இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கூர்ம புராணம்

The Kurma Purana (கூர்ம புராணம்) is one of the eighteen Mahapuranas, a genre of ancient Hindu scriptures that encompass a wide range of topics, including mythology, cosmology, theology, and religious practices. Named after Kurma, the turtle avatar of Vishnu, this Purana is notable for its accounts of the Kurma avatar and its teachings on various aspects of Hindu philosophy and devotion.


கூர்ம புராணம்

1. தோற்றுவாய்:

பதினென் புராணங்களில் கூர்ம புராணமும் ஒன்று. 17,000 ஸ்லோகங்கள் கொண்டது. இது பகவான் விஷ்ணு அமிர்த மதனத்தின்போது மந்தரமலை கடலில் அமிழ்ந்து போகாமல் நிலையாக நிறுத்த எடுத்த ஆமை வடிவம் பற்றிய வரலாறு. இது ஒரு சராசரி அளவுள்ள புராணம்.

மூல கூர்ம புராணத்தில் பிரம்மி சம்ஹிதை, பாகவதி சம்ஹிதை, கவுரி சம்ஹிதை, வைஷ்ணவி சம்ஹிதை என்று நான்கு பெரும் பிரிவுகள் இருந்தன. பிரம்மி சம்ஹிதை என்ற பிரிவு மட்டுமே கிடைத்துள்ளது. இதை வைத்தே இதற்குக் கூர்ம புராணம் என்ற பெயர் ஏற்பட்டது.

பிரம்மி சம்ஹிதை முதல் பாகம் பூர்வபாகம் என்றும், கூடுதல் பகுதி உபரி பாகம் என்றும் கூறப்படுகிறது. முன்னதில் 52 அத்தியாயங்களும், பின்னதில் 44 அத்தியாயங்களும் உள்ளன.

புராண இலக்கணங்களாகக் கூறப்பட்டுள்ள ஐந்தும் இதில் கூறப்பட்டுள்ளதால் இது மகாபுராணம் எனப்படுகிறது. கூர்ம புராணத்தின் ஒரு பகுதியாக ஈச்வர கீதை உள்ளது. இது யோகத்தைப் பற்றி விவரிக்கிறது. கூர்ம புராணம் ஒரு தாமசிக புராணம் ஆகும். பகவான் விஷ்ணு கூர்ம (அ) ஆமை வடிவில் இதை உரைத்ததால் இது கூர்ம புராணம் எனப்படுகிறது. இதனை இந்திரத்ம்யுனனுக்குக் கூறினார். பதினெட்டுப் புராணங்களின் பட்டியலில் சிவபுராணம் உண்டு என்பர். வேறு சிலர் சிவ புராணத்துக்குப் பதிலாக வாயுபுராணத்தைச் சேர்த்து கூறுவர். சிலர் சிவபுராணம், வாயுபுராணம் இரண்டையும் சேர்த்து பட்டியிலில் 19 புராணப் பெயர்களைக் கூறுவதும் வழக்கத்தில் உள்ளது.

2. இந்திரத்யும்மன்

முன்னர் ஸ்ரீ கல்பத்தில் இந்திரத்யும்மன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் முற்பிறவியில் ஓர் அரசன். அவன் விஷ்ணுவைப் பூசித்து அவர் மூலம் கூர்ம புராணத்தைக் கேட்டான். அதன் பலனாக இந்த ஜன்மத்தில் அந்தணனாகப் பிறந்தான். அவன் சதா சர்வகாலமும் மஹா விஷ்ணுவையே தியானித்து வந்ததால் மஹாலக்ஷ்மி அவன் எதிரே பிரத்தியட்சமானாள். அவன் ஸ்ரீதேவியைப் பார்த்து அவள் யார்? என்று கேட்க, மகாலக்ஷ்மி நான் விஷ்ணு பத்தினி, விஷ்ணுமாயை என்றும், நான் வேறு; பகவான் வேறல்ல. விஷ்ணு, பிரம்மா, சிவபெருமான்களுடைய ஆன்மா. அவரைப் பூசித்தால் மோக்ஷம் கிட்டும். நீயும் அவ்வாறே செய் என்று கூறி மறைந்து விட்டாள். அந்தணன் இந்திரத்யும்மன் ஸ்ரீநாதனைக் குறித்துப் பூசை செய்ய விஷ்ணு காட்சி அளிக்க அவரை வணங்கி நிற்க, அவனை இருகரங்களால் தொட, அந்தணன் பிரம்ம தத்துவம் அறியலானான். உடனே அந்தப் பிராமணர், தான் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுமாறு கூற, பகவான் சிருஷ்டிக்கெல்லாம் மூல காரணம் நான் ஒருவனே. இந்தப் பரம ஞானத்துடன் காரியங்களைச் செய்வாயாக என்று சிருஷ்டி முறை அனைத்தையும் போதித்தார். அன்று முதல் பிராம்மணன் சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்று அனைத்திலும் பரமாத்மாவைக் கண்டு ஆனந்த பரவசமானான்.

ஒருநாள் அந்தப் பிராமணன் சூரியன் கட்டளைப்படி பிரம்மலோகம் சென்று பார்க்க நினைக்க அவன் முன் ஒரு விமானம் வந்து நின்றது. அதில் ஏறிச் செல்லுகையில் தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் அவ்விமானத்தின் பின் கூட்டம், கூட்டமாகச் சென்றனர். அவர்கள் முன்னே ஆயிரம் சூரியன் ஒளியைக் கண்டனர். அதில் பிரம்மாவைக் கண்டனர். இந்திரத்யும்மன் முன்னால் சென்று பிரம்மாவின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். அவனைப் பிரம்மா தூக்கி நிறுத்தி ஆலிங்கனம் செய்து கொண்டார். அப்போது அவன் உடலிலிருந்து பேரொளி ஒன்று தோன்றி சூர்ய மண்டலத்தில் பிரவேசித்தது. எந்த புண்ணியாத்துமா பிரம்ம ஞானியாகி உத்தராயணத்தில் மரணம் அடைவானோ, அவன் தேவதைக்குச் சமமான மகிமை பெற்றுச் சூரிய ஒளியுடன் கலந்துவிடுவான் என்கிறது வேதம். அதுவே ஜன்ம சாபல்யம் அல்லவா!

3. பாற்கடலைக் கடைய ஆயத்தம்

பிரம்மா சிருஷ்டியை ஆரம்பித்த பிறகு தேவேந்திரன் ஒருநாள் கொலுவில் வீற்றிருக்க தேவர்கள், கந்தர்வர்கள், மும்மூர்த்திகள், கிம்புருடர்கள் நடனமாடி, அப்சரஸுகளின் ஆடல் பாடல் நடைபெற்றது. சிவதாண்டமும் கூடியது. அவ்வமயம் குபேரன் எழுந்து, எனக்கு நவநிதிகள், ரத்தினங்கள் யாவும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்திரன் பதவி ஏற்றிட அவை யாவும் செலவழிந்து விட்டன. மகேச்வரர் இந்திராதி தேவர்களுக்கும், சூரியன், சந்திரன் ஆகியோருக்கும் என்னிடமிருந்து நிதியை எல்லாம் எடுத்துச் செலவழித்தார் என்று கூறினான். அப்போது விஷ்ணு குபேரனின் கூற்றை ஆமோதித்து, இனி பாற்கடலைக் கடைந்தால் அகண்ட ரத்தினங்களும், மற்றும் அபூர்வ பொருள்களும் கிடைக்கும். எனவே அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள் என்று கூறினார். உடனே அனைவரும் பாற்கடல் உள்ள இடத்தில் ஒன்று கூடினர். அரக்கர் கூட்டத்தையும் அனுப்பி வைக்குமாறு பாதாள லோக பலிச்சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்பினார். அப்போது அசரீரி கூறியவாறு மந்தர மலைக்கெதிரில் விசித்திர நிறங்களுடைய ஆமை உள்ளது. அதனைக் கொண்டுவந்து கடலில் விட்டனர். உடனே அது மிகப்பெரிய உருவெடுத்து மந்திர மலையைச் சுற்றிக் கொள்ளுமாறு விஷ்ணு கூற, அது தான் தூள் தூளாகி விடுவேன் என அஞ்சிக் கூறிட, பகவான் உலகையே தாங்கும் உனக்கு இது ஒரு பொருட்டல்ல என்று கூறினார். உனக்கோர் ஆபத்துமின்றி நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இவ்வாறு பாற்கடல் கடைவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற, வாசுகி மந்திர மலையைச் சுற்றிக் கொள்ள அதன் தலைபக்கம் ராக்ஷசர்களும், வால்பக்கம் தேவர்களும் இருந்து பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர்.

4. பாற்கடலில் தோன்றியவை

தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் விண்ணிலிருந்து பாற்கடலைக் கடைவதைக் காணலுற்றனர். இடையில் கடைவதில் ஈடுபட்டவர்கள் களைப்புற்றனர். அவர்களுக்கு இயலாமை ஏற்பட்டது. எல்லோரும் தேவையான பலம் தந்து இந்தக் கடைவதை வெற்றிகரமாக்குமாறு ஸ்ரீஹரியை வேண்டினர். அப்போது மகாவிஷ்ணு, தேவர்களே, தானவர்களே, இதற்குப் போய் அலுத்துக் கொள்ளலாமா? இது மிக அற்பப்பணி. சமுத்திரம் உள்ளது; மத்து உள்ளது; கயிறு உள்ளது; நானிருக்கிறேன். மேலும் முயற்சி செய்யுங்கள் என்றார். அவர்கள் மறுபடியும் புது உற்சாகம், பலம் கொண்டு கடைய ஆரம்பித்தனர். அப்போது மலை பலவிதமாக அசைய ஆரம்பித்தது. அப்போது மகாவிஷ்ணு மலையைக் காலால் அழுத்தினார். பின்னர் முழுமனதுடன், முழுமூச்சாய் மதனம் நடைபெற்றது. சிலநேரம் வரை ஒன்றுமே பலன் கிடைக்காததால் பிரம்மா ஜாம்பவானை ஓஷதிகளைக் கடலில் சேர்க்குமாறு கூறினார். பிறகு கடலிலிருந்து ஒரு வெள்ளை ரசம் வெளிவர அதனை பிரம்மா ஒரு தங்கக் கலசத்தில் போட்டு வைத்துக் கொண்டார்.

மேலும் கடைந்திட அதிலிருந்து ஐராவதம் என்னும் யானை தோன்றியது. பிறகு மதுரசம் தோன்றியது. அதன் நாற்றம் பொறுக்க முடியாமல் அதனை வெறுத்தனர். அடுத்து சந்திரன் தோன்றினான். உடனே மகாலக்ஷ்மி பிறந்தாள். அவளுக்குப் பின்னால் ரம்பை, மேனகை, திலோத்தமை, கிருதாசி, ஸகேசி, மஞ்சுகோஷ், சித்திரலேகை முதலிய தேவலோக நடன மாதர்கள் தோன்றினர். பிறகு நிதிகள் தோன்றின. தினமும் ரத்தினங்கள் சிந்தும் உடலுள்ள இரண்டு திவ்விய புருஷர்கள் வெளிப்பட்டனர். பிரம்மா அவர்களிருவரையும் லக்ஷ்மி சந்ததியில் இருக்கச் செய்தார். அவர்கள் குபேரனுக்கு நவநிதிகள் முழுவதும் கிடைக்கச் செய்தனர். பின்னர் உச்சைச்சிரவம் என்னும் வெண்குதிரை தோன்றியது. அதன் பின் ஒரு தாமரை மொட்டு குடைபோல் தோன்றியது. அதிலிருந்து ரத்தினங்கள் கொட்ட ஆரம்பித்தன. அது தான் பிரம்ம தண்டலம். அடுத்து பிரம்மாவுக்கேற்ற கமண்டலம் வெளிப்பட்டது. பின்னர் கல்பதரு, காமதேனு, சூரியமணி, சமந்தகமணி, கவுஸ்துபமணி, தேவதத்த சங்கு, புஷ்பகவிமானம், நந்தி கோஷ ரதம் ஆகியவை தோன்றின.

5. ஆலகால விஷமும், நீலகண்டனும்

வெளிப்பட்ட பொருள்கள் மீது ஒவ்வொருவரும் உரிமை கொண்டாட வாதம் செய்யலாயினர். அப்போது சிவபெருமான் இவற்றை எல்லாம் ஓரிடத்தில் பத்திரப்படுத்தி மேலும் கடையுங்கள் என்று கூறினார். கடைசியில் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றார். இதுகேட்ட அனைவரும் செயல் வீரர்களாகி வேகவேகமாகக் கடைய ஆரம்பித்தனர். அப்போது பயங்கரமான, தாளமுடியாத, அதிக வெப்பம் பரவிற்று. அதிலிருந்து விண்ணை முட்டுமளவு சுவாலை எழும்பியது. எவராலும் அதைச் சமாளிக்க இயலவில்லை. அவ்வாறு ஆலகால விஷம் தோன்ற அதன் கொடுமையைத் தவிர்க்கும் வழி பற்றி யோசிக்கலாயினர். இந்த விஷத்தைச் சமாளிப்பது எப்படி? மதனத்தை நிறுத்தி விடலாமா? அப்போது அவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எங்களால் சகிக்க முடியவில்லை என்றனர். தேவாசுரர்களின் தீன நிலை கண்டு மகாவிஷ்ணு தயை கொண்டு பெருமழை பொழியச் செய்து வெப்பத்தைத் தணித்தார். விஷ்ணு வெப்பத்தைத் தாங்கி நிற்க அவர் உடல் நீலநிறம் ஆகியது. இனி என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் பிரம்மனிடம் சென்று வேண்ட, அவரும் அவர்களுடன் திருமாலிருப்பிடம் சேர்ந்தார்கள்.

விஷ்ணு அவர்களிடம் இப்போது அனைவரையும் காப்பாற்றக் கூடியவர் சிவபெருமானே என்று கூறி அவர்களைச் சிவனிடம் அனுப்பிவைத்தார். அனைவரும் கைலாயம் அடைந்து உமாமகேச்வரர்களிடம் வந்துள்ள ஆபத்தைப் பற்றி, அதாவது ஆலகால விஷத்தைப் பற்றிக் கூறித் தங்களைக் காத்தருளுமாறு வேண்டி துதி செய்தனர். என் பக்தர்களுக்கு அபாயமென்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா! எவ்வளவு கஷ்டமானாலும், ஆபத்து ஏற்படுவதானாலும் சரி என்று கூறி ஆலகால விஷத்தை ஏந்தி உட்கொண்டார். அவ்வாறு உட்கொள்ளும் முன் பார்வதியிடம் கூற அவள் பரமன் உட்கொள்வது விஷமல்ல, அமுதமாகும் என்று கூறினாள். அருந்திய ஆலகால விஷத்தை வயிற்றில் போக வொட்டாமல் நெஞ்சிலேயே நிறுத்த அது அவர் கழுத்தை நீலமாக்கி விட்டது. அவரும் அதனால் நீலகண்டன் எனப்பெயர் பெற்றார். எனினும் சிவனார் உடல் முழுவதும் பயங்கர வெப்பம் வீசிட பிரம்மதேவன் சந்திரனைச் சிவனார் தலையில் நின்று அவன் அமுத கிரணங்களால் குளிரச் செய்யுமாறு கூறினார்.

மேலும் பிரம்மா கங்கையைச் சிவனார் தலையில் இருந்து உனது பிரவாகத்தால் நனைத்துக் கொண்டிரு. உனது அபிஷேகத்தால் பரமனுக்குச் சாந்தி ஏற்படுத்து என்று கூறினார். இதனால் சிவபெருமானுக்குச் சந்திரசூடன், சந்திரசேகரன், கங்காதரன், சந்திரகலாதரன் என்ற பெயர்கள் ஏற்பட்டன. இவ்வாறு பரமசிவன் ஆலகால விஷத்தை உட்கொண்டு லோக÷க்ஷமார்த்தத்திற்கு உதவினார். இந்த நீலகண்டன் வரலாற்றினைச் சொல்வோர், கேட்போர், படிப்போர் சிவசாயுஜ்ய பதவி பெறுவர் என்று சூதமுனிவர் கூறி முடித்தார். இனி பாற்கடலில் தோன்றிய பொருள்களைப் பங்கு போட்டுக் கொள்வதில் அனைவரும் கவனம் செலுத்தினர்.

6. பாற்கடலில் தோன்றியவை பங்கீடு

கைலாயத்தைச் சுற்றிலும் ஒரு ரம்மியமான ருத்திரவனம் எனப்பட்ட புஷ்பவனம் இருந்தது. பார்வதி, பரமேச்வரர் அதில் உலாவி வந்து சுகம் அனுபவிப்பது வழக்கம். ஒருநாள் சிவபெருமான் அங்கு ஒரு கரடியைக் கண்டு தானும் ஓர் ஆண் கரடியாகி, பார்வதி பெண் கரடியாக இருவரும் ரதி, மன்மத சுகம் அனுபவித்தனர். அவர்களுக்கு கரடி முகம் கூடிய மனித உடல் உடைய ஓர் உருவம் தோன்றியது. அந்தக் கரடி உருவத்தைப் பார்த்து பரமன் நீ சிவாம்சத்துடன் பிறந்தாய். நீ சர்வ சாஸ்திரப் பண்டிதனாய் அச்சமென்பதே அறியாமல் விளங்குவாய் என்று கூறி ஆசிர்வதித்து வரங்கள் அளித்தார். அவனே ஜாம்பவந்தன். அவனைக் கொண்டே சமுத்திரத்தில் ஓஷதிகள் சேர்க்கப்பட்டு அமிர்தம் கடையப்பட்டது. பின்னர் அசுரர்கள் கலகம் செய்ய பொருள்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஸ்ரீ ஹரி கூர்ம வடிவை மாற்றிக் கொண்டார்.

பிரம்மா ஸ்ரீமகாலக்ஷ்மியிடம் ரத்தின மாலையைக் கொடுத்து அவளுக்கு இஷ்டமானவர் கழுத்தில் போடுமாறு கூற, அவள் மகாவிஷ்ணுவின் கழுத்தில் அம்மாலையைச் சூடி அவனருகில் சென்று சேர்ந்தாள். இந்திரன் ஐராவதமும், அப்சரசுகளும், ரத்னகுடையும் பெற்றான். குபேரன் நவநிதிகளைப் பெற்றான். கிடைத்த ஏழு குதிரைகள் சூரியன் தேருக்கு அளிக்கப்பட்டன. சமந்தக மணியையும், குண்டலங்களையும் இந்திரனே பெற்றான். கவுஸ்துபமணியை மஹா விஷ்ணுவுக்கு அளித்தனர். வருணன் புஷ்பக விமானத்தைப் பெற்றான். சிவபெருமான் சங்கை எடுத்துக் கொண்டார். கருடக்கொடி உள்ள தேரை ஸ்ரீஹரிக்குச் சமர்ப்பித்தனர். மகாசக்கரவர்த்திகளுக்குக் கிரீடங்கள், புஜகீர்த்தி, ரத்ன ஹாரங்களைப் பங்கிட்டளித்தனர். பிரம்மா ஒரு மணியை மட்டும் ஏற்று அணிந்தார். அரக்கர்கள் தங்களுக்கு எதுவும் அளிக்காமல் தேவர்களே பங்கிட்டு கொள்வதைக் கண்டு எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லையே என, பிரம்மா உங்களுக்குத்தான் அமிர்தம் இருக்கிறதல்லவா அதைப் பெற்றுச் சிரஞ்சீவிகளாக இருங்கள் என்றார். இவ்வாறு பிரம்மா சொன்னதும் ராக்ஷசர்கள் அமிர்த கலசத்தைக் கொடுக்குமாறு வற்புறுத்தலாயினர். ஆனால், பிரம்மா அமிர்தம் தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் என்று பலருக்கும் சமமாகப் பங்கிட வேண்டும் என்று கூறினார். இவ்வாறு தகராறு முற்றுவதைக் கண்ட பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீஹரியிடம் சென்று தங்களுக்கு உதவுமாறு வேண்டினர்.

எல்லோரும் கடற்கரையில் கூடி அமிர்தம் பெறக் காத்திருந்தனர். அப்போது அவர்கள் காதில் ஓர் இனிய கானம் வந்து விழுந்தது. கானம் வந்த திசையில் எல்லோரும் வியப்பபுற்று பார்க்க ஓர் அழகு சுந்தரி தங்கள் இருக்குமிடத்திற்கு வருவதைக் கண்டனர். இவ்வாறு மகாவிஷ்ணு ஜகன் மோஹினி வடிவில் வந்து கொண்டிருந்தார். அவள் அழகில் ஈடுபட்டு மெய்மறந்த சிலர் அவள் காலில் வணங்கி வீழ்ந்தனர். அனைவரையும் மோகினி கவர்ந்து இழுத்துத் தன் மாயவலையில் சிக்க வைத்தாள். பின்னர் அவர்கள் முன் உள்ள பிரச்சினை என்ன என்று கேட்க, அவர்கள் அமிர்தப் பங்கீடு பற்றி உரைத்தனர். அப்போது மோகினி தேவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பது போலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள் மோகினியிடம் அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனை ஆமோதித்தனர்.

பிறகு மோகினி பிரம்மனிடமிருந்து அமிர்த கலசத்தையும், சுரா பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டாள். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாக உட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக்கொண்டே அவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள். மோகினியின் மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்தத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஆனால் அரக்கர்களில் ஒருவன் மட்டும் தனக்கு அமிர்தம் கிடைக்காதென உணர்ந்து தேவர்கள் உருவில் அவர்கள் வரிசையில் அமர்ந்தான். இதை யாரும் கவனிக்கவில்லை. ஆனால், விண்ணிலிருந்து பார்த்து விட்ட சூரியனும், சந்திரனும் இதுபற்றி மகாவிஷ்ணுவிடம் கூற அவர் சக்கராயுதத்தை ஏவி அவன் தலையை வெட்டச் செய்தார். அவன் மரணமடையவில்லை. தலையும், முண்டமும் வெவ்வேறாக ககனவீதியில் உயிருடன் திரிய பின்னர் அவையே ராகு, கேதுக்களாக மாறி நவக்கிரகங்களில் இரண்டாயின. இதனால் கோபம் கொண்ட அசுரர்களைப் பகவான் அடக்கி பாதாளத்திற்கு அனுப்பினார். தேவர்களுக்கு தேவராஜ்ஜியம் கிடைத்தது.

7. கவுதம முனிவர் அனுபவம்

முன்பொரு சமயம் எங்கும் பசி, பட்டினி, உணவின்மை, பஞ்சத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். காட்டில் வாழ்ந்த முனிவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கவுதம முனிவர் என்னும் சக்திவாய்ந்த ரிஷி காட்டில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவருடைய ஆசிரமப் பகுதியில் மட்டும் மழை பொய்க்காமல் பெய்து செழிப்பாக இருந்தது. அங்கு பஞ்சம் தலைகாட்டவில்லை. எனவே, மற்ற முனிவர்கள் கவுதம முனிவரை வேண்டிட அவரும் அவர்களுக்கு உண்ண உணவும், உறைவிடமும் தந்து உதவினார். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. மழை பெய்து பஞ்சம் பறந்தோடியது. எனவே முனிவர்கள் தங்களுக்கு விடை அளித்து அனுப்புமாறு வேண்டினர். கவுதமன் இன்னும் சில நாட்கள் இருந்து செல்லுமாறு பணித்தார். அவ்வமயம் முனிவர்கள் கவுதமரின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்டனர். அவர்கள் மாயையால் ஒரு கரிய கன்றுக்குட்டியை உருவாக்கி கவுதமரிடம் அனுப்ப அதை அவர் தொட்டவுடனேயே கீழே விழுந்து உயிர்விட்டது. அதைக் கண்டு முனிவர்கள் கவுதமரிடம் அவர் பசுவைக் கொன்று, மகாபாவி ஆகிவிட்டதால் அவருடைய விருந்தாளியாக இருக்கமுடியாது என்று கூறிச்சென்றனர். பின்னர் கன்று குட்டியின் விவகாரம் மாயை என அறிந்தார். உடனே முனிவர்களைப் பார்த்து அவர்கள் வேத நெறி பிசகியதால் நரகத்தில் உழன்று, பலமுறை பிறந்து, இறந்து அவர்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ளுமாறு சபித்தார்.

அச்சம் கொண்ட முனிவர்கள் அரனையும், அரியையும் துதித்து தங்களுக்கு பாவ விமோசனம் அருள வேண்டினர். வேத நெறியைப் பின்பற்றாதவர்கள் நரகத்தில் உழல வேண்டியதே. வேறு வழியில்லை. எனவே, வேறு சில சாஸ்திரங்களை அவர்கள் பின்பற்ற உண்டாக்கினர். அவர்கள் நரகில் பல காலம் உழன்று, பல பிறவிகள் எடுத்துப் பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதுவே அவர்கள் செய்யக்கூடிய தவம் என்றார். காபாலம், நாகுலம், வாமம், பைரவம், பாஞ்சராத்திரம், பாசுபதம் முதலிய சாஸ்திரங்களை ஹரிகேசவர்கள் தோற்றுவித்தனர். சிவனும் காபாலிகனாக உலகில் திரிய ஆரம்பித்தார். அப்போது பார்வதிதேவி விஷ்ணுவின் உறைவிடத்தில் இருக்க, அவரும் பெண் வடிவில் பார்வதிக்கு உதவியாக இருந்தார்.

8. அந்தகன் என்னும் அரக்கன்

அந்தகன் என்னும் அரக்கன் மந்தர மலையின் மீது ஒருநாள் உலாவிக் கொண்டிருந்தான். அதேசமயம் அங்கு உலாவிக் கொண்டிருந்த பார்வதியைக் கண்டு மோகம் கொண்டான். சிவன் இல்லாததை அறிந்து பார்வதியைக் கைப்பற்ற எண்ணி பார்வதியின் இருப்பிடம் சென்று அங்கு நந்தி காவல் இருப்பதைக் கண்டான். நந்தி வழி மறிக்க இருவருக்கும் சண்டை ஏற்பட அசுரன், அசுரர்படையை நந்தியின் மீது ஏவிட, நந்தி விஷ்ணுவிடம் முறையிட்டார். அவர் பல சக்திகளை உருவாக்க அசுரர்களிடம் அவை போரிட்டன. அந்தகன் தோற்று ஓடினான். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துச் சிவபெருமான் திரும்பி வந்தார். நிகழ்ந்ததனைத்தையும் அறிந்தார். அந்தகன் புதுப்பலத்துடன் சிவகேசவர்களை எதிர்த்துப் போரிட வந்தான். சிவனும், விஷ்ணுவும் இணைந்து போர் செய்தனர். அந்தகனை உன்னால்தான் கொல்ல முடியும். அவனைக் கொன்று விடு என்று சிவனிடம் ஹரி கூறினார். சிவபெருமான் அரக்கனை சூலத்தால் குத்தி எடுத்துத் தாண்டவம் புரிந்தார். சூலத்தின் மகிமையால் அரக்கன் மனத்தூய்மை பெற்று சிவத்துதி செய்ய ஆரம்பித்தான். அதனால் மகிழ்ச்சியுற்ற சிவபெருமான் அந்த அரக்கனைக் கீழே இறக்கி தன்னிடம் ஒரு கணநாயகனாக வைத்துக் கொண்டார். அவன் நந்திக்குத் தோழனானான்.

9. சப்த சாரஸ்வத தீர்த்தம் மங்கணன் கதை

ஒருவன் சப்த சாரஸ்வத தீர்த்தத்தினுள் தவம் செய்வதால் ஞானம் ஏற்பட்டு, தவமும் பலிக்கும். மங்கணன் என்பவன் மஹரிஷிகளிடம் இந்தத் தீர்த்த மகிமையைக் கேட்டறிந்து, அத்தீர்த்தத்தில் நீராடி சிவபக்தனானான். அவன் சிவனைக் குறித்து தவம் செய்யலானான். அவன் மேனி பேரொளி பெற்றது. பக்தி பரவசத்தால் அவன் பரமனைப் போலவே தாண்டவம் ஆட ஆரம்பித்தான். அவன் முன் சிவபெருமான் காட்சியளித்தும் அவன் தாண்டவத்தை நிறுத்தவில்லை. அப்போது பரமசிவனார் ஆயிரம் சிரங்கள், ஆயிரம் கரங்கள் கொண்டு பயங்கரமான விசுவரூபம் கொண்டார். அவர் அருகில் ஒளிமிக்க ஒரு தேவதையும் இருந்தாள். இவ்வடிவில் அவர் செய்த மகாதாண்டவம் கண்ட மங்கணன் சிவபெருமானை வணங்கி ருத்ர அத்தியாயத்தில் துதி செய்தான். அது கேட்டு மகிழ்ந்து சிவனார் விசுவரூபத்தை மாற்றி முன் உருவுடன் தோன்றினார். அருகில் இருந்த தேவதையும் மறைந்து விட்டாள். அப்போது மங்கணன் சிவபெருமானை வணங்கி, விசுவரூபம் ஏன்! அருகிலிருந்த அழகிய தேவதை யார்? என்று கேட்டான். அதற்குப் பரமன் இது பரமேசுவரரின் திவ்யரூபம். நானே அது. என்னருகில் இருந்தது பிரகிருதி ரூபிணி. நானே பிரம்மாவாகி இருபத்தைந்து தத்துவங்களுடன் சிருஷ்டிக்கிறேன். விஷ்ணு வடிவில் அனைத்தையும் போஷிக்கிறேன். கால சொரூபனாய் அழிக்கிறேன். என்னுள் எல்லாம் ஐக்கியமாகி விடுகின்றன. எல்லா ஜீவராசிகளிலும் நானே ஜீவாத்மாவாக விளங்குகிறேன். என்னைக் காட்டிலும் வேறொன்றுமில்லை. இந்தத் தத்துவத்தை அறிந்து பக்தியுடன் என்னை உபாசனை செய்து சாயுச்சிய பதவியை அடைவாயாக என்று கூறி மறைந்தார். மங்கணனும் அவ்வாறே செய்து சாயுச்சிய பதவி பெற்றான்.

10. ஐயத்துவஜன் ஐவரின் ஐயமும் சப்தரிஷிகள் தீர்ப்பும்

கார்த்தவீர்யார்ச்சுனனுக்கு சூரன், சூரசேனன், திருஷ்ணன், கிருஷ்ணன், ஐயத்துவஜன் என்று ஐந்து புதல்வர்கள். அவர்களில் ஐயத்துவஜன் சிறுவயது முதலே ஞானசம்பன்னனாக, நாராயண பக்தனாக இருந்தான். ஆனால், மற்ற நால்வரும் முன்னோர்கள் போல் சிவபக்தர்கள். ஒருநாள் மற்ற நால்வரும் இளைய சகோதரனைப் பார்த்து நம் முன்னோர்களும் சிவபக்தர்களாயிருக்க, நீ மாத்திரம் ஏன் விஷ்ணு பக்தனானாய்? என்று வினவ, ஐயத்துவஜன் அரசர்களுக்கெல்லாம் நாராயணனே தெய்வம். அவரே பிரம்மா படைத்த உலகைப் பரிபாலனம் செய்கிறார். சுருதிகள் பகவான் விஷ்ணுவம்சத் தோன்றல்களே மன்னர்கள் என்றான் அவனது சகோதரர்கள் சிவன், சத்துருசங்காரம் செய்திடும் நம்முடைய ஆராதனைக்கு உரியவர். நமக்கு ஞானமும், மோக்ஷமும் அருள்வார் என்றனர். அப்போது ஐயத்துவஜன் ஒருவன் செய்யும் தர்ம ஆசரணமே முக்திகளுக்கு காரணம் பரதர்மங்கள் எவ்வளவு சிறந்தவையானாலும் ஆசரணத்துக்கு உதவாதவை என்று பகவானே சொல்லி இருக்கிறார்.

இவர்கள் வாதத்திற்கு முடிவேற்படாத நிலையில் சப்தரிஷிகளை அணுகி தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு அளிக்குமாறு வேண்டினர். யாருக்கு எந்தத் தெய்வத்தின் மீது இஷ்டம் உள்ளதோ அதுவே அவருடைய பர தெய்வம் ஆவார். ஆனால், காரண, காரியங்களுக்கேற்ப மற்ற தெய்வங்களைப் பூசிப்பது தற்காலிகமான பலனைக் கோரியே. அந்தப் பூஜைகள் நியதங்கள் ஆகா. மன்னர்களுக்கு விஷ்ணுவும், இந்திரனும் தெய்வங்கள். பிராம்மணர்களுக்கு அக்கினி, சூரியன், பிரம்மா, சிவன் ஆகியன தெய்வங்களாகும். தேவர்களுக்கு விஷ்ணுவும், ராக்ஷசர்களுக்கு சிவனும், யக்ஷ, கந்தர்வர்களுக்கு சோமனும் (சந்திரன்) தெய்வங்கள் என்று பிரம்மதேவன் சிருஷ்டியின் துவக்கத்திலேயே உறுதிப்படுத்தி உள்ளார். இவ்வாறு சப்தரிஷிகள் கூறியதைக் கேட்டு சகோதரர்கள் ஐவரும் தம் இடம் சேர்ந்து அவரவர் இஷ்ட தெய்வத்தைப் பூசித்து வந்தனர்.
ஒருநாள் விதேஹன் என்ற தானவன் அவர்கள் நகரத்தின் மீது போர் தொடுத்தான். கண்டவர்களை எல்லாம் கொன்றான். அனைவரும் அச்சமுறும் வகையில் மகாநாதம் (அ) பேரொலி செய்து கர்ச்சித்தான். சூர சேனாதிகள் ஐவரும் அவனைக் கொல்ல முற்பட்டனர். அவர்கள் தொடுத்த பாணங்கள், விடுத்த ஆயுதங்கள் எதுவும் அவனிடம் பலிக்கவில்லை. ஐயத்துவஜன் தவிர மற்றவர்கள் ஓடி விட்டனர். ஐயத்துவஜன் தன் இஷ்டதெய்வமான ஸ்ரீவிஷ்ணுவைத் தியானித்தான். அப்போது பகவான் அவன் முன் தோன்றி தன் கையிலிருந்த சக்கராயுதத்தை அவனுக்கு அளித்தார். உடனே ஐயத்துவஜன் ஸ்ரீஹரியைத் தியானித்து அந்தச் சக்கரத்தைச் செலுத்த அது விதேஹன் தலையை வெட்டி வீழ்த்தியது. ஐயத்துவஜனின் சகோதரர்கள் அவனைப் புகழ்ந்தனர். விசுவாமித்திரர் வந்து அவனைப் பாராட்டிச் சென்றார். தமையன் நால்வரும் ருத்திரயாகம் செய்ய, அதனை வசிஷ்டாதி முனிவர்கள் நடத்தி வைத்தனர். ஐயத்துவஜன் விஷ்ணுயாகம் செய்ய அதற்கு விசுவாமித்திரர் வந்திருந்து சாங்கோ பாங்கமாய் நிர்வகித்து அவனைக் கிருதார்த்தன் ஆக்கி அருளினார்.

11. துர்ஜயனும் ஊர்வசியும்:

சந்திர வம்சத்தில் தோன்றிய துர்ஜயன், கற்பில் சிறந்த தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் காளித்தி நதி தீரத்தில் அழகிய கானம் ஒன்று கேட்டான். கானம் வந்த திசையில் சென்று ஊர்வசி என்னும் அப்சரஸைக் கண்டு மோகிக்க, அவளும் அவன்மீது ஆசைபட இருவரும் பல ஆண்டுகள் சுகித்து இருந்தனர். ஒரு நாள் தூர்ஜயன் திடீரென்று தன் நாடு, மனைவி ஆகியோரைப் பற்றி எண்ணி தன் வீட்டுக்குச் சென்றுவர ஊர்வசியிடம் அனுமதி கோரினான். அப்போது ஊர்வசி இன்னும் ஓராண்டு காலம் தன்னுடன் இருக்குமாறு கூறினாள். துர்ஜயன் தன் நாட்டைப் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடுவதாக உறுதிப்பட கூறினான். அப்போது ஊர்வசி ஒரு நிபந்தனை இட்டாள். மற்ற எந்த ஸ்திரீயிடமும் கணவனாக வாழக்கூடாது என்றாள். அந்த நிபந்தனையை ஏற்று மன்னன் நாடு திரும்பினான். ஊர்வசிக்கு அளித்த வாக்குப்படி மனைவியை அவன் நெருங்கவில்லை. அதன் காரணத்தைப் பின்னர் துர்ஜயன் மனைவி அறிந்து கொண்டாள். அவன் பாவம் செய்ததைக் கணவனுக்கு எடுத்துக் காட்டினாள் அந்த கற்புக்கரசி. ஏக்கம் கொள்வதில் பயனில்லை. பாவத்துக்குப் பரிகாரம் பச்சாத்தாபம் மட்டுமல்ல. இது ஒரு மன்னனுக்கு அழகல்ல. தவம் செய்ய வேண்டும் என்றாள் அந்த மாதரசி.

எத்தகைய தவம் செய்ய வேண்டும் என்று அறிய கண்வ முனிவரை அடைந்து வேண்டிட, அவர் இமயமலைக்குச் சென்று தியானம் செய்யுமாறு கூறினார். செல்லும் வழியில் மன்னன் ஒரு கந்தர்வனைச் சந்தித்தான். அவன் கழுத்தில் ஒரு தெய்வீகமாலை இருந்தது. ஊர்வசியை நினைத்தான். அவளுக்கே உரித்தானது அந்த மாலை என்று கந்தர்வனைத் தோற்கடித்து, மாலையைப் பெற்று அதனை ஊர்வசிக்கு அணிவிக்க விரைந்தான். ஆனால், ஊர்வசி முன் இருந்த இடத்தில் இல்லை. அவளைத் தேடி அலைந்தான். சுமேரு மலையில், மானச ஏரிக்கரையில் ஊர்வசியைக் கண்டு அவளுக்கு அம்மாலையை அணிவித்து சில காலம் அவளுடன் மகிழ்ச்சியாக இருந்து வந்தான். ஒருநாள் ஊர்வசி, மன்னனை தன் நாடு சென்றிருந்த காலத்தில் என்ன நடந்தது என்று கேட்டாள். நிகழ்ந்ததை எல்லாம் மன்னன் கூற, ஊர்வசி அவனை உடனே சென்று விடுமாறும் இல்லாவிட்டால் கணவர், துர்ஜயன் மனைவி ஆகியோர் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கூறி அவனைப் போகச் சொல்ல ஊர்வசியை விட்டுப் பிரிய அவனுக்கு இஷ்டமில்லை. ஊர்வசி தன்னை அழகற்றவளாக மாற்றிக் கொள்ள அவன் அவள் மீது வெறுப்புக் கொண்டு தவம் செய்யச் சென்றான். மொத்தம் இருபத்து நான்கு ஆண்டுகள் மிக்க கோரத்தவம் செய்தான். தவம் முடிந்து கண்வர் இருக்குமிடம் அடைந்து முனிவரிடம் நடந்ததை எல்லாம் விவரித்தான்.
முனிவர் அவன் மாறுதலையும், தவத்தையும் கேட்டு மகிழ்ந்தார். பின்னர் அவர், அது மட்டும் போதாது என்றும் சிவபெருமான் உறையும் வாரணாசிக்குச் செல்லுமாறும் அறிவுரை கூறினார். அவர் மேலும் சிவபெருமான் வாரணாசியில் எப்போதும் இருக்கிறார். அவருடைய தரிசனமும், பூஜையும் மன்னனுடைய பாவத்தை நீக்கிவிடும் என்றார். அவ்வாறே துர்ஜயன் செய்து பாவ விமோசனம் பெற்றான். வாரணாசி செல்வதும், சிவபூஜையும் சிறந்த பலனைத் தரும்.

12. கிருஷ்ணனின் தவம்

கிருஷ்ணன் புத்திரபாக்கியம் வேண்டி உபமன்யு முனிவர் ஆசிரமம் நண்ணினான். அப்போது அவன் முனிவர்களை வாழ்த்தினான், அவர்கள் அவரைத் துதி செய்தனர். கிருஷ்ணன் நேரில் வாழ்த்தியது பற்றி பெரிதும் மகிழ்ந்த முனிவர் கிருஷ்ணன் வருகைக்கு ஏதேனும் முக்கிய காரணம் உண்டா என்று கேட்டார். அப்போது கிருஷ்ணன் தான் சிவனைக் காண என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு முனிவர் உண்மையான நம்பிக்கையுடன் தியானம் செய்து கடின தவம் செய்தால் சிவனைக் காண முடியும் என்றார். அதுகேட்ட கிருஷ்ணன் தவக்கோலம் பூண்டு பாசுபத விரதம் அனுஷ்டித்து தியானிக்க உமா மகேச்வரர்கள் காட்சி அளித்தனர். அப்போது சிவனார், கிருஷ்ணனிடம் அவர் விஷ்ணுவே நினைத்ததைப் பெறும் சகல வல்லமை படைத்தவர் என்றும் தன்னை வேண்டியது ஏன் என்றும் கூறிட, கிருஷ்ணன் தனக்குச் சிவபெருமானை ஒத்ததோர் மகன் வேண்டும் என்றார். அவ்வாறே வரம் பெற்ற அவருக்கு ஜாம்பவதி மூலம் சாம்பன் பிறந்தான்.

13. சிவனது அவதாரங்கள்

கூர்ம புராணம் சிவபெருமான் எடுத்த அவதாரங்களைப் பற்றித் தெரிவிக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரம் கொண்டோர் அவர். அவையாவன :

1. ஸ்வேதா,

2) சுதாரா,

3) மதனன்,

4) சுஹோத்திரன்,

5) கங்கணன்,

6) லோகாக்ஷி,

7) ஜெய் கிஷ்ஹவ்யன்,

8) தாதிவாகன்,

9) ரிஷபன்,

10) பிருகு,

11) உக்கிரன்,

12) அத்திரி,

13) பலி,

4) கவுதமன்,

15) வேதசீர்ஷன்,

16) கோகர்ணன்,

17) ஷிகந்தகன்,

18) ஜடமாலி,

19) அட்டஹாசன்,

20) தாருகன்,

21) லங்காலி,

22) மகாயாமன்,

23) முனி,

24) ஷுலி,

25) பிண்ட முனீச்வரன்,

26) ஸஹிஷ்ணு,

27) ஸோமசர்மா,

28) நகுலீஸ்வரன்.

14. ஈசுவர கீதை

முனிவர்களுக்கு சூதர் புராணங்கள் கூறிக் கொண்டிருந்த போது அங்கே வேதவியாசர் வந்தார். அவரிடம் முனிவர்கள் உண்மை ஞானம் பெற உபாயம் கூற வேண்ட, அவர் கூறியது இதோ: பரமாத்மாவே உண்மையானது. அது எல்லா இடத்திலும் தூய்மையாக வியாபித்து உள்ளது. இந்தப் பரமாத்மாவிலிருந்தே இந்தப் பேரண்டம் தோன்றியது. முடிவில் அதனுள்ளேயே ஐக்கியமாகும். பரமாத்மன் என்பது இந்தப் பூமியல்ல அது நீர், சக்தி, காற்று அல்லது ஆகாயமும் அல்ல. அதைத் தொடவோ உணரவோ முடியாது. ஒவ்வொருவர் ஆத்மாவிலும் பரமாத்மா இருக்கிறார். சுகம், பாவம், மாயையினால் பரமாத்மா, ஜீவாத்மாவுக்கிடையே வேறுபாடு தோன்றும். ஞானம் பெற்றவர் மாயையிலிருந்து விடுபடுவர். எனவே தனக்கும், மற்றவற்றிற்கும் வேறுபாடு காணமாட்டான். அனைத்திலும் பரமாத்மா ஊடுருவி உள்ளார்.

யோகா என்பது தியானம். அது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உணர்வை ஊட்டுகிறது. யோகத்தில் எட்டு உட்பிரிவுகள் உள்ளன. அவை முறையே
:
1. மூச்சை அடக்கும் பிராணாயாமம். பிராணம்=உயிர்; ஆயாமா=கட்டுப்பாடு. இதுவே பிராணாயாமத்தின் பொருள். மூச்சை உள்ளிழுப்பது ரேசகம்; உள்ளிருத்துவது கும்பகம்; வெளியிடுவது பூரகம்.

2. பிரத்தியாகாரம்-இது புலன்களை அடக்குவது. யோகா செய்யும் போது தக்க உடல்நிலையில் அமர்ந்து செய்ய வேண்டும்.

3. ஆசனம்! யோகாசனங்கள் பல வகைப்படும். அவற்றின் பலன்களும் வெவ்வேறாகும்.

4. அகிம்சை, உண்மை, தயை கொண்டிருத்தல் யாமம் ஆகும்.

5. வேதம் ஓதுதல், பிரார்த்தனை, தூய்மை, தியானம் ஆகியவை ருயாமம் எனப்படும்.

6. ஓர் இறைவனை முன்னிட்டு தியானம் செய்ய ஆரம்பித்துத் தொடர்ந்து தவம் செய்வது தியானம் ஆகும்.

7. அந்த இறைவனை உள்ளத்தில் நிலை நிறுத்துதல் தாரணம் ஆகும்.

8. இறுதியில் சமாதி-ஜீவாத்மா, பரமாத்மாவுக்கு இடையே ஒன்றியை நிலையை உணர்வதாகும்.

15. சமயச் சடங்குகள்

பிரம்மா பருத்திச் செடியைத் தோற்றுவித்தது முப்புரி நூல் எனப்படும் யஜ்ஞோபவீதம் உருவாக்கவே. பிராமணர்க்கு உபநயனம் மிகவும் முக்கியமானது. அது எட்டு வயதில் செய்யப்பட வேண்டும். ஆசான் (அ) குரு மரியாதைக்குரியவர். பூசிக்கத்தக்கவர். யாரிடமிருந்து அறிவு பெறப்படுகிறதோ அவரே குருவாவார். இவ்வாறு பாடம் (அ) வேதம், சாஸ்திரம் கற்பிப்பவரே அன்றி வேறு சிலரும் குருவாகக் கருதப்படுவர். தந்தை, அண்ணன், அரசன், மாமா, மாமனார், தாத்தா வயதில் பெரியவர்கள் ஆகியோரும் குருவாவார். மற்றும் தாயார், பாட்டி, குருபத்தினி, அத்தை, மாமியார், அண்ணி ஆகியோரையும் குருவுக்கு சமமாக நடத்த வேண்டும். குருவின் இடத்தில் உட்காரக்கூடாது. அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளக்கூடாது. அவரிடம் வாதிக்கக்கூடாது. குருவை வெறுப்பவனுக்கு நரகம் நிச்சயம்.

மேற்கூறியவர்களும் மிகவும் முக்கியமானவர்கள். தந்தை, தாய், ஆசான், அண்ணன், கணவன் ஆகியோர் என்னவானாலும் அவர்களிடம் மரியாதையாக நடந்து சேவை செய்ய வேண்டும். ஓர் அந்தணன் உணவுக்குப் பின் மட்டும் குடித்தல், உறங்கல், குளித்தல், எச்சில் துப்புதல், உடைமாற்றும் போது எல்லாம் வாயைக் கொப்பளித்துக் கழுவ வேண்டும். மற்றும் படிக்க உட்காருவதற்கு முன், நாத்திகனுடன் பேசியபின், மேலும் பிரஷ்டர்கள், பெண்கள் ஆகியோருடன் பேசிய பின்னும் வாயைக் கழுவிக் கொள்ள வேண்டும் (இது தூய்மையின் அடிப்படையில் கூறப்படுவதால் தற்காலத்தில் அனைவருக்கும் பொருத்தமாகும்.) வாயலம்புதல் முடியாத நிலையில் தீ, பசு, கங்கை, நீர் இவற்றைத் தொடுவதன் மூலமும் தூய்மை ஏற்படும். ஓர் அழுக்குத் துணியைத் தொட்டுவிட்டால் நன்னீர், புல், மண் இவற்றைத் தொட்டு தூய்மையாக்கிக் கொள்ளலாம்.

காயத்திரி மந்திரம்

மந்திரங்களில் சிறந்தது காயத்திரி மந்திரம். அதாவது

ஓம் பூர் புவஸ்ஸுவ :
ஓம் தத்ஸவிதுர் வர÷ண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனப் பிரசோதயாத்

கிரகண காலத்தில், பிரேதச்சடங்குகள் நடக்கும் போது, படுத்திருக்கும் போது, புலால் உண்டபின், புயலின் போது, பவுர்ணமி இரவில் வேதங்களைப் படிக்கக் கூடாது.

16. பிராயச்சித்தமும் விரதங்களும்

பிராமணனைக் கொன்றவன், மது உண்டவன், தங்கம் திருடியவன் ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். பிராம்மணனைக் கொன்றவன் அதற்கு பிராயச்சித்தமாக காட்டில் குடிசையில் பன்னிரண்டு ஆண்டு காலம் வாழ்ந்து வர ÷ண்வடும். அவன் இறந்தவர் தலையைக் குறிக்கும் அடையாளத்தைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு பிராயச்சித்தம் (அ) தவம் முடியும் வரையில் அவன் வேறோர் அந்தணன் இல்லத்திற்கோ, கோயிலுக்கோ செல்லக்கூடாது. இந்த பிராம்மணக்கொலை அஜாக்கிரதையால் (அ) அசட்டையால் நேர்ந்ததானால் அதற்கே இப்பிராயச்சித்தங்கள். வேண்டுமென்றோ, தெரிந்து கொலை செய்திருந்தாலோ, தவமோ, பிராயச்சித்தமோ போதாது. அத்தகைய பாவி தீக்குளித்தோ, நீரில் மூழ்கியோ, பட்டினி கிடந்தோ மரணமடைதல் சிறந்த பிராயச்சித்தமாகும்.

விரதங்கள்

மற்ற பாவங்களுக்குப் பரிகாரமாக கீழ்க்கண்ட விரதங்களை அனுஷ்டிக்கலாம். முக்கியமான சில கொடுக்கப்பட்டுள்ளன.

1. சந்தாபண விரதம் : ஒருநாள் முழுவதும் பஞ்ச கவ்யம் உட்கொண்டு, அடுத்த நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருத்தல்.

2. மஹாசந்தாபண விரதம் : இதில் பஞ்சகவ்யத்தில் ஏதேனும் ஒன்றை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இம்மாதிரி ஆறு நாட்கள் இருந்து ஏழாவது நாள் முழு உபவாசம் இருக்க வேண்டும்.

3. பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம் : இதில் முதல் மூன்று நாட்கள் பகலில் மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். அதுவும் சுமார் 26 முட்டையளவு மட்டும் உண்ண வேண்டும். அடுத்து மூன்று நாட்கள் 22 முட்டையளவு மாலையில் மட்டும் உட்கொள்ள வேண்டும். இறுதியாக மூன்று நாட்கள் 24 முட்டை அளவு மட்டும் உணவு கொள்ள வேண்டும்.

4. அதிகிரிச்சா விரதம் : முன் விரதத்தை விடக் கடுமையானது. முதல் மூன்று நாட்கள் ஒரு கையளவு உணவு பகலில் மட்டும் உட்கொள்ளல். அடுத்து மூன்று நாள்களில் மாலையில் மட்டும் ஒரு கை அளவு உட்கொள்ளல். அடுத்து மூன்று நாட்களில் ஒரு கை அளவே பகலில் எப்போதாவது ஒரு முறை உட்கொள்ள வேண்டும். இறுதியாக மூன்று நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு நாட்கள் விரதம் இது.

5. பராக விரதம் : இதில் 12 நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டும்.

6. தப்த கிரிச்சா விரதம் : இதுவும் 12 நாட்கள் கொண்ட விரதமே. இதில் ஒரு நாளைக்கு ஒரு முறையே நீராடல், முதல் 3 நாட்கள் நீர் மட்டும் அருந்தலாம். அடுத்த மூன்று நாட்கள் பால் அருந்தலாம். அடுத்த மூன்று நாட்கள் நெய் அருந்தி கடைசி மூன்று நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும்.

7. பதகிரிச்ச விரதம் : இது நான்கு நாட்கள் அனுஷ்டிப்பது. முதல் நாள் ஒரு வேளை உணவு, இரண்டாம் நாள் உபவாசம்; மூன்றாம் நாள் அளவில்லா உணவு. நான்காவது இறுதி நாள் உபவாசம்.8. சாந்தாராயன விரதம் : இது பவுர்ணமியில் ஒரு மாதம் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்.

முதல் நாள் 15 கையளவு உணவு; அடுத்து 14 கையளவு உணவு அடுத்த அமாவாசை வரையில் உட்கொள்ள வேண்டும். அமாவாசை அன்று முழு உபவாசம். அடுத்த பிரதமை முதல் தினமும் ஒரு கையளவு அதிகம் ஆக்கிக் கொண்டே உணவு உட்கொள்ள வேண்டும். பவுர்ணமி அன்று 15 கையளவு உண்ணாவிரதம் முடிவடையும். மேலும் பல விரதங்களும், பிராயச்சித்தங்களும் கூர்ம புராணத்தில் கூறப்படுகின்றன.

17. சீதை ஒரு மாயை

ராமாயணத்தில் ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றதை அறிவோம். சீதை ஒரு மாயை என்பதை விளக்குகிறதைக் காண்போம். இந்தக் கதையின்படி நன்னெறி கொண்டவர்க்கு என்றும் ஆபத்தில்லை என்று அறியலாம். ராவணன் ஒரு துறவி வடிவில், பர்ண சாலையில் இருந்த சீதையைத் திருட்டுத்தனமாக தூக்கிச் சென்றான். ராவணனின் தீய எண்ணத்தை சீதை முன்பே அறிந்திருந்தாள். எனவே, அவள் திட்டத்தை முறியடிக்க திட்டமிட்டாள். அவள் அக்கினி தேவனைப் பிரார்த்தித்தாள். அப்போது அக்கினிதேவன் தோன்றி ஒரு மாயா சீதையைத் தோற்றுவித்தான். உண்மையான சீதைக்குப் பதில் மாயா சீதை சென்றாள். உண்மையான சீதை அக்கினியால் ஏற்றுக்கொள்ளப்பட்டாள். எனவே, ராவணன் மாயா சீதையைத் தூக்கிச் சென்றான். அந்த மாயா சீதையின் காரணமாகவே ராம ராவண யுத்தம் நடந்தது. போருக்குப் பின், ராவண வதத்திற்குப் பின், சீதை அக்கினிப் பிரவேசம் செய்ய மாயா சீதை தீயில் மூழ்க உண்மையான சீதை திரும்பி வந்தாள். ஆக உண்மையான சீதைக்கும் ராவணனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

(பிரம்ம வைவத்திர புராணம் காண்க.)

18. சிவனும் பிரம்மனும்

முன்னர் ஒரு சமயம் பிரம்மா முனிவர்களிடம் நானே தலைமைக் கடவுள். என்னைத் தவிர வேறோர் தெய்வமில்லை என்று கூறினார். அதாவது அரி, அரன்களை விட நானே உயர்ந்தவன் என்றார். இவ்வாறு பிரம்மன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு விஷ்ணு வந்தார். அவர் நானே உயர்ந்த தெய்வம். நீ படைப்பாளி மட்டுமே. நான் காத்து ரக்ஷிப்பவன் என்றார். இந்நிலையில் வேதங்கள் நான்கும் உயிருள்ள வடிவில் தோன்றி அரி, அரன்களிடம் தக்க ஆதாரங்களைக் காட்டி சிவனே அரி, அயன்களைக் காட்டிலும் உயர்வான தெய்வம் என்று எடுத்துக் காட்ட, அதனை விஷ்ணு ஏற்றார். ஆனால் பிரம்மன் அதற்கு சம்மதிக்கவில்லை. பிரம்மா வேதங்களிடம் சிவன் எப்போதும் பேய், பிசாசுகளுடன் தோழமை கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார். அவர் எவ்வாறு எங்கள் இருவரை விடச் சிறந்தவர், உயர்ந்தவர் ஆவார்? என்று கேட்டார்.

இந்தச் சமயம் அங்குச் சிவபெருமான் வந்து சேர்ந்தார். சிவனைக் கண்டவுடன் பிரம்மா அவரைக் கண்டபடி நிந்திக்கலானார். அப்போது சிவன் தன்னிலிருந்து காலபைரவரைத் தோற்றுவிக்க, அவர் பிரம்மாவிடம் சண்டை போடலானார். அச்சண்டையில் காலபைரவர் ஐந்து முகம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை வெட்டிவிட பிரம்மா நான்முகன் ஆனார். நான்கு தலைகள் உடையவனானார். (சில புராணங்களில் சிவபெருமானே பிரம்மாவின் ஒரு தலையை நீக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.) உடனே பிரம்மா இறந்து விட அவரைச் சிவபெருமான் உயிர்ப்பித்தார். எனினும், சிவன் ஒரு பிராமணனைக் கொன்றதால் பிரம்மாவின் கொய்யப்பட்ட தலை காலபைரவனின் (சிவனின்) கையிலேயே ஒட்டிக்கொண்டது. இந்நிலையில் காலபைரவர் பல ஆண்டுகள் கையில் பிரம்மாவின் கொய்யப்பட்ட தலையுடன் அலைந்து திரிகையில் விஷ்ணு அவர் முன் தோன்றி வாரணாசிக்குப் புனிதப் பயணம் செல்லுமாறு அறிவுரை கூறினார்.

வாரணாசியை அடைந்தவுடன் காலபைரவனின் கையிலிருந்து பிரம்மாவின் தலை விடுபட்டது. அவ்விடம் ஒரு புனித தலம் ஆயிற்று. அது கபால மோசன தீர்த்தம் ஆகும். வாரணாசியே அன்றி பிரயாகை, குரு÷க்ஷத்திரம், கயா, வடமதுரை போன்ற பல தீர்த்தங்களும் சிறந்த தலங்களே. சருசுவதியில் மூன்று நாள் ஸ்நானமும், யமுனையில் ஒரு வாரம் நீராடலும், கங்கை நீரைத் தொட்ட உடனேயும் பாவம் நீங்கும். ஆனால் நர்மதை நீர் பார்வையில் பட்டாலே பாவம் நீங்கும்.

19. நந்தி தேவரின் வரலாறு

தருமநெறியில் நின்ற, சாஸ்திர ஞானம் மிகுந்த ஷிலாதர் என்ற முனிவர் ஆயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்ய சிவபெருமான் அவர் முன் தோன்றி வேண்டிய வரம் யாது? என்று கேட்க, அம்முனிவர் தாயிடம் பிறக்காத ஒரு புதல்வனைத் தனக்கு அருளுமாறு வேண்டினார். சிவன் அவ்வாறே வரம் அளித்தார். ஷிலாதர் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது ஓர் அழகிய பையன் ஏரியின் மீது திடீரென்று தோன்றினான். அவனைச் சுற்றி நான்கு பக்கமும் பேரொளி வீசியது. அவன் ஷிலாதரைத் தந்தையே என்று கூப்பிட்டான். அவனுக்கு நந்தி எனப் பெயரிடப்பட்டது. அவன் கல்வி கற்க ஆரம்பித்து சகல சாஸ்திர சம்பன்னன் ஆனான். நந்தி சிவதரிசனம் பெறவும், தான் மரணமின்றி இருக்கவும் சமுத்திர தீர்த்தத்தில் ஓரிடத்தில் கோடி சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்தான். சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க இன்னும் கோடி சிவநாமம் ஜபிக்க ஆயுள் வேண்டும் என்றான். அவ்வாறே வரம் அளித்தார் பரமசிவன்.

இம்மாதிரி மும்முறை நிகழ கடைசியில் சிவபெருமான் தோன்றி சிவநாம ஜபம் போதும். மேலும் தவம் வேண்டாம். உனக்கு மரணம் ஏற்படாது. நீ ஒரு கணநாதன் ஆகி கணங்களுக்கெல்லாம் நாயகனாக விளங்குவாய், என்னை விட்டுப் பிரியாத தோழனாவாய் என்று வரமளித்தார். மருத்தின் புதல்வியாகிய சுயாஷாவை நந்திக்குச் சிவபெருமான் மணம் செய்து வைத்தார். நந்தி எப்போதும் சிவ சந்நிதியில் பரமனைப் பிரியாமல் இருந்தார்.

கூர்ம புராணம் முற்றிற்று.


Overview of the Kurma Purana

1. Structure and Composition:

- The Kurma Purana is divided into two main sections: the Purva (earlier) and Uttara (later) parts. The text comprises around 17,000 to 18,000 verses, though the exact count can vary across different manuscripts.

2. Key Themes and Content:

- Kurma Avatar: The Purana is named after Kurma, the turtle avatar of Vishnu. The central narrative involves Kurma supporting Mount Mandara during the churning of the ocean (Samudra Manthan), a key event in Hindu mythology. This story symbolizes the preservation and support of the cosmic order by the divine.

- Creation and Cosmology: The Kurma Purana discusses the creation of the universe, detailing the roles of various deities and cosmic principles. It includes descriptions of the cosmic structure, different worlds, and the cyclical nature of creation and dissolution.

- Mythological Narratives: The Purana includes stories about gods, goddesses, sages, and heroes. It covers various episodes from the lives of deities like Vishnu, Shiva, Brahma, and their interactions with the world.

- Rituals and Worship: The text provides guidelines on religious rituals, worship practices, and the observance of festivals. It emphasizes the importance of devotion, proper conduct in rituals, and the significance of temples and sacred sites.

- Ethics and Morality: The Kurma Purana offers teachings on Dharma (righteousness), emphasizing moral and ethical behavior. It discusses the duties of individuals based on their social roles and the importance of living a life in accordance with Dharma.

- Philosophical Teachings: The Purana delves into philosophical themes such as the nature of the self (Atman), the Supreme Being (Brahman), and the paths to liberation (Moksha). It emphasizes the importance of knowledge (Jnana) and devotion (Bhakti) in achieving spiritual realization.

3. Significance of Kurma:

- Kurma, the turtle avatar of Vishnu, plays a crucial role in Hindu mythology, particularly in the Samudra Manthan episode. This avatar represents the idea of stability and support, symbolizing the divine's role in maintaining balance in the universe.

4. Cultural and Religious Impact:

- The Kurma Purana has influenced Hindu religious practices, particularly in the context of Vishnu worship and the celebration of events like the churning of the ocean. Its narratives and teachings have contributed to the development of temple rituals, festivals, and devotional literature.

5. Philosophical and Theological Themes:

- The Purana explores deep philosophical questions about the nature of existence, the universe, and the divine. It provides insights into Hindu cosmology and theology, highlighting the importance of the divine in maintaining cosmic order.

6. Unique Features:

- The focus on the Kurma avatar and the detailed account of the Samudra Manthan are distinctive features of this Purana. The text's emphasis on both devotion and knowledge as paths to liberation reflects a synthesis of different strands of Hindu thought.



Share



Was this helpful?