பதிக எண்: 1.23. திருக்கோலக்கா தக்கராகம்
பின்னணி:
தோடுடைய செவியன் என்றும் நறவநிறை வண்டு என்றும் தொடங்கும் பதிகங்களை பாடிய தனக்கு ஞானப்பால் அருளிய அன்னையையும், அதற்கு காரணமாக இருந்த தந்தையரையும் நினைத்தவாறே அன்றிரவு உறங்கிய திருஞானசம்பந்தர் அடுத்த நாள் பொழுது விடிந்ததும் திருக்கோயிலுக்கு சென்று தனது தந்தையும் தாயும் ஆகிய பெருமானையும் பிராட்டியையும் வணங்கினார் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் அவர்கள் இருவரையும் வணங்கிய பின்னர் அருகிலுள்ள திருக்கோலக்கா தலம் சென்று ஆங்குள்ள இறைவனை தரிசிக்க விருப்பம் கொண்டார். இந்த விருப்பம் இறைவனின் திருவருளால் தோன்றியது. சீர்காழி தலத்திலே நிலையாக் தங்கியிராமல், பல தலங்களுக்கும் சென்று திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்கள் பாட வேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொண்டார் போலும். மேதகை=மேன்மை பொருந்திய; வெளியே=வெளிப்பட்டு; போத முலை=சிவஞானம் கலந்த பாலினைச் சுரந்த முலை; முன் வணங்கி போற்றி=கோலக்கா தலத்திற்கு செல்வதற்கு முன்னர் வணங்கி; திருக்கோலக்கா தலம் சென்றது திருஞான சம்பந்தரின் முதல் தலயாத்திரை. ஒவ்வொரு தலயாத்திரை மேற்கொள்ளும் முன்னரும், பயணத்தினை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின்னரும், சீர்காழி தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்குவது பிள்ளையாரின் பழக்கமாக இருந்து வந்ததை இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது.
காதலுடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்றிருந்த தங்கள்
தாதையாரையும் வெளியே தாங்கரிய மெய்ஞானம் தம் பால் வந்து
போத முலை சுரந்தளித்த புண்ணியத் தாயரையும் முன் வணங்கிப் போற்றி
மேதகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார்.
இவ்வாறு சீர்காழி தலத்து அண்ணலையும் பிராட்டியையும் திருஞானசம்பந்தர் தந்தையாகவும் தாயாகவும் கருதினார் என்று சேக்கிழார் கூறுவது நமக்கு சம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளிய தேவாரப் (1.50.7) நினைவூட்டுகின்றது. சிவஞானிகள் பலராலும் ஆராயப்படும் தன்மையினை உடைய பெருமானை அன்புடன் சிந்திக்க தனது மனம் பெருவிருப்பம் கொள்கின்றது என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் இறைவனை சிந்திக்கவொட்டாமல் ஐந்து பொறிகளும் செய்யும் மாயத்தைக் குறித்து தான் அஞ்சுவதாகவும் இந்த பாடலில் கூறுகின்றார்.
தாயும் நீயே தந்தையும் நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே
தான் சென்ற வழியில் அலைகள் பெருக ஓடும் காவிரி ஆற்றின் வாய்க்கால்களில் மங்கையர்கள் குடைந்து நீராடுவதை சம்பந்தர் கண்டார் என்று சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் கோலக்கா தலத்தில் பெருமான் குடி கொண்டுள்ள திருக்கோயிலினை வலம் வந்த மூன்று வயதுக் குழந்தை, தனது கைகளால் தாளமிட்டவாறு பெருமானின் புகழினை மடையில் வாளை என்று தொடங்கும் பதிகத்தினை பாடத் தொடங்குகின்றது. தேவாரப் பாடல்கள் இசைப் பாடல்களின் அமைப்பினில் அமைந்தமையால் பாட்டின் இசைக்கு ஏற்ப, கைகளை தட்டியும் நிறுத்தியும் எடுத்தும் குழந்தை தாளமிட்டது என்பதை சேக்கிழார், கைந்நிறைந்த ஒத்து அறுத்து என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். ஒத்து=தாளம், இசையுடன் இணைந்த குரலுக்கு பொருந்திய வண்ணம் கைகளை தட்டுதல். வேணி=சடை;
மெய்ந் நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்பொருளை வேணி மீது
பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழலித் திங்கள் பரிந்து அருளுவானை
மைந் நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால்
கைந் நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை
மேற்கண்ட பாடலில் கூறிய வண்ணம் சம்பந்தர் தான் பாடும் பாடலுக்கு ஒத்த வகையில் தாளமிட்டு வருவதைக் பெருமானின் திருவுள்ளத்தில் அன்பு கசிந்தது போலும். தனது கைகளில் தாளம் இன்றி, கைகள் வலிக்கும் வண்ணம் சிறு குழந்தை கைகளால் தாளமிட்டு வருவதை கண்டு இரக்கம் கொண்ட பெருமான், சிறுவனின் கைகளில், பொற்றாளம் வந்து பொருந்துமாறு அருள் புரிந்தார். அந்த தாளத்தில், நமச்சிவாய மந்திரம் பொறிக்கப் பட்டிருந்தது என்று சேக்கிழார் கூறுகின்றார். செய்ய சடை வானவர்=சிவந்த சடையினை உடைய பெருமான்;
கை அதனால் ஒத்தறுத்துப் பாடுதலும் கண்டருளிக் கருணை கூர்ந்த
செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய நற்செம் பொற்றாளம்
ஐயரவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த
வையம் எலாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே
இறைவனின் அருளினால் தனது கைகளில் வந்து பொருந்திய தாளம் கண்டு மகிழ்வுற்று அந்த தாளம் இறைவன் அருளினால் வந்தது என்பதை உணர்ந்து கொண்ட ஞானக்குழந்தை, அந்த தாளத்தினை முதலில் தனது தலை மீது வைத்துக்கொண்டு கொண்டாடிய பின்னர், இறைவனின் அருளினை வெளிப்படுத்தும் வகையில் தகுந்த முறையில் கடைக்காப்பு பாடி பதிகத்தினை முடித்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திருத் தாளக் கருவி கண்டு
வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயில்
ஏழிசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித்
தாழு மணிக் குழையார் முன் தக்க திருக்கடைக்காப்பு சாத்தி நின்றார்
சீர்காழி தலத்திற்கு தென்மேற்கில் இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம் தற்போது தாளமுடையார் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. பண்டைய காலத்தில் இறைவனை மாசிலா நாயகர் என்றும் இறைவியை பெரிய நாயகி என்றும் அழைத்தனர் என்று ஊரார் கூறுகின்றனர். சம்பந்தப் பெருமானுக்கு இறைவன் தாளம் தந்தருளிய பின்னர், இறைவனை தாளபுரீசுவரர் என்றும் அம்மையை ஓசை கொடுத்த நாயகி என்றும் அழைக்கின்றனர். சம்பந்தர் தனது பதிகத்தில் இறைவனின் பெயரையோ இறைவின்யின் பெயரையோ எங்கும் குறிப்பிடவில்லை. பொதுவாக தங்கத்தால் செய்யப்பட்ட தாளத்தில் ஓசை எழாது. ஆனால் இந்த தாளத்தில் ஓசை எழுந்ததும் ஒரு அதிசயம் ஆகும். இந்த பதிகம் தக்கராகத்தில் பாடும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த முன்னுரையுடன் நாம் சம்பந்தப் பெருமான் அருளிய பதிகத்தின் பாடல்களை இப்போது சிந்திப்போம்.
பாடல் 1:
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கை கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்
உடையும் கொண்ட உருவம் என் கொலோ
விளக்கம்:
மடை=வாய்க்கால்களில் நீரைத் தேக்கி வைத்து, அந்த வாய்க்கால்களில் மடைகள் கட்டி தேவையான வயல்களுக்கு ஆற்றுநீரினை பாய்ச்சுவது வழக்கம்; இவ்வாறு மடைகளால் இயக்கப்படும் வாய்க்கால்களையும் மடை என்று அழைப்பது வழக்கம். சடை பிறை சாம்பல் பூச்சு மற்றும் கீளுடை என்பன பெருமானின் அடையாளங்கள்; குடையும்=குடைந்து நீராடும்; இறைவனது பற்றற்ற தன்மையை குறிக்கும் விதத்தில் மெய்யில் சாம்பல் பூசி கோவண ஆடை அணிந்திருக்கும் நிலையை நமக்கு இந்த பாடல் உணர்த்துகின்றது. மாதர்கள் குடைந்து விளையாடும் பொய்கைகள் கொண்ட தலம் என்று குறிப்பிட்டு, அந்த தலத்திலும், வாசனைப் பொடிகள் பூசி பட்டாடை உடுத்தி ஒய்யாரமாக இல்லாமல் பற்றின்றி விளங்கும் ஈசனை குறிக்கும் சம்பந்தப் பெருமான் இறைவன் ஏன் அவ்வாறு இருக்கிறான் என்ற கேள்வியை கேட்டு, இறைவனது பற்று அற்ற நிலை தான் காரணம் என்ற விடையை நமக்கு சொல்லாமல் சொல்லி விளக்கும் நேர்த்தியை இந்த பாடலில் நாம் காணலாம். எல்லாம் இருந்தும் தான் பற்று அற்ற யோகியாக இருப்பதன் மூலம் உயிர்களுக்கு யோக நெறி காட்டி விடுதலை பெறுவதற்கான வழியையும் காட்டும் தலைவன் என்று பரமனை குறிப்பதை நாம் உணரலாம். கீள் என்றால் கிழிக்கப்பட்டது என்று பொருள். எனவே கீள் என்பதற்கு இடையில் கட்டியுள்ள துணியாலான கயிறு என்று பொருள் கொள்வதே பொருத்தம். சில பதிப்புகளில் கீழ் என்று உள்ளது. அது பொருத்தமற்றது. கீளுடை என்பது அந்த துணிக்கயிற்றுடன் சேர்ந்த கோவண ஆடையைக் குறிக்கும். தான் பற்றற்ற கோலத்தில் இருப்பதன் மூலம், உயிர்களும் உலகப் பொருட்கள் மற்றும் உலகிலுள்ள உயிர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றினை நீக்கி, இனிமேலும் பாசத்தால் பற்றால் ஏற்படும் வினைகளை தவிர்த்து, தன்னை வந்தடையும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்ற பெருமானின் விருப்பம் இந்த நிலை மூலம் உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
நீரினை தேக்கி வைத்து வெளியிடும் மடைகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாட அந்த மீன்களைப் போன்று தங்களது கைகளால் நீரினைக் குடைந்து குடைந்து பெண்கள் நீராடும் நீர்நிலைகள் நிறைந்த கோலக்கா தலத்தில் இறைவன் இருக்கின்றான். தனது சடை முடியினில் பிறைச் சந்திரனை ஏந்திய வண்ணம் உள்ள பெருமான் தனது திருமேனியில் சாம்பலைப் பூசியவாறும் இடுப்பினில் கீளும் கோவணா ஆடையும் அணிந்தவாறு இருப்பதன் காரணம் புரியவில்லையா. இந்த கோலம் பெருமானின் பற்றற்ற நிலையினை உணர்த்துகின்றது. நீங்களும் உங்களது பற்றினை நீக்கிக் கொண்டு மெய்ப்பொருளை உணர்ந்து, வினைகளைக் கழித்துக் கொண்டு வீடுபேறு அடைவதற்கான நிலையினை அடைய வேண்டும் என்பதே பெருமானின் விருப்பம் ஆகும்.
பாடல் 2:
பெண் தான் பாகமாகப் பிறைச் சென்னி
கொண்டான் கோலக்காவு கோயிலாக்
கண்டான் பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே
விளக்கம்:
இறைவன் இருக்கும் நிலையினை முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், பெருமானுடன் இணை பிரியாது இருக்கும் தேவியின் நிலையினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெண்மையை மதித்து பெண்மைக்குத் தனது உடலில் ஒரு பாகத்தை அளித்த தன்மையையும், பிறைச் சந்திரனுக்கு அபயம் அளித்ததையும் இந்த பாடல் குறிப்பிடுகின்றது. தக்கனது சாபத்தினால் பிறைகள் ஒவ்வொன்றாக கழிந்து ஒற்றைப் பிறையுடன் அழிந்து கொண்டிருந்த நிலையில் தன்னைச் சரணடைந்த பிறைச் சந்திரனுக்குத் தனது சடையில் இடம் கொடுத்து அபயம் அளித்த நிகழ்ச்சி பெருமானின் வல்லமையையும் அவரது கருணையையும் குறிப்பிடுகின்றது. உலகினை காக்கும் பொருட்டு கொடிய விடத்தினை உண்ட தியாகச் செயலும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் பற்றற்ற நிலையினையும் எளிமையான கோலத்தையும் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில், அவனது ஆற்றல், கருணை, மற்றும் தியாக உணர்வினையும் இந்த பாடலில் குறிப்பிட்டு இறைவனின் பெருமையை உணர்த்துகின்றார். மேலும் பெருமானின் பற்றற்ற நிலை அவரது இயலாமையால் அல்ல என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.
பொழிப்புரை:
தனது மனைவியாகிய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், தனது சடையில் பிறைச் சந்திரனையும் வைத்துள்ளான். அவன் திருக்கோலக்கா தலத்தில் உள்ள கோயிலைத் தான் உறையும் இடமாக கொண்டுள்ளான். பாற்கடலில் விடம் பொங்கி எழுந்த போது அதன் தாக்கத்தினை தாங்க முடியாமல் தவித்த தேவர்கள், தனது திருப்பாதங்களைத் தங்களது (தேவர்களது) கையினால் தொழுவதைக் கண்ட பெருமான்], உலகம் உய்யும் பொருட்டு அந்த விடத்தினைத் தானே உட்கொண்டான்.
பாடல் 3:
பூணல் பொறி கொள் அரவம் புன்சடை
கோணல் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாட மறை வல்லானையே
பேணப் பறையும் பிணிகள் ஆனவே
விளக்கம்:
பிணிகள்=பிறவியினால் வரும் கேடுகள்; குழகன் என்று இறைவனை சம்பந்தர் கூறுகின்றார். குழகன் என்றால் அழகன் என்று பொருள். தனது முதல் பதிகத்தில் இளநாகம் என்று கூறி நரை, திரை, மூப்பு இல்லாத காரணத்தால் பாம்பு என்றும் இளமையாக இருக்கும் என்று கூறும் சம்பந்தர், இளமையுடன் காணப்படும் நாகம் அழகிய புள்ளிகளைக் கொண்டு அழகாக தோன்றுகின்றது என்று கூறுகின்றார். அழகனுக்கு அழகு சேர்க்கும் அணிகலனான பாம்பு இங்கே விவரிக்கப்படுகின்றது. பொறி என்றால் புள்ளி என்று பொருள். புன்சடை என்றால் சுருண்டு நீண்ட சடை என்று பொருள். மாண என்றால் மாட்சிமை பொருந்திய என்று பொருள். எளிமையாக இருக்கும் பெருமான் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் அழகாக இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார். பூணல்=பூண்+நல்; நல்=அழகிய; பொறி=புள்ளிகள்; பேண=இடைவிடாது தியானம் செய்ய; பேணுதல் என்பதற்கு முறையாக பூசை செய்து தூபம் தீபம் நிவேதனம் காட்டி வழிபடுதல் என்றும் பொருள் கொள்ளலாம்; பறையும்=அழிந்துவிடும்.
பொழிப்புரை:
அழகிய புள்ளிகளைக் கொண்டுள்ள பாம்பினை அணிகலனாக பூண்டுள்ள பெருமான், சுருண்டும் நீண்டும் காணாப்படும் தனது கூந்தலில் வளைந்த பிறைச் சந்திரனை சூடியுள்ளான். அவன் அழகும் இளமையும் பொருந்தி காணப்படுகின்றான். மறைகளில் வல்லவனும் கோலக்கா தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானின் மாண்புகளை இடைவிடாது தியானம் செய்தாலும், முறையாக பூசை செய்து வழிபட்டாலும், பிறப்பு எடுத்ததால் நாம் அடையும் துன்பங்கள் முழுவதும் மறைந்துவிடும்.
பாடல் 4:
தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறி சேர் செங்கையன்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே
விளக்கம்:
தழுக்கொள் பாவம்=உயிரினை உறுதியாக பற்றிக் கொண்டிருக்கும் தீய வினைகளும் அவைகளால் ஏற்படும் தீமைகளும்; மறி=மான் கன்று; இழுக்கா வண்ணம்=தவறாத வண்ணம்;
பொழிப்புரை:
மனிதர்களே, உங்களை இறுகப் பற்றியுள்ள தீய வினைகளும் அந்த வினைகளால் ஏற்படும் துன்பங்களும், தங்களது பிடிப்பினில் தளர்ந்து உங்களை விட்டு விலக வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாயின், மழுப்படையினைத் தாங்கிய செல்வனும், மான் கன்றினைத் தனது சிவந்த கையினில் ஏந்தியவனும், கூட்டமாக உள்ள பூதப் படையினால் சூழப் பட்டவனும், கோலக்கா தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனை தவறாமல் வழிபட்டு வணங்கி வாழ்த்துவீர்களாக.
பாடல் 5:
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே
விளக்கம்:
இறைவனின் அழகினை மூன்றாவது பாடலில் பாடிய சம்பந்தர், இங்கே இறைவியின் அழகை நினைத்து மயில் போன்ற சாயல் உடைய மாது என்று கூறுகின்றார். எந்த செயலையும் தொடர்ந்து செய்தலை பயிலுதல் என்று கூறுவார்கள். நாம் நமது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் கற்றுக் கொண்டே இருப்பதால் தான் கல்வி பயிலுதல் என்று சொல்கின்றனர். எயில்=கோட்டை; சாய=மடிந்து விழ;
பொழிப்புரை:
மயில் போன்று அழகினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும். வலிமையான மூன்று கோட்டைகளை உடைய திரிபுரத்து அரக்கர்கள் மடிந்து விழும் வண்ணம் அந்த மூன்று கோட்டைகளையும் எரித்த எமது தலைவனும் ஆகிய இறைவன் குயில்கள் நிறைந்து வாழும் சோலைகள் உடைய கோலக்கா தலத்தில் உறைகின்றான். அவனை இடைவிடாது தியானம் செய்து வணங்க, நமது பாவங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.
பாடல் 6:
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக்காவுள் எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே
விளக்கம்:
வெடிகொள் வினை=ஒரு வினையிலிருந்து மற்றொரு வினை கிளைத்தெழும் நிலை; நாம் பழைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள வினைகளின் தன்மையால் இந்த பிறவியில் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம். ஆனால் அந்த இன்ப துன்பங்களை அனுபவிக்கும் போது, நமது வினைகள் தாம் இந்த துன்பங்களுக்கு காரணம் என்பதை உணர்வதில்லை; அதற்கு மாறாக வினைகளின் கருவிகளாக துன்பங்களை விளைவிக்கும் மற்றவரை பழித்தும் வெறுத்தும் மேலும் பல வினைகளை தேடிக்கொள்கின்றோம் இதே போன்று இன்பங்களை அனுபவிக்கும் போது, நமது திறமையால் ஏற்பட்ட இன்பங்கள் எனக் கருதி யான் எனது என்ற செருக்கில் ஆழ்ந்து மேலும் பல வினைகளைத் தேடிக் கொள்கின்றோம். இவ்வாறு, முற்றிய தன்மையில் உள்ள வெண்டைக்காய் வெடித்துச் சிதறி பல செடிகளை உருவாக்குதல் போல ஒரு வினை மேலும் பல வினைகளுக்கு முதலாக இருந்து உயிர்களை என்றும் வினைக்குழியில் ஆழ்த்துகின்றன. இவ்வாறு சேரும் வினைகளை ஆகாமிய வினைகள் என்று கூறுவார்கள். வீட்ட=நீக்கிக்கொள்ள;
பொழிப்புரை:
வெடித்துச் சிதறும் முற்றிய காய்களும் கனிகளும் மேலும் பல புதிய செடிகள் உருவாவதற்கு காரணமாக இருப்பது போன்று, மேன்மேலும் பல வினைகளை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும் வினைகளை முற்றிலும் நீக்க விருப்பம் கொண்டுள்ளவர்களே, உங்களுக்கு, அந்த வினைகளை நீக்கிக்கொள்ளும் வழியினை நான் காட்டுகின்றேன்; நறுமணம் மிகுந்த கொன்றை மலர்கள் கலந்த சென்னியை உடையவனும், கொடிகள் கட்டப்பெற்று பல திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோலக்கா தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை சென்றடைந்து பணிந்து, உங்களது வினைகள் நீங்கப்பெற்று நலமுடன் வாழ்வீர்களாக.
பாடல் 7:
நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழுவார் பக்கல் துயரம் இல்லையே
விளக்கம்:
மொய்த்த=சேர்ந்த; தொழுவார் பக்கல் என்ற தொடருக்கு இறைவனைத் தொழும் அடியார்களைச் சார்ந்து இருக்கும் மனிதர்கள் என்று பொருள் கொண்டு, அவர்களுக்கும் துயரங்கள் இருக்காது என்று சம்பந்தர் கூறுவதாக விளக்கம் அளிக்கப்படுகின்றது.
பொழிப்புரை:
நெருக்கமாக செழித்து வளர்வதால் நிழல் பொருந்தி விளங்கும் சோலைகளில் நீலநிறம் உடைய வண்டுகள், புல்லாங்குழலில் வரும் இசை போன்று ரீங்காரம் செய்யும் கோலக்கா தலத்தில் உள்ள இறைவனது, வீரக்கழல்கள் பொருந்திய திருப்பாதங்களைத் தங்கள் கைகளால் தொழும் அடியார்களின் பக்கம் துன்பங்களும் துயரங்களும் வாரா.
பாடல் 8:
எறியார் கடல் சூழ் இலங்கைக் கோன் தனை
முறியார் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறியார் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே
விளக்கம்:
எறியார் கடல்=அலைகள் எறியும் கடல்; தடக்கை=அகன்ற கைகள், இங்கே தோள்கள் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும்.
பொழிப்புரை:
உயரமான அலைகள் பலவற்றை வீசி எறியும் கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவின் தலைவனாகிய அரக்கன் இராவணனின் அகன்ற தோள்களை முறித்து நெருக்கிய இறைவன் சிவபெருமான். இந்த இறைவனை, குறியாகக் கொண்டு பண்கள் பொருந்திய பாடல்களை முறையாக இசைத்து வழிபடும் அடியார்களின் வினைகள் முற்றிலும் நீங்கிவிடும்.
பாடல் 9:
மடையில் வாளை (1.23) பாடல்கள் 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0016)
நாற்றம் மலர் மேல் அயனும் நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும் காண்கிலாக்
கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே
விளக்கம்:
நாற்றம்=நறுமணம்;
பொழிப்புரை:
நறுமணம் மிகுந்த தாமரை மேல் உறையும் பிரமனும், ஆற்றல் மிகுந்த ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு கிடக்கும் திருமாலும் காண இயலாமல் நின்றவனும், காலனை உதைத்து வீழ்த்தியவனும், அழகும் இளமையும் ஒருசேர பொருந்தி திகழ்பவனும் ஆகிய இறைவன் திருக்கோலக்கா தலத்தில் உறைகின்றான்; எருதினை வாகனமாகக் கொண்டுள்ள அந்த இறைவனின் திருவடிகளைப் போற்றி வாழ்வீர்களாக.
பாடல் 10:
மடையில் வாளை (1.23) பாடல்கள் 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0016)
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
உற்ற துவர் தோய் உருவிலாரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றி பரவப் பறையும் பாவமே
விளக்கம்:
பெற்ற மாசு=நீராடுதளைத் தவிர்ப்பதால், சுற்றுப்புறத்திலிருந்து உடலுக்கு ஏறிய அழுக்குகள்; பிறக்கும்=தோன்றும்;
பொழிப்புரை:
நீராடுவதைத் தவிர்ப்பதால் தங்களது உடலினில் சேரும் அழுக்குகளுடன் தோன்றும் சமணர்களும், துவராடையினால் தங்களது உடல் முழுவதையும் மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குறைகள் உடைய சமய நெறிகளை மேற்கொண்டு உள்ளதால், அவர்கள் கோலக்காவில் உறையும் இறைவனை, தங்களது தெய்வம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அவர்களை பார்த்து தவறான வழியில் செல்லாமல்; நீங்கள் கோலக்கா இறைவனைப் பற்றிக்கொண்டு போற்றி வழிபட, உங்களது பாவங்கள் தீர்ந்துவிடும்.
பாடல் 11:
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே
விளக்கம்:
நலங்கொள்=இயற்கை வளம் பொருந்திய; குலங்கொள்=பண்பினால் உயர்ந்த குலத்தினை உடையவர்களாக விளங்கிய; வலம்கொள்பாடல்=திருவருளினால் வல்லமை பெற்று விளங்கும் பாடல்; உலம்=மலை; கோலக்கா தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தினை பாடும் அடியார்களின் வினைகள் மலை போன்று உயர்ந்தும் வலிமை உடையதாகவும் விளங்கினும், அத்தகைய வினைகளும் தீர்ந்து விடும் என்று சம்பந்தர் கூறுவது, அவரது நமச்சிவாயப் பதிகத்தின் பாடலை (3.49.6) நினைவூட்டுகின்றது, மந்தர மலை போன்ற அளவு பாவங்களைச் செய்ததால் வலிய வினைகளால் கட்டுண்டவர்களாக இருப்பினும், அவர்கள் திருவைந்தெழுத்தினை உச்சரித்தால் அவர்களது கொடிய வினைகளும் சிந்திவிடும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நந்தி=சிவ பெருமான்;
மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனை அவர் தாமும் பணிவரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே
திருவருளினால் வல்லமை பெற்றுத் திகழும் பாடல் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தில் பொற்றாளம் பெற்ற குறிப்பு எங்கும் காணப்படவில்லை. ஆனால் நம்பியாண்டார் நம்பி அருளிய பாடல்கள் மற்றும் சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்களில் இந்த குறிப்பு காணப்படுவதை நாம் இந்த பதிகத்து விளக்கத்தின் முடிவுரையில் காணலாம். வல்லமை வாய்ந்த பாடல் என்று குறிப்பாக, நடந்த அதிசயத்தை, சம்பந்தர் உணர்த்துகின்ராரோ என்று தோன்றுகின்றது. இந்த பதிகத்தினை தினமும் நம்பிக்கையுடன் ஓதினால் பேச்சுத் திறமை வளரும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர், பிறவி ஊமையாக இருந்த தனது மகன், இந்த தேவாரப் பதிகத்தின் உதவியால், பேசும் சக்தியைப் பெற்றதால் மனம் மகிழ்ந்த தாய், பொன்னால் செய்யப்பட்ட தாளம் ஒன்றினை இறைவனுக்கு அளித்தது இன்னும் திருக்கோயிலில் உள்ளது.
பொழிப்புரை:
இயற்கையாகவே நலங்கள் பல பெற்று வளமுடன் திகழும் சீர்காழி நகரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினராக விளங்கும் மனிதர்கள் வாழும் கோலக்கா நகரத்தினில் உறையும் இறைவனைக் குறித்து அருளிய பதிகத்தினை, நல்ல பலனை அளிக்கவல்ல இந்த பதிகத்தினை ஓதும் அடியார்களின் வினைகள் மலை போன்று அளவில் பெரியதாகவும் வலிமை வாய்ந்ததாக இருப்பினும் அடியோடு நீங்க அவர்கள் இன்பமுடன் வாழ்வார்கள்.
முடிவுரை:
திருஞானசம்பந்தர்க்கு இறைவன் தாளம் அளித்த செய்தியை நம்பியாண்டார் நம்பி அவர்கள் தனது ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி மற்றும் ஆளுடைப் பிள்ளையார் மும்மணிக் கோவை பதிகங்களில் (பதினோராம் திருமுறை), எழுத்தஞ்சும் இட்ட செம்பொற் தாளம் ஈந்த என்றும் செம்பொன் தாளம் அவையே என்றும் குறிப்பிடுகின்றார். சம்பந்தருக்கு இறைவன் தாளம் ஈந்த நிகழ்ச்சியை, இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் சுந்தரர் குறிக்கிறார். சம்பந்தரை நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பியவர் என்றும் இந்த பாடலில் சுந்தரர் புகழ்கிறார்.
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அம் கணன் தனை எண் கணம் இறைஞ்சும்
கோளிலிப் பெரும் கோயில் உளானைக் கோலக்காவினில் கண்டு கொண்டேனே
சம்பந்தர் தாளம் பெற்ற நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. அன்று சம்பந்தரின் திருவுருவம் சீர்காழியிலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அந்த திருவுருவத்திற்கு தாளம் வழங்கப்படும். அடுத்த நாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சம்பந்தரின் திருவுருவம் சீர்காழிக்கு எடுத்துச் செல்லப்படும். இறைவன் அளித்தது பொற்றாளம் என்பதால், முதலில் ஓசை எழவில்லை என்றும், பின்னர் இறைவியின் அருளால் தாளத்திலிருந்து ஓசை எழுந்தது என்றும் அந்த காரணம் பற்றியே இறைவிக்கு ஓசை கொடுத்தநாயகி என்று பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். இந்த குறிப்பு பெரியபுராணத்தில் காணப்படவில்லை. இந்த செய்தி செவிவழிச் செய்தியாக உள்ளது. சிவஞானத்துடன் குழைத்த ஞானப்பால் அளித்து மூன்று வயது சிறுவனை பாட வைத்த தாயின் கருணை உள்ளம், தாளத்தினில் ஓசை வருமாறு அருள் புரிந்ததும் இயற்கை தானே.
நடந்த அதிசயத்தைக் கண்ட தேவர்கள் வானில் குழுமி மலர்மாரி பொழிந்தார்கள் என்றும், இசையில் வல்ல நாரதர் தும்புரு ஆகியோர், தாளத்திலிருந்து எழுந்த நல்லோசை கேட்டு, அருள் புரிந்த இறைவனையும், இறைவனின் அருளுக்கு தகுதியுடன் விளங்கிய திருஞான சம்பந்தரையும் போற்றினார்கள் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். சிறிய குழந்தை தாளத்துடன் நடந்து செல்வதைக் கண்ட அவரது தந்தையார் பொறுக்க முடியாமல், அந்த குழந்தையைத் தனது தோள்களின் மீது தூக்கிக்கொண்டு, சீர்காழி திருக்கோயிலை சென்றடைந்தார். காதலுடன் அணைந்து (பாடல் எண்; 100) என்று தொடங்கும் பெரிய புராணப் பாடலில், சிவபெருமானை ஞானசம்பந்தரின் தாதை என்று குறிப்பிட்ட சேக்கிழார், கீழ்க்கண்ட பாடலில், பெருமானிடமிருந்து வேறுபடுத்தக் காட்டும் நோக்கத்துடன் சிவபாத இருதையரை குலத்தாதையர் என்று குறிப்பிடுவதை நாம் கீழக்கண்ட பாடலில் காணலாம்.
செங்கமல மலர்க் கரத்துத் திருத்தாளத்துடன் செல்லும் போது
தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மீது தரித்துக் கொள்ள
அங்கவர் தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்
திங்கள் அணி மணிமாடத் திருத்தோணிச் சிகரக் கோயில்
பெரும்பாலான பதிகங்களின் கடைப் பாடலில், பதிகத்தின் பலனை உணர்த்தும் திருஞானசம்பந்தர், பாடல் வல்லவர்கள் என்று கூறுவதை நாம் உணரலாம். பாடலை நன்றாக கற்று, அதற்குரிய இசையுடன் பொருந்தியவாறு, பாடலின் பொருளினை உணர்ந்துகொண்டு மனம் ஒன்றியும் பாடுவோரையே பாடல் வல்லார் என்று கூறுகின்றார். நாம் திருஞானசம்பந்தர் அருளிய இந்த பாடலை, கருத்துணர்ந்துக் கற்று, பிழையேதும் இன்றி, இசையுடன் பொருந்தும் வண்ணம் பாடி, சம்பந்தப் பெருமான் குறிப்பிட்ட பலன்களைப் பெற்று வாழ்வினில் உய்வினை அடைவோமாக.
மடையில் வாளை (Madaiyil Vaalai) is a phrase that refers to the Vaalai fish (a type of long, slender fish, often identified as eel or snakehead fish) found in a madai, which is a pond, tank, or a shallow water body. This phrase evokes imagery of a fish in its natural habitat, often symbolizing freedom, agility, and the vitality of life in water.
மடை (Madai): Refers to a water body, typically a pond, tank, or dam, often used in agricultural settings or natural reservoirs. It is a source of life and sustenance, where fish thrive.
வாளை (Vaalai): Refers to a specific type of fish that is long, agile, and known for its swift movements in water. In Tamil culture, the Vaalai fish is often admired for its speed and grace in water.
"மடையில் வாளை" can be interpreted as "a Vaalai fish in the pond" or "a fish in its natural habitat." The image is one of a graceful, free-moving creature in water, symbolizing vitality, freedom, and the natural balance of life.
Fish in Water (Life and Freedom): The fish in water is often used as a metaphor for freedom and vitality. It moves swiftly and naturally in its element, symbolizing ease, agility, and the flow of life.
Abundance and Prosperity: In many cultures, fish are symbols of prosperity, abundance, and fertility. A pond full of fish suggests a thriving, self-sustaining ecosystem.
Water as a Source of Life: The madai (pond) represents a nurturing space that supports life. It is symbolic of nature’s ability to sustain and nurture living beings.
In a broader sense, this phrase could be used metaphorically to describe someone who is in their element—a place where they are most comfortable and able to thrive. Just as a fish moves effortlessly in water, a person who is in a familiar and supportive environment can excel and succeed.
In Tamil literature and poetry, such imagery is often used to depict natural beauty, the harmony between living beings and their surroundings, and the ease with which life flourishes in a supportive environment.
"மடையில் வாளை" is a simple yet evocative phrase that highlights the beauty of natural life and the connection between living beings and their environment. It symbolizes freedom, vitality, and the natural harmony found in nature. In a metaphorical sense, it can also represent someone thriving in their most natural and supportive setting, moving with grace and confidence like a fish in water.