இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மதுரைக் காஞ்சி

Madurai Kanchi, also known as Maturai Kānci, is one of the classical Tamil literary works from the Sangam period and is included in the Pattuppāṭṭu (Ten Idylls) anthology. It is a significant text that provides a detailed account of the city of Madurai, one of the most important and ancient cities in Tamil Nadu.

மதுரைக் காஞ்சி

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப்பாட்டின் தொடக்கத்தில் திரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.



நூலாசிரியர் மாங்குடி மருதனார் வரலாறு:



பண்டைநாள் தண்டமிழ் இலக்கியங்களில் தலைசிறந்து விளங்கும் பத்துப்பாட்டின்கண், ஆறாவது எண்ணுமுறைக்கண் நின்ற மதுரைக்காஞ்சி என்னும் இன்சுவைப் பனுவலை இயற்றியவர் மாங்குடி மருதனார் என்னும் நல்லிசைப் புலவராவார். மாங்குடி கிழார், மதுரைக்காஞ்சிப் புலவன், காஞ்சிப்புலவன் என்னும் பெயர்களாலும் இவர் வழங்கப்படுகின்றனர். இவர் வேளாண் மரபினர் என்ப. மாங்குடிகிழார் என்பதன்கண் கிழார் என்னும் வேளாண் மரபிற்குரிய பெயருண்மை அவர் அம்மரபினர் என்றற்குச் சான்றாம். இவர் இயற்றிய மதுரைக்காஞ்சியினாதல், பிற பனுவல்களினாதல் இன்ன சமயத்தினர் இவர் எனத் துணிதற்குச் சான்றுகளில்லை. மதுரைக்காஞ்சியில் சைவ சமயம், பவுத்த சமயம், அமண் சமயம் முதலிய சமயங்களை இவர் கூறுமிடத்தும் தாம் எச்சமயச் சார்புடையார் என்பது தோன்றாததொரு பொது நிலையினின்று அவையிற்றைச் சமனிலையிலேயே நன்கு மதித்து ஓதுகின்றார். ஆதலின் இவர் வள்ளுவர் போன்றும், இளங்கோவடிகள் போன்றும், எல்லாச் சமயங்களையும் வீடுபேற்றிற்குச் சிறந்த படிவழிகள் என்றே மதித்துப் போற்றும் சமயங்கடந்த ஒரு பொது நிலையுற்ற சான்றோர் எனக் கொள்ளல் வேண்டும்.

மதுரைக்காஞ்சியில், மழுவாள் நெடியோன் தலைவனாக, மாசற விளங்கிய யாக்கையர், சூழ்சுடர் வாடாப்பூவின் இமையா நாட்டத்து, நாற்ற வுணவின் உருகெழு பெரியோர்க்கு எனப் பாராட்டி யிருத்தலான், இவர் சைவசமயத்தவர் என்பது அறியப்படும் என்பாரும் உளர். இங்ஙனமே இப்புலவர் பெருமான் சென்ற காலமும் வரூஉ மமயமும், இன்றிவட்டோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து, வானும் நிலனுந் தாமுழுதுணரும், சான்ற கொள்கைச் சாயா யாக்கை ஆன்றடங்கு அறிஞர் எனச் சமணசமயத்துத் துறவிகளைப் பாராட்டும் போதும், ஒருகால் இவரும் சமணரோ என எண்ண இடந்தருதல் காண்க.

மாங்குடி மருதனார் சிறந்த சமயங்கள் அனைத்திற்கும் உள்ளீடாய், உயிராய் அமைந்த சீரிய கொள்கையாகிய ஒன்றனையே மேற்கொண்டவர் ஆவார். அதுதான் யாதோ எனின், அற்றது பற்றெனின் உற்றது வீடு என்னும், எச்சமயத்தார்க்கும் பொதுவாகிய ஒரு மெய்க்கொள்கையே யாகும். இப்புலவர்பெருமான் நூலை ஓதுவார், இவர், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவர் என்பதனையும் உணர்ந்து கொள்ளக்கூடும்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் அவையகத்தே வீற்றிருந்த நல்லிசைப் புலவர்களினும், இவர் தலைசிறந்து விளங்கியவர் என்பதனை, அம்மன்னர் பெருமான் ஓதிய வஞ்சினக் காஞ்சித்துறைபற்றிய மறப்பாடலின்கண்,

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர்

எனவரும் அடிகள் நன்கு விளக்கும். இவ்வடிகள் தாமே, அம்மன்னர் பெருமான் இந்நல்லிசைப் புலவர்பாற் கொண்டுள்ள நன்மதிப்பையும் விளக்குதல் காண்க. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மன்னனாகும் பெருமையுடையானாதல் கிடக்கச் சிறந்த நல்லிசைப் புலவனுமாவான் என்பதனை, அவன் ஓதிய இவ்வஞ்சினக் காஞ்சியே நமக்கு விளக்கும். ஒருகால் மாங்குடி மருதனார் இம் மன்னர் பெருமானுக்கு நல்லாசிரியராய்த் திகழ்ந்து அவன் புலமையை வளர்த்தவருமாகலாம், என எண்ணவும் இடனுளது. இக் கருத்தை வலியுறுத்தப் பிற சான்றுகளும் உள்ளன.

காஞ்சி பாடுதற்குற்ற காரணம்: நெடுஞ்செழியன் இளமையில் மாங்குடி மருதனாரின் உடனுறைவாற் புலமை உள்ளம் நிறையப் பெற்றவனாய்ப் பனுவல் யாக்கும் திறம் படைத்தான். அவ் விளமையிற்றானே அவன் அரசு கட்டிலேறினான். அங்ஙனம் இளமையில் அரசுகட்டில் ஏறியதற்குக் காரணம், அவன்றந்தை அக்காலத்தே மாய்ந்தான் என்பது போலும். புலவரோடு உடனுறைந்து புலமையுள்ளம் முதிர்வதன் முன்னரே அரசுகட்டி லேறினான் செழியன். அவன் இளமையானும் வேறு பிற காரணங்களானும் அப்போதே அவனுக்குப் பல்வேறு பகைகள் கிளர்ந்தெழுந்தன. தலையில் அரசமுடி சூட்டியவுடன் கையில் வில்லேந்திப் போர்க்களம் புக வேண்டிய நிலை செழியனுக்கு இயற்கையின் நிகழலாயிற்று. இக் காலந்தொடங்கி நெடுஞ்செழியன் போர்ச்செயலில் ஈடுபட்டு ஊக்கத்தோடு உலகெலாம் வியக்கும்படி போரின்மேற் போர் வெற்றியின்மேல் வெற்றியாக எய்தி அத்துறையில் ஒப்பின்றித் திகழ்வானாயினன்.

இவன் காலத்து நல்லிசைப்புலவர் பலரும் இவன் போர்த்திறத்தையும் புகழையும் பலபடப் பாரித்து ஓதினர். இப்புலவர்களில், சிறந்த புலவராகிய மாங்குடி மருதனார் ஏனைப் புலவர்போன்று இவன் வெற்றியையும் வீரத்தையும் கண்டு மகிழ்ந்தனரேனும், அத் துறையின்கண் அவன் அளவின் விஞ்சி வெற்றியே! புகழே! என்னும் பற்றுள்ளத்தோடே மேன் மேலும் உழலுதல் கண்டு தம் முள்ளத்தூடே நொந்தனர். இளமையில் அறிவுத்துறைபற்றி வளர்ந்த இவன் உள்ளம் இவ்வாறு இப் போர்த்துறையில் ஆழ்ந்து மீளாவகை புதையலாயிற்றே! என வருந்திச் செவ்வி போந்தபோதெல்லாம் செழியனின் மறத்துறைப் போக்கை இடித்துரைகளால் தகைத்தே வரலாயினர். செழியனை மீண்டும் அறிவுத்துறையில் ஈடுபடுத்தச் செய்த முயற்சியின் பயனே இம் மதுரைக்காஞ்சி என அறிதல் வேண்டும். மன்னரைச் சார்ந்தொழுகுதல் மிக்க பெருமைதரும் செயலே எனினும், அச்செயலின்கட் சிறு தவறு நேர்ந்த விடத்தும் அது மிக்க இன்னலையே விளைவித்துவிடும். இதனை,

கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர் (குறள் - 699)

என்றும்,

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும் (குறள் - 700)

என்றும்,

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும் (குறள் - 698)

என்றும்,

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் (691)

என்றும் எழுந்த தமிழ்மறையான் உணரலாம்.

மன்னன்பால் பேரன்புடைய மாங்குடி மருதனார் ஏனைய புலவர் போலன்றி அவன் மிகுதியை இடித்துரைத்து மாற்றி மீண்டும் நன்னெறிக்கண் செலுத்தும் பொருட்டுக் குறிப்பறிந்து காலங்கருதி வேண்டுப வேட்பச் சொல்லும் செவ்வியை நோக்கி அமைதியோடிருந்தார். அத்தகைய தொரு செவ்வியும் நேர்ந்தது. அச் செவ்வியிலே தம் கருத்தினைச் செழியனுக்கு அறிவுறுத்தத் தொடங்கி, அவன் குறிப்பறிந்து, அவன் வேட்கும் ஆறறிந்து, இம் மதுரைக்காஞ்சியை அறிவுறுத்துவாராயினர். இம் மதுரைக்காஞ்சியின்கண் அம் மன்னன் வேட்கும் சிறப்புக்களையே புகழ்வார் போன்று பாடிய பகுதிகளே மிக்கிருக்கின்றன. எனினும் தம் கருத்தாகிய நிலையாமை யுணர்த்து தலையே யாண்டும் குறிப்பாகப் புலப்படுத்தியுள்ள இவர் வித்தகம் உன்னி உன்னி மகிழற்பாற்று. தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் திருக்குறளின்கண் நீத்தார் பெருமை கூறுமிடத்து,

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு (குறள் - 21)

என்ற அருமைத் திருக்குறளின் கருத்தையே இப்புலவர் பெருமான் பாண்டியனுக்கு விளக்கமாகச் செவியறிவுறுத்தார். இவர் செவியறிவுறுத்த முறையை உரைப்பாயிரத்துக் காட்டுதும் : ஆண்டுக் காண்க. இவ்வாற்றால் இப் புலவர்பெருமான் செழியனுக்கு ஞானாசிரியனுமாக விளங்கினார். இத் துறைபற்றி இவர் இச் செழியனுக்கு அறிவுறுத்த பனுவல் ஒன்று புறநானூற்றில் உளது. அஃது இம் மதுரைக்காஞ்சியின் சுருக்கமாகத் திகழ்கின்றது. (புறம் - 24)

பண்டைநாளில் தமிழ் வேந்தர் ஆட்சிக்கீழ்த் தமிழ் மக்கள் அமைந்து வாழ்ந்த சிறப்பினை இற்றை நாள் யாம் அறிதற்குச் சிறந்த சான்றாகத் திகழ்வனவற்றுள் இம் மதுரைக்காஞ்சி தலை சிறந்ததாக இருக்கின்றது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சிக்கீழ் அமைந்த அம் மதுரையின் அழகை - ஆண்டு வாழ்ந்த மக்களின் ஒழுக்க முதலியவற்றை, இன்று நம் முன்னர்க் கண்கூடாகக் காட்டும் ஒரு தெய்வத் தீம்பாடலே மதுரைக்காஞ்சி. நிலையாமை பாடிய மாங்குடி மருதனார் நிலையில்லாத காலத்தையும், அக் காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் உலகம் உள்ள காலமெல்லாம் நிலைத்து நிற்கச் செய்ததொரு தெய்விக வித்தையே மதுரைக்காஞ்சி.

நெடுஞ்செழியன் போர்புரிவதில் ஒப்புயர்வற்று விளங்கினான், என்னில் புலவர்பெருமான் மாங்குடி மருதனார் அப்போரைப் பாடுவதில் ஒப்புயர்வற்று விளங்குகின்றார். இவர் ஒரு சில அடிகளிலே நம் கண்முன்னர் அச்சமிக்க போர்க்களம் ஒன்றனை ஆக்கிவிடுகின்ற திறத்தை,

விழுச்சூழிய விளங்கோ டைய
கடுஞ்சினத்த கமழ் கடாஅத்து
அளறுபட்ட நறுஞ்சென்னிய
வரைமருளும் உயர்தோன்றல
வினைநவின்ற பேர்யானை
சினஞ்சிறந்து களனுழக்கவும்
மாவெடுத்த மலிகுரூஉத்துகள்
அகல்வானத்து வெயில்கரப்பவும்
வாம்பரிய கடுந்திண்டேர்
காற்றென்னக் கடிதுகொட்பவும்
வாண்மிகு மறமைந்தர்
தோண்முறையான் வீறுமுற்றவும்

எனவரும் அடிகளால் ஓதியுணர்க. தொல்காப்பியத்தில் புறத்திணைபற்றி எழுந்த போர்த்துறைகளுக்கு இவர் பாடிய மதுரைக்காஞ்சி எடுத்துக் காட்டுக்கள் பல உடைத்து. செய்யுளின்பம் செறிய இவர் யாத்துள்ள மதுரைக்காஞ்சியின் பெருமை எம்மால் எடுத்துரைக்கும் எளிமைத்தன்று. இம் மதுரைக் காஞ்சியேயன்றி நற்றிணையில் 2-ம், குறுந்தொகையில் 3-ம், அகநானூற்றில் 1-ம், புறநானூற்றில் 6-ம், திருவள்ளுவ மாலையில் 1-ம், இவர் இயற்றிய பனுவல்கள் உள்ளன. இவர் காலத்துப் புலவர்கள் குடபுலவியனார், கல்லாடனார், இடைக்குன்றூர்க் கிழார், நக்கீரர் முதலியோராவர்.

பாட்டுடைத் தலைவன் வரலாறு: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்!

மதுரைக்காஞ்சி என்னும் இவ்வாடாத தண்டமிழ்ப் பூந்தொடையல் சூட்டப்பெற்ற மன்னர் பெருமான் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவான். பாண்டிய மன்னரில் நெடுஞ்செழியன் என்ற பெயருடையார் பிறரும் உளர்; அவர், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், அரசு கட்டிலிற் றுஞ்சிய நெடுஞ்செழியன் என வெவ்வேறு அடைமொழிகளுடன் வழங்கப்படுவர். தலையாலங்கானம் என்னுமிடத்தே முடிவேந்தர் இருவரும் வேளிராகிய குறுநில மன்னர் ஐவரும் ஆகிய ஏழு மன்னர்களையும், தனது கன்னிப் போரில் இம் மன்னன் உலகம் வியக்க வென்று வாகை புனைந்த சிறப்புப்பற்றித் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என வழங்கப்பட்டான்.

இம் மன்னர் பெருமான் பால்மணமாறாத இளமைப் பருவத்திலேயே அரசு கட்டில் ஏறுஞ் செவ்வியைப் பெற்றான். இங்ஙனம் இளமையிலேயே அரசுரிமை ஏற்றுக் கோடற்குக் காரணம் இவன் அப்பருவத்திலேயே தன்றந்தையை இழந்தமையே ஆதல் வேண்டும். நெடுஞ்செழியனின் தந்தை இறந்ததும், இவன் மிக இளமைப்பருவத்தே முடி ஏற்றதும், இப் பாண்டியர்பால் பழம்பகையொடு இவர்க்கு அடங்கிக்கிடந்த மன்னர் பலருக்கும் தம் பழம் பகைமை தீர்த்துப் பாண்டி நாட்டைக் கைப்பற்றற்குரிய நல்ல செவ்வியாகத் தோன்றியதனால், இளைதாக முள் மரங் கொல்க என்னும் முறைபற்றி அப்பகை வேந்தர் பலரும் ஒருங்கு திரண்டு நெடுஞ்செழியனை அழித்துப் பாண்டி நாட்டைக் கைபற்றப் படைகொண்டு புறப்பட்டனர். நெடுஞ்செழியன் மறத் தெய்வமாகிய கொற்றவையின் திருவருள் மிகப் பெற்றவன் போலும்; அவ் விளம்பருவத்தேயே ஒரு சிறிதும் அஞ்சாது,

நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளைய னிவனென வுளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தோள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாமென்(று)
உறுதுப் பஞ்சாது உடல் சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ(டு)
ஒருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா இன்மையா னுறவே (புறம் - 72)

என்னும் - என்றென்றும் அழியாத - வஞ்சினங் கூறி அப்பகை மன்னரை எதிர்த்துக், காலென்னக் கடிதுராஅய் நாடு கெட எரிபரப்பி ஆலங்கானத்து அஞ்சுவரப் போரில் கொன்று, அவர் முரசு கொண்டு தன் வஞ்சின முற்றுவித்தான். அத் தலையாலங் கானத்துப் போரில் இவனை எதிர்த்து மாண்ட மன்னர் சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன், என்பவர் ஆவர். அப் போரிலேயே கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்னும் சேர மன்னன் சிறைப்படுத்தப்பட்டான்.

மிக்க இளைஞனாயிருந்தும் முடிவேந்தர் இருவரையும், வேளிர் ஐவரையும் ஒருதானாகி எதிர்த்து வென்று நூழிலாட்டிய மறப்பெருமையை அக்காலத்தே உலகம் பெரிதும் வியப்பதாயிற்று. இவ்வெற்றியை நல்லிசைப் புலவர் பலரும் பாராட்டிப் பாடினர். அப்பாடல்கள் புறநானூற்றில் மிளிர்கின்றன. அவையிற்றுள், செழியனின் மறச்சிறப்பை நேரிற்கண்ட இடைக் குன்றூர் கிழார் என்னும் புலவர் பெருமான் அவன் இளம் பருவத்தையும் அப் பருவத்திற் கேலாத பெரிய மறச் செயலையும் வியப்பாராய் ஒருவனை ஒருவன் கொல்லுதலும், ஒருவற் கொருவன் தோற்றலும் புதிதன்று; அஃது இவ்வுலகத்தின் கண்ணே தொன்று தொட்டு நிகழும் இயல்பேயாம்; வேம்பினது பெரிய கொம்பின் கண் உண்டாகிய ஒள்ளிய தளிரை உழிஞைக் கொடியுடனே செறியத் தொடுத்த தேன்மிக்க மாலையை வளைய மாலையுடனே சிறப்பச் சூடி, ஓசையினிய தெளிந்த போர்ப்பறை ஒலிப்பக் காட்சிதக, நாடுபொருந்திய செல்வத்தினையுடைய பசும் பொன்னாற் செய்த பூணையுமுடைய செழியனின் பெருமையும் உயர்ந்த தலைமையும் உணராதவராய், தம்மிற் கூடிப் பொருதுமென்று தன்னிடத்து வந்த இருபெரு வேந்தரும் ஐம்பெரு வேளிருமாகிய ஏழரசருடைய நல்ல வென்றி அடங்கும்படி தான் ஒருவனாய் நின்று போர் செய்து கொல்லுதலாகிய அதிசயத்தை இன்று யாம் கண்கூடாகக் காண்டலே அன்றி இதற்குமுன் இத்தகைய நிகழ்ச்சியைக் கேட்டும் அறிந்திலோம், என்றும்.

இத்தகைய வியத்தகு போரை யாற்றிய நெடுஞ்செழியனோ, இப்போது தான் குழந்தைப் பருவத்திற்கிட்ட கிண்கிணி களையப் பெற்றான். உடனே அக்கால்களிலே மறவர்க்குரிய வீரக் கழலைக் கட்டினான். அணித்தே குடுமி களையப்பட்ட தனது சென்னியில் வேம்பையும் உழிஞையையும் உடனே சூடினான். சிறுவர்க்குரிய குறுந்தொடி கழிக்கப்பட்ட சிறு கையில் உடனே வில்லை ஏந்தினான். குழந்தைப் பருவத்திற்கிட்ட ஐம்படைத்தாலி இன்னும் அவன் மார்பிலே திகழ்கின்றது. பாலுணவை ஒழித்து இன்று தான் உணவும் உண்டான்; அப்பால்மண மாறாத வாயினையுடைய இளைஞனோ இன்று இப்போர்க்களத்தே கொடுஞ்சித் தேர் பொலிய நிற்கின்றவன்! இத்துணைச் சிறுவன் முறை முறையாகத் தன்மேல் மண்டி வருகின்ற புதிய வீரரை மதித்தலும் இலன்! அவமதித்ததும் இலன்! அவரை இறுகப்பிடித்து விண்ணில் ஒலியெழும்படி கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணே பொருந்தக் கொன்றதற்கு மகிழ்ந்ததும் இலன்! இவ்வருஞ் செயல் செய்தோமே எனத் தன்னை மிகுத்தல் அதனினும் இலன்!! என்றும் வரும் கருத்தமையப் பாடிய பாடல்கள் அம் மன்னனின் மறச் சிறப்பை முழுதும் உணரப் போதிய சான்றாம்.

நகுதக்கனரே என்றெடுத்துக் காட்டிய பாடல் ஒன்றே இம் மன்னர் பெருமான் புலவர் பெருமானாகத் திகழ்ந்தான் என்பதை உணர்த்தும். மேலும் புரவலர் பெருமானாகவும் இவன் திகழ்ந்தான். இம் மன்னனின் மாண்பு முழுதும் மதுரைக்காஞ்சியையும் புறத்தின் கண்ணுள்ளனவாய் இவனைப்பற்றி எழுந்த பாடல்களையும் ஓதி உணர்தல் வேண்டுமன்றி ஈண்டு விரித்தற் கியலாது. இளம்பருவத்தே போரிற்புக்க இந்நெடுஞ்செழியன் நாளடைவில் இந்நாவலந்தீவு முழுதும் தன்னடிப்படுத்துவான் ஆனான். தொட்டிற் பழக்கம் சுடுகாடுமட்டும் என்ற பழமொழிக்கேற்ப இவன் மேலும் மேலும் போர்த்துறையில் பெரிதும் ஊக்கமும் பொருட்பற்றும் உடையனாய் உழலுதல் கண்டு இவன்பாற் பேரன்புடைய புலவர் பெருமான் இம் மன்னனுக்கு நிலையாமை யுணர்த்தி வீடு பேறு எய்துவிக்க விழைந்து அதற்குரிய காலமும் செவ்வியும் தேர்ந்து இம் மதுரைக் காஞ்சி யென்னும் பனுவல் மாலையை யாத்துச் சூட்டிப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று அறக்கள வேள்வி செய்வானாய், நிலந்தரு திருவிற் பாண்டியன் போன்று மெய்யுணர் வித்தகனாய்,

இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினிது உறைமதி

இங்ஙனமின்றி, நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மை கடை என அறிதி! எனக் காஞ்சியறிவுறுத்தி, அந்தமிலின்பத்து அழியாவீட்டிற்கு நெறிப்படுத்தினர் என்ப. இப் பத்துப் பாட்டினுள் இம் மதுரைக்காஞ்சியே அன்றி நெடுநல்வாடை கொண்டவனும் இவ் வேந்தர் பெருமானே ஆவான்.

அறிமுகம்

மதுரைக் காஞ்சி என்னும் இத்தீஞ்சுவைப் பனுவலின் சொற்பொருள் இன்பங்களிற் றோய்ந்த உள்ளமுடைய பிற்றை நாட் சான்றோர் ஒருவர் அப்பனுவலைப் புகழ்வாராய்,

சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீந்தாது நாறுதலான் - மல்லிகையின்
வண்டார் கமழ்தாமம் அன்றே மலையாத
தண்டாரான் கூடற் றமிழ்

என்னும் அருமையான வெண்பா ஒன்றனை அப்பனுவலுக்குட் பாயிரமாக யாத்தமைத்துள்ளார். சுருக்கமாகவும் தெளிவாகவும் உண்மையாகவும், இவ்வெண்பா மதுரைக் காஞ்சியின் அருமை பெருமைகளை நன்கு விளக்கும். சங்கம் நிறீஇ மொழி வளர்த்த பாண்டிய மன்னர்களின் நற்செயலின் விளைவே அன்றோ இத்தகைய இன்சுவைப் பனுவல்; எனவே இறப்ப இன்பம் நல்கும் இத்தமிழைத் தண்டாரான் கூடற்றமிழ் என்று மனமுவந்து இப்புலவர் பாராட்டுதல் மிகவும் பொருத்தமேயாகும். மதுரைக்காஞ்சியின்கண் அமைந்த வீறுடைய தீந் தமிழ்ச் சொல் ஒவ்வொன்றும் அழகியதும், வாடாததும், இன்பமிக்கதும் பரியதுமாகிய ஒவ்வொரு தெய்வத்தன்மை யுடைய மாமலர். மற்று அம்மலரில் உள்ளீடாய்த் ததும்பிச் சொட்டும் தேனே அதன்கட் பொருள் என்னும் இதற்குமேல் யாரே இம்மதுரைக் காஞ்சியின் சிறப்பை எடுத்தோத வல்லார்?

மரந்தின்னூஉ வரையுதிர்க்கும்
நரையுருமின் ஏறனையை (மதுரைக் - 62-3)

என்றும்,

காலென்னக் கடிதுராஅய்
நாடுகெட எரிபரப்பி
ஆலங் கானத்து அஞ்சுவரவிறுத்
தரசுபட அமருழக்கி
முரசுகொண்டு களம்வேட்ட
அடுதிறலுயர் புகழ்வேந்தே (þ 125-29)

என்றும்,

நட்டவர் குடியுயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை

என்றும்,

பொய்யறியா வாய்மொழியாற்
புகழ்நிறைந்த நன்மாந்தரொடு (மதுரைக் 19-20)

என்றும்,

ஆடுற்ற வூன்சோறு
நெறியறிந்த கடிவாலுவன்
அடியொதுங்கிப் பிற்பெயரா
படையோர்க்கு முருகயர (þ 35-8)

என்றும் வரும் மதுரைக் காஞ்சியின் அடிகள் சிலவற்றை எடுத்துக்காட்டி ஆ! இவ்வடிகள் தாம் ஓதுங்கால் எத்துணை இன்பந்தருகின்றன! நீயிரும் இவையிற்றைப் பன்முறையும் ஓதி ஓதி இன்புறுமின் என யாம் சுட்டிக் காட்டுவதல்லால் இவ்வடி இதனால் இத்தகைய இன்பமுடைத்தென ஏதுக்காட்டுவே மல்லோம். ஏனெனில் நல்லிசைப் புலவர்கள் இயற்றிய செய்யுள்கள் அனைத்தும் சொற்களால் இயன்றனவே எனினும் அவை தரும் இன்பமோ சொன்னலம் கடந்த சிறப்பிற்றாமாதலின்.

காண்பார் கண்கவரும் கவினுடைய மல்லிகைமலர் போன்ற இச்சொற்கள் அம்மலரின்கண் மணம் போன்ற தனித் தமிழ் மணமும் சாலவுடையன. இத் தீஞ்சொன்மலர் மாலை, தமிழ்ச் சான்றோர் அகம் புறம் என வகுத்த பொருட்பகுதியில் புறப் பொருட்பகுதி முழுதும் தன்பாற் றோனாகத் ததும்பப் பெற்றது. வெட்சித்திணை முதல் பாடாண்திணை இறுதியாகத் தொல்காப்பியத்தில் வரையரை செய்யப்பட்ட ஏழு திணைப் பொருளும் மதுரைக் காஞ்சியில் எஞ்சாது கூறப்பட்டுள்ளன. ஆதலின் இப்பனுவல் புறத்திணைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது எனலாம். எனினும் அவ்வேழுதிணையுள்ளும் காஞ்சித்திணைப் பொருளை அறிவுறுத்தலே இப்பனுவலின் நோக்கமாகும் சிறப்புப் பற்றி இது மதுரைக் காஞ்சி எனக் காஞ்சித்திணைப் பெயரால் வழங்கப்படுகின்றது.

காஞ்சித்திணை

இனி, மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள்களில் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின் காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையால் (பரிலேழகர் திருக். உரைப்பாயிரம்.)

காஞ்சித்திணை - அவ்வீட்டினைக் காரணவகையாற் கூறும் பகுதியாகும். என்னை?

காஞ்சி தானே (பெருந்திணைப்புறனே) (தொல்-புறத்-22)
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே (தொல்-புறத் - 23)

என்பது தொல்காப்பியத்தே காஞ்சித்திணைக்குக் கூறிய இலக்கணமாம். இதன் பொருள் :-

காஞ்சித்திணையாவது, தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக, அறம் பொருள் இன்பமாகிய பொருட் பகுதியானும், அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையும் செல்வமும் இளமையும் முதலியவற்றானும் நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்தாம் என்பது. எனவே வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது காஞ்சி என்ப.

அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் வீடுபேற்றிற்கு ஏதுவாயினாற் போன்று, வெட்சி முதலிய ஆறு திணைகளும் காஞ்சித்திணைக்கு ஏதுவாம். காஞ்சித்திணை ஒன்றே ஏனைத்திணைப் பொருள்களினும் சிறந்ததாம். மறுமை யறியாதது பிறப்பன்று; மக்கள் வாழ்க்கையின் நோக்கம் வீடுபெறுதல் ஒன்றே ஆதல் வேண்டும். வீடுபேற்றிற்குக் காரணம் யான் எனது என்னும் இருவகைச் செருக்கும் அறுதல்; செருக்கறு திக்குக் காரணமாவது மெய்யுணர்வு பிறத்தல்; மெய்யுணர்வு பிறத்தற்குக் காரணம் அழிதன் மாலையவாகிய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் வீடுபேற்றின்கண் ஆசையுமாம். இவ்வுவர்ப்புத்தானும் உண்டாதற்குக் காரணமாவது பற்றுதற்குரிய பொருளாகிய உடல்பொருள்களின் நிலையாமை உணர்ச்சி கைவரப் பெறுதலே ஆகலின், செந்தமிழ்ச்சான்றோர் நிலையாமை யுணர்த்தலாகிய இக்காஞ்சித் திணையையே வீடுபேற்றிற்கு நிமித்தமாகக் கொண்டு கூறுவாராயினர் என்க. இவ்வாற்றால் இக்காஞ்சியே ஏனைத்திணைகளினும் சிறப்புடைத்தாதலும் காண்க.

மதுரைக்காஞ்சி: மதுரைக்காஞ்சி என்னும் தொடரை மதுரையிடத்து அரசற்குக் கூறிய காஞ்சி என விரிப்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். காஞ்சித் திணைபற்றிய எல்லாப் பனுவலும் ஒவ்வோரிடத்திருந்து கூறப்பட்டனவே யாகும். அவை கூறப்பட்ட இடங்களை அடைமொழியாகக் கொண்டு வழங்கப்படுதலை யாம் காண்கின்றிலம். மேலும் இம் மதுரைக்காஞ்சியில் பாண்டியர் தலைநகரமாகிய மதுரையைப் பற்றியே பெரிதும் பாடப்பட்டிருத்தலையும் காண்கிறோம். ஒருகால் மதுரையைப் பாடுமாற்றான் உணர்த்திய காஞ்சி என இத்தொடர் விரிக்கப்படுதல் மிகவும் பொருந்துவதாம் என்று எமக்குத் தோன்றுகின்றது. மதுரைக் காஞ்சியின் வரலாறும் இதற்கு அரண் செய்வதாம். அது வருமாறு:

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மிக இளம்பருவத்திலேயே அரசு கட்டில் ஏறினான் என்றும், அவ்வமயம் அவன் பகைவர் பலர் அவனை அழித்து அவன் அரசியலைக் கைப்பற்ற எண்ணிக் கிளர்ந்தெழுந்தனர் என்றும் நெடுஞ்செழியன் வரலாற்றிற் கூறினாம். அவ்வமயம் புலமையுள்ளும் படைத்த நெடுஞ்செழியன் கூறிய நகுதக்கனரே நாடுமீக் கூறுநர் என்று தொடங்கி ஓதிய வஞ்சினப் பாடலே (புறம் - 72) இம் மதுரைக் காஞ்சியின் தாய் ஆகும்; அப்பாட்டின்கண்,

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை

என, அம் மன்னன் ஓதிய அடிகள் அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மாங்குடி மருதனார் உளத்தே பெரிதும் பதியலாயின. அப்போது அவர் தமக்குள் இளஞ்சிறானே; இறையருளால் உன்னுடைய பகைவரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படுத்து நின் அரிய வஞ்சினத்தை முற்றுவிக்கக்கடவாய்; நீ உன் வஞ்சினம் முற்றியவழி ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடிமருதன் என உன்னால் உயர்த்தோதப்பட்ட இப்புலவன் நின்னிலவரையைப் பலர் புகழ்சிறப்பில் உலகமொடு நிலைஇய பனுவலால் பாடுவன், இஃதுறுதி எனச் சொல்லிக் கொண்டனர் ஆதல் வேண்டும்.

இளைஞனாயினும் நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறியவாறே அச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை, அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படுத்து நூழிலாட்டித் தன் வஞ்சினம் முற்றுவித்தான். இனி மாங்குடி மருதனார் அவன் நிலவரையைப் பாடியே தீர்தல் வேண்டும். இவ் வெற்றியை இடைக் குன்றூர்க்கிழார் முதலிய நல்லிசைப் புலவர் பலர் நெஞ்சாரப் புகழ்ந்து பாடினர். மருதனார் உடனே பாடினாரில்லை, ஏன்?

வெற்றிமகள் ஆலங்கானத்துப் போரில் நெடுஞ்செழியனுக்கு வெற்றியலங்கல் சூடிய நாள் தொடங்கி மேலும் மேலும் போர்க்களம் பற்பல காட்டி அவனை வரவேற்று வாகைசூட்டி மகிழ்ந்தாள். போருக்குப்பின் போர்! வெற்றியின்மேல் வெற்றி! தொடர்ந்து கன்னிமுத லிமயம்வரைப் போராற்றித் தன்னடிப்படுத்தான். இந் நிகழ்ச்சிக்கிடையில் அவனையும் அவன் நிலவரையையும் பாடப் புலவர்க்குச் செவ்வி கிடைத்திலது. கூடலில் விளைந்த தண்டமிழ் மல்லிகைமாலையை மன்னனுக்குச் சூட்டி மகிழ யாண்டுகள் பல காத்திருந்தனர். இதற்கிடையே நினைத்தவுடனே செய்யுள் யாக்கும் வன்மையுடைய அம் முதுபுலவரின் கலையுளத்தே யாண்டுகள் பல கிடந்து மதுரைக்காஞ்சி சொல்லின்பம் பொருளின்பங்களான் மிகமிக முதிர்ந்து வரலாயிற்று. இவ்வாற்றால் வைகல் எண்டேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் போன்று இம்மதுரைக் காஞ்சி பெரிதும் திண்ணிதாயிற்று.

ஏனை மன்னர் போலாது அறிவுத்துறையினும் நல்லிசைப் புலவனாகத் திகழ்ந்து விளங்கிய செழியனுக்குச் சூடும் சொற்பூந்தொடையலில் காஞ்சிப்பொருளே தேனாக அமைவதாக எனப் புலவர் பெருமான் தேர்ந்து கொண்டனர். மக்கள் வாழ்க்கை எத்துணைச் சிறப்புடையதாயினும் அவர் மெய்யுணர்ந்து வாழாத பொழுது அதனாற் பயன் என்னாம்! எல்லாச் சிறப்பானும் சிறந்து விளங்கும் நம் செழியன் மெய்யுணர்ச்சியோடு மருவி வாழக்கடவன் எனக் கருதி மருதனார் காஞ்சிப் பொருளை அறிவுறுத்தலை மதுரையைப் பாடிய பனுவலின் உயிராக அமைத்துக் கொண்டார். ஆகவே இப் பனுவற்கு மதுரைக்காஞ்சி எனப் பெயர் குறித்தனர் என்க.

இனி அந்தணராக, அரசனாகுக, வணிகனாகுக, வேளாளனாகுக, வேறு யாரேனுமாகுக, எத்தகைய நிலையினும் நிலையாமை யுணர்ந்து பற்றறுதி எய்துமாற்றால் வாழ்வோர் எல்லாம் வீடு பேறடைவர் என்பது தமிழ்ச்சான்றோர் கொள்கையாம். ஆதலால், நெடுஞ்செழியனே! இவையெல்லாம் நிலையாத பொருள்கள் கண்டாய். இவையிற்றால் யாதுபயன்! இவற்றை இன்னே விட்டொழி; காட்டிற்கு ஓடிவிடு; ஆண்டுக் கண்மூடி மௌனியாயிரு! என மாங்குடி மருதனார் இப்பனுவலில் ஓதினாரில்லை; திருவள்ளுவனார் நீத்தார் பெருமை ஓதுமிடத்து,

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு (குறள் - 21)

என்னும் அருமைத் திருக்குறட் கருத்தையே தம்முள்ளத்தே கொண்டு, அரசர் பெருமானே! நீ உயர்ந்தோர் மருகன்! நெடியோன் உம்பல்! வெல்கோ! புகல்வேந்து! ஏறனையை! குருசில்! பழிநமக்கு எழுக என்னாய்! வாய்நட்பினை! அனையை யாதலின் நின்னை முன்னிலைப்படுத்து யான் உரைக்கற் பாலதென்னை? ஆயினும், நிலைபேறில்லாத இவையிற்றை நிலையுடைப் பொருளாக மயங்கி மெய்யுணர்வின்றிப் பிறப்பற முயலாது பயனின்றி மாண்டார் மணலினும் பலர் ஆதலான், நீ அவர்போலாது இவையிற்றின் நிலையாமை கண்டு படிமத்தை அதிட்டித்த முருகன்போன்று அரசர்கரசனா யிருந்தேயும் பற்றற்றவனாய் நின் பிறப்பிற்கேற்ற அறத்தின் ஒழுகி நிலந்தரு திருவிற் பாண்டியன் போன்று மெய்யுணர்ச்சியோடே மயக்கமில்லாதவனாய்,

பொற்பு விளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறன் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினிது உறைமதி பெரும!

என இனிதின் அறிவுறுப்பாராயினர். இவ்வறிவுரை,

நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதற் றவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும் இறை ஞானம்
கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர் (சிவஞான-சுபக்.செ. 308)

என்னும் ஆன்றோர் மெய்ம்மொழியை நினைவூட்டுகின்றது. இம் மதுரைக்காஞ்சி பத்துப்பாட்டினுள் அடிப் பெருமையுடைய பெரும் பாட்டாகத் திகழ்கின்றது. பெருகு வளமதுரைக் காஞ்சி என்றது இஃது அடிகளான் ஏனைப் பாட்டுக்களினும் பெருகியதாதலைக் கருதியே கூறப்பட்டதாதல் வேண்டும். மாந்தரின் மனவியல்புணர்ந்த மாங்குடி மருதனார் இந்நெடிய பாட்டினை ஓதுவோர் உணர்வு சலியாமைப்பொருட்டு இனிய வஞ்சியடிகளையும் ஆசிரிய வடிகளையும் விரவி இப் பாடலை யாத்துள்ளனர். இம் மதுரைக்காஞ்சி 782 அடிகளை உடைத்து.

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம் பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப 5

விய னாண்மீ னெறி யொழுகப்
பகற் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத் 10

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த

நோ யிகந்து நோக்கு விளங்க
மே தக மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு 15

கண்டு தண்டாக் கட்கின் பத்து
உண்டு தண்டா மிகுவளத் தான்
உயர் பூரிம விழுத் தெருவிற்
பொய் யறியா வாய்மொழி யாற்
புகழ் நிறைந்த நன்மாந்த ரொடு 20

நல் லூழி அடிப் படரப்
பல் வெள்ளம் மீக் கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் இணை 25

யொலியிமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந் தாட
அஞ்சு வந்த போர்க்களத் தான்
ஆண் டலை அணங் கடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி 30
சினத் தீயிற் பெயர்பு பொங்கத்
தெற லருங் கடுந் துப்பின்
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப் பாக
ஆ டுற்ற ஊன் சோறு 35

நெறி யறிந்த கடிவா லுவன்
அடி யொதுங்கிப் பிற் பெயராப்
படை யோர்க்கு முரு கயர
அமர் கடக்கும் வியன் றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின 40

தொல்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந
விழுச் சூழிய விளங்கோ டைய
கடுஞ் சினத்த கமழ்கடா அத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய 45

வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
சினஞ் சிறந்து களனு ழக்கவும்
மா வெடுத்த மலிகுரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும 50

வாம் பரிய கடுந்திண் டேர்
காற் றென்னக் கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்
இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் 55

பொரு தவரைச் செரு வென்றும்
இலங் கருவிய வரை நீந்திச்
சுரம் போழ்ந்த இக லாற்றல்
உயர்ந் தோங்கிய விழுச் சிறப்பின்
நிலந் தந்த பே ருதவிப் 60

பொலந்தார் மார்பி னெடியோன் உம்பல்
மரந் தின்னூஉ வரை யுதிர்க்கும்
நரை யுருமின் ஏற னையை
அருங் குழுமிளைக் குண்டுக் கிடங்கின்
உயர்ந் தோங்கிய நிரைப் புதவின் 65

நெடு மதில் நிரை ஞாயில்
அம் புமிழ் அயி லருப்பந்
தண் டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென் குமரி வட பெருங்கல் 70

குண குட கடலா வெல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்ற மொடு வெறுத் தொழுகிய
கொற்ற வர்தங் கோனா குவை

வானி யைந்த இரு முந்நீர்ப் 75

பேஎம் நிலைஇய இரும் பெளவத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை யெடுத்து
இன் னிசைய முரச முழங்கப 80

பொன் மலிந்த விழுப் பண்டம்
நா டார நன் கிழிதரும்
ஆடி யற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங் கிருக்கைத் 85

தெண் கடற் குண் டகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!
நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பு மிசை யேற்றத 90

தோடு வழங்கும் அக லாம்பியிற்
கய னகைய வய னிறைக்கு
மென் றொடை வன் கிழாஅர்
அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி
இரும்புள் ஒப்பும் இசையே என்றும் 95

மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானற்
பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப
ஒருசார், விழவுநின்ற விய லாங்கண்
முழவுத் தோள் முரட் பொருநர்க்கு
உரு கெழு பெருஞ் சிறப்பின் 100

இரு பெயர்ப் பேரா யமொடு
இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும்
பொலந் தாமரைப் பூச் சூட்டியும்
நலஞ் சான்ற கலஞ் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே! 105

கல் காயுங் கடுவேனி லொடு
இரு வானம் பெயலொ ளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை அரிநர் கம்பலை 110

புள்ளிமிழ்ந் தொலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று கறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல் 115

நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு
ஒலி யோவாக் கலி யாணர்
முது வெள்ளிலை மீக் கூறும்
வியன் மேவல் விழுச் செல்வத்து 120

இரு வகையான் இசை சான்ற
சிறு குடிப் பெருந் தொழுவர்
குடி கெழீஇய நானிலவ ரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்பக்
கா லென்னக் கடிது ராஅய் 125

நாடு கெட எரி பரப்பி
ஆலங் கானத் தஞ்சுவர விறுத்து
அரசு பட அமரு ழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறலுயர் புகழ் வேந்த 130

நட்டவர் குடி யுயர்க் குவை
செற்றவர் அரசு பெயர்க் குவை
பேரு லகத்து மேஎந் தோன்றிச்
சீரு டைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின் 135

இலங்கு வளை இருஞ் சேரிக்
கட் கொண்டிக் குடிப் பாக்கத்து
நற் கொற்கை யோர்நசைப் பொருந
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று
அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பிற் 140

கோழூ உன்குறைக் கொழு வல்சிப்
புலவு விற் பொலி கூவை
ஒன்று மொழி ஒலி யிருப்பில்
தென் பரதவர் போ ரேறே
அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு 145

உரிய வெல்லாம் ஓம்பாது வீசி
நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
அகநாடு புக்கவர் விருப்பம் வெளவி
யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து 150

மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்
உறு செறுநர் புலம் புக்கவர்
கடி காவி னிலை தொலைச்சி
இழி பறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரி மேய 155

நா டெனும் பேர் காடாக
ஆ சேந்த வழி மாசேப்ப
ஊரி ருந்த வழி பாழாக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப 160

அவை யிருந்த பெரும் பொதியிற்
கவை யடிக் கடு நோக்கத்துப்
பேய் மகளிர் பெயர் பாட
அணங்கு வழங்கு மகலாங் கண்
நிலத் தாற்றுங் குழூஉப் புதவின் 165

அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்
கொழும் பதிய குடி தேம்பச்
செழுங் கேளிர் நிழல் சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரலக 170

கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்
களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர
நல்லேர் நடந்த நசைசால் விளைவயல்
பன்மயிர்ப் பிணவொடு கேழல் உகள
வாழா மையின் வழிதவக் கெட்டுப் 175

பாழா யினநின் பகைவர் தேஎம்
எழாஅத் தோள் இமிழ்மு ழக்கின்
மாஅத் தாள் உயர் மருப்பிற்
கடுஞ் சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் றானையொட 180

முரு குறழப் பகைத்தலைச் சென்று
அகல் விசும்பின் ஆர்ப் பிமிழப்
பெய லுறழக் கணை சிதறிப்
பல புரவி நீ றுகைப்ப
வளை நரல வயி ரார்ப்பப் 185

பீ டழியக் கடந் தட்டவர்
நா டழியக் எயில் வெளவிச்
சுற்ற மொடு தூ வறுத்தலிற்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டில முற்றி 190

அரசியல் பிழையா தறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின் 195

தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம்
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் 200

பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே 205

அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் அவலம்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை
தவாப் பெருக்கத் தறா யாணர 210

அழித் தானாக் கொழுந் திற்றி
இழித் தானாப் பல சொன்றி
உண் டானாக் கூர் நறவில்
தின் றானா இன வைக
னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப் 215

பயனற வறியா வளங்கெழு திருநகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாணர் உவப்ப களிறுபல தரீஇக்
கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ 220

மறங் கலங்கத் தலைச் சென்று
வாளுழந் ததன் தாள் வாழ்த்தி
நா ளீண்டிய நல் லகவர்க்குத்
தே ரோடு மா சிதறிச்
சூ டுற்ற சுடர்ப் பூவின் 225

பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்ற மாகக்
கள்ளின் இரும்பைக் கலஞ்செல வுண்டு
பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப்
பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார 230

பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்
படுகண் முரசங் காலை யியம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த
பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர்
கரைபொரு திரங்கும் சுனையிரு முந்நீர்த் 235

திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே
அதனால், குணகடல் கொண்டு குடகடல்முற்றி
இரவு மெல்லையும் விளிவிட னறியாது
அவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் 240

கவலையங் குழும்பின் அருவி ஒலிப்பக்
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
வரைமுத லிரங்கும் ஏறொடு வான்ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது
குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி 245

நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்
களிறு மாய்க்குங் கதிர்க் கழனி
ஒளி றிலஞ்சி அடை நிவந்த
முட் டாள சுடர்த் தாமரை
கட் கமழு நறு நெய்தல் 250

வள் ளிதழ் அவிழ் நீலம்
மெல் லிலை யரி யாம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்
கம்புட் சேவல் இன்றுயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து 255

கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டுக்
கரும்பி னெந்திரங் கட்பி னோதை
அள்ளற் றங்கிய பகடுறு விழுமங்
கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்ப 260

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை யின்குரல்
தளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
கவிகொள் சும்மை யொலிகொ ளாயந்
ததைந்த கோதை தாரொடு பொலியப் 265

புணர்ந்துட னாடும் இசையே யனைத்தும்
அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றிஒருசார்ச 270

சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
கருங்கால் வரகின் இருங்குரல் புலர
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர
எழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி 275

மடக்கட் பிணையொடு மறுகுவன உகளச்
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்
பாஅ யன்ன பாறை யணிந்து
நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்
வெள்ளி யன்ன வொள்வி யுதிர்ந்து 280

சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணிமரு ணெய்தல் உறழக் காமர்
துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர
வல்லொன் தைஇய வெறிக்களங் கடுப்ப
முல்லை சான்ற புறவணிந் தொருசார் 285

நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி
இஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித் 290

தினைவிளை சாரற் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்
ஆமா கடியுங் கானவர் பூசல்
சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழல் அட்ட பூசல் 295

கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்
நறும்பூக் கொய்யும் பூசல் இருங்கேழ்
ஏறடு வயப்புலிப் பூசலொ டனைத்தும்
இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக்
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து. 300
அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்
இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படரக்
கலித்த இயவர் இயந்தொட் டன்ன
கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்து 305

அருவி யான்ற அணியில் மாமலை
வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக்
கமழ்சூழ் கோடை விடரக முகந்து
காலுறு கடலின் ஒலிக்குஞ் சும்மை
இலைவேய் குரம்பை உழையதட் பள்ள 310

உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப்
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்
முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம் 315

அரம்போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல 320

விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்கு 325

ஐம்பால் திணையுங் கவினி யமைவர
முழ வீமிழும் அக லாங்கண்
விழவு நின்ற வியன் மறுகில்
துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி
இன்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப 330

பாடல் சான்ற நன்னாட்டு நடுவண்
கலை தாய உயர் சிமையத்து
மயி லகவு மலி பொங்கர்
மந்தி யாட மாவிசும் புகந்து
முழங்குகால் பொருத மரம்பயில் காவின் 335

இயங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற்
கான்பொழில் தழீஇய அடைகரை தோறுந்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையி னொழுகும் விரிநீர் நல்வரல்
அவிரறல் வையைத் துறைதுறை தோறும 340

பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட் டிருந்த பெரும்பாண் இருக்கையும்
நிலனும் வளனுங் கண்டமை கல்லா
விளங்குபெருந் திருவின் மான விறல்வேள்
அழும்பில் அன்ன நாடிழந் தனருங் 345

கொழும்பல் புதிய குடியிழந் தனரும்
தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப்
பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று 350

மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு 355

வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வான மூழ்கி
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்
பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப 360

மாகா லெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்துச் 365

சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி
வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீர்ஒலித் தன்ன நிலவுவேற் றானையொடு .
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப 370

புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கி னருவியி னுடங்கப்
பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் 375

வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக்
கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துடன்
கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து 380

கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்
கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்
அங்கண்மால் விசும்பு புதைய வளிபோழ்ந்து
ஒண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதரும் 385

செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலெனக் கடுங்குங் கவின்பெறு தேருங்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத் தாதி போகிய 390

கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்
வேழத் தன்ன வெருவரு செலவிற்
கள்ளார் களமர் இருஞ்செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்
தீம்புழல் வல்சிக் கழற்கால் மழவர் 395

பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்
பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்
பலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்
தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய் 400

நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றினர்
இருதலை வந்த பகைமுனை கடுப்ப
இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து
ஏங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப்
பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர் 405

மலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர
இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை 410

செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்
ஐஇய கலுழு மாமையர் வையெயிற்று
வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்
சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத் 415

தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை
மையுக் கன்ன மொய்யிருங் கூந்தல்
மயிலிய லோரும் மடமொழி யோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப் 420

புடையமை பொலிந்த வகையமை செப்பிற்
காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியம்
கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக
மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக் 425

கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங் காடி நனந்தலைக் கம்பல 430

வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன சிவந்துணங் குருவிற்
கண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம்
பொன்புனை வாளொடு பொலியக் கட்டித்
திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக் 435

கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி
மொய்ம்பிறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்
மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை
அணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்
காலியக் கன்ன கதழ்பரி கடைஇக 440

காலோர் காப்பக் காலெனக் கழியும்
வான வண்கை வளங்கெழு செல்வர்
நாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடு
தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழல்
தாவற விளங்கிய வாய்பொன் னவிரிழை 445

அணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர்
மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ
ஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகந்
திண்காழ் ஏற்ற வியலிரு விலோதந்
தெண்கடற் றிரையின் அசைவளி புடைப்ப 450

நிரைநிலை மாடத் தரமியந் தோறும்
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய
நீரு நிலனுந் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன் றலைவ னாக 455

மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபி னுயர்பலி கொடுமார்
அந்தி விழவிற் றூரியங் கறங்கத் 460

திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர் 465

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி. 470

உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் 475

பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்க 480

ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து 485

நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
அச்சமும் அவலமும் ஆர்வமு நீக்கிச்
செற்றமும் உவகையுஞ் செய்யாது காத்து 490

ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூ றவையமும்
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல 495

நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
அறநெறி பிழையா தாற்றி னொழுகி 500

குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன
பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற்
பல்வேறு பண்டமொ டூண்மலிந்து கவினி
மலையவு நிலத்தவு நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு 505

சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் 510

கோடுபோழ் கடைநருந் திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயு மாக்களும் 515

எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பகல்
குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச் 520

சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக்
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந்
தண்கட னாடன் ஒண்பூங் கோதை
பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ 525

விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி 530

மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர 535

வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லென் இமிழிசை மானக் கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோதம 540

இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலிற்
பல்வேறு புள்ளின் இசையெழுந் தற்றே
அல்லங் காடி அழிதரு கம்பலை
ஒண்சுடர் உருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து 545

சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுதல்
நாள்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு
பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர்
காதல் இன்றுணை புணர்மார் ஆயிதழ்த 550

தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பப்
பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர் 555

நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லா நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணுக்கொள
ஏழ்புணர் சிறப்பின் இன்றொடைச் சீறியாழ்
தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்த 560

வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ
நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
மேதகு தகைய மிகுநல மெய்திப் 565

பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
கொண்டல் மலர்ப்புதல் மானப்பூ வேய்ந்து
நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்த 570

சேயரு நணியரு நலனயந்து வந்த
இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி
நுண்தா துண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்
நெஞ்சே மாப்ப இன்றுயில் துறந்து 575

பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய
மணம்புணர்ந் தோங்கிய அணங்குடை நல்லில்
ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்
ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி 580

நீனிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
நெஞ்சு நடுங்குறூஉக் கொண்டி மகளிர்
யாம நல்யாழ் நாப்ப ணின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப் 585

பனித்துறைக் குவவுமணல் முனைஇ மென்றளிர்க்
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி
மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயரக்
கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் 590

மாயோன் மேய ஓண நன்னாட்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச் 595

சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதரக்
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து 600

பணைத்தேந் திளமுலை அமுதம் ஊறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி 605

நுண்ணீ ராகுளி இரட்டப் பலவுடன்
ஒண்சுடர் விளக்க முந்துற மடையொடு
நன்மா மயிலின் மென்மெல இயலிக்
கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப ஒருசார் 610

அருங்கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும் 615

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப் 620

பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து
நொடைநவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி யயர
நல்வரி இறாஅல் புரையு மெல்லடை
அயிருருப் புற்ற ஆடமை விசயங் 625

கவவொடு பிடித்த வகையமை மோதகந்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க
விழவி னாடும் வயிரியர் மடியப்
பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்
பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப் 630

பானாட் கொண்ட கங்கு லிடையது
பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத் 635

தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர் 640

நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த 645

நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி
ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்
தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக
மழையமைந் துற்ற அரைநா ளமயமும்
அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலிற் 650

கடவுள் வழங்குங் கையாறு கங்குலும்
அச்ச மறியா தேம மாகிய மற்றை
யாமம் பகலுறக் கழிப்பிப்
போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
தாதுண் தும்பி போது முரன்றாங் 655

கோத லந்தணர் வேதம் பாடச்
சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி
யாழோர் மருதம் பண்ணக் காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப்
பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப் 660

பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்
கள்ளோர் களிதொடை நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப்
புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக்
கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய 665

ஒண்பொ னவிரிழை தெழிப்ப இயலித்
திண்சுவர் நல்லிற் கதவங் கரைய
உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
பழஞ்செருக் காளர் தழங்குகுரல் தோன்றச்
சூதர் வாழ்ந்த மாகதர் நுவல 670

வேதா ளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னங் கரைய அணிமயில் அகவப் 675

பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டுறை வயமாப் புலியொடு குழும
வான நீங்கிய நீனிற விசும்பின்
மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த 680

பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன
அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந்
தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப
மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப 685

இரவுத்தலைப் பெயரு மேம வைகறை
மைபடு பெருந்தோள் மழவ ரோட்டி
இடைப்புலத் தொழிந்த ஏந்துகோட் டியானை
பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி
வேல்கோ லாக ஆள்செல நூறிக் 690

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும் 695

கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ 700

ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவிற் சுடர்பொழிந்
தேறிய விளங்குகதிர் ஞாயிற்று இலங்குகதி
ரிளவெயிற் றோன்றி யன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து 705

மயிலோ ரன்ன சாயல் மாவின்
தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்து
ஈர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்
கடவுட் கயத்தமன்ற சுடரிதழ்த் தாமரைத் 710

தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்
தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித்
திருந்துதுயில் எடுப்ப இனிதி னெழுந்து
திண்கா ழார நீவிக் கதிர்விடு 715

மொண்காழ் ஆரங் கவைஇய மார்பின்
வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப
எருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற்
பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்
வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச் 720

சோறமை வுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று கவைஇ
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகியன் றன்ன உருவினை யாகி
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து 725

ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர்
வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த
வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின்
மாதாங் கெறுழ்த்தோள் மறவர்த் தம்மின்
கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் 730

நல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரசம் ஓவில கறங்க
எரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண்
பெருநல் யானை போர்க்களத் தொழிய 735

விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து 740

வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற் 745

பெருற்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோருந் தம்மென
வரையா வாயிற் செறாஅ திருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென 750

இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்
களந் தோறும் கள் ளரிப்ப
மரந் தோறு மை வீழ்ப்ப
நிண வூன்சுட் டுருக் கமைய 755

நெய் கனிந்து வறை யார்ப்பக்
குரூஉக் குய்ப்புகை மழை மங்குலிற்
பரந்து தோன்றா விய னகராற்
பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய 760

தொல் லாணை நல் லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி 765

அரிய தந்து குடி யகற்றிப்
பெரிய கற் றிசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப் 770

பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் தலைவ னாகக்
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்
பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த 775

மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
ரவரும் பிறகும் துவன்றிப்
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் 780

மகிழ்ந்தினி துறைமதி பெரும்
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே.

1-ஓங்குதிரை என்பது தொடங்கி, 23-உயர்ந்தோர் மருக, என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண் நல்லிசைப் புலவராகிய மாங்குடி மருதனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையாகிய காஞ்சி யறிவுறுக்க புகுவார், அவ் வேந்தர் பெருமானை விளிக்கு முகத்தான், அவன் முன்னோரின் செங்கோன்மைச் சிறப்பினைப் பாராட்டிக் கூறுகின்றார்.

பாண்டிமன்னர் குடிச்சிறப்பு

1-4 : ஓங்குதிரை ................. ஞாலத்து

பொருள் : ஓங்கு திரை வியன்பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாக - உயர்ந்தெழும் அலைகளையுடையதும் அகன்ற நீர்ப்பரப்பை உடையதும் முழக்கத்தையுடையதுமாகிய கடல் எல்லையாக அமையுமாறு, தேன் தூங்கும் உயர்சிமைய மலைநாறிய வியல் ஞாலத்து - தேனிறால் தூங்காநின்ற உயர்ந்த உச்சியை யுடைய மலைகள் தோன்றியுள்ள அகலத்தையுடைய உலகத்தின் கண்ணே;

கருத்துரை : உயர்ந்தெழும் அலைகளையும், அகன்ற நீர்ப்பரப்பையும், ஒலியையும் உடைய கடல் எல்லையாக அமையுமாறு தேனிறால் தூங்கும் உச்சிகளையுடைய மலைகள் தோன்றியுள்ள அகலத்தையுடைய இப்பேருலகத்தில் என்பதாம்.

அகலவுரை : கடல் எல்லையாகுமாறு விரிந்த ஞாலம் என்க. மறக்கள வேள்வியே செய்வதன்கண் முனைந்து மானிடப் பிறப்பின் பெறு பேறாகிய வீட்டினை எய்துதற்கு முயலாதிருந்த நெடுஞ்செழியனுக்கு, இவ்வுலகமும் அதற்குறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நிலைபேறுடையனவல்ல; ஆதலின், மானிட வாழ்க்கையின் செலவு வீடுபேற்றினை எய்துவதாக அமைதல் வேண்டும் என அறிவுறுத்தப் புகுந்த நல்லிசைப் புலவர் மாங்குடி மருதனார், அம்மெய்யுணர்ச்சி பிறத்தற்கேதுவான நிலையாமையே கூறும் காஞ்சி கூறுவார், இந்நூற் றொடக்கத்தே ஒன்றனைத் தேர்ந்து அமைத்திருத்தல் அறிந்து மகிழற்பாலதாம்; அச்சொற்றொடர் ஓங்கு திரை என்பதாம். என்னை? கடலின்கண் அலை நிலைபேறின்றித் தோன்றித்தோன்றி அழிதல் யாரும் நன்கறிந்த வுண்மையே அன்றோ? அவ்வாறே இவ்வுலகமும் அதன்கட் பொருளும் மாறிமாறித் தோன்றுதலும் அழிதலும் உடைய என்னும் நிலையாமை கூறும் கருத்துடையது இப்பனுவலாம். ஆகலின் நிலையுதலற்ற அலையினையே தொடக்கத்தே பெய்துரைத்தார்.

இனி, ஓங்கியெழுந்த திரை அழிதல் எத்துணை உண்மையோ அத்துணை, உண்மையேயாம் இவ்வுலகில் மானிடர்க்கமைந்துள்ள யாக்கை, இளமை, செல்வமுதலிய அனைத்தும் அழிதல் என்னுங் குறிப்பிற்கும் அச்சொல் இடந்தருகின்றது. இந்நிலையாமை யுணர்ந்தன்றிப் பற்றுவிடாதாகலின், அதனைக் கூறத்தொடங்கி, அம்மன்னர்பிரான் செவிக்கொள்ளும்வகை தேர்ந்து, வேம்பும் கடுவும் போன்று கைப்பன கழறாது, அவன் விரும்பி ஏற்றுக்கொள்ளுமாற்றான், அவனது சிறப்பினையே விரிப்பார் போன்று தொடங்குகின்றார் என்க.

ஓங்குதிரை வியன்பரப்பின் ஓலிமுந்நீர் என்னுந்துணையும் அமைந்த ஒரு சிறிய சொற்றொடரான், மாபெருங் கடலொன்றன் ஓவியத்தினை அதன் எல்லாச் சிறப்பும் எஞ்சாது பொருந்த ஓதுவார் உளத்தே கண்கூடாகத் தோற்றுவித்தல் அறிக. என்னை, கடல் கண்டோம் என்பார் யாவரே முழுதுறக் கண்டார், எனக் கம்பர் வியந்தாங்கு அது கட்பொறிக் கடங்காத பரப்புடைய தாதலை, வியன் பரப்பென்னும் தொடரானும், அஃதிடையறாது முழங்கிக் கிடத்தலை ஒலிமுந்நீர் என்னும் தொடரானும், பேரலைகள் எழுந்து வீசாநிற்கும் காட்சியை ஓங்கு திரை என்னும் தொடரானும், அக்கடல்தான் இறைவனைப்போன்று, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழிலும் வல்லதாம் என்பதும், ஆற்றுநீர் ஊற்றுநீர் மழைநீர் என்னும் மூன்று நீரானும் நிறைந்ததென்பதும், முந்நீர் என்னும் பெயரானே தோன்றக் கூறலானும் என்க.

ஓங்குதிரை - பேரலை, வியன் பரப்பென்றது மிக விரிந்த நீர்ப்பரப்பினையுடைய என்றவாறு; வியலென் கிளவி அகலப் பொருட்டே (உரி-66) என்பர் தொல்காப்பியனார். ஒலிமுந்நீர் : வினைத்தொகை. முந்நீர் - மூன்று நீர்மையை உடையது என்றும், மூன்று வகையான நீரையுடையது என்றும் இரட்டுற மொழிந்து கொள்க. அவை மேலே கூறினாம். வரம்பு - எல்லை; தேன்: ஆகுபெயர் - தேனிறால் என்னும் பொருட்டு. சிமையம் - மலையுச்சி; குவடு. மலைநாறிய என்றது மலைகள் தோன்றியுள்ள என்றவாறு. பல ஊழிகள் இவ்வுலகம் நீர்ப் பரப்பாகவே இருந்ததென்றும், பின்னர் மலைகள் தோன்றலாயின என்றும், அதன் பின்னர் நிலந் தோன்றிற் றென்றும் கூறுப. பாண்டிய மன்னரின் குடிப் பழைமை கூறுவார்; மலைநாறிய வியன் ஞாலத்து என்றார். எனவே கல்தோன்றி மண்தோன்றாக் காலந் தொடங்கி ஆண்டோர் மருக என்றவாறு. தோன்றும் பொருளை மீண்டும் அழியும் பொருளாதலின் நிலையாமை கூறப் புக்க புலவர் முன்னர் உலகத்தின் தோற்றம் கூறுவாராயினர். கடல் எல்லையாக அமைந்த இஞ்ஞாலத்தின் கண்ணே, இன்னின்ன இன்னின்னவாறு நிகழும்படி பாண்டியர் செங்கோன்மை செலுத்தலாயினர் என இனி மேலே கூறுகின்றார்.

பாண்டியர் செங்கோன்மைச் சிறப்பு

5-23 : வலமாதிரத்தான் .................... மருக

பொருள் : வலம் மாதிரத்தான் வளி கொட்ப - வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழலாநிற்ப, வியல் நாள்மீன் நெறி ஒழுக - அகலத்தையுடைய நாள்மீன்கள் தாம் நடக்கும் நெறியின்கண்ணே நடவாநிற்ப, பகற் செய்யும் செஞ்ஞாயிறும் - பகற் பொழுதை உண்டாக்கும் சிவந்த கதிரவனும், இரவுச் செய்யும் வெண் திங்களும் - இராப்பொழுதின்கண் ஒளி செய்யும் வெண்மையான திங்களும், மைதீர்ந்து கிளர்ந்து விளங்க - குற்றமற்றுத் தோன்றி விளங்காநிற்ப, மழை தொழில் உதவ - முகில் தானே பெய்தற்றொழிலை வேண்டுங்காலத்தே செய்துதவ, மாதிரங் கொழுக்க - திசைகள் எல்லாம் தழைப்ப, தொடுப்பின் வித்தியது ஆயிரம் விளைய, ஒரே விதைப்பின்கண் விதைத்த விதை ஆயிரமாக விளைய, நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த - விளைநிலங்களும் மரங்களும் பல்லுயிர்க்கும் பயன் கொடுத்தலை மேற்கொண்டு தழையாநிற்ப, நோய் இகந்து நோக்கு விளங்க - மக்கட்குப் பசியும் பிணியும் நீங்கி அழகு விளங்க, மிகப் பொலிந்த ஓங்கு நிலை வயக்களிறு மேதக - மிகவும் பொலிவு பெற்ற உலகத்தைத் தாங்குமாறு உயர்ந்த நிலையை உடைய வலிமிக்க திசை யானைகள் தம் பொறை நீங்கி வருத்தமற்று மேம்பாடு தக, கண்டு தண்டாக் கட்கின்பத்து - நோக்கி அமையாத கட்பொறியின் இனிமையினையும், உண்டு தண்டா மிகு வளத்தான் - உண்டு அமையாத உணவு மிகுகின்ற செல்வத்தோடே, உயர் பூரிமம் விழுத் தெருவில் - உயர்ந்த சிறகுகளையுமுடைய சீரிய தெருவிலிருக்கும், பொய் அறியா வாய்மொழியாற் புகழ் நிறைந்த நல்ல அமைச்சரோடே, நல் ஊழி அடிப் படர - நன்றாகிய ஊழிக் காலமெல்லாம் தமக்கு அடிபட்டு நடவாநிற்ப, பல்வெள்ளம் மீக்கூற - பல வெள்ளம் என்னும் எண்ணைப்பெற்ற காலமெல்லாம் தமது செங்கோன்மையைப் புகழ்ந்து சொல்லும் படி, உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக - உலகத்தை ஆட்சி செய்த உயர்ச்சி பெற்றோர் குடியிற் றோன்றியவனே!

கருத்துரை : காற்று வலமாகச் சுழலவும், அகன்ற நாள் மீன்கள் நன்னெறிக்கட் செல்லவும், பகற்பொழுதினை உண்டாக்கும் ஞாயிற்று மண்டிலமும், இரவின்கண் ஒளிசெய்யும் திங்கள் மண்டிலமும் தீதிலவாய்த் தோன்றி விளங்கவும், முகில்கள் வேண்டுங்கால் வேண்டியாங்குப் பெய்யாநிற்பவும், திசைகளெல்லாம் தழைப்பவும் ஒரு விதைப்பின்கண் வித்திய விதை ஆயிரமாக விளையவும், விளைநிலங்களும், மரமும், பல்லுயிர்க்கும் பயன் கொடுத்தலை மேற்கொண்டு தழைப்பவும், மக்கட்குப் பசியும் பிணியும் நீங்கி அழகு விளங்கவும், திசை யானைகள் சுமை நீங்கப்பெற்று வருத்தந்தீர்ந்து மகிழாநிற்பவும், கண்டு கண்டமையாத காட்சியின்பம் மிகவும், உண்டு உண்டொழியாத பெருஞ் செல்வத்தோடே, வழுக்கியும் தம் வாயிற் பொய் கூறாராய், மெய்ம் மொழியே பேசுதலாற் புகழ் நிறைந்த நல்ல அமைச்சரோடே, ஊழிக் காலமெல்லாம் தமக்கு அடிப்பட்டு நடக்க, இவ்வுலகத்தையாண்ட உயர்ந்த செங்கோல் மன்னர் மரபிற் றோன்றியவனே! என்பதாம்.

அகலவுரை : உலகத்தே எல்லா வகையானும் நன்மையே மிக்கு, மக்கள் பசியும் பிணியும் அற்று, வசியும் வளனும் சுரந்து இன்புற்று வாழ்தற்கு அவர்தம் அறநெறிச் செலவாகிய நல்லொழுக்கமே காரணமாவதென்றும், இங்ஙனம் மக்கள் நன்னெறி ஒழுகாதவராய்த் தீநெறிக்கண் செல்லுவாரெனின் அத்தீயொழுக்கம், மழை மறுத்து உலகத்தே பசியும் பிணியும் உண்டாதற்குக் காரணமாம் என்றும், மக்கள் ஒழுக்கத்தே நிலைத்தற்குக் காரணமாய் அமைவது வேந்தர் ஒழுக்கமாகிய செங்கோன்மையாம் என்றும், எனவே, அரசரே உலகின்கண் நிகழும் இன்பதுன்பங்கட்குக் காரணமாவார் என்றும் நம் பண்டைநாட் சான்றோர் அனைவரும் கருதி வந்தனர் என்றற்குச் சான்று, நம் செந்தமிழ்ப் பனுவல்களில் யாண்டும் காணலாம். இதனால் நிலம் நீர் தீ வளி வெளி என்னும் உயிரில்லா ஐம்பெரும் பூதமும் மக்களின் அறமறங்களுக்கேற்ப நிரலே நன்மை யுண்டாகு மாற்றானும் தீமை யுண்டாகு மாற்றானும் இயங்குகின்றன என்பதும், அச்சான்றோரின் சீரிய கொள்கையாகத் திகழ்ந்தது என்பது உணரப்படும். இக்கொள்கையிற் பற்றின்றி நெகிழ விட்டிருக்கின்ற இக்காலத்து மக்கட் கூட்டத்தையும் அதனால் அப் பசிப்பிணி முதலியவற்றிற்கு அவர் ஆளாதலையும் உலகத்தே வற்கடம் உண்டாய் வருத்துதலையும் எண்ணச் சான்றோர் உளம் வருந்துவர் என்பது திண்ணம். முன் கூறியபடி நம் சான்றோர் எண்ணியிருந்தனர் என்றற்கு, எண்ணிறந்த சான்றுகள் கிடைப்பனவாயினும், விரிவஞ்சி ஒரு சில சான்றுகளே கீழே தருகின்றோம்; அவை :

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு (குறள் - 558)

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். (குறள் - 559)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (குறள் - 560)

என்றற் றொடக்கத்துத் தமிழ் மறையும்,

கோன்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும். (மணிமே - 7: 8-9)

என்னும் மணிமேகலையும்,

முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா வின்பத் தவருடை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் (சிலப் - மதுரை-23. கட்டுரை)

என்னும் சிலம்பும்,

கோள்நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி
நீணிலம் மாரி யின்றி விளைவஃகிப் பசியும் நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி
ஆணையிவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடின் என்றான். (சிந்தா - 255)

என்னும் சிந்தாமணியும்,

வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர்
உள்ளமும் ஒருவழி யோட நின்றவன்
தள்ளரும் பெரும்புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்வள் ளுறையயில் மன்னர் மன்னனே. (கம்ப.பாலகா-அரசிய : 6)

என்றும்,

கூற்ற மில்லையோர் குற்றமில் லாமையாற்
சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செய்கையால்
ஆற்றல் நல்லற மல்லதில் லாமையால்
ஏற்ற மல்ல திழிதக வில்லையே. (கம்ப-நாட: 39)

என்றும் வரும் இராமாவதாரமும் இன்னோரன்ன பிறவுமாம். மாதிரம் - விசும்பு; திசையெனினுமாம். காற்று வலப்பக்கம் சுற்றி வீசின் உலகின் நன்மை உண்டாம் என்பது நம்பிக்கை. இதனை,

வளிவலங் கொட்கும் மாதிரம் வளம்படும். (12 : அந்தணர்த் - 91)

என்னும் மணிமேகலையினும் உணர்க. கொட்ப - சுழல. வியன் நாள்மீன் என்றது, விரிந்த கூட்டத்தை யுடைய நாள்மீன்கள் என்றவாறு; அவை, அச்சுவனி முதலியன. அவை நெறியொழுகலாவது: உலகத்தே வசியும் வளனும் உண்டாகுமாறு நடத்தல், பகற்செய்யும் செஞ்ஞாயிறு - தனது வருகையாற் பகற்பொழுதை உண்டாக்கும் சிவந்த ஞாயிற்றுமண்டிலம் இரவுச் செய்யும் வெண்டிங்கள் என்றதற்கு, இராப்பொழுதை உண்டாக்கும் வெள்ளிய மதி என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர்; இராப்பொழுதை உண்டாக்குவது திங்கள் அன்மையால் அத்தொடர்க்கு இரவின்கண் ஒளி செய்யும் திங்கள் என யாம் உரை கூறினாம். இரவுச் செய்யும் என்பதனை ஏழாவதன் உருபு பெய்து விரித்துக்கொள்க. ஞாயிறும் திங்களும் மைதீர்ந்து விளங்க என்றது, இக் கோள்கள் உலகின்கண் நன்மையுண்டாதற்கு ஏதுவாய் நடந்து விளங்க என்றவாறு. கோள் நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும் என்பவாகலின்; தலைமை பற்றி ஞாயிறும் திங்களும் என்றாரேனும் எடுத்த மொழியின் இனம் செப்பு மாற்றான் செவ்வாய் புதன் முதலிய ஏனைக் கோள்களும் மைதீர்ந்து கிளர்ந்து விளங்க என்பதும் கொள்க. மழை தொழில் உதவ என்றதற்கு மழை வேண்டுங்காலத்தே பெய்து உலகத்தின்கண் உழவு முதலிய தொழில்கட்கு உதவாநிற்ப என இரட்டுறவும் மொழிந்து கொள்க.

மழை உழவர் முதலியோர் வேண்டுங்காலத்தே மிகாதும் குறை யாதும் பொழிந்து கூழ் முதலியவற்றின் பெருக்கத்திற்கு உதவியாக என்பார், மழை தொழிலுதவ என்றார். உலகமும் அதற்குறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு மழையே ஏதுவாகலின் தொழில் உதவ எனப் பொதுவிற் கூறினார். மாதிரம் - திசை; மலையுமாம். கொழுக்க என்றது, வளத்தான் மிக்குச் செழிப்புற என்றவாறு. தொடுப்பு - விதைப்பு. ஆயிரமாக என்றது, ஒன்று ஆயிரம் பங்காகப் பெருகி என்றவாறு. ஆயிரம் மிகுதிக்கு ஓர் எண் காட்டியபடியாம்; நன்கு விளைய என்பது கருத்து.

வேலியாயிரம் விளையுட்டாக, (பொரு. 246-7)

என்றும்,

வான மின்னு வசிவுபொழிய வானா
திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளைய (மலைபடு. 7-8)

என்றும் பிறரும் கூறுதல் காண்க. நிலன், மரன், என்பவற்றில் மகரத்திற்கு னகரம் போலி. எதிர்பு : செய்பு என்னும் எச்சம்; எதிர்ந்து என்றவாறு. எனவே நிலமும் மரங்களும் உயிர்கட்கு நிறைந்த பயன் அளித்தல் வேண்டும் என்னும் குறிக்கோளுடையவாய்ப் பயன் அளிப்பனபோல அளிக்க என்க. நந்துதல்-தழைத்தல். நோய் - பசி பிணி முதலியன. இகந்து - அகன்று. நோக்கு - அழகு, நோக்கப் படுபொருளாதலான் அழகினை நோக்கென்றார். மேதக என்பதனை வயக்களிறு என்பதன் பின்னாகக் கூட்டுக. உலகினைத் திசை யானைகள் சுமப்பனவாம்; அவற்றின் சுமையைப் பாண்டிய மன்னர்கள் தாம் ஏற்றுக் கொண்டமையால், அவை சுமத்தற்றொழில் ஒழிந்து பொலிவுடையனவாய் மேம்பாடுற்றன என்பார், மிகப் பொலிந்த ஓங்குநிலை வயக்களிறு மேதக என்றார். திசைகள் தோறும் ஒவ்வொன்றாய் நிலைத்து நின்று சுமத்தலான், ஓங்கு நிலைக் களிறு என்றார். உலகந்தாங்கும் ஆற்றலுடையன என்பார், வயக்களிறு என்றார். வய-வலிமை.

வய வலியாகும் (தொல். உரி-68)

என்பர் தொல்காப்பியனார். இங்ஙனம் திசையானைகளால் உலகம் சுமக்கப்படுதலை.

விரும்பிய மூப்பெனும் வீடு கண்டயான்
இரும்பிய லனந்தனும் இசைந்த யானையும்
பெரும்பெயர்க் கிரிகளும் பெயரத் தாங்கிய
அரும்பொறை யினிச்சிறி தாற்ற வாற்றலேன் (கம்ப-2 : மந்திர - 16)

என்னும் இராமாவதாரத்தானும்,

........................ கூறொன்றத்
தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும்
வாங்கிப் பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய
கொற்றப் புயமிரண்டாற் கோமான் அகளங்கன்
முற்றப் பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற
வருத்த மறமறந்து மாதிரத்து வேழம்
பருத்த கடாம்திறந்து பாய். (விக்கிரம - உலா)

என்பதனானும் உணர்க. சுருளும் படியுமாகப் பண்ணின விடத்துப் பண்ணி நிற்கும்யானை என்றுரைப்பாருமுளர் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். கண்டு தண்டாக்கட்கின்பம் என்றது பாண்டியர் ஆட்சிக்கண் இவ்வாறெல்லாம் உலகம் வளம்படுதலான், ஆண்டுள்ள காட்சிகளைக் காணுந்தோறும் காணுந்தோறும் இன்பமே உடைத்தாதலான் மனனுணர்வுடையோர் கண்டது போதும் என அமையாது மேலும்மேலும் காண்டலை விரும்புதற்குக் காரணமான இன்பம் என்றவாறு. உண்டு தண்டாமிகுவளம் என்றது உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் வயிறார உண்டும் மிக்குக் கிடக்கும் செல்வம் என்றவாறு. அவை நெல் கனி முதலியனவாம். பூரிமம்-சிறகு. அஃதாவது தெருவின் இருமருங்கினும் நிரல்பட அமைத்துள்ள வீட்டொழுங்கு.

பூரிமம் என்பதனைச் சாந்திட்ட தொட்டி என்பாருமுளர் என நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். பொய் அறியா என்றது, வழுக்கியும் தம் வாயாற் பொய் பேசுதலை அறியார் என்றவாறு. தள்ளியும் வாயிற் பொய்கூறார் வடுவறு காட்சியார் என்று பிறருங் கூறுதல் காண்க. இனித் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும்,

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற (குறள் - 300)

என்றும்

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (குறள் 299)

என்றும் வாய்மையின் சிறப்பையும் அது சான்றோர்க்கு இன்றியமையாமையும் விதந்தோதி,

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (குறள் - 297)

என்றும்,

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும் (குறள் - 264)

என்றும் பொய்யாமை வாய்மை இரண்டனையும், விலக்குமுகத்தானும் விதிமுகத்தானும் கூறியிருத்தலறிக. அத்துணைச் சிறந்த அறமாகலின் இஃதொன்றனையே விதந்துகூறிப் பாண்டியமன்னர்களின் உழையிருந்த அமைச்சர் சிறப்பினைத் தெரித்தோதினார். ஓரிடத்துப் பொய் கூறுவாரும் மற்றோரிடத்தே வாய்மை பேசுதல் உண்டாகலின், வாய்மொழியாற் புகழ்நிறைந்த என்றொழியாது, பொய்யறியா எனல் வேண்டிற்று.

இங்ஙனம் தள்ளியும் பொய்கூறாது வாய்மை பேசுதற்குக் காரணம் ஆவது வடுவறு காட்சியே ஆகலின், அத்தகைய மெய்க்காட்சி யாளரையே அமைச்சராகக் கொண்டு உலகமாண்ட உயர்ந்தோர் மருக என்றவாறு. நல்லூழி அடிப்படர என்றது. கல்தோன்றி மண் தோன்றாக் காலந் தொடங்கி இதுகாறும் நிகழ்ந்த காலமெல்லாம் மாறாதே தம் மரபினர் வழி அடிப்பட்டு நடக்க என்றவாறு. இனி நல்லூழி கலியல்லா முன்னைய ஊழிகளினும் எனினுமாம். பல்வெள்ளம் மீக்கூற என்றது, இங்ஙனம் நிகழ்ந்த புகழை இனி எதிர்காலத்தேயும் பலவெள்ளம் ஆகிய ஊழிகள் உலகம் விதந்தெடுத்துப் புகழாநிற்ப, என்றவாறு. பல்வெள்ள ஊழி என்றது உலகம் உள்ளதுணையும் நிலவும் புகழ் என்றற்கு எண் காட்டியவாறு. உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக! என்றது விளி. முந்நீர் வரம்பாக மலைநாறிய ஞாலத்துக் கொட்பச் சுழல ஒழுக விளங்க உதவ விளைய நந்த விளங்க மேதக நல்மாந்தரொடு உலகம் ஆண்ட என வினை முடிவு செய்க. கொட்ப முதலிய செயவெனெச்சங்கட்கு ஆண்ட என்னும் எச்சம் ஏதுவாதல் அறிக.

இத்தகைய உயர்ந்தோராகிய உன் முன்னோரும் இவ்வுலகத்தே நிலையுதலின்றி மாண்டொழிந்தாரல்லது அவருள் ஒருவரேனும் நிலைத்திலர்; அவர்கள் வழிவந்த நீதானும் அவர்செய்தவற்றையே செய்தலிற் பயனில்லை என்றும், நிலைபேறுடைய வீடு எய்தும்நெறி முயல்க என்றும் செவியறிவுறுத்து மாற்றான் இதன்கண்ணும் காஞ்சித் திணைப் பொருளாகிய நிலையாமையே கூறும் நுணக்கம் நுண்ணிதின் உணர்ந்து மகிழற்பாற்று. இங்ஙனமே, அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும் மறக்கள வேள்வியே செய்துழன்றசேரன் செங்குட்டுவனுக்குக் காஞ்சி கூறப்புக்க நான்மறையாளன் மாடலனும்,

வேந்துவினை முடித்த வேந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிநின் ஊங்கணோர் மருங்கில்
கடற்கடம் பெறிந்த காவல னாயினும்
விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும்
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும்
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும்
வன்சொல் யவனர் வளநா டாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்
மிகப்பெருந் தானையோ டிருஞ்செரு வோட்டி
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்
உருகெழு மரபின் அயிரை மண்ணி
இருகட னீரும் ஆடினோன் ஆயினும்
சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்! (சிலப்-நடுகல் : 134-50)

என (வெளிப்படையான்) ஓதினன். நல்லிசைப் புலவர் தலைவராய் விளங்கிய மாங்குடி மருதனார் மற்றொரு நல்லிசைப் புலவனாகிய மன்னனுக்குக் கூறுதலானே காஞ்சி என்னும் பெயரானே இதன் கண்ணும் குறிப்பாக நிலையாமையே கூறப்பட்டதறிந்து அம் மன்னனும் நுண்ணிதின் மகிழும் பொருட்டு நுணக்கமாக அறிய வல்லுநர்க்குமட்டும் காஞ்சித் திணைப்பொருள் குறிப்பாற் புலப்படுமாறு கூறிப் போந்தனர். இங்ஙனமே இந்நூலில் யாண்டும் குறிப்பாக நிலையாமை யுணர்த்துவதனை ஆண்டாண்டுக் காட்டுதும். இனி, 24 - பிணக்கோட்ட சொல் களிறு என்பது தொடங்கி, 42-பொருந என்னுந் துணையும் நெடுஞ்செழியனின் முன்னோர் தெறற் சிறப்புக் கூறுமாற்றால் மீண்டும் விளிக்கின்றார்.

பாண்டிய மன்னரின் தெறற்சிறப்பு

24-35 : பிணக்கோட்ட ................. ஊன்சோறு

பொருள் : பிணக்கோட்ட களிற்றுக் குழும்பின் நிணம், வாய்ப்பெய்த பேய் மகளிர் - பிணங்களைக் கோத்த கொம்புகளை யுடையனவாய்ப் பட்ட யானையினுடைய திரளின் நிணத்தைத் தின்ற பேய் மகளிருடைய, இணை ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப்பிணை யூபம் எழுந்து ஆட - இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குச் செறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து நின்று ஆடுகையாலே, அஞ்சு வந்த போர்க்களத்தான் - அஞ்சுதலுண்டான போர்க்களத்தின் கண்ணே, ஆண் தலை அணங்கு அடுப்பின் - மறவர் தலையாகிய நோக்கினாரை வருத்தும் அடுப்பினிடத்தே, வய வேந்தர் ஒண் குருதி சினத் தீயில் பெயர்பு பொங்க - வலி மிக்க வேந்தருடைய ஒள்ளிய குருதியாகிய உலை வெகுளியாகிய நெருப்பில் மறுகிப் பொங்காநிற்ப, தெறல் அரும் கடுந்துப்பின் விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின் தொடித் தோள் கைதுடுப்பாக ஆடுற்ற ஊன் சோறு - பகைவரால் வெல்லுதற் கரிய கடிய வலியினையும் வெற்றி விளங்கிய சீரிய கொடுந்தொழிலினையுமுடைய மறவர்களின் மறவளையணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊனாலாய சோற்றினை,

கருத்துரை : பிணங்களைக் கோத்த கொம்பை உடையனவாய் இறந்துபட்ட யானைத் திரளின் நிணத்தைத் தின்று ஆடும் பேய்மகளின் துணங்கைச் சீர்க்குப் பொருந்துமாறு, குறைத்தலைப் பிணங்கள் எழுந்து ஆடுதலானே, அஞ்சுதல் உண்டான போர்க்களத்திடத்தே ஆண்மக்களின் தலையானியற்றிய அடுப்பின்கண்ணே, மறவருடைய சினத்தீ எரிந்து மன்னருடைய குருதியாகிய உலைநீர் பொங்குதலானே, மறவளை யணிந்த வெல்லற் கரிய மறவருடைய வலிமிக்க கைகளைத் துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊனாலாய சோற்றினை என்பதாம்.

அகலவுரை : கோட்ட : பலவறி சொல். தாம் குத்திக் கொன்ற மறவர்களுடைய பிணங்கள் தங்கொம்பிலேயே தூங்கக்கோத்த மறக்களிறென்பார் பிணக் கோட்ட களிறு என்றார். காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா, வேலாள் முகத்த களிறு (குறள் - 500) எனத் தேவருங் கூறுதல் காண்க. குழும்பு - திரள். நிணம் - ஊன். துணங்கை : ஒருவகைக் கூத்து; அதாவது : முடக்கிய இருகை பழுப்புடை ஒற்றித், துடக்கிய நடையது துணங்கை யாகும் என்பர்; இதனைச் சிங்கிக் கூத்தென்றுங் கூறுப. நிணம் உண்ட களிப்பால் பேய்மகள் ஆடிய துணங்கை என்க; இங்ஙனம் பேய்கள் நிணனுண்டு களித்துத் துணங்கையாடலை,

உலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை யலைக்கும் காதிற் பிணர்மோட்
டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணந்தின் வாயள் துணங்கை தூங்க, (முருகாற்று : 47-56)

எனவரும் திருமுருகாற்றுப்படையானும் உணர்க. இணைஒலி - தாள முதலியவற்றோடு பொருந்திய ஒலி என்க. ஒலியிமிழ் : பண்புத்தொகை. பேயாடும் துணங்கைக் கூத்தின் இசைக்கும் தாளத்திற்கும் ஏற்ப யூபம் எழுந்து ஆடும் போர்க்களம் என்க. யூபம் - குறைத்தலைப் பிணம். குறைத்தலைப்பிணம் ஒன்றனோடொன்று நெருங்க நின்றாடு மென்பார் பிணையூபமெழுந்தாட என்றார். பிணைதல் - நெருங்குதல்.

பேயும் குறைத்தலைப் பிணமும் ஆடுதல், கண்டார்க்குப் பெரிதும் அச்சம் பயக்குமாகலின் அஞ்சு வந்த போர்க்களம் என்றார். அஞ்சு - அஞ்சுதல். ஆண் : ஈண்டுப் போர்மறவர். போர்மறவரின் தலைகளை அடுப்பாகக் கோலி என்க. அணங்குதல் வருத்துதல்; அச்சுறுத்தலுமாம். அரக்கர் முடிகளை அடுப்பு வகிர்வன, (திருவகுப்பு : பொருகளத்.) என்றும், முடித்தலை ஒப்ப அடுப்பென வைத்து (þ - செருக்கள) என்றும் பிறரும் கூறுதல் அறிக. மன்னர் குருதியை உலைநீராக வாக்கி வெகுளியாகிய தீமூட்டி என்க. அஞ்சாது எதிர் நின்று மாய்ந்தோர் குருதியாகலின், ஒண்குருதி என்றார். ஒண்குருதி - ஒளியுடைய குருதி. இனி உயிர்கொடுத்துப் புகழ்பெறுவார் குருதியாகலின் புகழின் பொருட்டுச் சிந்திய குருதி ஒண்குருதி எனப்பட்ட தெனினுமாம். இதுகாறும் பிறபகைவரால் வெல்லப்படாத பகைப்படை என்பது தோன்ற பிணக் கோட்ட களிறு என்றும், வயவேந்தர் ஒண்குருதி என்றும் பகைவர் பெருமையைச் சிறப்பித்தோதினார். தெறலரும் கடுந்துப்பின் விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின் என்னுந் துணையும் தொடித் தோட்கைக்கு அடையாக்கியதூஉம் அக் கருத்தான் என்க. அடுதலுற்ற, என்பது ஆடுற்ற என நின்றது. அடுதல் - சமைத்தல். துடுப்பு - அகப்பை; அவர் கரவகப்பை யவைகொடு புகட்டி யடுவன என்றார் பிறரும்.

36-42 : நெறியறிந்த ................ பொருந

பொருள் : நெறி அறிந்த கடி வாலுவன் - இடும் முறைமையினை அறிந்த பேய் மடையன், அடியொதுங்கிப் பிற்பெயராப் படையோர்க்கு முருகு அயர - இட்ட அடியை வாங்கிப் பின் போகாத வீரர்க்கு வேள்வி செய்யும்படி, அமர்கடக்கு வியன் தானை - போரினை வெல்லும் அகலத்தையுடைய படையினையுடைய, தென்னவன் பெயரிய - தென்னவன் என்னும் சிறப்புப் பெயரினையுடைய, துன்னரும் துப்பின் - பகைவராற் கிட்டுதற் கரிய, தொல் முது கடவுட் பின்னர் மேய - பழைமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றிய, வரைத் தாழ் அருவி - பக்கமலையிலே வீழ்கின்ற அருவியினையுடைய, பொருப்பிற் பொருந - மலைக்கு வேந்தனாகிய வீரர் பெருமானே!

கருத்துரை : இடும் முறைமையினை அறிந்த பேய்மடையன் அடிபிறக்கிடாத மறவர்க்கு வேள்வி செய்யும்படியாகப் போரினை வெல்லும் பெரிய படையையுடைய தென்னவன் என்னும் சிறப்புப் பெயர்க்குரிய பழைமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றலும் பொதிய மலைத் தலைவனுமாகிய வீரவேந்தே! என்பதாம்.

அகலவுரை : தானையை உடையோனும், தென்னவன் என்னும் சிறப்புப் பெயருடையோனும் துப்பினை யுடையோனும், கடவுட் பின்னர் மேயவனும், பொருப்பினையுடையானும் ஆகிய பொருந! என்க.

நெறியறிந்த என்றது ஊன்சோறு வழங்குங்கால் வரிசை யறிந்து வழங்கும் நெறியினை அறிந்த என்றவாறு. வரிசை யறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே (புறம்-121) என்றார் பிறரும். கடி -பேய்; வாலுவன் - அடிசில் சமைப்போன்; மடையன், பேய்களுள் மடையன் என்றவாறு. அடியொதுங்கிப் பிற்பெயராப் படை என்றதும், பேய்களுள் மறப்பேய்களை என்க. முருகயர - வேள்வி செய்ய; என்றது சோறு வழங்க என்றபடி. பேய்ப்படை காளியின் படையாகிய கூளிப்படை என்க. முருகு : அழகென்னும் பொருட்டாகலின், அழகிய செயலாகிய ஈகையின் மேனின்றது. வாலுவன் முருகயர அமர்கடக்கும் என ஏதுவாக்குக. தென்னவன் என்றது, பாண்டியர்க்குரிய சிறப்புப் பெயராகலின் அப் பெயர்பெற்றவன் என்பார் தென்னவன் பெயரிய என்றார். பெயரிய பொருந எனக் கூட்டுக. தொன்முது கடவுட் பின்னர் மேய என்றதற்குப் பழைமை முதிர்ந்த கடவுளாகிய சிவனுக்குப் பின்னர் அவனுக்குச் சமம் என்ன வந்த அகத்தியனார் உறையும் எனப்பொருள் கூறிப் பொருப்பிற்கு அடையாக்கினுமாம். அகத்தியன் மேய பொருப்பிற்குத் தலைவன் என்றவாறு.

இனி இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் பின்வருமாறு பொருள் கூறினர். அது, தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் தொல்முது கடவுள் பின்னர் மேய பொருந - இராவணனைத் தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின வலியினையுடைய பழைமை முதிர்ந்த அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனாயிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே என்பதாம். இங்ஙனம் பொருள் கூறி மேலும் இதுபற்றி அவர் கூறுவதாவது : திசைநிலைக் கிளவியின் ஆஅகுநவும் என்றதனால் இராவணன் தென்றிசை யாண்டமைபற்றித் தென்னவன் என்றார்; இப்பெயர் பாண்டியற்கும் கூற்றுவற்கும் ஏற்றுநின்றாற் போல. அகத்தியன் தென்றிசை யுயர்ந்த நொய்மைபோக இறைவனுக்குச் சீரொப்ப இருந்தான் என்பது பற்றிக் கடவுள் என்றார். இராவணன் ஆளுதல் பாயிரச் சூத்திரத்து உரையாசிரியர் கூறிய உரையானும் உணர்க. இதனால் அகத்தியனுடன் தலைச் சங்கத்துப் பாண்டியனிருந்து தமிழாராய்ந்த சிறப்புக் கூறினார்.

கூற்றுவனை உதைத்த கடவுள் என்று இறைவனுக்காக்கி அவன் பின்னர் என்றது அகத்தியனை என்று பொருள் கூறின், இறைவனுக்குத் தம்பி என்றல் சாலாமையானும், அப்பொருள் தருங்காலத்து முன்னவன் பின்னவன் முன்னோன் பின்னோ னென்றல்லது நில்லாமையானும் அது

முன்னரே சாநாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள (நாலடி : 92)

எனப் பிறாண்டும் முன்னர் பின்னர் என்பன இடமுணர்த்தியே நிற்கும் என்றுணர்க என்பதாம்.

இறைவன் ஒரு காலத்தே பாண்டிய மன்னன் மகளாகிய அங்கயற் கண்ணியை மணந்து பாண்டியர்க்குரிய அரசு கட்டிலின் அமர்ந்து தென்னாட்டினை ஆட்சி செய்தனர் என்ப. இதனைத் தென்னாடுடைய சிவனே ! போற்றி என்னும் மணிவாசகத்தானும் திருவிளையாடற் புராணம் முதலியவற்றானும் உணர்க. இவ்வரலாற்றினை உட்கொண்டே தொன்முது கடவுட் பின்னர் மேய என்றார் நல்லிசைப்புலவர் மாங்குடி மருதனார் என்க. இத்தொடரினும் பிணக்கோட்ட களிறு முதலிய தொடர்களான் யாக்கை நிலையாமை முதலியன குறிப்பாற் போந்தமை உணர்க. 43-விழுச்சூழிய என்பது தொடங்கி, 61-உம்பல் என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண் பாண்டியன் நெடுஞ்செழியனின் போர் ஆற்றலும், யானை குதிரை தேர் மறவர் என்னும் நால்வகைப் படைகள் போர் உழக்கும் திறமும் கூறப்படும்.

யானைப்படையின் சிறப்பு

43-48 : விழுச்சூழிய ...................... களனுழக்கவும்

பொருள் : விழுச் சூழிய - சீரிய முகபடாத்தையுடைய வாய், விளங்கு ஓடைய - விளங்குகின்ற பட்டத்தையுடையவாய், கடுஞ்சினத்த - கடிய வெகுளியையுடையவாய், கமழ் கடா அத்து அளறுபட்ட நறுஞ்சென்னிய - கமழுகின்ற மதத்தாலே சேறுண்டான நறிய தலையினை உடையவாய், வரைமருளும் உயர் தோன்றல - மலையென்று கண்டார் மருளும் உயர்ந்த தோற்றத்தினை யுடையவாய், வினை நவின்ற பேர் யானை - போர்த் தொழிலிலே பயின்ற பெரிய யானை, சினஞ்சிறந்து களனுழக்கவும் - வெகுளி மிக்குப் போர்க்களத்தே பகைப்படை மறவரைக் கொன்று திரியாநிற்பவும்.

கருத்துரை : போர்ப்பயிற்சி நன்குடைய யானைகள் சிறந்த முகபடாத்தையும் விளங்குகின்ற பட்டத்தையும் அணியப் பெற்றனவாய், மணங்கமழும் மதச்சேறு உண்டான தலையினவாய்க் கண்டோர் மலை யென்று மருளும் உயர்ந்த உருவமுடையனவாய், சினம் மிகுந்து போரின்கட் பகைமறவரைக் கொன்றுகொன்று செருக்கித் திரியா நிற்பவும், என்பதாம்.

அகலவுரை : விழு - விழுமம்; சீர்மை; அல்லது சிறப்பு என்னும் பொருட்டு

விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (உரி-55.)

என்பர் தொல்காப்பியனார். சூழிய, ஓடைய, சினத்த, தோன்றல என்பன வினையெச்சமுற்றுக்கள். அவை உழக்கவும் என்பது கொண்டு முடியும்; வினை நவின்ற பேர்யானை என்னும் தொடர்க்கண் உள்ள நவின்ற என்னும் பெயரெச்சத்தோடு முடிக்க என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். சினம் சிறந்தென்றது, பகைப்படையின் ஆரவாரத்தானே தூண்டப்பட்ட வெகுளி பொங்கி என்றவாறு. கமழ் கடாம் - நாறுகின்ற மதம்; யானை மதம் மணமகள் கூந்தல் போல் மணங்கமழும் என்பர் திருத்தக்கதேவர்.

புணர்மருப் பியானையின் புயல்கொண் மும்மதம்
மணமகள் கதுப்பென நாறும் (சிந்தா-1621.)
குதிபாய் கடம் மதகோடி யுலகேழு மணநாற (தக்க-3)

என்றும்,

மாவதத்தினை யிழைத்திடும் பூட்கையின் மதநீர்
காவதத்தினுங் கமழ்தரு கலிங்கநாடு (கந்த.மார்க்கண்டேயப்-114)

என்றும் பிறரும் கூறுதல் காண்க.

வினை - ஈண்டுப் போர்த்தொழில். நவிலுதல் - நன்கு பயிற்சி செய்தல். பேர்யானை என்றது எழுமுழம் உயர்ந்து ஏழுறுப்பும் நிலத்திற்றோய்ந்த சிறந்த யானை என்றவாறு. என்னை, திருந்தி ஏழுறுப்பும் திண்ணிலம் தோய்வ (சிந்தா-2154) என்பவாகலின், களம்: களன் என மகரத்திற்கு னகரம் போலியாயிற்று. களம்-போர்க்களம். உழக்குதல் ஐந்துறுப்பானும் பகைவரைக் கோறல். என்னை?

அரும்பனைத் தடக்கை யபரகாத்திரம் வாய்
வால் எயிறு ஐந்தினுங் கொல்வ (சிந்தா-2154)

என்பவாகலின்,

குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படைகளின் சிறப்பு

49-54 : மாவெடுத்த ........................ வீறுமுற்றவும்

பொருள் : மா எடுத்த மலி குரூஉத் துகள் அகல்வானத்து வெயில் கரப்பவும்-குதிரைப்படை பகைவர்மேற் செல்லுதலான் உண்டான மிக்க நிறத்தையுடையவாகிய தூளி விரிந்த வானத்தின்கண் வெயிலை மறையாநிற்பவும், வாம்பரிய கடுந்திண்டேர் காற்றென்னக் கடிது கொட்பவும்-தாவும் குதிரைகளையுடைய கடிய செலவினையுடைய திண்ணிய தேர்ப்படை காற்றுச் சுற்றி யடித்தாற் போன்று விரைந்து சுழலாநிற்பவும், வாள் மிகு மறமைந்தர் தோள் முறையான் வீறு முற்றவும் - வாட்போரான் மிகுகின்ற மறத்தையுடைய மறவர்கள் தம் தோளானே முறையாகச் செய்யும் வெற்றி முற்றுப் பெறவும்;

கருத்துரை : பகைவர்மேற் பாயும் புரவிகளின் குளம்பு கிண்ட எழுந்த நிறமிக்க தூளி விண்ணிடத்தே வெயில் மறைப்பவும், தாவுகின்ற குதிரைகளையுடையனவும் விரைந்து செல்லும் இயல்புடையனவுமாகிய திண்ணிய தேர்கள் சூறைவளிபோல் விரைந்து சுழலவும், வாட்போரின் மிகுந்த வன்மையுடைய காலாட்படை மறவர் தம் தோளாலே இயற்றும் முறைபிறழாப் போரினைச் செய்து வெற்றியை முற்றச் செய்யவும், என்பதாம்.

அகலவுரை : விழுச்சூழிய (43) என்னும் அடி தொடங்கி வீறு முற்றவும் (54) என்பதிறுதியாகவுள்ள பன்னிரண்டடிகளிலே, காண்போர் தலைநடுக்கங் கொள்ளத்தகுந்த ஒரு பெரிய போர்க்களத்தையும், அப் போர்க்களத்தே களனுழக்கும் யானை முதலிய நால்வகைப் படையின் போர்த்தொழிலையும் வியத்தகு முறையில் நம் அகக்கண் முன்னரே படைத்துவிட்ட தெய்வப்புலமையின் அருமையை என்னென்று புகழவல்லோம். இக் காட்சியை மனனுணர்வாற் கண்டு களித்தலன்றி எடுத்துக் கூற எம்மனோர்க் கியலாதாம். இப்பன்னிரண்டடிகளாகிய வஞ்சியடிகளின் இடையிடையே தெற்றுப்பட்டு நடக்கும் தூங்கலோசைதான் இப் போர்நிகழ்ச்சி கூறுதற்கு எத்துணை வாய்ப்புடையதாக வுள்ளதென்பதனை இவ்வடிகளை மீண்டும் மீண்டும் ஓதி யுணர்க. பகைப் படையின் ஆரவாரங் கேட்டலும் வினைநவின்ற பேர் யானை தம் கண்களிலே சினநெருப்புச் சிதற அப்படையினூடே மலையியங்குமாறு போன்று மண்டிக்கால்களான் இடறியும், கையாற்றாக்கியும் மறவருடலைக் கொம்பின்கட் கோத்தும் செய்யும் அச்சந்தரும் போர்ச் செயலையும், விரைந்து செல்லும் குதிரைகளான் எழுந்த துகள் வெயிலை மறைத்தலானே அப்போர்க்களம் இருண்டுகிடத்தலையும், இதனிடையே திண்டேர்கள் ஆங்காங்கே சூறைவளிபோற் சுழலுதலையும், மறவர்கள் தம் தோளாலே வாள் வீசிப் பகைவரைக் கொன்று குவித்து வெற்றி வெற்றி வெற்றி என மறமுழக்கம் செய்தலையும் காண்மின்! காதாலே கேண்மின். இத்தகைய புலமையையன்றோ நல்லிசைப்புலமை எனத் தொல்காப்பியர் போற்றிப் புகழ்வாராயினர்.

மா-குதிரை. மலிதல் - மிகுதல். குரூஉ - நிறம்.
குருவும் கெழுவும் நிறனா கும்மே (உரி-5)

என்பது தொல்காப்பியம். அகல்வானம் : வினைத்தொகை. கரத்தல் - மறைத்தல். வாம்பரி - வாவும் பரி; வாவும் என்னும் செய்யுமென் வாய்பாட்டுப் பெயரெச்சம்.

செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே ஈற்றுமிசை யுகரம்
அவ்வழி அறிதல் என்மனார் புலவர் (தொல்-சொல்-வினை : 41)

என்னும் விதியான் ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங்கெட்டு வாம் என நின்றது; தாவுகின்ற என்னும் பொருட்டு. கடுந்திண்டேர் என்றதன்கண் கடி என்னும் உரிச்சொல் விரைவு குறித்து நின்றது. கொட்பவும் - சுழலவும். வாள் மிகு மறவர் என்றது வாட்போரின்கண் மிக்குப் புகழ்பெற்ற மறவர் என்றவாறு. வாட்போர்செய்யும் மறவர்க்குரிய மற நெறியிற் றவறாமே நின்றுபோர் செய்து வென்றார் என்பார் வெற்றியை வீறு என்றார். வீறு வேறொன்றற்கில்லாத சிறப்பு. அஃதாவது விருந்தாயினை எறி நீ யென விரைமார்பகம் கொடுத்தல் (சீவக : 2265) முதலிய அருஞ்செயல்கள் என்க.

நெடுஞ்செழியனின் போர்வேட்கையும், நிலந்தருதிருவிற் பாண்டியன் சிறப்பும்.

55-61 : இருபெரு வேந்தரொடு ................ உம்பல்

பொருள் : இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருது அவரைச் செரு வென்றும் - சேரன் சோழனாகிய இரண்டு பெரிய முடியுடை வேந்தர்களுடனே குறுநில மன்னர் பலரும் இளைக்கும்படி பொருது அவரைப் போரின்கண் வென்றும் அமையாமல், இலங்கருவிய வரை நீந்திச் சுரம் போழ்ந்த இகல் ஆற்றல் - விளங்காநின்ற அருவிகளையுடைய மலையின்கண் அரசர்களையும் அமர் கடந்து பகைவர் காடுகளைப் பாலையாம்படி பிளவு படுத்திய மாறுபாட்டையுடைய போர் வலிமையுடையோனும், உயர்ந்தோங்கிய விழுச் சிறப்பின் நிலந்தந்த பேருதவி. மிகச் சிறப்பினையுடையதாக இவ்வுலகத்தைத் திருத்திக் கொடுத்த பெரிய உதவியினையும் உடைய, பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல் - பொன்னாற் செய்த மாலையை அணிந்த மார்பினையுடைய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழான் நீண்டவனுடைய வழியில் தோன்றியவனும் ஆகிய யானைபோல்வானே!

கருத்துரை : தமிழ் மன்னராகிய சேர சோழரோடே, குறுநில மன்னர் பலரையும் இளைக்கும்படி பொருது வென்றும் அமையாதே மேலும் குறிஞ்சிநில மன்னர் பலரையும் அமர் செய்து வென்று பாழ்படுத்தியபேராற்றல் உடையவனும், தனது செங்கோன்மையானே உலகில் அறத்தினை நிறுத்திச் சீர்திருத்தம் செய்த உதவியையுடைய பொன்மாலை மார்பினனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்று உலகம் புகழ நின்ற பாண்டியன் மரபில் தோன்றியவனுமாகிய யானை போல்வானே என்பதாம்.

அகலவுரை : தமிழ்நாட்டு முடியுடை வேந்தர் மூவருள் நின்னை யொழிந்தார் இருவர் ஆகிய சேனும் சோழனும் என்பார், இரு பெருவேந்தர் என்றார். பெருவேந்தர் - தாம் ஒருவனுக்குத் திறை செலுத்துதலின்றிப் பிறர்பாற்றிறை கொள்ளும் முடியுடை வேந்தர். இத்தகைய மன்னரைச் சக்கரவர்த்தி என்ப வடவர். பாண்டியன் நெடுஞ்செழியன் இங்ஙனம் ஏனை இரண்டு மன்னரோடே குறுநில மன்னர் பலரையும் அமர் செய்து வென்றான் என்பதனை,

கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத் தகன்றலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்
போர்வல் லியானைப் பொலம்பூண் எழினி
நாரரி நறவின் எருமை யூரன்
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன்என்
றெழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்
முரைசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக் (அகம் - 36)
கொன்று,

எனவரும் அகப்பாட்டானும்,

இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையும் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்மென விரும்பி
முயங்கின னல்லனோ யானே மயங்கிக்
குன்றத் திறுத்த குரீஇயினம் போல
அம்புசென் றிறுத்த அரும்புண் யானைத்
தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோர்எம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலும் உளகொல் நமக்கென
மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉவிளங் காரம் கவைஇய மார்பே (புறம் - 19)

எனவரும் புறப்பாட்டானும் உணர்க. இங்ஙனம் எழுவரையும் வென்றும் அமையாதவனாய் வடவர் நாட்டினும் சென்று ஆண்டுள்ள குறிஞ்சிநில மன்னரையும் வென்றோய் என்பார் இலங்கருவிய வரைநீந்தி என்றார். வரை, ஈண்டு வரைநாட்டு மன்னர்க்கு ஆகுபெயர். சுரம் போழ்ந்து என்றது, அவர் நாட்டினைப் பாழாக்கி என்றவாறு. போரின்கண் பகைநாட்டினைப் பாழ்படுத்தும் வழக்கத்தை,

நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ (புறம்-38)

என்பதனானும் அறிக. இகலாற்றல் - போர்செய்யும் வலி. இகல் ஆற்றலுடைய உம்பல் என்க. உயர்ந்தோங்கிய விழுச் சிறப்பினையுடையதாய் உலகினைச் சீர்திருத்தித் தந்த உதவியைச் செய்தவன் என்க. அவன் நிலந்தரு திருவிற்பாண்டியன் ஆவான். அப்பாண்டியன், இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் என அடியார்க்கு நல்லார் கூறிய உரையானே சங்கம் நிறீஇத் தொல்காப்பிய முதலிய அறிவியல் நூல்கள் புலப்படுத்துமாற்றான் தமிழ் நிலத்தினைச் சீர்திருத்திய வரலாற்றை உணர்க. உலகின்கண் உண்மைச் சீர்திருத்தமாவது அறிவு வளரச் செய்தலே ஆகலின், நிலந்தந்த திருவில் என்றார்; என்றது தமிழ் நிலத்தைச் சான்றோர் விரும்பும் அறிவு நிலமாக்கித் தந்த என்றவாறு. இனித் தென்றிசைக்கண் தன்னாட்டில் கடல் கொண்டழிந்த நிலத்திற்கு ஈடாக வடக்கிலுள்ள ஏனைய அரசர் நாட்டினைக் கைப்பற்றித் தங்குடிகட்குப் பேருதவி செய்த பாண்டியன் எனினுமாம். நல்லிசைப் புலவராதலான் தொல்காப்பிய முதலிய நூல் புலப்படுத்திய செயலை உதவி என நன்றியறிதல் தோன்ற எடுத்தோதினார்.

இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர், நிலம் தந்த பேருதவி என்னும் தொடர்க்கு நாட்டிலிருக்கின்ற அரசர் நிலங்களையெல்லாம் கொண்ட பெரிய உதவியையும் எனப் பொருள் கூறி மலையும் காடும் அரணாக இருந்த அரசரை அழித்த வலியாலே நாட்டிலிருக்கின்ற அரசர் தத்தம் நாடுகளை விட்டாரென்றதாம் என விளக்கமும் கூறினார். மேலும் பொலந்தார் மார்பின் நெடியோன் என்பான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன், என்று கூறியுள்ளார். இத் தொடரானும் உன் பகைவராகிய இரு பெரு வேந்தரும் வேளிரும் தம் யாக்கை செல்வ முதலியன கெட்டு நிலையுதலின்றி அழிந்தமை காண்க எனக் குறிப்பானே நிலையாமை கூறப்பட்டமை யுணர்க. பிறாண்டும் இங்ஙனமே கொள்க. 62- மரந்தின்னூஉ; என்பது தொடங்கி, 74-கோனாகுவை என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண், அச்செழியனின் தெறற் சிறப்பும், அவன் ஆட்சிக்கண் அமைந்த நாட்டின் எல்லையும் கூறப்படும்.

செழியனின் திக்குவெற்றி

62-69 : மரந்தின்னூஉ .................... விழுச்சிறப்பின்

பொருள் : மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் நரை உருமின் ஏறு அனையை - மரங்களைச் சுட்டு மலைகளை நீறாக்கும் பெருமையினையுடைய உருமேற்றை ஒப்பாய், அருங்குழு மிளைக் குண்டு கிடங்கின் - பகைவர் சேர்தற்கரிய திரட்சியையுடைய காவற்காட்டினையும் ஆழ்ந்த கிடங்கினையும், உயர்ந்து ஓங்கிய நிரைப்புதவின் - உயர்ந்து வளர்ந்த கோபுரங்களிடத்தே நிரல்பட்ட வாயில்களையும், நெடுமதில் நிரை ஞாயில் - நெடிய மதிலினையும் நிரல்பட்ட சூட்டினையும், அயில் அம்பு உமிழ் அருப்பம் - வேலினையும் அம்பினையும் வீசும் அரண்களையும், தண்டாது தலைச் சென்று கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின் - அமைந்திராதே அவ் விடங்களிலே சென்று கைக்கொண்டு போந்த சீரிய தலைமையோடே;

கருத்துரை : மரங்களைச் சுட்டு மலைகளை நீறாக்கும் இடியேற்றை ஒப்பாய்! பகைவர் எய்துதற்கரிய காவற் காட்டினையும், ஆழ்ந்த அகழியினையும், உயர்ந்த கோபுரவாயில்களையும், நெடிய மதிலையும், நிரல்பட்ட ஞாயில்களையும், வேல் முதலியவற்றை உமிழும் அரண்களையும் உடைய வடநாட்டரசர்பால் படிந்திராதே சென்று, அவையிற்றைக் கைக்கொண்டு போந்த தலைமையோடே என்பதாம்.

அகலவுரை : தின்னூஉ : செய்யூ என்னும் எச்சம் அளபெடுத்தது. தின்னுதற் றொழில் ஈண்டுச் சுட்டழித்தற் றொழிலின் மேனின்றது; இது பாண்டியன் தன் பகைவரை அழித்தற் றொழிற்கு உவமை என்க. மலையை நீறாக்குதல் பகைவருடைய மதில் முதலியவற்றைத் துகள்பட அழிக்குந் தொழிற்கு உவமை. இங்ஙனம் போரின்கண் உயிர்ப்பொருள் உயிரில் பொருள்களை விரைந்தழித்தற்கு இடியேற்றையும் அதன் இருவேறு அழித்தற் றொழிலையும் உவமையாக்கிய அருமை உணர்க. அரசர்கள் பகையழித்தற்கு மடிதல் அறமன்மையான் தண்டாது என்றார்; தண்டாது - மடிந்திராது. தலை - இடம். தலைச்சென்று என்றது, தானே வலிந்து மேற் சென்றென்றுமாம். கொண்டு-அப் பகையரசரின் அரண் நாடு முதலியவற்றைக் கைக்கொண்டென்க. உயர்ந்தோங்கிய விழுச்சிறப்பு என்றது மேலும் மேலும் உயர்ந்து வளர்ந்த மாபெருஞ் சிறப்பு என்றவாறு. அஃது உலகெலாம் பொது நீக்கித் தன்னொருகுடைக் கீழ்க் கொண்டாளும் சிறப்பு. இச் சிறப்பினைச் சாமிராச்சியம் என்பர் வடநூலோர். இதனால் செழியன் வடவரை வென்று உலகமுழுதும் கைக்கொண்டமை கூறினார். இதனைத் திக்குவிசயம் என்பர் வடவர்.

செழியன் ஆட்சிக்கண் அமைந்த நாட்டின் எல்லைகள்

70-74 : தென்குமரி ...................... கோனாகுவை

பொருள் : தென்குமரி வடபெருங்கல் குண குட கடல் எல்லை ஆ தென்றிசைக்கண் உள்ள குமரியும் வடதிசைக்கண் உள்ள பெரிய இமயமும் கீழ்த்திசையினும் மேற்றிசையினும் கிடக்கும் இருபெருங் கடல்களும் நிரலே அவ்வத்திசையின் எல்லையாக அமையும்படி, தொன்று மொழிந்து தொழில் கேட்ப - இவ்வெல்லையகத்துள்ள வேந்தரெல்லாம் தம் பழைமையைச் சொல்லி ஏவல் கேட்கும்படி, வெற்றமொடு வெறுத்தொழுகிய-வெற்றியோடே செறிந்து நடந்த, கொற்றவர் தம் கோன் ஆகுவை - அம் மன்னர்கட்கு மன்னனாக விளங்கா நின்றனை;

கருத்துரை : அங்ஙனம் திசைகளை வென்றடிப்படுத்திய தலைமையோடே தெனாது உருகெழு குமரியும், வடாது நெடுவரையும், குணாது கரைபொரு தொடுகடலும், குடாது தொன்றுமுதிர் பவுவமும் எல்லையாக அமையும்படி நாவலந்தீவு முழுவதையும் அதன் கண்ணுள்ள அரசரெல்லாம் வழிமொழிந்து ஒழுக ஒரு குடைக் கீழ்க் கொண்டாளும் மன்னர் மன்னனாகத் திகழா நின்றனை என்பதாம்.

அகலவுரை : தமிழ் நாட்டின் வடவெல்லை வேங்கடமே யாயினும் செந்தமிழ் நாட்டு மூவேந்தருள்ளே ஒவ்வொரு காலத்தே சிறந்து விளங்கிய ஒவ்வோர் அரசர் வடவிமயங்காறும் வென்றடிப் படுத்தி விளங்கிய வரலாற்றினைச் சிலப்பதிகாரம் புறநானூறு பத்துப்பாட்டு முதலிய பண்டைத் தமிழ் நூல்களான் நன்கறியலாம்.

திங்கண்மாலை வெண்குடையான் சென்னிசெங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும், (சிலப் - 7:2)

இது சோழர் வடவிமயம் வரை ஆட்சி செய்தது.

குமரியொடு வடவிமயத்து ஒரு மொழிவைத்
துலகாண்ட சேரலாதற்கு. (சிலப் - 29: 1)

இது சேரன் அங்ஙனம் ஆண்டது.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் (புறம் - 6)

இது பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சிக்கண் அமைந்த எல்லை. எனவே இப்பேருலகிலுள்ள எல்லா நாடுகளினும் தமிழ்நாடு அறிவாற்றலின் உயர்ந்தோங்கித் திகழ்ந்த காலம் அஃதாமென உணரற்பாற்று. கடலாக என்னும் சொல் ஈறுகெட்டுக் கடலா என நின்றது. அதன்கண் உள்ள ஆக்கச் சொல்லை எல்லை என்பதன் பின்னாக மாறிக் குமரி முதலிய நான்கனோடும் தனித்தனி இயைத்துக் கொள்க. வெற்றம் - வெற்றி. வெறுத்தொழுகிய - செறிந்து நடந்த, கொற்றவர் - வென்றடிப்படுத்தப்பட்ட வேந்தர். தத்தம் பழைமையான தொடர்புகளையும் உறவு முறையையும் எடுத்துக்கூறிக் கேண்மை கொண்டு அரசரெல்லாம் தான் ஏவிய வழி ஒழுக என்பார்,

தொன்று மொழிந்து தொழில் கேட்ப.

என்றார். தொன்று மொழிதல், எந்தையும் நுந்தையும் இன்னவாறு தொடர்புடையர்; வழி வழி யாம் நின் நிழல் வாழ்வோம். என்றின்னோ ரன்ன கூறுதல். வெற்றியிற் சிறந்த மன்னரையும் வென்றாய் என்பார் கொற்றவர்தம் கோன் என்றார். 75- வானியைந்த என்பது தொடங்கி 88- கொற்றவ என்னுந் துணையும் ஒரு தொடர் : இதன்கண் செழியன் சிறந்த துறைமுகப்பட்டினம் ஒன்றனைக் கைக்கொண்ட வெற்றி கூறப்படும்.

நெல்லூர் கொண்டமை

75-88 : வானியைந்த ................ கொற்றவ

பொருள் : வான் இயைந்த இருமுந்நீர் பேஎம் நிலைஇய இரும்பௌவத்து - வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்று தலையுடைய பெரிதாகிய மூன்று நீர்மையையுடைய அச்சம் நிலை பெற்ற கரிய கடலிடத்தே, கொடும்புணரி விலங்கு போழ - வளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு, கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடி மிசை இதை எடுத்து - கரிய காற்றாலே ஓடித்துறையைச் சேரும் பொருட்டு நெடிய கொடியை உச்சியில் உடையவாய்ப் பாய்விரிக்கப்பட்டு, இன்னிசைய முரசம் முழங்க - இனிய ஓசையை உடைய முரசம் முழங்கா நிற்ப, பொன்மலிந்த விழுப்பண்டம் நாடு ஆர - பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை நாட்டிலுள்ளார் நுகரும்படி ஏற்றிக்கொணர்ந்து, நன்கு இழிதரும் - நன்றாக இறக்குதலைச் செய்யும், ஆடு இயற் பெரு நாவாய் - அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள், மழை முற்றிய மலைபுரைய துறை முற்றிய துளங்கு இருக்கை - முகிலாற் சூழப்பட்ட மலைபோலக் கடலாற் சூழப்பட்டு அசையாநின்ற இருப்பினையும், தெண்கடற் குண்டகழிச் சீர்சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ - தெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினையும் உடைய நெல்லூரைக் கைக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையோனே.

கருத்துரை : விசும்பினோடே கலந்து ஒன்றுபட்டுத் தோன்றுதலை யுடைய பெரியதாய மூன்று நீர்மையை உடைய கரிய கடலிடத்தே எழுந்திரைகளைக் குறுக்கே பிளந்தோடுமாறு நெடிய கொடிய உயர்த்தப்பட்டனவாய் பாய்விரிக்கப்பட்டு இனிய முரசமுழங்கப் பொன் மிகுதற்குக் காரணமான சிறந்த பண்டங்களை ஏற்றிக் கொணர்ந்து, நன்றாக இறக்குதலைச் செய்யும் முகில் சூழ்ந்த மலைபோற் றோன்றும் பெரிய மரக்கலங்கள் நிற்கும் துறைமுகத்தோடே ஆழ்ந்த கடலாகிய அகழியினையும் உடைய நெல்லூரை வென்று கைக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடைய வேந்தே! என்பதாம்.

அகலவுரை : வானமும் கடலும் காண்பார் கண்கட்குக் கலந்து ஒன்றுபட்டுத் தோன்றுதலான் வானியைந்த இருமுந்நீர் என்றார்.

மூலைக் கடலினை அவ்வான வளையம்
முத்த மிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்

எனச் சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளது நினைவு கூரற்பாலது. ஆசிரியர் நச்சினார்க்கினியர் வான் என்பதனை மேகத்திற்கு ஆகுபெயரெனக் கொண்டு மேகம் படிந்த கடலென உரை விரித்தனர். முந்நீர்-மூன்று நீர்மையுடைய; அல்லது மூவகை நீரான் நிறைந்த என்க. இதற்கு விளக்கம் முன்பு கூறப்பட்டமை காண்க. (2-ஆம் வரி) பேஎம் நிலைய - அச்சந்தருந் தன்மையுடைய

பேநாம் உரும்என வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள (தொல்-உரி-76)

என்றோதுவர் தொல்காப்பியனார்.

இரும் பவுவம் - கரிய கடல். புணரி - நீர் புணர்ந்தது என்னும் பொருட்டாய்க் கடலுக்குப் பெயராகி, ஈண்டு அதன்கண் எழும் அலைக்கு ஆகுபெயராயிற்று. கொடும் புணரி என்றதன்கண் கொடுமை வளைவென்னும் பொருட்டு. எனவே, வளைந்த அலை என்றவாறு. கடிய காற்றாற் செலுத்தப் பட்டோடும் மரக்கலம் அவ்வலைகளைப் பிளந்து கொண்டோடலான் கொடும் புணரி விலங்கு போழ என்றார். விலங்கு - குறுக்கு; போழ இதை எடுத்து, என இயைத்துக் கொள்க. இதை - மரக்கலத்தில் விரிக்கப்படும் பாய். கடுங்கால்-பெருங்காற்று. காலொடு என்பதன்கண் ஒடு உருபு கருவிப் பொருட்டு. மரக்கலத்தின் மிசைக் கொடியுயர்த்துதல் மரபு. மரக்கலம் இயங்குங்கால் அதன்கண் முரசம் முழங்குதலுண் டென்பதனை,

ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன்
றீடுபடச் செய்திளையோ ரேத்தவிமிழ் முந்நீர்க்
கோடுபறை யார்ப்பக் கொழுந் தாட்பவழங் கொல்லா
ஓடுகளி றொப்பவினி தோடியதை யன்றே. (சிந்.501)

எனவரும் சிந்தாமணிச் செய்யுளானும் அறிக.

பொன் மலிந்த விழுப்பண்டம் - என்ற தொடர்க்கு விலையாகக் கொடுக்கும் பொன்னுக்கு மிகமலிவாகக் கிடைக்கும் சிறந்த பண்டம் எனப் பொருள் கூறலும் பொருந்தும். இப்பொருட்குப் பொன்னுக்கு மலிந்த விழுப்பண்டம் என நான்கனுருபு விரித்திடுக. நாடார என்றது நாட்டிலுள்ள மக்கள் எண்மையிற் பெற்று நன்கு துய்க்குமாறு என்றவாறு. நன்கிழிதரும் என்றவிடத்தே நன்கென்றது. வேண்டியார் வேண்டியாங்கு கொள்ளும்படி நன்றாக இறக்கப்படும் என்றவாறு. நன்மை மிகுதிமேற்று. இழிதரல் - சரக்கினை இறக்குதல்.

மரக்கலங்கள் நீர்மேனிற்றலான் அசைந்த வண்ணமே நிற்பன; இதனை ஆடியற் பெருநாவாய் என்னுந் தொடராற் குறித்தார். பெருநாவாய் என்றது கப்பல் என்றவாறு. துறைமுகத்தே அலையெறியவும் கடல்சூழ நிற்கும் கப்பல்கள் முகில் சூழ்ந்த மலைகளைப் போன்றன என்க. துறை : கடலுக்கு ஆகுபெயர். துறையிடத்தே கடலும் மரக்கலங்களும் அசைந்தபடியே இருத்தலால் துளங்கிருக்கை என்றார்; துளங்குதல் - அசைதல். இருக்கை - கப்பல்கள் நிற்குமிடம். அப்பட்டினத்திற்கு ஒரு மருங்கு கடலே அகழ் அரணாம் என்பார், தெண்கடற் குண்டகழி என்றார். நெல்லூர் இடையே இன்சாரியை பெற்றது. இதனைச் சாலியூர் என்றும், இதனால், தனக்கு நடவாததோர் ஊர்கொண்டான் என்றார், என்றும் கூறுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இஃது ஆராய்ந்து காண்டற்பாலதாம். அவ்வூரினை முற்றி வென்றே கொண்டான் என்பது தோன்ற உயர்கொற்றவ என்றார். கொற்றம் - வெற்றி.

இனி, வானியைந்த இருமுந்நீர் என்பது தொடங்கி ஆடியற் பெருநாவாய் என்னுந்துணையும் போந்த ஒன்பது அடிகள் பேரலைகளைப் பிளந்து கொண்டு விரைந்தோடிவரும் வங்கங்களையும், கரைகள் தோன்றாது சூழ வானத்தோடியைந்து கொடும்புணரி வீசிமுழங்கும் மாபெருங் கடலையும், முரசம் முழங்குதலையும், அக் கப்பலின் அகத்தே அயல் நாட்டின்கண் உள்ள சீரிய சரக்குகள் நிறைந்து கிடத்தலையும், பெரிய பெரிய பாய்கள் விரிக்கப்பட்டிருத்தலையும், எத்துணை அழகாகப் புலப்படுத்துகின்றன காண்மின். இங்ஙனமே, மழைமுற்றிய என்பது தொடங்கித் துளங்கிருக்கை என்பது முடிய உள்ள இரண்டே அடிகளில் முகிழ்சூழ நின்ற மலைகள் போன்று தோன்றும் மாபெரு மரக்கலங்கள் ஆடியசைந்து நிற்கும் ஒரு சிறந்த துறைமுகம் தோன்றுதல் காண்க. 89 - நீர்த்தெவ்வும், என்பது தொடங்கி 105 - குட்டுவர்வெல்கோவே என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண் விழவுநிகழும் முதூர்களிலிருந்து இரவலர்க்குச் செழியன் பரிசில் வழங்கும் சிறப்புக் கூறப்படும்.

செழியன் நாட்டின்கண்ணுள்ள ஊர்களினியல்பு

89-98 : நீர்த்தெவ்வும் ...................... வியலாங்கண்

பொருள் : நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர் - நீரினைமுகந்திறைக்கின்ற நிரல்பட நின்று தொழில் செய்வோர், பாடு சிலம்பும் - இசை பாடுதலானே ஒலிக்கும் இசையும், ஏற்றத்தோடு வழங்கும் அகல் ஆம்பியில் - ஏற்றத்துடனே இயங்கும் அகன்ற பன்றிப்பத்தரின் ஓசையும், கயன் அகைய வயல் நிறைக்கும் - குளம் அற்றற்றுக் குறையுமாறு நீரைவிட்டுவிட்டு முகந்து விளைவயலை அந்நீரானே நிறைக்கின்ற, மென் தொடை வன்கிழார் - மெத்தென்ற கட்டுக்களையுடைய பூட்டைப் பொறியின் ஓசையும், அதரி கொள்பவர் - கடாவிடுகின்றவர் ஓசையும், பகடுபூண் தெண்மணி - எருதுகள் பூண்ட தெளிந்த மணியின் ஓசையும், இரும்புள் ஓப்பும் இசையே - பயிர்களில் விழும் பெரிய பறவைகளைக் கடிந்தோட்டும் ஓசையும், என்றும் மணிப்பூ முண்டகத்து மணல் மலிகானல் பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப - எந்த நாளும் நீலமணி போலும் பூக்களையுடையவாகிய கழிமுள்ளிகளை யுடைய மணற்குன்றுகள் மிக்க கடற்கரையிலிருக்கும் பரதவருடைய மகளிர் ஆடும் குரவைக் கூத்தின் ஓசையோடே கூடி ஆரவாரியாநிற்ப, ஒருசார் விழவு நின்ற வியலுள் ஆங்கண் - ஒரு பக்கத்தே விழாக்கொணடாடுதலாற் பிறந்த ஓசைகள் மாறாமல் நின்ற அகன்ற உள்ளிடத்தையுடைய ஊர்களிடத்தே இருந்து;

கருத்துரை : நீரினை இடாவான் முகந்து இறைக்கின்ற நிரல்பட நின்று தொழில் செய்வார் பாடுகின்ற பாட்டின் ஓசையும், ஏற்றத்தோடே இயங்கும் பன்றிப்பத்தரின் ஓசையும், குளத்தின்கண் நீர் அற்றற்றுக் குறையுமாறு நீரை முகந்து விளைவயலை நிறைக்கும் மெல்லிய கட்டுகளையுடைய பூட்டைப் பொறியான் எழும் ஓசையும், கடாவிடுவோர் ஓசையும் எருதுகள் பூண்ட மணியோசையும், புள்ளோப்பும் ஓசையும், நாடோறும் மணிபோலும் பூக்களையுடைய கழிமுள்ளிகள் நிறைந்த மணற் குன்றுகள் மிக்க கடற்கரையில் வாழும் நெய்தனில மகளிர் ஆடும் குரவைக்கூத்தின் ஓசையோடே கூடி ஆரவாரியாநிற்ப, ஒரு பக்கத்தே திருவிழாக் கொண்டாடுதலான் எழுந்த ஓசைகள் மாறாமனின்ற அகன்ற ஊர்களிடத்தே வீற்றிருந்து என்பதாம்.

அகலவுரை : தெவ்வுதல் - முகந்திறைத்தல். தொழுவர் - தொழிலாளர், நீரிறைப்போர் வரிசை யாகநின்றிறைத்தலான் நிரைத் தொழுவர் என்றார். பாடு சிலம்பும் இசை பாடுதலானே ஒலிக்கும் இன்னோசை என்க. ஏற்ற மரத்தோடே இணைக்கப் பட்டியங்கும் பன்றிப் பத்தர் என்பார், ஏற்றத்தோடு வழங்கும் ஆம்பி என்றார். ஆம்பி - பன்றிப் பத்தர் என்னும் ஒருவகை நீரிறை கருவி.

ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏத்தமும் (சிலப்-10: 110)

என்றார் இளங்கோவடிகளும். இவ்வடிக்கு ஆசிரியர் அடியார்க்கு நல்லார் மதுரைக் காஞ்சியின் இவ்வடிகளையே உரையில் எடுத்துக்காட்டியுள்ளார். கயன்- குளம். அகைய - அற்றற்று நீர்வடிய. என்னை, தொல்காப்பியத்தினும் அறுத்தறுத்துப் பயிலும் ஓசையினையுடைய செய்யுளை அகைப்பு வண்ணம் என்றோதுபவாகலின். பூட்டைப் பொறி இடையிடையே விட்டு விட்டு நீர்முகத்தலான் கயம் அற்றற்று வடியலாயிற்று என்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர் இப்பொருள் காணாது அகைய என்பதனை வயல் என்பதன் பின்னாகக் கூட்டி வயல் தழைக்கும்படி என்று பொருள் கூறினர்.

மென்றொடை வன்கிழார் என்ற அடிக்கண் முரண்தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. அதரி கொள்ளுதல் - கடாவிடுதல்,

கோட்மாப் பூட்டி வாட்கோ லாக
ஆளழி வாங்கி அதரி திரித்த
வாளே ருழவன் மறக்களம் (சிலப்-26: 232-4)

என்றார் பிறரும். பகடு - எருது. தெண்மணி - தெளிந்த ஓசையையுடைய மணி. இரும்புள் - பெரிய பறவை. கழிமுள்ளிப் பூவிற்கு நீலமணி, நிறவுவமை. முண்டகம் - கழிமுள்ளி. குரவை - ஒருவகைக் கூத்து; குரவையாவது எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடும் கூத்து என்றும், வரிக்கூத்தின் ஒருறுப்பென்றும், விநோதக் கூத்து ஆறனுள் ஒன்று என்றும் கூறுப. இதனை,

ஆங்கு,
தொழுவிடை யேறுகுறித்து வளர்த்தார்
எழுவர் இளங்கோதையார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்றுபடு முறையானிறுத்தி
இடைமுது மகளிர்க்குப்
படைத்துக்கோட் பெயரிடுவாள்
குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை உழைவிளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே (சிலப். 17 : 12)

எனவரும் சிலப்பதிகாரத்தானும் உணர்க.

நெடுஞ்செழியனின் கொடைச்சிறப்பு

99-105 : முழவுத்தோள் ............... கோவே

பொருள் : முழவுத்தோள் முரண் பொருநர்க்கு - முழவு போலும் தோளினையுடைய கல்வியானே மாறுபடுதலையுடைய தடாரிப் பொருநர்க்கு, உருகெழு பெருஞ் சிறப்பின் இரு பெயர்ப் பேராயமொடு - அச்சம் பொருந்திய பெரிய தலைமையை உடைய கன்றும் பிடியும் என்னும் இரண்டு பெயரையுடைய பெரிய திரளுடனே, இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் - விளங்குகின்ற கொம்பினையுடைய களிற்றியானைகளைக் கொடுத்தும், பொலந்தாமரைப் பூச் சூட்டியும் - பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட்டியும், நலம் சான்ற கலம் சிதறும் - நன்மையமைந்த பேரணிகலன்களை எல்லார்க்கும் கொடுக்கும், பல் குட்டுவர் வெல்கோவே - பலவாகிய குட்ட நாட்டுள்ளாரை வென்ற வேந்தனே!

கருத்துரை : மத்தளம் போன்ற தோளினை உடையராய்க் கல்வியான் மாறுபட்ட தடாரிப் பொருநர்க்கு அச்சந்தரும் பெரிய தலைமையினையுடைய கன்றும் பிடியுமாகிய இரு பெயரையுடைய திரளோடே விளங்கும் மருப்பினையுடைய களிற்றியானைகளைக் கொடுத்தும், பொற்றாமரைக் பூவினைச் சூட்டியும் நன்மை யமைந்த அணிகலன்களை எல்லார்க்கும் மிக்கு வழங்குபவனும், குட்ட நாட்டினரை வென்றவனுமாகிய வேந்தனே! என்பதாம்.

அகலவுரை : பொருநர், தடாரி முதலிய இசைக் கருவிகளை முழக்கிப் பாடுவோர் இவர் ஏர்க்களம் பாடுநரும், போர்க்களம் பாடுநரும், பரணி பாடுநரும் எனப் பலராவர். அவருள் ஈண்டுக் கூறப்பட்ட பொருநர் வைகறைப் போதின்கண் தடாரி கொட்டிப் பாடும் பொருநர் என்க. இதனை,

கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி
இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஒன்றியான் பெட்டா அளவையின் (பொருந. 70-3)

என்னும் பொருநராற்றுப் படையானும் உணர்க. உரு - அச்சம். உருஉட் காகும் புரைவுயர் வாகும் (தொல். உரி-4) என்பர் தொல்காப்பியனார். இரு பெயர் - கன்றும் பிடியும் என வழங்கும் இரண்டு பெயர். உருகெழு பெருஞ்சிறப்பின் என்ற அடைமொழிகளான் ஆயம் என்றது யானைத்திரள் எனப்பட்டது. இதற்கு ஆடும் மாடுமாகிய திரள் எனக் கூறுவாருமுளர் என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.

பொலம் தாமரைப்பூ - பொன்னாற் செய்த தாமரைப்பூ. பொருநர் முதலியோர்க்குப் பொற்றாமரை மலர் வழங்கும் வழக்கமுண்மையை,

மறம்பாடிய பாடினியும்மே
யேருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய இழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல் பாண்மகனும்மே
எனவாங்கு,
ஒள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே (புறம் - 11)

என்றும்,

எரியகைந் தன்ன வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி (பொருந. 159-60)

என்றும் பிறர் கூறுமாற்றானும் அறிக.

நலம் சான்ற கலம் என்றது உயரிய மணியானும், பொன்னானும் இயற்றப்பட்ட பேரணிகலன் என்றவாறு. சிதறுதல் - மிக்கு வழங்குதலைக் குறிக்கும். பல் குட்டுவர் - பலராகிய குட்டுவர் என்றது பல்குட்டுவர் எனத் தொக்கு நின்றது, பல் சான்றீர் என்புழிப் போன்று. வியலாங்கண் பொருநர்க்கு ஆயமொடு களிறு கொடுத்தும், சூட்டியும், சிதறும் கோவே! குட்டுவரை வென்ற கோவே எனத் தனித்தனி இயைத்துக் கொள்க. 106 - கல்காயும் என்பது தொடங்கி, 130 -புகழ்வேந்தே என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண்: தலையாலங்கானத்துச் செருவென்ற செய்தி கூறப்படும்.

முதுவெள்ளிலை என்னும் குறுநிலமன்னர் இருக்கை

106-119 : கல்காயும் ...................... முதுவெள்ளிலை

பொருள் : கல்காயும் கடு வேனிலொடு - மலைகள் காய்தற்குக் காரணமான கடிய முதுவேனிலாலே, இரு வானம் பெயல் ஒளிப்பினும் - பெரிய மேகம் மழையைத் தன்னிடத்தே மறைத்துக் கொள்ளினும், வரும் வைகல் மீன் பிறழினும் - மாறிவரும் இயல்புடைய நாளிலே வெள்ளி தென்றிசையிலே எழினும், வெள்ளம் மாறாது விளையுள் பெருக - யாறுகள் வெள்ளம் மாறாதே வந்து விளைதல் பெருகுகையாலே, நெல்லின் ஓதை அரிநர் கம்பலை புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே - வயலில் முற்றிய நெற்கதிர் காற்றான் அசைக்கப்படுதலின் எழுகின்ற ஓசையும் அதனை அறுப்பாருடைய ஓசையும் பறவைகள் கத்துகையாலே எழுந்த ஓசையும், என்றும் - நாள்தோறும், சலம் புகன்று சுறவுக் கலித்த புலவு நீர் வியன்பௌவத்து - தம்முள் மாறுபாட்டை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற புலால் நாற்றத்தையுடையதாகிய நீரையுடைய அகற்சியையுடைய கடலிடத்தே எழுந்து, நிலவுக் கானல் முழவுத் தாழைக் குளிர்ப் பொதும்பர் நளித்தூவல் - நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழாப் போலும் காயையுடைய தாழையை வேலியாகவுடைய குளிர்ந்த இளமரக் காவின்கண்ணே வந்து செறிதலையுடைய துவலையின் ஓசையும், நிரை திமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை - நிரைத்த மீன் படகாலே வேட்டையாடுவார் வந்து கரையைச் சேரும் ஆரவாரமும், இருங்கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு - பெரிய கழியிடத்தே உப்புப் பாத்தியில் வெள்ளிய உப்பை விற்கும் அளவர் ஒலியொடே, ஒலியோவாக் கலியாணர் - முழங்குதல் ஒழியாத முழக்கத்தோடே புதுறவருவாயினையுடைய, முதுவெள்ளிலை - முதுவெள்ளிலை என்னும் ஊரின்கண் வாழும்;

கருத்துரை : மலைகளையும் வெதுப்பும் கடிய முதுவேனிற் பருவத் தானே மழை வறந்தபோதும், வெள்ளி விண்மீன் தென்றிசைக்கண் எழுந்தாலும் அவற்றாலும் நீர் வறத்தலின்றி யாறுகளிலே நீர்ப்பெருக்கு எழுந்து வந்து பாய்தலானே நன்கு செழித்தோங்கிய நெற்கதிர்கள் காற்றசைத்தலான் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்பிய ஓசையும், அவையிற்றை அறுப்பார்தம் ஆரவாரமும் பறவைகள் கத்துதலானே தோன்றும் இசையும், கடலெறிந்த நீர்த் திவலைகள் மணற் குன்றுகளையுடைய கரையிடத்தே தாழை வேலியையுடைய இளமரக்காவின் கண் வந்து செறிதலால் எழுந்த ஓசையும், நிரல் படத் திமில் இயக்கிக் கரை சேரும் மீன் பிடிப்போர் ஆரவாரமும், உப்பு விளையும் அளத்தின்கண் உப்பு விற்போரின் ஓசையும் ஆகிய இன்னோரன்ன ஆரவாரம் அறாத புது வருவாயினையுடைய முது வெள்ளிலை என்னும் ஊரில் வாழ்கின்ற, (பெருந்தொழுவர் என - 122 - ஆம் அடிக்கட் சென்று முடியும்) என்பதாம்.

அகலவுரை : கல்காயும் கடுவேனில் என்றது - மலைகளும் வெப்பத்தானே உருகுதற்குக் காரணமான கொடிய முதுவேனிற் காலம் என்றவாறு. ஒன்பது கோள்களுள் ஒன்றாகிய வெள்ளிக்கோள் தென்றிசையில் எழுதல் மழைமறுத்து வற்கடம் உண்டாதற்கு அறிகுறி என்ப; இதனை,

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
..... ...... ...... ......
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை (சிலப். 10 : 102 - 108)

எனவரும் சிலப்பதிகாரத்தானும்,

வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்
பள்ளம் வாடிய பயனில் காலை (புறம் - 388)

என்றும்,

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே (புறம்-117)

என்றும் வரும் புறப் பாட்டுக்களானும்,

வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயங்கெழு பொழுதோ டாநிய நிற்ப (பதிற் - 24)

என்னும் பதிற்றுப் பத்தானும்,

வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி (பட்டினப். 1-6)

எனவரும் பட்டினப்பாலையானும் அறிக.

முதுவேனிற் பருவமாதல் வெள்ளிமீன் பிறழ்தலாதல் இரண்டில் ஒன்றே யாற்றின்கண் நீர் வறத்தற்கு அமைவதாக இரண்டும் நிகழ்ந்துழியும் அந்நாட்டின் யாறுகள் நீர்ப் பெருக்கெடுத்தோடும் எனச் சிறப்பித்தலின் உம்மைகள் சிறப்பின்கண் வந்தன. இது கோள்நிலை திரிந்தவிடத்தும் கோனிலை திரியானாதலின் மழைபெய்து வெள்ளம் மாறாது வந்ததென நெடுஞ்செழியனின் செங்கோன்மையைச் சிறப்பிக்கும் குறிப்பேதுவாய் நிற்றல் காண்க. வரும் வைகல் என்றது, மாறி மாறி வரும் இயல்புடைய வைகல் என்றவாறு.

வைகலும் வைகல் வரக்கண்டும் (நாலடி - 39)

என்றார் பிறரும். இதனை மீனுக்கேற்றித் தான் தோன்றுதற்குரிய நாளிலே தோன்றும் வெள்ளி என்றார், ஆசிரியர் நச்சினார்க்கினியர். விளையுள் - விளைவு. உள் : தொழிற்பெயர் விகுதி; செய்யுள் என்புழிப்போல. அரிநர் - நெல் அறுப்போர். கம்பலை - ஒலி. சலம் -மாறுபாடு. சுறவு - சுறாமீன். கலித்தல்-செருக்கித் திரிதல். நிலவுக் கானல் என்றது. நிலாப்போன்ற மணற் பரப்பையுடைய கடற்கரை என்றவாறு.

நில வடைந்த இருள்போல
வலையுணங்கு மணன்முன்றில் (பட்டின - 82-3)

என்றும்,

நிலவுக் குவித்தன்ன மோட்டுமணல்
அடைகரை (நற்.159: 4)

நிலவுத்தவழ் மணற்கோடு (நற். 169 : 5)

என்றும்,

நிலாவி னிலங்கு மணன்மலி மறுகில் (அகம். 200 : 1)

என்றும் சான்றோர் பிறரும் கூறுதல் காண்க. குளிர்ப் பொதும்பர் - குளிர்ந்த இளமரக்கா. நளித்தூவல் - செறிந்த நீர்த்துளி. நிரல் நிரலாக வருதலின், நிரைத்திமில் என்றார். திமில் - படகு. திமில் வேட்டுவர் என்றது நெய்தனிலத்துப் பரதவரை. இருங்கழிச் செறு - பெரிய கழியிடத்துள்ள உப்பு விளைகின்ற பாத்தி. ஒலியோவா - முழக்கமறாத. யாணர் - புது வருவாய். புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்.உரி : 81) என்பர் தொல்காப்பியனார். முதுவெள்ளிலை - ஒரு கடற்கரைப் பட்டினம். இதனைக் குறுநில மன்னர் இருப் பென்பர் நச்சினார்க்கினியர். இதனைத் தனியாக முடித்து ஊரும் நானிலவரும் எனவும் இயைப்பர்.

119-124 : மீக்கூறும் ....................... தொழில்கேட்ப

பொருள் : மீக்கூறும் வியன்மேவல் விழுச் செல்வத்து இரு வகையான் இசை சான்ற-சான்றோராற் புகழப்படுகின்ற அகலம் பொருந்திய சீரிய செல்வமாகிய உழவு வாணிகமென்னும் இரண்டு கூற்றானும் புகழ் நிறைந்த சிறிய குடிமக்களும் பெரிய வணிகரும், குடிகெழீ இய நானிலவரொடு - குடிகள் மிக்கு நான்கு நிலங்களினும் வாழ்வாரோடே, தொன்று மொழிந்து தொழில் கேட்ப - பழைமைகூறி நின்று ஏவலைக் கேட்கும்படி;

கருத்துரை : சான்றோராற் புகழப்படுகின்ற விரிவுடைய சிறந்த செல்வமாகிய உழவு வாணிகம் என்னும் இரண்டு கூற்றானும் புகழ் நிறைந்த உழவரும், வாணிகரும், ஏனைய நால்வகை நிலங்களினும் வாழ்கின்ற மக்களோடே தம் பழைமை கூறி நின்று ஏவல் கேட்குமாறு என்பதாம்.

அகலவுரை : முதுவெள்ளிலை என்னும் ஊரின்கண் வாழ்வோர் நானிலத்தும் வாழ்வாரோடே ஏவல் கேட்குமாறென்றியைத்துக் கொள்க. உழவுத்தொழிலும் வாணிகமும் சான்றோராற் புகழப்படுதலை,

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் - 1031)

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து (குறள் - 1032)

என்றும்,

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின் (குறள் - 120)

என்றும்,

புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர் (பட்டின : 203-204)

என்றும்,

தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉமிகை கொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல்கொண்டித் துவன்றிருக்கை (பட்டின.209-12)

என்றும், சான்றோர் பிறரும் கூறுமாற்றான் அறிக. சிறுகுடி என்றது உழவரையும், பெருந்தொழுவர் என்றது வணிகரையும் குறித்தன. நானிலவர் என்றது இந் நெய்தலொழிந்த ஏனைய நானிலத்தும் வாழ்வோரை.

நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்துப் போர்

125-130 : காலென்ன ...................... வேந்தே

பொருள் : கால் என்னக் கடிது உராஅய் - காற்றென்னும்படட விரைந்து சென்று, நாடுகெட எரிபரப்பி - பகைவர் நாடுகெடும்படி நெருப்பைப் பரப்பி, ஆலங்கானத்து அஞ்சுவர விறுத்து - தலையாலங்கானம் என்கிற ஊரின்கண்ணே பகைவர்க்கு அச்சந் தோன்றும்படி வதிந்து, அரசுபட அமர் உழக்கி - முடிமன்னர் இருவரும் குறுநில மன்னர் ஐவரும் படும்படி போர்செய்து, முரசு கொண்டு களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே - அவர் முரசைக் கைக்கொண்டு களவேள்வி வேட்ட கொல்லுகின்ற ஆற்றன்மிக்க புகழையுடைய வேந்தனே!

கருத்துரை : காற்று விரைந்து செல்லுமாறு போலே விரைந்து சென்று, பகைவர் நாடு கெடும்படி நெருப்பைப் பரப்பித் தலையாலங்கானத்துப் படைவிட்டிருந்து, ஏழு மன்னர் படும்படி கொன்று, ஏனைப் பகைவர்க்கு அச்சந் தோற்றுவித்து அவர் முரசத்தைக் கைக்கொண்டு மறக்கள வேள்வி வேட்ட பேராற்றல் வாய்ந்த புகழ்மிக்க வேந்தனே! என்பதாம்.

அகலவுரை : சிறுகுடிப் பெருந்தொழுவர் தொழில் கேட்பக் கடிதுராஅய்ப் பரப்பி இறுத்து உழக்கிக்கொண்டு வேட்ட வேந்தே என வினை முடிவு செய்க. முன்னர்,

இருபெரு வேந்தரொடு வேளிர் சாய (55)

எனக் கூறிப் போந்தமையான் ஈண்டு வாளா அரசுபட அமருழக்கி என்றொழிந்தார். அவ்வரசர் சேரன் செம்பியன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் எழுவர் ஆவர். இதனை,

இருபெரு வேந்தரொடு வேளிர் சாய (55)

என்னும் அடிக்குக் காட்டிய எடுத்துக் காட்டான் அறிக. காற்றென்னக் கடிதுராய் என்றது வஞ்சித்திணைக்கண் இயங்குபடை யரவம் என்னும் துறை கூறியவாறு. என்னை? இயங்குகின்ற படையெழுச்சியின் ஆரவாரம் கூறுதலே இயங்குபடை அரவம் என்னுந் துறையாமாகலின். பெருங்காற்று வீசுங்கால் பேராரவாரம் உண்டாதல் போலச் செழியன் படை பேராரவாரத்தோடே சென்றதென்பார் காற்றென்னக் கடிதுராஅய் என உவமை எடுத்தோதினாராகலான் : நாடுகெட எரிபரப்பி என்றது அத்திணைக்கண் எரிபரந்தெடுத்தல் என்னுந் துறை (தொல்-புறத் : 8) பண்டைநாளில் போர்மேற் செல்லும் மன்னர்கள் பகைவர் நாட்டில் தீக் கொளுவிப் பாழ்படுத்தும் வழக்க முண்மையைத் தொல்காப்பியர் வகுத்தோதிய இத்துறையானும்,

வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமறம் விறகாகக்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்படவிட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பில் தானை (புறம் - 16)

என்றும்,

எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின் (புறம் - 7)

என்றும்

ஊரெரி கவர உருத்தெழுந் துரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப (பதிற். 71:9-90)

என்றும்,

அயிலன்ன கண்புதைத்து அஞ்சி அலறி
மயிலன்னார் மன்றம் படரக் - குயிலகவ
வாடிரிய வண்டிமிரும் செம்ம லடையார்நாட்
டோடெரியுள் வைகின ஊர் (புறப்-வெண்-49)

என்றும் வரும் சான்றுகளானும் அறிக. இந்நூலாசிரியரே,

இழிபறியாப் பெருந்தண்பணை
குரூஉக்கொடிய எரிமேய
நாடெனும்பேர் காடாக (மதுரை - 154,6)

எனப் பிறாண்டும் ஓதுவர்.

இனி, முரசு கொண் டென்றது பகைவர்தம் வீரமுரசைக் கைக்கொண்டு என்றவாறு. இங்ஙனம் முரசினைக் கைப்பற்றுதலைத் தம் வெற்றிக்கு அறிகுறியாக மன்னர் கருதினர் என்பதனை இம் மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியனே,

உறுதுப்பு அஞ்சாது உடல்சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ
டொருங்ககப் படேஎ னாயின் (புறம் - 72)

எனக்கூறிய வஞ்சினக் காஞ்சியானும் உணர்க.

இனி, இங்ஙனம் வஞ்சினம் கூறியவாறே தலையாலங்கானத்து இருபெரு வேந்தரொடு வேளிர்சாய அமருழக்கி முரசமொடு ஒருங்ககப்படுத்துச் சூண் முற்றிய செழியன் வெற்றியையே ஈண்டு மாங்குடி மருதனார் என்னும் நல்லிசைப்புலவர் பாடிப் பரவுகின்றனர் என்க. அவ் வஞ்சினத்தே,
பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியன்எம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாகுக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை (புறம் : 72)

என்று அம் மன்னர் பெருமான் ஓதியவாறே இயற்றிச் சூண்மொழியையும் நிறைவேற்றினான். எனவே, நல்லிசைப்புலவர் தலைவராகிய மாங்குடி மருதனார் அம் மன்னன் வஞ்சினத்தே கண்டவாறு அவனது நிலவரையைப் பாடுதல் தம் கடமையாகக் கொண்டு பாடியது இம் மதுரைக் காஞ்சி என்க. களம் வேட்ட என்றது மறக்கள வேள்வி செய்த என்றவாறு. களம்வேட்டல் என்பது வாகைத்திணைக்கண் ஒரு துறையாம்.

அடுதிறல் அணங்கார
விடுதிறலான் களம் வேட்டன்று (பு-வெ: 160)

என, இதற்குப் புறப்பொருள் வெண்பாமாலை யாசிரியர் இலக்கணம் வகுத்தனர். தொல்காப்பியத்துள் வாகைத்திணைக்குத் துறை கூறும் சூத்திரத்தில்,

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகைப் பட்ட அரசர் பக்கமும்

என வருவனவற்றில் இக் களவேள்வியை ஐவகைப்பட்ட அரசர் பக்கமும் என்றதன்கண் அடக்கக்கூடும். ஆனால் ஆசிரியர் நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்கு மநுதர்மத்தை ஆதாரமாகக் கொண்டு வேறு உரை கூறியுள்ளார். இனி இம் மறக்கள வேள்வியை,

அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய (புறம்-26)

என்றும்,

புலவுக் களம் பொலிய வேட்டோய் (புறம் - 372)

என்றும்,

அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை (சிலப்-நடுகல்: 131-2)

என்றும் பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. 131 - அடுதிறல் என்பது தொடங்கி 138-பொருந என்னும் துணையும் ஒரு தொடர். இதன்கண் செழியனின் அளியுடைமையும், தெறற்சிறப்பும், கொற்கைத் தலைமையும் கூறப்படும்.

கொற்கைப் பட்டினம்

131-138 : நட்டவர் ...................... நசைப்பொருந

பொருள் : நட்டவர் குடி உயர்க்குவை - நின்னுடனே நட்புக் கொண்டவருடைய குடியை உயர்த்தலைச் செய்வை, செற்றவர் அரசு பெயர்க்குவை - நீ செறப்பட்டவர் அரசுரிமையை வாங்கிக் கோடலைச் செய்வை, பேருலகத்து மேஎந்தோன்றிச் சீருடைய விழுச்சிறப்பின் - பெரிய நன்மக்களிடத்தே மேலாய்த் தோன்றுகையாலே புகழையுடைய விழுமிய தலைமையினையும், விளைந்து முதிர்ந்த விழுமுத்தின் - சூல் ஏற்றி ஒளி முதிர்ந்த சீரிய முத்தினையும், இலங்கு வளை இருஞ்சேரி - விளங்குகின்ற சங்கினையுமுடைய சங்கு குளிப்பார் இருப்பினையும், கள் கொண்டி குடிப்பாக்கத்து - கள்ளாகிய உணவினையுடைய இழிந்த குடிகளை யுடைய சீறூர்களையுமுடைய, நற்கொற்கையோர் நசைப் பொருந - நன்றாகிய கொற்கை யென்னும் ஊரிலுள்ளோர் விரும்பா நின்ற வீரவேந்தே!

கருத்துரை : நின் நண்பருடைய குடியைப் பெரிதும் உயர்த்துவாய்; நின் சினத்திற்கு ஆளாகியோருடைய அரசுரிமையை மாற்றுவாய்; சான்றோர்களாற் புகழப்படும் சிறந்த தலைமையினையும், நன்கு முற்றி ஒளிரும் சீரிய முத்தினையும், சங்குகளையுடைய சங்குகுளிப்பார் இருக்கையினையும், கள்ளுண்போர் உறையும் சிறிய ஊர்களையும் உடைய நன்மை மிக்க கொற்கை நகரத்தில் வாழ்வோர் பெரிதும் விரும்பும் வீர மன்னனே! என்பதாம்.

அகலவுரை : பாண்டிநாட்டின் சிறந்த பொருளாக எண்ணப்படுவது முத்தாகும். அம் முத்து கொற்கைப்பட்டினத்தை அடுத்த கடலிற் குளிக்கப்படுதலான், கொற்கை முத்தென்ப. கொற்கை பாண்டிய மன்னர்களின் சிறந்த நகரங்களுள் ஒன்றாகலின் அத் தலைமையினை விதந்தெடுத்தோதினார்.

நட்டவர் குடியுயர்க்குவை என்றது, செழியனின் அளிச்சிறப்போதிற்று. செற்றவர் அரசு பெயர்க்குவை என்பது அவன் தெறற் சிறப்போதியவாறு.

மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட,
நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப (பெரும்பாண். 423-4)

என்றும்,

இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழ்நர்க்
கரசுமுழுது கொடுப்பினும் அமையா நோக்கமொடு
.............. வீயாது சுரக்கும் அவன் நாண்மகிழ் இருக்கையும் (மலைபடு. 73-9)

என்றும்,

செற்றோரை வழிதபுத்தனன்,
நட்டோரை உயர்புகூறினன் (புறம் - 239)

என்றும், பிறரும் கூறுதல் காண்க. இனி, பேருலகத்து மேஎந் தோன்றிச் சீர் உடைய விழுச்சிறப்பின் விளைந்து முதிர்ந்த விழுமுத்தென முத்துக்கே அடையாக்கினும் அமையும். என்னை?

பல்லரண் கடந்த பசும்பூண் பாண்டியன்
மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்றுறை
ஊதை யீட்டிய உயர்மண லடைகரை
ஓத வெண்டிரை உதைத்த முத்தம் (தொல்.களவு. 11. ந. உரை மேற்கோள்)

என்றும்,

பொறையன் செழியன் பூந்தார் வளவன்
கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை
பாவை முத்தம் ஆயிதழ்க் குவளை (யா.வி. 95.மேற்)

என்றும் உலகத்தே பலவிடத்தும் தோன்றும் முத்தினும் காட்டில் சான்றோர் விதந்தெடுத்துப் புகழும் முத்து கொற்கை முத்தாகலின் என்க. வளை யிருஞ் சேரி என்றது சங்கறுப்போர் குடியிருப்பினை. கொண்டி-கொள்ளப்படுதல் என்னும் பொருட்டாய் உணவிற்காயிற்று; கொள்ளையுமாம். பாக்கம்-பக்கத்தே உள்ள சிறிய ஊர். நசைப் பொருந என்றது குடிகளால் விரும்பப்படும் செங்கோன்மையையுடைய வீரனே எனச் செழியன் செங்கோன்மையைச் சிறப்பிக்கும் குறிப்பேதுவாய் நின்றது.

குறுநில மன்னரை வென்று தனக்குப் படையாக அடிப்படுத்தினமை.

139-144 : செற்றதெவ்வர் .............. போரேறே

பொருள் : செற்ற தெவ்வர் கலங்கத் தலைச் சென்று - தம்மால் செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடத்தே சென்று, அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பின் - அவர்க்கு அச்சந் தோன்றத் தங்கும் வருத்தத்தையுடையதாகிய வலியினையும், கோழ் ஊன் குறைக் கொழு வல்சி - கொழுத்த இறைச்சியுடைய கொழுத்திருக்கின்ற சோற்றினையும், புலவு வில் பொலிகூவை- புலானாற்றத்தையுடைய வில்லையும் பொலிவுடைய கூவைக் கிழங்கையும் ஒன்றுமொழி ஒலியிருப்பில் - வஞ்சினங் கூறுதலையும் ஆரவாரத்தையுடைய குடியிருப்பினையும் உடையராகிய, தென் பரதவர் போரேறே - தென்றிசைக்கண் வாழும் பரதவரைப் போர்செய்தடக்குதலில் அரிமாப் போன்றவனே!

கருத்துரை : தம்மால் செறப்பட்ட பகைவர் மனங்கலங்கும்படி அவர்பாற் சென்று தங்கும் வருத்தமிக்க வலியினையுடையாரும், கொழுவிய இறைச்சியுடைய கொழுப்புடைய சோற்றினை உண்பாரும், புலால் கமழும் விற்படை யுடையாரும், கூவைக்கிழங் குண்பாரும், அடிக்கவி சூளுறவு மொழிவாரும், ஆரவாரத்தையுடைய சேரிகளையுடையாரும், தென்றிசைக்கட் குறுநில மன்னரும் ஆகிய பரதவர் என்ற யானைகளை அச்சுறுத்தி அடிப்படுத்துதலில் அரிமாப் போன்றவனே! என்பதாம்.

அகலவுரை : தமக்கு அஞ்சும் பகைவர் பாற்சென்று தங்கி அவரை மேலும் அச்சுறுத்தும் தீமையோர் என்பார், செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று என்றார், அங்ஙனம் அறநெறிப்படாத வலியுடையார் என்பார், அணங்குடைத் துப் பென்றார்; அணங்கு - வருத்தம். துப்பு - வலி. கொழுத்த இறைச்சி கலந்தமையாற் கொழுப்புண்டாக்கும் சோறு என்பார், கோழ் ஊன் குறைக் கொழுவல்சி என்றார். கோழ்-கொழுப்பு. ஊன்குறை -இறைச்சித் துண்டு. கொழுவல்சி என்றுது, கொழுப்புண்டாக்கும் சோறு. தொடுத்த அம்பினையே மீண்டும் தொடுத்தலால் வில் புலவு நாறும் வில்லாயிற்று. கூவை - ஒருவகைக் கிழங்கு. கூவை - திரளுமாம். இடையறாது வஞ்சினங் கூறுதல் அவர் இயற்கை என்பார், ஒன்று மொழி பரதவர் என்றார். ஒன்றைச் செய்யேனாயின் இன்னன் ஆகுவல் என்னும் பொருள்படக் கூறலின், வஞ்சினம் ஒன்று மொழிதலாயிற்று. ஒன்று மொழிக் கோசர் (குறுந்-73:4) என்றார் பிறரும். தென்பரதவர் என்பார் தென்னாட்டின்கண் இருந்து குறும்பு செய்துவந்த குறுநில மன்னர்களாகிய பரதவர் என்றும், இவர்களைச் சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் வென்று அடிப்படுத்தினர் என்றும் கூறுப; இதனைத் தென்பரதவர் மிடல் சாய வடவடுகர் வாளோட்டிய (378) என்று தொடங்கும் புறப்பாட்டானும் அறிக. செழியனை ஏறென்றமையான் தென்பரதவர் என்ற யானைகளை என்பதும் கொள்க.

போர்த்தொழிலில் நெடுஞ்செழியன் கொண்டுள்ள ஊக்கம்

145-151 : அரியவெல்லாம் ...................... குருசில்

பொருள் : அரிய எல்லாம் எளிதினிற் கொண்டு - பிறர்க்கு அரிய நுகர்பொருள்கள் எல்லாம் எளிதாக நின்னூரிடத்தே யிருந்து மனத்தாற் கைக்கொண்டு, உரிய வெல்லாம் ஓம்பாது வீசி - அங்ஙனம் கைக்கொண்டமையான் நினக்கு உரியவாகிய பொருள்களை எல்லாம் நினக்கென்று பாதுகாவாது ஊரிடத்தேயிருந்து பிறர்க்கு நல்கி, நனி புகன்று உறைதும் என்னாது ஏற்று எழுந்து - மிக விரும்பி ஊரின்கண்ணே உறையக் கடவேம் என்று கருதாதே பகைவர் மேற் சேறலை மேற்கொண்டு போதலை ஒருப்பட்டு, பனிவார் சிமையக் கானம் போகி - பனி ஒழுகா நின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து, அகம் நாடு புக்கு அவர் அருப்பம் வெளவி - அவர் உள்நாடுகளிலே புகுந்து அப்பகைவருடைய அரண்களைக் கைக்கொண்டு அதனானும் அமையாமல், யாண்டுபல கழிய வேண்டுபுலத்து இறுத்து - பலயாண்டுகளும் கழியுமாறு நீ அழித்த நாடுகளில் கொள்ளவேண்டும் நிலங்களிலே தங்கி, மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில் - அந்நிலங்கள் பண்டையின் மேலாதற்கு அடிப்பட விருந்த வெல்லும் போரினையுடைய தலைவனே.

கருத்துரை : ஏனையோர் நுகர்தற்கரிய அரும்பொருளை எல்லாம் எண்மையாக நின்னூரிடத்தே இருந்து நெஞ்சாலே கைக்கொண்டு, அங்ஙனம் கைக்கொண்டமையான் நினக்கு உரிமையுடையவாகிய அப்பொருளைத் தனக்கெனப் பாதுகாவாது பிறர்க்கு வழங்கி, ஊரின் கண் இருந்து இன்பம் நுகர்வேம் என விரும்பாது பகைமேற் சேறலை மேற்கொண்டு போய், பனிமிக்க மலையுடைய காடுகளையும் கடந்து பகைவர் நாட்டின் உள்ளே புகுந்து அவர் அரண்களைக் கைக்கொண்டு அவ்வளவின் அமையாது அந்நாடுகளில் நீ வேண்டிய நாடுகள் பண்டையினும் மேம்படவேண்டிப் பலயாண்டுகள் கழிய இருந்து வெல்லும் போரினையுடைய தலைவனே! என்பதாம்.

அகலவுரை : அரிய எல்லாம் எளிதினிற் கொண்டு என்றது பகைவர் நாட்டின்கண் உள்ள பிறர்க்கரிய பொருளை எல்லாம் அவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னரே கொண்டான் போன்று மனத்தாற் கருதி என்றவாறு. அங்ஙனம் கருதுமாற்றான் தனக்குரியவாய அப்பொருளைத் தனக்கு வேண்டும் எனப் பாதுகாவாது வேண்டியோர்க்குக் கொடுத்தான் என்பார், உரிய எல்லாம் ஓம்பாது வீசி என்றார். இங்ஙனம் கொள்ளு முன்னரே தனதாகக் கருதுதற்குக் காரணம் ஐயமற்ற மறப்பெருமையே ஆகலின், இதனைக் கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம் என்னுமொரு துறையாக உழிஞைத் திணைக்கண் ஓதினர் ஆசிரியர் தொல்காப்பியனார். இத்துறைக்கு எடுத்துக் காட்டு கழிந்தது பொழிந்தென என்னும் புறப்பாட்டின்கண் (203)

ஒன்னார்
ஆரெயில் அவர்கட் டாகவும் நுமதெனப்
பாண்கட னிறுக்கும் வள்ளியோய்

என்பது. இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்ததும் அத்துறை யென்ப. இதனால் அரியவெல்லாம் எளிதினிற் கொண்டு உரிய வெல்லாம் ஓம்பாது வீசி என்பன கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் என்னும் போர்த்துறையாதலறிக. நனி புகன்று - மிகவும் விரும்பி. உறைதும் என்னாது என்றது, ஊரின்கண் இருந்து இன்பம் நுகர்வேம் என்று கருதாமல் என்றவாறு என்னை?

குடிஎன்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும் (குறள் - 601)

என்றற் றொடக்கத்துத் குறள்களான் சிறப்பாக மன்னர் மடிந்திருத்தல் ஆகாதென வள்ளுவனார் வகுத்தமையான், ஈண்டுச் செழியனின் மடியின்மை கூறுவார் மாங்குடி மருதனார் நனிபுகன்று உறைதும் என்னா தென்றார். மடிந்திருப்போர் பெரும்பாலும் இன்ப நுகர்ச்சியையே தலைக் கீடாகக் கொண்டிருப்பர் ஆகலின், அஃது ஆள்வினையுடைமைக்கு மாறாம் ஆகலின், செழியனின் இன்பம் விழையாது வினையே விழையும் ஆள்வினையுடைமையை நனிபுகன்று உறைதும் என்னாது எனத் தெரித்தோதினார்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றுந் தூண் (குறள் - 615)

என வள்ளுவனாரும் ஓதுதல் காண்க. ஏற்றெழுந்து என்றது, மண்ணசையாற் பகைமேற் சேறலின் வஞ்சியின் பாற்படும். என்னை? அவ்வஞ்சித்திணைதான்,

எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே (தொல்-புறத்; 7)

என்பவாகலான்.

பனிவார் சிமையம் கானம் போகி என்றது செழியனின் இடுக்கணழியாமையைக் குறிப்பாற் கூறியதென்க.

அவர் நாடு என்றது தொல்லெயிற் கிவர்தல் (தொல்-புற-12)

என்னும் துறை கூறிற்று. அவர்-அப் பகைவர். அருப்பம்-அரண். வெளவி-கைக்கொண்டு, அவர் விருப்பம் வெளவி என்றது குடுமி கொண்ட மண்ணு மங்கலம் என்னும் துறை கூறியவாறு. தான் கைக்கொண்ட நாடு பண்டையினும் சிறத்தல் வேண்டி அந்நாட்டிலேயே தங்கி மேம்பாடு செய்தென்க. மேம்பட மரீஇய என்றது மேம்படுதற் பொருட்டு ஆங்குத் தங்கி என்றவாறு. 152 - உறுசெறுநர் என்பது தொடங்கி, 176- நின் பகைவர் தேஎம் என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண் : நெடுஞ்செழியன் தன் பகைவர் நாடு பாழ்படுத்தியமை விரித்தோதப்படுகின்றது.

152-163 : உறுசெறுநர் .................... பெயர்பாட

பொருள் : உறு செறுநர் புலம் புக்கு -தொன்றுதொட்டு வந்த பகைவர் நிலத்தே புகுந்து, அவர் கடிகாவின் நிலை தொலைச்சி - அவர் காவலையுடைய பொழில்கள் நிற்கின்ற நிலையைக் கெடுத்து, இழிபு அறியாப் பெருந்தண்பணை குரூஉக் கொடிய எரிமேய - வளப்பங் குன்றுதலை ஒருகாலத்துமறியாத பெரிய மருதநிலங்களை நிறத்தையுடைய ஒழுங்கினையுடைய நெருப்புண்ணச்செய்து, நாடு எனும் பேர் காடு ஆக - நாடென்னும் பெயர்போய்க் காடென்னும் பெயரைப் பெற, ஆசேந்த வழி மாசேப்ப - பசுத்திரள் தங்கின இடமெல்லாம் புலிமுதலியன தங்க, ஊர் இருந்தவழி பாழாக - ஊராயிருந்த இடங்கள் எல்லாம் பாழாய்க் கிடக்க, இலங்குவளை மடமங்கையர் துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப - விளங்குகின்ற வளையினையும் மடப்பத்தினையும் உடைய மகளிர் துணங்கைக் கூத்தினையும் அழகினையுடைய தாள அறுதியை உடைய குரவைக் கூத்தினையும் மறப்ப, அவையிருந்த பெரும் பொதியில் கவையடிக் கடுநோக்கத்துப் பேய் மகளிர் பெயர்பு ஆட-சான்றோர் இருந்த பெரிய அம்பலங்களிலே இரட்டையான அடிகளையும் கடிய பார்வைகளையும் உடைய பேயாகிய மகளிர் உலாவி ஆடா நிற்ப;

கருத்துரை : தொன்று தொட்டு வந்த பகைவர் நிலத்தே புகுந்து அவர் காவலுடைய பொழில்களை வெட்டி அழித்து, ஒரு காலத்தும் வளம் குன்றுதலறியாத பெரிய மருத நிலங்களை, நிறமுடைய நெருப்புண்ணச் செய்து, நாடெல்லாம் காடாகவும், பசுத்திரள் தங்கின இடமெல்லாம் புலி முதலியன தங்கவும், ஊரிருந்த இடமெல்லாம் பாழாய்க் கிடப்பவும் வளையலணிந்த மடமகளிர் துணங்கைக் கூத்தையும், குரவைக் கூத்தையும் மறப்பவும் சான்றோரிருந்த அம்பலங்களிலே கவையடியினையும் கடிய பார்வையினையு முடைய பேய் மகளிர் ஆடாநிற்பவும் என்பதாம்.

அகலவுரை : தலைமுறை தலைமுறையாகப் பகைமைகொண்டுள்ளார் என்பார், உறுசெறுநர் என்றார். உறு-மிகுதி. என்னை? உறுதவ நனியென வரூஉம் மூன்றும் - மிகுதி செய்யும் பொருள (தொல்-உரி:3) என்பவாகலின். செறுநர் - பகைவர். புலம்-நிலம். அவர் - அப்பகைவர். கடிநா - காவலமைந்த இளமரக்கா. நிலை தொலைச்சி என்றது வெட்டி அழித் தென்றவாறு. இங்ஙனம் போர்மேற் சென்ற படைஞர் பகைவருடைய பொழில்களை அழித்தல் பண்டைக்கால மரபு: இதனைப்

பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்பு முதல்தடிந்த ............... பொறைய! (சிலப். 27: 124-6)

என்றும்,

வடிநல் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
கடிமரந் துளங்கிய காவும் (புறம். 23: 7-9)

என்றும்,

நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை (புறம். 36: 7-9)

என்றும்,

பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய (பதிற்று - 11 : 12-3)

என்றும்,

வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்ப
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே (பதிற்-12: 1-3)

என்றும் பிறரும் கூறுமாற்றான் உணர்க. இழிபறியா என்றது - வற்கடமுறுதலை அறியாத என்றவாறு. தண்பணை-மருதநிலம். குரூஉக் கொடிய எரி - செந்நிறமுடைய ஒழுகுங்பட்ட நெருப்பு. குருவும் கெழுவும் நிறனா கும்மே (உரி-5) என்பது தொல்காப்பியம். நிறம் ஈண்டுச் செந்நிறம் என்க. நாடு செயற்கையான் ஆவது, காடு இயற்கையிற் றோன்றுவது ஆகலின், நாடு நாடாக இருக்கும்படி ஆண்டுத் தொழில் செய்வார் எல்லாம் ஓடிவிட்டமையான் மீண்டும் காடுகள் தோன்றலாயின என்பார், நாடெனும் பேர் காடாக என்றார். நாடு காடாய வழி ஆண்டு முன்பு பசுத்திரள்கள் தங்கிய இடமெல்லாம் புலி முதலிய காட்டு விலங்குகள் தங்குவனவாயின என்க. துணங்கை-ஒருவகைக் கூத்து. தழூஉ. குரவைக் கூத்திற்கு ஆகுபெயர். இவற்றின் இலக்கணம் முன்னர்க் கூறினாம்; (மதுரைக்-26ஆம் அடி, 97-ஆம் அடிகளின் அகலவுரையிற் காண்க) அவை - சான்றோர் இருந்த மன்றம். பொதுஇல் - பொதியில் என நின்றது. கவையடி - பிளவுபட்ட அடி. கவையடிப் பேய்மகள் நிணனுண்டு சிரித்த தோற்றம் போல (சிறு பாணாற்று. 97-8) என்றார் பிறரும்.

164-176 : அணங்கு ................ பகைவர்தேஎம்

பொருள் : அணங்கு வழங்கும் அகலாங்கண் - இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்தே, நிலத்து ஆற்றும் குழூஉப்புதவின் - நிலத்தின்கண்ணே நின்று தொழில் செய்கின்ற நிலையோடு கூடின கதவின் அருகிலிருந்து, அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ-மனக்கவற்சியை உடைய பெண்டிர் வருந்திக் கூப்பிட, கொழும்பதிய குடிதேம்பிச் செழுங்கேளிர் நிழல்சேர - வளவிய ஊர்களிடத்தனவாகிய குடிகளெல்லாம் பசியால்வருந்திப் புறநாட்டிலிருக்கும் வளவிய சுற்றத்தார் தமக்குப் பாதுகாவலாகச் சென்று சேர, நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக் குடுமிக் கூகை குராலொடு முரல-பெரிய மாளிகைகளிலே வெந்து வீழ்ந்த கரிந்த குதிரிடங்களிலே சூட்டினையுடைய கூகைச் சேவல் பேட்டுடனே இருந்து கதற, கழுநீர் பொலிந்த கண் அகல் பொய்கை களிறுமாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர - செங்கழு நீர் மிக்க இடமகன்ற பொய்கைகளிடத்தே யானை நின்றால் மறையும் வாட்கோரையுடனே சண்பங்கோரையும் நெருங்கி வளர, நல்ஏர் நடந்த நசைசால் விளைவயல் பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள - நன்றாகிய எருதுகள் உழுத விரும்புதல் அமைந்த விளைகின்ற வயலிடத்தே பல மயிரினையுடைய பெண்பன்றியோடே ஆண்பன்றி ஓடித்திரிய, வாழாமையின் வழிதவக் கெட்டுப் பாழாயின நின் பகைவர் தேஎம்-நின் ஏவல் கேட்டு அடங்கி வாழாமையாலே வாழும் வழிமிகக் கெட்டுப் பாழாய் விட்டன உன்னுடைய பகைவர் நாடுகள் என்பதாம்.

கருத்துரை : தெய்வங்கள் உலாவாநின்ற ஊரிடத்தே அரந்தைப் பெண்டிர் கதவருகே இருந்து அழ, குடிமக்கள் பசியால் வருந்திப் புற நாட்டிலுள்ள தங்கேளிர்பாற் சென்று சேர, மாளிகைகளிலே கரிந்த குதிரிலிருந்து கூகை குழற, பொய்கையிலே கோரை முதலியன அடர, விளைவயல்களிலே பன்றிகள் உகள, நின்மொழி கேட்டு அடங்கி வாழாமையான் நின்பகைவர் நாடு வாழத் தகுதியில்லாமற் கெட்டுப் பாழாகி விட்டன என்பதாம்.

அகலவுரை : அணங்கு-தெய்வம்; ஈண்டு இல்லுறை தெய்வத்தின் மேற்று. அகலாங்கண் என்றது அகன்ற ஊரிடத்தே என்றவாறு. அகலாங்கண் வியலாங்கண், அகலுளாங்கண் வியலுளாங்கண் என்ற சொற்கள் பேரூர் என்னும் பொருளவாய்ப் பண்டை இலங்கியங்களிற் பெரிதும் வழங்கப்படுகின்றன. நிலத்து ஆற்றும் குழூஉப்புதவின் என்றது, நிலத்தின் கண்ணே நின்று சுழலுதலுடையதும் நிலையோடே கூடியதுமாகிய கதவு என்றவாற. இத் தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர், நிலத்திலுள்ளாரை எல்லாம் போக்கும் வாசல் காப்பாரை யுடைய வாசலின் கண்ணேயிருந்து எனப் பொருள் கூறி, மேலும் குழூஉ, ஆகுபெயர் என்றும், இனிக் குடுமி தேய்ந்து போதலின், மண்ணைக் கொழித்து வரும் என்பாரும் உளர் என்றும் கூறியுள்ளார். ஆற்றுதல் ஈண்டு இயங்குந் தொழிலைச் செய்தல். குழூஉ-கூடுகின்ற. புதவு-கதவு. அரந்தைப் பெண்டிர் பாழ்மனையின் கதவருகே இருந்து அழுதனர் என்றவாறு. அரந்தை-மனக்கவலை. இது, கணவன் முதலியோரை இழந்தமையானும் பொருளிழந்தமையானும் உண்டாயது. இனைந்தனர் - வருந்தி: முற்றெச்சம்.

பண்டு வளமுடையவாயிருந்த குடி என்பார், கொழும் பதிய குடிதேம்பி என்றார். பதிய - ஊரிடத்துள்ளனவாகிய. தேம்பி-பசிமுதலியவற்றால் வருந்தி. செழுங்கேளிர் - செல்வச் செழிப்புடைய சுற்றத்தார். அந்நாடு முற்றும் பாழ்பட்டமையாற் புறநாட்டிலுள்ள என உரை கூறப்பட்டது. நிழல் சேர்தல் - அவராற் போற்றப்பட்டிருத்தல். செழுங்கேளிர் என்றதற்கு நெருங்கிய உறவினர் எனலும் ஆம்; என்னை? செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல் என்புழி அஃதப் பொருட்டாதலான். நெடுநகர் - பேரில்லங்கள். பள்ளி - இடம். நெருப்பாலழிக்கப்பட்டமை தோன்றக் கரிகுதிர் என்றார். கரி குதிர் : வினைத்தொகை. குடுமிக் கூகை - உச்சியில் சூட்டினையுடைய கூகைச் சேவல். குரால் - கோட்டானுமாம். கோட்டான் கூகையின் இனத்துள் ஒன்று. சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும். புலவூண் பொருந்திய குராலின் குரலும் (மணி-6: 75) எனச் சாத்தனார் கூகை குரால் என்பவற்றை வேறுபடுத்தோதுதல் காண்க. மக்கள் வழங்கிய காலத்தே கழுநீர் மலர்ந்து விளங்கிய பொய்கைகள் வாட்கோரையும் சம்பங்கோரையும் மண்டியழிய என்பார், கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கை செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர என்றார். செருந்தி - வாட்கோரை; நெட்டிக் கோரையுமாம். அமலுதல்-நெருங்குதல். ஊர்தருதல் - மேனோக்கி வளர்தலைக் குறித்து நின்றதென்க. ஊர்தர என்றதற்கு மேலும் கிளைத்துப் படர எனினுமாம். அக் கோரைகளின் அடர்வும் உயரமும் கூறுவார், களிறுமாய் என்றார் - யானையையும் மறைக்கும் என்றவாறு.

பயந்த விளைநிலம் உள்ளும் உழவன் (நாலடி - 356)

என்பவாகலின், நசைசால் விளைவயல் என்றார். வாழாமையின் வழிதவக் கெட்டென்றது-நினக்கடங்கி வாழாமையாலே வாழும் வழி மிகக் கெட்டென்றவாறு.

இது, நல்லிசைப் புலவர் மாங்குடி மருதனார் செல்வம் நிலையாமை யாக்கை நிலையாமை முதலிய நிலையாமைகளைச் செழியன் பகைவர் மேலிட்டுக் குறிப்பான் எடுத்துக் கூறியவாறாதல் அறிக. என்னை? அவ்வாற்றானும் நிலையாமை அறிவுறுத்தலே அவர் கருத்தாகலான் என்க. இங்ஙனமே,

மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில்
செல்வம் நில்லா தென்பதை வெல்போர்த்
தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரிற்
கண்டனை யல்லையோ காவல் வேந்தே (சிலப்-நடுதற் : 151-4)

என மாடல மறையோன் சேரன் செங்குட்டுவனுக்குக் காஞ்சி யுணர்த்தியமை காண்க. இனி 152-உறுசெறுநர் என்பது தொடங்கி 174- பாழாயின என்னுந் துணையும் தொடர்ந்த இத் தொடரின்கண், பெரும்போர் நிகழ்தற் கிடமான ஒரு நாட்டின் நிலையினை ஆசிரியர் மாங்குடி மருதனார் நேரே நம்மை அழைத்துக் கொடுபோய்க் காட்டினாற் போன்று பொருள் புலப்படச் செய்யுள் செய்த அருமை நினைந்து நினைந்து மகிழற்பாற்று. உலகோம்புதற் றொழிலுடைய அரசராலேயே நாடு இங்ஙனம் அழிகின்ற கொடுமைதான் என்னே! என்னே! நெடுஞ்செழிய ! நினக்கு அறமும் புகழுமே யாயினும் இவ்வழிவினையும் சிறிதே எண்ணுக! இத்தகைய செயல்கள் வீடு பேற்றிற்கு அடாதன; அதனால் இத்துடனே இச் செயலை விடுக! இனியேனும், பற்றறுத்து வீடுபெறுதற் குரிய மேலாய நெறியிலே செல்வாய்! என, ஆசிரியர் இத்தொடரானும் குறிப்பாக அறிவுறுக்கின்ற அருமை உணர்வுடையோர் அறிந்து மகிழற்பாற்று. 177-எழாஅத்தோள் என்பது தொடங்கி, 196 - நின்தெவ்வர் ஆக்கம் என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண் இம் மாபெரும் நாவலம் பொழில் முழுதும் வென்றடிப்படுத்த நெடுஞ்செழியனின் வலம் படு கொற்றத்தைப் புலவர் பெருமான் நெஞ்சார வாழ்த்துகின்றார்.

முதுபொழின் மண்டில முற்றிய வலம்படு கொற்றம்

177-196 : எழாஅத்தோள் ...................... ஆக்கம்

பொருள் : எழாஅத் தோள் - முதுகிட்டார் மேற்செல்லாத மறத்தோளையுடைய மறவரோடே, இமிழ் முழக்கின் மாஅத்தாள் உயர் மருப்பில் கடுஞ்சினத்த களிறு பரப்பி - முழங்குகின்ற ஓசையையும் பெருமையுடைய கால்களையும் உயர்ந்த கொம்பினையும் உடைய கடிய வெகுளியை உடையனவாகிய யானைகளையும் எங்கும் பரப்புகையாலே, விரிகடல் வியன்றானையொடு - விரிகின்ற கடல் போலும் அகற்சியையுடைய படையோடே, முருகு உறழப் பகைத்தலைச் சென்று - முருகன் பகைவர் மேற் செல்லுமாறு போலத் தடையறப் பகைவரிடத்தே சென்று, அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ - விரிந்த விசும்பெங்கும் பரவுமாறு படையெழுச்சியாலாய ஆரவாரம் முழுங்கா நிற்ப, பெயல் உறழக் கணை சிதறி - மழையோடே மாறுபடும்படி அம்புகளைத் தூவி, பல புரவி நீறு உகைப்ப-பல குதிரைகள் ஓடுகின்ற விசையால் துகள்களை எழுப்ப, வளை நரல வயிர் ஆர்ப்ப - சங்கம் முழங்கக் கொம்புகள் ஒலிப்ப, பீடு அழியக் கடந்து அட்டு - பெருமை கெடும்படி வென்று கொன்று, அவர் நாடு அழிய எயில் வெளவி - அப்பகைவருடைய நாடுகள் அழியும்படி அவர் தம் அரண்களைக் கைக்கொண்டு, சுற்றமொடு தூ அறுத்தலின் - அவர்கட்கு உதவி செய்யும் சுற்றத்தாரோடே கூட அவர்கள் வலியைப் போக்குதலாலே, செற்ற தெவ்வர் நின் வழிநடப்ப - நின்னாற் சிறிது செறப்பட்ட பகைவர் நின் ஏவல் கேட்டு நடவாநிற்ப, வியல் கண் முது பொழில் மண்டில முற்றி - அகன்ற இடத்தையுடைய பழைய நாவலந்தீவின்கண் உளவாகிய நாடுகளை நின்னவாக வளைத்துக்கொண்டு, அரசியல் பிழையாது அறநெறிகாட்டி-தான் நூல்கள் கூறிய செங்கோன்மையிற் பிறழாது நின்று உலகின்கண் அரசியலறம் இஃது என ஏனையோர்க்குக் காட்டி, பெரியோர் சென்ற அடி வழிப் பிழையாது - நின் குலத்திற் பெரியோர் நடந்த அடிப்பாட்டின் வழியைத் தப்பாமல் ஒழுகிய, வலம்படு நின் கொற்றம் - வலிமை பெற்ற நின்னுடைய வெற்றி, குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்-மேற்றிசைக்கண் தோன்றிய நின் குலத்திற்குப் பழைதாகிய எல்லாரும் தொழும் பிறை நாடோறும் சிறக்குமாறு போல, வழி வழிச் சிறக்க - நின் பின்னுள்ளோரின் வழிமுறை வழிமுறையாகச் சிறந்தோங்குவதாக, குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியில் - கீழ்த்திசைக்கண் தோன்றிய நிறைந்த இருட்பக்கத்துத் திங்கள் நாடோறும் தேயுமாறு போல, தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்-தேய்ந்து கெடுவனவாக நின் பகைவருடைய ஆக்கம்;

கருத்துரை : எழாத் தோளுடைய மறவரோடே பிளிறுகின்ற பெரிய கால்களையுடைய ஏந்திய கொம்பினையுமுடைய வெகுளி மிக்க யானைகளையும் பரப்புதலாலே, விரிகடல் எனத் தோன்றும் அகன்ற படையோடே, பகைமேற் செல்லும் முருகனைப் போன்று பகைமேற் சென்று, படையெழுச்சியின் முழக்கம் விண்ணையளாவ மழைபோன்று அம்புகளைச் சிதறி, குதிரைகள் ஓடுதலாலே துகள் எழவும், சங்கம் முழங்கவும், கொம்பொலிப்பவும், பகைவர் பெருமை கெடும்படி வென்று கொன்று அவர் நாடுகள் பாழாக அரண்களைக் கைக்கொண்டு, அவர்க்கு உதவி செய்த சுற்றத்தோடே அவர் வலியைப் போக்குதலாலே நின்னால் சிறிது செறப்பட்ட பகைவர் நின் ஏவல் கேட்டு நடவாநிற்ப, அகலிதாய பழைய நாவலம் பொழிலின்கண் உள்ள எல்லா நாடுகளையும் நின்னவாக வளைத்துக்கொண்டு நூல்களில் கூறிய அரசியல் நெறி பிறழாது நின்று செங்கோன்மை செலுத்துமாற்றால், அவ்வறம் இற்றென உலகிற் குணர்த்தி வலிமை பெற்ற நின் வெற்றி மேற்றிசையிற் றோன்றிய நின்குலத்திற்குப் பழைதாகிய எல்லாரும் தொழும் பிறை நாடோறும் வளர்ந்து சிறக்குமாறுபோல வழிவழி வளர்ந்துசிறப்பதாக; கீழ்த்திசைக் கண்ணே தோன்றும் இருள் பக்கத்துத் திங்கள் நாடோறும் தேயுமாறு போல நின் பகைவர் ஆக்கம் நாடோறும் தேய்ந்தொழிவதாக என்பதாம்.

அகலவுரை : எயில் வெளவி மண்டிலமுற்றி அறநெறி காட்டிப் பிழையாது வலம்படு நின் கொற்றம் என்க. நின் வலம்படு கொற்றம் என்பதனை -வலம்படு நின் கொற்றம் என மாறுக. எழாத்தோள் : ஆகுபெயர். முதுகிட்டார் பாற்செல்லாத தோளையுடைய மறவர் என்றவாறு. இனி மக்கள்தோள் போன்று புடையுயர்ந்து தோன்றாமையின் யானையின் கையினை எழாத்தோள் என்றார் எனினுமாம். இதனை விரிதானைக்கேற்றுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இமிழ் முழக்கென்றது, யானையின் பிளிற்றொலியை. உயர் மருப்பு - முன்புறம் உயர்ந்து தோன்றும் மருப்பென்க. தலைகள் ஏந்தின கொம்பென்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். யானை குதிரை தேர் காலாள் என்னும் நால்வகைப் படையினுள், முதலும் இறுதியுமாகிய களிறும் காலாளும் கூறினாரேனும் எடுத்த மொழியின் இனம் செப்புமாற்றான், களிறு முதலிய நால்வகைப் படைகளையும் பரப்பி என்க. பரப்பி என்னும் எச்சத்தைப் பரப்புதலால் எனத் திரித்து விரிகடல் போன்ற தானை என்பதற்கு ஏதுவாக்குக.

முருகு-தெய்வத்தன்மை; அதனையுடைய முருகனுக்கு ஆகுபெயர். உறழ: உவம உருபு. அகல் விசும்பின் ஆர்ப்பிமிழ என்றது படையியங் கரவம் என்னும் துறை கூறியவாறு. பெயல்-மழை. மழை போன்றது கணைகளை மிக்குச் சொரிந்தென்றவாறு. பாயமாரியிற் பகழிசிந்தினார் (சிந்தாமணி - 421) என்றும், நாற்றிசை மருங்கினும் கார்த்துளி கடுப்பக் கடுங்கணை சிதறி, (சிந்தா-451) என்றும், காலமாரியின் அம்பு தைப்பினும், (புறம்-287) என்றும் பிறரும் கூறுதல் காண்க. நீறு-துகள். உகைப்ப-எழுப்ப. நரல - முழங்க. பீடு-ஈண்டுப் பகைவரின் பெருமை என்க. கடந்தட்டு என்றது நூழிலாட்டு என்னும் துறை. வியன்கண் முதுபொழில் என்றது, அகன்ற இடமுடைய பழையதாகிய நாவலந்தீவினை. மண்டிலம்-நாடு; சோழ மண்டலம் பாண்டி மண்டலம் என்புழிப்போல. மண்டலம் மண்டிலம் என மருவிற்றென்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். மண்டிலம் என்பது வட்டம் என்னும் பொருட்டாகலின் நாட்டிற்கு ஆகுபெயர் எனினுமாம். அரசியல் என்றது வள்ளுவனார் முதலிய ஆன்றோர் வகுத்த அரசர்க்குரிய அறத்தினை. தனது ஒழுக்கத்தானே அவ்வறம் பிறர்க்குத் தோன்ற உணர்த்தி என்பார், அறநெறி காட்டி என்றார். இனி, அறநெறியை மக்கட்குணர்த்தி அதன்கட் செலுத்தி எனினுமாம். என்னை? நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே (புறம்-312) என்றும், சேய் ஒக்கும் முன்னின்றொரு செல்கதி உய்க்கும் நீரால், (கம்ப-4. அரசிய:4) என்றும் கூறுபவாகலான். பெரியோர் என்றது, நிலந்தரு திருவிற் பாண்டியன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முதலியோரை என்க. முன்றிணை முதல்வர் போல நின்று (பதிற்றுப்-85:5) என்றும், தொல்லோர் சென்ற நெறிய போலவும் (புறம்.58:25) என்றும் பிறரும் கூறுதல் காண்க. குடமுதல்-மேற்றிசைக்கண். முதல் : ஏழாவதன் உருபு. தொன்று - பழைது. பாண்டியரைத் திங்கள் மரபினர் என்பவாகலின் நின்குலமுதல் என்பார் தொன்று என்றார். இதனை,

செருமாண் தென்னர் குலமுத லாகலின்
அந்தி வானத்து வெண்பிறை தோன்றி (சிலப்-4: 22-3)

என்றும்,

செந்நிலத் தன்றுதிண் டேர்மறித்துப்
பேர்ந்தான் றனது குலமுத லாய பிறைக்கொழுந்தே (பாண்டிக்கோவை)

என்றும் பிறரும் கூறுதலறிக. பிறையினை உலகிலுள்ள எல்லா மதத்தினரும் எல்லா நாட்டினரும் தொழுதல் இயல்பாகலின், தொழுபிறை என்றார்.

தொழுதுகாண் பிறையிற் றோன்றி (குறுந்-178:5)

என்றும்,
........ பலர்தொழச்
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே (குறுந்-307: 1-3)

என்றும்,

ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை (அகம் - 239)

என்றும்,

பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே (புறம்-1: 9-10)

என்றும் வருதல் காண்க. பிறை ஒளிப் பக்கத்துத் திங்கள். இருட் பக்கத்துத் திங்களை மதி என்ப. குடமுதற் றோன்றும் பிறை என்றும், குணமுதற் றோன்றிய மதி என்றும் ஓதினமை காண்க. பிறை நாடோறும் வளர்தல் போன்று, நின் கொற்றம் வழிமுறை தோறும் வளர்ந்து திகழ்க என்பதாம்.

ஆநாள் நிறைமதி அலர்தரு பக்கம்போ
னாளின் நாளின் நீர்நிலம் பரப்பி
வெண்மதி நிறையுவா போல
நாட்குறை படுதல் காணுநர் யாரே (பரி-11)

என்றும்,

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே
தானே சிறியார் தொடர்பு (நாலடி-125)

என்றும்,

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு (குறள் - 725)

என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து (குறள் - 112)

என, அறம் பாடிற்றாதலின், செழியனின் நடுநிலைமையைக் குறிப்பாற் புகழ்வாராய் வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம் என வாழ்த்துவாராயினர். செங்கோன்மை பிறழா மன்னர்க்குப் பகைவராவோர் கொடுங்கோன் மன்னரே யாதலின் அவர் கெடுக என்றதும் உலகிற் கொடுங்கோன்மை நீங்கிநன்மையே சிறக்க எனவாழ்த்திய படியேயாம். இவ்வாறு வாழ்த்திய புலவர் இனி,

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்-புறத்- 23)

என்னும் காஞ்சி கூறப் புகுவார், நெடுஞ் செழியனை முன்னிலைப்படுத்து மாற்றான் அவ்வேந்தனது பொய்யாமை முதலிய பண்புகளைப் பாராட்டுவாராய்த் தோற்றுவாய் செய்கின்றார். 197-உயர்நிலை யுலகம் என்பது முதல் 209 - நல்லிசை என்பது வரை ஒரு தொடர்.

நெடுஞ்செழியனின் சான்றாண்மை

197-209 : உயர்நிலையுலகம் ................ நல்லிசை

பொருள் : உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே - ஒரு பொய்யாலே உயர்ந்த தேவருலகத்தை அவர் நுகரும் அமிழ்தத்தோடே பெறுவையாயினும் அவற்றைத் தருகின்ற பொய் நின்னைக் கைவிட்டு நீங்க மெய்யுடனே நட்புச் செய்தலையுடையை, முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே - முழங்குகின்ற கடலாகிய எல்லையையுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்துள்ளாருடனே உயர்ந்த வானுலகத்துத் தேவரும் பகைவராய் வரினும் பகைவர்க்கு அஞ்சித் தாழ்ந்து ஒழுகுதலைச் செய்யாய், தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழி நமக்கு எழுக என்னாய் - தென்றிசை நிலத்தின் மலைகள் எல்லாம் நிறையும்படி வாணன் என்னும் சூரன் வைத்த சீரிய பொருட்டிரள்களினைப் பெறுவையாயினும் பிறர் கூறும் பழி நமக்கு வருவதாக என்று கருதாய், விழுநிதி ஈதல் உள்ள மொடு இசை வேட்குவையே - சீரிதாகிய பொருள்களை வழங்கும் நெஞ்சுடனே அதன்ஊதியமாகிய புகழை விரும்புவாய், அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ - அத்தன்மையுடைய சான்றாண்மை பொருந்திய நின்னோடே முன்னிலையா வைத்துக் கூறுதற்கு யாதுளது? இல்லையாயினும், கொன் ஒன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல் - இவையிற்றிற் கெல்லாம் மேலாயிருப்ப தொன்றனை யான் நினக்குக் கூறுவன் கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே, கேட்டிசின் வாழி - அதனைக் கேட்பாய் நீ நெடிது வாழ்க, கெடுக நின் அவலம் - அக் கேள்வியானே நின் மயக்கம் ஒழிக, கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல்லிசை-ஒரு காலமும் கெடாதே நிலைபெறுவதாக நின்னுடைய சேட்புலமெல்லாம் சென்று விளங்கும் நல்ல புகழ்;

கருத்துரை : ஒரு பொய் கூறுதல் வாயிலாய்த் தேவருலகத்தையும் அவர் நுகரும் அமிழ்தவுண்டியையும் எளிதே பெறக் கிடப்பினும் அப்பொய் நின்னை விட்டு நீங்கும்படி மெய்யுடனே நட்புக் கொள்வாய். கடலினை எல்லையாகவுடைய இப்பேருலகத்தே வாழ்வாருடனே வானுலகத்தே வாழ்வாரும் ஒருங்குகூடி நின்னைப் பகைத்து வரினும் அப் பெரும்பகைக்கும் அஞ்சாமல் அவரை எதிர்வதன்றிப் பணிந்தொழுகாய்; தென்றிசைக்கண்ணுள்ள மலைகள்தோறும் நிறைய வாணன் வைத்த சிறந்த பொருள் முழுதும் பெறக்கிடப்பினும் அது பழியொடு புணருமெனின், அதனைப் பெற நெஞ்சானும் நினையாய், ஈதலிசைபட வாழ்தலால் வரும் புகழைப் பெரிதும் விரும்புவாய்; அத்தகைய மேன்மையுடைய நினக்குக் கூறற்பாலது இல்லை எனினும், இவையிற்றிற் கெல்லாம் மேலாய தொன்றனை யான் உனக்குக் கூறத் துணிந்தேன்; அதனைக் கேட்பாயாக; அதனால் நின் மயக்கம் ஒழிவதாக; உலகெலாம் பரவித் திகழும் நின் உயர்ந்த புகழ் உலகமொடு நின்று நிலை பெறுவதாக! என்பதாம்.

அகலவுரை : உயர்நிலையுலகம் - தேவருலகம். தேவருலகத்து நுகர் பொருள்களில் நரை திரை மூப்புச் சாக்காடுகளை விலக்கும் பெருமையுடைத்தாய்ச் சிறத்தலின் அமிழ்தொடு பெறினும் என்றார். தலைமை பற்றி அமிழ்தொடு என்றாரேனும் ஆண்டுள்ள அமிழ்துள்ளிட்ட எல்லாநுகர் பொருள்களோடும் பெறினும் என்பது கருத்தாகக் கொள்க. சேண்-ஈண்டு அறுதியாக என்னும் பொருட்டு. வாய்-வாய்மை: அஃதாவது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். இதனை,

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல். (குறள் - 291)

என்றற் றொடக்கத்துத் திருக்குறள்களான் அறிக.

ஏணி-எல்லை.

நளியிரு முந்நீர் ஏணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கை (புறம்-35)

என்றார் பிறரும். உலகிலுள்ளோர் அனைவரும் என்பார் உலகினை மலர்தலை உலகம் என்றார். மக்களிற் றேவர் உயர்பிறப்புடையோராகலின் விழுமியோர் என்றார். விழுமம் - சீர்மையும் சிறப்புமாம்.

உற்ற விடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டாற் பணிவரோ (மூதுரை-6)

என்பது ஈண்டு நினைவு கூரற்பாற்று. இதனால் அவனது மறச்சிறப்புக் கூறப்பட்டது.

விண்டு - மலை. வாணன் - ஒரு சூரன்.

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதியம் இல்லை உயிர்க்கு (குறள்-231)

என்னுந் திருக்குறளான் இம்மையின் வாழ்தற்பயன் ஈதலும் அதனாலுண்டாம் புகழுமே யாதல் அறிக. அப்பயன் பெரிதும் உண்டாக வாழ்கின்றனை என்பார், ஈதலுள்ளமொடு இசைவேட்குவையே என்றார். அன்னாய் - அத்தன்மையுடையாய்.

இவ்வடிகளோடே,

உண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே (182)

என்னும் புறப்பாட்டு நினைவுகூரற் பாலது. இத்தகைய சான்றாண்மையுடைய நினக்கு இவ்வுலகியலறம் பற்றி நின்னை முன்னிலையாக்கிக் கூறற்பாலது யாதொன்றும் இல்லையென்பார் அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ என்றார். இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் முன்னிலை நின்னொடு எவனோ என மாற்றி ஐம்பொறிகளுக்கும் நுகரப்படுவனவாய் முன்னிற்கப் படுவனவாகிய இந் நுகர்பொருள்கட்கு நின்னோடு என்ன உறவுண்டு என வலிந்து பொருள்கூறி, நின் என்றது சீவான்மாவை, என்றும், முன்னிலை ஆகுபெயர் என்றும் கூறினர். இனிச் செழியன் அறநெறி நிற்பினும் பற்றுள்ளத்தோடே நிற்கின்றான் ஆகலின் அப் பற்றறுதிக்குக் காரணமாகிய நிலையாமை உணர்ச்சி தோற்றுவிப்பார். அப்பற்றுடைமைக்கு முதலாகிய மயக்கம் ஒழிக வென்பார், கெடுகநின் அவலம் என்றார். அவலம் : ஆகுபெயர். மயக்கம் என்னும் பொருட்டு.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடு நோய் (குறள் - 360)

எனத் தேவரும் கூறுதல் காண்க. காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றனுள்ளும் மயக்கத்தின் காரியம் காமமும், காமத்தின் காரியம் வெகுளியுமாம். எனவே ஏனையிரண்டிற்கும் காரணமாகிய மயக்கங் கெடின் காரியங்கள் கெடுதல் திண்ணமாகலின் அஃதொன்றினையே விதந்து கூறினார். எனவே நினது காம வெகுளி மயக்கங் கெட்டுப் பிறவி நோய் ஒழிவதாக என வாழ்த்தினாராயிற்று. இதனை ஆணவமலம் என்றும் அவிச்சை என்றும் கூறுப. ஆசிரியர் நச்சினார்க்கினியர் அவலம் என்றதற்கு மாயை என்று பொருள் கூறினர். பிறப்பறுத்துயர்தற்கு மாயை துணைக்காரணமாகலான் அவ்வுரை பொருந்தாதென்க. கொன் - பெருமை. என்னை?

அச்சம் பயமிலி காலம் பெருமைஎன்
றப்பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்-சொல்-இடை:6)

என்பவாகலின். பெருமை - ஈண்டு மெய்ப்பொருள் உணரும் உணர்ச்சியின் மேற்று. பொய்யெல்லாம் சிறுமையாகலின் மெய்யினைப் பெருமை என்றார். மெய் ஒன்றே யாகலின் கொன்னொன் றென்றார். கேட்டிசின்-கேட்கக் கடவை. இதற்கு அதனைத் தொல்லாணை நல்லாசிரியரிடத்தே கேட்பாயாக என்றும், கிளக்குவல் என்றதற்கு கூறுவன் அது என்னாற் காட்டுதற்கரிய தென்றும் என்றது, கந்தழியினை என்றும் வேண்டாது கூறினர் நச்சினார்க்கினியர். இனி 210-தவாப் பெருக்கத்து என்பது தொடங்கி, 237 ஆண்டு கழிந்தோரே என்னுந் துணையும் இந்நூலின் உட்கிடைப் பொருளாகிய காஞ்சித்திணைப் பொருள் கூறுகின்றார் என்க.

காஞ்சித்திணைப் பொருள்

210-219 : தவா ...................... தரீஇ

பொருள் : தவாப் பெருக்கத்து அறா யாணர் - கெடாத பெருக்கத்தினையுடைய நீங்காத புதுவருவாயும், அழித்து ஆனா கொழுந்திற்றி - அழிக்கப்பட்டும் அமையாத கொழுவிய தசையும், இழித்து ஆனாப் பல சொன்றி - உண்டமையாத பலவாகிய சோறும், உண்டு ஆனாக் கூர்நறவில் - பருகியமையாத மிக்க கள்ளும், தின்று ஆனா இனம் வைகல் மேலும் தின்றமையாத இன்னோரன்ன உண்டி வகைகளும் தங்குதலுடையவாய்; நிலன் எடுக்கல்லா ஒண்பல் வெறுக்கை - நிலம் சுமக்கமாட்டாத ஒள்ளிய பலவாகிய பொருட்டிரள்களையும் உடைய, பயன் அறவு அறியா நகர் - எக்காலமும் பயன் கெடுதல் அறியாத அரண்மனைகளிடத்தே இருந்து, நரம்பின் முரலும் நயம்வரும் முரற்சி விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்ப - யாழ் நரம்பு போன்று பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய விறல்பட ஆடும் மகளிர் தம்முடைய பூண் அணியாத கையிலே குறிய தொடிகளையிட, பாணர் உவப்பக் களிறுபல தரீஇ - பாணர்கள் மகிழும்படி யானைகள் பலவற்றையும் கொடுத்து;

கருத்துரை : கெடாத பெருக்கத்தையுடைய புதுவருவாயும் அழிக்கப்பட்டும் அமையாத கொழுவியதசையும் உண்டமையாத சோறும், பருகியும் அமையாத மிக்க கள்ளும் தின்றுதின்று அமையாத தின்பண்ட வகைகளும் உள்ளனவாய் நிலம் பொறுக்கவியலாத பொருட் குவியலையும் உடைய எக்காலமும் இன்பந் தருதலிலே கெடாத அழகிய அரண்மனைகளிடத்தே இருந்து யாழிசைத்தாற் போன்று பாடும் ஆடல் மகளிர் தம் வறுங்கையிலே குறுந்தொடி அணியாநிற்பப் பாணர்கட்கு யானைகள் பலவற்றையும் வழங்கி என்பதாம்.

அகலவுரை : புதிய வருவாயும் நாடோறும் மிக்குவரும் என்பார் தவாப் பெருக்கத்து அறா யாணர் என்றார்; யாணர் - புதுவருவாய். அழித்தல் இழித்தல் உண்டல் தின்றல் என்பன-உண்ணல் என்னும் ஒரு பொருளே குறித்து நின்றன. இழித்து என்பது - உண்டு கெடுத்தும் என்னும் பொருட்டு. திற்றி - தசை, கூர் நறவு - மிகுதியான கள். சொன்றி - சோறு. தின்று ஆனா இனம் என்றது, இன்னோரன்ன தின்றமையாத உணவு வகைகள் என்றவாறு. இனம்-வகை. எனவே உண்டு உண்டு அமையாத திற்றியும் சொன்றியும் நறவும் இனமும் வைகுதலுடைய நகர் என்றவாறு. இவ்வடிகட்கு அழிக்கப்பட்டு விருப்பமையாத கொழுவிய தசையைத் தின்று விருப்பமையாத பல வகைப்பட்ட சோற்றைத் தீதென்று கூறிக் களிப்பமையாத கள்ளையுண்டு அவ்விரண்டிலும் விருப்பமையாத பாணர் என்க என்று அதற்கேற்பக் கொண்டு கூட்டினர் நச்சினார்க்கினியர். வைகல் என்றதற்கு நாடோறும் என்பர். நரம்பு-யாழ் நரம்பு; யாழ் நரம்பின் இசை போன்று பாடும் விறலியர் என்க. நரம்பொடு வீணை நாவின்நவின்றதோ என்று நைந்தார். (658) என்னும் சீவக சிந்தாமணி அடியை எடுத்துக் காட்டினார் நச்சினார்க்கினியர். பாணர் - பாட்டுப்பாடும் ஒரு வகுப்பினர். களிறுபல தரீஇ என்றது கொடையின் மிகுதி கூறிற்று.

220-237 : கலந்தோர் .................. கழிந்தோரே

பொருள் : கலந்தோர் உவப்ப எயில்பல கடைஇ - தம்முடன் நட்புக்கொண்டோர் மனமகிழும்படி அழித்த அரண்களிற் கொண்ட பலபொருள்களையும் அவர்க்குச் செலுத்திக் கொடுத்து, மறம் கலங்கத் தலைச் சென்று - பகைவர் மறம் நிலைகுலையும்படி அவர்களிடத்தே சென்று, வாள் உழந்ததன் தாள் வாழ்த்தி - வாட்போரிலே அவர்கள் வருந்தி வென்றதற்குக் காரணமான அவர்கள் முயற்சியை வாழ்த்தி, நாள்ஈண்டிய நல் அகவர்க்குத் தேரோடு மா சிதறி - விடியற்காலத்தே வந்த நல்ல பொருநர்க்குத் தேருடனே குதிரைகளையும் கொடுத்து, சூடுற்ற சுடர்ப்பூவின் பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின் விழுமிய பெரியோர் சுற்றமாக - சூடுதலுற்ற விளக்கத்தையுடைய வஞ்சியினையும் பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தினையுமுடைய சீரிய படைத்தலைவரைத் தமக்குச் சுற்றமாகக் கொண்டு, கள்ளின் இரும்பைக் கலம் செலஉண்டு - கள்ளினையுடையவாகிய பெரிய பச்சைக் குப்பிகள் வற்றும்படியாகக் கள்ளினையுண்டு, பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப - தம்மை வழிபட்டோருடைய நாடுகள் தம் ஏவல் கேட்டு நடவாநிற்ப, பணியார் தேஎம் பணித்துத் திறைகொண்மார் - தம்மை வழிபடாதோருடைய நாடுகளைத் தம் ஏவல் கேட்கும்படி செய்து அவர்கள்பால் திறை கொள்ளற்பொருட்டு, பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை - உயரப் பறக்கவல்ல பருந்துகளும் பறக்கலாற்றாத உயர்ச்சியையுடைய அரண்களையுடைய பாசறைக் கண்ணே, படுகண் முரசம் காலை இயம்ப - ஒலிக்கின்ற கண்ணையுடைய பள்ளியெழுச்சி முரசம் நாட்காலத்தே ஒலிப்ப இருந்து, வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த - பகைவர் படைக்குக் கேடுண்டாகும்படி வென்று பின்னும் அழிக்க வேண்டிய நிலங்களிலே சென்று தங்கின, பணைகெழு பெருந்திறல் பல்வெல் மன்னர் - வெற்றி முரசு பொருந்தின பெரிய வலியினையும் பல வேற்படையினையுமுடைய அரசர்கள், கரை பொருது இரங்கும் கனையிரு முந்நீர்த் திரையிடு மணலினும் பலரே - கரையைப் பொருது முழங்கும் செறிதலையுடைய கரிய கடலினது திரை குவிக்கின்ற மணலினும் பலராவார் அவர் யாரெனின், உரைசெல மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே - புகழ் எங்கும் பரக்கும் படி அகன்ற இடத்தையுடைய உலகங்களைத் தம் ஏவல்களை நடத்தி மக்கட்குரிய மனன் உணர்வின்மையால் பிறப்பற முயலாது பயனின்றி மாண்டொழிந்தோர்;

கருத்துரை : தம்மோடு நட்புக் கொண்டோர் மகிழுமாறு பகைவர் அரண்களிலே கொண்ட பல பொருள்களையும் தாமே வலியப் போக்கிக் கொடுத்து, பகைவர் மறங்கெடும்படி அவரிடத்தே சென்று, வாட்போரிலே உழந்து வென்றோருடைய முயற்சியை வாழ்த்தி, விடியற்காலத்தே வந்த பொருநர்க்குத் தேரும் குதிரையும் வழங்கி, வஞ்சிப் பூவினைச் சூடிய பூசிப்புலர்ந்த சந்தனத்தையுடைய சீரிய படைத்தலைவரைத் தமக்குச் சுற்றமாகக் கொண்டு தம்மை வழிபட்டாருடைய நாடுகள் தம் ஏவல்வழி நடப்ப வழிபடாதாருடைய நாடுகளை ஏவல் கேட்கச் செய்து அவர்கள்பால் திறைகோடற் பொருட்டுப் பருந்தும் பறத்தலாற்றாத உயர்ச்சியுடைய அரண்கள் அமைந்த பாசறைக்கண் பள்ளியெழுச்சி முரசம் முழங்க இருந்து பகைவர் படைகெட வென்று மேலும் அழிக்க வேண்டுமென்ற நிலங்களிலே சென்று தங்கிய வெற்றி முரசு பொருந்தின பெரிய வலியினையும் பல வேற்படையினையுமுடைய அரசர்கள் கரையை மோதுகின்ற கடலின் திரை குவிக்கும் மணலினும் பலர்; அவர் யாரெனின் தம் புகழ் பரவும்படி அகன்ற இடமுடைய உலகங்களை ஆண்டு மக்கட்குரிய மனன் உணர்வில்லாமையாற் பிறப்பற முயலாது பயனின்றி மாண்டொழிந்தோர் என்பதாம்.

அகலவுரை : கலந்தோர் - தம் உணர்ச்சியினா லொன்றுபட்ட நண்பர். அவர் கேளாதேயும் தாமே பல்வேறு பொருள்களையும் வலிய உய்த்து வழங்குவார் என்பார் கடைஇ என்றார். கடைஇ-செலுத்தி, எயிற்பல, எயிலின்கட் கொண்ட பல பொருள். மறம் கலங்குதலாவது-அச்சந்தோன்றுதல். தலை-இடம். வாள் உழத்தல் - வாளினாலே போரியற்றல். வாளுழந்ததன் தாள் என்றது வாளினால் போர்செய்தற்குக் காரணமான ஊக்கத்தை. இதனை, நச்சினார்க்கினியர் வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி எனக் கண்ணழித்து, வாட்போரிலே வருந்தினபடியாலே அவ்வருத்தத்தினாற் பின்பும் அதன்கட் பிறக்கின்ற முயற்சியை வாழ்த்தி, எனப் பொருள் கூறினார். மேலும் உழந்தென்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. உழந்த+தன் எனப் பெயரெச்சமாயின் தன்னென்னும் ஒருமை மேல் வருகின்ற மன்னர் என்னும் பன்மைக் காகாமை உணர்க என்றும் ஓதினர்.

நாள் - நாட்காலம்; விடியற்காலம். விடியற் காலத்தே அரண்மனை வாயிலில் வந்து பாடுவோர் பொருநர். அவர் அம்மன்னரின் குலத்தோரையெல்லாம் அழைத்துப் புகழ்வரென்பது பற்றி அகவர் என்றார். அகவுதல்-அழைத்தல்.

விடியற் காலத்தே பொருநர் வந்து பாடுதலை,
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஒன்றியான் பெட்டா அளவையின் (பொருந. 72-3)

என்றும்,

வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை
அள்ளகட் டன்ன வரிக்கிணை - வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன்
என்கடை நீங்கிற் றிடர் (புற-வெண், 206)

என்றும் வருவனவற்றால் அறிக. இனிப் பொருநர் முதலிய பரிசிலர்க்குத் தேர் முதலியவற்றை மன்னர்கள் வழங்கும் வழக்கத்தை,

வாலுளைப் புரவியொடு வயக்களிறு முகந்து கொண்டு
யாம் அவணின்றும் வருதும் (பெரும்பாண். 27-8)

என்றும்,

களிறும் தேரும் வயிரியர் கண்ணுளர்க்
கோம்பாது வீசி (பதிற்றுப்.20: 15-7)

என்றும்,

நீயே வளியி னியன்மிகுந் தேருங் களிறும்
தளியிற் சிறந்தனை வந்த புலவர்க்கு
அளியொடு கைதூ வலை (கலி. 50 : 15-7)

என்றும்,

தேரோடு ஒளிறு மருப்பேந்திய செம்மற் களிறின்று
பெயரல பரிசிலர் கடும்பே (புறம்-205)

என்றும்,

இரவன் மாக்கள் களிறொடு நெடுந்தேர்
வேண்டினுங் கடவ (புறம்-313)

என்றும் வரும் பிற சான்றோர் கூற்றானும் உணர்க.

இனி, இதற்கு நச்சினார்க்கினியர் கூறுவதாவது ;

தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூத ரேத்திய துயிலெடை நிலையும் (தொல்.புறத் : 36)

என்னும் விதியால் சூதர் இருசுடர் தொடங்கி இன்றுகாறும் வருகின்ற தம் குலத்துள்ளோர் புகழை அரசர் கேட்டற்கு விரும்புவரென்று கருதி விடியற்காலத்தே பாசறைக்கண் வந்து துயிலெடை பாடுவர் என்பது ஈண்டுக் கூறிற்றாம் என்பதாம். எஞ்சாமண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித்தமையான் ஈண்டு வஞ்சித்திணையே கூறப்படுதலின் ஈண்டுச் சூடுற்ற சுடர்ப்பூ வஞ்சிப்பூ என்க. விழுமிய பெரியோர் என்றது படைத்தலைவரை, பை என்றதற்குப் பச்சைக்குப்பி என்பர் நச்சினார்க்கினியர். கள் நிறைந்த பெரிய பச்சைக்குப்பி என்பார், கள்ளிரும் பை என்றார். இக் குப்பிகள் பெரியவாதலின் அவை வற்றும்படி மிகுதியாக உண்டென்பார் செல உண்டு என்றார். பணிந்தோர்-தம் ஏவலில் நிற்போர்; பணியார் அங்ஙனம் நில்லாத பகைவர். பறவைகளில் மிக்க உயர்ந்தே பறக்கும் இயல்புடைய பருந்தானும் பறத்தற்கு இயலாதென அவ்வரணின் உயர்வு கூறினார். இனி வானத்தே அவ்வரண் மேலாகப் பறக்கும் பருந்துகளையும் அதன்கண் அமைத்த பொறிகள் கொல்லுமாகலின் பருந்தும் பறத்தலில்லாத அரண் என அவ்வரணின் பொறிச் சிறப் போதிய வாறுமாம். இங்ஙனமே,

சினத்தயில் கொலைவாள் சிலைமழுத் தண்டு
சக்கரம் தோமரம் உலக்கை
கனத்திடை உருமின் வெருவருங் கவண்கல்
என்றிவை கணிப்பில கொதுகின்
இனத்தையும் உவணத் திறையையும் இயங்கும்
காலையும் இதமல நினைவார்
மனத்தையும் எறியும் பொறியுள என்றால்
மற்றினி உணர்த்துவ தெவனோ (கம்ப.நகரம் : 12)

எனக் கம்பநாடார் கூறுதலும் காண்க. பார்வல் - அரசர் தம் பகைவர் சேய்மைக்கண் வருதலைப் பார்த்திருத்தற்குரிய உயர்ச்சியை உடைய அரண் : ஆகுபெயர். படுகண் முரசம் - ஒலி உண்டாகும் கண்ணையுடைய முரசம். காலை இயம்ப என்றமையால் முரசம் பள்ளியெழுச்சி முரசம் என்க. தழங்குகுரன் முரசம் காலை இயம்ப (ஐங், 448 : 1) என்றும், நாண் முரசிரங்கும் இடனுடை வரைப்பில், (புறம் 161 : 29) என்றும், காலை முரசக் கனைகுரல் ஓதையும் (சிலப். 13 : 140) என்றும், பிற சான்றோருங் கூறுதல் காண்க. வெடிபட என்றது ஓசையுண்டாக என்றுமாம். வேண்டுபுலம் - தாம் அழிக்க வேண்டும் என்று கருதிய நாடு. இறுத்தல் - படையோடே தங்குதல். பணை-வெற்றிமுரசு. மணலினும் பலர் என்றது, எண்ணிறந்தோர் என்றவாறு. பிறவிப்பயனைப் பெறாது அவமே செய்து வீண்போயினர் என்பார், ஆண்டு கழிந்தோர் என்றார். மக்கட்பிறப்பினை எய்தினோர் அதனால் பெறற்பாலதாகிய வீடுபேற்றினை எய்திய வழியன்றி அப் பிறப்பான் உறுபயன் வேறின்றாகவும் நிலையாத இப் பொய்ப் பொருளை மெய்யாகக் கருதிப் பெரிதும் முயன்று அழிந்தனர் என்று இரங்கியவாறு. எனவே இவையிற்றின் தன்மை இத்தகையதாகலின் நின்றுழி நில்லாது கானல்நீர் எனத் தோன்றிக் கனவென மாயும் இப் பொருள்களிடத்தே பற்றுவைத்து முயலுதல் அவம் செய்தலேயாம். இத்தகைய அவலம் நினக்குக் கெடுவதாக என்பது குறிப்பு.

இது மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை அன்றிப் பிறவியற முயலாமையில் கழிந்தமை கூறிற்று, என்பர் நச்சினார்க்கினியர். இத்தொடரே இந்நூலின்கண் காஞ்சி கூறியதென்க. இதனால் இப்பனுவல் மதுரைக் காஞ்சி என்னும் பெயர்த்தாயிற்றென்க. இனி 210-முதல் 237 வரையிலுள்ள நிலையாமை கூறிய இத்தொடரை: தரீஇக் கடைஇ சிதறி பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்பப் பணியார் தேஎம் பணித்துத் திறைகொள்ளும் பொருட்டுப் பெரியோர் சுற்றமாகக் கொண்டு பாசறையிலே முரசியம்ப இருந்து கடந்து இறுத்த மன்னர் மணலினும் பலர். அவர் யாரெனின் பிறப்பற முறலாது உலகம் ஆண்டு அவமே கழிந்தோர் என இயைத்துக் கொள்க. இனி இவ்வாற்றான் நிலையாமை கூறிய நல்லிசைப்புலவர் நிலையாமை யுணர்ந்தவன் செல்வம் யாக்கை முதலியவற்றிற் பற்றுச் செய்யாது இவற்றின் மெய்ம்மை யுணர்ந்து பற்றறுதி எய்தும் நெறியானே முயல்வனன்றோ அஃதெவ்வாறு முயலுதல் வேண்டும் என்பதை இனிக் கூறப்புக்கவர், உடலும் கருவிகளும் உலகமும் நுகர்ச்சியும் என நான்கு வகைத்தாகிய மாயையினூடே தனக்கென வரைந்த வாழ்நாள் அளவும் ஊடாடி வாழ்தற்கு அந்நால்வகையின் ஒன்றாகிய உலகம் முன்னை ஊழானே செழியற் கமைந்தவற்றைப் பாராட்டிப் புகழ்கின்றார். உலகந்தானும் மருதம் முதலியனவாக ஐவகைப்படும் ஆகலின் முதலில் செழியன் ஆட்சிக்கண் அமைந்த மருதநிலத்தின் இயல்பினை எடுத்தோதுகின்றார் என்க. 238-அதனால் என்பது முதல், 270-ஒருசார் என்பது வரை ஒரு தொடர்.

மருத நிலச் சிறப்பு

மழையோ! மழை!! மழை!!!

மழை வளம்

238-244 : அதனால் .................... சிறத்தலின்

பொருள் : அதனால் -அங்ஙனம் இருந்தவாற்றால், குணகடல் கொண்டு குடகடல் வரைமுதல் முற்றி - கீழ்த்திசைக் கடலிடத்தே நீரை முகந்துகொண்டு மேற்றிசைக் கடற்கரையிடத்தே உள்ள மலையிடத்தை வளைத்துக்கொண்டு, இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது - இரவும் பகலும் ஆகிய இரண்டு பொழுதுகளும் முடிவெய்தும் காலை இது மாலையிதுவென அறியவியலாதபடி, அவலும் மிசையும் நீர்திரள்பு ஈண்டி - பள்ளமும் மேடுமாகிய பலநிலத்துண்டாகிய நீரினாலே திரண்டு சேரக் குவிந்து, கவலையம் குழும்பின அருவி ஒலிப்ப - கவலைக் கிழங்கு கல்லின அழகிய குழியிலே வீழ்ந்து அருவிகள் ஒலிப்ப, கழைவளர் சாரல் களிற்றினம் நடுங்க - மூங்கில் வளர்ந்த மலைப்பக்கங்களிலே நின்று யானைத்திரள்கள் நடுங்கா நிற்ப, ஏறொடு வான் ஞெமிர்ந்து - இடிகளோடே முகில்கள் யாண்டும் பரவி, சிதரற் பெரும் பெயல் சிறத்தலின் - சிதறுதலையுடைய பெருமழை மிகுதலானே;

கருத்துரை : முகில்கள் கீழ்த்திசைக் கடலின்கண் நீரை முகந்து கொண்டு சென்று மேலைக்கடலினருகேயுள்ள மலைகளை வளைத்துக் கொண்டு, இரவிது, பகலிது என்று அறியாதபடி, இருள்செய்து மேடு பள்ளம் எங்கும் நீர் திரண்டு பெருக, அருவி ஒலிக்க, யானைகள் நடுங்க, இடித்துப் பெரிய மழையைப் பொழிதலாலே என்பதாம்.

அகலவுரை : அங்ஙனம் இருந்தவாற்றால் இவ்வாறு வாழ்ந்து மகிழ்ந்தினிதுறை என (782) இந் நூலிறுதியிற் சென்று முடியும்; இடையில் வருவனவெல்லாம் இடைப்பிற வரலாம். அதனால் என்பதற்குப் பயனின்மையாலே என ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கூறினர். அங்ஙனம் ஆண்டு கழிதல் பயனின்மையாலே என்பது அவர் கருத்தாகக் கொள்க.

இனி, மழையின்றி மாநிலத்தார்க் கில்லை என்றும், வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்தம் என்றுணராற் பாற் றென்றும் (குறள் -11) சான்றோராற் புகழப்படுவதும், கடவுளதாணையான் உலகமும் அதற்குறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற் கேதுவாகியதும் ஆகிய வான்சிறப்பே முதலில் கூறுவான் தொடங்கி அவ் வான்சிறப்பிற்கும் ஏதுவாய்நிற்கும் செழியன் செங்கோன்மையைக் குறிப்பாகச் சிறப்பிப்பார், அவன் ஆட்சிக்கண் மழைவளம் சிறந்த தன்மையினை விதந்தோதுகின்றார். 238- குணகடல் என்பது தொடங்கி 244-சிறத்தலின் என்னுந் துணையும் கிடந்த ஓரேழ் அடிகளிலே வியத்தகு முறையில் மிகப்பெரிய மழை ஒன்றைப்படைத்து விடுகின்ற மாங்குடி மருதனார் நல்லிசைப்புலமையின் சிறப்பை உணர்க. மழையோ! மழை!! மழை!!! என்று வியந்து மும்முறையும் கூவவே தோன்றுகின்றது. கீழ்கடல் தடித்தெழுந்த முகிற்றிரள்கள் மேலைமலைத் தொடரை முற்றுகையிட்டுவிட்டன. ஒரே இருள்! இருள்! இருள்! விடியற்காலத்தையும் மாலைப்போதினையும் யாரே ஆண்டறிய வல்லுநர்! எங்கெங்கும் இடிமுழக்கம் கேட்கப்படுகின்றது. மூங்கிற் புதரின் ஓரத்திலே யானைகள் திரள் திரளாய் நின்று நடுங்குகின்றன. யானைகளுக்கு நீர் என்றால் மிகவும் விருப்பம்; அவைகளே இவ்வாறு நடுங்குமெனில் ஏனை உயிர்களின் நிலை என்னாம்! நான்கு திசையினின்றும் நீர்மிக்குத் திரண்டு வெள்ளம் ஓடி வருகிறது. யாண்டும் வெள்ளம்! எங்கும் அருவியின் ஓசை! எத்துணைச் சிறந்த பெருமழை! இத்தனை அகக்காட்சியும் அந்த ஏழு அடிகளினாலேயே காட்டிய மருதனாரின் புலமை எத்துணைச் சிறந்தது கண்டீர்!

குணகடல் குடகடல் என்றவற்றில் முரண் தோன்றிச் செய்யுள் இன்பம் மிகுதலுணர்க. குடகடல் என்பதனோடு வரைமுதல் என்பதனைக் கூட்டுக. எல்லை-பகற்காலம், விளிவு இடன்-முடியுமிடங்கள்; என்றது, இரவுமுடியும் விடியலும், பகல் முடியும் மாலையும் என்றவாறு. அவல்-பள்ளம். மிசை-மேடு. அவலா கொன்றோ மிசையா கொன்றோ (புறம் - 185) என்றார் பிறரும். திரள்பு - திரண்டு; செய்பெனச்சம். ஈண்டுதல்-ஈண்டுப் பெருகுதல். கவலையம் குழும்பு - கவலைக் கிழங் ககழப்பட்ட குழி. கழை-மூங்கில். சாரல்-மலைப்பக்கம். சிதரல் - சிதறுதல் சிறத்தல்-மிகுதல்.

நீர்வளமும் நிலவளமும்

244 - 253 : தாங்காது ..................... பொய்கை

பொருள் : தாங்காது குணகடற்கு இவரும் குரூஉப் புனல் உந்தி நிவந்து செல் நீத்தம் - யாறுகள் தாங்காமல் கீழ்த்திசைக் கடலுக்குப் போகின்ற நிறத்தையுடைய நீராகிய முனைந்து ஓங்கி ஒழுகுகின்ற வெள்ளம், குளம் கொளச் சாற்றி - குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப, களிறு மாய்க்கும் கதிர்க் கழனி - யானைகள் நின்றால் அவற்றை மறைக்கும்படி விளைந்த கதிரையுடைய கழனியிலும், ஒளிறு இலஞ்சி - விளங்கும் மடுக்களிலும், அடைநிவந்த முள் தாள சுடர்த்தாமரை - இலைக்கு மேலே ஓங்கிய முள்ளையுடைய தாள்களையுடையவாகிய ஒளியினையுடைய தாமரைப் பூவினையும், வள் இதழ் அவிழ் நீலம் - பெருமையை உடைய இதழ் விரிந்த நீலப்பூவினையும், மெல் இலை அரி ஆம்பலொடு-மெல்லிய இலையினையும் வண்டுகளையும் உடைய ஆம்பற்பூவோடே, வண்டு இறை கொண்ட கமழ் பூம் பொய்கை - வண்டுகள் தங்குதல் கொண்ட மணநாறும் பிற பூக்களையும் உடைய பொய்கைகளிலும்;

கருத்துரை : யாறுகள் தாங்காமல் கீழ்த்திசைக் கடலை நோக்கிப் போதலையுடைய நிறமமைந்த நீராகிய விரைந்து பெருகி ஒழுகும் வெள்ளம், குளங்கல் கொள்ளும்படி நிறைப்ப, யானைகளையும் மறைக்கும்படி ஓங்கிய கதிர்களையுடைய கழனிகளிடத்தும், விளங்கும் மடுக்களிடத்தும், இலைக்குமேல் ஓங்கி நிற்கும் தாமரைப் பூவினையும், தேன்மணக்கும் நறிய நெய்தற் பூவினையும் பெரிய இதழையுடைய நீலப்பூவினையும், வண்டுகள் தங்கும் மணமிக்க பிற பூக்களையுமுடைய பொய்கைகளிடத்தும் என்பதாம்.

அகலவுரை : நீர் மிக்ககாலத்தே யாற்றின் கரைகளை உடைத்தலான் தாங்காது என்றார், நீர்மிகிற் சிறையு மில்லை (புறம்-51) என்றார் பிறரும். இவர்தருதல்-ஓடுதல். குணகடற்கு- குணகடலை அடையும் பொருட்டென்க. யாண்டுத் தோன்றிற்று ஒன்று ஆண்டே ஒடுங்குதல் இயல்பாகலின் குணகடலின் முகந்து கொள்ளப்பட்ட நீர் குணகடற்கே இவர்ந்ததென்ற நயமுணர்க. உந்துதல் - முன்னுள்ளவற்றைத் தள்ளுதல், முன் உள்ள பெருக்கைப் பின்வரும் பெருக்கு உகைத் தோடலின் உந்தி என்றார். நிவந்த என்றது மேலும் மேலும் பெருகி என்றவாறு. குணகடற்கு இவர்தரும் நீத்தம், உந்தி நிவந்து செல்நீத்தம் எனத் தனித்தனி முடிவுசெய்க. புதியநீர் நிலத்தின் நிறத்தை ஏற்று நிறமுடைத்தாய் வருதலின் குரூஉப்புனல் என்றார். குரு - நிறம்; அளபெடை சாற்றி - நிறைத்து. சால்பு என்னும் பண்படியாகப் பிறந்த வினையெச்சம். செழித்தோங்கும் நிலநலங் கூறுவார் களிறு மாய்க்கும் கழனி என்றார். நிற்கின்ற யானையையும் மறைக்கும்படி ஓங்கி வளர்ந்த கதிரையுடைய கழனி என்றவாறு.

மீன்கணி னளவும் வெற்றிடங்கள் இன்மையால்
தேன்கணம் கரும்பியல் காடும் செந்நெலின்
வான்புகழ் களிறுமாய் கழனி யாக்கமும்
ஊன்கணார்க் குரைப்பரி தொல்லென் சும்மைத்தே (சிந்தா-54)

எனத் திருத்தக்கதேவரும்,

களிறு மாய்க்கும் செந்நெல் அங்குலை (நைட-சுயம்-138)

என அதிவீரராமபாண்டியனாரும் ஓதுவர். இவ்வாசிரியரே களிறுமாய் செருந்தி, (172) என முன்னும் ஓதியிருத்தல் காண்க. மாய்த்தல் - மறைத்தல் என்னும் பொருட்டு. ஒளிறுதல்-விளங்குதல். இலஞ்சி-மடு. நீர்ப்பூவான் விளங்குதலின் ஒளிறிலஞ்சி என்றார். பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி, (மலைபடு-228) என்றார் பிறரும். பொய்கைகளிற் றாமரையிலைகள் நீர்ப்பரப்பின் மிசைக் கிடப்பனவாக, மலர்கள் அவற்றின் மேலுயர்ந்து நின்று அழகாய்த் தோன்றுதலின், அடைநிவந்த முட்டாள சுடர்த்தாமரை என்றார். அடையிறந் தவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை (பரிபா-13:50) என்றும் முட்டாட் டாமரை (முருகு-73) என்றும் முள்ளரைத் தாமரை (சிறுபாண்-183) என்றும் பிறரும் ஓதுப. அரி-வண்டு; மெல்லிலை அரி ஆம்பல் என்றதற்கு, மெல்லிய இலையின்கண் வரிகளையுடைய ஆம்பற்பூ எனினுமாம். அரி-மென்மையுமாம். இறை கொள்ளுதல்-தங்குதல்.

மருதநிலத்திலுண்டாகும் ஓசைகள்

254-262 : கம்புட் சேவல் .................. பறையின்குரல்

பொருள் : கம்புள் சேவல் இன் துயில் இரிய வள்ளை நீக்கி வயமீன் முகந்து - கம்புட்கோழி இனிய உறக்கம் கெடும்படி வள்ளைக்கொடிகளைத் தள்ளி, வலியை உடைய மீன்களை முகந்துகொண்டு, கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் - விலைகூறி விற்ற கொடிய முடிகளையுடைய வலையான் மீன்பிடிப்பார், வேழப் பழனத்து நூழிலாட்டு ஓதை - கொறுக்கைச்சியை யுடைய மருதநிலத்து மீனைக் கொன்றுகுவித்தலாற் பிறந்த ஓசையும், கரும்பின் யந்திரம் ஓதை கட்பின் ஓதை - கரும்பிற்கு இட்ட ஆலைகளிடத்து ஓசையும் களை பறிப்பிடத்து ஓசையும், அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே- மூத்தலாற் சேற்றிலே வலியற்றுத் தங்கிய எருதுற்ற வருத்தத்தைக் கள்ளை உண்ணும் களமர் பெயர்க்கும் ஆரவாரமும், ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்கை வினைஞர் அரிபறை - தழைத்த பகன்றையினையுடைய நெல்லுமுற்றிய கழனியில் அந்நெல்லை வலிய கையினாலே அறுப்பாருடைய அரித்தெழுகின்ற பறை ஓசையும்;

கருத்துரை : சம்பங்கோழி உறக்கம் கெடும்படி வள்ளைக் கொடிகளைத் தள்ளி வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு விலைகூறி விற்ற கொடிய முடிகளையுடைய வலையாலே மீன் பிடிப்பார் கொறுக்கைச்சியை உடைய மருதநிலத்தே மீனைக்கொன்று குவித்தலாற் பிறந்த ஓசையும், கரும்பாலையின் ஓசையும், களைபறிப்போர் ஓசையும், மூத்தலால் வலியற்றுச் சேற்றிலே விழுந்துவிட்ட எருதினைத் தூக்கிக் கரை சேர்க்கும் கள்ளுண்ட களமர் ஆரவாரமும் பகன்றை தழைத்த நென் முற்றிய கழனிகளிலே அந் நெல்லை அறுப்பார் முழக்கும் பறை ஓசையும் என்பதாம்.

அகலவுரை : கம்புட்சேவல் - ஒரு நீர்ப்பறவை; இதனைச் சம்பங்கோழி என்பர். பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக் கம்புட் கோழியும் (சிலப் 10 : 113-4) என்றார் இளங்கோவடிகளாரும். கம்புட் கோழி - சம்பங்கோழி என்பர் அடியார்க்கு நல்லார். வள்ளை-வள்ளைக் கொடி. இது நீர்மேற் படர்தலான் வள்ளைநீக்கி என்றார். வயமீன் - வலிய மீன் : பெரிய மீன் என்றபடி. அவை வாளைமீன் வரான்மீன் முதலியன. முகந்து - என்னும் சொல் மீனின் மிகுதியை உணர்த்தி நின்றது. கொள்ளை சாற்றிய - விலைகூறி விற்ற. இனமீன் முகந்து துணைபுணர் உவகையர் பரத மாக்கள் ........... கொள்ளை சாற்றி (அகம். 30: 2-10) என்றார் பிறரும்.

கொடுமுடி என்றது வலையின்கண் உள்ள முடிச்சுக்களை. வலைஞர் என்றது, வலைவீசி மீன்பிடிக்கும் களமர்களை என்க. வேழம் - கொறுக்கைச்சி. இதனைக் கொறுக்காந்தட்டை என இக் காலத்தே வழங்குப - இது மருதநிலத்தின்கண் வளரு மொருவகைப் புல் ஆதலின் வேழப்பழனம் என்றார். நூழிலாட்டு என்னுஞ் சொற்குக் கொன்று குவித்தல் என்பது பாடல்சான்ற புலனெறி வழக்கிற் பொருளாம். என்னை? பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் எனத் தொல்காப்பியனாரும் ஓதினர் ஆகலின் என்க. ஆசிரியர் இளங்கோ வடிகளாரும்,

கடும்படை மாக்களைக் கொன்றுகளங் குவித்து.................
நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன் (சிலப். 26: 212 218)

என்றோதுதல் காண்க. ஓதை என்பதனை நூழிலாட்டு எந்திரம் என்பவற்றோடும் இயைத்துக்கொள்க. ஓதை-ஓசை. அள்ளல்-சேறு. முதிர்ந்தமையாற் கரைசேரமாட்டாது சேற்றில் விழுந்த பகட்டினைக் கள்ளுண்ட களமர் ஆரவாரத்தோடு கரைசேர்க்கின்றனர் என்க. அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப நல்லெருது முயலும். அளறுபோகு விழுமத்துச் சாகாட்டாளர் கம்பலை, (பதிற்று. 27-12-4) என்றார் பிறரும். எந்திரம் - ஆலை. கட்பு - களைஎடுப்பு. பகடுறு விழுமம் - என்றது பகடு எய்தும் வருத்தத்தை என்க. கள் ஆர் - கள்ளை உண்ட. அகடாரார் என்றார் வள்ளுவனாரும். வன்கை - வலிய கை. இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைக்கும் கையாகலின் வன்கை வினைஞர் என்றார். பறை-ஓசைக்கு ஆகுபெயர். நெல்லரிவார் அக்கழனியில் வாழும் பறவை முதலியன ஓடி யுய்தற்பொருட்டுப் பறை முழக்குதல் வழக்கம். இதனை வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇ கண்மடற் கொண்ட தீந்தேன் இரிய (புறம். 348) என்றும், வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை ............. படுபுள்ளோப்பும் (அகம். 204; 10-11) என்றும், வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை (அகம். 40; 13-4) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க.

திருப்பரங்குன்றம்

262-270 : இன்குரல் .................... ஒருசார்

பொருள் : இன்குரல் தளி மழை பொழியும் தண்பரங்குன்றில் கலிகொள் சும்மை - இனிய ஓசையினையுடைய துளிகளை யுடைய முகில்கள் பெய்யும் குளிர்ந்த திருப்பரங்குன்றில் விழாக் கொண்டாடும் ஆரவாரமும், ஒலிகொள் ஆயம் ததைந்த கோதை தாரொடு பொலியப் புணர்ந்து உடன் ஆடும் இசையே- புதுநீர் விழாவின் ஆரவாரத்தைத் தம்மிடத்தே கொண்ட மகளிர்திரள் தம்மிடத்து நெருங்கின கோதை தம் கணவர் மார்பின் மாலையுடனே அழகுபெறக் கூடுமாறு அவர்களுடனே நீராடும் ஆரவாரமும் ஆகிய, அனைத்தும் அகல்இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப-அவ்வோசை முழுதும் ஏனைப் பூதங்கள் விரிதற்குக் காரணமாகிய பெருமையுடைய வானத்துச் சென்று முழங்கி ஆண்டு வாழ்வோர்க்கு இனிதாக ஒலியாநிற்க, குருகு நரல மனைமரத்தான் மீன்சீவும் பாண் சேரியொடு - குருகென்னும் பறவைகள் கூப்பிடும்படி மனையிடத்து மரங்கள் தோறும் மீனைத் திருத்தும் பாணர் குடியிருப்பில் பாடலானும் ஆடலானும் எழுந்த ஓசையோடே, மருதம் சான்ற தண்பணை சுற்றி ஒருசார் - ஊடலாகிய உரிப்பொருளமைந்த மருதநிலத்தாலே சூழப்பட்ட ஒரு பகுதியும்;

கருத்துரை : இனிய ஓசையோடே துளிக்கும் முகில் பொழியா நின்ற குளிர்ந்த திருப்பரங்குன்றில் திருவிழாக் கொண்டாடும் ஆரவாரமும், புதுநீர் விழாவின் ஆரவாரத்தைத் தம்மிடத்தே கொண்ட மகளிர் குழாம் தம் கோதை தங் கணவர் மார்பின் மாலையுடனே அழகுபெறக் கூட நீராடும் ஆரவாரமும் ஆகிய அனைத்தும் அகன்ற வானத்தே சென்று ஆண்டுள்ளார்க்கு இனிதாக இசையாநிற்பக் குருகுகள் கூப்பிடத் தம் மனைக்கண் நிற்கும் மரங்கடோறும் மீன்திருத்தும் பாணர் குடியிருப்பிற் பாடலானும் ஆடலானும் எழுந்த ஓசையோடே கூடிய மருத நிலம் தழுவிய ஒரு பகுதியும்;

அகலவுரை : கழனியினும் பொய்கையினும் சேவல் துயில் இரிய வள்ளை நீக்கி மீன் முகந்து சாற்றிய வலைஞர் நூழிலாட்டும், எந்திரத்தின் ஓசையும், கட்பின் ஓசையும், விழுமம் பெயர்க்கும் களமர் ஆர்ப்பும், பறையின் ஓசையும், ஆயம் ஆடும் இசையும் ஆகிய அனைத்தும் சேரியின் ஒலியொடு இசைப்ப மருதம் சான்ற தண்பணை சுற்றப்பட்ட ஒருபகுதியும் எனக் கூட்டுக.

மழை பொழியும் ஓசை கேட்டற்கு இனிதாயிருத்தலின் இன்குரற்றளி என்றார். தளி-துளி, பொழியும் என்றதற்குத் தங்கும் எனப் பொருள் கூறினர் நச்சினார்க்கினியர். எப்பொழுதும் மழைபொழிதலுண்மையாற் குளிர்ந்திருக்கும் திருப்பரங்குன்றென்க. பொழியும் என்றது, தண்பரங்குன்று என்றதற்குக் குறிப்பேதுவாய் நின்றதென்க. மருதநிலம் சூழ இடையே நிற்றலின் மருதநிலத்து ஆரவாரம் விழாவார வாரத்தோடே கலந்ததென்க. திருப்பரங்குன்றிற்கு மருதம் அண்மையிலிருத்தலை,

மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த
முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போன் மலர்ந்த காமர் சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று (முருகு - 71-77)

என ஆசிரியர் நக்கீரனாரும் ஓதுதல் காண்க. சும்மை - ஈண்டு இசைப் பொருண்மையை உணர்த்திற்று. ஆயம்-மகளிர் கூட்டம். தார் - மார்பில் அணியும் மாலை. மகளிர் தம் கோதை தங்கணவர் மார்பின் மாலையோடே பொருந்தி அழகுறுமாறு சேரக்கூடி ஆடினர் என்க. மைந்தர் கண்ணி மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும் (பட்டினப். 109.10) என்றும், மகளிர் கோதை மைந்தர் புனையவும், மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும் (பரி. 20: 20-1) என்றும் பிறரும் கூறுதல் காண்க. வானத்து இனிது இசைப்ப என்ற குறிப்பால் ஆண்டு வாழ்வோர்க்கு என உரையிற் கூறப்பட்டது. குருகு - ஒருவகைப் பறவை. நரலல் - ஒலித்தல். பாணர் மீன் பிடிக்கும் தொழிலும் உடையராகலின் மீன்சீவும் பாண்சேரி என்றார். பாண்சேரி - பாணர் குடியிருப்பு. இஃது ஆண்டெழும் ஆரவாரத்திற்கு ஆகுபெயர் என்க. மருதம் சான்ற - மருத ஒழுக்கம் அமைந்த - அஃது ஊடலும் ஊடனிமித்தமுமாம். 271 - சிறுதினை என்பது முதல் 285-புறவணிந்து ஒருசார் என்னும் துணையும் ஒருதொடர். இதன்கண் முல்லைசான்ற முல்லைவளம் கூறப்படும்.

முல்லைநில வளம்

271-285 : சிறுதினை ................ ஒருசார்

பொருள் : சிறு தினை கொய்யக் கவ்வை கறுப்பக் கருங்கால் வரகின் இருங்குரல் புலர-சிறிய தினைக்கதிர்கள் கொய்யப் படவும் எள்ளிளங்காய்கள் முற்றிக் கருமை எய்தவும் கரிய தாளினையுடைய வரகினது கரிதாகிய கதிர் முற்றி ஈரம் புலரவும், ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர - ஆழ்ந்த குழியிலே திருவினையுடைய மணிகள் கிடந்து விளங்கவும், எழுந்த கடற்றின் நன்பொன் கொழிப்ப - வளர்ந்த காட்டிடத்தே மாற்றற்ற பொன் மேலே பிறழும்படி, பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி மடக்கண் பிணையொடு மறுகுவன வுகள - பெரிய அழகைப் பெற்ற சிறிய தலையினையுடைய நௌவியமான் மடப்பத்தையுடைய கண்ணினையுடையவாகிய பிணையோடே கழல்வனவாய்த் துள்ளாநிற்பவும், சுடர்ப் பூங்கொன்றை தாஅய நீழல் - ஒளியினையுடையவாகிய பூக்களையுடைய கொன்றை பரந்த நிழலிடத்தே, பாஅயன்ன பாறை அணிந்து - பரப்பினாலொத்த பாறை அழகு பெற்று, நீலத்தன்ன பைம்பயிர் மிசைதொறும் - நீலமணியை ஒத்த பசிய பயிர்களினிடந்தோறும், சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை வெள்ளியன்ன ஒள் வீ உதிர்ந்து தாஅய் - முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடனே முல்லையினுடைய வெள்ளியின் நிறத்தை ஒத்த ஒள்ளிய பூக்கள் உதிர்ந்து பரவவும், மணி மருள் நெய்தல் உறழக் காமர் துணிநீர் மெல்லவல் தொய்யிலொடு மலர - நீலமணி என்று மருளும் நெய்தல் மாறுபடும்படி விருப்பத்தையுடைய தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்திலே தொய்யிற் கொடியோடே மலராநிற்பவும், வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார் - இவையிற்றால் இழைத்தல் வல்ல வேன் மகன் இழைத்த வெறிக் கூத்தையுடைய களத்தை ஒத்ததாக முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்து ஒரு பகுதியும்;

கருத்துரை : சிறியதினைக் கதிர்கள் கொய்யப்படவும், எள்ளிளங்காய்கள் முற்றிக் கருநிறங்கொள்ளவும், கரிய தாளினையுடைய வரகின் கருங்கதிர்கள் முற்றிப் புலரவும், ஆழ்ந்த குழிகளிடத்தே மணிகள் மிளிரவும், வளர்ந்த காட்டிடத்தே பொன்மேலே பிறழுமாறு நவ்வி மான்கள் பிணைகளோடே சுழன்று துள்ளவும், ஒளிமிக்க பூக்களையுடைய கொன்றை படர்ந்த நீழலின்கண் பரப்பிவைத்தாற் போன்ற பாறை அழகுபெற்று நீலமணிபோலும் நிறமுடைய பயிரின்மேல் முசுண்டையும் முல்லையும் வெள்ளிபோல் விளங்கும் மலர்களை உதிர்த்தலால் அவை பரவாநிற்பவும், நீலமணிபோன்ற நெய்தல் தொய்யிற்கொடியோடே மாறுபட்டுத், தெளிந்த நீரையுடைய பள்ளங்களிலே மலரவும், இவையிற்றால் வல்லவனாகிய வேன்மகன் இழைத்த நெறியாடு களம்போல விளங்கித் தோன்றும் முல்லை ஒழுக்கமமைந்த முல்லையம்புறவு சூழ்ந்து ஒருபக்கம் என்பதாம்.

அகலவுரை : சிறுதினை கொய்யும் செவ்வியை எய்தினமையால் முல்லை நிலமாக்கள் அதனைக் கொய்யாநிற்ப என்க. கவ்வை - எள்ளிளங்காய். கௌவை போகிய கருங்காய்....... ஈரெண், (105-6) என்றார் மலை படுகடாத்தினும். எள்ளிளங்காய் பசுமைதீர்ந்து முற்றுங்காற் கருநிற மடைதலான் கவ்வை கறுப்ப என்றார். கறுப்ப - கருநிறங்கொள்ள; முதிர என்றவாறு. கருங்கால் - வரகு - கரிய தாளையுடைய வரகு. இருங்குரல் - கரிய கதிர்; பெரிய கதிருமாம். புலர -ஈரம் வற்றி நன்கு முதிர என்றவாறு. குழும்பு - குழி. இச்சொல் கூட்டம் என்னும் பொருளில் முன்னர் வழங்கப்பட்டமை அறிக. (மதுரைக். கா-24) திருமணி : பண்புத்தொகை. திருவாகிய மணி என்க. அழகிய மணியுமாம். எழுந்த கடறு - வளர்ந்த காடு. நன்பொன் - மாற்றற்ற பொன். கொழித்தல்-மேலே வரச்செய்தல். பிணை எனப் பின் வருதலால் நௌவி ஆண்மான் என்க. நௌவிமான் - மான் வகையில் ஒன்றுமாம். பிணை - பெண்மான். மான்கள் பிணையோடு துள்ளிக் குதித்தலால் அவையிற்றின் குளம்புகளாற் கிண்டப்பட்டுப் பொன் மேலெழுந்த தென்க. பொன் போன்று மிளிரும் பூக்களையுடைமையின் சுடர்ப்பூங்கொன்றை என்றார். பாயன்ன பாறை-பரப்பி வைத்தாற் போன்று அழகாக விளங்கும் பாறை. படுத்துவைத்தன்ன பாறை என்றார் மலைபடுகடாத்தினும். அணிந்து - அழகுற்று. நீலமணி போன்று விளங்கும் பசிய பயிர்களின் மேல் முசுண்டை மலரும் வெள்ளி போன்று மிளிரும் முல்லை மலரும் உதிர்ந்து அழகுற்று விளங்க, அயலிற் பள்ளத்தில் நெய்தல் தொய்யிற்கொடியோடே மலர்ந்து விளங்க அவ்விடம் வெறியாடற் கிழைத்த களனென விளங்கும் என்க. வெள்ளி - வெள்ளியென்னும் விண்மீன். வெண்பொன் எனினுமாம். சுரிமுகிழ்-முறுக்குடைய அரும்பு. நெய்தல் தொய்யிலொடு உறழ மலர என்க துணிநீர் - தெளிந்த நீர். மெல்லவல் - நெகிழ்ச்சி யுடைய பள்ளம். வல்லோன் - களனிழைப்பதில் வல்லவனாகிய வேன்மகன். தைஇய - இழைத்த. வெறிக்களம் - வெறியாடுகின்ற இடம். முல்லைசான்ற - முல்லை ஒழுக்கம் அமைந்த; அஃதாவது, இருத்தலும் இருத்தல் நிமித்தமும் பொருந்திய என்க. புறவு - காடு.

தினைகொய்யக் கவ்வை கறுப்பக் குரல் புலர, மணி கிளர நௌவி பிணையோடுகள. நிழல் அணிந்து பயிர் மிசை வீ உதிர்ந்து தாய், நெய்தல் தொய்யிலொடு உறழ மலர, களங்கடுப்ப முல்லை சான்ற புறவு சூழ்ந்தென்க. 286-நறுங்காழ் என்பது தொடங்கி, 301- ஒருசார் என்னுந் துணையும் குறிஞ்சிவளங் கூறிய ஒருதொடர்.

குறிஞ்சி வளம்

(மலைநிலத்தின் விளைபொருள்கள்)

286-290 : நறுங்காழ் ................ ஈண்டி

பொருள் : நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை - நறிய அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டு நிலத்தே விதைத்த குறிய கதிர்களையுடைய தோரை நெல்லும், நெடுங்கால் ஐயவி - நெடிய தாளினையுடைய வெண்சிறு கடுகும், ஐவனம் வெள் நெல்லொடு அரில் கொள்பு நீடி - ஐவன நெல்லென்னும் வெள்ளிய நெல்லோடே பிணக்கங் கொண்டு வளரப்பட்டு, இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் - இஞ்சியும் மஞ்சளும் பசுத்த மிளகுக்கொடியும் ஒழிந்தனவுமாகிய, பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி - பலவாய் வேறுபட்ட பண்டங்களும் கற்றரையிடத்தே குவிக்கப்பட்டு;

கருத்துரை : நறிய அகில் சந்தன முதலிய மரங்களை அழித்துத் திருத்திய மேட்டுநிலத்தே விதைத்த குறிய கதிர்களையுடைய தோரை நெல்லும், நெடிய தாளினையுடைய வெண்சிறு கடுகும் ஐவனமென்னும் வெண்ணெல்லோடே பிணங்கி வளரப்பட்டு இஞ்சியும் மஞ்சளும் பசிய மிளகுக் கொடியும் பிறவுமாகிய பலவாய் வேறுபட்ட பண்டங்களும் கற்றரையிடத்தே குவிக்கப்பட்டு என்பதாம்.

அகலவுரை : மணமுடைய அகக்காழுடைய அகிலையும் சந்தனத்தையும் ஆகுபெயரான் நறுங்காழ் என்றார். கொன்று - வெட்டிக் களைந்து; காடுகொன்று நாடாக்கி (பட்டினப் 283) என்றார் பிறரும். கோடு-மேட்டு நிலம். தோரை - தோரை நெல்; மூங்கில் நெல். ஐவன வெண்ணெல் அரில் கொள்பு என்ற தொடர்க்கு, ஐவனநெல்லும் வெண்ணெல்லும் தம்முட் பிணங்கி என வேறுவேறு நெல்லாகக் கொண்டுரைத்தற்கு ஒற்றில்லாமையால் ஐவனமாகிய வெண்ணெல் எனப் பொருள் கூறப்பட்டது. பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் என்ற மலைபடு கடாத்தின் அடிகட்கு ஐவனநெல்லும் வெண்ணெல்லும் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை வகுத்தனர்; (மலைபடு. 114-5)

அரில் கொள்ளுதல்-ஒன்றோடொன்று பிணங்குதல். கொள்பு : செய்பு என்னும் எச்சம். ஐயவி - வெண் சிறுகடுகு. கறி -மிளகுக் கொடி, பிறவும் ஆகிய பல்வேறு தாரம் என்க. தாரம் - பண்டம். மலைப் பஃறாரமும் கடற் பஃறாரமும் (சிலப்-6 : 153) என்றார் பிறரும். கல்லகம் - கற்றரை.

குறிஞ்சிநிலத்தின்கண் எழும் பல்வேறு ஓசைகள்

291-301 : தினைவிளை .................... ஒருசார்

பொருள் : தினைவிளை சாரல் கிளிகடி பூசல் - இவையிற்றோடே தினையும் விளையப்படுகின்ற மலைப்பக்கத்தில் படியும் கிளியை ஓட்டும் ஆரவாரமும், மணிப்பூ அவரை குரூஉத்தளிர் மேயும் ஆமா கடியும் கானவர் பூசல் - பன்மணி போலும் பூவினையுடைய அவரையினது நிறமிக்க தளிரைத் தின்னும் ஆமாவை ஓட்டுகின்ற கானவருடைய ஆரவாரமும், சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் வீழ்முகக் கேழல் அட்ட பூசல் - மலைமிசை யுறையும் குறவன் கல்லப்பட்ட மூடின வாயையுடைய பொய்க்குழியிலே விழுந்த பக்குவத்தினையுடைய ஆண்பன்றியைக் கொன்றதனாலுண்டான ஆரவாரமும், கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும்பூக் கொய்யும் பூசல்-கரிய தாளினையுடைய வேங்கையிடத்துப் பெரிய கவடுகளில் தோன்றிய கொம்புகளிற் பூத்த நறிய பூவைப் பறிக்கும் மகளிர் புலி புலி என்று கூறும் ஆரவாரமும், இருங்கேழ் ஏறு அடு வயப்புலிப் பூசலொடு அனைத்தும் - கரிய நிறத்தையுடைய பன்றியைக் கொல்லுகின்ற வலியினையுடைய புலியினது ஆரவாரத்தோடே கூடி எல்லா ஆரவாரமும், இலங்கு வெள்ளருவியொடு சிலம்பகத்து இரட்ட - விளங்குகின்ற வெள்ளிய அருவி முழக்கத்தோடே மலையிடத்தே எதிரொலி செய்யாநிற்ப, கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து - கரிய காலையுடைய குறிஞ்சியினது பெயரையுடைய புணர்ச்சியாகிய உரிப்பொருள் அமைந்த பக்கமலைகளாற் சூழப்பட்ட, அருங்கடி மாமலை தழீஇ ஒரு சார் - பெறுதற் கரிய சிறப்பினையுடைய பெரிய மலை தழுவப்பட்டு ஒரு பக்கம்;

கருத்துரை : இவையிற்றோடே தினையும் விளையப்படுகின்ற மலைப் பக்கத்தே படியும் கிளியைக் கடியும் ஓசையும், மணிபோலும் பூக்களையுடைய அவரையினது நிறமிக்க தளிரைத் தின்னும் ஆமாவை ஓட்டும் கானவருடைய ஓசையும், மலைமிசை உறையுங் குறவன் கல்லிய குழியில் வீழ்ந்த ஆண் பன்றியைக் கொன்றதனாலுண்டான ஆரவாரமும், கரிய காலையுடைய வேங்கையின் பூக்களைக் கொய்யும் மகளிர் புலிபுலி என்று கூவும் ஆரவாரமும், கரிய பன்றியைக் கொல்லுகின்ற வலிய புலியின் ஆரவாரத்தோடே கூடி எல்லா ஆரவாரமும் அருவி முழக்கோடே மலையிடத்தே எதிரொலி செய்யாநிற்ப, குறிஞ்சி யென்னும் உரிப்பொருள் அமைந்த பக்கமலைகளையுடைய பெறுதற்கரிய சிறப்பமைந்த பெரிய மலைகள் தழுவப்பட்டு ஒரு பக்கம் என்பதாம்.

அகலவுரை : தினை முதிர்ந்துழி அதன் கதிர்களைக் கவரும் கிளி முதலிய பறவைகளைக் குறமகளிர் தட்டை குளிர் முதலிய கருவிகளைப் புடைத்தும் கவண் எறிந்தும் ஆயோ எனக் கூவியும் ஓட்டுதல் வழக்கம். இதனை,

துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
நற்கோட் சிறுதினைப் படுபுள் ளோப்பி
எற்பட வருதியர் எனநீ விடுத்தலில்
...................................................
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளிகடி மரபின ஊழூழ் வாங்கி (குறிஞ்சி - 37:44)

என்றும்,

குறமகள்.............
தட்டையின் ஐவனச் சிறுகிளி கடியும் நாடன் (ஐங். 285 : 1-3)

என்றும்,

ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளிகடி மகளிர் விளிபடு பூசல் (மலைபடு, 328-329)

என்றும் வருவனவற்றாலும் அறிக. அவரை மலர் மணிபோன்றிருத்தலின் மணிப்பூ என்றார். சிவப்பு நீலம் வெள்ளை முதலிய பன்னிற மலர்களையும் உடைமையின் பன்மணி என உரை கூறப்பட்டது. இலையினும் தளிர் நிறத்தான் அழகுடைத்தாகலின் குரூஉத்தளிர் என்றார். குரு - நிறம். ஆமா - காட்டுப் பசு. சேணோன் - உயரத்திருப்போன் என்னும் பொருட்டாகலின் மலை மிசைவாழும் குறவன் எனப்பட்டது. சேணோன் - என்பதற்கு இழி குலத்தான் என்று பொருள் கூறுவாருமுளர் என நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். பயம்பு - பள்ளம். வேங்கைமரத்தின் அடிப்பகுதி கரிய நிறமுடையதாகலான் கருங்கால் வேங்கை என்றார். வேங்கை மலர் கொய்யும் மகளிர் புலி புலி என்று கூவுதல், அங்ஙனம் கூவினால் அம்மரம் மலரும் என்றும் வளைந்து கொடுக்கும் என்றும் கொண்ட எண்ணத்தாலாம். இதனை,

தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை
மலைமா ரிடூஉம் ஏமப் பூசல் (மலைபடு-305-6)

என்றும்,

மான்ற வேங்கை மலர்பதம் நோக்கி
ஏறா திட்ட ஏமப் பூசல் (குறுந்- 241-4-5)

என்றும்,

ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப்
புலிபுலி என்னும் பூசல் தோன்ற (அகம்-48, 6-7)

என்றும்,

கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிய மகளிர்
இன்னா இசைய பூசல் பயிற்றலின் (அகம்-52: 2-3)

என்றும், பிறர் கூறுமாற்றானும் உணர்க. இருங்கேழ் ஏறு - கருநிறமுடைய ஆண்பன்றி; கரிய ஆனேறு எனினுமாம். சிலம்பு-மலை. இரட்ட - எதிரொலிசெய்ய. கருங்காற் குறிஞ்சி சான்ற என்றதற்குக் கரிய காலையுடைய குறிஞ்சியின் பெயரையுடைய ஒழுக்கம் அமைந்த என்க. அது புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாம். வெற்பு - ஈண்டுப் பக்கமலை என்க. மாமலை-பெரிய மலை. காழ் கொன்று வித்திய தோரையும் ஐயவியும் ஐவன வெண்ணெல்லும் நீடிப் பிறவும் தாரமொடு ஈண்டி விளை சாரலில் கிளிகடி பூசல். ஆமாக் கடியும் பூசல், பூக்கொய்யும் பூசல், கேழலட்ட பூசல், ஏறடு வயப்புலிப் பூசலோடு அனைத்தும் அருவியொடு சிலம்பகத் திரட்ட, குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து மாமலை தழுவி ஒருசார் என்றித் தொடரை இயைத்துக் கொள்க. 302 - இருவெதிர்ப் பைந்தூறு என்பது தொடங்கி, 314 - ஒரு சார் என்னும் துணையும் பாலைநிலத்தின் பண்புரைத்த ஒருதொடர்.

பாலைநிலத்தின் பண்பு

302-314 : இருவெதிர் ..................... ஒருசார்

பொருள் : இரு வெதிர்ப் பைந்தூறு கூர் எரி நைப்ப - பெரிய மூங்கிலினது பசிய புதரினை அதனிடத்தே தோன்றிய மிக்க நெருப்புச் சுட்டழித்தலானே, நிழத்த யானை மேய்புலம் படர-ஓய்ந்த யானைகள் தமக்கு மேயலாம் இடங்களிலே செல்லா நிற்பவும், கழித்த இயவர் இயம் தொட்டன்ன - மகிழ்ந்த இசைக் கருவியாளர் தம் இசைக் கருவிகளை முழக்கினாற் போன்ற, கண் விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து-மூங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதனால் முழக்க முண்டாகும்படி தட்டை அழகு அழிகையினாலே, அருவி ஆன்ற அணியின் மாமலை - அருவிகள் இல்லையான அழகில்லாத பெரிய மலையிடத்தே உள்ள, வை கண்டன்ன புல்முளி அங்காட்டு - வைக்கோலைக் கண்டாலொத்த ஊகம்புல் உலர்ந்த அழகிய காட்டின்கண்; கமம் சூழ் கோடை விடரகம் முகந்து காலுறு கடலின் ஒலிக்கும் - நிறைவினையுடைய சூறாவளியை முழைஞ்சிடங்கள் முகந்து கொள்கையினாலே காற்று மிகுந்த கடல்போல் ஒலிக்கும் ஆரவாரத்தையுடைய, இலைவேய் குரம்பை உழை அதட்பள்ளி உவலைக் கண்ணி வன் சொல் இளைஞர் - குழையாலே வேய்ந்த குடிலிலிருக்கும் மான் தோலாகிய படுக்கையினையும் தழைவிரவின கண்ணியினையும் கடிய சொல்லினையும் உடைய இளையோர், சிலையுடைக் கையர் கவலை காப்ப - வில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே ஆறலை கள்வர் வாராமற் காவா நிற்ப, நிழல் உருவிழந்த வேனில் குன்றத்து - நிழல் தன்வடிவை இழத்தற்குக் காரணமான முதுவேனிற் காலத்தையுடைய மலையிடத்து, பாலை சான்ற சுரம் சேர்ந்தொருசார் - பிரிவாகிய உரிப் பொருளமைந்த அருநிலம் சேரப்பட்டு ஒரு பக்கம்;

கருத்துரை : பெரிய மூங்கில்தூற்றிலே தோன்றிய நெருப்பு அத்தூற்றினைச் சுட்டழித்தலான் ஓய்ந்த யானைகள் தமக்கு மேய்ச்சல் கிடைக்கும் நிலங்கட்குப் போகும்படி வாச்சியங்களை முழக்கினாற் போன்ற ஓசையோடே அம் மூங்கிற் காடுகள் கணுக்கள் விட்டுப்போய் உடைந்து தட்டைகள் அழகழிதலானும், அருவிகள் இல்லாமையானும் அழகிழந்த மலையிடத்தே வைக்கோலைப் போன்று ஊகம் புல் உலர்ந்து தோன்றும் காட்டில் உள்ள முழைஞ்சுகள் நிறைவினையுடைய சூறாவளியை முகந்து கோடலால், காற்று மிக்க கடல் போன்று ஒலிப்பதும், தழையால் வேயப்பட்ட குடிலிலிருக்கும் மான்தோற் படுக்கையினையும் கண்ணியினையும் வன்சொல்லினையும் உடைய இளைஞர்களால் கவலைகளில் ஆறலை கள்வர் வாராமற் காக்கப்படுவதும், நிழல் இன்றி உலர்ந்த முதுவேனிற் பருவத்தை யுடையதும் ஆகிய மலைச்சார்பினுள்ள அருநிலம் சேரப்பட்டு ஒருசார் என்பதாம்.

அகலவுரை : இரு வெதிர் - பெரிய மூங்கில், பைந்தூறு - பசிய புதர். கூர் எரி - மிக்க நெருப்பு. சால வுறுதவ நனிர்கூர் கழிமிகல் என்பது நன்னூற் சூத்திரம் (உரி, 15). நைத்தல்-நண்டுச் சுட்டழித்தல் என்க. பரந்துபடு கூரெரி கானம் நைப்ப (நற். 177.1.2) என்றும், கோடெரி நைப்பவும் (பொருநரா - 234) என்றும் பிறரும் கூறுதல் காண்க. மூங்கிலிற் றீயுண்டாகி அதனையே அழித்து விடும் என்பதனை,

வான்றொடர் மூங்டல் தந்த வயங்குவெந் தீயி தென்னத்
தான்றொடர் குலத்தை யெல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள் (கரன்வதை - 66)

எனக் கம்பநாடர் கூறுமாற்றான் அறிக. முளிகழை இழைந்த காடுபடு தீயின் (248) என்றார் மலைபடுகடாத்தினும். நிழத்தல்-ஓய்தல். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (உரி.32) என்பர் தொல்காப்பியனார். காடு இங்ஙனம் தீயாற் கரிந்தமையால் மேய்ச்சலற்று ஓய்ந்த யானைகள் என்க. மேய் புலம் - மேயல் உள்ள வேறு நிலம். மூங்கிற்காடு தீப்பட்டு வேங்கால் கணுக்கள் விடுதலானும் தட்டைகள் உடைதலானும் பல்வேறு இசைக் கருவிகளை முழக்கினாற் போன்று ஓசையெழுமாகலின் இயவர் இயந்தொட் டன்ன என உவமை எடுத்தோதினார். கலித்த - மகிழ்ந்த. இயவர் - இசைக் கருவியாளர். விடுபு : செய்பெனெச்சம். உடையூஉ: செய்யூ என்னெச்சம் அளபெடுத்தது. அருவி ஆன்ற - அருவி இல்லையாய் அமைந்துவிட்ட என்க. இனி ஆன்ற என்னும் சொல் நிறைந்த என்னும் பொருட்டாகவும் வருதலின், அருவி ஆன்ற அணியில் மாமலை என்ற தொடர்க்கு அருவிகள் நிறைந்த அழகு இல்லையாய்ப் போன பெரிய மலை எனப் பொருள் கூறினும் அமையும். ஆன்ற என்பதற்கு இல்லையான என்றே ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் உரைத்தார். மலைகட்கு அழகாவது மரம் தழைத்தலும் அருவி பாய்தலும் முதலியனவே ஆகலின் அவையின்மையின் அணியில் மாமலை என்றார். விடர் -மலை முழைஞ்சு. கோடை - மேல்காற்று. முதுவேனிற் பருவக்காற்றுமாம்.

என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் (சிலப். 14: 121-24)

என்றார் ஆசிரியர் இளங்கோவடிகளாரும். கமம் -நிறைவு. கமம் நிறைந் தியலும் (உரி-57) என்பது தொல்காப்பியம். சூழ்வளி - சூறாவளி; வை -வைக்கோல்; இஃது உலந்த ஊகம். புல்லிற்கு உவமை. முளிதல்-உலர்தல். உழையதட்டுள்ளி - மான்தோலாகிய படுக்கை.

ஈத்திலை வேய்ந்த வெய்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி (98-9)

என்றார் பெரும்பாணினும். வரியதட் படுத்த சேக்கைத் தெரியிழை (அகம் 58: 4) என்றும், சிரூர் மரையதளிற் றங்கு கங்குற் சிறு துயிலே (திருச்சிற் - 398) என்றும் பிறர் கூறுதல் காண்க. உவலைக் கண்ணி -தளிர் விரவிப் புனைந்த மாலை; இதனைப் படலை மாலை என்றும் கூறுப. கவலை - பல வழிகளும் கூடுமிடம். மரம் முதலியன இன்மையான் நிழலற்றுப்போன என்பார் நிழலுரு விழந்த என்றார். பாலைக்கு நிலமின்மையான் வேனிற்பருவம் நீடி முல்லையும் குறிஞ்சியுமே பாலையாக மாறும் என்பவாகலின் இப் பாலை குறிஞ்சி திரிந்த பாலை என்பார் குன்றத்துப் பாலை என்றார். இதனை,

வேனலம் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவம் கொள்ளும் (சிலப்.11: 62-66)

என இளங்கோவடிகளார் கூறுமாற்றானும் உணர்க. தூறு எரிநைப்ப யானை மேய்புலம் படரத் தட்டை கவின் அழிந்து அணியில் மலையிடத்துக் காட்டில் கோடையை விடர் முகந்து ஒலிக்கும் சும்மையுடைய குன்றத்துப் பாலை என்க. 315-முழங்கு கடல் என்பது தொடங்கி 326-அமைவர என்னுந் துணையும் ஒரு தொடர்.

நெய்தல்நில வளம்

315-326 : முழங்குகடல் .................... அமைவர

பொருள் : முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் - ஒலிக்கும் கடல் தந்த விளங்குகின்ற ஒளியினையுடைய முத்துக்களும், அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை-வாளரம் கீறியறுத்த இடம் நேரிதாகிய விளங்கும் வளையல்களும், பரதர் தந்த பல்வேறு கூலம்- செட்டிகள் கொண்டு வருதலால் மிகப் பலவாய் வேறுபட்ட பண்டங்களும், இருங்கழிச் செறுவில் தீம்புளி வெள்ளுப்பு - கரிய கழியிடத்துப் பாத்தியில் விற்கும் தித்திப்புக் கூட்டிப் பொறித்த புளியோடே ஆண்டு விளையும் வெள்ளிய உப்பும், பரந்து ஓங்கு வரைப்பின் - மணற்குன்று பரந்துயரும் கானலிடத்தே, வன்கைத் திமிலர் கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் - வலிய கையினையுடைய திமிலர் கொழுவிய மீன்களை அறுத்த துடியின் கண் போலுருண்ட துணிகளும் ஏற்றப்பட்ட, விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் - சீரிய மரக்கலங்களும் அவையிற்றைக் கடலிலே இயக்கும் மீகாமர்களும், நனந்தலைத் தேஎத்து நல் கலன் உய்ம்மார் புணர்ந்து உடன்கொணர்ந்த புரவியொடு அனைத்தும் - அகன்ற இடத்தையுடைய யவனம் முதலிய நாட்டினின்றும் இவ்விடத்துண்டாகிய பேரணிகளை ஆண்டுச் செலுத்தற்குப் பலரும் கூடித் தம்மோடு கொண்டு வந்த குதிரைகளோடே முழுவதும், வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப - நாடோறும் முறைமையே முறைமையே மிகுகையினாலே, நெய்தல் சான்ற வளம்பல பயின்று - இரங்கலாகிய உரிப்பொருள் அமைந்த நெய்தனிலத்தே அமைந்த இன்னோரன்ன வளம் பலவும் நெருங்கப்பட்டு, ஆங்கு ஐம்பால் திணையும் கவினி அமைவர - அம் மண்டலத்தின் கண்ணே இங்ஙனம் ஐந்து கூற்றினையுமுடைய நிலங்களும் அழகுபெற்றுப் பொருந்துதல் தோன்ற;

கருத்துரை : முழங்குகின்ற கடலாலே தரப்பட்ட விளங்கும் ஒளியுடைய முத்துக்களும், வாளரம் போழ்ந்த இடம் நேரிய வளையலும், செட்டிமக்கள் கொண்டுவந்த பல்வேறு பண்டங்களும், கழியிடத்துப் பாத்திகளிலே விற்கும் தீம்புளியும், ஆண்டுப்படும் வெள்ளிய உப்பும், மணற்குன்று பரந்தோங்கிய கானலிடத்தே வலிய கையையுடைய திமிலர் கொழுத்த மீன்களை யறுத்த துடிக்கண் போன்ற உணங்கற்றுணிகளும், இவையிற்றை ஏற்றிய மரக்கலங்களும், யவனம் முதலிய நாட்டினின்றும் மரக்கல மீகாமர் பலரும் கூடி இவ்விடத்துண்டாகிய பேரணிகலன்களைப் பண்டமாற்றாகத் தத்தம் நாட்டிற்குக் கொண்டு போம் பொருட்டுச் சேரக் கொண்டு வந்த குதிரைகளோடே இன்னோரன்ன அனைத்தும் நாளுக்கு நாள் மிக்குப் பெருகி வருதலானே நெய்தனிலத்துச் செல்வம் பலவும் செறிந்து இரங்கல் என்னும் உரிப்பொருள் அமைந்த கடல் சார்ந்து ஒருசார் என ஈண்டுக் கூறிய ஐவகை நிலங்களும் அம்மண்டபத்தே அழகு பெற்றுப் பொருந்துதல் அமையா நிற்ப என்பதாம்.

அகலவுரை : 238- குணகடல் என்றது தொடங்கி 325-அமைவர என்னுந் துணையும் தொடர்ந்த அடிகளில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் தமிழ் நிலத்தே அமைந்த ஐந்து நிலப்பகுதிகளின் பண்பும் வளமும் அழகுறக் கூறிக் கற்போருளத்தே ஒரு சிறந்த நாட்டினைத் தோற்றுவித்தார் நல்லிசைப் புலவர். உலகத்தை முதல், கரு, உரி என மூன்றாக வகுப்பார் செந்தமிழ் நல்லிசைப் புலவர். அவையிற்றுள் முதலில் கருவும் கருவின் உரியும் ஒன்றற்கொன்று முறையே சிறந்தன என்றும் ஓதுப. இதனை,

முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை (தொல்.அகத்-3)

எனத் தொல்காப்பியர் ஓதுமாற்றானும் அறிக. நல்லிசைப் புலவர் மாங்குடி மருதனாரும், இம்மூன்றனுள்ளும் சிறந்த உரிப்பொருள் நிகழாவழி ஏனைய இருந்தும் இருந்தில என்னுங் கருத்தானே அவ்வந் நிலங்களைக் கூறி முடிக்குமிடத்தே அவ்வவ்வொழுக்கங்களையும் நன்கு நிகழ்வனவாக ஓதி வருதல் அறிக.

மருதம்

இனி, குணகடல் கொண்டு குடகடல் முற்றி விளிவிடன் அறியாது பெரும் பெயல் சிறத்தலில் தாங்காது புனல் நிவந்து செல்நீத்தம் சாற்ற, கழனியிலும் பொய்கையிலும் மீன் முகந்து வலைஞர் நூழிலாட்டும் ஓதையும் எந்திர முதலியவற்றின் ஓதையும் புணர்ந்து வானத்து இசைப்பப் பாண் சேரியோடு மருதஞ்சான்ற தண்பணை சுற்றி ஒருசார்.

முல்லை

தினை கொய்யக் கறுப்பப் புலரக் கிளரக் கொழிப்ப உகளப் பாறை அணிந்து பயிர்மிசைதொறும் வீ உதிர்ந்து தாஅய் மலரக் கடுப்ப முல்லைசான்ற புறவணிந்து ஒருசார்.

குறிஞ்சி

காழ் கொன்று வித்திய தோரை, ஐயவி, ஐவனநெல், நீடி, இஞ்சியும் பிறவும் ஈண்டி, கிளிகடி பூசல், ஆமா கடியும் பூசல், பூக்கொய்யும் பூசல், புலிப்பூசல், அனைத்தும், அருவியொடு இரட்டக் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து தழீஇ ஒருசார்.

பாலை

தூறு எரி நைப்ப யானை படரக் கவினழிந்து அணியில் மாமலையிடத்தே புல்முளி காட்டில் கோடையை விடர் முகந்து ஒலிப்ப, இளைஞர் கவலை காப்ப உரு இழந்த வேனிற் குன்றத்துப் பாலை என்ற சுரம் சேர்ந்து ஒருசார்.

நெய்தல்

முத்தம்,வளை, கூலம், தீம்புளி, உப்பு, துணியல் இவையிற்றை ஏற்றிய நாவாய் ஓச்சுநர், தேஎத்துக் கலனுய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த குதிரையோடே அனைத்தும் வழிவழிச் சிறப்ப நெய்தல் சான்ற வளம் பல பயின்று (ஒருசார்) இங்ஙனம் ஐம்பாற்றிணையும் கவினி அமைவர, என இவற்றை அணுகக்கொண்டு காண்க. இனித் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் தலைநகரத்தின் சிறப்போதுவான் றொடங்கி, முதற்கண் வையை யாறும் அதன் கரையகத்துள்ள பாண்சேரியும் கூறுகின்றார். உலகிற்கு மழையை முதற்கூறிய புலவர் ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் என்பவாகலின் முதலில் ஆறு கூறுகின்றனர் என்க. 127-முடிவு இமிழும் என்பது முதல் 342- இருக்கையும் என்பது முடிய ஒருதொடர்.

வையைப் பேரியாறும், பாண்சேரியும்

327-337 : முழவு இமிழும் ................. அடைகரைதோறும்

பொருள் : முழவு இமிழும் அகல் ஆங்கண் - முழவு முழங்கா நின்ற அகன்ற ஊரிடத்தே, விழவு நின்ற வியன் மறுகின் - திருநாள் நிலைபெற்ற அகன்ற தெருவினையும், துணங்கை அந்தழூஉவின் - துணங்கைக் கூத்தினையும் அழகினையுடைய குரவைக் கூத்தினையும் உடைய, மணங்கமழ் சேரி - மணம் நாறுகின்ற பரத்தையர் சேரியினையும், இன் கலி யாணர்க் குழூஉப் பல பயின்று - இனிய செருக்கினை யுடைத்தாகிய புதுவருவாயினை யுடைய பல்வேறு குடித்திரளினையும் உடைய, ஆங்கு - அந்நாட்டின் கண்ணும், பாடல் சான்ற நல் நாட்டு நடுவண் - புலவர் பாடுதல் முற்றுப் பெற்ற நல்ல நாட்டிற்கு நடுவணதாய், கலைதாய உயர் சிமையத்து மயில் அகவும் மலி பொங்கர் - முசுக்கலைகள் தாவாநின்ற உயர்ந்த மலையுச்சியிடத்து மயில்கள் ஆரவாரிக்கும் பொழிலிடத்தும், மந்தி ஆட மாவிசும்பு உகந்து முழங்கு கால் பொருத மரம் பயில் காவின் - மந்திகள் ஊசலாடும்படி பெரிய வானிடத்தே உயர்ந்து ஆரவாரிக்கின்ற பெருங்காற்று மோதிய மரம் நெருங்கின காவினிடத்தேயும், இயங்குபுனல் கொழித்த வெண்தலைக் குவவு மணல் - வீழ்ந்து இயங்காநின்ற நீர் கொழித்துக் கொணர்ந் தொதுக்கிய வெள்ளிய தலையினை உடைத்தாகிய திரட்சியை உடைய மணலினாலாகிய, கான்பொழில் தழீஇய அடைகரை தோறும் - காவோடே பொழில் சூழ்ந்த நீரடையும் கரைகள் தோறும்.

கருத்துரை : முழவு முழங்காநின்ற அகன்ற ஊரிடத்தே திருநாள் நிலைபெற்ற அகன்ற தெருவினையும், துணங்கையும் குரவையும் ஆடப்படுகின்ற மணங் கமழும் சேரியினையும், புதுவருவாயினையுடைய பல் வேறுகுடித்திரளையும் உடைய அந்நாட்டின் கண்ணும் புலவராற் பாடப் பெற்ற மிகச் சிறந்த நாட்டின் நடுவண் உள்ளதாய், முசுக்கலை தாவிய உயர்ந்த குடமலை உச்சியின்கண் மயிலகவும் பொழிலிடத்தும், மந்திகள் ஊசலாடும்படி பெருங்காற்று மோதிய மரங்கள் செறிந்த காட்டிடத்தும் வீழ்ந்து இயங்காநின்ற நீர் கொழித்துக் கொணர்ந்து ஒதுக்கிய, வெண்மணல் திரளானியன்றனவும் காவும் பொழிலும் சூழ்ந்தனவுமாகிய நீரடையும் கரைகள்தோறும், என்பதாம். (கரைகள்தோறும் இருந்த பெரும்பாணிருக்கையும் என்று 342 ஆம் அடிக்கட் சென்று முடி வெய்தும்.)

அகலவுரை : நாள்தோறும் ஆடல்பாடல் நிகழ்தலுண்மையின் ஊர்கள் தோறும் முழவின் முழக்கம், அறாஅ தென்பார் முழவு இமிழ் அகலாங்கண் என்றார். இமிழ்தல் : ஒலித்தல். அகலாங்கண் - அகன்ற இடமுடைய ஊர். தெருவுகளில் இடையறாது திருவிழா நிகழும் என்பார் விழவு நின்ற வியல் மறுகு, என்றார். மறுகு-தெரு. துணங்கை ஒருவகைக்கூத்து. தழூஉ - குரவைக்கூத்து. துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப (160) என்று முன்னரும் வந்தமையறிக. இவற்றின் இலக்கணத்தை அவ்வடியின் அகலவுரையிற் காண்க. மணங்கமழ் சேரி என்றது பரத்தையர் சேரியினை. பரத்தையர் எப்பொழுதும் தம்மை மலர் முதலிய மணப் பொருள்களால் ஒப்பனை செய்து கோடலின் ஆண்டு இடையறாது மணங்கமழும் என்க.

இன் கலி யாணர் - இனிய செருக்கிற்குக் காரணமான புதுவருவாய். குழூஉப்பல - கூட்டங் கூட்டமாகவுள்ள பல்வேறு குடிகள். முழவறாத ஊர்மக்களிடத்தே விழவறாத மறுகினையும், கூத்தினையும் சேரியினையும் உடைய குழூஉப் பல பயின்ற அந் நாட்டின்கண்ணும் நல்நாட்டின் நடுவண் உள்ளதாய் என்க. முத்தமிழ் நாட்டினுள் பாண்டி நாடே சங்கம் கண்டு தமிழையும் நல்லிசைப் புலவர்களையும் நன்குவளர்த்த நாடாகலின் செய்ந்நன்றிப் பேணும் நல்லிசைப் புலவரெல்லாம் அந்நாட்டினை நெஞ்சாரவாழ்த்திப் பாடின சிறப்பையுடைய நாடென்பார், பாடல் சான்ற நல்நாடு என்றார். இனித் தமிழ்ச் சங்கத்தே பண்டைப் பழம் பனுவல் அனைத்தும் அரங்கேறலின் பாடல் சான்ற நல்நாடென்றார் எனினுமாம்.

நடுவணதாய் (331) புகழெய்திய மதுரை என 699 ஆம் அடிக்கட் சென்றியையும். இதற்கிடையில் வருகின்றன வெல்லாம் மதுரையின் சிறப்புக்களேயாம். அச் சிறப்புக்கள் ஒவ்வொன்றும் இங்ஙனமே நின்று மதுரையென்னும் ஒரே முடிபைத் தனித்தனி கொண்டுமுடியும் என்க. கலைதாய உயர்சிமையம் (332) என்பது முதல் அடைகரை தோறும் (337) என்னுந் துணையும் அடைகரைக்கு அடைமொழியாக வந்தன. இவையிற்றைப் பல்வேறு வகையாற் பிரித்துக்கூட்டி ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார். அவர் கூறும் பொருள் வருமாறு :

கலைதாய மலிபொங்கர் மந்திஆட மரம்பயில்கா மாவிசும்பு உகந்து முழங்கு கால் பொருத மரம் மயில் அகவும் காவின் உயர் சிமையத்து இயங்கு புனல்கொழித்த வெண்டலைக் குவவு மணல் கான் பொழில் தழீஇய அடைகரை தோறும் என்பது அவர் கொண்டு கூட்டியது. முசுக் கலைகள் தாவின மிக்க கொம்புகளிலே அவற்றின் மந்திகள் விளையாடும்படி மரம்நெருங்கின சோலையிலே பெரிய ஆகாயத்தே செல்ல உயர்கையினாலே முழங்குகின்ற பெருங்காற்றடித்த மரம் மயில் ஆரவாரிக்கும் காவோடே உயர்ந்த மலைஉச்சியினின்றும் வீழ்ந்தோடுகின்ற நீர் கொழித்து ஏறட்ட வெள்ளிய தலையினையுடையதாகிய திரட்சியை உடையமணற்குன்றிடத்து மணத்தையுடைய பொழில் என்பது அவர் கூறிய பொருள். இங்ஙனம் கொண்டு கூட்டாமலே சொற்கிடந்தவாறே பொருள் இனிது முடிதலை உரையிற் காண்க. கான்பொழில், கானும் பொழிலும் என்க. கான் - மரச்சோலை. பொழில்-பூம்பொழில்.

338-342 : தாது சூழ் .................. இருக்கையும்

பொருள் : தாதுசூழ் கோங்கின் பூ மலர் தாஅய்க் கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல் அவிர் அறல் வையை - தாதுக்கள் சூழ்ந்த கோங்கினுடைய பூவும் ஏனை மலர்களும் பரந்து மாலை ஒழுகினாற்போல ஓடும் பெருநீர் நன்றாகி வருதலையுடைய விளங்குகின்ற அறலையுடைய வையையிடத்து, துறை துறை தோறும் பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி - துறைகள் தோறும் துறைகள் தோறும் பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழப்பட்டு, அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும் - நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரிய பாண்சாதியின் குடியிருப்பினையும்;

கருத்துரை : பூந்தாதுக்கள் சூழ்ந்த கோங்கம் பூவும், பிற பூக்களும் பரந்து மாலை ஒழுகினாற் போன்று ஓடும் பெரு நீர் நன்றாகி வருதலையுடைய விளங்கும் அறலையுடைய வையைப் பேரியாற்றின் துறைகள் தோறும் துறைகள் தோறும், பலவாற் வேறுபட்ட பூக்களையுடைய பூந்தோட்டங்கள் சூழப்பட்டு நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரும்பாணர்குடியிருப்பினையும் என்பதாம்.

அகலவுரை : தாது - பூந்துகள். கோங்கு - ஒரு மரம். பூமலர் : உம்மைத் தொகை. தாஅய்-பரந்து. இருமருங்கினுமுள்ள பூந்தோட்டங்களின் மலர்கள் யாற்றின் நீர்மேற் பரவி நீரை மறைத்துக்கொண்டு நீரோடு இயங்குதல் ஒரு பெரிய மலர்மாலை இயங்குதல் போன்று தோன்றும் என்க.

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக வோங்கலும்
பாடலந் தன்னொடு பன்மலர் விரிந்து
குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்
விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரின் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
....................................................
அருவி முல்லை அணிநகை காட்டி
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா வவிரறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டு முயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை யென்ற பொய்யாக் குலக்கொடி
...............................................
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென (சிலப். 13: 151-74)

என்னும் இளங்கோவடிகளார் கண்ட வையை யாறு மாங்குடி மருதனார் கண்ட வையைப் பேரியாற்றின் விரிந்த விளக்கமாக அமைந்திருத்தல் ஒப்பு நோக்கி மகிழற்பாலது. ஆசிரியர் இளங்கோவடிகளார் வையைப் பேரியாற்றினைப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி என்று போற்றியபொழுது அவர் திருஉள்ளத்தே ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதனா ராகிய நல்லிசைப் புலவரும் அவர்பாடிய இப்பகுதியும் நின்றிருத்தல் வேண்டும். அவிர் அறல் - விளங்கும் கருமணல். துறைதுறைதோறும் என்ற அடுக்கு எல்லாத் துறைகளிடத்தும் என்பது குறித்து நின்றது. அழுந்து படுதல் - தலைமுறை தலைமுறையாக இருந்து வாழ்தல், பெரும்பாண்-பெரும்பாணர்; குழலர் பாணர் முதலிய பெரிய இசைகாரர் என்பர் அடியார்க்கு நல்லார்; (சிலப். 5: 27-உரை) இருக்கை குடியிருக்குமிடம். இனி, (343) நிலனும் என்பது தொடங்கி (356) வழக்குடை வாயில் என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண், மதுரை மாநகரத்து அகழி முதலிய அரண்களும் தலைவாயிலும் கூறப்படும்.

மணிநீர்க் கிடங்கு

343-351 : நிலனும் ...................... கிடங்கின்

பொருள் : நிலனும் வளனும் கண்டு அமைகல்லா - நிலத்தையும் அதன்கண் உள்ள பயிர்களையும் கண்ட காட்சி முடிவு போகாத, விலங்கு பெருந் திருவின் மான விறல்வேள் அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் - விளங்கும் பெரிய செல்வத்தினையுடைய மான விறல்வேள் என்னும் குறுநில மன்னனுடைய அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும், கொழும்பல் பதிய குடி இழந்தனரும் - செல்வத்தினையுடைய பல ஊர்களிடத்தனவாகிய குடிகளை இழந்தவரும், தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த - பழையதாய செற்றங் கொண்டு தங்கும் வலி தம்மைக் கொண்டு வருகையினாலே எதிராய் வந்த, அண்ணல் யானை அடுபோர் வேந்தர் - தலைமை யினையுடைய யானையினையும் பகைவரைக் கொல்லும் போர்த்தொழிலையுமுடைய வேந்தரை, இன்னிசை முரசம் இடைப்புலத்து ஒழிய - இனிய ஓசையினையுடைய முரசம் உழிஞைப் போர்க்கு இடையே கிடக்கும்படி, பன் மாறு ஓட்டி - அவர் உளத்தே பலவாய்க் கிடந்த மாறுபாட்டினை அகற்றி, பெயர் புறம் பெற்று மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின் - அவரை ஓடச் செய்கையாலே அவருடைய முதுகைக் கண்டு மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த நீலமணி போலும் நீரையுடைய கிடங்கினையும்,

கருத்துரை : நிலவளன் பயிர்வளன் முதலியவற்றைக் கண்டகாட்சி முடிவு போகாத விளங்கும் பெரிய செல்வத்தினையுடைய மான விறல் வேள் என்னும் குறுநில மன்னனுடைய அழும்பில் என்னும் ஊரை ஒத்த வளமுடைய நாட்டினை இழந்தவரும், செல்வமிக்கஊர்களிடத்தனவாகிய குடிகளை இழந்தவருமாய்ப் பழையதாய செற்றங்கொண்டு தங்கும் வலியினது தூண்டுதலானே எதிராய் வந்த யானைகளையும், போர் வன்மையையுமுடைய வேந்தரை அவர் கொணர்ந்தபோர் முரசம் இடைநிலத்தே கிடப்ப, அவருடைய இகல் அகற்றி அவரை ஓடச்செய்தலான் அவர்தம் புறக்கொடை கண்டதும், மிகமிக ஆழ்ந்ததும் நீலமணி போலும் நிறமுடைய நீரான் நிறைந்ததுமான அகழியையும் என்பதாம்.

அகலவுரை : நிலம் -மருத முதலியன. வளன் என்றது அவையிற்றில் உண்டாகும் பயிர்களை. அவை மிகுதியாகச் செழித்தோங்கிக் கிடத்தலான்காட்சி முடிவு போகாதாயிற்று. கண்டுதண்டாக் கட்கின்பத்து உண்டு தண்டா மிகுவளத்தான் (16-17) என இவ்வாசிரியர் முன்னரும் ஓதியதுணர்க. அழும்பில் என்பது வேளிருடைய ஊர் என்று தெரிகிறது. மான விறல் வேள் என்பான் அக்காலத்தே (புலவர் காலத்தே) உடனிருந்தான் போலும். அவன் ஊராகிய அழும்பில் பெரிதும் வளம்பொருந்திய தென்பதை, பெரும்பூட் சென்னி அழும்பில் அன்ன அறாஅயாணர் என்னும் அகப்பாட்டானும் அறியலாம். புதுக்கோட்டைப் பகுதியில் இப்பொழுது அம்புக்கோயில் என வழங்கப்படும் ஊரே அழும்பில் என்னும் ஊர் என்ப. ஆங்குள்ள கல்வெட்டு இராஜராஜ வளநாட்டுப் பன்றியூர் நாட்டு அழும்பில் என அவ்வூரைக் குறிப்பிடுகின்றது என்ப. இவ்வூர்.

ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாளிரை பெறூஉம்
பெறாஅ வுறையரா வராலின் மயங்கி
மாறுகொண் முதலையொ டூழ்மாறு பெயரும்
அழும்பில். (புறம் - 283)

எனப் புறப்பாட்டினும் மிகுவளம்பொருந்தியதாகக் கூறப்படுதல் அறிக. சிலப்பதிகாரத்தும், அழும்பில் வேள் அழும்பில் வேளொடு (சிலப். 25-177 : 28: 205) எனக் கூறப்பட்டுள்ளமை காண்க. ஒரு நாட்டினை முழுதுங் கைக்கொள்ளுதலும், ஒரு நாட்டின் ஒரு சில பகுதிகளையே கைக்கொள்ளுதலும் உண்மையின் நாடிழந்தனரும்; குடியிழந்தனரும் என வேறு வேறுரைத்தார். கொழும் பல்பதி - செல்வத்தாற் கொழுத்த பலவாகிய ஊர்கள். தொன்று-பழையது. கறுத்த - சினந்த. கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (உரி-74) என்பர் தொல்காப்பியர். கறுத்து உறைதல் - பழம்பகை கொண்டு உறைதல் நெடுஞ்செழியன் கைப்பற்றிக் கொண்டமையால் நாடுகுடி முதலியவற்றை இழந்து செற்றங்கொண்டிருந்த அரசர் புதிய வலியை எய்தி அது செலுத்தலாலே போர் செய்யவந்து அகழிக்கே ஆற்றாது தோற்றோடினர் என்பதாம். அகழியைக் கடக்க வலியிலராய் ஆண்டுள்ள காவற்படைக்கு ஆற்றாதுமுரசு முதலியவற்றைப் போகட்டு ஓடினர் என்க. இவ்வெற்றியைக் கிடங்கின் மேலிட்டுரைத்தவாறு. இகல் கொண்டுவந்தவர் அதனை விட்டு அச்சங்கொண்டு ஓடுதலின் பல்மாறு ஓட்டி என்றார். இன்னிசை முரசம் இடைப்புலத்து ஒழிய என்றது அவர் நிலைகுலைந்து விரைந்தோடினர் என்பதனை உணர்த்தும், இங்ஙனம் முரசெறிந்து ஓடுதலை.

முரசம் பொறுக்குநர் இன்மையின்
இருந்து விளிந்தனவே (புறம்-63:7-8)

எனவும்,

இரங்கிசை முரச மொழியப் பரந்தவர்
ஓடுபுறங் கண்ட ஞான்றே (அகம் - 116 : 17-8)

எனவும் பிறர் கூறுதலானும் அறிக. இதற்கு நச்சினார்க்கினியர் உழிஞைப் போர் செய்ய வந்த அரசர் குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எய்தாது இடையே மீளும்படி காத்த கிடங்கு எனக் குறிப்புரை வரைந்துள்ளார். மண் உற ஆழ்ந்த என்றது மிகவும் ஆழ்ந்த என்றவாறு. ஆழ்ந்த நீர்நிலை தெளிந்து நீல நிறமாகத் தோன்றுதல் இயல்பாகலின் மணிநீர்க் கிடங்கு என்றார். மணிநீர் நிறைந்தன்று, (பரி. 12:33) என்றும், மணிமரு டீநீர், (அகம். 368-10) என்றும், மணிதெளித் தன்ன அணிநிறத் தெண்ணீர் (பெருங்-3-4 : 39) என்றும் பிறரும் ஓதுதல் காண்க.

வையை அன்ன வழக்குடை வாயில்

352-356 : விண்ணுற் .................. வாயில்

பொருள் : விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை - தேவருலகிலே செல்லும்படி உயர்ந்த பல கற்படைகளையுடைய மதிலினையும், தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை-பழையதாகிய வலி நிலைபெற்ற தெய்வத்தை உடைத்தாகிய நெடிய நிலையினையும், நெய்படக் கரிந்த திண் போர்க் கதவின் - நெய் பலகாலும் இடுதலாற் கருகின திண்ணியவாய்ப்பொருத்தப்பட்ட கதவினையும், மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு - முகில் உலாவும் மலைபோல ஓங்கின மாடத்தோடே, வையை அன்ன வழக்குடை வாயில்-வையை யாறு இடைவிடாது ஓடுமாறு போன்று மாந்தரும் மாவும் இடையறாமல் வழங்குதலையுடைய வாயில்;

கருத்துரை : வான் உற ஓங்கிய பல கற்படைகளையுடைய மதிலையும், பழையதாகிய வலி நிலைபெற்ற தெய்வத்தையுடைய நெடிய நிலையினையும்; நெய்யொழுகிக் கருதிய திண்ணிய கதவினையும், முகில் உலாவும் மலை போன்றுயர்ந்த மாடங்களையும் உடைய, வையை யாறு போன்று இடையறாது மக்களும் மாவும் வழங்கா நின்ற வாயிலையும் உடைத்தாய், என்பதாம்.

அகலவுரை : விண்ணுற ஓங்கிய என்றதற்கு வானிடத்தே மிக உயர்ந்த எனத் தமிழ் நெறிக்கேற்ப இயற்கைநவிற்சியாகக் கொள்ளினும் அமையும். மதில் பற்பல படைகளான் உயர்த்தப்படுதலின் பல்படை என்றார். உயர்வுக்கேற்ற அகலமும் உடைத்தாதல் கூறாமலே அமையும் என்க. பலகற்படை எனவே திண்மையுங் கொள்க; என்னை?

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். (குறள்-743)

என்றோதுபவாகலான். தொல்வலி நிலைஇய என்றதொடரை அணங்கிற் கேற்றி வலி மிக்க மறத்தெய்வமாகிய கொற்றவையின் உருச் செதுக்கப்பட்ட நெடுநிலை எனினுமாம். அக்கொற்றவைப் படிமத்திற்கு நெய்யணிதலானும் விளக்கிடுதலானும் நெய்யொழுகிக் கரிந்த கதவென்க. திண்போர்க் கதவு என்றது திண்ணிதாக வாய் பொருத்தப்பட்ட கதவு என்றவாறு. போர் அமை புணர்ப்பின் (84) என்றார், நெடுநல்வாடையினும். போர்க்கதவு என்றதற்குச் செருவினையுடைய கதவு, என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இடையறவின்றி மாவும் மாக்களும் வழங்கும் வாயிலுக்கு இடையறவின்றி நீர்வழங்கும் வையைப்பேரியாறு உவமை. இனி, அந்நகரத்தின் தெருக்களில் உண்டாகும் பற்பல நிகழ்ச்சிகளும் கூறுகின்றார்.

நாளங்காடியும், அல்லங்காடியும், பன்மொழி பேசும் மாந்தர்தம் பேரொலியும்

357-365 : வகைபெற எழுந்து ................. நியமத்து

பொருள் : வகைபெற எழுந்து வானம் மூழ்கி சில் காற்று இசைக்கும் பல் புழை நல்இல்-கூறுபாடாகிய பெயர்களைத் தாம் பெறும்படி உயர்ந்து வானத்தே சென்று தென்றற் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நன்றாகிய இல்லங்களையும், யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவின்-பேரியாறுகள் கிடந்தாற் போன்ற அகன்ற நெடிய தெருக்களிலே, பல்வேறு குழாத்து இசை எழுந்து ஒலிப்ப - நாளங்காடியிற் பண்டங்களைக் கொள்ளும் பல சாதியாகிய மொழி வேறுபாட்டையுடைய மாக்களின் திரளிடத்தே ஓசை மிக்கு முழங்காநிற்ப, மா கால் எடுத்த முந்நீர் போல முழங்கு இசை நன்பணை அறைவனர் நுவல - பெருமையை உடைய காற்றெடுத்த கடல் ஒலிபோல முழங்கும் ஓசையையுடைய நன்றாகிய முரசத்தைச் சாற்றினராய் விழவினை நாட்டிலுள்ளார்க்குக் கூறாநிற்ப, கயம் குடைந்தன்ன இயந்தொட்டு இமிழ்இசை மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை - குளத்தைக் கையாற் குடைந்து விளையாடும் தன்மையவாக இசைக் கருவிகளை முழக்குதலான் எழுந்த இசையினைக் கேட்டு மகிழ்ந்தவர்கள் ஆடும் செருக்கினைக் கொண்ட ஆரவாரத்தினையும் உடைய, ஓவுக் கண்டன்ன இருபெரு நியமத்து - ஓவியத்தைக் கண்டால் ஒத்த காட்சியினையுடைய இரண்டாகிய பெரிய அங்காடித் தெருவின்கண்;

கருத்துரை : தம்முட் பல கூறுபாடுடைய பெயரினவாய் வானுறவோங்கிய தென்றற்காற் றொலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும், யாறு கிடந்தாற் போன்ற தெருக்களிலே பண்டங் கொள்ள வந்த பல்வேறு மொழிகளையும் பேசும் மாந்தர் கூட்டத்தின் ஆரவாரத்தினையும், காற்றெடுத்த கடல் போன்ற முழங்கும் முரசங்களை முழக்கி மக்கட்குத் திருவிழாவை அறிவிக்கும் ஒலியினையும், குளத்தை விளையாட்டின் பொருட்டுக் கையால் குடைவது போன்று இசைக்கருவிகள் பலவும் முழங்கக் கேட்டுக் களித்து ஆடுவாருடைய ஆரவாரத்தினையும் உடைய இருவேறு வகைப்பட்ட அங்காடித் தெருவின்கண் என்பதாம்.

அகலவுரை : இல்லங்கள் தம்முள் மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை முதலிய பல்வேறு பெயர்களைப் பெறுதலின் வகை பெற என்றார். வானம் மூழ்கி என்றது மிக உயர்ந்து என்றவாறு. இதற்குத் தேவருலகிலே சென்று என மிகையுயர்வு நவிற்சியாகப் பொருளுரைத்தார் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

பல்புழை-பலவாகிய காலதர்; சாளரம், பலகணி எனவும் வழங்குப. நல் இல் என்றது ஆண்டு வாழ்வார்க்கு இன்பமே தரும் தன்மையுடைய இல் என்றவாறு.

யாறு கிடந்தன்ன தெரு என்றார் இருமருங்கினும் உள்ள இல்லங்கள் கரைகள் போன்றும் இடையிற் கிடக்கும் தெரு யாறு போன்றும் தோன்றுதலான். யாறெனக் கிடந்த தெரு (மலைபடு - 481) என்றும், யாறுகண் டன்ன அகன்கனை வீதியுள் (பெருங் 2.7:7) என்றும். நீத்தியாற் றன்ன நெடுங்கண் வீதி (பெருங் 5. 7. 23) என்று பிறரும் கூறுதல் காண்க. யவனம் முதலிய பலதேயத்து வணிக மாக்களும் ஒருங்குதிரண்டு பல்வேறு மொழிகளினும் பேசுதலான் பல்வேறு குழாத்திசை எழுந்தொலிப்ப என்றார். மா கால் - பெருங்காற்று நன்பணை - நல்ல முரசம். அறைவனர் - முழக்கினராய். நுவல - கூற. குளத்தின்கண் நீரைக் கையாற் குடையின் துடும் துடும் என ஒலிக்குமன்றே, அங்ஙனம் ஒலிக்கும் இயம் என்க. குடைதொறும் தெரியிமிழ் கொண்டநும் இயம்போல் இன்னிசை (295-6) என்றார் மலைபடுகடாத்தினும். கலி -செருக்கு. சும்மை - ஆரவாரம். ஓவு - ஓவியம். ஓவியத்தின் வரைந்து வைத்தாற் போன்று பல்வேறு பண்டங்களையும் உடையதாய் விளங்கும் நியமம் என்க. நியமம் - அங்காடி. அது நாளங்காடி அல்லங்காடி என இருவகைப்படுதலின் இருபெரு நியமம் என்றார்.

அங்காடித் தெருவில் ஆடும் கொடிகள்

366-374 : சாறயர்ந்து ................. அருவியி னுடங்க

பொருள் : சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி - திருக்கோயில்களுக்கு விழா நிகழ்த்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும், வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள நாள்தோ றெடுத்த நலம் பெறு புனைகொடி - வேறுபட்ட பல பெயர்களையுடையவாகிய அழித்தற்கரிய அரண்களைத் தண்டத் தலைவர் அரசனேவலாற் சென்று கைக்கொள்ளக் கைக்கொள்ள அவர்கள் அவ் வெற்றி குறித்து நாடோறும் உயர்த்திய நன்மையுடைய வெற்றிக் கொடியும், நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானை யொடு புலவுப்படக் கொன்று மிடைதோல் ஓட்டிப் புகழ் செய்து எடுத்த விறல்சால் நல்கொடி - கடல் ஒலித்தாற் போன்ற நிலை பெறுதலையுடைய வேற்படையோடே சென்று பகைவரைப் பலானாற்றமுண்டாகக் கொன்று பின்னர் அணியாய் நின்ற யானைத் திரளையும் கெடுத்துத் தமக்குப் புகழை யுண்டாக்கி எடுத்த நன்றாகிய வெற்றிக் கொடியும், கள்ளின் களி நவில் கொடிகள் - கள்ளினது களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடியும், நன்பல பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇ - இங்ஙனம் நன்றாகிய பலவற்றினாலே பலவாய் வேறுபட்ட திரட்சியையுடைய கொடிகளோடே பெருங்கொடிகளும் நிலைபெற்று, பெருவரை மருங்கின் அருவியி னுடங்க - பெரிய மலையிடத்து அருவி அசையுமாறு போல அசையாநிற்ப;

கருத்துரை : கோயில்களுக்கு விழா நிகழ்த்தி உயர்த்திய அழகிய கொடிகளும், தண்டத் தலைவர் அரசன் ஏவலாற் சென்று பல பெயர்களையுடைய அழித்தற்கரிய அரண்களைக் கைக்கொள்ளுந்தோறும் அவ்வெற்றி குறித்துயர்த்திய நல்ல வெற்றிக் கொடிகளும், கடல் ஒலித்தாற் போன்று வேற்படையோடே சென்று பகைவரைப் புலானாறக் கொன்று குவித்து அவர் யானைப்படையின் அணியையும் குலைத்தமைக்கு அறிகுறியாக உயர்த்திய வெற்றிக் கொடியும், கள் விற்கும் கடையைக் குறிக்கும் கொடிகளும் மேலும் நல்லன பலவற்றையும் தனித்தனி குறித்தலாற் பலவாய் வேறுபட்ட கொடிக் குழாங்களும் இவையிற்றோடு மீனக் கொடியும் நிலைபெற்றுப் பெரிய மலையிடத்தே அருவிகள் அசையுமாறு அசையா நிற்ப என்பதாம்.

அகலவுரை : சாறு அயர்தல்-விழா நிகழ்த்துதல். திருக்கோயிலுக்கு விழாத் தொடங்குங்கால் கொடியேற்றும் வழக்கம் இன்றும் உளது. சமயங்கடோறும் கொடிகள் வேறுபட்டிருத்தலான் பலகொடி என்றார். இனி ஒரே சமயத்துள்ளும் ஏற்றைக் கொடி சேவற்கொடி எனக் கொடிகள் வேறுபடுதலும் காண்க. உருவப் பல்கொடி என்றதற்கு ஏறு சேவல் உவணம் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்ட பல கொடிகள் என்றலுமாம்.

நாடுகடோறும் வேறு வேறு பெயருடன் விளங்கும் அரண் என்பார் வேறு பல்பெயர ஆர் எயில் என்றார். எனவே செழியனின் தண்டத் தலைவர் அவனதேவலால் நாள்தோறும் பகைவர் நாட்டிற் சென்று அவர் அரண்களை முற்றிக் கைக்கொள்வர் என்பதும், ஒரு அரணைக் கைப்பற்றியவுடன் அவ் வெற்றி குறித்து மதுரையில் ஒரு கொடி உயர்த்துதல் வழக்கம் என்பதும் உணர்க. கொளக் கொள என்னும் அடுக்கு அப் படைத் தலைவர் ஓரரணைக் கைப்பற்றிய பின்னர் மற்றோர் அரண்முற்றுதல்லால் மடிந்திரார் என்பதனைக் குறிப்பான் உணர்த்தும். இங்ஙனம் வலிந்து போர்மேற் சென்று அரண் முற்றுதலும் கோடலும், உழிஞைத் திணை என்ப. இதனை,

முழுமுத லரணம் முற்றலுங் கோடலும்
அனைநெறி மரபிற் றாகு மென்ப (தொல்-புற. 10)

என்னும் தொல்காப்பியத்தானும் உணர்க. இனி, நீர் ஒலித்தன்ன ............... நன்கொடி என்றது தும்பைப் போர் கூறியவாறு. இது உழிஞைப் போர்போல வலிந்த போர்மேற் செல்லாது, வலியுடைமை காரணமாகத் தம்மேல் போர்க்கு வந்த அரசனை எதிர்த்து வெல்லுதலாம். இதனை,

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப (தொல்-புற-15.)

என்பதனான் அறிக.

நீர்-கடல். நிலவு வேற்றானை என்றது, போரின்கண் ஊறஞ்சி ஓடாமல் நிலைத்து நின்று போர்செய்யும் வேற்படைஞர் என்றவாறு. மிடைதோல்-அணிவகுக்கப்பட்ட யானை. வெற்றிக் கொடியாதலின் புகழ்செய்து எடுத்த கொடி என்றார். இங்ஙனம் போர்களில் வென்ற பொழுதெல்லாம் கொடியுயர்த்துதலைச் சிலப்பதிகாரம் அடைக்கலக் காதையில் நாட்கொடி நுடங்கும், (217) என்ற தொடர்க்கு அடியார்க்கு நல்லார் நாடோறும் வென்று வென்றெடுத்த கொடி தானுடங்கும் என உரை கூறுமாற்றானும் செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி (முருகு-67) மலைநீர் வென்றெழு கொடியிற் றோன்றும் (மலைபடு-589) எனப் பிறரும் கூறுதலானும் உணர்க. கள் விற்கும் கடைக்கு அறிகுறியாகக் கட்டிய கொடி தன்னைக் கண்ட களிமாக்கட்குக் கள்ளின் களிப்பை நினைவூட்டித் தன்பால் ஈர்த்தலின், கள்ளின் நளிநவில் கொடி என்றார். களி நவிலலாவது, கள்ளின் களிப்புத்தன்மையின் சிறப்பை எடுத்தோதுதல். நன்பல என்றது, இக் கள்போன்ற தீமைதரும் பொருள்களைக் குறியாமல் கல்வி,கொடை,தவம் முதலிய நன்மைகள் பலவற்றையும் குறிக்கும் என்றவாறு. இங்ஙனம் கல்வி முதலியவற்றைக் குறிக்கும் கொடிகள் உண்டென்பதனை,

பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும் (பட்டின-169-71)

என்னும் பட்டினப் பாலையானும் உணர்க. பதாகை - பெருங்கொடி. அஃதாவது பாண்டிய மன்னர்க்குரித்தாகிய மீன்கொடி என்க. இனி, 375-பனைமீன் என்பது தொடங்கி, 406 - கொழுநிழல் இருத்தர, என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண் தெருக்களிலே யானை முதலிய நால்வகைப் படைகள் வழங்குமாறும், அவையிற்றின் ஆரவாரமும், ஆண்டுள்ள மாந்தர் அவையிற்றிற்கு அஞ்சுதலும் பல்வேறு பண்டம் பகர்வோர் செய்தியும் பிறவும் கூறப்படும்.

வெறிகொண்ட களிற்றியானை

375-383 : பனைமீன் ................. யானையும்

பொருள் : பனை மீன் வழங்கும் வளைமேய் பரப்பின் - பனை என்னும் சாதிமீன் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தே, வீங்குபிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ கூம்பு முதல் முருங்க ஏற்றி - இறுகும் பிணிப்பினையுடைய வலியினையுடைய பாய் கட்டின கயிற்றை அறுத்துப் பாயையும் பீறிப் பாய் மரம் அடியிலே முறியும்படி மோதி, காய்ந்துடன் கடுங்காற்று எடுப்ப - வெகுண்டு ஒருசேரக் கடிய காற்று எடுக்கையினாலே, கல் பொருது உரைஇ நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல - நங்குரக்கல் கயிற்றுடனே நின்று பொருது உலாவி நெடிய சுழியிலே அகப்பட்டுச் சுழலாநின்ற மரக்கலத்தை ஒக்க, இருதலைப் பணிலம் ஆர்ப்பச் சினஞ் சிறந்து - முன்னும் பின்னும் சங்குகள் ஒலியா நிற்ப வெகுளி மிக்கு, கோலோர்க் கொன்று மேலோர் வீசி - பரிக்கோற்காரரைக் கொன்று பாகரை வீசிப் போகட்டு, மென் பிணி வன்றொடர் பேணாது காழ் சாய்த்து - மெல்லிய பிணிப்பினையுடைய வலிய நீர்வாரி என்னும் காலிற் கட்டுஞ் சங்கிலியை நமக்குக் காவல் என்று பேணாதே அது கட்டின தறியை முறித்து, கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் - கம்பத்தைக் கைவிட்டுச் சுழலும் யானையும்;

கருத்துரை : பனைமீன் வழங்குவதும் சங்குகள் மேய்வதுமாகிய பரப்பையுடைய கடலிடத்தே இறுகும் பிணிப்பினையுடைய வலிய பாய்கட்டின கயிற்றை அறுத்துப் பாயையும் மீறிப் பாய்மரத்தை அடியில் முறிய மோதி வெகுண்டு பெருங்காற்று எடுத்தலாலே நங்குரக் கல் கயிற்றுடனே நின்று உலாவி நெடிய சுழியிலே பட்ட மரக்கலத்தைப் போன்று, முன்னும் பின்னும் சங்குகள் முழங்கச் சினம் மிகுந்து, பரிக்கோற்காரரைக் கொன்று, பாகரை வீசிப் போகட்டுக் காற் சங்கிலியைப் பேணாதே தறியை முறித்துக் கம்பத்தைக் கைவிட்டுச் சுழலும் கடாஅத்தையுடைய யானையும் என்பதாம்.

அகலவுரை : பனைமீன் - கடலில் வாழும் பெரிய மீன் வகையில் ஒன்று; இதனை யானைமீன் எனப் பிங்கலங் கூறும் (2620). வளை - சங்கு. பரப்பு - கடலுக்கு ஆகுபெயர். வீங்கு பிணி-இறுகிய பிணிப்பு. நோன்கயிறு - வலிய கயிறு. அரீஇ - அரிந்து; அறுத்து. என்னும் பொருட்டு. இதை-பாய். புடையூ - செய்யூஎன் னெச்சம். கூம்பு - பாய்மரம். முதல்-அடிப்பகுதி. முருங்குதல்-முறிதல். எற்றி மோதி. கடுங்காற்று- சூறைப் பெருங்காற்று. கல்-நங்குரக் கல். நெடுஞ்சுழி-சூறைக்காற்றால் கடலிடத்துஉண்டான நீர்ச்சுழி. யானை வெறிகொண்டு திரியுங்கால் அதன் வருகையை அறிவிக்கும்பொருட்டு முன்னும் பின்னும் சங்கு முழங்குதல் வழக்கம். யானை பின்புறம் திரும்புங்கால் அறிவித்தற்குப் பின்னும் சங்கு வேண்டிற்று. கோலோர் - யானைகளை அடக்குதல் வல்ல பரிக்கோற்காரர்; குத்துகோற்காரர் என்றும் கூறுப. குத்துக்கோல் வரைத்தன்றி யானை களி வரைத்தாயினாற் போல எனப் பேராசிரியரும் கூறுதல் காண்க.

மேலோர்-பாகர். வீசி என்றது கையாற் றூரத்தே விழ எறிந்து என்றபடி. வன்றொடர் - வலிய யானை கட்டும் சங்கிலி; இதனை நீர் வாரி என்பர் நச்சினார்க்கினியர். காழ்-கழி. ஈண்டு யானைகட்டுந்தறி என்க.

உழிதருதல்-சுழலுதல். மரக்கலத்தை இவ்வாறு செய்யும் பெருங்காற்று யானையை இவ்வாறு சுழல விடுத்த கடாத்திற்கு உவமை என்க; இனி,

நீயான் நடுங்க நடுவுநின் றோங்கிய
கூம்புமுதன் முறிய வீங்குபிணி யவிழ்ந்து
கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்
கிதைசிதைந் தார்ப்பத் திரைபொரு முந்நீர்
இயங்குதிசை யறியா தியாங்கணும் ஓடி
மயங்குகால் எடுத்த வங்கம் போலக்
காழோர் கையற மேலோ ரின்றிப்
பாகின் பிளவையிற் பணைமுகந் துடைத்துக்
கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்கலக் குறுத்தாங்
கொருபாற் படாது ஒருவழித் தங்காது
பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக்
கால வேகம் களிமயக் குற்றென (மணி-4: 30-44)

என்று தண்டமிழ் ஆசான் சாத்தன் உரைத்த மணிமேகலைப் பகுதியோடு நல்லிசைப் புலவர் மாங்குடி மருதனார் ஈண்டுக் கூறிய கடாஅயானையின் களிமயக்கினையும் ஒப்பிட்டுக் கண்டு மகிழ்க.

தேரும், குதிரையும், காலாண் மறவரும்.

384-394 : அங்கண்மால் .............. பெயர்தலின்

பொருள் : அங்கண் மால் விசும்பு புதைய வளிபோழ்ந்து - அழகிய ஞாயிறாகிய கண்ணையுடைய பெரிய வானம் மறையும்படி காற்றைப் பிளந்து, ஒண் கதிர் ஞாயிறு ஊறு அளவாத் திரிதரும் செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன - ஒள்ளிய கதிரையுடைய அஞ்ஞாயிற்றைத் தாம் சேர்தலை நெஞ்சாலே கருதிக்கொண்டு பறக்கும் சிவந்த காலையுடைய அன்னத்தினது சேவலை ஒத்த, குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து - வெண்ணிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே செலவு மிக்கு, கால் எனக் கடுக்கும் கவின்பெறு தேரும் - காற்றென விரைந்தோடும் அழகினை உடைய தேரும், கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின் - கையிலே மத்திகையைக் கொண்ட வலவன் ஐந்துவகைச் செலவினையும் பதினெண்வகைச் சாரியையும் பயிற்றுதலாலே, அடிபடு மண்டிலத்து ஆதி போகிய - குரங்கள் அழுந்தின வட்டமான இடத்தினும் ஆதி யென்னும் செலவில் ஓடிய, கொடிபடு சுவல இடுமயிர்ப் புரவியும்-ஒழுங்குபட்ட பிடரியினையுடையனவாக இடுமயிரையும் உடைய குதிரைகளும், வேழத் தன்ன வெருவரு செலவில் கள் ஆர் களமர் இருஞ் செரு மயக்கமும்- யானை போன்ற அச்சம் வருதற்குக் காரணமான போக்கினை யுடைய கள்ளை உண்ணும் மறவர் தம்மிற் பெரிய போரைச் செய்யும் கலக்கமும், அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் - தடுத்தற்கரியனவுமாய் அவை தாமும் சிறிதின்றி மிகவுள்ளனவுமாய்ப் பலகாலும் வந்து வந்து மீளுகையினாலே;

கருத்துரை : அழகிய ஞாயிறாகியகண்ணையுடைய பெரிய வானம் மறையும்படி காற்றைப் பிளந்துகொண்டு அஞ் ஞாயிற்று மண்டிலத்தை எய்தவேண்டும் என எண்ணி விரைந்து பறக்கும் அன்னச்சேவலை ஒத்த வெண்ணிற மயிரையுடைய குதிரைகள் ஈர்த்தோடுதலானே விரைந்தோடும் அழகிய தேர்களும், குதிரைவலவன் மத்திகை கொண்டு பயிற்றியபடி வட்டமான இடத்தில் ஆதியென்னும் செலவில் ஓடின ஒழுங்குபட்ட பிடரிமயிரோடே இடுமயிரையுடையனவாகிய குதிரைகளும், யானைபோன்று கண்டோர் அஞ்சும் போக்கினையுடைய கள்ளுண்ட மறவர் மயக்கமும் ஆகிய தடுத்தற் கரியனவும் எண்ணிறந்தனவுமாகிய நால்வகைப் படையும் பலகாலும் வருதலும் போதலும் உடைமையாலே, என்பதாம்.

அகலவுரை : ஞாயிற்றை வான்கண் என்று கூறுபவாகலின், அழகிய ஞாயிறாகிய கண்ணையுடைய பெரிய வானம் என்பார் அங்கண் மால்விசும்பென்றார். வான் கண் விழியா வைகறை யாமம் என்றார் சிலப்பதிகாரத்தும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அழகிய இடங்களைத் தன்னிடத்தே உடைய பெரிய ஆகாயம் என இத்தொடர்க்குப் பொருள் கூறி, தேவருலகம் முதலியவற்றைத் தன்னிடத்தே யுடைமையின் அங்கண்மால் விசும் பென்றார், என விளக்கமும் கூறியுள்ளார். வெண்ணிறக் குதிரைகள் விண்ணிற் பறப்பன போன்று தோன்றுதலான் ஞாயிற்று மண்டிலத்தை எய்தக் கருதி விசும்பு மறையக் காற்றைப் பிளந்து கொண்டு பறக்கும் அன்னச் சேவல்கட்கு உவமிக்கப்படும் பொருளாயின. இங்ஙனமே, நிரைபறை யன்னத் தன்ன விரைபரிப் புல்லுளைக் கலிமா (அகம்-234) வயங்குசிறை யன்னத்து நிரைபறை கடுப்ப நால்குடன் பூண்ட கானவில் புரவி (அகம்-334) எனப் பிறரும் கூறுதல் காண்க.

ஊறு - உறுதல்; எய்துதல். உறு என்னும் முதனிலை நீண்டது. அளவா-கருதா; செய்யா என்னும் உடன்பாட்டு வினையெச்சம் அளந்து என்னும் பொருட்டு. ஈண்டு அளத்தல் கருத்தான் எண்ணித் துணிதல் என்க. உராலின்-ஓடுதலால். பரி-செல்கை. கடுக்கும்-விரைந்தோடும். கடி என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம். விரைவு என்னும் பொருளும் கடி என்றற்கு உண்மையான் விரையும் என்னும் பொருட்டாய் நின்ற தென்க. கவின்-அழகு.

கால்-காற்று, காற்றுப் போன்று விரைந்தோடும் தேர் என்க.

காலுறழ் கடுந்திண்டேர் (கலி-33)

காலியல் நெடுந்தேர் (கலி-50)

எனப்பிறரும் கூறுதல் காண்க. கோல்-மத்திகை. கோலன் என்றதற்கு வாசிவாரியன் என்றும் இடுமயிர் என்றதற்கு இட்டவாசங்கள் என்றும் எழுதுவர் நச்சினார்க்கினியர். இடுமயிர் என்பது இன்றும் வழக்கிலுளது. இடுமயிர் என்றது கவரி மயிரை. கவரி மயிரால் குதிரைகள் ஒப்பனை செய்யப்படும். இதனை, ஓங்கல் மதிலுள் ஒருதனிமா-ஞாங்கர். மயிர் அணியப் பொங்கி மழைபோன்று மாற்றா - உயிர்உணிய ஓடி வரும் (புறப்-வெண்:90) என்றும், முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு மூட்டுறு கவரி தூக்கி யன்ன (அகம்-156) எனவும் வருவனவற்றால் அறிக. ஆதி-குதிரை ஓட்டங்களில் ஒருவகை ஓட்டம்; அஃதாவது நேராக ஓடல் என்ப. களமர் - போர் வீரர் களத்தே சேறலின் களமர் என்றார் என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். அரியவும் பெரியவும் என்றற்கு இங்ஙனம் கூறாது அரியவும் பெரியவுமாகிய பண்ணியம் என 394 ஆம் அடிக்கண் உள்ள இத்தொடரை 405 ஆம் அடிக்கண் உள்ள பண்ணியம் என்றதனோடு கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

பல்வேறு பண்ணியம் பகர்வோர் செய்தி

395-406 : தீம்புழல் வல்சி ............... நிழல் இருத்தர

பொருள் : தீம் புழல் வல்சி - இனிய பண்ணிகாரங்களாகிய உணவினையும், கழற் கால் மழவர் பூந்தலை முழவின் நோன்றலை கடுப்ப - வீரக் கழலணிந்த காலினையுடைய மழவர் முன்கொட்டும் பூவான் ஒப்பனை செய்யப்பட்ட இடத்தையுடைய வீர மத்தளத்தினது வலிய கண்ணைப் போன்று உருண்ட, பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர் - கூடைகளிலே இட்டுவைத்த மிகவும் நாறுகின்ற நறிய பூவினை யுடையாரும், பலவகை விரித்த எதிர் பூங்கோதையர் - பலவகையாக விரித்து வைத்த ஒன்றற் கொன்று மாறுபட்ட பூமாலை யுடையாரும், பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தார்-இடிக்க வல்லார் பலரும் திரண்டு இடித்த பூந்தாதுக்கள்போலும் பரக்கும் சுண்ணத்தையுடையாரும், தகைசெய் தீஞ்சேற்று இன்னீர்ப் பசுங்காய் நீடுகொடி இலையினர் - உடலுக்கு அழகைக் கொடுக்கும் இனிய களிக்கலந்த இனிய நீரினையுடைய பசிய பாக்குடனே வளர்ந்த கொடியீன்ற வெற்றிலையினை உடையாரும், கோடு சுடு நூற்றினர்-சங்கு சுடுதலால் உண்டான சுண்ணாம்பையுடையாரும், இருதலை வந்த பகைமுனை கடுப்ப இன் உயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து ஏங்குவனர் இருந்து-இரண்டு பக்கத்தானும் படைவந்த பகைப் புலத்தை ஒக்கத் தம்முடைய இனிய உயிருக்கு அஞ்சி ஏங்குவாராயிருந்து இன்னாததாகப் பெருமூச்செறிந்து, அவை நீங்கிய பின்றை - அந்நாற்படையும் சென்ற பின்னர், பல்வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர் - பலவாய் வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிகின்ற விற்பாரும், மலைபுரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர- மலையை ஒக்கும் மாடங்களிடத்துக் குளிர்ந்த நிழலிலே இருத்தலைச் செய்ய;

கருத்துரை : இனிய பண்ணிகாரமாகிய உணவினையும், வீரமத்தளத்தினது கண்போன்று உருண்ட பூந்தட்டிலே பெய்யப்பட்ட பூவினையுடையாரும், பலவகையாக விரித்து வைத்த மாறுபட்ட பூமாலைகளையுடையாரும், இடிக்க வல்லார் பலரும் கூடி இடித்த பூந்தாது போன்று பரக்கும் சுண்ணத்தையுடையாரும், உடலுக்கு அழகைத் தரும் களிக்கலந்த இனிய நீரினையுடைய பசிய பாக்குடனே வெற்றிலையினையுடையயாரும், சங்குசுட்ட சுண்ணாம்பினையுடையாரும், இருபக்கத்தும் போர்ப்படைகள் வந்த பகைப்புலத்தை ஒக்கத் தம் முயிர்க்கு அஞ்சி ஏங்குவாராயிருந்து இன்னதாக நெடுமூச் செறிந்து அப்படைகள் போன பின்பு பலவேறு பண்டங்களையும் விற்போருமாகிய அவர்கள் மலைபோன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலிலே இருத்தலைச் செய்ய என்பதாம்.

அகலவுரை : தீம்புழல் -இனிதாய் உட்கூடாயிருக்கும் ஒரு பண்ணிகாரம், இருப்பைப்பூ எனினும் பொருந்தும். என்னை?

இருப்பை .................. இழுதி னன்னதீம்புழல் (அகம். 9:3)

என்றும்,

தீம்புழல் உணீஇய கருங்கோட் டிருப்பை,
யூரும் பெருங்கை எண்கு (அகம். 171. 13-5)

என்றும் ஓதுதல் காண்க. வல்சி - உணவு. கழல்-மறவர்கள் காலிற் கட்டும் ஓர் அணி; இதனை வீரக்கழல் என்ப. மழவர் - சில வீரர், உருவக் குதிரை மழவ ரோட்டிய என்றார் பிறரும். பூந்தலை முழவு - வீரமத்தளம், அவை முரசு நிசாளம் துடுமை திமிலை என்பனவாம். இவற்றிற்கு மறவர்கள் பூ முதலிய சூட்டி வணங்குதல் மரபாகலின் பூந்தலை முழவு என்றார். இதனை,

மாசற விசித்த வார்புறு வள்பின்,
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை,
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம் (50)

என்னும் புறப்பட்டான் அறிக. வீரமுரசின் கண்ணைமேனோக்கியிருப்ப அமைத்து அக்கண்ணிறைய மலர்களைக் குவித்துவைத்தாற் போன்று கூடை நிறையமலரைக் குவித்து வைத்தனர் என்பதாம். இதற்கு இங்ஙனம் கூறாது, பூந்தலைக் கழற் கால் மழவர் முழவின் நோன்றலை கடுப்ப எனக் கொண்டுகூட்டி, பொற் பூக்களையுடைய தலையினையும் வீரக்கழல் அணிந்த காலினையுமுடைய மழவர் முன் கொட்டும் வீரமத்தளத்தினது வலிய கண்ணை ஒக்க உருண்டை எனக் கடுப்ப என்னும் உவம உருபிற்கு உருண்ட என ஒருசொல் வருவித்துரைத்தார் நச்சினார்க்கினியர். பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப் பெய்த பூவினர் எனச் சொல் வேண்டாமலே இனிதின் முடிதல் காண்க.

சுண்ணம் - நவமணிகளும் பொன்னும் சந்தனமும் கருப்பூரம் முதலியனவும் புழுகிலும் பனிநீரிலும் நனைய வைத்து இடிக்கப்படுவதாம். இங்ஙனம் இடிக்கவேண்டுதலின் பலர் தொகுபு இடித்த என்றார். அச்சுண்ணத்தின் நுண்மையை விளக்குவார், தாதுகு சுண்ணம் என்றார். தாதுகு சுண்ணம் - தாதுபோன்று பரந்த சுண்ணம் என்க. தகை செய்-அழகைச் செய்கின்ற. தீஞ்சேறு - கருங்காலி சீவிக் காய்ச்சின இனிய களி. பைங்கருங் காலிச் செங்களி அளைஇ நண்பகற் கமைந்த அந்துவர்க் காயும் (பெருங் 3-14: 81-2) என்றும், அங்கருங் காலி சீவி ஊறவைத் தமைக்கப்பட்ட செங்களிவிராய காயும் (சீவக-2473) என்றும் பிறரும் கூறுதல் காண்க. இன்னீர் என்றது இளம்பாக்கினுள் அன்னத்தை; இனிய நீர்மையுடைய பசுங்காய் எனினுமாம்.

நீடுகொடியிலை - வெற்றிலை. கோடு -சங்கு. நூறு-சுண்ணாம்பு. நால்வகைப் படையும் வழங்கும் தெருவின்கண் வழங்குமிவர்கள் இருவேறு படைகளும் நெருங்கிய பகைமுனைக்கட் பட்டாரைப் போன்று உயிர்க்கு அஞ்சி வெய்துயிர்த்தனர் என்க. அவை - அந்நால்வகைப் படை. படைவழங்கும்போது அஞ்சி ஒதுங்கி நின்று அவை போயின பின்னர்ப் பண்டம் விற்றுத்திரிவோர். மாடங்களின் நிழலிலே வெயிலுக்கு ஒதுங்கி இருந்தனர் என்க. யானையும், தேரும், புரவியும், களமர் மயக்கமும் வருவன பெயர்தலில், பூவினரும், கோதையரும், சுண்ணத்தினரும், இலையினரும், நூற்றினரும், பண்ணியம் தழீஇத்திரி விலைஞரும் அஞ்சி இருந்து, அவைநீங்கிய பின்றை நிழலில் இருத்தர என இயைத்துக் கொள்க. இனி, 407-இருங்கடல் என்பது தொடங்கி 423 - மறுக என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண் : நரைமுது மகளிர் பண்ணியம் விற்றலும் எழிலுடைய இளமகளிர் செயலும் கூறப்படும்.

பண்ணியம் விற்கும் தொன்முது பெண்டிரும், மயிலிய லோரும் மடமொழி யோரும்,

407-423 : இருங்கடல் ........................ மறுக

பொருள் : இருங்கடல் வான்கோடு புரைய - கரிய கடலில் வெள்ளிய சங்கைப்போல, வாருற்றுப் பின்னிட்ட வால் பெரும்நரைக் கூந்தலர் - கோதிப் பின்னே முடிந்து போகட்ட பெரிய வெள்ளிய நரையினையுடைய கூந்தலையுடையராகிய, நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர் - நன்றாகிய வனப்பினையுடைய பழமை மூத்த பெண்டிர், செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை செல்சுடர்ப் பசுவெயில் தோன்றி அன்ன செய்யர்-சிவந்த நீர்மையினை யுடைய கிளிச்சிறை என்னும் பொன்னாற் செய்த பாவை வீழ்கின்ற கதிர்களானாய பசிய வெய்யிலிடத்தே தோன்றினாற் போன்ற சிவந்த நிறத்தினையுடையராய், செயிர்த்த நோக்கினர் - ஆடவரை வருத்திய பார்வையையுடையராய், மடக்கண் ஐயகலுழும் மாமையர் - மடப்பத்தையுடைய கண்ணோடே வியப்பினையுடையவாய் நோக்கினார் கலங்குதற்குக் காரணமான மாமை நிறத்தினையுடையராய், வை யெயிற்று வார்ந்த வாயர் - கூரிய எயிற்றினது வரிசையாலே நேரிதாய வாயினையுடையராய், வணங்கு இறைப் பணைத்தோள்-வளைந்த சந்தினையுடைய மூங்கில் போலும் தோளினையும், சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை - நெகிழ்ந்து வீழ்ந்து விடுவதுபோன்ற விளக்க முற்றிய கை வந்தியினையும், தொய்யில் பொறித்த சுணங்கெதிர் இளமுலை - தொய்யிலால் வல்லியாக எழுதப்பட்ட சுணங்கு தோற்றிய இளைய மூலையினையும், மை உக்கன்ன மொய் இருங்கூந்தல் - மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரிய மயிரினையும் உடைய, மயில் இயலோரும் மடமொழியோரும் - மயிலின் தன்மையை உடையோரும் மடப்பத்தையுடைய மொழியினை உடையோரும், கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து - தம்மைக் கோலஞ் செய்து மெத்தென நடந்து கையைத் தட்டி, கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப - காம நுகர்ச்சியினையன்றி வேறொன்றையும் கல்லாத இளைஞருடனே மகிழ்ந்தனராய்ப் புணரும்படி, புடையமை பொலிந்த வகையமை செப்பில் - புடைபடுதல் அமைந்த அழகிய பல வகைப்பட்ட செப்பிடத்தில், காமர் உருவில் தாம் வேண்டு பண்ணியம்-விருப்பம் மருவிய வடிவினையுடைய நுகர்வார் தாம் விரும்பும் நுகர் பொருள்களை, கமழ் நறும் பூவொடு மனை மனை மறுக - மிகவும் மணங்கமழ்கின்ற நறிய மலர்களோடே ஏந்தி மனைகள்தோறும் உலாவி நிற்ப;

கருத்துரை : கரிய கடலின்கட் டோன்றிய சங்கு போன்று கோதிப்பின்புறத்தே முடியிட்டுப் போகட்ட நரைத்த கூந்தலையுடையவரும் நல்ல அழகினையுடையவருமாகிய முதுமகளிர்கள், சிவந்த நிறமுடைய கிளிச்சிறை யென்னும் பொன்னாலியற்றிய பாவை பசுவெயிற் பட்ட பொழுது தோன்றுமாறு போலத் தோன்றும் சிவந்த நிறத்தினையுடையாரும், ஆடவர்க்கு வருத்தந் தோற்றும் பார்வையினையுடைய கண்ணுடையோரும், வியப்பு நல்கும் மாமை நிறமுடையோரும், நேரிதாய கூரிய எயிற்றொழுங்கையுடைய வாயினையுடையோரும், வளைந்த மூங்கிலை ஒத்த தோளினையும் நெகிழும் கைவந்தியினையுமுடையாரும், தொய்யில் எழுதப்பட்ட சுணங்கு பிதிர்ந்த இளமுலையினையுடையாரும், மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரியகூந்தலையுடையாரும், மயில் போன்ற சாயலையுடையாரும், மடப்பமுடைய மொழியினையுடையாரும் ஆகிய மகளிர், தம்மைக் கோலஞ் செய்து கொண்டு மெத்தென நடந்து தங்காதற் கொழுநரைக் கைதட்டி அழைத்துக் காமநுகர்தலையன்றி வேறொன்றையும் கல்லாத அவ்விளைஞரோடே மகிழ்ந்து புணரும்படி, புடைபடுதலமைந்த அழகிய பல்வேறு வகையான செப்புகளில் அவர் விரும்புவனவும், கண்டார் விழையும் வடிவமைந்தனவுமாகிய தின்பண்டங்களை மண மிக்க மலர்களோடே ஏந்திக் கொண்டு, மனைகள் தோறும் உலாவாநிற்ப என்பதாம்.

அகலவுரை : தொன்முது பெண்டிர், மயிலிய லோரும் மடமொழி யோரும் மாந்தரொடு திளைக்குமாறு செப்பில் பண்ணியம் மலரோடு ஏந்தி மனைதோறும் உலாவ என, அணுகக் கண்டு கொள்க. காதலிருவர் மன நெகிழ்ந்த புணர்ச்சிக் காலத்தே விரும்பித்தின்னும் பண்டமும், சூடும் மலர்களும் இவை என அறிந்து அவையிற்றைத் தொன்முது பெண்டிர் மனைதொறும் சென்று விற்றலின், இதனை ஏதுவாக்கிக் கூறினார்.

செந்நீர் (410) என்பது தொடங்கி (419) கையெறிந்து என்னுந் துணையும் அந்நகரத்துச் செல்வமிக்க மனையில் வாழும் இளமகளிரின் இயல்பு கூறியதாம். வான்கோடு-வெண்மை நிறமுடைய சங்கு. இது தொன்முது பெண்டிர் முடியிட்டுப் போகட்ட கூந்தலுக்கு நிறத்திற்கும் வடிவிற்கும் உவமை என்க. சீரொடு வலம்புரி புரையும் வானரை முடியினர் (126-7) என்றார், திருமுருகாற்றுப்படையினும். பின்னிட்ட - பின்புறத்தே முடிந்து போகட்ட. தொன்முது : மீமிசைச் சொல். அவர்கள் அகவையான் முதிர்ந்த விடத்தும் அழகுடையராகவே விளங்கினர் என்பார், நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர் என்றார். ஆசிரியர் நச்சினார்க்கினியர் நன்னர் நலத்தர் என்ற தொடரைப் பிரித்து மயிலியலோர்க்கு இயைப்பாராயினர். செந்நீர்ப் பசும்பொன் என்றது, சிவந்த தன்மை யுடைய கிளிச்சிறை என்னும் பொன் என்றவாறு. பொன் சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என நால்வகைப்படும்; அவையிற்றுள், கிளிச்சிறை செந்நீர்மையான் உயர்ந்ததாகலின் செந்நீர்ப் பசும்பொன் என்றார். இதனை, நூறுபத் தடுக்கிய வீறுயர் பசும்பொன் (அரங்கேற்று காதையில் 164-5) எனவரும் தொடர்க்கு, வீறுயர் பசும்பொன் - மாற்றான் உயர்ச்சி பெற்ற பசிய பொன்: ஆவது கிளிச்சிறை என அடியார்க்கு நல்லார் உரை கூறுமாற்றானும் உணர்க. கிளிச்சிறையாற் செய்த பொற்பாவைமேல் அந்தி வெயிற்பட்டால் எத்துணை அழகியதாய்த் தோன்றும் அத்துணை அழகிய நிறமுடையார் மதுரை நகரத்து மயிலியலோர் என்று வரும் உவமை அழகினை உணர்ந்து மகிழ்க.

பசுவெயில்-கதிரவன் மறைதற்குச் சிறிது முன்னர் உலகிற்படரும் பச்சை வெயில். இதனைக் காடுகிழாள் வெயில் என்ப, (சிலப். 4: 5-8-உரை) என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். இக்காலத்தே இதனை மஞ்சள் வெயில் என்று வழங்குப. பாவை விரிகதிர் இளவெயிற் றோன்றி யன்னநின் (நற்-192:8-10) என்று, தாவினன் பொன் றைஇய பாவை விண்டவழ் இளவெயில் கொண்டு நின்றன்ன மிகுகவின் (அகம் 121 : 1-3) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க, செயிர்த்த நோக்கு - வருத்திய பார்வை. ஐய கலுழும் மாமை - என்றதற்கு வியப்பிற்றாய் வழிந்தொழுகுவது போன்ற கருநிறம் எனினுமாம். கருநிறம் - மாமை எனப்படும். கலுழ்தல்-ஒழுகுதலுமாம். வை-கூர்மை. வார்தல் - நேரிதாதல். கைவந்தி-ஒரு மகளிரணி; ஆடையுமாம். தோள்வந்தி - என இக்காலத்தே (தோவந்தி) மகளிர் மேலாடையை வழங்குதலுண்டு. தொய்யில்-எழுதும் குழம்பு. சுணங்கு-தேமல், கைஇ-கைசெய்து; ஒப்பனை செய்து. கையெறிந்து - கையைத் தட்டி அழைத்து கல்லா மாந்தர் என்றது, காமநுகர்தலன்றி மெய்ந்நூல்களை ஓதாத செல்வர் மக்களை. உலகமாந்தர் பெரும்பான்மையோரும் அன்னராதலின், கல்லா மாந்தர் என்றார். பண்ணியம் - பண்ணிகாரம், தின்பண்டம். மனைமனை என்னும் அடுக்கு மனைகள் தோறும் என்னும் பொருட்டு. மறுக-உலாவ.

இனி 424-மழை என்பது தொடங்கி 488-தோன்ற என்னுந் துணையும் ஒருதொடர்; இதன்கண் திருவிழாவும், மக்கள் இறைவழிபாடு செய்தலும் பவுத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி, அமண் பள்ளி முதலியனவும் கூறப்படும்.

நாளங்காடியின் பேராரவாரம்

424-430 : மழை ..................... கம்பலை

பொருள் : மழை கொளக் குறையாது புனல் புக மிகாது கரை பொருது இரங்கும் முந்நீர் போல- முகில் முகக்க முகக்கக் குறைவுபடாமல் யாறுகள் பாய்தலினானும் மிகுதலைச் செய்யாமல் கரையை மோதி ஒலிக்கும் கடல் போல, கொளக் கொளக் குறையாது தரத்தர மிகாது -பலரும் வந்து கொள்ளக் கொள்ளக் குறையாமல் பலரும் மேன் மேலும் கொண்டுவரக் கொண்டுவர மிகாமல் நிறையுற்ற, கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி - தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்த நீரைத் தன்னிடத்தே கொண்ட ஏழாநாள் அந்தியில், ஆடு துவன்று விழவின் -வேறோர் இடத்தில் இல்லாத வெற்றி நெருங்கும் திருவிழா நாளின்கண், நாடார்த்தன்றே - அவ்விழாவிற்குத் திரண்ட நாட்டிலுள்ள மக்கள் ஆரவாரித்தாற்போன்று, மாடம் பிறங்கிய மலிபுகழ்க்கூடல் - மாடத்தாலே விளக்கமுற்ற மிக்க புகழையுடைய நான்மாடக் கூடலின்கண், நாளங்காடி நனந்தலைக் கம்பலை - நாளங்காடியையுடைய அகன்ற இடத்தே எழுந்த பெரிய ஆரவாரமும்;

கருத்துரை : முகில்கொள்ளுதலால் குறையாமலும், யாறு புகுதலால் மிகாமலும் கரையை மோதி முழங்கும் கடல் போல, பலரும் வந்து கொள்ளுதலால் குறையாமலும், பலரும் கொண்டு வருதலான் மிகாமலும், எப்பொழுதும் பண்டங்களானும் ஆரவாரத்தானும் தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்த நீராட்டத்தை உடைய ஏழாநாள் அந்திப் பொழுதில் திரண்ட நாட்டிலுள்ள மக்கள் ஆரவாரித்த ஆரவாரம் போன்ற நான்மாடக் கூடலின்கண் நாளங்காடியில் எழுந்த பேராரவாரமும் என்பதாம்.

அகலவுரை : மதுரைமாநகரத்து நாளங்காடி பண்டங்கள் மக்கள் கொள்ளக் கொள்ளக் குறையாமலும் வணிகர்கள் மேலும் மேலும் கொண்டுவரக் கொண்டுவர நிறைவுறாமலும் இருத்தற்கு, முகில் கொள்ளுதலால் குறையாதும் யாறுகள் புகுதலால் மிகாதும் கிடக்கும் கடல் உவமை என்க.

கழுநீர்-கழுவும் நீர்; தீவினைப் போக்குந் தன்மையுடைய தீர்த்தம் என்றவாறு. திருவிழாவிற்குக் கால்கொண்ட ஏழாம் நாள் அந்தியில் தீர்த்தமாடுதன் மரபாகலின் எழுநாளந்தி என்றார். ஆடு-வெற்றி. துவன்று - நிறைவு; துவன்று நிறை வாகும் (உரி-34) என்பர் தொல்காப்பியனார். நாடு - நாட்டிலுள்ள மக்கட்கு ஆகுபெயர். ஆர்த்தன்று-ஆர்த்தது போன்றது. ஆர்த்தற்றே எனற்பாலது ஆர்த்தன்றே என மெலிந்து நின்றது. ஆர்த்த ஆரவாரம் போன்றது நனந்தலைக் கம்பலை என்க. கம்பலை - பேராரவாரம். நான்மடக்கூடல் என்பது மதுரைக்குக் காரணப்பெயர். என்னை? நான்கு மாடம் கூடலின் நான்மாடக்கூடல் என்னும் பெயர் பெற்றது என்பவாகலான். அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்பனவாம். இனி, கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்றும் கூறுப. மலிபுகழ் - மிக்க புகழ் நாளங்காடி-பகற்காலத்துக்கடை. நனந்தலை-அகன்ற இடம்.

விழவும், வழிபாடும்

பெருநிதிக் கிழவரின் பெற்றிமை

431-442 : வெயிற்கதிர் .............. காண்மார்

பொருள் : வெயில் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கர் அன்ன - வெயிலையுடைய சுடர்கள் ஒளி மழுங்கிய செலவு மிக்க ஞாயிற்றையுடைய செக்கர் வானத்தை ஒக்க, சிவந்து நுணங்கு உருவில் கண் பொருபு உகூஉம் ஒண் பூங் கலிங்கம் - சிவந்து நுண்ணிதாகும் வடிவாலே கண்களை வெறியோடப் பண்ணிச் சிந்தி விழுமாறு போன்ற ஒள்ளிய பூத்தொழிலையுடைய ஆடைகளை, பொன்புனை வாளொடு பொலியக்கட்டி-பொன்னிட்ட உடைவாளோடே அழகு பெறக் கட்டி, திண் தேர்ப் பிரம்பில் புரளுந் தானை-திண்ணிய தேரின்கட் பிரம்பினிடத்தே புரளுகின்ற முன்றானையினையும், கச்சந்தின்ற கழல் தயங்கு திருந்து அடி - கோத்துக் கட்டிய கச்சுக் கிடந்து தேய்த்த தழும்பிருந்த வீரக்கழலசையும் பிறக்கிடாத அடியினையும், மொய்ம்பு இறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல் - உலகத்துள்ளார் வலிகளைக் கடந்து புகழ்ச்சியால் எங்குந் திரியும் ஒன்றாகிய பெரிய வேப்ப மாலையினையும், மணி தொடர்ந்தன்ன ஒண்பூங்கோதை-மாணிக்கம் ஒழுகினாலொத்த ஒள்ளிய செங்கழுநீர் மாலையினையும், அணிகிளர் மார்பின் ஆரமொடு அளைஇ - அழகு விளங்கும் மார்பிற் கிடக்கின்ற முத்துமாலையோடே கலந்து அணிந்து, காலியக்கு அன்ன கதழ் பரி கடைஇ-காற்றினுடைய செலவினை யொத்த விரைந்த தேர்க்குதிரைகளைச் செலுத்தி, காலோர் காப்பக் காலெனக் கழியும் - காலாட்கள் சூழ்ந்து காப்பக் காற்றென்னும் படி கடிதிற் செல்லும், வான வண்கை வளங் கெழு செல்வர் - முகில் போன்று வரையாமற் கொடுக்கும் வளவிய கையினையுடையராகிய வளப்பம் பொருந்தின செல்வர், நாண்மகிழ் இருக்கை காண்மார் - நாட்காலத்தே மகிழ்ந்திருக்கின்ற இருப்பின்கண் இருந்து விழாக் காண்பாராக.

கருத்துரை : வெயிலின் கதிர் ஒளி மழுங்கிய ஞாயிற்றையுடைய செக்கர் வானம் போன்று சிவந்த நுண்ணிய வடிவாலே காண்பார் கண்களை வெறியோடச் செய்து சிந்தி விழுமாறு போன்ற ஒள்ளிய பூத்தொழில்களையுடைய ஆடைகளைப் பொன்னிட்ட உடைவாளோடே பொலிவுறக் கட்டித் திண்ணிய தேர்த்தட்டின்கட் பிரம்பிடத்தே ஆடையின் முன்றானை கிடந்து புரளா நிற்ப; உலகினுள்ளார் வலிகளைக் கடந்து புகழ்ச்சியால் எங்கும் திரிதரும் ஒப்பற்ற வேப்ப மாலையினையும், செங்கழுநீர் மாலையினையும் முத்து மாலையோடே கலந்து அணிந்து, காற்றென்னக் கடிது செல்லும் தேர்ப் புரவிகளைச் செலுத்தி விரையும் முகில் போன்ற வண்மையை யுடைய வளப்பம் மிக்க செல்வர் நாட்காலத் திருக்கையின்கண் இருந்து காணாநிற்ப என்பதாம்.

அகலவுரை : வெயிற் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிறு என்றது அந்திமாலைப் பொழுதில் மறையும் நிலையிலிருக்கும் ஞாயிற்றை. ஞாயிற்றையுடைய செக்கர் வானம் என்க. இஃது ஆடையின் நிறத்திற்கு உவமை. நுணங்குதல்-நுண்ணிதாதல். உரு : ஈண்டு வடிவின் மேற்று; நிறம் எனினுமாம். கண்பொருபு : கண்ணொளி கதுவா வண்ணம் தன்னொளியாற் றடைசெய்து என்றபடி. 262ம் - சிந்து மாறுபோல, பூங்கலிங்கம்-பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை. பொன் புனை வாள் என்றது பொன்னாற் பிடி முதலியவற்றில் அழகு செய்யப்பட்ட உடைவாள் என்றவாறு. இனிக் கரும்பொன்னாற் செய்த உடைவாள் எனினுமாம். ஆடையின்மேல் உடைவாள் கட்டுதல் மரபு. திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானை என்ற தொடரை, பிரம்பின் திண்டேர் என மாறி விளிம்பிலே வைத்த பிரம்பினையுடைய திண்ணிய தேர் என்றும், தானையை ஒலியல் என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். கச்சம்-கச்சு. தின்னுதல்-தழும்புண்டாகத் தேய்த்தல். கழல்-வீரக்கழல். திருந்தடி - போரிற் பிறக்கிடாத அடி. கழலுரீஇய திருந்தடி (புறம், 7-2) என்றும், இயலணிப் பொலிந்த ஈகை வான்கழல் துயல் வருந்தோறும் திருந்தடிக் கலாவ (குறிஞ்சி. 126-7) என்றும் பிறரும் கூறுதல் காண்க. கால்-காற்று. காற்கடுப் பன்ன கடுஞ்செலல் இவுளி (அகம். 224:5) என்றும், வளிநடந்தன்ன வாச்செலல் இவுளியொடு (197-1-புறம்) என்றும் பிறரும் குதிரையின் செலவிற்குக் காற்றின் இயக்கினை உவமித்தல் காண்க.

கதழ்பரி-விரைந்த செலவு. கதழ்வும் துனையும் விரைவின் பொருள (உரி-17) என்பர் தொல்காப்பியனார் . கடைஇ-செலுத்தி. காலோர் - காலாட்கள். வானம் : ஆகுபெயர்; முகில் என்னும் பொருட்டு. நாண்மகிழ் இருக்கை - நாட்காலத்தே கள்ளுண்டு மகிழ்ந்து வண்மை செய்து வீற்றிருக்கும் இருப்பு. இதனை நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின் (புறம். 123: 1-2) என்றும், தூத்துளி பொழிந்த பொய்யா வானின், வீயாது சுரக்கும் அவன் நாண்மகிழ் இருக்கையும் (மலைபடு. 75-6) என்றும் வருவனவற்றால் அறிக. காண்மார்-காண்பாராக.

பெருநிதிக் கிழவரின் பெண்டிர் செயல்

443-452 : பூணொடு .................. மறைய

பொருள் : பூணொடு தெள்ளரிப் பொற்சிலம்பு ஒலிப்ப - ஏனைய அணிகலன்களோடே தெள்ளிய உள்ளின் மணிகளையுடைய பொன்னாற் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி வந்த, ஒள் அழல் தாஅற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை - ஒள்ளிய நெருப்பிலே இட்டுக் குற்றம் இல்லாதே விளங்கிய அழகிய பொன்னாற் செய்த விளங்கும் அணிகலன்களையுடைய, அணங்கு வீழ்வு அன்ன-தெய்வ மகளிர் வானுலகத்தினின்றும் மண்ணுலகத்தே இழிந்தாலொத்த, பூந்தொடி மகளிர் - பூத்தொழில் செய்த வளையலினையுடைய அச் செல்வருடைய மகளிருடைய, மணங்கமழ் நாற்றம் தெருவுடன் கமழ-புழுகு முதலியன நாறுகின்ற நாற்றம் தெருவுகளெல்லாம் மணங்கமழாநிற்ப, ஒண் குழை திகழும் ஒளி கெழு திருமுகம் - ஒள்ளிய மகரக் குழை விளங்கும் ஒளிபொருந்திய அழகினையுடைய முகம், திண்காழ் ஏற்ற வியல் இரு விலோதம் தெண்கடல் திரையின் அசைவளி புடைப்ப - திண்ணிய கொடித்தண்டுகளில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளைத் தெளிந்த கடற்றிரை போல எழுந்து விழும்படி வீசுங்காற்று மோதுகையினாலே, நிரை நிலை மாடத்து அரமியந் தோறும் ஒழுங்குபட்ட நிலைமையினையுடைய மாடங்களின் நிலாமுற்றங்கள் தோறும், மழை மாய் மதியிற் றோன்றுபு மறைய-முகிலிலே மறையுந் திங்களைப் போன்று ஒருகால் தோன்றி ஒருகால் மறையாநிற்ப;

கருத்துரை : மகளிருடைய மணங்கமழ் நாற்றம் தெருவுடன் கமழ அவர்கள் முகம் தோன்றுபு மறைய என்க. ஏனை அணிகலன்களோடே சிலம்பு ஒலிக்கும்படி வந்த அழகிய பொன்னாற் செய்த விளங்கும் அணிகலன்களை யுடையவரும் விண்ணுலகினின்றும் மண்ணுலகத்திலே இழிந்த தெய்வ மகளிர் போன்றவரும் பூத்தொழில் செய்த வளையணிந்தவருமாகிய அச்செல்வருடைய பெண்டிர் அணிந்துள்ள புழுகு முதலிய மணப் பொருள்களின் மணம் தெருவெல்லாங் கமழவும், அவர்கள் திருமுகங்கள், ஒழுங்குபட்ட மாடத்தே நிலாமுற்றத்தின்கண் கடற்றிரை போன்று எழுந்து விழும்படி பெரிய கொடிகளைக் காற்று மோதுகையாலே முகிலால் மறைக்கப்படும் திங்கள் மண்டிலம் போன்று ஒரு காற்றோன்றி ஒருகால் மறையாநிற்பவும் என்பதாம்.

அகலவுரை : தெள்ளரி-தெள்ளிய சிலம்பினுள்ளிடும் மணி; என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே.. யாமுடைச் சிலம்பு முத்துடையரியே (சிலப். 20: 67-69) என வருதல் காண்க. ஆராய்ந்திடப்பட்ட அரி என்பார், தெள்ளரி என்றார். ஒள் அழல் - ஒளியுடைய தீ. நன்கு புடமிட்டுத் தூய்தாக்கிய சிறிதும் குற்றமில்லாத அழகிய பொன் என்பார், ஒள்ளழற் றாவற விளங்கிய ஆய்பொன் னென்றார். அவிர்தல் - விளங்குதல். இழை: ஈண்டு அணிகலன். மணிகள் வைத்து இழைக்கப்படுவது என்னும் பொருட்டு. அணங்கு-வானவர் மகளிர். வீழ்வு - இழிதல். அவர்கள் இருத்தற்குரிய மேல் உலகினின்றும் கீழதாகிய மண்ணுலகிற்கு இழிந்தாற் போன்ற என்றபடி. பூந்தொடி - பூவேலை செய்யப்பட்ட வளையல். காழ்-கழி; கொடியேற்றப்பட்ட கோல். விலோதம்-கொடி. தெருவுடன்-தெருவெங்கும்; கடலிடத்தே திரையெழுந்து மறியுமாறு கொடியை அசைத்தலால் அக்கொடிகளில் மறைந்தும் வெளிப்பட்டும் மாதர் முகம் தோன்றின என்க. அரமியம் - நிலா முற்றம். செல்வர் நாண்மகிழ் இருக்கையிலிருந்து விழாவைக் காண அவர் பெண்டிர் அரமியத்தேறி நின்று விழாக் கண்டனர் என்பது கருத்து. மாய்தல்-ஈண்டு மறைதல் என்னும் பொருட்டு; களிறுமாய்க்கும் கதிர்க் கழனி என்புழிப் போல (347). வரிசையாய் நிற்கும் மாடம் என்பார், நிரைநிலை மாடம் என்றார். நிரை-வரிசை. தோன்றுபு - தோன்றி : செய்பு என்வாய்பாட்டு வினையெச்சம். இனி இம் மகளிரை நாயனார் கோயிலிற் சேவிக்கும் மகளிர் என்றும், செல்வர் மாசற விளங்கிய யாக்கையராய்க் கமழ என்றும் 447 ஆம் அடியோ டியைத்து உரையெழுதுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். விலோதம் அவ்வரமியத்தே விழாக் குறித்துயர்த்தப்பட்ட தென்னாதே நாயன்மார் எழுந்தருளுங்கால் கொடியெடுத்தல் இயல்பென்னும் குறிப்பால், அவ்விலோதம் வேறென்று கூறியுள்ளார்.

மழுவாள் நெடியோன் கோயில் விழா

453-460 : நீரும் .............. கறங்க

பொருள் : நீரும் நிலனும் தீயும் வளியும் மாகவிசும்போடு ஐந்து உடன் இயற்றிய - நீரும் நிலனும் நெருப்பும் காற்றும் திசைகளையுடைய வெளியுமாகிய ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த, மழுவாள் நெடியோன் தலைவனாக - மழுவாகிய வாளையுடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு, மாசு அற விளங்கிய யாக்கையர்-அகத்தும் புறத்தும் அழுக்கற்றுத் திகழும் வடிவினையுடையராய், சூழ்சுடர் வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு - தெய்வத்தன்மையால் சூழ்ந்த ஒளியினையுடைய வாடாத பூக்களையும் இதழ் குவியாத கண்ணினையும் அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய மாயோன் முருகன் முதலாகிய தெய்வங்கட்கு, மாற்றரு மரபின் உயர்பலி கொடுமார்-விலக்குதற்கரிய முறைமையினையுடைய உயர்ந்த பலிகளைக் கொடுத்தற்கு, அந்தி விழவில் தூரியம் கறங்க - அந்திப் பொழுதின் நிகழும் விழாவில் இசைக் கருவிகள் முழங்க;

கருத்துரை : நீரும் நிலனும் தீயும் காற்றும் விசும்புமாகிய ஐம்பெரும் பூதமும் கலந்த உலகினைப் படைத்தருளிய மழுவாகிய வாளையுடைய பிறவா யாக்கைப் பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு அகம் புறமிரண்டானும் தூயராய்த் தெய்வத்தன்மையாற் சூழ்ந்த ஒளியினையுடைய வாடாத பூக்களையும், இமையாத கண்ணினையும் அவியாகிய உணவினையும் உடைய, மாயோன், முருகன் முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுத்தற்பொருட்டு அந்திக்காலத்து எடுத்த விழாவின் பொருட்டு இசைக்கருவிகள் முழங்காநிற்ப என்பதாம்.

அகலவுரை : தோற்றமுறை பற்றி எண்ணுமிடத்து விசும்பும் காற்றும் நெருப்பும் நீரும் மண்ணும் என்றும், ஒடுக்கமுறை பற்றி எண்ணுமிடத்து நிலன் நீர் தீ காற்று விசும்பென்றும் எண்ணுதல் மரபு. ஈண்டு ஒடுக்கமுறைபற்றி எண்ணுவார் செய்யுளாதலான் நிலனும் நீரும் என்னாது நீரும் நிலனும் என முறைபிறழ வைத்தார். இப் பூதங்கள் தோன்றுமிடத்து வான்முதலாக நிரலே தோன்றுமென்றல் சைவசமயத்தினர் கொள்கையாம்; இதனை,

சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்
தோற்றும்வான் வளிதீ நீர் மண்தொடக்கியே ஒன்றுக்கொன்றங்
கேற்றமா மோசை யாதி இருங்குண மியைந்து நிற்கும்
ஆற்றவே விடய பூதம் அங்காங்கி பாவ மாகும் (சித்தியார். சுபக்-155)

என்னும் அளவை நூலான் அறிக. ஐந்துவகைப் பொறிகட்கும் புலனாம் சிறப்புப்பற்றி இவ்வைந்து பூதங்களையுமே விதந்து கூறினரேனும், முப்பத்தாறு தத்துவங்களுள் ஒழிந்தவற்றையும் கொள்க. தத்துவக்கூட்டமாகிய இவ்வுலகத்தை உயிர்களின் மலமகற்றி அவையிற்றிற்கு அழிவில்லாத பேரின்ப வீடளித்தற் பொருட்டு முழு முதலாகிய பிறவாயாக்கைப் பெரியோன் படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும் நிகழ்த்துகின்றான் என்பது சைவசமயிகளின் கொள்கையாகலின், ஐந்துட னியற்றிய மழுவாள் நெடியோன் என்றார். இதனை,

காரிய கார ணங்கள் முதல்துணை நிமித்தங் கண்டாம்
பாரின்மண் திரிகை பண்ணு மவன்முதல் துணைநி மித்தம்
தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக
ஆரியன் குலால னாய்நின் றாக்குவன் அகில மெல்லாம் (சித்தி-சுப-38)

என்றற் றொடக்கத்து ஆன்றோர் மொழிகளான் உணர்க. முழுமுதலாகிய இறைவன் ஐந்தொழிலுமியற்றுதல் உயிர்களின் மலமகற்றும் பொருட்டேயாகலான், அவன் ஏந்திய துடி முதலியவற்றில் மலமொழிதற்கு அறிகுறியாக ஏந்திய மழுவொன்றனையே விதந்தெடுத்து மழுவாள் நெடியோன் என்றார். மழு-நெருப்பு; அது மலத்தினைச் சுட்டொழித்துப் பிறவியின் வேரினை அரிதலான் வாள் என்றார். மழுவை வாளாக வுடையான் என்றபடி. இதனை,

தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு (உண்மைவிளக்கம்-35)

என்பதனான் அறிக. நெடியோன் என்றது, அளவைகளான் அளக்கப்படாதவாறு நீண்டவன் என்றவாறு. என்னை?

பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரன் (சித்தி-சுப-292)

என்றும்,

சிவனை அவன் திருவடிஞா னத்தாற் சேரச்
செப்புவது செயல்வாக்குச் சிந்தை யெல்லாம்
அவனை அணு காவென்றும் ஆத லானும் (சித்தி-சுப-295)

என்றும்,

கண்டிடுங்கண் தமைக்காணா கரணம் காணா
கரணங்கள் தமைக்காணா உயிருங் காணா
உண்டியமர் உயிர்தானும் தன்னைக் காணா
துயிர்க்குயிராம் ஒருவனையும் காணா தாகும்

என்றும் ஓதுபவாகலான். (þ-296)

மாசு-உடலின் புறத்தேயும் அகத்தேயும் படிந்துள்ள அழுக்குகள். புறத்தே நீராடலானும் அகத்தே வாய்மை பேணலானும் இருவழியும் அழுக்கற்ற யாக்கையினர் என்றார். என்னை?

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் (குறள்-298)

என்றோதுபவாகலான், இத் தூய்மை சரியை முதலிய நான்கு படியினும் ஒழுகுவார்க்கு இன்றியமையாமையின் அதனை விதந்தோதினர். இனி, அகமாசு அற்றதனால் அதன் சத்துவம் மெய்ப்பட்டுத் தோன்றும் உடலினையுடையார் எனினுமாம். என்னை?

கையுந் தலைமிசை புனையஞ் சலியன
கண்ணும் பொழிமழை யொழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரு
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால் (பெரிய-திருநா-167)

என்னுமாற்றால் அகத்தே மாசற்றவழிப் புறத்தே விளங்கித் தோன்றும் மெய்ப்பாடுண்மை அறிக. தேவர்கட்கு மலர்வாடுதலும் கண்ணிமைத்தலும் இன்மையானும், அவர்கள் தீயிலிடப்படும் அவியின் மணத்தையே நுகர்ந்து கொள்வர். என்பதனானும் வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற வுணவிற் பெரியோர் என்றார். இங்ஙனமாதலை,

வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்
றன்னவை பிறவும் ஆங்க ணிகழ
நின்றவை களையும் கருவி என்ப (களவியல்-4)

எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க.

வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற வுணவி னோரும் (புறம்-62:16-7)

என்றார் பிறரும்.

உரு-அச்சம்-அசுரர் முதலியோர்க்கு அச்சமுண்டாக்கும் பெரியோர் என்க. நூல்களான் இன்னின்னவாறு பலிசெய்தல் வேண்டும் என விதித்தமுறை பிறழாதபடி கொடுத்தல் வேண்டுமாதலின் மாற்றரும் பலி என்றார். பலி - கடவுட்கிடும் பூசைப்பொருள். தூரியம்-இசைக் கருவி. கறங்குதல்-முழங்குதல். இதனால் மாங்குடி மருதனார் என்னும் நல்லிசைப் புலவரும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் சைவசமயிகள் என்று எண்ணற்கிடமுளது என்பாருமுளர். இனி மதுரை மாநகரத்துள்ள ஏனைய சமயநிலையங்களைக் கூறுவான் தொடங்குகின்றார்.

பவுத்தப் பள்ளி

461-467 : திண்கதிர் ................. பள்ளியும்

பொருள் : திண் கதிர் மதாணி ஒண் குறு மாக்களை -திண்ணிய ஒளியினையுடைய பேரணிகலன்களையுடைய ஒள்ளிய சிறு பிள்ளைகளை, ஓம்பினர் தழீஇ - கூட்டத்தே பிரிந்துவிடாமே பாதுகாப்பாராய்த் தம் கைகளான் அனைத்து, தாம் புணர்ந்து முயங்கி - அவர்பால் உண்டாய விருப்பத்தாலே அவர்களை மேலும் நன்கு அணைத்துத் தழுவி, தாதணி தாமரைப் போது பிடித்தாங்கு - தாது சேர்ந்த தாமரைப்பூ தாமரை முகிலைப் பிடித்தாற் போன்று அம்மக்கள் கையினைத் தம் கையாற் பற்றி, தாமும் அவரும் ஓராங்கு விளங்க - தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழ்தலானே, காமர் கவினிய பேரிளம் பெண்டிர் - விருப்பம் மருவிய அழகுபெற்ற பெரிய இளமையினையுடைய மகளிர், பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்ச - பூசைக்கு வேண்டும் பூவினையுடையராய்ப் புகையினையுடையராய்ப் புகழ்ந்து வாழ்த்த, சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும் - சிறப்பெய்தி அவர்களாற் பாதுகாக்கப்படும் பவுத்தப் பள்ளியும்;

கருத்துரை : திண்ணிய ஒளியினையுடைய பேரணிகலன்களையுடைய சிறு பிள்ளைகள் கூட்டத்தினுள் தம்மைப் பிரிந்து போகாதபடி தம் கைகளான் அணைத்துப் பாதுகாப்பாராய் மேலும் அவர்பால் உள்ள விருப்பத்தானே அவர்களைத் தம்முடலோடே பொருந்த அணைத்துத் தழீஇ, அவர்களுடைய சிறிய கைகளைத் தம் கையால் தாமரை மொட்டினைப் பற்றிய தாமரை மலர் போன்று தோன்றப் பற்றி, அவரும் தாமும் சேரத்திகழ்தலானே அழகுற்று விளங்கும் பேரிளம் பெண்டிர், பூசைக்கு வேண்டும் மலர், புகை முதலியவற்றோடே புத்தர் பெருமானை வழிபாடு செய்து வாயாற் புகழ்ந்து பாடிப் பாதுகாத்தலானே சிறந்து திகழும் பவுத்தப் பள்ளியும் என்பதாம்.

அகலவுரை : மதாணி - பதக்கமுமாம். சிறுபிள்ளைகள் தாயரைப் பிரிந்துழிக் கூட்டத்தினுள் பெரிதும் அலமருதலும், தாயர் அவரைக் காணாமல் அலமருதலும் இயல்பாகலின் அங்ஙனம் பிரியாதபடி பாதுகாத்தற் பொருட்டென்பார், ஓம்பினர் தழீஇ என்றார். அங்ஙனம் தழீஇய பின்னரும் அவரை இறுகப் புல்லி முத்த மிடுதல் தாயன்பின் இயல்பாகலின் மீண்டும் தாம் புணர்ந்துமுயங்கி என்றார்; என்னை? மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் என்பவாகலின், தாமரைப் போது பிடித்தாங்கு என்றதனைத் தாமரை, போதினைப் பிடித்தாங்கு என எழுவாய்த் தொடர் ஆக்குக. அலர்ந்த தாமரை என்பது தோன்றத் தாதணி தாமரை என்றும், மொட்டு என்பது தோன்றப் போது என்றுங் கூறினர். ஈண்டுத் தாதணி தாமரை தாயர் கைக்கும், போது குறுமக்கள் குவிந்த கைக்கும் உவமை. இதற்கு இங்ஙனம் கூறாது, ஆசிரியர் நச்சினார்க்கினியர், திண் கதிர் மதாணி காமர் கவினிய பேரிளம் பெண்டிர் தாம் முயங்கிப் புணர்ந்து ஓம்பினர்த் தழீஇ, தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு ஓண்குறு மாக்களைத் தழீஇத் தாமும் அவரும் ஓராங்கு விளங்க, எனக் கொண்டு கூட்டிப் பெண்டிர், தாம் புணர்ந்து முயங்கிப் பாதுகாக்கும் கணவரைக் கூட்டிக்கொண்டு தாமரை மலரைப் பிடித்தாற் போலச் சிறு பிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு, தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே வளங்க என்றார். ஈண்டுச் சீலமென்றது புத்த சமயத்தில் இல்லறத்தார்க்கோதிய ஒழுக்கத்தை அவை : கொல்லாமை, திருடாமை, பிறர்மனைநயவாமை, பொய் கூறாமை, கள்ளுண்ணாமை என்னும் ஐந்துமாம். இவை பஞ்சசீலம் எனக் கூறப்படும். பழிச்சுதல்-புத்தரின் சிறப்புக்களை ஓதிப் புகழ்தல். அது வருமாறு :

வாடாப் போதி மரகதப் பாசடை
மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கும்
அருளின் தீந்தேன் நிறைந்து நனிஞெகிழ்ந்து
மலரின் மெல்லி தென்ப வதனைக்
காமர் செல்வி மாரன் மகளிர்
நெடுமா மழைக்கண் விலங்கி நிமிர்ந்தெடுத்த
வாளும் போழ்ந்தில வாயின
யாதோ மற்றது மெல்லிய வாறே (தொல்.புறம்- அறுவகைப்பட்ட என்னும் சூத்.மேற்)

என்றற் றொடக்கத்துப் புத்தர் பெருமானின் சிறப்புக்களைப் புகழ்ந்து வாழ்த்துதல் என்க. இத்தகைய இல்லறத்தாராற் போற்றப்படுதலான், புறங்காக்கும் கடவுள் பள்ளி என்றார். பவுத்தர் புத்தனை வழிபடுமிடத்தைப் பள்ளி என்றல் மரபு. இதனால், பண்டைநாள் செந்தமிழ் நாட்டில் புத்தசமயம், பரவியிருந்தமை உணரற்பாற்று. மக்கள் சமயம் பற்றி ஒருவரோடொருவர் இகல் கொள்ளாதிருந்தமையும் அறியற் பாற்று.

அந்தணர் பள்ளி

468-474 : சிறந்த வேதம் ..................... பள்ளியும்

பொருள் : சிறந்த வேதம் விளங்கப் பாடி - அதர்வவேதம் ஒழிந்த முதன்மைப்பட்ட வேதங்களை அவையிற்றின் பொருள் தமக்கு விளங்குமாறு ஓதி, விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து - அவை கூறிய சீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்கள் வேறாகாதபடி மேற்கொண்டு, நிலம் அமர் வையத்து நால்வகையான நிலங்கள் அமர்ந்த உலகத்தே, ஒரு தாம் ஆகி - ஒன்றாகிய இறை தாங்களேயாய், உயர்நிலை உலகம் இவணின்றும் எய்தும் - உயர்ந்த நிலையினையுடைய வீட்டுலகத்தை இவ்வுலகிலே நின்றே சேரும், அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின் - அறத்தின் வழி ஒரு காலமுந் தப்பாது பல்லுயிர்களிடத்தும் பரந்து பட்டுச் செல்லும் அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய, பெரியோர் மேஎய் இனிதின் உறையும் - மெய்யுணர்வுடையோர் பொருந்தி எப்பொழுதும் இன்புற்று வதியும், குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் -மலையை உள் வெளியாக வாங்கி இருப்பிடமாக்கினாற் போன்ற அந்தணர்கள் இருப்பிடமும்;

கருத்துரை : சிறந்த வேதங்களைப் பொருள் விளங்க ஓதி, ஓதியதற்குத்தக ஒழுகி, நிலவுலகத்தினராயிருந்தும் இறைப்பொருளோடு தாம் வேறாகாத அத்துவித நிலையினை உணர்ந்தவராய், இவ்வுலகிலேயே வீட்டின்பம் கைவரப் பெற்றவராய் அறநெறியிற்றவறாதவராய், எவ்வுயிரிடத்தும் செந்தண்மை பூண்டொழுகுபவராய், விளங்கும் பெரியோர் இனிதே உறையும் மலையைக் குடைந்தாலொத்த இருக்கைகளும் என்பதாம்.

அகலவுரை : இது வேத வழிப்பட்ட மேலோர் இருக்கை கூறிற்று. அதர்வ வேதம் ஒழுக்கங் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுசூழும் மந்திரங்களும் பயிறலின் அவற்றோடு கூறப்படாது, (தொல்-புறத்-20. நச்-உரை) என்பவாகலான் இருக்கும், யசுரும், சாமமுமாகிய வேதங்களை என்பார், சிறந்த வேதம் என்றார். இனி, இவையிற்றை ஓதுவார் பலரும் தமக்கு அவையிற்றின் பொருள் விளக்கமின்றியே ஓதுதல் உண்மையின், அங்ஙனமின்றிப் பொருளை நன்கு உணர்ந்தே ஓதியோர் என்பார், விளங்கப் பாடி என்றார். வேதந்தானும், எழுதப்படாமல் ஆசிரியர் ஓதுவித்தலை உடனோதியே பயிலப்படுதலான் ஓதி என்னாதே பாடி என்றார். வேதங்களினும் அற்பச் சுருதி வாக்கியம் என்பது தொழிலொழுக்கம் கூறுவது; பிரபலச் சுருதி வாக்கியம், உயிரியல் அறிவு கூறுவதென்ப. ஆகலின் கருமவொழுக்கத்தை விட்டு, ஞானவொழுக்கத்தே நிலைபெற்ற அந்தணர் என்பார், விழுச்சீர் ஒழுக்கமொடு புணர்ந்து என்றார். ஈண்டு ஒழுக்கம் என்றது ஞான வொழுக்கத்தை; அஃதாவது யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும் இக்கோணை ஞான எரியால் வெதுப்பி நிமிர்த்துத் தான் செவ்வே நின்றிடல் என்க.

யானென தென்னும் செருக் கற்றாலன்றி இறைவனுடனாய் நின்று கோடலும், அதுபற்றி வினை நுகர்ச்சியும் ஆர்ச்சிப்பும் இல்லாதாதலும், அதுபற்றிக் குற்ற மறுதலுமாகிய இவை முறையே நிகழ்தல் செல்லாமையால், அச்செருக்கறுதியைப் பயக்கும் ஒழுக்கத்தை விழுச்சீர் எய்திய ஒழுக்க மென்றார். இனி, வேதங்களை நன்கு ஓதிய வழியும், ஓதியாங்கு ஒழுகாதார்க்கு ஓதலான் வரும் துன்பமே யன்றி நன்மை சிறிதும் இன்மையான், இவ்வந்தணர் நன்கு கசடற வோதி அதற்குத் தக நிற்றலுடையார் என்பார், ஒழுக்கமொடு புணர்ந்து என்றார்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள் - 391)

என்றும்,

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (குறள் - 134)

என்றும் பெரியாரும் பணித்தல் காண்க. ஒருதாம் ஆகி என்றது அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நின்று, என்றவாறு. அஃதாவது, உயிர் கட்டற்ற நிலையில் அவ்விறைப் பொருள் இவ்வுயிரேயாய்த் தான் என வேறு காணப்படாது நின்ற முறைமையால், வீட்டு நிலையில் உயிர் அவ்விறைவனோடு உடனாய் நின்று அறியினும் தானென வேறு காணப்படுமாறின்றி அவனோடு ஒற்றுமைப்பட்டு அவனே தானாய் நின்று என்றவாறு. இவ்வாறு நிற்க வல்லார்க்கு மலமற்று மேலும் பிறத்தற்கு ஏதுவின்மையான், இம்மையினின்றே வீடெய்தல் இயல்பாகலின், உயர்நிலை உலகம் இவணின்று எய்தும் என்றார். உயர்நிலை யுலகம் - வீட்டுலகம். உயர்ந்த நிலைமையுடைய தேவருலகம் என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். மேலும், பெரியோர் மேஎய் என்றதற்குச் சீவன்முத்தராயிருப்பாரிடத்தே சில காலம் பொருந்தி நின்று என்றும், ஒருதாம் ஆகி என்றதற்கு ஒன்றாகிய பிரமம் தாங்களேயாய் என்றும், ஒழுக்கமொடு புணர்ந்து - என்றதற்கு யாகங்கள் முதலிய தொழிலோடே சிலகாலம் பொருந்தி நின்று என்றும் கூறுவர்.

அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற் பெரியோர் என்றது, அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் எனத் தேவர் ஓதியவாறு அந்தணர் இயல்பு தெரித்தோதியவாறு. அன்பு - ஈண்டு அருள் என்னும் பொருட்டு. அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை ஆகலான், அவர் இவ்வுலகத்தே இம்மையிலேயே வீட்டின்பம் கைவரப் பெற்று உறைவார் என்பார். இனிதின் உறையும் பள்ளி என்றார். இது முன்னர் நிலையாமையைக் குறிப்பான் உணர்த்திய புலவர் பெருமான் மேலும், அந்தணர் மேலிட்டு நிலைபேறுடைய வீட்டின்பம் எய்தும் நெறியையும் குறிப்பான் உணர்த்தியவாறென்க.

அந்தணர் - வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார், என்பர் நச்சினார்க்கினியர். இனி, 475-வண்டுபட என்பது தொடங்கி, 488 - தோன்ற என்னுந் துணையும் அமண்பள்ளி கூறுகின்றார்.

அமண்பள்ளி

475-488 : வண்டு .................... தோன்ற

பொருள் : வண்டுபடப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் பூவும் புகையும் சாவகர் பழிச்ச - வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேனிருந்த தோற்றத்தையுடைய பூக்களையும் புகையினையும் ஏந்தி விரதங் கொண்டோர் வாழ்த்தாநிற்ப, சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்று இவண் தோன்றிய வொழுக்கமொடு நன்கு உணர்ந்து - சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே மிக வுணர்ந்து மேலும், வானும் நிலனும் தாம் முழுது உணரும் - தேவருலகையும் அதன் செய்கைகளையும் எல்லா நிலங்களின் செய்கைகளையும் நன்றாக உணருகின்றவரும், சான்ற கொள்கைச் சாயா யாக்கை ஆன்று அடங்கு அறிஞர் - தமக்கு அமைந்த விரதங்களையும் அவ்விரதங்கட்கு இளையாத மெய்யினையும் கல்விகளெல்லாம் நிறைந்து களிப்பு அடங்கின அறிவினையும் உடையார், செறிந்தனர் நோன்மார் - நெருங்கினராய் இருந்து நோற்றற்கு, கல் பொளிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி - கல்லைப் பொளிந்தாற் போன்ற ஒடுங்கிய வாயையுடைய குண்டிகையைப் பல வடங்களையுடைய நூலுறியிலே தூக்கி, நல்குவர - பிறர்க்கு அருளுதலையுடைய, கயங்கண்டன்ன - குளிர்ச்சியாற் குளத்தைக் கண்டாலொத்த, வயங்கு உடை நகரத்து - விளங்குதலுடைய கோயிலிடத்து, செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து - செம்பாற் செய்தாலொத்த செவ்விய சுவர்களை ஓவியம் எழுதி, நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து கண் பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து ஓங்கி, இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கையும் - வியப்பமைந்த நறிய பூக்களையுடைய அமண்பள்ளியும், குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற - மலைகள் பலவும் திரண்டு பொலிவன போலத் தோன்றாநிற்ப;

கருத்துரை : வண்டுகள் படியுமாறு பருவம் முதிர்ந்த தேன் இருந்த அழகிய பூக்களோடே, புகையினையும் பலியாக ஏந்திச் சாவக நோன்பிகள் அருகனை வாழ்த்தாநிற்ப, சென்ற காலத்தையும், எதிர்காலத்தையும் நிகழ்கால நிகழ்ச்சியோடே உணர்ந்து வான் முதலிய உலகங்களின் இயல்பினையும் உணர்ந்து கொண்டவரும், தமக்கமைந்த விரதங்களையும், அவ்விரதங்கட்கு இளையாத மெய்யினையும், கல்வியெல்லாம் நிறைந்த அறிவினையும் உடையோரும் ஆகிய சான்றோர் நெருங்கி நோண்பாற்றுதற்கு வேண்டிய கல்லைப் பொளிந்தாற் போன்ற ஒடுங்கிய வாயையுடைய குண்டிகைகளைப் பல வடங்களையுடைய நூலுறியிலே இட்டு வழங்கும் இடமாகிய குளத்தைக் கண்டாலொத்த குளிர்ச்சியை உடைய அருகக் கடவுளின் திருக்கோயிலிடத்தே அமைந்த செம்பாற் செய்தாலொத்த சுவர்களிலே ஓவியம் தீட்டப் பெற்றுக் கண்பார்வைக்கும் எட்டாது மேனிலமுயர்ந்து ஓங்கி வியப்பூட்டுகின்ற நறிய பூஞ்சோலைகளையுடைய அமணர் பள்ளியும் மலைகள் பல சேர நின்றார் போன்று தோன்றா நிற்ப என்பதாம்.

அகலவுரை : கடவுட் பள்ளியும், அந்தணர் பள்ளியும், நறும்பூஞ் சேக்கையும் குன்று பல குழீஇப் பொலிவன போன்று தோன்ற என இயைத்துக் கொள்க.

பழுநிய-முதிர்ந்த. புகை-அகில் முதலியவற்றையிட்டுப் புகைக்கும் நறிய மணப்புகை. சாவகர் - சமணரில் விரதங்காக்கும் இல்லறத்தார். சாவக நோன்பிகள் அடிகளாதலின் (சிலப்-15:18) என்றார் இளங்கோவடிகளாரும். கொல்லாமை இரவுண்ணாமை முதலியன அவ்விரதங்களாம்.

இறந்த பிறப்பிற்றாம் செய்த வினையை அறிந்து கோடலும், இனிப் பிறந்தெய்தும் வினையின் பயனை அறிந்து கோடலும், பிறந்த பிறப்பின் கண் நிகழ்கால ஒழுக்கம் காரணமாகக்கொண்டு செய்ய வல்லுநர் என்பார், சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்றிவட் டோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து என்றார். இதனை,

இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணாயோ நீ (சிலப். 11. 156-7)

என்னும் கவுந்தியடிகளார் மொழியானும் உணர்க. வானும் நிலனும்தாம் முழுதுணரும் என்றது. தேவகதி, மக்கட்கதி, விலங்கு கதி, நரக கதிகளை நன்கு ஓதி உணர்ந்த என்றவாறு. சான்ற கொள்கை - தந்நிலைக்கேற்ற விரதம்: இனி, சான்ற கொள்கையாவது,

ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகந் திறவா
காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாமம் அல்லது நவிலா தென்னா
ஐவரை வென்றோன் அடியிணை யல்லது
கைவரை காணினும் காணா என்கண்
அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதென்
பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது
அருக ரறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லதென்
கலைமிசை உச்சி தானணி பெறாஅ
திறுதியி லின்பத் திறைமொழிக் கல்லது
மறுதர வோதியென் மனம்புடை பெயரா (சிலப்-நாடு-164-207)

என்னும் சிறந்த கொள்கைகளைக் கடைப்பிடித்தல் எனினுமாம்.

ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி ஐந்தின் மென்வகை தெரியும் சிந்தை விளக்கு நின்றெரியவிட்டுப், பொய் கொலை களவு காமம் அவாவிருள் புகாது போற்றும் தற்றௌல் வாழ்க்கை, ஆற்றலுடையார்க்கே கடைபோதலின் சாயா யாக்கை என்றார்; ஆவது, அருக பரமன் அருளிய பரமாகமத்திற் கண்டவிரதங்கட்கு இளையாத மெய் என்றவாறு. கல்வியான் நிறைந்து அறிவின்கட் களிப்பின்றி அடங்கிய மெய்யுணர் பெரியோர் என்பார் ஆன்றடங்கு அறிஞர் என்றார். ஆன்றவிந் தடங்கிய சான்றோர் (புறம்-191) என்றார் பிறரும். நோன்மார் - நோற்கும் பொருட்டு. இட்டுவாய் - ஒடுங்கிய வாய். பல்புரிச் சிமிலி - பல புரிகளையுடைய நூலுறி. நல்குவர - வழங்குதல் உண்டாக. நோற்றற்குரிய சிமிலி முதலியவற்றைப் பள்ளியிலே வழங்குதல் உண்டாக என்க. நல்குவர என்றதற்குச் செறிந்தனர் நோன்மார் பிறர்க்குச் சொல்லுதல் உண்டாக எனினுமாம். நல்குவரப் புனைந்து ஓங்கிய சேக்கை என இயைத்துக் கொள்க. சேக்கை - சேக்குமிடம்; உறைவிடம். இனி 424-மழை என்பது தொடங்கி 488 - தோன்ற என்னுந் துணையும் விரிந்து கிடந்த இத்தொடர்ப் பொருளை, முந்நீர் போல, எழுநாளந்தியில் நாடு ஆர்த்த ஆரவாரம் போன்றது நனந்தலைக்கண் பேராரவாரம், கலிங்கம் வாளொடு கட்டி அளைஇக் கடைஇக் கழியும் செல்வர், நாண் மகிழ் இருக்கையிலிருந்து காண, பூந்தொடி மகளிர் முகம் தோன்றுபு மறைய இயற்றிய நெடியோன் தலைவனாகப் பெரியோர்க்குப் பலிகொடுமார் தூரியங் கறங்க. பெண்டிர் பழிச்சிப் புறங்காக்கும் பள்ளியும் அந்தணர் பள்ளியும் அமண் பூஞ்சேக்கையும், குன்றுகுழீஇ யன்ன தோன்ற, என அணுகக் கொண்டு காண்க.

அறங்கூ றவையத்தார் தெரு

489-492 : அச்சமும் .................... அறங்கூ றவையமும்

பொருள் : அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி - நடுவாகக் கூறுவாரோ கூறாரோ என்று அஞ்சிவந்த அச்சத்தையும் அவர்க்குத் தோல்வியால் நெஞ்சிற் றோன்றும் வருத்தத்தையும் அவர் தம் நெஞ்சு கருதின பொருள்கள் மேற் றோன்றும் பற்றுள்ளத்தினையும் போக்கி, செற்றமும் உவகையும் செய்யாது காத்து - ஒரு கூற்றில் செற்றம் செய்யாமல் ஒரு கூற்றில் உவகை செய்யாமல் தம் நெஞ்சினைப் பாதுகாத்து, ஞெமன் கோல் அன்ன செம்மைத்தாகி - துலாக்கோலை ஒத்த நடுவு நிலைமையை உடைத்தாய், சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும் - இக் குணங்களாற் சிறந்த விரதங்களையுடைய அறநூலைச் சொல்லும், அவையமிருக்கும் தெருவிடத்தும்;

கருத்துரை : வழக்கிடுவோர் உள்ளத்தே இவர் நடுக் கூறுவர் கொல், கூறார்கொல்! என்னும் ஐயத்தான் எழுந்த அச்சத்தையும், தோற்றுழி அவர்க்குளதாம் வருத்தத்தையும், அவர் தோற்குமாறு தொடர்தற்குக் காரணமான பற்றுள்ளத்தையும் போக்குபவராய், வழக்குத் தொடர்ந்தோருள் ஒருவர்பால் செற்றமும், ஒருவர்பால் உவகையும் செய்யாமல், தாம் தம்முடைய நெஞ்சினைப் பாதுகாத்துத் துலாக்கோல் போன்ற நடுநிலையுடையராய், அறத்தையே மேற்கொண்டு, அதனை வழக்கிட்டோர்க்கு விளங்கக் கூறும் சான்றோர்கள் கூடியிருக்கும் தெருவினிடத்தும் என்பதாம்.

அகலவுரை : அறங் கூறுவோர், வழக்கிடுவோர் அஞ்சவேண்டாத நிலையில் உயரிய குணஞ் செயல்களானே புகழ்வாய்ந்தவராய் விளங்குமாற்றானே அவர் உளத்தே அச்சம் போக்குவர் என்றபடி.

அவலம் நீக்கி என்றது, வழக்கிடுவோர் இருவருள் ஒருவர் வென்றால் ஏனையோர் தோற்றல் இயல்பாகலின், தோற்றவர் உளத்தே வருத்தந் தோன்றுங்கால் அவர்பால் அருள்கூர்ந்து அவர்க்கு அறங்காட்டித்தேற்றி என்றவாறு. ஆர்வம் நீக்கி என்றது, ஒரு பொருளைத் தனித்தனியே எனதென தென்றிருக்கும் பற்றுள்ளம் காரணமாகத் தம்முள் மாறுபடுவோர் இருவருள் ஒருவரே அப்பொருட்குரியவராதலும் மற்றொருவர் அறியாமையான் அதனைத் தனது என்று பற்றுள்ளம் உடையராதலும் இயல்பன்றே! அங்ஙனம் அறத்திற்கு முரணாகப் பற்றுள்ளம் கொண்டார் தோற்றுழி, அவர் வருந்தாமே அவர் செய்த பற்றுத் தவறுடைத்தாதலை அவர் மனங்கொளக் காட்டி, அப் பற்றொழித்து அவர் இன்புறுமாறு செய்து என்றபடி. அறங்கூறுவோர் நடுநிலை பிறழ்தற்குக் காரணமாவது ஒரு கூற்றில் வெறுப்பும், ஒரு கூற்றில் விழைவும் கோடலாம் ஆகலின், வழக்கிடுவோர் இருவருள், தமர், பகைவர் என்னும் வேறுபாடின்றி எல்லோரையும் சமமாகக் கொள்ளற்குரிய பெரியோர் என்பார், செற்றமும் உவகையும் செய்யாது காத்து என்றார்.

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின் (குறள் - 111)

எனத் தேவரும் கூறுதல் காண்க.

காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணந் தோன்றா தாகும் உவப்பதன்கண்
குற்றமுந் தோன்றா கெடும் (அறநெறிச்-22)

என்றார் பிறரும்.

ஞெமன் கோல் - துலாக்கோல். முன்னே தான் சமமாக நின்று, பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாக்கோல் போன்று முன்னே செற்றமும் உவகையும் செய்யாது தன்னை நடுநிலைக்கண் நிறுத்திப் பின்னர்ப் பகை நொதுமல் நட்பென்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பவுரைக்கும் செப்பமுடைய அவையம் என்பார், ஞெமன் கோல் அன்ன செம்மைத்தாகி என்றார். இத்தொடரோடு,

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோக் கணி (குறள் - 118)

என்னும் திருக்குறளை ஒப்புக் காண்க.

கேடும் பெருக்கம் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி (குறள் - 115)

என்னும் மேலான கொள்கையை எப்போதும் கடைப்பிடித்தொழுகுவார் அவை என்பார், சிறந்த கொள்கை அறங்கூ றவையம் என்றார். சமயங்கட்குப் பின்னாக. மாந்தர் வாழ்க்கைக்கு அறங்கூ றவையம் சிறந்ததாகலின் சமய நிலையங்களை அடுத்து ஏனையவற்றின் முன்னாக இதனைக் கூறினர் என்க. பண்டைநாள் தமிழ் மன்னர்கள் இத்தகைய சிறந்த அறங்கூறவையங்களை நிறுவி அவற்றால் அறங்கெடாது போற்றிய செய்தியை இதனானும் மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, அறங்கெட வறியாதாங்கு, (நற்-400 : 7-8) என்றும், அறங்கெழு நல்லவை, (அகம்-93:5) என்றும், உறந்தை யவையத்து அறம் நின்று நிலையிற்று, (புறம் 39:8-9) என்றும், அறம் நிலைபெற்ற அருள்கொள் அவையத்து (பெருங் -1-34-25) என்றும் பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க.

காவிதி மாக்களாகிய அமைச்சர் தெரு

493-499 : நறுஞ்சாந்து .................. காவிதிமாக்களும்

பொருள் : நறுஞ் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து -நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடையவராய், ஆவுதி மண்ணி - யாகங்களைச் செய்து, அவிர் துகின் முடித்து - விளங்குகின்ற மயிர்க்கட்டுக் கட்டி, மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல-பெரிய சுவர்க்கத்தே ஏறப்போம் சான்றோர்களைப் போன்று, நன்றுந் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி - நன்மை தீமைகளைத் தம் அறிவாலே கண்டு மேலும் ஆராய்ந்து தெளிந்து தம் மனம் தீதின்பாற் செல்லாதவாறு அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து - இல்வாழ்க்கைப் பண்பும் பயனுமாயமைந்த அன்பு நெறியினும் அறச் செயலினும் ஒழுகுதல் ஒழியாதபடி எக்காலமும் குறிக்கொண்டு பாதுகாத்து, பழி ஒரீஇ உயர்ந்து சான்றோராற் பழித்தொதுக்கப்பட்ட தீவினையினின்றும் விலகி அதனானே உயர்ச்சி எய்தி, பாய் புகழ் நிறைந்த செம்மைசான்ற காவிதி மாக்களும் - வறியோர்க்கு வழங்குதலான் உலகெலாம் பரவுகின்ற புகழானே நிறைவுற்ற தலைமையமைந்த காவிதிப் பட்டம் பெற்ற வேளாளராகிய அமைச்சர்கள் வாழும் தெருவினிடத்தும்;

கருத்துரை : நறிய சந்தனத்தைப் பூசி நிறம் விளங்கும் மார்பினையுடையராய் வேள்விகள் பலசெய்து விளங்குகின்ற மயிர்க்கட்டுக் கட்டி, பெரிய சுவர்க்கத்தே ஏறப்போகும் சான்றோர் போல நன்மை தீமைகளை அறிவாலே ஆராய்ந்து தெளிந்து தம் நெஞ்சத்தைத் தீதின்பாற் செல்லாது அடக்கி இல்லறத்திற்குரிய அன்பும் அறமும் நீங்காது இயற்றிப் பழிப்பன விலக்கி ஈகையாற் பரவிய புகழான் நிறைந்தவரும் காவிதிப்பட்டம் பெற்றவரும் வேளாளரும் ஆகிய அமைச்சர் வாழும் தெருவிடத்தும் என்பதாம்.

அகலவுரை : ஈண்டுக் கூறப்படும் காவிதிமாக்கள் பாண்டிநாட்டு மன்னராற் சிறப்புக் குறித்து வழங்கப்படும் காவிதிப்பட்டம் பெற்றவரும், முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்கு உரியவரும் பெருநிதிக் கிழாரும் ஆகிய வேளாளர் என்க. இப்பட்டம் பெற்றமைக்கு அறிகுறியாகக் காவிதிப்பூ என்னும் பொற்பூ வழங்குதன் மரபு. இப்பட்டத்திற்குப் பெண்டிரும் உரியர் என்பதனை எட்டி காவிதிப் பட்டந் தாங்கிய மயிலியன் மாதர் (23: 144-5) எனவரும் பெருங்கதையான் அறியலாம்.

இவர் அமைச்சியல் பூண்டொழுகும் உரிமையும் உடையார் என்பதனாற் காவிதி மாக்கள் என்றதற்குக் காவிதிப்பட்டம் கட்டின அமைச்சர் என்று நச்சினார்க்கினியர் ஓதினர். அதற்கேற்பவே, முன்னரும், நன்றும் தீதும் கண்டாய்ந் தடக்கி-என்றதற்கு, அரசனிடத்துள்ள நன்மையும் தீமையும் நெஞ்சத்தாலே கண்டு அத்தீங்குகளை யாராய்ந்து அவற்றிலே ஒழுகாமல் அடக்கி என்றவாறு வலிந்து பொருள் விரிப்பாராயினர். ஆவுதி-வேள்வி. வேள்வி செய்வோர்க்குச் சந்தனம் பூசுதல் மரபாகலின் நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து என்றார். அவிர் துகின் முடித்தலாவது விளங்குகின்ற தலைப்பாகையணிதல். இத் தலைப் பாகையும் காவிதிப்பட்டம் பெற்றமைக்கு அறிகுறி என்க.

மேலுலகம் எய்தும் குறிக்கோளுடைய பெரியோர் நன்றுந் தீதும் கண்டு ஆய்ந்து அடக்குமாறு போல நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கிய காவிதிமாக்கள் என வினை உவமமாக்குக. சான்றோர் ஓதிய மெய்ந்நூல்களை ஓதி நன்மை தீமைகளை ஆராய்ந்து தெளிந்து தீதொரீஇ நன்றின்பா லுய்க்கும் அறிவுடையோர் என்க. இவர் இல்லற நெறிக்கண் வழுவாது நின்று ஒழுகுவோர் என்பார் அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த காவிதி மாக்கள் என்றார். என்னை?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள்-45)

என்றும்,

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்று மில் (குறள் - 44)

என்றும்,

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன் (குறள் - 46)

என்றும்,

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதியம் இல்லை உயிர்க்கு (குறள்-231)

என்றும் தமிழ்த் திருமறை முழங்குதலான் என்க. செம்மை-ஈண்டுத் தலைமைத்தன்மை மேற்று. ஆவுதி-பெரியோர்க்கு யாகமும் காவிதி மாக்கட்கு விருந்தோம்பலும் என்க. யாகம் செய்து விசும்பு வழங்கும் பெரியோர் போல விருந்தோம்பி விசும்பு வழங்கும் காவிதி மாக்களும் என்றவாறு.

வணிகர் தெரு

500-506 : அறநெறி .............. பகர்தரும்

பொருள் : அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி - நூலோர் தமக்கோதிய நெறியிற் றவறாது இல்லற நெறியிலே நடந்து, குறும் பல் குழுவின் குன்று கண்டன்ன - அண்ணிய பல திரட்சியையுடைய மலைகளைக் கண்டாலொத்த, பருந்து இருந்து உகக்கும் பன் மாண் நல்இல் - பருந்துகள் இளைப்பாறி இருந்து பின்னர் உயரப் பறக்கும் பல தொழிலான் மாட்சிமைப்பட்ட நல்ல இல்லில், பல்வேறு பண்டமொடு ஊன் மலிந்து கவினி - பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பல உணவுகளும் மிக்கு அழகுபெற்று, மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் - மலையிடத்தனவும் நிலத்திடத்தனவும் நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய, பல்வேறு திருமணி முத்தமொடு பொன் கொண்டு - பலவாய் வேறுபட்ட அழகினையுடைய மணிகளையும் முத்துக்களையும் பொன்னையும் வாங்கிக்கொண்டு, சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும் - சிறந்த அயல்நாட்டுப் பண்டங்களை விற்கும் வணிகர் வாழும் தெருவிடத்தும்;

கருத்துரை : நூலோர் தமக்கு ஓதிய நன்னெறியிற் பிறழாதவராய், இல்லறத்தி னிற்பாராய், மலைகளின் திரட்சியைக் கண்டாற் போன்ற பருந்துகள் இளைப்பாறி இருந்து பின்னர்ப் பறத்தற்குக் காரணமான தொழின் மாண்புடைய இல்லத்தின்கண் இருந்து, பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே உணவுப் பொருள்களும் மிக்கு அழகுபெற்று, மலையிடத்தும் நிலத்திடத்தும் நீரிடத்தும் பிற இடங்களினும் தோன்றுதலை யுடையனவும், பலவாய் வேறுபட்ட அழகுடையனவுமாகிய மணிமுத்து பொன் முதலியவற்றைப் பண்டமாற்றாகப் பெற்று அயல் நாட்டினின்றும் கொணர்ந்த பண்டங்களை விற்கும் வணிகர் உறையும் தெருவிடத்தும்,

அகலவுரை : வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின் (குறள் - 120)

என்றும்,

வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும்பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதூ உமிகைகொளாது கொடுப்பதூ உங்குறை கொடாது
பல்பண்டம் பகர்ந்து

என்றும் வருவன வணிகர்க்குச் சிறந்துரிமையுடைய அறமென்க. தம் வணிக நெறியினும் இல்லற நெறியினும் பிறழாதென்பார், அறநெறி பிழையாது ஆற்றின்ஒழுகி, என்றார். ஆறு - இல்லறத்திற்கோதிய நெறி. என்னை? அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என இல்லறம் துறவறம் இரண்டனுள்ளும் இல்லறத்தையே சிறப்பித்தோதலான் அச்சிறப்புக் கருதி ஆறு என்றார் என்க. வணிகர் இல்லறநெறியிற் றலைசிறந்து நிற்றலை, வருநிதி பிறர்க் கார்த்தும் மாசாத்து வானென்பான் (சிலப். 1: 33) என்றும்,

ஈட்டிய தெல்லா மிதன்பொருட் டென்பதே
காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறும்
காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர்
தாமரையும் சங்கும்போற் றந்து (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு-குடிமரபு)

என்றும் வருவனவற்றால் அறிக. உயரப் பறக்கும் இயல்புடைய பருந்துகள் ஆண்டே தங்கி இளைப்பாறுதற்குத் தக, உயர்ந்தனவாகிய இல்லென்பார் பருந்து இருந்து உகக்கும் இல்லென்றார்; பல்வேறு சிற்பத் தொழிலும் நிறைந்த இல்லென்பார் பன்மாண் இல்லென்றார். உகத்தல் - ஏறப்பறத்தல். மணிகள் - மலையிடத்தும் நிலத்திடத்தும் கடலிடத்தும் பிறவிடத்தும் பிறத்தலுண்மையின் மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் என்றார். இத் தொடரைப் பண்ணியம் என்பதனோடியைப்பர் நச்சினார்க்கினியர். சிறந்த தேஎத்துப் பண்ணியம் என்றது, இன்னபண்ணியம் இன்ன நாட்டிற்றோன்றியது சிறப்புடைத்து என்னும் சிறப்புடைய அயல்நாட்டுப் பண்டம் என்றவாறு. அவை,

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குடகடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும் (பட்டின. 187-91)

என்றாற் போல்வன. பண்ணியம் - பண்டங்கள். பகர்நர் - விற்போர்; என்றது வணிகர் என்றவாறு. ஊண் மலிந்து கவினி பொன்கொண்டு பண்ணியம் பகர்நரும் என்க.

நாற்பெருங் குழுவினர் உறையும் தெரு

507-510 : மழை .................. குழுவும்

பொருள் : மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள் - மழைபெய்தல் இடையறாமையாலே தவறாத விளைவினையுடையதாகிய, பழையன் மோகூர் அவையகம் விளங்க -பழையன் என்னும் குறுநில மன்னனுடைய மோகூரிடத்து அரசவை திகழுமாறு, நான்மொழிக்கோசர் என்பார் வீற்றிருந்தாற் போன்று வீற்றிருக்கும், தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் - தாம் தமது ஒழுக்கத்தாலே மேலாய் விளங்கிய நால்வகைப்பட்ட பெரிய குழுவினர் வாழும் தெருவினிடத்தும்;

கருத்துரை : இடையறாது மழைபெய்தலாலே தவறாத விளைவினையுடைய பழையன் என்னும் குறுநில மன்னனின் மோகூரின்கண் அரசவையிடத்தே நான்மொழிக்கோசர் என்பார் சிறந்து விளங்குமாறு போல விளங்குவோரும் தம் ஒழுக்கத்தாலே மேன்மையுற்றோரும் ஆகிய நால்வகைப்பட்ட கூட்டத்தினர் வாழும் தெருவினிடத்தும் என்பதாம்.

அகலவுரை : மழை ஒழுங்கு அறாமையான் என ஏதுவாக்குக. பிழையா விளையுள் - தவறாத விளைவு. தவறாத விளையுளையுடைய மோகூர், பழையன் மோகூர் எனத் தனித்தனி கூட்டுக. பழையன் - கொங்கு மண்டலத்துள்ள மோகூரின்கண் இருந்த ஒரு குறுநில மன்னன் என்றும், இவன் சேரமன்னரைப் பகைத்துப் பாண்டியமன்னருடன் நட்புக் கொண்டிருந்தான் என்றும், இவன் காவன் மரம் வேம்பு எனத் தெரிவதாலும் இவனை மாறன் எனக் கூறுதலாலும் இவன் பாண்டிய மன்னரின் மரபினனாதல் வேண்டும் என்றும் எண்ண இடமுளது. இதனை,

பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்புமுதல் தடிந்த வேந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள் (சிலப். 27-124-6)

என்றும்,

பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி (பதிற் : 5-பதிகம்)

என்றும்,
மோகூர்ப்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த (அகம்; 251-10-13)

என்றும், பிறர் கூறுமாற்றானும் அறிக.

இனி, இம் மன்னன் அவையகத்தே சிறந்து விளங்கிய கோசர் என்பார் ஈண்டு நாற்பெருங் குழுவினர்க்கு உவமை கூறப்படுதலின் பழையன் அவையகத்தே இவர் நாற்பெருங் குழுவினராக விளங்கினர் போலும். இவர்கள் மிகச் சிறந்து விளங்கினர் என்பது இவரை உவமையாக எடுத்துக் கூறலான் உணரப்படும். இவர்கள் பாண்டிய மன்னர்க்கு அடங்கி யொழுகும் நட்பினர் என்பதை,

பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் தலைவனாக
கடந்தடு வாய்வா ளிளம்பல் கோசர்
இயனெறி மரபினின் வாய்மொழி கேட்ப (771-4)

என இந்நூலிற் பின்னர்க் கூறப்படுதலானும், அதுகேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு (கண்ணகிக்கு) விழவொடு சாந்தி செய்ய மழைத் தொழில் என்றும் மாறாதாயிற்று (சிலப்) என ஆசிரியர் இளங்கோவடிகளார் உரைபெறு கட்டுரையிற் கூறலானும் உணரலாம். (சிலப்) அரும்பதவுரையாசிரியர் இக்கோசரைக் குறும்பு செய்யும் சில வீரர் என ஓதுவர். அடியார்க் நல்லார் கொங்கு மண்டிலத்து இளங்கோவாகிய கோசர் என்பகுபர்லிளங் கோசர் என்னும் குறிப்பானும் நான்மொழிக்கோசர் என்பதனானும் இவர் நால்வேறு மொழிகளையும் பேசி வந்தனர் என்று எண்ணக்கூடும். ஆசிரியர் நச்சினார்க்கினியர், நாற்கோசர் மொழி தோன்றியன்ன என மாறி நான்கு வகையாகிய கோசர் வஞ்சின மொழியாலே விளங்கினாற் போன்ற என்றார். அரசொடுபட்ட ஐம்பெருங் குழுவில் அமைச்சர் குழுவினைப் பிரித்து (499) முன்னர்க் கூறினர் ஆதலின் ஈண்டு ஏனை நாற்பெருங் குழுவும் கூறுவாராயினர். ஐம்பெருங் குழுவினராவார்: அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதர் ஒற்ற ரிவரென மொழிப, ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் (5:157) எனச்சிலப்பதிகாரத்தும் வருதல்காண்க. அறங்கூறவையம் காவிதி மாக்கள் வணிகர் நாற்பெருங்குழு என்னும் நான்கும் அவர்கள் உறையும் தெருக்களைக் குறித்த ஆகுபெயர் ஆகக்கொள்க.

பல்வேறுவகைத் தொழில்செய்வாரும் பிற வணிகரும்

511-522 : கோடு .................. நிற்றர

பொருள் : கோடு போழ் கடைநரும் -சங்கினை அறுத்து வளையல் முதலியனவாகக் கடைவாரும், திருமணி குயினரும் - அழகிய மணிகளைத் துளையிடுவாரும், சூடு உறு நன்பொன் சுடர் இழை புனைநரும் - சுடுதலுற்ற நன்றாகிய பொன்னை விளங்கும் பணிகளாகப் பண்ணும் தட்டார்களும், பொன் உரை காண்மரும் - பொன்னை உரைத்த உரையை அறுதியிடும் பொன்வாணிகரும், கலிங்கம் பகர்நரும் - புடைவைகளை விற்பாரும், செம்பு நிறை கொண்மரும் - செம்பு நிறுக்கப்பட்டதனை வாங்கிக் கொள்வாரும், வம்பு நிறை முடிநரும் - நச்சுக்களைத் தம் தொழின் முற்றுப்பட முடிவாரும், பூவும் புகையும் ஆயும் மாக்களும் - பூக்களையும் சாந்தையும் நன்றாக ஆராய்ந்து விற்பாரும், எவ் வகைச் செய்தியும் உவமம் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள்வினைஞரும் - பலவகைப் பட்ட தொழில்களையும் ஓவியத்தொழிலாளரும், பிறரும் கூடி - ஈண்டுக் கூறப்படாத பிறரும் கூடி, தெண்டிரை அவிர் அறல் கடுப்ப ஒண்பல் குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து - தெளிந்த திரையில் விளங்குகின்ற அறலையொப்ப ஒள்ளிய பலவாகிய சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து, சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ - சிறியோரும் பெரியோருமாகிய நெய்தற் றொழிலைச் செய்வாரும் திரண்டு, நால்வேறு தெருவினும் கால்உற் நிற்றர - நான்காய் வேறுபட்ட தெருவுகள்தோறும் ஒருவர் காலோடு ஒருவர் கால் நெருங்க நிற்றலைச் செய்ய;

கருத்துரை : சங்குகளை அறுத்து வளையல் முதலியனவாகக் கடைவாரும், மணிகளைத்துளையிடுவாரும், பொன்னை உரையிட்டு அறுதியிடும் பொன்வாணிகரும், புடைவை விற்பாரும், செம்பினை நிறுத்து வாங்குவாரும், கச்சுக்களை முடிவாரும், பூக்களையும் சாந்தையும் ஆராய்ந்து விற்பாரும், ஓவியம் எழுதுவாரும், இன்னோரன்ன பிறரும் கடலின் கண் விளங்கும் அறலைப் போன்று மடிப் புடைவைகளை விரித்துச் சிறியோரும் பெரியோருமாகிய நெய்தற்றொழில் செய்வாரும் திரண்டு நான்கு வேறுபட்ட தெருவுகள்தோறும் ஒருவர் காலோடு ஒருவர் கால் பொருந்துமாறு நிற்றலைச் செய்ய என்பதாம். (நிற்றலைச் செய்தலால் எழுந்த ஓசையும் என்க.)

அகலவுரை : கோடு-சங்கு. போழ்-துண்டு. சங்கினை அறுத்த போழ் என்க. கடைநர் - கடையும் தொழிலைச் செய்வோர். திருவணி - செல்வமாகியமணியுமாம். குயினர் -துளையிடுவோர். குயிலுதல்-துளையிடுதல். பொன்னை உருக்கிப்பணி செய்தலின் சூடுறு நன்பொன் என்றார். இனிச் சுட்டதனால் நன்றாகிய பொன் எனினுமாம். சுடச் சுடரும் பொன் என்றார் வள்ளுவனார். சுடர் இழை - விளங்கும் அணிகலன். இழைநனைநர் என்றது தட்டாரை. பொன்னைக்கட்டளையின் இழைத்து அதன் உயர்பிழிவு கண்டு வாங்கும் பொன்வாணிகரைப் பொன் உரைகாண்மர் என்றார். பொலந்தெரி மாக்கள் (சிலப்-14: 203) என்பர் இளங்கோவடிகளார். அதற்குப் பொற்பேதத்தைப் பகுத்தறியும் பொன்வாணிகர் எனப் பொருள் விரிப்பர் அடியார்க்கு நல்லார்.

கலிங்கம் - ஆடை. பகர்நர் -விற்போர். வம்பு-கச்சு, புகை-புகையுறுப்பு. அவையாவன : நேர்கட்டி செந்தேன் நிரியாசம் பச்சிலை ஆரம் அகில் உறுப்போ டாறு (சிலப் 5: 14) என இவை. பூ - விடுபூ தொடைப்பூ கட்டுப்பூ வென்னும் மூவகைப் பூவும் என்க. எடுத்த மொழியின் இனம் செப்புமாற்றால் விரையும் கொள்க. என்னை? பூவும் புகையும் மேவிய விரையும் (சிலப் 5: 14) என்றோதுபவாகலான் அவை கோட்டந் துருக்கம் தகரம் அகில் ஆரம் என்னும் ஐந்துமரம் என்க.

கூரிய அறிவுடையார்க் கன்றி ஓவியத் தொழில் இயற்ற வாராமையின் நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞர் என்றார். நுழைந்த நோக்காவது, பொருளின் இயல்புகளை நுணுகிக் காணும் நோக்கு. நோக்கினார் கண்ணுள் தம் தொழிலை நிறுத்தலின் கண்ணுள் வினைஞர் என்றார் என்பர் நச்சினார்க்கினியர். கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும் (சிலப். 5: 30) என்றும் எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி, வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய, கண்கவர் ஓவியம் (மணி-3: 126-31) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க. அவிர் அறல் - புடைவையின் மடிப்பிற்கு உவமை. கம்மியர் - தொழிலாளர். காலுற - காலோடு கால் பொருந்த. நிற்றர - நிற்க. தர: பகுதிப் பொருளது.

523-526 : கொடும்பறை ............... கடுப்பப் பலவுடன்

பொருள் : கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும் - கண்கள் வளைந்த பறையினையுடைய கூத்தருடைய சுற்றம் சேர வாழ்த்தும், தண் கடல் நாடன் ஒண் பூங்கோதை பெருநாள் இருக்கை - குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய ஒள்ளிய பனந்தாரையுடைய சேரனுடைய பெரிய நாளோலக்க இருப்பிலே, விழுமியோர் குழீஇ விழைவுகொள் கம்பலை கடுப்ப - எல்லாக் கலைகளையும் உணர்ந்த சீரியோர் திரண்டு அவன் கேட்பத் தருக்கங்களைக்கூறி விரும்புதல் கொண்ட ஆரவாரத்தை ஒப்ப, பலவுடன் - பல ஆரவாரத்தோடே;

கருத்துரை : வளைந்த கண்களையுடைய பறையினையுடைய கூத்தருடைய சுற்றம் ஒரு சேர வாழ்த்தாநின்ற குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனவாகிய பனந்தார் சூடும் சேரமன்னனுடைய நாளோலக்க இருக்கையிற் கலையினை முழுதும் உணர்ந்த சீரியோர் கூடித் தருக்கஞ் செய்யுங்கால் எழும் ஆரவாரத்தை ஒப்ப நால்வேறு தெருவினும் ஆரவாரம் உண்டாக என்பதாம்.

அகலவுரை : கோடியர் - கூத்தர். பாடல்பற்றிய பயனுடையெழால் கோடியர் தலைவ (பொருநரா 56-7) என்றார் பிறரும். கூத்தரைப் பரிசில் வழங்கிப் பெரிதும் பேணுதலுடைமையால் அவர்கள் சுற்றம் ஒரு சேர வாழ்த்திற்றென்க. கடும்பு - சுற்றம். குடகடற் கரைசார்ந்த நாடாகலின், சேரநாட்டை தண்கடல் நாடு என்றார். ஒண்பூ - அடையாளப் பூவாகிய பனம்பூ. இது பொன்னாற் செய்யப்படுதலின், ஒண்பூ என்றார். கோதை - சேர மன்னன். கோதை என்பது சேர மன்னர்க்குரிய பெயர்களுள் ஒன்று: இதனை, மாவள்ளீகைக்கோதையும் (புறம்-172) என்றும் சேரமான் கோதை என்றும், சேரமான் குட்டுவன் கோதை என்றும் வருவனவற்றாலறிக.

சேரன் அவைக்களத்தே பல சமயத்தோரும் கூடிச் சொற்போர் புரிவர் போலும்; இதனை,

நறைகமழ் கூந்த னங்கை நீயும்
முறைமையின் இந்த மூதூர் (சேரன் தலைநகர்) அகத்தே
அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு (மணி-வஞ்சி-62-4)

எனவரும் மணிமேகலையானும் உணரலாம்.

கனியும் காயும் இனியன பிறவும்

527-535 : சேறும் .................. நுகர

பொருள் : சேறும் நாற்றமும் வேறு படக் கவினிய - சாற்றானும் மணத்தானும் ஒன்றற் கொன்று வேறுபட அழகுற்ற, பலவின் சுளையும் தேமாங்கனியும் - பலாப்பழத்தினது இனிய சுளைகளையும் இனிய மாவின் பழங்களையும், பல்வேறு உருவிற்காயும் பழனும்-இன்னோரன்ன பலவாய் வேறுபட்ட காய்களையும் பழங்களையும், கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி - மழை பருவத்தே பெய்து வளர்க்கையாலே கொடிகள் விட்டு அழகு பெற்று, மென்பிணி அவிழ்ந்த குறுமுறியடகும் - மெல்லிய சுருள் விரிந்த சிறிய இலைகளையுடைய இலைக்கறிகளையும், அமிர்து இயன்றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும் - அமிழ்தம் கற்கண்டாக வளர்ந்தா லொத்த இனிய சாற்றையுடைய கற்கண்டுத் தேற்றையும், புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும் - பலரும் இனிதெனப் புகழுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும், கீழ் செலவீழ்ந்த கிழங்கொடு பிறவும் - நிலத்தின் கீழ்ப் போகுமாறு வளர்ந்த கிழங்குகளுடனே பிறஉண்டிகளையும், இன்சோறு தருநர் பல்வயின் நுகர - இனிய பாற்சோறு அக்கார வடிசில் முதலியவற்றையும் கொடுக்கப் பெற்றோர் பலவிடங்களினும் உண்ணாநிற்ப;

கருத்துரை : சாற்றானும் மணத்தானும் ஒன்றற்கொன்று மாறுபட்ட அழகிய பலாப்பழத்தின் சுளைகளையும், இனிய தேமாவின் கனிகளையும், வேறுபட்ட வடிவினையுடைய காய்களையும் கனிகளையும், மழை பருவத்தே பெய்து வளர்த்தமையால் கொடிவிட்டு அழகுற்ற மெல்லிய சுருள் விரியப் பெற்ற இலைக்கறிகளையும், அமிர்தம் கற்கண்டானாற் போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத் தேற்றினையும், புகழ் உண்டாகச் சமைத்த பெரிய இறைச்சி கலந்த சோற்றினையும், நிலத்தின்கீழ் வீழ்ந்த கிழங்கோடே இன்னோரன்ன பிறவற்றையும், இனிய பாற்சோறு அக்கார வடிசில் முதலியவற்றையும் தரப்பெற்றோர் ஆங்காங்கே பலவிடங்களிலும் உண்ணாநிற்ப என்பதாம்.

அகலவுரை : சாறும் நாற்றமும் பலவின் சுளையும் வேறுபடக் கவினிய தேமாங்கனியும் என்றும், சாறு நாற்றமும் வேறுபடக் கவினிய, பலவின் சுளையும் தேமாங்கனியும் என்றும் இருவேறு பாடங்களும் உள என்று, நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். இவ்விரண்டனுள், சேறும் நாற்றமும் பலவின் சுளையும், வேறுபடக் கவினிய தேமாங்கனியும் என்னும் பாடத்தையே அவர்கொண்டு, சேறும் நாற்றமும் தேமாங்கனியும் என்ற தொடர்க்குத் தேனும் நாற்றமும் உடையவாகிய பலாப் பழத்தின் சுளையும் என்று பொருள் கூறி மேலும் சேறென்றார், சுளையில் இருக்கின்ற தேனை என விளக்கமும் கூறினர். இவ்விருவேறு பாடங்களினும் மற்றைப் பாடமே பொருட் பொருத்தமுற அமைந்திருத்தல் காண்க. காயும் பழனும் என்றது, பாகற்காய் வாழைக்காய் வழுதுணங்காய் முதலிய காய்களையும், வாழைப்பழம் முந்திரிகைப்பழம் நாரத்தம்பழம் முதலிய பழங்களையும் என்றவாறு. அடகு-இலைக்கறி. தீஞ்சேற்றுக்கடிகை என்றது, இனிய பாகு முற்றிய கற்கண்டினை; இதற்கு அமிழ்தம் உவமை. அமிழ்தமே கற்கண்டானாற்போன்ற கற்கண்டென்க. உண்டார் பலரும் அதன் இனிமையைப் பலவிடங்களினும் எடுத்தோதிப் புகழும்படி சமைக்கப்பட்ட ஊன்சோறென்பார், புகழ்படப் பண்ணிய பேரூன்சோறு என்றார். பண்ணுதல்-சமைத்தல். கீழ்நோக்கி வளர்தலுண்மையின் கீழ்செல வீழ்ந்த கிழங்கு என்றார். இன்சோறு - பாற்சோறும் அக்காரச்சோறும் என்க. தருநர் - தரப்பட்டோர்; தருநர் என்றது ஈண்டுச் செயப்பாட்டு வினைமேனின்றது. பல்வயின் நுகர இன்சோறு பிறவும் தருநர் எனக் கொண்டு கூட்டி பலவிடங்களினும் அநுபவிக்க இனிய பாற்சோறு முதலியவற்றையும் கொண்டு வந்து இடுவாரிடத்து எழுந்த ஓசையும் என்று கூறுவர், ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

அல்லங்காடியின் ஆரவாரம்

536-544 : வாலிதை ................. கம்பலை

பொருள் : வாலிதை எடுத்த வளிதரு வங்கம் - நன்றாகிய பாய் விரித்த காற்றுக் கொண்டு வருகின்ற மரக்கலங்களிற் கொணர்ந்த, பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து - பலவாய் வேறுபட்ட சரக்குகள் இறங்குதலைச் செய்யும் பட்டினத்து, ஒல்லென் இமிழ் இசை மானக் கல்லென - ஒல்லென முழங்குகின்ற ஓசையை ஒக்கக் கல்லென்னும் முழக்கத்தோடே, நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுக-அகன்ற இடத்தையுடைய பிறநாட்டு வாணிகர் ஈண்டுச் செய்த பேரணிகலங்களை விலைக்குக் கொண்டு உலாவாநிற்றலாலே, பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை ஓதம் - பெரிய கடல் சூழ்ந்த இடத்தினின்றும் புலால் நாறும் திரையையுடைய ஓதம், இருங்கழி யருவிப் பாயப் பெரிதெழுந்து - கரிய கழியிற் புகார்முகத்தே யேறிப் பரக்கின்ற அளவிலே மிக்கொழுந்து, உருகெழு பானாள் வருவன பெயர்தலில்-அச்சம் பொருந்திய நடுவியாமத்தே வருவனவாய் மீளுதலாலே, பல்வேறு புள்ளின் இசையெழுந்தற்றே - ஆண்டு வாழும் பல சாதியாய் வேறுபட்ட பறவைகளின் ஓசை எழுந்த தன்மைத்து, அல்லங்காடி அழிதரு கம்பலை - அந்திக்காலத்துக் கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம்;

கருத்துரை : நல்ல பாய்களை விரித்த காற்றுக்கொண்டு வருகின்ற மரக்கலங்களிற் கொணர்ந்த பல்வேறு பண்டங்கள் இறங்குகின்ற பட்டினத்தின்கண் ஒல்லென முழங்கும் ஓசையை ஒப்ப அகன்ற இடத்தையுடைய அயல்நாட்டு வாணிகர் ஈண்டுச் செய்த அணிகலன்களை விலைக்குக் கொண்டுபோதல் காரணமாக உலாவுதலால் எழுந்த ஆரவாரமும் இயைந்து பெரிய கடலிடத்தே பெருகும் ஓதம் கழிகளிடத்தே நள்ளிரவிலே பெருகிப் பாய்ந்து மீளுங்கால் ஆண்டு வாழும் பல்வேறு பறவைகளும் குழீஇ எடுத்த ஓசையை யொப்ப எழுந்த அல்லங்காடியின் ஆரவாரமும் என்பதாம்.

அகலவுரை : பல்வேறு பண்டமும் வங்கங்களில் வந்திறங்கும் பட்டினத்தின்கண் உண்டாகும் ஓசையை ஒப்ப, அயல்நாட்டினின்றும் வந்த வணிகர் அணிகலன்களை விலை பேசி வாங்குவதற்கண் உண்டாகும் ஓசையோடே மேலும் கலன் கொள்ளும் பொருட்டு உலாவ என்க.

வாலிதை-வெள்ளிய பாயும் ஆம். அக்காலத்தே மரக்கலங்கள் காற்றான் இயங்கிற்றாதலான் வளிதரு வங்கம் என்றார். துறைமுகப் பட்டினத்து அயல்நாட்டு வணிகர் மிக்கு முழங்கினாற்போன்று ஈண்டு மிக்கு ஆரவாரித்தனர் என்றவாறு. இனி அவர் பல நாட்டினின்றும் வந்து பலவேறு மொழிகளைப் பேசுதலான் பலவேறு வகைப்பட்ட பறவைகள் ஒருங்குகூடி ஆரவாரித்தலை உவமை கூறினார்.

இட்டவெண் ணிலப்படா வகையி னீண்டிய
முட்டிலா மூவறு பாடை மாக்களாற்
புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய
மட்டிலா வளநகர் வண்ணம் இன்னதே, (சீவக-93)

என்றும்,

களனவி லன்னமே முதல கண்ணகன்
றளமலர்ப் புள்ளொடு தயங்கி இன்னதோர்
கிளவியென் றறிவரும் கிளர்ச்சித் தாதலான்
வளநகர்க் கூலமே போலும் மாண்பது (கம்ப-பம்பை-7)

என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க. நனந்தலை வினைஞர் என்றது அகன்ற இடமுடைய யவனம் முதலிய அயல் நாட்டினின்றும் வந்து வணிகத்தொழில் செய்வோர் என்றவாறு.

மதுரையிடத்தே இயற்றப்படுகின்ற அணிகலன்களை விலைபேசி வாங்கிக்கொண்டு மேலும் அணிகலன் வாங்கும்பொருட்டுத் திரியா நிற்ப என்பார் கலங்கொண்டு மறுக என்றார். கடற்கு அணுகவுள்ள கழிகளில் நீர்ப்பறவைகள் இரவிற் றங்கி யிருப்பனவாக, நள்ளிரவில் கடல்பெருகி அக்கழிகளில் பாயுங்கால் அப்பறவைகள் எழுந்து ஆரவாரிக்கும் அன்றே, அவ்வாரவாரம் போன்றது அல்லங்காடியிடத்து ஆரவாரம் என்றபடி. நள்ளிரவிற் கடல்பெருகிக் கழிகளிற் பாய்ந்து மீளுதல் இயல்பு. ஓதம் என்றது கடற்பெருக்கை. அழி - மிகுதல். திருக்குறளின் கண்,

அற்றார் அழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (226)

என்னும் குறட்பாவில் அழிபசி - மிக்கபசி எனப் பரிமேலழகர் உரை கூறுமாற்றானும் அஃதிப் பொருட்டாதலறிக. இனி 489 - அச்சமும் தொடங்கி 544 - அல்லங்காடி அழிதரு கம்பலை என்னுந் துணையும் தொடாந்தவற்றை; அறங்கூ றவையமும், காவிதிமாக்களும், பண்ணியம் பகர்நரும் நாற்பெருங்குழுவும் வாழும் நால்வேறு தெருவினும், கலிங்கம் பகர்நரும், கடைநரும், குயினரும், புனைநரும், காண்மரும், பகர்நரும் கொண்மரும், பகர்நரும், முடிநரும், மாக்களும், கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி, கம்மியரும் குழீஇ நிற்றர, கோதை இருக்கையில் விழுமியோர் குழீஇக்கொள் கம்பலை கடுப்பப் பல கம்பலையோடு சுளையும் கனியும் பிறவும் தரப்பட்டோர் மிசையப் பட்டினத்து இசை மானக் கல்லென வினைஞர் கொண்டு மறுக ஓதம் வருவன பெயர்தலின் புள்ளின் இசை எழுந்தாற் போன்றது அல்லங்காடிக் கம்பலை எனச் சொற் கிடந்தவாறே முடித்திடுக. இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் 536-44 வாலிதை என்பது தொடங்கி, கம்பலை என்னும் துணையும் உள்ள அடிகளைப் பிரித்து நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுக, வாலிதை எடுத்த வளிதரு வங்கம் பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோதம் இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து உருகெழு பானாள் வருவன பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து ஒல்லென் இமிழிசை மானப் பெயர்தலின் பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்று, எனக் கொண்டு கூட்டி அதற்கியையப் பொருள் கூறுவர்.

இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் 467-கடவுட் பள்ளி என்பது தொடங்கி 544-இதுகாறும் கூறிய பொருள் இயைபும் முடிவும் கூறுதல் வருமாறு : கடவுட் பள்ளியிடத்தும், அந்தணர் பள்ளியிடத்தும், சேக்கையிடத்தும், அவையத்திடத்தும், காவிதிமாக்களிடத்தும், எழுகின்ற ஓதை கோதையிருக்கையில் கம்பலை கடுப்பக் கல்லென எனமுடிக்க. பண்ணியம் பகரிடத்தோசையும், நாற்பெருங் குழுவிடத்து ஓசையும், இன்சோறும் பிறவும் தருநரிடத்து ஓசையும், கோடுபோழ் கடைநர் முதலாகக் கண்ணுளர் ஈறாகவுள்ளாரும் பிறரும் கூடிக் கம்மியரும் குழீஇ நிற்றர எழுந்தவோசையும் பட்டினத்து இமிழிசை மானக் கல்லென என முடிக்க. இங்ஙனம் முடித்தபின் நியமத்து அல்லங்காடியில் அழிதருகம்பலை தூரியங் கறங்குகையினாலும், கம்பலை கடுப்பக் கல்லெனகையாலும் ஒல்லென் இமிழிசை கடுப்பக் கல்லென்கையாலும் பல்வேறு புள்ளின் இசையெழுந்தற்றே எனச் சேர வினைமுடிக்க, என்பதாம். இனி, 545-ஒண்சுடர் என்பது தொடங்கி, 620-முந்தையாமம் சென்ற பின்றை என்னுந் துணையும் ஒரு தொடர் : இதன்கண், மதுரை நகரத்தே அந்திமாலைப்போது வருதலும் அம் மாலைக்காலத்தே அந்நகரத்தின்கண் நிகழும் நிகழ்ச்சியும் அம்மாலை கழிந்தபின் இரவின் முதலியாமத்தே ஆண்டு நிகழும் நிகழ்ச்சிகளும் பிறவும் மிக அழகாகக் கூறப்படும்.

மதுரை மாநகர்க்கண் மாலைக்கால வரவும் நிகழ்ச்சிகளும்

545-558 : ஒண்சுடர் ....................... நீங்க

பொருள் : ஒண்சுடர் உருப்பு ஒளி மழுங்கச் சினம் தணிந்து சென்ற ஞாயிறு - ஒள்ளிய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்கச் சுடுசினம் அகன்று ஒழுகப்போன ஞாயிற்று மண்டிலம், நண்பகற் கொண்டு குடமுதல் குன்றம் சேர - பின்னர் நன்றாகிய பகற்பொழுதைச் சேரக்கொண்டு மேற்றிசையிடத்தே மறையும் மலையினைச் சேராநிற்ப, குணமுதல் நாள் முதிர் மதியம் தோன்றி - கீழ்த்திசையிடத்தே பதினாறுநாட் சென்று முதிர்ந்த நிறைமதி எழுந்து, நிலா விரிவு பகல் உரு உற்ற இரவு வர - நிலாப்பரக்கையினாலே பகலின் வடிவை ஒத்த இராக்காலம் வரும்படியும், நயந்தோர் காதல் இன் துணை புணர்மார் - புணர்ச்சியை நெஞ்சாலே விரும்பின மகளிர் காதன்மிக்க தம் இனிய காதற்கொழுநரைக் கூடும்பொருட்டு, ஆய் இதழ்த் தண் நறும் கழுநீர் துணைப்ப - ஆராய்ந்த இதழ்களையுடைய குளிர்ந்த நறிய செங்கழுநீர் மலர்களை மாலையாகக் கட்டும்படியும், இழைபுனையூஉ நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய-அணிகளை அணிந்து நன்றாகிய நெடிய கூந்தலிற்பூசின நறிய மயிர்ச்சந்தனத்தை அலைத்து நீக்கும்படியும், நரந்தம் அரைப்ப - கத்தூரியை அரைக்கும்படியும், நறுஞ்சாந்து மறுக-நறிய சந்தனத்தை அரைக்கும்படியும், மென்னூல் கலிங்கம் கமழ்புகை மடுப்ப - மெல்லிய நூலாற் செய்த கலிங்கங்களுக்கு மணக்கின்ற அகிற்புகையை ஊட்டும்படியும், பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர் - குணமுதலிய சிறப்புக்களால் உலகத்துப் பெண்டிர் விரும்பாநின்ற மான்பிணைபோலும் நோக்கினையுடைய மகளிர்களால், நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ - நெடிய ஒளியினையுடைய விளக்கினை யேற்றுவித்து, நெடுகர் எல்லை எல்லாம் நோயோடு புகுந்து கல்லென் மாலை நீங்க-பெரிய ஊரின் எல்லையாகிய இடமெல்லாம் நயந்தோர்க்கு நோயைச் செய்தலோடே புகுந்து கல்லென்னும் ஆரவாரத்தையுடைய மாலைக்காலம் பின்னர் நீங்க;

கருத்துரை : ஒள்ளிய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்குமாறு சினந்தணிந்து சென்றஞாயிறு பகற்போதையும் சேரக்கொண்டு மறையா நிற்ப, கலைகள் நிரம்பிய முழுவெண்டிஙகள் கீழ்த்திசையில் எழுந்து நிலாப் பரப்புகையாலே, பகல்போன்ற ஒளியுடைய இரவு வாராநிற்ப, தம் காதற் கொழுநரோடே கூடி இன்புறுதலை விழைந்த மகளிர்கள் ஆராய்ந்த இதழ்களையுடைய செங்கழுநீர் மலர்களை மாலையாகக் கட்டவும் அணிகலன்களை அணியவும் மயிர்ச் சந்தனத்தைக் கூந்தலின்கண்ணிருந்து அலைத்துதிர்ப்பவும், கத்தூரி சந்தன முதலியவற்றை அரைப்பவும், மெல்லிய நூற்சேலைகளை மணமூட்டவும், பெண்டிரானும் விரும்பப்படும் குணமும் அழகும் உடைய மகளிர்கள் மனைதொறும் சுடர் விளக்கத்தை ஏற்றவும் செய்து, ஊரின் எல்லையாகிய இடமெல்லாம் நயந்தோர்க்கு நோயைச் செய்தலோடே புகுந்த ஆரவாரமுடைய அந்திமாலை நீங்க என்பதாம்.

அகலவுரை : ஒண்சுடர் உருப்பு ஒளிமழுங்க என்றது, ஞாயிறு தன் ஒள்ளிய சுடர் வெப்பமும் ஒளியும் குன்றாநிற்ப என்றவாறு. உருப்பு - வெப்பம். உரவுக் கதிர் தெறூஉம் உருப்பவிர் அமயம் (குறிஞ்-45) என்றார் பிறரும். சினந்தணிதல், ஈண்டு வெம்மை தணிதல். ஞாயிறு மறைதலோடு பகற்பொழுது முடிவுறுதலான், பகலையும் உடன்கொண்டு சேர என்றார். குடமுதல் குன்றம் - பேற்றிசைக்கண் உள்ள மலை. ஆவது கதிரவன் மறைதற்குரிய மலை. ஞாயிறு மலையில் மறையும் என்பது பண்டையோர் கொள்கை. இம்மலையினை அத்தகிரி என்பர் வடவர். குணமுதல் - கீழ்த்திசையில். குடமுதல் குணமுதல் என்புழி முரண்தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. நாண்முதிர் மதியம் என்றது, முழுவெண்டிங்களை, விரிபு-விரிந்து; செய்பு என்னும் எச்சம் நிறைமதியத்தின் பானிலாப் பரந்து நன்கு ஒளியுடைத்தாகலின் பகலுருவுற்ற இரவு என்றார்.

பகல்உரு வுறழ்நிலாக் கான்று விசும்பின்
அகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே (அகம். 122: 10-11)

என்றார் பிறரும். நயந்தோர் - தம் காதற்கொழுநரோடு கூடுதலை விழைந்த மகளிர் என்க. புணர்மார் - கூடும்பொருட்டு. கூடும் பொருட்டுத் துணைப்பக்குடைய அரைப்ப மறுக புகைமடுப்பப் புகுந்து நீங்க என வினைமுடிவு செய்க. துணைத்தல் - தொடுத்தல் யான் போது துணைப்ப, (அகம். 117;11) என்றார் பிறரும். இழை -அணிகலன். இழைபுனையூ என்றது, வல்லென்ற அணிகலன்களை அகற்றி மெல்லென்ற அணிகலன்களை அணிந்து என்றவாறு. நறுவிரை - நறிய மயிர்ச்சாந்தம். நரந்தம்-கத்தூரி. மென்னூற் கலிங்கம் என்றது பருத்தி நூலினாய் புடைவையை. என்னை?

துணைப் புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கித் துகிலுடுத்து (பட்டினப்-107-8)

என்பவாகலான். ஏனைப் பெண்டிர் விரும்புதற்குக் காரணமான நற்குணம் நிறைந்த மகளிர் என்பார். பெண்மகிழ்வுற்ற என்றார். இனிப் பெண்டிரும் இம் மகளிரின் எழில்கண்டு பெண்மை எனினுமாம்.

வெங்களி விழிக்கொரு விழவு மாயவர்
கண்களிற் காணவே களிப்பு நல்கலான்
மங்கையர்க் கினியதோர் மருந்து மாயவன்
எங்கணா யகற்கினி யாவதாங் கொலோ, (கம்ப-மிதிலை: 33)

என்றும்,

கஞ்சத்துக் களிக்கு மின்றேன் கவர்ந்துணும் வண்டு போல
அஞ்சொற்கள் கிள்ளைக் கெல்லாம் அருளினா ளழகை மாந்தித்
தஞ்சொற்கள் குழறித் தத்தம் தகைதடு மாறி நின்றார்
மஞ்சர்க்கும் மாத ரார்க்கும் மனமென்ப தொன்றே யன்றோ (கம்ப-கோல: 19)

என்றும்,

பண்புற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமை யல்லால்
எண்பிறங் கழகிற் கெல்லை யில்லையாம் என்று நின்றாள்
கண்பிற பொருளிற் செல்லா கருத்தெனின் அஃதே கண்ட
பெண்பிறந் தேனுக் கென்றால் என்படும் பிறருக் கென்றாள் (கம்ப-சூர்ப்ப :60)

என்றும் கம்பநாடர் கூறுமாற்றானும், பெண் மகிழ்வுற்ற பிணைநோக்கு மகளிர் பெற்றியை உணர்க. இனி பெண்டிரு மாண்மை வெஃகிப் பேதுறு முலையினாளை என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதியை இதற்குக் காட்டினாருமுளர். பெண் மகிழ்வுற்றதென்றதன்றிப் பெண்டிர் ஆண் மகிழ்வுற்ற என்னாமையின் அது பொருந்தாமை உணர்க. பிணை-மான்பிணை. மகளிர் விளக்கினை ஏற்றி என்றதற்கு, மகளிரால் விளக்கினை ஏற்றுவித்து என ஏற்றி என்னும் வினைக்கு மாலையை ஏவுதற்கருத்தாவாக்குக. இனி ஏற்றி என்னும் எச்சத்தை ஏற்ற எனத் திரித்து முடித்தலுமொன்று.

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய் (குறள்-1227)

என்பவாகலான், நோயொடு புகுந்து என்றார்.

மதுரை நகரத்தே இரவின் முதலியாம நிகழ்ச்சிகள் குலமகளிர் செயல்

558-561 : நாணுக்கொள .............. தழீஇ

பொருள் : நாணுக்கொள - அங்ஙனம் துணைவரை நயந்து கோலம் கொண்ட மகளிர் அவரைக் கண்டுழித் தம் நெஞ்சம் நாணத்தான் நிறைதலானே புணர்ச்சி வேண்டாதாரைப் போன்று, ஏழ்புணர் சிறப்பின் இன் தொடைச் சீறியாழ் - இசையேழும், தன்னிடத்தே கூடிய தலைமையினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழின் இசையோடு, தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப - அதன் அயலே அதன் அளவிற்றாய்த் தாழ்ந்து செறிந்த தம் மிடற்றுப் பாடல் ஒப்ப, பண்ணுப் பெயர்த்து - தம் நெஞ்சு நிலைகொள்ளாமையால் பண்களை மாறிமாறி இசைத்து, வீழ்துணை தழீஇ - தம்மைப் பெரிதும் விரும்புகின்ற காதற்றுணைவரோடே தம் நெஞ்சு நாணுத்துறத்தலான் முயங்கிப் பின்னரும், நாணத்தை மேற் கொள்ளா நிற்ப;

கருத்துரை : அங்ஙனம் மாலைக்காலம் வந்தவுடன் துணைவரை நயந்து கோலங்கொண்ட மகளிர் அம்மாலை நீங்கத் தங் காதலரைக் கண்டுழி மிக்க நாணங்கொண்டவராய்ப் புணர்ச்சி வேண்டாதார் போல் ஏழிசையினையும் தன்பாற்கொண்ட தலைமையினையும் இனிய நரம்பினையுமுடைய தம் யாழின் இசையோடே தம்மிடற்றுப்பாடலின் குரல் தாழ்ந்து பொருந்துமாறு பண்களை மாறிமாறி இசைப்பாராய்ப் பின்னரும் நிறையழிதலானே தம் காதலரை முயங்கிப் புணர்ச்சி நீங்கிய பின்னர் மேலும் நாணமீக்கூரா நிற்ப என்பதாம்.

அகலவுரை : தங் காதலரோடு புணர்ச்சியை விரும்பியே கோலங் கொண்டாரேனும், அக் காதலரைக் கண்டுழித் தமக்கியல்பாகிய நாணமீக்கூர்தலான் தம் கருத்தை மறைப்பாராய் யாழ் வாசிக்கத் தொடங்கினர் என்க. குலமகளிர் இங்ஙனம் தங்கொழுநரிடத்தும் நாணங் கொள்ளல் இயல்பு. இதனை,

எஞ்ஞான்று மெங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போ னாணுதுமால் - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇனர் கொல்லோ பொருணசையாற்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார். (நாலடி-385)

என்னும் நாலடியானும் உணர்க. ஏழ்-ஏழிசை: ஆகுபெயர். ஏழிசையாவன : குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன. இன்தொடை - இனிய நரம்பு. தொடை : நரம்பிற்கு ஆகுபெயர். சீறியாழ் - சிறிய யாழ். மகளிர் குரல் யாழ்நரம்பின் இசையளவிற்றாய் மெலிந்து அதன் அயலே அவ்வியாழிசையே போன்று இசைப்ப என்பார், தாழ்பு அயல் கனைகுரல் கடுப்ப என்றார். யாழைக் கனைகுரல் கடுப்ப என்க. குரல்-மிடற்றுப்பாடல். தம்நெஞ்சு புணர்ச்சியிடத்தாகலான் இசையில் நில்லாமையின் பண்ணை அடிக்கடி மாறி வாசித்தார் என்க. இசையும் காம உணர்ச்சியை மிகுவித்தலான் அதன்கண் நிலைகொள்ளாமல் வீழ்துணை தழீஇ என்க. வீழ்துணை என்றார் அக்காதலரும் அம்மகளிர் குறிப்புணர்ந்து அவரைப் பெரிதும் விரும்பி நின்றமை தோன்ற என்னை?

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது (குறள் - 1196)

என்றும்,

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி, (குறள் - 1191)

என்றும் ஓதுபவாகலான், வீழ்துணை தழீஇ என்பதன் பின்னரும் காணுக்கொள என்பதனைக் கூட்டி, தழீஇ என்னும் எச்சத்தைக் கொள என்பதனோடு முடித்திடுக. 561-வியல் விசும்பு என்பது தொடங்கி 589-பொய்தல் அயர என்னுந் துணையும் வரைவின் மகளிரின் செயல் கூறப்படும்.

வரைவின்மகளிரின் ஒப்பனைச்சிறப்பு

561-568 : வியல்விசும்பு ................. பூவேய்ந்து

பொருள் : வியல் விசும்பு கமழ - அகன்ற விண்ணிலே சென்று மணக்கும்படி, நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு - நீர் திரண்டாற் போன்ற வெள்ளிய பூக்களாற் புனைந்த மாலைகளைக் கொண்டையிலே முடித்து, ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசி - அழகிய திரட்சியையுடைய விளங்குகின்ற தொடி மிகவிளங்கும்படி கையை வீசி நடந்து, போது அவிழ் புதுமலர் தெருவுடன் கமழ - அலரும் பருவமாக மலர்ந்த புதிய விடுபூக்கள் தெருவெங்கும் கமழாநிற்ப, மேதகு தகைய மிகுநலம் எய்தி - முற்படப் பலருடன் புணர்ந்த புணர்ச்சியாற் குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் பெருமை தருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக ஒப்பனைசெய்து, பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர் திறந்து மோந்தன்ன - பெரிய பலவாகிய செங்கழுநீரிற் சுரும்புகளுக்கு மலர்கின்ற பல பூக்களையும் அலர்கின்ற பருவத்தே கையாலலர்த்தி மோந்து பார்த்தாலொத்த, சிறந்து கமழ் நாற்றத்து - மிக்கு நாறுகின்ற நாற்றத்தோடே, கொண்டல் மலர்ப்புதல் மானப் பூவேய்ந்து - மழைக்கு மலர்ந்த மலரையுடைய சிறுதூற்றை ஒக்க ஏனைப் பூக்களையும் சூடி.

கருத்துரை : விண்ணிடமெல்லாம் பரந்து கமழும்படி நீர்திரண்டாற் போன்ற வெண்மலர் மாலைகளைக் கொண்டையிலே முடித்துத் தொடிகள் விளங்கும்படி கைகளை வீசி நடந்து, விடுபூக்களின் மணம் தெருவெல்லாம் கமழும்படி, பலருடன் புணர்ந்தமையாற் குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் புதுமையுண்டாக ஒப்பனைசெய்து, செங்கழுநீர் மலர்களையும் ஏனைப் பூக்களையும் மழையான் மலர்ந்த சிறுதூற்றை யொப்பச் சூடி என்பதாம்.

அகலவுரை : வியல் விசும்பு - அகன்ற வானம். வெள்ளிய மலர்களாற் புனைந்த மாலைக்கு நீரின் திரட்சி உவமை. பிறக்கிட்டு - பின்புறத்தே சூட்டி; என்றது கொண்டையிற் சூட்டி என்றவாறு.

ஓடுகலங் கரையும் துறை பிறக்கு ஒழிய (பெரும்பா-350-1) என்புழியும் பிறக்கு - பின்புறம் என்னும் பொருட்டாதலறிக. ஆய்-அழகிய; ஆராய்ந்த எனினுமாம். கோல்-திரட்சி. அவிர்தல்-விளங்குதல். தெருவுடன் - தெருவெங்கும் புதுமலர் என்றது, விடுபூக்களை, மேதகு தகைய மிகுநலம் என்றதற்கு வரைவின்மகளிர்கட்கு மேம்பாடளிக்கும் தகுதியையுடையவாய மிக்க அழகு எனினுமாம். எய்தி என்றமையால் ஒப்பனையாற் பெற்று என்க. கொண்டையில் நீர் திரண்டன்ன மாலை சூடி, விடுபூக்களாகிய குவளையையும், ஏனைப் பூக்களையும் புதல்மானச் சூடி என்க. புதல் - ஈண்டுப் பூம்புதர். திறந்து மோத்தலாவது அலரும் பருவமுடைய மொட்டினைக் கையால் அலர்த்தி மோத்தல்; புதுமணம் கமழ என்றவாறு.

கொண்டல் - முகில் : மழைக்கு ஆகுபெயர்.

569-583 : நுண்பூணாகம் ................ மகளிர்

பொருள் : நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி - தம்மைப் புணர்வோரின் நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பைத் தம் மார்பிலே வடுப்படும்படியாகத் தழுவி, மாயப் பொய் பல கூட்டி - இடையிடையே வடுப்படும்படியாகத் தழுவி, மாயப் பொய் பல கூட்டி - இடையிடையே வஞ்சனையுடைய பலவாகிய பொய்வார்த்தைகளைப் பேசி, கவவுக் கரந்து - அன்புடையார் போலே முயங்கின முயக்கத்தை அவர் பொருள் தருமளவும் மறைத்து, சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி - சேய்மைக் கண் உள்ள ஊரினரும் அண்ணிய ஊரினருமாய்த் தம்முடைய புறத்தேயுள்ள வடிவழகை விரும்பி வந்த இளைஞராகிய பல செல்வங்களையும் உடையாரை அவருடைய செல்வமெல்லாம் கெடும்படியாகக் கவர்ந்துகொண்டு, நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டினம் மான - பூ அலரும் காலமறிந்து அதன் நுண்ணிய தாதையுண்டு தாதற்ற வறிய பூவைப் பின்னர் நினையாமல் துறந்துபோம் மெல்லிய சிறகையுடைய வண்டின் - திரளை ஒப்ப, புணர்ந்தோர் நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து - தம்மை நுகர்ந்தோருடைய நெஞ்சு கலக்கமுறும்படி அவரிடத்து இனிய கூட்டத்தை நேராகக் கைவிட்டு, பழந்தேர் வாழ்க்கைப் பறவை போல - பழுமரமுள்ள இடந்தேடிச் சென்று அவற்றின் பழத்தையே ஆராய்ந்து கவர்ந்து நுகர்தலைத் தமக்குத் தொழிலாகவுடைய பறவையினம் போன்று, கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேய மணம் புணர்ந்தோங்கிய அணங்குடை நல்இல் - வளவிய குடியிற் பிறந்த செல்வரும் பிறமாந்தரும் பொருந்தியுள்ள புதிய மணம் நிகழ்ந்தமையால் உயர்ச்சி பெற்றனவும் இல்லுறை தெய்வங்களையுடையனவுமாகிய செல்வத்தான் நன்றாகிய இல்லங்களிலே சென்று, ஆய்பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர் - ஓடவைத்த பொன்னாற் செய்த விளங்குகின்ற தொடியினையும் பசிய பூணினையும் உடையவராகிய மகளிர்களாய், ஒண்சுடர் விளக்கத்துப் பலர் உடன் துவன்றி - ஒள்ளிய சுடரையுடைய விளக்கின் ஒளியிலே பலரும் சேர நெருங்கி, நீல்நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவ மகளிர் மான - நீலநிறத்தையுடைய வானத்தின்கண்ணே நெஞ்சமர்ந்து விளையாடும் தெய்வ மகளிர் வருத்துமாறுபோல, கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉம் கொண்டி மகளிர் - தம்மைக் கண்டோருடைய நெஞ்சை வருத்திப் பொருள் வாங்குதலையுடைய வரைவின் மகளிர்;

கருத்துரை : தம்மைப் புணர்வோருடைய நுண்ணிய பூண்களையுடைய மார்பைத் தம் மார்பிடத்தே வடுப்படும்படி அணைத்து, இடையிடையே பல வஞ்சனைகளைஉடைய பொய்ம் மொழிகளையும் அவருளம் இனிக்க மொழிந்து, அவர்தரும் பொருள் பெறுமளவும் தம் வஞ்சனை முயக்கம் தோன்றாதபடி மறைத்து, சேய்மைக் கண்ணும், அண்மையினும் உளவாகிய பல ஊர்களினின்றும் தம்முடைய வடிவழகைக் காமுற்று வந்தோராகிய அவ்விளஞ் செல்வர்களின் பொருள் கெடும்படி கவர்ந்து கொண்ட பின்னர், அலரும் பருவம் பார்த்து மலரின் நுண்ணிய தாதுக்களை உண்டு அது வறிதாய பின்னர் அதனை நினையாதே துறந்து போகின்றவண்டினத்தைப் போன்று, தம்மைப்புணர்ந்த அவ்விளம்பல் செல்வரின் நெஞ்சு கலக்கமுறும்படி அவருடன் கூடும் கூட்டத்தை நேராகத் துறந்து, மீண்டும் பழுமரங்களைநாடிச்சென்று அவையிற்றின் பழங்களைக் கவர்ந்துண்ணும் பறவைகளைப் போன்று, கொழுத்த செல்வரும் பிறரும் கூடாநின்ற மணவிழா நிகழ்ந்த இல்லங்களைத் தேடிச் சென்று ஆண்டுப்பொற்றொடி முதலியவற்றை அணிந்த இளமையுடையராய்ச் சுடர் விளக்கின் ஒளியிலே பலரும் நெருங்கி, விண்ணிடத்தே விரும்பியாடும் விண்ணவர் மகளிரைப் போன்று தம்மைக் கண்டோரை வருத்தி அவர் பொருளைக் கவர்கின்ற தன்மையுடைய வரைவின் மகளிர்கள் என்பதாம். மகளிர் (589) பொய்தல் அயர எனமுடியும்.

அகலவுரை : நுண்பூண் ஆகம் என்றார் செல்வர் மார்பு என்பது தோன்ற. வடுக்கொள முயங்கி என்றார் மிக்க அன்புடையார் போற்காட்டும் பொருட்டுப் பொய்யாக மிகத் தழுவுதலை, பேசுங்கால் அதன் கட்கரந்த வஞ்சனை புலப்படாவாறு பேசும் பொய் என்பார் மாயப்பொய் பல கூட்டி என்றார்; அது, நும்மோடு செங்கோடு பாய்தும் (நாலடி - 372) என்றாற் போல்வன. கவவு - அகத்தீடு, அஃதாவது தம் நெஞ்சத்துக் கிடக்கும் வஞ்சனையை மறைத்து என்றவாறு. கவவுக்கை என்புழியும் கவவு அகத்தீடு என்னும் பொருட்டாதல் (சிலப்-1 : 61) உணர்க. அம் மதுரை நகரத்து வாழ்வோரே யன்றித் தொலைக்கணின்றும் செல்வர்கள் அவர் பால் வருதலுமுண்மையின் சேயரும் நணியரும் என்றார். சேயர் - தூரத்தே உள்ளார்; நணியர்-அண்மையிலுள்ளார். நலன் - ஈண்டுப் புற அழகு. அவர் வலையிற் சிக்கினோர் தம் பொருள் முழுதும் கெடுந்துணையும் அவரால் வஞ்சிக்கப்படுவர் என்பது தோன்ற வளந்தப வாங்கி என்றார். தபுதல்-கெடுதல். வண்டினம் அப் பரத்தையர்க்குத் தொழில் உவமை என்க. நுண்டாதுண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டினமான என்னும் இத்தொடரோடு, நறுந்தாதுண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் (மணி-18 : 19-20) என்னும், பயன்பல வாங்கி வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிரை (மணி-18:108-9) என்றும் வரும் மணிமேகலை அடிகளை ஒப்புக் காண்க.

ஏமாப்ப - வருந்த. இன்றுயில் : இடக்கரடக்கல். மென்றோட்டுயில் (குறள் - 1103) என்றார் வள்ளுவனாரும். பழுமரம் : வினைத்தொகை. யாணர்ப் பழுமரம் பள்ளிமிழ்ந் தன்ன (புறம். 173:3) என்றும், மரஞ்சேர் பறவையும் தொக்குடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ பழுமரத் தீண்டிய பறவையின் எழூஉம் (மணி, 14: 24-6) என்றும், பிறரும் கூறுதல் காண்க. கொழுங்குடி - செல்வத்தாற் கொழுத்த குடி, குடி கொழுத்தக் கண்ணும் (நாலடி. 96) என்றார் பிறரும். மணம் புணர்ந்தோங்கிய அணங்குடை நல்லில் என்றது திருமண விழா நிகழ்ந்து உயர்ச்சிபெற்ற செல்வர் மனைகளை. ஆண்டுத் தெய்வங்கட்குச் சிறப்புச் செய்தல் உண்மையின் அணங்குடை நல்லில் என்றார். வரைவின் மகளிர், செல்வர் மனையில் மணம் நிகழும்போது ஆண்டுச் சென்று ஆடல் பாடல் நிகழ்த்துவர் என்றபடி. அங்ஙனம் சென்று ஆடி வசிகரித்து உறவுகொண்டு பொருள் வாங்குதல் அவர்க்கு இயல்பு என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியரும். அழகினை நன்கு எடுத்துக் காட்டும் பொருட்டு ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி என்க.

ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் லருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கட் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி (மணி-18:103-8)

என்பவாகலின் கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉம் கொண்டி மகளிர் என்றார். நடுக்குறுத்துதலாவது தம்மைக் கண்டோர் நெஞ்சிற் காமத்தீயை எழுப்பி வருத்துதல். இனிக் கண்டோர் என்பதற்கு, அறம் பொருள் இன்பங்களின் இயல்பினை உணர்ந்த சான்றோர் எனப்பொருள் கொண்டு அவருளத்தை அச்சத்தால் நடுக்குறச் செய்யும் கொண்டி மகளிர் என இரட்டுறவும் மொழிந்து கொள்க. என்னை?

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு (குறள் - 199)

என்று கண்ட சான்றோர் அவரைக் காணவே நடுங்குதல் இயல்பாகலின் என்க. கொண்டி - கொள்ளையுமாம். எனவே பிறர் அறிவையும் பொருளையும் சூறையாடும் மகளிர் எனினுமாம். வானவமகளிர் போல் ஆடும் என இயைப்பினும் ஆம். இருளிடையே ஒண்சுடர் விளக்கத்து ஆடும் அழகுமிக்க பரத்தையர்க்கு நீனிற விசும்பிற் றம்முடல் ஒளியிலேயே ஆடும்தேவ மகளிரை உவமை எடுத்தோதியது உணர்ந்து உணர்ந்து மகிழற்பாற்று. இனி, செல்வரும் பிறரும் மேவப்பட்ட அணங்குடை நல்ல இல்லிலே மணம் புணர்ந்தோங்கிய பாசிழை மகளிர் ஒண்சுடர் விளக்கத்தே சீறியாழைப் பண்ணுப் பெயர்த்து வீழ்துணை தழீஇ நாணுக்கொள எனக் கூட்டுக என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

584-589 : யாம நல்யாழ் .......................... பொய்தலயர

பொருள் : யாம நல்யாழ் நாப்பண் நின்ற முழவின் மகிழ்ந்தனர் ஆடி - முதல் யாமத்திலே இசைத்தற்குரிய நன்றாகிய யாழ்களுக்கு நடுவே அவற்றின் இசையோடே இயைந்து நின்ற முழவின் முழக்கத்திற்கு ஏற்ப மனமகிழ்ச்சியுடையராய்க் கூத்தாடுதல் செய்தும், குண்டு நீர்ப் பனித்துறைக் குவவு மணன் முனைஇ - ஆழ்ந்த நீரினையுடைய குளிர்ந்த துறையிடத்துக் குவிந்த மணலிலே ஆடியும் அவ்விடத்தை வெறுத்துழி, மென்றளிர்க் கொழுங்கொம்பு கொழுதி - மெல்லிய தளிர்களைக் கொழுவிய கொம்புகளினின்றும் கொய்து, நீர் நனை மேவர நெடுந் தொடர்க்குவளை வடிம்பு உற அடைச்சி-நீர்க்கீழ் அரும்புகளோடே பொருந்துதல் வரக் கட்டின நெடிய தொடரையுடைய குவளை மலரை வடிம்பிலே விழும்படி உடுத்து, மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயர-மணம் நாறுகின்ற தம்மில்லங்களிலே விளையாடுதலைச் செய்ய;

கருத்துரை : இரவின் முதல் யாமத்தே இசைத்தற்குரிய பண்ணை இசைக்கும் யாழ் இசையோடு பொருந்தி முழங்கும் மத்தளத்தின் முழக்கத்தாலே மன மகிழ்ந்தனராய்க் கூத்தாடியும், நீர்த்துறையிடத்தே குவிந்த மணற் பரப்பிலே ஆடியும் அவ்விடத்தை வெறுத்துழி, நீரின் அகத்தேயுள்ள அரும்போடு சேரக்கட்டின குவளை மலரையுடைய தொடர் மாலையை வடிம்பிற் புரளுமாறு உடுத்தியவராய்த் தம் மனைகளிடத்தே விளையாடுதலைச் செய்ய என்பதாம்.

அகலவுரை : 561-கோதை கமழப் பிறக்கிட்டு வீசிப் புதுமலர் கமழ நலமெய்தி, புதல்மானப் பூ வேய்ந்து, முயங்கிச்செல்வர் வளந்தப வாங்கி மானத் துறந்து பறவைபோல மேஎய நல்லில்லிலே இளமகளிராய் விளக்கத்து நெருங்கி மான நடுக்குறூஉம் கொண்டி மகளிர் ஆடி மணன்முனைஇ, குவளை அடைச்சி மனைதொறும் அயர என இயைத்துக் கொள்க. யாமநல்யாழ் என்றது இரவின் முதல் யாமத்தே இசைத்தற்குரிய பண்ணை இசைக்கும் யாழ் என்றவாறு. விரல்கவர்ந் துழந்த கவர்வி னல்யாழ் யாம முய்யாமை (நற்-335: 9-10) என்றும் விளரிப்பாலையிற் றோன்றும் யாம யாழ் (பரிபா-11: 128, பரிமேல்) என்றும் பிறரும் கூறுதல் காண்க. மற்றைக் கருவிகளின் குறையை நிரப்பியும் மிகுதியை அடக்கியும் நிரப்புமிடத்தும் அடக்குமிடத்தும் இடைவெளி தோன்றாதபடி தான் நடுநிற்றலால் நாப்பண் நின்ற முழவு என்றார். என்னை?

ஆடல் பாடல் இசையே தமிழே
பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றிவை ஆசி னுணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவின்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத் தியாழும் குழலும்
ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூருகிர்க் கரணங் குறியறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணம் சிதைவின்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்

என ஆசிரியர் இளங்கோவடிகளும் மிகையும் குறையும் உள்ள ஏனைக் கருவிகட்கு நாப்பண் முழவு நிற்றலைக் கூறினார் ஆகலான். கூத்தியறுற்வார்க்கு முழவின் முழக்கமே ஊக்கம் பெரிதும் அளித்தலின், அதனை ஏதுவாக்கினார். குண்டு நீர்ப் பனித்துறை என்றது ஈண்டு வையைப் பேரியாற்றின் துறையை. வையைப் பேரியாற்றின் நீர்த்துறைக்கண் மணலிடத்தே விளையாட்டயர்ந்து அதுவெறுத்த பின்னர் மனைதொறும் விளையாடினர் என்க. நெடுந்தொடர்க் குவளை யென்றார், இடையில் உடுத்துக்கொள்ளற் கேற்றவாறு தொடராக ஆடைபோன்று குவளை மலரானும் அரும்பானும் தொடுக்கப்பட்ட மாலையை. வடிம்பு - ஈண்டு அடிகளின் விளிம்பு - ஆழி வடிம்பலம்ப நின்றானும் (நள வெண்பா : 137) என்புழியும் அஃதிப் பொருடரல் காண்க. அடைச்சி - உடுத்து. குறுஞ்சினைக் குவளை யடைச்சி (நற் 204:3) நீலமடைச்சி (நற்-357:8) கூந்தல் ஆம்பல் முழு நெறி யடைச்சி (குறுந் -80:1) எனப் பிறாண்டும் வருவன காண்க. பொய்தல்-விளையாட்டு; கைதை வேலி நெய்தலங் கானல் பொய்தலாயம் (6: 150-1) என்றார் சிலம்பினும்!

ஓண நன்னாளில் யானையின் வெம்போர்

590-599 : கணங்கொள் ..................... திரிதர

பொருள் : கணங்கொள் அவுணர்க் கடந்த - குழாங் கொண்ட அவுணர்களைக் கொன்றருளிய, பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள் - பொன்னாற் செய்த மாலையினையுடைய திருமால் உலகிற் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளிடத்தே, கோணந் தின்ற வடு ஆழ்ந்த முகத்த - தோட்டி வெட்டின வடு அழுந்தின முகத்தை யுடையனவும், சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை - போர்க் கருவிகளைப் பலகாலும் பயில்தலால் தேய்ந்து தழும்புபட்ட போரைத்தாங்கும் பெரிய கையினையும், மறங்கொள் சேரி மாறுபொரு செருவின் - வீரத்தைத் தம்மிடத்தே கொண்ட மறவர்கள் வாழும் சேரிகள் தம்முள் மாறுபட்டுச் செய்வித்த போரின்கண்ணே, மாறாது உற்ற வடுப்படு நெற்றி - அடிமாறாமையாற் பட்ட கொம்பழுந்தின தழும்பினையுடைய நெற்றியினை உடையனவும், சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர் கடுங்களிறு - வண்டுகள் நிறைந்த போர்ப் பூவினையும் யானைப் போரின்கண் வெல்லுதலில் பெரிய விரும்பத்தையுமுடைய மறவர்களுடையனவுமாகிய கடிய களிற்று யானைகளை, ஓட்டலில் - அம் மறவர்கள் ஒன்றனோடொன்று பொருமாறு செலுத்துதலானே, காணுநர் இட்ட நெடுங்கரைக் காழக நிலம் பரல் உறுப்ப - அவ்வியானைப் போரைக் காணவந்தோர் ஆண்டு மக்கள்மேல் அப்போர் யானைகள் வாராமைப் பொருட்டு இடற்பட்ட நெடிய கரையாகிய கரிய இடமுடைய நிலத்தின்கட் பரற்கற்கள் தம் கால்களை உறுத்தும்படி, கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர - கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிக்குத் திரிதலைச் செய்ய;

கருத்துரை : கூட்டமாகிய அவுணர்களைக் கொன்றருளிய கரிய திருமால் உலகத்தே பிறந்த திருவோணமாகிய நல்ல நாளிலே தோட்டி வெட்டின வடுவாழ்ந்த முகத்தையும், தழும்புபட்ட பெரிய கையையும், மறவர் சேரிகள் மாறுபட்டுப் பொருதுவித்த போரில் புறமிடாது நின்று போர் செய்தமையால் பகையானையின் கொம்பழுந்தின வடுவுடைய நெற்றியினையும், உடையனவாகிய மறவர்களுடைய கடிய களிறுகளை அவர் ஒன்றனோடு ஒன்று போரிடுமாறு செலுத்துதலானே, அவ்வியானைப் போரைக் காணவந்தோர் ஆண்டு அவ்வியானைகள் மக்கள் மேல் வாராமைப் பொருட்டு எடுக்கப்பட்ட நெடிய கரையின்மேல் கரிய இடமுடைய நிலத்தின்கட் பருக்கைக் கற்கள் தம் காலை உறுத்தி வருத்துதலையும் அறியாராய்க் கடிய கள்ளை நிறையப் பருகிக் களிப்பான் மயங்கி யாண்டும் திரிதலைச் செய்ய என்பதாம்.

அகலவுரை : அவுணர் -அசுரர்: அவராவார் இரணியன் இராவணன் நரகன் முதலியோர். கணம்-கூட்டம். திருமால் திருவோண நாளில் உலகில் பிறந்தார் என்க. இதனை,

நின்ற மராமரம் ஏழும் சாய்த்தோய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராடவேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய், (பெரியாழ்-2-4:2)

என்றும்,

ஆண் ஒப் பார்இவன் நேரில்லை காண்திரு
வோணத் தான்உல காளும்என் பார்களே, (þ-1. 1:3)

என்றும், பெரியாழ்வார் கூறுமாற்றானும் அறிக. கோணம்-தோட்டி. சாணம்-தழும்பு. மாயன்-கரிய நிறமுடையோன்; திருமால் என்றபடி. வினைவழி உயிர்கள் பிறப்பது போலன்றித் தானே பிறத்தல் வேண்டும் எனக்கருதி வந்து பிறப்பன் என்பது தோன்ற மேய என்றார். உலகிற்கு இடையூறு விளைக்கும் அவுணர்களைக் கொன்று உலகில் அறங்காத்தற் பொருட்டு இறைவன் பிறந்த நாளாகலின் அதனை நன்னாள் என்றார். அந் நன்னாளை ஆண்டுதோறும் மக்கள் விழவெடுத்துக் கொண்டாடுதல் மரபு. ஒரு சேரியோடு மற்றொரு சேரி மாறுகொண்டு யானைப் போர் செய்விப்பர் என்பார், மறங்கொள் சேரி என்றார். அடிபிறக் கிடாமையால் பகையானையின் கொம்பு பாய்ந்த நெற்றியுடைய மறக்களிறு என்க. வடுவாழ் முகத்தையும் தடக்கையையும் வடுப்படு நெற்றியையும் உடையனவாகிய மறவருடைய கடுங்களிற்றை என யானைக் கேற்றுக. இவையிற்றை மறவர்க் கேற்றியுரைப்பர் நச்சினார்க்கினியர். பெரும் புகல்-பெரிய விருப்பம்; யானைப் போரில் வெற்றி காண்டலில் பெரிய விருப்பமுடைய மறவர் என்க.

ஓட்டுதல் - ஈண்டு யானைகளைப் போர் செய்ய ஏவுதல். யானைப்போர் காண்போர் அப் போர்யானைகளால் தமக்குத் தீங்கு நேராமைப் பொருட்டு யானைகள் ஏறிவரவியலாத மேட்டு நிலம் அல்லது குன்றுகளின்மேல் ஏறி நின்று காண்பர்; இதனை, குன்றேறி யானைப் போர் கண்டற்றால், என்னும் குறளானும் உணரலாம். மதுரை மாநகரத்தே யானைப்போர் காண்டற்கு உயரிய கரை யெடுத்திருந்தனர் என்பதும், அக்கரையின் மேலும், சரிவிலும் யானைகள் ஏறின் சருக்கி விழும் பொருட்டுக் கரிய பருக்கைக் கற்களைப் பரப்பியிருந்தனர் என்பதும் இட்ட நெடுங்கரைக் காழக நிலம் பரல் என்னும் தொடரான் அறியலாம். இத்தொடர்க்கு இங்ஙனம் செம்பொருள் கூறாது ஆசிரியர் நச்சினார்க்கினியர் காணுநர் நெடுங்கரை காழகம் இட்ட பரல் நிலம் உறுப்ப என மாறிக்கூட்டி, அவ்வியானை முன்னேயோடி அதன் விசையைக் காணும் பரிக்காரர் அவ்வியானை பிடித்துக்கொள்ளும் காலத்து மேல் வராமல் அஞ்சி மீளுதற்குச் சமைப்பித்து நெடிய கரையையுடைய நீல நிறத்தையுடைய புடைவைகளிலே வைத்துச் சிந்தின கப்பணம் நிலத்தே கிடந்து கால்களைப் பொதுக்கும்படி, எனத் தாம் வேண்டியவாறே கூறி, மேலும் நெருஞ்சி முள்ளுப் போல முனைபட இரும்பால் சமைத்துத் தூவற்கு யானை அஞ்சுமென்று அவர் மடியிலே வைத்த கப்பணத்தைப் பரல் போறலிற் பரல் என்றார் பிறரும் (285) எனச் சீவகசிந்தாமணிச் செய்யுளின் றொடரையும் எடுத்துக் காட்டியுள்ளார். காணுநர் - அவ்வியானைப் போரைக் காண வந்தோர். செய்கரையாகலின் இட்ட நெடுங்கரை என்றார். காழகம் -கரிய இடம்; காழக நுணங்கறல், (6) என்றார், சிறுபாணாற்றுப் படையினும். ஓண நன்னாளில் கடுங்களிறு ஓட்டலிற் காணுநர் பரல் உறுப்பத் தேறல் மகிழ்ந்து திரிதர என இயைத்துக் கொள்க.

புனிற்றிளம் பெண்டிர் குளநீராடல்

600-603 : கணவர் உவப்ப ...................... அயர

பொருள் : கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்து - தம் கணவர் இம்மை மறுமையிற் பெறும்பயன் பெற்றோமென்று மகிழும்படி பிள்ளைகளைப் பெற்று, பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற - பாலால் இடங்கொண்டு உயர்ந்த இளைய முலை பால் சுரக்கும்படி, புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு - புலால் நாற்றத்தை யுடைய ஈன்றணிமை தீர்ந்து தம் மகப்பேற்றின் பொருட்டு மகிழ்ச்சியாற் பொலிவுற்ற சுற்றத்தாரோடு, வளமனை மகளிர் குளநீர் அயர - வளப்பமிக்க செல்வத்தையுடைய குடிப்பிறப்பாட்டியராகிய மகளிர் குளத்து நீரிலே ஆடா நிற்ப;

கருத்துரை : தம் கணவர் இம்மை மறுமைப் பயன்களைப் பெற்றோமென்று மகிழும்படி புதல்வரைப் பெற்றவராகிய வளமனை மகளிர் பாலான் இடங்கொண் டேந்திய முலை பால் சுரக்கும்படி மகிழ்ச்சியாற் பொலிவுற்ற சுற்றத்தாருடனே குளத்தின்கண் நீராடுதலைச் செய்ய என்பதாம்.

அகலவுரை : மெய் தீண்டலால் உடற்கின்பமும் சொன்மிழற்றலால் செவிக்கின்பமும் செய்து எழுபிறப்புந் தீயவை தீண்டாமற் செய்வார் புதல்வராகலான் அத்தகைய சிறந்த பேறு பெற்றமையான் கணவர் உவப்ப என்றார். இதனை,

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு (குறள் - 65)

என்றும்,

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் (குறள்-62)

என்றும்,

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற (குறள் - 61)

என்றும் எழுந்த மெய்ம் மொழிகளானும்,

படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே (புறம் - 188)

என்றெழுந்த பாண்டியன் அறிவுடை நம்பி பனுவலானும் உணர்க. மகப்பயந்த அண்மையில் பால்நிறைவான் அடிபருத்து அணந்திருத்தலின் பணைத்து ஏந்து இளமுலை என்றார். மகப்பயந்தோர்க்குப் பயந்த பொழுதே நன்கு பால் சுரவாமையானும் குளிர்ந்த நீராட்டுப்பால் நன்கு சுரத்தற்கு ஏதுவாதலானும் அமுதம் ஊறக் குளநீரயர என ஏதுவாக்கினார். இங்ஙனமாதலைச் சிந்தாமணியில்,

வீங்கிள முலைகள் விம்மித் திறந்துபால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள்

என்புழி நச்சினார்க்கினியர் கூறிய உரையானும் உணர்க. இங்ஙனமன்றி ஆசிரியர் நச்சினார்க்கினியர் (610) சாலினிமடுப்ப என்றதற்குக் (603) குளநீரயர என்பதனை ஏதுவாக்கிக் கூறுவர். புதல்வர்ப் பயந்த புனிறு தீர் மகளிர் இங்ஙனம் நீராடும் வழக்கமுண்மையை,

அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கந்
தீர்வினை மகளிர் குளனா டரவமும் (7: 73-6)

என்னும் மணிமேகலையான் நன்கு உணர்க.

கடுஞ்சூன் மகளிரின் கடவுள் வழிபாடு

604-610 : திவவுமெ ................ மடுப்ப

பொருள் : திவவு மெய் நிறுத்துச் செவ்வழி பண்ணி - வலிக்கட்டினை யாழிற் றண்டிலே கட்டிச் செவ்வழிப் பண்ணினை வாசித்து, குரல் புணர் நல்யாழ் முழவோடு ஒன்றி - குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடனே முழவும் பொருந்தி, நுண்ணீர் ஆகுளி இரட்ட - மெல்லிய நீர்மையுடைய சிறு பறை ஒலிப்ப, பலவுடன் ஒண்சுடர் விளக்கம் முந்துற - பூசைக்கு வேண்டும் பல பொருள்களோடே ஒள்ளிய சுடரையுடைய நெய் விளக்கு முற்பட, மடையொடு - பாற்சோறு முதலிய உண்டிகளோடு, நன்மாமயிலின் மென்மெல இயலி - நன்றாகிய பெருமையையுடைய மயில்போல மெத்தென மெத்தென நடந்து சென்று, கடுஞ்சூல் மகளிர் - முதற்சூல் கொண்ட மகளிர்கள், பேணிக் கைதொழுது பெருந்தோட் சாலினி மடுப்ப - தெய்வத்தைக் கைகுவித்துத் தொழுது பெரிய தோளினையுடைய தேவராட்டி யானே தம் பரவுக் கடனைச் செலுத்தா நிற்ப,

கருத்துரை : வலிக்கட்டினை யாழ்த்தண்டிலே கட்டிச் செவ்வழி என்னும் பண்ணினை இசைத்து, யாழும் முழவும் இயைந்தொலிப்பச் சிறுபறை முழங்கப் பூசைக்கு வேண்டும் பொருள்கள் பலவற்றோடே, சுடர் விளக்கம் முற்பட்டுச் செல்லப் பாற்சோறு முதலிய மடையோடே, நல்ல மயில்போல் மெல்லமெல்ல நடந்து சென்று, திருக்கோயிலின்கண் இறைவனைக் கைதொழுது ஏத்தித் தேவராட்டியான் மடைகொடா நிற்ப என்பதாம்.

அகலவுரை : திவவு - யாழின் வார்க்கட்டு : மெய் நிறுத்தலாவது அதனைச் செறித்துப் பண்ணமைத்தல். செவ்வழி - நால்வகைப் பண்களுள் ஒன்று. திவவுக் கூறினமையால் அதன்கண் நரம்பும் கூறியபடியாம். குரல்-குரல் என்னும் நரம்பு. யாழ் முழவுகளோடே ஆகுளி ஒன்றி இரட்ட எனினுமாம். இரட்டல்-ஒலித்தல். நல்யாழ் முழவொடு ஒன்றி நுண்நீர் ஆகுளி இரட்ட என்ற தொடரோடு,

குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை (சிலப். 3: 139-42)

என்னும் சிலப்பதிகாரப் பகுதியை ஒப்பு நோக்குக. பலவுடன் என்றது பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியுமாகிய பலபூசைப் பொருள்களோடே என்றவாறு. புகை தோன்றாது மிக்க ஒளியுடைத்தாய்த் திகழும் ஆனெய்பெய்த விளக்கம் என்பது தோன்ற ஒண்சுடர் விளக்கம் என்றார். முற்பட-முன்னர்க் கொண்டு செல்ல என்க. மடை-சோறு. கடுஞ்சூல்-முதற்சூல்: சூல் கொண்டுள்ளமையின் மென்மெல நடந்தென்றார். கடுஞ்சூல்-முதிர்ந்த சூல் எனினுமாம். சாலினி - தெய்வமேறியாடும் மகள்; தேவராட்டி.

பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சி (சிலப்.வேட்டுவ. 7-9)

என்றார் இளங்கோவடிகளாரும். சாலினியால் என மூன்றாவது விரித்தோதுக. மடுப்ப - செலுத்த. ஓரிடுக்கணும் நேராமல் மகப்பெறுமாறு அருள்க என வேண்டி மடை மடுப்ப என்க.

வெறியாட்டரவமும், வேறு வேறு கம்பலையும்

610-620 : ஒருசார் ................ சென்றபின்றை

பொருள் : ஒருசார் - ஒருபக்கத்தே, அருங்கடி வேலன் முருகொடு வளைஇ - அரிய அச்சத்தைச் செய்யும் வேன்மகன் இவ் விடுக்கண் முருகனால் வந்ததெனத் தான் கூறிய சொல்லின் கண்ணே கேட்டோரை வளைத்துக்கொண்டு, அரிக்கூடு இன் இயம் கறங்க - அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக் கருவிகள் முழங்காநிற்ப, நேர் நிறுத்து கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேள் பேணி-முருகனை முன்னிலையாகக் கொண்டு கார்காலத்தான் மலர்தலையுடைய குறிஞ்சிப் பூவினைச் சூட்டிக் கடப்பமரத்தின் கண்ணே புகழ் மிக்க செவ்வேளாகிய முருகனை வழிபடுதலாலே, தழூஉப், பிணையூஉ மன்று தொறும் நின்ற குரவை - மகளிர் தம்முள் தழுவிக் கைகோத்து மன்றுகள் தோறும் நின்ற குரவைக் கூத்தும், சேரிதொறும் - குடியிருப்புக்கள் தோறும் நின்ற, உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ - புனைந்துரைகளும் பாட்டுக்களும் பலவகைப்பட்ட கூத்துக்களும் தம்முள் கலக்கையினாலே, வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி - வேறு வேறாகிய ஆரவாரம் ஒழுங்கு கொண்டு மயங்கப்பட்டு, பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்னாள்-பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற, சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு - சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற் போன்ற ஆரவாரத்தோடே, முந்தை யாமம் சென்றபின்றை - இரவின் முற்பட்ட யாமம் நிகழ்ந்த பின்னர்;

கருத்துரை : அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் இத் தீங்கு நுமக்கு முருகனால் வந்ததென்று கூறும் தன் சொல்லாலே வளைத்துக் கொண்டு இனிய இசைக் கருவிகள் முழங்க முருகனை முன்னிலையாக்கிக் குறிஞ்சிப்பூவைக் கடப்பமரத்தின் கண்ணே சூடி ஆண்டுப் புகழ் மிக்க முருகனைப் பரவி வழிபடுதலாலே மகளிர் தழுவிக் கைகோத்து மன்றங்கள் தோறும் நின்று ஆடும் குரவைக் கூத்தும், சேரிகளிடத்தே நின்ற புனைந்துரைகளும், ஆடல் பாடல்களும் கலக்கையாலே உண்டாய ஆரவாரமும் மயக்கப்பட்டுப், பெரும்புகழையுடைய நன்னனுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் சேரிகளிடத்தே எழும் ஆரவாரம் போன்று ஆரவாரிக்க, இவ்வாறு இரவின் முதலியாமம் நிகழ்ந்து கழிந்த பின்னர் என்பதாம்.

அகலவுரை : தலைவனைப் பொழிலிடத்தே ஊழ்கூட்டக் கண்டு அவனோடே மெய்யுறுபுணர்ச்சியாகிய களவு மணம் நிகழ்த்திய பின்னர்த் தலைவி பெற்றோர்களால் இற்செறிக்கப்படுதலும் பின்னர்த் தலைவி தலைவனைக் காணப்பெறாமை முதலிய காரணங்களால் நாடோறும் தேய்மதி போன்று நலனழிதலும் அந்நிலை கண்ட செவிலி இந்நோய் இவட்கு எற்றானாயதென வினவ இது தெய்வத்தான் நிகழ்ந்ததெனக் கூறி அவளைத் தன் கூற்றால் வளைத்துக் கோடலும் தலைவியின் நோய் தணிப்பான் களனிழைத்து வெறியாட்டயர்தலும் பிறவும் அகத்தினை பற்றியனவாம். அந்நிகழ்ச்சிகளைக் குறிஞ்சிப்பாட்டு முதலிய அகம்பற்றி எழுந்த பாடல்களினால் உணர்க.

தன் கூற்றைக் கேட்ட பின்னர் வெறியாடலன்றிப் பிழைத்தற்கு வேறு வழியில்லை எனச் செவிலியை அச்சுறுத்தலான், அருங்கடி வேலன் என்றார். கடி - ஈண்டு அச்சம். என்னை?

கடியென் கிளவி,
வரைவே கூர்மை காப்பே புதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
அச்சம் முன்றேற் றாயீரைந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே (தொல்-உரி. 85)

என்றோதுபவாகலான். இனி வேலன் இது தெய்வத்தான் நிகழ்ந்தது எனக் கேட்ட செவிலி வெறியாட்டயரத் தொடங்குதல் கண்ட தலைவியும் தோழியும் அஞ்சுதலுண்மையினானும் அருங்கடி வேலன் என்றல் பொருந்துமாறறிக. வேலன் என்னும் பெயர்க்கு பிள்ளையார் (முருகன்) வேலை எடுத்தலின் வேலன் என்றார்; என்றது கழங்குவைத்துப் பிள்ளையாரால் வந்ததென முற்கூறிப் பின் வெறியாடுவன் என்று ஆடும் முறைமை கூறிற்று என்பர் நச்சினார்க்கினியர். அரி-அரித்தெழும் ஓசை. அத்தகைய ஓசையுடையன சல்லிகை கரடிகை முதலியன என்க. அரிக்குரற் றட்டை (மலைபடு-9) என்றார் பிறரும். அரிக்கூட்டின்ணியம் கறங்க (குறிஞ்சி -194) என்னும் குறிஞ்சிப் பாட்டின் தொடர் இதனுடன் ஒப்பு நோக்கற் பாற்று.

நேர் நிறுத்து என்றதற்கு செவ்விதாகத் தன்மெய்க்கண்ணே நிறுத்தி என்றும் கடம்பின் சீர்மிகு நெடுவேள் எனக்கொண்டு கடம்பு சூடுதலால் அழகு மிகுகின்ற முருகன் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை வகுத்தார். இனி முருகனை வழிபட்டு வெறியாட்டயரும்வேலன் கடம்பின்கண் மாலை சூட்டும் வழக்கமுடைமையை,

அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்பத்
திரளரை வளைஇய திணிநிலைக் கடம்பின்
துணையறை மாலை (குறிஞ் 175-7)

என்பதனானும் அறிக. இனி, 545-ஒண்சுடர் என்பது தொடங்கி 620-முந்தை யாமம் சென்ற பின்றை என்னும் துணையும் விரிந்து கிடந்த இத்தொடரின் பொருளை, ஞாயிறு குன்றம் சேர, மதியம் தோன்றி விரிபு இரவு வர, நயந்தோர் புணர்மார் துணைப்பக் குடைய அரைப்ப மறுக மடுப்பக் கொளீஇப் புகுந்து மாலை நீங்க; நாணுக்கொள நயந்தோர் பண்ணுப் பெயர்த்துத் தழீஇ நாணுக் கொள; கமழப் பிறக்கிட்டு வீசி எய்தி வேய்ந்து முயங்கிக் கரந்து வாங்கித் துறந்து துவன்றி நடுக்குறூஉம் கொண்டி மகளிர் ஆடி அடைச்சி அயர,

ஓண நன்னாள் களிறு ஓட்டலிற் காணுநர் உருப்பச் சிறந்து திரிதர,
உவப்பப் பயந்து ஊற மகளிர் குளநீர் அயர,
நிறுத்துப் பண்ணி இரட்ட முந்துற இயலித் தொழுது மடுப்ப,

வேலன் வளைஇ நிறுத்துச் சூடிப் பேண நின்ற குரவை விரைஇ வேறு வேறு கம்பலை மயங்கிய ஆர்ப் பெழுந்தாங்கு முந்தையாமம் சென்ற பின்றை என இயைத்துக் கொள்க. இனி, 621-பணிலம் என்பது தொடங்கி 653- மற்றை யாமம் பகலுறக் கழிப்பி என்னுந் துணையும் மதுரை நகரின் நள்ளியாமத்தின் தன்மை நுதலிய ஒரு தொடர்.

கண்படை கொண்ட மதுரைக் கடிநகர்

621-631 : பணிலம் ................ இடையது

பொருள் : பணிலம் கலியவிந்து அடங்க - சங்குகள் ஆரவாரமொழிந்து அடங்கிக் கிடக்க, காழ் சாய்த்து நொடை நவில் நெடுங் கடை அடைத்து மடமதர் ஒள்இழை மகளிர் பள்ளி அயர - சட்டக்காலை வாங்கிப் பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து மடப்பத்தினையும் செருக்கினையும் ஒள்ளிய அணிகலன்களையும் உடைய மகளிர் துயிலுதலைச் செய்ய, நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை-நல்ல வரிகளை யுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும், அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம் கவவொடு பிடித்த வகையமை மோதகம் - கண்ட சருக்கரையை வெப்ப மேற்றிச் சமைத்தலமைந்த பாகினைக் கூட்டிய தேங்காயும் பருப்புமாகிய உள்ளீட்டோடே பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும், தீஞ் சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க - இனிய பாகோடு சேர்த்துக் கரைத்த மாவினையும் உடைய அப்பவாணிகரும் அவற்றோடே இருந்து தூங்குவனராய் உறங்க, விழவின் ஆடும் வயிரியர் மடிய - திருநாளின்கண்ணே கூத்தாடும் கூத்தர் அதனை ஒழிந்து துயில் கொள்ள, பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரைய - ஒலி நிறைந்து அடங்கின குளிர்ந்த கடலை ஒக்க, பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப - படுக்கையிலே துயில்கொள்ளுவோர் கண் இனிதாகத் துயில் கொள்ளாநிற்ப, பானாட் கொண்ட கங்குல் இடையது - இரவின் பாதியாகிய பதினைந்து நாழிகையைத் தன்பாற்கொண்ட கங்குலின் இடையாமத்தே;

கருத்துரை : சங்கங்களின் முழக்கம் அடங்கவும், சட்டக்காலை வாங்கிப் பண்டங்கட்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து மாதர்கள் துயிலவும், நல்ல வரிகளையுடைய தேனிறால் போன்ற அடைகளையும், காய்ச்சின பாகோடே பருப்பும் தேங்காய் கூட்டி உள்ளீடாக வைத்துப் பிடித்த மோதகங்களையும், பாகுகலந்த மாவினையும் உடைய அப்பவாணிகர் அவற்றோடே இருந்து தூங்கி விழுவாராய் உறங்கவும் கூத்தாடுவோர் அதனை ஒழித்துத் துயிலவும் ஒலியவிந்த கடல் போன்று பாயலில் துயில் கொள்ளும் ஏனை மாந்தர் எல்லாம் இனிதே துயிலவும் செல்லாநின்ற இரவின் நடுயாமத்தே, என்பதாம்.

அகலவுரை : பணிலம்-சங்கு. கலி-முழக்கம். காழ்-சட்டக்கால்; கடையின் தட்டியைத் தூக்கி அதனைத் தாங்குமாறு நிறுத்துங் கால் என்க. நொடை நவில்தல்-பண்டங்கட்கு விலைகூறுதல். நாளா தந்து நறவு நொடை தொலைச்சி, (பெரும்பா-141) என்றும், நறவு நொடைக் கொடியோடு, (பட்டினப்-180) என்றும், பிறரும் கூறுதல் காண்க.

மடமதர் - மடப்பத்தோடு கூடிய செருக்கு. தேத்திறால் வரிவரியாக அமைந்திருத்தலின் நல்வரி இறாஅல் என்றார். தேனடையை ஒத்த அடை என்க; இது வடிவுவமை. விசயம் ஆடுஅமை என்னும் தொடரை இதன் முன் கூட்டிப் பாகிலே சமைத்த அடையென்பர் நச்சினார்க்கினியர். புரையும் : உவம வுருபு. கவவு-உள்ளீடு. இச்சொல் 570 (கவவுக் கரந்து என்புழியும் உள்ளத்தின் உள்ளீடாகிய எண்ணங்களை உணர்த்தி நின்றது) ஈண்டு மோதகத்தின் உள்ளீடாகிய பொருளை உணர்த்தியது. அயிர் - கண்ட சருக்கரை; கற்கண்டுமாம். குடதிசை மருங்கின் வெள் அயிர் (4: 35) என்றார், சிலப்பதிகாரத்தும். வெப்ப மேற்றிச் சமைத்தலின், அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம் என்றார். கண்ட சருக்கரையைக் காய்ச்சிச் சமைத்தலமைந்த பாகு என்க. விசயம்-பாகு. மோதகம் - இத் தின்பண்டம் இற்றைக்கும் தமிழ் நாட்டிலுளது. இதனை அப்பம் என்றார் நச்சினார்க்கினியர். கொழுக்கட்டை எனவும் இது வழங்கப்படும். அப்பத்திற்குப் பாகோடு கலந்த மாவினைத் தீஞ்சேறு என்றார் கூவியர் - அப்பவாணிகர். காரகற் கூவியர் பாகொடு பிடித்த விழை சூழ் வட்டம் (377-8) என்றார் பெரும்பாணினும். காழியர் கூவியர் கண்ணொடையாட்டியர் எனச் சிலப்பதிகாரத்தும் (5:24) வருதல் காண்க. வயிரியர் - கூத்தர். மடிய - உறங்க. பாயல் வளர்வோர் என்றது, இவ்வணிகர் முதலியோரை யன்றி ஏனை நகர்வாழ் குடிமக்களை என்க. இடையது - இடையதாகிய யாமம்.

மதுரை நகரத்து நள்ளியாம நிகழ்ச்சிகள்

பேயும், அணங்கும், கள்வரும்

632-642 : பேயும் .................. ஒடுக்கமொற்றி

பொருள் : பேயும் அணங்கும் உருவு கொண்டு - பேய்களும் வருத்தும் தெய்வங்களும் புறக்கண்ணாற் காணத்தக்க உருவங்களைக் கொண்டு, ஆய்கோல் கூற்றக் கொல் தேர் கழுதொடு கொட்ப - உயிர்களின் வாழ்நாளை ஆராய்தலையுடைய செங்கோன்மை பிறழாத மறலி கொலை செய்தற்கு ஊரும் தேராகிய கழுதோடே சுழன்று திரிய, இரும்பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு - கரிய பிடியின் கண்ணே மேவின தோலை ஒத்த கருமையுடைய இருளிடத்தே சேர்ந்து, கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் தொடலை வாளர் - கல்லையும் மரத்தையும் வெட்டும் வன்மையுடைய கூர்மை பொருந்திய தூக்கிட்ட வாளையுடையராய், தொடுதோல் அடியர் - செருப்புக் கோத்த அடியினை யுடையராய், குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடி - தொடையிடத்தே தெரியாமற் கிடக்கும்படி அழுத்தின கூரிய முனையினையுடைய குறுகிய பிடியமைந்த உடைவாளையும், சிறந்த கருமை நுண்வினை நுணங்கு அறல் நிறங் கவர்பு புனைந்த நீலக் கச்சினர் - மிக்க கருமையினையுடைமையால், நுணுகிய தொழிற்றிறமையாலே, நுண்ணிய கருமணலின்கண் நிறத்தை வாங்கி இயற்றினாற் போன்ற நிறமமைந்த நீலநிறக் கச்சினையுமுடையராய், மெல் நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர் - மெல்லிய நூலாற் செய்த ஏணியை அரையிலே பலவாய் மாட்சிமைப் படச் சுற்றிய சுற்றினையுடையராய், நிலன் அகழ் உளியர் - நிலத்தை அகழும் உளியினை உடையராய், கலன் நசைஇக் கொட்கும் கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி - பேரணிகலன்களை விரும்புதலானே அவையிற்றைக் களவு கோடற்கு இடம்பார்த்துச் சுழன்று திரியும் விழித்த கண் இமைக்கும் அளவிலே மறைகின்ற கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை அவர் தம்மையறியாதவாறு ஒற்றுதலைச் செய்து, (வழங்கலின் என 650 ஆம் அடிக்கட் சென்று முடியும்.)

கருத்துரை : பேய்களும், தீண்டி வருத்தும் தெய்வங்களும், கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதும் மக்கள் கட்பொறிக்குப் புலனுமாறு உருவங் கொண்டு திரியாநிற்ப, கரிய பெண்ணியானையின் மேந்தோலை ஒத்த கரிய இருளிடத்தே, கல்லையும் மரத்தையும் துணித்தெறியும் வன்மையுடைய கூரிய தூக்கிட்ட வாளையும் தொடு தோலையும் தொடையிடத்தே பதியக் கிடக்கும் உடைவாளையும்; அறலின் நிறத்தைக் கவர்ந்து புனைந்தாலொத்த நீலநிறக் கச்சினையும், நூலேணியை இடையிற் சுற்றிய சுற்றினையும், நிலத்தைத் தோண்டும் உளியினையும், உடையராய்ப் பேரணிகலன்களை விரும்பி அவையிற்றைக் களவு கோடற்கு இடம் பார்த்துத் திரிகின்ற கள்வர் பதுங்கிக் கிடத்தலை அவர் அறியாதவாறு ஒற்றி என்பதாம்.

அகலவுரை : அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம். இதனைச் சூர் என்றும் வழங்குப. அரவும் சூரும் ......... உறுகண் செய்யா (சிலப்- 13: 7-8) என்றார் இளங்கோவடிகளாரும். ஆய்கோல் கூற்றம் என்றது உயிர்களின் இறுதி நாளை ஆராய்தலையுடைய செங்கோன்மை பிறழாத மறலி என்றவாறு. என்னை?

தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோ ரென்னான் (மணி-சக்கர-97-9)

எத்திறத்தார் மாட்டும் ஒப்பத் தன் ஆட்சியைச் செலுத்துதலான் என்க. கழுது பேயில் ஒருவகை. இதனைப் பிரித்தோதிக் கூற்றத்தின் கொல் தேராக உருவகம் செய்தமையால் இது பேய்களினும் வன்பேய் என்றுணர்க.

இதனைக் கண்டோர் அச்சத்தால் உயிர் நீத்தலின் இதனைக் கூற்றுவனின் தேர் என்றார். என்னை? அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணா, பிணங்கு நூன் மார்பன் பேதுகந்தாக ஊழ்வினை வந்திவன் உயிர் கண்டு கழிந்தது (மணி-சக்கர-150-3) எனச் சம்பாபதி கூறியாங்குக் கூற்றம் வினைமுடிவின் இவையிற்றின் வாயிலாய் உயிர்கவர்தலான் அவன் உயிர் கவர்தற்கு ஊர்ந்து வரும் தேர் என்றார். அதனைக் கண்டபோதே உயிர் நீங்குதலான் அக் கொலைத் தொழிலை அதன் மேலேற்றிக் கொல்தேர் என்றார். இவ் வுருவகத்தின் நுணுக்கம் பெரிதும் இன்பந்தருவ தொன்றாதல் உணர்க.

இனிக் கழுதுக் கடையாகி வந்த ஆய்கோல் கூற்றம் கொஃறேர் என்னும் (633-4) இத் தொடரைப் பிரித்தெடுத்துப் போய் (652) சேய்மையிற் கிடந்த அச்சம் அறியாது ஏமமாகிய என்ற அடியோடு கூட்டி, யாக்கை நிலையாது என்றறிந்து மறுமைக்கு வேண்டுவன செய்து கொண்டமையின் அழகிய கோலையுடைய கூற்றத்தின் கொலைக்கு அஞ்சாமல் காவலுண்டாயிருக்கின்ற (699) மதுரை என்க. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் - துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார், வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம்-வருங்காற் பரிவ திலர் (நாலடி -35) எனக் காட்டி கொஃறேர் - கால சக்கரம் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். கொட்ப-சுழல. இதனை, வலமாதிரத் தான் வளி கொட்ப (5) என்புழியும் காண்க. இரும்பிடி - கரிய பெண்யானை; இதன் மேந்தோல் இருளுக்கு நிறவுவமை. இருளிடத்தே இயங்கும் கண்மா றாடவர் என்றவாறு. இது கண்மா றாடவரின் இயல்பு நுதலி வந்தது. இதனைக் கரிய பிடியின் கண்ணே மேலின தோலையொத்த கருமை தமக்கு இயல்பாகச் சேரப் பட்டு என்றும், இருள் - கருஞ் சட்டையுமாம் என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

புதையிருளின் எழுகின்ற புகர்முக யானையின் உரிவைப்போர்வை போர்த்த உதயகிரி எனும் கடவுள் எனக் கம்ப நாடரும் இருளை யானைத்தோல் என்றமை காண்க. (கம்ப.மிதிலைக்-150) சேர்பு - சேர்ந்து, இருள் சேர்பு கொட்டும் ஆடவர் என இயைத்துக் கொள்க. முழுத் திங்கள் நிறைந்த இரவையே ஈண்டுக் கூறுகின்றார் ஆகலின் இருள் சேர்பு கொட்கும் என்றதும் பின்னர் மழையமைந்துற்ற அரை நாள் அமையமும் என்றதும் கள்வர் காவலர்களுடைய இயல்புகூறியபடியாம் என்க. தொடுதோல்-செருப்பு. குறங்கு-தொடை. குறும்பிடி; குறுகிய பிடியை உடைய உடைவாளுக்கு ஆகுபெயர். இது தொடையோடு அழுந்துமாறு கச்சான் இறுக்கி மறைத்துக் கட்டப்படுவதால், குறங்கிடைப் பதித்த குறும்பிடி என்றார். இதனைச் சொட்டை என்பர் நச்சினார்க்கினியர். இருளிற் செல்லுங்கால் பிறர் காண்டற்கியலாமைப் பொருட்டுக் கள்வர் நீலக் கச்சணிவர் என்க. நூலேணி, மதிற்றலையிலே உள்ளே விழவெறிந்தால் கைபோல மதிலைப் பிடித்துக் கொள்ளும்படி இரும்பாற் சமைத்ததனைத் தலையிலே உடைய நூற்கயிற்றை உள்ளே விழ எறிந்து அதனைப் புறம்பே நின்று பிடித்துக்கொண்டு அம் மதிலை ஏறுவாராகலின் ஏணி யென்றார் என விளக்கினர் நச்சினார்க்கினியர். கண்ட கண் இமைத்துக் காணுமளவிலே மறைவார் என்பார், கண்மா றாடவர் என்றார். இனி, மந்திரம் நாவிடை வழுத்துவராயின் இந்திர குமரரின் யாம்காண் குவமோ (சிலப்-16172-3) எனப் பொற்கொல்லன் புகன்றவாறு, காட்சியினின்றும் ஞெரேலென மறையும் ஆடவர் எனினுமாம். ஒடுக்கம்-ஒதுங்கி யிருக்கும் இடம். ஒற்றுதல்-தம்மைப் பிறர் அறியாதவாறு பிறரைத் தாம் அறிந்து கோடல். இதனை வேய்த்தல் என்றார் நச்சினார்க்கினியர்.

ஊர் காப்பாளரின் ஊக்கமும் திறலும்

643-653 : வயக்களிறு .................. கழிப்பி

பொருள் : வயக்களிறு பார்க்கும் வயப்புலி போல - வலிய களிற்றை இரையாகப் பார்க்கும் வலிய புலியைப் போலே, துஞ்சாக் கண்ணர் - துயில் கொள்ளாத கண்ணையுடையராய், அஞ்சாக் கொள்கையர் - தம்முயிர்க்கு ஏதம் நிகழும் என்று அஞ்சுதலில்லாத கோட்பாட்டை உடையராய், அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் - களவியற் றொழிலை அறிந்தவர்களாலே கள்வரைக் காண்டலில் இவர் வல்லுநர் எனப் புகழப்பட்ட ஆண்மையை உடையராய், செறிந்த நூல்வழிப் பிறையா நுணங்கு நுண் தேர்ச்சி ஊர்காப்பாளர் பொருட் செறிவினையுடைய நூலின் வழியைத் தப்பாத மிக நுண்ணிதாக நுணுகிய ஆராய்ச்சியின் தெளிவினையுடையராய் ஊர்காத்தற் றொழிலை ஆளுதலை உடையோர், ஊக்க அருங்கணையினர் - தப்பக் கருதி முயல்வார்க்கும் தப்புதற்கு அரிய அம்பினையுடையராய், தேர் வழங்கு தெருவின் நீர்திரண்டு ஒழுக மழை அமைந்து உற்ற அரைநாள் அமையமும் - தேர் ஓடும் தெருவின்கண்ணே நீர் திரண்டு ஒழுகும்படி மழை மிகப் பெய்த இரவின் நடுநாளாகிய பொழுதினும், அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் - மடியிலராய்ப் போந்து விருப்பந்தோன்றி உலாவுகையினாலே, கடவுள் வழங்கும் கையறு கங்குலும் - தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும், அச்சம் அறியாது ஏமமாகிய - ஆண்டு வாழ்வோர் அச்சத்தை அறியாமைக்குக் காரணமாகிய காவலுடைத்தாகிய, மற்றை யாமம் பகலுறக் கழிப்பி - முந்தையாமத்தை அடுத்து வந்த நள்ளியாமத்தையும் பகுத்தல் உண்டாகப் போக்கி;

கருத்துரை : வலிய களிற்றை இரையின் பொருட்டு ஆராயும் வலிய புலியைப் போலத் துயிலாக் கண்ணையுடையராய், அஞ்சாத கோட்பாடுடையராய்க் களவு நூலறிந்தோராற் புகழும் ஆண்மையுடையோராய்ப் பொருள் செறிந்த நூல்வழியிற் றப்பாத நுணுகிய ஆராய்ச்சித் தெளிவையுடையராய், ஊர் காக்குந்தொழிலை மேற்கொண்டோர், தப்புதற்குரிய கணையை உடையராய்த் தேரோடும் தெருவிடத்தே நீர்திரண்டோடுமாறு மிக்க மழைபொழியா நின்ற நள்ளிரவினும் மடிந்திராதே விருப்பத்தோடே எழுந்து உலாவுதலானே, தெய்வங்கள் வழங்குதற்குரிய செயலற்ற இருட்போதினும் மாந்தர் அஞ்சுதல் அறியாத அந் நள்ளியாமத்தையும் இங்ஙனம் பகுப்புண்டாகப் போக்கி, என்பதாம்.

அகலவுரை : வயக்களிறு பார்க்கும் வயப்புலி போல வழங்கலின் எனத் தொழிலுவமமாக்குக. வயக்களிறு கள்வர்க்கும், வயப்புலி ஊர் காப்பாளர்க்கும் உவமை என்க. ஈரிடத்தும் வய என்னும் உரிச்சொல் வலிமை என்னும் பொருட்டு. வயவலியாகும் (உரி-68) என்பது தொல்காப்பியச் சூத்திரம்.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் (குறள்-599)

என வள்ளுவனார் வகுத்த குறளை இது நினைவூட்டும். தொடலை வாளும் குறும்பிடியும் உளியும் உடையராயினும் கள்வர் ஊர்காப்பாளரை வெரூஉவர் ஆதலான், இங்ஙனம் நுண்ணிதின் உவமை எடுத்தோதினார். துஞ்சாக் கண்ணும், அஞ்சாக் கொள்கை
யும், ஊர்காக்கும் தொழிற்கு இன்றியமையாமை காண்க. அஞ்சாமை ஈண்டு மறைந்திருக்கும் கள்வரானும், பேய் அணங்கு முதலியவற்றானும், தமக்குத் தீங்குறுமே என்று அஞ்சாதிருத்தல், செறிந்த நூல் என்றது ஈண்டுக் களவு செய்தற்குரிய நூலும் கள்வரைக் கண்டு பிடித்தற்குரிய காவல்நூலும் என இருவகை நூலையும் குறிக்கும். என்னை? கள்வர்கள் பயின்றுள்ள நூலின் நுணுக்கங்களை அறிந்திராதவழி அவரைக் காண்டல் அரிதாதல் பற்றி அந் நூலின் நுணுக்கங்களையும் அறிதல் இன்றியமையாமையின் என்க. இதனால், களவும் கற்று மற என்னும் பழமொழிக்கும் சிறந்த பொருள் விளங்குதலறிக. இங்ஙனம் கூறியவாற்றாற் களவு நூலும், காத்தல் நூலும் இருந்தமை புலனாம். இவ் விருவகை நூல்களிற் களவு நூலிருந்ததென்பதற்கு,

கருந்தொழிற் கொல்லன் காட்டினன் உரைப்போன்
மந்திரந் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவியென்று
எட்டுட னன்றே இழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது (சிலப்-கொலைக். 165-9)

எனவரும் சிலப்பதிகாரப் பகுதியும், அப்பகுதியில் காட்டினன் உரைப்போன் என்னுந் தொடர்க்கு, களவு நூலிலுள்ள ஏதுக்களைக் காட்டினாய் உரைக்கின்றவனென்க என அடியார்க்கு நல்லார் கூறும் உரைப்பகுதியும் சான்றாம். உயர்திரு. உ.வே.சா. ஐயரவர்கள் களவு நூல் ஸ்தேய சாஸ்திரமென்று வழங்கப்படுகின்ற தென்றும், அந்நூலைச் செய்தவர் கசரென்பவரின் ஆசிரியராகிய கர்ணிசூதரென்பவர் என்றும் வடமொழியாளர் கூறுவர், என்று குறித்துள்ளார்கள். அறிந்தோர் - இந்த இருவகை நூலையும் அறிந்தோர் என்க. களவுநூல் கற்றோரும் புகழ்தலாவது, நம் நூல் இவ்வூர் காப்பாளர்க்குத் தப்பும் நெறி காட்டிற்றிலது; அத்துணை ஆற்றலுடையோர் இவர் எனத் தம்முட் புகழ்தல். நுணங்கு நுண்டோச்சி-என்றது மிக நுணுகிய தேர்ச்சி என்றவாறு. தெருவில் நீர்ப்பெருக்கெடுத்து ஓடுமாறு பெரு மழை பெய்யும் இரவினும், விருப்பத்தோடே தங்கடமையைச் செய்யும் காவலர் என அவர் வினையாற்றும் பெருமையைத் தெரித்தோதியவாறு காண்க. அரைநாள்-நடுநாள்; ஈண்டு இரவின் நடுநாள் என்க. கடவுள் மட்டுமே வழங்குதற் குரியதும் ஏனைமக்கள் செயலறுதற்கு ஏதுவாகியதும் ஆகிய கங்குல் என்க. கங்குல்-இருள்.

இத்தகைய சிறந்த காவலரை உடைமையின் மதுரைநகர் அச்சமறியாதென்க. (620) முந்தையாமம் சென்ற பின்றை என முன்னர் ஓதுதலின் அதனை அடுத்து நிகழும் நள்ளியாமத்தை மற்றை யாமம் என்றார். பகல்உற-பகுத்தல் உண்டாக. 121-பணிலம் என்பது தொடங்கி, மற்றையாமம் பகலுறக் கழிப்பி (652) என்னுந் துணையும்; பணிலம் அடங்க, மகளிர் பள்ளி யயரக் கூவியர் உறங்க, வயிரியர் மடியப் பாயல் வளர்வோர் கண்மடுப்ப இடையது, கொட்ப, கண்மா றாடவர் ஒழுக்கம் ஒற்றிப் புலிபோல ஊர் காப்பாளர் எழுந்து வழங்கலின், ஏமமாகிய மற்றை யாமம் கழிப்பி என அணுகக் காண்க. பானாட்கங்குல் இடையதாகிய மற்றையாமம் எனக் கூட்டுக. இடையதாகிய யாமமும், மற்றை யாமமும் எனப் பகுப்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இனி, 654-போது பிணிவிட்ட என்பது தொடங்கி, 656- ஏம வைகறை என்னுந் துணையும் ஒரு தொடர்.

மதுரை மாநகரத்தே வைகறைப்போதும் நிகழ்ச்சிகளும் வேதமுழக்கம்

654-659 : போது ................. பாட

பொருள் : போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை - பூக்கள் தளையவிழ்ந்த மணம் கமழ்தலையுடைய நறிய பொய்கைகளிலே, தாது உண் தும்பி போது முரன்றாங்கு - தாதையுண்ணுந் தும்பிகள் அப் பூக்களிலே பாடினாற் போன்று, ஓதல் அந்தணர் வேதம் பாட - ஓதுதற் றொழிலையுடைய அந்தணர் அவ்வமயம் ஓதற்குரிய வேதத்தைப் பாடாநிற்ப;

கருத்துரை : அலர்ந்த மலர்களையுடைய மணமிக்க பொய்கைகளிலே தாதுண்ணும் தும்பிகள் அப்பூக்களிடத்தே பாடுமாறுபோல ஓதற்றொழிலையுடைய அந்தணர் வேதங்களை ஓதாநிற்ப என்பதாம்.

அகலவுரை : பொய்கை - மானிடரான் ஆக்கப்படாத இயற்கை நீர்நிலை. காரணநிலையினின்றும் காரியநிலையில் விரிந்துள்ள இப்பேருலகம் இயற்கையிலுள்ள பொய்கைக்கும், அதன்கண் தோன்றியுள்ள உயிர்க் கூட்டங்கள் அப்பொய்கையின் மலரும் பூக்கட்கும், அப்பூக்களுள் பருவம் வாய்ந்த மலருள் ஊறும் தேன், அப் பிறப்புக்களுள் உயரிய அந்தணர் உளத்தே தோன்றும் இறை அன்புணர்ச்சிக்கும், தேனை உண்ட வண்டு களித்துப் பாடுதல் அவ்விறை யன்பு பொங்கி மகிழ்ந்து அந்தணர் வேதம் பாடுதற்கும் உவமையாகக் கொள்க. அந்தணர்க்குரிய அறுதொழிலினும் ஓதல் தலைசிறந்தமையின் ஓதலந்தணர் என்றார். கல்லாக் கழிப்பார் தலையாயார் (நாலடி) என்றார் பிறரும். வைகறைப்போதில் அந்தணர் வேதம் பாடும் வழக்கமுண்மையை,

பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம வின்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே (பரி.தி.27: 7-11)

என்பதனானும் அறிக.

657-662 : சீரினது .......................... நுவல

பொருள் : சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி - தாளவறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து, யாழோர் மருதம் பண்ண - யாழோர் மருதப பண்ணை இசையாநிற்ப, காழோர் கடுங்களிறு கவளம் கைப்ப - பரிக்காரர் கடிய களிற்றைக் கவளம் ஊட்ட, நெடுந் தேர்ப் பணை நிலைப்புரவி புல் உணாத் தெவிட்ட - நெடிய தேரிலே பூணும் பந்தியிலே நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை உண்டு தெவிட்டாநிற்ப, பல்வேறு பண்ணியக்கடை மெழுக்குறுப்ப - பண்டம் விற்போர் பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகளை மெழுகுதலைச் செய்ய, கள்ளோர் களிநொடை நுவல - கள்ளைவிற்போர் களிப்பினையுடைய கள்ளிற்கு விலைசொல்ல;

கருத்துரை : யாழோர் தாளவறுதியை இனிதாகக் கொண்டு நரம்பை இனிதாக இயக்கி மருதப்பண்ணை இசைக்கவும் பரிக்காரர் களிறுகட்குக் கவளம் ஊட்டவும், பந்தியிலே நிற்றலையுடைய தேர்க்குதிரைகள் புல்லுண்டு தெவிட்டவும், பண்டம் விற்போர் கடைகளை மெழுகவும், கள்விற்போர் கள்ளிற்கு விலைகூறாநிற்பவும் என்பதாம்.

யாழோர் - யாழியக்கும் பாணர்கள். சீர்-தாள அறுதி.

அகலவுரை : காழோர் - கோலையுடையோர். பரிக்காரர் குத்துக் கோலையுடையராகலின் காழோர் எனப்பட்டனர். காழோர் இகழ்பதம் நோக்கிக் கீழ நெடுங்கை யானை நெய்ம்மிதிக் கவளம் கடுஞ்சூன் மந்தி கவரும் என்றார் பெரும்பாணாற்றுப்படையினும், (193-5) கைப்ப - ஊட்ட, தீற்ற எனினுமாம். கவளம் - யானைக்கிடும் உணவு. நெடுந்தேர்ப் புரவி, பணைநிலைப்புரவி, எனத் தனித்தனி கூட்டுக. பணை - குதிரைப் பந்தி புல்லுணா-புல்லாகிய உணவு. தெவிட்டல்-உண்டு தேக்கெறிதல்-தெவிட்ட என்றதற்குக் குதட்ட எனப்பொருள் கூறினர் நச்சினார்க்கினியர். மெழுக்குறுத்தல் - மெழுகுதல். உறுப்ப : பகுதிப் பொருளது. கள்ளோர் - கள்விற்போர். நொடை - விலை. நுவலுதல் - எடுத்துக் கூறுதல். கள்விற்போர்-இக் கள் இன்னவிலை கொண்மின் எனக் கூவுவார் என்றபடி. களிப்பை நல்கும் கள்ளை ஆகுபெயராற் களி என்றார்.

குடிப்பிறப் பாட்டியர் செயல்

662-667 : இல்லோர் ................ கரைய

பொருள் : இல்லோர் நயந்த காதலர் கவவுப் பிணி துஞ்சி - கற்புடைமகளிர் தாங்கள் விரும்பின தங்கணவருடைய முயக்கத்திற் பிணிப்பாலே துயில்கொண்டு, புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி - இருள் மாய்ந்து கதிர்விரிகின்ற விடியற் காலத்தைப் பெறுகையினாலே அக்காலத்து இல்லத்திற் செய்யத் தகுவனவற்றைச் செய்தற்கு விரும்பி, கண் பொரா எறிக்கும் மின்னுக்கோடி புரைய-கண்ணை வெறியோடப் பண்ணி விளங்கும் மின்னொழுங்கை ஒப்ப, ஒண்பொன் அவிர் இழை தெழிப்ப இயலி - ஒள்ளிய பொன்னாற் செய்து விளங்கும் சிலம்பு முதலியன ஒலிப்பப் புறம் போதுகையினாலே, திண் சுவர் நல்லில் கதவம் கரைய - திண்ணிய சுவர்களையுடைய நல்ல இல்லங்களிலே கதவுகள் ஒலியாநிற்ப.

கருத்துரை : கற்புடைய குலமகளிர் இரவின்கண் தாங்கள் விரும்பின கணவருடைய முயக்கத்தின் பிணிப்பாலே இனிது துயில்கொண்டு, இருணீங்கி ஒளிபரவாநின்ற அவ்வைகறைப் போதின்கண் துயில்உணரப் பெற்றாராய், அவ்வமயத்தே இல்லத்தே செய்தற்குரிய செயல்களைச் செய்ய விரும்பி எழுந்து கொடிமின்னல் போன்று சிலம்பு முதலியன ஒலிப்ப நடந்து, கதவங்களைத் திறத்தலான் அவை ஒலியாநிற்ப என்பதாம்.

அகலவுரை : குடிப் பிறந்த குலமகளிர் என்பார். இல்லோர் என்றார். இல்லத்துக் கணவன் வாழ்க்கைக்குத் துணையாயிருந்து இல்லறம் நடத்தும் கற்புடை மகளிர் என்றவாறு.

இரவு வர நயந்தோர்
காத லின்றுணை புணர்மார் ஆயிதழ்த்
தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய
நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப (549-554)

கண்டாமன்றே, அம் மகளிரே எனச் சுட்டாமற் சுட்டுவார் ஆண்டுக்கூறிய நயந்தோர் காதலர் புணர்மார் என்றதற்கேற்ப ஈண்டும், நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சி என மறவாதோதும் அருமை அறிந்து இன்புறற் சாலது. அம்மதுரையில் காதலின்பத்தை விழைந்து கோலங் கொண்ட மகளிருள் யாரும் அதுபெறாது இன்னலுற்றார் இலர்போலும். கவவுப் பிணி - நெகிழாது அகப்படத் தழீஇய கை என்க. காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் (சிலப்-61) என்றார் இளங்கோவடிகளாரும். முயக்கிய கைகளை ஊக்கி ன் இவர் நுதல் பசக்கும் என அறிந்த காதலர் அங்ஙனம் தம் கைப்பிணியுள்ளே அவரைத் துயிற்றுதல் இயல்பே யன்றோ! இஃது அவர்தம் காதற் சிறப்புரைத்தவாறு.

இனி, வாழ்க்கைத் துணையாகிய அம் மடந்தையர் தம் கடமைக்கண் உவப்போடு தலைப்படுதலை, அதற்குத் தொடக்கநேரமாகிய வைகறையிலே துயிலுணர்தலானும், வைகறை கண்டு மகிழ்தலானும் உணர்த்தினார். வைகறைப் போதில் துயிலுணர்ந்து இல்லத்திற் செய்யவேண்டிய பணிகளைச் செய்து கணவன் முதலியோர்க்கு உண்டி முதலியன காலத்தே இயற்றிக் கொடுத்தல் குலமகளிர் இயல்பு. இதனைத் தம் ஒப்பற்ற வாழ்க்கைத் துணைவியை எண்ணி வள்ளுவனார் உரைத்த,

பின்றூங்கி முன்னெழூஉம் பேதையே போதியோ
என்றூங்கும் என்கண் இரா

என்னும் கையறுநிலையானும் காண்க. சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி (நாலடி-363) என்றார் பிறரும். மின்னுக்கொடி-மின்னொழுங்கு; கொடிமின்னல். மின்னுக்கொடி என்றது அம் மகளிரின் அழகுச் சிறப்பையும், இழை தெழிப்ப இயலி என்றது, அவர்தம் செல்வச் சிறப்பையும் உணர்த்தின.

668-677 : உண்டு .................... குழும

பொருள் : உண்டு மகிழ் தட்ட மழலை நாவில் பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற - கள்ளையுண்டு களிப்பினைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்ட மழலை வார்த்தையையுடைய பழைய களிப்பினையுடையாருடைய முழங்குகின்ற குரல்கள் தோன்றாநிற்ப, சூதர் வாழ்த்த மாகதர் நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப - நின்றேத்துவார் வாழ்த்த இருந்தேத்துவார் புகழைச் சொல்ல வைதாளிகர் தத்தம் துறைக்குரியனவற்றை இசைப்ப நாழிகை சொல்லுவார் நாழிகை சொல்ல, இமிழ் முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப - பள்ளி எழுச்சி முரசு ஒலிப்ப ஏறுகள் தம்முள் மாறுபட்டு முழங்க, பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப - பொறிகளையுடைய மயிரினையுடைய கோழிச் சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ, யானையங்குருவின் சேவலோடு காமர் அன்னம் கரைய அணிமயில் அகவ - வண்டாழ்ங்குருகினுடைய சேவல்களோடே விருப்பத்தையுடைய அன்னச் சேவல்களும் தமக்குரிய பேடைகளை அழைப்ப அழகிய மயில்கள் பேடைகளை அழைப்ப, பிடிபுணர் பெருங் களிறு முழங்க - பிடியோடே கூடின பெரிய யானைகள் முழங்க, முழு வலிக் கூட்டுறை வயமாப் புலியொடு குழும - மிக்க வலியையுடைய கூட்டிலே உறைகின்ற கரடி முதலிய வலிய விலங்குகள் புலியுடனே முழங்காநிற்ப;

கருத்துரை : மேலும் மேலும் கள்ளையுண்டு களிப்புத் தம்மைப் பிரியாமற் றடுத்துக்கொண்ட மழலைச்சொல்லையுடைய பழைய களிப்பினையுடைய களிமாக்களின் முழக்கந்தோன்றாநிற்ப, சூதர் வாழ்த்த, மாகதர் புகழ, வைதாளிகர் தத்தம் துறைக்குரியவற்றை இசைப்ப, நாழிகை சொல்வார் நாழிகையைச் சொல்ல, பள்ளி எழுச்சி முரசம் முழங்க, ஏறுகள் மாறுபட்டு முழங்க, கோழிச் சேவல் கூவ, வண்டாழ்ங் குருகின் சேவலும் அன்னச் சேவலும் மயிற்சேவலும் தத்தம் பெடைகளை அழைப்ப, பிடியோடே கூடின பெரிய யானைகள் பிளிறக் கூட்டின்கண் உறையும் கரடி புலி முதலிய வல்விலங்குகள் முழங்க, என்பதாம்.

அகலவுரை : ஒருமுறை உண்ட கள்ளின் களிப்பு மாறப்போம் அமய மறிந்து, மீண்டும் கள்ளினைப்பருகி அக் களிப்பினை மாறாதே நிறுத்திக் கொள்ளும் பெருங்களியர் என்பார், உண்டு மகிழ்தட்ட பழஞ்செருக்காளர் என்றார். உண்டு என்றது மேலும் மேலுங் கள்ளைப் பருகி என்றவாறு. கள்ளருந்துவோர் அறிவு மயங்குதல் காரணமாகத் திருத்தமுறப் பேசவியலாது குழறிப் பேசுவரன்றே! அங்ஙனம் பேசுதலையுடையார் என்பார், மழலைநாவிற் பழஞ்செருக்காளர் என்றார். செருக்கு - களிப்பு.

சூதர் - நின்றேத்துவார். மாகதர்-இருந்தேத்துவோர். வைதாளிகர்-வரிக்கூத்துட்பட்ட வேதாளிக்கூத்தினை ஆடுவோர். இதனை, மிக்க மலையாளி வேதாளி வாணி குதிரை சிலையாடு வேடு சிவப்பு எனவரும் அடியார்க்குநல்லார் (சிலப்-அரங்: 24) உரை மேற்கோளானும் உணர்க. நாழிகை சொல்வோரை ஆகுபெயரான் நாழிகை என்றார். நாழிகை நுவல என்றது நாழிகைக் கணக்கர் நாழிகை இனைத்தென்று கூற என்றவாறு. நாழிகைக் கணக்கர் என்பார் அரசனுக்குச் சென்ற நாழிகைக்குக் கவிசொல்வோர் ஆவர். இங்ஙனம் நாழிகை நுவல்தலை.

பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு
காமன் திரியும் கருவூரா - யாமங்கள்

ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோ யொன்றுபோ யொன்று (சிலப்-இந்திர : 49. உரைமேற்)

என்பதனானும் அறிக.

சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் (சிலப்-இந்திர : 48-9)

என்றார் இளங்கோவடிகளாரும். முரசு-காலை முரசம்; இதனைப் பள்ளி யெழுச்சிமுரசம் என்ப. காலைமுரசக் கனைகுர லோதையும் (சிலப்-13: 140) என்றார் பிறரும். யானையங்குருகு - சக்கரவாகப்புள் யானையங் குருகின் கானலம் பெருந்தோடு (குறுந்-34:45) கீசுகீசென்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து (திருப்பாவை.7) என்பதும் அது. பிண்டைக் காலத்தே கரடி புலி முதலியவற்றைக் கூட்டில் அடைத்து நகரங்களில் வைத்திருந்தனர் (இக்காலத்தே உள்ள பொருட்காட்சிச் சாலைகள் போன்று) என்பது முழுவலிக் கூட்டுறை வயமாப் புலியொடு குழும என்பதனான் உணரலாம். முழுவலி வயமா, கூட்டுறை வயமா எனத் தனித்தனி கூட்டுக. வயமா -வல்விலங்கு. அவை, கரடி அரிமா புலி முதலியன என்க. குழுமுதல் - முழங்குதல்.

678-686 : வானம் ............................. வைகறை

பொருள் : வானம் நீங்கிய நீல்நிற விசும்பின் - வானம் பிளக்கும்படியாக நீலநிறமுடைய முகிலினிடத்தே மின்னு நிமிர்ந்தனையராகி - மின்னுக் கொடி நுடங்கின தன்மையுடையராய், நறவு மகிழ்ந்து - மதுவையுண்டு, மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த பரூஉக்காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு - மாட்சிமைப்பட்ட பேரணிகலன்களையுடைய மகளிர் கணவரோடே புலந்தனராய், அறுத்த பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடே, பொன்சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன - பொன்னை உருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலம்போல, அம்மென் குரும்பைக் காய் படுபு பிறவும் - அழகிய மெத்தென்ற இளைதாகிய பச்சைப் பாக்கு விழுந்து முத்தொழிந்த மாணிக்கமும் மரகதமும் பொன்னும் மணிகளும் விழுந்து கிடப்ப, தருமணன் முற்றத்து அரிஞிமிறு ஆர்ப்ப - கொண்டு வந்து இட்ட மணலையுடைய அம்முற்றத்தே வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிப்ப, மென்பூஞ் செம்மலொடு நன்கலம் சீப்ப - மெல்லிய பூவாடல்களுடனே நல்ல பூண்களையும் பொறுக்கிப் போகும்படி, இரவு தலைப்பெயரும் ஏம வைகறை -இராக்காலம் தன்னிடத்தினின்றும் போகின்ற எல்லாவுயிர்க்கும் பாதுகாவலாகிய விடியற்காலத்தே;

கருத்துரை : வானம் பிளக்குமாறு நீலநிற முகிலிடத்தே அடங்கும் கொடி மின்னலை ஒத்த தன்மையுடையராய் மதுவை உண்டுகளித்துத் தம் கணவரோடே ஊடிக்கொண்ட மகளிர் அறுத்த பரிய வடத்தின்கண் முத்தும் பிறமணிகளும், பொன்சுடு நெருப்பு நிலத்தே சிந்திக் கிடந்தாற் போன்று சிதறி அவற்றோடு அழகிய மெல்லிய பச்சைப் பாக்கும் விழுந்து மிளிரும் மணலையுடைய முற்றத்தே வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிப்ப வாடற்பூக்களையும் அணிகலன்களையும் பொறுக்கி மீண்டும் அம்மகளிர் அணிந்துகொள்ளும்படி இரவு தன்னிடத்தினின்றும் பெயர்கின்ற பாதுகாவலாகிய விடியற்காலத்தே என்பதாம்.

அகலவுரை : விண் பிளப்பது போன்ற மின்னல் என்பார், வானம் நீங்கிய மின்னு என்றார். நீங்கிய-நீங்க; பிளக்க என்றவாறு. செய்யிய என்னும் வினையெச்சம். நீங்கிய நிமிர்ந்து என இயைக்க. விசும்பு : ஆகுபெயர்; முகில் என்னும் பொருட்டு. இங்ஙனம் பொருள் காணாது ஆசிரியர் நச்சினார்க்கினியர், வானம் நீங்கிய நீல்நிற விசும்பின் என்னும் தொடர்க்கு, ஆகாயம் தனக்கு வடிவின்றென்னும் தன்மை நீங்குதற்கு மேகபடலத்தால் நீலநிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே என்று உரை விரித்தார். மேலும் இனிச் செக்கர் வானம் போன விசும்பென்பாரும் உளர் எனக் குறித்தனர். முன்னர் கவவுப்பிணியிற் கூடி இனிது துயில் கொண்ட மகளிர், கண்பொரா எறிக்கும் மின்னுக் கொடி புரைய மென்மெல இயலுதலைக் கூறிய புலவர் ஈண்டு ஊடிய மகளிர் பெற்றியை எடுத்துரைக்கின்றார். என்னை?

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கு மாறு (குறள் - 1321)

என்றும்,

புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னாற் அகத்து (குறள்-1323)

என்றும்,

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் (குறள்-1330)

என்றும் இன்பத்துப்பால் ஊடலின்பத்தை ஓதுதல் காண்க. நறவு மகிழ்ந்து - கள்ளைப் பருகி. காழ் - வடம். காழ் ஆரம்: இரு பெயர் ஒட்டு; காழாகிய ஆரமென்க.

கரியும் தழலும் பொன்னுமாகப் பன்னிறம்படச் சிந்திக் கிடக்கும் பொன்சுடு நெருப்புப் போன்று பன்னிற மணிகள் முத்தமொடு சிந்திக் கிடக்கும் முற்றம் என்க. படுபு என்னும் எச்சத்தைப் பிறவும் என்பதன் பின்னாக மாறுக; காயும் பிறவும் படுபு என. தருமணல்-கொணர்ந்து போகட்ட மணல் முற்றத்திற்கு மணல் கொணர்ந்து பரப்புதல் மரபு. இதனை, பழமணன் மாற்றுமின் புதுமணற் பரப்புமின் (1:51) என்னும் மணிமேகலையானும் அறிக. அரிஞிமிறு என்பன வண்டின் வகை. ஞிமிறு ஆரவாரிப்ப நன்கலத்தைச் சீப்பர் என்க. புலந்து வீசிய மலர் மாலையும் ஆண்டுக் கிடத்தலின் அவற்றிற் படிந்த வண்டு நன்கலம் சீக்கும்போது ஆரவாரித்த வென்க. சூடிக்கழித்த பூவென்பார் செம்மல் என்றார், செம்மல்-வாடற்பூ. குயில் குடைந்துதிர்த்த புதுப்பூஞ் செம்மல் (5) என்றார் சிறுபாணாற்றுப்படையினும், தலைப்பெயர்தல் - இடத்தினின்றும் அகலுதல். இராக்காலம் உலகின் நீங்குதல் வைகறைப் போதாகலின் இரவுத்தலைப் பெயரும் வைகறை என்றார். எல்லாவுயிர்களையும் அவ்வவற்றிற்குரிய வினைகளின் ஈடுபடுத்தி அவையிற்றிற்கு உணவு முதலியன கிடைக்கச் செய்தலின் ஏம வைகறை என்றார்.

இனி 654-போது என்பது தொடங்கி 686-வைகறை என்னுந் துணையும் தொடர்ந்த இத்தொடரின் பொருளை, அந்தணர் வேதம் பாட, யாழோர் மருதம் பண்ணக் காழோர் கைப்ப, புரவி தெவிட்ட, கடை மெழுக்குறுப்ப, கள்ளோர் நுவல, இல்லோர் இயலிக் கதவம் கரைய, பழஞ் செருக்காளர் குரல் தோன்ற, வாழ்த்த நுவல இசைப்ப, சிலைப்ப, இயம்ப, கரைய, அகவ, முழங்கக் குழும ஆர்ப்பச் சீப்பப் பெயரும் வைகறை என இயைபு காண்க.

மதுரை மாநகரம்

687-699 : மைபடு ..................... மதுரை

பொருள் : மைபடு பெருந்தோள் மழவர் ஒட்டி இடைப் புலத்து ஒழிந்த ஏந்துகோட்டு யானை - பிறர் தோள் குற்றப்படுதற்குக் காரணமான பெரிய தோளையுடைய மழவரைக் கெடுத்து அவர் விட்டுப் போகையினாலே போர்க்களத்தே நின்ற ஏந்தின கொம்பினையுடைய யானைகளும், பகைப் புலம் கவர்ந்த பாம்பரிப்புரவி-பகைவர் நாட்டிலே கைக்கொண்டு வந்த பாய்ந்து செல்லும் செலவினையுடைய குதிரைகளும், வேல் கோலாக ஆள் செலநூறிக் காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர் ஊர் சுடு விளக்கில் தந்த ஆயமும்-தம் கையில் உள்ள வேலே ஆனோட்டும் கோலாகக் கொண்டு, ஆண்டு நிரை காத்திருந்த வீரரை மாள வெட்டி எரிகின்ற சினத்தை யுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய ஆயக்கரையில் இருந்த வேட்டுவர் பகைவருடைய ஊரைச் சுடுகின்ற விளக்கிலே அடித்துக்கொண்டு வந்த பசுத்திரளும், நாடுடை நல் எயில் அணங்கு உடைத் தோட்டி - அகநாட்டைச் சூழவுடைத்தாகிய நன்றாகிய அரண்களில் இட்ட வருத்தத்தையுடைய கதவுகளும், நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி நாள் தர வந்த விழுக்கலம் - நாள்தோறும் தமக்குச் செல்வம் மிகும்படியாகக் கையால் தொழுது வாழ்த்தி நாட்காலத்தே திறையாகக் கொண்டுவர வந்த சீரிய கலங்களும், அனைத்தும் - அத்தன்மையன பிறவும், கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்தாங்கு அளந்து கடையறியா வளம் கெழு தாரமொடு - கங்கையாகிய அழகிய பெரியாறு ஆயிரமுகமாகக் கடலிலே சென்றாற்போல அளந்து முடிவறிதல் செல்லாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடே, புத்தேள் உலகம் கவினிக் காண்வர - தேவருலகம் போன்று பொலிவெய்தி பிறநாட்டினர் அளாவிக் காணுதல் உண்டாக, மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை-மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பை யுடைய மதுரையின்கண்;

கருத்துரை : பெருந் தோளையுடைய மழவரைக் கெடுத்தமையான் அவர் போர்க்களத்தே விட்டொழிந்த யானைகளும், பகைவர் நாட்டிலே சென்று கைக்கொண்டு வந்த விரைந்த செலவினையுடைய குதிரைகளும், கூளியர் பகைவர் நாட்டிற் புகுந்து ஆண்டு ஆநிரை காத்திருந்த வீரரை வெட்டிக்கொன்று அவர் ஊரைச் சுட்டு அவ்விளக்கிலே தம் வேலையை கோலாகக் கொண்டு அடித்துக்கொண்டு வந்த பசுத்திரளும், தாம் வாழும் பொருட்டுத் தம்மைக் காக்கும்படி கையாற் றொழுது வாழ்த்தி நாட்காலத்தே திறையாகக் கொணரப்பட்ட பொருளும், பிறவும் கங்கையாறு கடலிற் பலமுகமாகப் புகுதுமாறு வந்து புகுதலானே வளப்பத்தை அளந்து முடிவு காண்டற்கியலாத அரும் பண்டங்களோடே தேவருலகம் போன்று பொலிவுபெற்று உலகெலாம் புகழ் பரப்பிய சிறப்பிற்றாய மதுரை யிடத்தே என்பதாம். (மதுரையிடத்தே இனிதுறைமதி பெரும-என நூலிறுதியிற் சென்று முடியும்).

அகலவுரை : மழவர் - சிலவீரர். மைபடு பெருந்தோள், என்றதற்கு கருமைபோன்று கரியவாகிய தோளையுடைய எனினுமாம். மழவர் தோற் றோடுவார் விட்டுப்போன யானைகளும் என்றமையால் இவர் யானைப் படையை மிகுதியாக உடையர் என்பது போதரும். முன்னர் (395-6) தீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர் பூந்தலை முழவு என இவ்வாசிரியர் கூறியிருத்தல் அறிக. உருவக் குதிரை மழவர் (அகம்-1 : 2) என்றார் பிறரும்.

இம் மழவர் தம்பால் வலிந்து போர்க்கு வந்து தோற்றோடினர் என்பது தோன்ற இடைப்புலத்து ஒழிய என்றார்; இது தும்பைப் போர் கூறிற்று, என்னை?

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலையழிக்கும் (தொல்-புற. 15)

சிறப்புரைத்தமையான். பகைப்புலம் கவர்ந்த பாய்பரிப் புரவி என்றது, உழிஞைப் போர் கூறியவாறு. என்னை? பகைவர் நாட்டிற் சென்று கவர்தல் முழுமுதலரணம் முற்றலுங் கோடலும் அஃதாகலான். வேல் கோலாகத் தந்த ஆயம்,விளக்கிற் றந்த ஆயம், எனத் தனித்தனி கூட்டுக. ஆள்-ஆண்டு ஆன் காவல் செய்திருந்த வீரர். ஆயம்-ஈண்டுப் பசுத்திரள். இது, வெட்சிப்போர் கூறிற்று. என்னை?

வேந்து விடுமுனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்தோம்பன் மேவற் றாகும் (தொல்-புறத்-2)

என்பதோத்தாகலான். இதன்கண் ஆள் செல நூறி ஊர் சுடு விளக்கில் என்றது, வெட்சித் திணைக்கண் ஊர்க்கொலை என்னும் துறையாம். ஆ கவர்வோர் ஆண்டுள்ள வீரரை வளைத்துக்கொண்டு கொல்லலும், பகைவர் ஊரைத் தீக்கொளுவுதலும் மரபு. இதனை,

அரவூர் மதியில் கரிதூர வீம
விரவூர் எரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற
பல்லான் தொழுவும் பகற்காண்மார் போர்கண்டார்
கொல்வார்ப் பெறாஆர் கொதித்து (தொல்-புறத்-3. மேற்கோ நச்.)

என்பதனானும் அறிக.

நாடுகெட எரிபரப்பி என இவ்வாசிரியர் முன்னும் கூறிப்போந்தமை காண்க. கூளியர் - மறவர். கொடுவிற் கூளியர் (மலைபடு-421) என்றும் கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் (புறம் 23:5) என்றும், பிறரும் கூறுதல் காண்க. இக் கூளியரை, ஆயக் கரையில் இருந்த வேட்டுவர் என்பர் நச்சினார்க்கினியர். ஆயக்கரை - ஆயத்துறை; சுங்கம் கொள்ளுமிடம். நாட்டின் எல்லையில் இருக்கும் படைஞர் என்றபடி. நாடுடை நல்லெயில் அணங்குடை தோட்டி என்றது பகைவர் அரண்களின் கதவுகளை; கதவுகளைக் கொணர்தல் வெற்றியின் அறிகுறியின் பொருட்டென்க. இங்ஙனம் நான்கு திசைகளினும் போரிற் கவர்ந்த பொருளும், திறையாக வரும் பொருளும் இடையறாது வந்து மதுரையிற் புக்க வண்ணமே இருத்தலின் அப் பண்டங்கள் வரையறை செய்யப் படாதனவாயின. கங்கையாறு மலைவளங்களை வரன்றிக்கொண்டு இடையறாது பல முகமாகக் கடலிற் புகுதலின், இப் பொருள் வருவாய்க்குக் கங்கைப் பேரியாற்றின் நீரொழுக்கை உவமித்தார். தாரம் - பண்டம். புத்தேள் உலகம் கவினிக், காண்வர என்ற தொடரை, புத்தேள் உலகம் காண்வரக் கவினி என மாறிக்கூட்டி தேவருலகம் காணுதல் உண்டாகத் தான் அழகைப் பெற்று என்பர் நச்சினார்க்கினியர். பெரும் பெயர் - என்றதற்குப் பெரும் பொருள் என்று பொருள்கூறி அதுவீடு என்றார். இனி, 331 - பாடல் சான்ற, என்பது தொடங்கி இதுகாறும் உட்பிரிவுகள் பலவுடைத்தாய்த் தொடர்ந்த இத் தொடரினை,

பாடல்சான்ற நன்னாட்டு நடுவணதாய், வையைத் துறைதொறும் பாணிருக்கையை உடைத்தாய், கிடங்கும் புரிசையும், வாயிலும் நல்லில்லும் உடைத்தாய், தெருவில் இசைஒலிப்ப இருபெரு நியமத்தில், நாடு துவன்று விழவின் நாடார்த்தாற் போன்று நாளங்காடியில் கம்பலை எழ, அல்லங்காடிக் கம்பலை புள்ளின் இசை யெழுந்தாற்போல எழ, ஞாயிறு குன்றம் சேர மாலை புகுந்து நீங்க, முந்தை யாமம் சென்ற பின்றை, மற்றை யாமம் கழிப்பி, வைகறையிலே அனைத்தும் கங்கையாறு கடற் படர்ந்தாங்கு அளந்து முடிவறியாப் பண்டங்களோடே கவினிப் புகழ்பெற்ற, மதுரை என அணுகக் கொண்டு காண்க. மதுரை நகரின் வளங்கூறும் இதனானும் யாதொன்றும் நிலையாதென்னும் குறிப்பே தோன்ற யாமங்கள் ஒன்றன் பின் னொன்றாய் நிலையின்றிக் கழிதலே கூறிய நுணுக்கம் அறிக. இனி, 700-முதல் நூன்முடியுந் துணையும் (782) ஒரு தொடர். இதன்கண் ; இதுகாறும் குறிப்பானும் வெளிப்படையானும், இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, முதலிய நிலையாமைகளையே கூறிவந்த புலவர் பெருமான் இனி, நில்லாத இவ் உலகத்தே, நிலையுதலுடைய வீடு பெறுமாறு பற்றற்று வாழும் வகையைப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறிதொன்று புகல்வார் போன்று மிக நுணுக்கமாகவும் குறிப்பாகவும் கூறுகின்றார்.

வீட்டு நெறியை விலக்காத இம்மை இன்பம் காதற் பேரின்ப நுகர்ச்சி

700-சினைதலை என்பது தொடங்கி, 714- எழுந்து என்னுந் துணையும் ஒரு தொடர்.

700-714 : சினைதலை .......................... எழுந்து

பொருள் : சினை தலை மணந்த சுரும்புபடு செந்தீ ஒண் பூம்பிண்டி அவிழ்ந்த காவில்-கொம்புகள் தம்மில் தலைக்கூடின சுரும்புகள் உண்டாகின்ற செந்தீப்போலும் ஒள்ளிய பூக்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள பொழிலிடத்தே, சுடர் பொழிந்து ஏறிய விளங்குகதிர் ஞாயிற்று இலங்குகதிர் இளவெயில் தோன்றி அன்ன -ஒளியைச் சொரிந்து குடமலையிலே போக விளங்குகின்ற கதிர்களையுடைய ஞாயிற்றினுடைய விளங்கும் கதிர்களின் இளவெயில் தோன்றினாலொத்த, தமனியம் வளைஇய தாவில் விளங்குஇழை-பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்று விளங்குகின்ற பேரணிகலன்களாலே, நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து - நிலம் விளக்கமடையா நிற்பக் கற்புடைமையால் மேன்மைதகப் பொலிவுற்று, மயில் ஓர் அன்ன சாயல் மயிலோடு ஒரு தன்மைத்தாகிய மென்மையினையும், மாவின் தளிர் ஏர் அன்ன மேனி -மாவின் தளிரினது அழகையொத்த நிறத்தினையும், தளிர்ப் புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலையர் - தளிரினது புறத்தில் ஈர்க்குப் போலத் தோன்றிய திதலையையும் உடையராய், கூர் எயிற்று ஒண்குழை புணரிய வண்தாழ் காதின் -கூரிய எயிற்றினையும் ஒள்ளிய மகரக்குழை பொருந்திய வளவிய காதினையும், கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் தாதுபடு பெரும்போது புரையும் வாண் முகத்து - கடவுட்டன்மையையுடைய பொற்றாமரைக் குளத்தின்கண் நெருங்கின நெருப்புப்போலும் இதழ்களையுடைய தாமரையினது தாதுண்டாம் பெரிய பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும், ஆய்தொடி மகளிர் - நன்றாக ஆராய்ந்த தொடியினையும் உடைய மகளிருடைய, நறுந்தோள் புணர்ந்து - நறிய தோளை முயங்கி, கோதையிற் பொலிந்த சேக்கை துஞ்சி - தூக்கு மாலைகளாற் பொலிவு பெற்ற படுக்கையிலே துயில் கொண்டு, திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து - சூதர் இனிய இசையான் ஏத்தித் துயிலெடுத்தலானே திருந்திய உறக்கத்தினின்றும் இனிதாக எழுந்து;

கருத்துரை : மலர்ந்த அசோகம் பூம்பொழிலிலே அந்திமாலைப் போதின்கண் ஞாயிற்றின் இளங்கதிர் பரவுமாறுபோல பொன்னின் ஒளி தழுவப்பட்ட விளங்கும் தம்மொளியைப் பரப்பி நிலத்தை விளக்கும் அணிகலன்களையும், மயிலை ஒத்த சாயலையும், மாந்தளிரை ஒத்த நிறத்தினையும், மாந்தளிரின் புறத்தில் ஈர்க்கை ஒத்த திதலையையும், கூர்த்த எயிற்றினையும், கடவுட்டன்மையுடைய பொற்றாமரைக் குளத்தின் மலரும் பெரிய தாமரைப்பூவை ஒத்த முகத்தினையும், வளையலினையும் உடைய மகளிருடைய நறிய தோளை முயங்கித் தூக்குமாலைகளாற் பொலிவு பெற்ற படுக்கையிலே துயில்கொண்டு வைகறையிற் சூதர் இசையாற் றுயிலுணர்த்த இனிதே எழுந்து, என்பதாம்.

அகலவுரை : மலர்ந்த அசோகம் பொழிலிலே இளவெயில் படர்ந்து அப்பொழிலின் மலர்தளிர் முதலியவற்றை விளக்கம் செய்து மேலும் நிலத்தையும் ஒளிரச் செய்வது போன்று, மணிகள் இழைத்த அணிகலன்களின் மேல் பொன்னின் ஒளிபடர்ந்து அவ்வணிகட்கு அழகின் மேல் அழகு செய்து அப் பொன்னொளியும், மணியொளியும் விரவி நிலத்தையும் விளக்கமடையச் செய்யாநிற்ப, என்க.

தமனியம் - பொன்னொளிக்கு ஆகுபெயர். மணியணிகலன் அணிந்த மகளிர்க்கு மலர்ந்த அசோக மரம் உவமை என்க. நச்சினார்க்கினியர், பொழிலிடத்தே இளவெயில் தோன்றினாலொத்த மகளிர் என்றும், என்றது பூத்த அசோகம் பொழிலிடத்தே இளவெயில் எறித்தாற்போலப் புணர்ச்சியாற் பெற்ற நிறத்தையுடைய மகளிர் என்க என்றும் கூறியுள்ளார். மேலும் நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து என்று இயைத்து நிலத்தை எல்லாம் விளக்கமுறுத்தும்படி கற்பு மேம்படப் பொலிவு பெற்று என்பர். மயிலோரன்ன சாயல் என்புழி, ஓர் : அசையுமாம். சாயல் மென்மைத்தன்மை, அஃதாவது: இற்றென எடுத்துக்காட்ட வியலாத தாய் மனனுணர்வால் நுகர்தற்குரியதாய் மகளிர்பாற் கிடக்கும் மென்மை. மா-மாமரம். ஏர் - அழகு. மாந்தளிர் - மகளிர் மேனியின் நிறத்திற்கு உவமை. ஈர்க்கு-மாவினது தளிரின்கட் படர்ந்துள்ள நரம்பு. ஈர்க்குப் புறக்காழனவாகிய புல்லொடு வரும் மரபிற்றாகவும் ஈண்டு அகக்காழுடைய மாந்தளிர் உறுப்புக்காயது உவம ஆகுபெயர் என்க; என்னை?

தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழேபாலை என்றா
ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர் (தொல்-மரபு 86)

என்பது ஒத்தாகலான். இனி இதனை வழுவமைதியாக்கினுமாம். ஈன்றவள் திதலைபோல் ஈர்பெய்யும் தளிரொடும் (32:7) என்றார் கலியினும். திதலை-தேமல்; சுணங்கு. வண்டாழ் காது - வளவிய தாழ்ந்த காது. புணரிய-புணர்ந்த. குழை - காதணிகலன். கடவுட்கயம் என்றது, மதுரையிற் பொற்றாமரைக் குளத்தை. தன்கட் டோய்வார், தீவினை கழுவும் தீர்த்தம் என்பார் கடவுட் கயம் என்றார். முட்டாள சுடர்த்தாமரை (249) என முன்னும் கூறினார். பெரும்போது - பெரிய பூ. அமன்ற - செறிந்த. புணர்ந்து பின்னைத் தனியே துயிலுதல் இயல்பென்பது தோன்றப் புணர்ந்து துஞ்சி என்றார் என்பர் நச்சினார்க்கினியர். சூழ மலர்மாலைகள் நாற்றி ஒப்பனை செய்யப்பெற்ற உயரிய படுக்கையில் என்பார், கோதையிற் பொலிந்த சேக்கை என்றார். தொழில் செய்திளைத்த புறக்கருவி அகக்கருவிகள் இளைப்புத்தீர்ந்து மேலும் தொழில் செய்தற்குத் தகுதியாகத் திருத்தமடைதற்குக் காரணமான நல்லுறக்கம் என்பார், திருந்து துயில் என்றார்; கனா மருவாத நல்ல துயிலுமாம். துயில் எடுப்ப என்றது, சூதர் இசைபாடித் துயிலுணர்த்த என்றவாறு. என்னை?, வைகறையாமத்தே அரசர்கள் துயிலுணர்ந்தெழுதற் பொருட்டுச் சூதர் இன்னிசைபாடுதல் மரபாகலின், இதனை, சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் என்னும் புறத்திணைத் துறையானும் உணர்க. செல்வத்தை நினைந்து இன்புறுகின்ற பற்றுள்ளம் உறக்கத்தை உணர்த்துகையினாலே என்பர் நச்சினார்க்கினியர். மேலும் என்றது - தன் செல்வம் இடையறாதொழுகுதற்கு வேண்டும் காரியங்களை மனத்தானாராயவேண்டுதலின் துயிலெடுப்புக்கு இது காரணமாயிற்று; வைகறையாமந் துயிலெழுந்து தான் செய்யும் நல்லறனும் ஒண்பொருளும் சிந்தித்து, என்றார் ஆசாரக் கோவையில் என விளக்கமும் கூறியுள்ளார்.

இவையிற்றை உனக்குப் பால்வரை தெய்வமே அளித்திருத்தலான் ஏற்று நுகர்க! நுகருங்கால் யான் எனதென்றும் செருக்கின்றி நுகர்ந்திருக்கக் கடவை. நிலையாதனவாகிய இவ்வின்பம் வினைக்கீடாக வருதலான் அவை ஏற்று நுகரற்பாலன. முனைப்பின்றி மெய்யுணர்ச்சியோடே நுகர்தல் வேண்டும் எனப் பற்றின்றியும் இன்ப நுகர்ச்சி கூறிக் காட்டியவாறு. என்னை?

சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகில்
சருவசங்க நிவர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின்
பற்றறுத்துப் பரத்தையடை பராவு சிவரன்றோ
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள் அரி வையரோடு
அநுபவித்து அங்கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்
நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும்
நுழைவர்பிறப் பினின் வினைகள் நுங்கிடாவே

என்பதனான், கருவி கரணங் கடந்த அதீத நிலையுற்றாரும் உண்டுடுத்துப் பூசி முடித்து உலகத்தார்போல் வாழினும் அகப்பற்றற்றிருக்கும் உண்மையை உணர்த்தியவாறு.

715-724 : திண்காழ் ..................... உருவினையாகி

பொருள் : திண் காழ் ஆரம் நீவிக் கதிர் விடும் ஒண்காழ் ஆரம் கவைஇய மார்பின் - திண்ணிய வயிரத்தையுடைய சந்தனத்தைப் பூசி ஒளிவிடும் ஒள்ளிய வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பிலே, வரிக்கடைப் பிரசம் மூசுவன மொய்ப்ப - வரியை உடைய பின்பகுதியையுடைய தேனினமும் மற்றும் மொய்க்கப்படுவனவாகிய வண்டு முதலியனவும் மொய்ப்ப எருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியல் - கழுத்தினிடத்தினின்றும் தாழ்ந்த விரவுதலையுடைய பூமாலையினையும், பொலஞ் செயப்பொலிந்த நலம்பெறு விளக்கம் வலி கெழு தடக்கைத் தொடியோடு சுடர்வர - பொன்னாற் செய்கையினாலே பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம் வலிபொருந்தின பெரிய கையில் வீரவளையோடு விளக்கம் வர, சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்-சோறு தன்னிடத்தே பொருந்துதலுற்ற நீரையுடைய துகிலை, உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ - உடைக்கு மேலணியும் அணிகலன்களாலே பொலிவுறுமாறு தாழ்வின்றாக உடுத்து, வல்லோன் தைஇய வரிப்புனை பாவை முருகு இயன்றன்ன உருவினை ஆகி - சிற்பத் துறை வல்லோன் பண்ணி எழுதிக் கைசெய்த பாவையிடத்தே முருகன் அதிட்டித்தாற் போன்ற தன்மையை உடையை ஆகி;

கருத்துரை : சந்தனத்தைப் பூசிமுத்து வடம் சூழப்பெற்ற மார்பிலே வண்டுகள் மொய்க்கும் மலர்மாலைகளும் கைகளிடத்தே பொன்னாற் செய்த மோதிரமும் வீரவளையல்களும் பொருந்தி விளங்காநிற்ப, நன்கு கஞ்சியிட்டு ஒலித்த கலிங்கத்தை உடையின் மேலணியும் மரபினவாகிய அணிகலன்களோடே அழகுற உடுத்துச் சிற்பக்கலை வல்லோனாற் செய்து எழுதிக் கை பாவையிடத்தே முருகன் அதிட்டித்தாற் போன்ற தன்மையை உடையையாகி என்பதாம்.

அகலவுரை : இதன்கண் உடலின் நிலையாமை அறிந்தும் ஊழ் பகுதியாலே அது தன்பால் நிற்குந்துணையும் அதன்பாற் பற்றின்றி அதனைப் போற்றிப் புனையுமாறு கூறப்படுகின்றது. உடலை அழகு செய்தற்குப் பூசுவன பூண்பன உடுத்துவனவாகிய பொருள்கள் இன்றியமையாதனவாகலின் நிரலே சந்தனம் முத்துவடம் கலிங்கம் மூன்றனையும் சிறப்புப் பற்றி எடுத்தோதினார். ஓதினாரேனும், உடற்கு வேண்டிய எல்லாப் பொருள்களானும் அதனை நன்றாக அழகு செய்து என்றல் கருத்தாகக் கொள்க. கடவுளாகிய முருகன் தான் அறிவுப் பொருளும் வியாபகப் பொருளும் ஆதல் நன்கு அறிந்தேயும் தன் தகவுக் கேற்பச் சிற்பியாலியற்றி அழகு செய்யப்பட்ட வடிவத்தே நின்று அடியார்க்குக் காட்சியின்பம் நல்கி அருளுமாப்போலவும் அவன் தான் ஏறிய பாவை அழியுங்கால் தனக்கு அழிவின்மையை உணர்ந்தவனாய் அவ்வுருவத்திற் பற்றின்றியும் உவந்து விளையாடுமாறு போலவும் அம் முருகன் உருவத்தினின்று விளையாடுதல் தன் பொருட்டன்றி உயிர்களின் பொருட்டே ஆதல் போன்றும், நீதானும் உனது உயிரியல்பினை இப் பாசவியல்பின் வேறாக உணர்ந்து கொண்டனையாய், உன் தகுதிக்கேற்ப ஊழாகிய சிற்பியாலியற்றிக் கை செய்தளிக்கப்பட்ட பாவையாகிய இவ்வுடலின் கட்பற்றின்றியும் உவந்திருந்து நினக்கேதும் பயன் கருதாமல் நின் கடமையாகிய அரசியலைப் பிறர்நலத்தின் பொருட்டு ஊக்கத்துடன் இயற்றி வாழக்கடவை; அங்ஙனம் வாழ்தலே உயர்நிலை உலகம் இவணின் றெய்தும் உண்மை நெறியாம் என்பது தோன்ற வல்லோன் கைஇய வரிப்புனை பாவை முருகியன் றன்ன உருவினை யாகி என்றார். இதன் அருமையைப் பன்முறையும் உன்னிஉன்னி இன்புறல் வேண்டும் இந் நுணுக்கத்தை ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறிற்றிலர். அவர், என்றதனால் நாட்காலையில் அரசர்க்குரிய கடன்கள் கழித்துத் தெய்வ வழிபாட்டோடிருந்தமை கூறினார், என்பர்.

விளக்கம்-மோதிரம். வரிக் கடைப் பிரசம் என்றது, பின் பகுதியிலே வரிகளையுடைய வண்டுகள் என்றவாறு. பிரசம் - தேன்; வண்டில் ஒருவகை. பிரசமும் மூசுவனவும் மொய்ப்ப என்க. மூசுவன-மொய்க்கும் இயல்புடைய ஏனை வண்டுகள். சோறமைவுற்ற நீர் என்றது கஞ்சியை. ஆடைக்குக் கஞ்சியிடுதல் மரபு. கலிங்கம் - ஆடை. உடையணி-உடையின் மேல் அணியும் மரபிற்றாய அணிகலன். கவைஇ-உடுத்து. வல்லோன் - சிற்பத்துறை வல்ல கலைஞன். பாவை - முருகனுக்குரிய படிவம்; அஃது அணிமயிலின்மேல் வள்ளிதெய்வ யானையாருடன் ஆறுமுகமும் பன்னிருதோளும் பிறவும் உடைத்தாக வீற்றிருக்கப்பெற்ற திருவுருவம். இத்தகைய தெய்வவுருவத்தைத் தனதாக ஏற்று முருகன் உறைவன் என்க. முருகு-முருகன். இது, யான் என்னும் உடற்பொறையின் நிலையாமை யுணர்ந்தும் அது ஊழ் வரையறையாற் றனதாந்துணையும் அதன்கட் பற்றின்றிப் போற்றி மகிழும் தன்மை கூறிற்று. இனி, அவ்வுடலின்கண் இருந்து ஊழ்தரும் கடமைகளைச் செவ்வன் ஆற்றும் முறை கூறுகின்றார்.

725-736 : வருபுனல் ................. தம்மின்

பொருள் : வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து ஒன்னார் ஓட்டிய செருப் புகல் மறவர் - மிக்குவருகின்ற யாற்று நீரிடத்துக் கல்லணை நின்று தாங்கினாற் போலத் தம் படையைக் கெடுத்து மிக்குவருகின்ற பகைவர் படையை நடுவே தவிர்த்து அவரைக் கெடுத்த போரைவிரும்பும் படைத்தலைவர், வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த - வெற்றியைப் பொருந்தின நின்று முயற்சியின் வெற்றியை வாழ்த்தா நிற்ப வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின் மாதாங்கு எறுழ்த் தோள் மறவர்த் தம்மின் - வில்லை நிரம்ப வலிக்கையினாலே தன்னுள்ளே அடக்கிக்கொண்ட அம்பின் விசையைத் தாங்கும் மார்பினையும், குதிரையைச் செலுத்தி வேண்டும் அளவிலே பிடிக்கும் வலியையுடைய தோளினையும் உடைய மறவரைக் கொணர்மின், கல் இடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின் நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின் - கற்றரையைக் பொளிந்து பண்ணின ஒடுங்கிய நீர்வரும் வாயையுடைய கிடங்கினையுடைய முழு முதலரணத்தே நின்று வருந்தின மறச் செல்வத்தையுடையாரைக் கொணர்மின், கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் ஒவில கறங்க - மாறுபாட்டை ஏற்றுக் கொல்லுதற் றொழிலையுடைய ஏற்றினது செவ்வித்தோலை மயிர் சீவாமற் போர்த்த பெரிய கண்ணையுடைய முரசம் மாறாமல் நின்று ஒலியா நிற்ப, எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண்-நெருப்பு நடந்தாற் போன்ற பகைவர் படைக்கு நடுவே சென்று, பெருநல் யானை போர்க்களத்து ஒழிய-பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தே பட வெட்டி, விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின் -சீரிய புண்ணாலே வீழ்ந்த தலைவரைக் கொணர்மின்;

கருத்துரை : பெருக்கெடுத்து வருகின்ற பேரியாற்று வெள்ளத்தைக் கல்லணை நின்று தாங்குமாறு போலே தம் படையைக் கெடுத்து மேல் வருகின்ற பகைவர் படைக்கு முன்னின்று அவரைக் கெடுத்த போர் விருப்பமுடைய படைத்தலைவர் வாள்வெற்றி பொருந்தின நினது முயற்சியின் வெற்றியை வாழ்த்தாநிற்ப, வில்லை மிக்கு வளைத்தேவுதல் காரணமாகத் தன்பால் மிக்க விசையுடைத்தாய் வரும் அம்பையும் தாங்கும் மார்பினையும், குதிரையை விரையச் செலுத்தித் தமக்கு வேண்டுமிடத்தே பிடித்து நிறுத்தும் வலியையுடைய தோளினையும், உடைய மறவரை அழையுங்கோள், கல்லை இடித்துச் செய்த சுருங்கிய நீர் வரும் வாயையுடைய முழுமுதலரணத்தே நின்று வருந்திய மறச் செல்வரை அழையுங்கோள், கொலைத் தொழிலையுடைய ஏற்றின் செவ்வித் தோலை மயிர்சீவாது போர்த்த வீரமுரசம் மாறாதே முழங்காநிற்ப, நெருப்பு நிமிர்ந்தாற் போன்றபகைவர் படையின் நடுவே சென்று பெரிய களிற்றி யானைகளை வெட்டிக்கொன்று விழுப்புண் பட்டாமையான் வீழ்ந்த மறவரை அழையுங்கோள்! (என வரையா வாயிற்செறா அது இருந்து என்று 748 ஆம் அடிக்கட் சென்று முடியும்) என்பதாம்.

அகலவுரை : வருபுனல் கற்சிறை கடுப்ப இடையறுத்து ஒன்னார் ஓட்டிய செருப்புகன் மறவர் என்றது, வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை யானும், (தொல்-புறத்: 8) என்னும் வஞ்சித் திணையிற்றுறை கூறிற்று. ஆசிரியர் தொல்காப்பியனார், மொழியையும் இவ்வடிக்கண் மாங்குடி மருதனார் பொன்னே போற் போற்றி யுரைத்தமை காண்க. தன் படை நிலையாற்றாது பெயர்ந்த வழி விசையோடு வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினாற் போலத் தன் மேல் வரும் படையினைத் தானே தடுத்த மறப்பெருமை என்பது அத் துறையின் பொருளாம்;

கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன்
தார்ப்பற்றி யேர்தரு தோணோக்கித்-தார்ப் பின்னர்
ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின்
தேர்க்குழா நோக்கித் தன்மாநோக்கிக் - கூர்த்த
கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக்
கிணைவனை நோக்கி நகும் (தகடூர்யாத்திரை : புறத்திரட்டு -881)

என்பதூஉம்,

வேந்துடைத் தானை முனைகெட நெரிதலின்
ஏந்துவாள் வலத்த னொருவ னாகித்
தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்
காழி யனையன் மாதோ என்றும்
பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப்
புரவிற் காற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே (புறம்-330)

என்பதூஉம், அத்துறைக்கு எடுத்துக் காட்டுக்கள்.

இனி, இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறிய அகலம் வருமாறு; வஞ்சித்துறை கூறினார்; இது கூறவே முன்னர் மாராயம் பெற்றவர்களே இப்போரைச் செய்வரென்பது ஆண்டுப் பெற்றாமாகலின் இவர்கள் ஏனாதிப்பட்டம் முதலிய சிறப்புப் பெற்ற படைத்தலைவர் என்பது பெற்றாம், என்பது. இதன்கண் நச்சினார்க்கினியர் ஆண்டு என்று சுட்டியது தொல்காப்பியத்தில் என்றவாறு ஆண்டு முன்னர் மாராயம் பெற்றவனே பின்னர் இரண்டு துறையும் நிகழ்த்துவான் என்றுணர்க, என இவர் உரை கூறிப் போந்தமையான் இங்ஙனம் கூறினர். மாராயம் - வேந்தனால் செய்யப்பெறும் சிறப்பு. ஏனாதிப்பட்டம் என்பது அரசர் வீரர்க்கு அளிக்கும் ஒரு பட்டம்; இதனை,

போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாம்
தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர்
ஏனாதிப் பட்டத் திவன் (தொல்-புறத்-8.மேற்கோள்)

என்பதனானும், என்னை? ஏனாதி மோதிரஞ் செறித்த திருவுடையான் ஒருவன் ஏனாதி மோதிரஞ் செறிக்கும் அத்திரு அவன் செறிக்கின்ற பொழுதே உண்டாயிற்றன்று, (2-உரை) என வரும் இறையனார் களவியலுரையானும், சேனாதிபதி ஏனாதியாயின சாத்தன் சாத்தற்கு என்னும் வேள்விக்குடிச் சாசனத்தானும் அறிக. வெற்றியைப் பாராட்டி வாழ்த்தற்குரியார் வீரரே யாகலான் மறவர் நின் வலம் வாழ்த்த என்றார்.

அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையும்
ஆணணி புகுதலும் அழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்து வயவர் ஏத்த (சிறுபாண். 210-12)

என்றார் பிறரும். ஒன்னார்-பகைவர். கவைஇக் கணை - என்றதனைக் கவைஇயதனால் விசையேற்ற கணை, என ஏதுப் பொருட்டாய மூன்றனுருபும் பயனும் விரித்தோதுக. கணையும் என்னும் சிறப்பும்மை தொக்கது. மாதாங்குதலாவது, மிக்க விசையுடன் குதிரையைச் செலுத்தித் தாம் வேண்டுழி ஞெரேலென நிறுத்த வல்லுநர் ஆதல்; இச் செயல்தோளாற்றன் மிக்கார்க்கே இயல்வதாகலின் மாதாங்கு எறுழ்த்தோள் என்றார். நிமிர்பரிய மாதாங்கவும் .......... வலியவாகும் நின் தாள்தோய் தடக்கை (புறம்-14) என்றார் பிறரும். எறுழ்-வலி; எறுழ் வலியாகும் (உரி-90) என்பர் தொல்காப்பியனார்.

இது தும்பையிற் குதிரைநிலை கூறிற்று; கணைதாங்கு மார்புகூறவே கணை துணையுற மொய்த்தலும் கூறிற்று எனத் துறை கூறினர் நச்சினார்க்கினியர். அஃதாவது, தானை யானை குதிரை யென்ற நோனாருட்கும் மூவகை நிலையும் (தொல்.புற-17) என்னுந் துறையின்கண் ஈண்டு மாதாங்கெறுழ்த்தோள் என்றது குதிரைநிலை கூறிற்று. கணைதாங்கு மார்பின் என்றது கணையும் வேலும் துணையுற மொய்த்தலில் (தொல்.புறத். 16) என்னும் துறை கூறிற்று என்றவாறு. கல்லிடித்தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் நல்லெயில் உழந்த செல்வர் என்றது. ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் (தொல்:புறத்-13) என்னும் புறத்துழிஞைத் துறை கூறிற்று. கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் என்றது, புலியைப் பொருதுகொன்ற ஏறு இறந்துழி அதன் உரிவையைச் சீவாமற் போர்த்த (அடியார்க்கு நல்லார் உரை, சிலப் 5-88) பெரிய கண்ணையுடைய முரசம் என்றவாறு. எரிநிமிர்ந்தனையதானை நாப்பண் பொருநல்யானை போர்க்களத்தொழிய விழுமிய வீழ்ந்த, என்னும் இதனை, களிற்றெதிர்ந்தோர் பாடு என்னுந் தும்பைத் துறை என்பர் நச்சினார்க்கினியர்.

737-748 : புரையோர் .................... இருந்து

பொருள் : புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை - நட்பிற் குற்றந்தீர்ந்த உயர்வினையுடையோர் பொருட்டுக் கட்டப்பட்ட பொன்னாற் செய்த பூவினையுடைய தும்பையை, நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி - நீவிர் யாவிரோ என அவரை வினாவியறியாதே குறிப்பான் உணர்ந்து அவர் தகுதிக்கேற்பக் கொண்டாடும் முறையினை உட்கொண்டு சூட்டி ஏவுகையினாலே, காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கி - காம்பு குழைச்சினுள்ளே செருகின வேல்களுடனே அம்புகளும் சென்று நிலை குலைத்தலின் நிலைகலங்கி, பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து - பலவாய்ப் பிரிந்து இணைந்த பொருத்துவாய்கள் அற்ற பழைய நிறங்கெட்ட கவயத்தோடே, வானத்து அன்ன வளநகர் பொற்ப - தேவருலகத்தை ஒத்த வளமுடைய நகர் மேலும் வீரப்பொலிவாலே விளங்க, நோன்குறடு அன்ன ஊன்சாய் மார்பின் - சாகாட்டின் வலிய குறட்டை ஒத்த ஊன்கெட்ட மார்போடே, உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின் - உயர்ந்த உதவியை மேலும் முயல்தல் உடையாரைக் கொணர்மின், நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த புலர்ந்த சாந்தின் விரவுபூந் தெரியல் பெருஞ் செய் ஆடவர்த் தம்மின் உயர்ந்த யானைத் திரளின் ஒழுங்குகளைக் கைக்கொண்ட பூசிப் புலர்ந்த சாந்தினையும் விரவுதலையுடைய வியன்பூ மாலையினையும் பெரிய செய்கைகளையும் உடைய மண்டலங்களை ஆளுகின்றவரைக் கொணர்மின், பிறரும் யாவரும் வருக ஏனோரும் தம் என - இன்னோரன்ன பிறரையும் ஏனையோரையும் கொணர்மின் என்று, வரையா வாயில் செறாஅது இருந்து - வரைந்து கூறி வாயிலிடத்தே தகையாமல் இங்ஙனம் யாவருக்கும் காண்டற்கு எளியையாயிருந்து;

கருத்துரை : நட்பின் உயர்ந்தோர்க்குச் சூட்டுதல் கருதிக் கட்டப்பட்ட பொற்பூந்தும்பையினை, நீவிர் யாரென வினவாமலே வரிசையறிந்து சூட்டி ஏவுகையினாலே, வேலும் கணையும் புகுந்து அலைக்கும் போர்க்களத்தே அவையிற்றால் தம் கவயம் சிதைவுண்ட விடத்தும் நம் நகர் மறச்சிறப்பாலே விளங்குதல் வேண்டும் என்று கருதி குறடு போன்று துளைபட்ட ஊன் பெருகும் மார்போடே மேலும் போரின்கண் முயலும், மறப்பெரு மக்களை அழையுங்கோள்! பகைவரின் யானை அணிகளைக் கவர்ந்தவரும் சந்தனம் பூசிப் புலர்ந்த மாலையினையுடைய மார்பினை உடையோரும் ஆகிய மண்டலங்களை ஆள்வாரை அழையுங்கோள்! இன்னோரன்ன பிறரையும் ஏனையோரையும் அழையுங்கோள்! என வரைந்து கூறி அவர்களை வாயிலிடத்தே தகையாமல் வரவேற்று இங்ஙனம் காட்சிக் கெளியையாய் இருந்து, என்பதாம்.

அகலவுரை : புரையோர் - உயர்ந்தோர். உருவுட் காகும் புரையுயர்வாகும் (உரி-4) என்பர் தொல்காப்பியனார். ஈண்டு உயர்ந்தோர் என்றது மறத்துறையில் உயர்ச்சிபெற்ற படைத்தலைவரை. புரையோர்க்குத் தொடுத்த என்றதன்கண், நான்கனுருபு, அதற்பொருட்டு புரையோர்க்குச் சூட்டுதற் பொருட்டுத் தொடுத்த என்க.

தமது வலியினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறுபொருளாகக் கருதிப் போர்மேல் வந்த வேந்தனை அங்ஙனம் மாற்று வேந்தனும் அவன் கருதிய வலியே தான் பெறுபொருளாக எதிர்சென்று அவனைத் தலைமை தீர்க்கும் சிறப்பினையுடைய தும்பைத்திணை இதனாற் கூறினார். இதற்கு அறிகுறியாகத் தும்பைப்பூச் சூடிச் சேறல் மரபு.

தனது வலிச்செருக்காலே போர்மேல் வந்த படையை எதிர்க்குங்கால் அவர்கள் வேல் அம்பு முதலிய படைகளால் பெரிதும் அலைப்பர் அன்றே! அங்ஙனம் அலைத்துழித் தம் கவசம் சிதைந்துழியும், வண்டியின் குறடு போன்று தம் மார்பம் துளைக்கப்பட்டு ஊர் சோர்ந்துழியும் விடாராய் மேலும் முயன்று வெல்வார் என்பார், காழ்மண்டு எஃகம் கணைஅலைக் கலங்கிப் பிரிபுஇணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து நோன் குறட்டன்ன ஊன்சாய் மார்பின் ஊக்கலர் என்றார். இங்ஙனம் இடுக்கண் அழியாது முயல்தல் தன் நகரின் மறப்பொலிவுக்கு ஏதுவாகலின் வானத்தன்ன வளநகர் பொற்ப என்றார். மறவர்களுள் இத்தகையோரே தலைசிறந்தவர் என்பது தோன்றப் புரையோர் என்றார். இவரே அரசனால் சிறப்புச் செய்தற்கு முதலிடம் பெறத்தக்கார் என்பார் முற்கூறினார். இத்தகைய சிறந்த மறவர்களில் யாரையேனும் தான் நேரில் அறிந்திராதவிடத்தும் அவரைப் பிறரானாதல் குறிப்பானாதல் அறிந்து சிறப்புச் செய்தல் வேண்டுமன்றி, அவரை நீவிர் யாரென வினவில் அத்தகையோர் வருந்துவர் என்பது கருதி நீர் யார் என்னாது என்றார். பொதுவின் நோக்காது, வரிசையான் நோக்குதல் வேண்டும் என்பார் முறை கருதுபு என்றார். முறை-உயர்ந்தோரை முன்னர் அழைத்தலும் ஏனையோரைப் பின்னர் அழைத்தலும் வேண்டும் என்னும் முறை. என்னை?

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா னோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர் (குறள்-528)

என்பவாகலான், முறைகருதுபு என்றதற்கு முன்னுளோர் காத்த முறைமையை நாளும் உட்கொண்டு என்பர் நச்சினார்க்கினியர். பொலம்பூ - பொன்னாற் செய்த பூ. பொலம்-பொன். காழ்-காம்பு. எஃகம்-வேல். அலை கலங்கி - அலைத்தலாற் கலங்கி. பிரிபு இணை அரிந்த - என்றது, தொடர்பிரிந்து பொருத்துவாய் அறுபட்ட என்றவாறு. கவயம்-மறவரிடும் சட்டை ;கவசம். நோன்குறடு - சகட்டின் வலிய குடம். ஆவது; ஆரங்களைத் தைக்கும் உருளையின் நடுவிடத்துள்ளதும் அச்சுக்கோப்பதுமாகிய உறுப்பு. இதன்கண் பல்வேறு ஆரத்துளைகளும் அச்சுத்துளைகளும் உண்மையால் வேல் அம்பு முதலியன தைத்த புண்களையுடைய மார்பிற்கு உவமையாக்கினார். தச்சன் அடுத்தெறி குறட்டின் நின்று மாய்ந்தனனே (புறம். 290: 4-5) என்றும்,

வீரவேல் உடம்பெலாஞ் சூழ வெம்புலால்
சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவார்
ஓருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய
வாரமே அமைந்ததேர்க் குழிசி யாயினார் (சீவக-790)

என்றும் பிறரும் கூறுதல் காண்க. இனி, வானத்து அன்ன வளநகர் பொற்ப உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின் என இயைத்துக் கொண்டு, தேவருலகத்தை ஒத்த செல்வத்தையுடைய ஊர்கள் முன்புபோல நட்புக் கொண்ட அகத்துழிஞையோர் ஆளும்படி உயர்ந்த உதவியைச் செய்த முயற்சியை உடையாரைக் கொணர்மின் என உரை கூறி என்றது, தமக்கு நட்பாய் முற்றகப் பட்டோரை முற்றுவிடுவித்தற்கு அவ்வூரை அவர்க்கு மீட்டுக் கொடுத்தமை கூறிற்று; இதனானே, உழிஞைப் புறத்துத் தும்பை கூறினார்; என்னை? கணையும் வேலும் துணையுற மொய்த்தலில் சென்ற வுயிரின் நின்ற யாக்கை (தொல்.புறத்-16) கூறுதலானும், வளநகர் பெறும்படி உயர்ந்தவுதவி செய்தமை கூறுதலானும், என விளக்கமும் கூறியுள்ளார்; நச்சினார்க்கினியர். பிறரும் என்றது இன்னோரன்ன சிறப்புடைய பிற மறவரையும் ஏனோரும் என்றது அறங்கூறவையத்தாரையும் மண்டபத்தாரையும் குறிக்கும். மண்டபத்தார் - பட்டி மண்டபத்தார். வரையா-வரைந்து செறாஅது - வாயிலிற் றடைசெய்யாது. இருந்து என்றது, காட்சிக்கு எளியையாயிருந்து என்றவாறு. இது, யான் எனதென்னும் செருக்கின்றித் தன்தொழிலை இனிதே நடத்தும் முறை கூறியவாறு.

749-752 : பாணர் .................. வீசி

பொருள் : பாணர் வருக - பாணர் வருவாராக, பாட்டியர் வருக - பாணிச்சியர் வருவாராக, யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என - செய்யுளாகிய புது வருவாயினையுடைய புலவரோடே கூத்தரும் வருவாராக என்று அழைத்து, இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி - தம் பெரிய சுற்றத்தாரைப் பாதுகாத்தலையுடைய இன்னோரன்ன பரிசிலர்க்கெல்லாம் கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி;

கருத்துரை : மேலும், பாணரும் பாணிச்சியரும் புலவரம் கூத்தரும் ஆகிய பரிசில் வாழ்க்கையுடையோரையும் அழைத்து, அவர்கள் உவக்கும்படி, முன்னையோர்க்கும் இவர்க்கும் தேர் யானை முதலிய பரிசிலையும் வழங்கி என்பதாம்.

அகலவுரை : பாணர் - பாட்டுப்பாடும் ஒரு வகுப்பினர்; பாட்டியர் என்றது அவருட்பெண்பாலாரை. புலவர் - இயற்றமிழ்ப் புலவர். வயிரியர் கூத்தர். இவர்கள் நாட்டின் பண்பாட்டிற்குரிய இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்துக் கலைகளையும் ஓம்புவோர்; இவர்களை ஓம்புமாற்றால் நாட்டின்கண் கலைநலம் பரவச்செய்தல் வேந்தர் கடமை. இங்ஙனம் இக் கலைஞர்களைப் பண்டைநாள் மன்னர்கள் நாடும் தேரும் யானையும் பிறவும் ஈந்து ஓம்பி வந்த செய்தியைப் பத்துப்பாட்டினுள் ஆற்றுப் படைகளானும் புறநானூறு முதலியவற்றானும் நன்குணரலாம்.

இக் கலைவாணர் தாம்பெற்ற பரிசிலை வல்லாங்கு வாழ்துமென்று பேணாது தம் சுற்றத்தார்க்கு நல்கும் பண்புடையார் ஆதலின், இருங்கிளை புரக்கும் இரவலர் என்றார். இவர் இன்னராதலை,

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
...............................................
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே (புறம்-47)

என்றும்,

நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னா தென்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே (புறம்-163)

என்றும் வருவனவற்றால் அறிக. கொடுஞ்சி தாமரைப்பூவாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது.

பற்றற்ற செயல்

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

753-760 : களந்தோறும் ................. போகிய

பொருள் : களந்தோறும் கள் அரிப்ப - இடந்தோறும் கள்ளை அரிப்பவும், மரந்தோறும் மை வீழ்ப்ப மரத்தடிகள் தோறும் செம்மறிக் கிடாயைப் படுப்பவும், நிணவூன் சுட்டு உருக்கு அமைய - நிணத்தையுடைய தசைகள் சுடுதலாலே அந்நிணம் உருகுதல் பொருந்தவும், நெய்கனிந்து வறையார்ப்ப - நெய் நிறையப் பெற்றுப் பொரிக்கறிகள் ஆரவாரிப்பவும், குரூஉக்குய்ப்புகை மழை மங்குலிற் பரந்து தோன்றா நிறத்தையுடைய தாளிப்பில் எழுந்த புகை மழையையுடைய திசைகள் போலப் பரந்து தோன்றா நின்ற, வியல் நகரால் - அகன்ற இம் மதுரைமா நகரத்தே, பல்சாலை முதுகுடுமியின் - பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று, நல்வேள்வித்துறை போகிய - நல்ல வேள்வித்துறைகளிலே முயல்தலைச் செய்வாயாக.

கருத்துரை : பண்டைநாள் இடங்கள்தோறும் கள்ளரிப்பவும், மரங்கள் தோறும், செம்மறிக் கிடாயைப்படுப்பவும், ஊன் சுட்டு உருக்கமையவும், நெய்நிறைந்து பொரிக்கறி ஆரவாரிப்பவும், தாளிப்பின் எழுந்த புகை மழைபோலத் திசைதோறும் சூழவும் வளப்பமுடைத்தாகிய இவ்வகன்ற மதுரையிடத்தே பல யாகங்களைச் செய்த உன் முன்னோனாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று வேள்வி பல செய்வாயாக! என்பதாம்.

அகலவுரை : இதன்கண் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் செங்கோன்மையை அவன் ஆட்சிக்கண் அமைந்த மதுரை நகரத்தின்கண் மக்கள் பசியும் பிணியுமற்று வசியும் வளனும் சுரந்து வாழுமாற்றால் கூறுகின்றார். இம் மன்னர் பெருமான், வடிவேல் எறிந்த வான் பகை பொறாதுபஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ளுதற்கு முன்னர்க் கடல்கோட்பட்ட குமரிக்கோடும் பஃறுளியாறும் உட்பட்ட பகுதியை ஆண்ட பாண்டியர் மரபின் முன்னோன் ஆவான். இதனை, இம் மன்னர்பெருமானைப் பாடிய நெட்டிமையார் என்னும் நல்லிசைப் புலவர்,

எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம்-9)

என வாழ்த்துதலானும், இவன் ஆட்சியின் அமைந்த நிலத்திற்கு எல்லை எடுத்தோதிய காரிகிழார் என்னும் நல்லிசைப் புலவர் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் என அக்காலத்தே தென்றிசைக்கண் கடலில்லையாகலான் அந்நிலத்தே ஒழுகிய கன்னிப் பேரியாற்றையே தெற்கெல்லையாக ஓதுதலானும் உணரலாம். இம் மன்னர் பெருமான் ஆக்குமுடிகவித்து அரசாண்டு அரிவையரோடு அநுபவித்து இருந்தான் எனினும் அகப் பற்றற்று இருந்தான் என்பதும், இவன் ஆட்சிக்கண் தான் மேற்கொண்ட அரசுரிமைக் கேற்ப அறம்பிறழா மறக்கள வேள்விபலசெய்தானேனும், அறக்கள வேள்வியே அவற்றினும்பல மிகுதியாக ஆற்றினான் என்பதும், புறநானுற்றின்கட் கிடைக்கும் சான்றுகளால் அறியப்படும். அரசனாகிய தன் நிலைக்குத் தக இம் மன்னன் போர் செய்யப் புக்குழியும்.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை (புறம்-9)

உடையனாகவே முன்னர் அறிவித்துப் பின்னர் அறப்போர் ஆற்றுவன் என்பதும், இம் மன்னனை நெட்டிமையார்,

நின் றெவ்வர் தேஎத்துத்
துளங்கியலாற் பணையெருத்திற்
பாவடியாற் செறனோக்கின்
ஒளிறு மருப்பிற் களிறவர
காப்புடைய கயம்படியினை
அன்னசீற்றத் தனையை யாகலின்
விளங்குபொன் எறிந்த கலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற்பனுவ னால்வேதத்
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட வியன்களம் பலகொள்
யாபல கொல்லோ பெரும? (புறம்-15)

என வினவுமாற்றான் இம் மன்னன் செய்த வேள்விச் சிறப்பும் உணரலாம். அரசனாக இருந்தேயும் பற்றற்று மெய்யுணர் நிலையின் வாழ்ந்த மன்னனாகலின் இவனைப்போன்று நீயும் வாழுதி என்பார், இவனை உவமையெடுத் தோதினார். பல்சாலை முதுகுடுமிபோல நல்வேள்வித்துறை போவாயாக என்க. போகிய; வியங்கோள்.

மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத்
தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த
நோயிகந்து நோக்கு விளங்க

உலகம் ஆண்ட உயர்ந்தோர் என முன்னர்க் கூறியவர்களுள் இவன் தலை சிறந்தவனாதலான் ஈண்டு அவ்வாட்சிப் பயனையே கள்ளரிப்ப மை வீழ்ப்ப உருக்கமைய வறையார்ப்ப புகை மங்குலிற் பரந்து தோன்று நகர், என்றோதிப் போந்தார். நகரால்-என்றதன்கண், ஆல்: உருபு வேற்றுமை மயக்கம். நகரிடத்து என ஏழாம் வேற்றுமை உருபு பெய்துரைக்க. கை - செம்மறிக் கிடாய்; இனிப் புறவாழ்க்கைக்கு இம் முதுகுடுமியை உவமை காட்டியவர் அக வாழ்க்கைக்கு மற்றொரு மன்னனை எடுத்துக் காட்டுகின்றார் என்க.

மெய்ப்பொருள் உணர்ச்சி

நிலந்தரு திருவின் நெடியோன்

761-765 : தொல்லாணை .......................... தோன்றி

பொருள் : தொல் ஆணை நல்லாசிரியர் புணர் கூட்டுண்ட - அகத்தியனாரை யுள்ளிட்ட பழைய ஆணையையுடைய வினையின் நீங்கி விளங்கிய மெய்யறிவினையுடைய நல்லாசிரியர்கள் தம் மகத்தே புணர்ந்து நுகரும் மெய்ப் பொருளின்பத்தை அவர் அருளாலே தானும் உணர்ந்து நுகர்ந்த, புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன்போல - செந்தமிழ் வழங்குங் காலமெல்லாம் தன் புகழ் நிறைந்து விளங்குதற்குக் காரணமான தமிழ்ச் சங்கம் நிறீஇ அதன்கண் மெய்ந்நூல் புலப்படுத்த சிறிப்பினையுடைய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழால் நீண்ட மன்னனைப்போல, வியப்பும் சால்பும் செம்மை சான்றோர் பலர்வாய்ப் புகர் அறு சிறப்பிற் றோன்றி - மெய்யுணர்ச்சி காரணமாகத் தம்முட் தோன்றும் இன்பத்தின் கண் இறும்பூதும், அது தானாகிய நிறைவும், அந்நிலை மாறாமைக்குரிய செப்ப முடைமையும் நிறைந்த மெய்யுணர்வாளர் பலரிடத்தும் உளதாகிய அழுக்கற்ற செம்பொருள் உணர்வோடே காணப்பெற்று;

கருத்துரை : அகத்தியனாரை உள்ளிட்ட பழைய ஆணையை உடைய மெய்யுணர்ந்த சான்றோர்கள் தம்முள்ளே புணர்ந்து நுகரும் மெய்ப் பொருளின்பத்தை அவர் அருளாலேதானும் அகத்தே உணர்ந்து நுகர்ந்திருந்த புகழ்மிக்க நிலந்தரு திருவிற் பாண்டியன் போன்று நிரதிசயவின்பத்தானுற்ற புதுமையும் நிறைவும் அந்நிலைக்கட் செம்மையும் நிறைந்த மெய்யுணர்வாளர் பலர் இடத்தும் உளதாய வீட்டின்பம் நின்னுள்ளே எய்தப் பெற்று என்பதாம்.

அகலவுரை : வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடையராகிய சான்றோரே இவ்வுலகிற்கு அறம் முதலிய நாற்பொருளையும் உணர்த்த வல்லார் ஆதலானும், அவர் ஆணையாகிய நூல் வழியே உலகம் ஒழுகிவரலானும். அச் சான்றோரைத் தொல்லாணை நல்லாசிரியர் என்றார். நல்லாசிரியரின் செம்பொருள் உணர்ச்சியைப் புணர் என்றார். புணர்வு என்றது, மெய்யுணர்வுடைமையால் தான் என்னும் முனைப்பற்றுப் பதிப்பொருட்கண் அடங்குதல். இதனை,

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய் (குறள்-359)

என்பதனானும்,

கண்டஇவை அல்லேன் நான் என்றகன்று காணாக்
கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த
தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே
சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி
விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால்
விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும்
பண்டைமறை களும்அதுநா னானே னென்று
பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே (சிவ சித்-சுப - 298)

என்றற் றொடக்கத்து மெய்ம்மொழிகளானும் உணர்க. அச் சான்றோர் தாம் பெற்ற பேரின்பத்தை நிலந்தரு திருவிற் பாண்டியனுக்கு ஆசானாகிக் காட்டியருள அவர்களோடு தானும் அதனை உணர்ந்தின்புற்றான் என்பார் புணர் கூட்டுண்ட என்றார். இதனைச் சீவன் முத்தத்தன்மை என்ப. எனவே அரசனாயிருந்தேயும் சீவன் முத்தத் தன்மை பெற்ற நிலந்தரு திருவிற் பாண்டியன் போன்று நீயும் நல்லாசிரியரின் வழிபாடுடையையாய் மெய்யுணர்ந்து பற்றற்று வீட்டின்பம் எய்துக என்றவாறு.

நிலந்தரு திருவிற் பாண்டியன் தமிழ்ச்சங்கம் நீறீஇத் தொல்காப்பிய முதலிய மெய்ந்நூல் தோற்றுவித்த புகழுடையான் என்பார் புகழ்சால் சிறப்பின் நெடியோன் என்றார். ஏனைமன்னர் போலன்றித் தண்டமிழும் அது வழங்கும் உலகமும் உள்ள துணையும் உளதாக நீண்ட புகழுடை யான் என்பார், நெடியோன் என்றார். மலம் நீங்கிய சீவன் முத்தத் தன்மையைப் புகர் அறு சிறப்பு என்றார் இச் சிறப்புற்றோர் பொருட்புணர்வால் இவ்வியல்பிற்றெனப் பிரித்தறிய வாராது இன்ப மயமாய் நிற்குங்கால் என்னே இஃதென்னே என வியத்தல் இயல்பாகலின் அவ்வியப்பும் அவ்வின்ப நிறைவும் அந்நிலையிற் பிறழாமையும் உடையர் என்பார் வியப்பும் சால்பும் செம்மையும் சான்றோர் என்றார். செம்மையும் என்னுமிடத்து உம்மைதொக்கது.

இனி இப்பகுதிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுதலாவது :

(759-முதல்) நல்ல யாகங்கட்குக் கூறிய துறைகள் எல்லாம் முன்னர் முற்ற முடித்துவிட்ட பழைய ஆணைகளையுடைய நல்ல ஆசிரியர் தாங்கள்பின்பு கூடின கந்தழியாகிய கொள்ளையை அவரிடத்தே பெற்று அனுபவித்த பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போல நீயும் நல்லாசிரியரிடத்தே கேட்டிசில் (208) என முன்னே கூட்டுக, என்றது, அந்தணர்க்குக் கூறிய முறையே முன் உள்ள கருமங்களை முடித்துப் பின்னர்த் தத்துவங்களை ஆராய்ந்து மெய்ப் பொருள் உணர்ந்து வீட்டின்ப மெய்திய ஆசிரியரிடத்தே தானும் அம்முறையே சென்று வீட்டின்பத்தைப் பெற்ற குடுமி என்றவாறு. நிலந்தரு திருவின் நெடியோன்போல - எல்லா நிலங்களையும் தன்னிடத்தே காட்டின பெருஞ் செல்வத்தையுடைய மாயோனைப் போலத் தொல்லாணையை உடைய நல்லாசிரியர் (761) என முன்னே கூட்டுக. என்றது கண்ணன் எப்பொருளும் தானாயிருக்கின்றபடியைக் காட்டி ஸ்ரீகீதை யருளிச் செய்து எல்லாரையும் போதித்தாற்போல எல்லாரையும் போதிக்க வல்லாராகிய ஆசிரியர் என்றவாறு. என்பதாம்.

கடப்பாடு

766-774 : அரிய ............................. கேட்ப

பொருள் : அரிய தந்து குடி அகற்றி - இவ்விடத்திற்கு அரியவாய் வேற்றுப் புலத்தில் உள்ள பொருள்களைக் கொணர்ந்து எல்லார்க்கும் கொடுத்து நாட்டில் வாழும் குடிமக்களைப் பெருக்கி, பெரிய கற்று இசை விளக்கி - நற்பொருள்களை விளங்கக் கூறிய நூல்களைக் கற்று நின் புகழே எவ்வுலகத்தும் நிறுத்தி, முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் - கடல் நடுவே தோன்றுகின்ற ஞாயிறு போன்றும், பன்மீன் நடுவண் திங்கள் போலவும் - பல மீன்களுக்கு நடுவே தோன்றுகின்ற முழுத்திங்கள் போன்றும், பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி - நீ பொலிவு பெற்ற சுற்றத்தாருடனே பொலிவு பெற்று இனிதாக விளங்கி, பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும் பெயர் மாறன் தலைவனாக - உண்மையான நல்ல புகழை உலகிலே நிறுத்தின கை செய்த மாலையினையும் பெரிய பெயரினையுமுடைய மாறனாகிய பழையன் தமக்குத் தலைவனாயிருப்ப, கடந்து அடு வாய்வாள் இளம்பல் கோசர் - பகைவரை வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளையபலராகிய கோசர்கள், இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப - நடக்கின்ற நெறி முறைமையாலே நின்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு அவ்வழி நடவா நிற்ப.

கருத்துரை : இந்நாட்டிற்கு அரிய பொருளாயவற்றை வேற்றுப் புலங்களினின்றும் கொணர்ந்து எல்லார்க்கும் வழங்கி நின் குடிமக்களைச் செங்கோன்மையால் வளப்படுத்துப் பெருக்கி மெய்ந்நூல்களை ஓதி நின் புகழை அழியாது நிலைநிறுத்தி, ஞாயிறு போன்றும் நிறைவெண்டிங்கள் போன்றும் சுற்றத்தாரோடு இனிது விளங்கிப் பெரும்பெயரை யுடைய பழையனைத் தலைவனாக உடையராய்ப் பகைவரை வெல்லும் இளம்பல் கோசர் நின்னேவல் கேட்டு ஒழுக, (இனிது உறைமதி என, 781 முடியும்) என்பதாம்.

அகலவுரை : அரிய தந்து என்றதற்கு நிலந்தரு திருவிற் பாண்டியன் தமிழ்ச் சங்கம்நிறீஇ அருஞ்செல்வமாகிய மெய்ந்நூல்களைப் புலப்படுத்து அறிவினை உலகிற்குத் தந்தாற்போன்று நீயும் கல்வியைப் பேணி அறிவாகிய அரிய பொருளைத் தந்து எனினுமாம். குடியகற்றுதலாவது - தன் செங்கோன்மையினால் குடிகள் நன்கு தழைத்து வாழச் செய்தல். இதனை,

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி (குறள் - 542)

என்றும்,

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு (குறள் - 544)

என்றும்,

இயல்புளிக் கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு (குறள் - 545)

என்றும் எழுந்த பொய்யில் புலவன் பொருளுரைகளானும் அறிக. பெரிய கற்று என்பதற்கு, மெய்யுணர்ந்து எனினுமாம். இம்மைப் பயன் அதுவாகலான் இசைவிளக்கி என்றார். இசைவிளக்குதலாவது வண்மை பூண்டொழுகுதல். பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும்பெயர் மாறன் என்றது, மோகூர்ப் பழையனை. இவன் பாண்டிய மரபினன் என்பதும், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நண்பன் என்பதும், இவன் அவையகத்தே இளம்பல் கோசர் என்பார் சிறந்த வீரராய்த் திகழ்ந்தனர் என்பதும் பிறவும் மழை யொழுக்கறாஅப் பிழையா விளையுள் பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றியன்ன (507-9) என்னுமிடத்தே கூறினாம்; ஆண்டுக் காண்க.

நல்லிசைப் புலவரின் வாழ்த்து

775-782 : பொலம்பூ ..................... நல்லூழியையே

பொருள் : பொலம்பூண் ஐவர் உட்பட - பொன்னாற்செய்த பேரணிகலன்களையுடைய ஐம்பெருங்கேளிரும் உட்பட, புகழ்ந்த மறம்மிகு சிறப்பில் குறுநிலமன்னர் அவரும் எல்லாராலும் புகழ்ப்பட்ட மறமிக்க நிலைமையினையுடைய குறுநிலமன்னராகிய அவர்களும், பிறரும் துவன்றி - கூறாதொழிந்தோரும் நிறைந்து, பொற்பு விளங்கும் புகழ் அவை நிற்புகழ்ந்து ஏத்த - பொலிவு விளங்குகின்ற புகழினை உடைய அவை நின்னுடைய அறத்தின் தன்மையைப் புகழ்ந்து வாழ்த்தா நிற்ப, இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப - விளங்குகின்ற பூணினையுடைய மகளிர் பொன்னாற் செய்த வட்டில்களிலே எடுத்த மணம் நாறுகின்ற காம பானத்தைத் தர அதனைப் பருகி, நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும - நாள்தோறும் மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக பெருமானே! வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே - பால்வரை தெய்வத்தாலே வரையப்பட்டு நீ அறுதியாக நினக்கு வாழ்நாளாகப் பெற்றுள்ள நல்ல ஊழிக்காலத்தை;

கருத்துரை : பொன்னாற் செய்த பேரணிகலன்களையுடைய ஐம்பெருங்கேளிரோடே புகழ்மிக்கமறமுடைய குறுநில மன்னரும் பிறரும் நிறைந்து திகழும் நின் அவைக்களம் நின் செங்கோனெறியைப் புகழாநிற்ப, விளங்கும் அணிகலன் அணிந்த மகளிர் பொன்வள்ளத்தே வாக்கித் தந்த காம பானத்தைப் பருகி நாடோறும் மகிழ்ந்து இனிதாக வாழ்ந்திருப்பாயாக பெருமானே! ஊழ் - நினக்கென வரைந்தளித்த ஊழிக்காலத்தை; என்பதாம்.

அகலவுரை : பொலம்பூண் ஐவரென்றது அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தவாத்தொழிற் றூதுவர் சாரணர் என்றிவர் என்றோதப்பட்ட ஐம்பெருங்குழுவினரை, வேந்தர்க்கு மாசனம் பார்ப்பார் மருத்தர் வானிமித்தரோடு அமைச்சர் ஆசில் அவைக்களத்தார் ஐந்து என்பாருமுளர். இனம்பற்றி எண்பேராயமும் கொள்க. அவராவார், கரணத்தியலவர் கருமகாரர் கனகச் சுற்றம் கடைகாப்பாளர் நகர மாந்தர் நளிபடைத் தலைவர் யானைவீரர் இவுளிமறவர் என்னும் இவர். இனி எண்பேராயமாவது சாந்துபூ கச்சு ஆடை பாக்கிலை கஞ்சுகம் நெய் ஆய்ந்த இவர் எண்மர் ஆயத்தார் என காட்டுவாருமுளர்.

வீரச் சிறப்புக்குரிய சின்னங்களைப் பெற்ற குறுநில மன்னர் என்பார், மறமிகு சிறப்பிற் குறுநில மன்னர் என்றார். மன்னரவர் என்றதன்கண் அவர் என்றது பகுதிப் பொருளது. துவன்றி - நிறைந்து. நல்லவைக்கேற்ற சிறப்பெல்லாம் அமைந்து சான்றோரால் புகழப்பட்ட அவை என்பார், பொற்பு விளங்கு புகழவை என்றார், இதனை,

புகழுந் தருமநெறி நின்றோர்பொய் காமம்
இகழுஞ் சினஞ்செற்ற மில்லோர் - நிகழ்கலைகள்
எல்லா முணர்ந்தோர் இருந்த இடமன்றோ
நல்லா யவைக்கு நலம்.

என்றும்,

நலனடக்கம் செம்மை நடுவுநிலை ஞானம்
குலனென் றிவையுடையோர் கோதில் - புலனில்லோர்
சென்று மொழிந்தனவும் கேட்போர் செறிந்தவிடம்
அன்றோ நிறைந்த அவை

என்றும் வரும் வெண்பாப் பாட்டியலானும் (பொது. 9: 10)

குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி
விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற
வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையிற்
காத லின்பத்துத் தூங்கித் தீதறு

நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்
அழுக்கா றின்மை அவாஅ வின்மையென
இருபெரு நிதியமும் ஒருதா மீட்டும்
தோலா நாவின் மேலோர் பேரவை (புறத்திரட்டு-அவையறிதல்)

எனவரும் ஆசிரியமாலையானும் உணர்க. எண்வகை நுதலிய அவையம் (புறத்-21) என்றோதுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். இனி,

நாடுகளில் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதற் றவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும் இறைஞானம்
கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர் (சிவ-சித்தி-சுபக்- 308)

என்றும்,

அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகும்
ஒளடதமந் திரமுடையார்க் கருவிடங்க ளேறா
எங்கித்தைக் கன்மமெலாம் செய்தாலும் ஞானிக்
கிருவினைகள் சென்றணையா முற்செய்வினை இங்குத்
தங்கிப்போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த
சக்கரமும் கந்தித்துச் சுழலு மாபோல்
மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா
மலங்களும்பின் காயமொடு மாயு மன்றே (சிவ-சித்தி-சுபக்-309)

என்றும் பிற்றைநாள் எழுந்த மெய்கண்ட வித்தகர்களின் மெய்யறிவு திகழும் கொள்கைகளைப் பண்டைநாள் எழுந்த இப் பழம்பனுவலிற் காணலாம். வீடுபேற்றிற்கு நிலையாமை யுணர்தலும் அவ்வுணர்ச்சியானே அவையிற்றிற்பற்றறுதலும் மெய்யுணர்தலுமே காரணமின்றி வேறன்றென்னும் கொள்கையினையுடையராதலின்,

இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறன் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!

என்றார். நிலையாமை உணர்ந்து மெய்யுணர்வு பிறந்தவழி யான் எனது என்னும் இருவகைச் செருக்குமின்றி,

உலகினில் என்செயல் எல்லாம் உன்விதியே நீயே
உள்நின்றும் செய்வித்தும் செய்கின்றாய் என்றும்
நிலவுவதோர் செயல்எனக்கு இன்றுஉன் செயலே என்றும்
நினைதலே

இயல்பாகும் அன்றோ? அவ்வழி, யான் எனது என்னும் செருக்காலுறற்பால துன்பம் அனைத்தும் அகன்று வீட்டின்பமே உளநிறைந்திருத்தல் பற்றி, மகிழ்ந்து இனிது உறைமதி என்றார். இங்ஙனம் இறைஞானம் கூடி நின்றுழி முன்னர் இப்பிறப்பிற்கு ஏதுவாகிய வினைகள் உள்ள துணையும் இவ்வுடல் நிலைத்தலும் இவ்வுடல் ஒழிவின் கண் எய்துவது வீடே யாதலும் திண்ணம் என்பார், இங்ஙனம் இவ்வுடலில் இருக்குங் காலந்தானும் முன்னரே ஊழான் வரையறை செய்யப்பட்டதாகலின் அதுகாறும் இவ்வுடலிலேயே வீட்டின்பம் மருவப்பெற்றுப் பின்னர் அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டின் அரசுரிமையையும் பெறக்கடவாய் என்பார், வரைந்து நீ பெற்ற நல்லூழியையே என்றார். இவ்வாழ்நாள் வீடுபேற்றிற்குக் காரணமாய்ச் சிறத்தலின் நல்லூழி என்றார். நல்லூழி கலியல்லாத ஊழி என்பர் நச்சினார்க்கினியர். ஏகாரம் ஈற்றசை. இனி, 700-சினைதலை மணந்த என்பது தொடங்கி, 782-நல்லூழியையே என்னுந்துணையும் கிடந்த பொருளை : ஆய்தொடி மகளிர் தோள்புணர்ந்து, துஞ்சி, எழுந்து நலம்பெறு விளக்கம் தொடியொடு கலிங்கம் கவைஇ உருவினையாகி மறவர் வாழ்த்தச் சுடர்வர தம்மின் தம்மின், தம்மின் தம்மென இருந்து வருக வருகென வீசி முது குடுமிபோலத் துறைபோவாயாக, நெடியோன் போலத் தோன்றி, தந்து அகற்றிக் கற்று விளக்கி ஞாயிறு போலவும் திங்கள் போலவும் விளங்கி கோசர் நின்மொழி கேட்ப மன்னரும் பிறரும் துவன்றி விளங்கும் அவை ஏத்தமகளிர் தேறல் மடுப்ப மகிழ்ந்து இனிது வாழ்க நீ பெற்ற நல்லூழியை என இயைத்துக் கொள்க.

இனி, 1-ஓங்குதிரை என்பது முதல் 782-ஊழியையே என்னும் துணையும் விரிந்து கிடந்த பொருளை அணுகக் கொள்ளுமாறு,

உயர்ந்தோர் மருகனே! நெடியோன் உம்பலே! பொருநனே! கொற்றவனே! வெல் கோவே! புகழ் வேந்தே! நசைப்பொருநனே! போரேறே! குருசிலே! நீ கொற்றவர் தம் கோனாகுவை: இசைவேட்குவை; நின்கொற்றம் பிறையிற் சிறக்க! நின் தெவ்வர் ஆக்கம் மதியிற் கெடுக! வாய் நட்பினை! பணிந்தொழுகலை; பழி நமக்கு எழுக என்னாய்; இசைவேட்குவை அன்னாய் நின்னொடு முன்னிலை எவன்? கொன் ஒன்று கிளக்குவல் கேட்டிசின் வாழி! கெடுக நின் அவலம்! நிலைஇயர் நின்இசை! பல்வேன் மன்னர் திரையிடும் மணலினும் பலரே உலகம் ஆண்டு கழிந்தோர். அதனால்; மருதஞ்சான்ற தண்பணை சுற்றி ஒருசார் முல்லைசான்ற புறவணிந்து, ஒருசார் குறிஞ்சி சான்ற மாமலை தழீஇ, ஒருசார் பாலைசான்ற சுரஞ்சேர்ந்து, ஒருசார் நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஒருசார் ஆங்கு ஐம்பாற்றிணையும் கவினி அமைவர, நன்னாட்டு நடுவண்வையைத் துறைதொறும் பெரும்பாண் இருக்கையையும், புரிசையையும், மாடமொடு வாயிலையும், நல்லில்லையும், உடைய தெருவில், இருபெரு நியமத்து, கொடி அருவியின் நுடங்க யானையும், தேரும் புரவியும் மயக்கமும் பெயர்தலில் பூவினர் முதலியோர் அஞ்சிநீங்கிய பின்றை, இருத்தர, முதுபெண்டிர் மயிலியலோரும் மடமொழி யோரும் திளைப்பப் பண்ணியம் பூவொடுகொண்டு மறுக, அந்திவிழவில் நாடார்த்தது போன்றது நாளங்காடிக் கம்பலை,

செல்வர் நாண்மகிழ் இருக்கையிற் காண, மகளிர் திருமுகம் தோன்றுபு மறைய, அந்தி விழவிற் றூரியங்கறங்க, பேரிளம் பெண்டிர் காக்கும் கடவுட் பள்ளியும் அந்தணர் பள்ளியும் நறும்பூஞ் சேக்கையும் தோன்ற, அறங்கூறவையமும் காவிதி மாக்களும், பகர்நரும் குழுவும் வாழும் நால்வேறு தெருவினும் குயினர் முதலியோர் குழீஇ நிற்றர இன்சோறு தருநர் நுகர, பட்டினத்து இசைமான, வினைஞர் கல்லென மறுக, புள்ளிசை யெழுந்தற்று அல்லங்காடிக் கம்பலை, ஞாயிறு குன்றம் சேர நிலா விரிபு புகுந்து மாலை நீங்க, நயந்தோர் நாணுக் கொளப் பண்ணுப் பெயர்த்து துணைதழீஇ நாணுக்கொள, கொண்டி மகளிர் பொய்தல் அயர, காணுநர் திரிதர, மகளிர் நீரயர, சூன் மகளிர் மடைமடுப்ப, நின்ற குரவையும், உரையும் பாட்டும் விரைஇ முந்தை யாமம் சென்ற பின்றை, பானாட்கங்குல் இடையது மற்றை யாமம் கழிப்பி, இரவுத்தலைப் பெயரும் ஏம வைகறையில் மிக்குக் கவினி காண்வரப் புகழ் எய்திய மதுரையில், மகளிர் நறுந்தோள் புணர்ந்து துஞ்சி எழுந்து தம்மென வருகென வீசி முதுகுடுமி போல வேள்வித் துறை போவாயாக! நிலந்தரு திருவின் நெடியோன் போலத் தோன்றி, தந்து அகற்றிக் கற்று விளக்கி, விளங்கிக் கேட்ப, ஏத்த, மடுப்ப, நாளும் இனிது உறை மதி பெரும! வரைந்து நீ பெற்ற நல்லூழியை; எனத் தொடர்புகாண்க.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை, (குறள் - 331)

அற்கா வியல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல் (குறள் - 333)

யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும், (குறள் - 346)

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும் (குறள் - 349)

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய், (குறள் - 356)

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்.புறத்-23)

தனிப் பாடல்கள்

பைங் கண் இளம் பகட்டின் மேலானை, பால் மதி போல்
திங்கள் நெடுங் குடையின் கீழானை, அங்கு இரந்து
நாம் வேண்ட, நல் நெஞ்சே! நாடுதி போய், நானிலத்தோர்
தாம் வேண்டும் கூடல் தமிழ். 1

சொல் என்னும் பூம் போது தோற்றி, பொருள் என்னும்
நல் இருந் தீம் தாது நாறுதலால், மல்லிகையின்
வண்டு ஆர் கமழ் தாமம் அன்றேமலையாத
தண் தாரான் கூடல் தமிழ்? 2

மதுரைக்காஞ்சி முற்றிற்று.

மதுரைக் காஞ்சிக்குப் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய உரை முற்றும்.



Overview of Madurai Kanchi

1. Title Meaning:

- The title "Madurai Kanchi" can be translated as "The Glory of Madurai." "Madurai" refers to the city itself, and "Kanchi" means "glory" or "celebration." Thus, the title signifies a detailed and celebratory description of Madurai.

2. Content:

- Structure: The poem is composed in the traditional Sangam style, consisting of 100 verses. It is divided into sections that highlight different aspects of Madurai, including its grandeur, its inhabitants, and its cultural and religious significance.
- Theme: The central theme of Madurai Kanchi is the celebration of the city of Madurai, focusing on its wealth, architectural splendor, and its role as a major cultural and religious center. The poem provides a vivid portrayal of the city's grandeur and its significance in Tamil culture.

3. Themes and Imagery:

- City’s Grandeur: The poem describes the architectural beauty and magnificence of Madurai, including its temples, streets, and public spaces. It celebrates the city's status as a major urban center of the Sangam period.
- Cultural and Religious Significance: Madurai is depicted as a city of great religious importance, with prominent temples and sacred sites dedicated to various deities. The poem reflects the city's role as a hub of religious and cultural activities.
- Social Life: The text also provides insights into the social and economic life of the city, including the prosperity and cultural vibrancy of its inhabitants.

4. Poetic Style:

- Rich Descriptive Language: The poem uses elaborate and descriptive language to convey the beauty and importance of Madurai. The rich imagery and vivid descriptions enhance the celebratory tone of the work.
- Traditional Meter: The poem is composed in the traditional Sangam meter, which contributes to its rhythmic and lyrical quality.

5. Cultural and Historical Context:

- Significance of Madurai: Madurai was a major cultural and political center during the Sangam period, known for its wealth, architectural marvels, and vibrant cultural life. The poem highlights the city’s significance in the Tamil literary and cultural tradition.
- Role of Poetry: The work reflects the tradition of using poetry to celebrate and immortalize important cities and cultural landmarks.

6. Literary Significance:

- Contribution to Tamil Literature: Madurai Kanchi is a key text in Tamil literature, offering valuable insights into the grandeur and significance of Madurai during the Sangam period.
- Historical Documentation: The poem serves as an important historical document, providing a detailed account of the city's architecture, religious practices, and social life.

Madurai Kanchi is celebrated for its poetic excellence and its portrayal of the city of Madurai as a center of cultural, religious, and economic importance. It remains an important work in the Tamil literary canon, reflecting the richness and vibrancy of one of Tamil Nadu's most historic cities.



Share



Was this helpful?