Digital Library
Home Books
Mahabharata is one of the two major Sanskrit epics of ancient India, the other being the Ramayana. The Mahabharata is an extensive and complex narrative that encompasses mythology, history, philosophy, and religion, offering deep insights into human nature, morality, and dharma (righteousness).
அம்மா! தாங்கள் என்னைப் பெற்றவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஆனால், ஊரைக் கண்டு அஞ்சி அன்றொரு நாள் என்னை உதாசீனப்படுத்தினீர்களே! அதை நினைத்துப் பாருங்கள். நான் ஒரு தேரோட்டியின் மகனாக வளர்ந்ததால், பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா? அனைத்து வித்தைகளும் தெரிந்தாலும், க்ஷத்திரியனல்லாத சூத்திரனாக வளர்ந்ததால், என்னை துரோணர், கிருபர் போன்றவர்கள் அவமானப்படுத்தினார்களே! உன் பிறப்பை பற்றி சொல் என்றார்களே! அப்போது, நான் தலை குனிந்து நின்றேன். அந்த சமயத்தில், எனக்கு கை கொடுத்து தூக்கி விட்டவன் யார்? துரியோதனன்.. அம்மா அவன் எனக்கு தெய்வம் அம்மா! நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
சோறிட்ட ஒருவனை தூக்கி எறிந்து விட்டு நன்றி மறந்து வரலாமா? எச்சில் சோற்றுக்கே வழியில்லாதவனை ராஜா என்ற அந்தஸ்துக்குள்ளாக்கியவனை உதாசீனம் செய்யலாமா? என்று அவன் சொல்லவும், பதில் சொல்ல முடியாமல் கண்ணீரை பதிலாகத் தந்தாள் குந்தி. கர்ணன் தொடர்ந்தான்.
அம்மா! துரியோதனின் நட்புக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். நானும், அவனது மனைவி பானுமதியும் ஒருநாள் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தோம். இந்நிலையில், துரியோதனன் அந்த அறைக்குள் நுழைய, கணவனுக்கு மதிப்பளிப் பதற்காக அவள் எழுந்து நின்றாள். ஆட்டத் தில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தான் பாதியிலேயே எழுகிறாளோ என நினைத்து, அவளது புடவையைப் பற்றி இழுத்தேன். அப்போது, இடுப்பில் கட்டியிருந்த முத்துக்கள் சிதறின, என சொல்லிக் கொண்டிருந்த போது, பதறிய குந்திதேவி, அப்புறம் என்ன நடந்தது? என ஆவலாகக் கேட்டான். நான் ஏறிட்டுப் பார்த்த போது, துரியோதனன் அங்கு நின்றான். நண்பா! எதற்காக ஆட்டத்தை விட்டு எழுந்தாய். சிந்திய முத்துக் களை எடுத்து தரவா அல்லது கோர்த்து தரவா? என்றான். இப்படிப்பட்ட மகத்துவமான நண்பன், உலகத்தில் யாருக்கு கிடைப்பான். என் மீதும், பானுமதி மீதும் அவன் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தால், இப்படியொரு வார்த்தை அவனது வாயிலிருந்து வந்திருக்கும்! வியர்த்து விறு விறுத்து நின்ற எனக்கு, அந்த வார்த்தை பனிக்கட்டிகளை அள்ளிக் கொட்டியது போல் இருந்தது தாயே! அந்த அன்பு தெய்வத்தை விட்டு நான் எப்படி பிரிய முடியும்? சொல்லுங்கள், என்றான்.
இவ்வளவு சொன்ன பிறகும், குந்தி சுயநலம் கருதியே பேசினாள். தன்னோடு வரும்படி மகனிடம் கெஞ்சினாள். கர்ணன் அவளிடம், அம்மா! இது நியாயமற்ற பேச்சு! போர் மூண்டுவிட்டது. இந்த இக்கட்டான நிலையில் நான் உங்களோடு வரமாட்டேன். மேலும், விதி என் வாழ்வில் மிகத் தீவிரமாகவே விளையாடுகிறது. இல்லாவிட்டால் தாய் சொல் கேளாதவன், தம்பியரைக் கொல்ல நினைப்பவன் என்ற அவலங்களெல்லாம் எனக்கு ஏற்படுமா? ஆயினும், விதிவிட்ட வழியில் நான் சொல்கிறேன். பாண்டவர்களுடன் என்னால் சேர இயலாது. அதைத் தவிர எதைக் கேட்டாலும், உங்கள் மகன் தருவான். வாக்கு தவறமாட்டான் உங்கள் பிள்ளை, எனக்கூறிய கர்ணன் தாயை பாசத்துடன் அணைத்து கொண்டான். இவ்வளவு சொல்லியும் மறுத்து விட்டாயேடா! போகட்டும்! போர்க்களத்தில் நீ களம் புகுந்தால், நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் அர்ஜுனன் மீது எய்யக்கூ டாது. மற்ற பாண்டவர்களும் உன் கையால் அழியக்கூடாது, என இரண்டு கோரிக்கைகள் வைத்தான். வாக்கு தவறாத மாமன்னன், எந்த யோசனையும் செய்யாமல் இந்த வேண்டுதல்களை ஏற்றான். அது மட்டுமின்றி, அம்மா! ஒரு மாவீரன், ஒரு அஸ்திரத்தை ஒரு முறை எய்தே எதிரியை அழிக்க வேண்டும். அதுதான் அவனுக்குப் பெருமை. நீங்கள் சொன்னதற்காக மட்டுமின்றி, இந்த காரணத்துக்காகவும் நான் ஒருமுறைக்கு மேல் நாகாஸ்திரத்தை எய்யமாட்டேன். தாங்கள் கேட்டது போல் மற்ற பாண்டவர்கள் மீதும் என் கை படாது, என்று சத்தியம் செய்து கொடுத்தான். குந்தி அவனைத்தழுவி ஆசிர்வதித்து புறப்பட்ட வேளையில், அம்மா! புறப் பட்டு விட்டீர்களா! பிள்ளையிடம் வரம் பெற்ற நீங்கள், பிள்ளைக்கு ஏதாவது தர வேண்டாமா? என்றாள்.
குந்தி குழப்பமும் ஆனந்தமும் கலந்த நிலையில், பெற்றவுடன் பிரிவை பரிசாக அளித்த இந்த பாவியிடம் என்னடா கேட்கப் போகிறாய்? நீ என்ன கேட்டாலும் தருவேன், என்றாள். அம்மா! நான் உங்கள் மகன் என்பது பாண்டவர்களுக்கு தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், எந்த யோசனையும் செய்யாமல், அவர்கள் என்னிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விடுவார்கள். அப்படி தரப்படும் நாட்டை, என் நண்பன் துரியோதனனிடம் சற்றும் யோசிக்காமல் நான் கொடுத்து விடுவேன். அதில் தங்களுக்கு எப்படி உடன்பாடு ஏற்படும்? அத்துடன், போர்க்களத்தில் நான் ஒருவேளை அர்ஜுனன் கையால் மடிய நேர்ந்தால், நீங்கள் என்னை தங்கள் மடியில் தூக்கி வைத்து, நான் உங்கள் மகன் என்ற உண்மையை ஊருக்கு உரைக்க வேண்டும். என் பிறப்பின் களங்கம், இறப்புக்கு பின்பாவது நீங்க வேண்டும், என்று கண்ணீர் வடித்தான். குந்தி அவனுக்கு ஆறுதல் கூறி, இப்படி ஒரு நிலைமை எந்த பிள்ளைக்கும், எந்த தாய்க்கும் உலகில் ஏற்படக்கூடாது எனச் சொல்லி புறப்பட்டாள். கிருஷ்ணரிடம் சென்ற அவள், கர்ணனிடம் பேசியது பற்றி தெரிவித்தாள். நினைத்தது நடந்ததை எண்ணி அந்த மாதவனும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர், தர்மரை தேடிச் சென்ற அவர், தான் தூது சென்ற வரலாறு முழுவதையும் சொன்னார். அதுகேட்டு தர்மர் கோபமடைந்தார். கிருஷ்ணரை அவமதிப்பவர்கள் அவர் மதிப்பதில்லை. மேலும், ஒரு தூதரை நடத்தும் விதம் கூட தெரியாத துரியோதனன், இனி உலகில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். போருக்கான ஆயத்தப்பணிகளைச் செய்தார். திரவுபதிக்கு பாண்டவர்கள் மூலம் ஆளுக் கொருவராக ஐந்து மகன்கள் பிறந்தனர். அவர்கள் விந்தன், சோமன், வீரகீர்த்தி, புண்டலன், ஜெயசேனன் ஆகியோர். இதுதவிர பீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்த கடோத் கஜன், அர்ஜுனன் நாகலோகம் சென்ற போது, நாககன்னிக்கும் அவனுக்கும் பிறந்த அரவான் ஆகியோரை அவர் வரவழைத்தார். மற்ற தேசத்து ராஜாக்களுக்கும் தங்களுக்கு ஆதரவு தரும்படி ஓலை அனுப்பினார்.
எல்லா நாட்டு மன்னர்களும் வந்து சேர்ந்ததும், போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தன்னை கவுரவர்கள் ஆளாக்கி விட்டதை எடுத்துக் கூறினார். அவர்கள், தர்மத்தைக் காப்பாற்ற தங்கள் உயிரையும் தருவதாக வாக்களித்தனர். இதே போல துரியோதனனும் தன் ஆதரவாளர்களை வரவழைத்தான். தனக்கு ஆதரவு தர மறுப்பவர்கள் கொல்லப்படுவர் என அறிவித்து ஓலை அனுப்பினான். பயந்து போன அவர்கள் துரியோதனனின் பக்கம் சேர்ந்தனர். இந்நேரத்தில், மந்திர தேசத்து மன்னனும், தனது தங்கை மாத்ரியை பாண்டவர்களின் தகப்பனான பாண்டுவுக்கு திருமணம் செய்து கொடுத்தவனுமான சல்லியன் (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரி என்பதும், அவர்களின் தாய்மாமனே இந்த சல்லியன் என்பதும் தொடரை ஆரம்பம் முதலே படித்து வருபவர்கள் அறிவார்கள்) தனது மருமகன்களுக்கு போரில் உதவி செய்ய படைகளுடன் புறப்பட்டு வந்தான்.
அவன் சொன்ன வாக்கு தவறாதவன், நன்றி மறக்காதவன். அவன் தன் படைகளுடன் தர்மர் தங்கியிருந்த உபப்லாவியத்தை நோக்கி சென்ற போது, செல்லும் வழியில் துரியோதனன் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
அவை துரியோதனனால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்பதை அறியாத சல்லியனும், அவனது படைகளும் அங்கேயே சாப்பிட்டனர். அங்கு ஏராளமாக கட்டப்பட்டிருந்த சத்திரங்களில் தங்கி ஓய்வெடுத்தனர். அதன்பிறகே, அவை துரியோதனனால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த சல்லியன், வேறு வழியில்லாமல் துரியோதனனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானான். சல்லியனைத்தவிர கலிங்கம், காம்பிலி, போஜம், தெலுங்கு நாடு, கேகயம் உள்ளிட்ட பல நாட்டு அரசர்களும் துரியோதனின் படையில் சேர்ந்தனர். பீஷ்மர், கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார், கர்ணன், விகத்தசேனன், பகதத்தன் ஆகிய ஏழு சேனாதிபதிகள் துரியோதனனின் படையில் இருந்தனர். இவர்கள் அனைவருமே யாராலும் வெல்ல முடியாத திறமைசாலிகள். படைகள் ஒன்று கூடிய பிறகு, துரியோதனன் அவர்கள் மத்தியில் நின்று, அந்த படைக்கு பிதாமகர் பீஷ்மரை தலைமை சேனாதிபதியாக்குவதாக அறிவித்தான். பின்பு பீஷ்மரின் பாதத்தில் விழுந்து ஆசி பெற்று,தளபதியே! போர் தொடங்கப்போகிறது. அதற்கு முன் நாம் களபலி கொடுக்க வேண்டும். களபலி கொடுக்க தகுதியானவர் யார்? அதற்கு உரிய நல்ல நாள் எது என்பதை தாங்கள் தான் சொல்ல வேண்டும்,என்றான். பீஷ்மர் சிரித்தார்.
துரியோதனா! நான் சிறந்த வில்லாளி. போர்களத்திலே உனக்கு வெற்றி பெற்று தருவேன். ஆனால் நீ கேட்கும் விஷயம் ஜோதிடம் சார்ந்தது. ஜோதிடத்தில் உன் தம்பி சகாதேவனைப்போல் சிறந்தவர்கள் உலகில் யாரும் இல்லை. அவன் உனக்கு எதிரியாயினும், நீ போய் கேட்டால் நல்ல நாள் குறித்து தந்து விடுவான். அவனிடம் உள்ள சிறந்த பண்பு அது. நீ உடனே புறப்படு. பாண்டவர்களின் பக்கம் அரவான் என்ற மாபெரும் வீரன் இருக்கிறான். அவன் இருக்கும் வரை வெற்றி என்பது நம் பக்கம் இல்லை. சகாதேவனைப்போல, யார் என்ன கேட்டாலும் கொடுக்கும் பண்பை உடைய அவனிடம் நீ ஒன்று கேட்க வேண்டும், என்று சொன்ன பீஷ்மரை துரியோதனன் கேள்வி குறியுடன் நோக்கினான். பீஷ்மர் தொடர்ந்தார். துரியோதனா! களப்பலி கொடுப்பதற்கு மிகச்சிறந்தவன் அரவான். எதற்கும் அஞ்சாதவனை களப்பலி கொடுத்தால் தான் போரில் வெற்றி கிடைக்கும். அத்தகைய வீரன் அர்ஜுனனின் மகனான அரவான். அவனிடம் நீ நேரில் சென்று அவனே உனக்காக களபலி ஆக வேண்டும் என்று கேள். உடனடியாக அவன் சம்மதிப்பான். இந்த இரண்டு வேலைகளையும் உடனடியாக முடித்து வா,என்றார். துரியோதனன் தனது தேரில் ஏறி சகாதேவனிடம் சென்றார். போர் துவங்குவதற்கு நல்ல நாள் குறித்து தரச்சொன்னான். தனது சகோதரன் தன்னை தேடி வந்தது சகாதேவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அண்ணனை அன்புடன் வரவேற்று ஆசனத்தில் அமர வைத்து, உணவருந்த செய்து, மார்கழி மாத அமாவாசை இரவில் களபலி கொடுத்தால், பகைவர்களை நீ ஜெயித்து விடலாம்,என சொன்னான்.
வந்த ஒரு வேலை வெற்றியுடன் முடிந்த மகிழ்ச்சியில் அரவானிடம் சென்றான் துரியோதனன். சகாதேவனை விட உயர்ந்த பண்புள்ள அரவான், துரியோதனனை நோக்கி,என் அன்பு தந்தையே வருக,என்று கூறி வரவேற்று, உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டான். துரியோதனன், தனக்காக அவன் களபலி ஆக வேண்டும் எனக்கேட்ட உடனேயே,தந்தைக்காக மகன் உயிரைக் கொடுக்கிறான் என்றால் அதை விட சிறந்த பாக்கியம் ஏது. உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன். அமாவாசையன்று நீங்கள் தவறாமல் களபலி களத்திற்கு வந்து விடுங்கள்,எனச் சொல்லி உபசரணை செய்து அனுப்பி வைத்தான். துரியோதனனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அஸ்தினாபுரம் சென்று பீஷ்மரிடம் நடந்ததை சொன்னான். இந்த விஷயங்கள் அனைத்தும் கிருஷ்ணருக்கு தெரிய வந்தது. அவர் சகாதேவனிடம் சென்று,எதிரிக்கே நாள் குறித்து தரும் பைத்தியக்காரனாக இருக்கிறாயே. உனக்கெல்லாம் நான் உதவி செய்ய வந்தேனே,என்று அவனிடம் கடிந்து கொள்வது போல நடித்தார். மனிதனை அவ்வப்போது தெய்வம் சோதித்து பார்க்கும். அந்த சோதனைகளில் மனிதன் ஜெயித்து காட்ட வேண்டும். அப்போது சகாதேவன் கண்ணனிடம்,என் எதிரிக்காக நாள் குறித்து கொடுத்தது சகாதேவன் என்ற சாதாரண மனிதன். ஆனால், என் அருகில் இருப்பதோ ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமாகிய கண்ணன். அவன் இருக்கும் போது நாளும் நட்சத்திரமும் என்னை ஏதும் செய்ய முடியாதென்பதில் தீவிர நம்பிக்கை வைத்திருக்கிறேன்,என்று சொல்லவும் கிருஷ்ணர் பெரிதும் மகிழ்ந்தார். தன் மீது சகாதேவன் கொண்டிருக்கும் பக்திக்காக அவனை மனதுக்குள் வாழ்த்தினார். உலகம் உள்ளளவும் சகாதேவனின் இந்த செயல் மெச்சத்தக்கதாக போற்றப்படும் என அருளாசி வழங்கினார். அடுத்து அரவானை களபலி களத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திலும் அவர் இருந்தார். அதற்காக ஒரு தந்திரம் செய்தார்.
மாயங்கள் புரிவதில் வல்லவரான கிருஷ்ணரின் யோசனையில் உதித்தது ஒரு திட்டம். அமாவாசையன்று அரவானை களபலி கொடுத்தால், கவுரவர்களின் வெற்றி உறுதியாகி விடும். எனவே, அமாவாசையையே மாற்றி விட்டால் என்ன! அதெப்படி முடியும், கிரகங்களின் சஞ்சாரத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும்! கடவுளால் அது முடியும். ஏனெனில், கிரகங்கள் அவரால் படைக்கப்பட்டவை. அவர் சொல்வதைக் கேட்டு நடப்பவை. கிருஷ்ணர், நாராயணனின் அம்சம் தான். கடவுள் தான்! இருப்பினும், இப்போதைக்கு அவர் பூமியில் மனிதனாக பிறந்திருக்கிறாரே! அப்படியிருக்க ஒரு மனிதனுக்கு கிரகம் எப்போது கட்டுப்படும்? அவன் புத்தியை பயன் படுத்தும் போது! கிரகங்களின் சாரத்தைப் பற்றி நீங்கள் படிக்கிறீர்கள். ராசிபலன் அவ்வளவு சரியில்லை என்றால், அதில் என்ன பலன் சொல்லப்பட்டுள்ளதோ, அதற்கேற்ப நமது நடை முறையை மாற்றி மைத்துக் கொண்டால்,கிரகங்கள் அந்த கடமை யுணர்வுக்கு மகிழ்ந்து, தாங்கள் தர இருந்த கெடுபலனை விலக்கிக் கொள்ளும்.
பணம் வராது என போட்டிருந்தால், நாம் வீட்டுக்கள் முடங்கி விடக்கூடாது. இன்று பத்து ரூபாயாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற முயற்சி எடுத்து, எவ்வளவு கடினமான பணியென்றாலும் செய்து வந்து விட்டால், கிரகங்கள் நமக்கு அடிமையாகி விடும். இந்த அடிப்படைத் தத்துவத்தை தான் உலக மக்களுக்கு தனது செயல் மூலம் கிருஷ்ணர் இப்பகுதியில் எடுத்துக் காட்டுகிறார். அமாவாசைக்கு முதல் நாளான சதுர்த்தசியன்றே, அமாவாசை திதியை வரவழைத்து குழப்பத்தை விளைவித்து விட்டால் என்ன என்று யோசித்தார். சில அந்தணர்களை அழைத்தார். ஓய்! இன்று தான் அமாவாசை. தர்ப்பணம் செய்ய வாருங்கள், என்று அழைத்தார். அவர்களுக்கு சந்தேகம். கிருஷ்ணா! நாளையல்லவா அமாவாசை! நீர் இன்றே தர்ப் பணம் செய்ய சொல்கிறீரே! என்றவர்களை, தன் சாமர்த்தியத்தால் பேசியே கட்டுப்பட வைத்தார்.
தர்ப்பணத்தை அவர் தொடங்கினர். இதைப் பார்த்து, மற்ற அந்தணர்களும் குழம்பிப்போய், கிருஷ்ணரே தர்ப்பணம் செய்கிறார், இன்றுதான் அமாவாசையாக இருக்கும், எனக்கருதி தர்ப்பணம் செய்ய, வானில் சஞ்சாரம் செய்த சூரிய, சந்திரர் குழப்பமடைந்தனர். அவர்கள் நேராக பூமிக்கு வந்து,கிருஷ்ணா! நாங்கள் இணைந்திருக்கும் நாள் நாளை தானே வருகிறது. நாளை அமாவாசையாக இருக்க, நீர் இன்றே தர்ப்பணம் செய்கிறீரே! என்ன நியாயம்? என்றார். உடனே கிருஷ்ணர் சமயோசிதமாக, நீங்கள் இணைந்திருக்கும் நாட்களெல்லாம் அமாவாசை என்றால், இன்றும் அமாவாசை தான். இப்போது, இருவரும் இணைந்து தானே வந்திருக்கிறீர்கள், என்றதும், அவர்களால் ஏதும் பேச முடியவில்லை.தர்மம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் கிருஷ்ணரின் இந்த நாடகத்தில், தங்கள் பங்கும் எதிர்காலத்தில் பேசப்படும் என்ற மகிழ்ச்சியுடன் அவர்கள் திரும்பிச் சென்றனர். பின்னர், அவசரமாக பாண்டவர்களின் இருப்பிடத்திற்குச் சென்ற கிருஷ்ணர், தர்மா! இன்று சூரியசந்திரர் ஒன்றாக இணைந்து வந்து விட்டனர்.
ஆகவே, அமாவாசையான இன்றே களபலி கொடுத்து விட வேண்டும். ஏற்பாடு செய், என்ற கிருஷ்ணரிடம், களபலியாக யாரைக் கொடுப்பது? என்று கேட்டார் தர்மர். இதென்ன கேள்வி தர்மா! என் மைத்துனர்களுக்காக என்னை பலி கொடுக்க சம்மதிக்கமாட்டேனா! என்னையே பலி கொடு, என்று அவர்களைச் சோதிக்கும் வகையில் கிருஷ்ணர் சொல்லவும், அதிர்ந்து போன பாண்டவர்கள் அவரது பாதங்களில் சரணடைந்தனர். மைத்துனா! உம்மை பலி கொடுத்து தான், நாங்கள் நாடாள வேண்டும் என்றால், அந்த நாடும் எங்களுக்கு தேவையில்லை, இந்த உயிரும் தேவையில்லை. நீர் இல்லாமல், நாங்கள் ஏது? தர்மம் ஏது? இந்த உலகம் தான் ஏது? என்று அவர்கள் கண்ணீர் சிந்தினர். கிருஷ்ணர் அவர்களின் பக்தி கண்டு மகிழ்ந்தார்.அந்நேரத்தில் அங்கு வந்த அரவான், பரமாத்மாவே! தாங்கள் இப்படியா விபரீத மாகப் பேசுவது.
அமாவாசையன்று என்னை களபலி கொடுக்க பெரியப்பா துரியோதனனிடம் சம்மதித்திருந்தேன். அவரோ, நாளை தான் அமாவாசை என நினைத்து இதுவரை வராமல் இருக்கிறார். ஆனால், தங்கள் சக்தியால், இன்றே அமாவாசை வந்து விட்டது. பெரியப்பா சொன்ன நேரத்துக்கு வராததால், அவருக்காக குறிக்கப்பட்ட அதே சமயத்தில், பாண்டவர்களுக்காக பலியாகிறேன். என்னை பலி பீடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள், என அவசரப்படுத்தினான். கிருஷ்ணருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. அரவான்! தியாகம் என்றால் இது தான் தியாகம்! பிறர் வாழ எவனொருவன் தன்னுயிரை துச்சமெனக் கருதி உயிர் விடுகிறானோ, அவன் எனக்குச் சமமானவன். இனி நீயும், நானும் ஒன்றென்றே உலகம் சொல்லும், எனச் சொல்லி அவனை அணைத்துக் கொண்டார். அப்போது அரவான் கிருஷ்ணரிடம், ஸ்ரீகிருஷ்ணா! வாழ்வின் இறுதிக்கட்டத்திலுள்ள நான், ஒரு வரம் கேட்கலாமா? என்றான்.தாராளமாகக் கேள், தருகிறேன், என்ற கிருஷ்ணரிடம், கிருஷ்ணா! என்னை பலி கொடுத்து விட்டாலும், என் உயிர் பிரியக்கூடாது. குரு÷க்ஷத்திரப் போர் உக்கிரமாக நடக்கும். அந்த போர்க்காட்சிகளை சில நாட்களாவது நான் பார்க்க வேண்டும், என்றான். கிருஷ்ணரும் அந்த வரத்தைக் கொடுத்தார்.
பின்பு அனைவரும் காளி கோயிலுக்கு புறப்பட்டனர். அங்கு அரவான், முகமலர்ச்சியுடன் நின்றான். மரணத்தைக் கண்டு அஞ்சாமல், முக மலர்ச்சியுடன் வரவேற்பவர்கள், சொர்க்கம் அடைவர். காளியின் முன்பு நின்ற அரவான், ஜெய் காளிமாதா! என்னை ஏற்றுக் கொள், என்றவனாய், தன் தலையை தானே சீவினான். அரவானின் களப்பலிக்கு பிறகு கிருஷ்ணரும் பாண்டவர்களும் தங்கள் படைத்தலைவர் ஸ்வேதனை வரவழைத்தார்கள். ஸ்வேதனின் தலைமையில் பீமன், அர்ஜுனன், அபிமன்யு ஆகியவர்களைக் கொண்ட அதிரதப்படையும், சிகண்டி, சாத்தகி, விராடராஜன், தர்மர் ஆகியோரை கொண்ட மகாரதப்படையும், யாகசேனன், உத்தமோஜோ, யுதாமன்யு ஆகியோரைக் கொண்ட சமரதப் படையும், நகுலன், சகாதேவன், கடோத்கஜன் ஆகியோரைக்கொண்ட அர்த்தரதப் படையும் அமைக்கப்பட்டது. அந்தப்படைகள் குரு÷க்ஷத்ரத்தை நோக்கி புறப்பட்டன. அரவான் களப்பலியானதும் ஆத்திரமடைந்த துரியோதனன் பீஷ்மரிடம், உடனடியாக நமது படையும் தயாராக வேண்டும். நீங்களே நால்வகை ரதப்படைக்கும் சேனாதிபதிகளை நியமியுங்கள், என உத்தரவிட்டான். அதன்படியே பீஷ்மர் துரோணர், அஸ்வத்தாமன், பூரிச்ரவஸ் ஆகியோரைக் கொண்ட ஒரு படையையும், சோமதத்தன், பகதத்தன், துர்மர்ஷணன் ஆகியோரைக் கொண்ட படையையும், கிருதவர்மராஜன், கிருபாச்சாரியார், சகுனி, சல்லியன், ஜெயத்ரதன் ஆகியோரைக் கொண்ட படையையும் நியமித்தார். கர்ணனுக்கு இந்தப் படையில் முக்கியத்துவம் தரப்படவில்லை. அவனை அர்த்தரத சேனாதிபதியான கடைப்பதவியில் நியமித்தார்.
இதனால் கர்ணன் மிகவும் ஆத்திரமடைந்தான். தனது வாளை உருவிக்கொண்டு பீஷ்மர் மீது பாய்ந்தான். என்னை கடைப்பதவியில் நியமித்த உம்மைக் கொன்றால்தான் என் மனம் ஆறும், எனச்சொன்னவன், என்ன காரணத்தாலோ வாளை மீண்டும் உறையில் போட்டுவிட்டான். பின்னர், இந்த யுத்தத்தில் எக்காரணம் கொண்டும் நீர் இறக்கும்வரை நான் ஆயுதத்தை தொடமாட்டேன், என சபதம் செய்துவிட்டு அகன்றான். கவுரவப்படைக்கு இது மிகவும் பின்னடைவாக அமைந்தது. கர்ணன் போன்ற வீரர்களின் கையில் ஆயுதங்கள் இருக்குமானால், பாண்டவர் படையில் கடும் சேதத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், தர்மத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த போரில் துரியோதனன் பின்னடைவை சந்திக்க இது இயற்கையாகவே அமைந்துவிட்டது. இரண்டு படைகளும் எதிரெதிரே நின்றன. அப்போது துரியோதனன் பீஷ்மரிடம், தாத்தா! பாண்டவர்களின் படையும் மிகப்பெரிய அளவில்தான் இருக்கிறது. இந்தப்படையை அழிக்க உங்களுக்கு எத்தனை நாள் வேண்டும்? எனக்கேட்டான். பீஷ்மர் மிகுந்த தைரியத்துடன், நானாக இருந்தால் இந்த சேனைகளை ஒரே நாளில் அழித்துவிடுவேன். துரோணருக்கு மூன்று நாட்களும், கர்ணனுக்கு ஐந்து நாட்களும் வேண்டும். அஸ்வத்தாமன் ஒரே நாழிகையில் (24 நிமிடம்) அழித்து விடுவான். ஆனால் இதே அளவுள்ள நமது படையை அழிப்பதற்கு அர்ஜுனனுக்கு ஒரு கண நேரம் போதும், என்றார்.
இந்த நேரத்தில் அர்ஜுனனின் மனதில் கலக்கம் உண்டாயிற்று. தன் எதிரே தனது குரு பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன் முதலிய பெரியவர்களைப் பார்த்தான். துரியோதனன் உள்ளிட்ட எதிரிகள்கூட உறவினர்களாகத்தான் அவன் கண்ணில் தெரிந்தார்கள். அந்த உறவுகளை எல்லாம் அழித்துதான் நாட்டை மீட்கவேண்டுமா? இதைவிட நம் நாட்டை அவர்களே வைத்து கொண்டு போகட்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அர்ஜுனனின் இந்த மன உணர்வை கண்டுபிடித்துவிட்டார் பகவான் கிருஷ்ணர். அவரிடமே சென்று சரணடைந்த அர்ஜுனன், கிருஷ்ணா! எனது தாத்தா, உறவினர்கள், அண்ணன், தம்பிகள் என் எதிரே நிற்கிறார்கள். இவர்களை எல்லாம் நான் கொல்ல வேண்டும் என்பது என்ன கட்டாயம்? அப்படி கொன்றாலும் எனக்கு என்ன கிடைத்துவிடும்? கேவலமான இந்த பூமிக்காக இந்த சண்டை அவசியம் தானா? அது மட்டுமல்ல. இப்போதுகூட எங்கள் ராஜ்ஜியம் என் சகோதரர்களின் கையில்தானே இருக்கிறது. யாரிடம் இருந்தால் என்ன? அவர்களைக் கொல்வது கொடிய பாவம் என்று எண்ணுகிறேன். எனவே நான் இந்த போர்க்களத்திலிருந்து வெளியேறப் போகிறேன், என்று சொல்லியபடியே அங்கிருந்து புறப்பட்டான்.
அவனைத்தடுத்து நிறுத்தினார் கிருஷ்ணர்.
அர்ஜுனா! பந்தபாசத்தை அகற்றிவிடு. இந்த உலகில் தர்மமே நிலைக்க வேண்டும். அதுவே எனது விருப்பம். இங்கே நிற்கும் அனைத்து உயிர்களும் எனக்குள் அடக்கம். நீ ஒருவேளை இவர்களைக் கொல்லாவிட்டாலும்கூட, இவர்கள் என்றாவது ஒருநாள் மரணமடைந்து என்னை அடையத்தான் போகிறார்கள். அதுவரை இந்த பூமியில் தர்மம் அழிந்தே கிடக்கும். தர்மத்தை நிலைநிறுத்துவது ஒவ்வொரு மனிதனின் கடமையுமாகும். எனவே உன்னிடமுள்ள பாசத்தை நீக்கிவிட்டு போருக்குத் தயாராகு, என்று சொன்னவர் விஸ்வரூபம் எடுத்தார். அந்த ரூபத்திற்குள் களத்தில் நின்ற அத்தனை வீரர்களும் தெரிந்தார்கள். என்றேனும் ஒருநாள் இறைவனை அடைந்துதான் தீரவேண்டும் என்ற ஞான உபதேசத்தைப் பெற்ற அர்ஜுனன் மனமயக்கம் நீங்கி போருக்குத் தயாரானான். அத்துடன் தனது குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணரிடம் வேண்டிக் கொண்டான். இந்த நேரத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒரு கேள்வி கேட்டார். அர்ஜுனா! நீ இங்கு நிற்கும் படைவீரர்களில் ஒருவர்கூட விடாமல் அழித்துவிடலாம் என எண்ணுகிறாயா? என்றார்.
பீஷ்மருக்கு அவர் நினைத்தாலொழிய மரணம் வராது என்ற வரத்தைப் பெற்றிருந்தார். யாராலும் அவரை வெல்லமுடியாது. இந்த நிலையில் அவரை எப்படி கொல்வது என்பதை அடிப்படையாக வைத்தே இந்த கேள்வியை கிருஷ்ணர் கேட்டார். இதற்கான பதில் அர்ஜுனனுக்கு தெரியவில்லை. எனவே கிருஷ்ணரே பீஷ்மர் அருகில் தனது தேரை ஓட்டிச் சென்றார். பீஷ்மரே! இது போர்க்களம். ஆனால் உமக்கு மட்டும் அழிவு கிடையாது என்பதை நான் அறிவேன். போர்க்களத்திற்கு வந்தபிறகு வெற்றி தோல்வி என்பதை ஏற்றுதான் ஆகவேண்டும். நீர் நினைத்தால் ஒரு நொடிப் பொழுதில் பாண்டவர் படையை நாசமாக்கிவிடுவீர் என்பதும் எனக்குத் தெரியும். இருப்பினும் போர் தர்மம் கருதி கேட்கிறேன். உமது உயிர் எப்படி போகும் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும், என்றார். அந்த மாயவனுக்கு எல்லாம் தெரியும் என்றாலும், பீஷ்மர் சற்றும் தயங்காமல் தனது முடிவைப் பற்றி அறிவித்தார்.
கிருஷ்ணா! ஒரு காலத்தில் என் தம்பிக்கு திருமணம் செய்வதற்காக, காசிராஜனின் மகள்களான அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்பவர்களைக் கடத்தி வர வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. அவர்களில் அம்பா வேறொருவனைக் காதலித்தாள். அதனால் நான் அவளை விடுவித்துவிட்டேன். ஆனால், அந்தக் காதலனோ, பிற ஆடவனால் கடத்தப்பட்ட அவளைத் திருமணம் செய்யமாட்டேன் என சொல்லிவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த அம்பா, என்னிடமே திரும்பி வந்து, என்னையே திருமணம் செய்யும்படி மன்றாடினாள். நான் என் தந்தைக்காக பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டிருந்ததால், அவளைத் திருமணம் செய்ய மறுத்து விட்டேன். என்னை பேடி என திட்டிய அவள், உன் அழிவு ஒரு பேடியாலேயே (ஆணும் பெண்ணும் அல்லாத வடிவம் கொண்டவர்) அமையும் என சபித்து விட்டாள். பின்னர் அவள் தவமிருந்து, சிகண்டி என்ற பெயரில் ராஜகுமாரனாகப் பிறந்திருக்கிறாள். அவள் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவள். சிகண்டி என்னை எதிர்த்துப் போரிட்டால் நான் ஆயுதத்தைக் கையால் தொடமாட்டேன். அந்த சமயத்தில் என்னை அர்ஜுனன் வீழ்த்தி விடுவான். இதுவே, என் இறப்பின் ரகசியம், என மறைக்காமல் சொன்னார். அதன் பிறகு பீஷ்மர் மிகுந்த பணிவுடன், கிருஷ்ணா! ஏது மறியாதவர் போல் ஏன் நீர் என்னிடம் இதையெல்லாம் கேட்க வேண்டும். என்னைக் கொல்லும் வழி உமக்கா தெரியாது. அது மட்டுமல்ல கிருஷ்ணா! நீ தர்மத்தின் பக்கம் இருக்கிறாய். நீ எந்தப் பக்கம் இருக்கிறாயோ, அந்தப் பக்கம் ஜெயிக்கும் என்ற சிறு உண்மையைக் கூட அறியாதவனா நான்! எனவே பாண்டவர்கள் தான் ஜெயிக்க போகிறார்கள். தர்மனின் அரசாட்சி இந்த பூமியில் விரியப் போகிறது, என்றார்.
இதுகேட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். அடுத்து, துரோணரை வீழ்த்துவது பற்றி அவரிடம் ஆலோசனை கேட்கச் சென்றார் கிருஷ்ணர். துரோணரே! எல்லையற்ற வீரம் பொருந்திய நீர், கவுரவர்களின் பக்கம் இருக்கும்வரை பாண்டவர்களுக்கு வெற்றியில்லை என்பதை நான் அறிவேன். உம்மை அஸ்திரங்களால் அழிக்க முடியாது என்பதை நான் அறிவேன். பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும், தர்மம் தழைக்க வேண்டும் என்பதை நீர் ஒப்புக்கொள்வீர். ஆனால், நீர் மூவுலகையும் அளந்த திருமாலாலும் வெல்ல முடியாதவர் என்ற பெருமையைப் பெற்றவர். பாண்டவர்கள் ஜெயிக்க ஒரு வழி சொல்லும், என்றார். அந்த மாயவனின் மன ஓட்டத்தை உணர்ந்த துரோணர், பரந்தாமா! நான் என் மகன் அஸ்வத்தாமனின் மீது கொண்ட அன்பை நீர் அறிவீர். அவன் இந்திரனையும் ஜெயிக்கும் வல்லமை வாய்ந்தவன். போர்க்களத்தில், ஒரு வேளை அவன் இறந்து விட்டான் தகவல் தெரிந்தால், நான் ஆயுதங்களைத் தொடாமல் அப்படியே ஸ்தம்பித்து விடுவேன். அப்போது திரவுபதியின் சகோதரன் திருஷ்டத்யும்நன் என் மீது பாணங்களைத் தொடுப்பான். நானும் மடிவேன் என்றார்.
பின்னர் துரோணரிடம் விடைபெற்ற கிருஷ்ணர், போரைத்துவங்க பாண்டவர்களுக்கு ஆணையிட்டார். இன்றும் மகத்தானதாகப் பேசப்படும் குரு÷க்ஷத்ர யுத்தம் துவங்கியது. பாண்டவர் படைகள் ஆரவாரத்துடன் கவுரவப் படைகளை எதிர்த்தன. இரண்டு பக்கமும் பலத்த சேதம் ஏற்பட்டது. அர்ஜுனன் பீஷ்மன் மீது அம்புகளை ஏவினான். அப்போது, இருபுறமும் நின்ற படைகள் அவர்களைப் பாதுகாக்கும் விதத்தில் அரண் அமைத்து தருகின்றன. குறிப்பாக பீஷ்மரை சல்லியன், சகுனி, துரியோதனனின் தம்பிகள் ஆகியோர் பாதுகாத்தனர். அப்போது, பீமன் அர்ஜுனனுக்கு துணையாக வந்தான். ஒரே நேரத்தில் மூன்று அம்புகளை பிரயோகித்து, பீஷ்மரின் பனைக் கொடியை சாய்க்க எத்தனித்தான். மேலும் 9 அம்புகளை பீஷ்மர் மீது எய்தான். அதன் வலிமை தாங்காத சல்லியனும், சகுனியும் பின்வாங்கினர். இதைப் பயன்படுத்தி பீஷ்மரின் நான்கு தேர்க்குதிரைகள் மீது அர்ஜுனனின் மகன் அபிமன்யு அம்புகளைத் தொடுத்துக் கொன்றான்.
இந்நேரத்தில், பாண்டவர்களின் அஞ்ஞானவாசத்தின் போது, அவர்கள் மறைந்து தங்கியிருந்த விராடதேசத்து மன்னன் விராடனின் மகன் உத்தரகுமாரன், சல்லியனை எதிர்த்து கடுமையாகப் போரிட்டான். பயந்த சுபாவமுடைய இவனை அர்ஜுனன் தான் பெரிய வீரனானாக்கினான் என்பது தெரிந்த விஷயம். சல்லியன் மீது தொடர்ந்து அம்புகளைப் பாய்ச்சி காயப்படுத்தியதால் கோபமடைந்த சல்லியன், அவன் மீது ஒரு வேலை எறிந்தான். அது உத்தரகுமாரனின் மார்பைப் பிளந்தது. பாண்டவர்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாக உத்தரகுமாரனின் மரணம் அமைந்தது. பாண்டவர் சேனை தங்கள் பலத்தை இழந்தது போல உணர்ந்து பின்தங்கியது. இதைப்பயன்படுத்தி துரியோதனனின் படைகள் ஆகரோஷமாகப் போரிட்டு பாண்டவர் படைகளை விரட்டின. தங்கள் படையின் பின்னடவைக் கவனித்த பீமன் ஆவேசம் கொண்டான். படையினர் பின்னேறினாலும், அவன் சற்றும் தயங்காமல் முன்நோக்கிச் சென்றான்.
படையினர் பின்னேறினாலும், பீமன் சற்றும் தயங்காமல் முன்நோக்கி சென்றான். கவுரவர்களின் காலாட்படைகளை தன் காலால் மிதித்தே கொன்று தீர்த்தான். இதைப் பார்த்த துரியோதனன் ஆத்திரத்துடன் பீமன் அருகில் வந்தான். அவனுக்கு துணையாக பல நாட்டு ராஜாக்களும் வந்தனர். பீமன் அவர்களது தேர்களை தன் புஜபலத்தாலேயே அடித்து நொறுக்கினான். அந்த ராஜாக்களை தன் கதாயுதத்தால் கொன்று போட்டான். பின்னர் துரியோதனனின் தேரை தன் பலம் கொண்ட மட்டில் தூக்கி வீசினான். துரியோதனன் இறந்துவிட்டானோ என்று நினைத்த கவுரவப்படை பின் வாங்க ஆரம்பித்தது. இதுகண்டு துணுக்குற்ற துரியோதனின் மைத்துனர்கள், அவனுக்கு ஆதரவாக வர போர் உக்கிரமானது. அவர்களைச் சிதறி ஓட வைத்தான் பீமன். விராடதேச இளவரசன் உத்தரகுமாரனைக் கொன்ற சல்லியனை நோக்கி முன்னேறினான் அவனது தம்பி
சுவேதன்.
இதுகண்ட துரியோதனன் பீஷ்மரை அவனுடன் போரிட அனுப்பினான். சுவேதனோ பெரும் வில்லாளி. அவன் விட்ட பாணங்களின் விவளவாக பிதாமகர் பீஷ்மரே தன் வில்லையும் அம்புகளையும் இழந்து நிராயுதபாணியானார் என்றால், அவனது வீரத்தை அளவிட மதிப்பேது? அதன் பின் மற்றொரு வில்லை எடுத்து அவர் போரிட வேண்டிய தாயிற்று. அவர் விட்ட அம்பில் சுவேதனின் கிரீடம் பறந்தது. இது கண்டு கோபமடைந்த சுவேதன் கடும்போர் புரிந்து மீண்டும் அவரை சோர்வுக்குள்ளாக்கினான். இவனை எப்படித்தான் வெல்வது என்று பீஷ்மரே யோசிக்க ஆரம்பித்து விட்டார். பீஷ்மர் சோர்ந்து விட்டதைக் கவுனித்த துரியோதனன், மேலும் பல அரசர்களை அவருக்கு துணைக்கு அனுப்பினான். ஒருவனை அடிக்க இத்தனை பேரா என்று சொல்லுமளவுக்கு, சுவேதனை சுற்றி நின்று அரசர்கள் தாக்கினர். ஆனால், வீராதி வீரனான சுவேதன் அவர்கள் அனைவரையும் பின்வாங்கச் செய்யும் வகையில் அஸ்திரங்களை எய்தான்.
இப்படி ஒருவன் தன் பக்கம் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்று துரியோதனனே நினைக்குமளவுக்கு நிலைமை போய்விட்டது. இதையடுத்து மேலும் ஐந்து பலசாலி அரசர்களை அனுப்பினான். அவர்களில் குகுர தேசத்து மன்னனும் அடக்கம். அவனும் பெரும் வில்லாளி. அவர்களையும் தோற்கடித்தான் சுவேதன்.வானுலக தேவர்களே அவனது வீரத்தை ஆஹா என விண்ணிலிருந்து பாராட்டினர். அவனது இந்த வெற்றிக்கு காரணம் என்னவென்றால், ஒரு காலத்தில் அவன் இந்த வில்லை, தான் செய்த தவத்திற்காக சிவபெருமானிடமிருந்தே பெற்றிருந்தான். சிவதனுசுக்கு ஏது தோல்வி? அதனால் தான் இவ்வளவு உக்கிரமாக அவனால் போரிட முடிந்தது. இவனை அழிக்க வேண்டுமானால் வீரம் பயன்படாது. விவேகம் தான் பயன்படும் என்று பீஷ்மர் சிந்தித்தார். எங்கே பொறுமை குறைகிறதோ, எங்கு உணர்ச்சிகள் அதிகமாகிறாதோ, அங்கே தோல்வி தேடி வந்து சேரும்.
இந்த தத்துவத்தை உணர்ந்தவர் பிதாமகர் பீஷ்மர். அவர் சுவேதனிடம், வில்வித்தையில் உன்னிலும் உயர்ந்தவர்கள் இல்லை என்றே சொல்வேன். ஆனால், உன் திறமை மட்டுமே இப்படி ஒரு வெற்றியை விட்டு, தன் உறையில் இருந்து வாளை உருவியபடியே, என்னையா வீரனில்லை என்றீர்? என்றபடியே, பீஷ்மர் முன்னால் நீட்டினான். அக்கணமே, பீஷ்மர் வில்லை எடுத்து அவனது கையில் அஸ்திரத்தைப் பாய்ச்ச அவனது கை அறுந்து விழுந்தது. ஆனாலும், அந்த வீரமகன் அதைப் பொருட்படுத்தவில்லை. இடது கையில் வாளைப் பிடித்து பீஷ்மரின் தலையை அறுத்தெடுக்கும் அளவுக்கு முன்னேறி விட்டான். அப்போது பீஷ்மர் மற்றொரு அம்பைப் பாய்ச்ச அவனது மார்பில் தைத்தது. அவன் விண்ணுலகை அடைந்தான். அவன் சுத்த வீரனாக சொர்க்கத்துக்குள் நுழைந்ததும், தேவர்களே அவனை மாலையிட்டு வரவேற்றார்கள். வெறும் வீரமும், ஒற்றைக் கலையும் மட்டும் மனிதனை வெற்றி பெற வைத்து விடாது. சகல கலைகளையும் மனிதன் கற்க வேண்டும். கற்றாலும் அறிவுத்திறனையும் பயன்படுத்த தெரிய வேண்டும். அவனே பூரண வெற்றியடைய முடியும் என்பது பாரதம் நமக்கு உணர்த்தும் பாடம்.
முதல்நாள் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அன்று கவுரவர் பக்கமே அதிக வெற்றி என்பது போல் மாயை ஏற்பட்டது. தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்த விராடராஜன் கலங்கி நின்றான். அவனை தர்மர் தேற்றினார். விராடராஜா! உன் மகன் சுவேதனை விண்ணுலக தேவர்களே பாராட்டியிருக்கிறார்கள். அவன் வீர சொர்க்கமே அடைந்தான். மகாத்மா பீஷ்மரே மாண்பு தவறி நடந்து கொண்டதன் விளைவே உன் மகனின் மரணம் என்பதே உனக்கு வெற்றி தான். உத்தர குமாரனும் பல வீரச்செயல்களை செய்தே மாண்டான். வீரப்பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்கள் இறந்து போனால் வருந்தக்கூடாது, என தேற்றினார். அப்போது விராடராஜன் மனம் மகிழ்ந்து, தர்மரே! என் பிள்ளைகள் உயிர் மட்டுமல்ல, எனது உயிரும் உமக்காகவே செல்லும், என்றான். தர்மர் அவனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார். இரண்டாம் நாள் விடிந்தது. பாண்டவர் படைக்கு அன்று திரவுபதியின் மூத்த சகோதரன் திருஷ்டத்யும்நன் தலைமை சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். இரண்டு படைகளும் களத்தில் இறங்கின.
பரந்தாமா ! என்ன இது விபரீதம்! சாரதியாய் வந்த நீர், இவ்வாறு போர்க்கோலம் பூணுவது நீதியாகுமா? எதிர்த்திசையில் இருப்பவர்கள் எனது உற்றார், உறவினர் என்பதால் தானே, நான் தயக்கத்துடன் போர் புரிகிறேன். இல்லாவிட்டால், என் பாணங்கள் இதற்குள் எதிரிகளின் தலைகளைக் கொய்திருக்காதா! கேசவா! சினம் தணிந்து என் தேரில் மீண்டும் ஏறும். அபிமன்யுவும், பீமனும் தங்களைக் காத்து கொள்ளும் திறமை வாய்ந்தவர்கள். பீஷ்மரால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் கூட நான் மகிழத்தான் செய்வேன். மகிமைக்குரிய மகாத்மா அல்லவா அவர்! அவருடன் போர் செய்ய நீர் செல்லலாமா? அது உம் தகுதிக்கு அழகாகுமா? என்ற அர்ஜுனனின் சொல்லை சற்றும் மதிக்கவில்லை கிருஷ்ணர். அவர் முன்னேறிச் சென்றார். தன்னை நோக்கி கண்ணனே வருகிறார் என்றால், தனக்கு அழிவு நிச்சயம் என்பதை பீஷ்மர் உணர்ந்து கொண்டார். கிருஷ்ணரின் கையால் இறந்தவர்கள் வைகுண்டபதியை அடைந்து, பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பதை, தன் இறப்பு விரைவில் நிகழட்டும் என ஆசைப்பட்டார். ஆனால், மனிதன் நினைப்பதை இறைவன் அவ்வளவு எளிதில் கொடுத்து விடுவதில்லை.
பீஷ்மர் கிருஷ்ணரை நோக்கி ஓடி வந்தார். புண்டரீகாக்ஷõ, கோவிந்தா, மதுசூதனா, கோபாலா, நாராயணா, விஷ்ணுபதீ! உன்னால் எனக்கு அழிவு நேருமானால், நான் செய்த பாக்கியம் தான் என்னே! என்னைக் கொன்று விடு. இனி, இவ்வுலகில் பிறக்கவிடாதே! என்றவராய் கிருஷ்ணனை நோக்கி ஓடி வந்தார். தனது திருநாமங்களை சொல்லி, மரணத்தை கண்டு அஞ்சாமலும், இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஓடி வந்த பீஷ்மர் மீது கிருஷ்ணருக்கு அனுதாபம் ஏற்பட்டது. மரணத்தைக் கண்டு எவனொருவன் அஞ்சாமல் இருக்கிறானோ அவனுக்கு என்றும் மரணமில்லை, என்ற தத்துவத்தின் அடிப்படையில், பகவான் கிருஷ்ணர் கோபம் தணிந்தார். அங்கிருந்து திரும்பி, மீண்டும் அர்ஜுனனின் தேரில் ஏறிவிட்டார். இதன்பிறகும் அமைதியாக இருந்தால், பீஷ்மர் உள்ளிட்ட அத்தனை உயிர்களும் பறிக்கப்படும் என்பதால் அச்சம் கொண்ட அர்ஜுனன், எதிரிகளின் மீது பாணமழை பொழிந்தான். கவுரவர்கள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அர்ஜுனனின் அம்புகளால் துண்டிக்கப்பட்ட பலதேசத்து ராஜாக்களின் உடலில் இருந்து பாய்ந்த ரத்தம் விண்ணுலகைத் தொட்டு, சூரியனை நனைத்ததாம். அந்தளவுக்கு உக்கிரமாக போர் புரிந்தான் அர்ஜுனன். அவனது போர், எதிரிகளுக்கு திகிலைக் கொடுத்ததால், கிருஷ்ணர் திருப்தியடைந்தார். கவுரவர்களுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கிய மகிழ்ச்சியுடன் அன்றையப் போர் நிறைவு பெற்றது.
மறுநாள் நான்காம் தின போருக்கு படைகள் ஆயத்தமாயின. அன்றைய தினம் கவுரவப்படைகள் பகதத்தனை களத்தில் இறக்கின. இவன் யார் தெரியுமா? தீபாவளி பண்டிகைக்கு காரணமான நரகாசுரனின் மகன். நரகாசுரனை விஷ்ணு அழித்ததும், அவனது மகன் பகதத்தனை பராமரிக்கும் பொறுப்பு அவரது தலையில் விழுந்தது. பகதத்தனை மிகுந்த அன்புடன் கவனித்து, அவனை தந்தைக்குப் பிறகு மன்னனாக்கினார் விஷ்ணு. ஆனாலும், அவன் தன் தந்தையைக் கொன்ற விஷ்ணுவின் ஆதரவாளர்களான பாண்டவர்களுக்கு எதிராகவே இருந்தான். இதைப்பயன்படுத்தி, துரியோதனன், அவனைத் தனது படையில் முக்கிய ஸ்தானத்தில் வைத்துக் கொண்டான். அவன் பாண்டவர்களை எதிர்த்து உக்கிரமாகப் போரிட்டான். பலம் கொண்ட அசுர வீரனை எதிர்க்க மானிடர்களால் எப்படி முடியும்? எல்லாரும் ராமனாகி விட முடியுமா? எனவே, அவனை எதிர்க்க பீமனுக்கும், இடும்பி என்ற அரக்கிக்கும் பிறந்து, அரக்கர் குலத்திலேயே வாழ்ந்த கடோத்கஜனை ஏற்பாடு செய்தனர்.
கடோத்தகஜனும், பகதத்தனும் கடுமையாக மோதினர். வெகு நீண்ட நேரம் சமபலத்துடன் போரிட்ட பிறகு, கடோத்கஜனின் கை ஓங்கியது. பாண்டவர் படையினர் ஆரவாரம் செய்தனர். அன்றையப் போரில் பகதத்தன் இருந்தும், கவுரவர்கள் பக்கம் தாள முடியாத ஒரு இழப்பு ஏற்பட்டது. துரியோதனின் தம்பிகள் ஐந்துபேரை எதிர்த் தரப்பினர் கொன்று விட்டனர். இதுகேட்டு காந்தாரி துடித்தாள். திரவுபதியை தனது மக்கள் துகிலுரிந்து வேடிக்கை பார்த்த போது, அதைக் கண்டுகொள்ளாமலும், பிள்ளைகளைக் கண்டிக்காமலும் இருந்த அந்த மாது இப்போது துடித்தாள். பிள்ளைகளைத் தாய்மார்கள் நல்ல முறையில் வளர்க்க வேண்டும். பொறாமை, போட்டி மனப்பான்மை, பெண்களை மதிக்காத தன்மை, மண்ணாசை பொன்னாசையுடன் தன் பிள்ளைகளை வளர்த்தாள். அதன் காரணமாக இன்று பிள்ளைகளை வரிசையாக இழக்கத்துவங்கி விட்டாள். அநியாய குணங்களுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் நிச்சயம் அழிவைச் சந்திப்பார்கள் என்பதற்கு மகாபாரதத்தின் இந்தக்காட்சி ஒரு உதாரணம். காந்தாரி புலம்பித் தீர்த்தாள்.
மக்களே! தினமும் உங்கள் நூறு பேரையும் பார்த்து பெருமைப்படுவேன். இப்போது ஐவர் இறந்து விட்டீர்கள். எதிரிகளான ஐந்துபேரை நீங்கள் அழிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் ஐந்துபேர் அழிந்து போனீர்களே! என்று அழுதாள். நான்காம் நாள் போரும் பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியான விடையையே தர, மறுநாள் போரும் அவ்வாறே அமைந்தது. அன்றைய தினம், கிருஷ்ணரின் மகன் சாத்தகியும், கவுரவப்படையின் தேர்ப்படை சேனாதி பதியான பூரிச்ரவஸும் செய்த போர் மிக கடுமையாக இருந்தது. அன்றைய தினம் மட்டும் இருபத்தைந்தாயிரம் அரசர்கள் இறந்தார்கள். ஆறாம்நாள் போரில், துரோணரும், பீமனும் மோதிக் கொண்டனர். துரோணர் தனது குரு என்பதால், அவரை நமஸ்கரித்த பிறகே, பீமன் அவருடன் கடும் போர் செய்தான். அவரது தேரை இழுத்து வந்த குதிரைகளை அம்பெய்து கொன்றான். தேர் நின்றுவிட்டது. இதைப் பார்த்த நகுல, சகா தேவனின் தாய்மாமனும், சந்தர்ப்பவசத்தால் துரியோதனனின் படையில் சேர்ந்தவனுமான சல்லியன், பீமனுடன் களத்தில் மோதினான். பீமனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அனைத்து ஆயுதங்களையும் இழந்து நின்ற வேளையில், சல்லியரே! இப்போது உங்கள் உயிர் எனது கையில், என்று வீரம் பேசிய பீமனை நோக்கி தேரில் பறந்து வந்தான் துரியோதனன்.
சல்லியனைக் காப்பாற்றும் விதத்தில், துரியோதனன் பீமனுடன் கடும் யுத்தம் செய்தான். இருவரும் மோது வதைப் பார்த்து பீமனின் மகன் கடோத்கஜன் வந்தான். அவனோடு கவுரவப்படைகள் மோதின. ஆனால், இந்த இருவரின் பலத்தின் முன்பு துரியோதனின் படைகளால் ஏதும் செய்ய முடியவில்லை. அவர்கள் பயத்தில் புறமுதுகிட்டு ஓடினர். அப்போது, துரியோதனின் தம்பி விகர்ணன் பாண்டவர் படைகளை ஒரு இடத்தில் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான். இதைப்பார்த்து விட்ட அபிமன்யு, அவனோடு கடும் யுத்தம் செய்தான். அவன் விட்ட அம்புகளால் விகர்ணனின் வயிறு கிழிந்து தொங்கிவிட்டது. அவனது குடல் சரிந்து மிகுந்த ஆபத்தான நிலையில் தரையில் விழுந்தான். இது கண்டு கவுரவப்படையினர் திடுக்கிட்டு ஓடினர். தங்கள் உயிரையும் அபிமன்யு பறித்து விடுவான் என்று அவர்கள் ஓடிய வேளையில், சூரியன் அஸ்தமிக்கவே ஆறாம்நாள் போர் முடிந்தது. ஏழாம்நாள் போரில் பீஷ்மரும் அர்ச்சுனனும் சமபலத்துடன் மோதினர்.
பீமனுடன் சகுனியும், சல்லியனும் மோதி தோற்றுப்போனார்கள். ஆனாலும், பொதுவான அளவில் பார்த்தால் வெற்றி தோல்வியின்றியே முடிந்தது. எடடாம் நாள் கவுரவர் படைக்கு பெரும் இழப்பாக அமைந்தது. கவுரவர்கள் நூறுபேர் என்ற இலக்கணத்தை அன்றைய தினம் மாற்றியமைத்தான் பீமன். அன்று துரியோதனனின் தம்பிகளான சுந்தரன், விசாலக்கண்ணன், பவுதுண்டன், மகாவிந்து, அபயன், மகோதரன், ஆதித்தகேது, வீரவாசி ஆகியோர் துரியோதனனுடன் வந்து, பீமனுடன் ஒட்டுமொத்தமாக இணைந்து யுத்தம் செய்தனர். பீமனுக்கு அல்வா சாப்பிட்டது போல இருந்தது. அன்று அவர்களை வதம் செய்தே தீருவதென உறுதியெடுத்தான். அதன்படி அம்பு மழையை அவர்கள் மீது பொழிந்தான். அவை துரியோதனனின் எட்டு தம்பிமார்களையும் விண்ணுலகுக்கு அனுப்பியது. அந்தக் காட்சியைக் கண்ட துரியோதனனால், மேற்கொண்டு போர் செய்ய முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. அவன் தனது தேரை மகாத்மா பீஷ்மரை நோக்கி ஓட்டினான். பிதாமகரே! ஐயனே! தாங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். எனது தம்பிமார்கள் எட்டுபேர், ஒரே நேரத்தில் என் கண்முன்னால் துடிதுடித்து இறந்தார்கள். நீங்கள் எங்கள் சேனாதிபதி மட்டுமல்ல! தாயும் தந்தையுமாக இருக்கிறீர்கள். நீங்கள் இருந்த இந்த போர்க்களத்தில், இப்படி ஒரு மாபெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறேன், என்று கண்ணீர் வழியச் சொன்னான்.
அப்போது, பீஷ்மர் துரியோதனனுக்கு சொன்ன அறிவுரை உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்துவதாக அமைந்தது. துரியோதனா! இறப்பைக் கண்டு வருந்தாதே. போர்க்களத்தில், நாம் ஆயுதங்களை ஏந்துவது நமது பாதுகாப்புக்காக மட்டுமல்ல. பிறரைக் கொல்வதற்கும் தான். மேலும், போர்க்களத்தில் உயிர்விடுவது வீரர்களுக்கு சிறப்பாகும். அதாவது, ஒரு செயலைச் செய்வதென முடிவெடுத்து விட்டோம். அப்போது உயிருக்கு ஆபத்து வருகிறதே என ஒதுங்கி விடக்கூடாது. எதிர்த்து நின்று ஜெயிக்க வேண்டும், இல்லையேல் மரணத்தை ஏற்க வேண்டும். ஒரு வள்ளல் தனது செல்வத்தை பிறருக்கு கொடுக்க தயங்கமாட்டான். ஒரு நல்ல இல்லறத்தான், தன் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதில் ஆனந்தம் கொள்வான். உலகம் நிலையற்றது என நினைக்கும் ஞானி மரணத்தைக் கண்டு ஒதுங்கமாட்டான். இதெல்லாம் எவ்வளவு நிச்சயமோ, அதுபோல் போர்க்களத்தில் சாவும் நிச்சயம். அது கண்டு அஞ்சக்கூடாது, என்றவர் மேலும் தொடர்ந்தார்.
துரியோதனா! இந்தக்கிழவன் நேரம் கெட்ட நேரத்தில் தத்துவங்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறானே என எண்ணாதே. நிஜத்தை சில இடங்களில் சொல்லியே தீர வேண்டும். இன்று உன் தம்பிகளை இழந்ததற்கான காரணத்தை எண்ணிப்பார். அன்று, யார் சொல்லையும் கேட்காமல், நீ திரவுபதியின் ஆடையைக் களைய உத்தரவிட்டாய். அவள் வடித்த கண்ணீர் இன்று இந்தக்கதிக்கு உன் தம்பிகளை ஆளாக்கியிருக்கிறது. எந்த ஒரு வீட்டில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கிறாளோ, அந்த இல்லம் அழிந்து போவது உறுதி. கர்ணனும், சகுனியும் சொன்னதைக் கேட்டு உன் சிந்தையில் தீமையை வளர்த்துக் கொண்டாயே அதன் பலாபலனை நீ தானே அனுபவிக்க வேண்டும், அதுமட்டுமா? மகாத்மா விதுரர் உனக்கு என்ன கேடு செய்தார்? மாபெரும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை அவர் வைத்திருந்தார். அது ஒன்று மட்டும் இருக்குமானால், இன்று குரு÷க்ஷத்ர களத்திலே, பாண்டவர்களில் ஒருவர் கூட மிஞ்சியிருக்க மாட்டார்கள். ஆனால், நீயோ அவரது பிறப்பைப் பற்றி பழித்துப்பேசி, கோபத்தைத் தூண்டி, வில்லை ஒடிக்கச் செய்தாய். கர்ணனும் கோபித்துக் கொண்டு ஆயுதம் எடுக்காமல் இருக்கிறான். மேலும், பாண்டவர்களுக்கு கண்ணபிரானின் ஆசியும் இருக்கிறது.
பாண்டவர்களை எதிர்க்க இப்போது உன்னையும், என்னையும் விட்டால் வீரர்கள் யாருமில்லை. சரிவா! இருவரும் போவோம். போராடுவோம். மரணம் வந்தாலும் தழுவிக்கொள்வோம், என்று சொல்லியபிறகு, அவனது பதிலுக்கு காத்திராமல், தேரை படைகளின் மத்தியில் செலுத்தினார். இந்த சமயத்தில் பாண்டவர்களுக்காக களப்பலியானவனும், அர்ஜுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவனுமான அரவான், தான் சாகும் முன்பு போர்க்கள காட்சிகளை சில நாட்களாவது பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்டுப்பெற்ற வரத்தின்படி போர்க்களத்தில் நின்று காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மாயவித்தைகள் தெரிந்தவன். மாயத்தோற்றங்கள் பலவற்றை எடுத்து அவனும் போரில் குதித்தான். கவுரவப் படையுடன் கடுமையாகப் போரிட்டான். பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, வேத்தீரிய வனத்தில் தங்கியிருந்தனர். அவ்வனத்தில் வசித்த மக்களை அங்குள்ள பகாசுரன் என்பவன், நாளுக்கு ஒருவர் வீதம் விருந்தாக உண்டான். ஒருமுறை, பீமன் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள இளைஞனுக்குப் பதிலாகச் சென்று பகாசுரனைக் கொன்று விட்டான்.அவனது தம்பி அலம்புசன் என்பவன், தன் சகோதரனைக் கொன்ற பீமனைப் பழிவாங்க துரியோதனனுடன் இணைந்திருந்தான். அவனுக்கும், அரவானுக்கும் அன்று கடும்போர் நடந்தது. அரவான் நாகவடிவத்தில் அவனுடன் போர் செய்தான்.
அலம்புசனுக்கும் அரவானுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. நாக வடிவ அரவானை ஏதும் செய்ய முடியாததால், மாயையில் சிறந்த அலம்புசன் கருட வடிவம் எடுத்தான். கருடனைக் கண்டால் நாகம் அஞ்சுவது இயற்கை தானே! அரவான் அதிர்ச்சியடைந்தான். தன் பலத்தையெல்லாம் இழந்து நின்ற வேளையில் இதுதான் சமயமென அவனை வாளால் வெட்டி வீழ்த்தினான் அலம்புசன். அரவானின் மரணம் கவுரவ சேனைக்கு புதிய ஆற்றலைத் தந்தது. அரவான் மடிந்தான், அலம்புசன் வாழ்க, துரியோதன மாமன்னர் வாழ்க என்ற கோஷத்துடன், பாண்டவப் படைகளை உக்கிரத் துடன் தாக்கின கவுரவப்படைகள். தாய் வேறானாலும், தன் சொந்த தம்பியாகவே அரவானைப் பாவித் தவன் அபிமன்யு. அவன் அரவானின் மரணம் கண்டு கலங்கினான். கண்களில் வெள்ளம் பொங்கியது. அதுவே, கோபத்தால் கனல் நீராக மாற, அவன் ஆர்ப்பரித்து போரிட்ட கவுரவப்படைகள் மீது அம்புகளை வாரியிறைத்தான். ஆர்ப்பரித்த கவுரவ படைகளும், அவர்களுக்கு தலைமை தாங்கிய பலநாட்டு மன்னர்களும் ஏராளமாக மண்ணில் சாய்ந்தனர். தம்பி மகனான அரவான் இறந்ததைக் கண்ட பீமனும் கூட்டத்துக்குள் புகுந்து பலரையும் தூக்கி வீசியே கொன்று ஆவேசத்தை வெளிப்படுத்தினான்.
அரவான் மரணத் துக்குப் பழிக்குப்பழியாக எப்படியேனும், துரியோதனப் படையின் முக்கியஸ்தர்கள் சிலரை அழித்தே தீருவதென கங்கணம் கட்டி முன்னேறினான். அவனது முன்னேற்றத்தைக் கண்ட துரியோதனன், தன் தம்பிமார்களுடன் அவனை எதிர்க்க ஆவேசத்துடன் ஓடிவந்தான். சற்றும் தாமதிக்காமல், கணநேரத்தில் தன் வில்லை வளைத்து, பீமன் அம்பு மழையைப் பொழிந் தானோ இல்லையோ.... ஆ...ஆ...என்ற அலறலுடன் ஏழு பேர் சாய்ந்தனர். துரியோதனன் இப்படி நடக்குமென கனவிலும் நினைக்கவில்லை. ஏற்கனவே நடந்த போரில் எட்டு தம்பிமார்களை இழந்திருந்த அவன், நொடிப்பொழுது நேரத்தில் மேலும் ஏழு பேரை இழந்தான். குண்டலபோசன், தீர்க்கநயனன், குண்டலன், குண்டலதாரன், திம்மவாகு, கனகத்துவஜன், அனாதியக்கன் ஆகியோர் அவர்கள். துரியோதனன் திகைத்து நின்ற வேளையில், இன்று நீயும் என்னிடம் அழிந்து போவாய், எனச் சொல்லி ஆக் ரோஷமாகப் போரிட் டான். துக்கத்தில் இருந்த துரியோதனனால் பீமனை சற்றும் எதிர்க்க முடியவில்லை. அவன் தோற்று ஓடிவிட்டான். இத்துடன் அன்றையப் போர் முடிந்தது. படைகள் தங்கள் இருப்பிடம் திரும்பினர். அன்று இரவில் அரவானின் மரணம் பற்றி பாண்டவர்கள் பேசி வருந்தினர். கிருஷ்ணர் அவர்களைத் தேற்றினார்.
பாண்டவச் செல்வங்களே! அரவான் ஏற்கனவே தன்னைக் காளிக்கு பலியிட்டு இறந்து போனவன் தான். அவன் கேட்ட வரத்தால், போர்க்களக் காட்சிகளைக் காணும் பாக்கியத்தைக் கொடுத்தேன். அவன் விதி முடியும் நேரம் வந்ததும், அவனுக்கு ஆக்ரோஷத்தைக் கொடுத்து சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டேன். இறந்தவன் மீண்டும் இறந்தது பற்றி கவலைப்பட வேண்டாம், என்றார். பாண்டவர்கள் மனம் தேறினர். இதே போல, கவுரவர்களின் பாசறையில் துரியோதனன் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். தன் மனஆறுதலுக்குரியவன் நண்பன் கர்ணனே என்பதால், அவனை அழைத்து வர உத்தரவிட்டான். கர்ணனிடம், நண்பா! பார்த்தாயா! நமது சகோதரர்கள் பலரை கொடிய பீமன் கொன்று விட்டான். பீஷ்மரும், துரோணரும் இருக்கும் நமது படையை நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது. அவர்களால் போர் செய்ய முடியவில்லை என்றே நினைக்கிறேன். இந்நிலையில், என்னைக் காக்கும் கருணைக்கடல் நீ மட்டுமே! என்னைக் காப்பாற்று. நம் தேசத்தைக் காப்பாற்று, என்றான். கர்ணனுக்கு ஆவேசம் அதிகமாயிற்று.
நண்பா! இப்போது வருத்தப்பட்டு என்ன லாபம்? அன்று, படைகளைப் பிரித்த போது, என்னை ஒரு கடைநிலை பணியான அர்த்தரத சேனாதிபதியாக்கி உத்தரவிட்டாரே பீஷ்மர்! அப்போது, அவையில் இருந்த நீ அடக்கமாகத்தானே இருந்தாய். மேலும், யாரை நீ நம்பினாயோ, அந்த பீஷ்மரே உன்னைக் காப்பாற்றுவார். நான் ஏற்கனவே சொன்னபடி, பீஷ்மர் களத்தில் என்று தோற்றோடுகிறாரோ, அடுத்த கணமே நான் உன்னருகில் இருப்பேன். உன்னைக் காப்பாற்றுவேன். கிருஷ்ணரையும், பாண்டவர்களையும் கொல்வேன். அதுவரை என்னை அழைக்காதே, என சொல்லி விட்டு சென்று விட்டான். துரியோதனனை பயம் கவ்விக் கொண்டது. கர்ணன் தன்னிடம் சொன்னதை அப்படியே பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி வரும்படி, தன் தம்பி துச்சாதனனை அனுப்பி வைத்தான். துச்சாதனனும் அதையே செய்ய, பீஷ்மர் சிரித்தார். ஒன்றைச் சொல்கிறேன் கேள் துச்சாதனா! நீங்கள் நினைப்பது போல், ஒருவேளை கர்ணன் பலரை கொன்றாலும், அர்ஜுனனை அவனால் ஏதுமே செய்ய முடியாது. அது மட்டுமல்ல! பீமன் வல்லவன், பலசாலி. நீங்கள் திரவுபதியை துகிலுரிந்து அவமானம் செய்தது, ஆறா வடுவாக அவன் மனதில் பதிந்து விட்டது. அதற்கு, அவன் உங்களைப் பழிவாங்கியே தீருவான். இதுதான் நடக்கப் போகிறது. நாளை ஒன்பதாம் நாள் போர். நாளை மட்டுமே நான் உங்கள் படையில் இருப்பேன். பத்தாம் நாள் போரில் நான் இறந்து போவேன். என் ஆயுள் முடியும் நேரம் வந்துவிட்டதை நான் அறிவேன். அதன் பிறகு கர்ணனோ வேறு பலசாலியோ உங் களைப் பாதுகாக்கட்டும், என்று சொல்லி அனுப்பி விட்டார்.
துச்சாதனன் அவரிடம் விடைபெற்று குழம்பிய மனதுடன் கிளம்பிவிட்டான். மறுநாள் காலை. ஒன்பதாம் நாள் விடியலில் போர் துவங்கியது. பீமன் ஆத்திரத்துடன் களத்தில் புகுந்தான். அரவானைக் கொன்ற அசுரன் அலம்புசனை இன்று கொன்றே தீருவதென்பது அவன் இலக்கு. அந்த ஆவேசத்துடன், களத்தில் இறங்கியவன், ஏ அலம்புசா! அரவான் ஏற்கனவே களப்பலியானவன். செத்த பாம்பை அடித்து விட்டு, நீ வீரம் கொண்டாடுகிறாயோ! உங்கள் பாசறையில் நேற்று, அரவானைக் கொன்றதற்காக உன்னை தலையில் தூக்கி வைத்து ஆடினார்களாமே கவுரவர்கள்...அட மடையனே! வா, என்னோடு போர் புரி, என்னை ஜெயித்தால் நீயே பலசாலியென ஒப்புக்கொள்கிறேன். வா சண்டைக்கு, என அவனது உணர்வுகளைத் தூண்டி விட்டான். அசுரனாகிய தன்னை மானிடனான ஒருவன் வம்புக்கு இழுக்கிறானோ என ஆவேசப்பட்டான் அலம்புசன்.
அப்போது அசுரன் அலம்புசன் மிகப்பெரிய பாறை ஒன்றைத் துõக்கி பீமன் மீது வீசினான். அதை அபிமன்யு தனது அம்பால் தடுத்து நிறுத்தி பொடிப் பொடியாக்கினான். அபிமன்யுவின் இந்த வீரம் கண்டு களித்த பீமன், இன்னும் ஆக்ரோஷமாக போரிட்டான். அலம்புசன் மீது தன் கையில் இருந்த வேல்கம்பு ஒன்றை எறிந்து கொன்றான். அலம்புசன் இறக்கவே, அவனுடன் இருந்த அசுர வீரர்கள் பயந்து சிதறினர். பீமன் அவர்கள் ஒருவர் விடாமல் கொன்றதுடன், துரியோதனனின் ஆதரவாளர்களான வடதேசத்து அரசர்கள் பலரையும் கொன்று தீர்த்தான். அலம்புசனின் இறப்பு கவுரவர்களுக்கு ஈடு செய்ய முடியாததாக அமைந்து விட்டது. பீமனால் அன்றையப் போரில் தனது படைக்கு பெரும் இழப்பு வந்ததை கண்ட பீஷ்மர் ஆவேசமானார். பெரும் கோபத்துடன் பாண்டவர் படையிடம் போர் நடத்தினார். பீஷ்மரின் அம்பு மழைக்கு யாரால் பதில் சொல்ல இயலும்? பாண்டவப்படையிலும் பேரிழப்பு ஏற்பட்டது, பீஷ்மரின் ஆவேசம் கண்ட சிகண்டி அவர் எதிரே வந்தான். இந்த சிகண்டி யார் தெரியுமா? பீஷ்மர் தன் தம்பி விசித்திரவீரியனின் திருமணத்துக்காக காசிராஜனின் புத்திரிகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா, ஆகியோரைக் கடத்தி வந்தார் அல்லவா? அவர்களில் அம்பா சாலுவன் என்பவனைக் காதலித்ததால், அவளை அவனிடமே அனுப்பி விட்டார். ஒரு ஆடவனால் கடத்தப்பட்ட உன்னை நான் ஏற்கமாட்டேன் என சாலுவன் அம்பாவைப் புறக்கணிக்கவே, அவள் மீண்டும் பீஷ்மரிடம் வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டினாள். இதற்கு பீஷ்மர் மறுக்கவே, பரசுராமர் மூலம் முயற்சித்தாள். எல்லா முயற்சியும் வீணாகவே, பிற்காலத்தில் நடக்கும் போரில் நான் உன்னைக் கொல்லும் பாக்கியம் பெறுவதற்காக தவமிருக்கப் போகிறேன் என சொல்லி விட்டு தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாய் சிகண்டி என்ற பெயரில் பாஞ்சால தேசத்து அரசன் யாகசேனனுக்கு ஆணும் பெண்ணும் அல்லாத அரவாணியாக பிறந்தாள்.
சிகண்டி தன்னை எதிர்த்தால், நான் அம்பெடுக்க மாட்டேன் என பீஷ்மர் ஏற்கனவே கிருஷ்ணரிடம் சொல்லியிருந்தார். அரவாணிகள் போன்ற பலமற்றவர்களை எதிர்ப்பது தன் வீரத்துக்கு இழுக்கு என அவர் கருதியிருந்தார். இந்த சமயத்தைத் தான் கிருஷ்ணர் எதிர்பார்த்திருந்தார். சிகண்டியை முன்னால் அனுப்பும் போது, பீஷ்மர் அம்புகளைக் கீழே போட்டு விடுவார். அந்த சமயத்தில் அர்ஜுனனைக் கொண்டு பீஷ்மரைக் கொல்வது கிருஷ்ணரின் திட்டம். நினைத்தது போலவே நடந்தது. சிகண்டி தன்னை எதிர்த்ததும், பீஷ்மர் அம்புகளைக் கீழே போட்டு விட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக, துச்சாதனன் சிகண்டியுடன் போர் செய்ய வந்து விட்டான். அவனது வீரத்துக்கு முன்னால், சிகண்டி எடுபடாமல் போய்விட்டான். ஆயுதங்களை இழந்து ஓடியே போய்விட்டான். இதையடுத்து, மீண்டும் வில்லெடுத்த பீஷ்மர் பாண்டவப்படைகளை குறி வைத்தார். மத்ஸ்ய தேசத்தை சேர்ந்த சதாநீகன் என்பவன் பாண்டவர் படையில் பெரும்புள்ளி. அவனை அன்று பீஷ்மர் கொன்றார். அத்துடன் அன்றையப் போர் நிறைவடைந்தது.பத்தாம் நாள் போர் முக்கியமான ஒன்று. இந்த நாளில் தான், பீஷ்மர் தனது உயிர் போகும் என கிருஷ்ணரிடம் சொல்லியிருந்தார். எனவே, சிகண்டியை அன்றைய தினத்தில் மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்தார். அன்று பீஷ்மரும் ஒரு முடிவோடு வந்திருந்தார்.
ஒன்று நாமிருக்க வேண்டும்... அது நடக்காத காரியம். ஏனெனில், அங்கே பரமாத்மா இருக்கிறார். பரமாத்மாவை வெல்பவன் உலகில் எவன்? பகவான் கிருஷ்ணர், பல மாயைகளைச் செய்து நம்மைக் கொன்று விடுவார். அதேநேரம், நம்மால் முடிந்தளவுக்கு பாண்டவப் படையின் வலிமையைக் குறைத்து விட வேண்டும்... இதுவே பீஷ்மரின் முடிவு. அதன்படி, அன்று பீஷ்மர் செய்த போரை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. அவரது பாணங்களுக்கு உருண்ட தலைகள் இத்தனை என வர்ணிக்க முடியாது. அர்ஜுனனின் உடலை மட்டுமல்ல....ஒரு போர்ச் சாரதி என்ற முறையில் பகவான் கிருஷ்ணரின் நீலநிற உடலையும், அவர் சிவனைப் போல செந்நிற மேனியனாக்கி விட்டார். பகவான் தன் உடலில் ரத்தம் வழிய தேரோட்டிக் கொண்டிருந்தார். பகவான் நினைத்தால் ஒரு நொடியில் அவரை ஒழித்திருக்க முடியும்! ஆனாலும், அவர் நியாயஸ்தர். தன் பக்தனின் உயிரை எடுக்கப்போகிறோம் என்றால், அவனுக்குரிய பங்களிப்பை அவர் கொடுத்தாக வேண்டுமே! எனவே, பீஷ்மர் விட்ட பாணங்களையும் புஷ்பமாகக் கருதி அவர் ஏற்றார். பின்னர், பீஷ்மருக்குரிய நேரத்தை அவருக்கு அளிக்க எண்ணி, சிகண்டியை மீண்டும் அவர் முன்னால் நிறுத்தினார் கிருஷ்ணர்.சிகண்டி! இன்றைய போருக்கு நீயே தளபதி. பீஷ்மர் மீது பாணங் களை விடு, என்றார் பகவான். சிகண்டி வில்லெடுக்கவே, பீஷ்மர் தன் அம்புகளை கீழே போட்டு விட்டு, அவன் முகத்தைக் கூட பார்க்காமல் தலை குனிந்து தேரில் நின்றார். அப்போது, முந்தைய நாளில் நடந்தது போலவே, துச்சாதனன் மின்னல் வேகத்தில் பறந்து வந்தான். சிகண்டியுடன் கடுமையாக மோதினான். சிகண்டி அப்போதும் பின் வாங்கினான். இதைப் பயன்படுத்தி, பீஷ்மர் மேலும் பலரைக் கொன்றார்.
சிகண்டியை மீண்டும் வரவழைத்த அர்ஜுனன், சிகண்டி! நீ கலங்காதே. அம்பை பீஷ்மர் மீது விடு. உன்னை யாரும் அழிக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன், என்றான். அர்ஜுனன் ஊட்டிய தைரியத்தால் சிகண்டி மீண்டும் பீஷ்மர் முன்னால் வந்து, அம்புகளை விட்டான். அப்போது பீஷ்மர் தன் ஆயுதங்களைக் கீழே போடவே, அர்ஜுனன் தன் பாணங்களை அவர் மீது தொடுத்தான். ஒரு அரவாணியின் கையால் இறப்பதை விட, வீரத்தில் உலகமே போற்றும் தன் மாணவனின் கையால் இறப்பதை பீஷ்மர் பெருமையாகக் கருதினார். அவரது உடலில் அம்புகள் தைத்தன. அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அப்போது, கிருஷ்ண பகவான் சங்கொலி எழுப்பினார். அதன் பெரும் ஓசையால் பூமியே நடுங்கியது.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |