Digital Library
Home Books
Mahabharata is one of the two major Sanskrit epics of ancient India, the other being the Ramayana. The Mahabharata is an extensive and complex narrative that encompasses mythology, history, philosophy, and religion, offering deep insights into human nature, morality, and dharma (righteousness).
கண்ணபிரான் உடனே தனது பாஞ்சஜன்ய சங்கை ஊதினார். அதன் ஒலி கேட்டு களத்தில் நின்ற அனைவரும் அடங்கி நின்றனர். அப்போது, அர்ஜுனனிடம், அர்ஜுனா! கலங்காதே! இதோ இந்த வேலாயுதத்தை வைத்துக் கொள். முன்பொரு முறை பூமாதேவி இந்த வேலால் தான் நரகாசுரனைக் கொன்றாள். இது எத்தகைய கவசங்களையும் துளைக்கும் சக்தி வாய்ந்தது,என்று சொல்லிக் கொடுத்தார். அதைக் கொண்டு துரியோதனனை அர்ஜுனன் கொன்றிருக்கலாம், ஆனால், தன் அண்ணன் பீமன் செய்த சபதம் நினைவுக்கு வந்தது. என்னால் தான் உனக்கு அழிவுஎன துரியோதனனிடம் அவன் சபதம் செய்திருந்ததால், துரியோதனன் மீது அந்த வேலை எறிந்தான். அந்த வேல் துரியோதனனின் கவசத்தை நொறுக்கியது. அதற்கு மேல் துரியோதனன் அங்கு நிற்கவில்லை. பின்வாங்கி ஓடிவிட்டான்.
இதன்பிறகு அர்ஜுனன் மற்ற வீரர்களின் தலைகளைக் கொய்து விட்டு முன்னேறிச் சென்றான். கடுமையான சோதனைகள் நமக்கு வரும் போது கண்ணனை நினைத்தால் போதும்! எத்தகைய தகிடுதத்தம் செய்தேனும் அவன் நம் துன்பங்களை தீர்த்து விடுவான். அவனால் முடியாதது ஏதுமில்லை. குறிப்பாக, கிரக தோஷம் உள்ளவர்கள் கிருஷ்ணன் கோயிலுக்கு போய் நெய் தீபம் ஏற்றி வைத்தால் அவன் நமக்கு பாதுகாப்பு தருவான். துன்பங்கள் பறந்தோடி விடும். அழிய இருந்த வேளையில், பிரம்மனால் தரப் பட்ட கவசத்தையே அர்ஜுனன் அடித்து நொறுக்கியிருக்கிறான் என்றால் அதற்கு காரணம் கண்ணனை சரணாகதி அடைந்ததால் தான்! இதற்கிடையே கர்ணன் உள்ளிட்டவர்களை புறமுதுகிடச் செய்தும், துரியோதனனின் தம்பிமார்கள் சிலரைக் கொன்றும் பீமன் முன்னேறிச் சென்று சாத்தகி இருந்த இடத்திற்கு போய் சேர்ந்தான். அங்கே சாத்தகியும், கவுரவர்களின் அதிரதச் சேனாதிபதியான பூரிச்ரவஸும் போர் செய்து கொண்டிருந்தனர்.
சாத்தகியை பூரிச்ரவஸ் மல்யுத்தம் செய்து கொல்ல முயன்றான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனிடம், அர்ஜுனா! என் தம்பி சாத்தகியைக் காப்பாற்று. பூரிச்ரவஸ் மீது அம்பு வீசி அவனைக் கொன்றுவிடு,என்றார்.அர்ஜுனன் மறுத்தான். சமபலம் வாய்ந்த இருவீரர்கள் மோதும் போது, அவர்களில் ஒருவருக்கு ஆதரவாக நடப்பது முறையா கிருஷ்ணா!என்று கேட்டான். கிருஷ்ணருக்கு கோபம் பொங்கியது. சொன்னதைச் செய்,என்று உத்தரவிட்டார். அர்ஜுனனும் அவன் தோள்கள் மீது அம்புகளை வீச, அவன் கீழே விழுந்தான். அப்போது சாத்தகி அவனைக் கொன்று விட்டான். உடனே துரியோதனன் கத்தினான். கிருஷ்ணா! நீ செய்தது கொஞ்சமும் தர்மமல்ல. இரு வீரர் களில் ஒருவருக்கு சாதகமாக நடந்து கொண்டாயே,என்றான் கோபத்துடன். துரியோதனா! தர்மத்தைப் பற்றி நீ பேசாதே. நேற்றைய போரில் அபிமன்யுவை தர்மப்படியா கொன்றாய்?எனக் கேட்டு அவனை அடக்கினார். அவனால் பதில் பேச முடியவில்லை.
உடனே துரியோதனன் படை வீரர்களை நோக்கி, ஜயத்ரதனை நிலவறைக்குள் மறைத்து வையுங்கள். அவனருகே அர்ஜுனனை நெருங்க விடாதீர்கள். ஜயத்ரதன் காப்பாற்றப்பட்டு விட்டால் அர்ஜுனன் அழிந்து போவான்,என ஆவேசமாக பேசினான்.ஜயத்ரதனுக்கு காவல் மேலும் பலப்படுத்தப்பட்டது. அவன் பயந்து போய் நிலவறையில் பதுங்கியிருந்தான். அஸ்தமன வேளையும் நெருங்கி விட்டது. களமே பரபரப்பில் இருந்தது. அர்ஜுனன் வெல்வானா? மாள்வானா? அப்போது, கிருஷ்ண பராமாத்மா யாரும் அறியாமல், வஞ்சனையாக ஒரு உபாயம் செய்தார். தன் சக்ராயுதத்தை வானில் ஏவி, சூரியனை மறைக்கச் செய்தார். அஸ்தமனம் ஆகிவிட்டது போன்ற தோற்றம் ஏற்படவே, கவுரவர்கள் ஆர்ப்பரித் தனர். அர்ஜுனனும் அஸ்தமனம் ஆகிவிட்டதென்றே நம்பினான். ஐயத்ரதனை நிலவறையில் இருந்து வெளியே வரும்படி சொன்னார்கள். அவனும் மகிழ்ச்சியுடன் வந்தான். அஸ்தமனம் ஆகிவிட்டதால் இனி அர்ஜுனனால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற முடிவில் வீறுகொண்டு களத்துக்குள் வந்தான். அப்போது கண்ணபிரான் அர்ஜுனனிடம், அர்ஜுனா! இதோ வருகிறான் ஜயத்ரதன்! அவன் மீது அம்பை வீசி கொல். அவனைக் கொல்லும் முன் ஜயத்ரதனைப் பற்றிய ஒரு ரகசியத்தைக் கேள்,என்று அர்ஜுனனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னார்.
கண்ணா! இது என்ன நியாயம்? அஸ்தமனம் ஆகிவிட்டது. இனி, நான் அக்னியில் விழுந்து இறப்பது தானே முறை. நான் தேரை விட்டு இறங்கப் போகிறேன்,என்றவனை கண்ணன் கோபித்தார்.அர்ஜுனா! முதலில் இதைக் கேள். இந்த ஜயத்ரதனின் தந்தை விருத்தக்ஷத்ரன் மிகப்பெரிய தபஸ்வி. அவன் இவனைப் பெற்றவுடன் தவமிருந்தான். அப்போது அசரீரி தோன்றி, என்ன வரம் வேண்டுமென கேட்டது. தன் மகனின் தலையை யார் ஒருவன் தரையில் உருளச் செய்கிறானோ அவனது தலை சுக்கு நுõறாக வெடிக்க வேண்டும் என வரம் கேட்டான். அதன்படியே வரமும் தரப்பட்டது. இப்போதும் அவனது தந்தை வேறு பல கோரிக்கைகளுக்காக காட்டில் தவமிருக்கிறான்.
இப்போது சூரியன் அஸ்தமித்து விட்டதால், இவனது தந்தை சந்தியாவந்தனம் செய்ய நீரைக் கையில் அள்ளி வைத்திருப்பான். இவனது தலை அவனது கையில் விழும் வகையில் உனது குறி அமைய வேண்டும். அவனது கையில் தலை விழவும் என்னவோ ஏதோவென அவன் கீழே எறிவான். அவனது தலையும் வெடித்து விடும்,என்றார். அர்ஜுனன் மீண்டும் மறுத்தான். கண்ணா! நீ சொல்வது கொஞ்சம் கூட தர்மத்துக்கு ஒப்பாது. நான் என் முடிவைத் தேடிக்கொள்கிறேன். அக்னி மூட்டப்போகிறேன் என்று சொல்லி ஒரு பாணத்தைத் தொடுத்து அக்னியை உண்டாக்கினான். அக்னியை வலம் வரத்துவங்கி விட்டான். கிருஷ்ணர் மீண்டும் அவனை எச்சரித்தார். அர்ஜுனா! தேரில் ஏறப்போகிறாயா இல்லையா?
அக்னியை வலம் வந்தான். கண்ணன் பாதங்களை வணங்கினான். அப்போது கண்ணன், அர்ஜுனா! காண்டீபத்தை உன் கையில் ஏந்தி, நாணேற்றிய வண்ணமே அக்னிப் பிரவேசம் செய். முடியுமானால், தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றையும் வில்லில் தொடுத்துக்கொண்டே அக்னியை வலம் வா! என்றார். அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நிகழ்ந்தது அந்த அதிசயம்.
திடீரென மேல் வானிலே பிரகாசமான வெளிச்சம் ஒன்று தோன்றியது. ஆம், உண்மையில் அப்போது ஆதவன் அஸ்தமனம் ஆகவில்லை; சூரியன் தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்தான். கண்ணன் தன் ஸுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டனர். வியப்படைந்து மேல் வானை நோக்கினான் அர்ஜுனன். பேரொளியுடன் சூரியன் தரிசனம் தந்தான். ஸுதர்சனச் சக்கரம் நகர்ந்ததும், இருளெனும் மாயை மறைந்து, மேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசிக் கொண்டிருந்தது.
அர்ஜுனன் கண்களில், தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான். அர்ஜுனா! அதோ ஜயத்ரதன்! எடு உன் அஸ்திரத்தை, விடு பணத்தை !!! அவன் தலையைக் கொய்து, வனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற மடியில் விழச் செய்! என்று ஆணையிட்டான் கண்ணன். கண்ணிமைக்கும் நேரத்தில், காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்து, விண்ணிலே தூக்கிச் சென்று, வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணி, மடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன். உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது.
தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோ, அவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான் விருத்தக்ஷத்ரன். அவன் வரமே அவனையும் அவன் மகனையும் சேர்த்து அழித்துவிட்டது. பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கண்ணனை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான். தன்னை நம்பியவர்களை எப்படிப்பட்ட துயரத்தில் இருந்தும் காத்தருள்வான் கண்ணன் என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு.
சபதத்தை முடித்தான் அர்ஜுனன். குருக்ஷேதிரத்தை தொடர்ந்தான் கண்ணன். ஆனால் துரியோதனனோ பெரும் கவலை அடைந்தான். துரோணரிடம் இன்று என் தம்பியர் பலர் மாண்டனர். பீமனும் சாத்யகியும் செய்த போரில் வீரர் பலர் இறந்தனர். ஜயத்ரதனும் மாண்டான். அர்ச்சுனனின் வல்லமையை யார் வெல்ல முடியும். இனிப் பேசிப் பயனில்லை. வெற்றி அல்லது வீர மரணம் என்று புலம்பினான்.
இவ்வாறு அன்று காலையில் நடந்த போரில் கௌரவர்களின் முக்கியமான வீரர்களில் ஒருவனான ஜயத்ரதனை இழந்தான் துரியோதனன். மாவீரன் பூரிசிரவஸ் என்பவனை இழந்தான். மேலும் பல தம்பியர்களை இழந்திருந்தான். அவனின் மன வலிமை சற்றே தளர்ந்து இருந்தது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தான். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. போர்களத்தின் காட்சிகள் அவன் கண் முன் ஓடியது. தம்பியர்களின் மரண ஓலங்கள் மீண்டும் மீண்டும் ஒலித்தது. இருபின்னும் அஸ்தினாபுரத்தை விட்டு கொடுக்க மனம் இல்லை.
பதினான்காம் நாள் பகல் போரின் முடிவில் துரியோதனனின் மன வேதனையை உணர்ந்த துரோணர், தன் முழு ஆற்றலையும் செலுத்திப் போரிடத் துணிந்தார். துரியோதனனின் கடுஞ்சொற்கள் ஒரு பக்கம் இருக்க, துரியோதனனின் மனவருத்தம் ஒரு பக்கம். சற்றே மௌனம் சாதித்த துரோணர் ஒரு முடிவிற்கு வந்தார். பகைவரை ஒழித்தப் பின்தான் கேடயத்தை கழட்டுவேன் என்று சபதம் செய்தார். மாலை மறைந்ததும் இரவுப் போரை தொடங்கினார். மாபெரும் வீரரான துரோணர், வில்லுடனும் வேலுடனும் தன் ரதத்தில் ஏறினார். போர்க்களம் நோக்கி பயணித்தார். அவரின் தேர் சத்தத்தை வைத்தே துரோணர் வருவதை அறிந்தான் அர்ஜுனன்.
அருமையான திட்டம் தீட்டினான் பாண்டவர்களின் படை தளபதி திருஷ்டத்துய்மன். இரவு போர் என்பதால் மனிதர்களை விட அரக்கர்களுக்கு பலம் அதிகம் என்பதை மனதில் கொண்டு, பீமனின் மகன் கடோத்கஜன், அவனின் மகன் அஞ்சனபர்வா ஆகியோருக்கு முக்கிய பொருப்புப்கள் கொடுத்தான். மேலும் கடோத்கஜன் அரக்கிக்கு பிறந்ததால் அவனுக்கு மாய விளையாடும், சித்து விளையாட்டும் அத்துப்படி. அது மட்டுமா அசாதாரண போர் வீரன். பீமன் பலத்தில் பாதியும், தன் தாய் இடும்பியிடம் இருந்து பாதி பலமும் கொண்ட அசாத்திய வீரன். இவனை கண்டாலே நடுங்கும் தோற்றம் உடையவன். தன் பெரியப்பவாகிய தருமர் மற்றும் சித்தப்பாக்கள் ஆகிய அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர்களுக்கு செல்ல பிள்ளை. தந்தையை காண காட்டில் இருந்து எப்போது வந்தாலும் திரௌபதி இவனுக்கு மட்டும் உணவை ஊட்டி விடுவாள். கிருஷ்ணரின் மேல் மிகுந்த பக்தியும், பாசமும் உடையவன்.
அபிமன்யூவிர்க்கு மிகவும் நெருக்கமானவன். அபிமன்யூவை கொன்ற கௌரவ படைகளை பழி வாங்க காத்து கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த நேரமும் வந்தது. கொடுத்த பொறுப்பை ஏற்ற கடோத்கஜன், தந்தை பீமனின் காலில் விழுந்து ஆசிபெற்றான். பின்னர் தர்மர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர்களிடம் ஆசி பெற்று கிருஷ்ணரிடம் சென்றான். என்றும் இல்லாமல் அன்று கிருஷ்ணர் அவனை நெஞ்சோடு தழுவி கொண்டார். சற்று நேரம் அவனை உற்று நோக்கிய கிருஷ்ணர் “ உன் புகழ் நிலைத்து நிற்கட்டும் “ என்று வாழ்த்தினார். புது தெம்போடும், அபிமன்யூவின் நினைவுகளோடும் போர்க்களம் நோக்கி தன் வீர பயணத்தை தொடங்கினான்.
கௌரவர்கள் தரப்பில் துரோணர் வெறி கொண்டு போர் புரிந்து கொண்டிருந்தார். எதிர்த்து வரும் அனைவரையும் மண்ணோடு சாய்த்தார். தான் அர்ஜுனனின் குரு என்பதை போர்களத்தில் நிரூபித்து கொண்டிருந்தார். பாண்டவ படைகள் தடுமாறியது. அஸ்திரங்கள் அவர் வில்லில் இருந்து புறப்படும் சத்தம் அனைவரையும் நடுங்க செய்தது. “ துரியோதனா!!! அர்ஜுனனை மட்டும் என்னை நெருங்க விட வேண்டாம். என் ஆற்றலை தடுக்கும் சக்தி அவனிடம் மட்டுமே உள்ளது ” என்றார் துரோணர். துரியோதனனும் அர்ஜுனன் மீது பல படைகளை ஏவி அவனை தடுத்து கொண்டே இருந்தான். துரோணர் தன்னை எதிர்த்து வந்த சிபி என்னும் மன்னனின் தலையைக் கொய்தார். தன்னை எதிர்த்த திருஷ்டத்துய்மனின் மைந்தர்களான தேறேஷ்டகா மற்றும் தேரேஷ்டாரா ஆகியோரை கொன்றார். அர்ஜுனனை தொடர்ந்து பாண்டவ தளபதியும் புத்திர சோகத்தை சந்தித்தார்.
போர்களத்தின் மற்றொரு திசையில் பீமன் துரியோதனனின் தம்பியரான துர்மதனையும், துஷ்கர்ணனையும் கொன்றான். சாத்யகி சோமதத்தனை எதிர்த்தான். சகுனி சோமதத்தனுக்கு உதவினான். இரு தரப்புகளுக்கும் இழப்பு என்ற நிலையில் போர் சென்று கொண்டிருந்தது.
பீமனின் மகன் கடோத்கஜன் ஒரு புறம் கடும் போர் புரிந்தான். பல ஆயிரம் வீரர்களை ஒருவனாக நின்று கொன்று குவித்தான். ஒரு கட்டத்தில் இவனின் ஆற்றலை கண்டு கௌரவ படை பின் வாங்கியது. அவன் மகன் அஞ்சனபர்வா அஸ்வத்தாமாவை எதிர்த்து போரிட்டான். அஸ்வதாமனின் தாக்குதல்களை நேர்த்தியாக சமாளித்தான் அஞ்சனபர்வா. நீண்ட நேரம் நடந்த போருக்கு பின் அஞ்சனபர்வா அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டான். மகனை இழந்த ஆத்திரத்தில் அஸ்வத்தாமாவுடன் கடும் போரிட்டான் கடோத்கஜன். இருவரும் சளைக்கவில்லை. இறுதியில் அஸ்வத்தாமன் நிலை தடுமாறி விழுந்தான். மயங்கினான். மயக்கத்தில் இருந்த அஸ்வதாமனை விட்டு விட்டு அங்கிருந்து சென்றான் கடோத்கஜன். மகனை இழந்த சோகத்தை கோபமாக மாற்றி போர் ஆற்றலாய் வெளிபடுத்தி கொண்டிருந்தான்.
கோபத்தின் உச்சியில் இருந்த கடோத்கஜன் கர்ணனிடம் வந்தான். அவனது பேராற்றலைக் கண்ட துரியோதனன் நடுங்கினான். கர்ணன் தளரவில்லை. அவனின் கண்களை பார்த்து அரக்கனே! முடிந்தால் என் அம்புகளுக்கு பதில் சொல் என்றான். படை வீரர்கள் அழிந்து கொண்டிருப்பதை பார்த்த துரியோதனனோ கர்ணனிடம் சக்தி அஸ்திரத்தை பயன் படுத்தும்மாறு வேண்டினான். கர்ணன் அதை தான் அர்சுனனுக்காக வைத்துள்ளதாகவும், அந்த அஸ்திரம் இல்லாமலே கடோத்கஜனை தன்னால் கொல்ல முடியும் என்று கூறினான். துரியோதனனின் பயம் மேலிட்டதால் அவன் மீண்டும் கர்ணனிடம் சக்தி அஸ்திரத்தை பயன் படுத்துமாறு வற்புறுத்தினான். தன் நண்பனால் கட்டாய படுத்தப்பட்ட கர்ணன் வேறு வழியின்றி, தன் சக்தி அஸ்திரத்தை எடுத்தான். சக்தி அஸ்திரம் மிகவும் வலிமையானது. அது இந்திரனிடம் இருந்து பெற்றான் கர்ணன். அந்த சக்தி அஸ்திரத்தை ஒரு முறை மட்டுமே பயன் படுத்த முடியும். பயன் முடிந்தவுடன் அது மீண்டும் இந்திரனிடமே சென்று விடும். அதை கர்ணன் அர்ச்சுனனைக் கொல்ல வைத்திருந்தான்.
எடுத்த அஸ்திரத்தை தன் வில்லில் பூட்டினான் கர்ணன். நான் ஏற்றி இலக்கை குறித்தான். இலக்கு கடோத்கஜன். விடுத்தான் அஸ்திரத்தை. காற்றை கிழித்து கொண்டு, மின்னல் வேகத்தில், சீறிப்பாய்ந்தது சக்தி அஸ்திரம்.
அந்த வேலாயுதம் கடோத் கஜனின் மார்பைத் துளைத்து கொண்டு பறந்தது. மாபெரும் மலை சாயந்தது போல, கடோத் கஜன் தனது முகம் தரையில் படும் படியாக கீழே விழுந்து உயிர் விட்டான். இதுகண்டு பாண்டவர் படை அதிர்ச்சியடைந்தது. தங்களுடைய புத்திரன் இறந்தது குறித்து, பாண்டவர்களுக்கு பெரும் வருத்தம் உண்டானது. இப்போதும் கிருஷ்ண பரமாத்மாதான் பாண்டவர்களுக்கு கை கொடுக்க வேண்டியதாயிற்று. செயலிழந்து நின்ற பாண்டவர் களிடம், மைத்துனர்களே! விதிப் பயனை யாராலும் வெல்லமுடியாது. தத்துவ ஞானம் உடையவர்களே மரணத்தை இலகுவாக எடுத்துக் கொள்வார்கள். கர்ணன் பயன் படுத்திய வேலாயுதத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். இந்திரன் ஒருமுறை கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்தான். அந்த கவச குண்டலங்கள் இல்லாவிட்டால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும், தர்மவானான கர்ணன் அவற்றை இந்திரனுக்குக் கொடுத்துவிட்டான். மனம் நெகிழ்ந்து போன இந்திரன், அந்த சமயத்தில் ஒரு வேலாயுதத்தை கர்ணனுக்குப் பரிசாகக் கொடுத்து, இந்த வேல் எமனைக் காட்டிலும் கொடிய வலிமை படைத்தது. இதை யார் மீது பிரயோகித்தாலும் அவன் அழிந்து போவான் என்று வரமளித்தான். அதைப் பயன் படுத்தியே இப்போது கடோத் கஜனை அழித்திருக்கிறான். இனிமேல் அந்த ஆயுதம் அவனுக்குப் பயன்படாது. அதை ஒருமுறை பயன்படுத்தினால் மீண்டும் இந்திரனிடமே பாய் சேர்ந்துவிடும். அதன்படி அந்த ஆயுதம் இப்போது இந்திரனைச் சேர்ந்து விட்டது. இப்போதும் கர்ணனிடம் இருப்பது நாகாஸ்திரம் மட்டுமே. அதையே அவன் அர்ஜுனன் மீது பிரயோகிப்பான். அவனிடம் அந்த வேலாயுதம் இருந்திருந்தால், அர்ஜுனனின் அழிவு உறுதியாகியிருக்கும். இன்று அவன் கடோத் கஜனைக் கொன்றதன் மூலம், அவனது தோல்வியை அவனே தேடிக்கொண்டான். இனி கர்ணனுக்கு தோல்வி உறுதி, என்றார்.
இதுகேட்டு பாண்டவர்கள் ஆறுதலடைந்தனர். கடோத் கஜனின்தியாக மரணம், தங்களைக் காப்பாற்றியது குறித்து பெருமையும் அடைந்தனர். இந்த நேரத்தில் திரவுபதியின் தந்தையான துருபதராஜனை எதிர்த்து, துரோணர் போருக்கு வந்தார். அவனுடன் விராட ராஜனும் சென்றான். இந்த இரண்டு முக்கியஸ்தர்களையும் துரோணர், தனது அம்புகளால் தலைகளைத் துண்டித்துக் கொன்றார். இதுகண்டு துருபதராஜனின் மைந்தன் திருஷ்டத்யும்நன் பெரும் கோபமடைந்தான். துரோணர் முன் நின்று, ஆச்சாரியரே! எனது தந்தையைக்கொன்ற உம்மை நாளை உமது மகன் அஸ்வத்தாமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்வேன். இது நிச்சயம், என சபதம் செய்தான். தங்களது மாமனார் கொல்லப் பட்டதால் பாண்டவர்கள், துரோணரை கொன்றே தீருவது என முடிவெடுத்தனர். அர்ஜுனன் கடும் கோபத்துடன் துரோணரை எதிர்த்தான். அவனது அம்புகளுக்கு துரோணரால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் தோற்று ஓடினார். இதனால் துரியோதனன் தனது படையைக் காப்பாற்ற முன் வந்தான். அவன் கண்ணபிரானின் தம்பியும், பாண்டவர்களின் மகாரத சேனாதிபதியுமான சாத்தகியை எதிர்த்தான். ஆனால் சாத்தகியின் பாணங்களுக்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவனும் பின்வாங்கி ஓடினான். இப்படியாக பதினான் காம் நாள் போர் இரு தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி முடிந்தது. அடுத்த நாள், குந்திதேவியின் தந்தையான குந்திபோஜனும், துரோணரும் சண்டை செய்தனர். சல்லியன், நகுலனுடன் போரிட்டான். கர்ணன் பீமனுடன் மோதினான். அன்றைய தினம் துரோணரின் கைங்கர்யத்தால் பாண்டவர் படை, சற்று நிலை குலைந்தது. இந்த நேரத்தில் மரீசி, ஆங்கிரஸ் உள்ளிட்ட சப்தரிஷி களும் அகத்திய முனிவரும் போர்க்களத்தில் தோன்றினர். அவர்கள் துரோணர் அருகே சென்றதும் துரோணர், போரை விட்டுவிட்டு அவர்களைத் தலைதாழ்த்தி வணங்கினார்.
அவரை ஆசீர்வதித்த ரிஷிகள், சாஸ்திரங்களைக் கற்றவரே! உமக்கு இந்த போர் ஆகுமா? நீர் எல்லாம் தெரிந்தவர். தத்துவஞானத்தை உணர்ந்தவர். தவம் செய்தவர். ஞான நுõல்களால் உண்டான மெய்யறிவைக் கொண்டவர். இந்த போர், பலம், செல்வம் இதெல்லாம் அரசர்களுக்கு உரியது. நீர் பிராமணர். சிறந்த ஆச்சாரியர். உமக்கு போர் ஆகாது. வில்லையும், வாளையும் நீர் அமர்ந்திருக்கும் தேரையும் உடனே துறந்து விட வேண்டும். நீர் மேலுலகம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. அங்கு வர தயாராக இருப்பீராக! அந்த லோகத்திற்குச் சென்றுவிட்டால் மன சஞ்சலம் நீங்கிவிடும். இறைவனின் திருப்பாதங்களை நீர் அடைவீர், என வாழ்த்தினர். ரிஷிகள் இவ்வாறு சொன்னதும் துரோணர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். எத்தனைதான் போர் செய்து கவுரவர்களுக்கு உதவினாலும், இறுதியில் என்றேனும் ஒருநாள் தழுவப்போகும் மரணத்தை ரிஷிகளின் ஆசீர் வாதம் கிடைத்த நாளிலேயே தழுவினால் என்ன என்ற எண்ணம் அவருக்குள் தோன்றியது. உடனடியாக தனது ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டு, தேரிலிருந்து கீழே இறங்கி நின்றார். இதுதான் துரோணரைக் கொல்ல சரியான சமயம் என கண்ணபரமாத்மா திட்டமிட்டார். இந்த நேரத்தில் முந்தைய தினம் சபதம் செய்தபடி, திருஷ்டத்யும்நனை துரோணருடன் போரிட அனுப்பினார். பின்னர் தர்மரை நோக்கி, தர்மரே! கவுரவர் தரப்பு வீரனான இந்திரவர்மாவோடு பீமன் செய்த போரில், அவனது பட்டத்து யானையான அஸ்வத்தாமா இறந்துவிட்டது. அந்த யானை மிகுந்த பலம் வாய்ந்தது. இந்த உலகத்தைத் தாங்கும் அஷ்டதிக் கஜங்களும் அதற்கு ஈடாகாது. இதைப் பயன்படுத்தி அஸ்வத்தாமா இறந்துவிட்டதாக, துரோணர் காதில் மட்டும் விழும் படியாக மெதுவாகச் சொல்லுங்கள். இதைக்கேட்டு, தனது மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக கருதி, துரோணர் அதிர்ச்சியடைந்து நிற்பார். புத்திரசோகத்தால் தளர்ந்து போவார். அப்போது திருஷ்டத்யும்நன் அவரைக் கொன்றுவிடுவான். இதை உடனே செய்ய வேண்டும், என்றார். இதைக்கேட்டு தர்மர் சிரித்தார்.கண்ணா! நீ பெரும் கள்வன். பொய்சொல்லி இந்த ராஜ்யம் எனக்குக் கிடைப்பதைவிட, நான் போரில் தோற்பதையே விரும்புகிறேன், என்றார்.
கிருஷ்ணா! உனக்கு தெரியாதது ஒன்றுமல்ல. பொய் சொல்வதால் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், அன்பு, புகழ், செல்வம், பலம், பிரார்த்தனை பலன், தர்மம் முதலானவற்றால் சேர்த்த புண்ணியம்... இன்னும் எல்லாமே அழிந்து போகும் என்பது நீ அறியாததல்ல! மாயவனே! நீயே பொய் சொல்லத் துõண்டினால் உலகத்தில் தர்மம் என்னாகும்? என்றார் தர்மப்பிரபுவான தர்மராஜா. கடவுளே பொய் சொல்லத் துõண்டினாலும் கூட, அதிலுள்ள நியாய தர்மத்தை ஆராய்கிறான் மனிதனான தர்மன். மகாபாரதம் எவ்வளவு பெரிய நற்போதனையை மக்களுக்கு வழங்குகிறது பார்த்தீர்களா! இதுபோன்ற பக்தி நுõல்களை சிறுவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். கண்டகண்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, டிவியில் தேவையற்ற காட்சிகளைக் காட்டுவது ஆகியவற்றால் தான் சிறுவர்கள் இன்று கெட்ட வழக்கங் களுக்கு ஆளாகிக் கொண்டிருக் கின்றனர். மகாபாரதம் போன்ற தர்மநுõல்களை பெரியவர்களும் வாசிக்க வேண்டும். சிறுவர்களுக்கும் அதில் ஆர்வத்தை உருவாக்க வேண்டும். மாயக்காரன் கிருஷ்ணனும் தர்மர் சொல்லும் அதே தர்மம் காக்கத் தானே இப்படி ஒரு போரையே நிகழ்த்துகிறார். அவரும் விடாப் பிடியாக பதில் சொன்னார்.தர்மரே! நீர் சொல்வது ஏற்கத்தக்கதே. ஆனால், ஒரு பொய் பல உயிர்களைக் காப்பாற்ற உதவுமானால், தர்மத்தைக் காக்க உதவுமானால் அதைச் சொல்வதில் தவறில்லை. ஒருவருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைப் போக்க பொய்யும் பயனளிக்குமானால், அது உண்மை என்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், தர்மத்துக்காக ஒரே ஒரு பொய் தான் சொல்லப் போகிறாய். ஓரிடத்தில் பெருநெருப்பு எரிவதாக வைத்துக் கொள். அதை ஒரு குவளை தண்ணீரால் அணைத்து விட முடியுமா? அந்தத் தீ கொழுந்து விட்டெரியத்தான் செய்யும். நீ செய்த தர்மத்தின் அளவையும், அதனால் கிடைத்துள்ள புண்ணியத்தின் அளவையும் பார்க்கும் போது, இந்தப் பொய் ஒருவேளை பாவத்தையே கொண்டு வருமானாலும் கூட, அது நீ சேர்த்து வைத்திருக்கும் புண்ணியத்தின் தன்மையை எந்த வகையிலும் பாதித்து விடாது, என்றார்.
கண்ணன் என்னும் மன்னன் சொல்லிவிட்டால் அங்கே மறுகருத்துக்கு ஏது இடம்? மறுத்தாலும் தான் அவன் விடுவானா என்ன? அந்த மாயவனின் பேச்சுக்கு தர்மர் கட்டுப்பட்டார். துரோணர் முன்பு தன் தேரில் போய் நின்றனர்.அவர் காதில் மட்டும் விழும்படியாக, ஐயோ! அசுவத்தாமா என்ற மதங்கொண்ட யானை இந்தப் போரில் பல வீரர்களை அழித்ததே! அதை பீமன் கொன்று விட்டானே, என்று மிக மெதுவாகச் சொன்னனர் சற்று அழுத்தமாக ஐயோ! அசுவத் தாமாவை பீமன் கொன்றானே. அவனது வீரத்தை எப்படி பாராட்டுவேன், என்று சற்று அழுத்தமாகச் சொன்னார். அவ்வளவு தான்! துரோணருக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. தன் மகன் அஸ்வத்தாமன் தான் இறந்தான் என நினைத்து வில்லைக் கீழே வீசிவிட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார். இதைப் பயன்படுத்திக் கொண்ட திரவுபதியின் சகோதரனான திருஷ்டத்யும்நன், அவர் மீது அம்பைத் தொடுத்தான். அது அவரது தலையைக் கொய்து விட்டது.இதுகண்டு கவுரவர் படை நடுங்கி விட்டது. அஸ்வத்தாமன் ஓடோடிச் சென்று தன் தந்தையின் பாதங்களை தன் தலை மீது துõக்கி வைத்துக் கொண்டு கதறினான்.என் அன்புத்தந்தையே! வில்லாற்றல், சொல்லாற்றல் ஆகியவற்றின் பிறப்பிடமான நீரா மறைந்தீர்! என்ன கொடுமை! உம்மைக் காப்பாற்ற இயலாமல், இந்த போர்க்களத்தில் நிற்கும் நான் உயிர் வாழத் தகுதியற்றவன். இவ்வுலகிலுள்ள அந்தணர்களெல்லாம் உம் வேத அறிவு கண்டு அஞ்சி ஒதுங்கி நிற்பார்களே! கண்ணனின் சொல் கேட்டு, சத்தியசீலரான தர்மரே பொய் சொன்னாரே! அதைப் பயன்படுத்தி உம்மிடமே வித்தை பயின்ற குரு துரோகியான திருஷ்டத்யும்நனும் உம்மைக் கொன்றானே! இதை நம்பாமல், நீர் வில்லெடுத்து போர் செய்திருந்தால் இந்த திருஷ்டத்யும்நன் என்ன! தேவர்களாலும் உம்மை ஜெயித்திருக்க முடியாதே! ஐயோ! உம்மைப் பிரிந்தும், இவ்வளவு நேரமும் என் உடலில் உயிர் தங்கியிருக்கிறதே, என முட்டி மோதி அழுதான்.
தனது குருவின் மகன் தந்தையை இழந்து தவிப்பது கண்ட துரியோதனன், அவனைத் தரையில் இருந்து துõக்கி நிறுத்தி மார்போடு அணைத்து அஸ்வத்தாமா! என்ன இது! நீயே அழுதால் நம் நிலைமை என்னாகும்? என் குருநாதரின் இழப்பை என்னாலும் தாங்க முடியவில்லை. அவர் எனக்கு கற்றுத்தந்த அந்த பழைய நினைவுகளெல்லாம் என் நெஞ்சில் அலை மோதுகின்றன. எவ்வளவு பெரிய மாவீரரை இழந்து விட்டேன். சேனாதிபதியின்றி கலங்கி நிற்கிறது நம் படை! ஆனாலும், மரணத்தின் பிடியில் சிக்கியவர்களை மீட்பது என்பது எப்படி? நீ மனதைத் தேற்றிக்கொள், என்று ஆறுதல் சொன்னான்.பின்னர் பெரும் கோபமடைந்த அஸ்வத்தாமன், என் தந்தையைக் கொன்ற திருஷ்டத்யும்நனின் உயிரை வாங்கிய பிறகு தான் எனக்கு மறுவேலையே! என முழங்கியபடியே அங்கிருந்து ஆவேசமாகக் கிளம்பினான். இதைக் கண்ட கிருஷ்ணர், தன் தரப்பு மன்னர்களையெல்லாம் அழைத்து, உடனடியாக எல்லாரும் அவரவர் ஆயுதங் களைக் கீழே போட்டு விடுங்கள். தேர்களில் இருந்து இறங்கி கீழே நில்லுங்கள், என்று உத்தரவிட்டார். அஸ்வத்தாமன் பெரும் கோபத்துடன் வரும் போது, அவனை எல்லோருமாக சேர்ந்து எதிர்க்க வேண்டிய சூழலில், இந்த மாயவன் ஏன் இப்படி ஒரு உத்தரவு போட்டார் என யாருக்கும் புரியவில்லை. ஆனாலும், அவரது உத்தரவுக்கு எல்லாரும் பணிந்தனர், ஒரே ஒருவனைத் தவிர!
அவன்தான் பீமன்! எதற்கும் கலங்காமல் அவன் ஆயுதத்துடன் நின்றான். அப்போது அஸ்வத்தாமன், நாராயண அஸ்திரத்தை மந்திரம் சொல்லி பாண்டவர் படை மீது ஏவினான். அந்த அஸ்திரத்தில் இருந்து பெரும் காற்றில் வேகமாகப் பரவும் தீயைப்போல, அக்னி ஜுவாலை வெளிப்பட்டது. அதிலிருந்து இடி முழக்கம் போல சப்தம் வெளிப்பட்டது. அந்த அஸ்திரம் பாண்டவப்படையை நெருங்கிய உடன், அனைவரும் அதன் மீது கை வைத்து மிகுந்த பக்தியுடன் வணங்கினார்கள். உடனே அந்த அஸ்திரம் பூமியை நோக்கிப் பாய்ந்தது. பின்னர் மீண்டும் மேலெழும்பி யாராவது ஆயுதத்துடன் நிற்கிறார்களா? என பல திசைகளையும் சுற்றிப் பார்த்தது. பீமன் ஒருவன் மட்டும் ஆயுதத்துடன் நின்றான். அவனை நோக்கி அந்த அஸ்திரம் வேகமாகச் சென்றது. பல அஸ்திரங்களாக மாறியது. அவை அத்தனையும் தேவர்களால் பயன்படுத்தப்படும் அஸ்திரங்களாகும். பீமன், சற்றும் கலங்காமல் அந்த அஸ்திரங்களை நோக்கி முன்னேறிச் சென்றான். எந்த அஸ்திரத்தை, எந்த எதிர் அஸ்திரத்தால் அழிக்க முடியுமோ, அவற்றை ஏவினான். ஆனாலும், நாராயண அஸ்திரத்தின் சக்தி சற்றும் குறையவில்லை. அது மேலும் பல அஸ்திரங்களாக மாறி பீமனை நெருங்கியது. ஆனால், அவனது கண் களிலிருந்து வீசிய கோப ஜுவாலைக்கு அது கட்டுப்பட்டது. பல அஸ்திரங்களையும் பீமன் ஒடித்தெறிந்தான். பல அஸ்திரங் களை தோளில் தாங்கி வீரத்துடன் நின்றான். ஆனாலும், விதியை வெல்ல யாரால் முடியும்? நாராயண அஸ்திரத்துக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. தன்னை எதிர்ப்பவர்களை மட்டுமே அது அழிக்கும். ஆயுதமின்றி நிற்பவர்களை அது ஏதும் செய்யாது. அதன் காரணமாகவே கிருஷ்ண பரமாத்மா, வீரர்களிடம் ஆயுதங்களை கீழே போடச் சொன்னார். பீமன் ஒருவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்த அஸ்திரம் பீமனால் எத்தனையோ முறை தடுக்கப்பட்டபோதும், அதையெல்லாம் மீறி அவனது மார்பை நோக்கி பாய்ந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணர், பீமனின் கையில் உள்ள வில்லையும், அம்பையும் அவனது தேரையும் மாயமாக மறையச்செய்துவிட்டார்.
உடனே நாராயண அஸ்திரம் அவனை அழிக்க தயங்கி, மீண்டும் அஸ்வத்தாமனிடமே போய்ச் சேர்ந்தது. அடுத்து அஸ்வத்தாமன் பாசுபதாஸ்திரத்தை பயன்படுத்த நினைத்தான். இந்த நேரத்தில் பிரம்மதண்டம் ஏந்தி வேதத்தை உச்சரித்தபடியே, வியாச முனிவர் அஸ்வத்தாமன் முன்பு தோன்றினார். அஸ்வத்தாமன் அவரது பாதங்களில் விழுந்து வணங்கி, பல்வேறாக போற்றித் துதித்தான்.வியாசர் அவனை மிகவும் புகழ்ந்தார். வீரனே! நீ வேலேந்திய சுப்பிரமணிய கடவுளுக்கு சமமானவன். பராக்கிரமம் உள்ளவன். உன்னிலும் வலிமை மிக்கவர்கள் இந்த போர்க்களத்தில் யாருமில்லை. துருபதன் பெற்ற ஒரு வரத்தின் காரணமாகவே, உனது தந்தையாகிய துரோணரை திருஷ்டத்யும்னனால் அழிக்க முடிந்தது. இல்லாவிட்டால் அவரை யாரும் ஜெயித்திருக்க முடியாது. இனி நீ சிவபெருமானை தியானம் செய்! கடும் தவம் புரி! இந்த பிறவியே வேண்டாமென அவரிடம் வேண்டுகோள் வை. ஐம்புலன்களையும், ஆசைகளையும் அடக்குபவனுக்கு சிவதரிசனம் கிடைக்கும், என உபதேசம் செய்து மறைந்தார்.இதற்குள் சூரியன் அஸ்தமிக்கவே, பதினைந்தாம் நாள் போர் நிறைவுக்கு வந்தது. அன்று இரவில் நடந்த பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் துரியோதனன், தனது படைக்கு கர்ணனை சேனாதிபதி ஆக்குவதென முடிவு செய்தான். இந்த விஷயத்தையும், துரோணர் இறந்து போன விஷயத்தையும் சஞ்சய முனிவரிடம் சொல்லி, திருதராஷ்டிரனிடம் கூறுமாறு அனுப்பி வைத்தான். துரோணரின் இறப்புச்செய்தி கேட்டு திருதராஷ்டிரன் மிகவும் வருந்தினான். மறுநாள் பொழுது விடிந்தது. சூரிய பகவான் அன்று சற்று முன்னதாகவே வந்து விட்டான். ஏனெனில் தனது மகன் கர்ணன், தளபதி ஆனது கண்டு அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பாண்டவர்களுடன் அவன் நிகழ்த்தப்போகும் போரை பார்வையிடுவதற்காக முன்கூட்டியே தோன்றிவிட்டான்.துரியோதனன் மிகுந்த நம்பிக்கையுடன் களத்திற்கு வந்தான். பீஷ்மரையும், துரோணரையும் இழந்த பிறகும்கூட, தனது படைக்கு கர்ணன் தலைவனாக இருக்கிறான் என்பதில் அவனுக்குப் பெரும் சந்தோஷம்.
கர்ணன், சேனாதிபதி ஆனதில் கவுரவப் படைகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவனது தலைமையில் எப்படியாவது பாண்டவர்களை வென்றுவிடலாம் என்றே அவர்கள் கருதினார்கள். இதன் காரணமாக களத்தில் ஆவேசமாக நின்றார்கள். பாண்டவர் படைகளுக்கும் அன்று மிகுந்த மகிழ்ச்சி. துரோணரும், பீஷ்மரும் இல்லாத கவுரவ படையை ஜெயிப்பது மிகவும் எளிது என்றே அவர்கள் கருதினார்கள். பீமன் ஒரு யானையின் மீது ஏறி, ஆவேசத்துடன் களத்திற்குள் நுழைந்தான். அவனை எதிர்த்து காசி நகர ராஜனாகிய கேமதுõர்த்தி என்பவன் மற்றொரு யானையில் வந்தான். இருவரும் யானையில் அமர்ந்தபடியே பாண பிரயோகம் செய்தனர். கேமதுõர்த்தியின் யானையை பீமன் தனது கதாயுதத்தால் அடித்துக் கொன்று விட்டான். கேமதுõர்த்தியும் அவ்வாறே பீமனின் யானையைக் கொன்று விட்டான். பின்னர் இருவரும் கதாயுதத்தால் மலையும், மலையும் மோதியது போல் கடும் யுத்தம் செய்தனர். இறுதியில் பீமன், கேமதுõர்த்தியை தன் கதாயுத்தால் உக்கிரமாக தாக்கியதில் அவன் மடிந்து போனான். இதுகண்டு கவுரவப்படைகள் சிதறி ஓடின. கர்ணன் அவர்களுக்கு தைரியம் கொடுத்தான். எக்காரணம் கொண்டும் பின்வாங்கக்கூடாது என உத்தரவிட்டான். இந்த நேரத்தில் நகுலன், தனது குதிரை மீது ஏறி கர்ணனை நோக்கிப் பாய்ந்து சென்றான். இருவரும் மிகக்கடுமையாக யுத்தம் செய்தனர். ஒருவர் மீது ஒருவர் ஏராளமான அம்புகளைத் தொடுத்தனர். பின்னர் இருவரும் அவரவர் தேரில் ஏறி நின்றபடியே அம்பு மாரி பொழிந்தனர். சமபலம் பொருந்தியவர்களாக இருந்ததால், இந்த போர் நீண்ட நேரம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் நகுலனுக்கு ஏற்பட்ட அம்புக்காயங்கள் அவனை மிகவும் துன்புறுத்தின. அவன் தளர்வடைந்தான். இந்நேரத்தில் கர்ணன் நினைத்திருந்தால் அவனைக் கொன்றிருக்க முடியும். ஆனால், தன் தாய் குந்திக்கு தன் தம்பியரைக் கொல்வதில்லை என வாக்கு கொடுத்திருந்தது நினைவிற்கு வந்தது.
உடனே, யாராலும் அழிக்க முடியாத காலப்பிருஷ்டம் என்ற தனது வில்லை எடுத்து, நகுலனுடன் போர் செய்தான். நகுலன் அதை உடைக்க முயன்று சோர்வடைந்தான். பின்னர் பெருந்தன்மையுடன், “நகுலா! நீ பிழைத்துப் போ, எனச்சொல்லி கர்ணன் அவனை அனுப்பி வைத்தான். ஆனால், தனது குறி அர்ஜுனன் என்பதால் அவனை நோக்கிச் சென்றான். கிருஷ்ணன் மீதும் அர்ஜுனன் மீதும் பாணங்களை தொடுத்தான். அது அவர்களை ஏதுமே செய்யவில்லை. அர்ஜுனன் தன்னை கிருஷ்ணரிடம் ஒப்படைத்துக் கொண்டவன். அவரது உடலோடும், மனதோடும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவன். இதன் காரணமாக அந்த அம்புகள் அவனை ஏதும் செய்யவில்லை. இறைவனை முழுமையாகச் சரணடைந்தவர்களை, எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம். பாணங்கள் வீணாகப் போனதால், கர்ணன் களைத்து நின்றான். அப்போது, ராமாயணப் போர்க்களத்தில் ராமபிரான் ஆயுதங்களை இழந்து நின்ற ராவணனிடம் சொன்னது போல, “கர்ணா! இன்று போய் நாளை வா, என்றான். கர்ணனும் அவமானத்துடன் அகன்று விட்டான்.அந்த சமயத்தில் துரியோதனன், தர்மருடன் யுத்தம் செய்ய தனது தேரில் வந்தான். அந்த தேரையே நொறுக்கிவிட்டார் தர்மர். மீண்டும் இமயமலை போல் உயரமான தேர் ஒன்றில் ஏறி துரியோதனன் வர அதனையும் தவிடு பொடியாக்கினார்.
“துரியோதனா! என்னை ஜெயிப்பதற்கு இது ஒன்றும் சூதாட்ட களமல்ல. இங்கே வீரத்திற்கு மட்டுமே விலை, என சிங்கநாதம் செய்தார் தர்மர். தன்னை அவர் கேலி செய்ததால், துரியோதனன் கோபமும் அவமானமும் அடைந்து தன் கதாயுதத்துடன் தர்மர் மீது பாய்ந்தான். அவனை தன் கதாயுதத்தால் அடித்து தரையில் வீழ்த்தினார் தர்மர். துரியோதனன் நிலைகுலைந்து கிடந்த போது, அஸ்வத்தாமன் ஓடி வந்தான். அவனுக்கு மிகுந்த வருத்தம். முதல்நாள் யுத்தத்தில் தன் தந்தையை வீழ்த்திய பாண்டவர்கள், இன்று மாமன்னனான துரியோதனனை தன்னைப் போன்ற வீரர்கள் இருக்கும் களத்திலேயே வீழ்த்தினரே என்று வருந்தினான். அவனைத் தொடர்ந்து வந்த கர்ணன், தங்களுக்கு தோல்வி உறுதியோ என எண்ண ஆரம்பித்து விட்டான். அவர்கள் வந்ததும் தைரியமடைந்த துரியோதனன், தர்மருடன் மீண்டும் உக்கிரமாக போரிட்டான். ஆனால், பாண்டவர் படைகள் அவர்களைக் கடுமையாகத் தாக்கவே, தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்கள் சிதறி ஓடினர். அத்துடன் சூரியன் அஸ்தமிக்கவே, அன்றைய போர் முடிவுக்கு வந்தது. மறுதினம் பதினேழாவது நாளாக போர் தொடர்ந்தது. கவுரவர் படைத்தலைவன் கர்ணன் தலைமையில் ஏராளமான கவுரவ வீரர்கள் கூடினர். அன்று கர்ணன் அணிந்திருந்த ஆபரணங்கள் வழக்கத்தை விட மிக அதிகமாக ஜொலித்தன. சூரிய பகவான், தன் மகனின் இந்தப் பேரழகை அதிகரிக்கும் வகையில் கிரணங்களை அதன் மீது பாய்ச்சி, அவற்றுக்கு மேலும் ஒளியூட்டினான். தர்மரின் நிலையும் அத்தகையதே. முந்தைய நாள் போரில், துரியோதனனை அடித்து வீழ்த்திய மகிழ்ச்சியில் இருந்த அவர், சிவபெருமான் ருத்திராம்சமாக தேரில் வருவது போல் உக்கிரத்துடன் காணப்பட்டார்.
அவர் கிருஷ்ணரிடம், “மைத்துனரே! இந்தப் போர் இன்று முடிவுக்கு வந்து விடுமா? கர்ணனை இன்று சொர்க்கத்துக்கு அனுப்பி விடலாமா? என்று ஆரூடம் கேட்பவரைப் போல் கேள்வி எழுப்பினார். கேள்வியின் நாயகனும், பதிலின் அதிபதியுமான கிருஷ்ணருக்குத் தான் எல்லாம் தெரியுமே! அதனால் தான், இப்படி ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார் தர்மர். லட்சுமியின் நாயகனாகிய கண்ணபிரான் ஒரு சிரிப்பை உதிர்த்தார். “தர்மரே! சரியான நேரத்தில் சரியான கேள்வியைக் கேட்டீர்கள். இன்று சூரியகுமாரனான கர்ணன் போரில் இறப்பது உறுதி. அர்ஜுனனின் பாணங்கள் அவனைத் துளைத்து விடும். நாளையும் ஒரு நல்லசெய்தி காத்திருக்கிறது. துரியோதனனை பீமன் கொன்று விடுவது உறுதி. அதன்பின் ஏழு தீவுகளை உள்ளடக்கிய இந்த பூமி உன்னுடையதாகி விடும், என்றார்.கிருஷ்ணரின் இந்த அமுதமொழி கேட்ட தர்மர், “ஸ்ரீகிருஷ்ணா! எங்கள் மானம் மரியாதை எல்லாவற்றையும் உமது கையில் ஒப்படைத்திருக்கிறோம். உம்மால் எல்லாம் முடியும். பரமாத்மா! எங்கள் வீரம், புகழ் அனைத்தையும் காப்பாற்றி எங்களுக்கு ராஜ்யத்தைத் தந்து விட்டாய், என்று நாளை கிடைக்கப் போகும் ராஜ்யத்தை இன்றே தன் வாக்குறுதியால் தந்ததற்காக தர்மர் நன்றி கூறினார். மற்ற பாண்டவர்களும் கிருஷ்ணருக்கு தலை வணங்கினர்.
தர்மர் தொடர்ந்தார்.
“கிருஷ்ணா! திரவுபதிக்கு ஐந்து கணவன் மாராக நாங்கள் இருந்து என்ன பயன்? அன்று அவளது புடவை பறிக்கப்பட்ட போது, நீயே அவளைக் காத்தருளினீர். பீமன் சிறுவனாக இருந்தபோது, கங்கை நதிக்குள் கூர்மையான கழுமரத்தை ஊன்றி, அவன் ஆற்றில் குதிக்கும் போது, அதில் குத்தி இறக்க துரியோதனன் சதி செய்தான். அந்த ஏற்பாட்டை முறியடித்து என் தம்பி பீமனை பாதுகாத்தீர். பொருளில்லாத எங்களிடம் பாசம் வைத்து எங்களுக்காக துரியோதனனிடம் துõது சென்றீர்! அமாவாசையை முன்னதாகவே வரச்செய்து எங்களுக்காக அரவான் தன்னைக் களப்பலி கொடுக்கும் நாளை மாற்றியமைத்தீர்! பீஷ்மரைக் கொல்ல அர்ஜுனன் தயங்கிய போது அவனுக்கு கீதோபதேசம் செய்து எங்களை ரட்சித்தீர்! அஸ்வத்தாமனின் நாராயண அஸ்திரத்தில் இருந்து எங்களைப் பாதுகாத்தீர்! உமது சேவைகள் கொஞ்சநஞ்சமா? எதைச்சொல்லி எதை விடுவேன், என்றவர் உணர்ச்சிவசப்பட்டு, கிருஷ்ணரின் திருவடிகளில் தலையை வைத்து வணங்கினார். கிருஷ்ணரும் தர்மருக்கு தலை வணங்கினார்.“தர்மரே! அச்சம் வேண்டாம். பாண்டவர்களாகிய நீங்கள் ஐவரும் இன்னும் பல்லாண்டு வாழ்வீர்கள். போரில் வெற்றி உங்களுக்கே, என ஆசியளித்தார். பின்னர் கர்ணன், பாண்டவர் தளபதியான திருஷ்டத்யும்னனை நோக்கி கிளம்பினான்.
அப்போது அவன் துரியோதனனிடம், நண்பனே! அர்ஜுனனுக்கு தேரோட்ட மாயாவியான கண்ணன் இருக்கிறான். அதுபோல், மிகச்சிறந்த தேரோட்டி ஒருவன் எனக்கு வேண்டும். அதுமட்டுமல்ல! போரில் சமயத்துக்கு தகுந்தபடி முடிவெடுக்கும் அறிவாளியாகவும் அவன் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன் தான் சல்லியன் (இவன் நகுலன், சகாதேவனின் தாய்மாமன், சந்தர்ப்பவசத்தால் துரியோதனனின் படையில் இணைந்தவன்) அவன் எனக்கு சாரதியானால், கிருஷ்ணாச்சுனர்களைக் கொல்வேன். பீமனை வெல்வேன், என கர்ஜித்தான். இதைக் கேட்ட துரியோதனன் சல்லியனிடம் சென்று, நான் ஒரு உதவி கேட்கிறேன். அதைச் செய்வாயா? என்றான்.சல்லியன் மிகவும் மகிழ்ந்து, வீரனே! நீ ஒரு உதவி கேட்டு அதை நான் மறுப்பேனா! சொல், என்றான். துரியோதனன் விஷயத்தைச் சொல்லவும், சல்லியன் ஆத்திரமடைந்தான். துரியோதனா! உன்னைத் தவிர வேறு யாராவது இப்படி என்னிடம் சொல்லியிருந்தால் அவர்களின் நாக்கை அறுத்திருப்பேன். பிறப்பால் இழிந்த ஒருவனுக்கு நான் தேரோட்டுவதாவது! உன் படையை இரண்டாகப் பிரி. ஒன்றை என் வசம் ஒப்படை. அதைக் கொண்டு பாண்டவர்களை அழித்து விடுகிறேன். கர்ணனின் தலைமையிலுள்ள படையின் உதவியின்றியே இதைச் செய்கிறேன். அந்தளவுக்கு என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை நான் இதை செய்யாமல் தோற்றுப்போனால் கர்ணனுக்கு சாரதியாகிறேன், என்று வீரமாகப் பேசினான்.
துரியோதனன் அவனைச் சமாதானம் செய்தான். சல்லியா! பரமசிவனுக்கு தேரோட்டியாக பிரம்மன் இருக்கிறான். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணனனே கிருஷ்ணனாக வந்து தேரோட்டுகிறான். அர்ஜுனனும் முன்பு விராட தேசத்தரசனின் மகன் உத்தரகுமாரனுக்கு தேரோட்டியாக இருந்தவன் தானே! அவர்கள் எல்லாருமே உலகத்தவரால் மதிக்கப்படுபவர்கள் தான். தேர் ஓட்டுவது பெருமைக் குறைவுக்கு உரியதல்ல. எல்லாக் கலையிலும் வல்லவர்களே தேரோட்ட முடியும், என்று புகழ்ந்து பேசினான். வேறு வழியின்றி சல்லியன் கர்ணனுக்கு தேரோட்ட சம்மதித்தான். இதையறிந்த கர்ணனும், கவுரவ வீரர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்திரனிடம் இழந்த கவச குண்டலங்களைத் திரும்பப் பெற்றது போல் கர்ணன் மகிழ்ந்தான். அவனைக் கட்டி யணைத்து தனது தேரில் ஏற்றினான். நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல, கர்ணன் படைகளுக்கு மத்தியில் தனது தேரில் கம்பீரமாக நின்று, பகைவர்களுக்கும் தானத்தை வாரி வழங்கினான். பல பிராமணர்களும் போர்க்களத்தில் வந்து தானம் பெற்றுச் சென்றனர்.பின்னர் சல்லியனிடம் கர்ணன், சல்லியா! எனக்கு நிகரானவர் இந்த போர்க்களத்தில் அர்ஜுனனைத் தவிர யாருமில்லை. நீ அவனருகே தேரோட்டிச் செல். என்னிடம் விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட் டதும், பரசுராமரால் எனக்கு அளிக்கப்பட்டதுமான விஜயம் என்ற வில் இருக்கிறது. அதைக் கொண்டும், உனது தேரோட்டும் திறமை கொண்டும் அர்ஜுனனை அழிப்பேன், என வீரவாதம் செய்தான்.
அப்போது சல்லியன் சற்று கேலியாக, கர்ணா! அர்ஜுனனிடம் இதே போர்க்களத்தில் பலமுறை நாங்கள் உன்னருகே நின்றும் பின்வாங்கி ஓடியிருக்கிறாய். இப்போது வீரம் பேசுகிறாய். முதலில் காரியத்தை முடி. ஒன்றைச் செய்வதற்கு முன் அது நிறைவடைந்து விட்டதாக நினைப்பவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? மேலும், நடக்கப்போவதை யாரும் அறிய மாட்டார்கள், என்றான். இதைக் கேட்ட கர்ணனுக்கு கோபம் வந்து விட்டது.சல்லியனே! கேலி பேசாதே. தேரோட்ட வந்தவன், நான் எங்கே தேரோட்டச் சொல்கிறேனோ அங்கே செல்ல வேண்டும். அதை விடுத்து, எனக்கு புத்தி சொல்லும் வேலையெல்லாம் தேவையில்லை, என்றான். உடனே சல்லியனுக்கு கோபம் அதிகமாகி தேரில் இருந்து கீழே இறங்கி, உருவிய வாளுடன் நின்றான். கர்ணனைப் போருக்கு அழைத்தான். கர்ணனும் அவனுடன் மோதத் தயாரானான். இதைப் பார்த்த துரியோதனன் பயந்து போனான். அவர்கள் இருக்குமிடம் வந்து அவர் களைச் சமாதானம் செய்து, சல்லியனை மீண்டும் தேரில் ஏற்றினான். கிருபாச்சாரியார், சகுனி, அஸ்வத்தாமன் உள்ளிட்ட வீரர்கள் கர்ணனைச் சூழ்ந்து நிற்க துரியோதனன் அதைப் பார்த்து பெருமையடைந்தான். அர்ஜுனன் அழிந்தான் என்றே முடிவு கட்டினான். போர் துவங்கியது. பாண்டவர் தரப்பில் அன்று பெரும் சேதத்தை கர்ணன் தலைமையிலான படை ஏற்படுத்தியது. இதைக் கண்ட பீமன் கர்ணனுடன் போருக்கு வந்தான். இருவரும் சமபலத்துடன் போரிட்டனர். கர்ணா! என் சகோதரன் அர்ஜுனன் உன்னைக் கொல்வதாக சபதம் செய்திருக்காவிட்டால், இப்படி உன்னுடன் போர் செய்து கொண்டிருக்கமாட்டேன். உன்னை என் ஒரு விரலாலேயே நசுக்கியிருப்பேன், என்று சொல்லிவிட்டு வேறு இடத்துக்குச் சென்றான்.
இந்த வீரவார்த்தைகளால் உற் சாகமடைந்த பாண்டவர் படை, கவுரவர் படை யிலுள்ள மன்னர்களையெல்லாம் வேட்டையாடியது. பல மன்னாதி மன்னர்கள் வீரசொர்க்கம் அடைந்ததும், கவுரவ படை பின் வாங்கியது. இதுகண்ட அஸ்வத்தாமன், பாண்டவர் படையை தன் பலத்தால் தடுத்து நிறுத்தினான். அர்ஜுனனும் அவன் முன்னால் வந்து நின்றான். அவனது தேரை ஒரே அம்பால் அடித்து நொறுக்கிய அர்ஜுனன், அஸ்வத் தாமனை உயிரோடு விட்டுவிட்டான். பின்னர் தர்மரும் கர்ணனும் கடுமையாகப் போரிட்டனர். கர்ணனின் அம்புகளுக்கு அவர் நீண்டநேரம் தாக்குப்பிடித்தாலும், கடைசியில் சோர்ந்து போன அவர் புறமுதுகிட எண்ணினார். அப்போது கர்ணன் அவரிடம், நீர் அறிவில் சிறந்தவர், சிறந்த நண்பர்களைக் கொண்டவர். தர்மம் தவறாத தம்பிமார்களைக் கொண்டவர். உலகையே அரசாளத்துடிக்கும் நீர், இப்படி புறமுதுகிட்டு ஓட நினைப்பது அழகா? கடைசி வரை எதிர்த்து நிற்க வேண்டாமா? என்றான். தர்மரும் புறமுதுகிடும் தன் எண்ணத்தை கைவிட்ட வேளையில், பீமன் அவருக்கு துணையாக வந்தான். உடனே சல்லியன் கர்ணனிடம், பீமன் வந்துவிட்டான். இனி தர்மரையோ, பீமனையோ உன்னால் வெல்ல முடியாது, என்று கர்ணன் மீதுள்ள வஞ்சகத்தால் இகழ்ச்சியாகப் பேசினான். கர்ணன் மீண்டும் கோபத்துடன் அவனைப் பார்த்தான்.
அவன் சல்லி யனிடம், சல்லியா! இகழ்ந்து பேசாதே! இப்போது பார் என் வலிமையை! என் ஒரே பாணத்தால் பீமன் மட்டுமல்ல, அர்ஜுனனையும் சேர்த்து அழிப்பேன், என்றான் வீரத்துடன். ஆனால், சல்லியன் சொன்னதே நடந்தது. பீமன் தனது தேரில் கர்ணன் முன்னால் வந்து நின்றான். அவனது பாணங்கள் கர்ணனை காயப்படுத்தின. கர்ணன் மயங்கி விழுந்து விட்டான். பின்னர், சல்லியன் தான் அவனுக்கு மயக்கம் தெளிவிக்க வேண்டியதாயிற்று. மயக்கம் தெளிந்து எழுந்த கர்ணன், பீமனைச் சுற்றி நின்ற அரசர்களை அம்பெய்து கொன்றான். இதனால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பீமன் பின்வாங்கினான். பீமனின் நிலையைக் கண்ட கிருஷ்ணர், தேரை கர்ணன் அருகே ஓட்டினார். இப்போது அர்ஜுனன், கர்ணன் மீது பாணங்களைப் பொழிந்தான். அஸ்வத்தாமன் கர்ணனுக்கு உதவியாக வந்தான். இருவருமாக கிருஷ்ணர் மீதும், அர்ஜுனர் மீதும் பதில் பாணங்களைத் தொடுத்தனர். அஸ்வத்தாமனின் பாணங்களுக்கு அர்ஜுனனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவன் சோர்வடைந்தான். இதைக் கண்ட கிருஷ்ணர், அர்ஜுனா! அஸ்வத்தாமனின் பாணங்களுக்கு கலங்காதே. அவனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியாது என்பது நிஜமே. ஆனால், அவனும் தோற்கடிக்கத் தக்கவன் தான்! அவனது மார்பை குறிவைத்து அம்புகளை விடு, என்றார். கிருஷ்ணர் சொல்லி முடிப்பதற்குள், அர்ஜுனன் தன்னிடமிருந்த சக்திவாய்ந்த சந்திரபாணத்தை அவன் மீது எய்ய, அஸ்வத்தாமன் மயங்கிச் சாய்ந்தான். இதைப் பார்த்த துச்சாதனன் அவனைக் காப்பாற்றி ஒரு தேரில் ஏற்றிச்சென்று விட்டான். அவனுக்கு மயக்கம் தெளிந்ததும், மீண்டும் கர்ணனின் அருகில் வந்து போர் செய்தான்.
இது ஒருபுறம் நடக்க, பீமன் தன் சபதத்தை நிறைவேற்ற துச்சாதனன் அருகில் சென்றான். துச்சாதனா! நீ பெரும் வீரன்! அன்றைய தினம் சபையிலே நீ ஒரு பெண்ணின் துயிலை உரிந்து வீரத்தைக் காட்டினாயே! அந்த வீரத்தை இன்றும் இந்த உலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பராக்கிரமம் மிக்க உன்னுடன் போரிடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அநேகமாக, திரவுபதி இன்று தன் கூந்தலை முடிந்து விடுவாள் என்றே எண்ணுகிறேன். இன்று நீ; நாளை துரியோதனன். இருவரையும் கொன்று விடுவேன், என்று எக்காளமாகப் பேசி சிரித்தான்.
துச்சாதனன் பதிலுக்கு ஏதும் சொல்லவில்லை. அமைதியாக நின்ற அவன் அருகில் கவுரவ சகோதரர்கள் ஒன்பது பேர் வந்து நின்றனர். அவர்கள் ஒன்பது பேரையும் பாணம் எய்து கொன்றான் பீமன். இதனால், ஆத்திரமடைந்த துச்சாதனன் பீமனுடன் கடுமையாகப் போரிட்டான். இரண்டு மலைகள் மோதியது போல் இருந்தது. மிக நீண்டநேரம் போர் நீடித்தது. ஒரு கட்டத்தில், துச்சாதனனின் கழுத்தை ஒடித்து அவனது முதுகுப்புறமாக திருப்பிய பீமன், அவனது தொடைகளைப் பிடித்து இழுத்து துண்டித்தான். ரத்தம் வழிய குற்றுயிராக கிடந்த அவனது கைவிரல்களை பிடித்த அவன், இந்த விரல்கள் தானே என் திரவுபதியைத் தொட்டன, என்றவாறே அவற்றை ஒடித்து தள்ளினான். பெண் பாவம் பொல்லாதது. பெண்களை அவர்களின் விருப்பமின்றி யார் ஒருவன் தொடுகிறானோ, அவர்களுக்கெல்லாம் இதுதான் கதி. கொலைப் பாவமான பிரம்மஹத்தி தோஷத்துக்கு கூட விடிவு கிடைத்து விடும். ஆனால், ஒரு பெண்ணை இம்சைப்படுத்துபவனுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பிராயச் சித்தம் கிடையாது.
அது துச்சாதனன் விஷயத்தில் உண்மையானது. அத்தோடு விட்டானா பீமன்! வெறி அவனது தலைக்கு ஏறியது. அவனது வயிற்றைக் கிழித்து குடலை உருவினான். பின்னர் அலக்காகத் துõக்கி, அவனது ரத்தத்தைக் குடிக்க ஆரம்பித்து விட்டான். அந்தக்காட்சி, இரணியனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தி போல இருந்தது. என்ன தான் கொடுமைக்காரன் என்றாலும், ஒருவனை இந்தளவுக்கு இம்சைப்படுத்திக் கொல்வது என்பது போர்க்களத்தில் நின்றவர்களுக்கே பிடிக்கவில்லை. அவர்கள் கண்ணீர் வடித்தனர். இதைப் பார்த்த கிருஷ்ணர் பீமனிடம், பீமா! துச்சாதனனைக் கொன்றது சரி. ஆனால், ரத்தம் குடிக்கக்கூடாது, என்று கடுமையாகச் சொன்னதும், அவனது உடலை கீழே போட்டுவிட்டு சென்ற பீமன், தர்மரிடம் அதைச் சொல்லி ஆனந்தப்பட்டான். துச்சாதனனின் மரணம், கவுரவர் படைத் தலைவனான கர்ணனை மிகவும் பாதித்து விட்டது. அவன் அயர்ச்சியுடன் நின்றான். பின்னர், சல்லியனின் வார்த்தைகளால் சுதாரித்த அவன் பாண்டவர் படையுடன் கடுமையாக மோதினான். ஆனால், அர்ஜுனன் கர்ணனின் மகனான விருஷசேனனை அந்த சமயத்தில் கொன்று விட்டான். இதனால், கர்ணன் மீண்டும் மூர்ச்சித்து விழுந்தான். சல்லியன் அவனுக்கு மயக்கம் தெளிவித்து, ஆறுதல் வார்த்தைகள் சொன்னான். இந்த சமயத்தில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. துரோணரின் மகன் அஸ்வத்தாமன் துரியோதனனிடம் சென்றான். மகாராஜா! நீங்களும், தருமரும் தொடங்கிய இந்தப்போர் 17 நாட்களாகியும் முடிந்தபாடில்லை. என் தந்தை மட்டுமின்றி, பீஷ்மர் போன்ற மகாத்மாக்களும், தங்கள் சகோதரர்களும், பலநாட்டு மன்னர்களும் அழிந்து போனார்கள். போனது போகட்டும். இப்போது எஞ்சியுள்ள உங்கள் தம்பிமார் களுடன் சென்று தர்மருடன் சமாதானம் செய்து, இருவரும் அவரவருக் குரிய பூமியை ஆண்டுவாருங்கள், என்று அறிவுரை சொன்னான். துரியோதனன் அதை ஏற்கவில்லை. அஸ்வத்தாமா! ஒன்று இந்தப் போரில் வெற்றி, அல்லது வீரமரணம். இதைத் தவிர எந்த சமாதானத் துக்கும் நான் தயாராக இல்லை, என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டான். பின்பு கர்ணனிடம் சென்று, மகனை இழந்து தவித்த அவனுக்கு ஆறுதல் சொன்னான். கர்ணன் ஆவேசத்துடன், துரியோதனா! இனியும் பொறுக்கமாட்டேன். அர்ஜுனனின் தலையை அறுக்கும் அம்பை போரில் பயன்படுத்தப் போகிறேன். அவனைக் கொல்லாமல் திரும்பமாட்டேன், என்று சொன்னான். அவனது தேர் அர்ஜுனனை நோக்கிப் பாய்ந்தது.
கர்ணனது தேரைச் சுற்றி கோபக்கனல் வீசும் கண் களுடன் கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன், சகுனி முதலானவர்கள் நின்றனர். அர்ஜுனன் அவன் மீது அம்புகளைச் சரமாரியாகப் பாய்ச்சினான். கர்ணனும் பதிலுக்குத் தாக்க இந்த யுகமே முடிந்துவிடுமே என்று விண்ணோர்களே பயந்து விட்டனர். கர்ணனின் திறத்தை அடக்க கிருஷ்ணரும், அர்ஜுனனின் திறத்தை அடக்க சல்லியனும் மிகத்திறமையாக தேரோட்டினர். அவர்கள் இருவரும் தேரோட்டுவதில் சமவலிமை படைத்தவர்கள் என்றே அனைவரும் பேசிக் கொண்டனர். கிருஷ்ணருக்கு எவ்வகையிலும் குறைந்தவனில்லை என்று காட்டும் வகையில் சல்லியன் நடந்து கொண்டான். அதுமட்டுமின்றி கர்ணனிடம் சொல்லி, கிருஷ்ணரைத் தேரோட்ட முடியாமல் செய்ய அம்புகளால் தடுப்புச்சுவர் எழுப்பச் சொன்னான். இதை சரக்கூடம் என்பார்கள். இது கர்ணனுக்கு மிகுந்த பலனளித்தது. கிருஷ்ணரால் அந்த தடுப்பைத் தாண்டி தேரோட்ட முடியவில்லை. உடனே தன் மாயையை பயன்படுத்தி, கிருஷ்ணரும் அவ்வாறே செய்ய கர்ணனின் தேரும் மாட்டிக் கொண்டது. அர்ஜுனன் மிகவும் களைத்துப்போய் அம்புகளை எய்ய முடியாமல் நின்றான். கிருஷ்ணர் அவனிடம், ஏன் எழுதப்பட்ட சித்திரம் போல அப்படியே நிற்கிறாய்? சாதாரண சூழலை விட, மாட்டிக்கொள்ளும் நேரங் களில் தான் மனிதன் தனது புத்தியை வேகமாகப் பயன்படுத்த வேண்டும். உம்..அம்புகளைத் தொடு, என்று அவசரப்படுத்தினார். அர்ஜுனனும் சுதாரித்து நெருப்பைக் கக்கும் ஆக்கினேயாஸ்திரத்தை கர்ணன் மீது பிரயோகம் செய்தான். அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் களத்தில் நின்ற ஏராளமான வீரர்கள், யானை, குதிரைகளை கருகச் செய்தபடியே கர்ணனை நோக்கிப் பாய்ந்தது. அஞ்சாநெஞ்சனான கர்ணன், அந்த அஸ்திரத்தை எதிர்கொள்வதில் பெருமிதமடைந்தான். வருணபகவான் தனக்குத் தந்த வருணாஸ்திரத்தை எதிர் பிரயோகம் செய்தான். அதில் இருந்து சிந்திய பெருவெள்ளமான தண்ணீர், எதிரே வந்த நெருப்பு அஸ்திரத்தை அழித்து விட்டது.இப்படியாக பல்வேறு சிறப்புமிக்க அஸ்திரங்களை இருவரும் பிரயோகித்தனர். அர்ஜுனன் விட்ட எல்லா அஸ்திரங்களையும் மாவீரன் கர்ணன் ஒடித்து தள்ளிவிட்டான். அர்ஜுனனின் வாவ்யாஸ்திரத்துக்கு சர்ப்பா ஸ்திரம், கர்ணனின் பூர்ணசந்திர அஸ்திரத்துக்கு அந்தகாரஸ்திரம், ஐந்திர அஸ்திரத்துக்கு, சூரிய அஸ்திரம், பிரமாஸ்திரத்துக்கு ருத்திராஸ்திரம் என மாறி மாறி தொடுத்தனர். இவையெல்லாம் பார்ப்பதற்கு சாதாரண அம்புகள் போல் தோன்றும்.
ஆனால், இதில் அடங்கியுள்ள மந்திரசக்தியாலும், தேவர்களால் தரப்பட்டது என்பதாலும் இவற்றுக்குரிய சக்தி மிகமிக அதிகம். இப்படி எந்த அஸ்திரமுமே இருதரப்புக்கும் பலன் தராததால் இருவரும் கைசோர்ந்தனர். சற்று ஓய்வுக்குப்பிறகு, கர்ணன் காண்டவவனத் தகனத்தின் போது, தன்னிடம் வந்து சேர்ந்த அஸ்வசேனன் என்னும் நாகக் குழந்தையை நினைத்தான். அது நாகாஸ்திரமாக அவன் கையில் வந்து சேர்ந்தது. இந்த அஸ்திரத்தைத் தான் ஒரே ஒருமுறை அர்ஜுனன் மீது எய்ய வேண்டும் என்று குந்திதேவி வரம் பெற்றிருந்தாள்.அந்த அஸ்திரம் ஐந்து வாய் களைக் கொண்டிருந்தது. காண்டவ வனத்தை அர்ஜுனன் அக்னிக்கு பரிசாகக் கொடுத்து எரித்தபோது, தட்சகன் என்ற பாம்பின் மனைவியும், கர்ப்பிணி யுமாக இருந்த நாகமாது என்பவள் தீயிலிருந்து தப்ப விண்ணை நோக்கிப் பறந்தாள். அர்ஜுனன் அந்தப்பாம்பின் மீது அம்பெய்தான். அது இருகூறாகி விழுந்தபோது, இந்திரன் அதைத் தாங்கிப் பிடித்து பாம்பின் உடலில் இருந்த அவளது குழந்தையை வெளியில் எடுத்தான். அஸ்வசேனன் என்று பெயர் பெற்ற அக் குழந்தை, அர்ஜுனனுக்கு எதிரி கர்ணன் என்பதைக் கண்டுபிடித்து அவனிடம் போய் அடைக்கலமானது. அதுவே நாகாஸ்திர வடிவில் இருந்தது. தன் தாயைக் கொன்ற அர்ஜுனனைப் பழிவாங்க அது காத்திருந்தது. அந்த அஸ்திரத்துக்கு சந்தனம் பூசி, துõபம் காட்டி, பூக்களால் பூஜை செய்த கர்ணன் அதை அர்ஜுனன் மீது எய்தான். அதை தனது அர்த்தசந்திர பாணத்தை வீசி துண்டித்துவிட்டான் அர்ஜுனன். துண்டான ஐந்து தலைகளுடன் வந்த அந்த பாணம், கர்ணனிடம் திரும்பி வந்து, மீண்டும் ஒருமுறை என்னை அர்ஜுனன் மீது ஏவு, என்று கெஞ்சியது.
கர்ணன் மறுத்தான். நாகாஸ்திரமே! உன்னை மீண்டும் ஒருமுறை எய்ய முடியாமைக்காக வருந்துகிறேன். குந்திதேவியிடம் உன்னை ஒருமுறை மட்டுமே எய்வேன் என்று வாக்கு கொடுத்துள்ளேன். எனவே உன்னை மீண்டும் பிரயோகிக்க மாட்டேன், என்றான். நாகாஸ்திரம் அது கேட்டு மிகவும் வருத்தப்பட்டது. செல்லியனும் அந்த அஸ்திரத்தை மீண்டும் அர்ஜுனன் மீது ஏவச்சொன்னான். அதையும் வாக்குத்தவறாத கர்ணன் கேட்க மறுத்துவிட்டான். கர்ணா! என் தாயை கொன்றவனை பழிதீர்க்கலாம் என்றே உன்னை சரணடைந் தேன். ஆனால், நீயோ ஒருமுறை எய்ததுடன் நிறுத்திக் கொண்டாய். அதுவும் குறிதவறி விட்டது. என் விதி அவ்வளவுதான், என்று சொல்லிவிட்டு நாகாஸ்திரம் மறைந்து விட்டது. நாகாஸ்திரத்துக்கே தப்பிவிட்ட அர்ஜுனனைக் கண்டு பாண்டவர் படையினர் ஆரவாரம் செய்தனர். இதைப் பார்த்த சல்லியன் கோபத்துடன், கர்ணா! நான் சொன்னதையும், மகாநாகாஸ்திரம் சொன்னதையும் கேட்க நீ மறுத்துவிட்டாய். இனி நான் உனக்கு தேரோட்ட மாட்டேன். அர்ஜுனனை உன்னால் கொல்ல முடியாது என்பது தெளிவாகி விட்டது. உன்னை நண்பனாக அடைந்ததற்காக துரியோதனன் தோற்கப்போவதும் நிஜமாகி விட்டது, என்று சொல்லிவிட்டு தேரில் இருந்து இறங்கிச் சென்று விட்டான்.கர்ணனே இப்போது தேரை ஓட்ட வேண்டியதாயிற்று. அவன் மிகவும் நொந்து போயிருந்தான். தனது பாணங்கள் இப்படி செயலற்று போக காரணம் என்ன என்று யோசித்தான். அப்போது தான் பரசுராமர் அவன் கண்கள் முன் நிழலாடினார்.
பரசுராமர் அந்தணர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்று கொடுத்து வந்தார். கர்ணனும், வில்லார்வம் காரணமாக அந்தணனைப் போல் வேடமிட்டு பரசுராமரிடம் வித்தை கற்றான். ஒருமுறை, பரசுராமர் அவனது மடியில் தலை வைத்து படுத்திருந்த போது, வண்டு ஒன்று கர்ணனின் தொடையைத் துளைத்தது. குருவின் துõக்கம் கலைந்து விடக்கூடாது என்பதால், கர்ணன் அந்த வலியையும் தாங்கவே ரத்தம் பெருக்கெடுத்து பரசுராமரின் கையில் பட அவர் விழித்து விட்டார். ஒரு க்ஷத்திரியனால் மட்டுமே இதுபோன்ற வலியைத் தாங்க முடியும் என கணித்த அவர் கோபத்தில் தன்னிடம் பொய் சொன்ன கர்ணனுக்கு, என்னிடம் கற்ற வித்தைகள் தக்க சமயத்துக்கு உனக்கு பயன்படாமல் போகும், என சாபம் கொடுத்து விட்டார். அந்த சாபம் இப்போது பலிக்கிறது. இருப்பினும், தன்னை சபித்த குருவை அவர் இருந்த திசைநோக்கி வணங்கிய கர்ணன் கோபத்துடன் மற்றொரு தேரில் ஏறி அர்ஜுனனின் அருகில் சென்றான். அப்போது கிருஷ்ணர் அவனது கர்ணனின் பலம் குறைந்து விட்டதைக் கவனித்து, அர்ஜுனனிடம், அவன் மீது பாணங்களை ஏவு என்றார். கர்ணனின் உடலே மறையும்படி அர்ஜுனன் விட்ட பாணங்கள் அவனைத் தைத்தன. அவனது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இவ்வளவு அம்புகள் தைத்த ஒருவனால் நிச்சயமாக உயிருடன் இருக்க முடியாது. ஆனால், அவனுக்கு மரணம் வரவில்லை என்றால் அதற்கு காரணம் என்ன?மாயவன் கிருஷ்ணன் அதை அறிவான்.
அர்ஜுனா! அம்பு விடுவதை நிறுத்து! சூரியன் மறைய இன்னும் சிறிது நேரமே இருக்கிறது. எனக்கு ஒரு வேலை இருக்கிறது, என்றவர் தன்னை ஒரு அந்தணராக வடிவம் மாற்றிக் கொண்டார். ரத்தம் வழிய வீழ்ந்து கிடந்த கர்ணனிடம் சென்ற அவர், சூரியனின் மைந்தனே! கர்ணா! நான் மேருமலையில் இருந்து வருகின்றேன். மிகவும் ஏழை. நீ தானதர்மத்தில் சிறந்தவன். உன்னிடம் உள்ளதில் நல்ல பொருள் ஏதாவது ஒன்றைக் கொடேன், என்றார்.கர்ணன் அந்த வலியிலும் மகிழ்ந்தான்.அந்தணரே! இந்த கடைசி நேரத்திலும், எனக்கு தானம் செய்ய வாய்ப்பளித்த உம்மை என்னவென்று புகழ்வேன்? என்னிடமுள்ளதில் சிறந்தது எது என்று கேட்டு நீரே பெற்றுக் கொள்ளும், என்றான். கர்ணா! உனது புண்ணிய பலன்கள் அனைத்தையும் எனக்குத் தரவேண்டும், என்றார் கிருஷ்ணன். கர்ணனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இருப்பினும் சோகமான குரலில், அந்தணரே! என்னிடம் சிறந்த பொருட்கள் இருந்த நேரத்தில் நீர் வரவில்லை. உமக்கு அவற்றைத் தர முடியாத பாவியாகி விட்டேனே! இருப்பினும், நீர் கேட்ட இந்த சாதாரணப் பொருளைக் கொடுக்கிறேன், என்றவனாய், தன் நெஞ்சில் வழிந்த ரத்தத்தைப் பிடித்து அதை தாரை வார்த்து கிருஷ்ணரிடம் ஒப்படைத்தான்.அந்த களிப்புடன் கர்ணனிடம், கர்ணா! நீ விரும்பும் வரத்தைக் கேள். தருகிறேன், என்றார்.ஐயா! கொடிய பாவங்களைச் செய்ததால், இன்னும் ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் அந்த ஜென்மங்களிலும் என்னிடம் வந்து யாசிப்பவர்களுக்கு அள்ளித்தரும் மனநிலையைக் கொடு, என்று வேண்டினான்.
கிருஷ்ணருக்கு அது கேட்டு மகிழ்ச்சி. கடைசி நேரத்தில், இதோ, என் எதிரி அர்ஜுனன். அவனைக் கொல்ல வேண்டும், என் எஜமானன் துரியோதனனை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும், என அவன் கேட்டிருந்தால், கிருஷ்ணரால் மறுத்திருக்க முடியுமா? ஆனால், அவன் தர்மத்தின் தலைவன். சூழ்நிலைக் கைதியாகி துரியோதனனிடம் சிக்கியவன். நண்பனுக்காக உயிர் கொடுப்பவர்கள் நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இதோ, இவன் நண்பனுக்காக தன் உயிரையும் தரப்போகிறான்.கிருஷ்ணர் அப்படியே தன் அத்தை மகன் கர்ணனை அணைத்துக் கொண்டார். இறைவனிடம் நம் கஷ்டத்தைச் சொல்லி நாம் கண்ணீர் வடித்திருக்கிறோம். ஆனால், செந்தாமரைக் கண்ணனான கிருஷ்ணர், கர்ணனை அணைத்தபடியே கண்ணீர் வடித்தார். அந்தக் கண்ணீர் அவனை அபிஷேகிப்பது போல் இருந்தது.கர்ணா! நீ கேட்ட வரத்தைத் தந்தேன். உன் செயல்களால் நீ எத்தனை பிறப்பெடுத்தாலும், உயர்ந்த இடத்திலேயே பிறப்பாய். தானங்கள் செய்து ஒவ்வொரு பிறப்பின் முடிவிலும் மோட்சம் அடைவாய், என வாழ்த்தினார். பின்னர், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம் தாங்கி விஸ்வரூபம் எடுத்தார். கர்ணனுக்கு கொடுத்த அந்த திவ்யமான காட்சியை தேவர்களும், சித்தர்களும், கந்தர்வர்களும், முனிவர்களும், போர்க்களத்தில் நின்ற மானிடர்களும் காணும் பேறு பெற்றனர். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்பாரே திருவள்ளுவர். அதுபோல், தானம் செய்து பேறு பெற்ற அந்த நல்லவனால் பாவிகளுக்கு கூட கிருஷ்ணனின் விஸ்வரூபதரிசனம் கிடைத்தது.
கர்ணன் அந்த காட்சி கண்டு பரவசமடைந்தான்.
நாராயணா! மதுசூதனா! பத்மநாபா! புண்டரீகாக்ஷா, கோவிந்தா, திரிவிக்ரமா, கோபாலா, கிருஷ்ணா என பல திவ்யநாமங்களால் அவரைப் போற்றினான். ஐயனே! உன்னை என்ன வார்த்தைகளால் புகழ்வேன்! மருதமரங்களுக்கு இடையே சென்று கந்தர்வர்களுக்கு வாழ்வளித்த பெருமாளே! துளசிமாலை அணிந்தவனே! திரண்ட தோள்களை உடையவனே! இந்த போர்க்களத்தில் துரியோதனனிடம் பட்ட செஞ்சோற்று கடன் காரணமாக, தர்மர் முதலான என் தம்பிமார்களிடம் போரிட்டேன். தவறு செய்த எனக்கு நீ விஸ்வரூபம் தரிசனம் தருகிறாய் என்றால் அதற்கு காரணம் முற்பிறவியில் நான் செய்த நல்வினைகளாலேயே ஆகும். நான் அடைந்த இந்த பாக்கியத்தை பூலோகத்தில் வேறு யார் பெற்றுள்ளனர்? என்று புகழ்ந்தான்.இது கேட்ட கிருஷ்ணர், கர்ணா! உன் கவச குண்டலங்களைப் பெறும்படி இந்திரனை அனுப்பியதும் நானே! நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருமுறைக்கு மேல் செலுத்த முடியாதபடி குந்தியின் மூலம் வரம் பெற்றவனும் நானே! நீ அவளுடைய மகன் என்ற உண்மையை சொன்னவனும் நானே! என்று உண்மைகளை உடைத்துவிட்டு, மீண்டும் தேர்சாரதி வடிவமெடுத்து அர்ஜுனனின் தேரில் ஏறினார்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |