இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மைம்மரு பூங்குழல்

மைம்மரு பூங்குழல்

திருப்புகலி மற்றும் திருவீழிமிழலை பண்;நட்டபாடை

பின்னணி:

திருஞானசம்பந்தர் மேற்கொண்ட ஐந்தாவது தலயாத்திரை முந்தைய தல யாத்திரைகளை விடவும் நீண்டதாக இருந்தது. சீர்காழி தலத்து அந்தணர்கள் பலரும், திருஞானசம்பந்தர் திருவீழிமிழ்லை தலத்தினில் திருஞானசம்பந்தர் இருக்கின்றார் என்பதை அறிந்தவர்களாக அந்த தலம் வந்தடைந்து அவரை சந்தித்தனர். திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கிய பின்னர், சீர்காழி தலத்தை விட்டகன்று சென்று நெடுநாட்கள் ஆனபடியால், தங்களுடன் திருஞானசம்பந்தர் சீர்காழி திரும்பவேண்டும் என்று வேண்டினார்கள். அதற்கு திருஞானசம்பந்தர், அடுத்த நாள் திருக்கோயில் சென்று இறைவனின் திருவுள்ளக் கருத்தினை அறிந்து கொண்ட பின்னர் முடிவு செய்யலாம் என்று பதில் கூறினார். அன்று இரவில், திருஞானசம்பந்தரின் கனவில் தோன்றிய பெருமான், சீர்காழி தலத்தில் இருக்கும் கோலத்தை வீழிமிழலை விமானத்தில் உமக்கு காட்டுவோம் என்றும் அதனைக் கண்டு நீ வழிபடுவாயாக என்றும் திருஞானசம்பந்தருக்கு மொழிந்தார். சீர்காழி திருக்கோயிலின் இரண்டாவது தளத்தில், உமாமாகேசுவரர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் சிவபெருமான், தனது கையினில் மானும் மழுவும் இல்லாதவராக காட்சி அளிக்கின்றார். ஊழிக்காலம் முடிந்த பின்னர் உலகினை மீண்டும் தோற்றுவிக்க திருவுள்ளம் கொண்ட பெருமான் நல்கிய காட்சி என்பதால், பெருமான் மானும் மழுவுமின்றி காட்சி அளிக்கின்றார். அதே தன்மையில் வீழிமிழலை விமானத்தில் காட்சி அளித்ததாக குறிப்பிடும் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.

அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சி மேல் அங்கை கூப்பி

வெறியுற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண்ணிழி கோயிலில் சென்று புக்கு

மறியுற்ற கையரைத் தோணி மேல் முன் வணங்கும் படியங்கு கண்டு வாழ்ந்து

குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார்.

தனது கனவின் கண் தோன்றி பெருமான் மொழிந்த அதிசயத்தை உணர்ந்த திருஞானசம்பந்தர், திருக்கோயில் சென்று அந்த அதிசயத்தைக் கண்டு வியந்தவராக மைம்மரு பூங்கழல் என்று தொடங்கும் இந்த பதிகத்தை பாடுகின்றார். இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் மழுவோடு இளமான் கையின்றி இருந்த பிரான் என்று குறிப்பிடுகின்றார். அதன் பின்னர், சீர்காழியிலிருந்து வந்த அந்தணர்களை நோக்கி, காழியில் இருந்த கோலத்தை வீழிமிழலை விமானத்தில் காட்டியதன் மூலம், காழியில் உறைகின்ற பெருமானே பல தலங்களிலும் உறைவதாக உணர்த்தி, அத்தகைய தலங்கள் செல்லுமாறு இறைவன் தன்னை பணிக்கின்றார் என்று சொல்லிய திருஞானசம்பந்தர், சீர்காழி அந்தணர்களை சீர்காழிக்கு திரும்பி செல்லுமாறு உரைத்தார். காழி அந்தணர்களும்,திருஞானசம்பந்தரை விட்டு பிரிய மனமில்லாமல், சீர்காழி திரும்புகின்றனர். இந்த நிகழ்ச்சி நடந்தேறிய சில நாட்கள் கழித்து, கொடிய பஞ்சம் ஏற்பட்டு மக்கள் உண்ண உணவும் கிடைக்காமல் கலங்கினார்கள். அப்போது பெருமான், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகிய இருவருக்கும், தினமும் ஒரு பொற்காசு அருளி, பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவு அளிக்க வழிவகுக்கின்றார். இவ்வாறு பஞ்சம் வரபோவதை முன்கூட்டியே அறிந்த பெருமான்,அந்த சமயத்தில் நாயன்மார்கள் இருவர் மூலமும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்ததால் தான், சீர்காழி அந்தணர்களுடன் திருஞானசம்பந்தர் காழி நகருக்கு செல்வதை தவிர்த்தார் போலும்.

பாடல் 1;

மைம்மரு பூங்குழல் கற்றை துற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும்

பொய் மொழியா மறையோர்கள் ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே

எம்மிறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்கொல் சொல்லாய்

மெய்ம்மொழி நான்மறையோர் மிழ்லை விண்ணிழி கோயில் விரும்பியதே

விளக்கம்:

இந்த பதிகத்தின் பாடலில் பெருமானின் கண்களை இமையாத முக்கண் என்று குறிப்பிடுகின்றார். நெற்றியில் இருக்கும் கண் எப்போதும் மூடியே இருக்கும்;மற்ற இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே காணப்படும். இமையாத கண்கள் இமைத்து நிலை மாறிய போது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம்,. எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம்.சிவபிரானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்கள் என்று சொல்லப்படும். ஒருமுறை விளையாட்டாக, பார்வதி தேவி, சிவபிரானின் கண்களை மூட,அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கின, உலகில் மொத்த இயக்கமும் நின்று போனது. தனது தவறினை உணர்ந்த பார்வதி தேவி, உடனே சிவபிரானின் கண்களை மறைத்த தனது கைகளை எடுத்துவிட்டார். பார்வதி தேவி தனது கண்களை மறைத்திருந்த கணப்பொழுதில் ஏற்பட்ட உலகத்தின் இருளைப் போக்குவதற்காக தனது நெற்றிக் கண்ணை, சிவபிரான் திறந்ததாக அப்பர் பிரான் ஒரு பாடலில் கூறுகின்றார். தனது தவறினுக்கு வருந்திய பார்வதி தேவி,திருப்பாம்புரம் தலத்திற்கு வந்து, அங்கே தவம் செய்து ஒரு சிவராத்திரி நாள் அன்று, இறைவனின் தரிசனம் கிடைக்கப் பெற்றார். இந்த தகவல் அப்பர் பிரானால், தசபுராணப் பதிகத்தில் கூறப்படுகின்றது. நலம்=சிவம்; நலம் மலி மங்கை=நலத்தை அருளும் சிவனின் மனைவி உமையம்மை;அலர்தரல்=விரிதல்; அல்ர்வித்த=ஒளிவிடச் செய்த; (பாடல் 4.14.8)

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா

உலகினை ஏழு முற்றும் இருள் மூட மூட இருள் ஓட நெற்றி ஒரு கண்

அலர் தர வஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல்

அலர் தரு சோதி போல் அலர்வித்த முக்கணன் அவனா நமக்கோர் சரணே

கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.05.4) திருஞான சம்பந்தர் இமையாத முக்கண் என்று குறிப்பிடுகின்றார்.இமையோர் பெருமான்=இந்திரன்; விருத்திராசுரனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு,இந்திரன் பெருமானை வழிபட்டு பயன் அடைந்த தலபுராண வரலாறு இங்கே உணர்த்தப் படுகின்றது. கால்=திருவடிகள்; நுண்ணறிவு=சிவ ஞானம்.தோல்=புலித்தோல், போர்வை=யானைத்தோல்; இமையோர் பெருமான் என்ற தொடர் தேவர்களுக்கு தலைவனாக சிவபெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர். துதைந்து= செறிந்து, இங்கே மிகவும் அதிகமாக பூசிக்கொண்டு என்று இங்கே பொருள் கொள்ள வேண்டும்.முந்தைய இரண்டு பாடல்களில் காட்டுப்பள்ளிப் பெருமானை நினைத்து உருகி வணங்கும் அடியார்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்றும், தங்களது துன்பங்களிலிருந்து விடுதலை அடைவார்கள் என்றும் உணர்த்திய சம்பந்தர், அவ்வாறு தனது அடியார்களுக்கு உதவும் பொருட்டே, தானாகவே விருப்பம் கொண்டு இந்த தலத்தில் உறைகின்றான் என்று கூறுகின்றார். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, நாமும் இந்த தலத்து இறைவனைப் பணிந்து வணங்கி பயனடையவேண்டும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

தோலுடையான் வண்ணப் போர்வையினான் சுண்ண வெண்ணீறு துதைந்து இலங்கு

நூலுடையான் இமையோர் பெருமான் நுண்ணறிவால் வழிபாடு செய்யும்

காலுடையான் கரிதாய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

மேலுடையான் இமையாத முக்கண் மின்னிடையாளொடும் வேண்டினானே

திருநீலகண்டப் பதிகத்தின் நான்காவது பாடலில் (1.116.4) பெருமானை, கண் இமையாதன மூன்று உடையீர் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.வித்தியாதரர் என்ற வடமொழிச்சொல் விச்சாதரர் என்று மாறியுள்ளது. திண்ணிய=வலிமை மிகுந்து; உறுதியாக உயிர்களைப் பற்றி இருப்பதால், உயிர்களால் நீக்கமுடியாத வினைகள் என்று குறிப்பிடப் படுகின்றது. நெற்றியில் இருக்கும் கண் எப்போதும் மூடியே இருக்கும்; மற்ற இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே காணப்படும். இமையாத கண்கள் இமைத்து நிலை மாறிய போது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம்,. எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதர்களும் வேதியரும்

புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே

கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்

திண்ணிய தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

கள்ளில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.119.3) திருஞானசம்பந்தர் இமையா முக்கண் என்று குறிப்பிடுகின்றார். கண்=அழகு; கண்ணார் நீறு=அழகு தரும் திருநீறு; பிஞ்ஞகன்= அழகிய தலைக்கோலம் உடையவன்;

எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்

பண்ணார் நான்மறை பாடும் பரமயோகி

கண்ணார் நீறணி மார்பன் கள்ளில் மேயான்

பெண் ஆணாம் பெருமான் எம் பிஞ்ஞகனே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (2.9.7) சம்பந்தர் இமையாத முக்கண்ணினன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மழபாடி மருந்து என்று பெருமானை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நமது உடலின் நோய்கள் தீருவதற்கு கொடுக்கப்படும் மருந்துகள், நாம் உட்கொள்ளவும் பூசிக்கொள்ளவும் தரப்படுகின்றன. ஆனால் இறைவன் எனப்படும் மருந்து, நமது மனதினை தூய்மை செய்வதற்காக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்பதால், இறைவன் எனப்படும் மருந்தினை நாம் சிந்திக்க வேண்டும், நினைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம், மழபாடி மருந்தினை சிந்திப்பவர்களின் வினைகள் தேய்ந்து அறுந்துவிடும் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

சந்தவார் குழலாள் உமை தன்னொரு கூறுடை

எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான்

மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடி மருந்தினைச்

சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே

ஆருயிர் திருவிருத்தம் எனப்படும் (4.84) பதிகத்தின் மூன்றாவது பாடல் இமையாத முக்கண் பெரியான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தரியா வெகுளியன் என்று பெருமானை இந்த பாடலில் அப்பர் பிரான் அழைக்கின்றார். பெருமான் கோபம் கொண்டால் எவராலும் தாங்க இயலாது என்பதை இந்த தொடர் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். தக்கன், தன்னை யாகத்திற்கு அழைக்காததையும், அவிர்பாகம் கொடுக்க மறுத்ததையும், இழிவாகப் பேசியதையும் சிவபிரான் முதலில் பொருட்படுத்தாமல் தான் இருந்தார். யாகத்திற்கு சென்ற தாக்ஷாயணியை (தக்கனின் மகள் என்பதால் அன்னைக்கு ஏற்பட்ட பெயர்), தக்கன் இழிவாகப் பேசியதன் விளைவாக அவள் அவமானம் தாங்க முடியாமல் யாககுண்டத்தில் பாய்ந்து உயிரினை விட்ட பின்னர்,சிவபெருமான் தனது கோபத்தை தடுக்க முடியாமல், வீரபத்திரரை, தக்கனின் யாகத்தை அழிக்க அனுப்புகின்றார். பெருமானது திருவடி நிழலில் தனது உயிர் நிலை பெற்று இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பிறந்த உயிர் தான் பிறந்த விதத்தையும் அன்னையையும் தந்தையையும், தனது அன்னை மூலம் உணர்கின்றது. தந்தையும் தாயும் இல்லாமல், தானே தோன்றிய பெருமான் எவ்வாறு தனது பிறப்பு குறித்து அறிய முடியும். எனவே தான் பெருமானை, தனது பிறப்பு அரியான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த

எரியார் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண்

பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை

அரியான் அடிநிழல் கீழது அன்றோ எனது ஆருயிரே

கடுமையான இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட போதும் நாம் கலங்காது இருக்கும் வண்ணம் நமக்கு புகலிடமாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்தும் பொதுப் பாடல் ஒன்றினில் (4.113.10) இமையாத மூன்று கண்களை உடைய பொன் குன்றம் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நெஞ்சமே,நெடுங்காலம் மழை இல்லாமல் போனால் மலைகள் தங்களது பசுமையை இழந்து வெப்பத்தினால் சூடேறிக் காணப்படும் என்றும், ஆறுகள் மற்றும் கடல்கள் வற்றிய நிலையில், மழை இல்லாததால் கொடிய பஞ்சம் ஏற்படும் என்றும் சூள் உரைக்காதே. அந்த நிலையிலும், இமையாத மூன்று கண்களை உடையவனாய் பொற்குன்றம் போன்று காட்சி அளிக்கும் சிவபெருமானை நாம் புகலடைந்தால், பஞ்சத்தால் நாம் வாடாமல் இருப்பதற்கு அவன் அருள் புரிவான் என்பது இந்த பாடலின் திரண்ட கருத்து. கடுமையான பஞ்சம் ஏற்பட்டு உணவு பற்றாக்குறை இருந்த காலத்திலும், வீழிமிழலை தலத்து இறைவன்,அப்பர் பிரானுக்கும் ஞான சம்பந்தருக்கும் பொற்காசுகள் அளித்து, அவர்களைச் சார்ந்த அடியார்கள் உணவின்றி வாடாமல் காப்பாற்றிய நிகழ்ச்சி அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும்.

கல் நெடுங்காலம் வெதும்பிக் கருங்கடல் நீர் சுருங்கிப்

பல் நெடுங்காலம் மழை தான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்றும்

என்னொடும் சூள் அறும் நெஞ்சமே இமையாத முக்கண்

பொன் நெடுங்குன்றம் ஒன்று உண்டு கண்டீர் இப்புகலிடத்தே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றில் (5.47.4) இமையா முக்கண்ணர் ஆகிய பெருமான் தனது நெஞ்சத்தில் உள்ளார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அவரது உண்மையான தன்மையும் பெருமையையும் எவரும் அறிய முடியாத காரணத்தால் தேவர்களும் தொழுகின்ற பெருமான் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், நம்மையும் கச்சி ஏகம்பனைத் தொழுது நலம் பெறுமாறு தூண்டும் பாடல் இது.

இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர்

தமை யாரும் அறிவொண்ணாத் தகைமையர்

இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்

நமை ஆளும் அவனைத் தொழுமினே

ஆமாத்தூர் திருத்தாண்டகத்தின் நான்காவது பாடலில் (6.09.4) அப்பர் பிரான் இமையா முக்கண்ணினர் என்று குறிப்பிடுகின்றார். பசைந்த=விருப்பம் உடைய; பிசைந்த=குழைத்த; படமெடுக்கும் பாம்பினை அணிந்தவராக இருந்தாலும், உடலெங்கும் திருநீறு பூசியவராக இருந்தாலும், உடலின் ஒரு பாகத்தில் பெண்ணுருவை கொண்டிருந்தாலும் பெருமான் அழகியவராக காணப்படுகின்றார் என்று அவரது அழகில் மயங்கிய இளம் பெண்ணின் எண்ணத்தை வெளிப்படுத்தும் பாடல் இது.

பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் படநாகக் கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு

இசைந்ததோர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால்வேதத்தர்

பிசைந்த திருநீற்றினர் பெண்ணோர் பாகம் பிரிவறியா பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை

அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.85) மூன்றாவது பாடலில், இமையா முக்கண்ணினான் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நம்பன்=நம்பிக்கைக்கு உரியவன். திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது, தேரின் அச்சு முறிந்து விடவே, திருமால் இடபத்தின் வடிவம் எடுத்து பெருமானைத் தாங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த மால்விடையிலிருந்து வேறுபடுத்தி காட்டும் வண்ணம்,நந்தியம்பெருமானை நரை விடை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நரை விடை=வெண்மை நிறத்து இடபம்; நவிலுதல்=பாடுதல்;

நம்பன்காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன்காண் கீதத்தை நவிற்றினான்காண்

இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு

அன்பன்காண் ஆரழலது ஆடினான்காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா

செம்பொன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

இமையாத நெற்றிக்கண் இமைத்து திறந்த போது, அதனின்று வெளிப்பட்ட தீப்பொறிகளின் தாக்கத்தினால் மன்மதனின் உடல் எரிந்து அழிந்தது என்று கற்குடி தலத்தின் மீது அருளிய பாடலில் (6.60.3) அப்பர் பிரான் கூறுகின்றார். ஒளிர்கின்ற நெருப்பு என்பதைக் குறிக்க வயங்கு எரி என்று கூறப்பட்டுள்ளது வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை நம்மால் அறிய முடியாது அல்லவா. அத்தகைய விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமான திருநாமங்களை உடையவன் என்பதை உணர்த்தும் முகமாக தாரகைகள் தம்மின் மிக்க எண் என்று இறைவனை அப்பர் பிரான் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார். ஐம்பூதங்களின் தன்மை விளக்கப்படும் பாடல். பரந்த வெளியிலிருந்து நாதம் பிறந்தமையால், ஆகாயத்தின் குணம் ஒலி என்று கூறுவார்கள். வீசும் காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு (ஊறு) ஆகிய இரண்டு பண்புகள் இருப்பதை நாம் உணர்கின்றோம். தீ, ஒலி கொண்டு உணரப்படுவதாகவும், தொடு உணர்வினால் அறியப்படுவதாக விளங்குவதுடன், ஒளியுடனும் திகழ்கின்றது. நீருக்கு, ஒலி, ஊறு, ஒளி, மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன. நிலத்திற்கு, நீரின் நான்கு குணங்களுடன் வாசனை ஆகிய ஐந்தாவது குணமும் உள்ளது. மேற்கண்ட குணங்களாக இறைவனே இந்த ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

மண்ணதனில் ஐந்தை மாநீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை மாருதத்து இரண்டை

விண்ணதனில் ஒன்றை விரிகதிரைத் தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க

எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக் காமன் எழில் அழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

மைம்மரு=கருமை சேர்ந்த; பொய் மொழியா=பொய் பேசாது உணமையே பேசும் என்பது பொதுவான பொருள். வாய்மை எனப்படுவது மனிதர்கள் கொள்ள வேண்டிய எட்டு அரிய குணங்களில் ஒன்று. இந்த காரணம் பற்றியே பெருமானுக்கு பிடித்த அக மலர்களில் ஒன்றாக கருதப் படுகின்றது. கொல்லாமை,இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பன அரிய எட்டு குணங்களாகும். நாம் அனைவரும் இந்த எட்டு குணங்கள் உடையவர்களாகத் திகழ்ந்து, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் விரும்புகின்றார். பொய் என்ற சொல்லுக்கு பொய்யான பொருட்கள், நிலையற்ற பொருட்கள் என்று பொருள் கொண்டு, நிலையற்ற உலகப் பொருட்களைப் பற்றி பேசாமல், நிலையான பரம்பொருள் குறித்தும் அவனது சிறப்பு பற்றியும் பேசும் அந்தணர்கள் என்று பொருள் கொள்வது சிறப்பு. அதே போன்று வீழிமிழலை அந்தணர்கள் குறித்தும், உண்மையான மெய்ப்பொருள் பற்றி சிந்தனை செய்வோர் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. புகலி என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. சூரபதுமனுக்கு அஞ்சிய தேவர்கள் புகலிடமாகக் கொண்டமையின் புகலி என்ற பெயர் வந்தது. புகலியிலிருந்து அந்தணர்கள் திருஞானசம்பந்தரை காண வந்ததை, வீழிமிழலை தலத்து அந்தணர்கள் திருஞானசம்பந்தருக்கு தெரிவித்ததாகவும், திருஞானசம்பந்தரின் அனுமதி பெற்ற பின்னர் அவர்களை திருஞானசம்பந்தர் இருந்த இடத்திற்கு அழைத்து வந்ததாகவும் பெரிய புராணம் உணர்த்துகின்றது. எனவே பதிகத்தின் பல பாடல்களிலும் புகலி மறையோர்களையும், வீழிமிழலை மறையோர்களையும் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மேலும் புகலி தலத்தை விரும்பி நிலையாக, புண்ணியமே வடிவமாக ஆங்கே பொருந்தியிருக்கும் இறைவன், விண்ணிலிருந்து இறங்கிய வீழிமிழலை விமானத்தை விரும்பியவனாக ஆங்கே பொருந்தி காட்சி அளிக்கின்றான் என்றும் கூறுகின்றார். விண்ணிழி=ஆகாயத்திலிருந்து இறங்கிய; பெருமானின் அருளால் வலிமை வாய்ந்த சக்கரப்படை கொடுத்து உதவிய பெருமானின் திருக்கோயிலுக்கு, சிறப்பான விமானத்தை ஆகாயத்திலிருந்து திருமால் இறக்கியதாக கூறுவார்கள். அதனை உணர்த்தும் விதமாக பாட்ல்தோறும் விண்ணிழி விமானம் என்று குறிப்பிடப் படுகின்றது. பதினாறு சிங்கங்கள் இந்த விமானத்தைத் தாங்குவது போன்று அமைக்கப் பட்டுள்ளது. ஆலவாய் தலத்து விமானமும் இந்திரனால் தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகின்றது. ஆலவாய் தலத்து கருவறை விமானத்தை, எட்டு திசை யானைகள் தாங்குவது போன்று எட்டு யானைகளின் முகங்கள் கருவறை வெளிச் சுற்றில், கருவறை விமானத்தைத் தாங்குவது போன்று அமைக்கப் பட்டுள்ளன. பூங்கழல்=அழகிய கூந்தல்; வாணுதல்=வாள்+நுதல்=ஒளிவீசும் நெற்றி; ஈசன்=தலைவன்

பொழிப்புரை:

கற்றையாக அடர்ந்து வளர்ந்ததும் கருமை நிறம் உடையதும் ஆகிய அழகிய கூந்தலும் ஒளிவீசும் நெற்றியும், மான் போன்று மருண்ட பார்வையும் உடையவளும் ஆகிய பார்வதி மங்கையோடும், எப்போதும் நிலையற்ற உலகப் பொருட்களைப் பேசாது உண்மையான மெய்பொருள் குறித்தே பேசும் மறையோர்கள் புகழ்ந்து போற்றும் வண்ணம் புகலி என்று அழைக்கப்படும் நகரினில் பொருந்தி உறைகின்ற புண்ணியமே வடிவமாக திகழும் பெருமானே,எமது இறைவனே, இமையாது இருக்கும் மூன்று கண்களை உடையவனே, எங்களது தலைவனே, என் பால் அன்பு பாராட்டுபவனே, மெய்ப்பொருளை பேசுவோரும் நான்கு மறைகளையும் ஓதுவோரும் ஆகிய அந்தணர்கள் உறைகின்ற வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.

பாடல் 2:

கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்

பொழில் மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இதென்கொல் சொல்லாய்

மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண்ணிழி கோயில் விரும்பியதே

விளக்கம்:

கழல் பந்து அம்மானை முற்றில் ஆகியவை சிறுமியர்கள் ஆடும் விளையாட்டுகள்; பல சங்க இலக்கியங்களில் இந்த விளையாட்டுகள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றன. கழல் என்பது கழங்கு என்றும் அழைக்கப்படுகின்றது. கழற்சிக்காய் என்று அழைக்கப்படும் வழுவழுப்பான பளிங்கு உருண்டைகள் கொண்டு ஆடப்படும் விளையாட்டு; மூன்று அல்லது ஐந்து சிறுமியர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு; முற்றில் என்பது தற்காலத்தில் பாண்டி என்று அழைக்கப்படும் விளையாட்டு போன்றது. கட்டங்கள் கட்டி ஒற்றைக்காலுடன் நொண்டி போன்று ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு தாவி விளையாடப்படும் விளையாட்டு.

பெருமான் நம்மைப் போன்று பசி தாகம் உறக்கம் தளர்ச்சி களைப்பு ஆகிய உணர்ச்சிகளால் தாக்கப்படுபவர் இல்லை. எனினும் அவர் பல இல்லங்களுக்கு பிச்சைப் பெருமானாக சென்று பலியேற்பதை குறிப்பிடும் வண்ணம் உபசார வார்த்தையாக உண்டு என்ற சொல் இங்கே கையாளப் பட்டுள்ளது. பெருமான் பலியேற்பது அவனது உணவுத் தேவைக்காக அல்ல; பக்குவப்பட்ட அடியார்களின் மலங்களைக் கழித்து அவர்களுக்கு முக்தி உலகினை பரிசாக அளிக்கும் பொருட்டே அவன் பலியேற்கின்றான். இந்த செய்தியை மிகவும் நயமாக, பல ஊர் சென்று பலி ஏற்றுக்கொண்டாலும் அதனை பெருமான் உண்டதில்லை என்று அப்பர் பிரான் ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.5) குறிப்பிடுகின்றார். மிகவும் நகைச்சுவை ததும்ப உண்டது நஞ்சு என்று கூறுவதையும் நாம் உணரலாம்.

வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்

உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்

பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளமது ஆர

அண்டனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம்,பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள்.பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான்.

பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்

நிரந்தரமாக நினையும் அடியார்

இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

பெருமான் பிச்சையாக ஏற்பது அகந்தை என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடலும் நமது நினைவுக்கு வருகின்றது. யான் எனது என்ற அகந்தை தானே அகப்பற்றுக்கும் புறப்பற்றுக்கு வழி வகுக்கின்றது எனவே அந்த பற்றுகளை நீக்குவது தானே, மலங்களை கழித்துக் கொள்வதில் முதற்படியாக இருக்க முடியும் என்ற கருத்தினை விளக்கும் பாடல். பொதுவாக பிச்சை ஏற்பவர் பெறும் பயன், பிச்சை இடுவோர் பெறுகின்ற பயனை விட அதிகமாகவே இருக்கும்.ஆனால் சிவபெருமான் பிச்சை ஏற்பது, தான் பயன் அடைவதற்காக அல்ல. அவருக்கு பிச்சை இடுவோர்கள் தங்களது அகங்காரம் (மலங்கள்) அழியப் பெற்று நலம் பெறுவதற்குத் தான். இந்த உண்மை அப்பர் பெருமானால் கீழ்க்கண்ட திருவாரூர் தலத்து பாடலில் (4.53.6) விளக்கப்படுகின்றது. பிச்சை ஏற்கும் பெருமான் உண்பது நஞ்சு என்று பாடலின் மூன்றாவது அடியில் கூறும் அப்பர் பிரான், சிவபெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும் தெளிவு படுத்துவதை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் குறிப்பிடப்படும் பிச்சை ஏற்கும் நிகழ்ச்சியை, தாருகவனத்து நிகழ்ச்சியாக கருதி, தாருகவனத்து மகளிரின் கர்வமும், பெண்மைக்குரிய இயல்புகளும் ஒழிந்து போகுமாறு, சிவபெருமான் பிச்சைப் பெருமானாக வலம் வந்தார் என்றும் விளக்கம் அளிப்பதும் பொருத்தமே. தானகம் என்ற சொல்லினை தான் அகம் என்று பிரித்து, அடியார்களது அகங்காரம் அழியும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார் என்பதை உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

வானகம் விளங்க மல்கும் வளம்கெழு மதியம் சூடித்

தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்

ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்

ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே

பல இடங்களிலும் திரிந்து பலியேற்பதை செல்வமாக பெருமான் கருதுகின்றார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வாழ்நாள் தோறும் செல்வத்தை தேடி வாழ்வதே வாழ்க்கை எனக் கொண்டு வாழும் அனைத்து மனிதர்களும் தமக்கு கிடைக்கும் செல்வத்தை மிகவும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்வதை நாம் அன்றாட வாழ்க்கையில் காண்கின்றோம். மிகவும் அதிகமான உயிர்கள் முக்தி உலகம் வந்தடைவதை விரும்பும் பெருமான்,அவ்வாறு முக்தி உலகம் செல்வதற்கு தடையாக உள்ளவை மலங்கள் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலத்தினை பிச்சையாக பெருமானின் உண்கலத்தினில் இடுவதை பெருமான் சிறந்த செல்வமாக ஏற்றுக்கொண்டு மகிழ்கின்றான். ஏனெனில் உயிர்களால் கழித்து விலக்கப்படும் மலங்கள், அந்த உயிர்கள் முக்தி உலகம் சென்றடையும் தகுதியை பெறுவதற்கு உதவுவதால், அவற்றை சிறந்த செல்வமாக பெருமான் கருதுகின்றான். இந்த கருத்தினை உணர்த்தும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.53.3) திருஞானசம்பந்தர் பெருமானை பலிகொள் செல்வர் என்று குறிப்பிடுகின்றார்.வாரி=கடல், கடல் போன்று பெருகி வந்த கங்கை நதி; மாகம்=ஆகாயம்; வைகு=பொருந்தும்; பெருமான் பலி கொள்வது வறுமை காரணமாக அல்ல என்பதை உணர்த்தும் பொருட்டு, செல்வன் என்று பெருமானை, சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்ததும் வேறு எவரிடமும் இல்லாத முக்திநிலையினை உள்ளவனை பெருஞ்செல்வன் என்று தானே அழைக்க வேண்டும். தான் ஏற்றுக்கொள்ளும் பலியை செல்வமாக பெருமான் கருதுவதால் அவனை செல்வன் என்று குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்து இருக்கும் பெருமானை தன்மையை உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அவனது பல வீரச் செயல்களையும் கருணைச் செயல்களையும் உணர்த்துகின்றார். கடல் போன்று பெருகி வந்த கங்கை ஆற்றினைத் தனது சடையில் அடக்கியதும்,விடமுடைய பாம்பின் தன்மையை மாற்றி கச்சையாக அணிந்து கொண்டதும், பிரமனின் தலையை நகத்தால் கிள்ளியதும், வலிமை வாய்ந்த யானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டதும் வீரச் செயல்கள். அழியும் நிலையில் இருந்த திங்களை சடையில் அணிந்து கொண்டு காப்பாற்றியதும், பிராட்டியைத் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்றுக் கொண்டதும், உயிர்களை உய்விக்கும் நோக்கத்துடன் உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொள்ள பலி ஏற்பதும் கருணைச் செயல்கள். மூரி=வலிமை வாய்ந்த; நாகம்=யானை; சீரிதாக=சிறப்பாக; செற்றலும்=கோபம் கொண்ட குணத்துடன்;

வாரி மாகம் வைகு திங்கள் வாளரவம் சூடி

நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன் தன் தலையில்

சீரிதாகப் பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியதோர்

மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.2.5) பெருமான் பெறுகின்ற பலியை, செல்வமே என்று குறிப்பிட்டு, பெருமான் அவற்றை செல்வமாக கருதுகின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கொல்லை=முல்லை நிலம்; குரு=நிறம்; வல்லை=விரைவு; சில்லை=சிறுமை;உழல்=திரிதல்; இந்த பாடலில் தான் ஏற்கும் பலியை சிறந்த செல்வமாக பெருமான் கருதுவது ஏன் என்ற கேள்வியை திருஞானசம்பந்தர் எழுப்புகின்றார்.உயிரின் உண்மையான விருப்பம், தன்னுடன் பிணைந்துள்ள வினைத் தொகுதிகள், மீண்டும் மீண்டும் தான் பிறப்பெடுத்து துன்பம் அடைவதற்கு வழி வகுப்பதால், இந்த வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதாகவே உள்ளது. உயிர்களை விடவும்,உயிர்கள் முக்திநிலை அடைந்து தன்னுடன் வந்து சேர்வதை, பெருமான் மிகவும் அதிகமாக விரும்புகின்றான். எனவே தான் அதற்கு வழி வகுக்கும் மலங்களற்ற நிலையினை உயிர்கள் அடைவதை பெரிதும் விரும்பும் இறைவன், தனது பிச்சைப் பாத்திரத்தில் உயிர்கள் இடும் ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களை, மிகவும் பெரிய செல்வமாக கருதுகின்றான். இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும், பலியை வேண்டிய செல்வமே என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

கொல்லை வென்ற புனத்தில் குருமாமணி கொண்டு போய்

வல்லை நுண்மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி

முல்லை வெண்முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர்

சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.41.3) அப்பர் பிரான், பெருமானை, பல் இலம் திரியும் செல்வர் என்று குறிப்பிடுகின்றார். பல் இலம் திரியும் செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது செல்வராக இருப்பினும் உலகத்தவரின் நலன் கருதி, பக்குவப்பட்ட உயிர்களுக்கு முக்தி அளிக்கும் வண்ணம், பலியேற்கின்றார் என்றும் தனக்கு கிடைக்கும் பிச்சையாக பெரிய செல்வமாக உகந்து ஏற்றுக் கொண்டு மகிழ்கின்றார் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டு விளக்கங்களும் மிகவும் பொருத்தமாக உள்ளன. கல்=மேரு மலை; மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. இலம்=இல்லம் என்பதன் திரிபு. சொல்=வேதங்கள்: வேதங்களில் காணப்படும் சொல்லாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் உள்ள தன்மை, இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.

கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே

எல்லியும் பகலும் முன்னே ஏகாந்தமாக ஏத்தும்

பல்லில் வெண்தலை கையேந்திப் பல் இலம் திரியும் செல்வர்

சொல்லு நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத்துறையனாரே

நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (5.52.1) பெருமானை பலிதிரி செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். விடம் கொண்டுள்ள தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பு நல்ல குணமுடைய நாகம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. இறைவனின் சன்னதியில் நல்லன அல்லாத பொருட்களுக்கு இடம் ஏது. கொலை வெறியுடன் தாக்க வந்த மான்கன்று, தனது கொலை வெறியை விடுத்து, துள்ளி விளையாடும் மான்குட்டியாக பெருமானின் கைகளில் திகழ்வது போல் பாம்பும் தனது கொடிய குணத்தை விட்டுவிட்டு நல்ல குணமுடைய பாம்பாக அடங்கி விடுகின்றது.சந்திரனிடம் தான் கொண்டுள்ள பகையையும் மறந்து, சந்திரனுடன் பெருமானின் சடையில் தாங்கும் பாம்பு என்று பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. நல்லான் ஆகிய பெருமானுடன் இணைந்த பாம்பு, தனது கொடிய குணத்தினை விட்டு விட்டு நல்ல குணத்துடன் திகழ்வது நமக்கு தமிழ் மூதாட்டி அவ்வையாரின், நல்லாரைக் காண்பதுவும் நன்றே என்று தொடங்கும் மூதுரை பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. பலிதிரி செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது செல்வராக இருப்பினும் உலகத்தவரின் நலன் கருதி, பக்குவப்பட்ட உயிர்களுக்கு முக்தி அளிக்கும் வண்ணம், பலியேற்கின்றார் என்றும் தனக்கு கிடைக்கும் பிச்சையாக பெரிய செல்வமாக உகந்து ஏற்றுக் கொண்டு மகிழ்கின்றார் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.இரண்டு விளக்கங்களும் மிகவும் பொருத்தமாக உள்ளன.

நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்

பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி

செல்வர் போல் திரு நாகேச்சரவரே

வேள்விக்குடி மற்றும் திருத்துருத்தி தலங்களின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.18.7) செத்தவர் தம் தலையில் பலி கொள்வ்தே செல்வமாக பெருமான் கருதுகின்றார் என்று சுந்தரர் கூறுகின்றார். சர்வ வல்லமை பொருந்திய பெருமான் பிச்சை எடுப்பதே தவறு. அவ்வாறு பிச்சைக்குச் செல்லும் போது, வேறு பாத்திரம் ஏதும் கிடைக்காதது போன்று, மண்டையோட்டினை சிறந்த செல்வமாகக் கருதி அதனைக் கையில் கொண்டு திரியும் அவனது செயல் பித்தர்களது செயலை ஒத்துள்ளது என்று கூறும் பாடல் இந்த பாடல்.

பித்தரை ஒத்து ஒரு பெற்றியர் நற்றவை என்னைப் பெற்ற

முற்றவை தம் அனை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்

செத்தவர் தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகி

அத்தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.19.7) சுந்தரர் பெருமானை பலி சென்று அகந்தோறும் திரிந்த செல்வர் என்று குறிப்பிடுகின்றார்.

தலையிடையார் பலி சென்று அகந்தோறும் திரிந்த செல்வர்

மலையுடையாள் ஒரு பாகம் வைத்தார் கல் துதைந்த நன்னீர்

அலையுடையார் சடை எட்டும் சுழல அருநடம் செய்

நிலையுடையார் உறையும் இடமாம் திருநின்றியூரே

பொழிப்புரை:

கழல் என்றும் கழங்கு என்று அழைக்கப்படும் விளையாட்டு, பந்து, அம்மானை மற்றும் முற்றில் ஆகிய விளையாட்டுகளைக் கற்றுத் தேர்ந்து விளையாடுவோரும், சிறிய இடை கொண்ட கன்னிச் சிறுமிகளும் சோலைகளில் மலிந்து திரியும் கிளிகளுக்கு சொற்களை பயிற்றுவிக்கும் காட்சிகள் நிறைந்ததும் புகலி என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி நகரினில் உறைகின்ற புண்ணியமே வடிவமாக உள்ள பெருமானே, அழகிய தாமரை மேல் உறைகின்ற பிரமனின் தலையொன்றை ஏந்திய வண்ணம் உலகெங்கும் திரிந்து பலியேற்று பக்குவப்பட்ட உயிர்கள் பிச்சையாக இடுகின்ற மலங்களை சிறந்த செல்வமாக கருதி இன்பமடையும் பெருமானே, அந்தணர்கள் புகழ்ந்து போற்றும் வண்ணம், வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.

பாடல் 3:

கன்னியர் ஆடல் கலந்து மிக்க கந்துக ஆடை கலந்து துங்கப்

பொன்னியல் மாட நெருங்கு செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே

இன்னிசை யாழ்மொழியாளோர் பாகத்து எம்மிறையே இதுவென்கொல் சொல்லாய்

மின்னிய நுண்ணிடையார் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

விளக்கம்:

கந்துகம்=பந்து; துங்க=உயர்ந்த; யாழின் இன்னிசை போன்று இனிய மொழியை உடைய பிராட்டி என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.பிராட்டியின் குரல் இனிமைக்கு, மழலை மொழி, யாழொலி, வீணையொலி, குழலொலி, கிளியின் மொழி, குயிலின் குரல், தேன், பால், கரும்பு, ஆகியவை பல திருமுறைப் பாடல்களில் ஒப்பிடப்படுகின்றன. யாழின் இசையொடு தேவியின் மொழி இனிமை ஒப்பிடப்படும் சில தேவாரப் பாட;களை நாம் இங்கே சிந்திப்போம்.

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.3) திருஞானசம்பந்தர், பிராட்டியின் மொழியை பண்ணியாழ் என முரலும் பணிமொழி என்று குறிப்பிடுகின்றார். கலி=ஆரவாரம்; கலி மறைக்காடு=அடியார்கள் மிகவும் அதிகமாக கூடுவதாலும் திருவிழாக்கள் அடிக்கடி நடப்பதாலும் ஆரவாரம் மிகுந்து காணப்படும் தலம். பண்ணியாழ்=பண்+யாழ்; இனிய பண்களை வெளிப்படுத்தும் யாழ் இசைக்கருவி; இந்த தலத்தின் அம்பிகையின் திருநாமம் யாழின் மொழியம்மை; இதனை உணர்த்தும் வண்ணம், பண்ணியாழ் என முரலும் பணிமொழி உமை என்று கூறுகின்றார். பணிமொழி=அடக்கமாக மொழிகளை பேசுபவர்; பெருமானின் திருமார்பினை பொன்மார்பு என்று குறிப்பிடுகின்றார்.

நுண்ணிதாய் வெளிதாகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில்

பண்ணி யாழ் என முரலும் பணிமொழி உமையொரு பாகன்

தண்ணிதாய வெள்ளருவி சலசல நுரைமணி ததும்பக்

கண்ணி தானுமொர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே

சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.102.6) பிராட்டியை யாழின் நேர்மொழி ஏழை என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். ஓட்டந்து=ஓட்டம் தந்து; ஆழி=கடல், இங்கே அருட்கடலாக பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது.அந்தம்=முடிவு; பிரளய வெள்ளத்தில் பூமி முழுவதும் மூழ்கிய போதிலும் சீர்காழி நகரம் மிதந்தது என்றும், பெருமான் உமையன்னையுடன், ஓம் எனப்படும் பிரணவ மந்திரத்தை தோணியாக மாற்றி, இந்த தலம் வந்தடைந்து தங்கி, மீண்டும் உலகினை படைத்தார் என்று சீர்காழி தலபுராணம் குறிப்பிடுகின்றது.அப்போது சில தேவர்கள் பறவைகளாக மாறி அந்த தோணியை சுமந்தனர் என்றும் கூறுவார்கள். ஊழி முடிவினில் பேரொலியுடன் பொங்கி வந்த கடல் அலைகள் உலகத்தினை மூடிய போது, அச்சம் கொண்டு ஓடி வந்த தேவர்கள், எந்தை பெருமானே, கருணைக் கடலே நீர் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று பெருமானிடம் சரண் அடைந்தனர். அப்போது பெருமான், அந்த ஊழி வெள்ளத்திலும் உயர்ந்து நிற்கும் வண்ணம், சீர்காழி நகரத்தினை உயரச் செய்தார். அந்த தலத்தினை பிரணவ மந்திரமாகிய தோணியில் பெருமானும் பிராட்டியும் அமர்ந்து சென்றடைந்த போது தேவர்கள் பறவைகள் வடிவில், அந்த தோணியுடன் சீர்காழி புகுந்தனர். யாழைப் போன்று இனிய மொழியினை உடைய பிராட்டியுடன் இனிதாக அமர்ந்துள்ள பெருமான், இன்பமே வடிவமாக உள்ளார். அத்தகைய பெருமானார் வாழும் சிரபுரம் நகர் சென்றடைந்து பெருமானைத் தொழுதெழும் அடியார்களை கொடிய வினைகள் அணுகா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஊழி அந்தத்தின் ஒலி கடல் ஓட்டந்து இவ்வுலகங்கள் அவை மூட

ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார் தாம்

யாழின் நேர் மொழி ஏழையோடு இனிதுறை இன்பன் எம் பெருமானார்

வாழி மாநகர்ச் சிரபுரம் தொழ வல்வினை அடையாவே

வெண்டுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.61.6) திருஞானசம்பந்தர் தேவியை யாழின்மொழி உமையாள் என்று குறிப்பிடுகின்றார்.ஒவ்வொரு ஊழியிலும், உலகில் உள்ள அனைத்துப் பொருட்கள் மற்றும் உயிர்களுடன் இணைந்து அவற்றை இயக்கும் பெருமான் என்ற கருத்து, ஊழிகளாய் உலகாய் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. போழிள=பிளவு பட்ட; மருப்பு=கொம்பு, இங்கே யானைத் தந்தம்; உணர்வரியான்=உணர்வதற்கு அரியவன்;

ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வரியான்

போழிள வெண்மதியும் புனலும் அணி புன் சடையான்

யாழின் மொழி உமையாள் வெருவவ் வெழில் வெண்மருப்பின்

வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.67.10) திருஞானசம்பந்தர், பிராட்டியின் மொழி இனிமையை உணர்த்தும் வகையில் பிராட்டியை யாழின் மொழி ஏழை என்று குறிப்பிடுகின்றார். பெருமானுடன் நடந்த நடனப் போட்டியில் தோற்ற காளியன்னை பெருமானை பணிந்து வணங்கியதால் சீர்காழி என்ற பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். தாருகனைக் கொன்ற காளியம்மையின் கோபம் தணியாத நிலையில் பெருமான் காளியுடன் நடனப் போட்டியில் பங்கெடுத்து அவளை வென்று அவளது கோபம் தணிந்த பின்னர், பெருமானை காளி வழிபட்டு தனது தவறினை பொறுத்து அருளுமாறு வேண்டிய சரித்திரம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. தாழும் இடம்=விரும்பி தங்கும் இடம்; சமணர்கள் தங்கும் இடங்களுக்கு பாழி என்று பெயர். வேழம்=யானை போன்று பருத்த உடல் உள்ளவர்கள் என்ற பொருளில் வந்தது. சூழும்=கூட்டமாக: சித்தன்னவாசல் செல்லும் வழியில் உள்ள குன்றுகளில் சமணப் படுக்கைகள் இருப்பதை இன்றும் நாம் காணலாம். ஒரே இடத்தில் கல்லினை குடைந்து தலையினை வைத்துக் கொள்வதற்கு சற்று உயரமாக உள்ள அமைப்பில் படுக்கைகள் போன்று சுமார் பத்து படுக்கைகள் இருப்பதை நாம் காணலாம். இதிலிருந்து கூட்டமாக சமண குருமார்கள் தங்கினார்கள் என்பது நமக்கு புலப்படுகின்றது. பொதுவாக உடல் வலிமையில் ஆணை விடவும் குறைந்தவர்களாக பெண்கள் இருப்பதால் பெண்களை ஏழை என்று அழைப்பது இலக்கிய மரபு. ஏழை=பெண்ணாகிய பார்வதி தேவி; உணரா=உணராத; வளர்=புகழ் பெருக;கீழுலகு=பூமி; மேலுலகு=தேவர்களின் உலகம்; ஆழிய=ஆழ்ந்த, தோற்ற; சில்காழி=சில வரிசைகளை உடைய மேகலை அணி

பாழி உறை வேழ நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா

ஏழின் இசை யாழின் மொழி ஏழையவள் வாழும் இறை தாழும் இடமாம்

கீழ் இசை கொள் மேல் உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு

ஆழிய சில் காழி செய ஏழுலகில் ஊழி வளர் காழிநகரே

சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.3) திருஞானசம்பந்தர் பிராட்டியின் மொழியை யாழின் மொழி என்று குறிப்பிடுகின்றார். திருஞான சம்பந்தர் இந்த பாடலில் பிராட்டியின் கண்களின் அழகினை, மாவடு போன்று கண்கள் என்று குறிப்பிடுகின்றார்.பெண்களின் கண்களுக்கு மாவடுவினை உவமையாக சொல்வது இலக்கிய வழக்கு; போழும்=பிளந்த, வட்டத்தின் ஒரு பகுதியாக பிளந்த சந்திரன்;தாழுநதி=தாழ்ந்து கீழே பாய்ந்து இறங்கிய கங்கை நதி; பொங்கரவு=சீறும் பாம்பு; புன்சடை=செம்பட்டை நிறத்தில் உள்ள சடை; புரி=முறுக்கிய;மாழை=மாவடு; தாழை முகிழ்=தாழையின் மொக்கு; ஞாழல்=புலிநகக் கொன்றை; மன்னு=நிலையாக விளங்கும்; புனை=புன்னை மரங்கள்; மாடு=அருகே;வுந்துதகு= தலையில் சூட்டிக் கொள்ளாமல் அலட்சியம் செய்யும்; ஏழை=தனியாக தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இறைவனது எண்ணங்களை செயல்படுத்தும்; தாழுநதி என்ற சொல் தண்ணீரின் தன்மையை, மேடான இடத்தில் நில்லாமல் கீழே பாயும் தன்மையை உணர்த்துவதாகவும் பொருள் கூறுவார்கள். உயர்ந்த சடையில் தேக்கிவைக்கப் பட்ட கங்கை நதி கீழே வாராமல் நிறுத்திய பெருமானின் வல்லமை மலைப்புக்கு உரியது.

போழு மதி தாழு நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன்

யாழின் மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதி தான்

வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடலார்

தாழை முகிழ் வேழ மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே

விளமர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.88.5) திருஞானசம்பந்தர் பிராட்டியின் மொழியை, பண்டலை மழலை செய் யாழென மொழி என்று கூறுகின்றார். பண்டலை=பண்+தலை, பண்ணோடு கூடிய என்று பொருள். மழலை=இனிமை; அலை=அசைகின்ற; அலை குரை கழல்= அசைவதால் ஒலி எழுப்பும்; விண்டலை=விண்+தலை, விண்ணின் இடத்தில்; விறல்=ஆற்றல், வல்லமை, திறமை; விமலர்=இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர்;

பண்டலை மழலை செய் யாழென மொழி உமை பாகமாக்

கொண்டலை குரை கழலடி தொழும் அவர் வினை குறுகிலர்

விண்டலை அமரர்கள் துதி செய அருள் புரி விறலினர்

வெண்டலை பலிகொளும் விமலர் தம் வளநகர் விளமரே

சுண்ணவெண் சந்தன என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.2.9) அப்பர் பிரான், தேவியை யாழின் மொழி மங்கை என்று குறிப்பிடுகின்றார். கீள்=அரை ஞாண் கயிறு. துணியிலிருந்து கிழிக்கப்படுவதால் கீழ் என்று அழைக்கப்படுவது. இங்கே கீள் என்று மருவிவிட்டது. சம்பந்தப் பெருமான் தனது கோலக்காத் திருப்பதிகத்தில் கீள் என்று குறிப்பிடுவது இங்கே நினவுறத் தக்கது. இந்தப் பாடலில் சிவபிரான் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை உரித்த செயல் குறிப்பிடப்பட்டுள்ளது. மலை போன்ற யானை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தனது அடியார்களுக்காக எதனையும் செய்யவல்ல சிவபிரானின் வல்லமை இந்த தொடர் மூலம் குறிப்பிடப்பட்டு, இந்த குறிப்பு மூலம் தன்னைத் தாக்க வரும் யானைக்கு, அப்பர் பிரான் ஓர் எச்சரிக்கை விடுப்பதை நாம் உணரலாம். இந்த பாடல், சமணர்களின் சூழ்ச்சியால் மதிமயங்கிய பல்லவ மன்னனின் ஆணையின் படி, மதயானை அப்பர் பிரானின் தலையை இடறித்தள்ள ஏவப்பட்ட போது அருளிய பதிகத்தின் பாடல்.

சூழும் அரவத் துகிலும் துகில் கிழி கோவணக் கீளும்

யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அருவரை போன்ற

வேழம் உரித்த நிலையம் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்த

தாழும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

திருமறைக்காடு தலத்தின் தேவிக்கு யாழைப் பழித்தன்ன மொழி மங்கை என்ற திருநாமம். இந்த திருநாமத்தை சுந்தரர் அந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.71.1) குறிப்பிடுகின்றார். பேழை என்றால் பெரிய என்று பொருள். பூழை என்றால் துவாரம் என்று பொருள். கூழை என்பதற்கு பல பொருள்கள் உண்டு. இந்த இடத்தில் குள்ளமான என்று பொருள் கொள்ளவேண்டும். கங்கையை மறைத்து வைத்த மணாளன் இருக்கும் இடத்தில், தான் உண்ணுவதை பிறர் அறியாமல் மறைத்து சாப்பிட கற்றுக்கொண்ட குரங்குகள் வாழும் தலம் என்று நயமாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்

யாழைப் பழித்தன்ன மொழிமங்கை ஒரு பங்கன்

பேழைச் சடை முடிமேல் பிறை வைத்தான் இடம் பேணில்

தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைத்து

வாழைக்கனி கூழைக் குரங்கு உண்ணும் மறைக்காடே

உமையம்மையின் குரலை யாழுக்கு ஒப்பிட்டு மணிவாசகர் தனது திருக்கோவையார் பாடல் ஒன்றில் கூறுகின்றார். தலைவன் தலைவிக்கு தந்து அன்பினை வெளிப்படுத்தும் முகமாக ஏதாவது ஒரு பரிசினை தோழி மூலம் கொடுப்பதற்கு முயற்சி செய்ய, தலைவியின் எண்ணத்தை அறியாது பரிசுப்பொருளை ஏற்கமாட்டேன் என்று பதில் தோழி கூறுவதாக அமைந்த அகத்துறை பாடல் இது.

யாழார் மொழிமங்கை பங்கத்து இறைவன் எறிதிரை நீர்

ஏழாய் எழுபொழிலாய் இருந்தோன் நின்ற தில்லை அன்ன

சூழார் குழல் எழில் தொண்டைச் செவ்வாய் நவ்வி சொல் அறிந்தால்

தாழாது எதிர் வந்து கோடும் சிலம்ப தரும் தழையே

பொழிப்புரை:

பந்தாட்டம் விளையாடுவதை மிகவும் விரும்பும் கன்னியர்கள், அதற்குரிய ஆடைகள் அணிந்து விளையாடுகின்ற சீர்காழி நகரத்து தெருக்களில் உயர்ந்த பொன்னிறமான அழகுடன் மாட வீடுகள் விளங்குகின்றன. இவ்வாறு செல்வச் செழிப்புடன் திகழும் புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் பொருந்தி உறைகின்றவனும் புண்ணியமே வடிவமாக இருப்பவனும் ஆகிய பெருமானே, யாழின் இன்னிசை போன்று இனிய மொழியினை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனே, எமது இறைவனே, மின்னலைப் போன்று நுண்ணிய இடையினை உடைய அழகிய மகளிர் பொருந்தி வாழும் வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.

பாடல் 4:

நாகபணம் திகழ் அல்குல் மல்கு நன்னுதல் மான்விழி மங்கையோடும்

பூகவனம் பொழில் சூழ்ந்த அந்தண் புகலி நிலாவிய புண்ணியனே

ஏக பெருந்தகையாய் பெம்மான் எம்மிறையே இதுவென்கொல் சொல்லாய்

மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

விளக்கம்:

நாக பணம்=நாகத்தின் படம்; நுதல்=நெற்றி; நன்னுதல்=அழகிய நெற்றி; பூகம்=கமுகு; ஏக=ஒற்றை, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி தனிச்சிறப்புடன் விளங்கும் தன்மை; பெருந்தகை=பெருமை வாய்ந்த தகுதி; பெம்மான்=பெருமான் என்பதன் திரிபு; உரிஞ்சு=தோய்ந்த; எயில்=மதில்;

பொழிப்புரை:

படமெடுத்து ஆடும் பாம்பு போன்று விரிந்த வயிறும் அழகிய நெற்றியும் மான் போன்று மருண்ட பார்வையும் உடைய பார்வதி தேவியுடன், கமுகு மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து அழகும் குளிர்ச்சியும் பொருந்தி காணப்படுவதும் புகலி என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி தலத்தினில் உறைபவனும் புண்ணியமே வடிவமாக அமைந்தவனும் ஆகிய பெருமானே, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கும் பெருமையினை உடைய பெருமானே, எமது இறைவனே, மேகங்கள் தோயும் வண்ணம் உயர்ந்து காணப்படும் மதில்களால் சூழப்பட்ட வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.

பாடல் 5

சந்தளறு ஏறு தடங்கொள் கொங்கைத் தையலொடும் தளராத வாய்மைப்

புந்தியினால் மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே

எந்தமை ஆளுடை ஈச எம்மான் எம்மிறையே இதுவென்கொல் சொல்லாய்

வெந்த வெண்ணீறு அணிவார் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

விளக்கம்:

அளறு=சேறு; சந்தளறு=சந்தனக் குழம்பு; தடங்கொள்=அகன்று பெரிய; புந்தி=புத்தி, அறிவு; தளராத= உறுதிபாட்டுடன் பின்பற்றும்; மாற்றம் ஏதுமின்றி;இறை என்ற சொல்லுக்கு தங்குதலை உடையவன் என்று பொருள் கொண்டு, ஊழிக்காலத்தில் அனைத்து பொருட்களும் அனைத்து உடல்களும் அழிந்த பின்னரும் தான் அழியாமல் தங்கும் தன்மை உடையவன் என்று பொருள் கொள்வது சிறப்பே. தையல்=அழகுபடுத்திக் கொள்ளுதல்; அழகிய உடை மற்றும் நகைகள் அணிந்து தங்களை மேலும் அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வம் உடையவர்களாக மகளிர் இருப்பதால், மகளிரை தையல் என்று குறிப்பிடுவது இலக்கிய மரபு; வாய்மை=உண்மை, என்றும் அழியாது நிலைத்து உண்மையான தன்மையுடன் இருக்கும் மெய்ப்பொருள்; ஈசன்=தலைவன்;

பொழிப்புரை:

சந்தனக் குழம்பு பூசப்பெற்றதும் அகன்றும் பெரியதும் ஆக விளங்கும் மார்பகத்தினை உடையவளும் தன்னை அழகிய உடை மற்றும் நகைகள் கொண்டு மிகவும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொள்பவளும் ஆகிய பிராட்டியுடன், நான்மறைகளை கற்றதால் உண்மையான மெய்ப்பொருளாக விளங்கும் பெருமானை சிறிதும் தளராத மனத்துடன் என்றும் பின்பற்றும் தன்மை உடைய அந்தணர்கள் வாழும் புகலி தலத்தினில் பொருந்தி உறைபவனும் புண்ணியமே வடிவாக அமைந்தவனும் ஆகிய பெருமானே, எம் அனைவரையும் ஆட்கொண்டு அருள் புரியும் தலைவனே, ஊழிக்காலத்தில் அனைத்துப் பொருட்களும் அனைத்து உடல்களும் அழிந்த பின்னரும் அழிவின்றி தங்கும் தன்மை உடையவனே, தீயினில் வெந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் திருநீற்றினை அணிந்த அடியார்கள் வாழும் வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.

பாடல் 6

சங்கொளி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேன்மேல்

பொங்கொலி நீர் சுமந்து ஓங்கு செம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே

எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம்மிறையே இதுவென்கொல் சொல்லாய்

வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

விளக்கம்:

தரங்கம்=அலைகள்; நிரந்து=வரிசை வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக; இப்பி=முத்துச் சிப்பிகள்; செம்மை=செழிப்பு; பிரான்=வள்ளல் தன்மை உடையவன், உலகம் அனைத்தும் தனது உடைமையாக இருப்பினும், உலகப்பொருட்களை உயிர்கள் அனுபவிக்கும் வண்ணம் கொடையாக கொடுத்து அருளியவன்; வெங்கதிர்=சூரியன்;

பொழிப்புரை:

ஒளிவீசும் சங்குகள், முத்துச்சிப்பிகள், சுறா மற்றும் மகரம் ஆகிய பல்வேறு வகையான மீன்கள் ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு வரிசை வரிசையாக வருகின்ற அலைகள் நிறைந்ததால் மேன்மேலும் இடைவிடாது ஓசை எழுகின்ற கடல் நீரால் சூழப்பட்ட புகலி தலத்தில் உறைபவனும் புண்ணியமே வடிவமாக உள்ளவனும் ஆகிய பெருமானே, எங்களது தலைவனே, இமையோர்களால் போற்றப்படும் பெருமை உடைய இறைவனே, சூரியன் தோயும் உயர்ந்த சொலைகள் நிறைந்த வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.

பாடல் 7

காமன் எரிப்பிழம்பாக நோக்கிக் காம்பன தோளியொடும் கலந்து

பூமரு நான்முகன் போல்வர் ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே

ஏமவனத்து எரி ஆட்டுகந்த எம்பெருமான் இதுவென்கொல் சொல்லாய்

வீமரு தண்பொழில் சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

விளக்கம்:

காம்பு=மூங்கில்; மரு=பொருந்தி உறையும்; ஈமவனம்=சுடுகாடு; ஆட்டுகந்த=நின்று ஆடுவதை விரும்பும்; வீ=மலர்கள்; காமனை எரித்தழித்த பெருமான் பிராட்டியுடன் கலந்து நிற்கும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. உலகத்து உயிர்கள் தமது துணையுடன் கலந்து இருக்கும் தன்மை காமத்தால் விளைவது. இறைவன் பிராட்டியுடன் கலந்து இருப்பது, உயிர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து உயிர்கள் போகத்தை அனுபவிக்கத் தூண்டுவதற்கே என்பதை நாம் புர்ந்து கொள்ளவேண்டும்.

ஏன் பற்றற்றவனாக இருக்கும் பெருமான் இவ்வாறு தேவியுடன் எப்போதும் இணைந்து இருப்பவராக காட்சி தருகின்றார் என்ற நமது ஐயத்தினை போக்கும் வண்ணம், திருச்சாழல் பதிகத்தினில் மணிவாசகர் ஒரு பாடலை அருளியுள்ளார். அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுவார். இதே கருத்து திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகரால் உணர்த்தப் படுவதையும் நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.பெருமான் பெண்ணைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டிராவிடில் உலகத்து உயிர்கள் எல்லாம் துறவு மேற்கொண்டு யோகத்தில் புகுவர்; அதனால் உலகம் வளராது நிற்கும். எனவே போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோற்றத்தை நமக்கு பெருமான் நல்குகின்றான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும்.

தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்

பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி

பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்

விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும்.இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்வதற்கு தேவைப்படும் உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும்.எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான், உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும். இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலில் உணர்த்தப் படுகின்றது.

இல்லறமும் துறவும் ஒன்றுக்கொன்று எதிரான நெறிகள், முரண்பட்ட நெறிகள் என்று பலரும் சொல்வதால் எவ்வாறு, இந்த இரண்டு கோலங்களும் இணைந்தவராக பெருமான் இருக்க முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழுவது இயற்கையே. இயல்பாகவே ஐந்து புலன்களையும் அடக்கி வென்ற பெருமானுக்கு இல்லறம் துறவறம் இரண்டையும் ஒன்றாக கடைப்பிடிப்பது எளிதான காரியம் தானே. இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.

மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம் திங்களை முடிமேல்

கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை

அங்கை ஓடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள் கடலே

இதே கருத்து சம்பந்தர் அருளிய வலிவலம் பதிகத்தின் பாடல் ஒன்றில் (1.123..6) உணர்த்தப் படுகின்றது. விரவது=கலப்பது இந்த பாடலில் பெருமான் உமை அன்னையுடன் கூடி இருப்பது போன்று தோற்றம் தருவது, நிலவுலகம் மற்றுமுள்ள பல உலகங்களில் வாழும் உயிர்களில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புணர்ந்து தத்தம் இனங்களைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை முன்னிட்டே என்று சம்பந்தர் கூறுகின்றார்.

தரை முதலினில் உயிர் புணர் தகை மிக

விரை மலி குழல் உமையொடு விரவது செய்து

நரை திரை கெடு தகை அது அருளினன் எழில்

வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே

இதே கருத்தினை அப்பர் பெருமானும் திருவீழிமிழலைப் பதிகத்தின் (6.50.3) மூன்றாவது பாடலில், நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். இமவானின் மகளாகப் பிறந்த உமையம்மை, பெருமானை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் புரிந்த தவத்தின் தன்மையை, முதியவராய் சிவபெருமான், அளக்கச் சென்ற நிகழ்ச்சியும் இங்கே உணர்த்தப்படுகின்றது.

அன்றாலின் கீழ் இருந்தங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட

நின்றானைக் கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்

வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்றுச்

சென்றானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

பொழிப்புரை:

தான் செய்து கொண்டிருந்த தவத்தைத் கலைப்பதற்கு முயற்சி செய்த மன்மதனின் உடல் எரிந்து அழியும் வண்ணம் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அடர்ந்த தீச்சுடர்களை வெளிப்படுத்தி மன்மதனை நோக்கிய பெருமான், கணுக்களுக்கு இடையே உள்ள மூங்கில் போன்று மிருதுவான அழகுடன் விளங்கும் தோள்களை உடைய பார்வதி தேவியுடன் உடனாக, சிறந்த தாமரை மீது அமரும் நான்முகன் போன்று வேதங்களில் தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் புகழ்ந்து போற்றும் வண்ணம் புகலி தலத்தில் புண்ணியமே வடிவமாக உறைபவனே, அனைத்து உலகப்பொருட்களும் எரிந்து அழிந்த நிலையில் உலகமே ஒரு சுடுகாடாக காட்சி அளிக்கும் பிரளய காலத்தில் ஊழித் தீயினில் நடனமாடுபவனே, எமது பெருமானே, மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.

பாடல் 8

இலங்கையர் வேந்து எழில் வாய்ந்த திண்டோள் இற்று அலரவ் விரல் ஒற்றி ஐந்து

புலங்களைக் கட்டவ்வர் போற்ற அந்தண் புகலி நிலாவிய புண்ணியனே

இலங்கெரி ஏந்தி நின்று எல்லியாடு எம்மிறையே இதுவென்கொல் சொல்லாய்

விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

விளக்கம்:

இற்று=ஒடிந்து; ஒற்றி=ஒற்றுவது போன்று அதிகமான அழுத்தம் ஏதும் தாராமல் தொடுதல்; கட்டவர்=கட்டியது போன்று புலன்களை செயலறச் செய்தல்;அந்தண்=அழகும் குளிர்ச்சியும் உடைய; இலங்கு=விளங்கும்; எல்லி=இரவு, பிரளய காலம் என்று பொருள் கொள்ளவேண்டும். சூரியன், சந்திரன், தாரகைகள் உட்பட வெளிச்சம் தருகின்ற அனைத்துப் பொருட்களும் அழிந்த நிலை; விலங்கல்=மலை; ஒண்=ஒளி பொருந்திய; தனது புலன்களை அடக்கும் வழியை அறியாமல் காமவேட்கையுடன் திரிந்த அரக்கன் இராவணனை முதல் அடியில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், புலன்களை அடக்கும் ஆற்றல் வாய்ந்த முனிவர்களை அடுத்த அடியில் குறிப்பிடுகின்றார். அதிகமான அழுத்தம் தாராமல், சிறிதே அழுத்தம் கொடுத்து தனது கால் பெருவிரலை கயிலை மலை மீது பெருமான் ஊன்றினார் என்ற செய்தி, நமக்கு சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலை (1.74.8) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பாடலில் அரக்கனின் உடலும் முடியும் நெரிய பெருமான் சிறிதே ஊன்றினார் என்று கூறுகின்றார்.

விண் தான் அதிர வியனார் கயிலை வேரோடு எடுத்தான் தன்

திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய

புண் தான் ஒழிய அருள் செய்தான் புறவம் பதியாக

எண் தோளுடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

சிறிதே ஊன்றினான் என்று சம்பந்தர் சொல்வது, அப்பர் பிரான் திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பாடல்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில் (4.47) அப்பர் பிரான், இறைவன் சற்றே தனது கால்விரலின் அழுத்தத்தை கூட்டியிருந்தால், எவரும் அரக்கன் இராவணனை மீண்டும் காணும் வாய்ப்பே இருந்திருக்காது என்று கூறுகின்றார். களித்தவன்=கயிலை மலையினை தான் பேர்த்து எடுக்கப் போகின்றோம் என்ற எண்ணத்தில் மிகுந்த மனக் களிப்புடன்; நெளித்தவன்=உடலினை வளைத்துக் கொண்டும் நெளித்துக் கொண்டும்; நேரிழை=அன்னை பார்வதி;வெளித்தவன்=அடியார்க்கு தன்னை மறைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக காட்சி அளிப்பவன்; மளித்து=மீண்டும் மீண்டும்

களித்தவன் கண் சிவந்து கயிலை நன்மலையை ஓடி

நெளித்தவன் எடுத்திடலும் நேரிழை அஞ்ச நோக்கி

வெளித்தவன் ஊன்றி இட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்

மளித்து இறை ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை தானே

பொழிப்புரை:

இலங்கைத் தீவுக்கு வேந்தனாகிய அரக்கன் இராவணனின் அழகியதும் திண்மை வாய்ந்ததும் ஆகிய தோள்களும் ஒடிந்து, வேதனையால் அரக்கன் அலறும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஒற்றி அரக்கனை கயிலாய மலையின் கீழே அமுக்கியவன் சிவபெருமான். தங்களது ஐந்து புலன்களால் பெறுகின்ற இன்பத்தின் பால் நாட்டம் கொள்ளாது, அந்த புலன்களை செயல்படவிடாமல் கட்டி அடக்கும் ஆற்றல் கொண்ட துறவியர்கள் போற்றும் வண்ணம், குளிர்ந்தும் அழகாகவும் காணப்படும் புகலி தலத்தினில் பொருந்தி உறைகின்றவனும் புண்ணியமே வடிவமாகக் கொண்டவனும் ஆகிய பெருமானே, ஒளிவீசும் தீப்பிழம்பைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பிரளய காலத்து இருளில் அனைத்து உடல்களும் அழிந்து சுடுகாடாக காணப்படும் உலகினில் நடனமாடும் பெருமானே, எமது இறைவனே, மலை போன்று பெரியதும் ஒளி வீசுவதும் ஆகிய மாளிகைகள் நிறைந்த வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது,எமக்கு சொல்வீராக.

பாடல் 9

செறி முளரித் தவிசு ஏறியாறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றைப்

பொறி அரவத்து அணையானும் காணாப் புகலி நிலாவிய புண்ணியனே

எறி மழுவோடு இளமான் கையின்றி இருந்த பிரான் இதுவென்கொல் சொல்லாய்

வெறிகமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

விளக்கம்:

சீர்காழித் திருக்கோயிலின் தரைத் தளத்தில் நாம் பிரமபுரீசுவரர் சன்னதியை காண்கின்றோம். கட்டு மலை என்று சொல்லப்படும் முதல் தளத்தில் உமா மகேசுவரர் சன்னதியையும் அதற்கு மேலே சென்றால் பைரவர் சன்னதியையும் நாம் காணலாம். பிரளயத்திலும் அழியாமல் இருந்த தன்மை குறித்து தோணிபுரம் என்று இந்த தலம் அழைக்கப்படுகின்றது. இந்த சன்னதியில் நாம் பெருமானை மானும் மழுவும் இன்றி காணலாம். பிரளயம் முடிந்து மீண்டும் உலகங்கள் படைக்கப்பட்ட போது காட்சி அளித்த தலம் என்பதால், மானும் மழுவும் இன்றி பெருமான் காணப்படுகின்றார். பிரளயம் முடிந்து மீண்டும் உலகம் படைக்கப்பட்டு சில ஆண்டுகள் கழிந்த பின்னர் தானே, தாருகவனத்து திருவிளையாடல்கள் நடந்தேறின என்பதால், இந்த உமா மகேசுவரர் சன்னதியில் பெருமானின் கைகளில் மானும் மழுவும் இல்லை. இத்தகைய காழிக் கோலம் வீழிமிழலை விமானத்தில் பெருமான் தோற்றுவித்தது அதிசயம் தானே. இந்த அதிசயம் நடந்ததற்கு அகச்சான்றாக இந்த பாடல் திகழ்கின்றது. செறி=அடர்ந்த, செழிப்புடன் வளர்ந்த; முளரி=தாமரை, தவிசு=ஆசனம், இருக்கை;ஆறும்=ஆறு வகைக் குற்றங்கள், காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறு குற்றங்களும் உயிரின் உட்பகையாக கருதப் படுகின்றன. செற்றி=அடக்கி, வெற்றி கொண்ட, ஆறும் செற்று செறிமுளரித்தவிசு ஏறி அதில் என்று மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும். பொறி அரவம்=உடலில் புள்ளிகள் கொண்டுள்ள பாம்பு; அணை=படுக்கை; அரவு அணையான்=பாம்பினைத் தனது படுக்கையாகக் கொண்டவன்; வெறி கமழ்=நறுமணம் கமழ்கின்ற; பூம்பொழில்=அழகிய சோலைகள்;

பொழிப்புரை:

நறுமணம் நிறைந்ததும், செழிப்புடன் வளர்ந்ததும் ஆகிய தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்டவனும் உயிரின் உட்பகைகளாக கருதப்படும் ஆறு குற்றங்களை (காமம், குரோதம், மோகம், உலோபம், மதம் மாற்சரியம்) களைந்தவனும் ஆகிய பிரமனும், தனது உடலில் புள்ளிகள் கொண்ட பாம்பினை படுக்கையாக உடைய திருமாலும் காண முடியாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவனே, புகலி தலத்தினில் பொருந்தி உறைகின்ற பெருமானே,புண்ணியமே வடிவமாக உள்ளவனே, மான் கன்றும் மழு ஆயுதமும் ஏந்தாத கைகளை உடையவனாக, சீர்காழி தலத்தினில் காணப்படும் திருக்கோலத்தில்,நறுமணம் கமழும் அழகிய சோலைகளால் சூழப்பட்ட வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.

பாடல் 10

பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அதன்றியும் பல்சமணும்

புத்தரும் நின்று அலர் தூற்ற அந்தண் புகலி நிலாவிய புண்ணியனே

எத்தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம்பெருமான் இதுவென்கொல் சொல்லாய்

வித்தகர் வாழ்பொழில் சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

விளக்கம்:

பான்மை=தன்மை; பெருமானின் அடியார்கள் பெருமானின் செயல்களின் பின்னணியில் அமைந்துள்ள அவனது கருணையை புர்ந்து கொள்வதால் பெருமானைப் புகழ்ந்து போற்றுகின்றனர். ஆனால் பல வகையான சமணர்களும் புத்தர்களும் பெருமானின் செய்கைகளின் பின்னணியில் உள்ள கருத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் அவனை பழிக்கின்றனர். இந்த வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம் பத்தர்கள் பெருமானை போற்றுகின்றனர் என்றும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் இறைவன் மீது ஆதாரமற்ற பழிச்சொற்களை கூறுகின்றனர் என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அலர்=வீண்பழிச் சொற்கள்; கணம்=குழுக்கள்;

பொழிப்புரை:

பெருமானை சரியாக புரிந்து கொண்ட அடியார்கள் பெருமானைப் புகழ்ந்து வணங்குகின்றனர். பெருமானின் தன்மையை புரிந்து கொள்ளாத சமணர்கள் மற்றும் புத்தர்கள் வீண்பழியை சொல்லி பெருமானை தூற்றிகின்றனர். இவ்வாறு ஒரு தரப்பினரின் போற்றுதலையும் மற்றொரு தரப்பினரின் தூற்றுதலையும் ஏற்றுக்கொண்டு அழகும் குளிர்ச்சியும் பொருந்திய புகலி தலத்தினில் பொருந்தி உறைகின்ற பெருமானே, புண்ணியமே வடிவமாக உள்ளவனே, பல வகையான தவத்தினை மேற்கொள்வோர்க்கும் அவர்கள் வழிபடும் இலக்காக இருக்கும் பெருமானே, பெருமைக்கு உரிய எங்களது தலைவனே, சதுரப்பாடு உடைய அறிஞர்கள் வாழ்வதும் அழகிய சோலைகளால் சூழப்பட்டதும் ஆகிய வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.

பாடல் 11

விண்ணிழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இதென்று சொல்லிப்

புன்ணியனைப் புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி

நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன

பண்ணியல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே

விளக்கம்:

திருஞானசம்பந்தர் இந்த பதிகம் பாடுவதற்கு முன்னர், வீழிமிழலை விமானத்தில் காழி நகரத்து திருக்கோயிலில் உள்ள கோலத்துடன் பெருமான் எவருக்கும் காட்சி தரவில்லை. சீர்காழி தலத்தின் கோலத்தை ஆங்கு செல்லாமல் வீழிமிழலை தலத்திலேயே திருஞானசம்பந்தர் கண்டு களிக்கலாம் என்பதை கனவினில் உணர்த்தியதை நனவாக்கிய இறைவனின் செயலை வித்தகம் என்று குறிப்பிட்டு திருஞானசம்பந்தர் தனது வியப்பையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றார். சீர்காழி தலத்து அந்தணர்கள் வீழிமிழலை வந்த போது, சீர்காழி பெருமானை திருஞானசம்பந்தர் தரிசனம் செய்து பல மாதங்கள் கழிந்து விட்டனவே என்று தங்களது கவலையை தெரிவித்தனர் போலும். அத்தகைய கவலை எவருக்கும் வேண்டாம் என்று உணர்த்தும் முகமாக பெருமான் செய்த திருவிளையாடல் போலும். தனது பதிகத்தின் கடைப் பாடல்களில் திருஞானசம்பந்தர் தமிழ் விரகன் என்றும் நான்மறை ஞானசம்பந்தன் என்றும் சொல்லிக் கொள்வதை நாம் காண்கின்றோம். ஆனால் எந்த பாடலிலும் இல்லாத வகையில் இந்த பாடலில் நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுவதை நாம் காண்கின்றோம். இந்த அடைமொழிகளை, தன்னுள் இருந்து தனதுரையாக பாடல்களை இறைவன் பாடவைத்த தன்மைக்கு கொடுக்கப்ப்ட்ட அடைமொழிகள் என்று தருமபுர ஆதீனக்குறிப்பு உணர்த்துகின்றது.

பொழிப்புரை:

திருமாலால் விண்ணிலிருந்து கொண்டுவரப்பட்ட சிறப்பான விமானத்தில், சீர்காழி நகரத்து திருக்கோயிலில் காணப்படும் கோலத்துடன் மிகுந்த விருப்பத்துடன் பொருந்தி உறையும் வித்தகச் செயலின் காரணம் யாது என்று வியப்புடன் பெருமானை, அடியேன் புகழ்கின்றேன். இவ்வாறு புகலி தலத்தினில் புண்ணியமே வடிவமாக அழகிய இளங்கொடி போன்ற பார்வதி தேவியுடன் உறைகின்ற பெருமானைப் போற்றி, சிறந்த புகழினை உடையவனும் நலம் பயக்கின்ற நூலறிவு உடையவனும் நான்மறைகளில் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் இயற்றிய பாடல்களை, முறையான இசையுடன் பாடும் வல்லமை பெற்றவர்கள் நிலவுலகத்தையும் விண்ணுலகத்தையும் ஆளும் சிறப்பினை உடையவர்கள் ஆவார்கள்.

மைம்மரு பூங்குழல் (Maimmaru Poonguzhal) is a poetic description found in Tamil devotional literature and classical poetry, often used to describe the beauty and grace of Goddess Parvati or Devi. Let's break down the phrase:

மை: Refers to black or dark kohl, symbolizing the dark, lustrous quality of hair.

மரு: Denotes something that is dense or thick.

பூங்குழல்: "Poonkuzhal" refers to beautiful, flower-like hair or tresses.

Full Meaning:

"மைம்மரு பூங்குழல்" describes someone who has thick, dark, and beautiful hair, often compared to flowers in its grace and softness. It is a poetic way of praising the divine feminine beauty, typically associated with Goddess Parvati, who is often described as having lustrous, flowing black hair adorned with flowers.

Context:

This type of description is commonly found in Tamil devotional hymns dedicated to Goddess Parvati, such as in Thiruvilaiyadal Puranam or Thevaram hymns. The imagery of dark, flowing hair represents her beauty, grace, and nurturing qualities as the divine mother. It also symbolizes the goddess's connection with nature, where her hair is compared to flowers, signifying purity and divinity.

In Tamil classical poetry, descriptions like "மைம்மரு பூங்குழல்" are used to capture the aesthetic charm and the divine feminine energy, which is seen as both alluring and compassionate.



Share



Was this helpful?