இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மையாடிய கண்டன்

மையாடிய கண்டன்


பதிக எண்: 1.15 திரு நெய்த்தானம் நட்டபாடை

பின்னணி:

மையாடிய கண்டன் (1.015) பின்னணி மற்றும் பாடல் 1 (திதே 0655)

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு சென்ற திருஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு பெரும்புலியூர் தலம் சென்று மண்ணுமோர் பாகம் உடையார் என்று தொடங்கும் பதிகம் பாடி இறைவன் தனது அடியார்களுக்கு செய்யும் உதவிகளை அந்த பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்டு இறைவனைப் புகழ்ந்து பாடினார். அப்போது அவருக்கு திருவையாறு தலத்திற்கு மேற்கே உள்ள தலங்கள் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எழவே, மேற்கு திசை நோக்கி செல்லலானார். அவ்வாறு செல்லும் வழியில் நெய்த்தானம் மழபாடி ஆகிய இரண்டு தலங்களுக்கும் சென்றார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பூகம்=பாக்கு மரங்கள்; குடதிசை=மேற்கு திசை;
குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு அங்கு அருள் பெற்றுக் குறிப்பினோடும்

படரு நெறி மேல் அணைவார் பரமர் திரு நெய்த்தானப் பதியில் நண்ணி
அடையும் மனம் உற வணங்கி அருந்தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும்
புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்றச் சென்றார்.
இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த ஒரு பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்கள் கிடைத்துள்ளன. மழபாடி தலம் சென்று பொன்னார் மேனியனே என்று தொடங்கும் பதிகம் பாடி பரமனைப் பணிந்த சுந்தரர், அருகிலுள்ள பல தலங்களுக்கும் சென்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். ஆனால், அப்போது அவர் நெய்த்தானம் சென்றதாக எங்கும் குறிப்பு இல்லை. திருவையாறு தலம் சென்ற போதும், சுந்தரர் அருகிலுள்ள நெய்த்தானம் தலம் சென்றதாக பெரிய புராணத்தில் குறிப்பு ஏதும் இல்லை. மேலும் நெய்த்தானம் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகம் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த தலம் திருவையாறு தலத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. தஞ்சையிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. தற்போது தில்லைஸ்தானம் என்று அழைக்கப் படுகின்றது. இறைவனின் திருநாமம், நெய்யாடியப்பர் இறைவியின் திருநாமம் பாலாம்பாள் வாலாம்பிகை. பாலாம்பிகை என்ற பெயர் வாலாம்பிகை என்று மருவியிருக்கலாம் என்று தோன்றுகின்றது. அப்பர் பிரான் பாலாம்பிகை என்ற பெயரினை அழகாக இளமங்கை என்று தனது பதிகத்தினில் குறிப்பிடுகின்றார். தெய்வீகப் பசு காமதேனு நெய் கொண்டு பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதால் நெய்த்தானம் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். முன்னொரு காலத்தில் பசு ஒன்று தினமும் இந்த தலத்தின் ஒரு இடத்தில் பால் பொழிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இவ்வாறு பொழியப்படும் பால், வெய்யிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் நெய்யாக மாறியது. ஒரு நாள் மறைந்திருந்து ஒரு இடையன் பசு பால் சொரிவதைப் பார்த்த போது, அந்த பசு மறைந்து விட்டது. அப்போது அவனுக்கு தினமும் பால் சொரிந்து சென்ற பசு தெய்வீக பசுவாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. ஊர் மக்களிடம் சொல்ல, அனைவரும் சேர்ந்து அந்த இடத்தினைத் தோண்டி பார்த்த போது, ஒரு இலிங்கம் புதையுண்டு இருந்ததைக் கண்டு வியப்பு எய்தினார். விவரமறிந்த மன்னன், அந்த இடத்திற்கு வந்து ஒரு கோயில் கட்டி, இறைவனை நெய்யினால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினான் என்று கூறுகின்றனர்.

ஐந்து நிலை கொண்ட உயர்ந்த இராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. கௌதம முனிவர் பிருகு முனிவர், கௌசிக முனிவர், சரஸ்வதி தேவி, இலங்கை வேந்தன் கஜபாஹு ஆகியோர் வழிபட்ட தலம். பிராகாரத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள நடராஜ சபையில், அம்பிகை பெருமானின் ஆடலுக்கு ஏற்ப தாளம் இடுவதையும், மணிவாசகர் தியானத்தில் ஆழ்ந்து இருப்பதையும் காணலாம். அதனை அடுத்து, சப்த லிங்கங்கள், கால பைரவர், சந்திரன் ஆகியோரை காணலாம். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோரை காணலாம். தென்முகக்கடவுள் ஒன்றன்பின் ஒன்றாக அமர்ந்த கோலத்திலும் நின்ற கோலத்திலும் இருப்பதை காணலாம். வட்ட வடிவமான பீடத்தில், சற்று உயரமான பாணத்துடன் அமைந்துள்ள அழகிய இலிங்கம். சுயம்பு இலிங்கம். பரமனை நெய்யால் நீராட்டிய பின்னர் வெந்நீரால் நீராட்டுவதையும் நாம் இங்கே காணலாம். அம்பாள் சன்னதி தனிக்கோயிலாக தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நான்கு கரங்களுடன், பாசமும் அங்குசமும் ஏந்தி, அபயகரம் காட்டும் அம்பிகை, தனது ஒரு கையினை தொடை மீது படும் வண்ணம் வைத்திருப்பதை காணலாம். அம்பிகை சிலை ஒரே கல்லால் செய்யப்பட்டது என்று கூறுவார்கள். பிராகாரத்தின் கிழக்கு பகுதியில் சூரியன் ஆதி விநாயகர் சன்னதிகள் உள்ளன. தென்மேற்கு பகுதியில் முருகப் பெருமானின் ஆறு படைவீடுகள் சித்திரமாக தீட்டப் பட்டுள்ளன. தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னதி, மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வயானை சமேத முருகர் சன்னதி, அடுத்து சனி பகவான், நாக கன்னிகைகள் மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. முருகப் பெருமானை ஒரு முகத்துடன் நான்கு கரங்களுடன் காணலாம். தூண்களில் உள்ள சிங்க உருவங்கள், பல்லவ மன்னர்களின் தொடர்பை உறுதிப் படுத்துகின்றன. பல சோழ மன்னர்கள் திருப்பணி செய்த தலம். இந்த தலத்து இறைவனை நெய் கொண்டு நீராட்டும் அடியார்கள், இருதய நோயிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்று நம்பப் படுகின்றது. பெருமானை நெய்யால் நீராட்டிய பின்னர், வெந்நீர் கொண்டு ஒரு முறை நீராட்டுகின்றனர். சோழர் காலத்து புலவர்கள், புகழேந்தி மற்றும் ஒட்டக்கூத்தர் இந்த தலத்தை குறிப்பிட்டு பாடல்கள் இயற்றியுள்ளனர். இலங்கை மன்னன் கஜபாகு இந்த தலத்து பெருமானை குலதெய்வமாக கருதி வழிபட்டதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இருதய சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் வழிபட்டு பலனடையும் தலமாக கருதப் படுகின்றது.

பாடல் 1;

மையாடிய கண்டன் மலைமகள் பாகமது உடையான்
கையாடிய கேடில் கரி உரி மூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம் மலர் நயனத்தவளோடும்
நெய்யாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே

விளக்கம்:
மை=கருமை நிறம் கொண்ட விடம்; ஆடிய=பொருந்திய; கை=துதிக்கை; கையாடிய=யானை நிற்கும் நிலையில், நடக்கும் நிலையில் எப்போதும் தனது துதிக்கையை ஆட்டியவாறே இருக்கும். அந்த தன்மையை குறிப்பிடும் பொருட்டு கையாடிய கரி என்று கூறுகின்றார். கரி=ஆண் யானை; கேடில்=அழிவற்ற புகழினைப் பெற்ற; இறைவனை எதிர்த்து வந்து இறைவனால் தனது உடலின் தோல் கிழிக்கப் பட்டமையால், தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானை அழிவற்ற புகழினைப் பெற்றது. செய்=வயல்; செய்யாடிய=வயல்களில் முளைத்த; நெய்யாடியப்பர் என்ற பெருமானின் திருநாமம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. கண்டம் என்பது வடமொழிச் சொல். கழுத்து என்று பொருள். கண்டம் உடையவன் கண்டன் என்று அழைக்கப் படுகின்றான். சில தேவாரப் பாடல்களில் மிடறு என்று பெருமானின் கழுத்தினை குறிப்பிடும் மூவர் பெருமானார்கள், பல பாடல்களில் பெருமானின் கழுத்தினை கண்டம் என்றும் பெருமானை கண்டன் என்றும் குறிப்பிடுகின்றனர். பெருமானின் கழுத்தினில், ஆலகால விடத்தினை உட்கொண்டு அந்த விடத்தினை வயிற்றுக்கு அனுப்பாமல் பெருமான் கழுத்தில் தேக்கியதால், அவரது கழுத்து கருமை நிறம் படர்ந்த கறையாக காணப் படுவதை பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. காளகண்டர் என்றும், கறைக்கண்டர் என்றும் நஞ்சுண் கண்டர் என்றும் கரிய கண்டர் என்றும் பெருமான் குறிக்கப் படுகின்றார். கருமை நிறத்தை கருநீலம் என்றும் நீலம் என்று சொல்வது இலக்கிய மரபு. இந்த மரபின் வண்ணம் பல பாடல்களில் நீல நிறம் படர்ந்த கழுத்தினை உடையவன் பெருமான் என்று சொல்வதும் வழக்கம். அத்தகைய பாடல்களை நாம் இங்கே காண்போம்.

கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.5.4) திருஞான சம்பந்தர் பெருமானை, கரிதாய கண்டன் என்று அழைக்கின்றார். இமையோர் பெருமான்=இந்திரன்; விருத்திராசுரனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, இந்திரன் பெருமானை வழிபட்டு பயன் அடைந்த தலபுராண வரலாறு இங்கே உணர்த்தப் படுகின்றது. கால்=திருவடிகள்; நுண்ணறிவு=சிவ ஞானம். தோல்=புலித்தோல், போர்வை= யானைத் தோல்; இமையோர் பெருமான் என்ற தொடர் தேவர்களுக்கு தலைவனாக சிவபெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர். துதைந்து=செறிந்து, இங்கே மிகவும் அதிகமாக பூசிக்கொண்டு என்று பொருள் கொள்ள வேண்டும். இதே பதிகத்தின் முந்தைய இரண்டு பாடல்களில் காட்டுப்பள்ளிப் பெருமானை நினைத்து உருகி வணங்கும் அடியார்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்றும், தங்களது துன்பங்களிலிருந்து விடுதலை அடைவார்கள் என்றும் உணர்த்திய திருஞான சம்பந்தர், அவ்வாறு தனது அடியார்களுக்கு உதவும் பொருட்டே, தானாகவே விருப்பம் கொண்டு இந்த தலத்தில் உறைகின்றான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, நாமும்இந்த தலத்து இறைவனைப் பணிந்து வணங்கி பயனடைய வேண்டும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. புலித்தோலை ஆடையாக உடுத்தியவனும், யானைத் தோலினை அழகிய போர்வையாக தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், வெண்மை நிறமுடைய திருநீறு மிகவும் அதிகமாக பூசப்பட்ட மார்பினில் பூணூல் பொலிந்து விளங்க தோற்றம் அளிப்பவனும், தேவர்களின் தலைவனாக விளங்குபவனும், பல அடியார்கள் சிவஞானம் கைவரப் பெற்று வணங்கிப் போற்றும் திருவடிகளை உடையவனும், தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஆலகால விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் காட்டுப்பள்ளி தலத்தின் மீது அன்பு வைத்துள்ளான். இமையாத மூன்று கண்களை உடையவனாகிய பெருமான், மின்னல் போன்று மெலிந்த இடையினை உடைய பிராட்டியுடன், உறைவதை தானாகவே விரும்புகின்றான். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு நாம் இறைவனைப் பணிந்து வணங்கி, நாம் வாழ்க்கையில் உய்வினை அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் கரிதாய கண்டன் என்று பெருமானை அழைக்கின்றார்.
தோலுடையான் வண்ணப் போர்வையினான் சுண்ண வெண்ணீறு துதைந்து இலங்கு
நூலுடையான் இமையோர் பெருமான் நுண்ணறிவால் வழிபாடு செய்யும்
காலுடையான் கரிதாய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
மேலுடையான் இமையாத முக்கண் மின்னிடையாளொடும் வேண்டினானே

இடும்பாவனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.17.9) திருஞானசம்பந்தர், பெருமானை இருளார் தரு கண்டர் என்று அழைக்கின்றார். பொருளார் தரு மறை=வாழ்க்கைக்கு தேவையான பொருள் நிறைந்த வேதங்கள்; புகழ் விருத்தர்=புகழால் பலருக்கும் மூத்தவர்கள்; தெருளார் தரு= தெளிந்த சிந்தை உடைய; சந்தம்=பல வகை நிறங்கள் கொண்ட; மருளார் தரு=தங்களின் வலிமை மீது கொண்டிருந்த செருக்கின் காரணமாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்த திருமால் மற்றும் பிரமன்; மயல்=மயங்கி நிற்றல்;
பொருளார் தரு மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்த்
தெருளார் தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய்
மருளார் தரு மாயன் அயன் காணார் மயல் எய்த
இருளார் தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.28.4) திருஞானசம்பந்தர், பெருமானை, மணிகொள் கண்டர் என்று அழைக்கின்றார். பிணி என்பதற்கு உடற்பிணி என்றும் பிறவிப்பிணி என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். உடலும் உடலில் உள்ள பல புலன்களும் தாமே, உயிரினை பலவிதத்திலும் அலைக்கழித்து, உயிர் மீண்டும் பிறப்பெடுக்கும் வண்ணம் செயல் புரிகின்றன. எனவே பிறவிப் பிணிக்கு வித்தாக அமைந்துள்ள உடல் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இந்த பிறவிப் பிணியை அறுத்து நீக்கும் வல்லமை வாய்ந்தவர் பெருமான் ஒருவர் தான் என்பதை குறிக்கும் வண்ணம், துணி கொள் போரார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். துணிகொள்=துண்டிக்கும் வல்லமை வாய்ந்த; உடலுடன் சேரும் வாழ்க்கையை ஒழித்து, பெருமானின் திருவடிகளில் சென்று சார்ந்து முக்தி நிலை அடைவதே வாழ்வின் நோக்கம் என்பதால், ஆக்கை அழிய பிறப்பு எடுத்துள்ள மனிதர்களே என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். துளங்கு=ஒளியுடன் பொலிந்து விளங்கும்; மழுவாள் ஏந்திய கையர் என்று குறிப்பிட்டு, தகுதி வாய்ந்த அடியார்களின் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுப்பதற்காக தயார் நிலையில் உள்ள இறைவன் என்பதை உணர்த்துகின்றார். உயிரினை பல வகையிலும் மயக்கித் தங்களது வழியில் உயிரினை இழுத்துச் சென்று மீண்டும்மீண்டும் இறந்து பிறக்கும் தன்மைக்கு உட்படுத்தும் புலன்கள் கொண்ட உடலுடன் சேர்ந்து வாழும் தன்மையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிறக்கும் மனிதர்களே, பிறப்பிறப்புச் சங்கிலியுடன் நீங்கள் கொண்டுள்ள தொடர்பு துண்டிக்கப்பட வேண்டும் என்று நீர் விரும்பினால், அந்த சங்கிலியைத் துண்டிக்கும் ஆற்றல் வாய்ந்தவரும், போர் செய்வதற்கு தகுந்த ஆயுதமாகிய ஒளியுடன் மிளிரும் மழுவாளினை ஏந்தியவரும், கருமையான மாணிக்கமணி பதிக்கப்பட்டது போன்று கழுத்தினை உடையவரும் ஆகிய பெருமான் பொருந்தி உறைகின்ற சோற்றுத்துறை தலத்தினை, நீண்ட பொழில்கள் நிறைந்த சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக என்பதே இதன் பொழிப்புரை.
பிணிகொள் ஆக்கை ஒழியப் பிறப்பு உளீர்
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார் பொழில்
அணிகொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே

இந்த பாடலில் பெருமானை துணிகொள் போரார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் தனது கையில் ஏந்தியுள்ள மழு ஆயுதம் தாருகவனத்து முனிவர்களால் ஏவப்பட்டது. தன் மீது ஏவப்பட்ட மழு ஆயுதத்தினை பெருமான், இலாவகமாக பிடித்து, செயலறச் செய்து தனது கையில் ஏற்றுக்கொண்டார் என்று புராணம் குறிப்பிடுகின்றது. அந்தகனை அடக்குவதற்காக மழு பைரவரால் பயன்படுத்தப் பட்டது என்ற குறிப்பினைத் தவிர, மழு ஆயுதம் பயன்படுத்தப் பட்டதாக குறிப்பு வேறெங்கும் இல்லை. அவ்வாறு இருக்கையில் மழு ஆயுதம் கொண்டு பெருமான் போரிட்டார் என்று சொல்வது ஏன் என்ற ஐயம் நமக்கு எழலாம். இந்த ஐயத்தினை போக்கும் வகையில் திருவாசகம் திருத்தசாங்கம் பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், மும்மலங்கள் பாயும் கழுக்கடை காண் கைக்கொள் படை என்று சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. அந்த போரினைப் புரியும் பெருமானை, தனது அடியார்களுடன் பிணைந்துள்ள மும்மலங்களை அறுத்தும் அடக்கியும் நீக்கும் பெருமான் புரிகின்ற போரினை செய்பவன் என்ற பொருள்பட, போரார் என்று குறிப்பிட்டார் போலும்.

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.35.5) திருஞானசம்பந்தர் பெருமானை, கரிதாகிய நஞ்சணி கண்டன் என்று அழைக்கின்றார். அணி=அணிகலன்; பெருமானின் கழுத்தினில் கரிய மாணிக்கம் பதித்தது போன்று, ஆலகால விடத்தினால் தோன்றிய கறை படர்ந்து இருப்பதால், தான் கழுத்தினில் தேக்கிய நஞ்சினை பெருமான் அணிகலனாக மாற்றி விட்டார் என்ற பொருள் பட நஞ்சணி கண்டன் என்று நயமாக கூறுகின்றார். அறை=ஒலி செய்யும்; தார்=மாலை; கொன்றை மலர்கள் கொத்து கொத்தாக மலரும் தன்மை, மாலைகளாக பூப்பது போன்று காணப்படுகின்றது என்று கூறுகின்றார். உரிதா=அடியார்கள் சென்றடைந்து வணங்கத் தக்க தலம்; வீழிமிழலை தலத்தின் பெருமையை உணர்ந்தவர்களாக, அந்த தலம் சென்றடைந்து பெருமானை வணங்க வேண்டும் என்று நினைத்தாலே வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று கூறுகின்றார்.
கரிதாகிய நஞ்சணி கண்டன்
வரிதாகிய வண்டறை கொன்றை
விரித்தார் பொழில் வீழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே

பேணுப் பெருந்துறைப் பதிகத்தின் பாடலில் (1.42.5) திருஞானசம்பந்தர் பெருமானை நீலமாகிய கண்டர் என்று அழைக்கின்றார். துணியார்=துண்டித்துக் கொண்டு செல்ல விரும்பாதவர்; தனது அடியார்கள் தன்னை அன்பால் பிணைத்துக் கொண்டுள்ள நிலையிலிருந்து விடுபட்டு செல்லும் மனம் இல்லாத இறைவர் என்று கூறுகின்றார். இறைவனது புகழினைப் பாடும் பாடல்களைப் பாடும் அடியார்கள், அத்தகைய பாடல்கள் பாடுவதால் நன்மை அடைவதால், அத்தகைய நன்மையைப் பெற்றுத் தருகின்ற நாவினை நன்மையுடன் பிணைந்த நாக்கு, நன்மையைத் தழுவிய நாக்கு என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சுமடர்கள்=அறிவற்றவர்கள்; சோதிப்பு அரியார்=இறைவனைப் பற்றி ஆராய்ந்து அவனது தன்மைகளை உணரும் வல்லமை அற்றவர்கள்; அவ்வாறு இறைவனைப் பற்றி நினைத்து அவனைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் துணிவு அற்றவர்கள் என்றும் அவர்களை குறிப்பிடுகின்றார். பெருமானின் கழுத்தினில் உள்ள நீல நிறத்து கறை, அவரது கழுத்தினுக்கு அணிகலனாக, மாணிக்கக்கல் பதிக்கப்பட்டது போன்று உள்ளது என்றும் கூறுகின்றார்.
பணிவாயுள்ள நன்கெழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ளமிலாத சுமடர்கள் சோதிப்பரியார்
அணியார் நீலமாகிய கண்டர் அரிசிலுரிஞ்சு கரை மேல்
மணிவாய் நீலம் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே

பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.3) திருஞானசம்பந்தர், பெருமானை, நஞ்சடை கண்டர் என்று அழைக்கின்றார். வெஞ்சுடர்=வெம்மையை விளைவிக்கும் தீ, கொழுந்து விட்டெரியும் தீ; பிரளய காலத்துத் தீ; பைந்தொடி=பசுமையான பொன் ஆபரணங்களை அணிந்த பெண்; துஞ்சிருள்=உலகத்தை இருளில் ஆழ்த்திய பிரளய காலத்து இருளில் கிடைக்கும் மாலை; ஊழிக்காலத்தில் உலகத்து பொருட்கள் அனைத்தும் அழிந்த நிலையில், இறந்த உடல்கள் தானே மாலையாக அணிந்து கொள்ள கிடைக்கும். சிதைத்தல் என்றால் பொதுவாக, அழித்தல் கெடுத்தல் என்ற பொருளில் வரும், இங்கே கொடிய துன்பம் கொடுத்து வருத்துதல் என்று பொருள் கொள்ள வேண்டும். சிதை என்றால் இறந்த உடல்கள் கிடத்தப் படுவதற்காக, சுடுகாட்டினில் அடுக்கப்படும் விறகுக் கட்டைகள் கொண்ட படுக்கை. எரியும் சிதையில் கிடத்தப்பட்ட உடல் அடையும் துன்பம் போன்று கொடிய துன்பத்தை அனுபவிக்கும் மழவன் மகள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நம்மை என்று அடியார்களை குறிப்பிட்டு, தானே விரும்பி சென்று, அடியார்களின் உள்ளத்தில் அமரும் பெருமானின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊழித்தீயின் நடுவே நின்ற வண்ணம் விருப்பத்துடன் நடனம் ஆடும் பெருமான், ஊழிக்காலத்தில் இறந்தவர்களின் தலைகளை மாலையாக விரும்பி அணிந்து கொள்கின்றார். தனது மார்பினில் வெண்ணூல் பூண்டவராகவும், கழுத்தினில் ஆலகால விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறத்து கறையினை உடையவராகவும் விளங்கும் பெருமான், அன்புடன் தன்னை நினைக்கும் அடியார்களின் நெஞ்சத்தை தனது இருப்பிடமாகக் கொள்கின்றார். மேகங்களை தொடும் வண்ணம் உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த பாச்சிலாச்சிராமம் தலத்தில் உறைகின்றவரும். செஞ்சடை அணிந்தவரும் ஆகிய பெருமான், பசுமையான பொன் ஆபரணங்களை அணிந்த மழவன் மகளை வருத்துவது அவரது புகழுக்கு தகுந்த செய்கை அல்ல என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சிருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சு இடமாக நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.55.4) பெருமானை நீலமார் கண்டன் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சால=அதிகமான; மேலையார்கள்=ஒழுக்கத்தினால் உயர்ந்த பெரியோர்கள்; சக்கரம் வேண்டி திருமால் பெருமானை வழிபட்ட தலம் என்று கூறுவார்கள்.
சால மாமலர் கொண்டு சரணென்று
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேறு
நீலமார் கண்ட நின்னையே

இதே பதிகத்தின் முதல் பாடலிலும் (1.55.1) திருஞானசம்பந்தர் பெருமானை, மணிகண்டர் என்று அழைக்கின்றார். மாறு=ஒப்பற்ற; பெருமான் நஞ்சினை உட்கொண்டு அனைவரையும் கொடிய நஞ்சின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிய செயல் ஒப்பற்ற செயல் என்று உணர்த்தப் படுகின்றது. மணி என்ற சொல் இங்கே, கருமை நிறம் கொண்ட மாணிக்கத்தை குறிப்பதாக பொருள் கொள்ள வேண்டும்.
ஊறியார் தரு நஞ்சினை உண்டு உமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர் வயல் தென் திருமாற்பேற்றின்
மாறிலா மணிகண்டரே

தூங்கானை மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.59.2) திருஞானசம்பந்தர் பெருமானை, மணி நீலகண்டம் உடைய பிரான் என்று குறிப்பிடுகின்றார். நீர=தன்மையை உடைய; மேலுலகம்= சிவனுலகம்; துணிநீர்=துள்ளிக் குதித்து ஓடும் நீர்; பிரியாத பேரின்பம்=வரம்பிலா இன்பம் கொடுக்கும் முக்தி உலகத்தின் தன்மையை உணர்த்த பேரின்பம் என்று கூறினார். நிலவுலகத்தில் நாம் அடையும் இன்பம் அளவினில் மிகவும் சிறியது, நிலையற்ற தன்மையால் அழிந்து துன்பமாக மாறக் கூடியது என்பதை உணர்த்தும் பொருட்டு பிரிய என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார். ஆனால் சிவனது உலகத்தில் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்காக காத்திருக்கும் இன்பமோ, துன்பக் கலப்பில்லாதது, நிலையானது. இந்த வேற்றுமையை உணர்த்தும் பொருட்டு பிரியாத பேரின்பம் என்றும் பிரிய இன்பம் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பிணிகள் நமது உடலின் வலிமையை குறைத்து நமக்கு துன்பம் அளிப்பதால், நோய்களால் நாம் சலிப்பினை அடைகின்றோம். பிறப்பு இறப்பு மற்றும் இவையிரண்டின் இடைப்பட்டவாழ்வின் நெடுகே நாம் பல துன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பதால், நோய்கள் போன்று சலிப்பினைத் தருவதாக இங்கே கூறப்படுகின்றது. அணி நீர=அழகிய தன்மையை உடைய; நமது உடலினை வருத்தி சலிப்படைய வைக்கும் நோயின் தன்மையை உடைய பிறப்பு இறப்பு மற்றும் இவையிரண்டின் இடைப்பட்ட வாழ்வு ஆகியவற்றை விட்டுப் பிரிந்து, என்றும் அழியாமல் நம்மை விட்டு பிரியாத பேரின்பத்தைத் தருவதும் அழகியதும் ஆகிய சிவலோக வாழ்க்கையினை அடைய விரும்பும் மனிதர்களே, உங்களுக்கு எந்த விதத்திலும் குறை ஏற்படாத வழியினை நான் சொல்லுகின்றேன் நீங்கள் கேட்பீர்களாக; எருதினை தனது வாகனமாக உடையவனும் அழகிய நீலமணி போன்ற கழுத்தினை உடையவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவன், மலைமகளுடன் இணைந்து மகிழ்ந்து வாழும் தூங்கானை மாடம் திருக்கோயிலை உடையதும், துள்ளி குதித்து வரும் நீரினை உடைய நிவா நதிக்கரையினில் உள்ளதும் ஆகிய கடந்தை தலம் சென்றடைந்து, ஆங்குள்ள இறைவனை வணங்கி நீங்கள் விரும்பிய பயன் அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு
அணி நீர மேலுலகம் எய்தல் உறின் அறிமின் குறைவில்லை ஆனேறு உடை
மணி நீல கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும்
துணி நீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே

சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.66.3) திருஞானசம்பந்தர் பெருமானை நீலகண்டர் என்று அழைக்கின்றார். மன்மதனின் கொடியில் அன்னத்தின் சின்னம் பதிக்கப் பட்டிருப்பதை உணர்த்தும் பாடல் ஒன்றினில் இரதி தேவிக்காக அருள் புரிந்து மன்மதனை பெருமான் உயிர்ப்பித்தார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மகரம்=மீன்; தாரா=சிறு நாரை; பகன்றில்=அன்றில் பறவை; அழகில் தனக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாதவள் இரதி தேவி என்று குறிப்பிட, நிகரொப்பில்லா தேவி என்று கூறுகின்றார்.
மகரத்தாடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய
நிகர் ஒப்பில்லாத் தேவிக்கு அருள் செய் நீல கண்டனார்
பகரத் தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்தத்
தகரப் புன்னை தழைப் பொழில் சேர் சண்பை நகராரே

சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.66.4) திருஞானசம்பந்தர், பெருமானை, கரிய கண்டர் என்று அழைக்கின்றார். சுத்தி=சிப்பியின் வடிவத்தில் இருக்கும் திருநீற்றுப் பேழை; எடுத்துக் கொடுப்பதற்கு வசதியாக செய்யப் பட்டது; அனைத்துப் பொருட்களையும் சுத்திகரிக்கும் திருநீறு; கட்டங்கம்=மழு ஆயுதம்; வலிமை வாய்ந்த அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விடத்தினை, சிறிதும் மிச்சம் வைக்காமல் முழுவதுமாக உட்கொண்டு அனைவரையும் காத்த தெய்வமாகிய பெருமான், சிவந்த திருமேனியையும் கறுத்த கழுத்தினையும் உடையவர் ஆவார்; அவர் தனது கைகளில், சிப்பியின் வடிவத்தில் உள்ள திருநீற்றுப் பெட்டகத்தையும் மழு ஆயுதத்தையும் ஏந்தியவர் ஆவார்; தன்னை எதிர்த்து வந்த மத யானையை அடக்கி, அதன் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்ட வல்லமை உடைய பெருமானை,மிகுந்த அன்பு கொண்டு சைவர் மற்றும் பாசுபதர்கள் வணங்குகின்றனர். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தினில் உறைகின்றார், என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மொய் வல்லசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அமுதுண்ட
தெய்வர் செய்ய உருவர் கரிய கண்டர் திகழ் சுத்திக்
கையர் கட்டங்கத்தர் கரியின் உரியர் காதலால்
சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.71.1) திருஞானசம்பந்தர் பெருமானை, கறை கொள் கண்டர் என்று அழைக்கின்றார். சேடு=பெருமை; சேடர்=பெருமை உடையவர்; சேடர் என்ற சொல்லினை சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்று கொண்டால், சிறந்த ஒழுக்கமும் புகழும் உடையவர்கள் என்று பொருள். பேழ் வாய்=பிளந்த வாய்; பாம்பின் நாக்கு இரண்டாக பிளந்திருக்கும்; எனவே பேழ்வாய் நாகம் என்று கூறுகின்றார். வேதங்கள், பெருமானின் பல தன்மைகளையும் சிறப்புகளையும் உணர்த்துகின்றன. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் அனைத்து விஷயங்களையும் அனைவராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே தான் அருளாளர்கள், பல மொழிகளிலும், வேதங்களில் சொல்லப் பட்டுள்ள விவரங்களை, தங்களது பாடல்களில், மிகவும் எளிமையான முறையில், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உணர்த்துகின்றனர். இந்த தன்மையையே, திருஞானசம்பந்தர் மறை கொள் கீதம் என்று இங்கே குறிப்பிடுகின்றார். வேதங்கள் ஓதுவதை விரும்பி கேட்பது போன்று, சிவபெருமான் இத்தகைய பாடல்களையும் விரும்பி கேட்கின்றார். எனவே தான் நாமும் இத்தகைய கீதங்களை பாடி பெருமானின் அருள் பெற வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். தேவாரப் பாடல்கள் பாடுவதால், நாம் அடையவிருக்கும் பலன்களையும் பல தேவாரப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிறை=சிறகுகள்; தேனார்=தேனை விரும்பி உட்கொள்ளும்; ஒற்றைப் பிறைச்சந்திரனை ஏற்றுக் கொண்ட சடையினை உடையவரும், புலியின் தோலை ஆடையாக உடையவரும், இரண்டாக பிளந்த நாக்கினை உடைய பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களிலும் ஆபரணமாக அணிந்தவரும், ஆலகால விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கறை படர்ந்த கழுத்தினை உடையவரும், தனது கையினில் பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்பவரும், பிரளய காலத்தினில், பிரமன் திருமால் இந்திரன் ஆகியோரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளினில் ஏற்ற வண்ணம் கங்காளராக காட்சி தருபவரும் ஆகிய பெருமான், வேதங்களின் பொருளை உணர்த்தும் பாடல்களை ஒழுக்கத்தில் சிறந்த அடியார்கள் பாட, அந்த பாடல்களின் இன்னிசையாலும் தேனுண்ட களிப்பினாலும் தங்களது சிறகுகள் படபடக்க வண்டுகள் முரலும் காட்சி உடைய நறையூர் சித்தீச்சரம் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பிறை கொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர்
கறை கொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர்
மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையின் மகிழ்வெய்தி
சிறை கொள் வண்டு தேனார் நறையூர் சித்தீச்சரத்தாரே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் (1.71.5) திருஞானசம்பந்தர் பெருமானை, கறை கொள் கண்டர் என்று அழைக்கின்றார். சித்தர்கள் இறைவனைப் புகழ்ந்து வணங்கிய தலம் என்பதை குறிப்பிடும் வண்ணம் சித்தர்கள், பெருமானைப் புகழ்ந்து ஆடியும் பாடியும் கொண்டாடிய தலம் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருவிழாக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப் பட்ட செய்தியும் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. நீரார்=பெருகிய நீரை உடைய கங்கை நதி; பாரார்= உலகெங்கும் பரவிய புகழ்; வேதங்களை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பதால், நாத்தழும்பு ஏறிய நாவினை உடையவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பரந்து பெருகிய நீரினை உடைய கங்கை நதியினைத் தனது சடைமுடியில் அடக்கி மறைத்தவரும், ஆலகால விடத்தைத் தேக்கியதால் கறை படிந்த கழுத்தினை உடையவரும், வேதங்கள் நிறைந்து பொருந்திய நாவினை உடையவரும் ஆகிய பெருமானை, உலகெங்கும் பரவிய பெருமானின் புகழினை அறிந்து கொண்ட பத்தர்களும் சித்தர்களும் அந்த புகழினை பாடலாக வடித்து பாடியும் ஆடியும் பெருமானை கொண்டாடுகின்ற தலம் சித்தீச்சரம் ஆகும். தேரோடும் வண்ணம் அகன்ற வீதிகளைக் கொண்டுள்ள இந்த தலத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களின் ஆரவார ஒலிகள், இசைக்கப்படும் முழவுக் கருவிகளின் ஓசையோடு கலந்து எண்திசையும் பரவுகின்றன. இத்தகைய சீரும் சிறப்பும் கொண்டு பொலியும் நறையூர் சித்தீச்சரம் தலத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டு சிவபெருமான் விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நீரார் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர்
பாரார் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே
தேரார் வீதி முழவார் விழவின் ஒலியும் திசை செல்லச்
சீரார் கோலம் பொலியும் நறையூர் சித்தீச்சரத்தாரே

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.4) திருஞானசம்பந்தர் பெருமானை காளகண்டர் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பார்வதி தேவியைத் தன்னுடலில்
ஒரு பாகமாக வைத்தவராக, மாதொரு பாகனின் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மாதொரு பாகனாக, என்றும் பிராட்டியை விட்டு பிரியாமல் இருக்கும் பெருமான், தான் பலியேற்கச் சென்ற போதும் பிராட்டியுடன் சென்றது இயற்கையே. மேலும் உயர்ந்த நோக்கத்துடன், உயிர்களுக்கு உதவும் எண்ணத்துடன் பலி ஏற்பது பெருமைக்கு உரிய செயல் தானே. எனவே அதற்காக வெட்கம் கொண்டு, தேவியை உடன் அழைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை அல்லவா. போது=மலர்கள்; புனல் சேர் போது என்று குறிப்பிடுவதால், நீரில் மலரும் தாமரை முதலிய மலர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். கந்தம்=நறுமணம்; தாது=மகரந்தப் பொடி; புறவு=காடு; காலம்=விடம்; காளகண்டர்=விடத்தை தேக்கியதால் கருமை நிறத்தில் படர்ந்த கரையினை கழுத்தில் உடையவன்; நீர்நிலைகளில் தோன்றும் தாமரை முதலான பூக்களின் நறுமணம் மேலோங்கி எங்கும் பரவ, அழகு மிகுந்த மகரந்த பொடிகள் நிறைந்த சோலைகளாலும் அழகிய காடுகளாலும் சூழப்பட்டதும் குளிர்ச்சி மிகுந்ததும் ஆகிய குடந்தை நகரத்தில் உள்ள காரோணம் தலத்தில் உறைகின்ற இறைவன், பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனாக பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றார். அவர் தனது காதினில் குழை ஆபரணத்தை அணிந்தவராக, தனது கழுத்தினில் விடத்தின் கறையாக கருமை நிறம் படர்ந்தவராக காணப்படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
போதார் புனல்சேர் கந்தம் உந்திப் பொலியவ் வழகாரும்
தாதார் பொழில் சூழ்ந்து எழிலார் புறவில் அந்தண் குடமூக்கில்
மாதார் மங்கை பாகமாக மனைகள் பலி தேர்வார்
காதார் குழையர் காளகண்டர் காரோணத்தாரே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (1.72.9) திருஞானசம்பந்தர், பெருமானை, கரிய கண்டர் என்று அழைக்கின்றார். கழறுதல்=பேசுதல்; இங்கே ஏசிய வண்ணம் பேசுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். தன்னை விடவும் அடுத்தவர் சிறியவர் என்று ஒருவருக்கொருவர் ஏசிக் கொண்டு, பிரமனும் திருமாலும் வாதம் புரிந்த நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் என்று திருவாசகத்தில் மணிவாசகர் குறிப்பிட்டது போன்று, கீழேழ் உலகங்களையும் கடந்து ஊடுருவிச் சென்ற திருப்பாதங்கள் பெருமானின் பாதங்கள். அனைத்துப் பொருள்களின் முடிவையும் தாண்டி ஓங்கி நிற்கும் திருமுடி என்பதால் மேலேழ் உலகங்களையும் கடந்து நின்றவர் பெருமான். இந்த தன்மையை உணர்த்தும் பொருட்டு, பல அரிய உலகங்களிலும் புகுந்து பிரமன் திருமால் ஆகிய இருவரும் தேடினார்கள் என்று கூறுகின்றார். கருமை நிறம் கொண்ட திருமாலும், சிவந்த வண்ணம் உடைய தாமரைப் பூவில் உறையும் பிரமனும் ஒருவருக்கொருவர் ஏசிக் கொண்டு வாதம் புரிந்த பின்னர், அந்த வாதத்திற்கு ஒரு முடிவு காணும் பொருட்டு, தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் முதலில் காண்பவர் எவரோ, அவரே தங்களில் உயர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்தவராக, பல அரிய உலகங்கள் புகுந்து, அடியையும் முடியையும் தேடியும், பெருமானை அளக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தனர். அவர்கள் இருவரும் தோல்வி அடையும் வண்ணம், நீண்ட நெடியவராக நின்றவர் பெருமான். தங்களது வல்லமையால் மட்டுமே இறைவனை அளந்து விடலாம் என்று நினைக்கும் எவராலும் காண முடியாதவராக திகழும் பெருமான், செல்வ வளம் மிகுந்த குடமூக்கு தலத்தினில், கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவராகவும் காலனை உதைத்து வீழ்த்தி வெற்றி கொண்ட காலகாலராகவும் குடந்தைக் காரோணம் தலத்தினில் திகழ்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கரிய மாலும் செய்ய பூமேல் அயனும் கழறிப் போய்
அரிய அண்டம் தேடிப் புக்கும் அளக்க ஒண்கிலார்
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில்
கரிய கண்டர் காலகாலர் காரோணத்தாரே

கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.73.5) திருஞானசம்பந்தர், பெருமானை கறைக் கண்டத்தார் என்று அழைக்கின்றார். தார்=மாலை; கார்=மேகம்; கார் கொள்=மேகம் போன்று கருமை நிறம் பொருந்திய; சேடர்=சிறந்த ஒழுக்கம் உடையவர், சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; வெந்நோய்=கொடிய நோய்; பல ஊர்களுக்கும் சென்று பிச்சை ஏற்ற பெருமான், தனக்கு கொடிய நோய் உண்டாக்கியதாக சம்பந்த நாயகி கூறுவது பற்றி நாம் சற்று சிந்திக்க வேண்டும். பல ஊர்களுக்கும் சென்ற பெருமான் தனது இல்லத்திற்கும் வந்தார் என்பதையும், அவ்வாறு வந்த அவரின் அழகினில் மயங்கிய தனக்கு, அவரது பிரிவு வருத்தத்தையும், வருந்திய உள்ளத்தில் காதல் நோயினையும் ஏற்படுத்தியது என்பதையும் சம்பந்த நாயகி உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். கடந்த மூன்று பாடல்களின் பின்னணியில் இந்த பாடலையும் நாம் கருதினால், மேற்குறிப்பிட்ட செய்தி நமக்கு புலப்படும். மாலையாக கோர்க்கப்பட்ட கொன்றை மலர்களையும் குளிர்ந்த பிறைச் சந்திரனையும் தனது தலைமாலையாக சூட்டிக் கொண்ட இறைவன், சிறப்பு மிக்க பாடல்களை பாடியவராக அதற்கேற்ப சிறந்த நடனம் ஆடியவராக, ஒழுக்க சீலராக பெருமான் எனது இல்லம் வந்தார். பல ஊர்களும் சென்று பிச்சை ஏற்ற பெருமான் எனது இல்லம் வந்த போது, நான் அவரது அழகினில் நற்பண்புகளில் ஆற்றலில் மயங்கி அவர் பால் தீராத காதல் கொண்டேன். எனது காதல் ஈடேறாத காரணத்தால், எனக்கு காதல் நோய் வாய்த்தது. இந்த நிலைக்கு காரணமாக உள்ள பெருமான், தனது கழுத்தினில் ஆலகாலம் உட்கொண்டதால் கருமை நிறம் பதிந்து காணப்படும் பெருமான், அடர்ந்து நெருங்கி வளர்ந்து இருளுடன் காணப்படும் சோலைகள் நிறைந்த கானூர் தலத்தினில் உறைகின்றார் என்று சம்பந்த நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.
தார்கொள் கொன்றைக் கண்ணியோடும் தண் மதியம் சூடி
சீர்கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து
ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று என்னுள் வெந்நோய் செய்தார்
கார்கொள் சோலைக் கானூர் மேய கறைக் கண்டத்தாரே

நல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.85.1) திருஞானசம்பந்தர் பெருமானை, கறை சேர் கண்டா என்று அழைக்கின்றார். இந்நாளில் கோனேரி ராஜபுரம் என்று அழைக்கப்படும் தலம். கல்லால மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம் சனகாதி முனிவர்களுக்கு, வேதங்களின் பொருளை பெருமான் விளக்கிய செயலும், ஆலகால விடத்தினை உட்கொண்டு உலகத்தவர் அனைவரையும் பெருமான் காத்த செயலும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் வேறு எவராலும் செய்ய முடியாத செயல்கள் என்பதை உணர்ந்த தேவர்கள் புகழ்கின்றனர் என்பதை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். அனைத்து உயிர்களுக்கு நல்லவனாக விளங்கும் பெருமானை, நல்லான் என்று மிகவும் பொருத்தமாக திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.
கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான் நம்மை ஆள்வான் நல்ல நகரானே

புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.97.1) திருஞான சம்பந்தர், பெருமானை மையார் கண்டன் என்று அழைக்கின்றார். மையார்=கருமையான மை போன்ற கருமை நிறம் படர்ந்த; பொய்யா நா=என்றும் பொய்க்காது நிலையாக நிலைத்து நிற்கும் வேத மந்திரங்களை ஓதும் நா என்றும், எப்போதும் உண்மையே பேசும் நா என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டுமே பொருந்தும். எய்தல்=இளைத்தல்; எப்போதும் வெற்றியை பெற்றவர்களாக திரிபுரத்து அரக்கர்கள் இருந்தமையால், அவர்கள் தோல்வி அடைந்து என்றும் துவண்டதில்லை என்று குறிப்பிடுகிறார். வென்றி=வெற்றி; தானவர்=அரக்கர்கள், இங்கே திரிபுரத்து அரக்கர்கள்; செய்யான்=சிவந்த திருமேனி உடைய பெருமான்; மை என்ற சொல்லுக்கு விடம் என்றும் பொருள் கொள்கின்றனர். வைகும்=பொருந்தும்;
எய்யா வென்றித் தானவர் ஊர் மூன்று ஏரி செய்த
மையார் கண்டன் மாதுமை வைகும் திருமேனிச்
செய்யான் வெண்ணீறு அணிவான் திகழ் பொற்பதி போலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவம்மே

திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.98.4) திருஞான சம்பந்தர், பெருமானை, கறை மல்கு கண்டன் என்று அழைக்கின்றார். தும்பி=பெண் வண்டு; கறை=ஆலகால விடத்தினை தேக்கியதால், பெருமானின் கழுத்தில் ஏற்பட்ட கருமை நிறம் கொண்ட கறை; சிறை=இறக்கை; மல்கு=நிறைந்த, பொருந்திய; இவ்வாறு ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும் சூழ்ந்து பாடும் நிலை, சிராப்பள்ளி நகரில் உள்ள ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக இந்த தலத்து இறைவனை வழிபடுவதற்கு செல்லும் தன்மையை உணர்த்துகின்றது என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. துறை=வழிகள்; கனல் என்று ஊழித்தீ இங்கே குறிப்படப் படுகின்றது. பல வழிகள் உடைய மலைச் சாரலை உடைய மலையின் அடிவாரத்தில் உள்ள சுனைகளில் நிறைந்து பூத்திருக்கும் நீல மலர்களில் தங்கும் சிறகுகள் உடைய வண்டுகளும் தும்பிகளும் பாடும் ஒலிகள் நிறைந்த சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் இறைவன், ஆலகால விடத்திலிருந்து தேவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன், அந்த விடத்தை உட்கொண்டு தனது கழுத்தில் தேக்கியதால் கருமையான கறையினை தனது கழுத்தினில் உடையவன் ஆவான்; அவன் பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் உலகப் பொருட்களும் அழிந்த பின்னர் ஊழித்தீயினில் நடமாடுபவன்; அவன் ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் தன்னிடம் சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் அணிந்து கொண்டு, அந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்தவன். இத்தகைய ஆற்றலும் கருணையும் உடையவனே, எங்கள் பெருமைக்கு உரிய தலைவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்திடை வைகிச்
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன் கனல் எரியாடும் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே

கண்ணார் கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.101.5) திருஞானசம்பந்தர் பெருமானை, கறுமா கண்டன் என்று அழைக்கின்றார். வாமனர் வணங்கியதால் இந்த தலத்திற்கு குறுமாணிக்குடி என்ற பெயரும் உள்ளது. குறு மாண் உருவன்=குள்ளமான பிரமச்சாரி உருவம் எடுத்த திருமால்; தற்குறி=தன்னால் குறிப்பிட்டு வணங்கப் படும் அடையாளம்; இந்த தலத்தில் உள்ள இலிங்கம் வாமனரால் தாபிக்கப் பட்டதாக கருதப் படுகின்றது. இந்த தலத்தினை அடுத்துள்ள ஊர் குறுமாணிக்குடி என்று இன்றும் அழைக்கப் படுகின்றது. மறு=குற்றம்; உருவத்தில் சிறியவனாக, குள்ளனாக மூன்றடி மண் இரந்த பின்னர், அவ்வாறு பெற்ற மூன்றடிகளை அளக்கும் தருவாயில் நெடுமாலாக வளர்ந்தது குற்றமுடைய வஞ்சக செயலாக இங்கே குறிப்பிடப் படுகின்றது. தனக்கு இணையாக வேறு எந்த அரக்கரும் இல்லாத வகையில் அறம் தவறாமல் ஆட்சி நடத்தியும் வானோரை வெற்றி கொண்டு வலிமையுடனும் திகழ்ந்த மாவலியை, வாமனனாக அவதாரம் எடுத்து குற்றமான வஞ்சக முறையில் நெடிது வளர்ந்து இரண்டு அடிகளால் மூன்று உலகினையும் அளந்த பிரம்மச்சாரி சிறுவன் திருமால், தான் பெருமான் பால் கொண்டிருந்த பக்தியின் அடையாளமாக, சிவலிங்கம் தாபித்து வழிபட்ட திருக்கோயில், நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறத்துடன் திகழும் பெரிய கழுத்தினைக் கொண்ட பெருமான் பொருந்தி உறையும் தலம் கண்ணார் கோயிலாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்
செறு மாவலி பால் சென்று உலகெல்லாம் அளவிட்ட
குறு மாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறு மா கண்டன் மேயது கண்ணார் கோயிலே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.104.7), திருஞான சம்பந்தர் பெருமானை, கறைக் கண்டன் என்று அழைக்கின்றார். வார்சடை=நீண்ட சடை; அவலம்=துன்பம்; பிராட்டியை மிகுந்த விருப்பத்துடன் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் பெருமான் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறுகின்றார். வார் கழனி=நீண்ட வயல்கள்;
மங்கை ஓர் கூறுகந்த மழுவாளன் வார்சடை மேல் திங்கள்
கங்கை தனைக் கரந்த கறைக் கண்டன் கருதுமிடம்
செங்கயல் வார் கழனி திகழும் புகலி தனைச் சென்று தம்
அங்கையினால் தொழுவார் அவலம் அறியாரே

அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்குவது, திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டத்துத் திருப்பதிகம் (1.116). இறைவனார் உட்கொண்ட நஞ்சினைத் தடுத்து வானவர்க்கும் உலகத்தவர்க்கும் எங்கும் பொங்கிப் பரவிய ஆலகால விடத்தினால் எந்தவிதமான தீங்கும் நேரிடாமல் பாதுகாத்தது நீல நிறமாக மாறிய கழுத்து என்றும், அந்த நீலகண்டம் அடியார்களுக்கு துன்பம் வாராமல் பாதுகாக்கும் என்ற பொருள் பட இந்த பதிகம் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும் நீலகண்டத்தின் சிறப்பு கருதி, திரு என்ற அடைமொழியை சேர்த்து திருநீலகண்டம் என்று அழைத்து ஆணையிடுவதாக இந்த பதிகம் அமைந்துள்ளது என்றும் சேக்கிழார் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களும் அடியார்களை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் பாதுகாக்கும் என்று முடிகின்றன. இதனால் இந்த பதிகம் திருநீலகண்டப் பதிகம் என்றே அழைக்கப் படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். அவ்வினை=சென்ற பல பிறப்புகளில் செய்த தீவினைகள்; இவ்வினை=பழைய வினைகளின் பயனாக இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பங்கள்; பொதுவாக சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளின் பயனை, இன்பமாகவும் துன்பமாகவும் உயிர்கள் இந்த பிறவியில் நுகர்ந்து கழிக்க வேண்டும் என்பதே விதி. இந்த விதியினை மாற்றுவதற்கோ வினைகளை முற்றிலும் அகற்றவோ குறைக்கவோ, பெருமானைத் தவிர்த்து வேறு எவருக்கும் அதிகாரம் கிடையாது. எனவே இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு பெருமானை வணங்கித் தொழுது உயிர்கள் தங்களது வினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதே அருளாளர்கள் மீண்டும்மீண்டும் நமக்கு வழங்கும் அறிவுரை ஆகும். இவ்வாறு நமது வினைகளைத் தீர்த்துக் கொள்ளும் உபாயம் இருக்கையில், அதனை விட்டுவிட்டு, வினைகளைக் கழித்துக் கொண்டு உய்யும் வழியினை நாடாமல் இருப்பது நமது தவறு தானே. இந்த குற்றத்தையே நமது ஊனம் என்று இங்கே திருஞானசம்பந்தர் சுட்டிக் காட்டுகின்றார். பெருமானை நாடுவதற்கு நமக்கு உள்ள சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகளில், சரியை கிரியை ஆகிய இரண்டு வழிகளை, கைவினை என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். முற்பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாக இந்த பிறவியில் துன்பங்கள் நேரிடுகின்றன என்று பெரியோர்கள் சொல்வதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும் இவ்வாறு சொல்வது சான்றோர்களின் மொழியில் ஒரு பகுதியே ஆகும். இந்த ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்றோர் பகுதியை (பெருமானை வழிபடுதல்) மறந்து விட்டு வாழ்வினில் உய்வினை நாடாமல் இருக்கின்றீர்களே, இது உமது குறை என்பதை உணர்வீர்களாக. நாமெல்லாம் பெருமானின் அடியார்கள் என்பதை மறவாதீர்கள்; இறைவன் நமக்கு அளித்த கைகளை பயன்படுத்திக் கொண்டு, பெருமானுக்கு பல வகையான திருத்தொண்டுகள் செய்து, சரியை கிரியை முதலான திருப்பணிகள் செய்து, பெருமானின் திருப்பாதங்களை போற்றுவீர்களாக. அவ்வாறு செய்தால், பழைய பல பிறவிகளில் நாம் செய்த வினைகள் நம்மை வந்து தாக்காமல் நின்று விடும். உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது, நீலகண்டம் என்று அழைக்கப்படும் பெருமானின் மீது, ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன் என்று திருஞான சம்பந்தர் சொல்வதாக அமைந்த பாடல்.
அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பது உம் தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

மொழிமாற்று பதிகத்தின் பாடலில் (1.117.10) திருஞானசம்பந்தர் பெருமானை, கறை கொள் கண்டர் என்று அழைக்கின்றார். அடியிணை கண்டிலன் மால், முடி கண்டிலன் தாமரையோன், கொடியணியும் ஏறு உகந்து ஏறுவர், புலித்தோல் உடுப்பர், பிடியணியும் நடையாள் ஓர் கூறுடையார், வெற்பு இருப்பது எனமொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ள வேண்டும். பிடி=பெண் யானை; வெற்பு=மலை, இங்கே இமயமலை; கடி=நறுமணம்; பெருமானதுஇணையான திருவடிகளை திருமால் காண முடியவில்லை; தாமரை மலரினை தனது ஆசனமாக உடைய பிரமனாலும் பெருமானின் திருமுடியை காணமுடியவில்லை; தனது கொடியில் அடையாளமாக உள்ள எருதினைத் தனது வாகனமாக உகந்து ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; தன்னை எதிர்த்து வந்தபுலியினை அடக்கி அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டவர் சிவபெருமான்; பெண் யானை போன்று அழகிய நடையினை உடைய உமைஅன்னையைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் வாழ்வது இமயமலையினில்; இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், மணம் வாய்ந்த சோலைகள் நிறைந்த சீர்காழியில் நீலகண்டராக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அடியிணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன்
கொடியணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோலுடுப்பர்
பிடியணியும் நடையாள் வெற்பு இருப்பதோர் கூறுடையர்
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக் கண்டரே

நெல்லிக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.19.10) திருஞானசம்பந்தர், பெருமானை, நஞ்சை தாவென வாங்கி அது உண்ட கண்டன் என்று குறிப்பிடுகின்றார். தனது தொண்டனாகிய ஆலால சுந்தரரை, ஆலால விடத்தினை திரட்டிக் கொண்டு வருமாறு பணிந்த பெருமான், அவ்வாறு கொண்டு வரப்பட்ட விடத்தினை, தா என வாங்கி உட்கொண்ட நிகழ்ச்சியை இங்கே திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அழல்=வெப்பம்; கான்ற=வீசிய; மாண்டு=பெருகி வந்த; கனத்தார்= மேகங்களால் உட்கொள்ளப்படும்; திரை=அலைகளை உடைய கடல்; கடல் நீர் சூரிய வெப்பத்தினால் ஆவியாக மாறி உயரே சென்ற பின்னர், குளிர்ந்து நீர்த்திவலைகள் கொண்ட மேகமாக மாறும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. மாண்பு=பெருமை, மாட்சிமை; புத்தர் மற்றும் சமணர்களின் செல்வாக்கு இந்திய நாட்டினில் அழிய வேண்டும் என்று பெருமான் திருவுள்ளம் கொண்டதால், நாடெங்கிலும் பல அருளாளர்கள் தோன்றி, சைவ சமயத்தை நிலை நாட்டினார்கள் என்ற சரித்திர உண்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.
கனத்தார் திரை மாண்டு அழற் கான்ற நஞ்சை
எனத் தா என வாங்கி அது உண்ட கண்டன்
மனத்தால் சமண் சாக்கியர் மாண்பழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

கருவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.28.5) திருஞானசம்பந்தர் பெருமானை நீலகண்டர் என்று குறிப்பிடுகின்றார். பங்கயம்=தாமரை மலர்; இந்த பாடலில் பெருமானின் திருப்பாதங்களின் தன்மை குறிப்பிடப் படுகின்றது. அழியும் நிலையில் இருந்த சந்திரனைத் தனது சடையினில் வைத்துக் கொண்டு அபயம் அளித்த பெருமான், நமக்கு அருள் புரிய வேண்டும் என்றால் நாம் பற்றிக் கொள்ள வேண்டியது அவனது திருப்பாதங்களைத் தானே. எனவே தான் பெருமானின் சடையினை இந்த பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், ஐந்தாவது பாடலில் பெருமானின் திருவடிகளை குறிப்பிடுகின்றார் போலும். அங்கை=அழகிய கை, அம்+கை; அம்=அழகிய; தாமரை மலர் போன்று சிவந்தும் மென்மையாகவும் உள்ள திருவடிகளை கொண்டுள்ள பெருமான், தனது உடலில் ஒரு பாதியில் பார்வதி தேவியை ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் நீலமணி பதித்தது போன்று தனது கழுத்தினில். ஆலகால விடம் தேக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள கறையினை உடையவர் ஆவார். வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்றுள்ள பெருமான், தனது அழகிய கையினில் படமெடுத்து ஆடும் பாம்பினையும் ஏந்தியுள்ளார். கருவூர் ஆனிலை தலத்தினில் உறையும் அவர் எமது தலைவராவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பங்கயம் மலர்ப் பாதர் பாதியோர்
மங்கையர் மணி நீலகண்டர் வான்
கங்கையர் கருவூருள் ஆனிலை
அங்கை ஆடரவத்து எம் அண்ணலே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.40.1) திருஞான சம்பந்தர், பெருமானை, கறைக் கண்டன் என்று அழைக்கின்றார். பிரான் என்ற சொல்லுக்கு பிரியமானவன் என்று பொருள் கொண்டு, அனைத்து உயிர்கட்கும் இனியவனாக விளங்கும் தலைவன் என்று பொருள் கொள்ளலாம். தம்=தாம், ஆன்மாக்கள்; அமுதம்=மிகவும் உயர்ந்த பொருள்; அமுதத்தினை மிகவும் உயர்ந்த பொருளாக கருதி தேவர்களும் அசுரர்களும் தமக்குள் சண்டையிட்டமையால், மிகவும் உயர்ந்த பொருளை அமுதம் என்று குறிப்பிடுவார்கள். கம்பம்=அசைதல்; பெருமானை அனைத்து உயிர்களுக்கும் இனியவன் என்று குறிப்பிடும் திருஞான சம்பந்தர், பெருமானை, காபாலி என்று குறிப்பிட்டு, பெருமான் பலி ஏற்கும் காரணத்தை மறைமுகமாக உணர்த்தி, பெருமான் எவ்வாறு உயிர்களுக்கு இனியவனாக உள்ளான் என்பதை உணர்த்துகின்றார். பக்குவப்பட்ட அடியார்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் தானே பெருமான் பலி ஏற்கின்றார். இதை விடவும் பெரிய உதவியினை உயிர்களுக்கு எவரும் செய்ய முடியாது அல்லவா. எனவே தான் பெருமான் உயிர்களுக்கு மிகவும் இனியவனாக உள்ளான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தழலைத் தனது கையில் ஏந்திய தன்மை, வினைகளை சுட்டெரிக்கும் பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றது. கறைக் கண்டனாகத் திகழும் தன்மை பெருமான் ஆலகால விடத்தினை உட்கொண்டு, தேவர்களையும் அசுரர்களையும் அழியாமல் காத்த செய்தியை உணர்த்துகின்றது. பண்டைய நாளில் விடத்தினை உட்கொண்டு உயிர்களை காத்த செயலும் இந்நாளில் உயிர்களை உய்விக்கும் நோக்கத்துடன் பலியேற்கும் செய்கையும், எப்போதும் தீப்பிழம்பை கையில் ஏந்தி வினைகளைச் சுட்டெரித்து அருளும் தன்மையும் குறிப்பிடப்பட்டு, நேற்றும் இன்றும் என்றும் பெருமான் உயிர்களுக்கு இனியவனாக இருக்கும் தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வம்பு=நறுமணம்; உலாம்=உலாவும்; வானவன்=உயர்ந்தவன்; எனக்கு தலைவனாக இருப்பவனும், எனக்கு அமுதம் போன்று மிகவும் உயர்ந்த பொருளாக இருப்பவனும் ஆகிய இறைவன், தன்னைச் சரணடையும் அனைத்து உயிர்களுக்கும் இனிய தலைவனாக விளங்குகின்றான். தீப்பிழம்பைத் தனது கையில் ஏந்திய பெருமான், அசையும் இயல்பினை உடைய பெரிய மதயானை தன்னை எதிர்த்து வந்த போது அதனை அடக்கி அதன் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவன் ஆவான். அவன் தனது கையினில் கபாலம் ஏந்தியவாறு உலகெங்கும் திரிந்து, பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை அவனது பிச்சைப் பாத்திரத்தில் பலியாக இட, அதனை ஏற்றுக் கொண்டு அந்த உயிர்களுக்கு முக்திநிலை அளிக்கின்றான். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினைத் தான் உட்கொண்டு தேவர்களையும் அசுரர்களையும் பண்டைய நாளில் காத்த அவன், அனைவரிலும் உயர்ந்தவனாக, நறுமணம் மிகுந்த சோலைகளை உடைய பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும்
கம்பமா கரி உரித்த காபாலி கறைக் கண்டன்
வம்புலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.8) திருஞான சம்பந்தர், பெருமானை மணிகண்டன் என்று அழைக்கின்றார். பெருமான் தனது கழுத்தினில் தேக்கிய நஞ்சினால் ஏற்பட்ட கருமை நிறத்து கறை, மாணிக்கக் கல் பதிக்கப் பட்டது போன்ற காட்சியை தருவதால், மாணிக்க மணியினை உடைய கழுத்து என்ற பொருள்பட, மணிகண்டன் என்று அழைத்தார் போலும். பொதுவாக திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் அரக்கன் இராவணனின் வலிமையை சிவபெருமான் அடக்கியதும் பின்னர் அவனுக்கு அருள் புரிந்த நிகழ்ச்சியும் காணப்படும் ஆனால் இந்த பதிகத்தில், சிவபெருமான் இராவணனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப் படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக, பெருமானின் அடியான் ஆகிய ஜடாயு, இராவணனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் பெருமை போன்று அவனது அடியார்களின் பெருமையையும் சிறப்பாக கருதியமையால், திருஞான சம்பந்தர் ஜடாயு அரக்கனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சியை குறிப்பிட்டார் போலும் என்று தோன்றுகின்றது. பண் ஒன்ற=இசைப்பண் பாடலுடன் பொருந்தும் வண்ணம்; குடியாக=புகலிடமாக; மண்ணின்றி=மீண்டும் உலகினில் பிறக்க வேண்டிய அவசியம் இன்றி; விண்=விண்ணுலகத்தினும் பெருமை வாய்ந்த முக்தி உலகம்; மருவும்=வாழும்; புண்=காயங்களால் ஏற்பட்ட புண்; எண்ணின்றி= கணக்கில் அடங்காத வண்ணம்; வாணாள்=வாழ்நாள்; இனிய இசை பொருந்தும் வண்ணம் பாடல்கள் பாடி, பெருமானின் திருவடிகளை புகலிடமாக கருதி வழிபடும் அடியார்கள், மீண்டும் நிலவுலகில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் விண்ணுலகத்தினும் மேலான முக்தி உலகத்தினை அவர்களுக்கு அருளும் பெருமான், தனது கழுத்தினில் மாணிக்கம் பதிக்கப் பட்டது போன்று கறையினை உடைய நீலகண்டன், உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் மூன்று கோடி வாழ்நாளை, பெருமானது அருளால் பெற்ற அரக்கன் இராவணனின் உடலில் காயங்களும் புண்களும் ஏற்படும் வண்ணம் போரிட்டு அவனது வலிமையை அழித்த ஜடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடியாக
மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள் அது உடையானைப்
புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

நாலூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.46.4) பெருமானை நீலத்தார் கண்டத்தான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கோலம்=அழகு; நீலத்தார்=நீல நிறம் பொருந்திய; தொல்வினை=எண்ணற்ற பழைய பிறவிகளாக தொன்று தொட்டு தொடர்ந்து வரும் சஞ்சித வினைகள்; இந்த பாடலில் மிகவும் பொருத்தமாக, சூலத்தான் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பெருமான் மூவிலைச் சூலம் வைத்திருப்பதே, தனது அடியார்களின் தொல்வினைகளை முற்றிலும் அறுத்து எறியவே என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அழகுடன் விளங்கும் கொன்றை மாலை அணிந்தவனும், எதிர்பட்ட விலங்குகளை கொல்லும் தன்மை உடைய புலியினை அடக்கி, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தவனும், ஆலகால விடத்தை தேக்கியதால் நீல நிறம் பொருந்திய கழுத்தினை உடையவனும், நெற்றியில் கண் உடையவனும், உலகத்தவர் பலரும் சென்று புகழ்ந்து தொழும் தன்மை உடையவனாக நாலூர் மயானம் தலத்தினில் உறைபவனும் ஆகிய பெருமானின் திருநாமத்தை, சூலத்தான் என்று அழைக்கும் அடியார்களின் தொல்வினைகள் முற்றிலும் அறுக்கப்பட்டு, அத்தகைய வினைகள் அந்த உயிர்களை சூழாத வண்ணம் பெருமான் அருள் புரிவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கோலத்தார் கொன்றையான் கொல்புலித் தோலாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார் பால் சூழாவாம் தொல்வினையே

திருக்களர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.6) திருஞானசம்பந்தர், பெருமானை நீலம் மேவிய கண்டர் என்று அழைக்கின்றார். கோலம்=அழகு; ஆல=தோகை விரித்து ஆடி அசைய; கொண்டல்=மேகம்; வானில் கருநிற மேகங்கள் சூழ்வதைக் காணும் மயில்கள் மழை வரப் போவதை அறிந்து மகிழ்ச்சியால் நடமாடுகின்றன என்று கூறுகின்றார், மேவிய=பொருந்திய; சேலிளம் கயலார்=சேல் கயல் ஆகிய இரண்டு வகை மீன்களும் நிறைந்து விளங்கும்; பெருமானைச் சரணடையும் அடியார்கள் அனைவரையும் பெருமான் காக்க வேண்டும் என்று அனைத்து அடியார்களின் சார்பாக திருஞானசம்பந்தர் இந்த பாடல் மூலம் பெருமானிடம் வேண்டுகின்றார்.
கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொழில் குலவும் வயலிடைச்
சேலிளம் கயலார் புனல் சூழ்ந்த திருக்களருள்
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன்சடைப் பெருமானெனப் பொலி
ஆல நீழலுளாய் அடைந்தார்க்கு அருளாயே

தலைச்சங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.55.5) திருஞானசம்பந்தர் பெருமானை, நீலஞ்சேர் கண்டத்தர் என்று அழைக்கின்றார். ஆலம்=நீர்; கோலம்=அழகு; மன்னும்=நிலையாக பொருந்தும் மூவிலை வேல் சூலம் ஏந்திய கையினை உடையவரே, திருநீற்றுப் பொடியினால் அபிஷேகம் செய்து கொண்டு மகிழ்பவரே, கொடிய ஆலகால விடத்தை தேக்கியதால் நீல நிறம் கொண்ட கழுத்தினை உடையவரே, நீண்ட சடையினில் கங்கை நீரினை தேக்கி அடக்கியவரே, நீர் வளம் மிகுந்து காணப்படுவதால் அன்னங்கள் பொருந்தி வாழும் சோலைகள் உடைய தலைச்சங்கை தலத்தில் உள்ள அழகிய கோயிலை நீர் உறையும் திருக்கோயிலாக கொண்டுள்ளீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண்ணீறு ஆடலீர்
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர்
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை
கோலம் சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.63.1) திருஞானசம்பந்தர், பெருமானை, இருள் தோய் கண்டர் என்று அழைக்கின்றார். இந்த பாடலில், இருள் தோய்ந்து கருமை நிறத்து கறையுடன் காணப்படும் பெருமானின் கழுத்தின் அருகே, வெண்மை நிறத்துடன் ஒளிவீசும் சந்திரன் இருப்பதாக சொல்லப் படுகின்றது. ஒவ்வொரு கலையாக தேய்ந்து அழியும் நிலையில், தன்னிடம் வந்து சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்து, அவனை மீண்டும் வானில் ஒளியுடன் மிளிர்ந்து உலவ வைத்தவர் சிவபெருமான் அல்லவா. அதன் அடையாளமாகத் தானே, பெருமான் தனது சடைமுடியில் ஒற்றைப் பிறைச் சத்திரனை அணிந்து கொண்டுள்ளார். ஆணவ மலத்தையும் அறியாமையும் இருளுக்கும் கருமை நிறத்திற்கும் ஒப்பிடுவது வழக்கம். ஞானத்தை வெண்மை நிறத்திற்கு ஒப்பிடுவது வழக்கம். எனவே, இவ்வாறு வெண்மை நிறமும் கருமை நிறமும் அருகருகே இருக்கும் தன்மை, பெருமானின் அருள் இருந்தால், நமது மனதினில் உள்ள அறியாமை நீங்கி ஞானவொளி பரவும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்று விளக்கம் சான்றோர்களால் அளிக்கப் படுகின்றது. துன்னவே=நெருங்கி இருத்தல்; கண்டம்=கழுத்து; கண்டர்=கழுத்தினை உடையவர்; தொன்=தொன்மை; பண்டைய நாளிலிருந்தே புகழ் வாய்ந்த தலமாக இந்த தலம் விளங்கியது என்பதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பொரு= மோதுகின்ற; அரிசில் ஆற்றின் அலைக் கரங்களால் அடித்து வரப்படும் பொன்னும் மணியும், இந்த தலத்தில் உள்ள ஆற்றங்கரைகளில் மோதுகின்றன என்று கூறுகின்றார். மின்னல் போன்று ஒளிவீசும் சடை மீதினில், ஒளிவீசும் ஒற்றைப் பிறைச் சந்திரனை அணிந்து கொண்டுள்ளவர் சிவபெருமான். அந்த பிறைச் சந்திரனின் அருகே, பாற்கடலிலிருந்து எழுந்த ஆலகால விடம் தேக்கப் பட்டதால், கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவன் பெருமான். இவ்வாறு கருமை நிறம் படர்ந்த கழுத்தின் அருகே வெண்மை நிறத்துடன் ஒளிவீசும் சந்திரனை அணிந்துள்ள தன்மை, பெருமானின் அருளினைத் துணையாகக் கொண்டு, உயிர்கள் தங்களது அறியாமையை நீக்கிக் கொண்டு ஞானத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதை உணர்த்துகின்றது. இத்தகைய ஆற்றல் உடைய இறைவன், பண்டைய நாளிலிருந்தே புகழ் வாய்ந்த தலமாக விளங்கும் அரிசிற்கரைப்புத்தூர் தலத்தில் உறைகின்றான். அன்னங்கள் பொருந்தி விளையாடும் நீர்ப்பரப்பினை உடைய அரிசில் ஆறு, தனது அலைக் கரங்கள் கொண்டு பொன்னையும் மணியையும் மோதி சேர்க்கும் கரைகள் கொண்ட தலம், காவிரித் தென்கரைத் தலமாகிய அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மின்னுஞ் சடை மேல் இள வெண் திங்கள் விளங்கவே
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொன் மூதூர்
அன்னம் படியும் புனலார் அரிசில் அலை கொண்டு
பொன்னும் மணியும் பொரு தென்கரை மேல் புத்தூரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.79.1) திருஞானசம்பந்தர், பெருமானை, காளகண்டன் என்று அழைக்கின்றார். பவனம்=காற்று; நாவெழா=ஊட்டப்படும் உணவினை, நாக்கு மேலெழுந்து உள்ளே தள்ள முடியாத நிலை; சட்ட=சிறிது சிறிதாக; வெள்குதல்= வெட்கம் கொள்ளுதல், நாணம் அடைதல்; காளம்=இருள், கருமை; இறக்கும் சமயத்தில் சிவனது திருப்பாதங்களை நினையாதவர் பேதைகள் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தில் அத்தகையோர் எவ்வாறு துன்பப்படுவார்கள் என்பதை நமக்கு படம் காட்டுவது போல் விவரிக்கும் நேர்த்தியை நாம் காணலாம். இறக்கும் சமயத்தில், உடலினை விட்டு நீங்கும் பொருட்டு பிராணவாயு பெருகும். இதனை மேல் மூச்சு வாங்குதல் என்று கூறுவார்கள். இந்த நிலையை, உடலில் காற்று அதிகமாக உள்ளது என்பதை குறிக்கும் வகையில், உடல் காற்றாய் மாறியது என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். சோடை என்றால் வறட்சி என்று பொருள். நாக்கு உலர்ந்து போய் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த சமயத்தில், வாயில் ஊட்டப்படும் உணவை உள்ளே செலுத்த முடியாமல் நாக்கு திண்டாடும். அப்போது மெல்லிய துணியை அல்லது பஞ்சினை முழுவதும் பாலினில் நனைத்து, அருகில் இருப்போர் ஊட்டுவார்கள்; இந்த நிலையைத் தான் நாவெழாப் பஞ்சு தோய் சட்ட உண்டு என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடல் மூலம் சிவனது திருப்பாதங்களை இறக்கும் சமயத்தில் நினைப்போர் மேற்கொண்ட துன்பங்களிலிருந்து விடுபடுவார்கள் என்று நமக்கு உணர்த்துகின்றார். திருஞான சம்பந்தர் இந்த பாடலில் விவரித்தவாறு, இறக்கும் தருணத்தில் உடல் படும் வேதனையில், இறைவனைப் பற்றிய நினைப்பு தோன்றாமல் இருப்பது இயற்கையே. எனவே அந்த நிலையில் இறைவன் பற்றிய சிந்தனை நமக்கு ஏற்பட வேண்டும் என்றால் இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே ஏற்படும். எனவே அத்தகைய அருள் புரிய வேண்டும் என்று நாம் தொடர்ந்து, நமது உடல், உயிருடன் ஒத்துழைக்கும் நேரங்களில், இறைவனைப் பணிந்து வேண்டவேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.
பவனமாய் சோடையாய் நாவெழாப் பஞ்சு தோய் சட்ட உண்டு
சிவன தாள் சிந்தியாமே பேதைமார் போல நீ வெள்கினாயே
கவனமாய் பாய்வதோர் ஏறு உகந்து ஏறிய காளகண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடலில் (2.85.1) திருஞானசம்பந்தர் பெருமானை, விடமுண்ட கண்டன் என்று அழைக்கின்றார். வேயுறு=மூங்கிலின் இரு கணுக்களுக்கும் இடையே உள்ள பகுதி; மென்மை மற்றும் அழகு பற்றி இந்த உவமை இங்கே சொல்லப் படுகின்றது. விடம் உண்ட செயல், வீணை வாசிக்கும் செயல் மற்றும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக் கொண்ட செயல் ஆகிய மூன்று செயல்களும் பெருமானின் கருணைத் திறத்தினை உணர்த்தும் செயல்கள்; அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் தனது உள்ளத்தில் இருப்பதால், தனக்கு நல்லனவே விளையும் என்று கூறுகின்றார். பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தத்தம் உடல்களை விட்டு நீங்கி இறைவனிடம் ஒடுங்குகின்றன. இவ்வாறு ஒடுங்குவதால், எண்ணற்ற பிறவிகள் எடுத்துக் களைத்த உயிர்களுக்கு தேவையான இளைப்பாற்றல் கிடைக்கின்றது. இது இறைவன் உயிர்கள் பால் கொண்ட கருணையால் நிகழ்கின்றது. இவ்வாறு இளைப்பாறி புத்துணர்ச்சி பெற்ற உயிர்களில் பெரும்பாலானவை மலத்துடன் பிணைந்து இருப்பதால், அந்த மலத்தினை உயிர்கள் நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதற்கு திருவுள்ளம் கொண்டவனாக உலகத்தைத் தோற்றுவிப்பதற்கும் மலங்களுடன் பிணைந்துள்ள உயிர்களை தகுந்த உடலுடன் சேர்ப்பதற்கும் இறைவன் நினைக்கின்றான். அவனது நினைப்பு, திருவருள் சக்தியால் செயலாக்கப் படுகின்றது. இதுவும் இறைவன் உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையின் அடிப்படையில் நிகழ்வதே. இவ்வாறு நினைக்கும் சமயத்தில் வீணை வாசிக்க, அந்த நாதத்திலிருந்து ஆகாயம் தோன்றுகின்றது; பின்னர் ஆகாயத்திலிருந்து முறையே மற்ற பூதங்களும், இந்த பூதங்களின் கலவையாக அனைத்து உலகப் பொருட்களும் தோன்றுகின்றன. மாசறு திங்கள் என்று இங்கே குறிப்பிடுகின்றார். இறைவனுடன் சேர்ந்த எந்த பொருளும் தூய்மை அடைகின்றன. மிகுந்த அகம்பாவத்துடன் பூமியையே புரட்டிப் போடும் நோக்கத்துடன் வானத்திலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி, கர்வபங்கம் அடைந்து தன்னில் நீராடும் மாந்தர்களின் பாவத்தைத் தீர்க்கும் புண்ணிய நதியாக மாறியது போன்று, குற்றம் உடைய சந்திரனும் தூய்மைத் தன்மை அடைந்தான் என்பதை உணர்த்த, மாசறு என்று குறிப்பிட்டார் போலும். ஆசு=குற்றம்; வியாழம்=பிரகச்பதி; வெள்ளி=சுக்கிரன்: பாம்பு=இராகு கேது; இதன் மூலம் ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நலத்தையே அடியார்களுக்கு விளைவிக்கும் என்று கூறுகின்றார். நான்கு முறை நல்ல என்று குறிப்பிட்டு இறுதியில் மிகவே என்று குறிப்பிடுவதன் மூலம், மிகுதியான நன்மைகளையே இந்த கோள்கள் செய்யும் என்று உறுதிபட கூறுகின்றார். இறைவன் எனது உளமே புகுந்த அதனால் ஒன்பது கோள்களும் நல்லனவே செய்யும் என்று திருஞானசம்பந்தர் கூறுவது, தற்போதம் அற்ற நிலையை அவர் அடைந்த தன்மையை நமக்கு உணர்த்துகின்றது. நடப்பது அனைத்தும் இறைவன் செயல் என்றும் அவனது அருளால் நல்லனவையே நடக்கும் என்றும் நமக்கு உணர்த்துகின்றார். திருஞானசம்பந்தர் புராணத்தின் முதல் பாடலில், சேக்கிழார், வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்தழுத திருஞானசம்பந்தர் என்று குறிப்பிடுவதன் மூலம், திருஞானசம்பந்தரின் அவதார நோக்கமே, சமண சமயத்தவரின் ஆதிக்க வலிமையை குறைத்து சைவ சமயத்தை நிலைநாட்டுவது என்பதால், தனது முயற்சிகளுக்கு இறைவனின் அருள் சிறந்த துணையாக இருக்கும் என்று அவர் உணர்ந்ததை, வெளிப்படுத்தும் பதிகமாக அமைந்துள்ளது. மிக நல்ல வீணை தடவி என்ற தொடர் சங்காரம் மற்றும் புனருற்பவம் ஆகிய இரண்டையும், (முற்றழிப்பு மற்றும் மீண்டும் தோற்றுவித்தல்) உணர்த்துகின்றது. இவை முறையே இனிவரும் நாட்களில் சமண சமயத்தாரின் கொட்டம் முற்றிலும் அழிக்கப்படுவதையும், சைவ சமயம் புது மறுமலர்ச்சி பெறுவதையும் முன்னதாகவே திருஞானசம்பந்தர் உணர்த்துவதாக சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். உடனே ஆசறு என்ற தொடர் மூலம், வரும் தீங்குகள் அனைத்தும், ஒன்றன் பின் ஒன்றாக அல்லாது, ஒருங்கே அழியும் என்பது உணர்த்தப் பட்டது; ஆசறும்=சமணர்கள் இட்ட தீ எவருக்கும் கெடுதல் செய்யாது அழிந்தது; விளைந்த நல்லவைகள்= மூன்று வாதங்களிலும் சமணர்கள் தோற்றமை, வேந்தன் திருநீறணிந்தது மற்றும் அதன் பொருட்டு மக்கள் சைவ சமயத்திற்கு மாறியது, அரசியார் அமைச்சர் மற்றும் மன்னன் ஆகிய மூன்று அடியார்களை சைவ உலகம் கண்டு கொண்டது என்பன;
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

இரு கணுக்களுக்கு இடையே உள்ள மூங்கில் போன்று அழகும் மென்மையும் உடைய தோள்கள் கொண்ட உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனும் ஆகிய இறைவன், இன்னிசை எழுப்பும் வீணை வாசிப்பவனாக, குற்றமற்ற பிறைச் சந்திரனையும் கங்கை நதியையும் தனது சடையில் அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்து உறைகின்றான். அதனால், ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி இராகு கேது ஆகிய ஒன்பது கோள்களும், எந்தவிதமான குற்றமும் இல்லாத நன்மையையே எனக்கு புரியும். இவ்வாறு எனக்கு குற்றமற்ற நன்மைகளைப் புரியும் கோள்கள், அடியார்கள் அனைவருக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் நஞ்சணி கண்டன் என்று பெருமானை அழைக்கின்றார்.

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.86.4) திருஞானசம்பந்தர் பெருமானை, விடம் உண்ட கண்டன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் திருஞான சம்பந்தர் தாயின் தன்மையை உடைய இறைவன் என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு ஈன்றாளுமாய் (4.94.1) என்று அப்பர் பிரான் அழைத்ததை நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பாடலில் தேய்பிறை வைத்துகந்த சிவன் என்று கூறுகின்றார். ஒற்றைப் பிறையுடன் தான் அழியும் நிலையில் சரணடைந்த சந்திரன் என்பதை உணர்த்தும் வண்ணம் இவ்வாறு கூறுகின்றார். தீ உறவாகிய=தீய வினைகளுடன் உறவு கொண்டுள்ள; ஆக்கை=உடல்; செற்ற=நெருங்கிய, பிணைந்துள்ள; உற்ற என்ற சொல்லினை உலகின் என்ற சொல்லுக்குப் பின்னர் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். தீய வினைகளோடு உறவு கொண்டுள்ள உடலும், அந்த உடலினை ஆதாரமாகக் கொண்டுள்ள வினைகளும் நெருங்கி அடர்ந்துள்ள உலகினையும் அந்த உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தாயாகிய தன்மையுடன் பாதுகாக்கும் தலைவனாகிய இறைவனின் திருநாமம் நிலையாக நின்று பொருந்தியிருக்கும் திருநாரையூர் தலத்தினை, உங்களது கைகளை தூக்கித் தொழுவீர்களாக. பேய்கள் நெருங்கியுள்ள காட்டினில் நடமாடுபவனும், தான் உட்கொண்ட விடத்தினை கழுத்தினில் அழகிய மணி போன்று தேக்கிக் கொண்டவனும், தனது சடைமுடியில் அழிந்து தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் சரண் அடைந்த சந்திரனை ஏற்றுக் கொண்டு அபயம் அளித்து, வளரும் சந்திரனாக மாற்றியவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறையும் தலம், செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தீ உறவாய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன் தன் நாமம் நிலையாக நின்று மருவும்
பேய் உறவாய கானில் நடமாடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல்
தேய் பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.8) நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் என்று திருஞானசம்பந்தர், பெருமானை குறிப்பிடுகின்றார். கனிவு=கருணை, இரக்கம்; நடலை=துன்பம்; கழல்களும் சிலம்பும் அணிந்த பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் எதிரும் சிலம்பு என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். மாதொரு பாகனாக விளங்கும் பெருமான், தனது வலது காலில் கழலும் இடது காலில் சிலம்பும் அணிவதை நாம் அறிவோம். இவ்வாறு இரு வேறு கால்களில் கழல்கள் மற்றும் சிலம்பு அணிந்துள்ள கோலத்தை இங்கே குறிப்பிடுகின்றார். எதிரே என்ற சொல் மூலம், கழல்கள் பூண்டுள்ள காலினுக்கு எதிரே உள்ள காலில், சிலம்பினை அணிந்துள்ளார், என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அரையன்=அரசன்; தனது தவறினை உணர்ந்து, இறைஞ்சிய அரக்கன் நலன்கள் பல பெறுகின்ற வண்ணம் அருள் புரிந்த பெருமானை, நம்பன் என்று அழைப்பது பொருத்தம் தானே. அவ்வாறே நாமும் நமது தவறுகளை உணர்ந்து பெருமானிடம் இறைஞ்சி வேண்டினால் நம்மையும் ஆட்கொண்டு பெருமான் அருள் புரிவார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுவதை நாம் உணரலாம். வலிமை வாய்ந்த எருதினைத் தனது வாகனமாக, விருப்புடன், ஏற்றுக் கொண்டவனும், அதிரும் கழல்களும், கழல்கள் அணிந்துள்ள காலுக்கு எதிரே உள்ள காலில் அணிந்துள்ள சிலம்பும் அசையும் வண்ணம் வருபவனும், உலகத்து உயிர்கள் மீது கொண்ட கருணை காரணமாக, பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினைத் தானே உட்கொண்டு தனது கழுத்தில் தேக்கியவனும், கோபம் கொண்டவனாக இலங்கை தீவுக்கு அரசனாகிய அரக்கன் இராவணனின், உடல் அனைத்து தோள்கள் மற்றும் பத்து தலைகளையும், கயிலை மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும் வண்ணம் செய்தவனும், பின்னர் அவனது சாமகான இசை கேட்டு அவன் பால் இரக்கம் கொண்டு, அவனுக்கு ஓர் வாளையும் கொடுத்து, அவனது துன்பங்களை தீர்த்து அருள் புரிந்தவனும் ஆகிய இறைவன், நமது துன்பங்களையும் தீர்த்து நம்மை ஆட்கொள்ளும் வல்லமை உடையவன் ஆவான். அத்தகைய பெருமான் நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அடல் எருது ஏறுகந்த அதிரும் கழற்கள் எதிரும் சிலம்பொடு இசையக்
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன்
உடலோடு தோள் அனைத்து முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆளவல்ல நறையூரின் நம்பன் அவனே

தென் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.1) திருஞானசம்பந்தர், கருமை நிறம் வந்த கண்டன் என்று குறிப்பிடுகின்றார். துளி=ஆலகால விடத்தின் துளி. மண்டி=நெருக்கி; பாற்கடலிலிருந்து பெருமளவில் பொங்கிய விடத்தை சிறு உருண்டையாக மாற்றி உட்கொண்ட செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. கொடிய விடத்தின் தாக்கத்திலிருந்து தங்களை காப்பாற்றுமாறு தேவர்கள் வேண்டிய போது, சிவபெருமான், தன்னருகே இருந்த தனது அணுக்கத் தொண்டன் சுந்தரரை ஆலகால விடத்தினை கொண்டு வருமாறு பணித்தார். சுந்தரரும் அந்த விடத்தினை சிறிய உருண்டையாக மாற்றி தனது உள்ளங் கையினில் ஏந்தி பெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சி இங்கே உணர்த்தப் படுகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சி, அனைவர்க்கும் அச்சம் விளைவித்து விரட்டிய நஞ்சு, பெருமானின் அடியவனாகிய சுந்தரருக்கு தீங்கு ஏதும் விளைவிக்காமல் இருந்த நிலையினையும் உணர்த்துகின்றது. பெருமானின் தொண்டராக வாழ்ந்த அப்பர் பிரானுக்கு, சமணர்கள் பாலினில் கலந்து ஊட்டிய நஞ்சு எந்த தீங்கினையும் செய்யாமல் இருந்ததை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். நிறம் என்று பொதுவாக குறிப்பிட்டாலும் கருமை நிறம் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். கண்டம்= கழுத்து; கண்டன்=கழுத்தினை உடையவன்; மன்னு=பொருந்திய, துன்னு=மிகுந்த; மதுவில் தெளி=தெளிந்த தேன்; சிறை=சிறகுகள்; பாற்கடலிலிருந்து பெருமளவில் பொங்கியெழுந்த ஆலகால விடத்தினை சிறு உருண்டையாக திரட்டி உட்கொண்டு, கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறத்தினை அடைந்த கழுத்தினை உடையவனும், ஒளிவீசும் திருமேனி உடையவனாக நிலையாக பொருந்தி நடனம் ஆடுபவனும், பேரொளிப் பிழம்பாக இருப்பவனும், உமை அன்னையைத் தனது உடலினில் ஒரு பாகமாக உடையவனும், பாதாளத்தையும் மேல் உலகத்தையும் கடந்து ஊடுருவி நிற்கும் நீண்ட திருமேனியை உடையவனும் ஆகிய எங்கள் இறைவனது ஊர் திருமுல்லை வாயிலாகும். காண்போர்க்கு இன்பத்தை தரும் சோலைகளை அடுத்துள்ள வளம் மிகுந்த கழனிகளில் பூத்துள்ள தாமரை மலர்களில் உள்ள தெளிந்த தேனினை உறிஞ்சி வயிறாரக் குடித்த வண்டுகள், மகிழ்ச்சியின் மிகுதியால் தங்களது சிறகுகளை விரித்து பறந்தவாறு இசை பாடுகின்ற காட்சிகள் காணப்படுவது திருமுல்லைவாயில் என்ற தலத்தில் நடைபெறுகிறது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன்
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமை பங்கன் எங்கள் அரன் ஊர்
களி மண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில்
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடும் திருமுல்லைவாயில் இதுவே

கொச்சைவயம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.89.10) பெருமானை மையணி கண்டன் என்றும் பிராட்டியை ஒண் கொடி என்றும் திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். ஒண் கொடி=ஒளி வீசுவதும் கொடி போன்று மெலிந்தும் உள்ள உமைஅன்னை; கொண்டல்=மேகம்; மேகம் தவழும் உயர்ந்த மாட வீடுகள் கொண்ட தலம் என்று கூறுகின்றார். வண்=நெருங்கிய, இங்கே சாயம் ஏற்றப்பட்ட என்று பொருள் கொள்வது பொருத்தம்; மிண்டர்=முரடர்கள்; பண்டைய நாளில், புத்தர்களும் சமணர்களும், பெருமானை குறித்து இழிவாக பேசிய பேச்சுகள் உண்மையை ஆதாரமாகக் கொண்டவை அல்ல; அந்த பேச்சுகள், சைவ மதத்தவரை திசை திருப்பும் நோக்கத்துடன் பேசப் பட்டவை; எனவே அத்தகைய பேச்சுகளை, பொருட்படுத்தாது புறக்கணித்து, தொடர்ந்து தன்னைப் பணிந்து வணங்கும் அடியார்களின் பண்டைய வினைகளை தீர்த்து அருள் புரியும் பண்பின் பெருமான் என்று கூறுகின்றார்.
குண்டர் வண் துவராடை போர்த்ததோர் கொள்கையினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டன்
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்கொடியோடும்
கொண்டல் சேர் மணி மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே

மை படர்ந்தது போன்று மிகவும் கருமையான நிறத்துடன் ஆலகால நஞ்சு எழுந்தது என்று புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.92.7) குறிப்பிடும் திருஞான சம்பந்தர், பெருமானை நஞ்சணி கண்டர் என்று அழைக்கின்றார். தென்சொல்=தமிழ் மொழி; வடசொல்=வடமொழி; திசைமொழி=பல்வேறு திசைகளிலும் பழக்கத்தில் இருந்த மற்ற மொழிகள்; விஞ்சுதல்=மிகுதல், இங்கே மற்றும் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. இறைவனின் புகழினை எடுத்துரைக்கும் பாடல்கள், எந்த மொழியில் இருந்தாலும், அந்த பாடல்களைப் பாடுவோரின் நெஞ்சத்து இருளை நீக்கும் தன்மை வாய்ந்தது என்று இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. அஞ்சனம்=மை;
தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல் புகலூரில்
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலைகடல் கடைய அன்று எழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே

தெங்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.93.4) திருஞானசம்பந்தர் பெருமானை, விடமணி கண்டர் என்று அழைக்கின்றார். பறைய=முற்றிலும் அழிய; பயத்தல்=கொடுத்தல்; கொண்டல்=மேகம்; குரை கடல்=ஓயாது அலைகள் ஒலி எழுப்பும் கடல்; வண்டுகள் அமர்ந்து தேனை உண்பதால், மலர்கள் விரிந்து மலர்கின்றன என்று கூறுகின்றார். தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயர் வெள்ளியங்குன்று.
பண்டு நான் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார்
கொண்டல் வான் மதி சூடிக் குரை கடல் விடமணி கண்டர்
வண்டு மாமலர் ஊதி மது உண இதழ் மறிவெய்தி
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்று அமர்ந்தாரே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.97.9) திருஞானசம்பந்தர் பெருமானை நீல மேவு கண்டனார் என்று குறிப்பிடுகின்றார். ஏலம்=நறுமணம் உடைய கூந்தல் தைலம்; வயது முதிர்ந்து கால்கை தளர்ந்த நிலையில் இறைவனைப் புகழ்ந்து பாடியும் போற்றியும் வணங்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும், உடல் அதற்கு ஒத்துழைக்க முடியாத நிலையினை அடைவதற்கு முன்னமே, உடல் நலமாக இருக்கும் போதே, இறைவனைப் பணிந்து வணங்கி பயன் அடையுமாறு அறிவுரை கூறுகின்ற பதிகம்.
காலினோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால்
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்பதன் முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.101.7) திருஞானசம்பந்தர் பெருமானை, கங்கை கரந்த கண்டர் என்று அழைக்கின்றார். கண்டர் என்றால் வீரம் மிக்கவர் ஆற்றல் மிக்கவர் என்று பொருள். வானிலிருந்து மிகவும் வேகமாக கீழே இறங்கிய கங்கை நதியினை, தாங்கும் ஆற்றல் சிவபெருமான் ஒருவருக்கு தான் உள்ளது என்று பிரமதேவனே உணர்த்தியதால், தானே, பகீரதன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து வேண்டுகிறான்.
கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர் காமனை
மங்க வெங்கணால் விழித்த மங்கை பங்கன் மன்னும் ஊர்
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல்
அங்கண் மந்தி முந்தி ஏறும் அந்தண் ஆரூர் என்பதே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.101.10) திருஞானசம்பந்தர், பெருமானை, நஞ்சமுண்ட கண்டன் என்று குறிப்பிடுகின்றார். பறித்த=முடிகள் பறிக்கப்பட்டு மொட்டையாக உள்ள தலை; கடுப்படுத்த மேனி=கடுக்காய்ப் பொடி பூசிய உடல்; நீராடாமல் இருந்ததால், தங்களது உடலிலிருந்து துர்நாற்றம் வீசுவதை தடுக்கும் பொருட்டு, கடுக்காய்ப் பொடி பூசிக் கொண்ட சமணத் துறவிகள்; வெறித்த=முனிந்த, கோபம் கொண்ட; வேடன்=சிவ வேடம் உடைய பெருமான்; அசும்பு= கசியும் நீர்; மறித்து=தடுத்து, திருப்பி; காவேரி நதியால் அடித்துக் கொண்டு வரப்படும் வண்டல் மண்ணினை மீண்டும்மீண்டும் வாரி, நீரினை வயல்களுக்கு பாய்ச்சும் ஊர் என்று நிலவளம் மற்றும் நீர்வளம் உணர்த்தப் படுகின்றது. சமணர்கள் செய்து வந்த பொய்த் தவத்தினை காணும் பெருமான், அவர்கள் மீது கோபம் கொள்வதாக இங்கே சொல்லப் படுகின்றது.
பறித்த வெண்டலைக் கடுப்படுத்த மேனியார் தவம்
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவுமூர்
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல்
அறுத்தவாய் அசும்பு பாயும் அந்தண் ஆரூர் என்பதே

கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.10) திருஞானசம்பந்தர், பெருமானை, விடமுண்ட கண்டர் என்று அழைக்கின்றார். குறி=கொள்கை, குறிக்கோள்; சமணர்களும் புத்தர்களும் தாம் சொல்லி வந்த கொள்கைகளின் வழியே நில்லாதவர் என்று குறிப்பிடுகின்றார். மிண்டுரை= பொருளற்ற முரட்டுச் சொற்கள்; முண்ட மேனியர்=திருமேனி எங்கும் புண்டரீகமாக திருநீற்றினை அணிந்தவர்; புண்டரீகம்=மூன்று கோடுகள்;
குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும் குறியின் நெறி நில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டு அவை மெய்யெனக் கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்ட நன் மேனியர் கடிக்குளத்து உறை தரும் எம் ஈசர்
தொண்டர் தொண்டரைத் தொழுது அடி பணிமின்கள் தூநெறி எளிதாமே

கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.1) திருஞானசம்பந்தர், பெருமானை, நீலமார் தரு கண்டன் என்று குறிப்பிடுகின்றார். மிகவும் அகன்று விரிந்து பரந்த முக்தி உலகத்தை சால நீள் தலம் என்று குறிப்பிடுகின்றார், கொழுந்தீசர் என்பது தலத்து இறைவனின் திருநாமம். கோலம்=அழகு;
நீலமார் தரு கண்டனே நெற்றியோர் கண்ணனே ஒற்றை விடைச்
சூலமார் தரு கையனே துன்று பைம்பொழில் சூழ்ந்து அழகாய
கோல மாமலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
சால நீள் தலம் அதனிடைப் புகழ் மிக தாங்குவர் பாங்காவே

மாந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.110.4) திருஞானசம்பந்தர், பெருமானை கண்டன் என்று குறிப்பிடுகின்றார். கொழுந்து=சிறப்பான ஒன்று, தலையானது; ஞாழல்=புலி நகக் கொன்றை மரம்; கண்டன்=கழுத்தினை உடையவன்; ஏனையோரின் கழுத்திலிருந்து மிகவும் வேறுபட்டு புகழினை உடையது பெருமானின் கழுத்து. ஸ்ரீகண்டன் என்பது அவரது திருநாமங்களில் ஒன்று. அனைவரையும் காக்கும் பொருட்டு, பாற்கடலிலிருந்து பொங்கி வந்த நஞ்சினைத் தானே உட்கொண்ட பெருமான், ஊழிக்காலத்தில் தனது வயிற்றினில் ஒடுங்கும் உயிர்களின் நலன் கருதி, வயிற்றினுள்ளே அந்த விடத்தைச் செலுத்தாமல், தனது கழுத்தினில் எப்போதும் தேக்கிய வண்ணம் இருக்கின்றார். இவ்வாறு அனைவர்க்கும் நன்மை புரிந்த, கழுத்து பெருமான் ஒருவருக்கே உரியது என்பதால், கண்டன் என்று மிகவும் பெருமையாக அவரை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அழைக்கின்றார். பெருமானை மலை என்று திருஞானசம்பந்தர் அழைப்பதையும் நாம் உணரலாம். அருள்நிதி தர வரும் ஆனந்த மலையே என்று மணிவாசகர் அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது.இலவம், புலிநகக் கொன்றை, ஈஞ்ச மரம், சுரபுன்னை இளமருது, இலவங்கம், ஆகிய மரங்களை கலந்து அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள மாந்துறை தலத்தினில் அமர்ந்துள்ள இறைவன், ஆலகால விடத்தை தேக்கி அனைவரையும் காப்பாற்றிய சிறப்பினை உரித்தாகக் கொண்டுள்ள கழுத்தினை உடையவன் ஆவான். பேரலைகள் வீசும் நீர்ப் பரப்பினைக் கொண்ட கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், படமெடுத்து ஆடும் பாம்புடன் தனது தலையில் வைத்துள்ள இறைவன், மலையைப் போன்று சிறந்த செல்வங்களை உடையவன் ஆவான். நிலையான அமைதி, எல்லையற்ற ஆனந்தம் வீடுபேறு ஆகிய செல்வங்களைத் தன்னிடம் கொண்டுள்ள இறைவனை, வானவர்களின் தலைவனாக விளங்குபவனை, தவிர்த்து வேறு எவரையும் வணங்குதலை நாம் அறியோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமருது இலவங்கம்
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடரவுடன் வைத்த
மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.09.3) பெருமானை திருஞான சம்பந்தர் நஞ்சு உண்டு இருள் கண்டர் என்று அழைக்கின்றார். பெருமானின் அருட் செயல்களை, அவர் புரிந்த வீரச் செயல்களை குறிப்பிட்டு அவரைப் புகழும் அடியார்களின் வலிய வினைகள் மாய்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நீராட்டுவதை திருமஞ்சனம் என்று அழைப்பது இன்றைய வழக்கிலும் உள்ளதை நாம் உணரலாம். தனது வலிமையால் தேவர்களை வென்ற அரக்கன், பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட பல தேவர்களை பெண்களுக்கான உடையை அணியச் செய்து ஏளனம் செய்ததுடன் அவர்களை பல விதத்திலும் அந்தகன் துன்புறுத்தினான். தேவர்களின் முறையீட்டுக்கு இரங்கிய சிவபெருமான், பைரவரை அந்தகனுடன் போருக்கு செல்லுமாறு பணிந்தார். பைரவரும் அந்தகனை வெற்றி கொண்ட பின்னர், அவனது உடலினை சூலத்தில் ஏந்தியவாறு பெருமான் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்தார். பெருமானை தரிசனம் செய்த உடன், பெருமானின் கடைக்கண் பார்வை அரக்கனது பாவங்கள் அனைத்தையும் அழிக்கவே, செருக்கு நீங்கிய அரக்கன் பெருமானை புகழ்ந்து துதித்தான். மனம் திருந்திய அவனை பெருமான் தனது கணங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார் என்று கந்த புராணம் கூறுகின்றது.
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமிழலையார்
அஞ்சனக் கண் உமை பங்கினர் கங்கை அங்கு ஆடிய
மஞ்சனச் செஞ்சடையார் என வல்வினை மாயுமே.

அம்பர் திருக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.19.11) திருஞானசம்பந்தர், பெருமானை அழகர் என்றும் அடிகள் என்றும் அம்பர் மேவிய நிழல்திகழ் சடைமுடி நீலகண்டர் என்றும் குறிப்பிட்டு, இந்த பதிகத்தை ஓதி சிவகதி அடையுமாறு அடியார்களுக்கு அறிவுரை கூறுகின்றார். கொண்மின் என்ற சொல்லுக்கு முன்னர் சிவகதி என்ற சொல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும். உமிழ் திரை உலகு=அலைகள் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகம்;
அழகரை அடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீலகண்டரை
உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே

திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.36.2) திருஞானசம்பந்தர், பெருமானை நீலமார் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். மரவம்=குங்கும மரம்; காளத்தி தலத்தின் அருகே ஓடும் நதி பொன்முகலி என்று அழைக்கப் படுகின்றது. பெருமானை எவ்வாறு நினைத்தல் தகுதியான செயலோ அவ்வாறு பெருமானை நினைத்து வழிபடுதல் நமது கடமை என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நெஞ்சினை தூய்மை செய்து நினைக்க வேண்டும் (4.23.9) உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும் உன்னையல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் (6.31.7) பொதுநீக்கித் தனை நினைய வல்லோர் (6.1.5) என்ற அப்பர் பிரான் திருவாய்மொழிகள் நமது நினைவுக்கு வருகின்றன.
ஆலமா மரவமோடு அமைந்த சீர் சந்தனம்
சாலமா பீலியும் சண்பகம் உந்தியே
காலமார் முகலி வந்து அணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே

நமச்சிவாயப் பதிகத்தின் பாடலில் (3.49.10) திருஞான சம்பந்தர் பெருமானை, நஞ்சுண் கண்டன் என்று அழைக்கின்றார். கஞ்சி மண்டையர்=மண்டை எனப்படும் மண் பாத்திரத்தினை உண்கலனாகக் கொண்ட புத்தர்கள்; கையர்=கீழ் மக்கள், இழிந்த குணத்தை உடைய சமணர்கள்; விஞ்சை=வித்தை; விரவிலர்=கலக்காதவர்; புத்தர் மற்றும் சமணர்களின் சொற்களை ஏற்காத ஈசன்; புத்தர் மற்றும் சமணர்களின் கொடிய சொற்களை ஏற்காத பெருமான்; விஞ்சை அண்டர்கள் என்று குறிப்பிட்டு தேவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்று கூறுகின்றார். ஆற்றல் மிகுந்தவர்களாக இருப்பினும், அவர்களால் ஆலகால விடத்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியவில்லை என்று உணர்த்தி, ஆலகால விடம் எத்துணை கொடியதாக இருந்தது என்பதை உணர்த்துகின்றார். தனது அடியார் அல்லாத சமணர்களின் சொற்களை பொருட்படுத்தாது விடுக்கும் பெருமான், தனது அடியார்களாகிய தேவர்களின் முறையீட்டினை மதித்து அருள் புரிந்தார் என்பதை மிகவும் நயமாக திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மண்டை என்று அழைக்கப்பட்ட உண்கலத்தினில் கஞ்சியை ஏந்திக் குடித்த புத்தர்களும், தங்களது கைகளில் உணவினை ஏற்றுக் கொண்டு உட்கொள்ளும் சமணர்களும், சிவபெருமான் குறித்து இழிவாக பல கொடுமையான சொற்களை சொல்பவராக உள்ளனர். அத்தகைய சொற்களை பொருட்படுத்தாது விடுத்த பெருமான், பல வித்தைகளில் வல்லவர்களாக விளங்கிய தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஆலகால விடத்தின் தாக்குதலிலிருந்து விடுவிக்கும் பொருட்டு நஞ்சினை உட்கொண்டார். மேலும் அந்த கொடிய நஞ்சு, பிரளய காலத்தின் முடிவில் தன்னிடம் ஒடுங்கவிருக்கும் உயிர்களுக்கு கேட்டினை ஏற்படுத்தாமல் இருக்கும் பொருட்டு, அந்த நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கி வைத்துள்ளார். அத்தகைய பெருமை வாய்ந்த பெருமானின் திருநாமம் நமச்சிவாய என்பதாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.52.5) திருஞானசம்பந்தர் தேவர்கள், நீலகண்டனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது சிந்தையில் நினையாமல் தினமும் வாழ்கின்றனர் என்று கூறுகின்றார். சிறுவர்களாக இருந்த போதிலும் பெருமானின் பெருமையினை புரிந்து கொண்டு பெருமானுக்கு தொண்டு செய்த, சண்டீசர் மற்றும் மார்க்கண்டேயர் ஆகியோரை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கோலம்=அழகிய;
கோலமாய நீள் மதில் கூடல் ஆலவாயிலாய்
பாலனாய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே
நீலமாய கண்டனே நின்னை அன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (4.52.8) திருஞானசம்பந்தர், பெருமானை, கறையிலங்கு கண்டனே என்று அழைக்கின்றார். கயிலாய மலையின் புனிதத் தன்மை மற்றும் பெருமானின் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாதவனாக அரக்கன் இராவணன் செயல்பட்ட தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. நிறையிலங்கு=புலன்களின் வழியே செல்லாமல், ஒன்றிய மனத்துடன், இறைவன் பற்றிய சிந்தனைகளே மனதினில் நிறைந்து நிற்கும் வண்ணம்; இவ்வாறு இறைவனை வழிபடுவதே முறையான வழிபாடு என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மறையிலங்கு பாடலாய்=வேதங்களில் உள்ள பாடல்களால் போற்றப் படுபவனே;
கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
துறையிலங்கு மன்னனைக் தோள் அடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.53.5) திருஞானசம்பந்தர் பெருமானை, மைகொள் கண்டன் என்று அழைக்கின்றார். வெய்ய=கொடிய; நாம் செய்யும் கொடிய செயல்கள் தீவினைகளாக மாறி, நமது வினைகளை மேலும் அதிகரித்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நாம் விடுபட்டு வெளியேறாத வண்ணம் செயல்படுகின்றன. எனவே நாம் இதுவரை இந்த பிறவியில் செய்த பாவங்களையும் பழைய பிறவிகளிலிருந்து சுமந்து கொண்டுவந்த வினைகளையும் தீர்க்கவேண்டும் என்று விரும்பினால் பெருமானைத் தொழ வேண்டும் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் நமக்கு அறிவுரை கூறுகின்றார். வினைகளை சுட்டெரிக்கும் வல்லமை வாய்ந்தவன் என்பதை உணர்த்தவே, பெருமான் தனது கையினில் தீச்சுடரை ஏந்திய வண்ணம் நடனமாடுகின்றான் என்று ஞான நடனத்தின் தன்மையை கூறுவார்கள். மாலை=நள்ளிரவு நேரம்; துன்று=அடர்ந்த; கொய்ய=பறித்த; கொடிய பாவங்கள் உம்மை விட்டு முழுவதுமாக நீங்கிவிட வேண்டும் என்று விரும்பும் மனிதர்களே, நான் சொல்வதை கேட்பீர்களாக; பாற்கடலிலிருந்து பொங்கிய ஆலகால விடத்தினை உட்கொண்டு சிறப்பான முறையில் தேவர்களை ஆட்கொண்டு காத்த பின்னர் அந்த விடத்தைத் தேக்கியதால் மை போன்று கருமையான நிறத்தில் கறை படர்ந்த கழுத்தினை உடையவனும், வெப்பம் மிகுந்த ஊழித்தீயினில் நின்ற வண்ணம், எங்கும் அடர்ந்த இருள் சூழ்ந்த நேரத்திலும் நடனம் ஆடுபவனும், என்னால் மிகவும் விரும்பப் படுபவனும், புதியதாக பறிக்கப் பட்டதும் அன்று மலர்ந்ததும் ஆகிய கொன்றைப் பூக்களை மிகவும் அடர்த்தியாகத் தனது தலையினில் சூட்டிக் கொள்பவனும், எமது தலைவனும் ஆகிய பெருமான், நீர்நிலைகள் நிறைந்த ஆனைக்கா தலத்தினில் உறைகின்றான்; நீங்கள் அனைவரும் அங்கு சென்று அவனைப் பணிந்து வணங்குவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர்
மைகொள் கண்டன் வெய்ய தீ மாலையாடு காதலான்
கொய்ய விண்ட நாண்மலர்க் கொன்றை துன்று சென்னி எம்
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.56.1) திருஞானசம்பந்தர், பெருமானை கறையணி கண்டன் என்றும் வெண்தோடணி காதினன் என்றும் குறிப்பிடுகின்றார். ஆலகால விடத்தினால் விளைந்த ஆபத்து போன்று பல இடர்களிலிருந்து தங்களை காத்த இறைவனை, வானோர்கள், தங்களது தந்தையாக கருதி வழிபடுகின்றனர் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். காலத்தன்று என்று பண்டைய நாளில் இறைவன் வேதங்கள் அருளிய தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. மன்னு=நிலையாக பொருந்திய; ஈசன்=தலைவன்; தோடணி காதினன் என்ற தொடர் மூலம், பெருமான் மாதொரு பாகனாக இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது.
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுதேத்த நின்ற
கறையணி கண்டன் வெண் தோடணி காதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.63.6) திருஞானசம்பந்தர், பெருமானை, கறைக்கண்டன் என்று அழைக்கின்றார். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். சிறுத்தொண்ட நாயனார் வாழ்ந்த தலம். சிறுத்தொண்டரின் அழைப்பின் பேரில் திருஞான சம்பந்தர் இந்த தலம் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. தனது தலைவனாகிய பெருமானுடன் கூடாத ஏக்கத்தில் தவிக்கும் சம்பந்தம் நாயகி, நாரையை பெருமானிடம் தூது செல்லுமாறு வேண்டும் பாடல். தலைவனாக இருப்பவனுக்கு அழகு, தனது தொண்டர்களின் குறையை தீர்ப்பது தானே. அவ்வாறு இருக்கையில், தன்னுடன் சேர்ந்து தனது ஏக்கத்தை போக்காமல் பெருமான் இருப்பது தகுமா என்ற கேள்வி கேட்கப் படுகின்றது. மேலும் பெருமானின் அருளினை தான் பெறும் நாள் விரைவில் வருவதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் நாரையின் தூது இருக்க வேண்டும் என்று சம்பந்த நாயகி இந்த பாடலில் வேண்டுகின்றாள்.
குறைக் கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கைத்
துறைக் கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய்
கறைக் கண்டன் பிறைச் சென்னிக் கணபதீச்சரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறலாமே

கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.89.2) திருஞானசம்பந்தர், பெருமானை நீலமார் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். நுந்தி=தள்ளிக் கொண்டு; கோலமாம்=அழகிய; ஆலியா=ஆலித்து, ஆரவாரித்து; நச்சி=விரும்பி; பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்து திருமால் பிரமன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் அச்சுறுத்திய ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றிய பெருமான் இருக்கையில் நாம் எதற்காக அஞ்ச வேண்டும் என்று அறிவுரை கூறும் பதிகம். இதன் மூலம் பெருமானை வணங்கித் தொழுது நமது துன்பங்கள் எத்துணை கொடியதாக இருந்தாலும் தீர்த்துக் கொள்ளலாம் என்று திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார்.
ஏலமார் இலவமோடு இனமலர்த் தொகுதியாய் எங்கும் நுந்திக்
கோலமாம் மிளகொடு கொழுங்கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு
ஆலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலமார் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.2) திருஞானசம்பந்தர் பெருமானை, காளகண்டர் என்று அழைக்கின்றார். ஊனமர்=ஊன் பொருந்திய; பொது=பொதுவான அரங்கம்;
கையின் மா மழுவினர் கடுவிடம் உண்ட எம் காளகண்டர்
செய்ய மா மேனியர் ஊனமர் உடை தலைப் பலி திரிவார்
வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்
ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.101.5) திருஞானசம்பந்தர் பெருமானை, நீலமார் கண்டம் உடைய எங்கள் நிமலர் என்று குறிப்பிடுகின்றார். ஒண்மழு=ஒளி பொருந்திய மழு: நின்று=தங்கி; நல்மாது=உமையன்னை; உமையம்மையின் பாடலுக்கு ஏற்ப பெருமான் நடனமாடுகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். குணம்=தன்மைகள்; குணமே குறித்துணர்வார் என்று சிவஞானிகள் பெருமானின் தன்மையை உணர்ந்து கொண்டு அவரை வழிபடுவதை குறிப்பிடுகின்றார்.
சூலமோடு ஒண்மழு நின்றிலங்கச் சுடுகாடு இடமாகக்
கோல நன்மாதுடன் பாட ஆடும் குணமே குறித்து உணர்வார்
ஏல நறும்பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய
நீலமார் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.108.2) திருஞானசம்பந்தர் பெருமானை, மாமணி கண்டன் என்று அழைக்கின்றார். வைதிகம்=வேத நெறி. கைதவம்=வஞ்சனை, கார்=கரிய நிறம், எய்தி=அடைந்து; வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வாழ்க்கை நெறி தான் அனைவருக்கும் உகந்த நெறி. எனவே அந்த நெறியில் வாழாது வேறு விதமாக வாழ்க்கை நடத்தும் சமணர்களை பொய் வாழ்க்கை வாழ்பவர்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நெற்றியில் நீறு பூசாத காரணத்தாலும், நீராடி உடலின் மாசு களையாத காரணத்தாலும் சமணர்கள் ஒளி குன்றியவர்களாக காட்சி தருகின்றனர். வஞ்சனை படைத்தவர்களையும் கரியர் என்று கூறுவதுண்டு. எனவே அவர்களை கார் அமண் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மதுரையில் இருந்த சமணர்கள் சைவர்களைக் கண்டால் தீட்டு என்று கருதி, அவர்களிடம் இருந்து விலகி செல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். எனவே அவர்களுடன் வாதிட வேண்டும் என்றால் அவர்கள் இருக்கும் இடத்தை நாடித் தான் செல்ல வேண்டும் என்று திருஞானசம்பந்தர் கருதியது இங்கே உணர்த்தப் படுகின்றது. நன்று அறியா சமண் பாழிக்குள் நான் புகமாட்டேன் என்று அப்பர் பிரானின் தமக்கையார் திலகவதியார் மறுத்தமை நமக்கு நினைவுக்கு வருகின்றது. தருமசேனராக வாழ்ந்து வந்த மருள்நீக்கியாரை (பின்னாளில் திருநாவுக்கரசர், அப்பர் பிரான் என்று அழைக்கப் பட்டவரை) இறைவன் தான் சூலை நோய் கொடுத்து ஆட்கொள்வதாக கனவின் கண் வந்து கூறியதால் ஏற்பட்ட தைரியம், திலகவதியாரை அவ்வாறு பேசத் தூண்டியது. ஆனால் திருஞான சம்பந்தருக்கோ, அவர்களை வாதுக்கு அழைக்க அவர்கள் இருக்கும் இடம் நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அனைவருக்கும் முதல்வராகிய தன்மை படைத்தமையால் இறைவனை ஆதி என்று அழைக்கின்றார். முன்னைப் பழமைக்கும் முன்னை பழம் பொருளே என்று மணிவாசகர் கூறுவதையும் நாம் இங்கே நினைவு கூர்தல் பொருத்தமாகும். கருநீலமணி பதித்தது போன்ற கழுத்தை உடைய சிவபெருமானே, ஆலவாயிலில் உறையும் எமது ஆதிப் பிரானே, உமது புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும். வைதீக நெறியின் படி வாழ்க்கையை நடத்தாமல், பொய்யான வாழ்க்கை நடத்தும் வஞ்சனையாளர்களான சமணர்களை, அவர்கள் இருக்கும் இடம் சென்று அடைந்து வாது செய்ய அடியேன் எண்ணியுள்ளேன். உமது திருவுள்ளத்தை தெரியப்படுத்தவும். உமது திருவருள் வேண்டுகின்றேன். நீர் திருவருள் புரிவீராக என்று திருஞானசம்பந்தர் பெருமானை வேண்டும் பாடல்.
வைதிகத்தின் வழியொழுகா தவக்
கைதவம் உடைக் காரமண் தேரரை
எய்தி வாது செயத் திருவுள்ளமே
மை திகழ் தரு மாமணி கண்டனே
ஞால நின் புகழே மிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.116.9) திருஞானசம்பந்தர் பெருமானை மணிகண்டனே என்று அழைக்கின்றார். காயம்=உடல்; மிக்கதொரு=பெரிய; காயம் மிக்க=பெரிய உடல் கொண்ட திருமால்; திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் கலந்து பெருமானின் திருவடியையும் திருமுடியையும் தேடிய போதிலும் அவர்களால் பெருமானின் உருவத்தை காண முடியவில்லை என்பது முதல் அடியின் பொருள். மயங்க=சேர; அவர்கள் இருவரும் மனம் மயங்கி திகைக்கும் வண்ணம் இந்த பூமியில் நின்றவர் பெருமான் என்று இரண்டாவது அடியின் பொருள். அகண்டன்=அளவிடப்பட முடியாதவன்; ஏய=பொருந்திய; இருவராலும் அளக்க முடியாத வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்ற பெருமான், மணிகண்டன் என்று அழைக்கப்படும் வண்ணம், மாணிக்கம் பதிக்கப் பட்டது போன்ற கழுத்தினை உடையவன் ஆவான். லட்சணம் என்ற வடமொழிச் சொல் இலக்கணம் என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. இலட்சணம்=அழகு; அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் தனது தூக்கத்தை விலக்கி ஞானம் அளிப்பாய், அழகனாகிய பெருமானே என்று கடை அடியில் திருஞானசம்பந்தர் வேண்டுகின்றார்.
காயம் மிக்கதொரு பன்றியே கலந்து நின்ன உருபு அன்றியே
ஏய இப்புவி மயங்கவே இருவர் தாம் மயங்கவே
தூய மெய்த்திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே
மேய இத்துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.120.6), திருஞானசம்பந்தர் பெருமானை கண்டன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் கழுத்து மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் கண்டன் என்ற சொல் சிவபெருமான் ஒருவரையே குறிக்கும். மேலும் இந்த பாடலில் அமைச்சர் குலச்சிறையாரை தவம் புரிந்தவர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அமைச்சராக பணி புரிந்தவர் எத்தகைய தவத்தினை செய்திருக்க முடியும். பெருமானின் அடியார்களைக் கண்ட போது, அவர்களது நாடு, குலம், கோத்திரம், குணம் ஆகியவற்றை ஆராயாது, அனைவரையும் வழிபட்ட செய்கையே இங்கே தவம் என்று குறிப்பிடப் படுகின்றது. கலை மலி கரத்தான்=கலைமான் பொருந்திய கையினை உடையவன்; இலை போன்ற கூரிய முனையை உடைய சூலம் என்பதால், மூவிலை வேல் என்று சொல்லப் படுகின்றது.
நலமிலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற
குலமிலராக குலமதுண்டாகத் தவம் பணி குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல் ஆலவாயவதும் இதுவே

நல்லூர் பெருமணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.125.7) திருஞான சம்பந்தர் பெருமானை, மேகத்த கண்டன் என்று அழைக்கின்றார். மேகம் போன்று கரிய நிறத்தினை உடைய கழுத்தினை உடையவன் என்பது பொருள். மேகம் பலனை எதிர்பாராது மழை பொழிவதால், கொடைக் குணம் நிறைந்த கருணை உள்ளத்திற்கு மேகம் உதாரணமாக சொல்லப் படுகின்றது. உயிர்களுக்கு தான் செய்து வரும் உதவிகளுக்கு பெருமான் என்றும் பலன் எதிர்பார்ப்பதில்லை. எனவே மேகம் என்ற உதாரணம் நமக்கு பெருமானின் கருணை உள்ளத்தையும் நினைவூட்டும் வண்ணம் மேகத்த என்ற சொல்லினை திருஞானசம்பந்தர் கையாண்டுள்ளார் என்று சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். இந்த தலத்தின் தேவி வெண்ணீற்றுமை உமை நங்கை என்று அழைக்கப் படுவதை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். திருஞான சம்பந்தரின் திருமணத்திற்கு வந்து கூடி வீடுபேறு பெற்று உய்யும் பொருட்டு, திருக்கோயிலில் எழுந்த சோதியில் கலந்து கொள்வதற்காக கூடிய அடியார்கள் அனைவருக்கும், அம்பிகை தனது கைகளால் திருவெண்ணீறு அருளினார் என்பது தலவரலாறு. பரை என்பது அம்பிகையை குறிக்கும் சொல். பராவணம் ஆவது நீறு என்று திருநீற்றுப் பதிகத்தில் திருஞானசம்பந்தர் பாடியதற்கு ஏற்ப, அம்பிகை அனைவர்க்கும் திருநீறு அளித்தது, இறைவனது கருணை உள்ளத்தை வெளிப்படுத்துகின்றது. இறைவனின் திருவுள்ளக் கருத்தினை செயல் படுத்துபவள் தாமே அன்னை. பந்தம் என்றால் கட்டு என்று பொருள்; பந்தித்த=இடுப்பினில் கச்சையாக கட்டிய; போகத்தன் என்ற சொல் இறைவன் அன்னையுடன் கூடி போகத்தை அனுபவிப்பவனாக தோற்றம் அளித்து, உலகத்து உயிர்கள் அனைத்தும் இல்லறம் அளிக்கும் போகத்தில் ஈடுபட்டு, உயிர்கள் இணைவதற்கு தகுந்த உடல்களை படைப்பதற்கு உதவியாக இருந்து செயல்படும் வண்ணம், உலகத்திலுள்ள உயிர்களை பெருமான் இயக்குகின்றான் என்பது உணர்த்தப் படுகின்றது. பெருமான் உண்மையில் யோகம் புரிபவனாக இருக்கும் தன்மையை நாம் அனைவரும் அறிவோம். யோகத்தையே புரிந்தானே, என்ற தொடர் பெருமான் இந்த திருமணத்திற்கு வந்த அனைவர்க்கும் யோகத்தின் பயனாகிய வீடுபேற்றினை அளித்த தன்மையை உணர்த்துகின்றது என்று சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். புரிந்தான் என்று இறந்த காலத்தில் சொல்லப்பட்டுள்ள தன்மை, திருஞானசம்பந்தர் தனக்கு வீடுபேறு அளிக்க வேண்டும் என்ற வைத்த விண்ணப்பத்தை செவி மடுத்த உடனே, பெருமான், மிகவும் விரைவாக செயல்பட்டு, அவருக்கு மட்டுமன்றி அந்த திருமணத்திற்கு வருகை தந்த அனைவரும் வீடுபேறு பெறும் வண்ணம் அருள் புரிந்த தன்மையை உணர்த்தும் முகமாக, எதிர்காலத்தில் நிகழவிருக்கும் செயல், நடைபெற்று முடிந்ததாக இறந்த காலத்தில் நயமாக சொல்லப் பட்டுள்ளது. பெருமான் மிகவும் விரைந்து செயல்பட்ட தன்மை, அவரது எல்லையற்ற கருணையை வெளிப் படுத்துகின்றது. கரிய மேகத்தைப் போன்ற கருமை நிறத்தில் கறை படர்ந்த கழுத்தினை உடைய பெருமான், பலன் எதிர்பாராது மழை பொழியும் மேகம் போன்று உயிர்கள் பால் கருணை கொண்டு பல உதவிகள் புரிகின்றான். அவன் எட்டு திருத்தோள்களை உடையவன்; வெண்ணீற்று உமை நங்கை என்று அழைக்கப்படும் உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவன் சிவபெருமான். அவன் பாயும் தன்மை படைத்த புலியினைக் கொன்று அதன் தோலினைத் தனது இடுப்பினில் ஆடையாக அணிந்தவன்; அந்த புலித்தோல் ஆடையின் மேல், பாம்பினை கச்சாக இறுகக்கட்டி தனது விருப்பம் போன்று அந்த பாம்பினை ஆட்டுகின்றான். அன்னையுடன் எப்போதும் கூடியிருக்கும் தன்மையால் போகத்தனாக உலகத்தவர்க்கு காட்சி அளித்த போதிலும் அவன் சிறந்த தன்மையில் யோகத்தில் ஆழும் முனிவனாகவும் விளங்குகின்றான். மேலும் உயர்ந்த சிவயோகத்தை உயிர்களுக்கு அருள்பவனாகவும் விளங்குகின்றான்.
மேகத்த கண்டன் எண் தோளன் வெண்ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தையே புரிந்தானே

அங்கமாலை பதிகத்தின் பாடலில் (4.9.2) அப்பர் பிரான், பெருமானை, நஞ்சுண்ட கண்டன் என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் நடனக் காட்சியைக் காணுமாறு கண்களை பணிக்கும் பாடல் இது. நஞ்சு உண்ட பின்னரும், இறவாமல் இருந்த காரணத்தால், பிறப்பு இறப்புகளைக் கடந்த இறைவன் சிவபெருமான் என்பது எங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான் நம்மை, சிவபெருமானது நடனக் கோலத்தை கண்டு களிக்குமாறு அறிவுறுத்துகின்றார். ஏதாவது ஒரு தொழிலினைச் செய்து கொண்டு நடனம் ஆடுவதே கடினம். ஆனால் சிவபெருமான் அல்லும் பகலும் இடைவிடாமல் நடனம் ஆடிக் கொண்டு இருந்தாலும், ஐந்து தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருக்கின்றார். அவர் செய்யும் ஐந்து தொழில்களையும் உணர்த்துவதே இந்த நடனக் கோலம். நாதத்திலிருந்து உலகம் தோன்றியது என்பர். எனவே நாதம் எழுப்பும் உடுக்கையினை கையில் கொண்டு ஆடும், சிவபெருமான் படைப்புத் தொழிலினை அதன் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். அபயமுத்திரை காட்டும் வலது கரம் காக்கும் தொழிலையும், தீ ஏந்தி இருக்கும் இடது கரம் அழிக்கும் தொழிலையும், முயலகனை அழுத்திய திருவடி மறைத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளும் செயலையும் குறிக்கின்றது. கண்களே, பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தை உடையவனும், எட்டு தோள்களை வீசி நின்றாடுபவனும் ஆகிய சிவபெருமானை நீங்கள் காணுங்கள் என்று நமக்கு அறிவுரை கூறும் பாடல்.
கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக்
கண்காள் காண்மின்களோ

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.22.10) அப்பர் பிரான், பெருமானை நீலஞ்சேர் கண்டனார் என்று அழைக்கின்றார். பனிநிலா=குளிர்ச்சியைத் தரும் நிலவு: அனைத்து உயிர்களும் இறந்த பின்னரும் இருக்கும் பாலனாகவும், அனைத்து உயிர்களுக்கு முன்னே தோன்றியமையால் அனைவர்க்கும் மூத்தவனாகவும் இருக்கும் இறைவன், குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனைத் தனது நெற்றியில் வைத்துள்ளான். அந்த சந்திரனின் ஒளி இவரது சடையில் தெரிகின்றது. காளையை வாகனமாகக் கொண்ட பெருமான், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த காலன் மீது கோபம் கொண்டு, காலால் அவனை உதைத்தவர். உலகத்தவரைக் காக்கும் பொருட்டு விடம் உண்ட காரணத்தால், நீல நிறத்துடன் திகழும் கழுத்தினை உடையவர். இவர் தான், உலகத்தின் இருதயமாக கருதப்படும் தில்லைச் சிற்றம்பலத்தில், நீண்ட தீயின் இடையே நின்று கூத்தாடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் எரி ஆடுமாறே என்று முடிகின்றன. இங்கே எரி எனப்படுவது ஊழித்தீ ஆகும். பிரளய காலத்தில், அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்கிய பின்னர், அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னர், இறைவன் நடமாடுவது பல திருமுறைப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
பாலனாய் விருத்தனாகிப் பனிநிலா எறிக்கும் சென்னிக்
காலனைக் காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்றேறி
ஞாலமாம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலம் சேர் கண்டனார் தாம் நீண்டு எரி ஆடுமாறே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.24.4) அப்பர் பிரான், கறையும் கொப்பளித்த கண்டர் என்று பெருமானை அழைக்கின்றார். கொப்பளித்த=பொருந்திய; இறை=சிறிது; பெருமான் இமைப்பளவில் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து உடனே மூடிய செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. அறையும்=புகழப்படும்; பெருமானின் சடை மேல் ஏற்றுக் கொள்ளப்படும் தகுதி குறித்து, கொன்றை மலர்கள் புகழப்படுகின்றன என்று கூறுவதாகவும், அனைவராலும் புகழப்படும் சென்னி உடையவர் பெருமான் என்று கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்.
கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர் வண்டுண்டு பாடும் கொன்றை
அறையும் கொப்பளித்த சென்னி அதிகை வீரட்டனாரே

இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (4.24.9) அப்பர் பிரான், பெருமானை, இரவு கொப்பளித்த கண்டர் என்று அழைக்கின்றார். இரவின் இருள் போன்ற கரிய நிறம் பொருந்திய கழுத்தினை உடையவர் என்று கூறுகின்றார். பரவு=புகழ் சொற்கள், வாழ்த்துக்கள்; விரவு=பொருந்தி கலந்த;
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த
விரவு கொப்பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர் அதிகை வீரட்டனாரே

திருவதிகை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.26.4) அப்பர் பிரான் பெருமானை கறை கண்டா என்று அழைக்கின்றார். தெருளுமா=அறியும் வழி, தெளிவு அடைதல்: அருளும் ஆறு=எனது நிலைக்கு ஏற்றவாறு அருளும் வழி: தீய வினைகளைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் செயல்படும் ஐந்து பொறிகளையும் தீவினைச் சுற்றமென்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். போவதோர் வழி=உயிர்கள் உய்வினை அடையக்கூடிய வழி. தீவினைச் சுற்றம் என்பதற்கு, முந்தைய பல பிறவிகளில் சேர்த்த வினைத் தொகுதியை குறிப்பிட்டு, அந்த வினைகளில் அழுந்தி மீள முடியாமல், உயிர் இருக்கும் நிலையைக் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். இறைவனே நான் தெளிந்த அறிவில்லாமல் இருக்கின்றேன்: தீய வினைகளைப் பெருக்கிக் கொள்ள வகை வகுப்பதால், தீய வினைகளின் சுற்றங்களாக கருதப்படும் ஐந்து பொறிகளின் ஆதிக்கத்தில் அழுந்தியுள்ள நான், மனம் தெளிவடையும் வழியினை பின்பற்றி, மனம் தெளிவு பெறுவதில் நாட்டம் அடையாமல் இருக்கின்றேன்: அதனால் உயிர் உய்வினை அடையும் நெறியினை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றேன்: தேவர்களைக் காக்க வேண்டி நஞ்சினை உண்டதால், இருள் போன்று கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவனே, உனது இணையான திருவடிகள் இரண்டையும் காண்பதற்கு அடியேன் ஆசை கொண்டுள்ளேன்: அதிகை வீரட்டம் தலத்தில் உறையும் தலைவனே, நீ தான் அருள் கூர்ந்து, உமது திருவடிகளை எனக்கு காண்பித்து, எனது ஆசையினை நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தெருளுமா தெருள மாட்டேன் தீவினைச் சுற்றம் என்னும்
பொருளுளே அழுந்தி நாளும் போவதோர் நெறியும் காணேன்
இருளுமா மணிகண்டா நின் இணையடி இரண்டும் காண்பான்
அருளுமாறு அருளவேண்டும் அதிகை வீரட்டனீரே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.27.7) அப்பர் பிரான் பெருமானை நீலம் சேர் கண்டர் என்று குறிப்பிடுகின்றார்.நுதல்=நெற்றி: வேலை=கடல்: கீறிட்ட=பிளவு பட்ட; திருநீறு பூசிய நெற்றியை உடையவராகவும், கடலில் இருந்து எழுந்த நஞ்சினை உண்டதால் நீல நிறத்தை உடைய கழுத்தினராகவும் காட்சி அளிக்கும் பெருமான், தனது மனைவி பார்வதிக்கு தனது உடலின் ஒரு கூறினை அளித்துள்ளார். அவர் தான் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் விரித்து கூறியவர்; தனது கலைகள் அனைத்தும் தேய்ந்து அழிந்த நிலையில் பிளவு பட்டது போல் தோன்றிய ஒற்றைப் பிறைச்சந்திரனைத் தனது சடையில் தரித்தவர்: கிளர்ந்து எழுந்த சடையில் கங்கை நதியைத் தேக்கி வைத்துள்ள பெருமான், கெடில நதியை ஒரு புறத்தில் வேலியாகக் கொண்டுள்ள அதிகை நகரத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நீறிட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்யராகிக் கூறினார் ஆறு நான்கும்
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையின் உள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலும் அதிகை வீரட்டனாரே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.29.2) அப்பர் பிரான், பெருமானை, கரிய கண்டர் என்று அழைக்கின்றார். நொய்யவர்=நுண்ணியர்: விழுமியார்=மேன்மை அடைந்தவர்: நூல்=வேதநூல்: இடிஞ்சில்=அகல், விளக்குத் தகளி: கருவாய் இருந்த காலத்திலிருந்து, சிவபெருமானது திருவடியை மெய்யன்புடன் தான் தேடிய காரணத்தால், அவரது திருவடி தனது நெஞ்சினில் நெய் விடாமல் ஏற்றப்பட்ட விளக்காக உள்ளது என்று திருமூலர் சொல்வது நமது நினவுக்கு வருகின்றது. சிவபெருமான் நுண்ணிய பொருட்களுக்கும் மிகவும் நுண்ணியராகத் திகழ்பவர்: அவர் அனைவரிலும் மேம்பட்டவர்: வேதங்களிலும் ஆகமங்களிலும் உள்ள நுட்பமான பொருளை நமக்கு விளக்கிக் காட்டும் உண்மை நெறியினர்: பொய் ஏதும் இல்லாதவர்: உடலென்னும் அகல் விளக்கில் உள்ள நெய்யில் தோய்ந்த திரியாகவும், ஒளி தரும் விளக்காகவும் உள்ளவர், செம்மை நிறத்துடன், நஞ்சினை கழுத்தில் அடக்கியதால் கரிய கண்டம் உடையவராய் விளங்குபவரும் திருச்செம்பொன்பள்ளியில் உறைபவரும் ஆகிய சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நொய்யவர் விழுமியாரும் நூலினுள் நெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில் தன்னில்
நெய் அமர் திரியுமாகி நெஞ்சத்துள் விளக்குமாகிச்
செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளியாரே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.33.2) அப்பர் பிரான், பெருமானை, காளகண்டர் என்று அழைக்கின்றார். தேயன=தியானிக்கப்படும் பொருள்; பக்குவம் அடைந்த அடியார்கள் சிவபெருமானிடம் வேண்டுவது வீடுபேறு பதவியைத் தான். அந்த பதவியை அளிக்க வல்ல பெருமானை தேயன நாடர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பாயன நாடு=பரந்து கிடக்கும் நாடு, உலகம் பாயனம்=நீர்ப்பாசனம், வடமொழிச் சொல்; நீர் பாய்ந்து வளம் கொழிக்கும் பரந்த உலகம். கதம்=கோபம்; காளகண்டர்=ஆலகால விடம் உண்டதால் கருமை நிறத்தில் கறை படிந்தகழுத்தினை உடைய பெருமான். காயன நாடு கண்டம்=கோபத்தால் எரிக்கப்பட்ட நாடு, கண்டம், திரிபுரங்கள் இந்த தொடர் மூலம் குறிக்கப் படுகின்றன. மாயன நாடு=மாயன் என்று அழைக்கப்படும் திருமால் நாடும் பெருமான். தே என்ற சொல்லுக்கு பெருமை என்று பொருள் கொண்டு தேயன நாடு என்பதற்கு, என்றும் அழியாது இருக்கும் பெருமையினை உடைய முக்தி உலகம் என்றும் பொருள் கொள்வது பொருத்தமே. காயன நாடு என்பதற்கு காயத்தை உடைய நாடு என்று பொருள் கொண்டு உடல் என்று, பெரிய புராணம் விளக்கம் புத்தகத்தில் சிவக்கவிமணி திரு சி.கே. சுப்பிரமணியம் அவர்கள் கூறுகின்றார். பக்குவப்பட்ட அடியார்களின் உடலைத் தனது கோயிலாக பாவித்து அவர்களின் மனதினில் இறைவன் உறைகின்றார் என்று விளக்கம் அளிக்கின்றார். பக்குவம் அடைந்த அடியார்கள் இறைவனையே தியானித்து யாசிக்கும் முக்தி உலகத்தினை உடையவராகிய பெருமான் தேவர்களுக்கும் தலைவனாக, தேவதேவராக விளங்குகின்றார். பரந்து கிடக்கும் உலகத்தில், மீண்டும் பிறப்பெடுத்து வாழ விரும்பாது முக்தி நிலையினை அடைய விரும்பும் அடியார்களே, நீங்கள் அனைவரும் பெருமானின் திருவடியை பணிவதற்கு வாருங்கள். கோபம் கொண்டு திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்து வந்த நாடுகளை அழித்த பெருமான், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை தேக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவர் ஆவார். மாயன் என்று அழைக்கப்படும் திருமாலால் தேடப்பட்டவர் பெருமான். இத்தகைய பண்புகளை உடைய பெருமான், சிறப்பு வாய்ந்த மறைக்காடு தலத்தில் உறையும் இறைவனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தேயன நாடராகித் தேவர்கள் தேவர் போலும்
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டம் கதனுளார் காளகண்டர்
மாயன நாடர் போலும் மாமறைக்காடனாரே

திருநெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.37.1) அப்பர் பிரான், பெருமானை நீலம் வைத்தனைய கண்டர் என்று குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடி தனது தலை மீது பதிந்த நிகழ்ச்சியை பல பாடல்களில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். எனினும் இரண்டு திருவடிகளும் பதிந்ததாககூறும் இந்த பாடல் மிகவும் அரிய பாடலாகும். மேதக=மேன்மை தரும் வண்ணம்; கோல=அழகு வாய்ந்த; நீலம் வைத்து அனைய=நீல நிறத்தினை வைத்தது போன்று; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த காலனை இடது காலினால் உதைத்து கீழே வீழ்த்திய பெருமானின் வீரச் செயல் அனைவரும் அறிந்ததே. இதே போன்று மற்றொரு அடியானின் உயிரைக் கவர வந்த இயமனை உதைத்து வீழ்த்திய செய்தி திருவெண்காடு தல புராணத்தில் காணப் படுகின்றது. சுவேதகேது என்ற சிறுவனின் ஆயுட்காலம் எட்டு வருடங்கள் தான் என்று விதிக்கப் பட்டிருந்தது. இந்த சிறுவனும் பெருமான் மீது அளவில்லாத பக்தி கொண்டு திருவெண்காட்டு பெருமானை நாள்தோறும் வழிபட்டு வந்தான். அவனது உயிரினைக் கவர வந்த இயமனை காலால் உதைத்து வீழ்த்தியதாக தலபுராணம் கூறினாலும், இயமன் உதைபட்டது இறைவனின் எந்த காலால் என்பது குறிப்பிடப் படவில்லை. காலனை வீழச் சென்ற கழலடி இரண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவதால், திருவெண்காடு தலத்தில், பெருமான் இயமனை வலது காலால் உதைத்தாரோ என்று தோன்றுகின்றது. தனது அடியார்களின் உயிரினைக் கவர முயற்சி செய்த இயமனை உதைத்து வீழ்த்திய பெருமானின் வீரக்கழல் அணிந்த திருவடிகள் இரண்டும் எனது தலை மீது பெருமானின் அருளினால் வைக்கப் பெற்றேன். மேன்மை அடைந்த நிலையில் காட்சி அளிக்கும் அழகிய நெய்த்தானம் என்னும் தலத்தில், குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட திருக்கோயிலில் உறையும் நீலகண்டனே, நீ நீல நிறம் உனது கழுத்தினில் பொருந்திய நிலையில் காட்சி தருகின்றாய். யான், எனது என்ற பற்று நீங்கிய நிலையில், உனது அருளினால் நீ வழங்கும் அறிவினைக் கொண்டு உன்னை அடியேன் எப்போதும் தியானிக்கின்றேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென்
மேலவா இருக்கப் பெற்றேன் மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர் பொழில் கோயில் மேய
நீலம் வைத்து அனைய கண்ட நினைக்குமா நினைக்கின்றேனே

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.43.5) அப்பர் பிரான் பெருமானை காளகண்டர் என்று அழைக்கின்றார். காளம்=கருமை நிறம் படர்ந்த நிலை; தானவர்=தானம் அளிப்பவர், கொடையாளிகள்; கொடையாளிகளுக்கு, அவர்கள் அடுத்தவர்களுக்கு உதவும் வண்ணம், அவர்களுக்கு செல்வம் தந்து அருளுபவர் பெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். பொருள் இல்லாதவர்களுக்கு பொருள் உள்ளவர்கள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு ஈந்து உதவுவார்களை உலகம் புகழ்கின்றது. அனைத்து உயிர்களின் உடலாகவும் உயிராகவும் கலந்து நிற்கும் பெருமான், அனைத்து உலகங்களிலும் பரந்து நிறைந்து உள்ளார்; ஊழிக் காலங்களின் தோற்றமாகவும், ஊழிக் காலங்களின் முடிவாகவும் உள்ள பெருமான் ஊழியின் தோற்றத்திற்கும் முடிவுக்கும் இடைப்பட்ட காலத்திலும் இருந்து உலகினை இயக்குகின்றார். பொருள் இல்லாதவர்களுக்கு கொடை அளித்து உதவும் எண்ணம் கொண்டவர்களின் செல்வமாக உள்ள பெருமான், விற்போரில் வல்லவனான அர்ஜுனனை எதிர்க்கும் வேடனாக தோன்றினார். நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கிய காளகண்டராக விளங்கும் பெருமான், பன்றிக் கொம்புடன் எலும்பு மாலைகள் அணிந்துள்ள பெருமான், காஞ்சி மாநகரில் உறைபவராக கச்சி மேற்றளியைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழியாகித்
தானவர் தனமுமாகி தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர் காளகண்டர் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியானாரே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.51.4) அப்பர் பிரான் பெருமானை நீலமார் கண்டத்தானே என்று அழைக்கின்றார். ஞாலமாம் பெருமை=உலகங்கள் அனைத்தையும் தனது மாயாசக்தியால் தோற்றுவித்து, தான் அதனைக் கடந்து நிற்கும் நிலை; ஞாலமாம் பெருமை என்பதற்கு, அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் உலகெங்கும் நிறைந்த தன்மை என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. செற்று=உதைத்து: உன்னை வழிபட்ட சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் வண்ணம், அவனது உயிரினைக் கவர வந்த இயமனை காலால் உதைத்து அருள் புரிந்த கருணை உள்ளம் கொண்டவனே, பாற்கடலிலிருந்த எழுந்த விடத்தை உண்டதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவனே, நீண்ட கிரீடங்களை அணிந்த தேவர்களின் தலைவனே, உலகங்கள் அனைத்தையும் தனது சக்தியால் தோற்றுவித்து அந்த உலகத்தைக் கடந்து நிற்பவனே, அழகிய இளம் பிறைச் சந்திரனைத் தனது அழகான சடையில் சூடியவனே, நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய் என்று பெருமானை நோக்கி அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.
காலனைக் காலால் செற்று அன்று அருள் புரி கருணையானே
நீலமார் கண்டத்தானே நீள் முடி அமரர் கோவே
ஞாலமாம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும்
கோலமார் சடையினானே கோடிகா உடைய கோவே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.52.4) அப்பர் பிரான் பெருமானை கறை சேர் கண்டா என்று அழைக்கின்றார். கெண்டை=கெண்டை மீன்: கெண்டையம் தடங்கண்=கெண்டை மீனைப் போன்று மிகவும் அகலமான கண்கள்: கெழுமுதல்=கூடுதல்: நூக்குதல்=வலியத் தள்ளுதல்: அண்டம்=உலகம்: இங்கே எல்லா உலகங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். தனது மனதினில் பெண்களுடன் கூட வேண்டும் என்ற ஆசை இல்லாவிடினும், ஐம்பொறிகள் தன்னை நிலை குலைவித்து, பெண்களுடன் தொடர்பு கொண்டு இன்பமாக இருக்க வேண்டும் என்று அந்த இடர்க் குழியில் தள்ளுவதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். குண்டர்=வலிமையான உடற்கட்டு உடையவர்: இங்கே ஐம்பொறிகளின் வலிமை பற்றி குண்டராய்த் திரியும் ஐம்பொறிகள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நீலகண்டரே, எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் போற்றும் தலைவனே, கெண்டை மீன் போன்று அழகிய அகன்ற கண்களை உடைய பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் நான் இணையவேண்டும் என்று வல்லமை வாய்ந்த எனது ஐந்து பொறிகளும் என்னை நிலை குலையச் செய்கின்றன. மேலும் அந்த ஐம்பொறிகள் என்னைத் துன்பக் குழியில் ஆழ்த்துகின்றன. இந்தச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லாதவனாக நான் உள்ளேன். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் சிவபெருமானே, நீ தான், நான் துன்பக் குழியில் இல்லாதவாறு பாதுகாத்து, என்னை உனது அடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.
கெண்டையம் தடம் கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய் திரி தந்து ஐவர் குலைத்து இடர் குழியின் நூக்கக்
கண்டு நான் தரிக்க கில்லேன் காத்துக் கொள் கறை சேர் கண்டா
அண்ட வானவர் போற்றும் ஆரூர் மூலட்டனீரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (4.53.4) அப்பர் பிரான் பெருமானை, மணி கொள் கண்டர் என்று அழைக்கின்றார். நகை இருள்=விரியும் இருள், பேரிருள்: கங்குல்=இரவு ஆனால் இங்கே ஈம என்ற சொல்லுடன் சேர்ந்து வருவதால், ஊழிக் காலத்து இரவு என்று பொருள் கொள்ள வேண்டும்: ஈமக் கங்குல்=உலகம் அழியும் நிலையில் ஏற்படும் ஊழி: நாராசம்=கம்பி: மூவா வெஞ்சுடர்=என்றும் அணையாது நிலைத்து நிற்கும் சூரியன்: முகடு=உச்சி; நஞ்சு உண்டதால் கறுத்த கண்டத்துடன் காணப்படும் சிவபெருமான், விரிந்து பரவும் இருளினை உடைய ஊழிக்காலத்திலும், சுடுகாட்டில் உயிரற்ற உடல்கள் எரிவதால் வெளிப்படுகின்ற, வெளிச்சத்தில் கூத்து ஆடுபவராகத் திகழ்கின்றார். அவர் தான், சூரிய மண்டலத்தின் உச்சியைத் தொடும் சடையை உடையவராகவும், அந்த சடையில் வெள்ளிக் கம்பி பொருந்தினால் போன்று, குளிர்ந்த பிறைச் சந்திரனை அணிந்த ஆரூரன் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நஞ்சிருள் மணிகொள் கண்டர் நகை இருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன
அஞ்சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே

பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.60.1) அப்பர் பிரான், பெருமானை, கறையணி கண்டன் என்று குறிப்பிடுகின்றார். வேதங்கள் பெருமானின் நாவினுக்கு அணிகலனாக இருக்கும் நிலையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது நமக்கு அவர் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடலை (4.11.5) நினைவூட்டுகின்றது. அந்தணர்க்கு அழகு சேர்ப்பது அவர்கள் ஓதும் வேதங்கள் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். வேதங்களை ஓதும் அந்தணர்கள், அந்த வேதங்களை காக்கும் ஆறு அங்கங்களையும் நன்கு தெரிந்து அறிந்தவர்களாக முறையாக ஓத வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, மறைகளுடன் அங்கங்களையும் சேர்த்து அருமறை ஆறங்கம் என்று கூறுவதை நாம் உணரலாம். வேதத்தின் ஆறு அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகியவை. சாதாரண மனிதர்களின் நாவினுக்கே அழகு சேர்க்கும் அணிகலனாக விளங்கும் வேதங்கள், வேதங்களை அருளிய பெருமானது நாவினுக்கு அணிகலனாக இருப்பது வியப்பு எதும் இல்லை. வேதங்கள் அணிகலனாக விளங்கும் நாவினை உடையவனும், தன்னை மறவாது நினைப்பவர் நெஞ்சத்தைத் தனது இருப்பிடமாக கொண்டவனும், தேக்கிய விடம் கருமை நிறத்து கறையாக அமைந்து அழகு செய்யும் கழுத்தினை உடையவனும், ஒளி வீசி கொழுந்து விட்டெரியும் நெருப்பினில் கூத்தினை நிகழ்த்துபவனும், பிறையை அணிந்த சடையை உடையவனும், பெருவேளூர் தலத்தினை மிகவும் விரும்பி உறைபவனும் ஆகிய பெருமானை, அடியேன் நாள்தோறும் மலர்கள் தூவி வணங்குவேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.
மறையணி நாவினானை மறப்பிலார் மனத்துளானைக்
கறையணி கண்டன் தன்னைக் கனல் எரி ஆடினானைப்
பிறையணி சடையினானைப் பெருவேளூர் பேணினானை
நறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்குவேனே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (4.60.4) அப்பர் பிரான், மைஞ்ஞவில் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். மைஞ்ஞவில்=மை+நவில், கருமை நிறம் படர்ந்த; கைஞ்ஞவில்=கை+நவில், கையில் பழகிய, பொருந்தியுள்ள; அந்தண்=அம்+தண், அழகும் குளிர்ச்சியும் உடைய; பொய்ஞ்ஞெக=பொய்+நெக, பொய்கள் நீங்கி; விடத்தை தேக்கியதால் கருமை நிறம் அடர்ந்து படர்ந்த கழுத்தினை உடையவனும், வலது கையில் மழுவினையும், இடது கையில் நெடுநாட்களாக பழகி பொருந்தி இருக்கும் மான் கன்றினை ஏந்தியவனும், ஒளிவீசும் தீயின் இடையே நின்று ஆடுபவனும், அழகிய தலைக் கோலம் உடையவனும், அழகும் குளிர்ச்சியும் உடைய பெருவேளூர் தலத்தினில் மிகுந்த விருப்பத்துடன் உறைபவனும் ஆகிய பெருமானை, எனது மனதினுள்ளே இருந்த வஞ்சகங்களை நீக்கி, நினையாமல் இருக்கின்றேன். பெருமானை உணர்வதற்கு உதவி புரியும் பொறிகள் இருந்தும் அவற்றை பயன்படுத்தி பெருமானை அறியாமல் அடியேன் இருப்பது மிகவும் பரிதாபமான நிலை. பெருமானே நீ தான் இந்த நிலையிலிருந்து என்னை விடுவித்து உன்னை நினைக்குமாறு அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் இறைஞ்சும் பாடல்.
மைஞ்ஞவில் கண்டன் தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்திக்
கைஞ்ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானைப்
பிஞ்ஞகன் தன்னை அந்தண் பெருவேளூர் பேணினானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறியிலா அறிவிலேனே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.2), நீலகண்டா என்று அப்பர் பிரான், பெருமானை அழைக்கின்றார். இதே பதிகத்தின் முந்தைய பாடலில் சிவபெருமானைத் தவிர வேறெந்த நினைப்பும் தனக்கு இல்லை என்று கூறும் அப்பர் பிரான், இந்த பாடலில் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் தான் புகழ்ந்து சொல்ல மாட்டேன் என்று கூறுகின்றார். கொன்றைக் கடவுள்=கொன்றை மலரை தனது சிறப்பான அடையாளமாகக் கொண்டுள்ள சிவபெருமான்: கொன்றை வேந்தன் என்று அவ்வை பிராட்டி சொல்வது நமது நினைவுக்கு வருகிறது. பண் தனை வென்ற இன்சொல் பாவை என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு அவர் திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பண்ணின் நேர் மொழியாள் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. பார்வதி தேவியின் சொற்கள் மிகவும் இனிமையானது என்பதை குறிக்க, பண், யாழ், வீணை, தேன், பால், கிளி, குயில், மழலை மொழி போன்றவை பல தேவாரப் பாடல்களில் உவமையாக கூறப்பட்டுள்ளன. சில தலங்களில் அம்பிகையின் திருநாமம், அம்பிகையின் குரல் இனிமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. யாழைப் பழித்த மொழியம்மை (திருமறைக்காடு), பாலின் நன்மொழியாள் (திருவாய்மூர்), மதுர பாஷிணி (விளமர்), கரும்பன்ன செல்வி (புறம்பயம்), குயிலினும் நன்மொழியம்மை (சாய்க்காடு), தேன்மொழியம்மை (தேவூர்) என்று அம்பிகை அழைக்கப் படுகின்றாள். இனிமையில் பண்ணினையும் வென்ற சொற்களை உடைய பார்வதி தேவியை உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள இறைவனே, நீலகண்டனே, மழைக் காலத்தில் வளரும் கொன்றை மாலையைச் சூடியவனே, தாமரை மலர் போன்று மென்மையான திருவடிகளை உடையவனே, எல்லா உலகமாகவும் இருப்பவனே, தேவர்களின் தலைவனே, அழகிய அண்ணாமலையில் உறைபவனே, உனது தொண்டனாகிய நான் உன்னைத் தவிர வேறு எவரையும் புகழ்ந்து சொல்லும் சொற்களை சொல்லமாட்டேன் என்று அப்பர் பிரான் தனது கொள்கையை வரையறுத்து சொல்லும் பாடல்.
பண் தனை வென்ற இன்சொல் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே அணி அணாமலை உளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.64.1) அப்பர் பிரான் பெருமானை, நஞ்சழுந்து கண்டர் என்று குறிப்பிடுகின்றார். சீதம்=குளிர்ச்சி; பூதப் படைகளை உடையவராகவும், பாம்பினை ஆபரணங்களாக அணிந்தவரும், மார்பினில் வெண்ணூல் பூண்டவராகவும், குளிர்ந்த பிறைச் சந்திரன் அழகுடன் பொலியும் சடையை உடையவராகவும், நஞ்சு உடலுக்கு உள்ளே செல்லாமலும் வெளியே வராமலும் இடையிலே நிறுத்தப்பட்ட கழுத்தினை உடையவராகவும், பாடல்களில் இணைந்து ஒலிக்கும் இனிமையான ஓசையை விரும்பி கேட்பவராகவும், வேள்விகளின் பயனாகவும், வேதங்களின் பொருளாகவும் விளங்கும் சிவபெருமான், வீழிமிழலை தலத்தில் விகிர்தராக விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூணநூலர்
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சழுந்து கண்டர்
கீதத்தில் பொலிந்த ஓசைக் கேள்வியர் வேள்வியாளர்
வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (4.64.2) அப்பர் பிரான், கறுத்த கண்டர் என்று பெருமானை அழைக்கின்றார். கங்குல்=இரவின் இருள்: அண்ணித்திட்டு=தித்தித்து, இனிமையாக. பாற்கடலில் தோன்றிய அமுதம் தேவர்களுக்கு மூப்பில்லாத உடலைத் தந்தது. அது போன்று பக்குவம் வாய்ந்த அடியார்களை தன்னுடன் சிவபெருமான் இணைத்துக் கொண்டு முக்தி அளித்து, என்றும் நிலையான தன்மை அவர்களுக்கு அளிப்பதால், சிவபெருமானை அமுதர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். காலையில் தோன்றும் சூரியனின் ஒளிக்கதிர்கள் போன்று சிவந்த மேனியராய், இரவின் இருள் போன்று அடர்ந்த கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவராய், மாலையில் ஒளி வீசும் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவராய் காணப்படும் சிவபெருமான், தேன் போலவும், பால் போலவும், கரும்புச் சாறு போலவும் அடியார்களுக்கு என்றும் இனியவராக உள்ளார். மேலும் பக்குவப்பட்ட அடியார்களுக்கு அவர் என்றும் நிலையான முக்தி நிலையை அளிக்கும் அமுதமாகவும் விளங்குகின்றார். அவர் தான் வீழிமிழலையில் விளங்கும் விகிர்தனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
காலையில் கதிர் செய் மேனி கங்குலில் கறுத்த கண்டர்
மாலையில் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும்
வேலையின் அமுதர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.64.9) அப்பர் பிரான், பெருமானை நீலகண்டர் என்றே அழைக்கின்றார். வித்தின்முளையர்=உயிர்க்கு உயிராக இருப்பவர்: இந்த பாடலில், சித்திகள் செய்ய விரும்புபவர்கள் சென்று அடைய வேண்டிய இடம் சிவபெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமாசித்தி அருளிய வரலாறு திருவிளையாடல் புராணத்தில் சொல்லப் படுகின்றது. மணிவாசகரும் திருவாசகம் கீர்த்தித் திருவகவலில் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார் (பட்டமங்கையில் பாங்காய் இருந்தங்கு அட்டமாசித்தி அருளிய அதுவும்); இதே செய்தியை போற்றித் திருவகலிலும் மணிவாசகர் கூறுகின்றார். இத்தி=கல்லால மரம்: அத்தி=யானை: யானைக்கும் கார்த்திகைப் பெண்களுக்கும் அருளிய சிவபெருமான் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. கீழ் இரு மூவர் என்று பல ஆண்டுகளாக கல்லாகக் கிடந்த கார்த்திகைப் பெண்களை குறிப்பிடுகின்றார். (இத்தி தன்னில் கீழ் இரு மூவர்க்கு; அத்திக்கு அருளிய அரசே போற்றி). அணிமா (அணுவினும் சிறிய வடிவம் எடுத்தல்), மகிமா (மிகவும் பெரிய வடிவம் எடுத்தல்), லகிமா (கனமான பொருளை இலேசான பொருளாக மாற்றுதல்) கரிமா (மிகவும் இலேசான பொருளை எடை அதிகம் கொண்ட பொருளாக மாற்றுதல்), பிராத்தி (தடையின்றி எல்லா இடத்திலும் சஞ்சாரம் செய்வது), பிரகாமியம் (வேண்டிய உருவத்தை எடுத்தல்) ஈசத்துவம் (ஈஸ்வரன் செய்யும் ஐந்து தொழில்களைச் செய்தல்) மற்றும் வசித்துவம் (மற்றவரை தன் வசியப்படுத்தி, தான் விரும்பும் செயல்களை செய்ய வைத்தல்) என்பன அட்டமா சித்திகள் ஆகும். சித்திகளை விரும்பி வழிபடும் அடியார்களுக்கு, அவர்கள் விரும்பும் சித்திகள் கூடுமாறு செய்தும், பக்தி செய்து வழிபடும் அடியார்களுக்கு அவர்களது பாவங்களை முற்றிலும் நீக்கியும், அருள் புரியும் சிவபெருமான், இறப்பு என்பது இல்லாதவர் ஆவார். பக்குவம் அடைந்த அடியார்களுக்கு முக்தி வழங்கும் பெருமான், மிகுந்த பிரகாசத்துடன் விளங்குகின்றார்: அவர் தான், தனது கழுத்தினில் நஞ்சினை அடக்கி உலகை காப்பாற்றியவர்: இவ்வாறு மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு காணப்படும் சிவபெருமான், வீழிமிழலையில் உறைகின்றார். அவர் தான் அனைத்து உயிர்களுக்கும் உயிராக விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூடப்
பத்தி செய்பவர்கள் பாவம் பறிப்பவர் இறப்பிலாளர்
முத்தி செய் பவள மேனி முதிரொளி நீலகண்டர்
வித்தினின் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.72.4) அப்பர் பிரான் பெருமானை விடமலி கண்டர் என்று அழைக்கின்றார். கடவு=செலுத்தும்; இடர்=பந்த பாசங்கள்; விடம் தங்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவர் சிவபெருமான்; அவர் வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைக்கு மாறாக தக்கன் செய்த வேள்வியினை அழித்தவர்; விரைந்து செல்லக்கூடிய அழகிய எருதினை வாகனமாக உடைய அவர், ஒரு சமயம் கூற்றுவனை கோபித்து உதைத்தவர் ஆவார்; படம் எடுத்தாடும் ஐந்தலை நாகத்தினை அணிகலனாக பூண்டுள்ள அவர், பாயும் இயல்பினை உடைய புலியைக் கொன்று அதன் தோலை உடையாக அணிந்துள்ளார்; அடியார்கள் கொண்டுள்ள பந்த பாசங்களை அறவே களைந்து, அவர்கள் முக்தி நிலையினை அடைவதற்கு வழி வகுக்கும் பெருமான் இன்னம்பர் தலத்தில் தலைவனாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விடமலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும்
கடவு நல் விடையர் போலும் காலனைக் காய்வர் போலும்
பட மலி அரவர் போலும் பாய்புலித் தோலர் போலும்
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.74.6) அப்பர் பிரான் பெருமானை, கண்டன் என்று அழைக்கின்றார். சிறப்பு வாய்ந்த கழுத்தினை உடையவன் பெருமான் ஒருவன் தான் என்பதால் கண்டன் என்ற சொல் பெருமானையே குறிக்கும். கருப்பனை=கரிய நிறத்தில் அகன்று பருத்து காணப்படும்; யானையின் துதிக்கை பனை மரத்திற்கு ஒப்பிடப் படுகின்றது தடக்கை=அகன்ற கை; களிறு=ஆண் யானை; விருப்பன்=அனைத்து உயிர்களையும் விரும்பி, அவற்றுடன் கூடி பொருந்தி இருந்து இயக்குபவன்; வியன்=அகன்ற; பொருப்பு=மலை; அங்கை=உள்ளங்கை; நேர்பட=நிமிர்ந்து; பெருமானை நினைத்த காரணத்தினால் பெருமிதம் அடைந்த தனது நெஞ்சம் நிமிர்ந்து நிற்கின்றது என்று கூறுகின்றார்.
கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை பங்கனை அங்கை ஏற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.76.4) அப்பர் பிரான், பெருமானை, நஞ்சிடம் கொண்ட கண்டா என்று அழைக்கின்றார். வழியற=வேறு ஏதும் வழி இல்லாதபடி: கொடிய சூலை நோயால் வருந்திய போது, சமணத் துறவிகள் தங்களுக்கு தெரிந்த மந்திரங்கள் தந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்திய பின்னரும் சூலை நோய் தீராத காரணத்தால், வேறு ஏதும் வழி புலப்படாமல், தனது தமக்கையாரை திருநாவுக்கரசர் அணுகிய நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது. திருநாவுக்கரசு என்பது, அவருக்கு பெருமான் அளித்த திருநாமம். கூற்றாயினாவாறு என்ற தொடங்கும் தீந்தமிழ் பதிகத்தினை பாடி, பெருமானின் அருளால் தனது சூலை நோயினை தீர்த்துக் கொண்ட அவர், பெருமானைப் பணிந்து வணங்கி எழுந்த போது, திருநாவுக்கரசே எழுந்திரு என்று சொல்லி, பெருமான் அவருக்கு இந்த நாமத்தை சூட்டுகின்றார். பின்னாளில், திருஞானசம்பந்தரை சந்தித்த போது, அவர் அப்பரே என்று அழைக்க, அப்பர் பிரான் என்பதும் அவரது திருநாமமாக மாறுகின்றது. சைவ சமயத்தை அழிப்பதற்கு பல சூழ்ச்சிகள் செய்து வந்த சமணர்களுடன் இருந்தமையால், தன்னையும் வஞ்சகப் புலையனேன் என்று அப்பர் பிரான் கூறிக் கொள்கின்றார். பல்லவ மன்னன், தன்னை அரசவைக்கு அழைத்து வர, மந்திரிகளை அனுப்பிய போது, முதலில் நாமார்க்கும் குடியல்லோம் என்று மறுத்த அப்பர் பிரான், பின்னர் தன்னை எதிர் நோக்கும் வினைகளுக்கு எம்பிரான் தனக்கு துணையாக உள்ளான் என்ற நினைப்பில், பல்லவ மன்னனை சந்திக்கச் செல்கின்றார். இறைவன் பால் அப்பர் பிரான் வைத்திருந்த நம்பிக்கை வீண்போகா வண்ணம் இறைவனும், அப்பர் பிரான் எதிர்கொண்ட அல்லல்களிருந்து காப்பாற்றியது சரித்திரம்.
வஞ்சகப் புலையனேனை வழியறத் தொண்டில் பூட்டி
அஞ்சல் என்று ஆண்டு கொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே
நெஞ்சகம் கனிய மாட்டேன் நின்னை உள் வைக்க மாட்டேன்
நஞ்சு இடம் கொண்ட கண்டா என்னென நன்மை தானே

அப்பர் பிரான், பெருமானுக்குத் தொண்டு செய்யும் வண்ணம் தன்னை மாற்றி ஆட்கொண்டதும், தன்னை அஞ்சேல் என்று சொல்லி பலவித துன்பங்களிலிருந்து தன்னை காத்ததும் சிவபெருமானுக்கு பெருமை விளைவிக்கும் செயல்கள் என்று குறிப்பிடுகின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானை, சமணர்களுடன் கலந்து தான் வாழ்ந்து வந்த நாட்களில் நெஞ்சம் கனிந்து தான் நினையாமல் இருந்தது தனது பெருந்தவறு என்று கூறுகின்றார். நெஞ்சம் கனிந்து நினையாமல் இருந்த நிலை என்று அப்பர் பெருமான் சொல்வதை நாம் சற்று சிந்திக்க வேண்டும், சமணத் துறவிகள் சிவபெருமானை குறித்து சிந்தனை செய்தவர்களாக இருந்தனர். எதற்காக அந்த சிந்தனை, சிவபெருமானை எவ்வாறு இழிவாகப் பேசி சைவர்களை திசை திருப்பி, சமணர்களாக அவர்களை மாற்ற முயற்சி செய்யலாம் என்று ஆலோசனை செய்தவர்களாக அவர்கள் இருந்தனர்; அந்த நிலைக்கு மாறுபட்டு, பெருமான் பால் அன்பு கொண்டு கனிந்த மனத்துடன் தான் சிந்தனை செய்யாமல் இருந்ததை குறித்து வருத்தம் தெரிவிக்கும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. வஞ்சகம் பல புரிந்து சைவ சமயத்தை அழிக்கத் தலைப்பட்ட சமணர்களுடன் சேர்ந்து வஞ்சகப் புலையனாக வாழ்ந்து வந்த எனக்கு, சூலை நோயினைத் தீர்த்துக் கொள்வதற்கான வழி, சிவபிரானுக்குச் செய்யும் தொண்டுகளில் ஈடுபடுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்று எனக்கு உணர்த்திய இறைவனே, அவ்வாறு உணர்த்திய பின்னர் நான் உமக்குத் தொண்டுகள் செய்யத் தொடங்கியபோது, நான் அவ்வாறு தொண்டுகள் செய்வதிலிருந்து வழுவாமல் இருக்குமாறு அத்தகைய தொண்டுகளுடன் என்னை பூட்டியவனே, இவ்வாறு சிவத்தொண்டினில் ஈடுபடுத்தப்பட்ட எனக்கு அஞ்சேல் என்று சொல்லி, சமணர்கள் புரிந்த பல கொலை முயற்சிகளிலிருந்து காப்பாற்றி என்னை அஞ்சேல் என்று ஆண்டு கொண்டது உன் பெருமையினை வெளிப்படுத்தும் செயல் அல்லவா. இவ்வாறு எனக்கு பல நன்மைகள் செய்த உன்னை, உள்ளம் உருகி நினைக்காமல், எனது உள்ளத்தில் உன்னை நிறுத்தாமல் இருக்கின்றேன். நஞ்சினை கழுத்தில் உடைய சிவபெருமானே, உன்னிடம் பெற்ற நன்மைகளை நான் நன்மைகளாக கருதாமல் இருக்கின்றேன் போலும், அதனால் தான் நான் உன்னை நினையாமலும், உனது நினைவால் கசிந்து உருகாமலும் இருக்கின்றேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.78.4) அப்பர் பிரான் பெருமானை, கடல் விடம் உண்ட கண்டன் என்று அழைக்கின்றார். இரை=உணவு: உரைக் கடந்து என்று சிவபெருமானின் பெருமைகள் சொற்களைக் கடந்தது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு அப்பர் பெருமான் கூறுவது நமக்கு மணிவாசகரின் குயில் பத்து பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் மணிவாசகர், சிவபெருமானின் திருப்பாதங்கள் ஏழு பாதாளங்களையும் கடந்தது என்றும், அவனது திருமுடி இருக்கும் இடமோ, சொல்லுக்கும் கற்பனைக்கும் எட்டாதது என்றும் கூறுகின்றார். கரையைக் கடந்து நீண்டு வரும் அலைகளைக் கொண்ட கடலிலிருந்து எழுந்த விடத்தினை உண்டதால், கருநிறம் கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமான், சொற்களைக் கடந்த பெருமையை உடையவன்: இறைவனே உனது பெருமையை அடியேன் உணரவில்லை. இடுப்பினில் நாகத்தை இறுகக் கட்டிக் கொண்டு, அதனை உனது விருப்பப்படி அசைக்கும் பெருமானே, பசியினைத் தீர்க்கும் உணவுக்கும், உடல் விரும்பும் சிற்றின்பத்திற்கும் ஏங்கி அலைந்து வீணாக பொழுதினைக் கழிக்கும் நான், இந்த பிறவியை எடுத்தது எதற்காக என்று தெரியாமல் திகைக்கின்றேன். இறைவனே, நீ தான் எனது வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றி அருளவேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல்.
கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன்
உரைக் கடந்து ஓது நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே
அரைக் கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு
இரைக்கு அடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே

மற்றொரு பொது பதிகத்தின் பாடலில் (4.79.5) அப்பர் பிரான் பெருமானை, கறையணி கண்டன் என்று அழைக்கின்றார். நின்று நிலையாக பெருமானைப் புகழ்ந்து ஏத்தாத காரணத்தால் தான் எதற்காக, வீணாகக் கழிகின்ற இந்த இழிந்த பிறப்பெடுத்தேன் என்று தன்னையே அப்பர் பிரான் நொந்து கொள்ளும் பாடலிது. தன்னைக் குறிப்பிட்டு, உலகத்தவர்க்கு அறிவுரை சொல்வது அப்பர் பிரானின் பழக்கம். இந்த பாடலும் அந்த வகையில் தான் அமைந்துள்ளது. சீகாமரம் பண்ணினை காமரம் என்று குறிப்பிடுகின்றார். எவருக்கும் பயன்படாத வகையில் தான் இருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். அறுபது வயதைக் கடந்த பின்னர் அப்பர் பிரான் சைவ சமயத்திற்கு மீண்டும் வந்ததை நாம் அறிவோம். அதற்கு முன்னர் அவர் சமண சமயத்தைச் சார்ந்திருந்த காலத்தில், துறவியாக இருந்ததையும் நாம் அறிவோம். எனவே பெண்களுடன் கூடுவதை தவிர்த்தவராக இருந்தார் என்பதை நாம் உணர்கின்றோம். இவ்வாறு பெண்கள் இன்பம் துய்ப்பதற்கு தான் பயன்படாமல் இருந்த நிலையை அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். நேர்வழியில், உரிமை உள்ள வாழ்க்கைத் துணையுடன் இன்பம் துய்த்தல் தவறன்று. இருபாலரும் ஒன்று கூடினால் தான், உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு தகுந்த உடலினை பெறமுடியும். எனவே உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு ஏதுவாக உடல்களை தோற்றுவிக்கும் புணர்ச்சி, இன்றியமையாதது என்பதால், இருபாலரும் முறையாக ஒன்று கூடுதலில் தவறு ஏதும் இல்லை. மேலும் இந்த சிற்றின்பத்தில் மயங்கி, உயிர் தன்னுடைய நோக்கத்தினை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்தி நிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தினை, ஒரு காலும் மறக்காமல் செயல்பட வேண்டும். மன்னி=நிலையாக; இறை=சிறிது நேரமும்
கறையணி கண்டன் தன்னைக் காமரம் கற்றுமில்லேன்
பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன்
மறை நவில் நாவினானை மணி நின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.80.5) அப்பர் பிரான், பெருமானை நீலமணி மிடற்றான் என்று அழைக்கின்றார். நின்ற என்ற சொல் ஞின்ற என்று மருவியுள்ளது. நகர ஞகரப் போலி என்று நன்னூல் இலக்கண நூலில் குறிப்பிடப்படும் விதிக்கு, உதாரணமாக இந்த பாடல் நன்னூல் உரையாசிரியர்களால் கருதப் படுகின்றது. செய்=வயல்: நீலம்=நீலோற்பல மலர்; நீலோற்பல மலர்கள் நிறைந்து காணப்படும் வயல்களை உடைய தில்லைத் திருநகரில் உறையும் சிற்றம்பலவன், நின்று எரியும் தீபச்சுடர் போன்று மிளிரும் கழுத்தினை உடையவன். அவனது ஆடலைக் கண்ட, ஒளி நிறைந்ததும் மையினால் மேலும் அழகூட்டப்பட்டதும் ஆகிய கண்களை உடைய உமையம்மை, மிகவும் மகிழ்ந்து நிற்கின்றாள். இவ்வாறு பெருமான் திருநடனம் ஆடும்போது, அவனது திருக்கை என்று வந்தாய் என்ற குறிப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த அழகிய கையினைக் கண்ட கண்களுக்கு வேறு எந்த காட்சியும் உயர்ந்ததாகத் தோன்றாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றன்
கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.89.8) அப்பர் பிரான், பெருமானை, விடமுண்ட கண்டன் என்று அழைக்கின்றார். ஒன்னார்=பகைவர்; தரித்த=தாங்கிய; ஈடு=பெருமை; தனது பெருமைக்கு பங்கமேதும் விளையாத வண்ணம் பெருமான் தன்னை ஆட்கொண்டதாக அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிறுவயதில் தான் சார்ந்திருந்த சைவ சமயத்தை விடுத்து சமண சமயத்தைச் சார்ந்து வாழ்ந்ததற்கு, தண்டனையாக சூலை நோயினை அளித்ததையும், தனது தமக்கையார் மூலம் நன்னெறி காட்டியதையும், தன்னை இறைவன் தூய்மைப் படுத்தவே என்று அப்பர் பிரான் கருதியது இந்த பாடலிலிருந்து புலனாகின்றது. சடையை விரித்து நடனம் ஆடுபவனும், தேவர்களுக்கு தலைவனாக உள்ளவனும், விடத்தை தேக்கியதால் தனது கழுத்தினில் கருமை நிறத்து கறையை உடையவனும், தன்னால் கொல்லப்பட்ட யானையின் தோலை உரித்து தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவனும், பகைவர் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே நொடியில் எரித்து அழித்த வில்லினை உடையவனும், தனது பெருமைக்கு பங்கம் ஏதும் விளையாத வண்ணம் என்னை தூய்மைப்படுத்தி ஆட்கொண்டவனும் ஆகிய இறைவன், அனைத்து உலகங்களையும் தாங்கி உலகநாயகியாக விளங்கும் அன்னையுடன் இணைந்து நெய்த்தானம் தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விரித்த சடையினன் விண்ணவர் கோன் விடமுண்ட கண்டன்
உரித்த கரி உரிமூடி ஒன்னார் மதில் மூன்றும் உடனே
எரித்த சிலையினன் ஈடழியாது என்னை ஆண்டு கொண்ட
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.90.9) அப்பர் பிரான் பெருமானை மையணி கண்டன் என்று அழைக்கின்றார். செய்ய கமலம்=செந்தாமரை மலர்கள்; வெண்மழு=வெண்மையாக ஒளி திகழும் மழுப்படை; தூய்மையானது என்பதை குறிக்க வெண்மை என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. விழுமிய=சிறந்த; ஆலகால விடத்தை தேக்கியதால் கருமை நிறம் படிந்த கழுத்தினை உடையவனும், திருநீறு அணிவதை பெருமையாக கருதி விருப்பமுடன் தனது திருமேனி முழுவதும் வெண்ணீறு பூசியவனும், சிறந்ததும் தூய்மையும் உடைய மழுப் படையை உடையவனாக திகழ்கின்றான். செந்தாமரை மலர்களின் நறுமணம் மிகுந்த வேதிகுடி தலத்தில் உறையும் பெருமானை, தெவிட்டாத அமுதம் போன்ற நமது தலைவனை நாம் சென்று அடைந்து பணிந்து அவனது அருள் வெள்ளத்தில் மூழ்கி நீராடுவோம் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.
மையணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணம் கமழும் திருவேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

சத்திமுற்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.96.8) அப்பர் பிரான், பெருமானை நீலகண்டா என்று அழைக்கின்றார். இகழ்ந்தவன்=தக்கன். பொறை இரத்தல்=பிழை பொறுக்குமாறு வேண்டுதல். முந்தைய பாடலில் சிவபெருமானை மறந்தவர்களின் நிலையினை விளக்கிய அப்பர் பிரானுக்கு, சிவபெருமானை இகழ்ந்த தக்கன் நினைவுக்கு வந்தான் போலும். சிவபிரானை இகழ்ந்து, அவரைத் தவிர்த்து மற்றைய தேவர்களை அழைத்துத் தவறாக யாகம் புரிந்தமையால் தக்கனது யாகம் அழிக்கப்பட்டது. யாகத்தில் பங்கெடுத்துக் கொண்ட பல தேவர்கள் தண்டனை பெற்றாலும் அவர்கள் மன்னிக்கப்பட்டு உயிருடன் இருந்தார்கள். தலை வெட்டப்பட்ட தக்கனும், ஆட்டுத் தலை பொருத்தப்பட்ட பின்னர் தனது தவற்றினை உணர்ந்து சிவபெருமானை வேண்டினான். மற்றைய தேவர்கள் எல்லாம் தண்டனை பெற்றபோது, திருமாலும் நான்முகனும் இறைவனிடம் எங்களது குற்றத்தைப் பொறுத்து அருளவேண்டும் என்று வேண்டியதால், அவர்கள் தப்பினார்கள் என்று அப்பர் பெருமான் தனது தசபுராணத் திருப்பதிகத்தில் (4.14.7) கூறுகின்றார். பெண்ணாகடத்தில், சிவபெருமான் அனுப்பிய பூதகணம் அப்பர் பிரானின் உடலில் இடபக் குறியினையும், மூவிலை சூலக்குறியினையும் இட்டு அப்பர் பிரானின் உடல் புனிதமானது என்று அனைவருக்கும் உணர்த்தினாலும், சிவபிரானின் திருவடி தனது தலையின் மீது பதிக்கப் பெற்றாலன்றி, தனது உடலின் குறைபாடு நீங்காது என்று அப்பர் பிரான் நினைத்தார் போலும். அதனால் தான், எனது உடல் குறைபாடுகள் நீங்க அருள் செய்வாய், என்று இந்தப் பதிகத்திலும் வேண்டுகின்றார். சிறப்புடன் திகழும் சத்திமுற்றத்து தலத்தில் உறையும் சிவக்கொழுந்தே, உன்னை அந்நாளில் இகழ்ந்து, உன்னை அலட்சியம் செய்து வேள்வி செய்ய முற்பட்ட தக்கனது வேள்வி நிறைவேறாமல் அழித்த பின்னர், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் செய்த தவற்றினை (சிவபிரானை ஒதுக்கிச் செய்யப்படும் வேள்வியில் பங்கேற்றமை) மன்னித்து வெற்றி கொண்டவனே, உன்னைப் புகழ்ந்து பாடும் அடியேனுடைய குறைபாடுகள் நீங்க அருள் புரிவாயாக என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன் தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.97.2) அப்பர் பிரான் பெருமானை, கறைக் கண்டர் என்று அழைக்கின்றார். தாருகவனத்து நிகழ்ச்சியை நினைத்து பார்க்கும் அப்பர் பிரான், அங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகளை கற்பனை செய்து பாடிய பாடல். கண்ணிட்டுப் போதல்=கண்ணால் சாடை காட்டிச் செல்லுதல்; கறைக்கண்டர்=நீல நிறத்தை கழுத்தினில் கொண்ட நீலகண்டர்; தாருகாவனத்து மகளிர் இல்லங்களுக்குச் சென்றதன் காரணம் அறியேன் என்று கூறும் அப்பர் நாயகி, நல்லூரில் தனது இல்லத்திற்கு பிச்சை ஏற்க வந்த போது, கண்ணால் சாடை காட்டிச் சென்றதற்கு காரணம் இருப்பதாக கூறுகின்றாள். தாருகாவனம் சென்ற போது பிச்சைப் பெருமான் வேடம் தரித்து (இடுப்பில் கோவணமும், உடலில் பாம்புகளை அணிகளாகத் தரித்தும்) சென்றதாக கூறப்படுகின்றது. அவ்வாறு பாம்புடன் சென்றால், பிச்சையிட வரும் பெண்மணிகள் பயம் கொள்வர் எனக் கருதி அத்தகைய வேடத்தில் நல்லூர் வரவில்லை என்று அப்பர் நாயகி கற்பனை செய்கின்றாள். சிவபெருமான் வந்ததாக கூறுவதே கற்பனை தான். தாருகாவனம் சென்ற போது சிவபிரான் யாரையும் தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு அழைக்கவில்லை. அவரது சுந்தர வேடத்தில் மயங்கி, தாருகாவனத்து பெண்மணிகள், தாங்கள் செய்து கொண்டிருந்த செயல்களை விட்டுவிட்டு அவரைப் பின் தொடர்ந்ததாக புராணம் கூறுகின்றது. நல்லூரில் தன்னைக் காணும் பெண்கள், தன் மீது ஆசை கொள்ளும்படி அழகிய வடிவத்துடன் வந்த சிவபெருமான், தான் தற்போது கொண்டுள்ள வடிவம், பண்டைய நாளில் தாருகாவனம் சென்ற போது எடுத்த வடிவம் அல்ல, இன்று பிச்சைக்காக எடுத்தது என்று கூறிக் கொண்டு, பல இல்லங்கள் தோறும் திரியும் சிவபெருமான், நல்லூரில் எனது இல்லத்திற்கு அருகில் வருகில் வந்தார்; பின்னர் எனது இல்லத்தில் புகுந்தார்; பண்ணோடு கூடிய பாடல்களைப் பாடியவாறு ஆடிக்கொண்டே வந்த சிவபெருமான், சிறிது நேரம் நின்று, எங்களை நோக்கி கண்ணால் சாடை காட்டிச் சென்றதற்கு காரணம் உள்ளது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பெண்ணிட்டம் பண்டையது அன்று இவை பெய்பலிக்கு என்று உழல்வார்
நண்ணிட்டு வந்து மனை புகுந்தார் நல்லூர் அகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடலராய்ப் பற்று நோக்கி நின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரணம் உண்டு கறைக் கண்டரே

வெள்ளிக் குழைத் துணி என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (4.112.6) அப்பர் பிரான், பெருமானை, கறைக் கண்டன் என்று அழைக்கின்றார். விரிநீர் உடுத்த மண்=கடலை ஆடையாகக் கொண்டுள்ள உலகம், கடல் நீரால் சூழப்பட்ட உலகம்: மருவுதல்=பொருந்துதல்: திருமாலின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த மூர்த்தம் தான், திருவாரூரில் உள்ள தியாகராஜ மூர்த்தம். ஆகாயம் மற்றும் கடல் சூழ்ந்த உலகங்கள் என்று அனைத்து இடங்களிலும்பரவியிருக்கும் எமது சிவபெருமான், திருமாலின் உள்ளத்தில் குடி கொண்டுள்ளான். பாடல்களில் பொருந்தும் இனிய பண்களில் இருக்கும் சிவபெருமான், அடியார்களின் சித்தத்திலும் இருக்கின்றான். பழைய நாயினைப் போன்று இழிந்த மனமுடைய அடியேனின், அகக் கண்ணிலும், மனத்திலும், தலை மீதும்உறையும் பெருமான் நீலகண்டன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விண்ணகத்தான் மிக்க வேதத்துளான் விரிநீர் உடுத்த
மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய
பண்ணகத்தான் பத்தர் சித்தத்துளான் பழ நாயடியேன்
கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறைக் கண்டனே

மீயச்சூர் இளங்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.10.1) அப்பர் பிரான் பெருமானை, கடுக்கண்டன் என்று அழைக்கின்றார். கடு=மிகவும்கொடிய; இங்கே பெருமானின் கழுத்துடன் இணைத்து கூறப்படுவதால் கொடிய விடம் என்று பொருள் கொள்ள வேண்டும்; ஈடு= வலிமை; விடுக்கண் இன்றி=விடுபடுவதற்கு வகை ஏதுமின்றி; வெகுண்டவன்=கோபம் கொண்டவன்; பெருமான் தனது கால் விரலை ஊன்றி கயிலை மலைக்கு கொடுத்த அழுத்தத்தால், மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கிய அரக்கன் இராவணன், விடுபடும் வகை தெரியாது தவித்த நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பெருமான், அரக்கனுக்கு இரங்கி, தனது கால் அழுத்தத்தை தளரவிட்ட பின்னர் தானே, இராவணன் பழைய நிலைக்கு மீளமுடிந்தது. எடுத்த மலையினை எவ்வாறேனும் கீழே வைத்துவிட்டு, தப்பலாம் என்று நினைத்த அரக்கன், தப்பிச் செல்லாதவாறு மலையின் கீழே அகப்பட்டு தவித்த நிலை, விடுபட்டு செல்ல முடியாத நிலை, விடுக்கண் இன்றி என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. கொடிய விடத்தினை உண்டு தனது கழுத்தினில் தேக்கிய பெருமான், கயிலாய மலையை எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் வலிமை அடங்குமாறு, அவன் விடுபடாத வகையில் கயிலை மலையின் கீழ் அழுந்தி நசுங்குமாறு, கோபம் கொண்டு மலையினை தனது கால் பெரு விரலால் அழுத்தினார்; அத்தகைய திறமை கொண்ட பெருமான், திருமீயச்சூர் தலத்தில் உள்ள இளங்கோயிலில், அடியார்களின் இடர்களைத் தீர்க்கும் வண்ணம் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கடுக்கண்டன் கயிலாய மலை தனை
எடுக்கல் உற்ற இராவணன் ஈடற
விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே

கடம்பந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.18.5) அப்பர் பிரான், பெருமானை, கறை கண்டன் என்று அழைக்கின்றார். அ=அழகிய; மறை=வெளிப்படையாக வைக்காமல் மறைத்து சொல்ல வேண்டிய உபதேசம்; நிறை கொண்ட=நிறுத்திக் கொள்ளும்; சிறை கொண்ட வினை= உயிர்களின் அறிவினை சிறைப்படுத்தி, தன்வயப்படுத்தி தன் வழியே செலுத்தும் வினைகள்; சிறந்த உபதேசப் பொருட்களை சிந்திக்கும் பெருமானின் மனத்தினை அழகிய மனம் என்று சிறப்பிப்பதை நாம் உணரலாம். இதே பதிகத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாடல்களில் இருவகைப் பட்ட மனிதர்களையும், (உலக சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தைக் கழிப்போர் மற்றும் அத்தகைய சிற்றின்பத்தில் ஈடுபடுவதை தவிர்ப்போர் ஆகிய இருவரையும்) கடம்பந்துறை தலம் சென்று ஆங்கே இறைவனை வழிபட்டு வினைகளை தீர்த்துக் கொள்வீர் என்று கூறுவதன் காரணம் இந்த பாடலில் விளக்கமாக கூறப்படுகின்றது. இந்த வினைகள் தாமே நம்மை சிறைப்படுத்தி, நமது உயிர் விரும்பும் செயல்களை செய்ய விடாமல் தடுக்கின்றன. எனவே வினைகளின் சிறையிலிருந்து, வினைகளின் கட்டுப்பாட்டிலிருந்து நாம் மீள வேண்டும் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். உலகத்தவரே, உயிர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டிய பொருளினை தனது மனதினில் எப்போதும் சிந்தித்தவாறு இருக்கும் இறைவனை, நீங்கள் சிந்திக்கும் எண்ணங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் மனதினில் நிறுத்தி தியானம் செய்வீர்களாக. உலகின் உயிர்களை காப்பாற்றும் பொருட்டு ஆலகால விடத்தை தனது கழுத்தினில் கறையாக படியும்படி தேக்கியவனும், கடம்பந்துறை இறைவனும் ஆகிய இறைவன் ஒருவனால் தான், நம்மை சிறைப்படுத்தி தன்வயப்படுத்தி நம்மை ஆட்கொண்டு பல தீய செயல்களை செய்விக்கும் வினைகளை தீர்க்க முடியும். எனவே அவனைத் தொழுது உங்களது வினைகளை தீர்த்துக் கொள்வீர்களாக என்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.
மறை கொண்ட அம்மனத்தானை மனத்துளே
நிறை கொண்ட அந்நெஞ்சின் உள்ளுற வைம்மினோ
கறை கண்டன் உறையும் கடம்பந்துறை
சிறை கொண்ட அவ்வினை தீரத் தொழுமினே

திருக்கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.19.5) நீலமலரன கண்டத்தன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார்.சுனை=மலையினில் தானே தோன்றிய நீர்நிலை; நீல மலர்=கருங்குவளை மலர்; புனையும்=அணியும்; கனையும்=ஒலிக்கின்ற; மலையினில் தானே தோன்றிய நீர் நிலையில் பூக்கும் குவளை மலர் போன்று, கருமை நிறத்தினை கழுத்தினில் உடையவன் சிவபெருமான். பொன் நிறத்தில் காணப்படும் கொன்றை மலரைத் தனது சடையில் அணிபவனும், பசும்பொன்னினால் செய்யப்பட்ட கழல்கள் ஒலிக்குமாறு நடனம் ஆடுபவனும் ஆகிய பெருமான் உறையும் கடம்பூர் திருக்கோயிலை உள்ளத்தினில் நினைக்கும் அடியார்களின் வினைகள், பெருமானின் அருளால் நீங்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சுனையுள் நீல மலர் அன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரி சடைக்
கனையும் பைங்கழலான் கரக் கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.28.2) பளிங்கின் வண்ணத்தில் திருமேனி கொண்டுள்ள பெருமான் தனது கழுத்தினில் நீல வண்ணம் உடையவராக இருக்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மூலம்=அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கும் அனைத்து உயிர்களும் உடல்களுடன் இணைவதற்கும் மூல காரணனாக நிற்கும் தன்மை; கோல வண்ணத்தர்= தம்மிடம் ஒடுங்கிய உலகத்தை மீண்டும் தோற்றுவிப்பவர்; நீல வண்ணத்தர்= திருமாலை ஒரு பாகமாக உடையவர்; தேவியை ஒரு பாகமாக உடையவர் எனினும் பொருத்தமே. மாசு ஏதும் இல்லாத நிலையில் எரியும் தீப்பிழம்பில் வெளிப்பகுதி நீல நிறத்தில் இருப்பதை நாம் காணலாம். எனவே தான் நீல நிறத்தை கொழுஞ்சுடர் நீல வண்ணம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார் போலும். ஆல வண்ணத்தர் என்றும் குறிப்பிடுவதால் ஆலகால விடம் கழுத்தினில் தேக்கப் பட்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தினை உடையவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கும் அனைத்து உயிர்களும் தங்களின் வினைத் தொகுதிகளுக்கு பொருத்தமான உடல்களுடன் சேர்வதற்கும் மூல காரணமாக இருப்பது இறைவனின் தன்மை. மேலும் தன்னிடம் ஒடுங்கியிருந்த உலகத்தை விடுவித்து உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு முதல் காரணமாக இருப்பதும் அவரது தன்மையே; திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்ததால் கொழுந்து விட்டெரியும் சுடரின் ஓரத்தில் தோன்றும் நீல நிறத்தில் தனது உடலின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது போன்று தோன்றுவதும் அவரது தன்மையே. மேலும் திருநீறு பூசப்பட்டதால் பளிங்கு போன்று தோன்றும் அவரது திருமேனியின் ஒரு பகுதியில், கழுத்தினில் ஆலகால விடத்தைத் தேக்கியதால் ஏற்பட்ட கருமை நிறமும், இவரது உடலில் வண்ணங்களில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு பல தன்மைகளையும் பண்புகளையும் உடையவரே திருவையாறு தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மூல வண்ணத்தராய் முதலாகிய
கோல வண்ணத்தராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்தராய் நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.40.7) அப்பர் பிரான் பெருமானை, கறை சேர்தரு கண்டன் என்று அழைக்கின்றார். மையுலாம்=சோலைகளில் மரங்கள் அடர்ந்து காணப் படுவதால், சூரியனின் கதிர்கள் ஊடுருவ முடியாதபடி இருள் சூழ்ந்த சோலைகள் என்று தலத்தின் நிலவளம் குறிப்பிடப் படுகின்றது. இருண்ட சோலைகளைக் கண்டதும், அப்பர் பிரானுக்கு பெருமானின் இருண்ட கழுத்து நினைவுக்கு வந்தது போலும். தான் காணும் காட்சிகளில் எல்லாம் சிவபெருமானையே உணர்ந்தவர் அல்லவா அப்பர் பிரான்; விதி என்ற சொல்லுக்கு முறை என்று பொருள் கொண்டு, இறைவனே முறையாக அருள வேண்டும் என்று வேண்டியதாக பொருள் கொள்ளலாம். விதி என்பது, சென்ற பிறவிகளில் உயிர் செய்த வினைகளுக்கு ஏற்ப, இந்த பிறவியில் நம்மை வந்தடையும் நன்மை தீமைகளின் தன்மையை முடிவு செய்பவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம், நன்மை மற்றும் தீமைகள் ஏற்பட காரணமாக இருப்பவனே என்றும் பொருள் கொள்ளலாம். இதே பதிகத்தின் முந்தைய பாடல்களில் அப்பர் நாயகியின் அன்பின் தன்மை குறிப்பிடப் படுவதால், தன்னை முறையாக ஏற்றுக் கொள்ளுமாறு அவள் வேண்டுகின்றாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. ஐயன்=தலைவன், அழகியவன்; சூரியனின் கதிர்கள் உள்ளே புக முடியாதபடி மரங்கள் அடர்ந்த சோலைகள் நிறைந்த கழிப்பாலைத் தலத்தின் இறைவனே, எனது தலைவனே, கையில் அனல் ஏந்தியவனே, ஆலகால விடம் உண்டதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவனே, அழகியவனே, நீ தான் முறையாக எனது காதலை ஏற்றுக் கொண்டு எனக்கு அருள் புரிய வேண்டும் என்று எனது மகள் எப்போதும் கூறுகின்றாள் என்று அப்பர் நாயகியின் தாயின் கூற்றாக அமைந்த பாடல்.
ஐயனே அழகனே அனல் ஏந்திய
கையனே கறை சேர்தரு கண்டனே
மையுலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே விதியே அருள் என்னுமே

பாலைத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.51.1) அப்பர் பிரான், பெருமானை நீல மாமணி கண்டத்தர் என்று குறிப்பிடுகின்றார். கோல மாமதி=அழகில் சிறந்த சந்திரன்: நீல மாமணி=கழுத்தில் பெரிய நீல மணி கட்டியது போன்று, நீலநிறம் கொண்டவர்; ஆலகால விடத்தை உண்டதால், கழுத்தினில் பெரிய நீல மணி போன்று கறையினை உடையவர் சிவபெருமான். அவர் தனது நீண்ட சடையில், அழகிய பிறைச் சந்திரனையும் கங்கையையும் சேர்த்து வைத்தவர்: அவர் தனது கையினில் சூலம் மழு ஆகிய ஆயுதங்களுடன், இளம் மான் கன்றினையும் ஏந்தியவர்: அவர் ஒளி வீசும் தனது முடியினை பால் நெய் முதலான ஐந்து பொருட்களையும் கொண்டு நீராடுபவர். இத்தகைய தன்மைகளை உடைய சிவபெருமான் பாலைத்துறை என்ற தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நீலமாமணி கண்டத்தர் நீள் சடைக்
கோல மாமதி கங்கையும் கூட்டினார்
சூல மான் மழு ஏந்திச் சுடர்முடிப்
பால் நெய் ஆடுவர் பாலைத் துறையரே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (5.51.8) அப்பர் பிரான் பெருமானை, கடலின் நஞ்சணி கண்டர் என்று அழைக்கின்றார். அரன்=அழித்தல் தொழிலைச் செய்பவன்; தம்மைத் தொடர்ந்து வணங்கும் அடியார்களைத் துன்பங்கள் தொடரும் போது, அந்த துன்பங்களை அழிக்கும் அரனாக செயல்படுபவர் சிவபெருமான். ஆலகால விடம் துன்பமாக தேவர்களைத் தொடர்ந்த போது, அந்த நஞ்சினைத் தான் உட்கொண்டு, தேவர்களை அந்த துன்பத்திலிருந்து காத்து அருள் புரிந்தவர் சிவபெருமான் ஆவார். அவர் நறுமணம் கமழும் கங்கை நீரினைத் தனது செஞ்சடையில் அடக்கியுள்ளார். அவர் தாம் பாலைத்துறையில் உறையும் பெருமானாவார்.
தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து
அடரும் போது அரனாய் அருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டர் கடி புனல்
படரும் செஞ்சடைப் பாலைத் துறையரே

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.56.8) அப்பர் பிரான், நீலகண்டனை நினைக்குமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். மால்=மயக்கம்; மாலதாகி=உலகப் பொருட்களில் மயங்கி; கடை முடியா முனம்=உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னமே; கோலவார்= அழகியதும் நீண்டதும்; உலகப் பொருட்கள் தரும் மயக்கத்தில் ஆழ்ந்து இறைவனை நினைக்காமல் இருக்கும் மனிதர்களே, உங்களது வாழ்வின் இறுதிக் காலம் நெருங்கி உங்களது வாழ்வு முடிவினை அடைவதற்கு முன்னமே, பரந்து அழகாக காணப்படும் சோலைகள் சூழ்ந்த கோளிலி தலத்தில் பொருந்தியுள்ள இறைவனை, நீலகண்டனை நினைத்து வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும், நீலகண்டனை நித்தலும் நினைமினே என்று அறிவுரை கூறுகின்றார்.
மாலதாகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடை முடியா முனம்
கோல வார் பொழில் கோளிலி மேவிய
நீலகண்டனை நின்று நினைமினே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.60.2) அப்பர் பிரான், மாவிடம் உண்ட கண்டா என்று பெருமானை அழைக்கின்றார். நிச்சல்=நித்தல் என்ற சொல்லின் திரிபு; கச்ச=கைத்த என்பதன் திரிபு; கைப்பு=கசப்பு சுவை; மா=கரிய நிறம் கொண்ட; வைச்ச=சேமித்து வைத்த; முதல் பாடலில் இறைவனின் திருநாமத்தை ஓதும் அடியார்கள் அடையும் பயனை உணர்த்திய அப்பர் பிரான் இந்த பாடலில், இறைவனின் திருநாமத்தை நினைக்கும் அடியார்களின் வினைகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று கூறுகின்றார். இறைவனின் திருநாமங்களை நாம் நினைக்கநினைக்க, அத்தகைய நினைவுகள், நமது சேமிப்பு ஆபத்காலங்களில் பயன்படுவது போன்று நமக்கு பயன்படும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. நெஞ்சமே, நீ தினமும் பெருமானின் திருநாமங்களை நினைத்து வந்தால், உனது வினைகள் உன்னை விட்டு முழுதும் நீங்கிவிடும். வினைகள் பிணைத்து நம்மை துன்பங்களில் ஆழ்த்துகின்றதே என்ற அச்சம், நீ கொள்ள வேண்டிய அவசியமில்லை. கடலிலிருந்து பொங்கிய கசப்புத் தன்மை வாய்ந்த விடத்தை உண்டு அனைவரையும் காப்பாற்றிய பெருமானே என்று அவனது புகழினை குறிப்பிட்டு காளகண்டா என்று அழைக்கும் அடியார்களுக்கு, சேமித்து வைத்த செல்வம் பயன்படுவது போல், இறைவன் பயன்படுவார் என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை சொல்லும் பதிகம்.
அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள்
நிச்சலும் நினையாய் வினை போய் அற
கச்ச மாவிடம் உண்ட கண்டா என
வைச்ச மாநிதி ஆவர் மாற்பேறரே

குரக்குக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.75.9) அப்பர் பிரான் பெருமானை, கரிய கண்டன் என்று அழைக்கின்றார். எல்லி=பகல்; குரவனம்=குரா மரங்கள் நிறைந்த காடு; ஊனுருக, மனம் கசிய, பெருமானின் திருப்பாதங்களைத் தொழ வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். எல்லி என்ற சொல் பொதுவாக இரவினை குறிக்கும் சொல் என்றாலும், இரவு என்பது இந்த பாடலில் ஏற்கனவே குறிப்பிடப் பட்டுள்ளதால், இரவினைத் தொடர்ந்து வரும் பகல் என்று பொருள் கொள்வது பொருத்தம்.
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின் நீர்
கரிய கண்ட கழலடி தன்னையே
குரவனம் செழும் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தி தொழுமினே

திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.84.8) நீலகண்டன் என்று அப்பர் பிரான் பெருமானை அழைக்கின்றார். வேலை வென்ற கண்ணார்=வேற்படை நடுவில் அகன்றும் நுனியில் கூராகவும் இருப்பது போன்ற கண்களை உடைய பெண்களை வேற்கண்ணி, வேற்கண்ணாள் என்று சொல்வது தமிழ் இலக்கிய மரபு. ஆனால் இங்கே வேலை வென்ற கண்ணார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வேலின் நுனி கூர்மையாக இருந்தாலும், அந்த ஆயுதம் எய்யப்பட்ட பின்னரே, தான் சென்று அடைந்த பொருளினை தைத்து வருத்தம் அளிக்கும். ஆனால் பெண்களின் கண்களோ, அந்த கண்கள் சென்ற பார்வையில் எதிர்ப்படும் மனிதர்களின் நெஞ்சத்தை தைத்து, அவர்களுக்கு காதல் நோய் அளித்து வருத்தும் என்பதால் வேலை வென்ற கண்ணார் என்று அப்பர் பிரான் நயமாக கூறுகின்றார். தான் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு தான் காணும் மனிதர்களின் நெஞ்சினில் பாய்ந்து வருத்தத்தை விளைவிக்கும் பெண்களின் கண்கள், தனது இலக்கினை சென்று அடைந்த பின்னரே அந்த இலக்கினுக்கு வருத்தம் விளைவிக்கும் வேலினை விடவும் கொடியது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். காலையே=உடலில் உயிர் உறையும் காலத்திலே. காலையே என்ற சொல்லுக்கு காலைப் பொழுதினில் என்று பொருள் கொண்டு, காலையில் இறைவனைத் தொழுமாறு அப்பர் பிரான் பணிக்கின்றார் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. காலை எழுந்தவுடன், நீராடி உடலைத் தூய்மை செய்து கொண்டு இறைவனைத் தொழுவது ஒரு சுகமான அனுபவம். புறத்தே உள்ள இருள் நீங்கும் நேரத்தில் அகத்தில் உள்ள இருளைப் போக்கிக் கொள்ள இறைவனை நாடுவது மிகவும் பொருத்தமே. சூலை நோயினால் வருந்திய அப்பர் பிரான், தனது தமக்கையாரின் இருப்பிடத்தை அடைந்த பின்னர், அடுத்த நாள் விடியலில், திருவதிகைத் திருக்கோயிலுக்கு சென்றதை குறிப்பிடும் சேக்கிழாரின் பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. தமக்கையாரால் திருநீறு அணியப் பெற்ற அப்பர் பிரானின் அகத்தில் இருந்த இருளும் புறத்தே இருந்த இருளும் ஒருசேர நீங்கப் பெற்ற திருப்பள்ளியெழுச்சி காலம் என்று சேக்கிழார் சிறப்பித்து சொல்கின்றார். சமணர்களின் மாயையில் சிக்கி திகைத்து வாழ்ந்து வந்த தனது மயக்கம் தீர்ந்த வேளை காலை நேரம் என்பது அப்பர் பிரானின் நினைவுக்கும் வந்தது போலும். பார்ப்போரின் நெஞ்சத்தை தைத்து வருத்துவதில் வேலினையும் வென்ற கண்களை உடைய பெண்டிர் பால் ஆசை வைத்து, இறைவனை வழிபடும் ஒழுக்கமான செயலைத் தவிர்த்து, இல்லற வாழ்க்கையில் ஆழ்ந்து, திகைத்து நிற்கும் பேதைகளே, உங்களது உடலில் உயிர் இருக்கும்போதே நீங்கள் பெருமானைத் தொழுவீர்களாக. காட்டுப்பள்ளி தலத்தில் உறைபவனும், தேவர்களை காப்பதற்காக தான் உண்ட நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் நீல நிறம் உடைய கழுத்தினை உடையவனாக காட்சி தருபவனும் ஆகிய இறைவனை நீங்கள் தினமும் நினைத்து தொழுவீர்களாக என்பதே இந்த பாடல் மூலம் நமக்கு அப்பர் பிரான் சொல்லும் அறிவுரை.
வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர்
சீலம் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை
நீலகண்டனை நித்தல் நினைமினே

சிந்திப்பார் மனத்தான் என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (5.97.7) அப்பர் பிரான், பெருமானை, காருலாம் கண்டனே என்று அழைக்கின்றார். இறைவனின் திருப்பாதங்களை தொழாத மனிதர்களைப் பற்றும் தீயனவாகிய துன்பங்கள் தீயனவாகவே இருக்கும் என்று கூறுவதால், அடியார்களைப்பற்றும் தீயன நல்லவையாக மாறிவிடும் என்பது குறிப்பால் உணர்த்தப் படுகின்றது. மற்றவர்கள் போன்று ஓர் ஊரினைத் தனது ஊராகக் கொள்ளாதுஉலகனைத்தும் தனது ஊராக பெருமான் கொண்டுள்ள தன்மை ஊரிலாய் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது. எண்ணற்ற பெயர்களை உடையவன்என்பதால் ஒரே பெயருடன் இல்லாதவன் என்று கூறுகின்றார். கார்=கருமை கண்டம்=கழுத்து; பேரிலாதான் என்று அப்பர் பெருமான் கூறுவது நமக்குதெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில் மணிவாசகர் கூறுவதை நினைவூட்டுகின்றது. உண்மையில் பெருமானுக்கு என்று ஒரு பெயரோ ஒரு உருவமோஇல்லை என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். எந்த பெயரை வைத்து அழைத்தாலும், அந்த பெயர் உணர்த்தும் பொருளினைக் கடந்து நிற்கும்திறமை படைத்த இறைவனை என்னவென்று அழைப்பது, எந்த உருவம் தான் அவனது உருவம் என்று நாம் நினைப்பது, என்பதே அருளாளர்கள் எழுப்பும்கேள்வி. தனக்கென்று தனியாக ஒரு ஊர் இல்லாத இறைவனே; ஒற்றைப் பெயர் இல்லாமல் பல பெயர்கள் உடையவனே, பிறைச் சந்திரனை அழகாகபின்னப்பட்ட சடையினில் ஏற்றுக் கொண்டவனே, நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறத்துடன் காணப்படும் கழுத்தினை உடையவனே, உனதுதிருப்பாதங்களை சரண் அடையாதவர்களுக்கு தீயன, தனது தன்மை மாறாமல் துன்பங்களைத் தரும்; இறைவனே உனது திருவடிகளைச் சாரும்அடியார்களுக்கு தீயனவும் தனது தன்மை மாறி நன்மை அளிப்பனவாக முடியும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஊரிலாய் என்று ஒன்றாக உரைப்பதோர்
பேரிலாய் பிறை சூடிய பிஞ்ஞகா
காருலாம் கண்டனே உன் கழலடி
சேர்விலார்கட்கு தீயவை தீயவே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.4.11) அப்பர் பிரான் பெருமானை மணிகண்டன் என்று அழைக்கின்றார். நெடியான்=நீண்ட திரிவிக்ரமனாக உருவம் எடுத்து மூவுலகையும் தனது இரண்டு அடிகளால் அளந்த திருமால்: நெடிது வளர்ந்த திருமாலாலும் காண முடியாத வகையில், பாதாளத்தையும் ஊடுருவி, விண்ணையும் கடந்து நின்ற சோதியின் தன்மை, நெடியான் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது. புவலோகம்=பூவுலகுக்கு மேல் உள்ள உலகம்: ஒரு உலகத்தை குறிப்பிட்டு அனைத்து உலகங்களையும் அப்பர் பிரான் உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். பொடி=திருநீறு; நெடியானாக வளரும் திறமை கொண்ட திருமாலும் நான்முகனும், தங்களின் முன்னே எழுந்த சோதியின் அடியையும் முடியையும் காணாத வகையில், சோதி வடிவாகத் தோன்றியவன் சிவபெருமான்: தனக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாதவன் சிவபெருமான்; எருதினை, தனது கொடியில் சித்திரமாக ஏற்றுள்ளவன் சிவபெருமான்: அழகாக விளங்கும் மணியின் நிறத்தில் அமைந்த கழுத்தினை உடையவன் சிவபெருமான்: கொலைத் தொழிலை உடைய வேங்கையின் தோலைத் தனது கோவண ஆடையின் மேல் அணிந்தவன் சிவபெருமான்: தனது மேனியின் மேல் திருநீற்றினை பூசியவன்: பிச்சைப் பெருமானாக அனைத்து உலகங்களும் திரிபவன் சிவபெருமான். தனக்கு உணவு வேண்டி பிச்சை எடுத்தாலும், தனது அடியார்களை தேவர்களின் உலகங்களை ஆளும் நிலைக்கு உயர்த்துபவன் சிவபெருமான். இத்தகைய தன்மைகளைக் கொண்ட சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறையும் பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே
கொடியேறு கோல மாமணி கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே புரி நூலானே
அடியாரை அமருலகம் ஆள்விக்குமே அவனாகில் அதிகை வீரட்டனாமே

காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.8.7) அப்பர் பிரான் பெருமானை கரியுருவு கண்டன் என்று குறிப்பிடுகின்றார். கரி உருவு=கரி போன்று கறுத்த நிறம்; முதலடியில் வரும் கண்டம் என்ற சொல் கழுத்து என்றும் வரையறுக்கப் பட்டவன் என்றும் இரண்டு பொருள்களில் வருமாறு கையாளப் பட்டுள்ளது. கரி=ஆண் யானை; கரி போன்று கருமையான நிறத்தில் அமைந்துள்ள கழுத்தினோடு நீலகண்டனாக அடியேனுக்கு காட்சி அளிப்பவனும், அடியார்களின் பக்குவ நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப வேறுவேறு உருவங்களில் காட்சி அளித்தவனாக நூல்களிலும் பாடல்களிலும் வரையறுக்கப் படுபவனும், வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலையை அணிந்தவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு மற்றும் பவளம் ஆகிய பொருட்களின் நிறத்தினை ஒத்த திருமேனியை உடையவனும், கச்சி ஏகம்பம் தலத்தில் பொருந்தி உறைபவனும், எட்டு திசைகளும் தானேயாக இருக்கும் பண்பினை உடையவனும், முப்பரங்களையும் தீயிட்டு கொளுத்தியவனும், நெருப்பின் இடையே நின்று கூத்தாடுபவனும், எனது உள்ளத்தில் இருந்த கொடிய எண்ணங்களை அழித்தவனும், தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்று அதன் தோலை போர்வையாக மகிழ்ந்து போர்த்தவனும், கையினில் மண்டையோடு ஏந்தி காபாலியாக பல இடங்களுக்கும் சென்று பிச்சை ஏற்பவனும், திருக்காளத்தி தலத்தில் காணப்படும் காளத்தியான் என்ற பெயரில் அழைக்கப் படுபவனும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கரியுருவு கண்டத்து எம் கண்ணுளான் காண் கண்டன் காண் வண்டுண்ட கொன்றையான் காண்
எரி பவள வண்ணன் காண் ஏகம்பன் காண் எண்டிசையும் தானாய குணத்தினான் காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயாடி காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண்
கரியுரிவை போர்த்து உகந்த காபாலி காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே

காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.8.9) அப்பர் பிரான், பெருமானை கறைக் கண்டன் என்று அழைக்கின்றார். ஆர்ந்து உக்க=நிறைந்து ததும்பும்; தேனப்பூ வண்டுண்ட=பூவினில் நிறைந்து நிற்கும் தேனை உண்பதற்காக சென்ற வண்டு; தலத்து அம்பிகையின் திருநாமம், ஞானப் பூங்கோதையாள்; ஞானமே வடிவாகிய மங்கை; மறிய=அழிய; ஓடி=விரைந்து; மட்டித்து நின்றான்= மடிந்து நின்றான் என்பதன் திரிபு; மடித்து=ஒடுக்கி; பூவினில் உள்ள தேனைப் பருகுவதற்காக வண்டுகள் சூழ்ந்த கொன்றை மாலை அணிந்தவனும், கச்சி ஏகம்பம் தலத்தில் உறையும் ஏகம்பனாக இருப்பவனும், தேன் நிறைந்து ததும்பும் மலர்களை அணிந்த ஞானப்பூங்கோதை அம்பிகையை தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், உயிர்களால் விரும்பப் படுபவனும், ஞானப் பிரகாசனாக விளங்குபவனும், ஊழிக்காலத்தின் இறுதியில் வானுலகம் மண்ணுலகம் ஆகிய அனைத்து உலகங்களும் முற்றிலும் அழியுமாறு விரைந்து ஒடுக்க வல்லவனும், வண்டுகள் உலாவும் சோலைகள் நிறைந்த கானப்பேர் தலத்தில் உறையும் நீலகண்டனும் திருக்காளத்தி தலத்தில் காணப்படும் காளத்தியானும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தேனப்பூ வண்டுண்ட கொன்றையான் காண் திருவேகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க
ஞானப் பூங்கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளியானான் காண்
வானப்பேரூரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டார் சோலைக்
கானப்பேரூரன் காண் கறைக் கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே

இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும் அப்பர் பிரான் (6.8.10) பெருமானை மணிகண்டன் என்று அழைக்கின்றார். குறையுடையார்=குறைந்து இறைவனைத் தொழ வந்த அடியார்கள், தமது உடலினை குறுக்கிக் கொண்டு பணிந்து இறைவனைத் தொழும் அடியார்கள்; குற்றேவல்=அடிமைத் தொண்டு; மறையுடையவானோர்=வேதங்களில் புகழப்படும் வானவர்கள்; இறையவன்=தலைவன்; குறையுடையார் என்பதற்கு பல குறைகள் உடைய உயிர்கள் என்று பொருள் கொண்டு, அந்த குறைகளை பொருட்படுத்தாமல் அருள் புரியும் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருப்பவனும், ஏழ்கடலாகவும் ஏழு மலைகளாகவும் அவற்றால் சூழப்பட்ட ஏழ் உலகங்களாக உள்ளவனும், அடக்கத்துடன் தலை தாழ்த்தி தன்னை வணங்கும் அடியார்களின் அடிமைத் தொண்டினை ஏற்றுக் கொள்பவனும், குடந்தை நகரில் உள்ள கீழ்க்கோட்டம் தலத்தில் பொருந்தி உறைபவனும், வேதங்களில் புகழ்ந்து பேசப்படும் தேவர்களின் தலைவனாக விளங்குபவனும், திருமறைக்காடு தலத்தில் உறைபவனும், நீலமணி போன்ற கறையினை உடைய கழுத்தினை உடையவனும், காபாலியாக பல இடங்களில் திரிபவனும், திருக்காளத்தி தலத்தில் காணப்படும் காளத்தியானும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பாடலில் பெருமானை கறையுடைய கண்டன் என்றும் குறிப்பிடுகின்றார்.
இறையவன் காண் ஏழுலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்
மறையுடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டுறை மணிகண்டன் காண்
கறையுடைய கண்டத்து எம் காபாலி காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.12.7) அப்பர் பிரான் பெருமானை நீலகண்டர் என்று அழைக்கின்றார். பிணம் புல்கு=அழியக் கூடிய பிணமாக ஒரு நாள் பொருந்த இருக்கும்; பீறல் குரம்பை=ஓட்டைக் குடிசை; நிணம் புல்கு=தசைகள் பொருந்தும்; கணம்புல்லன் கருத்து உகந்தார் என்று தனது தலைமுடியை திருக்கோயிலில் எரித்தது தவறான செய்கை என்றாலும், திருவிளக்கு நின்று நெடுநேரம் எரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்த செய்கையால், நாயனாரது செயலைக் குற்றமாக கருதாது, அதனை விரும்பி பெருமான் ஏற்றார் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இந்தபாடலில் கணம்புல்ல நாயனார் பற்றிய குறிப்பு காணப் படுகின்றது. இருக்குவேளூர் என்ற ஊரினைச் சார்ந்த கணம்புல்லர், தில்லையில் உள்ள திருப்புலீச்சரம் திருக்கோயிலில் நெய் விளக்கு ஏற்றும் திருப்பணியை செய்து வந்தார். தான் வறுமை அடைந்த நிலையிலும் புற்களை அரிந்து அதனை விற்று வரும் பணத்தினைக் கொண்டு தனது திருப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். கையில் செல்வம் இல்லாத நிலையில், அடுத்தவரிடம் இரந்து பணம் பெற்றுத் தனது தொண்டினைச் செய்வதற்கு பதிலாக, தனது உழைப்பில் வரும் பணத்தினைக் கொண்டு திருப்பணி செய்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். ஒரு நாள் தான் அரிந்து கொண்டு வந்த புற்கட்டு விற்காமல் போகவே, கணம்புல்லர் அந்த புல்லினை திருவிளக்கு ஏற்ற பயன்படுத்தினார். ஆனால் புல் மிகவும் விரைவில் எரிந்து போனதால், அதிகமான நேரம் விளக்கு தொடர்ந்து எரிய வேண்டும் என்பதற்காக, தனது முடியையே விளக்காக எரித்தார். இவ்வாறு திருவிளக்கு எரித்து திருப்பணி செய்த நாயனார், நல்வினை தீவினை என்று பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் இருவினைகளின் தொடர்பினை எரித்தார் என்று நயமாக பெரியபுராணப் பாடலில் சேக்கிழார் கூறுகின்றார். என்றேனும் பிணத்தின் நிலையினை அடையப் போகும் நிலையற்ற உடலினை, ஓட்டைகள் நிறைந்த குடிசையாகிய உடலினை, நிலையானது என்று தவறாக கருதும் பேதை மாந்தர்களே, தசைப் பகுதிகள் தங்கும் மூவிலை சூலத்தினை உடையவரும், நீலகண்டராக விளங்குபவரும், எட்டு தோள்களைக் கொண்டவரும், எண்ணற்ற நற்குணங்களை உடையவரும் ஆகிய சிவபெருமான், தனது முடியினைக் கொண்டு திருவிளக்கு ஏற்றிய கணம்புல்லனின் செய்கையினை மிகவும் விரும்பி ஏற்று மகிழ்ந்தார். எனவே நீங்களும் உள்ளன்புடன் அவருக்குத் தொண்டுகள் செய்து அவருக்கு விருப்பமானவர்களாக மாறுவீர்களாக; அவர் காஞ்சித் தலத்திலும் கழிப்பாலைத் தலத்திலும் உறைகின்றார். நாற்றத்தினை மறைப்பதற்காக நறுமணப் பொருட்கள் பூசப்படும் உடலினை விட்டு ஆன்மாக்கள் நீங்கி முக்தி நிலை அடைவதற்கான வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப் பேதப்படுகின்ற பேதைமீர்காள்
நிணம் புல்கு சூலத்தர் நீலகண்டர் எண்தோளர் எண்ணிறைந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சியுள்ளார் கழிப்பாலை மேய கபாலப்பனார்
மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.16.9) அப்பர் பிரான், அணி நீலகண்டம் உடையார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஆலகால விடத்தை தேக்கியதால் கருமை நிறத்துடன் பெருமானின் கழுத்தினில் படர்ந்த கறை என்றாலும், இந்த கருமை நிறமும், பெருமானின் கழுத்தினில் மாணிக்கக்கல் பதித்தது போன்ற தோற்றத்தை அளித்ததால், பெருமானுக்கு அணிகலனாக, இந்த கருமை நிறத்து கறை, விளங்கியது என்பதை உணர்த்தும் வண்ணம், அணி நீலகண்டம் என்று சொல்லப் படுகின்றது. வரவு=பிறப்பு; செலவு=இறப்பு; படைக் கணாள்=நீண்ட வேற்படையைப் போன்று நடுவில் அகன்றும் முனைகளில் குறுகியும் காணப்படும் கண்களை உடைய உமையம்மை: பசுமையான இளந்தளிர்களின் நடுவே தோன்றும் கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவரும், வேற்படை போன்று நடுவில் அகன்றும் முனைகளில் குறுகியும் அழகாக காணப்படும் கண்களை உடைய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவரும், காலை மற்றும் மாலை வேளைகளில் காணப்படும் வானம் போன்று சிவந்த மேனியை உடையவரும், கழுத்தினில் அணிந்துள்ள கரிய மணி போன்று தோன்றுமாறு தான் உண்ட நஞ்சத்தை கழுத்தினில் அடக்கியவரும், அனைத்து உயிர்களுக்கும் பிறப்பையும் இறப்பையும் நிகழ்த்துபவரும், நிலையாக எனது உள்ளத்தில் தங்கி நீங்காது இருப்பவரும், என் போன்ற அடியார்களின் இடர்களை தீர்க்க வல்லவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார் என்பதே பாடலின் பொழிப்புரை.
பைந்தளிர் கொன்றை அம் தாரார் போலும் படைக்கணாள் பாகம் உடையார் போலும்
அந்திவாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீலகண்டம் உடையார் போலும்
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும்
எந்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.17.3) அப்பர் பிரான், பெருமானை, கறைசேர் கண்டர் என்று அழைக்கின்றார். ஆகாயத்தர் என்ற சொல்லுக்கு ஆகாயம் முதலாகிய ஐந்து பூதங்களாக உள்ளவர் என்று பொருள் கொள்வது ஒரு வகை. ஆகாயம் தான் மற்ற பூதங்கள் தோன்றுவதற்கும் பிரளய முடிவினில் ஒடுங்குவதற்கும் இடமாக உள்ளது. அதைப் போன்று பிரளய முடிவினில் அனைத்துப் பொருட்களும் உயிர்களும் ஒடுங்குவதற்கு இடமாக இருப்பதுடன் பின்னர் தோன்றுவதற்கும் காரணமாக பெருமான் இருக்கின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பே. பல ஊழிகளையும் கடந்தவர் பெருமான் என்பதன் மூலம் கால நியதிக்கு அப்பாற்பட்டவர் பெருமான் என்பதை உணர்த்த காலம் பல கழித்தார் என்று கூறுகின்றார். கால வயத்தால் பிறப்பு இளமை முதுமை ஆகிய காலங்களுக்கு உட்படும் வண்ணம் அனைத்து உயிர்களையும் செயல்படுத்தும் பெருமான், தான் அந்த கால நியதியைக் கடந்தவராக இருக்கின்றார் என்று பொருள் கொள்வதும் பொருந்தும். சேயார்=தொலை தூரத்தில் உள்ளவர்; தன்னை உணராத உயிர்களுக்கு தொலை தூரத்தில் உள்ளவர் பெருமான். காணாதார்=உணராதவர்; கொல்லை= முல்லை நிலம்; முல்லை நிலத்தின் கடவுளாக கருதப்படும் திருமாலை விடையாகக் கொண்டவர் பெருமான். திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு பெருமான் சென்ற போது திருமால் அவரை இடபமாக தாங்கிய நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது.
ஆலநிழல் இருப்பர் ஆகாயத்தர் அருவரையின் உச்சியார் ஆணர் பெண்ணர்
காலம் பல கழித்தார் கறைசேர் கண்டர் கருத்துக்குச் சேயார் தாம் காணாதார்க்கு
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடுமழுவர் கோழம்பம் மேய ஈசர்
ஏல மணம் நாறும் ஈங்கோய் இடைமருது மேவி இடம் கொண்டாரே

ஆக்கூர் தான்தோன்றி மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.21.3) அப்பர் பிரான் மணி நீலகண்டம் உடையார் என்று பெருமானை அழைக்கின்றார். வை=கூர்மை; வளர் ஞாயிறு= தனது ஒளியில் வளர்ந்து கொண்டிருக்கும் சூரியன்; காலை நேரத்து சூரியன், முதலில் செம்மை நிறத்தில் தோன்றினாலும் சிறிது சிறிதாக ஒளி வளர்ந்து வெண்மை நிறமடைகின்றது; மை பூசப்பட்ட மலர்கள் போன்ற கண்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவர் சிவபெருமான்; ஒளிவிட்டு பிரகாசிக்கும் நீலமணி போன்ற கறையை தனது கழுத்தினில் உடையவர் சிவபெருமான்; நெய் பூசப்பட்ட திரிசூலத்தைத் தனது கையில் ஏந்தியவர் சிவபெருமான்; திருநீறு பூசப்பட்ட எட்டு தோள்களை உடைய பெருமான், கூர்மையான மழுவாட் படையைத் தனது கையில் வைத்துள்ளார். வளரும் நிலையில் காணப்படும் காலைக் கதிரவன் போன்று சிவந்து ஒளி வீசும் திருமேனி உடையவர் சிவபெருமான்; ஐந்து தலை பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டியுள்ள பெருமான், திருவாக்கூர் தலத்தில் தான்தோன்றி அப்பர் என்ற திருநாமத்துடன் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும், பெருமானை, நீலநற்கண்டத்து இறையார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும் மணிநீல கண்டம் உடையார் போலும்
நெய்யார் திரிசூலம் கையார் போலும் நீறேறு தோள் எட்டு உடையார் போலும்
வையார் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்
ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.24.1) அப்பர் பிரான், பெருமானை, கறைக் கண்டன் என்று அழைக்கின்றார். கை=துதிக்கை; மானம்=பெருமை; கை மானம் மதம் ஆகிய மூன்று சொற்களையும் தனித்தனியாக களிறு என்று சொல்லுடன் இணைத்து பொருள் கொள்ள வேண்டும். விலங்குகளில் யானை ஒன்றினுக்கு தான் கையாக பயன்படும் துதிக்கை அமைந்துள்ளது. அம்மான்=அனைவர்க்கும் தலைவன். செவ்வானம் என்ற சொல் செம்மானம் என்று எதுகை கருதி திரிந்தது. அயில்=கூர்மையான; வாய்=நுனி, முனை; துதிக்கை உடைத்ததாக விளங்குவதும், பல பெருமைகள் படைத்ததும் ஆகிய மதம் கொண்ட யானை, தாருகாவனத்து முனிவர்களால் தன் மீது ஏவிவிடப்பட்ட போது, தன்னை எதிர்க்கும் நோக்கத்துடன் ஓடி வந்த யானையின் தோலை உரித்து வெற்றி கண்டவனும், ஆலகால விடத்தினை தேக்கியதால் ஏற்பட்ட கறையினை உடைய கழுத்தினை உடையவனும், கண் பொருந்திய நெற்றியினை உடையவனும், அனைவர்க்கும் தலைவனாக விளங்குபவனும், படம் எடுத்து ஆடி அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டி ஆட்டுவிப்பவனும், ஊழித் தீயினில் நடனம் ஆடுபவனும், கூர்மையான நுனியினை உடைய சூலத்தைக் கையில் ஏந்தியவனும், எங்களுக்கு தலைவனாக விளங்குபவனும், ஏழ் உலகங்களிலும் பரந்து அனைத்து உயிர்களிலும் பொருட்களிலும் கலந்து நிற்பவனும், எரியும் விளக்கு போன்று சோதி வடிவில் விளங்குபவனும், ஒளியுடன் திகழும் மழுவினை ஏந்தியவனும், அந்தி நேரத்தில் காணப்படும் சிவந்த வானத்தின் நிறத்தை ஒத்த மேனியை உடையவனும் ஆகிய திருவாரூர் பெருமான் எனது சிந்தனையில் நிறைந்து உள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கைம்மான மத களிற்றின் உரிவையான் காண் கறைக் கண்டன் காண் கண்ணார் நெற்றியான் காண்
அம்மான் காண் ஆடரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில்வாய்ச் சூலத்தான் காண்
எம்மான் காண் ஏழுலகுமாயினான் காண் எரிசுடரோன் காண் இலங்கு மழுவாளன் காண்
செம்மானத்து ஒளியன்ன மேனியான் காண் திருவாரூரன் காண் அவனென் சிந்தையானே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (6.24.2) பெருமானை மணிகண்டன் என்று அப்பர் பிரான் அழைக்கிறார். ஊனேறு=புலால் நாற்றம் வீசும்; படுதலை=கொய்யப்பட்டு உடலிலிருந்து பிரிக்கப்பட்ட தலை; ஊன் பொருந்தியதால் புலால் நாற்றம் வீசுவதும் பிரமனின் உடலிலிருந்து பிரிக்கப்பட்டதும் ஆகிய தலையைத் தனது உண்கலனாகக் கொண்டுள்ளவனும், ஓங்காரத்தின் வடிவாகவும் பொருளாகவும் விளங்குபவனும், பல ஊழிக் காலங்களின் தலைவனாக விளங்குபவனும், காளையைத் தனது வாகனமாகக் கொண்டு திரிபவனும், ஐயாறு தலத்தில் உறைபவனும், எல்லா உலகங்களிலும் பரந்து விரிந்து இருப்பவனும், அனைத்து உலகங்களையும் கடந்து விளங்குபவனும், துள்ளி விளையாடும் மான்கன்றினைத் தனது கையினில் ஏந்தியவனும், தவசிகள் அனைவர்க்கும் முதல்வனாக பெருந்தவத்தோனாக விளங்குபவனும், தவம் செய்பவர்கள் அடையும் பயனாக விளங்குபவனும், தேன் நிறைந்த கொன்றை மலர்களை மாலையாக சூடியவனும் ஆகிய திருவாரூர் பெருமான் எனது சிந்தனையில் நிறைந்து உள்ளான் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
ஊனேறு படுதலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழிமுதல் ஆனான் காண்
ஆனேறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண்
மானேறு கரதலத்து எம் மணிகண்டன் காண் மாதவன் காண் மாதவத்தின் விளைவு ஆனான் காண்
தேனேறும் மலர்க் கொன்றைக் கண்ணியான் காண் திருவாரூரன் காண் அவன் என் சிந்தையானே’

மேற்கண்ட பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் (6.24.5) அப்பர் பிரான் பெருமானை, கறைக் கண்டன் என்று அழைக்கின்றார். கார்=மேகம்; குடுமி=உச்சி; மேகங்கள் தவழும் உயர்ந்த உச்சியைக் கொண்ட கயிலை மலையை உடையவனும், ஆலகால விடத்தை உண்டதால் ஏற்பட்ட கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவனும், நெற்றியில் கண்ணை உடையவனும், போர்க்குணம் கொண்டதும் தனது வாகனமும் ஆகிய எருதினைத் தனது கொடியில் வைத்து உயர்ந்த இடத்தை அளித்தவனும், புண்ணியத்தின் உருவமாக விளங்குபவனும், எண்ணற்ற அரிய பல குணங்களை உடையவனும், நீரினை வற்றச் செய்யும் தீப்பொறிகளை உமிழும் சூலப் படையை உடையவனும், இயல்பாகவே மலங்கள் அற்றவனும், தனக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாத தன்மையை உடையவனும், சிறப்பு மிக்க திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் ஆகிய திருவாரூர் பெருமான் எனது சிந்தனையில் நிறைந்து உள்ளான் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
காரேறு நெடுங்குடுமிக் கயிலாயன் காண் கறைக் கண்டன் காண் கண்ணார் நெற்றியான் காண்
போரேறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ணரும்பல் குணத்தினான் காண்
நீரேறு சுடர்ச் சூலப் படையினான் காண் நின்மலன் காண் நிகரேதும் இல்லாதான் காண்
சீரேறு திருமாலோர் பாகத்தான் காண் திருவாரூரன் காண் அவன் என் சிந்தையானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.28.5) அப்பர் பிரான், பெருமானை, கடல் நஞ்சம் உண்டிருண்ட கண்டர் என்று குறிப்பிடுகின்றார். ஆனத்து=ஆன்+அத்து=எருதின் மேல், முன் எழுத்து=அகரமாகிய முன் எழுத்து. அ என்ற எழுத்து அனைத்து எழுத்துகளும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது போன்று பெருமான், உலகப் பொருட்கள் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணனாக இருப்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. இதே கருத்துடன் திருக்குறளின் முதல் பாடல் அமைந்து இருப்பதை நாம் உணரலாம். அகர எழுத்து அனைத்து எழுத்துக்களும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது போன்று. ஆதியாகிய பகவான் அனைத்து உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு காரணமாக உள்ளார் என்று திருவள்ளுவர் இந்த பாடலில் கூறுகின்றார். ஏனம்=பன்றி, வராக அவதாரம் எடுத்த திருமால்; வராகமாக வாழ்ந்த திருமால் சில நாட்களே வாழ்ந்தமையால், அந்த பன்றியின் கொம்பு இளமையான கொம்பு என்று இங்கே கூறப்படுகின்றது. மருப்பு=கொம்பு; அரக்கன் இரண்யாக்கனைக் கொன்ற பின்னர், பன்றியாக உருவெடுத்த திருமாலின் அட்டகாசத்தைத் தாங்க முடியாத தேவர்கள் இறைவனிடம் முறையிட, அந்த பன்றியை அடக்கிய பெருமான் அதற்கு அடையாளமாக பன்றியின் கொம்பினை உடைத்துத் தனது மார்பினில் அணிகலனாக அணிந்து கொண்டவராகவும், பன்றி அடக்கப்பட்டதால் தங்களது அச்சம் நீங்கப்பெற்ற தேவர்கள் புகழ்ந்து ஏத்த இருந்தவராகவும், காட்டில் உள்ள கல்லால மரத்தின் நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு வேதங்களின் பொருளை விளக்கியவராகவும், பாற்கடலில் பொங்கி எழுந்த நஞ்சினை தேக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவராகவும், வானத்தில் உலவும் இளம் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவராகவும், உயர்ந்த கயிலை மலையில் மகிழ்ச்சியுடன் உறைபவராகவும், காளையை வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்பவராகவும், ஏனைய எழுத்துகளுக்கு அகர எழுத்து தோற்றத்தின் காரணமாக இருப்பது போன்று உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு காரண கர்த்தாவாக இருப்பவராகவும் ஆகிய அழகிய கோலத்தில் திருவாரூர் தலத்தின் மூலட்டானத்து பெருமான் எனது மனக்கண்ணுக்கு காட்சி அளிக்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஏனத்து இளமருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும்
கானக் கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்
வானத்து இளமதி சேர் சடையார் போலும் வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே

இதே பதிகத்தின் அடுத்த பாடலிலும் அப்பர் பிரான், பெருமானை கடல் நஞ்சம் உண்டிருண்ட கண்டர் என்று அழைக்கின்றார். சோமன்=சந்திரன்: ஆ=தண்ணீர், இங்கே கங்கை நதியை குறிப்பிடுகின்றது; நா மன்னும் மற்று ஆ மன்னும் எனப்படும் சொற்கள், நாமனையும் என்றும் ஆமனையும் என்றும், எதுகை கருதி திரிந்தன. தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடலினை நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கி எரித்தவராகவும், கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினைத் தனது கழுத்தினில் அடக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவராகவும், சந்திரனைத் தனது செஞ்சடையில் வைத்தவராகவும், சொல்லாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் இருப்பவராகவும், வேதங்கள் பொருந்தி நிற்கும் நாவினை உடையவராகவும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவராகவும், கங்கை நதி பொருந்தி அடங்கிய சடையை உடையவராகவும் ஆகிய கோலத்தில் அழகிய திருவாரூர் தலத்தின் மூலட்டானத்து பெருமான் எனது மனக்கண்ணுக்கு காட்சி அளிக்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
காமனையும் கரியாக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்
சோமனையும் செஞ்சடை மேல் வைத்தார் போலும் சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும் நங்கையோர் பால் மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையும் திருமுடியார் தாமே போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே

மேற்கண்ட பதிகத்தின் ஏழாவது பாடலிலும் (6.28.7) இருண்ட கண்டர் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். ஆர்=ஆத்தி மாலை; அடிமை=தொண்டு; செடி=முடை நாற்றம்; செல்கதி=வீடுபேறு அடையும் வழி; கருத்தர்=அடியார்களின் கருத்தினில் உறையும் தலைவர்; செல்கதி என்பதற்கு உயிர்கள் தங்களது வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப உடலை நோக்கிச் செல்வதற்கு வழி வகுத்தவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தனது சடைமுடியில் ஆத்தி மாலையும், இளம் பிறைச் சந்திரனையும், பாம்பினையும் சூடியவராகவும், மூவுலகிலும் நிறைந்து பரந்து அனைத்துப் பொருட்களிலும் கலந்து இருப்பவராகவும், கிள்ளப்பட்ட பிரமனின் தலை என்பதால் முடை நாற்றம் வீசும் மண்டை ஓட்டினைத் தனது உண்கலனாகக் கொண்டு திரிபவராகவும், வீடுபேறு கதிக்கு செல்லும் வழியாக இருப்பவராகவும், கொடிய நஞ்சினை தேக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவராகவும், ஊழிக்காலத்தில் கங்காள வேடத்தவராக இருப்பவராகவும், அடியார்களின் கருத்தினில் உறைபவராகவும், அடியார்கள் செய்யும் தொண்டினை மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டு மகிழ்பவராகவும் அழகிய திருவாரூர் தலத்தின் மூலட்டானத்து பெருமான் எனது மனக்கண்ணுக்கு காட்சி அளிக்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை அவ்வை பிராட்டி பெருமானை ஆத்திச்சூடி என்று அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது.
முடியார் மதியரவம் வைத்தார் போலும் மூவுலகும் தாமேயாய் நின்றார் போலும்
செடியார் தலைப் பலி கொண்டு உழல்வார் போலும் செல்கதி தான் கண்ட சிவனார் போலும்
கடியார் நஞ்சு உண்டு இருண்ட கண்டர் போலும் கங்காள வேடக் கருத்தர் போலும்
அடியார் அடிமை உகப்பார் போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.31.8) அப்பர் பிரான், பெருமானை, மைஞ்ஞவிலும் கண்டா என்று அழைக்கின்றார். இழைத்த நாள்=ஒருவனுக்கு விதியால் முன்னமே தீர்மானிக்கப்பட்ட வாழ்நாள். அந்த நாள் என்னவென்று நமக்குத் தெரியாது; எனினும் அத்தகைய நாள் ஒன்று உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அரணம்=பாதுகாப்பு. அடியேன் உன் அரணம் கண்டாய் என்ற தொடரை இறுதி அடியில் குற்றமில்லை என்ற சொல்லின் முன்னர் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். தான் உணர்ந்த உண்மையினை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக அப்பர் பிரான் திகழ்வதை, அவரே உணர்த்துவதை நாம் இங்கே காணலாம். பிஞ்ஞகன்=அழகாக பின்னப்பட்ட தலைமுடியை உடையவன். நெஞ்சமே, உனக்கு குறிக்கப் பட்டுள்ள வாழ்நாள் முடிவதன் முன்னம், நீ பிறவிப் பெருங் கடலைத் தாண்டவேண்டும். அது எவ்வாறு இயலும் என்பதை நான் உனக்கு சொல்லிக் கொடுக்கின்றேன்; இரவும் பகலும் எமது பெருமானைத் துதித்து, வாழ்த்தி, நான் செய்த எல்லாத் தவறுகளையும் பொறுத்து அருளும் பெருமானே என்றும், தலைமுடியை மிகவும் அழகாக பின்னியிருப்பவனே என்றும், நீலகண்டனே என்றும், சுருண்ட சடையை உடைய தலைவனே என்றும், ஆரூரில் உறையும் அழகனே என்றும் பலமுறை அழைத்து கூப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள். உனக்குப் பாதுகாவலாக இருக்கும் நான், நீ என்ன செய்யவேண்டும் என்பதனை உணர்த்தி விட்டேன். குற்றம் ஏதும் என்மேல் இனி இல்லை. நீ மேற்சொன்னவாறு செயற்படாமல் இருந்தால் குற்றம் உன்னுடையது தான், இதனை உணர்ந்து உடனே செயலில் இறங்குவாயாக என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை சொல்லும் பாடல்.
இழைத்த நாள் எல்லை கடப்பதென்றால் இரவினோடு நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்
பிழைத்தது எல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம் கொண்ட அழகா என்றும்
குழற்சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றமில்லை என் மேல் நான் கூறினேனே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.32.5) அப்பர் பிரான், பெருமானை, நஞ்சுடைய கண்டனே என்று அழைத்து போற்றுகின்றார். வெஞ்சுடரோன்=சூரியன்; நஞ்சு ஒடுக்கப்பட்ட கழுத்தினை உடையானே, தவத்தில் ஆழ்ந்து யோக வடிவாக விளங்குபவனே, தக்க யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களை உடைத்தவனே, வெண் பிறையை, தலையில் மாலையாகச் சூடியவனே, ஊழி முடிவில் உலகெங்கும் அடர்ந்த இருள் சூழ்ந்து இருக்கும் சமயத்தில் விருப்பமுடன் ஆடல் புரிபவனே, தூய திருநீற்றினை உடலில் பூசியவனே, சிவந்த சடையை உடையவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நஞ்சுடைய கண்டனே போற்றிபோற்றி நற்றவனே நின் பாதம் போற்றிபோற்றி
வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண்மதியம் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருள் ஆடல் உகந்தாய் போற்றி தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின் பாதம் போற்றிபோற்றி திருமூலட்டானனே போற்றிபோற்றி

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.34.5) அப்பர் பிரான், பெருமானை நீலமா மணிகண்டத்து எண்தோளன் என்று குறிப்பிடுகின்றார். தொன்மையான பதியாகிய ஆரூர் நகரத்தின் தொன்மைச் சிறப்பினையும், அந்த நகரத்தில் தொன்மைக் காலத்திலேயே பெருமான் குடிகொண்டுள்ள தன்மையையும் குறிப்பிட்டு பதிகம் பாட அப்பர் பிரான் ஆவல் கொண்டார் போலும். அந்த ஆவலின் விளைவாக எழுந்ததே இந்த பதிகம். எவ்வளவு தொன்மையானது திருவாரூர் திருக்கோயில் என்பதை குறிப்பிடுவதற்கு அளவுகோலாக, அப்பர் பிரான் எந்த வருடக் கணக்கினையும் எடுத்துக் கொள்ளவில்லை. பெருமானின் கருணைச் செயல்கள் மற்றும் வீரச் செயல்கள் பலவற்றையும் குறிப்பிட்டு அந்த செயல்கள் நடைபெற்ற நாளுக்கு முன்னரோ பின்னரோ ஆரூர் திருக்கோயில் எழுந்ததோ என்று கேட்கின்றார். இவ்வாறு கேள்வியை எழுப்பி அதன் மூலம், இந்த கேள்விக்கு பதிலை தான் அறியும் நிலையில் இல்லை என்பதை குறிப்பிட்டு, மனிதர்களால் அளவிட முடியாத தொன்மை உடையது திருவாரூர் தலம் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், முத்தாய்ப்பாக, உலகம் பெருமானை அறிவதற்கு முன்னமே ஆரூர் திருக்கோயில் எழுந்தது போலும் என்று கூறுகின்றார்.பிறப்பில்லாத பெருமான் என்றும் நிலையாக ஒரே கோலத்தில், மூப்பு அடையாத குழகனாக இருப்பதால் அவனை பாலனாக கண்டவர் எவருமில்லை. சிவபெருமானைத் தவிர்த்த மற்ற தெய்வங்களின் குழந்தைப் பருவ விளையாட்டுகளை குறிப்பிட்டு பாடல்கள் பல இலக்கியங்களில் காணப் படுகின்றன. மேலும் பிள்ளைத் தமிழ் நூல்களும் உள்ளன. ஆனால் சிவபெருமான் மீது பிள்ளைத் தமிழ் எவரும் இயற்றவில்லை. இந்த நிலையைத் தான் அப்பர் பிரான் இங்கே, பாலன் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே என்று உணர்த்துகின்றார். நெருநல்= நேற்று; குழந்தைப் பருவம் முதலான பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே, தன்னை வழிபடும் அடியார்களுக்கு பற்றுக்கோடாக விளங்குபவனே, விடத்தினை அடக்கியதால் நீலமாமணி பதித்தது போன்று தோன்றும் கழுத்தினை உடையவனே. எட்டு தோள்களை உடையவனே, நேற்று இன்று நாளை எனப்படும் மூன்று காலங்களாகவும் இருப்பவனே, சிவலோக நெறியினை அடியார்களுக்கு அளிக்கும் பண்பினைக் கொண்டவனே, புகழத்தக்க பண்புகளை உடையவனே, நுண்ணிய அறிவினை உடையவனே, நல்லொழுக்க குணங்களை உடையவனே, பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ, மேற்கண்ட குணங்களை எல்லாம் கொள்வதற்கு முன்னோ பின்னோ, நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்றானானே
நீலமாமணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்றாகி நாளையாகும்
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.37.3) அப்பர் பிரான், பெருமானை, நஞ்சணி கண்டனே என்று அழைக்கின்றார். அஞ்சுண்ண வண்ணன் என்பதற்கு திருநீற்றினை உடலில் பூசியதால் வெண்ணிறத் திருமேனியுடன் விளங்குபவன் என்று பொருள் கொள்வது வழக்கம். திருநீற்றில் வாசனை தரும் ஜவ்வாது போன்று பொருட்களை கலத்தல் பண்டைய நாளிலும் இருந்த வழக்கம் என்று கருதி அஞ்சுண்ணம் என்று குறிப்பிடுவதாக விளக்கம் அளிக்கின்றனர். சிலர் அழகிய நறுமணப் பொடி பூசி நீராடுபவன் என்றும் விளக்கம் அளிக்கின்றனர். அம்=அழகிய; சுண்ணம்=நறுமணப் பொடி; பண்டைய நாட்களில் இறைவனை நீராட்டுவதற்கு நறுமணம் மிகுந்த பொடி பயன்படுத்தப் பட்டது போலும். இதனையே சுண்ணம் என்று அழைத்தனர், பொற்சுண்ணம் இடிக்க வாரீர் என்று தனது தோழிகளை அழைக்கும் விதமாக பொற்சுண்ணம் பதிகம் திருவாசகத்தில் இடம் பெறுவது இங்கே நினைவு கூரத் தக்கது. சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி ஆகிய காப்பியங்களில் வாசனைப் பொருள்கள் சேர்த்து இடிக்கப்பட்ட சுண்ணப்பொடி பயன்படுத்தப் பட்டமை குறிப்பிடப் படுகின்றது. இறைவனுக்கு பயன்படுத்தப் படும் பொற்சுண்ணம் இடிக்கத் தொடங்குவதையே ஒரு விழாவாக கொண்டாடியமை திருவாசகம் பொற்சுண்ணம் திருப்பதிகத்தில் எடுத்துரைக்கப் படுகின்றது. நீராட்டத்தின் போது அழகிய நறுமணப் பொடிகள் பூசி நீராடி மகிழ்பவனே, அடியார்களுக்கு தெவிட்டாத அமுதமாக இருப்பவனே, தான் உண்ட நஞ்சினைத் தனது கழுத்துக்கு அணிகலன் போன்று கழுத்தினில் கருமை நிறத்தில் கறையினை தேக்கியவனே, சான்றோர்கள் ஓதும் நான்கு வேதங்களின் வடிவாக இருப்பவனே, எனது நெஞ்சத்தில் புகுந்து நீ உறைவதை நான் உணரும்போது அமுதம் உள்ளத்தில் நிறைந்தது போன்ற உணர்வினை எனக்கு அளிப்பவனே, அடியார்களாகிய நாங்கள் அஞ்சாத வண்ணம் எங்களை ஆட்கொள்ளும் பெருமானே, திருவையாறு தலத்தில் உறைபவனே என்று உன்னை பலவாறும் வாய்விட்டு அழைத்து அடியேன் மனம் உருகுகின்றேன் என்று மனம் உருகி அப்பர் பிரான் பாடும் பாடல்.
அம் சுண்ண வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே
நஞ்சணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர உள்புக்கிருந்த போது நிறையும் அமுதமே என்றேன் நானே
அஞ்சாதே ஆள்வானே ஐயாறு அன்னே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.38.3) அப்பர் பிரான் பெருமானை, நீலகண்டன் என்றே அழைக்கின்றார். கனம்=மேகம்; கடுஞ்சுடர்=மிகுந்த ஒளி; வரை=மலை; தனம்= செல்வம்; தகைந்து=தடுத்து; சினத்திருந்த=கோபத்தினால் எழுந்த; மலையுடன் கட்டி கடையப் பட்டதால் உண்டான உடல் வருத்தத்தினால் எழுந்த சினம்; வான் ஆகாயம் ஆகிய ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு சொற்களில் முந்திய சொல்லினை ஆகாயத்தில் இருக்கும் மேகத்தினை உணர்த்துவதாக பொருள் கொள்ள வேண்டும், மேகத்தில் தோன்றும் மின்னலாக இருப்பவன் நீயே என்றும், கடல் மலை மேகம் ஆகாயம் ஆகியவையாக இருப்பவன் நீயே என்றும், மண்டையோட்டினை பெரும் செல்வமாக கருதி செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்பவன் நீயே என்றும், உன்னைச் சார்ந்த அடியார்கள் தவறான வழியில் செல்லாமல் அவர்களை தடுத்து ஆட்கொண்டு நல்வழியில் செலுத்துபவன் நீயே என்றும், அடியார்களின் உள்ளக் கருத்தினை உணர்ந்து அவர்கள் விரும்பும் செயல்களை செய்து முடிப்பவன் நீயே என்றும், மலர் போன்று மெல்லிய உனது திருவடிகளை எனது தலை மேல் வைத்து அருள் புரிந்தவன் நீயே என்றும், மந்தர மலையுடன் சேர்த்து கட்டப்பட்டு கடையப் பட்டதால் உடலெங்கும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் உண்டான வருத்தம் தாங்க முடியாமல், வாசுகி பாம்பு சினந்து வெளியிட்ட கொடிய நஞ்சினை உணவாக ஏற்றுக் கொண்டு கழுத்தினில் கருமை நிறமாக நஞ்சு படரும் வண்ணம் நீலகண்டனாக இருப்பவன் நீயே என்றும், திருவையாறு தலத்தினை விட்டு அகலாத செம்பொற் சோதியாகிய இறைவனே உன்னை அடியேன் பலவாறாக அழைத்து வணங்குகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே
தனத்தகத்துத் தலை கலனாக் கொண்டாய் நீயே சார்ந்தாரைத் தகைந்து ஆள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

இந்த பதிகத்தின் ஆறாவது பாடலிலும் (6.38.6) அப்பர் பிரான் பெருமானை நீலகண்டன் என்று அழைக்கின்றார். உற்றிருந்த=உணர்வதற்கு உதவி புரியும் தன்மைகள்; உற்றவர்=அடைந்த அடியார்கள்; பொருட்களை உணர்ந்து கொள்வதற்கு உதவி புரியும் உணர்வுகளின் தன்மைகளாக இருப்பவன் நீயே என்றும், உன்னை சரணடைந்த அடியார்களின் சுற்றமாக இருந்து அவர்களுக்கு உதவி புரிபவன் நீயே என்றும், கற்கும் கல்வியாகவும் அந்த கல்வியால் விளையும் ஞானமாகவும் இருப்பவன் நீயே என்றும், உனது பெருமைகளை நன்கு உணர்ந்து கற்றவர்கள் வேண்டியதை அளிக்கும் கற்பகமாய் நிற்பவன் நீயே என்றும், பெற்ற தாயினை விடவும் உயிர்களுக்கு அதிகமாக பரிந்து உதவி செய்பவன் நீயே என்றும், தலைவனாக எனது விருப்பத்தை ஈடேற்றும் வண்ணம் தனது திருவடிகளை அடியேனது தலை மேல் வைத்தவன் நீயே என்றும், பாற்கடலிலிருந்து எழுந்த கொடிய நஞ்சின் தன்மையை அடக்கி மாற்றி தனது கழுத்தினில் அடக்கியவன் நீயே என்றும், திருவையாறு தலத்தினை விட்டு அகலாத செம்பொற் சோதியாகிய இறைவனே உன்னை அடியேன் பலவாறாக அழைத்து வணங்குகின்றேன் என்று குறிப்பிட்டு அப்பர் பிரான் பெருமானை பணியும் பாடல்.
உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

இதே பதிகத்தின் பத்தாவது பாடலில் (6.38.10) அப்பர் பிரான், பெருமான் உட்கொண்டது, கண்டாரைக் கொல்லும் கொடிய நஞ்சு என்று கூறுகின்றார். விண்டார்=நீங்கினார்; வேத நெறியை விட்டு நீங்கிய திரிபுரத்து அரக்கர்கள்; பண்டைய நாளில் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்து பரவிய ஆலகால விடம், தான் படர்ந்தவர்களின் உயிரையும் கொல்லும் வண்ணம் கொடிய விடமாக திகழ்ந்தது. அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க மூலைக்கு ஒருவராக ஓடியும் பயனில்லை என்பதால் தேவர்கள் பெருமானிடம் சரண் அடைந்ததை அப்பர் பிரான் மிகவும் அழகாக தசபுராண திருப்பதிகத்தின் முதல் பாடலில் (4.14.1) கூறுகின்றார். வேத நெறியிலிருந்து வழுவி வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்து அழித்தவன் நீயே என்றும், தேவர்களுக்கும் மேம்பட்ட தலைவனாக நிற்பவன் நீயே என்றும், காண்பவர் அனைவரையும் கொல்லும் கொடிய நஞ்சினை அச்சம் ஏதுமின்றி உண்டு பின்னர் கழுத்தினில் அடக்கியவன் நீயே என்றும், அடியேனை திருத்தொண்டு புரியும் அடிமையாக ஏற்றுக் கொண்டவன் நீயே என்றும், உனது தூய்மையானதும் மலர் போன்று மிருதுவானதும் ஆகிய சிறந்த திருவடிகளை எனது தலையின் மீது வைத்தவன் நீயே என்றும், வலிமையான தோள்களை வீசிய வண்ணம் ஊழித்தீயினில் நின்று கூத்தாட வல்லவன் நீயே என்றும், திருவையாறு தலத்தினை விட்டு அகலாத செம்பொற் சோதியாகிய இறைவனே உன்னை அடியேன் பலவாறாக அழைத்து வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான் பெருமானை வணங்கும் பாடல்.
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லு நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண்டோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.39.1) அப்பர் பிரான், விடம் உண்டிருண்ட கண்டன் என்று குறிப்பிடுகின்றார். அரணம்=கோட்டை; மாறு என்ற சொல்லுக்கு பகை என்ற பொருளும் உள்ளதால், பகைவர்கள் திரிபுரத்து அரக்கர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அட்டான்=அழித்தான்; தமிழ் பக்தி இலக்கியங்களும் வடமொழி பக்தி இலக்கியங்களும் இமயம், மந்தரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலமலை, கந்தமாதனம் என்பவை ஏழு மலைகள் என்று குறிப்பிடுகின்றன. உயிர்கள் தாங்கள் ஈட்டிய நல்வினைகளை அனுபவித்து கழிக்க உதவும் ஏழு உலகங்களாக, புவலோகம், சுவலோகம், மகலோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம், விஷ்ணு லோகம் மற்றும் உருத்திர லோகம். ஆகியவை கருதப் படுகின்றன. திருநீறு பூசிய திருமேனியை உடையவனாகவும், தனது நெற்றியில் ஒரு கண் நிறைந்து காணப் படுபவனாகவும், உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனாகவும், கடுமையான கொடிய விடத்தைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்டதாக மாறிய கழுத்தினை உடையவனாகவும், எருதினை வாகனமாகக் கொண்டு பல இடங்களிலும் திரிபவனும், ஏழு உலகமாகவும் ஏழு மலைகளாகவும் இருப்பவனும், வேதநெறியினை பின்பற்றாமல் அதற்கு மாறான வழியினை பின்பற்றிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்தவனும், ஆகிய பெருமான் மழபாடி தலத்தில் நிலையாக குடிகொண்டிருப்பதை அடியேன் கண்டேன். எனது நெஞ்சமே, நீயும் பெருமானின் திருவுருவத்தின் சிறப்புகளையும், சிறப்பான பண்புகளையும் உணர்ந்து கொள்வாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நீரேறு திருமேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகம் கொண்டான் கண்டாய் கொடியவிடம் உண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழுலகும் ஏழ் மலையும் ஆனான் கண்டாய்
மாறானார் தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.39.6) அப்பர் பிரான், பெருமானை, இருளார்ந்த கண்டத்து இறைவன் என்று குறிப்பிடுகின்றார். தாமரையான்=தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமன்; தனது நகத்தால் இறைவன் பிரமனின் தலையை கிள்ளி எடுத்ததை சாய்த்தான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தகவு=தகுதி; திருமாலின் உந்தியிலிருந்து எழுந்த கமலத்தில் தோன்றியவன் என்பதால், பிரமன் பூமலரான் என்று குறிப்பிடப் படுகின்றான். பூமலரான் ஏத்தும் புனிதன் என்பதற்கு புதிய மலர்கள் தூவி அடியார்களால் தொழப்படும் புனிதன் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். ஏ=அம்பு; மா=விலங்கு; தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமன் ஒரு முறை அகம்பாவம் கொண்டு வீண் வார்த்தைகள் பேசியதற்கு தண்டனை அளிக்கும் பொருட்டு, அவனது தலையினைக் கிள்ளிச் சாய்த்தவனும், தகுதி உடைய அடியார்களின் நெஞ்சத்தை தனது இருக்கையாக ஏற்றுக் கொண்டவனும், பூமலரான் என்று அழைக்கப்படும் பிரமனால் தொழப்படுபவனும், தூய்மையின் வடிவமாக இருப்பவனும், அனைத்து உயிர்களும் கலந்து இருப்பதற்கு விருப்பம் கொள்ளும் பொருளாக இருப்பவனும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்த அம்பு பொருத்தப்பட்ட கொடிய வில்லினை ஏந்தியவனும், இருள் போன்று அடர்ந்த கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடைய தலைவனும், விலங்குத் தன்மையுடன் தன்னை எதிர்த்து வந்த மான் கன்றின் தன்மையை மாற்றித் தனது கையினில் ஏந்தியவனும் ஆகிய பெருமான் மழபாடி தலத்தில் நிலையாக குடிகொண்டிருப்பதை அடியேன் கண்டேன். எனது நெஞ்சமே, நீயும் பெருமானின் திருவுருவத்தின் சிறப்புகளையும், சிறப்பான பண்புகளையும் உணர்ந்து கொள்வாயாக என்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.
தாமரையான் தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்
மாமருவும் கலை கையிலேந்தி கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.42.1) அப்பர் பிரான், பெருமானை, நஞ்சுண்ட கண்டன் என்று அழைக்கின்றார். தானம்=ஸ்தானம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்;, இடம் என்று [பொருள்; மெய்த்தானம்=உடலாகிய இடம்; அகம்படி=உட்புறத்தில்; குறை=இன்றியமையாத பொருட்களாக தாங்கள் கருதும் விருப்பங்கள்; கூடு=தங்கும் இடங்கள்; ஐம்புலன்களின் நுகர்ச்சி காரணமாக எழும் விருப்பங்கள் அனைத்தும், நமது வினைகளை மேலும்மேலும் பெருக்கி கொள்வதைத் தவிர, உயிருக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை. எனவே ஐந்து புலன்களின் உதவியினால் வாழ்வினில் உய்வினை அடையலாம் என்ற எண்ணத்தை கைவிடுமாறு அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு அறிவுரை கூறுகின்றார். இயம்பக் கேள்= சொல்வதை கேட்பீர்; வாழ்வினில் உய்வினை அடையும் வழியை அறியாது இருப்பதால், அறிவினில் ஏழை என்று உணர்த்தும் பொருட்டு, அப்பர் பிரான் ஏழை நெஞ்சம் என்று இங்கே கூறுகின்றார். ஏழை நெஞ்சே என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று இந்த பாடல் அமைந்திருந்தாலும், இந்த பாடலில் உள்ள அறிவுரை உலகத்தவர்க்கு கூறுவதாகவே நாம் கொள்ள வேண்டும். தன்னைச் சுட்டிக் காட்டி, உலகத்தவர்க்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி. வங்கம்=மரக்கலம்; பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவது தான் வாழ்வினில் உய்வினை அடையும் வகை என்பதை, அப்பர் பிரான் இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் உணர்த்துகின்றார். அறிவினில் ஏழையாக இருந்து உண்மையை உணராமல் இருக்கும் உலகத்தவரே, உங்களது உடலின் உள்ளே உறையும் ஐந்து புலன்களும், தங்களுக்கு இன்றியமையாததாக கருதும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் முனைப்பாக நின்று, உயிருக்கு மேலும்மேலும் வினைகளைப் பெருக்கும் கருவிகளாக உள்ளன. இவ்வாறு புலன்களால் ஆட்கொள்ளப்பட்டு செயல்படும் உடலின் உதவியுடன், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் இருப்பீராயின், அந்த எண்ணத்தை கைவிடுவீர்களாக. உங்களது வாழ்வினில் உய்வினை அடையும் வழியை நான் சொல்கின்றேன் கேட்பீர்களாக; மை தீட்டப்பட்டு நீண்ட கண்களை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவனும், மரக்கலங்கள் உலவுகின்ற கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கியவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நன்னகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை சொல்லும் பாடல்.
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர்நின்று வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்
இத்தானத்திருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்பக் கேள் ஏழை நெஞ்சே
மைத்தானத்து நீள் நயனி பங்கன் வங்கம் வருதிரை நீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (6.42.8) அப்பர் பிரான், பெருமானை மணிகண்டன் என்று அழைக்கின்றார். அஞ்சப்புலன்=அஞ்சு+அ+புலன்; ஐந்து புலன்களும் தங்களது ஆற்றலை பயன்படுத்தி, தாங்கள் நினைத்த வண்ணம் உடலினையும் உயிரினையும் செயல்படுத்தி, உடலுக்கு பல கொடிய நோய்களை தேடித் தருகின்றது; இவ்வாறு நோய்களுக்கு இருப்பிடமாகவும் நிலையற்ற தன்மை கொண்டதாகவும் உள்ள உடலினை நிலையானதாக கருதி தஞ்சம் அடையும் உலகத்தவரே, இவ்வாறு தாழ்ந்த நிலையினை அடைந்து புலன்கள் தரும் இன்பத்தில் ஆழ்ந்து இருப்பதை தவிர்ப்பீர்களாக; தன்னைப் பற்றுக்கோடாக கருதாமல், தன்னை அடையாத வஞ்சக மனத்தினை உடைய மனிதர்களால் காண முடியாதவனும், நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கரிய மணி போன்ற கறையினை உடையவனும், வானவர்களால் தங்கள் தலைவன் என்று புகழப் படுபவனும், அடியார்களின் நெஞ்சத்திற்கு மிகவும் இனிமையாக இருப்பவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நன்னகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று நமக்கு அறிவுரை சொல்லும் பாடல்.
அஞ்சப் புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அருநோய்க்கு இடமாகிய உடலின் தன்மை
தஞ்சம் எனக் கருதித் தாழேல் நெஞ்சே தாழக் கருதுதியே தன்னைச் சேரா
வஞ்ச மனத்தர்கள் காணவொண்ணா மணிகண்டன் வானவர் தம் பிரான் என்று ஏத்தும்
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.7) அப்பர் பிரான், பெருமானை, கருங்கடல் நஞ்சு உண்ட கண்டா என்று அழைக்கின்றார். கழை=மூங்கில்: கழை இறுத்த= மூங்கில்களை உடைத்த பல ஆறுகள் வந்தடைந்த கடல்; உழை=மான்; நாம் செய்யும் பிழைகளைப் பொறுப்பது இறைவனின் கடமையென்று அப்பர் பிரான் கூறுகிறார். மானினை உரித்து எடுத்த மான் தோலினை ஆடையாக உடுத்தியவனே, உமையம்மையின் தலைவனே, விலங்குகளுக்கு தலைவனாக இருக்கும் ஆண் சிங்கம் போன்று தேவர்களுக்குத் தலைவனாக இருப்பவனே, வரும் வழியில் பல மூங்கில்களையும் உடைத்துக் கொண்டு வந்த பல நதிகள் சேர்ந்த கருமை நிறத்து கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்ட அடையாளமாக கருமை நிறத்து கழுத்தினை உடையவனே, கயிலாய மலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனே, உன் மீது அன்பு வைத்திருக்கும் அடியார்களின் பிழைகளை பொறுத்தருளுவது உனது கடமை என்று பெரியோர்கள் கூறுகின்றார்கள். அடியார்களுக்கு அருள் செய்யும் கருணை குணத்தினை மிகவும் அதிகமாக கொண்ட இறைவனே, நீர்வளம் நிலவளம் மிகுந்து, மயில்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அகவும் சோலைகள் நிறைந்த குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் அமரர்கள் தலைவனே, நீ அடியேன் செய்த பிழைகளைப் பொறுத்து அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல்.
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள் தம் பெருமானே இமையோர் ஏறே
கழை இறுத்த கருங்கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்பால் அன்பர்
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடன் அன்றே பேரருள் உன் பாலது அன்றே
அழை உறுத்து மாமயில்கள் ஆலும் சோலை ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.45.6) அப்பர் பிரான் பெருமானை, காளகண்டர் என்று அழைக்கின்றார். இடிய பலி=இடித்த மாவால் செய்யப்பட உண்பொருள்; கடிய=விரைவாக செல்லக்கூடிய. தனது இல்லத்திற்கு பலி ஏற்க வந்த பெருமான், பிச்சையையும் பெற்றுக் கொள்ளாமல், இல்லத்தை விட்டு அகலாமலும் தன்னையே நோக்குவதாக கற்பனை செய்யும் தலைவி, பெருமான் எந்த ஊரிலிருந்து வந்தார் என்பதை யோசித்து பார்க்கின்றாள். திருமயிலையில் இவரைக் கண்டதாக அவளுக்கு நினைவுக்கு வருகின்றது. ஆனால் அங்கே காணப்பட்ட தோற்றத்திற்கு பெரிதும் மாறுபாடு உடைய கோலத்தோடு திருவொற்றியூரில் உலாவும் காரணம் யாது என்பது தெரியாமல் இருப்பது தனது தீவினை என்று கூறுகின்றாள். காளகண்டர்=கழுத்தினில் கரிய நிறம் கொண்டவர். வடிவுடைய மங்கை என்று தலத்து இறைவியின் திருநாமம் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. விரைவாக செல்லும் இடபத்தின் மீதேறி வந்த காளகண்டர், மான் கன்றினையும் மழுவாளையும் கையில் ஏந்தியவராக, எனது இல்லம் வந்து இடித்த மாவினை பலியாக தருமாறு கேட்டார். நான் அவர் கேட்ட பிச்சையை கொண்டு வந்த பின்னும், அதனை ஏற்காமலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமலும் இருந்தார். இவர் பல இல்லங்கள் பலியேற்கச் சென்றதாகவும், அந்த இல்லங்களில் இருந்த பெண்கள் இவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் திகைத்தையும் நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். எனக்கு இவரை முன்பொரு நாள் மயிலாப்பூரில் அழகும் இளமையும் பொருந்திய பெண்ணுடன் வீதியில் வந்ததை கண்டது நினைவுக்கு வந்தது. ஆனால் முற்றிலும் மாறுபட்ட கோலத்தில், புலால் நாற்றம் வீசும் மண்டையோட்டுடன் திருவொற்றியூர் புகுந்த காரணம் எனக்கு புரியவில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
கடிய விடையேறிக் காளகண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி
இடிய பலி கொள்ளார் போவார் அல்லர் எல்லாம் தான் இவ்வடிகள் யார் என்பாரே
வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்புள்ளே
செடிபடு வெண்தலை ஒன்று ஏந்தி வந்து திருவொற்றியூர் புக்கார் தீயவாறே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.6) அப்பர் பிரான், பெருமானை, நஞ்சுண்ட கண்டன் என்று குறிப்பிடுகின்றார். எல்லி=இரவு, இங்கே பேரிரவாகிய ஊழிக் காலத்து இருளினைக் குறிக்கும்’; நீரார் கங்கை=மிகுந்த வெள்ளப் பெருக்குடன் ஓடி வந்த கங்கை நதி; ஏற்றினை வாகனமாக உடையவனை, எட்டு தோள்கள் உடையவனை, பேரிரவாகிய ஊழிக் காலத்து இருளிலும் கூத்து நிகழ்த்தும் திறமை உடையவனை, கூற்றுவனுக்கு கூற்றுவனாக விளங்கி அவனை உதைத்தவனை, அலைகள் எப்போதும் ஆரவாரம் செய்து ஒலி எழுப்பிய வண்ணமாக இருக்கும் கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உண்டு தனது கண்டத்தில் அடக்கியவனும், உடலெங்கும் திருநீறு பூசியவனும், நீண்ட பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக அணிந்தவனும், வெள்ளமாக பொங்கி பெருகி வந்த கங்கை நதியைத் தனது நீண்ட சடைமுடியில் ஏற்றவனும், ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
ஏற்றானை எண்தோள் உடையான் தன்னை எல்லி நடமாட வல்லான் தன்னைக்
கூற்றானைக் கூற்றம் உதைத்தான் தன்னைக் குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை
நீற்றானை நீளரவு ஒன்று ஆர்த்தான் தன்னை நீண்ட சடைமுடி மேல் நீரார் கங்கை
ஆற்றானை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேனே

கோகர்ணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.9) அப்பர் பிரான் பெருமானை, கண்டன் என்று அழைக்கின்றார். பெருமானின் கழுத்தினைப் போன்று சிறப்பு வாய்ந்த கழுத்து, வேறு எவருக்கும் இல்லை என்பதால் கண்டன் என்ற சொல் பெருமானையே குறிக்கும். பொட்ட= விரைவாக; வெடித்தல்=உரத்த குரலில் பேசுதல்; கட்ட வினை=துன்பம் தரும் வினைகள்; கண்டன்= கற்கண்டு போன்று இனிப்பாக உள்ளவன்; வெட்ட வெடித்தல்=அடியார்களை இகழ்ந்து உரத்த குரலில் பேசுதல்; பெருமானை தூற்றிய சமணர்களும் புத்தர்களும் பெருமானின் அடியார்களையும், அப்பர் மற்றும் திருஞான சம்பந்தர் வாழ்ந்த நாட்களில் தூற்றினார்கள் போலும். அவ்வாறு அடியார்களை இழிவாக கூறும் மனிதர்களுக்கு நெருப்பாக இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு திருஞான சம்பந்தரின் வாழ்வினில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. பலரும் உணர வேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் உரத்த குரலில் அடியார்களை இழித்து வீணான சொற்களைப் பேசும் மனிதர்களை கொடிய நெருப்பு போன்று தாக்குபவனும், சிறந்த வீரனாக விளங்குபவனும், அட்ட வீரட்டத் தலங்களில் தனது வீரத்தை வெளிப்படுத்தி ஆங்கே நிலையாக பொருந்தி இருப்பவனும், தனது தவத்தினை கலைக்க முயற்சி செய்த மன்மதன் விரைவில் ஒரு நொடியில் அழியும் வண்ணம் நோக்கியவனும், உயிர்களுக்கு துன்பம் தரும் வினைகள் அடியார்களை தாக்காதவாறு காத்து ஆட்கொள்பவனும், கற்கண்டு போன்று இனியவனாக அடியார்களுக்கு இருப்பவனும், வண்டுகள் சூழ்ந்த கொன்றை மலர்களை சூடியவனும், வட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனும் ஆகிய பெருமான் பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாண்டிநாட்டில் சமணர்களை வாதினில் வென்று சோழநாட்டுக்கு திரும்பிய திருஞான சம்பந்தர், தெளிச்சேரி என்ற தலத்தில் இறைவனை வணங்கிய பின்னர், போதி மங்கை என்ற இடத்தை கடந்து சென்றார். அந்த இடம் புத்தர்கள் அதிகமாக வாழ்ந்த இடம். திருஞான சம்பந்தருடன் சென்ற அடியார்கள், தாரை சங்கு ஒலிக்க, பரசமயக் கோளரி வந்தார் என்று முழக்கமிட, அந்த முழக்கத்தை கேட்ட புத்தநம்பி என்ற புத்தர்களின் தலைவன், தாரை தப்பட்டை சங்கு ஆகிய திருச்சின்னங்களை விலக்கினான்; மேலும் கோபம் கொண்டு, தன்னை வென்ற பிறகு அல்லவா இந்த சின்னங்களை ஊத வேண்டும் என்றும் கடுமையான சொற்களை கூறினான். புத்தனது செயலால் வெகுண்ட அடியார்கள் புத்தனது தலையில் இடி வீழ்வதாக என்று கூறினார்கள். அப்போது திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களை படியெடுத்து எழுதும் சம்பந்த சரணாலயர் பஞ்சாக்கரப் பதிகத்தின் பத்தாவது பாடலை (3.22.10) பாட. புத்தநந்தியின் தலையில் இடி விழுந்து உடலும் தலையும் வேறுவேறாக துண்டாகியது. புத்தர்களும் சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனதில் கொள்ளாது தெளிந்த சித்தம் உடைய அடியார்களால் உறுதியாக ஓதப்படும் திருவைந்தெழுத்து மந்திரம், திருநீறு அணிந்த அடியார்களுடன் போருக்கு வரும் பகைவர்களை அம்பு போல் பாய்ந்து அழித்துவிடும் என்பதே இந்த பாடலில் பொருளாகும்.
வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ்வழலன் காண் வீரன் காண் வீரட்டம் மேவினான் காண்
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூதப் படையினான் காண்
கட்டக் கடு வினைகள் காத்தாள்வான் காண் கண்டன் காண் வண்டுண்ட கொன்றையான் காண்
வட்ட மதிப் பாகம் சூடினான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.7) அப்பர் பிரான், பெருமானை மஞ்சு அடுத்த மணிநீல கண்டர் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான் தன்னை ஆட்கொண்டதை குறிப்பிடுகின்றார். தன்னை ஆட்கொண்ட பெருமானின் சிறப்புகளை நமக்கு உணர்த்தி, நாமும் அவனை அடைந்து அவனால் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நமது மனதினில் தோற்றுவிக்கும் பதிகம். அணியார்=நெருக்கத்தில் இருப்பவர்; பஞ்சு அடுத்த=பஞ்சினை ஒத்த; பைந்நாகம்=படம் எடுக்கும் நாகம்; மஞ்சு=மேகம்; விரல்=விரலில் உள்ள நகத்தினை குறிக்கின்றது. கருமேகத்தின் நிறத்தில் கறை படர்ந்த கழுத்தினை உடையவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.
பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும் பைந்நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும்
மஞ்சு அடுத்த மணிநீல கண்டர் போலும் வட கயிலைமலை உடைய மணாளர் போலும்
செஞ்சடைக் கண் வெண்பிறை கொண்டணிந்தார் போலும் திருவீழிமிழலை அமர் சிவனார் போலும்
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

கன்றாப்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.61.5) அப்பர் பிரான் பெருமானை, விடம் உண்ட கண்டா என்று அழைக்கின்றார். வேலை=கடல்; விருத்தன்=முதியவன், இங்கே அனைத்து உயிர்களுக்கும் முந்தியவன்; நுந்தாத=தூண்ட வேண்டிய அவசியம் இல்லாத; பொருத்தன்=உறவினன்; அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியதால், அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக இருப்பவனே, பாற்கடலிலிருந்து எழுந்த விடத்தை உண்டு அதனை கழுத்தினில் தேக்கியவனே, விரிந்த சடை மேல் ஒற்றைப் பிறையுடன் தேய்ந்து அழிந்த நிலையில் வந்த சந்திரனைச் சூட்டிக்கொண்டு அபயம் அளித்து சந்திரனை வாழவைத்த ஒப்பற்ற ஒருவனே, உமையம்மையின் கணவனே, உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவனே, தூண்டவேண்டிய அவசியம் இல்லாமல் எப்போதும் பிரகாசமாக ஒளிவீசும் சுடரே, அனைத்து உயிர்களுக்கும் உறவினனாக இணைந்து இருப்பவனே, என்று பலவாறு இறைவனைக் கூப்பிட்டு தங்களது ஐந்து புலன்களையும் உள்ளே அடக்கி, வேறு எந்த விதமான பற்றும் இல்லாமல் இறைவனையே தியானித்த வண்ணம், அவனையே நினைத்து உள்ளம் கசிந்து தொழும் அடியார்களின் மனதினில், கன்றாப்பூர் தலத்தில் கன்றுக்குட்டி கட்டும் முளையில் தோன்றிய சிவபெருமான் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரிசடை மேல் வெண் திங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமை கணவா உலக மூர்த்தீ நுந்தாத ஒண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே என்றென்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்தடிக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.62.4) அப்பர் பிரான் பெருமானை, காளகண்டா என்று அழைக்கின்றார். தன்னை நினைப்பவர்களின் நெஞ்சினில் இறைவன் இருந்தாலும், அவன் இருப்பதை எவரும் உணரமுடியாத வண்ணம் மறைந்து இருப்பதால் அவனை வஞ்சக் கள்வன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். முனைந்தவர் என்ற சொல் எதுகை கருதி முனைத்தவர் என்று மாறியது. திரிபுரத்து அரக்கர்கள் இறைவனுடன் போர் செய்ய முனைந்ததை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கனைத்து வரும்=உரத்த குரலுடன் கனைக்கும்; உன்னை நினைக்கும் அடியார்களின் நெஞ்சினில் இருந்தாலும், நீ இருப்பதை அவர்கள் உணராது இருக்கும் வண்ணம் மறைந்து நிற்கும் வஞ்சக் கள்வனே, ஒளி நிறைந்த பிறைச் சந்திரனை சடையில் வைத்தவனே, உன்னைச் சரண் அடையாது உன்னுடன் போர் செய்ய முனைந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் நெருப்பினில் எரியச் செய்து அவர்களை வென்றவனே, பண்டைய காலத்தில் உன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலினை உரித்து அந்த தோலினை மேலாடையாக போர்த்த முதல்வனே, அனைவரையும் நடுங்க வைக்கும் பெரிய குரலுடன் கனைத்து வரும் எருதினை வாகனமாகக் கொண்டவனே, ஆலகால நஞ்சினைக் கழுத்தில் தேக்கியதால் கரிய நிறம் கொண்ட கழுத்தினை உடையவனே, கயிலாய மலையைத் தனது இருப்பிடமாக உடையவனே, அனைத்து உலகங்களையும் ஆள்பவனே, ஆனைக்கா அண்ணலே அடியேன் உனது திருவடிகளைச் சார்ந்து உள்ளதால் துன்பங்களால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படுமோ, ஏற்படாது; எனவே எனது துன்பத்தினை போக்கிக் கொள்ள இறைவனை வழிபடுவது தவிர வேறு ஏதும் அடியேன் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்பால்
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரியச் செற்றாய் முன் ஆனைத் தோல் போர்த்த முதல்வா என்றும்
கனைத்து வரும் எருது ஏறும் காளகண்டா கயிலாய மலையா நின் கழலே சேர்ந்தேன்
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

வலஞ்சுழி மற்றும் கொட்டையூர் ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (6.73.1) அப்பர் பிரான் பெருமானை, கருமணி போல் கண்டத்து அழகன் என்று அழைக்கின்றார். பொதுவாக கருமை நிறம் எவருக்கும் அழகினை சேர்க்காது என்று சொல்வார்கள். ஆனால் பெருமானின் கழுத்தினில் படர்ந்துள்ள கருமை நிறத்து கறை, பெருமானுக்கு அழகினை சேர்க்கின்றது என்ற பொருள் பட அழகன் என்று குறிப்பிடுகின்றார். வரு பொன்னி என்று பிலத்துவரத்திலிருந்து வெளியே சுழித்து வந்த காவிரி நதி என்று தலத்துடன் இணைந்த சம்பவத்தை குறிப்பிடுவதாக சிவக்கவிமணி திரு சி.கே. சுப்பிரமணியம் அவர்கள் பெரியபுராண விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார். ஈசன், ஈஸ்வரன் என்றால் தலைவன் என்று பொருள், பரமேஸ்வரன் என்று தலைவர்களுக்கும் தலைவனாக பெருமானே விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. மாதேவன் என்று இந்த சொல் மிகவும் அழகாக மொழிபெயர்ப்பு செய்யப் பட்டுள்ளது. குருமணி=அழகான நிறம் உடைய மணி; பாடலின் நான்காவது அடியில் உள்ள கோமான் என்ற சொல்லினை அழகமரும் என்று சொல்லுடனும் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். கோமான்=தலைவன்; பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த விடத்தை தேக்கியதால் அழகிய கரிய நீல மணியின் நிறத்திற்கு மாறிய கழுத்தினை உடையவனும், கல்லால மரத்தின் நிழலின் கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் வேதங்களின் பொருளை விளக்கியவனும், பருத்த மணிகளை உடைய பெரிய நாகங்களை அணிகலனாக பூண்டவனும், பவளங்கள் சேர்த்து வைக்கப்பட்ட குன்று போன்று சிவந்த திருமேனியுடன் பெரிய உருவத்துடன் இருப்பவனும், வலமாக சுழித்து வெளியே வந்த காவிரி நதிக்கரையில் உள்ள வலஞ்சுழி தலத்தின் இறைவனும், தேவர்களுக்குத் தலைவனாக உள்ளவனும், அடியார்களுக்கு வேண்டும் வரம் அளிக்க வல்லவனும், அழகான நிறத்துடன் காணப்படும் மணி போன்று அழகு அமர்ந்த திருவுருவத்தினை உடையவனும், கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய் பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்
வருமணி நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

குடந்தை கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.1) அப்பர் பிரான், பெருமானை, நஞ்சம் உண்டிருண்ட கண்டர் என்று அழைக்கின்றார். சொல் மலிந்த=சிறப்பான சொற்கள் நிறைந்த; வேதங்களில் உள்ள சொல்லாக இருப்பவனும் அந்த சொற்களுக்குத் துணையாக இருப்பவனும் பெருமான் தான் என்று பல திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. வேதங்களை உலகுக்கு உரைத்தவனும் வேதங்களுக்கு விளக்கம் அளித்தவனும் பெருமான் தானே. அதனால் தான் சொற்றுணை வேதியன் என்று நமச்சிவாய பதிகத்தினை (4.11) அப்பர் பிரான் தொடங்குகின்றார். புனிதமான சொற்களைக் கொண்டவை வேதங்கள். வேதங்களில் வல்லவனை வேதியன் என்று சொல்வார்கள், வேதங்களுக்கு பொருள் சொன்னவனும், வேதங்களை விரித்து ஓதியவனும் ஆகிய பெருமானை விடவும் வேதியன் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் வேறு எவர் உள்ளனர். புனிதமான சொற்கள் நிறைந்த நான்கு வேதங்களாகவும், அந்த வேதங்களுக்கு அரணாக செயல்படும் ஆறு அங்கங்களாகவும் இருப்பவனும், ஒளிப் பிழம்பாக சுடர் விடும் தன்மையில் சொற்களையும் சொற்கள் உணர்த்தும் பொருளையும் கடந்தவனாக இருப்பவனும், மடிப்பு மலைகளாக அமைந்து, கற்கள் நிறைந்து திகழும் இமயமலையில் வாழ்பவனும், பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த நஞ்சினை தனது கழுத்தினில் தேக்கியதால் கருநிறமாக மாறிய கழுத்தினை உடையவனும், மலை போன்று வலிமையானதும் அழகியதும் ஆகிய தோள்களை உடையவனும், மலைக்கு அரசனாக திகழ்ந்த இமவானின் மகளும் இளமையான அழகினை உடையவளும் ஆகிய பார்வதி தேவியின் மணாளரும், கொலைத் தொழில் புரிவதில் பழக்கம் உடையதும் மூன்று இலைகள் சேர்ந்தது போன்ற அமைப்பினை உடைய சூலத்தினை உடையவனும் ஆகிய பெருமான் குடந்தை நகரின் கீழ்க் கோட்டம் திருக்கோயிலில் கூத்தனாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கமாகிச் சொற்பொருளும் கடந்த சுடர்ச்சோதி போலும்
கல் மலிந்த கயிலை மலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்
மன் மலிந்த மணி வரைத் திண் தோளர் போலும் மலையரையன் மடப் பாவை மணாளர் போலும்
கொல் மலிந்த மூவிலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.76.2) அப்பர் பிரான், பெருமானை, நஞ்சுண்ட காராரும் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். வார்=மார்புக் கச்சை; வாராரும்=கச்சை பொருந்திய; காராரும்=கருமை நிறம் பொருந்திய; கண்டன்=கழுத்தினை உடையவன்; கூரார்=கூர்மையான பகுதியை உடைய; கொழுந்து விட்டெரியும் தீ எப்போதும் முக்கோண வடிவத்தில், கூர்மையான பகுதி மேல் பாகத்தில் இருப்பதை காணலாம். கச்சை பொருந்திய மார்பினை உடைய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனும்; சிறந்த வேதங்களாக விளங்குபவனும்; நிலமாகவும் ஆகாயமாகவும் கூர்மையான மேல் பாகத்தை உடையதாக மற்றும் வெம்மை மிகுந்து கொழுந்து விட்டெரியும் தீயாகவும் காற்றாகவும் நீராகவும் சிறந்த மலைகளாகவும் இருப்பவனும், கொடுமையான நஞ்சினை உண்டதால் கருமை நிறம் பொருந்திய கழுத்தினை உடையவனும், எட்டு தோள்களை உடையவனும், கயிலாய மலையினை தனது வாழ்விடமாக கொண்டவனும் ஆகிய பெருமான், தேர்கள் பொருந்தி ஓடும் வண்ணம் அகன்று காணப்படும் நெடிய வீதிகள் கொண்ட திருப்புத்தூர் தலத்தில் திருத்தளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் திருத்தளியான் என்ற திருநாமத்துடன் விருப்பத்துடன் உறைகின்றான். அவனே எனது சிந்தையில் நிறைந்து காணப் படுகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வாராரும் முலை மங்கை பாகத்தான் காண் மாமறைகள் ஆயவன் காண் மண்ணும்விண்ணும்
கூரார் தழலவனும் காற்றும் நீரும் குலவரையும் ஆயவன் காண் கொடு நஞ்சுண்ட
காராரும் கண்டன் காண் எண்டோளன் காண் கயிலை மலைப் பொருப்பன் காண் விருப்போடு என்றும்
தேராரும் நெடுவீதித் திருப்புத்தூரில் திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே

திருவாய்மூர் தலத்தினில் பெருமான் தனது நடனக் காட்சியை அப்பர் பிரான் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகிய இருவருக்கும் காட்டியருளிய போது, தான் கண்டு மகிழ்ந்த அந்த நடனக் காட்சியை ஒரு பதிகமாக அப்பர் பிரான் வடிக்கின்றார். அந்த பதிகத்தின் பாடலில் (6.77.2), பெருமானின் கழுத்தினில் நீல நிறம் படர்ந்து இருந்ததை தான் கண்டதாக அப்பர் பிரான் உணர்த்தும் பாடலை நாம் இங்கே சிந்திக்கலாம். பெற்றம்=எருது; காலை=இளமை; காலை நேரம் ஒரு நாட்பொழுதின் தொடக்க நேரம் என்பதால் அதனை இளமையை உணர்த்தும் காலமாக கருதுகின்றனர். மேலும் காலைப் பொழுதில் சூரியனின் கதிர்கள், மிகவும் குறைந்த வெப்பத்துடன் காணப்படுவதால், உடலுக்கு மிகவும் இதமாக இருக்கும். அது போன்று உடலுக்கு இதமாக குளிர்ச்சி அளிக்கும் சந்திரனின் கதிர்களை, காலைக் கதிர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கரந்தை=திருநீற்றுப் பச்சை; பதினெண் கணங்கள்; தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளம், தாராகணம், ஆகாயத்தில் வசிப்பவர், மனிதர்கள். பால் போன்று இனிய மொழிகளை பேசும் பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகம் வைத்தவராகவும், தொடர்ந்து பெருமானுக்கு திருப்பணி செய்வதற்காக குழுமியிருந்த பதினெண் கணங்களாலும் சூழப்பட்டவராகவும், தான் உட்கொண்ட விடத்தை தேக்கியதால் நீல நிறமாக காட்சியளிக்கும் கழுத்தினை உடையவராகவும், நெற்றியில் மூன்றாவது கண்ணினை உடையவராகவும், தனது வாகனமாகிய எருதினை அருகில் உடையவராகவும், குளிர்ந்து உடலுக்கு இதமாக உள்ள ஒளிக் கதிர்களை வெளிப்படுத்தும் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவராகவும், சடையினில் கரந்தை இலைகளை சூடியவராகவும், கொன்றை மாலையை அணிந்த சடையினராகவும் உள்ள கோலத்துடன் வாய்மூர் அடிகளை அடியேன் கண்டேன் என்று தான் கண்ட காட்சியை அப்பர் பிரான் பதிவு செய்கின்றார்.
பாலின் மொழியாளோர் பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீலநிறம் உண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியம் கண்டேன் கரந்தை திருமுடி மேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.81.8) அப்பர் பிரான், பெருமானை, கண்டன் என்று அழைக்கின்றார். பன்னகம்=பாம்பு; மேயான்=பொருந்தி உறைபவன்; கடம்=மதம்; கடமாடு= மதம் பிடித்த; கண்ணன் கோகுலத்தில் வளர்ந்த போது கோபிகைகளுடன் ஆடிய ஒரு வகைக் கூத்து குடமாடுக் கூத்து என்று அழைக்கப்படும். அந்த கூத்தினை ஆடிய கண்ணன் குடமாடி என்று இங்கே குறிப்பிடப் படுகின்றான்.
படமாடு பன்னாகக் கச்சசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி ஏழுலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்
குடமாடி இடமாகக் கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே

பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.83.8) அப்பர் பிரான், பெருமானை, இருண்ட கண்டர் என்று அழைக்கின்றார். அண்டம்=உலகம்; அண்டவர்=உலகத்தவர்கள், இங்கே மேல் உலகத்தில் வாழும் தேவர்களை குறிக்கின்றது; வேலை=கடல்; ஆறு=தன்மை; பண்டரங்க வேடன்= பண்டரங்கக் கூத்து ஆடியவன்; பெருமான் திரிபுரங்களை எரித்த பின்னர் ஆடிய கூத்து பண்டரங்கக் கூத்து., தானவர்கள்=அசுரர்கள்; மேல் உலகத்தில் வாழும் தேவர்கள் அசுரர்களுடன் ஒன்று கூடி பாற்கடலைக் கடைந்த போது, கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலால விடத்தைக் கண்டு அனைவரும் நடுங்கினார்கள். கடல்களால் சூழப்பட்ட உலகின் எட்டு திசைகளையும் ஆலால நஞ்சம் சுடுகின்ற தன்மையைக் கண்ட பெருமான், இமைப்பொழுதில் அந்த நஞ்சினைத் தான் உண்டார். அவ்வாறு உண்ட நஞ்சம், ஊழிக்காலத்தில் தனது உடலில் ஒடுங்கவிருக்கும் உயிர்களுக்கு கேடேதும் செய்யா வண்ணம் அந்த நஞ்சினைத் தனது கழுத்தினில் அடக்க, அவரது கழுத்து கருமை நிறம் கொண்டதாக மாறியது. இவ்வாறு உலகினைக் காத்த பெருமானை, தேவர்களும் அசுரர்களும் அடியார்களும் வண்டுகள் மொய்க்கும் வண்ணம் தேன் நிறைந்த மலர்களை தூவி வணங்கி வழிபடுகின்றனர். அவர் பண்டைய நாளில் திரிபுரங்களை எரித்த பின்னர் பண்டரங்கக் கூத்து ஆடியவர் ஆவார். இத்தகைய பெருமைகள் உடைய பெருமான் பாசூர் தலத்தில் பொருந்தி உறையும் பரஞ்சுடராக இருக்கின்றார். அவரைக் கண்டு தொழுது அடியேன் வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்த்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்டிசையும் சுடுகின்ற ஆற்றைக் கண்டு இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர்
வண்டுபடு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும்
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (6.93.3) அப்பர் பிரான், பெருமானை நீலகண்டர் என்று அழைக்கின்றார். அமருலகம்=சிவபெருமான் வாழும் மேலுலகம்; வாழ்க்கைக்கு தேவையான பொருளினைத் தேடுவதில் உயிர், எத்தகைய கீழ்நிலைக்கு ஆளாகின்றது என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். காலையில் எழுந்தது முதல் தொடர்ந்து பொய்யினை பேசி பொருள் தேடும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்படும் நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பொய்= நிலையாமை; பொய்யாறாவாறே=நிலையாமை என்ற தன்மையிலிருந்து நீங்காத; புனைந்து= சிறப்பித்து; கையாறா=கைவிடாது தொடர்ந்து; கரணம்=தொழிலாகக் கொண்டு; அமருலகம்=இறப்பு என்பது இல்லாத முக்தி உலகம்; முடிவு என்பதொன்று இல்லாமல் நிலையான இன்பத்துடன் தொடர்ந்து வாழும் வாழ்க்கை. தலைமுறை தலைமுறையாக மனிதகுலம் பொருள் தேடி வாழ்வதை இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் உணரலாம். அப்பர் பிரானின் காலத்தில் மிகவும் அதிகமான நெய்யினைக் கொண்டு பெருமானை நீராட்டி மகிழ்ந்தனர் என்பது இந்த பாடலில் புலனாகின்றது. நெய்யாற்றில் நீராடிய நீலகண்டர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தினமும் காலையில் எழுந்ததிலிருந்து, பொருள் ஈட்டும் நோக்கத்துடன் நிலையற்ற உலகப் பொருட்களையும் உலகிலுள்ள உயிர்களையும் சிறப்பித்து பொய்கள் பல பேசி, அத்தகைய செயல்களை கைவிடாமல் தொடர்ந்து செய்வதில் மகிழ்ந்தும், எங்களது குலத் தொழிலை செய்கின்றோம் என்று இறுமாந்து பேசியும் வாழும் மனிதர்களே, ஆறு போன்று ஓடும் நெய்யினில் நீராடுபவரும், நஞ்சினைத் தேக்கியதால் நீல நிறத்திற்கு மாறிய கழுத்தினை உடையவரும், நீண்டும் சுருண்டும் அழகாக உள்ள சடையினை உடையவரும், தனது நெற்றியில் கண் உடையவரும் ஆகிய இறைவன் பொருந்தி வாழும் திருவையாறு தலத்தின் பெயரினை ஐயாறேஐயாறே என்று சொல்வீர்களாயின், உங்களுக்கு துன்பம் கொடுக்கும் உடலுடன் வாழும் வாழ்க்கையினைத் தவிர்த்து, சிவபெருமானுடன் இணைந்து சிவலோகத்தில் வாழும் பேற்றினை அடையலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பொய்யாறாவாறே புனைந்து பேசிப் புலர்ந்து எழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீலகண்டர் நிமிர்புன் சடை நெற்றிக் கண்ணர் மேய
ஐயாறேஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே

மேற்கண்ட திருத்தாண்டகத்தின் முதல் பாடல் பூந்துருத்தி தலத்தினை குறிப்பிட்டாலும் அடுத்து வரும் பாடல்கள், பூந்துருத்தி தலத்தினை குறிப்பிடாமல் வேறு பல தலங்களை குறிப்பிடுகின்றன. முதல் ஒன்பது பாடல்களில் பல தலங்களை குறிப்பிடும் அப்பர் பிரான் இந்த பதிகத்தின் கடைப் பாடலில் நமச்சிவாய எனப்படும் மந்திரத்தை ஓதுவார்கள் பெறுகின்ற பேற்றினை உணர்த்துகின்றார். ஒரே பதிகத்தில் அந்த தலத்தினை தவிர்த்து வேறு பல தலங்கள் பல பதிகங்களில் குறிப்பிடப் படுகின்றன. ஆனால் ஒவ்வொரு பதிகத்தின் ஈற்றடியில் வேறுவேறு தலங்களை குறிப்பிட்டு, அந்த தலங்களில் பெருமையை உணர்த்தும் பதிகமாக இந்த பதிகம் ஒன்று மட்டுமே அமைந்துள்ளது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். மேலும் முதல் ஒன்பது பாடல்களிலும் பல தலங்களை குறிப்பிடும் அப்பர் பிரான், அந்த திருத்தலங்களின் பெயரைச் சொல்வதால் நாம் அடைய இருக்கும் பலனை குறிப்பிடுகின்றார். அந்த பாடல்களை சிந்திக்கும் நாம், திருத்தலங்களின் பெயரைச் சொல்வதால், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடலாம் என்று அப்பர் பிரான் உணர்த்துவதை அறியலாம். கடைப் பாடலில் பெருமானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய மந்திரத்தைச் சொல்வதால் முக்தி நிலையை அடையலாம் என்று கூறுவதன் மூலம், பெருமானின் திருநாமமும் பெருமான் உறைகின்ற தலங்களின் பெயரும் ஒரே பலனைத் தரும் என்பதை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மேலும் பல தலங்களின் பெருமையை உணர்த்துவதன் மூலம், அந்தந்த தலங்களின் மேல் அமைந்துள்ள பாடல்களைப் போன்றும் இருப்பதால், இந்த பதிகத்தை பல்வகைத் திருத்தாண்டகம் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் அளிக்கின்றனர். பஞ்சாக்கர மந்திரம் அளிக்கும் முக்தி நெறியினைப் போன்று, திருத்தலங்களின் பெயர்களும் முக்தி நிலையினை அளிக்கும் சிறப்பு, பாடல்கள் தோறும் உபதேசமாக நமக்கு வழங்கப் படுகின்றது.

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.99.8) அப்பர் பிரான், பெருமானை, நீலகண்டா என்று அழைக்கின்றார். கொய்=தளிர், இலை; கூவிளம்=வில்வம்; கூவிள மாலையும் கொன்றை மாலையும் கொண்டு பெருமானுக்கு அழகு செய்து தான் பெருமானை வழிபட்டதாக கூறும் அப்பர் பிரான், தன்னை பெருமான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இறைஞ்சுகின்றார். பெருமானுக்கு வில்வ இலைகளால் மாலை தொடுத்து அணிவித்தால், நாமும் அந்த தகுதியினை அடையலாம் என்பதை இந்த குறிப்பு மூலம் உணர்த்துகின்றார். நெய்யினால் நீராட்டப் படுவதை மிகவும் விரும்புபவனே; மலங்கள் அற்றவனே; தேவர்களைக் காப்பதற்காக விடம் உண்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தினை உடையவனே; குறை ஏதும் இன்றி நிறைவானவனே; வேதங்களில் வல்லவனே; நீதியானே; கண்களில் மை அணிந்துள்ள உமையம்மையை தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே; மான் தோலினை உடையாக மகிழ்ந்து அணிபவனே; அன்று பறித்த வில்வ இலைகள் மற்றும் கொன்றை மலர் மாலைகள் கொண்டு உன்னை தினமும் வழிபட்டு வந்த அடியேன், உனது திருவடிகளை நாடி வருகின்றேன். என்னை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் இறைஞ்சும் பாடல். இந்த பதிகம் பாடி முடித்த பின்னர், அப்பர் பிரானின் உடலிலிருந்து அவரது உயிர் பிரிய, அவரது உயிர் சோதியாக கருவறையில் உள்ள பெருமானின் உருவத்துடன் சென்று சேர்ந்ததாக பெரிய புராணம் உணர்த்துகின்றது. தனது வாழ்நாளில் பல பதிகங்களில், தான் இறக்கும் சமயத்தில் பெருமானது நினைவு தனக்கு இருக்க வேண்டும் என்றும் அந்த தருணத்தில் பெருமான் கருணை புரிந்து தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்த, அப்பர் பிரானின் விருப்பம் ஈடேறும் வண்ணம் பெருமான் அருள் புரிந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
நெய்யாடி நின்மலனே நீலகண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே
மையாடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

எதிர்கொள்பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.7.2) சுந்தரர், பெருமானை நீற்றர் ஏற்றர் நீலகண்டர் என்று அழைக்கின்றார். பிறந்தவர் அனைவரும் ஒருநாள் அழிவது நிச்சயம் என்றும், பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இல்லற வாழ்க்கை துயரம் நிறைந்தது என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். எனினும் இந்த இல்லற வாழ்க்கையைச் சிறப்பித்து பலரும் பேசும் சொற்கள் அனைத்தும் வஞ்சனையான சொற்கள், பொய் கலந்த சொற்கள் என்று குறிப்பிடும் சுந்தரர், துயரம் தரும் இல்வாழ்க்கைக்கு காரணமாகிய பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்புவோர், தனது திருமேனியில் திருநீற்றைப் பூசிக் கொண்டுள்ளவரும், எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவரும், நிறைந்த கங்கை நதியினைத் தனது சடையில் தேக்கியவரும், பக்குவப்பட்ட உயிர்களை முக்தி நிலைக்கு உயர்த்தும் ஆற்றல் உடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற எதிர்கொள்பாடி தலம் சென்றடைந்து பெருமானை வணங்கி பயனடைவோம் என்று சுந்தரர் அறிவுரை கூறும் பாடல்.
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயர மனை வாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீலகண்டர் நிறைபுனல் நீள்சடை மேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே

அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.10.3) சுந்தரர், பெருமானை, கறைக் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். கலி=ஆரவாரம் நிறைந்த; கொடிகள்=கொடி போன்று மெலிந்த உருவத்தினை உடைய மகளிர்; கொடி போன்ற இடையினை உடைய மகளிரின் ஆடல் பாடல்களை கேட்டு ரசிக்கும் குயில்கள் கூவியும் மயில்கள் ஆடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்துவதால் ஆரவாரம் நிறைந்து காணப்படும் காஞ்சி மாநகரம் என்று குறிப்பிடுகின்றார். மார்பகலம் என்ற சொல்லுக்கு அகன்ற மார்பினை உடையவன் என்றும் அழகிய அணிகலன்கள் அணியப்பெற்ற மார்பினை உடையவன் என்றும் இரண்டு விதமாக பொருள் விளக்கம் அளிக்கப் படுகின்றது. கலம்=அணிகலன்; கடி=நறுமணம்; நுதல்=நெற்றி; ஒற்றைப் பிறைச் சந்திரனை தனது நெற்றியில் அணிந்துள்ள நீலகண்டன் என்று கூறுகின்றார். பெருமானைச் சார்ந்ததால், எலும்பு மாலை, ஆமையோடு, பன்றிக் கொம்பு, பாம்புகள், ஆகியவை மிகுந்த அழகுடன் பொலிந்து விளங்குவதால், அழகிய அணிகலன்கள் என்று கூறுகின்றார்.
கொடிகள் இடைக் குயில் கூவுமிடம் மயிலாலும் இடம் மழுவாளுடைய
கடிகொள் புனற் சடை கொண்ட நுதற் கறைக் கண்டன் இடம் பிறை துண்ட முடி
செடிகொள் வினைப்பகை தீரும் இடம் திருவாகும் இடம் திருமார்பகலத்து
அடிகள் இடம் அழல் வண்ணன் இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே

திருநாட்டுத் தொகை பதிகத்தின் பாடலில் (7.12.8) சுந்தரர், பெருமானை காளகண்டன் என்று அழைக்கின்றார். வேளூர் மற்றும் விளத்தூர் என்பன வைப்புத் தலங்கள்; இதே பதிகத்தின் பத்தாவது பாடலில் மைகொள் கண்டன் என்று சுந்தரர் பெருமானை அழைக்கின்றார்.
நாளும் நன்னிலம் தென் பனையூர் வட கஞ்சனூர்
நீள நீள்சடையான் நெல்லிக்காவு நெடுங்களம்
காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டு வேளூர் விளத்தூர் நாட்டு விளத்தூரே

பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.14.3) சுந்தரர், பெருமானை, நஞ்சடை கண்டர் என்று குறிப்பிடுகின்றார். பெருமானிடம் பொன் வேண்டும் என்ற உள்ளக் கருத்துடன் பதிகம் பாடிய சுந்தரர், அவ்வாறு பொன் கிடைக்கப் பெறாமையால், மனம் புழுங்கி பாடிய பதிகம் என்றும், இந்த பதிகம் பாடி முடித்த பின்னர், பெருமான் பொற்காசுகள் அருளினார் என்றும் செவிவழி செய்திகள் உணர்த்துகின்றன. உற்ற போது=கிடைக்கப் பெற்ற போது; ஒரு பொருள் கிடைத்த பின்னரே, அதன் தன்மையை உணரமுடியும் என்ற கருத்து உடையவனாக இருந்த போதிலும், மனத்தளவில் தான் வேண்டிய பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருந்ததாக சுந்தரர் கூறுகின்றார். அற்றவர்=வேறு பற்றுக்கோடு ஏதும் இல்லாதவர்; பெருமானைத் தவிர்த்து வேறு பற்றுக்கோடு ஏதும் இல்லாத தான், பெருமான் தன்பால் இரக்கம் வைத்து அருள் புரிந்தாலும், இரக்கம் ஏதுமின்றி அருள் புரியாமல் விடினும், அவரைத் தவிர தன்னை காக்கும் தலைவர் வேறெவரும் இல்லை என்று குறிப்பிடும் பாடல். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் இவரலாது இல்லையோ பிரானார் என்று குறிப்பிட்டாலும், பதிகத்தின் கடைப்பாடலில் ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல என்று குறிப்பிட்டு, தான் வாயினால் பெருமானின் புகழினைச் சொல்லியும் மனதினால் நினைத்து பரமனின் திருவடிகளைப் பணிகின்ற அடியான் என்று தன்னை சுந்தரர் குறிப்பிடுகின்றார்.
உற்ற போது அல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையும் என்று இருந்தேன்
செற்றவர் புரம் மூன்று எரி எழச் செற்ற செஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம் யாது சொன்னாலும்
பெற்ற போது உகந்து பெறாவிடில் இகழில் இவரலாது இல்லையோ பிரானார்

நாட்டியத்தான்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.15.3) சுந்தரர் பெருமானை நஞ்சேர் கண்டா என்று அழைக்கின்றார். இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில், சுந்தரர், பெருமானை, தனது இடுப்பினில் கச்சாக பாம்பினை கட்டியவன் என்றும் சுடுகாட்டு எல்லையில் நின்று நடனம் ஆடுபவன் என்று குறிப்பிடுகின்றார். அந்த பாடலின் தொடர்ச்சியாக இந்த பாடலில், பெருமானின் அத்தகைய நிலை கண்டு தான் அச்சம் ஏதும் கொள்ளாமல், தொடர்ந்து பெருமானுக்கு திருப்பணிகள் செய்வேனென்று கூறுகின்றார். மேலும் தான் செய்யும் திருப்பணிக்கு பதிலாக, எதனையும் பெருமானிடம் வேண்டாதும் இருப்பேன் என்று கூறுகின்றார். பரமேட்டீ=தான் எவரையும் தொழ வேண்டிய அவசியம் இல்லாமல், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல், உயர்ந்த இடத்தில் இருப்பவன்; மஞ்சு=மேகம்;
அஞ்சாதே உனக்கு ஆட்செய வல்லேன் யாதினுக்கு ஆசைப்படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை பங்கா எம் பரமேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த மணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண்டலை ஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ

கலயநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.16.8) சுந்தரர், பெருமானை மணிகண்டன் என்று அழைக்கின்றார். மேலும் இந்த பாடலில் கலயநல்லூர் தலத்தில் உள்ள கிளிகள், ஆங்குள்ள அடியார்கள் சொல்வதைக் கேட்டு, பெருமானின் திருநாமங்களை சொல்லித் துதிக்கின்றன என்று கூறுகின்றார். இந்த தலத்து அடியார்கள் பெருமான் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாக, தினமும் காலையிலும் மாலையிலும், கசிந்த மனத்துடன், பெருமானைப் பணிந்து வணங்கியதாக சுந்தரர் கூறுகின்றார். இந்த அடியார்களிடமிருந்து தான், தலத்து கிளிகள், பெருமானின் திருநாமங்களைச் சொல்வதற்கு பழகிக் கொண்டன போலும்.
மாலயனும் காண்பரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்தெழுந்த
வேலை விடம் உண்ட மணிகண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவக் கோலமயில் ஆலச் சுரும்பொடு வண்டிசை முரலப் பசுங்கிளி சொல் துதிக்க
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.36.1) பெருமானை, நஞ்சை உண்டிருள் கண்டர் என்று சுந்தரர் அழைக்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள், தாருகவனத்து பெண்கள் பெருமானைப் பார்த்து தமது உள்ளக் கருத்தினை சொல்வதாக அமைந்துள்ளது என்று கூறுவார்கள். பல இடங்களும் சென்று பெருமான் எதற்காக பலி தேட வேண்டும், தன்னிடமே வேண்டிய அளவு பெற்றுக் கொள்ளலாமே என்று ஒரு பெண்மணி கேட்பதாக அமைந்த பாடல். பலரும் தனக்கு பலி இட்டு பயனடைய வேண்டும் என்பது தானே பெருமானின் திருவுள்ளக் கருத்து; எனவே ஒரே இடத்தில் அவர் எவ்வாறு பலி ஏற்றுக் கொள்வார்; ஆரணீய விடங்கர் என்பது இந்த தலத்து பெருமானின் திருநாமம். பெருமானின் அருகே பலியிட வந்த பெண்மணி, அவரது கழுத்தினில் பாம்பு இருப்பதைக் கண்டு அச்சம் கொள்கின்றாள். மாலையாக அணிந்து கொள்வதற்கு பாம்பினைத் தவிர்த்து வேறேதும் கிடைக்கவில்லையா என்று கவலை தோன்ற கேட்கின்றாள்.
காருலாவிய நஞ்சை உண்டு இருள் கண்டர் வெண்டலை ஓடு கொண்டு
ஊரெலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓரிடத்திலே கொள்ளும் நீர்
பாரெலாம் பணிந்து உம்மை பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்
ஆரமாவது நாகமோ சொல்லும் ஆரணீய விடங்கரே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.38.6) சுந்தரர், நீலகண்டத்து எம் பெருமான் என்று அழைக்கின்றார். மாதவன் என்று பெருமானை குறிப்பிட்டு மிகவும் உயர்ந்த தவம் செய்பவன் என்று உணர்த்துகின்றார். தவசிகளுக்கெல்லாம் தலை சிறந்த பெருமானை, மாதவன் என்று மிகவும் பொருத்தமாக அழைக்கின்றார். மைம்மான=மையினை ஒத்த; மை=கருமையான மை; வல்லேன=வலிமையான பன்றி: தலைமகன் என்ற சொல் தம்மான் என்று மருவியதாக அறிஞர்கள் கூறுகின்றனர். தம்மானை=தனது தலைவன்; பாம்பும் சந்திரனும் இயல்பிலேயே ஒன்றுக்கொன்று பகை வாய்ந்தவை என்பதை நாம் அறிவோம். எனினும் இறைவனின் சன்னதியில் தங்களது பகையை மறந்து அவரது சடையினில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இருந்தாலும் பாம்பின் இயற்கை குணம் அடிக்கடி தலை தூக்கவே, பாம்பு சந்திரனை விழுங்கும் சமயம் பார்த்து பாய்வதற்கு காத்திருக்கின்றது என்றும், இதனைக் கண்ணுறும் சந்திரனும் அதனால் பதட்டம் அடைகின்றது என்றும் சுந்தரர் கற்பனை செய்து, இரண்டும் பதட்டமடைந்து தடுமாறுவதாக கூறுகின்றார். வெம்மான= வெம்மை மிகுந்த; வேத விதியான்=வேதங்களின் பயனைத் தருபவன்; சண்ணித்த=பூசப்பட்ட; திருவதிகை சித்தவடம் மடத்தில் ஒரு இரவில் சுந்தரர் படுத்து உறங்கிய போது, அவரின் அருகே முதியவராக வந்து படுத்து, சுந்தரரின் முகத்தில் தனது திருவடியை பதித்தது, இறைவன் தான் என்பதை உணராத அறிவிலியாக இருந்ததுமன்றி கோபத்துடன் அவரிடம் பேசியதை தனது தவறு என்று குறிப்பிடும் சுந்தரர், இனியும் அவ்வாறு இறைவனை இகழ்வாக பேசமாட்டேன் என்று இந்த பதிகத்தின் பாடல்கள் தோறும் குறிப்பிடுகின்றார்.
மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான் வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும் தடுமாறும் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற
வெம்மான மதகரியின் உரியானை வேத விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போலியானே

திருத்தொண்டத் தொகை பதிகத்தின் எட்டாவது பாடலில் (6.39.8) சுந்தரர், பெருமானை, கறைக் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். காப்புக் கொண்டிருந்த-தமக்குப் பாதுகாவலாக உணர்ந்திருந்த. நிறை-நெஞ்சைத் தீ நெறியிற் செல்லாது நிறுத்துதல். நெல்வேலி வென்ற-நெல்வேலியில், அயல்நாட்டு அரசரை வென்ற. மயிலை-மயிலாப்பூர். அறை-அறுத்தல். நிறைக்கொண்ட முதலிய மூன்றிலும் ககர ஒற்று, விரித்தலாயிற்று. ஆலகால விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறம் படிந்த கழுத்தினை உடைய சிவபெருமானின் திருவடிகளே தமக்குச் சிறந்த பாதுகாப்பு என்று கருதி அவரிடம் நீங்காத பக்தி கொண்டவராக திகழ்ந்த கணம்புல்லர் என்ற சிறந்த அடியார்க்கும் நான் அடியேன்; காரி நாயனார் என்ற அடியார்க்கும் நான் அடியேன்; சிவபெருமானைத் தொழத் தொடங்கியதால் நிறைந்த சிந்தையராக மாறியவரும், நெல்வேலி என்ற இடத்தில், சாளுக்கிய மற்றும் சோழ அரசர்களை வென்ற வீரரும் சிவனருளால் தனது கூன் நீங்கப் பெற்று சிறப்பின் காரணமாக நின்றசீர் நெடுமாறன் என்று அழைக்கப் பட்டவரும் ஆகிய பாண்டிய மன்னன் நெடுமாறன் என்பவரின் அடியார்களுக்கும் நான் அடியேன்; கடற்கரை நகரங்களில் விற்கப்படுவதும் இருளை நீக்கி ஒளிவீசும் பவளம் போன்று அடியார்களின் அகவிருளை நீக்கும் சோதியாகிய சிவபெருமான் உறைகின்ற மயிலை தலத்தைத் சார்ந்த வாயிலார் என்பவரின் அடியார்க்கும் நான் அடியேன்; பகைவர்களின் உடலை இருதுண்டாக அறுக்கும் ஆற்றல் கொண்ட வேற்படை உடைய முனையடுவார் என்ற அடியார்க்கும் நான் அடியேன்; நம்பியாரூரன் ஆகிய நான், திருவாரூரில் குடிகொண்டிருக்கும் பெருமானுக்கு எப்போதும் அடிமையாகவே இருப்பேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக் கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் தொன் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவார்க்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே

கச்சூர் ஆலக்கோயில் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.41.5) சுந்தரர், பெருமானை, கறைக் கண்டா என்று அழைக்கின்றார். விதி=அறநெறி; அறநெறியாகவும் அறநெறியின் பயனாகவும் உள்ளவன் பெருமான் என்று கூறுகின்றார். விரவுதல்=கலத்தல்; விரவார்=சைவ நெறியுடன் கலக்காமல் பிணங்கி நின்ற திரிபுரத்து அரக்கர்கள்; பகலில் கதிரவனின் வெப்பத்தால் வாடி வதங்கி இருக்கும் உயிர்களுக்கு, இன்பம் அளிப்பதாக சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் இருப்பது போன்று, வினை வயத்தால் துன்பம் அனுபவித்து சோர்ந்து இருக்கும் உயிர்களுக்கு, மீண்டும்மீண்டும் பிறவிகள் எடுத்து இளைத்து வருந்தும் உயிர்களுக்கு, அந்த வினைகளை நீக்குவதன் மூலம் இன்பம் அளிக்கும் இறைவன் என்று உணர்த்துகின்றார். ஒரு சமயம் இந்திரன் உற்ற நோயினைத் தீர்ப்பதற்கு பச்சிலைகள் தேடி அலைந்த அஸ்வினி தேவர்களுக்கு, அந்த பச்சிலைகள் இருக்கும் இடத்தினை காட்டி பெருமானும் பிராட்டியும் அருள் புரிந்த தலபுராணச் செய்தி இங்கே சொல்லப் படுகின்றது.
மேலை விதியே விதியின் பயனே விரவார் புரம் மூன்று எரி செய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக் கண்டா
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனி பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே

கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.53.3) சுந்தரர், பெருமானை கண்டர் என்று அழைக்கின்றார். காயும்=சினத்துடன் பாயும்; அதள்=தோல்; அனைத்து உயிர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து பாதுகாப்பவர் என்று குறிப்பிடுகின்றார். பலி தேர்ந்து உண்ணும் தன்மையராக இருப்பினும், அனைவர்க்கும் தலைவராக இருக்கும் பெருமான், எவரையும் பணிந்து வணங்க வேண்டிய அவசியம் அற்றவராக, பரமேட்டியாக இருக்கின்றார் என்றும் சொல்கின்றார்.
காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண் தோள் கடவூரர்
தாயும் தந்தை பல்லுயிர்க்கும் தாமேயாய தலைவனார்
பாயும் விடை ஒன்றது ஏறிப் பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்து பெரிய பெருமான் அடிகளே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் (7.53.8) சுந்தரர், பெருமானை, கடலின் நஞ்சுண்ட கண்டர் என்று அழைக்கின்றார். காரார்=கருமை நிறம் பொருந்திய; வாணர்=வாழ்பவர்; வாழுநர் என்ற சொல் வாணர் என்று திரிந்ததாக கருதப் படுகின்றது.
காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூர் உறை வாணர்
தேரார் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்
ஊர் தான் ஆவது உலகேழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர்
பேர் ஆயிரவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே

திருவெண்ணெய் நல்லூரில் தன்னை ஆட்கொண்ட இறைவன், விரும்பத் தக்கவன் என்று, தான் இரண்டு கண்களின் பார்வையை இழந்து கோலை ஊன்றி நடந்த நிலையிலும் சுந்தரர் அழைப்பதை நாம் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.69.8) காணலாம். சம்பு என்ற வடமொழி சொல்லுக்கு இன்பம் உண்டாக்குபவன் என்று பொருள். நச்சரவு ஆட்டிய நம்பன் என்று மணிவாசகர் திருவண்டப்பகுதி அகவலில் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் சுந்தரர், பெருமானை நஞ்சுண்ட கண்டா என்று அழைக்கின்றார். தடங்கடல்=அகன்ற கடல்;
நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன் மாளிகை சூழ் திருமுல்லை வாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.71.7) சுந்தரர் பெருமானை ஆளலுறு கண்டன் என்று அழைக்கின்றார். கண்டன் என்ற சொல்லுக்கு வீரன், கணவன், தலைவன், எழுத்து உடையவன், கொடியோன் என்று பல பொருள் உள்ளன. இங்கே தலைவன் என்ற பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளது. குணவார்=கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நீண்ட கடல்; சலஞ்சலம் என்பது மிகவும் உயர்ந்த வகை சங்கு; ஆயிரம் வலம்புரி சங்குகளுக்கு சமம் என்று கூறுவார்கள்.
முளை வளர் இளமதி உடையவன் முன் செய்த வல்வினைகள்
களை கலந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல்
வளை விளை கயல் பாய் தரு குணவார் மணல் கடல்வாய்
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து ஏற்றும் மறைக்காடே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.75.2) சுந்தரர், பெருமானை இருள் கண்டன் என்று கூறுகின்றார். பெருமானை நஞ்சினை உட்கொண்டு தங்களை காப்பாற்றுமாறு வேண்டிய தேவர்களை, வஞ்சகர் என்று சுந்தரர் அழைக்கின்றார். வங்கம்=கப்பல்கள் உலவும் இடமாகிய கடல்; வேலை=அலைகள் நிறைந்த கடல்; ஈசனைப் போற்றும் அடியார்கள், தன்னை அடிமையாகக் கொள்ளும் தகுதி படைத்தவர்கள் என்று குறிப்பிட்டு, சுந்தரர், தான் அடியார்க்கும் அடியேன் என்பதை இங்கே உணர்த்துகின்றார்.
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி
தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆளுடையாரே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.76.5) சுந்தரர், பெருமானை, மைகொள் கண்டர் என்று அழைக்கின்றார். கூவிளம்=வில்வம்; சடைமுடியை உடையவராக இருந்தாலும் அழகராக திகழ்பவர் பெருமான் என்று கூறுகின்றார். கைதை=தாழை; பைதல்=இளமையான; பரிசு= தன்மை;
மைகொள் கண்டர் எண் தோளர் மலைமகளுடன் உறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை குலாவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்
பைதல் வெண் பிறையோடு பாம்புடன் வைப்பது பரிசே

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.80.2) சுந்தரர், கறைக் கண்டன் என்று பெருமானை அழைக்கின்றார். நல துண்ட=நன்கு பிளவுபட்டு சிறிய துண்டாக இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன்; கடமார்=மதம் பிடித்து மயக்கத்தில் ஆழ்ந்த; படவேர்=படம் எடுத்தாடும் பாம்பு; இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (7.80.4) சுந்தரர், பெருமானை கரிய கறைக் கண்டன் என்று அழைக்கின்றார்.
சுடுவார் பொடி நீறும் நல துண்டப் பிறை கீளும்
கடமார் தரு யானை உரி அணிந்த கறைக் கண்டன்
படவேர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல்
திடமா உறைகின்றான் திருக் கேதிச்சரத்தானே

கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.81.3) சுந்தரர், பெருமானை காளகண்டன் என்று அழைக்கின்றார். நீதியால்=முறையாக; அல்கி=குறைந்து, ஒடுங்கி செயலற்றுப் போதல்; நம்மை பல விதத்திலும் ஆட்கொண்டு, உயிரின் உண்மையான விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக வினைகள் இருக்கும் தன்னை இங்கே குறிப்பிடப் படுகின்றது.
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திட
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே

புக்கொளியூர் அவினாசி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.92.8) சுந்தரர் பெருமானை கறைக் கண்டனே என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானைத் தவிர்த்து வேறெந்த தேவரையும், தான் கொண்டாடாத நிலையில் இருப்பதாக கூறுகின்றார். பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் அணிகலனாகவும், தான் திரிபுரத்தவர்களுடன் போருக்குச் சென்ற போது ஏந்திய வில்லின் நாணாகவும் ஏற்றுக் கொண்ட பெருமான் என்று குறிப்பிடும் சுந்தரர், தான் பிற தேவர்களை விரும்பி போற்றாத காரணத்தால், அவர்கள் எவரையும் தான் காணவில்லை என்றும் கூறுகின்றார். பல தலங்களில் பெருமானின் திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், எத்தனை முறை பெருமான் தனக்கு காட்சி கொடுத்தாலும் தான் மகிழ்ந்து ரசிப்பேன் என்று கூறுகின்றார். அந்தணராக பெருமான் தனக்கு திருவெண்ணெய் நல்லூர், திருவதிகை வீரட்டம், திருக்கச்சூர், குருகாவூர் செல்லும் வழியில், கூடலையாற்றூர், திருவாரூர் ஆகிய தலங்களில் காட்சி கொடுத்ததையும், திருவாரூர், சீர்காழி, திருப்பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் சிவபெருமானாக காட்சி கொடுத்ததையும் நினைத்துப் பார்க்கும் சுந்தரர், மீண்டும்மீண்டும் சிவபெருமானை காண வேண்டும் என்ற தனது ஆசையை இந்த பாடலில் வெளிப்படுத்துகின்றார்.
பேணாது ஒழிந்தேன் உன்னை அல்லால் பிற தேவரைக்
காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் யான்
பூண் நாண் அரவா புக்கொளியூர் அவினாசியே
காணாத கண்கள் காட்ட வல்ல கறைக் கண்டனே

திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் பாடலில் (8.6.32) மணிவாசகர் பெருமானை கறைக் கண்டனே என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானை, நஞ்சினை அமுதாக்கியவன் என்று கூறுகின்றார். அமுதம் உண்ட பின்னரும் இறந்து படும் தேவர்களின் இடையே இருக்கும் பரமன், நஞ்சினை உண்ட பின்னரும் இறவால் இருந்தான் என்பதை உணர்த்தும் பொருட்டு, நஞ்சினை அமுதமாக மாற்றி, அதன் தன்மையை இழக்கச் செய்தவன் பெருமான் என்று கூறுகின்றார். விழுத் தொண்டர்=சிறந்த தொண்டர்கள்; சிறந்த தொண்டர்களைத் தவிர மற்றவர்கள் பழகுவதற்கு அரியவனாக இருப்பவன் பெருமான். அடற்கரி=அடல்+கரி, வலிமை வாய்ந்த ஆண் யானை; வலிமை வாய்ந்த ஆண் யானையை போன்று, உயிரினைத் தன் வசம் இழுத்து ஆட்கொள்ளும் ஐந்து புலன்களுக்கு அஞ்சும் தான், ஒடுங்கி ஏதும் செய்ய இயலாது இருப்பதாக அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமான் தனக்கு பக்கத் துணையாக இருந்தால் அந்த புலன்களின் தாக்கத்திலிருந்து விடுதலை அடையலாம் என்று ஆசை கொள்ளும் தான், தான் பற்றிக் கொண்ட பெருமானை விடாமல் தொடர்ந்து பற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று குறிப்பிடும் அடிகளார், இந்த நிலையில் பெருமான் தன்னை கைவிட்டால், தனக்கு புகலிடம் வேறேதும் இல்லை என்று புலம்புகின்றார்,
அடற்கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய் விட்டு இடுதி கண்டாய் விழுத் தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய் சுடர் மாமணியே சுடு தீச்சுழல
கடற்கு அரிதாய் எழு நஞ்சு அமுதாக்கும் கறைக் கண்டனே

திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் பாடலில், மணிவாசக அடிகளார், பெருமானை மழை தரு கண்டன் என்று அழைக்கின்றார். உழை=மான்; மழை தரு கண்டன்=மழை பொழியும் மேகம் போன்று கருமை நிறம் உடைய கழுத்தினை உடையவன்; மான்=மானைத் தனது இடது கையில் கொண்டுள்ளவன்;தேய்மதி=தக்கனின் சாபத்தால் நாளுக்கு ஒரு பிறையாக தேய்ந்து, அழியும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒற்றைப் பிறைச் சந்திரன்; பரன்=அனைவர்க்கும் மேலானவன்; அபரன்= மேன்மைத் தன்மை எதுமின்றி கீழானவன்; விழைதல்=விரும்புதல்; இந்த பாடலின் முதல் பகுதியில் உழை தரு நோக்கியர் கொங்கை பலாப் பழத்து ஈயின் ஒப்பாய் விழை தருவேன் என்று தனது நிலையினை அடிகளார் குறிப்பிடுகின்றார். பலாப் பழத்தின் மணத்தால் கவரப்படும் ஈ, அந்த பழத்தை நன்றாக உண்ட பின்னரும், அந்த பழத்தினை விட்டு வெளியே வர முடியாத வண்ணம், பலாப் பழத்தின் பிசினுடன் ஒட்டி இருப்பது இயற்கை. அதனைப் போன்று மகளிர் தரும் சிற்றின்பங்களில் ஆழ்ந்து மகிழும் உள்ளம், அந்த சிந்தனையை விட்டு வெளியே வர முடியாமல் இருப்பது போன்று, தனது சிந்தனை மான் போன்ற மருண்ட அழகிய பார்வையை உடைய மகளிர் பால் செல்வதையே விரும்புகின்றது என்று அடிகளார் தன்னை இழித்துக் கூறுகின்றார். இந்த குறை காரணமாகவே, பெருமான் தன்னை விட்டு விட்டதாக கருதும் அடிகளார், இவ்வாறு தன்னை விட்டு விடுவது பெருமானுக்கு அழகா என்ற கேள்வியை கேட்கின்றார். தன்னைக் கைவிட்டு விடாமல் உடன் அழைத்துச் சென்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த பதிகத்தின் பாடல்களில் விடுக்கப் படும் விண்ணப்பம்.
உழை தரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சு உண்
மழை தரு கண்டன் குணமிலி மானிடன் தேய் மதியன்
பழை தரு மா பரன் என்றென்று அறைவன் பழிப்பினையே

இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் தனது சிறுமையை காரணம் காட்டி, பெருமான் தன்னை கைவிடலாகாது என்று இறைஞ்சும் அடிகளார்,சலிப்படைந்து பெருமானை குறை கூறுகின்றாரோ என்று தோன்றுகின்றது. நமக்கு நெருக்கமானவராக நாம் கருதும் ஒருவர், பல முறை வேண்டியும் நமக்கு இரங்காமல் இருந்தால் நமக்கு சலிப்பு ஏற்பட்டு, அவரை குறை கூறுவது மனித இயல்பு தானே. சென்ற 45 பாடல்களில் வேண்டிய பின்னரும், தனக்கு அருள் புரியாமல் இருக்கும் பெருமானை பழித்து கூறுவேன் என்று எச்சரிக்கை விடுவதாகவும் ஒரு கோணத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது. அறைதல்=உரக்க கூறுதல். மேலோட்டமாக பார்த்தால், பெருமானை குறை கூறுவது போன்று இருந்தாலும், உண்மையில் பெருமானது பெருமையே இங்கே குறிப்பிடப் படுகின்றது. வேலை=கடல்; வேலை நஞ்சு உண்பவன்=பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உண்பவன் என்பது பொருள். தனக்கு உண்ண ஏதும் கிடைக்காததால், பித்தன் போன்று நஞ்சினை உண்ட பைத்தியக்காரன் என்பது ஒரு பொருள்; உண்மையான பொருள், ஆலகால நஞ்சினை உட்கொண்டு உலகினைக் காத்தவன் என்பது; வஞ்சகமான எண்ணம் கொண்டவர்களை கருமை படர்ந்த நெஞ்சினன் என்று கூறுவது உலக இயல்பு. செம்மை நிறத்தில் உள்ள பெருமானின் திருமேனியில், கருமை நிறம் படர்ந்திருப்பது, குற்றத்தின் அடையாளமாக கருதப்படும் என்பது ஒரு பொருள்; நீலகண்டனாக பெருமான் தனது வயிற்றினில் ஒடுங்கும் உலகத்து உயிர்களை காப்பாற்றுகின்றான் என்பது மற்றொரு பொருள். குணமிலி என்பதற்கு எந்த விதமான நற்குணமும் இல்லாதவன் என்பது ஒரு பொருள்; தாமசம் இராஜசம் மற்றும் சத்துவம் ஆகிய மூன்று குணங்களைக் கடந்தவன் என்பது மற்றொரு பொருள். தாமசம் இராஜசம் மற்றும் சத்துவம் ஆகிய மூன்று குணங்களில் எந்த குணம் மேலோங்கி இருக்கின்றதோ, அந்த குணம் தான், நமது செய்கைகளுக்கு காரணமாக இருப்பதை நாம் அறிவோம்; பெருமானோ இந்த மூன்று குணங்களைக் கடந்து இருப்பதால், அவனது செயல்கள் எப்போதும் அவனது முழுக் கட்டுப்பாட்டில் உள்ளன. மானிடன் என்பதற்கு நம்மைப் போன்று பல இழிந்த குணங்களை உடையவனாகவும், தெய்வத்திற்கு உரிய சிறந்த குணங்கள் இல்லாதவனாகவும் பெருமான் இருக்கின்றான் என்பது ஒரு பொருள். தாருக வனத்து முனிவர்கள் ஏவிய மானைத் தனது இடது கையில் ஏந்தியவன் என்பது மற்றொரு பொருள். தேய் மதியன் என்றால் குறைந்த, வளர்ச்சி அடையாத புத்தி உடையவன் என்பது ஒரு பொருள்; தக்கனது சாபத்தால் நாளொன்றுக்கு ஒவ்வொரு கலையாக தேய்ந்து ஒற்றைக் கலையுடன் தன்னிடம் சரணடந்த சந்திரனை, அழியாமல் காத்த பெருமை உடையவன் என்பது மற்றொரு பொருள்; மாபரன் என்ற சொல்லினை மா அபரன் என்று பிரித்து பொருள் கண்டால், மிகவும் கீழானவன் என்பது ஒரு பொருள்; மாபரன் என்பதை மா பரன் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு என்று பொருள் கொண்டால், அனைத்து உயிர்களுக்கும் மேலானவன் என்பது மற்றொரு பொருள். உயிரின் செயல்களை இராஜசம் தாமசம் சாத்துவீகம் ஆகிய மாயாகாரிய மூன்று குணங்களே தீர்மானிக்கின்றன. ஆனால் பெருமான் இந்த மூன்று குணங்களைக் கடந்தவன்; உணர்வுகளைக் கடந்தவன். எனவே தான் குணமிலி என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அதனால் பெருமான் குணம் ஏதும் இல்லாதவன் என்று நாம் கருதுதல் தவறு. அவன் மேலே குறிப்பிட்ட மாயாகாரிய குணங்களுக்கு மாறாக அருட்குணங்கள் எட்டு கொண்டவன். எனவே தான் குணமில் குணமே என்று பெருமானை அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, எல்லையற்ற ஆற்றல் உடைமை, வரம்பிலாத இன்பம் உடைமை, ஆகிய சிறந்த எட்டு குணங்களை உடையவனாக இறைவன் திகழ்கின்றான்.

திருக்கோவையார் பாங்கற்கூட்டம் அதிகாரத்தின் 23ஆவது பாடலில், மணிவாசக அடிகளார். பெருமானை, காவி நின்றேர் தரு கண்டர் என்று அழைக்கின்றார். ஆன்மாவை தலைவனாகவும் சிவத்தை தலைவியாகவும் உருவகித்து, சிவத்தைச் சென்றடைய விரும்பும் ஆன்மாவின் விருப்பத்தினை காதலாக உருவகித்து, ஆன்மாவுக்கும் சிவத்திற்கும் இடையே வளரும் காதலை அகத்துறை பாடல்களாக அளிக்கும் நூல் திருக்கோவையார். நானூறு பாடல்கள் கொண்ட இந்த நூல் இருபத்தைந்து அதிகாரங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. ஆன்மாவாகிய தலைவன், திருவருள் கைகூடவே, வேறெந்த காரணமும் இன்றி, தமது முயற்சி ஏதுமின்றி, இயற்கையாக ஓரிடத்தில் எதிர்ப்பட, சிவமாகிய தலைவியை காண்கின்றான். சிவமாகிய தலைவியும், தலைவனாகிய ஆன்மாவும் இயற்கையாக சந்திக்கின்றனர் அப்போது ஆன்மாவிடம் ஏற்படும் எண்ண ஓட்டங்கள் இயற்கைப் புணர்ச்சி அதிகாரத்தில் சொல்லப் பட்டுள்ளன. சிவத்தலைவியைக் காணும் ஆன்மா, சிவத்தால் ஈர்க்கப்பட்டு, சிவத்தைச் சென்றடைந்து என்றும் சிவனை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆன்மாவின் தற்போதம் தலைவனின் தோழனாக உருவகிக்கப் படுகின்றது. வருத்தத்தால் உடல் மெலிந்த தலைவனைக் காணும் தோழன், தலைவனின் உடல் நலிந்து கிடப்பதைக் கண்ணுற்று காரணத்தை வினவுகின்றான். தலைவன், தான் கண்ட தலைவியை குறிப்பிட்டு, அந்த தலைவி பால் தான் கொண்டுள்ள காதலே, தனது உடல் மெலிவுக்கு காரணம் என்று கூறுகின்றான். தனது நிலையை தலைவனாகிய ஆன்மா, தனது தோழனிடம், தற்போதமாகிய தோழனிடம் எடுத்துரைத்து, அவனுடன் கூடி ஆலோசனை செய்கின்றான். தோழனும் தலைவி இருக்குமிடம் தேடிச் சென்று கண்டறிந்து தலைவனிடம் தெரிவிக்க, தலைவியைக் காணச் செல்கின்றான். இதனிடையில் சிவத்தலைவியும், ஆன்மா மீண்டும் தன்னைக் காண வாராமல் நின்ற நிலை குறித்து வருத்தம் அடைந்து உடல் மெலிகின்றாள். தலைவி இருக்கும் இடம் சென்றடைந்த தலைவன், தற்போதம் தனக்கு உதவும் நிலையில் இல்லை என்பதை புரிந்து கொள்ளும் ஆன்மா, நேரிடையாக சிவமாகிய தலைவியை அணுகுவதை விடவும் சிவத்தின் தோழியாகிய திருவருளின் துணையை நாட முடிவு செய்கின்றது. இந்த விவரங்கள் பாங்கற்கூட்டம் என்ற அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. தலைவி தனது வாய் திறந்து ஏதேனும் பேச மாட்டாளா என்று ஏங்கும் தலைவன், தலைவி ஏதும் பேசாமல் இருப்பதால் தான் தளர்ச்சி அடைந்து உயிர் நீத்துக் கொள்ளும் தன்மையில் இருப்பதாக உணர்த்தும் பாடல், நாம் சிந்திக்க இருக்கும் பாடலாகும். எண்ணற்ற பிறவிகள் எடுத்து தளர்ச்சி அடைந்துள்ள ஆன்மா, தனது களைப்பினை போக்கிக் கொள்வதற்காக சிவத்தின் உபதேச மொழியை கேட்க ஆவலாக இருக்கும் தன்மை, இந்த பாடலின் உட்பொருளாக உள்ளது என்று கூறுவார்கள்.
காவி நின்று ஏர் தரு கண்டர் வண் தில்லைக் கண்ணார் கமலத்
தேவி என்றே ஐயம் சென்றது அன்றே அறியச் சிறிது
மா இயன்ற அன்ன என் நோக்கி நின் வாய் திறவாவிடில் என்
ஆவி அன்றே அமிழ்தே அணங்கே இன்று அழிகின்றதே

காவி=கருநீல குவளை மலர்; கமலத்தேவி=தாமரையில் உறையும் இலக்குமி தேவி; ஏர்=அழகு; ஏர் தரு=அழகு பொருந்திய; கருமை நிறத்து கறை படர்ந்த போதிலும் பெருமானின் கழுத்து அழகுடன் மிளிர்வதாக சொல்லப் படுகின்றது. வண் தில்லை=வளமை வாய்ந்த தில்லை நகரம்; மிகுந்த அழகுடன் இலக்குமி தேவி போன்று காணப்படும் சிவத்தலைவி, வாய் திறந்து ஏதேனும் பேசினால், அவள் மானிடப் பெண் என்பதை தான் புரிந்து கொள்வேன் என்று தலைவன் கூறுகிறான். சிறிது= மிகவும் சிறிய அளவினதாக; மா=மான் விலங்கு; வியன்று=அகன்று, மென் நோக்கி=மான் போன்ற மருண்ட பார்வை உடைய தலைவி; தலைவியைக் கண்டதால் இன்பம் அடையும் தலைவன், அவள் ஏதும் பேசாமல் இருப்பதால் வருத்தமும் அடைவதாக, ஒரே சமயத்தில் இன்பமும் துன்பமும் அடைவதாக சொல்லப் படுகின்றது. இன்பம் அளிக்கும் அமுதாகவும் துன்பம் அளிக்கும் பெண் தெய்வமாகவும் சிவத்தலைவி விளங்குவதாக சொல்லப் படுகின்றது. தலைவியை பேச வைப்பதற்காக தலைவன் எடுக்கும் முயற்சிகள் இந்த அதிகாரத்தின் முந்தைய பாடல்களில் சொல்லப் படுகின்றன. நீலமலர் போன்று ஒளி பொருந்திய கழுத்தினை உடையவனாகிய பெருமான் உறைகின்ற தில்லைச் சிதம்பரத்தில் காணப்படும் தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளோ என்ற ஐயம் இந்த பெண்ணைக் காணும் போது ஏற்படுகின்றது. எனவே இந்த ஐயத்தினை போக்கிக் கொள்ள, மானின் மருண்ட பார்வையினை உடைய தலைவியே, ஏதேனும் வாய் திறந்து பேசுவாயாக. நீ ஏதும் பேசாமல் இருந்தால், எனது உயிர் உடலில் தங்காது அழிந்து விடும். உன்னைக் கண்டதால் எனக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், நீ வாய் பேசாது மவுனமாக இருக்கும் நிலை எனக்கு வருத்தம் அளிக்கின்றது. இதனால், நீ எனக்கு அமுதமாகவும் அதே சமயத்தில் தீமை புரியும் தெய்வமாகவும் தோன்றுகின்றாய். எனது உயிர் சிறிது சிறிதாக அழிந்து கொண்டே இருக்கின்றதே என்று ஆன்மாவாகிய தலைவன் சொல்வதாக அமைந்த பாடல். எண்ணற்ற பிறவிகள் எடுத்துக் களைத்து சோர்ந்துள்ள ஆன்மா, சிவத்தலைவி வாய் திறந்து தனக்கு தகுந்த உபதேசம் அளித்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடையும் வழியினை காட்ட மாட்டாளா என்று ஏங்குகின்றது என்பதே இந்த பாடலின் உட்பொருள்.

திருக்கோவையார் நாண நாட்டம் அதிகாரத்தின் இரண்டாவது பாடலில், மணிவாசக அடிகளார்., பெருமானை, மணி சேர் கண்டன் என்று அழைக்கின்றார். தலைவியை தான் முதன்முதலாக சந்தித்த இடத்தில், மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆன்மா சிவத்தை நெருங்க துடிக்கின்றது. இந்த செய்தி இடந்தலைப்படுதல் அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. திருவருளாகிய தோழியும் சிவமாகிய தலைவியும் என்றும் பிரியாமல் இருப்பதைக் காணும் ஆன்மா, சிவத்தலைவியின் ஊரையும் பெயரையும் அறிய விரும்பி முயற்சி செய்கின்றது. இந்த விவரங்கள் மதியுடம்படுத்தல் அதிகாரத்தில் சொல்லப் படுகின்றன. சிவத்தலைவியோ அல்லது திருவருளாகிய தோழியோ வாய் திறந்து பேசவேண்டும் என்பதற்காக, பொருந்தாத கேள்விகளை, யானை இந்த பக்கம் வந்தததா, இந்த வழியே வந்த மானைக் கண்டீர்களா என்ற கேள்விகளை ஆன்மாவாகிய தலைவன் கேட்கின்றான். இவ்வாறு பொருத்தமற்ற வினாக்களை வினவும் தலைவன், தலைவி பால் காதல் கொண்டுள்ளான் என்பதை திருவருளாகிய தோழியும் சிவமாகிய தலைவியும் புரிந்து கொள்கின்றனர். இந்த விவரம் இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. சிவத்தலைவி, ஆன்மாவின் விருப்பத்தை, சிவத்துடன் கூட வேண்டும் என்ற ஆன்மாவின் விருப்பத்தை உணர்ந்து ஆன்மாவின் பக்குவ நிலையை அறிய விரும்பும் தன்மை, முன்னுறவுணர்தல் அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. அடுத்து வரும் குறையுணர்தல் அதிகாரத்தில், தலைவனாகிய ஆன்மா, சிவமாகிய தலைவியின் கட்டளை ஏதாகிலும் அதனை, நிறைவேற்றுவேன் என்று சொல்ல, தலைவனின் உள்ளக் கருத்தினை புரிந்து கொள்ளும் திருவருள், தலைவியும் ஆன்மாவின் பால் கருணை வைத்து, ஆன்மாவின் பக்குவத்தை புரிந்து கொண்டு, ஆன்மாவை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பதையும் புரிந்து கொள்ளும் திருவருள், தலைவன் மற்றும் தலைவி ஆகிய இருவரும் ஒத்த கருத்தினை உடையவர்களாக இருப்பதைக் கண்டு வியக்கின்றது. உயர்ந்த நிலையில் உள்ள சிவத்தலைவி, தாழ்ந்த நிலையில் உள்ள ஆன்மாவின் பால் கொண்டுள்ள கருணையின் உயர்வையும், சிவமே முன்வந்து ஆன்மாவுடன் இணைவதற்கு தயாராக இருப்பதற்கு உரிய பக்குவத்தை ஆன்மா அடைந்திருப்பதையும் திருவருளாகிய தோழி உணரும் தன்மை நாண நாட்டம் அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. ஐந்து பாடல்கள் கொண்டுள்ள இந்த பகுதியின் இரண்டாவது பாடலில், பெருமானை மணிசேர் கண்டன் என்று மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார். அக்கு=எலும்பு; கொழுந்தி=மகள்; அமர்ந்து=விரும்பி; அங்கம்=உடல் உறுப்பு; இணங்கு=இணக்கத்திற்கு உரியவள்;
அக்கின்றவா மணிசேர் கண்டன் அம்பலவன் மலயத்து
இக் குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனம் உடையான்
அக் குன்ற ஆறு அமர்ந்து ஆடச் சென்றாள் அங்கம் அவ்வவையே
ஒக்கின்ற ஆரணங்கே இணங்காகும் உனக்கு அவளே

எலும்பு மாலை அணிந்தவனும் மாணிக்க மணி பதித்தது போன்ற கழுத்தினை உடையவனும் அம்பல வாணனும் ஆகிய பெருமான் வாழும் பொதிகை மலையில் வாழும் குறவர் தலைவனின் மகள், இந்த தினைப் புனத்தினை காக்கும் தலைவி, நீராடச் சென்றுள்ளாள் என்று திருவருளாகிய தோழி நினைத்துக் கொண்டிருக்கையில், சிவமாகிய தலைவி திரும்புவதை தோழி காண்கின்றாள். ஆனால் சிவத்தலைவி புதுப் பொலிவுடன் விளங்குவதைக் காணும் தோழி, தலைவியை வேறோர் தெய்வப் பெண் என்று நினைத்து, அணங்கே என்று அழைத்து, தனது தலைவி அணங்கினை ஒத்த அழகுடையவள் என்று சொல்கின்றாள். தலைவியின் பொலிவுக்கு காரணம், தலைவனை தனி இடத்தில் சந்தித்ததே என்பதை தோழி பின்னர் புரிந்து கொள்கின்றாள். தலைவியை சந்திக்க தலைவன் ஆர்வம் கொண்டுள்ளது போன்று, தலைவியும் தலைவனை சந்திக்க ஆர்வமாக இருந்தாள் என்பதும், சந்தித்த பின்னர், முகமலர்ந்து இருந்தாள் என்பதும் உணர்த்தப் படுகின்றது. சிவத்தை நாடிச் சென்று சந்திக்கும் ஆன்மா அடையும் இன்பத்தை விடவும், ஆன்மாவை சந்திக்கும் சிவம் பெறுகின்ற இன்பம் மிகவும் அதிகமாக உள்ளது என்பதே இந்த பாடலின் உட்கருத்து. எலும்பு மாலைகளும் தரமான மாணிக்கமும் சேர்ந்த கழுத்தினை உடையவரும் தில்லை அம்பலவன் என்று அழைக்கப் படுபவனும் ஆகிய சிவபெருமானது பெரிய மலையாகிய பொதிகையில் வாழும் மலைக் குறவனின் மகளாகிய தலைவி, தமக்கு உரிய வளம் வாய்ந்த தினைப்புனத்தைக் காக்கும் பொறுப்பு உடையவள் ஆவாள். எனவே அந்த தினைப் புனத்தில், பரண் கட்டி தங்கியிருக்கும் தலைவி, தான் நீராடுவதற்காக சென்றுள்ளாள் போலும்; என் முன்னால் தோன்றும் ஆரணங்கே, உனது உடலும் உறுப்புகளும் எனது தலைவியைப் போன்று உள்ளன; எனவே நீ அவளைக் கண்டு செல்வாயாக என்று தான் கண்ட அணங்கினை நோக்கி திருவருளாகிய தோழி சொல்வதாக அமைந்த பாடல்.

மடற்றிறம் அதிகாரத்தின் ஒன்பதாவது பாடலில், மணிவாசக அடிகளார் பெருமானை மணிகண்டன் என்று அழைக்கின்றார். நாண நாட்டம் அதிகாரம் உட்பட முதல் எட்டு அதிகாரங்களில் சொல்லப்படும் கருத்துகளை சுருக்கமாக முன்னர் கண்டோம். ஒன்பதாவது அதிகாரம் நடுங்க நாட்டம் என்பதாகும். சிவத்தின் அருள் நிலையாக தொடர்ந்து உயிர் பால் இருக்கும் தன்மையை திருவருளாகிய தோழி உணர்ந்து கொள்ளுதல் இந்த அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. இதனை அடுத்த அதிகாரம் மடற்றிறல். இந்த அதிகாரம் ஒன்பது பாடல்கள் கொண்டது. தனது காதல் நிறைவேறி திருமணத்தில் முடிய வேண்டும் என்று விரும்பும் ஆன்மாவாகிய தலைவன், தோழியின் உதவியை நாடிய பின்னர், தலைவியும் தன் பால் காதல் கொண்டுள்ளதை ஆன்மாவாகிய தலைவன் தெரிந்து கொள்கிறான். எனினும் காதல் திருமணமாக கனியவில்லை என்ற வருத்தம் அவனுக்கு உள்ளது. எவ்வாறேனும் தனது மனம் கவர்ந்த கன்னியை அடைந்தே தீருவேன் என்ற முடிவினில் இருக்கும் ஆன்மா, மடல் ஏறியாவது தனது காதலை நிறைவேற்றிக் கொள்வேன் என்று சொல்லும் பாடல்கள் அடங்கிய அதிகாரம் மடற்றிறம் என்பதாகும். மடல் ஏறுதல் என்பது பண்டைக் காலத்தில் தலைவன் தனது காதலை நிறைவேற்றிக் கொள்ளக் கையாண்ட வழிகளில் ஒன்று. காதல் நிறைவேறாமல் தான் இறந்துபடும் நிலை ஏற்படுமாயினும் இந்த நிலையைக் கையாண்டு தனது காதலின் தீவிரத்தை பலருக்கும் தலைவன் வழக்கமாக இருந்து வந்தது. பனைமரத்தின் கருக்கு (பனை ஓலைகளை மரத்துடன் பிணைக்கும் பகுதி) கொண்டு மடலால் குதிரை செய்து, தனது காதலியின் உருவத்தை ஒரு துணியில் எழுதி, தனது காதலியின் பெயரையும் தனது பெயரினையும் எழுதி, உடல் முழுவதும் சாம்பல் பூசிக் கொண்டு, எருக்கு மாலை அணிந்தவனாக, எழுதப்பட்ட பிம்பத்தில் உள்ள தலைவியை தான் மணமுடிக்க முடியாத நிலை இருப்பதால், தான் இறந்துபடப் போகின்றேன் என்பதை பறையடித்துக் கொண்டு அறிவித்த வண்ணம் தெருவில் ஊர்வலம் வருதல் மடலேறுதல் என்று அழைக்கப்படும். ஆண்களுக்கு மட்டுமே இது அனுமதிக்கப் பட்டது. பெண்கள் மடலேறுதல் இல்லை. சங்க இலக்கியங்கள் இந்த பழக்கத்தினை குறிப்பிடுகின்றன. தேவாரம் மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடல்களிலும் இந்த குறிப்பு காணப்படுகின்றது. இவ்வாறு மடலேறுவதன் நோக்கமே, இதனைக் காணும் ஊர் தலைவன், அரசன் அல்லது பெரியோர் எவரேனும் தலையிட்டு, தலைவன் மற்றும் தலைவி இருவரும் ஒத்த கருத்தினராக இருந்தால், அவர்களுக்கு திருமணம் செய்வித்து அவர்கள் இருவரும் கூடுவதற்கு வழி வகுப்பர். தலைவனின் கூற்றாக அமைந்துள்ள இந்த பாடலின் பின் பகுதியில், தலைவன் தான் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வதானால், தனக்கு முன்னரே தலைவியும் கடலில் விழுந்து உயிரினை போக்கிக் கொள்ளும் வண்ணம், அவள் தன் பால் வைத்துள்ள காதலும் தீவிரமாக உள்ளது என்று கூறுகின்றான். இதிலிருந்து தலைவன் மற்றும் தலைவி ஆகிய இருவரும் ஒத்த கருத்தினராக இருந்தனர் என்பது உணர்த்தப் படுகின்றது. பைந்நாண் அரவன்=படத்தினை உடைய பாம்பினை, தனது வில்லின் நாணாக கொண்டவன்; பைந்நாண் அரவன் என்ற தொடருக்கு, தனது இடுப்பினில் படமெடுத்தாடும் பாம்பினை அரை ஞாணாக கட்டியவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கடல் வாய்ப்படு=கடலிலிருந்து எழுந்த; மை=கருமை நிறம்; நாண்-நாணும் வண்ணம்; பெருமானின் கழுத்தினில் படர்ந்த கறை, கருமை நிறத்தினும் அடர்ந்த கருமையாக இருந்தது என்று சொல்கின்றார். பொன்=பொன் போன்று மிகவும் உயர்வாக பெருமானால் கருதப்படும் பிராட்டி; முதுதிரை=பழமையான கடல்; அழுந்தினும்= மூழ்கினும்;
பைந்நாண் அரவன் படுகடல் வாய்ப் படு நஞ்சு அமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்த பொன் இம்
மொய்ந்நாண் முது திரை வாயான் அழுந்தினும் என்னின் முன்னும்
இந்நாள் இது மதுவார் குழலாட்கு என் கண் இன்னருளே

தலைவன் மடலேறும் தன்மையை அறியும் திருவருளாகிய தோழி, மடல் ஏறுதலை விலக்குமாறு சொல்லிய பின்னர், தலைவியிடம் சென்று தலைவனின் வேண்டுகோளை எடுத்துக் கூறுதல், குறை நயப்பு கூறல் அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. இதனை அடுத்து வரும் அதிகாரமாகிய சேட்படை அதிகாரம், இருபத்தாறு பாடல்களை உடையது. தன்னிடம் ஆன்மாவாகிய தலைவன் எடுத்துரைத்த வேண்டுகோளை கேட்கும் திருவருளாகிய தோழி, ஆன்மாவின் எண்ணங்களுக்கு மறுப்பு சொல்வது போன்று, ஆன்மா சிவத்தின் பால் கொண்டிருந்த வேட்கையை மேன்மேலும் பெருக்குதல் இந்த அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. இவ்வாறு செய்வதன் நோக்கமே, சிவத் தலைவியின் அருமையை முழுவதுமாக தலைவன் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் களவொழுக்க காலத்தை மேலும் நீட்டிக்காமல் விரைவில் திருமணத்திற்கு இசைய வேண்டும் என்பதாகும். இதனை அடுத்த அதிகாரம் பகற்குறி என்பதாகும். 32 பாடல்கள் கொண்ட இந்த அதிகாரம், தலைவி தலைவனை ஒரு நாள் பகற்பொழுதினில் சந்திக்க ஏற்பாடு செய்வதை உணர்த்துகின்றது. மேலும் இவ்வாறு அடிக்கடி சந்திப்பதை தவிர்த்தும், சிவத்துடன் கூடிய பின்னர் ஆன்மா சிவத்தை விட்டு பிரியாது இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திருவருளாகிய தோழி, ஆன்மா சிவத்தின் பால் கொண்டுள்ள வேட்கையை மேலும் அதிகரிக்கின்றாள்; இதனை அடுத்து வரும் அதிகாரம் இரவுக்குறி. 33 பாடல்கள் கொண்டது. பகற்பொழுதினில் சந்திப்பது அரிதாக உள்ள நிலையில், இரவினில் எவரும் அறியாமல் சந்திக்க முயற்சி செய்வதை பற்றி எடுத்துரைக்கும் அதிகாரம். இதனை அடுத்தது ஒருவழித் தணத்தல் அதிகாரம். இரவு நேரத்தில் சந்திக்க முயற்சி செய்ததால் ஏற்பட்ட பழிச்சொல் குறித்து அச்சம் கொண்ட தலைவன் சில நாட்கள் தலைவியை சந்திக்காமல் தனியாக இருத்தல், ஒருவழித் தணத்தல் அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. இந்த அதிகாரத்தின் பத்தாவது பாடலில் மணிவாசக அடிகளார் பெருமானை கண்டர் என்று அழைக்கின்றார். வனசம்=தாமரை; என்றூழ்=சூரியன்; கருங்கழி=உப்பங்கழி; ஒருங்கு அழி= ஒருங்கே அழிய; அருங்கழி காதம் அகலும்=கடத்தற்கு அரியதாக உள்ள பல காத தூரங்களைக் கடக்கும்; அலந்து=வருந்தி; கண்ணீர்=கள்+நீர்; காதரம்=அச்சம்; திரிபுரத்து அரக்கர்கள் தங்களது பறக்கும் கோட்டைகளில் சென்ற போது, தாங்கள் விரும்பிய இடங்களில் கீழே இறங்கி, அங்குள்ள அனைத்து உயிர்களும் கோட்டைகளின் அடியே சிக்கி ஒருங்கே அழியும் வண்ணம் செய்தமை அனைவர்க்கும் அச்சத்தை உண்டாக்கியது என்பதை, ஒருங்கழி காதர மூவெயில் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார்,
கருங்கழி காதல் பைங் கானலில் தில்லை எம் கண்டர் விண்டார்
ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற ஒற்றைச் சிலை சூழ்ந்து
அருங்கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க் கைகளே

சூரியன் மறைந்தால் தாமரை மலர்கள் கூம்புவது இயற்கை; தாமரை மலர்கள் கூம்பி இருக்கும் நிலையினை, கைகள் கூப்பி வணங்குவதாக சிவத்தலைவி கற்பனை செய்கின்றாள் என்று இங்கே சொல்லப் படுகின்றது. பல காத தூரங்களைக் கடந்து சூரியன் மீண்டும் வந்து தோன்ற வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தாமரை மலர்கள் கைகூப்பி வணங்குகின்றன என்று அடிகளார் கூறுகின்றார். சூரியன் தோன்றுவதை மலையிலிருந்து தோன்றுகின்றான் என்றும் சூரியன் மறைவதை கடலில் விழுகின்றான் என்றும் சொல்வது இலக்கிய மரபு. இந்த பாடலில் மேரு மலையைக் கடந்து, பல காத தூரங்கள் தாண்டி, சூரியன் வருவான் என்ற நம்பிக்கையில் தாமரை மலர் கைகூப்பி இருப்பதாக சொல்லப் படுகின்றது. உப்பங்கழிகளிலும் பசுமையான கானலிலும் காணப்படும் தாமரை மலர்கள், மேரு மலையினையும் எண்ணற்ற தூரத்தையும் கடந்து தங்கள் காதலனாகிய சூரியன் வரவேண்டும் என்று, தேனாகிய கண்ணீரைச் சிந்தி, காத்திருக்கின்றன. இந்த சூரியன் கடந்து வரவிருக்கும் மேரு மலையானது, தில்லைச் சிற்றம்பலத்தில் உறையும் இறைவன், வேத நெறியிலிருந்து சைவ நெறியிலிருந்து விலகிச் சென்று அனைவர்க்கும் பகைவர்களாக விளங்கியவரும் பல இடங்களுக்கும் பறந்து சென்று தாம் பறந்து சென்ற கோட்டைகளின் கீழே நசுக்கி பல உயிர்களையும் கொன்று அச்சம் விளைவித்தவர்களும் ஆகிய திரிபுரத்து அரக்கர்களையும் அவர்களது மூன்று கோட்டைகளையும் எரித்து அழிப்பதற்கு பயன்படுத்திய சிறப்பினை உடையதாகும். இவ்வாறு தாமரை மலர்கள் கைகூப்பி வேண்டுவதை, தனது சார்பில், தனது தலைவன் விரைந்து வர வேண்டும் என்று வேண்டுவதாக சிவத்தலைவி கருதுவதாக இந்த பாடல் உணர்த்துகின்றது. ஆன்மா சிவத்தின் அருள் தன்மீது பாடிய வேண்டும் என்று விரும்புவது போன்று, சிவமும் ஆன்மா தன்மீது அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புகிறது என்பதே இந்த பாடல் உணர்த்தும் உட்பொருளாகும்.

இவ்வாறு ஆன்மா சில நாட்கள் தலைவியை சந்திக்காமல் இருந்த பின்னர், தலைவிக்கும் தன்பால் நாட்டம் இருப்பதை அறிந்து கொள்ளும் தலைவன், தலைவியை அவளது பெற்றோருக்கு தெரியாத வண்ணம் தன்னுடன் தனது ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து அந்த முடிவினை செயல் படுத்துகின்றான். இதனை விவரிக்கும் அதிகாரம் உடன்போக்கு என்பதாகும். 56 பாடல்கள் கொண்டது இந்த அதிகாரம். இந்த அதிகாரத்தின் ஆறாவது பாடலில் மணிவாசக அடிகளார் பெருமானை கண்டர் என்று அழைக்கின்றார். மை தயங்கும்=கருமை நிறம் பொருந்திய; வாரி= கடல்; திரை=அலைகள்; கைதை=தாழை மடல்; புல்குதல்=தழுவிக் கொள்ளுதல்; மருங்குல்=இடுப்பு; சிவத் தலைவியின் செயல்களை கூர்ந்து கவனிக்கும், தோழியாகிய திருவருள், தலைவியின் பெற்றோர் சிவத்தலைவி ஆன்மாவினை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை எனினும், தலைவி, தலைவனை மணமுடிக்க ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்து, உடன்போக்கு வழியே சிறந்தது என்பதை தலைவனுக்கு உணர்த்துகிறாள்.
மை தயங்கும் திரை வாரியை நோக்கி மடல் அவிழ் பூங்
கைதை அங்கானலை நோக்கிக் கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை
பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள்
பை தயங்கும் அரவம் புரையும் அல்குல் பைந்தொடியே

கருமை நிறம் படர்ந்த கடலையும், இதழ் விரியாமல் நிற்கும் தாழை மடல்களைக் கண்டும் கண்ணீர் வடித்து, தனது பெற்றோர் தனது காதல் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காததை நினைத்து, தனது ஆற்றாமையை தலைவி உணர்த்துகிறாள். மேலும் நீலகண்டப் பெருமான் உறைகின்ற தில்லை நகரில் வாழும் தனது தோழியர்களைத் தழுவிக் கொண்டு, தனது நிலையை சொல்லி கண்ணீர் வடிக்கின்றாள். சிவத்தலைவியின் இந்த செயல்கள், ஆன்மாவாகிய தலைவனுடன் உடன் செல்வதற்கு துணிந்து விட்டாள் என்பதை உணர்த்துகின்றது. பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லார் என்ற தொடர், தில்லையில் வாழும் தலைவியின் தோழியர்களை குறிக்கின்றது. இடை இருப்பது பொய்யோ என்று அடுத்தவர் நினைக்கும் வண்ணம், மிகவும் நுண்ணிய இடையினை உடைய மகளிர் என்பது பொருள். நல்லார் என்று குறிப்பிட்டு, தலைவியின் காதலை ஆதரிக்கும் தோழியர் என்பதை உணர்த்துகின்றார். புரை=போன்ற, ஒத்த; பைந்தொடி=பசுமையான கொடி போன்ற தலைவி; பை தயங்கும் அரவம் புரையும்=பாம்பின் படம் போன்று புடைத்து எழுந்த மார்பகங்கள்; இவ்வாறு உணர்த்துவதன் மூலம், தோழியாகிய திருவருள் தலைவனிடம், இடைவிடாது தலைவன், தலைவியை தன்னுடன் வருமாறு, அவர்களது பெற்றோர் அறியாத வண்ணம் வருமாறு, அழைக்க வேண்டும் என்ற சேதியை சொல்கின்றாள். சிவம் ஆன்மாவின் மீது அன்பு செலுத்த விருப்பம் கொண்டுள்ளது என்றும், ஆன்மா தனது இடையறா அன்பினை தலைவிக்கு தெரிவித்து, சிவத் தலைவியின் அன்பை பெறவேண்டும் என்பதே இந்த பாடலின் உட்கருத்து.

இதே அதிகாரத்தின் 17ஆவது பாடலிலும் மணிவாசக அடிகளார் பெருமானை, மணிகண்டர் என்று அழைக்கிறார். முன்னோன்=சிவபெருமான்; உன்னாதவர்=பெருமானை நினைத்து வணங்காதவர்; ஆவி=உயிர்; விழை=விரும்புதல்; எனது உயிரே அன்னாள் என்று தோழியாகிய திருவருள், சிவத் தலைவியை தனது உயிரினும் மேலாக கருதுவது இங்கே உணர்த்தப் படுகின்றது. அந்த சிவத் தலைவி, ஆன்மாவை தனது உயிராக கருதுவதும் தோழி வாயிலாக இங்கே சொல்லப் படுகின்றது. எனவே தான் திருவருளாகிய தோழி, தலைவியையும் தலைவனையும் ஒன்று சேர்த்து வைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. எங்கும் இருள் பரந்து இருக்கும் இரவு நேரத்தில், குறிப்பிட்ட மகிழ மரத்தின் அடியில் தலைவனை, தலைவியை எதிர் நோக்கி காத்திருக்குமாறு குறிப்பு தெரிவிக்கப் படுகின்றது. எவரும் அறியாமல் தலைவனும் தலைவியும் ஊரை விட்டு செல்வதற்கு துணையாக இரவுக் காலம் இருப்பதால், இந்த இரவு பெரிதும் விரும்பப் படுகின்றது என்றும் தோழி சொல்கின்றாள். எனது உயிராகிய சிவத்தலைவியின் உயிராக விளங்கும் தலைவனே என்று அழைக்கும் திருவருளாகிய தோழி, பொன் போன்ற மகிழம் பூ விழச் செய்து நீ எழுப்பும் ஓசையினை, அடையாளமாகக் கொண்டு தலைவி, மகிழ மரத்தடிக்கு வந்து சேர்வாள் என்று உணர்த்துகின்றாள். இவ்வாறு இரு சாரராலும் விரும்பப்படும் இருள், அனைவர்க்கும் முன்னோனும் மாணிக்கம் பதிக்கப்பட்டது போன்ற கழுத்தினை உடையவனும் ஆகிய அம்பலத்தானை, தமது முடி சாய்த்து வணங்காத மனிதர்களைப் படர்ந்து காணப்படும் வினை போன்று அடர்ந்து காணப்படுகின்றது என்று கூறுகின்றாள். இந்த பாடலில் இருளாகிய அறியாமை, ஆன்மா சிவத்துடன் இணைவதற்கு உதவியாக இருப்பதாக சொல்லப் படுகின்றது. உயிருடன் பிணைந்துள்ள வினைகளை உயிர் நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். இவ்வாறு உயிர்கள் வினைகளை நுகர்ந்து கழிப்பதற்கு ஏதுவாக, உயிர் தனு கரண புவன போகங்களில் ஆழ்த்தப் படுகின்றது. இவ்வாறு ஆழ்த்தப் படும் போது ஆணவமலமாகிய அறியாமை, செயல்பட்டு, வினைகளின் பயனாக இன்ப துன்பங்களை அனுபவிக்க வழி வகுக்கின்றது. ஒரு வகையில் ஆணவ மலம் உயிருக்கு செய்யும் உதவியாக கருதப் படுகின்றது என்பதே இந்த பாடலின் உட்பொருள்.
முன்னோன் மணிகண்டம் ஒத்தவன் அம்பலம் தம் முடி தாழ்த்து
உன்னாதவர் வினை போல் பரந்து ஓங்கும் எனது உயிரே
அன்னாள் அரும் பெறல் ஆவி அன்னாய் அருள் ஆசையினால்
பொன்னார் மணி மகிழ்ப் பூ விழ யாம் விழை பொங்கிருளே

உடன்போக்கு நடைபெற முடியாத சூழ்நிலை நிலவினால், தலைவன் மற்றும் தலைவியின் இடையே மலர்ந்த காதல் விரைவில் திருமணத்தில் முடிய வேண்டும் என்று தோழியாகிய திருவருள் விரும்புவாள். தலைவனிடம் விரைவில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று, பல விதமான உபாயங்களை கையாண்டு, வலியுறுத்துவாள். இந்த விவரங்கள் வரைவு முடுக்கம் என்ற அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. வரைவு என்றால் திருமணம் என்று பொருள். வரைவு முடுக்கத்தின் விளைவாக, திருமணம் மற்றும் திருமண வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளினை ஈட்ட ஆன்மா விழையும். இந்த விழைவின் பயனாக, ஆன்மா பொருள் தேட முயற்சி செய்ய, அந்த முயற்சி ஆன்மா மற்றும் சிவத்தின் இடையே பிரிவினை ஏற்படுத்தும். இந்த பிரிவு வரைபொருட்பிரிதல் அதிகாரத்தில் சொல்லப் படுகின்றது. இந்த அதிகாரத்தில் 33 பாடல்கள் காணப்படுகின்றன. இந்த அதிகாரத்தின் ஏழாவது பாடலில் பெருமானை அடிகளார் மணிகண்டன் என்று அழைக்கின்றார். திருமணத்திற்கான பொருள் தேடும் பொருட்டு, தன்னிடம் சொல்லாமல் பிரிந்து சென்ற தலைவன் பற்றி உணரும் தலைவி, இந்த பிரிவு திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஏற்படும் பிரிவு என்பதை, உணர்கின்றாள். தவிர்க்க முடியாத பிரிவு என்பதை தனது நெஞ்சினுக்கு உணர்த்தி, நெஞ்சைத் தேற்றும் பாடல். திருந்தும்= மறைவாக சந்திக்கும் தவறினை தவிர்த்து முறையாக சந்தித்தல்; கடன் நெறி=காதலனின் கடமை, காதலை திருமணம் வரை கொண்டு செல்லும் கடமை; சிவத்தின் மேல் வைத்துள்ள அன்பு காரணமாக, ஆன்மா தான் சிவத்தை அடைவதற்கான வழிமுறையை ஆராய்ந்து, அதற்காக தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதே இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து.
அருந்தும் விடமணியாம் மணிகண்டன் மற்று அண்டர்க்கு எல்லாம்
மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல்
திருந்தும் கடன் நெறி செல்லும் இவ்வாறு சிதைக்கும் என்றால்
வருந்தும் மட நெஞ்சமே என்னமாம் இனி வாழ்வகையே

தான் உட்கொண்ட விடத்தினை, கருமணியாக தனது கழுத்துக்கு அணிகலனாக மாற்றி, அழகுடன் திகழும் நீலகண்டன் பெருமான். அவன் தேவர்களுக்கும் ஏனையோருக்கும் பிறவிப் பிணையினைத் தீர்க்கும் மருந்தாகவும் பேரின்பத்தை வழங்கும் அமிர்தமாகவும் திகழும் பெருமான், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவன் ஆவான். அத்தகைய சிவபெருமானை வாழும் தில்லையை வாழ்த்தும் தலைவன், மறைந்து சந்திக்கும் இந்த நிலையினை மாற்றி நிலையான திருமண வாழ்க்கைக்கு அடிகோலும் பொருட்டு பொருள் தேடி வர முனைந்ததால் நம்மிடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரிவினால் நமது காதல் கெட்டு விடுமோ என்ற சந்தேகம் கொள்கின்ற மனமே, பொருள் தேடிப் பிரிந்து செல்வதைத் தவிர்த்து, நமது காதல் திருமணத்தில் முடிவதற்கான வழி ஏதேனும் இருந்தால் சொல்வாயாக என்று சிவத்தலைவி தனது நெஞ்சினுக்கு உணர்த்தி, நெஞ்சத்தை தேற்றுவதாக அமைந்த பாடல்.

பொருள் தேடிச் சென்ற தலைவன், திருமணம் செய்து கொள்வதற்கும் இல்வாழ்க்கை இனிதே நடத்தவும் தேவையான பொருளை ஈட்டிக் கொண்டு வந்ததை அறியும் திருவருளாகிய தோழி, இந்த செய்தியை தலைவிக்கும் மற்றவர்க்கும் சொல்லும் பாடல்கள் அடுத்து வரும் மணம் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் காணப்படுகின்றன. இந்த அதிகாரம் ஒன்பது பாடல்களைக் கொண்டது. இந்த அதிகாரத்தின் மூன்றாவது பாடலில், மணிவாசக அடிகளார், காரியல் கண்டர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சீரிய=பெருமை மிகுந்த; காரியல்=கருமை படர்ந்த; வாட்கண்ணி= வாள் போன்று கூரிய நுனி கொண்ட கண்கள் உடைய தலைவி; எண்=எண்ணம், கருத்து; வேரி= நறுமணம்; கற்பு=களவொழுக்கத்தை விடுத்து கற்பின் வழி நிற்றல், திருமண வாழ்க்கை; சிவத்தின் திருவுள்ளக் கருத்தின் படியே உயிர் நடந்து கொள்ளும் என்பதே இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து. இந்த பாடல் தலைவியின் தாய்க்கு, தோழி நிலையை உணர்த்துவதாக அமைந்த பாடல். வண் தில்லை=நீர் வளமும் நில வளமும் கொண்ட செழிப்பான தில்லை; சந்து=நிறம்;
சீரியல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையால்
காரியல் வாட்கண்ணி எண் அகலார் கமலம் கலந்த
வேரியும் சந்தும் வியல் தந்தெனக் கற்பின் நிற்பர் அன்னே
காரியல் கண்டர் வண் தில்லை வணங்கும் எம் காவலரே

தாயே, கரிய கண்டத்தினை உடையவனும் வளம் பொருந்திய தில்லை நகரினில் உறைபவனும் ஆகிய தில்லைக் கூத்தனை வணங்கும் பண்பினனாகிய தலைவன், தலைவி பால் மிகுந்த அன்பு வைத்துள்ளமையால், பெருமை மிகுந்த உடலும் உயிரும் ஒன்றி இருப்பது போன்று, தலைவியுடன் இணைந்து வாழ்வான்; கரியதும் கூர்மை வாய்ந்து அழகுடன் காணப்படுவதும் ஆகிய கண்களை உடைய உமது மகளின் கருத்தின் வழியே நடக்கும் தலைவன், உமது பெண்ணின் எண்ணத்திற்கு மாறாக ஏதும் செய்ய மாட்டார். அவர்கள் இருவரும் அழகிய நிறத்துடன் காணப்படும் மலருடன் நறுமணம் பொருந்தி இருப்பது போன்று, ஒருவருக்கொருவர் இசைந்தவராக, சிறந்த இல்வாழ்க்கை நடத்துவார்கள்; எனவே அவர்களது திருமணத்திற்கு இசைவு தர வேண்டும் என்று தலைவியின் தாயிடம் தோழி வேண்டுகின்றாள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இவ்வாறு சிறப்பாக இல்வாழ்க்கை வாழும் தம்பதிகள், பல காரணங்களால் மீண்டும் பிரிய நேரிடுகிறது. அத்தகைய பிரிவுகள் கல்வி, காவல், தூது, வேந்தனுக்கு துணை, பொருள் ஈட்டல், பரத்தை ஆகிய காரணங்களால் நிகழ்கின்றன. இவை முறையே ஒதற்பிரிவு, காவற்பிரிவு, பகை தணிவினைப் பிரிவு, வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவு, பொருள் வயின் பிரிவு, பரத்தையர் பிரிவு ஆகிய அதிகாரங்களில் சொல்லப் படுகின்றது. வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவு பதினாறு பாடல்களைக் கொண்டது. தனது உற்ற நண்பனாகிய வேந்தன், பகை அரசனால் வலிமை இழந்து துன்பப்படும் போது அந்த துன்பத்தை நீக்கும் பொருட்டு, தலைவன் வேந்தனுக்கு துணையாக செல்லும் விவரங்களை எடுத்துரைக்கும் பாடல்கள் கொண்ட பகுதி. இந்த அதிகாரத்தின் பத்தாவது பாடலில், மணிவாசக அடிகளார் பெருமானை, கொண்டல் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். திக்கு இலங்கு= திசைகளில் விளங்கும்; இலங்கு=பொருந்தி விளங்கும்; நாண்=மார்பில் அணியும் ஒரு வகை அணிகலன், பெருமான் தனது மார்பில் அணிந்துள்ள பூணூலைக் குறிக்கின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே; தோன்றி=ஒரு வகை மலர்; கார் காலம் வந்து விட்டதை சிவத்தலைவி தனது தோழியாகிய திருவருளுக்கு உணர்த்தி, இந்த கார் காலத்தில் தலைவனை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதே என்று வருந்தும் பாடல். காந்தள் பூக்களும் தோன்றி மலர்களும் பூத்தல், கார் காலத்தின் அடையாளம். இந்த காட்சி பொய்யாக இருக்கலாகாதா என்று ஏங்குகின்றேன்; ஆனால் இந்த காட்சி மெய்யாக உள்ளதே என்று தலைவி ஏங்குகின்றாள். ஆன்மா சிவத்துடன் இணையும் பக்குவத்தை அடைந்து அந்த காலம் கனிந்த பின்னரும், ஆன்மா தன்னுடன் கூட முடியாத நிலை கண்டு சிவம் வருந்தும் என்பதே இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து. கொண்டல்=மேகம்; பாம்பை ஒத்து காந்தள் மலர் மலர்ந்தது; பெருமானின் கையில் இருக்கும் தீயினை ஒத்து தோன்றி மலர் மலர்ந்தது. காந்தள் மலருக்கு பாம்பின் படமும், அந்த மலரின் காம்பினுக்கு பாம்பின் உடலும், தோன்றி மலருக்கு பெருமானின் கையில் உள்ள தீப்பிழம்பும், அந்த மலரின் காம்பினுக்கு பெருமானின் திருக்கையும் உவமையாக சொல்லப் பட்டுள்ளன. இறைவனுக்கு எட்டு திசைகளும் தோள்களாக இருப்பதால், திக்கு இலங்கு திண் தோள் என்று கூறுகின்றார். உலகமே பெருமானது உருவம் என்றும் கூறுவார்கள். தேன் போன்று இனிய தோழியே, வீரக்கழல் அணிந்தவனும் செந்தீயின் நிறத்தில் திருமேனி உடையவனும் சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவனும் எமது தலைவனும் ஆகிய பெருமான், எட்டு திசைகளும் தனது தோள்களாக விளங்கும் வண்ணம் பேருருவம் கொண்டவன்; அவன் மேகம் போன்று கருமை படர்ந்த கழுத்தினை உடையவன்; அவன் தனது காதினில் அணிந்துள்ள குழையாகவும் மார்பினில் அணிந்துள்ள முப்புரி நூலாகவும் அமைந்துள்ள பாம்பினைப் போன்று காணப்படும் நறுமணம் உடைய காந்தள் மலர்களும், பெருமான் தனது கையில் ஏந்தியுள்ள தீப்பிழம்பினைப் போன்ற தோன்றி மலர்களும் மலர்ந்துள்ள தன்மை கார் காலத்தின் வரவை உணர்த்துகின்றன. இந்த காட்சி பொய்யாக இருந்து கார் காலம் வாராமல் இருக்க வேண்டுமே என்று எனது மனம் ஏங்குகின்றது. ஏனெனில் கார் காலத்தில், எனது தலைவனை பிரிந்து இருப்பது எனக்கு மிகவும் கொடுமையாக இருக்கும். ஆனால் என் செய்வது, இந்த காட்சி உண்மையான காட்சியே ஆகும். இந்த கார் காலத்தில் தலைவனை விட்டு பிரிந்து இருப்பது எனக்கு தாங்கவொண்ணா துயரத்தினை தருகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தேன் திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் சிற்றம்பலத்து எம்
கோன் திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் குழை எழில் நாண்
போன்று இக் கடி மலர்க் காந்தளும் பூண்டவன் கை அனல் போல்
தோன்றிக் கடி மலரும் பொய்ம்மையோ மெய்யில் தோன்றுவதே

இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலில் மணிவாசக அடிகளார், பெருமானின் கரிய மிடறு போன்று மேகம் இருப்பதாக கூறுகின்றார். விடை=இடபம், காளை வாகனம்; பொருந்தல் திருந்த=போர் புரியும் செயலை திருத்திக் கொண்ட; கார் காலத்தில் போர் புரிவதை பண்டைய நாட்களில் தவிர்த்தனர் போலும். எனவே கார் காலம் தொடங்கி விட்டமையால், உனது தலைவனின் தேர் விரைவில் இந்த ஊருக்கு திரும்பி விடும் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறும் முகமாக அமைந்த பாடல். ஆன்மா சிவத்துடன் இணைவதற்காக பக்குவம் அடைந்தமையாலும் அதற்குரிய காலம் வந்தமையாலும் சிவத் தலைவியின் அருளைப் பெறுவதற்காக ஆன்மா விரைவில் வந்து விடும் என்று திருவருளாகிய தோழி, தலைவிக்கு உணர்த்துகின்றது என்பதே இந்த பாடலின் உட்பொருள். திருமால் காண முடியாமல் தவித்த வீரக்கழல் பொருந்திய திருப்பாதத்தை உடையவன் சிற்றம்பலவன். அவன் பண்டைய நாளில், திருமால் இடபமாக மாறிய போது அந்த இடபத்தை தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்றான். அந்த பெருமானின் கரிய கண்டம் போன்று கருத்த மேகங்கள் வானில் சூழ்ந்து கார் காலத்தின் வருகையை அறிவிக்கின்றன. ஒன்றுக்கொன்று சண்டை இடுவது போன்று, கூரிய வேல் போன்று காணப்படும் கண்களை உடைய தலைவியே, கார் காலம் தொடங்கியதால் மன்னர்கள் தங்களக்குள் போரிடுவதை நிறுத்திக் கொண்டனர். எனவே எந்நேரமும் தலைவனின் தேர் ஊருக்கு திரும்பிவிடும், அந்த தேர் நமது இல்லத்தின் முன்னே தோன்றி உனது கவலை களையப்படும் என்று தோழி சொல்வதாக அமைந்த பாடல்.
திருமால் அறியாச் செறி கழல் தில்லைச் சிற்றம்பலத்தெம்
கருமால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண்டிசையும்
வருமால் உடன் மன் பொருந்தல் திருந்த மணந்தவர் தேர்
பொருமால் அயில் கண் நல்லாய் தோன்றும் நம் பொன்னகர்க்கே

நூலின் இறுதி அதிகாரமாகிய பரத்தையற்பிரிவு அதிகாரம் 49 பாடல்களைக் கொண்டது. பரத்தை பால் நாட்டம் கொண்டு, இடையில் சில நாட்கள் தலைவியை விட்டுப் பிரிந்திருந்த தலைவன் இல்லம் திரும்பியதால் தலைவி மகிழ்ச்சி அடைவதை உணர்த்தும் பாடல்கள் கொண்டவை. பரத்தை என்று சிவபெருமானைத் தவிர்த்த சிறு தெய்வங்கள் குறிப்பிடப் படுகின்றன. இந்த பதிகத்தின் 33வது மற்றும் 34வது பாடல்களில் பெருமானை மணிகண்டர் என்றும் மை கொண்ட கண்டர் என்றும் மணிவாசக அடிகளார் அழைக்கின்றார். தலைவன் இல்லம் திரும்பி விட்டான் என்று புலப்படுத்தும் தோழிக்கு, தலைவி அளிக்கும் பதிலாக அமைந்துள்ள பாடல். தனக்கு குழந்தை தந்த தலைவன், குழந்தை வளர்ந்து நடை பழகிக் கொண்டு சிறு தேர் உருட்டி விளையாடும் காலம் வரை வாராது இருந்தான் என்பதை தலைவி உணர்த்துகின்றாள். உடைமணி=இடுப்பில் கட்டும் அரை ஞாண்; உலாத்தரும்=உலாவும்; நடைமணி= மகன்; தோகை அன்னார்=மயில் போன்ற அழகினை உடைய தோழியர் கூட்டம்; முத்துப் போன்று ஒளி பொருந்திய பற்கள் உடைய தோழியே, ஒலிக்கும் சிறுமணியை இடுப்பினில் கட்டிக் கொண்டு சிறு தேர் உருட்டிக் கொண்டு நடை பயலும் வயதினை அடைந்த தனது மகனை இந்நாள் பார்க்க வாராத தலைவன் இன்று தான் வந்துள்ளான். இன்று தான் அவருக்கு எமது வீட்டு வாசல்படி கண்ணுக்கு தெரிந்தது போலும். இது தான் அவன் நம் பால் காட்டும் அன்பின் தன்மையா என்ற கேள்வி தலைவியால் கேட்கப் படுகின்றது. நான்முகனும் திருமாலும் காணமுடியாதவரும் இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவரும் நீலகண்டரும் ஆகிய பெருமான் உறைகின்ற செழிப்பு வாய்ந்த தில்லை நகரில் வாழும் தோழியரே, மயில் போன்ற அழகிய சாயலை உடையவர்களே, இந்நாள் வரையில், எனது தலைவன் பரத்தையுடன் கூடி இருந்து என்னை விட்டு பிரிந்து இருந்தது ஏன் என்று கேட்கின்றாள். ஆன்மா பிற தெய்வங்களை நாடியிருந்து தன்னை மறக்கும் நிலையில் இருப்பதை சிவம் ஏற்றுக் கொள்ளாது என்றும் ஆன்மாவின் அந்த தன்மை குறித்து சிவம் வருத்தம் அடையும் என்பதே இந்த பாடலின் உட்கருத்து.
உடைமணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத் தரும் இந்
நடை மணியைத் தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா
விடை மணி கண்டர் வண் தில்லை மென் தோகை அன்னார்கள் முன் நம்
கடைமணி வாள் நகையாய் இன்று கண்டனர் காதலரே

இதற்கு அடுத்த பாடலையும் நாம் இங்கே சிந்திப்போம். மேற்கண்ட பாடலின் தொடர்ச்சியாக இந்த பாடல் காணப்படுகின்றது. அதே இல்லத்தின் வாசலில் வந்து நிற்கும் இசைப் பாணன், தலைவன் பற்றிய நற்பண்புகளை சொல்லியவாறு ஏதோ வேண்டி நிற்கின்றான். அதனைக் காணும் தலைவிக்கு கோபம் வருகின்றது. தனது தலைவன் பற்றியும் அவன் தன் பால் அன்பின் தன்மை பற்றியும் நன்கு அறிந்த தன்னிடம் தலைவன் குறித்து பொய்யான செய்திகள் ஏதும் சொல்ல வேண்டா என்றும் அத்தகைய செய்திகள் சொல்வது கொல்லர் தெருவில் ஊசி விற்கும் முயற்சிக்கு சமம் என்பதால் தோல்வியில் முடியும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றாள். ஆன்மாவின் தன்மையை முற்றிலும் அறிந்த சிவத்திடம் எவரும் மாறாக சொல்ல முடியாது என்பதே இந்த பாடலின் உட்கருத்து. ஆத்தின்னி=ஆ உரித்து தின்றுழலும் புலையர்; கருமை நிறம் கழுத்தினில் பொருந்திய சிவபெருமானின் தில்லையை சூழ்ந்த ஊராகிய தலைவன், என்னிடத்தில் உண்மையாக இருப்பவன் என்று புலையனாகிய பாணன் நீ சொல்லவும் வேண்டுமோ, என்னிடத்தில் நீங்காத அன்பு உடையவன் தலைவன் என்பதை சிவத் தலைவியாகிய நான், நன்றாக அறிவேன்; உண்மை நிலை இவ்வாறு இருக்க, கொல்லன் தெருவில் ஊசி விற்பது போன்று, என்னிடமே உண்மைக்கு புறம்பாக தலைவனின் நிலை பற்றி சொல்ல விழைகின்றாயே இது என்னிடம் செல்லுமா என்று கேலியாக தலைவி பேசுகின்றாள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இல்லம் திரும்பிய தலைவன், தாங்கள் இருவரும் பண்டைய நாட்களில் நெருங்கி இருந்த தன்மையை நினைவு கூர்ந்து தலைவிக்கு எடுத்து உரைக்க, தலைவியும் ஊடல் தீர்க்கப் பெற்று, தலைவன் பால் மிகுந்த அன்புடன் சேர்ந்து இனிதே இருந்தாள் என்றும், மகிழ்ச்சி அடைந்த தலைவன் பல பரிசுப் பொருட்களை தலைவியைச் சார்ந்தோர்க்கு அருளியதை அனைவரும் கொண்டாடினர் என்றும் இந்த நூலினை அடிகளார் முடிக்கின்றார். சிவம் தன்னை ஏற்றுக் கொள்வதை புரிந்து கொள்ளும் ஆன்மா மிகுந்த மகிழ்ந்து அடைந்து, மெய் தானரும்பி விதிர்விதிர்த்து கை தான் தலை வைத்து கண்ணீர் மல்கி பொய்யினைத் தவிர்த்து, பெருமானின் விரையார் கழற்களைப் பற்றிக்கொண்டு, சிவத்தைப் போற்றும் கொள்கையிலிருந்து தவறாமல் வாழ்கின்றது என்பதே இந்த நூல் உணர்த்தும் கருத்து.
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின் வாய்
மெய் கொண்ட அன்பினர் என்பதென் விள்ளா அருள் பெரியர்
வை கொண்ட ஊசி கொள் சேரியின் விற்றெம் இல் வண்ணவண்ணப்
பொய் கொண்டு நிற்கல் உற்றோ புலை ஆத்தின்னி போந்ததுவே

உயர்கொடியாடை என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.2.8) திருமாளிகைத் தேவர், பெருமானை, நீலகண்டத்து என் அமுதே என்று அழைக்கின்றார். கணி=எண்ணத்தக்க; விசிறு கரம்= வீசியாடும் கை: துடி=உடுக்கை; விடவாய்=விடத்தைத் தனது வாயினில் கொண்டுள்ள பாம்பு; நெருப்புப் பிழம்பினைத் தனது கையில் ஏந்தியவாறு கைகளை வீசி நடனமாடும் அழகும், முன் கையில் கங்கணமாக பாம்பு திகழ்கின்ற தன்மையும், அபயம் காட்டும் சிவந்த கையும் பொருந்திய பெருமானின் கூத்தினைக் காணும் அடியார்களின் பிறவிப்பிணி கெட்டுவிடும் என்று இந்த பாடலில் திருமாளிகைத் தேவர் கூறுகின்றார். அடர்ந்த கருநீலம் நிறத்து மணி பதிக்கப்பட்டது போன்று ஆலகால விடம் தேக்கப்பட்டதால் ஏற்பட்ட கறை கழுத்தினில் படர்ந்துள்ளது என்றும் இந்த அழகிய கோலத்தைக் கண்ட தனது அறிவு, அந்த கோலத்தை விட்டு அகலாமல் பொருந்தி உள்ளது என்றும் கூறுகின்றார்.
கணிஎரி விசிறுகரம் துடி விடவாய்க் கங்கணம் செங்கை மற்றபயம்
பிணிகெட இவை கண்டுன் பெருநடத்திற் பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்
திணிமணி நீலகண்டத்து என் அமுதே சீர்கொள் சிற்றம்பலக் கூத்தா
அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே

தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (9.3.10) திருமாளிகைத் தேவர், நீலகண்டன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் தாயின் கூற்றாக அமைந்த அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். கூத்த பிரானின் நினைவில் தோய்ந்திருக்கும் தனது மகள், பெருமான் பால் தான் கொண்டிருந்த பித்தம் தலைக்கேறியவளாக எவ்வாறு பிதற்றித் திரிகின்றாள் என்று இந்த பாடலில் தாய் கூறுவதாக அமைந்த அகத்துறைப் பாடல்.
திருநீறிடா உருத் தீண்டேன் என்னும் திருநீறு மெய்த்திரு முண்டம் தீட்டிப்
பெருநீல கண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றிப் பெருந் தெருவே திரியும்
வருநீரருவி மகேந்திரப் பொன்மலையில் மலைமகளுக்கு அருளும்
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

கருவூர்த்தேவர் களந்தை ஆதித்தேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.9.6) நீலமே கண்டம் என்று குறிப்பிடுகின்றார். நித்திலம்=முத்து; நிரைத்து=வரிசையாக உள்ள நிலை; வரிசையாக முத்துக்கள் அடுக்கப்பட்டது போன்று பெருமானின் முறுவல் காணப் படுகின்றது என்று கூறுகின்றார்.பெருமானின் திருமுகம் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது என்பதை உணரும் அடியார்கள், பெருமானின் திருக்கோலம், அச்சோ பேரழகாக உள்ளதே என்று வியப்பினில் ஆழ்ந்து, மனம் குழைந்து உருகுவார்கள் என்று கருவூர்த்தேவர் இந்த பாடலில் கூறுகின்றார். வெறும் விடத்தினை மட்டும் உட்கொண்ட ஒருவரின் உடல் இத்துணை அழகாக எவ்வாறு திகழ்கின்றது என்ற வியப்பு காண்போரின் உள்ளத்தில் ஓங்கியிருப்பதாக கூறுகின்றார். அச்சோ= வியப்பினை குறிப்பிடும் சொல்.
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவே
போலுமே முறுவல் நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்டது
ஆலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே

கீழ்க்கோட்டூர் மணியம்பலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.10.2) கருவூர்த் தேவர் பெருமானின் நீலகண்டத்தை குறிப்பிடுகின்றார். இந்த பாடலும் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். மொழுப்பு=முடி; சுழியம் என்பது சூழியம் என்ற சொல்லின் திரிபு; சூழியம்=உச்சிக் கொண்டை; உகளும்=துள்ளிக் குதிக்கும்; பழனம்=வயல்கள்; கெழுவு=பொருந்திய; கம்பலை=ஆரவாரம்; மைந்தன்= வலிமை உடையவன்:
துண்ட வெண் பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளும் நீர்ப் பழனம் கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்
வண்டறை மணியம்பலத்துள் நின்றாடும் மைந்தன் என் மனம் கலந்தானே

கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.13.6) கருவூர்த் தேவர் பெருமானை நீலகண்டனே என்று அழைக்கின்றார். அண்டங்களை பெருமானின் திருவுருவத்துடன் ஒப்பிடுகையில் அண்டங்கள் அணு போன்று சிறியதாக உள்ளன என்று சொல்லும் வண்ணம் மிகவும் பெரிய உருவத்தை உடையவன் பெருமான் என்றும், பெருமானின் திருவுருவத்துடன் ஒப்பிடுகையில் அண்டங்கள் அணு போன்று மிகவும் சிறிய அளவில் தோன்றுகின்றன என்று அண்டங்களின் சிறுமையையும் இந்த பாடலில் கருவூர்த் தேவரால் உணர்த்தப் படுகின்றது. ஊண்=தான் நுகர்ந்து கழிக்கும் வினைகள்; தான் நுகர்ந்து கழிக்க வேண்டிய வினைகளை, பெருமான் தான் எடுத்துக் கொண்டு தன்னை உய்விக்க வேண்டும் என்று கருவூர்த் தேவர் கோருகின்றார். எரித்த கண்டன்=எரித்த வீரனே
அண்டமோர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டடியேன்
உண்ட ஊண் உனக்காம் வகையெனது உள்ளம் உள்கலனெழு பரஞ்சோதி
கொண்ட நாண் பாம்பாப் பெருவரை வில்லிற் குறுகலர் புரங்கள் மூன்றெரித்த
கண்டனே நீலகண்டனே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே

பொழிப்புரை:
ஆலகால விடம் பொருந்தியதால் கருமை நிறத்து கறையினைத் தனது கழுத்தினில் நிலையாக உடையவனும், மலைமகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும், தனது துதிக்கையை ஆட்டியவாறு தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழனை உடைய யானையின் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், ஒப்பற்றவனும் ஆகிய இறைவன், வயல்களில் விளையும் குவளை மலரினை ஒத்த கண்களை உடைய உமை அன்னையுடன், நெய்யால் நீராட்டப்பட்டு மகிழ்ந்தவராக உறையும் இடத்தின் பெயராகிய நெய்த்தானம் என்ற பெயரினை சொல்வீர்களாக.

பாடல் 2

மையாடிய கண்டன் (1.015) பாடல் 1 தொடர்ச்சி, மற்றும் பாடல்கள் 2, 3 (திதே 0676)
பறையும் பழி பாவம் படு துயரம் பல தீரும்
பிறையும் புனல் அரவம் படு சடை எம் பெருமானூர்
அறையும் புனல் வரு காவிரி அவை சேர் வடகரை மேல்
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே

விளக்கம்:
பறையும்=நீங்கும்; அறையும்=ஒலிக்கும்; புனை=அணிகின்ற; நிறை=கற்பு நெறி

பொழிப்புரை:
ஆரவாரத்துடன் பாய்ந்து வரும் அலைகள் கொண்ட காவிரி நதியின் வடகரையில் அமைந்ததும், பிறைச் சந்திரன் கங்கை நதி மற்றும் பாம்பினைத் தனது சடையில் அணிந்து கொண்டுள்ள பெருமான் தனது ஊராகக் கொண்டு உறைகின்ற தலமும், நிறைந்த குணமாகிய கற்பினைத் தங்களது அணிகலனாகக் கொண்ட மகளிர் வாழ்வதும் ஆகிய நெய்த்தானம் என்ற பெயரினைச் சொன்னால், உம்மைச் சூழ்ந்துள்ள பாவங்களும், அந்த பாவங்களால் ஏற்படும் பழிகளும் பாவத்தின் விளைவாக ஏற்படும் பல துயரங்களும், உம்மை விட்டு முற்றிலும் நீங்கிவிடும்.

பாடல் 3:

மையாடிய கண்டன் (1.015) பாடல் 1 தொடர்ச்சி, மற்றும் பாடல்கள் 2, 3 (திதே 0676)

மையாடிய கண்டன் (1.015) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0677)

மையாடிய கண்டன் (1.015) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0678)

மையாடிய கண்டன் (1.015) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0679)

மையாடிய கண்டன் (1.015) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0680)

மையாடிய கண்டன் (1.015) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0681)

மையாடிய கண்டன் (1.015) பாடல்கள் 3 தொடர்ச்சி, 4, 5, 6, 7 (திதே 0682)
பேயாயின பாடப் பெருநடம் ஆடிய பெருமான்
வேயாயின தோளிக்கு ஒரு பாகம் மிக உடையான்
தாயாகிய உலகங்களை நிலை பேறு செய் தலைவன்
நேயாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே
விளக்கம்:
வேயாயின=வேய் போன்ற, மூங்கில் போன்று அழகிய; தாயாகிய உலகங்கள்=அனைத்து உயிர்களையும் தாய் போன்று தாங்கும் உலகம்; பெருநடம்=ஊழிக் காலத்தில் ஆடப்படும் நடனம்; உலகில் உள்ள அனைத்து உயிர்களுடன் பெருமான் கலந்து நின்று அவற்றை இயக்குவதால் தான் உயிர்களின் இயக்கம் நடைபெறுகின்றது என்பதை உணர்த்தும் வண்ணம், நிலைபேறு செய். தலைவன் என்று கூறுகின்றார். நெய்யாடிய என்ற சொல் எதுகை நோக்கி நேயாடிய என்று திரிந்தது என்று சிலர் சொல்வார்கள். பலரும், நேயம் ஆடிய பெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு நேயாடிய என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் என்றும் விளக்கம் கூறுகின்றனர். பிந்தைய விளக்கம் மிகவும் பொருத்தமாக காணப்படுகின்றது. மானசீகமாக இறைவனின் திருவுருவத்தை நினைத்து, அன்பினால் அவனை நீராட்டி வழிபடுவது ஞானப் பூஜையின் ஒரு அங்கமாகும். அத்தகைய பூஜையை குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடலை நாம் இங்கே காண்போம். பாவநாசத் திருப்பதிகத்தின் கடைப் பாடல் இது (4.15.10). மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் இறை வழிபாட்டில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதை, இறைவனை நமது சிந்தையில் இருத்தி சிந்தையின் எண்ணங்களால் அவனை நீராட்டி, சொல்மாலைகளால் அவனைப் புகழ்ந்து பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து வழிபட வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார், இவ்வாறு செய்யப்படும் வழிபாடு நமது பாவங்கள் அனைத்தையும் நாசமாக்கிவிடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பாவநாசமே என்று முடிவதால், இந்த பொது பதிகத்திற்கு பாவநாசத் திருப்பதிகம் என்ற பெயர் வந்தது.
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளேறு ஊர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிச்சேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவநாசமே

அனைத்துப் பொருட்களுக்கும் முன்னமே, தானாகவே தோன்றியவனை, வெண்மை நிறம் கொண்ட மூத்த காளையினை வாகனமாகக் கொண்டவனை, மாலை நேரத்து செம்மை படர்ந்த வானத்தின் வண்ணத்தானை, அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கியவனை, தங்களது சிந்தையில் இருத்தித் தங்களது எண்ணங்களால் அவனை நீராட்டி, அவனது புகழைக் குறிக்கும் பாடல்கள் பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து, இறைவனே எங்கள் தலைவனே என்று வழிபடும் அடியார்களின் தீவினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

அன்பே சிவம் என்பது சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கை. அன்பும் சிவமும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பொருந்தியுள்ளது என்பதை திருமூலர் அழகாக விளக்குகின்றார். அறிவும் அனுபவமும் இல்லாதார் அன்பாகிய சக்தியும் அறிவாகிய சிவமும் வேறு வேறான இரண்டு பொருள்கள் என்று கருதுவார்கள்; அன்பு முதிர்ந்தால் அறிவாகிய சிவம் தோன்றும் என்பதை அனைவரும் உணர்வதில்லை; அன்பே சிவத்தை விளங்கச் செய்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் அன்பின் வடிவமாக மாறி, தானே சிவத்தன்மை எய்தியவர்களாக உள்ளனர் என்பதே இங்கே கொடுக்கப்பட்டுள்ள திருமந்திரப் பாடலின் திரண்ட கருத்தாகும். அன்பே வடிவாக இறைவன் இருப்பதால் தான் அன்பே சிவம் என்று சான்றோர்கள் கூறுகின்றனர். இறைவனின் திருவருள் அன்பு எனப்படும். அன்பாகிய திருவருளும் இன்பமாகிய சிவமும் ஒளியும் மணியும் போன்று பிரிக்க முடியாதவை. எனவே இவற்றை வேறுவேறு என்று கூறுதல் தவறு. இன்பம் அளிக்கும் சிவனின் திருமேனி திருவருள் தான் அவனது திருமேனி என்பதை அறிந்தவர்கள் அவனது திருவடியின் மீது அன்பினை வைத்து தியானித்து இன்பம் அடைவார்கள். அவர்கள் அடையும் இன்பநிலை சிவமாய் அமர்ந்து இருந்தார் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாக அமர்ந்து இருந்தாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.91.3) திருஞானசம்பந்தர் பெருமானை, அன்பன் என்று அழைக்கின்றார். பொன் மலர்=அழகிய மலர்; பொன்னும் மலரும் என்றும் பொருள் கொள்ளலாம், தியாகேசர் வீதிவலம் வருகையில் பொன்னும் மலரும் தூவி அடியார்கள் இன்றும் கொண்டாடுகின்றனர். திருவாரூர் என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, திருவாரூர்த் தேர் மற்றும் அந்த தேரினில் திருவுலா வருகின்ற பெருமானும் தான். எனவே திருவாரூர் தலத்திற்கே அணிகலனாக பெருமான் விளங்குகின்றார் என்றால் மிகையாகாது. இந்த கருத்தினை உணர்த்தவே,அன்பன் அணிகலனாக விளங்கும் திருவாரூர் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். அன்பே வடிவமாகிய பெருமானை அன்பன் என்று குறிப்பிடுகின்றார். அன்பே வடிவமாக இருக்கும் பெருமான், அனைத்து உயிர்கள் மீது அன்பு பாராட்டி அவற்றை இயக்கும் பெருமான், பெரிதும் விரும்புவது அன்பினையே. உயிர்கள் தன்னிடம் அன்பு பாராட்டி, தன்னை வழிபட்டு தனது அருள் பெற வேண்டும் என்பதே பெருமானின் விருப்பமாக உள்ளது. இம்மை வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற துன்பத்தை துடைத்துக் கொள்ள விரும்பும் மனிதர்களே, உமது துன்பத்தை துடைத்துக் கொள்வதற்கு உரிய வழியை சொல்கின்றேன் கேட்பீர்களாக; ஆரூர் நகரத்திற்கு அணிகலனாக விளங்குபவனும் அன்பனும் ஆகிய சிவபெருமான் திருமேனி மீது அழகிய பொன்னும் மலர்களும் தூவி வழிபடுவீர்களாக. அவ்வாறு செய்தால், உங்களை வருத்தும் துயரங்கள் ஒழிந்து போய் வாழ்வினில் இன்பம் அடைவீர்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
துன்பம் துடைப்பீர்காள்
அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ
இன்பம் ஆகுமே

அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.96.6) திருஞானசம்பந்தர் பெருமானை அன்பன் என்று குறிப்பிடுகின்றார். உம்பர்=தேவர்கள்; தேவருலகில் நாம் அடையும் இன்பம் இந்த பிறவியில் நாம் செய்யும் புண்ணியங்களின் அளவினைப் பொருத்தது. அந்த இன்பம் சிறிது காலமே நீடிக்கும். பின்னர் நாம் மீண்டும் உலகினில் பிறந்து எஞ்சிய வினைகளின் பயனாக இன்ப துன்பங்களை அனுபவிக்க நேரிடும். ஆனால் உயிர்களுக்கு பெருமான் அளிக்கும் முக்தி உலகத்து இன்பம் என்றும் அழியாதது. எனவே உம்பர் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுவது, தேவர்களுக்கும் மேலான நிலை என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இறைவனைப் புகழ்ந்து அவனை வழிபடுவதால் நமக்கு இம்மையிலும் இன்பம் மறுமையிலும் இன்பம் என்பதே இங்கே உணர்த்தப் படுகின்றது.
இன்பம் வேண்டுவீர்
அன்பன் அன்னியூர்
நன்பொன் என்னுமின்
உம்பர் ஆகவே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.6) திருஞானசம்பந்தர் பெருமானை, வேதியர் தாம் தொழும் அன்பன் என்று குறிப்பிடுகின்றார். முன்பு என்றால் வலிமை என்று பொருள்; முன்பன்=வலிமை உடையவன்; இணையில=இணையற்ற, ஒப்பற்ற: ஏதம்=குற்றம்; ஏதமில்=குற்றமற்ற வகையில் வேதங்களை ஓதுவோர் என்றும் குற்றமற்ற நல்ல குணங்களை உடைய வேதியர்கள் என்று இரண்டு வகையாக பொருள் கொள்ளலாம். என் பொனை=என்னால் பொன் போன்று உயர்ந்தவனாக கருதப்படுபவன்;
முன்பனை முனிவரோடு அமரர்கள் அடிதொழும்
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
என்பொனை ஏதமில் வேதியர் தாம் தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.63.5) திருஞானசம்பந்தர் பெருமானை, அடியார்க்கு அன்பன் என்று அழைக்கின்றார். அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சிவபெருமான் பால் நாம் எத்துணை அன்பு வைக்கின்றோமா அதனை விடவும் நம் பால் சிவபெருமான் வைக்கும் அன்பு பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என்று பல திருமுறைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. எலும்பு மாலை, பாம்பு, திருமாலாகிய வராகத்தின் பல், திருமாலாகிய கூர்மனின் அழகிய ஆமையோடு ஆகிய இவற்றுடன் மின்னல் போன்று ஒளிவீசும் பூணூலையும் கலந்து, தனது அழகிய மார்பினில் அணிந்து கொண்டவர் சிவபெருமான். அவர் தன்பால் அன்பு வைத்து, மனம் உருகி வழிபடும் அடியார்களுக்கு அன்பராகத் திகழ்கின்றார். அன்பராகிய சிவபெருமான் நிலையாக அமர்ந்து உறைகின்ற தலம் அரிசிற்கரைப்புத்தூர் ஆகும். பொன் போன்ற நிறத்தில் மலரும் பூக்களை உடைய கோங்கு மரம் உயர்ந்து வளர்ந்துள்ள சோலைகளை உடைய தலம் அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழிலாமை
மின் போல் புரிநூல் விரவிப் பூண்ட மணி மார்பர்
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர்
பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.79.8) திருஞானசம்பந்தர் ஆரூர் பெருமானை அன்பன் என்று அழைக்கின்றார். தனது நெஞ்சினைத் தேற்றுவது போன்று, மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நம் அனைவர்க்கும் ஆறுதல் கூறி தேற்றும் பாடல். அறியாமை என்ற இருளில் மூழ்கி, என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கும் மனிதர்களே, ஆரூர் பெருமானைத் தொழுது வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். கழி=கொம்பு; நிரைத்து=நெடுக கட்டி; முகடு=மேலே மூடி; எலும்புகளாகிய கழிகளை எங்கும் நிறுவியும் கட்டியும், இறைச்சி ஆகிய சுவரினை எழுப்பி, கட்டப்பட்டுள்ள இந்த உடலாகிய வீட்டின் உள்ளே இருக்கும் சீழ், சளி, இரத்தம் மற்றும் மலம் ஆகிய அறுவறுப்பு தரும் பொருட்கள் வெளியே தெரியாத வண்ணம், பொல்லாமை ஆகிய புலால் மணம் கமழும் தோல் கொண்டு இறைவன் மூடியுள்ளான். பண்டைய காலம் தொட்டே இந்த உடல் ஒன்பது வாயில்களை உடையதாக இருக்கின்றது. இந்த உடலினைப் பேணி பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு மூழ்கி விடாமல், நம் பால் அன்பு செலுத்தும் ஆரூர் பெருமானை போற்றி வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவோம் என்று அறிவுரை கூறுகின்றார்.
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண்சுவர் எறிந்து இது நம் இல்லம்
புன்புலால் நாறு தோல் போர்த்துப் பொல்லாமையான் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே
அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.82.7) திருஞானசம்பந்தர் பெருமானை அன்பன் என்றே அழைக்கின்றார். அவனது திருவடிகளைச் சென்று அடையும் அடியார்களின் அல்லல்களைக் களையும் அன்பனாக பெருமான் திகழும் தன்மை இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. வன்புயத்த=வலிமை வாய்ந்த தோள்களை உடைய அரக்கர்கள், இங்கே திரிபுரத்து அரக்கர்கள்; தடவரை=பெரிய மேரு மலை; தென் தமிழ்க் கலை தெரிந்தவர்=புலவர்கள்; மேருமலையை வளைத்து செய்யப்பட்ட வில்லினில் அம்பினைத் தொடுத்து எய்வதற்கு வலிமையான தோள்கள் வேண்டும் அல்லவா, அத்தகைய வலிய தோள்கள் கொண்டவனாக பெருமான் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.
வன்புயத்தவத் தானவர் புரங்களை எரியத்
தன் புயத்து உறத் தடவரை வளைத்தவன் தக்க
தென் தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே

தென் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.88.3) திருஞான சம்பந்தர் பெருமானை அன்பன் என்று அழைக்கின்றார். வாராத நாடன்=மீண்டும் நிலவுலகத்திற்கு வர வேண்டிய நிலையினைத் தடுக்கும் முக்தி உலகத்தினை தனது செல்வமாக உடைய சிவபெருமான்; நிதி என்ற சொல் நெதி என்று திரிந்தது. நிதி=செல்வம்; வில்லின் உரு=வானவில்லின் உருவத்தை போன்று; வானவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மனதினுக்கு இன்பம் தருவதாக இருந்தாலும் மிகவும் சிறிய நேரமே நிலைத்து நின்ற பின்னர், விரைவில் மறைந்து விடுகின்றது; மனிதப்பிறவி நமக்கு இன்பம் தருவது போன்று தோன்றினாலும் அந்த இன்பமும் நிலைத்து நீடிப்பதில்லை; மனிதப் பிறவியும் நிலையற்றதாக உள்ளது. வில்லின் உரு என்பதற்கு வயது முதிர்ந்த காலத்தில் உடலில் கூன் விழுவதால் வில் போன்று வளையும் உடல் என்று இளமை நிலையாமையை உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. பேராத=நீங்காத; அலர்=மலர், இங்கே தாமரை மலரை குறிக்கின்றது; பிரியாத மார்பின் அலர் மேவு பேதை என்று, தாமரை மலரினில் உறையும் இலக்குமி தேவி திருமாலின் மார்பினை விட்டு பிரியாது இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. வானவில் போன்று தோன்றி விரைவில் மறையும் குறைந்த வாழ்நாளைக் கொண்டுள்ள மனிதர்கள், உடலும் உள்ளமும் உருகி தன்னை வழிபட்டால், அவர்களுக்கு தெவிட்டாத இன்பத்தை அளித்து, அவர்கள் பால் மிகுந்த அன்பு கொண்டு அவர்களை விட்டு பிரியாது இருப்பவன் சிவபெருமான் என்று இந்த தென் திருமுல்லைவாயில் தலத்து பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தனது திருவடிகளை வந்தடைந்த அடியார்களை மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகத்திற்கு அனுப்பாத சிறப்பினை உடைய முக்தி உலகத்தை உடையவன் சிவபெருமான்; வானவில் போன்று தோன்றி விரைவில் மறையும் குறைந்த வாழ்நாளைக் கொண்டுள்ள மனிதர்கள், உடலும் உள்ளமும் உருகி தன்னை வழிபட்டால், அவர்களுக்கு தெவிட்டாத இன்பத்தை அளித்து, அவர்கள் பால் மிகுந்த அன்பு கொண்டு அவர்களை விட்டு பிரியாது இருப்பவன் சிவபெருமான்; அத்தகைய பெருமான், உலகத்தவர்க்கு அருள் புரியும் நோக்கத்துடன் எழுந்தருளி இருக்கும் ஊர் திருமுல்லைவாயிலாகும். நீங்காத ஒளியுடைய திருமாலின் மார்பினை விட்டு என்றும் பிரியாது இருப்பவளும், மலர்மகள் என்று அழைக்கப் படுபவளும் ஆகிய இலக்குமி தேவியின் அருளினால் செல்வம் தழைத்து ஓங்கும் பெருமையினை உடைய தலம் திருமுல்லைவாயிலாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வாராத நாடன் வருவார் தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில்
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே

அன்பருக்கு அன்பராக இறைவன் இருக்கும் தன்மை, கருக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.21.6) திருஞானசம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது. பூண்=ஆபரணம்; அரா=பாம்பு; முதல்= முழுமுதற் காரணமாக இருக்கும் இறைவன்; இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் உயிர்களுக்கு உதவி புரிவதற்கு எவ்வாறு பெருமான் முன்வருகின்றார் என்பதை உணர்த்திய திருஞானசம்பந்தர், இவ்வாறு உதவி புரியும் இறைவன் பால் அடியார்கள் அன்பு செலுத்துகின்றனர் என்று கூறுகின்றார். இறைவன் வீணை வாசிப்பதில் மிகவும் வல்லவர் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அனைத்து கலைகளிலும் வல்லவராகிய பெருமான், திறமையுடன் வீணை வாசிப்பதில் வியப்பேதும் இல்லை. வீணையை மீட்டி இன்னிசைப் பாடல்கள் பாடுவதில் மிகுந்த விருப்பம் உடையவரும், தனது அழகிய திருமேனியில் ஆபரணமாக பாம்பினையும் எலும்பு மாலையையும் பூண்டவரும், எரிகின்ற தீப்பிழம்பினைத் தனது கையினில் ஏந்தியவரும், அனைத்து உயிர்களும் அனைத்து உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக உள்ளவரும், முழுமுதற் கடவுளாக இருக்கும் நிலையினை உணர்ந்த அடியார்களால் புகழ்ந்து போற்றப் படுபவரும், அவ்வாறு போற்றும் அடியார்கள் பால் சிறந்த அன்பு கொண்டவரும் ஆகிய இறைவன், கருக்குடி தலத்தினில் உறைகின்றார். அவரே எமது தலைவராவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
இன்புடையார் இசை வீணை பூணரா
என்புடையார் எழில் மேனி மேலெரி
முன்புடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே

அன்பே வடிவமாக இருக்கும் பெருமான், அனைத்து உயிர்கள் மீது அன்பு பாராட்டி அவற்றை இயக்கும் பெருமான், பெரிதும் விரும்புவது அன்பினையே. உயிர்கள் தன்னிடம் அன்பு பாராட்டி, தன்னை வழிபட்டு தனது அருள் பெற வேண்டும் என்பதே பெருமானின் விருப்பமாக உள்ளது. ஒருவருக்கு மற்றவர் பால் கொண்டுள்ள அன்பு நாளுக்கு நாள் குறையாமல் வளர்ந்து கொண்டே இருந்தால் அதனை காதல் என்று கூறுவார்கள். அத்தகைய அன்பினை பெருமான் பால் வைத்து உள்ளம் கசிந்து அவனது திருநாமத்தைச் சொல்லும் அன்பர்களை நன்னெறியாகிய முக்தி நிலைக்கு அழைத்துச் செல்பவர் சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுவது (3.49.1) நமது நினைவுக்கு வருகின்றது. திருவைந்தெழுத்தை ஓதி பயன் பெற விரும்புவோர் மனம் மொழி மெய் என்ற மூன்றாலும் பெருமானுடன் ஒன்றி நிற்கும் நிலை இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. மல்கி= மிகுந்து; நமச்சிவாய மந்திரம், மனம் கசிந்துருகி, கண்ணீர் மல்கி, வாயினால் ஓத வேண்டும் என்று குறிப்பிடப் படுகின்றது. நன்னெறி=சிவநெறி; நாம் எடுக்கும் பிறவி வினையின் வழி பெறப்பட்டது; எனினும் நமச்சிவாய மந்திரத்தை சாதனமாகக் கொண்டு நாம் இறைவனை வழிபட, அவனது கருணையால் பிறவாமையை அடையும் நோக்கத்தில் நம்மை உந்துவது நன்னெறி என்று சொல்லப் படுகின்றது. எனவே இந்த உண்மையை நன்கு கருத்தினில் கொண்டு, நமச்சிவாய மந்திரத்தை ஓதி, ஈசனின் திருவடிப் பேறாகிய முக்தி இன்பத்தை நாம் அடைய வேண்டும் என்பதே இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஈசனாரின் திருநாமமாகிய நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை, அன்பின் மேலிட்டு மனதினில் பதித்து, கசிந்துருகி கண்ணீர் மல்கி, மீண்டும்மீண்டும் ஓதும் அன்பர்களுக்கு நன்னெறி வாய்க்கப் பெறும். இந்த மந்திரம் நான்கு வேதங்களிலும் சொல்லப்படும் மெய்ப் பொருளாக விளங்குகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

சூலை நோயால் வருந்தி, அந்த பிணியைத் தீர்த்துக் கொள்ள அதிகை வீரட்டத்து இறைவரை அணுகிய அப்பர் பிரானுக்கு, தன்னைப் போன்று வருந்தும் அடியார்களின் நிலை, துன்பம், பிணி, கவலை ஆகியவற்றால் வருந்தும், அடியார்களின் நிலை நினைவுக்கு வருகின்றது. அடியார்களை வருத்தும் துன்பம், பிணி, கவலை முதலியவற்றை விரட்டியும் மறைத்தும் அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானிடம் அப்பர் பிரான் வேண்டுகின்றார். அவ்வாறு செய்தால் தான் சிவபெருமான் அடியார்கள் பால் கொண்டிருக்கும் அன்பினை அனைவரும் உணர்ந்து தெளிவடைவார்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். சிவபெருமானது கருணையால் சூலை நோய் தீர்க்கப்பட்டு அவருக்கு அன்பராக மாறியவர், அன்பருக்கு அன்பராக சிவபிரான் விளங்கிய தன்மையை தனது அனுபவத்தில் புரிந்து கொண்டவர், அந்த நிலையினை அனைவர்க்கும் தெரியப்படுத்தும் பாடலாக இந்த பாடல் (4.01.09) விளங்குகின்றது. மெலியும் பிறை=தேய்ந்து ஒரு கலையுடன் நின்ற சந்திரன். புரிசடை=சுருண்ட சடை. புன்சடை=செம்பட்டை நிறத்தில் உள்ள சடை; பொன் போன்ற மேனியை உடையவரும், சுருண்டு செம்பட்டை நிறத்தில் உள்ள சடையினை உடையவரும், மெலிந்த நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனுக்கு அபயம் அளித்து அவனுக்கு வாழ்வு அளித்தவரும் ஆகிய சிவபெருமானே, கொடிய சூலை நோயினால் எனக்கு ஏற்பட்டுள்ள துன்பம் கவலை ஆகியவற்றைக் களைந்து அருள் புரிவீராக. என்னைப் போன்றவர்கள் உமது கருணையின் திறத்தை அறியாததால் தெளியாத நிலையில் உள்ளனர். கவலைகள் மற்றும் துன்பங்களால் கட்டுண்டு இருக்கும் அடியார்களின் கவலைகளை, துன்பங்களை நீக்கினால் அவர்களும் தெளிவு அடைவார்கள். உலகெங்கும் அன்பே நிலவும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என் போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில்
அன்பே அமையும் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே

பாவநாசத் திருப்பதிகத்தின் கடைப் பாடலில் (4.15.10) அப்பர் பிரான், அன்பினால் இறைவனை நீராட்டி வழிபட வேண்டும் என்று சொல்கின்றார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் இறை வழிபாட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதை, இறைவனை நமது சிந்தையில் இருத்தி சிந்தையின் எண்ணங்களால் அவனை நீராட்டி, சொல்மாலைகளால் அவனைப் புகழ்ந்து பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து வழிபட வேண்டும் என்று கூறுகின்றார், இவ்வாறு செய்யப்படும் வழிபாடு நமது பாவங்கள் அனைத்தையும் நாசமாக்கிவிடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பாவநாசமே என்று முடிவதால், இந்த பொதுப் பதிகத்திற்கு பாவநாசத் திருப்பதிகம் என்ற பெயர் வந்தது. அனைத்துப் பொருட்களுக்கும் முன்னமே, தானாகவே தோன்றியவனை, வெண்மை நிறம் கொண்ட மூத்த காளையினை வாகனமாகக் கொண்டவனை, மாலை நேரத்து செம்மை படர்ந்த வானத்தின் வண்ணத்தானை, அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கியவனை, தங்களது சிந்தையில் இருத்தித் தங்களது எண்ணங்களால் அவனை நீராட்டி, அவனது புகழைக் குறிக்கும் பாடல்கள் பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து, இறைவனே எங்கள் தலைவனே என்று வழிபடும் அடியார்களின் தீவினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளேறு ஊர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிச்சேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவநாசமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.21.9) அப்பர் பிரான் பெருமானை அன்பன் என்று அழைக்கின்றார். இறைவனைத் தொழாத நாட்கள் எல்லாம் துன்பமான நாட்களாக சிலர் கருதுவதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அன்பே உருவான சிவபெருமான் என்பதால் அன்பன் என்று அப்பர் பிரான் இறைவனை இங்கே அழைக்கின்றார். ஆதிரைத் திருநாள் விழாவில் திரண்டு கூடியிருக்கும் அடியார்கள் பேசுவது என்ன என்பதை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அனைவருக்கும் அன்பனாக விளங்கும் சிவபெருமானின் ஆதிரைத் திருநாளில் குழுமிய அடியார்கள், சிவபெருமானைத் தொழாத நாட்கள் துன்பமான நாட்கள் என்றும், சிவபிரானைத் தொழுது வணங்கும் நாட்கள் அவர்களது வாழ்க்கையில் மிகவும் இன்பம் மிகுந்த நாட்கள் என்றும், பேசுவார்கள்; மேலும் இறைனை நோக்கி, இறைவா, நாங்கள் எப்போதும் உனது திருத்தொண்டில் ஈடுபட்டு உந்தன் பின்னர் வருமாறு நீ அருள வேண்டும் என்று வேண்டுகின்றார்கள். இவ்வாறு அடியார்களால் மிகவும் சிறப்பாக கருதப்படுவது சிவபெருமானின் ஆதிரைத் திருநாள் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை ஏத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியேன் என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.26.1) அப்பர் பிரான் பெருமானை அன்பனே என்று அழைக்கின்றார். காண்பான்=காணும் பொருட்டு: அலந்து போனேன்=வருந்தினேன்; எல்லா உயிர்களின் தேவைகளையும் சிவபெருமான் நிறைவேற்றி வைப்பதால், சிவபெருமான் மீது நம்பிக்கை வைத்து அனைத்து உயிர்களும் தங்களது விருப்பங்களை தெரிவிக்கின்றன. இதனை உணர்த்தும் வகையில் நால்வர் பெருமானார்கள் பல பாடல்களில் நம்பன் என்றும் நம்பா என்றும் இறைவனை குறிப்பிடுகின்றனர். எங்கள் நம்பிக்கைக்கு உரியவனாகவும், அதனால் எங்களால் விரும்பப் படுவானுமாக விளங்கும் எங்கள் தலைவனே, நாதனே, ஆதி மூர்த்தியே, உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்டவனே, பரம யோகியே, செம்மையான பொன் போன்றவரே, பவளத்தின் குன்று போன்று சிவந்த நிறத்தில் காணப்படுபவரே, என்று உம்மை தினமும் புகழ்ந்து பாடும் அடியேன், தாமரை போன்ற உமது திருப்பாதங்களைக் காண தவிக்கின்றேன். அதிகை வீரட்டம் தலத்தில் உறையும் இறைவனே, நீர் தான் அருள் புரிந்து எனது வருத்தத்தைப் போக்க வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்தி
பங்கனே பரம யோகீ என்றென்றே பரவி நாளும்
செம்பொனே பவளக் குன்றே திகழ் மலர்ப் பாதம் காண்பான்
அன்பனே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே

சைவ சமயம் திரும்பிய பின்னர் அப்பர் பிரான், பெருமான் பால் எத்துணை அன்பு வைத்திருந்தார் என்பதை நாம் அறிவோம். பெருமானுக்கு அன்பனாக வாழாமல் இளமைக் காலத்தை வீணாக கழித்தமை குறித்து வருத்தம் தெரிவிக்கும் அப்பர் பிரான், நமக்கு அறிவுரை சொல்லும் பாடல் திருவதிகை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (4.28.1). இளமைக் காலத்தில் உடல் உயிரின் விருப்பத்துடன் ஒத்துழைக்கும் தன்மையில் இருக்கும் போதே, நாம் இறைவன் பால் அன்பு செலுத்தி அவனைப் பணிந்து வணங்கி பயனடைய வேண்டும் என்று சொல்கின்றார். முதுமை அடைந்த பின்னர், இருமல் முதலியவற்றால் பாதிக்கப்பட்டு, உயிர் விரும்பினாலும், உடல் இறைவனை சிந்தனை செய்து வணங்க முடியாமல் இருப்பதால், நாம் பெருமானைப் பணிந்து வணங்கி உரிய பயனை அடைய முடியாது என்று கூறுகின்றார். நாம் அனவைரும் காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்த பின்னர், பசி எடுப்பதை உணர்கின்றோம். அந்த பசியினைத் தீர்க்கும் வகையில் நாம் காலையில் அல்லது முன்பகலில் உணவு உட்கொள்கிறோம். அவ்வாறு முன் பகலில் பசி எடுக்கும் தருணத்தில் உணவு உட்கொள்ளாது, பசி மிகுந்து சோர்வடைந்து பின் பின்பகலில் உணவு ஏற்றால் உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தான் இல்லத்தில் உள்ள பெண்டிர், முன் பகலில் நாம் உணவு உட்கொள்ள ஏதுவாக, முன் பகலில் சமையல் வேலையை முடித்து விடுகின்றனர். அவ்வாறு இராமல், முன்பகலில் சோம்பி இருந்துவிட்டு, பின்பகலில் உணவு சமைப்பதால், உரிய பயன் ஏதும் கிடைக்காது அல்லவா. எனவே அத்தகைய பெண்டிரை அறிவிலிகள் என்று சாடும் அப்பர் பிரான், தனது இளமைக் காலத்தில் சோம்பியிருந்து வயது முதிர்ந்த பின்னர் இறைவனை வழிபடலாம் என்று நினைப்பது தவறு என்று இங்கே உணர்த்துகின்றார். தனது இளமைக் காலத்தில் பெருமானை நினையாது இருந்தேன் என்று அப்பர் பிரான் தனது வருத்தத்தை தெரிவிக்கின்றார். எனவே இறை வழிபாடு முதலிய அனைத்துச் செயல்களையும் செய்ய வேண்டிய காலத்தில், பருவத்தில் செய்ய வேண்டும் என்று உணர்த்துகின்றார்.
முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடிக்
கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றிப்
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன் அதிகை வீரட்டனீரே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.29.5) அப்பர் பிரான், பெருமானை அன்பருக்கு அன்பரே என்று அழைக்கின்றார். சிவபெருமான், தனது சடையில் கங்கை நதியை மறைத்து வைத்திருக்கின்றார்: அவர் அடியார்களுக்கு அன்பராகத் திகழ்கின்றார்: தனது உடலின் ஒரு பாதியில் பார்வதி தேவியை வைத்திருக்கின்றார்: கொடிய பாம்பினைத் தனது இடுப்பில் கட்டிக் கொண்டு திரிகின்றார்: உடலில் திருநீறு அணிந்து அழகுடன் விளங்குகின்றார். இத்தகைய தன்மைகளை உடைய சிவபெருமான், நெய்தல் பூக்களும், சேற்றிலே தாமரைப் பூக்களும் கமழும் நீர்வளம் உடைய திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்றார். என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆறுடைச் சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும்
கூறுடை மெய்யர் போலும் கோளரவு அரையர் போலும்
நீறுடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மைச்
சேறுடைக் கமலவேலித் திருச்செம்பொன் பள்ளியாரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.40.6) அப்பர் பிரான், அன்பினைத் தவிர வேறெதையும் பெருமான் பொருட்படுத்துவதில்லை என்று கூறுகின்றார். என்பு=எலும்பு:: கலன்= அணிகலன், புன்புலால்=இழிவான புலால்; துன்பிலாத் தொண்டர்=உலகத் துன்பங்களில் அழுந்தாத தொண்டர்கள்; இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே நிலையில் பாவிக்கும் தொண்டர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களால் துவளாமல் அனைத்தும் இறைவன் செயல் என்று ஏற்றுக் கொள்வதால், துன்பங்கள் அவர்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. அதனால் தான் அவர்களை துன்பத்தில் அழுந்தாத தொண்டர்கள், துன்பிலாத் தொண்டர்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஐயாறனார்க்கு எலும்புகளைத் தவிர வேறு நகைகள் இல்லை; இடபத்தைத் தவிர வேறு வாகனங்களை அவர் ஏற்றுக் கொள்வதில்லை; இழிவான புலால் வாசனை வீசும் சுடுகாட்டில் உள்ள சாம்பலைத் தவிர வேறு மணம் தரும் பொடி எதனையும், சாந்தாக கருதி தனது உடலில் அவர் பூசுவதில்லை; தாங்கள் எதிர்கொள்ளும் இன்பங்களையும் துன்பங்களையும் ஒரே விதமாக பாவித்து, துன்பங்களில் அழுந்தி துவளாமல் அனைத்தும் இறைவன் செயல் என்று ஏற்றுக் கொள்ளும் தொண்டர்கள் தன்னைத் தொழுது அழுதும் ஆடியும் பாடியும் வெளிப்படுத்தும் அன்பினைத் தவிர வேறு எதனையும் இறைவன் குறிப்பிடத்தக்க பொருளாக கருதுவதில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை
புன் புலால் நாறு காட்டின் பொடியலால் சாந்தும் இல்லை
துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும்
அன்பு அலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

தன்னைப் பலவாறும் தொழுது ஆடியும் பாடியும் தோத்திரங்கள் சொல்லி அழும் அடியார்களுக்கு அன்பராக இருப்பவர் இறைவன் என்று அப்பர் பிரான், ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.56.4) குறிப்பிடுகின்றார். எழுநுனை=கூரிய நுனி: சிவபெருமானின் புகழினைக் கேட்கும் போதும், சொல்லும் போதும் வாய் விட்டு அழுதல் என்பது சிறந்த அடியார்களின் குணங்களில் ஒன்றாகும். நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி சிவபெருமானின் திருநாமத்தை ஓதும் அடியார்கள் நன்னெறியை அடைவார்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நாம் அதிகமாக தொழத்தொழ, நமக்கு இறைவனிடத்தில் அன்பு அதிகமாகின்றது. அந்த இறையன்பு வலுப்பெறும்போது அது அழுகையாக வெளிப் படுகின்றது. இறை உணர்வு வலுப்பெற்று அழுகையாக மாறும்போது, அடியார்களின் புலன்களும் பொறிகளும் அந்தக்கரணங்களும் செயலிழந்து விடுகின்றன. இந்த நிலையையும் தாண்டும் அடியார்கள் நான், எனது என்ற எண்ணங்களை மறந்து தற்போதம் நீங்கியவர்களாய் துவண்டு விடும் நிலையை அடைகின்றார்கள். இதைத் தான், தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் என்று அப்பர் பிரான், முன்னம் அவனுடைய என்று தொடங்கும் பாடலில் கூறுகின்றார். கையில் மழுப்படை ஏந்தியவராயும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவரும் ஆகிய சிவபெருமான், கூரிய நுனியை உடைய சூலத்தைக் கையில் கொண்டுள்ளார். எலும்பு மாலையை அணிந்துள்ள அவர், தன்னை கீழே விழுந்து தொழுது எழுந்து, ஆடியும் பாடியும், அழுதும் தோத்திரம் சொல்லியும் வணங்கும் அடியார்களுக்கு அன்பராக இருக்கின்றார். அவர் தான் ஆவடுதுறை தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மழுவமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும்
தொழுது எழுந்தாடிப் பாடி தோத்திரம் பலவும் சொல்லி
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

திருவாலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.2) அப்பர் பிரான் பெருமானை அன்பனே என்று அழைக்கின்றார். சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் என்று பொதுவாக கூறினாலும், நான்கு திசைகளை பார்த்தவாறு நான்கு முகங்கள் இருப்பதாக கருதுவதால் அவனை நான்முகன் என்றும் அழைப்பதுண்டு. பல திருமுறை பாடல்களில் அவனை நான்முகன், எண்தோளன் என்று நால்வர் பெருமானார்கள் அவனை அழைக்கின்றார்கள். நான்கு முகங்களை உடையவன் தானே எண்தோளனாக இருக்க முடியும். அனைவரின் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பதால், எல்லோராலும் விரும்பப்படுபவனே, நான்கு முகங்களை உடையவனே, எங்கள் தலைவனே, ஞானமே வடிவமாக உள்ளவனே, எனக்கு பொன் போன்றவனே, ஈசனே, என்று உன்னை பலவாறும் அழைத்து, மனதினில் எந்த விகாரங்களும் இல்லாமல் தூய மனத்தனாய், அடியேன் வழிபடுகின்றேன். எனக்கு மிகவும் அன்பாக இருப்பவனே, ஆலவாயில் அப்பனே, அடியேன் புலன்களின் வழியே சென்று மேலும்மேலும் வினைகளை பெருக்கிக் கொள்ளாமல், உன்னை தியானித்து, தற்போது உள்ள வினைகளை முழுதும் கழித்து வாழுமாறு செய்து, இனிமேல் நான் பிறவாத வண்ணம் அருள் செய்ய வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞான மூர்த்தீ
என் பொனே ஈசா என்றென்று ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

அன்பு மயமாக இருக்கும் பெருமான், நாமும் அனைவரிடத்தும் அன்புடன் பழக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். வேதிகுடி பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.90.3) அன்பின் வழி நில்லாது பல உயிர்களுக்கும் துன்பமிழைத்த திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை அழித்த இறைவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அன்பு மயமாக விளங்கும் பெருமானை அன்பன் என்றும் ஆராவமுதன் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார். வேதங்களை ஓதியவாறு படைப்புத் தொழிலில் ஈடுபடும் பிரமனும், நான்கு வேதங்களும், இந்த தலத்து இறைவனை வணங்கி, வழிபட்டமையால் வேதிகுடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகின்றது. முனிவன்=கோபம் கொள்பவன், பாசத்தில் சிக்க வைக்கும் உலகப் பொருட்களின் மீது கோபம் கொண்டு அனைத்து உலகப் பொருட்களையும் வெறுத்து ஒதுக்குவதால், தவம் செய்வோர் முனிவர்கள் என்று அழைக்கப் படுகின்றார்கள். பிற உயிர்களின் மீது அன்பு பாராட்டாமல்., தங்களது பறக்கும் கோட்டைகளை கீழே இறக்கி, அதனடியில் பல உயிர்களையும் சிக்க வைத்து அழித்த திரிபுரத்து அரக்கர்களை, அன்பு நிலையில் நில்லாதவர்கள் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சிவம் என்ற சொல்லுக்கு அன்பு என்று ஒரு பொருளும் உண்டு. அன்பே சிவம் என்பது சான்றோர் வாக்கு. பிற உயிர்களின் மீது அன்பு பாராட்டாமல் வாழ்ந்த அவுணர்களையும், அன்பின் உருவமாக திகழ்ந்து அனைத்து உயிர்களை பாதுகாக்கும் பெருமானையும் ஒரே பாடலில் குறிப்பிட்டு அன்பினால் ஏற்படும் மாற்றத்தை, உலகத்து உயிர்களுக்கு சிவபெருமானின் அன்பினால் ஏற்படும் பயனை அப்பர் பிரான் நயமாக இந்த பாடலில் உணர்த்துகின்றார். அனைத்து உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு முன்னே இருந்தவனும், அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னரும் இருந்து உலகின் தோற்றத்திற்கும் அழிவுக்கும் மூல காரணனாக விளங்குபவனும் ஆகிய பெருமான், தலையாய முனிவன் ஆவான். பிற உயிர்களிடம் அன்பு பாராட்டாது, பல உயிர்களையும் கொன்று அழித்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து பொடியாகுமாறு செய்தவன், அனைவராலும் செம்பொன் போன்று அரியவனாக கருதப்படும் இறைவன் ஆவான். இந்த இறைவனை வணங்கி வழிபடுவதற்காக பிரமன் சென்று சேர்ந்த இடமாகிய வேதிகுடி தலத்தில் உறையும் பெருமானை, தனது அன்பினால் நம்மை அரவணைத்து அடிமை கொள்ளும் தலைவனை, நாம் சென்று அடைந்து பணிந்து அவனது அருள் வெள்ளத்தில் மூழ்கி நீராடுவோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
முன்பின் முதல்வன் முனிவன் எம் வினை கழித்தான்
அன்பின் நிலை இல் அவுணர் புரம் பொடியான செய்யும்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர் திருவேதிகுடி
அன்பனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் அனைத்தும் நிலையற்றன என்பதை புரிந்து கொண்டு, நிலையான பொருளாகிய பெருமான் பால் அன்பு செலுத்தும் அடியார்களது தலையின் மீது பெருமான், தனது திருவடிகளை பதித்து அருள் புரிவார் என்று அப்பர் பிரான், திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.92.6) குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் திருவடிகள், பற்றினை நீத்த அடியார்களுக்கு அணியாகத் திகழ்வதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த கருத்து நமக்கு மணிவாசகரின் திருவாசகம் சென்னிப்பத்து பதிகத்தினை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில், தனது தலையின் மீது சிவபெருமான் திருபெருந்துறையில் குருந்த மரத்தின் கீழ் இருந்த போது, மலரடிகளை பதித்ததைக் குறிப்பிடும் மணிவாசகர், பதிகத்தின் கடைப் பாடலில், எப்போது சிவபிரானின் திருப்பாதங்கள் அடியார்களின் சென்னி மீது மலரும் என்று குறிப்பிடுகின்றார். தங்களது பாசத்தை அறுத்துவிட்டு, அடியார்கள் சிவபெருமானின் மலரடிகளைப் பற்றிக் கொண்டால், சிவபெருமானின் திருப்பாதங்கள் அவர்களது தலையின் மீது பதியும் என்று சொல்லுகின்றார். ஐயாறனின் திருவடிகள், அடியார்கள் துன்பக் கடலைக் கடக்க உதவும் தோணியாக செயல்பட்டு இன்பமாகிய கரையில் கொண்டு சேர்ப்பன, பொன்னினை விட அதிகமாக ஒளி வீசுவன. பொன் மற்றுமுள்ள உலகப் பொருட்களை, பொய்யான பொருட்களாகக் கருதி அவற்றில் பற்று ஏதும் வைக்காது மெய்ப்பொருளான சிவபெருமானிடத்தில் பற்று வைக்கும் அன்பர்களுக்கு, இந்த திருவடிகள், அணியாகத் திகழ்வன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்ட தொண்டர் தம்மை
இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே
பொன் பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும் அப்பொய் பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்க அவை ஐயாறன் அடித்தலமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.7.4) அப்பர் பிரான் பெருமானை அன்பராமவர்க்கு அன்பர் என்று குறிப்பிடுகின்றார். சுபத்தர்=இன்பத்தை உடையவர்: தனக்கு வரும் இன்ப துன்பங்களை இன்பமாகவும் துன்பமாகவும் கருதாமல், இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று போல் கருதி, அத்தகைய விளைவுகளால் நிலை மாறாது இருக்கும் அடியார்களுக்கு துன்பங்கள் எந்த வருத்தத்தையும் விளைவிக்காது. இதற்கு அப்பர் பிரானின் சரித்திரமே மிகப் பெரிய சான்றாக விளங்குகின்றது. அதனால் தான், பல்லவ மன்னனின் ஆணையின் விளைவால், மன்னனின் அரசவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, மனம் கலங்காது இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று அப்பர் பிரான் பாடினார் (6.98.1). தனக்கு வரும் இன்பங்களையும் துன்பங்களையும், இன்ப துன்பங்களாக கருதாமல், ஒன்று போல் ஏற்றுக்கொண்டு வாழும் பக்குவம் அடைந்த அடியார்கள். என்றும் இன்பத்தையே அனுபவிப்பவர்களாய், தங்களது எலும்புகள் நெகிழ்ந்து உருகுமாறு, இரவும் பகலும், இடைவிடாது பெருமானைத் தொழுது வழிபடுவார்கள். அவ்வாறு சிவபெருமானிடம் இடையறாது அன்பு கொண்டு விளங்கும் அடியார்கள் பால் மிகுந்த அன்பு செலுத்துபவன் ஆரூர்ப் பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய்
என்பெலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று
அன்பராய் நினைந்து என்றும் இடையறா
அன்பராம் அவர்க்கு அன்பர் ஆரூரரே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் முதல் பாடலில் (5.13.1) அப்பர் பிரான் இறைவனை அன்பனே என்று அழைக்கின்றார். பைங்கழல்=பசும் பொன்னினால் செய்யப் பட்ட கழல் அணிகலன்; பொன்னைப் போன்று எனக்கு அருமையானவனே, வானவர்கள் தொழும் திருப்பாதங்களில் பசும்பொன்னால் செய்யப்பட்ட கழலினை அணிந்தவனே, சுத்தமான பொன்னைப் போன்று உயர்ந்தவனே, செம்பொன் போன்ற திருமேனியை உடையவனே, அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்துபவனே, திருவீழிமிழலை தலத்தில் வீற்றிருக்கும் இறைவனே, நன்மை எது தீமை எது என்பதை பகுத்து அறியும் ஆற்றல் இல்லாத அடியேனை, நீர் குறியாக் கொண்டு காத்தருள வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
என் பொனே இமையோர் தொழும் பைங்கழல்
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்றிலேன்
செம்பொனே திருவீழிமிழலையுள்
அன்பனே அடியேனைக் குறிக்கொளே

திருப்பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.30.4), அப்பர் பிரான், தன் பால் அன்பு செலுத்தும் அடியார்களை பெருமான் அறிந்து கொள்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். இந்த செய்தி மூலம் பெருமான் பால் நாம் அன்பு செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார். மோழைமை=அறியாமையால் பேசுவது போன்று பரிகாசம் கலந்த சொற்கள்; பெருமான் இத்தகைய சொற்களை தாருகாவனம் சென்றபோது பேசியதை அப்பர் குறிப்பிடுகின்றார். இறைவன் அவ்வாறு பரிகசித்து பேசியதையும் பொருட்படுத்தாமல், அவரது அழகில் மயங்கிய தாருகவனத்து இல்லத்தரசிகள் அவரை பின்தொடர்ந்தனர் என்பது புராண நிகழ்ச்சி. பலர் முன்னிலையில் தாருகாவனத்து முனிவர்களையும் அவர்களது மனைவியர்களையும் பரிகசித்து பேசியவர் பெருமான், அவர் எலும்பு மாலைகளை அணிந்து அங்கு திரிந்தார். இவ்வாறு காண்பதற்கு பித்தர் போன்று காட்சி தரும், பாராய்த்துரை செல்வனார், தம்மிடம் உண்மையான அன்பு வைத்து இருக்கும் அடியார்களை நன்றாக அறிந்தவர் ஆவார்.
முன்பெலாம் சில மோழைமை பேசுவர்
என்பெலாம் பல பூண்டு அங்கு உழி தர்வர்
தென்பராய்த்துறை மேவிய செல்வனார்
அன்பராய் இருப்பாரை அறிவரே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (5.31.7), தன்னை நினைத்துத் தொழும் அடியார்களுக்கு அன்பனாக இறைவன் விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மலர்களைத் தூவி இறைவனைத் தொழுது அழும் அடியார்களுக்கு அன்பனாக இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவனடியார்களின் அக இலக்கணங்களில் ஒன்றாக, பெருமானை நினைத்து அழுதல் சொல்லப் படுகின்றது. ஒழுகும் ஒன்பது ஓட்டைகள் கொண்டுள்ள மாடமாகிய உடலினை விட்டு உயிர் பிரிய, அந்த மாடத்தை கழுகு அரிப்பதன் முன்னம், பெருமானின் கழல் அணிந்த திருவடிகளைத் தொழ வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடலில் வழங்கப் படுகின்றது. ஒழுகும் ஒன்பது ஓட்டைகள் கொண்டுள்ள மாடமாகிய உடலினை விட்டு உயிர் பிரிய, அந்த மாடத்தை கழுகு அறிப்பதன் முன்னம், பெருமானின் கழல் அணிந்த திருவடிகளைத் தொழுதும், கைகளால் மலர்கள் தூவியும் வழிபடுவீர்களாக. பெருமான் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாய், அந்த அன்பினை தங்களது அழுகையால் வெளிப்படுத்தும் அடியார்களுக்கு அன்பனாக இருப்பவன் ஆனைக்கா அண்ணல் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்
கழுகு அரிப்பதன் முன்னம் கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவி நின்று
அழும் அவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.55.8) அப்பர் பிரான், பெருமானை அன்பன் என்று அழைக்கின்றார். வீடுதோறும் சென்றுபிச்சை எடுப்பவர்கள் பொதுவாக இரவில் பிச்சை எடுப்பதையே நாம் காண்கின்றோம். ஆனால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட பெருமான் நண்பகலில்பிச்சை எடுப்பதையே தனது வழக்கமாக கொண்டுள்ளதை பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. பெருமான் பிச்சை எடுப்பது தான் உண்டுமகிழ்வதற்காக அல்ல என்பதையும், உலகில் உள்ள உயிர்கள் உய்வதன் பொருட்டு அவர்கள் தங்களின் மலங்களை பெருமானிடம் ஒப்படைத்து, மலங்கள்நீங்கப் பெற்று முக்தி நிலை அடைய வேண்டும் என்ற பெருமானின் ஆசை தான் காரணம் என்பதையும் நாம் அறிவோம். இவ்வாறு பெருமான் கருணைவயத்தராகி மன்னுயிர்கள் உய்வதன் பொருட்டு, பலி ஏற்கத் திரிவது இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. எலும்பினை ஆபரணமாக அணிந்து, எருதின் மீதேறி, இளம்பிறைச் சந்திரனை, மின்னல் போன்று ஒளி மிளிரும் முறுக்கான சடையின் மீது அணிந்து, நண்பகலில் பல இல்லங்கள் சென்று, பெருமான் பிச்சை கேட்கின்றார். நாரையூர் தலத்தில் வீற்றிருக்கும் அன்பனாகிய பெருமானுக்கு இந்த செயல் எந்த விதத்திலும், இழிவினை ஏற்படுத்தாமல், அவருக்கு அழகினைச் சேர்ப்பது மிகவும் வியப்பாக உள்ளது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
என்பு பூண்டு எருது ஏறி இளம்பிறை
மின் புரிந்த சடை மேல் விளங்கவே
நன்பகல் பலி தேரினும் நாரையூர்
அன்பனுக்கு அது அம்ம அழகிதே

கோளிலி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.56.3) அப்பர் பிரான் இறைவனை, கலந்தவர்க்கு அன்பன் என்று அழைக்கின்றார். கலந்தவர்=மனதினால் இறைவனுடன் கலந்தவர்கள், மனம் ஒன்றி இறைவனை தியானம் செய்யும் அடியார்கள்; திரை=அலைகள்; பரவை= கடல்; கொண்டல்=மேகங்கள்; அம்=அழகிய; வெண்மை நிறம் கொண்ட பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த விடத்தினை உட்கொண்டு தனது கழுத்தில் தேக்கியவனும், மனம் ஒன்றி தன்னை தியானித்து வழிபடும் அடியார்களுக்கு அன்பனாக விளங்குபவனும், மேகங்கள் பொருந்தும் அழகிய சோலை சூழ்ந்த கோளிலி தலத்தில் உறைபவனும், எல்லா உலகங்களுமாக இருப்பவனும் ஆகிய பெருமானைத் தொழுவார்களுக்கு துன்பங்கள் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வெண்திரைப் பரவை விடம் உண்டதோர்
கண்டனைக் கலந்தார் தமக்கு அன்பனை
கொண்டலம் பொழில் கோளிலி மேவிய
அண்டனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.59.7) அப்பர் பிரான், மகிழ்வுடன் பெருமானின் திருநாமத்தை சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அடியார்களுக்கு அன்பனாக இருக்கும் பெருமான், தவறாது அத்தகைய அடியார்களுக்கு பல இன்பங்களை வழங்கி அருள் புரிகின்றார் என்று கூறுகின்றார். வலான்=வலது கரத்தில் ஏந்தியவன்; மிகுதியான அன்பின் வெளிப்பாடு அழுகை. மழு ஆயுதத்தைத் தனது வலது கையில் உடையவனின் திருநாமம் ஆகிய அஞ்செழுத்தினை மகிழ்ந்து உரைத்து, அவனது நினைவில் நெஞ்சம் உருகி கண்ணீர் பெருக்கும் அடியார்கள் பால் மிகுந்த அன்பு வைத்து, இன்பத்துடன் குறையேதும் இல்லாத அருளைப் புரியும் இறைவன் திருமாற்பேறு தலத்தில் உறைகின்றான். அவனைத் தொழுது வணங்கும் அடியார்களுக்கு துயரம் ஏதும் விளையாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மழு வலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து
அழவலார்களுக்கு அன்பு செய்து இன்பொடும்
வழுவிலா அருள் செய்தவன் மாற்பேறு
தொழவலார் தமக்கு இல்லை துயரமே

கடுவாய்க்கரை புத்தூர் எனப்படும் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.62.3) அப்பர் பிரான் இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார். அன்பே வடிவானவனும், அடியார்களின் துன்பங்களை நீக்குபவனும், செம்பொன் மேனியனாகத் திகழ்பவனும், கச்சி ஏகம்பம் தலத்தில் வீற்றிருப்பவனும், கடுவாய்க் கரை தென்புத்தூர் தலத்தில் உறைபவனும், அடியார்களின் நம்பிக்கைக்கு உரியவனும் ஆகிய பெருமானை அடியேன் இந்த தலத்தில் கண்டு, வாழ்வினில் உய்வினை அடையப் பெற்றேன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
அன்பனை அடியார் இடர் நீக்கியைச்
செம்பொனைத் திகழும் திருக் கச்சி
ஏகம்பனைக் கடுவாய்க்கரைத் தென் புத்தூர்
நம்பனைக் கண்டு நான் உய்யப் பெற்றெனே

திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.74.8) அப்பர் பிரான், பெருமானை அன்பனே என்று அழைக்கின்றார். உடலின் பல்வேறு தன்மைகளை முந்திய இரண்டு பாடல்களிலும் உணர்த்திய அப்பர் பிரான் இந்த பாடலில் ஏன் அவ்வாறு அத்தகைய உடலுடன் உயிரினை பொருத்தினான் என்பதையும் இந்த பாடலில் விளக்குகின்றார். மேலும் உயிருடன் இணைந்துள்ள உடலுக்கு பிறப்பு இறப்பு இன்பம் துன்பம் ஆகியவற்றையும் உடன் வைத்தவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தூல உடல் பூவுலகத்தில் தனது வாழ்க்கையை வாழ்ந்து கழித்த பின்னர், சூக்கும உடலோடும் உயிர் சொர்கத்திற்கும் நரகத்திற்கும் செல்கின்றது. தான் ஈட்டிய நல்வினைப் பயன்களை அனுபவித்துக் கழிக்க சொர்கத்தில் சில நாட்கள் இருக்கும் உயிர், பின்னர் நரகத்திற்கு சென்று தனது தீய வினைகளின் ஒரு பகுதியைக் கழிக்கின்றது. இன்பமோ அல்லது துன்பமோ ஏதோ ஒன்றைத் தான் சூக்குமவுடல் சொர்கத்திலும் நரகத்திலும் அடைகின்றது. கருவி கரணங்கள் அற்ற உடல் என்பதால், வினைகளை மேலும் பெருக்கிக் கொள்ளாத உடல், இன்பமும் துன்பமும் ஒரு சேர அனுபவிக்கும் இடமாக பூவுலகம் உள்ள நிலையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அவ்வாறு இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கும் நாம் அவற்றில் ஆழ்ந்து மேலும் வினைகளை பெருக்கிக் கொள்கின்றோம். அவ்வாறு இல்லாமல், இறைவனை துதித்து பேரின்பமாகிய முக்தி நிலையை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதை இங்கே உணர்த்துகின்றார். அத்தகைய முயற்சியினை மேற்கொள்ளவே நமக்கு கருவி கரணங்கள் அளிக்கப் பட்டுள்ளன. அவற்றை சரிவர பயன்படுத்தினால், இறைவன் நமக்கு எல்லையில்லா பேரின்பம் தருபவனாக இருப்பதை நாம் உணரலாம் என்று கூறுகின்றார். உயிரினை உடலுடன் இணைத்து பிறப்பை அளித்து, பின்னர் இறப்பு என்பதையும் வரையறுத்து, இதற்கு இடைப்பட்ட நாட்களில் இன்பமும் துன்பமும் இந்த உடலும் உயிரும் சேர்ந்து அனுபவிக்கும் வண்ணம் நம்மை இயக்குபவன் இறைவன் ஆவான். இந்த இன்ப துன்பங்களில் ஆழ்ந்து, நமக்கு பிறப்பு அளித்ததன் நோக்கத்தை மறந்து விடாமல், அன்பனே அரனே என்று இறைவனை அன்புடன் அழைத்து போற்றுவார்க்கு, நிலையான பேரின்பம் அளிக்கும் முக்தி வாழ்க்கைக்கு வழிகாட்டும் இன்பனாக விளங்குபவன் எறும்பியூர் ஈசன் ஆவான் என்பதே எந்த பாடலின் பொழிப்புரை.
இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு
துன்பமும் உடனே வைத்த சோதியான்
அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.4) அப்பர் பிரான், தன்னை அடைந்த அடியார்களுக்கு நேசராக பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். தேசர்-ஒளியுடையவர்; ஈசர்=தலைவராக தாங்குபவர்; நிட்டுருவர்=நேசம் இல்லாதவர், கடுமையான சித்தம் உடையவர்; திறம்=தன்மை; தனது தன்மைகளை நினைத்து தன்னைத் தொழுகின்ற அடியார்களின் சிந்தனையில் உறைபவர் சிவபெருமான் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், தன்னைச் சரணடையும் அடியார்களை நேசிப்பவராக உள்ளார் என்று கூறுகின்றார். அதே சமயத்தில் தன்னை நினையாத மனிதர்களுக்கு கடுமையான சிந்தை உடையவராக இருப்பார் என்றும் கூறுகின்றார். வஞ்சக் கள்வர் என்று எவரும் காண்பதற்கு அரியவராக இறைவன் இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது.
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திருவாரூர் என்றும் உள்ளார்
வாசமலரின் கண் மான்தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்சக் கள்வர்
நேசரடைந்தார்க்கு அடையாதவர்க்கு நிட்டுருவர் கட்டங்கம் நினைவார்க்கு என்றும்
ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம் கொண்டாரே

கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.4) அப்பர் பிரானும், இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார். கொக்கரை=ஒரு இசைக் கருவி; நிருபன்=தலைவன், அரசன்; நிழல்=ஒளி; மாறு=பகை; மாறுபட்டு, ஆகமக் கொள்கையிலிருந்து மாறுபட்டு வாழ்ந்தவர்கள்; கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றவனும், ஆரூரனாக திருவாரூர் நகரத்தில் உறைபவனும், அடியார்கள் பால் அன்பு செலுத்துபவனும், அழகான திருப்பழனம் தலத்தில் உறைபவனும், திருநீற்றினை உடலில் பூசிக்கொண்டு ஒளி திகழும் மேனியனாக விளங்குபவனும், அனைவர்க்கும் தலைவனாக இருப்பவனும், தனக்கு ஒப்பாக வேறொருவர் இல்லாதவனும், எந்த பொருளையும் பிளவுபடுத்த வல்ல கூர்மையினை உடைய மழுப்படையினை ஏந்தியவனும், கொக்கரை எனப்படும் இசைக் கருவியை வாசிப்பவனும், சிறந்த பூத கணங்களை வைத்திருப்பவனும், வேதாகம கொள்கைகளிலிருந்து மாறுபட்டு பகைமையுடன் விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்தவனும் ஆகிய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான், என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.
ஆறேறு செஞ்சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான் தான் காண்
நீறேறு நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகரொன்றும் இல்லாதான் காண்
கூறேறு கொடுமழுவாட் படையினான்காண் கொக்கரையன் காண் குழுநல் பூதத்தான் காண்
மாறாய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.52.9) அப்பர் பிரான், தன்னை நினைக்கும் அடியார்களுக்கு நேசனாகத் திகழ்பவன் பெருமான் என்று கூறுகின்றார். எச்சன்=வேள்வியை நடத்தி வைக்கும் தலைவன்; ஈசன்=தலைவன்; வேதங்களில் உணர்த்தும் நெறிக்கு மாறாக தக்கன் செய்த வேள்வியை இறைவன் அழித்த போது, அந்த வேள்வியில் பங்கேற்ற பலருக்கும் தண்டனை அளித்த செய்தி இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. இந்த வேள்வியில் பங்கேற்ற எவரும் இறக்கவில்லை. தலைகள் துண்டிக்கப்பட்ட தக்கனும் எச்சனும், வேறு ஒரு தலை பொருத்தப்பட்டு உயிர் பிழைத்தனர். இவ்வாறு தண்டனை மட்டும் அளித்து, அனைவரையும் வாழச் செய்தமையால், அருள் செய்தான் காண் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வேத நெறிகளுக்கு மாறாக செய்யப்பட்ட தக்கனது வேள்வியில் பங்கேற்ற சந்திரனைத் தனது திருவடியால் தேய்த்தவர் சிவபெருமான். வேள்வியை முன்னின்று நடத்திய தக்கனையும், வேள்வித் தலைவனையும் கோபித்த பெருமான், அவர்கள் இருவரது தலைகளையும் அறுத்த இறைவன், வேள்வியில் பங்கேற்ற இந்திரனின் தோள்களை முரித்தார். இவ்வாறு வேள்வியில் பங்கேற்றவர்களை தண்டித்து அருள் செய்த பெருமான் அனைவரையும் அடக்கி ஆளும் தலைவராக விளங்குகின்றார். தன்னை நினைத்து வழிபடும் அடியார்கள் மீது அன்பு பாராட்டும் பெருமான், வேத மந்திரங்களாகவும், மறைகளின் உட்பொருளாகவும் விளங்குகின்றான். திருமாலும் பிரமனும் அடியும் முடியும் காண முடியாத வகையில், தீப்பிழம்பாய் நீண்டவன் பெருமான். அடர்ந்த சோலைகள் சூழ்ந்திருப்பதால் குளிர்ந்து காணப்படும் திருவீழிமிழலை தலத்தில், விண்ணுலகத்திலிருந்து திருமாலால் கொண்டுவரப் பெற்ற விமானத்தை உடைய திருக்கோயிலில் இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சந்திரனைத் திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்
இந்திரனைத் தோள் முரிவித்து அருள்செய்தான்காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம்,
மந்திரமும் மறைப் பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடராய் ஓங்கினான் காண் விண்ணிழி தண்வீழி மிழலையானே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.65.2) அப்பர் பிரான், இறைவனை நேசர்க்கு நேசன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானிடத்தில் அன்பு வைக்காத மாந்தர்களை நீசர்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் இகழ்கின்றார். அவ்வாறு இருக்கும் மனிதர்களைக் காணும் இறைவன், தான் உய்வதற்கு அளித்த வாய்ப்பினை அவர்கள் பயன்படுத்த தவறிவிட்டார்களே என்று வருத்தம் அடைந்து அவர்களைக் காணவும் கூசுகின்றார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தஞ்சம் என்ற சொல் தஞ்சே என்று குறைந்தது. தஞ்சே=எளிதாக; கூசாதார் என்று கூச்சம் வெட்கம் ஏதும் கொள்ளாமல் பெருமானை வணங்கும் அடியார்களை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். எனவே பெருமானை வணங்க கூச்சம் கொள்ளும் மனிதர்கள் அந்நாளில் இருந்தனர் என்பது தெளிவாகின்றது. புத்தர்களும் சமணர்களும் நிறைந்து வாழ்ந்த காலத்தில், பெருமானை கும்பிட்டால் தன்னை மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் அப்பர் பெருமானின் காலத்தில் வாழ்ந்து வந்த சிலருக்கு இருந்தது போலும். மேலும் மன்னனே சமண சமயத்தை பின்பற்றியும் அதனை ஆதரித்தும் வாழ்ந்து வந்தமையால், அரசனிடம் இருந்த அச்சம் காரணமாக மற்றவர்கள் அறியும் வண்ணம் பெருமானை வழிபட சற்று தயக்கம் நிலவியது நியாயம் தானே. கிறுத்துவர்கள் நடத்தும் பள்ளிகளில், கல்லூரிகள் படிக்கும் இன்றைய இளைஞர்கள் தங்களது நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு செல்வதற்கு தயக்கம் கொள்வதை நாம் நேரிடையாக இந்நாளில் காண்கின்றோம் அல்லவா, எனவே அத்தகைய சூழ்நிலையில் கூச்சம் ஏதும் கொள்ளாமல் வெளிப்படையாக பெருமானை வணங்கியவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள் தானே. அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம், பெருமான், அத்தகைய அடியார்கள் எந்த முயற்சியும் செய்யும் முன்னரே மிகவும் எளிதாக அவர்களது நெஞ்சினில் குடிகொள்கின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தன்பால் அன்பு வைத்து வழிபடும் அடியார்கள் பால் அன்பு வைத்துள்ளவனும், தன்பால் அன்பு கொள்ளாத மாந்தர்களின் அறியாமையை நினைத்து அவர்களைக் காணவும் கூச்சம் அடைபவனும், கூச்சமோ வெட்கமோ கொள்ளாமல், அடுத்தவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற கவலை கொள்ளாமல் தன்னை வணங்கும் அடியார்களின் மனதினில் எளிதில் குடிபுகுந்து உறையும் தன்மை கொண்டவனும், அழகும் இளமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவனும், நறுமணம் உடைய அழகிய கொன்றை மலரைத் தனது சடையில் அணிந்தவனும், மலை மங்கையாகிய பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகத்தில் ஏற்றவனும், வானவர்களால் எப்போதும் வணங்கி புகழப்படும் தலைவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடி கொண்ட அழகன் காண் அழகார் கொன்றை
வாசன்காண் மலைமங்கை பங்கன் தான்காண் வானவர்கள் எப்போதும் வணங்கி ஏத்தும்
ஈசன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.4) அப்பர் பிரான், இறைவனை நேசர்க்கு நேசன் என்று குறிப்பிடுகின்றார். தலையான்=தலைவன்: முகடு=உச்சி; நேசர்க்கு நேசன் என்ற தொடர் நமக்கு சிவபுராணம் திருவாசகத்தில் வரும் அன்பருக்கு அன்பனே என்ற தொடரை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், தன்னுருவம் யாவர்க்கும் அறியவொண்ணா நிலையான் என்றும், அனைவர்க்கும் தலைவன் என்றும் இறைவனின் உயர்ந்த தன்மையை உணர்த்தும் அப்பர் பிரான், தன் பால் நேசம் வைத்து தொழும் அடியார்களுக்கு நேசனாகத் திகழ்கின்றார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அனைவர்க்கும் தலைவனாக இருப்பவனும், அனைத்து உலகங்களும் தானாக இருப்பவனும், தனது உருவத்தை ஊனக் கண்களால் எவரும் அறியமுடியாத நிலையில் இருப்பவனும், தன்னிடம் அன்பு செலுத்தும் அடியார்களுக்கு அன்பனாக இருப்பவனும், நீண்டு பரந்திருக்கும் ஆகாயத்தைத் தாங்குவது போல் உயர்ந்து நிற்கும் மலைகளாக இருப்பவனும், கோடுகளை உடைய வாசுகி பாம்பினை நாண் போன்று வில்லின் இரு முனைகளையும் இணைக்குமாறு கட்டி வலிமை வாய்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழிக்கும் வண்ணம் அம்பினை எய்தவனும், நாகேச்சரத்து நகரினில் உறைபவனும் ஆகிய இறைவனைச் சேராதார்கள், நல்ல நெறியில் செல்லாதவர்கள் ஆவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தலையானை எவ்வுலகும் தான் ஆனானைத் தன்னுருவம் யாவர்க்கும் அறியவொண்ணா
நிலையானை நேசர்க்கு நேசன் தன்னை நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
மலையானை வரி அரவு நாணாக் கோத்து வல்லசுரர் புரம் மூன்றும் மடிய எய்த
சிலையானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.67.1), அப்பர் பிரான் ஆளான அடியவர்கட்கு அன்பன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். ஆளான அடியார்=பெருமானுக்கு அடிமையாக மாறி திருத்தொண்டு செய்யும் அடியார்கள்; ஆளான அடியார்கட்கு அன்பனாக பெருமான் இருந்த தன்மையை நாம் பல நாயன்மார்களின் சரித்திரத்திலிருந்து அறிகின்றோம். சண்டீசருக்கு பதவி அளித்தது. திருஞான சம்பந்தருக்கு பொற்றாளம் அளித்தது, முத்துப் பல்லக்கு அளித்தது, முத்துப் பந்தர் அருளியது, உலவாப் பொற்கிழி அருளியது, திருநாவுக்கரசு நாயனாருக்கு பொதிசோறு அளித்தது, அவரது தோள்களில் இடப இலச்சினைகள் பொறித்தது, தனது திருவடியை அவரது தலையினில் வைத்தது, சுந்தரருக்கு வேண்டிய போதெல்லாம் பொருள் அளித்தது முதலான நிகழ்ச்சிகள் அடியார்களுக்கு அன்பனாக விளங்கும் பெருமான் செய்யும் உதவிகள். பெரிய புராணத்தில் உணர்த்தப்படும் கருணைச் செயல்கள் அனைத்தும் இறைவன் அடியார்களுக்கு அன்பனாக இருந்த தன்மையால் எழுந்தது தானே. அனைத்து நாயன்மார்களுக்கும் இறைவன் அருளிய தன்மையை விவரித்தால், இந்த விளக்கவுரை மேலும் விரிந்துவிடும் என்று கருதி, அத்தகைய விளக்கம் தவிர்க்கப் பட்டுள்ளது. கீள்=கிழிக்கப்பட்ட துணியால் முறுக்கிய கயிறு, கோவணத்தை தாங்குவதற்காக இடுப்பினில் கட்டப்படுவது. இறைவனை கீளும் கோவணமும் அணிந்தவன் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. தனக்கு அடிமையாக மாறி திருத்தொண்டு செய்யும் அடியார்களுக்கு அன்பனாக இருப்பவனும், பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடுவானும், அடியேன் அடைக்கலம் புகும் இடமாக தனது திருப்பாதங்களை உடையவனும், தனக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாதவனும், சந்தனம் குங்குமம் சாந்து ஆகிய வாசனைப் பொருட்களை பூசிய தோள்களை உடையவனும், துளையிடப்படாத முத்தினைப் போன்று சிறப்பும் உயர்வும் உடையவனும், தூய்மையாக வெண்மை நிறத்தில் உள்ள கோவணத்துடன் கீளினையும் தனது இடுப்பினில் அணிந்தவனும் ஆகிய பெருமானை, கீழ்வேளூரை ஆளும் அரசனாக அந்த தலத்தில் குடிகொண்டிருக்கும் கேடிலிப் பெருமானை நாடிச் சென்று அவனை வழிபடும் அடியார்கள், தாங்கள் இறந்த பின்னர் மறுபடியும் பிறத்தலாகிய கேட்டினை நீக்கியவர்களாக விளங்குவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
தாளானை தன்னொப்பார் இல்லாதானைச் சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானை தோளாத முத்து ஒப்பானைத் தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே

முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.85.1) அப்பர் பிரான் பெருமானை அடியவர்கட்கு அன்பன் என்று கூறுகின்றார். ஆர்த்தல்=கட்டுதல்; அழல்=சினம், கோபம்; புறங்காடு= ஊருக்கு வெளியே அமைந்துள்ள சுடுகாடு; கனை கடல்=அலைகள் இடைவிடாது ஒலிக்கும் கடல்; கடுஞ்சினத்தைத் தனது இயல்பாக கொண்டுள்ள பாம்பினைத் தனது இடுப்பினில் அரை நாணாக கட்டியவனும், தனது அடியவர்கள் பால் அன்பு கொண்டவனும், ஆனையைக் கொன்று அதன் தோலினைத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்தவனும், தனது முறுக்குண்ட சடையின் மேல் கங்கை நதியை ஏற்றவனும், ஊருக்கு புறம்பாக அமைந்திருக்கும் சுடுகாட்டில் ஆடல் புரிபவனும், ஏழு உலகங்களும் கலக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டு, இடைவிடாது ஒலிக்கும் அலைகள் உடைய கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டு, அந்த நஞ்சினைத் தனது கழுத்தினில் அடக்கியவனும் ஆகிய இறைவன் முண்டீச்சரம் தலத்தில் சிவலோகனாக உறைகின்றான். அந்த சிவன் தான், எனது சிந்தையில் எப்போதும் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆர்த்தான்காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்
காத்தான்காண் உலகேழும் கலங்கா வண்ணம் கனை கடல் வாய் நஞ்சதனைக் கண்டத்துள்ளே
சேர்த்தான் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

அன்பனாகிய பெருமானின் திருவடிகளை சென்றடைய வேண்டும் என்றால், நாமும் பெருமான் பால் அன்பு செலுத்த வேண்டும் என்று சுந்தரர் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் எதிர்கொள்பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (7.7.8). மோழைமை=அறிவின்மை; வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்து வருவது; பண்டைய வினைகளின் காரணமாக, அவற்றை நுகர்ந்து தான் கழிக்க முடியும் என்பதாலும், பண்டைய வினைத் தொகுதிகளின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதால் அவற்றை நுகர்ந்து கழிக்க எண்ணற்ற பிறவிகள் தேவைப் படுகின்றன என்பதாலும், பெரும்பாலான உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றன. பிறப்பிறப்புச் சுழற்சியில் இருந்து விடுபட்டால் தான், இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் வாழ்க்கையைத் தவிர்க்க முடியும். பெருமானின் திருவடிகளைச் சென்றடைந்தால் தான், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடமுடியும். பெருமானின் திருவடிகளைச் சென்றடைய, பெருமானுக்கு அன்பராக மாற வேண்டும் என்பதே இந்த பாடலின் கருத்தாகும். இறைவன் பால் அன்பு வைக்காத மனிதர்களை முட்டை மனத்தீர் என்றும் அறிவிலிகள் என்றும் சுந்தரர் குறிப்பிடுகின்றார்.
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை
முன்பு சொன்னால் மோழைமையாம் முட்டை மனத்தீரே
அன்பர் அல்லால் அணி கொள் கொன்றை அடிகள் அடி சேரார்
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே

திருக்கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.20.7) சுந்தரர் நறுமணம் உடைய கூந்தல் கொண்ட உமையம்மை என்று குறிப்பிடும் வண்ணம் வம்பமரும் குழலாள் என்று கூறுவதை நாம் இந்த பாடலில் காணலாம். தன்னிடத்தில் அன்பு உடையவனே என்று பெருமானை அழைத்து, பெருமானே உன்னை அல்லால் வேறு எவரொருவர் எனக்கு உதவி செயவல்லார், நீயே குண்டையூரில் உள்ள இந்த நெல் மலையினை திருவாரூர் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுந்தரர் கோரும் பாடல். சுந்தரரின் வேண்டுகோளைக் கேட்ட பின்னர், பெருமானால் உதவி செய்யாமல் இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம். தனது பூத கணங்கள், குண்டையூரில் குவிந்து கிடந்த நெல்மலை முழுவதையும், திருவாரூர் வீதிகளில், இரவோடு இரவாக மாற்றி விடும் வண்ணம் பெருமான் கட்டளை இடுகின்றார் என்று பெரிய புராணம் தெரிவிக்கின்றது.
எம்பெருமான் உனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும்
வம்பமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்
அன்பதுவாய் அடியேற்கு அவை அட்டித் தரப் பணியே

கோடிக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.32.9) சுந்தரர், பெருமான் மிகுந்த அன்பு கொண்டு கோடிக்கரை தலத்தினில் உறைகின்றார் என்று சொல்கின்றார். படியான்=தன்மையான்; பலி என்ற சொல்லுக்கு வழிபாடு என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒரே இடத்தில் நின்று கொண்டு பலி கேட்பவர் அல்ல பெருமான். பக்குவப்பட்ட அடியார்களைத் தேடிக் கொண்டு பெருமான் தானே சென்று பலி கேட்பதே அவரது வழக்கம். எனவே இந்த தலத்தில் எழுந்தருளி இருப்பது பலி ஏற்றுக் கொள்வதற்கு அல்ல என்பது புலனாகின்றது. குடிகள் எவரும் அருகே இல்லாத இடத்தில், பெருமான் குடியிருந்தால் அவரை வழிபடுவார் எவர் என்ற கேள்வியை சுந்தரர் இந்த பாடலில் கேட்கின்றார்.
நெடியானொடு நான்முகனும் அறிவொண்ணாப்
படியான் பலி கொள்ளும் இடம் குடியில்லை
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல்
அடிகேள் அன்பதாய் இடம் கோயில் கொண்டாயே

சேறும் புதைகுழிகளும் மிகவும் அதிகமாக காணப்படும் இடத்தில் கோடிக்குழகர் தனியாக குடி கொண்டிருக்கின்றார் என்று பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி அவர்கள் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. இன்றும் ஊர்க்கோடியில் இருக்கும் திருக்கோயிலின் அருகே சுமார் பத்து இல்லங்களே உள்ளன. சுந்தரர் காலத்தில் இருந்த தன்மையே இன்றும் தொடர்கின்றதோ என்று நினைக்க தோன்றுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலில் அடிகளே என்று அழைத்து பெருமானே உமக்கு துணையாக எவரும் இல்லையே என்று சுந்தரர் சொல்கின்றார். இரண்டாவது பாடலில், பெருமானே ஏன் தனியாக இருக்கின்றாய் என்றும், மூன்றாவது பாடலில் இங்கே தனியாக எதற்காக இருக்கின்றாய் என்றும், கூகைகளும் ஆந்தைகளும் கொடிய வேடர்களும் மட்டும் வாழும் இடத்தில் ஏன் இருக்கின்றாய் என்று நான்காவது பாடலிலும் குறிப்பிடும் சுந்தரர், மிகவும் வேடிக்கையாக, வேறு இடம் இல்லாத காரணத்தால், கங்கையாளும் உமை அன்னையும் பெருமானின் சடையிலும் உடலிலும் பொருந்தி உள்ளனர் என்று கூறுகின்றார். பதிகத்தின் ஆறாவது பாடலில் இரவைத் தவிர்த்து பெருமானுக்கு வேறு துணையில்லை என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில் பெருமான் இந்த தலத்தினில் தனியாக இருக்கின்றார் என்றும், எட்டாவது பாடலில் எதற்காக பெருமானே தனியாக இங்கே இருக்கிறாய் என்றும் கொடிய வேடர்கள் உறைகின்ற இடத்தின் பால் அன்பு கொண்டு எதற்காக உறைகின்றாய் என்று ஒன்பதாவது பாடலிலும் சுந்தரர் குறிப்பிடுவதை நாம் உணரலாம்.

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (7.38.10) சுந்தரர் அன்பனாகிய பெருமானை அறிந்து கொள்ளாமல், அவரை மதியாது பேசினேன் என்று வருந்துவதை நாம் உணரலாம். திருவதிகை தலத்திற்கு வெளியே இருந்த சித்தவடம் என்ற மடத்தில், இரவில் சுந்தரர் தங்கிய போது, ஒரு கிழ வேதியர் உருவில் வந்த பெருமான், சுந்தரருக்கு அருகில் படுத்துக் கொண்டு தனது பாதத்தை சுந்தரரின் தலை மீது வைத்தார். முதியவரின் உடல் தளர்ச்சியின் காரணமாக அவரது பாதம் தனது தலையில் மீது பட்டிருக்கலாம் என்று கருதிய சுந்தரர் எழுந்து சற்று தள்ளி படுத்தார். அப்போதும் முதியவரின் கால் தனது தலையின் மீது படவே, தூக்கம் கலைந்து எழுந்த சுந்தரர் கோபத்துடன் இங்கே பலமுறை எனது தலையை மிதித்த நீர் யார் என்று வினவினார், என்னை நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையா என்று அந்த கிழ வேதியர் சொல்லி மறைந்த பின்னரே, வந்தது பெருமான் என்பதை சுந்தரர் புரிந்து கொண்டார். வந்தது யார் என்பதை புரிந்து கொள்ளாமல் மதியாது பேசிய தனது தவறினை இந்த பாடலில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். தான் செய்த தவறினை பொருட்படுத்தாத இறைவனை, அன்புடன் மன்னித்த இறைவனை, அன்பன் என்று சுந்தரர் அழைக்கின்றார்.
என்பினையே கலனாக அணிந்தானை எங்கள் எருதேறும் பெருமானை இசைஞானிசிறுவன்
வன்பனைய வளர் பொழில் சூழ் வயல் நாவலூர்க் கோன் வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர் பெருமானை அதிகை மாநகருள் வாழ்பவனை
என் பொன்னை எறி கெடில வடவீரட்டானத்து உறைவானை இறை போதும் இகழ்வன் போலியானே

திருத்துருத்தி மற்றும் வேள்விக்குடி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து பாடிய பதிகத்தின் பாடலில் (7.74.1) சுந்தரர், அன்பராம் அடியார் என்று குறிப்பிடுகின்றார். தொழுதெழும் அன்பர் என்ற தொடருக்கு, அடியார்களால் தொழப்படும் அன்பர் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. இழிந்தருவி=குன்றுகளிலிருந்து அருவியாக கீழே இறங்கும் மழை நீர்; வெடிபட= ஒலிக்குறிப்பு; வெடில்பட என்ற சொல்லுக்கு நறுமணம் நிறைந்த என்ற பொருளும் பொருந்தும்; நறுமணம் நிறைந்த மலர்களை அடித்துக் கொண்டு வருவதால், காவிரி நதியின் நீர் நறுமணம் உடையதாக இருப்பதாக கூறுகின்றார். அன்னமாம்=அன்னங்கள் விளையாடும்; சொன்னவாறு அறிவார் என்பது தலத்து இறைவனின் திருநாமம். பரத முனிவரின் மகளாக வளர்ந்த தேவியை பெருமான் திருமணம் செய்து கொண்ட தலம். அந்த திருமணத்தின் போது, முன்னம் தாம் உலகினுக்கு மொழிந்த வேத மந்திரங்களை ஓதிய வண்ணம் பிராட்டியை திருமணம் செய்து கொண்டமையால் சொன்னவாறு அறிவார் என்ற பெயர் ஏற்பட்டது. நிலவுலகினில் நடைபெறுகின்ற திருமணங்களை பின்பற்றி, வைதீக முறையை பின்பற்றி பெருமான் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய பிராட்டியின் ஆசைக்கு இணங்கி இந்த திருமணம் நடைபெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது. சொன்னவாறு அறிவார் என்ற தொடருக்கு, அடியார்கள் தங்களது விண்ணப்பத்தில் முறையிடும் கோரிக்கைகளை முற்றிலுமாக அறிந்து கொண்டு, அந்த அடியார்களின் துன்பங்களை நீக்கும் பெருமான் என்பதாக திரு சி.கே.எஸ் அவர்கள் விளக்கம் அளிக்கின்றார். இந்த விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது; மறக்குமாறு என்னை=எங்ஙனம் மறப்பேன்; பிணியிடர்=பிணியால் வந்த துன்பம்; எற்றும்=மோதும்; இந்த பாடலில் சுந்தரர் தன்னை செடியனேன் (தீயவன்) என்று சொல்லிக் கொள்கின்றார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூர் நகரத்து எல்லையைத் தாண்டிய குற்றத்தை செய்தமை குறித்து, தன்னை செடியனேன் என்று குறிப்பிட்டார் போலும். ஒன்றுக்கொன்று இடித்து மின்னலை உண்டாக்கும் பெரிய கரிய மேகங்கள் பொழியும் மழை, மலைச் சாரல்களிலிருந்து பெரிய சத்தத்துடன் கீழே இறங்கும் அருவிகளாக மாறி பின்னர் வெள்ளப் பெருக்கு மிகுந்த அலைகள் கரைகளில் மோதும் காவிரி நதியாக உருவெடுக்கின்றது. இந்த தன்மை உடைய காவிரி நதியின் அகன்ற கரையினில், அன்னங்கள் நடமாடும் காவிரி நதியின் கரையினில், அமைந்துள்ள பல தலங்களில் உறைபவரும், சொன்னவாறு அறிவார் என்ற திருநாமத்துடன் துருத்தி தலத்தினில் உறைபவரும், வேள்விக்குடி தலத்தினில் தலைவராக வீற்றிருப்பவரும் ஆகிய பெருமானை, தனது திருவடிகளைத் தொழுது வணங்கும் அடியார்களுக்கு அன்பராக விளங்கும் பெருமானை, எனது உடற்பிணியை நீக்கி எனது துன்பத்தைக் களைந்த பெருமானை, குற்றம் புரிந்தவனாகிய அடியேன் எங்ஙனம் மறப்பேன்; பெருமானின் சன்னதி முன்னர் செய்த சத்தியத்தை மீறிய குற்றம் புரிந்த அடியேன், எனது பிணியைத் தீர்த்த பெருமானின் உதவியை மறக்கும் நன்றியற்றவன் அடியேன் அல்லேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மின்னுமா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபடக் கரையொடும் திரைக்கொணர்ந்து எற்றும்
அன்னமாம் காவிரி அகன் கரை உறைவார் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்குமாறு எம் பெருமானை என்னுடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை

பெருமான் பால் நாம் அன்பு வைப்பதும் அவனது கருணை இருந்தால் தான் நிகழும் என்று திருச்சதகம் பதிகத்தின் பாடலில் (8.5.6) மணிவாசக அடிகளார் கூறுகின்றார். அடிப்படையாக நம்மில் அந்த விருப்பம் முதலில் தோன்ற வேண்டும். பெருமானின் திருவடிகளுக்கு தான் நிரந்தரமாக அன்பு வைத்து, முழுவதுமாக பெருமானைப் போற்றி வணங்க பெருமானின் அருள் வேண்டும் என்று மணிவாசக அடிகளார் வேண்டும் பாடல். பல வகையான மலர்களையும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, தவறாமல் பெருமானின் திருமேனி மீது தூவி பெருமானைப் பணிந்து வணங்குவதால், தாம் விரும்புவது எல்லாம் அடைந்து விடலாம் என்று பலரும் நினைக்கின்றனர். இந்த செயலால் மட்டுமே நாம் இறைவனின் அருள் பெறுவது என்பது இயலாத காரியம். நமது மனதினில் வஞ்சம் ஏதுமின்றி நாம் அவனை வணங்கினால் தான் நமக்கு அவனது அருள் கிட்டும் என்பதை நமக்கு உணர்த்தும் அடிகளார், தனக்கு பெருமான் பால் உண்மையான அன்பு நிரந்தரமாக ஏற்பட வேண்டும் என்பதற்கு பெருமானின் அருளினை வேண்டி இறைஞ்சும் பாடல்.
பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பருள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே நின்றன் வார் கழற்கு அன்பு எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே

பெருமான் நம்பால் அன்பு வைக்க வேண்டும் என்றால், நாம் இறைவன் பால் அன்புடன் இருக்க வேண்டும் என்பதை முன்னமே சிந்தித்தோம். தான் பெருமானுக்கு அன்பனாக திகழ்ந்தமையால், பெருமான் தன்னை ஆண்டுகொண்டான் என்று மணிவாசகர் குறிப்பிடும் திருச்சதகத்தின் பாடலை (8.5.23) இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். ஆய=ஆராய்ந்து பார்க்கும்போது; பெருமானுக்கு எண்ணற்ற அடியார்கள் இருக்கின்றனர்; அதனால் அடியார் எவரும் இல்லாத காரணத்தால், தான் அவருக்கு அன்பன் என்று சொன்னவுடன் தன்னை அவர் ஆட்கொண்டார் என்று கருதுதல் தவறு; அவரது கருணை உள்ளமே, தன்னை விடவும் சிறந்த அடியார்கள் பலர் இருப்பினும், நாயாக பேயாக கீழ்மைத் தன்மையுடன் தான் இருப்பினும், தான் அவருக்கு அன்பன் என்று சொன்னவுடன் அவரால் தான் ஆட்கொள்ளப் பட்டதற்கு காரணம் ஆகும் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். .
ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்தி யான் யாவரினும் கடையனாய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் அடியார் தாமில்லையே அன்றி மற்றோர்
பேயனேன் இது தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே

திருச்சதகம் காருண்யத்திரங்கல் பதிகத்தின் பாடலில் (8.5.69) பாடலில் மாணிக்கவாசக அடிகளார், பெருமானை அன்பர்க்கு அவரினும் அன்ப என்று குறிப்பிடுகின்றார். நாம் பெருமான் பால் எவ்வளவு அன்பு செலுத்துகின்றோமோ, அதனினும் அதிகமான அன்பை அவர் நம் பால் பொழிகின்றார் என்று இந்த பாடலில் அடிகளார் குறிப்பிடுகின்றார். தீர்ந்த=முதிர்ந்த; வார்ந்த=ஒழுகிய; ஆர்ந்த=நிறைந்த, அருட்குணங்கள் நிறைந்த என்றும் இன்பம் நிறைந்த என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம்; பேர்ந்தும்=மீண்டும்; அயின்று=உட்கொண்டு: பேர்ந்த என் பொய்ம்மை என்ற தொடருக்கு, முனைவர் அ.ச.ஞா அவர்கள், இறைவனின் திருவுள்ளக் கருத்தினை புரிந்து கொள்ளாமலே, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று பாண்டிய மன்னனுக்கு பதில் அனுப்பிய செய்கை என்று விளக்கம் அளிக்கின்றார். அடிகளாரின் இந்த பொய்யினையும் மெய்யாக மாற்றியது இறைவனின் கருணை.
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிட வேண்டும் போற்றி
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி

திருச்சதகத்தின் மற்றொரு பாடலிலும் (8.5.73) மணிவாசக அடிகளார், மெய்யன்பர்களைப் போன்ற அன்பு தனக்கும் பெருமான் பால் ஏற்பட வேண்டும் என்று பெருமானின் அருள் வேண்டி நிற்கின்றார். உலகப் பொருட்கள் மீது தனக்கு பற்று இல்லை என்று தான் வஞ்சகமாக பொய் சொல்வதற்கு தயாராக இல்லை என்று அடிகளார் இந்த பாடலில் உணர்த்துகின்றார். உலகப் பொருட்கள் மீது தான் கொண்டுள்ள பற்றினால், பெருமான் பால் தான் வைத்துள்ள அன்பு பொய் கலந்ததாகவே காணப்படுகிறது என்று கூறுகின்றார். எனினும் மெய்யடியார்கள் போன்ற பக்குவம் தனக்கு வாய்க்க வேண்டும் என்றும் அதன் பயனாக தனக்கு பெருமான் பால் உண்மையான அன்பு தோன்ற வேண்டும் என்று வேண்டுகின்றார். நிலையற்ற பொருள்களின் பால் நாட்டம் இருக்கும் வரை, நமக்கு நிலையான பொருளாகிய பெருமான் பால் உண்மையான அன்பு தோன்றாது என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.
ஐய நின்னது அல்லது இல்லை மற்றொர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்ம்மையேன் என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழற்கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆக வேண்டுமே

திருவாசகம் திருச்சதகம் ஆனந்தாதீதம் பதிகத்தின் பாடலில் (8.5.91) பெருமான் பால் உண்மையான அன்பு வைத்துள்ள அடியார்கள் வீடுபேறு அடைவதையே விரும்புவார்கள் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். அதாவது உலகப் பொருட்கள் மீது நாட்டம் கொள்ளாமல் வாழ்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு தவிப்பதை தவிர்க்கும் வீடுபேறு பதவியை பெறுவதையே விரும்புவார்கள் என்று கூறுகின்றார். மேலும் இந்த பாடலில் எல்லையற்ற தன்மையனாக விளங்கும் பெருமான் எளிய மானிட வடிவம் கொண்டு திருப்பெருந்துறை தலத்தில் குருந்த மரத்தின் நிழலில் குருவாக வந்து அருள் புரிந்த தன்மையை மணிவாசக அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். வெள்ளப் பெருக்கு அளவுடன் இருந்தால் தான் பயிர்கள் செழித்து வளரும். கரை கடந்து வரும் வெள்ளம் பயிர்களை அழித்துவிடும். வெள்ளம் வாராமல் இருந்தாலும் பயிர்கள் வளராது. எனவே தனது நிலையில் மாறாது அளவோடு வரும் வெள்ளமே பயிர்களுக்கு சிறந்தது. அதே போன்று பெருமானின் கருணையின்றி உயிர்கள் தழைத்து வளர முடியாது. அதே சமயத்தில், அவனது கருணை வெள்ளம் முழுவதையும் தாங்கும் ஆற்றலும் உயிர்களுக்கு இல்லை. அதனால் தான் அருளாளர்கள் இறைவனின் கடைக்கண் பார்வையே போதும் என்று கூறுகின்றனர். இதனை உணர்த்தும் பொருட்டே மாறிலாத மாகருணை வெள்ளம் என்று பெருமானை அடிகளார் அழைக்கின்றார். உண்மையான அடியார்கள் (மெய்ம்மை அன்பர்) பெருமானுடன் கூடியிருந்து என்றும் அழியாத இன்பம் அடைவதையே (வீடுபேறு-மெய்ம்மை) விரும்புவார்கள். எல்லையற்ற தன்மைகளை உடைய இறைவன், எளிய அந்தணனாக வந்து குருந்த மரத்தினடியில் காத்திருந்து குருவாக உபதேசம் செய்து தன்னை ஆட்கொண்டதை குறிப்பிடும் அடிகளார், அவ்வாறு பெருமான் ஆட்கொண்டதால் தன்னிடம் நிகழ்ந்த மாற்றத்தையும் இங்கே குறிப்பிடுகின்றார். பல குற்றம் குறைகளுடன் பாமரனாக இருந்த தன்னை, ஒளி செய் மானுடமாக மாற்றியவன் பெருமான் என்றும் அந்த மாற்றம் பெருமானின் கண்ணோக்கத்தால் நிகழ்ந்தது என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். இரும்பாக இருந்த தன்னை பெருமான் பொன்னாக மாற்றிய பின்னரும், கடையனாகிய தனது நெஞ்சத்தில் அத்தகைய மாற்றத்தின் விளைவு தென்படவில்லை என்று குறிப்பிட்டு, தனது நிலையை நினைத்து தானே பரிதாபப் படுகின்றார். கீறிலாத நெஞ்சம் உடையவனாக தான் இருப்பதை குறிப்பிடுகின்றார். பலரும் நடந்த வழி தேய்வதும், கையாளப் பட்ட பாத்திரத்தில் கீறல்களும் இருப்பது இயற்கை. இறைவன் தனக்கு ஞானம் அருளிய பின்னரும் அந்த ஞானத்தின் அறிகுறி ஏதும் தனது மனதினில் காணப்படவில்லை என்பதை கீறிலாத நெஞ்சு உடையனாயினேன் என்று தன்னை குறிப்பிட்டு அடிகளார் வருந்துகின்றார். அதாவது தனது மனதினை பயன்படுத்தி, மனமொன்றி முழுமுதற் கடவுளாகிய பெருமானை தான் வழிபடவில்லை என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் அடுத்த பாடலிலும் (8.5.92) மெய்ம்மை அன்பர் நின் மெய்ம்மை மேவினார் என்று குறிப்பிடுகின்றார்.
மாறிலாத மாக்கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாளிணை
வேறிலாதப் பதப்பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
ஈறிலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடமாக நோக்கியும்
கீறிலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே

திருவாசகம் திருச்சதகம் ஆனந்தாதீதம் பதிகத்தின் பாடலில் (8.5.96) பெருமானின் அருளினால் தான் உண்மையான மெய்யன்பர்கள் பால் அன்பு வைத்துள்ளேன் என்று அடிகளார் கூறுகின்றார். பொதுவாக எந்த உயிரினமும் வளர்வதற்கு ஒரு வித்து தேவைப்படுகின்றது. ஆனால் பிரளயம் முடிந்த பின்னர், உலகினில் அனைத்து வகையான உயிரினங்களும் தோன்றுகின்றன. இவை எப்படி உண்டாகின்றன. வித்து ஏதும் இல்லாமல் பொருட்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இறைவனுக்கு இருப்பதன் காரணமே, இந்த வகையான தோற்றத்திற்கு காரணம். பெருமான் அனைத்து வகையான உயிர்களுக்கும் வித்தாக இருக்கும் நிலையே என்று இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. வைச்சு வாங்குவாய்=நிலைபெறச் செய்து அழிப்பாய்; கொலார்=கொல்ல மாட்டார்; பழ அடியார்களின் கூட்டத்தில் தன்னை சேர்த்து வைத்த பெருமான், ஒரே வினாடியில் அவர்களுக்கு சமமாக தானும் மதிக்கப் படும் வண்ணம் உயர்த்திய பெருமான், தன்னை கைவிட்டு விட்டு மறைந்து விட்டாரே என்று அடிகளார் ஏங்குகின்றார். தன்னிடம் ஏதோ குறை இருப்பதால் தான், பெருமான் தன்னை விட்டுவிட்டு போய்விட்டார் என்ற முடிவுக்கு வந்த அடிகளார் அதற்காக தன்னை கைவிடுதல் நியாயமா என்று கேட்கின்றார். தான் வளர்த்த மரம் நச்சுமரம் என்று தெரிந்த பின்னரும் அதனை வெட்டாமல் உலகத்தவர் பேணிக் காப்பது போன்று, தனது குறைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னை ஆதரித்து அருள் புரியவேண்டும் என்று பெருமானிடம் வேண்டுகின்றார்.
விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணும் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனம் உடைய நாதனே

அனைத்து உயிர்களுடன் கலந்து இருந்தாலும் அங்கிங்கு எனாதபடி அனைத்து இடங்களிலும் பரவி இருந்தாலும், பெருமானை அனைவரும் உணர முடிவதில்லை. பெருமான் பால் உண்மையான அன்பு வைத்துள்ள அடியார்கள் மட்டுமே அவனை உணர முடிகின்றது என்பதை திருவாசகம் திருவம்மானை பதிகத்தின் பாடலில் (8.8.13) மணிவாசக அடிகளார் உணர்த்துகிறார். இந்த உலகத்தில் நாம், மற்றவர்களின் பெருமையை உணர்ந்து மதித்து அவர்கள் நம்மை விட பெருமையிலும், குணத்திலும், ஆற்றலிலும் பெரியவர்களாக இருந்தால் அவர்களை நாம் தலைவராக ஏற்றுக் கொள்கின்றோம். சிவபெருமானைவிட ஆற்றலில் மிக்கவர்களும், பெருமையில் சிறந்தவர்களும், குணவான்களும் எவரும் இல்லாத காரணத்தால், சிவபெருமான் எவரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிலை காணப் படுவதில்லை. அதனால் தனக்குத் தலைவர் என்று ஒருவர் இல்லாத ஒப்பற்ற தலைவராக சிவபெருமான் விளங்குகின்றார். இந்தக் கருத்து தான் தலைவர் அல்லாமை என்ற தொடரால் விளக்கப் பட்டுள்ளது. தனக்குத் தலைவராக எவரும் இல்லாத காரணத்தால், சிவபெருமான்எவரையும் வணங்க வேண்டிய அவசியமும் இல்லை. எனவே அவரது கைகளுக்கு, சேர்ந்து இருப்பது என்ன என்பதே தெரியாது. அதனால் தான் மணிவாசகப் பெருமான் இவரை, சேர்ந்தறியாக் கையன் என்று நயமாக உரைக்கின்றார்.
கையார் வளை சிலம்ப காதார் குழையாட
மையார் குழல் புரளத் தேன் பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானாய்

ஏழுலகத்தையும் ஆளும் வண்ணம் உயர்ந்தவனாக இருப்பினும், அடியார்கள் பால் அன்பு வைத்துள்ள பெருமான், அவர்களது உள்ளங்களில் சிவானந்த அமுதத்தை ஊறச் செய்கின்றான் என்று குயில் பத்து பதிகத்தின் பாடலில் (8.18.6) மணிவாசகர் கூறுகின்றார். கொம்பு=மரக்கிளை; மிழற்றும்=கூவும்; தீர்ந்த அன்பு=தலையாய அன்பு; குயில் கூவுதல் வசந்த காலத்தின் வருகையை உணர்த்தும். வசந்த காலத்தில் காதலர்கள் திருமணம் நடைபெற்று ஒன்று கூடுதல் நடைபெறுவது வழக்கம் என்பதால், குயில் கூவுதலால் அவ்வாறு நடைபெறுவதாக பெண்கள் கற்பனை செய்வார்கள் என்றும், அதற்காக குயில் கூவ வேண்டும் என்று விரும்புவார்கள் என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அந்த மரபினை பின்பற்றி குயில் கூவ வேண்டும் என்று திருவாசக நாயகி விரும்புவதாக அமைந்த பாடல்.
இன்பம் தருவன் குயிலே ஏழுலகும் முழுதாளி
அன்பன் அமுதளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவடு ஒத்த நற்பரி மேல் வருவானைக்
கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி நாதனைக் கூவாய்

சிவபெருமானை அன்பே என்று மணிவாசகர் அழைப்பதை நாம் திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் முதல் பாடலில் (8.22.1) காணலாம். உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு வஞ்சனையாக செயல்படும் ஐந்து புலன்களின் தாக்கத்தை அடக்கி அமுதமாக தனது உள்ளத்தில் ஊறிய இறைவனை, தான் காணுமாறு அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் இங்கே வேண்டுகின்றார். அன்பே சிவமாகவும், அந்த சிவமே தனது உள்ளத்தில் ஊறும் அமுதமாகவும், அந்த அமுதம் விளைவிக்கும் அளவற்ற இன்பமாகவும் இருக்கும் நிலையினை தான் உணர்ந்ததை அடிகளார் இந்த பாடலில் தெரிவிக்கின்றார். தங்களுக்குள்ளே மாறுபட்டு தத்தம் வழியே தன்னை இழுத்துச் செல்ல இடைவிடாது முயற்சி செய்யும் வஞ்சக ஐம்புலன்கள், தன்னைத் தங்களின் வசப்படுத்தும் வழியினை, இறைவனின் உதவியுடன் தான் அடைத்ததால் தனது உள்ளத்தில் பரஞ்சோதி சுடர் விட்டது என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார்.
மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து அமுதே
ஊறி நின்று என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்து அருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே

திருவாசகம் செத்திலாப்பத்து பதிகத்தின் பாடலில் (8.23.4), மணிவாசக அடிகளார், திருமால் பிரமன் மற்றும் பல தேவர்கள் பெருமானுக்கு அன்பராக மாறி, அருந்தவம் புரிகின்றனர் என்று கூறுகின்றார். மேலும் பெருமானே நீர் என்னை ஆட்கொண்டதன் பயனை நான் இன்னும் அடையவில்லையே என்று மணிவாசக அடிகளார் புலம்புவதையும் இந்த பாடலில் நாம் காணலாம். திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்ட பெருமான், தன்னை மட்டும் விட்டுவிட்டு மற்ற அடியார்களுடன் சென்றதால் வருத்தம் அடைந்த அடிகளார், பின்னர் பெருமானின் திருவுள்ளக் கருத்தினை அறிந்தவராக, தான் தனது அனுபவங்களை திருவாசகப் பாடல்களாக பாட வேண்டும் என்பதை புரிந்து கொண்டவராக இருப்பதை உணர்ந்து சற்று ஆறுதல் அடைந்தார்; எனினும் தன்னை பெருமான் இன்னும் அழைத்துக் கொள்ளாததின் காரணம் தான் உடலுடன் கூடி இருப்பதே என்று முடிவு செய்தவராக, தனது உயிர் ஏனின்னும் உடலினை விட்டு பிரியாமல் இருக்கின்றது என்று ஏங்குகின்றார். இறைவனிடம் செத்திடப் பணியாய் என்று வேண்டியவாறு இந்த பதிகத்தின் பாடல்களை பாடுகின்றார். அத்தகைய பாடல் தான் இந்த பாடல். பலரும் காத்திருக்க, தன்னை இறைவன் ஆண்டு கொண்டதை நெகிழ்ந்த மனத்துடன் நினைத்துப் பார்க்கும் அடிகளார், அவ்வாறு இறைவன் ஆட்கொண்டதால் தனது உடலிலும் உள்ளத்திலும் தேவையான மாற்றங்கள் ஏற்படவில்லை என்று வருந்துகின்றார். தழலுறு மெழுகாக பலரும் கடுந்தவம் புரிந்தும் உன்னால் ஆட்கொள்ளப்படும் அருளினை அவர்கள் பெறாமல் இருக்கின்ற போது, பெருமானே நீ என்னை எதற்காக ஆட்கொண்டாய் என்று வினவுகின்றார். எனது சிந்தை வலிமை வாய்ந்த மரக்கட்டையாக இன்னும் நெகிழாமல் இருப்பதாலும், எனது செவிகள் இரும்புச் செவிகளாக இருப்பதாலும், நான் இன்னும் உன்னால் ஆட்கொள்ளப் பட்டதன் பயனை முழுதுமாக அடையவில்லை என்பது புலனாகின்றது என்று பெருமானிடம் முறையிடுகின்றார். இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் செத்திடப் பணியாய் என்று அடிகளார் வேண்டுவதையும் நாம் உணர்கின்றோம். அடிகளார் தனது உயிரை போக்கிக் கொள்வதற்கு எப்போதும் முயற்சி செய்யவில்லை; அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ என்று பெருமான் தன்னை ஆட்கொண்ட தன்மையை குறிப்பிடும் அடிகளார், தனது உடலும் இறைவனது உடைமை என்பதால் அந்த உடலினை போக்கிக் கொள்ள இறைவனது உதவியை நாடுகின்றார்.
அன்பராகி மற்று அருந்தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழலுறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனப்பலர் நிற்க இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய்
வன்பராய் முருகொடு ஒக்கும் என் சிந்தை மரக்கண் என் செவி இரும்பினும் வலிது
தென்பராய்த்துறையாய் சிவலோகா திருப்பெருந்துறை மேவிய சிவனே

திருவாசகம் கண்டப்பத்து பதிகத்தின் பாடலில் (8.31.9) மணிவாசக அடிகளார், பெருமான் தன்பால் எல்லையற்ற அன்பினை அருளிச் செய்து, உயர்ந்த கருணையை செலுத்தி, தனது மலங்களை அறுத்து வினைகளை நீக்கினார் என்று கூறுகின்றார். பாங்கு=நன்மை; பரிசு=தன்மை; பெருமானின் கருணையினால் தனது அகத்திருள் நீங்கி, ஞானம் பிறந்தது என்று கூறுகின்றார். உலப்பு=அழிவு அற்றது, எல்லை அற்றது; வினை வாங்கி என்று பெருமானின் செயலை அடிகளார் குறிப்பிடுவது சற்று சிந்திக்கத் தக்கது. உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கிக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்பும் பெருமான், உயிர்கள் தங்களது வினைகளை நீக்கிக் கொள்வதற்கு ஏதுவாக, உயிர்களை தகுந்த உடலுடன் பிணைத்து, அந்த உடலுக்கு கருவி கரணங்களை அளித்து, உயிர்கள் உண்மையான மெய்ப்பொருளாகிய தன்னை உணர்ந்து தன்பால் அன்பு செலுத்தி தன்னுடன் சேர்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார். இந்த பாதையில் பயணம் செய்யும் உயிர்கள் தற்போதம் நீங்கப் பெற்றவர்களாக, தாம் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை சரி சமமாக பாவித்து, அந்த இன்ப துன்பங்களை அனுபவிக்கையில் அதனால் சலனம் ஏதும் அடையாமல் தொடர்ந்து இறைவனை சிந்திக்கின்றன. இத்தகைய உயிர்கள், வினைகளின் பயனாகிய இன்ப துன்பங்களால் சலனம் ஏதும் அடையாத பக்குவத்தில் இருப்பதால், இனியும் இந்த உயிர்கள் எத்துணை வினைகளை அனுபவிக்க நேர்ந்தாலும், அந்த உயிர்களின் போக்கில் மாற்றம் ஏதும் இருக்காது என்பதை உணரும் இறைவன், அந்த உயிர்கள் அடுத்து வரும் பிறவிகளில் கழிக்க இருக்கும் வினைகளை தானே திரும்பப் பெற்றுக் கொள்கிறான். இதன் மூலம் அந்த உயிர்கள் வினையற்றவையாகத் திகழ்ந்து முக்தி நிலை அடைவதற்கு தகுதி பெறுகின்றன. பெருமானின் இந்த செய்கையே வினை வாங்கி என்று இங்கே உணர்த்தப் படுகின்றது.
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை
ஓங்கி உளத்தொளி வளர உலப்பிலா அன்பருளி
வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே

திருப்பாண்டிப் பதிகத்தின் பாடலில், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று விரும்பும் அடியார்களை அன்பர் என்று மணிவாசக அடிகளார் அழைக்கின்றார். முந்நீர்= மூன்று விதமான நீர் கலக்கும் கடல், ஆற்றுநீர் ஊற்றுநீர் மற்றும் மழைநீர் ஆகிய மூன்றும் கலப்பதால் ஏற்படும் கடலினை முந்நீர் என்று அழைப்பார்கள். பிறப்பிறப்புச் சுழற்சியை கடலுக்கு ஒப்பிடுகின்றார். எண்ணற்ற அலைகள் கொண்டுள்ள கடல் போன்று பிறப்பிறப்புச் சுழற்சியும் எண்ணற்ற பிறவிகளை உடையது. ஒரு அலையிலிருந்து தப்பித்து கரை ஏறுவது போன்ற நிலை இருக்கையில் அடுத்து இன்னொரு அலை அடித்துக் கொண்டு வந்து நம்மை கடலுக்குள்ளே இழுத்துச் செல்வதைப் போன்று, இடைவிடாது அந்த சுழற்சியிலிருந்து தப்ப முடியாத வண்ணம் நம்மை இழுத்து நிறுத்துவது பிறவிக்கடல். விரவிய=நம்முடன் கலந்துள்ள; வினைகள் உறுதியாக நம்மை பிடித்துக் கொண்டுள்ளமையால் தான், மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்க நேரிடுகின்றது. சிவபெருமான் குதிரைச் சேவகனாக வந்த அழகிய கோலத்தைக் கண்ட, தம்மை முற்றிலும் மறந்தவர்களாக மரம் போன்று அசையாது மதுரை நகரத்து பெண்டிர் நின்றனர் என்று கூறுகின்றார். மரவியன்=மரத்தின் இயல்பு கொண்டு;
விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப்
பரவிய அன்பரை என்புருக்கும் பரம் பாண்டியனார்
புரவியின் மேல் வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார்
மரவியன் மேல் கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே

நாம் அவனது திருவடி பால் வைக்கும் அன்பே சிவமாக மிளிர்கின்றது என்பதை மணிவாசக பெருமானார் பிடித்த பத்து பதிகத்தில் கூறுகின்றார். அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்க வேண்டும் என்றால், நாம் சிவபெருமான் பால் அன்பு கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும் போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை= பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை; சுருக்கும்=வீணாக்கும்: பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயப்பட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அடிகளார் இந்த பாடலில் அழைக்கின்றார். அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக்கொள்வதை நாம் உணரலாம்.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

குலாப்பத்து பதிகத்தின் பாடலிலும் (8.40.3) மணிவாசகர் இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார். எந்தவொரு உயிருக்கும் தான் எண்ணற்ற பழைய பிறவிகளில் சேர்த்துக் கொண்டுள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் நுகர்ந்து கழித்துக் கொள்வதற்கான சக்தி இல்லை; மேலும் அந்த உயிர் இணைந்துள்ள உடலுக்கும் அந்த அளவுக்கு இன்ப துன்பங்களை தாங்கும் சக்தி இல்லை என்பதால், இறைவன் நம் பால் கருணை கொண்டு அந்த உயிர்களின் வினைகளின் ஒரு பகுதியை மட்டும் இந்த பிறவிக்கு, பிராரத்த வினையாக ஒதுக்கிவிட்டு, எஞ்சிய வினைகளை அடுத்து எடுக்க இருக்கும் பிறவிகளுக்கு, சஞ்சித வினைகளாக, ஒதுக்கி விடுகின்றான். இந்த இரண்டு வினைகளைத் தான், பிரார்த்த வினைகள் மற்றும் சஞ்சித வினைகளையே, இருவினைகள் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்றால், இந்த இரண்டு வகையான வினைகளையும் முழுவதுமாக கழித்துக் கொள்ள வேண்டும். இந்த பிறவிக்காக ஒதுக்கப்பட்ட பிரார்த்த வினைகளை நாம் நுகர்ந்து கழித்துக் கொள்ளலாம், அவ்வாறு நுகர்ந்து கழிக்கும் போது, மேலும் ஆகாமிய வினைகள் சேராதவாறு, விருப்பு வெறுப்பு இன்றி, அந்த வினைகளின் பயனாக நேரிடும் இன்ப துன்பங்களை, விருப்பு வெறுப்பின்றி எதிர்கொண்டு நடந்து கொள்ளலாம். ஆனால் இனிமேல் எடுக்கவிருக்கும் சஞ்சித வினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி ஐயப்பாடு நமக்கு எழலாம். நாம் இந்த பிறவியில் எதிர்கொள்ளும், இன்ப துன்பங்களை, நமது வினைகளால் விளைந்தவை என்பதை புரிந்து கொண்டு, மனதினில் எந்த விதமான சலனமும் இன்றி, அனைத்தையும் இறைவனின் செயல் என்பதை உணர்ந்து, இன்ப துன்பங்களை ஒரே விதமாக பாவித்தால், மேலும் ஆகாமிய வினைகள் சேரா. மேலும், நாம் அடைந்துள்ள இந்த பக்குவ நிலையினை கண்ணுறும் இறைவன், இனிமேல் இந்த உயிர், எவ்வளவு வினைகளை அனுபவிக்க நேரிட்டாலும், அதன் நிலையில் மாற்றம் ஏற்படாது என்பதை உணர்வதால், அந்த உயிரினை, சஞ்சித வினைகளை வரும் பிறவிகளில் நுகர்ந்து கழிக்கும் நிலையிலிருந்து விடுதலை அளிக்கின்றான். இந்த தன்மை தான் இங்கே இருவினையை ஈடழித்து என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது. ஈடு என்றால் வலிமை என்று பொருள். துவந்துவங்கள்=நன்மை தீமை ஆகிய இணை பிரியாத இரண்டு; பரஞானத்தால், இறைவனைப் பற்றிய அறிவால், நமது மனது தூய்மை அடையும் நிலை. குலாத்தில்லை=சிறப்புடன் விளங்கும் தில்லையம்பலம்; தனது என்பினை உருக்கிய பெருமான், தனது இருவினைகளை ஈடழித்தும், இன்ப துன்பங்களை ஒரே விதமான உணர்ச்சியுடன் எதிர்கொள்ளும் பக்குவத்தை அளித்தும், அதற்கு முன்னம் தன்னுடன் பிணைந்திருந்த அனைத்து வினைகளையும் முழுவதுமாக அழித்தும், தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்து தனது உயிரின் துன்பங்களை முற்றிலும் களைந்து விட்டான் என்று இந்த பாடலில் மணிவாசக அடிகளார் கூறுகின்றார், எனவே தான், தன் பால் அன்பு கொண்டு இறைவன் செய்த இந்த கருணைச் செயலை நினைவு கூர்ந்து மனம் கசிந்தவராக இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார்.
என்பு உள்ளுருக்கி இருவினையை ஈடழித்துத்
துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து
முன்பு உள்ளவற்றை முழுதழிய உள்புகுந்த
அன்பன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே

திருவாசகம் திருவெண்பா பதிகத்தின் பாடலில் (8.47.11) மணிவாசக அடிகளார், தன்னிடம் அன்பு வைக்கும் வண்ணம் தனது சிந்தையை மாற்றிய பெருமான், தன்னுடைய சிந்தையினை தான் உறைகின்ற இடமாக விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டான் என்று கூறுகின்றார்.
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்பு அறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து

திருமந்திரம் முதல் தந்திரத்தின் பாடலில், திருமூலர் பெருமானை அன்பன் என்று குறிப்பிடுகின்றார். இரதிக்கும்=ரசிக்கும்; அனைவராலும் நம்புதற்கு உரியவனும், உயிர்கள் அடைக்கலம் புகத் தக்கவனாக இருப்பவனும், எல்லாப் பொருள்களுமாக இருப்பவனும், மங்கலத்தின் வடிவமாக இருப்பவன் என்று தேவர்களால் போற்றப் படுபவனும், இன்பமே வடிவமாக இருப்பவனும், இன்பத்தின் இடையில் சுவைக்கப் படுகின்ற அன்பாக இருப்பவனும் ஆகிய இறைவனை பலரும் அறிந்து கொள்வதில்லையே என்று திருமூலர் வருந்துகின்றார். இறைவன் அன்பின் வடிவினனாகவும் இன்பத்தின் சுவையாகவும் இருக்கின்றான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் கருத்து.
நம்பனை நானாவிதப் பொருளாகும் என்று
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை
இன்பனை இன்பத்திடை நின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகிலாரே

தாயாகிய உலகங்கள் என்ற தொடருக்கு, தன்னில் வாழும் உயிர்களைத் தாய் போன்று தாங்கும் உலகம் என்று பொருள், சிலர் கொள்கின்றனர். அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்று வள்ளுவர் சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. தாய் தானே, தனது மக்கள் தனக்கு செய்யும் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு அன்பு பாராட்டுகின்றாள். உலகம் நிலைத்து நிற்பதற்கு பெருமான் தான் காரணம் என்பதால், உலகத்தை நிலைபேறு செய்த தலைவன் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. தாயாகிய என்ற அடைமொழியை தலைவன் என்ற சொல்லுடன் சேர்த்து, உலகங்கள் என்பதற்கு உலகினில் உள்ள உயிர்கள் என்று பொருள் கொண்டு உலகிலுள்ள உயிர்கள் இயங்க வழி வகுப்பவன் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. .

பொழிப்புரை:
ஊழிக் காலத்தில் பேய்கள் பாட, பெருநடனம் ஆடும் பெருமான், மூங்கில் போன்று அழகிய திரண்ட தோள்களை உடைய பார்வதி தேவிக்குத் தனது உடலின் இடது பாகத்தை அளித்தவன் ஆவான். அனைத்து உலகங்களில் உள்ள எல்லா உயிர்களுடன் இணைந்து நிற்கும் பெருமான், தாய் தனது குழந்தைகளை அக்கறையுடன் பாதுகாப்பது போன்று, அந்த உயிர்கள் நிலையாக இயங்கச் செய்கின்ற தலைவனாக இருக்கின்றான். அடியார்களின் அன்பினால் நீராட்டப்படும் இறைவன் உறையும் இடமாகிய நெய்த்தானம் தலத்தின் பெயரை பலமுறையும் சொல்வீர்களாக.

பாடல் 4:

மையாடிய கண்டன் (1.015) பாடல்கள் 3 தொடர்ச்சி, 4, 5, 6, 7 (திதே 0682)
சுடுநீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி
நடு நள்ளிருள் நடம் ஆடிய நம்பன் உறை இடமாம்
கடு வாள் இள அரவாடு உமிழ் நஞ்சம் அது உண்டான்
நெடு வாளைகள் குதி கொள்ளுயர் நெய்த்தானம் எனீரே

விளக்கம்:
சுடுநீறு=சுடுகாட்டு சாம்பல் ஆகிய திருநீறு; நம்பன்=விரும்பப்படுபவன்; வாள்=ஒளி பொருந்திய; நெடு=நீண்ட; நள்ளிருள்=அடர்ந்த இருள்; எங்கும் இருள் சூழ்ந்து காணப்படும் ஊழிக்காலம்; கடு= கொடுமை நிறைந்த; மந்தர மலையினை மத்தாக பாவித்து, தன்னைக் கயிறாக சுற்றி கடைந்த போது வாசுகி பாம்பு உடல் வருத்தம் தாளாமல் உமிழ்ந்த நஞ்சு;

பொழிப்புரை:
சுடுகாட்டில் இருக்கும் சூடான சாம்பலை திருநீறாகத் தனது உடலில் பூசிக்கொள்பவனும் நமது தலைவனும், ஒளிவீசும் சூலத்தையும் அனல் பிழம்பினையும் தனது கையினில் ஏந்தியவனாக இருள் அடர்ந்த நள்ளிரவினில் நடமாடுபவனும், அனைவராலும் விரும்பப்படுபவனும், கொடிய குணம் ஒளி வீசும் உடல் மற்றும் இளமை ஆகியவற்றை ஒருங்கே கொண்ட வாசுகி பாம்பும் பாற்கடலும் வெளிப்படுத்திய நஞ்சினை உண்டவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாவது, நீண்ட வாளை மீன்கள் துள்ளி விளையாடும் வண்ணம் அதிகமான நீர்ப்பெருக்கு உடைய நெய்த்தானம் தலமாகும். நீங்கள் நெய்த்தானம் எனப்படும் இந்த தலத்தின் பெயரினை சொல்லி உய்வினை அடைவீர்களாக.

பாடல் 5:

மையாடிய கண்டன் (1.015) பாடல்கள் 3 தொடர்ச்சி, 4, 5, 6, 7 (திதே 0682)
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் உரை உந்திப்
பகரா வரு புனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும்
நிகரான் மணல் இடு தண் கரை நிகழ்வாய நெய்த்தான
நகரான் அடி ஏத்தந் நமை நடலை அடையாவே

விளக்கம்:
இந்த பதிகத்தின் முதல் நான்கு பாடல்களில் நெய்த்தானம் என்று தலத்தின் பெயரினைச் சொல்லி உய்யுமாறு அறிவுரை வழங்கிய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் நெய்த்தானத்து இறைவனின் திருவடிகளைப் பணிந்து புகழ்ந்து வாழ்த்தி நமது துன்பங்களை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் சந்தனம் ஏலம் மணிகள் செம்பொன் ஆகியவற்றை அடித்துக் கொண்டு வருவதையும் காவிரி நதியின் அலைகள் கரையினில் மோதி இரைச்சல் இடுவதையும் இணைத்து, திருஞானசம்பந்தர் ஒரு அழகான கற்பனை செய்கின்றார். தான் உந்திக் கொண்டு வரும் விலையுயர்ந்த பொருட்களை காவிரி நதி விலை கூவி விற்பது போன்று அலைகள் இரைச்சல் இடுகின்றன என்று கூறுகின்றார். ஒரு பொருளின் விலையினை கூவிச் சொல்வதை விலை பகர்தல் என்று கூறுவார்கள். நிகரான் மணல் என்பதற்கு ஒரு வகையான மணல் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது.

பொழிப்புரை:
மனிதர்கள் விரும்பி நுகரும் ஏலம், சந்தனம், செம்பொன், மணி ஆகிய பொருட்களை அடித்துத் தள்ளிக் கொண்டு வரும் காவிரி நதியின் அலைகள் இரைச்சல் இடுவது, அந்த விலையுயர்ந்த பொருட்களை ஆரவாரத்துடன் விலை கூறி ஏலம் விடுவது போல் உள்ளது. மேலும் தனது அலைக் கரங்களால் ஒரு வகையான மணலைக் கரையினில் சேர்க்கும் காவிரி நதி, இறைவனைப் பணிந்து புகழ்ந்து வழிபடுவது போன்றும் அந்த ஆரவாரம் உள்ளது. இவ்வாறு குளிர்ந்து காணப்படும் காவிரி நதியின் வடகரையில் உள்ள நெய்த்தானம் நகரத்தில் வீற்றிருக்கும் இறைவனது திருவடிகளை புகழ்ந்து வணங்கும் அடியார்களை துன்பங்கள் சென்று அடையா, அவர்களை விட்டு துன்பங்கள் விலகி ஓடி விடும்.

பாடல் 6:

மையாடிய கண்டன் (1.015) பாடல்கள் 3 தொடர்ச்சி, 4, 5, 6, 7 (திதே 0682)
விடையார் கொடி உடை அவ்வணல் வீந்தார் வெளை எலும்பும்
உடையார் நறுமாலை சடை உடையார் அவர் மேய
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே

விளக்கம்:
விடை=இடபம்; அண்ணல் என்ற சொல் அணல் என்று குறுகியது, தலைவன் என்று பொருள்; வீந்தார்=இறந்தவர்கள்; மேய=பொருந்திய; புடையே=அருகிலுள்ள; நெய்த்தானத்தின் சிறப்பு மீண்டும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. உயிர்கள் இந்த பிறவியில் செய்த செயல்களின் வினைகளுக்கு ஈடாக, சொர்கத்திலும் நரகத்திலும் தான் செய்த புண்ணிய பாவ செயல்களின் பலன்களை நுகர்ந்து வினைகளின் ஒரு பகுதியை கழிக்கின்றன. எனவே அனைத்து உயிர்களும் சில காலத்தை சொர்கத்தில் கழிக்கின்றன என்று கருதலாம்.. எனவே இந்த பாடலில் அமருலகம் என்பது,தேவர்களும் செல்ல விரும்பும் வீடுபேறு உலகம், முக்தி உலகம் என்று பொருள் கொள்வதே பொருத்தம். பெருமான் ஒருவன் தான் வீடுபேறு தரும் வல்லமை உடையவன் என்பதால், பெருமானை வழிபடாதவர்கள் வீடுபேறு அடைய மாட்டார்கள் என்று கூறப்படுகின்றது.

பொழிப்புரை:
இடபக் கொடியை உடைய தலைவனும், இறந்தவர்களாகிய பிரமன் திருமால் மற்றும் பல தேவர்களின் எலும்புகள் எரிக்கப் பட்டதால் சாம்பல் படிந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் எலும்புகளை மாலையாக அணிந்தவனும், நறுமணம் கமழும் மாலைகளைத் தனது சடையின் மேல் அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தி உறையும் தலம் நெய்த்தானம் ஆகும். பெருமான் உறையும் திருக்கோயிலின் அருகே உள்ள வாய்க்கால்களிலும் வயல்களிலும் சோலைகளிலும் காவிரி நதியின் நீர் பாய்ந்து செழிப்பாக விளங்குகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த நெய்த்தானம் தலம் சென்றடைந்து இந்த இறைவனை வழிபடாத மனிதர்கள், மறுமையில் வீடுபேறு அடைய மாட்டார்கள்.

பாடல் 7:

மையாடிய கண்டன் (1.015) பாடல்கள் 3 தொடர்ச்சி, 4, 5, 6, 7 (திதே 0682)
நிழலார் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழலானவன் அனல் அங்கையில் ஏந்தி அழகாய
கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றித்
தொழலார் அவர் நாளும் துயரின்றித் தொழுவாரே

விளக்கம்:
கழலாதே=நீங்காதே, விடல் இன்றி=இடைவிடாமல்; தொழலார்=தொழுதலை உடைய; நிழலார்= ஒளி பொருந்திய;

பொழிப்புரை:
பயிர் செழித்து வளர்தலால் ஒளியுடன் விளங்கும் வயல்களும், நறுமணம் கமழும் சோலைகளும் நிறைந்த நெய்த்தானம் தலத்தினில், தழலே உருவமாக உடையவனும் தனது அழகிய கையினில் தீச்சுடரினை ஏந்தியவனும், அழகிய வீரக் கழல் அணிந்த திருப்பாதங்களை உடையவனும் ஆகிய இறைவனின், திருப்பாதங்களை நாள்தோறும் இடைவிடாது மறவாது தொழும் அடியார்கள் எந்நாளும் துன்பமின்றி வாழ்வதுடன், ஏனையோர் தொழும் வண்ணம் சிறப்பாக வாழ்வார்கள்.

பாடல் 8:

மையாடிய கண்டன் (1.015) பாடல்கள் 8, 9, 10 (திதே 0683)
அறையார் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி
நிறையார் புனல் நெய்த்தானன் நல் நிகழ் சேவடி பரவக்
கறையார் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே

விளக்கம்:
இறை=மணிக்கட்டு, தலைவன்; இறையார்=மணிக்கட்டு பொருந்தும் வண்ணம்; அறைதல்=ஓசை எழுப்புதல்; அணி சேர்=அழகு வாய்ந்த; கறையார் கதிர்=கறை பொருந்தியதும் ஒளி வீசுவதும் ஆகிய சந்திரன்; கதிர் வாள்=ஒளி வீசும் கதிர்களை உடைய சந்திரனின் பெயரை உள்ளடக்கிய சந்திரகாசம் என்ற பெயரினை உடைய வாள்; இறைவன் இராவணனுக்கு அளித்த வாளின் பெயர் சந்திரகாசம்.

பொழிப்புரை:
அலைகள் எழுப்பும் ஓசை நிறைந்த கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவின் தலைவனாகிய அரக்கன் இராவணன், தனது இருபது கரங்களின் மணிக்கட்டுகள் கயிலை மலையின் கீழே பொருந்தும் வண்ணம், அழகான கயிலை மலையினைப் பெயர்த்து வேறொரு இடத்தில் வைப்பதற்கு முயற்சி செய்த போது, அரக்கனது இருபது தோள்களும் அறுந்து விழும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலை மீது ஊன்றி அழுத்திய சிவபெருமான், நீர்வளம் நிறைந்த நெய்த்தான நகரில் உறைகின்றார். தனது செயல் தவறு என்பதை உணர்ந்த அரக்கன், நலம் தருவதும் ஒளிமிகுந்ததும் ஆகிய, பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து இசைக்க, பெருமான் அவனது நிலைக்கு இரங்கி, முயற்கறை உடையதும் ஒளி வீசும் கதிர்களை உடையதும் ஆகிய சந்திரனின் பெயரினை உள்ளடக்கிய சந்திரகாசம் என்ற பெயரினை உடைய வாளினை அரக்கனுக்கு ஈந்து அருள் புரிந்தார். இவ்வாறு தனக்கு கேடு செய்ய முயன்றவனுக்கும் அருள் புரிந்த கருணை உள்ளம் கொண்ட இறைவனின் திருப்பாதங்களைப் புகழ்ந்து உரைப்பதே, நாம் பெருமானிடம் சரண் அடைவதற்கு தகுந்த வழியாகும். .

பாடல் 9:

மையாடிய கண்டன் (1.015) பாடல்கள் 8, 9, 10 (திதே 0683)
கோலம் முடி நெடுமாலொடு கொய் தாமரையானும்
சீலம் அறிவரிதா ஒளி திகழ்வாய நெய்த்தானம்
காலம் பெற மலர் நீரவை தூவித் தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே

விளக்கம்:
கோலம் முடி=அழகிய கிரீடம்; சீலம்=இயல்பு; காலம் பெற=விடியற்காலை வேளை; பொழுது விடிவதற்கு முன்னமே எழுந்து நீராடி, பெருமானைத் தொழுது வணங்க வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுவது (6.31.3) நமது நினைவுக்கு வருகின்றது. அப்பர் பிரான், இந்த பாடலில் நாம் எவ்வாறு நம்மை இறை பணியில் ஈடுபடுத்திக் கொள்வது என்பதை விளக்குகின்றார். நிலை பெறுதல்= தடுமாற்றம் இல்லாத நிலையில் இருத்தல்;
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம் பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் பூமாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சய போற்றிபோற்றி என்றும்
அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே

இந்நாளில் கடலூர் என்று அழைக்கப்படும் திருப்பாதிரிப்புலியூரில் இருந்தபோது கொடிய சூலை நோயால் வருந்திய அப்பர் பிரான், எவரும் அறியாமல், திருவதிகையில் தனது தமக்கையார் தங்கியிருந்த திருமடம் வந்தடைகின்றார். அடுத்த நாள் பொழுது விடிவதற்கு முன்னர், தனது தமக்கையார், திருவலகு, தோண்டி, சாணம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு திருக்கோயில் சென்றபோது தானும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார். அப்போது அவர் திருக்கோயிலில் தமது தமக்கையார் செய்த திருப்பணிகளைக் கண்டார். தனது தமக்கையார் செய்த பணிகளைக் கூர்ந்து கவனித்த அவர் தானும் அத்தகைய பணிகளை மேற்கொண்டு திருக்கோயிலையும் மற்றும் திருக்கோயில் சுற்றுப் பாதைகளையும் செப்பனிடத் தொடங்கினார். இந்த பாடலின் இரண்டாவது அடியில், தனது தமக்கையார் செய்த பணிகளைக் குறிப்பிடும் அப்பர் பிரான், அனைவரும் அவ்வாறு செய்யவேண்டும் என்று விரும்புகின்றார். தனது தமக்கையார், உழவாரப் பணியில் தான் ஈடுபடுவதற்கு முன்மாதிரியாக இருந்ததை அப்பர் பிரான் நமக்கு உணர்த்தும் பாடல் இது. நெஞ்சமே, நீ தடுமாற்றம் ஏதும் இன்றி, நிலையான மெய்ப்பொருளை நினைக்கவேண்டும் என்று விரும்பினால் என்னருகில் வா. நான் உனக்கு சொல்வதைக் கேட்டு கடைப்பிடிப்பாயாக. நீ தினமும் பொழுது புலர்வதற்கு முன்னர் எழுந்து நீராடி, உடலில் வெண்ணீறு பூசி, சிவபிரானது திருக்கோயில் புகுந்து, தரையை சுத்தமாக பெருக்கிய, பின்னர் நன்றாக மெழுகி, பூமாலைகள் கட்டி, இறைவனுக்கு அர்ப்பணித்து, அவரைத் தலையால் முழுதுமாக வணங்கி, புகழ்ந்து பாடி, மகிழ்ச்சியுடன் கூத்தும் ஆடி, சங்கரா நீ வெல்க, வாழ்க என்றும் கங்கையைத் தனது செஞ்சடை மேல் வைத்த ஆதிமூலமே என்றும் ஆரூரா என்றும் பலமுறை கூவி அழைப்பாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறும் வகையில், நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல்.

பெரிய புராணத்தில், திலகவதியார் செய்த பணிகளைக் குறிப்பிடும் சேக்கிழாரின் பாடல் இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. பணிமாறுதல்=திருக்கோயிலின் திருமுற்றத்தை பெருக்கித் தூய்மைப் படுத்துதல்; அலகு=துடைப்பம்; புனிறு=அண்மைக் காலத்தில் கன்று ஈன்ற பசு; அண்மையில் கன்று ஈன்ற பசுவின் சாணம், புனிதமற்றதாக கருதப் படுவதால், அதனை திருக்கோயிலில் பயன்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும்.
புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனிறகன்ற
நலமலி ஆன் சாணத்தால் நன்கு திருமெழுக்கிட்டு
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப்
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்

கடும்பகல் நட்டம் என்று தொடங்கும் நேரிசைப் பதிகத்தின் (பதிக எண்: 4.77) மூன்றாவது பாடலில், அப்பர் பிரான், பல்வேறு திருப்பணிகள் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்களைக் கூறுகின்றார். துளக்கி நன்மலர்=ஒளி பொருந்திய மலர்கள், வாடாமலும் புதுமையாகவும் இருக்கும் மலர்கள்; திருக்கோயில் தரையினைப் பெருக்கி சுத்தம் செய்தால் கிடைக்கும் பலனை விட பத்து மடங்கு பலன், தரையை மெழுக்கிட்டு சுத்தம் செய்தால் கிடைக்கும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மலர்கள் பறித்து மாலைகளாகத் தொடுத்து, இறைவனுக்கு அர்ப்பணித்தால், நமக்கு மேலுலகம் கிடைக்கும் என்றும் கோயிலில் திருவிளக்கு ஏற்றினால் நமக்கு ஞானம் ஏற்படும் என்றும் கூறும் அப்பர் பிரான், இறைவனைப் பாடல்களால் துதிப்பவர்க்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கும் என்று கூறுகின்றார். தனது தமிழ்ப் புலமைக்காக நாவுக்கரசர் என்று இறைவனால் பட்டம் சூட்டப்பட்ட அப்பர் பிரான், தன்னால் அளவிடமுடியாத பலன் கிடைக்கும் என்று கூறினால், அது எத்தைகைய பலன் என்பதை நாம் உணரலாம். விளக்கினார்=துடைப்பம் கொண்டு கோயிலை சுத்தம் செய்தல்; மெழுக்குதல்=பசுஞ்சாணி கொண்டு கோயில் தரையை பூசுதல்: அப்பர் பெருமானின் காலத்தில் பெரும்பாலான கோயில்கள் மண் தரையுடன் இருந்தன. பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான், பழைய கோயில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன. எனவே மண் தரையினைப் பேணி பாதுகாக்க தொடர்ந்து மெழுக்குதல் அவசியம்.
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றியாகும்
துளக்கி நன்மலர் தொடுத்தால் தூய விண் ஏறலாகும்
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே

கோயிலில் விளக்கு ஏற்றுபவருக்கு உண்மை ஞானம் வாய்க்கும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கூற்று நமக்கு திருமறைக்காடு தலத்தில் நடந்த நிகழ்ச்சியினை நினைவூட்டுகின்றது. திருமறைக்காடு தலத்தில் அணையும் தருவாயில் இருந்த ஒரு விளக்கினை, விளக்கில் இருந்த நெய்யினை குடிப்பதற்காக சென்ற எலி, தனது மூக்கினை விளக்கின் சுடர் சுடவே மூக்கினை பின்னுக்கு இழுத்தது; அப்போது திரியும் இழுக்கப்படவே, திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாக எரிந்தது. இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு சிவராத்திரி தினத்தில் என்று கூறுவார்கள். எலியின் அந்த செய்கைக்கு மகிழ்ந்த, சிவபெருமான், அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி என்ற சக்ரவர்த்தியாக பிறக்குமாறு அருளினார். அரக்கர் குலத்து அரசனாக இருந்தாலும், தரும நெறியில் நேர்மையாக மூவுலகையும் அரசாண்டவர் மகாபலி. அதனால் தான் அவருடன் சண்டையிடுவதற்கு தேவர்களுக்கும் திருமாலுக்கும் எந்த காரணமும் இல்லாமல் இருந்தது. இவ்வாறு ஞானம் மிகுந்தவராக மகாபலி திகழ்ந்தது, அவர் முந்தைய பிறவியில் திருக்கோயிலில் விளக்கு ஏற்றிய செயலின் பயனால் தான்.

பெரிய புராணத்தில் இடம் பெறும் பல தொண்டர்கள் இந்த பாடலில் குறிப்பிடப்படும் தொண்டுகள் செய்து சிவபிரானின் திருவடிகளில் சென்று சேர்ந்தவர்கள். அவர்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. கோயிலையும் அதன் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்தவர்கள்: திருநாவுக்கரசர், தண்டியடிகள் (குளம்) இறைவனுக்கு மலர்மாலைகள் சூட்டி தொண்டு செய்தவர்கள்: கணநாதர், முருக நாயனார், கோயிலில் திருவிளக்கு ஏற்றி தொண்டு புரிந்தவர்கள்: கணம்புல்லர், கலியர், காரைக்கால் அம்மையார், நமிநந்தி அடிகள், இறைவனைப் புகழ்ந்து பாடல் பாடியவர்கள்: ஐயடிகள் காடவர்கோன், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், திருமூலர். திருக்கோயில் தரையினை, சுத்தம் செய்வதால் ஏற்படும் இன்பத்தை விட பத்து மடங்கு இன்பம், கோயில் தரையினை மெழுக்கிட்டு சுத்தம் செய்வதால் ஏற்படும். ஒளி உடைய நல்ல மலர்களைத் தேர்ந்தெடுத்து மாலைகள் தொடுத்து இறைவனுக்கு அணிவித்தால், தூய்மையான இடமாகிய வீடுபேற்றினை அடையலாம். திருக்கோயில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மையான மெய்ஞ்ஞானம் பெறுவார்கள். இறைவனுக்கு மிகவும் விருப்பமான, தேவாரப் பாடல்களையும் சாம கானத்தையும் பாடும் அடியார்களுக்கு சிவபெருமான் எல்லையில்லாத வகையில் அருள்கள் புரிவார் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

திருநீலகண்டப் பதிகத்தின் பாடலிலும் திருஞானசம்பந்தர் (1.116.2) இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய திருப்பணிகளை குறிப்பிடுகின்றார். பெருமானின் அடியவர்களாக இருக்கும் நாம், பெருமானின் திருவடிகளைப் போற்றுவோம் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் கூறிய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் நாம் எவ்வாறு, நமது மனம் மொழி மெய்களால் இறைவனைப் போற்றுவது என்று சொல்கின்றார். மனதினால் பெருமான் திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்ததை நினைவு கூர்ந்து, கைகளால் பூக்களைக் கொய்தும் அவரது திருவடிகளின் புகழினை வாயால் உரைத்தும் பெருமான் வழிபட வேண்டும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் சொல்கின்றார். மேலும் மலர்ச் சோலைகளை வளர்த்தும் குளங்களை வெட்டியும் பெருமானுக்கு திருத்தொண்டுகள் செய்யவேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். ஏ=அம்பு; வினை=செய்கை; கனி மனம்=பெருமான் பால் அன்பு வைத்து கனிந்த மனம்; பெருமான் எரித்து அழித்த மூன்று கோட்டைகள், ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்கள் என்று திருமூலர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. மலங்களே முற்றிலும் அழிந்த பின்னர், மலத்தின் விளைவுகளுக்கும் நோய்களுக்கும் இடமேது. பெருமானின் திருமேனியின் மீது தூவி வழிபட மலர்ச் சோலைகளை வளர்ப்பதும் குளங்கள் பல வெட்டுவதும் போன்ற பல நல்லறங்களைச் செய்து பெருமானுக்கு திருத்தொண்டு செய்வீர்களாக. பெருமான் பால் அன்பினை வளர்த்து கனிந்த மனதினால், ஒரே அம்பினை எய்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் வீழ்த்தியது போன்ற பெருமானின் பல வீரச் செயல்களை நினைவு கூர்ந்து, காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு பொழுதுகளிலும் புதிதாக மலர்ந்த பூக்களைக் கொய்தும், அவ்வாறு பறித்த மலர்களை பெருமானின் திருவடிகளில் தூவி அவனது திருவடிகளை போற்றி வழிபடுவீர்களாக. அவ்வாறு அடியார்களாகிய நாம் பெருமானை வழிபட்டால் தீவினைகள் ஏதும் நம்மை வந்து தீண்டாது. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு, நீலகண்டம் என்று அழைக்கப்படும் பெருமானின் மீது ஆணையிட்டு, இதனை நான் சொல்கின்றேன் என்று திருஞானசம்பந்தர் மிகவும் உறுதியாக சொல்லும் பதிகம்.
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

எந்த இறைபணியையும் நாம் நீராடிய பின்னரே மேற்கொள்ள வேண்டும். புலர்கின்ற காலை வேளை என்று விடியற்காலம் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. காலை விடிவதற்கு முன்னர் எழுந்து நீராடி, மலர்களைப் பறித்து, பின்னர் மற்ற இறை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் கடவூர் வீரட்டத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் (4.31.4) இங்கே நினைவு கூரத் தக்கது. பெரும்புலர் காலை=இரவின் நான்காவது பகுதி. விதி=வகுக்கப்பட்ட நெறிமுறை.
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டு அங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி நல்விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டானாரே

விடியற்காலைப் பொழுதினை சிறுகாலை என்று குறிப்பிட்டு, விடியற்காலைப் பொழுதினில் இறைவனை வணங்க வேண்டும் என்று அறிவுரை கூறும் திருஞானசம்பந்தரின் பாடல் (3.103.4) வலம்புரம் நகரத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும். உடலினை நிலையில்லாத பொருள் என்பதை உணர்ந்து, நிலையான பொருளாகிய சிவபெருமானை வணங்குமாறு நம்மைத் தூண்டும் பதிகம்.
ஊனமர் ஆக்கை உடம்பு தன்னை உணரில் பொருள் அன்று
தேனமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ
ஆனமர் ஐந்தும் கொண்டு ஆட்டுகந்த அடிகள் இடம் போலும்
வானவர் நாள்தொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.102.10) விடியற்காலை நேரத்தில் சங்கு ஒலிப்பித்து குங்கிலியப் புகை காட்டி இறைவனை வழிபட வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சங்கு ஊதி ஒலி எழுப்புவது, பண்டைய நாட்களில் மங்கல வழக்காக கருதப்பட்டு வந்தது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு ஒலி எழுப்பி, மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்து, அனைவரையும் திருக்கோயில் வழிபாட்டிற்கும், திருவிழா வைபவத்திற்கும் அழைப்பது இதன் நோக்கமாக இருந்தது போலும். நாளடைவில் சங்கு ஊதுவதன் நோக்கத்தினை நாம் மறந்து, மங்கல நிகழ்ச்சிகளில் சங்கினால் ஒலி எழுப்புவதை நாம் நிறுத்தி விட்டோம். ஆனால் இன்றும் பிரதோஷம் போன்ற நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் சிங்கப்பூர் கோயில்களில் வெண்சங்குகள் ஊதப்பட்டு அப்பர் பிரானின் பாடல் நினைவூட்டப்படுகின்றது.
சங்கு ஒலிப்பித்திடுமின் சிறுகாலைத் தடவழலில்
குங்கிலியப் புகை கூட்டி என்றும் காட்டி இருபது தோள்
அங்குலம் வைத்தவன் செங்குருதிப் புனல் ஓட அஞ்ஞான்று
அங்குலி வைத்தான் அடித் தாமரை என்னை ஆண்டனவே

காலைப்பொழுது புலர்வதன் முன்னர், பூக்களை பறிக்கும் பழக்கம் கொண்டவராக அப்பர் பிரான் இருந்தார் என்பதை நாம் அவரது திருவையாறு பதிகத்திலிருந்து (4.3.8) தெரிந்து கொள்ளலாம். பெரும்புலர்=வைகறைப் பொழுது: இறைவனைத் தொழுது துதிப்பதற்காக நாம் பயன்படுத்தும் மலர்கள், நமக்கு முக்திப் பேற்றினைப் பெற்றுத் தரும் என்பதால், அந்த மலர்களை பெறுமலர் என்று அப்பர் பிரான் சிறப்பிக்கின்றார்.
விரும்பு மதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயாறு அடைகின்ற போது
கருங்கலை பேடையொடாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

பொழிப்புரை:
அழகிய கிரீடத்தை உடையவனும் நீண்ட திரிவிக்ரமனாக உயர்ந்து மூன்று உலகங்களையும் தனது ஈரடியால் அளந்த திருமாலும், பறிக்கத் தூண்டும் வண்ணம் அழகு படைத்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும், தனது திருவடியையும் திருமுடியையும் தேடக் காணாத வண்ணம் இயல்பு உடைய சிவபெருமான், அவர்களின் எதிரே நீண்ட தழற்பிழம்பாக நின்றான். அத்தகைய ஆற்றல் உடையவனாக நெய்த்தானம் நகரினில் உறையும் பெருமானை, விடியற்காலையில் எழுந்து நீரும் மலரும் சுமந்து கொண்டு திருக்கோயில் சென்று, இறைவனை நீராட்டிய பின்னர் மலர்கள் தூவித் தொழுது ஏத்தும் அடியார்கள் உலகத்தவரால் புகழப் படுவார்கள்; மேலும் மற்றவர்களை அண்டித் துன்புறுத்தும் பிறப்பிறப்பு நோய் அவர்களை நெருங்காது.

பாடல் 10:

மையாடிய கண்டன் (1.015) பாடல்கள் 8, 9, 10 (திதே 0683)
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்
புத்தர் அவர் சொன்னம் மொழி பொருளா நினையேன்மின்
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானமது ஏத்தும்
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே

விளக்கம்:
இறை=சிறிதும்; மத்தம்=செருக்கு; பயிலுதல்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல்;

பொழிப்புரை:
தங்களது சித்தத்தில் செருக்கு நிறைந்து சிறிதும் அறிவு இல்லாதவர்களாக விளங்கும் சமணர்களும் புத்தர்களும், பெருமானைக் குறித்து இழிவாக பேசிய பேச்சுகளை பொருட்டாக மதிக்காமல், நாம் நாள்தோறும் தொடர்ந்து வழிபடும் வண்ணம் நெய்த்தானம் தலத்தில் உறையும் பெருமானை, இயல்பாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து விடுபட்டு விளங்கும் பெருமானை, புகழ்ந்து பணிந்து வணங்கும் சிந்தனை உடைய அடியார்களது உடல், மனிதர்களை துன்புறுத்தும் எந்த நோயாலும் பாதிக்கப் படாது செழுமையாக விளங்கும்.

பாடல் 11:

மையாடிய கண்டன் (1.015) பாடல் 11 (திதே 0684)

மையாடிய கண்டன் (1.015) பாடல் 11 தொடர்ச்சி (திதே 0685)

மையாடிய கண்டன் (1.015) பாடல் 11 தொடர்ச்சி (திதே 0686)
தல மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நில மல்கிய புகழான் மிகு நெய்த்தானனை நிகரில்
பல மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவகதியே

விளக்கம்:
நில மல்கிய=நிலவளம் பொருந்திய; நில மல்கிய என்ற தொடருக்கு சிறந்த புகழினை உடைய நெய்த்தானம் தலம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். சில மல்கிய என்ற தொடரில் உள்ள சில என்ற சொல். சில் (நுண்ணிய பொருள்) என்பதன் திரிபாக கருதி, நுண்ணிய பொருட்களிலும் நிறைந்து நிற்பவன் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் நான்கு பாடல்கள் மற்றும் ஆறாவது பாடலில், நெய்த்தானம் தலத்தின் சிறப்பு கருதி, திருஞானசம்பந்தர் இந்த தலத்தின் பெயரினை உச்சரித்து உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுவதை நாம் நினைவில் கொள்ளலாம். தல மல்கிய=தலங்களில் சிறந்த தன்மை உடைய; ஒப்பற்ற பலனை தரும் பாடல்கள் என்று இந்த பதிகத்து பாடல்களை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடிகளைச் சென்றடைந்து சிவகதி பெறலாம் என்று பதிகத்தின் பலனை குறிப்பிடுகின்றார். சிவகதி என்றால் சிவஞானமாகிய நெறி என்று பொருள். சிவபெருமானுடன் ஆன்மா சேர்வதற்கு வழி வகுக்கும் நெறியே சிவஞானம் என்றும் சிவகதி என்றும் அழைக்கப் படுகின்றது.

சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் வேணுபுரம் என்பது ஒன்றாகும். வேணுபுரம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், திருஞானசம்பந்தர், அந்த பதிகத்தினை முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், இம்மையில் தங்களது துயர்கள் நீங்கப் பெற்று மறுமையில் சிவகதியை பெறுவார்கள் என்று கூறுகின்றார். ஏதம்=குற்றம், கேதம்=துயரம்; திருஞானசம்பந்தர் இந்த பாடலில் பாதத்தினில் மனம் வைத்தெழு பந்தன் என்று தன்னை குறிப்பிட்டுக் கொள்வதை நாம் உணரலாம். துயிலிலிருந்து எழும் போதே, பெருமானின் திருவடிகளில் மனம் வைத்தவராக, தான் இருந்த தன்மையை, திருஞான சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். (பாடல் 1.9.11)
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன் தன பாடல்
ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார்
கேதத்தினை இல்லார் சிவகெதியைப் பெறுவாரே

சண்பை நகர் (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் (1.66.11) பாடல்களை சிந்தனை செய்து பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் சிவகதி சேர்வார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வந்தி=வந்தனை; மறை=இரகசியம்; பூஜை நேரம் அல்லாத மற்ற நேரங்களில் பெருமான், பிராட்டியுடன் இரகசியம் பேசுகின்றார் என்றும் காலை மற்றும் மாலை வேளைகளில் (சந்தி வேளைகள்) தியானம் செய்கின்றார் என்றும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தின் மறை பேசிச்
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (1.112.11) ஓதும் அடியார்கள் சிவகதி பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நவம்=புதுமை;இம்மையில் புதுமையான பல நலன்கள் பெற்று மறுமையில் சிவகதி பெறுவார்கள் என்று கூறுகின்றார். தேவாரப் பாடல்களை ஓதினால் தவம் செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பெறலாம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. சிவபெருமான் உறைகின்ற நகரமாகிய சிவபுரத்தை குறித்து, சிவபுரத்தில் உறையும் பெருமானை குறித்து, கவுணிய கோத்திரத்தைச் சார்ந்த குலத்திற்கு தலைவனாகவும் சீர்காழி நகரத்திற்கு தலைவனாகவும் விளங்கும் திருஞானசம்பந்தன், பாடியதும் சிறந்த தவத்தின் பயனைப் பெற்றுத் தருவதும் ஆகிய சிறந்த தமிழ்ப் பாடல்களை பாடும் வல்லமை உடைய அன்பர்கள், பல புதுமையான நலன்களை இம்மையில் பெற்று மறுமையில் சிவகதி அடைந்தும் இன்பமாக வாழ்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை; .
சிவன் உறைதரு சிவபுர நகரைக்
கவுணியர் குலபதி காழியர் கோன்
தவமல்கு தமிழிவை சொல்ல வல்லார்
நவமோடு சிவகதி நண்ணுவரே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.105) கடைப் பாடலில் தான் அருளிய பதிகத்தின் பாடல்களை கற்று வல்லவராக திகழும் அடியார்கள் சிவகதி பெறுவது நிச்சயம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். தெருண்ட=தெளிந்த; இருண்ட மேதி=கருமை நிறம் உடைய எருமை மாடுகள்; குருண்ட வார்குழல்=சுருண்டு நீண்டு காணப்படும் சடை;
குருண்ட வார்குழல் சடை உடைக் குழகனை அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறையவர் தொழும் பெரும் திருக்கோயில் எம் பெருமானை
இருண்ட மேதி இன மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடமாமே

பூந்தராய் நகரத்தின் மீது (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.13.11), அந்த பதிகத்தின் பாடல்களை பாடுவதில் வல்லவராக விளங்கும் அடியார்கள், அனைத்துப் பேறுகளிலும் தலை சிறந்ததாக கருதப்படும் சிவகதியை அடைவது திண்ணம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பரம்=பாரம் என்ற சொல் பரம் என திரிந்தது; பரமலி குழல்=அடர்த்தியான கூந்தல்;
புரம் எரி செய்தவர் பூந்தராய் நகர்ப்
பரமலி குழல் உமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன் மெய்ப் பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே

விசயமங்கை பதிகத்தை (3.17.11) ஓதினால் சிவகதி புகுதல் திண்ணம் என்று உறுதியாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நண்ணிய=நெருங்கிய, இங்கே அவதரித்த என்று பொருள் கொள்ளுதல் பொருத்தம். விண்ணவர்கள் தொழுது வணங்கி எழுகின்ற விசயமங்கை தலத்தில் உறையும் பெருமானைப் புகழ்ந்து, புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தினில் அவதாரம் செய்த ஞானசம்பந்தர் இயற்றிய, செந்தமிழ் பாடல்கள் பத்தினையும் ஓதும் வல்லமை வாய்ந்த அடியார்கள் புண்ணியம் செய்தவர்களாக விளங்குவார்கள்; அத்தகைய அடியார்கள் சிவகதி அடையப் பெற்று சிவானந்த பெருவாழ்வு வாழ்தல் திண்ணம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விண்ணவர் தொழுதெழு விசயமங்கையை
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே

சிவபெருமானை தங்கள் சித்தத்தில் வைத்து வழிபடும் அடியவர் சிவகதி பெறுதல் திண்ணம் என்று, வடகுரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகம் ஒன்றில் (3.91.3) சம்பந்தர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. முழை=குகை, ஆரம்=சந்தன மரம்: முகந்து நுந்தி=தள்ளிக் கொண்டு வரும்: காவிரி நதி தனது அலைகளால் வாரிக் கொண்டு வரும் பொருட்களின் செல்வச் செழிப்பு இங்கே கூறப்படுகின்றது. தேவர்கள் செய்யும் வழிபாட்டினை குறிப்பிட்டு,நாமும் இறைவனை வழிபட வேண்டும் என்று இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர், இறைவனை வழிபடுவதால் நாம் அடைய இருக்கும் பலனை இங்கே குறிப்பிடுகின்றார். சிவகதி நண்ணுவர் என்று குறிப்பிடுகின்றார்
முத்து மாமணியொடு முழை வளர் ஆரம் முகந்து நுந்தி
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
மத்தமா மலரொடு மணி மதிபொதி சடைமுடி அடிகள் மேல்
சித்தமா அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே

சிவகதி பெறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும் அப்பர் பிரானின் பாடலை (4.76.2) நாம் இங்கே சிந்திப்பது பொருத்தமாகும். தகவு=தகுதி: திருநீறு, உருத்திராக்கம் முதலான சிவவேடங்கள்: பொறை=பொறுமை; செம்மையுள் நிற்றல்=சிந்தனையில் சிவத்தைத் தவிர வேறு ஏதும் இல்லாத நிலை: தம்மையும் நோக்கிக் கண்டு என்று அப்பர் பிரான் ஆன்ம தரிசனத்தையும் சிவதரிசனத்தையும் இங்கே குறிப்பிடுகின்றார். உயிர், தானே எதையும் அறிந்து கொள்ளும் ஆற்றலற்றது. தனக்கு கொடுக்கப் பட்டுள்ள கருவி கரணங்கள் (இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள், ஐந்து பூதங்கள், கண், காது, மூக்கு, வாய் மற்றும் உடல் ஆகிய ஞானேந்திரியங்கள், வாய், கை, கால், எருவாய், கருவாய் ஆகிய ஐந்து கன்மேந்திரியங்கள், ஒலி, ஒளி, ஓசை, நாற்றம், தொடும் உணர்வு ஆகிய ஐந்து தன்மாத்திரைகள், மற்றும் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் ஆகிய நான்கு உட்கருவிகள்) மூலம் உயிர், மற்ற பொருட்களை அறிய முயற்சி செய்கின்றது. அந்த முயற்சியில் ஈடுபடும் உயிர், தான் வேறு, கருவி கரணங்கள் வேறு என்பதை மறந்து, கருவி கரணங்களும் தானும் ஒன்றே என்ற நினைப்புடன் செயல் படுகின்றது. அந்த நிலையில், உண்மையில் தான் வேறு, கருவி கரணங்கள் வேறு என்பதை உணர்த்து செயல்பட, பக்குவ முதிர்ச்சி அவசியம். அந்த முதிர்ச்சி இருந்தால், தன்னை நடத்துவது இறைவனின் திருவருளே என்ற உணர்வு மேலோங்கும்: உயிர் தன்முனைப்பின்றி, இறைவனின் திருவருளில் அடங்கி நிற்க, இறைவன் ஆன்மாவின் உண்மை இயல்பினை உயிருக்கு உணர்த்துவான். இந்த நிலை தான் ஆன்ம தரிசனம் எனப்படும். இவ்வாறு, நடக்கும் எதுவும் தன் செயலோ அல்லது மற்றவர்கள் செயலோ அல்ல என்பதை உணர்ந்து அனைத்தும் இறைவனின் செயல் என்பதை உணர்ந்து, நமக்கு ஏற்படும் நன்மை தீமை இரண்டையும் ஒன்றாக நினைத்து செயல்படுவது ஆன்மசுத்தியாகும். இவ்வாறு எங்கும், எதிலும் சிவத்தைக் காண்பது சிவதரிசனமாகும். நமக்கு கிடைத்த சிவதரிசனத்தை, வேலி பயிரினைக் காப்பது போல் காப்பதற்கு சிவவேடங்கள் அவசியம் என்பது பல தேவாரப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. மேலும், சிவபெருமானை புகழ்ந்து பாடுவதன் மூலம் சிவகதி விளையும் என்றும் உணர்த்தப் படுகின்றது.
மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பு எனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறை எனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு தகவு எனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்பர் ஆகில் சிவகதி விளையும் அன்றே

சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய உண்மை வழிகளால், மனத்தினை நன்றாக உழுது பதப்படுத்திய பின்னர், இறைவன் பால் கொண்டுள்ள அன்பு எனும் விதையை விதைக்க வேண்டும். இவ்வாறு விதைத்த பின்னர் ஐந்து புலன்களையும் அடக்குவதன் மூலம், பொய்ம்மை எனப்படும் களையை நீக்கி, பொறுமை எனப்படும் நீரினைப் பாய்ச்ச வேண்டும்: வளரும் பயிரினைப் பார்த்துக் கொண்டே இருத்தல், பயிரின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இறையுணர்வு என்ற பயிர் வளரவளர, உயிரின் உண்மை இலக்கணம் நமக்கு புலப்படும். உயிரின் உண்மை இலக்கணத்தை புரிந்து கொண்டு, கருவிகள் வேறு ஆன்மா வேறு என்பதை உணர்ந்து, எங்கும் எதிலும் சிவத்தைக் கண்டு நாம் வாழத் தலைப்பட்டால், நமக்கு சிவதரிசனம் ஏற்படும். அவ்வாறு விளைந்த சிவதரிசனத்தை, நாம் சிவவேடங்கள் தரித்து, வேலி பயிரினைக் காப்பது போல் பாதுகாத்து தொடர்ந்து சிவநெறியில் நின்றால், நமக்கு சிவகதி விளையும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

ஒரு பொது பதிகத்தின் பாடலிலும் (4.77.7) அப்பர் பிரான் சிவகதி பெறுவது எப்படி என்று நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார். அளறு=சேறு: பாறுதல்=நீங்கி ஓடுதல்: பன்றி சேற்றினில் ஆழ்ந்து கிடப்பது போல், மனிதன் மூன்று மலங்களில் சிக்குண்டு, உடலினை பெரிதாகக் கருதி உலக இன்பங்களில் மூழ்கி இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தீவினைகளை உடைய நெஞ்சமே, பன்றி சேற்றில் புரண்டு இன்பம் அடைவது போல, உலக வாழ்வின் இன்பங்களில் சிக்குண்டு, உனது உடலினை பெரிதாக கருதி, அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் வாழ்க்கையை வாழ்கின்றாய். உவர்ப்புச் சுவை கலந்த உமிழ் நீர் ஊறுவதால் நாற்றமெடுத்து, இரத்தம் ஒழுகும் பல ஓட்டைகள் ஒரு போர்வையால் மூடப்பட்டு காணப்படும் இந்த உடலின் இழிவான தன்மையை அறிந்து கொள்ளாமல், உடலை அழகுடைய உடல் என்று நீ கருதுகின்றாய். இந்த நிலையிலிருந்து நீ தேறி, வெளியே வந்து, சிவபெருமானை நினைப்பாயாகில், உனக்கு சிவகதி திண்ணமாகும். எனவே இறைவனை விருப்பத்துடன் நினைந்து உய்வாயாக என்பதே அப்பர் பிரான் நமக்கு கூறும் அறிவுரை ஆகும்
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டுத்
தேறி நீ நினைதியாயில் சிவகதி திண்ணமாகும்
ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே.

கல்லுடன் கட்டப்பட்டு கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், நமச்சிவாயப் பதிகம் பாடிய வண்ணம் இறைவனின் திருநாமமாகிய நமச்சிவாய மந்திரத்தின் தன்மைகளை உணர்த்துகின்றார். இறைவனின் அருளால், கல்லே தெப்பமாக மாற திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் அருகே கரை ஏறுகின்றார். உடனே அருகிலிருக்கும் திருக்கோயிலுக்கு சென்று ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தினை பாடுகின்றார். அந்த பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.94.6) பெருமானை நோக்கி தருவாய் சிவகதி என்று வேண்டுகின்றார். அப்பர் பிரானே சிவகதி வேண்டும் என்று ஆசைப் படுகின்றார் என்றால் சிவகதியின் பெருமையை சொல்லவும் வேண்டுமோ. மனம், மொழி, மெய்களால் (உடலினால்) இறைவனை வழிபட வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த பாடலில் மூன்று வகையான வழிபாடுகளும் சொல்லப் பட்டுள்ளன. மனத்தால் நினைந்து, வாயினால் அவனது நாமத்தை சொல்லி, உடலில் திருநீறு அணிந்து சிவபெருமானை வழிபடுதல் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. தெரிதல் என்பதற்கு ஆராய்தல் என்ற பொருள் கொண்டு, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் சிவபெருமானது தன்மைகளை ஆராய்ந்து தெரிந்து கொண்டு அவனது திருநாமங்களை இடைவிடாது பல பதிகங்கள் மூலம் எடுத்துரைத்த செய்கையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவார்கள். சிவபெருமானின் அருள் இருந்தமையால், கருவாகக் கிடந்த போது அவனது திருப்பாதங்களை நினைத்து இருந்த தான், ஒரு உருவமாக உலகில் தோன்றிய பின்னர் சிவபெருமானின் நாமத்தைப் பயின்றதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பயிலுதல் என்றால் இடைவிடாது ஒரு செயலைச் செய்தல் என்று பொருள். கல்வி பயிலுதல் என்று சான்றோர்கள் கூறுவதன் பொருள், கல்வி என்பது கல்லூரியிலோ அல்லது பள்ளியிலோ முடியக் கூடிய ஒன்றல்ல. வாழ்க்கை முழுவதும் இடைவிடாது நடைபெறும் செயல் ஆகும். பாதிரிப்புலியூர் தலத்தில் வீற்றிருக்கும் அரனே, நான் கருவாகக் கிடந்த நாளில் உனது திருப்பாதங்களை நினைக்கும் கருத்துடன் இருந்தேன்; உலகினில் பிறப்பெடுத்த நான், உனது அருள் கூடிய காரணத்தால், உனது திருநாமங்களைத் தெரிந்து கொண்டேன்; மேலும் அத்தகைய நாமங்களை இடைவிடாது சொல்லலுற்றேன்; வாயார சிவாயநம என்ற மந்திரத்தினைச் சொல்லி எனது உடலில் திருநீறு பூசிக் கொண்டேன். நீ எனக்கு சிவநெறியினை அருள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவதாக அமைந்த பாடல்.
கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது அருளால்
திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே

சிவகதியை வேண்டும் அப்பர் பிரான், இந்த பாடலில் தனது தகுதியை குறிப்பிட்டு பெருமானிடம் வேண்டுவதை நாம் உணரலாம். அவர் குறிப்பிடும் தகுதிகள் தான் என்ன. கருவாய்க் கிடந்த நாளிலிருந்தே பெருமானின் திருப்பாதங்களின் தன்மையை நினைத்தல், உலகினில் பிறப்பெடுத்த பின்னர் அவனது திருநாமங்களை அறிந்து கொண்டு இடைவிடாது சொல்லுதல், வாயார சிவாயநம என்று சொல்லியவாறு திருநீறு பூசிக் கொள்ளுதல் என்பனவே அந்த தகுதிகள். நாமும் இந்த தகுதிகளை அடைந்து இறைவனிடம் சிவகதியை வேண்டிப் பெறுவோமாக. இந்த தகுதிகளுடன் தேவாரப் பாடல்களை, முறையாக ஓதும் செய்கையையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

தான் கருவாகக் கிடந்த போதே சிவபெருமானின் பாதங்களைத் தொழும் கருத்தினை உடையவனாக இருந்ததாக திருநாவுக்கரசு நாயனார் சத்திமுற்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் குறிப்பிடுகின்றார். அவரது பெற்றோர்கள் இருவரும் சைவ வேளாளர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்றும், இல்லற நெறி வழுவாமல் அனைவரிடமும் அன்பு கொண்டு ஒழுகினார்கள் என்றும் பெரிய புராணத்தில் குறிப்பிடப் படுகின்றது. மேலும் அவரது தமக்கையார் திலகவதியாரும் சிவநெறியில் பற்று உள்ளவராய்த் திகழ்ந்ததை நாம் அறிவோம். இத்தகைய சூழ்நிலையில் மருள்நீக்கியாரை கருவுற்ற காலத்தே, அவரது தாய் மாதினியார் சிவபெருமானைப் பற்றிய சிந்தனையில் இருந்திருக்க வேண்டும். அதனால் தான், தான் கருவாக இருந்த காலத்தே சிவபெருமானின் சிந்தனையோடு இருந்ததாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தாய்மைப் பேறு காலத்தில், அன்னைமார்கள் நல்ல சிந்தனையுடன் இருப்பது, கருவிலிருக்கும் குழந்தையின் மனப் பக்குவத்திற்கு மிகவும் நல்லது. கருவில் இருக்கும் குழந்தையின் புற உறுப்புகள் வளர்வது போல், குழந்தையின் அக உறுப்பான மனமும் விரிவடைகின்றது. மகாபாரதத்தில், சுபத்திரை கருவுற்ற காலத்தில், கண்ணனும் அர்ஜுனனும், சக்கர வியூகத்தை எப்படி உடைப்பது என்பது பற்றி பேசிக் கொண்டிருந்த பேச்சுகளை, கருவாக இருந்த அபிமன்யு கேட்டதன் மூலம், அவன் சக்கர வியூகத்தை உடைக்கும் வழியினை அறிந்தான் என்று கூறப்படுகின்றது. தான் கருவில் இருந்த போதே சிவபெருமானின் திருப்பாதங்களை நினைத்து இருந்ததாக அப்பர் பிரான் கோவாய் முடுகி என்று தொடங்கும் பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் (4.96.5) கூறுகின்றார். கருவாக இருந்த காலத்தில் வேறு எதையும் காண முடியாத நிலையில் சிவபெருமானை நினைந்து இருந்த தான், கருவில் இருந்து விடுபட்டு வெளியே வந்த பின்னர், உலகத்தில் உள்ள பொருட்களைக் கண்டு திகைத்து நின்றதால் உலகியல் பொருட்கள் மீது பற்று கொண்டதாகவும், அந்த திகைப்பினை ஒழித்து உலகப் பற்றினை நீக்க வேண்டும் என்று இங்கே இறைவனிடம் அப்பர் பிரான் வேண்டுகின்றார். தெரு=வெளி உலகம்;
கருவுற்று இருந்து உன் கழலே நினைத்தேன் கருப்புவியில்
தெருவில் புகுந்தேன் திகைத்து அடியேனைத் திகைப்பு ஒழிவி
உருவில் திகழும் உமையாள் கணவா விடில் கெடுவேன்
திருவில் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

தான் தனது தாயின் கருவில் இருந்த போது சிவபெருமானை நினைத்து வழிபட்டதாக அப்பர் பிரான் இங்கே கூறுவது நமக்கு பாகவதத்தில் குறிப்பிடப்படும் பிரகலாதனின் சரித்திரத்தை நினைவூட்டும். நாரத முனிவர் தனது அன்னைக்குச் சொல்லிய நாராயண மந்திரத்தை செவியுற்ற கருவில் இருந்த குழந்தை பின்னாளில் திருமாலின் சிறந்த அடியாராகத் திகழ்ந்தது போல் அப்பர் பிரானும் சிவபெருமானின் சிறந்த அடியாராகத் திகழ்ந்தார். கருவில் இருந்து வெளியே வந்த பின்னர் உலகியல் பொருட்களின் மயக்கத்தில் ஆழ்ந்து நிலையற்ற உலகப் பொருட்களை (சமண சமயம் உட்பட) பற்றிக் கொண்டதாக ஒப்புக்கொண்டு வருத்தப்படும் அப்பர் பிரான், தனது திகைப்பினை, மயக்கத்தை ஒழிக்க வல்லவர் சிவபெருமான் ஒருவரே என்று தெளிந்த சிந்தனையுடன் இருப்பதை நாம் இங்கே காணலாம். செல்வம் கொழிக்கும் சத்திமுற்றத்து தலத்தில் உறையும் சிவக்கொழுந்தே, அழகின் உருவாக விளங்கும் உமையம்மையின் கணவரே, தாயின் கருவில் இருந்த காலத்து, உலகப் பொருட்களுடன் தொடர்பு ஏதும் இல்லாததால் உனது நினைவுடன் இருந்த நான், இந்த உலகில் பிறந்தவுடன், உலகப் பொருட்களில் மயங்கி திகைத்து நிற்கின்றேன். உலகப் பற்றில் சிக்குண்டு நான் கெட்டு விடாமல் நீ எனது திகைப்பினை நீக்கி சிந்தையை தெளிவிக்க வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தான் கருவில் கிடந்த நாள் முதலாக சிவபெருமானின் திருப்பாதங்களைக் காண்பதற்கு தனது மனம் உருகியதாக, கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.99.6) பாடல் ஒன்றில் அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பதிகத்தில் தனக்கு வேறு ஏதும் பற்றுக்கோடு இல்லை என்று கூறும் அப்பர் பிரான், அந்த நிலையைக் காணும் சிவபெருமானே தனக்கு இரங்கி அருள் புரியவேண்டும் என்று கெஞ்சுவதை நாம் உணரலாம். பல பாடல்களில் அப்பர் பிரான்தனக்கு சிவபெருமானைத் தவிர பற்றுக்கோடு வேறு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கச்சி ஏகம்பனே, திருவொற்றியூரா, திருவாலவாயா, திருவாரூரா, கருவிலே பொருந்திய நாள் முதலாக நான் உனது திருவடியைக் காண்பதற்கு உள்ளம் உருகுகின்றேன்; எனது உடலும் வருந்தி இளைத்து செயலற்றுவிட்டது; உன்னைத் தவிர வேறு எந்த பற்றும் இல்லாமல் இருக்கும் அடியேனின் நிலையைக் கண்டு நீ இரக்கம் கொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் இறைஞ்சும் பாடல்.
கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்து ஒழிந்தேன்
திருவொற்றியூரா திருவாலவாயா திருவாரூரா
ஒரு பற்று இல்லாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே

இந்த பாடலில் அப்பர் பிரான் கருவுற்ற நாளிலிருந்தே தான் பெருமானின் திருநாமங்களை சொன்னதாக குறிப்பிடுகின்றார். இடையில் பல வருடங்கள் அவர் சமண சமயம் சார்ந்து இருந்ததை நாம் அறிவோம். அந்த பருவத்தில், பெருமானை நினைக்காத அப்பர் பிரான், இவ்வாறு கூறுவது சரியா என்ற ஐயம் நமக்கு எழலாம். இதற்கு விடையளிக்கும் முகமாக, அப்பர் பிரான், தான் பெருமானைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்று தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தில் குறிப்பிடுவதை நாம் நினைவு கூர்தல் அவசியம். எனவே சமண சமயத்தைச் சார்ந்து தான் இருந்த வருடங்கள் அனைத்தையும் பிறவாத நாட்களாக, வாழாத நாட்களாக அப்பர் பிரான் கருதினார் போலும்.

பெருமானின் திருவடிகள் மீது மலர்கள் தூவித் தொழுதால் சிறந்த பரிசாகிய சிவகதியினைப் பெறலாம் என்று அப்பர் பிரான் நல்லம் (தற்போது கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடல் ஒன்றினில் (5.43.8) கூறுகின்றார். வெம்மையான=தீயினும் கொடியதாக நம்மை வருத்துவதால் வெம்மை வினை என்று கூறுகின்றார். கடலின் அலைகள் போன்று ஒன்றன் பின் ஒன்றாக வினைகள் நம்மை வந்து வருத்துவதால் வினைக் கடல் என்று குறிப்பிடுகின்றார். சும்மை=ஆரவாரம்; ரீங்காரம் இட்டு ஆரவாரம் செய்தவாறு புதுமலர்களை சூழும் வண்டுகளை இங்கே குறிப்பிடுகின்றார். சும்மை என்பதை சுமை என்ற சொல்லின் திரிபாக கருதி, சுமந்து செல்லும் பூக்களை குறிப்பிடுகின்றார் என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றனர். தலை மீது சுமந்து செல்லும் அளவுக்கு மிகவும் அதிகமாக பூக்களை எடுத்துச் சென்று இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்பது அப்பர் பிரானின் ஆசை போலும். உலகத்தவர்களே, கொடிய தீ போன்று உங்களுக்கு வருத்தத்தை விளைவிப்பதும், கடல் அலைகள் போன்று தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்து வருத்துவதும் ஆகிய வினைகளிலிருந்து, நீங்கி சிறந்த நெறியாகிய சிவகதியை அடைய விரும்பினால், நீங்கள் நல்லம் தலம் செல்வீர்களாக. ஆங்கே உறைபவனும் நம்மை ஆள்வானும் ஆகிய இறைவனின் திருமேனியில், ஆரவாரம் செய்தவாறு வண்டுகள் சூழ்ந்து கொள்ள விரும்பும் புது மலர்களை தூவி, அவனை வணங்குவீர்களாக என்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.
வெம்மையான வினைக்கடல் நீங்கி நீர்
செம்மையாய சிவகதி சேரலாம்
சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ
நம்மை ஆளுடையான் இடம் நல்லமே

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (5.56.9) கோளிலி ஈசனை இரவும் பகலும் பாடி சிவகதி பெறலாம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கேடு மூடி=துன்பமே மிகுதியாக பரவி; உண்ணும்=நுகரும்; வினைகளில் ஆழ்ந்து மீண்டும்மீண்டும் பிறப்பெடுத்து உலக வாழ்க்கை என்ற சுழற்சியில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு கூறும் அறிவுரையாக இந்த பாடல் அமைந்துள்ளது. சென்ற பல பிறவிகளில் சேர்த்து வைத்த வினைகளைக் கழிப்பதற்காக எடுத்துள்ள இந்த பிறவியிலும் மேலும்மேலும் வினைகளை பெருக்கிக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நீங்காமலும், மீண்டும் பிறப்பதற்கே வழியினைத் தேடிக் கொண்டும் வாழும் நமக்கு, இறைவனைப் புகழ்ந்து பாடி பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுமாறு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல். துன்பம் மிகுந்து பரவிக் கிடக்கும் உலகத்தினையே மீண்டும்மீண்டும் விரும்பி தேடித் திரிகின்ற மனிதர்களே, நீங்கள்திருக்கோளிலி இறைவனைப் புகழ்ந்து இரவும் பகலும் பாடுவீர்களாக, அவ்வாறு பாடுவதன் பயனாக, உலக வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்று நீர்சிவகதி அடையலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கேடு மூடி கிடந்து உண்ணு நாடது
தேடி நீர் திரியாதே சிவகதி
கூடலாம் திருக்கோளிலி ஈசனைப்
பாடுமின் இரவோடு பகலுமே

நீலக்குடி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலிலும் (5.72.1) சிவபெருமானை நினைத்தால், அவனது திருநாமத்தைச் சொன்னால் சிவகதி திண்ணமாகும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மாடு=செல்வம்; செறிதல்=உடன் வருதல்: சித்தமாகில்=மனம் உடையவராக இருத்தல்: சேர்திர்= சேர்வீராக: அப்பர் பெருமான் மற்றொரு பதிகத்தின் பாடலில் இயமனின் தூதர்கள் ஒருவனின் உடலிலிருந்து உயிரை பிரிப்பதற்காக வரும் சமயத்தில் அவரது சுற்றத்தாரால் செய்யக் கூடிய செயல் ஏதுமில்லை என்று கூறுகின்றார். இந்த பிறவியில் நம்முடன் தொடர்பு கொண்டுள்ள மனைவி, மக்கள், மற்ற சுற்றங்கள் அனைவரும் நம் மீது எத்தகைய ஆழமான அன்பு கொண்டிருந்தாலும், நாம் இறக்கும் சமயத்தில் நம்முடன் கூட வராமல் இந்த உலகிலே நின்று விடுவார்கள்: அவர்கள் அனைவரும் இந்த உலகத்தில், நாம் அவர்களை விட்டு பிரிந்த பின்னரும் இருப்பது நிச்சயம். இதனை நாம் உணராமல் சுற்றங்கள் நிலையானவை என்று எண்ணி வாழ்கின்றோம். எனவே நம்முடன் வராத அவர்கள் எவராலும் நம்மை சிவகதிக்கு அழைத்துச் செல்ல முடியாது. சிவகதிக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவன் சிவபெருமான் ஒருவன் தான். எனவே சிவகதியை நீர் அடைய விரும்பினால், தினமும் நீலக்குடி அரனை நினைத்து வழிபட்டு, இறந்த பின்னர் சிவகதியைச் சென்று அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக்குடி அரனை நினை
சித்தமாகில் சிவகதி சேர்வரே

தான் தனது தாயின் கருவில் இருந்தபோது இறைவனின் நினைவுடன் இருந்ததற்கு, இறைவன் தன்னை அப்போது ஆண்டு கொண்டது தான் காரணம் என்று அப்பர் பிரான் இன்னம்பர் திருத்தாண்டகத்தில் கூறுகின்றார் (ஆறாம் திருமுறை பதிக எண் 89 பாடல் 9). செரு=போர். அட்டுதல்=அழித்தல்; இந்த பதிகத்தின் பாடலில் கழற்போது தந்தளித்த கள்வர் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். எல்லா உயிர்களிலும் பெருமான் கலந்து உடன் இருந்தாலும், அவன் அவ்வாறு உடன் இருப்பதை நாம் உணராதவாறு மறைந்து நிற்கின்றான். எனவே தான் அவனை கள்வர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மேலும் கருவுற்ற காலத்தே தன்னை இறைவன் ஆட்கொண்டதாக கூறும் அப்பர் பிரான், தன்னை சமண சமயம் செல்லாதவாறு இறைவன் தடுக்காமல் இருந்ததை, நினைத்து வருந்தி பெருமானை கள்வர் என்று கூறினார் போலும் என்றும் தோன்றுகின்றது. மைந்தர்=வலிமை உடையவர்; கூடிப் பிரியாத மைந்தர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இறைவன் தனது மெய்யடியார்களின் உள்ளத்தில் சேர்ந்து இருப்பது, அவர்கள் பக்குவம் அடைந்த பின்னர் என்பதால் அத்தகைய அடியார்களை விட்டு இறைவன் என்றும் பிரிவதில்லை. இந்த செய்தியே இந்த பாடலில் கூறப்படுகின்றது. அடியேன் கருவாக இருந்த காலத்திலே என்னை ஆட்கொண்ட பெருமான் பின்னாளில் தனது தாமரைப் பாதங்களை எனக்களித்த கள்வராக திகழ்ந்தார். திரிபுரத்து அரக்கர்களுடன் மேற்கொண்ட போரினில் அவர்களது பறக்கும் கோட்டைகள் மூன்றையும் எரித்து அழித்தவர் சிவபெருமான். தேவர்களுக்கும் தேவனாக திகழும் பெருமான், மிகப்பெரிய செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார். தனது அடியார்களுடன் கூடி அவர்களது மனதினில் உறையும் பெருமான், அவ்வாறு கூடிய பின்னர் என்றும் அவர்களிடமிருந்து பிரியாமல் இருக்கின்றார். தனது தாமரை போன்ற மலரடிகளை வணங்கிய பிரமன் திருமால் ஆகிய இருவருக்கும் ஒப்பற்ற தலைவராக நின்ற பெருமான் இன்னம்பர் திருத்தலத்தில் தான்தோன்றி ஈசனாக எழுந்தருளி உள்ளார் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்தளித்த கள்வர் போலும்
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவராம் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும் மலரடிகள் நாடி வணங்கலுற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

திருநின்றியூர் தலத்து பதிகத்தின் கடைப் பாடலில் (7.19.11) சுந்தரர் சிவகதியாய் விளங்கும் பெருமான் என்று கூறுகின்றார். சிவகதியாக இருக்கின்ற பெருமான், தேவாரப் பதிகங்களை முறையாக பாடி தொழுகின்ற அடியார்களுக்கு சிவகதியைத் தருகின்றான் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
சேரும் புகழ்த் தொண்டர் செய்கை அறாத் திருநின்றியூரில்
சீரும் சிவகதியே இருந்தானைத் திருநாவல்
ஆரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய்ப்
பாரும் விசும்பும் தொழப் பரமன் அடி கூடுவரே

நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் பாடலில் (8.6.41) சிவகதியாக இருப்பவன் சிவபெருமான் என்று மணிவாசகர் கூறுகின்றார். பெண்களின் வாயிலிருந்து வெளிவரும் மொழிகள், காமத்தில் ஆழ்த்தி நாம் வெளிவராத வண்ணம் நம்மை மயக்கும் என்பதால், அவர்களது வாயினை முதலைக்கு அடிகளார் ஒப்பிடுகின்றார். வெந்நீர்=வெம்+நீர், கொடிய நீர்; பெண்கள் பால் கொள்ளும் வேட்கை, சுழல்கள் உடைய கொடிய நீர்நிலைக்கு ஒப்பிடப் படுகின்றது. சுழலில் சிக்கியவர்கள் மீள்வதே கடினம். மிகுந்த முயற்சியுடன் அந்த சுழலைக் கடந்து வர நினைத்தாலும், அந்த நீர்நிலையில் முதலை இருந்தால், அதன் பிடியில் அகப்படாமல் வருவது என்பது மிகவும் கடினம் அல்லவா. பெண்களின் காம மொழிகள், சுழல் நிறைந்த நீர்நிலையில் முதலை இருப்பதற்கு ஒப்பிடப்பட்டு, அந்த நிலையிலிருந்து மீள்வது எவ்வளவு கடினம் என்பது உணர்த்தப் படுகின்றது. விதலை=நடுங்குதல்; விடக்கு ஊன்=புலால் நாற்றம் மிகுந்த உடல்; மிடைந்த=பொருந்திய; சிதலை= நோய்; திதலை=தேமல்; இந்த உடலுடன் தொடர்ந்து வாழ முடியாமல் தவிக்கும் தன்னை, சிவகதியாக, அதாவது முக்தி உலகமாக விளங்கும் பெருமான் ஆட்கொள்ள வேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.
முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன் மிடைந்த
சிதலைச் செய் காயம் பொறேன் சிவனே முறையோமுறையோ
திதலைச் செய் பூண்முலை மங்கை பங்கா என் சிவகதியே

மணிவாசகரும் தனது திருவாசகம் (கண்டப்பத்து என்ற பதிகத்தில்), உருத் தெரியாமல் தான் கருவில் இருந்த காலத்திலேயே, சிவபெருமான் தனது உள்ளத்தில் புகுந்ததாக கூறுகின்றார். தனது உளம் புகுந்த பெருமான், நிலையாக அங்கே தங்கியதாகவும் கூறுகின்றார். அருத்தி=நெருக்கம்; தனது உள்ளத்தில் உறையும் இறைவனைத் தான் கண்டுகொண்டதால் அவனுக்கு மிகவும் நெருங்கியவனாக தான் இருந்தேன் என்றும் கூறுகின்றார்.
உருத்தெரியா காலத்தே உள் புகுந்து என் உளம் மன்னிக்
கருத்து இருத்தி ஊன்புக்கு கருணையினால் ஆண்டு கொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணி கொள் தில்லை கண்டேனே

சிவகதி எவ்வாறு விளையும் என்று திருமூலர், முதல் தந்திரம் கேள்வி கேட்டமைதல் அதிகாரத்தின் பாடலில் குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். அறம்=நீதி நூல்கள்; மறம்=உலகியல் பாவங்கள் எவையெவை என்று விளக்கும் ஒழுக்க நூல்கள்; உலகியல் ஒழுக்கங்கள் யாவை என்று விளக்கும் நீதி நூல்கள், தன்னலம் பாராமல் எல்லோரும் இன்பமுடன் வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தணர்களாகிய பெரியோர்கள் சொல்லும் வழிமுறைகள்,நல்லொழுக்கத்துடன் வாழ நாம் விலக்க வேண்டிய செயல்களை விளக்கும் நீதி நூல்கள், மனம் தெய்வீக மணத்துடன் திகழ சொல்ல வேண்டிய மந்திரங்கள், இவை அல்லாத வேறு நல்ல நூல்கள், பெருமானின் பொது இயல்பு மற்றும் சிறப்பு இயல்புகளை உணர்த்தும் சாத்திர நூல்கள், ஆகியவற்றை தக்கோர் வாயிலாக, ஐயம் திரிபறக் கேட்டு, அந்த நூல்களால் பெற்ற அறிவினைக் கொண்டு இறைவனது பொது இயல்புகளையும் சிறப்பான குணங்களையும் அனுபவித்தால் சிவகதி ஏற்படும் என்று திருமூலர் கூறுகின்றார்.
அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம் கேட்டும் பொன்னுரை மேனி எம் ஈசன்
திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே

திருமந்திரம் மூன்றாவது தந்திரம் அட்டாங்க யோகப் பேறு அதிகாரத்தின் பாடலில், பிராணயாமத்தின் போது மூச்சுக் காற்றினை உள்ளே நிறுத்தும் தன்மையால் நாம் அடையும் இன்பத்தினை சிவகதி என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பிராணாயாமத்தில் மூன்று நிலைகள் உள்ளன. மூச்சினை மெதுவாக உள்ளே இழுத்தல், அவ்வாறு இழுத்த மூச்சினை உள்ளே நிறுத்தி இதயமெங்கும் பரவச் செய்தல், பின்னர் மெதுவாக அந்த மூச்சினை வெளியே அனுப்புதல் என்பன அந்த நிலைகள். இவற்றுள் இரண்டாவது நிலையே கும்பகம் எனப்படும் நிலை. அந்த நிலையே இங்கே குறிப்பிடப் படுகின்றது. அத்தகைய மனிதர்களை, விண்ணோர் எதிர் கொண்டு வரவேற்க, விண்ணுலகத்து மங்கையர் தமது தலைவன் என்று கொண்டாடுவார்கள் என்று கூறுகின்றார்.
செம்பொற் சிவகதி சென்று எய்தும் காலத்துக்
கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள
செம்பொற் தலைவன் இவனாம் எனச் சொல்ல
இன்பக் கலவி இருக்கலுமாமே

திருமந்திரம் மூன்றாம் தந்திரம் காலச் சக்கரம் அதிகாரத்தின் பாடலில், திருமூலர், சிவ யோகியர்கள் சேரும் இடம் சிவகதி என்று கூறுகின்றார். முக்கண் உடையவனும் பிறப்பிலியும் அடியார்களின் வினைகளை குறைத்து அழிப்பதால் நந்தி என்று அழைக்கப் படுபவனும், அடியார்களின் இதயத்தில் அமர்ந்து குருவாக செயல்பட்டு அவர்களை நல்வழிப் படுத்தும் ஒப்பற்றவனும், எங்கும் பரந்து நாம் கருதுகின்ற திசைகள் அனைத்திலும் நிறைந்தவனாக உலகமே தானாக நிற்பவனும் ஆகிய பெருமானையும், அவனது அருட் சக்தியாகிய பிராட்டியையும் நாம் சென்றடையும் வழியை ஆராய்ந்து அறிந்து கொண்டு அனுபவிக்கும் சிவயோகிகள் சேருகின்ற இடம் சிவகதி என்பதே இந்த பாடலின் கருத்து. இதுவே மிகவும் உயர்ந்த ஆனந்தத்தை தருகின்ற இடம் என்பதால், சொர்கம் என்ற பொருள் பட பதம் என்று அழைக்கப் படுகின்றது.
கண்ணன் பிறப்பிலி காண் நந்தியாயுள்ள
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்
திண்ணென்று இருக்கும் சிவகதியா நிற்கும்
நண்ணும் பதம் இது நாட வல்லார்க்கே

திருமந்திரம் நான்காம் தந்திரம், அசபை அதிகாரத்தின் பாடலில், பெருமான் பிராட்டியுடன் இணைந்து ஆனந்த நடனமாடும் ஞான பரவெளியே சிவகதி என்று திருமூலர் கூறுகின்றார். பரம்=மேலானவை; பிரணவ மந்திரத்தில் உள்ள அகார உகாரங்களே, பஞ்சாக்கர மந்திரத்தில் உள்ள சிகார மகாரங்கள் என்று கூறுகின்றார். இந்த காரணம் பற்றியே, பிரணவ மந்திரம், பிரணவ பஞ்சாக்கரம் என்று அழைக்கப் படுகின்றது. சிகாரமும் வகாரமும் ஆகிய சிவங்களே அனைத்தினும் உயர்ந்தவை; இந்த சிவங்கள் உறைகின்ற இடம் எவராலும் அறியப்படாத சூனியமாகும், அந்த இடமே திருக்கூத்து நிகழ்கின்ற ஞானவெளி; இந்த இடமே என்றும் அழியாத ஆனந்தத்தை அளிக்கும் சிவகதி என்று திருமூலர் கூறுகின்றார்.
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறிய இடம் என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்தமாமே

இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலில், அசபை என்று அழைக்கப்படும் அஜபா நடனத்தை அறிந்து கொண்டு அனுபவித்தலே சிவகதி என்று ஆகமங்களும் வேதங்களும் உணர்த்துகின்றன என்று திருமூலர் கூறுகின்றார். இருபத்தெட்டு ஆகமங்கள் இருப்பினும், அவற்றில் சொல்லப் பட்டுள்ள கருத்துகள் ஒன்றுக்கொன்று முரணாக இல்லாமல் இருக்கும் தன்மை, இங்கே மாறிலா ஆகமம் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. புன்னையும்=புன் நையும்; இந்த இடம் சென்றடையும் ஆன்மாவின் இழிந்த தன்மை நைந்து கெட்டு விடும்; வண்டுறை=வளம் வாய்ந்த துறை; அழிவிலாத ஆனந்தம் அளிக்கும் இடம்;அமலம்=நின்மல சொரூபமாகிய சிவம்; வாறு=தன்மை; சதாசிவமாகிய பெருமான் அருளியதே ஆகமம் என்று இந்த பாடலில் முதல் அடியில் உணர்த்தப் படுகின்றது.
வாறே சதாசிவம் மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே

திருமந்திரம் நான்காவது தந்திரம் சக்தி பேதம் அதிகாரத்தின் பாடலில், திருமூலர், சக்தியை தனது அடியார்களுக்கு சிவகதி காட்டி அருள் புரிபவள் என்று குறிப்பிடுகின்றார். நன்கு முதிர்ந்த புளியம்பழம், ஓட்டினுள் இருந்த போதிலும், அந்த ஓட்டுடன் ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்பது போன்று, உலகியல் வாழ்க்கை நடத்திய போதிலும், உலகப் பொருட்களின் மீது பற்றேதும் இல்லாத நிலையில் இருப்பதை குறிப்பிடுகின்றது. அத்தகைய பக்குவத்தை நாம் இறைவன் அல்லது இறைவியின் கருணை மூலம் தான் பெறமுடியும் என்பதே இங்கே உணர்த்தப் படுகின்றது. அளி=வண்டுகளில் ஒரு வகை; அளி ஒத்த பெண்பிள்ளை=அடியார்களின் இதயத் தாமரையில் மிகுந்த விருப்பத்துடன் அமரும் தேவி; உண்ணுதல்=தன்னுள் அடக்கிக் கொள்ளுதல்; அன்பர்களின் இதயத் தாமரையில் வண்டு போல விரும்பி உறைபவளும், ஆனந்தமே உருவாகவும் அழகிய தோற்றத்துடன் இருப்பவளும் ஆகிய தேவி, என் பால் மிகுந்த கருணையுடன் செயல்பட்டு, எனது உள்ளம் உலகியல் இன்பங்களிலிருந்து விலகி தனித்து இருக்கும் வண்ணம், வெளி ஓட்டில் ஒட்டாத புளியம் பழம் போன்ற தன்மையில் இருக்கும் வண்ணம், பக்குவப் படுத்தியவள் ஆவாள். மேலும் சிவஞானம் அளித்து எனது சித்தத்தை தெளியச் செய்த பிராட்டி, ஞான ஒளியால் எனது சிந்தையை நிரப்பி, அழியாத ஆனந்தமாகிய சிவகதியை காட்டி என்னை தன்னுள் அடக்கிக் கொண்டாள் என்று திருமூலர் கூறுகின்றார்.
அளி ஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு பழம் போல் உள்ளே நோக்கித்
தெளி உறுவித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்து என்னை உய்ய உண்டாளே

இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலில் திருமூலர், பிராட்டி தனது அடியார்களை சிவகதிக்கு செலுத்துவாள் என்று கூறுகின்றார். உயிருடன் பராசக்தி கலந்து நிற்கும் தன்மை இந்த பாடலில் விளக்கப் படுகின்றது. ஏடு அங்கையாள்=நூலேட்டினைத் தனது கையில் கொண்டுள்ள கலைமகள்; கலைமகளாக இருப்பவளும் பிராட்டி தான் என்று திருமூலர் கூறுகின்றார். அவன்=சிவபெருமான்; பெருமானின் உடலாகவும் உயிராகவும் இருக்கும் பிராட்டி, அவனுடன் சேர்ந்தே அனைத்துச் செயல்களையும் புரிகின்றாள் என்று கூறுகின்றார். சென்றாள் என்பதை செல்வித்தாள் என்று பிறவினையாக்கி பொருள் கொள்ள வேண்டும். முக்தி இன்பத்திலே ஆன்மாக்களை உய்விப்பாள் என்று கூறுகின்றார். பிராட்டி ஆன்மாவுடன் கலந்து ஒன்றாக இருக்கும் தன்மை, ஒன்றாகி என்னுள் புகுந்து உணர்வாகி என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது.
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வாகியே
நின்றாள் பரஞ்சுடர் ஏடு அங்கையாளே

இதே அதிகாரத்தின் கடைப் பாடலில், பிராட்டியை சிவகதி என்று திருமூலர் கூறுகின்றார். தத்=அது; தற்பரை=பொதுவாக உயிர்களால் அது என்று குறிப்பிடப்படும் பராசக்தி, அந்த உயிர்களுக்கெல்லாம் மேலானவளாக இருக்கும் தன்மை தற்பரை என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. பெருமானுடன் இணைந்து ஐந்து தொழில்களையும் இயற்றுபவள் என்பதால் முழுமுதற் தலைவியாக பிராட்டி கருதப் படுகின்றாள். சுத்த மாயையின் செயல்கள் மற்றும் அசுத்த மாயையின் செயல்கள் பதினான்கும் இங்கே பிராட்டி தந்தவையாக சொல்லப் படுகின்றன. மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம் மற்றும் புருடன் எனப்படும் ஏழும் அசுத்த மாயை என்று ஒரு தொகுப்பாக அழைக்கப் படுகின்றன. ஆணவ மலத்துடன் சேர்வதால் இவை அசுத்த மாயை என்று அழைக்கப் படுகின்றன. சிவம், சக்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்பன ஐந்து சுத்த மாயைகள்; இவற்றின் காரியங்கள் முறையே பரநாதம், அபரநாதம், சாதாக்கியம், ஈசுரம், மற்றும் சுத்தவித்தை என்பன. சுத்த வித்தையின் மூன்று பாகங்களாக அயன், திருமால் மற்றும் உருத்திரன் விளங்குகின்றனர். சுத்த வித்தையின் மூன்று பாகங்கள் மற்றுமுள்ள நான்கு சுத்த மாயைகளைச் சேர்த்து ஏழு சுத்த மாயைகள் என்று சொல்வதும் வழக்கம். இவ்வாறு பிரிக்கப்படும் பதினான்கு மாயைகளை பிராட்டி தந்ததாக திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். மான்=இயற்கை; இயற்கையுடன் இணைந்த இருபத்து நான்கு தத்துவங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து அறிவுக் கருவிகள், ஐந்து செயற் கருவிகள் மற்றும் நான்கு அந்தக்கரணங்கள் புலன்கள் ஆக இருப்பவளும் பிராட்டியே என்பது மான் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. வானோர் என்பது பாடபேதம்; தன்மை=வள்ளல் குணம்; உயிர்களுக்கு தத்துவங்களை அளித்து, வினைகளைக் கழித்துக் கொள்ளவும், உண்மையான மெய்ப் பொருளை உணர்வதற்கும் உதவி செய்யும் பிராட்டி, அந்த தத்துவங்களிலிருந்து உயிரினை விடுவித்து முக்தி நிலை அளிக்கும் கருணையுடன் விளங்குவதும் இங்கே சொல்லப் படுகின்றது.
தானே தலைவி என நின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும் நற்புத்தியும்
தானே சிவகதித் தன்மையும் ஆமே

திருமந்திரம் நான்காம் தந்திரம் ஆதார ஆதேயம் அதிகாரத்தின் பாடலில், சிவகதி அடைய விரும்புவோர் செல்ல வேண்டியது சன்மார்க்க நெறியில் என்று திருமூலர் கூறுகின்றார். சன்மார்க்கம்=நிலையான நன்னெறி; கூர்மையான அறிவின் பின்னே நின்று செயல்படுவது, இறைவன் அருளும் ஞானமேயாகும். தடம்=வழி; இறைவன் அருளும் ஞானத்தின் வழியே செயல்பட்டால் தான், செம்மையான சிவநெறியில் செல்லலாம். அந்த சிவநெறியில் சென்றால் தான் சிவகதியை அடைய முடியும் என்று கூறுகின்றார்.
நுண்ணறிவாகும் நுழை புலம் மாந்தர்க்கு
பின்னறிவாகும் பிரான் அறிவு அத்தடம்
செந்நெறியாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறியாவது சன்மார்க்கம் ஆமே

திருமந்திரம் ஐந்தாம் தந்திரம் புறச்சமய தூடணம் அதிகாரத்தின் பாடலில், திருமூலர் சிவகதி ஒன்று தான் உண்மையான முக்தி நிலையை அளிக்கும் என்று கூறுகின்றார். பவகதி=பிறவியைத் தேடித் தரும் வழி; அவகதி=பிறவியின் பயனாக துன்பங்களை தருகின்ற வழி; மற்ற சமயங்கள் உணர்த்தும் நெறிகள் அனைத்தும் பிறவிக்கு அடிகோலும் வகையில் இருப்பதால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு எந்த வகையிலும் உதவாது என்று கூறுகின்றார். எனவே முக்தி என்று மற்ற சமயத்தவர்கள் சொல்வது அனைத்தும் முக்தியில்லாத பிறப்பு நிலையே ஆகும். எனவே பாசத்தால் வருகின்ற துன்பங்களை தீர்க்க, மற்ற சமயங்கள் உதவி செய்யாது. மூவர் என்று பிரமன் திருமால் உருத்திரனை குறிப்பிடுகின்றார். நேரே சிவத்தைச் சாரும் தவகதியை பின்பற்றி முக்தி நிலையை பின்பற்றும் உயிர்களைக் காணும் மும்மூர்த்திகளும், தாமும் தவகதியைச் சார்ந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வேட்கையை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சிவகதியே கதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவி ஒன்றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை ஆமே

திருமந்திரம் ஆறாவது தந்திரம் தவ தூடணம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், சிவதரிசனம் பெற்று அதன் பின்னர் சிவகதியை அடைதலே தவத்தின் நோக்கம் என்று கூறுகின்றார். சிவனடியார்களுடன் கூடி, அவர்கள் செய்கின்ற தவத்தினை பின்பற்றி, நானும் அந்த தவத்தை செய்து, பெருமானின் திருவடிகளைக் காணும் பேறு பெற்றேன் என்று சொல்லும் திருமூலர், பெருமானின் திருவடியின் கீழே இருக்கும் தன்மையை விரும்பி மேலும் தவம் செய்து, அந்த சிவகதியைப் பெற்றதாக கூறுகின்றார். எனவே உண்மையாக செய்யப்படும் தவம், சிவகதியை விரும்பி செய்யப்படும் தவமாகும். சிவகதியை விரும்பாமல், வெறுமனே தமது உடலை வருத்திக் கொண்டு தவம் செய்வதால் எந்த விதமான பயனும் விளையாது; அத்தகையோரை தவசிகள் என்று அழைப்பதே தவறு என்று கூறுகின்றார். குரை கழல்=ஒலிக்கும் கழல்; ஏதம்=துன்பம்;
கூடித் தவம் செய்து கண்டேன் குரை கழல்
தேடித் தவம் செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம் செய்வது ஏதம் இவை களைந்து
ஊடில் பல உலகோர் எத்தவரே

திருமந்திரம் ஆறாம் தந்திரம் திருநீறு அதிகாரத்தின் பாடலில் திருமூலர், திருநீறு அணிவதன் பயனாக சிவகதி சாரலாம் என்று கூறுகின்றார். பெருமானின் அழகிய திருவடிகளைச் சென்று சார்வதே சிவகதி என்று உணர்த்துகின்றார். கங்காளன்=பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளினில் சுமக்கும் பெருமான். கங்காள வேடத்தன் என்ற குறிப்பு, பிரமன் திருமால் ஆகிய இருவரும் பிரளய முடிவினில் இறந்த பின்னரும், எஞ்சி இருப்பவன் சிவபெருமான் என்பதை உணர்த்துகின்றது. ஒளி கெடாத வண்ணம் திருநீற்றினை பூச வேண்டும் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். நீருடன் குழைத்து திருநீற்றினை பூசினால், மங்காமல் ஒளி வீசும் என்பதை நாம் அறிவோம். பெருமான் பால் உள்ளன்போடு, அவரது அடையாளமாகிய திருநீற்றினை, தயக்கம் ஏதுமின்றி நாம் பூசிக் கொள்ள வேண்டும் என்பதை இங்கே உணர்த்துகின்றார். அவ்வாறு பூசப்படும் திருநீறு அடியார்களுக்கு சிறந்த கவசமாகத் திகழும் என்ற செய்தியும் இங்கே சொல்லப் படுகின்றது.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே

திருமந்திரம் ஏழாம் தந்திரம் அருளொளி அதிகாரத்தின் பாடலில் திருமூலர், பெருமான் அருள் புரிந்து ஆன்மாவின் மனதினில் புகுந்தால், ஆன்மா தெளிவடைய, நாளடைவில் ஆன்மா சிவகதியை அடையும் என்று கூறுகின்றார். மருள்=மயக்க உணர்வு, ஆணவ மலத்தின் செயலால் விளைவது; ஆன்மா பக்குவம் அடையும் போது, திருவருள் ஆன்மாவில் பதியும்; அப்போது உயிர் தன்னையும் தனது தலைவனையும் உணரும். அதன் பயனாக, ஆன்மா பரவெளி சென்றடைந்து ஆங்கே விளங்கும் சிவத்தைப் பற்றி நின்று சிவகதி தரும் எல்லையற்ற பேரானந்தத்தில் திளைக்கும் என்று கூறுகின்றார். பொருள்=சிவம்: இறைவன் மனதினில் புகுவதால் மாயையும் மலமும் கெட்டு விடுகின்றன என்று சொல்கின்றார். அருள் அம்மை என்றும் பொருள் சிவம் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. தெருள்=தெளிவு;
அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம் புகுந்தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதியாமே

திருமந்திரம் ஏழாவது தந்திரம் விந்துசயம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், உட்கொள்ளும் உணவு மற்றும் நுகரும் பிராண வாயு ஆகியவற்றால் விளையும் சக்தியை வீணாக கழிக்காமல் உடலில் நிலைக்கும் வண்ணம் சாதிக்க வல்ல உயிர்க்கு சிவகதி சித்திக்கும் என்று சொல்கின்றார். ஏய்தல்=பொருந்துதல்; தானே உபதேசம்=தான் ஏய் உபதேசம்; விந்துவை வென்று சிவகதியைச் சேர விரும்பும் ஆன்மாவாகிய தான் அடையும் உபதேசம்; தான் அல்லாது=சிவமாகிய, திருவைந்தெழுத்து ஆகிய தான் அல்லாது; திருவைந்தெழுத்தை தியானிக்கும் ஆன்மா சிவத்தைச் சார்ந்து சிவமாகவே இருப்பதால், சிவமின்றி யாதொரு பொருளும் இல்லை என்பதை உணர்த்தும் முகமாக, தானலாது என்று கூறினார். நமசிவாய மந்திரத்தை இடைவிடாது தியானம் செய்ய,விந்து கீழ்நோக்காது மேல் நோக்கிச் சென்று பரையோடு கூடும் என்பதால், விந்துவை, வான் ஏய் உயர் விந்து என்று கூறுகின்றார். பதினான்கு=அகார கலை முதலாக, பரவிந்துவிலிருந்து தோன்றும் பதினான்கு கலைகள்; மான்=மனது;
தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை
வானே உயர்வித்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே

திருமந்திரம் ஏழாம் தந்திரம், இதோபதேசம் அதிகாரத்தின் பாடலில், திருமூலர் உயிர் சிவகதி அடைந்து இன்புற வேண்டும் எனில் எப்போதும் சிவனையே தியானித்து இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். கூட்டை விட்டு பறந்து செல்கின்ற பறவை போன்று, உடலிலிருந்து என்றோ ஒரு நாள் பிரிந்து பறந்து செல்லும் தன்மை உடைய உயிர்; உயிர் உடலுடன் கூடிய நோக்கமே, உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டு, அதனையே எப்போதும்தியானித்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, சிவத்தைச் சென்றடைவது தானே. சிறப்பு=சிவஞானம்;
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டில்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பு ஒன்று இலாமையும் பேருலகாமே

திருமந்திரம் ஏழாவது தந்திரத்தில் சற்குரு நெறி அதிகாரத்தின் பாடலில் திருமூலர், குருவின் ஸ்பரிச தீட்சையால் மூன்று மலங்களும் கெட்டு, உயிர் சிவகதியை அடையும் என்று கூறுகின்றார். வேதி=இரசவாத குளிகை; அனைத்தையும் பொன்னாக்கும் ஆற்றல் பெற்றது; குவலயம்=பூமி; குரு சிவோகம் பாவனையிலிருந்து தம் கையைச் சிவனின் கரங்களாக பாவித்து, சீடனின் சிரத்தை தொட, சீடன் மலமாயை கன்மங்களிலிருந்து நீங்கிச் சுத்தமான ஆன்மாவாக மாறுவான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் கருத்து.
பரிசன வேதி பரிசித்த எல்லாம்
வரிசை தரும் பொன் வகையாகுமா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே

இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலில் திருமூலர், தான் தோற்றுவிக்கும் உயிரினை சிவகதியில் சேர்த்தல் பெருமானுக்கு விளையாட்டு போன்று மிகவும் எளிதான காரியம் என்று கூறுகின்றார். உயிர்கள் அனைத்தும் இன்ப துன்பம் நுகர்வதற்கு வழிவகுக்கும் வகையில் புலன்களுடன் பொருத்தப் படுகின்றன. நாளடைவில் உயிர் ஞானம் அடைந்து, ஆன்மாவின் இயல்பினை புரிந்து கொண்டு செயல்பட, இறைவன் இறைவியுடன் ஆன்மாவின் உள்ளத்தில் உறைகின்றான். அப்போது மலங்கள் ஐந்தும் தாமாகவே தமது சேட்டை அடங்கி நிற்க, உயிரினை, மீண்டு வருதல் இல்லாத சிவகதியை அடையச் செய்தல், இறைவனுக்கு விளையாட்டு போன்று மிகவும் எளிதான காரியம் என்று கூறுகின்றார்.
எல்லாம் இறைவன் இறைவியுடன் இன்பம்
வல்லார் புலனும் வருங்கால் உயிர் தோன்றிச்
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே
செல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே

திருமந்திரம் எட்டாம் தந்திரம் நின்மலாவத்தை அதிகாரத்தின் பாடலில் திருமூலர், இந்த நிலையில் ஆன்மா அடையும் பேறு சிவகதி என்று சொல்கின்றார். நின்மலாவத்தை=மலம் அற்ற நிலை; சார்ந்ததன் வண்ணமாக இருக்கும் உயிர், மலங்களைச் சார்ந்து அறியாமை ஆகிய கேவல நிலையில் இருந்த உயிர்,ஞானம் தருகின்ற கருவிகளை சார்ந்து பக்குவம் அடைந்து, மலங்கள் முற்றிலும் அடங்கி செயலற்ற நிலையில் இருக்க, சிவத்தைச் சார்ந்து இருக்கும் நிலையே நின்மலாவத்தை என்று சொல்லப் படுகின்றது. போதம்=ஞானம்; ஆறாறு=முப்பத்தாறு தத்துவங்கள்; சர்வ வியாபியாக இருக்கும் இறைவன், அனைத்துப் பொருட்களுடன் கலந்து நிற்கும் தன்மை, எல்லாம் தன்னுள் புக யாவுளும் தானாகி என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. துரியம்=புலன்கள் செயலற்று கிடத்தல்; தத்துவங்கள் உயிரினை மீண்டும்மீண்டும் பிறவியுள் புக வைப்பதால், பொல்லாத ஆறாறு என்று கூறுகின்றார். செல்லாச் சிவகதி=தானே வந்து அடையும் சிவகதி, தனது முயற்சியால் எவரும் அடைய முடியாத சிவகதி; இறைவன் அருள் புரிய, பூவினுள் நாற்றம் பொருந்துவது போல, ஆன்மா சிவகதியில் பொருந்தும் என்று கூறுகின்றார். திருவருள் நம்மை அழைத்துச் சென்றால் தான், நாம் சிவகதியின் உள்ளே புகலாம் என்பது உணர்த்தப் படுகின்றது. பக்குவம் அடைந்த உயிரினை சிவமே சிவகதிக்கு அழைத்துச் செல்லும்.
எல்லாம் தன்னுள் புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாருள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்று எய்தும் அன்றே

திருமந்திரம் எட்டாம் தந்திரம் அட்டதள கமல முக்குண அவத்தை அதிகாரத்தின் பாடலில் திருமூலர், ஜீவன் சிவமாகும் தன்மையை குறிப்பிடுகின்றார். ஆறு என்பது பொதுவாக மலையில் தோன்றும். புருவ மத்தியாகிய ஆஞ்ஞை மலையாக உருவகிக்கப்பட்டு, அதனில் பெருகும் அமுத தாரை, ஆறாக சொல்லப் படுகின்றது. அந்த அமுத தாரையை உள்ளமாகிய குளத்தில் தேக்கி, உடலெங்கும் பரவச் செய்தால், ஜீவன் சிவமாம் தன்மை அடையும் என்று கூறுகின்றார். இதனால் ஏற்படும் விளைவே மிகவும் நுட்பமான சிவகதி என்று கூறுகின்றார்.
ஆறே அருவி அகம் குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவி முலைக் கொம்பு அனையாளொடும்
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே

திருமந்திரம் எட்டாம் தந்திரம் வாய்மை அதிகாரத்தின் பாடலில் திருமூலர் சிவகதியை சென்று அடையும் வழியினை உணர்த்துகின்றார். மலர்கள்=ஆறு ஆதாரங்கள்; தோட்டம் என்று உடலினை குறிப்பிடுகின்றார். யோகியாக விளங்கி, ஆறு ஆதாரங்களின் வழியாக குண்டலினி சக்தியை சகஸ்ர தளத்திற்கு செலுத்தி நிறுத்தினால், ஆங்கே காய்த்து பழுத்த அரிய நமச்சிவாயப் பழம் இருப்பதை உணரலாம். ஆனால் அதனை ஆன்மா அறிந்து உணராத வண்ணம் புலன்களாகிய பறவை மறைத்து விடுகின்றது. புலன்கள் மறைத்து விடுவதை, பறவை கொத்தித் தின்கின்றது என்று கூறுகின்றார். அந்த பறவை அவ்வாறு மறைக்காத வண்ணம் துரத்தி விரட்டினால், ஆன்மா சிவகதி சென்றடையலாம் என்று கூறுகின்றார். நமது உணர்வாகிய வில்லினில், திருவைந்தெழுத்தாகிய அம்பினை பொருத்தி, அந்த அம்பினை எய்தி, புலன்களை துரத்தலாம் என்று கூறுகின்றார்.
வம்பு பழுத்த மலர்ப் பழம் ஒன்றுண்டு
தன் பால் பறவை புகுந்து உணத் தான் ஒட்டாது
அம்பு கொண்டு எய்திட்டு அகலத் துரந்திடில்
செம்பொற் சிவகதி சென்று எய்தலாமே

நமது தீவினைகள் நம்மை சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்ல விடாது தடுக்கும் என்றும், நாம் அந்த தீவினைகளின் தாக்கத்தையும் மீறி அவனது திருநாமத்தைச் சொன்னால் தீவினைகள் அழிந்துவிடும் என்றும் இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார். ஆன்மாவைப் பிணித்துள்ள தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்று, சிவபெருமானுடன் ஆன்மா சேர்வதாக வழி வகுக்கும் நெறி சிவகதி எனப்படுகின்றது.
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் மோன சமாதி அதிகாரத்தின் பாடலில், திருமூலர் சிவகதியை தான் உணர்ந்த தன்மையை கூறுகின்றார். தான், வெளியே எங்கெங்கோ தேடி அலைந்ததை விட்டுவிட்டு, எங்கும் செல்லாது, தன்னையே நோக்கிக் கண்டமையால், பராபரம் எனப்படும் முதற் பொருளையும் அதனால் விளையும் இன்பத்தை பெறும் சிவகதியின் இயல்பினையும், உணர்வுக்கு உணர்வாய் இருந்து தெளிவிக்கும் அறிவாகிய திருவருளினையும், இந்த திருவருளைக் காண்பதற்கு பக்குவம் அடைய பல ஊழிக் காலங்கள் தேவைப்படும் என்பதையும் புரிந்து கொண்டேன் என்று கூறுகின்றார்.
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் அணைந்தோர் தன்மை அதிகாரத்தின் பாடலில் சிவகதி செல்லும் வழியை தான் தெரிந்து கொண்டதாக திருமூலர் கூறுகின்றார். இறைவன் வகுத்த வழியின் படியே, பிரமன், உயிர்களை அந்த உயிர்களுடன் கூடியுள்ள வினைகளின் தகுதிக்கு ஏற்ப தகுந்த உடலுடன் பிணைத்து, அந்த வினைகளின் பயனாக உயிர் இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்யும் தன்மையை, பிரமன் பிணித்ததோர் பாசம் என்று சொல்கின்றார். அத்தகைய வினைகளின் தொடர்பிலிருந்து பிரிந்த தான், சிவத்தைத் தலைப்படும் நெறியையும் அந்த நெறியிலிருந்து பிறழாது நிற்கும் நிலையினையும் அறிந்து கொண்டேன் என்று கூறுகின்றார். மேலும் பழைய வினைகளின் பயனாக இன்ப துன்பங்களை நுகர்ந்து கழிக்கும் தருணத்தில், தான் செய்யக்கூடிய வினைகளின் பயனாக ஆகாமிய வினைகள் சேராத வண்ணம், ஞானம் என்ற கூரிய வாளால் அறுத்தெரிந்த தான், தன்னை சிறையாக வைத்திருக்கும் உடம்பிலிருந்து விடுபட்டு முக்தி நிலை அடைய முயல்கின்றேன் என்றும் கூறுகின்றார்.
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில் மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின்றேனே

பொழிப்புரை:
தலங்களில் சிறந்ததாக கருதப்படுவதும், நீர்வளம் மிகுந்ததும் ஆகிய சீர்காழி நகரினைச் சார்ந்தவனும் தமிழ்ப் புலமை பெற்றவனும் ஆகிய ஞானசம்பந்தன், உலகெங்கும் பரவிய புகழினை உடைய நெய்த்தானத்து இறைவனைப் புகழ்ந்து பாடிய, ஒப்பற்ற பலன்களை அளிக்கும் பத்து பாடல்களையும் முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், நுண்ணியமான பொருட்களிலும் நிறைந்து நிற்பவனும், சிறந்த முக்திச் செல்வத்தை உடையவனும் ஆகிய இறைவனது திருவடிகளை, நிறைவான புண்ணியத்தை அளிக்கும் திருவடிகளைச் சார்ந்து என்றும் ஆனந்தத்தில் ஆழ்ந்து சிவகதியில் இருப்பார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் பல பாடல்களில் நெய்த்தானம் என்று தலத்தின் பெயரை சொல்லுமாறு திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நெய்யாடிய பெருமான் என்று தலத்து பெருமானின் திருநாமத்தை உணர்த்தும் பாடலுடன் இந்த பதிகத்தினை திருஞானசம்பந்தர் தொடங்குகின்றார். தலத்து இறைவனை நமக்கு அறிமுகப்படுத்தும் இந்த பாடலில், ஞானசம்பந்தர், பெருமானின் தியாகம் வீரம் கருணை ஆகிய மூன்று பண்புகளை குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தின் தாக்கத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றும் நோக்கத்துடன், ஆலகால விடத்தினைத் தானே உட்கொண்ட தியாகச் செயலும், தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்ட வீரச் செயலும், உமை அன்னைக்குத் தனது உடலின் இடது பாகத்தை வழங்கிய கருணைச் செயலும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன. முதல் பாடலில் பெருமானை நமக்கு அறிமுகப் படுத்தியதன் காரணம் இரண்டாவது பாடலில் கூறப்படுகின்றது. பெருமானை வழிபட்டு, நமது பழி பாவம் துயரங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிமுகத்தின் நோக்கம். உலகத்து உயிர்களுடன் இணைந்து, அந்த உயிர்களை இயக்கச் செய்து தாய் போல தாங்கும் பெருமானின் திறம் பதிகத்தின் மூன்றாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. அனைத்து உயிர்களுடன் இணைந்து அவற்றை தொழில்படுத்தும் பெருமான், பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தங்களது உடலினை விட்டு பிரிந்த பின்னரும், தான் அழியாமல் இருக்கும் நிலை, நான்காவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஐந்தாவது பாடலில், காவிரி நதி ஆரவாரம் செய்து கொண்டு வரும் நிலையினை, காவிரி நதி பெருமானைப் புகழ்ந்துப் பாடுவதாக நயமாக கூறுகின்றார். வீடுபேறு நிலையினை அடைய விருப்பம் உடைய தொண்டர்கள், நெய்த்தானம் தலம் சென்று பெருமானை வணங்க வேண்டும் என்று ஆறாவது பாடலில் அறிவுரை கூறுகின்றார். பெருமானின் திருவடிகளை இடைவிடாது தொழும் அடியார்கள் மற்றவர்கள் தொழப்படும் நிலையினை அடைவார்கள் என்று ஏழாவது பாடலில் கூறுகின்றார். தனக்கு கெடுதி செய்ய நினைத்த அரக்கன் இராவணனுக்கும் அருள் புரிந்த பெருமானின் கருணைச் செயல் எட்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரமனும் அறிய முடியாது திகைத்த நிலையும் பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் பெருமான் குறித்து பேசும் இழிவான சொற்களும் உணர்த்தப் பட்டு, அடியார்களுக்கு அறிவுரை கூறப்படுகின்றது. கடைப் பாடலில், இந்த பதிகத்தினை முறையாக ஓதி சிவகதி அடையுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். நெய்த்தானம் தலத்தின் பெருமையையும், பெருமான் தனது அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையையும் இந்த பதிகத்தின் மூலம் புரிந்து கொண்ட நாமும், நெய்த்தானம் தலம் சென்று இறைவனை வழிபட்டும், இந்த பதிகத்தினை முறையாக ஓதியும் சிவகதி பெற்று நிலையான இன்பம் அடைவோமாக.

மையாடிய கண்டன் (Maiyaadiya Kandan) is a poetic and devotional phrase referring to Lord Shiva, focusing on his iconic feature of wearing kohl (mai) on his neck or forehead. The term "கண்டன்" refers to Shiva, particularly in his form as Kandan, which means "the one with a (divine) throat" or "the one with the neck."

Breakdown of the Phrase:

மை (Mai): Refers to kohl or black pigment. In this context, it symbolizes the black hue, often associated with Lord Shiva’s neck.

ஆடிய (Aadiya): Means "adorned" or "smeared." It indicates that the kohl or black substance is smeared or worn on Shiva's neck or body.

கண்டன் (Kandan): Refers to Lord Shiva, especially highlighting his throat or neck. Shiva is famously known for his blue throat (Neelakanta), which turned blue after he drank the poison (Halahala) during the churning of the ocean (Samudra Manthan) to save the universe.

Full Meaning:

"மையாடிய கண்டன்" translates to "Shiva, who is adorned with kohl (black) on his neck." This poetic phrase refers to Lord Shiva’s throat, which became dark or blue after he drank the poison during the churning of the cosmic ocean. The term also evokes the imagery of Lord Shiva being adorned with the color black (or blue), highlighting his cosmic role as the savior of the universe.

Context:

In Hindu mythology, during the Samudra Manthan (churning of the ocean), a deadly poison called Halahala emerged, threatening to destroy the world. To save the universe, Lord Shiva drank the poison, which stayed in his throat, turning it blue. This earned him the name Neelakanta (the blue-throated one). The dark or bluish color of his throat is often described poetically as being "adorned with kohl."

In Tamil devotional hymns and literature, Lord Shiva’s blue or dark neck is frequently highlighted, symbolizing his immense power, sacrifice, and compassion. Descriptions like "மையாடிய கண்டன்" are used to praise his divine qualities, especially his role as the protector of the universe.

Thus, this phrase not only depicts Shiva’s physical appearance but also signifies his act of saving the world, making him a beloved and revered deity in Tamil culture and Hinduism at large.



Share



Was this helpful?