பின்னணி;
மதுரை வந்தடைந்த திருஞானசம்பந்தரை அச்சுறுத்தி அவரை மதுரையை விட்டு விரட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், அவரும் அவரது அடியார்களும் தங்கியிருந்த மடத்திற்கு, வஞ்சனையாக சமணர்கள் தீ வைத்த போது, தனது அடியார்களை தீயிலிருந்து காப்பாற்றும் பொருட்டு பெருமானை நோக்கி,செய்யனே என்று தொடங்கும் பதிகத்தினை (3.51) திருஞான சம்பந்தர் பாடுகின்றார். அந்த பாடலில் இந்த தீ, இந்த கொடுஞ்செயல் புரிவதற்கு சமணர்களுக்கு அனுமதி அளித்த பாண்டிய மன்னனை வெப்பு நோயாக சென்று பற்றட்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்றார். அவ்வாறே பாண்டிய மன்னனை வெப்பு நோய் பற்றிக்கொள்ள, மன்னன் தவிக்கின்றான். தங்களுக்கு தெரிந்த மந்திர தந்திரங்களை சமணர்கள் பயன்படுத்திய போதும் வெப்பு நோய் தீராமல் இருக்கவே மன்னன் பெரிதும் வருந்தினான். அப்போது அரசியார் மங்கையர்க்கரசியாரும் மந்திரி குலச்சிறையாரும் மன்னனை அணுகி,சமணர்கள் திருஞானசம்பந்தருக்கு திங்கிழைத்ததன் பயனாக (அவர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தது) விளைந்தது என்றும், திருஞானசம்பந்தரின் அருளால் மட்டுமே இந்த வெப்பு நோயினைத் தீர்க்க முடியும் என்றும் கூறினார்கள்; இதனைக் கேட்ட மன்னன், திருஞான சம்பந்தரை அழைத்து வருமாறு சொன்னான். மேலும் தனது வெப்பு நோயினைத் தீர்ப்பவர் எவராயினும் அவர் பக்கம் சார்வேன் என்றும் கூறினான். அரசனின் அனுமதி பெற்ற அமைச்சரும் அரசியாரும் மிகுந்த ஆர்வத்துடன் திருஞானசம்பந்தரை சந்திக்கச் சென்றனர். மன்னனின் வெப்பு நோயையும் சமணர்களால் மன்னன் அடைந்துள்ள மயக்கத்தையும் தீர்க்கவேண்டும் என்று அவரை வேண்டினார்கள். அதற்கு திருஞானசம்பந்தர், நீர் கவலைப்பட வேண்டாம்; இறைவனது திருவருள் துணை கொண்டு, நீர் மகிழும் வண்ணம் சமணர்களை வென்றும், மன்னனது நோயினைத் தீர்த்தும் உம்மை மகிழ்வித்து, மன்னனையும் திருநீறு அணிவிப்பேன் என்று ஆறுதல் கூறினார். அரண்மனை செல்லும் வழியில் திருவாலவாய் திருக்கோயில் சென்ற திருஞானசம்பந்தர் காட்டுமாவது உரித்து என்று தொடங்கும் பதிகத்தையும் செய்யனே திருவாலவாய் என்று தொடங்கும் பதிகத்தையும் பாடி இறைவனின் அருள் வேண்டினார். அரணமனை வந்து சேர்ந்த திருஞானசம்பந்தரை மன்னன் வரவேற்று அவர் அமர்வதற்காக தலை மாட்டில் முத்துகள் பதிக்கப்பட்ட ஆசனத்தை இடுமாறு கட்டளையிட்டான். சமணர்கள் மன்னனின் இடது பாகத்து வெப்பு நோயினை தீர்க்க முயற்சி செய்வதென்றும் திருஞானசம்பந்தர் வலது பாகத்து வெப்பு நோயினை தீர்க்க முயற்சிப்பதென்றும் முடிவாயிற்று. சமணர்கள் தங்களது முயற்சியை தொடங்க, மன்னனுக்கு நோய் மேலும் தீவிரமாக, மன்னன் தனது கண்ணசைவு மூலம் திருஞானசம்பந்தரை அழைத்தான். அப்போது மந்திரமாவது நீறு என்று தொடங்கும் இந்த பதிகத்தை பாடியவாறு திருஞானசம்பந்தர், மன்னனின் வலது பாகத்தில் திருநீறு பூசத் தொடங்கினார்.
பாடல் 1;
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே
விளக்கம்:
மன்னனின் கலக்கத்தை நீக்கும் பொருட்டு மந்திரம் என்ற சொல்லுடன் இந்த பாடலை துவக்குகின்றார். மந்திரம் உச்சரிப்பவர்களின் இடரைக் களைவது போன்று திருநீறும் பூசிக் கொள்வோரின் இடரைக் களையும் தனமை உடையது என்று கூறுகின்றார். இறைவனை மந்திரத்தான் என்று பல திருமுறைப் பாடல்கள் (1.61.3) குறிப்பிடுகின்றன. பெருமானின் திருவடிகள் மத்தமாம் பிணி நோய்க்கு மருந்தும் ஆவன மந்திரம் ஆவன என்று வலஞ்சுழி பதிகத்திலும் (2.106.3) அடிகளின் வேடங்கள் மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை என்று திருந்துதேவன்குடி பதிகத்திலும் (3.25.1) பெருமான் மருந்தவன் வானவன் தானவர்க்கும் என்று இடைமருது தலத்து பதிகத்திலும் (1.110.1) தீவினைக்கோர் மருந்து என்று புள்ளிருக்கு வேளூர் தலத்து பதிகத்திலும்(2.43.11) பெருமானின் திருநாமம் மருந்தவை மந்திரம் என்று திருநெல்வேலி பதிகத்திலும் (3.92.1) திருஞானசம்பந்தர் பல பாடல்களில் குறிப்பிடுகின்றார்.மயக்கம் தீர்க்கும் மருந்து என்று பாவனாசப் பதிகத்தில் (4.15.3) அப்பர் பிரான் குறிப்பிடுவதையும் நாம் உணரலாம். மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராநோய் தீர்க்கவல்லான் என்று புள்ளிருக்குவேளூர் தலத்து பதிகத்தில் அப்பர் பிரான் குறிப்பிடுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. திருவெண்ணீறு அணியாத திருவிலூரும் ஊரல்ல அவை அடவி காடே என்ற அப்பர் பிரானின் வாய்மொழியும் இங்கே குறிப்பிடத் தக்கது; ஆலவாய் தலத்தின் மீது அருளிய ஒரு பாடலில் (4.62.3) பாடலின் நான்கு அடிகளிலும் மருந்தாக பெருமான் செயல்படும் தன்மையை அப்பர் பிரான் விளக்குகின்றார். ஒரு மருந்து=ஒப்பற்ற தனி மருந்து; மருந்தாக செயல்படுவதில் ஒப்பற்றவன் பெருமான் என்று பாடலை அப்பர் பிரான் துவக்குகின்றார். பெருமருந்து=ஏனைய மருந்துகளுக்கு தலையான மருந்து; கருமருந்து=பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்து; அருமருந்து=கிடைத்தற்கு அரிய மருந்து;
ஒரு மருந்தாகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்
பெரு மருந்தாகி நின்றாய் பேரமுதின் சுவையாய்
கரு மருந்தாகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அருமருந்து ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
வானவர் என்ற சொல்லுக்கு உயர்ந்தவர்கள் என்று பொருள் கொண்டு சிவஞானம் பெற்று உயர்ந்த மனிதர்கள் அனைவரையும் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது சிறப்பு. சுந்தரம்=அழகு; தந்திரம்=ஆகமம்; சிவாகமங்களில் திருநீறு மிகவும் சிறப்பித்து சொல்லப் படுகின்றது. துவர்= பவளம்;
பொழிப்புரை:
அடியார்கள் நினைக்கும் பலனை அளிக்க வல்ல மந்திரமாக செயல்படுவது திருநீறு; சிவஞானம் பெற்று சிறந்தவர்களாக கருதப்படும் மனிதர்கள் தங்களது மேனியில் அணிவது திருநீறு; அணிவோருக்கு அழகினைச் சேர்ப்பது திருநீறு; பல நூல்களாலும் புகழப்படுவது திருநீறு; தந்திரம் என்று சொல்லப்படும் சிவாகமங்களில் குறிப்பிடப்படுவது. சைவ சமயத்தில் புகழ்ந்து பேசப்படுவது திருநீறு; இத்தகைய பெருமை வாய்ந்த திருநீற்றை, சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவனும் திருவாலவாய் தலத்தில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய பெருமான் விரும்பி அணிகின்றார்.
பாடல் 2;
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே
விளக்கம்:
வேதத்தில் உள்ளது=சிவபெருமானைப் போலவே திருநீறும் வேதங்களில் சிறப்பித்து பேசப் படுகின்றது. பச்மஜாபாலம் காலக்னிருத்ரம் முதலிய உபநிடதங்கள் திருநீற்றின் சிறப்பை பேசுகின்றன. வெந்துயர்=கொடிய துயரம்; உயிர் படும் துயரங்கள் அனைத்தினும் மிகவும் கொடியதாக அருளாளர்களால் கருதப்படுவது பிறவித்துயர் என்பதே. போதம்=சிவஞானம்; புன்மை=கீழான தன்மை; அறியாமை மனதினில் இருள் போன்று படர்ந்திருப்பதால் தான், பல உயிர்கள் இறைவன் பற்றிய சிந்தனையில் ஆழாமல். உலக சிற்றின்பங்களே பேரின்பம் என நினைத்து, மயங்கிக் கிடக்கின்றன. இந்த அறியாமை நீக்கப்பட்டு இறை சிந்தனையில் மனம் செல்வதற்கு அவன் அருள் கைகூடவேண்டும்; அத்தகைய அருள் நமக்கு கிடைப்பதற்கு வழிவகுப்பது திருநீறு என்பதால் புன்மை தவிர்ப்பது நீறு என்று கூறுகின்றார். புன்மை என்பதற்கு உடற்புன்மை மற்றும் உயிர்ப்புன்மை என்று விளக்கம் அளித்து, இந்த இரண்டையும் தவிர்ப்பது திருநீறு என்று சிவக்கவிமணியார் கூறுகின்றார். பூசப்படாது இருப்பதால் உடல் பொலிவிழ்ந்து கீழ்மைத் தன்மையுடன் காணப்படுகின்றது. உயிருக்கு புன்மை தருவது ஆணவம் என்ற அறியாமை; ஓதுதல்=புகழ்ந்து பேசுதல்; உண்மை=மெய்ஞ்ஞானம்,மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் நூல்கள்; சீதம்=குளிர்ச்சி;
பொழிப்புரை:
வேதங்களால் சிறப்பித்து சொல்லப்படுவது திருநீறு; உயிர்களின் கொடிய பிணியான பிறவிப் பிணியை போக்கும் வல்லமை கொண்டது திருநீறு;உண்மையான சிவஞானத்தைத் தருவது திருநீறு; உடற்புன்மை மற்றும் உயிர்ப்புன்மை ஆகிய இரண்டையும் தவிர்ப்பது திருநீறு; நாம் அனைவரும் சிறப்பித்து புகழ்ந்து பேசும் தகுதி படைத்தது திருநீறு; உண்மையான மெய்ஞானத்தை உணர்த்தும் நூல்களால் எடுத்துரைக்கப் படுவது திருநீறு; இத்தகைய பெருமைகள் வாய்ந்த திருநீற்றினை, குளிர்ந்த நீர் பாயும் வய்ல்கள் உடைய ஆல்வாய் தலத்தினில் வீற்றிருந்து அருள் புரிகின்ற பெருமான் மிகவும் விரும்புகின்றான்.
பாடல் 3;
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே
விளக்கம்:
முனிவர்=உயிரின் ஆறு உட்பகைகளையும் முனிந்து விலக்கி எப்போதும் இறைவன் பால் சிந்தையை செலுத்துவோர்; சத்தியம்=என்றும் அழிவில்லாத உண்மைப்பொருள்; தக்கோர்=தகுதி படைத்த சிவனடியார்கள்; பரவ=வாழ்த்த; சித்தி=அணிமா முதலான எண்வகை சித்திகள்
பொழிப்புரை:
அணிவோர்க்கு வீடுபேற்றினை கொடுப்பது திருநீறு; உயிரின் ஆறு உட்பகைகளையும் முனிந்து விலக்கி எப்போதும் இறைவன் பால் சிந்தையை செலுத்தும் முனிவர்கள் அணிவது திருநீறு; என்றும் அழிவில்லாத உண்மைப் பொருளாகத் திகழ்வது திருநீறு; சான்றோர் என்று அழைக்கப் படுவதற்கு தகுதி வாய்ந்த சிவனடியார்கள் புகழ்ந்து பேசுவது திருநீறு; அணிவோர்கள் அதன் முன்னம் இறைவன் பால் அன்பு கொள்ளாதவர்களாக இருப்பினும், அவர்களையும் இறைவனை பக்தியுடன் துதிக்க வழிவகுப்பது திருநீறு; திருநீற்றினைப் புகழ்ந்து பேசினால் நமது சிந்தனை இனியதாக மாறும்; அணிமா முதலான எண்வகை சித்திகளையும் தரும் வல்லமை வாய்ந்தது திருநீறு; இத்தகைய பெருமைகள் உடைய திருநீற்றை ஆலவாய் அரன் மிகவும் விரும்பி அணிகின்றான்.
பாடல் 4;
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே
விளக்கம்:
கவின்=அழகு; பேணி=புகழ்ந்து விருப்பத்துடன்; மாணம்=மாண்பு, சிறப்பான புகழ்; தகைவது= தடுப்பது; மாணம் என்பதற்கு மரணம் என்று பொருள் கொண்டு இறப்பினைத் தவிர்ப்பது என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். இறப்பது என்ற சொல் இங்கே இயமனின் தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் இடப்பட்டு துன்பம் அடைவது என்று பொருள்; சேணம்=உயர்வு; சேண் என்ற சொல்லுக்கு மேல் என்று பொருள் கொண்டு, சேணம் என்ற சொல்லுக்கு அழகிய மேலுலகம் என்று பொருள் கொள்வது சிறப்பே.
பொழிப்புரை:
திருநீறு, தன்னை அணிந்தோர்க்கு அழகைத் தருவதால், அவர்கள் மற்றவர்களின் கண்களுக்கு அழகராகத் தெரிகின்றனர். தன்னைப்புகழ்ந்து விருப்பத்துடன் அணிவோர் அனைவருக்கும் பெருமையை அளிப்பது திருநீறு; இவ்வாறு அணிவோர் அடைகின்ற பெருமை என்றும் அவர்களை விட்டு நீங்காத வண்ணம் காப்பது திருநீறு; உண்மையான அறிவை, பதியறிவைத் தருவது திருநீறு; அழகிய மேலுலகமாகிய முக்தி உலகினைப் பெற்றுத் தருவது திருநீறு; இத்தகைய பெருமைகள் உடைய திருநீற்றை ஆலவாய் அரன் மிகவும் விரும்பி அணிகின்றான்.
பாடல் 5;
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே
விளக்கம்:
பெருந்தவத்தோர்=முக்தி உலகம் தவிர்த்து வேறு எதனையும் விரும்பாக உண்மையான துறவிகள்; தமக்கு பலவகையான் ஆற்றல்கள் வாய்க்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரக்கர்களும் பகீரதன் போன்ற வேறு பலரும் தவமிருந்ததை நாம் புராணத்திலிருந்து அறிகின்றோம். அத்தகைய பலன்களை வேண்டி தவம் செய்யாமல், பேரின்பம் தரும் முக்தி நிலை வேண்டி தவம் செய்வோரை பெருந்தவத்தோர் என்று குறிப்பிடுகின்றார்.ஆசை=அகப்பற்று மற்றும் புறப்பற்று; அந்தம்=இறுதி;
பொழிப்புரை:
தங்களது உடலில் பூசிக் கொள்வோர்க்கு இனிய உணர்வினைத் தருவது திருநீறு; அவ்வாறு பூசிக் கொள்வோர் மேன்மேலும் சிவபுண்ணியங்களை சேர்த்துக் கொள்வதற்கு வழிவகுப்பது திருநீறு; திருநீற்றின் பெருமையை பேசப்பேச இனிய சிந்தனைகளை ஏற்படுத்துவது திருநீறு; நிலையான என்றும் அழியாத பேரின்பத்தை நாடி தவமிருக்கும் அடியார்களுக்கு, அவர்கள் உலகப் பொருட்கள் மீது கொண்டிருந்த பற்றுகளை அறுத்து உதவி செய்வது திருநீறு;அனைத்து பொருட்களும் பிரளயத் தீயினில் எரிந்து அழிந்து சாம்பலாக மாறுவதால், அனைத்துப் பொருட்களுக்கு முடிவாகத் திகழ்வது திருநீறு;உலகத்தவர் அனைவரும் புகழ்ந்து பேசும் பெருமை உடையது திருநீறு; இத்தகைய பெருமைகள் உடைய திருநீற்றை ஆலவாய் அரன் மிகவும் விரும்பி அணிகின்றான்.
பாடல் 6;
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே
விளக்கம்:
அருத்தம்=செல்வம்; அனைத்துச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாக திருநீறு கருதப்படுவதால் தான், திருக்கோயிலில் நாம் பெறுகின்ற திருநீற்றினை அங்கேயே ஓரிடத்தில் கொட்டிவிட்டு வருவதை தவறு என்று பெரியோர்கள் கருதுகின்றனர். வானம்=உயர்ந்த சிவலோகம்; பொருத்தம்= நன்மைகள் எல்லாம் பொருந்தும் புண்ணியங்கள்; புண்ணியர்=சிவனடியார்கள்; புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் என்று அப்பர் பிரான் வேண்டுவது நமது நினைவுக்கு வருகின்றது. புண்ணியமே வடிவமாக உள்ள பெருமானை புண்ணியர் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன (1.08.01, 1.04.09, 1.130.6, 1.116.4, 3.03.07, 3.04.02, 3.15.5, 3.55.4, 4.20.4, 4.80.2, 4.94.8, 1.109.2, 5.90.9, 6.99.01, 7.52.3, 7.70.1, 7.77.8, 8.36.1) திருத்தகு=திருத்தம் தேவைப்படாத அழகு
பொழிப்புரை:
அனைத்துச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாக கருதப் படுவது திருநீறு; அணிவோரின் துன்பங்களை வேரோடு அறுத்து, அவர்களின் மன வருத்தத்தை முற்றிலும் நீக்குவது திருநீறு; உயர்ந்த பதவியாகிய முக்திநிலையைப் பெற்றுத் தருவது திருநீறு; அணிவோர்க்கு நன்மைகள் அனைத்தும் பொருத்தும் வல்லமை உடையது திருநீறு; புண்ணியர் என்று அழைக்கப்படும் சிவபெருமானும் அவனது அடியார்களும் தங்களது உடலில் பூசிக் கொள்வது திருநீறு;இத்தகைய பெருமைகள் உடைய திருநீற்றை, திருத்தங்கள் ஏதும் தேவைப்படாத வண்ணம் அழகிய மாளிகைகளால் சூழப்பட்ட ஆலவாய் நகரத்து அரன் மிகவும் விரும்பி அணிகின்றான்.
பாடல் 7;
எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.
விளக்கம்:
எயில்=கோட்டை; திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள்; அடுதல்=சுட்டெரித்து அழித்தல்; இருமை=இம்மை மற்றும் மறுமை; துயில்=தூக்கம்;துயில் என்ற சொல்லுக்கு மறத்தல் என்று பொருள் கொண்டு, சிவபெருமானை மறக்கும் நிலை என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம்;அயில்=கூர்மை; பயிலப்படுதல்=பழகுதல்; பாக்கியம்=செல்வம் மற்றும் சிறந்த இன்பங்களை பெறுகின்ற பேறு; பக்குவம் அடைந்த அடியார்களும், பழைய வாசனா மலத்தின் செய்கையால் நிலை தடுமாறுவதை நாம் புராணங்களில் காண்கின்றோம். அத்தகைய தடுமாற்றத்தைத் தவிர்த்து, தொடர்ந்து தூய்மையுடன் இருக்க, திருநீற்றினை அணிந்து கொண்டு பெருமானின் திருநாமத்தை ஓத வேண்டும் என்று அருளாளர்கள் உண்ர்த்துகின்றனர்.
பொழிப்புரை:
திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்தது திருநீறே; இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் பல நன்மைகளை அடியார்களுக்கு பெற்றுத் தருவது திருநீறு; திருநீறு அளிக்கின்ற பலவிதமான பலன்கள் கருதி சிவனடியார்கள் திருநீற்றினை தொடர்ந்து அணிவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர்; அவ்வாறு அணிவதை பழக்கமாகக் கொண்டுள்ள அடியார்கள், சிறந்த இன்பங்களை பெறுகின்ற பேற்றினை அளிப்பது திருநீறே; வினை வயத்தால் சிவபெருமானை மறக்கும் நிலை ஏற்படின் அந்த நிலையைத் தடுத்து, உயிர்களை நல்வழிப் படுத்துவது திருநீறு; வாசனா மலத்தால் தடுமாற்றம் அடையும் தருணங்களில் மிகவும் தூய்மையான தன்மையை அளிப்பது திருநீறு; இத்தகைய பெருமைகள் உடைய திருநீற்றை,கூர்மையான தனமைக்கு விளக்கம் அளிக்கும் மூவிலைச் சூலத்தை அஎந்தியவனும், ஆலவாய் நகரத்தில் உறைபவனுமாகிய அரன் மிகவும் விரும்பி அணிகின்றான்.
பாடல் 8;
இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே
விளக்கம்:
சிறந்த சிவனடியார்களில் ஒருவனாக அரக்கன் இராவணன் திகழ்ந்தமையால், அவன் திருநீற்றினை அணிந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. பரை என்பது சக்தியின் வடிவம்; திருநீறே சக்தியின் வடிவம் என்று பல நூல்கள் எடுத்துரைக்கின்றன. தராவணம்=மெய்ப்பொருள்; தத்துவம்=மேலான பொருள்;அரா=பாம்பு; வணங்கும்=வளையும், தாழும்; அணங்கும் என்று கொண்டால், அழகு செய்யும் என்று பொருள் படுகின்றது. இந்த விளக்கம், வணங்கும் என்பதை விடவும் மிகவும் பொருத்தமாக இருப்பதாக தோன்றுகின்றது.
பொழிப்புரை:
சிறந்த சிவனடியானாக மூன்று உலகங்களினும் சஞ்சரித்த அரக்கன் இராவணன் தனது உடலின் மீது மகிழ்வுடன் அணிந்து கொண்டது திருநீறே;சான்றோர்கள் எண்ணும் தகுதி படைத்தது திருநீறு; சக்தியின் வடிவமாக விளங்குவது திருநீறு; பூசிக் கொள்வோரின் சிந்தனைகளை செம்மைப் படுத்தி,பாவச் செயல்கள் செய்யவொட்டாது தடுப்பது திருநீறு; உண்மையான மெய்ப் பொருளாகவும் அனைத்தினும் உயர்ந்த மேன்மையான பொருளாகவும் திகழ்வது திருநீறு; இத்தகைய பெருமைகள் உடைய திருநீற்றை, தனது திருமேனியில் பல இடங்களிலும் படர்ந்து அழகு செய்யும் வண்ணம் பாம்புகளை அணிந்தவனும், ஆலவாய் தலத்தினில் உறைபவனும் ஆகிய அரன் மிகவும் விரும்பி அணிகின்றான்.
பாடல் 9;
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே
விளக்கம்:
திருநீறு இறைவனின் வடிவம் என்பதால், திருமால் மற்றும் பிரமனால் அறியப்படாதது என்று கூறுகின்றார். முதலில் தீப்பிழம்பாக நின்றது பெருமான் என்பதை, தங்களுக்கு இருந்த மயக்கத்தின் காரணமாக அறியாமல் இருந்த திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும், பின்னர் உணமையை உணர்ந்து சிவபெருமானை போற்றி வழிபட்ட நிலை, தங்கள் மெய்யது வெண்பொடி என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. தேவர்கள் என்ற சொல்லுக்கு பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்; திருமால் ஒரு சிறந்த சிவனடியார் என்பதை நாம் கருத்தினில் கொள்ளவேண்டும்; ஏலும்=பொருந்தும்; ஏல உடம்பிடர்= இந்த பிறவியில் அனுபவித்துக் கழிப்பதற்காக பொருத்தப்பட்ட வினைகளால் ஏற்படும் துன்பங்கள்; இந்த பிறவிக்கு என வகுக்கப்ப்ட்ட வினைகளை உயிர்கள் கழித்தே தீரவேண்டும்;எனினும் அவ்வாறு அந்த வினைகளின் பயனால் விளையும் இன்ப துன்பங்களால் மனம் வாடாத வண்ணம் நமக்கு பக்குவத்தை அளிப்பது திருநீறு;
பொழிப்புரை;
திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் அறியமுடியாத தன்மை உடையது திருநீறு; மேல் உலகத்தில் வாழ்கின்ற, பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் தங்களது உடலில் அணிந்து கொள்வது வெண்பொடியாகிய திருநீறு; இந்த பிறவிக்கு என வகுக்கப்பட்ட வினைகளை உயிர்கள் கழித்தே தீரவேண்டும் என்பதால் அவ்வாறு அந்த வினைகளின் பயனால் விளையும் இன்ப துன்பங்களால் மனம் வாடாத வண்ணம் நமக்கு பக்குவத்தை அளிப்பது திருநீறு; இத்தகைய பக்குவம் தற்போத நிலையைத் தவிர்த்து உயிர்கள் ம்லபரிபாகம் பெற்று அதன் விளைவாக பிறவியாகிய இடரைக் களைய உதவி புரிவது என்பதால் திருநீறு பிறவிப்பிணியை தவிர்ப்பதாக கருதப்படுகின்றது; பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விடத்தை உண்டவனும், பிரளய காலத்தில் தன்னிடம் ஒடுங்கவிருக்கும் உயிர்களின் நன்மை கருதி அந்த விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியவனும் ஆலவாய் நகரத்தில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய பெருமான் விரும்பி அணிவது திருநீறு.
பாடல் 10;
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே
விளக்கம்:
குண்டிகை=மந்திர நீர் சிறிய நீர்க்குடுவை; சமணர்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம், குண்டிகை நீர், பாய், மயிற்பீலி முதலியன எடுத்துச் செல்லும் வழக்கம் உடையவர்களாக அந்நாளில் திகழ்ந்தமை பெரிய புராணத்திலிருந்து அறியப்படுகின்ற்து. இதனை உணர்த்தும் வண்ணம் குண்டிகைக் கையர் என்று சமணர்களை குறிப்பிடுகின்றார். சாக்கியர்=புத்தர்; கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு மேற்கு வடமேற்கு வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகிய எட்டு திசைகளுக்கும் முறையே இந்திரன், அக்னி தேவன், இயமன், நிருதி, வருணன், வாயுதேவன், குபேரன், ஈசானன் ஆகியோர் காவலர்களாக விளங்குகின்றனர். திருவாசகம் திருப்பள்ளி எழுச்சி பதிகத்தின் இரண்டாவது பாடலில் மணிவாசகர் கிழக்கு திசையை இந்திரன் திசை என்று குறிப்பிடுகின்றார் (அருணன் இந்திரன் திசை வந்துதித்தான்; அருணன்=சூரியனின் தேர்ப்பாகன்). திருநீற்றின் வலிமையால் பாண்டிய மன்னனின் வலது பாகத்து வெப்பு நோய் தீர்ந்ததையும், தங்களல் தீர்க்கமுடியாமல் கைவிடப்பட்ட இடது பாகத்து வெப்பு நோய் சிறிது சிறிதாக குறைந்து வருவதையும் கண்ட சமணர்கள் நடுங்கி கண் திகைத்தனர் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றாது.
பொழிப்புரை:
குண்டிகை எனப்படும் நீர்ப்பாத்திரத்தைத் தங்களது கையில் எப்போதும் ஏந்திக் கொண்டு திரியும் சமணர்களும் புத்தர்களும் காணமுடியாத வண்ணம் அவர்களது கண்கள் திகைக்கும்படி செய்வது திருநீறு; அதன் பெருமையை உணர்ந்து கருதுவோர்களுக்கு இன்பம் பயப்பது திருநீறு; இந்திரன் முதலாய எட்டு திசைக் காவலாளர்களும் புகழ்ந்து தொழும் பெருமை உடையது திருநீறு; அனைத்து அண்டங்களில் உள்ளவர்களும் பணிந்து புகழ்வது திருநீற்றையே;இத்தகைய பெருமைகள் உடைய திருநீற்றை ஆலவாய் அரன் மிகவும் விரும்பி அணிகின்றான்.
பாடல் 11;
ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
விளக்கம்:
ஆற்றல்=வலிமை; அடல்=வெற்றி; தேற்றி=உலகறியச் செய்த; தென்னன்=பாண்டிய மன்னன்; தீப்பிணி என்ற தொடருக்கு வெப்பு நோய் என்பது ஒரு பொருள்; தீயும் பிணியும் என்று பொருள் கொண்டு, வெப்பு நோய் மற்றும் அந்நாள் வரை மன்னனை பீடித்திருந்த சமண் நோய் என்று பொருள் கொள்வது சிறப்பே. சுரன்=தேவர், மேலோர்; பூ=நிலவுலகம்; பூசுரன்=நிலவுலகினில் வாழும் தேவர்களாகிய அந்தணர் குலம்;
பொழிப்புரை:
ஆற்றலும் பிறரைக் கொன்று வெற்றி பெரும் தன்மையும் உடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமானின் திருநீற்றின் குணங்களைப் போற்றி, புகலி எனப்படும் சீர்காழி நகரினில் வாழ்பவனும், தேவர்களுக்கு இணையாக உயர்ந்தவனாக கருதப்படும் அந்தணனும் ஆகிய ஞானசம்பந்தன்,உலகறியும் வண்ணம் பாண்டிய மன்னனின் உடலைப் பற்றிய வெப்பு நோயினைத் தீர்ப்பதற்காக, பெருமானின் அருளை வேண்டி பாடிய இந்த பத்து பாடல்களையும், முறையாக கற்று ஒதும் வல்லமை பெற்ற அடியார்கள் வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் விளங்குவார்கள்.
முடிவுரை:
பாடல் தோறும் ஆலவாயான் திருநீறு என்று துதிக்கின்றார். இவ்வாறு துதிக்கப்பட்டது திருநீறே ஆயினும், ஆலவாயான் என்ற சொல்லுடன் சேர்த்து குறிப்பிடப்படுவதால், பெருமானையும் போற்றுவதாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம்; மன்னனின் உடலெங்கும் திருநீற்றினை பூசிய வண்ணம்,பெருமானின் திருவருளை வேண்டி, திருநீற்றின் சிறப்பினை உணர்த்தும் இந்த பதிகம் பாடி முடித்த பின்னர், பாண்டிய மன்னன் வெப்பு நோயின் தாக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டான். வெப்பு நோயினைத் தீர்க்கமுடியாமல் தோற்ற சமணர்களே என்னை விட்டு விலகுவீராக என்று சமணர்களை விரட்டிய பாண்டிய மன்னன், தனது உச்சி மேல் கைகளை கூப்பி, வலிமை வாய்ந்த வெப்பு நோயினைத் தீர்த்த திருஞானசம்பந்தரின் திருப்பாதங்களை நெருங்கியதால் தான் உய்வடைந்ததாக கூறினான். இந்த அதிசய நிகழ்ச்சி நடந்தேறிய பின்னரும் சமணர்கள் தங்களது தோல்வியை ஒப்புக் கொள்ளாததால், அனல் வாதம் மற்றும் புனல் வாதம் ஏற்பாடு செய்யப் பட்டதும், அந்த இரண்டிலும் சமணர்களும் தோற்றதும் வரலாறு. சைவ மதத்தின் அடையாளமாக விளங்கும் திருநீற்றின் பெருமையை உணர்த்தும் வண்ணம் ஒரு தனிப் பதிகமே அமைந்துள்ளது சைவ மதத்தின் சிறப்பு; இந்த சிறப்பு வேறெந்த மதத்திற்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடந்த அதிசயத்தின் காரணமாக இந்த பதிகத்தை பக்தியுடன் ஓதும் அடியார்கள் தங்களது வெப்பு நோய் தீர்க்கப்படுவார்கள் என்று இன்றும் நம்பப்படுகின்றது.