இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மன்னியூர் இறை

மன்னியூர் இறை

பதிக எண்: 1.96 - அன்னியூர் (பொன்னூர்) - குறிஞ்சி

முன்னுரை:


தனது ஐந்தாவது தலயாத்திரையில் கண்ணார்கோயில், புள்ளிருக்குவேளூர், திருநின்றியூர், திருநீடூர், திருப்புன்கூர் ஆகிய தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் அருகிலுள்ள பழமண்ணிபடிக்கரை, திருக்குறுக்கை முதலான தலங்கள் சென்று பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். இந்த இரண்டு தலங்களின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. அங்கு=திருப்புங்கூர் தலம்;குரக்குக்கா தலமும் அருகில் உள்ளது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஏதும் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பதால், இந்த தலத்தினை, அரனார் மகிழ் கோயிலான எங்கணும் என்ற தொடர் மூலம் சேக்கிழார் குறிப்பிடுகின்றாரா என்பது பற்றி ஏதும் சொல்ல முடியவில்லை. குரக்குக்கா தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகம் நமக்கு கிடைத்துள்ளது. குறுக்கை மற்றும் பழமண்ணிப்படிக்கரை தலங்கள் மீது, முறையே, அப்பர் பிரான் மற்றும் சுந்தரர் அருளிய பதிகங்கள் ஒவ்வொன்று நமக்கு கிடைத்துள்ளன. தொடர்புடைய பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

அங்கு நின்றேகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயிலான

எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான் மடந்தை

பங்கர் உறை பழமண்ணிப் படிக்கரை கோயில் வணங்கித்

தங்கு தமிழ்மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்

குறுக்கைத் தலத்திலிருந்து புறப்பட்ட காழிப் பிள்ளையார் அன்னியூர் மற்றும் பந்தணைநல்லூர் சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. தனது நான்காவது தலயாத்திரையில் திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமமாம்புலியூர், கடம்பூர் வாழ்கொளிபுத்தூர், ஆகிய தலங்கள் சென்றார் என்பதையும், இடறினார் கூற்றை என்று தொடங்கும் பந்தணைநல்லூர் தலத்து பதிகத்தின் (3.121) விளக்கத்தையும் முன்னமே கண்டோம். ஐந்தாவது தலயாத்திரையில் பந்தணைநல்லூர் சென்றபோது திருஞானசம்பந்தர் அருளிய பதிகமும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. திருஞான சம்பந்தர், அன்னியூர் தலம் சென்றதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம். பொருப்பு=மலை, இங்கே மேரு மலை; வில்லாளர்=வில்லினை தனது கையில் ஏந்திய பெருமான். போந்து=புறப்பட்டுச் சென்று; பருக்கை வரை=மலை போன்று பருத்த கையினை உடைய யானை; இந்த பாடலில் சேக்கிழார் திருஞான சம்பந்தரை வேதம் தமிழால் விரித்தார் என்று சொல்வது சிந்திக்கத் தக்கது. வேதங்களில் சொல்லப் பட்டுள்ள கருத்துகளே, தேவார, திருவாசக மற்ற திருமுறைப் பாடல்களாக மிளிரும் வண்ணம் பெருமான் அருள் புரிந்த செய்கை, இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.

திருக்குறுக்கைப் பதி மன்னி திருவீரட்டானத்து அமர்ந்த

பொருப்பு வில்லாளரை ஏத்திப் போந்து அன்னியூர் சென்று போற்றிப்

பருக்கை வரை உரித்தார் தம் பந்தணைநல்லூர் பணிந்து

விருப்புடன் பாடல் இசைத்தார் வேதம் தமிழால் விரித்தார்

இந்த பதிகம் இருக்குக்குறள் என்ற வகையைச் சார்ந்தது. குறள் என்றால் சிறியது என்று பொருள். சிறிய அடிகளைக் கொண்ட பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம் குறள் என்று அழைக்கப் படுகின்றது. ஒவ்வொரு அடியிலும் இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். மந்திரம் என்ற சொல், சொல் சுருக்கம் உள்ளது என்ற பொருளினைத் தரும். இருக்கு வேதத்தில் உள்ள மந்திரங்கள் அளவில் சிறியதாக இருக்கும் நிலை பற்றி இந்த பாடலையும் இருக்குக்குறள் என்று பெயரிட்டு சேக்கிழார் அழைத்தார் போலும். மந்திரங்கள் எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை கொண்டது போன்று இந்த பதிகமும் அமைந்துள்ளது என்று தண்டபாணி தேசிகர் அவர்கள் கூறுவார்கள். இந்த பதிகம் உட்பட மொத்தம் ஒன்பது பதிகங்கள் திருவிருக்குக்குறள் பதிகங்களாக கருதப் படுகின்றன. அரனை உள்குவீர் என்று தொடங்கும் பிரமபுரம் பதிகமும் (1.90), சித்தம் தெளிவீர்காள் என்ற திருவாரூர்ப் பதிகமும்(1.91), வாசி தீரவே என்று தொடங்கும் வீழிமிழலைப் பதிகமும் (1.92) நின்று மலர் தூவி என்று தொடங்கும் திருமுதுகுன்றம் பதிகமும் (1.93), நீலமா மிடற்று என்று தொடங்கும் திருவாலவாய்ப் பதிகமும் (1.94} தோடொர் காதினன் என்று தொடங்கும் இடைமருதுப் பதிகமும் (1.95), மன்னியூர் இறை என்று தொடங்கும் இந்த பதிகமும் (1.96) அத்தகைய பதிகங்கள் ஆகும். திருஞானசம்பந்தரின் பதிகங்கள் அனைத்துமே இருக்கு வேதத்தின் சாரமாக கருதப் படுவதாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் கூறுகின்றார். திருமுதுகுன்றம் திருவிருக்குக்குறள் பதிகத்தினை குறிப்பிடும் பெரியபுராணப் பாடலில் சேக்கிழார் இருக்குக் குறள் துணை மலர் என்று குறிப்பிடுகின்றார். ஒன்றுக்கொன்று துணையாக உள்ள இரண்டு சீர்கள் கொண்ட அடிகள் என்பதை உணர்த்தும் வண்ணம் சேக்கிழார் இவ்வாறு கூறுகின்றார். எனவே இந்த பதிகங்கள் நான்கு அடிகள் கொண்ட பாடல்களே. முதல் திருமுறையில் வைக்கப் பட்டுள்ள இந்த ஏழு பதிகங்களும் குறிஞ்சி பண்ணில் இசைத்துப் பாடும் வண்ணம் இயற்றப் பட்டுள்ளன. மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள கொல்லி பண்ணுக்குரிய இரண்டு பதிகங்கள் (3.40 & 3.41) திருவிருக்குக்குறள் வகையைச் சார்ந்தவையாக கருதப் படுகின்றன.

திரு கி.வா.ஜா அவர்களும் தனது திருமுறை மலர்கள் என்ற நூலில் இரண்டு சீர்கள் கொண்டுள்ள அடிக்கு குறளடி என்ற பெயர் உள்ளது என்றும், மந்திரத்தைப் போன்று சுருங்கிய உருவத்தில் அமைந்திருப்பதால் இந்த பதிகத்து பாடல்களை மந்திரம் என்று கூறுவார்கள் என்றும் கூறுகின்றார். மேலும் மந்திரத்தை இருக்கு என்றும் அழைப்பார்கள் என்றும் மந்திரமாக அமைந்துள்ள குறுகிய அடிகளைக் கொண்ட இப்பாடல்கள் திருவிருக்குக்குறள் என்று அழைக்கப் படுவதாக அவர் கூறுகின்றார். அடிகள் தோறும் நான்கு சீர்கள் கொண்டுள்ள திருமந்திரப் பாடல்கள், மந்திரமாகக் கருதப் படுவதை நாம் அறிவோம்.

தற்போது பொன்னூர் என்று அழைக்கப்படும் இந்த தலம் திருநீடூர் தலத்திற்கு மேற்கே உள்ள சாலையில் மூன்று கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் நகரப் பேருந்து இந்த தலம் வழியாக செல்கின்றது. சிதம்பரம் மயிலாடுதுறை இரயில் பாதையில் நீடூர் நிலையத்தில் இறங்கியும் செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். இறைவனின் திருநாமம்=ஆபத்சகாயர்; இறைவியின் திருநாமம்; பெரியநாயகி. இந்த தலத்தில் அக்னிதேவன், பாண்டவர்கள், அரிச்சந்திரன், இரதிதேவி, வருணன் ஆகியோர் வழிபட்டு பயன் அடைந்ததாக தலபுராணம் கூறுகின்றது. ஈசனை மதிக்காமல் நடத்தப்பட்ட தக்க யாகத்தில் தான் பங்கேற்றதற்கு வருந்திய அக்னிதேவன், பெருமானை வழிபட்டு தனது தவற்றினை மன்னிக்குமாறு வேண்டிய தலம். தலமரத்தின் கீழே அக்னி வழிபட்ட ஆதிதேவர் (சரண்யேசுவரர் என்றும் அழைக்கப் படுகின்றார்). சன்னதி உள்ளது. பங்குனி மாதத்தின் இறுதி ஐந்து நாட்களில் தினமும் காலையில் சூரியன் தனது கதிர்களால் இறைவனை வணங்குவதை இன்றும் காணலாம். அந்நாட்களில், காலை 4.30 மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு, சுவாமிக்கும் பிராட்டிக்கும் காலை நேரம் ஆராதனைகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகின்றன. மூலவர் சுயம்பு மூர்த்தம். சுவாமி சன்னதியின் கருவறை நுழைவாயிலில் விநாயகரை காணலாம். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரான் பாடிய இரண்டு பதிகங்கள் இதுவரை கிடைத்துள்ளன. நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரை கோஷ்ட மூர்த்தங்களாக காணலாம். பிராகாரத்தில் சித்தி விநாயகர், முருகன், சந்திரசேகரர், நடராஜர் அச்திரதேவர், மகாலட்சுமி, ஆதிசங்கரர், நால்வர், நவகிரக சன்னதிகளையும், அம்மன் சன்னதி இருக்கும் மகாமண்டபத்தில் சூரியன் மற்றும் பைரவர் சன்னதிகளையும் காணலாம். பிராகாரத்தில் சனிபகவானுக்கு தனியாக சன்னதி உள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. புன்னகை தவழும் அழகிய உருவம். கருவறை நுழை வாயிலில் வலது பக்கத்தில் காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது. பெருமானை திருமணம் புரிந்து கொள்ளும் பொருட்டு அம்பிகை தவம் புரிந்த தலமாக கருதப்படுகின்றது. எனவே திருமணத் தடைகள் நீங்கவும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், இந்த தலத்தில் செய்யப்படும் வழிபாடு பலனளிக்கும் என்று கருதப்படுகின்றது. இராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய தோரண வாயில் உள்ளது. சுப்பிரமணியர், தனது காதினில் வட்ட வடிவான நகையை அணிந்திருப்பதை காணலாம். இரண்டு தக்ஷிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. மேதா தட்சணாமூர்த்தி சன்னதியில் நாம் நந்திதேவரையும் காணலாம். தென்முகக் கடவுளை நோக்கி செய்யும் வழிபாடுகள் சிறந்த கல்வியை அளிக்கும் என்று நம்பப்படுகின்றது. மீண்டும் உயிர் பெற்ற மன்மதன் தனது மனைவியுடன் சிவபெருமானை வழிபட, அவர் தம்பதியருக்கு காட்சி தந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார் என்று கூறுவார்கள். தலமரம் எலுமிச்சை; அக்னி தீர்த்தம் மற்றும் வருண தீர்த்தம்.

கணவனை இழந்த இரதிதேவியின் மீது சூரியன் விருப்பம் கொண்டு, அவளை அடைய முயற்சி செய்தான். அதனை விரும்பாத, இரதி தேவி சூரியன் தனது வலது கரம் இழக்குமாறு சாபம் இடவே, சூரியன் தனது வலது கரத்தை இழந்தான். சூரியன் இந்த தலத்து இறைவனை வழிபட்டு, தனது வலது கரத்தை திரும்பப் பெற்றான் என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது. வெண் குஷ்டத்தால் வருந்திய அரிச்சந்திரன், இந்த தலத்து இறைவனை வணங்கித் தனது நோய் தீரப் பெற்றான். பாண்டவர்களுக்கு காட்சி கொடுத்த பெருமான், பாண்டவேசுவரர் என்று அழைக்கப் படுகின்றார்.

பாடல் 1:

மன்னியூர் இறை

சென்னியார் பிறை

அன்னியூர் அமர்

மன்னு சோதியே

விளக்கம்:

மன்னி ஊர் இறை=என்றும் நிலையாக உயிருடன் ஒட்டி நின்று உயிர்களை இயக்கும் இறைவன்; இந்த விளக்கம் சிவக்கவிமணியாரால் அளிக்கப் பட்டுள்ளது. மன்னு=நிலையாக நிற்கும்; சோதி வடிவமாக உள்ள இறைவனைத் தவிர்த்து மற்ற அனைத்து சோதிகளுக்கும் அதனை இயக்கும் ஒருவன் தேவைப்படுகின்றது. சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சோதிகளும் இறைவன் அவைகளுடன் கலந்திருந்து இயக்குவதால் தான் ஒளி வீசுகின்றன. மற்ற விளக்குகள் எரிவதற்கு வேறு ஒருவரின் உதவியோ தூண்டுதலாவது தேவைப்படும். அத்தகைய உதவியோ தூண்டுதலோ தேவைப்படாமல் தானே சுயமாக ஒளி வீசும் தன்மை உடையவன் பெருமான். சோதி என்பதற்கு ஞானம் என்று பொருள் கொண்டு ஞான வடிவாக இருப்பவன் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மன்னி ஊர் இறை என்ற தொடரினை பாடலின் கடையில் வைத்து, சோதி வடிவினனாக இருக்கும் இறைவன், பல ஊர்களிலும் எழுந்தருளி ஆங்காங்கே உள்ள மக்களுக்கு தலைவனாக விளங்குகின்றான் என்றும் பொருள் கொள்கின்றனர். சுயஞ்சோதியாக, பரஞ்சோதியாக, தூண்டா விளக்காக பெருமான் இருக்கும் பல தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்களை நாம் இங்கே சிந்திப்போம்.

எண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்கு, அந்த எண்ணெய் அல்லது நெய் குறையக் குறைய ஒளி மங்குவதையும், அவை முழுதும் தீர்ந்த பின்னர் அணைந்து விடுவதையும் நாம் காண்கின்றோம். மின்சாரம் போன்ற சக்திகளால் ஒளிவிடும் விளக்குகளும், அந்த சக்தியின் தொடர்பு அறுந்த பின்னர் அணைந்து போவதையும் நாம் காண்கின்றோம். ஆனால் சோதி வடிவாக இருக்கும் இறைவன் எந்த விதமான சக்தியின் தொடர்புமின்றி ஒளிர்கின்றான்; மேலும் அந்த ஒளி என்றும் குறையாது வளர்கின்ற ஒளியாகவும், எந்த விதமான தூண்டுதலும் தேவைப்படாமல் மிளிர்கின்ற ஒளியாகவும், என்றும் அழியாத ஒளியாகவும் விளங்குகின்றது என்பதை குறிப்பிட ஒளிவளர் விளக்கு என்று குறிப்பிடுகின்றார். இரத்தினம், மாணிக்கம், வயிரம் போன்றவை, இயற்கையாகவே ஒளியுடன் திகழ்கின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒரு நாள் அழியக்கூடிய பொருட்களாக விளங்குகின்றன. உலப்பு என்றால் அழிவு என்று பொருள். என்றும் அழியாத இறைவன், இயற்கையாக ஒளிவீசும் இரத்தினம் மாணிக்கம் வயிரம் ஆகியவற்றினும் மிகவும் உயர்ந்தவனாக உள்ள நிலை,உலப்பிலா ஒன்றே என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. அறியாமையை நீக்கும் ஞானத்தையும் ஒளி என்று கூறுவார்கள். ஆனால் இறைவனோ ஞானம் எனப்படும் உணர்வினையும் கடந்தவன். எனவே தான் உணர்வு சூழ் கடந்த உணர்வு என்று குறிப்பிடுகின்றார். ஆச்சு இலாத பளிங்கு, ஆசு (குற்றம்) ஏதும் இல்லாத பளிங்கு போன்று திருமேனியை உடையவன் என்று ஞானசம்பந்தர் ஒரு பாடலில் கூறுவது போன்று, திருமாளிகைத் தேவரும் தெளிந்த பளிங்கு ஒன்று திரண்டது போன்று முழுமையான மணிக் குன்றாக இறைவன் இருப்பதையும் உணர்த்துகின்றார். இவ்வாறு உயர்ந்த தன்மைகள் உடையவனாக திகழும் இறைவனை, அன்பினால் தியானித்தால், அவன் தேன் போன்று நமது சித்தத்தில் இனிய உணர்வினைத் தருபவனாகவும், நமது உள்ளத்தில் இனிய சுவை தரும் கனியாகவும் திகழ்கின்றான். அவனை நாம் உணர்ந்து அனுபவிக்கவே முடியும், அவனை நேரில் காணுதல் அரிது என்றாலும், தில்லைச் சிற்றம்பலத்தில் தெய்வீகக் கூத்தினை பெருமான் மிகவும் விரும்பி ஆடுகின்றான். அவனது புகழினை அடியேன் எடுத்துரைக்கும் வண்ணம் அடியேனுக்கு உதவி புரிவதற்கு பெருமான் திருவுளம் கொள்ளவேண்டும் என்று இந்த பாடலில் தேவர், விண்ணப்பம் செய்கின்றார்.

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே

தெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே

அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக

வெளிவளர் தெய்வக் கூத்து உகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.50.2) திருஞானசம்பந்தர், பெருமானை, சோதீ என்று அழைக்கின்றார். தயங்கு=விளங்கு; அனைத்து விதமான ஒளிகளுக்கும் மேலான ஓளியாக, தனித்துவம் வாய்ந்த ஒளியாக இருக்கும் நிலையை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்ள வேண்டும். சித்தம் தெளியாதவர்களாக, தேவர்கள் இறைவனை வணங்காமல் இருக்கும் நிலையை குறிப்பிடும், திருஞானசம்பந்தர் அத்தகைய நிலை தனக்கு ஏற்படாமல் இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார். போக வாழ்க்கையில் வாழும் தேவர்கள், இன்பத்தை அனுபவிக்கின்ற போதையில் இறைவனை நினைப்பதில்லை; தங்களது போக வாழ்வினுக்கு இடையூறு ஏற்படும் நேரங்களில் மட்டும், அந்த இடையூற்றினை போக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் இறைவனை வேண்டுகின்றனர். இந்த தன்மையே, இந்த பாடலில், சொல்லப் படுகின்றது.

இயங்குகின்ற இரவி திங்கள் மற்று நல் தேவர் எல்லாம்

பயங்களாலே பற்றி நின் பால் சித்தம் தெளிகின்றலர்

தயங்கு சோதீ சாமவேதா காமனைக் காய்ந்தவனே

மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே

வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.14.6) திருஞானசம்பந்தர் பெருமானை, துளக்கமில்லாத விளக்கு என்று குறிப்பிடுகின்றார். காற்றில் அசையாத விளக்காக இருப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். தொத்து=குவியல்; துளக்கம்=அசைவு, காற்றினால் அசைக்கப்பட்டு விளக்குகள் அலை பாய்வதை நாம் காண்கின்றோம். அத்தன்=தலைவன்; பொதுவாக எந்த உயிரினமும் வளர்வதற்கு ஒரு வித்து தேவைப்படுகின்றது. ஆனால் பிரளயம் முடிந்த பின்னர், உலகினில் அனைத்து வகையான உயிரினங்களும் தோன்றுகின்றன. இவை எப்படி உண்டாகின்றன. வித்து ஏதும் இல்லாமல் பொருட்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இறைவனுக்கு இருப்பதன் காரணமே, இந்த வகையான தோற்றத்திற்கு காரணம். பெருமான் அனைத்து வகையான உயிர்களுக்கும் வித்தாக இருக்கும் நிலையே இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. முத்து முழுமையான வைரத்தூண் மாணிக்கத்தின் குவியல் போன்று மிகவும் அரிதாகவும் உயர்ந்தும் இருப்பவனும், காற்றினில் அசையாத அணையாத பெருஞ்சுடராக இருப்பவனும், அனைத்து பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆதாரமாக வித்தாக இருப்பவனும் ஆகிய பெருமானை, வெண்ணி தலத்தினில் உறையும் பெருமானை, தேவர்கள் தொழுகின்றனர். இவ்வாறு நமக்குத் தலைவனாக இருக்கும் பெருமானின் திருவடிகளைச் சென்று அடையும் அடியார்களுக்கு வாழ்வினில் துன்பம் ஏதும் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

முத்தினை முழு வயிரத் திரள் மாணிக்கத்

தொத்தினைத் துளக்கம் இலாத விளக்காய

வித்தினை விண்ணவர் தாம் தொழும் வெண்ணியில்

அத்தனை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.32.2) திருஞானசம்பந்தர், பெருமானை உந்துதல் தேவைப்படாத சோதி என்று குறிப்பிடுகின்றார். கந்து=பற்றுக்கோடு; அமர=பொருந்தும்; அப்பர் பெருமான் திருவையாறு அகலாத செம்பொற்சோதி என்று, அனைத்து சோதிகளிலும் உயர்ந்த சோதியாக பெருமான் விளங்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில், பெருமானாகிய சோதி எவ்வாறு மற்ற விளக்குகளினும் உயர்ந்தது என்பதை திருஞானசம்பந்தர் எடுத்து உரைக்கின்றார். புகையினை வெளியிடாத சோதி என்றும் தூண்டுதல் தேவைப்படாத சோதி என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். உந்தல்=தூண்டுதல்; மின் விளக்கு உட்பட நாம் உலகினில் காணும் அனைத்து விளக்குகளுக்கும் ஒரு தூண்டுதல் தேவைப் படுகின்றது. மின் விளக்காக இருந்தால், நாம் ஒரு விசை (ச்விட்ச்) மூலம் இயக்குகின்றோம். மற்ற விளக்குகளை வேறோர் நெருப்புச் சுடர் கொண்டு ஏற்றுகின்றோம். மேலும் மின்சாரம், திரி, எண்ணெய், மெழுகு முதலியன இந்த விளக்குகள் ஒளிவிட்டு பிரகாசிக்க தேவைப் படுகின்றன. அந்த சாதனங்கள் துண்டிக்கப்பட்டால், விளக்குகள் அணைந்து விடுகின்றன. அனைத்து விளக்குகளும், ஒளியினை வெளிப்படுத்தும் போது, வெப்பம் மற்றும் புகையை வெளியிடுகின்றன. ஆனால், பெருமானாகிய சோதி, எந்த விதமான தூண்டுதலும் தேவைப் படாமல், தானே சுடர் விட்டெரிகின்றது; மேலும் வெப்பமோ புகையோ வெளிப்படுவதில்லை; எனவே, பெருமானாகிய சோதி அனைத்து சோதிகளிலும் உயர்ந்தது என்று இந்த பாடல் மூலம், திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். சந்த மலியும் தரு=அழகுடன் பொலியும் மரங்கள்; வளி=காற்று; நந்து=நந்தவனம்; வண் திருவையாறு=வள்ளல் தன்மை உடையவர்கள் வாழும் திருவையாறு.

கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கேர்

இந்திரன் உணர்ந்து பணி யெந்தை இடம் எங்கும்

சந்தமலியும் தரு மிடைந்த பொழில் சார

வந்த வளி நந்தணவு வண் திருவையாறே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.50.6) திருஞானசம்பந்தர், பெருமானை, சோதியே சுடரே என்று அழைக்கின்றார். ஆரணம்=வேதங்கள்; நீதி=முறையாக, ஐயம் திரிபு இன்றி; நீர்மை=பண்பு; சுரும்பு=வண்டுகள்; சுரும்பமர்=வண்டுகள் மொய்க்கும்;

ஓதி ஆரணமாய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்னெறி

நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மை அதென்

சோதியே சுடரே சுரும்பமர் கொன்றையாய் திருநின்றியூர் உறை

ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே

கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.2) துளக்கிலா விகிர்தன் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். சோதி வடிவாக இருக்கும் இறைவன் எந்த விதமான சக்தியின் தொடர்புமின்றி ஒளிர்கின்றான்; மேலும் அந்த ஒளி என்றும் குறையாது வளர்கின்ற ஒளியாகவும், எந்த விதமான தூண்டுதலும் தேவைப்படாமல் மிளிர்கின்ற ஒளியாகவும், என்றும் அழியாத ஒளியாகவும் விளங்குகின்றது. எனவே தான் துளக்கிலா விளக்கே என்ற பொருள் பட, துளக்கிலா விகிர்தன் என்று கூறுகின்றார். விண்ணவர்களும் மண்ணுளோரும் தொழுகின்ற விளக்கு என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பண்ணோடு இணைந்த பாடல்களைப் பாடிப் பெருமானைப் போற்றும் அடியார்களை கேடும் பழியும் சென்றடையாது என்றும் அவர்கள் மிகுந்த புகழுடன் வாழ்வார்கள் என்றும் கூறுகின்றார்.

விண்ணுளார் தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும்

மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவித் தம்

கண்கள் ஆர்தரக் கண்டு நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தைப்

பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே

நமச்சிவாய மந்திரம் பதிகத்தின் பாடலில் (4.11.8) அப்பர் பிரான், நமச்சிவாய மந்திரம் நமது உள்ளத்தில் ஞான விளக்காக இருப்பதாக கூறுகின்றார். இல்=இல்லம். நமது உடல் உயிர் குடி கொண்டிருக்கும் இடம் இல்லம் என்று இங்கே அழைக்கப் படுகின்றது. நமது உடலில் உள்ள மனத்தில் நமச்சிவாய மந்திரம் துதிக்கப்பட்டு ஞான விளக்கு ஏற்றி வைக்கப் பட்டால் நம்மைப் பிணித்திருக்கும் அறியாமை என்ற இருள் விலகுகின்றது. சிவபெருமான் சொற்களுக்குத் துணையாக இருக்கும் நிலை, சொற்றுணை வேதியன் என்று, இதே பதிகத்தின் முதல் பாடலிலும் கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களுடனும் சிவபெருமான் கலந்து இருப்பதால் பல்லக விளக்கு என்று கூறப்பட்டுள்ளது. நமச்சிவாய மந்திரம், நமது உள்ளத்தில் ஞான விளக்காக நின்று நம்மை பிணைத்திருக்கும் மலங்களை அகற்றும்; சொற்களுக்குத் துணையாக நின்று சொற்களுக்குப் பொருளை அளிக்கும்; என்றும் நிலைத்து நிற்பது, பல்லாயிரக் கணக்கான உயிர்களின் உள்ளே நிற்பது; பக்குவப் பட்ட நிலையில் நின்று பாசங்களை அறுத்த பலரும் காண்பது: நல்ல உள்ளங்களில் வீற்றிருப்பது ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது

பல்லக விளக்கது பலரும் காண்பது

நல்லக விளக்கது நமச்சிவாயவே

பாவநாசத் திருப்பதிகத்தின் பாடலில் (4.15.3) அப்பர் பிரான், பெருமானை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கு என்று குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் சிவபெருமானை தனது உள்ளத்தில் நிலையாக நிறுத்தியதையும், அவ்வாறு நிறுத்திய சிவபெருமானை மறவாமல் இருப்பதையும் குறிப்பிடும் அப்பர் பிரான், மேற்கண்ட இரண்டு செய்கைகளால் தனக்கு ஏற்பட்ட பலனை, தனது உள்ளம் மகிழ்ந்து நிறைந்து இருப்பதை இங்கே கூறுகின்றார். நெதி=செல்வம்: ஞாயிறு=சூரியன் போன்று பிரகாசமான ஒளியை உடையவன். சந்திரனை தலையில் மாலையாக அணிந்து, சூரியன் போன்று மிகுந்த பிரகாசத்துடன் விளங்குபவனை, அறியாமையால் மயங்கிக் கிடக்கும் உயிர்களின் மயக்கத்தைத் தீர்ப்பவனை, தொன்மை வாய்ந்த அதிகை நகரத்தின் அரசனை, திருவையாற்றில் அமர்ந்து இருக்கும் இறைவனை, பெரும் புகழினை உடையவனை, ஊழ்வினைக்கு ஏற்றவாறு உயிர்களை உடல்களுடன் பொருத்துவதால் ஊழ்வினையாக கருதப் படுவானை, வானோர்கள் வேண்டித் தேடும் சோதியை, அனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையானை, ஞானக் கொழுந்தினை, அடியேன் நினைந்த போது எனது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

மதியம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயாறமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.23.2) அப்பர் பிரான், அறிய ஒண்ணா சோதீ என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சிவபெருமான் அறிவுக்கு எட்டாதவன். ஆனால் பக்தியுடன் அணுகும் அடியார்களுக்கு அருள் புரியும் தன்மை கொண்டவன். தங்களது அறிவிலும் திறமையிலும் நம்பிக்கை கொண்டவர்களாக பிரமன் திருமால் ஆகிய இருவரும் அடிமுடி தேடிய போது அவர்களுக்கு அகப்படாத சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பின்னர் அவர்களுக்கு காட்சி கொடுக்கின்றான். மணிவாசகர், திருவாசகத்தில் பத்தி வலையில் படுவோன் என்று சிவபெருமானைக் குறிப்பிடுகின்றார். காம்பு=மூங்கில். கருத்தன்= ஒன்றிய கருத்து உடையவன். கருத்தனாய் பாடுதல் என்றால், பாடும் பாடலின் பொருளை புரிந்து கொண்டு அந்த பொருளில் உள்ளம் ஒன்றி பாடுதல் என்று பொருள். கையொன்று செய்ய, மனம் ஒன்று நினைக்க, நாவொன்று பாடுதல் வழிபாடாகாது. ஒன்றியிருந்து நினைமின்கள் என்று தனது கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில் நமக்கு அறிவுரை கூறும் அப்பர் பிரான் உள்ளம் ஒன்றியே அனைத்துப் பாடல்களை பாடியிருந்தாலும், மனம் ஒன்றி பாடவேண்டும் என்ற கருத்தினை நமக்கு வலியுறுத்துவதற்காக, இங்கே இவ்வாறு கூறியுள்ளார். திருத்தம் என்றால் திருத்துதல் என்று பொருள். உயிர்கள் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொண்டு அந்த உயிர்களை நல்வழிப் படுத்தும் சிவபிரான் உறையும் தில்லைநகர் என்பதால் திருத்தமாம் தில்லை என்று இங்கே கூறப்பட்டுள்ளது என்றும் விளக்கம் கூறுவார்கள். மூங்கில் போன்ற மென்மையான தோள்களை உடைய உமாதேவியை தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே, எவரும் தங்களது அறிவினைக் கொண்டு அறிய முடியாத திருவடிவத்தை உடைய சோதியே, நான் பாடும் பாட்டின் பொருளில் மனம் ஒன்றி உன்னை பாடமாட்டேன். தூய்மையான தில்லை மாநகரில் பொலிந்து விளங்கும் சிற்றம்பலம் தன்னில் ஆடும் திருக்கூத்தினை நான் நேரே காண்பதற்காக வந்து கொண்டு இருக்கின்றேன் என்று அப்பர் பிரான் மிகவும் அடக்கமாக கூறுவதாக அமைந்த பாடல்.

கருத்தனாய் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா

ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருவுரு உடைய சோதீ

திருத்தமாம் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே

நிருத்த நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.25.7) அப்பர் பிரான், பெருமானை, சோதியாகவும் ஞான விளக்காகவும் இருப்பவர் என்று குறிப்பிடுகின்றார். நீதி=சிவபெருமானை எவ்வாறு வழிபடுவது என்று வேதங்களிலும் சைவ ஆகமங்களிலும் கூறப்படும் நெறிமுறை: தனது நெஞ்சத்திற்கு அப்பர் பிரான் அறிவுரை கூறுவதாக இந்த பதிகம் அமைந்திருந்தாலும், நமக்கு அப்பர் பிரான் அறிவுறுத்தும் பதிகம். இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் ஒவ்வொரு காலத்திலும் இறைவனைப் புகழ்ந்து பாடுமாறு, தனது நெஞ்சினுக்கு கட்டளையிடும் அப்பர் பிரான், இந்த பாடலில் தினமும் அவ்வாறு பாடுமாறு பணிக்கின்றார். நிமலன்=மலங்களின் தொடர்பு இல்லாதவன். நெஞ்சமே, வேதங்களிலும் சைவ ஆகமங்களிலும் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை அறிந்து கொண்டு அவ்வாறு, இயல்பாகவே மலங்களின் தொடர்பு அற்ற சிவபெருமானை, தினமும் வழிபட்டு தியானம் செய்வாயாக. பார்வதி தேவியை, தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு உள்ளவரும், சோதியாகவும், ஞான விளக்காகவும் உள்ளவரும் ஆகிய சிவபெருமான், சுடுகாட்டு சாம்பலைத் தனது உடலில் பூசிக்கொண்டு, தான் உலகுக்கு ஆதியாகவும் அந்தமாகவும் இருக்கும் நிலையை உணர்த்துகின்றார். இவ்வாறு ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியாக உள்ள சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறைகின்றார் என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறுகின்றார்.

நீதியால் நினை செய் நெஞ்சே நிமலனை நித்தமாகப்

பாதியாம் உமை தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை

சோதியாய் சுடர் விளக்காய்ச் சுண்ண வெண்ணீறு அதாடி

ஆதியாய் ஈறும் ஆனார் அதிகை வீரட்டானாரே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.26.3) அப்பர் பிரான், பெருமானை சோதியே சுடரே என்று அழைக்கின்றார். நீதி=வேதங்களும் சிவாகமங்களும் விளக்கும் வாழ்க்கை நெறிமுறை; முறையாக வழிபட்டு, வேதம் ஓதுவதையும் நீதியாக செய்வது என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. தூயவனாக இல்லாத நான், வேதங்களிலும் சைவ ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை தினமும் கடைப்பிடிக்காமல் இருக்கின்றேன்: கல்வி கற்றும் கற்ற கல்வியை பயன்படுத்தி உன்னைத் தொழாத காரணத்தால் உன்னை உணராமல், உன்னை மனத்தினுள் நிறுத்தி தியானிக்காமல் இருக்கின்றேன்: சோதியாகவும் சுடர் விளக்காகவும் உள்ள பெருமானே, உனது திருப்பாதங்களைக் காண முடியாமல் வருந்துகின்றேன்: அனைவர்க்கும் முதலாகிய பெருமானே, அதிகை வீரட்டனீரே, நீர் தான் என் மீது கருணை வைத்து, உமது திருப்பாதங்களை காண்பித்து அருளி, எனது வருத்தத்தை தீர்க்கவேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் இறைஞ்சும் பாடல்.

நீதியால் வாழ மாட்டேன் நித்தலும் தூயேன் அல்லேன்

ஓதியும் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்

சோதியே சுடரே உந்தன் தூமலர்ப் பாதம் காண்பான்

ஆதியே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.29.2), அப்பர் பிரான், நமது நெஞ்சினுக்கு ஒளி தரும் விளக்காக இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நொய்யவர்= நுண்ணியர்: விழுமியார்=மேன்மை அடைந்தவர்: நூல்=வேதநூல்: இடிஞ்சில்=அகல், விளக்குத் தகளி: கருவாய் இருந்த காலத்திலிருந்து, சிவபெருமானது திருவடியை மெய்யன்புடன் தான் தேடிய காரணத்தால், அவரது திருவடி தனது நெஞ்சினில் நெய் விடாமல் ஏற்றப்பட்ட விளக்காக உள்ளது என்று திருமூலர் கூறுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. சிவபெருமான் நுண்ணிய பொருட்களுக்கும் மிகவும் நுண்ணியராகத் திகழ்பவர்: அவர் அனைவரிலும் மேம்பட்டவர்: வேதங்களிலும் ஆகமங்களிலும் உள்ள நுட்பமான பொருளை நமக்கு விளக்கிக் காட்டும் உண்மை நெறியினர்: பொய் ஏதும் இல்லாதவர்: உடலென்னும் அகல் விளக்கில் உள்ள நெய்யில் தோய்ந்த திரியாகவும், ஒளி தரும் விளக்காகவும் உள்ளவர், செம்மை நிறத்துடன், நஞ்சினை கழுத்தில் அடக்கியதால் கரிய கண்டம் உடையவராய் விளங்குபவரும் ஆகிய சிவபெருமான் திருச்செம்பொன்பள்ளியில் உறைபவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

நொய்யவர் விழுமியாரும் நூலினுள் நெறியைக் காட்டும்

மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில் தன்னில்

நெய் அமர் திரியுமாகி நெஞ்சத்துள் விளக்குமாகிச்

செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளியாரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.39.1) அப்பர் பிரான், பெருமானை, சுடர் கொள் சோதீ என்று அழைக்கின்றார். குண்டன்=மூர்க்கன், தங்களது கொள்கைகளே சிறந்தது என்று பிடிவாதத்துடன் வாதம் செய்யும் குணம் கொண்டவர்கள்; மால்=மயக்கம்; துண்டன்=துண்டித்தவன், அறுத்து எறிந்தவன்; அண்டன்=அண்டங்களுக்குத் தலைவன்; ஏறே=தலைவனே; சமணர்களின் பேச்சினில் முன்னர் மயங்கி இருந்த நிலையும், பின்னர் அந்த மயக்க நிலையிலிருந்து விடுபட்டு, உண்மையான மெய்ப்பொருளாகிய சிவபெருமானின் சிறப்புகளை தான் உணர்ந்ததுமன்றி, ஏனையோரும் உணரும் வண்ணம் பதிகங்கள் இயற்றிய நிலையும் அப்பர் பிரானால் இங்கே உணர்த்தப் படுகின்றது. மூர்க்கனாக, அறிவின்றி சமணர்களுடன் கூடியிருந்து, அவர்களது பேச்சினில் மயங்கி நின்ற அடியேனின் மயக்கத்தைத் தீர்த்து, அவர்களுடன் அடியேன் கொண்டிருந்த தொடர்பினைத் துண்டித்த இறைவனே, ஞான வடிவினனாக ஒளிவீசும் இறைவனே, தூய நெறியாக நின்று அனைவர்க்கும் வழிகாட்டுபவனே, அனைத்து உலகங்களுக்கும் தலைவனே, தேவர்களின் தலைவனே, திருவையாறு தலத்தில் அமர்ந்தவனாய் எனக்கு தேன் போன்று இனிப்பவனே, உனக்கு பலவிதமான திருத்தொண்டுகள் செய்தவாறு அடியேன் பல தலங்களுக்கும் சென்று திரிகின்றேன். அடியேனுக்கு நீவிர் தான் அருள் புரியவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்

துண்டனே சுடர் கொள் சோதீ தூநெறியாகி நின்ற

அண்டனே அமரர் ஏறே திருவையாறு அமர்ந்த தேனே

தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.42.5) அப்பர் பிரான், பெருமானை, காண்பரிய சுடர் என்று குறிப்பிடுகின்றார். உடல் தனைக் கழிக்கலுற்ற=ஒரு நாள் உடலை விட்டு விலகும் தன்மை கொண்ட உயிர். முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைகளின் பயனாக பல வகையான துன்பத்திலும் ஆழும் உடலை விடுத்து விடுதலை அடைய விரும்பவது தான் ஆன்மாவின் உண்மையான விருப்பம். ஆன்மாவின் இந்த உண்மையான விருப்பத்தை புரிந்து கொண்டவர்களுக்கு அறிவுரை கூறும் முறையில் அமைந்த பாடல் இது. சென்ற பாடலில் இந்த பிறவியில் நாம் அடையும் துயரங்களிலிருந்து விடுதலை பெற இறைவனை வழிபடுவீர்கள் என்று அறிவுரை கூறிய அப்பர் பிரான், இனிமேல் பிறவியே எடுக்காமல் இருப்பதற்கான வழிமுறையை இங்கே கூறுகின்றார். காண்பரிதாகி நின்ற சோதி என்று இறைவனை, அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அவனது அருள் இல்லையேல் அவனை நாம் காண முடியாது என்ற கருத்தினை உணர்த்தும் வண்ணம், எவரும் தங்களது சொந்த முயற்சியால் காண முடியாதவன் இறைவன் என்று இங்கே கூறப்படுகின்றது. தங்களுக்குள்ளே யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமனும் திருமாலும், தனது முடியையும் அடியையும் காண முடியாத, நெடுஞ்சுடராக நின்ற தன்மையை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. உடலுடன் தொடர்பு கொண்டுள்ள தன்மையை, நிலையாக நீக்க விரும்பும் உலகத்து உயிர்களே உங்களுக்கு நான் கூறும் அறிவுரையை கேட்பீர்களாக. உங்களது பிறவிப் பிணியினை அடியோடு நீக்க உங்களுக்கு விருப்பம் உண்டென்றால், பெருமானைப் புகழ்ந்து நீங்கள் அனைவரும் வணங்குவீர்களாக. கருமையான நிறத்தில் திரண்டெழுந்த கடல் நஞ்சினை உண்ட பின்னரும், அந்த நஞ்சின் தன்மையால் எந்த கேடும் அடையாமல் இருந்தவரும், தங்களது முயற்சியால் மட்டுமே இறைவனை கண்டுவிடலாம் என்று எண்ணும் மனிதர்கள் காண்பதற்கு அரியவனாக இருப்பவனும் ஆகிய சிவபெருமானை, ஞானச் சுடராக விளங்குபவனை அடியேன் துருத்தித் தலத்தில் கண்டேன். நீங்களும் அவனைப் பணிந்து வழிபட்டு அவனைக் காண்பீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உடல் தனைக் கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கெல்லாம்

இடர் தனைக் கழிய வேண்டில் இறைவனை ஏத்துமின்னோ

கடல் நிறம் நஞ்சம் உண்டு காண்பரிதாகி நின்ற

சுடர்தனைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.1) அப்பர் பிரான் பெருமானை, மிக்க சோதி என்று அழைக்கின்றார். ஓதி என்று வாயினால் தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைத் தொழுததையும், மலர்கள் தூவி என்று கையினால் மலர்கள் எடுத்து இறைவன் மேல் தூவி வழிபட்டதையும். நினையுமா நினைவு என்று இறைவனை எப்போதும் நினைத்து இருக்கும் தன்மையையும் இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மனம், மொழி, மெய்களால் அப்பர் பிரான், அன்புடன் இறைவனை வழிபட்டமை இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது, நாமும் அவ்வாறு இறைவனைத் தொழவேண்டும் என்பதே இந்த பாடலின் மையக் கருத்தாகும். ஈசன் தனது உடலில் தன்னை ஏற்க வேண்டி உமையம்மை தவம் செய்து, ஒரு கார்த்திகை நன்னாளில் இறைவனின் உடலின் இடது பாகத்தில் அமர்ந்தது இந்த தலத்தில் தான். இன்றும் கார்த்திகை நன்னாளில் இறைவனும் இறைவியும் இணைந்த மாதொரு பாகன் கோலத்தில் இறைவன் காட்சி தருவது ஒரு சிறப்பான நிகழ்ச்சியாகும். இறைவன் இவ்வாறு காட்சி அளித்த பின்னர் தான் மலையின் உச்சியில் அண்ணாமலைத் தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் விதமாக உமையவள் பங்கா என்று முதலில் இறைவனை குறிப்பிட்டு, அதன் பின்னரே சோதியாய் நின்ற தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். திருவண்ணாமலை தலத்தினில் கிரிவலம் செல்லும்போது, நாம் மேற்குச் சுற்றில் ஆதி அண்ணாமலை என்று சொல்லப்படும் கோயிலையும் காணலாம். இந்த கோயிலை அடி அண்ணாமலை என்றும் அணி அண்ணாமலை என்றும் அழைப்பதுண்டு. இந்த கோயிலுக்கு அருகே மணிவாசகர் தங்கி இருந்தார் என்றும் அப்போது தான் திருவெம்பாவை அருளியதாகவும் கருதப் படுகின்றது. இங்கே மணிவாசகப் பெருமானுக்கு தனியாக ஒரு கோயில் உள்ளது. இந்த ஆதி அண்ணாமலை திருக்கோயில் பிரமன் வழிபட்ட தலமாகும். அணி அண்ணாமலை என்று அப்பர் பிரான் இந்த கோயிலின் மீது தான் இந்த பதிகத்தினை அருளினார் என்றும் சிலர் கருதுவார்கள். அணி அணாமலை என்பதற்கு, தொண்டர்கள் அணுகி வழிபடும் இறைவன் என்றும், அடியார் அல்லாதார் அணுகமுடியாத இறைவன் என்றும் விளக்கம் அளிப்பதுண்டு. இந்த தல வரலாறே, பிரமனும் திருமாலும் சோதியின் அடிமுடி காணமுடியாமல் திகைத்து நின்ற நிகழ்ச்சி தானே. மாமலர்கள்=சிவபெருமானை வழிபடுவதற்கு சிறந்த மலர்களாக கருதப் படுபவை, புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை. பாதிரி, அலரி, மற்றும் செந்தாமரை ஆகிய எட்டு மலர்கள் ஆகும். கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு மற்றும் அறிவு ஆகிய எட்டு குணங்களைக் கொண்டவராக இருந்து (அக மலர்கள்) இறைவனை வழிபடுதல் சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது. பார்வதி தேவியை உடலில் ஏற்றவனே என்றும், மேன்மையான சோதியே என்றும், கூத்தாடும் போது அசைந்தாடும் எட்டு தோள்களை உடையவனே என்றும், ஒளி வீசும் மழுப் படையினை உடையவனே என்றும், அனைவர்க்கும் முன்னவனான ஆதியே என்றும், அமரர்கள் தலைவனே என்றும், அழகிய அண்ணாமலையில் உறைபவனே என்றும் உன்னை எப்போதும் நினைத்து மலர்கள் தூவி முறையாக வழிபட்டு உன்னை தியானிப்பதைத் தவிர வேறு எவரையும், எந்தப் பொருளையும் நான் நினைக்க மாட்டேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க

சோதியே துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையினானே

ஆதியே அமரர் கோவே அணி அணாமலை உளானே

நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.74.7) அப்பர் பிரான், பெருமானை துளக்கமில்லா விளக்கு என்று குறிப்பிடுகின்றார். நீதி=சிவாகம விதி; சிவாகமத்தில் குறிப்பிடப்படும் கொள்கைகளின் வழியே, பெருமானை தியானித்து வழிபடும் அடியார்களின் மனதினில் பெருமான் உறைகின்றான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். சாதி=சாதி மாணிக்கம், தரத்தில் மிகவும் உயர்ந்த மாணிக்கக் கல்;

நீதியால் நினைப்புளானை நினைப்பவர் மனத்துளானைச்

சாதியைச் சங்க வெண்ணீற்று அண்ணலை விண்ணில் வானோர்

சோதியைத் துளக்கமில்லா விளக்கினை அளக்கலாகா

ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.103.6) அப்பர் பிரான் பெருமானை பரஞ்சுடர் என்று அழைக்கின்றார். பரஞ்சுடர்=அனைத்து விளக்குகளினும் மேம்பட்ட சுடர்; அல்=இரவு: பொழுது சாய்ந்து விளக்கு ஏற்றிய பின்னர் உணவு உண்பதனை தவிர்ப்பது சமணர் பழக்கங்களில் ஒன்றாகும். விளக்கினை நாடி வரும் பூச்சிகள் இறந்து உணவினில் விழுந்து விடும் என்பதால் இந்த பழக்கத்தை அவர்கள் மேற்கொண்டார்கள். புரை=துளை: துதிக்கையில் துளை உடைய யானையை புரைக் கை யானை என்று இங்கே அப்பர் குறிப்பிடுகின்றார். கனை கடல்=ஓயாது ஒலிக்கும் அலைகளை உடைய கடல். தன்னை ஆட்கொண்ட சிவபிரானுக்கு வழிவழி அடிமையாக இருப்பது எவ்வாறு என்று சிவபிரானையே, இந்த பதிகத்தின் மூன்றாவது பாடல் மூலம் கேள்வி கேட்ட அப்பர் பிரான் இந்த பாடலில் திருத்தொண்டுகள் செய்வதற்கு தனக்கு மிகுந்த விருப்பம் இருப்பதாக தெரிவிக்கின்றார். பனை மரத் தண்டு போன்று பருத்ததும், துளையினை உடையதுமாகிய துதிக்கையினை கொண்ட மதயானை, உன் மேல் ஏவப்பட்ட போது, அந்த யானையை அடக்கி அதன் தோலை உரித்த பரஞ்சுடரே, அலைகள் ஓயாது ஒலிக்கும் கடலினால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உறையும் எங்களது நெற்றிக் கண்ணனே, இல்வாழ்க்கையைத் துறந்து துறவறம் பூண்டு, இரவில் உணவு உண்பதைத் தவிர்த்து வாழும், முரட்டுச் சமணர்கள் பால் எனக்கிருந்த மயக்கத்தை நீக்கி, என்னை ஒரு பொருட்டாக மதித்து என்னை ஆட்கொண்ட பெருமானே, நீ எனக்குச் செய்த கருணைச் செயலுக்கு நன்றியாக, நான் உனக்குச் செய்யக்கூடிய தொண்டுகள் யாவை என்பதை அறியாமல் திகைக்கின்றேன். இறைவனே தயை கூர்ந்து நீ எனக்குத் தெரிவிப்பாயாக, நான் அதனை மிகுந்த விருப்பமுடன் செய்வேன் என்று அப்பர் பிரான் பெருமானிடம் விண்ணப்பம் வைக்கும் பாடல்.

பனைபுரை கைம்மத யானை உரித்த பரஞ்சுடரே

கனைகடல் சூழ்தரு நாகைக் காரோணத்து எம் கண்ணுதலே

மனை துறந்து அல் உணா வல்லமண் குண்டர் மயக்க நீங்கி

எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.029.3) அப்பர் பிரான், பெருமானை, சோதியே சுடரே என்று பெருமான் பால் காதல் வயப்பட்ட பெண் எப்போதும் பிதற்றிக் கொண்டு இருப்பதாக அவளது தாயின் கூற்றாக, கூறுகின்றார். நான்மறை என்று சொல்லாமல் பன்மறை என்று சொல்லி இருப்பதால், மறைகள் மற்றும் ஆகமங்கள் என்று பொருள் கொள்வது சிறப்பு. இதே பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் தனது மகள் தேவையான பக்குவம் அடையாத நிலையில் இருப்பதையும், இறைவனின் முழுமையான அன்பின் ஆழத்தையும் உணராமல் இருப்பதாக குறிப்பிடும் தலைவியின் தாய், பதிகத்தின் எஞ்சியுள்ள பாடல்களில் தனது மகளின் செய்கைகளை உணர்த்துகின்றாள். ஒண்பொருள்=மேம்பட்ட பொருள்; தனது மகள் ஓயாமல் இறைவனின் திருநாமங்களைச் சொல்வதை உணர்த்தி அதன் மூலம் அவள் இறைவன் பால் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பினை தெரிவிக்கும் தாய், இறைவன் தனது மகளுக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகோளினை சொல்லாமலே உணர்த்தும் நயமான பாடல். பெண்ணினைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனே என்றும், பல மறைகளை ஓதி எனது உள்ளம் கொள்ளை கொண்டவன் என்றும், மேம்பட்ட பொருளே என்றும், அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கு ஆதியே என்றும், குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் சோதியே என்றும் ஒப்பற்ற சுடரே என்றும் இறைவனின் திருநாமங்களை இடைவிடாது சொல்பவளாக எனது மகள் இருக்கின்றாள். ஆவடுதுறை இறைவனே, அவளின் இந்த செய்கை அவள் உன்பால் கொண்டுள்ள தீவிர அன்பினை வெளிப்படுத்துகின்றது. எனவே இறைவா நீ அவளை ஆட்கொண்டு அருள வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாதி பெண்ணொரு பாகத்தன் பன்மறை

ஓதி என்னுள்ளம் கொண்டவன் ஒண்பொருள்

ஆதி ஆவடு தண்டுறை மேவிய

சோதியே சுடரே என்று சொல்லுமே

வாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.50.10) அப்பர் பிரான் பெருமானை, வாய்மூர் விளக்கு என்று குறிப்பிடுகின்றார். மீண்டற்கு=மீளுதற்கு. அரக்கனாகிய இராவணன் கயிலை மலையினைப் பேர்த்தெடுக்க முயற்சி செய்தது மிகப் பெரிய தவறு. அந்தத் தவற்றினை அவன் உணரவேண்டும்; உணர்ந்து வருந்த வேண்டும் என்பது பெருமானின் திருவுள்ளம். அதனால் தான் தனது திருவிரல் ஒன்றினை, கயிலை மலையின் மீது மெதுவாக ஊன்றினார். தீண்டற்கரிய திருவடி=பன்றி வடிவு எடுத்து மிகவும் ஆழமாகத் தோண்டியும் திருமாலால் காண முடியாத அரிய திருவடி. கயிலை மலையினைப் பேர்த்தெடுக்கும் முயற்சியால் தவறான செயல் புரிந்த இராவணன், தான் செய்த பாவச் செயலிலிருந்து மீளவேண்டும் என்று சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். அதற்காக திருமாலும், வேதங்களும், தேவர்களும் அணுகுதற்கு அரிய திருவடியின் விரல் ஒன்றினால் தான் இருந்த கயிலை மலையை அழுத்தினார். இவ்வாறு அரக்கனுக்கு நன்மை செய்வதற்காக தனது திருவிரலை ஊன்றி வருத்திய சிவபெருமானை, வாய்மூர் விளக்கினை, எனது வருத்தத்தை தீர்க்குமாறு வேண்டினேன்; அவனது திருப்பாதங்களையே மனதில் நினைத்து, எனது சிந்தனை சிவமயமாக இருக்குமாறு நான் தூண்டிக் கொண்டேன்; இவ்வாறு நான் என்னைத் தூண்டிக் கொள்ள, சிவபிரான் என் முன்னே தோன்றினார் என்று திருமறைக்காடு தலத்தில் தனக்கு அந்தணனாக காட்சி தந்து,வாய்மூர் தலம் அழைத்துச் சென்றவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.

தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்

மீண்டற்கும் மிதித்தார் அரக்கன் தனை

வேண்டிக் கொண்டேன் திருவாய்மூர் விளக்கினைத்

தூண்டிக் கொள்வன் நான் என்றலும் தோன்றுமே

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.57.2) அப்பர் பிரான், பெருமானை, விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கு என்று குறிப்பிடுகின்றார். விண்ணுளார்=தேவர்கள்; அண்ணல்=தலைவன்; இதே பதிகத்தின் முதல் பாடலில் இது நாள் வரை இறைவனை நினையாத மனிதர்களுக்கு, இறைவனது திருவடிகளைத் தொழாத மனிதர்களுக்கு, இனியாவது அவனைத் தொழுவீர்கள் என்று அறிவுரை கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் இறைவனது திருவடிகளை பற்றிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்குகின்றார். தொழும் அடியார்களின் வினைகள் தீர்க்கப்படும் என்று உணர்த்தும் அப்பர் பிரான், அவனது புகழினை போற்றி இசைப் பாடல்களாக பாடி தொழவேண்டும் என்றும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். விண்ணிலுள்ள தேவர்கள் புகழ்ந்து போற்றி தொழும் ஒளி வடிவான இறைவனை, மண்ணில் உள்ள மனிதர்களின் வினைகளைத் தீர்க்கும் மருந்து போல் செயல்படுபவனை, இசையில் வல்லவர்களால் தொடர்ந்து புகழ்ந்து பாடப்படும் இறைவனை, திருக்கோளிலி தலத்தில் உறையும் தலைவனின் திருவடிகளை தொழுது நீங்கள் உய்வினை அடைவீர்களாக என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

விண்ணுளார் தொழுது ஏத்தும் விளக்கினை

மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினைப்

பண்ணுளார் பயிலும் திருக்கோளிலி

அண்ணலார் அடியே தொழுது உய்ம்மினே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (5.93.2) அப்பர் பிரான், பெருமானை, புந்திக்கு விளக்காய புராணன் என்று குறிப்பிடுகின்றார். புந்தி=அறிவு; புராணன்=மிகவும் பழமையானவன்; சந்தி என்பது இங்கே முன்னிரவும் பின்னிரவும் சந்திக்கின்ற நள்ளிரவை குறிப்பிடுகின்றது. நள்ளிரவு என்பது இங்கே இருளில் மூழ்கிக் கிடக்கும் ஊழிக் காலத்தை குறிக்கின்றது. முற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில் நடனமாடுவதற்கு தனி திறமை வேண்டும் என்பதால், அத்தகைய திறமை உடைய பெருமானை சதுரன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இறைவன், தானே வந்து தனது உள்ளத்தில் புகுந்து ஆட்கொண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். அடியேனது அறிவுக்கு தூண்டுகோலாக அமையும் விளக்கு போன்றவனும், உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அனைத்து பொருட்களுக்கும் பழமையானவனும், பிரளய காலத்து இருளிலும் திறமையாக நடமாட வல்ல திறமையை உடையவனும், அந்திச் செவ்வானத்து நிறத்தினில் சிவந்த திருமேனியை உடையவனும், தீப்பிழம்பினை தனது கையில் ஏந்தி நடமாடும் தலைவனும் ஆகிய இறைவன், தானே முன் வந்து எனது உள்ளத்தில் புகுந்து என்னை ஆட்கொண்டான். அவனை எவ்வாறு இந்நாள் மறக்க இயலும் என்று அப்பர் பிரான் மனம் நெகிழும் பாடல்.

புந்திக்கு விளக்காய புராணனைச்

சந்திக் கண் நடமாடும் சதுரனை

அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை

வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.1.6) அப்பர் பிரான் துளக்கிலா விளக்கு என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சுரும்பு=வண்டு; துளக்கு=அசைவு. காற்றில் அசைவதால் விளக்குகள் அணைந்து போவதுண்டு; வேதங்களின் ஆறு அங்கங்களாக கருதப்படுவன: சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் என்பன. வேதங்களில் பயன்படுத்தப் பட்டுள்ள எழுத்துகளைப் பற்றி கூறுவது சிக்ஷை எனப்படும் பகுதி. எழுத்துகள் ஒலிக்கப்பட வேண்டிய முறை, மாத்திரை அளவுகள், மற்றும் அந்தந்த எழுத்துகளுக்கு உரிய தேவதைகள் முதலிய பல விவரங்கள் அடங்கிய பகுதிகள் சிக்ஷை என்று அழைக்கப்படும். பல எழுத்துக்களால் உருவான சொற்களைப் பற்றி கூறுவது வியாகரணம். சந்தஸ் என்பது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களின் எழுத்து எண்ணிக்கையை குறிக்கும் பகுதியாகும். நிருக்தம் என்றால் விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். வேதங்களில் வரும் சொற்றொடர்களுக்கும், சொற்களுக்கும் விளக்கம் அளிக்கும் வேதத்தின் பகுதிகள் நிருக்தம் என்று அழைக்கப் படுகின்றன. ஜோதிடம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியான கணிதத்தில், கால தத்துவங்கள், வருடம், அயனம், திதி, வாரம், மாதம், வளர்பிறை/தேய்பிறை விவரங்கள் மற்றும் அந்தந்த காலங்களில் செய்யக் கூடிய காரியங்கள் விளக்கப் பட்டுள்ளன. இரண்டாவது பகுதியான ஹோரையில், இதுவரை நடந்த சம்பவங்கள், தற்போது நடக்கும் சம்பவங்கள், இனி நடக்க இருக்கும் சம்பவங்கள் என்பவை கோள்களின் பயணத்தின் அடிப்படையில் கணித்து சொல்லப்படுகின்றன. கல்பம் என்றால் பிரயோகம் என்று பொருள்; வேதங்களில் சொல்லப் பட்டுள்ள கர்மாக்களை செய்யவேண்டிய வழிமுறைகள் அடங்கிய பகுதிகள் கல்பம் என்று அழைக்கப் படுகின்றன. கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி தேவியைத் தனது திருமேனியின் இடது பாகத்தில் கொண்டவன் சிவபெருமான்; தனது சிவந்த மேனியில் வெண்ணீறு பூசிய காரணத்தால், வெண்மை நிறத்தில் வைரக் குன்று போன்று காட்சி அளிப்பவனும், மலரும் தருவாயில் உள்ள கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், அருமறையோடு ஆறங்கமாகத் திகழ்பவனும் அவனே. அத்தகைய சிவபெருமானை, வண்டுகள் நிறைந்த நறுமணம் வீசும் சோலைகள் மிகுந்த திருவாரூரில் உறையும் சுடர்க்கொழுந்தை, அசைவதும் அணைந்து போவதும் அற்ற விளக்கினை, அனைத்துப் பொருட்களினும் அதிகமான இன்பத்தைத் தரும் வீடுபேறாக இருப்பவனை, பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப்படும் தலத்தில் உறைபவனும் ஆகிய சிவபெருமானைப் பேசாத நாட்கள் வீணாகக் கழிந்த நாட்கள் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கரும்பமரும் மொழி மடவாள் பங்கன் தன்னைக் கனவயிரக் குன்று அனைய காட்சியானை

அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை அருமறையோடு ஆறங்கம் ஆயினானைச்

சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென்னாரூர்ச் சுடர்க் கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க

பெரும் பொருளைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.31.1) அப்பர் பிரான், பெருமானை, சுடர் ஒளியாய் அனைவரின் உள்ளத்தே விளங்கும் சோதீ என்று குறிப்பிடுகின்றார். இடர்=பிறவித் துன்பம்: கெடுமாறு=கெடும்+ஆறு=துன்பம் ஒழியும் வகை; ஈண்டு=மிகுந்த; சாதாரண வயிற்று வலியோ அல்லது சுரமோ ஏற்பட்டால் நாம், அந்த வலியினை உணர்ந்து, அம்மா, அப்பா, ஐயோ என்று அலறுகின்றோம். ஆனால் அனைத்து நோய்களுக்கும் பெரியதான பிறவிப் பிணியைக் கொண்டுள்ள நாம், அதனை உணர்வதில்லை. முதலில் அதனை உணர்ந்தால் தானே நாம் நமது வேதனையை வெளிப்படுத்தும் முகமாக அலறுவோம்; அதனை உணருவதுமில்லை, எனவே அலறுவதுமில்லை; அதனைப் போக்கிக் கொள்ளும். வழியினை ஆராய்வதுமில்லை. அதனால் தான் முதலில் பாடலின் தொடக்கத்தில் இடர் என்று பிறவிப்பிணியை உணர்த்தி, அதனைப் போக்கிக் கொள்ள விருப்பம் உள்ளதா என்று நம்மை அப்பர் பிரான் கேள்வி கேட்கின்றார். ஏன் நாம் பிறவித் துன்பத்தை நீக்கிக்கொள்ள, சிவபெருமானை நாட வேண்டும். நிலையில்லாத உலகத்தில் நிலையான ஒருவன் அவன் தான் என்பதை அவனது திருநீறு அணிந்த கோலம் நமக்கு நினைவூட்டுகின்றது. மேலும் மற்ற அனைவரும், பிரமன் திருமால் உட்பட்ட அனைத்துத் தேவர்களும், பிறவிப் பிணிக்கு ஆட்பட்டவர்கள் தானே; தான் கொண்டுள்ள நோயினைத் தீர்த்துக் கொள்ளும் வழி அறியாமல், அந்த நோயுடன் வாழும் அவர்களால் எவ்வாறு அந்தப் பிணியைப் போக்க முடியும். ஒவ்வொரு ஊழி முடிவிலும் செத்து செத்துப் பிழைக்கும் தேவர்கள் எவ்வாறு நம்மை காப்பாற்ற முடியும்? சிவபெருமான் ஒருவன் தான், நமது பிறவிப் பிணியைத் தீர்க்கவல்ல மருத்துவன் என்பதை திருநீறு அணிந்தவன் என்று குறிப்பிடுவதன் என்பதன் மூலம் நமக்கு அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். உயிர்கள் அனைத்தும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மிகப் பெரிய துன்பம் பிறவித் துன்பம் தான். இந்த பிறவித் துன்பம் நீங்கப் பெற்றால், நாம் இறைவனடி சேர்ந்து என்றும் அழியாத பேரானந்தத்தில் திளைக்கலாம். பிறவித் துன்பத்தை நீக்க வல்லவன் சிவபெருமான் ஒருவனே என்பதால், முதலில் அவனது நாமத்தைச் சொல்லுமாறு, அப்பர் பிரான் நமது நெஞ்சத்திற்கு கட்டளை இடுகின்றார்.

பிரமன், திருமால் உட்பட்ட அனைத்துத் தேவர்களும், பாற்கடலில் இருந்து எழுந்த நஞ்சம் தாளாமல் தவித்த போது, அவர்களைக் காப்பதற்காக நஞ்சினை உண்டவன் சிவபெருமான். நம்மிலும் பெரியோர் திருமால், பிரமன், மற்றுமுள்ள தேவர்கள்; அவர்களுக்கு துன்பம் வந்தபோது, அவர்களையே காத்து அருளியவன், நம்மையும் காக்கும் வல்லமை படைத்தவன் அல்லவா. ஓரிடத்தில் நில்லாமல் துள்ளித் திரியும் இயல்பு உடையது மான்கன்று. அந்த மான் கன்றினை அடக்கி, தனது கையில் நிலையாக ஓரிடத்தில் வைத்து இருப்பவன் சிவபெருமான். மான் துள்ளவது போல், பல இடங்களுக்கும் சென்று திரியும் இயல்பு உடைய மனத்தினை கட்டுப்படுத்தும் வல்லமையைத் தர வல்லவன் சிவபெருமான் ஒருவனே என்பது மறி ஏந்து கையன் என்ற தொடர் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. நெஞ்சமே, நீ அனைத்துத் துன்பங்களிலும் பெரிய துன்பமான பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ள, ஆசைப் படுவாயாகில், என்னிடம் வா; நான் உனக்கு அதற்குரிய வழியினைக் காட்டுகின்றேன்; மிகுந்த ஒளிவீசும் செஞ்சடையில் கங்கையை அணிந்தவனே என்றும், ஞான ஒளியாய் அனைவரது உள்ளத்திலும் மிளிரும் சோதீ என்றும், திருநீறு அணிந்து ஒளிரும் தோள்களை உடையவனே என்றும், பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் கரிய நிறமடைந்த கழுத்தினை உடையவனே என்றும், மான்கன்றினை ஏந்திய கையனே என்றும், ஆற்றல் மிக்க காளையினை வாகனமாக உடைய இறைவனே என்றும், கிடைத்தற்கு அரிய அமுதமே என்றும், அனைவருக்கும் மூத்தவனே என்றும் ஆரூரனே என்றும் அவனது புகழினையும் ஆற்றலையும் உணர்த்தும் திருநாமங்களை உரத்த குரலில் சொல்லி அவனை பலகாலும் அழைப்பாயாக என்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

இடர் கெடுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளிசேர் கங்கைச் சடையா என்றும்

சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூநீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும்

கடல் விடம் அது உண்டு இருண்ட கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும்

அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.31.9) அப்பர் பிரான், பெருமானை, பரஞ்சோதி என்றும் தேசத்து ஒளி விளக்கு என்றும் குறிப்பிடுகின்றார். தேசத்து ஒளி விளக்கு= உலகில் உள்ள விளக்குகளுக்கெல்லாம் ஒளி கொடுப்பவன்; ஏசற்று நிற்றல்=கூசி இருத்தல்; சிவபெருமானதுபெருமையின் முன்னர் நாம் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து, தாழ்மை உணர்ச்சியால் கூசி நிற்றல்; பண்டரங்கன்=பண்டரங்கக் கூத்து ஆடியவன், திரிபுரங்கள் எரிக்கப்பட்ட பின்னர், ஆடிய ஆனந்த நடனம் பண்டரங்கக் கூத்து என்று அழைக்கப்படும். பரஞ்சோதி=அனைத்து சோதிகளினும் மேம்பட்ட சோதி. நெஞ்சமே, உலகப் பொருட்களின் மீது நீ வைத்துள்ள பாசத்தினை அடியோடு அறுத்து, உலக மாயையில் இருந்து விடுபடுவதற்கான வழியினைச் சொல்லுகின்றேன் நீ கேட்பாயாக; பரஞ்சோதியே, திரிபுரங்களை எரித்து பண்டரங்கக் கூத்து ஆடியவனே, பாவங்களை போக்குபவனே, உலகுக்கு ஒளி தரும் விளக்கே, தேவர்களுக்கெல்லாம் தேவனே, திருவாரூர் திருமூலத்தானது உறையும் இறைவனே என்று அவனது திருநாமங்களை, பலமுறை கூவி, அவன் மீது நீ வைத்துள்ள அன்பினைப் பெருக்கி, தினமும் அவனை தரிசித்து வணங்கி, அவனது சன்னதியில் நின்று அவனையே நினைத்து உருகி, அவனது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, எல்லையில்லா இறைவனது பெருமையின் முன்னர் நமது நிலை மிகவும் தாழ்வானது என்ற உண்மையை புரிந்து கொண்டு, உடல் கூசி, தலை தாழ்த்தி, வானவர்கள் தலைவனே என்றும் எங்களது பெருமானே என்றும் அவனது புகழைப் பாடி நிற்பாயாக என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

பாசத்தைப் பற்று அறுக்கலாகும் நெஞ்சே பரஞ்சோதி பண்டரங்கா பாவநாசா

தேசத்து ஒளிவிளக்கே தேவதேவே திருவாரூர்த் திருமூலட்டானா என்றும்

நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்றடி மேல் வீழ்ந்து நின்று

ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்றென்றே ஏத்தா நில்லே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (6.31.4) பெருமானை நுந்தாத ஒண்சுடரே என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். நுந்தாத=தூண்டல் வேண்டாத, தூண்டுதல் தேவைப்படாத. சிவபெருமான், எப்போதும் ஒளி குன்றாத சுடர் விளக்கு என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. இறைவனின் பெருமை கூறும் திருநாமங்கள் சொல்வதே புண்ணியம் மற்றும் நன்னெறி என்று இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். நெஞ்சமே, புண்ணியம் நன்னெறி ஆகியவை என்ன என்று கேட்டாய் அல்லவா, அதற்கு விடை கூறுகின்றேன், கூர்ந்து கேட்பாயாக. நுண்ணிய வெண்ணூல் அணிந்த மார்பினனே, தூண்டுதல் தேவைப்படாத விளக்கே, வானத்தில் உலவும் தேவர்கள், நான்மறைகள், தாமரை மலர் மேல் உறையும் பிரமன், மற்றும் திருமால் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும், அவர்களால் கணக்கிட முடியாத திருநாமங்கள் உடைய இறைவனே, அழகிய ஆரூர் நகரில் உறையும் இறைவனே என்றும் பலகாலும் நீ இறைவனைத் துதிப்பாயாக என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை சொல்லும் பாடல்.

புண்ணியமும் நன்னெறியும் ஆவதெல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்தக் கேள் நீ

நுண்ணிய வெண்ணூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண்சுடரே என்றும் நாளும்

விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரைமலர் மேல் நான்முகனும் மாலும் கூடி

எண்ணரிய திருநாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தா நில்லே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.35.9) அப்பர் பிரான், உலகுக்கு ஒரு விளக்காய் நிற்பவன் பெருமான் என்று கூறுகின்றார். தவங்கள் செய்த வெள்ளானை என்று யானை சிவபெருமானை வழிபட்டதை அப்பர் பிரான் இந்த பாடலில் சொல்கின்றார். யானை சிவபெருமானை வழிபட்ட தலங்கள் ஒன்பதில் இந்த தலமும் ஒன்றாகும். இன்னம்பர், எதிர்கொள்பாடி, கானப்பேர் (காளையார் கோயில்), கோட்டாறு, திருவானைக்கா, திருக்காளத்தி, திருவெண்காடு, ஆலவாய் மற்றும் பெண்ணாகடம் ஆகிய தலங்களே அந்த ஒன்பது தலங்கள். சூரபத்மனின் மகனால் தனது நான்கு கொம்புகளை இழந்த ஐராவத யானை பெருமானை இந்த தலத்தில் வழிபட்டு, தான் முன்னர் இழந்த கொம்புகளையும் பொலிவையும் மீண்டும் பெற்றது. இந்த நிகழ்ச்சி தான் அப்பர் பிரான் மற்றும் திருஞான சம்பந்தர், இந்த தலத்தின் மீது அருளிய பதிகங்களில், வெள்ளானை வழிபட்ட வெண்காட்டான் என்று பதிவு செய்யப் பட்டுள்ளது. புள்ளான்=கருடனை வாகனமாக உடையவன், கருடக் கொடியினை உடையவன்: உள்ளான்=எல்லாப் பொருட்களின் உள்ளே உறைந்திருப்பவன், ஒன்றலா உருவினான்= ஒன்றுக்கும் மேற்பட்ட உருவத்தினை உடையவன்; ஒன்றலா உரு என்பதற்கு, ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு உருவாகத் தோற்றம் அளிப்பவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தம். பிரமனும் திருமாலும், காண முடியாமல் திகைத்தது சிவபெருமானின் திருவுருவத்தின் முன்பு தான். இதுவே அவனின் மாறுபட்ட தன்மையாகும். பிரமனும் திருமாலும், மேலும் கீழும் தேடிச் சென்ற போதும், நீண்ட அழலாய் நின்ற பிழம்பின் முடியையும் அடியையும் காண முடியாமல் திகழ்ந்த சிவபெருமான், எல்லாப் பொருட்களிலும் உள்ளே உறைந்து நிற்கின்றான்; அவன் அடியார்களுக்கு அருளும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட உருவத்தினை எடுத்து அருள் புரிகின்றான். உலகங்கள் அனைத்துக்கும் ஒப்பற்ற விளக்காகத் திகழ்ந்து வழிகாட்டுபவனும் சிவபெருமான் தான். அத்தகைய பண்புகள் வாய்ந்த சிவபெருமானை, காலை நண்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் தவறாமல், தேன் நிறைந்த கொன்றை மலர்களைக் கொண்டு வழிபாட்டு தவம் செய்த வெண்மை நிறத்து யானையாகிய அயிராவத யானைக்கு, வேண்டிய வரங்கள் கொடுத்தவன், வெண்காட்டில் திகழும் விகிர்தன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறியழலாய் நின்றான் தன்னை

உள்ளானை ஒன்றலா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான் தன்னைக்

கள் ஏந்து கொன்றை தூய்க்காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த

வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (6.38) அப்பர் பிரான் பெருமானை செம்பொற்சோதி என்று குறிப்பிடுகின்றார். திருவையாறு இறைவனுக்கு சோதீஸ்வரர் என்ற திருநாமமும் உள்ளது. இந்த திருநாமத்திற்கு பொருந்துவது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்ததை தலபுராணம் குறிப்பிடுகின்றது. சுசரிதன் என்ற சிறுவனுக்கு இறைவன் சோதி வடிவில் தரிசனம் அளித்ததால் இந்த பெயர் ஏற்பட்டது என்று கூறுவார்கள். இது கர்ண பரம்பரையாக வரும் தகவல் என்பதால் இந்த நிகழ்ச்சி நடந்த காலம் எது என்பது தெரியாது. இந்த பகுதியில் வாழ்ந்து வந்த சுசரிதன் எனும் சிறுவன் சிறுவயதில் தனது தாய் தந்தையரை இழந்து விட்டான். அவனது தாய் இறக்கும் தருவாயில் தனது மகனது தொடையில் தலை வைத்து படுத்துக் கொண்டு இருந்தபோது, மகனிடம் இனிமேல் சிவபெருமான் தான் அவனுக்கு தாயும் தந்தையும் என்று கூறி, சிவத்தலங்கள் பலவும் சென்று தரிசித்து வருமாறு கூறி இறந்துவிட்டார். தாயின் சொற்படி சிவத் தலங்களை தரிசித்து வந்த மைந்தன் ஒரு நாள் திருப்பழனம் வந்தடைந்தான். இறைவனை கண்டு வணங்கிய பின்னர் இந்த தலத்திலே இரவு தங்கி விட்டான். நடு இரவில் யாரோ கதவு தட்டும் ஓசை கேட்கவே சிறுவன் எழுந்து கதவைத் திறந்து பார்த்தான். அவன் எதிரே கன்னங்கரிய உடலுடனும், மடித்த உதடுகளுடனும், அனல் கக்கும் விழிகளுடனும் தோன்றிய காலதேவன், அவனது ஆயுட்காலம் இன்னும் ஐந்து நாட்களில் முடிவு அடையும் என்றும், அதற்கு தயாராக இருக்குமாறும் சொல்லி விட்டு மறைந்து விட்டான். மரணத்தைப் பற்றி கவலைப் படாத சிறுவன், தன்னால் தாய் கூறியவாறு சிவத் தலங்கள் செல்ல முடியாமல் போய் விடுமே என்று வருந்தினான். மறுநாள் காலை பழனத்தாரை கண்டு தொழுது அடி பணிந்து தனது வருத்தத்தை சிறுவன் இறைவனிடம் சொல்லி அழுத போது, இறைவன் சிறுவனை திருவையாறு செல்லுமாறும் அங்கே தான் தோன்றி தக்க சமயத்தில் காப்பதாகவும் சொல்லி அனுப்பினார். அவனுக்கு பல தலங்கள் பிரயாணம் செய்யும் பேற்றை அருளியதால் பழனத்து இறைவனுக்கு பிரயாண நாதேஸ்வரர் என்ற பெயரும், ஆபத்து காலத்தில் உதவுவதாக வாக்கு அளித்தமையால் ஆபத் சகாயேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. இறைவன் கூறியபடி திருவையாறு சென்ற சிறுவன் தெற்கு கோபுர வாயிலில் அமர்ந்து சிவநாமத்தையே சொல்லிக் கொண்டு இருந்தான். முன்னமே கூறியபடி, ஐந்தாவது நாள் இரவு இயமன் சிறுவன் அருகில் வரவே, சிவபிரான் தோன்றி மார்க்கண்டேயனை காப்பாற்றியது போலஇயமனை காலினால் உதைத்து சுசரிதன் பல்லாண்டு காலம் வாழும் வகை அருளினார். ஐயாற்றின் தெற்கு வாயிலில் அமர்ந்துள்ள மூர்த்திக்கு ஆட்கொண்டார் என்ற பெயர் இதனால் ஏற்பட்டது. பழனத்தில் வாக்கு அளித்த பெருமான் தான் ஐயாற்றில் ஆட்கொண்டாராக எழுந்து அருளியிருக்கிறார் என்ற நம்பிக்கை உண்டு. கூற்றுவன் வந்த போது இறைவன் முதலில் சோதி ரூபமாக தோன்றியதால் சோதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது என்பர். கோயிலின் தெற்கு வாயிலின், ஆட்கொண்டார் சன்னதிக்கு எதிரில் ஒரு குழி ஏற்படுத்தி அதில் குங்கிலியம் போடும் பழக்கம் இன்றும் பின்பற்றப்படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். பூ மா ஆ போன்ற ஒரு சில எழுத்துகளைத் தவிர மற்ற எழுத்துக்கள் எந்த பொருளையும் தாராது. அவற்றை உச்சரித்தால், எழுவது ஓசை மட்டுமே. எனவே ஓசை என்ற சொல் மூலம் எழுத்துகளையும். ஒலி என்ற சொல் மூலம் பொருளை உணர்த்தும் எழுத்துகளின் கூட்டாகிய சொற்களையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். எழுத்துகளாகவும், எழுத்துகளின் கூட்டாகிய சொற்களாகவும் இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. தேசம்=உலகம்; தேச விளக்கு=உலகிலுள்ள ஒளிதரும் பொருட்கள் சூரியன், சந்திரன், கோள்கள், மற்றும் விண்மீன்கள். பொருளற்ற எழுத்துகள் எழுப்பும் ஓசையாகவும், பொருள் தரும் சொற்களில் அடங்கியுள்ள எழுத்துகளின் கூட்டமைப்பு எழுப்பும் ஒலியாகவும் நிற்பவன் நீயே என்றும், இந்த உலகினுக்கு ஒப்புவுயர்வற்ற தலைவனாக விளங்குபவன் நீயே என்றும், மலரில் உள்ள நறுமணம் போன்று கண்ணுக்கு தென்படாமல் உலகெங்கும் பரவியுள்ளவன் நீயே என்றும், மலையரசனாகிய இமவானின் மருமகனாக திகழ்பவன் நீயே என்றும், பேசுவதற்கு மிகவும் இனியதாகிய பெருமையை உடையவன் நீயே என்றும், எனது தலைவனாக எனது வேண்டுகோளுக்கு இரங்கி தனது திருவடியை எனது தலை மேல் வைத்தவன் நீயே என்றும், உலகிலுள்ள ஒளி தரும் அனைத்துப் பொருட்களாக (சூரியன் சந்திரன் கோள்கள் விண்மீன்கள்) இருப்பவனும் நீயே என்றும், திருவையாறு தலத்தினை விட்டு அகலாத செம்பொற் சோதியாகிய இறைவனே உன்னை அடியேன் பலவாறாக அழைத்து வணங்குகின்றேன் என்று குறிப்பிட்டு, அப்பர் பிரான் இறைவனை வணங்கும் பாடல்.

ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே

வாச மலரெலாம் ஆனாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே

பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே

தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.44.3) அப்பர் பிரான் பெருமானை, ஒண்சுடர் என்று அழைக்கின்றார். உற்றார்=பிறப்பினால் உறவாக வந்தவர், தந்தை, தாய், அண்ணன், தம்பி, தங்கை, தாத்தா, பாட்டி போன்றவர்கள்; பிறவாத தன்மை உடைய சிவபெருமான் அத்தகைய உறவினர்கள் எவரும் இல்லாதவர் அல்லவா. சிவபெருமானே நீ எனது அபயம் என்று கூறும் அப்பர் பிரானுக்கு, அவர் முதன் முதலில் பெருமானிடம் சரணம் அடைந்ததும், அந்த தருணத்தில் தீவினையாகத் தன்னைப் பற்றிய சூலை நோயினை பெருமான் தீர்த்து அருள் புரிந்ததும் நினைவுக்கு வந்தது போலும். தீவினையைக் கண்டு போக தீர்த்தவன் என்றும் இதே பதிகத்தின் முதல் பாடலிலும், கல்லாதேன் தீவினையைக் கண்டு போகச் செற்றவன் என்றும் இந்த பாடலிலும் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு பிறையாக தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் சரண் அடைந்த சந்திரனைத் தனது சடையில் சூடி அடைக்கலம் அளித்தவனே, முளைத்து வெளிப்படும் கற்பக மரத்தின் தளிரினைப் போன்று என்றும் இளமையாக இருப்பவனே, பிறப்பினால் தனக்கு உறவினராக எவரும் இல்லாததால் உறவின் அடிப்படையில் வேண்டுபவர் வேண்டாதார் என்று எவரும் இல்லாதவனே, உலகினைப் பாதுகாக்கும் பெருமை வாய்ந்த சுடரே, அனைத்து வேதங்கள் மற்றும் கலைகள் ஆகியவற்றை கல்லாமலே அறிந்தவனே, சிவபெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள் எதனையும் கற்காமல் அறிவிலியாக இருந்த அடியேனை தீய வினைகள் சூழ்ந்து இருப்பதைக் கண்டு, என் மேல் இரக்கம் கொண்டு, அந்த தீவினைகளை வென்று நீக்கியவனே, சந்திரன் சூரியன் ஆகிய அனைத்து ஒளிகளுக்கும் மூல காரணமாக திகழும் ஒளியே, சோற்றுத்துறை இறைவனே, சிவபெருமானே, அடியேன் உன்னை சரணடைந்து உனக்கு அடைக்கலப் பொருளாக மாறியுள்ளேன் என்று குறிப்பிட்டு அப்பர் பிரான் பெருமானிடம் சரண் அடையும் பாடல்

முற்றாத பால்மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே

உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண்சுடரே ஓதும் வேதம்

கற்றானே எல்லாக் கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போகச்

செற்றானே திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே சிவனே உன் அபயம் நானே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.46.9) அப்பர் பிரான் பெருமானை, தூண்டாமை சுடர்விடு நற்சோதி என்று கூறுகின்றார். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் வேண்டாமை வேண்டுவதும் இல்லான் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுவது, நமக்கு வேண்டுதல் வேண்டாமை இலான் என்று திருவள்ளுவர் கூறுவது நினைவுக்கு வருகின்றது. அசைவித்தல்=வருத்தம் உறச்செய்தல்; அயர்வு அடையச் செய்தல். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாக விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டவனாகத் திகழும் பெருமானை. பண்டைய நாளில் வேடுவனாகத் தோன்றி வலிமை மிகுந்த அர்ஜுனனைப் போரில் தோற்கடித்து வருத்தமுறச் செய்தவனை, எவரும் தூண்டாமலே சிறந்த ஒளியுடன் திகழ்பவனை, சூலப்படையை உடையவனை, கூற்றுவனின் வாழ்நாள் முடியுமாறு அவனை காலால் உதைத்து மாள்வித்தவனை, மண்ணுலகத்தில் உள்ளவரும் விண்ணுலகத்தில் உள்ளவரும் வணங்கி வழிபடும் தலைவனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை விசயனை முன்னசைவித்த வேடன் தன்னைத்

தூண்டாமை சுடர்விடு நற்சோதி தன்னைச் சூலப் படையானைக் காலன் வாழ்நாள்

மாண்டோட உதை செய்த மைந்தன் தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும்

ஆண்டானை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்துய்ந்தேனே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.1) அப்பர் பிரான், பெருமானை செழுஞ்சுடரே என்று அழைக்கின்றார். எனது உறவு, ஊன், ஊனின் உள்ளம், உள்ளத்தின் கரு, கற்பகம், கண், கண்ணின் கருமணி, மணியாடு பாவாய் என்று சொல்லி, இறைவன் தனக்கு எத்தனை அருமையானவன் என்று அப்பர் பிரான் சொல்லுகின்றார். இவ்வாறு சொல்வதன் மூலம் நாமும் இறைவனை அவ்வளவு அருமையானவனாக கருத வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல். அருவாய வல்வினை=காண்பதற்கு அரிதாகிய வலிய வினைகள். வினைகள் தாமே பிறவிப் பிணிக்கு வித்தாக அமைகின்றன. எனவே வினைகளை நோய் என்று அழைக்கின்றார். நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்ற வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப, தன்னைப் பிணித்துள்ள பிறவிப் பிணிக்கு காரணம் வல்வினைகள் என்பதை தெரிந்து கொண்ட அப்பர் பிரான், வல்வினைகளை நீக்கும் திறன் பெருமான் ஒருவனுக்கே உண்டென்பதால், பிறவிப் பிணியினை நீக்கும் வைத்தியனாகிய பெருமானை, தனது வல்வினைகள் நீக்க வேண்டும் என்று வேண்டுகின்றார். சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைத் தொகைகளின் இயல்பு காரணமாக, நாம் எடுத்துள்ள இந்த பிறவியில் நமக்கு இன்ப துன்பங்கள் நேரிடுகின்றன. நல்வினைகளின் பயனாக நமக்கு செல்வமும் வருகின்றது. அத்தகைய நல்வினையையும் அதனால் வரும் செல்வத்தையும் நாம் நமக்கு அருமையான பொருட்களாக கருதுகின்றோம். எனவே இந்த நல்வினையையும் நல்வினையின் பயனாக வரும் செல்வத்தையும், தான் அருமையாக கருதும் பொருட்களுடன் சேர்த்து அப்பர் பிரான் பட்டியல் இடுகின்றார். திரு=நல்வினை; செழுஞ்சுடர்=ஞானச் சுடர்;

திருவே என் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சோதி மிக்க

உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தினுள்ளே நின்ற

கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணியாடு பாவாய் காவாய்

அருவாய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

கொடிய வலிமை மிகுந்த வல்வினைகள் என்னை வந்து சாரா வண்ணம் காக்க வேண்டும் நல்வினைகள், நல்வினைகளின் பயனாக விளையும் செல்வம், தேன், எனது உருவம், எனது உறவுகள், எனது உடல், எனது உடலினுள்ளே உள்ள உள்ளம், எனது உள்ளத்தினுள்ளே இருக்கும் உணர்வுகள், வேண்டியதை ஈயும் கற்பக மரம், எனது கண், கண்ணின் கருமணி, கருமணியின் பாவை எனப்படும் பொருட்கள் போன்று எனக்கு மிகவும் அரியவனும், வானோர்க்கு ஆற்றலை அருளும் ஞானமாக உள்ளவனும், அடியார்களுக்கு காட்சி தரும் பெரிய சுடராக உள்ளவனும், நீர்வளம் மிகுந்து குளிர்ந்த ஆவடு துறை தலத்தில் உறைபவனாகவும் ஆக இருக்கும் அமரர்கள் தலைவனே, நீ தான் கண்ணால் காண்பதற்கு மிகவும் அரியதாக உள்ள, என்னை பீடித்துள்ள பிறவிப் பிணிக்கு காரணமாக இருக்கும் வலிமை வாய்ந்த வினைகளை நீக்க வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.56.7) அப்பர் பிரான், பெருமானை சுடரே என்று அழைக்கின்றார். தொழில்=செய்கை;தன்னை வணங்கும் அடியார்களின் தன்மையை உணர்ந்து, அந்த தன்மைக்கு ஏற்ப அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை படைத்த இறைவனின் தன்மை தொழில் நோக்கி ஆளும் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. வஞ்சனை உடைய மனத்துடன் தன்னைத் தொழும் அடியார்களை இனம் கண்டுகொண்டு நாணி நிற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் கூறுவது (5.90.9) நமது நினைவுக்கு வருகின்றது. ஏழு உலகங்களையும் கடந்தவனே, உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவனே, உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பவனே, பண்டைய பல பிறவிகளில் ஈட்டிய வினைகளை முற்றிலும் அறுக்கும் வல்லமை வாய்ந்தவனே, மண்ணுலகம் மற்றும் விண்ணுலகத்தில் இருப்பவர்களால் புகழ்ந்து வணங்கப் படுபவனே, அடியார்கள் புகழ்ந்து பாடும் திருத்தலங்களில் உறைபவனே, மனிதர்கள் செய்யும் வழிபாடுகளின் உண்மைத் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு அருள் புரியும் பண்பினை உடையவனே, உட்கொண்ட கொடிய நஞ்சு வயிற்றுக்கு செல்லாமல் கழுத்திலே தேக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவனே, கயிலை மலையினை இருப்பிடமாக உடையவனே, உன்னை பலமுறையும் நான் போற்றுகின்றேன் என்று அப்பர் பிரான் பெருமானை போற்றும் பாடல்.

அண்டம் ஏழு அன்று கடந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி

பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப் படுவாய் போற்றி

தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி

கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.52.3) சுந்தரர், பெருமானை தூண்டா விளக்கின் நற்சோதீ என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில், சுந்தரர், தான் ஆலங்காடனின் அடியார்க்கு அடியேன் ஆவேன் என்று கூறுகின்றார். திருத்தொண்டத் தொகை பதிகத்தின் பாடல்களில், பல அடியார்களை குறிப்பிடும் சுந்தரர், அவர்களின் அடியார்க்கும் தான் அடியேன் என்று குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. திரிபுரத்து அரக்கர்கள் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்த புண்ணியன் என்று குறிப்பிடுகின்றார். பறக்கும் கோட்டைகளில் அமர்ந்து கொண்டு பல இடங்களுக்கும் சென்று, எண்ணற்ற உயிர்களுக்கு, திரிபுரத்து அரக்கர்கள் தீங்கு செய்து கொண்டிருந்ததை பெருமான் தடுத்த செயல் என்பதால், புண்ணியம் என்று சொல்லப் படுகின்றது. ஆண்டான் என்பதன் கடைக்குறை ஆண்டா என்ற சொல், ஆண்டவனே என்று பொருள். உயிர்களை இன்ப துன்பங்களை நுகர வைத்து, மேன்மேலும் ஆகாமிய வினைகளை கூட்டுவித்து, இனியும் அந்த உயிர்கள் எடுக்கவிருக்கும் பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால், பாண்டாழ் வினைகள் என்று குறிப்பிடுகின்றார்.

தூண்டா. விளக்கின் நற்சோதீ தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்

பூண்டாய் எலும்பைப் புரம் மூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே

பாண்டாழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய

ஆண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே

திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.57.6) அப்பர் பிரான், பெருமானை தெய்வச் சுடர் என்று குறிப்பிடுகின்றார். கரியான்=திருமால்; உணர்வு-கருத்து; பெருமானின் கருத்தறிந்து செயல்படும் இடப வாகனம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஏசுமா=ஏசும் வண்ணம்; பிறர் ஏசுவதையும் பொருட்படுத்தாமல் இறைவன் பலி ஏற்கின்றான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உயிர்கள் தங்களது மலங்களை பிச்சையாக இட்டு உய்யும் பொருட்டு, பெருமான் பலி ஏற்பதால், பிறரது இகழ்ச்சிகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பலி ஏற்கும் அவனது கருணைச் செயல் இங்கே உணர்த்தப் படுகின்றது. அடக்கம்=நுண்ணிய வடிவம்; அனைத்து உலகங்களுக்கும் உரிமை உடையவனே, உனது கருத்தினை அறிந்து செயல் படும் இடபத்தை வாகனமாக உடையவனே, தெய்வீகம் நிறைந்த சுடராக இருப்பவனே, பிறர் ஏசுவதையும் பொருட்படுத்தாமல் மண்டையோட்டினை ஏந்தி பிச்சை எடுப்பவனே, தேவர்களும் அணுகுவதற்கு மிகவும் அரியவனே, ஞானமே வடிவமாக உள்ளவனே, நுண்ணிய வடிவமாக உள்ளவனே, திருமாலுக்கு பண்டைய நாளில் சக்கரப்படை அளித்தவனே, கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாக கொண்டவனே, உன்னை நான் பலமுறையும் போற்றி வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான் பெருமானை போற்றும் பாடல்.

உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வென்னும் ஊர்வது உடையாய் போற்றி

எரியாய தெய்வச் சுடரே போற்றி ஏசுமாம் உண்டி உடையாய் போற்றி

அரியாய் அமரர்கட்கு எல்லாம் போற்றி அறிவே அடக்கம் உடையாய் போற்றி

கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி

கன்றாப்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.61.5) அப்பர் பிரான் பெருமானை, நுந்தாத ஒண்சுடரே என்று அழைக்கின்றார். வேலை=கடல்; விருத்தன்=முதியவன், இங்கே அனைத்து உயிர்களுக்கும் முந்தியவன்; நுந்தாத=தூண்ட வேண்டிய அவசியம் இல்லாத; பொருத்தன்=உறவினன்; அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியதால், அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக இருப்பவனே, பாற்கடலிலிருந்து எழுந்த விடத்தை உண்டு அதனை கழுத்தினில் தேக்கியவனே, விரிந்த சடை மேல் ஒற்றைப் பிறையுடன் தேய்ந்து அழிந்த நிலையில் வந்த சந்திரனைச் சூடிக்கொண்டு அபயம் அளித்து சந்திரனை வாழவைத்த ஒப்பற்ற ஒருவனே, உமையம்மையின் கணவனே, உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவனே, தூண்டவேண்டிய அவசியம் இல்லாமல் எப்போதும் பிரகாசமாக ஒளிவீசும் சுடரே, அனைத்து உயிர்களுக்கும் உறவினனாக இணைந்து இருப்பவனே, என்று பலவாறு இறைவனைக் கூப்பிட்டு தங்களது ஐந்து புலன்களையும் உள்ளே அடக்கி, வேறு எந்த விதமான பற்றும் இல்லாமல் இறைவனையே தியானித்த வண்ணம், அவனையே நினைத்து உள்ளம் கசிந்து தொழும் அடியார்களின் மனதினில், கன்றாப்பூர் தலத்தில் கன்றுக்குட்டி கட்டும் முளையில் தோன்றிய சிவபெருமான் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரிசடை மேல் வெண் திங்கள் விளங்கச் சூடும்

ஒருத்தனே உமை கணவா உலக மூர்த்தீ நுந்தாத ஒண்சுடரே அடியார் தங்கள்

பொருத்தனே என்றென்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்தடிக்கிப் புலம்பி நோக்கிக்

கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (6.61.8) அப்பர் பிரான், பெருமானை பரஞ்சுடரே என்று அழைத்து தினமும் புகழும் அடியார்களின் நெஞ்சினுள்ளே பெருமான் உறைகின்றார் என்று கூறுகின்றார். திருதி=மன உறுதி; ஐவர்=ஐம்பொறிகள்; திகையாமல்=மனம் கலங்காமல் சுருதி=மறை; துயக்கு=மயக்கம்; கருதி=தியானித்து; ஐம்புலன்கள் சேட்டை செய்து உயிரினுக்கு கேடு விளைவிக்காத வண்ணம் அவைகளை அடக்கி காவலில் வைத்து, மனதினில் கலக்கம் ஏதுமின்றி சிவாயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தை தியானிப்பதன் விளைவாக, சிந்தனையில் ஏற்படும் மயக்கத்தை அறவே நீக்கி, துன்பக்கடல் என்று கருதப்படும் பிறப்பிறப்பு சுழற்சிக் கடலின் வெள்ளத்திலிருந்து முக்தி நிலை ஆகிய கரையேறி என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பதே தங்களது வாழ்வின் நோக்கம் என்று கருதும் அடியார்கள், சூரியனின் பற்களை பறித்தவனே, பாவங்களை நாசம் செய்து போக்குபவனே, மென்மையான ஒளிச்சுடரே, என்று நாளும் இறைவனைத் தொழுது வணங்குகின்றார்கள். அத்தகைய அடியார்களின் மனதினில், கன்றாப்பூர் தலத்தில் கன்றுக்குட்டி கட்டும் முளையில் தோன்றிய சிவபெருமான் உறைகின்றான் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

திருதிமையால் ஐவரையும் காவல் ஏவித் திகையாதே சிவாயநம என்னும் சிந்தைச்

சுருதி தனைத் துயக்கு அறுத்துத் துன்ப வெள்ளக் கடல் நீந்திக் கரையேறும் கருத்தே மிக்குப்

பரிதி தனைப் பற்பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றென்று பரவி நாளும்

கருதி மிகத் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (6.95.4) அப்பர் பிரான், பெருமானை, நலம் தரும் சுடரே என்று அழைக்கின்றார். நற்பதத்தார்=ஞானிகள்; சிவநெறியில் நிற்கும் ஞானிகள், நற்பதமாகிய வீடுபேற்றினை அடைய தகுதி படைத்தவர். சொற்பதம்=வேதாந்தம். இறைவனை தான் அனுபவித்த நிலையை இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். நிற்பது ஒத்து நிலையிலா நெஞ்சம்=ஒரு பொருளில் நிலையாக நிலைத்து நிற்பது போன்று பாவனை காட்டி, எந்த பொருளிலும் நிலையில்லாத நெஞ்சம் என்று அலை பாயும் மனித நெஞ்சத்தின் இயல்பினைக் கூறுகின்றார். நிலாவாத புலால் உடம்பு என்று உடலின் நிலையில்லாத தன்மையும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு தகுதியற்ற உடலிலும் நெஞ்சிலும் சிவபெருமான்புகுந்து நின்ற கருணை அப்பர் பிரானால் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. வீடுபேற்றினை அடையும் தகுதி படைத்த ஞானிகளுக்கு, வீடுபேறாய் (முக்தி) இருக்கும் இறைவனே, ஞான வடிவினனே, நான்கு வேதங்களின் பொருளையும் நன்றாக உணர்ந்து, தெளிவைடைந்து, அந்த வேதங்களின் பொருட்களையும் கடந்து அப்பால் நிற்கும் அபரமுக்தர்களின் சொற்களையும் கடந்து நிற்கும் தன்மை படைத்தவனே, எந்த ஒரு பொருளிலும் நிலைத்து நில்லாமல், ஆனால் உறுதியாக இருப்பது போல் தோன்றும் எனது நெஞ்சினுள்ளும், புலால் நாற்றம் வீசும் நிலையிலாத எனது உடலினுள்ளும் புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் அளிக்கும் கருணையாளனே, பொன்னும் மாணிக்கமும் ஒத்த நிறத்தை உடைய கடவுளே, நான் உன்னை வெளியே விடுவதாக இல்லை என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ நலஞ்சுடரே நால்வேதத்து அப்பால் நின்ற

சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை

நிற்பது ஒத்து நிலையிலா நெஞ்சம் தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற

கற்பகமே யான் உன்னை விடுவேன் அல்லேன் கனகமாமணி நிறத்து எம் கடவுளானே

அற்புதமான பழைய ஆவணம் காட்டி, தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு, தான் கயிலாயத்தில் அணுக்கத் தொண்டனாக ஆலால சுந்தரனாக பணியாற்றிய போது சமர்ப்பித்த விண்ணப்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு, திருவெண்ணெய் நல்லூரில் நடைபெறவிருந்த தனது திருமணத்தை தடுத்த பெருமானை, நொந்தா ஒண்சுடரே என்று காஞ்சி திருமேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (7.21.01) சுந்தரர் குறிப்பிடுகின்றார். நொந்தா ஒண்சுடர்=பிரகாசம் குன்றாத விளக்கு; தனது மனதினில் புகுந்த பெருமான், என்றும் தன்னை விட்டு நீங்காது இருப்பதாகவும், தனது தந்தையாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தான் புகழமாட்டேன் என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் சுந்தரர் பெருமானை ஒண்சுடரே என்று அழைக்கின்றார்.

நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்து இருந்தேன்

வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற

சிந்தாய் எந்தை பிரான் திருமேற்றளி உறையும்

எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.24.5) சுந்தரர், பெருமானை பரமாய பரஞ்சுடரே என்று அழைக்கின்றார். கருத்து=அறிவு;ஏழுலகங்களிலும் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் அறிவாக இருப்பவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். அருத்து அமுதம்= அமுதத்தை விரும்புவது போன்று மிகவும் விரும்பும் பொருளாக இருப்பவன்; பரம்=மேலானவன்;

கண்ணாய் ஏழுலகும் கருத்தாய அருத்து அமுதமுமாய்ப்

பண்ணார் இன் தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே

மண்ணார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே

அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.26.1) சுந்தரர், பெருமானை செழுஞ்சுடரே என்று அழைக்கின்றார். செண்டு என்பது குதிரையின் நடையைக் குறிக்கும். குதிரை போன்று மிகவும் வேகமாக நடக்கும் இடபம் என்று குறிப்பிடுகின்றார். செழுஞ்சுடர்=செழுமையான ஒளி; வண்டுகளால் மொய்க்கப்படும் வண்ணம், நறுமணம் நிறைந்த கூந்தல் உடையவள் பிராட்டி என்று உணர்த்தப் படுகின்றது. பெருமானைக் காணும் எவரும் அவர் பால் நீங்காத அன்பு கொள்வார்கள் என்றும் சொல்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் சுந்தரர், பெருமானை பலவாறாக அழைத்து,பெருமானே உன்னை அல்லால் வேறு எவரையும் அறிந்து ஏத்த மாட்டேனே என்று கூறுகின்றார்.

செண்டாடும் விடையாய் சிவனே என் செழுஞ்சுடரே

வண்டாரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே

கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய்

அண்டா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே

திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.28.8) சுந்தரர், பெருமானை, செழுஞ்சுடரே என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் ஒன்பது பாடல்களையும் பெருமானைத் தவிர்த்துத் தனக்கோர் துணை வேறெவரும் இல்லை என்று சுந்தரர் முடிக்கின்றார். வேறா உன்னடியேன் என்ற தொடருக்கு, பெருமானே, உனக்கு அடிமையாக உள்ள தான் வேறு எவரையும் தெய்வமாக நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் சொல்வதாக பொருள் கொள்ள வேண்டும். காறார்= கருமை நிறம் பொருந்திய கழுத்து; மருப்பு=கொம்பு; பன்றியின் வெண்மை பல்: ஆறார்=ஆறு தங்கும் சடையினை உடையவன்;இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் பெருமானை பரஞ்சுடரே என்று அழைக்கின்றார்.

வேறா உன்னடியேன் விளங்கும் குழைக் காதுடையாய்

தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழுஞ்சுடரே

காறார் வெண் மருப்பா கடவூர் திருவீரட்டத்துள்

ஆறார் செஞ்சடையாய் எனக்கார் துணை நீ அலதே

வடமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பத்து பாடல்கள் அனைத்திலும், சுந்தரர் பெருமானை பாசுபதா பரஞ்சுடரே என்று அழைக்கின்றார். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.69.1) சுந்தரர், பெருமானின் திருவடிகளை செல்வம் என்றும் உண்மையான மெய்ப்பொருள் என்றும் குறிப்பிடுகின்றார். உறாமைகள்=புகல் அடையாமல் இருத்தல்; உறைப்பன்= மிடுக்குடன் இருத்தல்; பெருமானின் திருவடிகளைச் சார்ந்து இருப்பதால், வேறு ஒருவரையும், வேறு எந்த தெய்வத்தையும் அடைக்கலம் என்று நாடாமல், அவ்வாறு இருக்கும் நிலையினால் மிடுக்காக தான் திரிவதாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள் என்று எண்ணி

ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்

முருகமர் சோலை சூழ் திருமுல்லைவாயிலாய் வாயினால் உன்னைப்

பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

திருச்சதகம் பதிகத்தின் பாடலில் (8.5.26) மணிவாசக அடிகளார் பெருமானை தனிச்சுடர் என்று அழைக்கின்றார். தனி=ஒப்பற்ற; பெருமான் தன்னுள்ளே புகுந்து தன்னை ஆட்கொண்டதால், தன்னிடம் ஏற்பட்ட மாற்றத்தை அடிகளார் உணர்த்தும் பாடல். ஆர=நிறைந்த; தனது ஐந்து புலன்களிலும் இறைவன் நிறைவாக நின்ற தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. தனது நினைப்பு எப்போதும் சிவபெருமானைப் பற்றியதாகவும், தனது கண்கள் பெருமானின் திருப்பாதங்கள் தவிர்த்து வேறெதையும் காணாத தன்மையில் இருப்பதையும், தனது கைகள் பெருமானின் திருவடிகளையே வணங்குவதாகவும், தனது சொற்கள் பெருமானின் புகழினையே உரைப்பதாகவும் இருக்கும் நிலைக்கும், பெருமான் தன்னை ஆட்கொண்டதே காரணம் என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். இது பெரிய மாயம் என்று வியப்பதையும் நாம் உணரலாம். இரண்டும்=இம்மை மற்றும் மறுமை; இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் இன்பம் காண இயலாத கீழ்மைத் தன்மையில் இருக்கும் தன்னை, பெருமான் மேற்கண்டவாறு ஆட்கொண்டு அருள் புரிந்ததை நினைத்து மனம் நெகிழும் பாடல்.

சிந்தனை நின் தனக்காக்கி நாயினேன் தன் கண் இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி

வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குன் மணி வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர

வந்தனை ஆட்கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்

தந்தனை செந்தாமரைக் காடு அனைய மேனித் தனிச்சுடரே இரண்டும் இலித் தமியனேற்கே

திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் பாடலில் (8.11.4), மணிவாசக அடிகளார் பெருமானை, பரஞ்சோதி என்று அழைக்கின்றார். பவமாயம்=பல மாயங்கள் செய்து உயிரினைத் தொடர்ந்து தனது பிடியில் வைத்திருக்கும் பிறவிகள். பிறப்புச் சங்கிலியிலிருந்து தன்னை விடுவித்து தன்னை ஆட்கொண்ட பெருமானை பவமாயம் காத்தென்னை ஆட்கொண்ட பரஞ்சோதி என்று இந்த பாடலில் அடிகளார் அழைக்கின்றார். வீணான தேவர்களின் கீழான நெறியில் சென்று அழுந்தாதபடி, பிறப்பால் உண்டாய வஞ்சனையிலிருந்து தன்னை காப்பாற்றி ஆண்ட, மேலான ஒளிவடிவினனாகிய சிவபெருமான், என்றும் புதியதாக இருக்கும் சிவஞானத்தை அருளியுள்ளான். அந்த சிவஞானம் உணர்த்தும் வண்ணம், யான் மற்றும் எனது எனப்படும் உணர்வுகளை முற்றிலும் ஒழித்து, சிவமாகவே மாறுவோம் என்று தெள்ளேணம் கொட்டுவோம் என்று கூறுகின்றார். இறைவனின் பெருமையை உணர்ந்து, இறைவனை வழிபட்டு உய்யும் வழியினை நாடாது, தேவலோகம் தருகின்ற பலவிதமான போகங்களில் ஆழ்ந்து, பிறவியை வீணாக கழிப்பதால், அவமாய தேவர்கள் என்று குறிப்பிடுகின்றார் அவர்களைப் போன்று, பொறிகளால் விளையும் சிற்றின்பங்களில் ஆழ்ந்து, பிறவியை வீணாக கழிக்காமல், நாம் இருக்க வேண்டும் என்ற அறிவுரை இங்கே சொல்லப் படுகின்றது. .

அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே

பவமாயம் காத்து என்னை ஆண்டு கொண்ட பரஞ்சோதி

நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து

சிவமானவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ ;

திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் மணிவாசக அடிகளார், பெருமானை, ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே என்று அழைக்கின்றார். இந்த பாடலில் கோதிலா அமுது என்று குறிப்பிட்டு மணிவாசகர் அமுதமும் குறை உடையது என்று நமக்கு உணர்த்துகின்றார். அமுதம் உண்ட தேவர்கள் எவரும் இறப்பிலிருந்து தப்பிக்கவில்லை: மேலும் அமுதம் தோன்றிய இடம், நஞ்சு தோன்றிய பாற்கடலாகும். ஆனால் சிவபெருமானோ எத்தைகைய குறையும் இல்லாதவர். அதனால் தான் அவரை கோதிலா அமுது என்று இங்கே மணிவாசகர் குறிப்பிடுகின்றார். குறையேதும் இல்லாமல் நிறைவாக இருப்பவனும், குற்றங்கள் இல்லாத அமுதமாக இருப்பவனும், முடிவு என்பது இல்லாமல் எப்போதும் எரியும் சுடராக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான், வேதத்தின் சொற்களாகவும், அந்த சொற்களின் பொருளாகவும் தனது மனதினில் நிலை பெற்று இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார். கரைகள் ஏதும் இல்லாத நீர் பாய்வது போன்று, தங்கு தடை ஏதும் இன்றி தனது சிந்தையில் ஊறும் சிவபெருமான், தனது உடலில் இடம் கொண்டமையால், தான் இனிமேல் இறைவனிடம் ஏதும் வேண்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இங்கே உணர்த்துகின்றார்.

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே

மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே

சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே

இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (8.22.8) மணிவாசக அடிகளார், பெருமானை, தன்னை ஆனந்தத்தில் ஆழ்த்தும் சோதீ என்று அழைக்கின்றார். பதம்=பிரமன் திருமால் இந்திரன் ஆகிய பதவிகள்; பூமியும் பிரமலோகம், இந்திரலோகம் வைகுண்டம் ஆகிய மற்ற உலகங்களையும் ஆகிய அனைத்து இடங்களிலும் எங்கும் பரந்து, மேன்மேலும் படர்கின்ற ஒளியின் பரப்பாக உள்ள பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நீருறு தீ=நீரில் பொருந்தியுள்ள நெருப்பு, வெம்மைத் தன்மை; இந்த தொடருக்கு சுடுநீரில் கலந்துள்ள வெப்பம் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. நீருறு தீ என்பதற்கு கடலில் உள்ள வடவாக்னி தீ என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. பிரளய காலத்தில், கடல் நீர் பொங்கி எழுந்து அனைத்து உலகங்களையும் மூடி அழித்த பின்னர், வடவாக்னி பொங்கி, அந்த பிரளய வெள்ளத்தை வற்றடிக்கின்றது என்றும், பின்னர் அந்த தீ, பலமாக வீசும் காற்றினால் அணைக்கப் படுகின்றது என்றும், அந்த காற்று ஆகாயத்தில் அடங்கி விடுகின்றது என்றும் கூறுவார்கள். கடல் நீரினில் இருக்கும் வடவாக்னி, கடல் நீரினை ஒரு எல்லைக்குள் அடக்கி வைக்க உதவுகின்றது என்றும் அதன் விளைவாகவே கடல் நீர் ஒரு எல்லைக்குள் அடங்கி இருப்பது போன்று, அனைத்து உயிர்களும் அனைத்து பொருட்களும் ஒரு எல்லைக்குள்ளே வைத்திருப்பவன் இறைவன் என்றும் சொல்லப் படுகின்றது. பெருமானின் அருள் வெள்ளத்தில் சிவானந்தத் தேன் வெளிப்படுவதாகவும் அடிகளார் கூறுகின்றார். இறுதியாக பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தான் உறவாக கருதுவதில்லை எவரையும் அயலவராகவும் கருதுவதில்லை என்று உணர்த்தும் அடிகளார், தான் சிவமயமானதாகவும் அவ்வாறு தன்னை மாற்றியவர் பெருமான் தான் என்றும் குறிப்பிடுகின்றார்.

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்தும் பரந்ததோர் படரொளிப் பரப்பே

நீருறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின்னருள் வெள்ளச்

சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே

ஆருறவு எனக்கு இங்கு ஆர் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதீ

திருவாசகம் அருட்பத்து பதிகத்தின் முதல் பாடலில் (8.29.1) மணிவாசக அடிகளார், பெருமானை, சோதியே, சுடரே, சூழொளி விளக்கே என்று அழைக்கின்றார். நாம் துன்பங்களால் வருந்தி துயரடைந்து இருக்கும் நிலையில், நமது துயரத்தை துடைக்காவிடினும் பரவாயில்லை, எவரேனும் ஆதரவாக ஒரு வார்த்தை பேச மாட்டாரா என்று நமது மனம் துடிப்பது இயற்கை. அவ்வாறு தான் மணிவாசகரும் ஏங்குகின்றார். ஆனால் நமக்கும் அவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம். நாம், நமக்கு நெருங்கிய உறவினரோ அல்லது நண்பரோ, நம்மிடை வந்து நமது உடல் நிலை எவ்வாறு உள்ளது, மனநிலை எவ்வாறு உள்ளது என்று கேட்டால், நாம் சற்று ஆறுதல் அடைவோம். ஆனால் மணிவாசகரோ இறைவன் அவ்வாறு கேட்க மாட்டாரா என்று ஏங்குகின்றார். அந்த ஏக்கம் தான் இந்த பதிகத்தின் பாடல்களாக வெளிப்படுகின்றன. ஏன் அவ்வாறு மணிவாசகர் ஆசைப் படுகின்றார். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள், நம்மைத் தேற்றும் முகமாக நம்மை விசாரித்தாலும், பெரும்பாலும் அவர்களுக்கு நமது வருத்தத்தைத் தீர்க்கும் ஆற்றல் இல்லாமல் போகலாம் ஆனால் இறைவனோ நமது துன்பங்கள் அனைத்தையும் களையும் ஆற்றல் படைத்தவர். அத்தகைய ஆற்றல் உடைய ஒருவர் நம் மீது அக்கறை கொண்டு விசாரிக்க முன்வருகின்றார் என்றால், அவர் அத்துடன் நிறுத்த மாட்டார் அல்லவா. அதனால் தான், இறைவன் அவ்வாறு விசாரித்தாலே போதும் என்று திருப்தி அடைந்தவராக, இறைவனே அதெந்துவே என்று கேட்டு அருள் புரிய மாட்டாயா என்று பதிகத்தின் பாடல் தோறும் அடிகளார் இறைஞ்சுகின்றார். அது என்று நமது வருத்தத்திற்கு காரணம். எந்து எப்படி உள்ளது, காரணம் என்ன என்பதாகும். தான் இறைவனை அழைக்கும் போது வாளா இராமல் ஏன் என்றாவது கேள் என்று இறைவனிடம் அடிகளார் வேண்டுகின்றார். ஆதரித்து=விரும்பி, நீ ஒருவனே எனது பற்றுக்கோடு என்ற எண்ணத்துடன் அழைத்து. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானை தான் ஆதரித்து அழைப்பதாக அடிகளார் கூறுகின்றார்.

சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரி குழற் பணைமுலை மடந்தை

பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மாலறியா

நீதியே செல்வப் திருபெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்

ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

இந்த பாடலின் முதல் அடியில் சோதி என்றும் சுடர் என்றும் விளக்கு என்றும் இறைவனை அழைத்து பாடலை தொடங்குகின்றார். மூன்றும் ஒளி வடிவமாக இருக்கும் இறைவனை குறிப்பிடுவது போல் தோன்றினாலும் இந்த சொற்கள் உணர்த்தும் பொருள் சற்று மாறுபட்டவை என்று மிகவும் அழகாக அந்த வேறுபாட்டினை உணர்த்தி, முனைவர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் திருவாசக சிந்தனைகள் என்ற நூலில் விளக்கம் அளிக்கின்றார். அந்த விளக்கத்தை சற்று சுருக்கமாக நாம் இங்கே காண்போம். சோதி என்பது, பற்றுக்கோடு ஏதும் இல்லாமல், உருவோ வடிவமோ இல்லாமல், எங்கும் நிறைந்ததாக இருக்கும் பேரொளியாகும். சுடர் என்பது ஏதோ ஒன்றைப் பற்றி நின்று எரியும் தீப்பிழம்பினை நினைவூட்டுகின்றது. சூழொளி விளக்கு என்றால், சிறிய திரியை பற்றுக்கோடாகக் கொண்டு ஒரு விளக்கினுள் அமர்ந்து எரியும் சிறிய ஒளிப் பிழம்பினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. நாமம் ரூபம் அற்றதாக எங்கும் பரந்து நிற்கும் பரம்பொருளை எந்தவிதமான பற்றுக்கோடும் இல்லாமல் தனித்து நிற்கும் பரம்பொருளை, எவ்வாறு குறிப்பிட்டு உணர்த்துவது. அதனால் தான், எந்தவிதமான அடைமொழியும் இல்லாமல் சோதியே என்று அழைத்து, பரம்பொருளின் வியாபகத் தன்மையை அடிகளார் முதலில் உணர்த்துகின்றார். சுடர் என்ற சொல் மூலம், சக்தியோடு சேர்ந்துள்ள இறைவனின் தன்மை உணர்த்தப் படுகின்றது. பற்றி எரியும் திரியில் ஒளியைக் காணும் நாம், திரியைப் பற்றி நினைப்பதில்லை, திரியும் நமது கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் திரி தனித்து இயங்காமல் சுடரினுள் அடங்கி விடுவதை உணர்கின்றோம். சூழொளி விளக்கு, பற்றி எரியும் திரிக்கும் அந்த திரியின் மூலம் எரிகின்ற நெய்யினையும் தாங்கி நிற்கும் விளக்கினை உணர்த்துவது போன்று, அருவுருவத் திருமேனியாகிய இலிங்கத் திருமேனியை நமக்கு உணர்த்துகின்றது. இலிங்கத் திருமேனியை நாம் காணும்போது அதனுள் இருக்கும் சோதியை நாம் உணர்வதில்லை. அந்த சோதியை உணரும் அடியார்கள் இலிங்கத் திருமேனியை காண்பதில்லை. மரத்தை காணும் தச்சன் யானையைக் காண்பதில்லை, யானையைக் காணும் குழந்தை மரத்தைக் காண்பதில்லை என்ற திருமூலர் வாக்கினுக்கு ஏற்ப, சோதியைக் காணும் அடியார்கள் இலிங்கத்தைக் காண்பதில்லை; இலிங்கத்தைக் காணும் அடியார்கள் சோதியை உணர்வதில்லை. சர்வ வியாபியாக இருக்கும் இறைவன், நாம் வழிபடும் வண்ணம் இலிங்கத் திருமேனியுடன் பல தலங்களில் காட்சி தருவது போன்று, எங்கும் நிறைந்து காணப்படும் இறைவன் குருந்த மரத்தின் நிழலில் மானிடச் சட்டை தாங்கி வந்து தனக்கு அருள் புரிந்ததையும் அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இலிங்கத் திருமேனியைக் காணும் நாம், சோதியைக் காண்பதில்லை; ஆனால் மானிடச் சட்டை தாங்கி வந்த குருநாதரைக் காணும் அடிகளார், அவ்வாறு வந்து தனக்கு அருள் புரிந்தவர், பரம்பொருள் என்பதை உடனே புரிந்து கொள்கின்றார். அந்த உண்மையைத் தான் மடந்தை பாதியே, பரனே, பால் கொள் வெண்ணீற்றாய், மாலும் பிரமனும் அறியாத நீதியே, நிறை மலர்க் குருந்தமே என்று குறிப்பிடுகின்றார்.

திருவாசகம் பிரார்த்தனைப் பத்து பதிகத்தின் பாடலில் (8.32.4) மணிவாசக அடிகளார், பெருமானை, தூண்டா விளக்கின் சுடரனையாய் என்று அழைக்கின்றார். வேண்டும் என்ற சொல் விருப்பத்தையும், அத்தகைய விருப்பம் இன்றியமையாத தன்மையில் இருப்பதையும் குறிப்பிடுகின்றது. அடியார்களுடன் தன்னை இறைவன் கூட்டுவித்தது, அவனது கருணையால் விளைந்த செயலே அன்றி, தனது தகுதியால் அடைந்தது அல்ல என்பதை உணர்த்தும் அடிகளார், பெருமான் தனது இடர்களைக் களைந்து ஆட்கொண்டான் என்றும் கூறுகின்றார். மேவுதல்=பொருந்துதல்; வேண்டாது= பயனற்ற ஆசைகள், உயிருக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத உலகப் பொருட்களின் மீது எழுகின்ற ஆசை, விரும்பத் தகாத ஆசை; இறைவனின் அருளால் தான், அத்தகைய ஆசையினை நீக்கிக் கொள்ள முடியும் என்பதால், இறைவனது உதவியை அடிகளார் வேண்டுகின்றார். தூண்டா விளக்கு என்ற ஒன்று உலகினில் இல்லை என்பதை நாம் அறிவோம். முயற்கொம்பு என்பது போல, இல்பொருள் உவமை. இத்தகைய இல்பொருள் உவமை மூலம், பெருமானின் சிறப்பு உணர்த்தப் படுகின்றது.

வேண்டும்வேண்டும் மெய்யடியார் உள்ளே விரும்பி எனை அருளால்

ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அருமா மணிமுத்தே

தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாம் கொல்

வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே

திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் பாடலில் (8.37.7), மணிவாசக அடிகளார், பெருமானை, தேசுடை விளக்கு என்றும் செழுஞ்சுடர் மூர்த்தி என்றும் அழைக்கின்றார். நமது பற்றுகளை அறுத்துக் கொள்வதற்கும் பற்றற்றவனாகத் திகழும் பரமனைப் பற்றிக் கொள்வதற்கும் அவனது அருள் தேவைப் படுகின்றது என்று மணிவாசக அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். தேசு=தேஜஸ்; சிறந்த ஒளி; செழுஞ்சுடர்=மாசற்ற சிறந்த சோதி; சிவானந்தத் தேனை வழங்கும் திருவடிகள் என்பதை குறிப்பிட, பூங்கழல் என்று கூறுகின்றார் போலும்.

பாசவேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமாறு அடியனேற்கு அருளிப்

பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே

தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே

ஈசனே உன்னை சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

பிடித்தபத்து பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (8.37.5) மணிவாசகர் பெருமானை, செழுஞ்சுடர் மூர்த்தி என்றும் ஒப்பு உனக்கில்லா ஒருவனே என்றும் அழைக்கின்றார். அழகு, ஆற்றல், உடைமை, பெருமை, பண்பு ஆகிய தன்மைகளில் ஒன்றுக்கொன்று சமமாக உள்ளவற்றை ஒப்பிட்டு ஒன்றை ஒன்று ஒத்துள்ளது என்று கூறுவது வழக்கம். மேற்கூறிய இந்த அளவுகோல்கள் அனைத்தும் மனம் முதலிய கருவி கரணங்களால் அறியப்பட்டு ஒப்பிடப் படுகின்றன. இறைவனோ கருவி கரணங்களைக் கடந்து அறிவு பூர்வமாக அல்லாமல், உணர்ச்சியின் வழியாக உணரப்படும் இன்ப வடிவினன். எனவே அவனை அனுபவித்து உணர்ந்த அடிகளார், பெருமானுக்கு ஒப்பு என்று எவரும், எந்த பொருளும் இல்லை என்பதை உணர்ந்த தன்மையை, பெருமான் ஒருவர் தான் பெருமானுக்கு ஒப்பாக இருக்க முடியும் என்பதை தான் உணர்ந்த தன்மையை, இங்கே ஒப்பு உனக்கில்லா ஒருவன் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். எய்ப்பு=இளைத்த காலம், செல்வத்தில் இளைத்து வறுமையில் உழலும் காலம். வறுமையில் வாடும் ஒருவன், தனக்கு ஒரு பொற்காசு கிடைத்தால், எவ்வாறு அந்த காசினை கெட்டியாகப் பற்றிக் கொண்டு பாதுகாக்கின்றானோ. அந்த தன்மையில் தானும், கிடைத்தற்கரிய பெருமானை இறுகப் பற்றிக் கொண்டு இருப்பதாக அடிகளார் உணர்த்துகின்றார். எய்ப்பு என்ற சொல்லுக்கு கருவி கரணங்கள் மனம் உள்ளம் ஆகிய அனைத்தும் செயலிழந்து, இனி உய்வதற்கு வழியே இல்லை என்ற நிலை அடைந்திருந்த தருணத்தில், தன்னெதிரே தோன்றிய இறைவனை, உறுதியாக பற்றிக் கொண்டதையே அடிகளார் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. மெய்ப்பதம்=எப்போதும் உண்மையாக எக்காலத்திலும் நிலையாக நிற்கும் மெய்ப்பொருளாகிய இறைவன்; வீறு=பெருமை, தகுதி; வீறிலி=பெருமை, தகுதி அற்றவன்; உண்மையான மெய்ப்பொருளை புரிந்து கொள்வதற்கு தனியான ஞானம் வேண்டும். அத்தகைய மெய்ப்பொருளை உணர்ந்த பின்னர், அதனை அடைய முயற்சி செய்வதற்கும் தனித் திறமை வேண்டும். அத்தகைய தன்மைகள் இல்லாதவன் என்று தன்னைக் குறிப்பிட்டு வீறிலி என்று கூறுகின்றார். அத்தகைய தன்மைகள் ஏதும் இல்லாதிருந்த போதிலும், தன் பால் கருணை வைத்து இறைவன் அருள் புரிந்ததற்கு காரணம் அவனது அன்பே என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றார். விழுமிய=சிறந்த;

ஒப்பு உனக்கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே

மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமியது அளித்ததோர் அன்பே

செப்புதற்கு அரிய செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெருமானே

எய்ப்பிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே

திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் கடைப் பாடலிலும் (8.37.10) மணிவாசகர் தன்னை எளியையாய் ஆண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார். புரை=துளை; புரைபுரை=அனைத்துத் துளைகளும்; சிவானந்தம் தனது எலும்புத் துளைகள் அனைத்திலும் புகுந்து இன்ப ஊற்று பெருக்கெடுக்கும் வண்ணம் மாற்றியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், பெருமானைத் தான் சிக்கெனப் பிடித்ததாக அடிகளார் குறிப்பிடுகின்றார். பெருமான் தானே விரும்பினால் அன்றி எவரது பிடியிலும் அகப்படார் என்பதை நாம் அறிவோம். நமக்கு சுந்தரரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நமது நினைவுக்கு வருகின்றது. நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், மணமேடையில் இருக்கும் சுந்தரர் தனது அடிமை என்று உரிமை கோரிய முதியவர், அந்த அடிமை ஓலையை சுந்தரர் காணவேண்டும் என்று விரும்பிய போது, அந்த ஓலையை காண்பிக்க மறுக்கும் முதியவர், ஓலையுடன் ஓடுவது போன்று பாவனை காட்டுகின்றார். ஆனால் சுந்தரர், முதியவரை துரத்திச் சென்று பிடித்து, அவரைப் பற்றி அவரது கரத்தினில் இருந்த ஓலையை பிடுங்கி கிழித்து விடுகின்றார். பெருமான் நினைத்திருந்தால் சுந்தரர் தன்னை பிடிக்க முடியாத வண்ணம் ஓடியிருக்கலாம் அல்லவா. ஆனால் அவ்வாறு செய்யாமல், சுந்தரருக்கு மேன்மேலும் கோபமூட்டி தனது ஓலையையும் வேண்டுமென்றே பறிகொடுத்த முதியவர், இவ்வாறு ஓலையினை கிழித்த செயலே, சுந்தரர் தனக்கு அடிமை என்பதை உறுதிபடுத்துகின்றது என்று வாதாடுகின்றார். ஆனால் பத்தி வலையில் படுவோன் என்று அடிகளார் முன்னம் குறிப்பிட்ட வண்ணம், பெருமானை அடிகளார் பிடிக்க முடிந்தது என்றால், அவரது பிடிக்கு அகப்படும் வண்ணம் பெருமான் எளியனாக மாறியதே காரணம் என்பதை விளக்கும் முகமாக, எளியை என்று இங்கே குறிப்பிடுகின்றார் போலும். பெருமான் தன்னை ஆட்கொண்டு, தனது உள்ளத்தின் உள்ளே புகுந்து நின்றதால், தனது துன்பங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, தான் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடும் கோயிலாப் புகுந்தென்

என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே

துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம் தொடக்கெலாம் அறுத்த நற்சோதீ

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே

திருவாசகம் திருப்புலம்பல் பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், பெருமானைத் தவிர்த்து தனக்கு உற்ற துணையாக எவரையும் அறியேன் என்று கூறுகின்றார். தயங்கு=விளங்கும்; மழ=இளமையான; இந்த பாடலில் பெருமானை, பரஞ்சோதீ என்று அடிகளார் அழைக்கின்றார்.

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் சூலப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழ வெள்ளை

விடையானே விரிபொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான்

உடையானே உனை அல்லாது உறுதுணை மற்று அறியேனே

திருவாசகம் திருப்படையாட்சி பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், பெருமானை, பரமாய பரஞ்சுடர் என்று குறிப்பிட்டு, அத்தகைய ஈசன் நம் முன்னே எழுந்தருளினால் நம்மிடம் ஏற்படும் பல மாற்றங்களை உணர்த்தும் அடிகளார், இந்திர ஞாலம் போன்று இன்பத்தை நம்மிடை தோற்றுவித்து உடனே அந்த இன்பங்களை அழித்து, துன்பங்களை மிகுதியாக அளிக்கும் பிறவித் துன்பம் ஒழிந்து போகும் என்று கூறுகின்றார். பொதுவாக நடைபெறாது என்று நாம் கருதும் பல செயல்கள், இறைவன் நம் முன்னே எழுந்தருளினால் நடைபெறுகின்ற அதிசயத்தை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பறிந்து மறிந்திடும்=வேர் பறிக்கப்பட்டு தலைகீழாக விழுந்து விடும்; பந்த விகார குணங்கள்=ஆணவ மலத்தின் சேர்க்கையால் உயிர்கள் இறைவனை நாடும் தன்மைக்கு இடையூறாக இருக்கும் அறியாமை; பாவனை=தியானம்; மகளிரின் சிவந்த உதடுகள், இதழ் துடிப்புகள், இளமை முதலியன நம்மில் காம உணர்ச்சியைத் தூண்டி, இறை உணர்வினை மங்கச் செய்யும் தன்மை, மடவார் இடரானவை என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது; இறைவன் நம் முன்னே எழுந்தருளினால், தொடரும் பிறவிகளுக்கு காரணமாக விளங்கும் குணங்கள், ஆணவ மலத்தின் சேர்க்கையால் நம்மிடம் ஏற்படும் மாறுதல்கள், நம்மை விட்டு விலகி விடும்; இறைவனைக் குறித்து தியானம் செய்கின்ற மனதினில் சிவானந்தம் பெருகும்; எல்லா அண்டங்களையும் எல்லையற்ற எல்லா உலகப் பொருள்களையும் காணும் ஆற்றல் நம்முள் விளையும்; அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகிய பரஞ்சுடரை நாம் நெருங்க முடியும்; அழகிய மகளிர்களால் நமது கவனம் சிதறாத வண்ணம் நம்மால் தொடர்ந்து இறை உணர்வில் திகழ முடியும்; நமது கண்கள் எப்போதும் அவனது திருமேனியை காணும் வண்ணம் எங்கும் சிவத்தையும் எதிலும் சிவத்தையும் காணும் பக்குவம் நம்மில் உண்டாகும்; இந்திர ஞாலம் போன்று தோன்றி மறையும் இன்பங்களை விளைவித்து பின்னர் துன்பங்களில் ஆழ்த்தும் பிறவிகள் நம்மை விட்டு விலகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும். இதே பதிகத்தின் எட்டாவது பாடலில், பெருமானை, எங்கும் நிறைந்து அமுதூறு பாஞ்சுடர் என்று குறிப்பிடுகின்றார்.

பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே

பாவனையாய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே

அந்தமிலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே

ஆதி முதற் பரமாய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே

செந்துவர் வாய் மடவார் இடரானவை சிந்திடும் ஆகாதே

சேலன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாதே

இந்திர ஞால இடர்ப் பிறவித் துயர் ஏகுவது ஆகாதே

என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே

பொழிப்புரை:

என்றும் நிலையாக உயிருடன் ஒட்டி நின்று இயக்கும் இறைவன், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனாக அன்னியூர் தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளான்; அவன் நிலையாக ஒளி உருவில் விளங்குகின்றான். அவ்வாறு ஒளியுடன் திகழ, அவனுக்கு வேறு எவரது உதவியோ அல்லது தூண்டுதலோ தேவைப்படுவதில்லை.

பாடல் 2:

மன்னியூர் இறை (1.096) பாடல் 2 (திதே 0458)

மன்னியூர் இறை (1.096) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0459)

மன்னியூர் இறை (1.096) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0460)

மன்னியூர் இறை (1.096) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0461)

மன்னியூர் இறை (1.096) பாடல் 2 தொடர்ச்சி, 3, 4 (திதே 0462)

பழகும் தொண்டர் வம்

அழகன் அன்னியூர்

குழகன் சேவடி

தொழுது வாழ்மினே

விளக்கம்:

வம்=வம்மின், வாருங்கள்; பழகும்=சிவநெறியில் பழகும்; குழகன்=இளமையாக இருப்பவன்; குழகன் என்றால் அழகும் இளமையும் பொருந்தியவன் என்று பொருள். பல திருமுறைப் பாடல்கள் பெருமானை குழகன் என்று குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். கோலக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.23.3), திருஞானசம்பந்தர், பெருமானை, குழகன் என்று அழைக்கின்றார். பிணிகள்=பிறவியினால் வரும் கேடுகள்; தோடுடைய செவியன் என்று தொடங்கும் தனது முதல் பதிகத்தின் இரண்டாவது பாடலில் இளநாகம் என்று கூறி நரை, திரை, மூப்பு இல்லாத காரணத்தால் பாம்பு என்றும் இளமையாக இருக்கும் என்று கூறும் திருஞான சம்பந்தர், இளமையுடன் காணப்படும் நாகம் அழகிய புள்ளிகளைக் கொண்டு அழகாக தோன்றுகின்றது என்று கூறுகின்றார். அழகனுக்கு அழகு சேர்க்கும் அணிகலனான பாம்பு இங்கே விவரிக்கப் படுகின்றது. பொறி என்றால் புள்ளி என்று பொருள். புன்சடை என்றால் சுருண்டு நீண்ட சடை என்று பொருள். மாண என்றால் மாட்சிமை பொருந்திய என்று பொருள். எளிமையாக இருக்கும் பெருமான் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர் இந்த பாடலில், பெருமான அழகாக இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார். பூணல்=பூண்+நல்; நல்= அழகிய; பொறி=புள்ளிகள்; பேண=இடைவிடாது தியானம் செய்ய; பேணுதல் என்பதற்கு முறையாக பூசை செய்து தூபம் தீபம் நிவேதனம் காட்டி வழிபடுதல் என்றும் பொருள் கொள்ளலாம்; பறையும்=அழிந்துவிடும். அழகிய புள்ளிகளைக் கொண்டுள்ள பாம்பினை அணிகலனாக பூண்டுள்ள பெருமான், சுருண்டும் நீண்டும் காணப்படும் தனது கூந்தலில் வளைந்த பிறைச் சந்திரனை சூடியுள்ளான். அவன் அழகும் இளமையும் பொருந்தி காணப்படுகின்றான். மறைகளில் வல்லவனும் கோலக்கா தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானின் மாண்புகளை இடைவிடாது தியானம் செய்தாலும், முறையாக பூசை செய்து வழிபட்டாலும், பிறப்பு எடுத்ததால் நாம் அடையும் துன்பங்கள் முழுவதும் மறைந்துவிடும். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் குழகன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

பூணல் பொறி கொள் அரவம் புன்சடை

கோணல் பிறையன் குழகன் கோலக்கா

மாணப் பாட மறை வல்லானையே

பேணப் பறையும் பிணிகள் ஆனவே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.24.9) திருஞானசம்பந்தர், பெருமானை குழகரே என்று அழைக்கின்றார். இந்த பாடலில் திருமாலையும் பிரமனையும் ஆற்றல் உடையவர்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். திருமாலின் வலிமை அனைவரும் அறிந்ததே. நெடிய உருவம் கொண்ட திருவிக்ரமனாக அவதாரம் எடுத்து, இரண்டு அடிகளால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் அளந்த வல்லமை படைத்தவர் திருமால்; மேலும் வராகமாக அவதாரம் எடுத்து கடலின் அடியில் மறைத்து வைக்கப் பட்டிருந்த பூமியையும் மீட்டெடுத்த வல்லமை படைத்தவர் திருமால். இத்தகைய வல்லமை படைத்த திருமால் பன்றியாக ஊடுருவி நீண்ட தூரம் சென்ற போதிலும், அவரால் பெருமானின் திருவடியை காண முடியவில்லை. எப்போதும் வேதங்களைப் படித்தவாறு படைத்தல் தொழிலில் ஈடுபடும் பிரமனும் ஆற்றல் மிக்கவர். எனினும் அவராலும் பெருமானின் திருமுடியைக் காண முடியவில்லை. எனவே ஆற்றல் மட்டும் எந்த விதத்திலும் இறைவனைக் காண்பதற்கும் உணர்வதற்கும் உதவாது; இறைவனின் அருளும் வேண்டும். இந்த கருத்தினை மிகவும் அழகாக அப்பர் பிரான், இறைவனின் அருளே கண்ணாகக் காணின் அல்லால், அவனது திருவுருவத்தை நாம் அறிய முடியாது என்று சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. மிகுந்த ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும் காண முடியாத வண்ணம் நீண்ட அழலாக நின்ற பெருமானின் தன்மை, அவர்கள் இருவரது ஆற்றலையும் வெற்றி கொண்டது. சிறப்பு மிக்கதாக கருதப்படும் இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளவனும், சீர்காழி நகரத்தில் உறைபவனும் ஆகிய இறைவன், கூற்றுவனையும் வெற்றி கொண்டு, சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் காப்பாற்றியவர்; அவர் அழகும் இளமையும் ஒருங்கே கொண்டவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆற்றல் உடைய அரியும் பிரமனும்

தோற்றம் காணா வென்றிக் காழியார்

ஏற்றம் ஏறு அங்கு ஏறும் அவர் போலாம்

கூற்றம் மறுகக் குமைத்த குழகரே

பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.7) திருஞானசம்பந்தர், பெருமானை, குழகர் என்று அழைக்கின்றார். ஏகவடம்=ஒற்றைச் சர மாலை; பாம்பினை பெருமான் தனது கழுத்தினில் மாலையாக அணிந்திருப்பது பெருமான் ஒற்றை வடச் சங்கிலி அணிந்திருப்பது போல் உள்ளது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொங்கிள நாகம்=கடுஞ்சினம் கொண்டு படமெடுத்து ஆடும்; கொங்கு=தேன்; கொங்கிள மாலை=தேன் நிறைந்து புது நறுமணம் கமழும் மலர்கள் கொண்ட மாலை; உமையன்னை பால் கருணை கொண்டு அன்னைக்குத் தனது உடலின் ஒரு பாகத்தை அளித்த கருணையாளனாகிய பெருமான், மழவன் மகளை வாட வைப்பது தவறு அல்லவா என்று நயமாக கேள்வி எழுப்பப் படுகின்றது. சிவந்த தனது மேனியின் முழுவதும் வெண்ணீறு பூசிக் கொண்டிருப்பதால், வெண்மை நிறத்துடன் பெருமான் காட்சி அளிப்பதாக சொல்லப் படுகின்றது. கடுஞ்சினம் கொண்டு படமெடுத்து ஆடும் பாம்பினை, ஒற்றை வடச் சங்கிலி ;போன்று தனது கழுத்தினில் பெருமான் அணிந்து கொண்டுள்ளார். மேலும், ஆமை ஓடு, வெண்மை நிறத்தில் முப்புரி நூல், தேன் நிறைந்த புதிய கொன்றை மலர்கள் கொண்டு புனையப்பட்ட மாலை ஆகியவற்றை பூண்டு கொண்டுள்ள பெருமான் மிகவும் அழகுடன் காணப்படுகின்றார். அழகிய இளைஞராகிய பெருமான், தனது அழகினுக்கு பொருந்தும் வகையில் அழகிய பெண்ணாகிய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். பாச்சிலாச்சிராமம் தலத்தில் உறைகின்ற பெருமான், தனது திருமேனியின் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டுள்ள தன்மையால் வெண் சங்கின் நிறத்தில் திருமேனி உடையவராக விளங்கும் பெருமான், நீண்டு தாழ்ந்த கூந்தலை உடைய மழவன் மகள் வருந்தும் வண்ணம், சாமர்த்தியமாக செயல்படுவது தகுமா என்று திருஞான சம்பந்தர் பெருமானை நோக்கி கேள்வி கேட்கும் விதமாக அமைந்துள்ள பாடல்.

பொங்கிள நாகம் ஓர் ஏக வடத்தோடு ஆமை வெண்ணூல் புனை கொன்றை

கொங்கிள மாலை புனைந்து அழகாய குழகர் கொலாம் இவர் என்ன

அங்கு இள மங்கையோர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வோ

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.1) திருஞானசம்பந்தர், பெருமானை குழகர் என்று குறிப்பிடுகின்றார். குழகன் குழகன் என்று குடமூக்கு தலத்தினில் குடிகொண்டிருக்கும் இறைவனை, குடமூக்குத் திருப்பதிகத்தின் பல பாடல்களிலும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தரின் மனதினை விட்டு அந்த அழகனின் நினைவுகள் அகலவில்லை போலும். குடமூக்கிலிருந்து அடுத்த தலமாகிய குடந்தைக் காரோணம் வந்த பின்னரும், அந்த அழகனின் இனிய நினைவுகள் நிறைந்து இருந்தமையால், குடமூக்கு குழகனை இந்த பதிகத்தின் முதல் பாடலிலும் குறிப்பிடுகின்றார் போலும். இந்த பாடலில் எண்தோள் எந்தை என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கச்சணிந்த மார்பங்களை உடைய மங்கை பார்வதி தேவியினைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்ட பெருமான், தனது நீண்ட சடையினில் நீர் நிறைந்த கங்கை நதியையும் ஒற்றைப் பிறைச் சந்திரனையும் உடையவராக, தனது நெற்றியில் ஒரு கண் உடையவராக, கூர்மை வாய்ந்த மழுப் படையினை ஏந்தியவராக, குளிர்ந்த குடமூக்கு தலத்தினில் குழகராக, அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவராக, காட்சி அளித்த எமது தந்தையாகிய பெருமான், கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவராக, எட்டு தோள்கள் உடையவராக, காரோணத்தராக, குடந்தைக் காரோணம் தலத்தினில் காட்சி தருகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் திருஞானசம்பந்தர், பெருமானை குழகன் என்று குறிப்பிடுகின்றார்.

வாரார் கொங்கை மாதோர் பாகமாக வார்சடை

நீரார் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றைக் கண்

கூரார் மழு ஒன்று ஏந்தி அந்தண் குழகன் குடமூக்கில்

காரார் கண்டத்து எண்தோள் எந்தை காரோணத்தாரே

திருவிடைச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.78.2) திருஞானசம்பந்தர், இளமையைத் தவிர்த்து வேறெதையும் அறியாதவர் பெருமான் என்று கூறுகின்றார். குழகு=இளமை; குழகலது அறியார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஏற்றை=ஆண் குரங்கு; செம்முக மந்தி=பெண் குரங்கு; அவிர்சடை=விரிந்த சடை;

ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை உடையர் அழகினை அருளுவர் குழகலது அறியார்

கூற்றுயிர் செருப்பதோர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அந்தாரார்

சேற்றயல் மிளிர்வன கயல் இள வாளை செருச் செய ஓர்ப்பன செம்முக மந்தி

ஏற்றையொடு உழி தரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

நல்லம் (தற்போதைய பெயர் கோனேரிராஜபுரம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.85.7) பிராட்டியை அங்கோல்வளை மங்கை என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பெருமான் இளமைக் கோலத்தில் இருப்பதாக கூறுகின்றார். கொங்கு=நறுமணம் நிறைந்த தேன்; குழகாக=இளமைக் கோலத்தில்; தனது கையில் தீப்பிழம்பை ஏந்திய பெருமான், ஊழித்தீயினில் நின்று நடமாடுவதை, உமை அன்னை கண்டு இன்பம் அடைகின்றாள் என்று கூறுகின்றார். பெருமானின் நடனக் கோலத்தை, இளமையும் அழகும் ஒன்றிய கோலம் என்று குறிப்பிடுகின்றார்.

அங்கோல் வளைமங்கை காண அனலேந்தி

கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக

வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்

நங்கோன் நமை ஆள்வான் நல்ல நகரானே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.112.3) திருஞானசம்பந்தர் பெருமானை குழகன் என்று அழைக்கின்றார். மறுகிட=அச்சத்தால் கலக்கம் கொள்ள; மதகரி=தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப்பட்ட மதம் கொண்ட ஆண் யானை; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்திய சிவபெருமான்; அலை மல்கு=அலைகள் நிரம்பிய; சிலை மல்கு மதிள்=மலை போன்று உயர்ந்து வலிமையுடன் காணப்படும் மதிள்கள்; உயர்ந்த மதில்களால் பாதுகாக்கப்பட்ட தலம் என்று குறிப்பிடுவதால், திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்தில், இந்த தலம் சிறந்த நகரமாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. மலைமகளாகிய பார்வதி தேவி அச்சம் கொண்டு கலக்கம் அடையும் வண்ணம், தன்னை எதிர்த்து வந்த மதயானையை, தாருகவனத்து முனிவர்கள் ஏவிவிட்ட மத யானையைக் கொன்ற சிவபெருமான், ஈரப்பசை மிகுந்த அந்த யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொள்கின்றார். ஆனால் அந்த யானைத் தோல், பெருமானின் உடலுக்கு எந்தவிதமான கேட்டினையும் விளைவிக்கவில்லை. இத்தகைய ஆற்றலும், அழகும் இளமையும் ஒருங்கே கொண்டுள்ள இறைவன் உறைகின்ற நகரம் சிவபுரம் ஆகும். நிறைந்த அலைகளுடன் மிகுந்த நீர்ப்பெருக்கு கொண்டுள்ள அரிசில் ஆற்றின் அருகே உள்ள சிவபுரம் நகரம், வலிமை வாய்ந்த பாதுகாப்பான மதில்களை கொண்ட நகரமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மலைமகள் மறுகிட மதகரியைக்

கொலை மல்க உரி செய்த குழகன் நகர்

அலை மல்கும் அரசிலி அதன் அயலே

சிலை மல்கு மதிள் அணி சிவபுரமே

குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.22.2) திருஞானசம்பந்தர் பெருமானை, குழகர் என்று குறிப்பிடுகின்றார். ஆதி அந்தம் இல்லாத பெருமானின் கொடியும் தொன்மை வாய்ந்ததாக உள்ள நிலை இங்கே தொல் கொடி என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. உரகம்=பாம்பு, தனது மார்பினால் ஊர்ந்து செல்லும் பாம்பு; ஓடும் நதி என்று மிகுதியான நீர்ப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதி குறிப்பிடப் படுகின்றது. நீடும்=நீண்ட பெருமை வாய்ந்த; தொல் கொடி மேல் விடை கூடும் என்று மாற்றி அமைத்து பொருள் காணவேண்டும். மிகுந்த வெள்ளப் பெருக்குடன், தேவலோகத்திலிருந்து கீழே இறங்கி வந்த கங்கை நதியையும், பிறைச்சந்திரன் மற்றும் பாம்பினையும் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள இறைவன், தனது தொன்மை வாய்ந்த கொடியினில் இடபத்தை இலச்சினையாகக் கொண்டுள்ளார். இத்தகைய இறைவன், இளமையும் அழகும் ஒருங்கே கொண்டவராக, குடவாயில் தலத்தில் நீண்ட புகழுடன் விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் நான்காவது, ஐந்தாவது மற்றும் பத்தாவது பாடல்களிலும் பெருமானை குழகன் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.

ஓடும் நதியும் மதியோடு உரகம்

சூடும் சடையன் விடை தொல் கொடி மேல்

கூடும் குழகன் குடவாயில் தனில்

நீடும் பெருங்கோயில் நிலாயவனே

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.35.07) திருஞானசம்பந்தர், பெருமானை, குழகன் என்று குறிப்பிடுகின்றார். பழகும் வினை=உயிர் எடுக்கின்ற அனைத்துப் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து ஒட்டிக் கொண்டு பழகும் வினைகள்; மலபரிபாகம் நேர்ந்து, உயிர் தற்போதம் அற்ற நிலையை அடைந்த பின்னர், பக்குவம் அடைந்த அந்த உயிரின் வினைகள் முழுவதும் இறைவனால் தீர்க்கப் படுகின்றன. இந்த தன்மையே பழகும் வினை தீர்ப்பவன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. முழங்கும்=ஒலிக்கும்; அயின்=கூர்மையான; மூவிலை வேல்=திரிசூலம்; தனது அடியார்களுடன் எண்ணற்ற பிறவிகளாக பிணைந்து பழகியிருந்த வினைகளை முற்றிலும் தீர்க்கும் வல்லமை வாய்ந்த இறைவன், பார்வதி தேவியுடன் கூடியவனாக முழவம் குழல் மொந்தை முதலிய கருவிகள் பின்னணியில் ஒலிக்க, ஒலித்த வண்ணம் பொங்கிப் பெருகி எழுகின்ற பிரளயத் தீயினில் நின்றவாறு நடனம் ஆடுகின்றான். அவன் சிறந்த அழகனாக, இளமை வாய்ந்தவனாக, தனது கையினில் கூர்மையான நுனிகளை கொண்ட மூவிலை சூலம் ஏந்தியவனாக காணப்படுகின்றான். இத்தகைய இறைவன் உறைகின்ற தலம் தென் குரங்காடு துறையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும்

முழவம் குழல் மொந்தை முழங்கெரியாடும்

அழகன் அயின் மூவிலை வேல் வலனேந்தும்

குழகன் நகர் போல் குரங்காடுதுறையே

பெரும்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.67.7) திருஞானசம்பந்தர், பெருமானை அழகர் என்றும் குழகர் என்றும் கூறுகின்றார். மாமலர்=அழகிய தாமரை மலர்; தங்களது மனதினில் குறைகள் உடைய அடியார்களின் குறைகளைத் தீர்ப்பவர் பெருமான் என்று குறிப்பிட்டு, இரண்டு செய்திகளை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பினும் அந்த குறைகளை இறைவனுக்கு உணர்த்தி, அந்த குறைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிறிதுமின்றி இறைவனை எப்போதும் நினைத்து வணங்கும் அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார். உயர்ந்த அடியார்கள், தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவனை வழிபடாமல் தங்களது கடமையாக நினைத்து இறைவனை வழிபடுவார்கள் என்று அவர்களின் உயர்ந்த தன்மையை நமக்கு உணர்த்தும் திருஞானசம்பந்தர், கூறும் அடுத்த செய்தியையும் இப்போது காண்போம். எவரும் உணர்த்தாமலே அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த இறைவன், அடியார்கள் தங்களது குறைகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றி, அவர்களது குறைகளை புரிந்து கொண்டு, அந்த குறைகளை தீர்க்கும் கருணை உள்ளம் கொண்டவன் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். பெருமானிடம் தங்களது தேவைகளை வேண்டிப் பெறுகின்ற நோக்கத்துடன் அவரை வழிபடும் அடியார்களுக்கு, அவர்களது தேவையை நிறைவேற்றும் பெருமான், தன்னிடம் ஏதும் வேண்டாது வழிபடும் அடியார்களை பெரிதும் விரும்புகின்றார். தங்களது தேவைகளை அவர்கள் வெளிப்படுத்தி பெருமானிடம் ஏதும் வேண்டாமல் அவர்கள் இருந்தாலும், பெருமான் அவர்களது தேவைகளை தானே அறிந்து கொண்டு, அவர்களது குறைகளை தீர்ப்பவர் பெருமான் என்பதே இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வேதமோதும் மறையோர்கள் மற்றும் இனிய ஒலியுடன் பாடல் பாடும் அடியார்கள் பெருமானின் சிறந்த அழகிய தாமரை மலர் போன்ற திருவடிகளை இடைவிடாது நினைக்கின்றனர். அத்தகைய அடியார்களின் மனதினில் உள்ள குறைகளை தீர்க்கும் இறைவன், இளைஞராகவும் அழகராகவும் சிறந்த முக்திச் செல்வத்தை உடையவராகவும் விளங்குகின்றார். ஆலகால விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடைய பெருமான், கங்கை நதியினைத் தனது சடையில் மறைத்தவர் ஆவார். அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு, அந்த பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்ட பெருமான் பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக, என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

மறை உடையார் ஒலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்

குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர்

கறை உடையார் திகழ் கண்டம் கங்கை சடையில் கரந்தார்

பிறை உடையார் சென்னி தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே

தென் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.5) திருஞானசம்பந்தர், பெருமானை குழகர் என்று அழைக்கின்றார். கொம்பு=பூங்கொடியின் கொம்பு; கூறன்=ஒரு கூறாக கொண்டுள்ளவன்; விடை=இடபம்; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவன்; சென்னி=தலை; ஒண்=ஒளிவீசும்; கணவர்=கண்களை உடைய பெண்கள்; அணி=அழகிய; செவ்வி=செம்மையான; பூங்கொம்பு போன்றும் மின்னல் போன்றும் மெலிந்த இடையினை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், இடபத்தின் மீது ஏறிக்கொண்டு நாள்தோறும் பல இடங்கள் செல்பவனும், அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவனும், நமது நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ளவனும், நம் பால் மிகுந்த அன்பு கொண்டுள்ளவனும், முதன்முதலாக நான்மறைகளையும் ஓதிய நாவினை உடையவனும், வானில் உலவும் பிறைச்சந்திரனைத் தனது தலையில் வைத்துள்ளவனும் ஆகிய பெருமான் உறையும் தலம் திருமுல்லைவாயிலாகும். அம்பு போன்று ஒளி மிகுந்த கண்களை உடைய மகளிர் நடமாடும் அரங்குகளும் அழகிய கோபுரங்களும் அணிகலன் போன்று அழகினை மேம்படுத்த, செம்பொன் போன்று அழகிய செம்மையான மாடங்கள் கொண்ட தலம் திருமுல்லைவாயிலாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொம்பு அன்ன மின்னின் இடையாளொர் கூறன் விடை நாளும் ஏறு குழகன்

நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானில் மதியேறு சென்னி அரனூர்

அம்பன்ன ஒண் கணவர் ஆடரங்கின் அணி கோபுரங்கள் அழகார்

செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே

கோவலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.100.1), பெருமானை, குழகன் என்றும் விடையதேறும் கொடியினான் என்றும், திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். உயிர்கள் செய்த பாவங்களுக்கு தகுந்த தண்டனை அளிப்பதற்காகவும் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதற்காகவும் படைகள் வைத்திருப்பவன் இயமன். இடைகொள்வார்=தடுப்பவர்: இவ்வாறு இயமனால் பிரிக்கப் படும் உயிர்கள் தங்களை எதிர்நோக்கி இருக்கும் தண்டனைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று விரும்பினால், கோவலூர் வீரட்டம் திருக்கோயில் சென்றடைந்து இறைவனை வணங்க வேண்டும் என்று நமக்கு திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அறிவுரை வழங்குகின்றார். இதே பதிகத்தின் மூன்றாவது ஆறாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களிலும் பெருமானை குழகன் என்று திருஞான சம்பந்தர் அழைக்கின்றார்.

படைகொள் கூற்றம் வந்து மெய்ப் பாசம் விட்ட போதின் கண்

இடை கொள்வார் எமக்கிலை எழுக போது நெஞ்சமே

குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர் தனுள்

விடை அதேறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.105) கடைப் பாடலில், பெருமானை குழகர் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், தான் அருளிய பதிகத்தின் பாடல்களை கற்று வல்லவராக திகழும் அடியார்கள் சிவகதி பெறுவது நிச்சயம் என்று கூறுகின்றார். தெருண்ட=தெளிந்த; இருண்ட மேதி= கருமை நிறம் உடைய எருமை மாடுகள்; குருண்ட வார்குழல்=சுருண்டு நீண்டு காணப்படும் சடை;

குருண்ட வார்குழல் சடை உடைக் குழகனை அழகமர் கீழ்வேளூர்த்

திரண்ட மாமறையவர் தொழும் பெரும் திருக்கோயில் எம் பெருமானை

இருண்ட மேதி இன மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன்

தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடமாமே

இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.117.1), பெருமானை குழகன் என்று குறிப்பிடும், திருஞானசம்பந்தர் பார்வதி தேவியின் கையின் உதவி கொண்டு மூன்று புரங்களையும் எரித்தார் என்று கூறுகின்றார். மான் என்ற சொல் மான் எனப்படும் மிருகத்தை குறிப்பதாகவும், மான் போன்று அழகிய உருவம் உடைய உமை அன்னையை குறிப்பிடுவதாகவும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை, பெருமான் தனது இடது கையினில் ஏந்தி இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். பார்வதி தேவி என்று பொருள் தருவதாக எடுத்துக் கொண்டாலும், பிராட்டி பெருமானின் இடது பாகத்தில் இருப்பதால், இடது கையால் வில்லினை பிடித்துக் கொண்ட பெருமான் என்று பொருள் வருகின்றது. மாதொரு பாகனாகிய பெருமானின் இடது கரம் என்று குறிப்பிடுவது, பிராட்டியின் கையை குறிக்கின்றது என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இதே கருத்தினைத் தான், திருஞானசம்பந்தர், பார்வதி தேவி தனது கரத்தினால் வில்லினைத் தாங்கினாள் என்று கூறுகின்றார். சுலாய்=சுற்றி; இரும்பை என்பது தலத்தின் பெயர்; மாகாளம் என்பது திருக்கோயிலின் பெயர்; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவன்; வண்டுகள் ரீங்காரம் இட்டு ஒலி எழுப்புவதை முரலுதல் என்று கூறுவார்கள்; மண்டு=பெருகி வந்த;

மண்டு கங்கை சடையில் கரந்தும் மதிசூடிமான்

கொண்ட கையால் புரம் மூன்று எரித்த குழகன் இடம்

எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை தனுள்

வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே

திலதைப்பதி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.118.2) திருஞானசம்பந்தர், பெருமானை, குழகன் என்று குறிப்பிடுகின்றார். மிண்டி=நெருங்கி; முத்தம்=முற்றம்; கண்டார்=தரிசனம் பெற்ற அடியார்கள்; கெண்டி=தோண்டி எடுத்து; துணையல்=மலர் மாலைகள்;

தொண்டர் மிண்டிப் புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும்

கொண்டு கண்டார் குறிப்புணர நின்ற குழகன் இடம்

தெண்டிரைப் பூம்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி

வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.7.5) திருஞான சம்பந்தர் பெருமானை குழகர் என்று குறிப்பிட்டு எண்ணற்ற நாமங்களைச் சொல்லி தேவர்களால் வணங்கப்படும் இறைவன் சிவபெருமான் என்று கூறுகின்றார், கோமள மாது=இளமையும் அழகும் பொருந்திய உமாதேவி; அந்தண்=அழகும் குளிர்ச்சியும் பொருந்திய: இங்கே வானவர்கள் இலட்சார்ச்சனை செய்து இறைவனை வழிபடுவதாக சொல்லப் படுகின்றது. அழகினுக்கு ஏற்ற அழகியாக பிராட்டி இருக்கும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

சாம நல்வேதனும் தக்கன் தன் வேள்வி தகர்த்தானும்

நாம நூறாயிரம் சொல்லி வானோர் தொழு நாதனும்

பூ மல்கு தண்பொழில் மன்னும் அந்தண் புகலிந் நகர்க்

கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே

கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.12.10) திருஞானசம்பந்தர், பெருமானை குழகன் என்று அழைக்கின்றார். கடுக்காய் நீரில் தோய்த்து துவர்ச் சாயம் ஏற்றுவது பண்டைய நாளில் பழக்கத்தில் இருந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. தன்னை நாடாத புத்தர்களுக்கும் சமணர்களுக்கும் பெருமான் அருள் புரியாமல் இருந்த தன்மையும், தன்னை வழிபடும் அடியார்களுக்கு பெருமான் அருள் புரிகின்ற தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. இடுக்கண் இன்றித் தொழுவார் என்ற தொடர், மிகவும் அரிய முயற்சிகளை மேற்கொள்ளாமல், தமது உடலினை அதிகமாக வருத்திக் கொள்ளாமல் பெருமானைத் தொழும் அடியார்கள் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு, கோட்டாறு தலத்தின் சிறப்பினை உணர்த்தும் முகமாக, சிறிய அளவிலான சிவ புண்ணியமும் கோட்டாறு தலத்தினில் செய்யப் பட்டால், பெரிய பயனை, தேவர்களும் தொழும் தன்மைக்கு உயர்த்தும் தன்மையை பெற்றுத் தரும் என்று சொல்லப் படுகின்றது.

கடுக்கொடுத் துவர் ஆடையர் காட்சி இல்லாததோர்

தடுக்கு இடுக்கித் சமணே திரிவார்கட்குத் தன்னருள்

கொடுக்க கில்லாக் குழகன் அமரும் திருக் கோட்டாற்றுள்

இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே

திருவேடகம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.32.3) திருஞானசம்பந்தர் பெருமானை குழகர் என்று குறிப்பிடுகின்றார். அலம்பும்=ஒலிக்கின்ற; செண்டு=வட்டமாக சுற்றி வரும் மாலை; இடபத்தின் கழுத்தினில் உள்ள மாலையும் அதனில் இணைக்கப் பட்டுள்ள மணியும்; விடை= இடபம்; கழலுமே=கழன்று விடுமே; கவலை நோய்=மனக் கவலைகளால் வரும் நோய் என்றும் நோய்களால் வரும் மனக்கவலை என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் திருஞான சம்பந்தர் பெருமானை குழகனார் என்று குறிப்பிடுகின்றார்.

குண்டலம் திகழ்தரு காதுடைக் குழகனை

வண்டலம்பும் மலர்க் கொன்றையான் மதியணி

செண்டு அலம்பும் விடைச் சேடனூர் ஏடகம்

கண்டு கை தொழுதலும் கவலை நோய் கழலுமே

திருக்கருகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.46.3) திருஞானசம்பந்தர் பெருமானை குழகர் என்று குறிப்பிடுகின்றார். கழல் கொள் பாடல்=பெருமானின் திருப்பாதங்களின் சிறப்பினை கருத்தாகக் கொண்ட பாடல்; இந்த பாடலில் சிறுத்தொண்டர் என்ற அடியாரைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. அவரது பாடலுக்கு மயங்கி இறைவன் காட்சி கொடுத்ததாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆனால் இந்த அடியவரைப் பற்றிய செய்திகள் வேறு ஏதும் தெரியவில்லை. இந்தத் தலத்தில் வாழ்ந்து வந்த அடியவர் ஒருவரின் இசைக்கு மயங்கி இறைவன் சுயம்புவாக காட்சி கொடுத்ததாக ஒரு செவிவழிச் செய்தி இங்கே நிலவுகின்றது. தனக்கு திருத்தொண்டுகள் புரியும் அடியார்களுக்கு அமுதமாக இனிக்கும் பெருமான் என்று முந்திய பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், தன்னைக் குறித்து இன்னிசைப் பாடல்கள் பாடும் அடியார் ஒருவருக்கு அளித்த இன்பத்தை இங்கே சுட்டிக் காட்டுகின்றார். பெருமானை குறித்த பாடல்களை எவ்வாறு பாட வேண்டும் என்றும் திருஞானசம்பந்தர் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். நமது அகம் குழைய, அதாவது உள்ளம் கசிந்து, நாம் பெருமான் பால் வைத்துள்ள அன்பு வெளிப்படும் வண்ணம் ஓத வேண்டும் என்று கூறுகின்றார். பாட இயலாதவர்களும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க அவனது திருநாமத்தை ஓதும் அடியார்கள் என்று பின்னாளில் குறிப்பிட்டவர் அல்லவா திருஞானசம்பந்தர். பழகவல்ல என்ற தொடருக்கு அடிமைத் தன்மையில், பெருமானை ஆண்டானாக ஏற்றுக்கொண்டு அவருக்கு திருப்பணிகள் செய்யும் தொண்டர்கள் என்று விளக்கம் அளிக்கின்றார். பழகுவதற்கு இனிய குணங்கள் படைத்த, அடியார்கள் சிறந்த இன்னிசைப் பாடல்கள் பாடி அழகும் இளமையும் ஒருங்கே படைத்த பெருமானே என்று தங்களது உள்ளம் கசிந்த அன்பினோடு அழைத்து, பெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருப்பாதங்களின் பெருமையை கருப்பொருளாகக் கொண்ட பாடல்களைப் பாடுகின்றனர். கருகாவூர் தலத்தில் வீற்றிருப்பவரும், கொழுந்து விட்டெரியும் நெருப்புச் சுடரின் வண்ணத்தின் திருமேனியை உடையவரும் ஆகிய பெருமான், தனது அடியார்களின் பாடல்களைக் கேட்டு மனம் நெகிழ்ந்து காட்சி தருகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை

குழகர் என்று குழையா அழையா வரும்

கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்

அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே

தண்டலை நீணெறி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.50.10) திருஞான சம்பந்தர், பெருமானை, குழகன் என்று குறிப்பிடுகின்றார். சீவரத்தார்=சீவர ஆடையை, துவராடையை அணியும் புத்தர்கள்; கலவு=சுற்றிய; குலவுதல்=கொண்டாடுதல்; குலவ மாட்டா=போற்றிக் கொண்டாடாத; சுலவு=சுற்றி வளைந்த; நிலவு=விளங்குகின்ற;

கலவு சீவரத்தார் கையில் உண்பவர்

குலவ மாட்டாக் குழகன் உறைவிடம்

சுலவு மாமதிலும் சுதை மாடமும்

நிலவு தண்டலை நீணெறி காண்மினே

குடமூக்கு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.59.1) திருஞானசம்பந்தர் பெருமானை, குழகர் என்று குறிப்பிடுகின்றார். கோடல்=காந்தள் மலர்; நீண்ட தண்டினை உடையது. நீண்ட தண்டின் நுனியில் விரிந்து காணப்படும் மலர், பாம்பின் படத்தைப் போலவும், நீண்ட தண்டு பாம்பின் மெல்லிய உடலையும் ஒத்து இருப்பதால், அரவிரி கோடல் நீடல் என்று இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அணி=அழகிய; அயலே=அருகே; மர=மராமர மரங்கள்; போது= மலர்கள்; மௌவல்=முல்லையில் ஒரு வகை; கள்=தேன்; குர=குரா மலர்கள்; அரா, மரா, குரா மற்றும் இரா ஆகிய நான்கு சொற்களும் கடை எழுத்து குறுகி வந்தன. இர=இரவு நேரம்; விரி=பரப்புகின்ற, ஒளியை பரப்புகின்ற; இறை=தலைவன்; பாம்பின் உடலைப் போன்று நீண்ட தண்டும், பாம்பின் படத்தைப் போன்று விரிந்த மலர் பகுதியையும் கொண்டுள்ள காந்தள் செடிகள் செழித்து காணப்படும் காவரி நதியின் கரையில் உள்ள மராமரங்களின் மீது படர்ந்திருந்த மௌவல் மலர்கள் மற்றும் மல்லிகை மலர்களும், மேலும் நறுமணம் வீசுவதும் தேன் சொட்டும் தன்மையில் உள்ளதும் ஆகிய குரா மரத்தின் மலர்களும் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட குடமூக்கு நகரினில், அழகும் இளமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பெருமான், இரவினில் விரிந்து ஒளி வீசும் கதிர்களைக் கொண்டவனாகிய சந்திரனின் ஒற்றைப் பிறையை, தனது சடையினில் சூட்டிக் கொண்டவனாக உறைகின்றான். அவனே எமது தலைவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அரவிரி கோடல் நீடல் அணி காவிரி ஆற்றயலே

மரவிரி போது மௌவல் மண மல்லிகை கள்ளவிழும்

குரவிரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா

இரவிரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் (3.59.2) திருஞானசம்பந்தர், பெருமானை குழகன் என்று குறிப்பிடுகின்றார். வேதங்கள் பக்தியுடன் ஓதப் படுவதால் ஓத்து என்று வேதங்கள் அழைக்கப் படுகின்றன. குழுவாக சேர்ந்து வேதங்களை ஓதும் வழக்கம், இன்றிருப்பதைப் போன்று, பண்டைய நாளிலும் பழக்கத்தில் இருந்த நிலையினை இந்த பாடல் உணர்த்துகின்றது. அரவம் என்றால் ஒலி என்று பொருள். அரவங்கள் என்று பன்மையில் சொல்லியபடியால் பலர் ஒன்று சேர்ந்து கூட்டமாக வேதங்கள் ஓதினார்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இன்றும் பல வேத பாடசாலைகள் கொண்டுள்ள குடந்தை நகரம், பண்டைய நாளிலும் வேத பாடசாலைகளும் வேத விற்பன்னர்களும் மிகுதியாக கொண்டிருந்த தலமாக விளங்கியது போலும். வேதங்களை இறைவனை வழிபட்ட இடம் என்பதை உணர்த்தும் முகமாக திருவோத்தூர் என்றே தொண்டை நாட்டில் ஓரு தேவாரத் தலம் அழைக்கப் படுகின்றது. முதல் அடியில் உள்ள அரவங்கள் என்ற சொல் வேத மந்திரங்களை குறிப்பிடுவது போன்று இரண்டாவது அடியில் உள்ள அரவங்கள் என்ற சொல் பெருமானின் திருநாமங்களை சொல்வதாலும் தேவார பதிகங்களை பாடுவதாலும் ஏற்படும் ஓசைகளை உணர்த்துகின்றன என்று பொருள் கொள்வது சிறப்பு. தேவார முதலிகள் மூவரும், வடமொழியை வெறுக்கவில்லை; மாறாக பெருமான் வடமொழியாகவும் தென் தமிழ் மொழியாகவும் இருக்கின்றார் என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர். குழுவாக ஒன்று சேர்ந்து வேதங்கள் ஓதப்படும் ஒலிகளுடன், காவரி நதி பாய்ந்து வரும் ஆரவாரமும் சேர்ந்து ஒலிக்கும் பின்னணியில், பூக்கள் கொண்டு தூபம் தீபம் காட்டியும் பெருமானின் திருவடிகளை வழிபடும் அடியார்கள் பெருமானைப் போற்றி தேவார இசைப் பாடல்களின் ஒலியும், அரஅர அவனது திருநாமங்களை பலரும் சேர்ந்து சொல்லும் ஓசையும் இணைகின்றன. கேட்போர் மனதினுக்கு இனியவையாக திகழும் இந்த சூழ்நிலையில் இடைவிடாத ஆரவாரத்துடன் இறைவன் திருநடனம் புரிகின்றார். அத்தகைய இறைவன், இளமையும் அழகும் ஒருங்கே கொண்டுள்ள இறைவன், குடமூக்கு தலத்தினைத் தனது இடமாகக் கொண்டு உறைகின்றார். அனைவரும் அவனது புகழினைப் பாடல்களாக பாட, குடமூக்கு தலத்தில் வீற்றிருக்கும் இறைவனே எமது தலைவன் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து அயலே

பூத்து அரவங்களோடும் புகை கொண்டடி போற்றி நல்ல

கூத்து அரவங்கள் ஓவாக் குழகன் குடமூக்கு இடமா

ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே

மேலும் இதே பதிகத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களில் திருஞான சம்பந்தர் பெருமானை, குழகர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலை நாம் இங்கே காண்போம். ஆர்=பொருந்திய; எரி=நெருப்பு; இரி=ஒழுகிய; புராணங்களும் மிகவும் அதிகமான திருமுறைப் பாடல்களும், வானிலிருந்து கீழே இறங்கி வந்த கங்கை நதியை பெருமான் தனது சடையில் அடக்கி தேக்கிய செய்தியை உணர்த்துகின்றன. இந்த பின்னணியில் ஒழுகிய கங்கை நீர் என்று குறிப்பிடுவது நமக்கு ஐயத்தை ஏற்படுத்துகின்றது. பெருமான் கங்கை நதியினைத் தனது சடையில் தேக்கிய போதிலும், பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி, கங்கை நதியினை சிறிது சிறிதாக வெளியேற்றினார் என்பதை புராணங்கள் கூறுவதை நாம் அறிவோம். அந்த செய்தி தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. எனவே கங்கை நதி பெருமானின் சடையிலிருந்து கசிந்ததும், அவரது அருளால் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவே திருஞானசம்பந்தர் இங்கே நீரிரி புன்சடை என்று கூறினார் போலும். நிரம்பா மதி=வளராத சந்திரன், ஒற்றைப் பிறைச் சந்திரன்; கூரெரி=நீண்ட தழற்பிழம்பு; ஈரிரு=ஈர் இரண்டு, நான்கு; பல பதிப்புகளில் ஈருரி என்று உள்ளது. ஈருரி என்றால் ஈரப்பசையுடைய யானைத் தோல் என்று பொருள். யானைத் தோல் கோவணமாக ஆனது என்றால் பொருத்தமாக இல்லை. பெருமான் பெரிய துணியிலிருந்து கிழிக்கப் பட்டதையே கோவணமாக அணிந்து கொள்கின்றார் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. நால்விரல் கோவணம் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்ற அடிப்படையில் ஈரிரு கோவணம் என்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆறுமுக விலாஸ் அச்சுக்கூடம் அச்சிட்ட புத்தகத்தில் ஈரிரு கோவணம் என்றே உள்ளதால், அதனையே பொருத்தமாக எடுத்துக் கொள்வது சிறப்பு. சிவக்கவிமணியாரும், தனது பெரிய புராண விளக்கம் நூலில் ஈரிரு கோவணம் என்று குறிப்பிட்டு விளக்கம் அளிக்கின்றார். மறையே நமது கோவணமாம் என்று திருவிளையாடல் புராணத்தில் உள்ள பெருமானின் வாய்மொழி ஒன்றினை தனது கூற்றுக்கு ஆதாரமாக கூறுகின்றார்.

ஆர் எரி ஆழியானும் மலரானும் அளப்பரிய

நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி

கூரெரியாகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா

ஈரிரு கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே

நெருப்பினை உமிழ்ந்து பகைவரை அழிக்கும் வல்லமை வாய்ந்த சக்கரப்படை உடைய திருமாலும், தாமரை மலரினை தனது ஆசனமாகக் கொண்டதால் மலரவன் என்று அழைக்கப்படும் பிரமனும், தங்களின் எதிரே நீண்ட தீப்பிழம்பாக நின்ற பெருமானின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்தனர். அத்தகைய அளப்பரிய ஆற்றல் உடைய பெருமான், தனது சுருண்ட சடையின் மீது, கங்கை நீர் ஒழுகும் சடையின் மீது, வளர்ச்சி அடையாத ஒற்றைப் பிறைச் சந்திரனை சூட்டிக் கொண்ட பெருமான், அழகும் இளமையும் ஒருங்கே பொருந்திய பெருமான், குடமூக்கு தலத்தினைத் தனது இடமாகக் கொண்டு உறைகின்றார். நான்கு வேதங்களையும் தனது கோவணமாக உடைய பெருமான், எமது தலைவர் ஆவார் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.83.3) திருஞானசம்பந்தர், பெருமானை, குழகன் என்று குறிப்பிடுகின்றார். நீடுவரை=நீண்ட மேரு மலை; நிகழ்=பொருந்தும்; கூடலர்= வேதநெறி மற்றும் சைவ நெறியுடன் கூடாத திரிபுரத்து அரக்கர்கள்; அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டுவதே அன்பே சிவம் என்று உணர்த்தும் சைவநெறி ஆகும். அந்த நெறியிலிருந்து வழுவி, பல உயிர்களுக்கும் தீங்கு இழைத்தவர்கள் திரிபுரத்து அரக்கர்கள்; சேடு=பெருமை, ஒளி; ஏடு=இதழ்கள்; புனல்=கங்கை நதி; நிமலன்=இயற்கையாகவே பாசங்களிலிருந்து நீங்கிய பெருமான்; பெருமானின் எட்டு உயர்ந்த குணங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல்; விடை ஏறுதல் என்ற செயல் பெருமான் தோற்றத்திற்கு காரணமாக இருப்பதையும் எரி கையேந்தி ஆடுதல் அவன் சம்ஹாரம் செய்வதையும் உணர்த்துகின்றது. இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் ஆதியும் அந்தமாகவும் பெருமான் இருக்கும் தன்மை இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. நீண்ட மேரு மலையினை வில்லாக வளைத்து, வாசுகி பாம்பினை நாணாக அந்த வில்லினில் பூட்டி, தீக்கடவுளை நுனியில் கொண்டுள்ள அம்பினைப் பொருத்தி, அன்பே சிவம் எனப்படும் சிவநெறியிலிருந்து வழுவி பல உயிர்களுக்கும் தீங்கிழைத்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்து வந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒருங்கே அழித்து எரித்தவர் சிவபெருமான் ஆவார். அவர் தனது சடையினில், இதழ்கள் நிறைந்த கொன்றை மலர்களையும் கங்கை நதியையும் பொருத்தமாக அணிந்து கொண்டவர்; அவர் இயற்கையாக பாசங்களிலிருந்து விடுபட்ட நிமலர் ஆவார். இத்தகைய பெருமைகள் வாய்ந்த பெருமான் இருக்கும் இடம், ஒளி வீசுவதும், பெருமை மிகுந்ததும் ஆகிய தாமரை மலர்கள் விளங்கும் நீண்ட வயல்களை உடைய நல்லூர் தலமாகும்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நீடுவரை மேரு வில் அதாக நிகழ் நாகம் அழல் அம்பால்

கூடலர்கள் மூவெயில் எரித்த குழகன் குலவு சடை மேல்

ஏடுலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடமாம்

சேடுலவு தாமரைகள் நீடு வயலார் திரு நலூரே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.76.2) திருஞான சம்பந்தர், பெருமானை, குழகர் என்று குறிப்பிடுகின்றார். பண்டிரை=பண்டு இரை; பண்டு=பண்டைய காலத்தில்; பயம் என்ற சொல் பய எனக் குறுகியது. பால் என்று பொருள்; புணரி=அலைகள்; அலைகள் உடைய பாற்கடல் என்று இங்கே பொருள் கொள்வது பொருத்தம். கனக மால் வரை=பொன் மலை எனப்படும் பெரிய மேரு மலை; வண்டிரை=வண்டு+இரை=வண்டுகள் ஆரவாரம் செய்கின்ற; மீதணவு=மீது அணவு, மீது தவழும், வருடும்; வெறியார்=நறுமணம் பொருந்திய; மொழி=புகழ்ச் சொற்கள்;

பண்டிரை பயப் புணரியிற் கனக மால் வரையை நட்டு அரவினைக்

கொண்டு கயிறிற் கடைய வந்த விடம் உண்ட குழகன் தன் இடமாம்

வண்டிரை நிழற் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறியார்

வெண்டிரைகள் செம்பவள முத்து கடல் வந்த மொழி வேதவனமே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.6) திருஞானசம்பந்தர் பெருமானை, குழகனார் என்றும் காளி ஏத்தும் அழகனார் என்றும் குறிப்பிடுகின்றார். தோற்றவர் எவருக்கும் தம்மை வென்றவர் மீது கோபமும் வெறுப்பும் ஏற்படுவது இயற்கையே. இந்த இயற்கைக்கு மாறாக, பெருமானிடம் நடனப் போட்டியில் தோல்வி அடைந்த காளியன்னை, பெருமானை புகழ்ந்தனள் என்று குறிப்பிட்டு, போட்டியிட்ட காளிதேவியும் புகழும் வண்ணம் பெருமானின் நடனம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று நமக்கு உணர்த்துகின்றார். அம்பர் மாகாளம் தலத்தில் உள்ள காளிதேவி சன்னதி மிகவும் ப்ரசித்தி பெற்றது. திருக்கோயிலின் தெற்கு பகுதியில் காளிதேவி சன்னதி உள்ளது. அம்பன் அம்பாசுரன் ஆகிய இரண்டு அரக்கர்களை கொன்ற பாவம் தீர, காளிதேவி இறைவனை வழிபட்டதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது.

பழக மாமலர் பறித்தி இண்டை கொண்டு இறைஞ்சுவார் பால் செறிந்த

குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற

கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும்

அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.101.9) திருஞான சம்பந்தர் பெருமானை, குழகன் என்று குறிப்பிடுகின்றார். ஏ=அம்பு; ஏவலன்=அம்பு எய்தலில் வல்லவனாகிய இராமபிரான்; சே=எருது, இடபம்; சேவல=இடபத்தின் சித்திரம் பொருந்திய; கோவலன்=கலைகளுக்கு அரசன், இங்கே திருமாலை குறிப்பிடுகின்றது. நோக்கொணாத என்ற தொடர் மூலம், திருமாலும் பிரமனும் பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முடியால் நின்ற தன்மை உணர்த்தப் படுகின்றது. மெய்ம்மை=உண்மைத் தன்மை; இராமபிரான், சிவபெருமானின் உண்மையான தன்மையை உணர்ந்து, பெருமானைப் புகழ்ந்து ஏத்தி வழிபட்டதாக இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.

கோவலன் நான்முகன் நோக்கொணாத குழகன் அழகாய

மேவலன் ஒள்ளெரி ஏந்தி ஆடும் இமையோர் இறை மெய்ம்மை

ஏவலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய

சேவல வெல்கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே

பரிதி நியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.9) திருஞானசம்பந்தர், பெருமானை குழகர் என்று குறிப்பிடுகின்றார். நயந்து=நயமாக பெருமானின் புகழினை குறிப்பிட்டு பணிந்து தொழ, பெருமானின் திருவடிகளையும் திருமுடியையும் தேடிக் காணுமாறு எவரும், திருமால் மற்றும் பிரமனிடம் சொல்லவில்லை. அவர்கள் இருவரும் அவர்களாகவே, தங்களது ஆற்றல் அடுத்தவரை விடவும் மேலானது என்பதை நிலைநாட்டும் பொருட்டு, பெருமானது திருவடியையும் திருமுடியையும் நாடினார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம், நாடினர் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். ஏடு=இதழ்கள்; கூடலர்=காணக் கூடாதவர்; பிரமனும் திருமாலும் காண முடியாத வண்ணம், நெருப்புத் தூணாக நின்ற தனது உருவத்தை நீட்டிக் கொண்டவர் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது. குழகர்=இளைமையும் அழகும் ஒருங்கே பொருந்தியவர்; சோர=சோர்ந்து காணப்படும் வண்ணம்; ஆடல்=திருவிளையாடல்; மேலே குறிப்பிட்ட வண்ணம் நீண்ட தழலாக பெருமான் நின்ற தன்மை, உண்மையை அவர்கள் இருவருக்கு உணர்த்தும் பொருட்டு பெருமான் செய்த திருவிளையாடல். பெருமானது திருவடிகளையும் திருமுடியையும் கண்டுவிட வேண்டும் என்ற முடிவோடு, அவற்றை நாடிய திருமாலும் பிரமனும் காண முடியாமல் திகைத்தனர். பின்னர் இறைவனின் ஆற்றலை உணர்ந்த அவர்கள் இருவரும், பெருமானின் புகழ் வாய்ந்த தன்மைகளை குறிப்பிட்டு பெருமானை துதித்து வணங்கினர். பிரமனும் திருமாலும் உண்மையை அறியும் பொருட்டு பெருமான் செய்த திருவிளையாடல் தான், அவர்கள் இருவரும் காணக் கூடாதவர்களாக நீண்ட தோற்றத்துடன் நின்ற தன்மை. இளமையும் அழகும் ஒருங்கே உடையவராக விளங்கும்பெருமான் தினமும் பலி ஏற்பவராக திகழ்கின்றார். இதழ்கள் உடைய தாமரை மலர் போன்று அழகுடன் விளங்கும் எனது முகம், அவருடன் இணைய முடியவில்லையே என்ற ஏக்கத்தினால் சோர்ந்து காணப்படுகின்றது. இவ்வாறு எனது முகத்தின் அழகினைக் கவர்ந்த கள்வராகிய பெருமான் உறைகின்ற இடம், பாடல்கள் பாடியும் ஆடியும் அடியார்கள் பெருமானை வணங்கும் பரிதிநியமம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. பெருமான் பால் தீவிர காதல் கொண்ட பெண்ணின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது.

நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்தக்

கூடலர் ஆடலராகி நாளும் குழகர் பலி தேர்வார்

ஏடலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்

பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிந் நியமமே

திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.9) திருஞானசம்பந்தர், பெருமானை குழகர் என்று அழைக்கின்றார். ஏடு=அடுக்கடுக்காக இதழ்களை உடைய தாமரை மலர்; சரிதை= திருவிளையாடல்கள்; அடுக்கடுக்காக இதழ்களை உடைய பிரமன், சிறப்புடைய திருமால் ஆகிய இருவரும் பெருமானின் திருமுடியையும் திருவடியையும் காணமுடியாமல் திகைத்து நின்ற போது, அவர்கள் இருவரும் காணமுடியாத வண்ணம் கூரான நெருப்புப் பிழம்பாக நீண்டு நிமிர்ந்த அழகர் சிவபெருமான்; அவர் தனது கையினில், வாடி உலர்ந்த பிரம கபாலத்தை, பலி ஏற்பதற்காக ஏந்தியுள்ளார். அவர் வலஞ்சுழி தலத்தினில் எமது தலைவராக பொருந்தி உறைகின்றார். நான்கு வேதங்களையும் புராணங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்த சான்றோர்கள், பாடி போற்றும் வகையில் அவர் புரிந்த பல திருவிளையாடல்கள் அமைந்துள்ளன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஏடியல் நான்முகன் சீர் நெடுமால் என நின்றவர் காணார்

கூடிய கூரெரியாய் நிமிர்ந்த குழகர் உலகேத்த

வாடிய வெண் தலை கையிலேந்தி வலஞ்சுழி மேய எம்மான்

பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.107.10) திருஞானசம்பந்தர் பெருமானை, குழகன் என்று அழைக்கின்றார். வெற்றரை=ஆடையால் மறைக்கப்படாத வெற்று இடுப்பு; உணராது=பொருட்படுத்தாது; உற்றரை= உற்ற+அரை; தொழில் என்று நாரையூர் தலத்தில் பெருமான் எழுந்தருளி இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. நிலவுலகில் உள்ள மாந்தர்களுக்கு அருள் புரியும் வண்ணம் பல தலங்களிலும் பெருமான் உறைவதால், அவ்வாறு அருள் புரிவதை பெருமானின் தொழில் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அன்பே சிவம் என்று திருமூலர் கூறுவது போன்று, தன்பால் அன்பு வைக்கும் அடியார்களுக்கு, குழைந்து அருள் புரிவதே இறைவனின் தொழிலாக உள்ளது என்று நயமாக கூறப்படுகின்றது. பாம்பு என்பது அனைவர்க்கும் அச்சம் விளைவிப்பது. அத்தகைய பாம்பினை அடக்கி, தனது விருப்பம் போன்று பெருமான் ஆட்டும் செயல், அச்சம் தரும் வினைகளால் அடியார்கள் கொண்டுள்ள பயத்தினை பெருமான் அறவே நீக்கும் வல்லமை படைத்தவர் என்பதை குறிப்பிடுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இடுப்பினில் ஆடை ஏதும் இல்லாத வேடத்துடன் பல இடங்களில் திரியும் சமணர்களும், துவராடை கொண்டு தங்களது இடுப்பினை மறைத்து திரியும் புத்தர்களும், சிவபெருமானின் தன்மையை இழிவாகக் குறிப்பிடும் சொற்களை பொருட்படுத்தாது, உலகத்தவரே, நீங்கள் பெருமானைப் பணிந்து எழுவீர்களாக. குற்றங்கள் ஏதும் இல்லாத கொள்கைகள் உடையவரும், எமது தலைவனும், இளமையும் அழகும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவனும் ஆகிய இறைவன், நிலவுலகில் பல தலங்களில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள் புரிவதையே தனது தொழிலாகக் கொண்டுள்ளான். அனைவர்க்கும் அச்சம் தரும் பாம்பினைத் தனது விருப்பம் போன்று ஆட்டும் வல்லமை படைத்த பெருமான், தங்களைப் பிணைத்துள்ள வினைகளின் தன்மையால் அடியார்கள் கொண்டுள்ள அச்சத்தை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்தவன் ஆவான். எனவே நீங்கள், நாரையூர் தலம் சென்றடைந்து பெருமானை வழிபட்டு வினைகளால் நீங்கள் கொண்டுள்ள அச்சத்தினையும், வினைகளையும் முற்றிலும் தீர்த்துக் கொள்வீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெற்றரை ஆகிய வேடம் காட்டித் திரிவார் துவராடை

உற்றரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழுமின்கள்

குற்றம் இலாததோர் கொள்கை எம்மான் குழகன் தொழிலாரப்

பெற்றரவு ஆட்டி வரும் பெருமான் திருநாரையூர் சேர்வே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (3.107.6) திருஞானசம்பந்தர், பெருமானை, அழகிய கோலத்துடன் இருப்பதாக கூறுகின்றார். சென்னி=தலை; புகல்=வெற்றி, வெற்றியால் அடையும் புகழ்; புகல் என்ற சொல்லுக்கு திருவருட்சக்தி பதிதல் என்ற விளக்கமும் சொல்லப் படுகின்றது. பதிகத்தின் முந்தைய பாடல்களில், பெருமானைத் தொழுது வணங்குவதால், உயிர்கள் இம்மையில் அடையும் பல பலன்கள் கூறப்பட்டு இருப்பதால், அந்த வரிசையில், புகழ் சேரும் என்று சொல்வது பொருத்தமாக உள்ளது. அதாவது பெருமானின் அடியார்கள் தாங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவார்கள் என்றும் அத்தகைய வெற்றிகளால் சிறந்த புகழினை அடைவார்கள் என்றும் உணர்த்தப் படுகின்றது. மத்தம்=ஊமத்தை மலர்; குலாய=செழிப்பாக வளர்ந்த மலர்; அரை=இடுப்பு; குழகாக=இளமையாக; நக்கன்=குறைந்த ஆடையை அணிந்தவன்; நக்கமரும்= குறைந்த ஆடையினை அணிந்த; மேவி=பொருந்தி;கொக்கின் இறகையும், செழிப்புடன் மலர்ந்தும் குளிர்ந்தும் காணப்படும் ஊமத்தை மலரினைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவனாக, எலும்பு மாலையினையும் பாம்பினையும் தனது இடுப்பினில் இறுகக் கட்டி, குறைந்த ஆடையுடன் காணப்பட்டாலும் மிகுந்த அழகும் இளமையும் பொருந்திய திருமேனியை உடையவனாக விளங்கும் சிவபெருமான் திருநாரையூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான். அந்த தலம் புகுந்து, இறைவனை வழிபடும் எண்ணம் கொண்டுள்ள அடியார்கள் தங்களது செயல்களில் வெற்றி கொண்டு நிறைந்த புகழினை பெறுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி

அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகாக

நக்கு அமரும் திருமேனியாளன் திரு நாரையூர் மேவிப்

புக்கு அமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும் புகறானே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.118.7) திருஞானசம்பந்தர், பெருமானை குழகனார் என்று குறிப்பிடுகின்றார். கொலையிடை=கொலைத் தொழில்கள் நடைபெறும் சண்டை; அடல் நெடு=வலிமை வாய்ந்த நீண்ட மதில்கள்; மலைகளை விடவும் உயர்ந்த மரக்கலங்கள் தங்கும் கடற்கரை என்று குறிப்பிட்டு, சீர்காழி நகரம் கடல் வாணிகத்தில் தலை சிறந்து விளங்கிய தன்மையை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

அலைபுனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதிலொரு மூன்று

கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயிலது என்பர்

மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்று மற்றிடையிடை எங்கும்

கலை களித்தேறிக் கானலில் வாழும் கழுமல நகர் எனலாமே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.37.3) அப்பர் பிரான் பெருமானை, குழகன் என்று குறிப்பிடுகின்றார். பெய் புனல்=பொருந்திய கங்கை நதி; பிறைச் சந்திரனை தனது சடையினில் வைத்துள்ள பெருமான், வானிலிருந்து பாய்ந்து மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியையும் தனது சடையில் தங்குமாறு வைத்துள்ளார். பல ஊழிகளின் வடிவமாக விளங்கிய எங்களது உயர்ந்த தலைவனாகிய பெருமான், சோலைகள் நிறைந்த நெய்த்தானம் தலத்தில் உறைபவனாகவும், அழகிய இளைஞனாகவும் விளங்கும் பெருமான், தன்னை வந்தடைந்து தங்களது குறைகளை சொல்லி வழிபட்டு, அந்த குறைகளை தீர்க்குமாறு வேண்டும் அடியார்கள் அணுகுவதற்கு மிகவும் எளியவனாக உள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;

பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை தன்னை

உறை தர வைத்த எங்கள் உத்தமன் ஊழியாய

நிறை தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று

குறை தரும் அடியவர்க்கு குழகனைக் கூடலாமே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் (4.37.5) அப்பர் பிரான் பெருமானை குழகனார் என்று குறிப்பிடுகின்றார். அந்தண்=அம்+தண்=அழகும் குளிர்ச்சியும் உடைய; காட்டினைத் தான் நடனமாடும் அரங்காகக் கொண்டு, கனன்று எரியும் தீப்பிழம்பினை கையில் ஏந்தியவாறு, பாடுகின்ற பூதங்கள் தன்னைச் சூழ்ந்து நிற்க, பண்ணுடன் இசைந்த பல பாடல்கள் பாடியவாறு நடனமாடும் சிறப்பினை உடைய பெருமான், அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நெய்த்தானம் தலத்தில் என்றும் உறைகின்றார். அத்தகைய பெருமானை, அழகும் இளமையும் பொருந்தி விளங்கும் பெருமானைச் சென்று அடையும் சிவயோக நெறியினை அடியேன் அறியாமல் இருக்கின்றேன். இந்த நிலை மிகவும் பரிதாபமானது என்று அப்பர் பிரான் தன்னை நொந்து கொள்ளும் பாடல். இவ்வாறு தன்னை நொந்து கொண்டு இறைவனிடம் விண்ணப்பம் வைப்பதன் மூலம், அந்த சிவயோக நெறியினை தான் அறிந்து கொள்வதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என்று உணர்த்துகின்றார்.

காடு இடமாக நின்று கனலெரி கையில் ஏந்தி

பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி

ஆடிய கழலர் சீரார் அந்தண் நெய்த்தானம் என்றும்

கூடிய குழகனாரை கூடுமாறு அறிகிலேனே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.51.10) அப்பர் பிரான், பெருமானை குழகன் என்று அழைக்கின்றார். குழகன்=அழகன், இளைஞன்; பசுபதி=ஆன்மாக்களின் தலைவன்; உதிரம் சொட்டும் நிலையில் உள்ள யானையின் ஈரத் தோல், அதனை உடலில் போர்த்துக் கொள்வோரின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது சீவக சிந்தாமணியில் கூறப்படும் செய்தி. எனவே தான், உமை அம்மை யானையின் தோலை உரித்த இறைவன் அந்த தோலினைத் தனது உடல் மீது போர்த்ததைக் கண்டு அச்சம் அடைகின்றாள். ஆன்மாக்களின் தலைவனாக விளங்கும் இறைவனே, பாவங்களைப் போக்குபவனே, உனக்கு அடிமைத் தொண்டு புரிவதற்கு நான் என்னை பழக்கப் படுத்திக் கொண்டு தொடர்ந்து உனக்கு பல விதமான பணிவிடைகள் செய்தவாறு இருப்பேன். இறைவனே நீ என்னை உனது அடிமையாக ஏற்றுக் கொள்வாயாக. இளமையானதும் மதமயக்கம் உடையதும் ஆகிய யானையினை அதன் தோலை உரித்துக் கொன்ற பின்னர், அந்த ஈரப்பசை உடைய தோல் உனது உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் பொருட்படுத்தாமல், யானையின் தோலினைப் போர்த்தவனே, கரிய நிறத்தை உடைய தோலினைப் போர்த்த பின்னரும் அழகான தோற்றத்துடன் என்றும் இளமையுடன் காட்சி அளிப்பவனே, அரக்கன் இராவணனின் வலிமையான தோள்கள் நொறுங்குமாறு, உனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி, அரக்கனை மலையின் கீழே அடர்த்த குழகனே, பன்றிக் கொம்பு பூண்டு அழகுடன் விளங்கும் மார்பினை உடையவனே நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா

மழகளி யானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த

அழகனே அரக்கன் திண் தோள் அருவரை நெரிய ஊன்றும்

குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே

வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.55.1) அப்பர் பிரான், பெருமானை குழகர் என்று அழைக்கின்றார். இரைத்து=சீர் பாடி, பெருமையினை பாடி; தெண் திரை=தெளிந்த அலைகள்; ஓதம்=நீர்; தொண்டு=தொண்டர்கள்; அப்பர் பிரான், தொண்டர்கள் பெருமானை குறித்து கீதங்கள் பாடி வணங்கியதாக இங்கே குறிப்பிடுகின்றார். பெரிய புராண குறிப்புகளின் படி திருஞானசம்பந்தர் ஏழு வயது நிறைந்து அவருக்கு உபநயனம் செய்து வைக்கப் பட்ட பின்னரே, அப்பர் பிரான் அவரை சீர்காழியில் சந்தித்ததாக உணர்கின்றோம். திருக்கோலக்கா தலத்தில் பொற்றாளம் பெற்று திரும்பிய பின்னர் நனிபள்ளி தலம் சென்று அங்கிருந்து சீர்காழி திரும்பும் வழியில், வலம்புரம், சாய்க்காடு, வெண்காடு ஆகிய தலங்களுக்கு திருஞானசம்பந்தர் சென்றதாக நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். எனவே அப்பர் பிரான் வலம்புரம் தலம் சென்றதற்கு முன்னமே திருஞான சம்பந்தர், வலம்புரம் சென்று பதிகம் அருளினார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். எனவே, அடியார்கள் இசைப் பாடல்கள் பாடி இறைவனை துதித்ததாக அப்பர் பிரான் கூறுவது, அந்த தலத்தில் இருந்த அடியார்கள் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்களை பாடியதாக குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. அப்பர் பெருமானின் குறிப்பிலிருந்து வலம்புரம் தலத்திற்கு மிகவும் அருகில் கடல் இருந்ததாக தெரிய வருகின்றது. கடலலைகள் பெருமானின் திருவடிகளை வருடியதாக அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வலம்புரத்து அடிகளின் திருவடிகளை, தெளிந்த கடலின் நீரலைகள் சென்றடைந்து அலசும் தருணத்தில், ஆங்கே உள்ள அடியார்கள் பெருமானின் பெருமைகளை பாடியவாறு அனைத்து உலகங்களுக்குத் தலைவனாக உள்ள பெருமானைத் தொழுது வணங்குகின்றார்கள். மேலும் செறிந்து காணப்படும் பல வகையான மலர்களில் உள்ள தேனைப் பருகியதால், மயக்கம் அடைந்து தம்மை மறந்து உறங்கும் வண்டினங்கள் மிகுந்த வலம்புரத்து தலத்தில் உறையும் அடிகளை, அடியார்கள் தங்களது உள்ளத்தில் இருத்தி, சிறப்பான இசைப் பாடல்களைப் பாட, குழகர் இருக்கும் வண்ணம் தான் என்னே என்று தனது வியப்பினை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடல்.

தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும் காலைத்

தொண்டு இரைத்து அண்டர் கோனைத் தொழுது அடி வணங்கி எங்கும்

வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள் தம்மைக்

கொண்டு நற்கீதம் பாடக் குழகர் தாம் இருந்தவாறே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.56.2) அப்பர் பிரான், பெருமானை குழகர் என்று அழைக்கின்றார். மடந்தை=உமையம்மை: சேக்கிழார் பெரிய புராணப் பாடலில் குறிப்பிட்டது போன்று, சிவபெருமான் பசுவுக்கு இங்கே அருள் புரிந்தார். அதனால் தான் ஆவடுதுறை என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் கயிலையில் சொக்கட்டான் ஆட்டம் ஆடிய போது ஏற்பட்ட பிணக்கால். உமை அம்மை பசுவாக இந்த தலம் வந்து சேர்ந்ததாகவும் கூறுவர். ஈசன் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அணைத்து எழுந்த கோலத்தில் இருந்ததால் அணைத்து எழுந்த நாயகர் என்றும் பசுவுக்கு முக்தி கொடுத்து உமை அம்மை சுயரூபம் பெற்றமையால் கோமுக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகை பசுவாக இந்தத் தலம் வந்து வழிபட்டமையால் கோகழி என்றும் இந்த தலம் அழைக்கப் படுகின்றது. இந்த தலத்தில் அணைத்து எழுந்த நாயகராக அருள் புரிந்தவர், கச்சி ஏகம்பத்தில் தழுவக் குழைந்த நாதராக வெளிப்பட்டவர், அண்ணாமலையில் உமை அம்மையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் ஏற்று அருள் புரிகின்றார். உடலில் சரி பாதியை அளித்து, தனக்குச் சமமாக அம்மையை உயர்த்தியதை விட பெரிய பேறு ஏதும் இல்லை என்பதால், அம்மைக்கு அருள் புரிந்த தலத்துப் பாடலில், மடந்தை பாகத்தர் என்று இறைவனின் பேரருளை அப்பர் பிரான் குறிப்பிட்டார் போலும். உமை அம்மையை, தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; அவர் தன்னை நோக்கி பாய்ந்து வந்த மான் கன்றினைத் தனது கையில் ஏந்தினார்; அவர் தான் குடந்தையில் அழகராக காட்சி தருகின்றார்: அவர் தன்னைக் கொல்ல வந்த புலியினைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டவர்; தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சினை உண்டு உலகத்தை காப்பாற்றியவர்; சிறுவன் மார்க்கண்டேயனுக்காக காலனைக் காய்ந்தவர்; ஆவடுதுறையில் அமர்ந்துள்ள அவர், தன்னைச் சரண் அடையும் அடியார்களுக்கு அருள்கள் வழங்கும் அன்பராக உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;

மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்

குடந்தையில் குழகர் போலும் கொல்புலித் தோலர் போலும்

கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனைக் காய்வர் போலும்

அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.7) அப்பர் பிரான், பெருமானை, குழகனே என்று அழைக்கின்றார். ஆலவாயில் தலத்து இறைவனின் திருநாமங்களில் சொக்கன் என்பதும் ஒன்று. சொக்கன் என்ற சொல்லுக்கு அழகு, பொன், மயக்கம் என்று வேறுவேறு பொருட்கள் உண்டு. ஆலவாயிலில் உறையும் பெருமானுக்கு இந்த மூன்று பொருட்களும் பொருந்துவதை நாம் உணரலாம். சொக்கத் தங்கம் என்றால் மாற்று குறையாத தங்கம் என்று பொருள். இந்த பாடலில் அப்பர் பிரான், மாத்தாய், மாற்று குறையாத தங்கமே என்று பெருமானை அழைப்பதை நாம் காணலாம். குழகன்=இளமையான அழகன்: வில்லீ=வில்லினை உடையவன்: கோல வில்லீ என்றால் அழகாக வில்லினை ஏந்தியவன் என்று பொருள். தெண் திரை=தெளிந்த நீரினை உடைய கடல், இங்கே பாற்கடலைக் குறிக்கும். வழுவிலாது=எந்த விதமான கேடும், பாதகமும் இன்றி வழிபடுதல்: இந்த பாடலில் நஞ்சம் உண்ட குழகனே (அழகனே) என்று அப்பர் பிரான் கூறுகின்றார். திருமால் பிரமன் உட்பட அனைத்து தேவர்களும் அசுரர்களும், பாற்கடலிலிருந்து திரண்டெழுந்த ஆலகால நஞ்சின் நெடியினைத் தாங்க முடியாமல் ஓடியபோது, அந்த நஞ்சினை உட்கொண்ட பின்னரும் உயிருடன் இருந்தது மட்டுமல்லாமல், நஞ்சினை உட்கொண்டதால் சிறிதும் தளர்ச்சியோ, வாட்டமோ இல்லாமல் இருந்தவர் சிவபெருமான். தளர்ச்சி அடைந்து, அவரது முகம் வாட்டம் அடைந்து இருந்தால், அவரது அழகு குறைந்திருக்கும். நஞ்சம் உண்ட பின்னரும், பெருமான் அழகு ஏதும் குறையாமல் இருந்தார் என்பதை உணர்த்தும் பொருட்டு நஞ்சம் உண்ட குழகனே என்று குறிப்பிட்டு, நஞ்சினை உண்டதால் சிறிதும் தளர்ச்சி அடையாமல் சிவபெருமான் இருந்தார் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லும் அப்பர் பிரானின் நயம் ரசிக்கத்தக்கது. தெளிந்த பாற்கடலிலிருந்து திரண்டெழுந்த நஞ்சினை உண்ட அழகனே, மேரு மலையினை வில்லாக வளைத்து அழகாக அதனை ஏந்தியவனே, இடைவிடாது நடனம் ஆடுபவனே, மாற்றுக் குறையாத தங்கம் போன்று அடுத்தவரை சொக்கவைக்கும் அழகு உடையவனே, ஆலவாயிலில் உறையும் அப்பனே, அடியேன் உன்னை எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் வழிபடுகின்றேன். உனது செழுமையான மலர்ப் பாதங்களைக் காண விருப்பம் கொண்டுள்ள எனக்கு நீ தான் அருள் புரிந்து உனது திருப்பாதங்களை காட்ட வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்

செழு மலர்ப் பாதம் காணத் தெண் திரை நஞ்சம் உண்ட

குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள

அழகனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.66.9) அப்பர் பிரான், பெருமானை, குழகர் என்று அழைக்கின்றார். வக்கரை=திருவக்கரை என்று அழைக்கப்படும் தொண்டை நாட்டுத் தலம். தேவாரப் பாடல் பெற்ற தலம். பாணி=கை: அக்கு=சங்கு மணி; கொக்கரை, தாளம், வீணை ஆகிய இசைக்கருவிகளை கையில் ஏந்தி, அந்த கருவிகள் எழுப்பும் இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடும் பெருமான் இளைய தோற்றம் உடையவராக உள்ளார். சங்குமணி மாலையைத் தனது இடுப்பினில் அணிந்துள்ள பெருமான், ஐந்து தலை பாம்புகளையும் அணிகலனாக ஏற்று தனது விருப்பம் போல் அவற்றை ஆட்டுவிக்கின்றார். திருவக்கரை என்று அழைக்கப்படும் தொண்டை நாட்டுத் தலத்தில் உறையும் அவர், தாருகவனத்து மகளிர் தன்மீது காதல் கொள்ளும் வண்ணம் அழகிய தோற்றம் உடையவர் ஆவார். மிகவும் குறைந்த ஆடைகளை அணியும் அவர், நாகேச்சரத்து தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொக்கரை தாளம் வீணை பாணி செய் குழகர் போலும்

அக்கரை அணிவர் போலும் ஐந்தலை அரவர் போலும்

வக்கரை அமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்

நக்கரை உருவர் போலும் நாக ஈச்சரவனாரே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.74.5) அப்பர் பிரான், பெருமானை குழகன் என்று அழைக்கின்றார். மழலை=இளமையான; பெருமான் என்றும் இளமையுடன் இருப்பதுடன், பெருமானைச் சார்ந்த பொருட்களும் இளமையாக இருக்கும் நிலை, மழலை வெள்ளேறு என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. ஏற்றன்=ஏறினை, எருதினைத் தனது வாகனமாக உடைய பெருமான்; இரும் சடை= பெரிய சடை; ஆற்றன்=ஆற்றினைத் தனது சடையில் கொண்டுள்ள பெருமான்; கங்கை நதியினைத் தனது சடையில் பெருமான் ஏற்றுக் கொண்டுள்ள தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. நீற்றன்=திரு நீற்றினைத் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டுள்ளவன்; இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் பெருமானை குழகன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

கூற்றினை உதைத்த பாதக் குழகனை மழலை வெள்ளேறு

ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடைக் கற்றை தன் மேல்

ஆற்றனை அடியர் ஏத்தும் அமுதனை அமுத யோக

நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.6.3) அப்பர் பிரான், பெருமானை குழகர் என்று அழைக்கின்றார். விண்ட=கிள்ளி எறியப்பட்ட பிரமனின் தலை; வாணர் வாழ்நர் என்ற சொல்லின் மருவு. அண்டம் என்பதற்கு மேலுலகம் என்று இங்கே பொருள் கொண்டு தேவர்களுக்கு அருளும் இறைவன் என்று புரிந்து கொள்ளவேண்டும். பிரமனின் ஐந்து தலைகளிலிருந்து கிள்ளப் பட்டதும், தசை நரம்பு ஆகியவை உலர்ந்து வெண்மை நிறத்துடன் காட்சி அளிப்பதும் ஆகிய தலையினை தான் உணவு உட்கொள்ளும் கலனாக ஏற்று வீடுகள் தோறும் பலியேற்கச் செல்லும் இறைவன் மிகவும் அழகியவராக காணப் படுகின்றார். அவர், தேய்ந்து துண்டிக்கப்பட்டது போன்று காணப்படும் ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவர்; மேலுலகத்தில் வாழ்கின்ற தேவர்களுக்கும் அருள் புரியும் இறைவனாக விளங்கும் அவர் திருவாரூரர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விண்ட வெண் தலையே கலனாகவே

கொண்டு அகம் பலி தேரும் குழகனார்

துண்ட வெண்பிறை வைத்த இறையவர்

அண்ட வாணருக்கு அருளும் ஆரூரரே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.10.8) அப்பர் பிரான், பெருமானை, குழகர் என்று அழைக்கின்றார். மாறிலாக் கதவம்=மறைகள் காப்பிட்ட. நாள் தொடங்கி மாறுபாடு ஏதும் இல்லாமல் மூடியே கிடக்கும் திருமறைக்காடு தலத்து திருக்கோயிலின் கதவுகள். குழகர் என்பது அருகிலிருக்கும் கோடிக்கரை தலத்தில் உறையும் பெருமானின் திருநாமம். அழகன் என்று பொருள் கொண்டது. கங்கை ஆற்றினை தலையில் சூடியவரே, அழகிய மறைக்காட்டுத் தலத்தில் உறையும் மறைக்காடரே, உமையம்மைக்கு உடலில் ஒரு பாகம் கொடுத்த குழகரே, ஏறினை வாகனமாக உடைய எம்பெருமானே, வேதங்கள் காப்பிட்ட நாள் தொட்டு தனது நிலையில் மாறுபாடு, ஏதும் இல்லாமல் மூடியே கிடக்கும் கதவுகளின் வலிமையை நீக்கி. அவை திறக்குமாறு அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

ஆறு சூடும் அணி மறைக்காடரோ

கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ

ஏறது ஏறிய எம்பெருமான் இந்த

மாறிலாக் கதவம் வலி நீக்குமே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.13.8), அப்பர் பிரான், பெருமானை குழகன் என்று அழைக்கின்றார். கழகு=படை; கழகின் மேல் வைத்த என்ற சொற்றொடர், பெருமானின் இலிங்கத் திருவுருவத்தை கட்டிக் கொண்டிருந்த சிறுவனின் மேல் பாசக் கயிற்றினை வீசி அவனின் உயிரைக் கவர முயற்சி செய்ததை உணர்த்துகின்ற தொடர். பாசக்கயிறு தானே இயமனின் படை. பெருமானின் திருவடிகளை தினமும் வழிபட்டு சிறுவன் மார்க்கண்டேயன் வணங்கிய தன்மை, பழகி நின்னடி சூடிய பாலன் என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. சாடிய=உதைத்த; கழகு என்பதற்கு வஞ்சனை என்றும் பொருள் கூறுகின்றனர். குறித்த காலத்தில் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனின் செயலில் வஞ்சனை இருப்பதாக தோன்றவில்லை. ஒருகால், பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த அடியானின் உயிரினை கவர்வதற்கு முன்னர், இயமன் பெருமானின் அனுமதியை பெறாத செய்கையை வஞ்சனை என்று கருதுகின்றனர் போலும் கழகு என்ற சொல் படையுடன் தொடர்பு கொண்டுள்ளதாக சிவக்கவிமணி தனது பெரிய புராண விளக்கத்தில் கூறுகின்றார். தினமும் நியமத்துடன் வழிபட்டு, உனது திருவடிகளைத் தனது தலையில் சூட்டிக் கொண்ட சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினை, தனது பாசத்தால் கவர முயற்சி செய்த இயமனை உதைத்து கீழே வீழ்த்திய அழகனே, அழகு மிகுந்த திருவீழிமிழலை தலத்தில் வீற்றிருக்கும் இளமையும் அழகும் ஒருங்கே பொருந்திய இறைவனே, அடியேனை, நீர் குறியாக் கொண்டு காத்தருள வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பழகி நின்னடி சூடிய பாலனைக்

கழகின் மேல் வைத்த காலனைச் சாடிய

அழகனே அணி வீழிமிழலையுள்

குழகனே அடியேனை குறிக்கொளே

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.14.6) அப்பர் பிரான், பெருமானை, குழகனார் என்று அழைக்கின்றார். இறையுணர்வு தனது நெஞ்சத்தில் ஊறி, உள்ளம் நெகிழ்ந்து உருக வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் வேண்டுகின்றார். இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள இடைமருது தலத்தின் தலைவனாகிய ஈசனார், தனது திருநாமத்தைச் சொல்லும் அடியார்களின் வினைகளை முற்றிலும் நீக்கும் குழகனார் ஆவார். பாய்ந்து வந்த கங்கை ஆற்றினைத் தனது சடையில் வைத்து மறைத்த அழகராகிய இறைவனை எண்ணியெண்ணி தனது உள்ளம் உருகுகின்றது என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

ஏறது ஏறும் இடைமருது ஈசனார்

கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்

ஆறு செஞ்சடை வைத்த அழகனார்

ஊறியூறி உருகும் என் உள்ளமே

கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.20.1) அப்பர் பிரான் பெருமானை, குழகன் என்று குறிப்பிடுகின்றார். குருவதாய்=தென்முகக் கடவுள் வடிவத்தில் சனகாதி முனிவர்களுக்கு வேதங்களின் பொருளை உணர்த்தியது; பருவரால்=உடல் தடித்த பெரிய வரால் மீன்கள்; குழகன்=அழகன்; பழனம்=வயல்கள்; சக்தியும் சிவமும் இணைந்த ஒரே உருவமாக இருப்பவனும், சிவமாகவும் சக்தியாகவும் வேறுவேறு உருவமாக இருப்பவனும், மும்மூர்த்திகளாக இருப்பவனும், தென்முகக் கடவுள் வடிவம் கொண்டு குருவாக மௌன மொழியால் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசம் செய்தவனும், வேதங்களின் உட்பொருளை உணர்த்தியவனும் ஆகிய அழகன் உறையும் இடம் கடம்பூர் கரக் கோயிலாகும். உடல் பருத்த பெரிய வரால் மீன்கள் துள்ளி விளையாடும் நிலங்கள் நிறைந்த கடம்பூர் தலத்தில் அமைந்துள்ள கரக்கோயிலில், அனைத்துப் பொருட்களுக்கும் மூலமாகிய பெருமான் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும், அப்பர் பிரான், பெருமானை குழகன் என்று அழைக்கின்றார்.

ஒருவராய் இரு மூவரும் ஆயவன்

குருவதாய் குழகன் உறைவிடம்

பரு வரால் குதி கொள்ளும் பழனம் சூழ்

கருவதாம் கடம்பூர்க் கரக்கோயிலே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.52.8) அப்பர் பிரான், பெருமானை, குழகர் என்று அழைக்கின்றார். சாந்தம்=சந்தனம்; ஏனையோர் நறுமணம் வீசும் சந்தனத்தை விரும்பி உடல் முழுவதும் பூசிக் கொள்வது போன்று, திருநீற்றினை இறைவன் தனது உடல் எங்கும் பூசிக் கொள்ளும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பாடம் கேட்ட சனகாதி முனிவர்கள் முதியவராக காணப்பட, அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் பெருமான் மிகவும் இளையவராக இருக்கும் நிலையை நாம் பல இடங்களிலும் காண்கின்றோம், இந்த நிலையை உணர்த்தும் பொருட்டு, இளமையுடன் அழகாக விளங்கும் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கழலினைத் தனது காலில் அணிந்துள்ள பெருமான், தனது அடியானாகிய சிறுவன் மார்க்கண்டேயனது உயிரைக் கவர வந்த இயமனின் மீது கோபம் கொண்டு அவனைக் காலால் உதைத்தவர் ஆவார். கொழுந்து விட்டு எரியும் தழலின் நிறத்தை உடைய பெருமான், தனது உடலெங்கும் சந்தனம் பூசிக் கொள்வது போன்று திருநீற்றினைப் பூசிக்கொண்டு மிகவும் அழகராக காணப்படுகின்றார். ஆல மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு வேதங்களின் பொருட்களை விளக்கிய பெருமான், இளையவராகவும் அழகியராகவும் காணப்படுகின்றார். இத்தகைய தன்மைகள் கொண்ட பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கழல் கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்

தழல் கொள் மேனியர் சாந்த வெண்ணீறு அணி

அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய

குழகர் போல் திரு நாகேச்சரவரே

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.57.8) அப்பர் பிரான், பெருமானை, குழகனார் என்று அழைக்கின்றார். இதே பதிகத்தின் முந்தைய பாடலில் துன்பங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக இறைவனின் திருப்பாதங்களை நாடச் சொல்லும் அப்பர் பிரான், அவ்வாறு பலராலும் நாடப்படும் இறைவனின் புகழினை உணர்த்தும் வண்ணம் திருவிழாக்கள் இடைவிடாது நடைபெறுவதை சுட்டிக் காட்டுகின்றார். ஓசை=இன்னதென்று குறிப்பிட முடியாத சத்தம். பழகினார் வினை தீர்க்கும் பழம்பதி என்று தலத்தின் பழமையையும், பண்டை நாட்களில் அடியார்கள் அடைந்த பேற்றினையும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று என்பதால், சோழ மன்னன் முசுகுந்தன் இறைவனை வழிபட்டதையும், இந்திரனிடமிருந்து தான் கொண்டுவந்த மூர்த்தத்தை தாபித்த தலம் என்பதையும் நாம் உணரலாம். பிரமன் வழிபட்ட இறைவன் என்பதால், இறைவனின் திருநாமம் பிரமபுரீஸ்வரர் என்று இந்த தலத்தில் குறிப்பிடப் படுகின்றது. பகாசுரனை கொன்ற பாவத்தை போக்கிக் கொள்ள பீமன் இங்கே இறைவனை வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகின்றது. பகாசுரனின் உருவத்தையும் பிரம்மஹத்தியின் உருவத்தையும் நாம் முன்கோபுரத்தில் காணலாம். தங்களது வினைகளை அடியார்கள் பண்டை நாட்களில், தலத்து இறைவனை வணங்கி தீர்த்துக் கொண்டது போன்று நாமும் நமது வினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று அப்பர் பிரான் அறிவுரை வழங்கும் பாடல். கோளிலி தலத்தில் உள்ள குளிர்ந்த சோலைகளில், தலத்தில் இறைவனின் புகழை அனைவர்க்கும் உணர்த்தும் வண்ணம் கொண்டாடப்படும் திருவிழாக்களில் எழுகின்ற ஓசையொலிகள் இடைவிடாது கேட்கின்றன. இத்தகைய திருவிழாக்களில் பங்கேற்று பழகிய அடியார்களின் வினைகள் தீர்க்கும் தன்மை வாய்ந்தது இந்த கோளிலி திருப்பதி. இந்த பெருமையினை உடைய தலத்தில் உறையும் பெருமானும், தனது கையினில் தழலை ஏந்தி நடமாடுபவனும், அழகனும், இளைஞனும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களின் சிறப்பினை நீங்கள் கூறுவீர்களாக என்று அப்பர் பிரான் அறிவுரை வழங்கும் பாடல்.

விழவின் ஓசை ஒலி அறா தண் பொழில்

பழகினார் வினை தீர்க்கும் பழம்பதி

அழல் கையான் அமரும் திருக்கோளிலித்

குழகனார் திருப்பாதமே கூறுமே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (6.81) அப்பர் பிரான் பெருமானை கோடிகா அமர்ந்துறையும் குழகன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலில் மீண்டும்மீண்டும் பிறப்புக்கு வழிவகுக்கும் மயக்க நிலைக்கு மருந்தாக இருப்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். கண்டலம்=கண் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள: மண்டலம்=பல வகை உலகங்கள்; விண்டலம்=தேவர் உலகம்; கொண்டலம்=கொண்டல்+ அம்=அழகிய மேகம், அழகிய மேகம் கொண்டுள்ள கருமை நிறம்;

கண்டலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய் கல்மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய்

மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்

விண்டலம் சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்

கொண்டலம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

முதல் ஐந்து திருமுறைகளில் பெருமானை குழகர் என்று குறிப்பிடும் பாடல்களை சிந்தித்த நாம், அத்தகைய குறிப்புகள் கொண்ட எஞ்சிய திருமுறைப் பாடல்களை வேறோர் தருணத்தில் சிந்திப்போம். கோடிக்கரை தலத்தின் இறைவன் கோடிக்குழகர் என்றே அழைக்கப் படுகின்றார். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பல பாடல்களில் சுந்தரர், பெருமானை குழகீர் என்றும் குழகர் என்றும் அழைப்பதை காணலாம். இந்த பதிகத்தின் இரண்டாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சதுப்பு நிலமாக காட்சி தரும் இந்த தலத்தினில், திருக்கோயிலின் அருகே சுமார் பத்து வீடுகளே இருக்கும் நிலையில், கடற்கரையின் அருகே பெருமான் தனியாக கோயில் கொண்டுள்ள தன்மையைக் கண்ட சுந்தரர், தனியாக இருப்பது ஏன் என்ற கேள்வியை மிகவும் நயமாக பெருமானிடம் கேட்கின்றார். பண்டைய நாளில் நஞ்சினை அளித்த கடலுக்கு உபகாரமாக, அந்த கடலுக்குத் துணையாக இருக்கின்றீர் போலும் என்று பெருமானை நோக்கி கேட்பதாக அமைந்த பாடல். பரவை= கடல்;

முன்றான் கடல் நஞ்சம் உண்ட அதனாலோ

பின்றான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ

குன்றாப் பொழில் சூழ்தரு கோடிக் குழகா

என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே

பொழிப்புரை:

இறைவன் பால் மனம் ஒன்றி சிவநெறியில் பழகும் தொண்டர்களே, அனைவரும் வருவீர்களாக. அழகும் இளமையும் இணைந்த அன்னியூர்ப் பெருமானின் சிறந்த திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.

பாடல் 3:

மன்னியூர் இறை (1.096) பாடல் 2 தொடர்ச்சி, 3, 4 (திதே 0462)

நீதி பேணுவீர்

ஆதி அன்னியூர்

சோதி நாமமே

ஓதி உய்ம்மினே

விளக்கம்:

நீதி=நியதி, வழிபாட்டு முறைகள்; நீதி பேணுதல்=வழிபாட்டு முறைகளில் ஒழுகுதல்; பெருமானைக் கண்டு தொழுத பின்னர் அவனது திருநாமங்களை சொல்வது தானே முறை.

பொழிப்புரை:

வேதங்களிலும் ஆகம நூல்களிலும் சொல்லிய வண்ணம் முறையாக பெருமானைத் தொழும் அன்பர்களே, நீவிர் அனைவரும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக இருப்பவனும் சுயமாக ஒளி வீசுபவனும் ஆகிய பெருமானின் திருநாமங்களை ஓதி உய்வினை அடைவீர்களாக.

பாடல் 4:

மன்னியூர் இறை (1.096) பாடல் 2 தொடர்ச்சி, 3, 4 (திதே 0462)

பத்தர் ஆயினீர்

அத்தர் அன்னியூர்

சித்தர் தாள் தொழ

முத்தர் ஆவரே

விளக்கம்:

அத்தர்=தந்தை; சித்தர்=அடியார்களின் சித்தத்துள் நிலைத்து நிற்பவர் என்றும் சித்திகளைத் தருபவர் என்றும் சித்திகளை புரிபவர் என்றும் பல விதமாக பொருள் கொள்ளலாம். சித்தர் என்றதும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதி பிராகாரத்தில் துர்க்கை சன்னதிக்கு அருகே உள்ளே எல்லாம் வல்ல சித்தர் சன்னதி, நமது நினைவுக்கு வருகின்றது. அபிடேக பாண்டியனின் ஆட்சி காலத்தில், எல்லாம் வல்ல சித்தராக பெருமான் தோன்றி மதுரை மாநகரில் திருவிளையாடல் புரிந்தமை, பரஞ்சோதி முனிவரால், திருவிளையாடல் புராணத்தில் எல்லாம் வல்ல சித்தர் படலம் என்ற படலத்தில் விவரமாக சொல்லப் படுகின்றது. காதினில் வெள்ளிக் குண்டலங்களும், மார்பினில் ஸ்படிக மற்றும் உருத்திராக்க மாலைகள் அணிந்து, திருமேனி எங்கும் திருநீறு பூசியவராக, கையில் தங்கப் பிரம்பும் மழு ஆயுதமும் தாங்கி, கோவண ஆடையும் புலித்தோலும் அணிந்து, ஜடாமகுடதாரியாய், யாவரையும் மயக்கும் புன்முறுவலுடன் சித்தர் வேடத்தில் ஆலவாய் திருக்கோயிலில் பெருமான் ஒருநாள் காணப்பட்டார். இடையிடையே நான்கு வீதிகள் கூடும் இடங்களில் சென்று, வீதியிலும் மாளிகை வாயில்களிலும் அவர் செய்த சித்து வேலைகளைக் காண மக்கள் கூட்டமாக திரண்டனர். திடீரென அங்கிருந்து மறைந்தும், வேறொரு இடத்தில் தோன்றியும் பல அதிசயங்கள் அவர் நிகழ்த்தினார். இளைஞரை முதியவராக மாற்றியும், முதியோரை இளைஞராக மாற்றியும், பிறவியிலே ஊனமடைந்த பலருக்கும் கண் பார்வை அருளியும், பேசும் சக்தி அளித்தும், அவர்களது காதுகளை கேட்க வைத்தும், ஏழைகளை செல்வந்தராக மாற்றியும், செல்வந்தர்களின் செல்வத்தை மறைத்தும், எட்டிப் பழங்களை இனிப்பாக மாற்றியும், வைகை நதியில் வெள்ளம் பெருக்கியும் பின்னர் அந்த வெள்ளத்தை தணித்தும், பட்ட மரத்தினை பூக்கச் செய்தும், கூன் உடையவர்களது கூனினை நிமிர்த்தியும், பல பொருட்களை தங்கமாக மாற்றியும், தன்னிடம் இருந்த கோல் அந்தரத்தில் தொங்குமாறு செய்தும், அந்தரத்தில் தொங்கிய கோலின் மேல் ஒரு ஊசியினை நட்டு அந்த ஊசியின் மீது தனது கால் பெருவிரல் வைத்து நடனமாடியும், விண்ணில் தாவி மேகத்தினை பிழிந்து நீரினை வெளிக் கொணர்ந்தும், பகலை இரவாக மாற்றியும், இரவினை பகலாக மாற்றியும், பல சித்து வேலைகளைச் செய்த அவரை அரண்மனைக்கு அழைத்து வர மந்திரிகளை மன்னன் அனுப்பினான். சித்தரை அழைக்கச் சென்ற மந்திரி மற்றும் சேவகர்களும் சித்தரின் விளையாட்டுகளில் மயங்கி மெய்மறந்து நின்றனர். சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்த அவர்கள் அரண்மனைக்கு அழைத்து வருமாறு மன்னன் தங்களை அனுப்பியதை சித்தரிடம் சொன்னார்கள். அதற்கு சித்தர், மன்னனால் தனக்கு ஆகவேண்டிய காரியம் ஏதும் இல்லை என்றும், மன்னனுக்கு தன்னிடம் ஆகவேண்டிய காரியம் ஏதேனும் இருந்தால் தன்னை மன்னன் வந்து காணலாம் என்று தெரிவித்தார். மந்திரி மூலமாக இந்த செய்தியை அறிந்த மன்னன், தானே அவரை நாடிச் சென்றான். இதனிடையில் சித்தர் ஆலவாய் திருக்கோயிலில் வடமேற்கு திசையில் சென்று அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு பணிந்து வணங்கிய மன்னன், தன்னிடம் இருந்த கரும்பினை கல்யானை உண்ணுமாறு சித்து வேலை செய்ய முடியுமா என்று கேட்டான். உடனே கல்யானையை சித்தர் பார்க்க, அந்த யானை உயிர் பெற்று பிளிறியதும் அன்றி, மன்னனின் கையில் இருந்த கரும்பையும் பிடுங்கித் தின்றது. மீண்டும் சித்தர் யானையைப் பார்க்க, அந்த யானை மன்னன் கழுத்தினில் இருந்த முத்துமாலையை எடுத்து விழுங்கியது. யானையின் செயலால் மன்னன் மிகுந்த கோபம் கொண்டதை கவனித்த காவலர்கள், யானையை இயக்கிய சித்தரை அடிக்க நெருங்கினார்கள். அப்போது சித்தர் புன்னகையுடன் நில்லுங்கள் என்று கூற, அடிக்க வந்த அனைத்து காவலர்களும் சிலை போல் அசைவின்றி நின்றுவிட்டனர். திகைத்து நின்ற பாண்டிய மன்னன் சித்தரை வணங்கி, தனக்கு புத்திரப்பேறு வாய்க்க அருள் புரியுமாறு வேண்டினான். சித்தரும் அவ்வாறே ஆகட்டும் என்றார். பின்னர் சித்தர் மீண்டும் யானையை பார்க்க யானை அவரது எண்ணத்தினை புரிந்து கொண்டு மன்னனின் முத்துமாலையை திருப்பிக் கொடுக்க மன்னனும் அதனை மகிழ்வுடன் அணிந்து கொண்டான். சித்தர் மறைய யானையும் முன்போன்று கல் யானையாக மாறியது. மன்னனுக்கும் சிலநாட்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான்.

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.77.7) அப்பர் பிரான் பெருமானை சித்தர் என்று குறிப்பிடுகின்றார். மாடு=செல்வம்; அத்தர்=தலைவர்; நமது இறுதிக் காலத்தில் மரணம் நம்மை நெருங்கும் போது எவரும் நமக்கு உதவி செய்ய முடியாத நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. சுற்றத்தாரை ஒத்து ஒவ்வாத சுற்றத்தார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நம்மிடம் செல்வம் உள்ள போது நம்முடன் ஒத்து உறவாடி, நமது சொற்களுக்கு தாளம் போடும் உறவினர்கள், நாம் வறுமை அடைந்த நேரத்தில் நம்முடன் வேறுபட்டு நிற்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. நீங்கள் தேடி வைத்த செல்வமும், பாசத்துடன் பழகிய மனைவியும், உங்களது செல்வ நிலைக்கு தகுந்தவாறு உங்களுடன் உடன்பட்டும் மாறுபட்டும் பழகிய உறவினர்களும், உங்களது இறுதிக் காலத்தில் ஏதும் செய்ய இயலாதவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த நேரத்திலும் உங்களுக்கு உதவும் நிலையில் இருப்பவர், தான் நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்ய வல்லவரும், திருச்சேறை தலத்தின் செந்நெறி திருக்கோயிலில் உறைபவரும், நமக்கு தலைவராக விளங்குபவரும் ஆகிய பெருமான் தான். இவ்வாறு நம்மை காத்தருளும் பெருமான் இருக்கையில் நாம் எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வைத்த மாடும் மடந்தை நல்லார்களும்

ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார்

சித்தர் சேறைத் திருச்செந்நெறி உறை

அத்தர் தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே

திருமணஞ்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.87.4) அப்பர் பிரான், பெருமானை சித்தர் என்று அழைக்கின்றார். சித்தர் என்பதற்கு அடியார்களின் சித்தத்தினுள்ளே உறைபவர் என்றும் பொருள் கொள்ளலாம். முத்தர்=இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர்; இதே பதிகத்தின் முந்தைய பாடலில், இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய அப்பர் பிரான், இறைவன் பற்று அற்றவனாக இருக்கும் தன்மையை நமக்கு உணர்த்தி, அவனைப் பற்றிக் கொண்டால் தான் நாம் பற்றினை அறுக்க முடியும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். பெருமானைச் சரண் அடைந்ததால் அழியும் நிலையிலிருந்த சந்திரன் வளரத் தொடங்கிய செய்தி இங்கே கூறப் படுகின்றது. வித்தர்=வித்தகர், அறிவே வடிவானவர்; சிவபெருமான் தன்னை விரும்பும் அடியார்களை விரும்பும் தன்மையை இங்கே அப்பர் பிரான் குறிப்பது, நமக்கு திருவாசகம் சிவபுராணத் தொடர் அன்பருக்கு அன்பனே என்பதை நினைவூட்டுகின்றது. சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சுடர்கள், பெருமானின் மூன்று கண்களாக விளங்குகின்றன. இந்த பாடலில் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர் என்றும் அறிவே வடிவானவர் என்றும் இறைவனின் இரண்டு குணங்கள் உணர்த்தப் படுகின்றன. தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். ஆகிய எட்டு குணங்களை உடைய பெருமான் எண்குணத்தான் என்று திருமுறைப் பாடல்களில் பல இடங்களில் அழைக்கப் படுகின்றான். ஊமத்தை மலரை சடையில் அணிந்தவரும், தனது பிறைகள் அனைத்தும் தேய்ந்து அழியும் நிலையில் வந்து சரணடைந்த சந்திரனை, வளர் சந்திரனாக மாற்றித் தனது சடையில் அணிந்தவரும், இயல்பாகவே பாசங்களிலிருந்து விடுபட்டவரும், மூன்று கண்களை உடையவரும், தனது உடலில் மொய்க்கும் பாம்பினை அணிகலனாக அணிந்தவரும், அடியார்களின் சித்தத்தில் உறைபவரும், ஞான வடிவாக உள்ளவரும், தீயின் வண்ணத்து மேனியை உடையவரும் ஆகிய பெருமான் மணஞ்சேரியில் உறைகின்றார். அவர், தம்மை விரும்பும் அடியார்களை தாமும் விரும்பி, அந்த அடியார்களுக்கு பல விதங்களிலும் அருள்கள் புரிகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மத்தமும் மதியும் வளர் செஞ்சடை

முத்தர் முக்கணர் மூசு அரவம் அணி

சித்தர் தீவணர் சீர் மணஞ்சேரி எம்

வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே

பொழிப்புரை:

இறைவனிடம் அன்பு கொண்டவர்களே, நம் அனைவர்க்கும் தந்தையாக விளங்கும் பெருமான் அன்னியூர் தலத்தில் வீற்றிருக்கின்றான். எதையும் செய்யவல்ல சித்தராக விளங்கும் பெருமானின் திருவடிகளைத் தொழுது, வினைகளிலிருந்து விடுபட்டு முக்தி நிலை அடைவீர்களாக.

பாடல் 5:

மன்னியூர் இறை (1.096) பாடல் 5 (திதே 0463)

நிறைவு வேண்டுவீர்

அறவன் அன்னியூர்

மறையுளான் கழற்கு

உறவு செய்ம்மினே

விளக்கம்:

உறவு=அன்பு; அறவன்=தருமமே உருவானவன்; இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே உள்ள உறவு, அன்பினால் எழுந்த, இறைவன் பக்தன் என்ற உறவு தான். எனவே தான் இறைவனிடம் அன்பு கொண்டு அவனுக்கு அன்பினனாக நடந்து கொண்டு அவனுடன் உறவாடவேண்டும் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இறைவனுக்கு உறவினனாக நடந்து கொள்வதில் என்ன இலாபம் என்று அப்பர் பிரான் அறிவுறுத்தும் பாடலை (5.90.10) நாம் இங்கே காண்போம். விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. ஆனால் பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்டு கடைந்த பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். தகுந்த முறையில் அவனை அறிந்து கொண்டு அவனை வழிபடவேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

இந்த பாடலில் பெருமானை, திருஞானசம்பந்தர்., அறவன் என்று குறிப்பிடுவது, நமக்கு திருவாரூர் தலத்தின் மீது அவர் அருளிய பதிகத்தின் பாடலை நினைவூட்டுகின்றது. அறவன்=அறங்களுக்கு இருப்பிடமானவர்; திருவள்ளுவர் அறவாழி அந்தணன் என்று கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. துறவி=பாசம் துறத்தல்; தங்களது பழ வினைகளை முற்றிலும் தீர்த்துக் கொண்டு முக்தி அடையவேண்டும் என்று விரும்பும் முனிவர்கள் பெருமானைத் தொழுகின்றனர் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. புண்ணியமே வடிவமாக விளங்கும் ஆரூர் பெருமானை மறவாது புகழ்ந்து வணங்கி, அவனது உதவியுடன், உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டுள்ள ஆசையினை துறந்து விடுவீர்களாக. இவ்வாறு பாசத்தைத் துறந்தும், எதிர்கொள்கின்ற இன்ப துன்பங்களை ஒன்றாக கருதி அவற்றால் சலனம் அடையாமல் இருப்பதன் மூலம், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, முக்தி உலகம் சென்றடையும் தகுதி பெறுவீர்களாக என்று திருஞானசம்பந்தர் அறிவுரை கூறும் பாடல் (1.91.2).

பிறவி அறுப்பீர்காள்

அறவன் ஆரூரை

மறவாது ஏத்துமின்

துறவி யாகுமே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.24.2) திருஞானசம்பந்தர், பெருமானை அறவா என்று அழைக்கின்றார். சிறவார்=சிறப்பினை அடையாதவர்கள்; இங்கே திரிபுரத்து அரக்கர்களை குறிக்கும்; தங்களது எல்லையற்ற வலிமையை பயன்படுத்தி பலருக்கும் நன்மைகள் செய்து வாழாமல், பலரையும் துன்புறுத்தி வந்ததால், அனைவரும் அவர்களை இகழ்ந்து பேசி வந்தமை இங்கே உணர்த்தப் படுகின்றது. அதனால் தான் சிறப்பினை இழந்தவர்கள் என்று பொருள்பட சிறவார் புரம் என்று கூறுகின்றார் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. சிறகுகள் உடைய பறவைகள் போன்று பறக்கும் தன்மை கொண்ட கோட்டைகள் என்று பொருள்பட சிறவார் புரம் என்று அளிக்கும் விளக்கமும் பொருத்தமே. சிலை=மேரு மலையினை வளைத்துச் செய்யப்பட்ட வில்; உறவார் கணை=பொருத்தப்பட்ட அம்பு; உய்த்தவன்=திரிபுரத்து அரக்கர்களை அழித்து தேவர்களை உய்வித்தவன்; நறவு=கள், இங்கே வண்டுகளுக்கு மயக்கம் ஏற்படுத்தும் தேனை குறிப்பிடுகின்றது; ஆசு=குற்றம்; அறவா=தருமத்தின் உருவமாக இருப்பவன்; பலருக்கும் இன்னல் விளைவித்து வந்த திரிபுரத்து அரக்கர்களை வீழ்த்தி தருமத்தை நிலைநாட்டிய பெருமானை அறவா (புண்ணியத்தின் உருவமே) என்று அழைக்கின்றார். வினைகளை உயிரின் குற்றங்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வினைகள் தாமே உயிர்களை இன்ப துன்பங்களில் ஆழ்த்தி, அவ்வாறு இன்ப துன்பங்களை நுகரும் தருணங்களில் உயிர்களை மேலும் பல தவறுகளைச் செய்ய வைத்து, பிறவிப் பிணியிலிருந்து மீளாத வண்ணம் உயிர்களை ஆட்டுவிக்கின்றது என்பதால், வினைகளை உயிரின் குற்றம் என்று கூறுகின்றார்.

சிறவார் புரம் மூன்று எரியச் சிலையில்

உறவார் கணை உய்த்தவனே உயரும்

நறவார் பொழில் நாகேச்சுர நகருள்

அறவா என வல்வினை ஆசு அறுமே

அரிசிற்கரைப் புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.63.11) திருஞானசம்பந்தர், பெருமானை அறவன் என்று குறிப்பிடுகின்றார். நறவம்=தேன்; பொறி=புள்ளிகள்; செறி=சொல்லும் பொருளும் அழகுடன் நெருங்கி பொருந்திய; அறவன்=அறமே, புண்ணியமே வடிவமான இறைவன்; தேன் மணம் கமழும் பூக்கள் நிறைந்த சீர்காழி நகரினைச் சார்ந்த ஞானசம்பந்தன், புள்ளிகள் நிறைந்த உடலினை உடைய பாம்புகளைத் தனது உடலின் பல இடங்களிலும் ஆபரணமாகப் பூண்டு கொண்டுள்ள பரமன் அருளாட்சி புரியும் அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது இயற்றியதும், சொல் வளமும் பொருள் வளமும் நிறைந்த தமிழ் மாலையை ஓதும் ஆற்றல் உடைய அடியார்கள், புண்ணியமே உருவமான பெருமானின் திருப்பாதங்களை அடைந்து அவனது அன்பினையும், அந்த அன்பின் விளைவாக என்றும் குறையாத இன்பமும் அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நறவம் கமழ் பூங்காழி ஞானசம்பந்தன்

பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல்

செறி வண்டமிழ் செய்மாலை செப்ப வல்லார்கள்

அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே

திருத்தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.82.3) திருஞானசம்பந்தர், அறவனாகிய பெருமானின் திருவடிகளைச் சார்ந்த அடியார்களுக்கு வாழ்வினில் அல்லல் என்பதே இல்லை என்று கூறுகின்றார். இந்த செய்திக்கு எடுத்துக்காட்டாக சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்க்கையை இங்கே குறிப்பிடுகின்றார். தனக்கு நல்ல மகன் வேண்டும் என்று தன்னை நோக்கி தவமிருந்த மிருகண்டு முனிவருக்கு, பதினாறு வயது வரை வாழும் மகன் பிறப்பான் என்று பெருமான் வரம் அளிக்கின்றார். அதாவது சிறுவன் மார்க்கண்டேயனுக்கு ஆயுட்காலம் பதினாறு வருடங்கள் தாம் என்பது பெருமானால் வரையறுக்கப்பட்ட ஒன்று. இதனை நன்றாக அறிந்தவனாக அந்த சிறுவன் மார்க்கண்டேயனும் வாழ்ந்து வந்தான். தனது ஆயுட்காலம் மிகவும் குறைந்தது என்பதால், அந்த காலம் முழுவதையும் இறைவனின் வழிபாட்டினில் ஈடுபடுத்த வேண்டும் என்று விரும்பிய அந்த சிறுவன், தன்னை மரணம் நெருங்கிய போதும், கலக்கம் ஏதும் அடையாமல் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான். இந்த தன்மையை கண்ட இறைவன், தான் அளித்த வரத்தின் தன்மையையே மாற்றி, அந்த சிறுவனை, இறப்பற்ற சிரஞ்சீவியாக மாற்றி விடுகின்றார். செறு=சண்டை; மிகவும் அதிகமான நீர்வளத்தினால் வயல்களில் உள்ள சேற்றில் காணப்படும் சேல் மீன்களும் வாளை மீன்களும் சண்டையிடும் காட்சிகள் நிறைந்த தலம் என்று கூறுகின்றார். செறுவில் என்ற சொல்லுக்கு சேற்றில் என்றும் பொருள் கொள்ளலாம். கறுவு=கோபம்;

மறைகளால் மிகு வழிபடு மாணியைக் கொல்வான்

கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்த எம் கடவுள்

செறுவில் வாளைகள் சேலவை பொருவயற் றேவூர்

அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.47.5) அப்பர் பிரான், இறைவனை அறவா என்று அழைத்து, தன்னை நோக்கி அஞ்சேல் என்று இறைவன் சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றார். நம்மை பீடித்துள்ள வினைகளின் பயனாக வரும் துன்பங்களை எந்த உயிரும் அனுபவித்து தான் கழிக்க முடியும். எனவே அத்தகைய துயரங்களை நீக்குவது என்பது எவர்க்கும் இயலாத காரியம். இறைவனின் அருளால் தான் அதனை நீக்க முடியும். அவ்வாறு இறைவனின் அருளினை பெறுவதற்கு அவனை வழிபடல் வேண்டும். அவ்வாறு தான் வழிபட்டதால், தன்னை ஊழ்வினைகள் ஏதும் செய்யாது என்று இறுமாப்புடன் அப்பர் பிரான் சொல்வதை நாம் இந்த பாடலில் உணரலாம். வினைகளால் இந்த பிறவியில் எதிர்கொள்ள இருந்த துன்பங்களை, இறைவனின் அருளால் நீக்கிக் கொண்ட போதிலும், இனிமேல் தான் எடுக்கவிருக்கும் பிறவிகளை நினைத்து தான் அஞ்சுவதால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து அஞ்சேல் என்று இறைவன் சொல்ல வேண்டும் என்று கேட்கின்றார். தினமும் நீராடிய பின்னர் நறுமணம் நிறைந்த மலர்களை தானே கொய்து, பெருமானின் திருப்பாதங்கள் மேல் தூவி பெருமானை வழிபட்டு எளிதில் நீக்கிக் கொள்ள முடியாத துன்பங்களையும் தான் இறைவனின் அருளால் நீக்கிக் கொண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார்.

நறுமா மலர் கொய்து நீரின் மூழ்கி நாடோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தித்

துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழுலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே

உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரைநீர்க் கடல் நஞ்சுண்டு உய்யக் கொண்ட

அறவா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

திருக்கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.27.2) சுந்தரர் மறையோர் மற்றும் வானவர்களால் வணங்கப்படும் இறைவனே, எம்பெருமானே, எனக்கு இனிய அமுதம் போல் இனிப்பவனே, அறவா, அழகிய கண்களை உடையவனே என்று அழைத்து, தன்னையும் அஞ்சேல் என்று உய்விக்க வேண்டும் என்று வேண்டுகின்றார். அருளாளர்கள் அனைவரும் அடுத்து பல பிறவிகள் எடுக்க நேரிடுமோ என்ற அச்சம் கொண்டு வாழ்வதால், அந்த அச்சத்தினை நீக்கும் வண்ணம், அஞ்சேல் என்று இறைவன் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். தனது கடைக்கண் நோக்கினால் இறைவன் உயிர்களுக்கு அருள் புரிவதால், இறைவனது கண்களை அழகிய கண்கள் என்று கூறுகின்றார். கண்களுக்கு அழகு சேர்ப்பது கருணை தானே.

மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற

இறைவா எம்பெருமான் எனக்கு இன்னமது ஆயவனே

கறையார் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற

அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சல் என்னே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.58.6) சுந்தரர், பெருமானை அறவன் என்று குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர் வாழ்ந்த தலம் என்பதால், இந்த தலத்தினில் தனது கால்களை பதிக்கத் தயங்கிய சுந்தரர், இந்த தலத்தினை வலம் வந்தவாறு பாடிய பதிகம். தனது திருக்கோயிலுக்கு வருவதை திருஞானசம்பந்தர் பால் கொண்டிருந்த மதிப்பு காரணமாக தவிர்த்த சுந்தரருக்கு, இறைவன் இடபத்தின் மீது அமர்ந்தவராக திருக்காட்சி கொடுத்தருளியதை, இந்த பதிகத்தின் பாடல் தோறும் சுந்தரர் குறிப்பிடுகின்றார். தான் தனது வாழ்க்கையில் எதிர்கொள்ள இருந்த வலிமை வாய்ந்த வினைகளால் விளையும் துன்பங்கள் கண்டு அஞ்சிய தான், மறவாமல் இறைவனை மிகுந்த விருப்பத்துடன் முறையாக வழிபட்டேன் என்று குறிப்பிடும் சுந்தரர், அந்த வழிபாட்டின் தன்மையால் இறைவன் தன்னை இகழாமல் அருள் புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவ்வாறு வழிபட்டதாக கூறுகின்றார். குளிர்ப்பு=குளிர்ச்சி; துன்பங்கள் நீங்கியதால் மனம் குளிர்ந்தது என்று குறிப்பிட்டு, இறைவன் தனது வழிபாட்டுக்கு இரங்கி, பல விதத்திலும் தனக்கு அருள் புரிந்தமையை உணர்த்துகின்றார்.

வரும் பெரும் வல்வினை என்று இருந்தெண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன்

விரும்பியென் மனத்திடை மெய் குளிர்ப்பெய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே

அரும்பினை அலரினை அமுதினைத் தேனை ஐயனை அறவன் என் பிறவிவேர் அறுக்கும்

கரும்பினைப் பெருஞ் செந்நெல் நெருங்கிய கழனிக் கழுமல வளநகர் கண்டு கொண்டேனே

கூடலையாற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.85.8) சுந்தரர், அறவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். முதுகுன்றம் தலம் செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன், சுந்தரர் வழியில் தென்பட்ட ஒரு முதியவரிடம் வழி கேட்டபோது, அந்த முதியவர் வேண்டுமென்றே தவறான வழியை காட்டி சுந்தரரை கூடலையாற்றூர் அழைத்துச் சென்றார் என்று பெரிய புராணம் உணர்த்துகின்றது. சுந்தரரை கூடலையாற்றூருக்கு வரவழைப்பதில் பெரு விருப்பம் கொண்டிருந்த பெருமான், வழியில் வேறெவரேனும் முதுகுன்றம் செல்லும் வழியை சரியாக குறிப்பிட்டு சுந்தரர் கூடலையாற்றூர் செல்வதை தவிர்த்து விடுவாரோ என்பதால், தானே கூடலையாற்றூர் வரை சென்றார் என்பதை உணரும் போது, பெருமானின் திருவிளையாடல்களின் தன்மையை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. முதியவர் உடன் செல்லாமலிருந்தால், வழியில் எதிர்ப்படும் வேறொருவரிடம் முதுகுன்றம் செல்லும் வழி குறித்து, சுந்தரர் மீண்டும் விசாரிக்க வாய்ப்பு உண்டாகியிருக்கும். ஆனால் முதியவரும் கூடலையாற்றூர் வரை உடன் சென்றதால் சுந்தரருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

மறை முதல் வானவரும் மாலயன் இந்திரனும்

பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கணமும் சூழக்

குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில்

அறவன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே

தருமமே உருவமாக இருக்கும் பெருமானை அறவாழி அந்தணன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆழி என்றால் கடல் என்று பொருள். வள்ளுவரும் அறவாழி அந்தணன் என்று இறைவனை அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது. தனக்கு, பிறவா நெறி தந்த இறைவனை அறவாழி அந்தணன் என்றும் ஆதி பராபரன் என்றும் குறிப்பிடும் திருமூலர், அந்த இறைவன் தனக்கு உறவாகி வந்து தனது உள்ளம் புகுந்ததாக கூறுகின்றார். அவன் தான் நம்மை ஆட்கொண்டு அருள் புரியும் இறைவன் என்பதையும் நாம் அவனுக்கு அடியான் என்ற உணர்வையும் தாங்கியவர்களாக அவனை நமது உறவாக கருதினால், அவனும் நம்மை உறவினனாக கருதி நம்முடன் இணைந்திருப்பான் என்று இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார். தருமத்தின் வழியே வாழ்பவன் என்பதால் அறவாழி என்று இறைவனை அழைக்கின்றனர்.

பிறவா நெறி தந்த பேரருளாளன்

மறவா அருள் தந்த மாதவன் நந்தி

அறவாழி அந்தணன் ஆதி பராபரன்

உறவாகி வந்து என் உளம் புகுந்தானே

திருமந்திரம் (ஆறாம் தந்திரம், துறவு அதிகாரம் பாடல் 3) பாடல் ஒன்றினில் திருமூலர் பெருமானை அறவன் என்று குறிப்பிடுகின்றார். பிறப்பிலி என்பதால், பிறவியின் தொடர்பாக பெருமானுக்கு உறவினர் என்று எவரும் இல்லை; அவன் துறவு பூண்டுள்ள தன்மையை உணர்த்தும் முகமாக, அவனது இல்லம் சுடுகாடு என்றும் அவன் உண்பது பிச்சை என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். அவன் அருள் புரியவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டால், எல்லையற்ற வகையில் அடியார்களுக்கு அருள் புரிவதால், அவனை பித்தன் என்று கூறுகின்றார். உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது வைத்துள்ள பாசத்தை துறந்த உயிர்களுக்கு, முக்தி உலகினை பரிசாக அளிக்கும் பரமன் என்றும் இங்கே கூறுகின்றார்.

அறவன் பிறப்பிலி யாருமிலாதான்

உறைவது காட்டகம் உண்பது பிச்சை

துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப்

பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே

பெரியபுராணம் காரைக்கால் அம்மையார் புராணம் பாடல் ஒன்றில், அறவா என்று அம்மையார் இறைவனை அழைத்ததாக சேக்கிழார் கூறுகின்றார். கயிலாயம் சென்ற காரைக்கால் அம்மையாரை, அம்மையே என்று அழைத்து வரவேற்ற பெருமான், தனக்கு வேண்டிய வரம் வேண்டுமாறு காரைக்கால் அம்மையிடம் சொன்னார். அம்மையார் அப்போது விடுத்த வேண்டுகோள் தான் இங்கே பாடலாக சேக்கிழாரால் கொடுக்கப் பட்டுள்ளது. பெருமானிடத்தில் தான் கொண்டுள்ள இன்ப அன்பு என்றும் தொடர வேண்டும் என்று வேண்டிய அம்மையார், அடுத்து பிறவாமை என்ற வரத்தினை வேண்டுகின்றார். ஒருகால் பிறவாமை என்ற வரம் தனக்கு கிடைக்காமல், மீண்டும் பிறவி எடுக்க நேரிட்டால், அந்த பிறவியிலும் இறைவனை தான் மறவாமல் நினைக்கும் தன்மையை வேண்டிய அம்மையார், இந்த பிறவியின் எஞ்சிய நாட்களில், இறைவன் நடனமாடுவதை, மிகவும் அருகில் இருந்து, அவனது திருவடிக்கீழ் இருந்த வண்ணம் தான் காண வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்துகின்றார்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்

அறத்தையே தனது வாழ்க்கை நெறியாகக் கொண்ட பெருமானை சேக்கிழார் அறவாணன் என்று வாயிலார் நாயனார் புராணத்து பாடல் ஒன்றினில் குறிப்பிடுகின்றார். இறைவனை எப்போதும் மறவாமல் இறைவனை தனது மனமாகிய கோயிலில் நிறுத்திய வாயிலார் நாயனார், அந்த பெருமானை ஞானம் என்ற விளக்கினை ஏற்றி அறிந்து கொண்டார் என்றும், அந்த இறைவனை தான் எப்போதும் மறவாமல் இருக்கும் தன்மையால் தனது மனமே பெருமான் உறைகின்ற கோயிலாக மாறியது என்றும், தனது மனதில் பெருகும் சிவானந்தம் என்ற நீரினால் இறைவனை நீராட்டி, தனது அன்பையே அவனுக்கு நிவேதனமாக அளித்து அர்ச்சனை செய்து வாயிலார் நாயனார் வழிபட்டார் என்று சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார்.

மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி

உறவாதி தனை உணரும் ஒளிவிளக்குச் சுடரேற்றி

இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி

அறவாணர்க்கு அன்பென்னும் அமுதமைத்து அர்ச்சனை செய்வார்

பொழிப்புரை:

குறையேதும் இன்றி மனநிறைவுடன் வாழ விரும்பும் அன்பர்களே, நீங்கள் புண்ணியமே வடிவமாக உள்ள அன்னியூர் இறைவனை, வேதங்களில் பரம்பொருளாக கூறப்படுபவனின் திருப்பாதங்கள் பால் அன்பு வைத்து அவனோடு உறவு கொள்வீர்களாக.

பாடல் 6:

மன்னியூர் இறை (1.096) பாடல் 6 (திதே 0464)

மன்னியூர் இறை (1.096) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0465)

மன்னியூர் இறை (1.096) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0466)

மன்னியூர் இறை (1.096) பாடல் 6 தொடர்ச்சி 7, 8 (திதே 0467)

இன்பம் வேண்டுவீர்

அன்பன் அன்னியூர்

நன்பொன் என்னுமின்

உம்பர் ஆகவே

விளக்கம்:

உம்பர்=தேவர்கள்; தேவருலகில் நாம் அடையும் இன்பம் இந்த பிறவியில் நாம் செய்யும் புண்ணியங்களின் அளவினைப் பொருத்தது. அந்த இன்பம் சிறிது காலமே நீடிக்கும். பின்னர் நாம் மீண்டும் உலகினில் பிறந்து எஞ்சிய வினைகளின் பயனாக இன்ப துன்பங்களை அனுபவிக்க நேரிடும். ஆனால் உயிர்களுக்கு இறைவன் அளிக்கும் முக்தி உலகத்து இன்பம் என்றும் அழியாதது. எனவே உம்பர் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுவது, தேவர்களுக்கும் மேலான நிலை என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இறைவனைப் புகழ்ந்து அவனை வழிபடுவதால் நமக்கு இம்மையிலும் இன்பம் மறுமையிலும் இன்பம் என்பதே இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த கருத்து நமக்கு சாய்க்காடு தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடலை (2.41.1) நினைவூட்டுகின்றது. மண் புகார்=மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகம் சார மாட்டர்கள்; வான்=மிகவும் உயர்ந்த இன்பம் அளிக்கும் முக்தி உலகம்; கண் புகார்=இடுக்கண் கண் புகார், துன்பம் அடைய மாட்டார்கள்; பெருமானின் புகழினைக் கற்றவரும் கேட்டவரும், சாய்க்காட்டுப் பெருமானின் திருவடிகளைச் சாரும் அடியார்களும், இம்மையில் மனம் வருத்தம் இன்றியும், பிணியேதும் இன்றியும், பசியின்றியும், எந்தவிதமான துன்பங்கள் மற்றும் இடர்களில் படாமலும் இனிமையாக வாழ்வார்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் இந்த உலக வாழ்வு முடிந்த பின்னர், அவர்கள் மீண்டும் உலகினில் பிறக்காத வண்ணம் முக்தி நிலையினை அடைவார்கள் என்றும் கூறுகின்றார், விண் புகார் என்று கூறுவதன் மூலம், தேவர் உலகத்தினை அத்தகைய அடியார்கள் அடைய மாட்டார்கள், ஆனால் அதனினும் உயர்ந்த சிவலோகத்தினைச் சென்று அடைந்து நிலையான இன்பம் பெறுவார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும்

கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்

விண் புகார் என வேண்டா வெண்மாட நெடுவீதித்

தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே

அன்பன் என்று அன்பே வடிவமாக உள்ள இறைவனின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானை அன்பே என்று மணிவாசகர் அழைப்பதை நாம் திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் முதல் பாடலில் காணலாம். உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு வஞ்சனையாக செயல்படும் ஐந்து புலன்களின் தாக்கத்தை அடக்கி அமுதமாக தனது உள்ளத்தில் ஊறிய இறைவனை, தான் காணுமாறு அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் இங்கே வேண்டுகின்றார். அன்பே சிவமாகவும், அந்த சிவமே தனது உள்ளத்தில் ஊறும் அமுதமாகவும், அந்த அமுதம் விளைவிக்கும் இன்பமாவும் இருக்கும் நிலையினை தான் உணர்ந்ததை அடிகளார் இந்த பாடலில் தெரிவிக்கின்றார்.

மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து அமுதே

ஊறி நின்று என்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காண வந்து அருளாய்

தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே

ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.15.3) திருஞானசம்பந்தர் பெருமானை நேயாடிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வேயாயின=வேய் போன்ற, மூங்கில் போன்று அழகிய; தாயாகிய உலகங்கள்=அனைத்து உயிர்களையும் தாய் போன்று தாங்கும் உலகம்; பெருநடம்=ஊழிக் காலத்தில் ஆடப்படும் நடனம்; உலகில் உள்ள அனைத்து உயிர்களுடன் பெருமான் கலந்து நின்று அவற்றை இயக்குவதால் தான் உயிர்களின் இயக்கம் நடைபெறுகின்றது என்பதை உணர்த்தும் வண்ணம், நிலைபேறு செய் தலைவன் என்று கூறுகின்றார். நெய்யாடிய என்ற சொல் எதுகை நோக்கி நேயாடிய என்று திரிந்தது என்று சிலர் சொல்வார்கள். பலரும், நேயம் ஆடிய பெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு நேயாடிய என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் என்றும் விளக்கம் கூறுகின்றனர். பிந்தைய விளக்கம் மிகவும் பொருத்தமாக காணப்படுகின்றது. மானசீகமாக இறைவனின் திருவுருவத்தை நினைத்து, அன்பினால் அவனை நீராட்டி வழிபடுவது ஞானப் பூஜையின் ஒரு அங்கமாகும்.

பேயாயின பாடப் பெருநடம் ஆடிய பெருமான்

வேயாயின தோளிக்கு ஒரு பாகம் மிக உடையான்

தாயாகிய உலகங்களை நிலை பேறு செய் தலைவன்

நேயாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.91.3) திருஞானசம்பந்தர் பெருமானை, அன்பன் என்று அழைக்கின்றார். பொன் மலர்=அழகிய மலர்; பொன்னும் மலரும் என்றும் பொருள் கொள்ளலாம், தியாகேசர் வீதிவலம் வருகையில் பொன்னும் மலரும் தூவி அடியார்கள் இன்றும் கொண்டாடுகின்றனர். திருவாரூர் என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, திருவாரூர்த் தேர் மற்றும் அந்த தேரினில் திருவுலா வருகின்ற பெருமானும் தான். எனவே திருவாரூர் தலத்திற்கே அணிகலனாக பெருமான் விளங்குகின்றார் என்றால் மிகையாகாது. இந்த கருத்தினை உணர்த்தவே, அன்பன் அணிகலனாக விளங்கும் திருவாரூர் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். அன்பே வடிவமாகிய பெருமானை அன்பன் என்று குறிப்பிடுகின்றார். அன்பே வடிவமாக இருக்கும் பெருமான், அனைத்து உயிர்கள் மீது அன்பு பாராட்டி அவற்றை இயக்கும் பெருமான், பெரிதும் விரும்புவது அன்பினையே. உயிர்கள் தன்னிடம் அன்பு பாராட்டி, தன்னை வழிபட்டு தனது அருள் பெற வேண்டும் என்பதே பெருமானின் விருப்பமாக உள்ளது. இம்மை வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற துன்பத்தை துடைத்துக் கொள்ள விரும்பும் மனிதர்களே, உமது துன்பத்தை துடைத்துக் கொள்வதற்கு உரிய வழியை சொல்கின்றேன் கேட்பீர்களாக; ஆரூர் நகரத்திற்கு அணிகலனாக விளங்குபவனும் அன்பனும் ஆகிய சிவபெருமான் மீது, சிவபெருமானின் திருமேனி மீது அழகிய பொன்னும் மலர்களும் தூவி வழிபடுவீர்களாக. அவ்வாறு செய்தால், உங்களை வருத்தும் துயரங்கள் ஒழிந்து போய் வாழ்வினில் இன்பம் அடைவீர்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

துன்பம் துடைப்பீர்காள்

அன்பன் அணியாரூர்

நன்பொன் மலர்தூவ

இன்பம் ஆகுமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.6) திருஞானசம்பந்தர் பெருமானை, வேதியர் தாம் தொழும் அன்பன் என்று குறிப்பிடுகின்றார். முன்பு என்றால் வலிமை என்று பொருள்; முன்பன்=வலிமை உடையவன்; இணையில=இணையற்ற, ஒப்பற்ற: ஏதம்=குற்றம்; ஏதமில்= குற்றமற்ற வகையில் வேதங்களை ஓதுவோர் என்றும் குற்றமற்ற நல்ல குணங்களை உடைய வேதியர்கள் என்று இரண்டு வகையாக பொருள் கொள்ளலாம். என் பொனை=என்னால் பொன் போன்று உயர்ந்தவனாக கருதப்படுபவன்;

முன்பனை முனிவரோடு அமரர்கள் அடிதொழும்

இன்பனை இணையில இறைவனை எழில் திகழ்

என் பொனை ஏதமில் வேதியர் தாம் தொழும்

அன்பன வளநகர் அந்தண் ஐயாறே

தன்னை அணுகும் அடியார்களின் வினைகளை நாசம் செய்யும் பெருமானை நம்பான் என்றும் அன்பான் என்றும் அழைப்பது தானே பொருத்தம். நமது வினைகளை நாசம் செய்யும் பெருமான், நமக்கு செய்யும் மற்ற உதவிகளும் இந்த பாடலில் (2.11.7) குறிப்பிடப் படுகின்றது. நம்மை திருத்தும் வண்ணம் பல துன்பங்களை நமக்கு அளித்து நம்மை நல்வழிப் படுத்தித் திருத்தியும், நாம் துயரடையும் தருணங்களில் நமது துன்பங்களைத் தீர்த்தும் அருள் புரியும் இறைவன் இன்ப வடிவினாகவும் அன்பு வடிவினனாகவும் இருக்கின்றார். அவர், ஏழிசையின் நுணுக்கங்களை அறிந்து பாடல்களுக்கு உரிய பண்ணுடன் இசைத்துப் பாடிப் போற்றும் அடியார்களை பேணி பாதுகாக்கின்றார்.

துன்பானைத் துன்பம் அழித்து அருளாக்கிய

இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார்

அன்பானை அணிபொழில் காழி நகர் மேய

நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.63.5) திருஞானசம்பந்தர் பெருமானை, அடியார்க்கு அன்பன் என்று அழைக்கின்றார். அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சிவபெருமான் பால் நாம் எத்துணை அன்பு வைக்கின்றோமா அதனை விடவும் நம் பால் சிவபெருமான் வைக்கும் அன்பு பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என்று பல திருமுறைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன

என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழிலாமை

மின் போல் புரிநூல் விரவிப் பூண்ட மணி மார்பர்

அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர்

பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.79.8) திருஞான சம்பந்தர் ஆரூர் பெருமானை அன்பன் என்று அழைக்கின்றார். தனது நெஞ்சினைத் தேற்றுவது போன்று, மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நம் அனைவர்க்கும் ஆறுதல் கூறி தேற்றும் பாடல். அறியாமை என்ற இருளில் மூழ்கி, என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கும் மனிதர்களே, ஆரூர் பெருமானைத் தொழுது வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். கழி=கொம்பு; நிரைத்து=நெடுக கட்டி; முகடு=மேலே மூடி; எலும்புகளாகிய கழிகளை எங்கும் நிறுவியும் கட்டியும், இறைச்சி ஆகிய சுவரினை எழுப்பி, கட்டப்பட்டுள்ள இந்த உடலாகிய வீட்டின் உள்ளே இருக்கும் சீழ், சளி, இரத்தம் மற்றும் மலம் ஆகிய அறுவறுப்பு தரும் பொருட்கள் வெளியே தெரியாத வண்ணம், பொல்லாமை ஆகிய புலால் மணம் கமழும் தோல் கொண்டு இறைவன் மூடியுள்ளான். பண்டைய காலம் தொட்டே இந்த உடல் ஒன்பது வாயில்களை உடையதாக இருக்கும் இந்த உடலினைப் பேணி பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு மூழ்கி விடாமல், நம் பால் அன்பு செலுத்தும் ஆரூர் பெருமானை போற்றி வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவோம் என்று கூறுகின்றார்.

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண்சுவர் எறிந்து இது நம் இல்லம்

புன்புலால் நாறு தோல் போர்த்துப் பொல்லாமையான் முகடு கொண்டு

முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே

அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.82.7) திருஞானசம்பந்தர் பெருமானை அன்பன் என்றே அழைக்கின்றார். அவனது திருவடிகளைச் சென்று அடையும் அடியார்களின் அல்லல்களைக் களையும் அன்பனாக பெருமான் திகழும் தன்மை இந்த பாடலில் சொல்லப்படுகின்றது. வன்புயத்த=வலிமை வாய்ந்த தோள்களை உடைய அரக்கர்கள், இங்கே திரிபுரத்து அரக்கர்கள்; தடவரை=பெரிய மேரு மலை; தென் தமிழ்க் கலை தெரிந்தவர்=புலவர்கள்; மேரு மலையை வளைத்து செய்யப்பட்ட வில்லினில் அம்பினைத் தொடுத்து எய்வதற்கு வலிமையான தோள்கள் வேண்டும் அல்லவா, அத்தகைய வலிய தோள்கள் கொண்டவனாக பெருமான் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

வன்புயத்தவத் தானவர் புரங்களை எரியத்

தன் புயத்து உறத் தடவரை வளைத்தவன் தக்க

தென் தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்

அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே

தென் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.88.3) திருஞான சம்பந்தர் பெருமானை அன்பன் என்று அழைக்கின்றார். வாராத நாடன்=மீண்டும் நிலவுலகத்திற்கு வர வேண்டிய நிலையினைத் தடுக்கும் முக்தி உலகத்தினை தனது செல்வமாக உடைய சிவபெருமான்; வில்லின் உரு=வானவில்லின் உருவத்தை போன்று; வானவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மனதினுக்கு இன்பம் தருவதாக இருந்தாலும் மிகவும் சிறிய நேரமே நிலைத்து நின்ற பின்னர், விரைவில் மறைந்து விடுகின்றது; மனிதப்பிறவி நமக்கு இன்பம் தருவது போன்று தோன்றினாலும் அந்த இன்பமும் நிலைத்து நீடிப்பதில்லை; மனிதப் பிறவியும் நிலையற்றதாக உள்ளது. வில்லின் உரு என்பதற்கு வயது முதிர்ந்த காலத்தில் உடலில் கூன் விழுவதால் வில் போன்று வளையும் உடல் என்று இளமை நிலையாமையை உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. பேராத= நீங்காத; அலர்=மலர், இங்கே தாமரை மலரை குறிக்கின்றது; பிரியாத மார்பின் அலர் மேவு பேதை என்று, தாமரை மலரினில் உறையும் இலக்குமி தேவி திருமாலின் மார்பினை விட்டு பிரியாது இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. வானவில் போன்று தோன்றி விரைவில் மறையும் குறைந்த வாழ்நாளைக் கொண்டுள்ள மனிதர்கள், உடலும் உள்ளமும் உருகி தன்னை வழிபட்டால், அவர்களுக்கு தெவிட்டாத இன்பத்தை அளித்து, அவர்கள் பால் மிகுந்த அன்பு கொண்டு அவர்களை விட்டு பிரியாது இருப்பவன் சிவபெருமான் என்று இந்த தென் திருமுல்லைவாயில் தலத்து பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

வாராத நாடன் வருவார் தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில்

ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர்

பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்

தீராத காதல் நெதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே

அன்பருக்கு அன்பராக இறைவன் இருக்கும் தன்மை, கருக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.21.6) திருஞானசம்பந்தரால் குறிப்பிடப் படுகின்றது. பூண்=ஆபரணம்; அரா=பாம்பு; முதல்=முழுமுதற் காரணமாக இருக்கும் இறைவன்; இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் உயிர்களுக்கு உதவி புரிவதற்கு எவ்வாறு பெருமான் முன்வருகின்றார் என்பதை உணர்த்திய திருஞானசம்பந்தர், இவ்வாறு உதவி புரியும் இறைவன் பால் அடியார்கள் அன்பு செலுத்துகின்றனர் என்று கூறுகின்றார். இறைவன் வீணை வாசிப்பதில் மிகவும் வல்லவர் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அனைத்து கலைகளிலும் வல்லவராகிய பெருமான், திறமையுடன் வீணை வாசிப்பதில் வியப்பேதும் இல்லை.

இன்புடையார் இசை வீணை பூணரா

என்புடையார் எழில் மேனி மேலெரி

முன்புடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு

அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே

ஒருவர் மற்றவர் பால் கொண்டுள்ள அன்பு நாளுக்கு நாள் குறையாமல் வளர்ந்து கொண்டே இருந்தால் அதனை காதல் என்று கூறுவார்கள். அத்தகைய அன்பினை பெருமான் பால் வைத்து உள்ளம் கசிந்து அவனது திருநாமத்தைச் சொல்லும் அன்பர்களை நன்னெறியாகிய முக்தி நிலைக்கு அழைத்துச் செல்பவர் சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுவது (3.49.1) நமது நினைவுக்கு வருகின்றது.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.55.4) திருஞானசம்பந்தர் பெருமானை, அன்பா என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது மனம் ஆதரிக்காது என்று கூறுகின்றார்.

பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே

மின் போலும் புரிநூல் விடையேறிய வேதியனே

தென்பால் வையம் எல்லாம் திகழும் திருவான்மி தன்னில்

அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

சூலை நோயால் வருந்தி, அந்த பிணியைத் தீர்த்துக் கொள்ள அதிகை வீரட்டத்து இறைவரை அணுகிய அப்பர் பிரானுக்கு, தன்னைப் போன்று வருந்தும் அடியார்களின் நிலை, துன்பம், பிணி, கவலை ஆகியவற்றால் வருந்தும், அடியார்களின் நிலை நினைவுக்கு வருகின்றது. அடியார்களை வருத்தும் துன்பம், பிணி, கவலை முதலியவற்றை விரட்டியும் மறைத்தும் அருள் செய்யவேண்டும் என்று சிவபிரானிடம் அப்பர் பிரான் வேண்டுகின்றார். அவ்வாறு செய்தால் தான் சிவபிரான் அடியார்கள் பால் கொண்டிருக்கும் அன்பினை அனைவரும் உணர்ந்து தெளிவடைவார்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். சிவபெருமானது கருணையால் சூலைநோய் தீர்க்கப்பட்டு அவருக்கு அன்பராக மாறியவர், அன்பருக்கு அன்பராக சிவபிரான் விளங்கிய தன்மையை தனது அனுபவத்தில் புரிந்து கொண்டவர், அந்த நிலையினை அனைவர்க்கும் தெரியப் படுத்தும் பாடலாக இந்த பாடல் (4.01.09) விளங்குகின்றது.

பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர்

துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்

என் போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில்

அன்பே அமையும் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே

பாவநாசத் திருப்பதிகத்தின் கடைப் பாடலில் (4.15.10) அப்பர் பிரான், அன்பினால் இறைவனை நீராட்டி வழிபட வேண்டும் என்று சொல்கின்றார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் இறை வழிபாட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதை, இறைவனை நமது சிந்தையில் இருத்தி சிந்தையின் எண்ணங்களால் அவனை நீராட்டி, சொல் மாலைகளால் அவனைப் புகழ்ந்து பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து வழிபடவேண்டும் என்று கூறுகின்றார், இவ்வாறு செய்யப்படும் வழிபாடு நமது பாவங்கள் அனைத்தையும் நாசமாக்கிவிடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பாவநாசமே என்று முடிவதால், இந்த பொதுப் பதிகத்திற்கு பாவநாசத் திருப்பதிகம் என்ற பெயர் வந்தது. அனைத்துப் பொருட்களுக்கும் முன்னமே, தானாகவே தோன்றியவனை, வெண்மை நிறம் கொண்ட மூத்த காளையினை வாகனமாகக் கொண்டவனை, மாலை நேரத்து செம்மை படர்ந்த வானத்தின் வண்ணத்தானை, அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கியவனை, தங்களது சிந்தையில் இருத்தித் தங்களது எண்ணங்களால் அவனை நீராட்டி, அவனது புகழைக் குறிக்கும் பாடல்கள் பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து, இறைவனே எங்கள் தலைவனே என்று வழிபடும் அடியார்களின் தீவினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளேறு ஊர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவநாசமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.21.9) அப்பர் பிரான் பெருமானை அன்பன் என்று அழைக்கின்றார். இறைவனைத் தொழாத நாட்கள் எல்லாம் துன்பமான நாட்களாக சிலர் கருதுவதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அன்பே உருவான சிவபிரான் என்பதால் அன்பன் என்று அப்பர் பிரான் இறைவனை இங்கே அழைக்கின்றார். ஆதிரைத் திருநாள் விழாவில் திரண்டு கூடியிருக்கும் அடியார்கள் பேசுவது என்ன என்பதை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்

இன்பம் நும்மை ஏத்து நாள்கள் என்பாரும்

நும்பின் எம்மை நுழையப் பணியேன் என்பாரும்

அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.26.1) அப்பர் பிரான் பெருமானை அன்பனே என்று அழைக்கின்றார். காண்பான்=காணும் பொருட்டு: அலந்து போனேன்=வருந்தினேன்; எல்லா உயிர்களின் தேவைகளையும் சிவபெருமான் நிறைவேற்றி வைப்பதால், சிவபெருமான் மீது நம்பிக்கை வைத்து அனைத்து உயிர்களும் தங்களது விருப்பங்களை தெரிவிக்கின்றன. இதனை உணர்த்தும் வகையில் நால்வர் பெருமானார்கள் பல பாடல்களில் நம்பன் என்றும் நம்பா என்றும் இறைவனை குறிப்பிடுகின்றனர்.

நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்தி

பங்கனே பரம யோகீ என்றென்றே பரவி நாளும்

செம்பொனே பவளக் குன்றே திகழ் மலர்ப் பாதம் காண்பான்

அன்பனே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.29.5) அப்பர் பிரான், பெருமானை அன்பருக்கு அன்பரே என்று அழைக்கின்றார். சிவபெருமான், தனது சடையில் கங்கை நதியை மறைத்து வைத்திருக்கின்றார்: அவர் அடியார்களுக்கு அன்பராகத் திகழ்கின்றார்: தனது உடலின் ஒரு பாதியில் பார்வதி தேவியை வைத்திருக்கின்றார்: கொடிய பாம்பினைத் தனது இடுப்பில் கட்டிக் கொண்டு திரிகின்றார்: உடலில் திருநீறு அணிந்து அழகுடன் விளங்குகின்றார். இத்தகைய தன்மைகளை உடைய சிவபெருமான், நெய்தல் பூக்களும், சேற்றிலே தாமரைப் பூக்களும் கமழும் நீர்வளம் உடைய திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்றார். என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆறுடைச் சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும்

கூறுடை மெய்யர் போலும் கோளரவு அரையர் போலும்

நீறுடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மைச்

சேறுடைக் கமலவேலித் திருச்செம்பொன் பள்ளியாரே

தன்னைப் பலவாறும் தொழுது ஆடியும் பாடியும் தோத்திரங்கள் சொல்லி அழும் அடியார்களுக்கு அன்பராக இருப்பவர் இறைவன் என்று அப்பர் பிரான், ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (4.56.4) குறிப்பிடுகின்றார். எழுநுனை=கூரிய நுனி: சிவபெருமானின் புகழினைக் கேட்கும் போதும், சொல்லும் போதும் வாய் விட்டு அழுதல் என்பது சிறந்த அடியார்களின் குணங்களில் ஒன்றாகும். நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி சிவபெருமானின் திருநாமத்தை ஓதும் அடியார்கள் நன்னெறியை அடைவார்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நாம் அதிகமாக தொழத்தொழ, நமக்கு இறைவனிடத்தில் அன்பு அதிகமாகின்றது. அந்த இறையன்பு வலுப்பெறும்போது அது அழுகையாக வெளிப் படுகின்றது.

மழுவமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும்

எழுநுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும்

தொழுது எழுந்தாடிப் பாடி தோத்திரம் பலவும் சொல்லி

அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

திருவாலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.2) அப்பர் பிரான் பெருமானை அன்பனே என்று அழைக்கின்றார். சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் என்று பொதுவாக கூறினாலும், நான்கு திசைகளை பார்த்தவாறு நான்கு முகங்கள் இருப்பதாக கருதுவதால் அவனை நான்முகன் என்றும் அழைப்பதுண்டு. பல திருமுறை பாடல்களில் அவனை நான்முகன், எண்தோளன் என்று நால்வர் பெருமானார்கள் அவனை அழைக்கின்றார்கள். நான்கு முகங்களை உடையவன் தானே எண்தோளனாக இருக்க முடியும்.

நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞான மூர்த்தீ

என் பொனே ஈசா என்றென்று ஏத்தி நான் ஏசற்று என்றும்

பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்

அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.74.2) அப்பர் பிரான், பெருமானை அன்பன் என்று அழைக்கின்றார். முன்பன்=முன்னதாக உள்ளவன்; உலகுக்கு எல்லாம் என்ற தொடரை, முன்பனை மற்றும் மூர்த்தி ஆகிய இரண்டு சொற்களுக்கும் பொதுவாக வைத்து பொருள் கொள்ள வேண்டும். அனைத்துப் பொருட்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவனும், அனைத்து உலகத்தின் உயிர்கள் அனைத்திற்கும் தலைவனும், முனிவர்களால் புகழ்ந்து போற்றப் படுபவனும், அத்தகைய முனிவர்களுக்கு சிவானந்தம் அளிக்கும் ஞான விளக்காக இருப்பவனும், பார்வதி தேவி அச்சம் அடையும் வண்ணம் தாருக வனத்து முனிவர்களால் ஏவப்பட்ட மத யானையை அடக்கிய பின்னர் அதன் தோலினைத் தனது உடல் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவனும், எங்களது அன்பனும் ஆகிய பெருமானை நினைப்பதால், எனது நெஞ்சம் மேலும் அழகுடன் பொலிந்து விளங்குகின்றது என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும்

இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச

வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள்

அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே

அன்பு மயமாக இருக்கும் பெருமான், நாமும் அனைவரிடத்தும் அன்புடன் பழக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். வேதிகுடி பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.90.3) அன்பின் வழி நில்லாது பல உயிர்களுக்கும் துன்பமிழைத்த திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை அழித்த இறைவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அன்பு மயமாக விளங்கும் பெருமானை அன்பன் என்றும் ஆராவமுதன் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார்.

முன்பின் முதல்வன் முனிவன் எம் வினை கழித்தான்

அன்பின் நிலை இல் அவுணர் புரம் பொடியான செய்யும்

செம்பொனை நன்மலர் மேலவன் சேர் திருவேதிகுடி

அன்பனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.7.4) அப்பர் பிரான் பெருமானை அன்பராமவர்க்கு அன்பர் என்று குறிப்பிடுகின்றார். சுபத்தர்=இன்பத்தை உடையவர்: தனக்கு வரும் இன்ப துன்பங்களை இன்பமாகவும் துன்பமாகவும் கருதாமல், இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று போல் கருதி, அத்தகைய விளைவுகளால் நிலை மாறாது இருக்கும் அடியார்களுக்கு துன்பங்கள் எந்த வருத்தத்தையும் விளைவிக்காது. இதற்கு அப்பர் பிரானின் சரித்திரமே மிகப் பெரிய சான்றாக விளங்குகின்றது. அதனால் தான், பல்லவ மன்னனின் ஆணையின்விளைவால், மன்னனின் அரசவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, மனம் கலங்காது இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று அப்பர் பிரான் பாடினார் (6.99.1). தனக்கு வரும் இன்பங்களையும் துன்பங்களையும், இன்ப துன்பங்களாக கருதாமல், ஒன்று போல் ஏற்றுக்கொண்டு வாழும் பக்குவம் அடைந்த அடியார்கள். என்றும் இன்பத்தையே அனுபவிப்பவர்களாய், தங்களது எலும்புகள் நெகிழ்ந்து உருகுமாறு, இரவும் பகலும், இடைவிடாது பெருமானைத் தொழுது வழிபடுவார்கள். அவ்வாறு சிவபெருமானிடம் இடையறாது அன்பு கொண்டு விளங்கும் அடியார்கள் பால் மிகுந்த அன்பு செலுத்துபவன் ஆரூர்ப் பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய்

என்பெலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று

அன்பராய் நினைந்து என்றும் இடையறா

அன்பராம் அவர்க்கு அன்பர் ஆரூரரே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் முதல் பாடலில் (5.13.1) அப்பர் பிரான் இறைவனை அன்பனே என்று அழைக்கின்றார். பைங்கழல்=பசும் பொன்னினால் செய்யப் பட்ட கழல் அணிகலன்; பொன்னைப் போன்று எனக்கு அருமையானவரே, வானவர்கள் தொழும் திருப்பாதங்களில் பசும்பொன்னால் செய்யப்பட்ட கழலினை அணிந்தவரே, சுத்தமான பொன்னைப் போன்று உயர்ந்தவரே, செம்பொன் போன்ற திருமேனியை உடையவனே, அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்துபவனே, திருவீழிமிழலை தலத்தில் வீற்றிருக்கும் இறைவனே, நன்மை எது தீமை எது என்பதை பகுத்து அறியும் ஆற்றல் இல்லாத அடியேனை, நீர் குறியாக் கொண்டு காத்தருள வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

என் பொனே இமையோர் தொழும் பைங்கழல்

நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்றிலேன்

செம்பொனே திருவீழிமிழலையுள்

அன்பனே அடியேனைக் குறிக்கொளே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (5.31.7), தன்னை நினைத்துத் தொழும் அடியார்களுக்கு அன்பனாக இறைவன் விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மலர்களைத் தூவி இறைவனைத் தொழுது அழும் அடியார்களுக்கு அன்பனாக இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவனடியார்களின் அக இலக்கணங்களில் ஒன்றாக, பெருமானை நினைத்து அழுதல் சொல்லப் படுகின்றது. ஒழுகும் ஒன்பது ஓட்டைகள் கொண்டுள்ள மாடமாகிய உடலினை விட்டு உயிர் பிரிய, அந்த மாடத்தை கழுகு அரிப்பதன் முன்னம், பெருமானின் கழல் அணிந்த திருவடிகளைத் தொழ வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடலில் வழங்கப் படுகின்றது.

ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்

கழுகு அரிப்பதன் முன்னம் கழலடி

தொழுது கைகளால் தூமலர் தூவி நின்று

அழும் அவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.55.8) அப்பர் பிரான், பெருமானை அன்பன் என்று அழைக்கின்றார். வீடு தோறும் சென்றுபிச்சை எடுப்பவர்கள் பொதுவாக இரவில் பிச்சை எடுப்பதையே நாம் காண்கின்றோம். ஆனால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட பெருமான் நண்பகலில்பிச்சை எடுப்பதையே தனது வழக்கமாக கொண்டுள்ளதை பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. பெருமான் பிச்சை எடுப்பது தான் உண்டுமகிழ்வதற்காக அல்ல என்பதையும், உலகில் உள்ள உயிர்கள் உய்வதன் பொருட்டு அவர்கள் தங்களின் மலங்களை பெருமானிடம் ஒப்படைத்து, மலங்கள்நீங்கப்பெற்று முக்தி நிலை அடைய வேண்டும் என்ற பெருமானின் ஆசை தான் காரணம் என்பதையும் நாம் அறிவோம். இவ்வாறு பெருமான் கருணைவயத்தராகி மன்னுயிர்கள் உய்வதன் பொருட்டு, பலி ஏற்கத் திரிவது இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

என்பு பூண்டு எருது ஏறி இளம்பிறை

மின் புரிந்த சடை மேல் விளங்கவே

நன்பகல் பலி தேரினும் நாரையூர்

அன்பனுக்கு அது அம்ம அழகிதே

கோளிலி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.56.3) அப்பர் பிரான் இறைவனை, கலந்தவர்க்கு அன்பன் என்று அழிக்கின்றார். கலந்தவர்=மனதினால் இறைவனுடன் கலந்தவர்கள், மனம் ஒன்றி இறைவனை தியானம் செய்யும் அடியார்கள்; திரை=அலைகள்; பரவை=கடல்; கொண்டல்=மேகங்கள்; அம்=அழகிய;

வெண்திரைப் பரவை விடம் உண்டதோர்

கண்டனைக் கலந்தார் தமக்கு அன்பனை

கொண்டலம் பொழில் கோளிலி மேவிய

அண்டனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே

கடுவாய்க்கரை புத்தூர் எனப்படும் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.62.3) அப்பர் பிரான் இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார். அன்பே வடிவானவனும், அடியார்களின் துன்பங்களை நீக்குபவனும், செம்பொன் மேனியனாகத் திகழ்பவனும், கச்சி ஏகம்பம் தலத்தில் வீற்றிருப்பவனும், கடுவாய்க் கரை தென்புத்தூர் தலத்தில் உறைபவனும், அடியார்களின் நம்பிக்கைக்கு உரியவனும் ஆகிய பெருமானை அடியேன் இந்த தலத்தில் கண்டு, வாழ்வினில் உய்வினை அடையப் பெற்றேன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

அன்பனை அடியார் இடர் நீக்கியைச்

செம்பொனைத் திகழும் திருக் கச்சி

ஏகம்பனைக் கடுவாய்க்கரைத் தென் புத்தூர்

நம்பனைக் கண்டு நான் உய்யப் பெற்றேனே

திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.74.8) அப்பர் பிரான், பெருமானை அன்பனே அரனே என்று அழைத்து அரற்றும் அடியார்களுக்கு இன்பம் அளிப்பவன் என்று குறிப்பிடுகின்றார். உடலின் பல்வேறு தன்மைகளை இதே பதிகத்தின் முந்திய இரண்டு பாடல்களிலும் உணர்த்திய அப்பர் பிரான் இந்த பாடலில் ஏன் அவ்வாறு அத்தகைய உடலுடன் உயிரினை இறைவன் பொருத்தினான் என்பதையும் இந்த பாடலில் விளக்குகின்றார். மேலும் உயிருடன் இணைந்துள்ள உடலுக்கு பிறப்பு இறப்பு இன்பம் துன்பம் ஆகியவற்றையும் உடன் வைத்தவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தூல உடல் பூவுலகத்தில் தனது வாழ்க்கையை வாழ்ந்து கழித்த பின்னர், சூக்கும உடலோடும் உயிர் சொர்கத்திற்கும் நரகத்திற்கும் செல்கின்றது. தான் ஈட்டிய நல்வினைப் பயன்களை அனுபவித்துக் கழிக்க சொர்கத்தில் சில நாட்கள் இருக்கும் உயிர், பின்னர் நரகத்திற்கு சென்று தனது தீய வினைகளின் ஒரு பகுதியைக் கழிக்கின்றது. கருவி கரணங்கள் அற்ற உடல் என்பதால், வினைகளை மேலும் பெருக்கிக் கொள்ளாத உடல், இன்பமும் துன்பமும் ஒரு சேர அனுபவிக்கும் இடமாக பூவுலகம் உள்ள நிலையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அவ்வாறு இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கும் நாம் அவற்றில் ஆழ்ந்து மேலும் வினைகளை பெருக்கிக் கொள்கின்றோம். அவ்வாறு இல்லாமல், இறைவனை துதித்து பேரின்பமாகிய முக்தி நிலையை அடைவதற்கு உயிர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அத்தகைய முயற்சியினை மேற்கொள்ளவே நமக்கு கருவி கரணங்கள் அளிக்கப் பட்டுள்ளன. அவற்றை சரிவர பயன்படுத்தினால், இறைவன் நமக்கு எல்லையில்லா பேரின்பம் தருபவனாக இருப்பதை நாம் உணரலாம் என்று கூறுகின்றார். இறைவனின் திருநாமங்களைச் சொல்லி, அவனைப் புகழ்ந்து போற்றி வணங்குவதே, நமது கருவி கரணங்களை சரியாக பயன்படுத்தும் வழியாகும். உயிரினை உடலுடன் இணைத்து பிறப்பை அளித்து, பின்னர் இறப்பு என்பதையும் வரையறுத்து, இதற்கு இடைப்பட்ட நாட்களில் இன்பமும் துன்பமும் இந்த உடலும் உயிரும் சேர்ந்து அனுபவிக்கும் வண்ணம் நம்மை இயக்குபவன் இறைவன் ஆவான். இந்த இன்ப துன்பங்களில் ஆழ்ந்து, நமக்கு பிறப்பு அளித்ததன் நோக்கத்தை மறந்து விடாமல், அன்பனே அரனே என்று இறைவனை அன்புடன் அழைத்து போற்றுவார்க்கு, நிலையான பேரின்பம் அளிக்கும் முக்தி வாழ்க்கைக்கு வழிகாட்டும் இன்பனாக விளங்குபவன் எறும்பியூர் ஈசன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு

துன்பமும் உடனே வைத்த சோதியான்

அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு

இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.4) அப்பர் பிரான், தன்னை அடைந்த அடியார்களுக்கு நேசராக பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். தேசர்-ஒளியுடையவர்; ஈசர்=தலைவராக தாங்குபவர்; நிட்டுருவர்=நேசம் இல்லாதவர், கடுமையான சித்தம் உடையவர்; திறம்=தன்மை; தனது தன்மைகளை நினைத்து தன்னைத் தொழுகின்ற அடியார்களின் சிந்தனையில் உறைபவர் சிவபெருமான் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், தன்னைச் சரணடையும் அடியார்களை நேசிப்பவராக இறைவன் உள்ளார் என்று கூறுகின்றார். அதே சமயத்தில் தன்னை நினையாத மனிதர்களுக்கு கடுமையான சிந்தை உடையவராக, இறைவன் இருப்பார் என்றும் கூறுகின்றார். வஞ்சக் கள்வர் என்று எவரும் காண்பதற்கு அரியவராக இறைவன் இருக்கும் தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது.

தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திருவாரூர் என்றும் உள்ளார்

வாசமலரின் கண் மான்தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்சக் கள்வர்

நேசர் அடைந்தார்க்கு அடையாதவர்க்கு நிட்டுருவர் கட்டங்கம் நினைவார்க்கு என்றும்

ஈசர் புனற் பொன்னித் தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம் கொண்டாரே

கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.4) அப்பர் பிரானும், இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார். கொக்கரை=ஒரு இசைக் கருவி; நிருபன்=தலைவன், அரசன்; நிழல்=ஒளி; மாறு=பகை; மாறுபட்டு, ஆகமக் கொள்கையிலிருந்து மாறுபட்டு வாழ்ந்தவர்கள்; கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றவனும், ஆரூரனாக திருவாரூர் நகரத்தில் உறைபவனும், அடியார்கள் பால் அன்பு செலுத்துபவனும், அழகான திருப்பழனம் தலத்தில் உறைபவனும், திருநீற்றினை உடலில் பூசிக்கொண்டு ஒளி திகழும் மேனியனாக விளங்குபவனும், அனைவர்க்கும் தலைவனாக இருப்பவனும், தனக்கு ஒப்பாக வேறொருவர் இல்லாதவனும், எந்த பொருளையும் பிளவுபடுத்த வல்ல கூர்மையினை உடைய மழுப்படையினை ஏந்தியவனும், கொக்கரை எனப்படும் இசைக் கருவியை வாசிப்பவனும், சிறந்த பூத கணங்களை வைத்திருப்பவனும், வேதாகம கொள்கைகளிலிருந்து மாறுபட்டு பகைமையுடன் விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்தவனும் ஆகிய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான், என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

ஆறேறு செஞ்சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான் தான் காண்

நீறேறு நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகரொன்றும் இல்லாதான் காண்

கூறேறு கொடுமழுவாட் படையினான்காண் கொக்கரையன் காண் குழுநல் பூதத்தான் காண்

மாறாய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.52.9) அப்பர் பிரான், தன்னை நினைக்கும் அடியார்களுக்கு நேசனாகத் திகழ்பவன் பெருமான் என்று கூறுகின்றார். எச்சன்=வேள்வியை நடத்தி வைக்கும் தலைவன்; ஈசன்=தலைவன்; வேதங்களில் உணர்த்தும் நெறிக்கு மாறாக தக்கன் செய்த வேள்வியை இறைவன் அழித்த போது, அந்த வேள்வியில் பங்கேற்ற பலருக்கும் தண்டனை அளித்த செய்த இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. இந்த வேள்வியில் பங்கேற்ற எவரும் இறக்கவில்லை. தலைகள் துண்டிக்கப்பட்ட தக்கனும் எச்சனும், வேறு ஒரு தலை பொருத்தப்பட்டு உயிர் பிழைத்தனர். இவ்வாறு தண்டனை மட்டும் அளித்து, அனைவரையும் வாழச் செய்தமையால், அருள் செய்தான் காண் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

சந்திரனைத் திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்

இந்திரனைத் தோள் முரிவித்து அருள் செய்தான்காண் ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க்கு எல்லாம்,

மந்திரமும் மறைப் பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்

வெந்தழலின் விரிசுடராய் ஓங்கினான் காண் விண்ணிழி தண்வீழி மிழலையானே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.65.2) அப்பர் பிரான், இறைவனை நேசர்க்கு நேசன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானிடத்தில் அன்பு வைக்காத மாந்தர்களை நீசர்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் இகழ்கின்றார். அவ்வாறு இருக்கும் மனிதர்களைக் காணும் இறைவன், தான் உய்வதற்கு அளித்த வாய்ப்பினை அவர்கள் பயன்படுத்த தவற விட்டார்களே என்று வருத்தம் அடைந்து அவர்களைக் காணவும் கூசுகின்றார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தஞ்சம் என்ற சொல் தஞ்சே என்று குறைந்தது. தஞ்சே=எளிதாக; கூசாதார் என்று கூச்சம் வெட்கம் ஏதும் கொள்ளாமல் பெருமானை வணங்கும் அடியார்களை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். எனவே பெருமானை வணங்க கூச்சம் கொள்ளும் மனிதர்கள் அந்நாளில் இருந்தனர் என்பது தெளிவாகின்றது. புத்தர்களும் சமணர்களும் நிறைந்து வாழ்ந்த காலத்தில், பெருமானை கும்பிட்டால் தன்னை மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் அப்பர் பெருமானின் காலத்தில் வாழ்ந்து வந்த சிலருக்கு இருந்தது போலும். மேலும் மன்னனே சமண சமயத்தை பின்பற்றியும் அதனை ஆதரித்தும் வாழ்ந்து வந்தமையால், அரசனிடம் இருந்த அச்சம் காரணமாக மற்றவர்கள் அறியும் வண்ணம் பெருமானை வழிபட சற்று தயக்கம் நிலவியது நியாயம் தானே. கிறுத்துவர்கள் நடத்தும் பள்ளிகளில், கல்லூரிகள் படிக்கும் இன்றைய இளைஞர்கள் தங்களது நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு செல்வதற்கு தயக்கம் கொள்வதை நாம் நேரிடையாக இந்நாளில் காண்கின்றோம் அல்லவா, எனவே அத்தகைய சூழ்நிலையில் கூச்சம் ஏதும் கொள்ளாமல் வெளிப்படையாக பெருமானை வணங்கியவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள் தானே. அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம், பெருமான், அத்தகைய அடியார்கள் எந்த முயற்சியும் செய்யும் முன்னரே மிகவும் எளிதாக அவர்களது நெஞ்சினில் குடிகொள்கின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்

கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடி கொண்ட அழகன் காண் அழகார் கொன்றை

வாசன்காண் மலைமங்கை பங்கன் தான்காண் வானவர்கள் எப்போதும் வணங்கி ஏத்தும்

ஈசன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.4) அப்பர் பிரான், இறைவனை நேசர்க்கு நேசன் என்று குறிப்பிடுகின்றார். தலையான்=தலைவன்: முகடு=உச்சி; நேசர்க்கு நேசன் என்ற தொடர் நமக்கு சிவபுராணம் திருவாசகத்தில் வரும் அன்பருக்கு அன்பனே என்ற தொடரை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், தன்னுருவம் யாவர்க்கும் அறியவொண்ணா நிலையானவன் என்றும், அனைவர்க்கும் தலைவன் என்றும் இறைவனின் உயர்ந்த தன்மையை உணர்த்தும் அப்பர் பிரான், தன் பால் நேசம் வைத்து தொழும் அடியார்களுக்கு நேசனாகத் இறைவன் திகழ்கின்றார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

தலையானை எவ்வுலகும் தான் ஆனானைத் தன்னுருவம் யாவர்க்கும் அறியவொண்ணா

நிலையானை நேசர்க்கு நேசன் தன்னை நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற

மலையானை வரி அரவு நாணாக் கோத்து வல்லசுரர் புரம் மூன்றும் மடிய எய்த

சிலையானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.67.1), அப்பர் பிரான் ஆளான அன்பர்கட்கு அன்பன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். ஆளான அடியார்=பெருமானுக்கு அடிமையாக மாறி திருத்தொண்டு செய்யும் அடியார்கள்; ஆளான அடியார்கட்கு அன்பனாக பெருமான் இருந்த தன்மையை நாம் பல நாயன்மார்களின் சரித்திரத்திலிருந்து அறிகின்றோம். சண்டீசருக்கு பதவி அளித்தது. திருஞானசம்பந்தருக்கு பொற்றாளம் அளித்தது, முத்துப் பல்லக்கு அளித்தது, முத்துப் பந்தர் அருளியது, உலவாப் பொற்கிழி அருளியது, திருநாவுக்கரசு நாயனாருக்கு பொதிசோறு அளித்தது, அவரது தோள்களில் இடப இலச்சினைகள் பொறித்தது, தனது திருவடியை அவரது தலையினில் வைத்தது, சுந்தரருக்கு வேண்டியபோதெல்லாம் பொருள் அளித்தது முதலான நிகழ்ச்சிகள் அடியார்களுக்கு அன்பனாக விளங்கும் பெருமான் செய்யும் உதவிகள். பெரிய புராணத்தில் உணர்த்தப்படும் கருணைச் செயல்கள் அனைத்தும் இறைவன் அடியார்களுக்கு அன்பனாக இருந்த தன்மையால் எழுந்தது தானே. அனைத்து நாயன்மார்களுக்கும் இறைவன் அருளிய தன்மையை விவரித்தால், இந்த விளக்கவுரை மேலும் விரிந்து விடும் என்று கருதி, அத்தகைய விளக்கம் தவிர்க்கப் பட்டுள்ளது.

ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க

தாளானை தன்னொப்பார் இல்லாதானைச் சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த

தோளானை தோளாத முத்து ஒப்பானைத் தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த

கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே

முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.85.1) அப்பர் பிரான் பெருமானை அடியவர்கட்கு அன்பன் என்று கூறுகின்றார். ஆர்த்தல்=கட்டுதல்; அழல்=சினம், கோபம்; புறங்காடு= ஊருக்கு வெளியே அமைந்துள்ள சுடுகாடு; கனை கடல்=அலைகள் இடைவிடாது ஒலிக்கும் கடல்;

ஆர்த்தான் காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன் காண் ஆனைத் தோலைப்

போர்த்தான் காண் புரிசடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்

காத்தான் காண் உலகேழும் கலங்கா வண்ணம் கனை கடல் வாய் நஞ்சதனைக் கண்டத்துள்ளே

சேர்த்தான் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (7.38.10) சுந்தரர் அன்பனாகிய பெருமானை அறிந்து கொள்ளாமல், அவரை மதியாது பேசினேன் என்று வருந்துவதை நாம் உணரலாம். திருவதிகை தலத்திற்கு வெளியே இருந்த சித்தவடம் என்ற மடத்தில், இரவில் சுந்தரர் தங்கிய போது, ஒரு கிழ வேதியர் உருவில் வந்த பெருமான், சுந்தரருக்கு அருகில் படுத்துக் கொண்டு தனது பாதத்தை சுந்தரரின் தலை மீது வைத்தார். முதியவரின் உடல் தளர்ச்சியின் காரணமாக அவரது பாதம் தனது தலையில் மீது பட்டிருக்கலாம் என்று கருதிய சுந்தரர் எழுந்து சற்று தள்ளி படுத்தார். அப்போதும் முதியவரின் கால் தனது தலையின் மீது படவே, தூக்கம் கலைந்து எழுந்த சுந்தரர் கோபத்துடன் இங்கே பலமுறை எனது தலையை மிதித்த நீர் யார் என்று வினவினார், என்னை நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையா என்று சொல்லி, அந்த முதியவர் மறைந்த பின்னரே, வந்தது பெருமான் என்பதை சுந்தரர் புரிந்து கொண்டார். வந்தது யார் என்பதை புரிந்து கொள்ளாமல் மதியாது பேசிய தனது தவறினை இந்த பாடலில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். தான் செய்த தவறினை பொருட்படுத்தாத இறைவனை, அன்புடன் மன்னித்த இறைவனை, அன்பன் என்று சுந்தரர் அழைக்கின்றார்.

என்பினையே கலனாக அணிந்தானை எங்கள் எருதேறும் பெருமானை இசைஞானிசிறுவன்

வன்பனைய வளர் பொழில் சூழ் வயல் நாவலூர்க்கோன் வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன

அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர் பெருமானை அதிகை மாநகருள் வாழ்பவனை

என் பொனை எறி கெடில வடவீரட்டானத்து உறைவானை இறை போதும் இகழ்வன் போலியானே

பெருமான் நம்பால் அன்பு வைக்க வேண்டும் என்றால், நாம் இறைவன் பால் அன்புடன் இருக்க வேண்டும் என்பதை முன்னமே சிந்தித்தோம். தான் பெருமானுக்கு அன்பனாக திகழ்ந்தமையால், பெருமான் தன்னை ஆண்டுகொண்டான் என்று மணிவாசகர் குறிப்பிடும் திருச்சதகத்தின் பாடலை (8.5.23) இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். ஆய=ஆராய்ந்து பார்க்கும் போது; பெருமானுக்கு எண்ணற்ற அடியார்கள் இருக்கின்றனர்; அதனால் அடியார் எவரும் இல்லாத காரணத்தால், தான் அவருக்கு அன்பன் என்று சொன்னவுடன் தன்னை அவர் ஆட்கொண்டார் என்று கருதுதல் தவறு; அவரது கருணை உள்ளமே, தன்னை விடவும் சிறந்த அடியார்கள் பலர் இருப்பினும், நாயாக பேயாக கீழ்மைத் தன்மையுடன் தான் இருப்பினும், தான் அவருக்கு அன்பன் என்று சொன்னவுடன் அவரால் தான் ஆட்கொள்ளப் பட்டதற்கு காரணம் ஆகும் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். .

ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையனாய

நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்

ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் அடியார் தாமில்லையே அன்றி மற்றோர்

பேயனேன் இதுதான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே

திருச்சதகம் காருண்யத்திரங்கல் பதிகத்தின் பாடலில் (8.5.69) பாடலில் மாணிக்கவாசக அடிகளார், பெருமானை அன்பர்க்கு அவரினும் அன்ப என்று குறிப்பிடுகின்றார். நாம் பெருமான் பால் எவ்வளவு அன்பு செலுத்துகின்றோமோ, அதனினும் அதிகமான அன்பை அவர் நம் பால் பொழிகின்றார் என்று இந்த பாடலில் அடிகளார் குறிப்பிடுகின்றார். தீர்ந்த=முதிர்ந்த; வார்ந்த=ஒழுகிய; ஆர்ந்த=நிறைந்த, அருட்குணங்கள் நிறைந்த என்றும் இன்பம் நிறைந்த என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம்; பேர்ந்தும்=மீண்டும்; அயின்று=உட்கொண்டு: பேர்ந்த என் பொய்ம்மை என்ற தொடருக்கு, முனைவர் அ.ச.ஞா அவர்கள், இறைவனின் திருவுள்ளக் கருத்தினை புரிந்து கொள்ளாமலே, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று பாண்டிய மன்னனுக்கு பதில் அனுப்பிய செய்கை என்று விளக்கம் அளிக்கின்றார். அடிகளாரின் இந்த பொய்யினையும் மெய்யாக மாற்றியது இறைவனின் கருணை.

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி

பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிட வேண்டும் போற்றி

வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி

ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி

ஏழுலகத்தையும் ஆளும் வண்ணம் உயர்ந்தவனாக இருப்பினும், அடியார்கள் பால் அன்பு வைத்துள்ள பெருமான், அவர்களது உள்ளங்களில் சிவானந்த அமுதத்தை ஊறச் செய்கின்றான் என்று குயில் பத்து பதிகத்தின் பாடலில் (8.18.6) மணிவாசகர் கூறுகின்றார். கொம்பு=மரக்கிளை; மிழற்றும்=கூவும்; தீர்ந்த அன்பு=தலையாய அன்பு;

இன்பம் தருவன் குயிலே ஏழுலகும் முழுதாளி

அன்பன் அமுதளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன்

நன்பொன் மணிச் சுவடு ஒத்த நற்பரி மேல் வருவானைக்

கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி நாதனைக் கூவாய்

நாம் அவனது திருவடி பால் வைக்கும் அன்பே சிவமாக மிளிர்கின்றது என்பதை மணிவாசக பெருமானார் பிடித்த பத்து பதிகத்தில் கூறுகின்றார். அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்க வேண்டும் என்றால், நாம் சிவபிரான் பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும் போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை= பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை; சுருக்கும்=வீணாக்கும்: பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயப்பட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அடிகளார் இந்த பாடலில் அழைக்கின்றார். அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக் கொள்வதை நாம் உணரலாம்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

குலாப்பத்து பதிகத்தின் பாடலிலும் (8.40.3) மணிவாசகர் இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார். எந்தவொரு உயிருக்கும் தான் எண்ணற்ற பழைய பிறவிகளில் சேர்த்துக் கொண்டுள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் நுகர்ந்து கழித்துக் கொள்வதற்கான சக்தி இல்லை; மேலும் அந்த உயிர் இணைந்துள்ள உடலுக்கும் அந்த அளவுக்கு இன்ப துன்பங்களை தாங்கும் சக்தி இல்லை என்பதால், இறைவன் நம் பால் கருணை கொண்டு அந்த உயிர்களின் வினைகளின் ஒரு பகுதியை மட்டும் இந்த பிறவிக்கு, பிரார்த்த வினையாக ஒதுக்கி விட்டு, எஞ்சிய வினைகளை அடுத்து எடுக்க இருக்கும் பிறவிகளுக்கு, சஞ்சித வினைகளாக, ஒதுக்கி விடுகின்றான். இந்த இரண்டு வினைகளைத் தான், பிரார்த்த வினைகள் மற்றும் சஞ்சித வினைகளையே, இருவினைகள் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்றால், இந்த இரண்டு வகையான வினைகளையும் முழுவதுமாக கழித்துக் கொள்ள வேண்டும். இந்த பிறவிக்காக ஒதுக்கப்பட்ட பிரார்த்த வினைகளை நாம் நுகர்ந்து கழித்துக் கொள்ளலாம், அவ்வாறு நுகர்ந்து கழிக்கும் போது, மேலும் ஆகாமிய வினைகள் சேராதவாறு, விருப்பு வெறுப்பு இன்றி, அந்த வினைகளின் பயனாக நேரிடும் இன்ப துன்பங்களை, விருப்பு வெறுப்பின்றி எதிர்கொண்டு நடந்து கொள்ளலாம். ஆனால் இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்காக ஒதுக்கப் பட்டுள்ள சஞ்சித வினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி ஐயப்பாடு நமக்கு எழலாம். நாம் இந்த பிறவியில் எதிர்கொள்ளும், இன்ப துன்பங்களை, நமது வினைகளால் விளைந்தவை என்பதை புரிந்து கொண்டு, மனதினில் எந்த விதமான சலனமும் இன்றி, அனைத்தையும் இறைவனின் செயல் என்பதை உணர்ந்து, இன்ப துன்பங்களை ஒரே விதமாக பாவித்தால், மேலும் ஆகாமிய வினைகள் சேரா. மேலும், நாம் அடைந்துள்ள இந்த பக்குவ நிலையினை கண்ணுறும் இறைவன், இனிமேல் இந்த உயிர், எவ்வளவு வினைகளை அனுபவித்தாலும், அதன் நிலையில் மாற்றம் ஏற்படாது என்பதை உணர்வதால், அந்த உயிரினை, சஞ்சித வினைகளை வரும் பிறவிகளில் நுகர்ந்து கழிக்கும் நிலையிலிருந்து விடுதலை அளிக்கின்றான். இந்த தன்மை தான் இங்கே இருவினையை ஈடழித்து என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது. ஈடு என்றால் வலிமை என்று பொருள். துவந்துவங்கள்=நன்மை தீமை ஆகிய இணைபிரியாத இரண்டு; பரஞானத்தால், இறைவனைப் பற்றிய அறிவால், நமது மனது தூய்மை அடையும் நிலை. குலாத்தில்லை=சிறப்புடன் விளங்கும் தில்லையம்பலம்; தனது என்பினை உருக்கிய பெருமான், தனது இருவினைகளை ஈடழித்தும், இன்ப துன்பங்களை ஒரே விதமான உணர்ச்சியுடன் எதிர்கொள்ளும் பக்குவத்தை அளித்தும், அதற்கு முன்னம் தன்னுடன் பிணைந்திருந்த அனைத்து வினைகளையும் முழுவதுமாக அழித்தும், தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்து தனது உயிரின் துன்பங்களை முற்றிலும் களைந்து விட்டான் என்று இந்த பாடலில் மணிவாசக அடிகளார் கூறுகின்றார், எனவே தான், தன் பால் அன்பு கொண்டு இறைவன் செய்த இந்த கருணைச் செயலை நினைவு கூர்ந்து மனம் கசிந்தவராக இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார்.

என்பு உள்ளுருக்கி இருவினையை ஈடழித்துத்

துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து

முன்பு உள்ளவற்றை முழுதழிய உள்புகுந்த

அன்பன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே

அன்பே சிவம் என்பது சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கை. அன்பும் சிவமும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பொருந்தியுள்ளது என்பதை திருமூலர் அழகாக விளக்குகின்றார். அறிவும் அனுபவமும் இல்லாதார் அன்பாகிய சக்தியும் அறிவாகிய சிவமும் வேறு வேறான இரண்டு பொருள்கள் என்று கருதுவார்கள்; அன்பு முதிர்ந்தால் அறிவாகிய சிவம் தோன்றும் என்பதை அனைவரும் உணர்வதில்லை; அன்பே சிவத்தை விளங்கச் செய்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் அன்பின் வடிவமாக மாறி, தானே சிவத்தன்மை எய்தியவர்களாக உள்ளனர் என்பதே இங்கே கொடுக்கப் பட்டுள்ள திருமந்திரப் பாடலின் திரண்ட கருத்தாகும். அன்பே வடிவாக இறைவன் இருப்பதால் தான் அன்பே சிவம் என்று சான்றோர்கள் கூறுகின்றனர். இறைவனின் திருவருள் அன்பு எனப்படும். அன்பாகிய திருவருளும் இன்பமாகிய சிவமும் ஒளியும் மணியும் போன்று பிரிக்க முடியாதவை. எனவே இவற்றை வேறுவேறு என்று கூறுதல் தவறு. இன்பம் அளிக்கும் சிவனின் திருமேனி திருவருள் தான் அவனது திருமேனி என்பதை அறிந்தவர்கள் அவனது திருவடியின் மீது அன்பினை வைத்து தியானித்து இன்பம் அடைவார்கள். அவர்கள் அடையும் இன்பநிலை சிவமாய் அமர்ந்து இருந்தார் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின்

அன்பே சிவமாக அமர்ந்து இருந்தாரே

திருமந்திரம் முதல் தந்திரத்தில், அன்பு செய்வாரை அறிபவன் சிவன் என்ற அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை இன்பன் என்றும் அன்பன் என்றும் அழைக்கின்றார். நானாவிதப் பொருள்= இயங்குவன, நிற்பன என்று அனைத்து விதமான பொருட்கள்; நம்பன்=அனைவராலும் நம்புதற்கு உரியவன், அடைக்கலம் புகத் தக்கவன்; உம்பர்=தேவர்கள்; இரதிக்கும்=ரசிக்கும் என்ற சொல்லின் திரிபு; நம்பப்படத் தக்கவனும், எல்லாப் பொருளுமாக இருப்பவனும் ஆகிய சிவபெருமானே என்று தேவர்களால் புகழ்ந்து போற்றப் படுபவனும், இன்பமே வடிவமாக இருப்பவனும், இன்பத்தில் சுவைக்கப் படுகின்ற அன்பாக இருப்பவனும் ஆகிய பெருமானின் உண்மைத் தன்மையை பலரும் அறியாமல் இருக்கின்றனரே என்று திருமூலர் வருத்தம் அடையும் பாடல்.

நம்பனை நானாவிதப் பொருளாகும் என்று

உம்பரில் வானவர் ஓதும் தலைவனை

இன்பனை இன்பத்திடை நின்று இரதிக்கும்

அன்பனை யாரும் அறியகிலாரே

பொழிப்புரை:

இந்த உலக வாழ்க்கையில் துன்பங்களைத் தவிர்த்து இன்பம் அடைய வேண்டும் என்று நீர் விரும்புவீராயின், அன்பே வடிவமாக விளங்கும் பெருமானை, அன்னியூர் இறைவனை, நல்ல பொன் போன்று அருமையாக உள்ளவனே என்று புகழ்ந்து வழிபடுவீர்களாக. அவ்வாறு வழிபட்டால், நீங்கள் மறுமையிலும் நிலையான இன்பம் பெறலாம்.

பாடல் 7:

மன்னியூர் இறை (1.096) பாடல் 6 தொடர்ச்சி 7, 8 (திதே 0467)

அந்தணாளர் தம்

தந்தை அன்னியூர்

எந்தையே என

பந்தம் நீங்குமே

விளக்கம்:

பந்தம்=மல மாயையால் விளைந்த பாசக்கட்டு; உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் நிலையானவை என்று தவறாக நினைத்து அவற்றின் மீது உயிர்கள் வைக்கும் பாசக்கட்டு; சடையான் என்றும் வேதியன் என்றும் பல திருமுறைப் பாடல்கள் இறைவனை குறிப்பிடுகின்றன. அந்தணர்களில் சிறந்தவன் என்றும் முனிவர்களில் சிறந்தவன் என்றும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. வேதம் ஓதுதலும் வேதம் ஓதுவித்தலும் அந்தணர்களின் தொழிலாக பண்டைய நாளில் கருதப்பட்டு வந்தது. முதன் முதலாக வேதங்களை ஓதியவனும், வேதங்களுக்கு ஐயம் திரிபற விளக்கம் உரைத்தவனும் ஆகிய பெருமானை அந்தணாளர் தம் எந்தை என்று அழைப்பது பொருத்தம் தானே.

பொழிப்புரை:

அந்தணர்களுக்கு தலைவனாகவும் அந்தணர்களில் சிறந்தவனாகவும் விளங்கும் பெருமான் அன்னியூர் தலத்தில் உறைகின்றான். அந்த இறைவனை எங்களது தந்தையே என்று புகழ்ந்து போற்றுவோர், உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசத்தினை நீக்கும் வல்லமை உடையவர்களாக விளங்குவார்கள்.

பாடல் 8:

மன்னியூர் இறை (1.096) பாடல் 6 தொடர்ச்சி 7, 8 (திதே 0467)

மன்னியூர் இறை (1.096) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0468)

மன்னியூர் இறை (1.096) பாடல் 8 தொடர்ச்சி 9, 10, 11 (திதே 0469)

தூர்த்தனைச் செற்ற

தீர்த்தன் அன்னியூர்

ஆத்தமா அடைந்து

ஏத்தி வாழ்மினே

விளக்கம்:

தீர்த்தன்=தூய்மை செய்பவன்; ஆத்தமா=அன்புடன்; ஆப்தம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. நெருங்கிய நண்பனை ஆப்தன் என்று சொல்வதுண்டு. தூர்த்தன்=காமி, பெண்பித்து கொண்டு அலைபவன்;

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தின் பாடலில் (4.63.8) அப்பர் பிரான், பெருமானை தீர்த்தன் என்று அழைக்கின்றார். நல்குதல்=அருளுதல்: நிலாவுதல்=தங்குதல்: புனித தீர்த்தம் அதில் நீராடும் மக்களின் பாவங்களைத் தீர்ப்பது போன்று, தன்னை வணங்கி வழிபடும் அடியார்களின் வினைகளைக் கழிப்பவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு, சிவபெருமானை தீர்த்தன் என்று அழைக்கின்றார். அடியார்களின் மலங்களைக் களைந்து அவர்களை தூய்மை செய்யும் தன்மை கொண்ட சிவபிரான் தீர்த்தன் என்று அழைக்கப் படுவது பொருத்தம் தானே. பார்த்தனுக்கு அன்று பாசுபத ஆயுதத்தை அளித்து அருள் புரிந்தவனே, மிகுந்த நீரினைக் கொண்டு ததும்பும் கங்கை நதியை நீண்ட சடையில் தங்குமாறு வைத்தவனே, ஆரவாரத்துடன் ஒன்று சேரும் மேகங்கள் அழகு செய்யும் அண்ணாமலையை இருப்பிடமாகக் கொண்டவனே, தூய்மை செய்பவனே, உனது திருவடிகளுக்கு அடிமையாக இருப்பதைத் தவிர வேறு எவருடனும் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்

நீர் ததும்பு உலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்

ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே

தீர்த்தனே நின் தன் பாதம் திறம் அலால் திறமிலேனே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.2.2) அப்பர் பிரான், பெருமானை தீர்த்தன் என்று அழைக்கின்றார். தீர்த்தன்=தூய்மை உடையவன்; மூர்த்தி=தலைவன்; இந்த பாடலில் அப்பர் பிரான் தன்னை கொடியேன் என்று கூறிக் கொள்கின்றார். வினைத் தொகுதிகளின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு உயிரும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. அத்தகைய பிறவிகளில், மனிதப் பிறவியில் தான், இறைவனை உணர்ந்து, அவனை வழிபட்டு உய்வதற்கான வாய்ப்பு, அவ்வாறு அறிவதற்கு உதவும் கருவி கரணங்கள் கொடுக்கப்பட்டு, அளிக்கப் படுகின்றது. அத்தகைய வாய்ப்பினை பயன்படுத்தி, இறைவனை நினையாத மனிதர்களை கொடியவர்கள் என்று உணர்த்தும் விதமாக, இறைவனை நினைக்காத தன்னை கொடியேன் என்று சுட்டிக் காட்டி அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தன்னிடம் இல்லாத குறையாயினும், அந்த குறை தன்னிடம் உள்ளது போன்று தன்னைச் சுட்டிக் காட்டி, அடுத்தவரின் குறைகளை உணர்த்துவது அப்பர் பிரானின் பாணி. தூயவனாக இருப்பவனும், சிவலோகத்தின் நாயகனும், அவனது அன்பான குணத்தை உணர்த்தும் வகையில் சிவன் என்று மங்கலமாக அழைக்கப் படுபவனும், தலைவனும், அனைத்துப் பொருட்களும் மற்றும் அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவனும், பார்த்தனுக்கு பாசுபதம் அளித்து அருள் செய்தவனும், சிற்றம்பலத்தில் நடமாடுபவனும் ஆகிய சிவபெருமானை மறந்தால் கொடியவனாகிய நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை

மூர்த்தியை முதலாய ஒருவனைப்

பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்

கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.32.2) அப்பர் பிரான் பெருமானை தீர்த்தன் என்று குறிப்பிடுகின்றார். தவம் புரிந்து கொண்டிருந்த பார்த்தனைக் காண வேடுவக் கோலம் தாங்கிச் சென்ற பெருமான், தான் தாங்கிய வேடத்திற்கு பொருந்தும் வண்ணம் புலித் தோலாடை அணிந்து சென்றதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். படை தொடுதல்=போர் புரியச் செல்லுதல். பாசுபத அத்திரம் பெற வேண்டி பெருமானை நோக்கி தவம் செய்த அர்ஜுனனுடன் போர் செய்யவும், அந்த போரினை உமையவள் முன்னிலையில் செய்யவும் பெருமான் திருவுள்ளம் கொண்டார். போர்க் கலையில் சிறந்து விளங்கிய அர்ஜுனனுக்கு முதுகினில் மச்சம் இருந்ததாகவும், அர்ஜுனன் எவரிடமும் தோற்று ஓடாததால் அந்த மச்சத்தினை பார்க்கும் வாய்ப்பு எவருக்கும் கிடைக்கவில்லை என்றும் கூறுவார்கள். அன்னை பார்வதி தேவிக்கு இந்த மச்சத்தினைக் காண ஆவல் உண்டானதாகவும், அதனால் தான் தன்னை நோக்கி தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் வழங்கச் சென்ற இறைவன், தன்னுடன் அன்னையையும் அழைத்துக் கொண்டு சென்றதாகவும், அர்ஜுனனை போரில் தோற்கடித்து அவனது முதுகு மச்சத்தை பார்வதி தேவி காண வைத்ததாகவும் கூறுவார்கள். சிதம்பரத்தை அடுத்த வேட்களம் தலத்தில் தான் அர்ஜுனன் பாசுபதம் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த தலத்து இறைவனின் பெயர் பாசுபத நாதர் என்பதாகும். இங்கு உள்ள அர்ஜுனன் உருவச் சிலையில் முதுகில் ஒரு வடு இருப்பதையும் நாம் காணலாம். தனது இடுப்பினில் புலித்தோல் ஆடையினை இறுக கட்டிய வேடனாக சென்ற பெருமான், அர்ஜுனனோடு போர் தொடுத்த போதிலும் முடிவில் அவனுக்கு பல அருள்கள் புரிகின்றார். இவ்வாறு தனது அடியார்களுக்கு அருள் புரிபவனகிய இறைவன் பூத்துக் குலுங்கும் நீண்ட சோலைகள் நிறைந்த பூந்துருத்தி நகரத்தில் உறைகின்றார். அவன் அடியார்களின் பாவங்களை நீங்கி புனிதராக அவர்களை மாற்றும் தீர்த்தன் ஆவான். அத்தகைய பெருமானின் சிவந்த திருவடிகளின் கீழே இருந்து திருப்பணி செய்யும் வாய்ப்பினை அடியேன் பெற்றேன் என்று அப்பர் பிரான் பெருமிதத்துடன் சொல்லும் பாடல்.

ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்

பார்த்தனோடு படை தொடுமாகிலும்

பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர்த்

தீர்த்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.52.10) அப்பர் பிரான், பெருமானை தீர்த்தர் போன்றவர் என்று குறிப்பிடுகின்றார். தூர்த்தன்=தீய ஒழுக்கம் உடையவன், இங்கே அரக்கன் இராவணனை குறிக்கின்றது; தொலைய=அழிய; ஆர்த்து=ஆரவாரம் செய்து; ஆடிடும்=நீராடும்; வினைகளைத் தீர்ப்பவன் என்று பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிட்ட அப்பர் பிரான், அந்த உண்மையை உணர்ந்த உலகத்தவர் பலரும், இந்த தலம் வந்தடைந்து தங்களை தூய்மைப் படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை பதிகத்தின் கடைப் பாடலில் உணர்த்துகின்றார். தீய ஒழுக்கம் கொண்டவனாக, கயிலை மலையைப் பேர்த்தெடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் கால்களும் பத்து தலைகளும் இருபது தோள்களும் அழியுமாறு, கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை சேர்த்து சிவபெருமான் அழுத்தினார். தங்களது பாவங்களைத் தொலைப்பதற்காக, அடியார்கள் மிகுந்த ஆரவாரத்துடன் நீராடும் புனித நீர்நிலைகளை போன்று தன்னுடன் வந்து சேரும் அடியார்களின் பாவங்களைத் தீர்க்கும் பெருமான் நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தூர்த்தன் தோள் முடி தாளும் தொலையவே

சேர்த்தினார் திருப்பாதத்து ஒரு விரல்

ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும்

தீர்த்தர் போல் திரு நாகேச்சரவரே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.12.8) அப்பர் பிரான் தீர்த்தமான தியம்பகன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். தியம்பகன்=திரியம்பகன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம், முக்கண்ணன்; கண்டல்=தாழை: முயல்வான்=இடைவிடாது ஐந்து தொழில்களையும் செய்பவன்; மயலாய மாயக் குரம்பை=மயக்கம் அடைவதும், நிலையற்றதும் ஆகிய உடல்; புலன்கள் இழுத்துச் செல்லும் வழியில் சென்று, அந்த சிற்றின்பங்களில் மயங்கி கிடக்கும் உடலின் தன்மையும், ஒரு நாள் மாயமாக மறையக் கூடிய தன்மையும் கொண்ட உடல் என்பது உணர்த்தப் படுகின்றது. இயல்பாய ஈசன்=தலைவனாகும் தன்மை, ஈசன் என்ற சொல்லுக்குத் தலைவன் என்று பொருள். எந்தை தந்தை என்=நான், எனது தந்தை, மற்றும் தந்தையின் தந்தை என்று பரம்பரையாக உள்ள நிலை; தனது இயல்பு பற்றி அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவர் சிவபெருமான் ஆவார்; பரம்பரை பரம்பரையாக எங்கள் குலத்திற்குத் தலைவனாக விளங்கும் அவன், எனது சிந்தையில் விரும்பி உறைகின்றான்; மூன்று மூர்த்திகளாகத் திகழ்ந்து இடைவிடாது ஐந்து தொழில்களையும் செய்யும் பெருமான், தூயவன், மூன்று கண்களை உடையவன், முத்தலை சூலத்தைத் தனது கையில் ஏந்தியவன். தாழை மரங்கள் வேலிகளாக அமைந்த கயல்கள் பாயும் நீர்நிலைகளை அதிகமாக உடைய கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய பெருமான், புலன்கள் ஏற்படுத்தும் மயக்கத்தில் ஆழ்வதும் நிலையற்றதும் ஆகிய உடலினை விட்டு ஆன்மா முக்தி நெறிக்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

இயல்பாய ஈசன் எந்தை தந்தை என் சிந்தை மேய உறைகின்றானை

முயல்வானை மூர்த்தியைத் தீர்த்தமான தியம்பகன் திரிசூலத்து அன்ன கையன்

கயல்பாயும் கண்டல் சூழ் உண்ட வேலி கழிப்பாலை மேய கபாலப்பனார்

மயலாய மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.4) அப்பர் பிரான் பெருமானை, பொன்னித் தீர்த்தர் என்று குறிப்பிடுகின்றார். புனித நதியாக கருதப்படும் காவிரி நதியை உடையவர் என்பதை உணர்த்தத் தீர்த்தர் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில் கரியுரியர் வஞ்சக் கள்வர் என்று அப்பர் பிரான், பெருமானை குறிப்பிடுகின்றார். நிட்டுருவர்= கொடியவர்; தேசர்=ஒளியுடையவர்; திறம்=அருள் புரியும் தன்மை; எவருக்கும் எளிதில் அகப்படாமல் தன்னை மறைத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவர் என்பதால் பெருமானை வஞ்சக்கள்வர் என்று கூறுவதாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. நமக்கு, ஒளிக்கும் சோரனைக் கண்டனம் என்று மணிவாசகர் திருவண்டப்பகுதி அகவலில் கூறுவதும் நினைவுக்கு வருகின்றது. கரியுரியர் என்ற தொடருடன் வஞ்சக் கள்வர் என்று அப்பர் பிரான் கூறுவது சிந்தனைக்கு உரியது. பல தேவாரப் பாடல்களிலும் ஆனையின் தோலுரித்த கள்வர் என்று சொல்ல படுகின்றது. தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்த செய்கையில் கள்ளத்தனம் எங்கே உள்ளது என்ற ஐயம் நமக்குத் தோன்றலாம். இதற்கான விடையை நாம் அப்பர் பிரானின் பாடலில் (4.32.1), திருப்பயற்றூர் தலத்து பதிகத்தின் பாடலில் நாம் காணலாம். கருநிறம் கொண்ட யானையை ஆணவ மலத்தினுக்கும் அஞ்ஞானத்திற்கும் ஒப்பிடுவது வழக்கம். அஞ்ஞானம் ஞானத்தை வரவிடாமல் தடுப்பதால் ஞானமே உருவாகிய உமையம்மை அஞ்ஞானத்திற்கு அச்சப்படுவது இயற்கையே. உமையம்மை நடுங்கிய விதம் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. நடுக்கத்தால் பல முறை தனது விரல்களை தேவி உதறியதாக அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உமை அம்மையின் நடுக்கத்தைக் கண்டு சிவபெருமானார் தனது பற்கள் புலப்பட சிரித்ததாகவும், சிறிது நேரம் கழித்து தனது உடல் மீது போர்த்து இருந்த யானையின் தோலை கழற்றியதாகவும் இங்கே கூறப்படுகின்றது. உமை அம்மையின் அச்சத்தைக் கண்டு தாம் பொறதாவராகி, யானையின் தோலை கழற்றியதாக அப்பர் பிரான் கூறுகின்றார். யானையின் தோல் தனக்கு எந்தவிதமான கேடும் விளைவிக்காது என்று தெரிந்திருந்த போதிலும், பெருமான் தானும் அஞ்சியது போன்று நடித்து அந்த தோல் போர்வையைக் கழற்றியது, தனது உண்மை நிலையை மறைக்கும் வஞ்சகமான செயல் தானே. எனவே தான் பல திருமுறை பாடல்களிலும், யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட செயல் வஞ்சக் கள்வரின் செயலாக குறிப்பிடப் படுகின்றது போலும்.

தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திருவாரூர் என்றும் உள்ளார்

வாச மலரின் கண் மான்தோல் போர்ப்பர் மருவும் கரியுரியர் வஞ்சக் கள்வர்

நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுருவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும்

ஈசர் புனல் பொன்னித் தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம் கொண்டாரே

ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.19.11) அப்பர் பிரான் பெருமானை தீர்த்தன் என்று அழைக்கின்றார். தூர்த்தன்=தீயவன்; ஆப்தன் என்ற வடமொழிச் சொல் ஆத்தன் என்று இங்கே திரிந்துள்ளது.; தீயவனாக விளங்கிய அரக்கன் இராவணனின் இருபது தோள்களையும் பத்து முடிகளையும் மலையின் கீழே அடர்த்து நசுக்கியவனும், பின்னர் அரக்கன் தனது கைநரம்பினை வீணையின் தந்தி போல் மீட்டி இன்னிசை பாடியதைக் கேட்டு அவன் மீது இரக்கம் கொண்டு அருள் செய்தவனும், பார்த்தனின் தொண்டு கருதி அவன் மீது இரக்கம் கொண்டு அவனுக்கு பாசுபத அத்திரம் அளித்தவனும், நெருங்கிய நண்பனாகவும் நம்பத் தகுந்தவனாகவும் இருப்பவனும், அடியேன் பால் அன்பு உடையவனும், அளவற்ற பல ஊழிகள் கண்ட பின்னரும் தனது நிலையில் மாற்றம் ஏதும் அடையாமல் தூயவனாக இருப்பவனும் ஆகிய இறைவன் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தென்மதுரை நகரத்தில் உறைகின்றான், அடியேன் அவனது திருவடிகளை சிந்திக்கும் பேறு பெற்றவனாக உள்ளேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.

தூர்த்தனைத் தோள்முடி பத்திறுத்தான் தன்னைத் தொல் நரம்பின் இன்னிசை கேட்டருள் செய்தானைப்

பார்த்தனைப் பணி கண்டு பரிந்தான் தன்னைப் பரிந்து அவற்குப் பாசுபதம் ஈந்தான்தன்னை

ஆத்தனை அடியேனுக்கு அன்பன் தன்னை அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற

தீர்த்தனைத் தென்கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.20.6) அப்பர் பிரான், பெருமானை, தனது அடியார்களுடன் பிணைந்துள்ள மலங்களைக் கழுவி நீக்குபவன் என்று குறிப்பிடுகின்றார். குலம் கெடுத்து என்றும் பாடபேதம் வழக்கில் உள்ளது. கெடுத்து என்று கொள்ளும் போது குலம் என்பது பசு எனப்படும் உயிர்க் கூட்டத்தை குறிக்கும்; கெடுத்து என்ற சொல் அடுத்த இரண்டு அடிகளில் வருவதால், முதல் அடியிலும் கெடுத்து என்றிருப்பது பொருத்தமே என்று நினைக்கத் தோன்றுகின்றது. முக்தி நிலை உயிருக்கு அளிப்பதன் மூலம் உயிருக்கு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை கொடுத்து, மறுபடியும் பிறந்து பசுக்களின் கூட்டத்தில் சேராத வண்ணம் தடுப்பதை குலம் கெடுத்து என்ற தொடரின் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். கொடுத்து என்று கொள்ளும் போது குலம் என்பது பெருமானின் அடியார்கள் கூட்டம் என்று பொருள் கொள்ளுதல் பொருத்தமாக உள்ளது. கோள்=துன்பங்கள்; குலவரை=சிறந்த மலை; மடப்பாவை= இளமையான மங்கை; சலம்=நடுக்கம்; சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்று கொண்டு தடுமாற்றம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தயாமூல தன்மம்=இரக்கத்தினை அடிப்படையாக கொண்டுள்ள சிவநெறி; தாழ்ந்தோர்=தலை சாய்த்து வணங்கும் அடியார்கள்; அன்பே சிவம் என்பது சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.

குலம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னைக் குலவரையின் மடப்பாவை இடப்பாலானை

மலம் கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனைப் பிறை தவழ் செஞ் சடையினானை

சலம் கெடுத்து தயாமூல தன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்த்தோர்க்கு எல்லாம்

நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே

தன்னை வழிபடும் மாந்தர்களை தனது அடியார்கள் என்ற குலத்தினில் சேர்ப்பித்து அவர்களது துன்பங்களை நீக்கும் வல்லமை படைத்தவனும், சிறந்த மலையாகிய இமயமலையின் சாரலில் வளர்ந்த மகளும் என்றும் இளமையாக இருப்பவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் இடது பக்கத்தில் ஏற்றவனும், உயிர்களைப் பற்றியுள்ள மலங்களை நீக்கி தனது அருட்கடலில் ஆழ்த்துபவனும், வேதங்களை ஓதுபவனும், பிறைச் சந்திரன் தவழும் சடையினை உடையவனும், தங்களது மனதினில் உள்ள தடுமாற்றத்தை நீக்கி இரக்க குணத்தை அடிப்படையாகக் கொண்ட உயர்ந்த சிவநெறியை பின்பற்றி தங்களது தலையினை சாய்த்து பெருமானை வணங்கும் அடியார்களுக்கு நன்மைகளை நல்குபவனும், அடியார்களின் தலைவனும், திருநள்ளாறு தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனை அடியேன் தியானித்து வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதாக அமைந்த பாடல்.

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.41.2) அப்பர் பிரான், பெருமானை, தீர்த்தன் என்று குறிப்பிடுகின்றார். ஆதி=முதலாகிய; ஆர்த்தான்=அடிமையாக பிணைக்கப்பட்ட; கூர்த்த= நுணுக்கங்கள் நிறைந்த; தீர்த்தன்=தூய்மைகள் செய்பவன்; சூலை நோயால் வருந்திய நிலையில் அதிகை பெருமானிடம் தஞ்சம் அடைந்த போதே, பெருமானுக்கு அடிமையாக மாறியவர் அப்பர் பிரான். மேலும் பெருமானும் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டதை, தான் பாடிய பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பிரான் வெளிப்படுத்துகின்றார். என்னை உனது அடிமையாக பிணைத்துக் கொண்ட பெருமானே, எப்போதும் என்னிடம் அன்பு கொண்டுள்ளவனே, அனைத்து மலைகளுக்கும் முதன்மையான மலையாக விளங்கும் கயிலாய மலையில் உறைபவனே, நடனக் கலையின் நுட்பங்களை உணர்த்தும் வண்ணம் நடனம் ஆடுபவனே, குழகன் என்ற திருநாமத்துடன் கோடிகா தலத்தில் உறைபவனே, பார்த்தனுக்கு பாசுபதம் கொடுத்து அருள் செய்தவனே, திருவாலங்காடு தலத்தினை அடுத்துள்ள பழையனூர் தலத்தில் உறைபவனே, நற்பண்புகள் நிறைந்தவனே, அடியார்களின் உள்ளத்தினை தூய்மை செய்யும் சிவலோகனே, நெய்த்தானம் தலத்தில் நிற்கின்ற நீ எனது நெஞ்சினிலும் நிறைந்து நிற்கின்றாய் என்று அப்பர் பிரான், இறைவனிடம் உணர்த்தும் பாடல்.

ஆர்த்தான் எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதிக் கயிலாயன் நீயே என்றும்

கூர்த்த நடமாடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும்

பார்த்தற்கு அருள் செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும்

தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.2) அப்பர் பிரான், பெருமானை, தீர்த்தன் என்று சொல்கின்றார். இந்த பாடலில் உள்ளவன் காண் இல்லவன் காண் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு யாவையுமாய் அல்லையுமாய் என்ற திருவாசகம் சிவபுராணம் தொடரினை நினைவூட்டுகின்றது. பொதுவாக அனைத்துப் பொருட்களையும் (உயிர்கள் உட்பட) அறிவுடைய பொருட்கள் என்றும் அறிவற்ற பொருட்கள் என்றும் இருவகையாக பிரிக்கலாம். அறிவற்ற பொருட்களை அவை அசையும் வண்ணம் இயக்குபவனும், அறிவுடைய பொருட்கள் தங்களது அறிவினை மயக்கி அறியாமையில் ஆழ்த்தும் ஆணவ மலத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்கும், அந்த பொருட்களின் உடனே இருந்து உதவுபவன் இறைவன். இவ்வாறு அனைத்துப் பொருட்களுடன் இருப்பினும், அந்த பொருட்களின் சேர்க்கை எந்த விதத்திலும் இறைவனை பாதிப்பதுமில்லை, இறைவனை மாற்றுவதுமில்லை. இந்த நிலையினை உணர்த்தவே, உள்ளவன் என்றும் இல்லவன் என்றும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். உள்ளவன் என்பதற்கு அடியார்கள் அனுபவிக்கும் பொருளாக இருப்பவன் என்றும், இல்லவன் என்ற சொல்லுக்கு உலகியலில் திளைத்து இறைவனை நினையாமல் இருப்போர்க்கு உணரமுடியாத பொருளாக இருப்பவன் என்றும் விளக்கம் அளிப்பதுண்டு. உள்ளவன் என்பதற்கு தோற்றம் உடையவன் என்றும் இல்லவன் என்பதற்கு தோற்றம் ஏதும் இல்லாமல் அருவமாக இருப்பவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மூன்றும் பொருத்தமான விளக்கங்களே. பணி=செயல், இங்கே போர்ச் செயலினை குறிக்கும். அனைத்து உயிர்களும் உறையும் உடலாக இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் துணையாக நின்று உதவுபவனும், அடியார்கள் அனுபவித்து மகிழும் பொருளாக இருப்பவனும், உலகியலில் திளைத்து இறைவனை நினையாமல் இருப்போர் உணர முடியாத பொருளாக இருப்பவனும், உமையம்மைக்கு என்றும் தேன் போன்று இனியவனாக இருப்பவனும், உயர்ந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவனும், எட்டு திசைகளிலும் பரந்து இருப்பவனும், அடியார்களின் உள்ளத்து மாசுகளை களையும் புனிதனாக விளங்குபவனும், அர்ஜுனனின் போர்த் திறமையை கண்டு மகிழ்ந்த வேடனும், கடலாகவும் மலையாகவும் இருப்பவனும், தன்னை எதிர்த்து வந்த மதயானை கதறி அலறுமாறு அதன் தோலை உரித்து, ஈர இரத்தப் பசையினை உடைய தோலினைத் தனது உடலின் மீது போர்த்தவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

ஊனவன்காண் உடல்தனக்கோர் உயிரானான்காண் உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட்கென்றும்

தேனவன் காண் திருவவன் காண் திசையானான் காண் தீர்த்தன் காண் பார்த்தன் தன் பணியைக் கண்ட

கானவன் காண் கடலவன் காண் மலையானான் காண் களியானை ஈருரிவை கதறப் போர்த்த

வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே

திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.76.1) அப்பர் பிரான் பெருமானை, தீர்த்தன் என்று அழைக்கின்றார். புரிந்து=விரும்பி;; விடைப்பாகன்=விடையை வாகனமாகக் கொண்டு செலுத்துபவன்; விரை=-நறுமணம்; தீர்த்தன்=முனிவன்; பிரமனின் சிரத்தை அரிந்த நிகழ்ச்சியுடன் தீர்த்தன் என்ற சொல்லினை இணைத்து, முனிவனாக இருந்தமையால் தான் பெருமான், பிரமனை கொல்லாமல் அவனது தலையினை மட்டும் கொய்தான் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். கொல்லாமை என்பது முனிவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாக கருதப் படுகின்றது. திருந்து வயல்=பண்படுத்தப் பட்ட வயல்; தளி என்றால் கோயில் என்று பொருள். இலக்குமி தேவி வழிபட்டதை உணர்த்தும் வகையில் திருத்தளி என்ற பெயர் வந்தது. திருப்புத்தூர் என்றது பண்டைய பெயர். புற்றினில் அமர்ந்து வால்மீகி முனிவர் வழிபட்டமையால் திருப்புற்றூர் என்ற பெயர் வந்ததாகவும் நாளடைவில் அந்த பெயர் திருப்புத்தூர் என்றும் திருப்புத்தூர் என்று மருவியதாகவும் கூறுவார்கள். தற்போது திருப்பத்தூர் என்று இந்த தலம் அழைக்கப் படுகின்றது. தலத்து இறைவனின் திருநாமம், திருத்தளி நாதர், திருத்தளி ஈசன் என்பதாகும். அந்த பெயரினை சற்று மாற்றி, திருத்தளியான் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்து பாடல்களில் குறிப்பிடுகின்றார். இறைவனைத் தவிர்த்து ஏனையோரைப் புகழ்ந்து சொல்லப்படும் சொற்கள், பொருள் சேராதவனாக உள்ளமை பற்றியும், இறைவனைப் புகழ்ந்து கூறும் சொற்களே பொருள் பொதிந்த சொற்களாக இருப்பமை குறிப்பிட்டும், புகழ்ச் சொற்களுக்கு தகுந்தவன் இறைவன் ஒருவனே என்று உணர்த்தும் பொருட்டும் புகழ் தக்கோன் காண் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும்

விரிந்து பல உயிராக விளங்கினான் காண் விரைக் கொன்றைக் கண்ணியான் காண் வேதம் நான்கும்

தெரிந்து முதல் படைத்தோனைச் சிரம் கொண்டான் காண் தீர்த்தன் காண் திருமாலோர் பாகத்தான் காண்

திருந்து வயல் புடை தழுவு திருப்புத்தூரில் திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே

இறைவனது பெருமையை புரிந்து கொண்ட தேவர்கள் அவனைத் தொழுது வணங்கி அவனைப் புகழ்கின்றனர். இவ்வாறு அவர்கள் புகழ்வதற்கு தகுதி உள்ளவனாக இருப்பவனும், போர்க்குணம் கொண்ட இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டு எங்கும் செலுத்த வல்லவனும், ஏழு உலகங்களையும் படைத்தவனும், முற்றூழிக் காலத்தில் தனது வயிற்றில் ஒடுங்கிய அனைத்து உயிர்களையும் விரித்தவனும், அவ்வாறு தான் விரித்த உயிர்களுடன் கலந்து விளங்குபவனும், நறுமணம் வீசும் கொன்றை மாலையினைத் தனது தலையில் சூடியவனும், நான்கு வேதங்களையும் தெரிந்து கொண்டு முன்வந்து படைப்புத் தொழிலை ஏற்றுக்கொண்ட பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை கொய்தவனும், சிறந்த முனிவனாக இருப்பவனும், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனும் ஆகிய பெருமான், நன்றாக பண்படுத்தப் பட்ட வயல்கள் சூழ்ந்த திருப்புத்தூர் தலத்தில் திருத்தளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் திருத்தளியான் என்ற திருநாமத்துடன் உறைகின்றான். அவனே எனது சிந்தையில் நிறைந்து காணப்படுகின்றான்என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.78.1) அப்பர் பிரான், புண்ணிய தீர்த்தங்களாக இருப்பதே பெருமான் தான் என்று குறிப்பிடுகின்றார். ஒன்றா=ஒன்றாக கலந்து; ஊழி தோறும் உயர்ந்தவர் என்பதற்கு இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. ஊழி காலத்தில் கடல் பொங்கி வந்து உலகங்களை அழிக்கும் என்று கருதப் படுகின்றது. ஆனால் ஊழிக்காலத்திலும் அழியாமல் தனித்து நிற்பவர் பெருமான் என்பதால், ஊழி வெள்ளத்தைக் கடந்து உயர்ந்து நின்றவர் என்பது ஒரு பொருள். ஊழி தோறும் பல உயிர்களுக்கு வீடுபேறு அளித்து உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் தன்மை உடையவர் என்பது இரண்டாவது பொருள். இந்த பதிகத்தின் அனைத்து பாடல்களும் திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே என்று முடிகின்றன. பதிகத்தின் முதல் பாடலில் ஊழி தோறும் பல உயிர்களுக்கு வீடுபேறு அளிப்பவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வீடுபேற்றினை விடவும் உயர்ந்த செல்வம் வேறு ஏதும் இல்லை என்பதால், அத்தகைய வீடுபேற்றினை அளிக்கவல்ல பெருமானை செல்வர் என்று அழைப்பது தானே பொருத்தம். இவ்வாறு செல்வர் என்று பெருமானை அழைப்பது நமக்கு திருநெல்வேலி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தையும் (3.92) அப்பர் பிரான் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தையும் (6.82) நமக்கு நினைவூட்டுகின்றன. திருஞான சம்பந்தர் தான் அருளிய பதிகத்தின் பாடல்களில் திருநெல்வேலி உறை செல்வர் தாமே என்று கூறுகின்றார். அப்பர் பிரான் சாய்க்காடு பதிகத்தில் சாய்க்காடு இனிது உறையும் செல்வர் தாமே என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்து பாடல்களும் திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே என்று முடிகின்றன. அனைத்து உலகங்களும் தன்னுடன் கலந்து ஒன்றி இருக்கும் நிலையில் இருப்பவரும், ஒவ்வொரு ஊழியையும் கடந்து உயர்ந்து நிற்பவரும், ஒரே இடத்தில் நின்றாலும் அனைத்து இடங்களிலும் சர்வ வியாபியாக பரந்து இருக்கும் வல்லமை படைத்தவரும், தண்ணீர் தீ ஆகாசம் காற்று மண் ஆகிய ஐந்து பூதங்களாக இருப்பவரும், பல உயிர்களையும் கொன்று திரியும் கூற்றுவனை உதைத்து வீழ்த்தியவரும், அழகிய பழையனூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டவரும், உலகத்தவர் தேடிச் சென்று நீராடும் புனித தீர்த்தங்களாக இருப்பவரும் ஆகிய இறைவன் திருவாலங்காடு தலத்தில் உறையும் செல்வர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

ஒன்றா உலகனைத்தும் ஆனார் தாமே ஊழி தோறூழி உயர்ந்தார் தாமே

நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே

கொன்றாடும் கூற்றை உதைத்தார் தாமே கோலப் பழனை உடையார் தாமே

சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே

அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (6.95.8) அப்பர் பிரான், பெருமானின் அருட் பார்வையே, அடியார்களின் மலங்களைக் கழுவும் தீர்த்தமாக செயல்படுகின்றது என்று கூறுகின்றார். இந்த பதிகத்தில் அப்பர் பிரான், தன்னை சிவபெருமான் எளிவந்து ஆண்டுகொண்ட கருணைத் திறத்தினை குறிப்பிட்டு வியக்கின்றார். தான் செய்த தவறுகளைப் பொறுத்த இறைவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, சுந்தரர் அருளிய பொன்னும் மெய்ப்பொருளும் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டும். தந்தையே, அடியேனை உனது அன்பினால் கட்டுவித்தாய்; உனது கருணைப் பெருக்கில் என்னை நீராட்டி, தூய்மை அற்றவனாக இருந்த என்னை தூயவனாக மாற்றினாய்; தேவர்களும் எளிதில் அடையமுடியாத அரியவனாகத் திகழும் இறைவனே, நீ என் பொருட்டு மிகவும் எளியனாக வந்து, என் மீது இரக்கம் கொண்டு, என்னை உனது அடிமையாக ஏற்றுக் கொண்டாய்; ஒரு கொள்கையில் நிலையாக இல்லாத பித்தனாகவும், நல்லன எதையும் உணராத பேதையாகவும், காலத்தை வீணாகக் கழித்துத் திரிந்த பேயனாகவும், செய்த தவறுகளை மறுபடியும் மறுபடியும் செய்யும் நாய் போன்று கீழ்த்தன்மை உடையவனாகவும் இருந்த எனது தவறுகள் அத்தனையும் பொறுத்தாய்; நீ இவ்வாறு அருள் செய்வதற்கு நான் எந்த விதத்திலும் பொருத்தமானவன் அல்லன்; இருப்பினும் நீ அருள் செய்த தன்மை உனது கருணைத் தன்மையினைக் காட்டுகின்றது. இதனை எண்ணி நான் வியப்படைகின்றேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்

எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய் எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்

பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே

இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே

திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.55.7) சுந்தரரும், பெருமானை, அடியார்களின் குற்றங்களைக் களைந்து அருள் புரியும் தீர்த்தன் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், பெருமான் தனது அடியார்களுக்கு அருள் புரிந்த செயல்கள் பலவற்றை குறிப்பிடுகின்றார். போர்த்த=பொதிந்த; கூர்ந்து கேட்கும் தன்மையை, நீண்ட செவியுடன் கேட்பவர் என்று சொல்வது வழக்கம்; மனம் ஒன்றிய நிலையில் கூர்ந்து கேட்ட சனகாதி முனிவர்களுக்கு, சோலைகளால் சூழப்பட்ட ஆலமரத்தின் நிழலின் கீழே அமர்ந்த வண்ணம், அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பொருட்களையும் உணர்த்தும் வேதங்களின் தெளிந்த பொருளினை உணர்த்தியவன் சிவபெருமான். பார்த்தன் என்று அழைக்கப்படும் அர்ஜுனனுக்கு பாசுபதம் அத்திரம் கொடுத்து அருள் புரிந்தவனும், பகீரதனின் வேண்டுகோளுக்கு இரங்கி மிகவும் வேகத்துடன் பாய்ந்து வந்த கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டு பின்னர் அதனை மெதுவாக விடுவித்தவனும், அடியார்களின் குற்றங்களைக் களைவதால் தீர்த்தன் என்று அழைக்கப் படுபவனும் ஆகிய இறைவன் என்பதை உணர்ந்த தான், பெருமானின் திருவடிகளை சரணடைந்தேன் என்று கூறுகின்றார். இவ்வாறு பெருமானின் திருவடிகளில் தான் சரணடைந்ததன் நோக்கமே, இந்த பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்ட பல்வேறு அடியார்களுக்கு அருள் புரிந்தது போன்று, இறைவன் தனக்கும் அருள் புரியவேண்டும் என்ற விருப்பம் தான் காரணம் என்பதையும் உணர்த்துகின்றார்.

போர்த்த நீள்செவியாளர் அந்தணர்க்குப் பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து

பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட

ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசைக் கரந்த

தீர்த்தனே நின் தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே

திருக்கோலக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.62.4) சுந்தரர், பெருமானை கங்கையைக் கரந்த தீர்த்தன் என்று குறிப்பிடுகின்றார். கங்கை நதியினைத் தனது சடையினில் பெருமான் தேக்கிக் கொண்டு மறைத்ததால் தான், கங்கை இன்றும் புண்ணிய தீர்த்தம் என்று அனைவராலும் கருதப்படும் தன்மைக்கு உயர்ந்தது. வானுலகத்திலிருந்து கீழே இறங்கி வருவதற்கு மனம் இல்லாத கங்கை நதி, பூமியையே புரட்டி பாதாளத்திற்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கியது என்பதையும், பெருமான் அன்று கங்கை நதியினைத் தனது சடையினில் தாங்கியிராவிடின், கங்கை நதியும் மொத்தமாக பாதாளம் சென்று மறைந்திருக்கும் என்றும், அப்பர் பிரானும் மணிவாசகரும் தங்களது பாடல்களில் குறிப்பிடுவதை நாம் அறிவோம். மேலும் கங்கை நதியினை தீர்த்தமாப் போத விட்டவர் இறைவன் என்றே அப்பர் பிரான் ஒரு பாடலில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு கங்கை நதிக்கு இந்த உயர்ந்த தகுதியை அளித்த பெருமானை சுந்தரர், மிகவும் பொருத்தமாக தீர்த்தன் என்று அழைக்கின்றார். ஆத்தன்=நெருங்கிய நண்பன்; ஆப்தன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். பெருமான் தனது நெருங்கிய நண்பனாக, தன்னை ஏற்றுக் கொண்ட தன்மையை சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வார் தயங்கிய=கச்சு பொருந்திய;

ஆத்தம் என்று எனை ஆள் உகந்தானை அமரர் நாதனை குமரனைப் பயந்த

வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசைக் கங்கையைக் கரந்து

தீர்த்தனைச் சிவனைச் செழும் தேனைத் தில்லை அம்பலத்துள் நின்று ஆடும்

கூத்தனை குரு மாமணி தன்னைக் கோலக்காவினில் கண்டு கொண்டேனே

சுந்தரர், சிவபெருமானை தீர்த்தன் என்று அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (7.70.1) காணலாம். அங்கணன்=அழகிய நெற்றிக் கண்ணை உடையவன், கருணையாளன். கங்கை நதியினைத் தனது நீண்ட சடையினில் தேக்கி மறைத்தவனே, பூத கணங்களின் தலைவனே, காலனுக்கு காலனாக விளங்கி அவனது உயிரை பறித்த ஆற்றல் உடையவனே, காமனுக்கு அனலாக விளங்கி அவனை சுட்டெரித்து அழித்தவனே, பொங்கும் அலைகள் மிகுந்த கடலிலிருந்து எழுந்த ஆலகாலம் விடத்தை தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனே, ஐந்து பூதங்களுக்கும் தலைவனே, புண்ணியமே வடிவமாக உள்ளவனே, தூய்மையானவனே, சிவந்த கண்களை உடைய இடபத்தினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவனே, தெளிந்த தேன் போன்று அனைவர்க்கும் இனிமையாக திகழ்பவனே, அடியார்களின் மலங்களைக் களைந்து தூய்மை செய்யும் ஆற்றல் படைத்தவனே, திருவாவடுதுறையில் உறைகின்ற கடவுளே, கருணை பொழியும் அழகிய கண்களை உடையவனே, காட்டுக்கு சிங்கம் தலைவனாக இருப்பது போன்று தேவர்களின் தலைவனாக இருப்பவனே, அடியேனுக்கு உன்னைத் தவிர நெருங்கிய உறவினரோ, பற்றுக் கோடோ வேறெவரும் இல்லை என்று சுந்தரர் குறிப்பிடும் பாடல். எனவே பெருமான் தான், அஞ்சேல் என்று சொல்லித் தேற்றி, தனது துன்பங்களை களைய வேண்டும் என்று வேண்டும் பாடல்.

கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே

பொங்கு மாகடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா

செங்கண் மால் விடையாய் தெளிதேனே தீர்த்தனே திருவாவடு துறையுள்

அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

சுந்தரர் பரவு பரிசு ஒன்று அறியேன் என்று தொடங்கும் திருவையாறுப் பதிகத்தின் (7.77.7) பாடலில் தீர்த்தன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்ட கோலத்துடன் பெருமான் உலகெங்கும் திரிந்து பலி ஏற்கின்றார் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். சிலை=வில்; கணை=அம்பு; எயில்=மூன்று பறக்கும் கோட்டைகள்;

மலைக்கண் மடவாள் ஒரு பாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்

சிலைக்கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய் தீர்த்தன் நீ

மலைக்கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு

அலைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளே

மணிவாசகர் தனது திருவெம்பாவைப் பதிகத்தின் பன்னிரண்டாவது பாடலில், தீர்த்தன் என்று அழைத்து சிவபெருமானின் புனிதத் தன்மையை உணர்த்துகின்றார். நம்மை பீடித்துள்ள பிறவிப்பிணி நீங்க வேண்டும் என்றால், நம்மைச் சார்ந்துள்ள மலங்கள் விலக வேண்டும். நமது மலங்களை, மலங்கள் ஏதும் அற்ற ஒருவன் தானே விலக்க முடியும். யார், மலங்களின் பிடியிலிருந்து விடுபட்டு, நமது மலங்களை அகற்றும் வல்லமை கொண்டுள்ளவர் என்பதை உணர்த்தும் முகமாக இங்கே, சங்கரனை தீர்த்தன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். நமது உடலிலுள்ள மாசுகளை அகற்ற நாம் நீராடுகின்றோம். மனதிலுள்ள மாசுகளைக் களைந்தால் தானே, நமது உள்ளம் தூய்மையாக இருந்து இறையுணர்வினை அங்கே புகுத்திட ஏற்றதாக மாறும். அதற்காக நாம் நீராட வேண்டியது இறைவனாகிய தீர்த்தம் என்பதை உணர்த்தும் வகையில் நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்று இங்கே கூறுகின்றார். நீர்நிலையில் நீராடினால் நமது உடல் மாசுகள் அகற்றப்பட்டு உடல் தூய்மையாவது போன்று, இறைவன் எனும் தீர்த்தத்தில் நீராடினால், நமது மலங்கள் அகன்று, மலங்களால் நமக்கு ஏற்படும் பிறவிப் பிணியும் அகன்று விடும் என்று மணிவாசகர் இங்கே உணர்த்துகின்றார். தீயாடும் தீர்த்தன் என்று ஒன்றுக்கொன்று முரணான, ஒன்றை ஒன்று அழிக்கக்கூடிய, (தீ மற்றும் தண்ணீர்) இரண்டு பொருட்களையும் அவைகளின் இயல்பினை மாற்றி தானிடம் வைத்திருப்பவன் சிவபெருமான் என்றும் இங்கே சொல்லப் படுகின்றது. நீராடும் போது பேச வேண்டிய வார்த்தைகள், இந்த உலகத்தையும் நம்மையும், படைத்தும், காத்தும் விளையாடும் இறைவனைப் பற்றியதாக இருக்கவேண்டும் என்றும் இங்கே கூறுகின்றார்.

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லாமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

திருமந்திரம் முதல் தந்திரம் சிவபரத்துவம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், பெருமானை தீர்த்தன் என்று அழைக்கின்றார். ஆத்தம்=அன்பு வைத்து நண்பனாக இருந்து; தன்னை வாழ்த்தி வணங்கும் அடியார்களின் மனதினில், சோதியாக திகழ்பவன் இறைவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அடியார்களின் மனதினில் பொருந்தி உறைகின்ற பெருமான், அந்த அடியார்களின் மனதினில் உள்ள மாசுகளைக் களையும் தீர்த்தனாகவும் விளங்குகின்றார் என்று கூறுகின்றார்.

வாழ்த்த வல்லார் மனத்து உள்ளுறு சோதியைத்

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை

ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும்

ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே

திருமந்திரம் ஏழாம் தந்திரம் சிவபூசை அதிகாரத்தின் பாடலில் திருமூலர் சிவபெருமானை, தீர்த்தன் என்று அழைக்கின்றார். ஆர்த்து=வீண் ஆரவாரம் செய்து; மூர்த்தி=மூர்த்தம் என்ற சொல் மூர்த்தி என்று குறுகியுள்ளது. பெருமானின் திருமேனி என்று பொருள்; மூவா=என்றும் மூப்படையாத; மூவா முதல் உருவாக இருப்பவன் பெருமான் என்ற தொடர் மூலம், பெருமான் அனைத்து உயிர்களுக்கும் முதலானவனாகவும், அனைத்து உயிர்கள் இறந்த பின்னரும் தான் அழியாமல் இருப்பவன் என்பதும் உணர்த்தப் படுகின்றது. பிறப்பிறப்பினைக் கடந்த பெருமான்; இறைவனது தன்மையை உணர்ந்து கொண்டு, அவனைப் போற்றி வழிபட்டால் தான் இறைவனை உணர முடியும் என்று உணர்த்தும் திருமூலர், அவ்வாறு உணராமல், வீண் ஆரவாரம் செய்து பெருமானின் திருமேனி மீது மலர்களைத் தூவி வழிபடும் மனிதர்கள் பெருமானை உணர மாட்டார்கள் என்று சாடுகின்றார்.

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுது நின்று

ஆர்த்து எமது ஈசன் அருட் சேவடி என்றன்

மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற

தீர்த்தனை யாரும் துதித்து உணராரே

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் தோத்திரம் அதிகாரம் பாடலில் திருமூலர், பெருமானின் திருவடிகளே தீர்த்தம் என்று குறிப்பிடுகின்றார். பெருமானது திருவடிகளை துதித்து வணங்கும் அடியார்களுக்கு அவர்கள் விரும்பும் அனைத்துப் பொருளாகவும் பெருமானின் திருவடிகள் விளங்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. மன அழுக்கைப் போக்கும் புண்ணிய தீர்த்தமாக

பெருமானின் திருவடிகள் இருக்கும் தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது.

விரும்பி அவனடி வீர சுவர்க்கம்

பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்

திருந்தில் அவனடி தீர்த்தமுமாகும்

வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே

பொழிப்புரை:

பெண்பித்து கொண்டவனாக திகழ்ந்த அரக்கன் இராவணின் வலிமையைக் குன்றச் செய்து அவனை வெற்றி கொண்ட பெருமான், அன்னியூர் தலத்தில் உறையும் பெருமான், தனது அடியார்களின் மலங்களைத் தீர்க்கும் புனிதனாக விளங்குகின்றான். அவனை உங்களது நெருங்கிய நண்பனாக கருதி அவன் பால் அன்பு வைத்து, அவனை புகழ்ந்து வாழ்த்துவீராக.

பாடல் 9:

மன்னியூர் இறை (1.096) பாடல் 8 தொடர்ச்சி 9, 10, 11 (திதே 0467)

இருவர் நாடிய

அரவன் அன்னியூர்

பரவுவார் விண்ணுக்கு

ஒருவர் ஆவரே

விளக்கம்:

அரவன்=பாம்பினை அணியாக அணிபவன்; விண்ணுக்கு=விண்ணவர்களுக்கு ஒருவன்=ஒப்பற்ற தலைவனாக விளங்கும் இந்திரன்;

பொழிப்புரை:

பிரமன் திருமால் ஆகிய இருவரும் திருவடியையும் திருமுடியையும் தேடி காண முடியாத வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவனும், பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் கொண்டவனும், அன்னியூர் தலத்தின் இறைவனும் ஆகிய பெருமானை புகழ்ந்து பாடுவோர், இந்திர பதவியை அடைவார்கள்.

பாடல் 10:

மன்னியூர் இறை (1.096) பாடல் 8 தொடர்ச்சி 9, 10, 11 (திதே 0467)

குண்டர் தேரருக்கு

அண்டன் அன்னியூர்த்

தொண்டுளார் வினை

விண்டு போகுமே

விளக்கம்:

அண்டன்=அண்ட முடியாதவன், நெருங்க முடியாதவன்; குண்டர்=பருத்த உடலைக் கொண்ட சமணர்கள்; தேரர்=புத்தர்; சிறிய விதையிலிருந்து பெரிய மரங்கள் வளர்வது போன்று, நமது கண்ணுக்கு தெரியாமல் நம்முடன் பிணைந்திருக்கும் வினைகள், நாம் பல இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க காரணமாக உள்ளன. விண்டு போகும் விதைகள் செயலற்று போவது போல், பெருமானின் அருளினால் அவனது அடியார்களை பிணைந்துள்ள வினைகள் செயலற்று விடுகின்றன என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

பருத்த உடலை உடைய சமணர்களும் புத்தர்களும் அண்ட முடியாதவனாக விளங்கும் பெருமானுக்கு அன்னியூர் தலத்து இறைவனுக்கு தொண்டு செய்யும் அன்பர்களின் வினைகள் விண்டு போய்விடும்.

பாடல் 11:

மன்னியூர் இறை (1.096) பாடல் 8 தொடர்ச்சி 9, 10, 11 (திதே 0467)

பூந்தராய்ப் பந்தன்

ஆய்ந்த பாடலால்

வேந்தன் அன்னியூர்

சேர்ந்து வாழ்மினே

விளக்கம்:

ஆய்ந்த=ஆராய்ந்து பாடிய, வேதங்களின் நுட்பமான பொருளை அறிந்து அவற்றை தமிழ்ப் பாடல்களாக பாடிய; சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவதால் நாம் அவனை நெருங்கி அவனுடன் இணைய முடியும் என்பதையே சேர்ந்த என்ற சொல் மூலம் திருஞானசம்பந்தர் விளக்குகின்றார்.

பொழிப்புரை:

பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் தோன்றிய ஞானசம்பந்தன், வேதங்களின் நுட்பமான பொருளினை ஆராய்ந்து அறிந்து அந்த கருத்துகளை தமிழ்ப் பாடல்களாக அமைத்து அன்னியூர் தலத்தின் தலைவனாகிய இறைவன் மேல் இயற்றிய பாடல்களை பாடி இறைவனுடன் சேர்ந்து வாழ்வீர்களாக.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் அனைத்து உயிர்களுடன் கலந்து அவற்றை இயக்குபவன் பெருமான் என்று உணர்த்தும் திருஞான சம்பந்தர், இரண்டாவது பாடலில் அன்னியூர் தலம் சென்றடைந்து அவனது திருவடிகளைத் தொழுமாறு அனைத்து தொண்டர்களையும் அழைக்கின்றார். மூன்றாவது பாடலில் பெருமானின் திருநாமங்களை சொல்லி உய்வினை அடைவீர் என்றும் நான்காவது பாடலில் அவனது திருப்பாதங்களைத் தொழுது முக்தி நிலை அடைவீர் என்றும் ஐந்தாவது பாடலில் பெருமானுடன் உறவு கொண்டு மனநிறைவுடன் வாழ்வீர் என்றும், ஆறாவது பாடலில் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் வேண்டும் என்று விரும்பினால் அவனை தூய பொன் போன்று சிறந்தவனாக கருதுவீர் என்றும், ஏழாவது பாடலில் நமது தந்தையாக பாவித்தால் பந்த பாசங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றும், எட்டாவது பாடலில் அவனை நெருங்கிய நண்பனாக கருதுவீர் என்றும், ஒன்பதாவது பாடலில் அவனை புகழ்வீர் என்றும், பத்தாவது பாடலில் அவனுக்கு தொண்டு செய்வீர்கள் என்றும் நம்மை வழிப்படுத்தும் சம்பந்தர், தேவார பதிகங்களை இறைவனை நெருங்கி அவனுடன் இணைவீர்கள் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார்.



Share



Was this helpful?