பதிக எண்: 2.67 - திருப்பெரும்புலியூர் - காந்தாரம்
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு சென்று வழிபட்ட திருஞான சம்பந்தர் அங்கிருந்து பெரும்புலியூர் சென்றதாக பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. திருவையாறு தலத்திலிருந்து வடக்கே மூன்று கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவையாறு கல்லணை பாதையில்,நெய்த்தானத்திற்கு வலது புறத்தில் பிரியும் சாலையில் உள்ளது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த ஒரு பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. இறைவனின் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர், பிரியாநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர நாயகி; வியாக்ரபாதர் வழிபட்ட ஐந்து தலங்களில் இந்த தலமும் ஒன்று. இந்த ஐந்து தலங்களும் புலியூர் என்று முடிகின்றன. அவையாவன, பெரும்பற்றப்புலியூர் (தில்லைச் சிதம்பரம்), திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்),ஓமாம்புலியூர், பெரும்புலியூர், எருக்கத்தம்புலியூர். இந்த ஐந்து தலங்களிலும் மூலவர் சுயம்பு மூர்த்தம். இந்த தலத்து மூலவர் இலிங்கத்தின் பின் புறத்தில் சடை போன்ற அமைப்பு உள்ளது. இதனைக் குறிப்பிடும் வகையில், பெருமானை பின்னுசடைப் பெருமானார் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். மன ஒற்றுமைக்கு ஏங்கும் தம்பதியர் சென்று வழிபடவேண்டிய தலம். கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜ கோபுரம். சுயம்பு மூர்த்தி; மூலவர் கருவறை நான்கு அடுக்குகள் கொண்ட பத்ம பீடத்தின் மேல் உள்ளது. துர்க்கையே மூலவராக இருப்பதால், இங்கே கோஷ்டத்தில் துர்க்கை சன்னதி இல்லை. இனிய புன்முறுவலுடன் அழகிய தோற்றத்துடன் நின்ற நிலையில் அம்பிகை காட்சி தருவதை காணலாம். விநாயகர் தக்ஷிணாமூர்த்தி அர்த்தநாரீசுவரர் இலிங்கோத்பவர் ஆகியோர் கோஷ்டத்தில் உள்ளனர். பிராகாரத்தில் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், சண்டீசர், நவகிரகம், சோமாஸ்கந்தர், வாராகி, பைரவர், சூரியன், சந்திரன், சிவகாமி சமேத நடராஜர் ஆகியோர் தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். நடராஜர் சன்னதியில் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி ஆகிய இருவரையும் காணலாம். கோயில் விமானத்தின் அடித்தளம் தாமரை மலர் போல் அமைந்துள்ளது. நவகிரகங்கள் அனைத்தும் நடுவில் இருக்கும் சூரியனைப் பார்த்தவாறு அமைந்துள்ள தன்மை, இந்த திருக்கோயிலின் தனிச் சிறப்பாகும். சூரியன் மேற்கு நோக்கி, சுவாமியை பார்த்தவாறு இருக்கின்றார். அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறத்தில் விநாயகரையும் வலது புறத்தில் அனுமனையும் காணலாம். வடக்கு பிராகாரத்தில் அம்பிகை சன்னதியை காணலாம். கிழக்கு நோக்கிய சன்னதி. அம்பிகையின் சன்னதியின் அர்த்த மண்டப நுழை வாயிலில் துவார பாலகிகளை காணலாம். தனது மேலிரண்டு கைகளில் தாமரை மலரையும் ஜெபமாலையும் ஏந்திய அம்பிகை, கீழ்க்கை மூலம் அடியார்களுக்கு அபயம் அளிக்கின்றாள்; இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களும் பெரும்புலியூர் பிரியாரே என்று முடிகின்றன எந்நாளும் பிரியாமல் பெரும்புலியூர் தலத்தில் பொருந்தி உறையும் பெருமான் என்றும், பிராட்டியை விட்டு பிரியாமல் இருக்கும் பெருமான் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். கோஷ்ட மூர்த்தமாக மாதொருபாகனின் மூர்த்தம் இருப்பதால், இறைவனை மாதொருபாகனாக சித்தரிப்பதில் பெரும் ஆர்வம் கொண்ட திருஞானசம்பந்தர், பிராட்டியை விட்டு இறைவன் பிரியாமல் இருக்கும் நிலையை உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். பிரியாநாதர் என்ற தலத்து இறைவனின் திருநாமமும், மாதொருபாகன் என்ற கருத்தையே உணர்த்துகின்றது. தலமரம் சரக்கொன்றை; தீர்த்தம்=காவிரி; அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். புதர் மண்டிக் கிடந்த இந்த திருக்கோயில், மதுரை சுந்தர சுவாமிகள் என்பவரால் வெளிக்கொண்டு வரப் பட்டது என்று கூறுவார்கள். சுவாமிகளின் சிலையும் பிராகாரத்தில் காணப்படுகிறது. இராஜராஜச் சோழன் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்ட திருக்கோயில். திருமழிசை ஆழ்வாருடன் தொடர்பு கொண்ட தலம். திருமழிசை ஆழ்வாரைக் கண்ட சில அந்தணர்கள், தாங்கள் ஓதிக் கொண்டிருந்த வேதத்தை ஆழ்வார் கேட்கலாகாது என்று கருதி, வேதத்தை இடையில் நிறுத்தி விட்டனர். ஆழ்வார் தங்களைக் கடந்து சென்ற பின்னர், வேதத்தை தொடர்ந்து ஓத முயற்சி செய்கையில், அவர்களுக்கு தாங்கள் நிறுத்திய இடம் யாது என்பது நினைவுக்கு வரவில்லை. எவ்வளவு முயற்சி செய்த போதிலும், நினைவுக்கு வராமல் போகவே, தாங்கள் ஆழ்வாரை அவமதித்ததே இந்த நிலைக்கு காரணம் என்பதை உணர்ந்த அவர்கள், ஆழ்வார் இருக்குமிடம் தேடிச் சென்று ஆழ்வாரை வணங்கினார்கள். அப்போது ஆழ்வார் அவர்களுக்கு, அவர்கள் நிறுத்திய இடத்தினை நினைவூட்டி, அவர்கள் தொடர்ந்து வேதம் ஓதுமாறு செய்தார் என்பது செவி வழிச் செய்தி.
பாடல் 1:
மண்ணுமோர் பாகம் உடையார் மாலுமோர் பாகம் உடையார்
விண்ணுமோர் பாகம் உடையார் வேதம் உடைய நிமலர்
கண்ணுமோர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார்
பெண்ணுமோர் பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே
விளக்கம்:
இந்த பாடலில் திருமாலையும் பார்வதி தேவியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் பெருமான் வைத்துள்ளதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பல தேவாரப் பாடல்கள், பெருமான் பிராட்டியைத் தனது மேனியின் இடது பாகத்தில் வைத்திருப்பதாக கூறுவது போன்று, திருமாலை பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் வைத்திருப்பதாகவும் உணர்த்துகின்றன. ஒரே பாடலில் தேவியையும் திருமாலையும் பெருமான் தனது உடலில் வைத்திருப்பதாக குறிப்பிடும் தேவாரப் பாடல்கள் மிகவும் அரிதாகும். இந்த பதிகத்தின் முதல் பாடல் அத்தகைய பாடலாகும். இந்த பாடல் போன்ற ஒரு சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.5.1) பாம்பினைத் தனது படுக்கையாகக் கொண்டுள்ள திருமாலையும் அழகிய தோள்களை உடைய பிராட்டியையும் பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் வைத்திருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். செய்=வயல்கள்: கை அருகே=கைக்கு எட்டும் உயரத்தில்; கானல்=காடு; பை= நச்சுப்பை; அழல் வாய்=நெருப்பினைப் போன்று கொடிய விடத்தினை கக்கும்; ஐவாய்= ஐந்து தலைகளை உடைய; பாம்பணையான்=பாம்பினைத் தனது தலையணையாகவும் படுக்கையாகவும் கொண்டுள்ள திருமால்; பணைத் தோளி=மூங்கில் போன்று அழகிய தோள்களை உடைய தேவி; விண்டவர்=விட்டவர், பெருமான் மீது வைத்துள்ள பற்றினைத் தவிர்த்து மற்றைய பற்றுகளை விட்டவர்; உள்கி=நினைத்து; மேலுலகம்=அனைத்திலும் உயர்ந்ததாக விளங்கும் வீடுபேறு; பாம்பணையான் என்ற சொல்லினை பணைத் தோளி என்ற சொல்லுடன் இணைத்துப் பொருள் கொண்டால், பெருமான் திருமாலையும் பிராட்டியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ளார் என்ற பொருள் பட வருகின்றது. அப்போது உள்கி என்ற வினைச் சொல்லுக்கு அடியார்கள் என்ற எழுவாய் பொருந்துகின்றது. பாம்பணையான் என்ற சொல்லுடன் உள்கி என்ற சொல்லினை இணைத்து, திருமால் பெருமானை நினைத்து உருகியதை குறிப்பிடுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர். பெருமானை தனது மனதிலே தியானித்து எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டு இருப்பதாகவும் அவரது மூச்சுக் காற்றின் அசைவுக்கு ஏற்ப பெருமான் நடனம் ஆடுவதாகவும், அந்த நடனமே அஜபா நடனம் என்று அழைக்கப் படுவதாகவும் திருவாரூர் தலபுராணம் கூறுகின்றது.
செய் அருகே புனல் பாய ஓங்கிச் செங்கயல் பாயச் சில மலர்த் தேன்
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எல்லாம் கமழ் காட்டுப்பள்ளி
பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பணையான் பணைத் தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேலுலகே
வயல்களின் அருகே உள்ள வாய்க்கால்களில் நீர்ப் பெருக்கு மிகவும் அதிகமாக பாய, அதனால் களிப்படைந்த செங்கயல் மீன்கள் உயரமாக துள்ளி குதிக்க, துள்ளிக் குதிக்கும் மீன்களின் அசைவினால் அதிர்ந்த சில மலர்கள் தேன் சிந்தவும், கைக்கு எட்டும் உயரத்தில் வாழை மரங்கள் முதிர்ந்த வாழைப்பழக் குலைகளை அளிக்க, காடெல்லாம் தேனின் மணமும் பழுத்த வாழைகளின் மணமும் கலந்து கமழ விளங்கும் காட்டுப்பள்ளி தலத்தில் பெருமான் உறைகின்றார். நச்சுப் பையின் அருகே நெருப்பு போன்று கொடிய விடத்தினை கக்கும் பற்களை உடைய ஐந்து தலைப் பாம்பினைத் தனது தலையணையாகவும் படுக்கையாகவும் வைத்துள்ள திருமாலையும், மூங்கில் போன்று அழகிய தோள்களை உடைய பார்வதி தேவியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள சிவபெருமானை தியானித்து, இறைவன் மீது கொண்டுள்ள பற்றினை மட்டும் உடையவர்களாக, அந்த பற்றினைத் தவிர்த்து ஏனைய உலகப் பற்றுக்களை அறவே விலக்கிய அடியவர்கள், மறுமையில் முக்தி உலகினை அடைவார்கள் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை..
புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.97.2) திருஞானசம்பந்தர் மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற நாதன் என்று கூறுகின்றார். புன்னை மலர்கள் உதிர்க்கும் மகரந்தத் தூள்கள், மஞ்சள் வண்ணத்தில் பொன் பொடிகள் கீழே சிந்துவது போன்றிருக்கும் தன்மையை, பொன் கொடுக்கும் புன்னைகள் நிறைந்த புறவம் பதி என்று கூறுகின்றார். திருமாலையும் பிராட்டியையும் தனது உடலின் ஒரு பகுதியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏந்தியுள்ள பெருமான் என்று அடியார்கள் புகழ்வதாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பரன்=மேலான கடவுள்;
மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற
நாதன் என்று ஏத்தும் நம் பரன் வைகும் நகர் போலும்
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆடப்
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே
இந்திரநீல பர்ப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.27.5) திருஞானசம்பந்தர் மாலும் மட மாதேர் பாகமாய் பெருமானின் உடலில் இருப்பதாக கூறுகின்றார். இரவன்=பல இடங்களுக்கும் சென்று இரப்பவன்; வண்ணம்=இயல்பு; தான் இரப்பதற்காக செல்லும் போது, தன்னிடம் தங்களது மலங்களை பிச்சையாக அளிக்கும் உயிர்களின் வினைகளைத் தீர்த்து முக்தி நிலை அளிப்பவன் பெருமான் என்ற பொருள் பட, வினைகள் தீர்த்த பண்பினன் இரவன் என்று குறிப்பிடுகின்றார். அருவி=மலை அருவியாக பாயும் கங்கை நதி; மருவு மான் மட மாது என்று பல பதிப்புகளில் காணப்படுகின்றது. மருவு என்ற சொல்லுக்கு பொருந்துதல் என்று பொருள். பொருந்தும் திருமாலையும் அழகிய பார்வதி தேவியையும் உடலில் கொண்ட பெருமான் என்று பொருள் கொள்வது ஒரு வகை. மான் போன்ற மருண்ட பார்வையும், இளமை மற்றும் அழகு ஒருங்கே பொருந்திய பார்வதி தேவியை ஒரு பாகமாக கொண்டவன் என்று பொருள் கொள்வது மற்றொரு வகை.
மருவு மால் மட மாதோர் பாகமாய்ப்
பரவுவார் வினை தீர்த்த பண்பினான்
இரவன் இந்திர நீலப் பர்ப்பதத்து
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.6) திருஞானசம்பந்தர், பெருமான், திருமால் மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரையும் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்ட செய்தியை குறிப்பிடுகின்றார். மாலுமோர் பாகர் அயனும் ஓர் பாலர் என்று ஏகபாத திரிமூர்த்தியாக பெருமான் இருக்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. புரூரவன்=பாண்டவர்களுக்கு முன்னோன், சந்திர குலத்து அரசன்; பூசுரர்=நிலவுலகில் வாழும் அந்தணர்கள் தேவர்கள் போன்று உயர்ந்தவர்களாக கருதப் படும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. அனைத்து பொருட்களுக்கும் தோற்றமாகவும், நிலை பெற்று இருக்கும் தன்மையாகவும், அந்த நிலையான தன்மைக்கு முடிவாகவும் இருக்கும் பெருமான், தேவர்களுக்கு தேவனாக விளங்குகின்றான். போது-மலர்கள்; சென்னி=தலை, மலர்க் கிரீடம் அணிந்த தலை; அறா=இடைவிடாது ஒலிக்கும்;
பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர்
போது சேர் சென்னிப் புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே
தில்லைப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.22.4) அப்பர் பிரான், மை படர்ந்த கண்ணாளாகிய தேவியுடன் திருமாலையும் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று கூறுகின்றார். அசைத்த=தளரச் செய்த; பை அரவு=பாம்பின் படம்; பெண்களின் மார்பகத்தை, பாம்பின் படத்திற்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. பல தேவாரப் பதிகங்களில், உமை அம்மையின் மார்பகங்கள், பாம்பின் படத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அப்பர் பெருமான் இங்கே பாம்பு வருந்துவதாக கூறுகின்றார். அல்குல்=மார்பகம், இங்கே அழகிய மார்பகத்தை உடைய பெண்ணைக் குறிக்கின்றது. சடையில் தாங்கியுள்ள சந்திரனுடன் இணைத்து சொல்லப் பட்டிருப்பதால், இங்கே அழகிய பெண்மணி என்று கங்கை நதியை குறிப்பதாகக் கொள்ள வேண்டும். கங்கையின் மார்பகத்தின் அழகுக்கு முன்னால் தனது படத்தின் அழகு எடுபடாமல் இருப்பதால் வருத்தமுற்று பாம்பு தளர்ந்து இருப்பதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். செய்=நன்செய் நிலம்; செய்யரி=நெல் முதலான தானியங்கள் அறுவடை செய்யப்படும் நிலங்கள்;
பை அரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னிச்
மையரிக் கண்ணியாளும் மாலுமோர் பாகமாகிச்
செய்யரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கையெரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே
இந்த பாடலின் கடைசி வரியில், கையெரி மற்றும் கனல் எரி என்று இரண்டு விதமான நெருப்புகளை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். எனவே எரி ஆடுமாறே என்று ஒவ்வொரு பாடலின் கடைசியில் அப்பர் பிரான் கூறுவது, நடராஜப் பெருமான் கையில் ஏந்தியுள்ள எரி அல்ல என்பது தெளிவாகின்றது. எனவே தான் ஊழித் தீயின் இடையே நின்று பெருமான் ஆடுவதையே அப்பர் பிரான் அனைத்துப் பாடல்களிலும் குறிக்கின்றார் என்று சிவக்கவிமணி, சி.கே. சுப்பிரமணியம் அவர்கள், தனது பெரியபுராண விளக்கம் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் இத்தகைய நடனம் தொடர்ச்சியாக நடைபெறுவதால், அப்பர் பிரான் எரி ஆடுமாறே என்று நிகழ்காலத்தில் கூறுகின்றார் போலும். ஊழித்தீயினை ஞானத்தீ என்றும் குறிப்பிடுவதுண்டு. படம் எடுக்கும் பாம்பினை வருத்தப்படச் செய்யும் அழகுடைய மார்பகங்களை உடைய கங்கை நங்கையையும், ஒளி வீசும் சந்திரனையும் சடையில் சிவபிரான் அணிந்துள்ளார். சந்திரனின் ஒளி சடையில் தெரிகின்றது. மை தீட்டிய அழகிய கண்களை உடைய உமை அம்மையையும், திருமாலையும் தனது உடலில் பாகமாகக் கொண்டுள்ளவன் சிவபெருமான். அத்தகைய சிவபெருமான், அனல் ஏந்திய கையினை வீசியபடியே, ஊழித்தீயின் இடையே நின்று ஆடுகின்றார்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தேவார ஒளிநெறி (அப்பர் தேவாரப் பதிகங்கள்) என்ற ஆராய்ச்சி நூல் எழுதிய தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளையவர்கள், தனது நூலில், அரியலால் தேவி இல்லை என்ற அப்பர் கூற்றுக்கு ஒப்பாக வேறொரு தேவாரப் பாடலின் பகுதியையும் சுட்டிக் காட்டுகின்றார். அப்பர் பிரான் அருளிய திருப்பயற்றூர் பதிகத்தின் பாடல் ஒன்றினை (4.32.7) அவர் சுட்டிக் காட்டுகின்றார். இந்த பாடலிலும் அப்பர் பிரான், தேவியையும் திருமாலையும் தனது உடலில் பெருமான் வைத்துள்ளதாக கூறுகின்றார். ஆவி=வேள்விகளில் வெளிப்படும் புகை; அவி= வேள்விகளில் தேவர்களுக்கு அளிக்கப்படும் ஆகுதி; வேள்விகள் செய்யப்பட வேண்டிய முறை மற்றும் அப்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் ஆகியவை வேதங்களில் காணப்படுகின்றன. காவியங்கண்ணாள் என்பது திருப்பயற்றூர் தலத்தில் உறையும் தேவியின் திருநாமம். அருக்கத்தின் எதிர்மறை பெருக்கம். பிரமன்=உண்மையான மெய்ப்பொருள். பிரமம் என்ற சொல்லுக்கு வேதம், தத்துவம், தவம், அந்தணர், நான்முகன் ஆகிய பல பொருட்கள் உண்டு. இடம் கருதி நாம் தகுந்த பொருளை உணரவேண்டும். அனைவர்க்கும் மேலான உண்மையான மெய்ப் பொருளாக சிவபெருமான் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். வேள்விகளில் எழுகின்ற புகையாகவும், அந்த வேள்வியில் அளிக்கப்படும் அவியாகவும், நுண்ணியனாகவும் மிகவும் பெரியவனாக அனைத்து இடங்களில் பரவி இருப்பவனும், பாவிகளின் பாவங்களைத் தீர்க்கும் மேலான கடவுளாகவும், உண்மையான மெய்ப் பொருளாகவும் நிற்பவன் இறைவன். அவர் கடல் வண்ணத் திருமேனி கொண்டவளும் காவியங்கண்ணாள் என்ற திருநாமத்துடன் இந்த தலத்தில் உறைபவளும் ஆகிய தேவியைத் தனது உடலில் ஒரு பாகத்தில் வைத்துள்ளார். அத்தகைய பெருமான் தான் திருப்பயற்றூரில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. கடல் வண்ணன் என்று அழைக்கப்படும் திருமாலாக தேவி இருக்கின்றாள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஆவியாய் அவியுமாகி அருக்கமாய்ப் பெருக்கமாகிப்
பாவியர் பாவம் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகிக்
காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணனாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே
பல திருமுறை பாடல்களில் திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் பெருமான் ஏற்றுள்ள செய்தி காணப்படுகின்றது. மேலும் மாதொரு பாகனாக விளங்கும் பெருமானின் இடது பாகத்தில் தேவி உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இந்த இரண்டு நிலைகளையும் ஒருங்கே சிந்திக்கும் போது, நமக்கு திருமாலும் தேவியும் ஒன்றே என்ற நிலை புலப்படும். இந்த உண்மையைத் தான் அரி அலால் தேவி இல்லையென்று அப்பர் பிரான் உணர்த்துகின்ற பாடல் (4.40.5) நமது நினைவுக்கு வருகிறது. இந்த பாடல் திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடலாகும். இந்த தேவாரப் பாடலை மேற்கோளாக காட்டி, மகா பெரியவர், தெய்வத்தின் குரல் புத்தகத்தில் தேவியும் திருமாலும் ஒன்று என்பதை சுட்டிக் காட்டுகின்றார். ஐயாறனார் நெருப்பின் உருவத்தில் அல்லாது வேறு உருவத்தில் தோன்றுவதில்லை; இடபத்தைத் தவிர வேறு வாகனத்தை அவர் பயன்படுத்துவதில்லை; யானையின் தோலைத் தவிர்த்து வேறு எதனையும் அவர் போர்வையாக போர்த்துக் கொள்வதில்லை; பிரியாது சேர்ந்து இருக்கும் தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி மேம்பட்ட சிறப்பினை உடையவனே என்று சிறப்பித்து வணங்கும் திருமாலைத் தவிர வேறு எவரையும் தனது தேவியாக சிவபெருமான் ஏற்றுக் கொள்வதில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
எரி அலாது உருவம் இல்லை ஏறு அலாது ஏறல் இல்லை
கரி அலால் போர்வை இல்லை காண் தகு சோதியார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்
அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே
திருவையாறு தலத்தில் உள்ள நாயகி, அறம் வளர்த்த நாயகியின் தோற்றத்தைக் காண்பவர்க்கு இந்த நிலை புலப்படும் வண்ணம், அம்பிகை நான்கு கரங்களுடன், மேல் இரண்டு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியவளாய், வலது கீழ்க்கரம் அஞ்சேல் என்று அபய முத்திரை காட்ட, இடது கீழ்க்கரம் தொடையின் மீது படிந்திருப்பதை நாம் காணலாம். விளமர் தலத்தில் உள்ள தேவியின் தோற்றமும் இவ்வாறே உள்ளது. மேலும் திருவையாறு தலத்தில் வெள்ளிக்கிழமை இரவுகளில் அம்பாள் சன்னதியில் இலக்குமி சிலை வந்து நிற்க தேவிக்கு தீபாராதனை நடைபெறும். இந்த நிகழ்ச்சி, இலக்குமி தேவி திருமாலை வந்து வணங்கும் அடிப்படையில் இருப்பதாக கருதப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியும் திருமாலும் தேவியும் வேறுவேறு அல்ல என்பதை உணர்த்துகின்றது.
ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலின் (4.62.8) அப்பர் பிரான், பெருமானை, மறிகடல் வண்ணன் பாகன் என்று அழைக்கின்றார். மறிகடல்=மடிந்து விழும் அலைகளைக் கொண்ட கடல்: செறிவு=யோகம்: இறைவனை வழிபடும் முறைகள் நான்கு. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று இவற்றை கூறுவார்கள். சரியை என்பது உடலால் வழிபடுவது (திருக்கோயிலை வழிபடுவது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது), கிரியை (வாயினால் வழிபடுவது–அஞ்செழுத்து மந்திரங்களை ஓதுவது, திருமுறைகள் ஓதுவது, திருமுறை கருத்துக்களை, சாத்திர தோத்திரக் கருத்துக்களை அடுத்தவர்க்கு எடுத்துரைப்பது), யோகம்(இறைவனின் திருவுருவத்தை மனதினில் தியானித்து வழிபடுதல்), ஞானம் (மேற்கண்ட மூன்று வழிகளில் ஒன்றினை நாள்தோறும் கடைப்பிடித்தால், இறைவன் குரு வடிவினில் வந்து அருளுவது). மடிந்து விழும் அலைகளைக் கொண்ட கடலின் நிறத்தினை உடைய திருமாலை, உடலில் ஒரு பாகத்தில் ஏற்ற பெருமானே, உயர்ந்த வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் முழுவதும் அறிந்தவனே, ஆலவாயில் தலத்தில் உறையும் அப்பனே, தினமும் தூய நீரினைக் கொண்டு உன்னை நீராட்டியும் பின்னர் நறுமணம் வீசும் மலர்களைக் கொண்டு உனது திருமேனியில் தூவியும், உன்னை வாழ்த்திப் பாடியும், உனது திருவுருவத்தினை மனதினில் தியானித்தும், உனது மலர்ப் பாதங்களை அடைய நான் முயற்சி செய்கின்றேன். நீ தான் அருள் கூர்ந்து, உனது திருவடிகளில் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நறுமலர் நீரும் கொண்டு நாடொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா மாமறை அங்கம் ஆறும்
அறிவனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
அப்பர் பிரான், திருப்பழனத்துப் பதிகத்தின் (4.87.7) ஒரு பாடலிலும் இதே கருத்தினை கூறுகின்றார். பழனத்து அரசே, ஒப்பற்ற திருமாலை, மிகவும் மகிழ்ந்து உனது உடலின் ஒரு பாகத்தில் நீ ஏற்றுக் கொண்டுள்ளாய்; உமை அம்மையுடன் எப்போதும் கூடியிருப்பது போன்ற தன்மையுடன் திருமாலுடன் பொருந்தியுள்ளாய். ஒரு பாம்பினைப் பிடித்து, அந்த பாம்பினை உனது கையில் சுற்றியிருக்குமாறு பற்றியுள்ளாய். இறைவனே, இவ்வாறு பாம்பும், திருமாலும், உமை அம்மையும் உனது உடலில் பற்றியிருக்கச் செய்த நீ, எனது வேண்டுகோளினை உனது கருத்தினில் கொண்டு என்னையும் ஆட்கொண்டு அருள வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒரு பாகம் மகிழ்ந்து உடனே
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கோர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே
பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.88.6) அப்பர் பிரான், தனது அருகே திருமாலைக் கொண்டுள்ளவன் பெருமான் என்று கூறுகின்றார். அருகு=அருகினில்; அடைமாலை=இடையிடையே பச்சிலைகள் வைத்து தொடுக்கப்பட்ட மாலை; அழகார்ந்த நாயகி=அழகாக அமைந்த உருவத்தினை உடைய பார்வதி தேவி; பொரு=போரிடும்; பெருமானின் வில் பிநாகம் என்று அழைக்கப்படும்; திரு=அழகு; தலத்து அன்னையின் திருநாமம் அழகார்ந்த நாயகி என்பது உணர்த்தப் படுகின்றது. உலகாயும் நின்றான் என்ற தொடர், அட்ட மூர்த்தியாக (நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன் சந்திரன் மற்றும் ஆன்மா) பெருமான் உள்ள நிலையை குறிப்பிடுவதாக கொள்வதும் பொருத்தமே. மால் என்ற சொல்லுக்கு திருமால் என்று பொருள் கொண்டு, திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவன் பெருமான் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது, இடையிடையே பச்சிலைகள் வைக்கப்பட்டு நெருக்கமாக தொடுக்கப்பட்ட மாலையினை உடையவனும், அழகாக அமையப்பெற்ற உருவத்தினை உடைய அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும், அனைத்துப் பொருட்களுடனும் அனைத்து உயிர்களுடனும் கலந்து உலகெங்கும் பரந்து நிற்பவனும், போரிடும் படைக் கலன்களாகிய வில்லினையும் வேலினையும் உடையவனும், அழகும் ஒளியும் பொருந்திய பிறைச் சந்திரனை அணிந்தவனும் ஆகிய பெருமான் பூந்துருத்தி தலத்தில் மிகவும் மகிழ்ந்து ஆதிபுராணன் என்ற நாமத்துடன் உறைகின்றான். அவனது திருவடிகளை நான் போற்றுகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அருகு அடை மாலையும் தான் உடையான் அழகால் அமைந்த
உரு உடை மங்கையும் தன்னொரு பால் உலகாயும் நின்றான்
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும்
திருவுடைத் தேச மதியனை யான் அடி போற்றுவதே
இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.16.1) அப்பர் பிரான், பெருமானை, மாலை மகிழ்ந்து ஒரு பால் வைத்தார் என்று குறிப்பிடுகின்றார். கண்ணி=தலையில் அணியும் மாலை; மாலை=திருமாலை; வேலை=கடல்; வினைகள் மூன்று வகைப்படும். தொல்வினை, ஊழ்வினை மற்றும் மேல்வினை என்பனவே அந்த மூன்று பிரிவுகள். பழைய பல பிறவிகளில் ஈட்டிய மொத்த வினைத் தொகுதி தொல்வினை ஆகும். அந்த தொல் வினையின் ஒரு பகுதி ஊழ்வினையாக, இந்த பிறவியில் அனுபவித்து கழிப்பதற்காக ஒதுக்கப் படுகின்றது. அந்த வினையின் விளைவுகளாக வரும் இன்ப துன்பங்களை நாம் எதிர்கொள்ளும் முறைகள் மேலும் பல வினைகளுக்கு வழிவகுத்து, நமது வினைகளை பெருக்குகின்றன. இவ்வாறு நமது வினைகளை மேலும்மேலும் பெருக்கிக் கொள்வதை தடுக்கும் வல்லமை, இறைவனின் கருணையால் தான் நமக்கு ஏற்படும். அந்த பக்குவ நிலை, விருப்பு வெறுப்பு இல்லாமல் இன்ப துன்பங்களை எதிர் கொள்ளும் பக்குவம், இருவினைகளையும் ஒன்றாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்த பின்னர், பக்குவம் அடைந்த இந்த உயிர் இனிமேல் வினைகளை அனுபவிப்பதால் நிலை தடுமாறாது என்பதை உணரும் இறைவன், மொத்த வினைகளையும் அகற்றி கழித்து விடுகின்றான். இவ்வாறு அவன் செய்யும் உதவியே, மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு வினைகளை முற்றிலும் தீர்க்கும் வல்லமை, சிவபெருமான் ஒருவனுக்கே உண்டு என்பதால், மற்றவர்களிடமிருந்து மாறுபட்டுள்ள அவனை விகிர்தன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார் (விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்). தந்திரம்=செய்யும் முறைகள்: வேதங்களில் வேள்விகள் முதலான சடங்குகள் செய்யும் போது சொல்லப்பட வேண்டிய மந்திரங்கள் தவிர, அந்த மந்திரங்கள் சொல்லப் படும்போது செய்ய வேண்டிய வழிமுறைகளும் சொல்லப் பட்டுள்ளன. இதனையே மந்திரமும் தந்திரமும் ஆனார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். வேதங்களை மந்திரம் எனவும் சிவ ஆகமங்களை தந்திரம் என்றும் சொல்வதுண்டு. இந்த பொருளை உள்ளடக்கி, சிவபெருமான் மந்திரமாகவும் தந்திரமாகவும் உள்ளான் என்று திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. சூலப்படையினை உடையவரும், சுடராக ஒளி வீசும் சந்திரனைத் தனது சடையில் மாலையாக அணிந்தவரும், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டவரும், மந்திரங்களாகவும் அந்த மந்திரங்களின் பயனைப் பெறுவதற்கு வழிவகுக்கும் செயல்களாகவும் அமைந்தவரும், கடலில் தோன்றிய விடத்தினை உண்டவரும், ஊழ்வினையை அனுபவிக்கும் உயிர்கள் தாங்கள் ஏற்றிக்கொள்ளும் ஆகாமிய வினையைத் தீர்ப்பவரும், ஏனைய தெய்வங்களும் தேவர்களும் செய்ய முடியாத செயல்களை செய்யும் வல்லமை வாய்ந்த விகிர்தரும், நறுமணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சூலப்படை உடையார் தாமே போலும் சுடர்த் திங்கள் கண்ணி உடையார் போலும்
மாலை மகிழ்ந்து ஒரு பால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்
வேலைக் கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே
திருமாலின் அம்சமாக பார்வதி தேவி விளங்குகின்றாள் என்று ஆதி சங்கரர் தனது சிவானந்த லஹரியின் எண்பத்திரண்டாவது பாடலில் கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் இறைவன் தொடுத்த போரினில் அம்பாகவும், தேரின் அச்சு முறிந்த நிலையில் இறைவன் அமரும் இடப வாகனமாகவும், பார்வதி தேவியாக உடலின் இடது பாகத்திலும், பன்றியாக திருவடியை காண முயற்சி செய்தவராகவும், மோகினி வடிவில் தோழியாகவும், பிரதோஷ கால நடனத்தில் மிருதங்கம் வாசிப்பவராகவும் இருந்த திருமால், தனது கண்ணினை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார் என்று ஆதி சங்கரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
பாணத்வம் வ்ருஷபத்வம் அர்த்தவபுஷா பார்யாத்வம் ஆர்யாபதே
கோணித்வம் ஸஹிதா ம்ருதங்கவஹதா சேத்யாதி ரூபம் ததௌ
த்வத்பாதே நயனார்ப்பணஞ்ச க்ருத்வா த்வத் தேஹோ பாகோ ஹரி
பூஜ்யாத் பூஜ்யதரஸ் ஸ ஏவ ஹி ந சேத் கோ வா ததன்யோ திக
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.68.10) தேவியையும் திருமாலையும் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இகழ்ந்தான்=பெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையின் பெருமையினை அறியாது இகழ்ந்த அரக்கன் இராவணன்; கயிலை மலையின் பெருமையை அறியாது அதனை இகழ்ந்து பின்னர் அதனை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அரக்கன் இராவணனின் இருபது தோள்களும் நொறுங்குமாறு தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவனும், தனது வலிமை அடக்கப்பட்ட பின்னர் உண்மை நிலையினை உணர்ந்த அரக்கன் தனது உடலின் ஏழு நரம்புகளைக் கொண்டு பாடிய இன்னிசையைக் கேட்டு மகிழ்ந்து அரக்கனுக்கு பல விதமான அருள்கள் புரிந்தவனும், பூந்துருத்தி தலத்தில் உறைபவனும், புண்ணியனும், விண்ணவர்களால் பெரிய செல்வமாக கருதப் படுபவனும், உமையம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து மகிழ்ந்தவனும், தன்னிடம் சரணடைந்த பின்னர் வளரும் தன்மையினைப் பெற்ற சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துத் திகழ்பவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா என்று குறிப்பிட்டு அப்பர் பிரான் தான் சமண மதத்தைச் சார்ந்து பல வருடங்கள் வீணாகக் கழித்ததை நினைத்து மனம் வருந்துகின்றார்.
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழுநரம்பின் இசை பாட இனிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் தன்னைப் புண்ணியனை விண்ணவர்கள் நிதியம் தன்னை
மகிழ்ந்தானை மலைமகள் ஓர் பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர் பாகம்
திகழ்ந்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
திருநாவலுர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.17.9) சுந்தரர் திருமாலையும் தேவியையும் தனது உடலின் பாகத்தில் ஏற்றவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மேலும் விடைப் பாகன் என்றும் நயமாக கூறுகின்றார். ஆலமரத்தை வடவிருட்ஷம் என்று வடமொழியில் கூறுவார்கள். திரு ஆலங்காடு தலம் வடாரண்யம் என்று அழைக்கப்படும். எனவே வடம் என்ற சொல்லுக்கு ஆலிலை என்று பொருள் கொண்டு, ஆலிலையில் துயிலும் திருமாலை குறிப்பிடுகின்றது என்ற விளக்கம் அளிக்கப் படுகின்றது. திருமாலையும் பிராட்டியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்ட தன்மை பாடலின் முதல் அடியில் குறிப்பிடப் படுகின்றது. இரண்டாவது அடியில், திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்ற தருணத்தில், திருமாலைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு, பாகனாக அதனை செலுத்திய தன்மை உணர்த்தப் படுகின்றது. வெண்ணெய் நல்லூர் தலத்தின். வழக்காடு மன்றத்தில், அடிமை ஓலை காட்டி, தன்னை அடிமை என்று பெருமான் ஏற்றுக் கொண்ட செய்தியை சுந்தரர் இங்கே நினைவு கூர்கின்றார்.
படமாடு பாம்பணையானுக்கும் பாவை நல்லாள் தனக்கும்
வடமாடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்தொரு நாள்
இடமாடியார் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளும் கொண்ட
நடமாடியார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே
பனையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.87.5) சுந்தரர், பெருமானை, மங்கை பாகமும் மாலோர் பாகமும் தாம் உடையார் என்று குறிப்பிடுகின்றார். பாவையர்கள் குடைந்து ஆடுவதால், அரும்புகளாக இருந்த குவளை, மலர்கின்றன என்று கூறுகின்றார்.
கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர்க் குவளை மலர் தர
பங்கயம் மலரும் பழனத் திருப்பனையூர்
மங்கை பாகமும் மாலோர் பாகமும் தாம் உடையவர் மான் மழுவினோடு
அங்கைத் தீ உகப்பார் அவரே அழகியரே
பெருமானின் விசுவரூபத்தின் தன்மை, எல்லாப் பொருளுமாக பெருமான் இருக்கும் தன்மை இந்த பாடலில் விளக்கப் படுகின்றது. மண் விண் என்று கூறியமையால், மண்ணையும் விண்ணையும் படைத்த பிரமனும் பெருமானின் உடலின் ஒரு பாகத்தில் உள்ளார் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். கண்ணுமோர் பாகம் என்பதற்கு கண்களின் ஒரு பாகத்தை தனது உடைமையாகக் கொண்டவர் என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டமையால், பெருமானின் இடது கண்ணும் அவரது நெற்றிக் கண்ணின் இடது பாகமும், தேவியின் உடைமையாக மாறிவிடுகின்றன. எனவே வலது கண்ணும் நெற்றிக் கண்ணின் ஒரு பாகமும் பெருமானின் உடைமையாக கருதப் படுகின்றன. இந்த தன்மையை உணர்த்தும் பொருட்டே, திருஞானசம்பந்தர் கண்ணில் ஒரு பாகத்தை தனது உடைமையாகக் கொண்டவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார் போலும். இந்த குறிப்பு நமக்கு அப்பர் பிரான் அருளிய திருவொற்றியூர் பதிகத்தின் ஒரு பாடலை (4.86.7) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான் பெருமானை ஒன்றரைக் கண்ணர் என்று நகைச்சுவை தோன்ற கூறுகின்றார். மூன்று கண்களை உடைய பெருமானின் உடலில் பாதி தேவிக்கு சொந்தம் என்பதால், பெருமான் ஒன்றரைக் கண் உடையவராகத் தானே இருக்க முடியும்.(வலது கண் மற்றும் நெற்றிக்கண்ணின் ஒரு பகுதி)
இன்று அரைக் கண்ணுடையார் எங்கும் இல்லை இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்குக் கூறிட்ட நாள்
அன்று அரைக் கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே
ஐ=தலைவர்: ஐக்கு=தலைவருக்கு: அண்=அண்மையாக கிடைத்த, எளிதாக கிடைத்த: தக்க யாகத்தில் தனக்கும், தனது கணவர் சிவபெருமானுக்கும் நேர்ந்த அவமானத்திற்குப் பிறகு, தக்கன் தந்த உடலுடன் உயிர் வாழ, தாட்சாயணிக்கு விருப்பம் இல்லை. இதனை சிவபெருமானிடம் அன்னை தெரிவித்த போது, தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று தவம் புரியும் இமவானிடத்தில் குழந்தையாகத் தோன்றுமாறு தேவியை பெருமான் பணித்தார். அவ்வண்ணமே, தேவியும் ஒரு சிறிய குழந்தையாக, இமயமலைச் சாரலில், ஒரு தாமரை மலர் மேல் தோன்றினாள். இந்த நிகழ்ச்சியைத் தான் அப்பர் பிரான், எளிதாக இமவானைச் சென்று அணுகிய பார்வதி தேவி என்று இங்கே குறிப்பிடுகின்றார். இந்த நிகழ்ச்சி கந்த புராணத்திலும் திருவிளையாடல் புராணத்திலும் குறிப்பிடப் படுகின்றது.
உமை அம்மைக்குத் தனது உடலில் இடது பாகம் கொடுத்த பின்னர், சிவபெருமானுக்கு மிஞ்சியது, அவரது வலது கண்ணும், நெற்றிக் கண்ணில் ஒரு பாதியும் தான். பெரிய புராணத்தில் கண்ணப்பர், தனது வலது கண்ணினை சிவபெருமானின் வலது கண் இருக்கும் இடத்தில் அப்பியதாக சேக்கிழார் கூறுகின்றார். எனவே வலது கண் கண்ணப்பரின் கண் ஆகும். இந்த அடிப்படையில் சிவபெருமானுக்கு உரியது, அவரது நெற்றிக் கண்ணில் ஒரு பாதி மட்டுமே என்பது நாம் சற்று சிந்தித்தால் விளங்கும். கண்ணப்பர் வலது கண் அளித்ததை உணர்த்தும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. உலகத்தவர் அனைவர்க்கும் பல நன்மைகள் அளிக்கும் பெருமானுக்கே தனது கண்ணினை கொடையாக அளித்த கண்ணப்பரை, வள்ளலார் என்று சேக்கிழார் அழைக்கின்றார்.
வலத் திருக்கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம்
நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில் செங்குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
குலப் பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்
அப்பர் பிரான் பெருமானை ஒன்றரைக் கண்ணர் என்று பாடியதை ரசித்தோம். காளமேகப் புலவர் இன்னும் ஒரு படி மேலே சென்று, பெருமானை அரைக் கண்ணர் என்று அழைக்கின்றார். மூன்று கண்களை உடையவராக இருந்தாலும், உண்மையில் பெருமானுக்கு ஒரு அரைக் கண் தான் என்ற பொருள் பட, காளமேகப் புலவரின் பாடலை இங்கே சிந்திப்பது பொருத்தமாகும். மாதொரு நாயகனாகிய பெருமானின் இடது பாகம் உமை அன்னைக்கு சொந்தம் என்பதால், இடது கண்ணும், நெற்றிக் கண்ணின் இடது பாகம் உமை அன்னையின் கண்கள்; பெருமானின் வலது கண்ணோ, வேடன் கண்ணப்பர் அப்பியது. எனவே நெற்றிக் கண்ணின் வலது பாகமாகிய அரைக் கண் தான் பெருமானுக்கு சொந்தம் என்று காளமேகம் நயமாக கூறுகின்றார்.
முக்கண்ணன் என்று அரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற்கு உள்ளது அரைக் கண்ணே – மிக்க
உமையாள் கண் ஒன்றரை மற்று ஊன் வேடன் கண் ஒன்று
அமையும் இதனால் என்று அறி
தேவி மற்றும் திருமால் ஆகிய இருவரையும் பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் வைத்து இருப்பதாக குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களைச் சிந்தித்த நாம், இப்போது பெருமான், திருமாலைத் தனது உடலில் ஏற்றுக் கொண்ட செய்தியை குறிப்பிடும் திருமுறைப் பாடல்களைச் சிந்திப்போம். திருமாலை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளதாக தேவார முதலிகள் கூறுவது, நமக்கு சங்கரநாராயண மூர்த்தத்தை நினைவூட்டுகின்றது. பெருமானின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய இருபத்தைந்து மூர்த்தங்களில் சங்கர நாராயண மூர்த்தமும் ஒன்றாகும். ஈசான முகத்திலிருந்து தோன்றிய மூர்த்தங்கள், சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர்: தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திரிபுராரி (திரிபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமை மகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜ சம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும்.
பொன் வண்ணத் திருவந்தாதி பதிகத்தின் ஆறாவது பாடலில் (பதினோராவது திருமுறை) சங்கர நாராயண கோலத்தை சேரமான் பெருமாள் நாயனார் விவரிக்கிறார். இடப்பக்கம் திருமாலுக்கு அளித்த பிரானது இடது பாகத்தில் துளசி மாலை, பொன் ஆடை, சக்ராயுதம், கருவண்ண மேனி, குடக்கூத்து இவற்றால் திருமாலின் அம்சம் முழுமை பெற்று இருப்பதை இந்த பாடலில் உணர்த்தும் சேரமான் பெருமாள் நாயனார் வலப்பக்கத்தை கொன்றை மாலை, தோல் ஆடை, மான், செம்மை நிறம் மற்றும் கொக்கரை அலங்கரிப்பதாக கூறுகிறார். இந்த பாடல், சங்கரன் கோயிலில், சங்கர நாராயணர் சன்னதியில் அனைவரும் படித்து மகிழ்ந்து, சங்கரநாராயணரை தரிசனம் செய்யும் வகையில் வாயிற்படியின் மேல் எழுதப்பட்டு உள்ளது. சேது=செய்யது என்ற சொல்லின் குறுகல், சிவந்த நிறம் உடையது.
இட மால் வலம் தான் இடப்பால் துழாய் வலப்பால் ஒண் கொன்றை
வடமால் இடம் துகில் தோல் வலம் ஆழி இடம் வலம் மான்
இட மால் கரிதால் வலம் சேது இவனுக்கு எழில் நலம் சேர்
குடமால் இடம் வலம் கொக்கரையாம் எங்கள் கூத்தனுக்கே
கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.62.6) திருஞானசம்பந்தர், திருமாலை தாவியவன் என்று குறிப்பிட்டு, அவர் பெருமானுடன் உடன் இருந்ததாக கூறுகின்றார். தற்பரன்=தனது உயிரினும் மேம்பட்டவன்; அங்கணன்=அழகிய கண்களை உடையவன்; கடைக் கண்ணால் தனது அடியார்களை கண்டு, அவர்களுக்கு கருணை புரியும் தன்மை தெய்வங்களின் கண்களுக்கு அழகு சேர்ப்பதாக கருதப்படுவதால், தனது கடைக்கண் நோக்கால் தனது அடியார்களுக்கு அருள் புரியும் பெருமானை அங்கணன் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தாவியவன்=மூன்று உலகங்களையும் திரிவிக்ரமனாக இரண்டு அடிகளால் தாவி அளந்த திருமால்; பெருமானுக்கு மிகவும் நெருங்கியவனாக அவனது உடலில் ஒரு பாகத்தில் இருக்கும் திருமால், மூன்று உலகங்களையும் தாவி அளக்கும் ஆற்றல் உடையவனாக இருந்த போதிலும், அவனால் பெருமானின் திருவடிகளை காண முடியாத நிலை இருந்த தன்மையை இங்கே திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார்.
சிறுவன் மார்க்கண்டேயன், சிறுவன் சண்டீசர், அர்ஜுனன் என்ற அடியார்கள் மிகவும் பண்டைய காலத்தில் வாழ்ந்தவர்கள். அண்மையில் வாழ்ந்த அடியார்கள் எவருக்கேனும் பெருமான் அருள் புரிந்த தன்மையை நமக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்பிய திருஞானசம்பந்தர், தான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நமிநந்தி அடிகளுக்கு அருள் புரிந்ததை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். திருவாரூர் திருக்கோயிலில் உள்ள விளக்குகளில் எண்ணெய் இல்லாத காரணத்தால், பெருமானின் சன்னதியில் இருந்த விளக்குகள் அணையும் தருவாயிலிருந்த போது, அடிகளார் அருகிலிருந்த இல்லங்கள் சென்று சிறிது எண்ணெய் கேட்டார். அதற்கு ஆங்கிருந்த சமணர்கள், தனது கையில் அனல் ஏந்திய பெருமானுக்கு தனியாக விளக்கு எதற்கு என்று கேலி செய்தனர். இதனைக் கேட்டு மனம் புழுங்கிய அடிகளாரை, அந்த விளக்குகளில் தண்ணீர் விட்டு விளக்கு ஏற்றுமாறு இறைவன் அசரீரியாக பணிக்க, அடிகளாரும் அவ்வாறே செய்ய விளக்குகள் தண்ணீரால் எரிந்த அதிசயம் நிகழ்ந்தது. மற்றொரு தருணத்தில் இறைவன், திருவாரூரில் வாழும் அனைவரும் சிவகணங்களாக இருக்கும் தன்மையை அடிகளாருக்கு உணர்த்த, அடிகளாரும் தான் அந்நாள் வரை வாழ்ந்து வந்த ஏமப்பேறூர் தலத்தினை விட்டு நீங்கி திருவாரூர் தலத்தினில் வாழத் தொடங்கினார். இவ்வாறு இரண்டு முறை அடிகளாருக்கு இறைவன் அருள் புரிந்த தன்மையை இந்த பாடலில் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். கோவியலும்=தலைமை சார்ந்த, சிறந்த; தாவி என்ற சொல்லுக்கு பிணைந்து நிற்றல் என்று பொருள் கொண்டு, வேறாக காண முடியாத வண்ணம் உயிர்களுடன் பிணைந்து நிற்கும் பெருமான், உயிர்களினும் மேம்பட்டவனாக இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது என்ற சிறப்பான விளக்கம் சிவக்கவிமணி அவர்களால் அளிக்கப் படுகின்றது. இந்த தன்மையே சிவஞானபோதம் நூலின் இரண்டாம் சூத்திரத்தில் அவையே தானாக இருக்கும் இறைவனின் தன்மை என்று சொல்லப் படுகின்றது. கோ இயலும் பூ என்ற தொடருக்கு அரசர்களால் ஆட்சி செய்யப்படும் நிலவுலகம் என்று பொருள் கொண்டு, அத்தகைய நிலவுலகத்தில் தானாக முளைத்த விடங்கராக விளங்கும் பெருமான் என்ற விளக்கம் சிவக்கவிமணி அவர்களால் அளிக்கப் படுகின்றது. இந்த ஏழு தலங்களிலும் உள்ள விடங்க மூர்த்தங்களை தியாகராஜர் என்றே அழைக்கின்றனர். திருவாரூரைச் சார்ந்த சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தலத்தினில் அவனி விடங்கராக காட்சி அளிக்கும் பெருமான் பிருங்கி நடனம் ஆடுபவராக உள்ளார். மூன்று உலகங்களையும் ஈரடியால் தாவி அளந்த ஆற்றல் உடையவனாக இருந்த திருமால், பெருமானுக்கு மிகவும் நெருங்கியவனாக அவனது உடலின் இடது பாகத்தில் இருந்த போதிலும், அவரால் பெருமானின் திருவடிகளை காண முடியவில்லை; ஆயினும் பெருமானைத் தனது உயிரினும் மேம்பட்டவனாக கருதி அவன் பால் அன்பு பாராட்டி, தனது ஐம்பொறிகளையும் அடக்கி, கருணை நிறைந்த அழகிய கண்களை உடையவன் என்று அழைத்து வழிபட்டவரும், பலரும் தங்களது நாவினால் புகழத்தக்க வாழ்ந்தவரும் ஆகிய நமிநந்தி அடிகளுக்கு அருள் புரிந்த பெருமான், சிறந்த மலர்கள் கொண்ட செடி கொடி மரங்களை உடைய திருக்கோளிலி தலத்தில் உறைகின்ற பெருமான் ஆவான். உயிர்களினின்று வேறாக பிரிக்க முடியாத வண்ணம் உயிர்களுடன் பிணைந்து நின்று அவற்றை இயக்கும் இறைவன், அவ்வாறு உயிர்களுடன் பிணைந்து இருந்தாலும், உயிர்களினும் மேம்பட்டவனாக இருக்கின்றான். இந்த தலத்தினில் பெருமான் அவனி விடங்கர் என்ற திருநாமத்துடன் பிருங்கி நடனம் ஆடுபவராக உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை
ஆவி தனில் அஞ்சொடுக்கி அங்கணன் என்று ஆதரிக்கும்
நாவியல் சீர் நமிநந்தி அடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழு கோல் கோளிலி எம் பெருமானே
மொழிமாற்றுப் பதிகத்தின் பாடலில் (1.117.7) திருஞானசம்பந்தர், பெருமானை, மாலது பாகம் உடையவர் என்று குறிப்பிடுகின்றார். சொற்களை இடம் மாற்றி வைத்து அருளிய பதிகம் என்பதால் மொழிமாற்றுப் பதிகம் என்று அழைக்கப் படுகின்றது. காலது கழல் சிலம்பு, கங்கை கற்றைச் சடை உள்ளால், மாலது பாகம், மழுவது ஏந்தல், வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், அடல் ஏறு ஊர்வர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ள வேண்டும். கொழுங்கோடு=செழிப்பாக உள்ள மரக்கிளை; ஏறு=எருது; ஊர்தல்=எருதினை வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கு செல்லுதல்; சேல்=மீன்; கண்ணி= கண்ணினை உடைய உமையன்னை; மீன் போன்று அழகிய கண்களை உடையவள் என்று பொருள் படும் வண்ணம், மதுரை தேவியை அங்கயற்கண்ணி என்று அழைப்பார்கள். கழலும் சிலம்பும் அணிபவர் என்று மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. கோடு என்பதற்கு மலையினுச்சி என்று பொருள் கொண்டு, கயிலாய மலையின் உச்சியில் உள்ள கல்லால மரத்தின் நிழலில் இருக்கும் பெருமான் என்று சில அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சிவபெருமானின் காலில் உள்ளது வீரக்கழலும் சிலம்பும்; கற்றையாக அடர்ந்து காணப்படும் அவரது சடையின் உள்ளே கங்கை நதி பொதிந்து உள்ளது; திருமால் அவரது உடலின் இடது பாகத்தில் உள்ளார்; அவர் தனது கையினில் ஏந்துவது மழு ஆயுதம்; செழிப்புடன் வளரும் கிளைகளை உடைய ஆலமரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் விளக்கிய பெருமான் வலிமை உடைய இடபத்தினைத் தனது ஊர்தியாகக் கொண்டு தான் விரும்பும் இடங்களுக்கு செல்கின்றார்; அழகிய நீல மணிகளை அடித்துக் கொண்டு வரும் நீரினில் பாயும் மீன்கள் போன்று கண்ணினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள பெருமான், சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் பொருந்தி உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
காலது கங்கை கற்றைச் சடையுள்ளால் கழல் சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர் கொழுங்கோட்டு
ஆலது ஊர்வது ஆடல் ஏற்று இருப்பர் அணிமணி நீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே
பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.127.4), திருஞானசம்பந்தர், பெருமான் திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டு உள்ளார் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் ஒரே தொடரே நான்கு அடிகளிலும் திரும்பத்திரும்ப வந்தாலும், தொடரை சொற்களாக பிரிக்கும் முறை கொண்டு, வேறுவேறு பொருள் உணர்த்துவதை நாம் காணலாம். முதல் அடியை விளம் கொளி தி கழ்தரு எங்கு உரு மேவினன் என்று பிரித்து பொருள் கொள்ள வேண்டும்; விளம்= விளாம்பழம்; கொளி=கொள்பவன், கொண்டவன், கவண் கல்லால் அடித்து விளாம்பழம் கொண்டவன்: கன்றுக் குட்டியை கவண்கல்லாகக் கொண்டு விளாமரத்தை நோக்கி எறிந்து அழித்த கண்ணனாகிய திருமால்; கண்ணன் கோகுலத்தில் வளர்ந்து வந்த காலத்தில் கண்ணனை அழிப்பதற்காக வத்சாசுரன் என்ற அரக்கனும் கபிச்தாசுரன் என்ற அரக்கனும் கம்சனால் அனுப்பப்பட்டனர். இருவரும் கண்ணனைக் கொல்வதற்கு தகுந்த தருணம் எதிர்பார்த்து காத்திருந்தனர். வத்சாசுரன் ஒரு கன்றுக் குட்டியாக உருவம் எடுத்து அங்கிருந்த கன்றுகளுடன் கலந்திருக்க, கபிச்தாசுரன் அருகில் இருந்த ஒரு விளாமரத்தில் ஒளிந்து கொண்டான். இதனை அறிந்த கண்ணன், அசுரன் ஒளிந்து கொண்டிருந்த கன்றின் பின்னங் கால்களை தூக்கிப் பிடித்து விளாமரத்தின் மீது எறிந்து மரத்தினை ஒடித்து அதில் மறைந்திருந்த அரக்கனையும் கொன்றான் என்று பாகவதம் உணர்த்துகின்றது. இந்த செய்தியை கன்றால் விளவு எறிந்தவன் என்று பல திவ்யபிரபந்த பாடல்களும் சில தேவார பாடல்களும் குறிப்பிடுகின்றன. தி=விளங்கிய; தீ என்ற சொல் தி என்று குறுகியதாக பெரியோர்கள் கூறுவார்கள். கழுதரு என்ற சொல் கழ்தரு என்று திரிந்தது. கழுதரு=நின்மல; எங்கு=எந்த இடத்தில்; உரு மேவினன்=தனது உருவத்தில் வைத்துக் கொண்டான், இடது புறம் என்பது எந்த இடத்தில் என்ற கேள்விக்கு ஏற்ற விடை என்பதால், திருமாலைத் தனது உடலின் இடது புறத்தில் வைத்துக் கொண்ட பெருமான் என்பது இந்த அடியின் பொருள். திருமாலை பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துக் கொண்டதாக பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. திருமாலின் உடலினில் வலது பாகத்தில் பெருமான் இருப்பதாக திவ்ய பிரபந்த பாசுரமும் குறிப்பிடுகின்றது. கன்றினைக் கொண்டு விளாமரத்தின் மீது எறிந்து, கன்றிலும் விளாமரத்திலும் மறைந்திருந்த அரக்கர்களை கொன்ற கண்ணனாகிய திருமாலை, நின்மலனாகிய பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். மற்ற ஒலிகளிலிருந்து மாறுபட்டுத் திகழ்வதும் அனைவர்க்கும் அச்சம் ஊட்டும் வண்ணம் குமுறுவதும் ஆகிய இடியாக ஒலிப்பவன் சிவபெருமான். சிறந்ததாகிய சிவஞானத்தை அளித்து எனக்கு குருவாக விளங்கிய பெருமான், பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கி மிகவும் இழிந்த நிலையில் இருந்த என்னை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நீக்கி, முக்தி நிலையை எனக்கு அருளி என்னுடன் கலந்தவன் ஆவான். நீதிநெறி வழுவாது உயிர்களுக்கு தண்டனை அளிப்பதால் மிகுந்த சிறப்பினுடன் திகழும் இயமன், வெங்குரு எனப்படும் தலத்தில் பொருந்தி உறையும் பெருமானை வணங்கி அந்த சிறப்பினை பெற்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.30.3), திருஞானசம்பந்தர், பெருமானை, திருமாலுடன் சேர்ந்தும் பிரிந்தும் இருப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். மகா சங்கார காலத்தில் உலகப் பொருட்களும் உலகத்தில் உள்ள உயிர்களும் முற்றிலும் அழிவதில்லை; அவை இறைவனிடம் ஒடுங்குகின்றன. அவ்வாறு ஒடுங்கும் பொருட்களும் உயிர்களும், இறைவன் உலகத்தை மீண்டும் படைப்பதற்கு திருவுள்ளம் கொள்ளும் போது இறைவனால் விரிக்கப் படுகின்றன. உமிழ்தல்=வெளிப்படுத்துதல்; இதையே விரித்தல் குவித்தல் மற்றும் உமிழ்தல் என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமான் இந்த செயல்கள் அனைத்தும் செய்வதை, விரிந்தனை குவிந்தனை உமிழ்ந்தனை என்று இங்கே குறிப்பிடுகின்றார். விரிந்தனை குவிந்தனை என்ற தொடருக்கு எங்கும் இறைவன் பரந்து இருக்கும் நிலையினையும் மிகவும் நுண்ணியமாக இருக்கும் நிலையினையும் குறிப்பிடுவதாக சிலர் பொருள் கூறுகின்றனர். இந்த தொடரை அடுத்து விழுங்குயிர் உமிழ்ந்தனை என்று கூறுவதால் முதலில் கூறியுள்ள பொருளே, தோற்றுவிப்பது மற்றும் ஒடுக்கும் செயல்களை குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.
குருந்தொசிப் பெருந்தொகை என்று குருந்த மரத்தினை வளைத்து ஒடித்த கண்ணனை (திருமாலை) திருஞான சம்பந்தர், குறிப்பிடுகின்றார். திருமாலின் அவதாரமாகிய மோகினியுடன் பிச்சைப் பெருமானாக இறைவன் தாருகாவனம் சென்றதையும் இங்கே குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. திருமால் அன்னையின் ஒரு அம்சம் என்பதை நாம் மறக்கலாகாது. சக்தி ஒன்றே ஆயினும் பயன் பொருட்டு நான்கு வடிவங்கள் எடுப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. மனைவியாகும் போது பவானியாகவும் (பார்வதி தேவி) கோபம் கொள்ளும் போது காளியாகவும், போர் செய்யும் போது துர்கையாகவும், ஆணுருவம் கொள்ளும் போது திருமாலாகவும் வடிவம் எடுப்பதாக ஆகமங்கள் உணர்த்துகின்றன என்று மூவர் தமிழ் மாலை புத்தகத்தில், இந்த பாடலுக்கு விளக்கம் அளிக்கும் ஆங்கீரச வெங்கடேச சர்மா அவர்கள் கூறுகின்றார். அரியலால் தேவி இல்லை என்ற திருவையாறு பதிகத்தில் அப்பர் பிரான் கூறுவதையும் இந்த கருத்துக்கு ஒரு சான்றாக கூறுகின்றார். பாற்கடலில் தோன்றிய அமுதத்தினை தேவர்கள் மட்டும் உண்ணும் பொருட்டு மோகினியாக உருவம் எடுத்த திருமாலோடு பெருமான் புணர்ந்ததால் ஐயனார் அவதரித்தார் என்று ஸ்காந்த புராணம் உணர்த்துகின்றது. மேலும் தாருகாவனம் சென்ற பெருமான், மோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. உலகெங்கும் பரந்து நிற்பவனும், பிரளய காலத்தில் அனைத்து உயிர்களையும் தனது வயிற்றில் ஒடுக்குபவனும், அவ்வாறு ஒடுங்கும் உயிர்களை தக்க சமயத்தில் வெளிப்படுத்தி மீண்டும் அந்த உயிர்களுக்கு தங்களது மலங்களை கழித்துக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கும் வண்ணம் அவற்றின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப தகுந்த உடலுடன் இணைப்பவனும், தாருகவனத்தில் பிச்சை ஏற்கவும் தனது அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு வேறுவேறு வேடங்களில் வேறுவேறு இடங்களில் திரிந்தவனும், குருந்த மரத்தினை ஒடித்த கண்ணனாகிய திருமாலோடு இணைந்தவனும், பின்னர் அந்த திருமாலிடமிருந்து பிரிந்தவனும், பிணங்கள் புகுகின்ற மயானத்தில் விருப்பமுடன் மகிழ்ச்சியுற நடனம் புரிபவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விரிந்தனை குவிந்தனை விழுங்கு உயிர் உமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.1) திருஞானசம்பந்தர், பெருமானை, ஒரு பாலும் மேனி அரியான் என்று குறிப்பிடுகின்றார். நேரியன்=நுண்ணியன்; ஆகுமல்லன் என்ற தொடரை நேரியன் என்ற சொல்லுடன் மீண்டும் இணைத்து, நேரியன் ஆகுமல்லன் என்று சொற்களை அமைத்துப் பொருள் கொள்ள வேண்டும். மிகவும் நுண்ணியனாக இருக்கும் பெருமான், அளவிடமுடியாத பெரிய உருவம் எடுப்பவனாகவும் உள்ளான் என்பதையே இந்த தொடர் உணர்த்துகின்றது. நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணியனே என்ற திருவாசகத் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. முனாய= முன்+ஆய; அனைத்து உயிர்களுக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் முன்னே தோன்றிய ஆதி மூர்த்தி; கால்=காற்று; உறு தீ=மிகுதியாக எரியும் தீ; இயல் கால்=இயங்குகின்ற காற்று; ஊர் இயல்=ஊரார் இயல்பாக, தாங்களாகவே முன்வந்து இடுகின்ற பிச்சை; நேரியன் என்ற சொல்லுக்கு அனைத்தும் பொருந்தியவன் என்றும் அல்லன் என்ற சொல்லுக்கு ஏதும் இல்லாதவன் என்றும் பொருள் கொண்டு ஒரு சிறப்பான விளக்கம் அளிக்கப் படுகின்றது. அனைத்து உலகங்களும் அவனது உடைமை என்பதால், சிவபெருமான் அனைத்தையும் உடையவனாக இருக்கின்றான்; அதே சமயத்தில் எந்த பொருளின் மீதும் பற்று அற்றவனாக இறைவன் இருக்கும் தன்மை அல்லன் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. அனைத்துச் செல்வங்களும் பெற்றிருந்த போதும், எந்த விதமான பொருளின் மீது பற்றற்றவனாக இருப்பதும் இறைவனின் சிறந்த குணங்களில் ஒன்றாகும்.
நேரியன் ஆகும் அல்லன் ஒரு பாலும் மேனி அரியான் முனாய ஒளியான்
நீரியல் காலுமாகி நிறை வானுமாகி உறு தீயும் ஆய நிமலன்
ஊரியல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நலகண்டு பண்டு சுடலை
நாரியோர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்பன் அவனே
உலகினில் உள்ள அனைத்து பொருட்களினும் மிகவும் நுண்ணியவனாகவும், அதே சமயத்தில் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களினும் மிகவும் பெரிய உருவத்துடன் இருப்பவனும் ஆகிய இறைவனின் திருமேனியின் தன்மையை எவராலும் அறியமுடியாது. அவன் அனைத்துப் பொருட்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவன்; சோதி வடிவமாக உள்ள இறைவன், நீர், இயங்கும் காற்று, நிறைந்த வானம், மிகுதியாக எரிகின்ற தீ மற்றும் உலகம் ஆகிய ஐந்து பூதங்களாக இருப்பவனும், இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து விலகியவனும் ஆகிய இறைவன், ஊரார் இயல்பாக, தாங்களே மனமுவந்து முன்வந்து தருகின்ற பிச்சையை மதித்து ஏற்றுக் கொள்கின்றான். இவ்வாறு பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தருகின்ற பிச்சையாகிய மலங்களை ஏற்றுக்கொள்ளும் பெருமான், தனக்கு இடப்பட்ட பிச்சைக்கு பதிலாக முக்தி நிலையினை அந்த ஆன்மாக்களுக்கு வழங்குவதை உணரும் உலகம் போற்றுகின்றது. பண்டைய நாளில், அனைத்து உலகங்களும் அழிந்த நிலையில், உயிரற்ற உடல்கள் எங்கும் பரவிக் கிடந்து சுடுகாடாக காட்சி அளித்த நிலையில், தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு மாதொருபாகனாக, நடமாடும் வல்லமை வாய்ந்த பெருமான் நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.
தென்குடித் திட்டை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.35.6) திருஞானசம்பந்தர், பெருமானை, மால் கூறினார் என்று குறிப்பிடுகின்றார். ஊறினார்=அனைத்துப் பொருட்களிலும் ஊறி ஆழ்ந்து நிறைந்தவர்; மால்=திருமால்; ஆறினார்=உயிரின் ஆறு குற்றங்கள்; இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற அந்த ஆறு குற்றங்களுக்கு, காமம் குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் என்று உயிரின் உட்பகையாக விளங்கும் ஆறு குற்றங்களுக்கு, ஆர் எனப்படும் மரியாதை விகுதி கொடுத்திருக்கின்றார். பொய்=நிலையானவை என்று பொதுவாக கருதப்படும் பொய்ப் பொருட்கள்; ஐ=ஐந்து புலன்கள்; மெய் தேறுதல்=சிவபெருமானே உண்மையான மெய்ப்பொருள் என்று ஆராய்ந்து தெளிதல்; எய்தி=ஒருமுகப்பட்டு; இந்த தலத்தில் வழிபடும் அடியார்களின் தன்மை குறித்து திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். அனைத்து ஓசைகளிலும் ஒன்றியவர் என்று இறைவனை குறிப்பிடுவது, நமக்கு ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே என்று அப்பர் பிரான் திருவையாறு தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தை நினைவூட்டுகின்றது. உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் உயிர்களிலும் ஆழ்ந்து ஊறி நின்று இயக்கும் செயலை செய்பவர் சிவபெருமான்; அவர் எல்லா விதமான ஒசைகளுடன் ஒன்றியவர்; திருமாலைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவர், குமரவேளின் தந்தையார்; இத்தகைய தன்மைகளை உடைய பெருமான் உறைவது தென்குடித் திட்டை தலமாகும். இந்த இறைவனை, உயிர்களின் உட்பகைகளாக விளங்கும் காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய ஆறு குற்றங்களை அறவே களைந்து, நிலையற்ற பொருட்களின் மீது செல்லும் அவாவினை ஒழித்து, ஐந்து புலன்களின் வழியே மனம் செல்லாதவாறு மனத்தினை அடக்கி, சிந்தனையை ஒருமுகப்படுத்தி, சிவபெருமானே உண்மையான மெய்ப்பொருள் என்பதை தெளிந்து உணர்ந்து, அவரை வழிபடும் அடியார்கள் நிறைந்த தலம் தென்குடித் திட்டையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால்
கூறினார் அமர் தரும் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத்து ஐ உணர்வு எய்தி மெய்
தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே
கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.113.5) திருஞானசம்பந்தர், திருமால் தொடர்ந்து பெருமானின் உடலின் இடது பகுதியில் உறைகிறார் என்று கூறுகின்றார். பெருந்தவம் செய்தவன் என்று பொருள்பட திருமாலை மாதவன் என்று அழைக்கின்றார். முதல் அடியில் உள்ள மாதவன் என்ற சொல் பெரிய தவம் புரிந்த திருமாலையும், தனது புலன்களை அடக்கி தவத்தில் ஆழ்ந்த பெருமானையும் குறிக்கும். கண்டனம் என்றால் வலிமையாக மறுப்பினை தெரிவித்தல்; கண்டனன்=உறுதியாக கண்டனம் செய்பவன்; பகடு=யானை; அரை செய்தல்=கொல்லுதல்; உயிர்களுக்கு உய்வினை அளிக்கும் வழியினை காட்டும் மறைகளை அருளியவன் சிவபெருமான், மூவகை மாயையின் வயப்பட்டு செய்யப்பட்ட புறச் சமயங்களின் கொள்கைகளை வன்மையாக கண்டனம் செய்பவன் சிவபெருமான்; படமெடுத்து ஆடும் பாம்பினைத் தனது இடுப்பில் இறுகக் கட்டியவன் சிவபெருமான்; தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து கொன்றவன் சிவபெருமான்; உயிர்களைத் தொடரும் துயரங்களுக்கு நஞ்சாக செயல்பட்டு அவற்றை முறியடிப்பவன் சிவபெருமான், அவரே தோணிபுரம் தலத்தினில் சிவனாக உறைகின்றார்.
உடன் பயில்கின்றனன் மாதவனே உறு பொறி காய்ந்திசை மாதவனே
திடம் பட மாமறை கண்டவனே திரிகுணம் மேவிய கண்டனனே
படம் கொள அரவு அரை செய்தனனே பகடு உரி கொண்டு அரை செய்தனனே
தொடர்ந்த துயருக்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே
ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், பாதியா உடன் கொண்டது மாலையே என்று குறிப்பிட்டு, திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் பெருமான் ஏற்றுக் கொண்டதை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கோதில்= குற்றமற்ற; தனது உடலில் பாதியாக திருமாலை ஏற்றுக் கொண்ட பெருமான், பாம்பு தவழும் தனது மார்பினில் கொன்றை மாலையை அணிந்துள்ளார். குற்றமற்ற திருநீற்றினை தனது உடலில் பூசிக் கொள்ளும் பெருமான், தனது இடது கையில் மானினை ஏந்தியுள்ளார்; அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகிய பெருமான் தினமும் பசு நெய் கொண்டு விருப்பத்துடன் நீராடுகின்றார்; தன்னை எதிர்த்து வந்த மதயானையை நாடிச் சென்ற பெருமான், அந்த யானையின் தோலினை உரித்து கொன்றார். தனது திருவாயால் வேதங்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும் விகிர்தனாகிய பெருமானின் ஊர், திருவாலவாய் ஆகும் என்பே இந்த பாடலின் பொழிப்புரை.
பாதியா உடன் கொண்டது மாலையே பாம்பு தார் மலர்க் கொன்றை நன் மாலையே
கோதில் நீறது பூசிடும் ஆகனே கொண்ட நற்கையில் மானிடம் ஆகனே
நாதன் நாடொறும் ஆடுவது ஆன் நெய்யே நாடி அன்று உரி செய்ததும் ஆனையே
வேத நூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆல நல்வாயிலே
ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.2.4) பெருமானின் தோற்றத்தை விவரிக்கும் அப்பர் பிரான், இடமால் தழுவிய பாகம் என்று குறிப்பிடுகின்றார். மடமான்=இளமான், மான்மறி=மான் கன்று, பொற்கலை=அழகிய ஆடை, குடமால் வரை=மேற்குத் திசையில் உள்ள பெரிய மலை. குனி சிலைக் கூத்து=வில்லினைப் போல் வளைந்து ஆடும் நடனம்; இளமையான மான் கன்றினை தனது கையில் ஏந்தியவரும், அழகிய தோல் ஆடையினை உடையவரும், ஒரு கையில் மழுப்படையும், மற்றொரு கையில் பாம்பினையும், மற்றொரு கையில் வீணையையும் ஏந்தி இருப்பவரும், மேற்குத் திசையில் காணப்படும் மலை போன்ற திண்மையான தோள்களை உடையவரும், வில் போன்று வளைந்து ஆடும் நடனம் பயில்பவரும் ஆகிய சிவபெருமான் தனது உடலின் இடது பாகத்தில் பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடினை உடைய திருமாலைக் கொண்டுள்ளார். குளிர்ந்த கெடில நதியைத் தீர்த்தமாக உடைய சிவபெருமானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப் போவதும் இல்லை என்று சொல்லியவாறு, தன்னை நோக்கி ஏவப்பட்ட மதயானையை அப்பர் பிரான் எதிர் கொள்கின்றார். அப்பர் பிரானின் அருகில் வந்த யானை, அவரைத் தனது கால்களால் இடறித் தள்ளுவதற்கு பதிலாக அவரை மும்முறை வலம் வந்த பின்னர் அவர் முன்னே நிலத்தில் தாழ்ந்து வணங்கி திரும்பியது. இந்த அதிசயம் பெரிய புராணத்தில் சொல்லப் படுகின்றது.
மடமான் மறி பொற்கலையும் மழுப் பாம்பு ஒரு கையில் வீணை
குடமால் வரைய திண்தோளும் குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாகம் இருநிலன் ஏற்ற சுவடும்
நடமார் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.37.7) அப்பர் பிரான், பெருமானை, மாலொரு பாகமாக மகிழ்ந்த நெய்த்தானனார் என்று குறிப்பிடுகின்றார். திருமாலைத் தனது வாகனமாக ஏற்ற பெருமானது அருட்செயலை இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான் இந்த பாடலில், திருமாலைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டதை குறிப்பிடுகின்றார். குழிய நின்று=பள்ளம் உண்டாகும் வகையில்; தனது கால்கள் அசைவதால் அணிந்துள்ள வீரக் கழல்கள் ஒலியெழுப்ப ஆடும் பெருமான் தனது கையில் கொழுந்து விட்டெரியும் அனலை ஏந்தியுள்ளார். அவர் இவ்வாறு கூத்தாடும்போது, நிலத்தில் பள்ளம் ஏற்படுகின்றது; வானத்தை எட்டும் அளவில் உள்ள அவரது சடை எட்டு திசைகளையும் தொட்டு நிற்கின்றது; இவ்வாறு சிறப்பான நடனத்தை ஆடும் பெருமான், திருமாலினைத் தனது உடலில் மகிழ்ந்து ஏற்ற வண்ணம் நெய்த்தானம் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனலெரி கையில் வீசி
ஞாலமும் குழிய நின்று நட்டமது ஆடுகின்ற
மேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாய
மாலொரு பாகமாக மகிழ்ந்த நெய்த்தானனாரே
கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.43.7) மாயன் தன்னையோர் பாகம் கொண்டவர் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எண்=எண்ணம்; கண்ணனாக அவதாரம் செய்த போது மண்ணினை உண்ட திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; பண்ணுடன் கலந்து இசைப் பாடல்களை பாடும் அடியார்களின் சித்தத்தில் உள்ள பெருமான் மூன்று கண்களை உடையவர் ஆவார். காஞ்சி மாநகரத்தில் உறையும் பெருமான், அடியார்கள் தங்களது எண்ணத்தில் தன்னையே (பெருமானையே) நினைக்கும் வண்ணம் செயல்படும் பெருமான் கச்சி மேற்றளியைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகம் கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியானாரே
திருநாகேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.66.8) அப்பர் பிரான், பெருமானை, திருமாலைத் தனது உடலின் ஒரு பகுதியில் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார். போகம்=இன்பம்: மோடி=துர்க்கை தேவி; கொங்கை=மார்பகம்; அன்னை பார்வதி தேவியுடன் கூடியிருந்து இன்பம் துய்ப்பவன் போன்று இறைவன் நமக்கு காட்சி அளித்தாலும், இறைவன் இன்ப சுகங்களில் ஈடுபடாமல் தூயவனாகவே உள்ளான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு கங்கை கொண்ட சோளேச்சரம் பதிகத்தின் கடைப் பாடலில் கருவூர்த் தேவர் கூறுவதை நினைவூட்டுகின்றது. பார்வதி தேவியோடு எப்போதும் கூடி இருந்தாலும் யோகத்தில் ஆழ்பவன் சிவபெருமான் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல் கங்கை கொண்ட சோளேச்சரம் மீது கருவூர்த் தேவர் அருளிய பதிகத்தின் கடைப் பாடலாகும். இன்பம் தரும் துர்க்கை தேவியின் மார்பகங்களைத் தழுவியவராக காணப்பட்டாலும் புனிதராக உள்ளவர் சிவபெருமான். அவர் விரைந்து செல்லும் காளையைத் தனது வாகனமாகக் கொண்டவர்; வெண்ணீறு அணிந்த தனது மேனியின் ஒரு பாகத்தில் திருமாலை ஏற்றுள்ள பெருமான், மேரு மலையினை வில்லாக வளைத்து, அந்த வில்லுக்கு பொருந்துமாறு வாசுகி பாம்பினை நாணாக உடையவர் ஆவார். அவர் தான் திருநாகேச்சரம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும் வெண்பொடி ஆடும் மேனிப்
பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும்
நாகம் நாண் உடையர் போலும் நாக ஈச்சரவனாரே
ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.78.7) அப்பர் பிரான், பெருமானை, திருமால் ஓர் பங்கன் என்று அழைக்கின்றார். நிவஞ்சகம்=பொய்ம்மை: தேஜஸ் என்ற வடமொழிச் சொல் தேசு என்று திருமுறை மற்றும் திவ்யப் பிரபந்தப் பாடல்களில் தமிழாக்கம் செய்யப் படுகின்றது. தேசு உடையவன் தேசன் என்று அழைக்கப் படுகின்றான். ஒளி உடையவனாகவும், உலகங்கள் புகழும் திருமாலைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றவனும், அனைவராலும் வழிபடப் படுவனும், தூயவனாக விளங்குபவனும், அடியார்களின் உள்ளத் தாமரையில் உறைபவனும், அனைத்து உயிர்களிடத்தும் நேசமாக இருப்பவனும், தனது கையில் தீயினை ஏந்தியவனும், வஞ்சகம், பொய்ம்மை ஆகியவை அற்ற செம்மையான பொருளாக இருப்பவனும் ஆகிய ஈசனை நான் அறியாமல் இருக்கின்றேன். எனவே இந்த பிறவி எடுத்ததால் நான் ஏதும் பயன் அடையவில்லை, இறைவனே, நீ தான் அருள் புரிந்து, உன்னை நான் உணருமாறு செய்து, எனது பிறவியை பயன் உள்ளதாக மாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல்.
தேசனைத் தேசமாகும் திருமால் ஓர் பங்கன் தன்னைப்
பூசனைப் புனிதன் தன்னைப் புணரும் புண்டரீகத்தானை
நேசனை நெருப்பன் தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை அறிய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.27.2) அப்பர் பிரான், பெருமானை, பக்கம் மாலை மகிழ்ந்தனர் என்று கூறுகின்றார். போக-இடர்கள் நீங்குமாறு; தேவர்களின் இடர்கள் நீங்குமாறு கஜமுகாசுரனை அழித்தமை இங்கே உணர்த்தப் படுகின்றது. கோகு= தோள்; குலாயது=விளங்கிச் சூழ்ந்து; தனது உடலின் ஒரு பாகத்தில் திருமாலை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்தவர் சிவபெருமான்; தேவர்களை பல விதமாக துன்புறுத்தி வந்த கஜமுகாசுரனின் செயல்களால் ஏற்பட்ட இடர்கள் நீங்குமாறு, அந்த அரக்கனைக் கொன்று அருள் புரிந்தவர் சிவபெருமான்; தனது தோள்களில் பொருந்தி அழகுடன் விளங்குமாறு கொன்றை மாலைகளை அணிந்துள்ள பெருமான், பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் நெய் முதலான ஐந்து பொருட்களையும் கொண்டு விருப்பமுடன் நீராடுகின்றார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான், திருவையாறு தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பக்கம் மாலை மகிழ்ந்தனர் பால் மதி
போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.68.3) அப்பர் பிரான், பெருமான், மாலினை பாகம் பூண்டவர் என்று குறிப்பிடுகின்றார். பங்கயம்=தாமரை; பங்கயத்தான்= தாமரை மலரில் உறையும் பிரமன்; எயில்=கோட்டை; அழல்=நெருப்பு; சோர=பற்ற; தனது பெரிய புராண விளக்கம் புத்தகத்தில் சிவக்கவிமணி திரு சி.கே. சுப்பிரமணியம் அவர்கள் அழல் சோர என்ற தொடருக்கு அழலினால் சோர்வடைந்து அழிய என்று பொருள் கொள்கின்றார். திருநள்ளாறு தலம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருநள்ளாறு தலத்தில் பெருமான் ஆடும் நடனம் உன்மத்த நடனம் என்று கருதப் படுகின்றது. மற்ற சப்த விடங்கத் தலங்களில் ஆடும் நடனங்கள் பின்வருமாறு; திருவாரூர்–அஜபா நடனம், திருமறைக்காடு-அன்ன நடனம், நாகைக் காரோணம்-அலை வீசி நடனம், திருவாய்மூர்-கமல பாத நடனம், கோளிலி=பிருங்க நடனம், வண்டு நடனம்; திருக்காறாயில்-குக்குட நடனம், மயில் நடனம்; திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளில் உள்ளவர்கள் வருத்தம் அடையும் வண்ணம் கோட்டைகளை நெருப்பு பற்றுமாறு, மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்து இருக்கும் மேரு மலையை வில்லாக வளைத்துத் தொட்டவன் சிவபெருமான். அவனது உடலில் ஒரு பாகத்தில் உள்ள திருமால் மற்றும் தாமரை மலரில் அமரும் பிரமன் ஆகிய இருவராலும் வழிபடப்படும் பெருமான், நாகத்தை அணிகலனாகத் தனது உடலில் அணிந்து நடனம் ஆடுபவனாக உள்ளான். அத்தகைய இறைவன் தான் திருநள்ளாறு தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மேகம் பூண்டதோர் மேரு வில் கொண்டு எயில்
சோகம் பூண்டு அழல் சோரத் தொட்டான் அவன்
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு
நாகம் பூண்டு கூத்தாடு நள்ளாறனே
மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.23.7) அப்பர் பிரான், பெருமானை, மாலையோர் கூறுடைய மைந்தன் என்று கூறுகின்றார். மைந்தன்=வலிமை வாய்ந்தவன்; பரவை=கடல்: ஆலை=ஆல்+ஐ=மிகுந்த அழகு; தடவு=அளாவும்; வேலை=கடல்; துன்பம் என்ற பொருளினைத் தரும் அலை என்ற சொல் ஆலை என்று திரிந்ததாகவும் கூறுவார். தக்கன் செய்த வேள்வியில் பங்கேற்ற பலருக்கும் துன்பமே மிஞ்சியதால், பலருக்கும் துன்பத்தினை சேர்த்த வேள்வி என்று கூறுவதும் பொருத்தமே. பாற்கடலிலிருந்து திரண்டெழுந்த நஞ்சினைத் தனது கழுத்தில் தேக்கியவனும், விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த கயிலை மலையை உடையவனும், மிகுந்த அழகுடன் விமரிசையாக செய்யப்பட்ட தக்கனது வேள்வியினை அழித்தவனும், தேவர்கள் அனைவராலும் புகழப் படுவானும், பசுவிலிருந்து கிடைக்கப்பெறும் பால், நெய், தயிர் கோமியம் சாணம் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடுவானும், பருப்பதம் தலத்தில் உறைபவனும், கடலின் நிறத்தில் தனது திருமேனியை உடைய திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும் ஆகிய இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள் தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்
பால் நெய் சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.24.5) அப்பர் பிரான், பெருமானை, சீரேறு திருமாலோர் பாகத்தான் என்று அழைக்கின்றார். கார்=மேகம்; குடுமி=உச்சி. மேகங்கள் தவழும் உயர்ந்த உச்சியைக் கொண்ட கயிலை மலையை உடையவனும், ஆலகால விடத்தை உண்டதால் ஏற்பட்ட கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவனும், நெற்றியில் கண்ணை உடையவனும், போர்க் குணம் கொண்டதும் தனது வாகனமும் ஆகிய எருதினைத் தனது கொடியில் வைத்து உயர்ந்த இடத்தை அளித்தவனும், புண்ணியத்தின் உருவமாக விளங்குபவனும், எண்ணற்ற அரிய பல குணங்களை உடையவனும், நீரினை வற்றச் செய்யும் தீப்பொறிகளை உமிழும் சூலப் படையை உடையவனும், இயல்பாகவே மலங்கள் அற்றவனும், தனக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாத தன்மையை உடையவனும், சிறப்பு மிக்க திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் ஆகிய திருவாரூர் பெருமான் எனது சிந்தனையில் நிறைந்து உள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
காரேறு நெடுங்குடுமிக் கயிலாயன் காண் கறைக் கண்டன் காண் கண்ணார் நெற்றியான் காண்
போரேறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான்காண் புண்ணியன்காண் எண்ணரும் பல் குணத்தினான் காண்
நீரேறு சுடர்ச் சூலப் படையினான் காண் நின்மலன் காண் நிகரேதும் இல்லாதான் காண்
சீரேறு திருமாலோர் பாகத்தான் காண் திருவாரூரன் காண் அவன் என் சிந்தையானே
வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.8) அப்பர் பிரான், திருமால் பாகம் வேண்டினான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். உரு=இடி; ஈண்டு புனல்=மிகுந்த நீர்; உலகங்கள் தோன்றுவதற்கு முன்னே இருந்தவனும், உலகங்கள் ஒடுங்கிய பின்னரும் இருப்பவனும், மூப்பு அடையாது என்றும் ஒரே நிலையில் இருக்கும் திருமேனியை உடையவனும், அனைத்து பொருட்களுக்கும் முதலாகவும் முடிவாகவும் இருப்பவனும், சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று சோதிகளைப் போன்றவனும், அடியார்களுக்கு மிகவும் அருகில் இருப்பவனும், அடியார்கள் அல்லாதவர்க்கு மிகவும் தொலைவில் இருப்பவனும், எல்லையற்ற ஒளி உடைய மின்னல் போன்று பிரகாசம் உடையவனும், இடியாக இருந்து மழை பொழிவதற்கு காரணமாக இருப்பவனும், திருமாலின் வேண்டுகோளை ஏற்று அவனைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்தவனும், மிகுந்த நீரினை உடைய கங்கையைத் தனது சடையில் ஏற்று கங்கை மணாளனாக இருப்பவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான். என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதலவன் காண் முடிவவன் காண் மூன்று சோதி
அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவில் சோதி
மின்னவன் காண் உருமவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும்
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.2) அப்பர் பிரான், பெருமானை நாரணனை இடப்பாகத்து அடைத்தார் என்று குறிப்பிடுகின்றார். சமரம்=போர்; குறைத்த=அழித்த; நமன்=இயமன்; தனக்கு இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் பயந்து ஓடியதால் தன்னை எதிர்த்து போரிடுவார் எவரும் இல்லாத நிலையில், தனது தோள் தினவு காரணமாக, சிவபெருமானுடன் போர் செய்ய வேண்டும் என்று திரிந்தவன் அரக்கன் சலந்தரன். இதனை உணர்த்தும் வண்ணம் போர் வேண்டினான் என்று அரக்கனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். குழகர்=இளமையும் அழகும் பொருந்தியவர். பல போர்களில் வெற்றி கொண்டவனாய், தன்னை எதிர்த்து போரிடுவார் எவரும் இல்லாத நிலையில், சிவபெருமானுடன் போர் புரியும் எண்ணத்துடன் அவரைத் தேடி அலைந்தவன் அரக்கன் சலந்தரன். அத்தகைய வலிமை வாய்ந்த அரக்கனை எதிர்கொண்டு அவனது உடலை சக்கரத்தால் பிளந்தவர் சிவபெருமான்; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை, தனது காலால் உதைத்து அழித்தவர் சிவபெருமான்; திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; குமரனை தனது மகனாக உடையவரும், அடர்ந்த சோலைகள் நிறைந்து குளிர்ச்சியுடன் காணப்படும் திருவீழிமிழலையின் திருக்கோயிலில் அமர்ந்துள்ள குழகரும், பின்னால் தோன்றப் போகும் அமுதத்தை அமரர்கள் உண்ணவேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கு முன்னே பொங்கி எழுந்த நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவன் அடியேனை ஆட்கொண்டு அருள் புரிந்தவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும்
குமரனையும் மகனாக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும்
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.58.3) அப்பர் பிரான், திருமாலை பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றதை குறிப்பிடுகின்றார். படைப்புக் காலத்தில், தனது உடலின் இடது பாகத்தில் திருமாலைத் தோற்றுவித்து, பின்னர் அவர் மூலம் பிரமனை தோற்றுவித்து, படைப்புத் தொழிலினைத் தொடங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. தீக்கூரும்=நெருப்பு மிகுந்து எரிவது போன்று தோன்றும்; அரி=திருமால்; தன்னிடம் ஆக்கூர் செல்வதாக கூறிய பெருமான், அந்த இடத்திற்கு செல்லாமல் வலம்புரம் தலத்திற்கு சென்றதாக அப்பர் நாயகி இந்த பாடலில் கூறுகின்றாள். தான் செல்வதாக சொன்ன இடத்திற்கு செல்லாமல், வேறு ஒரு இடத்திற்கு சென்ற பெருமான் வஞ்சகம் புரிந்ததாகவும் மாயம் பேசியதாகவும் கூறுகின்றாள். இவ்வாறு அவர் செய்த செயல், அவரது வேடத்திற்கு சற்றும் பொருந்தாத செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், அவரது திருக்கோலத்தினை இந்த பாடலின் மூன்றாவது மற்றும் நான்காவது அடிகளில், அப்பர் நாயகி குறிப்பிடுகின்றாள். ஆக்கூர் அருகில் உள்ள ஒரு தலம். நெருப்பு மிகுந்து எரிவது போன்ற சிவந்த நிறத்தை உடலின் ஒரு பகுதியிலும், திருமாலின் நிறத்தை உடலின் மற்றோர் பாகத்திலும் கொண்டு திகழும் பெருமான், என் கண் முன்பாக ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடக் கோயிலுக்குச் செல்வது போன்று போக்கு காட்டிய பின்னர், நான் அந்த இடத்தை விட்டு மறைந்த பின்னர் வேறு எங்கும் நோக்காமல், வலம்புரம் சென்று விட்டார். பூணூலும் மான்தோலும் மார்பில் பொருந்தியவராய், தனது உடலெங்கும்வெண்ணீறு பூசியவராய், தனது வாயால் வேதங்கள் பேசிய பெருமான் தனது தோற்றத்திற்கு பொருந்தாத வகையில் மாய வார்த்தைகள் பேசி, வலம்புரம் திருக்கோயிலின் உள்ளே சென்று அங்கே நிலையாக தங்கிவிட்டார்
தீக்கூரும் திருமேனி ஒருபால் மற்றை ஒரு பாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றிப்புகுவார் போல் வருவினையேன் செல்வதுமே அப்பால் எங்கும்
நோக்கார் ஒரு விடத்து நூலும் தோலும் துதைந்து இலங்கும் திருமேனி வெண்ணீறு ஆடி
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே
கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.7) அப்பர் பிரான், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மகா சங்கார காலத்தில் உலகப் பொருட்களும் உலகத்தில் உள்ள உயிர்களும் முற்றிலும் அழிவதில்லை; அவை இறைவனிடத்தில் ஒடுங்குகின்றன. அவ்வாறு ஒடுங்கும் பொருட்களும் உயிர்களும், இறைவன் உலகத்தை மீண்டும் படைப்பதற்கு திருவுள்ளம் கொள்ளும் போது இறைவனால் விரிக்கப் படுகின்றன. உமிழ்தல்=வெளிப்படுத்துதல்; இதையே குவித்தல் மற்றும் உமிழ்தல் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அத்தகைய செயல்களை செய்யும் இறைவனை, விரிந்தான் என்றும் உமிழ்ந்தான் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார். பண்டான்=பண்டையன்; குவித்தல்=ஒடுக்குதல்; உடையான்= உரிமையாளன், விண்டான்= நீங்கியவன்; உலகமெல்லாம் உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை என்ற தொடருக்குதிருமாலை உடலின் ஒரு பாகத்தில் உடையவன் என்று சிலர் பொருள் கூறுகின்றனர். கண்ணனாக அவதாரம் செய்த காலத்தில், மண்ணை உண்ட திருமால், தனது அன்னை யசோதை பிராட்டி, வாயைத் திறந்து காண்பிக்குமாறு மிரட்டிய தருணத்தில், தனது வயிற்றில் உலகம் இருப்பதை காட்டிய நிகழ்ச்சியாக குறிப்பிட்டு திருமால் என்று விளக்கம் கூறுவது பொருத்தம் தானா என்பது சிந்தனைக்கு உரியது. மேலும் குவிந்தானை என்ற சொல்லுடன் இணைத்துப் பார்க்கும்போது உலகத்தை ஒடுக்கிய செயலையே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றிய பண்டையனும், உலகெங்கும் பரந்து இருப்பவனும், மகா சங்கார காலத்தில் அனைத்து உயிர்களையும் உலகப் பொருட்களையும் ஒடுக்குபவனும், அவ்வாறு ஒடுக்கியவற்றை உட்கொண்டு தனது வயிற்றினில் அடக்கியவனும், பின்னர் உலகத்தினை மீண்டும் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் தருணத்தில் அனைத்து உயிர்களையும் உலகப் பொருட்களையும் வெளிப்படுத்துவானும், உலகம் உலகப்பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் தனது உடமையாக கொண்டுள்ளவனும், எவராலும் அறிய முடியாத வண்ணம் பெருமை உடையவனாக அனைவரின் அறிவுக்கும் அப்பாற்பட்டவனாக விளங்குபவனும், சிவநெறியை விட்டு நீங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் கொடிய தீயினில் அகப்பட்டு பொடியாக மாறும் வண்ணம் அம்பினை எய்தவனும், அனைவர்க்கும் மேலானவனும் ஆகிய இறைவன் கற்குடி தலத்தில் கற்பகமாக எழுந்தருளி இருப்பதை அடியேன் எனது கண்களால் கண்டு உய்ந்தேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் தன்னைப் பாரானை விண்ணாய் இவ்வுலகம் எல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை ஒருவரும் தன் பெருமை தனை அறிய ஒண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் வெவ்வழலில் வெந்து பொடியாகி வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.76.1) அப்பர் பிரான், பெருமானை, திருமாலோர் பாகத்தான் என்று அழைக்கிறார். புரிந்து=விரும்பி; தக்கோன்=தகுந்தவன்; விடைப்பாகன்=விடையை வாகனமாகக் கொண்டு செலுத்துபவன்; விரை=நறுமணம்; தீர்த்தன்= முனிவன்; பிரமனின் சிரத்தை அரிந்த நிகழ்ச்சியுடன் தீர்த்தன் என்ற சொல்லினை இணைத்து, முனிவனாக இருந்தமையால் தான் பெருமான், பிரமனை கொல்லாமல் அவனது தலையினை மட்டும் கொய்தான் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். கொல்லாமை என்பது முனிவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாக கருதப் படுகின்றது. திருந்து வயல்=பண்படுத்தப் பட்ட வயல்; தளி என்றால் கோயில் என்று பொருள். இலக்குமி தேவி வழிபட்டதை உணர்த்தும் வகையில் திருத்தளி என்ற பெயர் வந்தது. திருப்புத்தூர் என்றது பண்டைய பெயர். புற்றினில் அமர்ந்து வான்மீகி முனிவர் வழிபட்டமையால் திருபுற்றூர் என்ற பெயர் வந்ததாகவும் நாளைடைவில் அந்த பெயர் திருப்புத்தூர் என்றும் திருப்பத்தூர் என்று மருவியதாகவும் கூறுவார்கள். தற்போது திருப்பத்தூர் என்று இந்த தலம் அழைக்கப் படுகின்றது. தலத்து இறைவனின் திருநாமம், திருத்தளி நாதர், திருத்தளி ஈசன் என்பதாகும். அந்த பெயரினை சற்று மாற்றி, திருத்தளியான் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்து பாடல்களில் குறிப்பிடுகின்றார். இறைவனைத் தவிர்த்து ஏனையோரைப் புகழ்ந்து சொல்லப்படும் சொற்கள், பொருள் சேராதவையாக உள்ளமை பற்றியும், இறைவனைப் புகழ்ந்து கூறும் சொற்களே பொருள் பொதிந்த சொற்களாக இருப்பமை குறிப்பிட்டும், புகழ்ச் சொற்களுக்கு தகுந்தவன் இறைவன் ஒருவனே என்று உணர்த்தும் பொருட்டும் புகழ் தக்கோன் காண் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இறைவனது பெருமையை புரிந்து கொண்ட தேவர்கள் அவனைத் தொழுது வணங்கி அவனைப் புகழ்கின்றனர். இவ்வாறு அவர்கள் புகழ்வதற்கு தகுதி உள்ளவனாக இருப்பவனும், போர்க் குணம் கொண்ட இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டு எங்கும் செலுத்த வல்லவனும், ஏழு உலகங்களையும் படைத்தவனும், முற்றூழிக் காலத்தில் தனது வயிற்றில் ஒடுங்கிய அனைத்து உயிர்களையும் விரித்தவனும், அவ்வாறு தான் விரித்த உயிர்களுடன் கலந்து விளங்குபவனும், நறுமணம் வீசும் கொன்றை மாலையினைத் தனது தலையில் சூடியவனும், நான்கு வேதங்களையும் தெரிந்து கொண்டு முன்வந்து படைப்புத் தொழிலை ஏற்றுக் கொண்ட பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை கொய்தவனும், சிறந்த முனிவனாக இருப்பவனும், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனும் ஆகிய பெருமான், நன்றாக பண்படுத்தப் பட்ட வயல்கள் சூழ்ந்த திருப்புத்தூர் தலத்தில் திருத்தளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் திருத்தளியான் என்ற திருநாமத்துடன் உறைகின்றான். அவனே எனது சிந்தையில் நிறைந்து காணப் படுகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும்
விரிந்து பல உயிராக விளங்கினான் காண் விரைக் கொன்றைக் கண்ணியான் காண் வேதம் நான்கும்
தெரிந்து முதல் படைத்தோனைச் சிரம் கொண்டான் காண் தீர்த்தன் காண் திருமாலோர் பாகத்தான் காண்
திருந்து வயல் புடை தழுவு திருப்புத்தூரில் திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே
கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.81.8) அப்பர் பிரான், கண்ணனை குடமாடி என்று குறிப்பிட்டு, குடமாடியை தனது உடலின் இடது பாகத்தில் கொண்டவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பன்னகம்=நாகம்; கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், கோபிகளுடன் ஆடிய கூத்தின் ஒரு வகை குடமாடுக் கூத்து; அத்தகைய கூத்து ஆடிய கண்ணனை குடமாடி என்று குறிப்பிடுகின்றார். கடம்=மதம்; கடமாடு களிறு=மத யானை; தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவிய காட்டு யானை; மேயான்=நிலையாக பொருந்தி இருப்பவன்; நாதன்-தலைவன், நாத தத்துவத்தில் பொருந்தி உள்ளவன் என்று இரண்டு பொருள்களும் பொருந்தும்.
படமாடு பன்னகக் கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி ஏழுலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்
குடமாடி இடமாகக் கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே
ஒரு பொது பதிகத்தின் பாடலில் (6.96.3) அப்பர் பிரான், பெருமானை, மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார் என்று குறிப்பிடுகின்றார். முடி=சடைமுடி; தேவர்கள் அணிந்துள்ள மணி முடிகளை முதல் இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, பெருமானின் முடி குறித்த நினைவு வந்தது போலும். ஏனையோரிடமிருந்து பல தன்மைகளில் மாறுபட்டு விகிர்தனாக காட்சி தரும் பெருமான், மற்றவர்களைப் போன்று கிரீடம் ஏதும் அணியாமல், பெருமானது சடையே முடியாக விளங்கும் வண்ணம் காட்சி அளிப்பதை இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முளை=முளைத்த; அலம்பு=ஒலிக்கின்ற; ஆர்க்க=ஒலி செய்ய; மூசு=மொய்க்க, தனது படத்தினால் மறைக்க; வடி=கூர்மை; தனது சடையையே முடியாக கொண்டவரும்,. வானில் முளைத்த வெண்பிறைச் சந்திரனையும், சந்திரனை மறைக்கும் வண்ணம் படம் எடுக்கும் பாம்பினையும் தனது சடையில் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டவர் பெருமான். ஒலிக்கும் தன்மை வாய்ந்த சிலம்பினையும் ஓசை எழுப்பும் கழலையும் தனது பாதங்களில் கொண்டுள்ள பெருமான், அடங்காத முயலகனையும் அடக்கித் தனது காலின் கீழே வைத்துக் கொண்டார்; கூர்மையான முனைகளை கொண்டதாக விளங்கும் மழு ஆயுதத்தைத் தனது வலது கையினில் கொண்டுள்ள பெருமான், தனது உடலின் இடது பாகத்தில் திருமால் பொருந்தும் வண்ணம் கொண்டுள்ளவர் ஆவார்; அவர் துடி இசைக் கருவியை தனது வலது கையில் வைத்துள்ளார், பிரளய காலத்தில் இறந்த திருமால் மற்றும் பிரமனது உடல்களைத் தனது தோள் மேல் வைத்துக் கொண்டார்; அவர் என்னை வருத்திய சூலை நோயினைத் தீர்த்து, அடியேனைத் தனது அடிமையாக ஏற்றுக் கொண்டார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இளநாகம் உடனாக் கொண்டார்
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ் கொண்டார்
வடி கொண்டு ஆர்ந்து இலங்கு மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே
இடையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.31.9) சுந்தரர், பெருமானை, திருமாலோர் கூறன் என்று குறிப்பிடுகின்றார். கோவல்=கோவல் வீரட்டம்; பேறன்=எல்லா உயிர்களும் சென்றடைய விரும்பும் வீடுபேறாக உள்ளவன்; தேறன்=தெளிந்த சிந்தை உடையவன்; கோன்=தலைவன், இங்கே கணவன் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏறு=இடபம்; ஏறன்=இடபத்தை உடையவன்; எய்த மான்=எய்த அம்மான்; அனைத்து உயிர்களிலும் பொருந்தி இயக்கும் பெருமான்.
பேறனூர் பிறைச் சென்னியினான் பெருவேளூர்
தேறனூர் திருமாமகள் கோன் திருமாலோர்
கூறனூர் குரங்காடுதுறை திருக்கோவல்
ஏறனூர் எய்த மான் இடையாறு இடைமருதே
கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் சுந்தரர் (7.80.1) பெருமானை, நத்தார் புடை ஞானன் என்று கூறுகின்றார். நத்து=சங்கு; நத்தார்=சங்கினை ஆயுதமாகக் கொண்ட திருமால்; புடை=சூழ்ந்த; நத்தார் புடை என்ற சொல் பாடபேதமாக நத்தார் படை என்றும் பல பதிப்புகளில் காணப் படுகின்றது. பெருமானுடன் இருப்பதை விரும்பும் பூதப் படை என்று பொருள். கவுள்=யானையின் கன்னம்; பத்து ஆகிய தொண்டர் என்ற தொடருக்கு, சிறந்த பத்து குணங்களை உடைய அடியார்கள் என்று பொருள் கொள்வது பொருத்தம். பத்து கொலாம் அடியார் செய்கை தானே என்ற அப்பர் பிரானின் திருவாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது. சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபெருமானின்திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபெருமானின் புகழைக் கேட்கும் போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்
நத்தார் புடை ஞானன் பசுவேறிந் நனை கவுள் வாய்
மத்தம் மதயானை உரி போர்த்த மணவாளன்
பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல்
செத்தார் எலும்பு அணிவான் திருக் கேதீச்சரத்தானே
பொழிப்புரை;
மண்ணும் விண்ணும் தனது பேருருவத்தின் பாகமாகக் கொண்டுள்ள பெருமான், மண் விண் ஆகிய அவையிரண்டினையும் படைத்த பிரமனையும் தனது பேருருவத்தின் பாகமாக உடையவர் ஆவார். அவர் திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றவராவார். வேதங்களை முதன் முதலில் சொல்லி உலகுக்கு அருளியவர் என்பதால், வேதங்களைத் தனது உடைமையாகக் கொண்டவர் சிவபெருமான். அவர் இயற்கையாகவே மலங்களின் பிணைப்பிலிருந்து நீங்கியவர். நெற்றிக்கண்ணின் வலது பகுதியை மட்டும் தனது உடைமையாகக் கொண்டவர் சிவபெருமான். அவர் கங்கை நதியினைத் தனது சடையினில் மறைத்து வைத்தவர். உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்ட பெருமான், பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக, என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 2:
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல் 1 தொடர்ச்சி மற்றும் பாடல் 2 (திதே 0647)
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0648)
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினாள் ஒரு கங்கைக்
கன்னிகளின் புனையோடு கலை மதி மாலை கலந்த
பின்னு சடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
விளக்கம்:
இந்த பாடலில் பின்னுசடைப் பெருமானார் என்று இறைவனை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். மூலவர் இலிங்கத்தின் பின்புறத்தில் சடை போன்ற அமைப்பு காணப் படுகின்றது. அந்த அமைப்பினை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். கலை மதி=வளரும் கலைகளை உடைய சந்திரன். தக்கனின் சாபத்தினால், தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து முற்றிலும் அழியக்கூடிய நிலையில் ஒற்றைப் பிறையுடன் பெருமானிடம் சரண் அடைந்த சந்திரன் அழியாமல் மறுவாழ்வு பெற்று, வளரும் கலைகளை உடைய சந்திரனாக மாறிய நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. துன்னு=நெருங்கிய:
புனை=துணை நதிகள்; தேவலோகத்திலிருந்து கீழே இறங்கி வந்த கங்கை நதியினை, பெருமான் தனது சடையில் ஏற்றார் என்று புராணங்களும் தேவாரப் பதிகங்களும் உணர்த்துகின்றன. எனவே அந்த நிலையில் துணை நதிகள் ஏதும் கங்கைக்கு இல்லை. அவ்வாறு இருக்கையில் திருஞானசம்பந்தர் துணை நதிகளின் நீரினோடும் கங்கையைத் தனது சடையில் பெருமான் ஏற்றுக் கொண்டார் என்று கூறுவது பொருந்துமா என்ற சிந்தனை தோன்றுகின்றது. இந்த சிந்தனைக்கு விடை அப்பர் பெருமான் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.65.7) உள்ளது. தேவலோகத்திலிருந்து கீழே இறங்கி வருவதற்கு விருப்பம் ஏதுமின்றி, வேண்டா வெறுப்பாக கீழே இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட கங்கை, ஆயிரம் கிளைகளாக பிரிந்து மண்ணுலகினை புரட்டிக் கொண்டு கடலில் சேர்க்கும் எண்ணத்துடன் கீழே இறங்கியது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு மிகுந்த ஆவேசத்துடன் கங்கை நதி கீழே இறங்கிய போதிலும் சிவபெருமானின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டிருந்த தேவர்கள் ஐயம் ஏதும் இல்லாதவர்களாக, இந்த நிகழ்ச்சியைக் கண்ட தேவர்கள் பெருமானைப் புகழ்ந்து வாழ்த்தினார்கள் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். மை=குற்றம்: மையறு=குற்றமற்ற; குற்றமற்ற மனத்தினை உடைய பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்பதற்காக சிவபிரான் ஒப்புக்கொண்டார்: மிகவும் வேகமாக, ஆயிரம் கிளைகளுடன் கங்கை நதி கீழே இறங்கி வந்த போது, உலகத்தையே புரட்டி பாதாளத்திற்கு கொண்டு செல்வது போல் வேகமாக வந்தது. ஆனால் சிவபெருமானின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டிருந்த தேவர்கள் ஐயம் ஏதும் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப கங்கை நதியைத் தனது சடையில் அடக்கிய சிவபெருமானை தேவர்கள் வாழ்த்தினார்கள்: அத்தகைய ஆற்றல் படைத்தவர் தான் சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகமதாகி
வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே
திருப்பூவணம் தலம் சென்ற அப்பர் பிரானுக்கு பெருமான் தனது நடனக் காட்சியையும் பலவிதமான தோற்றங்களையும் காட்டினார் என்று பெரிய புராணம் உணர்த்துகின்றது. தான் கண்ட காட்சிகளை, அப்பர் பிரான் வடிவேறு திருசூலம் என்று தொடங்கும் பதிகத்தின் (6.18) பாடல்களில் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில், கங்கையைத் தனது சடையில் ஏற்ற கோலத்தை பெருமான் தனக்கு காட்டியதை அப்பர் பிரான், பதிவு செய்கிறார். அந்த கோலத்தினை பாடலாக பதிவு செய்த அப்பர் பிரான், ஆயிரம் முகங்களுடன் கங்கை நதி வானில் தோன்றியதாக கூறுகின்றார். மயலாகும் அடியார்=வேறு ஒன்றும் தோன்றாமல் ஈசனிடத்தில் அன்பு மட்டும் வெளிப்படுத்தும் அடியார்கள்; கலுழி=பெருக்கம்; பொற்பு=பொலிவு, அழகு, புன்சடை=செம்பட்டை நிறம் கொண்ட சடைமுடி; சோலைகள் சூழ்ந்த திருப்பூவணத்துப் புனிதரின் திருவுருவத்தில், சிவபிரானிடத்தில் பேரன்பு வைத்த அடியார்களுக்கு அவர் அருள் புரியும் செயல்கள் தோன்றும்; அழுக்கற்ற சடையில் உள்ள சந்திரன் தோன்றும்; பிச்சை ஏற்கும் அவருக்கு, அடியார்கள் பிச்சை இடும் தோற்றம் தெரிகின்றது; பெரிய கடலிலிருந்து எழுந்த நஞ்சு உண்டதால், கருத்து காணப்பட்ட கழுத்து தோன்றுகின்றது; மிகுந்த ஆரவாரத்துடன் பெருத்த வெள்ளமாக ஆயிரம் முகங்களைக் கொண்டு கீழே இறங்கிய கங்கை நதியை, வானில் தோன்றிய புயல் மழை போல் விளங்கிய கங்கை நதியை. ஏற்றுக் கொள்வதற்காக தனது சடையை விரித்திருக்கும் அழகிய தோற்றம் தோன்றுகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மயலாகும் தன்னடியார்க்கு அருளும் தோன்றும் மாசிலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும் இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்
கயல் பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை ஆயிரமா முகத்தினோடு வானில் தோன்றும்
புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
பெருமானின் விசுவரூபத்தின் முன்னர், ஆயிரம் முகங்கள் என்ன, அதற்கும் அதிகமான முகங்களுடன் கங்கை நதி பாய்ந்தாலும் அதனை சடையில் ஏற்றுக் கொண்டு தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றவர் சிவபெருமான். ஒரு புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி போன்று, ஆயிரம் முகங்களுடன் பாய்ந்த கங்கை நதியை, பெருமான் தனது சடையினில் ஏற்றுக் கொண்டார் என்று அப்பர் பிரான் வீழிமிழலை தலத்து பதிகத்து பாடல் ஒன்றினில் (6.50.10) கூறுகின்றார். பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை அறுத்தவனும், கயிலை மலையின் பரந்த நிலையைக் கண்டு அச்சம் ஏதும் கொள்ளாமல் மலையினை பேர்த்து எடுப்பேன் என்று முயற்சி செய்த அரக்கன் இராவணனின் தோள்களை மலையின் கீழே அழுத்தி அரக்கனது வலிமையை அடக்கியவனும், பின்னர் அரக்கன் தனது நரம்புகளைக் கொண்டு சாமகானம் இசைத்த போது அதனை கேட்டு மகிழ்ந்து பல வரங்கள் அளித்த கருணையாளனும், தக்க யாகத்தினில் பங்கேற்ற சந்திரனைத் தனது காலினால் தேய்த்தவனும், சூரியனின் பற்களை பேர்த்தவனும், பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கை நதியைத் தனது சடையில் தாங்கியவனும். தனது நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தைத் தாங்க முடியாமல் தனது கைகளை உதறிய உமையம்மையின் விரல்களிலிருந்து வெளிப்பட்ட வியர்வை ஆற்றினைத் தனது சடைமுடி ஒன்றின் நுனியில், புல்லின் நுனியில் அமரும் பனித்துளி போல் தாங்கி அடக்கியவனும் ஆகிய பெருமான் திருவீழிமிழலை தலத்தில் உறைகின்றார். இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய திருவீழிமிழலைப் பெருமானை அணுகி அவனை வழிபடாமல் நிற்கும் மாந்தர்கள் தங்களை அறியாமலே, தீயநெறிக்கு சென்று கெடுகின்றார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை எழுநரம்பின் இசை கேட்டானை இந்துவினைத் தேய்த்தானை இரவி தன் பல்
பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப் பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆங்குச்
செறித்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (4.73.4) ஒன்றிலும் பல முகங்களாக பிரிந்து கங்கை நதி கீழே இறங்கியதாக அப்பர் பிரான் கூறுகின்றார். வெஞ்சின முகங்கள் என்று குறிப்பிட்டு, இவ்வாறு கங்கை நதி பிரிந்து பாய்ந்தது அவள் கொண்டிருந்த கோபத்தினால் தான் என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அனேக காலம் தவம் செய்தான் என்று பகீரதன் செய்த தவத்தை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முதலில் தேவலோகத்தில் இருந்த கங்கை நதியை பூமிக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரமனை நோக்கித் தவம் செய்த பகீரதன், பின்னர் பிரமனின் ஆலோசனைப் படி, கீழே இறங்கும் கங்கையைத் தாங்க வேண்டும் என்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான், பின்னர் சிவபெருமானின் தலையில் சிக்குண்ட கங்கை நீரை மெல்ல விடுவிக்க வேண்டும் என்று மறுபடியும் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். சிவபெருமானின் சடையில் இருந்த இறங்கிய கங்கை, தான் செல்லும் வழியில், ஜஹ்னு என்ற முனிவரின் ஆசிரமத்தை அழித்துவிட, கோபம் கொண்ட முனிவர் கங்கை நதியை, ஒரு சிறு துளியாக மாற்றி குடித்து விட்டார். பின்னர் அவரையும் வேண்டி கங்கை நதியை பகீரதன் வெளிக் கொணர்ந்து, பாதாள லோகம் வரை அழைத்துச் சென்று, தனது மூதாதையர்கள் சாம்பலை கங்கை நீரில் கரைத்து அவர்களுக்கு விமோசனம் அளித்தான். இந்த வரலாறு, வால்மீகி இராமயணத்தில் மிகவும் விவரமாக, விஸ்வாமித்திரர் இராமருக்கு கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு பலமுறை, தவம் செய்த பகீரதனை அநேக காலம் வஞ்சனை இல்லாத தவங்கள் செய்தான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தனது ஐந்து புலன்களையும் அடக்கி, ஐந்து தீக்களை வளர்த்து அதனிடையே நின்று பல ஆண்டுகள், வஞ்சனை ஏதும் இல்லாமல், தனது மூதாதையர்கள் கடைத்தேற வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் தவம் செய்த பகீரதனின் தவத்தினால் தேவலோகத்திலிருந்து கீழே கங்கை நதி பாய்ந்தது. ஆனால் தேவலோகத்தை விட்டுத் தன்னை பிரித்ததால் ஏற்பட்ட கோபத்துடன், பல கிளைகளாகப் பிரிந்த கங்கை மிகுந்த வேகத்துடன், பூமியையே கரைத்து, பாதாள லோகத்திற்கு அடித்துச் செல்வது போல் கீழே இறங்கியது. இவ்வாறு மிகுந்த வேகத்துடன் இறங்கிய கங்கை நதியை தனது சடையில் ஏற்ற சிவபெருமான், கங்கை நதி சீராக மண்ணுலகில் பாயுமாறு செய்தார். இவ்வாறு எவர்க்கும் துன்பம் ஏற்படாத வண்ணம் கங்கை நதியை வழி நடத்தியவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம்
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்களாகி விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை ஏற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
அலையலையாக பரந்து வந்த கங்கை நதி என்று கருப்பறியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.31.9) திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நிரந்து=வரிசையாக முறையாக; பரந்து=பரவி; மேல்மிசை=மேலிடத்தில்; கரந்து=ஒளித்து; நிரந்தரம்=எப்போதும்; நேடி=தேடி; முதலில் ஒளித்தவனாக இருந்தாலும் பின்னர் அருள் புரிந்து வெளிப்படச் செய்தவன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒளிக்கப் பட்ட கங்கை நதி பின்னர் சிறிது சிறிதாக, அவனது அருளால் வெளிப்படுகின்றது. பிரமனும் திருமாலும் தங்களது செருக்கினை ஒழித்து இறைஞ்சிய போது, அவர்களுக்கு இலிங்க வடிவத்தில் காட்சி அளித்ததும் பெருமானின் திருவருளினால் தானே. வரிசை வரிசையாக வரும் பல அலைகளுடன் பரந்து மிகுந்த வேகத்துடன் பாய்ந்து கீழே இறங்கிய கங்கை நதியை தனது சடையினில் நிரந்தரமாக இருக்கும் வண்ணம் ஏற்றுக் கொண்டு அதை மறைத்து வைத்து மகிழ்ந்தவனும், முறையாக ஒருவர் பன்றி வடிவமெடுத்து கீழ்நோக்கியும் மற்றொருவர் அன்னமாக மேலே பறந்து சென்ற போதும், திருமால் மற்றும் பிரமன் தேடி அலைந்த போது அவர்கள் காண இயலாத வண்ணம் நீண்டு நின்று தனது அடியையும் முடியையும் மறைத்தவனும் ஆகிய பெருமான் உறையுமிடம் கருப்பறியலூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை
கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.54.8) சுந்தரர் கங்கை ஆயிரம் முகமுடையாள் என்று குறிப்பிடுகின்றார். திருவொற்றியூரை விட்டு அகல மாட்டேன் என்று சங்கிலி நாச்சியார்க்கு, மகிழ மரத்தின் அடியில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறிய குற்றத்திற்காக, திருவொற்றியூர் எல்லையைக் கடந்த போது சுந்தரர், தனது இரண்டு கண்களின் பார்வையையும் இழக்கின்றார். அப்போது தனது நிலையை சொல்லி கதறும் பாடல்கள் கொண்ட பதிகம். அடிமையாகிய தான், தனக்கு எஜமானனாகிய பெருமான் செய்த செயல்களைச் சுட்டிக் காட்டுவதால், பயனேதும் இல்லை என்று புலம்பும் சுந்தரர், அதே சமயத்தில் தான் செய்த தவறும் பெருமானின் செயலை ஒத்து உள்ளது என்று கூறுகின்றார். கங்கை நங்கையை தனது சடையில் பெருமான் ஏற்றுக் கொண்ட போது, பார்வதி தேவியை நினையாமல் இருந்ததால் தான், வெளியே தெரியாத வண்ணம், கங்கையை சடையில் மறைத்தார் என்று கூறுகின்றார். தொழும்பன்=அடிமை; தான் கண் பார்வையினை இழந்தது பெருமானின் செயல் தான் என்றாலும், அதற்காக பெருமானிடம் பிணக்கு கொண்டு, பெருமானிடமிருந்து விலகி இருந்தால், தனக்கு உதவி புரிபவர் வேறு எவரும் இல்லை, என்று தனது மனதுக்கு ஆறுதல் சொல்லும் சுந்தரர், கண் பார்வை இழந்ததால் வாடியிராமல், தொடர்ந்து பெருமானைப் பணிந்து வழிபட்டு, தனது வலிய வினைகளை நீக்கிக் கொள்ள. வேண்டும் என்று அறிவுரை சொல்வதை நாம் உணரலாம்.
கூடினாய் மலை மங்கையை நினையாய் கங்கை ஆயிரம் முகம் உடையாளைச்
சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலுமாமே
வாடி நீ இருந்தி என் செய்தி மனமே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டே ஒற்றியூர் என்னும் ஊர் உறைவானே
பொழிப்புரை;
கடலில் கிடைக்கும் பவளங்கள் நெருக்கமாக சேர்ந்து இருப்பதைப் போன்று செம்மை நிறத்தில் காணப்படும் பெருமானின் தூய்மையான தோள்கள், திரண்டு வலிமையுடன் உள்ளன. மின்னுகின்ற ஒளியினை உடைய கொடி போன்று மெலிந்த மேனியை உடையதும் பல கிளைகளாக பரந்து பிரிந்த வண்ணம் வேகத்துடன் கீழே இறங்கியதும் ஆகிய கங்கை நதியும் வளர்கின்ற பிறைகளைக் கொண்ட சந்திரனும் கலந்ததும் அழகாக பின்னப்பட்டதும் ஆகிய சடையினை உடைய பெருமான், பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக, என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 3:
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல்கள் 3, 4, 5, 6, 7 (திதே 0649)
கள்ளம் மதித்த கபாலம் கை தனிலே மிக ஏந்தித்
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர்
வெள்ள நகு தலை மாலை விரிசடை மேல் மிளிர்கின்ற
பிள்ளை மதிப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
விளக்கம்:
பிள்ளை மதி=இளம் பிறைச் சந்திரன்; கள்ளம்=பொய்; திருமாலை விடவும் தான் அதிகமான ஆற்றல் உடையவன், அதனால் திருமாலை விடவும் பெரியவன் என்று நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அன்னமாக உருவெடுத்து பறந்து சென்று பெருமானின் முடியினைக் காண்பதற்கு, பிரமன், பெருமுயற்சி செய்தார். மிகவும் உயரமான இடத்திற்கு பறந்து சென்ற போதிலும் அவரால் பெருமானின் சடையினை காணமுடியவில்லை. எனினும் தனது முயற்சியை தொடர்ந்த பிரமன் தான் பறந்து சென்ற வழியினில், ஒரு தாழை மலரின் இதழ் கீழே விழுவதைக் கண்டார். தாழை மலரின் இதழை நோக்கிய பிரமன், நீ எங்கிருந்து வருகின்றாய் என்று கேட்ட போது, தாழை மலர் தான் சிவபெருமானின் சடையிலிருந்து கீழே விழுந்ததாகவும், தான் வெகு தூரம் கீழே இறங்கிய பின்னர் பிரமனைக் கண்டதாகவும் கூறியது. இதனைக் கேட்ட பிரமன், எவ்வாறேனும் திருமாலை விடவும் தான் பெரியவன் என்பதை உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பிரமன், தாழை மடலிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். பிரமனாகிய தான் பெருமானின் சடையைக் கண்டதாகவும் அதற்கு சாட்சியாக தாழை மடலும் பொய் சொல்ல வேண்டும் என்று வேண்டினார். பின்னர் கீழே இறங்கி வந்த பிரமன் திருமாலிடம் தான் பெருமானின் முடியைக் கண்டதாக பொய் சொன்னார். இவ்வாறு பொய் சொன்ன பிரமனை, கள்ளம் மதித்த பிரமன் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். அப்போது அங்கே தோன்றிய பைரவர், பொய் சொன்ன பிரமனின் தலையை தனது நகத்தால் கிள்ளவே, உடலிலிருந்து பிரிக்கப் பட்ட அந்த தலை உலர்ந்து பிரமனின் கபாலமாக மாறியது. இந்த கபாலத்தைத் தனது கையினில் பிச்சைப் பாத்திரமாக பெருமான் ஏற்றுக்கொண்டார். இதுவே பொய் சொன்ன பிரமனின் தலை, பெருமானின் உண்கலனாக மாறிய வரலாறு. இந்த இரண்டு செய்திகளையும் உணர்த்தும் வகையில் கள்ளம் மதித்த கபாலத்தைத் தனது கையினிலே ஏந்திய பெருமான் என்று பாடலின் முதல் அடியில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பொய் சொல்வதை தவறு என்பதை கருத்தினில் கொண்டு, பொய்யினை தவிர்க்காமல், அந்த பொய்யான சொல் மூலம் புகழினை அடையக் கருதியதால் பிரமனை பொய்யினை, அதாவது கள்ளத்தை, மதித்த பிரமன் என்று இழிவாக கூறுகின்றார். பெருமான் தனது கையினில் பிரமகபாலத்தை ஏந்தி பலிக்காக திரிவதை தொழில் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உலக இயக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டி பெருமான் நடனமாடுவதை தொழில் என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் தன்னிடம் ஏதுமில்லை என்பதற்காக பிச்சை எடுக்கவில்லை என்பதை உணர்த்தும் வண்ணம், செல்வர் என்று குறிப்பிடும், ஞானசம்பந்தர், எழில் மிகு செல்வர் என்று குறிப்பிட்டு, அழகான உருவத்துடன் பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்றதை உணர்த்தும் பாங்கினையும் நாம் இந்த பாடலில் காணலாம். .
பொழிப்புரை;
பொய்யினை, கள்ளத்தை சொல்வது தவறு என்று உணர்ந்து அதனைத் தவிர்க்காமல், பொய் சொல்லி புகழ் அடைய விரும்பிய பிரமனின் கபாலத்தை தனது கையினில் ஏந்தியவராகிய பெருமான், துள்ளிக் குதித்தும் நின்றும் நடனம் ஆடுபவராக, உயிர்களுக்கு உய்வினை அளிக்கும் நோக்கத்துடன், பக்குவம் வாய்ந்த உயிர்கள் அளிக்கும் மலங்களைத் தனது கலனில் ஏற்றுக் கொள்ளும் நோக்கத்துடன், பிச்சை ஏற்கும் தொழிலைத் தொடர்ந்து சிவபெருமான் செய்து வருகின்றார். அழகு வாய்ந்தவராக விளங்கும் பெருமான், என்றும் அழியாது இருக்கும் சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார். கங்கை நதி, வாய் பிளந்த தோற்றத்துடன் சிரிப்பது போன்று காட்சி அளிக்கும் மண்டையோட்டு மாலை மற்றும் ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது விரிந்த சடையில் அணிந்துள்ள பெருமான், பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக, என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 4:
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல்கள் 3, 4, 5, 6, 7 (திதே 0649)
ஆடல் இலையம் உடையார் அருமறை தாங்கி ஆறங்கம்
பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும்
ஊடல் இலையம் உடையார் யோகு எனும் பேரொளி தாங்கிப்
பீடல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே
விளக்கம்:
இலயம்=லயம், அழகு, நளினம்; அஞ்சு=ஐந்து புலன்கள்; ஊடல் இலையம்=மாறுபட்டு ஊடல் கொண்டு இருப்பதிலும் ஒற்றுமை என்று சிவக்கவிமணி அவர்கள் விளக்கம் அளிக்கின்றார். நமது ஐந்து புலன்களும், ஒன்றுக்கொன்று மாறுபட்டு தத்தம் வழியில் உயிரினை இழுத்துச் செல்வதில் முயற்சி செய்வதை நாம் அனைவரும் அறிவோம். தமது செயல்பாடுகளில் வேறுபட்டு இருந்தாலும், உயிரினைத் தமது வழியில் இழுத்துச் செல்லும் நோக்கத்தில் ஒற்றுமையாக இருப்பதையே ஊடலில் இலயம் உடைய ஐந்து பொறிகள் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஐந்து பொறிகளையும் மற்ற தத்துவங்களையும் உயிர்களுக்கு உதவும் பொருட்டு அளித்துள்ள பெருமானை, அஞ்சும் ஊடல் இலையம் உடையார் என்று கூறுகின்றார் போலும். உயிர்களை அலைக்கழிக்கும் ஐந்து பொறிகளும் பெருமானை ஒன்றும் செய்ய முடியாது என்பதை குறிப்பிடும் முகமாக பேரொளி தரும் யோகத்தில் பெருமான் ஆழ்ந்திருப்பதை உணர்த்துகின்றார். பீடல்=பீடு+அல், பெருமையுடைய நள்ளிரவு; பெருமான் நடனம் ஆடுவதால் நள்ளிரவு சிறப்பு வாய்ந்த நேரமாக மாறிவிடுகின்றது. ஊழிக் காலத்தினை நள்ளிரவு என்று குறிப்பிடுகிறார். உலகமும் உலகப் பொருட்களும் அனைத்து உயிர்களும் தாங்கி இருந்த உடல்களும் அழிந்த பின்னர், பெருமானும் பெருமானைச் சார்ந்த பொருட்களைத் தவிர்த்து வேறு ஏதும் இல்லாத போதிலும், தொடர்ந்து பெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடனம் ஆடுவதால், ஊழிக்காலம் சிறப்பினை உடையதாக கருதப் படுகின்றது.
பொழிப்புரை;
நளினமாக ஆடும் தன்மையை உடைய பெருமான், அரிய நான்கு மறைகளையும் போற்றி பாதுகாக்கும் ஆறு அங்கங்களும் கொண்ட பாடல்களை இனிமையான பண்ணுடன் இசைத்துப் பாடுகின்றார். ஒப்பற்ற ஒருவனாக உள்ள பெருமான், பலவகை வேடங்களைத் தாங்கியவராக அடியார்களுக்கு அருள் புரிகின்றார். தங்களது செயல்பாடுகளில் மாறுபட்டாலும், தங்களது நோக்கத்தில் ஒன்றாக இருக்கும் தன்மையை (உயிரினை தாங்கள் விரும்பும் வழியில் செலுத்துவது என்ற தன்மையை) உடைய ஐந்து பொறிகளையும் மற்ற தத்துவங்களையும் உயிரினுக்கு உதவும் பொருட்டு அளித்தவர் சிவபெருமான்; உயிர்களை பல விதங்களிலும் அலைக்கழிக்கும் ஐந்து பொறிகளையும் அடக்கி, யோக நெறியினில் ஆழ்ந்து ஒளிவீசும் தன்மையுடன் இருக்கும் சிவபெருமானின் நடனத்தினால் சிறப்பு பெற்ற நள்ளிரவினில் பெருமான் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் நடனம் ஆடுகின்றார். அத்தகைய பெருமான் பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக, என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 5:
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல்கள் 3, 4, 5, 6, 7 (திதே 0649)
தோடுடையார் குழைக் காதில் சுடுபொடியார் அனலாடக்
காடு உடையார் எரி வீசும் கையுடையார் கடல் சூழ்ந்த
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த
பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
விளக்கம்:
தனது உடலெங்கும் திருநீறு அணிந்து கொள்ளும் வழக்கம் உடைய பெருமான், தனது காதுகளிலும் திருநீறு அணிந்து கொள்கின்றார் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. பிரளய காலம் முடிந்து உலகின் அனைத்துப் பொருட்களும் அனைத்து உடல்களும் எரிந்து சாம்பலாக மாறும் நிலையில், எங்கும் இருள் சூழ்ந்து காணப்படும் நேரத்தில், நெருப்புப் பிழம்பு ஏந்தியுள்ள கரம் வீசி, ஊழித்தீயின் நடுவில் நின்று பெருமான் ஆடும் நடனமே, இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. அனலாட என்று முதல் அடியிலும், எரி வீசும் கை உடையார் என்று இரண்டாவது அடியிலும் குறிப்பிடப் படுவதை நாம் உணரலாம். இந்த குறிப்பு நமக்கு அப்பர் பிரான் தில்லை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினை (4.22.4) நினைவூட்டுகின்றது.
பை அரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னிச்
மையரிக் கண்ணியாளும் மாலுமோர் பாகமாகிச்
செய்யரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கையெரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே
இந்த பாடலின் கடைசி வரியில், கையெரி மற்றும் கனல் எரி என்று இரண்டு விதமான நெருப்புகளை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். எனவே எரி ஆடுமாறே என்று ஒவ்வொரு பாடலின் கடைசியில் அப்பர் பிரான் கூறுவது, நடராஜப் பெருமான் கையில் ஏந்தியுள்ள எரி அல்ல என்பது தெளிவாகின்றது. எனவே தான் ஊழித் தீயின் இடையே நின்று பெருமான் ஆடுவதையே அப்பர் பிரான் அனைத்துப் பாடல்களிலும் குறிக்கின்றார் என்று சிவக்கவிமணி, சி.கே. சுப்பிரமணியம் அவர்கள், தனது பெரியபுராண விளக்கம் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் இத்தகைய நடனம் தொடர்ச்சியாக நடைபெறுவதால், அப்பர் பிரான் எரி ஆடுமாறே என்று நிகழ்காலத்தில் கூறுகின்றார் போலும். ஊழித்தீயினை ஞானத்தீ என்றும் குறிப்பிடுவதுண்டு.
பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த என்ற தொடருக்கு, அடியார்களுக்கு தேவையான பொருளும் இன்பமும் மற்ற பல நன்மைகளையும் நாள்தோறும் விரும்பி அளிக்கும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. நல்ல பொருள் என்று அவரை வழிபடும் அடியார்கள் என்றும் சிலர் பொருள் கொண்டு, அடியார்கள் அன்புடன் செய்யும் வழிபாட்டினை நாள்தோறும் நயந்து ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்பதும் பொருந்தும்.
பொழிப்புரை;
ஒரு காதினில் தோட்டினையும் மாதொரு காதினில் குழை ஆபரணமும் அணிந்துள்ள பெருமான், திருநீற்றினையும் தனது காதினில் பூசிக் கொண்டுள்ளவராக காணப்படுகின்றார். உலகமே சுடுகாடாக மாறிய நிலையில் ஊழித்தீயின் நடுவே நின்று, நெருப்புப் பிழம்பினைத் தனது கையில் ஏந்திய வண்ணம், கைகளை வீசி நடமாடும் பெருமான், கடல்களால் சூழப்பட்ட உலகத்தினைத் தனது உடைமையாக கொண்டவர் ஆவார். நல்ல பொருட்களால் விளையும் இன்பத்தினை நாளும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் பெருமையினை உடைய பெருமான், தனது அடியார்களை பெரிதும் விரும்புகின்றார். இத்தகைய பெருமான் பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக, என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 6:
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல்கள் 3, 4, 5, 6, 7 (திதே 0649)
கற்றது உறப் பணி செய்து காண்டும் என்பார் அவர் தம் கண்
முற்றிது அறிதும் என்பார் கண் முதலியார் வேத புராணர்
மற்றிது அறிதும் என்பார் கண் மனத்திடையார் பணி செய்ய
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே
விளக்கம்:
கற்றது உற=கல்வி கற்றதன் பயனை அடையும் வண்ணம்; பெருமானின் அரிய பெருமைகளை நூல்கள் வாயிலாகக் கற்று, அந்த நூல்களில் உணர்த்திய வண்ணம் பெருமானை முறையாக வழிபட்டு வாழ்வதே கல்வி கற்றதன் பயனாகும். கல்வி கற்றதன் பயனே இறைவனைத் தொழுதல் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றினை நினைவூட்டுகின்றது. வாலறிவன்=தூய அறிவின் வடிவமாக இருக்கும் இறைவன்;
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்
நல்லனவற்றை பெரிதும் விரும்பும் பெருமான் என்று இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் தொண்டர்களையும் தொண்டர்கள் செய்யும் திருப்பணிகளையும் மிகவும் விரும்பும் பெருமான் என்று குறிப்பிட்டு, அத்தகைய அடியார்களுக்கு பெருமான் எவ்வாறு உதவி செய்கின்றார் என்பதை குறிப்பிடுகின்றார். பெருமானின் தோற்றத்தைக் நமது ஊனக் கண்களால் காண்பது மிகவும் அரிது. எனினும் பெருமானின் அருளே நமக்கு கண்ணாக இருந்து உதவினால் நம்மால், அவனது தோற்றத்தைக் காண முடியும் என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய பாடல் (6.97.10) ஒன்றினை நினைவூட்டுகின்றது.
மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்
ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன் ஓரூரன் அல்லன் ஓருவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்டொணாதே
பொழிப்புரை;
கல்வி கற்றதன் பயனை உணர்ந்து பெருமானுக்கு பல விதமான திருப்பணிகள் செய்து அவனைக் காண்போம் என்ற உறுதியுடன் வாழும் அடியார்களுக்கு, கண்ணாக நின்று அவர்களுக்கு அருள் புரிந்து தனது கோலத்தை காட்டி அருள் புரிபவர் பெருமான். கடவுளின் தன்மையை முற்றிலும் அறிந்து கொள்வோம் என்று இறைவனைப் பணிந்து முயற்சி செய்யும் அடியார்களுக்கு வேதங்களாகவும் புராணங்களாகவும் விளங்கி தனது தன்மையை பெருமான் அறிவிக்கின்றார். பெருமானின் தன்மையை பின்னர் அறிந்து கொள்வோம் என்று கருதி, அத்தகைய முயற்சியில் ஈடுபடாமல், முதலில் பெருமானுக்கு திருப்பணி செய்யும் அடியார்களின் தன்மையை மிகவும் விரும்பும் பெருமான் பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக, என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 7:
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல்கள் 3, 4, 5, 6, 7 (திதே 0649)
மறை உடையார் ஒலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர்
கறை உடையார் திகழ் கண்டம் கங்கை சடையில் கரந்தார்
பிறை உடையார் சென்னி தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே
விளக்கம்:
மாமலர்=அழகிய தாமரை மலர்; தங்களது மனதினில் குறைகள் உடைய அடியார்களின் குறைகளைத் தீர்ப்பவர் பெருமான் என்று குறிப்பிட்டு, இரண்டு செய்திகளை திருஞான சம்பந்தர் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பினும் அந்த குறைகளை இறைவனுக்கு உணர்த்தி, அந்த குறைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிறிதுமின்றி இறைவனை எப்போதும் நினைத்து வணங்கும் அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார். உயர்ந்த அடியார்கள், தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவனை வழிபடாமல் தங்களது கடமையாக நினைத்து இறைவனை வழிபடுவார்கள் என்று அவர்களின் உயர்ந்த தன்மையை நமக்கு உணர்த்தும் திருஞான சம்பந்தர், கூறும் அடுத்த செய்தியையும் இப்போது காண்போம். எவரும் உணர்த்தாமலே அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த இறைவன், அடியார்கள் தங்களது குறைகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றி, அவர்களது குறைகளை புரிந்து கொண்டு, அந்த குறைகளை தீர்க்கும் கருணை உள்ளம் கொண்டவன் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். பெருமானிடம் தங்களது தேவைகளை வேண்டிப் பெறுகின்ற நோக்கத்துடன் அவரை வழிபடும் அடியார்களுக்கு, அவர்களது தேவையை நிறைவேற்றும் பெருமான், தன்னிடம் ஏதும் வேண்டாது வழிபடும் அடியார்களை பெரிதும் விரும்புகின்றார். தங்களது தேவைகளை அவர்கள் வெளிப்படுத்தி பெருமானிடம் ஏதும் வேண்டாமல் அவர்கள் இருந்தாலும், பெருமான் அவர்களது தேவைகளை தானே அறிந்து கொண்டு, அவர்களது குறைகளை தீர்ப்பவர் என்பதே இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
மேலும் வீடுபேற்றினைத் தவிர்த்து பெருமானிடம் எதனை வேண்டிப் பெற்றாலும் அந்த பொருள் நிலையற்ற பொருளாகத் தானே இருக்க முடியும். அதனால் தான் அப்பர் பிரான், பெருமானிடம் இந்த பொருள் வேண்டும் அந்த பொருள் வேண்டும் என்று ஏதேனும் வேண்டிக் கொண்டே இருக்கும் மனிதர்களை கல்மனவர் என்று அழைக்கின்றார். இந்த பாடல் தில்லை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (4.81.3). உயிரின் வேட்கை இறைவனைச் சென்று அடைவது. இதனை புரிந்து கொள்ளாத நாம், உயிரின் விருப்பத்தை விட்டுவிட்டு, இந்த உடலின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் நமது விருப்பங்களை இறைவனிடம் தெரிவிக்கின்றோம். இந்த உடலின் தேவைகள் அனைத்தும் நிலையற்றவை, ஒரு நாள் அழியக்கூடியவை. ஆனால் உயிர் விரும்பும் முக்தி நிலை, என்றும் அழிவற்றது, குறையாத பேரின்பத்தை கொடுக்க வல்லது. எனவே அந்த முக்தி நிலையை வேண்டிப் பெறாது, அழியும் இன்பங்களை வேண்டுவோரை கல்மனவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தில்லையுள் உள்ள அடியார்கள் இறைவனிடம் முக்தி நிலை வேண்டுவதால், அவர்களை நல்மனவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பேரின்பத்தைத் தரவல்ல சிவபெருமானிடம் சென்று சிற்றின்பத்தை யாசிப்பது, ஒரு பெரிய பணக்காரரிடம் சென்று பத்து காசுகள் யாசித்துப் பெறுவது போன்று நகைப்புக்கு உரியதல்லவா. அதனால் நமக்கு ஏற்படும் பயன் என்ன?
கல் மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல பொலிந்திலங்கி
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடில்லையே
பெருமானிடம் நாம் யாதும் வேண்டாமலே, நமது தேவைகளைப் புரிந்து கொண்டு அருள் புரிபவர் பெருமான் என்ற கருத்தினை மணிவாசகர் குழைத்தபத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் குறிப்பிடுகின்றார். நாம் வேண்டுவதற்கு தகுதி படைத்த பொருட்கள் என்னென்ன என்பதை நாம் அறிய முடியாது. மனித மனத்தின் விருப்பங்கள் விசித்திரமானவை; பல சமயங்களில் பின்னர் தீமை பயக்கும் என்று நமக்கு தோன்றும் பொருட்களையும் விரும்பி உடனே பெறவேண்டும் என்று துடிக்கின்றது. சர்க்கரை நோயாளி இனிப்புப் பண்டம் தனக்கு தீமை தரும் என்று தெரிந்திருந்தும், தனது ஆசையை அடக்க முடியாமல் அந்த பண்டத்தை உட்கொள்வதை நாம் காண்கின்றோம். சில சமயங்களில் நாம் ஆசை கொண்டு அடைய வேண்டும் என்று விரும்பும் பொருள் நமக்கு நன்மை பயக்குமா அல்லது தீமை பயக்குமா என்று முடிவு செய்யமுடியாத நிலையிலும் அந்த பொருள் வேண்டுமென்று மனம் விரும்புகின்றது. ஆனால் பெருமானோ அதனை அறிந்தவர்; அதனால் தான், நாம் விரும்பும் சில பொருட்கள் நமக்கு கிடைக்காமல் செய்கின்றார். ஆனால் அதனை உணராத நாம் பெருமானிடம் மீண்டும்மீண்டும் வேண்டி, அவ்வாறு பெருமானால் தவிர்க்கப் பட்ட பொருட்களை வேண்டிப் பெற்று பின்னர் இடர்ப்படுகின்றோம்.
வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உந்தன் விருப்பு அன்றே
நமக்கு தீமை பயக்கும் என்று தெரிந்த இறைவன், ஏன் நமக்கு அந்த பொருளைத் தருகின்றான் என்ற ஐயம் நமக்கு எழலாம். நாம் மேலும்மேலும் அழுத்தத்தை கொடுத்து இறைவனிடம் வேண்டும்போது, இறைவன் தவிர்க்க முடியாமல், தான் அந்த பொருளினை அளித்து அருள் புரியாவிடில் தனது அடியான் வருந்துவான் என்ற எண்ணத்துடன், அந்த பொருளைத் தருகின்றான். இதனையே வேண்ட முழுதும் தருவோய் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். அந்த பொருளினை தொடக்கத்தில் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் மனிதன், பின்னர் அது தீமை பயப்பதை அறியும் போது அவனது அனுபவம் விரிகின்றது. மேலும் நமது வினைகள், அத்தகைய பொருட்களின் மூலமாக நாம் துன்பம் அனுபவித்து நமது வினையின் ஒரு பகுதியை கழிக்கும் வண்ணம், நமது மனம் உந்துமேயானால், நாமும் அந்த பொருளை பெறவேண்டும் என்று இடைவிடாது பெருமானிடம் வேண்டி, நச்சரித்து அந்த பொருளினைப் பெற்று, பின்னர் அந்த பொருள் விளைவிக்கும் துன்பத்தையும் அனுபவித்து நமது வினையின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கின்றோம்.
திருமாலும் பிரமனும் பரமனின் திருமுடியையும் திருவடியையும் தங்களது முயற்சியால் கண்டுவிடலாம் என்று தேடிச் சென்ற போது, அவர்கள் பெருமானைச் சரணடைந்து முயற்சி ஏதும் செய்யவில்லை. அதனால் அவர்கள் காண்பதற்கு மிகவும் அரியவனாக பெருமான் அவர்களுக்கு விளங்கினான். அடிகளார் திருப்பெருந்துறை செல்ல வேண்டும் என்று நினைத்ததுமில்லை. ஆனால் காந்தம் இரும்பினை கவர்ந்து இழுப்பது போன்று, பெருமான் அவரது சிந்தையில் புகுந்து அவரை திருப்பெருந்துறைக்கு இழுக்கின்றார். திருப்பெருந்துறை சென்ற பின்னர் பெருமானால் ஆட்கொள்ளப்படும் அடிகளார், கோயில் திருப்பணி செய்தும், பெருமானைப் புகழ்ந்து திருவாசகம் திருக்கோவையார் ஆகிய நூல்களை இயற்றியும் திருத்தொண்டு புரிகின்றார். இந்த தன்மையே இங்கே வேண்டி என்னைப் பணி கொண்டாய் என்று இங்கே கூறப்படுகின்றது.
நாம் வேண்டாமலே, பெருமான் ஒவ்வொரு உயிர்க்கும், அந்தந்த உயிர்களின் தேவைக்கு ஏற்ப பல நன்மைகள் புரிகின்றார். எனவே பெருமான் எதனை விரும்பி நமக்கு அளிக்கின்றாரோ, அதனையே நாம் விரும்பும் பொருளாக கருதினால், பெருமான் அளிக்கும் எதனையும் நாம் இன்பமுடன் ஏற்றுக் கொள்வோம். இந்த கருத்து தான் கடையிரண்டு அடிகளில் சொல்லப் படுகின்றது. இந்த இரண்டு அடிகளுக்கு வேறு விதமாகவும் பொருள் கூறலாம். உந்தன் விருப்பு என்ற தொடருக்கு, பெருமான் பால் கொண்டுள்ள அன்பு என்று பொருள் கொண்டு, நாம் பெருமானிடம் வேண்டுவது, அவன் பால் என்றும் அன்புடையவராக நாம் இருத்தலே என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் என்று தானே காரைக்கால் அம்மையாரின் விருப்பத்தை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் மற்றும் மணிவாசகரின் மேற்கண்ட பாடல்கள் நாம் பெருமானிடம் எதையும் தனியாக வேண்டத் தேவையில்லை என்பதை உணர்த்துகின்றன.
பொழிப்புரை;
வேதமோதும் மறையோர்கள் மற்றும் இனிய ஒலியுடன் பாடல் பாடும் அடியார்கள் பெருமானின் சிறந்த அழகிய தாமரை மலர் போன்ற திருவடிகளை இடைவிடாது நினைக்கின்றனர். அத்தகைய அடியார்களின் மனதினில் உள்ள குறைகளை தீர்க்கும் இறைவன், இளைஞராகவும் அழகராகவும் சிறந்த முக்திச் செல்வத்தை உடையவராகவும் விளங்குகின்றார். ஆலகால விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடைய பெருமான், கங்கை நதியினைத் தனது சடையில் மறைத்தவர் ஆவார். அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு, அந்த பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்ட பெருமான் பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக,என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 8:
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல் 8 (திதே 0650)
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0651)
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0652)
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0653)
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் பாடல்கள் 9, 10, 11(திதே 0654)
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிதாகித்
துறவியும் கூட்டமும் காட்டித் துன்பமும் இன்பமும் தோற்றி
மறவியும் சிந்தனை மாற்றி வாழவல்லார் தமக்கு என்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே
விளக்கம்:
உறவு என்ற சொல் உறவி என்று எதுகை கருதி திரிந்தது. அடியார்களின் குறைகளை தீர்த்து அருள் புரியும் இறைவன் என்று முந்திய பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அடியார்களுக்கு எப்படியெல்லாம் பெருமான் உதவுகின்றார் என்று கூறுகின்றார். பொதுவாக உயிர்கள், வினைகளின் விளைவால் தாங்கள் பெறுகின்ற இன்ப துன்பங்களில் ஆழும் போது, இன்பங்களை அனுபவித்து மகிழும் போதும், துன்பங்களால் வருந்தும் போதும் இறைவனை மறந்து விடுவதை நாம் காண்கின்றோம். ஆனால், தனது இன்ப துன்பங்களில் ஆழ்ந்தாலும், பெருமானை மறவாது இருக்கும் அடியார்களுக்கு அவர்களின் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்து முக்தி அளித்து பெருமான் அருள் புரிகின்றார் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். கூட்டம்=பந்தம்; உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்களுடன் மற்றும் உலகப் பொருட்களுடன் கூடி இருக்கும் நிலை;
அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.96.5) திருஞானசம்பந்தர், நம்மை பெருமான் பால் அன்பு செலுத்தி, அவனுக்கு உறவாக மாறுமாறு அறிவுரை கூறுகின்றார். உறவு=அன்பு; அறவன்=தருமமே உருவானவன்; இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே உள்ள உறவு, அன்பினால் எழுந்த, இறைவன் பக்தன் என்ற உறவு தான். எனவே தான் இறைவனிடம் அன்பு கொண்டு அவனுக்கு அன்பினனாக நடந்து கொண்டு அவனுடன் உறவாடவேண்டும் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். குறையேதும் இன்றி மனநிறைவுடன் வாழ விரும்பும் அன்பர்களே, நீங்கள் புண்ணியமே வடிவமாக உள்ள அன்னியூர் இறைவனை, வேதங்களில் பரம்பொருளாக கூறப்படுபவனின் திருப்பாதங்கள் பால் அன்பு வைத்து அவனோடு உறவு கொள்வீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர்
மறையுளான் கழற்கு உறவு செய்ம்மினே
இறைவன் ஒருவனே நமது வாழ்வின் பற்றுக்கோடு என்று உணர்ந்து அவன் பால் நம்பிக்கை வைத்து வழிபடும் அடியார்களின் வாய், அவனது திருநாமம் சொன்னால் இனிக்கும் என்று திருஞானசம்பந்தர் கூறும் பாடலும் (3.49.2) நமது நினைவுக்கு வருகின்றது. இறைவனது திருநாமம் அன்றலர்ந்த மலரில் இருக்கும் தேன் போன்று இனியது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தேன் உட்கொள்ளும் போது நமது நாவினில் இனிக்கின்றது. பின்னர் நமது உடலுக்குள் சென்றதும் மருந்தாக செயல்பட்டு உடற்பிணியை நீக்குகின்றது. அது போன்றே, நமச்சிவாய மந்திரமாகிய இறைவனின் திருநாமமும், நாம் அதனை சொல்லும் போது இனிமையான உணர்வுகளை நமக்குத் தருகின்றது. தொடர்ந்து நாம் அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல, அந்த மந்திரம் நமது மனதினில் இருக்கும் மாசுகளை அகற்றி நம்மை தூய்மை செய்து, பிறவிப் பிணியிலிருந்து நாம் விடுபட வழி வகுக்கின்றது. எனவே இறைவன் மீது நாம் நம்பிக்கை வைத்து வழிபட வேண்டும் என்பது, இங்கே உணர்த்தப் படுகின்றது.
நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே
திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.52.3) திருஞானசம்பந்தர், பெருமானை, சுற்றம் நீ என்று குறிப்பிடுகின்றார். அருத்தம்=பொருள்; பெருமான் அனைத்து உயிர்களின் உள்ளே உயிருக்கு உயிராக பிணைந்து இருந்து இயக்குவதால், உயிர்களின் குற்றமாகவும் குணமாகவும் இருப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். நாம் கடந்த பிறவிகளில் சேர்த்த வினைகளின் தன்மையே, இந்த பிறவியில் நமது குற்றமாகவும் குணமாகவும் அமையும் வண்ணம் பொருத்துபவன் பெருமான் என்று குறிப்பதாக பொருள் கொள்ள வேண்டும். பெருமான் ஒருவரே நமது அகத்து இருளினை நீக்கி ஞானத்தை அளிக்க வல்லவர் என்பதால், அவரையே நாம் நமக்கு நெருங்கிய சுற்றமாகவும் தலைவனாகவும் கருத வேண்டும் என்று கூறுகின்றார். தான், மூன்று வயது குழந்தையாக இருந்த போது, அம்மையின் ஞானப்பால் அருந்திய நாளிலிருந்து, திருஞானசம்பந்தர் பெருமானைத் தனது தந்தையாகவும் பிராட்டியைத் தனது தாயாகவும் கருதியதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். நாம் கற்க வேண்டிய வேதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றின் கருத்தாக இருக்கும் பெருமான், அத்தகைய நூல்களைக் கற்பதால் நாம் அடையும் இன்பமாகவும் இருப்பதாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மேற்சொன்னவை அனைத்தும், பெருமானே உன்னை புகழ வேண்டும் என்பதற்காக சொன்ன சொற்கள் அல்ல, முழுவதும் உண்மை என்று பாடலின் கடை அடியில் உணர்த்துகின்றார்.
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய்
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ
கற்ற நூல் கருத்து நீ அருத்தம் இன்பம் என்றிவை
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பதென் முகம்மனே
இதே கருத்து அப்பர் பிரான் அருளிய அங்கமாலை பதிகத்தின் பத்தாவது பாடலிலும் உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானின் ஐந்து நடன அரங்குகளில் ஒன்றாக குற்றாலம் கருதப்படுவதால், குற்றாலத்தில் உறையும் இறைவன் என்று கூறாமல், குற்றாலத்துக் கூத்தன் என்று கூறி இங்குள்ள நடன அரங்கத்தின் சிறப்பினை நமக்கு அப்பர் பிரான் நினைவூட்டுகின்றார். தில்லை (பொற்சபை), மதுரை (வெள்ளி சபை), திருநெல்வேலி (தாமிர சபை), திருவாலங்காடு (இரத்தின சபை), குற்றாலம் (சித்திர சபை) என்பன சிவபெருமானின் ஐந்து நடன அரங்குகள் ஆகும். குற்றாலத்தில் இருக்கும் நடராஜப் பெருமானின் சன்னதியில், உட்பிராகாரச் சுற்றுச் சுவர்களில் அழகான சித்திரங்கள் உள்ளதால், சித்திர சபை என்ற பெயர் வந்தது. நாம் இறக்கும் தருவாயில், நம்மைச் சுற்றியுள்ள உறவினர்கள் எவரும் உதவ முடியாத நிலையில் இருப்பதால், அவர்கள் எவரையும் உற்றார்களாக கருதமுடியாது. அந்த சமயத்தில், குற்றாலத்தில் உறையும் கூத்தன் தவிர, வேறு எவரும் நமக்கு உதவி செய்யக்கூடிய உற்றார் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
உற்றார் ஆர் உளரோ – உயிர்
கொண்டு போம் பொழுது
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆர் உளரோ
இறந்த உடலினை புதைப்பதை பலர் பழக்கமாக கொண்டுள்ளனர். இதுவும் உற்றார், இறந்த உடல் அழுகி நோய்க் கிருமிகள் பெருகாமல் இருக்க வேண்டும் என்று தங்களது நலன் கருதி செய்யப்படும் செயலே தவிர, உயிருக்கு செய்யப்படும் உதவி ஆகாது. கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றில் (4.67.3), அப்பர் பிரான், உறவினர்கள் ஒன்று கூடி இறந்த உடலை மண்ணில் புதைத்து ஒளித்து வைப்பார்கள் என்று கூறுகின்றார். கதிர் நரம்பு=விளங்கும் நரம்புகள்: ஆர்த்து=செய்து: உழைஞர்=உற்றார் உறவினர்கள்: ஒளித்தல்=உடலை புதைத்தல்: ஓலெடுத்து=வாய் விட்டுக் கதறி
கால் கொடுத்து எலும்பு மூட்டிக் கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்துத்
தோல் உடுத்து உதிரம் ஆட்டித் தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்
சேலுடை பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்து உளானே
உலகியல் வாழ்க்கையில் ஆழும் நாம், நம்மை அறியாமல் செய்யும் தவறு யாது என்பதை சுட்டிக் காட்டும் அப்பர் பிரான், நிலையற்ற சுற்றத்தை உண்மையான சுற்றம் என நினைத்து மயங்கி, இறைவனை மறந்து விடுகின்றோம் என்று கூறுகின்றார். இந்த பாடல் கோவலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (4.69.9). கணம்=கூட்டம்: மனைவி, மக்கள் மற்றுமுள்ள சுற்றத்தார்கள் கூட்டம். நிணம்=கொழுப்பு; சதை: யாக்கை=உடல்: நியமம்=சிவ ஆகமங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள், தினமும் அனுசரிக்க வேண்டியவை: உடலின் மீது வைத்துள்ள பற்று நித்திய நியமங்களை கடைப்பிடிக்கத் தடையாக இருக்கும் நிலையும், சுற்றங்கள் இறையுணர்வில் ஈடுபட்டு பாசங்களை அறுத்து வாழ்வதற்கு தடையாக இருக்கும் நிலையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. மனைவி, மக்கள், மற்றுமுள்ள சுற்றங்களை காக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ள மனிதன், அவர்களைப் பேணுவதற்காக பொருள் ஈட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றான். பொருள் ஈட்டும் வழியில் ஈடுபடும்போது, இறை உணர்வுக்கு நேரமும் பொறுமையும் இன்றி, பெரும்பாலானோர் வாழ்வதை நாம் கண்கூடாக காண்கின்றோம். எனவே ஒரு வகையில், இறை உணர்வினை வளர்த்துக் கொள்வதற்கு தடையாக, நமது மனைவி, மக்கள், சுற்றம் உள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தசைகளுடன் இணைந்த உடலினைப் பேணும் எண்ணத்தில், உடலினை வருத்தும் நியமங்களில் ஈடுபடாமல் நான் இருக்கின்றேன். திருமணம் மற்றும் பல விழாக்களில் நடைபெறும் கேளிக்கைகளில் ஈடுபட்டு, எனது சுற்றமாகிய கூட்டம் விரும்பும் செயல்களைச் செய்தவாறு வாழும் நான், அவர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை விலக்க முடியாமல் திண்டாடுகின்றேன். அதனால் உன் மீது அன்பு கொண்டு உன்னைப் போற்றிப் புகழ்ந்து வணங்கி வாழாமல் இருக்கின்றேன். கோவலூர் வீரட்டத்தில் உறையும் பெருமானே, நீ தான் மேற்கூறிய தடைகளை நீக்கி, நாம் நியமத்துடனும் இறை உணர்வினோடும் வாழ்வதற்கு அருள் புரியவேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல். அப்பர் பிரான் திருமண வாழ்க்கையில் ஈடுபடாமல் துறவியாக வாழ்ந்ததை நாம் அறிவோம். எனவே இந்த பாடல், நம்மைப் போன்றவர்களுக்காக இயற்றப் பட்ட பாடல் என்பதை புரிந்துகொண்டு நாம் பின்பற்ற வேண்டும். இல்லற வாழ்க்கையின் கடமைகளை நிறைவேற்றும் நாம், உயிரின் தேவையையும் புரிந்து கொண்டு, இறைவனை வழிபட வேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப்படும் அறிவுரை.
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும்
கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னைப் பேணும்
குணத்திடை வாழ மாட்டேன் கோவல் வீரட்டனீரே
இதே கருத்து நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (4.71.1) அப்பர் பிரானால் சொல்லப் படுகின்றது. கனையும்-ஒலிக்கும்: தனது நெஞ்சத்தினை நோக்கி அப்பர் பிரான் சொல்வதாக இந்த பாடல் அமைந்திருந்தாலும், உண்மையில் இந்த பாடல் நமக்கு கூறப்படும் அறிவுரையாகும். குடும்ப பந்தம் இல்லாமல் துறவியாக வாழ்க்கையை மேற்கொண்ட அப்பர் பிரானுக்கு மேற்கண்ட பந்தங்கள் இல்லை. நமது வினைத் தொகுதியை, நாம் கழித்துக் கொள்வதற்காக நாம் பிறவி எடுப்பது போன்று, நமது பெற்றோர்கள், மனைவி, மற்ற சுற்றங்கள் அனைவரும் பிறவி எடுக்கின்றார்கள். இந்த சுற்றம், இந்த உறவு அனைத்துமே இந்த பிறவியில் மட்டுமே ஏற்படுவன: சென்ற பிறவிகளின் நமக்கு சொந்தமாக இருந்தவர்கள் யார்யார் என்பது நமக்குத் தெரியாது: அதே போன்று வரும் பிறவிகளில் எவரெவர் நமக்குச் சுற்றமாக இருப்பார்கள் என்பதும் நமக்குத் தெரிவதில்லை: எனவே இந்தப் பிறவியில் நமக்கு சுற்றமாக உள்ளவர்கள் அடுத்த பிறவிக்கு நம்முடன் தொடர்ந்து வரப் போவதில்லை: மேலும் நாமே நமது உயிரின் உண்மையான விருப்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவதில்லை: அப்படி இருக்கையில், நமது சுற்றத்தார்கள் நமது உயிரின் விருப்பத்தைப் புரிந்து கொண்டு நடப்பது என்பது இயலாத காரியம். நாமும் நமது நெருங்கிய சுற்றத்தாருக்காக பல செயல்களைச் செய்து, நமது வினைகளை பெருக்கிக் கொள்கின்றோம். மேலும் சுற்றங்களின் விருப்பங்கள் ஒரு கட்டுக்குள் அடங்குவதில்லை: ஒரு விருப்பம் நிறைவேறினால் அடுத்த விருப்பம் தோன்றுகின்றது: கடலலைகள் போல் தொடர்ந்து வரும் விருப்பங்களுக்கு ஒரு முடிவு என்பது இல்லை. எனவே தான், சுற்றங்கள் நமது வினையை மேலும் பெருக்குகின்றன என்பதை நமக்கு உணர்த்தும் முகமாக, சுற்றம் என்னும் வினையுளே விழுந்து வேதனைக்கு இடம் கொடாமல் வாழ வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நெஞ்சமே, மனைவி, தந்தை, தாய், மற்றுமுள்ள சுற்றங்கள், இந்த பிறவியில் ஏற்பட்ட உடலுடன் கொண்ட தொடர்புகள். இந்த தொடர்புகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயன்று மேலும்மேலும் வினைகளை பெருக்கிக் கொண்டு வேதனையில் வாழாதே: இடைவிடாது ஒலிக்கும் கடல் அலைகளால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தானை, நீ விருப்பமுடன் நினைத்தால், உனது துயரங்களிலிருந்து விடுதலை பெற்று வாழ்க்கையில் உய்வினை அடையலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடமாகாதே
கனையும் மாகடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யலாம் நெஞ்சினீரே
உற்றார்கள் உதவ முடியாத நிலையில் இருப்பார்கள் என்று நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை; உற்றார்கள் இல்லாதார்க்கு எல்லாம் உறுதுணையாக இருப்பவன் சிவபிரான் என்று, திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.92.13) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நன்னூல்=சிவாகமங்கள், சிவனைப் பற்றிய புகழினை எடுத்துரைக்கும் நூல்கள்; காதல் செய்ய கிற்பார்=காதல் செய்ய வல்லவர்கள்; அற்றார்=பற்று அற்றார்கள்; ஐயாரப்பனின் திருவடிகள், நமக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று இதனால் உணர்த்தப் படுகின்றது. இயமன் தனது பாசக்கயிற்றுடன் மார்க்கண்டேயர், சிறுவன் சுவேதகேது ஆகியோரை அணுகிய போது, இருவரையும் காப்பாற்றியவர் சிவபெருமான்.
உற்றார் இல்லாதார்க்கு உறுதுணை ஆவன ஓதி நன்னூல்
கற்றார் பரவப் பெருமை உடையன காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளர் ஒளி வானகம் தான் கொடுக்கும்
அற்றார்க்கு அரும் பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே
தனக்கு அனைத்து விதமான உறவுமாக இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான், திருப்பாதிரிப் புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் குறிப்பிடுகின்றார். ஏன்றுதல்=தாங்கிக் கொள்ளுதல்; அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற மொழியினுக்கு ஏற்ப ஈன்றாள் என்று தாயினை முன்னே சொல்லி பின்னர் தந்தையை குறிப்பிடுகின்றார். கூற்றுவனே நேரில் வந்து வருத்துவதைப் போல் தன்னை வருத்திய சூலை நோயினைத் தான் போக்கிக் கொள்ளத் தெரியாமல் தவித்த போது, தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபெருமான் தானே உண்மையாக அனைவருக்கும் துணையாக இருந்து உதவுகின்றான். மேலும் நாயானாரின் வாழ்க்கையில், சமணர்களின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பியதற்கு சிவபெருமானின் கருணை தானே காரணம். எனவே, தனக்கு முன்னே தோன்றாவிட்டாலும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தோன்றாத் துணை நாதன் என்பது இங்குள்ள இறைவனின் பெயர்.
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே
மூன்றாய் உலகம் படைத்து என்ற குறிப்பினுக்கு, கீழ்க்கண்டவாறும் விளக்கம் அளிப்பதுண்டு. பொதுவாக இந்த உலகத்தில் உள்ளவற்றை மூன்று வகைப் பொருட்களாக சைவ சித்தாந்தம் பிரிப்பதை உணர்த்தியதாக கூறுவார்கள். அவன் (இறைவன்), அவள் (அனைத்து உயிர்கள்) அது (உலகும் உலகத்தில் உள்ள பொருட்களும்). இவையே பதி, பசு, பாசம் என்றும் அழைக்கப்படும். உகந்தான் என்று சொல்லப் படுவதற்கு காரணம், உயிர்களை அவைகள் செய்த வினைகளுக்கு ஏற்ப உடலுடன் பொருத்தும் இறைவன், உயிர்கள் தங்களது மலத்தினை நீக்கிக் கொள்ளும் பொருட்டு பல கருவிகளை அளித்திருப்பதால், உயிர்கள் அந்த கருவிகளை பயன்படுத்தி மலநீக்கம் பெற்று தன்னை வந்து அடையும் என்ற ஆசை உள்ளவனாக இறைவன் இருக்கும் நிலை தான்.இறைவன் உயிர்களை உடலுடன் பொருத்தியதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. அனைத்து உயிர்களுக்கும் துணையாக உடனும் இருக்கின்றான் என்ற கருத்தினை உட்கொண்டு அடியோங்கள் என்று பன்மையில் குறிப்பிடுகின்றார். மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில், ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியான் என்று குறிப்பிடுவது போல், (ஓர்தல்=உணர்ந்து ஆழ்ந்து பார்த்தல்) தனது மனத்தில் இறைவன் இருப்பதை அப்பர் பிரான் உணர்ந்தமையால், மனத்துள் இருக்க என்று இங்கே குறிப்பிடுகின்றார். எனது தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகிய மூவரையும் எனக்குத் தோன்றும் துணையாக இந்த உலகத்தில் படைத்து உகந்தவரும், எனது மனத்துள் இருப்பவருமாகிய சிவபெருமான் என்னைத் தனது அடிமையாக ஏற்றுத் தாங்குகின்றான். தேவர்களுக்கு மிகவும் இனிமையானவனாக இருக்கும் சிவபெருமான் தனது அடியார்களுக்குத் தோன்றாத் துணையாக விளங்குகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
இறைவன் சிவபெருமான் ஒருவன் தான் நமக்கு உண்மையான உறவினன் என்று கூறும் அப்பர் பிரான், இந்த உலகம் முழுவதும் கடலால் சூழப்பட்டாலும், நமக்கு அடைக்கலமாக விளங்குவன சிவபெருமானின் திருப்பாதங்கள் தான் என்று கூறுகின்றார். அப்பர் பிரான் தனது நெஞ்சத்தை நோக்கிக் கூறுவதாக இந்த பாடல் (4.94.2) அமைந்திருந்தாலும், நமக்குச் சொல்லும் அறிவுரையாக எடுத்துக் கொள்ளலாம். கடலின் ஆழம் அனைவரும் அறிந்த ஒன்று என்பதால் எவரும் கடலின் அருகே சென்று மூழ்கும் நிலைக்கு ஆளாக மாட்டார்கள். மேலும் கடலில் கல்லுடன் கட்டித் தள்ளிவிடப் படுவது என்பது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்ச்சி. எனவே இயற்கைச் சீற்றத்தின் விளைவாக கடல் பொங்கி வருவதும், ஊழிக் காலத்தில் பொங்கி வருவதும் தான் கடல் நம்மை மூழ்கடிக்கக் கூடிய வாய்ப்புகள். அத்தகைய நேரத்திலும் சிவபெருமான், அவரிடம் பக்தி செலுத்தும் எவரையும் கடலில் மூழ்காமல் காப்பார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நெஞ்சமே, பரந்த இந்த உலகினைச் சூழ்ந்துள்ள கடல் பொங்கி முழுவதுமாக மூடினாலும் கவலைப்பட வேண்டாம். நமக்கு உற்ற துணையாக அடைக்கலம் கொடுப்பவனை நான் கண்டு கொண்டேன். அவன் தான் உமை அம்மைக்கு மிகவும் அன்பானவனும், இளம் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடி இருப்பவனும் ஆகிய சிவபெருமான். எனவே எப்போதும் அவனையே நினைந்து அவனது திருப்பாதங்களைப் பற்றிக் கொள்வீர் என்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.
பற்றாய் நினைந்திடு எப்போது நெஞ்சே இந்தப் பாரை முற்றும்
சுற்றாய் அலைகடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு
உற்றான் உமையவட்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான் தன் மொய் கழலே
வேம்பினைப் பேசி என்று தொடங்கும் ஆரூர்ப் பதிகத்தின் (4.102) முதல் பாடலில், சுற்றத்தை நிலையான துணை என்று நம்பியிருக்கும் மாந்தர்களே என்று அழைத்து, சிவபெருமானுக்கு வஞ்சனை இல்லாதத் தொண்டினைச் செய்து உய்யுமாறு அப்பர் பெருமான் நமக்கு அறிவுரை கூறுகின்றார். வேம்பினைப் பேசுதல் என்ற சொற்றொடர் மூலம், உலகியல் பேச்சுக்கள் அனைத்தும் வெறுப்பைத் தருவன என்று குறிப்பிட்டு வேம்பினை ஒத்தது என்று கூறுகின்றார். விடக்கு என்றால் உடல். தூம்பு=வயிறு; தூம்பினைத் தூர்த்தல்=மறுபடியும் மறுபடியும் காலியாக உள்ள வயிற்றினை உணவு உட்கொண்டு நிரப்புதல். இந்தப் பாடலில் அப்பர் பிரான், பயன் ஒன்றும் தராத, வெறுப்பினை வளர்க்கும் உலகியல் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு, உடலினை வளர்த்து, மேன்மேலும் வினைகளை பெருக்கிக் கொண்டு, மறுபடியும்மறுபடியும் காலியாகும் வயிற்றினை உணவு உட்கொள்ளுவதன் மூலம் நிரப்பிக் கொண்டு, நமது சுற்றத்தார்கள் நமக்குத் துணை என்று நம்பிக் கொண்டு இருக்கும் மாந்தர்களே என்று கூறி, மேற்கூறிய செய்கைகள் எல்லாம் நமக்கு உய்வினைத் தாராது என்று உணர்த்துகின்றார். நமது உடலில் திருநீற்றினைப் பூசிக்கொண்டு, வஞ்சனை ஏதும் இல்லாத தொண்டுகள் சிவபெருமானுக்கு செய்வதன் மூலம் நாம் உய்யலாம் என்று உய்யும் வழியினைச் சொல்லிக் கொடுக்கின்றார்
வேம்பினைப் பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கித்
தூம்பினைத் தூர்த்து அங்கோர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர்
ஆம்பலம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டு பட்டு உய்ம்மின்களே
ஏன் நமது உற்றார்கள் எவரும், உற்றாராக கருதப்படுவதில்லை என்பதற்கு விளக்கம், திருச்சேறை பதிகத்தின் (பதிக எண்: 5.77) ஏழாவது பாடலில் அப்பர் பிரானால் அளிக்கப் பட்டுள்ளது. நாம் தேடிவைத்த செல்வமும், நமது மனைவியும், நமது உற்றார்களும் நமக்கு உதவ முடியாத சூழ்நிலை, நாம் இறக்கும் தருவாயில் ஏற்படுவதால், உற்றார்கள் உற்றாராக கருதப் படுவதில்லை. இங்கே ஒத்து ஒவ்வாத உற்றார்கள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் உணரலாம். செல்வம் சேரும் சமயத்தில், நம்முடைய கருத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் ஒத்து இருக்கும் உற்றார்கள், நமது வறுமைக் காலத்தில் நம்மிடமிருந்து விலகி இருப்பதால், அவர்களை ஒத்து ஒவ்வாத உற்றார்கள் என்று குறிப்பிடுகின்றார். செந்நெறி என்பது திருச்சேறையில் உள்ள திருக்கோயில் பெயர்; செந்நெறி அப்பர், செந்நெறி அத்தர் என்பது அவரது திருநாமம், இவ்வாறு உற்றார்கள் நமக்கு உதவ முடியாத நேரத்திலும், செந்நெறியப்பர் நமக்கு உதவுவார் என்பதால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று அப்பர் இங்கே கூறுகின்றார்.
வைத்த மாடும் மடந்தை நல்லார்களும்
ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந்நெறி உறை
அத்தர் தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே
கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.20.8) அப்பர் பிரான், உயிர்கள் அனைத்திற்கும் உறவாக இருப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். உற்றார்=உற்ற சமயத்தில், தேவைப்படும் நேரத்தில் உதவி செய்வோர்; முற்றார்=அறிவில் முதிர்ச்சி அடையாத திரிபுரத்து அரக்கர்கள்; கற்றார்கள்=சிவநெறியை கற்று மெய்ப்பொருளை உணர்ந்த சான்றோர்கள். உற்ற சமயத்தில், உதவி தேவைப்படும் சமயத்தில் உதவி செய்பவரும், அனைத்து உயிர்களுக்கும் உறவாகி உயிர்களை ஈன்றவனும், முதிர்ந்த அறிவு இல்லாமல் பலரையும் வருத்தும் கொடுமைகள் செய்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினால் அழித்தவனும் ஆகிய பெருமான் உறைவது, கற்றவர்கள் சேரும் கடம்பூர் நகரத்தில் உள்ள கரக்கோயிலாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
உற்றாராய் உறவாகி உயிர்க்கெலாம்
பெற்றார் ஆய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்
கற்றார் சேர் கடம்பூர்க் கரக்கோயிலே
நமக்கு இந்த பிறவியில் வாய்த்துள்ள சுற்றங்கள் நிலையானவை அல்ல, அந்த சுற்றங்கள் நம்மை விட்டு பிரிவதன் முன்னம், நமது உயிர்க்கு என்றும் நிலையான சுற்றமாக உள்ள இறைவனைத் தொழுது சரணடைய வேண்டும் என்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல், நல்லம் தலத்துப் பதிகத்தின் பாடலாகும் (5.43.7). பேதமாகி=வேறுபட்டவராக. இறப்பதால் பிணமாக மாறி மற்றவரிடமிருந்து வேறுபட்ட நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. புகழ்=அடைக்கலம். உலகத்தவரே, உங்களது உடலிலிருந்து உயிர் பிரிந்து, உயிருடன் வாழும் உமது மனைவி மக்கள் மற்றும் சுற்றத்தார் ஆகியோரிடமிருந்து மாறுபட்டு, பிணமாக மாறும் முன்னர், அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகிய இறைவன் உறைகின்ற நல்லம் திருத்தலம் சார்ந்து தொழுவதற்கு புறப்படுங்கள். அவனுக்கு அடைக்கலப் பொருளாக மாறி உங்களது உயிர் உய்யும் வகையினை நீர் தேடிக் கொள்வீராக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மாதராரொடு மக்களும் சுற்றமும்
பேதமாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ
போதுமின் எழுமின் புகலாகுமே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.47.5) அப்பர் பிரான், பெருமான், தனக்கு நல்ல சுற்றமாக பொருந்தியுள்ளான் என்று கூறுகின்றார். சுற்றமும் மக்களும் நாம் இடர்ப்படும் நேரத்தில் நமக்கு உதவுபவர்களாக இருப்பதை நாம் இந்த உலகினில் காண்கின்றோம். அத்தகைய சுற்றத்தாரை நல்ல சுற்றத்தார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவதை நாம் உணரலாம். கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் தள்ளிவிடப்பட்ட போதும், கடலில் தான் மூழ்காமல் கரையேற்றிய பெருமானை, ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் இருந்தவன் இறைவன் என்று பாடிய அப்பர் பிரான், இந்த பாடலில் தன்னுடன் பொருந்தி நின்று உதவிய நல்ல சுற்றம் என்றும் குறிப்பிடுகின்றார். தனக்குத் தாயாகவும் தந்தையாகவும் விருப்பமுடைய சுற்றத்தாராகவும் பெருமான் இருந்த நிலையினை, அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். தடம்=அகன்ற; மருந்து=பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்து எந்தை= எங்கள் தந்தை; இம்மையிலும் மறுமையிலும் தன்னை காப்பவனாக அப்பர் பிரான் இறைவனை காண்பதை நாம் உணரலாம். கம்பை ஆற்றங்கரையில் பரமனை உமையம்மை தொழுத நிகழ்ச்சி இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. எனது பிறவிப் பிணியினைத் தீர்த்து மறுமையில் எனக்கு உதவி செய்யும் பெருமான், இம்மையிலும், நல்ல சுற்றமும் நன்மக்களும் உதவுவது போன்று என்னுடன் பொருந்தி எனக்கு உதவி செய்யும் புண்ணியனாகத் திகழ்கின்றான். கரியதும் அகன்ற கண்களை உடையவளும் ஆகிய உமை அம்மை கை தொழும் வண்ணம் இருந்த கச்சி ஏகம்பன், எனக்கு தந்தையாகவும் விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் சொல்லும் பாடல்.
மருந்தினோடு நல் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன்
கருந்தடங் கண்ணினாள் உமை கை தொழ
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே
இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (5.47.6), உலகப் பற்றினை விட்டவர்களுக்கு பெருமான் நல்ல சுற்றமாக இருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். பற்றிலார்=உலகப் பொருட்களின் மீதும் உலகத்தில் உள்ள உயிர்களின் மீதும் தாங்கள் வைத்திருந்த பாசத்தைத் துறந்தவர்கள்; பற்றினைத் துறந்தவர்களுக்கு அருளும் பெருமான் என்று உணர்த்தும் அப்பர் பிரான், அவனது அருளினை நாம் எவ்வாறு பெறுவது என்பதனை பாடலின் கடையடியில் உணர்த்துகின்றார். அவனைத் தொழுது நமது அறியாமையை நாம் நீக்கி கொண்டால், நமக்கு உலகமும் உலகப் பொருட்களும் உலகிலுள்ள உயிர்களும் நிலையற்றவை என்ற ஞானம் ஏற்படும். அப்போது நாமும் நிலையிலாத அந்த பொருட்களின் மீது நாம், இந்நாள் வரையில் வைத்திருந்த பாசத்தை நீக்கி, நிலையான பொருளாகிய பெருமான் மீது பற்று கொள்வோம். அந்த பற்று நாளடைவில் முதிர்ந்து தீவிர பக்தியாகி, நாம் அவனது அருளுக்கு பாத்திரமாகும் தன்மையை நமக்கு அளிக்கும். உலகப் பொருட்களின் மீதும் உலகத்தில் உள்ள உயிர்களின் மீதும் தாங்கள் வைத்திருந்த பாசத்தை முற்றிலும் துறந்த அடியார்களுக்கு நன்மைகள் பல அருளும் அரும் பொருளாக இருப்பவன் சிவபெருமான். அவன் சுருண்ட செஞ்சடையை உடையவன். கச்சி ஏகம்பத்தில் உறையும் அவனை கை தொழுது, உங்களது மனதினில் இருக்கும் அறியாமை என்ற இருளை நீக்கிக் கொள்வீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பொருளினோடு நல் சுற்றமும் பற்றிலர்க்கு
அருளு நன்மை தந்து ஆய அரும் பொருள்
சுருள் கொள் செஞ்சடையான் கச்சி ஏகம்பம்
இருள் கெடச் சென்று கை தொழுது ஏத்துமே
இறைவனைத் தவிர நமக்கு சிறந்த உறவு வேறெவரும் இல்லை என்பதால், நாம் உலகியல் வாழ்க்கையால் நமக்கு வாய்க்கும் உறவுகளை சிந்தித்து மகிழ்ச்சி அடையாமல், பெருமானையே சிந்திக்க வேண்டும் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பதிகம், அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (5.80.7). பிறவி என்னும் மாயக் கடலில் விழுந்த நாம், இந்த பிறவியே நமக்கு நிலை என்ற உணர்வுடன் இந்த பிறவியில் நமக்கு ஏற்பட்டுள்ள பந்தங்களை நிலையான உறவுகள் என்று எண்ணி மகிழ்கின்றோம். இந்த மாயப் பிணைப்பிலிருந்து விழித்து வெளியே வருமாறு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல். நிலையில்லாத இந்த மாயப் பிறவியை நிலையாக எண்ணி, அந்த பிறவியினால் ஏற்பட்ட உறவுகளை நிலையான துணை என்று நினைத்து மகிழ்ந்து இராமல், தருமமே வடிவமாக உடையவனும் அன்பில் ஆலந்துறை தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானை மறவாமல் தொழுது, புகழ்ந்து, வணங்குவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவெலாம் சிந்தித்து உன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே
இந்த பாடலின் முதல் அடியில் உறவும் இன்புறு சீரும் ஓங்கினால் வீடுபேறு எளிதாகும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இங்கே உறவு என்று அவர் குறிப்பிடுவது இறைவனுடன் நாம் கொண்டுள்ள உறவு, இறைவன் அடியான் என்ற உறவு; இந்த உறவு தான் நம்மையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு நாம் சிறப்புடன் வாழ வழி வகுக்கின்றது. இந்த குறிப்பு நமக்கு, மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலை (5.90.10) நினைவூட்டுகின்றது. விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை ஒன்றோடொன்று கடைந்தால் தீ ஏற்படுகின்றது. ஆனால் பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் தான் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்ட பின்னர் தான், மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான். எனவே தகுந்த முறையில் அவனை அறிந்து கொண்டு அவனை வழிபட வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். உறவே போற்றி உயிரே போற்றி என்று போற்றித் திருவகவலில் மணிவாசக அடிகளார் சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது.
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே
அருந்துணையாக பெருமான் இருக்கையில், நம்மைப் பாசத்தில் ஆழ்த்தும் சுற்றத்தாரின் மேல் பற்று வைக்க வேண்டாம் என்று அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல், தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (6.1.5). அருந்துணை-ஒப்பற்ற துணை; வான்புலன்கள்=வானத்தைப் போன்று பெரிய புலன்கள்; உண்மையான மெய்ப்பொருளை நாம் நினைக்காத வண்ணம், நம்மைத் திசை திருப்பும் வல்லமை வாய்ந்த ஐம்புலன்களை, இகழ்ச்சி தோன்ற வான்புலன்கள் என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமான் துணையாக இருந்ததால் அமணர்களின் வஞ்சனையில் இருந்து தப்பித்த அப்பர் பிரான் தனக்கு ஒப்பற்ற பெருந்துணையாக இருந்த சிவபெருமான், யாருக்கெல்லாம் பெருந்துணையாக இருப்பான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உடன் பிறந்தார், சுற்றத்தார், செல்வம் இவைகளின் மீது வைத்த பாசத்தை நீத்து, புலன்களின் மேல் செல்லும் மனத்தை அடக்கி மகளிர் தரும் சிற்றின்பப் பயனை அடியோடு ஒழித்து பொதுவாக பல தெய்வங்களை நினைப்பதை விடுத்து சிவபெருமான் ஒருவனையே போற்றும் வல்லவர்களுக்கு பெருந்துணையாக சிவபெருமான் இருப்பார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பற்றுகளை அறுத்தவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப்படுகின்றது. பற்று அறுவதற்காகத் தானே நமக்கு பல பிறப்பை இறைவன் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். மாயையாகிய உலகப் பொருட்களின் மேல் நாம் வைத்துள்ள பாசத்தை நீக்கி, மெய்ப்பொருளை தியானித்து நமது வினைகளைக் கழிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப் படுகின்றது. நமக்கு ஒப்பற்றத் துணைவனாய் விளங்கும் சிவபெருமான், அடியார்களின் அல்லலாகிய பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுபவன். இந்த உலகத்தில், தான் பிறப்பெடுத்த பின்னர் தோன்றிய உடன்பிறப்புக்களை, மற்ற சுற்றத்தார், மற்றும் செல்வம் முதலான உலகப் பொருட்கள் இவற்றின் மீது வைத்த பற்றுக்களை விட்டு, நல்ல வழியில் செல்ல விடாமல் திசை திருப்பும் வல்லமை பெற்ற ஐம்புலன்களை அடக்கி, மகளிரோடு கூடி அனுபவிக்கும் சிற்றின்பத்தை அறவே வெறுத்து, மற்ற தெய்வங்களுடன் சமமாக நினைக்காமல், சிவபெருமானின் தனிப் பெரும் சிறப்புக்களை புரிந்து கொண்டு அவனை வழிபடும் அடியார்களுக்கு பெரிய துணையாக இருப்பவன் சிவபெருமான். இவ்வாறு அனைவருக்கும் துணையாக இருக்கும், பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாட்களை நாம் பிறவாத நாட்களாக கருத வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்
பொருந்தணை மேல் வரும் பயனைப் போக மாற்றிப் பொது நீக்கித் தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையை பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.20.10) அப்பர் பிரான், அரக்கன் இராவணன், பெருமானின் புகழினை குறிப்பிடும் சாமகீதங்கள் பாடி பெருமானுக்கு உறவாக மாறினான் என்று கூறுகின்றார். நறவு=தேன்; உற்ற பிணி என்று அரக்கன் இராவணன் கயிலை மலையின் கீழே நசுக்குண்டு இருந்த நிலை குறிப்பிடப் படுகின்றது. உறவு=பெருமான், அடியவன் என்று நமக்கும் பெருமானுக்கும் இடையே உள்ள தொடர்பு; இறவாத தன்மை உடைய வரம் பெற்றேன் என்ற செருக்கு கொண்டு திரிந்த அரக்கன் இராவணனின் இருபது தோள்களும் நசுங்குமாறு தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவனும்; பின்னர் அரக்கன் இராவணன் தனக்கும் பெருமானுக்கும் இடையே உள்ள பெருமான் அடியான் என்ற உறவின் வழியே பெருமானை போற்றி சாமகானம் இசைத்து பாட, அந்த இன்னிசை கேட்டு இரக்கம் கொண்டு அரக்கனை அவன் மலையின் கீழே நசுங்கியிருந்த நிலையிலிருந்து அவனை மீட்டு பல வகையில் அருள் புரிந்தவனும், தன்னை என்றும் மறக்காமல் வழிபட்டு வணங்கும் அடியார்களின் மனதினில் நிலைபெற்று இருப்பவனும், சிறப்பு வாய்ந்த பிறைச் சந்திரன் மற்றும் கொன்றை வன்னி ஊமத்தம் ஆகிய மலர்களை சடையில் அணிந்தவனும், மேற்குறிப்பிட்ட மலர்களில் உள்ள தேன் ஒழுகி கலந்த செஞ்சடையை உடையவனும், திருநள்ளாறு தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனை அடியேன் தியானித்து வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
இறவாமே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபதுதோள் நெரிய ஊன்றி
உறவாகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான் தன்னை
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மாமதியம் மலர்க் கொன்றை வன்னி மத்தம்
நறவார் செஞ்சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.38.6) அப்பர் பிரான், தன்னைச் சரணடைந்த அடியார்களுக்கு சுற்றமாக பெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். உற்றிருந்த=உணர்வதற்கு உதவி புரியும் தன்மைகள்; உற்றவர்=அடைந்த அடியார்கள்; பொருட்களை உணர்ந்து கொள்வதற்கு உதவி புரியும் அவற்றின் தன்மைகளாக இருப்பவன் நீயே என்றும், உன்னை சரணடைந்த அடியார்களின் சுற்றமாக இருந்து அவர்களுக்கு உதவி புரிபவன் நீயே என்றும், கற்கும் கல்வியாகவும் அந்த கல்வியால் விளையும் ஞானமாகவும் இருப்பவன் நீயே என்றும், உனது பெருமைகளை நன்கு உணர்ந்து கற்றவர்கள் வேண்டியதை அளிக்கும் கற்பகமாய் நிற்பவன் நீயே என்றும், பெற்ற தாயினை விடவும் உயிர்களுக்கு அதிகமாக பரிந்து உதவி செய்பவன் நீயே என்றும், தலைவனாக எனது விருப்பத்தை ஈடேற்றும் வண்ணம் தனது திருவடிகளை அடியேனது தலை மேல் வைத்தவன் நீயே என்றும், பாற்கடலிலிருந்து எழுந்த கொடிய நஞ்சின் தன்மையை அடக்கி மாற்றி தனது கழுத்தினில் அடக்கியவன் நீயே என்றும், திருவையாறு தலத்தினை விட்டு அகலாத செம்பொற் சோதியாகிய இறைவனே உன்னை அடியேன் பலவாறாக அழைத்து வணங்குகின்றேன் என்று பெருமானுக்குத் தனது வணக்கத்தை அப்பர் பிரான் தெரிவிக்கும் பாடல்.
உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ
தன்னை வேண்டிப் பணியும் அடியார்களுக்கு உறவாக இருந்து அவர்களின் இடர்களைக் களைபவன் பெருமான் என்பதை உணர்த்தும் முகமாக, தன்னை வேண்டிய வானவர்களுக்கு உறவாகி நின்று ஆலகால விடத்தினைத் தானே உட்கொண்டு அவர்களைக் காத்த செய்தியை திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.5) அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அறவா=அறமே உருவாக உடையவன்; நம்மை பீடித்துள்ள வினைகளின் பயனாக வரும் துன்பங்களை எந்த உயிரும் அனுபவித்து தான் கழிக்க முடியும். எனவே அத்தகைய துயரங்களை நீக்குவது என்பது எவர்க்கும் இயலாத காரியம். இறைவனின் அருளால் தான் அதனை நீக்க முடியும். அவ்வாறு இறைவனின் அருளை பெறுவதற்கு அவனை வழிபட வேண்டும். அவ்வாறு தான் பெருமானை வழிபட்டதால், தன்னை ஊழ்வினைகள் ஏதும் செய்யாது என்று இறுமாப்புடன் அப்பர் பிரான் சொல்வதை நாம் இந்த பாடலில் உணரலாம். தினமும் விடிவதற்கு முன்னரே எழுந்து நீரினில் மூழ்கி குளித்து, பின்னர் நறுமணம் மிகுந்த மலர்களைக் கொய்து, இறைவனே உனது திருப்பாதங்களை வாழ்த்தி வணங்கி, அத்தகைய வழிபாட்டினால், பழைய வினைகளால் ஏற்படும் துன்பங்களை, எளிதில் துறக்க முடியாத துன்பங்களை அடியேன் நீக்கிக் கொண்டேன். இந்த நிலையில் ஊழ்வினைகள் என்னை என்ன செய்ய முடியும். கடலிலிருந்து எழுந்த நஞ்சின் தாக்கத்தால் ஏதும் செய்ய முடியாமல் திகைத்து, தன்னை வேண்டிய தேவர்களை உறவாக மதித்து, அவர்களின் துயரத்தை தீர்ப்பதற்காக, ஆரவாரம் இடும் அலைகள் நிறைந்த கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டு தேவர்களை காத்த பெருமானே, நீர்வளம் மிகுந்து குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் அமரர்கள் தலைவனே, அறமே வடிவமாக உள்ளவனே, நீர் தான் அடியேனுக்கு அஞ்சல் என்று சொல்லி, வினைகளின் தாக்கத்திலிருந்து காக்க வேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல்.
நறுமா மலர் கொய்து நீரின் மூழ்கி நாடோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தித்
துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழுலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரைநீர்க் கடல் நஞ்சுண்டு உய்யக்கொண்ட
அறவா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே
உயிர் உடலினை விட்டு பிரியும் தருவாயில் ஏற்படும் துயரங்களையும், அதனை நீக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் ஒருவனே என்பதையும் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவது, நமக்கு அப்பர் பிரான் திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. எத்தாயார்=எத்துணை மேம்பட்ட தாயார்; மாடு=செல்வம்; சும்மாடு-சுத்தமான செல்வம், நமது செல்வங்களையும் நமது உறவுகளையும் குறிப்பிட்டு, அவற்றில் உண்மையாக நமக்கு உதவக் கூடியது யாது என்ற கேள்வியை அப்பர் பிரான் இந்த பாடலில் எழுப்புகின்றார். நமக்கு என்று அவர் குறிப்பிடுவது நமது உயிரைத் தான். உயிர் தனது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ளவும், உண்மையான மெய்ப் பொருளை அறிந்து கொள்ளவும் உதவும் பொருட்டு, இறைவன் உயிருக்கு கருவி கரணங்களை அளித்துள்ளார். அந்த கருவிகள் இல்லாமல் நாம் எதனையும் அறிய முடியாது. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர், அந்த கருவி கரணங்களால் எந்த உதவியும் உயிருக்கு செய்ய முடியாது. எனவே உடலை விட்டு பிரிந்த உயிருக்கு உதவி தேவைப்படுகின்றது. ஈட்டிய வினைகளின் ஒரு பகுதியை சூக்கும உடல் அனுபவித்து கழிக்கும் போதும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவும், முடிந்தால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் உயிர் விரும்பும் போது, உதுவுவார் யார். இந்த பிறவியில் நமக்கு வாய்த்த தாய் தந்தையாரோ சுற்றத்தாரோ உதவ முடியுமா, அவர்கள் எவராலும் உதவ முடியாது. நாம் ஈட்டிய செல்வத்தால் ஏதேனும் உதவியை விலைக்கு வாங்க முடியுமா அதுவும் நடக்காது என்பதே நிதர்சனமான உண்மை. இந்த உண்மை தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. செத்த பிறகு அந்த உயிர்க்கு உதவி தேவைப்படும் போது, யார் உதவி செய்ய வல்லவர், எந்த செல்வம் உதவக் கூடியது என்ற கேள்வியை அப்பர் பிரான் இங்கே கேட்கின்றார் இறைவன் ஒருவனே நமக்கு அந்த தருணத்தில் துணையாக இருந்து உதவி செய்வான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. எத்தந்தை என்று ஒருமையில் குறிப்பிட்ட அப்பர் பிரான் எத்தாயர் என்று பன்மையில் குறிப்பிட்டதை நாம் உணரலாம். ஒருவனை ஈன்ற தாயைத் தவிர, வேறு நான்கு பேரையும் தாயாருக்கு சமமாக கூறுவதுண்டு. அரசனின் மனைவி குடிமக்கள் அனைவர்க்கும் தாய், குருவின் மனைவி சீடர்கள் அனைவர்க்கும் தாய், அண்ணனின் மனைவி, அந்த குடும்பத்தில் உள்ள மற்ற அனைவர்க்கும் தாய், தாயை ஈன்றவளும் தனது பேரக் குழந்தைகள் அனைவர்க்கும் தாயாக மதிக்கப் படுகின்றாள். செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை என்று நமது உறவினர்களை குறிப்பிட்ட அப்பர் பிரான், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் இங்கே கூறுகின்றார். சிறு விறகால் தீமூட்டி செல்லா நிற்பர் என்று கூறுகின்றார். சடலத்திற்கு இறந்தவரின் மூத்த மகன் கொள்ளி வைத்த பின்னர் சுற்றியிருக்கும் ஏனையோரும் சிறிய விறகு கட்டைகளை தீ மூட்டி, சடலத்தின் மீது போடுவது வழக்கம். அவ்வாறு போட்ட பின்னர் உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்தால், மற்றவர்கள் தன்னைத் தவறாக நினைப்பாரோ என்ற எண்ணத்தில், தயக்கத்துடன் பலர் இருப்பதையும் அந்த தருணத்தில் நாம் காணலாம். இந்த நிலைமைத் தான் சிறு விறகால் தீ மூட்டி செல்லா நிற்பர் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த செயல் உயிரினுக்கு செய்யும் உதவி அல்ல. உயிர் பிரிந்த உடல் முற்றிலும் எரிந்து சாம்பலாக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல். எத்துணை மேம்பட்ட தாயாராக இருந்தாலும், எத்துணை மேம்பட்ட தந்தையாக இருந்தாலும் எத்துணை மேம்பட்ட சுற்றத்தாராக இருந்தாலும் அவர்கள் எவரும் நமது உடலிலிருந்து பிரியும் உயிரினுக்கு நன்மை செய்யும் நல்லவர்களாக முடியாது. நாம் சேர்த்து வைத்த செல்வம் எத்தனை உயர்ந்த செல்வமாக இருந்தாலும், நமது உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர், அந்த உயிரினுக்கு அந்த செல்வம் எந்த வகையிலும் உதவாது; நமது உடலினை விட்டு உயிர் பிரிந்த பின்னர் நமது உறவினர்கள் செய்யும் செயல் இது ஒன்று தான்; அதாவது நமது உயிரற்ற உடலுக்கு சிறிய விறகினால் தீ மூட்டிய பின்னர், அந்த இடத்தினை விட்டுவிட்டு நகரலாமா கூடாதா என்று தயக்கத்துடன் நிற்பது தான்; எனவே இவர்கள் எவரையும் அடியேன் நம்பவில்லை. ஞான வடிவமாகிய தலைவனே, பொன்னி நதிக்கரையினில் உள்ள திருவானைக்காவைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள செல்வனே, உனது பொன்னான திருவடிகளை அடியேன் அடையப் பெற்றால், துன்பங்களால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படுமோ, ஏற்படாது; எனவே எனது துன்பத்தினை போக்கிக் கொள்ள இறைவனை வழிபடுவது தவிர அடியேன் வேறு ஏதும் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக்கா உடைய செல்வா என்றன்
அத்தா உன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என்செய்கேனே.
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.63.3) அப்பர் பிரான், பெருமான் அனைத்து உயிர்களுக்கும் உற்றவனாக இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். முற்றூழிக் காலத்தில் பிரமன் திருமால் உட்பட அனைவரின் உடல்களும் அழிந்த பின்னர், எஞ்சியுள்ள உயிர்களை இறைவன் ஒடுக்கி தனது வயிற்றினில் அடக்குகின்றான். இந்த செயலைத் தான் அப்பர் பிரான் இறக்கம் செய்வான் என்று இங்கே கூறுகின்றார். ஊழிக்காலம் முடிந்த பின்னர் உயிர்களைத் தோற்றுவிக்க இறைவன் திருவுள்ளம் கொள்ள அவன் நினைத்த மாத்திரத்தில் அவனிடத்தில் ஒடுங்கிய உலகம் விரிவடைய, ஒடுக்கத்திலிருந்து உயிர்களும் விரிவடைகின்றன. உயிர்களின் தன்மைக்கு ஏற்ப உடல்களுடன் உயிர்கள் இணைக்கப்பட உலகத் தோற்றம் நிகழ்கின்றது. இந்த செயலைத் தான் அப்பர் பிரான் இங்கே பெற்றானைப் பின் இறக்கம் செய்வானை என்று குறிப்பிடுகின்றார். முற்றாத, ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது தலையில் மாலையாக அணிந்தவனும், முந்நீர் என்று அழைக்கப்படும் கடலிலிருந்து தோன்றிய நஞ்சினை தான் உண்டு தேவர்களுக்கு அமுதம் கிடைப்பதற்கு வழி வகுத்த உறவினனும், அனைத்து உயிர்களுக்கும் துணையாக இருப்பவனும், ஓங்காரத்தின் உட்பொருளாக இருப்பவனும், அனைத்து உலகங்களையும் தோற்றுவித்தவனும், பின்னர் தான் தோற்றுவித்த உயிர்களை ஊழிக் காலத்தில் ஒடுக்குபவனும், தன்னைத் தலைவன் என்று போற்றாத திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை வெற்றி கொண்டு அழித்தவனும், திருவானைக்கா தலத்தில் செழிப்பான நீர்த்திரளின் வடிவமாக அமைந்தவனும் ஆகிய பெருமானை அடியேன் சென்று அடைந்தேன் என்று அப்பர் பிரான் தான் இறைவனின் திருவடிகளில் சரணடைந்ததை குறிப்பிடும் பாடல்.
முற்றாத வெண்திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சுண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குத் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம்
பெற்றானை பின் இறக்கம் செய்வான் தன்னைப் பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானைத் திருவானைக்கா உளானை செழுநீர் திரளைச் சென்று ஆடினேனே
நாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.6) அப்பர் பிரான் இறைவன் உயிர்களுக்கு உறவாகவும் பகையாகவும் இருக்கின்றான் என்று கூறுகின்றார். தனது அடியார்களுக்கு உறவாக இருந்து நன்மைகள் புரிந்தும் இடர்களிலிருந்து காத்தும் உதவி புரியும் இறைவன், தன்னை நினைக்காத மனிதர்களுக்கு அத்தகைய உதவிகள் ஏதும் புரியாமல் இருக்கின்ற தன்மையை பகை என்று கருதுவது ஒரு வகையான பொருள். அனைத்து உயிர்களும் இன்பங்களும் துன்பங்களும் மாறிமாறி அனுபவிக்கின்றன. இன்பத்தை அனுபவிக்கும் உயிர்கள் இறைவனை உறவாகவும் துன்பத்தை அனுபவிக்கும் உயிர்கள் இறைவனை பகையாகவும் கருதுகின்றன என்பது மற்றொரு விளக்கம். அப்பர் பிரான் இந்த பாடலில் பெருமானை பித்தன் என்று அழைக்கின்றார். அதற்கான காரணத்தையும் அவர் நமக்கு உணர்த்துவதை நாம் இங்கே காணலாம். நடனம் ஆடும் கலைஞர்கள் தங்களது நடனத்திற்கு ஏற்ப இனிமையாக பாடுவோரைக் கொண்டு நடனம் ஆடுவார்கள். ஆனால் பரமனோ இங்கே, அவ்வாறு எவரையும் கொள்ளமால், பேய்களின் பாடலுக்கு ஏற்ப நடனமாடுகின்றார். எனவே அவரை பித்தன் என்று கூறுவதாக நமக்கு உணர்த்துகின்றார். நறவு=தேன்: உயர்ந்து காணப்படும் மலை பல செல்வங்களை உடையது; பரந்து எல்லையின்றி காணப்படும் கடலும் பல செல்வங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய பண்புகளை உடைய சிவபெருமான், மலையாகவும், கடலாகவும் உள்ளதாக கூறுவது திருமுறை மரபு. மனித உயிர்கள் ஏதேனும் செய்யவேண்டும் என்றால், ஒரு கருவினுள்ளே புகுந்து, வளர்ந்து, தான் விரும்பும் செயலை நிகழ்த்த வேண்டும். ஆனால் இறைவனுக்கு அத்தகைய கட்டாயம் ஏதும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் எதனையும் செய்ய வல்லவன் இறைவன். இந்த உண்மையை பிறவாது பெருகினான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். உறவானை பகையானை என்று பெருமான் உயிர்களுக்கு உறவாகவும் பகையாகவும் இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். நாம் இன்பங்கள் அனுபவிக்கும் போது, பெரும்பாலும் இறைவனை நினைப்பதில்லை: அப்படி நினைத்தாலும், நமக்கு இன்பங்கள் அளித்த அவனை நல்லவன் என்று சொல்கின்றோம். துன்பம் அடையும் நேரங்களில் அவனைத் தூற்றுகின்றோம். இது மனிதனின் இயல்பு. இதைத் தான் அப்பர் பிரான், இங்கே இறைவன் உறவாகவும் (இன்பங்கள் அனுபவிக்கும் போது) பகையாகவும் (நாம் துன்பங்கள் அடையும் தருணங்களில்) நம்மால் கருதப்படுவதை குறிப்பிடுகின்றார். ஆனால் நாம் ஒருகணம் சிந்தித்தால், நாம் இன்ப துன்பங்கள் அடைவதன் மூலம், நமது வினைகள் கழியுமாறு உதவி செய்பவன் இறைவன் என்பதை உணரலாம். எனவே உண்மையில் அனைவர்க்கும் உறவாகவே இறைவன் விளங்குகின்றான். மற்றவர்கள் போன்று வினைகளால் கட்டுண்டு இல்லாமல், பிறப்பினையும் இறப்பினையும் கடந்து, பிறவாமலும் இறக்காமலும் இருப்பதால் பெரும்புகழ் பெற்றவனாக விளங்குபவன் சிவபெருமான்; பேய்களின் பாடலுக்கு ஏற்ப காட்டினில் நடனம் ஆடுபவன் சிவபெருமான்; தன்னை மறவாது இருக்கும் அடியார்களின் மனதினில் நிலையாக பொருந்தி இருப்பவன் சிவபெருமான்; உயர்ந்து காணப்படும் மலை போன்று, மற்ற தெய்வங்களை விடவும் உயர்ந்த நிலையில் இருக்கும் சிவபெருமான், பல வளங்களை மலை நமக்கு அளிப்பது போன்று, நமக்கு பலவிதங்களிலும் நன்மை புரிகின்றான். பரந்தும் ஆழ்ந்தும் காணப்படும் கடல் தன்னில் மூழ்குவோர்க்கு விலை மதிப்பற்ற முத்துகளை அளிப்பது போன்று, பெருமானும் தன்னைப் பற்றிய நினைவுகளுடன் ஒன்றும் அடியார்களுக்கு எவரும் பெறாத ஆனந்த பரவச நிலையினை அளிக்கின்றான். அவன் காட்டினில் உறைகின்றான். உயிர்களின் வினைத் தொகைகளுக்கு ஏற்ப இன்பமும் துன்பமும் விளைவிப்பதால், உயிர்களுக்கு உறவாகவும் பகையாகவும் கருதப்படுகின்றான். அனைத்து உயிர்களுக்கும் உயிராக விளங்கும் பெருமான், உயிர்களுடன் கலந்து உயிரின் உள்ளேயும், அவ்வாறு கலந்திருந்தாலும் உயிரினின்று வேறுபட்டு நிற்கும் தன்மையால் உயிரின் வெளியே நிற்பவனாகவும் விளங்குகின்றான். இவ்வாறு விளங்கும் பெருமான் ஒலி வடிவாக நின்று, மற்ற நான்கு தன்மாத்திரைகளாகவும், ஐம்பூதங்களாகவும், ஐம்பூதங்களின் கலவையால் ஆன உலகமாகவும் உலகப் பொருட்களாகவும் உள்ளவன் சிவபெருமான். அவன் தேன் நிறைந்த கொன்றை மலர்களை சூடியவனாக காணப் படுகின்றான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
பிறவாதும் இறவாதும் பெருகினானைப் பேய் பாட நடமாடும் பித்தன் தன்னை
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானைக் கடலானை வனத்துள்ளானை
உறவானைப் பகையானை உயிரானானை உள்ளானைப் புறத்தானை ஓசையானை
நறவாரும் பூங்கொன்றை சூடினானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.80.4) அப்பர் பிரான், பெருமானை, அனைத்து உயிர்களுக்கும் உற்றவன் என்று குறிப்பிடுகின்றார். உற்றவன்=உறவானவன்; அனைத்து உயிர்களுக்கும் உறவாக இறைவன் நிற்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பிறவி தோறும் உயிர்களுக்கு தொடர்ந்து இறைவன் உற்றவனாக இருப்பதால் தான், இறைவனைத் தவிர நமக்கு நிலையான உறவினன் வேறு எவரும் இல்லை என்று அருளாளர்கள் கூறுகின்றனர். அனைத்து உயிர்களுக்கும் சிறந்த உறவாக திகழ்பவனும், அனைத்து உடல்களிலும் உயிராக நிறைந்து நிற்பவனும், ஓங்காரத்தின் முழுப் பொருளாக இருப்பவனும், உமை அம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக பெற்றவனும், அழகான தலைக் கோலத்தை உடையவனும், பிறவாமல் தோன்றியவனும், பெரியதும் அரியதும் ஆகிய அனைத்துப் பொருட்களையும் ஏனையோர் கற்பதற்கு முன்னமே கற்றவனும், கற்கப்படும் பொருள்கள் அனைத்துமாக இருப்பவனும், கச்சி ஏகம்பம் தலத்தில் வீற்றிருப்பவனும், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த காலன் கீழே விழுந்து மடியுமாறு கோபத்துடன் உதைத்தவனும், தூண்டப்படும் பொருள் ஏதுமின்றி தானே ஒளியாக திகழ்பவனும், திருமாற்பேறு தலத்தில் உறைபவனும். சிவந்த பவளக் குன்று போன்ற திருமேனியை உடையவனும் ஆகிய இறைவனை அடியேன் திருமாற்பேறு தலம் சென்றடைந்து கண்டு களித்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
உற்றானை உடல் தனக்கு ஓர் உயிரானானை ஓங்காரத்து ஒருவனை உமையோர் பாகம்
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவாதானைப் பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானைக் கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனைக் காலன் வீழச்
செற்றானைத் திகழொளியைத் திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன் நானே
முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.85.6) அப்பர் பிரான், பெருமானை, உறவெல்லாம் ஆவான் காண் என்று குறிப்பிடுகின்றார். உற்றவன்=உயிர்களோடு இணைந்து நிற்பவன்; உலப்பு=அழிவு; எங்கும் ஒழிவற நின்று=எந்த இடமும் எஞ்சாமல் அனைத்து இடங்களிலும் நிறைந்து நின்ற; நணுகிய=நெருங்கிய; மாணி=பிரம்மச்சாரி, இங்கே சிறுவன் மார்க்கண்டேயன். அனைத்து உயிர்களுடன் இணைந்து இருப்பவனும், உயிர்களுக்கு எல்லா உறவுமாக இருந்து பாதுகாப்பவனும், அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவனும், அழிவு என்பது இல்லாதவனும், புற்றில் வசிக்கும் இயல்பினை உடைய பாம்பினைத் தனது உடலில் கச்சாக இறுகக் கட்டியவனும், பாம்பினை ஆபரணமாக அணிந்தவனும், ஊருக்கு புறம்பே அமைந்துள்ள சுடுகாட்டில் தீயினை ஏந்தி நடனம் ஆடுபவனும், தூய்மையான சிறப்பு மிகுந்த தவத்தினை மேற்கொள்பவனும், தனது பாதங்களில் சரணடைந்த சிறுவன் மார்க்கண்டேயனை நெருங்கி வந்த கூற்றுவனைத் தனது பாதங்களால் உதைத்து வெற்றி கொண்டவனும் ஆகிய பெருமான் முண்டீச்சரம் தலத்தில் சிவலோக நாயகனாக காட்சி தருகின்றார். அவரே எனது சிந்தையில் கலந்து நிற்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
உற்றவன் காண் உறவெல்லாம் ஆவான் தான் காண் ஒழிவற நின்று எங்கும் உலப்பிலான் காண்
புற்றரவே ஆடையுமாய்ப் பூணுமாகிப் புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான் தான் காண்
நற்றவன் காண் அடியடைந்த மாணிக்காக நணுகியதோர் பெருங் கூற்றைச் சேவடியினால்
செற்றவன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே
ஆன்மாவிற்கு நிரந்தரமான உறவினர்கள் சிவபிரானைத் தவிர வேறு எவரும் இல்லை. சென்ற பிறவியில் நாம் எவ்வாறு இருந்தோம், எவர் நமக்கு உறவினராக இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. அடுத்த பிறவி நமக்கு எவ்வாறு அமையும் என்பதும் நமக்குத் தெரியாது. இந்தப் பிறவியில் நமக்கு உறவினர்களாக இருப்பவர்களும், நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்முடன் இருப்பதில்லை. அவர்கள் அனைவரும் இடையில் வந்து சேர்பவர்களாகவோ, இடையில் நம்மை விட்டு போகின்றவர்களாகவோ இருக்கின்றனர். எனவே நாம், எப்போதும் நமக்கு உறவினனாக இருக்கும் இறைவனிடம் அன்பு செலுத்துவதை விட்டுவிட்டு, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதால் நமக்கு பயன் ஏதும் இல்லை. இந்த உண்மையை வலியுறுத்தி, இறைவனை நமது உறவினனாக மதித்து, அவனிடம் அன்பு செலுத்தி உய்ய வேண்டும் என்று அறிவுரை கூறும் பாடல் (6.95.1). இயல்பாகவே தங்களது குழந்தைகள் மீது தாய்க்கும் தகப்பனுக்கும் அன்பு இருப்பதை நாம் அறிவோம். அவ்வாறான அன்பு மாமனுக்கும் மாமிக்கும் நம் மேல் இருக்குமா என்ற ஐயம் கொள்ள வேண்டாம் என்பதை உணர்த்தவே அன்புடைய என்ற அடைச்சொல் இங்கே சேர்க்கப் பட்டுள்ளது. தங்களது மக்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு காரணமாக நமது மாமனுக்கும் மாமிக்கும் நம் மீது அன்பு இருக்கும் என்பதால் அன்புடைய மாமன் மாமி என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். அன்புடைய என்ற சொல்லை, அப்பன் நீ, அம்மை நீ என்ற சொற்களுக்கு முன்னர் வைத்து பொருள் கொள்ள வேண்டும் என்றும் கூறுவார்கள். ஐயன்=தலைவன், குரு, முன்னோன்; ஒப்புடைய மாதர்=நம்முடன் ஒத்த கருத்து கொண்டு பலவிதங்களிலும் நம்முடன் ஒத்துழைத்து இல்லறம் நடத்தும் மனைவி; ஒண்பொருள்=இல்லற வாழ்க்கையின் பயனாக நாம் அடையும் மக்கட் செல்வம் மற்றும் அறநெறியால் வந்த செல்வம்; துய்ப்பன= நாம் அனுபவிக்கும் இன்பங்கள்; உய்ப்பன=நாம் இன்பம் அனுபவிக்க உதவும் கருவிகள், வாகனம் முதலியன; இவ்வாறு தனக்கு எல்லா வகையிலும் உறவினனாக இருக்கும் பெருமான், தனது உள்ளத்திற்கு, உலகப் பொருட்கள் மற்றும் பந்தங்கள் அனைத்தும் நிலையற்றவை என்ற உண்மையை உணர்த்தி, தான் துறவு நிலை மேற்கொள்வதற்கு காரணமாகவும் இருந்தான் என்பதை இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையா என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே
அப்பர் பெருமான் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்; சைவ மதம் திரும்பிய பின்னர் நிலையாக ஒரு ஊரிலும் தங்கவில்லை. எனவே இல்லற வாழ்க்கை பற்றிய குறிப்புகள் கொண்டுள்ள இந்த பாடல், நமது நிலையிலிருந்து அப்பர் பிரான் உரைக்கும் பாடலாக, நாம் எவ்வாறு இறைவனை கருதவேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடலாக கருதப்பட வேண்டும். எனக்கு நிலையான உறவினனாகிய சிவபெருமானே, நீயே எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், ஆசானாகவும், மாமனாகவும், மாமியாகவும், இல்லறத்தில் பல விதங்களிலும் என்னுடன் ஒத்து வாழும் நல்ல மனைவியாகவும், முறையான இல்லற வாழ்க்கை மூலம் வரும் மக்கட் செல்வமாகவும், அறவழியில் ஈட்டிய செல்வமாகவும் விளங்குகின்றாய். நீயே எமது குலத்தைச் சார்ந்த்தவனாகவும் சுற்றமாகவும், நான் நிலையாக இருக்கும் ஊரினைச் சார்ந்தவனாகவும் உள்ளாய்; நான் அனுபவிக்கும் போகமாகவும், அவ்வாறு அனுபவிக்கத் துணையாக உள்ள கருவிகளாகவும் விளங்கும் நீ, எனக்குத் துணையாக என் உள்ளத்தில் இருந்து உண்மையை, அதாவது மேற்கூறிய உலகப் பொருட்கள் மற்றும் பந்தங்கள் அனைத்தும் நிலையற்றவை என்ற உண்மையை, உணர்த்தி, இந்த பந்தங்களைத் துறக்குமாறு செய்வானும் நீயே. நான் பொன்னாகவும், மணியாகவும், முத்தாகவும், வேறு பல உயர்ந்த பொருளாகவும், இடபத்தை வாகனமாகக் கொண்ட உன்னையே கருதுகின்றேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
திருப்புனவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.50.6) பெருமான் அனைத்து உயிர்களுக்கும் உறவாகவும் காலமாகவும் இருக்கும் தன்மையை சுந்தரர் உணர்த்துகின்றார். புறவம்=புறா; மனமே நீ மறவாமல், புனவாயில் தலத்தினையும் அங்கே உறைகின்ற பெருமானையும் நினைப்பாய் என்று அறிவுரை கூறும் பாடல்.
மறவல் நீ மனம் என்னோடு சூளறு வைகலும்
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடமாவது
பிறவு கள்ளியின் நீள் கவட்டேறித் தன் பேடையைப்
புறவம் கூப்பிடப் பொன் புனம் சூழ் புனவாயிலே
தனக்குச் சுற்றம் சிவபெருமானைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் சிவபெருமான் தான் தனக்குத் துணை என்றும் அப்பர் பெருமான் கூறுவதைப் போல், சுந்தரரும் கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறுகின்றார். மறுமைக்கும் என்று, இந்த பிறப்பில் மட்டும் இல்லாமல், அடுத்த பிறவியிலும் தனக்கு சிவபெருமானைத் தவிர வேறு எவரும் துணை இல்லை என்று கூறுகின்றார். தன்னைச் சுற்றியுள்ள சுற்றம் எவரையும் சுற்றம் என்று கருதமாட்டேன் என்று இங்கே கூறுகின்றார்.
மற்றொரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண்சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.1) சுந்தரர் புண்ணியா புனிதா என்று பெருமானை அழைக்கும் சுந்தரர், தன்னிடம் அஞ்சேல் என்று சொல்லி பெருமான் தேற்ற வேண்டும் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், அமரர்களின் தலைவனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரும் தனக்கு உறவு அல்ல என்று தெளிவு படுத்துகின்றார். தனது அருட்கண்ணால் நோக்கி அடியார்களுக்கு அருள் புரியும் இறைவனை மிகவும் பொருத்தமாக அங்கணா என்று அழைக்கின்றார். அங்கணன்=அழகிய கண்களை உடையவன்;
கங்கை வார் சடையா கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே
பொங்கு மாகடல் விட மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால் விடையாய் தெளிதேனே தீர்த்தனே திருவாவடுதுறையாய்
அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
பெருமானின் திருநாமத்தைச் சொல்வதே நமது கடமை என்று உணர்த்தும் பாடல் (7.82.5) திருச்சுழியல் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பாடலாகும். திறம்பாமை=நீங்காமல்; பெருமான் ஒருவனே நமக்கு நிலையான உறவினன் என்று இந்த பாடலில் சுந்தரர் உணர்த்துகின்றார்.
உற்றான் நமக்கு உயரும் மதிச் சடையான் புலன் ஐந்தும்
செற்றார் திருமேனிப் பெருமான் ஊர் திருச் சுழியல்
பெற்றான் இனிது உறையத் திறம்பாமைத் திருநாமம்
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே
உலகிடைத் தோன்றும் மனைவி, தாய், தந்தை, மக்கள், சுற்றம் என்பவை நம்மை வினையினுள் அழுத்தும் என்ற கருத்து, மணிவாசகரின் கோத்தும்பீ பதிகத்தின் பாடல் ஒன்றிலும் உணர்த்தப் படுகின்றது. உலகினில் வாழும் நமக்கு, நமது சேமிப்பு நிதி, மனைவி, மக்கள், குலம், கல்வி முதலியன இயல்பாக அமைகின்றன. அவற்றுடன் கலந்து வாழும் நமக்கு, அவை அனைத்தும் நமது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகத் தோன்றுகின்றன. நிலையில்லாத அவை அனைத்தும், எனது என்ற உணர்வினை ஏற்படுத்துவதுடன், அவற்றால் தான் நாம் மகிழ்வுடன் இருக்கின்றோம் என்ற எண்ணத்தையும் நமது உள்ளத்தில் வளர்க்கின்றது. இவை அனைத்துடன் நாம் வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், இவை அனைத்தும் நிலையற்றவை என்பதை உணர்வது தான் சித்தத் தெளிவாகும். அவ்வாறு அல்லாத நிலையை சித்த விகாரக் கலக்கம் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார். இறப்பு என்பது நமது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நிலை. அதனை உணராமல் இறப்பினைக் கண்டு அஞ்சுவதும் சித்த விகாரக் கலக்கம் தான். இந்த சித்த விகார கலக்கத்தைத் தெளிவிக்க இறைவனது அருள் நமக்கு வேண்டும். இந்த சித்த விகாரக் கலக்கத்தைத் தெளிவிக்க இறைவன் எண்ணினால், அவன் எந்த வழியினை மேற்கொண்டு அருள் புரிவான் என்பதை நாம் உணரமுடியாது என்பதால், அவனை வித்தகத் தேவன் என்று மணிவாசகர் அழைக்கின்றார்.
வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ
மணிவாசகரும் திருவாசகம் வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில், சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் துணையாக மனதினில் நினைக்க மாட்டேன் என்றும் வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுவதை நாம் காணலாம்.
பழுதில் தொல் புகழாள் பங்க நீ அல்லால் மற்று நான் பற்று இலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே
உறவு என்ற சொல்லுக்கு பற்றுக்கோடு என்ற பொருளும் பொருந்தும். திருவாசகம் குலாப் பத்து பதிகத்தின் பாடலில், மாணிக்க வாசகர், எளிமையான கோலத்தினை உணர்த்தும் திருவோடும் கோவணமுமே தனக்கு வாழ்க்கையில் பற்றுக்கோடு என்று வாழ்வதாக கூறுகின்றார். குமண்டை=களியாட்டம்; கவுந்தி=கோவணம்; தேடும் பொருள்=முயற்சி செய்து அடையத் தகுந்த பொருள்; கூடு=இந்த உயிர் தங்கும் கூடாகிய உடல்; குனித்து=உடலை வளைத்து; குலாத் தில்லை=விளக்கத்தை உடைய தில்லை; உலகப் பொருட்கள் அனைத்தும் நிலையற்றவை, மேலும் அவை தருகின்ற இன்பமும் நிலையற்றன என்பதை புரிந்து கொண்ட அடிகளார், எளிமையான தோற்றமே இனிமேல் தனது வாழ்வாக இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்து, அனைத்தையும் துறந்த தன்மையை குறிப்பிடுகின்றார். வாழ்வினில் தான், முயற்சி செய்து தேடி அடைய வேண்டிய பொருள் பெருமானின் திருவடிகளே என்பதை தெளிவாக உணர்ந்த தான், பெருமானையே எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பதாக கூறுகின்றார். தனது உடலினை வளைத்து பெருமான் செய்யும் நடனம், தனது உடலும் உயிரும் தெவிட்டும் வண்ணம் இன்பம் அளிப்பதாக அடிகளார் கூறுகின்றார். பெருமானின் திருநடனம், அவன் ஐந்து தொழில்களைப் புரிபவன் என்பதையும் தனக்கு விளக்கம் அளிக்கின்றது என்று கூறுகின்றார்.
ஓடும் கவுந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து
தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்து அடியேன்
ஆடும் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே
திருவாசகம் சென்னிப்பத்து பதிகத்தின் பாடலில் (8.42.7) மணிவாசக அடிகளார் பெருமானை, தன்னுடன் உறவாக இருந்து, பிறவி என்னும் இக்கடலை நீந்தத்தன் பேரருள் தந்து அருளினான் என்று குறிப்பிடுகின்றார். அறவை=ஆதரவற்றவன்; நல்ல துணையேதும் இல்லாமல் இருந்த தன்னை, அடியார்களின் கூட்டத்தில் புகுத்தியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பெருக்கம்=வளர்ச்சி; உண்மைப் பொருளாக இருக்கின்ற பெருமானின் வளர்ச்சி; கல்லையே தெப்பமாக மிதக்கச் செய்து அப்பர் பெருமானை காப்பாற்றிய பெருமான், பிறவிக் கடலில் சிக்குண்ட அடியார்களை காப்பது அவனுக்கு மிகவும் விருப்பமான செயல் அல்லவா. இதனால் தானே கைதர வல்ல கடவுள் என்று மணிவாசக அடிகளார் போற்றித் திருவகவலில் குறிப்பிடுகின்றார். பிறவியாகிய கடலை நீந்திக் கடக்க தனது பேரருளாகிய தெப்பத்தைத் தந்து அருளியவனும், என்னைத் துணையற்றவன் என்று கருதி அடியார்களுடைய திருவருட் கூட்டத்தில் என்னை புகுத்தியவனும், அந்த அடியார்களுடன் நெருங்கிய உறவினை உண்டாக்கி தன்னை உய்வித்தவனும் ஆகிய பெருமானது திருப்பாதங்களில் சேரும் எனது சென்னி, அழகுடன் பொலிந்து மலரும் என்று அடிகளார் கூறுவதாக அமைந்த பாடல்.
பிறவி என்னும் இக்கடலை நீந்தத்தன் பேரருள் தந்து அருளினான்
அறவை என்று அடியார்கள் தங்கள் அருட்குழாம் புக விட்டு நல்
உறவு செய்து எனை உய்யக் கொண்ட பிரான்றன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக் கண் நம் சென்னி மன்னி திகழுமே
திருமந்திரம் பாயிரம் பகுதியின் பாடலில் திருமூலர் ஆன்மாக்களுக்கு ஈசனுடன் உறவு கொள்வதைக் காட்டிலும் சிறந்த இன்பம் இல்லை வேறேதும் என்று உணர்த்துகின்றார். நறுமணம் தரும் பல பொருட்களுடன் கத்தூரியையும் கலந்து கொதிக்க வைத்தால், கத்தூரியின் மணமே ஓங்கி நிற்பது போன்று, ஏனைய தேவர்களுடனும் சிவபெருமானை ஒப்பிட்டு நோக்கினால், பெருமான் தான் மிகவும் அதிகமான நன்மையை உயிர்களுக்கு செய்கின்றான் என்பது புலனாகும் என்று கூறுகின்றார். தேவர்கள் பலரும் உலகத்தவர்க்கு பல நன்மைகள் செய்கின்றனர். எனினும் உண்மையான ஞானத்தையும் வீடுபேற்றையும் தருபவர் சிவபெருமான் ஒருவரே என்பதால், அவரே அனைத்து தெய்வங்களினும் சிறந்தவர் என்பது புலனாகின்றது.
காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
மாயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்தொரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிரில்லை தானே
திருமூலரும் முதல் தந்திரம் யாக்கை நிலையாமை என்ற தலைப்பின் கீழ் இறந்த பின்னர் உயிருக்கு உதவுவார்கள் எவரும் இல்லை என்பதை உணர்த்துகின்றார். அந்த தருணத்தில் யாக்கை நிலையாமை என்பதை இறந்த உடலைச் சூழ்ந்து நிற்கும் அனைவரும் உணர்ந்தாலும், தீட்டு கழிப்பதற்காக குளித்த பின்னர், அந்த உணர்வினையும் மறந்து விடுவார்கள் என்று இங்கே கூறுகின்றார். நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்கள் என்பதற்கு, தீட்டு கழிப்பதற்காக குளித்த பின்னர், இறந்தவரைப் பற்றிய நினைப்பு கூட மறந்துவிடும் என்றும் பொருள் கொள்ளலாம். சூரை=ஒரு வகை முட்செடி.
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு
சூரையம் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே
இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலில் திருமூலர், நாம் உயிருடன் இருந்த நாட்களில் ஆரவாரத்துடன் நம்மை சூழ்ந்திருந்த சுற்றம், நமது உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னர், ஊர் எல்லை வரையில் தான் உடன் வருவார்கள் என்று கூறுகின்றார். ஊர்த்துறை=ஊரெல்லை; பிணத்தின் மீது விறகுக் கட்டைகளை அடுக்கி தீ மூட்டிய பின்னர், நன்றாக தீப்பற்றி எரிவதைக் கண்ட பின், அனைவரும் காட்டினை விட்டகன்று சென்று, நீரில் சென்று தலை முழுகும் வண்ணம் அமிழ்ந்து குளிப்பார்கள் என்று கூறுகின்றார்.
ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகு இட்டு எரி மூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியிலோரே
திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் திருவருள் வைப்பு அதிகாரத்தின் பாடலில் திருமூலர், பெருமான் உறவாகி வந்து தனது உள்ளத்தில் புகுந்ததாக பெருமையுடன் கூறுகின்றார். அவ்வாறு உறவாகி வந்து தனது உள்ளத்தில் புகுந்ததன் விளைவாக, தான் அவனை எப்போதும் மறவாமல் இருப்பதாகவும், தான் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்ததாகவும் கூறுகின்றார்.
பிறவா நெறி தந்த பேரருளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதி பராபரன்
உறவாகி வந்து என் உளம் புகுந்தானே
திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் அணைந்தோர் தன்மை அதிகாரத்தின் பாடலில், திருமூலர், உறவென்னும் பாசத்தைத் தான் களைந்ததாக கூறுகின்றார். அழிவு=இறப்பு; ஆக்கம்=இறப்பதன் பின் தொடர்ச்சியாக வரும் பிறப்பு; நல்ல வளத்தினைத் தரும் சிவத்தினைத் தான் சார்ந்து விட்டதால், இதன் முன்னம் சார்பு போன்று தோன்றி தன்னை பிறவிக் கடலில் ஆழ்த்திய உறவு மற்றும் அந்த உறவுகளின் மீது கொண்டிருந்த பாசம் ஆகியவற்றை தான் அடியோடு நீக்கிக் கொண்டு விட்டேன்; இந்த உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் அப்பால் இருக்கும் சிவத்துடன் தான் முற்றிலும் ஒன்றியதாக திருமூலர் கூறுகிறார். அவ்வாறு ஒன்றியதன் விளைவாக, தான் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்ததாகவும் கூறுகின்றார்
ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்றானேன்
அழிந்தாங்கு இனி வரும் ஆக்கமும் வேண்டாம்
செழுஞ் சார்புடைய சிவனைக் கண்டேனே
இரட்டை மணிமாலை பதிகத்தின் பாடலில் (பதினோராம் திருமுறை) காரைக்கால் அம்மையார், உற்றார்கள் நமக்கு செய்யக் கூடிய ஒரே செயல், நமது உயிரற்ற உடலுக்கு தீ மூட்டுவது தான் என்று கூறுகின்றார். இறந்தவர் எவ்வளவு உத்தமராக, புகழ் பெற்றவராக இருந்தாலும், அவருக்கு இதே நிலை தான் என்று குறிப்பிடும் அம்மையார், அந்த நிலை நமக்கு வாய்க்கும் முன்னர், நாம் பெருமானின் தன்மையை உணர்ந்து கொண்டு புகழ்ந்து அவனைப் பணிய வேண்டும் என்று கூறுகின்றார். உலத்தல்=அழிதல், இறத்தல்; செத்த மரம்=உலர்ந்த விறகு;
உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரம் அடுக்கி தீயாமுன் – உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன் திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து
வாயிலார் நாயனார் புராணத்தில் சேக்கிழார், நாயனார், மறவாமல் எப்போதும் பெருமானை மனதினில் நிறுத்தி, உறவாக பெருமானை கருதினார் என்று கூறுகின்றார். அறத்தையே தனது வாழ்க்கை நெறியாகக் கொண்ட பெருமானை சேக்கிழார் அறவாணன் என்று வாயிலார் நாயனார் புராணத்து பாடல் ஒன்றினில் குறிப்பிடுகின்றார். இறைவனை எப்போதும் மறவாமல் இறைவனை தனது மனமாகிய கோயிலில் நிறுத்திய வாயிலார் நாயனார், அந்த பெருமானை ஞானம் என்ற விளக்கினை ஏற்றி அறிந்து கொண்டார் என்றும், அந்த இறைவனை தான் எப்போதும் மறவாமல் இருக்கும் தன்மையால் தனது மனமே பெருமான் உறைகின்ற கோயிலாக மாறியது என்றும், தனது மனதில் பெருகும் சிவானந்தம் என்ற நீரினால் இறைவனை நீராட்டி, தனது அன்பையே அவனுக்கு நிவேதனமாக அளித்து அர்ச்சனை செய்து வாயிலார் நாயனார் வழிபட்டார் என்று சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார்.
மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனை உணரும் ஒளிவிளக்குச் சுடரேற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பென்னும் அமுதமைத்து அர்ச்சனை செய்வார்
கூட்டம் என்பதற்கு அடியார்களின் திருக்கூட்டம் என்ற பொருள் கொண்டு, அடியார்களுடன் இணைவதால் நமது மனம் பக்குவம் அடையும் என்பதை உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பாடலில், அடியார்களை இறைவன் பக்குவம் செய்யும் முறையும், துன்பத்தை மாற்றி இன்பத்தை பெருக்கும் ஈசனின் அருள் வண்ணமும், அவன் நம் பால் கொண்ட கருணையின் விளைவாக நடைபெறுகின்றன என்பதை திருஞான சம்பந்தர் உணர்த்துகிறார். இந்த பதிகத்தின் பாடல்களில் எங்கும் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை மலை நிகழ்ச்சியோ, சமணர் மற்றும் புத்தர்கள் குறித்த குறிப்போ காணப்படவில்லை; ஆனால் அண்ணாமலை சம்பவம் குறிப்பிடப் படுகின்றது.
பொழிப்புரை;
பெருமானுக்கு அடியவன் என்று எண்ணத்துடன் அவனை வழிபடும் அடியார்களுக்கு, ஆண்டவன் அடியான் எனப்படும் உறவு இன்பம் தரும் உறவாக விளங்கும். மேலும் அத்தகைய அடியார்களின் புகழ் ஓங்கி வளரும்; அவர்கள் வீடுபேறு அடைவதும் மிகவும் எளிது; ஏனெனில் அத்தகைய அடியார்களுக்கு உலக பந்தங்களுடன் வாழும் வாழ்க்கையின் தன்மையையும், உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்களின் மீது வைத்துள்ள பற்றினை முற்றிலும் துறந்து வாழும் வாழ்க்கையின் தம்மையையும் உணர்த்தி, அத்தகைய வாழ்க்கைகளின் பலன்களையும் அந்த வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களையும் நன்கு உணரும் வண்ணம் இறைவன் அருள் புரிகின்றார். அவ்வாறு இறைவனால் உணர்த்தப்பட்ட அடியார்கள், வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் ஆழ்ந்து இறைவனை மறக்கும் தன்மையுடைய சிந்தனை அற்றவர்களாக விளங்கி வீடுபேறு அடையும் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றனர். அந்த அடியார்களை பிணைத்திருக்கும் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்து அவர்கள் எளிதினில் வீடுபேற்றினை அடையும் வண்ணம் அருள் புரியும் பெருமான், பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக, என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 9:
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் பாடல்கள் 9, 10, 11(திதே 0654)
சீருடையார் அடியார்கள் சேடர் ஒப்பார் சடை சேரும்
நீருடையார் பொடிப் பூசு நினைப்பு உடையார் விரி கொன்றைத்
தார் உடையார் விடை ஊர்வர் தலைவர் ஐந்நூற்றுப் பத்தாய
பேருடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
விளக்கம்:
சிரேஷ்டர் என்ற வடமொழிச்சொல் சேடர் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலானவர் என்று பொருள்; சீர்=புகழ்; எண்ணற்ற திருநாமங்கள் உடையவர் இறைவன் என்பதை உணர்த்தும் பொருட்டு ஐந்நூற்றுப் பத்தாய பேர் உடையவர் என்று கூறுகின்றார். தார்= தொகுப்பு, மாலை;
பொழிப்புரை;
புகழுடைய அடியார்களால் தங்களின் மேலானவராகவும் தலைவராகவும் ஏற்றுக் கொள்ளப்படும் இறைவன், தனது சடையினில் கங்கை நதியை உடையவர் ஆவார்; அவர் தனது உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொள்ளும் எண்ணத்துடன் இருப்பவர்; விரிந்த கொன்றை மலர் மாலையினை உடையவர்; இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவர்; எண்ணற்ற திருநாமங்கள் உடையவர்; இத்தகைய தன்மைகளை உடைய பெருமான், பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக, என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 10:
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் பாடல்கள் 9, 10, 11(திதே 0654)
உரிமை உடை அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டி அருள் செயும் ஆதி முதல்வர்
கருமை உடை நெடுமாலும் கடிமலர் அண்ணலும் காணாப்
பெருமை உடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
விளக்கம்:
உள்குதல்=நினைத்தல், தியானம் செய்தல்; ஆறாவது பாடல்கள் தொடங்கி தொடர்ந்து நான்கு பாடல்களில் அடியார்களின் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் அத்தகைய அடியார்களை உரிமை உடை அடியார்கள் என்று இந்த பாடலில் அழைக்கின்றார். தங்களது பண்பின் காரணமாக, இறைவனின் அருள் பெறுவதற்கு தகுதி படைத்தவர்களாக அவர்கள் விளங்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. அண்ணல்=தலைவன்; படைப்புத் தொழில் புரிவதால் பிரமனை அண்ணல் என்று அழைக்கின்றார். திருமாலும் பிரமனும் காணமுடியாமல் திகைத்த தன்மையையும் சுட்டிக் காட்டி, எவ்வாறு பெருமானின் அடியார்கள் அவர்கள் இருவரை விடவும் உயர்ந்தவர்கள் என்பதை இந்த பாடலில் சுட்டிக் காட்டி உணர்த்துகின்றார். அருமை உடையன காட்டி=காண்பதற்கு அரிய கோலம்; அடியார்கள் பலருக்கும் தனது திருக்கோலத்தை காட்டி பெருமான் அருள் புரிந்தமை பெரிய புராணத்தில் பல இடங்களில் சொல்லப் பட்டுள்ளது. எப்போதும் இறைவன் பற்றிய நினைவோடு தனது வாழ்க்கையினை கழித்த அப்பர் பிரானுக்கு பெருமான் திருப்பூவணம் தலத்தில் தனது திருவுருவத்தையும் பல விதமான திருவிளையாடல்களையும் காட்டினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் உணர்த்துகின்றார். இவ்வாறு தான் கண்ட காட்சிகளை, உருவத்தின் பல அம்சங்களை, அப்பர் பிரான் வடிவேறு திருசூலம் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்களில் (6.18) உணர்த்துகின்றார் என்று கூறும் சேக்கிழாரின் பாடலை நாம் காண்போம். .
கொடிமாடம் நிலவு திருப்பூவணத்துக் கோயிலினுள்
நெடியானுக்கு அறிவரியார் நேர் தோன்றக் கண்டு இறைஞ்சி
வடிவேறு திருசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார்,
பொழிப்புரை;
முந்தைய நான்கு பாடல்களில் குறிப்பிடப்படும் தன்மை உடைய அடியார்களுக்கு, எப்போதும் தங்களது மனதினில் பெருமானை தியானம் செய்து நினைத்து வாழும் அடியார்களுக்கு, ஏனையோர் காண்பதற்கு அரிதாகிய தனது திருக்கோலத்தை காட்டி அருள் புரிபவர் சிவபெருமான்; அவர் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றி, ஆதியாகவும் தலைவராகவும் இருப்பவர்; கரிய நிறமுடைய திருமாலும் நறுமணம் வீசும் தாமரை மேல் உறைகின்ற தலைவனாகிய பிரமனும் காணமுடியாத பெருமை உடைய சிவபெருமான் பெரும்புலியூர் தலத்தினை விட்டு பிரியாதவராக, என்றும் இந்த தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 11:
மண்ணுமோர் பாகம் (2.067) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் பாடல்கள் 9, 10, 11(திதே 0654)
பிறை வளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை
நறை வளரும் பொழில் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடுலகத்து இருப்பாரே
விளக்கம்:
நறை=தேன்; மறை வளரும் தமிழ் மாலை=வேதங்களுக்கு ஒப்பாக வைத்துக் கொண்டாடப்படும் தேவாரப் பதிகங்கள்; நிறை வளர் நெஞ்சினர்=குறை ஏதும் இன்றி நிறைவான மனத்துடன் இருத்தல்;
பொழிப்புரை;
ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்து வளரும் பிறைகள் உடையவனாக மாற்றி, தனது சடை முடியில் அணிந்து கொண்ட பெருமானை, பெரும்புலியூர் தலத்தில் உறையும் இறைவனை, தேன் நிறைந்த மலர்கள் கொண்ட சோலைகள் நிறைந்த சீர்காழி தலத்தில் வாழ்வானும் நற்றமிழ் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன், புகழ்ந்து பாடிய இந்த பாடல்களை, வேதங்களுக்கு ஒப்பான தன்மையையும் புகழினையும் உடைய பாடல்கள் என்று அனைவராலும் கருதப்படும் தமிழ் மாலைகளை, கற்றுத் தேர்ந்து வல்லவர்களாக விளங்கும் அடியார்கள், தங்களது துயரங்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, குறையேதும் இன்றி நிறைந்த மனத்தவர்களாக இம்மையில் வாழ்ந்து, மறுமையில் நீடிய பேரின்பத்தில் திளைத்து வாழ்வார்கள்.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் உருவத்தின் அடையாளங்களையும் தன்மையையும் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பதிகத்தின் இரண்டாவது பாடலில் ஆயிரம் முகங்களாக பிரிந்து மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் தாங்கிய பெருமானின் ஆற்றலை குறிப்பிடுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில் அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் வந்து சரணடைந்த, சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்த கருணைச் செயல் குறிப்பிடப்பட்டு, தன்னிடம் சரணடையும் அனைவர்க்கும் கருணை புரிபவர் இறைவன் என்பது உணர்த்தப் படுகின்றது. தனது அடியார்களுக்கு பலவிதமான வேடங்களில் தோன்றி அருள் புரிபவர் பெருமான் என்பது நான்காவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. தூய்மையான உள்ளம் கொண்ட அடியார்களை மிகவும் விரும்பும் பெருமான் என்று ஐந்தாவது பாடலில் கூறும் திருஞானசம்பந்தர், பெருமானின் தன்மைகளை முற்றிலும் அறிந்து கொள்வதை விடவும் பெருமானுக்கு பலவிதமான திருப்பணிகள் செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கும் அடியார்களின் தன்மை பெருமானுக்கு மிகவும் உகந்தது என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் புகழினை உணர்த்தும் வேத கீதங்களையும் இன்னிசைப் பாடல்களையும் பாடும் அடியார்களின் குறைகளை தீர்க்கும் தன்மை வாய்ந்தவர் பெருமான் என்று ஏழாவது பாடலில் கூறுகின்றார். வாழ்வில் ஏற்படும் இன்பதுன்பங்களை பொருட்டாக கருதாமல் எப்போதும் பெருமானின் நினைவோடு வாழும் அடியார்கள் எளிதில் வீடுபேற்றினை அடைவார்கள் என்று எட்டாவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் திருநாமங்கள் ஒவ்வொன்றும் அவரது பண்பினை உணர்த்துவதால், ஐயாயிரம் பெயர்களை உடையவர் என்று குறிப்பிட்டு, எண்ணற்ற நல்ல பண்புகள் உடையவர் பெருமான் என்பதை நமக்கு ஒன்பதாவது பாடலில் உணர்த்துகின்றார். திருமாலும் பிரமனும் காண முடியாத தனது திருவுருவத்தை தகுதி படைத்த அடியார்களுக்கு காட்டி அருள் புரிபவர் பெருமான் என்று பத்தாவது பாடலில் உணர்த்துகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், தேவாரப் பதிகங்களை முறையாக ஓதும் அடியார்கள் இம்மையில் குறையற்ற வாழ்க்கை வாழ்ந்து, மறுமையில் வீடுபேறு பெற்று நிலையான இன்பத்துடன் வாழ்வார்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். ஞானசம்பந்தரின் இந்த பதிகம் மூலம், இறைவன் அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையை உணர்ந்து கொண்ட நாம், அவரும் மற்ற அருளாளர்களும் அருளிய தேவாரப் பாடல்களை முறையாக ஓதி, இம்மையில் குறையற்ற வாழ்க்கை வாழ்ந்து மறுமையில் நிலையான பேரின்பம் பெறுவோமாக.