இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மண்புகார் வான்

மண்புகார் வான்

பதிக எண்: 2.41 - திரு சாய்க்காடு - சீகாமரம்

பின்னணி:


பல்லவனீச்சரத்து பரமனாரை பணிந்து பதிகங்கள் பாடிய பின்னர், திருஞானசம்பந்தர் காவிரிபூம்பட்டினத்தில் உள்ள மற்றொரு தலமாகிய சாய்க்காடு சென்றார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். சாய்க்காடு தலத்து இறைவன் மீது சம்பந்தர் அருளிய இரண்டு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய நேரிசைப் பதிகம் ஒன்றும் (4.65), திருத்தாண்டகப் பதிகம் ஒன்றும் (6.82) நமக்கு கிடைத்துள்ளன. இந்த தலம் சென்ற சம்பந்தர், தனது சிவந்த கைகளை உச்சி மீது கூப்பி, இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள் உடலும் மனமும் உருகும் வண்ணம் மண்புகார் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். மான் இடம் தரித்தார் என்று தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை அடக்கி, தனது இடது கையினில் பெருமான் ஏந்திய வீரச்செயல் இங்கே உணர்த்தப் படுகின்றது.

வானளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத்

தேனலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்து

மான் இடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண் புகார் என்று

ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை

இந்த தலம் புகார் நகரத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. புகார் சாய்க்காடு என்றே இந்த பதிகத்தில் ஞானசம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது. பாய்கள் செய்வதற்கு பயன்படும் சாயா (கோரைப்புல் போன்று மற்றொரு வகை) எனப்படும் புற்கள் அதிகமாக கிடைப்பதால் சாய்க்காடு என்ற பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர். சாயாவனம் என்று அழைக்கப்படும் இந்த தலம், சிலப்பதிகாரம் இலக்கியத்தில் குறிப்பிடப் படுகின்றது. தற்போது பிடாரியம்மன் என்று அழைக்கப்படும் அம்மன் சிலப்பதிகாரத்தில் சம்பாதி அம்மன் என்று குறிப்பிடப் படுகின்றாள். மேலும் நற்றிணை அகநானூறு ஆகிய சங்க இலக்கியங்களும் இந்த தலத்தினை குறிப்பிடுகின்றன. காசிக்கு சமமாக கருதப்படும் தமிழ் நாட்டுத் தலங்களில் இந்த தலம் ஒன்று. காசியினைப் போன்று இந்த தலத்தில் இறப்பவர்கள் முக்தி அடைவார்கள் என்று நம்பப் படுகின்றது. இதே சிறப்பினைப் பெற்றுள்ள மற்ற தலங்கள், மறைக்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவாஞ்சியம். இறைவன் சுயம்பு மூர்த்தம். இறைவனின் திருநாமம் அமுதேஸ்வரர், இறைவியின் திருநாமம் குயலினும் நன்மொழியம்மை. வில்லேந்திய வேலவர் மூர்த்தம் (உற்சவர்) மிகவும் அழகானது. இந்த சிலை கடலிலிருந்து கண்டெடுக்கப் பட்டதாக கூறுவார்கள். நான்கு கைகள் உடையதாக, வில்லினை ஏந்திய வண்ணம் காட்சி அளிக்கும் முருகப் பெருமானின் உருவத்தினை நாம் வேறெங்கும் காணமுடியாது. மாடக்கோயில் அமைப்பில் உள்ளதால் கோச்செங்கட் சோழன் கட்டியதாக கருதப் படுகின்றது.

இந்திரனின் தாயார் இந்த தலம் வந்து இறைவனை அனுதினமும் வணங்கி வந்தார் என்றும், தனது தாயாருக்கு உதவி புரியும் பொருட்டு, இந்த தலத்து இறைவனின் மூர்த்தத்தை தேவலோகம் எடுத்துச் செல்ல இந்திரன் முயற்சி செய்தான் என்றும், அவ்வாறு அவன் முயற்சி செய்தபோது பாதாளம் வரை அகழ்ந்து சென்றும் பெருமானின் திருமேனி மேலும் ஊடுருவிச் சென்றது என்றும், அப்போது பாதாளத்தில் நாகராஜனின் தலையில் இருந்த மணியின் ஒளி எங்கும் வீசியதால், தான் பெருமானை எடுத்துச் செல்வதை மற்றவர் அறிந்து தன்னை இகழ்வார்கள் என்ற பயத்தினால் தனது முயற்சியை இந்திரன் கைவிட்டான் என்றும் தலபுராணம் கூறுகின்றது. சாயா என்றால் ஒளி என்று பொருள். நாகராஜனின் ஒளி படர்ந்தமையால் சாயாவனம் என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். உபமன்யு முனிவர் மற்றும் ஐராவத யானை வழிபட்ட தலம். இந்திரன் ஐராவத யானையினை தேரில் பூட்டி, இந்த கோயிலை இழுத்துச் செல்வதற்கு முயற்சி செய்தான் என்றும், அதனைக் கண்ட அம்பிகை குயில் வடிவம் கொண்டு குரல் கொடுத்து பெருமானுக்கு உணர்த்தியதால், குயிலினும் நன்மொழியம்மை என்ற ;பெயர் இறைவிக்கு ஏற்பட்டது என்றும் கூறுவார்கள்.

பாடல் 1:


மண் புகார் வான் புகுவர் மனமிளையார் பசியாலும்

கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்

விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி

தண் புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன் தாள் சார்ந்தாரே

விளக்கம்:

உயிர்கள் தாம் செய்த தீயவினைகளின் பயனை நரகத்தில் அனுபவித்தும் நல்வினைகளின் பயனை சொர்கத்தில் அனுபவித்தும் கழிக்க வேண்டிய நிலையில் உள்ளன. எனவே தூல உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னர், சூக்கும உடல், தங்களின் வினைகளின் தகுதிக்கு ஏற்ப சொர்கத்திற்கும் நரகத்திற்கும் இழுத்துச் செல்லப்பட்டு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. ஆனால் இறைவனின் அருளினால் தங்களது வினைகள் முற்றிலும் கழிக்கப்பட்டு வினைகள் ஏதும் இல்லாத நிலையில், பக்குவமடைந்த அடியார்களின் உயிர் முக்தி உலகம் சென்று அடைவதால், அந்த வினைகள் சொர்கத்திற்கு செல்வதும் தவிர்க்கப் படுகின்றது. இந்த நிலையினைத் தான், விண்ணுலகம் செல்ல மாட்டார் என்று சொல்ல வேண்டாம், அதனினும் உயர்ந்த இடமாகிய சிவலோகம் செல்வார்கள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மண் புகார்=மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகம் வரமாட்டார்கள்.

வான்=உயர்ந்த; வானுலகம்=விண்ணுலகினும் உயர்ந்த சிவனுலகம்; மனம் இளைத்தல்= மனம் வருந்துதல்; கண்=இடுக்கண், துன்பங்கள்; தாள்=திருப்பாதங்கள்; சாய்க்காட்டுத் தலைவனின் திருப்பாதங்களைச் சாரும் அடியார்கள் இம்மையில் துன்பங்கள் ஏதும் இன்றி மறுமையில் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று கூறுகின்றார். இம்மையிலும் மறுமையிலும் பெருமானின் அடியார்கள் அடைய இருக்கும் பலன்கள் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றன. கற்றாரும் கேட்டாரும் என்று பெருமானின் திருப்பாதங்களை வணங்கும் அடியார்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

இந்த பாடலில் நான்கு அடிகளிலும் புகார் என்ற பெயர் குறிப்பிடப்பட்டு நயமாக அமைந்து உள்ளது. இந்த நயம், நமக்கு ஆலவாய் தலத்தின் மீது அருளப்பட்ட, பாடலை (3.52.1) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. வீடுபேறு பெறுவதைத் தவிர வேறு எந்த அவாவும் இல்லாத ஞானிகள் பெருமானின் திருப்பாதங்களை போற்றிப் பாட, அத்தகைய பாடல்களைத் தவிர வேறு எதனையும் விரும்பாதவனாக, ஆலவாய் அண்ணல் அனைவரும் புகழும் வண்ணம் வீற்றிருக்கின்றான். காட்டினைத் தவிர்த்து வேறு எதனையும் தனது இருப்பிடமாக கொள்வதற்கு விரும்பாத கபாலியாகிய பெருமான், வலிமை வாய்ந்த நீண்ட மதில்களால் சூழப்பட்ட மதுரை நகரில் குலாவி விளையாடும் கொள்கை உடையவனாக இருக்கின்றான்.

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின் கழல்

பாடலால வாயிலாய் பரவ நின்ற பண்பனே

காடலால வாயிலாய் கபாலி நீள் கடிம்மதில்

கூடலால வாயிலாய் குலாயது என்ன கொள்கையே

பொழிப்புரை:

வெண்மை நிறத்து மாடங்களையும் நீண்ட வீதிகளையும் குளிர்ந்த தன்மையையும் கொண்டுள்ள புகார் நகரின் சாய்க்காடு திருக்கோயிலில் உள்ள தலைவனாகிய பெருமானின் திருப்பாதங்களைச் சாரும் அடியார்கள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு மீண்டும் நிலவுலகில் புகவேண்டிய அவசியம் இல்லாதவர்களாக விளங்குவார்கள்; மேலும் அவர்கள் உயர்ந்த சிறப்பினை உடைய பெருமானின் முக்தி உலகம் சென்றடைவார்கள்; அத்தகைய அடியார்கள், இம்மையில் பசி பிணி முதலான துன்பங்களிலிருந்து விடுபட்டு மனவருத்தம் ஏதும் இன்றி வாழ்வார்கள். இவ்வாறு பெருமானது திருப்பாதங்களை பணிந்து வழிபடும் அடியார்கள், பெருமானின் புகழினை கற்றும் கேட்டும் மகிழ்வார்கள். அவர்கள் இந்த நிலவுலக வாழ்க்கையினை முடித்த பின்னர், மீண்டும் பிறப்பினுக்கு வழி வகுக்கும் போகவுலகத்திற்கு, சொர்க்க லோகத்திற்கு செல்ல மாட்டார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ; அதனிலும் உயர்ந்த சிவலோகம் சென்று என்றும் அழியாத பேரானந்தத்தில் திளைத்து வாழ்வார்கள் என்பதை நாம் எவரும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்..

பாடல் 2:


பேய்க்காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்

சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்

வாய்க்காடு முது மரமே இடமாக வந்தடைந்த

பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே

விளக்கம்:

பேய்கள் உலவும் இடம் என்பதால், சுடுகாட்டினை பேய்க்காடு என்று குறிப்பிடுகின்றார். விடையான்=இடபத்தை வாகனமாகக் கொண்டவன்; புகார் நகரத்தின் ஒரு பகுதியாக சாய்க்காடு தலம் விளங்கும் நிலை இங்கே புகார்ச் சாய்க்காடு என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. வாய்க்காடு=அகன்ற இடத்தினைக் கொண்டுள்ள காடு; முதுமரம்=பழமையான கல்லால மரம். பெருமானே என்ற சொல்லினை மூன்றாவது அடி மற்றும் நான்காவது அடிக்கு பொதுவான சொல்லாக கருதி பொருள் கொள்ள வேண்டும்.

பேய்களின் பாடலுக்கு ஏற்ப பெருமான் நடமாடுவதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நமக்கு அப்பர் பிரானின் இன்னம்பர் தலத்து பாடலை (4.100.3) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. தாம் செய்வது இன்னதென்று அறியாத நிலையில், தங்களுக்குள்ளே மாறுபட்டு நடனம் ஆடும் பேய்களுடன் இணைந்து நடனம் ஆடும் பெருமானின் திறமையை இங்கே குறிப்பிடுகின்றார். நடனக்கலை என்றால் என்ன என்று அறியாதன பேய்கள். எனவே எப்படி ஆடுவது என்பது குறித்து அவைகளின் இடையே ஒத்த கருத்து எழவில்லை. அதனால் ஒருவர் ஆட்டத்திற்கும் மற்றொருவர் ஆட்டத்திற்கும் இடையே ஒற்றுமை ஏதும் இல்லாமல் நெறிமுறை தவறி ஆடிய ஆட்டம். இத்தகையவர்களுடன் கூடி ஆடுவதே கடினம்; அதிலும் அவர்களின் நடனத்துடன் இணைந்து ஆடுவது என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனாலும் சிவபிரான் பேய்களுடன் இணைந்து சாமர்த்தியமாக ஆடியதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூமலரால்

வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னு மறைகள் தம்மில்

பிணங்கி நின்று இன்ன என்று அறியாதன பேய் கணத்தோடு

இணங்கி நின்று ஆடின இன்னம்பரான் தன் இணை அடியே

பேய்கள் பாட பெருமான் பெருநடனம் ஆடுகின்றான் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். நெய்த்தானம் தலத்தின் மீது பாடிய பதிகத்தின் பாடலில் (1.13.3) பேய்கள் பாட நடமாடிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நெய் என்ற சொல் எதுகை கருதி நேய் என்று நான்காவது அடியில் வந்துள்ளது. நே என்ற சொல் நேயம் என்ற சொல்லின் சுருக்கமாக கருதி அடியார்கள் தங்களது நீராட்ட மகிழ்ந்து உறையும் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பேயாயின பாடப் பெருநடம் ஆடிய பெருமான்

வேயாயின தோளிக்கொரு பாகம் மிக உடையான்

தாயாகிய உலகங்களை நிலைபேறு செய்த பெருமான்

நேயாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே

அடியார்களின் அன்பினால் நீராட்டப்படும் இறைவன் என்று சம்பந்தர் இங்கே கூறுவது அப்பர் அருளிய பாவனாசத் திருப்பதிகத்தின் பாடலை (4.15.11) நமது நினைவுக்கு, கொண்டு வருகின்றது. நமது சிந்தனையில் தோன்றும் அன்பு வெள்ளத்தில் பெருமானை நீராட்டி, அழகிய தமிழ் பாடல்களை அவனது திருவடியில் சேர்த்து, எமது தந்தையே பெருமானே என்று வழிபடும் அடியார்களின் பாவங்கள் முற்றிலும் நாசமாகிவிடும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் இறை வழிபாட்டில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதை, இறைவனை நமது சிந்தையில் இருத்தி சிந்தையின் எண்ணங்களால் அவனை நீராட்டி, சொல்மாலைகளால் அவனைப் புகழ்ந்து பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து வழிபடவேண்டும் என்று கூறுகின்றார். மூரி=வலிமை மிகுந்த

முந்தி தானே முளைத்தானை மூரி வெள்ளேறு ஊர்ந்தானை

அந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை

சிந்தை வெள்ளப் புனலாட்டி செஞ்சொல் மாலை அடி சேர்த்தி

ஏந்தைப் பெம்மான் என்னெம்மான் என்பார் பாவம் நாசமே

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.56.3) பூதங்களின் பாடலுக்கு ஏற்ப பெருமான் சுழன்று சுழன்று, தனது கையினில் தீச்சுடரினை ஏந்தியவாறு நடமாடுவதாக சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

அழல் மல்கும் அங்கையில் ஏந்திப் பூதம் அவை பாடச்

சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்

எழில் மல்கு நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில்

பொழில் மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பாடலில் (4.37.5) தன்னைச் சூழ்ந்து நிற்கும் பூதங்கள் பாடல் நடனம் ஆடும் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அந்தண்=அம்+தண்= அழகும் குளிர்ச்சியும் உடைய; காட்டினைத் தான் நடனமாடும் அரங்காகக் கொண்டு, கனன்று எரியும் தீப்பிழம்பினை கையில் ஏந்தியவாறு, பாடுகின்ற பூதங்கள் தன்னைச் சூழ்ந்து நிற்க, பண்ணுடன் இசைந்த பல பாடல்கள் பாடியவாறு நடனமாடும் சிறப்பினை உடைய பெருமான், அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நெய்த்தானம் தலத்தில் என்றும் உறைகின்றார். அத்தகைய பெருமானை, அழகும் இளமையும் பொருந்தி விளங்கும் பெருமானைச் சென்று அடையும் சிவயோக நெறியினை தான் அந்நாள் வரை அறியாமல் பரிதாபமான நிலையில் இருந்ததாக அப்பர் பிரான் வருத்தம் அடையும் பாடல்.

காடு இடமாக நின்று கனலெரி கையில் ஏந்தி

பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி

ஆடிய கழலர் சீரார் அந்தண் நெய்த்தானம் என்றும்

கூடிய குழகனாரை கூடுமாறு அறிகிலேனே

எங்களது துன்பங்களைத் தீர்க்கும் இடைமருதனே என்று அழைத்து அவனது திருப்பாதங்களைத் தொழுதால் நமது பாவங்கள் நம்மை விட்டு நீங்கும் என்று சொல்லும் பாடலில் (5.13.9) பூதங்கள் பாட அதற்கு ஏற்ப நின்றாடும் புனிதன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். ஏதம்=துன்பம்: பறையும்=நீங்கும்: பரமேட்டி=பல தெய்வங்களாலும் விரும்பப் படுபவன்;

வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்

பூதம் பாட நின்றாடும் புனிதனார்

ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று

பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பாடலில் (7.6.7) தன் பால் அன்பு கொண்டுள்ள அடியார்கள் மகிழும் வண்ணம் நடனம் ஆடும் பெருமான், பூதங்களின் பாடலுக்கு ஏற்ப விருப்பத்துடன் நடனம் ஆடுகின்றார் என்று சுந்தரர் கூறுகின்றார். அவரது ஆடலை உலகமே புகழ்வதாக இந்த பாடலில் கூறுகின்றார்.

காதலாலே கருதும் தொண்டர் காரணத்தர் ஆகி நின்றே

பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்

நீதியாக ஏழில் ஓசை நித்தராகி சித்தர் சூழ

வேதம் ஓதித் திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே

பொழிப்புரை:

பேய்கள் உலவும் சுடுகாட்டில் மறைந்து வாழ்வதை தனது வழக்கமாக உடைய பெருமான், பூம்புகார் நகரத்தில் உள்ள சாய்க்காடு தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றான். அவன் இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளான். அகன்ற காட்டினில் உள்ள கல்லால மரம் வந்தடைந்து, அதன் கீழே அமர்ந்து நான்கு முனிவர்களுக்கும் அறம் உரைத்த பெருமான், பேய்களின் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றான். அத்தகைய பெருமானை, பெருமைக்கு உரியவனாக கருதி சான்றோர்கள் புகழ்கின்றனர்.

பாடல் 3:


நீ நாளும் நெஞ்சே நினை கண்டாய் யார் அறிவார்

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே

பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப

நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே

விளக்கம்:

பெருமானின் கருணைத் தன்மையினை புரிந்து கொண்ட சான்றோர்கள், அவனது திருப்பாதங்களைச் சார்ந்தும் அவனைத் தங்களது தலைவனாக ஏற்றுக்கொண்டும் அவனைப் பணிந்து வணங்குகின்றனர் என்று முதல் இரண்டு பாடல்களில் உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் நாமும் அவ்வாறு செய்யவேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். சாநாள்=இறக்கும் நாள்; உலகில் ஒருவர் எவ்வளவு நாட்கள் இருப்பர், என்று இறப்பர் என்பதை எவரும் அறிய முடியாது என்பதால் ஒருவன் தாமதம் ஏதும் செய்யாமல், இப்போதிலிருந்தே பெருமானை நாள்தோறும் வழிபடத் தொடங்க வேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. தனது நெஞ்சத்திற்கு அறிவுரை சொல்வது போல், சம்பந்தர் நமக்கு அறிவுரை சொல்லும் பாடல். பெருமானை தினந்தோறும் வழிபட வேண்டும் என்று சம்பந்தர் இங்கே கூறுவது போல், அப்பரும் சுந்தரரும் உணர்த்தும் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

குறுக்கை வீரட்டம் தலத்து பாடல் ஒன்றினில் (4.49.2) தினமும் பெருமானை வழிபட்டுவந்த அந்தணச் சிறுவனை காப்பாற்றும் பொருட்டு கூற்றுவனை குமைத்த பெருமானின் செய்கை குறிப்பிடப்படுகின்றது. சாற்று நாள்=சிவபெருமான், மார்க்கண்டேயரின் தந்தை மிருகண்டு முனிவருக்கு, குழந்தை வரம் அருளிய போது, ஆயுட்கால் பதினாறு வருடங்கள் என்று வரையறுத்து சிறுவனின் ஆயுட்காலம் முடியும் நாளினை குறிப்பிட்டது.

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து

ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணானரைக் கொல்வான்

சாற்று நாள் அற்றது என்று தருமராசர்க்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டானாரே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.52.5) ஞானசம்பந்தர் தேவர்கள், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது சிந்தையில் நினையாமல் தினமும் வாழ்கின்றனர் என்று கூறுகின்றார். சிறுவர்களாக இருந்த போதிலும் பெருமானின் பெருமையினை புரிந்து கொண்டு பெருமானுக்கு தொண்டு செய்த, சண்டீசர் மற்றும் மார்க்கண்டேயர் ஆகியோரை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

கோலமாய நீள் மதில் கூடல் ஆலவாயிலாய்

பாலனாய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே

நீலமாய கண்டனே நின்னை அன்றி நித்தலும்

சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே

தினமும் பெருமானை நினைத்து வணங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்த விதமான நெகிழ்வோ தளர்ச்சியோ இல்லாமல் விருப்பத்துடன் பெருமானை வணங்க வேண்டும் என்பதை இங்கே உணர்த்தும் அப்பர் பிரான் அருளிய கழிப்பாலைத் தலத்து பாடலை நாம் இங்கே காண்போம். நெளிவு=நெகிழ்வு, தளர்ச்சி: வளி=மூச்சுக் காற்று; உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் சில நாட்கள் சிலர் வாழலாம், ஆனால் காற்றின்றி எவரும் வாழ முடியாது. எனவே அனைவரையும், தவத்தினில் ஈடுபட்டு உணவின்றி, தண்ணீரின்றி வாழும் முனிவர்களையும் உள்ளடக்கி, வளியுண்டார் என்று, அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நேரிழையாள்=சிறந்த ஆபரணங்களை அணிந்தவள், இங்கே உமையம்மை: கண்டல்=தாழை:

நெளிவு உண்டாக் கருதாதே நிமலன் தன்னை நினைமின்கள் நித்தலும் நேரிழையாள் ஆய

ஒளி வண்டார் கருங்குழலி உமையாள் தன்னை ஒரு பாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த

களி வண்டார் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபாலப்பனார்

வளி உண்டார் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

இயல்பாகவே மலங்களிளிருந்து நீங்கிய பெருமானை தினமும் நினைக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்தவிதமான தளர்ச்சியும் இல்லாமல், அவனை விருப்பத்துடன் நீங்கள் நினைப்பீர்களாக. அழகிய ஆபரணங்களை அணிந்தவளும் ஒளியுடன் திகழும் வண்டுகள் மொய்க்கும் அடர்ந்த கூந்தலை உடையவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனாக விளங்கும் பெருமானை அவனது அடியார்கள் தங்கள் உள்ளத்தினில் தியானம் செய்து வணங்கி வழிபடுகின்றார்கள். அதிகமான தேனைக் குடித்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரியும் வண்டுகள் நிறைந்த அடர்ந்த சோலைகளுக்கு, தாழை மடல்கள் வேலியாக விளங்கும் கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய சிவபெருமான், காற்றை உட்கொள்வதால் நிலைத்து நிற்கும் தன்மை படைத்த இந்த உடலினை நிலையாக நீத்து, இனி மற்றொரு பிறவி எடுக்காத வண்ணம் இருக்கும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக என்று அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல்.

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தினில், குண்டையூர் கிழார் தனக்கு அளித்த நெற்குவியலை திருவாரூர் கொண்டு சேர்ப்பதற்கு பெருமான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறும் சுந்தரர், தனது தகுதியை குறிப்பிட்டு பெருமான் உதவி செய்ய வேண்டும் என்று உணர்த்துகின்றார். அவரது தகுதி தான் யாது. நீண்ட காலமாக தினமும் பெருமானை நினைத்தவாறு தொடர்ந்து தினமும் கை தொழுது வந்ததே தனது தகுதி என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார். தினமும் தவறாது கைதொழுது வந்தால், பெருமானிடம் எந்த உதவியையும் உரிமையுடன் கோரும் தகுதி கிடைக்கும் என்பது சுந்தரரால் நமக்கு உணர்த்தப் படுகின்றது. அட்டித்தருதல்=சேர்ப்பித்தல்;

நீள நினைந்து அடியேன் உனை நித்தலும் கை தொழுவேன்

வாளன கண் மடவாள் வாடி வருந்தாமே

கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லுப் பெற்றேன்

ஆளிலை எம்பெருமான் அவை அட்டிதரப் பணியே

திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.81.3) சுந்தரர், நஞ்சணிந்த கண்டனாகிய பெருமானை தினமும் வணங்கி நமது வினைகளை முற்றிலும் போக்கிக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். மாமணிச் சோதியான்=மாணிக்கம் ;போன்று ஒளிவீசுபவன்; காளகண்டன்=ஆலகால விடத்தினை கழுத்தினில் தேக்கியவன்.

நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்

ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்

தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்

காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே

நவின்று=விருப்பத்துடன்; புகழ்நாமம்=பெருமானது புகழினை குறிப்பிடும் திருநாமங்கள்; கங்காதரர், காலகாலர், நடராஜர், திரிபுராந்தகர், கஜசம்ஹாரர், மாதொருபாகர், பிக்ஷாடனர், சந்திரசேகரர், பாசுபதர், போன்ற திருநாமங்கள் அவரது கருணையையும் ஆற்றலையும் உணர்த்தும் வண்ணமாக அமைந்துள்ளன. இந்த பாடலில் நமது தலை பெருமானுக்கு அர்ச்சனை செய்ய பயன்படும் பூக்களை சுமந்து செல்லவேண்டும் என்றும் காதுகள் அவனது புகழினை உணர்த்தும் திருநாமங்களை கேட்க வேண்டும் என்றும் நமது நா விருப்பத்துடன் அவனது பெயரினை சொல்லவேண்டும் என்று சம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது அப்பர் பெருமான் அருளிய அங்கமாலை பதிகத்து பாடல்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. நமது செவிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.9.3) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

செவிகாள் கேண்மின்களோ – சிவன் எம்மிறை செம்பவள

எரி போல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில் (பதிக எண்: 5.90), அப்பர் பிரான். சிவபிரானின் புகழினைக் கேளாத செவியினை உடையவர்கள் இழிந்தவர்கள் என்று சாடுவதையும், அவர்கள் தங்கள் வாழ்க்கையினை வீணாகக் கழித்து மண்ணோடு மண்ணாகி மங்குவதைத் தவிர, பயனுள்ள செயல்கள் ஏதும் செய்வதில்லை என்றும் கூறுவதை நாம் உணரலாம். சுரை=உட்குழி; தோளாத சுரை=துளையிடப்படாத உட்குழி.

ஆளாகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளாத சுரையோ தொழும்பர் செவி

வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தில் அப்பர் பிரான், சிவபெருமானின் புகழினைக் கேளாத மனிதர்களை துளையிலாச் செவித் தொண்டர்கள் என்று குறிப்பிடுகின்றார். செவித்துளை வழியாக ஒலி அலைகள் புகுந்து செவிப்பறை மீது மோதுவதால் தான் நம்மால் பல்வேறு ஒலிகளை உணரமுடிகின்றது சிவபிரானின் புகழைக் கேட்காத செவிகள், செவிகள் என்று அழைக்கப்படும் தகுதியை இழந்துவிட்டதால், அவற்றை துளையிலாச் செவிகள் என்று குறிப்பிடும் இந்த பாடல் (5.66.3) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இளைய காலத்தினை, சிவபெருமானின் புகழைக் கேட்காது வீணே கழித்திருந்தாலும், இப்போதாவது அவனைப் பற்றுக்கோடாகக் கருதி உய்யவேண்டும் என்ற அறிவுரை இங்கே கூறப்படுகின்றது. முதிய காலத்தில், முதுகு வளைத்து கூனாக மாறிவிடும் நிலை, இங்கே வளையும் காலம் என்று குறிப்பிடப்படுகின்றது.

இளைய காலம் எம்மானை அடைகிலாத்

துளையிலாச் செவித் தொண்டர்காள் நும்முடல்

வளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக்

களைகணாகக் கருதி நீர் உய்ம்மினே

ஆமாத்தூர் தலத்துப் பதிகத்தின் (2.44) பாடலில் சம்பந்தர், சிவபெருமானின் புகழை கேட்காத காதுகள், காதுகளே அல்ல என்று கூறுகின்றார். தாள்=திருவடி. நம்பன்=விருப்பத்திற்கு உரியவன்; ஆள் ஆனார்=அடிமையாக மாறியவர்கள். சிவபிரானது திருநாமத்தையும் அவனது புகழினையும் கேட்ட அடியார்கள் அவன் மீது பெருவிருப்பு கொண்டு அவனுக்கு அடியவர்களாக மாறி, அவனைப் புகழ்ந்து வணங்கினார்கள் என்று இங்கே கூறுகினார். அவ்வாறு மாறாத மனிதர்களின் செவிகள் செவிட்டுச் செவிகள் என்று சாடுவதை நாம் உணரலாம். சிவபிரானை வழிபடாத மனிதர்களை ஆளாகார் (மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில்) என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் உணர்ந்தோம். அதே கருத்து உடன்மறையாக சம்பந்தர் கூறுவதை நாம் இங்கே காணலாம். சிவபெருமானைத் தொழும் அடியார்களை ஆளானார் என்று கூறுகின்றார். இதன் மூலம், சிவபிரானைத் தொழாத மனிதர்கள் ஆளாகாதார் என்பது உணர்த்தப்படுகின்றது.

தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன் தன்

நாள் ஆதிரை என்றே நம்பன் தன் நாமத்தால்

ஆளானார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்

கேளார் செவி எல்லாம் கேளாச் செவிகளே

செவிகளின் செயல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில பாடல்களை சிந்தித்த நாம் இப்போது நமது வாய் என்ன செய்யவேண்டும் என்று கூறும் அங்கமாலை பதிகத்து பாடலை (4.9.5) காண்போம்.

வாயே வாழ்த்து கண்டாய் – மதயானை உரி போர்த்துப்

பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்

மேலே குறிப்பிட்ட ஆமாத்தூர் பதிகத்தின் (2.44) இன்னொரு பாடலில் சம்பந்தர், சிவபெருமானின் புகழினைக் கூறாத நாக்கினை உடையவர்கள், நாவிருந்தும் ஊமையராக கருதப் படுவார்கள் என்ற கருத்தினில், ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே என்று கூறுகின்றார்.

மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை

வேறாக நில்லாத வேடமே காட்டினான்

ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்

கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில், அப்பர் பிரான், தான் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை, சிவபிரானை வாழ்த்தி துதிக்காமல் கழித்து விட்டதை நினைந்து மனம் வருந்துவதை நாம் உணரலாம். சிவபெருமானை அந்நாள் வரை நினைக்காது இருந்ததால் தனது மனம் அறியாமையில் மூழ்கி இருந்தது என்பதை உணர்த்தும் வகையில் மடநெஞ்சம் என்று அப்பர் இங்கே குறிப்பிடுகின்றார்.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்

தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (பதிக எண்: 4.30) ஒரு பாடலில் அப்பர் பிரான், நமக்கு வாயினை சிவபெருமான் அளித்தன் காரணம், அவனை வாழ்த்துவதற்கு என்று குறிப்பிடுகின்றார். வாமன் என்று இங்கே தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்ட உமை அம்மையை குறிப்பிடுகின்றார். உமை அம்மையை வணங்காமல், சிவபெருமானை மட்டும் வணங்கியவராக இருந்தவர் பிருங்கி முனிவர். சிவபெருமானும் அன்னையும் ஒருவருக்கொருவர் நெருங்கி அமர்ந்திருந்த போதும், அவர்களின் இடையே ஒரு வண்டு வடிவத்தில் புகுந்து, சிவபெருமானை மட்டும் வலம் வந்த அடியாராகத் திகழ்ந்தவர் பிருங்கி முனிவர். உமை அம்மையை, தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டதன் மூலம், பிருங்கி முனிவர் உமையம்மையை வழிபடுமாறு செய்தவர் சிவபெருமான். மாதொரு பாகனாக காட்சி தரும் திருச்செங்கோடுத் தலத்தில், அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில், நாம் கோலை ஊன்றியபடி நடக்கும் பிருங்கி முனிவரின் உருவத்தையும் காணலாம்.

வாமன் என்ற சொல் வாமனன் என்ற சொல்லின் திரிபு என்று விளக்கம் அளித்து, வாமனனாக உருவெடுத்த திருமாலை குறிக்கும் சொல் என்றும் கூறுவார்கள். திருமாலைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றதன் மூலம், அனைவரும் திருமாலை வணங்க வைத்த சிவபெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். ஆ மன் நெய்=பசுக்கள் அளிக்கும், பால், தயிர், நெய் முதலான பொருட்கள்.

வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்

சோமனைச் சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்

ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பென்னும் பாசம் வைத்தார்

காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே என்று நமச்சிவாயத் திருப்பதிகத்தில், நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் நாக்கினை புகழ்ந்து கூறும் அப்பர் பிரான், நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் வாயினை திருவாய் என்று அடைமொழியுடன் ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில் சிறப்பிக்கின்றார். பொலிதல் என்றால் அழகுடன் விளங்குதல் என்று பொருள். சிவபிரானின் நாமத்தை நாம் சொல்வதால் நமது வாய் அழகு பெற்று விளங்கும் என்ற கருத்தும் இங்கே கூறப்படுகின்றது. இந்த பாடல் மூலம், அப்பர் பிரான், நாம் திருநீறு இட்டுக் கொள்ளும் போது சிவாயநம என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகின்றார்.

கருவாய்க் கிடந்தது உன் கழலே நினையும் கருத்துடையேன்

உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது அருளால்

திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்

தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே

பொழிப்புரை:

நன்னெஞ்சே, தாம் என்று இறப்போம் என்பதையும் தாம் இந்த உலகில் இனியும் வாழும் நாட்கள் எத்தனை என்பதையும் அறிந்தவர் எவரும் இல்லை; எனவே நீ சாய்க்காடு தலத்தினை சென்றடைந்து, பெருமானுக்கு தேவையான பூக்களை உனது தலையில் சுமந்து கொண்டு சென்று தொண்டு புரிவாயாக. மேலும் அவனது புகழினை உணர்த்தும் அவனது திருநாமங்களைக் கேட்டு, அவனது திருநாமங்களை உனது நாவினால் விருப்பத்துடன் நாள்தோறும் சொல்லிப் புகழ்ந்தால், நீ நல்வினைப் பயன்களைப் பெறலாம்.

பாடல் 4:

மண்புகார் வான் புகுவர் (2.041) பாடல்கள் 4, 5, 6, 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0041)

கட்டு அலர்த்த மலர் தூவிக் கை தொழுமின் பொன் இயன்ற

தட்டு அலர்த்த பூஞ்செருந்தி கோங்கு அமரும் தாழ் பொழில் வாய்

மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்

பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே

விளக்கம்:

சென்ற பாடலில் பெருமானைக் குறித்து செய்யப்படும் வழிபாடு, நமக்கு நல்வினைகளைத் தேடித் தரும் என்று உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய வழிபாட்டினை எவ்வாறு தொடங்குவது என்பதை கற்றுக் கொடுக்கின்றார். கட்டு அலர்த்த=அரும்பாக இருந்த நிலை கட்டப்பட்ட நிலை என்று சொல்லப் படுகின்றது. பூவின் நறுமணமும் பூவினில் உள்ள தேனும் எவரும் உணரமுடியாத வண்ணம் இருக்கும் நிலை என்பதால் கட்டுண்ட நிலை என்று சொல்வது மிகவும் நயமாக உள்ளது. கட்டு அலர்த்த மலர் என்று குறிப்பிட்டு, அப்போது மலர்ந்த மலர்கள் என்பதை சம்பந்தர் உணர்த்துகின்றார். இயன்ற= போன்று; முருகு=மணம்; உயிர்க்கும்=வெளியே பரப்பும்;

பொழிப்புரை:

உலகத்தவரே, அரும்பாக கட்டுண்ட நிலையிலிருந்து விடுபட்டு அப்போது மலர்ந்த மலர்களை பெருமானின் திருமேனி மீது தூவி வழிபடுவீர்களாக. மலர்ந்து பொன் தட்டு போன்று காணப்படும் பூக்களை உடைய செருந்தி கொன்றை மரங்களை உடைய சோலையினில், தாழ்ந்த இடத்தினில் உள்ள தாழையின் அரும்புகள் மலர்ந்து மணத்தினை வெளியே பரப்பும் காவிரிப்பூம்பட்டினத்தின் சாய்க்காடு தலத்தில் உறையும் பரம்பொருளாகிய சிவபெருமானின் திருப்பாதங்களை தொழுவீர்களாக.

பாடல் 5:

மண்புகார் வான் புகுவர் (2.041) பாடல்கள் 4, 5, 6, 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0041)

கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணைத் தோள் கொடியிடையைப்

பாங்கென்ன வைத்து உகந்தான் படர்சடை மேல் பால் மதியம்

தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ்

ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே

விளக்கம்:

பதிகத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பாடல்கள் மூலம், பெருமானின் வழிபாட்டினில் நம்மை ஈடுபடுத்திய சம்பந்தர், பெருமானை வழிபடுவதால் நாம் உயர்ந்தவர்களாக உலகத்தவரால் மதிக்கப்படுவோம் என்று கூறுகின்றார். கோங்கு=கோங்கின் அரும்பு; கொழும்=செழிப்பான; பணை=மூங்கில்; பாங்கு=பக்கம்; பாங்கென்ன வைத்து=ஒரு பாகத்தில் வைத்து; சாய்க்காட்டான் என்று தலத்து இறைவனின் திருநாமம் இங்கே குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

கோங்கின் அரும்பு போன்று குவிந்த மார்பகங்களையும், செழித்து வளர்ந்த மூங்கில் போன்ற அழகான தோள்களையும், கொடி போன்று துவளும் மெல்லிய இடையினையும் கொண்டுள்ள பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தினில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வைத்தவரும், தனது படர்ந்த சடையின் மீது பால் நிறத்தினில் அமைந்த பிறைச் சந்திரனை தாங்கியவரும் ஆகிய இறைவன் பூம்புகார் சாய்க்காடு தலத்தினில் உறைகின்றான். அவனது திருப்பாதங்களின் நிழலில் தங்கி உய்வினை அடைந்தவர்களே வாழ்க்கையினில் உயர்ந்தவர்களாக உலகத்தவரால் கருதப் படுவார்கள்.

பாடல் 6:

மண்புகார் வான் புகுவர் (2.041) பாடல்கள் 4, 5, 6, 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0041)

சாந்தாக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன்

தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான் திருமுடி மேல்

ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள்

தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே

விளக்கம்:

தீந்து=தீய்ந்து; சாந்து=சந்தனம்; ஆகம்=உடம்பு; கொளுவ=கொள்ளும் வண்ணம்; கொள்ள என்ற தன்வினைச் சொல்லின் பிறவினைச் சொல்லாக வருவது கொளுவ; செற்று=வென்று; ஓய்ந்து=தனது கவலைகளிலிருந்து ஒய்வு பெற்று; ஆர=பொருந்த; பெருமானின் அடியார்கள் உலகத்தவரால் மிகவும் உயர்வாக மதிக்கப் படுவார்கள் என்று சென்ற பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில், பெருமானை வழிபட்டு, அவரது அடியான் சந்திரன் அடைந்த பயனை குறிப்பிடுகின்றார். மன்மதனை வெற்றி கொண்ட பெருமான் என்பதற்கு இரண்டு விதமாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மன்மதன் தனது கணைகளால் தாக்கிய பின்னரும், தொடர்ந்து தவம் செய்தவர் பெருமான் என்றும், மன்மதனின் உதவி ஏதும் தேவைப்படாமல் பார்வதி தேவியை திருமணம் புரிந்து கொண்டவர் என்றும், இரு வகையிலும் மன்மதனை வெற்றி கொண்ட நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

திருநீற்றினை, நறுமணம் வீசும் சந்தனமாக பாவித்துத் தனது திருமேனியில் பூசிக் கொள்பவன் சாய்க்காடு தலத்தில் பொருந்தி உறையும் பெருமான். மன்மதனின் உடல் தீய்ந்து எறியும் வண்ணம் அவனை வெற்றி கொண்டு மகிழ்ந்தவன் ஆவான். நாளுக்கு நாள் தனது கலைகள் தேய்ந்து, ஒற்றைப் பிறையுடன் முழுவதும் அழிந்து விடும் நிலையில் இருந்த பிறைச் சந்திரனின் கவலைகள் முற்றிலும் ஓயும் வண்ணம், பிறைச்சந்திரனை தனது சடையில் அணிந்து கொண்டு, சந்திரன் அழியாமல் தொடர்ந்து ஒளிவீசும் வண்ணம் அருள் புரிந்தவன் பெருமான். மலைமகளின் தோளினில் தோய்ந்த பெருமான், மலைமகளை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்ட பெருமான், இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டவர் ஆவார்.

பாடல் 7:

மண்புகார் வான் புகுவர் (2.041) பாடல்கள் 4, 5, 6, 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0041)

மங்குல் தோய் மணிமாடம் மதி தவழு நெடு வீதிச்

சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்

கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடு மலர்க் கொன்றைத்

தொங்கலான் அடியார்க்குச் சுவர்கங்கள் பொருள் அலவே

விளக்கம்:

சென்ற பாடலில் பெருமானின் அடியானாகிய சந்திரன் பெற்ற பயனை குறிப்பிட்ட சம்பந்தர், பெருமானின் அடியார்களின் மனப்பாங்கினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் அடியார்கள் சுவர்கத்தை ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். மண் புகார் வான் புகுவர் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் பெருமானது அடியார்கள் நிலவுலகத்தில் மீண்டும் புகாமலும் தேவர்களின் உலகத்திற்கு செல்லாமலும் முக்தி உலகத்தினை அடைவார்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுவது இத்தகைய அடியார்களை குறிப்பிட்டு பாடியதோ என்று தோன்றுகின்றது. கொங்கு=நறுமணம்; தொங்கல்=மாலை; பொருது=பொருத்தி சேர்க்கும்; திரை=அலைகள்; புலம்பும்=ஒலிக்கும்;

பொழிப்புரை:

வானில் உள்ள மேகங்களைத் தொடும் வண்ணமும் சந்திரன் தவழும் வண்ணமும் உயர்ந்த மாடங்களைக் கொண்ட நீண்ட வீதிகளை உடையதும், சங்குகளைத் தங்களது கரங்களால் கொணர்ந்து கரையில் சேர்க்கும் கடல் அலைகளின் ஓயாத ஆரவாரம் கேட்பதும் ஆகிய சாய்க்காடு தலத்தினில் உறைபவன் சிவபெருமான். தனது நறுமணத்தால், உடலில் வரிகளைக் கொண்டுள்ள வண்டுகளைக் கவர்ந்து அவ்வாறு வந்த வண்டுகள் தேன் உண்ட களிப்பினில் இன்னிசை பாடும் வண்ணம் அவற்றை கிறங்கடிக்கும் கொன்றை மலர்களால் அமைந்த மாலையினை அணிந்த பெருமானின் அடியார்கள் சுவர்கம் தரும் இன்பத்தினை ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். ஏனெனில், சுவர்கம் தரும் இன்பத்தை விட மிகவும் சிறந்ததும் என்றும் அழியாத பேரானந்தத்தை தரும் சிவலோகத்தை சென்று அடைவதையே அவர்கள் விரும்புவார்கள்.

பாடல் 8:

மண்புகார் வான் புகுவர் (2.041) பாடல்கள் 4, 5, 6, 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0041)

தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ணப்

பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும்

தட வரையால் தடவரைத் தோள் ஊன்றினான் சாய்க்காட்டை

இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே

விளக்கம்:

சென்ற பாடலில் பெருமானின் அடியார்களின் மனப்பாங்கினை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் அத்தகைய அடியார்களுக்கு இடர்கள் ஏதும் இல்லை என்று கூறுகின்றார். இந்த பாடலில் திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை எரித்த அம்பின் தன்மையை தொடலரிய கணை என்று கூறுகின்றார். அக்னியை முனையாகக் கொண்ட அம்பினை எவ்வாறு மற்றவர்களால் எவ்வாறு தொடமுடியும். தடவரை=அகன்ற மலை;

பொழிப்புரை:

தனது நுனியினில் அக்னியைக் கொண்டுள்ள தன்மையால், வெம்மை உடைத்தாக உள்ளமையால் எவரும் தொடுவதற்கு மிகவும் அரியதாக காணப்படும் அம்பினைக் கொண்டு திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் நெருப்பினால் எரித்து அழித்த பெருமான், படம் எடுத்து ஆடும் பாம்பினை அழகிய அணிகலனாகக் கொண்டுள்ளான். பண்டைய காலத்தில் அரக்கன் இராவணனின் அகன்ற தோள்களை, தனது கால் பெருவிரலால் பெரிய கயிலை மலையினை அழுத்தி, அடர்த்து நெரித்து, அரக்கனது வலிமையை அடக்கியவன் சிவபெருமான். அவன் வீற்றிருக்கும் தலமாகிய சாய்க்கட்டினை சிறந்த தலமாக கருதி, அதனைச் சென்றடைந்து இறைவனை வணங்குவோம் என்று எண்ணும் அடியார்களுக்கு துன்பங்கள் ஏதும் ஏற்படாது.

பாடல் 9:

மண்புகார் வான் புகுவர் (2.041) பாடல்கள் 4, 5, 6, 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0041)

வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும்

ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை

தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம் பெருமானைத்

தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே

விளக்கம்:

வையம்=பூமி, நீர் ஏற்றான்=தானமாக ஏற்றுக்கொண்டு மகாபலி சக்ரவர்த்தி தத்தமாக அளித்த நீரினை ஏற்றுக்கொண்ட திருமால். முதலில் வாமனனாக சென்று மூன்றடி மண்ணினை தானமாக கேட்ட திருமால், மகாபலி அதனை தருவதற்கு ஒப்புக்கொண்டதை உணர்த்தும் பொருட்டு, வாமனரின் கையினில் நீர் வார்த்தான். இவ்வாறு நீர் வார்ப்பதை தத்தம் செய்தல் என்று கூறுவார்கள். வாமனனாக சென்ற திருமால், நீரினை ஏற்ற பின்னர், திரிவிக்ரமனாக மாறி தனது இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்தார் என்று பாகவதம் உணர்த்துகின்றது. ஐயன்=தலைவன்; தையலார்=மகளிர்; ஓவா=இடை விடாத; தேறோம்=மதிக்க மாட்டோம். சென்ற எட்டு பாடல்களில் பெருமானின் அடியார்கள் பெரும் நன்மையினையும் அவர்களின் தன்மையையும் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் தலத்து மகளிர் இடைவிடாது பெருமானின் பெருமையை பாடுகின்றனர் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

மூன்றடி மண்ணினை தானமாகப் பெற்று இரண்டு அடிகளால் மூவுலகத்தையும் அளந்த ஆற்றல் படைத்த திருமாலும், தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், அவர்கள் இருவரும் தலைவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் தனது திருமேனியின் நீளத்தினை அளந்து அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம், பெருமை மிகுந்த நீண்ட தழலுருவாக நின்றவன் சிவபெருமான். இது போன்று பல பெருமானின் பெருமைகளை மகளிர் இடைவிடாது பாடும் தலம் சாய்க்காடு ஆகும். இந்த தலத்தில் உள்ள பெருமானின் பெருமைகளை உணர்ந்து அவனை தெய்வமாக போற்றாத மனிதர்களின் அறிவினை ஞானம் என்று கருதி நாம் மதிக்கமாட்டோம்.

பாடல் 10:

மண்புகார் வான் புகுவர் (2.041) பாடல்கள் 4, 5, 6, 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0041)

குறம் காட்டு நால்விரலில் கோவணத்துக் கொலோவிப் போய்

அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும்

திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடைமின்

புறம் காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே

விளக்கம்:

குறம்=தொடை; கொலோவி=திரிந்து, உலாவி; அறம் காட்டும் சமணர்=தங்களது பொய்யொழுக்கத்தை மறைத்து, சாமார்த்தியமாக பேசி, பல நூல்களை மேற்கோள் காட்டி, தாங்கள் பின்பற்றும் வழி அறத்தின் வழி போன்று காட்டும் சமணர்கள்; திறம்=தன்மை; அலர்=பழிச்சொல்; அந்நாளில் பெருமானின் அடியார்களாக இருந்த பலரையும், தங்களது சாமர்த்தியமான பேச்சினால், பெருமானைப் பழித்துக் கூறும் தங்களது பொய்களால் கவர்ந்து, சமணர்களும் புத்தர்களும் செயல்பட்டமையால், எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு பெருமானை தொடர்ந்து வழிபடவேண்டும் என்று உலகத்தவர்க்கு அறிவுரை கூறும் பாடல்.

பொழிப்புரை:

தங்களது தொடைகளை வெளியே காட்டும் வகையில் நான்கு விரல் அகலத்தில் உள்ள கோவண ஆடையினை அணிந்தவர்களாக எங்கும் உலாவுபவர்களும், தங்களது பொய்களை சாமர்த்தியமாக மறைத்து அறவழியில் நடப்பது போன்று பொய்யான தோற்றத்தை உருவாக்கும் சமணர்களும் புத்தர்களும், பெருமானை பழித்துச் சொல்லும் தன்மையை உடைய சொற்களை பொருட்படுத்தாமல், உலகத்தவரே, நீங்கள் தெளிவு உடைய மனத்தராக பூம்புகார் நகரினில் உள்ள சாய்க்காடு தலம் சென்றடைந்து, ஊருக்கு புறம்பாக உள்ள சுடுகாட்டில் நடனம் ஆடும் பெருமானின் திருவடிகளை சென்று சார்வீர்களாக.

பாடல் 11:

மண்புகார் வான் புகுவர் (2.041) பாடல்கள் 4, 5, 6, 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0041)

நொம்பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார்

அம்பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங்காழிச்

சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும்

எம் பந்தம் எனக் கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுவே

விளக்கம்:

நொம்=நோகும் வண்ணம்; பைந்து=பந்து; ஒல்கு=தளர்ச்சி அடைந்து; பூங்காழி=ஆழகிய சீர்காழி நகரம்; பந்தம்=பற்றுகோடு;

பொழிப்புரை:

புடைத்த பந்துகள் மோதுவதால் தளர்ச்சி அடையும் மென்மையான கால்களில் நூபுர அணியினை அணிந்து கொண்டு அழகிய பந்துகளும் கழற்சிக் காய்களும் விளையாடும் மகளிர் எழுப்பும் ஓசை நிறைந்து காணப்படும் அழகிய சீர்காழி நகரினைச் சார்ந்த ஞானசம்பந்தன், சாய்க்காடுப் பெருமானை புகழ்ந்து பாடிய பத்து பாடல்களையும் தமது பற்றுக்கோடாக கருதி ஓதி, பெருமானைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும்.

முடிவுரை:

புகார் என்ற சொல்லினை நயமாக நான்கு அடிகளிலும் பயன்படுத்தி பதிகத்தின் முதல் பாடலை தொடங்கும் ஞானசம்பந்தர், பெருமானின் திருவடிகளைத் சாரும் அடியார்கள் இம்மையில் துன்பமேதும் இன்றியும் மறுமையில், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று சிவலோக வாழ்க்கையினையும் பெற்று மகிழ்வார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அருள் புரியும் பெருமானின் கருணைத் திறனைக் கற்றும் கேட்டும் அறிந்த சான்றோர்கள் அவனைத் தங்களது தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறுகின்றார். கற்றோர்களின் செயலை அறிந்த நாமும், வாழ்க்கை நிலையாமையை உணர்ந்தவர்களாக, இன்றையிலிருந்தே தினமும் பெருமானை புகழ்ந்து பாடி நல்வினையை சேர்த்துக் கொள்ளலாம் என்று பதிகத்தின் மூன்றாவது பாடலில் கூறுகின்றார். இவ்வாறு பெருமானைப் புகழ்ந்து பாடும் நிலையினை சென்று அடைந்த பின்னர், பெருமானின் திருப்பாதங்களில் மலர்கள் தூவி வழிபட வேண்டும் என்று நான்காவது பாடலில் உணர்த்துகின்றார். சென்ற பாடலில் குறிப்பிட்ட வண்ணம் பெருமானின் திருவடிகளின் பெருமையை உணர்ந்து சரணடையும் மக்களே வாழ்வினில் உயர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர் என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். ஆறாவது பாடலில் பெருமானிடம் சரணடைந்த, அழியும் நிலையிலிருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன் மறுவாழ்வு பெற்றதை குறிப்பிடுகின்றார். ஏழாவது பாடலில், சாய்க்காட்டு பெருமானின் அடியார்கள் சொர்கத்தினும் உயர்ந்த சிவலோக வாழ்வினை பெறுவதற்கு தகுதி உடையவர்களாக இருப்பதால் சுவர்க்க லோக வாழ்வினையும் பொருட்படுத்தாமல் சிவலோக வாழ்வினையே சிறந்ததாக கருதி வாழ்வார்கள் என்று கூறுகின்றார். எனவே இந்த சாய்க்காடு தலத்தினை அடையும் அடியார்களுக்கு இடர்கள் ஏதும் இல்லை என்று எட்டாவது பாடலில் கூறுகின்றனர். அளப்பதற்கு மிகவும் அரிதான பெருமையை உடைய பெருமானை தெய்வமாக போற்றாதவர்களின் அறிவினை ஞானமாக தான் கருதவில்லை என்று சம்பந்தர் சாடுவதை பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் நாம் காணலாம். மேலும் இந்த பாடலில் அளவிடமுடியாத பெருமானின் பெருமைகளை இடைவிடாது இசைப் பாடல்களாக மகளிர் பாடுகின்றனர் என்றும் கூறுகின்றார். சாய்க்காட்டு தலத்தின் அடியார்களின் தன்மையையும், அந்த அடியார்கள் பெறுகின்ற நன்மைகளையும் முந்திய பாடல்களில் குறிப்பிட்ட சம்பந்தர், பதிகத்தின் எட்டாவது பாடலில் உலகத்தவரை சமணர்கள் மற்றும் புத்தர்களின் வீண் சொற்களை புறக்கணிக்குமாறு அறிவுரை கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம், மாற்று மதத்தவர் உண்மையை திரித்துச் சொல்லும் வீண்பழிச் சொற்களை நாம் புறக்கணிக்கவேண்டும் என்பது உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடலில், தேவாரப் பதிகங்களை பற்றுக்கோடாக கொண்டு, அந்த பதிகங்களை பாடி இறைவனைப் புகழும் அடியார்கள் துன்பங்கள் நீங்கப்பெற்று இன்பமுடன் வாழ்வார்கள் என்று உணர்த்தப் படுகின்றது. நாமும் தேவாரப் பாடல்களை பக்தியுடன் ஓதி, இம்மையில் துன்பங்கள் தீர்க்கப்பெற்று வாழ்வோமாக.



Share



Was this helpful?