பதிக எண்: 2.30 - திருப்புறம்பயம் - இந்தளம்
முன்னுரை:
திருவைகா சென்று கோழை மிடறாக கவி என்று தொடங்கும் பதிகம் பாடி இறைவனைப் பணிந்து வணங்கிய ஞானசம்பந்தர், அடுத்து அருகிலுள்ள புறம்பயம் தலம் சென்று இறைவனைப் பணிந்து பதிகம் பாடுகின்றார். ஞானசம்பந்தர், அப்பர் பிரான் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரப் பதிகங்கள் பெற்ற தலம். மணிவாசகரும் தனது கீர்த்தி திருவகவல் பதிகத்தில் புறம்பயம் அதனில் அறம் பல அருளியும் என்று குறிப்பிடுகின்றார். தென்முகக் கடவுளின் முக்கிய தலமாக கருதப் படுகின்றது. ஞானசம்பந்தர் புறம்பயம் சென்றதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் சம்பந்தரை சேக்கிழார் நீடிய அறம்தரு கொள்கையார் என்று குறிப்பிடுகின்றார். நீடிய அறம் என்று முக்தி நிலை உணர்த்தப் படுகின்றது. பிள்ளையாரின் பாடல்கள் முக்தி நெறிக்கு வழி காட்டும் தன்மையது என்பதால் இந்த பெயர் மிகவும் பொருத்தமாக உள்ளது. இந்த தன்மை பற்றியே சிவம் பெருக்கும் பிள்ளையார் என்றும் அவர் அழைக்கப் படுகின்றார்.
புறம்பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய்
திறம்புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ்
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய
அறம் தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்
கும்பகோணத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் உள்ள தலம். இன்னம்பர் தலத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. கும்பகோணம் மற்றும் சுவாமிமலையிலிருந்து இன்னம்பர் வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் மூலம் சென்றடையலாம். மற்ற ஊர்களை பிரளய வெள்ளம் அழித்த போதிலும், இந்த தலம் அழியாமல் இருந்தது. இவ்வாறு பிரளயத்திற்கு புறம்பாக, வெளியே இருந்தமையால் புறம்பயம் என்ற பெயர் வந்தது. நாளடைவில் அந்த பெயர் புறம்பியம் என்று மருவிவிட்டது. இந்த தலத்தில் உள்ள விநாயகருக்கு பிரளயம் காத்த விநாயகர் என்றே பெயர். புன்னை வன நாதர், சாட்சிநாதர், புறம்பயநாதர், கரும்படு சொல்லி, இக்ஷூவாணி; செட்டிப் பெண்ணுக்கு சாட்சி சொல்லியமையால், சாட்சிநாதர் என்ற பெயர் வந்தது. அகத்தியர் புலஸ்தியர், சனகர், சனாதனர், விஸ்வாமித்திரர், துரோணர் சுக்ரீவன், இமவான் ஆகியோர் வழிபட்ட தலம். துரோணர் வழிபட்டு அச்வத்தாமாவை மகனாகப் பெற்றார். மகத நாட்டு மன்னன் ஒருவன், பெருமானை வழிபட்டு தனக்கிருந்த முயலகன் நோயினைத் தீர்த்துக்கொண்டான். நாளும் கோயிலுக்கு விறகு கொண்டு வந்து கொடுத்த அடியான் ஒருவனுக்கு முக்தி வழங்கப் பட்டது. செட்டிப் பெண்ணுக்கு சாட்சி சொன்ன நிகழ்ச்சி திருவிளையாடல் புராணத்தில் வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலத்தில் சொல்லப் படுகின்றது.
மூலவர் சன்னதிக்கு செல்லும் மண்டபத்தின் இடது பக்கத்தில் உள்ள விநாயகர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரளய வெள்ளத்தை தடுப்பதற்காக சிப்பி, கிளிஞ்சல், கடல்நுரை சேர்த்து இந்திரனால் செய்யப்பட்ட மூர்த்தம் தான் இந்த பிரளயகால விநாயகர். பொங்கி வந்த பிரளய வெள்ளம் அனைத்தையும் விநாயகர் தன்வயப்படுத்திக் கொண்டு பிரளயத்தால் இந்த இடம் அழியாதவாறு காத்தார். பொங்கிவந்த ஏழு கடல்களையும், குளத்தின் கீழக்கரையில் உள்ள ஏழுகடல்கிணறு என்று அழைக்கப்படும் கிணற்றில் அடக்கினார் என்று கூறுவார்கள். இந்த விநாயகருக்கு தேன்குடித்த விநாயகர் என்றும் தேன் அபிஷேக பிள்ளையார் என்றும் பெயர் உண்டு. வெண்மை நிறத்தில் விளங்கும் இந்த விநாயகருக்கு விநாயக சதுர்த்தியன்று குடம் குடமாக தேன் அபிஷேகம் செய்யப் படுகின்றது. எவ்வளவு தேன் அபிஷேகம் செய்தாலும், அத்தனையும் உறிஞ்சப்பட்டு, தேன் சொரிந்த அடையாளமே இல்லாத வண்ணம் மாறிவிடுகின்றது. மேலும் அருகில் ஒரு எறும்போ ஈயோ கூட நாம் காண முடியாது. தேனை உட்கொண்ட விநாயகரின் நிறம் மாறுவதை, அத்தகைய அபிஷேகம் செய்யப்படும் நாட்களில், சிவப்பும் பழுப்பும் கலந்த வண்ணத்தில் இருப்பதை, இன்றும் காணலாம். அந்த சமயத்தில் இவரை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாக கருதப் படுகின்றது.
ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். கோபுரத்துக்கு எதிரில் பிரம்மதீர்த்தக் குளம். இந்த குளத்தின் தென்கரையில் கோயிலின் நுழைவாயிலுக்கு எதிரில் தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது. சனகாதி முனிவர்களுக்கு பிரம்மஞானம் தட்சிணாமூர்த்தியால் உபதேசம் செய்யப்பட்ட தலம். இவர் அறம் உரைத்த நாயனார் என்று அழைக்கப் படுகின்றார். தென்முகக் கடவுள் சிறப்பாக கருதப்படும் இருபத்து நான்கு தலங்களில் இந்த தலம் ஒன்று என்று தமிழ் தாத்தா உ.வே.சா அவர்கள் திருத்தலங்கள் வரலாறு இரண்டாம் பகுதி புத்தகத்தில் கூறுகின்றார். உள்ளே நுழைந்தவுடன் உள் மாடத்தில் நர்த்தன விநாயகர். நுழைவாயிலுக்கு நேரே பலிபீடம் நந்தி கொடிமரம் உள்ளன. பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் தெற்கு முகம் நோக்கி அம்பாள் சன்னதி. கோயிலில் நுழையும் போதே நாம் அம்மன் சன்னதியை காணமுடியும். நாம் காணும் குஹாம்பிகை சன்னதி என்று அழைக்கப் படுகின்றது. தனது இடுப்பினில் குழந்தை முருகனை ஏந்திய வண்ணம் காட்சி தரும் அம்பிகை. இந்த அம்பிகைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப் படுகின்றது. பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைப்பேறு வாய்க்கவும், கருவுற்ற பெண்களுக்கு சுகப் பிரசவம் நிகழவும் குஹாம்பிகையை வழிபடுவது பயனளிக்கும். இந்த சன்னதியில் உள்ள திருவுருவம் சுதையால் செய்யப்பட்டது.
வெளிப் பிராகாரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், உள்வாயிலின் இருபுறமும் விநாயகர் மற்றும் தண்டபாணி இருப்பதை காணலாம். தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி. அதனை அடுத்து தனி மண்டபத்தில் நால்வர் சன்னதி. தென்மேற்கு மூலையில் முக்கண் விநாயகர். அடுத்து சோமாஸ்கந்தர் மூலவருக்கு பின்புறத்தில் சுப்பிரமணியர் சன்னதி; தொடர்ந்து பல லிங்கங்களும் மகாலட்சுமி சன்னதி; விஸ்வாமித்திரரும் அகத்தியரும் வழிபட்ட லிங்கங்கள்; வடமேற்கு மூலையில் புன்னைமரம். வடகிழக்கு மூலையில் சிவகாமி உடனுறை நடராஜர் சன்னதி. கிழக்குச் சுற்றில் நவகிரக சன்னதி, சூரியன் சந்திரன்.
மகாமண்டபத்தில் சிறிய நந்தி; வலது புறத்தில் உற்சவ மூர்த்தங்கள்; அர்த்த மண்டபம் செல்லும் வழியில் மற்றொரு விநாயகர். மூலவர் சன்னதிக்கு இரண்டு துவாரபாலகர்கள். மூலவர் வட்ட ஆவுடையாருடன் பெரிய பாணம் கொண்டவராக கம்பீரமாக காட்சி தருகின்றார். இவர் சாட்சிநாதர் என்று அழைக்கப்படும் பெருமான். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் மூன்று, நான்கு மற்றும் ஐந்து தேதிகளில் காலையில் சூரியனின் கதிர்கள் நேராக சென்று மூலவரை அடைகின்றன. கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்திக்கு தனி மண்டபம் உள்ளது. இந்த சன்னதிக்கு அருகில் உள்ள படிக்கட்டு, நம்மை சட்டைநாதர் சன்னதிக்கு அழைத்துச் செல்கின்றது. கோபமும் சாந்தமும் ஒருங்கே கலந்த உருவம் அருகில் உள்ள காலசம்ஹார மூர்த்தி மற்றும் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ள தன்மை மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. நரசிம்மரின் உக்ரத்தை தவிர்த்து, நரசிம்மரின் தோலையே தனது உடலின் மீது சட்டையாக போர்த்துக் கொண்டதால், சட்டைநாதர் என்ற பெயர் வந்தது. இவருக்கு புனுகுச் சட்டமே சாத்தப் படுகின்றது. வெள்ளிக் கிழமை இரவினில், சட்டைநாதருக்கு முன்னே இருக்கும் பலிபீடத்திற்கு அபிஷேகம் செய்யப் படுகின்றது. மூலவருக்கு நேர் பின்னால் கோஷ்டத்தில்லிங்கோத்பவர். வடக்கு சுற்றில் துர்க்கை சன்னதி, ப்ரத்யக்ஷநாதர், மற்றும் அர்த்தநாரீஸ்வரர் உருவங்கள் உள்ளன. கருவறை கோஷ்டங்களில் சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. அம்பாள் சன்னதிக்கு முன்னே மகாமண்டபமும் அர்த்தமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தில் பள்ளியறை உள்ளது. கரும்படு சொல்லம்மை, என்ற அம்பிகையின் பெயர், கரும்பினை விடவும் இனிமையான மொழி படைத்தவள் என்ற பொருள் பட அமைந்துள்ளது. குஹாம்பிகை சன்னதியை அடுத்து அம்பிகை சன்னதி அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய சன்னதி. தேவியின் சன்னதி கோஷ்டத்தில் சண்டிகேஸ்வரி சிலையினை காணலாம். முதலாம் ஆதித்தச் சோழன் இங்கே நடந்த போரினில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் செங்கற்கோயிலை கற்கோயிலாக மாற்றினான்.
பாடல் 1:
மறம் பய மலைந்தவர் மதில் பரிசு அறுத்தனை
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரு நால்வர்க்கு
அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
மலைப்பு என்ற சொல்லுக்கு போர் என்ற பொருளும் உள்ளது. மறம்=பாவச் செயல்கள்; அறம் என்பதற்கு எதிர்ச்சொல் மறம். அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி என்று மணிவாசகர் திருவாசகம் சிவபுராணத்தில் கூறுகின்றார். தங்களது பறக்கும் கோட்டைகளில் அமர்ந்தவாறு போர் புரிந்து உலகத்தவர் அனைவரையும் துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்கள் இந்த போர்களால் அடைந்தது பாவச் செயல்கள் தானே. அதனை உணர்த்தும் வண்ணம் பாவச் செயல்களை பயனாகப் பெற்றுத் தந்த போர்கள் புரிந்த அரக்கர்கள் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
பரிசு=தன்மை; மதில்களின் தன்மையை அறுத்தவன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மூன்று மதில்களும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் நேரத்தில் மட்டுமே இந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வலிமையான வரம். மூன்று மதில்களும் எப்போதும் வானில் பறந்து கொண்டே இருப்பதால், அவைகள் இருக்கும் இடம் மாறிக்கொண்டே இருக்கும். இவ்வாறு மாறிக்கொண்டே இருந்தாலும் இரண்டு மதில்களை ஒரு கோட்டினால் இணைக்க முடியும் என்றாலும் மூன்றாவது மதிலும் அந்த நேர்க்கோட்டினில் வருவது என்பது எப்போதாவது ஒரு முறை நிகழக்கூடிய சம்பவம். மேலும் மதில்கள் நகர்ந்து கொண்டே இருப்பதால் அவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் நேரமும் மிகவும் குறைந்தது. இந்த தன்மையே மிகவும் வலிமையான அரணாக இருந்ததால், எவராலும் அழிக்க முடியாத மதில்களாக அவை விளங்கின. ஆனால் இந்த தன்மையை மாற்றி, மூன்று மதில்களும் ஒரே நேர்க்கோட்டினில் இருந்த குறைந்த நேரத்தில், ஒரே அம்பினால் அவை மூன்றையும் வீழ்த்தி எரியச் செய்தவர் பெருமான், என்பதை குறிப்பிடும் வண்ணம் மதில் பரிசு அறுத்தவன் என்று பெருமானை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பரிசு என்ற சொல்லுக்கு பெயர்ந்து பல இடங்களும் பறந்து சென்று, அழிக்கும் தன்மை என்று பொருள் கொண்டு. திரிபுரத்தவர்கள் செய்து கொண்டிருந்த தீச்செயல்களை, அவர்களை அழிப்பதன் மூலம் நிறுத்தியவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
நிறம் பசுமை என்று அம்மையின் உடல் நிறத்தினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அம்மையின் நிறத்தினை கருமை என்றும் கருநீலம் என்றும் பச்சை என்று திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. திருமாலின் நிறத்தையும் அவ்வாறே பச்சை என்று பல பிரபந்த பாடல்கள் குறிப்பிடுகின்றன. நிறம் பசுமை செம்மையோடு என்று குறிப்பிடுவதன் மூலம் அம்மையப்பரின் திருக்கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது.
பிராட்டியின் நிறம் பச்சை என்பதை உணர்த்தும் திருமுறைப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பெருமானின் உடலில் பல விதமான வண்ணங்களும் உள்ளதால் இன்ன நிறம் என்று நாம் பெருமானை குறிப்பிட முடியாது என்று அப்பர் பிரான் குடந்தை கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.5) குறிப்பிடுகின்றார். அவரது கழுத்து விடத்தினை தேக்கியதால் கருநீல நிறத்துடனும், செம்பொன் நிறத்தில் உள்ள மேனியில் பூசப்பட்ட திருநீறு வைரத்தைப் போன்று வெண்மை நிறத்துடனும், அன்னையை உடலின் ஒரு கூறாக ஏற்றுக்கொண்ட இடது பாகத்து மேனி பச்சை நிறத்துடனும் நெடிதுயர்ந்த பளிங்கின் உருவமாக காணப்படும் பெருமானின் திருவுருவ நிறத்தினை என்னவென்று சொல்ல முடியும் என்ற கேள்வியை நம்மிடம் அப்பர் பிரான் கேட்கின்றார். கோலமணி=அழகிய மணிகள்; கொழித்து=அடித்துக் கொண்டு வரப்படும், மேடான மேற்கு பகுதியிலிருந்து தாழ்வான கிழக்கு சமவெளிக்கு பாயும் காவிரி நதியை கீழே இறங்கின நதி என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமான் ஆண் என்றும் பெண் என்றும் அலி என்றும் சொல்ல முடியாத வண்ணம் இருப்பதால் அவரது உருவம் இன்ன தன்மை என்று சொல்ல முடியாது என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும்
நீல உரு வயிர நிரை பச்சைச் செம்பொன் நெடும் பளிங்கு ஒன்று அறிவரிய நிறத்தார் போலும்
கோலமணி கொழித்து இழியும் பொன்னி நன்னீர்க் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே
பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடல் ஒன்றினில் (3.112.6) பெருமானின் திருமேனி நிறம் பச்சை என்று சம்பந்தர் கூறுகின்றார். பிராட்டியைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டதால், அவரது திருமேனியின் நிறம் இடது பாகத்தில் பச்சையாக காணப்படுகின்றது என்பதை நாம் உணருகின்றோம். தனது மனைவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றதாலும், பிச்சை ஏற்பதாலும் வித்தியாசமாக காணப்படும் பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், இவ்வாறு பெருமான் இருப்பதன் காரணத்தை நாம் அறிய முடியாது என்று கூறுகின்றார். எனவே தான் இவர் தன்மை அறிவார் ஆர் என்று இந்த பாடலை முடிக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானின் பண்பும், அருட் செய்கைகளும் குறிப்பிடப்பட்டு அவரது தன்மையை நம்மால் அறிய முடியாது என்று சம்பந்தர் உணர்த்துகின்றார்.
பச்சைமேனியர் பிச்சைகொள்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவாரார்
இடைமருது தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்திலும் (6.17.7) அப்பர் பிரான் இறைவனை பச்சை நிறம் உடையர் என்று குறிப்பிடுகின்றார். பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்று பல்லாண்டு பதிகத்தில் கூறுவது போன்று அப்பர் பிரான் என்றும் உள்ளார் என்று இந்த பாடலில் இறைவனின் அழியாத தன்மையை குறிப்பிடுகின்றார். பல இல்லங்கள் தேடிச் சென்று பிச்சை எடுத்தாலும், பெருமை குறையாதவர் பெருமான் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
பச்சை நிறம் உடையர் பாலர் சாலப் பழையர் பிழை எலாம் நீக்கி ஆள்வர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கையேந்தி இல்லம் தோறும்
பிச்சை கொள நுகர்வர் பெரியார் சாலப் பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம் கொண்டாரே
நீத்தல் விண்ணப்பத்தின் பாடல் ஒன்றினில் மணிவாசகர் பச்சையன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பொதுவாக கனல் போன்று சிவந்த திருமேனியை உடையவன் பெருமான் என்று திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. என்றாலும் அவனது திருமேனி பல்வேறு வண்ணங்கள் உடையதாக உள்ள தன்மை திருமுறைப் பாடல்களில் கூறப் படுகின்றன. திருமேனி முழுவதும் திருநீற்றினை பூசிக் கொள்வதால் வெண்மை நிறத்துடனும், ஆலகால விடத்தை தேக்கியதால் கழுத்தின் ஒரு பாகம் கருமை நிறத்துடனும். அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டதால் இடது பாகம் பச்சை நிறத்துடனும் அவரது சிவந்த திருமேனி காணப் படுவதை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சச்சையன்=இளமையாக இருப்பவன்; கால்=காற்று; தடம் தாள=பருத்த காலினை உடைய; விச்சை=வித்தை, வியத்தகு தன்மை; ஐந்து பூதங்களிலும் கலந்து நின்று பெருமான் அவற்றை இயக்கும் தன்மையை வியத்தகு தன்மை என்று அடிகளார் கூறுகின்றார். ஒண் படம்=அழகிய படம்; அடல் கரி=வலிமை உடைய யானை;
சச்சையனே மிக்க தண்புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம்
விச்சையனே விட்டு இடுதி கண்டாய் வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனே ஒண் பட அரவக்
கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே
திருமூலர் சக்திபேதம் எனப்படும் பகுதியில் இறைவியின் தன்மையை உணர்த்தும் பொழுது நீங்காத பச்சை நிறத்தை உடையவள் என்று குறிப்பிடுகின்றார். ஓங்காரியாக இருக்கும் அன்னை சதாசிவன் மகேசுரன் உருத்திரன் மால் அயன் ஆகிய ஐவரையும் பெற்றெடுத்தாள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். ஹ்ரீம் என்ற எழுத்தினில் அம்மை இடம் கொண்டு இருப்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஹ்ரீம் என்ற எழுத்து இரீங்காரம் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது.
ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரியாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே
நான்காம் தந்திரம் நவாக்கரி சக்கரம் அதிகாரத்தில் பல இடங்களில் அம்மையின் நிறம் பச்சை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அத்தகைய பாடல் ஒன்றினை நாம் இங்கே காண்போம். பச்சையம்மன் கோயில் என்று பல கிராமங்களிலும் வீரசக்தியின் கோயில் இருப்பதை நாம் காணலாம்.
உகந்த நாள் பொன்முடி முத்தாரமாக
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக் கச்சு அணிந்து
தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சையாமே
திறம்=உறுதியானது, நிலையானது; உண்மைப் பொருளை உள்ளடக்கியது; திறம் பயனுறு பொருள்=உண்மைப் பொருளை உள்ளடக்கிய வேதங்களின் பயனையும் பொருளையும்;
பொழிப்புரை:
பாவமே பயனாக வரும் வண்ணம் பல கொடிய செயல்கள் செய்து அனைவரையும் போருக்கு அழைத்து துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளின் வலிமையான தன்மையை அறுத்து, மூன்று கோட்டைகளையும் ஒருங்கே எரித்தவனும், பசுமை நிறத்துடன் செம்மை நிறமும் பொருந்துமாறு கலந்த திருமேனியை உடையவனும், உண்மைப் பொருளை உள்ளடக்கியதும் வீடுபேறாகிய பயனைத் தருவதும் ஆகிய வேதங்களின் பொருளினை உணர்ந்து தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்த சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறத்தின் பயனை விரித்து உரைத்தவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளான்.
பாடல் 2:
விரித்தனை திருச்சடை அரித்து ஒழுகு வெள்ளம்
தரித்தனை அது அன்றியும் மிகப் பெரிய காலன்
எருத்து உற உதைத்தனை இலங்கிழை ஓர் பாகம்
பொருந்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
எருத்து=கழுத்து; இலங்கு=விளங்கிய; கருத்தினை=கருத்தை உடையாய்;
பொழிப்புரை:
விரித்த சடையை உடையவனாய் பெருகி வந்த கங்கை வெள்ளத்தை சடையில் தாங்கியவனும், அதிகமான வலிமை வாய்ந்த காலனின் கழுத்து ஒடிந்து வருந்தி கீழே விழும் வண்ணம் உதைத்து வீழ்த்தியவனும், அழகுடன் விளங்கும் நகைகளை அணிந்துள்ள உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பொருத்தும் கருத்து உடையவனாக விளங்கி செயல்படுத்தியவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளான்.
பாடல் 3:
விரிந்தனை குவிந்தனை விழுங்கு உயிர் உமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
மகா சங்கார காலத்தில் உலகப் பொருட்களும் உலகத்தில் உள்ள உயிர்களும் முற்றிலும் அழிவதில்லை; அவை இறைவனிடத்தில் ஒடுங்குகின்றன. அவ்வாறு ஒடுங்கும் பொருட்களும் உயிர்களும், இறைவன் உலகத்தை மீண்டும் படைப்பதற்கு திருவுள்ளம் கொள்ளும் போது இறைவனால்விரிக்கப்படுகின்றன. உமிழ்தல்=வெளிப்படுத்துதல்; இதையே விரித்தல் குவித்தல் மற்றும் உமிழ்தல் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பெருமான் அத்தகைய செயல்கள் செய்வதை, விரிந்தனை குவிந்தனை உமிழ்ந்தனை என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு இறைவன் பிரளய காலத்தில் உயிர்களை ஒடுக்கியும் பின்னர் விரித்தும் உலகத்தை படைத்தும் அருள் புரிவதை அப்பர் பிரான் ஆலம்பொழில்தலத்து திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.86.6) கூறுகின்றார். இந்த பாடலில் வியன் பிறப்போடு இறப்பானானை என்று இறைவனை அப்பர் பிரான்குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு உயிரும் எண்ணிலடங்கா பிறப்புகளை எடுக்கின்றன. எனவே தான் வியன் பிறப்பு என்று, விரிந்த பிறப்புகளின் தன்மையைஅப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மேலும் அந்த பிறப்புகள் பின்னர் இறப்பிற்கு காரணமாகவும் இருக்கின்றன. இவ்வாறு உடல்கள் பிறப்பதற்கும் இறப்பதற்கும் மூல காரணனாக இருப்பவன் பெருமான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. வேத வித்து=வேதங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவன்; அரிந்தான்=இரு கூறாக பிளந்தான். உலகத்தை மீண்டும் படைப்பதற்கு தான் திருவுள்ளம் கொள்ளும் தருணத்தில் தனது உடலில் முன்னர் ஒடுக்கிய உயிர்களையும் பொருட்களையும் விரிப்பவனும், மகாசங்கார காலத்தில் உலகப் பொருட்களையும் அனைத்து உயிர்களையும் ஒடுக்கி ஒரே இடத்தில் குவிப்பவனும், வேதங்கள் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பவனும், பரந்த உலகினில் உள்ள அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கும் இறப்பதற்கும் காரணமாக இருப்பவனும், அரக்கன் சலந்தரனின் உடலினை இரு கூறாக பிரித்தவனும், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினால் தேவர்கள் அழியாதவாறு காப்பாற்றியவனும், திரிபுரத்து அரக்கர்களும் பல அசுரர்களும் வாழ்ந்து கொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் பாழ்படும் வண்ணம் மேருமலையினை வில்லாக வளைத்து, அந்த வில்லினில் வாசுகிப் பாம்பினை நாணாக ஏற்றி அம்பினை ஆராய்ந்து பொருத்தி எய்தவனும், தென்பரம்பைக்குடி எனப்படும் ஊரினில் உள்ள ஆலம்பொழில் என்ற இடத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ சிந்திப்பாயாக என்று உயிர்களுக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல் இந்த பாடல்.
விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பாகி நின்றான் தன்னை
அரிந்தானைச் சலந்தரன் தன் உடலம் வேறா ஆழ்கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்யப்
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு
தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம்பொழிலானை சிந்தி நெஞ்சே.
கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.60.7) பெருமானின் இந்த செயல்களை, உலகின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமாக இறைவன் திகழ்வதை, அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மகா சங்கார காலத்தில் உலகப் பொருட்களும் உலகத்தில் உள்ள உயிர்களும் முற்றிலும் அழிவதில்லை; அவை இறைவனிடத்தில் ஒடுங்குகின்றன. அவ்வாறு ஒடுங்கும் பொருட்களும் உயிர்களும், இறைவன் உலகத்தை மீண்டும் படைப்பதற்கு திருவுள்ளம் கொள்ளும் போது இறைவனால் விரிக்கப்படுகின்றன. உமிழ்தல்= வெளிப்படுத்துதல்; இதையே குவித்தல் மற்றும் உமிழ்தல் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அத்தகைய செயல்களை செய்யும் இறைவனை, விரிந்தான் என்றும் உமிழ்ந்தான் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார். அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றிய பண்டையனும், உலகெங்கும் பரந்து இருப்பவனும், மகா சங்கார காலத்தில் அனைத்து உயிர்களையும் உலகப் பொருட்களையும் ஒடுக்குபவனும், அவ்வாறு ஒடுக்கியவற்றை உட்கொண்டு தனது வயிற்றினில் அடக்கியவனும், பின்னர் உலகத்தினை மீண்டும் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் தருணத்தில் அனைத்து உயிர்களையும் உலகப் பொருட்களையும் வெளிப்படுத்துவானும், உலகம் உலகப் பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களை அனைத்தையும் தனது உடமையாக கொண்டுள்ளவனும், எவராலும் அறிய முடியாத வண்ணம் பெருமை உடையவனாக அனைவரின் அறிவுக்கும் அப்பாற்பட்டவனாக விளங்குபவனும், சிவநெறியை விட்டு நீங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் கொடிய தீயினில் அகப்பட்டு பொடியாக மாறும் வண்ணம் அம்பினை எய்தவனும், அனைவர்க்கும் மேலானவனும் ஆகிய இறைவன் கற்குடி தலத்தில் கற்பகமாக எழுந்தருளி இருப்பதை அடியேன் எனது கண்களால் கண்டு உய்ந்தேன் என்ற அப்பர் பிரானின் கூற்றாக அமைந்த பாடல்.
பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் தன்னைப் பாரானை விண்ணாய் இவ்வுலகம் எல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை ஒருவரும் தன் பெருமை தனைஅறிய ஒண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் வெவ்வழலில் வெந்து பொடியாகி வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன்நானே
மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் உயிர்கள் மிகவும் களைத்து விடுகின்றன. இவ்வாறு களைப்படைந்த உயிர்களுக்கு இளைப்பாற்றல் தேவைப் படுகின்றது. இந்த கருத்தையே மணிவாசகர் சிவபுராணத்தில், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் என்று கூறுகின்றார். இளைப்பாறும் வாய்ப்பினைத்தான் இறைவன் மகா சங்கார காலத்தில் உயிர்களுக்கு அளிக்கின்றான். உயிர்களை ஒடுக்கி தனது வயிற்றினில் அடக்கிக் கொள்ளும் இறைவன், உலகத்தினை மீண்டும் படைக்க திருவுள்ளம் கொள்ளும் போது, தனது வயிற்றினில் ஒடுங்கிய உயிர்களை மீண்டும் வெளிக்கொணர்வதை, விழுங்கு உயிர்உமிழ்தல் என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தனது வயிற்றில் ஒடுங்கிய உயிர்கள் அனைத்தும் ஆணவ மலத்துடன் பிணைந்து இருப்பதால், அந்த உயிர்களுக்கு தங்களுடன் பிணைந்துள்ள மலத்தின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, உலகினை தோற்றுவிப்பதற்கு பெருமான் விரும்புகின்றார். இவ்வாறு மீண்டும் மீண்டும் அழிந்த உலகினை தோற்றுவிப்பதால் பெருமானுக்கு ஏதும் இலாபம் இல்லை. உயிர்கள் தாம், தங்களது வினைகளை கழித்துக் கொண்டு முக்தி நிலை பெறுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெறுவதால், பயன் அடைகின்றன.
விரிந்தனை குவிந்தனை என்ற தொடருக்கு எங்கும் இறைவன் பரந்து இருக்கும் நிலையினையும் மிகவும் நுண்ணியமாக இருக்கும் நிலையினையும் குறிப்பிடுவதாக சிலர் பொருள் கூறுகின்றனர். இந்த தொடரை அடுத்து விழுங்குயிர் உமிழ்ந்தனை என்று கூறவதால் முதலில் கூறியுள்ள பொருளே, தோற்றுவிப்பது மற்றும் ஒடுக்கும் செயல்களை குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.
குருந்தொசிப் பெருந்தொகை என்று குருந்த மரத்தினை வளைத்து ஒடித்த கண்ணனை (திருமாலை) சம்பந்தர், குறிப்பிடுகின்றார். திருமாலின்அவதாரமாகிய மோகினியுடன் பிச்சைப் பெருமானாக இறைவன் தாருகாவனம் சென்றதையும் இங்கே குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. திருமால் அன்னையின் ஒரு அம்சம் என்பதை நாம் மறக்கலாகாது. சக்தி ஒன்றே ஆயினும் பயன் பொருட்டு நான்கு வடிவங்கள் எடுப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. மனைவியாகும் போது பவானியாகவும் (பார்வதி தேவி) கோபம் கொள்ளும் போது காளியாகவும், போர் செய்யும் போது துர்கையாகவும், ஆணுருவம் கொள்ளும் போது திருமாலாகவும் வடிவம் எடுப்பதாக ஆகமங்கள் உணர்த்துகின்றன என்று மூவர் தமிழ் மாலை புத்தகத்தில், இந்த பாடலுக்கு விளக்கம் அளிக்கும் ஆங்க்ரீச வெங்கடேச சர்மா அவர்கள் கூறுகின்றார். அரியலால் தேவி இல்லை என்ற திருவையாறு பதிகத்தில் அப்பர் பிரான் கூறுவதையும் இந்த கருத்துக்கு ஒரு சான்றாக கூறுகின்றார். பாற்கடலில் தோன்றிய அமுதத்தினை தேவர்கள் மட்டும் உண்ணும் பொருட்டு மோகினியாக உருவம் எடுத்த திருமாலோடு பெருமான் புணர்ந்ததால் ஐயனார் அவதரித்தார் என்று ஸ்காந்த புராணம் உணர்த்துகின்றது. மேலும் தாருகாவனம் சென்ற பெருமான், மோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.21.2) திருமாலுடன் ஒன்றி நின்று காத்தல் தொழிலைப் புரிபவர் பெருமான் என்று கூறுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. சம்பந்தர், திருமாலாக சிவபிரான் உறையும் பதி என்று சிவபுரத்தை குறிப்பிடுகின்றார். பாற்கடலில் துயில்வதுபோல் திருமால் காட்சி அளித்தாலும், உலகில் நடக்கும் அனைத்துச் செயல்களும் அறிந்து கொள்ளும் வல்லமை படைத்தவர் என்பதால், அவரது தூக்கத்தைஅறிதுயில் என்று ஆழ்வார்கள் குறிப்பிடுவது போன்று, சம்பந்தரும் அறிதுயில் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே காணலாம். மலைகள் மிகுந்த இந்தமண்ணுலகில் வாழும் மனிதர்களும், விண்ணில் வாழும் தேவர்களும், மற்ற உலக உயிர்கள் அனைத்தும் நிலைபெற்று வாழவேண்டும் என்ற எண்ணத்துடன்பாற்கடலில் துயிலும் திருமால் என்று இங்கே திருமால் செய்யும் படைத்தல் தொழிலினை சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். திருமாலுடன் பிரிந்தனை என்பதற்கு பிரளய காலத்தினில், அந்நாள் வரை திருமாலுடன் கூடி நின்று அவரை இயக்கிய பெருமான், அவரிடமிருந்து வேறாக பிரிந்து சங்காரத் தொழிலில் ஈடுபட்டு, திருமால் பிரமன் உட்பட அனைத்து உயிர்களும் தன்னிடம் ஓடுங்கும் வண்ணம் செயல் புரிவதை குறிப்பிடுகின்றது என பொருள் கொள்வதும் பொருத்தமே.
மலை பல வளர் தரு புவியிடை மறை தரு வழி மலி மனிதர்கள்
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலை பெறுவகை நினைவொடு மிகும்
அலைகடல் நடு அறிதுயில் அமர் அரி உரு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதிள் சிவபுர நினைபவர் திருமகளொடு திகழ்வரே
பொழிப்புரை:
உலகெங்கும் பரந்து நிற்பவனும், பிரளய காலத்தில் அனைத்து உயிர்களையும் தனது வயிற்றில் ஒடுக்குபவனும், அவ்வாறு ஒடுங்கும் உயிர்களை தக்க சமயத்தில் வெளிப்படுத்தி மீண்டும் அந்த உயிர்கள் தங்களது மலங்களை கழித்துக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கும் வண்ணம் அவற்றின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப தகுந்த உடலுடன் இணைப்பவனும், தாருகவனத்தில் பிச்சை ஏற்கவும் தனது அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு வேறுவேறு வேடங்களில் வேறுவேறு இடங்களில் திரிந்தவனும், குருந்த மரத்தினை ஒடித்த கண்ணனாகிய தோன்றிய திருமாலோடு இணைந்தவனும், பின்னர் அந்த திருமாலிடமிருந்து பிரிந்தவனும், பிணங்கள் புகுகின்ற மயானத்தில் விருப்பமுடன் மகிழ்ச்சியுற நடனம் புரிபவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளார்.
பாடல் 4:
மறம்பய மலைந்தவர் (2.030) பாடல்கள் 2, 3, 4, 5, 6 (திதே 01310)
வளம் கெழு கடும்புனலொடும் சடை ஒடுங்க
துளங்கு அமர் இளம்பிறை சுமந்தது விளங்க
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
வளம் கெழு=வளமை பொருந்திய, நிறைந்த நீர்ப்பெருக்குடன்; துளங்கு=அசைவு; அளைந்தவர்=குழைந்தவர்; உடல் என்ற பொருளினைத் தரும் புலம் என்ற சொல் இங்கே எதுகை கருதி புளம் என்று மாறியுள்ளது. புலம் என்றால் நிலன் என்று பொருள். இங்கே பெருமானது திருமேனி என்று பொருள் கொள்ள வேண்டும்.
பொழிப்புரை:
நிறைந்த நீரினைக் கொண்டு மிகவும் விரைந்து கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் ஒடுங்கும் வண்ணம் ஒடுக்கி மறைத்தவரும், கங்கை நீரின் அலைகளால் அசைக்கப் படும் பிறைச் சந்திரன் தனது சடையில் விளங்கித் தோன்றும் வண்ணம் அணிந்தவரும், தனது அடியார்களின் உள்ளத்தில் இடம் பெரும் நோக்கத்துடன் குழைந்தவரும், தனது அடியார்களுக்கு வெந்த வெண்ணீற்று சாம்பலை தனது உடலில் பூசியவாறு விளங்கித் தோன்றுபவரும் ஆகிய பெருமான் திருப்புறம்பயம் தலத்தில் உறைகின்றார்.
பாடல் 5:
மறம்பய மலைந்தவர் (2.030) பாடல்கள் 2, 3, 4, 5, 6 (திதே 01310)
பெரும்பிணி பிறப்பினொடு இறப்பிலை ஒர் பாகம்
கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே
விளக்கம்:
இந்த தலத்து அன்னையின் திருநாமம் கரும்படுசொல்லம்மை. இந்த திருநாமம் இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளதை நாம் உணரலாம், சுரும்பு=வண்டு; பிணியற்றவன் பெருமான். ஆமயம் என்றால் நோய் என்று பொருள். நோய்கள் ஏதும் அணுகாத தன்மை உடைய பெருமானை நிராமயன் என்று வடமொழியில் கூறுவார்கள். தனது நோயினைத் தீர்த்து தன்னை ஆட்கொண்டவன் பெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு ஆமயம் தீர்த்து என்னை என்று ஒரு பதிகத்தினை அப்பர் பிரான் தொடங்குகின்றார்.
பொழிப்புரை:
பெரும் பிணிகள், பிறப்பு மற்றும் இறப்பு இல்லாதவனும், தனது உடலின் ஒரு பாகத்தில் கரும்படுசொல்லம்மை என்று அழைக்கப்படும் உமையன்னையை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு இருப்பவனும், வண்டுகள் தேனை உண்பதால் அரும்புகள் மலராக மலரும் பிரிந்து எழுகின்ற கொன்றை மலர்களை விரும்பி அணிபவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்கின்ற பெருமான் ஆவான்.
பாடல் 6:
மறம்பய மலைந்தவர் (2.030) பாடல்கள் 2, 3, 4, 5, 6 (திதே 01310)
அனல்படு தடக்கையர் எத்தொழிலர் ஏனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே
தனல் படு சுடர்ச்சடை தனிப்பிறையொடு ஒன்றப்
புனல் படு கிடைக்கையை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
அனல் படு தடக்கையர்=வேள்விக்காக தீ வளர்க்கும் அந்தணர்கள்; எத்தொழிலர்=வேறு எந்த தொழில் புரிபவராக இருந்தாலும்; தணல் என்ற சொல் எதுகை கருதி தனல் என்று மாறிவிட்டது. கிடக்கை=இருக்கும் நிலை; தனிப்பிறை=ஒப்பற்ற தன்மை உடைய பிறைச் சந்திரன். பெருமான் ஏற்றுக் கொண்டதால் சிறப்பு பெற்று விளங்கும் பிறைச் சந்திரன். தடம்=நீண்ட; வினைப்பகை=வினைக்கு பகையாக நின்று அவற்றை முற்றிலும் அழிப்பவன்;
பொழிப்புரை:
வேள்விக்காக தீ வளர்க்கும் நீண்ட கைகளை உடைய அந்தணர்கள் ஆயினும், அந்தணர்கள் அன்றி வேறு ஏதேனும் தொழில் புரிபவராக இருப்பினும், பெருமானை தங்களது மனதினில் நினைப்பவர் ஆயின் அவரது தீவினைகளுக்கு பகையாக உள்ளவனும், கொழுந்து விட்டெரியும் தீச்சுடர் போன்று ஒளி வீசும் செஞ்சடையினை உடையவனும், ஒப்பற்ற ஒற்றைப் பிறையுடன் சந்திரன் ஒன்றியிருக்கும் சடையினை உடையவனும், கங்கை நதி தங்கியிருக்கும் தன்மையை உடைய சடையினை உடையவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளான்.
பாடல் 7:
மறம்பய மலைந்தவர் (2.030) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0132)
மறத்துறை மறுத்தவர் தவத்து அடியர் உள்ளம்
அறத்துறை ஒறுத்து உனது அருட்கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை மதித்து அகல நின்றும்
புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
மறத்துறை=பாவம் விளைவிக்கும் செயல்கள்; மறுக்கும்=விரும்பாது ஒதுக்கும்; ஒறுத்து= கட்டுப்படுத்தி; அறத்துறை ஒறுத்து=புலன்களின் வழியில் செல்லாமல் அறத்துறையில் செல்லும் வண்ணம் மனதினை கட்டுப்படுத்தி; கிழமை=உரிமை; அருட்கிழமை=அருள்+கிழமை= சிவபிரானது அருளுக்கு பாத்திரமாகும் தன்மை; அகல நின்றும்=உயிர்களிடமிருந்து பிரிந்து வேறாக நிற்கும் தன்மை;
அறத்துறை ஒறுத்து என்ற தொடருக்கு, இன்பத்தையும் வெறுத்து என்று சிலர் பொருள் கூறுகின்றனர். இன்பம் வரினும் துன்பம் வரினும் ஒன்றாக பாவித்து, துன்பம் வந்த போது கலங்காமலும் இன்பம் வந்த போது மகிழ்ச்சி அடையாமலும் அனைத்தும் இறைவன் செயல் என்று எதிர்கொள்ளும் தன்மையுடன் செயல்படும் உயிர்கள் இருவினையொப்பு என்ற நிலையை அடைகின்றன. தாங்கள் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களால் மனம் ஏதும் சலனம் அடையாமல் இருப்பதால், அவர்கள் மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வதில்லை. மேலும் பழைய வினைகளை எதிர்கொள்ளும் போது அவர்களின் சிந்தனையும் செயலும் மாற்றம் ஏதும் அடையாமல் இருப்பதால், வினைகள் செயலற்றுப் போவதால், இறைவன் பழைய வினைகள் அனைத்தையும் ஒருங்கே நீக்கி விடுகின்றான். இத்தகைய நிலை அடைவதற்கு தகுதி பெற, இன்பத்தையும் வெறுக்கும் தன்மை பெறவேண்டும். அத்தகைய நிலையினை தவம் புரிபவர்கள் அடைந்து, பெருமானின் அருளால் வீடுபேறு பெறுவதற்கு தகுதி பெறுகின்றனர் என்று விளக்கம் அளிக்கின்றனர். இத்தகைய விளக்கமும் பொருத்தமானதே. இத்தகைய நிலைக்கு அப்பர் பிரானின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். சமணர்களின் சூழ்ச்சியால் பல வகையான துன்பங்கள் அடைந்த போதும் ஏதும் கலக்கம் அடையாமல், எப்பரிசாயினும் ஏத்துவன் எம் இறைவனை, என்ற கொள்கையுடன் எதிர்கொண்ட அவர். திருப்புகலூரில் மாணிக்கக் கற்கள் மண்ணுடன் கலந்து தோன்றிய போதும், அவைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் மண்ணுடன் வாரியெடுத்து அப்புறப் படுத்தியவர் அப்பர் பிரான். இத்தகைய அடியார்களையே சேக்கிழார் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
பாவம் விளைவிக்கும் தீய செயல்களை முற்றிலும் விலக்கி தவத்தினை புரியும் அடியார்கள் தங்களது மனம் ஐந்து புலன்களின் வழியில் செல்லாமல் அடக்கி அறவழியில் நிலைத்து நிற்குமாறு கட்டுப்படுத்துகின்றனர். அத்தகைய அடியார்கள் பெருமானது அருளினைப் பெறுகின்ற தகுதி உடையவர்களாக விளங்குகின்றனர். அவர்களது தன்மையை மதித்து அவர்களது மனதினில் குடிகொள்ளும் பெருமான், அவர்களிடமிருந்து அகன்று வேறாகவும் இருக்கும் தன்மை உடையவன் ஆவான். இத்தகைய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்து உறைகின்றான்.
பாடல் 8:
மறம்பய மலைந்தவர் (2.030) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0132)
இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலின் முழங்க
உலம் கெழு தடக்கைகள் அடர்த்திடலும் அஞ்சி
வலம் கொள எழுந்தவன் நலம் கவின அஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
இலங்கையர்=இலங்கை வாழ் மக்கள்; விலங்கல்=மலை; இறைஞ்சும் என்ற சொல் வணங்கும் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. விலங்கினை=நீங்கினை, விலகினை; உலம்=பெரிய கல், திரண்ட கல்; கெழு=ஒத்த; கவின=அழகு செய்ய; அழகு செய்ய பெருமான் வரங்கள் அளித்தான் என்று இங்கே கூறப்படுகின்றது. சந்திரஹாசம் என்ற பெயர் கொண்ட வாள் பெருமானால் அரக்கனுக்கு அளிக்கப் படுகின்றது. தெய்வத் தன்மை பொருந்திய இந்த வாளினை அணிந்து கொண்ட அரக்கன் மேலும் அழகுடன் திகழ்ந்தான் என்பதை உணர்த்தும் வண்ணம், பெருமான் அளித்த வரங்கள் அரக்கனுக்கு வெற்றி மற்றும் அழகினைச் சேர்த்தன என்று சம்பந்தர் கூறுகின்றார். அஞ்சு புலன்கள்=புலன்கள் தங்களை ஆட்கொண்டு, தங்களது உயிர் விரும்பும் வழியில் செல்லவிடாமல் தடுக்கும் என்பதால் சான்றோர்கள் புலன்களின் செய்கைகளுக்கு அஞ்சுவார்கள். புலன்களை கட்டுப்படுத்தும் தன்மை தங்களுக்கு ஏற்படவேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள். ஆனால் இயற்கையாகவே புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து நீங்கிய இறைவன், புலன்களை வென்றவனாக திகழ்கிறான். இந்த செய்தியே அஞ்சு புலன்களை விலங்கினை என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
இலங்கை வாழ் மக்கள் வணங்கும் தலைவனாகிய அரக்கன் இராவணன், கயிலாய மலையின் கீழே அகப்பட்டு வருத்தம் தாளாமல் உரத்த குரலில் அலறி தனது பெரிய கற்கள் போன்று வலிமையான அகன்ற கைகள் நசுங்கி விடுமோ என்ற அச்சத்துடன் பெருமானைப் போற்ற, அரக்கனுக்கு வெற்றியும் அழகும் உண்டாகும் வண்ணம் பல வரங்களை அளித்தவன் சிவபெருமான். அத்தகைய பெருமான், மற்றவர்கள் அஞ்சும் வண்ணம் அவர்களுக்கு துன்பம் செய்யும் ஐந்து புலன்களை வென்று, அதன் தாக்கத்திலிருந்து நீங்கியவனாக காணப்படுகின்றான். அத்தகைய இறைவன் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளான்.
பாடல் 9:
மறம்பய மலைந்தவர் (2.030) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0132)
வடம் கெட நுடங்கு உள இடந்த இடை அல்லிக்
கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரலாகார்
தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்கப்
புடங்கருள் செய்து ஒன்றினை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
வடம்=ஆலமரம்; இங்கே ஆலிலையை குறிக்கின்றது. நுடங்கு உள=துயில் கொள்ள; இடந்து= படுத்துக் கிடந்த; இடை=இங்கே கொப்பூழைக் குறித்தது; அல்லி என்ற சொல் தாமரை மலரைக் குறிக்கும் வண்ணம் பல திருமுறை பாடல்களில் கையாளப் பட்டுள்ளது. புடம்=மறைப்பு; தொடர்ந்து அவர் உடம்போடு=தாங்கள் தேடிக் காணாமையால் அலுத்து தங்களது சுய உருவத்துடன்; புடங்கருள்=புள்+தங்கு+அருள்; பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் முறையே அன்னப்பறவை மற்றும் கருடனைத் தங்களது வாகனமாக கொண்டுள்ளனர். ஒன்றினை=அவர்களுடன் கலந்து நின்ற தன்மை.
பொழிப்புரை:
ஆலிலையில் படுத்துக் கிடந்த திருமாலின் கொப்பூழில் தோன்றிய தாமரை மலரில் அமர்ந்துள்ள பிரமனும், ஆலிலையில் கிடந்த திருமாலும், பெருமானை அளந்து அவனது முடியையும் திருவடியையும் காண்பதற்கு, அன்னமாகவும் பன்றியாகவும் மேலே பறந்தும் கீழே அகழ்ந்தும் முயற்சி செய்து தங்களது முயற்சியில் தோல்வி அடைந்தனர். பின்னர் உண்மை நிலையை உணர்ந்த அவர்கள் இருவரும், தங்களது சுய உருவத்துடன் பெருமானை வணங்க, பெருமான் அவர்கள் இருவருக்கும் அன்னமும் கருடனும் ஆகிய பறவைகள் வாகனமாக இருக்க அருள் புரிந்த பெருமான், அவர்களுடன் ஒன்றி இருந்து அவர்கள் முறையே படைத்தல் மற்றும் காத்தல் தொழில்களை புரிவதற்கு அருள் புரிந்தான். அத்தகைய பெருமை உடைய பெருமான் தான் புறம்பயம் தலத்தில் அமர்ந்து உறைகின்றார்.
பாடல் 10:
மறம்பய மலைந்தவர் (2.030) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0132)
விடக்கு ஒருவர் நன்றென விடக்கு ஒருவர் தீதென
உடல் குடை களைந்தவர் உடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமையொர் பாகம்
அடக்கினை புறம்பயம் அமர்ந்த உறவோனே
விளக்கம்:
விடக்கு=ஊன், மாமிச உணவு; படக்கர்கள்=உடை அணிந்தவர்கள்; சம்பந்தர் காலத்தில் புத்தர்கள் புலால் உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருந்தமை இந்த பாடல் மூலம் நமக்கு தெரிய வருகின்றது. புத்தர்களின் புனித நூல் திரிபிடகம் என்று அழைக்கப் படுகின்றது. பிடக நூலினை பின்பற்றும் புத்தர்கள் பிடகர் என்று அழைக்கப் பட்டனர். உடலை களைந்தவர்=உடை ஏதும் உடுத்தாமல் இருந்த சமணர்கள்; படுத்து=தாழ்வு அடையச் செய்து; உறவோன்=வலிமை உடையவன்; சமணர்களின் முக்கிய கொள்கைகளின் ஒன்றாக பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது இருத்தல் கருதப்பட்டது. எனவே அவர்கள் உயிர்க் கொலையையும், மாமிசம் உட்கொள்வதையும் தவிர்த்தனர். சமண மற்றும் புத்த நூல்கள் முக்தி நெறிக்கு வழிகாட்டாமல், மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்கு வழி வகுப்பதால், பெருமான் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பெரியோர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பொழிப்புரை:
ஊனை உணவாக உட்கொள்ளுதல் நன்று என்று கூறும் புத்தர்களும், ஊனை உட்கொள்ளல் தீயது என்று கூறும் சமணர்களும், உடையினைத் தவிர்த்து திரிந்த சமணர்களும், உடலை மறைக்கும் வண்ணம் துவராடை அணிந்த புத்தர்களும் கூறும் திருபிடகம் முதலான நூல்களின் உரைகளை ஏற்றுக் கொள்ளாது, அந்த உரைகளை தாழ்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றவன் பெருமான். அவன் உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் அடக்கியவனாக புறம்பயம் தலத்தில் அமர்ந்து உள்ளான்.
பாடல் 11:
மறம்பய மலைந்தவர் (2.030) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0132)
கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தம்
தரும் கழுமலத்து இறை தமிழ்க் கிழமை ஞானன்
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்
பெரும் பிணி மருங்கு உற ஒருங்குவர் பிறப்பே
விளக்கம்:
கருங்கழி=கரிய உப்பங்கழிகள்; பொருந்திரை=பெரிய அலைகள்; குலவு=விளங்கும்; மருங்கு அற=இருந்த இடம் தெரியாது முற்றும் ஒழிய; பிறப்பு ஒருங்குவர்=பிறப்பு ஒழியப் பெறுவார்கள். கிழமை=உரிமை;
பொழிப்புரை:
பெரிய அலைகளால் அடித்துக் கொண்டு வரப்படும் முத்துக்கள், கரிய உப்பங்கழிகளில் பொருத்தி விளங்கும் தன்மையை உடைய கடற்கரை உடைய கழுமலம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் தலைவனும், தனது ஞானத்தினால் தமிழுக்கு உரிமை கொண்டாடும் தகுதி படைத்தவனும் ஆகிய சம்பந்தன், வண்டுகள் இடைவிடாது ஒலி செய்யும் புறம்பயம் தலத்தில் உறையும் பெருமானைப் புகழ்ந்து பாடிய தமிழ்ப் பாடல்களில் வல்லவர்களின் பிறவிப் பிணி இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் ஒழிய, அவர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவார்கள்.
முடிவுரை:
சோழ நாட்டின் உள்ள பூம்புகார் என்ற கடற்கரை தலத்தில் வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். நெடுநாட்கள் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த இந்த வணிகருக்கு இறைவனின் அருளால் ஓர் பெண் குழந்தை பிறந்தது. தனது மகள் இரத்தினாவளியை அரதனகுப்தன் என்ற தனது மருமகனுக்கு மணமுடித்துக் கொடுப்பதாக அனைவரிடமும் சொல்லி மகளை வளர்த்து வந்தார். இதனிடையில் அவரது மருமகனுக்கு வேறோர் இடத்தில் திருமணம் முடிந்தது. எனினும் தனது மகளினை அவனுக்கே மணமுடித்து வைப்பது என்ற முடிவினில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் இருவரும் நோய்வாய்பட்டு இறந்துவிடவே, அந்தப் பெண் தனிமைப்படுத்தப் பட்டாள். ஊரில் இருந்த பெரியோர்கள் மருமகனுக்கு செய்தி சொல்லி அனுப்ப, மருமகனும் வந்தான். தனது மாமனுக்கு ஈமச் சடங்குகளை முடித்த பின்னர், ஊரிலுள்ளவர்கள் அந்த மருமகனை, இறந்த வணிகரின் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள். அதற்கு அந்த மருமகன், தான் தனது மாமன் மகளை மதுரைக்கு அழைத்துச் சென்று ஆங்கே தனது சுற்றத்தார் முன்னிலையில் மணமுடித்துக் கொள்வதாக கூறி அழைத்துச் சென்றான். அவ்வாறு செல்லும் வழியில் திருப்புறம்பயம் தலத்தில் கோயிலின் அருகில் இருந்த வன்னி மரத்தின் அடியில் உணவு சமைத்து உண்ட பின்னர் இருவருமாக மரத்தடியில் தங்கினார்கள். அப்போது விதிவசத்தால், மருமகனை பாம்பு தீண்ட அவன் இறந்தான். தனது காதலன் இறந்ததைக் கண்ட நங்கை, தனக்கு ஆதரவாக இருந்த காதலனும் இறந்ததால், தானும் உயிரினை விட்டுவிட முடிவு செய்தாள். அந்த சமயத்தில் அருகிலிருந்து வேறோர் மடத்தில் தங்கியிருந்த, திருஞானசம்பந்தர், அந்த பெண்ணின் அழுகுரலைக் கேட்டு அந்த பெண் தங்கியிருந்த இடத்திற்கு வந்து அழுகையின் காரணத்தை வினவினார். அந்த பெண்ணும் தனது சோகத்திற்கான காரணத்தை கூறினாள். அதனைக் கேட்ட திருஞானசம்பந்தர், இறந்து கிடந்தவனைப் பார்த்த வண்ணம், தனது மனதினில் தியானித்து, அவனது உடல் முழுவதும் பாம்பின் விடத்தினை ஒடுக்கும் மருந்தாக மாறவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். உடனே இறந்து கிடந்தவன் தூக்கத்திலிருந்து விழிப்பவன் போன்று எழுந்தான். அப்போது திருஞானசம்பந்தர் இருவரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். அதற்கு அவர்கள் மதுரை நகருக்கு சென்ற பின்னர் உறவினர்களை சாட்சியாக வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறினார்கள். அப்போது, ஞானசம்பந்தர், வன்னி மரத்தையும் அருகிலிருந்த கிணற்றையும் வன்னி மரத்தையும் லிங்கத்தையும் சாட்சியாக வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். உடனே அவர்கள் தயக்கம் ஏதுமின்றி அவ்வாறே திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மணமக்கள் இருவரும் மதுரை சென்றனர்.
மதுரை சென்ற பின்னர் கணவன், தந்து மூத்த மனைவியிடமும், மற்ற சுற்றத்தாரிடமும் நடந்ததை கூற, அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டு கணவன் மனைவியரை வரவேற்றனர். சில வருடங்கள் கழித்து மூத்த மனைவியின் குழந்தைகள் இளைய மனைவியின் குழந்தையை துன்புறுத்த, மனைவியர் இருவரிடையே கருத்து வேற்றுமை தோன்றலாயிற்று. அப்போது மூத்த மனைவி இளையவளை தனது கணவனை மயக்கி அவனுடன் வந்ததாகவும், அவர்களின் திருமணத்திற்கு சாட்சி ஏதும் இல்லை என்றும் ஏசினாள். அதற்கு இளைய மனைவி, வன்னிமரம், கிணறு சிவலிங்கம் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு தனது திருமணம் நடைபெற்றதாக கூற, மூத்தவள் பரிகாசமாக அந்த சாட்சிகள் மதுரை வருமா என்று கேட்டாள். அந்த கேள்விக்கு விடை அளிக்க முடியாத இளைய மனைவி, மிகுந்த வருத்தத்துடன், மதுரை திருக்கோயில் சென்று இறைவனிடம் தனது குறையை தெரிவித்து வணங்கினாள். தனது அடியார் திருஞானசம்பந்தரின் சொற்படி நடந்த திருமணம் முறிந்து போவதை காணப் பொறாத சிவபெருமான், வன்னிமரத்தையும் கிணறையும் அழைத்துக் கொண்டு, லிங்க வடிவில், சுவாமி சன்னதியின் வடகிழக்கே தோன்றினான். அந்நாள் வரை இல்லாது திடீரென்று முளைத்த மூன்று சாட்சிகளையும் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். இவ்வாறு தனது அடியவளுக்காக சாட்சி சொன்ன லிங்கம் என்பதால் சாட்சி நாதர் என்று பெருமானே அழைக்கப் படலானர். இந்த நிகழ்ச்சி மிகவும் விவரமாக தெய்வத்தின் குரல் புத்தகத்திலும் காணப்படுகின்றது. ஆனால் பெரிய புராணத்தில் இத்தகைய குறிப்பு ஏதும் இல்லை. மதுரை சுந்தரேச்வர் சன்னதிச் சுற்றில் நடராஜ பெருமானின் சன்னதிக்கு அருகே, இந்த மூன்று சாட்சிகளும் எழுந்த இடம், தகவல் பலகை மூலம் சுட்டிக் காட்டப் படுகின்றது. அங்கே இந்த மூன்று சாட்சிகளும் சிறிய சிற்பமாக உள்ளன. புறம்பயம் திருக்கோயிலில் உள்ள தகவல் பலகை ஒன்று, இந்த நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் உணர்த்தப் படுவதாக குறிப்பிடுகின்றது. வன்னிமரம் மடைப்பள்ளி சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள் என்பன சிலப்பதிகார வரிகள். இந்த நிகழ்ச்சி திருவிளையாடல் புராணத்தில் விவரமாக சொல்லப் படுகின்றது. சிலப்பதிகாரம் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று எடுத்துக் கொண்டால், திருஞான சம்பந்தருக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் உள்ள தொடர்பு, ஆதாரமற்ற இடைச்செருகல் என்றே நாம் கருதவேண்டும். பெரிய புராணத்தில் இந்த செய்தி இடம் பெறாமல் இருத்தல், இந்த முடிவினை மேலும் வலுப்படுத்துகின்றது.
பொருளாழம் மிகுந்த இந்த பதிகம் பல அரிய கருத்துக்களை மிகவும் எளிய முறையில் உணர்த்துகின்றது. முதல் பாடலில் அம்மையும் அன்னையும் வேறு வேறு அல்ல இருவரும் ஒருவரே என்றும், இரண்டாவது பாடலில் விரித்த சடையினில் கங்கை நதியினை அடக்கிய வல்லமை படைத்தவன் என்றும், மூன்றாவது பாடலில் உலகத்தை தோற்றுவித்தும் ஒடுக்கியும் மீண்டும் தோற்றுவித்து திருவிளையாடல் புரிபவன் பெருமான் என்றும், நான்காவது பாடலில் அடியார்களுக்கு நீறணிந்த தனது திருமேனியை காட்டி அருள் புரிபவன் என்றும், பிறப்பு மற்றும் இறப்பினைக் கடந்த பெருமான் என்று ஐந்தாவது பாடலிலும், தன்னை நினைக்கும் அடியார்களின் மனதினில் உறைபவன் பெருமான் என்று ஆறாவது பாடலிலும், அடியார்களுக்கு அவர்களின் தன்மைக்கு ஏற்ப அருள் புரியும் பெருமான் என்று ஏழாவது பாடலிலும், ஐந்து புலன்களை வென்றவன் என்று எட்டாவது பாடலிலும், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவருடன் ஒன்றி நின்று அவர்கள் இருவரும் தங்களது செயல்களைச் செய்வதற்கு மூல காரணனாக இருப்பவன் என்று ஒன்பதாவது பாடலிலும், முக்திநெறிக்கு வழி காட்டாத நூல்கள் தாழும் வண்ணம் செய்பவன் பெருமான் என்று பத்தாவது பாடலிலும் கூறிய சம்பந்தர், இந்த பாடலை வல்லமையுடன் ஓதும் அடியார்கள் முக்தி நிலை அடைவார்கள் என்று கூறுகின்றார். நாமும் இந்த பதிகத்தின் பொருளினை நன்கு உணர்ந்து அவற்றினை மனதினில் கொண்டு மனமொன்றி. இந்தளம் பண் பொருந்தும் வண்ணம் இந்த பதிகத்தை ஓதி, முக்தி பெறுவதற்கு தகுதி உடையவர்களாக மாறுவோமாக.