இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மருந்தவன் வானவன்

மருந்தவன் வானவன்

பதிக எண்: 1.110 திருவிடைமருதூர் வியாழக்குறிஞ்சி

பின்னணி:

தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாவடுதுறை தலம் சென்ற திருஞான சம்பந்தர் அந்த தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து சில பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். திருவிடைமருதூர் தலத்தில் உள்ள திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் ஓடே கலன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடிய வண்ணம் சென்ற திருஞான சம்பந்தர், அந்த தலத்தினில் சில நாட்கள் தங்கியிருந்ததாக பெரிய புராணம் உணர்த்துகின்றது. இந்த தலத்தின் மீது, திருஞானசம்பந்தர் மொத்தம் ஆறு பதிகங்கள் அருளியுள்ளார். மேலும் இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் கிடைத்துள்ளன. திருஞானசம்பந்தர் அருளிய ஆறு பதிகங்களில் ஒன்றாகிய மருந்தவன் வானவர் என்று தொடங்கும் பதிகத்தினை நாம் இந்த பதிவினில் சிந்திக்கின்றோம்.

சேக்கிழார், பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில் விரவுவார் திருப்பதிகம் பல பாடி பெருமானது திருப்பாதங்களைத் தொழுத வண்ணம் திருஞானசம்பந்தர் மேலும் பல நாட்கள் இந்த தலத்தினில் தங்கி இருந்தார் என்று கூறுவதால், ஒடேகலன் என்று தொடங்கும் பதிகம் மற்றும் பொங்குநூல் மார்பினர் என்று தொடங்கும் பதிகம் ஆகிய இரண்டு பதிகங்களை தவிர்த்து, மற்றைய நான்கு பதிகங்களும் பின்னர் அருளப்பட்ட பதிகங்களாக கருதப் படுகின்றன. விரவுதல்= கலத்தல்; இங்கே தனது மனதினில் விருப்பம் உடையவராக திருஞானசம்பந்தர் பதிகம் பாடினார் என்று பொருள் கொள்ளவேண்டும்.

பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில்

விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண்மதியோடு

அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால்

உரவு திருத்தொண்டருடன் பணிந்தேத்தி உறையுநாள்

பட்டினத்து அடிகளும் அவரது சீடர் பத்ரகிரியும் இந்த தலத்தினில் சில நாட்கள் தங்கியிருந்தனர். கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் இவர்களது திருவுருவங்களை நாம் காணலாம். இவர்கள் இருவரும் இங்கே இருந்த சமயத்தில், அடியார் ஒருவர் ப்ட்டினத்தாரை அணுகி, தனக்கு ஏதேனும் அளித்து உதவுமாறு வேண்டினார். அந்நாளில், பிச்சை எடுக்க பயன்படும் திருவோடும் தனக்கு சுமை என்று கருதியவராக பட்டினத்தார் இருந்ததால்,திருவோடும் இல்லாதவராக இருந்தார். தன்னிடம் ஏதுமில்லை என்று பட்டினத்தார் தெரிவித்த போதிலும், இவரை சந்தித்த அடியார், எவ்வகையிலேனும் தனக்கு உதவ வேண்டும் என்று வேண்டியதால், பட்டினத்தார் அடுத்த வாயிலில் இருந்த சம்சாரி பத்ரகிரியாரை அணுகுமாறு ஆலோசனை கூறினார்.பத்ரகிரியார் ஒரு நாட்டின் மன்னராக இருந்தவர். பத்ரகிரியாரும் தனது குரு பட்டினத்தாரைப் பின்பற்றி துறவியாக வாழ்ந்து வந்தார். எனினும், அவர் பட்டினத்தாரைப் போன்று, திருவோட்டினைத் தவிர்க்காமல், எப்போதும் திருவோடுடன் கூடியவராக இருந்தார். மேலும் பல நாட்களாக பழகி வந்த ஒரு நாயும் அவருடன் எப்போதும் இருந்து வந்தது. எனவே தான், நாய் மற்றும் திருவோடு ஆகிய இரண்டின் மீது பற்று வைத்திருந்த அவரை, சம்சாரி என்று வேடிக்கையாக பட்டினத்தார் குறிப்பிட்டார். உடனே, அந்த சிவனடியார், பட்டினத்தாரிடம் விடை பெற்றுக் கொண்டு, மற்றொரு வாயிலில் இருந்த பத்ரகிரியாரை தனக்கு உதவி புரியுமாறு அணுகினார். மேலும் சிவனடியார், பட்டினத்தார் இவரை சம்சாரி என்று குறிப்பிட்டதையும் சொன்னர். தான்,தன்னுடன் வாழ்ந்து வந்த நாயின் மீதும் திருவோட்டின் மீதும் பற்று வைத்திருந்தது தவறு என்று சுட்டிக்காட்டவே, அவ்வாறு தனது குரு கேலியாக குறிப்பிட்டார் என்பதை புரிந்து கொண்ட பத்ரகிரியார், இந்த இரண்டையும் தான் துறந்தால் தான், தன்னை உண்மையான துறவியாக மற்றவர்கள் கருதுவார்கள் என்பதையும் உணர்ந்தார். உடனே தனது கையில் இருந்த திருவோட்டினை வீசி எறிந்தார். அந்த திருவோடு, அவருடன் அந்நாள் வரை வாழ்ந்து வந்த நாயின் உடல் மீது பட்டு நாய் இறந்ததுமன்றி, திருவோடும் உடைந்து போனது. அந்த நாய் முக்தி அடைந்தது என்றும், வந்த சிவனடியார் உடனே மறைந்து விட்டார் என்றும் கூறுவார்கள். இவ்வாறு திருவோட்டினால் அடிபட்டு நாய் இறந்த இடம், நாயடியார் கோயில் என்று அழைக்கப் படுகின்றது. இந்த இடமும் கோயிலின் அருகே உள்ளது. திருவொற்றியூர் கோயிலில் ஒற்றியூர் ஈஸ்வரன் சன்னதியின் முன் மண்டபத்தில், பட்டினத்தார் உருவமும் பத்திரகிரியார் உருவமும் பொறிக்கப்பட்ட தூண்கள் எதிரெதிரே உள்ளன. பட்டினத்தார் கையில் கரும்பையும், பத்திரிகிரியார் கையில் திருவோட்டையும் நாம் இந்த சிற்பங்களில் காணலாம். அவருக்கு அருகில் ஒரு நாயும் உள்ளது. பட்டினத்தார் திருவிடைமருதூர் மும்மணிக் கோவை என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் பதினோராம் திருமுறையில் உள்ளது. பதினோராம் திருமுறையில் அமைந்துள்ள சிவபெருமான் திருவந்தாதி எனும் நூலில் இந்தத் தலம் குறிப்பிடப்படுகின்றது. அருணகிரி நாதரும் இந்த தலத்தின் மீது ஒரு திருப்புகழ் பாடல் அருளியுள்ளார். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் தல புராணமும், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவிடைமருதூர் உலாவும் பாடியுள்ளனர்.

மன்னன் வீரசோழன், இந்த திருக்கோயிலைச் சுற்றியிருந்த காட்டினை அழித்து, மக்கள் அனைவரும் இறைவனை எளிதில் வழிபடும் வண்ணம், வகை செய்ததால் வீரசோழபுரம் என்ற பெயரும் இந்த தலத்திற்கு உள்ளது. காசிக்கு சமமாக சொல்லப்படும் தமிழ்நாட்டுத் தலஙகளில் இந்த தலமும் ஒன்று.இடைமருதூர் சாய்க்காடு மயிலாடுதுறை திருவாஞ்சியம் திருவெண்காடு மற்றும் திருவையாறு என்பன அந்த தலங்கள். கும்பகோணத்தைத் சார்ந்த பஞ்சக்ரோசத் தலங்களில் இந்த தலம் ஒன்றாக கருதப் படுகின்றது. க்ரோசம் என்றால் காசிக்கு சமம் என்று பொருள். திருநாகேச்சரம், திருவிடைமருதூர்,தாராசுரம், சுவாமிமலை மற்றும் திருப்படலனம் என்றும் சொல்லப்படும் கருப்பூர். இந்த ஐந்து தலங்களும் சென்று விதிப்படி நீராடி பெருமானைப் பணிந்து வணங்கி, ஒவ்வொரு தலத்திலும், ஒரு பகல் நேரம் அங்கே தங்கிய பின்னரே திருக்குடந்தை கும்பேசர் திருக்கோயில் சென்று பெருமானை வழிபட வேண்டும் என்று கூறுவார்கள். எனவே இந்த ஐந்து திருத்தலங்களும் கும்பகோணம் திருக்கோயிலின் அங்கங்களாக கருதப் படுகின்றன. திருநீலக்குடி தலத்தைச் சார்ந்த ஏழூர்த் தலங்களில் (சப்த ச்தானங்களில்) இந்த தலமும் ஒன்று. மற்ற ஐந்து தலங்கள், இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேச்சரம்,திருபுவனம், மற்றும் மருத்துவக்குடி என்பன. திருவிடைமருது வீதி அழகு என்பது முதுமொழி.

திருவரங்கத்தைப் போன்று ஏழு பிரகாரங்கள் இருந்ததாக சொல்லப் படுகின்றது. தற்போது திருக்கோயிலின் உள்ளே நான்கு பிராகாரங்களே உள்ளன.முன்னர் இருந்த மூன்று பிரகாரங்களும் வீடுகள் கொண்ட வீதிகளாக மாறிவிட்டன போலும். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தென்படும் பிராகாரம் அசுவமேத பிராகாரம் என்று அழைக்கப் படுகின்றது. இந்த பிராகாரத்தை வலம் வந்தால், சுவாமி மற்றும் அம்பிகை சன்னதி இரண்டையும் ஒரு சேர வலம் வரமுடியும். இந்த பிராகாரத்தை வலம் வந்தால், அச்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்றும் பைத்தியம் மற்றும் பேயால் பீடிக்கப்பட்டவர்கள் குணம் அடைவார்கள் என்றும் சொல்லப் படுகின்றது. இதனை அடுத்த பிரகாரம் கொடுமுடி பிரகாரம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பிராகாரத்தை வலம் வந்தால், சுவாமி சன்னதியை மட்டும் வலம் வரலாம். இந்த வலம், கயிலாய மலையினை வலம் வருவதால் கிடைக்கும் பலனுக்கு ஒப்பாக கருதப் படுகின்றது.இதனை அடுத்த பிரகாரம் பிரணவ பிராகாரம் என்று அழைக்கப் படுகின்றது. இதனை வலம் வருவோர் மெய்ஞானம் பெறுவார்கள் என்றும் அவர்களுக்கு முக்தி உலகினில் இடம் கிடைக்கும் என்று நம்பப் படுகின்றது. அம்பிகை சன்னதியைத் தனியாக வலம் வரும் வண்ணம் ஒரு பிரகாரமும் உள்ளது.

தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளில் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. வடக்கு கோபுர வாயிலில் அகோரவீரபத்திரர் கோயிலும், மேற்கு கோபுர வாயிலில் குமரன் கோயிலும் உள்ளன. திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் நான்கு சிவாலயங்கள் உள்ளதால் பஞ்சலிங்கத் தலம் என்றும் கூறுவர். கிழக்கு பகுதியில் விஸ்வநாதர், மேற்கு பகுதியில் ரிஷிபுரேஸ்வரர், வடக்கில் சொக்கநாதர், மற்றும் தெற்கில் ஆத்மநாதர் என்பவையே அந்த நான்கு லிங்கங்கள் ஆகும். வடக்கு பகுதியில் உள்ள சொக்கநாதர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மேகராகக்குறிஞ்சி பண்ணில் அமைந்துள்ள தேவாரப் பதிகங்களை பாடி வழிபட்டால், மழை பொழியும் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.

ஒரு சமயம், பார்வதி தேவி விளையாட்டாக இறைவனது இரண்டு கண்களையும் மூடிய போது, சூரியன் சந்திரன் ஆகிய இருவரும் தங்களது ஒளியினை இழந்தனர்: அதனால் அப்போது உலகம் அனைத்தும் இருளில் மூழ்கியது. ஆனால் அந்த சமயத்திலும் இந்த திருக்கோயிலில் இருந்த இலிங்கம், ஒளி மயமாக விளங்கியதாக கூறுவார்கள். இறைவன் தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட தலமாக இந்தத் தலம் கருதப்படுகின்றது, இந்தச் செய்தி கீர்த்தித் திருவகலில் காணப்படுகின்றது. படிமப்பாதம் என்றால் தவநெறி என்று பொருள். தான் பூஜை செய்து, வழிபாட்டிற்கான நெறிமுறையை பெருமான் நிறுவிய தன்மை இங்கே கூறப்பட்டுள்ளது. இறைவன் தனக்குத் தானே பூஜை செய்து கொண்டு, எவ்வாறு ஒழுங்காக வழிபாடு செய்யவேண்டும் என்று சிறந்த ஏழு முனிவர்களுக்கு உணர்த்தியதாக சொல்லப் படுகின்றது.

இடைமருது அதனில் ஈண்ட இருந்து

படிமப் பாதம் வைத்த அப்பரிசும்

பாடல் 1:

மருந்தவன் வானவர் தானவர்க்கும்

பெருந்தகை பிறவினொடு இறவுமானான்

அருந்தவ முனிவரொடு ஆல் நிழற்கீழ்

இருந்தவன் வளநகர் இடைமருதே

விளக்கம்:

வந்த நோயினைத் தீர்க்கவும் நோய் வாராமல் தடுக்கவும் உடலை வளர்க்கவும் மருந்து உண்ணப் படுகின்றது. மலங்களால் கட்டுண்ட உயிர் தனது வினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. இதனை பிறவிப்பிணி என்று பெரியோர்கள் கூறுகின்றனர். இவ்வாறு மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கித் தவிக்கும் உயிர்கள், அந்த பிறவிப்பிணியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது இயற்கை. இந்த பிறவிப்பிணிக்கு மருந்து சிவபெருமானை வழிபடுவதே ஆகும். இந்த செய்தியை உணர்த்தும் வண்ணம், பல திருமுறைப் பாடல்கள், இறைவனை மருந்து என்று குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். இவ்வாறு பெருமானின் திருநாமமும் பெருமானின் திருவடிவும், பிறவிப்பிணிக்கு மருந்தாக இருக்கும் தன்மை பல தேவாரப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளன.

நல்வினைகளையும் தீவினைகளையும் நுகர்ந்து கழிக்க வேண்டிய நிலையில் அனைத்து உயிர்களும் உள்ளன. நல்வினைகளால் இன்பங்களும் தீவினைகளால் துன்பங்களும் துயரங்களும் உயிர்களுக்கு உண்டாகின்றன. இந்த பிறப்பினில் நமது தீவினைகளால் ஏற்படும் துயரங்களைத் தீர்த்துக் கொண்டு, மறுமையில் பிறப்பையே அடியோடு நாம் தவிர்க்கவேண்டும் என்ற விரும்பினால், அதற்கு மருந்தாக பயன்படுபவன் பெருமான் ஒருவன் தான் என்று புள்ளிருக்குவேளூர் தலத்து பதிகத்தின் கடைப் பாடலில் (2.43.11) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். செடியாய=குணம் இல்லாத; கடி=நறுமணம்;கடியார்ந்த=நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த; சோம்பியிராமல் தேவாரப் பாடல்களை சொல்லும் வல்லமை உடைய அடியார்களுக்கு மறுபிறவி இல்லாத வண்ணம் பெருமான் அருள் புரிவான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பொடியாடி=திருநீற்றினை உடல் முழுதும் பூசிக் கொண்டவன்,திருநீற்றில் நீராடியது போன்று உடல் முழுதும் திருநீற்றின் வண்ணமும் துகள்களும் உடைய பெருமானின் திருக்கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது.

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கொர் மருந்தாவான்

பொடியாடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்

கடியார்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல்

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே

பெருமான் நமது பிறவிப்பிணியைத் தீர்க்கும் மருந்தாகவும் மந்திரமாகவும் செயல்படுகின்றார் என்று திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருந்தலார்=தங்களது தவறான வழியிலிருந்து திருந்தாத திரிபுரத்து அரக்கர்கள்; திரிபுரத்து அரக்கர்கள் தொடர்ந்து தவறுகள் செய்து அனைவரையும் வருத்திய காரணத்தால் தான் பெருமான் அவர்களுடன் போரிடச் சென்றார். விறல்=பெருமை; மத்தம்=மயக்கம்;மத்தமாம் பிணிநோய் என்ற தொடருக்கு, உன்மத்தம் முதலான உடலுடன் தொடர்பு கொண்டுள்ள நோய்கள் என்றும் பொருள் கொள்கின்றனர். எனினும் மத்தமாம் பிணி நோய் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுவதால் மனதினை அறியாமையில் ஆழ்த்தி, இறைவனை நாம் சிந்தியாது இருக்கும் வகையினில் நம்மை மயக்கும் மலங்களின் தொடர்பால் ஏற்படும் நோய் என்று பொருள் கொள்வது சிறப்பாக உள்ளது.. மத்தமாம் பிணி நோய் தானே நம்மை பிறப்புச் சுழற்சியிலிருந்து வெளியே வாராத வண்ணம் தடுக்கின்றது.

திருந்தலார் புரம் தீயெழச் செறுவன விறலின் கண் அடியாரைப்

பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணி நோய்க்கு

மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடமாக

இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடித் தலம் தானே

பெருமானின் திருவேடங்கள் மருந்தாகவும் மந்திரமாகவும் செயல்படும் தன்மையை திருஞானசம்பந்தர் திருந்துதேவன்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.25.1) குறிப்பிடுகின்றார். திருந்துதேவன்குடி தலத்து பெருமானது அடையாளங்களாகிய திருநீறு உருத்திராக்கம் மற்றும் சடைமுடி ஆகியவற்ற கண்ணால் கண்டாலும் அல்லது மனதினால் நினைத்தாலும் ஏற்படும் பயன் யாதென்பதை இங்கே கூறுகின்றேன்; உலகத்தவரே கேட்பீர்களாக,பெருமானின் இந்த அடையாளங்கள், தங்களது நோய்களை தீர்த்துக் கொள்ள விரும்பும் அடியார்களுக்கு மருந்தாகவும், ஐந்தெழுத்து மந்திரம், வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாடல்கள் ஆகியவற்றை சொல்ல விரும்பும் அடியார்களுக்கு அத்தகைய மந்திரங்களாகவும், சிவ புண்ணியங்கள் செய்ய விரும்பும் அடியார்களுக்கு, அத்தகைய புண்ணியங்கள் அளிக்கும் பயன்களாகவும் விளங்குகின்றன, இத்தகைய வேடங்களை தனது அடையாளமாகக் கொண்டுள்ள இறைவன், தேவதேவன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் தலம் திருந்துதேவன்குடி என்பதாகும். இந்த பெருமானின் திருவேடங்களை,அரிய தவம் புரியும் முனிவர்கள் தியானித்து தொழுகின்றனர், என்பதே பாடலின் பொழிப்புரை.

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை

திருந்துதேவன்குடித் தேவர் தேவு எய்திய

அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், திருஞானசம்பந்தர், பெருமானின் திருவேடங்கள் பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்று கூறுகின்றார். செரு=நெருங்கி வளர்ந்த, மரு=மருத மரம்; மருத மரத்து இலைகள் துவர் நிற சாயத்தை தயாரிக்க பயன்படுவதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தேர்=தேரர் என்ற சொல்லின் சுருக்கம், புத்தர்கள் என்று பொருள்; மருவுதல்=நெருங்குதல்; திரு=அழகு; திரு என்ற சொல்லுக்கு திருமகள் என்று பொருள் கொண்டு திருமகள் வீற்றிருக்கும் தாமரை மலர்கள் நிறைந்த பொய்கை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மற்றவர் அருகே வந்து நெருங்குவதற்கு தயங்கும் வண்ணம் சமணர்களின் உடல் நாற்றம் வீசும் வண்ணம் இருந்தது என்று இங்கே திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். அந்நாளைய சமணர்கள், காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்கி சுத்தம் செய்வதை தவிர்த்தனர்; நீராடுவதையும் தவிர்த்து அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று கூறுவார்கள். எனவே உடலும் வாயும் துர்நாற்றத்துடன் விளங்கும் அவர்களை நெருங்க ஏனையோர் தயங்கியது இயற்கை தானே. தொழும்பர்=அடிமைகள், இழிந்தவர்கள்; இங்கே இழிந்தவர்கள் என்ற பொருள் மிகவும் பொருத்தமானது. இந்த தலத்தில் உள்ள திருக்கோயில் மூன்று புறமும் குளத்தால் சூழப்பட்டுள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. அருமருந்து= கிடைத்தற்கு அரிய மருந்து; பெருமானின் கருணை மற்றும் அவனது சின்னங்களே பிறவிப் பிணியை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது என்பதால் அரிய மருந்து என்று குறிப்பிடுகின்றார். இங்கே உள்ள அம்பிகையின் திருநாமம், அருமருந்து நாயகி என்பதையும் குறிப்பால் சம்பந்தர் உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம்.

செருமரு தண்டுவர்த் தேர் அமண் ஆதர்கள்

உரு மருவப்படாத் தொழும்பர் தம் உரை கொளேல்

திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன் குடி

அருமருந்து ஆவன அடிகள் வேடங்களே

இம்மையில் நோய் தீர்க்கும் மந்திரமாகவும் மருந்தாகவும் செயல்படும் பெருமானின் திருநாமம், மறுமையில் நமது உயிர் நன்னெறி அடைவதற்கும் உதவும் என்று திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் திருஞானசம்பந்தர் (3.92.1) கூறுகின்றார். மேலும் மழபாடி மேய மருந்து என்றும் வலஞ்சுழி மருந்து என்றும், மாத்தூர் மேய மருந்து என்றும், தேவர்கள் தேடும் மருந்து என்றும், மணஞ்சேரி மருந்து என்றும், பல பாடல்களில் தேவார ஆசிரியர்கள் பெருமானின் பிணி தீர்க்கும் தன்மையை குறிப்பிடுகின்றனர். புறவு=தோட்டம்;

மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறி அவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்

செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.13.3) அப்பர் பிரான், இறைவனை, வானவர்க்கு மருந்தாகிப் பிணி தீர்க்கும் அணியான் என்று குறிப்பிடுகின்றார். நம்பான்=விரும்பத் தக்கவன்: நணியான்=அருகில் இருப்பவன்: சேயான்=தொலைவில் இருப்பவன்: சிவபெருமான் அவரது அடியார்களுக்கு மிகவும் அருகில் இருப்பவராகவும் ஏனையோருக்குத் தொலைவில் இருப்பவராகவும் உள்ள தன்மை இங்கே கூறப்பட்டுள்ளது. இந்த பாடல் மூலம், தேவர்களும் தங்களது பிறவிப்பிணியைத் தீர்த்துக் கொள்ள விரும்பினால், அதற்காக அவர்கள் பெருமானது அருளினை நாடவேண்டும் என்பது உணர்த்தப் படுகின்றது.

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்

துணியானே தோலானே சுண்ண வெண்ணீற்றானே

மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணி தீர்க்கும்

அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

ஆணவ மலத்தின் தாக்கத்தால் நமது மனம் அறியாமையில் மூழ்கி கிடக்கின்றது, அதனால் உண்மையான மெய்பொருளை அறிந்து கொள்ளாமல் நிலையில்லாத பொருட்களை நிலையான பொருட்களாக நினைக்கும் மயக்க நிலை நமக்கு ஏற்படுகின்றது. இந்த மயக்கம் தீர்க்கும் மருந்தாக செயல்படுபவன் இறைவன் என்று பாவநாசத் திருப்பதிகத்தின் பாடல் (4.15.3) ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நெதி=செல்வம்; சூரியனின் கதிர்கள் சந்திரனை விடவும் அதிகமாக வெளிச்சம் அளிப்பன, ஆனால் வெளிச்சத்துடன் வெப்பத்தையும் சேர்ந்து சூரியனின் கதிர்கள் அளிக்கின்றன.சந்திரனின் கதிர்கள் குளிர்ச்சியை அளிப்பன, இறைவன் சந்திரன் குளிர்ச்சியும் சூரியனின் வெளிச்சமும் கொண்ட கதிர்களாக இருப்பதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

மதியம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயாறமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே

பாவநாசப் பதிகத்தின் பாடலில் (4.15.10) மாத்தூர் மேய மருந்து என்று பெருமானை கூறுகின்றார். புத்தூர் என்பது அரிசிற்கரைப் புத்தூரை குறிக்கும் என்று சிலரும் இது ஒரு வைப்புத் தலத்தைக் குறிப்பது என்று சிலரும் கருதுகின்றனர். மாத்தூர் என்பது வைப்புத் தலம் என்றும் வேறு சிலரால் ஆமாத்தூர் என்றும் கருதப்படுகின்றது. புராணன்=மிகவும் பழமையானவன்: வித்தாய் மிழலை முளைத்தான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவது, சிவபிரான் உயிர்களுக்கு உயிராக இருக்கும் நிலையை குறிப்பிடுவதாகும்.

புத்தூர் உறையும் புனிதனைப் பூவணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன்று எரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தேன் எந்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே

தன்னை வணங்குவோரின் இடர்கள் தீர்க்கும் மருந்து என்று பெருமானை, திருக்குறுக்கை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.49.9)அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அணங்கு=பெண் தெய்வம்: சிவபிரானுக்குப் திருப்பணி செய்து வாழ்வதே தவமாகக் கொண்டு வாழ்ந்தவர் என்று அப்பர் பிரான், கணம்புல்ல நாயனாரை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள பேளூர் என்ற ஊர் அந்நாளில் இருக்குவேளூர் என்று அழைக்கப்பட்டது. சிவபெருமானின் கோயில்களில் விளக்குகள் ஏற்றி பெருமானை வழிபட்டு வந்த கணம்புல்லர் என்பவர் இங்கே வாழ்ந்துவந்தார்.தான் வறுமை அடைந்த நிலையில் அவர் தில்லை நகரம் சென்று சேர்ந்தார். எனினும் தனது திருப்பணியை தொடர்ந்து செய்யவேண்டும் என்று விரும்பி செயல்பட்டுவந்தார். திருபுலீச்ச்சரம் என்று அழைக்கப்பட்ட திருக்கோயிலில் விளக்கு எரிக்கும் பணி செய்வதற்காக தனது இல்லத்தில் உள்ள பொருட்களையெல்லாம் விற்றார். பின்னர் விற்பதற்கு பொருள் ஏதும் இல்லாத நிலையில், கணம்புற்களை அரித்து வந்து அவற்றை விற்று வந்த பணத்தில் விளக்கு எரித்து வந்தார். புல்லை விலை கொடுத்து எவரும் வாங்காத நிலையில், தான் அரிந்த புற்களைக் கொண்டு விளக்கு எரிக்க முற்பட்டார். ஆனால் புற்கள் போதாமையால், தனது முடியை விளக்கில் இட்டு எரித்தார். இத்திருத்தொண்டின் பயனாக, ஞானமும், வீடுபேறும் அடைந்து இறுதியில் சிவலோகம் சென்றார். இந்த வரலாறு பெரியபுராணத்தில் சேக்கிழார் அவர்களால் கூறப்படுகின்றது. பொருவில் தொண்டர்=ஒப்பற்ற திருத்தொண்டர்.

அணங்கு உமை பாகமாக அடக்கிய ஆதி மூர்த்தி

வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அருந்தவத்த

கணம்புல்லர்க்கு அருள்கள் செய்து காதலாம் அடியார்க்கு என்றும்

குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய ஒரு பாடலில் (4.62.3) பாடலின் நான்கு அடிகளிலும் மருந்தாக பெருமான் செயல்படும் தன்மையை அப்பர் பிரான் விளக்குகின்றார். ஒரு மருந்து=ஒப்பற்ற தனி மருந்து; மருந்தாக செயல்படுவதில் ஒப்பற்றவன் பெருமான் என்று பாடலை அப்பர் பிரான் துவக்குகின்றார்.பெருமருந்து=ஏனைய மருந்துகளுக்கு தலையான மருந்து; கருமருந்து=மீண்டும் உயிர்கள் கருவினில் புகாமல் காக்கும் மருந்து, பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்து; அருமருந்து=கிடைத்தற்கு அரிய மருந்து; ஒப்பற்ற தனி மருந்தாக உள்ளவனே, தேவர்கள் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் அவர்களது பிறவிப் பிணியைத் தீர்க்கும் தலையான மருந்தாக உள்ளவனே, அமுதமும் கொடுக்கமுடியாத பிறப்பு இறப்பு இல்லாத நிலையினைத் தருவதால்,அமுதினை விடவும் இனிமையாக உள்ளவனே, எங்களை ஆட்கொண்டு எங்களது வினைகளைத் தீர்க்கும் அரிய மருந்தாக உள்ளவனே, ஆலவாய் தலத்தில் உறைகின்ற அப்பனே, அடியேன் இனிப் பிறவாத வண்ணம் எனக்கு நீர் தான் வரம் அருள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

ஒரு மருந்தாகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்

பெரு மருந்தாகி நின்றாய் பேரமுதின் சுவையாய்

கரு மருந்தாகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்

அருமருந்து ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.105.4) அப்பர் பிரான், பெருமானை, தேவர்கள் தேடும் மருந்தே என்று அழைக்கின்றார். போக வாழ்க்கை வாழ்கின்றவர்கள் தேவர்கள். எனவே அவர்களுக்கு மருந்து தேவைப்படுவதில்லை. மன்னுள என்ற தொடர் மூலம் தேவர்கள் நிலையான புகழுடன் இருப்பவர்கள் என்று உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்கின்றனர். மன்னும் என்றால் நிலையான என்று பொருள். மனிதர்களுடன் ஒப்பிட்டால்,தேவர்கள் மிகவும் அதிகமான வாழ்நாட்கள் கொண்டு திகழ்பவர்கள் என்பதை நாம் அறிவோம். எனினும் அவர்களும் பிறப்பிறப்பு சுழற்சியில் சிக்கியவர்கள் என்பதால், அந்த நோயிலிருந்து விடுபட மருந்தாகிய பெருமானை அவர்கள் நாடுகின்றனர். இதற்கு காரணம் பெருமான் ஒருவரால் தான், அவர்களது பிறவிப் பிணியை நீக்க முடியும் என்பதே. பொன்னார் சடையன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பொன் போன்று ஒளியுடன் மிளிரும் சடை என்று பொருள் கொள்வது பொருத்தமே. அப்பர் பிரான், உலகப் பற்றுகளை முற்றிலும் அறுத்து வாழ்ந்தமையை நாம் பெரிய புராணத்திலிருந்து உணருகின்றோம். வீடுபேறு அடைந்து என்றும் சிவபெருமானுடன் பொருந்தி இருந்து நிலையான இன்பத்தை அடையவேண்டும் என்பதில் அவர் மிகுந்த ஆசை கொண்டிருந்தார். பொதுவாக யான் எனது என்ற அகப்பற்று மற்றும் புறப்பற்று ஆகிய இரண்டையும் விட்டொழித்தவர்கள் வீடுபேறு அடைவார்கள் என்று நம்பப்படுகின்றது. ஆனால், தான் உலகப் பற்றினைத் துறந்த பின்னரும், வீடுபேறு அடையாமல் உலக வாழ்க்கையில் உழன்று கிடந்தது அப்பர் பிரானுக்கு வருத்தத்தை அளித்தது போலும். இடைக்கலம்=இரண்டு நிலைகளுக்கும் இடையே உள்ள நிலை, இங்கே பற்றறுத்த நிலை மற்றும் வீடுபேறு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்று பொருள் கொள்ளவேண்டும். தனக்கு வீடுபேறு பேற்றினை பெருமான் இன்னும் அளிக்கவில்லையே என்ற அவரது வருத்தம் கோபமாக மாறுகின்றது. தனக்கு பெருமான் இன்னும் இரங்காத நிலையை சுட்டிக் காட்டி, பெருமானை உத்தமனே என்று அழைக்கின்றார். இங்கே உத்தமனே என்ற சொல் வஞ்சப்புகழ்ச்சி அணியாக கையாளப்பட்டுள்ளது. இவ்வாறு தனது வருத்தத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்திய பின்னரும், சிவபெருமானால் செவி சாய்க்காமல் இருக்க முடியுமா என்ன. உடனே அவரை ஆட்கொண்டு தன்னுடன் இணைத்துக் கொள்கின்றார். அப்பர் பிரானும் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் என்று பாடியவாறே புகலூர்ப் பெருமானுடன் ஒன்றறக் கலந்து விடுகின்றார்.புண்ணியா என்று தொடங்கும் இந்த பதிகமே, அப்பர் பிரான் தனது வாழ்க்கையில் அருளிய கடைசிப்பதிகம். இந்த பதிகம் பாடுவதற்கு முன்னம் அருளிய பதிகத்தின் பாடல் தான், கீழ்க்கண்ட பாடல் கொண்டுள்ள, தன்னைச் சரணென்று தொடங்கும் பதிகம். எனவே அப்பர் பிரானின் வருத்தம், பெருமானால் உடனே களையப்பட்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய் புகலூர் அரசே

மன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய்

என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்

உன் அளவே எனக்கொன்று இரங்காத உத்தமனே

தனது அடியார்களை பீடித்துள்ள வலிமையான வினைகளையும் தீர்க்கும் மருந்தாக செயல்படும் வல்லமை உடைய பெருமான், பற்கள் இல்லாமலும் உலர்ந்தும் காணப்படும் பிரமனின் கபாலத்தைக் கையில் ஏந்தியவாறு எங்கும் திரிகின்றார் என்றும், பலருக்கும் நன்மை பயப்பவராக விளங்கும் பெருமான்,விடத்தை உடையதாக இருந்தாலும் பெருமானுடன் இணைந்த பின்னர் நல்ல குணம் உடையதாக மாறிய பாம்பினைத் தனது இடையில் பூண்டுள்ள பெருமான், தனது விருப்பம் போல் அந்த பாம்பினை ஆட்டுகின்றார் என்றும், பிச்சை ஏற்றாலும் உண்மையில் முக்திச் செல்வம் எனப்படும் சிறந்த செல்வத்தை உடையவராக இருக்கும் பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார் என்றும் அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் நாகேச்சரத்து தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் (5.52.1) முதல் பாடலாகும். விடம் கொண்டுள்ள தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பு நல்ல குணமுடைய நாகம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. இறைவனின் சன்னதியில் நல்லன அல்லாத பொருட்களுக்கு இடம் ஏது. எனவே தான், கொலை வெறியுடன் தாக்க வந்த மான்கன்று, தனது கொலை வெறியை விடுத்து, துள்ளி விளையாடும் மான்குட்டியாக பெருமானின் கைகளில் திகழ்வது போல் பாம்பும் தனது கொடிய குணத்தை விட்டுவிட்டு நல்ல குணமுடைய பாம்பாக அடங்கி பெருமானின் சடையிலும் அவரது திருமேனியில் பல இடங்களிலும் தங்கி விடுகின்றது. சந்திரனிடம் தான் கொண்டுள்ள பகையையும் மறந்து, சந்திரனுடன் பெருமானின் சடையில் தங்கும் பாம்பு என்று பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. நல்லான் ஆகிய பெருமானுடன் இணைந்த பாம்பு, தனது கொடிய குணத்தினை விட்டு விட்டு நல்ல குணத்துடன் திகழ்கின்றது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்

பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி

செல்வர் போல் திரு நாகேச்சரவரே.

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.60.4) இறைவனை, நோய்கள் தீர்க்கும் மருந்து என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.மந்திரமாக உள்ள அஞ்செழுத்து, மருந்தாகவும் பயன்படும் நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்து=சிந்தித்து இருந்து; ஏழைகாள்=அறிவில் ஏழையாக இருப்பவர்களே; அருந்தவம் தரும்=மிகவும் அறிய தவங்களைச் செய்வதால் கிடைக்கும் பலன்கள்; பொருந்து=உடலில் பொருந்திய;துரப்பது=நீக்குவது; மன்னும்=நிலை பெற்ற;

இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்

அருந்தவம் தரும் அஞ்செழுத்து ஓதினால்

பொருந்து நோய் பிணி போகத் துரப்பதோர்

மருந்தும் ஆவர் மன்னு மாற்பேறரே

திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.74.3) அப்பர் பிரான், பெருமானை மருந்து என்று அழைக்கின்றார். பூண்=நகை,அணிகலன்கள்; பொருந்து பூண்முலை நங்கை என்பதை பூண் பொருந்து முலை நங்கை என மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும்.தானவர்=அசுரர்கள்; அசுரர்கள் பெரும்பாலும் சிவபெருமானை போற்றி வாழ்ந்தவர்களாக இருப்பதை நாம் புராணங்களில் காண்கின்றோம். மேலும் அசுரர்கள் பலர் பெருமானை நோக்கி தவமிருந்து வரங்கள் பெற்று இன்பம் அடைந்ததால் பொதுவாக அசுரர்களுக்கு இனிய சுவையாக இருந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். வானவர்கள் துன்பங்களில் ஆழ்ந்த போதெல்லாம், அவர்களது துன்பங்களைக் களைந்து பெருமான் அருள் புரிந்தமையால்,கிடைத்தற்கு அறிய அருமருந்தாக செயல்படுபவன் பெருமான் என்று கூறுகின்றார். நோய் நொடி ஏதுமின்றி வாழ்வினை நீட்டிப்பதால், மூவா மருந்து என்று அமுதத்தை குறிப்பிடுவார்கள். எனவே மருந்து என்பதற்கு அமுதம் என்று பொருள் கொண்டு, தேவர்களுக்கு அமுதம் அளித்தவன் சிவபெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் ஆலகால விடத்தை உட்கொண்டிராவிடில், அனைத்து தேவர்களும் ஆலகால விடத்தின் பின்னர் தோன்றிய,அமுதம் அருந்தும் வாய்ப்பினையே இழந்திருப்பார்கள் அல்லவா.

மருந்து வானவர் தானவர்க்கு இன்சுவை

புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்

பொருந்து பூண்முலை மங்கை நல்லாளொடும்

எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே

தில்லைத் திருத்தாண்டகத்தின் பாடலில் (6.1.5) அப்பர் பிரான், பெருமானை, அடியார்களின் அல்லல் தீர்க்கும் அருமருந்து என்று குறிப்பிடுகின்றார்.அருந்துணை-ஒப்பற்ற துணை; வான்=உயர்ந்த; வான் புலன்கள்=பெரிய புலன்கள்; நம்மை மயக்கி உண்மையான மெய்ப்பொருளை நாம் நினைக்காத வண்ணம், திசைதிருப்பும் வல்லமை வாய்ந்த ஐம்புலன்களை, இகழ்ச்சி தோன்ற வான்புலன்கள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சிவபிரான் துணையாக இருந்ததால் அமணர்களின் வஞ்சனையில் இருந்து தப்பித்த அப்பர் பிரான் தனக்கு ஒப்பற்ற பெருந்துணையாக இருந்த சிவபிரான்,யாருக்கெல்லாம் பெருந்துணையாக இருப்பான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உடன் பிறந்தார், சுற்றத்தார், செல்வம் இவைகளின் மீது வைத்த பாசத்தை நீத்து, புலன்களின் மேல் செல்லும் மனத்தை அடக்கி மகளிர் தரும் சிற்றின்பப் பயனை அடியோடு ஒழித்து பொதுவாக பல தெய்வங்களை நினைப்பதை விடுத்து சிவபிரான் ஒருவனையே போற்றும் வல்லமை வாய்ந்த அடியார்களுக்கு பெருந்துணையாக சிவபிரான் இருப்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார். இவ்வாறு பெருந்துணையாக இருந்து அருள் புரியும் பெருமானை, நாம், நினைக்காமல் அவனது புகழினைப் பேசாமல் இருப்பது தவறல்லவா.எனவே தான் அத்தகைய தவறினைச் செய்யும் நாட்களை பிறவா நாள் என்று கூறுகின்றார். பற்றுகளை அறுத்தவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப்படுகின்றது. பற்று அறுவதற்காகத் தானே நமக்கு பல பிறப்பை இறைவன் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். மாயையாகிய உலகப் பொருட்களின் மேல் நாம் வைத்துள்ள பாசத்தை நீக்கி, மெய்ப்பொருளை தியானித்து நமது வினைகளைக் கழிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப் படுகின்றது. பொது நீக்கி என்று பொதுவான தேவர்களோடு இணைக்காமல், சிவபிரானின் தனித் தன்மைகளை புரிந்து கொண்டு அவரை நினைத்து போற்ற வேண்டும் என்று இங்கே அறிவுரை சொல்லப்படுகின்றது.

அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி

வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்

பொருந்தணை மேல் வரும் பயனைப் போக மாற்றிப் பொது நீக்கித் தனை நினைய வல்லோர்க்கு என்றும்

பெருந்துணையை பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

திருவதிகைத் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தில் அப்பர் பிரான் (6.6.9) பெருமானின் திருவடியை, மருந்தாய் பிணி தீர்க்கவல்ல அடி என்று குறிப்பிடுகின்றார். தணி=இனிய இசை: தகை சார்=பெருமை பொருந்திய: இனிய இசை பாடும் அடியார்களை உடையதும் குளிர்ந்த கெடில நதி பாய்வதும் ஆகிய அதிகை வீரட்டத்தின் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகள் பல பெருமைகளை உடையன. பெருமானது திருவடிகள், அவரது அடியார்களுக்கு மிகவும் அருகில் உள்ளன: அடியார்கள் அல்லாதவர்க்கு தூரத்தில் அமைந்திருப்பவை: கிடைத்தற்கு அரிய அமுதம் போன்று அடியார்களுக்கு இனிமையாக அமைந்துள்ள திருவடிகள்: தன்னைத் தொழும் அடியார்களுக்கு பக்கத் துணையாக இருப்பன அந்த திருவடிகள்: உலகப் பற்றினை அறுத்த சான்றோர்கள் விருப்பத்துடன் பற்றும் திருவடிகள் அவை: விலை உயர்ந்த மணிகள் போலவும் பொன் போலவும், மதிக்க முடியாத பெருமை உடையவை அந்த திருவடிகள்:அடியார்களின் பிறவிப் பிணியை அடியோடு அறுத்துத் தீர்க்கும் வல்லமை பெற்றவை அந்த திருவடிகள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. .

அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி

பணிபவர்க்குப் பாங்காக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி

மணி அடி பொன்னடி மாண்பாம் அடி மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி

தணிபாடு தண்கெடில நாடன் அடி தகை சார் வீரட்டத் தலைவன் அடி

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.20.2) அப்பர் பிரான், அடியார் தங்கள் அருமருந்து என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.பாசுபத வேடத்தான்=அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் அருளும் வண்ணம் கொண்ட வேடுவக் கோலம் கொண்ட பெருமான்; தனது கையில் வில்லினையும் அம்புகளையும் ஏந்தி பெருமான் சென்ற செய்தி படையானை என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது. அனங்கன்=மன்மதன், அங்கம் இல்லாதவன். தனது தவத்தினைக் கலைத்த குற்றத்திற்காக, நெற்றிக் கண்ணினை விழித்து மன்மதனை எரித்த பெருமான், பின்னர் இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி,மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்கின்றார். ஆனால் அடுத்தவர் கண்களுக்கு மன்மதன் தெரிய மாட்டான் என்றும், இரதி தேவியின் கண்களுக்கு மட்டும் தெரிவான் என்றும் பெருமான் கூறுகின்றார். அடுத்தவருக்கு உடல் தெரியாத வண்ணம் மன்மதன் வாழ்ந்ததால், உடல் இல்லாதவன் என்று உணர்த்தும் பொருட்டு, அனங்கன் என்ற பெயர் மன்மதனுக்கு ஏற்பட்டது.

படையானை பாசுபத வேடத்தானைப் பண்டு அனங்கன் பார்த்தானைப் பாவமெல்லாம்

அடையாமைக் காப்பானை அடியார்தங்கள் அருமருந்தை ஆவா என்று அருள்செய்வானைச்

சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச் சங்கத்த முத்தனைய வெள்ளயேற்றின்

நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே

நமது தீவினைகளையும் அந்த தீவினைகளால் ஏற்படும் மயக்கத்தினையும் போக்கும் மருந்தாக செயல்படும் இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார் என்று திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (6.23.8) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அம்மை=வீடுபேறு; என்றும் அழியாத நிலையான பேரின்பத்தை வீடுபேறு உயிருக்கு தருவதால், வீடுபேற்றினை, அமிர்தம் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.பொதுவாக உலகினில் அனைவரும் தன்னை விடவும் தனக்கு நெருங்கிய, தன்னை விடவும் இனிய பொருளாக, வேறு எதையும் கருதுவதில்லை. ஆனால் பெருமான் தனக்கு புரிந்துள்ள நன்மைகளை கருத்தினில் கொண்டு, பெருமானை தன்னிலும் இனியான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.நாமும், இந்நாள் வரையிலும் பெருமான் நமக்குச் செய்த நன்மைகளை கருத்தினில் கொண்டு, நம்மிலும் அவனை இனியவனாக கருதி போற்றி வழிபடவேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் உணர்த்தப்படும் அறிவுரை; மம்மர்=மயக்கம்;

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அந்தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு

இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்

மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக

மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

திருவரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.32.1) அப்பர் பிரான் பெருமானை, வானவர்கள் போற்றும் மருந்தே என்று அழைக்கின்றார்.கற்றவர்கள்=மெய்ப்பொருளை உண்மையாக உணர்ந்தவர்கள்; உண்ணுதல்=அனுபவித்தல்; கனி=பயன், அற்றவர்கள்=சிவபிரானைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லாதவர்கள்; கதி=முக்திப்பேறு;

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி

அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி

மற்று ஒருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி

செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி

ஆணவ மலம் ஏற்படுத்தும் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் சிந்தனை உடையவர்களுக்கு அவர்களது மயக்கத்தை போக்கும் மருந்தாக செயல்படுபவன் சிவபெருமான் என்று ஆரூர் அரநெறி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.33.7) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

பொருளியல் நற்சொற் பதங்கள் ஆயினானைப் புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை

மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை

இருளியல் நற்பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிதமரும் பெருமானை இமையோரேத்த

அருளியனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்தடியேன் அருவினை நோய் அறுத்தவாறே

மேலும் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்படும் தலத்தில் (தற்போதைய பெயர் வைத்தீசுவரன் கோயில்) இறைவன் மருத்துவனாக காயங்களுக்கு சிகிச்சை (முருகப் பெருமானின் படைவீரர்களுக்கு) செய்த நிலை இந்த திருக்கோயிலின் தலபுராணத்தில் கூறப்படுகின்றது. தாரகாசுரனுடன் நடந்த போரில் காயம் அடைந்த தனது படை வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யுமாறு இறைவனை முருகக் கடவுள் வேண்டுகிறார். இறைவனுடன் இறைவியும்,எண்ணெய் கிண்ணத்துடன், சிவபிரான் கொடுக்கும் மருந்துகளை குழைத்து காயங்களில் தடவுதற்கு வசதியாக வருகிறார். இதனால் அம்மைக்கு தைல நாயகி என்ற பெயர் வந்தது. தைல நாயகி நாளைடைவில் தையல்நாயகி என்று மருவிவிட்டது. இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர் வந்த காரணம் இது தான். இந்த தலத்தில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து தான் சிவபிரான் வைத்தியம் பார்த்ததாக நம்பப் படுகின்றது. வைத்தியநாதனாக சிவபிரான் அருள் புரிந்தமை குறித்து அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது இயற்றிய தனது தேவாரப் பதிகத்தில் (ஆண்டானை அடியேனை ஆளாக கொண்டு எனத் தொடங்கும் பதிகம்–6,54) எட்டாவது பாடலில் பாடியுள்ளார். வாராத செல்வம் என்று குறிப்பிடுவதை எளிதில் கிடைக்காத வீடு பேறு செல்வம் என்றும்,மறுபடியும் இந்த உலகில் வந்து பிறவாத நிலையை உடைய செல்வம் என்றும் கொள்ளலாம். எப்போதும் இறைவனை பிரியாது வழிபடும் அடியவர்க்கு இந்த நிலை அருளப்படும் என்பதும் இந்தப் பாடலில் உணர்த்தப்படுகின்றது. மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி என்ற தொடர் மூலம், இறைவன் உடல் நோயினையும் உயிர் நோயாகிய பிறவிப்பிணியினையும் தீர்ப்பவனாக செயல்படும் தன்மை உணர்த்தப்படுகின்றது.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவு இலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி

தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீ எழ திண்சிலை கைக் கொண்ட

போரானை புள்ளிருக்கு வேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

திருக்கயிலாயம் மீது அருளிய போற்றித் திருத்தாண்டகத்தின் பாடலில் (6.55.4) அப்பர் பிரான், வானத்தார் போற்றும் மருந்தே என்று பெருமானை அழைக்கின்றார். பொதுவாக வானோர்கள் மானிடர்களாகிய நம்மை விடவும் பல மடங்கு ஆற்றல் உடையவர்களாக கருதப் படுகின்றனர். எனினும் அவர்கள் எவரும், பெருமானின் அருளின்றி வீடுபேறு நிலையை அடையமுடியாது. தங்களது பிறவிப் பிணிக்கு மருந்தாக விளங்குபவன், சிவபெருமான் ஒருவனே என்பதை புரிந்து கொண்டவர்களாக, பெருமானை மருந்தே என்று அழைத்து அவர்கள் போற்றுவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.விண்ணில் வாழும் தேவர்கள் போற்றும் மருந்தே, எனது சிந்தையில் வந்து புகுந்த இறைவரே, உயிர்களின் ஊனமாகிய மலங்களை நீக்கும் கருணை உள்ளம் கொண்டவரே, திருமாலும் பிரமனும் உன்னைத் தேடித் திரிந்து உன்னைக் காணாமல் தவித்த போது அவர்கள் முன்னே விண் முட்டும் அளவுக்கு தீப்பிழம்பாக உயர்ந்தவனே, வடிகட்டப்பட்ட தேனைப் போல் தெளிவாக உள்ளவனே, தேவர்களுக்கு எல்லாம் தேவனாகத் திகழ்பவனே, சுடுகாட்டுத் தீயில் கூத்து ஆடுவதை விரும்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான் சொல்லும் பாடல்.

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்றன் சிந்தை புகுந்தாய் போற்றி

ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி

கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.7) அப்பர் பிரான், பெருமானை வலிமை வாய்ந்த வினைகளை வேருடன் அறுத்தெறியும் மருந்து என்று குறிப்பிடுகின்றார். ஐம்புலனும் காத்தான்=ஐந்து புலன்களும் சேட்டைகள் செய்து அடியார்களின் சிந்தனையை திசை திருப்பாத வண்ணம் காப்பவன்; பொங்க=செழிக்க, சிறந்து விளங்க; மாத்து=பெருமை; மகத் என்ற வடமொழி சொல்லின் திரிபு; மாத்தாடி=பெருமை உடைய நடனம்;தாருகவனத்து முனிவர்கள் தன் மீது ஏவிய மதம் கொண்ட யானையின் தோலை உரித்த தருணத்தில் தனது திருமேனி, பார்ப்பவர்களின் கண்களை கூசும் வண்ணம் ஒளி மிகுந்து விளங்க, அந்த கோலத்தைக் கண்ட தேவர்களின் கண்களை பாதுகாக்கும் பொருட்டு யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்தவனும், கொல்ல வந்த புலியின் தோலினை உரித்துத் தனது ஆடையாக அணிந்து எங்கும் திரிபவனும், அடியார்களின் இறைச் சிந்தனையை ஐந்து பொறிகளும் திசை திருப்பாதவண்ணம் பாதுகாப்பவனும், பறக்கும் மூன்று கோட்டைகளையும் வெகுண்டு எரித்தவனும், கழல் அணிந்த தனது காலினால் இயமனை கோபித்து உதைத்தவனும், பெருமை மிகுந்த நடனத்தை ஆடுபவனும், பக்தி கொண்டு தன்னை வணங்கும் அடியார்களின் வலிமையான வினைகளை வேருடன் களைபவனும், அடியார்களை வருத்தும் பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்ந்து அதனை போக்குவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா என்று அப்பர் பிரான் தனது நிலையை எண்ணி. தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.

போர்த்து ஆனையின் உரிதோல் பொங்கப் பொங்கப் புலி அதளே உடையாகத் திரிவான் தன்னை

காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான் தன்னை

மாத்தாடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேரறும் வண்ணம் மருந்துமாகித்

தீர்த்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

மாமுனிவர் தம்முடைய மருந்து என்று பெருமானை அப்பர் பிரான் வலஞ்சுழி மற்றும் கொட்டையூர் தலங்களை இணைத்து பாடிய பதிகத்தின் பாடலில் (6.73.6) குறிப்பிடுகின்றார். நமது பிறவிப் பிணிக்கு இறைவன் சிறந்த மருந்து என்பதை நாம் அறிந்தாலும், நமது பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்வதற்கு நாம் முயற்சிகள் ஏதும் எடுப்பதில்லை. அவ்வப்போது உடல் அனுபவிக்கும் சிற்றின்பங்களில் மனம் மகிழும் நாம், உடல் அனுபவிக்கும் பல துன்பங்களை பொருட்ப இல்லை. இந்த உடலும் உடல் பெறுகின்ற சிற்றின்பங்களும் நிலையானவை என்ற மாயையில் ஆழ்ந்து, அத்தகைய சிற்றின்பங்கள் பெறுவதற்கு துடிக்கின்றோம். எனவே பிறவியை உயிர் அடைந்துள்ள பிணியாகவே கருதுவதில்லை. பிறவியை ஒரு பிணியாக கருதினால் தானே, உயிரைப் பீடித்துள்ள பிணிக்கு மருந்து தேடுவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் இந்த பிறவிப் பிணியால் உயிர் அடைகின்ற துயரங்களை உணர்ந்துள்ள முனிவர்கள், உலகப் பொருட்கள் மீதும் உலகத்து உயிர்கள் மீது தாங்கள் கொண்டிருந்த பாசத்தினை நீக்கி, துறவறம் மேற்கொண்டு இறைவனை தியானம் செய்து அதன் பயனாக தங்களது பிறவிப் பிணியினை அறுத்துக் கொள்வதை உணர்த்தும் பொருட்டு, மாமுனிவர் தம்முடைய மருந்து என்று இங்கே குறிப்பிடுகின்றார்.சண்டன்=சண்டீசன்; தேவர்களும் தொழும் நிலைக்கு சண்டீசனை உயர்த்திய செய்தி இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.

சண்டனை நல்லண்டர் தொழச் செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன் தான் கண்டாய்

தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடரொளியாய்த் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய்

மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்

கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.5) அப்பர் பிரான், பெருமான் வருபிணி தீர்க்கும் மருந்தாக செயல்படுவதாக குறிப்பிடுகின்றார். உமையம்மை தன்னை நோக்கித் தவம் செய்ததால் மகிழ்ந்த சிவபெருமான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி இந்த பாடலில் நமக்கு சொல்லப்படுகின்றது. எனவே சிவபெருமானின் தவத்தைக் கலைப்பதற்கு மன்மதன் செய்த முயற்சிக்கும் உமையன்னையின் திருமணத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது புலனாகின்றது. புரை=துளை: துதிக்கையில் உள்ள துளையினை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மனித வாழ்க்கையில் நேரும் இன்பங்களும் துன்பங்களும், இருவினைத் தொடர்பால் உண்டாகின்றன. மனிதர்கள் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் வினைகளை மேலும் பெருக்குவதால், அவ்வாறு பெருக்கப்படும் வினைகளைத் தீர்ப்பதற்காக மறுபடியும் மறுபடியும், உயிர் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் தன்மையை நோய் என்று அப்பர் பிரான் கருதுவதால், வருபிணி நோய் என்று இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளை இங்கே குறிப்பிடுகின்றார்.

புரை உடைய கரியுரிவைப் போர்வையானைப் புரிசடைமேல் புனலடைத்த புனிதன்தன்னை

விரை உடைய வெள்ளெருக்கம் கண்ணியானை வெண்ணீறு செம்மேனி விரவினானை

வரையுடைய மகள் தவஞ்செய் மணாளன் தன்னை வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை

நரைவிடை நற்கொடி உடைய நாதன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில், அப்பர் பிரான், தானும் திருஞான சம்பந்தரும் கண்ட பெருமானின் நடனக் காட்சியை விவரிக்கின்றார். இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் (6,77.8), பெருமான் அடியார்களின் பிறவிப்பிணிக்கு மருந்தாக பெருமான் செயல்படுவதைத் தான் கண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். ஏனைய தேவர்களுக்கும் உலகத்தவர்க்கும் பொருந்தாத செயல்கள் செய்பவர் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மற்றவரிடமிருந்து மாறுபட்டு இருப்பது தானே பெருமானின் தனிச் சிறப்பு. இந்த தன்மை விகிர்தன் என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டு, அதற்கான காரணமும் விளக்கப்பட்டுள்ளது. அமுதம் உண்பதற்காக மற்றவர் காத்திருக்கையில், பொங்கி எழுந்த நஞ்சினை உண்டது; செல்வம் பலவிருந்தும் தான் உண்பதற்காக வீடுகள் தோறும் சென்று பலியேற்பது, பட்டாடை முதலியன தவிர்த்து கீளும் கோவணமும் அணிந்து காட்சி தருவது; தேர் குதிரை யானை முதலியவற்றை வாகனமாக கொள்ளாமல் எருதினை வாகனமாக ஏற்றது, சுடுகாட்டினை தனது இருப்பிடமாகக் கொண்டது, பெண்ணினை தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றது, பூதகணங்கள் சூழ இருப்பது; பூதங்களுடன் நடனம் ஆடுவது, இரவில் நடனம் ஆடுவது, எலும்பு மாலை, சங்கு மாலை, பன்றிக் கொம்பு, கொக்கின் இறகு ஆகியவற்றை அணிகலனாக ஏற்றுக் கொள்வது, உயிரற்ற உடலைத் தோள் மீது சுமப்பது, முதலிய பல செயல்கள் பொருந்தாத செய்கையாக இங்கே குறிப்பிடப்படுகின்றன. விருந்து=புதியதாக வந்தது;

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழக்கண்டேன்

பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பாராய்ப் புலனாகி நிற்கை கண்டேன்

விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்

மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

கோடிகா தலத்தின் மீது அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகத்தின் முதல் பாடலில் (6.81.1) மீண்டும் மீண்டும் பிறப்புக்கு வழிவகுக்கும் மயக்க நிலைக்கு மருந்தாக இருப்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். கண்டலம்=கண் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள: மண்டலம்=பல வகை உலகங்கள்;விண்டலம்=தேவர் உலகம்; கொண்டலம்=கொண்டல்+அம்=அழகிய மேகம், அழகிய மேகம் கொண்டுள்ள கருமை நிறம்;

கண்டலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய் கல்மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய்

மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்

விண்டலம் சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்

கொண்டலம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

திருச்செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.84.2) அப்பர் பிரான், பெருமானை, எரிந்து சாம்பலாக மாறிய மன்மதனுக்கு மருந்தாக மாறி, அவனுக்கு உயிரினை மீண்டும் அளித்து அவனது மனைவி இரதி தேவி மனமகிழ்ந்து நகைக்கும் வண்ணம் அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். துங்க=உயர்ந்த; இரணியனின் உடலைக் கிழித்த நரசிம்மரின் நகத்தை உயர்ந்த நகம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். என்றும் இறவாமல் இருக்கும் வரத்தினை வேண்டிய அரக்கன் இரணியன், அத்தகைய வரம் கிடைக்காது என்பதை உணர்ந்த பின்னர், எந்த விதமான ஆயுதத்தாலும், உயிரற்ற பொருளாலும், உயிருள்ள பொருளாலும், இரவிலும் பகலிலும், தனது வீட்டினில் உள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும், ஆகாயத்திலும் பூமியிலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தினைப் பெற்றான். நமது நகம் மற்றும் முடி வளர்ச்சி அடைகின்றன; ஆனால் அவற்றை வெட்டும்போது நமக்கு வலி ஏற்படுவதில்லை. இவ்வாறு உயிரற்றது என்றும், உயிருள்ளது என்றும் சொல்ல முடியாத நகத்தினைக் கொண்டு, அரக்கனின் உடலைக் கிழித்த நரசிம்மரின் நகத்தை உயர்ந்த நகம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் வெளியேயும் அல்லாமல், வாயிற்படியில் அரக்கனது மரணம் நிகழ்கின்றது. பூமியிலும் அல்லாமல், ஆகாயத்திலும் அல்லாமல், திருமாலின் தொடை மீது அரக்கனது மரணம் நிகழ்கின்றது. இதன் மூலம், பெருமான் ஒருவனைத் தவிர, ஏனையோர் அனவைரும் ஒருநாள் இறப்பினை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் புலனாகின்றது. ஆகம்=மார்பகம்;அங்கனக=அம்+கல்+நகு+அத்; அரக்கனது மாளிகையில் இருந்த அழகிய கற்றூணில், மிகுந்த ஆவேசத்துடன் சிரித்தவாறு நரசிம்மர் தோன்றியதை,அங்கனக என்று ஒரே சொல்லில் நயமாக அப்பர் பிரான் கூறுவது அவரது புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மங்க நக=மங்குமாறு கண் மலர, கண் விழித்த;மருந்து=அமுதம்; வண்கயிலை=சிறந்த கயிலை மலை; கயிலை மலைக்கு சென்று காண வேண்டிய பெருமானை, தான் கயிலைமலை செல்லாமல் செங்காட்டங்குடி தலத்தில் கண்டேன் என்று நயமாக அப்பர் பிரான் கூறுவதை நாம் உணரலாம்.

துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றித் தொகுதிறல் அவ்விரணியனை ஆகம் கீண்ட

அங்கனகத் திருமாலும் அயனும் தேடும் ஆரழலை அனங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து

மங்க நகத்தான் வல்ல மருந்து தன்னை வண்கயிலை மாமலை மேல் மன்னி நின்ற

செங்கனகத் திரள்தோளெம் செல்வன்றன்னைச் செங்காட்டங்குடி அதனில் கண்டேன்நானே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.6) அப்பர் பிரான், தனது பிறவிப் பிணிக்கு மருந்தாக விளங்குபவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஆராத=தெவிட்டாத: அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விடம் என்பது பழமொழி. ஆனால் இறைவனைப் பற்றி எத்தனை முறை சிந்தித்தாலும், எத்தனை முறை அவனது புகழினைப் பாடினாலும். எத்தனை முறை கேட்டாலும், அடியார்களுக்கு அலுப்பு என்பது ஏற்படுவதில்லை. இவ்வாறு ஆரா அமுதமாக விளங்கும் பெருமானை ஆராத இன்னமுது என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். அரிய தவத்தினைச் செய்யும் முனிவர்கள் தொழுது வணங்கும் பெருமானாக உள்ளவனும், தெவிட்டாத இனிய அமுதமாக உள்ளவனும், அடியார்கள் அடையவிருக்கும் துன்பங்களைத் தவிர்த்து அவர்களை இன்பமுறச் செய்பவனும், உமையாள் நங்கையின் மணாளனாகத் திகழ்பவனும், எனது பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்பவனுமாக விளங்குபவன் சிவபெருமான். பயிர் வளர்ச்சிக்கு பொருத்தமான காற்றினால் தழுவப்படும் வயல்கள் நிறைந்ததும், உயரத்திலிருந்து ஒளிவீசும் நிலவின் ஒளியினால் மிகவும் அழகாக காட்சி தரும் நகரமும் ஆகிய ஓமாம்புலியூர் தலத்தில் நாள்தோறும் சிறப்புடன் வழிபாடு நடைபெறும் வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில், எந்நாளும் அனைவர்க்கும் நன்மை பயப்பதால் இனிதாக அமைந்துள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை ஆராத இன்னமுதை அடியார்தம்மேல்

வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள்நங்கை மணவாளநம்பியை என் மருந்து தன்னைப்

பொருந்து புனல்தழுவு வயல்நிலவு துங்கப் பொழில் கெழுவு தரும் ஓமாம்புலியூர் நாளும்

திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.91.2) அல்லல் தீர்க்கும் அருமருந்து என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் அருளால் அவனை அறியும் திறமை தான் கைவரப் பெற்றதாக கூறும் அப்பர் பிரான், அதனால் தனது உள்ளத்தில் இருந்த கலக்கங்கள் தீர்ந்து தெளிவு பெற்றதாக இந்த பாடலில் கூறுகின்றார். விளித்து என்ற சொல் எதுகை கருதி விளிந்து என்று மாறியது. விளித்து=அறைகூவல் விடுத்து; சலந்தரனின் வலிமை முன்னே எதிர்நிற்க மாட்டாமல் திருமால் பிரமன் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் ஒளிந்து கொண்டதால்,தன்னுடன் போரிடுவதற்கு எவரும் இல்லாத நிலையில், சிவபெருமானுடன் போருக்கு செல்வது என்று சலந்தரன் தீர்மானித்தான். மிகுந்த ஆரவாரத்துடன் அவன் கயிலை நோக்கி, அறைகூவல் விடுத்தவாறு சென்றதை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வீட்டினான்=அழித்தான்; நான்முகனாகவும் பிரமனாகவும் பெருமான் உள்ள தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பளிங்கு=ஸ்படிகம்; ஸ்படிகத்தின் உள்ளே இருக்கும் சோதி மிகுந்த ஒளி விட்டு பிரகாசிப்பது போன்று, மிகுந்த ஒளியுடன் விளங்குபவன் பெருமானென்று கூறுகின்றார்.

பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானைப் பசுபதியைப் பாசுபத வேடத்தானை

விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம்

அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அருமருந்தை ஆமாறு அறிந்து என் உள்ளம்

தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன் நானே

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.99.4) அப்பர் பிரான், மருந்தாய் பிணி தீர்ப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.தெருளாதார்=பெருமையை உணராதார்; மருளாதார்=உலக மயக்கத்தில் உட்படாத உத்தமர்கள்; செங்கணை=அக்னி அம்பின் முனையாக இருக்கும் தன்மை செங்கணை என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது. அலர்மேலான்=தாமரை மலர் மேலிருக்கும் பிரமன்; நீர்மேலான்=பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால்; பிறப்பு இறப்புச் சுழலில் உயிர்கள் மாட்டிக்கொண்டு, வெளிவர முடியாமல் தவிக்கும் நிலையினை பிறவிப்பிணி என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுழலில் இருந்து நம்மை விடுவிக்கும் சிவபிரானை, மருந்தாகவும் மந்திரமாகவும் கருதுவது திருமுறை மரபு.

தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவச் சிலை வளைத்து செங்கணையால் செற்ற தேவே

மருளாதார் தம்மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க்கென்றும்

அருளாகி ஆதியாய் வேதமாகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணாப்

பொருளாவாய் உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

திருக்கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.27.3) சுந்தரர் பெருமானை மலைமேல் மாமருந்தே என்று அழைக்கின்றார். பிறவிப்பிணியை நினைத்து தான் அடைகின்ற அச்சத்தை பெருமான் தீர்க்கவேண்டும் என்று சுந்தரர் இந்த பாடல் மூலம் இறைஞ்சுகின்றார். கலை=மான் கன்று;மடமாது=இளமை வாய்ந்த பார்வதி தேவி; மலை மேல் உள்ள மருந்து கிடைத்தற்கு அரியது என்பது போன்று பெருமானும் உயிர்களுக்கு கிடைத்தற்கு அரியவன் என்பதை உணர்த்துகின்றார்.

சிலையால் முப்புரங்கள் பொடியாக சிதைத்தவனே

மலைமேல் மாமருந்தே மடமாது இடம் கொண்டவனே

கலை சேர் கையினனே திருக்கற்குடி மன்னி நின்ற

அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே

சென்னையில் உள்ள திருவான்மியூர் தலத்திற்கு அகத்திய முனிவர் வந்த போது அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது என்றும் அவருக்கு சிவபெருமான்,பல அபூர்வமான மூலிகைகளை சுட்டிக் காட்டி அவற்றால் பல விதமான நோய்களை தீர்க்கும் கலையை கற்றுக் கொடுத்தார் என்றும், அதனால் தான் இந்த தலத்து இறைவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். திருக்கச்சூர் மலைக்கோயில் இறைவனின் திருநாமம் மருந்தீசுவரர் என்பதாகும். இந்திரன் ஒரு முறை கடுமையான நோயால் வருந்திய போது, அச்வினி தேவர்கள் இந்த தலத்து இறைவனை அணுகி, இந்திரனின் நோயினை தீர்க்கும் வழியினை வேண்டினர். அப்போது சிவபெருமான் இந்த தலத்தில் உள்ள பலா, அதிபலா என்ற மூலிகைகளைச் சுட்டிக் காட்டினார். அதனால் அவருக்கு மருந்தீசர் என்றும் ஔஷதேசர் என்றும் பெயர் ஏற்பட்டது. இந்த மூலிகைகள் மூலம் இந்திரனின் நோய் தீர்ந்தது. அச்வினி தேவர்கள் அந்த மூலிகைகளை தேடிய போது, அவர்களுக்கு உதவியாக, மூலிகைகள் இருந்த இடத்தில் ஒளி ஏற்படுத்தி, சுட்டிக் காட்டியதால் அம்பாளுக்கு இருள் நீக்கி அம்மை என்ற பெயர் வந்தது. வடமொழியில் அந்தகார நிவாரணி என்று அழைக்கின்றனர். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (7.41.5) சுந்தரர் மலை மேல் மருந்தே என்று இறைவனை அழைக்கின்றார். மேலை விதி=மேம்பட்ட அறநெறி; விரவார்=சிவநெறியில் கலக்காது நின்ற திரிபுரத்து அரக்கர்கள்;ஆலை=கரும்பாலைகள்; பழனம்= வயல்கள்;

மேலை விதியே விதியின் பயனே விரவார் புரம் மூன்று எரி செய்தாய்

காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா

மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.51.4) சுந்தரர், பெருமானை தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீட்டு ஆட்கொண்ட அருமருந்து என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகம், திருவொற்றியூரில் இருந்த வண்ணம், திருவாரூர்ப் பெருமானை நினைத்துக் கொண்டு, திருவாரூர் பங்குனி உத்திரப் பெருவிழாவில் பங்கேற்க முடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்து பாடிய பதிகம்.

இங்ஙனம் வந்து இடர்ப்ப்பிறவி பிறந்து அயர்வேன் அயராமே

அங்ஙனம் வந்து எனையாண்ட அருமருந்து என் ஆரமுதை

வெங்கனல் மாமேனியனை மான் மருவும் கையானை

எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே

தன்னை வலம் வரும் அடியார்களின் வலிய வினைகளைத் தீர்க்கும் மருந்தாக ஆனைக்கா ஆதி செயல்படுகின்றார் என்று சுந்தரர் கூறும் பாடல் (7.75.9)இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் ஆனைக்கா அண்ணலின் திருவடிகளை நாளும் வணங்கும் அடியார்களை,தன்னை அடிமையாக ஆட்கொள்வதற்கு தகுதி படைத்தவர்கள் என்று சுந்தரர் கூறுகின்றார்.

வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து

கலங்கக் காலனைக் காலால் காமனைக் கண் சிவப்பானை

அலங்கல் நீர் பொரும் ஆனைக்காவுடை ஆதியை நாளும்

இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.9) சுந்தரர், பெருமானை வழித்துணை மருந்தே என்று அழைக்கின்றார். மாசிலாமணி என்பது இந்த தலத்து இறைவனின் திருநாமம். உயிர்கள் செல்ல விரும்பும் முக்தி நிலைக்கு, பக்குவமடைந்த உயிர்களின் பிறவிப் பிணியை நீக்கி,உயிர்களுடன் துணையாக உடனிருந்து அழைத்துச் செல்லும் இயல்பினன் என்பதை உணர்த்த, வழித்துணை மருந்தே என்று அழைக்கின்றார். எயிறு=பல்;இங்கே வராக அவதாரம் எடுத்த பன்றியின் கொம்பினை உணர்த்துகின்றது. ஈடு=இடப்பட்ட; வானம் என்பது உயர்ந்த உலகமாகிய முக்தி உலகத்தினை குறிப்பிடுகின்றது. பெருமானைத் தவிர்த்து, தனக்கு அஞ்சேல் என்று சொல்லித் தேற்றும் தன்மையர் வேறொருவரும் இல்லை என்று கூறுகின்றார். நாமும் அத்தகைய பாவனையுடன், பெருமான் ஒருவனே நமக்கு பற்றுக்கோடு என்று கருதி அவனை வேண்ட வேண்டும் என்பதை சுந்தரர் இங்கே நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்.

வான நாடனே வழித்துணை மருந்தே மாசிலாமணியே மறைப்பொருளே

ஏனமா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்புடையானே

தேனெய் பால்தயிர் ஆட்டுகந்தானே தேவனே திருவாவடுதுறையுள்

ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.97.8) நமது பிணியினைக் களையும் அருமா மருந்து என்று சுந்தரர், இறைவனை குறிப்பிடுகின்றார். பிணி என்று இங்கே பிறவிப் பிணியே உணர்த்தப் படுகின்றது. குறுந்தெரியல்=சிறிய பிறைச் சந்திரன்; கண்ணி=தலையில் சூட்டிக் கொண்டுள்ள மாலை; சடையினில் பிறைச் சந்திரனை உடைய பெருமானை, திங்கட் கண்ணியன் என்று சொல்வது வழக்கம். சிவபெருமானால் மட்டுமே,பிறவிப் பிணியைத் தீர்க்க முடியும் என்பதால், பெருமானை அரியதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய பெரிய மருந்து என்று கூறுகின்றார். ஏழ் பிறப்பு=ஏழு வகையான பிறப்புகள்; அடுத்த பிறப்பின் தன்மையை எவரும் அறிந்தாரில்லை. என்பதால் தான் ஏழு வகையான பிறப்புகளில் ஒன்றாகிய பிறப்பு என்று இங்கே சொல்லப் படுகின்றது. தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர்கள், தேவர்கள் என்பனவே ஏழு வகையான பிறப்புகள்;

திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய்

நங்கள் பிணி களைவான் அருமாமருந்தே ஏழ் பிறப்பும்

மங்கத் திருவிரலால் அடர்த்தான் வல் அரக்கனையும்

நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே

பிறவிப்பிணியில் முடங்கி வருந்தும் மனிதர்களுக்கு மருந்தாக செயல்படுவது இறைவனே என்று நீத்தல் விண்ணப்பத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.தன்னை அடிமையாக ஆட்கொண்ட சிவபெருமானுக்குத் தன்னை விற்பதற்கும், அடமானம் வைப்பதற்கும் உரிமை உள்ளது என்று அடிகளார் கூறுவதை இந்த பாடலில் உணரலாம். ஒற்றி=அடமானம். விருந்தினன் என்றால் புதிதாக வந்தவர் என்று பொருள். சமீபமாக, அதாவது சில நாட்களுக்கு முன்னர் தான்,சிவபிரானுக்கு அடிமையாக வந்தவர் என்பதை உணர்த்தும் பொருட்டு, பழைய அடியார்களிலிருந்து தான் மாறுபட்டவன் என்பதை உணர்த்தும் பொருட்டு,விருந்தினன் என்று மணிவாசகர் தன்னை குறிப்பிடுகின்றார். தான் சிவபெருமானுக்கு அடிமையாக இருப்பதற்கு உடன்படுவதாகவும், தனது தகுதியை ஆராய்ந்து, சிவபெருமான் தன்னை ஆட்கொள்ளவேண்டும் என்றும், தான் அத்தகைய பக்குவம் இன்னும் அடையவில்லை என்றால் சிறிது காலம் கழித்து ஆட்கொள்ளக் கருதி எவரிடமேனும் அடமானம் வைக்கலாம் என்றும், சிறிதும் தகுதி இல்லை என்றால் விற்றுவிடலாம் என்றும் பெருமானுக்கு அனுமதி வழங்குவது போன்று அமைந்த பாடல். விற்றுவிடலாம் என்றும் கூறினாலும், நஞ்சையே அமுதமாக மாற்றும் ஆற்றல் படைத்த பெருமானுக்கு, தனது தகுதியையும் மாற்றும் ஆற்றல் உடையது என்பதால் தன்னை விட்டு விடக் கூடாது என்று இறைஞ்சுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம்.

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால்

விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா

அருந்தினனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே

மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே

திருவாசகம் திருவெம்பாவை பதிகத்தின் பாடலில் (8.7.4) மணிவாசகர் பெருமானை, விண்ணுக்கு ஒரு மருந்து என்று குறிப்பிடுகின்றார். விண் என்ற சொல்லுக்கு விண்ணவர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். ஒண்ணித்திலம்=ஒள் நித்திலம், ஒளி பொருந்திய முத்து;

ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காமே

விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

கோயில் திருப்பதிகத்து பாடல் ஒன்றினில் பிறப்பறுக்கும் எம் மருந்தே என்று மணிவாசகர் இறைவனை அழைக்கின்றார். ஒழிந்தார்=தேவர்கள் முனிவர்கள் தவிர்த்த ஏனையோர்; சாத்வீகம் இராஜசம் தாமசம் ஆகிய மூன்று குணங்களையும் கடந்து, அந்த மூன்று குணங்களால் விளையும் அழியும் தன்மை வாய்ந்த இன்பங்களன்றி, என்றும் அழியாத பேரின்பம் உடையவன் இறைவன் என்று குறிப்பிடும் அடிகளார், அந்த குணங்களற்ற இன்பத்தைத் சாரும் தானும், அதே தன்மையை அடைவதால், தனக்கு குறையேதும் இல்லை என்று உணர்த்துகின்றார். இணங்கிலி=நிகர் அற்றவன்; திணிந்ததோர் இருள்=அறியாமையாகிய அடர்ந்த இருள்; அறியாமை எனப்படும் இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களின் இடையே தெளிந்த தூய ஒளியாக உள்ள இறைவனின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே

இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப்பறுக்கும் எம் மருந்தே

திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே திருப்பெருந்துறை உறை சிவனே

குணங்கள் தாம் இல்லா இன்பமே உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே

திருவாசகம் செத்திலாப்பத்து பதிகத்தின் பாடலில் (8.23.8) மணிவாசக அடிகளார், இறைவனை மருந்தே என்று அழைக்கின்றார். குரை கழல்=ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருப்பாதம்; கோது மாட்டுதல்=குற்றம் களைந்து ஆட்கொள்ளுதல்; கோது என்ற சொல்லுக்கு கொத்து என்று பொருள் கொண்டு,பாசக்கொத்துகள் என்று பொருள் கொள்வாரும் உள்ளனர். அவ்வாறாயின் பாசப்பிணைப்பினை ஆட்டி அசைத்து முற்றிலும் நீக்கி என்று பொருள் கொள்ளலாம். இரண்டுமே இங்கு பொருத்தமாக உள்ளன. புரந்தராதிகள்=இந்திரன் முதலான தேவர்கள்; போது=மலர், இங்கே தாமரை மலர்;அயன்=பிரமன்; பெருமானின் அருளுக்கு தான் காத்து நிற்பது போன்று, பிரமன் இந்திரன் முதலான பல தேவர்கள் காத்து நிற்பதாக கூறும், அவர்களை எல்லாம் ஒதுக்கி விட்டு, தனக்கு முன்னுரிமை அளித்து புரிய வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகின்றார் அவர் வேண்டுவது தான் யாது. பெருமான், தனது(மணிவாசகரின்) குற்றங்களை ஒழித்து, வீரக்கழல் ஒலிக்கும் திருப்பாதத்தை காட்டி, அந்த திருப்பாதத்தை பற்றிக் கொள்வாய் என்று பணித்தும்,அடியார்களுடன் கூட்டியும் அருள் புரிய் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். இந்திரன் முதலான தேவர்கள், இதுவரையில் தாங்கள் செய்த நற்செயல்களின் பயனாக போக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எனவே அவர்கள் இன்பம் மட்டுமே துய்ப்பவர்களாக உள்ளனர். ஆனால் நிலவுலகில் வாழும் மணிவாசகரோ, உலகியல் வாழ்வினில் ஈடுபட்டு, இன்ப துன்பங்களில் உழன்று கொண்டிருப்பவர். எனவே உலக வாழ்வினில் உழல்வோருக்குத் தானே முன்னுரிமை அளிக்கவேண்டும். அந்த உரிமையைத் தான் மணிவாசக அடிகளார் வேண்டுகின்றார் போலும். தான் படும் துன்பத்தை, யாது செய்வது என்று திகைத்துத் தான் இருந்ததாகவும், பெருமானால் குருந்த மரத்தினடியில் ஆட்கொள்ளப்பட்ட தான் இடரினில் உழல்வது அழகோ என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகினில் நாம் காணும் மருந்துகள் அனைத்தும், உடலின் நோயினைத் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் தன்மை உடையன.ஆனால் அடிகளார் கொண்டுள்ளதோ மனநோய், மனதின் அகப் பகைகளாகிய காமம் குரொதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் விளைவிக்கும் நோய்;இந்த ஆறு உட்பகைகளையும் வெல்வதற்கு வேண்டிய ஆற்றலை, உயிர்க்கு அருளும் வல்லமை பெற்றவன் பெருமான் என்பதால், தனது மனநோய்க்கு மருந்தாக திகழ்பவன் இறைவன் என்பதை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

போது சேர் அயன் பொருகடற் புரந்தராதிகள் நிற்க மற்றென்னைக்

கோது மாட்டி நின் குரை கழல் காட்டிக் குறிக்கொள்கென்று நின் தொண்டரில் கூட்டாய்

யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ

சீதவார் புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே

திருவாசகம் புணர்ச்சிப் பத்து பதிகத்தின் பாடலில் (8.27.9) மாணிக்கவாசகர், பெருமானை பிறவிப் பிணிக்கோர் மருந்தே என்று அழைக்கின்றார்.பாதப்போது=மலர்கள் போன்று மென்மையான் திருப்பாதங்கள்; பேதாய்=ஏதும் அறியாதவன்; நாயினும் கடையனான தன்னை பெருமான் ஆட்கொண்ட கருணைச்செயலை இங்கே அடிகளார் குறிப்பிடுகின்றார். தன்னால் இறைவன் ஏதும் பயனடையாத நிலையில், தன்னை இறைவன் ஆட்கொண்டது பேதையின் செயல் என்று அடிகளார் பழிப்பது போன்று தோன்றினாலும், உண்மையில் இறைவனை பழிப்பது போன்று அடிகளார் இங்கே புகழ்கின்றார்.எதற்கும் பயன்படாமல், நாயினும் கடையனாக தான் இருந்த போதிலும், தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்ட இறைவன் என்று குறிப்பிட்டு இறைவனை புகழ்கின்றார். இவ்வாறு இறைவன் நாயேனாகிய தன்னை ஆட்கொண்டதை குறிப்பிட்டு, இறைவனின் எளிவந்த தன்மையை அடிகளார் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருப்பாதத்தை மலர் என்று குறிப்பிடுவதால், திருவடி மலர்களால் பெறுகின்ற இன்பத்தை தேன் என்று நயமாக குறிப்பிடுகின்றார். இரவும் பகலும் எப்போதும் இறைவனின் திருவடிகளின் தன்மையை ஆராய்ந்து, குற்றமற்ற மாணிக்கமாகிய இறைவனுடன் சென்று சேர்வது எந்நாளோ என்று தனது ஏக்கத்தினை தெரிவிக்கும் பாடல் இந்த பாடல்.

தாதாய் மூவேழ் உலகுக்கும் தாயே நாயேன் தனையாண்ட

பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்

ஏதா மணியே என்றென்று ஏத்தி இரவும் பகலும் எழிலார் பாதப்

போது ஆய்ந்து அணைவது என்று கொல்லொ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

திருவாசகம் உயிருண்ணிப் பத்து பதிகத்தின் பாடலில் (8.34.8) மாணிக்கவாசகர் பெருமானை அருமருந்தே என்று அழைக்கின்றார். அருமையான மருந்தே என்று இறைவனை அழைக்கும் அடிகளார், கொம்புத்தேன் பாற்கடலில் விளைந்த அமுது ஆகிய உயர்ந்த பொருட்களுக்கு இறைவனை ஒப்பிடுகின்றார்.குரை கடல்=இடைவிடாது அலைகள் வந்து மோதுவதால், ஒலியெழுப்பும் கடல் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் பெருமானை அருமருந்தே என்று அடிகளார் அழைக்கின்றார்.

கோற்றேன் எனக்கு என்கோ குரைகடல்வாய் அமுது என்கோ

ஆற்றேன் எங்கள் அரனே அருமருந்தே எங்கள் அரசே

சேற்றார் வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும்

நீற்றார் தரு திருமேனி நின்மலனே உனை யானே

திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் பாடலில் (8.37.1) தன்னை வாழ்வித்த மருந்தே என்று பெருமானை அடிகளார் அழைக்கின்றார். ஊற்றை=அழுக்கு;உயிரின் அழுக்காகிய மலங்கள்; யோகம்=கலப்பு. உலகிலுள்ள அனைத்து உயிர்களுடனும் அனைத்துப் பொருட்களுடனும் நீக்கமற நிறைந்து கலந்து நிற்கும் தன்மை; வம்பு=காலமற்ற காலம். உரிய காலத்தில் பழங்கள் பழுப்பது போன்று, உயிர்களும் உரிய பக்குவ நிலை அடைந்த பின்னரே இறைவனால் ஆட்கொள்ளப் படுகின்றன. இருவினையொப்பு நிலை அடைந்து மலபரிபாகம் ஏற்பட்ட பின்னர், மல்ங்கள் ஏதுமற்ற நிலையில் உயிர்கள் பக்குவ நிலையை அடைகின்றன. ஆனால் அடிகளோரோ, ஊற்றையேன் என்று தன்னைக் குறிப்பிட்டு, மலங்களுடன் தான் பிணைந்திருந்த நிலையினை உணர்த்துகின்றார்.எனவே தான், தான் பக்குவமடையாத நிலையில் இறைவன் தன்னை ஆட்கொண்டதாக இங்கே குறிப்பிடுகின்றார். தம்மை இறைவன் ஆட்கொண்டமையால்,தனது குடி முழுவதும் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டதாக குறிப்பிடுகின்றார். மணிவாசகர், மூவேழ் சுற்றம் முரணுரு நரகிடை ஆழாமே அருள் அரசே என்று இறைவனை குறிப்பிடுகின்றார். முரண்= வலிமை; தந்தை வழி ஏழு தலைமுறையைச் சார்ந்த உயிர்களும், தாயின் தந்தை வழியில் ஏழு தலமுறையைச் சார்ந்த உயிர்களும், தனது வழிவரும் ஏழு தலமுறையைச் சார்ந்த உயிர்களும், உய்யும் வகைக்கு இறைவன் அருள் புரிவார் என்று வேதங்களும் உணர்த்துகின்றன. இவ்வாறு தன்னைச் சார்ந்த மூவேழ் தலைமுறைகள் உய்வினை அடையும் வண்ணம், இறைவன் அருள் புரிந்ததாக கூறுகின்றார்.வாழ்வற=வினையுடன் வாழ்கின்ற வாழ்க்கையை துண்டித்த;

உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு

வம்பெனப் பழுத்து என் குடி முழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே

செம்பொருள் துணிவே சீருடைக் கழலே செல்வமே எம்பெருமானே

எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே

திருவாசகம் திருவெண்பா பதிகத்தின் பாடலில் (8.47.4) வரும் துயரம் தீர்க்கும் மருந்து என்று பெருமானை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். வரும் துயரம் என்ற தொடருக்கு இனி எடுக்கவிருக்கும் பிறவிகள் என்று பொருள் கொள்வது பொருத்தம். முன்னை வினை=பழைய பல பிறவிகளில் ஈட்டிய வினைகள்;இரண்டும்=நல்வினை தீவினை ஆகிய இரண்டு; அனைத்து வினைகளும் கழிவதால், வினைகளின் சேர்க்கை காரணமாக பிறப்பு எடுக்கவேண்டிய நிலையிலிருந்து விடுபடும் உயிர், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைகின்றது.

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் — தென்னன்

பெருந்துறையில் மேய பெருங் கருணையாளன்

வரும் துயரம் தீர்க்கும் மருந்து

திருவிசைப்பா பாடல் ஒன்றினில் திருமாளிகைத் தேவர் (9.3.4) மகேந்திர மாமலைமேல் இருந்த மருந்தே என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். பெருமான் பால் தீவிர காதல் கொண்டுள்ள தனது மகள், எப்போதும் இறைவனின் தன்மைகளையும் அவனது சிறப்பினை உணர்த்தும் திருநாமங்களையும் சொல்வதாக நாயகியின் தாய் கூறுகின்றாள்.

வெறியேறு பன்றிப்பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள் செய்த வேந்தே என்னும்

மறியேறு சாரல் மகேந்திர மாமலை மேல் இருந்த மருந்தே என்னும்

நெறியே என்னும் நெறி நின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்

குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

திருமூலரும் தனது பாடல் ஒன்றினில் மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆக இறைவனின் திருவடிகள் இருக்கும் நிலையினை குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மந்திரம் அதனை உச்சரிக்கும் அடியார்களை காப்பது; மருந்து உயிர்ப்பிணியையும் உடற்பிணிதையும் தீர்க்கும் மருந்து; தந்திரம் இறைவனை வழிபடும் முறை; தானங்கள்=பொருள் உடையவர்கள் பொருள் இல்லாத வறியவர்க்கு கொடுத்து உதவி செய்யும் தன்மையும் அதனால் விளையும் நற்பயனும்; சுந்தரம்=அழகு; தூய்நெறி=குற்றங்கள் ஏதும் இல்லாத தூய்மையான நெறி,

மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்

தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்

சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்

எந்தை பிரான் தன் இணை அடி தானே

பொழிப்புரை:

உயிரின் நோயாகிய பிறவிப்பிணிக்கும் உடலின் பல நோய்களுக்கும் மருந்தாக விளங்குபவனும் வானவர்கள் அசுரர்கள் உட்பட அனைவர்க்கும் தலைவனாக விளங்குபவனும் ஆகிய பெருமான் உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக விளங்குகின்றான். மிகவும் அரிய தவத்தினை மேற்கொண்ட சனகர்,சனந்தனர், சனத்குமாரர், சனாதனர், என்ற நான்கு முனிவர்களுக்கும் கல்லால மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம், வேதங்களின் பொருளை அவர்கள் நால்வரும் ஐயம் திரிபின்றி உணரும் வண்ணம், பொருள் உரைத்து அருளிய சிவபெருமான் வீற்றிருக்கும் தலம் வளமை மிகுந்த நகரமாகிய திருவிடைமருதூர் ஆகும்.

பாடல் 2:

தோற்றவன் கேடவன் துணை முலையாள்

கூற்றவன் கொல்புலித் தோல் அசைத்த

நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல்

ஏற்றவன் வளநகர் இடைமருதே

விளக்கம்:

தோற்றவன்=தோற்றுவிப்பவன்; கேடவன்=அழியும் வண்ணம் கெடுப்பவன்; உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக இருப்பவன் பெருமான் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர், உலகில் உள்ள பொருட்கள் தோன்றுவதற்கும் ஒடுங்கி அழிவதற்கும் காரணமாக உள்ளவன் பெருமான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தோற்றவன் கேடவன் என்ற தொடருக்கு, உயிர்களின் தோற்றத்திற்கும் அழிவிற்கும் காரணமானவன் இறைவன் என்றும் பலர் பொருள் கொள்கின்றனர். இந்த தன்மை பதிகத்தின் முதல் பாடலில், பிறவினொடு இறவும் ஆனான் என்ற தொடர் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

பொழிப்புரை:

உலகப் பொருட்களின் தோற்றத்திற்கும் அழிவினுக்கும் காரணமாக இருப்பவனும்,ஒன்றுக்கொன்று இணையான மார்பகங்களை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒறு கூறாக ஏற்றுக் கொண்டவனும், தாருக வனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட கொல்லும் தன்மை வாய்ந்த கொடுமையான புலியினைக் கொன்று அதன் தோலைத் தனது இடுப்பினில் அணிந்து கொண்டவனும், தனது உடல் முழுவதும் திருநீறு பூசியவனும்,நிறைந்து பெருகிய வெள்ளத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது நீண்ட சடையின் மீது ஏற்றுக் கொண்டு தேக்கியவனும் ஆகிய பெருமான் எழுந்தருளி வீற்றிருப்பது வளமையான நகரமாகிய இடைமருது என்பதாகும்.

பாடல் 3:

படையுடை மழுவினன் பால் வெண்ணீற்றன்

நடை நவில் ஏற்றினான் ஞாலமெல்லாம்

உடைதலை இடுபலி கொண்டு உழல்வான்

இடைமருது இனிதுறை எம் இறையே

விளக்கம்:

பால் வெண்ணீறு என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பால் மற்றும் திருநீறு ஆகிய இரண்டுமே வெண்மை நிறம் கொண்டவை. பால் அனைவரும், அனைத்து பருவத்தினரும் பருகுவதற்கு இனியது. திருநீறும் பூசிக்கொள்வோர் எவராயினும் அவர்களுக்கு நன்மை பயக்க வல்லது. பால் பருகுவோருக்கு மருந்தாக பயன்படுவதுமன்றி, அவர்களது உடல் வலிமையையும் வளர்க்கின்றது. திருநீறும் பூசிக் கொள்வோருக்கு மருந்தாக பயன்படுவதுமன்றி, அவர்களுக்கு பொலிவினையும் அளிக்கின்றது. பால் திருநீறு ஆகிய இரண்டுமே இறைவன் உகந்து நீராடும் பொருட்களாக உள்ளன.இரண்டுமே மிகவும் எளிதில் கிடைக்கும் பொருட்கள். பால் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிப்பது போன்று திருநீறும் பூசிக் கொள்வோருக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றது. திருநீறு அளிக்கும் பயனின் தன்மைகள் குறித்து திருஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்று தொடங்கும் ஒரு பதிகமாகவே பாடியுள்ளார். இந்த காரணம் பற்றியே பால்வெள்ளை நீறு என்றும் பால்வெண்ணீறு என்றும் பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருவேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.5) திருஞானசம்பந்தர், பால் போன்ற திருநீற்றினை மார்பினில் அணிந்த பெருமான் என்று கூறுகின்றார். பண்ணுறு வண்டு= பண்களுடன் கூடிய இசையை எழுப்பும் வண்டுகள்; அறை=ஒலிக்கும், புரை=போன்ற; பெண்ணுறு= பெண் பொருந்திய;அலங்கல்=மாலை; பேணார்=போற்றாதவர்கள், வேத நெறியையும் சைவ நெறியையும் போற்றாமலும் அனைவர்க்கும் பகைவர்களாகவும் திகழ்ந்த முப்புரத்து அரக்கர்கள்; கண்ணுறு நெற்றி=நெற்றியில் பொருந்திய கண்; மால் விடை=பெருமைக்கு உரிய இடபம்; கண்ணி=தலைமாலை;

பண்ணுறு வண்டறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண்ணூல் கிடந்த

பெண்ணுறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான்

கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும்

வெண்ணிற மால் விடை அண்ணல் வேட்கள நன்னகராரே

அச்சிறுப்பாக்கம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.77.2) பாலன நீற்றர் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். தேன் உண்ணும் போது இனிய சுவை தந்தாலும், உட்கொண்ட பின்னர் ஒரு வகையான புளிப்புச் சுவையினைத் தருகின்றது. ஆனால் பெருமானோ எப்போதும் இனிய உணர்வுகளை மனதினில் ஊறச்செய்பவர் என்பதால் தேனினும் இனியர் என்று கூறினார் போலும். கரும்பு, கடித்து உண்பவரின் முயற்சிக்கு ஏற்ப, அவரது பருவத்திற்கு ஏற்ப இனிப்பினை நல்குகின்றது. பெருமானும் அடியார்களின் பக்குவத்திற்கு ஏற்ப இன்பத்தை அருளுவதால் கரும்பு போன்றவர் என்று கூறுகின்றார். வானகத்தை விடுத்து மண்ணுலகில் பெருமான் பொருந்தி இருப்பதாக இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வானுலகம் போகபூமி ஆதலின், அங்கே, உயிர்கள் தாம் செய்த வினைகளின் ஒரு பகுதியை நுகர்ந்து கழித்துக் கொள்ள முடியுமே தவிர தங்களது வினைகளை முற்றிலும் நீக்கிக்கொள்ள முடியாது. ஆனால் நிலவுலகம் அந்த தன்மையிலிருந்து மாறுபட்டது. உயிர்கள் தங்களது வினைகளின் ஒரு பகுதியை, இன்ப துன்பங்களை துய்ப்பதன் மூலம் கழித்துக் கொள்வதன்றி, மனம் ஒன்றி பக்குவ நிலை அடைந்து பெருமானை வழிபட்டால் தங்களது மொத்த வினைகளையும் தீர்த்துக் கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் முடியும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

தேனினும் இனியர் பாலன நீற்றர் தீங்கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார்

ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார்

வானகம் இறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை உடையார்

ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுப்பாக்கம் அது ஆட்சி கொண்டாரே

கொடிமாடச் செங்குன்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.3) பாலன நீறு புனைந்தவர் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாலன நீறு என்று பால் போன்று வெண்மை நிறம் கொண்ட திருநீறு என்று மட்டும் இங்கே உணர்த்தப் படவில்லை. பருகுவதற்கு இனியதாக இருக்கும் பால், உடலுக்கு சக்தியையும் அளிக்கின்றது. பூசுவதற்கு இனியதாக உள்ள திருநீறு, ஞானம் அளித்து உயிர்களின் ஆன்மப் பசியையும் தீர்க்கின்றது. எனவே தான் பாலுடன் திருநீறு ஒப்பிடப்படுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பத்தி தருவது நீறு, பரவ இனியது நீறு,முத்தி தருவது நீறு, பூச இனியது நீறு என்று குறிப்பிடும் திருநீற்றுப் பதிகம் நமது நினைவுக்கு வருகின்றது. நீதி=நியதி, கடமை, வழிமுறை;ஏலம்=மயிர்ச்சாந்து; மா=பெருமை வாய்ந்த; நன்=நன்மை பயந்த, நல்ல; உலகினுக்கு நன்மை பயந்த பெருமை வாய்ந்த கழுத்து என்று பெருமானது கழுத்து,ஆலகால விடத்தை தேக்கி உலகத்தவர் அனைவரையும் காத்த கழுத்து என்று இங்கே உணர்த்தப் படுகின்றது.

பாலன நீறு புனை திகழ் மார்பில் பல்வளைக்கை நல்ல

ஏலமலர்க் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்

கோல மலர்ப் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்

நீலநன் மாமிடற்றான் கழல் ஏத்தல் நீதியே

பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (2.69.7) திருஞானசம்பந்தர், பாலன நீறு என்று பாலுடன் திருநீற்றினை ஒப்பிட்டு கூறுகின்றார். பண்மொழியம்மை என்ற தலத்து தேவியின் திருநாமத்தை உணர்த்தும் வகையில் தேன் அமரும் மொழி மாது என்று குறிப்பிடுகின்றார். பானல நீறு=பால் நல நீறு என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும். பாலைப் போன்ற நீறு. திருநீற்றினை பாலுக்கு ஒப்பிட்டு, பால் போன்று பல நன்மைகளை செய்யவல்ல திருநீறு என்று கூறுகின்றார். பால் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவது போன்று திருநீறும் நோயினைத் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது. கூன் பாண்டியனின் வெப்பு நோயினைத் தீர்க்க திருநீறு பயன்பட்ட விவரம் பெரிய புராணத்தில் மிகவும் விரிவாக கூறப்படுகின்றது.உடலுக்கு அழகினைத் தருவது உணவாக உட்கொள்ளப்படும் பால். திருநீறும் அணிந்தவர்களுக்கு அழகினையும் பிணிநீக்கம் வினைநீக்கம் போன்ற நன்மைகளையும் செய்கின்றது. .இறைவன் பாலில் நீராடுவதை மிகவும் விரும்புவதைப் போன்று திருநீறு கொண்டு நீராட்டப் படுவதையும் மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கின்றான். எனவே தான் பால் போன்ற வெண்ணீறு என்று மட்டும் சொல்லாமல், திருநீற்றின் மற்ற குணங்களையும் நமக்கு உணர்த்தும் வண்ணம் பால் நீறு என்று கூறுகின்றனர்.

ஊனமர் வெண்தலை ஏந்தி உண்பலிக்கென்று உழல்வாரும்

தேன் அமரும் மொழி மாது சேர் திருமேனியினாரும்

கானமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக் கரை மேல்

பானல நீறு அணிவாரும் பாண்டிக் கொடுமுடியாரே

கொச்சைவயம் (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.89.3) பால் போன்ற திருநீற்றினை பெருமான் பூசிக் கொள்வதாக கூறுகின்றார். பெருமான் மாலைக் காலத்தே நடனம் ஆடுகின்றார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். ஆலகால விடத்தினை உட்கொண்டு தேவர்கள் அனைவரையும் காப்பற்றிய பெருமான், அந்த விடம் தன்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் ஒரு மாலை நேரத்தில் நடனம் ஆடியதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. வேதகீதங்களை கேட்டு மகிழ்வது போன்று, இன்னிசைப் பாடல்களையும் கேட்டு மகிழும் பெருமான் என்று கூறுகின்றார். வேலை மால் கடல்=அலைகள் நிறைந்த பெரிய கடல்;

பாலை அன்ன வெண்ணீறு பூசுவர் பல்சடை தாழ

மாலை ஆடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர்

வேலை மால் கடலோதம் வெண்டிரை கரை மிசை விளங்கு

கோல மாமணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே

பட்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.73.3) திருஞானசம்பந்தர், பாலை அன நீறு புனை மார்பன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.மறுகு=வீதிகள்; கௌவை=ஓசை, ஆரவாரம்; கடி=நறுமணம்; பாலை அன நீறு=பால் போன்று வெண்ணிறம் உடைய திருநீறு; மேலை= மேன்மை தரும்;மால்=சிறந்த, சிறந்த செல்வம் என்று பொருள் கொள்ளவேண்டும். பெருமான் குறித்து செய்யப்படும் வழிபாடு இம்மையிலும் மறுமையிலும் அளிக்கும் நலன்கள் இந்த பாடலில் சொல்லப்பட்டுள்ளது.

காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடியார் மறுகெலாம்

மாலை மணநாறு பழையாறு மழபாடி மேய அழகாய மலி சீர்

பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசரமே பரவுவார்

மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்ணுலகம் ஆளும் அவரே

தோணிபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் (3.100.2) பால்வெள்ளை நீறு என்று குறிப்பிடுகின்றார். கொங்கியல்=இயற்கை மணம்; பூங்குழல்=மலர் போன்று மென்மையான கூந்தல்; கோமளம்= தாமரை மலர், இங்கே தாமரை மலர் போன்று அழகும் இளமையும் வாய்ந்த உமை அன்னை; பங்கியலும்=ஒரு பாகத்தில் பொருந்திய; பங்கியலும் என்ற சொல்லினை இரண்டு இடங்களிலும் பொருத்தி, அன்னையின் திருமேனி பொருந்திய பாகம் மற்றும் திருநீறு பூசிய இடம், ஆகிய இரண்டு இடங்களிலும் பொருத்தி உரை காண்பது சிறப்பு.சாயல்=உடல் தோற்றப் பொலிவு; பெருமான் பால் கொண்டிருக்கும் தீராத காதல், பயனளிக்காததால் உடல் வெளுத்து அழகிழந்து காணப்படும் நிலை இங்கே சொல்லப் பட்டுள்ளது. துங்கம்=உயர்வு; துங்கியல்=உயர்ந்த

கொங்கியல் பூங்குழற் கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமையாள்

பங்கியலும் திருமேனி எங்கும் பால் வெள்ளை நீறணிந்து

சங்கியல் வெள்வளை சோர வந்தென் சாயல் கொண்டார் தமதூர்

துங்கியல் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.19.11) அப்பர் பிரான், பெருமான் தனது மார்பினில், சந்தனமாக பாவித்து பால் வெண்ணீற்றினை அணிந்துள்ளான் என்று கூறுகின்றார். செஞ்சாந்து அணிவித்து=தோள்களை நெரித்து உடலை வருத்தி உடல் முழுவதும் குருதி பெருகி ஓடுமாறு அரக்கன் இராவணன் இருந்த நிலையினை அரக்கனுக்கு இறைவன் செஞ்சாந்து அணிவித்தான் என்று நயமாக கூறுகின்றார். அரக்கன் இராவணனின் தன்மை பெருமானின் தன்மையிலிருந்து வேறுபட்டது என்பதை உணர்த்தும் வண்ணம் செம்மை மற்றும் வெண்மை ஆகிய இரண்டு நிறங்களை உடையவர்களாக இருவரும், முறையே அரக்கனும் பெருமானும் விளங்கினார்கள் என்று நயமாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்

மஞ்சாடு குன்று அடர ஊன்றி மணிவிரலால்

துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்

செஞ்சாந்து அணிவித்துத் தன் மார்பில் வெண்ணீற்று

அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (4.43.2) பால்வெள்ளை நீறு பூசிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.மால்=மேகம்; மாலன=மேகத்தின் கருமை நிறத்தினை ஒத்த; மாயன்=திருமால்; ஏலம்=நறுமணம் மிகுந்த; விருத்தராகும் பாலனார் என்ற தொடர் திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சி ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி விருத்த குமார பால படலம் என்ற படலத்தில் மிகவும் விரிவாக சொல்லப் பட்டுள்ளது. மேகத்தினைப் போன்று கருமை நிறத்து மேனியை உடைய திருமாலைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்று மகிழ்ந்தவர் சிவபெருமான்; அனைத்து உயிர்களுக்கும் முன்னமே இருந்த பழையவராகவும், அனைத்து உயிர்களும் இறந்த பின்னரும் இருக்கப் போகின்ற புதியவராகவும் உள்ள பெருமான் அனைத்து உயிர்களுக்கும் தலைவராவார். பால் போன்ற வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பூசியுள்ள பெருமான், இயமனைத் தனது காலால் உதைத்து வென்றவர் ஆவார். நறுமணம் மிகுந்த கடம்ப மாலையினைச் சூடும் முருகனின் தந்தையாகிய பெருமான், காஞ்சி மாநகரத்தில் விளங்கித் தோன்றும் மேற்றளியைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;.

மாலன மாயன் தன்னை மகிழ்ந்தனர் விருத்தராகும்

பாலனார் பசுபதியார் பால்வெள்ளை நீறு பூசிக்

காலனைக் காலால் செற்றார் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்

ஏலநல் கடம்பன் தந்தை இலங்கு மேற்றளியானாரே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.4) அப்பர் பிரான், பெருமானை, பால் வெண்ணீறா என்று அழைக்கின்றார்.அம்பொன்=அழகிய பொன்: கொழித்து= மிகவும் அதிகமாக: பரமன்=அனைவரிலும் மேம்பட்டவன். பசும்பொன் போன்றவனே, செம்மை நிறத்துடன் பவள மலையாக காட்சி அளிப்பவனே, அனைவர்க்கும் மேம்பட்டவனே, பால் போன்ற வெண்ணீற்றினை உடலில் பூசியவனே, செம்பொன்னே, மலர் போன்ற திருவடிகளை உடையவனே, சிறப்பு மிக்க மாணிக்கக் கற்களும் அழகிய பொன்னும் திரட்டிக் கொண்டு வந்து வீழும் அருவிகள் உடைய அழகிய திருவண்ணாமலையில் உறைபவனே, எனக்கு பொன் போன்று அருமையான பொருளாக உள்ளவனே, அடியேன் உன்னைத் தவிர வேறு எந்த பொருளையும் நினையாமல் இருக்கின்றேன என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீறா

செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க

அம்பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே

என் பொனே உன்னை அல்லால் ஏது நான் நினைவிலேனே

தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.81.4) அப்பர் பிரான் பெருமானை, பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்தவர் என்று கூறுகின்றார். குனித்த=வளைந்த, பனித்த=ஈரமுள்ள, குமிண் சிரிப்பு=இதழ்கள் குவிந்து கூடிய புன்சிரிப்பு, மனித்தப் பிறவி= பெரியோர்களால் வேண்டப்படாத பிறவி. உண்மையான மெய்ப்பொருளாக விளங்கும் பெருமானின் தன்மையை உணர்ந்த சான்றோர்கள் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, இறைவனுடன் இணைந்து முக்தி உலகில் இருப்பதையே விரும்புவார்கள்; உயிரின் உண்மையான தாகத்தை உணர்ந்தவர் அப்பர் பிரான்.அதனால் தான் உலகியல் பொருட்களை வேண்டுவோரை கல்மனவர் என்று இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் அப்பர் பிரான் அழைக்கின்றார்.ஆனாலும் நடராஜப் பெருமானின் அழகிய கோலத்தை ரசித்த அவருக்கு, அந்தக் காட்சியினைக் மீண்டும் மீண்டும் காண்பதற்காக மனிதப் பிறவி மறுபடியும் வேண்டும் என்று தோன்றுகின்றது. அந்த அளவுக்கு பெருமானின் திருமேனியின் அழகு அவரது உள்ளத்தைக் கவர்ந்த தன்மை இந்த பாடலில் வெளிப்படுகின்றது.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (5.25.10) பெருமானை பால் வெண் நீற்றினர் என்று கூறுகின்றார்.மறையவன்=மறைகள் ஓதும் பிரமன்; பாலின் வெண்மை நிறத்திற்கு திருநீறு இங்கே ஒப்பிடப்படுகின்றது. தோற்றத்தில் வெண்மை நிறம் கொண்டுள்ள பால்,பூஜைக்கு உகந்த பொருளாகவும், உடல் பசியை போக்குவதாகவும், நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும், உடலைப் பாதுகாக்கும் சத்துப் பொருட்கள் நிறைந்ததாகவும், திகழ்ந்து நலம் தருகின்றது. அதே போல் திருநீறு, மலங்களை நீக்கியும், ஞான உணர்வினை அளித்தும், உடலை தூய்மை செய்தும்,மந்திரமாகவும், மாமருந்தாகவும் உயிர்களுக்கு பலன் அளிக்கின்றது. மேலும் பசுவிலிருந்து பால் கிடைப்பது போன்று, பசுவிலிருந்து கிடைக்கும் சாணம் கொண்டு திருநீறு தயாரிக்கப் படுகின்றது.

மாலினோடு மறையவன் தானுமாய்

மேலும் கீழும் அளப்பரிது ஆயவர்

ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிகப்

பால் வெண் நீற்றினர் பாசூர் அடிகளே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.10.7) அப்பர் பிரான், பெருமானை, பால் வெண்ணீற்றார் என்று அழைக்கின்றார். தலத்து இறைவியின் திருநாமம் காம்பன தோளி அம்மை என்பதாகும். இந்த பெயரினை சற்றே மாற்றி காம்பேய்த் தோளி என்று அப்பர் பிரான் அழைக்கின்றார்.காம்பு=மூங்கில். அம்பிகையின் திருநாமம் வேணுபுஜாம்பிகை என்று வடமொழியில் அழைக்கப் படுவதை, காம்பேய்த் தோளி என்று மிகவும் அழகாக அப்பர் பிரான் தமிழாக்கம் செய்துள்ளார். முற்றா மதி=பிள்ளை மதி என்றும் இளமதியம் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்படும் பிறைச் சந்திரனை, பிறை தேய்ந்து இருந்த நிலையினை முற்றா மதி என்று கூறுகின்றார். மூவராக, பிரமன், திருமால், உருத்திரனாக பெருமான் இருக்கும் நிலையும், அந்த மூவருக்கும் முதல்வராக இருக்கும் நிலையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

முற்றா மதிச் சடையார் மூவரானார் மூவுலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்

கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பேய்த் தோளி

பற்றாகும் பாகத்தார் பால் வெண்ணீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார்

பற்றார் மதில் எரித்தார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

திருக்கருகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.15.8) அப்பர் பிரான் பெருமானை, பால் நீற்றன் என்று குறிப்பிடுகின்றார். குயலர்=தேர்ந்தவர்;கூறாத=உண்மை சொல்லாத; துடியின் முழக்கம் ஒலியாகும். ஒலியிலிருந்து தோன்றியது ஆகாயம். மற்ற நான்கு தன்மாத்திரைகளும் (ஊறு, ஒளி, சுவை நாற்றம் ஆகியவை), மற்ற நான்கு ஐம்பூதங்களும் (காற்று, தீ, தண்ணீர், நிலம் ஆகியவை), ஒலியிலிருந்து தோன்றியவையே. எனவே தான் துடியின் முழக்கம் தோற்றத்தைக் குறிப்பதாக சொல்லப்படுகின்றது.. ஓசையிலிருந்து எழுந்தது சொல். இவ்வாறு ஓசையாகவும் ஒலியாகவும் சிவபெருமான் உள்ள தன்மை ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே என்று தொடங்கும் அப்பர் பிரானின் திருவையாறு திருப்பதிகத்தின் மூலமும் உணர்த்தப் படுகின்றது.

துடியாம் துடியின் முழக்கம் தானாம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பானாம்

படி தானாம் பாவம் அறுப்பானாகும் பால் நீற்றனாம் பரஞ்சோதி தானாம்

கொடியானாம் கூற்றை உதைத்தானாகும் கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்

கடியானாம் காட்சிக்கு அரியானாகும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

திருக்கயிலாயம் பதிகத்தின் பாடலில் (6.56.5) அப்பர் பிரான், பெருமானை பால் வெண்ணீறாடி என்று குறிப்பிடுகின்றார். மை=கருமை நிறம்;மிக்கோர்=உயர்ந்தவர்கள்; தீபம்=ஞான விளக்கு; மை போன்று கருமை நிறம் சேர்ந்த கழுத்தினை உடையவனே, திருமாலுக்கு சக்கரம் அளித்து அருள் புரிந்தவனே, வஞ்சனை எண்ணங்கள் உடைய நெஞ்சினில் புகுந்து உறைவதை தவிர்ப்பவனே, என்றும் எனது உள்ளத்திலிருந்து நீங்காது இருப்பவனே,தனது உடல் முழுவதும் பொருந்துமாறு பால் போன்ற திருநீற்றினை பூசியவனே, உயர்ந்தவர்கள் புகழ்ந்து ஏத்தும் ஞான விளக்கே, தனது கையினில் தீப்பிழம்பினை ஏந்தி நடனமாடுபவ்னே, கயிலை மலையினை இருப்பிடமாக உடையவனே, உன்னை பலமுறையும் நான் போற்றுகின்றேன்.

மை சேர்ந்த கண்ட மிடற்றாய் போற்றி மாலுக்கு ஓராழி ஈந்தாய் போற்றி

பொய்ச் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி

மெய் சேரப் பால் வெண்ணீறாடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி

கை சேர் அனல் ஏந்தியாடீ போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.83.9) அப்பர் பிரான், பால் ஒத்த வெண்ணீற்றர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் அந்தகனை வென்ற வீரச்செயல் குறிப்பிடப் படுகின்றது. அந்தகன் பற்றிய குறிப்பு காணப்படும் தேவாரப் பாடல்கள் மிகவும் அரிதானவை.மன்மதனை எரித்தது, திரிபுரங்களை எரித்தது, இயமனை காலால் உதைத்தது, யானையின் தோலை உரித்தது, தக்கனது யாகத்தை தகர்த்தது, பிரமனின் சிரத்தைக் கொய்ந்தது, சலந்தரனை அழித்தது ஆகிய வீரச்செயல்களைக் குறிப்பிடும் பாடல்கள் மிகவும் அதிகமாக முதல் ஏழு திருமுறைகளில் காணப்படுகின்றன.

ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில்

சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத் தொல்லுலகில் பல்லுயிரைக் கொல்லும் கூற்றைக்

காலத்தால் உதை செய்து காதல் செய்த அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்

பால் ஒத்த வெண்ணீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.99.3) அப்பர் பிரான், பெருமானை பால் வெண்ணீற்றாய் என்று அழைக்கின்றார்.பை=நச்சுப்பை: படம் என்றும் பொருள் கூறுவார்கள். பளிங்குக்குழை=பளிங்கு போன்று ஒளியினால் மிளிரும் சங்கக்குழை, சிவபெருமான் காதில் அணியும் அணி; தரவு அறுத்தல்=ஏவல் கொள்ளுதல்: ஐவர்=ஐந்து பொறிகள்; உமை அம்மையின் மொழியினை பண்ணார் இன்சொல் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். ஐந்து பொறிகளுக்கு என்னால் ஆகவேண்டிய காரியம் ஒன்றும் இல்லை, என்று மிகவும் தைரியமாகச் சொல்வதன் மூலம், அப்பர் பிரான் தான் ஐந்து பொறிகளை அடக்கிய தன்மையை இங்கே குறிப்பிடுகின்றார். ஐந்து பொறிகளும் தன்னை மயக்கி, எதுவும் சாதித்துக் கொள்ள முடியாது என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகின்றார். அப்பர் பிரானின் சரித்திரம், அவர் புலன்கள் ஐந்தை வெற்றி கொண்ட தன்மையை நமக்கு உணர்த்துகின்றது.

பை அரவக் கச்சையாய் பால் வெண்ணீற்றாய் பளிங்குக் குழையினாய் பண்ணாரின்சொல்

மை விரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய் மான்மறி கை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்

ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை

பொய் உரையாது உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

பழமண்ணிப்படிக்கரை தல்த்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.22.7) சுந்தரர், பெருமானை பால் வெண்ணீற்றன் என்று அழைக்கின்றார். படுத்தவன் என்ற சொல்லுக்கு, நன்மையில் ஆழ்த்தியவன் என்று பொருள் கொள்ளவேண்டும். கயிலாய மலையினைப் பேர்த்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தைத் தொடர்கின்ற எண்ணத்தில் இருந்த அரக்கனை, கயிலை மலையின் கீழே அமுக்கி, அரக்கனின் உடல் நசுங்கும் வண்ணம் துன்பத்தில் ஆழ்த்திய பெருமான், பின்னர் அரக்கன் சாமவேதம் பாடி தன்னை மகிழ்விக்கவே, அவன் பால் கருணை கொண்டு, அவனுக்கு வரங்கள் பல அளித்து இன்பத்தில் ஆழ்த்தினார் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். அரக்கன் தனது கையினில் உள்ள நரம்பினை மீட்டி, வீணையின் நாதம் எழுப்பினான் என்றும் இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார்.

கடுத்தவன் தேர் கொண்டோடிக் கயிலாய நன் மாமலையை

எடுத்தவன் ஈரைந்து வாய் அரக்கன் முடி பத்தலற

விடுத்தவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுறப்

படுத்தவன் பால் வெண்ணீற்றன் பழமண்ணிப்படிக்கரையே

கானாட்டுமுள்ளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.40.9) சுந்தரர் பெருமானை, பால் வெண்ணீற்றான் என்று குறிப்பிடுகின்றார்.குனி=வளைந்த; இனிய கதிர்=சந்திரனின் கதிர்கள் குளிர்ச்சியைத் தருவதால், இனிய ஒளிக்கதிர்கள் என்று இங்கே சொல்லப் பட்டுள்ளது. நீர்த்துளிகள் சிந்தும் சடை என்று, சிறிது சிறிதாக கங்கை நதி வெளியிடப்படும் சடை என குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. பல தெய்வங்களாக பெருமான் ஒருவனே இருக்கும் தன்மை, இந்த பாடலில் பலவுருவும் தன்னுருவே ஆய பெருமான் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.

குனியினிய கதிர்மதியம் சூடு சடையானைக் குண்டலம் சேர் காதவனை வண்டினங்கள் பாடப்

பனியுதிரும் சடையானைப் பால் வெண்ணீற்றானை பல உருவும் தன்னுருவே ஆய பெருமானைத்

துனியினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார் தூநீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே

கனியினிய கதலி வனம் தழுவு பொழிற் சோலைக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.91.6) சுந்தரர், பெருமானை பால் வெண்ணீற்றன் என்று குறிப்பிடுகின்றார். தன்னை வந்தடைகின்ற அடியார்களின் வினைகளை அறுத்து நன்மை புரிபவன் பெருமான் என்று கூறுகின்றார். தன்னை அடிமையாக பெருமான் ஏற்றுக் கொண்ட தன்மையையும் இந்த பாடலில் சுந்தரர் உணர்த்துகின்றார்.

படையார் மழுவன் பால் வெண்ணீற்றன்

விடையார் கொடியன் வேத நாவன்

அடைவார் வினைகள் அறுப்பான் என்னை

உடையான் உறையும் ஒற்றியூரே

திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பாடலில் பெருமானை, பால்வெள்ளை நீற்றினை ஒரு பகுதியில் பூசிக் கொண்டவன் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம் என்று மாதொரு பாகனாரின் திருக்கோலத்தை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவபெருமானின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைந்து உள்ளதாக இந்த பாடலில் கூறுகின்றார்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்

பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்

சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை

கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

திருவாசகம் அருட்பத்து பதிகத்தின் முதல் பாடலில் (8.29.1) பால் கொள் வெண்ணீற்றாய் என்று பெருமானை அடிகளார் அழைக்கின்றார். நாம் துன்பங்களால் வருந்தி துயரடைந்து இருக்கும் நிலையில், நமது துயரத்தை துடைக்காவிடினும் பரவாயில்லை, எவரேனும் ஆதரவாக ஒரு வார்த்தை பேச மாட்டாரா என்று நமது மனம் துடிப்பது இயற்கை. அவ்வாறு தான் மணிவாசகரும் ஏங்குகின்றார். ஆனால் நமக்கும் அவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம். நாம்,நமக்கு நெருங்கிய உறவினரோ அல்லது நண்பரோ, நம்மிடை வந்து நமது உடல் நிலை எவ்வாறு உள்ளது, மனநிலை எவ்வாறு உள்ளது என்று கேட்டால்,நாம் சற்று ஆறுதல் அடைவோம். ஆனால் மணிவாசகரோ இறைவன் அவ்வாறு கேட்க மாட்டாரா என்று ஏங்குகின்றார். அந்த ஏக்கம் தான் இந்த பதிகத்தின் பாடல்களாக வெளிப்படுகின்றன. ஏன் அவ்வாறு மணிவாசகர் ஆசைப் படுகின்றார். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள், நம்மைத் தேற்றும் முகமாக நம்மை விசாரித்தாலும், பெரும்பாலும் அவர்களுக்கு நமது வருத்தத்தைத் தீர்க்கும் ஆற்றல் இல்லாமல் போகலாம் ஆனால் இறைவனோ நமது துன்பங்கள் அனைத்தையும் களையும் ஆற்றல் படைத்தவர். அத்தகைய ஆற்றல் உடைய ஒருவர் நம் மீது அக்கறை கொண்டு விசாரிக்க முன்வருகின்றார் என்றால், அவர் அத்துடன் நிறுத்த மாட்டார் அல்லவா. அதனால் தான், இறைவன் அவ்வாறு விசாரித்தாலே போதும் என்று திருப்தி அடைந்தவராக, இறைவனே அதெந்துவே என்று கேட்டு அருள் புரிய மாட்டாயா என்று பதிகத்தின் பாடல் தோறும் அடிகளார் இறைஞ்சுகின்றார். அது என்று நமது வருத்தத்திற்கு காரணம். எந்து எப்படி உள்ளது, காரணம் என்ன என்பதாகும். தான் இறைவனை அழைக்கும் போது வாளா இராமல் ஏன் என்றாவது கேள் என்று இறைவனிடம் அடிகளார் வேண்டுகின்றார். ஆதரித்து=விரும்பி, நீ ஒருவனே எனது பற்றுக்கோடு என்ற எண்ணத்துடன் அழைத்து. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானை தான் ஆதரித்து அழைப்பதாக அடிகளார் கூறுகின்றார்.

சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரி குழற் பணைமுலை மடந்தை

பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மாலறியா

நீதியே செல்வப் திருபெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்

ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

இந்த பாடலின் முதல் அடியில் சோதி என்றும் சுடர் என்றும் விளக்கு என்றும் இறைவனை அழைத்து பாடலை தொடங்குகின்றார். மூன்றும் ஒளி வ்டிவமாக இருக்கும் இறைவனை குறிப்பிடுவது போல் தோன்றினாலும் இந்த சொற்கள் உணர்த்தும் பொருள் சற்று மாறுபட்டவை என்று மிகவும் அழகாக அந்த வேறுபாட்டினை உணர்த்தி, முனைவர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் திருவாசக சிந்தனைகள் என்ற நூலில் விளக்கம் அளிக்கின்றார். அந்த விளக்கத்தை சற்று சுருக்கமாக நாம் இங்கே காண்போம். சோதி என்பது, பற்றுக்கோடு ஏதும் இல்லாமல், உருவோ வடிவமோ இல்லாமல், எங்கும் நிறைந்ததாக இருக்கும் பேரொளியாகும். சுடர் என்பது ஏதோ ஒன்றைப் பற்றி நின்று எரியும் தீப்பிழம்பினை நினைவூட்டுகின்றது. சூழொளி விளக்கு என்றால், சிறிய திரியை பற்றுக்கோடாகக் கொண்டு ஒரு விளக்கினுள் அமர்ந்து எரியும் சிறிய ஒளிப்பிழம்பினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. நாமம் ரூபம் அற்றதாக எங்கும் பரந்து நிற்கும் பரம்பொருளை எந்தவிதமான் பற்றுக்கோடும் இல்லாமல் தனித்து நிற்கும் பரம்பொருளை, எவ்வாறு குறிப்பிட்டு உணர்த்துவது.அதனால் தான், எந்தவிதமான அடைமொழியும் இல்லாமல் சோதியே என்று அழைத்து, பரம்பொருளின் வியாபகத் தன்மையை அடிகளார் முதலில் உணர்த்துகின்றார். சுடர் என்ற சொல் மூலம், சக்தியோடு சேர்ந்துள்ள இறைவனின் தன்மை உணர்த்தப்படுகின்றது. பற்றி எரியும் திரியில் ஒளியைக் காணும் நாம், திரியைப் பற்றி நினைப்பதில்லை, திரியும் நமது கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் திரி தனித்து இயங்காமல் சுடரினுள் அடங்கி விடுவதை உணர்கின்றோம். சூழொளி விளக்கு, பற்றி எரியும் திரிக்கும் அந்த திரியின் மூலம் எரிகின்ற நெய்யினையும் தாங்கி நிற்கும் விளக்கினை உணர்த்துவது போன்று, அருவுருவத் திருமேனியாகிய இலிங்கத் திருமேனியை நமக்கு உணர்த்துகின்றது. இலிங்கத் திருமேனியை நாம் காணும்போது அதனுள் இருக்கும் சோதியை நாம் உணர்வதில்லை. அந்த சோதியை உணரும் அடியார்கள் இலிங்கத் திருமேனியை காண்பதில்லை. மரத்தை காணும் தச்சன் யானையைக் காண்பதில்லை, யானையைக் காணும் குழந்தை மரத்தைக் காண்பதில்லை என்ற திருமூலர் வாக்கினுக்கு ஏற்ப, சோதியைக் காணும் அடியார்கள் இலிங்கத்தைக் காண்பதில்லை; இலிங்கத்தைக் காணும் அடியார்கள் சோதியை உணர்வதில்லை. சர்வ வியாபியாக இருக்கும் இறைவன், நாம் வழிபடும் வண்ணம் இலிங்கத் திருமேனியுடன் பல தலங்களில் காட்சி தருவது போன்று, எங்கும் நிறைந்து காணப்படும் இறைவன் குருந்த மரத்தின் நிழலில் மானிடச் சட்டை தாங்கி வந்து தனக்கு அருள் புரிந்ததையும் அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இலிங்கத் திருமேனியைக் காணும் நாம், சோதியைக் காண்பதில்லை; ஆனால் மானிடச் சட்டை தாங்கி வந்த குருநாதரைக் காணும் அடிகளார், அவ்வாறு வந்து தனக்கு அருள் புரிந்தவர், பரம்பொருள் என்பதை உடனே புரிந்து கொள்கின்றார். அந்த உண்மையைத் தான் மடந்தை பாதியே, பரனே, பால் கொள் வெண்ணீற்றாய், மாலும் பிரமனும் அறியாத நீதியே, நிறை மலர்க் குருந்தமே என்று குறிப்பிடுகின்றார்.

திருவாசகம் எண்ணப்பதிகம் பாடலில் (8.44.6) மணிவாசகர் பெருமானை பால் திருநீற்று எம் பரமன் என்று அழைக்கின்றார். அடியார்கள் தேடிச் செல்லவேண்டிய அவசியம் இல்லாமல், தானே வந்து அடியார்களின் முன்னே தோன்றும் கருணைச் செயலை, எதிர்ந்து என்ற சொல் மூலம் குறிப்பிடுகின்றார்.பிறவிக்கடலில் விழுந்து வருந்தும் அடியார்களை, கரையேற்றும் பெருமானை அருள் துறை என்று அழைக்கின்றார். பெருமானை பலவாறும் புகழ்ந்து அலறி,அவனைத் தனது உள்ளத்தின் உள்ளே நிலையாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற தனது ஆவல் நிறைவேற வேண்டும் என்று இறைவனிடம் அடிகளார் வேண்டும் பாடல். தனது ஆசையின் வண்ணமே, அப்படியே ஆகட்டும் என்று இறைவன் கருதி முடிக்க வேண்டும் என்பதை ஆவ என்ற சொல் மூலம் உணர்த்துகின்றார். ஆவ=அங்ஙனமே ஆகுக, ததாஸ்து என்ற வடமொழித் சொல்லின் தமிழாக்கம்

பால் திருநீற்று எம்பரமனைப் பரம் கருணையொடும் எதிர்ந்து

தோற்றி மெய்யடியார்க்கு அருட்டுறை அளிக்கும் சோதியை நீதியிலேன்

போற்றி என் அமுதே என நினைந்தேத்திப் புகழ்ந்து அழைத்து அலறி என்னுள்ளே

ஆற்றவனாக உடையவனே எனை ஆவ என்று அருளாயே

பொழிப்புரை:

சிறந்த மழுப்படையினை உடையவனும், பால் போன்று பல நலங்களைத் தருகின்ற திருநீற்றனைத் தனது திருமேனியின் மீது பூசியவனும், அழகிய நடையினை உடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவனும், உடைந்த மண்டையோட்டினைத் தனது கையில் ஏந்தியவனாக உலகெங்கும் திரிந்து பலியேற்பவனும் எமது தலைவனும் ஆகிய சிவபெருமான், மிகவும் மகிழ்ந்து உறைவது திருவிடைமருதூர் தலமாகும்.

பாடல் 4:

பணைமுலை உமை ஒரு பங்கன் ஒன்னார்

துணை மதிள் மூன்றையும் சுடரின் மூழ்கக்

கணை துரந்து அடுதிறல் காலற் செற்ற

இணையிலி வளநகர் இடைமருதே

விளக்கம்:

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானை இணையிலி என்று கூறுகின்றார். தனக்குவமை இல்லாதானாகிய பெருமானை, இணையிலி என்றும் துணையிலி என்றும் ஒப்பிலி என்றும் தன்னேர் இல்லோன் என்றும் குறிப்பிட்டு, பெருமானின் ஒப்பற்ற தன்மையை திருமுறை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பெருமானின் எந்த செயலை எடுத்துக் கொண்டாலும், அதற்கு ஒப்பாகவோ மிக்காகவோ வேறு எவரது செயலையும் நாம் குறிப்பிட முடியாது.

பெருமானின் திருவடிகளை ஒப்பற்ற திருவடிகள் என்று பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.90.10)திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஓர்தல்=தியானம் செய்தல்; நேர்=ஒப்பு; நேரில்=ஒப்பற்ற;

தேரர் அமணரைச்

சேர்வில் கொச்சைமன்

நேரில் கழல் நினைந்து

ஓரும் உள்ளமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகம் ஒன்றினில், திருஞானசம்பந்தர் (1.105.1) ஒப்பில்லாத வண்ணம் உயர்ந்த அழகினை உடைய திருமேனி கொண்டவன் சிவபெருமான் என்ற பொருள்பட, படிபட்ட கோலத்தன் என்று குறிப்பிடுகின்றார். படி என்றால் ஒப்பில்லாத வண்ணம் என்று பொருள்.காண்போரை சொக்க வைக்கும் சொக்கனாகவும், சுந்தரனாகவும் திகழ்வது பெருமானின் அழகு; அந்த ஒப்பற்ற அழகின் தன்மை தானே, அவருக்கு சொக்கன் என்ற பெயரினையும் சுந்தரேசன் என்ற பெயரையும் தேடித் தந்தது. எனவே தனது அழகினுக்கு ஒப்பு ஒன்றும் இல்லாத நிலையில் பெருமான் மிகவும் உயர்ந்த அழகுடன் விளங்குவதில் வியப்பு என்ன இருக்கமுடியும். முத்து விதானம் என்று தொடங்கும் பதிகம் மூலம் (4.21), ஆதிரை நாள் விழாவின் சிறப்பினை அப்பர் பிரான் வாயிலாக அறிந்த திருஞானசம்பந்தர், பெருமானை ஆதிரையன் என்று அழைப்பதை நாம் இந்த பாடலில் காணலாம்.கூடலர்=கூடாதாவர்கள்; வேதநெறியுடன், சிவநெறியுடன் கூடாத திரிபுரத்து அரக்கர்கள்;

பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்

சூடலன் மூவிலைய சூலம் வலன் ஏந்திக்

கூடலர் மூவெயிலும் எரி உண்ண கூர் எரி கொண்டு எல்லி

ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே

திருவல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.113.2) திருஞானசம்பந்தர், இறைவனை தன்னொப்பிலாத் தூயவன் என்று கூறுகின்றார்.பெருமானைச் சென்று அடைந்ததால், சந்திரன் தூய்மை அடைந்தவனாக விளங்குகின்றான் என்று இங்கே கூறுகின்றார். முனிவராகவும் அமரராகவும் இருந்தால் மட்டுமே இறைவனை நெருங்கி விடலாம் என்பது நினைப்பது தவறு. உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் தான் என்ற ஞானம் உடையவர்களாக இருந்தால் மட்டுமே இறைவனை நெருங்க முடியும் என்பதை உணர்த்தும் முகமாக அமரர்க்கும் முனிவர்கட்கும் பெருமான் சேயவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். சேயவன்=தொலைவில் உள்ளவன்.

தாயவன் உலகுக்குத் தன்னொப்பில்லாத்

தூயவன் தூமதி சூடி எல்லாம்

ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்கும்

சேயவன் உறைவிடம் திருவல்லமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.6) திருஞானசம்பந்தர், இணையில இறைவன் என்று குறிப்பிடுகின்றார். இணையற்றவன் இறைவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். முன்பன்=உலகுக்கெல்லாம் முன்பானவன், வலிமை மிகுந்தவன்: ஏதமில்= குற்றமற்ற;

முன்பனை முனிவரோடு அமரர்கள் அடி தொழும்

இன்பனை இணையில இறைவனை எழில் திகழ்

என்பொனை ஏதமில் வேதியர் தாம் தொழும்

அன்பன வளநகர் அந்தண் ஐயாறே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.125.6) திருஞானசம்பந்தர் பெருமானை இணையிலி என்று அழைக்கின்றார். இந்த பாடலில் சதிர் பெறும் உள்ளம் உடைய அடியார்கள் இந்த தலத்தினில் வாழ்கின்றனர் என்று திருஞானசம்பந்தர் தலத்து அடியார்களை சிறப்பித்து கூறுகின்றார். இறைவன் நமக்கு கருவி கரணங்களை அளித்ததன் நோக்கமே, அந்த கருவி கரணங்களை நாம் தகுந்த முறையில் பயன்படுத்தி, நமது மெய்ஞானத்தை பெருக்கிக் கொண்டு இறைவனின் தன்மைகளை சரியாக அறிந்து கொண்டு, நமது வினைகளை படிப்படியாக கழித்துக் கொண்டு, முக்தி உலகம் சென்று அடையும் வழியில் நாம் முன்னேற வேண்டும் என்பதே ஆகும். இதுவே உயிர்களின் விருப்பமாகவும் உள்ளது. இதற்கான முதல் படி, நமது புலன்களின் வழியே நாம் செல்லாமல், நமது விருப்பம் ஈடேறும் வகையில் புலன்களை செயல்படச் செய்யவேண்டும். இவ்வாறு புலன்களின் சேட்டைகளை முற்றிலும் அடக்கி,புலன்களை தங்களது வசம் வைத்துக் கொள்ள நமக்கு இறைவனின் அருள் மிகவும் அவசியம். அத்தகைய அருள் பெற்று புலன்களை அடக்கியாளும் அடியார்களை, சதுரப்பாடு உடைய மனம் உடைய அடியார்கள் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

முதிர்சடை இளமதி நதிபுனல் பதிவு செய்து

அதிர் கழல் ஒலி செயவரு நட நவில்பவன்

எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி

சதிர் பெரும் உளம் உடையவர் சிவபுரமே

திருமீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.3) திருஞானசம்பந்தர், பெருமானை, தன்னேர் பிறரில்லான் என்று அழைக்கின்றார்.அகலத்தான்=அகன்ற மார்பினை உடையவன்: அந்நேர்=அம்+நேர்=அழகும் நேர்த்தியும் பொருந்திய;

பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்

மின்னேர் சடைகள் உடையான் மீயச்சூரானைத்

தன்னேர் பிறர் இல்லானைத் தலையால் வணங்குவார்

அந்நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிதன்றே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (2.62.7) திருஞானசம்பந்தர், பெருமானை, தனக்கு நிகராக வேறு எவரும் இல்லாதவர் என்று குறிப்பிடுகின்றார். நீல வடிவினில் கழுத்தினை உடைய பெருமான், திருமாலும் பிரமனும் அறிய முடியாத வண்ணம் நெடிய வடிவினராக நீண்ட தீப்பிழம்பாக விளங்கியவர்;நிகரற்றவராகவும், அழகிய பல வடிவங்கள் கொண்டவராகவும் விளங்கும் அவர், இன்ன தன்மையர் என்று எவராலும் அறியமுடியாதவர்; தனது காலில் வீரக்கழல் அணிந்தவராகவும் கையில் மழுப்படை ஏந்தியவராகவும் உள்ள பெருமான், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்தவர் ஆவார்.அனைவர்க்கும் மேன்மையானவராக விளங்கும் அவர், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக்கொண்டு சந்திரனுக்கு வாழ்வளித்த கருணையாளராகவும், உயிர்கள் தத்தம் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவித்துக் கழிக்க வழிவகுப்பவராகவும் உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பாடலில் குறிப்பிடப்படும் பல தன்மைகள், பெருமானுக்கு நிகராக வேறொருவர் இல்லாத தன்மையை உணர்த்துகின்றன.

நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்

கோல வடிவு தமதாம் கொள்கை அறிவொண்ணார்

காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்

மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே

கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104,4) திருஞானசம்பந்தர் பெருமானை நிகரில்லாப் பவளம் என்று குறிப்பிடுகின்றார். நிகரில்லா என்ற சொல்லினை பவளத்தை என்ற சொல்லின் முன்னே வைத்து பொருள் காணவேண்டும். செல்வம்=திருவருள்; பெருமானின் திருவருளைப் புகழ்ந்து ஏத்தும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தேய்ந்தழிய அவர்கள் வினை அற்றவர்களாக மாறிவிடுவார்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

நீர்கொள் சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப்

பார்கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தைப் பசும்பொனை விசும்பாரும்

கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம் தன்னைச்

சீர்கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணமாமே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.10.6) திருஞானசம்பந்தர் இறைவனை, இராமபிரானின் பழி போக்கிய இணையிலி என்று குறிப்பிடுகின்றார். அலைகள் சூழ்ந்த கடலில் அணை கட்டி, இலங்கை செல்வதற்கு இராமர் வழி வகுத்த தன்மை பாடலின் முதலடியில் குறிப்பிடப் படுகின்றது. பணையிலங்கும்=பருத்து விளங்கும்; இறுத்த=அறுத்து வீழ்த்திய: இணையிலியாக இருக்கும் காரணத்தால், தனக்கு தக்க துணை இல்லாதவனாக பெருமான் இருக்கும் தன்மையும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. எல்லா விதமான ஆற்றலும் உடையவனாக விளங்கும் பெருமானுக்கு துணை தேவையில்லை அல்லவா.

அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்

பணையிலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய

இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்

துணையிலி தூமலர்ப் பாதம் ஏத்தத் துயர் நீங்குமே

பாவநாசத் திருப்பதிகத்தின் பாடல் ஒன்றினில் (பற்றற்றார் சேர் பழம்பதி என்று தொடங்கும் பதிகம் 4.15.5) அப்பர் பிரான், பெருமானை துணையிலி என்று குறிப்பிடுகின்றார். தனக்கு நிகராகவோ தன்னை விடவும் உயர்ந்தவராகவோ எவரேனும் இருந்தால் தானே அவர்களை தனக்குத் துணையாக வைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமான், தனக்கு துணையாக எவரைக் கொள்ள முடியும். எனவே தான் துணையிலி என்று பொருத்தமாக இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். குருமணி=நல்ல நிறமுடைய மாணிக்கம்: குடமூக்கு=கும்பகோணத்தில் உள்ள கும்பேசர் கோயில். உள்ளம் மகிழ்ச்சியுடன் இருந்ததால், உடலும் குளிர்ந்ததாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். குருமணி என்பதற்கு குருநாதன் என்றும் பொருள் கொள்ளலாம். விடமுணி=விடம் உண்ணி, விடம் உண்டவன்;

கோலக்காவில் குருமணியைக் குடமூக்கு உறையும் விடமுணியை
ஆலங்காட்டில் அந்தேனை அமரர் சென்னியாய் மலரைப்
பாலில் திகழும் பைங்கனியைப் பராய்த்துறையெம் பசும்பொன்னைச்
சூலத்தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே

நெல்வாயில் அரத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.3.1) அப்பர் பிரான், பெருமானை, திறமையில் தனக்கு ஒப்பாக வேறொருவர் இல்லாதவர் என்று குறிப்பிடுகின்றார். கடவுள்=சொல்லையும் உணர்வையும் கடந்தவன்: நஞ்சுண்ட உடல் உள்ளவன் என்று நஞ்சுண்ட பின்னரும் இறவாமல் உயிருடன் இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அடல்=தான் நினைத்தபோது வெளிப்பட்டு, தான் நினையாதபோது மறைந்திருக்கும் தன்மை:சுடர்=ஞானச்சுடர்; ஒப்பாரி=ஒப்பாவர் எவரும் இல்லாத தன்மை. இறைவன் தனக்கு உவமையாக சொல்வதற்கும் எவரும் இல்லாதவன் என்று பொருள்.

கடவுளைக் கடலுள் எழு நஞ்சுண்ட

உடல் உளானை ஒப்பாரி இலாத எம்

அடலுளானை அரத்துறை மேவிய

சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.46.4) அப்பர் பிரான் இறைவனை, தன்னை நேர் ஒப்பிலாத தலைவன் என்று அழைக்கின்றார்.நேர்=ஒத்த; சென்ற பாடலில் தனது செவிலித் தாய் கேட்ட கேள்விக்கும், தலைவி விடை அளிப்பதாக இந்த பாடல் அமைந்துள்ளது போலும். இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில், பெருமான் பால் ஆராத காதல் கொண்ட தலைவியின் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்ணுற்ற ஊரார், தலைவியை பழித்துக் கூறுவதாகவும், அந்த பழிச்சொற்களைக் கேட்கும் தலைவியின் தாய் தலைவியிடம் உண்மை நிலை யாது என்று வினவுவதாகவும் அமைந்துள்ளது.தலத்தின் தலமரம் புன்னை. மேலும் புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் அதிகமாக காணப்பட்ட தலம்.

மின்னின் நேரிடையாள் உமை பங்கனைத்

தன்னை நேர் ஒப்பிலாத தலைவனைப்

புன்னைக் கானல் பொழில் புகலூரனை

என்னுளாக வைத்து இன்புற்று இருப்பனே

தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.1.2) அப்பர் பிரான், பெருமானை, மற்றாரும் தன்னொப்பார் இல்லாதான் என்று குறிப்பிடுகின்றார். அற்றார்=வேறு துணை இல்லாதவர்கள்; அலந்தார்கள்=துன்பம் அடைந்தவர்கள்: உலகத்தில் பலருக்கு, அவரது உறவினர்கள் துணையாக இருப்பதை நாம் காண்கின்றோம். அவ்வாறு உறவினர் ஏதும் இல்லாதார்க்கு இறைவன் உறுதுணையாக இருப்பதை அப்பர் பிரான் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பது ஆன்றோர் வாக்கு. கங்கையினைக் குறிப்பிடும் அப்பர் பிரானுக்கு, பல சிவத் தலங்களைத் தனது கரையில் கொண்டுள்ள காவிரி நதி நினைவுக்கு வந்தது போலும். தமிழ் மக்களுக்கு காவிரி நதியை நினைத்தாலே தனிப் பெருமிதம் தோன்றும்.கங்கையில் புனிதமாய காவிரி என்று தொண்டரடிப் பொடியாழ்வார் ஒரு பாசுரத்தில் குறிப்பிடுவார். ஒரு புறத்தில் காவிரி நதியால் சூழப்பட்ட வலஞ்சுழி தலத்தில் உறையும் பெருமானே என்று குறிப்பிட்டு, கங்கையை குறிப்பிட்ட அதே அடியில் காவிரி நதியையும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

கற்றானைக் கங்கை வார்சடையான் தன்னைக் காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை ஆரூரும் புகுவானை அறிந்தோமன்றே

மற்றாரும் தன்னொப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும்

பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

திருவதிகை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (6.4.11) பெருமானை நேர் ஒருவர் இல்லாதான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.பொடி=திருநீறு; நெடியான்=நீண்ட திரிவிக்ரமனாக உருவம் எடுத்து மூவுலகையும் தனது இரண்டு அடிகளால் அளந்த திருமால்: நெடிது வளர்ந்த திருமாலாலும் காண முடியாத வகையில், பாதாளத்தையும் ஊடுருவி, விண்ணையும் கடந்து நின்ற சோதியின் தன்மை, நெடியான் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது. புவலோகம்=பூவுலகுக்கு மேல் உள்ள உலகம் என்பது பொதுவான பொருள். எனினும், பெருமான் பூலோகத்தில் பலியேற்பதால் பூலோகம் என்று நாம் பொருள் கொள்வது பொருத்தம்.

நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே

கொடியேறு கோல மாமணி கண்டனே கொல்வேங்கை அதளனே கோவணவனே

பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே புரி நூலானே

அடியாரை அமருலகம் ஆள்விக்குமே அவனாகில் அதிகை வீரட்டனாமே

திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.8.3) அப்பர் பிரான், தனது தன்மைக் கண் தானேயாக இருப்பவன் இறைவன் என்று கூறுகின்றார். அதாவது இறைவனின் தன்மை கொண்டவர்களாக வேறொருவரும் இல்லை என்று உணர்த்துகின்றார். நாவாய்=தோணி, கப்பல்; கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்று பெரியோர்கள் சொல்லிய வண்ணம், ஞானம் என்பது பெரிய கடல். அதனை முற்றும் உணர்ந்து கரையினை அடைவது என்பது மிகவும் அரிது. ஆனால் இறைவனின் அருளினால் ஞானத்தை அடையமுடியும் என்பதை பல அருளாளர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகின்றது. முற்றிலும் உணர்ந்த இறைவன், அந்த ஞானப் பெருங்கடலைக் கடந்த தோணியாக விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. புராணன்=பழமை வாய்ந்தவன்; சாரணன்=எங்கும் இயங்குபவன்; தக்கோர்=மெய்யுணர்வு உடையவர்கள்;மெய்யுணர்வு உடையவர்களே இறைவன் முழுமுதற் பொருள் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்பதால், இவ்வாறு அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இதன் மூலம் மெய்யுணர்வு இன்றி மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மாந்தர்களால், பெருமானின் முழுமுதல் தன்மையை புரிந்து கொள்ள முடியாது என்பதயும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன் காண் ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன

பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரிசடை மேல் புனலேற்ற புனிதன் தான் காண்

சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மைக் கண் தானே காண்

தக்கோர்கெல்லாம்

காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண்ணுளானே

திருவாலவாய் (மதுரை) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.19.10) அப்பர் பிரான், பெருமானை, துலையாக ஒருவரையும் இல்லாதான் என்று கூறுகின்றார். துலை என்ற சொல்லுக்கு தராசுத்தட்டு என்பது ஒரு பொருள்; தராசுச் தட்டுகள் ஒன்றுக்கொன்று நேராக இருக்கும் வண்ணம் வைத்துத் தானே பொருளினை அளக்கின்றனர். அதனால் துலை என்ற சொல், நேர், நிகர் என்ற பொருள் படவும் கையாளப்படுகின்றது. இங்கே நிகராக என்ற பொருளில் வருகின்றது; மன்னுதல்=நிலையாக இருத்தல்; துலையாக, தனக்கு நேராக வேறொருவர் இல்லாதவர் என்று பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் கூறுவது நமக்கு திருவாசகம், திருவண்டப்பகுதியில், தன்நேர் இல்லோன் தானே காண்க என்ற சொற்றொடரினை நினைவூட்டுகின்றது.

மலையானை மாமேரு மன்னினானை வளர் புன்சடையானை வானோர் தங்கள்

தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானைத் தானே எங்கும்

துலையாக ஒருவரையும் இல்லாதானைத் தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த

சிலையானைத் தென்கூட திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.24.10) கடைப் பாட்லில் அப்பர் பிரான் மற்றாரும் தன்னொப்பார் இல்லான் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். பெருமானின் திருவுருவத்தினை நமது கண் முன்னே கொண்டு நிறுத்தும் இந்த பதிகத்தின் கடைப் பாடலில், வழக்கமாக இராவணனின் கயிலை நிகழ்ச்சியை குறிப்பிடும் அப்பர் பிரான், அந்த வழக்கத்திலிருந்து இங்கே நழுவுகின்றார். கடைப் பாடலாக பதினோராவது பாடல் இருந்து அந்த பாடல் சிதைந்ததா, அல்லது இராவணனின் கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படாததற்கு காரணம் ஏதேனும் உள்ளதா என்பது புரியவில்லை.பொற்றாது=பொன் பொடி போன்ற மகரந்தம் கொண்ட கொன்றை மலர்; செற்றான்=அழித்தான்;

பொற்றாது மலர்க்கொன்றை சூடினான்காண் புரிநூலன்காண் பொடியார் மேனியான் காண்

மற்றாரும் தன்னொப்பார் இல்லாதான்காண் மறையோதிகாண் எறிநீர் நஞ்சுண்டான் காண்

எற்றாலும் குறை ஒன்றும் இல்லாதான்காண் இறையவன்காண் மறையவன்காண்

ஈசன் தான் காண்

செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தான்காண் திருவாரூரான்காண் அவனென் சிந்தையானே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.24.5) அப்பர் பிரான், பெருமானை நிகரேதும் இல்லாதான் என்று குறிப்பிடுகின்றார்.கார்=மேகம்; குடுமி=உச்சி;

காரேறு நெடுங்குடுமிக் கயிலாயன்காண் கறைக்கண்டன்காண் கண்ணார் நெற்றியான்காண்

போரேறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ணரும்

பல் குணத்தினான் காண்

நீரேறு சுடர்ச் சூலப் படையினான் காண் நின்மலன் காண் நிகரேதும் இல்லாதான் காண்

சீரேறு திருமாலோர் பாகத்தான் காண் திருவாரூரன் காண் அவன் என் சிந்தையானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.26.4) அப்பர் பிரான், இறைவனை ஒப்பிலா ஒருவன் என்று குறிப்பிடுகின்றார்.வைப்பான்=படைப்பான்; களைதல்=அழித்தல்; ஊழிக் காலத்தில் அழிந்த உலகத்தை மீண்டும் பெருமான் தோற்றுவிக்கும் செயல் இங்கே குறிப்பிடப் படுகின்றது. நித்திலம்=முத்து. அப்பாலைக்கு அப்பால் என்று நிலையற்ற உலக பொருட்கள் ஏற்படுத்தும் மாயையும் அந்த மாயையைக் கடந்த உயிர்களையும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

மெய்ப்பால் வெண்ணீறு அணிந்த மேனியானை வெண்பளிங்கின் உள் பதித்த சோதியானை

ஒப்பானை ஒப்பிலா ஒருவன் தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம்

வைப்பானைக் களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தேமன்னினானை

அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்தவாறே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் ((6.29.2) அப்பர் பிரான், இறைவனை தன்னொப்பார் இல்லாதான் என்று குறிப்பிடுன்றார்.மின்னான்=மின்னல் போன்று ஒளியுடையவன்; பொங்கு=விளங்கித் தோன்றும்; இந்த பாடலில் வேழத்தின் உரியை விரும்பி போர்த்தவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். யானையின் பசுந்தோல் உடலுக்கு கெடுதி விளைவிக்கும் என்பதையும் கருதாது, தனது உடலின் மீது யானைத் தோலை விருப்பத்துடன் போர்த்துக் கொண்டவன் சிவபெருமான். அனைவரையும் அச்சுறுத்திய ஆலகால நஞ்சே பெருமானுக்கு எந்த விதமான கேட்டினையும் விளைவிக்காத போது, யானையின் பசுந்தோல் அவனை என்ன செய்ய முடியும். தன்னான்=தன் வயத்தனாக இருத்தல். பெருமானின் எட்டு அரிய குணங்களில் இது ஒன்று.

பொன்னே போல் திருமேனி உடையான் தன்னைப் பொங்கு வெண்ணூலானைப் புனிதன் தன்னை

மின்னானை மின்னின் இடையாள் பாகன் தன்னை வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான் தன்னைத்

தன்னானைத் தன்னொப்பார் இல்லாதானைத் தத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனி

அன்னானை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.32.1) அப்பர் பிரான் பெருமானை, மற்றொருவர் ஒப்பிலா மைந்தா என்று அழைத்து போற்றுகின்றார். கற்றவர்கள்=மெய்ப்பொருளை உண்மையாக உணர்ந்தவர்கள்; உண்ணுதல்=அனுபவித்தல்; கனி=பயன், அற்றவர்கள்=சிவபிரானைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லாதவர்கள்: கதி=முக்திப்பேறு; மைந்தன்=வலிமை வாய்ந்தவன்; மனிதர்களை விடவும் வானவர்கள் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பினும், அவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கித் தவிப்பவர்கள் தான். எனவே அவர்களது பிறவிப்பிணியை தீர்ப்பவராகவும் பெருமான் தான் விளங்குகின்றார் என்பதை உணர்த்தும் வண்ணும் வானவர்கள் போற்றும் மருந்தே என்று பெருமானை அப்பர் பிரான் இந்த பாடலில் அழைக்கின்றார்.

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி

அற்றவர்கட்கு ஆரமுதமானாய் போற்றி அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி

மற்று ஒருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி

செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி

திருவாரூர் அரநெறி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.33.6) அப்பர் பிரான் பெருமானை, தன்னொப்பில்லாத் தலைவன் என்று அழைக்கின்றார்.மறிகடல்=மடிந்து வரும் அலைகள் நிறைந்த கடல்; மைந்தன்=வல்லமை வாய்ந்தவன்; மேயவன்=பொருந்தி இருப்பவன், அனைத்து உயிர்களிலும் பொருந்தி இருக்கும் பெருமானின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

தாயவனை எவ்வுயிருக்கும் தன்னொப்பில்லாத் தகு தில்லை நடம் பயிலும் தலைவன் தன்னை

மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறிகடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன் தன்னை

மேயவனைப் பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே

ஆயவனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே

திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.39.8) அப்பர் பிரான், இறைவனை, தனது இயல்புடன் வேறொருவர் இல்லாதவன் என்று கூறுகின்றார். இயலும்=செய்யப்பட்டது போன்று. தாங்கரிய சிவம் என்பதற்கு சுவையான மற்றொரு விளக்கமும் கொடுக்கப் படுகின்றது. ஞாயிற்றின் ஒளியினை நமது கண்கள் நேரே ஏற்க முடியாமல், கண்கள் கூசுவதை நாம் அனைவரும் உணர்வோம். ஆனால் சூரியனின் ஒளி நமது வாழ்க்கைக்கு இன்றியமையாததாக உள்ளது. இறைவனின் கருணையினை சூரியனின் ஒளிக்கு ஒப்பிட்டு, அவனது பேரருளையும் பேராற்றலையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனும் உண்மை இங்கே தாங்கரிய சிவம் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. இறைவனது பேரருளை நாம் பெற்று அனுபவிக்கவே, சக்தி எனும் நிலைவாயில் உள்ளது என்பதால் சக்தியை இறைவனின் கருணை வடிவமாக, அருள் வடிவமாக நமது பெரியோர்கள் கண்டனர்.

பொன்னியலும் திருமேனி உடையான் கண்டாய் பூங்கொன்றைத் தார் ஒன்று அணிந்தான் கண்டாய்

மின்னியலும் வார்சடை எம் பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய்

தன்னியல்பார் மற்றொருவர் இல்லான்கண்டாய் தாங்கரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்

மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.42.2) இறைவனை ஒப்பார் இல்லாதவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.மின்னானை=மின்னலாக இருந்து ஒளி தருபவன்; உருமு=இடி; ஒளியின் வேகத்தை விடவும் ஒலியின் வேகம் குறைவு என்பதால் நாம் மின்னலை முன்னர் காண்கின்றோம், அதன் பின்னரே இடியின் ஓசையைக் கேட்கின்றோம். எனவே இந்த வரிசை முறையை பின்பற்றி மின்னலை முன்னமும் இடியை பின்னரும் வைத்து அப்பர் பிரான் பாடியுள்ளார். வெண்முகிலாய் மழை பொழிவான் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு சற்றே வியப்பினைத் தரலாம்.நீர்த்திவலைகளை அதிகமாக உள்ளடக்கியதால் மேகங்கள் கருத்து காணப் படுவதையும், அத்தகைய மேகங்கள் ஒன்றோடு ஒன்று இடித்து மழை பொழிவதையும் நாம் அறிவோம். அப்படி இருக்கையில் வெண்முகில் என்று சொல்வதேன். நம்மைச் சற்று சிந்திக்க வைக்கும் தொடர் இது. கரு மேகங்களாக இருப்பினும், ஒன்றுடன் ஒன்று இடிப்பதால் ஏற்படும் மின்னல் ஒளியின் பின்னணியில், மேகங்கள் வெண்மை நிறத்துடன் காணப்படுவதை இங்கே குறிப்பிடும் வண்ணம் மழை பொழியும் வெண்முகில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

மின்னானை மின்னிடைச் சேரும் உருமினானை வெண்முகிலாய் எழுந்து மழைபொழிவான் தன்னைத்

தன்னானைத் தன் ஒப்பார் இல்லாதானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தையாகி

என்னானை எந்தை பெருமான் தன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே

அன்னானை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்துய்ந்தேனே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.3) அப்பர் பிரான், தன்னொப்பில்லா தத்துவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.ஏயவன்=நடத்துபவன் இயல்பு=இயக்கம், நடை; தத்துவன்=உயர்ந்த பொருள். அனைத்துப் பொருட்களையும் நடத்துபவனும், அனைத்து உயிர்களின் இயக்கமாக உள்ளவனும், துன்பக் கலப்பு ஏதும் இல்லாமல் இன்பம் உடையவனாக இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருப்பவனும்,உலகினில் தனக்கு ஒப்பாக வேறொருவர் இல்லாத உயர்ந்த பொருளாக இருப்பவனும், உத்தமனாக இருப்பவனும், உலகெங்கும் பரவி இருப்பவனும்,அனைத்து அண்டங்களுக்கும் அப்பாற்பட்டவனும், மனம் உருகி உடலின் உரோமங்கள் மயிர்க்கூச்செறிய அழுது வணங்கித் தொழும் அடியார்களின் வாயிலிருந்து வரும் மொழிகளாக இருப்பவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான் என்று அப்பர் பிரான் கூறும் வண்ணம் அமைந்துள்ள பாடல்.

ஏயவன்காண் எல்லார்க்கும் இயல்பானான்காண் இன்பன்காண் துன்பங்கள்இல்லாதான்காண்

தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப்பில்லாத் தத்துவன்காண் உத்தமன்காண் தானேயெங்கும்

ஆயவன்காண் அண்டத்துக்கு அப்பாலான்காண் அகங்குழைந்து மெய்யரும்பி அழுவார் தங்கள்

வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே

திருக்கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.4) அப்பர் பிரான், பெருமானை நிகரொன்றும் இல்லாதான் என்று குறிப்பிடுகின்றார்.கொக்கரை=ஒரு இசைக் கருவி; நிருபன்=தலைவன், அரசன்; நிழல்=ஒளி; மாறு=பகை; மாறுபட்டு, ஆகமக் கொள்கையிலிருந்து மாறுபட்டு வாழ்ந்தவர்கள்;

ஆறேறு செஞ்சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான் தான் காண்

நீறேறு நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகரொன்றும் இல்லாதான் காண்

கூறேறு கொடு மழுவாட் படையினான்காண் கொக்கரையன்காண் குழுநல் பூதத்தான் காண்

மாறாய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.52.7) அப்பர் பிரான், பெருமானை, தன்னொப்பார் இல்லாதான் என்று குறிப்பிடுகின்றார்.இந்த பாடலில் திருமாலுக்கு இறைவன் அளித்த சக்கரப்படை எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்று உணர்த்துகின்றார். கற்பொலி தோள்= மலையைப் போன்று வலிமையுடன் விளங்கிய தோள்கள்; எப்போதும் தனது வில்லுடன் காட்சி அளித்தவன் அர்ஜுனன் என்பதை உணர்த்தும் பொருட்டு விற்பொலி தோள் விசயன் என்று கூறுகின்றார். தத்பரம் என்ற வடமொழிச் சொல் தற்பரம் என்று மாற்றப் பட்டுள்ளது. தத் என்றால் அது என்று பொருள். தத் என்ற முதற்சொல் மாயையையும் இரண்டாவது சொல் உயிரினையும். உணர்த்துகின்றது. மாயையினும் உயிர் மேம்பட்ட பொருளாகவும், அந்த உயிரினையும் மேம்பட்ட பொருளாக இறைவனும் இருக்கும் நிலை, தற்பரமாம் தற்பரமாய் நிற்கின்றான் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. பரம்=மேலானது; அனைத்து உயிர்களினும் மேம்பட்டவன் இறைவன் என்பதே இதன் பொருள்.

கற்பொலி தோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக்கு அருள் செய்த கருணையான் காண்

விற்பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய்ப் போர் பொருது காட்டினான் காண்

தற்பரமாம் தற்பரமாய் நிற்கின்றான்காண் சதாசிவன்காண் தன்னொப்பார் இல்லாதான்காண் வெற்பு அரையன் பாவை விருப்புளான் காண் விண்ணிழி தண்வீழி மிழலையானே

திருக்கயிலாயத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.55.5) அப்பர் பிரான், இறைவனை, நேர்வார் ஒருவரையும் இல்லாய் என்று அழைத்து போற்றுகின்றார். நேர்வார்=ஒப்பானவர். பேர்= புகழ்; நீராவியான நிழல்=நீருக்குள் ஆவியாகவும், நீருக்குள் நிழலாகவும் என்றும் பொருள் கொள்வார்கள்.நீரில் வாழும் உயிர்களின் நிழல் பிரிந்து தோன்றாது நீருடன் கலந்து காணப்படுவது போல், அருவமாக உயிருடன் கலந்து இருப்பவன் பெருமான் என்றும் விளக்கம் சொல்வதுண்டு.

ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

பேராகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி

நீராவியான நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி

காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.64.3) அப்பர் பிரான், பெருமானை துணையிலி என்று குறிப்பிடுகின்றார். துணை என்ற சொல்லுக்கு ஒப்பு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தனது திருமேனியில் திருநீறு பூசியவனும், நீராகவும் தீயாகவும் மற்றுள்ள பூதங்களாகவும் இருப்பவனும், வெம்மை நிறைந்த மழுப்படையும் உடுக்கையையும் கையில் ஏந்தியவனும், தனது உள்ளங்கையில் தீயினை ஏந்தியவாறு நடனம் ஆடுபவனும்,உலகிலுள்ள அனைத்து உயிர்களின் பிறப்புக்கு காரணமாக இருப்பவனும், இவ்வாறு மற்றவர்களின் பிறப்புக்கு காரணமாக இருந்தாலும் பிறப்பு எனப்படும் குறையில்லாமல் இருப்பவனும், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவனும், தன்னைத் துணை என்று நினைத்துத் தொழும் அடியார்களின் உள்ளத்தில் இருந்து அவர்களை காப்பவனும், பலவிதமான புகழ்கள் உடையவனும், புள்ளிகள் உடலில் உடைய பாம்பினையும் கங்கை நதியையும் தனது விரிந்த சடை மேல் ஏற்றவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் நான்காவது பாடலில் அப்பர் பிரான், பெருமானை தன்னொப்பில்லாத் தத்துவன் என்று குறிப்பிடுகின்றார்.

நீற்றவன் காண் நீராகித் தீயானான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில்

தோற்றவன் காண் தோற்றக் கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணையென்று தொழுவார் உள்ளம்

போற்றவன் காண் புகழ்கள் தமை படைத்தான் தான் காண் பொறியரவும் விரிசடை மேல் புனலும் கங்கை

ஏற்றவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.3) அப்பர் பிரான், பெருமானை, மற்றொருவர் தன்னொப்பு இல்லாதார் என்று குறிப்பிடுகின்றார். கயவர்=கீழ் மக்கள்; ஏரான்=எழுச்சி உடையவன், சிறப்பு மிக்கவன்; ஏர்=அழகு, ஏரான் என்ற சொல்லுக்கு அழகன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இறைவனை காதலித்து நினைக்க வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அடுத்தவர் பால் வைத்துள்ள அன்பு நாளுக்கு நாள் குறையாமல் மேலும் மேலும் வளரும் நிலை தான் காதல் என்ற சொல்லின் பொருள். அத்தகைய அன்பினை நாம் இறைவனிடம் வைக்க வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

காரானை உரி போர்த்த கடவுள் தன்னைக் காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்

வாரானை மதிப்பவர் தம் மனத்துளானை மற்றொருவர் தன்னொப்பார் ஒப்பிலாத

ஏரானை இமையவர் தம் பெருமான் தன்னை இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க

சீரானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.67.1), அப்பர் பிரான், பெருமானை தன்னொப்பார் இல்லாதான் என்று கூறுகின்றார். ஆளான அடியார்=பெருமானுக்கு அடிமையாக மாறி திருத்தொண்டு செய்யும் அடியார்கள்; ஆளான அடியார்கட்கு அன்பனாக பெருமான் இருந்த தன்மையை,நாயன்மார்களின் சரித்திரத்திலிருந்து நாம் அறிகின்றோம். சண்டீசருக்கு பதவி அளித்தது. திருஞான சம்பந்தருக்கு பொற்றாளம் அளித்தது, முத்துப் பல்லக்கு அளித்தது, முத்துப் பந்தர் அருளியது, உலவாப் பொற்கிழி அருளியது, திருநாவுக்கரசு நாயனாருக்கு பொதிசோறு அளித்தது, அவரது தோள்களில் இடப இலச்சினைகள் பொறித்தது, தனது திருவடியை அவரது தலையினில் வைத்தது, சுந்தரருக்கு வேண்டியபோதெல்லாம் பொருள் அளித்தது முதலான நிகழ்ச்சிகள் அடியார்களுக்கு அன்பனாக விளங்கும் பெருமான் செய்யும் உதவிகள். பெரிய புராணத்தில் உணர்த்தப்படும் கருணைச் செயல்கள் அனைத்தும் இறைவன் அடியார்களுக்கு அன்பனாக இருந்த தன்மையால் எழுந்தது தானே. இவ்வாறு அடியார்களுக்கு உதவும் அன்பனாக விளங்கும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. துளையில்லாத முத்து என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு தோளா முத்துச் சுடர் என்று மணிவாசகர் போற்றித் திருவகவலில் குறிப்பிடுவதை நினைவூட்டுகின்றது. கீள்=கிழிக்கப்பட்ட துணியால் முறுக்கிய கயிறு, கோவணத்தை தாங்குவதற்காக இடுப்பினில் கட்டப்படுவது.

ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க

தாளானை தன்னொப்பார் இல்லாதானைச் சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த

தோளானை தோளாத முத்து ஒப்பானைத் தூ வெளுத்த கோவணத்தை அரையிலார்த்த

கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே

பள்ளியின் முக்கூடல் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் அப்பர் பிரான் (6.69.5) இறைவனை தன்னொப்பார் இலாதான் என்று குறிப்பிடுகின்றார். கார் முகில்=கரிய நிறத்து மேகம்; படிந்தான்=வெளிப்பட நிறைந்தான். நிலத்தில் ஒரு வட்டம் கிழித்து, அந்த வட்டமான நிலத் துண்டினையே சக்கரமாக மாற்றி சலந்தரனை அழித்தவன் சிவபெருமான். இவ்வாறு கையில் எந்த படையுமின்றி சென்றபோது, எதிரே வந்த பலம் வாய்ந்த அரக்கனை வென்ற செய்கை செயற்கரிய செயல் என்பதால் தன்னொப்பார் இல்லாதான் என்று இறைவனை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

அடைந்தார் தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம்

கடிந்தானைக் கார்முகில்போல் கண்டத்தானைக் கடுஞ்சினத்தோன் தன்னுடலைநேமியாலே

தடிந்தானை தன்னொப்பார் இல்லாதனைத் தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்

படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழே நான் உழன்றவாறே

மற்றாரும் தன்னொப்பான் இல்லான் என்ற தொடருடன் திருக்கோடிகா தலத்து பதிகத்தினை (6.81.1) அப்பர் பிரான் தொடங்குகின்றார். அற்றார்=மற்ற பற்று ஏதும் இல்லாமல், சிவபெருமானே தங்களது வாழ்க்கையின் பற்றுக்கோடு என்று வாழும் அடியார்கள்; அற்றான்=தன்மை இல்லாது இருப்பவன்;மறைந்து நிற்கும் தன்மை இல்லாது அவர்களுக்கு வெளிப்படையாக தோன்றுபவன்; அவர்களது மனதினில் நிலையாக தங்கி அவர்களுக்கு அனுபவப் பொருளாகத் தோன்றுபவன்; பெருமான் அணிந்திருக்கும் பாம்புகள், எப்பொதும் பெருமானுடன் இணைந்து இருக்கின்றன. என்வே அவை புற்றில் வசிப்பதில்லை. எனினும் பாம்புகளின் பொதுத்தன்மை குறித்து, புற்றாடு அரவு என்று கூறுகின்றார்.

மற்றாரும் தன்னொப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான்கண்டாய்

புற்றாடு அரவணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்

அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்

குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

படி என்றால் ஒப்பான பொருள் என்று அர்த்தம். அப்பர் பிரான் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.82.7), இறைவனை படி ஒருவர் இல்லாப் படியார் என்று அழைக்கின்றார். காரோணத்து என்றும் இருப்பார் என்று அப்பர் பிரான் காரோணம் தலத்தினை குறிப்பிடுகின்றார்.காரோணம் என்ற பெயருடன் தமிழ்நாட்டில் மூன்று கோயில்கள் உள்ளன, நாகைக் காரோணம், குடந்தைக் காரோணம் மற்றும் கச்சிக் காரோணம் என்பன அவை. நாகைக் காரோணம் மற்றும் குடந்தைக் காரோணம் பாடல் பெற்ற தலங்கள். காய ஆரோகணம் என்ற வடமொழிச் சொல் காரோணம் என்று திரிந்ததாக கூறுவார்கள். காயம் என்றால் உடல். ஆரோஹணம் என்றால் தழுவிக் கொள்ளுதல் என்று பொருள். பல தலங்களை இந்த பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்டு வரும் அப்பர் பிரான், காரோணம் என்று இந்த மூன்று தலங்களையும் குறிப்பிடுகின்றார் போலும். காரோணர் என்று குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, இறைவன் தேவியைத் தழுவிக் கொண்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். கச்சி ஏகம்பம் தலத்தில், தழுவக் குழைந்த நாதராக இறைவன் இருப்பதை நமக்கு நினைவூட்டும் வகையில் ஏகம்பம் மேவி இருந்தார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

கடுவெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும் காரோணத்து என்றும் இருப்பார் போலும்

இடிகுரல் வாய்ப் பூதப் படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும்

படி ஒருவர் இல்லாப் படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம்மூர் போலும்

செடிபடு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும் திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.83.7) அப்பர் பிரான், இறைவனை இணையொருவர் தாமல்லால் யாரும் இல்லார் என்று கூறுகின்றார். தனக்கு இணையாக வேறு எவரும் இல்லாமையால், தானே தனக்கு உவமையாக இருப்பன் இறைவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.இதனையே திருவாசகத்தில் மணிவாசகர் தன்னேர் இல்லோன் தானே காண்க என்று கூறுகின்றார். அணைவு=நெருங்குதல்; அணைதல்=சார்தல்:சாந்து=சந்தனம்; அளறு=சேறு; குழம்பு; அருமருந்தன்ன என்ற சொல் அருமந்த என்று மருவியது; இங்கே மருந்து என்பது அமுதத்தை குறிக்கும்; பணை முலையாள்=பருத்த மார்பகத்தை உடைய பார்வதி தேவி; தணல் முழுகு பொடி=ஊழிக் காலத்தில் அனைத்து உடல்களும் பொருட்களும் எரிந்து அழிந்த பின்னர், அந்த நெருப்பினை மூடியபடி இருக்கும் சாம்பல்; அனைத்தும் அழிந்த பின்னரும் பெருமான் மட்டும் எஞ்சியிருப்பதையும், உலகின் நிலையாமையை உணர்த்தும் வண்ணம் சாம்பலைத் தனது உடலில் பெருமான் பூசியிருப்பதையும் உணர்த்தும் பாடல்.

இணை ஒருவர் தாமல்லால் யாருமில்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார்

அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எல்லாம் அடியார்க்கு ஈவர்

தணல் முழுகு பொடியாடும் செக்கர்மேனித் தத்துவனைச் சாந்து அகிலின் அளறு தோய்ந்த

பணைமுலையாள் பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

திருவோமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.8) அப்பர் பிரான், பெருமானை, தன்னொப்பில்லாத் தழலுருவன் என்று குறிப்பிடுகின்றார். தகை=பெருமை வாய்ந்த; கள்ளாத அடியார்=நெஞ்சினில் கள்ளமும் வஞ்சனையும் இல்லாத அடியார்கள்; ஓர்ந்து=ஆராய்ந்து; இந்த பாடலில் தலைமகன் என்று அப்பர் பிரான் இறைவனை அழைக்கின்றார். தலமகன் என்றால் தலை சிறந்த ஆண்மகன் என்றும், குழுவின் தலைவனாகிய ஆண்மகன் என்றும் பொருள். ஒன்றுக்கொன்று வேறுவேறு இயல்புகளைக் கொண்ட கங்கை நதி, சந்திரன் பாம்பு ஆகிய மூன்றினையும் ஒரே இடத்தில் வைத்து அவர்களுக்கு இடையே இருக்கும் பகையினை தீர்த்த இறைவனின் வல்லமை இங்கே உணர்த்தப் படுகின்றது.

சேர்ந்தோடு மணிக் கங்கை சூடினானைச் செழு மதியும் பட அரவும் உடன் வைத்தானைச்

சார்ந்தோர்கட்கு இனியானைத் தன் ஒப்பில்லாத் தழல் உருவைத் தலைமகனைத் தகை நால்வேதம்

ஓர்ந்து ஓதிப் பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானைக் கள்ளாத அடியார்நெஞ்சில்

சேர்ந்தானை வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

கஞ்சனூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.90.2) அப்பர் பிரான், பெருமானை, மற்றொப்பார் இல்லாதான் என்று குறிப்பிடுகின்றார்.தலை=பிரம கபாலம்; சவம் தாங்கு தோளான்=பிரமன் மற்றும் திருமாலின் உயிரற்ற உடலினைத் தனது தோளில் தாங்கிய கங்காள வடிவினன்; எலும்பு மாலைகளை அணிந்தவன், சாம்பலைத் தனது உடலில் பூசியவன், கங்காள வேடத்தவன் என்று சொல்வதன் மூலம், பெருமானைத் தவிர நிலையான தன்மை உடையவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.

தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானைச் சவம் தாங்கு தோளானைச் சாம்பலானைக்

குலையேறு நறும் கொன்றை முடிமேல் வைத்துக் கோணாகம் அசைத்தானைக் குலமாம் கைலை

மலையானை மற்றொப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும்

கலையானைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே

அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (6.95.7) அப்பர் பிரான், பெருமானை நோக்கி, நின்னாவார் பிறர் அன்றி நீயே ஆனாய் என்று கூறுகின்றார். பெருமான், தான் பிரமனாகவும், திருமாலாகவும், அவர்களுடன் கூட இருந்து, படைத்தல் மற்றும் காத்தல் தொழில்களைச் செய்கின்றார் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. இந்த அடிப்படையில் நமக்கு ஓர் ஐயம் எழுவது இயற்கை. பிரமனோ திருமாலோ அல்லது வேறு எவரோ, சிவபெருமானாக இருப்பரோ என்பது தான் அந்த ஐயம். அந்த ஐயத்தைத் தெளிவிக்கும் வண்ணம் நின்னாவார் பிறர் அன்றி நீயே ஆனாய் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். ஏழை=அறிவில் குறைந்தவன்; பொதுவாக ஏழை என்றால் செல்வம் இல்லாத வறியவர்கள் என்ற பொருளில் இந்நாளில் பயன்படுத்தப் படுகின்றது. பண்டைய இலக்கியங்களில் ஏழை என்ற சொல் அறிவில் குறைந்தோரையும், வலிமை குன்றியவர்களையும், செல்வத்தில் குறைந்தவர்களையும் குறிக்க கையாளப்பட்டுள்ளது. இந்த பாடலில் சிவபெருமானின் பெருமை உயிர்களால் அளவிட்டுக் உணரலாகாத தன்மை குறிப்பிடப் படுகின்றது. சிவபிரான், தனது சிற்றறிவுக்கு எட்டாத பெருமை உடையவன் என்பதால், அப்பர் இங்கே ஏழை என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்றார்.

நின்னாவார் பிறர் அன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்தும் ஆனாய்

மன்னானாய் மன்னவர்க்கோர் அமுதம் ஆனாய் மறைநான்கும் ஆனாய் ஆறங்கம் ஆனாய்

பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ்தக்க பொருளே உன்னை

என்னானாய் என்னானாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே

இறைவன் தனக்கு உவமையாக சொல்வதற்கும் எவரும் இல்லாதவன் என்று கூறும் அப்பர் பிரானின் திருத்தாண்டகப் பாடல் (6.97.10) ஒன்றினை நாம் இங்கே காண்போம். மயானத்தில் உறைபவன், நீண்ட சடையினை உடையவன் என்று நாம் சொல்லும் இறைவன், அந்த அளவில் மட்டும் நிற்பதில்லை,அவனுக்கு உவமையாக சொல்வதற்கு எவரும் இல்லை: உலகப் பொருட்களில் அவன் ஒருவன் அல்லன்; எந்த ஒரு ஊருக்கும் உரியவனல்லன்: அனைத்து ஊர்களுக்கும் உரிமையானவன்; எந்த பொருளும் அவனுக்கு உவமையாக இல்லாதவன், அவனது திருவருளைக் கண்ணாகக் கொண்டு, நாம் அவனைக் கண்டாலும், அவன் இந்நிறத்தன், இந்த தன்மையன், இந்த உருவத்தில் இருப்பவன் என்று நம்மால் எழுதிக் காட்டமுடியாது என்று இந்த பாடலில் அப்பர் பிரான் சொல்கின்றார்.

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னில் அல்லான்

ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன் ஒரூரன் அல்லன் ஓர் உவமனில்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்று எழுதிக் காட்டொணாதே

சங்கிலியாரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர், அவருக்கு கொடுத்த சத்தியத்தின் காரணமாக திருவொற்றியூரை விட்டு அகல முடியாத சூழ்நிலையில் இருந்த சுந்தரருக்கு ஆரூர் பெருமானைக் காண வேண்டும் என்று தீராத ஆசை, ஒரு நாள் ஏற்பட்டது. ஆரூர்ப் பெருமானின் மீது மிகவும் அதிகமான பற்று வைத்திருந்த தான், எந்த தன்மையால் ஆரூர் இறைவனை விட்டு இவ்வாறு பிரிந்து இருக்கின்றேன் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்திய வண்ணம், திருவொற்றியூரில் இருந்த வண்ணம் ஆரூர்ப் பெருமானை நினைத்து பாடிய திருப்பதிகம். இந்த பதிகத்தின் பாடலில் (7.51.5)ஒப்பரிய குணம் உடைய இறைவனை, தனக்கு இணையாக வேறு எவரும் இல்லாத இறைவனை எவ்வாறு பிரிந்திருக்க முடியும் என்ற தனது ஏக்கத்தினை வெளிப்படுத்துகின்றார். ஒப்பரிய குணம் என்று பெருமானின் அரிய எட்டு குணங்கள் உணர்த்தப் படுகின்றன என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் ஆகிய இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபிரானது குணங்களாக கூறப்படுகின்றன. இந்த ஒப்பரிய எட்டு குணங்களை உடைய இறைவன் என்று உணர்த்தும் முகமாக,இறைவனை எண்குணத்தான் என்று அருளாளர்கள் அழைக்கின்றனர். அணைவின்றி=சென்றடைந்து சார்ந்து வாழாமல்; இந்த பதிகம் பாடியபோதே எவ்வாறேனும் திருவாரூர் சென்று தியாகேசனைக் காண்பது என்ற முடிவுக்கு சுந்தரர் வந்த நிலையினை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது. பரிசு=தன்மை;நிலவுலகத்தில் வாழும் மனிதர்களை விடவும், தேவர்களை விடவும் பல விதங்களில் உயர்ந்தவராகிய திருமாலை, செப்பரிய திருமால் என்று குறிப்பிடுகின்றார். செப்பரிய திருமாலும் எளிதில் பெருமானின் தன்மையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார்.

செப்பரிய அயனோடு மால் சிந்தித்து தெரிவரிய

அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன்

ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றி

எப்பரிசு பிரிந்து இருக்கேன் என் ஆரூர் இறைவனையே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.68.1) சுந்தரர், தன்னொப்பிலானை என்று பெருமானை அழைக்கின்றார். சம்பு=இன்பத்தை உண்டாக்குபவன்; கும்பம்=குடம்; யானையின் தலைக்கு உவமையாக சொல்லப் பட்டுள்ளது.

செம்பொன் மேனி வெண்ணீறு அணிவானைக் கரிய கண்டனை மாலயன் காணாச்

சம்புவைத் தழல் அங்கையினானைச் சாம் வேதனைத் தன்னொப்பிலானைக்

கும்ப மாகரியின் உரியானைக் கோவின் மேல் வரும் கோவினை எங்கள்

நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.76.1) சுந்தரர், பெருமானை பொருவனார் என்று அழைக்கின்றார். பொருவனார் என்ற சொல்லுக்கு தமக்குத் தாமே உவமையாக இருப்பவ்ர் என்று திரு வ்.சு. செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் பொருள் கொள்கின்றார். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமானுக்கு அவர் ஒருவர் தாமே உவமையாக இருக்க முடியும். இந்த சொல்லுக்கு மாறுபடும் தன்மை உடையவர் என்று பொருள் கொண்டு, தீயவர்களுடன் மாறுபடும் தன்மை உடையவர் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. இரண்டுமே இங்கே பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். மருவார்=நெருங்காதவர்; தன்னை நெருங்கி பணியும் மனிதர்களின் நினைவில் பெருமான் வருவதையும், தன்னை நெருங்காமல் தொலைவில் நிற்கும் மனிதர்களை பெருமான் தவிர்ப்பார் என்றும் இந்த பாடலில் சுந்தரர் உணர்த்துகின்றார். திருவனார்=திருவாகிய இலக்குமி தேவியை உடைய திருமால்; திருமால் இந்த தலத்து பெருமானை வழிபட்டு, இலக்குமி தேவியைத் தனது மனைவியாக பெற்றார் என்பது தலவரலாறு. ஒருவனார்=ஒப்பற்றவர்;

பொருவனார் புரிநூலர் புணர்முலை உமையவளோடு

ம்ருவனார் மருவார் பால் வருவதும் இல்லை நம் அடிகள்

திருவனார் பணிந்தேத்தும் திகழ் திருவாஞ்சியத்து உறையும்

ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே

திருவாசகம் திருச்சதகத்தில் உள்ள காருண்யத்து இரங்கல் பதிகத்தின் முதல் பாடலில் (8.5.61), மணிவாசக அடிகளார் ஒப்பில் ஒருவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். விடலை= இளையவன்; அனைத்து உயிர்களும் தாங்கள் தங்கியிருந்த உடல்களை விட்டுப் பிரிந்த பின்னரும், எஞ்சி இருக்கும் தன்மை உடைய இறைவனை, இளையோன் என்று கூறுகின்றார். மெய்ப்பொருளாகிய இறைவனின் தன்மையை உணர்ந்து கொண்ட பின்னர், தனது நெஞ்சத்திற்கு அதனை அறிவுறுத்தி, தனது அகப்பற்று மற்றும் புறப்பற்று ஆகிய இரண்டையும் சுட்டெரித்து, தனது மனதினை சுத்தம் செய்து கொண்ட அடிகளார், தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றார். இவ்வாறு தனது நெஞ்சத்தை மாற்றிய பின்னர், தான் இறைவனை தியானித்து அவநது நினைவில் ஆழ்ந்திருக்கும் தன்மையை அடைந்த அடிகளார், இறைவன் தன்பால் இரக்கம் கொண்டு அருள் புரியும் காலம் வருவதை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றார். தனக்கு காட்சி கொடுக்கும் இறைவனிடம், தனது உலக வாழ்க்கையினை முடித்து, தன்னுடன் இறைவன் தன்னை (அடிகளாரை)உடனழைத்துச் செல்ல வேண்டும் என்ற அவாவினை இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான

விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்

ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை

நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி

நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் பதினாறாவது பாடலில், மணிவாசகர், சிவபிரானுக்கு ஒப்பு அவர் ஒருவர் தான் என்று கூறுகின்றார். ஒப்புமை கூறுவதற்கு வேறு எவரும் இல்லாத காரணத்தால், சிவபெருமானுக்கு ஒப்பு சிவபெருமான் தான் என்ற கருத்தில், மெய்யே உன்னை ஒப்பாய் என்று, நீத்தல் விண்ணப்பம் பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். தனக்கு உவமை இல்லாத தன்மையனாக சிவபிரான் உள்ள தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது.

என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்

மின்னை ஒப்பாய் விட்டுடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே

உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே

அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும்பொருளே

நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் இருபத்தொன்பதாவது பாடலில், மணிவாசகர், இறைவனை, ஒப்பிலாதவனே என்று அழைக்கின்றார். உற்றார் உறவினர்களிடமிருந்து தன்னை நீக்கிய பெருமான், அவர்கள் பால் தான் வைத்திருந்த பாச்த்தைக் களைந்தார் என்றும், தன்னுடன் பொருந்தி இருந்த பல விதமான குற்றங்களையும் களைந்து தன்னை தூயவனாக்கிய தன்மையை பாடலின் முதலடியில் உணர்த்தும் அடிகளார், அவ்வாறு தூயவனாக்கிய தன்னை பெருமான் விட்டு விடலாமா என்று பெருமானை நோக்கி வினவுகின்றார். கொற்றச் சிலை=வெற்றி பொருந்திய வில்; விலங்கல்=மலை, இங்கே மேரு மலை;பெருமான் தன்னை விட்டுவிட்ட காரணத்தால், ஐந்து புலன்ளும் ஒன்று சேர்ந்து, தயிரைக் கடைகின்ற மத்து வருத்துவது போன்று தன்னை வருத்துவதாக குறிப்பிட்டு, இந்த நிலையிலிருந்து பெருமான் ஒருவன் தான் தன்னை காப்பாற்ற முடியும் என்று அடிகளார் பெருமானை வேண்டுகின்றார்.

குலம் களைந்தாய் களைந்தாய் என்னைக் குற்றம் கொற்றச் சிலையாம்

விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை

அலங்கல் அம் தாமரை மேனி அப்பா ஒப்பிலாதவனே

மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்துறவே

இந்த உலகத்தில் நாம், மற்றவர்களின் பெருமையை உணர்ந்து மதித்து அவர்கள் நம்மை விட பெருமையிலும், குணத்திலும், ஆற்றலிலும் பெரியவர்களாக இருந்தால் அவர்களை நாம் தலைவராக ஏற்றுக் கொள்கின்றோம். சிவபிரானை விட ஆற்றலில் மிக்கவர்களும், பெருமையில் சிறந்தவர்களும்,குணவான்களும் எவரும் இல்லாத காரணத்தால், சிவபிரான் எவரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படவில்லை. அதனால் தனக்குத் தலைவர் என்று ஒருவர் இல்லாத ஒப்பற்ற தலைவராக சிவபிரான் விளங்குகின்றார். இந்தக் கருத்து தான் தலைவர் அல்லாமை என்ற தொடரால் பல பதிகங்களில் விளக்கப் பட்டுள்ளது. தனக்குத் தலைவராக எவரும் இல்லாத காரணத்தால், சிவபிரான் எவரையும் வணங்க வேண்டிய அவசியமும் இல்லை. எனவே அவரது கைகளுக்கு, சேர்ந்து இருப்பது என்ன என்பதே தெரியாது. அதனால் தான் மணிவாசகப் பெருமான் இவரை, சேர்ந்தறியாக் கையன் என்று நயமாக திருவம்மானை பதிகத்துப் பாடலில் (8.8.13) உரைக்கின்றார்.

கையார் வளை சிலம்ப காதார் குழையாட

மையார் குழல் புரளத் தேன் பாய வண்டொலிப்பச்

செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியானை

ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானாய்

கோயில் திருப்பதிகம் நான்காவது பாடலில் (8.22.4), மணிவாசகர், பெருமானை குணங்கள் தாம் இல்லா இன்பமே என்று குறிப்பிடுகின்றார். வேதங்கள் உணர்த்தும் வாழ்க்கைக் கல்வியினை நன்கு கற்று, கற்றதன் பயனை உணர்ந்த முனிவர்கள் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். ஒழிந்தோர்=முனிவர்கள் தேவர்கள் அல்லாத ஏனையோர்; அனைத்து உயிர்களின் உணர்வுகளை கடந்த மெய்பொருள் என்று பெருமானை குறிப்பிடும் அடிகளார், அனைத்துப் பொருட்களுடனும் கலந்து இருந்தாலும் தான் எந்த மாற்றமும் அடையாமல் இருப்பவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். பொருட்கள் அனைத்தும் தோற்றம், இருப்பு, முடிவு ஆகிய மூன்று நிலைகளுக்கு உட்பட்டவை. ஆனால் இறைவனோ தோற்றம் முடிவு ஆகிய நிலைகளுக்கு அப்பாற்பட்டவன்.பொருட்களோடு இணைந்து இருந்தாலும், பொருட்கள் தோன்றும்போது அவன் தோன்றுவதில்லை, பொருட்கள் அழியும்போது அவன் அழிவதுமில்லை.தோற்றமும் முடிவும் அற்ற ஒருவனுக்கு தோற்றம் என்பதும் முடிவு என்பதும் இல்லை அல்லவா. மேலும் இவ்வாறு பொருட்களுடன் இணைந்து இருப்பதால் அவன் எந்த மாற்றமும் அடைவதில்லை. எனவே தான் அவனை இணங்கிலி என்று கூறுகின்றார். சத்துவம், இராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்களின் அடிப்படையில் ஓவ்வொரு உயிரும் இன்பம் அடைகின்றது. ஆனால் இந்த இன்பமும் நிலையாக நீடித்து இருப்பதில்லை. ஆனால் மூன்று குணங்களைக் கடந்த பெருமான் என்றும் மாறாத இன்ப வடிவினனாக இருப்பதுமன்றி, தன்னைச் சரணடைந்தவர்கட்கும் எந்த குறையினையும் வைக்காமல் பூரண இன்பத்தை வழங்குகின்றான். இணங்குதல்=வண்ணம், வடிவு, அளவு, சுவை ஆகிய பண்புகளால் ஒன்றையொன்று ஒத்திருத்தல்; எந்த வகையிலும் தன்னுடன் ஒத்த பொருள் ஏதும் இல்லாத காரணத்தால், பெருமானை இணங்கிலி என்று குறிப்பிடுகின்றார்.

உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு அரும் பொருளே

இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப்பு அறுக்கும் எம் மருந்தே

திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே

குணங்கள் தாம் இல்லா இன்பமே உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே

திருவாசகம் ஆசைப்பத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் (8.25.9), மணிவாசகர் ஒப்புமை இல்லாத பரம்பரன் என்று குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கடி=மிகுந்த: செடி ஆர்= கேடுகள் நிறைந்த, குற்றங்கள் நிறைந்த; யாக்கை=உடல்; கூறுபாடு அற வீசி=முற்றிலும் கழித்து;திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவாக வந்து பாத தீட்சை அளித்து தன்னை ஆட்கொண்ட, இறைவன் சிறிது நேரம் கழித்து மறைந்து விட்டதை நினைத்துப் பார்க்கும் மணிவாசகர், இறைவனுடன் நிலையாக கலந்திருக்கும் நிலையை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். இறைவன் மட்டும் மறையவில்லை. அவருடன் இருந்த அடியார்களும் மறைந்து விடுகின்றார்கள். தனது உடல் தான், இறைவனுடன் தான் சேர்ந்து இருப்பதற்கு தடையாக இருந்தது என்பதை அடிகளார் உணர்கின்றார் போலும். குற்றங்கள் நிறைந்த அந்த உடலினை உதறி விட்டு, தனது ஆன்மா சிவபுர நகர் சென்று அடைந்து இறைவனின் ஒளி வீசும் திருமேனியை கண்ணாரக் காணவேண்டும் என்றும் அவனுடன் காட்சி அளித்த பழ அடியார்களுடன் இணைந்து இருக்க வேண்டும் என்று மணிவாசகர் விரும்புகின்றார். அந்த விருப்பத்தை உணர்த்தும் பாடல் இது. இங்கே சிவபுரம் என்று முக்தி உலகினை மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

செடி ஆர் யாக்கை திறம் அற வீசிச் சிவபுரநகர் புக்குக்

கடி ஆர் சோதி கண்டு கொண்டு என் கண் இணை களி கூர

படி தான் இல்லாப் பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம்

அடியேன் காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே

திருவாசகம் புணர்ச்சிப் பத்து பதிகத்தின் பாடலில் (8.27.7) மணிவாசகர், இறைவனை தன்னை ஒப்பாரில்லாத் தனியன் என்று குறிப்பிடுகின்றார். தன்னை ஒப்பார் எவருமில்லாது தனித்து நிற்கும் இறைவன் என்று இந்த பாடலில் குறிப்பிடும் மணிவாசகர், அதற்கான காரணத்தையும் இங்கே உணர்த்துகின்றார்.மற்றவர்கள் நினைத்துப் பார்க்கவும் முடியாத, அரிய செயலைச் செய்யும் இறைவன் என்று இந்த பாடலில் குறிப்பிட்டு, அதனால் தான் ஒப்பார் ஒருவரும் இல்லாத தனியன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அத்தகைய அரிய செயல் தான் யாது. ஐந்து பூதங்களுடன் கலந்து நின்று அவற்றை இயக்கும் தன்மையே அந்த தன்மை ஆகும். இதனை மிகவும் விவரமாக வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய், நீரிடை நான்காய் திகழ்ந்தாய், பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் என்று போற்றித் திருவகவல் பதிகத்தில் அடிகளார் உணர்த்துகின்றார். வானிடை ஒலி என்ற குணமாகவும், காற்றினில் ஒலி மற்றும் தொடுவுணர்வு ஆகிய இரண்டு குணங்களாகவும், நெருப்பினில் ஒலி, தொடுவுணர்வு மற்றும் உருவம் ஆகிய மூன்று குணங்களாகவும், நீரினில் ஒலி தொடுவுணர்வு உருவம் சுவை ஆகிய நான்கு குணங்களாகவும், நிலத்தினில் ஒலி தொடுவுணர்வு உருவம் சுவை மணமாகிய ஐந்து குணங்களாகவும் இருக்கும் தன்மை தானே, அந்தந்த பூதங்கள் இயங்குவதற்கு காரணமாக உள்ளது. எவருக்கும் கிடைத்தற்கு அரிய சிவபரம்பொருள் தனக்கு கிடைத்தால் தனது மனம் மகிழ்ச்சி அடைந்து உடல் பூரித்தும் (தழைத்து) குரல் தழுதழுத்தும் (தழுத்த கண்டம்) கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக பொழிந்தும் கைகள் கூப்பியும் தான் வழிபடுவேன் என்றும், அத்தகைய நிலை ஏற்பட்டு ஆனந்த மேலீட்டால் நறுமணம் மிகுந்த மலர்களை இறைவனது திருவடியில் சமர்ப்பித்து, இறைவனுடன் தானும் கூடும் நாள் எந்நாளோ என்று தனது ஆசையையும் அந்த ஆசை நிறைவேறாததால் தான் ஏங்குவதையும் இந்த பாடலில் அடிகளார் குறிப்பிடுகின்றார். தனது உடலும் உள்ளமும் அடைய விரும்பும் மாற்றங்களை, தான் அடைந்து இறைவனை வணங்குவதாக மெய் தான் அரும்பி என்று தொடங்கும் பாடலில் அடிகளார் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது.

நினையப் பிறருக்கு அரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத்

தனை ஒப்பாரை இல்லாத் தனியை நோக்கித் தழைத்து தழுத்த கண்டம்

கனையக் கண்ணீர் அருவி பாயக் கையும் கூப்பி கடிமலரால்

புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

திருவாசகம் கண்டபத்து திருப்பதிகத்தின் பாடலில் (8.31.2) மணிவாசகர், தன்னை ஆட்கொண்ட பெருமான், தன்னை பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுவித்த இணையிலி என்று கூறுகின்றார். பெருமானைத் தவிர்த்து வேறு எவரும் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுக்க முடியாது என்பதால், அவரை இணையிலி என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகவே உள்ளது. நாம் பிறக்கும் போதே, இந்த பிறவியில் நாம் நுகர்ந்து கழிக்கவேண்டும் என்று இறைவனால் நிர்ணயிக்கப் படும் வினைகளின் தொகுதியும் நம்முடன் சேர்ந்து கொள்கின்றன. அந்த வினைகளின் தன்மையால் தான், நமக்கு வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு நாம் அனுபவிக்கும் இன்பங்களில் ஆழும் நாம் இறைவனை மறந்து விடுவது இயற்கை. துன்பங்களில் ஆழும் போது, ஒரு சிலர் தங்களது துன்பங்கள் தீர வேண்டும் என்று வேண்டுவதற்காக இறைவனை நினைக்கின்றார்களே தவிர வேறு எதற்காகவும் இறைவனை நினைப்பதில்லை. பலரும் தனக்கு ஏன் இந்த துன்பங்கள் ஏற்படுகின்றன என்ற கவலையில், துன்பங்கள் இழைப்பவரை கடிந்து கொள்வதும் ஏன் இறைவனையே சினந்து கொள்வதும் நடைபெறுவதை நாம் அடிக்கடி காண்கின்ற நிகழ்ச்சிகளாக உள்ளன. இந்த நிலையில் தான் இருப்பதாக மணிவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த இன்ப துன்பங்களின் விளைவால் மனநிலை மாறாமல், மகிழ்ச்சியோ வேதனையோ ஏதும் கொள்ளாமல், தங்களது மனதினில் ஏற்படும் சஞ்சலங்களை தவிர்த்து, இன்ப துன்பங்களை சரிசமமாக பாவித்து, எப்போதும் சிவ சிந்தையுடன் வாழும் அடியார்களை, இந்த இன்ப துன்பங்கள் ஏதும் செய்வதில்லை. அதனால் அவர்கள் மேன்மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கும் பக்குவத்தை அடைந்து விடுகின்ற்னர்.அந்த நிலையை அடையாமல் வினைகளால் தான் தளர்ந்து கிடப்பதை குறிப்பிடும் மணிவாசகர், தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்ட பெருமானை, தான் தில்லை அம்பலத்தில் கண்டதாக கூறுகின்றார்.

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

தனைச் சிறிதும் நினையாதே தளர்வு எய்திக் கிடப்பேனை

எனைப் பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பறுத்த இணையிலியை

அனைத்துலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே

திருவாசகம் பிடித்தபத்து பதிகத்தின் பாடலில் (8.37.3) மணிவாசகர் பெருமானை ஒப்பிலா மணியே என்று அழைக்கின்றார். நாம் அவனது திருவடி பால் வைக்கும் அன்பே சிவமாக மிளிர்கின்றது என்பதை மணிவாசக பெருமானார் இந்த பாடலில் கூறுகின்றார். அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்கவேண்டும் என்றால், நாம் சிவபிரான் பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும் போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார்.பொய்ம்மை=பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை; சுருக்கும்=வீணாக்கும்: பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயப்பட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அடிகளார் இந்த பாடலில் அழைக்கின்றார். அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக அடிகளார் கூறிக்கொள்வதை நாம் உணரலாம்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

பிடித்தபத்து பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (8.37.5) மணிவாசகர் பெருமானை ஒப்பு உனக்கில்லா ஒருவனே என்று அழைக்கின்றார். அழகு, ஆற்றல்,உடைமை, பெருமை, பண்பு ஆகிய தன்மைகளில் ஒன்றுக்கொன்று சமமாக உள்ளவற்றை ஒப்பிட்டு ஒன்றை ஒன்று ஒத்துள்ளது என்று கூறுவது வழக்கம்.மேற்கூறிய இந்த அளவுகோல்கள் அனைத்தும் மனம் முதலிய கருவி கரணங்களால் அறியப்ப்ட்டு ஒப்பிடப்படுகின்றன. இறைவனோ கருவி கரணங்களைக் கடந்து அறிவு பூர்வமாக அல்லாமல், உணர்ச்சியின் வழியாக உணரப்படும் இன்ப வடிவினன். எனவே அவனை அனுபவித்து உணர்ந்த அடிகளார்,பெருமானுக்கு ஒப்பு என்று எவரும், எந்த பொருளும் இல்லை என்பதை உணர்ந்த தன்மையை, பெருமான் ஒருவர் தான் பெருமானுக்கு ஒப்பாக இருக்க முடியும் என்பதை தான் உணர்ந்த தன்மையை, இங்கே ஒப்பு உனக்கில்லா ஒருவன் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். எய்ப்பு=இளைத்த காலம்,செல்வத்தில் இளைத்து வறுமையில் உழலும் காலம். வறுமையில் வாடும் ஒருவன், தனக்கு ஒரு பொற்காசு கிடைத்தால், எவ்வாறு அந்த காசினை கெட்டியாகப் பற்றிக்கொண்டு பாதுகாக்கின்றானோ. அந்த தன்மையில் தானும், கிடைத்தற்கரிய பெருமானை இறுகப் பற்றிக்கொண்டு இருப்பதாக அடிகளார் உணர்த்துகின்றார். எய்ப்பு என்ற சொல்லுக்கு கருவி கரணங்கள் மனம் உள்ளம் ஆகிய அனைத்தும் செயலிழந்து, இனி உய்வதற்கு வழியே இல்லை என்ற நிலை அடைந்திருந்த தருணத்தில், தன்னெதிரே தோன்றிய இறைவனை, உறுதியாக பற்றிக்கொண்டதையே அடிகளார் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. மெய்ப்பதம்=எப்போதும் உண்மையாக எக்காலத்திலும் நிலையாக நிற்கும் மெய்ப்பொருளாகிய இறைவன்;வீறு=பெருமை, தகுதி; வீறிலி=பெருமை, தகுதி அற்றவன்; உண்மையான மெய்ப்பொருளை புரிந்து கொள்வதற்கு தனியான ஞானம் வேண்டும். அத்தகைய மெய்ப்பொருளை உணர்ந்த பின்னர், அதனை அடைய முயற்சி செய்வதற்கும் தனித் திறமை வேண்டும். அத்தகைய தன்மைகள் இல்லாதவன் என்று தன்னைக் குறிப்பிட்டு வீறிலி என்று கூறுகின்றார். அத்தகைய தன்மைகள் ஏதும் இல்லாதிருந்த போதிலும், தன் பால் கருணை வைத்து இறைவன் அருள் புரிந்ததற்கு காரணம் அவனது அன்பே என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றார். விழுமிய=சிறந்த;

ஒப்பு உனக்கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே

மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமியது அளித்ததோர் அன்பே

செப்புதற்கு அரிய செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெருமானே

எய்ப்பிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே

இதே கருத்து திருமூலரின் பாடலிலும் காணப்படுகின்றது. பிறங்க=விளங்க. பெருமானால் தொழப்படும் தகுதி வாய்ந்தவர் எவரும் இல்லை என்று குறிப்பிடுவதன் மூலம், பெருமானை ஒப்பாரும் மிக்காரும் எவரும் இல்லை என்று திருமூலர் இங்கே உணர்த்துகின்றார்.

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை என்னப்

பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி

என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்

தன்னால் தொழப்படுவார் இல்லை தானே

மற்றொரு திருமந்திரப் பாடலில், துணையிலி என்று பெருமானை திருமூலர் குறிப்பிடுகின்றார். மன்னும்=என்றும் நிலையாக இருக்கும்;மனோமயன்=மனமாக இருப்பவன்; மருவி=பொருந்தி, இங்கே மனதினில் இறைவனின் திருவுருவினை, இறைவனது நினைவுகளை பொருத்தி தியானம் செய்யும் அடியார்கள்; இவ்வாறு இறைவனை தியானம் செய்யும் அடியார்களின் மனமாகவே இறைவன் மாறி விடுகின்றான் என்று வேதங்கள் எடுத்துரைக்கின்றன. ஆனால் இதனை அறியாது உலகத்தவர் பலரும் இகழ்கின்றனர். ஆனால் மனமே, நீ அவ்வாறு இகழாமல், இறைவனின் தன்மையை புரிந்து கொண்டு, அவனை ஒன்றிய மனத்துடன் தியானம் செய்து வணங்கினால், அந்த தலைவன், தனக்கு துணையேதும் இல்லாமல் ஒப்பற்றவனாகத் திகழும் தலைவன் உன்னுள் பொருந்துவான்; மேலும் நீயும் அவனைச் சென்று அடையலாம் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மன்னும் ஒருவன் மருவு மனோமயன்

என்னின் மனிதர் இகழ்வர் இவ்வேழைகள்

துன்னி மனமே தொழுமின் இணையிலி

தன்னையும் அங்கே தலைப்படலாமே

இணையிலியாக இறைவன் கருதப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றினை, திருமூலர் கீழ்க்கண்ட பாடலில் குறிப்பிடுகின்றார். மிகவும் நுண்ணிய பொருட்களுக்கும் நுண்ணியவனாக பெருமான் இருக்கும் தன்மையும், நுண்ணிய பொருட்கள் உட்பட அனைத்தும் இறைவனைச் சார்ந்து இருக்கும் தன்மையை இந்த பாடலில் திருமூலர் உணர்த்துகின்றார். இந்த தன்மையால் பெருமான் ஒப்பற்ற தனிப்பொருள் என்று உணர்த்தும் திருமூலர்,அந்த இறைவன் உலகெங்கும் நீக்கமற நிறைந்து இருப்பதாகவும் இங்கே உணர்த்துகின்றார்.

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணுவற நின்ற கலப்பது உணரார்

இணையிலி ஈசன் அவன் எங்குமாகித்

தணிவற நின்றனன் சராசரம் தானே

திருமந்திரம் சிவதரிசனம் எனும் அதிகாரத்தில், சிவனது திருவருள் கூடிய காரணத்தால், ஒரு நொடி, அந்நாள் வரையில் மூடிக் கிடந்த தனது அறிவாகிய கண் திறக்கப்பட்டது என்றும், அந்த அறிவுக் கண்ணின் உதவியால் சிவபெருமான் எனது அறிவினுக்கு அறிவாக இருக்கும் தன்மையை தான் உணர்ந்தேன் என்று குறிப்பிடும் பாடலில், பெருமானை இணையிலி என்று திருமூலர் அழைக்கின்றார். இயல்பாகவே தன்னைப் பற்றியுள்ள ஒளியினை உடையவன் என்றும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவன் என்றும், பொன் போன்ற திருமேனி உடையவன் என்றும் சுருண்ட சடை உடையவன் என்றும் அடியார்களின் வினைகளைக் குறைத்து அருள் புரிபவன் என்றும் பெருமானின் தன்மைகளை இங்கே குறிப்பிடுகின்றார்.

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்

தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி

பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்

என்னுற்று அறிவானான் என் விழித்தானே

திருமந்திரம் முதல் தந்திரத்தில் சிவபரத்துவம் எனற அதிகாரத்தில், ஒப்பிலி வள்ளல் என்று பெருமானை திருமூலர் குறிப்பிடுகின்றார். வேறு எவருக்கும் ஒப்பாகாத வள்ளல் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். அடியார்களுக்கு அருள் புரிவதில் பெருமானுக்கு ஒப்பாக வேறொருவர் இல்லை என்பதால் தான்,பெருமானுக்கு பித்தர் என்ற பெயரே வந்தது. எந்த முறையினை பின்பற்றி பெருமானை துதித்தாலும் மகிழ்ச்சி அடைந்து அருள் புரிபவன் பெருமான் என்பதால், எந்த வழியேனும் பின்பற்றுவீர் என்று இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார்.

அப்பனை நந்தியை ஆரா அமுதினை

ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை

எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினால்

அப்பரிசு ஈசனருள் பெறலாமே

தனக்கு ஒப்பாக வேறொருவ்ர் இல்லாத் தலைமகன் என்று குறிப்பிடும் திருமந்திரப் பாடலும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. போது என்றால் மலர் என்று பொருள். இங்கே பொன்மலராகிய சகஸ்ரதளம், பொன்னை ஒப்பாகின்ற போது என்ற தொடரால், குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்

தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்

தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்

பொன்னை ஒப்பாகின்ற போதகத்தானே

திருமாளிகைத் தேவர் அருளிய பதிகத்தின் பாடலில் (9.4.1) பெருமானை இணங்கிலா ஈசன் என்று குறிப்பிடுகின்றார். இணங்கு=ஒப்பு; எவரும் எந்த தன்மையிலும் தனக்கு ஒப்பாகாத வண்ணம் திகழும் பெருமான் என்பதால் இணங்கிலா ஈசன் என்று கூறுகின்றார். மணங்கொள்=பலவிதமான திருவிழாக்களைக் கொண்ட தில்லைச் சிற்றம்பலம்; மணவடியார்கள்=அடியார்கள் கூட்டம்; வண்மை=வள்ளல் தன்மை; வீறு=பெருமை; வீறில்=பெருமை இல்லாத; கோரம் என்ற சொல் கோறை என திரிந்தது; கோரம்=கொடுமை; பீறற் பிண்டம்=ஓட்டை உடம்பு; தில்லைச் சிற்றம்பலத்து அடியார்களின் குணங்களை குறிப்பிட்டு போற்றாத மனிதர்கள் உயிர் வாழ்வதால் எந்த பயனும் இல்லை என்பதால், அவர்களை பிணம் என்று திருமாளிகைத் தேவர் சாடுகின்றார். மேலும் அத்தகைய பேய்களுடன் தான் பேசமாட்டேன் என்றும் அவர்களைத் தான் காணமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பதிகங்களின் மற்ற பாடல்களும் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே என்று முடிகின்றன.

இணங்கிலா ஈசன் நேசத்திருந்த சித்தத்தினேற்கு

மணங்கொள் சீர்த் தில்லைவாணன் மணவடியார்கள் வண்மைக்

குணங்களைக் கூறா வீறில் கோறை வாய்ப் பீறற் பிண்டப்

பிணங்களைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே

பொழிப்புரை:

பெரிய மார்பங்களை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், அனைவர்க்கும் பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை, ஒன்றுக்கொன்று துணையாக இருந்து வலிமையுடன் திகழ்ந்த கோட்டைகளை, தீயில் வெந்து அழியும் வண்ணம் அம்பினை எய்தவனும், உயிர்களை கொல்லும் ஆற்றல் உடையவனாக திகழ்ந்த வலிமை வாய்ந்த காலனைத் தனது காலால் உதைத்து வெற்றி கண்டவனும் ஆகிய பெருமான், தனக்கு இணையாக வேறு எவரும் இல்லாத தன்மையன். இத்தகைய ஆற்றல் உடைய பெருமான் உறைகின்ற வளமான நகரம் இடைமருது ஆகும்.

பாடல் 5:

பொழிலவன் புயலவன் புயலியக்கும்

தொழிலவன் துயரவன் துயரகற்றும்

கழலவன் கரியுரி போர்த்துகந்த

எழிலவன் வளநகர் இடைமருதே

விளக்கம்:

புயல்=மேகம்; புயலியக்கும்=மேகத்தினை இயக்கி மழை பொழிவிக்கும் தன்மை. பெருமான் மழையாக விளங்கி உயிர்களுக்கும் உயிர்கள் வாழ தேவையான பயிர்களுக்கும் துணையாக இருக்கும் தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இறைவனின் கருணையை மழைக்கு ஒப்பிடுவதும் வழக்கம். பயன் எதிர்பாராது மழை பொழிவது போன்று, இறைவனிடம் உயிர்களிடம் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அருள் புரிகின்றான் அல்லவா. மழையாக பொழிந்து இறைவன் அருள் புரிகின்ற தன்மையையும் மழை போன்று பதிலுதவி எதிர்பாராமல் பெருமான் இயங்கும் தன்மையையும் குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

புளமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.16.6) திருஞானசம்பந்தர், பெருமானை, உலகினுக்கு ஒரு மழையானவன் என்று குறிப்பிடுகின்றார். புளமங்கை என்ற தலத்தின் பெயரும் ஆலந்துறை என்ற திருக்கோயிலின் பெயரும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றன.என்னானவன்=எனக்கு இனியவனாக இருப்பவன்; எனக்கு உயிர் போன்று இன்றியமையாது இருப்பவன்; ஆன் என்ற சொல் பசுவினைக் குறிக்கும். பசு என்ற சொல்லோ அனைத்து உயிர்களையும் குறிக்கும் வண்ணம் சைவ சித்தாந்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. எனவே என்னானவன் என்ற சொல்லினை என் ஆன் ஆனவன் என்று பிரித்து எனக்கு உயிர் போன்றவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மன்=பொருந்தி உறைதல்; உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் பொருந்தி நின்றும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் கலந்து நின்று இயக்குபவன் இறைவன் அல்லவா. உலகத்தினுக்கு மழையாக பொழிந்து பயிர்கள் தழைத்து வாழவும் உயிர்கள் தங்களது தேவைக்கான நீரினைப் பெறுவதற்கு உதவுகின்ற மழையாக பொழிந்து அருள் செய்பவன் என்றும் பெருமானை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்

பொன்னானவன் முதலானவன் பொழில் சூழ் புளமங்கை

என்னானவன் இசையானவன் இள ஞாயிறின் சோதி

அன்னானவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே

இராமனதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.115.3) திருஞானசம்பந்தர், உலகினுக்கு மழையாக பொழிந்து அருள் புரியும் சடையவன் என்றும் முருகப்பெருமானை தழைத்த பீலியை உடைய மயிலினைத் தனது வாகனமாகக் கொண்டவன் என்றும் சிவபெருமானை முருகரின் தந்தை என்றும் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இழையவன்=முப்புரி நூல் அணிந்தவன்

தழைமயில் ஏறவன் தாதையோ தான்

மழை பொழி சடையவன் மன்னு காதில்

குழையது இலங்கிய கோலமார்பின்

இழையவன் இராமனதீச்சரமே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.48.1) திருஞானசம்பந்தர், பயிர் காட்டும் புயலான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.இந்த பாடலில் பரமனின் கோலம் நமக்கு காட்டும் பொருட்களை மிகவும் நயமாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பரமனின் நெற்றி, மூன்றாவது கண்ணையும், அவனது கை தீப்பிழம்பினையும், உருவம் ஓர் கூறு உவந்து பெற்றுக் கொண்ட மாதினையும், சடை தஞ்சம் பெற்ற பிறையையும், அவன் பாடும் இசை பண்ணையும், காட்டும் நேர்த்தி திருஞானசம்பந்தரை நெகிழ வைக்கின்றது. புயல் என்பது இங்கு நீரை குறிக்கும். பரமன், பயிரை வளம்படுத்தும் நீரை போல மன்னுயிர்களுக்கு வளமாக உள்ளான் என கூறும் திருஞானசம்பந்தர் இறைவனது கொடி, விடையை (விடை என்றால் நந்தி என்று பொருள்)காட்டுகின்றது என கூறி பாடலை நிறைவு செய்கிறார். நெற்றிக் கண் கோபத்தையும் அருளையும் காட்டும் என்று சிவக்கவிமணி தனது பெரிய புராண விளக்கத்தில் கூறுகின்றார். மன்மதனை சினந்து நோக்கிய போது கோபத்தை காட்டிய நெற்றிக்கண், முருகப் பெருமான் பிறப்பதற்கு காரணமாக இருந்து ஆறு சுடர்களை வெளிப்படுத்தி தேவர்களுக்கு அருளியது அல்லவா.

கண் காட்டு நுதலானும் கனல் காட்டும் கையானும்

பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்

பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்

வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே

திருவல்லம் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.113.4) திருஞானசம்பந்தர், பெருமழையாக பெய்து உலகத்தை உய்விப்பன் பெருமான் என்று கூறுகின்றார். இரண்டாவது அடியில் உள்ள மை என்ற எழுத்தினை முதலடியுடன் சேர்த்து தம்மை என்று பொருள் கொள்ள வேண்டும்; செல்வம் ஓரிடத்தில் நிலையாக நில்லாது பல இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கும் தன்மையை, தவழ் திருமகள் என்று நயமாக குறிப்பிடுகின்றார். ஆனால் பெருமானை வணங்கும் அடியார்களிடம் பொருந்தியுள்ள செல்வம், அவ்வாறு பிரிந்து செல்லாது அடியார்களிடம் நிலையாக நிற்கும் என்பதை உணர்த்தும் முகமாக,திருமகள் வணங்க வைத்து என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் இங்கே சொல்கின்றார். அதாவது, பெருமானின் அடியார்களை திருமகள் வணங்கி,அவர்களை விட்டு விலகாமல் இருப்பாள் என்று உணர்த்துகின்றார். எவரிடமும் இருக்கும் செல்வம் ஒரே சமயத்தில் பெருகுவதுமில்லை, ஒரே சமயத்தில் தேய்வதுமில்லை. செல்வ நிலையில் மாற்றங்கள் சிறிது சிறிதாகவே நிகழ்கின்றன. இதனை உணர்த்தும் வண்ணம் தவழ் திருமகள் என்று கூறினார் போலும்.தவழும் குழந்தை மெதுவாகத் தானே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்கின்றது.

கொய்து அம்மலர் அடி கூடுவார் தம்

மைதவழ் திருமகள் வணங்க வைத்துப்

பெய்தவன் பெருமழை உலகம் உய்யச்

செய்தவன் உறைவிடம் திருவல்லமே

பிரமாபுரம் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.37.7) திருஞானசம்பந்தர், பெய்யும் மழையாக இருப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். செய்யன்=சிவந்த திருமேனியை உடையவன்; வெள்ளியன்=உடல் முழுவதும் திருநீறு பூசியதால், வெண்மை நிறத்துடன் காட்சி அளிப்பவன்; ஒள்ளியார்=சிவஞானம் பெற்ற அடியார்கள். ஆண்தகை=ஆண்களில் சிறந்தவன்; நான்கு வேதங்களின் பொருளாக உள்ளவன் பெருமான் என்று இங்கே ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட

ஐயன் ஆண்தகை அந்தணன் அருமாமறைப் பொருள் ஆயினான்

பெய்யும் மாமழை ஆயினான் அவன் பிரமாபுரம் இடம் பேணிய

வெய்ய வெண்மழு ஏந்தியை நினைந்து ஏத்துமின் வினை வீடவே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.13.8) அப்பர் பிரான், பெருமான் மின்னலாகவும் இடியாகவும் இருந்து மழை பொழிவதற்கு காரணமாக இருக்கின்றார் என்று கூறுகின்றார். உரு=இடி: மின்=மின்னல்: நின்னானான்=உன்னைப்போலவே தாங்களும் பரம்பொருள் என்று நினைத்துக்கொண்ட திருமாலும், பிரமனும், மணிவாசகர் தனது திருவாசகத்தில் (தோள்நோக்கம் பதிகம்), இருவரும் தாங்களே பரமம் என்று நினைத்துக் கொண்டது தான் திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையே விவாதம் ஏற்பட்டதன் காரணம் என்பதை கூறுகின்றார். அதே செய்தி தான் இங்கே அப்பர் பிரானால் குறிப்பிடப்படுகின்றது. அளவு இறந்து=எல்லா அளவுகளையும் கடந்து

மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்

பொன்னானாய் மணியானாய் பொருகடல் வாய் முத்தானாய்

நின்னானான் இருவர்க்கும் காண்பரிய நிமிர்சோதி

அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.74.9) அப்பர் பிரான், பெருமானை மின்னலை ஒப்பவன் என்று குறிப்பிட்டு, மழை பொழிவித்து உயிர்கள் வாழ வழி செய்பவன் என்று கூறுகின்றார்.

விண்ணிடை மின் ஒப்பானை மெய்ப்பெரும் பொருள் ஒப்பானை

கண்ணிடை மணி ஒப்பானை கடுவிருட் சுடர் ஒப்பானை

எண்ணிடை எண்ணலாகா இருவரை வெருவ நீண்ட

அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே

பேரெயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.16.3) அப்பர் பிரான் பெருமானை, மழை சொரிவிப்பவன் என்று கூறுகின்றார். பெருமான் இணைந்திருக்கும் பொருட்களை பிரிக்கும் ஆற்றல் படைத்தவர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். செல்வம் வளம் முதலியன ஒரே இடத்தில் நில்லாமல் இடம் பெயரச் செய்பவர் பெருமான் தான் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். சூரியனின் கதிர்கள் வெம்மையாக இருப்பதை எரிக்கும் கதிர்கள் என்று கூறும் அப்பர் பிரான், குளுமை தரும் சந்திரனின் கதிர்களை விரிவிப்பவர் பெருமான் என்று நயமாக கூறுகின்றார். குறித்த காலத்தில் மழை பொழிவித்து நிலத்தினை வளம் பெறச் செய்யும் பெருமான். உலகினை, குளிர்விக்கும் சந்திரனின் கதிர்களை விரித்தும், உலகினுக்கு தேவையான வெப்பத்தை அளிக்கும் சூரியனின் கதிர்களை எங்கும் படரச் செய்தும் உலகினில் உயிர்கள் வளர்வதற்கு வழி வகுக்கின்றார். தான் நினைத்த மாத்திரத்தில் எந்த பொருளின் ஆற்றலையும் அடக்கும் வல்லமை கொண்ட பெருமான், இணைந்து நிற்கும் பொருட்களையும் பிரிக்க வேண்டிய நேரத்தில் பிரிக்கும் வல்லமை பெற்றவர் ஆவார். உடலுடன் ஒட்டியிருக்கும் உயிரினை தகுந்த நேரத்தில் பிரிப்பவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.இத்தகைய பண்புகளை உடைய பெருமான் பேரெயில் தலத்தின் தலைவராக விளங்குகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்..

சொரிவிப்பார் மழை சூழ்கதிர் திங்களை

விரிவிப்பார் வெயில் பட்ட விளங்கொளி

எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும்

பிரிவிப்பார் அவர் பேரெயில் ஆளரே

திருக்கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.12.5) அப்பர் பிரான், பெருமானை மேகமாக நின்று மழை பொழிபவன் என்று குறிப்பிடுகின்றார். இறை=எல்லாப் பொருட்கும் தலைவன்: கார்=மேகம்; விண்=தேவர்கள் உலகம்; கண்=பற்றுக்கோடு. விருப்பத்துடன் பெருமானை வழிபாட்டு நிற்கும் தேவர்கள், எங்களது உலகமாக இருப்பவனே, வேதங்களாகவும் கீதங்களாகவும் எல்லா இடங்களிலும் பரவி இருப்பவனே,எண்ணானாவனே, எழுத்தானவனே, ஏழு கடல்களாக உள்ளவனே, எங்களுக்குத் தலைவனாக இருப்பவனே, எங்களுக்கு பற்றுக்கோடாக உள்ளவனே, மழை பொழியும் மேகம் போன்று கருணை உள்ளம் கொண்டவனே, எல்லா உலகங்களாக இருப்பவனே என்று சிவபெருமானை வாழ்த்துகின்றார்கள். இவ்வாறு வாழ்த்தப்படும் பெருமான் கழிப்பாலைத் தலத்தில் உறைகின்றார். கையினில் கபாலம் ஏந்திய பெருமானாகிய அவர், மண்ணோடு மண்ணாக கலந்து அழியக்கூடிய நிலையில்லாத உடலினில் சிக்காமல் பிறப்பிறப்பு என்ற சங்கிலியிலிருந்து விடுபட்டு முக்தி உலகத்திற்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக என்று நம்மை அப்பர் பிரான் வழிநடத்தும் பாடல்..

விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும்

எண்ணானாய் எழுத்தானாய் கடல் ஏழானாய் இறையானாய் எம் இறையே என்று நிற்கும்

கண்ணானாய் காரானாய் பாருமானாய் கழிப்பாலை உள்ளுறையும் கபாலப்பனார்

மண்ணாய மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.46.2) அப்பர் பிரான், பெருமானை வெண்முகிலாய் எழும் மழை என்று குறிப்பிடுகின்றார்.மின்னானை=மின்னலாக இருந்து ஒளி தருபவன்; உருமு=இடி; ஒளியின் வேகத்தை விடவும் ஒலியின் வேகம் குறைவு என்பதால் நாம் மின்னலை முன்னர் காண்கின்றோம், அதன் பின்னரே இடியின் ஓசையைக் கேட்கின்றோம். எனவே இந்த வரிசை முறையை பின்பற்றி மின்னலும் முன்னமும் இடியை பின்னரும் வைத்து அப்பர் பிரான் பாடியுள்ளார். வெண்முகிலாய் மழை பொழிவான் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு சற்றே வியப்பினைத் தரலாம்.நீர்த்திவலைகளை அதிகமாக உள்ளடக்கியதால் மேகங்கள் கருத்து காணப் படுவதையும், அத்தகைய மேகங்கள் ஒன்றோடு ஒன்று இடித்து மழை பொழிவதையும் நாம் அறிவோம். அப்படி இருக்கையில் வெண்முகில் என்று சொல்வதேன். நம்மைச் சற்று சிந்திக்க வைக்கும் தொடர் இது. கரு மேகங்களாக இருப்பினும், ஒன்றுடன் ஒன்று இடிப்பதால் ஏற்படும் மின்னல் ஒளியின் பின்னணியில், மேகங்கள் வெண்மை நிறத்துடன் காணப்படுவதை இங்கே குறிப்பிடும் வண்ணம் மழை பொழியும் வெண்முகில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

மின்னானை மின்னிடைச் சேரும் உருமினானை வெண்முகிலாய் எழுந்து மழை பொழிவான் தன்னைத்

தன்னானைத் தன் ஒப்பார் இல்லாதானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தையாகி

என்னானை எந்தை பெருமான் தன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே

அன்னானை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்துய்ந்தேனே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.4) அப்பர் பிரான், பெருமானை விண் பொழியும் மழையானான் என்று குறிப்பிடுகின்றார்.பொழில் ஏழு=ஏழுலகங்கள்; உய்த்தல்= செலுத்துதல்; அனைத்து உடல்களின் உள்ளே உயிராக இருந்து அந்த உடல்களை செலுத்துபவனும்,ஓங்காரத்தால் உணர்த்தப் படுபவனும், அனைத்து உலகங்களும் தோன்றுவதற்கு விதையாக, முதற்காரணனாக இருப்பவனும், வானத்து மழையாக உலகை வாழ வைப்பவனும், மழையின் விளைவால் தோன்றும் பொருட்களாக இருப்பவனும், தன்னை விரும்பாதார் மனதினில் தோன்றாமல், மறைந்துவிடும் பொருளாக இருப்பவனும், ஏழ் உலகங்களையும் தாங்குபவனும், கங்கை நதி மற்றும் பாம்பு ஆகியவற்றுடன் தன்னைச் சரணடைந்த பின்னர் வளரும் நிலைக்கு மாறிய சந்திரனையும் தனது சடையில் ஏற்றவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் தனது மனதினில் நிலையாக உள்ளான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

உய்ந்தவன் காண் உடல் தனக்கோர் உயிரானான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம்

வித்தவன் காண் விண்பொழியும் மழையானான் காண் விளைவவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும்

பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர்மதியும் பாம்பும் சென்னி

வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (6.48.8) அப்பர் பிரான், பெருமானை மின்னல் மற்றும் இடியாக இருந்து பெருமான் மழை பொழிவதற்கு காரணமாக உள்ளார் என்று கூறுகின்றார். உரு= இடி; ஈண்டு புனல்=மிகுந்த நீர்; உலகங்கள் தோன்றுவதற்கு முன்னே இருந்தவனும், உலகங்கள் ஒடுங்கிய பின்னரும் இருப்பவனும், மூப்பு அடையாது என்றும் ஒரே நிலையில் இருக்கும் திருமேனியை உடையவனும், அனைத்து பொருட்களுக்கும் முதலாகவும் முடிவாகவும் இருப்பவனும், சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று சோதிகளைப் போன்றவனும், அடியார்களுக்கு மிகவும் அருகில் இருப்பவனும், அடியார்கள் அல்லாதவர்க்கு மிகவும் தொலைவில் இருப்பவனும், எல்லையற்ற ஒளி உடைய மின்னல் போன்று பிரகாசம் உடையவனும், இடியாக இருந்து மழை பொழிவதற்கு காரணமாக இருப்பவனும், திருமாலின் வேண்டுகோளை ஏற்று அவனைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்தவனும், மிகுந்த நீரினை உடைய கங்கையைத் தனது சடையில் ஏற்று கங்கை மணாளனாக இருப்பவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதலவன் காண் முடிவவன் காண் மூன்று சோதி

அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவில் சோதி

மின்னவன் காண் உருமவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும்

மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (6.48.9) அப்பர் பிரான் பெருமானை, காரவன் என்று அழைக்கின்றார். கார்=மழை பொழியும் மேகம். நெதி=நிதி,செல்வம்; கார்=நீர்; பதி=தலைவன்; பாம்போடு திங்கள் பயில வைத்த மதியவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தன்னை அடைந்த பாம்பும் திங்களும் தங்களின் இடையே இருந்த பகையை மறந்து பழகும் வண்ணம். அவையிரண்டின் தன்மையையும் தன் போல் மாற்றிய தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. சிறந்த முக்திச் செல்வத்தை உடையவனும், எவரும் மனதினாலும் நினைத்துப் பார்க்க முடியாத நீதிநிலையில் இருப்பவனும்,வேதங்களை சிறந்த முறையில் ஓதுபவனும், தன்னை விருப்பத்துடன் நினைக்கும் அடியார்கள் சென்று சேரும் கதியாக இருப்பவனும், நீர் நெருப்பு முதலான ஐந்து பூதங்களாக இருப்பவனும், பல ஊழிக் காலங்களிலும் கலந்து நின்று அவற்றை கடந்தவனாக விளங்குபவனும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், சுவை நிறைந்த பழமாகவும் பழத்தின் சாறாகவும் இனிமையாக உள்ளவனும், பகை உணர்வு கொண்ட பாம்பும் சந்திரனும் தங்களின் பகையை மறந்து ஒரே இடத்தில் தொடர்ந்து பழகும் நிலையில் வைத்தவனும், ஞானம் உடையவனும் வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும்,வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான் என்று அப்பர் பிரான் பெருமிதத்துடன் உணர்த்தும் பாடல்.

நெதியவன் காண் யாவர்க்கும் நினையவொண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும்

கதியவன் காண் காரவன் காண் கனலானான் காண் காலங்கள் ஊழியாய்க் கலந்து நின்ற

பதியவன் காண் பழமவன் காண் இரதந்தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த

மதியவன்காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான்காண் அவனென் மனத்துளானே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.50.6) அப்பர் பிரான், பெருமானை மழையாய் எங்கும் பெய்வான் என்று குறிப்பிடுகின்றார்.மைவான மிடறு=கரிய மேகம் போன்ற கறை படர்ந்த கழுத்தினை உடையவன்; ஆர்த்தல்=ஆரவாரம் செய்ய; மதியான்=மதியை அணிந்தவன்; பிலம்=ஆழ்ந்த குகை; பொய்த்தல்=பறித்தல்; பிச்சாடல்=பித்துடன் ஆடல், தான் உண்ட நஞ்சினை கழுத்தினில் தேக்கியதால் கரிய மேகம் போன்று இருண்ட கழுத்தினை உடையவனும், மேகங்கள் தவழும் வானத்தில் தோன்றும் மின்னல் போன்று ஒளிவிட்டு பிரகாசிக்கும் சந்திரனை தனது சடையினில் அணிந்தவனும், எங்கும் மழையாய்த் தனது அருளினைப் பொழிபவனும், இன்ப மிகுதியினால் ஆடும் பித்தனைப் போன்று எப்போதும் நடனம் புரிபவனும், குகை போன்று ஆழமான வாயினை உடைய பூதங்கள் கூட்டமாக ஆரவாரம் செய்ய சூலத்தை எரிபவனும், பொய் கலவாத உண்மையான மெய்ப்பொருளாக விளங்குபவனும், உயிர்கள் தங்களது வினையின் தன்மைகளுக்கு ஏற்ப மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பிறக்குமாறு செய்வானும் ஆகிய பெருமான் திருவீழிமிழலையில் உறைகின்றான். இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய திருவீழிமிழலைப் பெருமானை அணுகி அவனை வழிபடாமல் நிற்கும் மாந்தர்கள் தங்களை அறியாமலே, தீயநெறிக்கு சென்று கெடுகின்றார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மைவான மிடற்றானை அவ்வான் மின் போல் வளர்சடை மேல் மதியானை மழையாய் எங்கும்

பெய்வானைப் பிச்சாடல் ஆடுவானைப் பிலவாய பேய்க் கணங்கள் ஆர்க்கச் சூலம் பொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப் பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை

செய்வானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

திருக்கயிலாயத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.55.5) அப்பர் பிரான், பெருமானை, காராகி நின்ற முகில் என்று அழைக்கின்றார். பேர்=புகழ்;நேர்வார்=ஒப்பானவர். நீராவியான நிழல்=நீருக்குள் ஆவியாகவும், நீருக்குள் நிழலாகவும் என்றும் பொருள் கொள்வார்கள். நீரில் வாழும் உயிர்களின் நிழல் பிரிந்து தோன்றாது நீருடன் கலந்து காணப்படுவது போல், அருவமாக உயிருடன் கலந்து இருப்பவன் என்றும் விளக்கம் சொல்வதும் உண்டு. பல தலங்களில் உறைந்து உலகெங்கும் பரவி இருப்பவனே, பிரமனும் திருமாலும் உமது அடி முடி காண முயன்ற போது உயர்ந்த அழலாய் நிமிர்ந்தவனே, மிகுந்த புகழ் உடையவனாய் உலகெங்கும் பரந்து இருப்பவனே, எனது சிந்தையில் புகுந்த பின்னர் அங்கிருந்து பெயர்ந்து வெளியே செல்லாது அங்கேயே நிலையாக இருப்பவனே, நீரினைத் தழுவி வரும் காற்று போலவும் நிழலைப் போலவும் குளிர்ச்சியாக உள்ளவனே, தனக்கு ஒப்பாக எவரும் இல்லாத நிலை கொண்ட ஒப்பற்றவனே, மழை பொழியும் கருத்த மேகம் போன்று அனைவர்க்கும் அருள் மழை பொழியும் அருட்கடலே, கயிலை மலையில் உறையும் இறையவனே,உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

பேராகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி

நீராவியான நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி

காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (6.55.3) அப்பர் பிரான், பெருமானை கருவாகி ஓடும் முகில் என்று குறிப்பிடுகின்றார். மருவார்=பொருந்தாதவர்கள்;சிவநெறியில் பொருந்தாத முப்புரத்து அரக்கர்கள் என்று இங்கே பொருள் கொள்ளவேண்டும்; மருவி=விரும்பி; உள்ளாவி= உடலின் உள்ளுக்குள் இருக்கும் உயிர்; கருவாகி ஓடும் முகில்=நீரினை உட்கொண்ட மேகம்.; தேசம்=பல தேசங்களைக் கொண்ட உலகம். திரு=செல்வம்; இங்கே அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்ததாகிய முக்திச் செல்வத்தை குறிப்பிடுகின்றது. இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும், அப்பர் பிரான், பெருமான் இடியாகவும் மழையாகவும் நின்று ம்ழை பொழிவிக்கின்றார் என்று கூறுகின்றார்.

மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி

உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி

திருவாகி நின்ற திருவே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி

கருவாகி ஓடும் முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.64.1) அப்பர் பிரான், பெருமானை, நீராகவும், மின்னலாகவும், இடியாகவும் இருப்பவன் என்று குறிப்பிடுகின்றார். கூற்றுவன்= உருத்திரனாக அழிக்கும் தொழிலைப் புரிவதால் கூற்றுவன் என்று அப்பர் பிரான் இங்கே இறைவனை குறிப்பிடுகின்றார்.குமைத்த=அழித்த; குவலயம்=பூமி; கலிக்கும்=ஒலிக்கின்ற; மின்= மின்னலுடன் கலந்து வரும் இடியினை இங்கே குறிக்கின்றது; கனம்=பெருமை வாய்ந்த;ஊரும்=தவழும்; ஆர்ந்த=பொருந்திய; அழிக்கும் தொழிலை ஏற்றுக்கொண்டு உருத்திரனாக செயல்படுபவனும், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த இயமனை உதைத்து அழித்தவனும். உயிர்கள் வாழும் உலகங்களாகவும், உலகங்கள் இயங்குவதற்கு உதவியாக இருக்கும் நீராகவும்,காற்றாகவும், நெருப்பாகவும், ஆகாயமாகவும், மின்னலாக மின்னி இடியாக ஒலித்து மழை பொழிவதற்கு காரணமாக இருப்பவனும், பெருமை வாய்ந்த செம்மை நிறத்து திருமேனியில் வெண்ணீற்றினை பூசியவனாகவும், பிறைச் சந்திரன் உலவும் சடையை உடையவனும், நீர் நிறைந்து மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது நிமிர்ந்த சடையில் தாங்கியவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கூற்றுவன் காண் கூற்றுவனைக் குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீரானான் காண்

காற்றவன் காண் கனலவன் காண் கலிக்கும் மின் காண் கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை

நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல்

ஏற்றவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.64.8), அப்பர் பிரான், இடியாகவும் மின்னலாகவும் விளங்கி மழை பொழிவிப்பன் பெருமான் என்று கூறுகின்றார். வன்கூற்று=கொடிய கூற்றுவன்; பிணையல்=சடையுடன் பிணைந்த; உரு=இடி; வன்கூற்றை என்ற சொல்லை முடித்தவன் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். சாபம்=வில்; வில்லை பிடித்தவன் என்று கூறுவதன் மூலம், வில்லினை பயன்படுத்தாமல் மூன்று கோட்டைகளையும் பெருமான் அழித்தார் என்ற செய்தி உணர்த்தப் படுகின்றது.

முடித்தவன் காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார் தம் புரம் மூன்றும்வேவச் சாபம்

பிடித்தவன் காண் பிஞ்ஞகனாம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி

முடித்தவன் காண் மூவிலை நல்வேலினான் காண் முழங்கி உருமெனத் தோன்றும் மழையாய் மின்னி

இடித்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.9) பயிரின் வாட்டம் தவிர்க்கும் மழையாக இருப்பவன் பெருமான் என்று, அப்பர் பிரான் கூறுகின்றார். அளியான்=கருணை உடையவன்; அண்ணிக்கும்=இனிக்கும் தன்மை உடைய: ஆன்=பசு; துளி=மழைத் துளி; தேறல்= கரும்புச் சாறு; கருணை வடிவினனாக இருப்பவனும், இனிக்கும் பசும்பால் போன்று தனது அடியாருக்கு இனிமையாக இருந்து பல நலன்கள் அருளுபவனும், உலகில் வளரும் பயிர்களாகவும் அந்த பயிரின் வாட்டம் தீர்க்கும் மழைத் துளியாக இருப்பவனும், திருமாலும் பிரமனும் தேடியும், தனது அடியையும் முடியையும் காண முடியாத வகையில் நெடிது உயர்ந்த தீப்பிழம்பாக நின்றவனும், குற்றங்கள் ஏதுமின்றி தொண்டு செய்யும் அடியார்களுக்கு அவர்கள் அணுகும் வண்ணம் மிகவும் எளியவனாக இருப்பவனும், ஏனையோருக்கு அரியவனாக இருப்பவனும், கட்டிக் கரும்பினில் உள்ளே இருக்கும் இனிய கருப்பஞ்சாறாக இருப்பவனும்,நாகேச்சரத்து நகரினில் உறைபவனும் ஆகிய இறைவனைச் சேராதார்கள், நல்ல நெறியில் செல்லாதவர்கள் ஆவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை வான் பயிரை அப்பயிரின் வாட்டம் தீர்க்கும்

துளியானை அயன் மாலும் தேடிக் காணாச் சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்கு

எளியானை யாவர்க்கும் அரியான் தன்னை இன்கரும்பின் தன்னுள் இருந்த தேறல்

தெளியானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.80.8) அப்பர் பிரான், பெருமானை வானகத்தில் வளர் முகில் என்று குறிப்பிடுகின்றார்.வடிவார்=அழகு நிறைந்த; ஊனகம்=உடல்; உலவுதல்=அழிதல்; உலவாதான்=என்றும் அழியாமல் இருக்கும் பெருமான்; தேன் மற்ற பொருட்களை விடவும் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதால் அதன் சுவையும் நீடித்து நிற்கின்றது. இறைவனுடன் உயிர் கலப்பதால் ஏற்படும் பேரின்பம் என்றும் நீடித்து நிலைத்து நிற்பதால், அந்த பேரின்பம் தேனகத்து இன்சுவை என்று இங்கே கூறப்படுகின்றது.

வானகத்தில் வளர்முகிலை மதியம்தன்னை வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை

ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்

கானகத்துக் கருங்களிற்றைக் காளத்தியைக் கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்

தேனகத்தில் இன் சுவையைத் திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன் நானே

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.83.2) அப்பர் பிரான், பெருமானை கூதலாய் பொழிகின்ற மாரி என்று குறிப்பிடுகின்றார்.கொண்டல்=கிழக்கிலிருந்து வீசும் காற்றினை பண்டைய நாட்களில் கொண்டல் என்று அழைத்தனர். இந்த காற்றே மழை பொழியும் மேகங்களை கொணர்ந்து தமிழகத்திற்கு மழை பொழிய காரணமாக உள்ளது என்று கூறுவார்கள். வடக்கிலிருந்து வீசும் காற்றினை வாடைக் காற்று என்றும்,மேற்கிலிருந்து வீசும் காற்றினை கோடைக் காற்று என்றும் தெற்கிலிருந்து வீசும் காற்றினை தென்றல் காற்று என்று பெயரிட்டு பண்டைய நாட்களில் அழைத்ததாக தெரிகின்றது. கூதல்=விடாது பொழியும் சிறு தூறல்கள்; மலைப் பகுதிகளில் இத்தகைய தூறல்களை நாம் காணலாம். குவலயம்=பூமி; பாசு என்றால் மூங்கில் என்று பொருள். மூங்கிலின் அடியே பெருமான் சுயம்புவாக தோன்றி நின்ற நிலையை குறிக்கும் வண்ணம், தலத்தின் பெயர் பாசூர் என்று வந்தது போலும்.

வேதமோர் நான்காய் ஆறங்கமாகி விரிகின்ற பொருட்கெல்லாம் வித்துமாகிக்

கூதலாய்ப் பொழிகின்ற மாரியாகிக் குவலயங்கள் முழுதுமாய்க் கொண்டலாகிக்

காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி நின்ற

பாதியோர் மாதினனைப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.87.9) அப்பர் பிரான், பெருமானை பயிரை வளர்க்கும் துளி என்றும் துளியில் நின்ற நீர் என்றும் குறிப்பிடுகின்றார். சிவன்=இன்பம் விளைவிப்பவன்; வெள்ளைப் பன்றியாக திருமால் பெருமானை வழிபட்ட இடமாக கருதப்படும் தலம். கோஷ்டத்தில் உள்ள தென்முகக் கடவுள் சன்னதிக்கு அருகில் வெள்ளைப் பன்றி, தாமரை மலர் கொண்டு இலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது. இந்த தல புராணச் செய்தி இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. நிலமாகவும், நிலத்தில் வளரும் பயிராகவும், பயிரினை வளர்க்கும் மழைத் துளியாகவும், அந்த மழைத் துளியில் உள்ள நீராகவும் உள்ளவனும், தனது சடை மேல் நீரினை தேங்கச் செய்து நிறுத்தியவனும், நாடுகளை ஆளும் மன்னர்கள் தங்களது மனதினில் இறைவனை நினைத்து வணங்கும் தன்மையால் அவர்கள் ஓங்கி வளர்வதற்கு அருள் புரிபவனும், சந்திரனின் பிறை போன்று வெண்மையாகவும் வளைந்தும் காணப்பட்ட பற்களை உடைய பன்றியாக அவதாரம் எடுத்த திருமால் நீங்காமலும் பிரியாமலும் வழிபட்ட பெருமையை உடையவனும், சிறப்பான தேவர்களுக்கெல்லாம் இன்பம் அளிப்பவனாகவும் உள்ள சிவபெருமான். சிவபுரம் என்று அழைக்கப்படும் தலத்தின் செல்வனாக விளங்குகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை..

பாரவன் காண் பாரதனில் பயிரானான் காண் பயிர் வளர்க்கும் துளியவன் காண்

துளியில் நின்ற

நீரவன்காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நிலவேந்தர் பரிசாக நினைவுற்றோங்கும்

பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளைப் பன்றிப் பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும்

சீரவன்காண் சீருடைய தேவர்க்கெல்லாம் சிவனவன்காண் சிவபுரத்து எம் செல்வன் தானே

திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.91.6) அப்பர் பிரான், பெருமானை கார்முகிலாய் பொழிவான் என்று குறிப்பிடுகின்றார். மழை பொழிவதும் இறைவனின் செயலே என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்; கார்முகில்=கருமையான மேகம்: முன்னீர்=முன்னம் பொழிந்த மழை நீர்; முந்நீர் என்று மூன்று வகையான நீர் (ஆற்றுநீர், மழைநீர், ஊற்றுநீர்) சென்று சேர்கின்ற கடலை குறிப்பிடுவார்கள். பொதுவாக கடலின் நீர் வற்றி மேகமாக மாறுகின்றது என்று கருதப்பட்டாலும், இங்கே கடலினை குறிப்பிடுவதாக முந்நீர் என்று கொள்வது பாடமாகாது என்று தருமபுரத்து ஆதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. கடிய நடை= விரைந்த நடை: ஒற்றி என்ற சொல்லுக்கு அடமானம் என்ற பொருளும் ஒத்தி வைக்கப்பட்டது என்றும் பொருளுமாக இரண்டு அர்த்தங்கள் உள்ளன, பொதுவாக ஒற்றியூர் என்ற சொல்லுக்கு அடமானம் வைக்கப்பட்ட ஊர் என்று பொருள் கொண்டு, தனது ஊரினையும் அடமானம் வைத்த பெருமான் என்று பரிகசிப்பது போன்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்பட்டாலும், பெருமான் தனது ஊராக ஒற்றியூரை வைத்துள்ளான் என்று பெருமையாக இந்த தலத்தினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கருத்த மேகமாகத் தோன்றி மழையாக பொழிபவனும்,அவ்வாறு பொழிந்த நீரினைக் கவர்ந்து மேகமாக மாற்றுபவனும், விரைந்து நடக்கும் விடையினைத் தனது வாகனமாகக் கொண்டு பல ஊர்கள் திரிபவனும்,ஒற்றியூர் என்ற தலத்தை தனது ஊராகக் கொண்டு உலகம் முழுவதும் ஆள்பவனும், ஓங்காரமாகிய பேரேழுத்தினையே தனது பெயராக உடையவனும்,பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட தேவர்களால் மந்திரங்கள் சொல்லப்பட்டு துதிக்கப்படுபவனும் ஆகிய பெருமான் சிறப்பு வாய்ந்த எறும்பியூர் மலையின் மேல் ஒளி வீசும் மாணிக்கமாகத் திகழ்கின்றான். அத்தகைய பெருமானைச் சென்று அடையும் பேற்றினை அடியேன் பெற்று வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

கார் முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முன்னீர் கரப்பானைக் கடிய நடை விடை ஒன்றேறி

ஊர் பலவும் திரிவானை ஊரதாக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு

பேர் எழுத்து ஒன்று உடையானைப் பிரமனோடு மாலவனும் இந்திரன் மந்திரத்தாலேத்தும்

சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன் நானே

நின்ற திருத்தாண்டகத்தின் பாடலில் (6.94.4) அப்பர் பிரான், பெருமானை, காற்றாகி கார்முகிலாய் இருப்பவன் என்று கூறுகின்றார். காற்று மற்றும் நீர் ஆகிய இரண்டுமே உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள். களிறு=யானை, இங்கே கூற்றுதைத்த சிவபெருமான் யானையாக உருவகப்படுத்தப் பட்டுள்ளார். கங்குல்=இரவு; நாளின் ஒரு பகுதியான இரவினைக் குறிப்பிட்டு, மற்றொரு பகுதியான பகலையும் இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.ஏற்றான்= ஏற்றுக்கொண்டவன். தான் நடத்தும் ஐந்து தொழில்களையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டவன் பெருமான். உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையின் பேரில், அந்த உயிர்கள் உய்வதற்காக, ஐந்தொழில்களையும் ஏற்றுக்கொண்டவன். தனக்குத் தலைவன் யாரும் இல்லாத காரணத்தால்,சிவபிரானை, இன்ன செயல் செய்க என்று பணிப்பார் எவரும் இல்லாத நிலை, தொழில்களை அவன் தானே ஏற்றுக்கொண்ட நிலையை குறிப்பிட்டு, இங்கே மறைமுகமாக உணர்த்தப் பட்டுள்ளது. சிவபெருமான், படைக்கும் தொழிலை பிரமனுக்கும், காக்கும் தொழிலை திருமாலுக்கும், ஒப்படைத்து அவர்கள் மூலம் அந்த தொழில்கள் செய்வதைப் போன்று எவரும், சேர்ந்தறியாக் கையானான சிவபிரானுக்கு எந்த பொறுப்பினையும் ஒப்படைக்கவில்லை.

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க் கனவாகி நனவாகிக் கங்குலாகிக்

கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறுமாகிக் குரைகடலாய் குரைகடற்கோர் கோமானுமாய்

நீற்றானாய் நீர் ஏற்ற மேனியாகி நீள் விசும்பாய் நீள்விசும்பின் உச்சியாகி

ஏற்றானாய் ஏறு ஊர்ந்த செல்வனாகி எழும்சுடராய் எம்மடிகள் நின்றவாறே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.55.2) இறைவனை ஒளிகொள் வெண்முகிலாய் பரந்து எங்கும் பெய்த மழை என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். நீர்வளம் சுருங்கி வயல்கள் காய்ந்த நிலையில் பெரு வெள்ளமாக மழை பொழிந்து அருளியதையும், வெள்ளம் வடிய வேண்டிய போது அடர்த்தியாக பெய்து கொண்டிருந்த மழையினைத் தவிர்த்து அருள் புரிந்து பன்னிரண்டு வேலி நிலங்களை திருப்புன்கூர் பெருமான் பெற்றதையும் இந்த பாடல் குறிப்பிடுகின்றது. இந்த பாடலில் ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினை குறிப்பிடுகின்றது. ஒரு முறை மழையின்றி பூமி வறண்டு கிடக்க மக்கள் வருந்தியதைக் கண்டு, கலிக்காம நாயானர் திருப்புன்கூர் இறைவனிடம் மழை பொழிவித்தால் ஆறு வேலி நிலம் அளிப்பதாக குறிப்பிட்டு வேண்டிக்கொள்ள, இறைவனும் அடர் மழை பொழிவிக்கின்றார். அடர் மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவிக்கவே,வெள்ளத்தைத் தவிர்க்க மேலும் ஆறு வேலி நிலம் தருவதாக சொல்லி வேண்டவே, வெள்ளம் தவிர்க்கப்படுகின்றது. இறைவனின் இத்தகைய கருணைச் செய்ல்களை அறிந்து கொண்ட தான், இறைவனின் திருவடிகளே தஞ்சம் என்று அவனது திருவடிகளைச் சென்று அடைந்ததாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் மற்ற பாடல்களிலும் பெருமானின் பல கருணைச் செயல்கள் குறிப்பிடப் படுகின்றன.

வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீர் இலை மாநிலம் தருகோம்

உய்யக் கொள்க மற்று எங்களை என்ன ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்து எங்கும்

பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டருளும்

செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.59.3) மழையாய் நின்று பொழிபவன் என்று பெருமானை சுந்தரர் குறிப்பிடுகின்றார்.கலைக்கு எலாம் பொருளாக இருப்பவன் என்று நூல்கள் உணர்த்தும் பொருளாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

கார்க்குன்ற மழையாய்ப் பொழிவானைக் கலைக்கு எலாம் பொருளாய் உடன் கூடி

பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானைப் பகலும் கங்குலும் ஆகி நின்றானை

ஓர்க்கின்ற செவியைச் சுவை தன்னை உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை

ஆர்க்கின்ற கடலை மலை தன்னை ஆரூரானை மறக்கலுமாமே

இந்த பாடலில் துயரவன் என்றும் துயரகற்றும் கழலவன் என்றும் பெருமானை குறிப்பிடுகின்றார். இரண்டு செயல்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை போல் தோன்றுகின்றன அல்லவா. ஒருவனுக்கு துயரத்தை கொடுத்து பின்னர் அந்த துயரத்தை போக்கி நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியம் பெருமானுக்கு இல்லை. ஒரு சில அற்ப மனிதர்கள் அவ்வாறு செய்து புகழினை சேர்க்க முயற்சி செய்யலாம். ஆனால் பெருமான் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் காரண காரியங்கள் உள்ளன. சற்று சிந்தித்தால் தான் அவற்றை நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லா உயிர்களும், தாங்கள் முந்தைய பிறவிகளில் சேர்த்துக் கொண்டுள்ள வினைகளுடன் தான் பிறக்கின்றன. அந்த வினைகளை அந்தந்த உயிர்கள் நுகர்ந்து கழிக்க வேண்டிய நிலையில் தான் உள்ளன. தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு, அந்த உயிர்கள் தன்னை வந்தடைந்து என்றும் அழியாத ஆனந்தத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்பும் இறைவன், இன்ப துன்பங்கள் மூலம் அந்த வினைகளைக் கழித்துக் கொள்ளும் பொருட்டு, இன்ப துன்பங்களை நமக்கு அளிக்கின்றான்.இந்த தன்மை தான் இங்கே, நமக்கு இன்பங்களால் மகிழ்ச்சியும் துன்பங்களால் துயரமும் விளைவிப்பவனாக பெருமான் இருக்கும் தன்மை தான், துயரவன் என்ற சொல் மூலம் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு இன்ப துன்பங்களை அனுபவித்து தங்களுடன் இந்த பிறவியில் பிணைக்கப்பட்டுள்ள வினைகளை கழித்துக் கொள்ளும் உயிர்கள், தாங்கள் எதிர் கொள்ளும் இன்ப துன்பங்களால் சலனம் அடையாமல், மேன்மேலும் ஆகாமிய வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் இருக்கும் பக்குவ நிலை அடைந்தால், அத்தகைய உயிர்களுக்கு, மேன்மேலும் பிறவிகள் கொடுத்து இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்வதால், அந்த உயிர்களின் பக்குவ நிலையில் ஏதும் மாற்றம் இருக்காது என்பதால், இறைவன் மொத்த வினைகளையும் களைந்து விடுகின்றான்.இவ்வாறு மொத்த வினைகளும் களையப்படுவதால், வினைகளாகிய மலங்கள் அற்ற உயிர்கள், இறைவனின் அருளால், முக்தி நிலை அடைந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற தகுதியை அடைகின்றன. இத்தகைய விடுதலையால், மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அந்நாள் வரை உழன்ற துயரத்திலிருந்து அந்த பக்குவப்பட்ட உயிர்கள் விடுதலை பெறுகின்றன. இந்த நிலை ஏற்படுவதற்கு காரணமாக உள்ள இறைவனை துயரகற்றுபவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

பொழிப்புரை:

சோலைகள் நிறைந்த ஏழ் உலகங்களாகவும், உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் வாழ வைக்கும் வண்ணம் மழை பொழியும் மேகமாகவும், அந்த மேகத்தை இயக்கி மழை பொழியச் செய்யும் தொழில் செய்பவனும், உயிர்களுக்கு இன்ப துன்பங்களைத் தந்து உயிர்கள் தங்களது வினைகளை நுகர்ந்து கழிக்க வகை வகுப்பவனும், உயிர்கள் அனுபவிக்கும் பெரிய துன்பமாகிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் வீரக் கழல்கள் அணிந்த திருப்பாதத்தை உடையவனும், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து போர்வையாக அணிந்து கொண்டு மகிழ்ந்தவனும், சிறந்த அழகனாக விளங்குபவனும் ஆகிய பெருமான் உறைகின்ற வளமான நகரம் இடைமருது ஆகும்.

பாடல் 6:

நிறையவன் புனலொடு மதியும் வைத்த

பொறையவன் புகழவன் புகழநின்ற

மறையவன் ம்றிகடல் நஞ்சை உண்ட

இறையவன் வளநகர் இடைமருதே

விளக்கம்:

பொறையவன்=சுமையை உடையவன்; மறிகடல்=மடிந்து வரும் அலைகளை உடைய கடல்; மறையவன்=வேதங்களாக உள்ளவன்; புனல்=பொதுவாக தண்ணீரை குறிக்கும் சொல் என்றாலும் இங்கே கங்கை நதியை உணர்த்துகின்றது. நிறையவன்=குறைகள் ஏதுமின்றி நிறைவாக இருப்பவன்; குறைகள் ஏதும் இல்லாமல் நிறைவாக இருப்பவன் என்றும் குறைகள் அற்றவன் என்றும் இறைவ்னை குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். தனக்கு வாய்த்த பொருள் ஏதாயினும் அதனை ஏற்றுக்கொண்டு போதும் என்ற மன நிறைவுடன், குறை இல்லாமல் வாழ்ந்தால்,நமக்கு வாழ்க்கையில் பல துன்பங்கள் ஏற்படாது என்பதை நமக்கு உணர்த்தும் முகமாக, கோவண ஆடை. எருது வாகனம். காடு உறைவிடம், கபாலம் உண்கலன், என்று சிவபிரான் இருக்கின்றாரோ என்று தோன்றுகின்றது. இதனால் தான் எந்த குறையினையும் நிறையாக ஏற்றுக் கொள்ளும் பண்பு கொண்ட சிவபிரானை குறைவிலா நிறைவே என்று அருளாளர்கள் அழைத்தனர் போலும்.

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.125.7) திருஞானசம்பந்தர் பெருமானை நிறையவன் என்று குறிப்பிடுன்றார். நிறையவன் என்று பெருமானை, எந்த விதமான குறையும் இல்லாமல் நிறைவாக இருக்கும் தன்மையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மதி என்ற சொல்லுக்கு அறிவு என்றும் சந்திரன் என்ற இரண்டு பொருள் உள்ளதை நாம் அறிவோம். மதி உடையவன் என்று குறிப்பிடும்போது பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்டவன் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. மதியாக உள்ளவன் என்று குறிப்பிடும்போது, அறிவாக ஞானமாக உள்ளவன் பெருமான் என்று பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமாக உள்ளது. உறைவு=உறையும் இடம்; இறை=தலைவன்; சிவபுர நகரத்தின் பெருமையையும் ஆங்கே வாழ்கின்ற மக்களின் சிறப்பையும் கண்டுணர்ந்த திருஞானசம்பந்தர், அவர்களைப் போன்று தானும் பெருமானுக்கு அடிமையாக உள்ள தன்மையை இங்கே, இறைவன் தன்னை உடையவன் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார்.

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்

நிறையவன் உமையவள் மகிழ் நட நவில்பவன்

இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்

உறைவு என உடையவன் எமை உடையவனே

திருமங்கலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.10.4) திருஞானசம்பந்தர் பெருமானை குறைவிலா நிறைவே என்று அழைக்கின்றார்.ஆடியும் பாடியும், மனதினில் தியானம் செய்தும் மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபடும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. இந்த பாடலில் குணமில் குணமே என்று திருஞானசம்பந்தர் கூறுவது சற்று சிந்திக்கத் தக்கது. உயிரின் செயல்களை இராஜசம் தாமசம் சாத்துவீகம் ஆகிய மாயாகாரிய மூன்று குணங்களே தீர்மானிக்கின்றன. ஆனால் பெருமான் இந்த மூன்று குணங்களைக் கடந்தவன்; உணர்வுகளைக் கடந்தவன். எனவே தான் குணமிலி என்று பெருமானை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அதனால் பெருமான் குணம் ஏதும் இல்லாதவன் என்று நாம் கருதுதல் தவறு. அவன் மேலே குறிப்பிட்ட மாயாகாரிய குணங்களுக்கு மாறாக அருட்குணங்கள் எட்டு கொண்டவன். எனவே தான் குணமில் குணமே என்று பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தன்வயத்தனாதல், தூயஉடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, எல்லையற்ற ஆற்றல் உடைமை, வரம்பிலாத இன்பம் உடைமை, ஆகிய சிறந்த எட்டு குணங்கள் உடையவனாக இறைவன் திகழ்கின்றான். முன்னெறி=எல்லா நெறிகளுக்கும் முதன்மையான சிவநெறி; பாரிடம்=பூதகணம்;

பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம்

மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி

குறைவிலா நிறைவே குணமில் குணமே என்று

முறையினால் வணங்கும் அவர் முன்னெறி காண்பரே

தாங்கள் இசைக்கும் பறையின் ஒலியுடன் பாடலொலியைக் கலந்து ஆடல் புரியும் பூத கணங்கள் சூழ வீற்றிருக்கும் சிவபெருமான், வேதங்கள் பயின்று அதன் வழியே ஒழுகும் அந்தணர்கள் நிறைந்துள்ள திருமங்கலக்குடி தலத்தில் உறைகின்றார். அவரை குறைவிலா நிறைவே என்றும் குணமில் குணமே என்றும், ஏனையோருக்கு இல்லாத அரிய எட்டு குணங்களை உடையவனே என்றும் புகழ்ந்து, வேத ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள முறையில் வணங்கும் அடியார்கள் தொன்மையான நெறியாகிய சிவநெறியின் பயனை உணர்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.105.7) திருஞானசம்பந்தர் பெருமானை நிறை நிலாவிய ஈசன் என்று அழைக்கின்றார்.நிலாவி=நிலையாக இருத்தல்; என்றும் நிலையாக குறைவிலா நிறைவாக இருப்பவன் பெருமான் என்று இங்கே குறிப்பிடுகின்றார். துன்னாரும்=நெருக்கமாக திகழ; பெருமான் மிகுந்த விருப்பத்துடன் கீழ்வேளூர் தலத்தில் உறைவது, அந்த தலம் மறை வல்ல அந்தணர்கள் உறைகின்ற அந்த தலத்தில் இருந்தால் அந்தணர்கள் சொல்லும் நான்மறை கீதங்களை தான் கேட்கலாம் என்ற ஆசையினால் தான், என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பிறை நிலாவிய சடையிடைப் பின்னலும் வன்னியும் துன்னாரும்

கறை நிலாவிய கண்டர் எண்டோளினர் காதல் செய் கீழ்வேளூர்

மறை நிலாவிய அந்தணர் மலி தரு பெருந்திருக்கோயில் மன்னு

நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே

திருஞான சம்பந்தர் தான் பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.14) முதல் பாடலில் காடு உறைவிடமாக இருந்தாலும், உடை கோவணமாக இருந்தாலும், அதனால் குறை ஒன்றும் இல்லாதவர் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். அவரது உடை கோவணம், வாகனம் எருது, அவர் சடை உலராமல் நீருடனே இருக்கும், அவரது பணியாட்கள் பூத கணங்கள். இவ்வாறு மற்றவரிடம் இருந்து பல விதத்திலும் வேறுபட்டு காணப்படும் இறைவன் சிவபெருமான் நீங்காது உறைவது பைஞ்ஞீலி எனப்படும் தலம் என்று சம்பந்தர் கூறுகின்றார்.

ஆரிடம் பாடிலர் அடிகள் காடு அலால்

ஓர் இடம் குறைவிலர் உடையர் கோவணம்

நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும்

பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.121.1) யாதும் குறைவிலர் என்று பெருமானை, திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.கடறு=காடு; கொடிறனார்=உறுதியானவர். படிறு=வஞ்சனை; கொடிறு என்ற சொல் பூச நட்சத்திரத்தை குறிக்கும் என்று அபிதான சிந்தாமணி நூல் குறிப்பிடுகின்றது. தைப்பூச நன்னாளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பெருமானை, கொடிறனார் என்று குறிப்பிடுகின்றார் போலும். கோவணம் கொண்டு கூத்தாடும் என்ற தொடரினை குறைவிலார் தாம் போய் என்ற தொடருடன் கூட்டி, குறையேதும் இல்லாமல் அனைத்துச் செல்வங்களும் பெற்றுள்ள பெருமான் (உலகத்தில் உள்ள அனைத்து செல்வங்களும் அவர் தந்தது தாமே) கோவண ஆடையுடன் உள்ளார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.கொடிறனார் என்ற சொல்லுக்கு உறுதிப்பாடு உடையார் என்று பொருள் கொண்டு, யாதும் குறைவிலார் தாம் போய்க் கோவணம் கொண்டு என்ற தொடருடன் இணைத்து விளக்கம் அளிப்பதும் பொருத்தமாக உள்ளது. தன்னிடம் எத்தனை செல்வம் இருந்தாலும், அந்த செல்வத்தின் மீது பற்று ஏதும் வைக்காமல் எளிமையாக தோற்றம் அளிப்பதில் உறுதிப்பாடு உடையவராக விளங்கி, கோவண ஆடையுடன் பெருமான் காட்சி அளிக்கின்றார் என்று விளக்கம் அளிக்கின்றனர். படிறனார் என்ற சொல்லுடன் இணைத்து, தன்னிடம் அனைத்து செல்வஙகளும் இருந்த போதிலும், தான் ஏதும் இல்லாதவன் என்பதை உணர்த்தும் முகமாக, வஞ்சனையுடன் கோவண ஆடை அணிந்துள்ளார் என்றும் பொருள் கொள்ளலாம். குறைவிலார் என்ற சொல்லினை எந்த சொல்லுடன் சேர்க்காமல், குறை ஏதும் இல்லாமல் நிறைவாக விளங்கும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

இடறினார் கூற்றைப் பொடி செய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்தக்

கடறினார் ஆவர் காற்றுளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில்

கொடிறனார் யாதும் குறைவிலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்தாடும்

படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.41.1) பெருமானை ஒன்றும் குறைவிலர் என்று குறிப்பிடுகின்றார். கோவண ஆடையை உடுத்தி இருந்தாலும், எருதினை வாகனமாகக் கொண்டிருந்தாலும், அனைவரும் வெறுக்கும் பாம்பினை அணியாகக் கொண்டிருந்தாலும், உலர்ந்த மண்டையோடு தனது உண்கலமாக இருந்தாலும், உறைவிடம் காடாக இருந்தாலும், எந்த விதமான குறையும் இல்லாமல் அவை அனைத்தையும் உகந்து ஏற்றுக் கொள்பவர் சிவபிரான் என்றும் அத்தகைய பெருமானை சரணடையும் அடியார்க்கும் அவலம் ஏதுமில்லை என்றும் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது..

உடையர் கோவணம் ஒன்றும் குறைவிலர்

படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்

சடையில் கங்கை தரித்த சதுரரை

அடைய வல்லார்க்கு இல்லை அவலமே

ஆடியும் பாடியும், மனதினில் தியானம் செய்தும் மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபடும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஒரு குறையும் இல்லாமல் நிறைவாக இருப்பவன் இறைவன் என்று திருஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு குறைவிலா நிறைவே என்ற திருமுறைத் தொடரினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. குறைவிலாது நிறைந்து நிற்கும் தன்மையை நிறைவார்ந்த நீர்மை என்று குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடல் (6.3.9)இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னை நெற்றிமேல் கண் ஒன்றுடையான் தன்னை

மறையானை மாசொன்றிலாதான் தன்னை வானவர்மேல் மலரடியை வைத்தான்தன்னைக்

கறையானைக் காதார் குழையான் தன்னைக் கட்டங்கம் ஏந்திய கையினானை

இறையானை எந்தை பெருமான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.9.10) அப்பர் பிரான், பெருமானுக்கு ஒன்றாலும் குறைவில்லை என்று கூறுகின்றார்.நிறை=அடக்க குணம் கற்பு ஆகிய இரண்டு பொருள்கள் கொண்ட சொல். இரண்டுமே இங்கே பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம்;ஒற்றியூர்=அடமானம் வைக்கப்பட்ட ஊர். ஒன்றாலும் குறைவில்லை என்ற தொடர் மூலம் சிவபிரான் குறையேதும் இல்லாதவர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தேர், குதிரை, யானை போன்ற வாகனங்கள் இல்லை என்ற குறையோ (வாகனம், எருது), உயர்ந்த பட்டாடைகள் இல்லை என்ற குறையோ (உடை, கோவணம் மற்றும் தோலாடை), பொன்னாபரணம் இல்லை என்ற குறையோ (அணிகலன்கள், நாகம் மற்றும் எலும்பு மாலை), உயர்ந்த மாலைகள் இல்லை என்ற குறையோ (எலும்பு மாலை அல்லது தலைமாலை), வாசனை தரும் பொடிகள் பூசவில்லை என்ற குறையோ (மேனியில் பூசுவது திருநீறு), தமது தலமாகிய ஒற்றியூர், அடமானம் வைக்கப்பட்டு உள்ளது என்ற குறையோ இல்லாமால் இருப்பவர் சிவபெருமான் என்று உணர்த்தப்படுகின்றது. நிறைவான தன்மை உடையவர் பெருமான். நிறை என்ற சொல் இங்கே கற்பு என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பெண்களுக்கு நிறைவினை அளிப்பது கற்பு என்ற சிறந்த குணம் தானே. பெருமானிடம் தனது மனதினை பறிகொடுத்த அப்பர் நாயகியின் கூற்றாக அமைந்துள்ள பாடல். பெருமானிடம் தனது மனதினை இழந்த தலைவி, தனது கற்பினை பெருமான் கவர்ந்ததாகவும், தனது மனம் தன்வசம் இல்லாத காரணத்தால் பலவகையான துன்பங்களுக்கு ஆளாகி தான் வருந்துவதாகவும் இந்த பாடலில் உணர்த்துகின்றாள். நெற்றியில் கண் கொண்டுள்ள தன்மை பெருமானின் தனிக்குணம். வேறு எவருக்கும் இல்லாத தன்மை. தனது இல்லத்திற்கு பலி ஏற்பதற்காக வந்த பெருமான், தனது தனி அடையாளமாகிய நெற்றிக் கண்ணினை காட்டினார் என்று உணர்த்தும் அப்பர் நாயகி, பெருமான் தனது மனதினை கொள்ளை கொண்டுவிட்டார் என்றும் இந்த பாடலில் உணர்த்துகின்றாள்.

ஒன்றாலும் குறைவில்லை ஊர்தி வெள்ளேறு ஒற்றியூர் உம் ஊரே உணரக் கூறீர்

நின்று தான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர்

என்றும் தான் இவ்வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்போ

அன்றித் தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.24.10) அப்பர் பிரான் எற்றாலும் குறைவொன்றும் இல்லாதான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார், பொடி போன்ற மகரந்தம் கொண்ட கொன்றை மலர்; செற்றான்=அழித்தான்; எற்றாலும்=எந்த வகையிலும்;

பொற்றாது மலர்க் கொன்றை சூடினான்காண் புரிநூலன்காண் பொடியார் மேனியான் காண்

மற்றாரும் தன்னொப்பார் இல்லாதான்காண் மறையோதிகாண் எறிநீர் நஞ்சுண்டான்காண்

எற்றாலும் குறைவொன்றும் இல்லாதான்காண் இறையவன்காண் மறையவன்காண் ஈசன் தான்காண்

செற்றார்கள் புரம்மூன்றும் செற்றான் தான்காண் திருவாரூரன்காண் அவனென் சிந்தையானே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.37.4) எல்லை நிறைந்தானே என்று பெருமானை அப்பர் பிரான் அழைக்கின்றார்.கடற்கரையிலிருந்து காணும் போது, தொலை தூரத்தில் நிலமும் கடலும் தொடுவது போன்றும் கடல் வளைந்து இருப்பது போன்றும் தோற்றம் அளிக்கின்றது. ஆனால் அருகில் சென்று பார்த்தால் அந்த நிலை மாயத்தோற்றம் என்பது புரியும். அதே போன்று பெருமானும் நாம் இன்னதென்று அறிய முடியாத தோற்றம் கொண்டுள்ள தன்மை கருதி, தொடுகடலை பெருமானுக்கு உவமையாக அப்பர் பிரான் கூறுகின்றார் போலும். இந்த தோற்றத்தையே தொடுகடல் என்று அப்பர் பிரான் கூறினார் போலும். தொல்லை தொடுகடல் என்ற சொற்றொடரை தொல்லை கடல் என்றும் தொடுகடல் என்று பிரித்து பொருள் கொண்டு, பழமையான மேலைக்கடல் என்றும் சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட கீழைக் கடல் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். எல்லை நிறைந்தான்=உலகத்தின் எல்லைகளையும் தொடும் வண்ணம் எங்கும் நிறைந்து நிற்பவன்; எல்லை (நான்காவது அடியில் வருவது)=உறைவிடம்

தொல்லைத் தொடுகடலே என்றேன் நானே துலங்குமிளம் பிறையாய் என்றேன் நானே

எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ்நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே

அல்லல் கடல் புக்கழுந்துவேனை வாங்கி அருள் செய்தாய் என்றேன் நானே எல்லையாம் ஐயாறா என்றேன் நானே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே

திருவலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.6) அப்பர் பிரான் பெருமானை நிறையானான் என்று குறிப்பிடுகின்றார். கறுத்தவன்=கோபம் கொண்டவன், வெகுண்டவன்; நிலை= நிலையாக பாதுகாக்கும் செயல்; நிறை=இறுதி, அழிக்கும் செயல். உயிர்கள் மற்றும் உலகப் பொருட்கள் தோன்றுவதற்கும், நிலையாக நிலைத்து நிற்பதற்கும், அழிவதற்கும் மூல காரணனாக இருப்பவனும், நீராகவும் நிலமாகவும் மற்றுமுள்ள மூன்று பூதங்களாகவும் இருப்பவனும், எப்போதும் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளை உடைய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று ஊர்களையும் அழித்த வில்லினை ஏந்தியவனும், சிவந்த வாய் மற்றும் கரிய கூந்தல் மற்றும் தேன் போன்று இனிய மொழியினை உடைய உமையம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் சேர்த்தவனும், அனைத்து கலைகளாக இருப்பவனும், காற்றாக இருப்பவனும், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலன் கீழே விழுமாறு கோபத்துடன் உதைத்தவனும், கயிலாயம் எனப்படும் தெய்வீகம் நிறைந்த மலையாக இருப்பவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும்,வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை:

நிலையவன்காண் தோற்றவன்காண் நிறையானான்காண் நீரவன்காண் பாரவன்காண் ஊர் மூன்று எய்த

சிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை ஒரு பாகம் சேர்த்தினான் காண்

கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக் கறுத்தவன்காண் கயிலாயமென்னும் தெய்வ

மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே

கஞ்சனூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.90.9) அப்பர் பிரான் பெருமானை, நிறைவு ஆனான் என்று அழைக்கின்றார். தருக்கு=செருக்கு;கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போன்று சிவந்த திருமேனியில் வெண்ணீற்றினை பூசியவனும், தன்னை நினைக்கும் அடியார்களின் நெஞ்சினில் நிலைத்து நிற்பவனும், எங்கும் நிறைந்தவனும், தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப்பட்ட செருக்கு மிகுந்த முயலகனை அடக்கி அவனைத் தனது காலின் கீழே அழுத்தியவனும், சலந்தரனைப் பிளந்தவனும், தகுந்த ஞானம் உடைய ஞானியரின் சிந்தையில் விருப்பத்துடன் உறைபவனும், வேதங்களில் ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ள நெறி முறைகளாக இருப்பவனும், இயல்பாகவே மிகுந்த ஒளியுடன் திகழ்பவனும், மெய்ப்பொருளாக விளங்குபவனும், தோற்றமும் ஒடுக்கமும் கடந்த நிலையில் இருப்பதால் சான்றோர்களால் போற்றப்படும் கருத்தாக உள்ளவனும், கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்..

நெருப்புருவத் திருமேனி வெண்ணீற்றானை நினைப்பார் தம் நெஞ்சானை நிறைவானானைத்

தருக்கழிய முயலகன் மேல் தாள் வைத்தானைச் சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை

விருப்பவனை விதியானை வெண்ணீற்றானை விளங்கு ஒளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றும்

கருத்தவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.99.8) அப்பர் பிரான், பெருமானை நிறைவு உடையாய் என்று அழைக்கின்றார். கொய்=தளிர்,இலை; கூவிளம்=வில்வம்; அப்பர் பிரான் தினமும், இறைவனை வில்வ இலைகளாலும், கொன்றை மலர்களாலும் வழிபட்டமை இங்கே கூறப்பட்டுள்ளது.நெய்யினால் நீராட்டப்படுவதை மிகவும் விரும்பவனே; மலங்கள் அற்றவனே; தேவர்களைக் காப்பதற்காக விடம் உண்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தினை உடையவனே; குறை ஏதும் இன்றி நிறைவானவனே; வேதங்களில் வல்லவனே; நீதியானே; கண்களில் மை அணிந்துள்ள உமையம்மையை தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே; மான் தோலினை உடையாக மகிழ்ந்து அணிபவனே; அன்று பறித்த வில்வ இலைகள் மற்றும் கொன்றை மலர்மாலைகள் கொண்டு உன்னை தினமும் வழிபட்டு வந்த அடியேன், உனது திருவடிகளை நாடி வருகின்றேன். என்னை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவதாக அமைந்த பாடல்.

நெய்யாடி நின்மலனே நீலகண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே

மையாடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்

கொய்யாடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டுக் கூறி நின்று

பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

குறைவிலா நிறைவே என்று பெருமானை தனது ஆவடுதுறை பதிகத்தில்(7.70.6) அழைக்கும் சுந்தரர், தனக்குத் துணையாக வேறு எவரும் இல்லாததால் பெருமான் தான், அஞ்சல் என்று சொல்லி தனக்கு அருளவேண்டும் என்று கூறுகின்றார். நம் அனைவருக்கும் கூட, இறைவன் ஒருவன் தான் துணை.என்பதை உணர்த்தும் பாடல். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் தான் உறவாகக் கருதாததால், தனது பிழை ஒன்றினை பொறுத்து அருளினால் இறைவனுக்கு தாழ்வு ஏதும் ஏற்படாது என்று இறைவனுக்கே உணர்த்தி, தனது பிழைகளை பொறுக்குமாறு இறைவனை சுந்தரர் பணியும் பாடல்.

குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்காது உடையானே

உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே

சிறை வண்டார் பொழில்சூழ் திருவாரூர்ச் செம்பொனே திருவாவடுதுறையுள்

அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடல் (8.22.5) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் கோதிலா அமுது என்று குறிப்பிட்டு மணிவாசகர் அமுதமும் குறை உடையது என்று நமக்கு உணர்த்துகின்றார். அமுதம் உண்ட தேவர்கள் எவரும் இறப்பிலிருந்து தப்பிக்கவில்லை: மேலும் அமுதம் தோன்றிய இடம், நஞ்சு தோன்றிய பாற்கடலாகும். ஆனால் சிவபெருமானோ அத்தகைய குறையேதும் இல்லாதவர். அதனால் தான் அவரை கோதிலா அமுது என்று இங்கே மணிவாசகர் குறிப்பிடுகின்றார். குறையேதும் இல்லாமல் நிறைவாக இருப்பவனும், குற்றங்கள் இல்லாத அமுதமாக இருப்பவனும், முடிவு என்பது இல்லாமல் எப்போதும் எரியும் சுடராக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான், வேதத்தின் சொற்களாகவும், அந்த சொற்களின் பொருளாகவும் தனது மனதினில் நிலை பெற்று இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார். கரைகள் ஏதும் இல்லாத நீர் பாய்வது போன்று, தங்கு தடை ஏதும் இன்றி தனது சிந்தையில் ஊறும் சிவபெருமான், தனது உடலில் இடம் கொண்டமையால், தான் இனிமேல் இறைவனிடம் ஏதும் வேண்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இங்கே உணர்த்துகின்றார்.

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே

மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே

சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே

இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே

பொழிப்புரை:

குறைவற்ற நிறைவாக விளங்குபவனும், மிகுந்த வெள்ளத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியுடன் ஒற்றைப் பிறைச் சந்திரனையும் தனது சடையில் வைத்துக் கொண்டு சுமப்பவனும், மிகுந்த புகழினை உடையவனும், பலராலும் புகழப்படும் வேதங்களாக உள்ளவனும், மடிந்து வரும் அலைகளை உடைய பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடத்தை உண்டவனும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருப்பவனும் ஆகிய பெருமான் உறைகின்ற இடம் வளம் மிகுந்த இடைமருது நகரம் ஆகும்.

பாடல் 7:

நனிவளர் மதியொடு நாகம் வைத்த

பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்

முனிவரொடு அமரர்கள் முறை வணங்க

இனிதுறை வளநகர் இடைமருதே

விளக்கம்:

பனி மலர்=குளிர்ந்த மலர்கள்; நனி=நன்கு; நாள்தோறும் ஒவ்வொரு கலையாக வளரும் சந்திரன்; நன்றாக வளர்ந்து வரும் சந்திரன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தக்கனது சாபத்தினால் நாளுக்கு ஒரு கலையாக தேய்ந்து ஒற்றைப் பிறைச் சந்திரனாக மாறி, அடுத்த நாள் முற்றிலும் அழியக்கூடிய நிலையில், சந்திரன் பெருமானிடம் சரண் அடைகின்றான். பெருமானின் கருணையால், சந்திரன் அழிவிலிருந்து தப்பியது மட்டுமன்றி,நாளுக்கொரு பிறையாக வளரவும் தொடங்குகின்றான். இந்த தன்மையே வளர்மதி என்று இங்கே சொல்லப் பட்டுள்ளது. இந்த பாடலில் மதியொடு நாகம் வைத்த படர் சடையன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சந்திரனுக்கும் பாம்புக்கும் இடையே உள்ள பகை நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமில்லை என்பதால், பெருமானின் சடையினில் இருக்கும் பிறைச் சந்திரன் அச்சம் ஏதுமின்றி,அச்சத்தினால் வளர்ச்சி குன்றும் நிலையை தவிர்த்தமையால், வளர்கின்ற மதியாக உள்ளது என்பதை உணர்த்தும் வண்ணம் வளர்மதி என்று குறிப்பிடுகின்றார் போலும். வளர்மதி என்று குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே சிந்திப்போம்.

திருவிடைச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.78.1), திருஞானசம்பந்தர், பெருமானை வளர்மதி சூடியவன் என்று அழைக்கின்றார்.வரிவளர் அவிர் ஒளி அரவு=வரிகளோடு கூடியதாக, ஒளியுடன் திகழும் பாம்பு; அரை தாழ=இடுப்பினில் தங்க; மிசை=மேல்; கரி வளர் தரு கழல்=யானை உருவம் பொறித்த வீரக்கழல்; வலது காலில் வீரக்கழல் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு, இடது காலினில் சிலம்பு அணிந்தவராக, மாதொரு பாகராக இறைவன் விளங்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் வளர்மதிக் கண்ணியர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

வரிவளர் அவிரொளி அரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்

கரிவளர் தரு கழல் கால் வலனேந்திக் கனலெரி ஆடுவர் காடு அரங்காக

விரிவளர் தரு பொழில் இளமயில் ஆல வெண்ணிறத்து அருவிகள் திண்ணென வீழும்

எரிவளர் இனமணி புனமணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.3.11) அப்பர் பிரான், வளர்மதி என்று குறிப்பிடுகின்றார். நாகு=பசு; ஏறு=எருது:கடைக்கணித்தல்=முயற்சி செய்தல். இறைவனது கயிலைத் திருக்காட்சியைக் காண, தான் முயற்சி செய்ததை அப்பர் பிரான் குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவதுண்டு. சிலர் கடைக்கண் நிற்கின்றேன் என்று பிரித்து, கயிலைக் காட்சியைக் காண்பதற்காக, இறைவன் பணித்தபடி, திருவையாறு தலத்திலுள்ள கோயில் வாயிலில் தான் வந்து நின்றதை அப்பர் பிரான் குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவதும் உண்டு. பொதுவாக தனது கடைப்பாடலில் இறைவனின்,பகைவனுக்கும் அருளும் திறத்தினை இராவணனின் கயிலை நிகழ்ச்சி மூலம் கூறும் அப்பர் பிரான் அந்த பழக்கத்தினின்றும், இந்த பதிகத்தில் வழுவுகிறார்.தன் மீது இறைவன் காட்டிய அளவு இல்லாத அன்புடன் ஒப்பிடுகையில் இராவணனுக்கு பெருமான் அருளிய திறம் ஒன்றும் இல்லை என அப்பர் பிரான் நினைத்தார் போலும். கடினமான கயிலை யாத்திரை மேற்கொண்டபோது தடுத்து இளைப்பாற வைத்து, பின்னர் திருவையாறு குளத்தில் எழ வைத்து கயிலைக் காட்சியை எந்த சிரமமும் இன்றி காணச் செய்த கருணையை வியந்து அளவு படாததோர் அன்பு என அப்பர் பிரான் கூறுகிறார். இந்த கயிலை காட்சியைக் காண வேண்டும் என்று தான் பல காலம் ஏங்கி இருந்ததையும் இந்த பாடலில் குறிக்கும் அப்பர் பிரான், தனது நீண்ட நாள் அவா நிறைவேறியது காரணமாக எல்லையில்லாக் களிப்பில் மிதந்தார் போலும். இந்தப் பாடலில் களவு படாததோர் காலம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.சிவபெருமானைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் எனும் கொள்கை கொண்ட அப்பர் பிரான், தனது காலம் சிறிதும் விரயமாகாமல் கயிலைக் காட்சி கிடைத்தால், தனது காலம் வேறு எந்த செயலுக்கும் பயன்பட்டு களவு போகாமல் இருந்தது என்று இங்கே கூறுகின்றார்.

வளர்மதிக் கண்ணியினானை வார்குழலாளொடும் பாடிக்

களவு படாததொர் காலம் காண்பான் கடைக்கணிக்கின்றேன்

அளவு படாததொர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது

இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.07.02) அப்பர் பிரான், பெருமானை வளர்மதி சேர் சடையான் என்று குறிப்பிடுகின்றார்.உமையம்மையின் குரல் இனிமை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. கிளியைப் போன்று இனிமையான மழலை மொழி பேசும் உமையம்மையின் குரல்,தேனினும் இனியதாக இருப்பதால் தேன் மிகவும் திகைத்து அம்மையை நோக்குவதாக அப்பர் பிரான் கூறுகின்றார். அம்மையின் குரல் வளத்தைக் கண்டு தேன் திகைத்து நிற்க, இறைவனின் மேனி நிறத்தினைக் கண்டு, பவளம் திகைத்து நிற்பதாகவும் இங்கே கூறுகின்றார். கேள்வன்=கணவன்

தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம்

தான் நோக்கும் திருமேனி தழல் உருவாம் சங்கரனை

வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை வானோர்க்கும்

ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

பாவநாசத் திருப்பதிகத்தின் பாடலில் (4.15.8) அப்பர் பிரான், பெருமானை மாலை தோன்றும் வளர்மதி என்று குறிப்பிடுகின்றார். இன்சாறு=இனிய சாறு:துளக்கு=அசைவு இறைவன் மீது கொண்ட ஆசையினால் அவனை விருப்பத்துடன் விழுங்கியதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பொதுவாக, பழம் மற்றும் உணவுப் பொருட்களைத் தான் நாம் விழுங்கியதாக கூறுவோம். தான் விரும்பும் பழமாக அப்பர் பிரான், சிவபெருமானைக் கருதுகின்றார்.

மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட்டுறையும் மணாளனை
ஆலைக் கரும்பின் இன்சாற்றை அண்ணாமலையெம் அண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய சுடரில் திகழும் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி இட்டேனே

பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.60.8) அப்பர் பிரான், பெருமானை வளர்மதி கண்ணியான் என்று குறிப்பிடுகின்றார்.முண்டம்=தலைமாலை; உடலில் உயிர் புகுந்த பின்னரே அது உடல் என்று அழைக்கப்படும் தன்மையைப் பெறுகின்றது. அது வரையிலும் பிண்டம் என்று அழைக்கப்படும் பொருள், அனைத்து உயிர்களுடன் இணைந்து நிற்கும் பெருமான் உயிராக பிண்டத்துடன் கலந்த பின்னர் பிண்டம் தனது நிலையில் மாற்றம் அடைவதால், பிண்டமாக இருப்பவன் என்று குறிப்பிட்டு பிண்டத்தினுள்ளே இறைவன் இருக்கும் தன்மையை அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.இந்த நிலையை ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் என்று திருவாசகம் சிவபுராணம் நமக்கு உணர்த்துகின்றது.

ஒரு பொதுப்பதிகத்தின் முதல் பாடலில் (4.95.1) அப்பர் பிரான் வளர்மதி என்று குறிப்பிடுகின்றார். சட்ட=முழுவதும்: வானத்திலிருந்து தனது ஒளியினை சொட்டு சொட்டாக மண்ணில் வீழ்த்தும் நிலவினை, பிறையாகச் சடையில் அணிந்து, அந்த சந்திரனின் அருகில் தேன் சொட்டும் கொன்றை மலர்களை அணிந்துள்ள இறைவனே, பெண் மானைப் போன்ற மருண்ட பார்வையினை உடைய உமை அம்மையின் கணவரே, பளிங்கு போன்று தெளிந்த நீரினை உடைய மிழலைத் தலத்தில் உறைபவரே, அடியேன் நான் இறக்கின்ற தருணத்தில் உம்மை முழுவதும் மறந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் உமது கருணைப் பார்வை என் மீது விழவேண்டும என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டுவதாக அமைந்துள்ள பாடல்.

வான் சொட்டச் சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே

தேன் சொட்டச் சொட்ட நின்றட்டுத் திருக் கொன்றை சென்னி வைத்தீர்

மான் பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் மிழலையுளீர்

நான் சட்ட உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

தில்லைச் சிற்றம்பலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.1.3) அப்பர் பிரான், பெருமான் தனது சடையில் அணிந்துள்ள சந்திரனை வளர்மதியம் என்று குறிப்பிடுகின்றார். கருமான்=யானை, மான் என்ற சொல் பொதுவாக காட்டில் வாழும் விலங்கினை குறிக்கும். கரிய மான் என்று கருமை நிறம் கொண்ட யானையை குறிப்பிடுகின்றார். தாருகவனத்து முனிவர்கள் வேள்வியிலிருந்து எழுப்பி, சிவபெருமான் மீது ஏவியது காட்டுயானை என்பதால்,காட்டில் வாழும் விலங்கு என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அதள்=தோல்; வீக்கி=கட்டி; கனைகழல்=ஒலி எழுப்பும் கழல்கள்; கழல்கள் காலில் அணியும் ஒரு ஆபரணம் ஆகும். மானம்= பெருமை; மடித்து என்ற சொல் மட்டித்து என்று மருவியது; மானேர் நோக்கி=மானைப் போன்ற மருண்ட பார்வையினை உடைய பார்வதி தேவி; இந்த பாடல் சிவபெருமானது ஆடல் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றது. வாண்முகம்=வாள்முகம்=வாள் போன்று ஒளியினை வீசும் முகம்.

கருமானின் உரியதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல் கையேந்தி

வருமானத் திரள் தோள்கள் மட்டித்தாட வளர்மதியம் சடைக்கணிந்து மானேர் நோக்கி

அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற

பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.30.1) அப்பர் பிரான்., பெருமானை வளர்மதி சேர் கண்ணியான் என்று குறிப்பிடுகின்றார்.பந்தம்=உலகப் பொருட்களின் மீது நாம் வைத்திருக்கும் விருப்பு வெறுப்புகள்; வம்பு=நறுமணம்; வம்புந்து=நறுமணத்தை எழுப்புகின்ற; அடியேனுடன் இறுக்கமாக பிணைக்கப்பட்டு இருந்த கொடிய வினைகளையும், அடியேன் உலகப் பொருட்களின் மீது கொண்டிருந்த பாசத்தையும் அறவே நீக்கியவனும்,ஏழ்கடலாகவும் ஏழுலகமாகவும் இருப்பவனும், நறுமணம் நிறைந்த அழகிய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், அனைத்துப் பிறைகளும் தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் வந்து சரணடைந்த சந்திரனை அடைக்கலமாக தனது சடையில் ஏற்றுக் கொண்டு ஒற்றைப் பிறைச் சந்திரனை வளரும் சந்திரனாக மாற்றியவனும், வானோர்களின் வேண்டுதலுக்கு இணங்கி வானில் பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் வீழ்த்தி எரியச் செய்தவனும், ஊழிக் காலத்தில் பெருந்தீயின் நடுவே நின்று நடனம் ஆடுபவனும், பசுவிலிருந்து கிடைக்கப் பெரும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடுபவனும் ஆகிய பெருமானே, செம்பொன்னினால் செய்யப்பட்ட அழகிய மணிகள் பதிக்கப்பட்ட மாடங்களை உடைய திருவாரூர் நகரத்து திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எமது செல்வன் ஆவான் என்று அப்ப்பர் பிரான் கூறுகின்றார்.

எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழுலகும் ஆயினான் காண்

வம்புந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர்மதி சேர் கண்ணியன் காண்

வானோர் வேண்ட

அம்பொன்றால் மூவெயிலும் எரி செய்தான் காண் அனலாடி காண் ஆன் அஞ்சும் ஆடினான் காண்

செம்பொன் செய் மணிமாடத் திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (6.30.3) அப்பர் பிரான், பெருமானை வளர்மதி சேர் சடையான் என்று கூறுகின்றார். வார்=கச்சு; வனம்=அழகு;மாதேவன்=மகாதேவன், தேவர்களுக்கும் தலைவனாக விளங்குபவன்; கார்=கருமை நிறம்; மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியைத் தனது சடையில் தரித்தவனும், இயல்பாகவே மலங்களின் சேர்க்கை இல்லாதவனும், நெற்றியில் ஒரு கண்ணினை நிறைவாக உடையவனும், கச்சு அணிந்து அழகான மார்பகத்தினை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றவனும், அனைத்து பிறைகளும் தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் சரணடைந்த சந்திரனை வளரும் பிறைச் சந்திரனாக மாற்றித் தனது சடையில் அணிந்தவனும், தேவர்களுக்கு எல்லாம் தலைவனாக முழுமுதற் கடவுளாக இருப்பவனும், கருமை நிறம் கொண்ட மேகத்தின் நிறத்தினை உடைய கழுத்தினை உடையவனும், கல்லால மரத்தின் கீழே அமர்ந்தவாறு சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவனும், சிறப்பு மிகுந்த அழகிய மாடங்களை உடைய திருவாரூர் நகரத்து திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எமது செல்வன் ஆவான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

நீரேறு சடைமுடி எம் நிமலன் காண் நெற்றி மேல் ஒற்றைக் கண் நிறைவித்தான் காண்

வாரேறு வனமுலையாள் பாகத்தான்காண் வளர்மதி சேர் சடையான்காண் மாதேவன்காண்

காரேறு முகில் அனைய கண்டத்தான்காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான்காண்

சீரேறு மணிமாடத் திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.4) அப்பர் பிரான், பெருமானை, புனல் நதியும் பாம்பும் வளர்மதியும் சடையில் வைத்தவன் என்று குறிப்பிடுகின்றார். பொழில் ஏழு=ஏழுலகங்கள்; உய்த்தல்=செலுத்துதல்; அனைத்து உடல்களின் உள்ளே உயிராக இருந்து அந்த உடல்களை செலுத்துபவனும், ஓங்காரத்தால் உணர்த்தப் படுபவனும், அனைத்து உலகங்களும் தோன்றுவதற்கு விதையாக, முதற்காரணனாக இருப்பவனும், வானத்து மழையாக உலகை வாழ வைப்பவனும், மழையின் விளைவால் தோன்றும் பொருட்களாக இருப்பவனும், தன்னை விரும்பாதார் மனதினில் தோன்றாமல் இல்பொருளாக இருப்பவனும், ஏழுலகங்களையும் தாங்குபவனும், கங்கை நதி மற்றும் பாம்பு ஆகியவற்றுடன் தன்னைச் சரணடைந்த பின்னர் வளரும் நிலைக்கு மாறிய சந்திரனையும் தனது சடையில் ஏற்றவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

உய்ந்தவன்காண் உடல் தனக்கோர் உயிரானான்காண் ஓங்காரத்து ஒருவன்காண் உலகுக்கு எல்லாம்

வித்தவன் காண் விண்பொழியும் மழையானான் காண் விளைவவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும்

பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர்மதியும் பாம்பும் சென்னி

வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.63.2) அப்பர் பிரான், பெருமானை, வளர்மதியம் சடையான் என்று குறிப்பிடுகின்றார்.மருந்து=பிறவிப் பிணிக்கு மருந்தாக உள்ளவன்; மந்திரிப்பார்=மனதினில் ஆழமாக பஞ்சாக்கர மந்திரத்தை உச்சரிப்பவர்: பெருமான் தனது சடையில் அணிந்திருப்பது பிறைச் சந்திரன் என்றாலும், தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரன், பெருமான் அணிந்த நொடியிலிருந்து அழியாமல் வளரத் தொடங்கியதால் வளர்மதி என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கருந்தான மத களிறு=கரிய மதநீர் பெருக்கும் யானை; கனம்=பெருமை மிகுந்த;இரத்தத்தின் ஈரப்பசை மிகுந்த யானையின் தோலை உடலின் மீது அணிந்து கொண்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறுவார்கள். எனவே தான்,பெருமான் தான் அடக்கி தோல் உரித்த யானையின் தோலை தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட போது உமையன்னை அச்சம் கொண்டாள் என்று இங்கே கூறப்படுகின்றது. மற்றவர்களின் உடலுக்கு கேடு செய்யும் யானையின் பசுந்தோலும் இறைவனின் உடலுக்கு எந்தவிதமான கெடுதியும் செய்யவில்லை என்பதும் இங்கே மறைமுகமாக உணர்த்தப் படுகின்றது.

மருந்தானை மந்திரிப்பார் மனத்துளானை வளர்மதியம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து

இருந்தானை இறப்பிலியைப் பிறப்பிலானை இமையவர்தம் பெருமானை உமையாள் அஞ்சக்

கருந்தான மதகளிற்றின் உரி போர்த்தானைக் கனமழுவாட் படையானை பலி கொண்டூரூர்

திரிந்தானைத் திருவானைக்கா உளானைச் செழுநீர் திரளைச் சென்று ஆடினேனே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.10) பெருமான், அப்பர் பிரானை, வளர்மதியம் சடை வைத்தான் என்று குறிப்பிடுகின்றார்.இகழ்ந்தான்=பெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையின் பெருமையினை அறியாது இகழ்ந்த அரக்கன் இராவணன்; கயிலை மலையின் பெருமையை அறியாது அதனை இகழ்ந்து பின்னர் அதனை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அரக்கன் இராவணனின் இருபது தோள்களும் நொறுங்குமாறு தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவனும், தனது வலிமை அடக்கப்பட்ட பின்னர் உண்மை நிலையினை உணர்த்த அரக்கன் தனது உடலின் நரம்புகளைக் கொண்டு பாடிய இன்னிசையைக் கேட்டு அரக்கனுக்கு பலவிதமான அருள்கள் புரிந்தவனும், பூந்துருத்தி தலத்தில் உறைபவனும்,புண்ணியனும், விண்ணவர்களால் பெரிய செல்வமாக கருதப்படுபவனும், உமை அன்னையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து மகிழ்ந்தவனும்,தன்னிடம் சரணடைந்த பின்னர் வளரும் தன்மையினைப் பெற்ற சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துத் திகழ்பவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல். சிவபெருமான் அரக்கன் இராவணனை புகழ்ந்தார் என்ற பொருள்பட, இசை பாட இனிது கேட்டு புகழ்ந்தான் என்று இங்கே கூறுகின்றார். உலகம் அனைத்தும் கேட்கும் வண்ணம் உரத்த குரலுடன் அழுதவன் என்பதை உணர்த்தும் வண்ணம், அரக்கனுக்கு இராவணன் என்று பெயரிட்டு அழைத்தவர் சிவபெருமான் தானே. அவ்வாறு அழைத்ததை, சிவபெருமான் புகழ்ந்தார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார் போலும்.

இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழுநரம்பின் இசை பாட இனிது கேட்டுப்

புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் தன்னைப் புண்ணியனை விண்ணவர்கள் நிதியம் தன்னை

மகிழ்ந்தானை மலைமகள் ஓர் பாகம் வைத்து வளர்மதியம் சடை வைத்து மால் ஓர் பாகம்

திகழ்ந்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.

திருக்குடந்தை கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.6) அப்பர் பிரான் வளர்மதி என்று குறிப்பிடுகின்றார். சடையில் பொருந்திய வளர்மதி, மூன்று கண்களின் மென்மையான பார்வை, அருளினை உணர்த்தும் புன்முறுவல், ஒளிவீசும் மேனி, கொவ்வைச் செவ்வாய், துடி போன்று தோற்றத்தில் சிறுத்த இடை, இடது பாகத்தில் அம்மை, செம்பொன் மலை போன்ற தோற்றம் என்று பெருமானின் கூத்தினை அப்பர் பிரான் ரசித்து உணர்த்துகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் என்று குறிப்பிடுகின்றார். காலையில் முளைக்கும் சூரியனின் கதிர்கள் விளைவிக்கும் இளஞ்சூடு உடலுக்கு இதமாகவும் மென்மையாகவும் உள்ளதை நாம் உணர்கின்றோம். நேரம் செல்லச் அதே சூரியனின் கதிர்கள் நமது உடலினை வருத்துவதையும் நாம் உணர்கின்றோம். ஆனால் மூன்று சுடர்களாக கருதப்படும் பெருமானின் கண்களின் பார்வை நம்மை வருத்தாமல் இன்பம் தருவதாக உள்ள நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் தனது மூன்று கண்களையும் முழுவதுமாக திறந்து நம்மை நோக்கினால், அந்த கண்களின் தீட்சண்யத்தினை நம்மால் தாங்க முடியாது. எனவே தான் பெருமான், தனது கண்களை மிகவும் சிறிதாக திறந்து நம்மை நோக்குகின்றார் என்ற உண்மை, முளை ஞாயிறு அன்ன கண்கள் என்றும் மலர்க் கண்கள் என்றும் உவமைகள் கூறப்பட்டு உணர்த்தப் படுகின்றது. பெருமானிடம் சரணடைந்த சந்திரன், வளர்ச்சி அடைந்ததை உணர்த்தும் வண்ணம் வளர்மதி என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தேய்பிறைகள் பல கண்ட பின்னரும் சந்திரன் மறுபடியும் வளரும் நிலைக்கு வந்ததை, வருவதை, வரப்போவதை உணர்த்தும் வண்ணம் வளர்மதி என்று வினைத்தொகை சொல் பயன்படுத்தப் பட்டுள்ளதை நாம் உணரலாம்

முடி கொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர்க் கண்கள் மூன்றும்

அடி கொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி அணி முறுவல் செவ்வாயும் அழகாய்த் தோன்ற

துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர்ச் சோதிக் கடிச் செம்பொன் மலை போல் இந்நாள்

குடி கொண்டு என் மனத்து அகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

குழந்தைகள் வளர்வதற்கு அச்சமற்ற சூழ்நிலை அவசியம். காரைக்கால் அம்மையார் தனது அற்புதத் திருவந்தாதியில் (பாடல் எண் 36) பெருமானின் சடையில் இருக்கும் பிறைச் சந்திரன் தனக்கு அருகே பாம்பு இருப்பதைக் காணும் போது ஏற்படும் அச்சத்தில் எவ்வாறு வளரும் என்ற கேள்வியை பெருமானிடம் கேட்கின்றார். இறைவனுடைய சடையில் இருக்கும் பிறைச் சந்திரன் தேய்வதும் இல்லை, வளருவதும் இல்லை. எப்போதும் ஒரே நிலையில் இருக்கும் பிறைச் சந்திரன் அது. அந்த பிறைச் சந்திரனைக் கண்டதும் அம்மையாருக்கு ஓர் ஐயம் எழுகின்றது. இயற்கையாகவே சந்திரன் பாம்பினிடம் கொண்டுள்ள அச்சத்தினால், பிறைச் சந்திரன் வளராமல் உள்ளதோ என்ற ஐயம் தான். இந்த ஐயம் மிகவும் நயமாக இந்த பாடலில் வெளிப்படுகின்றது.மறு=கருப்பு; தெறும்=துன்புறுத்தும்; உழலும்=மனம் கலங்கும்; வான்=வானில் உள்ளோர்; பிள்ளை மதி=பாலச்சந்திரன், பிறைச் சந்திரன்; வான்=வானத்தில் உள்ளவர்கள். உயர்ந்த சடை மீது இருக்கும் பாம்பு எட்டிப் பிடித்தால் தாம் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுமோ என்று வானில் உள்ள தேவர்களே அஞ்சும்போது, சந்திரன் எவ்வாறு அஞ்சாமல் இருக்க முடியும் என்று அம்மையார் எண்ணுகின்றார். அம்மையாரின் தாயுள்ளத்தின் தன்மை இந்த பாடலில் பிறைச் சந்திரனின் மீது இரக்கமாக வெளிப்படுகின்றது.

மறுவுடைய கண்டத்தீர் வார்சடை மேல் நாகம்

தெறும் என்று தேய்ந்து உழலும் ஆவா உறுவான்

தரை மீது ஓடுமேல் தான் அதனை அஞ்சி

வளருமோ பிள்ளை மதி

இந்த பாடலில் முனிவர்கள் பெருமனை வழிபடுவதை முதலில் குறிப்பிட்டு அதன் பின்னர் தேவர்கள் வழிபடுவதை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.உயிரின் விருப்பமாகிய வீடுபேற்றைனையும் உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்பதையும் தவிர்த்து முனிவர்கள் பெருமானிடம் வேறெதையும் வேண்டுவதில்லை. இம்மை வாழ்வினில் தாங்கள் விரும்பும் எதனையும் அவர்கள் பெருமானிடம் வேண்டுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இம்மை வாழ்வினை, எத்தகைய விருப்பமும் இன்றி அவர்கள் வாழ்ந்து வந்தனர். இத்தகைய பக்தி, பெருமானிடம் பலன் ஏதும் வேண்டாமல் பெருமானை வழிபடும் பக்தி, நிஷ்காம்ய பக்தி என்று அழைக்கப்படுகின்றது. இதனை அடுத்து தேவர்கள் இறைவனை வழிபடுவதையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தேவர்கள் அனைவரும், தங்களது முந்தைய பிறவிகளில் செய்த நற்செய்கைகளின் பலனாக போக வாழ்க்கையினை அனுபவிப்பவர்கள். எனவே அந்த போக வாழ்க்கைக்கு இடையூறு வருகின்ற தருணங்களில், அவர்கள் பெருமானை வழிபடுகின்றனர். அசுரர்கள் அவர்களுக்கு நிரந்தரமான எதிரிகளாக இருப்பதால், அவர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவனை தேவர்கள் வழிபடுகின்றனர்.மேலும் பதவி மமதையால் தாங்கள் செய்கின்ற பல செயல்களால், சாபம் பெறுகின்ற தேவர்கள், அந்த சாபத்தின் விளைவினை நீக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் இறைவனை வழிபடுவதை, நாம் பல புராண நிகழ்ச்சிகளிலிருந்து அறிகின்றோம். எனவே அவர்கள் செய்கின்ற வழிபாடு, பலனை எதிர்பார்த்து செய்யப்படும் வழிபாடாக அமைந்துள்ளது. இத்தகைய வழிபாடு காமிய வழிபாடு என்று சொல்லப் படுகின்றது. நிஷ்காம்ய பக்தி என்பது மிகவும் உயர்ந்ததாக கருதப் படுகின்றது. எனவே அத்தகைய வழிபாடு செய்கின்ற முனிவர்களை முதலில் குறிப்பிட்டு பின்னர் காம்ய வழிபாடு செய்யும் தேவர்களை குறிப்பிடுகின்றார். மேலும் உயர்ந்த வழிபாடாகிய நிஷ்காம்ய பக்தியை நாம் பெறுவதற்கு முயற்சி செய்யவேண்டும் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் பாடலில் (8.5.16) மணிவாசக அடிகளார், மற்றவர்கள் வணங்கும் நிலைக்கு தாங்கள் உயரவேண்டும் என்ற விருப்பம் உடையவர்களாக வாழும் தேவர்கள், தங்களது விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காக, தேவர்கள் பெருமானை வணங்குகின்றனர் என்று கூறுகின்றார்.தார்=மாலை; தாரோய்=மாலை அணிந்தவன்; பாழ்த்த=பயன் ஏதும் இல்லாத; தேவர்களைப் போன்று, தாங்கள் உயரவேண்டும் என்றும் மற்றவர்கள் தம்மைத் தொழவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமானைத் தொழாமல், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக இறைவனை வணங்க வேண்டும் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின் பால்

தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லை தொழ வேண்டி

சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்

பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே

பொழிப்புரை:

நாள்தோறும் ஒரு கலையாக வளரும் தன்மையைப் பெற்ற பிறைச் சந்திரனையும், பாம்பினையும் தனது சடையில் வைத்துக் கொண்டுள்ள பெருமான்,குளிர்ந்த கொன்றை மலர்களையும் தனது விரிந்து படர்ந்த சடையினில் சூட்டிக் கொண்டுள்ளார். முனிவர்களாலும் தேவர்களாலும் முறையாக வணங்கப்படும் பெருமான், இனிதாக உறைகின்ற வளமான நகரம் இடைமருதாகும்.

பாடல் 8:

தருக்கின அரக்கன தாளும் தோளும்

நெரித்தவன் நெடுங்கை மாமத கரியன்று

உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும்

எரித்தவன் வளநகர் இடிமருதே

விளக்கம்:

தருக்கின=செருக்குடன் திரிந்த; ஒன்னலர்=பகைவர்: தனது வலிமையில் மிகுந்த செருக்கு உடையவனாக அரக்கன் இராவணன் திரிந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. அந்த செருக்கு தானே பெருமான் வாழ்கின்ற புனிதமான மலை கயிலை மலை என்பதையும் பொருட்படுத்தாமல், தான் செல்லும் வழியில் குறுக்கே நின்றது என்று முடிவு செய்து, கயிலாய மலையினைப் பேர்த்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தை அரக்கன் தொடர்வதற்கு துணிந்தான்.

பொழிப்புரை:

தனது வலிமையினால் செருக்கு உடையவனாகத் திகழ்ந்த அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அரக்கனின் தலைகளும் தோள்களும் கயிலாய மலையின் கீழே அமுக்குண்டு, நெரியும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றி மலையை அழுத்தியவன் பெருமான். நீண்ட துதிக்கையினை உடைய மதம் கொண்ட யானை, தன்னைத் தாக்க வந்த போது, அந்த யானையை தடுத்து நிறுத்தி அதன் தோலை உரித்தவன் பெருமான். தேவர்களின் பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்தவனாகிய பெருமான் உறைகின்ற நகரம் வளம் மிகுந்த இடைமருது ஆகும்.

பாடல் 9:

பெரியவன் பெண்ணினொடு ஆணுமானான்

வரியரவணை மறி கடல் துயின்ற

கரியவன் அலரவன் காண்பரிய

எரியவன் வளநகர் இடைமருதே

விளக்கம்:

அரவணை=அரவு+அணை=ஆதிசேடன் பாம்பு படுக்கையாக இருக்கும் தன்மை; மறி கடல்=மடிந்து வருகின்ற அலைகள் கொண்ட கடல்; கரியவன்=கரிய நிறம் கொண்ட திருமால்; அலரவன்= தாமரை மலரைத் தனது இருக்கையாகக் கொண்ட பிரமன்; எரியவன்=தீப்பிழம்பாக நின்றவன்;

பொழிப்புரை:

அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றிய தன்மையால் அனைத்து உயிர்களுக்கும் பெரியவனாக இருப்பவனும் ஆணுருவும் பெண்ணுருவும் கலந்து மாதொருபாகனாகத் திகழ்பவனும் ஆகியவன் பெருமான். கோடுகள் உடைய பாம்பாகிய ஆதிசேடன் படுக்கையாக விரிந்து இருக்க, மடிந்து வரும் அலைகள் உடைய பாற்கடலின் மீது அந்த பாம்புப் படுக்கையில் படுத்து உறங்கும் கரிய நிறம் கொண்ட உடலினை உடைய திருமாலும், தாமரை மலரினைத் தனது இருக்கையாகக் கொண்டுள்ள பிரமனும், முறையே தனது திருவடிகளையும் திருமுடியையும் காண முடியாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்ற பெருமான்,உறைவது வளம் பொருந்திய நகரமாகிய இடைமருதாகும்.

பாடல் 10:

சிந்தையில் சமணொடு தேரர் சொன்ன

புந்தியில் உரையவை பொருள் கொளாதே

அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா

எந்தை தன் வளநகர் இடைமருதே

விளக்கம்:

சிந்தையில்=சிந்தை இல்லாத; சிந்தனை அற்ற திறமை இல்லாத; பெருமானின் பண்புகளை சிந்தித்து சரியாக புரிந்து கொள்ளாமல், உண்மையை மறைத்து பெருமானை பழிக்கும் விதமாக கூறி வந்தமையால் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் சமணர்கள் என்று கூறினார் போலும். புந்தியில் உரை=புத்தி அற்ற சொற்கள்; ஓத்து=வேதம்; அரவம்=திருவிழாக்களால் எழுகின்ற ஆரவாரம் மிகுந்த ஓசை.

பொழிப்புரை:

சிந்திக்கும் திறனற்ற சமணர்களும் புத்தர்களும் சொல்கின்ற, புத்தியற்ற சொற்களை, உலகத்தவரே பொருள் உடைய சொற்களாக கருதாமல் புறக்கணிப்பீர்களாக. அந்தணர்கள் ஓதுகின்ற வேத ஒலிகளும் திருவிழாக்களின் ஆரவாரமும் என்று நீங்காது ஒலிக்கும் இடமருது தலமே எந்தையாகிய பெருமான் உறைகின்ற தலமாகும். இந்த நகரம் வளம் மிகுந்த நகரமாகும்.

பாடல் 11

இலைமலி பொழில் இடை மருதிறையை

நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன

பலமிகு தமிழிவை பத்தும் வல்லார்

உலகுறு புகழினொடு ஓங்குவரே

விளக்கம்:

பொழில்=சோலை; பலமிகு=பலவிதமான பலன்களை அளிக்கும் தன்மை வாய்ந்த;

பொழிப்புரை:

இலைகள் மிகுந்து செழிப்புடன் காணப்படும் மரங்கள் நிறைந்த சோலைகளின் இடையே அமைந்துள்ள இடைமருது தலத்தின் உறைகின்ற இறைவனை புகழ்ந்து, இறைவனின் திருவருள் பெற்ற ஞானசம்பந்தன் சொன்னதும், ஓதுவோருக்கு பலவிதமான நன்மைகள் பெற்றுத் தரும் சிறப்பினை உடையதும் ஆகிய தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் முறையாக பாடும் அடியார்கள், உலகினில் நிறைந்து காணப்படும் அனைத்து விதமான புகழ்களையும் பெற்று வாழ்வினில் ஓங்கி வாழ்வார்கள்.

முடிவுரை:

சந்திரன் ஒரு முறை தனது குரு ப்ரஹஸ்பதியின் மனைவி தாரையுடன் இன்பம் அனுபவித்துக் கொண்டு இருந்ததை அறிந்த பிரஹஸ்பதி சந்திரனுக்கு சாபம் அளித்தார். தான் பெற்ற சாபத்திலிருந்து தீர்வு காண இந்த தலத்தில் இருக்கும் சிவபிரானை வழிபட சந்திரன் இங்கு வந்த போது, அவனுடன் அவனது மனைவியர் ஆகிய இருபத்தேழு நட்சத்திரங்களும் உடன் வந்தனர். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டன. அந்த லிங்கங்கள் நட்சத்திர லிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் தனி சன்னதியாக வரிசையாக இருப்பதை காணலாம். இந்த லிங்கங்களை வழிபடுபவரின் நட்சத்திர தோஷங்கள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.

வரகுண பாண்டியன் ஒரு முறை மதுரையின் அருகே இருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். நேரம் போவது தெரியாமல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மன்னவன் மதுரை திரும்புவதற்கு மாலை நேரம் முடிந்து இரவு நேரம் தொடங்கிவிட்டது. இருட்டினில் வந்துகொண்டு இருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால், வழியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு வேதியர் மீது அவனது குதிரை இடறவே குதிரையின் குளம்புகளால் காயம் அடைந்த அந்த வேதியர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் மன்னன் அறியாமல் நடந்தபோதிலும், அந்தணன் இறப்பதற்கு காரணமாக இருந்தமையால், மன்னனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. மன்னன் எங்கு சென்றாலும் அந்த பிரமஹத்தி அவனை தொடர்ந்து கொண்டே இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மன்னன், மதுரை சொக்கநாதப் பெருமானை வேண்டினான். மன்னனது கனவில் தோன்றிய சோமசுந்தரக்கடவுள் இடைமருதூர் தலம் சென்று வழிபடவேண்டும் என்று ஆலோசனை கூறினார். தனது எதிரி நாட்டிற்கு எவ்வாறு செல்வது என்று பாண்டிய மன்னன் திகைத்த சமயத்தில்,சோழமன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க, பாண்டிய மன்னன் அவனுடன் போரிட்டு வென்றான். சோழ மன்னனை அவனது நாடு வரை துரத்திச் சென்ற பாண்டிய மன்னன், வழியிலிருந்த திருவிடைமருதூர் தலம் சென்றபோது. ஆலயத்தின் பிரதான கிழக்கு வாயிலின் வழியே கோயிலின் உள்ளே சென்றான். கோயிலுக்குள் சென்று மன்னனை பின் தொடர முடியாத பிரமஹத்தி, கோயிலின் கிழக்கு வாயிலில் தங்கி மன்னன் வெளியே வரும் சமயத்தை எதிர் நோக்கி காத்திருந்தது. கோயிலுள் தொடர்ந்து வராத பிரம்மஹத்தியை கவனித்த மன்னன், சிவபிரானை வழிபட்ட பின்னர் எவ்வாறு வெளியே செல்வது என்பதை யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு அசரீரி வாயிலாக இறைவன் மன்னனை மேற்கு வாயில் வழியாக வெளியே செல்லுமாறு பணித்தார்.மன்னனும் அவ்வாறே மேற்கு வாயில் வழியாக வெளியேறிவிட்டான். இதனை அறியாத பிரம்மஹத்தி கிழக்கு வாயிலில் காத்துக் கொண்டு இருந்தது. (இன்றும் பிரமஹத்தி பாண்டிய மன்னனுக்காக காதுக் கொண்டு இருப்பதாக கூறுவர். ஒரு சிறிய கோரமான உருவம் உடைய சிலை ஒன்றினை கிழக்கு வாயிலில் நாம் காணலாம்.) இந்த காரணத்தால் இன்றும் கிழக்கு வாயில் வழியாக கோயில் சென்று மேற்கு வாயில் அம்மன் சன்னதி கோபுரவாயில் வழியாக வெளியேறுவதை பழக்கமாக பக்தர்கள் கொண்டுள்ளனர். இதே போன்ற நிகழ்ச்சி அஞ்சத்வஜன் என்ற சோழ மன்னனின் வாழ்வில் நிகழ்ந்ததாகவும் கூறுவர்.

வரகுண பாண்டியன் சிவபிரான் அருளால் பிரமஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்ட பின்னர், காந்திமதி என்ற பெண்மணியை மணந்து அந்த பெண்மணியை ராணியாக்கினான். ஆனால் மணம் புரிந்துகொண்ட பிறகு, மன்னன் அனைத்து உலகமும் சிவ மயம் என்றும் சிவபிரானுக்கு உரியது என்றும் நினைக்கத் தொடங்கியதால், மன்னனால் மனைவியுடன் இன்பமாக இருக்க முடியவில்லை. மணம் புரிந்துகொண்டது மிகப் பெரிய தவறு என்று கருதின மன்னன் ஒரு நாள் தனது மனைவியை திருவிடைமருதூர் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்று சிவபிரானிடம் தனது மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான்.மன்னனின் பக்தியை உணர்ந்த சிவபிரானின் உருவத்துடன் ராணி காந்திமதி ஒன்றறக் கலந்துவிட்டாள். காந்திமதியின் உருவச் சிலையை பிராகாரத்தில் நாம் காணலாம். இந்த செய்தியை மணிவாசகர் திருவாசகம் திருவார்த்தைப் பதிகத்து பாடலில் குறிப்பிடுகின்றார் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.இடவை என்ற சொல், திருவிடைமருதூர் தலத்தினை குறிக்கும் சொல்லாகும்.

மாலயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கருள் செய்த ஈசன்

ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம் திகழுங்

கோல மணியணி மாடநீடு குலாவும் இடவை மடநல்லாட்கு

சீலம் மிகக் கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே

இந்த பதிகதின் முதல் பத்து பாடல்களிலும், பெருமான் உறைகின்ற நகரம் வளம் பொருந்திய இடைமருது என்று சொல்லப் படுகின்றது. இந்த நகரினில் வீற்றிருக்கும் பெருமானின் சிறப்புகள் ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்பட்டு, அந்த இறைவனை நாம் வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்பதை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். உயிர்களின் உண்மையான விருப்பம் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபடுவது தான். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் ஆற்றல் உடையவன் பெருமான் என்பதை முதல் பாடலில் உணர்த்துகின்றார். இரண்டாவது பாடலில், எவராலும் தோற்றுவிக்கப் படாமலும் முடிவற்றவனாகவும் இருக்கும் இறைவனின் சிறப்புத் தன்மை உணர்த்தப்படுகின்றது. உயிர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் பெரு விருப்பம் கொண்டவனாக இறைவன் உள்ள தன்மை, பக்குவப்பட்ட உயிர்களைத் தேடி இறைவன் பலியேற்கும் கருணைச் செயல் மூலம் உணர்த்தப்படுகின்றது.நான்காவது மற்றும் எட்டாவது பாடல்கள், அவனது எல்லையற்ற ஆற்றலை, எவரும் நினைத்துப் பார்க்கவும் முடியாத செயலை, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை அழித்த வீரச் செயலை குறிப்பிடுகின்றது. மழையாக பொழிந்து உயிரினங்கள் வாழ்வதற்கு உதவும் தன்மை ஐந்தாவது பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. ஆலகால நஞ்சினை உட்கொண்டு அனைவரையும் காத்த கருணைச் செயல் ஆறாவது பாடலில் சொல்லப் பட்டுள்ளது.பலன் ஏதும் எதிர்பாராமல், முனிவர்கள் போன்று இறைவனை வழிபடுவதே சிறந்த வழிபாடு என்பதை ஏழாவது பாடல் நமக்கு அறிவுரையாக சொல்கின்றது.ஒன்பதாவது பாடல், அனைத்து உயிர்களினும் பெரியவன் இறைவன் என்பதை உணர்த்துகின்றது. இத்தகைய பெருமை நிறைந்த தன்மையை சரியாக புரிந்து கொள்ளாமல், மாற்று மதத்தவர்கள் இறைவன் குறித்து சொல்லும் பழிச் சொற்களை பொருட்படுத்தாமல் நாம் தொடர்ந்து இறைவனை வழிபடவேண்டும் என்ற அறிவுரை பத்தாவது பாடல் மூலம் சொல்லப் படுகின்றது. பதிகத்தின் கடைப்பாடலில், இந்த பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள், அனைத்து விதமான புகழினையும் பெற்று, உலகினில் சிறந்து வாழ்வார்கள் என்று திருஞானசம்பந்தரால் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் மூலம் இறைவனது எல்லையற்ற பெருமையினையும் அதற்குரிய காரணங்களையும் உணரும் நாம், திருவிடைமருதூர் சென்று, பலன் ஏதும் எதிர்பாராமல் இறைவனை வழிபட்டு, வாழ்வினில் புகழுடன் விளங்குவோமாக.



Share



Was this helpful?