இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மட்டிட்ட புன்னையங்கானல்

மட்டிட்ட புன்னையங்கானல்

2.47 மட்டிட்ட புன்னையங்கானல்

பின்னணி:

சுமார் 1300 வருடங்களுக்கு முன்னர் சென்னை நகரைச் சார்ந்த மயிலாப்பூர் தலத்தில் வாழ்ந்து வந்த சிவநேசன் எனும் வணிகர், மதுரை மாநகரம் மற்றும் வேறு பல தலங்களில் திருஞானசம்பந்தர் நிகழ்த்திய அதிசயங்கள் பற்றி கேள்விப்பட்டு திருஞானசம்பந்தர் பால் பெருமதிப்பு கொண்டு இருந்தார். அவர் தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு மணம் செய்து கொடுத்து தமது பெரும் செல்வத்தையும் அவருக்கே அளிக்கவேண்டும் என்று உறுதி பூண்டார். இவ்வாறு இருக்கையில் ஏழு வயதான பூம்பாவை ஒரு நாள் மலர் பறித்து வர தோட்டம் செல்ல, விதிவசத்தால் அங்கு இருந்த பாம்பு கடித்து இறந்தாள். சிவநேசர் மயிலை வரும் சிவனடியார்களுக்கு அமுதளிப்பதை தவறாமல் செய்து வந்தார். தினமும் மிகவும் அதிகமான நபர்களுக்கு அன்னதானம் செய்து வந்தமையால், ஒரு திருவிழா போல் அந்தச் செயல் நடந்து வந்தது. முன்னமே தனது மகள் திருஞானசம்பந்தருக்கு அடைக்கலம் என்று தீர்மானித்த படியால், பெண் இறந்த பிறகும் கூட அவளது எலும்பு சாம்பல் முதலியவற்றை ஒரு பானையில் வைத்து பெண் வளர்ந்த கன்னி மாடத்தில் வைத்து திருஞான சம்பந்தரின் வருகையை எதிர்நோக்கி காத்து வந்தார். ஐந்து வருடம் கழித்து திருஞானசம்பந்தர் ஒற்றியூர் வந்த செய்தி கேட்டு அவரை வரவேற்க முனைந்தார். ஒற்றியூரிலிருந்து மயிலை வரை வழி நெடுக பந்தல் அமைத்து திருஞானசம்பந்தரை பாதி வழி சென்று எதிர்கொண்டு வரவேற்றார். ஒற்றியூரில் இருந்த போது தொண்டர்கள் திருஞானசம்பந்தருக்கு, சிவநேசர் பற்றியும் அவரது மகள் இறந்த செய்தியையும் கூறி இருந்தனர்.மயிலை வந்த திருஞானசம்பந்தர் கபாலீச்சரனை வணங்கி கோயிலுக்கு வெளியில் வந்த பின்னர், சிவநேசரை நோக்கி அவரது மகளின் எலும்பும் சாம்பலும் அடங்கிய மண் குடத்தை கொண்டு வருமாறு கூறினார். அந்த மண்குடம் வரவழைக்கப்பட்ட பின்னர் திருஞானசம்பந்தர், அந்த மண்குடத்தை பார்த்தவராக, மட்டிட்ட புன்னை அம் கானல் மட மயிலை எனத் தொடங்கும் பதிகம் பாடி, பூம்பாவாய் பூம்பாவாய் என்று அழைத்து, கபாலீச்சரத்து இறைவனின் விழாக்களை காணாமல் போகலாமா என்று கருத்து வரும் படி பதிகம் பாடினார். இந்த பதிகத்தின் பத்தாவது பாடல் பாடப்பட்டபோது குடம் உடைந்து, தாமரைப் பூவினில் எழுந்து அருளும் திருமகள் போல் பூம்பாவை உயிருடன் எழுந்ததாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகிறார். இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளின் வளர்ச்சியும் பெற்று அழகான நங்கையாக பொலிவுடன் விளங்கியதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இவ்வாறு எழுந்த பூம்பாவையின் அழகு பெரிய புராணத்தில் பதினைந்து பாடல்கள் ஒதுக்கப்பட்டு தலைமுடி முதல் கால் வரை ஒவ்வொரு அங்கமும் விவரிக்கப்படுகின்றன. தனது மகளை மணம் புரியுமாறு சிவநேசர் வேண்ட, திருஞானசம்பந்தர், அவரது பதிகம் பாடி சிவன் அருளால் பூம்பாவை உயிர் பெற்ற காரணத்தால் தான் அவளுக்கு தந்தை முறை ஆன படியால் மணம் செய்து கொள்வது தகாது என விளக்கி, சிவபிரானின் தொண்டில் ஈடுபடுமாறு பூம்பாவையை கேட்டுக்கொள்ள, நங்கையும் அவ்வாறே தனது எஞ்சிய வாழ்நாளை கழித்தாள் என்று பெரிய புராணம் உணர்த்துகின்றது. பூம்பாவை உயிர் பெற்றெழுந்த அதிசயம் ஒவ்வொரு வருடமும் பிரமோற்சவத்தில் எட்டாவது நாளில் திருவிழாவாக கொண்டாடப் படுகின்றது. நிரந்தரமான வேலை கிடைக்கவும், ஈடுபட்டுள்ள தொழில் வளம் பெறவும், உடைந்த எலும்புகள் சேரவும் பக்தியுடன் ஓத வேண்டிய பதிகமாக கருதப் படுகின்றது.

பாடல் 1:

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

விளக்கம்:

மட்டு=நறுமணம்; மட்டு என்பதற்கு தேன் என்ற பொருளும் பொருத்தமே. புன்னை=புன்னை மலர்; கானல்=கடற்கரையில் உள்ள அடர்ந்த சோலை;கட்டு=கோயில்; மயிலைக் கட்டு என்று கூட்டி, மயிலாகிய அம்மையின் பிணைப்பினை விரும்பி என்று பொருள் கொள்ளவேண்டும் என்று திரு வ.சு.செங்கல்வராயப்பிள்ளை அவர்கள் விளக்கம் அளிக்கின்றார்; இட்டம் கொள்ளுதல்=விரும்பி வீற்றிருத்தல்; அமர்ந்தான்=விரும்பி வீற்றிருத்தல்; ஒட்டிட்ட பண்பு=பொருள் இரண்டு என்று பிரிக்க முடியாத வகையில் ஒன்றாக கலந்திருக்கும் அத்துவிதக் கலப்பு; உருத்திரப் பல்கணத்தார்=மதிசூடும் அண்ணலின் அடியார்கள் என்று சேக்கிழார் பொருள் கூறுகின்றார். அட்டிடல்=திருவமுது ஊட்டல்; மயிலைக் கட்டு என்ற தொடருக்கு கூட்டாக மயில்கள் இருக்கும் தன்மை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தலத்தின் பெயர் மயிலாப்பூர், திருக்கோயிலின் பெயர் கபாலீச்சரம். போதியோ=வாராமல் போவாயோ என்று சொல்லி வருக என அழைத்தல். பார்வதி தேவி வழிபட்ட தலம் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த தலத்தினில் மகளிர் வெகுவாக பெருமானை வழிபடுவதை அடுத்து வரும் பாடல்களில் குறிப்பிடுகின்றார். புன்னை தலமரம். பலருக்கும் அமுது படைத்தல், அமுதினை ஏற்போரின் மனம் மற்றும் நமது மனத்தையும் குளிரச் செய்யும் தன்மையை உடைத்தது; மேலும் நமக்கு சிவபுண்ணியத்தை பெற்று தருகின்றது.

ஒட்டிட்ட பண்பினர் என்று திருஞானசம்பந்தர் சொல்வது நமக்கு அப்பர் பெருமானின் திருவாரூர் பாடல் ஒன்றினை (6.25.1) நினைவூட்டுகின்றது.உயிராவணம்=உயிராத வண்ணம்; உயிர்த்தல் என்ற சொல் மூச்சு விடுதல் என்ற பொருளில் இங்கே கையாளப்பட்டுள்ளது. உற்று நோக்கி=தியானத்தில் ஆழ்ந்து மனதினில் உருவகப்படுத்திய இறைவனின் உருவத்தினை நினைந்து; கிழி=திரைச்சீலை, துணி; உயிர் ஆவணம் செய்தல்=உயிரினை ஒப்படைத்தல் ஆவணம்=சாசனம்;. ஆவணம் என்பதற்கு ஓலை என்ற பொருள் கொண்டு அடிமை ஓலை எழுதி, தன்னை அடிமையாக இறைவனுக்கு ஒப்படைத்தல் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அயிராவணம்=கயிலை மலையில் உள்ள யானை, இரண்டாயிரம் தந்தங்களை உடையது. அயிராவணம் (நான்காவது அடியில் உள்ள சொல்)=ஐ இரா வண்ணம், ஐயம் ஏதும் இல்லாத வண்ணம் உள்ள உண்மையான மெய்ப்பொருள். எவரோடு இறைவன் ஒட்டி வாழ்வான் என்று முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், கடைசி அடியில், இறைவனை உணராதவர்கள், அவனது இன்பத்தைப் பெறுவதற்கு உரியவர்கள் அல்லர் என்று கூறுகின்றார். அருட்கண் என்று சிவபெருமான் நமக்கு அருளிய கண் என்று இங்கே கூறப்படுகின்றது. பெருமான் நமக்கு கண் கொடுத்தது அவனது திருவுருவத்தைக் கண்ணாரக் கண்டு களிப்பதற்குத் தானே. அயிராவணம் என்று இரண்டாயிரம் தந்தங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த யானை கயிலையில் இருந்தாலும், அதனை வாகனமாகக் கொள்ளாமல், எளிமையான எருதினை வாகனமாகக் கொண்டு, தேவர்கள் உலகத்தினை ஆளும் திறமையும் வல்லமையும் கொண்டிருந்தாலும், தேவலோகத்தை ஆளாமல், அடியார்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரூர் நகரினை ஆளும் இறைவனே; தங்களது உயிர் மூச்சினை அடக்கி, உன்னை தியானித்து, உனது உருவத்தைத் தங்களது உள்ளத்தில் என்றும் அழியாத வண்ணம் பதித்து, உனக்கு அடிமையாகத் தங்களைக் கருதி, அந்த அடிமை சாசனத்தை உனது கையில் ஒப்படைக்கும் அடியார்களுடன், நீ இணைந்து வாழ்கின்றாய்.எவருக்கும் எந்த ஐயமும் ஏற்படாமல் உண்மையான மெய்ப்பொருளாக இருப்பவனே, உன்னால் வழங்கப்பட்ட கண்கள் கொண்டு உன்னைக் காணாதவர்கள்,உனது அருளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்லர், என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உரு எழுதி

உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத் தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி

அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட

அயிராவணமே என் அம்மானே நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே

பொழிப்புரை:

தேன் மிகுந்து நறுமணத்துடன் காணப்படும் புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் உடையதும், மயில்கள் கூட்டமாக உலவுவதும் ஆகிய மயிலாப்பூர் தலத்தினில், மயிலாக உருவெடுத்து தன்னை வழிபட்ட பார்வதி தேவியின் பால் மிகுந்த விருப்பம் கொண்டு, கபாலீச்சரம் என்று அழைக்கபடும் திருக்கோயிலில் அமர்ந்தவன் சிவபெருமான். அத்தகைய இறைவன் மீது நெருங்கிய அன்பு உடையதால் சிவகணங்களாகவே கருதப்படும் மாகேச்சுரர்களுக்கு, திருவிழாக் காலங்களில், திருவமுது செய்விக்கும் காட்சியை காணாது, பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ, சொல்வாயாக.

பாடல் 2:

மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்

விளக்கம்:

மட நல்லார்=பெண்மையின் குணங்களின் ஒன்றாக கருதப்படும் மடம் என்ற குணத்தை உடைய மாதர்கள்; அறிந்தும் அறியாதது போல் இருத்தல் என்பதே மடம் என்ற குணத்தின் தன்மை. மடம் என்ற சொல்லுக்கு இளமை என்று பொருள் கொண்டு இளமாதர்கள் எனலும் பொருத்தமே. கைப் பயந்த=தவறாது பயன் அளிக்கும் திருநீறு; திருநீறு அளிக்கும் பயன்கள் மிகவும் விவரமாக திருநீற்றுப் பதிகத்தினில் (2.66) திருஞானசம்பந்தரால் சொல்லப் பட்டுள்ளன.உடல் முழுவதும் திருநீற்றினைப் பூசிக் கொண்டுள்ள பெருமான் திருநீறு வடிவினனாக உள்ளான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இராமபிரான் ஒரு ஐப்பசி திருவோண நாளில் இறைவனை பூசித்து இராவணனைக் கொன்றதால் தனக்கு வந்த பாவத்தைத் தீர்த்துக் கொண்டதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது. அருந்தவர்கள்=அடியார்கள்; பெருமானை வழிபடும் அடியார்கள் தவம் செய்வதால் கிடைக்கின்ற பயனை அடைவார்கள் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. துய்த்தல்=திருவமுது செய்தல்; திருநீற்றின் வடிவத்தில் அருவப் பொருளாக விளங்கி இறைவன் அருள் புரிகின்றான் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

மை பூசப் பெற்றதும் ஒளி மிகுந்ததும் ஆகிய கண்களை உடையவர்களும், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய சிறந்த குணங்களை உடையவர்களும் ஆகிய இளமகளிர் வாழும் சிறந்த மயிலை நகரினில் உள்ள கபாலீச்சரம் திருக்கோயிலில் விருப்பத்துடன் உறைகின்றவன் பெருமான், அவன் பலன் தரும் திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பூசியவ்னாக, திருநீற்று வடிவினனாக காணப்படுகின்றான். அத்தகைய பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி திருவோண விழாவில் அருந்தவ முனிவர்கள் திருவமுது உண்ணும் காட்சிகளை காணாது பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ, சொல்வாயாக.

பாடல் 3:

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்

விளக்கம்:

வண் மறுகு=வளமையான வீதிகள்; மடம்=இளமை; வண் என்ற சொல்லுக்கு கொடைப் பண்பு என்று பொருள் கொண்டு, கொடைக் குணம் பொருந்திய மகளிர் வாழும் மயிலை தலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. துளக்கு=அசைவு, வருத்தம், தளர்வு; தனது அடியார்களுக்கு அருள் புரிவதில் என்றும் தளர்ச்சி அடையாதவன். தொல்=தொன்மை; கார்த்திகை நாள்=பண்டைய நாளிலிருந்தே கொண்டாடப்படும் திருவிழா என்பது புராணங்கள் மற்றும் பழைய இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து உணரப்படுகின்றது. சங்க இலக்கியமாகிய அகநானூறு கார்த்திகைக் திருவிழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டதை குறிப்பிடுகின்றாது. தளத்து=சாந்தினை, சந்தனத்தை; வரிசையாக விளக்கினை வைத்து ஏற்றி வழிபடும் தன்மையை விளக்கீடு காண்டல் என்று குறிப்பிடுகின்றார். தையல் என்றால் அழகு படுத்துதல் என்று பொருள்; பல விதமான நகைகள் அணிந்து தங்களது உடலை அழகு செய்து கொள்ளும் மகளிரை பொதுவாக தையலார் என்று குறிப்பிடுவார்கள்.

பொழிப்புரை:

தங்களது கைகளில் நெருக்கமாக வளையல்கள் அணிந்த இள மங்கையர் வாழ்வதும், கொடைக் குணம் நிறைந்த மாந்தர் வாழும் வீதிகளைக் கொண்டதும் ஆகிய சிறப்பினை உடைய மயிலை நகரினில் கபாலீச்சரம் திருகோயிலில் உறைகின்றவன் பெருமான். அவன் தனது அடியார்களுக்கு அருள் புரிவதில் என்றும் தளர்ச்சி அடையாதவன். இத்தகைய பெருமை வாய்ந்த இறைவன் உறைகின்ற தலத்தினில், சந்தனம் பூசப்பெற்ற மார்பினை உடையவர்களும் பல தரப்ப்ட்ட நகைகளை அணிந்து கொண்டு அழகு செய்து கொள்பவர்களும் ஆகிய மங்கையரும் சிறுமியரும், தொன்றுதொட்டு கார்த்திகைத் திருநாளை கொண்டாடி வருகின்றனர். அவ்வாறு கொண்டாடப்படும் கார்த்திகைத் திருநாளில் வரிசையாக வைத்து அழகாக ஏற்றப்படும் திருவிளக்குகளை காணாமல்,பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ, சொல்வாயாக.

பாடல் 4:

ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்

விளக்கம்:

ஊர்திரை வேலை உலாவும் என்ற தொடரை வேலைத்திரை ஊர் உலாவும் என்று மாற்றி அமைத்துப் பொருள் கொள்ள வேண்டும். வேலை=கடல்;திரை=அலைகள்; கடலலைகள் ஊருக்கு உள்ளே வந்து உலாவும் வண்ணம் கடற்கரையில் இருந்த நகரம் மயிலாப்பூர் என்று உணர்த்தப் படுகின்றது.பண்டைய நாளில் கடற்கரையில் இருந்த திருக்கோயில், டச்சுக்காரர்களால் இடிக்கப்பட்டு தேவாலயமாக எழுப்பப்பட்டது. பின்னர் அந்த கோயிலின் இடிபாடுகள் கொண்டு தற்போதைய கோயில் கட்டப்பட்டு, மண்ணில் புதைந்து கிடத்த மூர்த்தங்களைக் கொண்டு நிறுவப்பட்டது. கூர்தரு=கூர்மையான படைக்கலங்கள்; வேல் வல்லார்=வேலினை எறிந்து பெரிய மீன்களை கொல்லும் ஆற்றல் வாய்ந்த பரதவர்கள்; கொற்றம்=வெற்றி; சேரி=சேர்ந்து இருக்கும் இடம்; நகரத்தின் பல பகுதிகளுக்கு பெயர் சூட்டி சேரி என்று அழைப்பது பண்டைய நாளில் வழக்கமாக இருந்தது போலும். தெளிச்சேரி, திருமணஞ்சேரி என்று பாடல் பெற்ற அழைக்கப்படுவது நமது நினைவுக்கு வருகின்றது. இறையான்சேரி என்பது ஒரு வைப்புத்தலம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் (6.70.4). கார்தரு சோலை=சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புகாவண்ணம் மிகவும் அடர்த்தியாக சோலைகள் இருப்பதால் இருள் படர்ந்த சோலைகள் என்று குறிப்பிடப்ப்டுகின்றது. ஆதிரை என்ற சொல் எதுகை கருதி ஆர்திரை என்று மாற்றப்பட்டுள்ளது. ஊர்திரை வேலை என்ற தொடருக்கு ஊர்ந்து வரும் அலைகள் கொண்ட கடல் என்றும் விளக்கம் அளிக்கப்ப்படுகின்றது.

பொழிப்புரை:

கடலின் அலைகள் ஊரினுள்ளே வந்து உலாவும் வண்ணம் கடற்கரைக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள மயிலாப்பூர் தலத்தினில், கூரிய வேலால் பெரிய மீன்களைக் குத்திக் கொல்வதில் வெற்றி காணும் பரதவர்கள் வாழ்கின்ற சேரியினில் நீர்வளத்தால் அடர்ந்து வளர்ந்த மரங்கள் தங்களது நிழலில் இருளினை பரப்பும் மயிலாப்பூர் தலத்தினில் உள்ள கபாலீச்சரம் திருக்கோயிலில் மிகுந்த விருப்பமுடன் உறைபவன் சிவபெருமான். அத்தகைய பெருமை வாய்ந்த நகரினில் உறைகின்ற பெருமானுக்கு திருவாதிரைத் திருநாளில் நிகழ்த்தப்படும் திருவிழாவினை காணாதே பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ,சொல்வாயாக.

பாடல் 5:

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்

விளக்கம்:

ஒண் கண்=ஒளிவீசும் கண்கள்; புழுக்கல்=சோறு; இந்த பாடலில் தைப்பூசம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட தன்மை குறிப்பிடப்படுகின்றது. தைப்பூச நாள் சிறப்பாக கொண்டாடப்பட்ட செய்தி திருவிடைமருத்துர் தலத்து பதிகத்தின் பாடல்களிலும் (1.32.5, 5.14.1 & 2.76.5) வலஞ்சுழி பதிகத்தின் பாடலிலும் (2.22.6) கடுவாய்க்கரைபுத்தூர் தலத்து பதிகத்தின் பாடலிலும் (5,62.8) குறிப்பிடப் படுகின்றது. நெய்ப்பூசு=நெய் நிறைந்த;

பொழிப்புரை:

மை பூசப்பட்ட ஒளி நிறைந்த கண்களை உடைய சிறந்த இளமகளிர் வாழும் மயிலை தலத்தினில் தனது கைகளில் திருநீறு பூசியவனாக காணப்படும் இறைவன் கபாலீச்சரம் திருக்கோயிலில் விருப்பத்துடன் உறைகின்றான். நெய் மணம் வீசும் பொங்கல் படைத்து, தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்துள்ள மகளிர் கொண்டாடும் தைப்பூசம் திருவிழாவினைக் காணாதே பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ, சொல்வாயாக.

பாடல் 6:

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்

விளக்கம்:

மடல்=தென்னையின் நீண்ட ஓலை; அடல்=வலிமை வாய்ந்த; ஆனேறு=பசுக்குலத்தைச் சார்ந்த இடபம்; மாசிக்கடலாடு=மாசி மகத்தன்று நடைபெறுகின்ற கடலாட்டு விழா. தற்போதும் இந்த விழா நடைபெற்று வருகின்றது. அன்று இறைவனின் அடையாளமாக, இறைவனின் சூலம், சகல மரியாதைகளுடன் எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் நீராட்டப் படுகின்றது. அடிபரவி=பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி: இந்த விழாவினில் பங்கேற்க, அடியார்கள் கடற்கரைக்கு செல்வது இன்றும் நடைபெறுகின்றது. மங்கையர்கள் நடமாடுவது இந்த விழாவின் ஒரு அங்கமாக பண்டைய நாளில் இருந்தமை இங்கே உணர்த்தப்படுகின்றது. திருஞானசம்பந்தர் தனது திருவையாறு பதிகத்தின் பாடலில் (1.130.6) பெருமானின் வீதிவுலா வைபவத்தில் மகளிர் நடமாடுவதை குறிப்பிடுகின்றார். தேந்தாம்=இசையுடன் இணைந்து ஒலிக்கும் முழவினை உணர்த்தும் குறிப்புச் சொல்; நன்னெறி=உயிர்கள் வினைகளின் பிணைப்பிலிருந்தும் விடுதலை அளித்து, என்றும் அழியாத பேரின்பத்தில் ஆழ்த்தும் முக்தி நெறி. .சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் முக்தி நிலை அளிக்க முடியாது என்பதால், சிவபெருமானை ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.தாமம்=மாலை; மக்களை ஆட்சி செய்யும் வேந்தனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம், மக்களை காப்பதும் அவர்களுக்கு நல்ல வழி கட்டுவதும் தானே. அனைத்து உலகங்களுக்கும் வேந்தனாக விளங்கும் பெருமான், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நன்னெறி காட்டும் விகிர்தனாக உள்ள தன்மை இயற்கை தானே. நறுமணம் வீசும் கொன்றை மலர் மாலையினைத் தனது சடையில் அணிந்தவரும், புண்ணியமே வடிவமாக உள்ளவரும் ஆகிய இறைவன் உறையும் திருக்கோயில் உள்ள இடம், காந்தாரம் இசைக்கு பொருந்தும் வகையில் மகளிர் பாடல்கள் பாட, அழகிய வீதிகளில் அமைந்த அரங்குகளில் சிறந்த அணிகலன்களை பூண்ட இளம் பெண்கள் தேம் தாம் என்று ஒலிக் குறிப்புக்கு ஏற்ப நடமாடும் திருவையாறு நகரமாகும், என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;

வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறி காட்டும் விகிர்தனாகி

பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்

காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாடக் கவினார் வீதித்

தேந்தாம் என்று அரங்கு ஏறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே

பொழிப்புரை:

நீண்ட கீற்று மடல்கள் கொண்ட தென்னை மரங்கள் நிறைந்த மயிலைத் தலத்தில் உள்ள கபாலீச்சரம் திருக்கோயிலில் இறைவன், மாசித் திங்களில் கடலில் நீராடுகின்றான். அவன் வலிமை வாய்ந்த இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டு வலம் வருவதைப் புகழ்ந்து ஆடியும் பாடியும் கொண்டாடும் காட்சியைக் காணாதே பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ, சொல்வாயாக.

பாடல் 7:

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்

விளக்கம்:

மலி விழா வீதி=விழாக்கள் மலிந்த திருவீதிகள்; கலி விழா=ஆராவரம் மிகுந்த விழா; கலி என்ற சொல் கலி புருடனை குறிப்பதாக பொருள் கொண்டு,கலியின் தன்மையை கடிந்து கலி புருடனின் வலிமையை குறைத்து பெருமான் அருள் புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படும் விழா என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஒலி விழா=இசைக்கருவிகள் பல முழங்கும் விழா; பலி விழா=எட்டு திசைகளிலும் உள்ள திசைக்காவலர்களுக்கு பலி அளிக்கப்படுவதை நாம் இன்றும் புதுமனைப் புகுவிழாவினில் காணலாம். இந்த பழக்கம் பண்டைய நாளில் பங்குனி உத்திர நாள் திருவிழாவில் கடைப்பிடிக்கப்பட்டது போலும். ஆரவாரம் மிகுந்த திருவிழா என்பதை குறிப்பிடும் முகமாக ஒலிவிழா என்று குறிப்பிட்டார் போலும். பெருமானின் வீதிவலம் ஒவ்வொரு இல்லத்திலும் திருவிழாவாக கொண்டாடப்பட்ட தன்மை மலிவிழா வீதி என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

பெருமானின் திருவுலா திருவிழாக்களாக கொண்டாடப்ப்டும் வீதிகள் உடைய மயிலைத் தலத்தினில் வாழும் இள மங்கையர்கள் மிகுந்த ஆரவாரத்துடன்,கலிபுருடனின் தன்மையைக் கடிந்து உலகெங்கும் மகிழ்ச்சியுடன் விளங்க இறைவனின் அருளினை வேண்டும் நோக்கத்துடன் பல விழாக்களை கொண்டாடுவதை மகிழ்ச்சியுடன் காணும் இறைவன் அந்த தலத்தின் கபாலீச்சரம் திருக்கோயிலில் விருப்பத்துடன் உறைகின்றான். ஆடல் பாடல்களுடன் மிகுந்த உற்சாகத்துடன் பங்குனி உத்தர திருநாளில் கொண்டாடப்படும் பலிவிழாவின் ஆரவாரத்தைக் காணாதே பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ,சொல்வாயாக.

பாடல் 8:

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்

விளக்கம்;

தண்மை என்ற சொல்லுக்கு எதிர்மறை தண்ணா; நெஞ்சில் ஈரமற்றவனாக பலரையும் வருத்திய அரக்கன் இராவணன். பலருக்கும் வருத்தத்தை,வெம்மையை ஏற்படுத்தும் செயல்கள் புரிந்த அரக்கன் இராவணன்; இந்த பாடலில் குறிப்பிடப்படும் அட்டமி நாள் விழா, அடுத்த இரண்டு பாடல்களில் குறிப்பிடப்படும் பொற்றாப்பு மற்றும் பெருஞ்சாந்தி விழாக்கள், பெரும்பாலான திருக்கோயில்களில் தற்போது நடைபெறுவதில்லை. பதினெண் கணங்கள் என்று சிவகணங்களை குறிப்பிடுகின்றார். கண்ணாரக் காண்டல் என்று திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாவினை நேரில் கண்டு களித்தலை குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு செக்கிழார் அருளிய பெரியபுராணப் பாடலை, இந்த பதிகத்துடன் தொடர்பு கொண்ட பாடலை, நமது நினைவுக்கு கொண்டுவருகின்றது. இந்த பாடலில், நிலவுலகில் பிறந்த மனிதர்கள் பெறுகின்ற பயன் இரண்டு என்று சேக்கிழார் கூறுகின்றார். அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தலும் கண்ணிலால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தலும் என்று குறிப்பிடுகின்றார். இந்த இரண்டு செயல்களையே பதிகத்தின் மையக் கருதாகக் கொண்டு இந்த பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்டு, இந்த நிகழ்ச்சிகளை காணாமல் சென்று விட்டாயே பூம்பாவாய் என்று திருஞானசம்பந்தர் விளிப்பதை நாம் உணரலாம். பத்தரது வேடத்தை பரமனாகவே கருதி, அந்த வேடத்தைக் கொண்டாடி வழிபட்டு, திருவமுது ஊட்டுவது,உடை முதலாக அவர் வேண்டுவதை கொடுப்பது என்பது முதற்பயன். இயற்பகைநாயனார், இளையான்குடிமாற நாயனர், மெய்ப்பொருள் நாயனார், அமர்நீதி நாயனார், ஏனாதிநாத நாயனார், மானக்கஞ்சாற நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், குலச்சிறை நாயனார், அப்பூதி அடிகளார், மூர்க்க நாயனார்,முனையடுவார் நாயனார், இடங்கழி நாயனார், சிறுத்தொண்ட நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், கணநாத நாயனார், நரசிங்க முனையரையர்,கலிக்கம்ப நாயனார், நேச நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார் ஆகியோர்கள் சிவனடியார்கள் வேண்டியதை அளித்து முக்திநிலை பெற்ற அடியார்கள்.இரண்டாவதாக சொல்லப்படும் செயல், பெருமானை சிறப்பித்துச் செய்யப்படும் திருவிழாக்களை கண்டு களித்தல்; பெருமானின் திருவிழாக்களை காணும் அன்பர்கள் இம்மையிலும் மறுமையிலும் பல நன்மைகள் பெறுவார்கள் என்பதை உணர்த்தும் முகமாக நல்விழா என்று கூறுகின்றார், இந்த பெரியபுராணப் பாடலை இங்கே சிந்திப்பது பொருத்தமாகும்.

மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்

அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்

கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்

உணமையாம் எனில் உலகர் முன் வருகென உரைப்பார்

பொழிப்புரை:

தனது நெஞ்சில் ஈரமற்றவனாக, பலருக்கும் வருத்தம் விளைவிக்கும் செயல்களைச் செய்து வந்த அரக்கன் இராவணனின் வீரம் மிகுந்த தோள்களை சாய்த்து கயிலாய மலையின் கீழே அமுக்கி வருத்திய, கால் பெருவிரலை உடையவன் சிவபெருமான்; அவன் கண்களுக்கு நிறைவு தரும் வகையில் அழகு வாய்ந்த மயிலைத் தலத்தினில் உள்ள கபாலீச்சரம் திருக்கோயிலில் மிகுந்த விருப்பத்துடன் உறைகின்றான். பண்ணுடன் பொருந்திய பாடல்களை பாடியும் ஆடியும்,சிவகணங்களாக விளங்கும் அடியார்கள் கொண்டாடும் அட்டமித் திருநாளைக் காணாதே பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ, சொல்வாயாக.

பாடல் 9:

நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும்
முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்

விளக்கம்;

முற்றாங்கு உணர்கிலா=அளவு காணாத வண்ணம்; கற்றார்கள் போற்றும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு, கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்ற திருக்குறளை நினைவூட்டுகின்றது. சிவபெருமானைத் தொழுது வணங்கும் அடியார்களையே அருளாளர்கள் கற்றவர் என கருதுகின்றனர். கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி (6.32.1) கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன் (1.129.11)கற்றவர் தாம் தொழுதேத்த நின்றான் (1.05.09) கற்றவர் பரவியேத்தி (4.56.3) கற்றவர்கோர் கற்பகமாய் நின்றாய் (6.38.6) கற்றவர் தொழுதேத்தும் (7.48.1)கற்றவர் பரவப்படுவானை (7.61.11) கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி (9.05.02) கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல் (திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம்) ஆகிய திருமுறைப் பாடல்கள் நமது நினைவுக்கு வருகின்றன. மேலும் கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன் என்றும் ஒரு பொதுப் பதிகத்தில் (3.40.1)திருஞானசம்பந்தர் என்று கூறுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. பொற்றாப்பு=பொன்தாம்பு என்பதன் மருவு; பொன்னூசல் திருவிழா.

பொழிப்புரை:

மலர்களில் சிறந்ததாக கருதப்படும் தாமரை மலரினைத் தனது இருக்கையாகக் கொண்ட நான்முகனும் நாராயணன் என்று அழைக்கப்படும் திருமாலும்,தன்னை முழுவதுமாக அறிந்து கொள்ளாத வகையில், தங்களில் யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த அவர்கள் இருவரின் எதிரே, நீண்ட தழற்பிழம்பாக தோன்றியவன் பெருமான். அவன் தனது திருவடிகளை, கற்றவர்கள் தொழுதேத்த, கபாலீச்சரம் திருக்கோயிலில் உறைகின்றான். அந்த பெருமானுக்கு நிகழும் பொன்னூசல் திருவிழாவினைக் காணாது பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ, சொல்வாயாக.

பாடல் 10:

உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்

விளக்கம்:

இதனை சமண் பாட்டு என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். உரிஞ்சல்=அகற்றுதல்; உரிஞ்சாய வாழ்க்கை=உடையற்று வாழும் வாழ்க்கை;பெருஞ்சாந்தி=பவிற்றோர்சவம் என்று கூறுவர். இந்த பாடலை பாடிய போது, எலும்புகள் வைக்கப்பட்டிருந்த குடம் உடைந்து சிதற, அந்த குடத்திலிருந்து முழு வளர்ச்சி அடைந்தவளாக பூம்பாவை தோன்றினாள் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். பதிகத்தின் முதற்பாடல் பாடிய போது,குடத்தில் இருந்த எலும்புகளும் சாம்பலும் ஒன்று செர்ந்தது என்றும் அடுத்த எட்டு பாடல்கள் பாடிய போது பன்னிரண்டு ஆண்டுகள் நிரம்பிய பெண்ணுருவம் வரப்பெற்றது என்றும் பத்தாவது பாடல் பாடிய போது உயிர்பெற்று பூம்பாவை வெளியே தோன்ற குடம் உடைந்தது என்று கூறுவார்கள். கருஞ்சோலை=அடர்ந்து இருப்பதால் இருள் திகழும் சோலை; எடுத்து உரைக்கும்=வாய்க்கு வந்தவாறு பிதற்றும்;

பொழிப்புரை:

உடையற்று உரித்தது போன்ற தோற்றத்துடன் உலவும் சமணர்களும், உடையினைப் போர்த்து திரிந்து மனதினில் கரிய எண்ணங்களை கொண்டுள்ள சாக்கியர்களும், பெருமானை குறித்து மிகவும் இழிவாக, தங்களது வாய்க்கு வந்தவாறு பிதற்றுவதை பொருட்படுத்தாமல், அடியார்கள் பலரும், செழிப்புடன் அடர்த்தியாக வளர்ந்து இருளில் திகழும் சோலைகளால் சூழப்பட்ட கபாலீச்சரம் திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமானைக் கொண்டாடி நடத்தும் பெருஞ்சாந்தி விழாவினை காணாதே பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ, சொல்வாயாக.

பாடல் 11:

கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே

விளக்கம்:

இந்த பதிகத்திற்கு பூம்பாவைப்பதிகம் என்று திருஞானசம்பந்தரே பெயர் சூட்டியுள்ளார். பாடல் தோறும் பூம்பாவையின் பெயர் சொல்லி அழைத்து,பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்தமையால், இந்த பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. வானம்=உயர்ந்த நிலையாகிய வீடுபேறு; கான்=காடு;தேனமர் பூம்பாவை=தேன் நிறைந்த பூவினில் உறையும் திருமகள் போன்று அழகுடன் விளங்கிய பூம்பாவை;

பொழிப்புரை:

மணற்காடுகளில் உள்ள சோலைகளால் சூழப்பட்ட கபாலீச்சரம் திருக்கோயிலில் விரும்பி அமரும் பெருமானைப் புகழ்ந்து, தேன் நிறைந்த பூவினில் உறையும் திருமகள் போன்று அழகுடன் பொலிந்த பூம்பாவையை அழைக்கும் பாடல்களை பாடிய, செந்தமிழில் வல்லவனாகிய ஞானசம்பந்தன்,இறைவனின் தன்மையை கொண்டாடி நடத்தும் திருவிழாக்களை புகழ்ந்து பாடிய பத்து பாடல்களையும் நன்றாக கற்றுத் தேர்ந்து முறையாக பண்ணுடன் பொருத்தி பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், முக்தி உலகில் வாழும் சிவகணங்களுடன் கூடி நிலையாக வாழ்வார்கள்.



Share



Was this helpful?