பதிக எண்: 2.23 - திருவானைக்கா - இந்தளம்
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக மூக்கீச்சரம் சென்ற ஞானசம்பந்தர் பின்னர் திருச்சிராப்பள்ளி மற்றும் திருவானைக்கா ஆகிய தலங்கள் சென்றார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. மூவர் பெருமானார்கள் பாடிய தேவாரப் பதிகங்கள் இந்த தலத்திற்கு உரியவை. ஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்களும், அப்பர் பிரான் அருளிய மூன்று பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன. மணிவாசகர் தனது திருவம்மானை பதிகத்தின் பாடலில் இந்த தலத்தினை குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர் இந்த தலம் சென்றதை உணர்த்தும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
விண்ணவர் போற்றிச் செய் ஆனைக்காவில் வெண்ணாவல்
மேவிய மெய்ப்பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நாற்கோட்டு நாகம்
பணிந்ததுவும்
அண்ணல் கோச்செங்கண் அரசன் செய்த அடிமையும் அஞ்சொல்
தொடையில் வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலை பாடிப் பரவி நின்று ஏத்தினார்
பான்மையினால்
திருச்சி நகரத்தின் ஒரு பகுதியாக, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவரங்கம் செல்லும் வழியில் உள்ள தலம். ஐம்பூதத்தலங்களில் நீரினுக்கு உரியதாக கருதப்படும் தலம். இறைவனின் கருவறையில் எப்போதும் நீர் கசிந்து கொண்டே இருப்பதை இன்றும் காணலாம். இறைவன் தன்னை பூமியாக உருவகப்படுத்திக் கொண்ட போது, இந்த தலம் தான் அவரது உந்திக்கு பொருந்திய தலமாக கருதப்படுவதால், இதனை சுவாதிட்டானத் தலம் என்றும் கூறுவார்கள். ஐராவத யானை வழிபட்ட தலம் என்பதையும் பூஞ்சோலைகள் நிறைந்த தலம் என்பதையும் உணர்த்தும் வண்ணம் திருவானைக்கா என்ற பெயர் வந்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். மேற்கண்ட பெரிய புராணப் பாடலிலும் நாற்கோட்டு யானை (நான்கு கொம்புகள் உடைய யானை) என்று ஐராவத யானை பெருமானை வழிபட்டதை சேக்கிழார் குறிப்பிடுகின்றார். நாவல் மரத்தின் கீழ் எழுந்தருளியதால் வெண்ணாவல் ஈசர் என்று இறைவன் அழைக்கப் படுகின்றார். இந்த பதிகத்தின் பாடலில் வெண்ணாவல் உளாய் என்று பல பாடல்களில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும் தன்மையை, செழுநீர்த்திரள் என்று அப்பர் பிரானும், ஈரமுள்ளவர் என்று சுந்தரரும் தங்களது பதிகத்தில் குறிப்பிடுகின்றனர். காவிரிநதி வறண்ட நாளிலும் இங்கே நீர் ஊறும் என்று சொல்வார்கள்.
ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ள திருக்கோயில். நான்காவது மற்றும் ஐந்தாவது பிராகாரத்தில் வீடுகள் உள்ளன. நான்காவது பிராகாரத்தில் உள்ள மதிற்சுவர் திருநீறிட்டான் மதில் என்று அழைக்கப் படுகின்றது. சுமார் 8000 அடி நீளமும் 35 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட இந்த மதிற்சுவர், சிவபெருமானே சித்தராக வந்து கட்டிய மதிற்சுவர் என்று கூறுவார்கள். கூலியாக கொடுக்கப்பட்ட திருநீறு, அவரவர்கள் செய்த வேலைக்கு தக்கவாறு தங்கமாக மாறியது என்றும் கூறுவார்கள். மூன்றாவது சுற்றில் உள்ள கோபுரத்தைக் கடந்து மூலவர் சன்னதிக்கு அழைத்துச் செல்லும் பாதை படிப்படியாக கீழே இறங்க, மூலவர் சன்னதி தரைமட்டத்திற்கு கீழே இருப்பதை உணரலாம். யானை புகாத கோயிலாக கட்டவேண்டும் என்று முடிவு செய்த கோச்செங்கட்சோழன் இவ்வாறு கட்டினான் என்று கூறுவார்கள். மேலும் சுவாமியின் சன்னதிக்கு செல்லும் வழி பக்கவாட்டில் உள்ளது. சதுர பீடத்தின் மீது சிறிய இலிங்கத் திருமேனி. கருவறைக்கு முன்னர் ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரம் (திருச்சாலகம்) உள்ளது. இந்த சாளரத்தின் வழியே இறைவனை தரிசனம் செய்வது சிறப்பாக கருதப் படுகின்றது.
மால்யவான் புஷ்பதத்தன் ஆகிய இரண்டு சிவகணங்களின் இடையே யார் பக்தியில் விஞ்சியவர் என்ற போட்டி எப்போது இருந்து கொண்டு வந்தது. ஒருநாள் அவர்களது சண்டை முற்றவே, ஒருவருக்கொருவர் சாபம் கொடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக அவர்கள் இரண்டு பேரும் சிலந்தியாகவும் யானையாகவும் பிறக்குமாறு நேர்ந்தது. சிலந்தியாக யானையாக பிறந்தாலும், அவை இரண்டும் தொடர்ந்து இறைவனை வழிபட்டு வந்தன. நாவல் மரத்தின் கீழ் இருந்த இலிங்கத்தைக் கண்ட யானை காவரி நீரைக் கொண்டு இலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தது. நாவல் மரத்தின் கீழ் இருப்பதால் இலைகளும் சருகுகளும் சிவலிங்கத்தின் மேல் விழுவதைக் கண்ட சிலந்தி, அவ்வாறு சருகுகளும் இலைகளும் இலிங்கத்தின் மேல் விழ்வதைத் தடுக்கும் பொருட்டு, இலிங்கத்தின் மேலே ஒரு பந்தல் அமைப்பது போன்று வலை பின்னியது. சிலந்தியின் எச்சில் வலை அபசாரம் என்று கருதி யானை அந்த வலையை அழித்தது. பின்னர் வந்த சிலந்தி மீண்டும் வலை பின்னியது. இவ்வாறு சிலந்தி வலை பின்னுவதும் அதனை யானை அழிப்பதும், மீண்டும் அடுத்த நாள் சிலந்தி பின்னுவதுமாக தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்று வந்தது. யானை தான், தான் பின்னும் வலையை அழிக்கின்றது என்பதை தெரிந்து கொண்ட சிலந்தி மிகுந்த கோபத்துடன், ஒருநாள் யானையின் தும்பிக்கையுள் புகுந்து கடித்தது. வலி பொறுக்க முடியாத யானை, தும்பிக்கையை ஓங்கி தரையில் அடிக்க, இரத்தம் கொட்ட யானை இறந்தது. அதன் தும்பிக்கையின் உள்ளே இருந்த சிலந்தியும் இறந்தது. யானை முக்தி அடைந்தது. தனது ஆசை முழுதும் நிறைவேறாத சிலந்தி அடுத்த பிறவியில் கோச்செங்கட் சோழனாக பிறக்கின்றது. பெருமான் பால் ஆழமான பக்தி கொண்டிருந்த அவன், எழுபது மாடக் கோயில்களை கட்டினான் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் சொல்கின்றார். கோச்செங்கட் சோழன் சிறந்த அடியாராக கருதப்பட்டு, சுந்தரரால் திருத்தொண்டப் பதிகத்தில் குறிப்பிடப் படுகின்றார். சேக்கிழார் இந்த வரலாற்றினை கோச்செங்கட் சோழன் புராணத்தில் விரிவாக கூறுகின்றார். சென்ற பிறவியின் நினைவு இருந்ததன் காரணமாக, தான் கட்டிய கோயில்கள் அனைத்தும் யானை புகாத வண்ணம் மாடக் கோயிலாக சோழ மன்னன் அமைத்துள்ளான்.
சுவாமி சன்னதிக்கு செல்லும் முகப்பில் உள்ளது நான்கு தூண்களைக் கொண்ட மண்டபம். இதனை சதுர்வேத மண்டபம் என்றும் அழைக்கின்றனர். கீழே குறுகலாக இருக்கும் இந்த தூண்கள் மேலே விரிந்து, மண்டபத்தின் கூரையைத் தாங்குவது போன்று அமைந்துள்ளன. தொங்கும் கருங்கல் சங்கிலிகளை நாம் இங்கே காணலாம். மேலும் அழகிய பல சிற்பங்கள் நிறைந்த மண்டபம். சுவாமி சன்னதி செல்வதற்கு, பக்கவாட்டில் உள்ள சிறியது உயரம் குறைந்ததும் ஆகிய வழியின் மூலம் செல்லவேண்டும். கருவறை மிகவும் சிறியதாக இருப்பதால், இடநெருக்கடியைத் தவிர்க்க குறைந்த நேரமே கருவறையினுள் இருந்த வண்ணம் நாம் சுவாமியை தரிசிக்க முடியும். நீர் இருப்பதன் காரணமாக கருவறை எப்போதும் குளிர்ந்து காணப்படும். காவிரி நதியின் நீரினை எடுத்து பார்வதி தேவி, பிடித்த இலிங்கம் என்று கூறுவார்கள். பிரமன், சிலந்தி, யானை, அம்பிகை, அஷ்டவசுக்கள், முனிவர் பராசரர், முனிவர் கௌதமர் வழிபட்ட தலம்.
இரண்டாம் பிராகாரத்தில் உற்சவ மூர்த்திகள் வீற்றிருக்கும் உற்சவ மண்டபம் உள்ளது. இங்கே கலை வண்ணம் மிகுந்த கொடுங்கைகள் காணப்படுகின்றன. கல்லால் செய்யப்பட்டிருப்பினும், மரத்தால் செய்யப்பட்டது போன்று அழகான வளைவுகள் கொண்ட கொடுங்கைகள். இந்த பிராகாரத்தில் தலமரமான நாவல் மரம் உள்ளது. ஜம்பு என்ற வடமொழிச் சொல்லுக்கு நாவல் என்று பொருள். நாவல் மரங்கள் நிறைந்த தென்னாட்டினை நாவலந்தீவு என்றும் ஜம்பூத்வீபம் என்று அழைப்பார்கள். ஜம்புமாதவன் என்ற முனிவர் நாவலங்காட்டினில் அமர்ந்து சிவபெருமனை நோக்கி தவம் செய்தபோது, ஒரு நாள் அவரது மடியில் ஒரு நாவற்பழம் விழுந்தது. அவர் அந்த பழத்தினை எடுத்துக் கொண்டு கயிலாயம் சென்று பெருமானுக்கு சமர்ப்பித்தார். பெருமானும் அதனை ஏற்றுக் கொண்டு உண்ட பின்னர், அந்த பழத்தின் கொட்டையை பெருமானை உமிழ்ந்ததை முனிவர், பெருமானின் பிரசாதம் என்று ஏற்றுக்கொண்டு உட்கொண்டார். விதை அவரது வயிற்றினில் சென்ற பின்னர், முளைவிட்டு மரமாக வளரத் தொடங்கியது. பெருமானிடம் முனிவர் மீண்டும் முறையிட, பெருமான் காவிரி நதிக்கரை சென்று தவத்தினை தொடருமாறும், தான் அந்த நாவல் மரத்து நிழலில் தங்குவேன் என்று கூறினார். நாவல்மரத்தில் தங்கிய இறைவைனை ஜம்புகேஸ்வரர் என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினார்கள். பெருமானின் சன்னதியின் பின் புறத்தில் சரஸ்வதி தேவி வீணையின்றி இருக்கும் கோலத்தை காணலாம். பொதுவாக அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும், ஐப்பசி மாதத்தில் சன்னதியில் நீர்ப்பெருக்கு அதிகமாக இருக்கும் என்பதால் இங்கே வைகாசி மாதத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.
மூன்றாவது பிராகாரத்தில் இருக்கும் இந்திர தீர்த்தத்தின் அருகே தண்டபாணி சன்னதி உள்ளது. நான் தனியாக இருப்பேன் என்று கூறும் முருகப் பெருமானின் முகத்தில் தன்னம்பிக்கை சுடர் விட்டு ஒளிவதை நாம் காணலாம். முருகரின் அம்சமாக கருதப்படும் திருஞானசம்பந்தரின் சன்னதி அருகில் உள்ளது. பெரிய மண்டபத்தில் மூன்று லிங்கங்கள் ஒன்றுக்கொன்று அருகில் இருப்பதை காணலாம். இவற்றை மும்மூர்த்திகள் சன்னதி என்று அழைக்கின்றனர். இதற்கு அருகே மூன்று மூர்த்திகளும் இணைந்து இருக்கும் ஏகபாத திருமூர்த்தி உருவத்தையும் காணலாம். அம்பிகை சன்னதியின் எதிரே உள்ள மண்டபத்தில் திரிபாத திருமூர்த்தியை நாம் காணலாம்.
இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களும் அகத்துறை வகையைச் சார்ந்தவை. தலைவியின் தன்மை குறித்து, அவள் தனது தலைவனுடன் சேராது இருக்கும் தன்மை குறித்து வருந்தி ஏங்கும் தன்மையை, அவளது தாய் குறிப்பிடுவது போன்று அமைந்த பாடல்கள். உயிர்களின் உண்மையான விருப்பம், பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு இறைவனுடன் சேர்ந்து என்றும் அழியாத பேரானந்தத்தில் இருப்பதே ஆகும், ஆனால் உயிர் அதற்கான முயற்சிகள் எடுக்காத வண்ணம், வினைகளும் உடலில் உள்ள கருவிகளும் செயல்படுகின்றன. அந்த தடைகளை முறியடித்து உயிர்கள் எப்போதும் பெருமானையே நினைத்த வண்ணம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு, பெருமான் பால் தீவிர காதல் கொண்டு பெருமானுடன் சேரத் துடிக்கும் தலைவியின் நிலையை இங்கே ஞானசம்பந்தர் உணர்த்தும் பதிகமாக இந்த பதிகம் உள்ளது. உயிர்கள் இறைவனது அருட்பெருக்கினில் ஈடுபட்டு தன்வயமிழந்து நிற்க வேண்டிய நிலையினை உணத்தும் வண்ணம் இந்த பதிகம் அருளப் பட்டுள்ளது என்று சிவக்கவிமணியார் கூறுகின்றார். இறைவனைத் தலைவனாகவும், ஆன்மாவைத் தலைவியாகவும் தாயை குருவாகவும் வைத்து இந்த பதிகத்தின் பொருளை சிந்திக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த பதிகத்தின் பாடல்களில் தனது மகளின் நிலையை இறைவனிடம் எடுத்துரைக்கும் தாயின் நோக்கம் தான் என்னே. தனது மகளின் நிலையை புரிந்து கொள்ளும் இறைவன், தனது மகளின் ஏக்கத்தைத் தீர்க்கும் வண்ணம், அவளைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த தாயின் விருப்பம் மற்றும் வேண்டுகோள். இதனை நேரிடையாக ஞானசம்பந்தர் சொல்லவில்லை என்றாலும், இந்த அக்கருத்து உணர்த்தப் படுவதால் ஓவ்வொரு பாடலின் முடிவிலும் இதனை குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ளவேண்டும்.
பாடல் 1:,
மழையார் மிடறா மழுவாள் உடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவாரும் வெண் நாவலின் மேவிய எம்
அழகா எனும் ஆயிழையாள் அவளே
விளக்கம்:
மழை என்பது மழை பொழியும் மேகத்தினை குறிக்கும். கைம்மாறு கருதாது மழை பொழிவது போன்று, இறைவனும் பல விதமான உதவிகளை செய்து கொண்டே இருக்கின்றான். மிடறு= கழுத்து; உழை=மான்; கரவா=கரத்தினை உடையவன்; விழவாரும்=திருவிழாக்கள் மலிந்த; ஆயிழை=ஆராய்ந்து செய்யப் பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள்; இந்த பதிகத்தின் பாடல்கள், உமை அன்னை இறைவனை வழிபடும் தன்மையை குறிக்கும் பாடல்கள் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். உமையாள் கணவா என்ற தொடர் இந்த பாடலில் இருப்பதால், இந்த பாடலில் உள்ள சொற்களை உமையன்னையின் கூற்றாக நாம் கொள்வது பொருத்தமற்றது என்பதை நாம் உணர்கின்றோம். சிவக்கவிமணியாயர் தனது பெரிய புராண விளக்கம் புத்தகத்தில், தலைவனிடம் தனது மனதைப் பறிகொடுத்த தலைவியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்த தாயின் கூற்றாக கருதி இந்த பாடல்களின் பொருளை உணரவேண்டும் என்று கூறுகின்றார்.
தனது மகளின் நிலையை உணர்த்தி, தனது மகள் மீது கருணை கொண்டு பெருமான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். தன்னையும் மறந்த நிலையில், தனது மகள் எவ்வாறு பெருமானின் நாமத்தை சொல்லியவாறு இருக்கின்றாள் என்பதை அவளது தாய் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ள பாடல். பெருமானின் திருநாமத்தை நாம் எப்போதும் சொல்லிக் கொண்டே இருந்தால், நிச்சயமாக ஒரு நாள் நமக்கு பெருமானின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தலைவி சொல்கின்றாள் என்று ஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். இந்த கருத்தினை பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்,.
பெருமானின் திருநாமங்களைப் பிதற்றினால் நமது பிணிகள் தீரும் என்று ஞானசம்பந்தர் கூறும் பாடல் சீர்காழி நகரத்தின் மீது அருளிய பாடலாகும் (2.59.2).
ஊரார் உவரிச் சங்கம் வங்கம் கொடு வந்து
காரார் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
பேராயிரமும் பிதற்றத் தீரும் பிணி தானே
திருவைந்தெழுத்து திருப்பதிகத்தின் பாடலில் (3.22.9) திருஞானசம்பந்தர் பெருமானின் பெருமையைப் பேசிப் பிதற்றும் அடியார்களை காக்கும் கவசமாக அஞ்செழுத்து மந்திரம் செயல்படும் என்று கூறுகின்றார். கார்வணன்=கரிய மேகம் போன்ற வண்ணம் உடைய திருமால்; அடியைக் காண முயற்சி செய்தவர் திருமால்; ஆர்தல்=அனுபவித்தல், திளைத்தல்; ஆர்வணம்= பற்றுக்கோடு; பித்தர்=பேசியதையே மீண்டும் மீண்டும் பேசும் தன்மை உடையவர்கள்; பித்தர்கள் பிதற்றுவது போன்று பெருமானின் திருநாமத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் அடியார்கட்கு, அஞ்செழுத்து மந்திரம் இனிமையான உணர்வினைத் தரும் என்றும் சிறந்த பற்றுக்கோடாக இருக்கும் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்
சீர் வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன அஞ்செழுத்துமே
சிவபிரான் பால் காதல் கொண்ட தலைவி, பிறப்பிலி ஆகிய சிவபெருமானின் திருநாமத்தை ஓயாது பிதற்றும் நான், பெருமைக்குரிய நலங்களை இழக்கலாமா என்று இறைவனிடம் கேள்வி கேட்கும் வண்ணம் அமைந்துள்ள ஞானசம்பந்தர் பாடல் (3.63.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. நறவு=தேன்: நவில்=வாழ்கின்ற: சிவபிரானின் மேல் தான் கொண்டிருந்த காதல் நிறைவேறாததால், ஊராரின் பழிச்சொல்லுக்கு தான் ஆளாகிய நிலையை குறிப்பிட்டு, அத்தகைய நிலையில் தன்னை ஆழ்த்தியது சிவபெருமானுக்கு பெருமை சேர்க்காது என்று தலைவி கூற்றாக அமைந்த பாடல். சிவபெருமான் எடுக்கும் பிச்சையை சம்பந்தர் அறப்பலி என்று குறிப்பிடுகின்றார். அறத்தை பெறுதல் வேண்டி இடப்படும் பிச்சை என்று பொருள். நாம் உய்வினை அடையும் பொருட்டு, நமது மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) பெருமானின் ஓட்டில் இடுவது இங்கே குறிப்பிடப்படுகின்றது. சிறப்புலவான் சிறுத்தொண்டன் என்று சம்பந்தர் சிறந்த புலவன் என்று சிறுத்தொண்டரை கூறுகின்றார். ஆயுர்வேதக் கலையில் தேர்ந்தவர், சிறுத்தொண்டர் என்று சிவகாமியின் சபதம் நாவலில் பரஞ்சோதியை (பின்னாளில் சிறுத்தொண்டன் என்ற நாமத்தை ஏற்றவர்) ஆசிரியர் கல்கி குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது.
நறப்பொலி பூங்கழிக் கானல் நவில் குருகே உலகெல்லாம்
அறப்பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ எம் பெருநலமே
பேதைப் பங்கப் பெருமானின் திருநாமத்தை வாயில் வந்தபடி பிதற்றினால் நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து தப்பிக்கலாம் என்று அப்பர் பிரான் சோற்றுத்துறை பதிகத்தின் பாடலில் (4.41.6) நமக்கு அறிவுரை கூறுகின்றார். பெருமானின் சடையினின் உள்ளே புகுந்து வெளிவந்ததால் கங்கை நதி, புண்ணிய தீர்த்தமாக கருதப்படும் நிலைக்கு உயர்ந்தது என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலைபுனல் கங்கை ஏற்றுத்
தீர்த்தமாய் போத விட்டார் திருச் சோற்றுத்துறையனாரே
துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.42.10) சதைப் பிண்டமாகிய உடலுடன் கூடி வாழும் வாழ்க்கையை உயிர் கழித்து விட்டு நிலையான முக்தி உலகில் இருக்க வேண்டுமென்று விரும்பினால், பெருமானின் திருநாமங்களை பிதற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். துண்டம்=சந்திரனின் ஒற்றைப் பிறை; பெருமாளின் திவ்ய தேசங்களில் ஒன்றாகிய நிலாத்துண்டம் தலத்து பெருமாளை நிலாத்துண்டப் பெருமாள் என்று அழைப்பார்கள். பிண்டம்=சதைப் பிண்டத்தாலான உடல்; கழிக்க வேண்டில்=பிறவிப் பிணியினை தீர்க்க வேண்டுமென்றால்; அண்டத்தைக் கழிய=பல அண்டங்களையும் வென்ற; அடல்=வலிமை;
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்றுமின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை
கண்டு ஒத்துக் கால் விரலால் ஊன்றி மீண்டு அருளிச் செய்த
துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
பெருமானின் திருநாமத்தை பிதற்றாத மனிதர்களை பேதையர் என்று குறிப்பிட்டு அப்பர் பிரான் சாடுவதையும், அவர்கள் நரகத்தில் வீழ்வார்கள் என்பதையும் குறிப்பிடும் பாடல் திருவொற்றியூர் தலத்தின் மீது அருளப்பட்ட நேரிசைப் பாடலாகும் (4.45.8). அறியாமை ஆகிய ஆணவ மலம், மெய்பொருளை உயிர் உணர முடியாதபடி செயல் படுவதால், ஆணவ மலத்தினை இருள் என்று அழைப்பதுண்டு. சிவஞானத்தால் தான் அந்த இருளினை போக்க முடியும் என்பதால், சிவஞானம் விளக்காக இங்கே உருவகிக்கப் பட்டுள்ளது, அத்தகைய சிவஞானம் பெறுவதற்கு இறைவனின் புகழ் பாடும் மறைகளும் திருமுறைப் பாடல்களும் உதவுகின்றன. பிதற்றுதல்=மறுபடியும் மறுபடியும், வாய் குழறுவதையும் பொருட்படுத்தாமல், ஒரே பொருளைக் குறித்து சொல்லுதல்: பேதை=அறிவில்லாதவர்கள்: நமது பழைய வினைகள் தீரவேண்டுமென்றால் நாம் பெருமானின் திருநாமங்களை சொல்ல வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வினைகள் தீர்ந்தால், அடுத்த படி முக்தி செல்வது தானே.
பின்னுவார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவார் நரகம் தன்னுள் தொல்வினை தீர வேண்டில்
மன்னுவான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்றேற்றி
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே
ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.10), பெருமானின் திருநாமத்தைத் தான் பிதற்றாமல் இருந்ததாக குறிப்பிட்டு அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கின்றார். சிவபிரானின் நாமத்தைத் தான் பிதற்றாமல் இருந்ததாக அப்பர் பிரான் கூறுவது, அவரைக் குறிப்பிட்டு கூறியதாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மீண்டும் சைவ சமயம் வந்ததன் பின்னர் அப்பர் பிரான், எப்போதும் சிவபிரானின் நாமத்தைக் கூறியவாறே திருத்தொண்டுகள் செய்ததும் பல தலங்கள் சென்று எண்ணற்ற பதிகங்கள் பாடியதும் நாம் அனைவரும் அறிவோம். இது தன்னை சுட்டிக் காட்டி, அப்பர் பிரான் அடுத்தவருக்கு கூறும் அறிவுரையாக நாம் கொள்ளவேண்டும்..
பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையில் புந்தி ஒன்றிப்
பிடித்து நின் தாள்கள் எனும் பிதற்றி நான் இருக்க மாட்டேன்
எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
பெருமானின் திருநாமங்களை பிதற்றியே தான் அவனது அருளைப் பெற்றேன் என்று அப்பர் பிரான் கோழம்பம் பதிகத்து பாடல் (5.64.7) ஒன்றினில் கூறுகின்றார். நீற்றறையில் அடைக்கப்பட்ட போதும், தன்னை நோக்கி மதயானை ஏவப்பட்ட போதும், கல்லுடன் பிணைத்து கடலில் தள்ளப் பட்ட போதும் பெருமானின் திருனமங்களைச் சொல்லிக் கொண்டும், அவரது புகழினை பதிகங்களாக பாடியும் இருந்தவர் அல்லவா அப்பர் பிரான்.
முன்னை நான் செய்த பாவம் முதலறப்
பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது
அன்னமார் வயல் கோழம்பத்துள் அமர்
பின்னல் வார் சடையானைப் பிதற்றியே
திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.91.8) சமண சமயத்தைத் தான் சார்ந்திருந்து பெருமானின் திருநாமத்தை சொல்லாமல் கழித்த நாட்களை தான் பிறவாத நாட்களாக கருதுவதாக அப்பர் பிரான் கூறுகின்றார் இவ்வாறு குறிப்பிட்டு, பெருமானின் புகழினைப் பேசிய நாட்களே, உலகினில் பிறந்த நாட்கள் என்று கூறுகின்றார். அறத்தை தாங்கள் முற்றிலும் அறிந்தவர்களாக தங்களை சமணர்கள் கருதினாலும், அவர்கள் அறத்தினை அறியும் வழியில் முதல் வகுப்பு பாடத்திலே இன்னும் இருக்கின்றார்கள் என்று உணர்த்தும் வகையில் ஆரம்பக் குண்டர் என்று கேலியாக அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அறிவில்=அறிவு+இல், அறிவில்லாத; மேலும், பெருமானின் திருநாமங்களை மீண்டும் மீண்டும் பிதற்றி, அடிமையாக என்னை ஏற்றுக்கொண்டு அருள் பாலிக்கும் அவனது சிறப்பான அன்பினை நினைத்தவாறு அடியேன் எனது வாழ்க்கையின் இறுதிப் பகுதியை கழிக்கின்றேன் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். .
அறம் தெரியா ஊத்தை வாய் அறிவில் சிந்தை ஆரம்பக்
குண்டரோடு அயர்த்து நாளும்
மறந்தும் அரன் திருவடிகள் நினைய மாட்டா மதியிலியேன்
வாழ்வெலாம் வாளா மண்மேல்
பிறந்த நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றிச் சீரடிமை
திறத்துள் அன்பு
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச்
சென்று அடையப் பெற்றேன் நானே
மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களும் இறைவனின் எண்ணற்ற நாமங்களைப் பிதற்றியவாறு, அவனது சன்னதியை விட்டு பிரியாமல் இருக்கின்றார்கள் என்று சுந்தரர் நமச்சிவாயப் பதிகத்தின் (7.48) ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார். சரண் அடையத் தக்கவன், எங்களது தந்தை, எங்களது தலைவன், எங்களது தலைவன், பொன், சிறந்த மணி என்று பல பெயர்களால் இறைவனை அழைத்து பிதற்றுகின்றார்கள் என்று இங்கே கூறுகின்றார்.
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் எம்பொன் மாமணீ
என்று
பேரெணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
இறைவனிடத்தில் நாம் மிகுந்த பற்று கொண்டு அவனைப் பணியவேண்டும்; கழல் அணிந்த அவனது திருவடிகளைக் காண; ஆர்வம் கொள்ளவேண்டும்: அவனது திருநாமங்களை பிதற்ற வேண்டும் என்று கூறும் மணிவாசகர், தான் இறைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதாகவும், சிவபெருமான் தன்னை ஏற்றுக்கொண்டு தனது பிறப்பினை அறுக்கவேண்டும் என்று இங்கே வேண்டுகின்றார். திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்ட பெருமான் மறைந்ததால், அவரைப் பிரிந்து தான் தவிக்கும் நிலையை இங்கே மணிவாசகர் உணர்த்துகின்றார். இது எண்ணப்பதிகத்தின் ஐந்தாவது பாடல்.
பத்திலன் ஏனும் பணிந்திலன் ஏனும் உன் உயர்ந்த பைங்கழல்
காணப்
பித்திலன் ஏனும் பிதற்றிலன் ஏனும் பிறப்பு அறுப்பாய் எம்
பெருமானே
முத்து அனையானே மணி அனையானே முதல்வனே முறையோ
என்று
எத்தனை யானும் யான் தொடர்ந்து உன்னை இனிப் பிரிந்து
ஆற்றேனே
கோயில் மூத்த திருப்பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர் தளர்ந்து இருக்கும் உயிருக்கு இரங்கி இறைவன் அருள வேண்டும் என்று கூறுகின்றார். அந்த உயிருக்கு ஏன் உதவவேண்டும் என்று முதல் மூன்று அடிகளில் உயிர் அடைந்துள்ள தகுதிகளை குறிப்பிடுகின்றார். அந்த தகுதிகளில் ஒன்று இறைவனின் திருநாமத்தைப் பிதற்றுவது. மற்ற தகுதிகள், இறைவன் நமக்கு ஒரு நாள் அருள் புரியாது போகான் என்ற நம்பிக்கையுடன் இருத்தல், இறைவனின் நாமங்களை கூறும்போது கண்களில் நீர் வழிதல், பேச்சு தடுமாறுதல், வாயால் இறைவனை வாழ்த்தி, மனதினால் இறைவனை நினைத்து, உடலால் அவனை பணிந்து வணங்குதல், பலகாலும் அவனது உருவத்தினை தியானித்து பொன்னம்பலம் என்று துதித்தல் ஆகும். ஒல்கா=தளர்ந்து.
நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகி
பல்கால் உன்னை பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே
ஒன்பதாம் திருமுறையில் வேணாட்டடிகள், தான் அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில், வீடுபேறு அடைவதற்கான வழி, பெருமானை விருப்புற்று நினைந்து, மனம் உருகி, வாட்டம் உற்று, நாவினால் அவனது திருநாமத்தை பலவாறு பிதற்றுதல் என்று கூறுகின்றார். இவ்வாறு தான் செய்யும் குற்றேவல் தன்னை பெருமான் ஏற்று, அதற்கு பரிசாக தவறாமல் முக்திப்பேறு அளித்து, பெருமானுடன் தான் என்றும் கூடி இருப்பதற்கு பெருமான் திருவுள்ளம் பற்றவேண்டும் என்று அடிகள் இங்கே வேண்டுகின்றார். உலகப் பொருட்கள் மற்றும் அவை தரும் சிற்றின்பப் பயன்கள் கருதி நாம் இறைவனை வழிபடக் கூடாது என்றும், நிலையான வீடுபேற்றினை வேண்டியே நாம் இறைவனை வழிபடவேண்டும் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடலாக இந்த பாடல் திகழ்வதை நாம் உணரலாம்.
வாடா வாய் நாப்பிதற்றி உன்னை நினைந்து நெஞ்சு உருகி
வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்றிது பொய்யில்
கூடாமே கை வந்து குறுகுமாறு யான் உன்னை
நாடாயால் திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே
திருவேகம்பம் உடையார் திருவந்தாதியின் கடைப் பாடலில், பட்டினத்தார் பித்தர்கள் பிதற்றுவது போன்று பொருள் தெரியாத வகையில் இறைவனின் திருநாமத்தைப் பிதற்றினாலும், அந்த அடியார்களுக்கு துன்பம் ஏதும் ஏற்படாவண்ணம், அவர்கள் உற்ற பல பிணிகளையும் தீர்ப்பார் என்று கூறுகின்றார். புன்சொல்லாக தான் இயற்றிய பாடலை, வேதம் பொலியும் பொருளாக மெய்யடியார்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பட்டினத்தார் அவையடக்கத்துடன் கூறுவதையும் நாம் உணரலாம்.
பாதம் பரவியோர் பித்துப் பிதற்றினும் பல்பிணியும்
ஏதம் புகுதா வகை அருள் ஏகம்பர் ஏத்தெனவே
போதம் பொருளால் பொழியாத புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம் எனக் கொள்வர் மெய்த்தொண்டரே
பொழிப்புரை:
மழை பொழியும் கருமேகத்தினைப் போன்று கருமை நிறத்தில் கறை உடைய கழுத்தினை உடையவனே, மழுவாளினைத் தனது வலது கையில் ஏந்தியவனே, துள்ளும் மான் கன்றினைத் தனது இடது கையில் ஏந்தியவனே, உமை அன்னையின் கணவனே, திருவிழாக்கள் மலிந்த தலமாகிய திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழே பொருந்தி அமர்ந்து உறைபவனே, அழகனே என்று எப்போதும் உனது திருநாமங்களை சொல்லியவாறு, ஆராய்ந்து நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நகைகளை அணிந்துள்ள எனது மகள் இருக்கின்றாள். பெருமானே, அவளது ஏக்கத்தினை தீர்க்கும் வண்ணம், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிய வேண்டும்.
பாடல் 2:
கொலையார் கரியின் உரி மூடியனே
மலையார் சிலையா வளைவித்தவனே
விலையால் எனை ஆளும் வெண் நாவலுளாய்
நிலையா அருளாய் எனும் நேரிழையே
விளக்கம்:
நேரிழை=நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த ஆபரணங்களை அணிந்த பெண்மணி; நிலையா அருளாய்=என்றும் ஒரே தன்மையுடன் அருள் புரியவேண்டும். பெருமானின் அடியாராக இருக்கும் இந்த தலைவி, முன்பு ஒரு நாள் இறைவனின் அருள் பெற்றமையால் தனது துன்பம் தீர்க்கப் பெற்று இன்பம் அடைந்தாள் போலும். எனவே அந்த அனுபவத்தை மனதினில் நிறுத்தி, நிலையான அருள் தனக்கு வேண்டும் என்று இங்கே கோருகின்றாள்.
விலையால் எனை ஆளும் பெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுவது தன்னைக் குறிப்பிட்டு கூறுவது போல் அமைந்துள்ளது. இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களுமே, தன்னைப் பெருமான் பால் அன்பு கொண்டுள்ள தலைவியாக உருவகித்து, தனது நிலையை ஞானசம்பந்தர் எடுத்து உரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது அல்லவா. எண்ணரிய சிவஞானம் கலந்த ஞானப் பால் கொடுத்து தன்னை அடிமையாக ஆட்கொண்ட பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவதாக விளக்கம் அளிக்கப்படுகின்றது. தான் பெருமானுக்கு அடிமையாக மாறும் தன்மையை விலையை கொடுத்து ஞானப்பால் பெற்றுக்கொண்டார் என்பது பொருத்தமாகவே உள்ளது. எனினும் பெருமான் தன்னை ஆட்கொள்ளும் தன்மைக்கு விலையாக பெற்றுக் கொண்டார் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவதால், அவ்வாறு பெருமான் தன்னை ஆட்கொண்டதற்கு விலையாக ஞானசம்பந்தர் என்ன கொடுத்தார் என்ற கேள்வி எழுகின்றது. திருப்பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பாடலிலும் (3.14.7) தனது தன்மையை மாற்றிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள். பெருமானைக் கண்டதால் தனது மனதில் ஏற்பட்ட மாறுதலை உணர்ந்த சம்பந்த நாயகி, இறைவன் அவ்வாறு செய்ததன் காரணம் தான் யாது என்று தனது வியப்பினைத் தெரிவிக்கும் முகமாக அமைந்த பாடல். தனது முதல் பதிகத்தின் பாடல்களில், உள்ளம் கவர்ந்த கள்வன் என்று அழைத்த திருஞானசம்பந்தர், தனது மனதினில் மாற்றத்தை விளைவித்து இறை வழிபாட்டினால் தன்னை ஈடுபடுத்தியவன் இறைவன் என்பதை இங்கே உணர்த்துகின்றார். ஜீவனாகத் திகழ்ந்த தன்னை சிவமாக மாற்றிய இறைவனின் கருணையை நினைத்து ஞானசம்பந்தர் உள்ளம் நெகிழ்ந்து கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
தூயவன் தூய வெண்ணீறு மேனி மேல்
பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவன் எனைச் செயும் தன்மை என் கொலோ
இதற்கு விடை ஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகத்தின் மூன்றாவது பாடலில் (1.116.3) உள்ளது. தடம்=அகன்ற; சிலைத்து=சினந்து, ஆரவாரம் செய்து, முழங்கி; விலைத்து=விலையாகக் கொண்டு; பழவினைகளின் தாக்கத்தினால் நாம் பல துன்பங்களை அடைந்து, அந்த துன்பங்களால் வருத்தி வினைத்தொகுதியின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கின்றோம். திருஞானசம்பந்தர் தனது வாழ்வினில் எந்த விதமான துன்பமும் அடையாத வண்ணம், பெருமான் அவரை பாதுகாத்தமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அவர் தனது வாழ்வினில் எந்த விதமான போகமும் அனுபவிக்கவில்லை என்பதையும் நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். எனவே வினைகளின் தாக்கமின்றி அவர் வாழ்ந்தார் என்பதை நாம் உணர்கின்றோம். இந்த தன்மைக்கு பெருமானின் அருளே காரணம் என்று இங்கே அவர் குறிப்பிடுகின்றார். முலைத்தடம் மூழ்கிய போகம் என்று இல்லறத்தில் மனிதர்கள் பெறுகின்ற சிற்றின்ப சுகம் குறிப்பிடப்படுகின்றது. இல்லறத்தில் ஆழ்வதற்கு விருப்பம் இல்லாதவராக திருஞானசம்பந்தர் இருந்தார். அதனால் தான் மற்றவர்களின் கட்டாயத்திற்கு இணங்கி அவர் திருமணம் செய்து கொள்வதற்கு இசைந்த போதிலும், திருமணப் பந்தலில் இருந்தவாறே பெருமானை நோக்கி, இல்லற சுகத்தைத் தான் எப்போதும் வேண்டாது இருந்தமை எனது பாடல்கள் உனக்கு தெரிவிக்கவில்லையா, என்னை ஏன் மனைவியின் காலினை கல்லில் ஊன்றுவது போன்ற திருமணச் சடங்குகள் செய்யும் வண்ணம் பணித்தாய் என்று கேட்கின்றார்.
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்து அலையா வணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்
இலைத் தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
அப்பர் பெருமானும் தில்லைச் சிதம்பரம் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.1.5) உலகத்து பொருட்கள் தரும் சிற்றின்பத்தை ஒதுக்கித் தள்ளும் அடியார்களுக்கு பெருந்துணையாக பெருமான் இருப்பார் என்று கூறுகின்றார். அருந்துணை–ஒப்பற்ற துணை; வான்புலன்கள்= வானத்தைப் போன்று பெரிய புலன்கள்; உண்மையான மெய்ப்பொருளை நாம் நினைக்காத வண்ணம், நம்மைத் திசை திருப்பும் வல்லமை வாய்ந்த ஐம்புலன்களை, இகழ்ச்சி தோன்ற வான்புலன்கள் என்று குறிப்பிடுகின்றார்.
அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகல்
ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்து
அடக்கி மடவாரோடும்
பொருந்தணை மேல் வரும் பயனைப் போக மாற்றிப் பொது நீக்கித்
தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையை பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம்
பிறவா நாளே
சிவபிரான் துணையாக இருந்ததால் அமணர்களின் வஞ்சனையில் இருந்து தப்பித்த அப்பர் பிரான் தனக்கு ஒப்பற்ற பெருந்துணையாக இருந்த சிவபிரான், யாருக்கெல்லாம் பெருந்துணையாக இருப்பான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உடன் பிறந்தார், சுற்றத்தார், செல்வம் இவைகளின் மீது வைத்த பாசத்தை நீத்து, புலன்களின் மேல் செல்லும் மனத்தை அடக்கி மகளிர் தரும் சிற்றின்பப் பயனை அடியோடு ஒழித்து பொதுவாக பல தெய்வங்களை நினைப்பதை விடுத்து சிவபிரான் ஒருவனையே போற்றும் வல்லவர்களுக்கு பெருந்துணையாக சிவபிரான் இருப்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார்.. பற்றுகளை அறுத்தவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப்படுகின்றது. பற்று அறுவதற்காகத் தானே நமக்கு பல பிறப்பை இறைவன் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். மாயையாகிய உலகப் பொருட்களின் மேல் நாம் வைத்துள்ள பாசத்தை நீக்கி, மெய்ப்பொருளை தியானித்து நமது வினைகளைக் கழிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப்படுகின்றது. பொது நீக்கி என்று பொதுவான தேவர்களோடு இணைக்காமல், சிவபிரானின் தனித் தன்மைகளை புரிந்து கொண்டு அவரை நினைக்க வேண்டும் என்று இங்கே சொல்லப் படுகின்றது. உலகத்து சிற்றின்பங்களை அனுபவித்து இன்பம் அடைய வேண்டும் என்ற ஆசை நம்மை விட்டு விலகிப்போக நாம் நமது மனதினை பக்குவப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார்.
பெருமான் தன்னை ஆட்கொள்வதற்கு தகுதி படைத்தவளாக தான் இருப்பதை பெருமானுக்கு தலைவி உணர்த்துவதாக இங்கே கூறப்படுகின்றது. மீளாத அடிமையாக தான் இருப்பதாக தன்னை ஞானசம்பந்தர் குறிப்பிட்டுக் கொள்கின்றார் என்ற விளக்கமும் பொருத்தமே. இந்த பாடலில் கொலைத் தொழில் புரியும் யானை என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பொதுவாக யானை சாதுவான பிராணி. தனக்கு தீங்கு செய்வோரை மட்டும் நினைவில் நிறுத்திக் கொண்டு அவர்களை தாக்கக் கூடியது. ஆனால் தாருகவனத்து முனிவர்கள் அபிசார ஹோமம் செய்து எழுப்பப்பட்ட யானை மதயானையாக இருந்தமையால், பொதுவான தன்மைக்கு மாறுபட்டு இருந்தமை இங்கே கொலையார் கரி என்ற தொடரின் மூலம் குறிப்பிடப் படுகின்றது. .
பொழிப்புரை:
கொலைத் தொழில் புரியும் தன்மையினை உடைய மதயானை தன்னைத் தாக்க வந்த போது, அதனை அடக்கி, அதன் தோலினை உரித்து, அந்த தோல் கொண்டு தனது மார்பினை மூடிய பெருமானே என்றும், மேருமலை வில்லாக பயன்படும் வண்ணம் அந்த மலையினை வளைத்தவனே என்றும், எனது பழைய வினைத் தொகைகளின் விளைவினால் நான் நுகர இருந்த இன்பதுன்பங்களை விலையாக ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக என்னை ஆட்கொண்டு அருள் புரியும் பெருமானே என்றும், திருவானைக்கா தலத்தினில் உள்ள வெண்ணாவல் மரத்தின் நிழலை தனது இருக்கையாக ஏற்றுள்ள பெருமானே என்றும் உன்னை அழைத்து அடியேனுக்கு நிலையான இன்பம் தரும் வண்ணம் அருள் புரிவாயாக என்று, நுணுக்கமாக செய்யப்பட்ட நகைகளை அணிந்துள்ள எனது மகள் வேண்டுகின்றாள். பெருமானே, அவளது ஏக்கத்தினை தீர்க்கும் வண்ணம், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிய வேண்டும்.
பாடல் 3:
காலால் உயிர் காலனை வீடு செய்தாய்
பாலோடு நெய் ஆடிய பால் வணனே
வேலாடு கையாய் எம் வெண் வெண் நாவலுளாய்
ஆலார் நிழலாய் எனும் ஆயிழையே
விளக்கம்:
பெருமான் தனது கையில் ஏந்தியுள்ள சூலத்தினை மூவிலை வேல் என்று அழைப்பார்கள். வீடுதல்=நீக்குதல்; தனது உடல் முழுதும் பெருமான், திருநீறு பூசியிருக்கும் தன்மையால், சிவந்த அவனது திருமேனி வெண்மை நிறத்துடன் காணப்படுகின்றது.
பொழிப்புரை:
சிறுவன் மார்க்கண்டேயனை காக்கும் பொருட்டு, அவனது உயிரினைக் கவர வந்த இயமனை தனது காலால் உதைத்து அவனது உடலிலிருந்து உயிரினை நீக்கியவனே என்றும், பால் நெய் முதலான ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடுபவனே என்றும், பால் போன்று வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினைத் தனது உடல் முழுதும் பூசிக்கொண்டு வெண்மை நிறம் கொண்ட திருமேனி உடையவனாக காட்சி தருபவனே என்றும், ஆல மரத்தின் நிழலில் அமர்ந்தவண்ணம் சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கியவனே என்றும், திருவானைக்கா தலத்தினில் உள்ள வெண்ணாவல் மரத்தின் நிழலை தனது இருக்கையாக ஏற்றுள்ள பெருமானே என்றும் உன்னை அழைத்து, உனது திருநாமங்களை, ஆராய்ந்து செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொண்டுள்ள எனது மகள், சொல்லிக் கொண்டே இருக்கின்றாள். பெருமானே, அவளது ஏக்கத்தினை தீர்க்கும் வண்ணம், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிய வேண்டும்.
பாடல் 4:
சுறவக் கொடி கொண்டவன் நீறதுவாய்
உற நெற்றி விழித்த எம் உத்தமனே
விறல் மிக்க கரிக்கு அருள் செய்தவனே
அறம் மிக்கது என்னும் என் ஆயிழையே
விளக்கம்:
யானைக்கு அருள் செய்தவனே என்று தலவரலாற்றின் ஒரு பகுதி இங்கே சொல்லப் படுகின்றது. கரி=யானை; இந்திரனின் யானை ஐராவதத்திற்கு அருள் செய்த பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பதிக விளக்கத்தின் பின்னணியில் கொடுக்கப் பட்டுள்ள பெரிய புராணப் பாடலில் நாற்கோட்டு யானை என்று ஐராவதம் பெருமானை வழிபட்ட செய்தி குறிப்பிடப் படுகின்றது. ஐராவத யானை பெருமானை பூசித்து வழிபட்ட ஒன்பது தலங்களாவன, இன்னம்பர், எதிர்கொள்பாடி, கானப்பேர், கோட்டாறு, திருவானைக்கா, திருக்காளத்தி, திருவெண்காடு, பெண்ணாடகம் மற்றும் ஆலவாய் ஆகும். சுறவம்=மீன்; மன்மதன் மீன்கொடியை உடையவன்; விறல்=வலிமை; அறம்=புண்ணியம்; புண்ணியமே உருவாக அமைந்துள்ள பெருமான், அறச் செயல்களை பாதுகாக்கும் பெருமான், தன் உள்ளத்தைப் பறிகொடுத்த பேதையை மேலும் வருத்துவது அழகா என்று நயமாக உணர்த்தும் பாடல். மன்மதனின் கணைகளுக்கு பலியாகி, அனைத்து உயிர்களும் காதல் மயக்கம் உறுகின்றன. ஆனால் பெருமான் ஒருவர் தான், அவ்வாறு மயக்கத்தில் ஆழாமல் இருந்தவர் என்பதை உணர்த்த உத்தமர் என்று பெருமானை ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
ஒத்த கருத்தினை உடைய தலைவனும் தலைவியும் தாங்கள் என்றும் பிரியாது சேர்ந்தே இருக்கவேண்டும் என்று விரும்பினாலும், பல காரணங்களுக்காக அவர்கள் பிரிய நேரிடுகின்றது. இலக்கியங்கள் அந்த தருணங்களை குறிப்பிட்டு, அத்தகைய சமயங்களில் அவர்களது நிலையையும் சுவைபட உணர்த்துகின்றன. பொருள் தேடல், கல்வி கற்றல், நாட்டுநலன் கருதி பல பணிகளில் ஈடுபடுதல் ஆகிய செயல்கள் இவர்களது பிரிவுக்கு காரணமாக இருக்கின்றன. மணிவாசகர் அருளிய திருக்கோவையார் நூலும், இந்த பிரிவினை குறிப்பிட்டு, அவ்வாறு பிரியும் நேரங்களில் தலைவன் மற்றும் தலைவியின் உணர்ச்சிகள் எவ்வாறு உள்ளன என்பதை விவரிக்கின்றன. நாட்டுநலன் குறித்து போரில் ஈடுபடுதல், உள்நாட்டு கலவரங்களை அடக்குதல், தருமத்தை நிலைநாட்டுதல் ஆகிய செயல்களில் தலைவன் ஈடுபட வேண்டிய நிலைமை திருக்கோவையார் நூலில் குறிப்பிடப் படுகின்றது. உலகங்கள் அனைத்திற்கும் அரசனும், புண்ணியமே வடிவாக உள்ளவனும் ஆகிய இறைவன், அறத்தை நிலைநாட்டுதலை தனது தலையான கடமையாகக் கொள்வதில் எந்தவித வியப்பும் இல்லை. எனவே அத்தகைய காரணத்திற்காக தலைவன் தன்னை விட்டு பிரிந்ததாக சம்பந்த நாயகி இங்கே கற்பனை செய்கின்றாள். தன் பால் கொண்டுள்ள காதலை விடவும் அறத்தை நிலைநாட்டுதலை பெரிதாக கருதி, அவன் பிரிந்துள்ளான் என்பதை உணர்த்தும் வண்ணம், அறமே மிக்கது என்ற தொடரை ஞானசம்பந்தர் இங்கே பயன்படுத்துகின்றார். இந்த பாடலில் குறிப்பிடப்படும் செயல்களும் அறத்தினை நிலைநாட்டும் செயல்களாக உள்ளதை நாம் உணரலாம். தவத்தை கலைத்த மன்மதனை தண்டித்தல், தன்னை நோக்கி தவமிருந்த யானைக்கு அருள் செய்தல் ஆகிய இரண்டு செயல்களும் அறத்துடன் தொடர்பு கொண்டவை அல்லவா. பலவாறாக உன்னைப் போற்றியும் புகழ்ந்தும் வழிபடும் தலைவி, பெருமான் தனக்கு அருள் புரியாமல் இருப்பதன் காரணத்தை நினைத்து வருந்துகின்றாள். பின்னர் தலைவன் தவிர்க்க முடியாத பணியில் ஈடுபட்டு இருப்பதால் வர இயலாத நிலையில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தன்னைத் தேற்றிக் கொள்ளும் நயத்தை நாம் இந்த பாடலில் உணரலாம்.
பொழிப்புரை:
மீன் கொடி உடைய மன்மதன் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் தனது நெற்றிக் கண்ணை விழித்த உத்தமனே என்றும் திறமை மிகுந்த ஐராவதம் யானைக்கு அருள் செய்தவனே என்றும், திருவானைக்கா தலத்தினில் உள்ள வெண்ணாவல் மரத்தின் நிழலை தனது இருக்கையாக ஏற்றுள்ள பெருமானே என்றும் உன்னை குறிப்பிட்டு அழைக்கும் எனது மகள், தனது காதலை விடவும் அறத்தினை நிலைநாட்டுதலை பெரிதாக கருதி, நீ அவளை விட்டு பிரிந்து சென்று விட்டாய் என்று சொல்லியவண்ணம் ஆராய்ந்து செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொண்டுள்ள எனது மகள், புலம்புகின்றாள். பெருமானே, அவளது ஏக்கத்தினை தீர்க்கும் வண்ணம், ஆராய்ந்து செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொண்டுள்ள எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிய வேண்டும்.
பாடல் 5:
செங்கட் பெயர் கொண்டவன் செம்பியர் கோன்
அங்கட் கருணை பெரிது ஆயவனே
வெங்கண் விடையாய் வெண் நாவலுளாய்
அங்கத்து அயர்வு ஆயினள் ஆயிழையே
விளக்கம்:
செம்பியர் கோன்=சோழ அரசன்; செங்கட் பெயர் கொண்டவன்=செங்கணான் என்று தனது தாயால் அழைக்கப் பட்டவன். செங்கட் சோழன் என்று பெயர் வந்ததற்கான காரணத்தை, சேக்கிழார் பெரியபுராணம் கோச்செங்கட் சோழ நாயனார் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார். சுபதேவன் என்ற சோழ அரசன் பெருந்தேவி எனப்படும் தனது மனைவியுடன், தில்லைச் சிதம்பரத்து கூத்தனுக்கு மிகவும் அன்புடையவனாக ஆட்சி செய்து வந்தான். தனக்குப் பின்னர் சோழ நாட்டினை ஆள்வதற்கு தகுந்த மகன் தனக்கு பிறக்க வேண்டும் என்று பெருமானை அனுதினமும் வேண்டி வந்தான். பெருமானின் அருளால் அவன் மனைவி கருத்தரிக்க, குழந்தை பிறக்கும் நேரமும் நெருங்கவே, சிறிது நேரத்தில் குழந்தை பிறக்கும் என்பதை அரசி உணர்ந்தாள். அப்போது அரண்மனை சோதிடர்கள், ஒரு நாழிகை கழித்து பிறந்தால், அந்த குழந்தை மூவுலங்களையும் ஆட்சி செய்யும் வாய்ப்பினை பெறும் என்று கூறினார்கள். தனது மகன் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்று விரும்பிய தாய், தனது கால்களை இறுகக்கட்டி மேலே தூக்குமாறு வேண்டினாள். மருத்துவர்களும் அவ்வாறே செய்ய, குழந்தை பிறக்கும் நேரம் ஒகு நாழிகைப் பொழுதுக்கு தாமதம் செய்யப்பட்டது. பிள்ளை பிறக்கும் நேரம் தாமதிக்கப் பட்டமையால், குழந்தையின் கண்கள் சிவந்தன. சோதிடர்கள் குறித்த குழந்தை நேரத்தில் குழந்தை பிறக்கவே, குழந்தையைத் தனது கையில் எடுத்த தாயார், குழந்தையின் கண்களைக் கண்டு செல்லமாக செங்கண்ணனோ என்று அழைத்தாள். அந்த பெயரே நிலைத்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து தாயார் இறந்தார். இந்த நிகழ்ச்சி மிகவும் விரிவாக கோச்செங்கட் சோழ நாயனார் புராணத்தில் சேக்கிழாரால் சொல்லப் படுகின்றது. இந்த நிகழ்ச்சியையே திருஞான சம்பந்தர் செங்கட் பெயர் கொண்டவன் என்ற தொடர் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். சென்ற பிறவியில் ஆனைக்கா அண்ணலுக்கு வலைப்பந்தர் பின்னி வழிபட்ட சிலந்தியே இந்த பிறவியில் இந்த குழந்தையாக பிறந்தது என்பதையும் சேக்கிழார் இந்த புராணத்தில் கூறுகின்றார். முகத்திற்கு அழகு சேர்ப்பன மலர்ந்த நிலையில் உள்ள திறந்த கண்கள். பெருமானின் கண்களோ அருள் பொழியும் கண்கள். அத்தகைய கண்களிலிருந்து அருள் பொழிந்தால் மிகவும் அழகாக இருக்கும் அல்லவா. அத்தகைய அருளினை மிகவும் அதிகமாக பெற்றவனாக விளங்கியவன் கோச்செங்கட் சோழன். அதனால் தான் அங்கட்கருணை பெரிது என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
கோச்செங்கட் சோழன் என்று பெயர் படைத்த சோழர் குலத்து அரசன் சீரும் சிறப்புடன் வாழ மிகவும் பெரிதாக அருள் செய்தவனே என்றும், கோபத்தினால் சிவந்த கண்களை உடைய இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டவனே என்றும், திருவானைக்கா தலத்தினில் உள்ள வெண்ணாவல் மரத்தின் நிழலை தனது இருக்கையாக ஏற்றுள்ள பெருமானே என்றும் உன்னை அழைத்து வேண்டுகின்ற எனது மகள், உன்னுடன் சேர முடியாத ஏக்கத்தினால் உடல் வருந்தி சோர்வடைகின்றாள். அவளது ஏக்கத்தினை தீர்க்கும் வண்ணம், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிய வேண்டும்.
பாடல் 6:
குன்றே அமர்வாய் கொலையார் புலியின்
தன் தோலுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரம் மூன்றை வெண் நாவலுளே
நின்றாய் அருளாய் எனும் நேரிழையே
விளக்கம்:
குன்று=கயிலாய மலை; கொலையார்=கொலைக் குணம் கொண்ட;
பொழிப்புரை:
கயிலாய மலையினைத் தனது இருப்பிடபாகக் கொண்டவனே என்றும், தன் மீது தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப்பட்டதும் எதிர்ப்பட்டவரை கொல்லும் குணம் கொண்டதும் ஆகிய புலியினை வென்று அதன் தோலைனைத் தனது உடையாக அணிந்தவனே என்றும், நீண்ட சடையை உடையவனே என்றும், ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனே என்றும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் அழித்து அவர்களை வெற்றி கொண்டவனே என்றும், திருவானைக்கா தலத்தினில் உள்ள வெண்ணாவல் மரத்தின் நிழலை தனது இருக்கையாக ஏற்றுள்ள பெருமானே என்றும் உன்னை அழைத்து அருள் புரிவாயாக என்று நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த நகைகளை அணிந்த எனது மகள் வேண்டுகின்றாள். அவளது ஏக்கத்தினை தீர்க்கும் வண்ணம், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிய வேண்டும்.
பாடல் 7:
பதிகத்தின் ஏழாவது பாடல் சிதைந்தது.
பாடல் 8:
மலை அன்று எடுத்த அரக்கன் முடி தோள்
தொலையவ் விரல் ஊன்றிய தூமழுவா
விலையால் எனை ஆளும் வெண் நாவலுளாய்
அலசாமல் நல்காய் எனும் ஆயிழையே
விளக்கம்:
விலையால் எனை ஆளும் பெருமானே என்று, இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறியது போன்று, இந்த பாடலிலும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தூமழுவா என்று பெருமான் ஏந்திய மழு ஆயுதம் இரத்தக் கறை படியாமல் தூய்மையாக இருப்பதை உணர்த்துகின்றார். அலசாமல்= மேலும் வருத்தமால்; விலையால் என்னை ஆளும் என்ற தொடருக்கு என்னைக் கொண்டு தன்னைத் தந்த இறைவன் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று அளிக்கப்படும் விளக்கம் மிகவும் நயமாக உள்ளது. இந்த விளக்கம் திருவாசகப் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது.
பெருமானை, அவன் மிகவும் சாமர்த்தியம் வாய்ந்தவனாக செய்யும் பல செயல்களைக் குறிப்பிட்டு, சதுரன் என்று பல தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானை விடவும் தான் சதுரன் என்று நகைச்சுவையாக மணிவாசகர் சொல்லும் பாடலை இங்கே சிந்திக்கலாம். இந்த பாடல் திருவாசகம் கோயில் திருப்பதிகத்தில் வருகின்றது. இந்த பாடலில் அடிகளார் தனக்கும் பெருமானுக்கும் இடையே இருந்த பண்டமாற்று வாணிபத்தை குறிப்பிடுவதை நாம் உணரலாம். தன்னைக் கொடுத்து இறைவனை அடிகளார் பெற்றுக் கொண்ட தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. எப்போதும் பெருமானை நினைத்து உருகிய அடிகளார் பெருமானின் சிந்தையில் புகுகின்றார். அதன் விளைவாக பெருமான் அடிகளாரின் சிந்தையினில் புகுகின்றார். பெருமானின் தன்மை யாது என்பதை சற்று சிந்திப்போம். ஒப்பற்ற எட்டு குணங்களை உடையவர் பெருமான். ஒரே நேரத்தில் உலகில் நடக்கும் அனைத்தையும் உணரும் ஆற்றலும், தான் நினைக்கும் எதையும் செய்யவல்ல ஆற்றலும், இயல்பாகவே பாசநீக்கமும் உடையவராக இருத்தலும், ஐந்து புலன்களின் ஆட்சிக்கு உட்படாமல் இருத்தலும், பெருமானின் குணங்களாக திகழ்கின்றன. இந்த குணங்களுக்கு நேர் எதிர்மாறான குணங்களை உடையது மனித ஆன்மா. எனவே அடிகளார் இழந்ததை விடவும் பெற்றது அதிகமாக இருப்பதால் தான் பெருமானை விடவும் சதுரனாக தான் திகழ்வதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டுகின்றார். இவை அனைத்தும் எதனால் நிகழ்ந்தது என்பதை அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துகின்றார். .தனது சிந்தனையை, பெருமான் தான் உறையும் கோயிலாக ஏற்றுக் கொண்டு புகுந்தமையால் தான் என்று அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துவதை நாம் காணலாம். அதன் விளைவாக ஏற்பட்ட அந்தமிலா ஆனந்தத்தையும் அடிகளார் குறிப்பிடுகின்றார்.
தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னைச் சங்கரா ஆர்
கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது
ஒன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான் திருப்பெருந்துறை
உறை சிவனே
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர்
கைம்மாறே
பொழிப்புரை:
கயிலை மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் முடிகளும் தோள்களும் நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவனே என்றும், இரத்தக் கறையேதும் இன்றி தூய்மையான வெண்மை நிறத்தில் பொலியும் மழு ஆயுதத்தை உடையவனே என்றும், எனது பழைய வினைத் தொகைகளின் விளைவினால் நான் நுகர இருந்த இன்பதுன்பங்களை விலையாக ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக என்னை ஆட்கொண்டு அருள் புரியும் பெருமானே என்றும், திருவானைக்கா தலத்தினில் உள்ள வெண்ணாவல் மரத்தின் நிழலை தனது இருக்கையாக ஏற்றுள்ள பெருமானே என்றும் உன்னை அழைத்து வேண்டுகின்ற, ஆராய்ந்து செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொண்டுள்ள எனது மகள், அவளை நீ ஏற்றுக்கொள்ளாததால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளாள். அவள் மேலும் வருத்தம் அடையாத வண்ணம், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிவாயாக. .
பாடல் 9:
திருவார் தரு நாரணன் நான்முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையாரும் வெண் நாவலுள் மேவிய எம்
அரவா எனும் ஆயிழையாள் அவளே
விளக்கம்:
திருவார்=திருமகள் பொருந்திய மார்பு; மருவுதல்=நெருங்குதல்; மருவா=நெருங்கி காணமுடியாமல்; வெருவுதல்=அச்சம் அடைதல்; விரை=நறுமணம்; அரவா என்ற சொல்லினை அர வா என்று பிரித்து, அரனே நீ வரவேண்டும் வந்து என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று தலைவி வேண்டுவதாகவும் பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. அரவா=பாம்பினை உடையவனே; பன்னகாபரணன் என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்று. திருத்துறைப் பூண்டிக்கு அருகே உள்ள முகத்தலை என்ற தலத்தின் இறைவனின் திருநாமம் பன்னகாபரணன். கருவூர்த் தேவர் இந்த தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பாடல்களில் பன்னகாபரணன் என்றே இறைவனை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். பூரணன்= முழுமையாக இருப்பவன்; எந்த குறையுமின்றி அனைத்து நல்ல பண்புகளும் பொருந்தியவன்; ஆரணம்=வேதங்கள்; பன்னகம்=பாம்பு; தவள=வெண்மை நிறம் கொண்ட;
புவன நாயகனே அகவுயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே பணி செய்வார்க்கு இரங்கும் பசுபதீ
பன்னகாபரணா
அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும்
முகத்தலை மூதூர்த்
தவள மணிப் பூங்கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை
நீங்குதற்கே
பொழிப்புரை:
திருமகள் பொருந்திய மார்பினை உடைய திருமாலும், நான்முகனும் உனது திருவடியையும் திருமுடியையும் நெருங்கி காணமுடியாத வண்ணம், அவர்கள் இருவரும் அச்சம் கொள்ளும் வண்ணம், நீண்ட நெடுந்தழலாக நின்ற பெருமானே என்றும் நறுமணம் வீசும் வெண்ணாவல் மரத்தின் நிழலில் பொருந்தி அமர்ந்துள்ள பெருமானே என்றும், பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் மாலையாக கங்கணமாக அணிகலனாக கச்சாக அணிந்துள்ள பெருமானே என்றும் பலவாறு அழைத்து, ஆராய்ந்து செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொண்டுள்ள எனது மகள், உன்னை வேண்டுகின்றாள். அவளது ஏக்கத்தினை தீர்க்கும் வண்ணம், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிய வேண்டும்.
பாடல் 10:
புத்தர் பலரோடு அமண் பொய்த் தவர்கள்
ஒத்தவ் வுரை சொல்லி இவை ஓரகிலார்
மெய்த்தேவர் வணங்கும் வெண் நாவலுளாய்
அத்தா அருளாய் எனும் ஆயிழையே
விளக்கம்:
இந்த பாடலில் புத்தர் பலர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். புறச்சமயங்கள் ஆறு என்று சைவ சித்தாந்தம் பாகுபாடு செய்கின்றது. சமண சமயங்களில் இரண்டு பிரிவுகளையும் புக்த சமயங்களின் நான்கு பிரிவுகளையும் சேர்த்து ஆறு புறச்சமயங்கள் என்று கூறுவர். ஆசீவகம் நிகண்டவாதம் என்ற இரு பிரிவுகள் சமண சமயத்தைச் சார்ந்தவை. ஆசீவகப் பிரிவு வெண்மை நிறத்து ஆடையை உடுத்துவதை ஏற்கும். இரண்டாவது பிரிவு, ஆடையே உடுத்தலாகாது என்று கூறும். இரண்டாவது வகையே தென்னாட்டினில் பரவி அமணம் என்று பெயர் பெற்றது. புத்த சமயத்தின் நான்கு பிரிவுகள், மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், சௌராந்திரகம் என்பன. இந்த பிரிவுகளின் கொள்கை வேறுபாடுகள் சிவஞானசித்தியார் பரபக்கம் பகுதியில் சொல்லப் பட்டுள்ளன. இந்த பிரிவுகளையே புத்தர் பலர் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வழிபாட்டு முறையின் வகையில் ஈனயானம் மகாயானம் என்று இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. ஓர்தல்=ஆராய்ந்து உணர்தல்;
பொழிப்புரை:
பல உட்பிரிவுகளை உடைய புத்தர்களும், சமணர்களும் பொய்யான தவம் புரிகின்றனர். அவர்கள், பெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் சைவமதத்தின் பொருத்தமான மொழிகளைச் சொல்லி, அந்த சொற்களின் பொருளை ஆராய்ந்து உணரும் தன்மை அற்றவர்கள். உண்மையான மெய்ப்பொருளாகிய தன்னை, தேவர்கள் அனைவரும் வந்து வணங்கும் வண்ணம், திருவானைக்கா தலத்திலுள்ள வெண்ணாவல் மரத்தின் நிழலினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள பெருமானே, எனது தந்தையே என்று அழைத்து அருள் புரியவேண்டும் என்று ஆராய்ந்து செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொண்டுள்ள எனது மகள், உன்னை வேண்டுகின்றாள். அவளது ஏக்கத்தினை தீர்க்கும் வண்ணம், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிய வேண்டும்.
பாடல் 11;
வெண் நாவல் அமர்ந்து உறை வேதியனைக்
கண்ணார் கமழ் காழியர் தம் தலைவன்
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே
விளக்கம்:
வேதியன் என்ற சொல்லுக்கு, வேதங்களைப் படைத்தவன், வேதங்களால் உணர்த்தப் படுபவன், வேதனைகளின் உட்பொருளாக இருப்பவன் என்று பலவிதமாக விளக்கங்கள் அளிக்கப் படுகின்றன. வேதங்களில் உள்ள சொற்களுக்குத் துணையாக, அதன் பொருளாக இறைவன் இருக்கும் தன்மையை குறிப்பிடும் வண்ணம், சொற்றுணை வேதியன் என்று நமச்சிவாயப் பதிகத்தினை அப்பர் பிரான் தொடங்குகின்றார். கமழ்தல்=பரவுதல்; கண்=அறிவு; கண் என்பதற்கு மூங்கில் என்று பொருள் கொண்டு, மூங்கில் மரங்கள் நிறைந்த சீர்காழி தலம் என்று பொருள் கொள்வதும் பொறுத்தே. வேணுவனம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று அல்லவா. கண்ணார் என்பதற்கு கண்களில் நிலைத்து நிற்கும் அழகிய காட்சிகள் கொண்ட காழி நகரம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
பொழிப்புரை:
திருவானைக்கா தலத்தில் உள்ள வெண்ணாவல் மரத்தின் நிழலில் உறையும் பெருமானை, வேதங்களைப் படைத்தவனை, வேதங்களின் உட்பொருளாக இருப்பவனை, வேதங்களால் உணர்த்தப்படும் இறைவனை, ஞானம் பெற்றவர்கள் நிறைந்ததால் தெய்வமணம் கமழும் சீர்காழி நகரின் தலைவனாகிய ஞானசம்பந்தன் பண்ணோடு இசைத்து பாடிய இந்த பத்து பாடல்களையும் முறையாக பாடும் வல்லமை வாய்ந்த அடியார்களை, புகழ்ந்து வணங்க தேவர்களும் விரும்புவார்கள்.
முடிவுரை:
பெருமானின் புகழினை உணர்த்தும் அவனது செயல்களையும் அவனது திருநாமங்களையும் மீண்டும் மீண்டும் சொல்வதால், பெருமானின் தன்மையை நாம் மறவாமல் புரிந்து கொள்ள முடிகின்றது. பெருமானின் தன்மைகளை புரிந்து கொண்டால் அவனது அருளினைப் பெறவேண்டும் என்ற பிறக்கவே, நாமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றோம். மேலும், அவனது நாமங்களை மீண்டும் மீண்டும் சொல்வதால் நம்மை அறியாமலே, நமது மனதினில் அவனது அருங்குணங்கள் பதிந்து விடுகின்றன. இந்த பதிகத்தில் உணர்த்தப்படும் அவனது அருட் செயல்களை நாம் சுருக்கமாக இங்கே காண்போம். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விடத்தினை உட்கொண்டு, உலகங்கள் அழியாத வண்ணம் காத்த செய்கை முதல் பாடலிலும், திரிபுரத்து அரக்கர்களால் உலகம் அடைந்த துன்பங்களுக்கு ஒரு முடிவு கட்டியவன் என்று இரண்டாவது பாடலிலும், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் முடிந்துவிட்ட நிலையில் எந்த நேரமும் இயமன் தனது உயிரினைக் கவர வருவான் என்ற சூழ்நிலையிலும் மனம் கலங்காமல் இறை வழிபாட்டினால் ஈடுபட்ட சிறுவனின் உயிரைக் காப்பதற்காக இயமனை காலால் உதைத்து வீழ்த்திய செய்கை மூன்றாவது பாடலிலும், ஐராவத யானையின் வழிபாட்டினை ஏற்றுக்கொண்டு அருள் புரிந்தவன் என்று நான்காவது பாடலிலும், தனக்கு பந்தல் அமைத்து வழிபட்ட சிலந்திக்கு அரசபதவி அளித்தவன் என்று ஐந்தாவது பாடலிலும், அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்தவன் என்று ஆறாவது பாடலிலும், தன்னையே அடியார்களுக்கு தரும் பண்பினை உடையவன் என்று எட்டாவது பாடலிலும், அன்புடன் தன்னை அணுகுவோருக்கு காட்சி தரும் தன்மையன் என்று ஒன்பதாவது பாடலிலும், அவனது கருணைச் செயல்கள் குறிப்பிடப் படுகின்றன. பெருமை வாய்ந்த இத்தகைய பண்புகளைக் கொண்ட பெருமான் என்பதை உணர்ந்த தேவர்களால் வழிபடப்படுபவன் என்று அவனது உயர்ந்த தன்மை பத்தாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்களை, தேவர்களும் விரும்பிப் புகழ்வார்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகம் மூலம் பெருமானின் தன்மைகளை புரிந்து கொள்ளும் நாம், திருவானைக்கா சென்று இறைவனை வழிபாட்டு, அவனது புகழினை உணர்த்தும் பதிகங்கள் பாடி, உயர்வான அவனது திருநாமங்களை பலமுறை சொல்லி, வந்து அருளினைப் பெற்று, இம்மையிலும் மறுமையிலும் இன்பமாக வாழ்வோமாக.