பின்னணி:
மதுரை மாநகரம் சென்று அனல் வாதம் மற்றும் புனல் வாதங்களில் சமணர்களை வென்று, சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டிய திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறபாண்டிய நாயனார், அவரது மனைவி மங்கையர்க்கரசி நாயனார் மற்றும் அமைச்சர் குலச்சிறை நாயனார் ஆகியோரிடமிருந்து பிரியாவிடை பெற்றவராக, தனது ஊராகிய சீர்காழி திரும்ப முடிவு செய்தவராக பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டார். அவ்வாறு சோழநாடு திரும்பும் வழியில் முதன்முதலாக திருக்களர் மற்றும் பாதாளீச்சரம் தலங்கள் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவிக்கின்றார். பன்னகப் பூண் அணிந்தவர்=பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களிலும் ஆபரணமாக அணிந்தவர்: பகைவர்கள் எவரும் தாண்டி வர முடியாத வண்ணம் உயர்ந்த மதில் என்பதால் கன்னி மதில் என்றார் போலும்.திருமறைக்காடு தலத்தினில் தன்னை சந்தித்த பாண்டிய நாட்டு அன்பர்களின் வாயிலாக, அரசியார் மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் ஆகியோரின் வேணுடுகோளைக் கேட்டறிந்த திருஞானசம்பந்தர், கடிக்குளம், இடும்பாவனம், தில்லை வளாகம்,உசாத்தானம், மற்றும் பல தலங்களைக் கடந்து பாண்டிய நாடு சென்றதாக சேக்கிழார் கூறுகின்றார். அத்தகைய பதிகளில் சில பதிகளும் சென்றதாக, இந்த பாடலில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். திருக்களர் தலத்தினில் திருஞான சம்பந்தர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. முள்ளிவாய்க்கரை என்பது இப்போது ஓடம் போக்கியாறு என்று அழைக்கப்படுகின்றது. பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தை முறையாக பாடுவோருக்கு இன்பமான இல்வாழ்க்கை அமையும் என்று சொல்லஒப்படுகின்றது.
பொன்னி வளம் தருநாடு புகுந்து மிக்க பொருவில் சீர் திருத்தொண்டர் குழாத்தினோடும் பன்னகப்பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும் பத்தருடன் பதியுள்ளோர் போற்றச்சென்று கன்னி மதில் திருக்களரும் போற்றி கண்டம் கறையணிந்தார் பாதாளீச்சரமும் பாடி முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க் கரை அணிந்தார் முந்நூல் மார்பர்
இந்த தலத்தின் இறைவனின் திருநாமம், பாம்பணி நாதர், நாகநாதர், சர்ப்பபுரீச்வரர் என்பதாகும். தனஞ்சயன் என்ற பாம்பு வடிவில் வாழ்ந்த முனிவர் வழிபட்ட தலம். இவரது திருவுருவம் திருக்கோயிலில் உள்ளது. இந்த பதிகத்தின் பாடல்களில், பாம்பினை பெருமான் தனது சடையில் அணிந்துள்ள தன்மை இரண்டு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பினுடன், கொன்றை முதலான மலர்கள் மற்றும் பிறைச் சந்திரனை பெருமான் தனது சடையில் அணிந்து கொண்டுள்ள தன்மையும் இந்த பதிகத்தின் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது.பதிகத்தின் இரண்டாவது பாடலிலும், ஆடரவம் திகழ பெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். திருஞான சம்பந்தர் இந்த தலம் சென்றதை குறிப்பிடும் சேக்கிழார், பன்னகப் பூண் அணிந்தவர் என்று பெருமானை குறிப்பிடுவதும் இங்கே நினைவுகூரத் தக்கது.
பாடல் 1:
மின்னியல் செஞ்சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல் சூடிப் பொற்பமரும்
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே
விளக்கம்:
மின்னியல்=மின்னல் போன்று ஒளிவீசும்; பொன்னியல்=பொன் போன்ற; மத்தம்=ஊமத்தை மலர்; பன்னிய=மீண்டும் மீண்டும்: பிராட்டியின் நடையழகு அன்னத்தின் நடைக்கும் பெண் யானையின் நடைக்கும் மயிலின் நடைக்கும் ஒப்பிடப்படுகின்றன. அத்தகைய பாடல்களில் அன்னநடை என்று குறிப்பிடும் ஒரு சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம். சோபுரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.51.6) அன்னத்தைப் போன்று மிருதுவான நடையினை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பொற்பு=அழகு; இடையினில் துன்ன ஆடையினாய் வண்ண ஆடையினாய் என்று ஆடையினாய் என்ற சொல்லினை இரண்டு இடங்களில் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். துன்ன ஆடை=பெரிய ஆடையிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆடை, கோவணம். துன்ன என்ற சொல்லுக்கு தைக்கப்பட்ட என்ற பொருளும் பொருந்தும். கோவண ஆடை வெண்மை நிறத்தில் உள்ளதாக பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. எனவே வண்ண ஆடை என்று குறிப்பிடப் பட்டுள்ளது பிராட்டி அணிந்துள்ள ஆடையை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாதொரு பாகனாக பெருமான் உள்ள நிலை, இங்கே இருவேறு ஆடைகள் மூலம் நயமாக உணர்த்தப் படுகின்றது.
கொல் நவின்ற மூவிலை வேல் கூர்மழுவாட் படையன்
பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை கொலாம்
அன்னம் அன்ன மென்னடையாள் பாகம் அமர்ந்து அரை சேர்
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே
மயில் போன்று அழகிய நடை உடையவள் பிராட்டி என்று இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.121.5) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமுலை நன்மங்கை என்பது இந்த தலத்து பிராட்டியின் திருநாமம். அந்த திருநாமத்தை உணர்த்தும் வண்ணம், இந்த பாடலில் பெருநலமுலையிணை என்று பிராட்டியின் மார்பகங்களை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பிராட்டியின் மார்பகங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை என்பதை உணர்த்தும் பொருட்டு, பல தலங்களில் பிராட்டியின் திருநாமம் அமைந்துள்ளதை நாம் காணலாம். மட நடை=அழகான நடை;அசைந்து ஆடியவண்ணம் வரும் மயில் போன்று அழகிய நடை உடையவள்; செரு நல=பகைவர்களுடன் போர் தொடுப்பதற்கு உதவும் வகையில் பொருத்தமாக இருக்கும் கோட்டைகள்; திரிபுரத்து அரக்கர்கள், தங்களது மூன்று பறக்கும் கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயத்தில் மட்டுமே அழிக்கப்பட முடியும் என்ற வரத்தினை பெற்றிருந்தனர். எனவே மற்ற இரண்டு கோட்டைகளை இணைக்கும் கோட்டிலிருந்து விலகி இருப்பதன் மூலம்,மூன்றாவது கோட்டை மற்ற இரு கோட்டைகளுக்கும் சிறந்த பாதுகாப்பாக இருந்த தன்மை, செருநல என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. இருநல புகழ்=பெரும்புகழ்: செருநல என்ற தொடரினை சிவபெருமானுக்கு அடைமொழியாகக் கொண்டு, திரிபுரத்து அரக்கர்களுடன் சண்டை புரிந்ததன் மூலம் உலகினுக்கு நன்மை செய்த பெருமான் என்ற விளக்கமும் சிலரால் அளிக்கப்படுகின்றது. இருநலம்=இம்மை மறுமை ஆகிய இரண்டு நிலைகளிலும் நன்மை பயக்கும் தன்மை;
வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணை செய்த பெருமான்
செருநல மதில் எய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ் மல்கும் இடம் இடைமருதே
தருமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.136.1) பிராட்டியின் நடையின் பெருமிதத்திற்கு பெண்யானையையும் நடையின் மென்மைக்கு அன்னத்தின் நடையையும், திருஞானசம்பந்தர் ஒப்பிடுகின்றார். பிடி=பெண்யானை; மாதர்=விரும்பத் தகுந்த; மட=இளமையும் அழகும் ஒருங்கே வாய்ந்த; படர் சடை=விரிந்த சடை; அயலே=அருகே; தயங்கும்=பொருந்தும்; பயிலும்=தொடர்ந்து செய்யப்படும் ஒரு செயல்:
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர் நடை உடைம் மலைமகள் துணையென மகிழ்வர்
பூத இனப்படை நின்று இசை பாடவும் ஆடவ்ர் அவர் படர் சடைந் நெடு முடியதோரு புனலர்
வேதமோடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை இரைந் நுரை கரை பொருது விம்மி நின்று அயலே
தாதவிழ் புன்னை தயங்கும் மலர்ச் சிறை வண்டறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே
தருமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.136.7) திருஞானசம்பந்தர் பிராட்டியின் நடையை அன்னத்தின் நடைக்கு ஒப்பிடுகின்றார்.தேமரு=தேனின் நறுமணம் பொருந்திய, தேன் நிறைந்த மலர்கள்; வார்குழல்=நீண்ட கூந்தல்; பெடை மான்=பெண் மான்; திருந்திழை=தேர்ந்து எடுக்கபப்ட்ட நகைகள்; பிராட்டியின் கூந்தல், நடை, விழி ஆகியவற்றின் அழகு குறிப்பிடப்பட்டு சிறந்த நகைகள் அணிந்திருக்கும் பிராட்டியின் தன்மை உணர்த்தப் படுகின்றது. மேலும் பிராட்டியின் திருமேனியின் விரிந்த ஒளி, பெருமானின் உடலில் ஒரு பாகத்தில் பொருந்தி இருப்பதாக கூறும் திருஞானசம்பந்தர், பெருமானின் சடையையும் உடையையும் விவரமாக கூறுகின்றார். துதை=பொருந்திய; பெருமானின் சடையினில் வெண்மதி, கொன்றை மலர், பண்டைய நாளில் ஏற்றுக் கொண்டு கங்கை நதி, தலைமாலை ஆகியவை மறைந்திருப்பதாகவும் சொல்கின்றார். காமரு=அழகிய; கானல கண்டகம்=கடற்கரைச் சோலைகளில் உள்ள தாழை; கண்டகம்=கடல் முள்ளிச் செடிகள்;
தேமரு வார்குழல் அன்ன நடைப் பெடைமான்விழித் திருந்திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
தூமரு செஞ்சடையில் துதை வெண்மதி துன்று கொன்றை தொல்புனல் சிரம் கரந்து உரித்த தோலுடையர்
காமரு தண்கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே
தாமரை சேர் குவளைப் படுகில் கழுநீர்மலர் வெறி கமழ் செறிவ் வயல் தருமபுரம் பதியே
வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.17.5) அன்னம் போன்ற மென்மையான நடை உடையவள் என்றும் தனது இடுப்பினில் மேகலை ஆபரணம் அணிந்த தேவி என்றும் பிராட்டியை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அரை= இடுப்பு; கலை=மேகலை;உரை=புகழுரைகள்; பிராட்டியைப் புகழ்ந்து பேசுவதில் பெரும் விருப்பம் உடையவன் பெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
அரையார் கலை சேர் அன மென்னடையை
உரையா உகந்தான் உறையும் இடமாம்
நிரையார் கமுகின் நிகழ் பாளையுடை
விரையார் பொழில் சூழ் வேணுபுரமே
சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (2.102.01) திருஞானசம்பந்தர் பிராட்டியை அன்ன மென்னடை அரிவை என்று அழைக்கின்றார். அமரர் தம் பெருமான் என்ற தொடர், தேவதேவன், மகாதேவன் ஆகிய திருநாமங்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது.சில பதிப்புகளில் வேதந்தான் என்ற தொடருக்கு பதிலாக வேதாந்தம் என்ற தொடர் பாடபேதமாக காணப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான பதிப்புகளில் வேதந்தாம் என்ற தொடரே காணப்படுகின்றது. எனவே நாமும் அந்த தொடரையே பின்பற்றுவோம். பயத்தல்= கொடுத்தல்; பெருமான் வேதங்களுக்கு பொருள் அருளியதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலத்தில் (திருவிளையாடல் புராணம்)பரஞ்சோதி முனிவர், கண்வர் முதலான முனிவர்களுக்கு வேதத்தின் பொருள் சொன்ன நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். மதுரையிலிருந்து சென்ற வேதியன் ஒருவன், நைமிசாரண்யத்தில் கண்வர் முதலான முனிவர்கள், முகம் வாட்டமடைந்து இருந்ததைக் கண்டு, அதன் காரணத்தை வினவினார். வேதங்களின் பொருளினை அறியமுடியாமல் வருந்துவதாக அவர்கள் கூற, மதுரை வேதியன், மதுரை மாநகரம் சென்று சொக்கநாதப் பெருமானிடம் வேண்டுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறினார். அவ்வண்ணமே கண்வரும் மற்ற முனிவர்களும் மதுரை சென்றடைந்து சொக்கநாதப் பெருமானிடம் வேண்டினார்கள்.பின்னர் அவர்கள் ஆங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் வழிபட்ட போது, வேதியச் சிறுவனாக பெருமான் வெளிப்பட்டு, முனிவர்களை நோக்கி அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது முனிவர்கள் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே தங்கள் அவா என்று கூறவே, வேதியச் சிறுவனாக வந்த பெருமானும் வேதங்களின் பொருளை எடுத்துரைத்தார் என்று திருவிளையாடல் புராணம் உணர்த்துகின்றது. சனகாதி முனிவர்களுக்கு தனது மோன முத்திரையால் வேதத்தின் பொருளை உணர்த்தியவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
அன்ன மென்னடை அரிவையோடு இனிதுறை அமரர் தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக்கம் மலர் வைத்தவர் வேதம் தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதில் சிரபுரத்தார் சீரார்
பொன்னின் மாமலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே
மூக்கீச்சரம் (திருச்சிராப்பள்ளி நகதத்தின் ஒரு பகுதியாகிய உறையூர் பண்டைய நாளில் மூக்கீச்சரம் என்று அழைக்கப்பட்டது) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், திருஞான சம்பந்தர், அன்னம் அன்ன நடையாளாகிய பார்வதி தேவியுடன், கங்கை நதியையும், முறையே தனது உடலிலிலும் சடையிலும் பெருமான் ஏற்றுக்கொண்டுள்ளது, அவர் செய்கின்ற மாயச் செயல்களில் ஒன்று என்று கூறுகின்றார். சாயல்=போன்ற; மாயம்=காரணம் அறிந்து சொல்ல முடியாத செயல்கள்; கோழி=கோழியூர் என்ற பெயர் கொண்டுள்ள உறையூர்; உலகில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஈசனின் திருவுள்ளக் குறிப்பின் படியே நடைபெறுவதால், அதனை நாம் எவரும் சரியாக புரிந்து கொள்ள முடியாது என்பதையும் உணர்த்தும் வண்ணம், அடிகள் செய்கின்றதோர் மாயம் என்று குறிப்பிடும் விளக்கம், ஈசனே உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முழுமுதற் காரணமாக உள்ள நிலையை எடுத்துரைக்கின்றது. மும்மலங்களில் ஒன்றாக கருதப்படும் மாயை வேறு, இங்கே குறிப்பிடப்படும் மாயம் வேறு, கங்கை நதியையும் உமை அன்னையையும் பெருமான் ஏற்றுக் கொண்ட காரணம் இந்த பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்தப் பட்டுள்ளது.
அன்னம் அன்ன நடைச் சாயலாளோடு அழகு எய்தவே
மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம்
தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன் மூக்கீீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மாயமே
தூய வெண்மை நிறதில் சிறகுகளை உடைய பெண் அன்னம் போன்ற மென்மையானை நடையும், ஒளிவீசும் வெண்முத்துப் போன்ற பற்கள் கொண்ட பிராட்டி என்று பூந்தராய் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.காவி=நீலோற்பல மலர்; நீலோற்பல மலர் போன்ற கருமையான கண்களை உடையவள் தேவி என்று கூறுகின்றார். தொண்டைக்கனி=கோவைக் கனி;கோவைக்காய் போன்ற சிவந்த உதடுகளை உடைய தேவி என்று சொல்லப் படுகின்றது; தூவி=இறகு; வெண்மையான இறகுகள் கொண்ட அன்னம் போன்ற நடையினை உடைய உமையன்னை; கருமையான கண்களையும் சிவந்த இதழ்களையும் வெண்முத்து போன்று ஒளிவீசும் பற்களையும் அன்னம் போன்ற மென்மையான நடையினையும் சுருண்ட கூந்தலையும் உடைய பார்வதி தேவி என்று தேவியின் அழகினை இங்கே வர்ணிக்கின்றார். சீர்காழி தலத்திற்கு பன்னிரண்டு பெயர்கள் உள்ளன என்றும், அந்த வரிசையில் ஆறாவதாக வருவது பூந்தராய் என்ற பெயர் என்பது ஒன்றிரண்டு மூன்றொடு சேர்பதி என்ற தொடர் மூலம், பாடலின் கடைப் பகுதியில் உணர்த்தப் படுகின்றன. பிரமனைப் போன்று வேதங்களில் சிறந்து விளங்கிய அந்தணர்கள் என்று சீர்காழி அந்தணர்களை திருஞானசம்பந்தர் உயர்த்திப் பேசுகின்றார்.
காவியங் கருங்கண்ணினாள் கனித் தொண்டை வாய்க்கதிர் முத்த நல் வெண்ணகைக்.
தூவியம்பெடை அன்ன நடைச் சுரி மென்குழலாள்
தேவியும் திருமேனியோர் பாகமாய் ஒன்றிரண்டு மூன்றொடு சேர் பதி
பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே
புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.7.8), தேவியை, திருஞானசம்பந்தர், அன்ன மென்னடையாள் என்று குறிப்பிடுகின்றார். இரவாகவும் பகலாகவும் காலதத்துவத்தை இயக்கும் பெருமான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வழிவழியாக பெருமானைப் போற்றி வாழ்ந்த குடியில் வந்தவன் என்று, திருஞானசம்பந்தர், தன்னைச் சொல்லிக் கொள்கின்றார்.
இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண் தகையே
அன மென்னடையாளொடும் அதிர்கடல் இலங்கை மன்னை
இனமார் தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே
புனவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.11.1) திருஞானசம்பந்தர், பிராட்டியை, அன்னம் அன்ன நடையாள் என்று அழைக்கின்றார். விரி நூலினன்=விரிந்த மார்பினில் முப்புரி நூல் உடையவன்; பெருமான் அடிக்கடி நான்கு வேதங்களையும் ஓதுபவனாக உள்ள தன்மை பன்னிய என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.
மின்னியல் செஞ்சடை வெண்பிறையன் விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடியாடிப் பல ஊர்கள் போய்
அன்னம் அன்ன நடையாளொர்டும் அமரும் இடம்
புன்னை நன்மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே
பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.13.1) திருஞானசம்பந்தர் பிராட்டியை அன்னமன்னந் நடை அரிவை என்றும் பெருமானை அன்னமன்னந் நடை அரிவை பங்கர் என்றும் அழைக்கின்றார்.
மின்னன எயிறுடை விரவலோர்கள் தம்
துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்தராய் நகர்
அன்னம் அன்னந் நடை அரிவை பங்கரே
கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.24.5) திருஞானசம்பந்தர், பிராட்டியை பெடைநடையவள் என்று குறிப்பிடுகின்றார்.அடைவு=புகலிடம், பற்றுக்கோடு; அடைவிலோம்= புகலிடம் இல்லையே என்ற வருத்தம்; அயர்வு=தளர்ச்சி; கடை உயர்=உயர்ந்த வாயில்கள் உடைய மாட வீடுகள்; கடை என்ற சொல்லுக்கு ஊழிக்காலம் என்று பொருள் கொண்டு, ஊழிக் காலத்திலும் அழியாமல் நிலையாக நிற்கும் சீர்காழி தலம் என்ற விளக்கமும் பொருத்தமே.
அடைவிலோம் என்று நீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்
பெடைநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
குருகாவூர் வெள்ளடை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.124.3) திருஞானசம்பந்தர், அன்னநடை மட மங்கையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அடையலர்=பகைவர், வேதநெறியைச் சென்றடைந்து அதன் வழியே ஒழுகாத திரிபுரத்து அரக்கர்கள்;;
அடையலர் தொன்னகர் மூன்று எரித்து அன்ன
நடை மட மங்கையொர் பாகம் நயந்து
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடை அமர் வெண்பிறை சங்கரன் நீரே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.9.3) அப்பர் பிரான், அன்ன மென்னடையாள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார்.ஞாழல்=சுரபுன்னை; சின்ன வேடம்= உருத்திராக்கம் திருநீறு சடைமுடி முதலியன சிவச் சின்னங்களாக கருதப் படுகின்றன. இத்தகைய சின்னங்களை பெரிய செல்வமாக மதித்து இறைவன் அணிகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இறைவனே சிவச் சின்னங்களை மேலான செல்வமாக மதிக்கின்றான் என்று குறிப்பிடுவதன் மூலம், நாமும் அந்த சின்னங்களை சிறப்பாக மதிக்க வேண்டும் என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். புறணி=உப்பங்கழிக்கரை; மன்னினார்=நிலையான புகழினை உடையவர்கள்;
புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னினார் வலம் கொள் மறைக்காடரோ
அன்ன மென் நடையாளை ஒர் பாகமாச்
சின்ன வேடம் உகப்பது செல்வமே
புகலூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.99.9) பாடலில் அன்னநடை மடவாள் பாகத்தான் என்று அப்பர் பிரான் இறைவனை குறிப்பிடுகின்றார். துன்னம்=தையல்; அக்காரம்= எலும்பு மாலை; சங்கு மணிகளால் கோர்க்கப்பட்ட உருத்திராக்க மாலை என்றும் கூறுவார்கள்.சிவபெருமான் கையில் இருக்கும் மழு ஆயுதத்தை அவர் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாத காரணத்தால், இரத்தக் கறை படியாத ஆயுதமாக விளங்குகின்றது.
துன்னம்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்திலங்கு வெண்மழுவாள் கையிலேந்தி
தன் அணையும் தண்மதியும் பாம்பும் நீரும் சடைமுடி மேல்வைத்துகந்த தன்மையானே
அன்ன நடை மடவாள் பாகத்தானே அக்காரம் பூண்டானே ஆதியானே
பொன்னம் கழலடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே
பொழிப்புரை:
மின்னல் போன்று மிகுந்த ஒளியுடன் திகழ்வதும் சிவந்த நிறத்தில் திகழ்வதும் ஆகிய சடையினில், பொருந்தி விளங்கும் ஒற்றைப் பிறைச் சந்திரன், ஊமத்தை மலர்கள், பொன்னின் நிறத்தில் காணப்படும் கொன்றை மலர்கள் ஆகியவற்றுடன், கங்கை நதியையும் மறைத்து வைத்துக் கொண்டுள்ள பெருமான், அழகிய அன்னம் போன்ற நடையினை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டவராகவும், நாளும் வேத கீதங்களை மீண்டும் மீண்டும் பாடுபவராக திகழும் பெருமான், பாதாளீச்சரம் திருகோயிலில் உறைகின்றார்.
பாடல் 2:
நீடலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி வெள்ளைத்
தோடமர் காதில் நல்ல குழையான் சுடு நீற்றான்
ஆடரவம் பெருக அனலேந்தி கைவீசி வேதம்பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே
விளக்கம்:
தலத்து மறையோர்கள் நாளும் வேத கீதங்கள் ஓதி பெருமானை வழிபட்டமை, இந்த பதிகத்தின் பல பாடல்களில் வேதங்கள் பற்றிய குறிப்பு மூலம் உணர்த்தப்படுகின்றது. (பாடல்கள் 1, 2, 4, 7, 8, 9, 10); நீடலர்=மாலை போன்று நீண்டு மலர்ந்த; நிரம்பா மதி=ஒற்றைப் பிறைச் சந்திரன்; சுடுநீறு=பிரளய காலத்தில் அனைத்துப் பொருட்களும் உடல்களும் எரிந்து அழிந்த சாம்பல்; ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் குழையும் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு, மாதொரு பாகனாக பெருமான் உள்ள தன்மையை இந்த பாடலில் உணர்த்துகின்றார். அவ்வாறு பெருமானை, தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம்என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும்சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைத்து குறிப்பிடும் இனிமையான பாடல்.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ
இந்த கோலத்தைக் கண்டு மணிவாசகர் மனம் குளிர்ந்தது போன்று, நம்பியாண்டார் நம்பி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் இந்தபழமையான கோலத்தை எவ்வாறு தாங்கள் கண்டனர் என்பதை கீழ்க்கண்ட பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த பாடல்கள் பதினோராம்திருமுறையில் உள்ளன. கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் இருபத்தோராவது பாடலில் நம்பியாண்டார் நம்பி, இறைவனை, வலதுகாதில் குழையும் இடது காதில் தோடும் அணிந்தவனாக காண்கின்றார். கோஷன் என்ற சொல்லின் திரிபு கோடன்: விசயனுடன் போர் செய்வதற்காகஆரவாரத்துடன் வந்த சிவபெருமான் கோஷன் என்று அழைக்கப் படுகின்றார். சிவபிரான் பேரில் காதல் கொண்டு, அதன் காரணமாக உடல் மெலிந்து தனதுகை வளையல்களை இழந்த தலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தோடு அணிந்த காது, இடது காது என்று குறிப்பிட்டு அம்மைக்கு உரியபகுதியில் தோடு அணிந்து இருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார்.
வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்று அளித்த
கோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்ட
தோடன் என்றாள் தொகு சீர் தில்லையம்பலத்து ஆடுகின்ற
சேடன் என்றாள் மங்கை அங்கை சரி வளை சிந்தினவே
மேற்கண்ட பாடலில் தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிட்டு, மாதொரு பாகனின் நிலையை உணர்த்தியதுடன் நம்பியார் திருப்தி அடையவில்லைபோலும். இதே பதிகத்தின் ஐம்பதாவது பாடலில் மிகவும் விவரமாக, இறைவனின் வலது பாகத்தில் உள்ள பொருட்களையும் இடது பாகத்தில் உள்ளபொருட்களையும் பட்டியல் இடுகின்றார். இடம் என்ற சொல், இடது பாகம் மற்றும் இருக்கும் இடம் என்ற இரண்டு பொருட்களில் இந்த பாடலில் கையாளப்பட்டுள்ளது. வீ=பூச்செண்டு: பாந்தள்=பாம்பு; சங்கம்=வெண் சங்கால் அமைந்த வளையல்: அக்கு= எலும்பு மாலை: அங்கம்சரி=அங்கு+அம்+சரி: அங்கு,பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்: அம் சரி=அழகாக சரிந்த இடுப்பு. கங்கை, குண்டலம், மழு ஆயுதம், பாம்பு, தோலாடை, அக்கு மாலை, ஆகியவைஅம்பலவனை உணர்த்தும் பொருட்களாகவும் தோடு, பூச்செண்டு, சங்கு வளையல், சேலை ஆடை, அழகாக சரிந்த இடுப்பு ஆகியவை அணங்கினைஉணர்த்தும் பொருட்களாகவும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன.
கங்கை இடம் வலம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்
தங்கும் கரம் வலம் வெம்மழு வீயிடம் பாந்தள் வலம்
சங்கம் இடம் வலம் தோல் இடம் வலம் அக்கு இடம்
அங்கம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே
சேரமான் பெருமாள் நாயனாரும் தான் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் அறுபத்து ஐந்தாவது பாடலில் மாதொரு பாகனின்கோலத்தை விவரிக்கின்றார். வீரக்கழல், பாம்பு, திருநீறு, தீப்பிழம்பு, எலும்பு மாலை, மூவிலை வேல் சூலம், நீரினைத் தாங்கிய சடை முதலியன பெருமானதுவலது பக்கத்திலும், இடது பகுதியில் பாடகம். மேகலை, சாந்து, பந்து, மலர் மாலை, மோதிரம், முதலியன பெருமானது இடது பக்கத்திலும் இருப்பதாகஇங்கே கூறப்படுகின்றது.
வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடம்
மேகலம் தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு
அலர்ந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்
சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே
தோடுடைய செவியன் என்று, மூன்று வயது குழந்தையாக இருந்த போது, தனது முதல் பதிகத்தைத் தொடங்கிய திருஞான சம்பந்தர் பல பாடல்களில் தோடொர் காதினன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். தோடு ஒரு காதில் அணீந்தவன் என்பதால் குழை மற்றொரு காதினில் அணிந்த மாதொரு பாகன் என்பது உணர்த்தப் படுகின்றது. சில பாடல்களில் தோடும் குழையும் அணிந்தவன் என்றும் குறிப்பிடப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.30.5) திருஞானசம்பந்தர் தோடும் குழையும் அணிந்தவனாக மாதொரு பாகனின் கோலத்தில் பெருமானை காண்கின்றார், கனபொற்குழை=எடை மிகுந்த பெரிய பொற்குழை; தாதார்=மகரந்தப் பொடிகள் பொருந்திய, தேனைத் தேடி வரும் வண்டுகள் சுவைப்பதற்கு முன்னர் பறிக்கப்பட்ட மலர்கள்; குழையும் தோடும் அணிந்துள்ள பெருமான், மகரந்த பொடிகள் நிறைந்த மலர்களை தனது குளிர்ந்த சடையில், கங்கை நதியினை அடக்கியதால் குளிர்ந்த சடையில், சூடியவனாக, தனது சடையினை தூக்கி முடிந்த நிலையில் காட்சி அளிக்கின்றான் என்று கூறுகின்றார். நாதன் என்ற சொல் எதுகை கருதி நாதான் என்று நீண்டது. அவன் அனைத்து உயிர்களுக்கும் நாதனாகத் திகழ்கின்றான் என்றும் சம்பந்தர் இங்கே கூறுகின்றார். போது=மலர்கள்
காதார் கனபொற் குழை தோடது இலங்க
தாதார் மலர் தண் சடை ஏற முடித்து
நாதான் உறையும் இடமாவது நாளும்
போதார் பொழில் பூம்புகலி நகர் தானே
குரங்கணில்முட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.31.4) திருஞானசம்பந்தர் இறைவனை தோடார் குழையான் என்று அழைக்கின்றார்.இதன் மூலம் இடது காதினில் தோடும் வலது காதினில் குழையும் அணிந்த பெருமான் என்பது உணர்த்தப் படுகின்றது. பாலனம்= காப்பாற்றுதல்; தனது அடியார்களை நன்கு காப்பாற்றும் பெருமான் என்றும் காக்கும் தொழிலைப் புரிபவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமாக உள்ளன. கூடாதன செய்த என்ற தொடர் மூலம் மற்றவர்கள் செய்ய முடியாத பல அரிய செயல்கள் செய்த பெருமான் என்று நமக்கு திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில்
தோடார் குழையான் நல்ல பாலன நோக்கி
கூடாதன செய்த குரங்கணின்முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே
செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் (1.61.8), திருஞான சம்பந்தர் இறைவனை தோடுடையான் குழையுடையான் என்றுகுறிப்பிடுகின்றார். பீடு=பெருமை; அடர்த்த=அடக்கிய, வலிமையை குறைத்த; சேடு=பெருமை; கணபதீச்சரம் என்பது திருக்கோயிலின் பெயர்.செங்காட்டங்குடி என்பது தலத்தின் பெயர் இவை இரண்டையும் இணைத்து திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுவதை நாம் உணரலாம்.சேர்ந்தாடும் என்று பேய்களுடன் இணைந்து நடனம் ஆடுவதை இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். காட்டில் உறைபவனாக இருந்தாலும், பலநாடுகளிலும் உள்ள கோயில்களில் இறைவன் குடி கொண்டு இருப்பதால், சம்பந்தர் நாடுடையான் என்றும் இறைவனை அழைக்கின்றார். பீடு=பெருமை.எவராலும் வெல்ல முடியாதவனாக, செருக்குடன் திரிந்த அரக்கன் இராவணனின் வலிமையை முதலில் அடக்கிய பெருமை உடையவன் என்பதால், அரக்கன்தோளடர்த்த பீடு உடையான் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் தோடார் குழை தான் ஒரு காதில் இலங்க பெருமான் காட்சி தருவதாக கூறுகின்றார்.
தோடுடையான் குழை உடையான் அரக்கன் தன் தோள் அடர்த்த
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிகப் பெரியான்
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்தாடும்
காடு உடையான் நாடு உடையான் கணபதீச்சரத்தானே
பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.63.4) திருஞானசம்பந்தர், தோடும் தாழ்குழையும் அணீந்தவன் என்று குறிப்பிடுகின்றார். தாருகவனத்து இல்லத்தரசிகளை அங்கோல் வளையார் என்று குறிப்பிட்டு, அவர்களது இல்லத்திற்கு பிச்சைப் பெருமானாக சிவபெருமான் சென்ற நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடுகின்றார். ஆநலம்=கற்புநெறி; ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் குழையும் அணிந்து மாதொரு பாகனாக இறைவன் திகழும் தோற்றம் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. வெங்கோ=கோபம் கொண்ட தலைவன், இயமன்; தங்களின் இல்லத்திற்கு பலியேற்க வந்த பிச்சைப் பெருமானின் அழகில் மயங்கி தங்களது நிலையினை மறந்த தாருகவனத்து இல்லத்தரசிகள், தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு, பெருமானை பின்தொடர்ந்தனர். இந்த செய்கையால் அவர்கள் கற்பு நிலையிலிருந்து தவறியதாக கருதப்பட்டது. இதற்கு மூல காரணமாக இருந்த பெருமானை, கற்பினைக் கவர்ந்த கள்வன் என்று இங்கே கூறுகின்றார். உரிய காலத்தில், உயிர்களை,அவை அந்நாள் வரை குடிகொண்டிருந்த உடல்களிலிருந்து பிரிக்கும் இயமனை, அனைவரும் பழிக்கின்றனர். எனினும் அவன், தனது கடமையை தொடர்ந்து செய்ய வேண்டிய கடடாயத்தில் இருப்பதால்,பெருமானிடம் தனது நிலையினை அவன் எடுத்துரைக்க, பெருமான் அவனுக்கு தருமநெறியிலிருந்து வழுவாமல், எவ்வாறு தனது கடமையை நிறைவேற்றுவது என்பதை இயமனுக்கு கற்றுக் கொடுத்தார் என்ற செய்தி இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. இவ்வாறு இயமனுக்கு குருவாக இருந்த காரணத்தால், இயமனுக்கு தனது கடமையை அவன் செவ்வனே செய்யும் வண்ணம் கற்றுக் கொடுத்து அவனை ஊக்குவித்த பெருமான் உறைகின்ற தலம் என்பதால் வெங்குரு என்ற பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது என்றும் கூறுவார்கள். இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், தாருகவனத்து மகளிரின் கோல்வளைகளை பெருமான் திருடியதாகவும் கூறுகின்றார்.
சங்கோடு இலஙகத் தோடு பெய்து காதிலொர் தாழ்குழையன்
அங்கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆனலம் வவ்வுதியே
செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்கும் செய்வினை மெய் தெரிய
வெங்கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே
திருவிடைச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.78.6) திருஞானசம்பந்தர் பெருமானை, தோடணி குழையினர் என்று குறிப்பிடுகின்றார்.பீடு=பெருமை; பாஙகர்=அருகே; கோடல்=செங்காந்தள் பூ; ஒழுகுவ=தேன் ஒழுகும் தன்மை, தேன் சொரியும் பூக்கள்; தும்பி=வண்டு; தேனை உறிஞ்சும் முயற்சியில், வண்டுகள் பூவில் மூழ்கி விடுகின்றன என்று கூறுகின்றார்.
தோடணி குழையினர் சுண்ண வெண்ணீற்றர் சுடலையின் ஆடுவர் தோலுடையாகப்
பீடுயர் செயததோர் பெருமையை உடையர் பேயுடன் ஆடுவர் பெரியார் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் அரவமமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல் இடைச் சுரம் மேவிய இவர் வணம் என்னே
கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.103.1) ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் தூய குழையும் அணிந்தவன் என்றும் குழை ஆபரணம் தாழ்ந்து தொங்குகின்றது என்றும் திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் இந்த பாடலில் காணலாம். ஏடு உடையான்=தாமரை மலரினை தனது இருப்பிடமாக கொண்டுள்ள பிரமன்; பல நாடுகளும் சென்று பெருமான் பலி ஏற்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம் இரந்து உண்ணும் நாடுடையான் என்று கூறுகின்றார். ஏமம்=ஜாமம்;
தோடுடையான் ஒரு காதில் தூய குழை தாழ
ஏடுடையான் தலை கலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள் ஏமம் நடமாடும்
காடுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே
பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.1.6) திருஞானசம்பந்தர் காதிலங்கு குழை சங்க வெண்தோடுடன் வைத்ததே என்று கூறுகின்றார். மாது=அழகு; மாது இலங்கிய=அழகுடன் விளங்கும்; மருங்கு=அருகே, பக்கம்; போது=மலரும் தன்மையில் உள்ள அரும்பு;அங்கமலம்=அம்+கமலம்=அழகிய தாமரை மலர்; மதுவார்=தேன் நிறைந்த; சோதி அம் சுடர் மேனி=ஒளியுடன் திகழும் அழகிய திருமேனி; இந்த பதிகத்தின் பாடல்கள் வினாவுரை முறையில் அமைந்துள்ளன. பெருமானின் பல செயல்களுக்கு பெருமானிடம் விடை கேட்பது போன்று அமைந்துள்ள பாடலகள் கொண்ட பதிகம்.
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கெலாம்
போதில் அங்கமலம் மதுவார் புனல் பூந்தராய்ச்
சோதி அஞ்சுடர் மேனி வெண்ணீறணிவீர் சொலீர்
காது இலங்கு சங்க வெண் தோடு உடன் வைத்ததே
கோழம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.13.3) பெருமானை, வெண்குழை தோடு விளங்கிய காதன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஏதனை=உயிர்கள் செய்யும் குற்றங்களுக்கு காரணமானவன்; உயிர்கள் தங்களது வினைகளை நுகர்ந்து கழிக்க வேண்டிய நியதியை ஏற்படுத்தியவன் என்பதால், அத்தகைய வினைகளால் உயிர்கள் செய்யும் குற்றங்களுக்கு பெருமான் காரணனாக கருதப்படுகின்றான். குற்றம் நீ குணங்கள் நீ என்ற திருஞானசம்பந்தர் (ஆல்வாய் பதிகம்; 3.52) வாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது. ஏதமிலா= குற்றங்கள் இல்லாத; இமையோர்=கண்கள் இமைப்பதையும் மூச்சுக் காற்றினை உள்ளே இழுத்து வெளிவிடுவதையும் கட்டுப்படுத்தும் தன்மை உடைய யோகியர்கள்; வேதன்=வேதத்தின் வடிவமாக விளங்குபவன்; கடிபொழில்=நறுமணம் நிறைந்த சோலைகள்;
ஏதனை ஏதமிலா இமையோர் தொழும்
வேதனை வெண்குழை தோடு விளங்கிய
காதனைக் கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை ஏத்துமின் நும் வினை நையவே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.49.3), நாம் பெருமானை தோடுடைய காதனே என்றும் சங்க வெண்குழையாய் என்று அழைத்து மாதொரு பாகனின் திருக்கோலத்தைப் போற்றிப் புகழவேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நாடு முழுவதும் சிறக்க வேண்டும் என்று நல்லார்கள் பெருமானிடம் வேண்டுவதாக திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்ற வடமொழித் தொடரை நினைவூட்டுகின்றது. அனைத்து மந்திரங்களையும் சொல்லி முடித்த பின்னர், இந்த தொடருடன் எந்த வழிபாட்டினையும் முடிப்பது வழக்கம்.திருஞானசம்பந்தரும் வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பாடலின் (3.54.1) வையகமும் துயர் தீர்கவே என்று முடிப்பதும் நமது நினைவுக்கு வருகின்றது.
நாடெலாம் ஒளி எய்த நல்லவர் நன்றுமேத்தி வணங்குவார் பொழில்
காடெலாம் மலர் தேன் துளிக்கும் கடற்காழித்
தோடுலாவிய காதுளாய் சுரிசங்க வெண்குழையான் என்றென்று உன்னும்
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றார்களே
புறவார் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.53.2) திருஞானசம்பந்தர், பெருமானை தோடிலங்கிய காதயன்மின் துளங்க வெண்குழை என்று குறிப்பிடுகின்றார். நீடல்=நீளும் தன்மை கொண்ட, நீண்ட; கோடல்=காந்தள் மலர்; சங்கரன்=இன்பம் அளிப்பவன்; அறைதல்=ஒலித்தல் இங்கே முரலுதல் என்பது பொருந்தும்; அலர=மலர; அளம்=குவியலாக; வண்டுகளின் உடலிலிருந்து உதிரும் மகரந்தத் தூள்கள் குவியலாக காணப்படுகின்றன என்று கூறுகின்றார். நிரை=வரிசையாக; அயல்=பக்கத்தில், அருகே; மின்=மின்னல் போல் ஒளிரும்; தோடு மற்றும் குழை ஆபரணங்களின் தன்மையில் காணப்படும் வேறுபாடு மிகவும் அழகாக உணர்த்தப் படுகின்றது. தோடு ஒரே இடத்தில் பொருந்தி விளங்க, குழை துள்ளி ஆடும் தன்மை சொல்லப் பட்டுள்ளது.
நீடல் கோடல் அலர வெண்முல்லை நீர்மலர் நிரைத் தாது அளஞ்செய்
பாடல் வண்டறையும் புறவார் புனங்காட்டூர்த்
தோடு இலங்கிய காதயன் மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடும் சங்கரனே அடைந்தார்க்கு அருளாயே
தலைச்சங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.55.1), திருஞானசம்பந்தர், பெருமான் தோடும் குழையும் அணிந்து காட்சி தரும் தன்மையை குறிப்பிடுகின்றார். நலம்=அழகு; சங்கை=ஐயம், சந்தேகம்; கமுகின் காய்கள் செம்மை நிறத்தில் இருப்பதால், செங்காய் பைங்கமுகு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்தல்=இறங்கி வருதல்; நிலவுலகத்து மனிதர்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் பெருமான் நிலவுலகம் வந்து பல தலங்களிலும் எழுந்தருளி இருக்கும் நிலையினை, தாழ்ந்தீர் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிட்டார் போலும். திருமாலுக்கு சங்கு அளித்து அருள் புரிந்த தலத்து இறைவனை அழகிய சங்கு என்ற பொருள் தரும் தொடருடன் தொடங்குவது மிகவும் பொருத்தமாக உள்ளது. பெய்து=அணிந்து;
நலச்சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர்கொள் சோலைக் குயில் ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே
பெரும்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.67.5) திருஞானசம்பந்தர், பெருமானை தோடுடையார் குழைக்காதில் என்று குறிப்பிடுகின்றார்.தனது உடலெங்கும் திருநீறு அணிந்து கொள்ளும் வழக்கம் உடைய பெருமான், தனது காதுகளிலும் திருநீறு அணிந்து கொள்கின்றார் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. பிரளய காலம் முடிந்து உலகின் அனைத்துப் பொருட்களும் அனைத்து உடல்களும் எரிந்து சாம்பலாக மாறும் நிலையில், எங்கும் இருள் சூழ்ந்து காணப்படும் நேரத்தில், நெருப்புப் பிழம்பு ஏந்தியுள்ள கரம் வீசி, ஊழித்தீயின் நடுவில் நின்று பெருமான் ஆடும் நடனமே, இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. அனலாட என்று முதல் அடியிலும், எரி வீசும் கை உடையார் என்று இரண்டாவது அடியிலும் குறிப்பிடப்படுவதை நாம் உணரலாம்.
தோடுடையார் குழைக் காதில் சுடுபொடியார் அனலாடக்
காடு உடையார் எரி வீசும் கையுடையார் கடல் சூழ்ந்த
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த
பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.5) திருஞானசம்பந்தர், பெருமான் தோடும் குழையும் அணிந்தவனாக இருக்கும் நிலையை குறிப்பிடுகின்றார். கனல்=நெருப்பு; வீடு உடன் எய்துவார்கள்=பேரின்பம் தரும் முக்தி வீட்டினை இந்த பிறவி முடிந்தவுடனே அடையும் தகுதி படைத்தவர்கள்; வெறிநீர்=நறுமணம் உடைய நீர்; விதி=முறை; தினமும் பெருமானை நோக்கி செய்யப்படும் பூஜை முதலிய வழிபாடுகள் முடிந்த பின்னர்,மலர்கள் தோய்ந்து இருக்கும் நீருடன் சிறிது பாலையும் சேர்த்து, பூமியில் தெளித்து இதமர்க்யம் என்று மூன்று முறை சொல்லி முடிப்பார்கள். இந்த பழக்கத்தையே, விதி என்று வெறிநீர் என்று விரலால் தெளிப்ப என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். அந்தணர் குலத்தில் அவதரித்த மூன்று வயதுக் குழந்தை, தனது தந்தையார் பூஜை செய்யும் முறையினை உற்று கவனித்து தான் உணர்ந்த செய்திகளை பதிகத்தில் கூறும் நயத்தை நாம் உணரலாம். தெளிந்த நீர்நிலைகளில் அந்தணர்கள் காலை, நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் சந்தியா வந்தனம் செய்வது வழக்கம். அத்தகைய நீர்நிலைகளில் மலர்ந்துள்ள மலர்களின் நறுமணம் நீருடன் கலந்து இருப்பதை வெறிநீர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்றும் தோன்றுகின்றது. மேலும் சந்தியாவனத்தின் ஒரு பகுதியாக சூரியனுக்கு அர்க்கியம் வழங்கி சூரியன் மூலமாக அனைத்து தேவர்களுக்கும் தினமும் அர்க்கியம் வழங்கும் முறையில். இரண்டு கைகளையும் இணைத்து நீரினை முகந்து, விரல்களின் நுனியால் அந்த நீரினை தெளிப்பது வழக்கம். எனவே இவ்வாறு செய்யப்படும் சந்தியாவந்தனம் இங்கே குறிப்பிடப்படுகின்றது என்ற விளக்கமும் பொருத்தம் ஆனதே.
தோடொரு காதனாகி ஓர் காது இலங்கு சுரி சங்கு நின்று புரளக்
காடு இடமாக நின்று கனலாடும் எந்தை இடமாய காதல் நகர் தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்
நாடு உடனாடு செம்மை ஒலி வெள்ளம் ஆகும் நனிபள்ளி போலும் நமர்காள்
நறையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.3) ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் குழையும் அணிந்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சூடகம்=வளையல்; தனது அடியார்களுக்கு அருள் புரிய வருகின்ற பெருமான், பார்வதி தேவியுடன் வருகின்றான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பார்வதி தேவி தானே அருட்சக்தி; எனவே தொண்டர்களுக்கு அருள் புரிய விரும்பும் பெருமான், பிராட்டியுடன் வருவது தானே பொருத்தம்; ஈடகம்=பெரிய வீடுகள், பெருமை மிகுந்த வீடுகள்; பெருமான் பெரிய வீடுகள் சென்று பிச்சை ஏற்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.எனவே அந்த வீடுகளில், தங்களின் மலங்களை பெருமானுக்கு பிச்சையாக அளிக்கும் பொருட்டு, பெருமானின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பக்குவமடைந்த உயிர்கள் இருப்பதை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்கள் இறைவனது அருளினால் செல்வந்தர்களாக, பெரிய வீடுகள் உடையவர்களாக இருந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெரிய வீடு, என்பதற்கு பெருமையில் சிறந்த வீடு என்று பொருள் கொண்டு பக்குவம் அடைந்த அடியார்கள் வாழும் பெருமை படைத்த வீடு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. படு பிச்சன்=ஈடுபாடுடன் பிச்சை ஏற்கும் பெருமான்; மிகவும் அதிகமான உயிர்கள், முக்தி நிலை அடைந்து தன்னை விட்டு பிரியாது இருக்கவேண்டும் என்ற ஆவல் உடையவன் பெருமான். எனவே தான், மிகுந்த ஆர்வத்துடன், பக்குவப்பட்ட உயிர்களைத் தேடிக் கொண்டு அவனே முன்சென்று பிச்சை எடுக்கின்றான். இந்த தன்மையை புரிந்து கொண்ட அடியார்கள் அவனைப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்றும் கூறுகின்றார். வேழம்=யானை; இலங்கு=பொலிந்து விளங்க; நாடகம்= நடனம்; தொண்டர்கள் மனதினில் நின்ற மைந்தன் என்று பொதுவாக, இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில், தலத்து மகளிர்கள் இறைவனின் புகழினை பாடியும் நடனமாடியும் வெளிப்படுத்துவதை குறிப்பிடுகின்றார்.
சூடக முன்கை மங்கை ஒருபாகமாக அருள் காரணங்கள் வருவான்
ஈடகம் ஆன நோக்கி இடுபிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவத்
தோடகமாய் ஒர்காதும் ஒரு காதிலங்கு குழை தாழ வேழ உரியன்
நாடகமாக ஆடி மடவார்கள் பாடும் நறையூரின் நம்பன் அவனே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.113.6) சம்பந்தர் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.பீடு=பெருமை; கோடு=பெரிய கிளைகள்;
தோடு இலங்கும் குழைக் காதர் தேவர் சுரும்பார் மலர்
பீடு இலங்கும் சடைப் பெருமையாளர்க்கு இடமாவது
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்கப் பெரும் செந்நெலின்
காடு இலங்கும் வயல் பயிலும் அந்தண் கடற் காழியே
தோணிபுரம் என்று அழைக்கப்படும் சிர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.81,10) தோடு குழை பெய்தவர் என்று குறிப்பிடுகின்றார், வேடநிலை=இடுப்பினில் ஆடையின்றி இருக்கும் தமது வேட நிலை; ஆதர்=அறிவற்றவர்கள்; பெருமானைக் குறித்து பூரண அறிவற்ற மூடர்கள்; கேடு=தீமை விளைவிக்கும் சொற்கள்; சிவநெறியிலிருந்து மக்களை திசை திருப்ப பயன்படுத்தப் படும் வீண் பழிச்சொற்கள் என்பதால் தீங்கு விளைவிக்கும் சொற்கள் என்று கூறினார். அடைவு என்ற சொல்லுக்கு முறை என்றும் சரணம் அடையும் இடம் என்று இரண்டு விதமாக பொருள் கூறலாம். இரண்டும் பொருத்தமாக உள்ளன. பெய்தல்=அணிதல்; உறைவு=உறைவிடம்;
மூடு துவர் ஆடையினர் வேட நிலை காட்டும் அமண் ஆதர்
கேடு பல சொல்லிடுவர் அம்மொழி கெடுத்து அடைவினானைக்
காடு பதியாக நடம் ஆடி மடமாதொடு இரு காதில்
தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரமாமே
திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.5) குழையாராக விளங்கும் பெருமான் தோடு அணிந்தவராகவும் உள்ளார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மை= கருமை; மையமரும்=மரங்களின் கிளைகள் நெருங்கி வளர்ந்துள்ளதால் இருளடர்ந்து காணப்படும் சோலைகள்;சென்ற பாடலில் பெருமை மிகுந்த நடை நடக்கும் பாதம் என்றும் சிலம்பணிந்த திருவடி என்றும் மாதொரு பாகனாக விளங்கும் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில், குழையும் தோடும் அணிந்தவர் என்று மாதொரு பாகனாக இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இந்த தன்மையை மீண்டும் மீண்டும் சொல்வதில் தான், திருஞானசம்பந்தர் எத்துணை மகிழ்ச்சி அடைகின்றார். ஆர் தரு=பொருந்திய;
கையமரும் மழு நாகம் வீணை கலைமான் மறியேந்தி
மெய்யமரும் பொடிப் பூசி வீசும் குழையார் தரு தோடும்
பையமரும் அரவாட ஆடும் படர்ச்சடையார்க்கு இடமாம்
மையமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மாநகரே
இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் பெருமான் மாதொரு பாகனாக இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது. கங்கை நங்கை மற்றும் உமையன்னை ஆகிய இருவரும் குறிப்பிடப்படும் அரிய பாடல்களில் ஒன்று. இந்த பாடலில் இடபம், கங்கை, சடைமுடி, உமாதேவி, உயிர்களுக்கு முக்தி நிலை அளித்து அருள் புரியும் திருவடி, சிலம்பு, வலஞ்சுழி ஆகிய ஏழு அம்சங்களின் மேன்மை உணர்த்தப் படுகின்றது. இவை அனைத்தும் பெருமானையே சார்ந்து நிற்கும் தன்மையையும், வேறு எவரையும் சாராது இருக்கும் நிலையையும் நாம் உணரவேண்டும். இதன் மூலம் பெருமானின் தனிச்சிறப்பு உணர்த்தப் படுகின்றது.சிவபெருமானுக்கு அருகே ஒரு பக்கத்தில் இடப வாகனம் உள்ளது. சடையின் ஒரு பக்கத்தில், பெருமானை விரும்பி வந்தடைந்த மெல்லியலாள் கங்கை ஒரு புறம் உள்ளாள். விரிந்து பரந்த சடை ஒரு புறம் இருக்க, தாழ்ந்த குழலை உடைய பிராட்டி பெருமானின் உடலின் ஒரு பாகத்தில் பொருந்தி இருக்கின்றாள். இத்தகைய கோலம் கொண்டுள்ள பெருமான், பெருமை மிகுந்த நடை நடக்கும் திருவடியும் சிலம்பணிந்த திருவடியும் கொண்டவராக விளங்குகின்றார். இங்கே குறிப்பிடப்பட்ட தன்மைகள் சென்று அடையும் வண்ணம் திருவலஞ்சுழி பெருமான் விளங்குகின்றார். இத்தகைய தன்மைகள் ஏன் பெருமானை மட்டும் சென்றடைந்து மற்றவரை சென்றடையாமல் நிற்கின்றன என்பது எங்களது சிற்றறிவுக்கு எட்டவில்லை என்பதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
விடை யொருபால் ஒரு பால் விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடை ஒருபாலொடு பால் இடம் கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடை ஒரு பாலொரு பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர்
அடை ஒரு பாலடையாத செய்யும் செய்கை அறியோமே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.107.3) தோடொரு காது ஒரு காது சேர்ந்த குழையான் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். தோடுடைய செவியன் என்று குறிப்பிட்டு தனது முதல் பதிகத்தினைத் தொடங்கிய திருஞானசம்பந்தர், பல பாடல்களை தோடு என்று சொல்லுடன் தொடங்கி இன்பம் அடைகின்றார். தோடு என்ற சொல்லுடன் தொடங்கும் வண்ணம் ஞானசம்பந்தர் அருளிய பதினைந்து பாடல்கள் இதுவரை நமக்கு கிடைத்துள்ளன. மூன்று பதிகங்களின் முதல் பாடல்கள் தோடு என்ற சொல்லுடன் தொடங்குகின்றன. இழை=நூலிழை, இங்கே பெருமான் அணிந்துள்ள பூணூலை குறிப்பிடுகின்றது. பீடு=பெருமை; நாடு என்ற சொல் பல நாடுகளில் உள்ள அடியார்களை குறிப்பிடுகின்றது.
தோடொரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும்
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி
நாடொரு காலமும் சேர நின்ற திருநாரையூரானைப்
பாடுமின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வாமே
சமணர்களின் சூழ்ச்சியினால், மத யானையைக் கொண்டு தனது தலையை இடற பல்லவ மன்னன் இட்ட கட்டளையை ஏற்று தன்னை நோக்கி வந்த மதயானையைக் கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாமல், அருளிய பதிகத்தின் (4.2.7) பாடலில், பெருமானின் தோற்றத்தை விவரிக்கும் அப்பர் பிரான், தோடு மற்றும் குழை அணிந்தவனாக பெருமானைக் கண்டதை நமக்கு உணர்த்தும் பாடல் இது. குவவு=தோளின் திரட்சியை குறிப்பிடுகின்றது, குலவு என்ற சொல் குவவு என்று திரிந்தது; திரண்ட தோள்களை உடையவன் பெருமான். விலைபெறு சங்கக் குழை=சங்கினால் செய்யப்பட்டதும் விலை உயர்ந்ததும் ஆகிய குழை ஆபரணம். விலை உயர்ந்த குழையினை குறிப்பிடும் பாடலில் விலையே இல்லாத கபாலம் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். விலை மதிக்க முடியாத கபாலம் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும்.
கொலை வரி வேங்கை அதளும் குவவோடு இலங்கு பொன் தோடும்
விலை பெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் கடைப்பாடலில் (4.8.10) தோடும் சங்கக்குழையும் அணிந்தவனாக பெருமானை அப்பர் பிரான் காண்கின்றார். இந்த பாடலில் நாம் வேறெங்கும் காண முடியாத காட்சியை நமது கண் முன்னே அப்பர் பிரான் கொண்டு வருகின்றார். இறைவன் வேதங்கள் ஓதுவதையும் நடனம் ஆடுவதையும், மிகவும் அருகில் இருந்து எப்போதும் ரசிப்பவள் உமையம்மை. மாதொருபாகனாக இருக்கும் பெருமானின் திருவாயின் வலது பகுதி வேதத்தை சொல்வதாகவும், இடது பகுதி அந்த வேதத்தை கேட்டு ரசித்தபடியே புன்முறுவல் செய்வதாகவும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.ஓலை=தோடு; புதுவிரி பொன் செய் ஓலை=ஒளியை பரப்பிக் கொண்டு இருக்கும் புதியதாக செய்யப்பட்ட பொன் தோடு. இந்த பாடலில் அப்பர் பிரான்,பெருமான் தனது உடலில் சடை ஒரு பாகத்திலும் குழல் மற்றொரு பாகத்திலும் உடையவராக உள்ளார் என்று கூறுகின்றார். புதிய சுருள் பொன்னால் செய்யப்பட்ட தோட்டினை ஒரு காதிலும், மற்றோர் காதினில் வளைந்த சங்கு தோளில் புரளும் படியாக அணிந்துள்ள பெருமானின், திருவாயின் ஒரு பகுதி வேத கீதங்களைப் பாட, திருவாயின் மற்றொரு பகுதி பெருமான் பாடும் வேத கீதத்தை ரசித்தபடியே புன்முறுவல் பூக்கின்றது. சடையாக காணப்படும் வலது பகுதியில், தேன் சொட்டும் கொன்றை மலர் விரிந்த படியே இருக்க, இடது பகுதியில் உள்ள கூந்தல் பின்னப்பட்டு அழகாக காணப்படுகின்றது, இவ்வாறு பெருமானின் தன்மையும் இயல்புகளும் ஒரு புறத்திலும் மற்றோர் புறத்தில் உமை அம்மையின் தன்மையும் இயல்புகளும் காணப்பட்டன என்று இந்த பாடலில் அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார்.
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஓர் காது சுரி சங்கு நின்று புரள
விதி விதி வேத கீதம் ஒருபாடும் ஓதம் ஒருபாடும் மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்
இது இவர் வண்ணம் வண்ணம் இவள் வண்ணம் வண்ணம் எழில் வண்ணம் வண்ணம் இயல்பே
பாண்டி நாட்டில் பூவணம் திருத்தலம் அப்பர் பிரான் சென்றபோது, பெருமான் அவருக்குத் தனது திருக்கோலத்தைக் காட்டினார். அதனைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் தான் கண்ட காட்சியை பதிகமாக வடித்தார். அந்த பதிகத்தின் (6.18) முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு காதினில் வெண் குழையையும், மற்றொரு காதினில் தோட்டினையும் அணிந்து பெருமான் அளித்த காட்சியை காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்று உரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
வாய்மூர் தலத்திற்கு அப்பர் பிரான் சென்றபோது அவருக்கு, சிவபெருமான் தனது நடனக்காட்சியை காட்டி அருளினார். அந்த நடனக் காட்சியை, பாடஅடியார் பரவக் கண்டேன் என்று தொடங்கும் திருத்தாண்டகத்தில் (6.77) அப்பர் பிரான் நமக்காக வடித்து இருக்கின்றார். இந்த பதிகத்தின் ஏழாவதுபாடலில், சிவபெருமானின் காதினில் தோடும் குழையும் கண்டதாக அப்பர் பிரான் சொல்கின்றார்.
குழையார் திருத்தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழையார் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்
மழையார் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (6.96.4) அப்பர் பிரான், பெருமானை கொண்டை கொண்டார் என்று குறிப்பிட்டு மாதொரு பாகனின் திருக்கோலத்தை உணர்த்துகின்றார். பொக்கணம்= திருநீற்றுப் பை; கொடியோன்=அசுரன் சலந்தரன்; செடியேன்=அழுக்கினை உடையவன்; புயம்= தோள்;அக்கு=சங்குமணிமாலை; கொண்டை=இழுத்து கட்டப்பட்டு முடித்த சடை என்றும் பொருள் கொள்ளலாம். செக்கர்=செவ்வானம்;
பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார் பூதப் படைகள் புடை சூழக் கொண்டார்
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்துலகும் படைத்து அவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையாக் கொண்டார்
செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார் தாமே
வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.42.5) சுந்தரர் வெண் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு அவரது காதில் இருந்த குழையணி அசைந்தது என்று கூறுகின்றார். குழைக்கும் தோட்டினுக்கும் உள்ள அமைப்பு வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம், துளை உடைய குழை என்று இங்கே கூறுகின்றார். பெருமானின் காதுகள் நீண்டு, அவரது தோள்களைத் தொட்ட நிலையினை தூங்கும் காது என்று உணர்த்துகின்றார். கள்ளையே, பிள்ளை, வெள்ளை என்ற சொற்கள் எதுகை கருதி களையே, பிளை, வெளை என்று இடையெழுத்து குறைந்து காணப் படுகின்றன. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், இறைவன் தனது சீரிய அடியார்களுள் ஒருவனாக தன்னையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தினை வைக்கின்றார்.
துளை வெண் குழையும் சுருள் தோடும் தூங்கும் காதில் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுதற்கு அரியாய்
வெளை மால்விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.84) ஒன்பதாவது பாடலில் சுந்தரர், இறைவனை, மகரக்குழையும் தோடும் அணிந்த காதுகளை உடையவனாக காண்கின்றார். இறைவன் தூது சென்றதையும், தன்னை ஆட்கொண்டதையும், தான் இறைவனைத்தலைவனாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டு தனது வாழ்க்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் கூறும் நேர்த்தியை நாம் இங்கே காணலாம். மாதினைஒரு பாகம் கொண்டுள்ள சிவபிரானை மாதன் என்று அழைக்கின்றார். இறைவனின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து தான், நாதமும் பின்னர்ஓசையும் பிறந்த செய்தியை இங்கே நாதனும் நாதம் மிகுத்து ஓசையது ஆனவன் என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அடியார்கள் உள்ளத்தின் மீதுதான் வைத்துள்ள பற்றினை சிறிது நேரம் கூட நீக்காத இறைவன் என்று குறிப்பிட்டு, சிறந்த அடியார்கள் பெரும் பேற்றினையும் நமக்கு உணர்த்துகின்றார்.
நாதனை நாதம்மிகுத்து ஓசையதானானை ஞானவிளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை
மாதனை மேதகுபத்தர் மனத்திறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனைஆள் தோழனை நாயகனைத் தாழ்மகரக்குழையும் தோடுமணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவது என்றுகொலோ கார்வயல்சூழ் கானப்பேருறை
காளையையே
பொழிப்புரை
கொத்து கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களுடன், வளராமல் ஒற்றைப் பிறையுடன் நிரம்பாமல் விளங்கிய சந்திரனையும் தனது சடையில் சூட்டிக்கொண்டுள்ள பெருமான், வெண்மை நிறத்தில் முத்துகள் பதிக்கப்பட்ட தோட்டினையும் அழகிய குழை ஆபரணத்தையும் தனது காதுகளில் அணிந்து கொண்டுள்ளான். அவன் ஊழி முடிவினில் அழிந்துபடும் உயிரற்ற பிணங்களின் எரிந்த சாம்பலை, சூடாக விளங்கும் சாம்பலைத் தனது உடல் முழுவதும் பூசியவனாக உள்ளான். படம் எடுத்து ஆடும் தன்மை உடைய பாம்பு, அவனது உடலில் ஆபரணமாகத் திகழ, கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பை ஏந்திய கைகளை வீசி நடமாடுகின்றான். இவ்வாறு நடனமாடும் பெருமான்,இன்னிசை பொருந்த வேத கீதங்களையும் பாடுவதால், அனைவர்க்கும் இனியவனாக திகழும் பெருமான், பாதாளீச்சரம் தலத்தினில் உறைகின்றான்.
பாடல் 3:
நாகமும் வான்மதியும் நலமல்கு செஞ்சடையான் சாமம்
போக நல் வில் வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான்
தோகை நன் மாமயில் போல் வளர் சயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே
விளக்கம்:
சாமம் போக=உரிய நேரத்தில்; பாம்பும் சந்திரன் ஆகிய இரண்டும் இயல்பாகவே ஒன்றுக்கொன்று பகையுடன் விளங்குவன. எனினும் பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமில்ல என்பதால், இரண்டுமே தங்களின் இடையே உள்ள பகையை மறந்து அமைதியாக பெருமானின் சடையினில் பொருந்தி இருக்கும் சூழ்நிலையை நலமல்கு செஞ்சடை என்று குறிப்பிடுகின்றார். பகைமை உணர்ச்சியால் ஏற்படும் கோபமின்றி பாம்பு சாந்தமாகவும், பாம்பிடம் தான் கொண்டிருந்த அச்சம் நீங்கியதால் கலவரமேதும் இன்றி சந்திரன் இருக்கும் தன்மை தான், நலமல்கு என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. இந்த செய்தி நமக்கு அப்பர் பிரான் திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலை (6.99.2) நினைவூட்டுகின்றது. இங்கே பாடலில் அப்பர் பிரான் பெருமானை பாம்பொடு திங்கள் பகை தீர்த்தாண்டாய் என்று கூறுகின்றார்.
திரிபுரத்து அரக்கர்கள் அடுத்தவருக்கு தீங்கு செய்யத் தொடங்கிய போது, அவர்கள் வேதநெறியை பின்பற்றி வந்ததால், அவர்களது செயல்களை பொறுத்துக் கொண்டிருந்த பெருமான், அவர்கள் வேதநெறியிலிருந்து விலகி வேதங்களை பழிக்கத் தொடங்கியதைக் கண்ட பெருமான், அவர்களை அழிப்பதற்கான நேரம் கனிந்து விட்டது என்பதை உணர்ந்தவராக, அவர்களுடன் போருக்கு சென்ற தன்மை, சாமம் போக என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. அங்கம்=உயிரற்ற உடலின் பாகங்கள், எலும்பு, எலும்புக்கூடு. எலும்பு மாலை அணிந்தவன் என்று பல பதிகங்களில் சிவபெருமான் குறிக்கப்படுகின்றார். உலகமெல்லாம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் ஊழிக் காலத்தின் போது பிரமனும், திருமாலும், தங்கள் கடமைகள் முடிந்தன என்று இறக்க, அவர்கள் இருவரது எலும்புக் கூடுகளை, அணிந்தவனாய்,ஒடுங்கிய உலகம் மீளத் தோன்ற, சங்கற்பம் செய்து கொண்டு இறைவன் வீணையை வாசித்துக் கொண்டு இருப்பான் என்று கூறுவார்கள்.ஆல மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த செய்கை ஆல் நிழலாய் என்று உணர்த்தப்படுகின்றது. மறை நூல்களைப் படித்த சனகாதி முனிவர்கள், தாங்கள் தெளிவாக மறையின் பொருளை புரிந்து கொள்ள சிவபிரானை அணுகியபோது, ஒரு ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து சிவபிரான் அவர்களுக்கு அருமறைகளின் பொருளை உரைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உரியதாக கருதப்படுவதால், சிவபெருமானை ஆதிரை நாளன் என்று அழைப்பார்கள். சங்கை=சந்தேகம்,தடுமாற்றம்
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆனேறு ஊர்ந்தாய்
பங்கம் ஒன்றில்லாத படர் சடையினாய் பாம்போடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.05.04) பாம்பும் திங்களும் புனலும் தம்மிற் பகை தீர்த்துடன் வைத்த பண்பா என்று அப்பர் பிரான் பெருமானை அழைக்கின்றார். கூம்பித் தொழுவார்=மனம் ஒன்றிய நிலையில் தொழும் அடியார்கள்: சாம்பர்= சாம்பல், திருநீறு: அகலம்=மார்பு:தவநெறிகள் சாதித்தல்=துணையாய் நின்று தவத்தை முற்றுவித்து, தவத்திற்கு உரிய பலன்களை அளித்தல்: பாம்பும் சந்திரனும் இயல்பிலே ஒன்றுகொன்று மாறுபட்ட குணங்களைக் கொண்டுள்ளவை வெம்மையான நஞ்சினை உடைய பாம்புக்கு, குளிர்ந்த நீர் அதன் தன்மையால் பகையாக உள்ளது. சடையில் அடைபட்டிருக்கும் கங்கை தனது அலைகளால் மோதுவதால் சந்திரனுக்கு தண்ணீர் பகையாக உள்ளது. தங்களுக்குளே பகைமை கொண்டுள்ளவர்களை ஒரே இடத்தில் அந்த பகைமை உணர்வை மறந்து இருக்கச் செய்வது வல்லமை படைத்த ஒருவனால் தான் முடியும். அந்த வல்லமை படைத்தவராக சிவபெருமான் காணப்படும் நிலை இங்கே கூறப்படுகின்றது
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார் தம் குற்றேவலைக் குறிக் கொண்டிருக்கும் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன் வைத்த பண்பா போற்றி
திருமூலரும் ஒரு திருமந்திரப் பாடலில் பாம்பும் மதியும் பகை தீர்த்துடன் கொள்ளும் இறைவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். குண்டலினியாகிய பாம்பு சுவாதிட்டானத்தில் பொருந்தி சந்திரகலை வளரவொட்டாது விந்து நீக்கம் செய்து கொண்டிருக்கின்றது. மணிபூரகத்திலுள்ள சூரிய கலையையும் தனது வெப்பத்தால் குண்டலினியை அசைத்து வலிவிழக்கச் செய்யும். நமது நாசியின் இடது பாகம் சந்திர கலை பொருந்தியதாகவும் வலது பாகம் இடது கலை சூரியகலை பொருந்தியதாகவும் உள்ளன. சந்திர கலை நாம் சுவாசிக்கும் பிராணவாயுவில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களை தனது குளிர்ந்த தன்மையால் பாதுகாத்து உடலுக்குள்ளே செலுத்தும். வலது நாசியிலுள்ள சூரியகலை நாம் வெளீயிடும் கரிமலவாயுவில் உள்ள தீமை தரும் நுண்ணிய பாக்டீரியாக்களை, அழிக்கும் தன்மை வாய்ந்தது. எனவே தான், நாம் இடது நாசி வழியாக காற்றினை உள்ளே இழுத்து, இருதயத்தில் செலுத்தி, வலது நாசி வழியாக காற்றினை வெளியே விடவேண்டும் என்று திருமூலர் கூறுகின்றார். சிவத்தியானத்தால், குண்டலினி சக்தியை நாம் மேலே எழுப்பி, நமது தலைக்கு அனுப்பினால் சந்திர கலை மேலும் வளர்ச்சி அடையும் என்றும், வெப்பத்தை ஏற்படுத்தும் சூரிய கலையும் தனது செயலை விட்டுவிடும். இந்த நிலையில்,குண்டலினி மற்றும் சந்திரகலை ஆகியவற்றின் இடையே உள்ள பகைமையை நீக்கினால், அந்த சாதகனை விட்டு பெருமான் நீங்காமல், அவ்னது சிரத்தினில் தங்கியிருப்பான் என்று இந்த பாடலில் திருமூலர் உணர்த்துகின்றார். மனம் சிவநெறியில் தழைத்து நிற்கும் போது, பாம்பு, மதி, சூரியன் ஆகிய மூன்றும் தமது தீய தன்மைகள் நீங்கப் பெற்று சாதகனின் சிரசில் நிலை பெற்று விளங்கும் என்று கூறுகின்றார்.
பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு
தீங்கு கதிரையும் சேரத் தினலுறும்
பாம்பும் மதியும் பகை தீர்த்துடன் கொளீஇ
நீங்கல் கொடானே நெடுந்தகையானே
பொழிப்புரை:
ஒன்றுக்கொன்று பகைமை உணர்ச்சியுடன் வாழும் பாம்பும் சந்திரனும், தங்களின் இடையே உள்ள பகையை மறந்து இருக்கும் வண்ணம்,நலத்துடன் திகழும் சடையை உடையவனும், உரிய காலம் வரும் வரை காத்திருந்து திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் விருப்பத்துடன் எரித்தழித்து இன்பம் அடைந்தவனும், நன்கு வளர்ந்த ஆண் மயிலின் தோகையின் சாயலில் அழகுடன் விளங்குபவளும் தூய்மையான மொழி பேசுபவளும் ஆகிய உமை அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்து இன்பம் அடைபவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருக்கோயில் பாதாளீச்சரமாகும்.
பாடல் 4:
அங்கமும் நான்மறையும் அருள் செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறை கோயில்
செங்கயள் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே
விளக்கம்:
செறு=வயல்; வயல்களில் தாமரை மலர்வதை குறிப்பிட்டு, தலத்தின் நீர்வளமும் நிலவளமும் உணர்த்தப்படுகின்றது. இந்த பாடலில் அங்கமும் வேதமும் அருள் செய்த பெருமான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிவ ஆகமங்களையும் வேதங்களையும் இறைவன் தனது திருவாயால் வேறுவேறு முனிவர்களுக்கு அருளினான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. நான்மறைகளை அருளிய காரணத்தால் சிவபிரான் நான்மறையான் என்று இங்கே அழைக்கப்படுகின்றார். வடகிழக்கை நோக்கி உள்ள பளிங்கு நிறமான ஈசான முகத்தில் இருந்து சிவ ஆகமங்களும், கிழக்கு நோக்கிய தத்புருஷ முகத்தில் இருந்து இருபத்தியொரு சாகைகள் கொண்ட இருக்கு வேதமும், தெற்கு நோக்கிய கருநிற அகோர முகத்தில் இருந்து நூறு சாகைகள் கொண்ட யஜுர் வேதமும், வடக்கு நோக்கிய செம்மை நிற வாமதேவ முகத்தில் இருந்து ஆயிரம் சாகைகள் கொண்ட சாம வேதமும், மேற்கு நோக்கிய சத்தியோஜாதம் முகத்தில் இருந்து ஒன்பது சாகைகள் கொண்ட அதர்வண வேதமும் தோன்றியது. இதனைக் குறிக்கும் திருவிளையாடல் புராணம் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
கீழ்த்திசை முகத்தொன்று அடுத்த நால் ஐந்தில் கிளைத்ததால் இருக்கு அது தென்பால்
ஈட்டிய இரண்டாம் வேத நூறு உருவோடு எழுந்தது வட திசை முகத்தின்
நீட்டிய சாமம் ஆயிரம் முகத்தான் நிமிர்ந்தது குடதிசை முகத்தில்
நாட்டிய ஒன்பது உருவோடு கிளைத்து நடந்தது நான்கதாம் மறையே
திருவல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.113.1) , திருஞானசம்பந்தர், வேறு வேறாகிய நான்கு வேதங்களையும் விரித்துரைத்த பெருமான்,அவற்றின் பொருளையும் விளக்கினார் என்று கூறுகின்றார். தெரித்தவன்=தெரிய வைத்தவன், தெளிவாக உரைத்தவன்; வேதங்களின் பொருளினை தெளிவாக உரைத்தவன் என்பதால், ஆறு அங்கங்களையும் சொன்னவன் என்பதும் உணர்த்தப்படுகின்றது.
எரித்த்தவன் முப்புரம் எரியின் மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடை மேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.131.7) திருஞானசம்பந்தர் ஆலின் கீழ் இருந்து நால்வேதம் அருளிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். தரளம்=முத்து; மணி= மாணிக்கக் கற்கள்; கிளரும்=விளங்கித் தோன்றும்; திறம் கொள்=முதிர்ந்து தரமான நிலையில் இருக்கும் நிலை; சிறிய சொப்பு கிண்ணங்களை வைத்துக் கொண்டு சிறுமியர்கள், தங்களை இல்லத்தரசிகளாக பாவித்துக் கொண்டு சமையல் செய்வது போன்று விளையாடுவது பண்டைய நாளிலும் பழக்கமாக இருந்தது போலும். நாமும் நமது சிறு வயதினில், சிறுமியர்கள் மணலினை அரிசியாக பாவித்து விளையாடுவதை கண்டிருக்கின்றோம். நாகரீகம் பெருகிய இந்நாளில், இத்தகைய விளையாடல்கள் அரிதாக மாறி, கணினியில் பல விளையாட்டுகளை இருபாலரும் விளையாடும் இந்நாட்களில் இத்தகைய விளையாட்டுகளை நாம் கற்பனையில் தான் காண முடியும். செல்வச் செழிப்பு மிகுந்திருந்த முதுகுன்றத்தில் பண்டைய நாளில் சிறுமியர்கள் முத்தினை அரிசியாக பாவித்து விளையாடியதாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இந்த செய்தி, பண்டைய நாட்களில் தலத்தினில் வாழ்ந்து வந்த அடியார்கள் இறைவனை வணங்கி அவனது அருளினால் செல்வச் செழிப்புடன் இருந்ததை நாம் அறிகின்றோம். இன்றும் நாம் கடற்கரை மற்றும்,. ஆற்றங்கரையில் சிறுவர்கள் மணல் கொண்டு வீடு கட்டி விளையாடுவதை காண்கின்றோம். இந்த செயலை சிற்றில் கட்டு விளையாடுவது என்று பண்டைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த பாடலில், திருஞானசம்பந்தர், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றினை பெருமான் அறுத்ததாக கூறுகின்றார்.
அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தில் ஒன்று அறுத்த நிமலர் கோயில்
திறம் கொண் மணித் தரளங்கள் வரத் திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள்
முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலைப் பெய் முதுகுன்றமே
பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.135.3) வேதம் எல்லாம் விரித்தோத வல்ல ஒருவனார் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஒருவனார் என்ற சொல் மூலம் வேதங்களை விரித்தோதும் ஒப்பற்ற ஆற்றல் உடைய பெருமான் என்று உணர்த்துவதை காணலாம்.முறையால் விரித்து=அதற்குரிய பண்களுடன் இசைத்து; வேதர்= வேதங்களை உடையவர்; வேதங்களை முதன் முதலில் முறையான இசையுடன் இணைத்து விரித்து ஓதியதால், அந்த வேதங்களை உடையவராக விளங்கும் ஒப்பற்ற பெருமான், தனது உடலில் பாதியை பார்வதி தேவிக்கு அளித்தவர் ஆவார்; எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்கும் அவர் பராய்த்துறையில் உறையும் தலைவர் ஆவார் என்பதே இந்த பாடலின் கருத்து.
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து
ஓத நின்ற ஒருவனார்
பாதி பெண்ணுரு ஆவர் பராய்த்துறை
ஆதி ஆய அடிகளே
நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானை, வேதம் நான்கும் விரிவித்த நாவின் என்று குறிப்பிடுகின்றார்.அனமிகு=அன்னமாக; செல்கு=வயிற்றின் உள்ளே செல்லும்; மண்டை=பனை ஓலையால் செய்யப்பட்ட உண்கலம்; மனமிகு=மனம் மகிழ்ந்து;வினை=செயல்முறைகள்; இறைவனை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய செயல்கள்; நன மிகு=தெளிந்த ஞானம் உடைய;
அனமிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டுபட்ட அமணும்
மணமிகு கஞ்சி மண்டை அதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேத நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர் தான்
நனமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்
திருக்கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.114.2) திருஞானசம்பந்தர், பெருமானை வேதநான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார் என்று குறிப்பிடுகின்றார். ஆறு= ஆறு அங்கங்கள்; பதினெட்டு=பதினெட்டு புராணங்கள்; உகளும்=மகிழ்ச்சியுடன் தரையில் புரண்டும் துள்ளியும் விளையாடும். மகரந்தத் தூள்கள் கலந்த மதுவினை உண்ணும் வண்டுகள் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வண்டுகள் மூலமாக மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு, மலர்கள் காயாகவும் பழமாகவும் மாறுகின்ற தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது.
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து ஏத்தவே
வேத நான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார்க்கு இடம்
தாது விண்ட மதுவுண்டு மிண்டி வரு வண்டினம்
கீதம் பாட மந்தி கேட்டு உகளும் கேதராமே
பெண்ணைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமானை ஒரு பாகமும் பெண்ணர் என்றும் வேதம் விரித்தோத வல்லார் என்றும் திலதைப்பதி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.118.6) ஞானசம்பந்தர் கூறுகின்றார். திலதைப்பதி என்பது தலத்தின் பெயர்; மதிமுத்தம் என்பது தலத்திலுள்ள திருக்கோயிலின் பெயர். எயில்=கோட்டை; செற்று=போரில் வென்று;
விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும்
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம்
தெண்ணிலாவின் ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார் வந்து அருள் பேண நின்ற மதிமுத்தமே
திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.120.1), திருஞானசம்பந்தர், நால் வேதமும் பொருள்களும் அருளியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வரிவளைக்கை= வரிகளை உடைய வளையல்களை வரிசையாக கைகளில் அணிந்தவர்; மட=இளமையும் அழகும் வாய்ந்த; மானி=சோழர் குலத்தில் பிறந்தவள்; மானாபரணர் என்று சோழர்கள் அழைக்கப் பட்டனர். மடமானி என்ற தொடருக்கு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய குணங்கள் உடையவள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. பங்கயம்=தாமரை; பங்கயச் செல்வி=தாமரை மலரை வீற்றிருக்கும் இலக்குமி தேவிக்கு ஒப்பான அழகு உடையவள்; பொங்கழல்=ஓங்கி கொழுந்து விட்டெரியும் நெருப்புத் தழல்; திருவிளையாடல் புராணம் வேதஙகளுக்கு பொருள் சொன்ன படலத்தில், மதுரை நகர் வந்தடைந்த நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு சிவபெருமான், வேதங்களுக்கு பொருள் சொன்ன நிகழ்ச்சி எடுத்துரைக்கப் படுகின்றது. மீனாட்சி என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கம் அங்கயற்கண்ணி;
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கை மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதனாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.35.4) அப்பர் பிரான், பெருமானை வேதங்கள் நான்கும் அங்கம் பண்ணினார் என்று குறிப்பிடுகின்றார். விண்ணுலகம் என்றும் சொர்க்கம் என்றும் தேவர்கள் வாழும் உலகத்தை சொல்வதுண்டு. சிவபெருமான் உறையும் சிவலோகம்,தேவலோகத்தை விடவும் சிறந்ததாக கருதப் படுவதால், விண்ணின் மிக்கார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பண்ணின் மிக்க பாடல்கள்=மேம்பட்ட பண்களைக் கொண்ட பாடல்கள்; நுதல்=நெற்றி: எண்ணின் மிக்கார்=மேம்பட்ட எண்ணங்களை உடைய அடியார் மனதினில்; கண்=கருத்து;
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமர் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்க இடைமருது இடம் கொண்டாரே
புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.46.7) அப்பர் பிரான், பெருமானை, பண்டு நான்மறை ஓதிய பாடலன் என்று கூறுகின்றார். பண்டு என்ற சொல் மூலம், அனைவர்க்கும் முன்னமே நான்மறைகளை ஓதியவன் பெருமான் என்று குறிப்பிட்டு, உலகினுக்கு முதன் முதலாக நான்மறைகளை அளித்தவன் சிவபெருமான் என்பதை உணர்த்துகின்றார். அண்ட வாணர்=தேவர்கள்; தேவர்கள் அசுரர்கள் இருவரும் சேர்ந்து, தாங்கள் அமுதம் பெற்று உண்ண வேண்டும் என்ற முயற்சியில், பாற்கடலைக் கடைந்தாலும் வெளிப்பட்ட அமுதத்தை உண்டது தேவர்கள் மட்டும் தானே. எனவே தான் தேவர்கள் அமுது உண்ணும் பொருட்டு நஞ்சினை உண்டவன் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தனது நெஞ்சத்தின் உள்ளே இறைவன் இருப்பதை இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், எவ்வாறு நாமும் இறைவனை நமது நெஞ்சினுள்ளே நிறுத்திக் கொள்ளும் வழியை இந்த பாடலில் உணர்த்துகின்றார். பாடலன்=பாடப் பட்டவன்; புண்டரீகம்=இதயக் கமலம்.
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு
பண்டு நான்மறை ஓதிய பாடலன்
தொண்டராகித் தொழுது மதிப்பவர்
புண்டரீகத்துளார் புகலூரரே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.49.7) அப்பர் பிரான், பெருமானை மறை நான்கோடு ஆறங்கம் விரித்தவன் என்று கூறுகின்றார். புன்சடை=முறுக்குண்ட சடை: வேதங்களை கற்பவர்கள் அதன் ஆறு அங்கங்களையும் கற்றால் தான், வேதங்களை முறையாகவும் தவறின்றியும் சொல்ல முடியும். சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவையே அந்த ஆறு அங்கங்கள். எனவே தான் வேதங்களை உலகுக்கு அருளிய பெருமான், அந்த வேதங்களுக்கு துணையாக நிற்கும் ஆறு அங்கங்களையும் அருளினார்.
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடையான் கயவர் புரம்
எரித்தவன் மறை நான்கினோடு ஆறங்கம்
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே
திருத்தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.63.7) பெருமானை, அப்பர் பிரான், முறையால் மறை ஓத்தன் என்று குறிப்பிடுகின்றார். மாத்தன்=பொற் கொல்லர்கள், நகைகள் செய்ய கொண்டுவரப்படும் தங்கத்தினை தரம் பார்த்து அறிவதற்காக வைத்துக் கொண்டிருக்கும் மாற்றுப் பொற்கட்டி போன்று தரம் வாய்ந்த தங்கம் போன்று தூய்மையானவன்; ஓத்தன்=ஓதியவன்; முயலகன் அரக்கன் தாருகவனத்து முனிவர்களால் பெருமான் மீது ஏவப்பட்டவன்; அந்த முயலகனை அடக்கி தனது திருவடியால் அமுக்கியவாறு நடனம் ஆடிய பெருமான், தாருகனை கொன்ற காளி அந்த சினம் தணியாமல் திரிந்த போது காளியையும் தனது உயர்ந்த நடனத்தால் போட்டியில் தோற்கடித்தவன் என்று இங்கே சொல்லப்படுகின்றது.போத்தன்=வென்றவன்; தானவன்=அரக்கன்;
மாத்தன் மறையார் முறையால் மறை
ஓத்தன் தாரகன் தன் உயிருண்ட பெண்
போத்தன் தானவன் பொங்கு சினம் தணி
கூத்தன் தான் குரங்காடுதுறையனே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.16.3) அப்பர் பிரான், பெருமானை வேதங்கள் வேள்வி பயந்தார் என்று குறிப்பிகிடுன்றார். ஏதங்கள்=துன்பங்கள். தங்களது துன்பங்கள் இறைவனால் நீக்கப் படுவதால் அடியார்கள் இன்பம் அடைவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அடியார்கள், பெருமானின் திருவடிகளைத் தொழுது ஏத்தும் சிறப்பு பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.பயத்தல்=படைத்தல்;
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்
பூதங்களாய புராணர் போலும் புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும்
ஏதங்களான கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே
திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.83.10) அப்பர் பிரான், பெருமானை, நான்மறையோடு ஆறங்கம் விரித்தவன் என்று குறிப்பிடுகின்றார். சங்கரன்=இன்பம் செய்பவன்; சம்பு=இன்பம் விளைவிப்பவன்; வடமொழிச் சொற்களாகிய சங்கரன், சம்பு மற்றும் உருத்திரன் ஆகிய சொற்களுக்கு காஞ்சி புராணத்தில் விளக்கம் அளிக்கப் படுகின்றது. இன்பம் செய்தலில் சங்கரன் எம்பிரான் இன்பம் ஆக்கலில் சம்பு, இடும்பை நோய் என்பது ஓட்டும் இயல்பினான் உருத்திரன், என்பதே காஞ்சி புராணத்து தொடர். உருத்திரன் என்றால் நோய்களையும் துன்பங்களையும் தீர்ப்பவன் என்று பொருள். அம்மான்=தலைவன் தரியலர்கள்=பகைவர்கள்;
விரித்தானை நான்மறையோடு அங்கமாறும் வெற்பெடுத்த இராவணனை விரலாலூன்றி
நெரித்தானை நின்மலனை அம்மான்றன்னை நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க்கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத் தரியலர்கள் புரம் மூன்றும் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன் நானே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.25.4), சுந்தரர், பெருமானை, மறை நான்கும் விரித்து உகந்தீர் என்று குறிப்பிடுகின்றார்.இட்டளம்=துன்பம்; திருமுதுகுன்றம் தலத்தினில் தான் பெருமானிடமிருந்து பெற்ற பொற்காசுகள், திருவையாறு குளத்தினில் தோன்றும் வண்ணம் அருள் புரியவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து, தான் பெற்ற பொற்காசுகளை மணிமுத்தாறு நதியினில் சுந்தரை விடுத்தார். பெருமான் தனக்கு அருள் புரியும் தன்மையை, தனது மனைவி பரவை நாச்சியாரும் காண வேண்டும் என்ற விருப்பம் கொண்டவராக, மனைவியை அழைத்துக்கொண்டு, திருவையாறு கமலாலயம் குளத்திற்கு சென்ற சுந்தரர், பொற்காசுகள் குளத்தில் கிடைக்கவேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் தான் எதிர்பார்த்த வண்ணம் பொற்காசுகள் வாராமையால், பொன்செய்த மேனியினீர் என்று தொடங்கும் இந்த பதிகம் பாடியவராக, அவ்வாறு தனது மனைவியின் எதிரே பொற்காசுகள் பெறாமல் தான் அவமானம் அடைந்த நிலையை குறிப்பிட்டு பெருமானை வேண்டுகின்றார். பின்னர் பொற்காசுகள் கமலாலயம் குளத்தில் மிதந்து வர,சுந்தரரும் அவரது மனைவியாரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
மங்கையொர் கூறுகந்தீர் மறை நான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கு அணிந்தீர் திகழும் முதுகுன்று அமர்ந்தீர்
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டிருந்தாள் முகப்பே
அங்கணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.61.7), சுந்தரர், பெருமானை வேதன் தான் விரித்து ஓத வல்லான் என்று குறிப்பிடுகின்றார்.
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம் தான் விரித்து ஓத வல்லானை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே
வடதிருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.69.9), சுந்தரர், பெருமானை, செழுமறை பகர்ந்த பட்டன் என்று குறிப்பிடுகின்றார்.பட்டன் என்றால் அறிஞர் என்று பொருள். பண்டைய நாளில் திருக்கோயில்களில் பணியாற்றி வந்த அர்ச்சகர்கள் வடமொழி மற்றும் தமிழ் மொழியில் வல்லவர்களாக விளங்கியமை குறித்து அவர்கள் பட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
மட்டுலா மலர் கொண்டு மாணி தன்மேல் மதியாதே
கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயில் செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய் பாடுபதா பரஞ்சுடரே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.71.3) சுந்தரர், பெருமானை, அங்கங்களும் மறை நான்குடன் விரித்தான் என்று கூறுகின்றார். கப்பல்களில் கட்டப்பட்டுள்ள பாய்மரங்கள் காற்றின் விசையை தடுத்து நிறுத்துவதால், வளைந்து ஒரு புறமாக கூம்பியிருக்கும் நிலையினை,கப்பல்கள் தங்களது கைகளாகிய பாய்மரம் கொண்டு பெருமானை வணங்குவதாக சுந்தரர் கற்பனை செய்கின்றார். இத்தகைய கற்பனையை தற்குறிப்பேற்ற அணி என்று தமிழ் இலக்கணம் குறிப்பிடுகின்றது. தெங்கம்=தென்னை மரங்கள்; நெடும் பெண்ணை=நீண்டு உயர்ந்த பனை மரங்கள்;படப்பை=சோலைகள், இங்கே கடற்கரைச் சோலைகள் என்று பொருள் கொள்ளவேண்டும்.
அங்கங்களும் மறை நான்குடன் விரித்தான் இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே
திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.99.5) சுந்தரர், பெருமானை நான்மறை நூல் உரை பெருக உரைத்தவன் என்று குறிப்பிடுகின்றார். விரி கோவணம் என்று குறிப்பிட்டு, நான்கு மறைகளே பெருமானின் கோவணமாக விரிந்துள்ளன என்று கூறுகின்றார்.
அரைவிரி கோவணத்தோடு அரவு ஆர்த்தொரு நான்மறைநூல்
உரை பெருகவ் வுரைத்து அன்று உகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணியும் வரைச் சந்தகிலோடும் உந்தித்
திரைபொரு தண்பழனத் திருநாகேச்சரத்தானே
பொழிப்புரை:
உலகினில் நாம் சிறப்புடன் வாழ்வதற்கான நெறிமுறைகளை எடுத்துரைக்கும் நான்மறைகளையும் அந்த நான்மறைகளுக்கு துணையாக இருக்கும் ஆறு அங்கங்களையும் முதன்முதலாக வழங்கி அருள் புரிந்தவனும், அழகிய சொற்களைப் பேசும் உமையன்னையைத் தனது உடலினில் ஒரு கூறாகக் கொண்டவனும், வேதங்களை அருளியதால் மறையோன் என்று அழைக்கப் படுபவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருக்கோயில், செங்கயல் மீன்கள் புரண்டு விளையாடும் வயல்களில், செழுமையாக வளர்ந்து பிரகாசத்துடன் திகழும் தாமரை மலர்கள் மலர்ந்து காணப்படும் வயல்களால் சூழப்பட்டுள்ள பாதாளீச்சரம் தலத்தினில் உள்ளது.
பாடல் 5:
பேய் பலவும் நிலவ பெருங்காடரங்காக உன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறையும் அரவும் பொலி கொன்றைச் சடை தன் மேல் சேரப்
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே
விளக்கம்:
தேய்பிறை=ஒவ்வொரு கலையாக அழிந்த தேய்ந்த நிலையில் ஒற்றைப் பிறையுடன் சரணடைந்த சந்திரன்: பெருங்காடு=சுடுகாடு; நாளும் மேன்மேலும் பிணங்கள் வந்து சேர்வதால், அனைத்துக் காடுகளையும் விடவும் பெரியது என்பதை உணர்த்தும் வண்ணம் பெருங்காடு என்று கூறினார் போலும். நிலவ=சூழ்ந்து விளங்க:
பொழிப்புரை:
பல பேய்கள் சூழ சுடுகாட்டினை தான் நடனம் ஆடுவதற்கு தகுதியான அரங்கமாக கருதி, துள்ளி ஓடும் இயல்பினை உடைய மான் கன்று,கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பு மற்றும் கொடிய மழு ஆயுதம் ஆகியவற்றைத் தனது கைகளில் விளங்கித் தோன்றும் வண்ணம் ஏந்திய வண்ணம், தக்கனது சாபத்தினால் ஒவ்வொரு கலையாக தேய்ந்து முற்றிலும் அழியும் நிலையில் தன்னிடம் சரணடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரன். பாம்பு, அழகுடன் பொலியும் கொன்றை மலர் ஆகியவை பொருந்தியுள்ள தனது சடையினில் வேகமாகப் பாய்ந்து வந்த கங்கை நதியையும் சேர்த்துக் கொண்டு அந்த கங்கை நதியினைத் தனது சடையினில் தேக்கிய சிவபெருமான் உறைகின்ற திருக்கோயில் உள்ள தலம் பாதாளீச்சரம் தலமாகும்.
பாடல் 6:
கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடை தன்மேனன்று
விண்ணியல் மாமதியும் உடன் வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங் காடரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறை கோயில் பாதாளே
விளக்கம்:
கண்ணமர் நெற்றி=மூன்றாவது கண் பொருந்திய நெற்றி; விண்ணியல்=விண்ணில் இயலும், விண்ணில் இயங்கும், உலாவும்; மேனன்று=மேல் நன்று; நன்று=நலமுடன், தேய்ந்து அழிவோம் என்ற கவலை அற்றவனாக;
பொழிப்புரை:
தனது மூன்றாவது கண் பொருந்திய நெற்றியினை உடையவனும், நறுமணம் கமழும் கொன்றை மலர்கள் அணிந்த சடையினில் ஒற்றைப் பிறைச் சந்திரனையும் உடன் அணிந்து கொண்டு தக்கனது சாபத்தால் தான் தேய்ந்து அழிந்து விடுவோம் என்ற கவலையின்றி சந்திரனை விண்ணினில் நலமுடன் உலாவ வைத்தவனும் ஆகிய பெருமான், தனது திருமேனியில் தேவியை பொருத்திக் கொண்டு விளங்குகின்றான். அவன் பெருங்காடு என்று அழைக்கப்படும் சுடுகாட்டினை தான் நடனம் ஆடும் அரங்காகக் கொண்டு, பண்ணுடன் பொருந்திய பாடல்களை பாடிக்கொண்டே நட்னம் ஆடுகின்றான். அத்தகைய இறைவன் உறைகின்ற திருக்கோயில் பாதாளீச்சரம் தலத்தில் உள்ளது.
பாடல் 7:
விண்டலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ்
வண்டலர் கொன்றை நகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேத நான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறை கோயில் பாதாளே
விளக்கம்:
விண்டலர் மத்தம்=மொக்கு என்ற நிலையிலிருந்து விடுபட்டு முழுவதுமாக மலர்ந்த ஊமத்தை மலர்; மிளிரும்=பொலிந்து விளங்கும்;கொன்றை நகு=நகு கொன்றை என்று மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும். மலரந்து விரிந்து கொன்றை என்று பொருள்;விண்டவர்=வேத நெறியிலிருந்து விலகிச் சென்று பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்;
பொழிப்புரை:
மொக்கு என்ற நிலையிலிருந்து விடுபட்டு மலர்ந்த ஊமத்தை மலர்கள், ஒளி பொருந்திய மேனியுடன் பொலியும் இள நாகம், வன்னி இலைகள், வண்டுகள் அமர்ந்து தேன் பருகுவதால் விரிந்து மலர்ந்து சிரிப்பது போன்ற தோற்றத்தில் உள்ள கொன்றை மலர்கள் மற்றும் பிறைச் சந்திரன் ஆகியவை பொருந்திய நீண்ட சடையினை உடையவனும், வேத நெறியிலிருந்து விலகி பகைவர்களாக மாறி பலரையும் துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்தவனும், நான்கு வேதங்களையும் உரைத்ததுமன்றி அவற்றை பண்ணுடன் பொருத்தி பாடி மகிழ்பவனும் ஆகிய சிவபெருமான் உறைகின்ற திருக்கோயில் உள்ள தலம் பாதாளீச்சரம் ஆகும்.
பாடல் 8:
மல்கிய நுண்ணிடையாள் உமை நங்கை மறுக அன்று கையால்
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்
கொல்லை விடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்
பல்லிசைப் பாடலினான் உறை கோயில் பாதாளே
விளக்கம்:
மறுக=அச்சம் கொள்ள: தொல்லை மலை=மிகவும் பழமையான மலை: முந்தைய பாடலில் திரிபுரத்து அரக்கர்களை பெருமானை வென்றதை குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு, அந்த தருணத்தில் திருமால் விடையாக மாறி பெருமானைத் தாங்கிக் கொண்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். முல்லை நிலத்திற்கு உரிய விலங்கு எருது என்பதால் கொல்லை ஏறு என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் திருமால். பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போர் புரியச் சென்றபோது, தனது காலினை தேர்த்தட்டில் வைத்த போது அவரது பாரத்தை தாங்க முடியாமல் தேரின் அச்சு முறிந்தது. அந்த தருணத்தில் திருமால், எருதின் வடிவம் எடுத்து பெருமானை தாங்கிய வரலாறு புராணத்திலும் பல திருமுறை பாடல்களிலும் கூறப்படுகின்றது. அந்த நிகழ்ச்சியினை நினைவூட்டும் வகையில், முல்லை நிலத்திற்கு உரிய தெய்வமாகிய திருமாலை வாகனமாக ஏற்றவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பாடலில் குறிப்பிட்டது போன்று பல திருமுறைப் பாடல்கள் கொல்லை விடை என்றும் கொல்லை ஏறு என்றும் பெருமானின் வாகனத்தை குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.24.7) திருஞானசம்பந்தர், திருமாலை கொல்லை விடை என்று குறிப்பிடுகின்றார். கல்லவடம்=பறை போன்ற ஒரு வகை தோலிசைக் கருவி: வடாரண்யம் என்பதற்கு ஆலங்காடு என்று பொருள். எனவே கல்லவடம் என்ற சொல் கல்லால மரத்தினை குறிப்பதாகவும் பொருள் கூறுவார்கள். அல்ல இடம்=பிறர் செல்ல தயங்குமிடம், சுடுகாடு;
கொல்லை விடை முன் பூதம் குனித்தாடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார்
அல்ல இடத்து நடந்தார் அவர் போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே
சண்பை நகர் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.66.5) ஒன்றினில் கொல்லை எருது ஏறுபவன் என்று இறைவனை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மருப்பு=கொம்பு; சலமார் யானை=வஞ்சனை மிகுந்த யானை; நாளிகேரம்=தென்னை; தென்னை மரத்தின் பாளை யானையின் தந்தம் போன்று வெண்மையாக காணப்படும் சோலைகள் நிறைந்த நகரம் என்று சீர்காழியினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் நஞ்சினை உண்டு தேவர்களின் இடர் தீர்த்ததால் தான், அவர்களால் அமுதம் உண்ண முடிந்தது என்பதால் விடம் உண்டு தேவர்க்கு அமுதம் அருள் செய்தவன் என்று கூறுவதை நாம் உணரலாம்.
கலமார் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த
குலமார் கயிலைக் குன்றது உடைய கொல்லை எருது ஏறி
நலமார் வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை
சலமார் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே
திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.69.4) திருஞானசம்பந்தர், பெருமான், திருமாலை தனது வாகனமாக ஏற்றுக்கொண்ட தன்மையை குறிப்பிடுகின்றார். இழைத்த=நூலிழை போன்ற; தழைத்த=தாழ்ந்து தொங்கும்; தரியார்=பகைவர்; பிழைத்த=தவறிய; பிடி=பெண் யானை;விடை=திருமால் விடையாக மாறி தாங்கிய தன்மை குறிப்பிடப்படுகின்றது. திரிபுரத்தவர்களுடன் பெருமான் செய்த போர் இங்கே குறிப்பிடப்படுவதால்,அந்த சமயத்தில், பெருமான் ஏறிச்செல்ல இருந்த தேரின் தட்டு முறிந்ததால், திருமால் விடையாக மாறி பெருமானுக்கு வாகனமாக இருந்த தன்மை தான் விடை ஒன்றேரி என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது என்பதை நாம் உணரலாம். தனது துணையைத் தேடி அலைந்து திரிந்த யானை, தளர்வடைந்தது என்ற குறிப்பின் மூலம் மலையின் சுற்றளவு மிகவும் பெரியது என்பதை உணர்த்துகின்றார். மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையின் நீளம் பதினான்கு கி.மீ. என்பதிலிருந்து நாம், மலையின் பரிமாணத்தை ஊகித்துக் கொள்ளலாம்.
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
தழைத்த சடையார் விடை ஒன்றேறித் தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்தங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே
அறையணிநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்த்தின் பாடலில் (2.77.2) திருஞானசம்பந்தர், பெருமானை, ஒரு காலினால் வில்லினை நிலத்தில் ஊன்றிய வண்ணம் கரத்தினால் வில்லை வளைத்து அம்பு எய்தியவர் என்று குறிப்பிடுகின்றார். அவர் அப்போது இடபத்தின் மீது அமர்ந்தவராக இருந்தார் என்று திருமால் இடபமாக மாறியதை உணர்த்துகின்றார். தடுமாற்றம் என்று பிறவிக்குழியில் உயிர்கள் விழுகின்ற தடுமாற்றம் குறிப்பிடப்படுகின்றது.
இலையினார் சூலம் ஏறுகந்து ஏறி இமையோர் தொழ
நிலையினால் ஒருகால் உறச் சிலையினான் மதில் எய்தவன்
அலையினார் புனல் சூடிய அண்ணலார் அறையணினல்லூர்
தலையினாற் றொழுதோங்குவார் நீங்குவார் தடுமாற்றமே
கொச்சைவயம் என்று அழைக்கப்பட்ட சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.89.6) திருஞானசம்பந்தர், திரிபுரங்கள் எரியும் வண்ணம் விடை மேல் அமர்ந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இங்கே விடை என்பது திருமாலாகிய விடையினை குறிப்பிடுகின்றது. தானவர்= அரக்கர்கள்;விண்ட=வேதநெறியிலிருந்து விலகிச் சென்ற திரிபுரத்து அரக்கர்கள்; அரணம்= பாதுகாப்பாக மதில்; மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் மட்டுமே அவை அழிக்கப்பட முடியும் என்ற வரத்தினைப் பெற்றிருந்தமையால், அந்த கோட்டைகள் வேறு வேறு திசையில் பறந்து கொண்டிருந்த தன்மையே, அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பாக இருந்த நிலை; தொல்வரை=மிகவும் பழமையான மேரு மலை
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்சடை தன் மேல்
துண்ட வெண்பிறை அணிவர் தொல்வரை வில்லதுவாக
விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேல்
கொண்ட கோலமது உடையார் கொச்சைவயம் அமர்ந்தாரே
திருத்தெங்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2,.93.6) திருஞானசம்பந்தர், பெருமானை இமையவர் புகழும் வண்ணம் திருமாலாகிய இடபத்தின் மீது ஆறி அமர்ந்து திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்தார் என்று கூறுகின்றார். தொல்லை வல்வினை தீர்ப்பார் என்ற குறிப்பு, நமக்கு திருமூலரின் கருத்தை, பெருமான் திரிபுரங்கள் மட்டுமன்றி மூன்று மலங்களையும் எரித்து அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் என்று கூறுவதை நினைவூட்டுகின்றது. எல்லி என்ற சொல் பொதுவாக இருளினை உணர்த்துகின்றாது என்றாலும், இந்த சொல்லுக்கு ஒளி தரும் சூரியன் மற்றும் சந்திரன் என்ற பொருளும் பொருந்துவதாக தேவார சொல்லகராதி குறிப்பிடுகின்றது. சுவண்டர்=சுற்றித் திரிபவர்; பிச்சைப்பெருமானாக பெருமான் எங்கும் திரிகின்ற நிலை சொல்லப் படுகின்றது.
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடியணி சுவண்டர்
எல்லி சூடி நின்றாடும் இறையவர் இமையவர் ஏத்தச்
சில்லை மால்விடை ஏறித் திரிபுரம் தீயெழச் செற்ற
வில்லினார் திருத்தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.97.6) கொல்லை ஏறது ஏறுவான் என்று இறைவனை சம்பந்தர் அழைக்கின்றார். தவறு,பொய் என்ற பொருள் தரும் அபத்தம் என்ற வடமொழிச் சொல் அவத்தம் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது, இயங்கு-நடத்தல்; பிணக்கு= மாறுபாடு;துன்பமயமான வாழ்க்கையை நடத்தி, பெறுவதற்கு அரிய மனித வாழ்க்கையை வீணாக நடத்தி, உலக மாயைகளில் முரண்பாடுகளில் ஆழ்ந்து கிடக்கும் உலகத்தவர்களே, நீங்கள் எழுந்து புறப்பட்டு சீர்காழி தலத்தினை அடைந்து இறைவனை வழிபட்டு உய்வினை அடைவீர்களாக. நமக்கு அருள் புரியும் நோக்கத்துடன், நாம் அவனுக்கு பிச்சையாக இடும் மும்மலங்களையும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பலி கேட்டு திரியும் இறைவனிடம் நமது மலங்களை சமர்ப்பித்து விட்டு உய்வினை அடைய வேண்டும் என்று இந்த பாடல் மூலம் சம்பந்தர் உணர்த்துகின்றார். பல் இல் வெண்தலை என்று பறிக்கப்பட்ட பிரமனின் தலையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர்
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழுமினோ
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்
கொல்லை ஏறது ஏறுவான் கோலக் காழி சேர்மினே
உசாத்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.33.2) சம்பந்தர் கொல்லை ஏறு என்று குறிப்பிடுவதை நாம் காணலாம். பல்லை ஆர் படுதலை, முன்னம் ஒரு காலத்தில் பற்கள் நிறைந்திருந்த தலை என்று பிரமனின் மண்டை ஓட்டினை சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.படுதலை=இறந்தவரின் தலை, கிள்ளி பறிக்கப்பட்டு உயிரின் தொடர்பு அறுக்கப் பட்டமையால் இறந்தவரின் தலை என்று கூறுகின்றார். நறை கமழ்=தேன் மணம் வீசும்
கொல்லை ஏறுடையவன் கோவண ஆடையன்
பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்
முல்லை ஆர் புறவணி முதுபதி நறை கமழ்
தில்லையான் உறைவிடம் திருவுசாத்தானமே
தோணிபுரம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.81.4) திருஞானசம்பந்தர் கொல்லை விடையேறு உடையவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். நா அணவு மாலை=அடியார்களின் நாவினில் பொருந்தும் சொல் மாலை; ஒல்லை=ஓசை;மாலை ஒல்லை உடையான்=அடியார்கள் பாடும் பாமாலைகளின் ஓசையை கேட்பவன்; அடையலார்=வேதநெறியினை அடையாத திரிபுரத்து அரக்கர்கள்;ஒள்ளழல்= ஒளிவீசும் நெருப்பு; அடைவு=சாக்கு, காரணம்; பெருமான் இடர்களை மிகவும் விருப்பத்துடன் தீர்த்து அருள்பவன். பெருமான், அடியார்கள் இடும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு அதனை ஒரு காரணமாக கொண்டு அவர்களின் இடர்களை தீர்ப்பதாக சம்பந்தர் கூறுகின்றார்.
கொல்லை விடை ஏறுடைய கோவணவன் நா அணவும் மாலை
ஒல்லை உடையான் அடையலார் ஆரரணம் ஒள்ளழல் விளைத்த
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவிவளர் தொண்டர்
சொல்லை அடைவாக இடர் தீர்த்தருள் செய் தோணிபுரமாமே
அவளிவணல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.82.1) திருஞானசம்பந்தர், திருமாலை விடையாக ஏற்றுக்கொண்டு திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்றதை குறிப்பிடுகின்றார். கொம்பு இரிய=கொம்புகள் தங்களது நிலையிலிருந்து விலகி நிற்க; கொன்றை மலர்கள் மாலைகளாக மாறி பெருமானின் மார்பினில் இருக்கும் நிலை மரங்களில் பூத்திருக்கும் இயல்பான நிலையிலிருந்து மாறி விலகி நிற்பதாக இங்கே குறிப்பிடப்படுகின்றது, பொதுவாக வண்டுகள் காலையில், தேனை பருகுவதற்காக காலையில் மலர்களை நாடி செல்வது வழக்கம். ஆனால் இந்த தலத்தில் உள்ள வண்டுகள் அவ்வாறு மலர்களை நாடி செல்வதில்லை என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அந்த வண்டுகள் மரத்தின் கொம்புகளில் உள்ள மலர்களை நாடிச் செல்லாமல், இறைவனின் திருமார்பினை நாடி, செல்வதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த நிலை எதனால் உண்டாகியது என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். இந்த தலத்தினில் உள்ள மக்கள், வண்டுகள் மலர்களில் உள்ள தேனைச் சுவைக்கும் முன்னரே, அந்த மலர்களை,இறைவனுக்கு அணிவதற்காக பறித்து விடுகின்றனர் என்று தானே பொருள். இத்தகைய மலர்களை பெருமானுக்கு சூட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தானே, வியாக்ரபாதர் பெருமானிடம், தனது கால்கள் கூர்மையான நகங்கள் கொண்ட புலியின் கால்கள் போன்று இருக்கவேண்டும் என்றும் இருளிலும் காண்பதற்கு வசதியாக புலியின் கண்கள் போன்று தனது கண்கள் இருக்கவேண்டும் என்று வேண்டினார். தம்பரிசுடையார் என்பது தலத்து இறைவனின் திருநாமம். வேறு எவருக்கு இல்லாத பல தனித் தன்மைகள் கொண்டவர் பெருமான். பெருமானின் இணையற்ற எட்டு குணங்களாக விளங்கும் குணங்கள்,அவருக்கு மட்டுமே உரித்தானவை. திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பூசிக் கொள்வதும் இடபத்தைத் தனது வாகனமாகக் கொள்வதும் அத்தகைய தன்மைகள். கம்=ஆகாயம்; பரிய=பருத்த; செம்பொன் நெடுமாடம்=திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகள், பின் வெள்ளி இரும்பு கொண்டு செய்யப்பட்டவை என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. கல்வரை=கல் மலை; கொன்றை மரங்களை நாடிச் சென்று ஆங்கே மலர்கள் இல்லாததை நிலையினால் ஏமாற்றம் அடைந்த வண்டுகள், சிவபெருமானை வந்தடைந்து அவனது மார்பினில் கொன்றை மலர்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து அதனுள் உள்ள தேனைப் பருகி இன்பமுறும் நிலை, வேறங்கும் தான் அடைய முடியாத இன்பங்களை, சிவபெருமானை நெருங்கும் உயிர்கள் அடையலாம் என்பதை உணர்த்தும் முகமாக கூறப்பட்டுள்ளது என்ற விளக்கம் தருமபுரத்து ஆதீனத்தாரின் வலைத் தளத்தில் காணப்படுகின்றது. மிகவும் அருமையான விளக்கம்.
கொம்பு இரிய வண்டுலவு கொன்றை புரிநூலொடு குலாவித்
தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து இடபம் ஏறிக்
கம் பரிய செம்பொன் நெடுமாட மதில் கல் வரை விலாக
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.13.5) அப்பர் பிரான், பெருமானை, விடையேறி புரம் எரித்த வித்தகன் என்று குறிப்பிடுகின்றார்.அடையானே=எல்லோரும் சரண் அடையத் தக்க தகுதி வாய்ந்தவன்: சடையான்=சடையை உடைய அனைவருக்கும், சடை வளர்த்துக் கொண்டு துறவறம் பூண்டு இறைவனை நினைத்து தவத்தில் ஆழ்ந்திருக்கும் சான்றோர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக, முதல்வனாக இருப்பதால் சிவபெருமான் மட்டும் தான் சடையான் என்று அழைக்கப் படுகின்றார். சடையானே, சடையாய் என்று நால்வர் பெருமானர்கள் பல பாடல்களில் சிவபெருமானை குறிப்பிட்டு உள்ளதை நாம் காண்கின்றோம்.
சடையானே சடை இடையே தவழும் தண்மதியானே
விடையானே விடையேறிப் புரம் எரித்த வித்தகனே
உடையானே உடைதலை கொண்டு ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
திருப்பழனம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் (5.33) முதல் பாடலில் அப்பர் பிரான் பெருமானை கொல்லை ஏற்றினர் என்று குறிப்பிடுகின்றார். இறை பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கு நமக்கு தேவையானவை, மன வலிமையும் உடல் வலிமையும் என்பதை உணர்த்தும் வகையில் வலிமையுடன் பணி செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அடுத்தவரின் கேலிப் பேச்சுகளையும், இகழ்வினையும் பொருட்படுத்தாமல், மனம் ஒன்றி ஈடுபட மனவலிமை அவசியம். திருக்கோயில் பிராகாரத்தை சுத்தம் செய்வதற்கும், கோயிலில் பயன்படுத்தும் பொருட்களையும், பெருமானுக்கு அணிவிக்கும் ஆடைகளையும் சுத்தமாக வைத்திருக்க உடல் வலிமையும் தேவை. எனவே தான், தனது நெஞ்சத்தை நோக்கி வலிமையுடன் பணி செய்வாயாக என்று கூறுகின்றார்.
கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர்
தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்
தொல்லை ஊழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லையாய்ப் பணி செய் மட நெஞ்சமே
நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.83.4) அப்பர் பிரான் கொல்லை மால்விடை ஏறிய கோ என்று குறிப்பிடுகின்றார். மால் என்று சொல்லுக்கு சிறப்பு வாய்ந்த என்று ஒரு பொருளும் திருமால் என்று ஒரு பொருளும் பொருந்தும், எனவே முல்லை நிலத்தில் வளரும் சிறப்பு வாய்ந்த இடபத்தினை வாகனமாகக் கொண்டவன் என்று ஒரு பொருளும், முல்லை நிலத்துக் கடவுளாகிய திருமாலை தனது வாகனமாக கொண்ட இறைவன் என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமாகவே அமைந்து உள்ளன. எல்லி= இரவு; மாநடம் என்ற சொல்லுடன் கூடி வருவதால், எல்லி என்ற சொல்லுக்கு வெளிச்சம் அற்ற ஊழிக்காலம் என்று கொள்வது பொருத்தம். உயிருடன் பிணைந்துள்ள வினைகள் உயிர்கள் சோர்வடையும் வண்ணம் வருத்துவதே தங்கள் தொழிலாக கொண்டுள்ளன. ஆனால் இறைவனின் திருநாமத்தை நாம் சொன்னால், இறைவனின் அருளால் வினைகள் சோர்வடைந்து விடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வினைகள் சோர்வடைய வினைகளால் நமக்கு ஏற்படும் வருத்தங்களும் நீங்கும் என்பது இதனால் உணர்த்தப் படுகின்றது.
கொல்லை மால்விடை ஏறிய கோவினை
எல்லி மாநடம் ஆடும் இறைவனைக்
கல்லினார் மதில் நாகைக் காரோணனைச்
சொல்லவே வினையாயின சோருமே
திருக்கோடிகா தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றனில் (5.78.3) அப்பர் பிரான் கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று இறைவனை அழைத்து புகழும் அடியார்களுக்கு ஊனம் ஏதும் இல்லை என்று கூறுகின்றார். ஒல்லை=விரைந்து; காலம் தாழ்த்தாது உடனே இறைவனை வழிபடுவதை ஒல்லை என்று உணர்த்துகின்றார் போலும்.
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்றில்லையே
இடைமருதில் உறையும் ஈசனை கொல்லை ஏற்றினர் என்று அப்பர் பிரான் அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (6.17.3) காணலாம். காலம் பல கழித்தார்=காலத்தின் தாக்கத்தால் மாறுபாடு அடையாது என்றும் ஒரே உருவத்தராய் காலங்களைக் கடந்து இருப்பவர்; சேயார்=தொலைவில் உள்ளவர்;தம்மை அறியாத மாந்தர்களுக்கு தொலைவில் உள்ளவர்
ஆலநீழல் இருப்பர் ஆகாயத்தர் அருவரையின் உச்சியார் ஆணர் பெண்ணர்
காலம் பல கழித்தார் கறைசேர் கண்டர் கருத்துக்குச் சேயார் தாம் காணாதார்க்குக்
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடுமழுவர் கோழம்பம் மேய ஈசர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம் கொண்டாரே
இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் அப்பர் பிரான் பெருமானை கொல்லை ஏற்றினான் என்று குறிப்பிடுகின்றார்.
மலை வளர்த்த மடமங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண்
இலை வளர்த்த மலர்க் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறிதிரை நீர் நஞ்சு உண்டான் காண்
கொலை வளர்த்த மூவிலைய சூலத்தான் காண் கொடுங்குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண்
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான்காண் திருவாரூரன்காண் அவனன் சிந்தையானே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (6.23.3) அப்பர் பிரான், பெருமானை, மலம் துக்க மால்விடை ஒன்று ஊர்ந்தான் என்று குறிப்பிடுகின்றார். தொக்க என்ற சொல் துக்க என்று எதுகை கருதி, பாடலின் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது அடிகளில் மருவியுள்ளது.துக்க=செறிந்து அமைந்த, உருவம் உடையவன்; நெருங்கி பொருந்தி உள்ள; நிரூபி= உருவம் இல்லாதவன்; ரூபி=உருவம் உடையவன்; நான்காவது அடியில் வரும் துக்க என்ற சொல்லுக்கு, பொருத்தம் கருதி எதிர்மறையாக பொருள் கொள்ள வேண்டும். மலம் என்ற சொல்லுக்கு செருக்கு என்று பொருள் கொண்டு, சிவபெருமான் திருபுரத்து அரக்கர்களுடன் போரிடுகையில் அவருக்கு உதவியாக் தாங்களும் இருக்கின்றோம் என்ற செருக்குடன் பல தேவர்கள் இருந்தபோது, தன்னை இடபமாக மாற்றிக்கொண்ட திருமால் மிகவும் பணிவுடன் பெருமானை தன் மீது அமர்ந்து போரிடுமாறு வேண்டியதை உணர்த்தும் வகையில், மலமற்ற விடை என்று குறிப்பிட்டார் போலும். திருக்காளத்தி தலத்திலும் சிலந்திக்கு அருள் புரிந்ததாக தலவரலாறு குறிப்பிடுகின்றது. மால் என்ற சொல்லுக்கு சிறப்பு வாய்ந்த என்று பொருள் கொண்டு, தருமதேவதையை விடையாக மாற்றி ஏற்றுக்கொண்ட இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீ வாய்ப்படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலம் துக்க சென்னிச் சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலம் துக்க மால்விடை ஒன்றூர்ந்தான் கண்டாய் மறைக்காட்டுறையும் மணாளன்தானே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.30.10) அப்பர் பிரான், பெருமானை செங்கண் மால் ஏற்றினான் என்று குறிப்பிடுகின்றார்.செரு=போர்; போர் புரிவதில் சிறந்து விளங்குவதும் சிவந்த கண்களை உடையதும் ஆகிய காளையைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவனும்,தென்னாட்டில் உள்ள திருவானைக்கா நகரில் உறைபவனும், வேத நெறியில் பொருந்தாத திரிபுரத்து அரக்கர்கள் தீயினில் வெந்து அழியுமாறு அவர்களது பறக்கும் மூன்று கோட்டைகளையும் எரியச் செய்தவனும், வஞ்சகர் உள்ளங்களில் பொருந்தாது தவிர்க்கும் வல்லமை உடையவனும், பெயர்த்தற்கு மிகவும் அரியதாக விளங்கிய கயிலை மலையினை பேர்த்தேடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் நசுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலால் கயிலை மலையின் கீழே அவனை அழுத்தியவனும் ஆகிய பெருமானே திருவாரூர் நகரத்து திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எமது செல்வன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
செரு வளரும் செங்கண் மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில்வீழ
மருவலர்தம் புரம்மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர் பால் அணுகாத மைந்தன் தான்காண்
அருவரையை எடுத்தவன் தன் சிரங்கள் பத்தும் ஐந்நான்கு தோளும் நெரிந்து அலற அன்று
திருவிரலால் அடர்த்தவன் காண் திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே
மழபாடி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.39.2) அப்பர் பிரான் பெருமானை கொல்லை விடையேறு கூத்தன் என்று அழைக்கின்றார்.கொக்கிறகு=கொக்கின் உருவத்தில் இருந்த குரண்டாசுரன் என்ற அரக்கனை அழித்ததன் அடையாளமாக கொக்கின் இறகினை பெருமான் தனது முடியினில் அணிந்துள்ளார் என்பது கந்த புராண வரலாறு (பாடல் எண்: 8-9-64) இரிந்து ஓடுதல்=பயத்தால் நாலாபுறமும் ஓடுதல்; குரண்டம்=கொக்கு;சிறை=இறகு;
கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடையேறும் கூத்தன் கண்டாய்
அக்கு அரை மேல் ஆடலுடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதிகண்டாய்
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுது ஆனான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.50.9) அப்பர் பிரான் சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனன் என்று குறிப்பிடுகின்றார்.இப்பக்கம் பல ஆனான் என்று கூறுவதால், பரந்தான் என்ற சொல்லினை அப்பக்கம் பரந்தான் என்று கொள்ளவேண்டும். உலக மாயையின் இருபக்கங்களில் இறைவன் உள்ள நிலை இங்கே கூறப்படுகின்றது. திருபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது சிறப்பு வாய்ந்த அம்பினை எடுத்துச்சென்ற பெருமான், அந்த அம்பினையும் பயன்படுத்தாமல், தனது காலின் கீழே அந்த அம்பினை வைத்து விட்டு, அரக்கர்களை வென்றதாக அப்பர் பிரான்கூறுவது நமக்கு திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தின் பாடலை, ஏரம்பு கண்டிலம் ஏகம்பன் தன்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற, என்ற பாடலை நினைவூட்டுகின்றது. சரம் என்ற சொல்லுக்கு திருமால் என்று விளக்கம் அளித்து, திருமாலின் மீது அமர்ந்து போருக்கு சென்றதை குறிப்பிடுவதாக, வ.சு.செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் விளக்கம் அளிக்கின்றார்.
பரந்தானை இப்பக்கம் பல ஆனானைப் பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்துளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்காம்
சரத்தானைச் சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனைச் சடாமகுடத்து அணிந்த பைங்கண்
சிரத்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.8) அப்பர் பிரான், பெருமானை கொல்லை விடை ஏற்றினான் என்று குறிப்பிடுகின்றார். கூத்தாட வல்ல கானவன் என்று இறைவன் சுடுகாட்டில் நடனம் ஆடுவதை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். எனவே குழலும் முழவும் பூதகணங்களால் இசைக்கப் படுகின்றன என்று நாம் கருதவேண்டும். மருவி=விருப்பத்துடன் கலந்து; கழல் என்பது இங்கே கழல் அணிந்த பாதங்களை குறிப்பிடுகின்றது.பல செயல்களை ஒருசேர செய்ய வல்லவன் இறைவன். அவ்வாறு பல செயல்களை செய்த போதிலும் அனைத்துச் செயல்களிலும் வெற்றி காண்கின்ற தலைவனாக இறைவன் உள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. கொல்லை=முல்லை நிலம்;
வானவனை வானவர்க்கு மேலானானை வணங்கும் அடியார் மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர் தொழு கழலான் தன்னைச் செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லை விடை ஏற்றினானைக் குழல் முழவம் இயம்பக் கூத்தாடவல்ல
கானவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
திருநாவலுர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.17.9) சுந்தரர் வடமாடு மால்விடைப் பாகன் என்று கூறுகின்றார். ஆலமரத்தை வடவிருட்ஷம் என்று வடமொழியில் கூறுவார்கள். திரு ஆலங்காடு தலம் வடாரண்யம் என்று அழைக்கப்படும். எனவே வடம் என்ற சொல்லுக்கு ஆலிலை என்று பொருள் கொண்டு, ஆலிலையில் துயிலும் திருமாலை குறிப்பிடுகின்றது என்ற விளக்கம் அளிக்கப்படுகின்றது. திருமாலையும் பிராட்டியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்ட தன்மை பாடலின் முதல் அடியில் குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவது அடியில், திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்ற தருணத்தில், திருமாலைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு, பாகனாக அதனை செலுத்திய தன்மை உணர்த்தப்படுகின்றது.
படமாடு பாம்பணையானுக்கும் பாவை நல்லாள் தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்தொரு நாள்
இடமாடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்தெனை ஆளும் கொண்ட
நடமாடியார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.65.9) அப்பர் பிரான், பெருமானை, செங்கண் மால்விடை ஒன்று ஏறுவான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் முருகனுக்கும் விநாயகனுக்கும் தந்தையாக இருப்பவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்களில் முருகப் பெருமானும் கணபதியும் குறிப்பிடப் பட்டாலும் இருவரையும் சேர்த்து ஒரே பாடலில் குறிப்பிடும் பாடல்கள் சற்று அரிதாகும். முந்தை=அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றியவன், சிவன்=இன்ப வடிவினன்; சிந்தாத=இறைவனைப் பற்றிய சிந்தனை தவிர புறப் பொருட்களில் தங்களது கவனத்தை சிதறவிடாத; மால் என்ற சொல்லுக்கு பெருமை என்ற பொருள் கொண்டு, சிவந்த கண்களை உடையதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய எருதினை வாகனமாக கொண்டவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
முந்தைகாண் மூவரிலும் முதலானான்காண் மூவிலைவேல் மூர்த்திகாண் முருகவேட்குத்
தந்தைகாண் தண் கடமா முகத்தினாற்குத் தாதைகாண் தாழ்ந்தடியே வணங்குவார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத்தார்க்குச் சிவனவன்காண் செங்கண்மால் விடை ஒன்றேறும்
எந்தை காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே
திருநீடூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.56.3) சுந்தரர், பெருமானை கொல்லை வெள்ளெருது ஏற வல்லான் என்று கூறுகின்றார். கொல்லை எருது என்று குறிப்பிட்டமையால், முல்லை நிலத்து கடவுளான திருமாலை குறிக்கின்றது என்று பொருள் கொள்ளவேண்டும். நீடூர் தலத்தினை தாண்டி திருபுங்கூர் சென்ற போதிலும், சுந்தரா நீ நீடூர் தலத்தினை தாண்டி செல்லலாமோ என்று பெருமானை தனது திருவுள்ளக் கருத்தினை உணர்த்த, அதனை புரிந்து கொண்ட சுந்தரர், திருபுங்கூர் தலத்திலிருந்து திரும்பி வந்து நீடுர் தலத்து இறைவனை வணங்கி பதிகம் பாடியதாக பெரிய புராணம் நமக்கு உணர்த்துகின்றது.
கொல்லும் மூவிலை வேலுடையானைக் கொடிய காலனையும் குமைத்தானை
நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
அல்லலில் அருளே புரிவானை ஆடுநீர் வயல்சூழ் புனல் நீடூர்க்
கொல்லை வெள்ளெருது ஏற வல்லானைக் கூறி நாம் பணியா விடலாமே
திருக்கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.61.3) சுந்தரர், பெருமானை திரியும் முப்புரம் தீப்பிழம்பாக செங்கண் மாலை விடைமேல் திகழ்வான் என்று குறிப்பிடுகின்றார். திருவொற்றியூரில் தனது இரண்டு கண்களிலும் பார்வை இழந்த சுந்தரர், பெருமானின் அருளால் இடது கண்ணில் பார்வை வரப்பெற்ற பின்னர், பெருமானைத் தனது கண்கள் குளிரும் வண்ணம் மீண்டும் காண முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியுடன் பாடிய பாடல்கள் கொண்ட பதிகம்.
திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச் செங்கண் மால் விடை மேல் திகழ்வானைக்
கரியின் ஈருரி போர்ர்த்து உகந்தானைக் காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி எத்தி வழிபடப்பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.1) சுந்தரர், பெருமானை செங்கண் மாலை விடையாய் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறோர் பற்றுக்கோடு இல்லை என்பதை உணர்த்தும் வண்ணம், பெருமானே எனை அஞ்சல் என்று அருளாய் ஆரெனக்கு உறவு அமரர்கள் ஏறே என்று சுந்தரர் கூறுகின்றார்.
கங்கை வார்சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே
பொங்கு மாகடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால் விடையாய் தெளிதேனே தீர்த்தனே திருவாவடுதுறையுள்
அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
கானப்பேர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.84.5) சுந்தரர், பெருமானை அழகிய கொல்லை விடையினை உடையவன் என்று குறிப்பிடுகின்றார். முல்லை அரும்பினை ஒத்த நகையை உடையவள் பிராட்டி என்று சிறப்பித்து கூறுகின்றார். கல்லவடம்=மணிமாலை
கொல்லை விடைக் குழகும் கோல நறுஞ்சடையில் கொத்தலரும் இதழித் தொத்தும் அதனருகே
முல்லைபடைத்த நகை மெல்லியலாளொருபால் மோகமிகுத்திலங்கும் கூறு செயப்பரிசும்
தில்லைநகர்ப் பொதுவுற்றாடிய சீர்நடமும் திண்மழுவும் கைமிசைக் கூரெரியும் அடியார்
கல்லவடப் பரிசும் காணுவதென்று கொலொ கார்வயல்சூழ் கானப்பேருறை காளையையே
வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.86.5) சுந்தரர், பெருமானை, செங்கண் மால் விடையான் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தினும், சுந்தரர், பெருமானை வழிபடாத மனிதர்களை இழித்து கூறுவதை நாம் காணலாம். உள்ளம் உருகித் தொழுதால் உடனாகும் தன்மை உடைய பெருமானை, பரவிப் புகழ்ந்து போற்றாத மனிதர்கள் வேறெதனைப் போற்றி பயனடைவார்கள் என்று இகழ்ச்சியாக கூறுகின்றார்.
உரம் என்னும் பொருளானை உருகில் உள் உறைவானைச்
சிரம் என்னும் கலனானைச் செங்கண் மால் விடையானை
வரம் முன்னம் அருள் செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவென்னே
இந்த பாடலில் அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் அந்த மலையினை அசைத்த போது, உமையன்னை அச்சம் கொண்டதாக சொல்லப்படுகின்றது. யானையின் தோலை பெருமான் உரித்த போது, உமையன்னை அச்சமடைந்து கலக்கம் அடைந்த செய்தி மிகவும் அதிகமான திருமுறைப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. பெருமான் ஆலகால நஞ்சினை உட்கொண்ட போதும், சுடுகாட்டினில் நடமாடும் போதும்,எலும்பு மாலை முதலியன பூண்டுகொண்ட போதும், இராவணன் கயிலாய மலையினை அசைத்த போதும், அன்னை அச்சம் கொண்டதாகவும் தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. சுந்தரர் தனது கச்சி ஏகம்பம் பதிகத்தின் பாடல் ஒன்றினில், கம்பை ஆற்றின் வெள்ளம் பெருகிய போது, தான் வழிபட்டுக் கொண்டிருந்த இலிங்கத் திருவுருவம் அந்த வெள்ளத்தில் கரைந்து விடுமோ என்று அச்சம் கொண்டு, இலிங்கத்தை பார்வதி தேவி இறுகத் தழுவியதாக குறிப்பிடுகின்றார். அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தை தொடரலாம் என்ற எண்ணத்துடன், கயிலாய மலையினை பேர்க்க முயற்சி செய்ததையும், பெருமான் தனது கால் பெருவிரலை ஊன்ற அந்த முயற்சி முறியடிக்கப் பட்டதையும் நாம் அறிவோம். பெருமான் இராவணனின் செயலால் கோபம் கொண்டு அவனை மலையின் கீழே நெருக்கினார் என்று பொருள் கொள்வது தவறு என்றும் தேவியின் அச்சத்தை தீர்க்கும் பொருட்டே அரக்கனின் வலிமையை குறைத்தார் என்பதையும் உணர்த்தவே, அந்த சமயத்தில் உமையன்னை கொண்ட அச்சம் பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. கோபதாபங்களைக் கடந்த பெருமான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.இருபதுக்கும் மேற்பட்ட திருமுறைப் பாடல்களில் இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி அச்சம் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.இராவாணன் கயிலாய மலையினை அசைத்த போது உமை அன்னை அச்சம் கொண்டதை குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.9.8) திருஞானசம்பந்தர், மலையான் மகள் அஞ்ச வரை எடுத்தவன் என்று அரக்கன் இராவணனை குறிப்பிடுகின்றார். சரண்=சரணடையத் தகுதி வாய்ந்த திருப்பாதம்; உகிர்=நகம்; சுருதித் தொகை=சாகைகளின் கூட்டமாகிய வேதம்; விலையாயின சொல்=பெறுமதிப்புடைய சொற்கள்; கலை ஆறு=ஆறு அங்கங்கள்;
மலையான் மகள் அஞ்சவ் வரை எடுத்தவ் வலி அரக்கன்
தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதித்தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலையாயின சொற்றோர் தரு வேணுபுரம் அதுவே
கைச்சினம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.45.8) திருஞானசம்பந்தர், மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாளரக்கன் என்று குறிப்பிடுகின்றார். போது=மலர்; நீதியினால்= முறையாக; உலவு கொன்றை, வினைத்தொகை, பெருமானின் திருமுடி மேல் எப்போதும் கொன்றை மலர் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றது.
போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடி மேல்
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாளரக்கன்
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்றாடும்
காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.48.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது மலையினில் ஏற்பட்ட அசைவு காரணமாக பார்வதி தேவி அச்சம் கொண்டாள் என்று கூறுகின்றார். மொழியாள்= சொல்லினை உடையவள்;கண்=மயில் தோகையில் உள்ள கண்கள்; மஞ்ஞை=மயில்; கருமை என்று குறிப்பிட்டாலும் அந்த சொல் நீல நிறத்தினை உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். உரம்=வலிமை; மொய்த்த=பொருந்திய; பண் மொய்த்த என்று குறிப்பிடுவதன் மூலம், இனிமையான பண்கள், தாமே சென்று தேவியின் சொற்களில் சென்று அமர்ந்தது போன்ற இனிமையான சொற்களை உடையவள் தேவி என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.உன்மத்தன்=பைத்தியக்காரன்; கயிலாய மலையினை பேர்த்து எடுக்க நினைப்பதே பெரிய குற்றம். அரக்கன் இராவணன் அறியாமையால் செய்தான் என்று எண்ணுவது என்பது தவறு என்று உணர்த்தும் முகமாக, இராமாயண காவியம் அரக்கனுக்கு தக்க சமயத்தில் தேர்ப்பாகன் அறிவுரை செய்ததை உணர்த்துகின்றது. ஆனால் அரக்கன் இராவணனோ, தனது வலிமையில் செருக்கு கொண்டவனாக, செயல்பட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.பல தேவாரப் பாடல்களும், தேர்ப்பாகன் செய்த அறிவுரையை குறிப்பிடுகின்றன. எனவே தான், தேர்ப்பாகன் செய்த எச்சரிக்கையினையும் புறக்கணித்து,கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் எண்ணத்துடன் அந்த மலையை நோக்கி ஓடியவனை பித்துக்குளி என்றும் பைத்தியக்காரன் என்றும் மிகவும் பொருத்தமாக அழைக்கின்றனர். சில பதிப்புகளில் உண்மத்தன் என்று காணப்படுகின்றது. எதுகை கருதி உன்மத்தன் என்ற சொல் உண்மத்தன் என்று திரிந்ததாக கருதினார்கள் போலும்.
பண் மொய்த்த இன் மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் (2.57.8), அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, தேவி அச்சம் கொண்டதை உணர்த்துகின்றார். மாது=பெருமை, காதல்; கறுத்த=கோபம் கொண்ட, தான் செல்லும் வழியில் இருந்துகொண்டு தனது பயணத்திற்கு தடையாக கயிலை மலை இருந்தது என்று எண்ணியதால் கோபம் கொண்ட அரக்கன் இராவணன். மறுகும் வண்ணம்=கலக்கம் அடையும் வண்ணம்; மாது என்ற சொல்லுக்கு அழகினை உடையவள் என்று பொருள் கொண்டு, தலத்து அம்பிகையின் திருநாமம் கல்யாண சுந்தரி என்பதை உணர்த்துவதாக சிலர் விளக்கம் கூறுவதும் பொருத்தமாக உள்ளது.
காதமரும் வெண்குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப
மாதமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டுகந்தீர்
தீதமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திருநல்லூர்
மாதமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
இவ்வாறு பிராட்டி நடுங்கியதைக் கண்ட பெருமான், தனது கால் பெருவிரலை ஊன்றி அன்னை கொண்டிருந்த அச்சத்தை தவிர்த்ததாக மேற்கண்ட பாடல்கள் அனைத்திலும் கூறப்பட்டுள்ளன. இந்த விளக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு அவ்வாறு பிராட்டி கலங்கிய போது, பெருமான் மகிழ்ச்சி கொண்டதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது, சிந்தனைக்குரியது. இவ்வாறு மகிழ்ந்தது பெருமானின் திருவிளையாடல்களில் ஒன்று என்று சான்றோர்கள் பொருள் கண்டனர். கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்ற செயலுக்கு கோபம் கொண்ட பார்வதி அன்னையின் கோபத்தினை தணிப்பதற்காக, பெருமான் இந்த திருவிளையாடலை புரிந்தாரோ என்று நமக்கு தோன்றுகின்றது. இத்தகைய கற்பனை ஒன்றினை உள்ளடக்கி அப்பர் பிரான் பாடிய பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தமாகும், கயிலை மலையினை அரக்கன் அசைத்த போது, பார்வதி தேவி கொண்ட அச்சத்தினைநீக்கிய பெருமான், அதனை ஒரு வாய்ப்பாக கருதி தேவி தன்னிடம் கொண்டிருந்த ஊடலைத் தீர்த்தான் என்று சுவையாக தனது கற்பனையை ஏற்றி அப்பர்பிரான் பாடிய பாடல் மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.34) கடைப் பாடலாகும். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அரக்கன்இராவணனின் கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. கங்கை நங்கையை பெருமான் தனது சடையில் மறைத்ததை காரணமாக கொண்டு தேவி ஊடல்செய்ததாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். உருவம் வேறுவேறாக திகழ்ந்தாலும், பெருமானும் பிராட்டியும் இணைந்தே செயல்படுவதாக சைவசித்தாந்தம் சொல்கின்றது. பெருமானின் கருணை அம்சம் தான் தேவி. எனவே அவர்களுக்குள்ளே ஊடல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனினும்புலவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, அப்பர் பிரான், ஒரு கற்பனை நிகழ்ச்சியை புகுத்தி, தேவாரப் பாடலுக்கு நயம் சேர்ப்பதை நாம் இந்தபாடலில் காணலாம்.
கங்கை நங்கையைத் தனது தலையில் மறைத்து வைத்ததால் தேவிக்கு கோபம் ஏற்படுகின்றது. அந்த கோபம் ஊடலாக மாறுகின்றது. அரக்கன் இராவணன்கயிலை மலை அசைத்ததால் ஏற்பட்ட அசைவு, அன்னைக்கு அச்சத்தை ஏற்படுத்த, அந்த அச்சத்தை தீர்க்கும் முகமாக, அன்னையிடம் அஞ்சேல் என்றுசொல்லிய பெருமான், தனது கால் பெருவிரலால் மலையினை அழுத்தி, மலையின் ஆட்டத்தை நிறுத்துகின்றார். தேவியின் அச்சம் மட்டுமா மறைகின்றது.அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஊடலும் மறைந்து விடுகின்றது என்பதை சொல்லாமல் சொல்லி விளக்கும் நயமான பதிகம்.
கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட
அங்கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடு தானே
உலகியலில் வாழும் நாம், எத்துணை கருத்தொத்த தம்பதியராக இருப்பினும் அவர்களின் இடையே, சிறுசிறு விஷயங்களில், கருத்து ஒவ்வாதுஇருப்பதையும், அந்த வேறுபாடு காரணமாக ஊடல்கள் ஏற்படுவதையும் காண்கின்றோம். சங்க இலக்கியங்களில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் ஊடல்வெகுவாக விவரிக்கப் படுகின்றது. திருக்குறளிலும் ஊடல் காதலுக்கு மேலும் சுவை ஊட்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு ஊடலுவகை என்று தனிஅதிகாரம் கொடுக்கப்பட்டு பத்து பாடல்கள் உள்ளன. இத்தகைய ஊடல்கள் அதிக நேரம் நீடிப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் உண்மையான பாசமும்நேசமும் கொண்டு தம்பதியர் திகழ்வதால், அவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறிய இடர் நேர்ந்தாலும், அடுத்தவர் அந்த இடரினைக் களையும் போது,அந்நாள் வரை அவர்களின் இடையே இருந்த ஊடல் காணமல் போய்விடுகின்றது. இதனை உலக வாழ்க்கையில் நாம் அடிக்கடி காண்கின்றோம். அத்தகையநிகழ்ச்சியாக, இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி கொண்ட அச்சத்தை பெருமான் களைந்த விதத்தினை அப்பர் பிரான் கற்பனைசெய்கின்றார். இறைவனின் செயல் வடிவமே சக்தி. சக்திக்கும் சிவத்திற்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. சிவபிரானின் எண்ணத்திற்கு ஏற்ப செயல் படும் சக்திக்கும் சிவத்திற்கும் வேறுபாடு இல்லாத போது, அவர்களிடையே ஊடல் வருவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. எனினும் அவர்களின் இடையே ஊடல் ஏற்பட்டது போன்று அப்பர் பிரான் கற்பனை செய்து அந்த ஊடல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்று, புலவர்களுக்கு உள்ள உரிமையுடன் நயமாக இந்த பாடலில் கூறுகின்றார்.
வெண்காடு தலத்தின் மீது அருளிய மற்றோர் பதிகத்தின் பாடலிலும் (2.61.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் கயிலாய மலையினை அசைத்ததால் பார்வதி தேவி நடுங்கியதாக குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். வளையார்=வளையல்கள் பொருந்திய; மலையாள்= இமயமலையில் வளர்ந்தவளாகிய அன்னை பார்வதிதேவி; வெருவ=அச்சம் கொள்ள; முளையார்= முளைத்து வளரும் தன்மை கொண்ட பிறைச்சந்திரன்;இளையாது=தளர்ச்சி அடையாது;
வளையார் முன் கை மலையாள் வெருவ வரை ஊன்றி
முளையார் மதியம் சூடி என்று முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும்
விளையார் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே
மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.8) உமையன்னைக்கு அச்சம் விளைவித்த, திரண்ட தோள்களையும் வலிமையையும் உடைய அரக்கனின் வலிமை நலியுமாறு, மலையின் கீழே, சிவபெருமான் அடக்கினார் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஒலி கொள் புனல் என்று மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி என்று கூறுகின்றார்.
புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடி நீற்றர்
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச
வலிய திரள் தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை
மெலிய வரைக் கீழ் அடர்த்தார் மீயச்சூராரே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.8) திருஞானசம்பந்தர், கயிலாய மலை இராவணனால் அசைக்கப் பட்டதால் அன்னை நடுங்கியதைக் கண்ட பெருமான், சிரித்த வண்ணமே தனது கால்பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியதாக கூறுகின்றார். இந்த நகைப்பின் காரணம், இந்த பாடலில் குறிப்பிடப்படவில்லை. தன்னால் முடியாத காரியத்தை அரக்கன் செய்யத் துணிந்ததற்காக, அரக்கன் மீது பரிதாபம் கொண்டதால் விளைந்த நகைப்பா, தேவியின் அச்சம் தேவையற்றது என்ற எண்ணத்தில் எழுந்த நகைப்பா, தேவி தன்னுடன் கொண்டிருந்த ஊடலைத் தீர்ப்பதற்காக தனக்கு கிடைத்த வாய்ப்பு என்று கருதியதால் விளைந்த நகைப்பா என்பது பற்றி திருஞானசம்பந்தர் குறிப்பிடாமல் நமது கற்பனைக்கு விட்டுவிடுகின்றார்.இந்த மூன்று காரணங்களும் பொருத்தமாக இருப்பதை நாம் உணர்கின்றோம். ஓரான்= உணராதவன்;
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத் தன் திருவிரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டலறப் பரிந்தவன் பதி மறைக்காடே
சீர்காழி நகரத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.96.8) தனது வலிமையை பெரிதாக கருதிய அரக்கன் இராவணனின் வலிமை கண்டு, கயிலாய மலையினை எடுக்கும் ஆற்றலைக் கண்டு, உமையன்னை அஞ்சியதாக சம்பந்தர் கூறுகின்றார்; ஏர்=அழகு; ஏர்கொள் மங்கை= அழகுடைய பார்வதி தேவி;சீர்கொள் பாதம்=சிறப்புடைய திருவடி; செறுத்த=வெற்றி கொண்ட; தார்=பூ; கடுந்திறல்=மிகுந்த வலிமை;
கார் கொள் மேனி அவ் வரக்கன் தன் கடுந்திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்து ஒரு விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில்
தார்கொள் வண்டினம் சூழ்ந்த தண்வயல் காழி நன்னகரே
திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.8) பார்வ்தி தேவி அச்சம் கொள்ளும் வண்ணம் மலையை அசைத்து இராவணன் எடுக்க முயற்சி செய்தான் என்று கூறுகின்றார். ஆன்மாவினை, தனது தலைவனுடன் சேரத் துடிக்கும் தலைவியாக உருவகித்து, இறைவனைத் தலைவனாக உருவகித்து, ஆன்மா எவ்வாறு இறைவனுடன் சேர்ந்து என்றும் அவனிடமிருந்து பிரியாமல் இருப்பதற்கு தலைப்படவேண்டும் என்றும், தனது ஆசை நிறைவேறாத ஆன்மா எவ்வாறு வருந்தி, தனது விருப்பத்தை இறைவனிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இத்தகைய அகத்துறைப் பாடல்கள் மூலம் அருளாளர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். எதற்காக தணியாத இந்த வேட்கை ஆன்மாவிடம் ஏற்படவேண்டும் என்று கேள்வி கேட்போர்க்கு விடையளிக்கும் முகமாக, இந்த பாடல் அமைந்துள்ளது. பரகதி=உயர்ந்த நிலை, முக்தி நிலை; தொடர்ந்து இறைவனின் புகழினைப் பாடும் அடியார்கள் பரகதி அடைவார்கள் என்றும், அவ்வாறு இறைவனின் புகழினை நினைக்காதவர்கள் பரகதி அடைய மாட்டார்கள் என்றும் கூறுகின்றார். இறைவனின் புகழினைப், பெருமையினைப் புரிந்து கொண்டு அவனது மேன்மையை உணர்வதே இறை வழிபாட்டினால் முதல்படி என்பதால், அந்த முதல் படி,படிப்படியாக நம்மை உயர்த்தி, பக்குவம் அடையச் செய்து உய்வினை அளிக்கும் என்பதால், இறைவனின் புகழினை நாம் உணரத் தலைப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.
குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர்முடி தோள் இருபதும் ஊன்றி
மயிலின் நேர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே
கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.109.8) திருஞானசம்பந்தர் கயிலாய மலையினை அரக்கன் இராவணன் எடுக்க முயற்சி செய்த போது உமையம்மை அஞ்சவே, அந்த அச்சத்தினை நீக்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை சற்று சுளித்து மலையின் மீது ஊன்றி, அரக்கன் சோர்வு அடையுமாறு செய்தார் என்று கூறுகின்றார். சோர்வடைந்த இராவணன் தனது தவறினை உணர்ந்து பெருமானை போற்றி சாமகானம் பாடிய பின்னர் அவன் செய்த தவறினை பொருட்படுத்தாது அவனுக்கு அருள் நல்கிய பெருமானின் திருவடிகளைத் தொழும் அடியார்கள் இறைவனின் திருவடித் தாமரைகளைச் சென்றடைய தவம் செய்யும் முனிவர்கள் போன்றவர்கள் ஆவார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் பெருமானின் திருவடிப் பெருமையை உணர்த்துகின்றார்.அரக்கனது பற்கள் ஒளி வீசும் வாள் போன்று இருந்தன என்று சம்பந்தர் கூறுகின்றார்.
ஒளிகொள் வாள் எயிற்று அரக்கன் அவ் உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சிச்
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள் செய்த
குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நல் கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர் கொள் தாமரைப் பாதங்கள் அருள் பெரும் தவம் உடையவர்களே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.8) பார்வதி தேவி நடுங்கும் வண்ணம் அரக்கன் இராவணன் கயிலாய மலையை அசைத்தான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மருப்பு=தந்தம்; தனது தந்தத்தில் நெருப்புப் பொறி பறக்க மலையுடன் மோதும் பருத்த யானைக்கு அரக்கன் இராவணனை இங்கே ஒப்பிடுகின்றார். மலையுடன் மோதுவது வீணான செயல் என்பதை புரிந்து கொள்ளாத மதயானையை போன்று, பெருமானின் புனிதமான இருக்கை என்பதையும் அதனில் பெருமான் வீற்றிருக்கின்றார் என்பதையும் பொருட்படுத்தாமல் அரக்கன் இந்த செயலில் ஈடுபட்டான் என்று கூறுகின்றார். ஒருக்குடன்=ஒருங்கு உடனே; வெருக்கு=அச்சம்; நிருத்த விரல்=நடனம் புரியும் விரல்; நடனமாடுவோரின் அங்கங்கள் எப்போதும் மிருதுவான தன்மையுடன் இருக்கும். அத்தகைய மிருதுவான விரலாக இருந்தாலும், பெருமானின் விரல், அரக்கனை அலற வைக்கும் வண்ணம் மலையின் கீழே நெருக்கும் வலிமை வாய்ந்ததாக இருந்தது என்று குறிப்பிடுவதன் மூலம் பெருமானின் வலிமை எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை உணர்த்துகின்றார்.கருத்தில ஒருத்தன்=அறிவற்ற அரக்கன்; எருத்து இற=கழுத்து முறியும் வண்ணம்;
மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு செருச் செய்த பருத்த களிறின்
பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது
ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்த விரலால்
கருத்தில ஒருத்தனை எருத்திற நெரித்த கயிலாய மலையே
சண்பை என்று அழைக்கப்பட்ட சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, பிராட்டி அச்சம் கொண்டதாக குறிப்பிடுகின்றார்.
வரைக்குல மகட்கொரு மறுக்கம் வருவித்த மதியில் வலியுடை
அரக்கனது உரக் கர சிரத்துற அடர்த்து அருள் புரிந்த அழகன்
இருக்கையது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்
தருக்குல நெருக்கு மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (3.103.8) கயிலை மலையினை அரக்கன் இராவணன் பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது,உமையன்னை நடுங்கியதாக திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். தண்டணை=தண்டு+அணை; அணை=சென்று சேர்ந்த,இங்கே கொண்ட என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்டணை=ஒண்டு+அணை, உடலுடன் ஒன்றாக இணைந்த; மிண்டு=செருக்கு;விகிர்தன்=மாறுபட்ட தன்மை உடையவன்; வைகும்=தாங்கும்; வண்டு என்பது இங்கே ஆண் வண்டினை குறிப்பதாக கொண்டு, தன்னோடும் என்ற சொல்லுக்கு பெண் வண்டு என்று விளக்கம் அளித்துள்ளனர்.
தண்டணை தோள் இரு பத்தினொடும் தலை பத்து உடையானை
ஒண்டணை மாதுமை தான் நடுங்க ஒரு கால் விரல் ஊன்றி
மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும்
வண்டு அணை தன்னொடு வைகு பொழில் வலம்புர நன்னகரே
கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் (3.105.8) அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, உமையம்மை நடுங்கிய செய்தி குறிப்பிடப்படுகின்றது. ஊர் அரவம்=தரையில் ஊரும் பாம்பு; தரையில் ஊரும் தன்மையை உடைய பாம்பினைத் தனது நீண்ட முடியின் மீது சூட்டிக் கொண்டுள்ள பெருமான், இரைச்சலை எழுப்பும் அலைகள் கொண்ட கடலால் சூழப்பட்ட உலகினை ஆள்கின்றான். அத்தகைய பெருமான், கருமை நிறம் உடையதும் ஒலி எழுப்புவதும் ஆகிய கடலால் சூழப்பட்ட கலிக்காமூர் தலத்தில் உறைகின்றார். தேர் போன்று அகன்ற மார்பகங்களை உடைய உமையன்னை அஞ்சும் வண்ணம், சிறந்த கயிலை மலையினை பேர்த்தேடுக்கத் துணிந்த அரக்கன் இராவணன்,உடல் வருந்தி கதறும் வண்ணம் கயிலை மலையின் மீது தனது பாதத்தை ஊன்றிய சிவபெருமானின் இருப்பிடம் கலிக்காமூர் ஆகும் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை .
ஊர் அரவம் தலை நீள்முடியான் ஒலி நீர் உலகாண்டு
கார் அரவக் கடல் சூழ வாழும் பதியாம் கலிக்காமூர்
தேர் அரவ அல்குல் அம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான்
ஆரரவம் பட வைத்த பாதம் உடையான் இடமாமே
திருவதிகை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.25.10) கயிலாய மலை குலுங்கும் வண்ணம் ஆரவாரத்துடன் அரக்கன் இராவணன் மலையை எடுத்தான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தடக்கை=அகலமுடைய கை: தடவரை=அகன்ற மலை, இங்கே கயிலாய மலை குறிப்பிடப் படுகின்றது.ஆர்த்து=மிகுந்த ஆரவாரம் செய்து: கிடக்கை=கிடத்தல்: ஓங்கு=மிகுதியாக பெருகிய: முருகு=நறுமணம்:
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய
முடக்கினார் திருவிரல் தான் முருகமர் கோதை பாகத்து
அடக்கினார் என்னை ஆளும் அதிகை வீரட்டானாரே
கயிலாய மலையினை பேர்த்து எடுக்க அரக்கன் இராவணன் முயற்சி செய்த போது, அவனது முயற்சி வீண் முயற்சி என்பதை நன்கு அறிந்தவர் சிவபெருமான்.எனினும் தனது அருகில் அமர்ந்திருந்த பார்வதி தேவி அச்சம் கொண்டதைக் கண்டு, அந்த அச்சத்தை நீக்கும் பொருட்டு பெருமான் தனது கால்பெருவிரலை மலையின் மீது ஊன்றி அரக்கனின் வலிமையை அழித்தார் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் (4.27.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
தீர்த்த மாமலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிரல் அதனை ஊன்றிச்
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று
ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகை வீரட்டனாரே
அரக்கன் இராவணன் கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, மலையின் அசைவால் தேவி அச்சம் உற்றதைக் கண்ட பெருமான், தேவி கொண்ட அச்சம் தேவையற்றது என்பதை உணர்த்தும் வண்ணம் சிரித்தார் என்று கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பாடலில் (4.30.10) அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மாலினாள்=பெருமானிடம் அதிகமான விருப்பம் உடையவள்; வேலினான்=வேல் ஏந்திய வீரன்; நூலினான்=வேத நூல்களை அருளிய பெருமான்;
மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோர் அளவில் வீழக்
காலினால் ஊன்றி இட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
திருப்பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.32.10) அப்பர் பிரான் அரக்கன் இராவணன் கயிலை மலையை அசைத்தபோதுஉமையம்மை அஞ்சியதாக குறிப்பிடுகின்றார். மூர்த்தி=தலைவன்; முனிதல்=கோபித்தல்; ஆர்த்தல்=ஆரவாரம் செய்தல்; அடர்த்தல்=நெருக்குதல்;அரிவை=பார்வதி தேவி;
மூர்த்தி தன் மலையின் மீது போகாதால் முனிந்து நோக்கிப்
பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல்லரிவை அஞ்சத்
தேத்தெத்தே என்னக் கேட்டார் திருப்பயற்றூரனாரே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.47.5) அப்பர் பிரான், பார்வதி தேவி கயிலாய மலையை எடுத்த போது, அச்சம் கொண்டதாக குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (4.47) அப்பர் பிரான், இறைவன் சற்றே தனது கால் விரலின் அழுத்தத்தை கூட்டியிருந்தால்,எவருக்கும் அரக்கன் இராவணனை மீண்டும் காணும் வாய்ப்பே இருந்திருக்காது என்று கூறுகின்றார். கன்றி=மிகுந்த கோபம் கொண்டு; வென்றி=பல வெற்றிகள் பெற்ற: கைத்தலம்=கைகள்; வெருவ=அஞ்ச; நக்கு=புன்முறுவல் பூத்தல்; நகழ்தல்= துன்பம் அடைதல்; மன்றி=சற்றே அழுத்தி; பெருமான் அரக்கனை தண்டிக்க வேண்டும் என்று நினைத்து சற்று அழுத்தமாக ஊன்றியிருந்தால், அரக்கன் இராவணனை எவரும் உயிருடன் பர்ர்க்கும் வாய்ப்பே இருந்திருக்காது என்று கூறுவதன் மூலம், இறைவனின் திருவுள்ளக் கருத்து அரக்கனை தண்டிப்பது அல்ல என்பதும் பார்வதி தேவியின் அச்சத்தைத் தவிர்ப்பது தான் என்பது நமக்கு புலனாகின்றது. இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் நேரிழை அஞ்ச நோக்கி வெளித்தவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வெளித்தவன்=அடியார்களுக்கு தன்னை மறைத்துக் கொள்ளாமல் வெளிப்படுத்திக் கொள்ளும் இறைவன்; நேரிழை அஞ்ச என்று அன்னை, இராவணன் கயிலை மலையை எடுத்த போது அச்சம் அடைந்த தன்மையை குறிப்பிடுகின்றது.
கன்றித்தன் கண் சிவந்து கயிலை நன் மலையை ஓடி
வென்றித்தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத் தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்து நொக்கில்லை அன்றே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.57.10) அப்பர் பிரான், அரக்கன் இராவணன், கயிலாய மலையைத் தனது தலைக்கு மேலே இருபது கைகளாலும் தாங்கிய வண்ணம் தூக்கினான் என்று கூறுகின்றார். உலப்பு=அழிவு: அலைத்த=அலைகள் வீசும்: ஒறுத்தல்= தண்டித்தல்:சென்றுற=சென்று நிற்க; இந்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு தான், பல திருக்கோயில்களில் அரக்கன் இராவண வாகன அமைப்பு உருவாக்கப்பட்டது போலும் என்று தோன்றுகின்றாது.
மலைக்கு நேராய அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி ஒறுத்தவற்கு அருள்கள் செய்து
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே
குடமூக்கு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.22.10) அப்பர் பிரான், கயிலாய மலையை அரக்கன் இராவணன் பேர்த்தெடுக்க செய்த முயற்சி வீண் முயற்சி என்பதை உணர்த்தும் முகமாக பெருமான் ஏளனச் சிரிப்பு செய்தார் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில், அந்த தருணத்தில் உமையன்னை அஞ்சிய செய்தியும் உணர்த்தப் படுகின்றது. கொன்று=வருத்தி;
அன்று தான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு நல்விரல் ஊன்றிப்பின்
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே
நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.46.7) சுந்தரர், அரக்கன் இராவணன் கயிலை மலையைப் பெர்த்தெடுத்த போது நேர்ந்த மலையின் அசைவினால் அச்சம் அடைந்த தேவியின் தன்மை, பெருமானுக்கும் பிராட்டிக்கும் இடையே இருந்த பிணக்கினையும் அந்த பிணக்கினால் விளைந்த ஊடலையும் தீர்த்துக் கொள்வதற்கு உதவியது, என்று நகைச்சுவையாக கூறுகின்றார். தனக்கும் பிரட்டிக்கும் இடையே இருந்த ஊடல் தீர்வதற்கு,அரக்கன் இராவணனின் செய்கை ஒரு விதத்தில் உதவியதால், பெருமான் மிகவும் மகிழ்ந்து அரக்கனுக்கு வரங்கள் அளித்தார் என்பது போல இந்த கற்பனை சுவையாக அமைந்துள்ளது. அப்பர் பிரானும் திருஞானசம்பந்தரும் பாடிய பாடல் கேட்டு மகிழ்ந்து அவர்களுக்கு வீழிமிழலை தலத்தில் நித்தமும் பொற்காசு அருளிய பெருமான், ஏன் தனக்கு நிதிகள் அளித்து அருள் புரியாமல் இருக்கின்றார் என்பதாக உரிமையுடன் கேள்வி கேட்பதாக அமைந்த பாடல்.
தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்தோர் சொற்பாடாய்வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத் திப்பிய கீதம் பாடத் தோரொடு வாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறைமறையோர் உறைவீழிமிழலை தனில் நித்தல்
காசருளிச் செய்தீர் இன்றெனக்கருள வேண்டும் கடல்நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.68.9) சுந்தரர், அரக்கன் இராவணன் கயிலாய மலையை பேர்த்தெடுக்கும் முயற்சியில் அந்த மலையினை அசைத்த போது, பிராட்டி அச்சமுற்றாள் என்று கூறுகின்றார்.
இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான் மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல்
நல்ங்கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
பொழிப்புரை:
மிகவும் நுண்ணிய இடை பொருந்திய உமை நங்கை அச்சம் கொள்ளும் வண்ணம், மிகவும் பழமையான கயிலாய மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் அந்த மலையினை அரக்கன் இராவணன் அசைத்த போது, அன்னையின் அச்சத்தைத் தீர்க்கும் பொருட்டு கயிலாய மலையினை நிலையாக நிறுத்தும் வண்ணம், அந்த மலையினைத் தனது கால் பெருவிரலை ஊன்றியவர் சிவபெருமான். அவ்வாறு கயிலை மலியின் மீது தனது கால் பெருவிரலை பெருமான் ஊன்றிய போது, அரக்கனின் தலைகளும் தோள்களும் மலையின் கீழே நெரிக்கப்பட்டன. இத்தகைய ஆற்றல் உடைய பெருமான், முல்லை நிலத்துக் கடவுளாகிய திருமால் இடபமாக மாறிய போது, அந்த இடபத்தைத் தனது வாகனமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்றார். அவர் குளிர்ச்சி மிகுந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவர் ஆவார். அவர் பல் வகையான இசைப் பாடல்களைப் பாடுவதில் மிகுந்த வல்லவர். இத்தகைய ஆற்றல்கள் உடைய பெருமான் உறையும் திருக்கோயில் பாதாளீச்சரம் தலத்தில் உள்ளது.
பாடல் 9:
தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல் காண்பிலராய் அகன்றார்
பூ மருவும் குழலாள் உமை நங்கை பொருந்தியிட்ட நல்ல
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே
பாலையாழ் மற்றும் செவ்வழி ஆகிய இரண்டு பண்களும் திருவீழிமிழலை தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் பாடலில் (5.12.10)குறிப்பிடப்படுகின்றன. பாலையாழ் என்பது ஒரு வகைப் பண்ணின் பெயர். இந்த பண் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றது. இந்த பண்ணில் அமைந்த இசைப் பாடல்கள் மாலை நேரத்தில் பாடப்பட வேண்டும் என்று கூறுவார்கள். செவ்வழிப் பண்ணில் அமைந்த பாடல்களும் மாலை நேரத்தில் இசைக்க வேண்டியவை. பாலையாழ் பண்ணில் எந்த தேவாரப்பாடலும் இசைக்கப் படவில்லை; எனினும் இந்த பண்ணில் அமைந்த மற்ற இசைப்பாடல்கள் பாடுவது, அப்பர் பிரானின் காலத்தில் பழக்கத்தில் இருந்தது போலும். எந்தெந்த பண்களில் அமைந்த பாடல்களை பகற்பொழுதில் பாடலாம், எந்தெந்த பண்களில் அமைந்த பாடல்களை இரவுப் பொழுதினில் பாடலாம் என்பதை பண்டைய நாட்களில் வரையறுத்து வைத்ததாக தெரிகின்றது. புறநீர்மை,காந்தாரம், பியந்தை காந்தாரம், இந்தளம், தக்கேசி, நட்டராகம், நட்டபாடை, பழம்பஞ்சுரம், காந்தாரபஞ்சமம், பஞ்சமம் ஆகிய பண்களில் அமைந்த பாடல்கள் பகற்பொழுதினில் பாட வேண்டிய பாடல்கள். தக்கராகம், பழந்தக்கராகம், சீகாமரம், கொல்லி, கொல்லிக்கௌவாணம், வியாழக்குறிஞ்சி,மேகராகக்குறிஞ்சி, குறிஞ்சி, அந்தாளிக்குறிஞ்சி ஆகிய பண்களில் அமைந்த பாடல்கள் இரவு நேரங்களில் பாட வேண்டியவை. செவ்வழி மற்றும் செந்துருத்தி ஆகிய பண்களில் அமைந்துள்ள பாடல்கள் பகல் நேரம் மற்றும் இரவு நேரம் ஆகிய இரண்டு தருணங்களிலும் பாடக் கூடிய பொதுப் பாடல்கள்.குறுந்தொகை திருவிருத்தம், நேரிசை மற்றும் திருத்தாண்டகப் பாடல்களுக்கு இவ்வாறான வரைமுறை ஏதுமில்லை, நேரத்திற்கு ஏற்ப பண்களில் அமைந்த பாடல்களை பாடுவது அப்பர் பிரானின் காலத்தில் நடைமுறையில் இருந்தமை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வேலை=செயல், தொழில்;ஆலை=வேள்விச்சாலை;
பாலை யாழொடு செவ்வழி பண் கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலையார் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும் வீழிமிழலையே
வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.81.5) திருஞானசம்பந்தர் பாலையாழ் பண்ணினை குறிப்பிடுகின்றார். இனிய மொழி பேசும் தலத்து மகளிரால் தினமும் காலையில் தொழப்படும் இறைவன் என்று பாடலின் இரண்டாவது அடியில் குறிப்பிடப்படுவதால், தலத்து மகளிர் பாலையாழ் பண்ணில் பாடல்கள் இசைத்து பாடுவதாக பொருள் கொள்வது பொருத்தமே. நறவு=தேன்: மெய்=உடல்;மெய் மாதினொடும்=தனது உடலில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்ட பிராட்டியுடன்;
ஆலை சேர் தண் கழனி அழகாக நறவுண்டு
சோலை சேர் வண்டினங்கள் இசை பாடத் தூமொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ மெய் மாதினொடும்
பாலை யாழ வேணுபுரம் பதியாகக் கொண்டீரே
திருவீழிமிழலை தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் பாடலில் (5.12.10) வானவர் பாலையாழ் மற்றும் செவ்வழி பண்களில் பாடல்களை இசைத்து பாடி பெருமானை வழிபடுகின்றனர் என்று கூறியதை நாம் ஏற்கனவே சிந்தித்தோம். தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.45.4) அப்பர் பிரான், கங்கை நங்கையை பாலையாழ் மொழியாள் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அகத்துறை வகையைச் சார்ந்தவை. பாலையாழ் என்பது ஒரு வகையான பண் என்றும் யாழில் ஒரு வகை என்றும் சொல்லப் படுகின்றது. யாழ் என்ற இசைக்கருவியே மிகவும் அரிதாக போய்விட்ட இந்நாளில் பண்டைய தமிழர்கள், பாலை யாழ், சகோட யாழ், மகர யாழ் என்று பல விதமான யாழ்க் கருவிகள் வைத்திருந்தது நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கின்றது. பார்வதி தேவியை, சிவபெருமான் தனது உடலில் வைத்திருக்கும் காட்சி, அப்பர் நாயகியின் தாய்க்கு, கங்கையை சடையில் தரித்துள்ள காட்சியை நினைவூட்டுகின்றது. ஒருத்தியை உடலில் மறைத்தும், மற்றொருத்தியை தனது சடையில் மறைத்தும் சிவபெருமான் இருக்கும் நிலையினை, ஒருத்தியை மற்றொருத்தி அறியாத வண்ணம் மறைத்து வாழும் நிலையாக இந்த தாய் கருதுகின்றாள். எனவே இரு மனைவியர் இருந்தும் ஒருத்திக்கும் நல்லவனாக இல்லாத சிவபெருமான் மீது காதல் கொண்டுள்ள தனது பெண், பெருமானின் வஞ்சகச் செய்லை புரிந்து கொள்ளாமல் மிகவும் நல்லவளாக இருக்கின்றாளே என்ற வருத்தம் தாய்க்கு ஏற்படுவதை அப்பர் பிரான் மிகவும் நயமாக இங்கே உரைக்கின்றார்.
பாலை யாழ்மொழி ஆனவள் தாழ்சடை
மேலள் ஆவது கண்டனள் விண்ணுறச்
சோலை ஆர் தரு தோணிபுரவர்க்குச்
சால நல்லள் ஆகின்றனள் தையலே
இந்த பாடலில் வண்டுகள் மாலையில் பெருமானின் திருவடிகளைப் பணிந்து பாடுகின்றன என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மதுவுண்டு இசை முரல்கின்றன என்று கூறுவதால், பெருமானின் திருவடிகளில் அடியார்களால் தூவப்பட்ட புதிய மலர்களில் உள்ள தேனைப் பருகிய களிப்பில் வண்டுகள் பாலை யாழ் இசையில் முரல்வதாக சொல்லப்படுகின்றது. தினமும் மாலை நேரத்தில் பெருமானைத் தொழுகின்ற அடியார்களை வண்டுகளாக உருவகித்து,அவர்கள் இனிய கீதங்கள் பாடி இறைவனை வழிபடுவதாக உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. பாலை யாழ்ப்பண் பாட வேண்டிய நேரம் மாலைப் பொழுது என்பதால், மாலையில் வண்டுகள் முரல்வதாக குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
காலையில் கஞ்சி உட்கொள்ளும் புத்தரும், கீழ் மக்களாக விளங்கிய சமணர்களும் உண்மையை திரித்துக் கூறி உரைக்கின்ற கட்டுரைகளை பொருட்படுத்தாது, தனது செயல்களை, விடம் உட்கொண்டு தேவர்களை ஆலகால விடத்திலிருந்து காப்பது ஊரெங்கும் திரிந்து பலியேற்பது ஆகிய செயல்களை, விடாமல் தொடர்ந்து செய்து வரும் இறைவனின் திருவடிகளைப் புகழ்ந்து மாலையில் அடியார்கள் பாலை யாழ் பண்ணில் இன்னிசை பாடுகின்றனர். இவ்வாறு இவர்கள் பாடுவது, பெருமானின் திருவடியில் அடியார்களால் தூவப்பட்ட அன்றலர்ந்த மலர்களில் பொருந்தி இருக்கும் தேனை உண்ட களிப்பில், மயக்கத்தில் பாலை யாழ் இசையில் முரல்வதை இறைவன் மிகுந்த விருப்பத்துடன் கேட்பது போன்று அமைந்துள்ளது. இவ்வாறு இசையில் விருப்பம் கொண்டுள்ள இறைவன் உறைகின்ற திருக்கோயில் பாதாளீச்சரம் தலத்தில் அமைந்துள்ளது.
பாடல் 11:
பன்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியல் மாடம் மல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே
விளக்கம்:
தன்னொளி=சிவஞான விளக்கம்; எழில் வானகம் என்பதற்கு பலரும் தேவருலகம் என்று பொருள் கொண்டாலும், வானகம் என்பதற்கு உயர்ந்த உலகம் என்று பொருள் கொண்டு, முக்தி உலகம் என்ற விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது.
பொழிப்புரை:
பல வகையான மலர்கள் பூக்கும் சோலைகளால் சூழப்பட்ட பாதாளீச்சரம் தலம் சென்றடைந்து இறைவனைப் பணிந்து வணங்குமாறு கூறும்,பொன் போன்று பொலிவுடன் திகழும் மாடவீடுகள் நிறைந்ததும் புகலி என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி நகரின் தலைவனும் தனது புகழ் உலகெங்கும் பரவி விளங்கும் வண்ணம் உயர்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், சொன்ன பத்து பாடல்களையும் இனிய இசையுடன் பொருத்தி பாடும் வல்லமை வாய்ந்த அடியார்கள் அழகு வாய்ந்த முக்தி உலகம் சென்றடைவார்கள்.