இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மின்னுஞ்சடை மேல்

மின்னுஞ்சடை மேல்

பதிக எண்: 2.63 திருஅரிசிற்கரைப்புத்தூர் காந்தாரம்

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக வலஞ்சுழி சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு பழையாறை, சத்திமுற்றம், பட்டீச்சரம்,இரும்பூளை முதலான தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் அரதைப் பெரும்பாழி தலம் செல்கின்றார். அதன் பின்னர் திருச்சேறை, திருநாலூர்,குடவாயில், நறையூர் சித்தீச்சரம், தென்திருப்புத்தூர் ஆகிய தலங்கள் சென்றதாக பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தென்திருப்புத்தூர் என்று பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் தலம். அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும். குடமூக்கு (இந்நாளில் கும்பகோணம் என்று அழைக்கப்படும் தலம்)சென்று இருந்த அப்பர் பிரான் அங்கிருந்து நாலூர், குடவாயில், மற்றும் நறையூர் சித்தீச்சரம் தலங்கள் சென்றதாக பெரிய புராணத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த தலங்கள் மீது அப்பர் பிரான் அருளிய பதிகங்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை.

பாடும் அரதைப் பெரும்பாழியே முதலாகச்

சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்

நாடிய சீர் நறையூர் தென்திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி

நீடு தமிழ்த் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்

மூவர் பெருமானர்களின் பாடல் பெற்ற தலம். கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் செல்லும் வழியில், ஏழு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். இந்நாளில் அழகாபுத்தூர் என்று அழைக்கப் படுகின்றது. இறைவனின் திருநாமம் அழகிய நாதர், சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு நாதர்; இறைவியின் திருநாமம் அழகாம்பிகை, சௌந்தரநாயகி; தலமரம் வில்வம்; மேற்கு திசை நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட இராஜகோபுரம். கோபுரத்தைக் கடந்தவுடன் உள்ள சுற்றினில், விநாயகர் முருகன் மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. பன்னிரு கைகளுடன் காட்சி அளிக்கும் முருகரின் வலது கரம் ஒன்றினில், சக்கரமும் இடது கரம் ஒன்றினில் சங்கும் காணப்படுவது, காண்பதற்கு மிகவும் அரிதான காட்சி. ஒரு சமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, அவர்களை அழிக்க முருகரை அனுப்ப சிவபெருமான் திட்டமிட்டார். அப்போது பல தேவர்களும் முருகப்பெருமானுக்கு பலவிதமான ஆயுதங்களை அளித்தார்கள்.அப்போது திருமால் அளித்தவையே சங்கு மற்றும் சக்கர ஆயுதங்கள்; மற்ற கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலம், வஜ்ரம் ஆயுதங்களை நாம் காணலாம். இந்திர மயில் (முருகப் பெருமானுக்கு வலது புறத்தில் முகம் இருக்கும் வண்ணம்) மீது அமர்ந்த வண்ணம் காட்சி கொடுக்கும் முருகப்பெருமானின், திருவாசி பிரணவ எழுத்தின் (ஓங்காரம்) வடிவில் உள்ளது. மூலவர் மேற்கு பார்த்த சன்னதியில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.தனது உடல் தளர்ச்சியினால் புகழ்த்துணை நாயனார் கை தவறி விட்டுவிட்ட நீர்க்குடம் விழுந்த அடையாளம், மூலவரின் பின்புறத்தில் இன்றும் காணப்படுகின்றது. மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில், பிரமன், லிங்கோத்பவர், தென்முகக்கடவுள் ஆகியோர் காணப் படுகின்றனர். கோஷ்டத்தின் அருகில் சண்டேஸ்வரர் சன்னதியும் உள்ளது. மூலவர் சன்னதியின் வலது புறத்தில், தெற்கு திசை நோக்கிய வண்ணம் அம்மன் சன்னதி உள்ளது. உள் பிராகாரத்தில்,விநாயகர், விசாலாக்ஷி, காசி விசுவநாதர், சுப்பிரமணியர், புகழ்த்துணை நாயனார் மற்றும் அவரது மனைவியார், நால்வர் பெருமானர்கள், உண்மையானந்த முனிவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. சுந்தரரின் அருகில் பரவை நாச்சியாரும் காட்சி தருகின்றார். மூலவரின் பின்புறத்தில், சொர்ண பைரவர், கால பைரவர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் உள்ளன. கோச்செங்கட் சோழன் திருப்பணி செய்த தலமாக கருதப்படுகின்றது,

பெரியபுராணத்தில் இந்த தலம் செருவிலிபுத்தூர் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த தலத்தினில், ஒரு சிவாச்சாரியார் குலத்தில் அவதரித்தவர் புகழ்த்துணையார். பெருமான் மீது அதிகமான பக்தி கொண்டிருந்த இவர், அருகில் உள்ள அரிசில் ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு சென்று தினமும் பெருமானை நீராட்டுவதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் வாழ்ந்த காலத்தில், ஒரு சமயத்தில் இங்கே, கடும் பஞ்சம் ஏற்பட்ட போதிலும், பெருமானை நீராட்டி மலர்கள் தூவி, பூஜை செய்வதை தவறாமல் நாயனார் செய்து வந்தார். பஞ்சத்தின் காரணமாக பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்த நாயனார், ஒரு நாள், பசி மற்றும் களைப்பு காரணமாக தள்ளாடிய படியே பெருமானை நீராட்டுவதற்காக நீர்க்குடத்தை சுமந்து கொண்டு வந்தார். ஒருவாறு, பெருமானின் சன்னதியை அடைந்த நாயனார், பெருமானை நீராட்ட முயற்சி செய்கையில், உடல் தளர்ச்சியின் காரணமாக,நிலை தடுமாறி, தான் சுமந்து கொண்டு வந்த நீர்க்குடத்தை தவறவிட்டார். அந்த நீர்க்குடம் மூலவர் லிங்கத்தின் மீது விழுந்தது. மேலும் உடல் தளர்ச்சி அவரை உறக்கத்தில் ஆழ்த்தியது. சங்கரனின் அருளால், நாயனார் உறக்கத்தில் ஆழ்ந்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.இவ்வாறு, உடல் தளர்ச்சியால் சன்னதியில் உறங்கிய நாயனாரின் கனவில் தோன்றிய பெருமான், பஞ்சம் தீருமளவும் தினமும் ஒரு பொற்காசு அவருக்கு அளித்து உதவுவதாக வாக்களித்தார். இறைவன் அளித்த பொற்காசின் உதவி கொண்டு, நாயனார் தன்னை நாள்தோறும் வருத்திய பசிப்பிணியைப் போக்கிக் கொள்ள, மேலும் அதிக உற்சாகத்துடன் தனது திருப்பணியை, அவர் தொடர்ந்து செய்து வந்தார். இவ்வாறு தனது அடியானுக்கு தினமும் ஒரு பொற்காசு அளித்து அவரது வறுமையையும் பசிப்பிணியையும் நீக்கிய பெருமான், படிக்காசு நாதர் என்று, அன்று முதல் அழைக்கப்பட்டார். இத்தகைய திருப்பணி செய்த நாயனார், தனது வாழ்நாளின் இறுதியில் முக்தி அடைந்தார் என்று அவரது சரித்திரம் நமக்கு உணர்த்துகின்றது. அவரது தலைமுறையினர் இன்றும், இந்த திருக்கோயிலில் பூஜை செய்வதாக சொல்லப் படுகின்றது. பல அடியார்கள் இரண்டு பொற்காசுகள் கொண்டு வந்து, இரண்டினையும் பெருமானின் திருப்பாதங்களில் வைத்து பூஜை செய்த பின்னர், ஒரு காசினை பெருமானுக்கு அளித்துவிட்டு, மற்றொரு காசினைத் தங்களது இல்லத்திற்கு எடுத்துச் செல்வது பழக்கமாக உள்ளது. இவ்வாறு செய்தால், தங்களது இல்லத்தில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. நாயனாருக்கு பெருமான் அருளிய செய்தியை குறிப்பிடும் பெரியபுராணப் பாடல் இங்கே காணலாம்.

சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய

அங்கணனும் கனவின் கண் அருள் புரிவான் அருந்து உணவு

மங்கிய நாள் கழிவளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு

இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார்

இங்கே விளக்கம் அளிக்கப்படும் பதிகத்தின் ஏழாவது பாடலில், திருஞானசம்பந்தர், புகழ்த்துணை நாயனாருக்கு பெருமான் அருளிய செய்கை குறிப்பிடப்படுகின்றது. புகழ்த்துணை நாயனாரை ஒரு பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இதே பதிகத்தின் மற்றொரு பாடலில், சிலந்திக்கு அருள் புரிந்து, அடுத்த பிறவியில் கோச்செங்கட் சோழனாக பிறக்க வைத்த செய்தியும் சொல்லப் பட்டுள்ளது. சுந்தரரும், இந்த தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் ஆறாவது (7.9.6) பாடலில் சுருக்கமாக நாயானாரின் சரித்திரத்தை உணர்த்துகின்றார்.

அகத்து அடிமை செய்யும் அந்தணன் தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான்

மிகத் தளர்வு எய்திக் குடத்தையும் நும் முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்

வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி

புகழ்த்துணை கை புகச் செய்து உகந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனாரே

பாடல் 1:

மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே

துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொன் மூதூர்

அன்னம் படியும் புனலார் அரிசில் அலை கொண்டு

பொன்னும் மணியும் பொரு தென்கரை மேல் புத்தூரே

விளக்கம்:

இந்த பாடலில், இருள் தோய்ந்து கருமை நிறத்து கறையுடன் காணப்படும் பெருமானின் கழுத்தின் அருகே, வெண்மை நிறத்துடன் ஒளிவீசும் சந்திரன் இருப்பதாக சொல்லப் படுகின்றது. ஒவ்வொரு கலையாக தேய்ந்து அழியும் நிலையில், தன்னிடம் வந்து சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்து,அவனை மீண்டும் வானில் ஒளியுடன் மிளிர்ந்து உலவ வைத்தவர் சிவபெருமான் அல்லவா. அதன் அடையாளமாகத் தானே, பெருமான் தனது சடைமுடியில் ஒற்றைப் பிறைச் சத்திரனை அணிந்து கொண்டுள்ளார். ஆணவ மலத்தையும் அறியாமையும் இருளுக்கும் கருமை நிறத்திற்கும் ஒப்பிடுவது வழக்கம்.ஞானத்தை வெண்மை நிறத்திற்கு ஒப்பிடுவது வழக்கம். எனவே, இவ்வாறு வெண்மை நிறமும் கருமை நிறமும் அருகருகே இருக்கும் தன்மை, பெருமானின் அருள் இருந்தால், நமது மனதினில் உள்ள அறியாமை நீங்கி ஞானவொளி பரவும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்று விளக்கம் சான்றோர்களால் அளிக்கப் படுகின்றது. துன்னவே=நெருங்கி இருத்தல்; கண்டம்=கழுத்து; கண்டர்=கழுத்தினை உடையவர்; தொன்= தொன்மை;பண்டைய நாளிலிருந்தே புகழ் வாய்ந்த தலமாக இந்த தலம் விளங்கியது என்பதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பொரு=மோதுகின்ற;அரிசில் ஆற்றின் அலைக் கரங்களால் அடித்து வரப்படும் பொன்னும் மணியும், இந்த தலத்தில் உள்ள ஆற்றங்கரைகளில் மோதுகின்றன என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

மின்னல் போன்று ஒளிவீசும் சடை மீதினில், ஒளிவீசும் ஒற்றைப் பிறைச் சந்திரனை அணிந்து கொண்டுள்ளவர் சிவபெருமான். அந்த பிறைச் சந்திரனின் அருகே, பாற்கடலிலிருந்து எழுந்த ஆலகால விடம் தேக்கபப்ட்டதால், கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவன் பெருமான். இவ்வாறு கருமை நிறம் படந்த கழுத்தின் அருகே வெண்மை நிறத்துடன் ஒளிவீசும் சந்திரனை அணிந்துள்ள தன்மை, பெருமானின் அருளினைத் துணையாகக் கொண்டு, உயிர்கள் தங்களது அறியாமையை நீக்கிக் கொண்டு ஞானத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதை உணர்த்துகின்றது. இத்தகைய ஆற்றல் உடைய இறைவன்,பண்டைய நாளிலிருந்தே புகழ் வாய்ந்த தலமாக விளங்கும் அரிசிற்கரைப்புத்தூர் தலத்தில் உறைகின்றான். அன்னங்கள் பொருந்தி விளையாடும் நீர்ப்பரப்பினை உடைய அரிசில் ஆறு, தனது அலைக் கரங்கள் கொண்டு பொன்னையும் மணியையும் மோதி சேர்க்கும் கரைகள் கொண்ட தலம், காவிரித் தென்கரைத் தலமாகிய அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும்.

பாடல் 2:

மேவா அசுரர் மேவெயில் வேவ மலை வில்லால்

ஏவார் எரி வெங்கணையால் எய்தான் எய்தும் ஊர்

நாவால் தன் நாமம் ஓதி நாள் தோறும்

பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே

விளக்கம்:

மேவுதல்=பொருந்துதல்; மேவா அசுரர்=பொருந்தாத, சிவநெறியில், வைதீக நெறியில் பொருந்தாது பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்கள்;மேவெயில்=மேவிய எயில், பொருந்திய கோட்டைகள்; வேவ=தீயினில் வெந்து அழிய; வெங்கணை=வெப்பத்தை வெளிப்படுத்திய அம்பு; அம்பு தீப்பிழம்புகளை வெளிப்படுத்தியது என்று கூறுகின்றார். எரிகணை=அக்னியை தனது நுனியில் கொண்டிருந்த அம்பு; ஏ=அம்பு; எய்தும்=குடி கொண்டிருக்கும்; சுரர் என்றால் உயர்ந்தவர்கள் என்று பொருள். அதனால் தான் தேவர்களை சுரர் என்று குறிப்பிடுவார்கள். பூசுரர் என்றால் நிலவுலகத்தில் உள்ள உயர்ந்தவர்கள்; இங்கே சிவவேதியர்களை குறிப்பிடும் சொல்லாக உள்ளது.

இந்த தலத்தினில் வாழ்ந்த தொண்டர்கள் பெருமானின் திருநாமத்தை நாள்தோறும் ஓதி, பூவும் நீரும் கொண்டு வந்து பெருமானுக்கு அளித்து வழிபட்டதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். ஈசனைப் போற்றி துதித்து மலர்கள் கொண்டு அவனது திருமேனியின் மீது தூவி வணங்குதலும், அவனது திருநாமத்தை ஓதுதலும் நாள்தோறும் நாம் ஆற்றவேண்டிய பணிகளாக கொள்ளவேண்டும் என்பது இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.பெருமானின் திருநாமங்களை ஓதுவதால் நாம் அடையவிருக்கும் பலன்கள் பல தேவாரப் பதிகங்களில் சொல்லப்பட்டுள்ளன. பெருமானின் திருநாமங்களை சொல்லி அவனைப் பணிந்த தொண்டர்கள் பற்றிய குறிப்பும் பல திருமுறைப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது. வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.50.1) எவ்வாறு அவனது திருநாமத்தை குறிப்பிட்டு பெருமானை வழிபட வேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுவதை சித்திப்பது இங்கே பொருத்தமாக இருக்கும். ஒல்லை=வேகம்; ஒல்லையாறி=பரபரப்பு அடங்கிய மனத்துடன், கள்ளம்= வஞ்சனை; வெய்ய சொல்=கடுஞ் சொற்கள்; பரபரப்பு ஏதும் இன்றி அமைதியான ஒன்றிய மனத்துடன், வஞ்சனையான எண்ணங்களையும் கடுமையான சொற்களையும் தவிர்த்து,தூய்மையான சிந்தனையுடன், காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய குற்றங்களையும் அந்த குற்றங்களால் விளையும் வினைகளையும் முழுவதும் அகற்றி, நல்ல முறையில் இறைவனின் திருநாமங்களை மீண்டும் மீண்டும் ஓதி வழிபடும் தனக்கு இறைவன் தக்கவாறு அருள் புரிய வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இறைஞ்சும் பாடல். இவ்வாறு தன்னைக் குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர், நாம் எவ்வாறு இறைவனை வழிபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றார்.

ஒல்லையாறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய

சொல்லையாறித் தூய்மை செய்து காமவினை அகற்றி

நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்றேத்த

வல்லவாறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில், பெருமானின் திருநாமத்தை தினமும் ஓதுவது, பெருமானிடம் நாம் மிகவும் உரிமையுடன் உதவி பெறுவதற்கு வழிவகுக்கும் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். பெருமானே நாம் அனுதினமும் உந்தன் திருநாமத்தை ஓதி வருவதால், உலகத்தவர் பலரும் காணும் வண்ணம் நீ எனக்கு அருள் புரிய வேண்டும் என்று உரிமையுடன் கேட்பதை நாம் உணரலாம். நமது வினைகளின் செயலால், நாள்தோறும் பலவிதமான அல்லல்களை எதிர்கொண்டு, மனம் வருந்தும் நாம் பெருமானின் அருளினை எவ்வாறு பெறுவது என்பதை நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல். பொய்யான கருத்துகளை நமது சிந்தைனையிலிருந்து அகற்றி, வேதனைகளை அளிக்கும் பந்த பாசங்களைத் துறந்து, செம்மையான சிந்தனை உடையவர்களாக வாழும் சான்றோர்களின் சிந்தனையில் உறையும் இறைவன் என்று குறிப்பிடுகின்றார்.

மெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து

செய்யாரானார் சிந்தையானே தேவர் குலக் கொழுந்தே

நைவன் நாயேன் உன்றன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்

வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே

துன்பம் அளிக்கும் உலகியல் பாசங்களிலிருந்து விடுபடாமல், வேதனையில் ஆழ்ந்து இருக்கும் உயிர்கள், பெருமான் பால் அன்பு வைத்து அவனது திருநாமங்களை மீண்டும் மீண்டும் சொல்லி வந்தால், அவனது அருள் பெற்று பாசங்களிலிருந்து விடுபடலாம் என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடல் வலிவலம் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (1.50.3). பேதை=அறியாமையை வளர்க்கும் பாசப் பிணைப்புகள்;

பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதைப் பெருங்கடலை

விண்டு பட்டே வாழமாட்டேன் வேதனை நோய் நலியக்

கண்டு கண்டேன் உன்றன் நாமம் காதலிக்கின்றது உள்ளம்

வண்டு கிண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.53.9) திருஞானசம்பந்தர் நிலவுலகில் வாழும் அடியார்கள் பெருமானின் திருநாமத்தை சொல்லியவாறு, மலர்கள் தூவி இறைவனை போற்றுகின்றனர் என்று கூறுகின்றார். பொதுவாக நிலவுலகத்தில் வாழும் உயிர்கள், சென்ற பல பிறவிகளில் தாங்கள் சேர்த்திருந்த வினைகளின் விளைவை, இன்பமாகவும் துன்பமாகவும் நுகர்ந்து கழிக்கின்றன. பெரும்பாலோர் துன்பங்களை அனுபவிக்கும் போது,தங்களது துன்பங்களை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறைவனை நாடுகின்றனர். ஆனால் எப்போதும் போகத்தில் திளைக்கும் தேவர்களோ,தங்களையும் மறந்து போகத்தில் திளைப்பவர்களாக, இறைவனை நினைப்பதில்லை. இந்த கருத்தினை தான் இங்கே திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மேலும் நிலவுலகத்தில் வாழ்பவர்களாக பெருமானை நினைக்கும் அடியார்களுடன் பிணைந்திருக்கும் ஆணவ மலமும் இறைவனின் அருளால் ஒடுக்கப்படுகின்றது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். நீற்றர்=திருநீற்றினை அணிந்து கொண்ட அடியார்கள்; வாயான்=வாக்கில் விளங்குபவர்; உலகத்தினை உண்ட திருமால் என்று கண்ணாக அவதாரம் எடுத்த போது நடந்த நிகழ்ச்சி ஒன்றினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.எதற்காக மண்ணினை உண்டாய் என்று அன்னை யசோதை கண்ணனை மிரட்டிய போது, கண்ணன் தான் மண்ணினை உண்ணவில்லை என்று தனது வாயினைத் திறந்து காட்டியபோது, அவனது வயிற்றினில் பல உலகங்கள் இருப்பதை யசோதை காண்கின்றாள். இந்த நிகழ்ச்சியை இங்கே ஞாலம் உண்ட மால் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அண்டர்=தேவர்கள்; கொய் மலர்=அன்று பறித்த மலர்கள்; ஏல=பொருந்த; மூலம்=மூல மலமாகிய ஆணவ மலம்;இசைய=பொருந்த;

ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும் அறியாக்

கோலம் அண்டர் சிந்தை கொள்ளார் ஆயினும் கொய் மலரால்

ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும்

மூலம் உண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே

தூங்கானை மாடம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.59.5) திருஞானசம்பந்தர் விமலனாகிய பெருமானின் திருநாமங்களை இடைவிடாது சொல்லி வணங்கினால் முக்தி நிலை அடையலாம் என்று கூறுகின்றார். உலகத்து உயிர்கள் மீதும் உலகத்து பொருட்கள் மீது கொண்டுள்ள மயக்கம் தொடர்ந்து இருக்கச் செய்யும் வாழ்க்கைக்கு வழி வகுக்கும் பிறவியும், ஒரு நாள் அழிந்துவிடும் என்பதால் நிலையற்ற தன்மை கொண்டவை; எனவே பல வகையான பிறப்புகள் எடுப்பதற்கு காரணமாக உள்ள பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு சிவனது உலகம் சென்று அடையவதற்கு விருப்பம் கொண்டவர்களாக விளங்கும் மனிதர்களே, நீங்கள் மிகவும் அதிகமான முயற்சி மேற்கொண்டு, பல்வேறு நெறிகளில் ஈடுபட்டு ஏதும் செய்ய வேண்டிய அவசியமில்லை;இயற்கையாகவே மலங்களின் சேர்க்கை இல்லாமல் தூயவனாக திகழும் பெருமான் உறையும் இடம் சென்று, அவனது திருநாமங்கள் பலவற்றை சொல்லி,இடைவிடாது அவனது திருவடிகளை புகழ்ந்து பணிந்து வணங்கினால் போதும். எனவே நமது துயர்களைத் தீர்க்கும் தலமாகிய கடந்தை நகர் சென்று ஆங்குள்ள அகன்ற தூங்கானை மாடமாக விளங்கும் திருக்கோயில் சென்று, அங்கே உறையும் பெருமானைத் தொழுது நீங்கள் விரும்பும் பயன் அடைவீர்களாக என்று நமக்கு அறிவுரை கூறும் பதிகம். தீர்மை=தீர்வு; ஆறு=வழி; ஓவாது=இடைவிடாது; வியல் தீர=பலவகையான துன்பங்கள் படுதல், பல வகையான பிறப்புகள் எடுத்தல்; உயர் தீர=ஓங்கி உயர்ந்து; மரணம்=அழிவு;.

மயல் தீர்மை இல்லாத தோற்றமிவை மரணத்தொடு ஒத்தொழியுமாறு ஆதலால்

வியல் தீர் மேலுலகம் எய்தல் உறின் மிக்கொன்றும் வேண்டா விமலன் இடம்

உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல் செய்

துயர் தீர் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே

பெருமானின் திருநாமத்தை சொல்லும் அடியார்கள், அவனது திருநாமத்தை மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதிலும் மிகுந்த விருப்பம் கொண்டவர்களாக இருக்கும் தன்மை, தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பாடல் பதிகம் ஒன்றினில் (1.60.10) ஞானசம்பந்தரால் உணர்த்தப் படுகின்றது. பெருமான் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக, தன்னை உருவகித்து, தனது நிலையினை பறவைகளை தூதாக அனுப்பி, பெருமானுக்கு உணர்த்த நினைக்கும் தலைவியின் முயற்சிகள் இங்கே வெளிப்படுகின்றன. பல விதமான பறவைகளை தூதுக்கு அனுப்பியும் பயன் ஏதும் இல்லாததைக் கண்ட சம்பந்த நாயகி மிகவும் வருத்தம் அடைகின்றாள். குறைந்தது, பெருமானின் திருநாமத்தை எவரேனும் சொல்ல, தான் அதனைக் கேட்டால் தனது துன்பம் ஓரளவாது குறையும் என்ற நம்பிக்கையில் கிளியிடம் விடுக்கும் வேண்டுகோள் இந்த பாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருநாமத்தைச் சொல்வதானால், கிளிக்கு தேனும் பாலும் தருவதாக ஆசை காட்டுகின்றாள். தனது தலைவி பலமுறை சொல்லக் கேட்ட இறைவனின் திருநாமங்களை சொல்வது கிளிக்கு மிகவும் எளிதான செயல் தானே. தருவன் என்ற சொல்லோடு மொய்ப் பவளம் தரளம் ஆகிய சொற்களைச் சேர்த்தும் பொருள் கொள்ளலாம். உண்பதற்கு தேனும் பாலும் அளிப்பது மட்டுமன்றி, இறைவனின் நாமத்தைச் சொல்லும் கிளிக்கு அழகு சேர்க்கும் வகையில் முத்தும் பவளமும் இணைத்து கட்டப்பட்ட மாலையும் சூட்டி அழகு பார்க்கத் துடிக்கும் நாயகியை நாம் இங்கே உணரலாம்., இறைவனின் பேரில் அவள் கொண்டுள்ள காதலின் சக்தி தான் என்னே.

சிறை ஆரும் மடக்கிளியே இங்கே வா தேனொடு பால்

முறையாலே உணத் தருவன் மொய் பவளத்தொடு தரளம்

துறை ஆரும் கடல் தோணிபுரத்து ஈசன் துளங்கும் இளம்

பிறையாளன் திருநாமம் எனக்கு ஒரு கால் பேசாயே

இவ்வாறு சம்பந்தர் கிளியை வேண்டுவது நமக்கு மணிவாசகரின் திருத்தசாங்கம் பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. மணிவாசகரும்,கிளியை நோக்கி, இறைவனை குறிக்கும் சொற்களாகிய எம்பெருமான், தேவர் பிரான், ஆரூரன், செம்பெருமான் ஆகிய சொற்களை சொல்லுமாறு வேண்டுகின்றார். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு, தலைவனது பெயரைக் கேட்ட மாத்திரத்தில்,. அவனுடன் கூடி இணைந்தது போன்று மகிழ்ச்சி தோன்றுவது இயற்கை தானே. அதனால் தானே இறைவன் பால் காதல் கொண்டுள்ள அடியார்கள், இறைவனின் நாமங்களை தாங்கள் கேட்டு மகிழும் வண்ணம் கூறுமாறு மற்றவர்களை வேண்டுகின்றனர். வெண்மலரான் என்று பிரமனையும் பாற்கடலான் என்று திருமாலையும் குறிப்பிட்டு, அவர்கள் இருவரும் எங்களது தலைவனே, தேவர்கள் தலைவனே என்று அழைப்பதை குறிப்பிட்டு, பெருமானின் திருநாமத்தை எவரெல்லாம் விருப்பமுடன் சொல்கின்றனர் என்றும் இங்கே கூறுகின்றார்.

ஏரார் இளம் கிளியே எங்கள் பெருந்துறைக் கோன்

சீரார் திருநாமம் தேர்ந்து உரையாய் – ஆரூரன்

செம்பெருமான் வெண் மலரான் பாற்கடலான் செப்புவ போல்

எம்பெருமான் தேவர்பிரான் என்று

கோளிலி தலத்தின் மீது அருளிய பாடலில் (1.62.1) பெருமானின் திருநாமங்களை தினமும் நாம் தினமும் சொல்வதாலும் கேட்பதாலும், நாமும் நமது சுற்றங்களும் இன்பமாக வாழ்வோம் என்றும் நமது மனதில் மாறுபடும் எண்ணங்களால் ஏற்படும் குழப்பங்களை தீர்த்து தெளிவான சிந்தனையை நமக்கு இறைவன் அருள்வான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். எனவே, மேலும் நாட்களை வீணாக கழிக்காமல், பெருமானுக்கு அன்பராக நாம் இப்பொழுதே மாறவேண்டும் என்று உணர்த்துகின்றார். கோள்=மாறுபாடு; மட நெஞ்சம்=அறியாமையில் ஆழ்ந்திருக்கும் மனம்.

நாளைய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே

ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம்

கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்

கோளாய நீக்கும் அவன் கோளிலி எம்பெருமானே

நாம் வாழ்வினில் உய்வினை அடைய வேண்டும் என்று விரும்பினால் நம் பெருமானின் திருநாமங்களை ஓதவேண்டும் என்று அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.96.03) திருஞானசம்பந்தர் சொல்லிக் கொடுக்கின்றார். நீதி=நியதி, வழிபாட்டு முறைகள்; நீதி பேணுதல்=வழிபாட்டு முறைகளில் ஒழுகுதல்; பெருமானைக் கண்டு தொழுத பின்னர் அவனது திருநாமங்களை சொல்வது தானே முறை.

நீதி பேணுவீர்

ஆதி அன்னியூர்

சோதி நாமமே

ஓதி உய்ம்மினே

அனேகதங்காவதம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.05.03) பெருமானின் திருநாமங்களை சொல்லாத நாவினை, நா என்று அழைக்கலாமா என்ற கேள்வியை திருஞானசம்பந்தர் எழுப்புகின்றார். எரிவாயது=பற்றி எரியும் தீயினைத் தனது வாயாக (முனையில்) கொண்டுள்ள அம்பு;வில்லி=வில்லினை உடையவன்; கொம்பின் நேர்=பூங்கொம்பினைப் போன்று மெலிந்த;

செம்பின் ஆரும் மதில் மூன்று எரியச் சினவாயதோர்

அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம்

கொம்பின் நேர் இடியாளொடும் கூடிக் கொல்லேறு உடை

நம்பன் நாமம் நவிலாதன நா எனலாமே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.7.6) திருஞானசம்பந்தர், பெருமானின் திருநாமத்தைச் சொல்லி, அவனது புகழினை குறிப்பிடும் அடியார்களின் வினைகள் உடனே தீர்க்கப்படும் என்று கூறுகின்றார். பெருமானின் திருநாமங்கள், அவனது பண்பையும் அவனது கருணைச் செயல்களையும் குறிப்பிடுவதால், நாம் தனியாக பெருமானைப் புகழ வேண்டிய அவசியம் இல்லை; பெருமானின் விரிந்த புகழினை அறியாதவர்களாக நாம் இருந்தாலும் கவலை கொள்ளவேண்டாம்; அவனது நாமங்களைச் சொல்வதே, அவன் புகழினை நாம் பாடுவதாக மாறிவிடும். மைந்தர்=வலிமை வாய்ந்தவர்; பொதுவாக பிச்சை ஏற்பவர்கள், நாணம் கொண்டு, தங்களது உடல் குறுக பிச்சை ஏற்பதை நாம் காண்கின்றோம். பிச்சை ஏற்றாலும் அவர்கள் முழு மனதுடன் அந்த செயலில் ஈடுபடுவதில்லை. தங்களது இயலாமை காரணமாக, வேறுவழி இல்லாமல் பிச்சை எடுப்பதால், அவர்கள் நாணம் கொள்கின்றனர். ஆனால் பெருமானோ தனது இயலாமை காரணமாக பலி ஏற்பதில்லை; பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலங்களை, பிச்சையாக இறைவனிடம் அளித்து,வாழ்வினில் உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், பெருமான் பிச்சை ஏற்கின்றார். எனவே தான் அவர் நாணம் கொள்ள வேண்டிய அவசியமின்றி, பலி ஏற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

அரவம் பூண்பர் அணியும் சிலம்பு ஆர்க்க அகம் தொறும்

இரவின் நல்ல பலி பேணுவர் நாணிலர் நாமமே

பரவுவார் வினை தீர்க்க நின்றார் திருவாஞ்சியம்

மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.33.4) திருஞானசம்பந்தர், நாக லோகத்தவர், வித்தியாதரர் மற்றும் தேவர்கள் திருநள்ளாறு தலம் வந்தடைந்து, ஆங்குள்ள குளத்தில் நீராடியபின்னர், பெருமானின் திருநாமத்தை மறவாமல் நினைத்து சொல்கின்றனர் என்று கூறுகின்றார்.கொக்கு=கொக்கிறகினைச் சூடிக் கொண்டவர், அரவர்=பாம்பினை அணிந்தவர், நாக லோகத்தவர்; கூன் மதியர்=வளைந்த பிறைச் சந்திரனை சூட்டிக் கொண்டவர்; கோபர்=கோபம் உடையவர்; திருமேனிச் செக்கர்=செவ்வானம் போன்று சிவந்த திருமேனியை உடையவர்; தடம்=குளம், நீர்நிலை;விஞ்சையர்=கந்தருவர், வித்தியாதரர்; நக்கர்=குறைந்த அடிகளை உடைய சிவபெருமான்;

கொக்கரவர் கூன்மதியர் கோபர் திருமேனிச்

செக்கர் அவர் சேருமிடம் என்பர் தடம் மூழ்கி

புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி

நக்கு அரவர் நாம் நினைவெய்திய நள்ளாறே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் திருநள்ளாறு தலத்தில் வாழும் அந்தணர்கள் நாள்தோறும் வேள்விகள் செய்தும் வேதங்கள் ஓதியும் பெருமானின் திருநாமங்களையும் அந்த நாமங்களின் சிறப்பையும் பலருக்கும் உணர்த்தி வருகின்றனர் என்று கூறுகின்றார். நெடுந்தகை=உயர்ந்த குணங்களை உடையவர்; நீண்மலை=நீண்ட கயிலாய மலை; பாவை பாதியர்=அர்த்தநாரீசுவரர், மிகவும் அழகான சொல்லாட்சி; பராபரர்=மேலானவர்க்கும் மேலானவர்;பரம்பரர்=பரமாகவும் அபரமாகவும் இருப்பவர்; பரம் மற்றும் அபரம் ஆகிய இரண்டு சொற்கள் சேர்ந்தவை பரம்பரம் என்று இணைகின்றன. முதலும் முடிவும் என்று பொருள். முதலாகவும் முடிவாகவும் இருக்கும் பெருமானை பரம்பரர் என்று குறிப்பிடுகின்றார்.

நீதியர் நெடுந்தகையர் நீண்மலையர் பாவை

பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை

வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும்

ஓதி அரன் நாமம் உணர்த்திடும் நள்ளாறே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.41.3) திருஞானசம்பந்தர், நாம் நாள்தோறும் பெருமானின் திருநாமங்களைச் சொல்லியும்,அவனது திருவடிகளில் தூவ மலர்களை சுமந்து சென்றும், அவனது திருநாமங்களை மற்றவர் சொல்லிக் கேட்டும், இறைவனை வழிபடவேண்டும் என்றும்,அவ்வாறு செய்வதால் நமக்கு பல நன்மைகள் விளையும் என்றும் கூறுகின்றார். சாநாள்=இறக்கும் நாள்; உலகில் ஒருவர் எவ்வளவு நாட்கள் இருப்பர், என்று இறப்பர் என்பதை எவரும் அறிய முடியாது என்பதால் ஒருவன் தாமதம் ஏதும் செய்யாமல், இப்போதிலிருந்தே பெருமானை நாள்தோறும் வழிபடத் தொடங்க வேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. தனது நெஞ்சத்திற்கு அறிவுரை சொல்வது போல், சம்பந்தர் நமக்கு அறிவுரை சொல்லும் பாடல்.

நீ நாளும் நெஞ்சே நினை கண்டாய் யார் அறிவார்

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே

பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப

நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே

பெருமானின் திருநாமத்தை சொல்லாத நாக்கினை உடையவர்கள், நாவிருந்தும் ஊமையராக கருதப் படுவார்கள் என்ற கருத்தினில், ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே என்று ஆமாத்தூர் பதிகத்து (2.44.7) பாடல் ஒன்றனில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்,

மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை

வேறாக நில்லாத வேடமே காட்டினான்

ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்

கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

ஆமாத்தூர் தலத்துப் பதிகத்தின் (2.44.8) பாடலில் சம்பந்தர், சிவபெருமானின் புகழை கேட்காத காதுகள், காதுகளே அல்ல என்று கூறுகின்றார்.தாள்=திருவடி. நம்பன்= விருப்பத்திற்கு உரியவன்; ஆளானார்=அடிமையாக மாறியவர்கள். சிவபிரானது திருநாமத்தையும் அவனது புகழினையும் கேட்ட அடியார்கள் அவன் மீது பெருவிருப்பு கொண்டு அவனுக்கு அடியவர்களாக மாறி, அவனைப் புகழ்ந்து வணங்கினார்கள் என்று இங்கே கூறுகினார். அவ்வாறு மாறாத மனிதர்களின் செவிகள், செவிட்டுச் செவிகள் என்று சாடுவதை நாம் உணரலாம். சிவபிரானை வழிபடாத மனிதர்களை ஆளாகார் (மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில்) என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் உணர்ந்தோம். அதே கருத்து உடன்மறையாக சம்பந்தர் கூறுவதை நாம் இங்கே காணலாம். சிவபெருமானைத் தொழும் அடியார்களை ஆளானார் என்று கூறுகின்றார். இதன் மூலம், சிவபிரானைத் தொழாத மனிதர்கள் ஆளாகாதார் என்பது உணர்த்தப் படுகின்றது.

தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன் தன்

நாள் ஆதிரை என்றே நம்பன் தன் நாமத்தால்

ஆளானார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்

கேளார் செவி எல்லாம் கேளாச் செவிகளே

பெருமானின் திருநாமங்கள் நமக்கு பல நன்மைகள் பயப்பவனாக இருப்பதால் நல்நாமம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது திருநணா தலத்தின் (தற்போது பவானி என்று அழைக்கப்படும் தலம்) மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (2.72.7). தாருகவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து எழுப்பிய காட்டு யானை, என்பதால் காடுகளில் திரியும் யானை என்று இங்கே உபசார வழக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. அரை=இடுப்பு; ஊன்=தசை; பெருமான் தனது உணவுத் தேவைக்காக பிச்சை ஏற்பதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் உபசார வழக்காக, கையினில் கபாலத்தை ஏந்திய வண்ணம் வீடுவீடாக செல்வதால் பிச்சை ஏற்கின்றார் என்றும் அதனை உண்கின்றார் என்றும் சொல்லப் படுகின்றது. தான் பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பிச்சை ஏற்பவர் போல் வருவதன் நோக்கத்தை புரிந்து கொள்ளும் ஆன்மாக்கள், தங்களது மலங்களை தான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தினில் இட்டு உய்வினை அடைவதை பெருமான் பெரிதும் விரும்புகின்றான் என்ற செய்தியே இங்கே சொல்லப்படுகின்றது. அனைத்து உயிர்களின் உண்மையான ஆசை,பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, இறைவனின் திருப்பாதங்களை சென்று அடைய வேண்டும் என்பதே ஆகும். உயிர்களின் இந்த விருப்பத்தை விடவும், உயிர்கள், தங்களது மலங்களையும் வினைகளையும் முற்றிலுமாக கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருமான் கொண்டுள்ள விருப்பம் மிகவும் அதிகமானது. எனவே தான் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் அளிக்கும் மூன்று மலங்களாகிய பிச்சையை பெருமான் பெரிதும் உகந்தான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். நானாவிதத்தால் நாமம் ஏத்தி என்ற தொடருக்கு, நூறு, ஆயிரம், இலட்சம், கோடி என்று பல்வேறு கணக்கினில் பெருமானின் நாமத்தை சொல்லும் பழக்கம் குறிப்பிடப்படுகின்றது என்றும் பொருள் கொள்ளலாம்.

கானார் களிற்று உரிவை மேல் மூடி ஆடரவம் ஒன்று அரை மேல் சாத்தி

ஊனார் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்

நானாவிதத்தால் விரதிகள் நல் நாமமே ஏத்தி வாழ்த்தத்

தேனார் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திருநணாவே

மாந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.110.5) திருஞானசம்பந்தர், பெருமானின் திருநாமங்களைச் சொல்வதே தவம் என்று உணர்த்துகின்றார். பாங்கு=முறை; சிவ ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள முறை; ஆவி=நிவேதனம்; உடலை வருத்தி, கடுமையான தவங்கள் மேற்கொண்டு அடையக்கூடிய பலன்களை நாம் எளிதில் அடையும் வழியினை நமக்கு திருஞானசம்பந்தர் இங்கே சொல்லிக் கொடுக்கின்றார். காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள மாந்துறை தலத்தினில் உறையும் இறைவனை, முறையாக சிவ ஆகமங்களில் சொல்லிய வண்ணம் வழிபட்டு, தூபம் தீபம் நிவேதனம் காட்டியும் தோத்திரங்கள் சொல்லியும் அவனது திருவடிகளில் மலர்கள் தூவியும் அவனது திருநாமங்களைச் சொல்லும் அடியார்கள் மேலான தவங்களை செய்த பலனை அடைவார்கள்.

கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவிடை மலர் உந்தி

ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைப்

பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தித்

தாங்குவார் அவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே

எண்ணற்ற நாமங்களைச் சொல்லி தேவர்களால் வணங்கப்படும் இறைவன் சிவபெருமான் என்று புகலி (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று)தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (3.07.05) திருஞானசம்பந்தர் கூறுகின்றார், கோமள மாது=இளமையும் அழகும் பொருந்திய உமாதேவி;அந்தண்=அழகும் குளிர்ச்சியும் பொருந்திய: இங்கே வானவர்கள் இலட்சார்ச்சனை செய்து இறைவனை வழிபடுவதாக சொல்லப் படுகின்றது.

சாம நல்வேதனும் தக்கன் தன் வேள்வி தகர்த்தானும்

நாம நூறாயிரம் சொல்லி வானோர் தொழு நாதனும்

பூ மல்கு தண்பொழில் மன்னும் அந்தண் புகலிந் நகர்க்

கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே

கருக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.21.9) பெருமானின் திருநாமத்தை நாம் மனதினில் நினைத்து வழிபடுவதே நமக்கு நன்மையைப் பெற்றுத் தரும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

பூமகனும் திசைமுகன் தானும் பொற்பமர்

வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி

ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி

நாமம் மனனினில் வர நினைதல் நன்மையே

பெருமானின் திருநாமம் நமச்சிவாய என்று நமச்சிவாயப் பதிகத்தின் (3.49) அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், நமச்சிவாயத் திருநாமம் நமக்கு பெற்றுத் தரும் நன்மைகளை பட்டியல் இடுகின்றார். நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்கும் பெருமானின் திருநாமம் நமக்கு நன்னெறி காட்டுமென்று முதல் பாடலிலும், நம்பிக்கை வைத்து இறைவனின் திருநாமத்தை சொன்னால் தேனை உட்கொண்டது போன்ற இனிய உணர்வைத் தரும் என்று இரண்டாவது பாடலிலும், முறையாக இறைவனின் திருநாமத்தை தியானித்தால் தேவர்களாக மாறும் தகுதியினைப் பெறுவோம் என்று மூன்றாவது பாடலிலும், நியமத்துடன் பெருமானின் திருநாமத்தை நினைக்கும் அடியார்களை அண்டி இருப்போரை நெருங்கவும் இயமன் அஞ்சுவான் என்று நான்காவது பாடலிலும், கொலைத் தொழில் புரியும் கொடியவர்களாக இருப்பினும் பெருமானின் திருநாமத்தை சொல்லுவோர் தங்களது தீங்குகள் நீங்கப் பெறுவார்கள் என்று ஐந்தாவது பாடலிலும், மந்தரமலை போன்று மிகவும் அதிகமான பாவங்கள் செய்தவர்களும் பெருமானின் திருநாமத்தை உச்சரித்து தங்களது வினைகளை போக்கிக் கொள்ளலாம் என்று ஆறாவது பாடலிலும், ஏழு நரகங்கள் புகுவிக்கும் அளவு பாவங்கள் செய்தோரும் பெருமானின் திருநாமத்தை சொன்னால் உருத்திர கணத்தில் ஒருவராக மாறலாம் என்று ஏழாவது பாடலிலும், அரக்கன் இராவணன் உய்வதற்கு சொல்லிய நாமம் பெருமானின் திருநாமம் என்று எட்டாவது பாடலிலும், பெருமானின் திருவடி மற்றும் திருமுடியைத் தேடிக் களைத்த திருமாலும் பிரமனும் ஓதி உய்ந்தது நமச்சிவாய திருநாமம் என்று ஒன்பதாவது பாடலிலும் குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் பெருமானின் திருநாமத்தை அனைவரும் சொல்லும் வண்ணம் தூண்டும் அழகிய பதிகம்.

அரனின் திருநாமம் மிகவும் அதிகமாக ஒலித்தால் உலகத்தின் துயரங்களும் உலகத்தில் வாழும் உயிர்களின் துயரமும் ஒழிந்துவிடும் என்று திருப்பாசுரம் பதிகத்தின் முதல் பாடலில் (2.54.1) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வேதநெறி தழைத்து ஓங்கவும் சைவநெறி நாட்டில் தழைத்து ஓங்கவும், அவதாரம் செய்த திருஞானசம்பந்தர், அனல் வாதத்தில் சமணர்களை வெற்றி கொண்ட பின்னர், புனல் வாதம் செய்த போது, பாடிய பாசுரத்தின் முதல் பாடலில்,பாண்டிய நாடும் பாண்டிய நாட்டு மக்களும் சிறப்பாக வாழவேண்டும் என்று இறைவனை வேண்டும் பாடலில், வேள்விகளை வளர்க்கும் அந்தணர்கள் வாழ வேண்டும் என்றும், வேள்விகள் செய்வதற்கு உரிய பொருட்களைத் தந்து உதவும் பசுவினங்கள் வாழ வேண்டும் என்றும், வேள்வியில் வழங்கப்படும் ஆகுதிகளை பெறுகின்ற தேவர்கள் வாழ வேண்டும் என்றும், நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும், நாட்டில் நீர்வளம் பெருகி நாடும் நாட்டின் மக்களும்,நாட்டின் வேந்தனும் ஓங்கி வளர வேண்டும் என்றும் பாடும் பாடல். நாட்டில் தீய சக்திகள் அனைத்தும் அழிந்து, எங்கும் சிவன் நாமமே ஒலிக்கப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தையும் இந்த பாடலில் (3.54.1) தெரிவிக்கின்றார்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே

சூழ்க வையகமும் துயர் தீரவே

கோகரணம் தலம் செல்லும் மகளிர், ஆங்குள்ள தீர்த்தத்தில் பெருமானின் திருநாமத்தை சொல்லியவாறு மூழ்கியெழ, கொல்லும் தன்மை வாய்ந்த கடுமையான விடநோய்களும் நீங்கப்பெற்று நலமடைகின்றனர் என்று அந்த தலதின் மீது அருளிய பாடலில் (3.79.7) திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.திருத்தம்=தீர்த்தம்; கல்லவடம் மொந்தை குழல் தாளம் கொக்கரை ஆகிய இசைக்கருவிகளுக்கு ஏற்ப பெருமான் நடமாடுகின்றார் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.

கல்லவட மொந்தை குழல் தாள மலி கொக்கரையர் அக்கு அரை மிசை

பல்ல பட நாகம் விரிகோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே

நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக

கொல்ல விடநோய் அகல்தரப் புகல் கொடுத்து அருளும் கோகரணமே

நாமம் என்ற சொல்லுக்கு புகழ் என்ற பொருளும் பொருந்தும். மதுரையில் சமணர்களுடன் நடந்த அனல் வாதத்தின் போது, பெருமானைக் குறித்து சொல்லப்படும் புகழ்ச் சொற்கள் உண்மை எனில், தான் நெருப்பினில் இடும் பதிக ஏடு பழுதடையாமல் இருக்கட்டும் என்று சொல்லியவாறு, போகமார்த்த பூண்முலையாள் என்று தொடங்கும் பதிக ஏட்டினை நெருப்பினில் திருஞான சம்பந்தர் இடுகின்றார். அந்த பதிக ஏடு இவ்வாறு நெருப்பினில் இட்ட போதிலும், எந்த விதமான சேதமும் அடையாமல் இருந்த தன்மை சிவபெருமானின் பெருமையையும் சைவ சமயத்தின் உயர்வையும் உணர்த்தியது. இவ்வாறு பதிக ஏட்டினை நெருப்பினில் இடும்போது திருஞான சம்பந்தர் அருளிய பதிகம் தளிரிள வளரொளி என்று தொடங்கும் பதிகமாகும் (3.87). இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நள்ளாறர் தம் நாமமே எரியிடில் இவை பழுதிலை மெய்ம்மையே என்ற தொடர் உடையதாக விளங்குகின்றன. இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். வனம்=அழகு;

தளிர் இள வளரொளி தனது எழில் தருதிகழ் மலைமகள்

குளிர் இள வளரொளி வனமுலை இணை அவை குலவலின்

தளிர் இள வளரொளி மருவு நள்ளாறர் தம் நாமமே

மிளிர் இள வளரெரி இடில் இவை பழுதிலை மெய்ம்மையே

நமது நோயினைத் தீர்க்கும் மருந்தாகவும், அச்சத்தைப் போக்கும் மந்திரமாகவும், மறுமையில் நல்ல கதி அடைவதற்கு உதவுவதும், பல விதமான நன்மைகளை அருளுவதும், தீர்க்கமுடியாத கடும் துயரினையும் தீர்க்கும் வல்லமை வாய்ந்ததும் ஆகிய திருநாமம் பெருமானின் திருநாமம் என்று திருநெல்வேலி பதிகத்தின் முதல் பாடலில் (3.92.1) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். எனவே அந்த திருநாமத்தை நாம் மனதினில் சிந்தனை செய்யவேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறி அவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்

செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே

கொடிய சூலை நோய் தன்னை வருத்தியபோது அந்த நோயினைத் தீர்த்துக் கொள்வதற்காக திருவதிகை தலம் வந்தடைந்து பெருமானின் சன்னதி முன்னே கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தினை அப்பர் பிரான் பாடுகின்றார். அப்போது, சைவ சமயத்தை விட்டகன்று சமணசமயம் சார்ந்தது தான், தான் செய்த பெரிய தவறு என்பதை அவர் உணர்கின்றார். தான் செய்த தவற்றினை உணர்ந்து வருந்தி, இறைவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டும் அப்பர் பிரான், இனியும் அத்தகைய தவற்றினை தான் செய்யமாட்டேன் என்றும் தான் தனது வாழ்க்கையை இனி எவ்வாறு நடத்துவேன் என்பதையும் இங்கே விளக்குகின்றார். துன்பம் ஏற்பட்டபோது இறைவனின் அருளை வேண்டுவதும் அந்த துன்பம் துடைக்கப்பட்ட பின்னர், இறைவனை மறப்பதும் மனித இயல்பு. அந்த மனித இயல்பிற்கு மாறாக, தான் நலமாக இருக்கும் தருணத்திலும், இடர்ப்படும் நேரங்களிலும், அதாவது எப்போதும், உன்னையே நினைத்து இருப்பேன் என்று இறைவனிடம் அப்பர் பிரான் கூறும் பாடல் (4.1.6). இதற்கு ஏற்றாற்போல் தனக்கு பல இடர்பாடுகளை சமணர்கள் செய்தபோதும் கலக்கம் ஏதும் அடையாமல் அவர் சிவபிரானையே நினைந்து இருந்தார். சமணர்கள் செய்த பல சூழ்ச்சிகளில் இருந்து சிவபெருமான் அருளால் தப்பிய அப்பர் பிரான் தனது எஞ்சிய வாழ்நாளில், பல தலங்கள் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி நாடெங்கும் சைவ சமய உணர்வினை பரப்பி, அதன் மறுமலர்ச்சிக்கு அடிகோலினார்.

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்

நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என் நாவில் மறந்தறியேன்

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறுசூலை தவிர்த்து அருளாய்

அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

இறக்கும் தருவாயில், பெரும்பாலோருக்கு புலன்கள் தங்களது செயலிழந்து நிற்க, மெல்ல மெல்ல உணர்வுகள் இழக்கும் நிலை ஏற்படும். நமது உடல் பூரண நலத்துடன் இருக்கையிலே, நாம் சிவபிரானை நினைப்பதற்கு அவனது அருள் தேவைப் படுகின்றது. அவ்வாறு இருக்கையில், நமது இறுதிக் காலத்தில், உடலும் மனமும் நம்முடன் ஒத்துழைக்காத போது, இறைவனை நினைப்பதென்பது மிகவும் அரிதான செயலாக அனைவர்க்கும் மாறிவிடுவது இயற்கையே. அதனால் தான், உடலும் மனமும் தனக்கு வஞ்சனை செய்யும் இறுதி நாளில், இறைவனின் நினைவு தோன்றவேண்டும் என்றால் ஐயாறன் அருள் வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல் (4.27.3) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கயம்=ஆழமுடைய நீர்நிலை: வான் சுழி=பெரிய சுழி: நீர்நிலை என்பதால் சுழி என்று இறுதி கால நிலையை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

நெஞ்சம் என்பதோர் நீள் கயம் தன்னுள்ளே

வஞ்சம் என்பதோர் வான்சுழிப் பட்டு நான்

துஞ்சும் போழ்து நின் நாமத் திருவெழுத்து

அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே

பெருமானின் திருநாமத்தை மீண்டும் மீண்டும் தனது நாவினால் சொல்லவே, அந்த அஞ்செழுத்து மந்திரம் சிறந்த படைக்கலமாக மாறி, தன்னை பல துன்பங்களிலிருந்து மீட்டது என்று அப்பர் பிரான் தில்லைத் தலத்தின் மீது அருளிய பாடலில் (4.81.8) குறிப்பிடுகின்றார். இடைக்கலம் அல்லேன்=இடையில் நிறுத்தாமல் இருப்பேன். கல்லுடன் பிணைக்கப்பட்டு நடுக்கடலில் தள்ளப்பட்ட அப்பர் பிரான் இறைவனின் கருணையால் கடலில் மூழ்காமல் கரையேறுகின்றார். அந்த தருணத்தில் சமண சமயத்தவர்கள் தனக்கு இழைத்த பல சூழ்ச்சிகளும், அந்த சூழ்ச்சிகளிலிருந்து சிவபிரான் காப்பாற்றிய தன்மையும் அப்பர் பிரானுக்கு நினைவுக்கு வந்தது போலும். அப்போது அவரைக் காப்பாற்றியது அஞ்செழுத்து மந்திரம் தானே. அந்த மந்திரம் படைக்கலம் போல் தன்னைக் காத்ததை பெருமையுடன் இங்கே சொல்லிக் கொள்கின்றார். இடைவிடாது உனது அன்பராக இருப்பேன் என்று சிவபிரானிடம் கூறும் அப்பர் பிரான் வேறொரு செய்தியையும் இறைவனுக்குத் தெளிவுபடுத்துகின்றார். புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி வழுவாது இருக்க வரம் வேண்டியவர் அல்லவா. மறுபிறப்பு என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட சைவராகிய அவருக்கு தனது மறுபிறப்பு எந்த வகையான பிறப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது. இந்த பிறப்பினில் நாம் செய்த வினைகளுக்கு ஈடாக உள்ள உடலுடன் அடுத்த பிறவியில் நமது உயிர் இறைவனால் பொருத்தப் படுகின்றது. தாவரம், நீரில் வாழ்வன, ஊர்வன, நடப்பன, பறப்பன, மனிதர், தேவர் என்ற ஏழுவகையான பிறப்புகளில் எதுவாக இருந்தாலும், அந்த பிறப்பிலும் தான் இறைவனுக்கு அடிமையாக இருப்பேன் என்று உறுதியாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்

இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்

துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்து உன்

அடைக்கலம் கண்டாய் அணித் தில்லைச் சிற்றம்பலத்து அரனே

தனது தாயின் வயிற்றினில் கருவாக இருந்த போதே பெருமானின் திருப்பாதங்களைத் தொழும் கருத்து உடையவனாக தான் இருந்தேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் அப்பர் பிரான், உலகினில் பிறந்த பின்னர் பெருமானது அருளினால் அவனது திருநாமங்களை தெரிந்து கொண்டதாக குறிப்பிடும் பாடல் திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (4.94.6). நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே என்று நமச்சிவாயத் திருப்பதிகத்தில், நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் நாக்கினை புகழ்ந்து கூறும் அப்பர் பிரான், இங்கே நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் வாயினை திருவாய் என்று அடைமொழியுடன் சிறப்பிக்கின்றார். பொலிதல் என்றால் அழகுடன் விளங்குதல் என்று பொருள். சிவபிரானின் நாமத்தை நாம் சொல்வதால் நமது வாய் அழகு பெற்று விளங்கும் என்ற கருத்தும் இங்கே கூறப்படுகின்றது. நாம் எப்படி திருநீறு இட்டுக் கொள்வது என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார். சிவாய நம என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு, திருநீறு அணிந்து கொள்ள வேண்டும் என்பதே அப்பர் பிரான் நமக்கு சொல்லும் அறிவுரை.

கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்

உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது அருளால்

திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன்

தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே

பெருமானின் திருநாமத்தின் பெருமையை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால் தான், அப்பர் பிரான், தான் சாகும் நேரத்திலும் நமச்சிவாய என்று பெருமானின் திருநாமத்தை சொல்வற்கு பெருமான் உதவ வேண்டும் என்று அப்பர் பிரான் நாகைக் காரோணம் பதிகத்தின் ஒரு பாடலில் (4.103.3)கூறுகின்றார். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்த எழுந்த தீப்பிழம்பில் தான் அழிந்து பட்டாலும், மன்மதன் எந்த நோக்கத்திற்காக இறைவனின் தவத்தினை கலைக்க முயற்சி செய்தானோ, அந்த நோக்கம் நிறைவேறியது: அதாவது உமையம்மையை இறைவன் திருமணம் செய்து கொண்டார் என்று உணர்த்தும் பொருட்டு, திருமணச் சடங்குகளில் நடைபெறும் வேள்வி இங்கே குறிப்பிடப்படுகின்றது. சங்கரன் என்றால் நன்மைகளைச் செய்பவன் என்று பொருள். உயிரின் உண்மையான ஆசை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைவது தானே. இறக்கும் தருவாயில் உயிர்,இறைவனை நினைந்து அதன் மூலம் உயிர் உய்வினை அடையும் என்றால், அதனினும் பெரிய உதவி என்ன இருக்க முடியும். அதனால் தான் இத்தகைய பெரிய உதவியினைப் புரிய வேண்டி சங்கரனே என்று இங்கே அப்பர் பிரான் அழைக்கின்றார்

தூமென் மலர்க்கணை கோத்துத் தீ வேள்வி தொழிற்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக் காரோண நின்

நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்

சாம் அன்று உரைக்கத் தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.104.6) அப்பர் பிரான், பெருமானின் திருநாமங்கள் அவரைச் சரண் அடைந்தவர்களின் துன்பங்களை நீக்கி அவர்களுக்கு நல்ல துணையாக இருக்கும் என்று கூறுகின்றார். அதிகை வீரட்டர் ஆகிய பெருமானின் அடையாளங்கள், படர் பொற்சடை, அவரது திருமேனியின் மீது படரும் பிளவுபட்ட நாக்கினை உடைய பாம்புகள், குளிர்ந்த பிறைச் சந்திரன், சுடுகாட்டுச் சாம்பல் பூசப்பெற்ற திருமேனி என்பன என்று குறிப்பிடும் அப்பர் பிரான், அத்தகைய பெருமானை, தொடர்ந்து பற்றுக்கோடாகப் பற்றிக் கொள்ளாமல் தான் கேடு அடைந்ததாக கூறுகின்றார்.

படர் பொற்சடையும் பகுவாய் அரவும் பனி மதியும்

சுடலைப் பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண்ணீர்க்

கெடிலக் கரைத் திருவீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார்

நடலைக்கு நற்றுணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே

கடம்பந்துறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.18.8) அப்பர் பிரான், அவனது திருநாமங்களைச் சொல்லி இறைவனைப் புகழும் அடியார்களின் தீவினை நாசமாகிவிடும் என்று கூறுகின்றார். இந்த பாடலில் மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபடும் முறை குறிப்பிடப் படுகின்றது. தீ வளர்த்து ஓமம் செய்து பெருமானை வழிபடுவது சிவபூசையின் ஒரு வகையாகும். உடற்கருவிகளால் ஓமம் வளர்த்து, மனதினில் அவனது புகழினையும் உருவத்தையும் தியானித்து, வாயினால் அவனை உணர்த்தும் தோத்திரங்களையும் பாடல்களையும் திருநாமங்களையும் சொல்லி வழிபடும் முறை இங்கே உணர்த்தப் படுகின்றது. கோதை=கூந்தல். பெருமானது திருக்கண்ணோக்கால் மன்மதனின் உடல் ஒரு நொடியில் அழிந்தது போன்று,அவனது அருட்கண் நோக்கினால் நமது வினைகளும் ஒரு நொடியில் அழியும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.

பூமென் கோதை உமை ஒரு பாகனை

ஓமம் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தால்

காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை

நாமம் ஏத்த நம் தீவினை நாசமே

பெருமானின் திருநாமங்களை அடிக்கடி சொல்லியும் ஐந்தெழுத்து மந்திரத்தை தியானித்தும் இருந்தால் நமது மனதினில் இறைவன் உறைவான் என்றும்,அவ்வாறு இறைவன் உறைவதை நாம் மனக்கண்ணினால் உணரலாம் என்றும் அப்பர் பிரான் கூறுகின்றார். மனக் கண்ணினாலும் புறக் கண்ணினாலும்(இறைவன் குடிகொண்டிருக்கும் திருக்கோயில்கள்) இறைவனை நாம் காணக் கூடிய இடங்கள் என்று உணர்த்தப்பட்டு, இறைவனை வழிபடுமாறு தூண்டும் பாடல் புகலூர் தலத்தின் மீது அருளியது (5.46.5).

விண்ணினார் மதி சூடிய வேந்தனை

எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும்

கண்ணினால் கழல் காண்பிடம் ஏது எனில்

புண்ணியன் புகலூரும் என் நெஞ்சமே

தனது திருநாமத்தை உச்சரிக்கும் அடியார்களுக்கு தேன் போன்று இனியவர் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (5.52.7). இறைவன் ஞானச் சுடராக இருந்து, புற இருளையும் உயிர்களின் அகயிருளையும் நீக்கும் தன்மையையும்,உயிர்களுக்கு அருள் புரிவதையும், காலம் கடந்து ஆதியாக நிற்கும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

மானை ஏந்திய கையினர் மையறு

ஞானச் சோதியர் ஆதியர் நாமம் தான்

ஆன அஞ்செழுத்து ஓத வந்து அண்ணிக்கும்

தேனர் போல் திரு நாகேச்சரவரே

மழு ஆயுதத்தைத் தனது வலது கையில் உடையவனின் திருநாமம் ஆகிய அஞ்செழுத்தினை மகிழ்ந்து உரைத்து, அவனது நினைவில் நெஞ்சம் உருகி கண்ணீர் பெருக்கும் அடியார்கள் பால் மிகுந்த அன்பு வைத்து, இன்பத்துடன் குறையேதும் இல்லாத அருளைப் புரியும் இறைவன் திருமாற்பேறு தலத்தில் உறைகின்றான் என்றும் அவனைத் தொழுது வணங்கும் அடியார்களுக்கு துயரம் ஏதும் விளையாது என்றும் அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல், திருமாற்பேறு தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் ஒரு பாடலாகும் (5.59.7). இந்த பாடல் நமக்கு அழுதால் அவனைப் பெறலாமே என்ற மணிவாசக அடிகளாரின் வாக்கினை நினைவூட்டுகின்றது.

மழு வலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து

அழவலார்களுக்கு அன்பு செய்து இன்பொடும்

வழுவிலா அருள் செய்தவன் மாற்பேறு

தொழவலார் தமக்கு இல்லை துயரமே

தினமும் பெருமானின் திருநாமத்தை நினைக்கும் அன்பர்களுக்கு அச்சம் இருக்காது என்று அப்பர் பிரான் உணர்த்தும் குறுந்தொகைப் பாடல் திருமாற்பேறு தலத்தின் மீது அருளியது. தந்து நெஞ்சத்திற்கு உணர்த்துவது போன்று, நமக்கு அறிவுரை கூறும் பாடல் (5.60.2). நிச்சல்=நித்தல் என்ற சொல்லின் திரிபு;கச்ச=கைத்த என்பதன் திரிபு; கைப்பு=கசப்பு சுவை; மா=கரிய நிறம் கொண்ட; வைச்ச=சேமித்து வைத்த; இறைவனின் திருநாமங்களை நாம் நினைக்க நினைக்க, அத்தகைய நினைவுகள், நமது சேமிப்பு ஆபத்காலங்களில் பயன்படுவது போன்று நமக்கு பயன்படும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது

அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள்

நிச்சலும் நினையாய் வினை போய் அற

கச்ச மாவிடம் உண்ட கண்டா என

வைச்ச மாநிதி ஆவர் மாற்பேறரே

பூவனூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தினை (5.65) நூறு நூறாயிரம் (கோடி) திருநாமங்களைச் சொல்லி அடியார்கள் இறைவனை நெருங்கினார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நண்ணினார்=ஓதியவர்கள்; பாறி=அழிந்து; பறைய=நீங்க; பெருமானின் திருநாமங்களை ஆயிரம் என்ற கணக்கில் வருமாறு சகஸ்ரநாமம் சொல்வதும், ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி இறைவனின் மீது மலர்கள் தூவி அர்ச்சனை செய்வதும் பல திருக்கோயில்களில் நடைபெறுவதை நாம் இப்போது காண்கின்றோம். அப்பர் பெருமானின் காலத்தில் கோடி நாமங்களைச் சொல்லி இறைவனுக்கு அர்ச்சனை செய்வது பழக்கத்தில் இருந்தது போலும். நூறு நூறாயிரம் என்று கோடி எண்ணிக்கையை உணர்த்தும் அப்பர் பெருமான், அவ்வாறு இறைவனின் திருநாமங்களை சொல்லும் அடியார்களின் பாவங்கள் நீங்கும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். எத்துணைச் செல்வம் இருப்பினும், அத்தனைச் செல்வங்களிலும் உயர்ந்ததாகிய முக்திச் செல்வம் இந்திரனிடம் இல்லை. அத்தகைய முக்திச் செல்வத்தை, என்றும் அழியாது மாறாமல் இருக்கும் செல்வத்தை, இறைவனின் திருநாமங்கள் நமக்குப் பெற்றுத் தருவதால், அத்தகைய அடியார்களை இந்திரனை விடவும் உயர்ந்த செல்வம் பெற்றவர்கள் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் நாமங்களை சொல்லியதால் அடைந்த செல்வம் என்பதால், செல்வம் என்ற சொல் அருட்செல்வம் மற்றும் பொருட்செல்வம் ஆகிய இரண்டு செல்வங்களையும் குறிப்பதாக, சில உரை ஆசிரியர்களால் கருதப் படுகின்றது.

பூவனூர்ப் புனிதன் திருநாமம் தான்

நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார்

பாவம் ஆயின பாறிப் பறையவே

தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே

கல்லோடு பிணைக்கப்பட்டு நடுக்கடலில் தள்ளப்பட்ட தான், கடலில் ஆழ்ந்து போகாமல் பிழைத்ததற்கு காரணம், தான் அப்போது இறைவனின் நாமத்தை உச்சரித்தது தான் என்று இந்த பாடலில் (5.72.7) அப்பர் பிரான் கூறுகின்றார். நமச்சிவாய நாமத்தின் பெருமையினை ஒவ்வொரு பாடலிலும் உணர்த்தும்,நமச்சிவாயப் பதிகம் (4.11) அப்பர் பிரான் அருளியது அவர் நடுக்கடலில் மிதந்த போது தானே. இந்த பதிகத்தின் முதல் பாடலில், கல்லுடன் கட்டப்பட்டு நடுக்கடலில் தள்ளப்பட்ட போதும் நமக்கு உற்ற துணையாகத் திகழ்வது நமச்சிவாய மந்திரம் என்று கூறுகின்றார். ஒல்லை=விரைந்து:நூக்க=அமிழ்த்திவிட: நவிற்றுதல்=சொல்லுதல்: அமண் கையர்=சமண சமயத்தைச் சார்ந்தவர்கள்: அப்பர் பிரானுக்கு சமணர்கள் இழைத்த கொடுமைக்கு இந்த பாடல் அகச் சான்றாகும்.

கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்

ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்

நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன்

நல்ல நாமம் நவிற்று உய்ந்தேன் அன்றே

இறைவனின் திருநாமங்களைச் சொல்வதால், நமக்கு புண்ணியம் நிறைந்து கைகூடும்; நம்மைப் பற்றியிருந்த கீழ்மை நிலை கெடுதல் அடைந்து நம்மை விட்டு விலகும். அறியாமை நம்மை விட்டு விலகி நமக்கு கூர்ந்த அறிவு கைகூடும் என்று அப்பர் பிரான் திருச்சேறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தை (5.77.1) தொடங்குகின்றார், பூரித்து=நிறைந்து; பொய்=புண்ணியத்திற்கு மாறான கீழ்மை நிலை; கூரிதாய=கூர்ந்த; அறிவு;சீரியார்=சிறந்தவர்கள்; பயில்=வாழ்கின்ற; நாரி=பெண்மணி;

பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும்

கூரிதாய அறிவு கைகூடிடும்

சீரியார் பயில் சேறையுள் செந்நெறி

நாரி பாகன் தன் நாமம் நவிலவே

பெருமானின் திருநாமங்களை சொல்லாதவர்களின் நிலையை பற்றி, மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.90.5) அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். சிவபிரானின் பொன்னார் திருவடிகளை தங்களது கைகளால் பூக்கள் தூவி வழிபாடு செய்யாதவர்களும், தங்களது நாவினால் சிவபிரானது திருமாமத்தைச் சொல்லாதவர்களும், தங்களது வாழ்க்கையை தங்களது உடலினை வளர்ப்பதற்காக உணவினைத் தேடி அலைவதில் செலவிட்டு வீணாகக் கழித்துகொண்டு, இறுதியில் தங்களது உடலினை காக்கைக்கும் கழுகினுக்கும் உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்வதில்லை என்று இந்த பாடலில் அப்பர் பிரான் சாடுவதை நாம் உணரலாம்.

பூக் கை கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே

காலனின் தூதர்களை சிவபெருமானின் அடியார்களின் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடும் அப்பர் பிரான், பெருமானின் அடியார்களை அவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக, அடியார்களின் உருவத்தையும் செய்கைகளையும், பொது பதிகம் ஒன்றினில்(5.92) பட்டியல் இடுகின்றார்.சிவபிரானின் பெருமைகளை பாடலாக பாடுவது, அவ்வாறு பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப கொடுகொட்டி, கைத்தாளம் முதலிய கருவிகளை இசைப்பது,சிவபிரானின் திருநாமத்தை பிதற்றுவது, சிவபிரானின் திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்வது, திருநீற்றினை அணிந்து இருப்பது, சிவபெருமானை வழிபடுவதற்காக, தூபம், தீபம், மலர் மாலைகள் ஏந்திச் செல்லுதல், என்பவை அடியார்களின் அடையாளங்களாக இங்கே கூறப்படுகின்றது. அடியார்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மட்டுமன்றி, அவர்களைப் போற்றியும், பேணியும் பாதுகாப்பது அவர்களின் கடமை என்று இயமனின் தூதர்களுக்கு உணர்த்தும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலில், அடியார்களுக்கு இன்னல் விளைவித்தால் பெருமானின் திருவடிகள் உங்களை சுட்டுவிடும் என்பதை எச்சரிக்கையாக விடுப்பதையும் நாம் உணரலாம். இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில், பெருமானின் திருநாமத்தை அரற்றும் அடியார்களின் அருகில் செல்ல வேண்டாம் என்று இயமனின் தூதுவர்களுக்கு அறிவுரை கூறுகின்றார். கடிமலர்=நறுமணம் உடைய மலர்: சீர்கொள்=சிறப்பினை உடைய:சார்தல்=சென்று அடைதல்: அரற்றுதல்=பல முறையும் கூறுதல்

கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்

சீர்கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார்

ஆர்களாகிலும் ஆக அவர்களை

நீர்கள் சாரப் பெறீர் இங்கு நீங்குமே

தினமும் பெருமானின் திருநாமத்தை நினைக்கும் அன்பர்களுக்கு அச்சம் இருக்காது என்று அப்பர் பிரான் உணர்த்தும் குறுந்தொகைப் பாடல் திருமாற்பேறு தலத்தின் மீது அருளியது. தனது நெஞ்சத்திற்கு உணர்த்துவது போன்று அப்பர் பிரான், நமக்கு அறிவுரை கூறும் பாடல்(5.60.2). நித்தல்=நித்தல் என்ற சொல்லின் திரிபு; கச்ச=கைத்த என்பதன் திரிபு; கைப்பு= கசப்பு சுவை; மா=அடர்ந்து கரிய நிறம் கொண்ட; வைச்ச=சேமித்து வைத்த; இறைவனின் திருநாமங்களை நாம் நினைக்க நினைக்க, அத்தகைய நினைவுகள், நமது சேமிப்பு ஆபத்காலங்களில் பயன்படுவது போன்று நமக்கு பயன்படும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது

அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள்

நிச்சலும் நினையாய் வினை போய் அற

கச்ச மாவிடம் உண்ட கண்டா என

வைச்ச மாநிதி ஆவர் மாற்பேறரே

பெருமானின் திருநாமத்தை கேட்பது உயிர்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைகளின் முதற்படி என்று திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் (6.25.7) ஒன்றினில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். சிவபிரானைச் சென்று உயிர்கள் அடைய, உயிர் மேற்கொள்ள வேண்டிய நிலைகளை படிப்படியாக விவரிக்கும் பாடலாக, இந்த பாடல் கருதப்படுகின்றது. கேட்டல், தெளிதல், சிந்தித்து ஆராய்தல், யான் எனது என்ற நிலை மாறி சிவமாக மாறுதல் என்ற நான்கு நிலைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன. ஆரூர்ப் பெருமானின் பெயரை முதன் முதலாகக் கேட்ட தலைவி, பின்னர் அவனது தன்மைகளை பலர் மூலம் கேட்டறிந்து கொண்டு அவனது நிலை பற்றி தனக்கிருந்த ஐயங்களைத் தெளிவித்துக் கொள்கின்றாள்; பின்னர் அவனைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து, தனது பெயரை மறந்து, தனது பெற்றோர்களை விடுத்து, தனது குல வழக்கங்களை விடுத்து, முடிவில் தன்னையே மறந்து அவனுக்கு ஆளான நிலை, அவளது தோழிக்கூற்றாக இங்கே சொல்லப்பட்டுள்ளது. முன்னம் ஒரு சமயம், ஆரூர் பெருமானது திருநாமத்தைக் கேட்ட தலைவி, அவனது தன்மைகளை பிறர் மூலம் கேட்டு அறிந்தாள்; அவனது இருப்பிடம் ஆரூர் என்பதையும் அறிந்த அவள், அவன் மீது தீராத காதல் கொண்டாள்; தனது பெற்றோர்களை அன்றே மனத்தினால் துறந்த அந்த நங்கை, அவனைப் பற்றிய நினைப்பில் எப்போதும் மூழ்கி இருந்ததால், தான் செய்யும் செயல்களையும் மறந்தாள்; தனது பெயரினையும் மறந்து இறுதியில் தன்னையே மறந்த அந்த நங்கை, அவனது திருவடிகளையே நினைத்து அவனுடன் ஒன்றிவிட்டாள் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை ஆகும். .

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

இறக்கும் தருவாயில் பெருமானின் திருநாமத்தை சொல்வதால் என்ன பலன் கிடைக்கும் என்று ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.3) அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். வரை=மலை, இங்கே இமயமலை; கழல்=கழலை அணிந்த பெருமானின் திருவடிகள்; அரையன்=அரசன்;தான் இறக்கும் தருவாயில் பெருமானின் திருநாமங்களைச் சொல்லும் வல்லமை தனக்கு இருக்குமாயின், எத்துணை வலிய நோயும் தனக்கு எந்த கெடுதலையும் செய்யாது என்று கூறுகின்றார். நோய் என்று உடலுக்கு வரும் நோயினை மட்டும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடவில்லை. இறக்கும் சமயத்தில் உடலுக்கு எந்த விதமான நோய் வந்தாலும் அதனால் பெரிய மாற்றம் ஏதும் விளையாது அல்லவா. அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது, பழைய பிறவிகள் முதலாக அந்த பிறவி வரை ஈட்டிய வினைத் தொகைகளையே நோயாக, உயிரினைப் பற்றும் நோயாக குறிப்பிடுகின்றார். அந்த வினைக் குவியல்கள் தானே, இறந்த பின்னர் அந்த உயிருக்கு அடுத்த பிறவி உள்ளதா, இருந்தால் அந்த பிறவி எத்தகையதாக இருக்கும் என்பதை தீர்மானிக்கின்றது. இந்த கருத்தினை உள்ளடக்கியே, தான் இறக்கும் சமயத்தில் இறைவன் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்றும், இறக்கும் சமயத்தில் அவனது திருநாமங்களைச் சொல்லும் வண்ணம் தான் இருக்க வேண்டும் என்றும் அப்பர் பிரான் பல பாடல்களில் வேண்டுகின்றார்.

வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்றன் நாமம்

உரையா உயிர் போகப் பெறுவேனாகில் உறுநோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே

கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு

அரையா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

இந்த பிறவியினில் நமக்கு வாய்த்துள்ள பல்வேறு உறவினர்களும் நமக்கு நிலையான உறவு அல்ல என்றும் இந்த உயிர்க்கு நிலையான உறவாக அனைத்துப் பிறவிகளிலும் திகழும் இறைவனையே நமது நிலையான உறவாக கருதி நாம் அவரை போற்றி வணங்கி மகிழ வேண்டும் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல் ஒரு பொது பதிகத்தின் பாடல் (6.93.10). திளைத்தல்=நட்பு கொண்டு விளையாடி மகிழ்தல்; இருவிசும்பு=சிவலோகம்

தந்தையார் தாயார் உடன் பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே

வந்தவாறு எங்ஙனே போமாறேதோ மாயமாம் இதற்கு ஏதும் மகிழ வேண்டா

சிந்தையீர் உமக்கொன்று சொல்லக்கேண்மின் திகழ்மதியும் வாளரவும் திளைக்கும் சென்னி

எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கலாமே

நாம் முற்பிறவியில் செய்த புண்ணியங்களின் பயனாக, இந்த பிறவியில் பெருமானின் திருநாமத்தைச் சொல்லும் தன்மை பெற்றோம் என்று நெல்வாயில் அரத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.03.08) சுந்தரர் கூறுகின்றார். ஞெண்டு=நண்டு

திண் தேர் நெடுவீதி இலங்கையர் கோன் திரள்தோள் இருபதும் நெரித்தருளி

ஞெண்டாடு நெடுவயல் சூழ புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே

பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப் பெற்றேன்

அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே

அர்ஜுனனுக்கு உயர்ந்த பாசுபதப் படை அளித்து அருள் புரிந்த பெருமானின் கருணைத் தன்மையை உணர்ந்த தான், பெருமான் மீது விருப்பம் கொண்டு,மிகுந்த அன்போடு, அவனது திருநாமங்களைச் சொல்லி, அவனைப் புகழ்ந்து வழிபடுவதாக சுந்தரர் சொல்லும் பாடல் திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (7.66.4). வாரம்= மிகுந்த அன்பு; கேழல்=பன்றி;

வீரத்தால் ஒரு வேடுவனாகி விசைத்தொர் கேழலைத் துரந்து சென்றணைந்து

போரைத் தான் விசயன் தனக்கு அன்பாய்ப் புரிந்து வான்படை கொடுத்தல்கண்டு அடியேன்

வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி

ஆர்வத்தோடும் வந்து அடியிணை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே

பெருமானின் திருநாமத்தைச் சொல்வதே நமது கடமை என்று உணர்த்தும் பாடல் (7.82.5) திருச்சுழியல் தலத்தின் சுந்தரர் அருளிய பாடலாகும்.திறம்பாமை=நீங்காமல்; பெருமான் ஒருவனே நமக்கு நிலையான உறவினன் என்று இந்த பாடலில் சுந்தரர் உணர்த்துகின்றார்.

உற்றான் நமக்கு உயரும் மதிச் சடையான் புலன் ஐந்தும்

செற்றார் திருமேனிப் பெருமான் ஊர் திருச் சுழியல்

பெற்றான் இனிது உறையத் திறம்பாமைத் திருநாமம்

கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே

கோயில் மூத்த திருப்பதிகத்தின் கடைப் பாடலில், பெருமானின் திருநாமத்தை தான் இடைவிடாது பிதற்றிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் நிச்சயமாக பெருமான் தனக்கு அருள் புரிவான் என்ற நம்பிக்கையுடன், அவனது திருநாமத்தை பலகாலும் சொல்லி, கண்களில் நீர் பெருக ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்து,வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி, கசிந்த மனதினால் நினைத்து, அவனது உருவத்தை தியானித்து பொன்னம்பலம் என்று புகழ்ந்து, தளர்ந்து நிற்கும் தனக்கு விரைவில் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று மணிவாசக அடிகளார், இந்த பாடலில் இறைஞ்சுகின்றார். ஒல்கா நிற்கும்=தளர்ந்து நிற்கும்;நல்காது=அருள் புரியாது; ஒழியாது=புறக்கணிக்காமல்; மல்கா, குழறா, வாழ்த்தா, வணங்கா என்ற சொற்களுக்கு எதிர்மறையாக, மல்கி குழறி வாழ்த்தி வணங்கி என்று பொருள் கொள்ளவேண்டும்.

நல்காது ஒழியான் நமக்கு என்றுன் நாமம் பிதற்றி நயன நீர்

மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப்

பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே

ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் அடியார்களின் தன்மைகளை குறிப்பிடுகையில், இறைவனின் திருநாமத்தை மந்திரமாக பல முறையும் தியானிக்க வல்லவர்கள் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். தேனிப்பார்=தியானம் செய்வார்; தரிப்பார்=மனதினில் தரிப்பார் என்று கூட்டிக் கொண்டு திருநாமத்தை நினைப்பார் என்று பொருள் கொள்ள வேண்டும்; நரிப்பாய்=இகழ்ச்சிக்கு உரியவனாக; நல்குதல்-அருள் புரிதல்; நம்பி=சிறந்த கல்யாண குணங்களை உடையவன்; உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க எப்போதும் சிவசிந்தனையில் ஆழ்ந்திருப்ப்தால், தன்வசமின்றி திகழும் அடியார்கள் அடிக்கடி சிரிப்பதும், பெருமானின் திருநாமங்களை தியானிப்பதும், பெருமானின் புகழினை விரிவாக எடுத்துரைப்பதும், அவனது தன்மையை பிறர் சொல்லக் கேட்பதும், அவ்வாறு கேட்கும் தருணத்தில் ரசித்து சிலாகித்து பேசுவதும், இறைவனின் பல திருநாமங்களை மீண்டும் மீண்டும் சொல்வதும், பொன்னம்பலம் என்று அவன் நடமாடும் மன்றினை சிறப்பித்து பேசுவதும் ஆகிய தன்மையுடன் விளங்குகின்றனர். அத்தகைய அடியார்களின், முன்னே அவர்களின் இகழ்ச்சிக்கு ஆளாகாமல், அவர்களைப் போன்று தானும் திகழும் தன்மையை, பெருமான் தனக்கு அருள் புரிய வேண்டும் என்று மணிவாசக அடிகள் வேண்டும் பாடல்.

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திரு வார்த்தை

விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம்

தரிப்பார் பொன்னம்பலத்தாடும் தலைவா என்பார் அவர் முன்னே

நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித் தான் நல்காயே

தனது அறியாமையின் காரணமாக, பெருமானின் திருநாமமாகிய ஐந்தெழுத்து மந்திரத்தை நினைக்காது இருந்தேன் என்று குறிப்பிட்டு, தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் மணிவாசக அடிகளார், ஞானமடைந்த அடியார்களோடு தான் சேராமல் இருந்தும், நல்ல செயல்களை புரியாமல் இருந்தும், வீணாகத் தனது வாழ்வினைக் கழித்துக் கொண்டு உயிருக்கு எந்தவிதமான பயனுமின்றி மண்ணோடு மண்ணோடு கலந்து மக்கிப் போகும் வாழ்வு வாழும் தன்னை,தலைவனாகிய பெருமான் தன்னை ஆட்கொண்டு அடியார்களுடன் கூட்டிய அதிசயம் தனது வாழ்வினில் நிகழ்ந்தது என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றார்.இவ்வாறு அடியார்களுடன் கூட்டப்பட்டதால், தான் அவர்களிடமிருந்து ஞானம் பெற்று தனது குறைகளை களைந்து கொள்ளும் நிலை ஏற்பட்டதால்,பெருமானின் திருநாமத்தை உணர்ந்து சொல்லும் வாய்ப்பு கிடைத்தமையால், அவர் பெற்ற மகிழ்ச்சி இந்த பாடலில் வெளிப்படுகின்றது. இந்த பாடல் அதிசயப்பத்து பதிகத்தின் ஆறாவது பாடல்.

எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே

நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே

மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவதற்கு ஒருப்படுகின்றேனை

அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

புணர்ச்சிப் பத்து பதிகத்தின் நான்காவது பாடலில், பிரமன் திருமால் இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் பெருமானின் புகழினை உணர்த்தும் திருநாமங்களைச் சொல்லி போற்றுகின்றனர் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். மேலும் இவ்வாறு புகழப் படுவனும், சொற்ப்ரபஞ்சத்தையும் பொருட்ப்ரபஞ்சத்தையும் கடந்தவனும், ஒப்பற்ற சுடராக இருப்பவனும், நமது உள்ளங்கையில் இருக்கும் நெல்லிக் கனி போன்று நம்மால் உணரமுடியும் வண்ணம் எளியவனாக இருப்பவனும், தேன் பால் இன்னமுதம் போன்று இனிப்பவனும், அமுதின் சுவையாக இருப்பவனும் ஆகிய இறைவனைச் சார்ந்து அவனுடன் ஒன்றறக் கலந்து நிற்கும் நாள் எந்நாளோ என்று தான் ஏங்குவதையும் உணர்த்துகின்றார். அத்தகைய ஏக்கத்தினை அனைத்து உயிர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அடிகளாரின் அவா. புல்லி=தழுவி; புணர்தல்=ஒன்றற கலத்தல்; இறந்த=கடந்த; பொல்லா மணி=செதுக்கப் படாத மாணிக்கம்;

அல்லிக்கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும்

சொல்லிப் பரவும் நாமத்தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை

நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையைப்

புல்லிப் புணர்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

பெருமானின் திருநாமங்களைப் புகழ்ந்து பேசும் அடியார்களின் துன்பங்கள் துடைக்கப் பெற்று, அவர்கள் ஒப்பற்ற இன்பம் அடைவார்கள் என்று திருக்கழுக்குன்றப் பதிகத்தின் முதல் பாடலில் மணிவாசக அடிகளார் கூறுகின்றார். இணக்கு=ஒப்பு; இணக்கிலாத=ஒப்பற்ற; உணக்கிலாத=உலர்த்தப்படாத; விதைகள் விளைந்த பின்னர், உலர்த்தப் பட்டு ஈரம் விலகினால் தான், அவை முளையைத் தோற்றுவிக்கும் பக்குவத்தை அடையும்.அவ்வாறு உலர்த்தப்படாமல், ஈரத்துடன் நிழலில் இருக்கும் விதைகளின் முளைக்கும் சக்தி கெட்டொழிந்து விடும். எண்ணற்ற பழைய பிறவிகளின் செயல்களால் நாம் சேர்த்துக் கொண்டுள்ள வினைகளை நாம் நுகர்ந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கும் போது, நாம் கொள்கின்ற விருப்பு வெறுப்புகளால், நாம் ஆகாமிய வினைகளை சேர்த்துக் கொள்ளும் ஆபத்து ஏற்படுகின்றது. நாம் எதிர் கொள்ளும் இன்ப துன்பங்கள், நமது வினைகளின் செயல்கள் என்றும் அந்த வினைகளின் தொகுதியே இன்பமாகவும் துன்பமாகவும் நம்மால் நுகர்ந்து கழிக்கப்பட வேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி என்றும் புரிந்து கொண்ட பக்குவம் அடைந்த உயிர்கள், எந்த விதமான தடுமாற்றமும் இன்றி, அந்த இன்ப துன்பங்களை எதிர்கொண்டு தங்களது வினைகளை கழித்துக் கொள்வார்கள். இத்தகைய பக்குவம், இறைவனின் அருளால் அந்த உயிர்களுக்கு நேரிடுகின்றது. இந்த பக்குவம் இருக்கும் காரணத்தால், நமக்கு இன்பங்களையும் துன்பங்களையும் விளைவிக்கும் வினைகள், மேலும் ஆகாமிய வினைகளை தோற்றுவிக்க முடியாமல் தோல்வி அடைகின்றன. இந்த தன்மையையே அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். இறைவனின் அருள் எனப்படும் நீரினில் தோய்ந்த வினைகள், முளை தோற்றுவிக்கும் ஆற்றல் இழந்த தன்மையை, ஈரமான விதைகள் விளைச்சலுக்கு பயன்படாத நிலைக்கு உவமையாக அடிகளார் இங்கே ஒப்பிடுகின்றார்.கணக்கிலா= எண்ணற்ற;

பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு

இணக்கிலாததோர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம் பிரான்

உணக்கிலாததோர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின்

கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

பொழிப்புரை:

சைவநெறியில் பொருந்தாது வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் வெந்து அழியும் வண்ணம், தீ மூட்டியவர் சிவபெருமான். மேரு மலையினை வளைத்து வில்லாக மாற்றி, அதனில் அம்பினைப் பூட்டி திரிபுரங்களை நோக்கி எய்தி அழித்தவர் சிவபெருமான். அந்த அம்பு தீப்பிழம்பினைக் கக்கும் அம்பாக, தீக்கடவுளை அம்பின் நுனியில் பொருத்தி எய்த, பெருமான் உறைகின்ற ஊர் அரிசிற்கரை புத்தூர் என்பதாகும்.அந்த தலத்தினில் வாழ்கின்ற வேதியர்கள், தங்களது நாவினால் இறைவனின் திருநாமங்களை ஓதி, நீர் கொண்டு நீராட்டியும் மலர்கள் கொண்டு இறைவனின் திருமேனி மீது தூவியும் இறைவனை வழிபடுகின்றனர்.

பாடல் 3:

பல்லார் தலை சேர் மாலை சூடிப் பாம்பும் பூண்டு

எல்லா இடமும் வெண்ணீறு அணிந்து ஒர் ஏறேறிக்

கல்லார் மங்கை பங்கர் ஏனும் காணுங்கால்

பொல்லார் அல்ல அழகியர் புத்தூர்ப் புனிதரே

விளக்கம்:

பல்லார்=பற்கள் நிறைந்த; பெருமான் அணிந்திருக்கும் தலைமாலையில் உள்ள தலைகளின் தசைகள் உலர்ந்து வற்றிப்போய், பற்கள் மற்றும் எலும்புகள் மட்டும் காணப்படும் நிலை இங்கே பல்லார் தலை என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. கல்லார்=கற்கள் நிறைந்த, மலை; இங்கே இமயமலை என்று பொருள் கொள்ளவேண்டும். ஓர்=ஒப்பற்ற; பொல்லார்=பொலிவு இல்லாதவர்; தலைமாலை அணிகலனாகவும், உடலின் பல இடங்களில் பாம்புகள் அணிந்தவராகவும், உடல் முழுதும் சாம்பல் பூசியவராகவும், காணப்படுகின்றார் என்றவுடன், பொலிவற்றவராக, அழகின்றி பெருமான் காட்சி அளிப்பார் என்று நினைக்கவேண்டாம், அவர் மிகவும் அழகுடன் காணப்படுகின்றார் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு திருநாரையூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் (5.55) பாடல்களை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். வீறு=பெருமை:வெற்பன்=மலையை உடையவன், இமவான்; கூன் பிறை=வளைந்த பிறைச் சந்திரன்; தனது உடலின் பாதியில் பெண் உருவத்துடன் இருந்தாலும், வாய்ந்த பிறைச் சந்திரனை முடியில் சூட்டிக் கொண்டிருந்தாலும், நீரினைத் தனது சடையில் தேக்கியவனாக இருந்தாலும், பெருமான் வியப்பூட்டும் வண்ணம் மிகுந்த அழகுடன் காணப்படுகின்றார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்

கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும்

நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு

ஆறு சூடலும் அம்ம அழகிதே

இங்கே குறிப்பிடப்பட்ட பதிகத்தின் இரண்டாவது பாடலில், புலித்தோலை உடுத்தியவனாக உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டும் கழுத்து கருமை நிறத்தினில் காணப் பட்டாலும், பெருமான் அழகியவனாக காணப்படுகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வேடுவக் கோலம் தரித்தபோதும்,அருவருப்பினைத் தரும் மண்டை ஓட்டினை உண்கலனாக ஏற்றுக்கொண்டு பிச்சை எடுத்த போதும், பெருமான் அழகியவரே என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். குறைந்த ஆடை அணிந்தவனாக இருந்தாலும், கொக்கின் இறகினையும் வில்வ இலைகளையும் தலையில் சூட்டிக் கொண்டிருந்தாலும்,விரித்த சடைக்கோலத்துடன் இருந்தாலும், மண்டையோட்டு மாலையை அணிந்து இருந்தாலும் பெருமான் அழகிய தோற்றத்துடன் காட்சி தருகின்றார் என்று நான்காவது பாடலில் கூறுகின்றார். கூர்மையான மழுவாட்படையையும் மான்கன்றினையும் தனது கரத்தில் ஏந்தியிருந்த போதிலும் பெருமான் அழகுடன் காணப்படுவதாக ஐந்தாவது பாடல் உணர்த்துகின்றது. சூலமும் தீப்பிழம்பும் ஏந்தியவனாக, பால் நெய் தயிர் கொண்டு நீராடுபவனாக,ஆலமரத்தின் நிழலில் அமர்பவனாக இருப்பினும் பெருமான் அழகுடன் காணப் படுகின்றார் என்று ஆறாவது பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். ஏழாவது பாடல் பெருமானின் செய்கைகள் வியப்பூட்டுவதாக உள்ள தன்மையை குறிப்பிடுகின்றன. எலும்பினை ஆபரணமாக பூண்டுகொண்டு, எருதினை வாகனமாக ஏற்றுக்கொண்டு பகல் நேரத்தில் பலரும் காண பிச்சை எடுக்கும் பெருமான், அழகராகவே கருதப் படுகின்றார் என்று எட்டாவது பாடல் உணர்த்துகின்றது.பூத கணங்கள் புடை சூழ, ஆரவாரம் மிகுந்த இசையின் பின்னணியில், இரவினில் நெருப்பின் இடையே நின்று நடமாடிய போதிலும் பெருமான் அழகிய வடிவத்துடன் விளங்குகின்றார் என்று ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார். எவரும் விரும்பாத கொன்றை மலரும் பெருமானுக்கு அழகு சேர்க்கின்றது என்று பதிகத்தின் கடைப்பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். மேலே குறிப்பிடப்பட்ட அடையாளங்களை, நாம் பெருமானின் திருமேனியுடன் இணையாத நிலையில், தனியாக பார்த்தால், எந்த பொருளுமே எவருக்கும் அழகு சேர்க்காது என்பதை உணர்வோம். எனினும் பெருமானுடன் இணைந்ததால் பெருமை பெற்றுள்ள இந்த பொருட்கள், பெருமானுக்கு மேலும் அழகூட்டுவது மிகவும் வியப்பான செயல் என்று அப்பர் பிரான் உணர்த்தும் அருமையான பதிகம்.

பொழிப்புரை:

தசை வற்றி உலர்ந்து, எலும்புகளும் பற்களும் மட்டும் தெரியும் வண்ணம் காணப்படும் மண்டை ஓடுகளை மாலையாக கோர்த்து அணிந்து கொண்டிருக்கும் பெருமான், தனது திருமேனியில் பல இடங்களில் பாம்பினை அணிந்தவராக காணப்படுகின்றார். அவர் தனது உடல் முழுவதும் வெண்ணீறு பூசியவராக,ஒப்பற்ற விடை வாகனத்தின் மீது ஏறி பல இடங்களுக்கும் செல்பவராக உள்ளார். அவர் கற்கள் நிறைந்த இமயமலையில் தோன்றிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவராக இருப்பினும், மண்டையோடுகள் பாம்பு மற்றும் திருநீறு சார்ந்த திருமேனியுடன் இருப்பினும், அவரது திருமேனி பொலிவற்றதாக காணப்படவில்லை. மாறாக சிறந்த அழகராக திகழும் பெருமான், அரிசிற்கரைப்புத்தூர் தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 4:

வரியேர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற

கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்

அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து அங்கு அழகாய

பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே

விளக்கம்:

வரி=வரிசை என்றும் நிறம் என்றும் இரண்டு பொருளைத் தருகின்ற சொல். இரண்டுமே இங்கே பொருத்தமாக உள்ளன. ஏர்=அழகு;வளையாள்=வளையல்கள் அணிந்துள்ள பார்வதி தேவி; கரி ஏர்=கரத்தினை உடைய அழகிய யானை; தும்பிக்கையை யானையின் கரமாக கருதுவது வழக்கம்; அரி=தவளை மற்றும் வண்டு; பழனம்=நெல் வயல்கள்;

பொழிப்புரை:

தனது முன்கையினில் அழகாகவும் வரிசையாகவும் அடுக்கப்பட்ட வளையல்கள் உடைய பார்வதி தேவி அச்சம் கொள்ளும் வண்ணம், தன்னை நோக்கி வேகமாக வந்த மதம் கொண்ட யானையின், தோலை உரித்து, தனது உடல் மீது போர்த்துக் கொண்ட கடவுள் சிவபெருமான்; இரத்தப்பசை கொண்ட யானையின் பசுந்தோல் பெருமானின் உடலுக்கு ஏதும் கேட்டினை விளைவிக்குமோ என்ற எண்ணம் வந்ததால் தேவி அச்சம் கொள்கின்றாள். ஆனால் யானைத் தோலின் இயற்கைத் தன்மையை, பெருமான் மாற்றியதால் அவரது உடலுக்கு அந்த தோல் எந்த கேட்டினையும் விளைவிக்கவில்லை. அத்தகைய ஆற்றல் கொண்ட பெருமான் உறைகின்ற இடம், வண்டுகளும் தவளைகளும் நிறைந்து காணப்படும் செழிப்பு மிகுந்த நெல்வயல்கள் மிகுந்தும், பொரிகள் போன்று மலர்களை சொரிகின்ற அழகிய புன்னை மரங்கள் கொண்ட சோலைகள் நிறைந்ததும் ஆகிய அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும்.

பாடல் 5:

என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழிலாமை

மின் போல் புரிநூல் விரவிப் பூண்ட மணி மார்பர்

அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர்

பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே

விளக்கம்:

அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சிவபெருமான் பால் நாம் எத்துனை அன்பு வைக்கின்றோமா அதனை விடவும் நம் பால் சிவபெருமான் வைக்கும் அன்பு பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என்று பல திருமுறைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அத்தகைய சில பாடல்களை, தன் பால் அன்பு வைக்கும் அடியார்களுக்கு அன்பராக பெருமான் திகழ்வதை உணர்த்தும் சில பாடல்களை நாம் இங்கே காண்போம்.

தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.82.7) திருஞானசம்பந்தர் பெருமானை அன்பன் என்றே அழைக்கின்றார். அவனது திருவடிகளைச் சென்று அடையும் அடியார்களின் அல்லல்களைக் களையும் அன்பனாக பெருமான் திகழும் தன்மை இந்த பாடலில் சொல்லப்படுகின்றது.வன்புயத்த=வலிமை வாய்ந்த தோள்களை உடைய அரக்கர்கள், இங்கே திரிபுரத்து அரக்கர்கள்; தடவரை=பெரிய மேரு மலை; தென் தமிழ்க் கலை தெரிந்தவர்=புலவர்கள்; மேருமலையை வளைத்து செய்யப்பட்ட வில்லினில் அம்பினைத் தொடுத்து எய்வதற்கு வலிமையான தோள்கள் வேண்டும் அல்லவா,அத்தகைய வலிய தோள்கள் கொண்டவனாக பெருமான் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

வன்புயத்த தானவர் புரங்களை எரியத்

தன் புயத்து உறத் தடவரை வளைத்தவன் தக்க

தென் தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்

அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே

வாராத நாடன்=மீண்டும் நிலவுலகத்திற்கு வர வேண்டிய நிலையினைத் தடுக்கும் முக்தி உலகத்தினை தனது செல்வமாக உடைய சிவபெருமான்; வில்லின் உரு=வானவில்லின் உருவத்தை போன்று; வானவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மனதினுக்கு இன்பம் தருவதாக இருந்தாலும் மிகவும் சிறிய நேரமே நிலைத்து நின்ற பின்னர், விரைவில் மறைந்து விடுகின்றது; மனிதப்பிறவி நமக்கு இன்பம் தருவது போன்று தோன்றினாலும் அந்த இன்பமும் நிலைத்து நீடிப்பதில்லை; மனிதப்பிறவியும் நிலையற்றதாக உள்ளது. வில்லின் உரு என்பதற்கு வயது முதிர்ந்த காலத்தில் உடலில் கூன் விழுவதால் வில் போன்று வளையும் உடல் என்று இளமை நிலையாமையை உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. பேராத=நீங்காத; அலர்=மலர், இங்கே தாமரை மலரை குறிக்கின்றது; பிரியாத மார்பின் அலர் மேவு பேதை என்று, தாமரை மலரினில் உறையும் இலக்குமி தேவி திருமாலின் மார்பினை விட்டு பிரியாது இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. வானவில் போன்று தோன்றி விரைவில் மறையும் குறைந்த வாழ்நாளைக் கொண்டுள்ள மனிதர்கள், உடலும் உள்ளமும் உருகி தன்னை வழிபட்டால், அவர்களுக்கு தெவிட்டாத இன்பத்தை அளித்து, அவர்கள் பால் மிகுந்த அன்பு கொண்டு அவர்களை விட்டு பிரியாது இருப்பவன் சிவபெருமான் என்று இந்த தென் திருமுல்லைவாயில் தலத்து பதிகத்தின் பாடலில் (2.88.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

வாராத நாடன் வருவார் தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில்

ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர்

பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்

தீராத காதல் நெதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே

தன்னைப் பலவாறும் தொழுது ஆடியும் பாடியும் தோத்திரங்கள் சொல்லி அழும் அடியார்களுக்கு அன்பராக இருப்பவர் இறைவன் என்று அப்பர் பிரான்,ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பாடலில் (4.56.4) குறிப்பிடுகின்றார். எழுநுனை=கூரிய நுனி: சிவபெருமானின் புகழினைக் கேட்கும் போதும், சொல்லும் போதும் வாய் விட்டு அழுதல் என்பது சிறந்த அடியார்களின் குணங்களில் ஒன்றாகும். நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி சிவபெருமானின் திருநாமத்தை ஓதும் அடியார்கள் நன்னெறியை அடைவார்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நாம் அதிகமாக தொழத்தொழ, நமக்கு இறைவனிடத்தில் அன்பு அதிகமாகின்றது. அந்த இறையன்பு வலுப்பெறும்போது அது அழுகையாக வெளிப் படுகின்றது.

மழுவமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும்

எழுநுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும்

தொழுது எழுந்தாடிப் பாடி தோத்திரம் பலவும் சொல்லி

அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

அன்பு மயமாக இருக்கும் பெருமான், நாமும் அனைவரிடத்தும் அன்புடன் பழக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். வேதிகுடி பதிகத்தின் பாடல் ஒன்றினில்(4.90.3) அன்பின் வழி நில்லாது பல உயிர்களுக்கும் துன்பமிழைத்த திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை அழித்த இறைவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அன்பு மயமாக விளங்கும் பெருமானை அன்பன் என்றும் ஆராவமுதன் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார்.

முன்பின் முதல்வன் முனிவன் எம் வினை கழித்தான்

அன்பின் நிலை இல் அவுணர் புரம் பொடியான செய்யும்

செம்பொனை நன்மலர் மேலவன் சேர் திருவேதிகுடி

அன்பனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (5.31.7), தன்னை நினைத்துத் தொழும் அடியார்களுக்கு அன்பனாக இறைவன் விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மலர்களைத் தூவி இறைவனைத் தொழுது அழும் அடியார்களுக்கு அன்பனாக இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவனடியார்களின் அக இலக்கணங்களில் ஒன்றாக, பெருமானை நினைத்து அழுதல் சொல்லப் படுகின்றது. ஒழுகும் ஒன்பது ஓட்டைகள் கொண்டுள்ள மாடமாகிய உடலினை விட்டு உயிர் பிரிய, அந்த மாடத்தை கழுகு அரிப்பதன் முன்னம், பெருமானின் கழல் அணிந்த திருவடிகளைத் தொழ வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடலில் வழங்கப் படுகின்றது.

ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்

கழுகு அரிப்பதன் முன்னம் கழலடி

தொழுது கைகளால் தூமலர் தூவி நின்று

அழும் அவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே

கோளிலி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.56.3) அப்பர் பிரான் இறைவனை, கலந்தவர்க்கு அன்பன் என்று அழிக்கின்றார்.கலந்தவர்=மனதினால் இறைவனுடன் கலந்தவர்கள், மனம் ஒன்றி இறைவனை தியானம் செய்யும் அடியார்கள்; திரை=அலைகள்; பரவை=கடல்;கொண்டல்=மேகங்கள்; அம்=அழகிய;

வெண்திரைப் பரவை விடம் உண்டதோர்

கண்டனைக் கலந்தார் தமக்கு அன்பனை

கொண்டலம் பொழில் கோளிலி மேவிய

அண்டனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.59.7) அப்பர் பிரான், மகிழ்வுடன் பெருமானின் திருநாமத்தை சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அடியார்களுக்கு அன்பனாக இருக்கும் பெருமான், தவறாது அத்தகைய அடியார்களுக்கு பல இன்பங்களை வழங்கி அருள் புரிகின்றார் என்று கூறுகின்றார். வலான்=வலது கரத்தில் ஏந்தியவன்; மிகுதியான அன்பின் வெளிபாடு அழுகை.

மழு வலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து

அழவலார்களுக்கு அன்பு செய்து இன்பொடும்

வழுவிலா அருள் செய்தவன் மாற்பேறு

தொழவலார் தமக்கு இல்லை துயரமே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.4) அப்பர் பிரான், தன்னை அடைந்த அடியார்களுக்கு நேசராக பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். தேசர்-ஒளியுடையவர்; ஈசர்=தலைவராக தாங்குபவர்; நிட்டுருவர்=நேசம் இல்லாதவர், கடுமையான சித்தம் உடையவர்;திறம்=தன்மை; தனது தன்மைகளை நினைத்து தன்னைத் தொழுகின்ற அடியார்களின் சிந்தனையில் உறைபவர் சிவபெருமான் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், தன்னைச் சரணடையும் அடியார்களை நேசிப்பவராக உள்ளார் என்று கூறுகின்றார். அதே சமயத்தில் தன்னை நினையாத மனிதர்களுக்கு கடுமையான சிந்தை உடையவராக இருப்பார் என்றும் கூறுகின்றார். வஞ்சக் கள்வர் என்று எவரும் காண்பதற்கு அரியவராக இறைவன் இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது.

தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திருவாரூர் என்றும் உள்ளார்

வாசமலரின் கண் மான்தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்சக் கள்வர்

நேசரடைந்தார்க்கு அடையாதவர்க்கு நிட்டுருவர் கட்டங்கம் நினைவார்க்கு என்றும்

ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம் கொண்டாரே

கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.4) அப்பர் பிரானும், இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார். கொக்கரை=ஒரு இசைக் கருவி; நிருபன்= தலைவன், அரசன்; நிழல்=ஒளி; மாறு=பகை; மாறுபட்டு, ஆகமக் கொள்கையிலிருந்து மாறுபட்டு வாழ்ந்தவர்கள்; கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றவனும், ஆரூரனாக திருவாரூர் நகரத்தில் உறைபவனும், அடியார்கள் பால் அன்பு செலுத்துபவனும், அழகான திருப்பழனம் தலத்தில் உறைபவனும், திருநீற்றினை உடலில் பூசிக்கொண்டு ஒளி திகழும் மேனியனாக விளங்குபவனும், அனைவர்க்கும் தலைவனாக இருப்பவனும், தனக்கு ஒப்பாக வேறொருவர் இல்லாதவனும், எந்த பொருளையும் பிளவுபடுத்த வல்ல கூர்மையினை உடைய மழுப்படையினை ஏந்தியவனும், கொக்கரை எனப்படும் இசைக் கருவியை வாசிப்பவனும், சிறந்த பூத கணங்களை வைத்திருப்பவனும், வேதாகம கொள்கைகளிலிருந்து மாறுபட்டு பகைமையுடன் விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்தவனும் ஆகிய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான், என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

ஆறேறு செஞ்சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான் தான் காண்

நீறேறு நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகரொன்றும் இல்லாதான் காண்

கூறேறு கொடுமழுவாட் படையினான்காண் கொக்கரையன் காண் குழுநல் பூதத்தான் காண்

மாறாய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.52.9) அப்பர் பிரான், தன்னை நினைக்கும் அடியார்களுக்கு நேசனாகத் திகழ்பவன் என்று கூறுகின்றார். எச்சன்= வேள்வியை நடத்தி வைக்கும் தலைவன்; ஈசன்=தலைவன்; வேதங்களில் உணர்த்தும் நெறிக்கு மாறாக தக்கன் செய்த வேள்வியை இறைவன் அழித்த போது, அந்த வேள்வியில் பங்கேற்ற பலருக்கும் தண்டனை அளித்த செய்த இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. இந்த வேள்வியில் பங்கேற்ற எவரும் இறக்கவில்லை. தலைகள் துண்டிக்கப்பட்ட தக்கனும் எச்சனும், வேறு ஒரு தலை பொருத்தப்பட்டு உயிர் பிழைத்தனர். இவ்வாறு தண்டனை மட்டும் அளித்து, அனைவரையும் வாழச் செய்தமையால், அருள் செய்தான் காண் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

சந்திரனைத் திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்

இந்திரனைத் தோள் முரிவித்து அருள் செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம்,

மந்திரமும் மறைப் பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்

வெந்தழலின் விரிசுடராய் ஓங்கினான் காண் விண்ணிழி தண்வீழி மிழலையானே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.65.2) அப்பர் பிரான், இறைவனை நேசர்க்கு நேசன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானிடத்தில் அன்பு வைக்காத மாந்தர்களை நீசர்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் இகழ்கின்றார். அவ்வாறு இருக்கும் மனிதர்களைக் காணும் இறைவன், தான் உய்வதற்கு அளித்த வாய்ப்பினை அவர்கள் பயன்படுத்த தவறிவிட்டார்களே என்று வருத்தம் அடைந்து அவர்களைக் காணவும் கூசுகின்றார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தஞ்சம் என்ற சொல் தஞ்சே என்று குறைந்தது. தஞ்சே=எளிதாக; கூசாதார் என்று கூச்சம் வெட்கம் ஏதும் கொள்ளாமல் பெருமானை வணங்கும் அடியார்களை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். எனவே பெருமானை வணங்க கூச்சம் கொள்ளும் மனிதர்கள் அந்நாளில் இருந்தனர் என்பது தெளிவாகின்றது. புத்தர்களும் சமணர்களும் நிறைந்து வாழ்ந்த காலத்தில், பெருமானை கும்பிட்டால் தன்னை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் அப்பர் பெருமானின் காலத்தில் வாழ்ந்து வந்த சிலருக்கு இருந்தது போலும். மேலும் மன்னனே சமண சமயத்தை பின்பற்றியும் அதனை ஆதரித்தும் வாழ்ந்து வந்தமையால், அரசனிடம் இருந்த அச்சம் காரணமாக மற்றவர்கள் அறியும் வண்ணம் பெருமானை வழிபட சற்று தயக்கம் நிலவியது நியாயம் தானே. கிறுத்துவர்கள் நடத்தும் பள்ளிகளில், கல்லூரிகள் படிக்கும் இன்றைய இளைஞர்கள் தங்களது நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு செல்வதற்கு தயக்கம் கொள்வதை நாம் நேரிடையாக இந்நாளில் காண்கின்றோம் அல்லவா, எனவே அத்தகைய சூழ்நிலையில் கூச்சம் ஏதும் கொள்ளாமல் வெளிப்படையாக பெருமானை வணங்கியவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள் தானே. அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம், பெருமான்,அத்தகைய அடியார்கள் எந்த முயற்சியும் செய்யும் முன்னரே மிகவும் எளிதாக அவர்களது நெஞ்சினில் குடிகொள்கின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்

கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடி கொண்ட அழகன் காண் அழகார் கொன்றை

வாசன்காண் மலைமங்கை பங்கன் தான்காண் வானவர்கள் எப்போதும் வணங்கி ஏத்தும்

ஈசன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.4) அப்பர் பிரான், இறைவனை நேசர்க்கு நேசன் என்று குறிப்பிடுகின்றார்.தலையான்=தலைவன்: முகடு=உச்சி; நேசர்க்கு நேசன் என்ற தொடர் நமக்கு சிவபுராணம் திருவாசகத்தில் வரும் அன்பருக்கு அன்பனே என்ற தொடரை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், தன்னுருவம் யாவர்க்கும் அறியவொண்ணா நிலையான் என்றும், அனைவர்க்கும் தலைவன் என்றும் இறைவனின் உயர்ந்த தன்மையை உணர்த்தும் அப்பர் பிரான், தன் பால் நேசம் வைத்து தொழும் அடியார்களுக்கு நேசனாகத் திகழ்கின்றார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

தலையானை எவ்வுலகும் தான் ஆனானைத் தன்னுருவம் யாவர்க்கும் அறியவொண்ணா

நிலையானை நேசர்க்கு நேசன் தன்னை நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற

மலையானை வரி அரவு நாணாக் கோத்து வல்லசுரர் புரம் மூன்றும் மடிய எய்த

சிலையானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.67.1), அப்பர் பிரான் ஆளான அன்பர்கட்கு அன்பன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.ஆளான அடியார்= பெருமானுக்கு அடிமையாக மாறி திருத்தொண்டு செய்யும் அடியார்கள்; ஆளான அடியார்கட்கு அன்பனாக பெருமான் இருந்த தன்மையை நாம் பல நாயன்மார்களின் சரித்திரத்திலிருந்து அறிகின்றோம். சண்டீசருக்கு பதவி அளித்தது. திருஞானசம்பந்தருக்கு பொற்றாளம் அளித்தது, முத்துப் பல்லக்கு அளித்தது, முத்துப் பந்தர் அருளியது, உலவாப் பொற்கிழி அருளியது, திருநாவுக்கரசு நாயனாருக்கு பொதிசோறு அளித்தது, அவரது தோள்களில் இடப இலச்சினைகள் பொறித்தது, தனது திருவடியை அவரது தலையினில் வைத்தது, சுந்தரருக்கு வேண்டியபோதெல்லாம் பொருள் அளித்தது முதலான நிகழ்ச்சிகள் அடியார்களுக்கு அன்பனாக விளங்கும் பெருமான் செய்யும் உதவிகள். பெரிய புராணத்தில் உணர்த்தப்படும் கருணைச் செயல்கள் அனைத்தும் இறைவன் அடியார்களுக்கு அன்பனாக இருந்த தன்மையால் எழுந்தது தானே. இவ்வாறே அப்பர் பிரானுக்கு இறைவன் அருளிய தன்மையும் இந்த விளக்கத்தில் மற்றோர் இடத்தில் சொல்லப் படுகின்றது. அனைத்து நாயன்மார்களுக்கும் இறைவன் அருளிய தன்மையை விவரித்தால், இந்த விளக்கவுரை மேலும் விரிந்துவிடும் என்று கருதி, அத்தகைய விளக்கம் தவிர்க்கப் பட்டுள்ளது.

ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க

தாளானை தன்னொப்பார் இல்லாதானைச் சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த

தோளானை தோளாத முத்து ஒப்பானைத் தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த

கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே

முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.85.1) அப்பர் பிரான் பெருமானை அடியவர்கட்கு அன்பன் என்று கூறுகின்றார்.ஆர்த்தல்=கட்டுதல்; அழல்=சினம், கோபம்; புறங்காடு=ஊருக்கு வெளியே அமைந்துள்ள சுடுகாடு; கனை கடல்=அலைகள் இடைவிடாது ஒலிக்கும் கடல்;

ஆர்த்தான்காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன்காண் ஆனைத் தோலைப்

போர்த்தான்காண் புரிசடை மேல் புனல் ஏற்றான்காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான்காண்

காத்தான்காண் உலகேழும் கலங்கா வண்ணம் கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத்துள்ளே

சேர்த்தான் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

பெருமான் நம்பால் அன்பு வைக்கவேண்டும் என்றால், நாம் இறைவன் பால் அன்புடன் இருக்கவேண்டும் என்பதை முன்னமே சிந்தித்தோம். தான் பெருமானுக்கு அன்பனாக திகழ்ந்தமையால், பெருமான் தன்னை ஆண்டுகொண்டான் என்று மணிவாசகர் குறிப்பிடும் திருச்சதகத்தின் பாடலை இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். ஆய=ஆராய்ந்து பார்க்கும்போது; பெருமானுக்கு எண்ணற்ற அடியார்கள் இருக்கின்றனர்; அதனால் அடியார் எவரும் இல்லாத காரணத்தால், தான் அவருக்கு அன்பன் என்று சொன்னவுடன் தன்னை அவர் ஆட்கொண்டார் என்று கருதுதல் தவறு; அவரது கருணை உள்ளமே,தன்னை விடவும் சிறந்த அடியார்கள் பலர் இருப்பினும், நாயாக பேயாக கீழ்மைத் தன்மையுடன் தான் இருப்பினும், தான் அவருக்கு அன்பன் என்று சொன்னவுடன் அவரால் தான் ஆட்கொள்ளப் பட்டதற்கு காரணம் ஆகும் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். .

ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்தி யான் யாவரினும் கடையனாய

நாயினேன் ஆதலையும் நோக்கிக்கண்டு நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்

ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார் தாமில்லையே அன்றி மற்றோர்

பேயனேன் இதுதான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே

ஏழுலகத்தையும் ஆளும் வண்ணம் உயர்ந்தவனாக இருப்பினும், அடியார்கள் பால் அன்பு வைத்துள்ள பெருமான், அவர்களது உள்ளங்களில் சிவானந்த அமுதத்தை ஊறச் செய்கின்றான் என்று குயில் பத்து பதிகத்தின் பாடலில் மணிவாசகர் கூறுகின்றார். கொம்பு=மரக்கிளை; மிழற்றும்=கூவும்;

இன்பம் தருவன் குயிலே ஏழுலகும் முழுதாளி

அன்பன் அமுதளித்து ஊறும் ஆனந்தன் வான்வந்த தேவன்

நன்பொன் மணிச்சுவடு ஒத்த நற்பரி மேல் வருவானைக்

கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி நாதனைக் கூவாய்

சிவபெருமானை அன்பே என்று மணிவாசகர் அழைப்பதை நாம் திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் முதல் பாடலில் காணலாம். உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு வஞ்சனையாக செயல்படும் ஐந்து புலன்களின் தாக்கத்தை அடக்கி அமுதமாக தனது உள்ளத்தில் ஊறிய இறைவனை, தான் காணுமாறு அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் இங்கே வேண்டுகின்றார். அன்பே சிவமாகவும், அந்த சிவமே தனது உள்ளத்தில் ஊறும் அமுதமாகவும், அந்த அமுதம் விளைவிக்கும் அளவற்ற இன்பமாவும் இருக்கும் நிலையினை தான் உணர்ந்ததை அடிகளார் இந்த பாடலில் தெரிவிக்கின்றார். தங்களுக்குள்ளே மாறுபட்டு தத்தம் வழியே தன்னை இழுத்துச் செல்ல இடைவிடாது முயற்சி செய்யும் வஞ்சக ஐம்புலன்கள், தன்னைத் தங்களின் வசப்படுத்தும் வழியினை, இறைவனின் உதவியுடன் தான் அடைத்ததால் தனது உள்ளத்தில் பரஞ்சோதி சுடர் விட்டது என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார்.

மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து அமுதே

ஊறி நின்று என்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காண வந்து அருளாய்

தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே

ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே

நாம் அவனது திருவடி பால் வைக்கும் அன்பே சிவமாக மிளிர்கின்றது என்பதை மணிவாசக பெருமானார் பிடித்த பத்து பதிகத்தில் கூறுகின்றார். அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்கவேண்டும் என்றால், நாம் சிவபிரான் பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார்.பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும் போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை=பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை; சுருக்கும்=வீணாக்கும்: பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயப்பட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ் வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அடிகளார் இந்த பாடலில் அழைக்கின்றார். அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக்கொள்வதை நாம் உணரலாம்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

குலாப்பத்து பதிகத்தின் பாடலிலும் மணிவாசகர் இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார். எந்தவொரு உயிரும் தான் எண்ணற்ற பழைய பிறவிகளில் சேர்த்துக் கொண்டுள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் நுகர்ந்து கழித்துக் கொள்வதற்கான சக்தி அந்த உயிர் இணைந்துள்ள உடலுக்கு இல்லை என்பதால், இறைவன் நம் பால் கருணை கொண்டு அந்த உயிர்களின் வினைகளின் ஒரு பகுதியை மட்டும் இந்த பிறவிக்கு, பிரார்த்த வினையாக ஒதுக்கிவிட்டு, எஞ்சிய வினைகளை அடுத்து எடுக்க இருக்கும் பிறவிகளுக்கு, சஞ்சித வினைகளாக, ஒதுக்கிவிடுகின்றான். இந்த இரண்டு வினைகளைத் தான், பிரார்த்த வினைகள் மற்றும் சஞ்சித வினைகளையே, இருவினைகள் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்றால், இந்த இரண்டு வகையான வினைகளையும் முழுவதுமாக கழித்துக் கொள்ள வேண்டும். இந்த பிறவிக்காக ஒதுக்கப்பட்ட பிரார்த்த வினைகளை நாம் நுகர்ந்து கழித்துக் கொள்ளலாம், அவ்வாறு நுகர்ந்து கழிக்கும் போது, மேலும் ஆகாமிய வினைகள் சேராதவாறு, விருப்பு வெறுப்பு இன்றி, அந்த வினைகளின் பயனாக நேரிடும் இன்ப துன்பங்களை, விருப்பு வெறுப்பின்றி எதிர்கொண்டு நடந்து கொள்ளலாம். ஆனால் இனிமேல் எடுக்கவிருக்கும் சஞ்சித வினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி ஐயப்பாடு நமக்கு எழலாம். நாம் இந்த பிறவியில் எதிர்கொள்ளும்,இன்ப துன்பங்களை, நமது வினைகளால் விளைந்தவை என்பதை புரிந்து கொண்டு, மனதினில் எந்த விதமான சலனமும் இன்றி, அனைத்தையும் இறைவனின் செயல் என்பதை உணர்ந்து, இன்ப துன்பங்களை ஒரே விதமாக பாவித்தால், மேலும் ஆகாமிய வினைகள் சேரா. மேலும், நாம் அடைந்துள்ள இந்த பக்குவ நிலையினை கண்ணுறும் இறைவன், இனிமேல் இந்த உயிர், எவ்வளவு வினைகளை அனுபவித்தாலும், அதன் நிலையில் மாற்றம் ஏற்படாது என்பதை உணர்வதால், அந்த உயிரினை, சஞ்சித வினைகளை வரும் பிறவிகளில் நுகர்ந்து கழிக்கும் நிலையிலிருந்து விடுதலை அளிக்கின்றான். இந்த தன்மை தான் இங்கே இருவினையை ஈடழித்து என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது. ஈடு என்றால் வலிமை என்று பொருள். துவந்துவங்கள்=நன்மை தீமை ஆகிய இணைபிரியாத இரண்டு; பரஞானத்தால், இறைவனைப் பற்றிய அறிவால், நமது மனது தூய்மை அடையும் நிலை. குலாத்தில்லை=சிறப்புடன் விளங்கும் தில்லையம்பலம்; தனது என்பினை உருக்கிய பெருமான், தனது இருவினைகளை ஈடழித்தும், இன்ப துன்பங்களை ஒரே விதமான உணர்ச்சியுடன் எதிர்க்கொள்ளும் பக்குவத்தை அளித்தும், அதற்கு முன்னம் தன்னுடன் பிணைந்திருந்த அனைத்து வினைகளையும் முழுவதுமாக அழித்தும்,தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்து தனது உயிரின் துன்பங்களை முற்றிலும் களைந்துவிட்டான் என்று இந்த பாடலில் மணிவாசக அடிகளார் கூறுகின்றார், எனவே தான், தன் பால் அன்பு கொண்டு இறைவன் செய்த இந்த கருணைச் செயலை நினைவு கூர்ந்தது மனம் கசிந்தவராக இறைவனை அன்பன் என்று அழைக்கின்றார்.

என்பு உள்ளுருக்கி இருவினையை ஈடழித்துத்

துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து

முன்பு உள்ளவற்றை முழுதழிய உள்புகுந்த

அன்பன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே

அன்பே சிவம் என்பது சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கை. அன்பும் சிவமும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பொருந்தியுள்ளது என்பதை திருமூலர் அழகாக விளக்குகின்றார். அறிவும் அனுபவமும் இல்லாதார் அன்பாகிய சக்தியும் அறிவாகிய சிவமும் வேறு வேறான இரண்டு பொருள்கள் என்று கருதுவார்கள்; அன்பு முதிர்ந்தால் அறிவாகிய சிவம் தோன்றும் என்பதை அனைவரும் உணர்வதில்லை; அன்பே சிவத்தை விளங்கச் செய்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் அன்பின் வடிவமாக மாறி, தானே சிவத்தன்மை எய்தியவர்களாக உள்ளனர் என்பதே இங்கே கொடுக்கப்பட்டுள்ள திருமந்திரப் பாடலின் திரண்ட கருத்தாகும். அன்பே வடிவாக இறைவன் இருப்பதால் தான், அன்பே சிவம் என்று சான்றோர்கள் கூறுகின்றனர். இறைவனின் திருவருள் அன்பு எனப்படும்.அன்பாகிய திருவருளும் இன்பமாகிய சிவமும் ஒளியும் மணியும் போன்று பிரிக்க முடியாதவை. எனவே இவற்றை வேறு வேறு என்று கூறுதல் தவறு. இன்பம் அளிக்கும் சிவனின் திருமேனி திருவருள் தான் அவனது திருமேனி என்பதை அறிந்தவர்கள் அவனது திருவடியின் மீது அன்பினை வைத்து தியானித்து இன்பம் அடைவார்கள். அவர்கள் அடையும் இன்பநிலை சிவமாய் அமர்ந்து இருந்தார் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின்

அன்பே சிவமாக அமர்ந்து இருந்தாரே

பொழிப்புரை:

எலும்பு மாலை, பாம்பு, திருமாலாகிய வராகத்தின் பல், திருமாலாகிய கூர்மனின் அழகிய ஆமையோடு ஆகிய இவற்றுடன் மின்னல் போன்று ஒளிவீசும் பூணூலையும் கலந்து, தனது அழகிய மார்பினில் அணிந்து கொண்டவர் சிவபெருமான். அவர் தன்பால் அன்பு வைத்து, மனம் உருகி வழிபடும் அடியார்களுக்கு அன்பராகத் திகழ்கின்றார். அன்பராகிய சிவபெருமான் நிலையாக அமர்ந்து உறைகின்ற தலம் அரிசிற்கரைப்புத்தூர் ஆகும். பொன் போன்ற நிறத்தில் மலரும் பூக்களை உடைய கோங்கு மரம் உயர்ந்து வளர்ந்துள்ள சோலைகளை உடைய தலம் அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும்.

பாடல் 6:

வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும்

வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர்

தெள்ளி வரு நீர் அரிசில் தென்பால் சிறை வண்டும்

புள்ளும் மலி பூம்பொய்கை சூழ்ந்த புத்தூரே

விளக்கம்:

இந்த பாடலில் முருகப்பெருமான் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. பல திருமுறைப் பாடல்கள் முருகப்பெருமானை குறிப்பிடுகின்றன. திருக்கடவூருக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானைப் போற்றி, கருவூர்த் தேவர் அருளிய பதிகம் ஒன்று ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ளது. நக்கீரத் தேவர் அருளிய திருமுருகாற்றுப்படை பதினோராம் திருமுறைத் தொகுப்பின் ஒரு அங்கமாக உள்ளது.திருஞானசம்பந்தர் அருளிய பதின்மூன்று பதிகங்களும், அப்பர் பிரான் அருளிய இருபத்துமூன்று பதிகங்களும் சுந்தரர் அருளிய பதினான்கு பதிகங்களும் முருகப் பெருமான் பற்றிய குறிப்பு உடைய பாடல்களைக் கொண்டுள்ளன. முருகப் பெருமானை குறிப்பிடும் திருஞானசம்பந்தர் பாடல்களை மட்டும் நாம் இங்கே காண்போம். முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.12.10) திருஞானசம்பந்தர், இந்த தலத்தில் உள்ள இளம் பெண்கள் தெய்வத்தன்மை பொருந்திய குறிஞ்சிப் பண்ணில் முருகனது பெருமைகளை பாடுகின்றனர் என்று கூறுகின்றார்.

அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான்

மருகன் வரும் இடபக் கொடி உடையான் இடம் மலரார்

கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி

முருகன்னது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே

சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.48.11) சேய் அடைந்த சேய்ஞலூர் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் குழந்தையாகிய முருகப் பெருமான் சூரபதுமனுடன் போருக்கு செல்லும் வழியில் படைவீடு அமைத்து தங்கிய செய்தியை இந்த குறிப்பு நமக்கு உணர்த்துகின்றது. சேய்=பெருமானின் குழந்தையாகிய முருகப் பெருமான். தோயம்=நீர்; தோயம் என்ற சொல் தோய் என்று இங்கே எதுகை கருதி மாறியுள்ளது. சாய்=சார்பு; வண் வயல்=வளமை உடைய வயல்கள்

சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவித்

தோய் அடைந்த வண் வயல் சூழ் தோணிபுரத் தலைவன்

சாயடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன்னுரைகள்

வாயடைந்து பாட வல்லார் வானுலகு ஆள்பவரே

இராமனதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.115.3) திருஞானசம்பந்தர், முருகப்பெருமானை தழைத்த பீலியை உடைய மயிலினைத் தனது வாகனமாகக் கொண்டவன் என்றும் சிவபெருமானை முருகரின் தந்தை என்றும் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இழையவன்=முப்புரி நூல் அணிந்தவன்

தழைமயில் ஏறவன் தாதையோ தான்

மழை பொழி சடையவன் மன்னு காதில்

குழையது விலங்கிய கோலமார்பின் பின்

இழையவன் இராமனதீச்சரமே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.117.8) திருஞானசம்பந்தர் இறைவனை, மாமுருகன் தந்தையார் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் சொற்களை இடம் மாற்றி அமைக்கப் பட்டிருப்பதால், இந்த பதிகம் மொழிமாற்றுப் பதிகம் என்று அழைக்கப் படுகின்றது. நெருப்புறு மேனியர், வெள்விடை ஏறுவர், நெற்றியின் கண் கண்ணர், மருப்பு உருவன் தாதை, மாமுருகன் விருப்புறு தந்தையார்,பாம்புக்கு மெய்யைக் காட்டுவர் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். நெருப்புறு=நெருப்பினைப் போன்ற;வெள்விடை=வெண்மை நிறமுடைய இடபம்; மருப்பு=தந்தம்; மருப்புருவன்= தந்தம் ஒரு உறுப்பாக கொண்டுள்ள யானை முகத்தினை பெற்றுள்ள கணபதி;விறல்=வலிமை பொருப்பு=மலை; தென்=அழகிய. தாதையை என்ற சொல்லில் உள்ள ஐகாரத்தை மெய் என்ற சொல்லுடன் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். இந்த பாடலில் கணபதி மற்றும் முருகப் பெருமான் ஆகிய இருவர் பற்றிய குறிப்புகளும் காணப் படுகின்றன. திருமுறைப் பாடல்களில் கணபதி மற்றும் முருகன் பற்றிய குறிப்பு பல பாடல்களில் காணப்பட்டாலும், இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடும் பதிகங்கள் மிகவும் அரிதானவை.

நெருப்பு உறு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண்

மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்

விருப்புறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மாதவர் வாழ்

பொருப்புறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியரே

மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.1) மாயச்சூரை அன்று அறுத்த மைந்தன் என்று முருகப்பெருமானையும் அவனது தாதை என்று சிவபெருமானையும் குறிப்பிடுகின்றார். மாயச்சூர்=பல மாயங்கள் புரிந்த சூரபதுமன்; மைந்தன்=வலிமை மிகுந்தவன்; காயம்=உடல்; செவ்வி=அழகான;அழகான உடல் கொண்ட காமன் என்று கூறுகின்றார்;

காயச்செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்

பாயப் படர் புன்சடையில் பதித்த பரமேட்டி

மாயச்சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை தன்

மீயச்சூரே தொழுது வினையை வீட்டுமே

திருக்களர் என்று அழைக்கப்படும் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.2) திருஞானசம்பந்தர், வீரத்தில் முருகப்பெருமானை ஒத்த அர்ஜுனன் என்று கூறுகின்றார். மிண்டிய=நெருங்கிய; அடியார்கள் பெருமானை நெருங்கி அவனது திருப்பாதங்களைப் போற்றி வணங்குகின்றனர் என்று கூறுகின்றார்,

தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய

தாளினார் வளரும் தவமல்கு திருக்களருள்

வேளின் நேர் விசயற்கு அருள் புரி வித்தகா விரும்பும் அடியாரை

ஆள் உகந்தவனே அடைந்தார்க்கு அருளாயே

பிரமனூர் என்று அழைக்கப்பட்ட சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.73.1), திருஞானசம்பந்தர், இளங்குமரன் என்று முருகரை குறிப்பிடுகின்றார். தேவர்களின் பகைவனாகிய சூரபதுமனையும், அவனைத் சார்ந்த அரக்கர்களையும் அழிப்பதற்காக முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது என்று கூறுகின்றார். சீர்=பெருமை; விளங்கிய சீர்=பெருமையுடன் விளங்கும்; மேல் சோலை=உயர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள் கொண்ட சோலை: களங்கமில் ஊர்=உயிரினுக்கு களங்கம் எனப்படும் ஆணவ மலத்தினை இல்லை என்று சொல்லும் வண்ணம் அடக்க உதவும் ஊர்;இளங்குமரன்=முருகப் பெருமான்; பகை=சூரபதுமன்; எறிவித்தல்=எறிதல், அடித்தல், முரித்தல். வீசுதல் என்று பல பொருள்களைத் தரும். இந்த சொல் இங்கே அழித்தல் என்ற பொருளைத் தருகின்றது. வண்=வளமை மிகுந்த;

விளங்கிய சீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை

வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல்

களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன

இளம் குமரன் தன்னைப் பெற்று இமையவர் தம் பகை எறிவித்த இறைவன் ஊரே

மதுரையில் பாண்டிய மன்னனின் அவையில் அருளிய பதிகத்தின் பாடலில் (2.74.6) முருகப் பெருமானை தோற்றுவித்து தேவர்களின் பகையை (சூரபதுமன் மற்றும் அவனது படை) கெடுத்த இறைவன் என்று சிவபெருமானை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். காய்ந்த=சினத்துடன் வந்த; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த இயமன், சிறுவன் சிவபெருமானை வழிபாடு செய்வதைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டதை இங்கே குறிப்பிடுகின்றார். இருங் கமலம்=சிறந்த தாமரைப்பூ. சேந்தன்=முருகப் பெருமான்; பயந்து=பெற்றெடுத்து; இட மயில்=மயில் போன்ற சாயலுடன் இடது பாகத்தில் பொருந்தி இருக்கும் பார்வதி தேவி; நாணி=நாணினை உடைய வில்;

காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலமாத் தோணிபுரம் சீர்

ஏய்ந்த வெங்குருப் புகலி இந்திரனூர் இருங் கமலத்து அயனூர் இன்பம்

வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை

சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.2) ஞானசம்பந்தர், முருகப் பெருமானை மடமயில் ஊர்தி என்றும் சிவபெருமானை மடமயில் ஊர்தி தாதை என்றும் குறிப்பிடுகின்றார். பொருள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கடுமயில் என்ற தொடர் கடும் அயில் என்று இங்கே பிரிக்கப் பட்டுள்ளது. நான்கு அடிகளிலும் முதற்சீர், இடமயில், கடுமயில், மடமயில், நடமயில் என்று இருப்பதை நாம் உணரலாம். நான்கு அடிகளிலும் மயில் என்ற சொல் கையாளப் பட்டுள்ள நயத்தினை நாம் உணரலாம். திருஞானசம்பந்தரின் கவிதை நயத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த பாடல் உள்ளது.

இட மயில் அன்னசாயல் மடமங்கை தன் கை எதிர் நாணி பூண வரையில்

கடும் அயில் கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன்

மடமயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும்

நடமயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரின் நம்பன் அவனே

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.115.6) திருஞானசம்பந்தர் முருகப் பெருமானை சாமி என்று குறிப்பிட்டு, இறைவனை சாமியின் தாதை என்று கூறுகின்றார். ஆமிதென்று தகைந்து=அன்னமாகவும் பன்றியாகவும் உருவெடுத்து பெருமானின் முடியையும் அடியையும் தேடுதல் தங்களுக்கு பொருந்தும் வழி என்று முடிவு செய்து;

நேமியானும் முகநான்கு உடையந் நெறி அண்ணலும்

ஆம் இதென்று தகைந்து ஏத்தப்போய் ஆரழல் ஆயினான்

சாமி தாதை சரணாகும் என்று தலை சாய்மினோ

பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே

திட்டை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.35.6), திருஞானசம்பந்தர், முருகப் பெருமானின் தந்தையார் சிவபெருமான் என்று கூறுகின்றார்.ஊறினார்=அனைத்துப் பொருட்களிலும் ஊறி நிற்பவர்; பொய்யகத்து ஐ உணர்வு என்று பிரித்து பொருள் கொள்ள வேண்டும். நிலையற்ற பொய்யான,உலகத்து பொருட்களின் மீது பற்று (ஆசை) வைக்காதவர்கள்; அமர்தரும்=அமர்ந்து உறையும்; அனைத்துப் பொருட்களிலும் ஊறி நின்று நிறைந்து இருப்பவரும் எல்லா விதமான ஓசைகளிலும் ஒன்றியவரும் திருமாலை தனது உடலின் ஒரு கூறாகக் கொண்டுள்ளவரும் குமரவேளின் தந்தையும் ஆகிய பெருமான் விருப்பத்துடன் அமர்ந்து உறையும் ஊர் தென்குடித்திட்டை. இந்த தலத்தினில் வாழும் அடியார்கள், காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் என்ற ஆறு குற்றங்களைக் களைந்தவர்களாக, நிலையற்ற உலகப் பொருட்களின் மீது ஆசை அற்றவர்களாக, மனதினை ஐந்து பொறிகளின் வழியே மனதினை செலுத்தாமல் அடக்கியவர்களாக சிவபெருமான் ஒருவரே உண்மையான மெய்ப்பொருள் என்பதை உணர்ந்தவர்களாக, பெருமானை வழிபாட்டு வருகின்றனர் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால்

கூறினார் அமர் தரும் குமரவேள் தாதை ஊர்

ஆறினார் பொய்யகத்தை உணர்வு எய்தி மெய்

தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே

சுரருலகு நரர்கள் பயில் என்று தொடங்கும் பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67.3) முருகப் பெருமான் தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்தை, ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் விநாயகக் கடவுள் தோற்றுவிக்கப்பட்ட செய்கையையும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.சிவபெருமான் தனது ஐந்து முகங்களோடு அதோமுகமும் கொண்டு குமரக் கடவுளை தோற்றுவித்த தன்மையை உணர்த்தும் வண்ணம், ஒரு முகம் மிகுந்த நிலையினை குறிப்பால் சுட்டிக்காட்டும் வண்ணம் மிக அருளி என்று சம்பந்தர் கூறியதாக விளக்கம் கூறுகின்றனர். நிகழ்=போன்ற; நகமணி=நாகமணி;முகை=மொட்டு; முகைமலர்=அன்று வரை மொட்டாக இருந்து அப்போது தான் மலர்ந்த மலர், நாண்மலர்; பகவன்=சிவபெருமான்; முகம்=திருவருள் நோக்கம்; பகை=தேவர்களின் பகைவராகிய அசுரர்கள்; மிக அருள=மிகுந்த கருணையுடன் தர; நிகரில் இமையோர்=அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்த தேவர்கள்; புக=சரண் புக; அகவு=விருப்பம்; இவ்வாறு முனிவர்களுக்கு அருளிய பெருமான் தேவர்களுக்கும் அருளியவன் ஆவான். தேவர்களின் பகையாக விளங்கிய சூரபதுமனையும் அவனுடன் இருந்த அரக்கர்களையும் வேரோடு களையும் வகையில் ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமானை இறைவன் தோற்றுவிக்க, அதனால் மிகவும் மகிழ்ந்த தேவர்கள், முருகப் பெருமானின் தோற்றத்திற்கு முன்னம் சரண் அடைவதற்கு தகுந்த இடமாக, புகழ் மிகுந்ததும் அழகு வாய்ந்ததுமாக விளங்கியது சீர்காழி நகரம், தேவர்கள் புகல் அடைந்தமையால் புகலி நகர் என்ற பெயரினைப் பெற்றது.

பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு

அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய பகவன் இடமாம்

பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள நிகரில் இமையோர்

புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.102.3) திருமாலாகவும் பிரமனாகவும் சிவபெருமான் இருப்பது போன்று முருகப்பெருமானாகவும் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். சேய் என்ற சொல் முருகப் பெருமானை உணர்த்துகின்றது என்பதை நமக்கு தெரிவிக்கும் வகையில் சேய்த்தொண்டர் புராணம் என்ற நூலை தேனூர் வரகவி சொக்கலிங்கனார் என்பவர் இயற்றியுள்ளார். முருகப் பெருமான், சூரபத்மனுடன் போருக்குச் செல்கையில், ஒரு இரவுப்பொழுதில் படைவீடு அமைத்துத் தங்கியதால் சேய்ஞலூர் என்ற பெயர் வந்ததாக, தலபுராணம் குறிப்பிடுகின்றது. திருஞானசம்பந்தரும் சேய் அடைந்த ஊர் என்று சேய்ஞலூர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் குறிப்பிடுகின்றார் என்பதை நாம் முன்னரே சிந்தித்தோம்.

மாயவன் சேயவன் வெள்ளியவன் விடம் சேரு மை மிடற்றன்

ஆயவனாகி ஓர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம்

தீயவன் நீரவன் பூமியவன் திருநாரையூர் தன்னில்

மேயவனைத் தொழுவார் அவர் மேல்வினை ஆயின வீடுமே

கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.113.1), திருஞானசம்பந்தர், சிவபெருமான் முருகப்பெருமானை பெற்றெடுத்ததை நினைத்து உகந்து அணைத்துக் கொண்டதாக கூறுகின்றார். உற்று=பிரியாது; காமனை= தனக்காக காத்திருக்கும் மனைவி மக்கள் முதலியோர்; அற்றம்=மறைக்க வேண்டிய பாகம்; உமையன்னை பிரியாது இருப்பது பெருமானின் உடலை, சான்றோர்கள் உணர்வது உண்மையான கடவுளாகத் திகழும் பெருமானை, கற்றவர்கள் வெறுப்பது மனைவி மக்கள் ஆகியோரால் ஏற்படும் பாசக்கட்டினை, பெருமானின் நெற்றிக்கண் எரித்து அழித்தது காமனை, பெருமான் தனது இடுப்பினில் அணிந்து கொண்டுள்ள பாம்பு அவரது இடுப்பினைச் சார்ந்த அங்கத்தினை மறைக்கின்றது, தேவர்கள் பெருமானுக்கு பணிவிடை செய்கின்றனர், தான் பெற்றெடுத்த முருகப்பெருமானின் உச்சியை முகர்ந்து பெருமான் மகிழ்கின்றார்,பிரமபுரம் என்று அழைக்கபப்டும் சீர்காழி தலத்தினில் உரைவதை பெருமான் மிகவும் விரும்புகின்றார் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே

கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே

அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே

பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை உகந்தனையே

பொழிப்புரை:

வள்ளியம்மையின் மார்பினைத் தழுவும் முருகப்பெருமானின் தந்தையும், வானளாவ உயர்ந்த வெள்ளி மலையாகிய கயிலாய மலை போன்று கம்பீரமாகவும் வெண்மை நிறத்தில் காணப்படுவதும் ஆகிய விடையினைத் தனது வாகனமாக உடையவனும் ஆகிய சிவபெருமான் பொருந்தி உறையும் ஊர் அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும். தெளிந்த நீருடன் பாயும் அரிசில் ஆற்றின் தென் கரையில், சிறைகளை விரித்து பறக்கும் வண்டுகளும் பறவைகளும் நிறைந்து வாழ்வதும் அழகிய நீர்நிலைகளும் உடையதும் ஆகிய தலம் அரிசிற்கரைப்புத்தூர் ஆகும்.

பாடல் 7:

நிலம் தணீரோடு அனல் கால் விசும்பு நீர்மையான்

சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தான் ஊர்

அளந்த அடியான் அற்றைக்கு அன்றோர் காசு எய்திப்

புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே

விளக்கம்:

நீர்மை=இயல்பு; ஐம்பூதங்களின் தன்மையாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. ஐம்பூதங்கள் என்றதும், திருஞான சம்பந்தருக்கு, ஐம்பூதத் தலங்களில் ஒன்றாகிய திருவானைக்கா தலத்தினில் வழிபட்ட கோச்செங்கட்சோழன் நினைவுக்கு வந்தார் போலும். கோச்செங்கட் சோழனையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அலந்த=வருந்திய; அற்றைக்கு=பண்டைய நாளில் அன்று; இந்த பாடலில் புகழ்த்துணை நாயனார்,இறைவனின் அருளால் தினமும் ஒரு பொற்காசு பெற்றமை குறிப்பிடப்படுகின்றது. சேக்கிழாரின் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். பெற்றம்=இடபம்; அற்றம்=வறுமை;

பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு

அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்றது கைக்கொண்டு

உற்ற பெரும் ;பசியினால் உணங்கும் உடம்புடன் உவந்து

முற்றுணர்வு தலை நிரம்ப முகமலர்ந்து களி கூர்ந்தார்

பொழிப்புரை:

நிலம் தண்ணீர் தீ காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களின் தன்மையாக இருப்பவரும், தன்னை வழிபட்ட சிலந்தி அடுத்த பிறவியில் கோச்செங்கட்சோழனாக பிறக்கச் செய்தவரும் ஆகிய பெருமானின் ஊர் அரிசிற்கரைப்புத்தூர் ஆகும். வறுமையால் விளைந்த உடல் தளர்ச்சியால் வருந்திய, புகழ்த்துணை நாயனாருக்கு, பண்டைய நாளில் தினமும் ஒரு பொற்காசு அளித்தவர் சிவபெருமான்; அந்த சிவபெருமானை அனுதினமும் காலையிலும் மாலையிலும் புகழ்த்துணை நாயனார் போற்றி வழிபட்ட தலம், அரிசில் நதிக்கரையில் உள்ள அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும்.

பாடல் 8:

இத்தேர் ஏக இம்மலை பேர்ப்பன் என்று ஏந்தும்

பத்தோர் வாயான் வரைக் கீழ் அலறப் பாதம் தான்

வைத்தார் அருள் செய் வரதன் மருவும் ஊரான

புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே

விளக்கம்:

சென்ற பாடலில் புகழ்த்துணை நாயனார் அனுதினமும் இந்த தலத்து பெருமானை வழிபட்ட செய்தியை உணர்த்திய திருஞானசம்பந்தர், நாமும் இந்த தலத்து இறைவனை வழிபட்டு, நமது வினைகளைத் தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். தேர் ஏக= தேர் தடையின்றி செல்ல; ஏந்தும்=தாங்கும்;எண்ணத்தை தாங்கியவனாக; வரை=மலை; ஒரு முறை அரக்கன் இராவணன் கயிலாய மலையைக் கடந்து செல்ல முயற்சி செய்த போது அவனால் முடியவில்லை. தான் செல்லும் வழியில் குறுக்கே நின்று இடையூறு செய்தது என்று கருதிய அரக்கன், இந்த மலையை பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தை மேற்கொள்வேன் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதை ஏந்தும் என்ற சொல் மூலம் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

தான் அமர்ந்து பறந்து கொண்டிருந்த புட்பக விமானம் தொடர்ந்து பயணம் செய்வதற்கு இடையூறாக இருந்த கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தினை தொடர்வேன் என்ற எண்ணத்துடன், பத்து வாயினையும் பத்து தலைகளையும் உடைய அரக்கன் இராவணன், தனது எண்ணத்தினை சாயாலாக்க முயற்சி செய்த போது, அந்த அரக்கன் கயிலாய மலையின் கீழே அமுக்குண்டு வருந்தி அலறும் வண்ணம்,தனது பாதத்தின் திருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான்; பின்னர் தனது தவறுக்கு வருந்திய அரக்கன் இராவணனுக்கு அருள் புரிந்த வரதனும் அவரே. அத்தகைய கருணை உள்ளம் கொண்டவராகிய பெருமானை காண்பதற்கு விருப்பம் கொண்டவராக அவர் உறைகின்ற தலமாகிய அரிசிற்கரைப்புத்தூர் சென்று அவரை காணும் அடியார்களின் வினைகள், அவர்களை விட்டு விலகிவிடும்.

பாடல் 9:

முள்ளார் கமலத்து அயன் மால் முடியோடு அடி தேட

ஒள்ளார் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும்

கள்ளார் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள்

புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே

விளக்கம்:

முள்ளார் கமலம்=முட்கள் நிறைந்த தண்டுடன் கூடிய தாமரை மலர்; கள்ளார்=தேன் நிறைந்த; புள்ளார்=பறவைகள் நிறைந்த; ஒள்ளெரி=சிறந்த ஒளி

பொழிப்புரை:

முட்கள் நிறைந்த தண்டுடன் பொருந்திய தாமரை மலரில் உறையும் பிரமனும் திருமாலும், ஒன்றுகூடி பெருமானின் திருமுடியையும் திருவடியையும் தேடுவதற்கு முயற்சி செய்த போது, சிறந்த ஒளியாக நீண்டு நிமிர்ந்து, பிரமனும் திருமாலும் தனது முடியையும் அடியையும் காண முடியாத வண்ணம், நின்றவர் சிவபெருமான். அத்தகைய ஆற்றல் கொண்ட பெருமான் உறைகின்ற இடம், தேன் நிறைந்த நெய்தல் ஆம்பல் கழுநீர் தாமரை மலர்கள் நிறைந்த பொய்கைகள், பலவிதமான பறவைகள் மற்றும் மலர்கள் நிறைந்து காணப்படும் தலமாகிய அரிசிற்கரைப்புத்தூர் ஆகும்.

பாடல் 10:

கையார் சோறு கவர் குண்டர்களும் துவர் உண்ட

மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல

பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்

ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகாமே

விளக்கம்:

கவர் என்ற சொல்லுக்கு வாங்கி உட்கொள்ளும் என்று பொருள் கொள்ள வேண்டும்; மெய்யார்=உடலில் போர்த்துக் கொள்ளும்; மண்டை என்பது புத்தர்கள் வைத்திருக்கும் உண்கலன்; அகன்ற வாயினை உடையது என்பர்; எனவே அவர்கள் மண்டையர் என்று அழைக்கப் பட்டனர்; ஐயுறவு=சந்தேகம்;ஐயா=தலைவன்;

பொழிப்புரை:

தங்களது கை நிறைய உணவினை வாங்கிக்கொண்டு உட்கொள்ளும் சமணர்களும், துவர்ச்சாயம் தோய்க்கப்பட்ட ஆடையினைத் தங்களது உடலின் மீது போர்த்துக் கொள்வோரும் மண்டை என்று அழைக்கப்பட்ட உண்கலனை ஏந்துவோரும் ஆகிய புத்தர்களும், சிவபெருமானைக் குறித்தும் சைவசமயம் குறித்தும் சொல்லும் சொற்கள் உண்மையற்ற சொற்கள்; எனவே, உலகத்தவரே, அவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணிப்பீர்களாக. எக்காலத்திற்கும் உண்மையாக பொருந்தும் மொழிகளை உடைய வேத மந்திரங்களை சொல்லி அந்தணர்கள் பெருமானை போற்றுகின்ற அரிசிற்கரைப் புத்தூர் தலத்து இறைவனை, எங்களது தலைவனே என்று போற்றும் அடியார்கள், தங்களது வாழ்வினில் பல நலன்களும் பெற்று பொலிவுடன் திகழ்வார்கள் என்பது திண்ணம்.

பாடல் 11:

நறவம் கமழ் பூங்காழி ஞானசம்பந்தன்

பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல்

செறி வண்டமிழ் செய்மாலை செப்ப வல்லார்கள்

அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே

விளக்கம்:

நறவம்=தேன்; பொறி=புள்ளிகள்; செறி=சொல்லும் பொருளும் அழகுடன் நெருங்கி பொருந்திய; அறவன்=அறமே, புண்ணியமே வடிவமான இறைவன்;

பொழிப்புரை:

தேன் மணம் கமழும் பூக்கள் நிறைந்த சீர்காழி நகரினைச் சார்ந்த ஞானசம்பந்தன், புள்ளிகள் நிறைந்த உடலினை உடைய பாம்புகளைத் தனது உடலின் பல இடங்களிலும் ஆபரணமாகப் பூண்டு கொண்டுள்ள பரமன் அருளாட்சி புரியும் அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது இயற்றியதும், சொல் வளமும் பொருள் வளமும் நிறைந்த தமிழ் மாலையை ஓதும் ஆற்றல் உடைய அடியார்கள், புண்ணியமே உருவமான பெருமானின் திருப்பாதங்களை அடைந்து அவனது அன்பினையும், அந்த அன்பினை விளைவாக என்றும் குறையாத இன்பமும் அடைவார்கள்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் கருமை நிறம் கறையாக பொருந்திய கழுத்தின் அருகே வெண்மை நிறத்துடன் ஒளிவீசும் பிறைச் சந்திரனை அணிந்துள்ள பெருமானின் தன்மை, அறியாமையை நீக்கும் பரஞ்சோதியாக பெருமான் விளங்குகின்றார் என்ற உண்மையை உணர்த்துகின்றது என்றும் அரிசிற்கரைப் புத்தூர் மிகவும் பழமை வாய்ந்த புகழ் மிகுந்த தலம் என்றும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த தலத்து அடியார்கள் பெருமானின் திருநாமத்தை சொல்லியவாறு பூவும் நீரும் கொண்டு வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார். பெருமானுடன் இணைந்துள்ள தலைமாலை, பாம்பு, சாம்பல் பொடி ஆகிய பொருட்களை ஆராயாமல், பெருமானின் முழு உருவத்தின் கோலத்தை ஆராய்ந்தால் பெருமான் அழகு வாய்ந்தவர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் என்று மூன்றாவது பாடலில் குறிப்பிடுகின்றார். அதாவது பெருமானுடன் இணைந்துள்ள பொருட்களின் அடிப்படையில் பெருமானின் அழகினை நிர்ணயம் செய்வதோ ஆராய்வதோ தவறு என்று உணர்த்துகின்றார். எவ்வாறு எந்த பொருளும் பெருமானின் அழகினுக்கு பங்கம் விளைவிக்காது என்று மூன்றாவது பாடலில் விளக்கிய திருஞானசம்பந்தர், பதிகத்தின் நான்காவது பாடலில் எந்த பொருளும் பெருமானின் உடலுக்கு கேடு விளைவிக்காது என்று கூறுகின்றார். அதற்கு உதாரணமாக, அனைவரும் ஈரப்பசை வாய்ந்த யானையின், தோல் தங்களது உடலுக்கு கேடு விளைவிக்கும் அச்சம் கொண்டு தவிர்ப்பதை குறிப்பிட்டு அத்தகைய யானைத்தோலினை தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்ட பெருமானின் செயல் குறிப்பிடப் படுகின்றது. முதல் நான்கு பாடல்களில் உணர்த்தியபடி, பலவிதமான ஆற்றல்கள் மற்றும் பெருமைகள் கொண்டவராக விளங்கும் பெருமான், அடியார்கள் பால் அன்பு வைத்து அருள் புரிபவராக உள்ள நிலை ஐந்தாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. தமிழ்க் கடவுளாகிய ஆறுமுகனை ஈன்றெடுத்த பெருமை உடையவர் என்று பதிகத்தின் ஆறாவது பாடல் குறிப்பிடுகின்றது. ஐந்தாவது பாடலில் குறிப்பிட்ட வண்ணம் அடியார்களுக்கு அன்பராக விளங்கும் தன்மை,கோச்செங்கட் சோழன் மற்றும் புகழ்த்துணை நாயனார் ஆகியோரின் குறிப்பு மூலம் ஏழாவது பாடலில் வலியுறுத்தப் படுகின்றது. எட்டாவது ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்கள், முறையே இராவணன், திருமால் மற்றும் பிரமன், சமணர்கள் ஆகியோரின் நிலையினை எடுத்துரைக்கும் பாடல்களாக அமைந்து உள்ளன. கடைப்பாடல் இந்த பதிகம் ஓதுவதால் நாம் அடைய இருக்கும் பலனை உணர்த்துகின்றன. இந்த பதிகத்தின் மூலம் அரிசிற்கரைப் புத்தூர் தலத்து இறைவனின் பெருமையையும் பண்பையும் புரிந்து கொள்ளும் நாம், அந்த தலம் சென்று இறைவனைப் பணிந்து வணங்கி, தேவாரப் பதிகங்கள் பாடி, அவனது அருளினை, இம்மையிலும் மறுமையிலும் பெறுவோமாக



Share



Was this helpful?