இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


முல்லைப் பாட்டு

Mullai Pattu, also known as Mullai Pāṭṭu, is a classical Tamil literary work from the Sangam period. It is part of the Pattuppāṭṭu (Ten Idylls) anthology, which consists of ten long poems that are central to the Sangam literary tradition.

முல்லைப் பாட்டு

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

நூலாசிரியர் வரலாறும், பாட்டியல்பும்

சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டினுள் ஐந்தாம் பாட்டாகத் திகழும் இம்முலைப் பாட்டினை இயற்றியருளியவர் நப்பூதனார் என்னும் நல்லிசைப் புலவராவார். இப் புலவர் பெருந்தகை காவிரிப்பூம் பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் என வழங்கப்படுதலானே பண்டைக்காலத்தே சோழநாட்டுத் தலைநகராகச் சிறந்தோங்கிய காவிரிப்பூம்பட்டினத்தே இவர் பிறந்தவர் என்றும், அந்நகரத்தே அக்காலத்திற் சிறப்புற்றோங்கிய வணிகர் குடிகளுள் ஒன்றிற் றோன்றியவரென்றும், இவர் தந்தையார் சிறந்த பொன் வாணிகஞ் செய்தனர் என்றும் நன்கு விளங்கும். இனி, பூதனார் என்பதே இவர் இயற்பெயராகும். அப்பெயர் முன்னர்ச் சிறப்புப் பொருளைத் தரும் இடைச் சொல்லாகிய ந என்பதனைப் பெய்து இவர் நப்பூதனார் என்று வழங்கப்பட்டனர் என்க. பண்டைக்காலத்தே கல்வி கேள்விகளானே வல்லுநராகிய சான்றோர் பெயரை ந என்னும் அடைகூட்டி வழங்கும் வழக்கமுண்மையை நக்கீரனார், நத்தத்தனார், நக்கண்ணையார், நப்பசலையார் என வரும் பிற சான்றோர் பெயர்களிடத்தும் காண்க.

இப்புலவர் பெருமான் இயற்றியதாகப் பண்டை இலக்கியங்களில் இம் முல்லைப் பாட்டினையன்றி வேறு பாடல் காணப்படவில்லை. நற்றிணை 29ஆம் செய்யுளை இயற்றிய புலவர் பெயர் பூதனார் எனப்படுகின்றது. ஒருகால் அப் பூதனார் இந் நப்பூதனார் தாமோ பிறரோ அறிகிலம். இவர் வாணிகர் குடித் தோன்றலாயினும் மன்னர்களுடனே- அவர்தம் படைகளுடனே - பெரிதும் ஊடாடியறிந்தவராதல் ஒருதலை. ஒருகால், இவரே ஒரு சிறந்த போர்வீரராகவும் பணிசெய்திருத்தலும் கூடும் என்பது இவர் ஓதும் பாசறைநிலையினை ஊன்றி நோக்குவார்க்குப் புலனாம். நெடுநல்வாடை பாடிய நக்கீரர் போலாது, இவர் தனித்த அகத்திணை பற்றியே இப்பாடலை யாத்துள்ளனர். ஆதலின், தமது புலமை உணர்ச்சியே இவரைத் தூண்டிய காரணத்தான் இப்பாடலை இவர் யாத்தனர் என்றுணரலாம்.

இனி, இவர் இம் முல்லைப்பாட்டினுள் செந்தமிழ் மொழி உள்ள துணையும் அழிவின்றி நின்று நிலவுவனவாய இரண்டு சிறந்த உயிரோவியங்களைத் தமது மனனுணர்ச்சியாகிய வண்ணந்தீற்றிப் புனைந்தமைத்துள்ளனர். அவற்றுள் ஒன்று, வினைமேல் சென்ற தன் ஆருயிர்க் காதலன் அவன் கூறிச் சென்ற பருவம் வந்துழியும் வாராமையானே, அலமந்து கிடக்கும் ஓர் அன்பு கெழுமிய பெண்ணின் ஓவியமாம்; மற்றொன்று, போர்குறித்துச் சென்ற ஒப்பிலா வீரர் பெருந்தகையாகிய மன்னன் ஒருவன், தன்னுடைய நாற்பெரும் படையொடு இரவின்கட் பாசறையிலிருக்கும் இருப்பாகிய எழிலோவியம். இவ்விரண்டோவியம் அன்றியும், தாய்மாரின் வருகையை எதிர்நோக்கிப் பசியோடே சுழலா நின்ற ஆனிளங் கன்றுகளின் அலமரல் வருத்தம் நோக்கி அன்புடைமையாலே மனம் உருகித் தன் தோள்களைத் தழுவிய கையையுடையளாய் அவையிற்றிற்கு உதோ நும் தாய்மார் வந்திடுவர்! வருந்தேன்மின்! என ஆறுதல் கூறி நிற்கும் ஓர் இடைச்சிறுமியின் எழிலோவியம் ஒன்றும் உளது. இப்புலவர் பெருமான் தாம் மேற்கொண்ட அகப்பொருள் முல்லைத்திணைக்குரிய கார்காலம், அந்திமாலை ஆகிய பெரும் பொழுது, சிறு பொழுதுகளையும் அந்நிலத் தெய்வமாகிய திருமாலையும், அந்நிலக் கருப்பொருளாகிய ஆன்களையும், கன்றுகளையும், அந்நிலத்துவாழ் மக்களாகிய ஆயர், ஆய்ச்சியரையும், அவர் செய்தொழிலாகிய ஆன்காத்தலையும், ஒரு சில அடிகளிலே இம் முல்லைப்பாட்டின் தொடக்கத்தே கற்போ ருளத்தே கண்கூடாகத் தோன்றுமாறு அமைந்திருக்கும் அருமை உன்னி உன்னி மகிழற்பாலது; அவ்வடிகள்,

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடுவலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல்
என்றும்,
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
என்றும்,

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்நடுங்குசுவ லசைத்த கையள் கையகொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தரஇன்னே வருகுவர் தாயர் என்போள்
என்றும் வருவனவாகிய சிறந்த அடிகளாம். இனி, இப்புலவர்பெருமான் உலகத்தின் இயற்கை யழகிலே உளம் போக்கி இன்புறும் இயல்பினர் என்பதனை இப்பாட்டின் தொடக்கத்தே இப்பேருலகத்தையே விழுங்குமாப்போல வளைந்து கொண்டு மிகப் பெரிய மழையைப் பொழிகின்ற முகில்களின் காட்சியையும், அம் முகிற்கூட்டங்கள் உயரிய மலைச்சிகரங்களிலே தவழ்கின்ற இன்பக் காட்சியையும், பெருமுழக்கத்தோடே அலையெறிந்து குளிர்ந்து கிடக்கும் மாபெருங் கரியகடற் காட்சியையும், இக் காட்சியைக் கண்ட காலத்தே இவற்றிற்கு உவமமாக உள்ளத்தே தோன்றிய திருமால் உலகளக்கப் பேருருக் கொண்டெழுந்த தெய்வக் காட்சியையும், இனிதாக இவர் நினைவு கூர்ந்தோதுமாற்றான் உணரலாம்.

இனி, இடைச் சேரியிலே பன்னிற மணிகளை நிரல்படச் கோத்தாங்குச் சிறிய தாமணியிலே தொடுக்கப்பட்ட பன்னிற ஆன்கன்றுகள் நிற்கின்ற அழகும், அவற்றின்பால் ஆரா அன்பு கொண்ட ஆய்மகள், நுந்தாயர் இன்னே வருகுவர் வருந்த வேண்டா என ஆறுதல் கூறும் அழகும், பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலைப் போதாகலான், அவ் வாய்மகள் தானும் குளிரால் வருந்துவாளாய்த் தன் கைகளைத் தோளிற் கட்டிக்கொண்டு நிற்கும் அழகும், இவ்வான்கன்றின்பால் அன்பு கூர்ந்து அவையிற்றைத் தேற்றும் ஆய்மகள் போன்றே, தன் காதலன் வரவு காணாது கலங்கும் காரிகைநல்லாளை அவள்பாற் பேரன்பு பூண்ட பெரு முதுபெண்டிர் நன்னர் நன்மொழி கேட்டனம் அதனால், வினைமுடித்துத் தலைவர் வருவது வாய்வது; நீ நின் மனத்தடுமாற்றத்தாற் றோன்றிய எவ்வம் களை, எனப் பல்காற் றேற்றியும் தேறாது முத்துதிர்ந்தாற் போன்று கண்ணீர் உதிர்க்கும் தலைவியின் அன்பு வெளிப்பாட்டழகும் கற்போருளத்தைக் கனிவித்து இன்பூட்டும் சொல்லோவியங்களாம்.
இனி, இடைப் பிறவரலாக இப்புலவர் பெருமான் வரைந்தளித்த பாசறை ஓவியம் நம்மை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்க் கொண்டுசென்று ஆங்கொரு காட்டினூடே நாற்பெரும்படையினகத்தே நின்று காணும்படி செய்து விடுகின்றது.

காட்டாறுகள் சூழ்ந்து கிடக்கும் அக் காட்டினூடே நறிய பிடவஞ் செடிகளையும், ஏனைப் புதல்களையும் வெட்டியழித்து, நாற்புறமும் இடுமுள்ளால் மதிலெடுத்துயர்த்து, வரிசை வரிசையாகப் படைஞர்க்குக் குடிலமைத்து அவையிற்றைத் தழையாலே, வேய்ந்துள்ள அழகும், நாற்சந்தியிலே காவலாக நிறுத்தப்பட்ட களிற்று யானைகள் கரும்பும் நெல்லும் அதிமதுரத் தழையுமாகிய இனிய கவளத்தைத் தானும் செருக்குடைமையாலே உண்ண மறுத்தனவாய், அவற்றாலே தம் நெற்றியைத் துடைப்பனவாய்க் கூரிய மருப்பின்மேலே தம் கையை ஏறட்டு நிற்கின்ற எழிலும் யானைப் பாகர்கள் அவற்றைக் கவளம் உண்ணும்படி அதட்டிக் குத்துக்கோலாலே ஆது, ஆது, அப்புது, அப்புது, அப்புது, ஐ,ஐ எனச் சில வடமொழிகளைப் பலகாலும் உரத்துக் கூறிக் குத்துதலும், ஒருசார் விற்களை ஊன்றி அவையிற்றின் மேல் தூணிகளைத் தூங்கவிட்டிருக்கும் தோற்றம் பார்ப்பனத் துறவிகள் தம் காவித்துகிலை முக்கோலை நட்டு அவற்றின்மேல் இட்டுவைத்தாற் போன்று தோன்றும் காட்சியும், உள்ளறையும் புறவறையுமாக மதிட்டிரை வளைத்து, அப்பாசறையின் நடுவிடத்தே மன்னனுக்கென்று தனியே அமைக்கப்பட்ட பள்ளியறையின் மாண்பும், அப் பள்ளியறையின் அகத்தே நள்ளிரவினும் உறங்காராய் ஒளி பொருந்திய வாள் கட்டிய மறமகளிர் தங் கையிடத்தே நெய்ச்சுரையும் திரியுமுடையராய் ஆண்டு அவியும் விளக்குகளை நெய் வார்த்துக் கொளுத்தி வருகின்ற காட்சியும், ஒருசார், அரசன் மெய்காவலராகிய பெருமூதாளர், வெண்டுகிலாலே போர்வை யிட்டவாரய் மோசிமல்லிகை படர்ந்து கிடக்கும் சிறு தூறு காற்றாலே அசையுமாறு போல மெல்ல அசைந்த நடையினராய்ச் சூழ்வருங் காட்சியும், வாயானன்றிக் கையானும் முகத்தானுமே பேசும் ஊமைக் காவலர் தன்மையும், இப்பாசறையூடே மன்னன் யானை முதலிய படைகளின் நிலைமையே சிந்தித்தவனாய், ஒரு கையைப் படுக்கைமேல் வைத்து மற்றைக் கையால் தலையைத் தாங்கிக் கண்படை கொள்ளாதே கிடத்தலும், பிறவுமாகிய இப்பாசறை ஓவியம் மட்டுமே இத்துணை யழகாகத் தமிழிலக்கியங்களிலே வேறிடத்துக் காணப்படாததாக ஆசிரியர் நப்பூதனார் நமக்களித்த அரும்பெறல் ஓவியமாக அமைந்துள்ளது.

இனி, இவ்வாறு, பாசறையிருப்பின்கண் உள்ள மன்னனைக் காணப் பெறாது பூப்போலுண்கண் புலம்பு முத்துறைப்ப முன்னர்க் காட்டிய தலைவியின் மாண்பினைப் பின்னர்த் தொடர்ந்து கூறுகின்றார். அம் மடந்தையின் உள்ளத்தே அறிவிற்கும் அன்பிற்கும் பெரும்போர் நிகழ்கின்றது. நந்தலைவன் கூறியபடி ஆற்றியிருத்தலே நங்கடன்; ஆற்றாமை அறக்கழிவாம் என அறிவு எடுத்துக் காட்டித் தேற்றுகின்றது; மற்று, அடைக்குந் தாழில்லாத அன்போ, அவ்வறிவின் தேற்றுரையின் அடங்காதே பொங்கிப் பொங்கி வழிகின்றது! என்செய்வள் தனியள் ! பெண்!

நீடுநினைந்து தேற்றியும் ஓடுவளை திருத்தியும்மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி இழைநெகிழ்ந்துபாவை விளக்கிற் பரூஉச்சுடர் அழலஇடஞ்சிறந் துயரிய எழுநிலை மாடத்துமுடங்கிறைச் சொரிதரும் மாத்திரள் அருவி இன்பல் இமிழிசை ஓர்ப்பனள்
கிடக்கலானாள் ; பின் என்செய்வாள் பேதை!

இங்ஙனமாகிய இத்தலைவியின் இந்நிலைமை இனியும் நீளில் பதம் முறுகிக் கெடுமன்றே! அங்ஙனம் கெடாதவாறு, இப்புலவர் பெருமான் பொங்கும் பாலிலே நெய்யகுத்தாற் போன்று தேர்ந்து கொண்ட ஒரு சிறு சொற்றொடராலே அன்பினை அன்போடு கூட்டுவிக்கும் அழகுதான் என்னே ! என்னே ! ஓர்ப்பனள் கிடந்தோளுடைய அஞ்செவி நிறைய ஆலின என்னும் இச் சிறு சொற்றொடரே அஃதாம். எவையாலின? என்னும் வினா நம்முள்ளத்தே விரைந்தெழுகின்றது.

இவ்வினாவிற்கு விடையைக் காண, யாம் எஞ்சிய செய்யுட் பகுதியை ஆர்வத்தோடே ஓதிக் காண்போமானால், அவ்வன்புப் பிழம்பாகிய தலைவிக்கு எவையாலின! என்னும் ஐயம் ஒரு சிறிதும் தோன்றுமாறில்லை. அவ்வன்புடைப் பெருமாட்டியோ, அஞ்செவி நிறைய ஆலிய அக்கணமே, இவை நம் தலைவர் நெடுந்தேர்பூண்ட மாவே என ஐயமின்றி அறிதல் இயல்பே யன்றோ? இனி, முன்னர்க் கண்ட சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றுகளின் அஞ்செவி நிறைய அவையிற்றின் தாய்ப் பசுக்கள் ஆலினவாதலும் அப்போதே நிகழ்ந்திருத்தல் திண்ணம். இவ்வாற்றான் இப்புலவர் பெருமான் நப்பூதனார் இச் சிறு பாட்டானே தமிழுணர்வார்க்குப் பெருநலம் விளைவித்தனர் என்க.

அறிமுகம்

காவிரிப்பூம்பட்டினத்துச் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் என்னும் நல்லிசைப் புலவராற் பாடப்பட்ட இம்முல்லைப் பாட்டு, பத்துப் பாட்டென்னும் சிறந்த தமிழிலக்கிய வரிசையின் ஐந்தாம் பாட்டாகத் திகழ்வதாம்.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லைபெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினியகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்பாலை கடாத்தொடும் பத்து

எனவரும் பழைய வெண்பாவானே பத்துப் பாட்டுக்கள் இவை என்றும், அவற்றின் எண்ணுமுறையும் இனிதின் உணரலாம். இனி, இம் முல்லைப் பாட்டுத் தமிழ்மொழிக்கே சிறந்துரிமையுடைய அகம் புறம் என்னும் பொருணெறி மரபின்கண்ணே அகப் பொருள் நெறியில் முல்லைத்திணை பற்றி எழுந்ததாகலான் திணைப் பெயரானே முல்லை அல்லது முல்லைப்பாட்டு என்று வழங்கப்படுகின்றது. இனி, மக்கள் அகத்தே நிகழ்கின்ற அன்பு காரணமாக ஒத்த நெஞ்சமுடைய ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர், அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குக் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதொரு பொருளாகலின் இக் காதலின்பத்தினை அகம் என்றும் இவ்வகவின்ப வாழ்விற்கேதுவாகிய பொருளையும் அவ்வாழ்க்கையுடையோர் இயற்றும் அறத்தினையும் புறம் என்றும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் வகுத்துக்கொள்வாராயினர்.

அவ்விருவகைப் பொருள்களுள் அகப்பொருள் பற்றிய ஒழுக்கங்களைக் கைக்கிளை ஒழுக்கம், பெருந்திணையொழுக்கம், குறிஞ்சியொழுக்கம், முல்லையொழுக்கம், பாலையொழுக்கம், மருதயொழுக்கம், நெய்தலொழுக்கம் என ஏழு பெரும் பிரிவாக வகுத்து ஒவ்வோர் ஒழுக்கத்துள்ளும் பற்பல உட்பிரிவுகளும் வகுத்தோதுவர்.

பெரும்பகுப்பைத் திணை என்றும் அவற்றின் உட்பகுப்பைத் துறையென்றும் கூறுதல் மரபு. இனி, இவற்றுள் கைக்கிளை என்பது தலைவன் தலைவியரிடை ஒத்த அன்பானன்றித் தலைவன் அல்லது தலைவியாகிய ஒருவர் அன்புகொள்ள மற்றையோர் அன்பு கொள்ளாதவழி நிகழ்வதாகிய ஒருதலை அன்பொழுக்கமாகும். பெருந்திணையென்பது, மடலேறுதலும் தலைவி ஆண்டினால் தலைவற்கு இளையளாகாது ஒத்த, அல்லது மிக்க அகவையுடையளாதலும் அறிவழிந்த குணமுடையளாதலும், ஆண் மகனும் அகவை முதிர்வுடனே காமமிகுதியானே எதிர்ப்பட்டுழி வலிதிற் புணர்தலுமாகிய பொருந்தாக் காம ஒழுக்கம் என்ப. எனவே இவ்விருவகை ஒழுக்கமும் இழுக்குடையனவாக, இடையே எஞ்சிய குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்னும் ஐந்தொழுக்கமே ஒத்த அன்பாலே பொருத்தமுற நிகழும் ஒழுக்கம் என்ப.

இவையிற்றுள் குறிஞ்சி என்பது, புணர்தலும் அதன் நிமித்தங்களுமாம்; முல்லை என்பது இருத்தலும் அதன் நிமித்தங்களுமாம்; பாலை என்பது பிரிதலும் அதன் நிமித்தங்களுமாம்; மருதம் என்பது , ஊடலும் அதன் நிமித்தங்களுமாம்; நெய்தல் என்பது இரங்கலும் அதன் நிமித்தங்களும் ஆம்: என்க. எனவே இம் முல்லைப்பாட்டு இருத்தலும் அதன் நிமித்தங்களுமாகிய ஒழுக்கமியம்பும் பாட்டாதல் அறிக.

அன்பானே ஒத்த தலைவனும் தலைவியுமாகிய இருவரும் உளமொத்துக் கூடி இல்லறம் நடத்துகின்ற நாள்களிலே, தலைவன் தன் ஆண்மைக்கு இன்றியமையாக் கடமையாய்த் தம் இல்லறம் இனிதே நடத்தற்கு ஏதுவாய் உள்ள பொருட்பேற்றிற்கு வழியாயமைந்த போர்த் தொழில் முதலியவை பற்றித் தன் அன்புடை மனையாளைப் பிரிந்து செல்ல நேர்தல் இவ்வுலகியல்பாமன்றோ! இவ்வியல்போடொத்துத் தன் பகைவரொடு போர் செய்யக் கருதிப் புறப்படுகின்ற தலைவன் தன் மனைவியை நோக்கி இனிதாகத் தான் பிரிந்து செல்ல வேண்டியதன் இன்றியமையாமையை நயமாக எடுத்துக் கூறி, யான் இத்துணை நாளில் மீண்டும் வருகுவல், அதுகாறும் ஆற்றியிருத்தல் நின்கடனாம், எனத் தேற்றிப் பிரிந்தான். அங்ஙனம் அத் தலைவன் வினைமேற் சென்ற காலம் முதுவேனிற் பருவமாகும். அவன் மீண்டு வருவதாகக் கூறிச் சென்ற காலம் முதுவேனிற் காலத்திறுதியும், கார்காலத் தொடக்கமுமாகிய ஆவணித் திங்களின் முதனாளாகும்.

ஒருநாள் எழுநாள்போற் செல்லும்சேட் சென்றார்வருநாள்வைத் தேங்கு பவர்க்கு (திருக்குறள் - 1249)
என்றோதுவர் மக்களின் மனவியல்பை நுண்ணிதின் உணர்ந்த திறவோர். பிரிவாற்றாமையால் எழுங் கடல் போன்ற வருத்தத்தைத் தன் கணவன் ஆற்றியிரு எனத் தனக்கிட்ட கட்டளையை எண்ணியும் கணவன் சொற்றிறம்பாத் திண்மையே தன் உயிரினும் சிறந்த கற்பாதலை நினைந்தும், நெடிய அம்முதுவேனிற் பருவத்தை ஒருவாறு கழித்துத் தலைவி கடைகாண்பாளாயினள்; இதுவே, முல்லை ஆகும். இதனை ஆன்றோர் இல்லிருத்தல் முல்லையெனப் போற்றினர்.

இத்தலைவன் கூறிப்போன கார்ப் பருவத் தொடக்கமாகிய ஆவணித் திங்கள் முதனாளும் அரிதின் வந்தெய்தியது; வானத்தே யாண்டும் கரிய முகில்கள் சூழ்ந்தன! எங்கும் பெருமழை ! காலை வாராராயினும் மாலைக் காண்குவம் என்னும் ஒரு சிறு நம்பிக்கையின்மேல் தலைவியின் உயிர் தரித்து நின்றது; காலைப்போது உச்சிப் போதாய்க் கதிர்சாய்ந்து அந்தோ! அம் மாலைதான் கொலைக் களத்து ஏதிலர் போல வந்தெய்தியது! ஆனால், தன்னாருயிர்த் தலைவனோ வரக் காண்கிலள்! இந்நிலையிலேதான் இம் முலைப்பாட்டுத் தொடங்குகின்றது. தலைவியின் பேரன்பு அறிவின் ஆட்சிக்கீ ழமையாது பொங்கிப் புரள்வதாயிற்று. அளியரோ! அளியர்! அவள்பால் அன்பு பூண்ட பெருமுதுமகளிர்; விரைந்து ஊர்ப்புறத் தோடினர்; நெல்லும் மலருந் தூவினர்; நற்சொல் என்ன தோன்றுகின்றது என்று செவியால் நெடிது ஓர்ந்தனர்.
இன்னே வருகுவர் தாயர்

என்றோர் இன்சொல் அங்குப் பெற்றனர். விரைந்தோடி வந்தனர்: மாயோய்! நல்ல ! நல்ல ! நற்சொல்! நல்ல இன்னே வினை முடித்து வருவர் நின்றலைவர்; அன்னே! ஆற்றுக ! ஆற்றுக ! என்று மொழிந்தனர்.
அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புண்கணீர் பூசல் தரும் (குறள் - 71)
அன்றோ!

இனித் தன் ஆருயிர்த் தலைவனுடைய பிரிவினால் இத்துணை ஆற்றாமை எய்தும் தலைவி நெடிய வேனிற் காலம் முழுதும் அவனது கட்டளை நினைந்து ஆற்றியிருந்த அருமையைக் கூறிய நப்பூதனார், இப்பாட்டின் தொடக்கமுதல் பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப என வரும் 23 - அடிகளோடு;

இன்றுயில் வதியுநற் காணாள் துயருழந்துநெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடுமுடங்கிறைச் சொரிதரும் மாத்திரள் அருவிஇன்பல் இமிழ்இசை ஓர்ப்பனள் கிடந்தோள்அஞ்செவி நிறைய ஆலினதுனைபரி துரக்கும் செலவினர்வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே

எனப் பின் வரும் ஒருசில அடிகளை மட்டுமே இணைத்து முடித்திருப்பினும், இப்பாட்டு முல்லைத் திணைக்குரிய முதல், கரு, உரியெனும் முப்பொருளும் பெற்றுச் சிறிதும் குறைபாடின்றி முடிவு பெற்றதோர் இனிய முல்லைப்பாட்டாகவே திகழும் என்பதில் ஐயமின்று எனினும், ஆசிரியர் நப்பூதனார் இவ்வருமைப் பாட்டின் அழகினை மேலும் அழகு செய்யக் கருதியவராய், இங்ஙனம் ஆற்றியிருக்கும் தலைவியைப் பிரிந்து சென்ற தலைமகளின் தன்மையையும், முல்லை என்னும் அகப்பொருள் இலக்கணத்தோடு மிகப் பொருந்தியதாகிய வஞ்சித்திணை என்னும் புறப்பொருள் பகுதியின்பாற்பட்ட பாசறை யிருப்பினைக் கூறு முகத்தானே இடைப்பிறவரலாக நன்கு பொருந்த இணைத்துக் கூறும் திறம் வியக்கற்பாலதாம்.

ஆசிரியர் தொல்காப்பியனாரும்,
வஞ்சி தானே முல்லையது புறனே (தொல்.புறத்-6.)
என்றும், எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே (þ.7.)
என்றும் ஓதுதல் அறிக.

முல்லையென்னும் அகவொழுக்கத்திற்கு வஞ்சி என்னும் புறவொழுக்கம், தலைமகள் தலைவனைப் பிரிந்திருக்கும் மனை காடுறையுலகமாதலும், தலைவியைப் பிரிந்து சென்ற தலைமகன் பாசறையும் காடுறையுலகத்தே இருத்தலானும், முல்லைக்குரிய கார்ப்பருவத் தொடக்கத்தே இருவரும் மீண்டுங் கூடுதலானும், தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் பிரிந்திருத்தலொப்புமை யானும் ஏனைக் கருப்பொருள்களும் இரண்டுக்கும் ஒத்தலானும் இயைபுடைத்தாயிற்று என்க. இனி, இம் முல்லைப்பாட்டு நேரிசை ஆசிரியப்பாவாலியன்றதாம். பத்துப் பாட்டினுள் அடிவரவாலே மிகச் சிறிய பாட்டும் இம்முலைப்பாட்டேயாம். இப் பாட்டு 103 அடிகளாலாயது.

இப் பாட்டினை, ஆசிரியர் நப்பூதனார் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக உட்கொண்டே அவன் தன் அருமை மனைவியைப் பிரிந்துபோய்ப் பாசறைக்கண்ணிருந்த மாண்பினையும், அவன் மனைவி அவனைப் பிரிந்திருந்த மாண்பினையும், அகப்பொருளிலக் கணம் பிறழாமை கருதி வெளிப்பட வோதாமல் குறிப்பாற் கொள்ளுமாறு ஓதினர் என்பாரும் உளர். ஆசிரியர் நக்கீரனார் அவ்வாறே அப் பாணடியனைத் தம் நெடுநல்வாடையிற் பாடியுள்ளார்.

நக்கீரர் பாடியது கூதிர்ப்பாசறையாக, இம் முல்லைப் பாட்டில் வேனிற்பாசறை கூறப்படுகின்றது. பண்டைக் காலத்தே தமிழ்மன்னர்கள் ஒரு யாண்டினகத்தனவாகிய ஆறு பெரும் பொழுதுகளுள், வேனிற் பொழுதையும், கூதிர்ப்பொழுதையுமே போர் செய்தற்கேற்ற காலமாகக் கொண்டிருந்தனர் என்பது இவற்றால் உணரலாம்.
இனி இம்முல்லைப் பாட்டின்கண் அத்திணைக்குரிய நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளும் கருப்பொருள்களும் இருத்தலாகிய உரிப்பொருளும் எஞ்சாதே வந்தமை அறிக.

கார் பருவத்தின் வருகை

நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல், போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி 5

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,

பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டல்
அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10

பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப

நல்ல வாய்ப்புகள்

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய
கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, 15

இன்னே வருகுவர், தாயர் என்போள்

பெருமுது பெண்டிரின் தேற்ற மொழிகள்
நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீ நின் 20

பருவரல் எவ்வம் களை, மாயோய்! என,
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப

பாசறை அமைப்பு

கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, 25

வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ,
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி

பாசறையின் உள் அமைப்பு - யானைப் பாகரின் செயல்
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற 30

தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, 35

கல்லா இளைஞர், கவளம் கைப்ப

வீரர்கள் தங்கும் படைவீடுகள்

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை 40

பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணம் ஆக,

அரசனுக்கு அமைத்த பாசறை

வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு,

மங்கையர் விளக்குகளை ஏந்துதல்
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, 45

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரிவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,

மெய்காப்பாளர் காவல்புரிதல்
நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், 50

அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ

நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்
பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், 55

தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப
வன்கண் யவனர்
மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,
மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, 60

வலி புணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண்
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், உரையா நாவின், 65

படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,

பாசறையின் கண் வேந்தன் மனநிலை
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது,
எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,
பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய, 70

தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு
வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து,
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்;
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை 75

முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து

பாசறையில் வெற்றி முழக்கம்
பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை

தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்
இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து, 80

நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, 85

இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின

அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்

வென்று, பிறர்
வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு, 90

விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப,

மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல்
அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால,
கோடல் குவி முகை அங்கை அவிழ, 95

தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந் நிலப் பெரு வழி,
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்,
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள,
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில், 100

அரசனது தேரின் வருகை
முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய,
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே.

தனிப் பாடல்கள்

வண்டு அடைந்த கண்ணி வளர் ஆய்ச்சி வால் நெடுங் கண்
சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது - என்றுகொல்
கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்து,
குன்று எடுத்து நின்ற நிலை? 1

புனையும் பொலம் படைப் பொங்கு உளை மான் திண் தேர்
துனையும் துனைபடைத் துன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாராமுன்னம்,
கடல் முகந்து வந்தன்று, கார்! 2


Overview of Mullai Pattu

1. Title Meaning:

- Mullai refers to the "forest" or "pastoral" landscape, and **Pattu** means "song" or "poem." Thus, **Mullai Pattu** translates to "Songs of the Forest" or "Pastoral Songs," indicating that the poems are set in a rural, forested environment.

2. Content:

- Structure: Mullai Pattu consists of 12 poems and focuses on the natural beauty and lifestyle of people in the Mullai region, characterized by its pastoral and hilly terrain.
- Theme: The central theme of Mullai Pattu is the depiction of life in the pastoral landscape of the Mullai region. The poems celebrate the simplicity and beauty of rural life, the natural environment, and the cultural practices of its inhabitants.

3. Themes and Imagery:

- Pastoral Life* The poems portray the idyllic and serene aspects of pastoral life, emphasizing the harmony between humans and nature. The Mullai region is depicted as a place of peace and natural beauty.
- Natural Beauty: Detailed descriptions of the landscape, including forests, hills, and flora, are central to the work. The natural setting is depicted with vivid imagery and poetic language.
- Love and Relationships: Similar to other Sangam poetry, Mullai Pattu explores themes of love and relationships, often set against the backdrop of the natural environment. The pastoral setting adds a romantic and idealized dimension to these themes.

4. Poetic Style:

- Kurinji Meter: The poems are written in the "Kurinji" meter, which is associated with pastoral and mountainous themes. This meter is known for its rhythmic and melodic qualities.
- Imagery and Symbolism: The use of rich imagery and symbolism enhances the portrayal of the natural world and the emotions of the characters. The natural landscape often serves as a metaphor for human experiences and feelings.

5. Cultural and Historical Context:

- Sangam Geography: The Mullai region represents one of the five landscapes (tinai) described in Sangam literature. Each tinai represents different aspects of human experience and emotion. The Mullai region is associated with pastoral life and natural beauty.
- Role of Nature: The poems reflect the significance of nature in shaping the lives and experiences of people in the Mullai region. The natural world is portrayed as both a setting and a source of inspiration.

6. Literary Significance:

- Contribution to Tamil Literature: Mullai Pattu is an important work in Tamil literature, showcasing the poetic richness and thematic diversity of the Sangam period. It provides valuable insights into the cultural and environmental aspects of ancient Tamil Nadu.
- Influence on Later Literature: The pastoral themes and stylistic elements of Mullai Pattu have influenced subsequent Tamil literature, particularly in the depiction of rural life and the natural environment.

Mullai Pattu is celebrated for its lyrical beauty and evocative portrayal of life in the pastoral landscapes of Tamil Nadu. It remains a key text in the Tamil literary tradition, reflecting the cultural and environmental richness of the Sangam era.



Share



Was this helpful?