இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


முந்திநின்ற வினைகள்

முந்திநின்ற வினைகள்

பதிக எண்: 1.27. - திருப்புன்கூர் - தக்கராகம்

பின்னணி:


வைத்தீசுவரன் கோயில் (தேவாரப் பதிகங்களில் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்படும் தலம்) சென்று வைத்தியநாதரை, கள்ளார்ந்த என்று தொடங்கும் பதிகம் பாடி போற்றி வணங்கிய பின்னர் திருஞானசம்பந்தர், திருநின்றியூர் திருநீடூர் மற்றும் திருப்புன்கூர் தலங்கள் சென்று பெருமானை வணங்கி பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவிக்கின்றார். நீண்ட புகழ் வாய்ந்த திருநின்றியூர் சென்று ஆங்கே வீற்றிருக்கும் நிமலனாரின் திருவடிகளைத் தொழுது பெருமான் மீது காதல் கொண்டு அவரைப் போற்றி சிறந்த தமிழ்ப்பதிகம் பாடிய திருஞானசம்பந்தர், சிறப்பு வாய்ந்த திருநீடூர் தலம் சென்று பெருமானை வணங்கிய பின்னர் திருப்புன்கூர் தலம் சென்று நடனம் ஆடும் பெருமானின் திருப்பாதங்களை சிறப்பித்து அவனது அருளை இறைஞ்சி பதிகம் பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய, சூலம்படை சுண்ணப்பொடி என்று தொடங்கும் பதிகத்தினை (1.18) சிந்தித்த நாம் இப்போது திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தை சிந்திப்போம். திருநீடூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. திருப்புன்கூர் தலத்தின் மீது, திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பதிகங்கள் தலா ஒவ்வொன்று நமக்கு கிடைத்துள்ளன. திருஞான சம்பந்தர் திருப்புன்கூர் தலம் சென்றதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த தலத்தில் உள்ள நடராஜர் திருவுருவத்தின் அழகில் தனது மனதினை பறி கொடுத்த சேக்கிழார், ஆடிய பாதம் என்று நடராஜப் பெருமானை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார் போலும்.

நீடு திருநின்றியூரின் நிமலர் தம் நீள்கழல் ஏத்திக்

கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு வண்டமிழ் கூறி

நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி

ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்

இந்த தலம் நந்தனார் சரித்திரத்துடன் தொடர்பு கொண்டது. திருக்கோயிலின் உள்ளே செல்லாமல் புறத்தே கோபுர வாயிலிலிருந்து நந்தனார் வழிபட்ட போது, இலிங்கத் திருமேனியை நந்தி மறைத்தால், பெருமானை காண முடியாமல் அவர் வருந்தினார். அவரது வருத்தத்தைப் போக்க திருவுள்ளம் கொண்ட பெருமான் நந்தியை சற்று விலகுமாறு கட்டளையிட்டார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இன்றும் அந்த நந்தி சற்று விலகிய நிலையில் இருப்பதை நாம் காணலாம். பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் நந்தனாரின் சன்னதி உள்ளது. சுந்தரர் தனது பதிகத்தின் பாடலில் (7.55.2) இந்த தலத்துடன் ஏயர்கோன் கலிக்காமர் தொடர்பு கொண்டுள்ள நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். ஒரு சமயம் உலகெங்கும் மழை இன்றி தவித்தபோது மழை பெய்தால் பன்னிரு வேலி நிலம் திருக்கோயிலுக்கு தருவதாக வேண்டிக்கொள்ள, பெருமழை பெய்து வெள்ளமாக ஓடியது. பின்னர் அந்த மழையினை நிறுத்த, மேலும் பன்னிரு வேலி நிலம் தருவதாக வேண்டிக்கொள்ள மழை நின்றது என்று சுந்தரர் இந்த பதிகத்தில் கூறுகின்றார். ஏயர்கோன் கலிக்காம நாயனார் பிறந்த தலமாகிய பெருமங்கலம் அருகில் உள்ளது. ஏயர்கோனும் சுந்தரரும் சேர்ந்து இந்த தலம் வந்தடைந்து பெருமானை வழிபட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். நம்பியாண்டார் நம்பியும், ஏயர்கோனார், பன்னிரண்டு வேலி நிலங்கள் இந்த திருக்கோயிலுக்கு கொடையாக அளித்ததை திருப்பண்ணியர் விருத்தம் நூலில் குறிப்பிடுகின்றார்.

வைத்தீஸ்வரன் கோயிலிருந்து அணைக்கரை வழியாக மணல்மேடு செல்லும் பாதையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மேற்கே சுமார் மூன்று கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தலம். கும்பகோணம் மணல்மேடு பேருந்து, சீர்காழி மணல்மேடு பேருந்து, மற்றும் மயிலாடுதுறை நகரப் பேருந்து ஆகியவை இந்த தலம் வழியாக செல்கின்றன. சிதம்பரம் மற்றும் சீர்காழி நகரங்களிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. புங்க மரங்கள் அதிகமாக உள்ளதால் புங்கூர் என்ற பெயர் வந்தது. வடமொழியில் கரிஞ்சாரண்யம் என்று அழைக்கப் படுகின்றது. இறைவனின் திருநாமம் சிவலோகநாதன், சிவகாமிநாதன், இறைவியின் திருநாமம் சிவகாமி, சௌந்தர நாயகி, சொக்கநாயகி. அகத்திய முனிவர் இறைவனின் திருமணக் கோலம் கண்டு களித்த தலம். பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், சப்த கன்னிகைகள், சீதா தேவியைத் தேடிக் கொண்டு சென்ற அங்கதன், ஜாம்பவான், அனுமன் மற்றும் உடன் சென்ற வானரங்கள், இந்திரன், பிரமன், சூரியன், சந்திரன், அக்னி, இராஜேந்திர சோழன், ஆகியோர் வழிபட்ட தலம். சற்று குட்டையான பாணத்தில் காட்சி தரும் சுயம்பு இலிங்கம். புற்று மண்ணால் ஆனது. மூலவர் இலிங்கம் திருக்குவளை என்று அழைக்கப்படும் கலசம் சார்த்தப்பட்டு எப்போதும் மூடியே இருக்கும். திங்கட்கிழமை அர்த்தஜாம நேரத்தில் இலிங்கத்தின் மீது புனுகு தெளிக்கப்படும். மிகவும் பெரிய நந்தி. ஐந்து நிலை இராஜகோபுரம். எல்லா கோயில்களிலும் நாம் துவாரபாலகர்கள் நிமிர்ந்து நேரே நிற்பதை காணலாம். ஆனால் இந்த திருக்கோயிலில் வாயில் காப்பாளர்கள், தங்களது தலையினை சற்று சாய்த்துக் கொண்டு சன்னதியை நோக்கி பார்த்த வண்ணம் உள்ளனர். தெருக்கோடியில் நின்று கொண்டு இறைவனை காண முடியவில்லையே என்று வருந்திய நந்தனாரின் தன்மையை பெருமானுக்கு தெரிவிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு சாய்ந்து உள்ளனரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

வெளி பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர், முருகர் சன்னதிகள் உள்ளன. தலமரத்தின் கீழே ஐந்து முகங்களைக் கொண்ட லிங்க உருவத்தை நாம் காணலாம். பெருமானின் எதிரே பிரமன் நின்ற நிலையில் பெருமானை வழிபடுவதையும் காணலாம். பிரமனுக்கு தரிசனம் அளித்தபடியால் பிரமலிங்கம் என்று அழைக்கப் படுகின்றது. உள் பிராகாரத்தில் சூரியன், நால்வருடன் கலிக்காம நாயனார், சுந்தர விநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர், சந்திரன் சன்னதிகள் உள்ளன. பெரிய உருவத்துடன் காணப்படும் சோமாஸ்கந்தர் இந்த தலத்தின் தனிச் சிறப்பு. சூரிய லிங்கம்; அக்னி லிங்கம் என்று சூரியனும் அக்னியும் வழிபட்ட லிங்கங்களும் உள்ளன. கருவறையின் சுற்றுச் சுவர்களில் நர்த்தன விநாயகர், பிக்ஷாடனர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை, மாதொருபாகன் பைரவர் ஆகியோரை காணலாம். துர்கையின் அருகே சண்டீசரையும் காணலாம். நடராஜர் அழகான உருவம். ஒரு பூதகணம் பஞ்சமுக வாத்தியம் வாசிப்பதையும் மற்றொரு பூதகணம் முழவம் வாசிப்பதையும் காணலாம். ஐந்து லிங்கங்கள் ஒன்றுக்கொன்று அருகிலும் அளவினில் மாறுபட்டும் இருப்பதை காணலாம். இவற்றை பஞ்ச முக லிங்கங்கள் என்று அழைக்கின்றனர். பெருமானின் ஐந்து முகங்களுக்கு உரிய லிங்கங்களாக இவை கருதப்படுகின்றன. தத்புருஷம் அகோரம் வாமதேவம் சத்யோஜாதம் மற்றும் ஈசானம் என்பன பெருமானின் ஐந்து திருமுகங்கள்; இந்த இந்து முகங்களிலிருந்து மாகேச்வர வடிவங்கள் தோன்றியதாக சொல்லப் படுகின்றன. ஈசான முகத்திலிருந்து சோமாஸ்கந்தர்,ரிஷபாரூடர், சந்திர சேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர் தோன்றினர் என்றும், தத்புருட முகத்திலிருந்து தாருகாவனம் சென்ற பிட்சாடனர், காமனை எரித்த காமாரி, ஜலந்தரனை அழித்த ஜலந்தராரி, திரிபுரம் எரித்த திரிபுராரி, இயமனை உதைத்து வீழ்த்திய காலாரி ஆகியோர் தோன்றினர் என்றும் அகோர முகத்திலிருந்து வீரபத்திரர், தென்முகக் கடவுள், பாசுபதம் அளித்த கிராத மூர்த்தி, கஜசம்ஹாரர் மற்றும் நீலகண்டர் தோன்றினர் என்றும் வாமதேவ முகத்திலிருந்து கபாலம் ஏந்திய கங்காளர் திருமாலுக்கு சக்கரம் அளித்த சக்ரதானர், ஐராவத யானைக்கு அருள் புரிந்த கஜமுகானுக்ரர் சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் தோன்றினர் என்றும் சத்யோஜாத முகத்திலிருந்து இலிங்கோத்பவர், உமை அம்மைக்கு உபதேசம் செய்த சுகாசனர், உமா மகேசுவரர், திருமாலுக்கு ஒரு பாகம் அளித்த அரியர்த்தர் மற்றும் மாதொரு பாகனாகிய அர்த்த நாரீசுவரர் ஆகியோர் தோன்றினர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. செப்பால் செய்யப்பட்ட நந்தனார் திருவுருவம் இந்த தலத்தின் தனிச் சிறப்பு வாய்ந்தது. திருக்கோயிலில் உள்ள குளம், ஒரே இரவில் விநாயகப் பெருமானின் உதவியுடன் நந்தனார் வெட்டியதாக கூறப்படுகின்றது. நாக தோஷத்தினால் திருமணம் தள்ளிப் போகும் பக்தர்கள், தங்கத்தில் நாகத்தகடு செய்து பெருமானுக்கு சமர்ப்பித்து வேண்டிக் கொள்கின்றனர். வேலை வாய்ப்பு, தொழில் அபிவிருத்தி மற்றும் உத்தியோகத்தில் உயர் பதவிகள் பெறுவதற்கு இந்த திருக்கோயில் வழிபாடு வழிவகுக்கின்றது என்ற நம்பிக்கை உள்ளது. இராஜேந்திரச் சோழன் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டது. அம்பிகைக்கு சொக்க நாயகி மற்றும் சௌந்தர நாயகி என்ற பெயர்கள் வருவதற்கு செவிவழிச் செய்தியாக ஒரு நிகழ்ச்சி சொல்லப் படுகின்றது. சுவாமிக்கும் அம்பிகைக்கும் இடையில் அழகில் யார் சிறந்தவர் என்ற விவாதம் வந்தது. அப்போது சிவபெருமான் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து மூன்று முடிச்சுகள் போட்டு கீழே போடுகின்றார். அந்த தர்ப்பை கீழே விழும் இடத்தில் அழகில் சிறந்தவள் இருப்பாள் என்று சுவாமி கூறுகின்றார். அந்த தர்ப்பைப் புல் கீழே விழுந்த இடம் தான் திருப்புன்கூர் என்றும் அதனால் தான் அம்பிகைக்கும் சொக்க நாயகி மற்றும் சௌந்தர நாயகி என்ற பெயர்கள் வந்தன என்றும் சொல்லப் படுகின்றது. இவ்வாறு கீழே விழுந்த தர்ப்பைப் புல்லே பஞ்ச லிங்கங்களாக மாறியது என்று கூறுவார்கள்.

பிரமன் ஒரு முறை கயிலாயம் சென்ற போது, சிவபெருமானைப் போன்ற வடிவம் கொண்டுள்ள பலரும் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். பெருமானிடம் அதற்குரிய காரணம் கேட்ட போது பெருமான், பூலோகத்தில் உள்ள இந்த தலத்தின் ரிஷப தீர்த்தத்தில் குளித்து, தன்னையும் அம்பிகையையும் பக்தியுடன் வழிபடும் அடியார்கள், முக்தி நிலையும் சாரூப பதவியும் அடைவார்கள் என்று உணர்த்தினார். பிரமனும் இந்த தலம் வந்தடைந்து, பெருமானை வழிபட்டு, பெருமான் திருக்காட்சி அருள, அதனைக் கண்டு மகிழ்ந்தார் என்றும், பிரமனுக்கு பெருமான் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தார் என்றும் கூறுவார்கள். இந்திரனும் கௌதம முனிவர் இட்ட சாபத்திலிருந்து விடுதலை பெறும் நோக்கத்துடன் இந்த தலத்தில் பெருமான் வணங்கி பயனடைந்தான் என்றும் சொல்லப் படுகின்றது. அகத்தியர் பெருமானை வழிபட்டு, அவரது திருமணக் கோல காட்சியினைக் கண்ட இடங்களில் இந்த தலமும் ஒன்றாக கருதப் படுகின்றது. சந்திரன், தனது குருவின் மனைவியாகிய தாரையைப் புணர்ந்த பாவத்தை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இந்த தலத்தில் வழிபாடு செய்து பயனடைந்தான். தக்க யாகத்தில் பங்கேற்றதற்காக, தனது பற்களை இழந்து தண்டனை பெற்ற சூரியன் இந்த தலம் வந்தடைந்து பெருமானை வழிபட்டு பற்களைத் திரும்பப் பெற்றான் என்றும், வீரபத்திரரால் தனது கையினை இழந்த அக்னி, இந்த தல வழிபாட்டின் மூலம் தனது கை வளரப் பெற்றான் என்றும் தலபுராணம் உணர்த்துகின்றது. சீதா தேவியைத் தேடிச் சென்ற வானரங்கள், இந்த தலத்து இறைவனை வழிபட்டு, சீதா தேவியை காணும் வரம் பெற்றனர். பிரமன் மூலம் இந்த தலத்தின் சிறப்பினை அறிந்து கொண்ட பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் முனிவர்களும் இந்த தலத்து இறைவனை வழிபட்டனர். சப்த கன்னிகைகள், தேவிக்கு உதவியாக மகிடாசுரனுடன் நடைபெற்ற போரில் பங்கேற்கும் வல்லமையை இந்த தல வழிபாட்டின் மூலம் பெற்றனர். விறன்மிண்ட நாயனார் வழிபட்ட தலம் என்றும் சொல்லப் படுகின்றது. .

பாடல் 1:

முந்தி நின்ற வினைகள் அவை போக

சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்

அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்

கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே

விளக்கம்:

தலத்து இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பது சிவனார் என்று சொல்லின் மூலம் உணர்த்தப் படுகின்றது. எந்த உயிரும் தான் கொண்டிருந்த உடலை விட்டு நீங்கிய பின்னர், தன்னுடன் பிணைந்துள்ள எஞ்சிய வினைகளைக் கழித்துக் கொள்ளும் பொருட்டு மீண்டும்மீண்டும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. எஞ்சியுள்ள வினைகளின் தன்மை பற்றியே, அடுத்து எடுக்கவிருக்கும் உடலின் தன்மை இறைவனால் தீர்மானிக்கப் படுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் முன்னமே, வினைகள் முன்னமே சென்று அந்த பிறவியின் தன்மையை நிர்ணயிப்பதையும் தக்க தருணத்தில், புதிய உடலுடன் பிணைந்துள்ள அந்த உயிர்கள், வினைகளை நுகர்ந்து கழிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் நாம் காண்கின்றோம். இவ்வாறு வினைகள் இருக்கும் நிலையினையே முந்தி நின்ற வினைகள் என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த வினைகளை அனைத்து உயிர்களும் அனுபவித்தே கழிக்க வேண்டிய நிலையில் பொதுவாக இருந்தாலும், சிவபெருமான் கருணையால் பக்குவப்பட்ட உயிர்களின் வினைகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன. அத்தகைய பக்குவம் பெறுவதற்கான முதற்படி பெருமானை வணங்கி வழிபடுதல். எனவே தான் திருஞானசம்பந்தர் இந்த பாடலில், தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் பத்தாவது பாடலில் காபாலி வேடத்தைக் கண்டு களித்து, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார்.

உயிர்கள் இணைந்திருக்கும் உடல் அழிகின்றது: அதனால் எஞ்சிய வினைகளை கழித்துக் கொள்ள உயிர் மீண்டும் பிறப்பு எடுக்க நேரிடுகின்றது. ஆனால் பெருமானோ அழிவின்றி என்றும் நிலையாக இருப்பவன். அவனுக்கு இறப்பு என்பதே இல்லை; மேலும் அவன் மலங்களின் கலப்பற்றவன். எனவே மலங்களைக் கழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. அதனால் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு ஏற்படும் பிறப்பும் அவனுக்கு ஏற்படுவதில்லை. இவ்வாறு அழிவின்றி, அழிவினால் ஏற்படும் பிறப்பின்றி இருக்கும் பெருமான் ஒருவனே நம்மை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்க வல்லவன் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்தமில்லா அடிகள் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இவ்வாறு அந்தமில்லா அடிகளாக இறைவன் இருப்பதால் அவனைத் தொழ வேண்டும் என்றும் நமக்கு அறிவுரை கூறுகின்றார். பிரமன் திருமால் உட்பட அனைத்து தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியுடன் பிணைக்கப்பட்டு பிறந்தும் இறந்தும் இறந்த பின்னர் மீண்டும் பிறந்தும் உழல்பவர்கள். இந்த சங்கிலியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு அந்த விடுதலையை மற்றவர்க்கு அளிக்க முடியும். எனவே தான் பெருமான் ஒருவன் மட்டுமே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் படைத்தவன் என்று திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன.

இந்த பதிகத்தின் பாடலில் பெருமானின் சடையினை கந்தம் மல்கு கமழ்சடை என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நறுமணம் வீசும் பொருட்கள் அனைத்திற்கும் நறுமணத்தை அளித்த பெருமானின் சடை, இயற்கையாகவே நறுமணத்துடன் இருப்பது வியப்பல்லவே. பல திருமுறைப் பாடல்கள் நறுமணம் கமழும் சடை என்று பெருமானின் சடையினை குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், திருஞானசம்பந்தர் (1.10.6) பெருமானை கமழ் சடையார் என்று அழைக்கின்றார். பெருகி வரும் அருவி நீரினை உடைய அண்ணாமலை தலமானது, பாற்கடலிருந்து தோன்றிய சந்திரனின் பிறைகள் ஒவ்வொன்றாக அழிந்து ஒற்றைப் பிறையுடன் சந்திரன் சரணடைந்த போது அந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு வாழவைத்த சிவபெருமான் உறைகின்ற தலமாகும். அவர் பாற்கடலிலிருந்து அனைவரும் அச்சம் கொள்ளும் வகையில் பொங்கி எழுந்த ஆலகால விடத்தினை, சற்றும் தாமதம் செய்யாமல் மிகுந்த துணிவுடன் பருகியவர் ஆவார். மேலும் அந்த விடம் தனது வயிற்றினுள்ளே சென்றால், பிரளய காலத்தில் தன்னில் ஒடுங்கவிருக்கும் உயிர்களின் நலன் கருதி, அந்த விடத்தினை வயிற்றின் உள்ளே செல்லாத வண்ணம் தடுத்த பெருமான், அந்த விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் அவரது கழுத்து கருமை நிறம் படர்ந்து காணப்படுகின்றது. அவர் தனது திருமேனியின் மீது வெண்ணீறு பூசிக்கொண்டவர் மற்றும் நறுமணம் கமழ்கின்ற சடையை உடையவர் ஆவார். அத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானின், வீரக்கழல்கள் அணிந்த திருப்பாதங்களை புகழ்ந்து பணிந்து வணங்கி மனம் உருகும் அடியார்களை, கொடிய நோய்கள் சென்று அணுகா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சைப்

பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகிக்

கருகும் மிடறுடையார் கமழ் சடையார் கழல் பரவி

உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே

குரங்கணில் முட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.31.3) திருஞானசம்பந்தர், பெருமானின் சடையினை ஏலம் கமழ் புன்சடை என்று குறிப்பிடுகின்றார். ஏலம்=மயிர்ச்சாந்து; நறுமணம் கமழும் எண்ணெய்; பெருமான் எளிமையான திருக்கோலத்தை உடையவர் என்பதால், வாசனை பொருந்திய சந்தனம் முதலான பொருட்களைத் தவிர்ப்பவர் என்பதை நாம் அறிவோம். எனவே இயற்கையாகவே நறுமணம் கமழும் சடையினை உடைய பெருமான் என்ற குறிப்பு மூலம் பெருமான் மயிர்ச் சாந்தினையும் தவிர்ப்பவர் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். வவ்விய=திருடிய, கவர்ந்த; காலனும் அறியாத வண்ணம் அவனது உயிரினை பெருமான் போக்கிய தன்மை, வவ்விய என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

சூலப் படையான் விடையான் சுடுநீற்றான்

காலன் தனை ஆருயிர் வவ்விய காலன்

கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து

ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே

நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.6) திருஞானசம்பந்தர், பெருமானின் சடையினை கமழ் சடை என்று குறிப்பிடுகின்றர். விருத்தன்=அனைவரிலும் மூத்தவன், அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றிய பெருமான் தோன்றிய காலம் யாது என்பதை இதுவரை எவரும் அறியவில்லை; பாலன்=அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும், தான் அழியாமல் இருப்பதால் பாலன் என்றார். வயது முதிர்ந்தவர்கள் இறந்த பின்னரும் சிறியோர்கள் உயிருடன் இருப்பது பொதுவான உலக நியதி. இந்த தன்மையை உணர்த்தும் வண்ணம், பெருமானை பாலன் என்று குறிப்பிட்டார் போலும்,. பொதுவாக பாலன் விருத்தன் என்று வரிசைப் படுத்தி கூறுவார்கள். உலகினில் தோன்றும் உயிர்கள், இறைவன் என்று ஒருவன் இருப்பதையும் அத்தகைய ஒருவன் தாங்கள் தோன்றுவதற்கு முன்னமே இருந்தான் என்பதையும் உணர்வதால், அவனை விருத்தனாக முதலில் உணர்கின்றனர். பல உயிர்கள் இறந்த பின்னரும் இறைவன் இருப்பதை உணரும் உயிர்கள், தாம் இறந்த பின்னரும் இறைவன் அழியாமல் இருக்கும் தன்மையை ஊகித்து உணர்கின்றன. எனவே, தங்களுக்கும் பின்னரும் இறைவன் இருக்கும் தன்மையை பாலனின் தன்மையாக காண்கின்றனர். எனவே தான் விருத்தன் என்பது முதலில் கூறப்பட்டு, பாலன் என்பது பின்னர் கூறப்படுகின்றது. அனைத்து உயிர்களும் உலகங்களும் இயங்குவதற்கு காரணகர்த்தாவாக இருப்பவன் என்று உணர்த்தும் கர்த்தா என்ற வடமொழிச் சொல் கருத்தன் என்று தமிழ்ப் படுத்தப் பட்டுள்ளது. இணையான திருவடிகள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பொன்னடி என்றும் மலரடி என்றும் பெருமானின் திருவடிகள் போற்றப் படுகின்றன. பொன் போன்று சிறந்ததும் ஒளிவீசுவதும் ஆகிய திருவடிகள் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் இத்தகைய ஒப்பு முழுமையான ஒப்பு அல்ல. பொன்னுடன் ஒப்பிடப் படும்போது, திருவடிகளின் மென்மை வெளிப்படுவதில்லை; மலருடன் ஒப்பிடப் படும்போது திருவடிகளின் ஒளிவீசும் தன்மை வெளிப் படுவதில்லை. எனவே திருஞானசம்பந்தர் ஒரு முடிவுக்கு வந்தார் போலும், பெருமானின் திருவடிக்கு எந்த பொருளும் இணையாகாது என்பதே அந்த முடிவு; பெருமானின் இடது திருவடிக்கு அவரது வலது திருவடி இணையாகவும், அவரது வலது திருவடிக்கு இடது திருவடி இணையாக உள்ள தன்மை இங்கே அடியிணை என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.

விருத்தனாகி பாலனாகி வேதமோர் நான்கு உணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேல் கரந்தாய்

அருத்தனாய ஆதிதேவன் அடி இணையே பரவும்

நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக விருத்தனாக இருப்பவனே, அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் தான் அழியாமல் பாலனாக இருப்பவனே, நான்கு வேதங்களையும் நன்றாக கற்றுணர்ந்து அதன் பொருளாக இருப்பவனே, கங்கை நங்கையை தனது நறுமணம் கமழும் சடையில் வைத்து மறைத்தவனே, முழுமுதற் கடவுளாக இருப்பவனே, உனது இணையான திருவடிகளைப் புகழ்ந்து ஆடியும் பாடியும் போற்றும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக என்று திருஞானசம்பந்தர் வேண்டுவதாக அமைந்த பாடல்.

பிரமபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.63.6) பெருமானின் சடையினை கமழ்சடை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஆதி வராகமான திருமால், இரண்யாக்கனைக் கொன்ற பழியினை தீர்த்துக் கொள்வதற்காக சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால் பூந்தராய் என்ற பெயர் வந்ததை இங்கே குறிப்பிடுகின்றார். பூண் அரையர்=தங்களது இடுப்பினில் ஆபரணம் அணிந்த மன்னர்கள்; குடி மக்களைக் காக்கின்ற கடமை உள்ளவர்கள் மன்னர்கள்; அனைத்து உயிர்களையும் காக்கின்ற திருமால், அந்த மன்னர்களையும் விடவும் மிகவும் வலிமை வாய்ந்தவராக இருப்பதால், அந்த மன்னர்களின் மன்னராக கருதப் படுகின்றார். அடல்=வலிமை; தவர்=தவம் செய்கின்ற முனிவர்; இந்த பாடலில் தாருகவனத்து மகளிர் இட்ட பிச்சையை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களது மேன்மையான அணிகலனாகிய கற்பினை கவர்ந்த பெருமான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளையும் மறந்து, தாங்கள் உணராத வகையில் பெருமானின் அழகில் மயங்கியவர்களாக, தங்களது உடைகள் நழுவதையும் உணராதவர்களாக, பெருமானின் பின்னே சென்ற தாருகவனத்து மகளிர், தங்களது கற்பினை இழந்தவர்களாக கருதப்பட்டனர். மாட்டு-அருகே; தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களில் இருந்த மகளிர் பலரும், சிவபெருமானின் அழகில் மயங்கி, அவருக்கு பலியிட வந்ததாக திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பூம்பலி=சுவை நிறைந்த உணவு வகைகள்; அயலே=அருகே;

கவர் பூம்புனலும் தண்மதியும் கமழ்சடை மாட்டு அயலே

அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய் ஆனலம் வவ்வுதியே

அவர் பூண் அரையர்க்கு ஆதியாய அடல் மன்னன் ஆள் மண்மேல்

தவர் பூம்பதிகள் எங்குமெங்கும் தங்கு தராயாவனே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.118.8) திருஞானசம்பந்தர், பெருமானை, கங்கை நதியினை கமழ் சடையினில் கரந்தவன் என்று கூறுகின்றார். கமழ்சடை என்ற தொடர் தமிழ் இலக்கணத்தின் வழியே வினைத்தொகை என்று சொல்லப்படுகின்றது. பண்டைய நாளில் நறுமணத்துடன் கமழ்ந்த சடை என்றும், நிகழ் காலத்தில் நறுமணத்துடன் கமழ்கின்ற சடை என்றும், எதிர் காலத்திலும் நறுமணத்துடன் கமழவிருக்கும் சடை என்றும் பொருள் கொள்ள வேண்டும். நமது மனதினில் எண்ணற்ற நினைவுகள் ஒரே சமயத்தில் தோன்றி நம்மை பலவிதத்திலும் அலக்கழித்து, இறை வழிபாட்டினில் ஈடுபடாத வண்ணம் நமது புலன்களை பலவாறாக திசை திருப்பும் மனதினை, மனதில் தோன்றும் நினைவுகளை, ஆழ்கிணற்றின் தன்மைக்கு ஒப்பிடுகின்றார். கிணற்றிலிருந்து நாம் நீரினை இறைக்க யிறைக்க, நீர் ஊறி நின்று பெருகுவதை போன்று, நாம் நமது மனதினில் எழுகின்ற எண்ணங்களின் வழியே செல்லச் செல்ல, மேன்மேலும் தன்வசப்படுத்தி உயிரினை பல அல்லல்களில் சிக்க வைக்கும் மனதினை, ஊறிப் பெருக்கெடுக்கும் தன்மை உடைய கிணற்றுடன் ஒப்பிடுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. தறிகெட்டோடும் மாட்டினை, மூக்கணாங்கயிறு கொண்டு இழுத்து வழிக்கு கொண்டுவருவது போன்று, தனது மனத்தின் எண்ணங்கள் ஈடேறாத வண்ணம் தான் பற்றி இழுத்ததாக குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அந்த முயற்சியில் தான் மிகவும் தளர்ந்து போனதாக கூறுகின்றார். நமது எண்ணங்களின் வழியே சென்று நிலைகுலைந்து அவலமான நிலை உயிருக்கு ஏற்படுவதை நாம் தவிர்க்க வேண்டுமென்றால், பருப்பதத்து இறைவனின் திருப்பாதங்களை நாம் பற்றிக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றார். மிகுந்த ஆரவாரத்துடன் பெரு வெள்ளமாக பொங்கி கீழே இறங்கி வந்த, கங்கை நதியைத் தனது சடையில் சிறைப்படுத்தி அடக்கிய ஆற்றல் உடைய பெருமான் ஒருவரால் தான், நமக்கு அருள் புரிந்து நமது மனதின் எண்ண ஓட்டங்களை நாம் கட்டுப்படுத்த நமக்கு உதவி புரியமுடியும் என்ற் செய்தியும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின்று அயராதே

மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை

கனைத்து எழு திரள் கங்கை கமழ்சடை கரந்தான் தன்

பனைத் திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.121.2) திருஞானசம்பந்தர் பெருமானை, கமழ்சடை முடியன் என்று குறிப்பிடுகின்றார். புனல்=கங்கை நதி; கமழ் சடை=நறுமணம் கமழும் சடை; இழை=முப்புரி நூல்; பிராட்டியின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் வாய்ந்தது என்பதை உணர்த்த, பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை நாம் திருவிளையாடல் புராணத்தில் காண்கின்றோம். பிராட்டியின் கூந்தலைப் போன்று, பெருமானின் சடையும் இயற்கை மணம் வாய்ந்தது என்பதை கமழ்சடை முடியன் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மேகங்களின் இடையே நுழைந்து செல்லும் பிறைச் சந்திரனையும், தசையும் நரம்பும் அழிந்து உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் மண்டையோட்டினை தலை மாலையாகவும், மூங்கில் காடுகளின் நுழைந்து செல்லும் மயில்கள் நிறைந்த மலையினில் பாய்கின்ற கங்கை நதியையும், நறுமணம் கமழும் சடையினில் வைத்துள்ள பெருமான், குழை அணிகலன் நுழைந்து மிளிரும் அழகிய காதினை உடையவன் ஆவான். இழையாகத் திரண்ட முப்புரி நூலினை விரும்பி அணிந்துள்ள தலைவனாகிய பெருமான் உறைகின்ற இடம் இடைமருது தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் மூன்றாவது பாடலிலும் பெருமானை, திருஞான சம்பந்தர் கமழ்சடை முடியன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் எட்டாவது பாடலிலும் பெருமானின் சடை முடியை, திருஞானசம்பந்தர், கனல் செய்த கமழ் சடை என்று குறிப்பிடுகின்றார்.

மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை

கழை நுழை புனல் பெய்த கமழ்சடை முடியன்

குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வதோர்

இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே

பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.40.5) திருஞானசம்பந்தர், பெருமானை கமழ்சடையான் என்று அழைக்கின்றார். கமழ்=நறுமணம் கமழ்கின்ற; இதம்=நன்மை; நுதலுதல்= கருதுதல்; செல்வத்தை இயல்பாக அறிந்தோமே என்ற தொடர் மூலம், வீடுபேறு எனப்படும் உயர்ந்த செல்வம், என்றும் அழியாத பேரின்பத்தைத் தரும் வல்லமை உடையது என்பதை அறிந்து கொண்டவர்கள் பெருமானின் அடியார்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். செல்வம் என்பதற்கு பெருமானை வணங்குவதே சிறந்த செல்வம் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்ற விளக்கமும் அறிஞர்களால் சொல்லப்படுகின்றது. பிராட்டியைத் தனது உடலில் பெருமான் ஏற்றுக் கொண்டுள்ள தன்மை பிராட்டிக்கு நன்மை பயக்கின்றது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சிவபெருமானின் தீவிர அடியாராக விளங்கிய பிருங்கி முனிவர், பிராட்டியை வணங்காமல் பெருமானை மற்றும் பணிந்து வணங்கியதைக் கண்ட பிராட்டி, வருத்தம் அடைந்து, இனிவரும் நாட்களில் தன்னை எவரும் புறக்கணிக்கலாகாது என்று விருப்பம் கொண்டார். அந்த விருப்பம் ஈடேறும் வண்ணம் பெருமான், தனது உடலில் தன்னை (பிராட்டியை) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினார். பெருமானும் பிராட்டி பால் தான் கொண்டிருந்த அன்பினையும் மதிப்பினையும் உலகுக்கு உணர்த்த எண்ணி, பிராட்டியைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டுள்ள தன்மை, தேவிக்கு இறைவன் செய்த நன்மையாக திருஞான சம்பந்தரால் குறிப்பிடப் படுகின்றது. இதன் மூலம், தான் வேறு பிராட்டி வேறல்ல என்ற செய்தியையும் பெருமான் உலகுக்கு உணர்த்துகின்றார்.

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ் சடையான் விடையேறி

பெண் இதமாம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான்

விண் நுதலாத் தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி

எண்ணுதலாம் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே

புள்ளிருக்குவேளூர் (தற்போதைய பெயர் வைத்தீசுவரன் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.10) கமழ்சடை என்று பெருமானின் சடையினை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கடுத்து வரும்=மிகுந்த கோபத்துடன்; நீர்நிலைகளில் முங்கி, தலை உட்பட உடல் உறுப்புகள் அனைத்தும் நனையும் வண்ணம் குளித்தலே, நீராடல் என்று சொல்லப்படும். பெருமான் தனது சடையில் கங்கை நதியினை மறைத்த போதிலும் அவரது சடை முழுதும் நனையாமல் இருந்தது என்பதை உணர்த்தும் வண்ணம், சடை ஒன்றும் ஆடாமே என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பெருமானுக்கு ஒன்பது சடைகள் என்று தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. அந்த ஒன்பது சடைகளில் ஒரு சடை மட்டுமே, கங்கை நதியைக் கரந்திடப் பயன்பட்டது என்பதையும் திருஞானசம்பந்தர் இங்கே, சடை என்று ஒருமையில் குறிப்பிட்டு உணர்த்துகின்றார். விடைத்து=சீறி; கமழ் சடை=பரந்து நறுமணத்துடன் விளங்கிய சடை; மலங்க=கலங்க; கமழ் சடை என்ற தொடருக்கு நறுமணம் கமழும் பூக்களை சடையில் அணிந்தவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சூரிய மண்டலம் வரை பறந்து சென்றதால் சம்பாதியின் சிறகுகள் எரிந்து அழிந்தன என்று மணிமேகலை காப்பியம், சம்பாதி வனத்தை குறிப்பிடுகையில் சொல்கின்றது. அரக்கன் இராவணன் வைத்திருந்த சந்திரகாசம் என்ற வாள் மிகவும் சிறந்த படைக்கலம் என்பதால். அந்த படைக்கலம் அரக்கன் இராவணன் இராமபிரானுடன் பின்னாளில் செய்யவிருந்த போரினில் பயன்படாத வண்ணம் அந்த படையினை செயலிழக்கச் செயல்பட்ட ஜடாயுவின் உதவி இராமபிரானுக்கு ஜடாயு செய்த மிகப் பெரிய உதவியாகும்.

கடுத்து வரும் கங்கை தனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே

தடுத்தவர் எம் பெருமானார் தாம் இனிதா உறையும் இடம்

விடைத்து வரும் இலங்கைக் கோன் கலங்கச் சென்று இராமர்காப்

புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

கங்கை நங்கையைத் தனது சடையினில் வைத்துக் கொண்டு பெருமான் தேக்கியது, கங்கை நங்கையின் மீது பெருமான் விருப்பம் கொண்டதால் அல்ல என்பதை நாம் அறிவோம். பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி பெருமான் தனது சடையினில் கங்கையை ஏற்றதை உமையம்மையும் அறிவாள். எனினும் புலவர்களுக்கு உரிய சுதந்தரத்தை பயன்படுத்திக் கொண்டு, திருஞானசம்பந்தர், பெருமானுக்கு பிராட்டிக்கும் இடையில் ஊடல் நிகழ்ந்ததாகவும், அந்த ஊடலுக்கு காரணம், பெருமான் கங்கையைத் தனது சடையில் அடக்கி மறைத்த செய்கை என்று நயமாக கற்பனை செய்கின்றார். அந்த கற்பனை மிளிரும் பாடல் ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (2.50.7), இந்த பாடலில், தனது நறுமணம் கமழும் சடையில் பெருமான் கங்கை நதியை மறைத்து வைத்ததாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடியூட மணம் கமழ் சடைக்

கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொலாம்

பங்கயம் மது உண்டு வண்டு இசை பாட மாமயில் ஆட விண் முழவு

அங்கையில் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே

புறவார் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.53.5) திருஞானசம்பந்தர் பெருமானின் சடையினை, நறுமணம் கமழ்சடை என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அடியார்களுக்கு அருளவேண்டும் என்று பெருமானிடம் திருஞான சம்பந்தர் வேண்டுகின்றார். அடியார்களுக்கு பெருமான் அருளும் திறத்தினுக்கு இரண்டு உதாரணங்களை குறிப்பிட்டு, நாமும் பெருமானைப் பணிந்து அவ்வாறு வேண்டவேண்டும் என்று ஊக்குவிக்கும் முகமாக உணர்த்தும் நேர்த்தியை நாம் காணலாம். தனது கலைகள் முற்றிலும் அழிந்து தேயும் நிலையில் தன்னை வந்து சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு அவன் அழியாத வண்ணம் காத்தது, தனது அடியான் பகீரதனின் வேண்டுகோளை ஏற்று, வேகமாக கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் தேக்கி வைத்தது ஆகிய இரண்டும் மற்றவர்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகள் எனினும், தனது அடியார்களின் நலன் கருதி, பெருமான் மிகவும் எளிமையாக செய்த செயல்கள்.

செங்கயல்லொடு சேல் செருச் செய சீறி யாழ் முரல் தேன் இனத்தொடு

பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்

கங்கையும் மதியும் கமழ்சடைக் கேண்மையாளொடும் கூடி மான்மறி

அங்கை ஆடலனே அடியார்க்கு அருளாயே

விற்குடி வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.108.2) திருஞானசம்பந்தர் நறுமணம் கமழும் சடையின் மேல், கொன்றை மலர் மற்றும் பிறைச் சந்திரனை ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் என்று கூறுகின்றார், நறுமணம் கமழும் சடையில் கொன்றை மலரை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கூறுவதால், கொன்றை மலர் இல்லாமலே பெருமானின் சடை தனக்கே இயல்பான நறுமணத்துடன் விளங்கும் தன்மையை உணர்த்துகின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். களம்=களர் நிலம்; பெருமானை மனம் பொருந்தி வழிபட வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடிகமழ் சடைக்கு ஏற்றி

உளம் கொள் பத்தர் பால் அருளிய பெருமையர் பொருகரி உரி போர்த்து

விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடி வீரட்டம்

வளம் கொள் மாமலரால் நினைந்து ஏத்துவார் வருத்தமது அறியாரே

பட்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.73.4) திருஞானசம்பந்தர், பெருமானை கமழ் செஞ்சடையினான் என்று குறிப்பிடுகின்றார். ஒரு முறை பெருமானின் கண்களை பார்வதி தேவி, விளையாட்டாக பொத்தியபோது, சூரியனும் சந்திரனும் தங்களது ஒளியை இழந்தன. அதனால் உலகமே இருளில் மூழ்க, வெளிச்சமும் வெப்பமும் இன்றி உயிர்கள் தவித்தன. உயிர்களின் தவிப்பைக் கண்ட, இறைவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்கவே, உயிர்களுக்கு தேவையான வெப்பமும் வெளிச்சமும் கிடைத்தன. ஆனால், பெருமானின் நெற்றிக் கண்ணின் மிகவும் அருகே தனது கைகளை வைத்திருந்த பிராட்டி, அந்த நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட வெப்பம் தாங்க முடியாமல், மிகவும் அவசரமாக தனது கைகளை எடுக்கின்றார். எனினும் மிகவும் குறைந்த நேரமே இருந்த நெற்றிக் கண்ணின் தாக்கத்திலிருந்து அன்னையின் கைகளிலிருந்து வியர்வை ஆறாக வெளிப்பட்டது. அச்சமடைந்த தேவி, தனது தவறினை உணர்ந்து, தனது கைகளை உடனே எடுத்த பின்னரும் கைகளில் ஏற்கனவே பரவியிருந்த வெப்பத்தினை தாங்க முடியாமல் தனது கைகளை உதறினாள். அப்போது அந்த விரல்களிலிருந்து வழிந்த வியர்வையே ஆறாக ஓடியது என்று புராணம் குறிப்பிடுகின்றது. இந்த நிகழ்ச்சி இங்கே உணர்த்தப் படுகின்றது. கண்ணின் மிசை=கண்களின் இடத்தில்; நண்ணி=நெருங்கி, இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து, அன்னை பெருமானின் இரண்டு கண்களையும் மூடிய தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இழிவிப்ப=பொழிய; அன்னையின் கைகளிலிருந்து வழிந்த வியர்வை ஆயிரம் முகங்களை உடைய கங்கையாறு போன்று பெருகியது என்று புராணம் கூறுகின்றது. இதன் மூலம் அந்த வியர்வை வெள்ளத்தினால் உலகங்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாத வண்ணம் பெருமான், அந்த நீரினைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு காப்பாற்றினார். பெருமானின் இந்த செயலை, பிரமன் உள்ளிட்ட பல தேவர்களும் புகழ்ந்ததும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. பாணி=தாள ஒத்து; பால் மதி=வெண்மை நிறத்தில் உள்ள பிறைச்சந்திரன்; நேரில்=நிகரற்ற, ஒப்பிலாத; மருவுதல்= பொருந்தி இருத்தல்;

கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செஞ்சடையினான்

பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆடவல பான் மதியினான்

மண்ணின் மிசை நேரில் மழபாடி மலி பட்டிச்சரமே மருவுவார்

விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடனாதல் அது மேவல் எளிதே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.95.4) திருஞானசம்பந்தர் பெருமானை கடிகமழ் சடைமுடியீர் என்று அழைக்கின்றார், தெளிந்த சிந்தனையுடன் இறைவனைத் தொழும் அடியார்கள் வினை நீக்கம் பெற்றவர்களாக இருக்கும் நிலை இந்த பாடலில், இந்த பதிகத்தின் முதல் மூன்று பாடல்களின் தொடர்ச்சியாக உணர்த்தப் படுகின்றது. இந்த பாடல்களில் பெருமானைச் சார்ந்து அவனை வாழ்த்தும் அடியார்களின் தன்மையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வீணை யாழ் குழல் போன்ற வாத்தியங்கள் மிருதுவான இன்னிசை எழுப்பும். தோல் கருவிகளாகிய முரசு, முழவு, பறை போன்ற வாத்தியங்கள் பலமான இசையினை எழுப்பும். இத்தகைய கருவிகளே ஆரவாரத்தை ஏற்படுத்தி திருவிழாவின் சந்தடியை அதிகரிக்கும் திறன் வாய்ந்தவை. எனவே இத்தகைய வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. இன்றும் கயிலாய வாத்தியம் எனப்படும் குழுவினர், இத்தகைய வாத்தியங்கள் அதிகமாக வாசிப்பதை நாம் காணலாம். முரல்=எழுப்பும்; கடி=நறுமணம்; நறுமணம் மிகுந்த சடை என்று முதல் பாடலில் குறிப்பிட்டது போன்று இந்த பாடலிலும், பெருமானின் சடை நறுமணம் மிகுந்து காணப்படுவதாக திருஞான சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார்.

இடிகுரல் இசை முரல் இன்னம்பர் மேவிய

கடிகமழ் சடை முடியீரே

கடி கமழ் சடைமுடியீர் உம கழல் தொழும்

அடியவர் அருவினை இலரே

சிறுகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.97.7) திருஞானசம்பந்தர், பெருமானின் சடை நறுமணம் கமழும் சடை என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் திருவடிகளைச் சென்று சேரும் விருப்பம் உடைய அடியார்கள், சன்மார்க்க நெறியில் வாழ்வார்கள் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.

செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய

வெறி கமழ் சடைமுடியீரே

வெறி கமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந்

நெறி உணர்வோர் உயர்ந்தோரே

திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.2) திருஞானசம்பந்தர் பெருமானை, கமழ் புன்சடை உடையவர் என்று குறிப்பிடுகின்றார். பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, பெருமானைச் சென்றடைந்து, என்றும் அழியாத நிலையான ஆனந்தத்தில் திளைக்க வேண்டும் என்று உயிர்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள மலங்களை முற்றிலும் கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருமான் கொண்டுள்ள விருப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் தான், பக்குவமடைந்த உயிர்கள் தன்னைத் தேடிவரும் வரையில் காத்திராமல், தானே அந்த உயிர்கள் இருக்கும் இடம் சென்றடைந்து, அந்த உயிர்களின் மலங்களை, பிச்சையாக ஏற்றுக் கொள்ள, மிகுந்த துடிப்புடன் பெருமான் செயல்படுகின்றார். நம்மில் பெரும்பாலோர் இதனை உணர்வதில்லை. வானில் உள்ள கரிய மேகங்களுக்கு அணிகலன் போன்று திகழும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், தனது சுருண்ட சடையினை அழகு செய்யும் வகையில் கொன்றை மாலையையும் குளிர்ந்த எருக்கு மாலையையும் தழைந்து தொங்கும் வண்ணம் அணிந்துள்ளார். அவர், மார்பினில் கச்சணிந்தவளும் நல்லாள் என்று அழைக்கப் படுபவளும் ஆகிய உமையன்னை உடனாக திருவலஞ்சுழியில் பொருந்தி உறைகின்றார். ஊர்கள் தோறும் சென்று பலியேற்று, அவர் அடைந்த உவகையின் தன்மையை, எங்களால் அறிய முடியவில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காரணி வெள்ளை மதியம் சூடிக் கமழ்புன் சடை தன்மேல்

தாரணி கொன்றையும் தண்ணெருக்கும் தழைய நுழைவித்து

வாரணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்

ஊரணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.109.2) கந்த வார்சடை என்று பெருமானின் சடை இயற்கையில் நறுமணம் வாய்ந்தது என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அயன்=பிரமன்; வந்து=தங்களில் யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலின் எதிரே வந்து தோன்றிய; கந்த=நறுமணம் மிகுந்த; நறுமணம் மிகுந்த சடை உடையவர் பெருமான் என்று இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. ஆதி என்று குறிப்பிட்டு அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக, அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும் பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அனைத்து உயிர்களுக்கும் அந்தமாக பெருமான் இருக்கும் நிலையினையும், வெந்த வெண்ணீறணி என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். பெருமான் வெண்ணீறு அணிந்துள்ள கோலம், பெருமான் ஒருவரே அழியாமல் என்றும் நிலையாக இருப்பவர் என்பதை உணர்த்துகின்றது அல்லவா. கந்தம்=நறுமணம்.

வந்து மாலயன் அவர் காண்பரியார்

வெந்த வெண்ணீறு அணி மயேந்திரரும்

கந்த வார்சடை உடைக் கயிலையாரும்

அந்தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.10.9) அப்பர் பிரான், பெருமானின் சடையினை வெறியுறு விரிசடை என்று குறிப்பிடுகின்றார். வெறியுறு=நறுமணம் வீசும்: பொறியுறு=புள்ளிகளை உடைய: நெறியுறு=சுருள்களை உடைய: கிறிபட=தந்திரமாக உழிதரல்= ஆடுதல்: தந்திரமாக நடனம் ஆடினார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதால், இந்த பாடல் தாருகவனத்து மகளிர் காண ஆடிய நடனக் காட்சியோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை அவிழ்ந்து தரையில் புரளுமாறும், இடுப்பினில் புள்ளிகள் உடைய புலித்தோல் ஆடையாகவும், சுருண்ட கூந்தலை உடைய உமையம்மை தனது உடலின் ஒரு பாகமாகவும் இருக்கும் கோலத்தில் கெடில வாணர் மாயக் கூத்து ஆடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெறியுறு விரிசடை புரள வீசியோர்

பொறியுறு புலியுரி அரையது ஆகவும்

நெறியுறு குழல் உமை பாகமாகவும்

கிறிபட உழி தர்வர் கெடில வாணரே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.35.8) அப்பர் பிரான், கமழ் தரு சடை என்று குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் ஏழாவதுபாடலில் மற்றும் இந்த பாடலில், சடையில், பாய்ந்து வந்த கங்கை நதி, விடம் கொண்ட பாம்பு, சந்திரன் ஆகிய மூன்றையும் வைத்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த மூன்று பொருட்களும் ஒன்றுக்கொன்று பகைமையுடன் விளங்குதலன்றி, ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களைக் கொண்டவை. இந்த மூன்று பகைவர்களையும் தனது சடையில் வைத்து பகை தீர்த்து ஆண்ட பண்பு, பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றது. இந்த அரிய பண்பு உடைய பெருமானை பலரும் புகழ்ந்து வணங்குவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்

கமழ் தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடு

தவழ் தரு மதியம் வைத்துத் தன்னடி பலரும் ஏத்த

மழுவது வலம் கையேந்தி மாதொரு பாகமாகி

எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.6.8) அப்பர் பிரான், பெருமானின் சடையினை கமழ்சடை என்று குறிப்பிடுகின்றார். எல்லி=நள்ளிரவு, இங்கே எங்கும் இருள் சூழ்ந்திருக்கும் சர்வசங்கார இரவு என்று பொருள் கொள்ள வேண்டும்; கமழ=விளங்கும்; தனது மனைவியர் இடையே பட்சபாதமாக அன்பு வைத்தமையால் தக்கனின் சாபத்திற்கு உள்ளாகி நாளும் ஒவ்வொரு கலையாக இழந்து, முற்றிலும் அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன், சரணடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் விளங்குமாறு ஏற்றுக் கொண்டு அபயம் அளித்த இறைவனார், தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவராக, சர்வ சங்கார காலத்து நள்ளிருளில் தொடர்ந்து நடனம் ஆடுபவர் ஆவார். தனது தவத்தினை கலைப்பதற்காக முயற்சி செய்த மன்மதன் மீது கோபம் கொண்ட போது தீப்பொறிகளை வெளிப்படுத்திய நெற்றிக் கண்ணினை உடையவரும் அவரே. அவர் நான்கு மறைகளையும் ஆராய்ந்து ஓதுகின்றார். வேதங்களை அருளியவர் பெருமான் என்பதால் தனியாக வேதங்களை கற்றுக்கொண்டு, அவற்றை ஆராய வேண்டிய அவசியம் பெருமானுக்கு இல்லை. மேலும் சிறந்த தவசீலர்களாக கருதப்படும் சனகாதி முனிவர்களுக்கு, அவர்களுக்கு இருந்த சந்தேகத்தைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றிருந்த பெருமான் என்பதால், வேதங்களை ஆராய்ந்து மற்றவர்கள் உணரும் செய்திகளை அறிந்தவராக பெருமான் இருந்தார் என்பது ஆய்ந்த நான்மறை என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. இத்தகைய ஆற்றல் உடைய பெருமான் திருவாரூர் நகரில் உறைகின்றார் என்பதை உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல்

ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்

காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்

ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.29.3) அப்பர் பிரான், பெருமானின் சடையினை கடி கமழும் சடை என்று கூறுகின்றார். கடி=நறுமணம்; ஏறு=இடபம்: ஏற்றான்= இடபத்தை வாகனமாக ஏற்றுக் கொண்டவன்; இடபத்தை வாகனமாக ஏற்றுக் கொண்டவனும், ஏழு கடல்களாகவும் ஏழு மலைகளாகவும் இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் முடிவான காரணமாக இருப்பவனும். இயமனை காலால் உதைத்தவனும், பகைவர்களுக்கு கொடியதாக விளங்கும் மழுவாளினை கையில் ஏந்தியவனும், காற்றாகவும் தீயாகவும் நீராகவும் மற்றுமுள்ள பஞ்ச பூதங்களாகவும் இருப்பவனும், நறுமணம் கமழ்வதும் வெள்ளமாக பாய்ந்ததும் ஆகிய கங்கை நதியைத் தனது சுருண்ட சடைமுடியில் ஏற்றவனும் ஆகிய ஆரூர் பெருமானை அறியாது, அவனை மறந்து நாயினும் கீழான அடியேன் எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்தது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் என்று அப்பர் பிரான் தனது வருத்தத்தை இந்த பாடலில் தெரிவிக்கின்றார்.

ஏற்றானை ஏழுலகும் ஆனான் தன்னை ஏழ் கடலும் ஏழ் மலையும் ஆனான் தன்னைக்

கூற்றானைக் கூற்றம் உதைத்தான் தன்னைக் கொடுமழுவாள் கொண்டதோர் கையான் தன்னை

காற்றானைத் தீயானை நீருமாகிக் கடிகமழும் புன்சடை மேல் கங்கை வெள்ள

ஆற்றானை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே.

அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.10.3) சுந்தரர், பெருமானின் சடையினை கடிகொள் புனற்சடை என்று குறிப்பிடுகின்றார். கலி=ஆரவாரம் நிறைந்த; கொடிகள்= கொடி போன்று மெலிந்த உருவத்தினை உடைய மகளிர்; கொடி போன்ற இடையினை உடைய மகளிரின் ஆடல் பாடல்களை கேட்டு ரசிக்கும் குயில்கள் கூவியும் மயில்கள் ஆடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதால் ஆரவாரம் நிறைந்து காணப்படும் காஞ்சி மாநகரம் என்று குறிப்பிடுகின்றார். மார்பகலம் என்ற சொல்லுக்கு அகன்ற மார்பினை உடையவன் என்றும் அழகிய அணிகலன்கள் அணியப் பெற்ற மார்பினை உடையவன் என்றும் இரண்டு விதமாக பொருள் விளக்கம் அளிக்கப் படுகின்றது. கலம்=அணிகலன்; கடி=நறுமணம்; நுதல்=நெற்றி; ஒற்றைப் பிறைச் சந்திரனை தனது நெற்றியில் அணிந்துள்ள நீலகண்டன் என்று கூறுகின்றார். பெருமானைச் சார்ந்ததால், எலும்பு மாலை, ஆமையோடு, பன்றிக் கொம்பு, பாம்புகள், ஆகியவை மிகுந்த அழகுடன் பொலிந்து விளங்குவதால், அழகிய அணிகலன்கள் என்று கூறுகின்றார்.

கொடிகள் இடைக் குயில் கூவுமிடம் மயிலாலும் இடம் மழுவாளுடைய

கடிகொள் புனற்சடை கொண்ட நுதற் கறைக் கண்டன் இடம் பிறை துண்ட முடி

செடிகொள் வினைப்பகை தீரும் இடம் திருவாகும் இடம் திரு மார்பகலத்து

அடிகள் இடம் அழல் வண்ணன் இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே

திருக்கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.61.8) சுந்தரர், பெருமானை கந்தவார் சடைக் கம்பன் என்று அழைக்கின்றார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை, திருவொற்றியூரினை விட்டு அகலமாட்டேன் என்று சொன்ன வார்த்தையை, மீறிய குற்றத்திற்காக, தனது இரண்டு கண்களிலும் பார்வையை இழந்த சுந்தரர், வெண்பாக்கம், திருமுல்லைவாயில், திருவாலங்காடு மற்றும் திருவூறல் (தற்போது தக்கோலம் என்று அழைக்கப்படும் தலம்–இந்த தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை) ஆகிய தலங்கள் சென்ற பின்னர் திருக்கச்சி ஏகம்பம் சென்றடைகின்றார். ஆங்கே கச்சி ஏகம்பரின் அருளினால், தனது இடது கண் பார்வையை மீண்டும் பெற்ற சுந்தரர், அந்த மகிழ்ச்சியினில் கச்சி ஏகம்பத்துப் பெருமானை காண்பதற்கு தான் கண் பெற்றேன் என்று மகிழ்ந்து பாடுகின்றார். இந்த குறிப்பிலிருந்து, வெண்பாக்கம் முதலான நான்கு தலங்களில் வீற்றிருக்கும் பெருமானைத் தான் காண முடியாத நிலைக்கு சுந்தரர் எவ்வளவு வருந்தியிருப்பார் என்பதை நம்மால் உணர முடிகின்றது. எப்போதும் பெருமானையே சிந்தித்து வாழும் அடியார்கள், அதிகாலையில் துயிலிலிருந்து எழுகின்ற போதும் இறைவனையே சிந்திப்பார்கள் என்றும் அத்தகைய அடியார்களின் சிந்தையில் பெருமான் உறைகின்றார் என்றும் இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். அனைத்து உயிர்களும் வினைகளால் கட்டுண்டு கிடக்கின்றன. அந்த உயிர்கள் தங்களைப் பற்றியிருக்கும் வினைகளை நீக்கிக் கொள்ள விரும்பினால் பெருமானது திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் இந்த பாடலில் வழங்கப் படுகின்றது.

சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன் தன்னைப்

பந்தித்த வினைப் பற்றறுப்பானைப் பாலொடு ஆனஞ்சும் ஆட்டுகந்தானை

அந்தமில் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற

கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே

கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார்கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.84.1) சுந்தரர், பெருமானின் சடை கோல நறுஞ்சடை என்று குறிப்பிடுகின்றார். அழகும் நறுமணமும் பொருந்திய சடை என்று கூறுகின்றார். சூது என்ற சொல்லுக்கு மாங்கனி என்று சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். புண்டரிகம்=தாமரை மலர் பரிசு=தன்மை; பூசல் என்பதற்கு ஓலம் என்று இங்கே பொருள் கொள்ளவேண்டும். கொண்டல்=மழை பொழியும் கருத்த மேகம்; வண்ணம்=தன்மை;

தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும் சூதன மென்முலையாள் பாகமும் ஆகி வரும்

புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள் பூசலிடக் கடல் நஞ்சு உண்டக் கருத்தமரும்

கொண்டல் எனத் திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறுஞ்சடை மேல் வண்ணமும் கண் குளிரக்

கண்டு தொழப்பெறுவது என்று கொலோ அடியேன் கார்வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே

திருவாசகம் அச்சப்பத்து (8.35.8) பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், பெருமானின் சடையினை வெறிகமழ் சடை என்று குறிப்பிடுகின்றார். அருளாளர்கள் அனைவரும் பெருமானை வழிபடாத அறிவு, அறிவு என்று கருதப்படாமல் புறக்கணிப்பதை நாம் பல பாடல்கள் மூலம் உணர்கின்றோம். மணிவாசகர் ஒரு படி மேலே சென்று, அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். அவர்களுடன் பழகினால் அவர்களது கெட்ட குணம் தன்னையும் தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தின் காரணமாக, அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டிய அவசியத்தை இவ்வாறு உணர்த்துகின்றார். தறி=காட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை இயற்கையான நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்,

தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்

வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா

செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க மாட்டா

அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே

பொழிப்புரை:

ஒரு உடல் பிறக்கும் முன்னமே, அந்த பிறவியில் அனுபவித்து கழித்துத் தீர்க்க வேண்டிய வினைகள், அந்த உடலையும் உயிரினையும் வருத்த காத்திருக்கின்றன. இவ்வாறு காத்திருக்கும் வினைகளை நீங்கள் முற்றிலுமாக கழித்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் திருப்புன்கூர் தலத்தில் வீற்றிருக்கும் சிவலோகநாதரை சிந்திப்பீர்களாக. அழிவு என்பதே இல்லாமல் என்றும் நிலையாக இருக்கும் சிவபெருமான், நறுமணம் கமழும் செம்பட்டை நிறத்தில் உள்ள சடையை உடையவர் ஆவார்.

பாடல் 2:

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 2 (திதே 0445)

மூவராய முதல்வர் முறையாலே

தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர்

ஆவர் என்னும் அடிகள் அவர் போலும்

ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே

விளக்கம்:

ஏ=அம்பு; அல்லார்=வேதநெறியில் சாராது வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; மூன்றாவது அடியில் உள்ள சொற்களை அடிகள் ஆவர் என்னும் என்று மாற்றி அமைத்து பொருள் காண வேண்டும். எயில்=மதில்; பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருடன் இணைந்திருந்து அவர்கள் தந்தம் தொழில்களைச் செய்வதற்கு துணையாக இருப்பவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் மூவராய முதல்வன் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். ஒரே தண்டினில் மூன்று கிளைகளாக பிரிந்துள்ள மூவிலைச் சூலத்தினை பெருமான் ஏந்துதல், நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் தானே என்பதையும் மூன்று தொழில்களும் செய்பவன் தானே என்பதையும் உணர்த்தும் பொருட்டு என்று ஓற்றியூர் ஒருபா ஒருபது பதிகத்தின் ஆறாவது பாடலில் பட்டினத்து அடிகள் (பதினோராம் திருமுறை) கூறுகின்றார்.

மூவிலை ஒரு தாள் சூலம் ஏந்துதல்

மூவரும் யான் என மொழிந்தவாறே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.36.5) அப்பர் பிரான் பெருமானை மூவராய் முதலாக நின்றவன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தினில், அம்பு ஏதும் இன்றி மூன்று கோட்டைகளையும் எரித்தவன் இறைவன் என்று சொல்லப் பட்டுள்ளது.

பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்

ஏ அலால் எயில் மூன்றும் எரித்தவன்

தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்

மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே

மூன்று தொழில்களைச் செய்யும் மூவிலைச் சூலம் என்று அப்பர் பிரானும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.89.3) கூறுகின்றார். தொழில் மூன்றும் ஆயின என்ற தொடரினை மூவிலைச் சூலம் என்ற தொடருடன் கூட்டி, பெரியபுராண விளக்கம் நூலின் ஆசிரியர் சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் கூறுகின்றார். வடமொழி ஆகமத்தில் ஜனனி ரோதயித்திரி ஆரணி ஆகிய மூன்று சக்திகளை உடையது பெருமானின் மூவிலைச் சூலம் என்று கூறப்படுகின்றது. பிரணவ மந்திரமே மூவிலைச் சூலத்தின் தண்டாக விளங்குகின்றது என்று கூறுவார்கள்,

மூன்று மூர்த்தியுள் நின்றியலும் தொழில்

மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்

மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்

மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே

வேணுபுரத்தின் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளப்பட்ட பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.9.2) திருஞான சம்பந்தர், படைப்பவனாகவும், காப்பவனாகவும், அழிப்பவனாகவும் விளங்குவதுடன், இந்த தொழில்களின் முடிந்த பயனாகிய முக்தி நிலையாகவும் சிவபெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். கிடை=வேதம் ஓதும் கூட்டம்

படைப்புந் நிலை இறுதிப் பயன் பருமையொடு நேர்மை

கிடைப் பல்கணம் உடையான் கிறி பூதப்படையான் ஊர்

புடைப் பாளையின் கமுகின்னொடு புன்னை மலர் நாற்றம்

விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், (1.53.1) திருஞானசம்பந்தர், பெருமானை, மூவராய முதலொருவன் என்று குறிப்பிடுகின்றார். நாவர்=நாக்கினை உடையவர்; செழு மறை சேர் நாவர்=செழுமையான மறைகளை ஓதும் நாவினை உடைய அந்தணர்கள்; நண்ணு=நெருங்கி வாழும்; கால்=காற்று; இந்த பாடலில் மூவராகவும் (பிரமன், திருமால், உருத்திரன்) அவர்களுக்கு முதல்வனாகவும் இருப்பது சிவபெருமான் என்று கூறப்படுகின்றது. மேவராய=விரும்பியவராக; இவ்வாறு மூவராக பெருமான் இருக்கும் நிலை, அவனது விருப்பமாக இருப்பதாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதும், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும், அவனால் படைத்தல் காத்தல் அழித்தல் தொழிலைச் செய்வதற்காக படைக்கப் பட்டவர்கள் என்றும் சைவ சித்தாந்தம் கூறுகின்றது தேவர், அசுரர், சித்தர்கள், செழுமையான வேதங்கள் ஓதும் நாவினை உடைய மறையவர்கள் முதலாக பல வகையான கணங்களாகவும், நாம் அனைவரும் தங்கி வாழும் பூமி ஆகாயம் நெருப்பு காற்று மற்றும் நீராகிய ஐந்து பூதங்களாகவும் நறுமணம் மிகுந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமன் மற்றும் சிவந்த கண்களை உடைய திருமாலாகவும் இருக்கும் பெருமான் அவர்கள் அனைவர்க்கும் தலைவனாகவும் இருக்கின்றான். மூவராகவும் அந்த மூவர்களின் தலைவனாகவும் உள்ள பெருமான் பொருந்தி உறைவது முதுகுன்றம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்

நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்

மேவராய விரை மலரோன் செங்கண் மால் ஈசன் என்னும்

மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.29) ஒரு பாடலில் வெள்ளியர் (உடல் முழுவதும் திருநீறு பூசியதால் வெண்மை நிறத்துடன் காணப்படும் சிவபெருமான்), கரியர் (திருமால்) மற்றும் செய்யர் (பொன் நிறத்தில் உள்ள பிரமன்) ஆகிய மூவராக இருப்பவர் சிவபெருமான் தான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தெள்ளியார்=தெளிந்த உள்ளம் கொண்ட ஞானியர்கள்: பள்ளியார்= பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால்: ஒள்ளியர்=ஒளி தருபவர்

வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்

ஒள்ளியர் ஊழியூழி உலகமது ஏத்த நின்ற

பள்ளியர் நெஞ்சத்துள்ளார் பஞ்சமம் பாடி ஆடும்

தெள்ளியார் கள்ளம் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளியாரே

கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (5.20.1) அப்பர் பிரான் மூவரும் ஆயவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். குழகன்=அழகன்; பருவரால்=பருத்த வரால் மீன்கள்; பழனம்=வயல்கள்; ஒப்பற்ற ஒருவனாகவும், சக்தி சிவன் ஆகிய இருவராகவும், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளாகவும் உள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.

ஒருவராய் இரு மூவரும் ஆயவன்

குருவதாய குழகன் உறைவிடம்

பருவரால் குதி கொள்ளும் பழனம் சூழ்

கருவதாம் கடம்பூர் கரக் கோயிலே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.10.7) அப்பர் பிரான், பெருமானை மூவரானார் என்று குறிப்பிட்டு மூன்று மூர்த்திகளாக விளங்கும் தன்மையை உணர்த்துகின்றார். தலத்து இறைவியின் திருநாமம் காம்பன தோளி அம்மை என்பதாகும். இந்த பெயரினை சற்றே மாற்றி காம்பேய்த் தோளி என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். காம்பு=மூங்கில். அம்பிகையின் திருநாமம் வேணுபுஜாம்பிகை என்று வடமொழியில் அழைக்கப் படுவதை, காம்பேய்த் தோளி என்று மிகவும் அழகாக அப்பர் பிரான் தமிழாக்கம் செய்துள்ளார். முற்றா மதி=பிள்ளை மதி என்றும் இளமதியம் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்படும் பிறைச் சந்திரனை, பிறை தேய்ந்து இருந்த நிலையினை முற்றா மதி, அதாவது முழுவதாக இருந்த நிலையிலிருந்து தேய்ந்த மதி என்ற பொருள் பட முற்றா மதி என்று கூறுகின்றார்.

முற்றா மதிச் சடையார் மூவரானார் மூவுலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்

கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பேய்த் தோளி

பற்றாகும் பாகத்தார் பால் வெண்ணீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார்

பற்றார் மதில் எரித்தார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.34.1) சிவபெருமான் ஒருவனே மூவுருவமாக நிற்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கருவன்=சம்ஹார மூர்த்தி; கறுவன் என்ற சொல்லின் திரிபாக, சினம் கொண்டவன் என்னும் பொருள் பட, கருவன் என்ற சொல் கையாளப்பட்டு உள்ளதாகவும் விளக்கம் கூறுவார்கள். பாடலின் எதுகை நோக்கி கருவன் எனத் திரிந்தது என்று கூறுவார்கள். தெரித்த=படைத்த: திருவினாள்=அழகு பொருந்தியவள்; மருவன்= பொருந்துபவன்;

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவமான நாளோ

கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் எரித்த நாளோ

மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ மான்மறி கை ஏந்தியோர் மாதோர் பாகம்

திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளோ

வலம்புரம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.58) நான்காவது பாடலில் அப்பர் பெருமான் மூவர் உருவாய முதல்வர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அகத்துறை அமைப்பில் அமைந்த பாடல். சிவபெருமான் மீது ஆராத காதல் கொண்ட அப்பர் நாயகி, பெருமான் தன்னை வாவா என்று அழைத்ததாக கற்பனை செய்கின்றாள். அவ்வாறு அழைத்த பெருமான், தன்னை அவருடன் அழைத்துச் செல்லாமல், விட்டுவிட்டு சென்றதாக குறிப்பிட்டு தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.

மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உருவாய முதல்வர் இந்நாள்

கோவாத எரிகணையைச் சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே

போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத் தம்முடைய பூதம் சூழ

வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.79.4) அப்பர் பிரான், சிவபெருமான் உருத்திரனாகவும் நான்முகனாகவும் திருமாலாகவும் இருக்கின்றார் என்று கூறுகின்றார். சிவனாகி என்று உருத்திரனாக இருக்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. செழுஞ்சுடர்=சூரியன் மற்றும் சந்திரன், பவன்=அடியார்கள் வேண்டும் இடங்களில், வேண்டுவார் வேண்டும் வண்ணம் தோன்றுபவன்; பவனங்கள்=உயிர்கள் வாழும் இடங்கள்; இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் அனைத்து உயிர்களுக்கும் முழுமுதற் காரணனாக இருக்கும் பெருமான் நாரணனாகவும் பிரமனாகவும் இருப்பதாக கூறுகின்றார்.

சிவனாகித் திசைமுகனாய்த் திருமாலாகிச் செழுஞ்சுடராய்த் தீயாகி நீருமாகிப்

புவனாகிப் புவனங்கள் அனைத்துமாகிப் பொன்னாகி மணியாகி முத்துமாகிப்

பவனாகிப் பவனங்கள் அனைத்தும் ஆகிப் பசு ஏறித் திரிவான் ஓர் பவனாய் நின்ற

தவனாய தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே

சிவபெருமான் ஒருவனே மூன்று உருவமாக, பிரமன், திருமால், மற்றும் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாக இருக்கும் தன்மை அப்பர் பிரானால், முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய தாண்டகப் பதிகத்தின் (6.85) பாடல் ஒன்றிலும் குறிப்பிடப் படுகின்றது. கருத்தன்=கர்த்தா என்ற வடமொழிச் சொல்லின் திரிபு; தலைவன் என்று பொருள். காய்தல்=கோபித்தல்: பிரமன் மீது கோபம் கொண்டு அவனது தலையினைக் கொய்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது. விருத்தன்= அனைவர்க்கும் மூத்தவன், பழையவன், ஆதி;

கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றைக் காய்ந்தான் காண் பாய்ந்த நீர்பரந்த சென்னி

ஒருத்தன் காண் உமையவளோர் பாகத்தான் காண் ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற

விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேலானான் காண் மெய்யடியார் உள்ளத்தே விரும்பி நின்ற

திருத்தன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

திருஞானசம்பந்தர் சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் மூன்று பாடல்களுக்கும் உரையருளிய ஆசிரியர்கள், பிரமன், திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோரின் உடல்களில், சிவபெருமான் அதிட்டித்து, அம்மூவரையும் செயல்படுத்துவதாக விளக்கம் அளிக்கின்றனர். ஜீவசமாதியை அதிஷ்டானம் என்று வடமொழியில் குறிப்பிடுகின்றனர். பல மகான்கள் மற்றும் சித்த புருடர்களின் ஜீவசமாதிகளை நாம் தமிழ்நாடெங்கிலும் காண்கின்றோம். அத்தகைய சமாதிகள் சென்று வணங்கும் அடியார்கள், மகான்கள் இன்றும் அந்த சமாதிகளில், நிலையாக பொருந்தி வாழ்வதாக கருதி வழிபடுவதால் தானே ஜீவசமாதிகள் என்று அவை அழைக்கப் படுகின்றன. அதே போன்று, மூவராகிய மூர்த்திகளின் உடலுடன் இணைந்து சிவபெருமான் பொருந்தி இணைந்து, மூவரையும் செயல்படுத்தும் தன்மை, அதிட்டித்து என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை வணங்கி நமது வினைகளை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறும் திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமான் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டும் பொருட்டு, தேவர்களும் அவரை வணங்குவதாக குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருடன் இணைந்து இருந்து அவர்கள் தத்தம் தொழில்களை செய்யும் வண்ணம் இயக்கி அந்த மூவருக்கும் முதல்வனாகத் திகழும் பெருமானை தேவர்கள் அனைவரும் முறையாக வணங்குகின்றனர். திருப்புன்கூர் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அவரே, வேதநெறியைச் சாராமல் நின்று பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவர் ஆவார்.

பாடல் 3:

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 3, 4, 5, 6, 7, 8, 9, 10 (திதே 0446)

பங்கயம் கண் மலரும் பழனத்துச்

செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்க்

கங்கை தங்கு சடையர் அவர் போலும்

எங்கள் உச்சி உறையும் இறையாரே

விளக்கம்:

உச்சி=துவாத சாந்தத் தாமரை; பழனம்=வயல்கள்; பங்கயம்=தாமரை; பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானை வணங்க வேண்டிய அவசியத்தையும் அவரது உயர்வினையும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த இரண்டு நிலைகளையும் கருதி, பெருமானை தியானித்து தனது துவாதசாந்தப் பெருவெளியில் அவரை நிறுத்தியதாக கூறுகின்றார்.

பொழிப்புரை:

திருப்புன்கூர் வயல்களில் தாமரை மலர்கள் மலர்கின்றன; செழுமையான கயல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. இத்தகைய நீர் வளம் நிறைந்த வயல்கள் மலிந்த திருப்புன்கூர் தலத்தில் உறையும் இறைவர் கங்கையைத் தனது சடையினில் ஏற்றவர் ஆவார். எங்களது தலைவராகிய அவர் எங்களது தலையுச்சியின் மேல் துவாதசாந்தப் பெருவெளியிலும் உறைகின்றார்.

பாடல் 4:

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 3, 4, 5, 6, 7, 8, 9, 10 (திதே 0446)

கரை உலாவு கதிர் மாமணி முத்தம்

திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர்

உரையின் நல்ல பெருமான் அவர் போலும்

விரையின் நல்ல மலர்ச் சேவடியாரே

விளக்கம்:

இந்த பாடலில் பெருமானின் திருவடிச் சிறப்பு கூறப்பட்டு அதனைப் பற்றிக்கொண்டு உய்வினை அடையுமாறு உணர்த்தப் படுகின்றது. பெருமானின் திருவருளின் வடிவமாக திருவடி கருதப் படுகின்றது. உரை=புகழ்; சென்ற பாடலில் தலத்தின் நீர்வளத்தினை உணர்த்தியவர், இந்த பாடலில் தலத்தின் செல்வ வளத்தினை உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

வயலின் கரைகளில் ஒளிவீசும் மாணிக்கக் கற்கள் சிதறிக் கிடக்க, வயலின் நீரினில் முத்துக்கள் உலாவும் செல்வச் செழிப்பு வாய்ந்த வயல்களை உடைய திருப்புன்கூர் தலத்தில், மிகுந்த புகழினை உடைய பெருமான் உறைகின்றார். நறுமணம் மிகுந்த மலர் ;போன்ற சிவந்த பெருமானின் திருவடிகளை கண்டு தொழுது வணங்குவீராக.

பாடல் 5:

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 3, 4, 5, 6, 7, 8, 9, 10 (திதே 0446)

பவள வண்ணர் பரிசார் திருமேனி

திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்

அழகர் என்னும் அடிகள் அவர் போலும்

புகழ நின்ற புரிபுன் சடையாரே

விளக்கம்:

சென்ற பாடலில் திருவடிகளின் தன்மையை எடுத்துரைத்த திருஞானசம்பந்தர் இந்த பாடலில் பெருமானின் திருமேனியின் தன்மையை உணர்த்தி, பெருமான் அழகே வடிவானவர் என்று கூறுகின்றார். பரிசு=தன்மை; புரிசடை=முறுக்குண்ட சடை; புன்சடை=செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடை; சொக்கவைக்கும் அழகு உடைய பெருமானை, பொருத்தமாக மதுரை தலத்தில் சொக்கன் என்று அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது.

பொழிப்புரை:

பவளத்தின் வண்ணம் போன்று சிவந்து காணப்படும் ஒளிவீசும் திருமேனியை உடைய பெருமான் என்றும் நீங்காது உறையும் தலம் திருப்புன்கூர்; சிறந்த அழகர் என்று பலரும் புகழும் வண்ணம் வீற்றிருக்கும் பெருமான், முறுக்குண்டு பொன்னின் நிறத்தில் காணப்படும் சடையை உடையவர் ஆவார்.

பாடல் 6:

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 3, 4, 5, 6, 7, 8, 9, 10 (திதே 0446)

தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல்

திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர்

பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்

விரிந்து இலங்கு சடை வெண்பிறையாரே

விளக்கம்:

தெரிந்து இலங்குதல்=மிகுந்த ஒளியுடன் கூடி இருத்தல்;

பொழிப்புரை:

மிகுந்த ஒளியுடன் கூடிய செங்கழுநீர் பூக்கள் மலரும் வயல்களும், ஒரே சீராக உயர்ந்து வளர்கின்ற நெற்கதிர்கள் நிறைந்த வயல்களும் சூழ்ந்த திருப்புன்கூர் தலத்தில் நிலையாக பொருந்தி உறைபவர் சிவபெருமான். அவர் தனது விரிந்த சடையில் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனை அணிந்துள்ளார்.

பாடல் 7:

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 3, 4, 5, 6, 7, 8, 9, 10 (திதே 0446)

பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும்

தேர் கொள் வீதி விழவார் திருப்புன்கூர்

ஆர நின்ற அடிகள் அவர் போலும்

கூர நின்ற எயில் மூன்று எரித்தாரே

விளக்கம்:

முந்தைய மூன்று பாடல்களில் பெருமானின் திருவடி, திருமேனி, சடைமுடி ஆகியவற்றின் அழகினை உணர்த்திய திருஞானசம்பந்தர், இத்தகைய அழகு மிளிர பெருமான் வீதிவலம் வந்த காட்சியை மனதினில் நினைத்தார் போலும். அவ்வாறு வீதிவலம் நடைபெறும் தெருக்களின் அகலத்தை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பாரும்=உலகத்தில் உள்ளவர்கள்; விண்ணும்= விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள்; ஆர=பொருந்த; கூர நின்ற=கொடுமைகள் செய்யும்; க்ரூரம் என்ற வடமொழிச் சொல்லை மூலமாகக் கொண்டு எழுந்த சொல்லாக கருதப் படுகின்றது. க்ரூரம்=கொடுமை; தங்களின் விருப்பம் போன்று பல இடங்களுக்கு பறக்கும் கோட்டைகளில் பறந்து சென்று, திடீரென்று கீழே இறங்கி கோட்டைகளின் கீழே அகப்பட்ட அனைத்து உயிர்களையும் கொன்ற செயலின் கொடுமைத் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

நிலவுலகத்தில் உள்ள மனிதர்களும் விண்ணுலகத்தில் உள்ள தேவர்களும் பெருமானைத் தொழுது போற்றும் வண்ணம், தேரோடும் அகன்ற வீதிகளைக் கொண்டதும் எந்நாளும் திருவிழாக்களால் சிறப்பிக்கப் படுவதும் ஆகிய திருப்புன்கூர் தலத்தில் பொருந்தி உறையும் இறைவனார், கொடுமையான முறையில் அனைவரையும் வருத்திய திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளும் ஒருங்கே பற்றி எரியும் வண்ணம் அம்பு எய்தி எரித்தவராவர்.

பாடல் 8:

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 3, 4, 5, 6, 7, 8, 9, 10 (திதே 0446)

மலையதனார் உடைய மதில் மூன்றும்

சிலை அதனால் எரித்தார் திருப்புன்கூர்த்

தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை

மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே

விளக்கம்:

மலையதனார்=மலையது அன்னார், மலை போன்று வலிமை உடையவர்கள்; அடர்த்தல்= நெருக்குதல்; மலைதல் என்ற சொல்லுக்கு சண்டை போடுதல் என்று ஒரு பொருளும் உள்ளது. தேவர்களுடன் போரிட்ட திரிபுரத்து அரக்கர்கள் என்றும் பொருள் சிலர் கொள்கின்றனர். மலைத்தல் என்றால் மலைத்து திகைத்து இருத்தல் என்று ஒரு பொருள். இந்த அடிப்படையில் தங்களது பகைவர்கள் திகைத்து நிற்கும் வண்ணம் வலிமை கொண்ட திரிபுரத்து அரக்கர்கள் என்றும் பொருள் கூறப்படுகின்றது.

பொழிப்புரை:

மலை போன்று வலிமை பொருந்திய திரிபுரத்து அரக்கர்கள் கொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், மேருமலையினை வளைத்து செய்யப்பட்ட வில்லில் கூரிய அம்பினைப் பொருத்தி எரித்தவர் சிவபெருமான். அவரே திருப்புன்கூர் தலத்தின் தலைவராக திகழ்கின்றார். வலிமை வாய்ந்த அரக்கன் இராவணன் மிகுந்த செருக்குடன், கயிலாய மலையினைப் பேர்த்து எடுப்பேன் என்ற எண்ணத்துடன் முயற்சி செய்த போது, அந்த கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை அழுத்தி, மலையின் கீழே அரக்கனை நெருக்கி அவனது வலிமையை அழித்து, பின்னர் அரக்கனின் சாமகானத்தை கேட்டு மகிழ்ந்து பல வரங்கள் அளித்தவர் பெருமான்.

பாடல் 9:

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 3, 4, 5, 6, 7, 8, 9, 10 (திதே 0446)

நாட வல்ல மலரான் மாலுமாய்த்

தேட நின்றார் உறையும் திருப்புன்கூர்

ஆட வல்ல அடிகள் அவர் போலும்

பாடல் ஆடல் பயிலும் பரமரே

விளக்கம்:

நாடவல்ல மலரான் என்று பிரமனை திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பிரமனுக்கு நான்கு திசைகளையும் ஒரே சமயத்தில் நோக்கும் வண்ணம் நான்கு முகங்கள் உள்ளன. எனவே தான் தேடும் எந்த பொருளையும் எளிதில் கண்டறியும் ஆற்றல் படைத்தவன், பிரமன். இந்த தன்மையை, எதையும் எளிதில் நாடி உணரும் திறமையை குறிப்பிடும் பொருட்டு நாட வல்லவன் என்று இங்கே கூறுகின்றார். நாட வல்லவனாக இருந்தும், பெருமானின் திருமுடியைத் தேடி காண முடியாமல் திகைத்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் எப்போதும் வேத கீதங்களை பாடியவண்ணம் இருக்கின்றார் என்று பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன.

அழகன் வீரன் கருணையாளன் என்று பல விதமாக பெருமானை வர்ணித்த திருஞானசம்பந்தர், கலைகளில் வல்லவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பாடலில் வல்லவனாக வேதங்களை ஓதும் பெருமான் ஆடலில் வல்லவனாக ஐந்தொழில்களும் புரிகின்றான். பாடலையும் ஆடலையும் பயிலும் பெருமான் அதே சமயத்தில் வேதங்களை அருளியும், படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து செயல்களையும் செய்தும் உயிர்களை உய்ய வைக்கும் கருணைத் திறம் தான் என்னே.

பொழிப்புரை:

நான்கு முகங்களைக் கொண்டு எதனையும் எளிதில் தேடிக் கண்டு பிடிக்கும் ஆற்றல் வாய்ந்த பிரமனும் திருமாலும், தனது அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து நிற்கும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்ற பெருமான் திருப்புன்கூர் தலத்தில் உறைகின்றான். அவரே ஆடவல்லானாக திகழ்கின்றார். அவர் இடைவிடாது ஆடலும் பாடலும் பயின்ற வண்ணம் உயிர்களுக்கு பல விதங்களிலும் அருள் புரிகின்றார்.

பாடல் 10:

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 3, 4, 5, 6, 7, 8, 9, 10 (திதே 0446)

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 10 தொடர்சி (திதே 0447)

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 10 தொடர்சி (திதே 0448)

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 10 தொடர்சி (திதே 0449)

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 10 தொடர்சி (திதே 0450)

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 10 தொடர்சி மற்றும் பாடல் 11 (திதே 0451)

குண்டு முற்றிக் கூறை இன்றியே

பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கேளேல்

வண்டு பாட மலரார் திருப்புன்கூர்

கண்டு தொழுமின் கபாலி வேடமே

விளக்கம்:

குண்டு=பருத்த உடல்; முற்றி=மிகுந்து; கீழான தன்மை மிகுந்து; கூறை=உடை, துணி; பிண்டம்= சோற்றுக் கவளம்; பிராந்தர்=மயங்கிய அறிவினை உடையவர்; என்றும் நிலையாக இருக்கும் பெருமானை கருதாமல், மற்ற நிலையற்ற பொருட்களை நிலையாக கருதுவதால் சமணர்களை மயக்க அறிவினை உடையவர்கள் என்று அழைத்தார் போலும், பெருமான் மிகவும் குறைந்த ஆடையை உடையவராக இருப்பதால் நக்கர் என்று அழைக்கப் படுவதை நாம் அறிவோம். பெருமான் பலி ஏற்பதையும் நாம் அறிவோம். சமணர்களும் ஆடையேதும் இன்றி பல இடங்களிலும் திரிந்து மற்றவர் தரும் உணவினை ஏற்று வாழ்வதால், நக்கனாக பலியேற்றுத் திரியும் பெருமானுடன் அவர்களை ஒப்பிடுவது தவறு என்பதை உணர்த்தும் வண்ணம், சமணர்கள் மயங்கிய அறிவினை உடையவர்கள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதாக சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். கையில் கபாலம் ஏந்தி பலி ஏற்க வரும் பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, உள்ளத்தில் உள்ள மருள் நீங்கப் பெற்றவராக நாம் அனைவரும், பெருமானைத் தொழுது உய்வினை அடைய வேண்டும் என்று உணர்த்துகின்றார்.

இந்த பாடலில் கண்டு தொழுமின் கபாலி வேடமே என்று திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்கள் பெருமான், பிச்சைப் பெருமானாக வேடம் தரித்து, தனது கையில் பிரம கபாலம் ஏந்தியவாறு, பக்குவப் பட்ட உயிர்கள் தங்களது மலங்களை பிச்சையாக பெருமானுக்கு அளித்து விட்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறலாம் என்று உணர்த்துகின்றன. நாம் நமது ஊனக்கண்களால் இறைவன் இவ்வாறு வருவதை காணமுடியாது: எனினும் இறைவன் வருவார் என்பதை எதிர்பார்த்து, விருப்பு வெறுப்பு ஏதுமின்றி நாம் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை ஒரே மாதிரியாக பாவித்து, நமது பழைய மலங்களை அவரிடம் சமர்ப்பிப்பதற்கு தயாராக இருந்தால், அவர் நமது பழைய வினைகளை முற்றிலும் கழித்து, நம்மைப் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுவிப்பார் என்ற செய்தி பல பாடல்கள் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. பிச்சைப் பெருமானின் வேடத்தின் முக்கிய அம்சமே, பெருமான் தனது கையில் ஏந்தியுள்ள பிரம கபாலம் தான். பிரம கபாலம் ஏந்தியுள்ள பெருமானை, கபாலி என்று அழைக்கின்றனர். கபாலி என்று பெருமானை குறிப்பிடும் பாடல்களை நாம் இந்த பதிவினில் சிந்திப்போம்.

திருப்பறியலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.134.5) திருஞானசம்பந்தர் பெருமானை கபாலி என்று அழைக்கின்றார். படுதம்=கூத்தில் ஒரு வகை என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது; படுதம் என்ற சொல்லினை படு மற்றும் தம் என்று பிரித்து, இறந்து படுவோர்கள் தமது என்று பொருள் கொள்வது இங்கே பொருத்தமாக இருப்பதாக தோன்றுகின்றது. புரிந்தார்=வினை புரிந்தவர்கள்; தங்களது வினையின் காரணமாக நிலவுலகில் பிறந்து, மீண்டும் வேறொரு பிறவி எடுப்பதற்காக இறக்கும் மனிதர்கள்; கரிந்தார்=இறந்தவர்கள்; தெரிந்தார்=தெரிந்து+ஆர்=ஆராய்ந்து அறிந்தவர்கள்; இறந்தவர்களின் உடலை எரித்து கரிந்தவர்களாக மாற்றும் சுடுகாட்டினில், நடனம் ஆடுகின்ற கபாலியாக இருப்பவன் பெருமான். அவன் தங்களது வினைகளின் காரணமாக நிலவுலகில் பிறந்து, மீண்டும் வேறொரு பிறவி எடுப்பதற்காக இறந்து படுகின்ற உயிர்களின் உடல்கள் வைத்து எரிக்கப்படும் புறங்காட்டில் நடனமாடும் பெருமான், நான்மறைகளை ஆராய்ந்து உணர்கின்ற அந்தணர்கள் வாழும் திருப்பறியலூர் தலத்தினில், விரிந்து பரந்த மலர்ச் சோலைகள் நிறைந்த தலத்தினில் உள்ள வீரட்டம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் பெருமான் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கரிந்தா ரிடுகாட்டி லாடுங்க பாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டி லாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறிய லூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே

நெல்லிக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அருளிய பாடலில் (2.19.3) திருஞானசம்பந்தர், பெருமானை கபாலி என்று அழைக்கின்றார். சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம், நலம் என்று பொருள். அந்த தன்மையைத் தான் நலம் தான் அவன் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சிவம் இல்லாவிடில் உயிர்களுக்கு நலமும் இல்லை. புலம்=சிவஞான சொரூபம்; புகழால் எரி விண்=சிவபெருமானின் அருளால் விளங்கும் விண்ணோர்கள்; நிலம்=இடம், வீடுபேறு என்று பொருள் கொள்வது பொருத்தம்; நிலாவுதல்=நிலையாக இருத்தல்; உயிர்களுடன் இணைந்து உயிர்களுக்கு நன்மை பயக்கும் பொருளாக இருக்கும் சிவபெருமான், நான்முகனின் தலையைத் தனது உண்கலனாக ஏற்றுக் கொண்டமையால் கபாலி என்ற பெயருடன் விளங்குகின்றார். ஞானமே வடிவமாக உள்ள பெருமான், அவனது அருளால் புகழுடன் விளங்கும் வானோர்களால் போற்றப்படும் வீடுபேறாக விளங்கும் பெருமான், நெல்லிக்கா தலத்தினில் நிலையாக உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நலம் தான் அவன் நான்முகன் தன் தலையைக்

கலம் தான் அது கொண்ட கபாலியும் தான்

புலம் தான் புகழால் எரி விண் புகழும்

நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.40.1) திருஞானசம்பந்தர் பெருமானை காபாலி என்று அழைக்கின்றார். பிரான் என்ற சொல்லுக்கு பிரியமானவன் என்று பொருள் கொண்டு, அனைத்து உயிர்கட்கும் இனியவனாக விளங்கும் தலைவன் என்று பொருள் கொள்ளலாம். தம்=தாம், ஆன்மாக்கள்; அமுதம்=மிகவும் உயர்ந்த பொருள்; அமுதத்தினை மிகவும் உயர்ந்த பொருளாக கருதி தேவர்களும் அசுரர்களும் தமக்குள் சண்டையிட்டமையால், மிகவும் உயர்ந்த பொருளை அமுதம் என்று குறிப்பிடுவார்கள். கம்பம்=அசைதல்; பெருமானை அனைத்து உயிர்களுக்கும் இனியவன் என்று குறிப்பிடும் திருஞான சம்பந்தர், பெருமானை, காபாலி என்று குறிப்பிட்டு, பெருமான் பலி ஏற்கும் காரணத்தை மறைமுகமாக உணர்த்தி, பெருமான் எவ்வாறு உயிர்களுக்கு இனியவனாக உள்ளான் என்பதை உணர்த்துகின்றார். தழலைத் தனது கையில் ஏந்திய தன்மை, வினைகளை சுட்டெரிக்கும் பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றது. கறைக் கண்டனாகத் திகழும் தன்மை பெருமான் ஆலகால விடத்தினை உட்கொண்டு, தேவர்களையும் அசுரர்களையும் அழியாமல் காத்த செய்தியை உணர்த்துகின்றது. பண்டைய நாளில் விடத்தினை உட்கொண்டு உயிர்களை காத்த செயலும் இந்நாளில் உயிர்களை உய்விக்கும் நோக்கத்துடன் பலியேற்கும் செய்கையும், எப்போதும் தீப்பிழம்பை கையில் ஏந்தி வினைகளைச் சுட்டெரித்து அருளும் தன்மையும் குறிப்பிடப்பட்டு, நேற்றும் இன்றும் என்றும் பெருமான் உயிர்களுக்கு இனியவனாக இருக்கும் தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வம்பு=நறுமணம்; உலாம்=உலாவும்; வானவன்=உயர்ந்தவன்; எனக்கு தலைவனாக இருப்பவனும், எனக்கு அமுதம் போன்று மிகவும் உயர்ந்த பொருளாக இருப்பவனும் ஆகிய இறைவன், தன்னைச் சரணடையும் அனைத்து உயிர்களுக்கும் இனிய தலைவனாக விளங்குகின்றான். தீப்பிழம்பைத் தனது கையில் ஏந்திய பெருமான், அசையும் இயல்பினை உடைய பெரிய மதயானை தன்னை எதிர்த்து வந்த போது அதனை அடக்கி அதன் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவன் ஆவான். அவன் தனது கையினில் கபாலம் ஏந்தியவாறு உலகெங்கும் திரிந்து, பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை அவனது பிச்சைப் பாத்திரத்தில் பலியாக இட, அதனை ஏற்றுக்கொண்டு அந்த உயிர்களுக்கு முக்திநிலை அளிக்கின்றான். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினைத் தான் உட்கொண்டு தேவர்களையும் அசுரர்களையும் பண்டைய நாளில் காத்த அவன், அனைவரிலும் உயர்ந்தவனாக, நறுமணம் மிகுந்த சோலைகளை உடைய பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன்னடைந்தார்

தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும்

கம்பமா கரி உரித்த காபாலி கறைக் கண்டன்

வம்புலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.44.02) திருஞானசம்பந்தர், பெருமானை கைம்மாவின் தோல் போர்த்த காபாலி என்று கூறுகின்றார். கைம்மா=துதிக்கையை கையாக உடைய விலங்கு, யானை; ஏத்துதல்=புகழ்ந்து போற்றுதல்; தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை

உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், வானில் திரிந்து கொண்டு பலருக்கும் இடர் விளைவித்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று வலிமை வாய்ந்த பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்தவனும், பிரம கபாலம் ஏந்திய வண்ணம் உலகெங்கும் பலிக்கு திரிவதால் காபாலி என்ற பெயர் பெற்றவனும், மூன்று கண்களை உடையவனும் ஆகிய பெருமானின் புகழினை குறிப்பிட்டு, அழகியதும் பெரியதும் ஆகிய சோலைகள் நிறைந்த ஆமாத்தூர் தலத்தில் உறைகின்ற அம்மானே எனது பெருமைக்குரிய தலைவன் என்று சொல்லி புகழ்ந்து அவனை வழிபடாத மனிதர்கள், பேய்களின் கூட்டத்தில் இருக்கும் மிகவும் கீழ்மைத் தன்மை வாய்ந்த பேயாவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கைம்மாவின் தோல் போர்த்த காபாலி வானுலகில்

மும்மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி

அம்மா மலர்ச் சோலை ஆமாத்தூர் அம்மான் எம்

பெம்மான் என்று ஏத்தாதார் பேயரில் பேயரே

நாலூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.46.6) திருஞானசம்பந்தர் பெருமானை காபாலி என்று அழைக்கின்றார். மணி=நீலமணி; மிடறு=கழுத்து; நண்பு என்ற சொல் இங்கே அன்பு விருப்பம் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. தன் பால் மிகுந்த அன்பு கொண்டுள்ள உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நறையார்=தேன் மிகுந்த; கட்டங்கம்=மழுப்படை; நமது பாவங்களும், பாவங்களால் விளையும் துன்பங்களும், இதே பதிகத்தின் முந்திய பாடலில் கூறப்பட்ட வண்ணம், நீக்கப் பட்டால் நாம் அடைவது இன்பம் தானே. அந்த செய்தி தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. ஆலகால விடத்தை உட்கொண்டு தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையானும், தனது கையினில் பிரமகபாலம் ஏந்தி பலியேற்க செல்பவனும், கட்டங்கம் என்ற மழு ஆயுதத்தை ஏந்தியவனும், பிறைச் சந்திரன் வளரும் சடை உடையவனும், தன் பால் மிகுந்த அன்பு வைத்துள்ள பார்வதி பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், தேன் மிகுந்த மலர்களுடன் அழகாக விளங்கும் சோலைகள் சூழ்ந்துள்ள நாலூர் மயானத்தில் உறைகின்றவனும் ஆகிய பெருமானை, எனது இறைவன் என்று குறிப்பிட்டு புகழ்ந்து வணங்கும் அடியார்களுக்கு இன்பம் உண்டாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கறையார் மணி மிடற்றான் காபாலி கட்டங்கன்

பிறையார் வளர் சடையான் பெண்பாகன் நண்பாய

நறையார் பொழில் புடை சூழ் நாலூர் மயானத்தெம்

இறையான் என்று ஏத்துவார்க்கு எய்துமாம் இன்பமே

ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.52.1) திருஞானசம்பந்தர் பெருமானை கபாலி என்று அழைக்கின்றார். இந்த பாடலில் நான்கு அடிகளிலும் ஆலவாய் என்ற தலத்தின் பெயர் வரும் வண்ணம் இயற்றி இருந்தாலும், கடை அடியில் மட்டுமே ஆலவாய் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. வீடலாலவாயிலாய் என்ற சொல்லினை வீடு அலால் அவா இலாய் என்று பிரித்து, வீடுபேற்றினை அடைவதைத் தவிர்த்து வேறு எந்த ஆசையும் இல்லாத தொண்டர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். விழுமியார்=சிறந்த தொண்டர்கள்; பாடலால வாயிலாய் என்ற தொடரை பாடு அலால் அவா இலாய் என்று பிரித்து பொருள் காண வேண்டும். சிறந்த தனது தொண்டர்கள் பாடும் பாடல்களைக் கேட்பதைத் தவிர்த்து வேறு எதனையும் கேட்பதற்கு விருப்பம் அற்ற பெருமான் என்று குறிப்பிட்டு தனது தொண்டர்கள் புகழ்ந்து போற்றி பாடல்கள் பாடுவதை விரும்பி ஏற்றுக்கொண்டு நிற்கும் பெருமான் என்பது இந்த அடியின் பொருள். பெருமான் தனது இருப்பிடமாக காட்டினை, சுடுகாட்டினை ஏற்றுக் கொண்டுள்ள தன்மை மூன்றாவது அடியில் குறிப்பிடப் பட்டுள்ளது. நான்காவது அடியில் கூடல் என்றும் ஆலவாய் என்று அழைக்கப்படும் தலத்தினை, அன்பு பாராட்டி போற்றுகின்ற பெருமானின் கொள்கை தான் என்னே என்று திருஞானசம்பந்தர் வியக்கின்றார். சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாக பெருமான் ஏற்றுக் கொண்டு இருந்தாலும், ஆலவாய் நகர் பால் மிகுந்த விருப்பம் கொண்டு, தனது உறைவிடமாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார். .

வீடலாலவாயிலாய் விழுமியார்கள் கை தொழ

பாடாலவாயிலாய் பரவ நின்ற பண்பனே

காடலாலவாயிலாய் கபாலி நீள் கடிம்மதில்

கூடாலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே

வேட்டக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.66.1) திருஞானசம்பந்தர் பெருமானை காபாலி என்று அழைக்கின்றார். வண்டு இரைக்கும்=வண்டுகள் முரன்று ஆரவாரம் செய்யும்; கண்டு இரைக்கும்=பாம்பினைக் கண்டு அச்சத்தால் மூச்சு இரைக்கும் சந்திரன்; கனை கழல்கள்=ஒலி எழுப்பும் வீர்க் கழல்கள்; தொண்டு=தொண்டர்கள்; தொண்டர்கள் ஆரவாரம் செய்த வண்ணம் பெருமானைத் தொழும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. சிலர் பாடியும், சிலர் ஆடியும், சிலர் பெருமானின் புகழினைப் பேசியவாறும் இருப்பதால் சிலர் தங்களது கோரிக்கையை உரக்க சொல்லியவாறும் ஆரவாரமாக இருக்கும் சூழ்நிலை சுட்டிக் காட்டப் படுகின்றது. தெண்டிரை= தெளிந்த அலைகள்; ஆரவாரத்துடன் மொய்க்கும் வண்டுகளால் சூழப்பட்ட கொன்றை மலர்களைத் தனது விரிந்த சடையில் மேல் அணிந்துள்ள பெருமான், அந்த சடையினில் கோடுகள் உடைய உடலினை உடைய பாம்பினையும் சடையில் ஏற்றுக் கொண்டுள்ளான். அந்த பாம்பு தன்னை நெருங்கி வருவதால் அச்சம் கொள்ளும், சந்திரன் மூச்சிரைத்து அச்சத்தை வெளிப்படுத்துகின்றது. ஒலிக்கும் வீரக் கழல்களைத் தனது கால்களில் அணிந்துள்ள பெருமானின் சன்னதியில் கூடியுள்ள தொண்டர்கள் ஆரவாரம் செய்த வண்ணம், பெருமானைத் தொழுது வேண்டுகின்றனர். இவ்வாறு பெருமான் எழுந்தருளி உறையும் இடம், சுடர் விட்டு ஒளிரும் பவளத்தை தனது அலைக் கரங்களால் அடித்துக் கொண்டு வந்து கரை சேர்க்கும் கடலின் அருகே உள்ள வேட்டக்குடி தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வண்டிரைக்கும் மலர்க் கொன்றை விரிசடை மேல் வரியரவம்

கண்டிரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனை கழல்கள்

தொண்டிரைத்துத் தொழுது இறைஞ்சத் துளங்கொளி நீர்ச் சுடர்ப் பவளம்

தெண்டிரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.70.11) திருஞானசம்பந்தர், பெருமானை கபாலி என்று அழைக்கின்றார். இந்த பாடலில் தேவார பாடல்களை இசையுடன் இணைத்து பாடும் அடியார்கள் பொன்னுலகம் பெறுவார்கள் என்று கூறுகின்றார். பெருமானிடம் உள்ள சூலப் படையின் சிறப்பு இந்த பாடலில் கூறப்படுகின்றது. நிலவுலகில் வாழ்வோர் மற்றும் வானுலகில் வாழ்வோர் எவரையும் பொருட்படுத்தாத படை என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். காதன்மை=ஒப்பற்ற அன்பு, காதல்; மயில் உருவம் கொண்டு பிராட்டி பெருமானை வழிபட்ட தலமாகிய மயிலாடுதுறை தலம் சென்ற திருஞானசம்பந்தருக்கு, மயிலாக பிராட்டி வழிபட்ட மற்றொரு தலமாகிய சென்னை மயிலாப்பூர் தலமும் ஆங்கே எழுந்தருளி இருக்கும் காபாலி பெருமானும் நினைவுக்கு வந்தனர் போலும்.

நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாததொரு சூலமொடு பேய்க்

கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்ததொரு காதன்மையால்

மணம் தண்மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையைப்

புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரை செய்வர் பெறுவர் பொன்னுலகே

துருத்தி மற்றும் வேள்விக்குடி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து பாடிய பதிகத்தின் பாடலில் (3.90.3) திருஞானசம்பந்தர், பெருமானை கண்ணுதல் கபாலியார் என்று அழைக்கின்றார். மழை=குளிர்ச்சி; விழை=விருப்பம்; கழை=கரும்பு; இழைவளர் துகில்=பஞ்சின் இழைகள் சேர்ந்த ஆடை, பருத்தி ஆடை; குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனையும் கொன்றை முதலான மலர்களையும், வெண் தலையையும் தனது நீண்ட சடையில் பொருத்தியுள்ள பெருமான், கரும்பு முதலான பயிர்களை வளர்க்கும் நீர்ப்பெருக்கினை உடைய கங்கை நதியும் தனது சடையினில் புகுந்து மறையக் கண்டவர் ஆவார். அவர் தனது நெற்றியில் ஒரு கண்ணினை உடையவராய், தனது கையினில் கபாலம் ஏந்தியவராய், பஞ்சின் இழைகளால் நெய்யப்பட்ட ஆடையினைத் தனது மார்பினில் அணிந்துள்ள உமையன்னையுடன், மேலும்மேலும் பெருகும் விருப்பத்துடன் பகலில் அமர்ந்துள்ள இடம் திருத்துருத்தி தலமாகும். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு வார்சடை மேல்

கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல் கபாலியார் தாம்

இழை வளர் துகில் அல்குல் அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்

விழை வளர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும், திருஞானசம்பந்தர் பெருமானை கண்ணுதல் கபாலியார் என்று அழைக்கின்றார். களம் கொள்=இருக்கும் இடம்; விளங்குநீர் துருத்தி என்ற தொடர், ஆற்றின் இடையே இந்த தலம் ;பண்டைய நாளில் அமைந்திருந்ததை உணர்த்துகின்றது. வளம்=அழகு; கிளர்-திகழ்; துளங்கும்=அசையும்; அழகுடன் திகழும் பிறைச் சந்திரனும் பொன் நிறத்தில் காணப்படும் கொன்றை மலரையும் ஒளியுடன் திகழும் பாம்பையும், தனது சடையின் இடையே இடம்பெற்று இருக்கும் வண்ணம் வைத்துள்ள எமது பெருமான், தனது நெற்றியில் ஒரு கண் உடையவர் ஆவார். தனது கையினில் கபாலம் ஏந்திய தோற்றத்துடன் இருப்பவரும் தனது மார்பினில் பொலிந்து அசையும் வண்ணம் பூணூல் அணிந்தவரும் ஆகிய பெருமான், உமை அன்னையுடன் இணைந்து பகற் போதினில் அமரும் இடம் திருத்துருத்தி எனப்படும் தலமாகும் அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வளம் கிளர் மதியமும் பொன் மலர்க் கொன்றையும் வாள் அரவும்

களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல் கபாலியார் தாம்

துளங்கு நூல் மார்பினர் அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்

விளங்கு நீர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே

பேரெயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.16.1) அப்பர் பிரான், பெருமானை கறை கொள் கண்டம் உடைய கபாலியார் என்று குறிப்பிடுகின்றார். துறை=கரை; கல்வி என்பது பெருங்கடல். கல்வியை முற்றும் கற்று, அந்த பெருங்கடலைக் கடந்து கரையை அடைதல் என்பது எவர்க்கும் இயலாத காரியம், ஆனால் பெருமானின் குணங்களில் ஒன்று முற்றும் உணர்தல் என்பதால், அவர் முற்றும் கற்று கரையை அடைந்தவராக கருதப் படுகின்றார். மறைகளை ஓதும் பெருமான், மறைகளை அருளியவராக திகழ்வதால், உலகுக்கு வாழ்க்கை நெறியினை வகுத்து உரைத்தவராக உள்ளார். தாங்கள் செய்த மாயத்தால், துள்ளி விளையாடும் மான் கன்றுக்கு கொலை வெறி ஊட்டிய தாருகவனத்து முனிவர்களின் மாயையை அகற்றி, தன்னை எதிர்த்து வந்த அந்த மான் கன்றினைத் தனது கையில் ஏந்தியவன் பெருமான். தனது கழுத்தின் நிறத்தை மாற்றிய ஆலகால விடத்தை, உலகத்தின் நன்மை கருதி, அருந்திய பெருமான் அந்த விடத்தின் தன்மையை தனது விருப்பம் போன்று மாற்றியவர் சிவபெருமான்; முற்றும் உணர்ந்தவராக இருப்பதால் கல்விக் கடலின் கரையினைக் கண்டவராக திகழ்கின்றார். தூய்மையான வெண்ணீற்றை தனது திருமேனியில் பூசியதன் மூலம், தான் ஒருவனே நிலையானவன் என்றும், மற்ற அனைத்துப் பொருட்களும் உலகத்தில் உள்ள உடல்களும் நிலையற்றவை என்பதையும் உணர்த்துபவராக உள்ளார். இவ்வாறு பல விதமான வல்லமைகள் கொண்டுள்ள பெருமான், மிகுந்த இரக்க குணம் உடையவராக, ஒற்றைப் பிறையுடன் தேய்ந்து அழிந்த நிலையில் தன்னிடம் சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டு சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்தவராக உள்ளார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான் பேரெயில் தலத்தின் தலைவராக விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்

கறைகொள் கண்டம் உடைய கபாலியார்

துறையும் போகுவர் தூய வெண்ணீற்றினர்

பிறையும் சூடுவர் பேரெயில் ஆளரே

வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.17.2) அப்பர் பிரான், பெருமானை, கபாலியார் என்று அழைக்கின்றார். முந்தைய நாளில் தான் கண்ட வெண்ணி தலத்து இறைவனைப் பற்றி நினைத்ததை இந்த பதிகத்தின் முதல் பாடலில் வெளிப்படுத்திய அப்பர் பிரான், இறைவனைப் பற்றிய நினைவுகள் தனது நாவினில் அமுதமாக ஊறி இனித்ததாக இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஏற்கனவே தான் கண்டு களித்த பெருமானின் திருக்கோலத்தை, தனது மனதினில் அசைபோட்டு, மகிழ்ந்த அப்பர் பிரான், அந்த இனிய நினைவுகளை ஒரு தனி பதிகமாக அருளினார் போலும். அண்ணித்து=இனித்து; கண்ணி=மாலை; இந்த பாடல், மனம் ஒன்றி இறைவனை தியானிப்பதால் அவனது நினைவுகள் தேன் போன்று இனிக்கும் சிவானந்தம் நமது சிந்தனையில் சுரக்கும் என்று உயிர்களுக்கு உணர்த்தும் வண்ணம் அருளப்பட்ட பாடல் என்று கருதப்படுகின்றது. மிகவும் தொன்மை வாய்ந்த நகராகிய வெண்ணி தலத்தில் உறையும் பெருமான், வெண்மை நிறம் உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவர்: தனது சடையில் கொன்றை மாலையினையும் சூடியுள்ள பெருமான், தனது கையில் பிரம கபாலத்தை ஏந்தியவராக காட்சி அளிக்கின்றார். இவ்வாறு காட்சி அளிக்கும் பெருமானை, நினைந்து இருந்த அடியேனுக்கு, அவரது நினைவுகள் எனது நாவினில் அமுது ஊறி தித்திப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெண்ணித் தொல்நகர் மேய வெண் திங்களார்

கண்ணித் தொத்த சடையர் கபாலியார்

எண்ணித் தம்மை நினைந்து இருந்தேனுக்கு

அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.24.5) அப்பர் பிரான் பெருமானை கபாலி என்று அழைக்கின்றார். வாளரவு=ஒளி பொருந்திய உடலினை உடைய பாம்பு; பெற்றம்= எருது; உமையம்மையுடன் பெருமான் இடபத்தின் மேல் காட்சி அளிப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பெரிய புராணத்தில், பல நாயன்மார்கள் சரித்திரத்தில், பெருமான் இடப வாகனராக, அம்மையுடன் அடியார்களுக்கு காட்சி கொடுத்த அருட்செயல்களை நாம் அறியலாம். சிவமும் சக்தியும் எப்போதும் இணைந்தே இருப்பார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமான் இவ்வாறு காட்சி கொடுக்கின்றாரோ என்று தோன்றுகின்றது. புற்றினில் மறைந்து வாழ்வதும் ஒளி திகழும் உடலை உடையதும் ஆகிய பாம்பினை தனது இடுப்பில் கட்டிக் கொண்டு தனது விருப்பம் போன்று ஆட்டுபவன் சிவபெருமான். அவன் உமையம்மையுடன் எருதின் மீது மிகுந்த விருப்பத்துடன் ஏறித் தோன்றும் பெருமையை உடையவன்; தனது கையினில் கபாலம் ஏந்திய இறைவன் உலகத்தவரும் வானவர்களும் தொழும் வண்ணம் ஒற்றியூரில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புற்றில் வாளரவு ஆட்டி உமையொடு

பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான்

மற்றையாரொடு வானவரும் தொழ

ஒற்றியூர் உறைவான் ஓரு கபாலியே

பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.25.7) அப்பர் பிரான், பெருமானை கபாலி என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அகத்துறை வழி அமைந்த பாடல். தலைவியின் கூற்றாக அமைந்துள்ளது. எட்டி நோக்கி=தம்மை எவரும் காணாதவாறு எட்டிப் பார்த்து; கட்டி விட்ட=கட்டி முடித்த; சூழ்ச்சியாளர் என்று இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் தாய் உரைத்த போதிலும், தன்னிடம் சொல்லாமலே வேறு ஒரு ஊருக்கு சென்ற போதிலும், பெருமான் தன்னிடம் காதல் கொண்டுள்ளதாகவே தலைவி நம்புகின்றாள். எனவே தான், மற்றொருவர் அறியாத வண்ணம், பெருமான் தனது இல்லத்தின் உள்ளே தான் இருப்பதை அறிந்து கொள்ளும் வண்ணம் எட்டி பார்த்ததாக கற்பனை செய்கின்றாள். கட்டி முடித்த சடையை உடையவரும், கபாலத்தை கையில் ஏந்தியவரும் ஆகிய பெருமான், மற்றொருவர் அறியா வண்ணம் எனது இல்லத்தில் நான் இருப்பதை அறிந்து கொள்வதற்காக எட்டி பார்த்த பின்னர். எனது இல்லத்தில் புகுகின்றார். இவரது விருப்பம் யாது என்பதை தன்னால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் தான், நெற்றியில் பட்டம் அணிந்தவராக பாசூர் அடிகளாக திகழ்கின்றார் என்றும் அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.

கட்டி விட்ட சடையர் கபாலியர்

எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவர்

இட்டமா அறியேன் இவர் செய்வன

பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே

இந்த பதிகத்தின் அடுத்த பாடலிலும் (5.25.8) அப்பர் பிரான், பெருமானை காதில் வெண்குழை வைத்த கபாலியார் என்று அழைக்கின்றார். நிறை=கற்பு: பெருமான் மீது காதல் கொண்டு, பெருமானையே எப்போதும் சிந்தித்தவளாக தான் இருந்தமையால், தான் கற்பு நிலை தவறியதாக தலைவி நினைப்பதை உணர்த்தும் பாடல். எனவே தனது கற்பு நிலை கெடுவதற்கு காரணமாக இருந்த பெருமானிடம் முறையிட்டு தனது பரிதாபம் கருதியாவது, தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இறைஞ்சும் பாடல். இதுவும் அகத்துறை வகையைச் சார்ந்தது. வேறு எந்த தெய்வத்தையும் நினைக்காமல் தான் இருக்கும் நிலையை, ஆன்மா இறைவனுக்கு உணர்த்தி அவரது அருளை வேண்டுவதாக உட்கருத்தினைக் கொண்ட பாடல். பாதி வெண்பிறை என்று குறிப்பிடுவதன் மூலம் மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. எனவே தான், மணமான பெருமான் தனது கற்பினை கவர்ந்தது முறையா என்று தலைவி வினவுகின்றாள். ஆன்மாக்களைத் தன் பால் ஈர்த்து, சிவானந்தத் தேனைப் பருகச் செய்து, உலகப் பற்றினை ஒழிக்கச் செய்யும் ஈசனின் அருட்செய்கையை குறிப்பிடும் பாடல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அறியாதவர் போன்று எனது கற்பினைக் கவர்ந்த பெருமான், மாதொரு பாகனாக உள்ளவரும் பாசூர் அடிகளாக திகழ்பவரும் ஆகிய பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர்

காதில் வெண்குழை வைத்த கபாலியார்

நீதி ஒன்று அறியார் நிறை கொண்டனர்

பாதி வெண்பிறைப் பாசூர் அடிகளே

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.63.1) அப்பர் பிரான், பெருமானை, கபாலி என்று அழைக்கின்றார். தரங்கம்=அலைகள்;மற்ற உயிர்கள் மீது இரக்கம் கொள்ளாமல் இருந்த திரிபுரத்து அரக்கர்களை கல்மனவர் என்ற பொருள்பட, வன்மனத்தார் என்று அழைக்கின்றார். திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளே, அவர்களுக்கு பெரிய காவலாகத் திகழ்ந்தமை, முப்புரம் காவல் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. பெருமான் தனது கையில் வைத்திருக்கும் மண்டையோடு மிகவும் அழகாக விளங்குகின்றது என்று கூறுகின்றார். பெருமானைச் சென்றடையும் எந்த பொருளும், தமது தன்மையை இழந்து, அழகுடன் பொலிகின்றது என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்

புரம் காவல் அழியப் பொடி ஆக்கினான்

தரங்காடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக்

குரங்காடு துறைக் கோலக் கபாலியே

கோழம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.64.2) அப்பர் பிரான் கயிலை நன்மலை ஆளும் கபாலி என்று குறிப்பிடுகின்றார். இந்திரனிடம் சாபம் பெற்ற சந்தன் என்ற கந்தர்வன் குயிலாக இங்கே வாழ்ந்த போது இறைவனைத் தொழுது வணங்கியதால் சாபம் நீங்கப் பெற்றான் என்பது தல வரலாறு. அந்த வரலாற்றினை நினைவூட்டும் வண்ணம், அப்பர் பிரான் குயில் தொடர்ந்து பாடி வழிபட்ட இடம் என்பதை உணர்த்தும் வகையில் குயில் பயில் கோழம்பம் என்று கூறுகின்றார். குயில் வழிபட்டதை நினைவூட்டும் வகையில் இறைவன் கோகிலேஸ்வரர் என்று அழைக்கப் படுகின்றார். மயில் போன்று அழகான தோற்றம் கொண்ட இறைவி என்று குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, தலத்தில் வழிபட்டு உய்வினை அடைந்த குயில் நினைவுக்கு வந்தது போலும். அனைத்து உயிர்களின் உள்ளே இறைவன் கலந்து உறைகின்றான் என்பதை உணர்த்தும் வகையில் அட்ட மூர்த்தங்களின் வரிசையில் ஆன்மா கூறப்படுகின்றது. அவ்வாறு அனைத்து ஆன்மாவிலும் உறைபவனாகிய இறைவனை உயிர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். புகழ் வாய்ந்த கயிலை மலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டு ஆள்பவனும், கையில் பிரம கபாலத்தை ஏந்தி உலகெங்கும் பலிக்குத் திரிபவனும் ஆகிய இறைவன், மயிலினைப் போன்று சாயலை உடைய உமை அம்மையின் மணவாளன் ஆவார். குயில்கள் தொடர்ந்து இன்னிசை இசைக்கும் சோலைகள் கொண்ட கோழம்பம் தலத்தில் பொருந்தி உறையும் பெருமானை, அனைத்து ஆன்மாக்களிலும் கலந்து உயிராக இருப்பவனை நினைத்து எனது உள்ளம் உருகுகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

கயிலை நன்மலை ஆளும் கபாலியை

மயிலியல் மலை மாதின் மணாளனைக்

குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என்

உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.80.2) அப்பர் பிரான் கபாலியார் என்று பெருமானை அழைக்கின்றார். காரணத்தர்=உலகமும் அனைத்து உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு நிமித்த காரணனாக இருப்பவர்; கருத்தர்=அனைத்து பொருட்களுக்கும் உயிர்களுக்கும் கருவாக இருப்பவர்; வாரணம்=யானை; ஆரணம்=வேதங்கள்; நம்பி=சிறந்த ஆண்மகன்; உலகமும் அனைத்து உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு நிமித்த காரணனாக இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் கருவாக இருப்பவனும், தன்னைத் தாக்க வந்த யானையின் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்ட மணாளனும், வேதங்களின் பொருளாக விளங்குபவனும், அன்பில் ஆலந்துறை தலத்தில் உறைபவனும், நாராயணன் காண்பதற்கு அரியவனாக திகழ்ந்தவனும் ஆகிய பெருமான் ஒப்பற்ற ஆண்மகனாவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காரணத்தர் கருத்தர் கபாலியார்

வாரணத்து உரி போர்த்த மணாளனார்

ஆரணப் பொருள் அன்பில் ஆலந்துறை

நாரணற்கு அரியான் ஒரு நம்பியே

இலிங்க புராண குறுந்தொகை என்று அழைக்கப்படும் பொது பதிகத்தின் பாடலில் (5.95.3) அப்பர் பிரான் பெருமானை கபாலி என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் பிரமனும் திருமாலும், தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் தன்மையை உணர முடியாமல், அந்த பிழம்பின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து நின்ற செயலுக்கு உரிய காரணங்களை அப்பர் பிரான் கூறுகின்றார். ஆப்பி=பசுஞ்சாணம்; ஆப்பிநீர்=சாணம் கலந்த நீர்; மண் தரையினை சாணமும் நீரும் கொண்டு மெழுக்கிடும் செயல், தரையினை சுத்தம் செய்வதுடன் தரையினில் உள்ள இடுக்குகளை நிரப்பி தரையில் விரிசல் ஏற்பட்டு தரை பாழாகாத வண்ணம் காக்கும். இடுக்குகளும் விரிசலும் இருந்தால். அதன் வழியே பல ஜீவராசிகள் சென்று புகுந்து, திருக்கோயிலுக்கு வரும் அடியார்களுக்கு இடர் விளைவிக்கக் கூடும் என்பதால் கோயில் தரைகள் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம். ஓப்பி=ஓம்பி என்பதன் திரிபு, எதுகை நோக்கி அமைந்தது; பாதுகாத்து என்ற பொருளில் வருகின்றது. காப்பு என்ற சொல்லுக்கு திருநீறு என்று பொருள் கொண்டு, திருநீற்றினைத் தனது மேனியில் பூசியவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இருவர் என்று திருமாலும் பிரமனும் குறிப்பிடப் படுகின்றனர். பிரமன் திருமால் ஆகிய இருவரும், திருக்கோயிலுக்கு சென்று திருக்கோயிலை சுத்தம் செய்யும் பணியிலும், திருக்கோயிலின் தரையினை சாணம் கலந்த நீரினால் மெழுக்கிடும் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் பூக்கள் நிறைந்த கூடைகளை சுமந்து கொண்டு திருக்கோயிலுக்கு சென்றாரில்லை; எனினும், அவர்கள் இருவரும் உலகினையும் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பதைத் தனது தொழிலாக மேற்கொண்டவனும், பிரமனின் மண்டையோட்டினைத் தனது கையினில் ஏந்தி திரிபவனும் ஆகிய இறைவனின் திருவடியையும் முடியையும் கண்டு, அவனது உருவத்தைத் தங்களது மனதினில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சி வீண் முயற்சியாக மாறியது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆப்பி நீரோடு அலகு கைக் கொண்டிலர்

பூப் பெய் கூடை புனைந்து சுமந்திலர்

காப்புக் கொள்ளி கபாலி தன் வேடத்தை

ஓப்பிக் காணல் உற்றார் அங்கு இருவரே

தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் கடைப் பாடலில் (6.2) அப்பர் பிரான் கபாலியார் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். பாரிடங்கள்=பூத கணங்கள்; பெருமான் இடையில் தான் உடுத்தியுள்ள பட்டாடையின் மேல் கச்சாக பாம்பினை இறுகக் கட்டிக் கொண்டும், பூத கணங்கள் சூழவும், தீயினைக் கையில் ஏந்தியவாறும், நடனக் கலையில் வல்லவராக நடனம் செய்கின்றார் என்று பாடலின் முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், அந்த பெருமானை தில்லை நகர் சென்று காணுமாறு நம்மை பணிக்கின்றார். அவ்வாறு நடனம் ஆடும் பெருமானை தேடிக் கொண்டு செல்லும் நாம் அவனை அடையாளம் கண்டு கொள்வதற்காக, அவனது அடையாளங்களை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒளியுடன் விளங்கும் சூலம், மார்பினில் திகழும் வெண்ணூல், ஓதும் வேதம், கையில் வீணை மற்றும் கட்டங்கம் என்று குறிப்பிட்டு இறுதியில் வேறு எவருக்கும் இல்லாத நீலக்கறை படிந்த கழுத்து என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். விட்டு=ஒளிவீசும்; சிட்டர்=மேலானவர், நடனக் கலையில் வல்லவர் என்று பொருள் கொள்ளவேண்டும். அருவுருவமாக, இலிங்க வடிவத்தில் அனைத்து தலங்களிலும் காட்சி அளிக்கும் பெருமானின் அடையாளங்கள் எதற்காக திருமுறை பாடல்களில் குறிப்பிடப் படுகின்றன என்ற ஐயம் நமக்கு எழலாம். இந்த அடையாளங்கள், பெருமானின் கருணை, வீரச்செயல்கள் மற்றும் அவரது தன்மை ஆகியவற்றை நமக்கு உணர்த்துவதால்,அந்த அடையாளங்களை நமது மனக் கண்ணினால் கண்டு, பெருமானின் தன்மையை நாம் சரிவர புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நால்வர் பெருமானர்களின் விருப்பம்.

பட்டுடுத்து தோல் போர்த்துப் பாம்பு ஒன்று ஆர்த்துப் பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம்

சிட்டராய் தீ ஏந்திச் செல்வார் தம்மைத் தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இந்நாள்

விட்டு இலங்கு சூலமே வெண்ணூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே

கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.6.7) அப்பர் பிரான் பெருமானை கபாலி என்று அழைக்கின்றார். கலி=நீராடும் மக்கள் செய்யும் ஆரவாரம்: அரை மாத்திரை=நுண்ணிய பொருள். அரை மாத்திரை என்பதற்கு பிரணவ மந்திரத்தின் ஒரு பகுதி என்றும் கூறுவார்கள். பிரணவ மந்திரத்தின் இறுதி எழுத்தாகிய ம் எனப்படும் மெய்யெழுத்து பெருமானின் திருவடிகளை குறிப்பதாக கூறுவார்கள். பலராலும் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்கள் உடையவை திருவடிகள்: பலராலும் புகழ்ந்து பாடப் பட்டாலும், பாடல்களில் உள்ள சொற்களால் முழுமையாக உணரப் படாத திருவடிகள் அவை: மலைமகளாகிய பார்வதி தேவி, மனம் வருந்தாத வண்ணம், என்றும் பிரியாதவாறு அம்மையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டவனின் திருவடிகள் அவை: வானவர்கள் வணங்கி வாழ்த்தும் திருவடிகள் அவை: மிகவும் நுண்ணிய பொருட்களிலும் அடங்கி நிற்கும் திருவடிகள்: பரப்பு எத்தகையது என்பதை எவரும் அளக்க இயலாதவாறு, பரந்து நிற்கும் திருவடிகள்; இத்தகைய பெருமையினை உடைய திருவடிகள், நிறைந்த மாமரங்களைக் கொண்ட கரையினை உடைய கெடில நதியில் ஆரவாரம் செய்தவாறு குளிக்கும் மக்கள் வசிக்கும் திருவதிகை நகரின் தலைவனாகிய பெருமானது திருவடிகள். நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த வீரட்டானத்தில் உறையும் சிவபெருமான், பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தியவராக காபாலி என்ற பெயருடன் விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப் படாத அடி

வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும் அடி

அரை மாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி

கரை மாங் கலிக் கெடில நாடன் அடி கமழ் வீரட்டானக் கபாலி அடி

திருவதிகை வீர்ட்டானம் தலத்தின் மீது அருளிய காப்புத் திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.7.7) அப்பர் பிரான், பெருமானை காபாலியார் என்று அழைக்கின்றார். காப்பு என்றால் இடம் என்று பொருள். இந்த பதிகத்தின் பாடல்களில், பெருமான் உறைகின்ற பல தலங்களை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அவற்றில் சில வைப்புத் தலங்களும் அடங்குவன. கரபுரம் மற்றும் அரண நல்லூர் என்பன வைப்புத் தலங்கள்;

தெண்ணீர் புனற் கெடில வீரட்டமும் சீர்காழி வல்லம் திருவேட்டியும்

உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரண நல்லூர்

விண்ணார் விடையார் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க

கண்ணார் நுதலார் கரபுரமும் காபாலியாரவர் தம் காப்புக்களே

காளத்தி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பிரான், பிச்சைப் பெருமானாக பெருமான் தரித்துள்ள வேடம் மிகவும் பொருத்தமாக உள்ளது என்பதால் அவனை, மாச்சதுரன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் ஆறாவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பத்தாவது பாடல்களில் பெருமானை காபாலி என்றே அழைக்கின்றார். இந்த பதிகத்தின் ஆறாவது பாடலை நாம் இங்கே சிந்திப்போம். பூரித்தான்=நிறைவித்தான்; கல்லாடை=துறவிகள் அணியும் காவியுடை; புலன் ஐந்தும் போக்கினான்=ஐந்து புலன்களின் சேட்டைகளை அடக்கி ஆள்பவன்; நல்ல=பெரிய; நளிர்=குளிர்ந்த; உடலின் வெப்பம் ஒரே சீராக இருக்க நாம் சுவாசிக்கும் காற்றும் நமது உடலில் இருக்கும் இரத்தமும் உதவுகின்றன. பிரமனின் உடலிருந்து பிரிக்கப்பட்ட மண்டையோடு, வெப்பத்துடன் இல்லாமை குறித்து குளிர்ந்த மண்டையோடு என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவனும், கச்சி ஏகம்பம் திருத்தலத்தில் பொருந்தி உறைபவனும், தேவர்கள் தன்னை வழிபடும் வண்ணம், பொல்லாத ஐந்து புலன்களின் சேட்டைகளை அடக்கி ஆண்டு இயல்பாகவே பாசங்களால் பாதிக்கப் படாமல் இருப்பவனும், முறுக்குண்ட சடையினில் கங்கை நதி நிறைந்து நிற்குமாறு அடக்கியவனும், பெரிய காளையைத் தனது வாகனமாகக் கொண்டு அதன் மீது ஏறுபவனும், பாம்புகளை அணிகலனாகத் தனது உடலின் பல இடங்களிலும் அணிந்தவனும், பிரமனின் உடலிலிருந்து பிரிக்கப்பட்டதால் குளிர்ந்து காணப்படும் மண்டையோட்டினை தனது கையில் ஏந்தி காபாலியாக திகழ்பவனும், முற்றும் துறந்த நிலையிலும் தங்களது நாணத்தினை காக்கும் பொருட்டு முனிவர்கள் அணியும் காவியாடையை அணிந்தவனும், திருக்காளத்தி தலத்தில் காணப்படும் காளத்தியானும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்தப்

பொல்லாப் புலன் ஐந்தும் போக்கினான் காண் புரிசடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண்

நல்ல விடை மேல் கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரமொன்று ஏந்தியோர் நாணா அற்ற

கல்லாடை மேற்கொண்ட காபாலி காண் காளத்தியான் காண் அவன் என் கண்ணுளானே

காளத்தி தலத்தின் மீது அருளிய இந்த பதிகத்தின் ஏழாவது பாடலை நாம் இப்போது சிந்திக்கலாம். கரி உருவு=கரி போன்று கறுத்த நிறம்; முதலடியில் வரும் கண்டம் என்ற சொல் கழுத்து என்றும் வரையறுக்கப் பட்டவன் என்று இரண்டு பொருள்களில் வருமாறு கையாளப் பட்டுள்ளது. கரி=ஆண் யானை; கரி போன்று கருமையான நிறத்தில் அமைந்துள்ள கழுத்தினோடு நீலகண்டனாக அடியேனுக்கு காட்சி அளிப்பவனும், அடியார்களின் பக்குவ நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப வேறுவேறு உருவங்களில் காட்சி அளித்தவனாக நூல்களிலும் பாடல்களிலும் வரையறுக்கப் படுபவனும், வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலையை அணிந்தவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு மற்றும் பவளம் ஆகிய பொருட்களின் நிறத்தினை ஒத்த திருமேனியை உடையவனும், கச்சி ஏகம்பம் தலத்தில் பொருந்தி உறைபவனும், எட்டு திசைகளும் தானேயாக இருக்கும் பண்பினை உடையவனும், முப்பரங்களையும் தீயிட்டு கொளுத்தியவனும், நெருப்பின் இடையே நின்று கூத்தாடுபவனும், எனது உள்ளத்தில் இருந்த கொடிய எண்ணங்களை அழித்தவனும், தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்று அதன் தோலை போர்வையாக மகிழ்ந்து போர்த்தவனும், கையினில் மண்டையோடு ஏந்தி காபாலியாக பல இடங்களுக்கும் சென்று பிச்சை ஏற்பவனும், திருக்காளத்தி தலத்தில் காணப்படும் காளத்தியான் என்ற பெயரில் அழைக்கப் படுபவனும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்,

கரியுருவு கண்டத்து எம் கண்ணுளான் காண் கண்டன் காண் வண்டுண்ட கொன்றையான் காண்

எரி பவள வண்ணன் காண் ஏகம்பன் காண் எண்டிசையும் தானாய குணத்தினான் காண்

திரிபுரங்கள் தீயிட்ட தீயாடி காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண்

கரியுரிவை போர்த்து உகந்த காபாலி காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே

இதே பதிகத்தின் எட்டாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சில்பலி=சிறிய அளவிலான பிச்சை; ஒரே இடத்தில் அதிகமான அளவினில் பிச்சை ஏற்றால் அடுத்த பல இல்லங்களுக்குச் செல்ல முடியாது என்பதால், பலரையும் உய்விக்கும் எண்ணத்துடன், சிறிய அளவில் பலி ஏற்கின்றார் போலும். மல்லாடு=வலிமை பொருந்திய; ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் பல இல்லங்களுக்குச் செல்லும் பெருமான், ஒவ்வொரு இல்லத்திலும் சிறிய அளவிலான பிச்சையை ஏற்கின்றான். தேவர்களால் தொழப்பட்டு வேண்டி வணங்கப் படுபவனும், கையினில் வில்லினை ஏந்தி கானகத்தில் அர்ஜுனனைக் கொல்ல வந்த பன்றியின் பின்னே ஓடியவனும், வெண்மை நிறைந்த பூணூலை தனது அகலமான மார்பில் அணிந்தவனும், வலிமை மிகுந்ததும் திரண்டு காணப்படுவதும் ஆகிய தோளின் மேல் மழுவாட் படையை தாங்குபவனும், மலைமகளாகிய பார்வதி தேவியின் மணாளனாக திகழ்பவனும், பண்டைய நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து தென்முகக் கடவுளாக நால்வர்க்கு அறம் உரைத்தவனும் திருக்காளத்தி தலத்தில் காணப்படும் காளத்தியானும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.

இல்லாடி சில்பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்

வில்லாடி வேடனாய் ஓடினான் காண் வெண்ணூலும் சேர்ந்த அகலத்தான் காண்

மல்லாடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள் தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்னாள்

கல்லாலின் கீழ் இருந்த காபாலி காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே

இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும் அப்பர் பிரான் பெருமானை காபாலி என்று அழைக்கின்றார். குறையுடையார்=குறைந்து இறைவனைத் தொழ வந்த அடியார்கள்; குற்றேவல்=அடிமைத் தொண்டு; மறையுடைய வானோர்=வேதங்களில் புகழப்படும் வானவர்கள்; இறையவன்=தலைவன்; குறையுடையார் என்பதற்கு பல குறைகள் உடைய உயிர்கள் என்று பொருள் கொண்டு, அந்த குறைகளை பொருட்படுத்தாமல் அருள் புரியும் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருப்பவனும், ஏழ்கடலாகவும் ஏழு மலைகளாகவும் அவற்றால் சூழப்பட்ட ஏழ் உலகங்களாக உள்ளவனும், அடக்கத்துடன் தலை தாழ்த்தி தன்னை வணங்கும் அடியார்களின் அடிமைத் தொண்டினை ஏற்றுக் கொள்பவனும், குடந்தை நகரில் உள்ள கீழ்க்கோட்டம் தலத்தில் பொருந்தி உறைபவனும், வேதங்களில் புகழ்ந்து பேசப்படும் தேவர்களின் தலைவனாக விளங்குபவனும், திருமறைக்காடு தலத்தில் உறைபவனும், நீலமணி போன்ற கறையினை உடைய கழுத்தினை உடையவனும், காபாலியாக பல இடங்களில் திரிபவனும், திருக்காளத்தி தலத்தில் காணப்படும் காளத்தியானும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்று அப்பர் பிரான் பெருமையுடன் சொல்வதாக அமைந்த பாடல்.

இறையவன் காண் ஏழுலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்

குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்

மறையுடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டுறை மணிகண்டன் காண்

கறையுடைய கண்டத்து எம் காபாலி காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.9.1) அப்பர் பிரான், பெருமானை காபாலியார் என்று அழைக்கின்றார், வண்ணங்கள்=தாளத்தோடு பொருந்தப் பாடும் இசைகள்; வலிசெய்து=வலிமை காட்டி, இங்கே ஆடற்கலையின் தனக்கிருந்த திறமை காட்டி என்று கொள்ள வேண்டும். வளை கவர்ந்தார்=காதலன் சிவபெருமான் வளைகளைக் கவர்ந்தார்;. காதலன் பால் கொண்ட அன்பால், அவன் பிரிவு வெகுவாக தலைவியை பாதிக்க, அவளது உடல் மிகவும் இளைத்து விடுகின்றது. உடல் இளைத்த காரணத்தால், கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் நில்லாமல் கழன்று விடுகின்றன. இந்த நிலைக்குத், தன்னை புறக்கணித்த காதலனே காரணம் என்பதால், அவனை வளையல் கவர்ந்த கள்வனாக கருதுவது சங்க இலக்கியங்களின் மரபு. இதே மரபு தேவாரப் பாடல்களிலும் பின்பற்றப் பட்டுள்ளது. இந்த தலத்து இறைவனின் திருநாமம் அழகிய நாதர். இதனை அழகியர் என்று சற்றே மாற்றி இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் குறிக்கின்றார். தாளத்தோடு பொருந்தும் பாடல்களை பாடிக்கொண்டு, நடனக்கலையில் தனக்கிருந்த திறமையினைக் காட்டிய அழகர் என்பதால், நான் அவர் பால் காதல் கொண்டேன்; ஆனால் அவர் எனது காதலை பொருட்படுத்தாமல் என்னை விட்டு அகன்று சென்றபடியால், நான் வருத்தமடைந்து, உடல் இளைத்தேன்; அதனால் எனது வளையல்கள் எனது கையை விட்டு கழன்று விட்டன. இவ்வாறு எனது வளையல்களைக் கவர்ந்த காபாலியார், தனது பார்வையால் எனது இதயத்தைத் துளைத்து, அங்கே ஆசைக் கனலை மூட்டி விட்டார்; எனது மனம் அவர் பால் நெகிழும் விதமாக ஆசையான வார்த்தைகளையும் பேசினார். ஆனால் இவ்விடத்தில் தங்காமல், விரைந்து செல்லும் காளையின் மீதேறி சென்றுவிட்டார்; நறுமணம் வீசும் திருநீற்றினை உடலில் பூசிக்கொண்டு, தோலாடைகள் அணிந்து, மார்பில் பூணூல் அணிந்தவாறு வந்த, ஆமாத்தூர் அண்ணலார் போகின்றார், நீர் அனைவரும் வந்து காணீர். அவர் மிகவும் அழகியரே என்று அப்பர் நாயகி கூறுவது போல் அமைந்த அகத்துறைப் பாடல்.

வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மைக்

கண் அம்பால் நின்று எய்து கனலப் பேசிக் கடியதோர் விடையேறிக் காபாலியார்

சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித் தோலுடுத்து நூல் பூண்டு தோன்றத் தோன்ற

அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலிலும் (6.9.3) அப்பர் பிரான், பெருமானை, காபாலியார் என்று அழைக்கின்றார். கட்டங்கம்=மழு; இட்டங்கள்=விருப்பத்தை ஏற்படுத்தும் மொழிகள்; பட்டிமை= நெறியற்ற சொற்கள்; படிறு=வஞ்சனை; பரிசு=தன்மை; நிறை=அடக்கமான குணம்; பெண்களுக்கு அழகு அவர்களது அடக்கமான குணம். சிவபெருமானைக் காணும் வரை, இந்தப் பெண்மணியும் அவ்வாறே, எந்த ஆடவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல், இருந்து வந்தாள். ஆனால் சிவபெருமானைக் கண்ட பின்னர், அவரது அழகினில் தனது மனதினைப் பறிகொடுத்த இந்த அப்பர் நாயகி, தனது அடக்க குணத்தைக் கைவிட்டு, சிவபெருமானை ஏறிட்டுப் பார்த்தாக அவளே சொல்கின்றாள். கட்டங்கம் எனப்படும் மழுப்படையைக் கையில் ஏந்தி, விரைந்து செல்லும் இடபத்தின் மேல் ஏறிக்கொண்டு வந்த காபாலியார், எனது இல்லம் புகுந்தார்; அவ்வாறு புகுந்த அவர், நான் அளித்த உணவினை ஏற்றுக் கொள்ளாது இருந்தார்; ஆனால் அவர் எனது வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லாமல், எனக்கு அவர் பேரில் விருப்பம் ஊட்டும் சொற்களைப் பேசியவராக இருந்தார். இவ்வாறு நெறியற்ற சொற்களையும், வஞ்சனையான சொற்களையும் பேசிய அவர் நின்ற தோரணை மிகவும் அழகாக, அவரை பார்க்கும் பெண்கள் தங்கள் அடக்க குணத்தைக் கைவிட்டு, அவர் மீது காதல் கொள்ளும்படிச் செய்வதாக இருந்தது. நான் அவருக்கு அளித்த உணவுகளைத் தொடாமலே இருந்த அவர், தனது மனக்கருத்து என்ன என்பதையும் சொல்லாதவராக இருந்த, ஆமாத்தூர் அழகியர் மிகவும் அழகியரே என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.

கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்திக் கடிய விடையேறிக் காபாலியார்

இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இடக் கொள்ளார் போவார் அல்லர்

பட்டிமையும் படிறுமே பேசா நின்றார் பார்ப்பாரைப் பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம்

அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.23.2) அப்பர் பிரான், பெருமானை காபாலி என்று குறிப்பிடுகின்றார். கிளரும்=பொருந்தி விளங்கும்; வலவன்=வல்லவன் என்ற சொல் இடைக் குறைந்து வலவன் என்று மாறியது. வை=கூர்மை; மெய்யடியார்களின் உள்ளத்தில் சிவஞானம் கிளைத்து எழுவதற்கு காரணமாக இருப்பதால் பெருமானை வித்து என்று கூறுகின்றார். விதை முளைத்து வளர்ந்து மரமாக தழைத்து, பூ காய் கனி ஆகியவற்றை நமக்கு அளிப்பது போன்று, அடியார்களின் மனதினில் வித்தாக உறையும் பெருமான், வித்திலிருந்து ஞானம் முளைத்து வெளிப்பட்டு விரிவடைந்து, உயிருக்கு பல விதங்களிலும் நன்மை அளித்து இறுதியில் முக்தி நிலையை பெறுவதற்கு உதவுகின்றார் என்று பொருள் கொள்ள வேண்டும்.தனது கையில் பொருந்தியிருக்கும் வீணையினை வாசிப்பதில் மிகவும் வல்லவனாக விளங்குபவனும், பிரமனின் கபாலத்தை கையில் ஏந்தியவனாக பல இடங்களுக்கு பலியேற்கச் செல்பவனும், ஒளி விட்டு பிரகாசிக்கும் திருமேனியுடன் ஞான விளக்காக விளங்குபவனும், மெய்யடியார்கள் உள்ளத்தில் அவர்களின் உள்ளத்தில் கிளர்ந்தெழும் சிவஞானத்திற்கு வித்தாக இருப்பவனும், படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது விருப்பம் போல் அசைப்பவனும், உயர்ந்தவர்களாக கருதப்படும் அனைவருக்கும் உயர்ந்தவனாக இருப்பவனும், பாசூர் திருத்தலத்தில் உறைபவனும், கூர்மையான வாட்படையை உடையவனும் ஆகிய இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார். என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி

மெய் கிளரும் ஞான விளக்குக் கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய்

பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய்

வை கிளரும் கூர்வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.24.6) அப்பர் பிரான், பெருமானை காபாலி என்று அழைக்கின்றார். குறுங்கண்ணி=குறுகிய மாலை; பிறை என்ற சொல்லினை குறுங்கண்ணி என்ற சொல்லுடன் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும். தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து மிகவும் குறுகிய நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்டு அபயம் அளித்த நிகழ்ச்சி இங்கே அப்பர் பிரானால் குறிப்பிடப் படுகின்றது. இறை=முன்கை; செம்மையான்=சரி பாதியாக உடையவன்; இயற்கையாகவே நறுமணம் வாய்ந்த கூந்தலை உடைய அம்பிகையின் கூந்தலை வண்டுகள் மொய்ப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார், பல தலங்களில் வீற்றிருக்கும் அம்பிகையின் திருநாமம் வண்டார் குழலி என்பது நாம் இங்கே நினைவு கூரத் தக்கது. இந்த பாடலில் இருநிலத்தின் இயல்பு ஆனான் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு மணிவாசகர் அருளிய திருவண்டப்பகுதி பாடல் வரிகளை நினைவூட்டுகின்றது. அட்ட மூர்த்தியாக விளங்கும் பெருமான் எவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கலந்து நிற்கின்றான் என்று இந்த வரிகளில் விளக்கப் படுகின்றது. தினந்தோறும் தோன்றும் சூரியனில் ஒளியாகவும், சந்திரனில் குளிர்ச்சித் தன்மையாகவும், வலிமை பொருந்திய அக்னியில் வெப்பமாகவும், ஆகாயத்தை பஞ்ச பூதங்களில் ஒன்றாக கருதாத, அயல் மதத்தவர்களின் பொய்யுரையை மறுக்கும் வண்ணம் மற்ற நான்கு பூதங்களும் தன்னுடன் கலக்கும் தன்மையாக ஆகாயத்திலும். சிறப்பான காற்றினில் இயக்கத்தையும், நிலத்தினில் திண்மையையும் (உறுதித் தன்மையையும்) வைத்தவன் பெருமான் என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த திண்மை தன்மையையே அப்பர் பிரான், இருநிலத்தின் இயல்பு என்று இங்கே உணர்த்துகின்றார். இருநிலம்=விரிந்து பரந்த பெரிய பூமி; பிறப்பறுக்கும் காபாலி என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். காபாலியாக ஊரெங்கும் பலியேற்கத் திரிவது, அடியார்களின் பிறப்பிறப்புச் சுழற்சியினை அறுப்பதற்காக என்னும் செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. தான் கையில் கொண்டு செல்லும் பாத்திரத்தில், தங்களது மலங்களை (ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மும்மலங்களை) இடும் அடியார்களுக்கு முக்தி அளித்து அவர்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிப்பதே, இறைவன் பலியேற்பதன் நோக்கமாகும். தக்கனின் சாபத்தால் கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் தன்னிடம் வந்து சரணடைந்த சந்திரனுக்கு அபயமளித்து மாலையாக, பாம்புடன் தனது சடையில் சூடிக் கொண்டவனும். பிறப்பேதும் இல்லாதவனும், பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டதால் பெண் உருவத்துடன் ஆண் உருவத்தையும் இணைந்த உருவத்தை உடையவனும், கரிய மாணிக்கக்கல் போன்று கருமை நிறத்து கறையுடன் விளங்கும் கழுத்தினை உடையவனும், திருமேனியில் வெண்ணீறு பூசியவனும், தனது பாதங்களைப் பற்றிக் கொள்ளும் அடியார்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிப்பவனும், கபாலம் ஏந்தி ஊர் ஊராக பலியேற்கச் செல்பவனும், தனது முன்கைகளில் பெரிய வளையல்கள் அணிந்துள்ள உமையன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றவனும், பெரிய நிலப் பரப்பினை உடைய பூமியாகவும், அந்த பூமியின் தனித் தன்மையாகிய திண்மை குணமாக இருப்பவனும், சிறகுகள் உடைய அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய அம்பிகையைத் தனது உடலின் சரி பாதியில் வைத்திருப்பவனும் ஆகிய திருவாரூர் பெருமான் எனது சிந்தனையில் நிறைந்து உள்ளான் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

பிறை அரவக் குறுங்கண்ணிச் சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண்

கறை உருவ மணி மிடற்று வெண்ணீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலி காண்

இறை உருவக் கனவளையாள் இடப்பாகன் காண் இருநிலன் காண் இருநிலத்துக்கு இயல்பானான்காண்

சிறை உருவக் களி வண்டார் செம்மையான் காண் திருவாரூரன் காண் அவன் என் சிந்தையானே

கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.6) அப்பர் பிரான், பெருமானை காபாலி என்று அழைக்கின்றார். பேரவன்=பெயர்பெற்ற புகழினை உடையவன்; பாணி=தாளம்; பெண் என்பது இங்கே கங்கை நங்கையை குறிக்கின்றது. பிறையோடு என்று குறிப்பிடுவதால், சடையில் தேக்கிய கங்கை நதி என்று பொருள் கொள்ளவேண்டும். பிறைச் சந்திரனோடு கங்கை நங்கையையும் தனது சடையின் ஒரு புறத்தில் வைத்தவனும், பேர் பெற்றபுகழினை உடையவனும், பிறப்பு இல்லாதவனும், நஞ்சினைத் தேக்கியதால் நீலமணியின் நிறத்தினை கறையாக கொண்ட கழுத்தினை உடையவனும், காபாலி என்று அழைக்கப் படுபவனும், கையினில் கட்டங்கம் என்ற படைக்கலத்தை ஏந்தியவனும், தனது கையினில் கபாலம் ஏந்திய வண்ணம் பறை எனப்படும் தோற் கருவியின் இசைக்கு ஏற்ப பல பாடல்களை பாடுபவனும், தான் பாடும் பாடலுக்கு ஏற்ப தாளங்கள் இட்டு கூத்தாடுபவனும், அடியார்கள் இசைக்கும் பாடல்களையும் வேத கீதங்களையும் விருப்பமுடன் கேட்பவனும் ஆகிய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிறையோடு பெண் ஒருபால் வைத்தான் தான் காண் பேரவன் காண் பிறப்பொன்றும் இல்லாதான் காண்

கறையோடு மணி மிடற்றுக் காபாலி காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்திப்

பறையோடு பல்கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணியாக நின்று

மறையோடு மாகீதம் கேட்டான் தான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.51.7) அப்பர் பிரான், பெருமானை காபாலிய்யார் என்று அழைக்கின்றார். மேவுதல்=பொருந்தி உறைதல்: மாகாளம் வைப்புத் தலம். வடநாட்டில் உள்ள உஜ்ஜைனி தலத்தை குறிப்பிடுவதாக கருதுகின்றனர். மிறை=துன்பம்;

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளிபுத்தூர் மாகாளத்தார்

கறை காட்டும் கண்டனார் காபாலிய்யார் கற்குடியார் விற்குடியார் கானப்பேரார்

பறைக் காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழப் பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டோர்

மிறைக் காட்டும் கொடுங் காலன் வீடப் பாய்ந்தார் வீழிமிழலையே மேவினாரே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.52.3) அப்பர் பிரான் கண்ணும் ஒரு மூன்றுடைய காபாலி என்று குறிப்பிடுகின்றார். மூன்று கண்களை உடைய தன்மை மற்றும் பிரம கபாலத்தை தனது உண்கலனாக வைத்திருக்கும் தன்மை ஆகிய இரண்டும் பெருமானுக்கே உரிய தன்மைகள் ஆகும். புட்பாகர்=புள்ளினைத் தனது வாகனமாகக் கொண்டவன்; புள்=பறவை, இங்கே கருடனைக் குறிக்கின்றது. எண்ணில்=எண்+இல்=பொருளுணர்வு இல்லாத; ஒன்றுக்கொன்று மாறுபட்ட பலவகை ஆற்றலை உடையவன் பெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு, தண்மையும் வெம்மையும் ஆயினான் என்று இறைவனை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு திருமந்திரத்தின் பாடல் ஒன்றினை நினைவுக்கு கொண்டு வருகின்றது. தீயின் வெம்மையும் உயிர்களுக்கு சில சமயங்களில் தேவைப் படுகின்றது; அதே போன்று நீரின் குளிர்ச்சியும் உயிர்களுக்கு பல சமயங்களில் தேவைப் படுகின்றது. இவ்வாறு நமது தேவைக்கு ஏற்ப வெம்மை அளிப்பவனாகவும், குளிர்ச்சி தருபவனாகவும் இருப்பவன் சிவபெருமான் தான் என்பதை உணர்த்தும் பொருட்டு தீயினும் வெய்யன் என்றும் புனலினும் தண்ணியன் என்றும் திருமூலர் கூறுகின்றார். மறக்கருணை புரிந்து உயிர்களை வாட்டுவதில் தீயினை விடவும் கொடுமையை கையாள்பவனும், அறக்கருணை புரிவதில் நீரினை விடவும் குளிர்ச்சியாக இருப்பவனும் என்பதை உணர்த்தும் பொருட்டு தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் என்று திருமூலர் கூறுகின்றார் என்றும் அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

தண்மையொடு வெம்மையது ஆயினான் காண் சக்கரம் புட்பாகற்கு அருள் செய்தான் காண்

கண்ணுமொரு மூன்று உடைய காபாலி காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண்

எண்ணில் சமண் தீர்த்தென்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியாய் அருளினான் காண்

விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண்ணிழி தண்வீழி மிழலையானே

உயிர்களின் தன்மைக்கு ஏற்ப, அந்தந்த சமயங்களுக்கு ஏற்ப, மறக்கருணையும் அறக்கருணையும் புரியும் இறைவன் வெம்மை உடையவனாகவும் குளிர்ச்சி உடையவனாகவும் விளங்குகின்றான். பறவையாகிய கருடனைத் தனது வாகனமாகக் கொண்ட திருமாலுக்கு சக்கரம் அருள் செய்தவனும், மூன்று கண்களை உடையவனும், தன்னால் கிள்ளி எடுக்கப்பட்ட பிரமனின் தலையைத் தனது உண்கலனாக ஏற்றவனும், தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடல் தீயினில் வெந்து அழியும் வண்ணம் தீச்சுடர்களை வெளிப்படுத்தும் நெற்றிக் கண்ணினை உடையவனும், மெய்ப் பொருளினை உணர முடியாத சமண சமயத்தின் மீது அடியேன் வைத்திருத்த பற்றினை நீக்கி என்னை ஆட்கொண்டவனும், திருமால் பிரமன் ஆகிய இருவரும் அறிய முடியாத வண்ணம் நீண்ட தழலுருவமாக நின்றவனும், விண்ணவர்களால் போற்றப் படுபவனும் ஆகிய இறைவன் சிவபெருமான். அடர்ந்த சோலைகள் சூழ்ந்திருப்பதால் குளிர்ந்து காணப்படும் திருவீழிமிழலை தலத்தில், விண்ணுலகத்திலிருந்து திருமாலால் கொண்டுவரப் பெற்ற விமானத்தை உடைய திருக்கோயிலில் இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் உறைகின்றார் என்று அப்பர் பிரான் புகழ்வதாக அமைந்த பாடல்.

வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.58.6) அப்பர் பிரான், பெருமானை, காபாலியார் என்று அழைக்கின்றார். முண்டம்=தலை மாலை; முறித்தது=உரித்தது; முற்றம்=வீட்டின் முன் வாசல்; முறுவல்=புன் சிரிப்பு; தெறித்ததொரு வீணை=விரல்களால் சுண்டி இழுக்கப்பட்ட வீணை; வௌவ=கவர, மறித்து=மீண்டும்; பாற்கடலிலிருந்து பொங்கிய விடத்தை உண்டு அதனைத் தனது கழுத்தினில் தேக்கியதால், கருநிறம் அடைந்த கழுத்தினை உடையவரும், தனது அடியவன் மார்க்கண்டேயனைக் காக்கும் பொருட்டு காலனைக் காலால் உதைத்து மகிழ்ந்தவரும், பிரமனின் தலையைக் கையில் ஏந்தியவராய் உலகெங்கும் திரிந்து பலி ஏற்பவரும், தாருகவனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட புலி மற்றும் யானையின் தோல்களை உரித்து ஆடையாகவும் போர்வையாகவும் தரித்துக் கொண்டவரும், தலைமாலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான், முனிவர் குழாங்கள் தன்னைப் பின் தொடர, பலி ஏற்பதற்காக பல இல்லங்களின் முற்றங்கள் செல்கின்றார். அவ்வாறு செல்லும் இறைவன், தனது கையில் உள்ள வீணையின் நரம்புகளை விரலால் சுண்டி இனிய இசை எழுப்பியவராய் செல்கின்றார். அவரது புன்முறுவல் எனது சிந்தைனையைக் கவர, அவர் மறுபடியும் என்னை நோக்கமாட்டாரா என்று எனது மனம் ஏங்கியது. ஆனால் அவரோ என்னை மறுபடியும் நோக்காமல், மாயங்கள் பேசியவராய், வலம்புரம் தலம் சென்று அங்கே நிலையாக தங்கிவிட்டார் என்பதே இந்த பாடல் முலம் வெளிப்படுத்தப்படும் அப்பர் நாயகியின் கூற்றாகும்.

கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் காலினால் காய்ந்து உகந்த காபாலியார்

முறித்ததொரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனிகணங்கள் புடை சூழ முற்றம் தோறும்

தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம் வாய்ச் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ

மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.2) அப்பர் பிரான் பெருமானை, காபாலி என்று குறிப்பிடுகின்றார். காரொளிய=கரிய நிறத்துடன் ஒளி வீசும்; கண்டம்=கழுத்து; கட்டங்கம்=மழு ஆயுதம்; பாரொளி=உலகினில் ஒளி வீசும் சூரியன், சந்திரன் மற்றும் விண்மீன்கள்; சீரொளி=சிறப்பான ஒளி; வாங்குதல்=வாங்கிக் கொள்ளுதல்; தனது அடியார்களின் வினைகள், அவர்களைத் தாக்காதவாறு அவைகளை தான் முற்றிலும் அழித்தல்: முற்றிலும் அழித்தல் என்ற பொருளில், மணிவாசகர் வைச்சு வாங்குவாய் என்று திருச்சதகம்-ஆனந்தாதீதம் பாடலில் கூறுகின்றார். இதே பதிகத்தின் முதல் பாடலில், மிகவும் அதிகமான நாட்கள் சமண சமயத்தைச் சார்ந்திருந்த தன்னை அபயமாக ஏற்றுக் கொண்டவன் சிவபெருமான் என்று கூறி வியந்த அப்பர் பிரானுக்கு, பெருமான் சந்திரனுக்கு அபயம் அளித்துக் காத்தது நினைவுக்கு வந்தது போலும். இந்த நிகழ்ச்சியை பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். கருமையான ஒளியுடன் மிளிரும் கழுத்தினை உடைய கடவுளை, காபாலியாக பிரமனின் தலையைக் கையில் ஏந்தி பலிக்குச் செல்பவனை, மழு ஆயுதத்தை ஏந்தியவனை, உலகத்திற்கு ஒளி தரும் சூரியனாகவும் சந்திரனாகவும் விளங்குபவனை, ஆகாயத்தில் ஒளியாக மிளிர்பவனை, பாதாளத்தின் இருளாகத் திகழ்பவனை, பால் போன்ற நிலவினைத் தனது சடையில் சூடி தன்னைச் சரண் அடைந்தாரை காக்கும் நற்பண்பு உடையவனை, ஒப்புமை இல்லாத முறையில் ஞான ஒளியாகத் திகழ்பவனை, பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனை, தன்னைப் போற்றி வணங்கும் அடியார்களின் தீவினைகள் அவர்களைத் தாக்காத வண்ணம் அந்த தீவினைகளைத் தான் வாங்கிக் கொள்பவனை, சிறப்பான ஒளியாகத் திகழ்பவனை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமான் ஆகிய சிவபெருமானை நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா என்று பண்டைய நாளில் தான் செய்த தவறினை குறிப்பிட்டு, அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கும் பாடல்.

காரொளிய கண்டத்து எம் கடவுள் தன்னைக் காபாலி கட்டங்கம் ஏந்தினானைப்

பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப் பால் மதியம் சூடியோர் பண்பன் தன்னை

பேரொளியைப் பெண் பாகம் வைத்தான் தன்னைப் பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும்

சீரொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

ஆலம்பொழில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.86.1) அப்பர் பிரான், பெருமானை, காபாலி என்று அழைக்கின்றார். ஆர்ந்த=நிறைந்த; உருவார்ந்த=உருவத்தினில் அழகு நிறைந்த; திருவான்=மேன்மையான முக்திச் செல்வத்தை உடையவன்; பரம்பைக்குடி என்பது தலத்தின் பெயர். ஆலம்பொழில் என்பது திருக்கோயிலின் பெயர். உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் முதலாக இருப்பவனும், தனது நெற்றியில் ஒரு கண் உடையவனும், தாமரை மலரினைத் தனது இருப்பிடமாக உள்ள பிரமனின் தலையை அரிந்து பின்னர் அந்த பிரம கபாலத்தினை விரும்பி தனது உண்கலனாக ஏற்றுக் கொண்டவனும், அழகு நிறைந்த உருவத்தினை உடைய மலைமகளைத் தனது உடலினில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும், உயிர்களின் உணர்வாக இருப்பவனும், அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓசையாக வருபவனும், வலஞ்சுழியில் உறையும் பெருமானும், மறைக்காடு மற்றும் குளிர்ந்த சோலைகள் நிறைந்த ஆவடுதுறை தலங்களில் உறைபவனும், மேன்மையான முக்திச் செல்வத்தை உடையவனும், தென்பரம்பைக்குடி எனப்படும் ஊரினில் உள்ள ஆலம்பொழில் என்ற இடத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ சிந்திப்பாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக் கமலத்தோன் தலை அரிந்த காபாலிய்யை

உருவார்ந்த மலைமகள் ஓர் பாகத்தானை உணர்வெலாம் ஆனானை ஓசையாகி

வருவானை வலஞ்சுழி எம் பெருமான் தன்னை மறைக்காடும் ஆவடு தண்துறையும் மேய

திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.92.2) அப்பர் பிரான், பெருமானை, காபாலி என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானை கல்லாடை புனைந்தவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொதுவாக பெருமானை புலித்தோல் ஆடை அணிந்தவன் என்று மூவர் பெருமானார்கள் குறிப்பிடுகின்றனர். கல்லாடை என்றால் துவராடை என்று பொருள். துவராடை அணிந்தவனாக பெருமானை குறிப்பிடுவது அரிது. இந்த பாடலிலும் பாய்புலித் தோலுடையான் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பல்லாடு தலை=பற்கள் வெளியே தெரியும் வண்ணம் வாய் திறந்து காணப்படும் மண்டையோடு; அல்லாத காலன்=முறையற்ற செயலை மேற்கொண்டவன்; சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினை வஞ்சகமாக கவர முயற்சி செய்தமை இவ்வாறு உணர்த்தப் படுகின்றது.

பல்லாடு தலை சடை மேல் உடையான் தன்னை பாய்புலித் தோல் உடையானைப் பகவன் தன்னை

சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னைச் சுடருருவில் என்பறாக் கோலத்தானை

அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுதானானை

கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

ஆமயம் தீர்த்தென்னை என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் முதல் பாடலில் (6.96.1) அப்பர் பிரான் கபாலியார் என்று பெருமானை அழைக்கின்றார். ஆமயம்=நோய், இங்கே சூலை நோய்; இறைவனை பதி என்றும்; பல வகையாக பிறவி எடுத்துள்ள அனைத்து உயிர்களையும் பொதுவாக பசு என்றும் குறிப்பிடுவது வழக்கம். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இறைவன் அமைந்துள்ள தன்மை குறிப்பிடும் வண்ணம் பசுபதி என்ற திருநாமம் இறைவனுக்கு அமைந்துள்ளது. பிறவி எடுத்து தான் உலகில் வாழும் தன்மையை அப்பர் பிரான் ஆமயம் என்று குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மேலும் அருளாளர்கள், தங்களை பிணைத்துள்ள நோய் என்று குறிப்பிட்டு வருந்துவது பிறவிப்பிணியை தானே. மானிடம் கொண்டார் என்ற தொடருக்கு மான் போன்று அழகான மங்கையாகிய உமை அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டவர் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. வலது கையில் மழு ஆயுதத்தை ஏற்றுள்ள பெருமான் என்று குறிப்பிடுவதால், மானிடம் என்று குறிப்பிடுவது மான் கன்றினைத் தனது இடது கையினில் ஏற்றுள்ள பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தன்னை ஆட்கொண்ட பெருமான் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், தான் செய்யும் உழவாரப் பணியினை குறிப்பிடாமல் கண்ணப்பர் செய்த திருப்பணியினை இங்கே குறிப்பிடுகின்றார். தான் செய்த உழவாரப் பணியினும் சிறந்த பணியாக கண்ணப்பரின் செயலை அப்பர் பிரான் கருதுகின்றார் என்பது இதிலிருந்து புலனாகின்றது. இறைவனின் கண்களிலிருந்து உதிரம் பெருகி வழிவதைக் கண்ட கண்ணப்பர், தயக்கம் ஏதுமின்றி தனது கண்களையே பேர்த்து எடுத்து இறைவனின் திருமேனியில் அப்பத் துணிந்த கண்ணப்பரின் அன்புக்கு வேறு எவரது அன்பும் ஈடாகாது அல்லவா.

தாமரையான்=தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமன். கண்ணால் நோக்கி என்ற தொடரை, இறுதி அடியில் அந்த தொடருக்கு முன்னும் பின்னும் வரும் இரண்டு தொடர்களுடன் இணைத்து பொருள் கொள்ள வேண்டும். இத்தகைய சொல்லாட்சி இடைநிலை தீபம் என்று அழைக்கப்படும். நெற்றிக் கண்ணினைத் திறந்து விழித்தே காமனை எரித்த பெருமான், தனது இரண்டாவது கண்ணினையும் பேர்க்கத் துணிந்த கண்ணப்பரை நோக்கி, தனது கையால் அவனைத் தடுத்து நில்லு கண்ணப்பா என்று கூறியது இங்கே உணர்த்தப் படுகின்றது. காயம்=உடல்; மாகாயம்=பெரிய உடல், திரிவிக்ரமனது உடல். மூவுலகையும் தனது இரண்டு திருவடிகளால் அளந்த திரிவிக்ரமரின் செருக்கினை அடக்கும் பொருட்டு, வயிரவர் அவரது மார்பினை கிள்ளி வெளியே வந்த உதிரத்தை தனது கபாலத்தில் ஏந்தினார் என்பது சீர்காழி தலபுராண வரலாறு. தனது உடலின் இரத்தம் அனைத்தும் வடிந்த பின்னர் திருமால் மயக்கமடைந்து கீழே விழ, அவரது மனைவி இலக்குமி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி இறைவன் திருமாலுக்கு உயிர்ப்பிச்சை அளித்தார் என்றும் புராணம் கூறுகின்றது. இந்த நிகழ்ச்சி சீர்காழி தலத்தில் பிரமபுரீசுவரர் சன்னதியின் மேலே உள்ள உட்புறச் சுவர்களில் சித்திரமாக வரையப் பெற்று இருந்ததை அடியேன் முன்னர் கண்டேன். நக்கீர தேவர் அருளிய பெருந் தேவபாணியில் (பதினோராம் திருமுறை), கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை, என்று குறிப்பிடுகின்றார். உயிருடன் எழுந்த திருமால், தனது தோலையும் முதுகெலும்பையும் பெருமான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டவே, தோலினை சட்டையாகவும் எலும்பினை கதையாகவும் சட்டநாதர் ஏற்றுள்ளார் என்றும் கூறுவார்கள்.

ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார் அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்

தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவாம் தன்மை

வாமனனார் மாகாயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார்

காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கிக் கண்ணப்பர் பணியும் கொள் காபாலியாரே

என்னை வருத்திய சூலை நோயினைத் தீர்த்து, அடியேனை தனது அடிமையாக ஏற்றுக் கொண்ட பெருமான், திருவதிகை வீரட்டானம் தலத்தினை தான் ஆட்சி செய்யும் இடமாக கொண்டுள்ளார். தாமரை மலரினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள பிரமனின் ஐந்து தலைகளின் ஒன்றினை அரிந்து, அந்த தலையினை தான் பலி ஏற்கும் கலனாக கொண்டுள்ளார். நெடிது வளர்ந்து நிறைவான தன்மையுடன் தனது திருவடிகளால் மூன்று உலகங்களையும் அளந்த வாமனராக வந்த திருமாலின் பெரிய உடலில் இருந்த உதிரம் அனைத்தையும் தனது கபாலத்தில் ஏற்றுக்கொண்ட பெருமான், தனது உடலின் இடது பாகத்தில் மான் போன்ற அழகிய உமை நங்கையை ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் தனது வலது கையில் மழுவாள் ஆயுதத்தையும் கொண்டுள்ளார். தனது நெற்றிக் கண்ணினை விழித்து மன்மதனின் உடலை எரித்த பெருமான், கண்ணப்பர் செய்த பூஜையை அவரது அன்பு கருதி ஏற்றுக்கொண்டார் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.72.9) சுந்தரர், இந்த தலத்தினை கபாலி தன் இடம் என்று குறிப்பிடுகின்றார். தோலாடையை உடுத்திக் கொண்டும் சாம்பலை பூசிக் கொண்டும் உலாவுபவனும், பிரம கபாலத்தை ஏந்தியவனாக இல்லங்கள் தோறும் பலிக்காக திரிபவனும், ஆகிய இறைவன் உறைகின்ற இடம், சடசட என்று ஓசைகளை எழுப்பும் ஓலைகள் உடைய பனைமரங்கள், பழங்கள் நிறைந்து காணப்படுவதும், மணற் குன்றுகள் இடிந்து விழுகின்ற இடமாக இருப்பதும் ஆகிய வலம்புரம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சடசட விடு பெணை பழம் படும் இடவகை

பல வடகத்தொடு பலி கலந்து உலவிய

கடைகடை பலி திரி கபாலி தன் இடமது

இடிகரை மணலடை இடம் வலம்புரமே

சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டபோது திருவொற்றியூரை விட்டு பிரியேன் என்று சத்தியம் இட்டதை மீறி, திருவாரூர் செல்ல முயன்றதை தான் செய்த பிழை என்பதை உணரும் சுந்தரர், அடியார்கள் செய்யும் பிழைகளை பெருமான் பொறுத்துக் கொண்டு அருள் புரிவார் என்பதால் தனது இந்த பிழையினையும் பெருமான் பொறுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் துணிந்து செய்ததாகவும், அந்த எண்ணத்தினை மெய்ப்பிக்காமல் இருந்ததால் இறைவனுக்கு பழி ஏற்பட்டது என்றும் வெண்பாக்கம் தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தினில் (7.89.1) சுந்தரர் கூறுகின்றார். தனது கண்பார்வை இழந்த நிலையில், பெருமானைத் தான் நேரில் காண முடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக, பெருமானே இந்த தலத்தில் நீ இருக்கின்றாயோ என்ற கேள்வி கேட்ட தன்பால், சிறிதும் இரக்கம் கொள்ளாமல், ஆமாம் இந்த தலத்தில் இருக்கின்றேன், நீ செல்வாயாக என்று பதில் சொல்கின்ற முகமாக, ஏதும் சொல்லாமல் பெருமான் வாளா இருக்கின்றார் என்று வருந்தும் பாடல், இந்த பதிகத்தின் நான்காவது பாடலாகும்.. இந்த பதிகத்தின் பத்தாவது பாடலைப் பாடிய போது, இறைவன் ஒரு ஊன்றுகோலை விட்டெறிய, அந்த கோல் சுந்தரரின் அருகே வந்து விழுகின்றது. கம்பமரும் கரி என்று யானை ஒரு கற்றூணுடன் கட்டப்படும் தன்மையை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். சேயிழை=பார்வதி தேவி;

கம்பமரும் கரி உரியன் கறை மிடற்றன் காபாலி

செம்பவளத் திருவுருவன் சேயிழையோடு உடனாகி

நம்பி இங்கே இருந்தாயே என்று நான் கேட்டலுமே

உம்பர் தனித் துணை எனக்கு உளோம் போகீம் என்றாரே

திருவாசகம் பூவல்லி பதிகத்தின் பாடலில் (8.13.10) மணிவாசக அடிகளார், பெருமானை காபாலி என்று அழைக்கின்றார். உலகியல் சிற்றின்பங்களை எவ்வளவு அனுபவித்தாலும், அதனால் திருப்தி அடையாமல் மேன்மேலும் அந்த இன்பங்களைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று விரும்பும் பொறிகளைக் கொண்ட உடல் என்பதை உணர்த்தும் முகமாக, பேராசையாம் இந்த பிண்டம் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலால நஞ்சினை உண்ட பெருமான், எதற்காக, பலி ஏற்கின்றார் என்பதாக நயமான கேள்வி கேட்கும் பாடல்.

பேராசையாம் இந்த பிண்டமறப் பெருந்துறையான்

சீரார் திருவடி என் தலை மேல் வைத்த பிரான்

காரார் கடல் நஞ்சை உண்டுகந்த காபாலி

போரார் புரம் பாடிப் பூவல்லிக் கொய்யாமோ

திருமந்திரம் மூன்றாம் தந்திரம், சரீரசுத்தி உபாயம் என்ற அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை கண்டம் கருத்த கபாலி என்று அழைக்கின்றார். அண்டம்=ஆண்குறி; புணர்ச்சியில் ஈடுபடாத நேரத்தில் ஆண்குறி சுருங்கி இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார்; காமத்தில் ஈடுபட்டு, உடற் புணர்ச்சியை குறைத்தால் உடல் வாழும் நாள் அதிகமாகும்; உடல் இளைத்து மெலிந்தால், உடலின் உள்ளே குடிகொண்டிருக்கும் பிராணன் நிலையாக அதிகமான நாட்கள் உடலில் பொருந்தி நிற்கும். உடல் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்தால், தவம் பெருகும், உடல் சுருங்கும், காம உணர்வு குறையும்,இறுதியாக ஆயுள் அதிகரிக்கும்; இந்த நிலை முற்ற, ஜீவன் சிவமாக மாறும் தன்மை நிகழும் என்பதே இந்த பாடல் உணர்த்தும் பொருள்.

அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை

பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும்

உண்டி சுருங்கில் உபாயம் பலவுள

கண்டம் கருத்த காபாலியுமாமே

பொழிப்புரை:

பருத்த உடல் உடையவர்களாய், கீழ்மைத் தன்மை மிகுந்து உடலில் ஆடை ஏதுமின்றி பல வீதிகளிலும் திரிந்து பிச்சை ஏற்றுண்பவர்களும், மயக்கம் தரும் அறிவினை உடையவர்களும் ஆகிய சமணர்களின் சொற்களை பொருட்டாக கருதாதீர்கள். மலர்ந்த மலர்களில் உள்ள தேனை உண்பதற்காக கூட்டமாக வரும் வண்டுகளின் இசை நிறைந்த திருப்புன்கூர் தலம் சென்று ஆங்குள்ள இறைவனைக் கண்டு தொழுவீர்களாக. கபாலியாக வேடம் கொண்டு பலியேற்கும் இறைவனைத் தொழுது அவனது பிச்சைப் பாத்திரத்தில் உங்களது மலங்களை இட்டு, மலங்கள் நீங்கியவர்களாக இறைவனின் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.

பாடல் 11:

முந்தி நின்ற வினைகள் (1.027) பாடல் 10 தொடர்சி மற்றும் பாடல் 11 (திதே 0451)

மாடம் மல்கு மதில் சூழ் காழிமன்

சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்

நாட வல்ல ஞானசம்பந்தன்

பாடல் பத்தும் பரவி வாழ்மினே

விளக்கம்:

இந்த பதிகத்தின் கடைக்காப்பு மற்ற பதிகங்களிலிருந்து மாறுபட்டது. இந்த பாடலில் இந்த பதிகம் பாடுவதால் நாம் அடையவிருக்கும் பலன் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடி வாழ்வீர்களாக என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானின் தன்மைகளையும் பண்புகளையும் கருணைத் திறனையும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அந்த பாடல்கள் குறிப்பிடும் கருத்தினை உள்வாங்கி, அவற்றை பின்பற்றி, பெருமானை வணங்கித் தொழுது நாம் அனைவரும் வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று விரும்புகின்றார் போலும். அதனால் தான் பதிகத்தின் பாடல்களை மீண்டும்மீண்டும் பாடி வாழ்வீர்களாக என்று கூறுகின்றார். நாடவல்ல=ஆராய்ந்து அறியும் வல்லமை வாய்ந்த;

பொழிப்புரை:

உயர்ந்த மாடவீடுகள் நிறைந்ததும் உயர்ந்த மதிற் சுவர்களைக் கொண்டதும் ஆகிய சீர்காழி தலத்தின் தலைவன் ஆகிய ஞானசம்பந்தன், சான்றோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் தலத்து இறைவனின் தன்மைகளை ஆராய்ந்து அறியும் ஆற்றலை வெளிப்படுத்திய பாடல்கள் பத்தையும் பாடி வாழ்வீர்களாக.

முடிவுரை:

இந்த பதிகத்தின் மூன்று பாடல்களில் திரிபுரத்தை எரித்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு ஒரே பதிகத்தின் பல பாடல்களில் திரிபுரம் எரித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுவது அரிது. திருப்புன்கூர் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஒரு பூதகணம் பஞ்சமுக வாத்தியம் வாசிப்பதாகவும் மற்றொரு பூதகணம் மத்தளம் (குடமுழா) வாசிப்பதாகவும் சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பத்தைக் கண்ட திருஞான சம்பந்தருக்கு, பெருமான் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று சிவனடியார்களை தனது இரண்டு காவல்காரர்களாகவும் குடமுழா வாசிப்பவனாகவும் நியமித்து பெருமான் கருணை புரிந்த செயலும் அதற்கு முன்னோடியாக அமைந்த திரிபுர தகனமும் நினைவுக்கு வந்தது போலும். அதனால் தான் பதிகத்தின் மூன்று பாடல்களில் திரிபுரம் எரித்த வீரச் செயலை குறிப்பிட்டார் போலும்.

சுந்தரர் தனது பாடல் ஒன்றினில் (7.54.8) பெருமான் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அடியார்களுக்கு அருள் புரிந்ததை குறிப்பிடுகின்றார். தாருகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்களும், தாங்கள் பின்பற்றி வந்த சிவநெறியை கைவிட்டு புத்தர்களாக மாறி சிவநிந்தனையும் வேதநிந்தனையும் செய்யத் தொடங்கினார்கள். மக்கள் அனைவரும் தங்களது மன்னனை பின்பற்றி புத்த மதத்திற்கு மாறிய போதிலும் சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவர் சிவநெறியைக் கைவிடாமல் வாழ்ந்து வந்தனர். பெருமானிடம் தொடர்ந்து அன்பு பூண்டு அவர்கள் வாழ்ந்து வந்தமையால் பெருமான் இவர்கள் மூவரும் அழியாமல் காத்து, திரிபுரத்தை எரித்தார். மேலும் மூவரில் இருவரை தனது கோயிலில் வாயில் காவலராகவும் ஒருவரை மத்தளம் முழக்குபவராகவும் மாறும் வண்ணம் அருள் புரிந்தார் என்று காஞ்சிப்புராணம் கூறுகின்றது. அவர்களே இந்த திருக்கோயிலில் வாயில் காப்பாளராக இருப்பதாக நம்பப்படுகின்றது. பொதுவாக வாயில் காப்பாளர்கள் நுழை வாயிலைப் பார்த்த வண்ணம் நிற்பதைக் காண்கின்றோம். ஆனால் இந்த கோயிலில் அவர்கள் இருவரும் பெருமானின் சன்னதியை நோக்கிய வண்ணம் சற்று தலை சாய்த்து நிற்பதை நாம் காணலாம். காவலராக இருப்பினும் பெருமானைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று அந்த திரிபுரத்து அடியார்கள் விரும்பினர் போலும். செற்ற=வெற்றி கொண்ட; ஞான்று=நாளில்;முழா=மத்தளம்; ஏவுதல்=கட்டளை இடுதல்;

மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்

காவலாளர்கள் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரி காடு அரங்காக

மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க அருள் செய்த

தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே

அருகில் இருந்த ஆதனூர் கிராமத்தில் (சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது) ஒரு அந்தணரிடம் நந்தனார் பண்ணையாளாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு சிறு வயதிலியே தில்லையில் நடராஜப் பெருமானின் நடனக் கோலத்தை காண வேண்டுமென்ற ஆசை தோன்றியது. தனது நண்பர்களுடன் இன்று போகலாம் நாளை போகலாம் என்று அவர்களின் திட்டம் காலம் தாழ்த்தப் படுகின்றது. இதனால் இவருக்கு திருநாளைப் போவார் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த நாளில் இருந்த கட்டுப்பாடுகளின் காரணமாக நந்தனார் தில்லை சென்று கூத்தபிரானை தரிசனம் செய்வது கடினம் என்று பெரியவர்கள் நந்தனாருக்கு அறிவுரை கூறுகின்றனர். எனினும் தனது நண்பர்களுடன் அருகிலுள்ள சிவலோகநாதரை காணலாம் என்று நந்தனார் இந்த தலத்திற்கு வருகின்றார். சன்னதி தெரு வந்தடைந்த நந்தனாருக்கு திருக்கோயிலின் உள்ளே செல்வதற்கு தயக்கம் ஏற்பட்டது. எனவே தொலைவில் இருந்தே கருவறையில் உள்ள லிங்கத்தைக் காணலாம் என்ற எண்ணத்துடன் பார்த்தபோது, நந்தி மறைப்பதைக் கண்டு வருந்துகின்றார். ஏதாவது அதிசயம் நிகழ்ந்து நந்தி சற்று விலகி தான் பெருமானை காண்பதற்கு இடம் கொடுக்காதா என்று வருந்துகின்றார்.

நந்தனாரின் ஆழ்ந்த பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், நந்தியை சற்றே வடக்காக விலகுமாறு ஆணையிட, நந்தி சிறிது நகர்ந்து நந்தனார் பெருமானைக் காண்பதற்கு வசதி செய்த அதிசயம் நிகழ்ந்தது. நந்தனாரும் அவரது நண்பர்களும் பெருமானை கண்டு மகிழ்ந்தனர். இன்றும் நந்தி விலகிய நிலையில் இருப்பதை நாம் காணலாம். சிவபெருமானின் தரிசனத்தைக் கண்டு எப்போதும் மகிழும் நிலையில் அவருக்கு எதிரே அனைத்து திருக்கோயில்களிலும் இருக்கும் நந்தி, சற்று விலகிய நிலையிலும், பெருமானைக் காணும் ஆர்வத்தால் உந்தப்பட்டு, தனது உடலினை சற்று வளைத்து கருவறையை காணும் கோலத்தில் இருப்பதை நாம் காணலாம். சுவாமி சன்னதி சென்று அங்கிருந்து நாம் நந்தியை பார்த்தால், நந்தி எவ்வளவு தூரம் விலகி இருக்கின்றது என்பதை உணரலாம். மேலே கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் கர்ண பரம்பரையாக வரும் தகவல்களின் அடிப்படையில் தொடுக்கப் பட்டவை. பெரிய புராணத்தில், நந்தி விலகிய நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. எனினும் நந்தனார் கோயிலின் உள்ளே செல்வதற்கு கட்டுப்பாடு இருந்ததாக குறிப்பு ஏதும் இல்லை. தனது பிறப்பு கருதி உள்ளே செல்வதற்கு நந்தனார் தயங்கியதாக சொல்லப் படுகின்றது. சிதம்பரம் சென்ற நிகழ்ச்சியும் அங்கே, எரி மூட்டப்பட்டு, எரியில் மூழ்கி அந்தணர் கோலத்தில் நந்தனார் வெளிவந்ததும் பின்னர் தில்லைக் கோயிலின் உள்ளே சென்று பெருமானை தரிசனம் செய்ததாகவும், அப்போதே பெருமானுடன் கலந்ததாகவும் பெரிய புராணத்தில் கூறப்படுகின்றது. சிதம்பரம் திருக்கோயிலில் நிருத்தசபையில் நடராஜப் பெருமானை பார்த்த வண்ணம் நந்தனாரின் உருவச்சிலை ஒன்று இருந்தது என்று தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் திருத்தலங்கள் குறிப்பு என்ற புத்தகத்தில் கூறுகின்றார். ஆனால், இப்போது அந்த சிலையை நாம் காணமுடியாது. சுந்தரர் இந்த தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் பாடலில் நாளைப் போவான் என்று நந்தனாரை குறிப்பிடுகின்றார். பின்னாளில் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தனார் சரிதம் மிகவும் புகழ் பெற்றது. தலமரமாகிய புங்க மரம் மருத்துவ குணங்கள் வாய்ந்தது என்று நம்பப் படுகின்றது. இந்த காரணம் பற்றியே, ஔஷனாம்பதி என்று ஶ்ரீருத்ரத்தில் அழைக்கப்படும் தலங்களில் இந்த தலமும் ஒன்று என்று தமிழ் தாத்தா உ.வே.சா அவர்கள் கூறுகின்றார். கணபதி தீர்த்தம். ரிஷப தீர்த்தம், தேவேந்திரன் தீர்த்தம். வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. நந்தனார் பெருமானை தரிசனம் செய்த தேரடியிலும் நந்தனாருக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது.

வெகு நாட்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்த வீரசோழ மன்னன், இந்த தலத்து இறைவனை வழிபட்டு அவனது அருளால் ஒரு மகனைப் பெற்றான். சிற்சபேச நடேசன் என்ற வீரசோழ மன்னனின் மகன் இந்த ஊரில் இருந்த சௌந்தரவல்லி என்ற நாட்டிய மங்கையின் பால் விருப்பம் கொண்டு, அவளுக்கு பல நகைகள் அளித்து அவளுடன் மகிழ்ந்து இருந்தான். சில நாட்கள் கழித்து, தன்னுடன் திருவாரூர் வருமாறு ஆங்கே நிலையாக தங்குமாறு கோரிக்கை விடுக்கின்றான். ஆனால் சிவலோகத் தியாகரை அனுதினமும் வணங்கி வந்த அந்த நாட்டிய மங்கை, திருப்புங்கூர் தலத்தை விட்டு செல்வதற்கு மறுத்து விடவே, தான் கொடுத்த நகைகள் தானே என்ற எண்ணத்தில், அந்த நகைகளை திருடிச் சென்று விடுகின்றான். நகைகளை இழந்த நாட்டிய மங்கை, அரசனை பின்தொடர்ந்து சென்று தனது நகைகளை கொடுக்குமாறு கேட்டாள். அதற்கு மன்னன், தனக்கு அவளது நகையைப் பற்றி ஏதும் தெரியாது என்று சொல்லிவிட்டான். நாட்டிய மங்கை, வேறு வழியின்றி இறைவனிடம் முறையிடுகின்றாள். மேலும் மன்னனிடம், சிவலோகத் தியாகரின் சன்னைதியின் முன்னே சத்தியம் செய்ய வேண்டும் என்ற கேட்க, மன்னனும் அதற்கு உடன்படுகின்றான். தலம் வந்தடைந்த மன்னன், திருக்கோயில் குளத்தில் நீராடச் சென்ற போது, கோயில் குளம் இரத்த மயமாக இருந்ததைக் கண்டு நீராடுவதைத் தவிர்த்தான். பின்னர் சுவாமி சன்னதிக்கு அருகே மன்னன் சென்ற போது, இரண்டு துவாரபாலகர்களில் ஒருவர் பாம்பாகவும் மற்றொருவர் கருடனாகவும் மாறினர். கருடன் பாம்பினைத் தூக்கி மன்னனின் கழுத்தில் போட, மன்னன் பாம்பினை நீக்கினால் உண்மையை ஒத்துக் கொள்வதாக சொன்னான். உடனே அந்த பாம்பு மறைந்தது. மன்னன் தனது தவறினை ஒப்புக் கொண்டு, நகைகளை நாட்டியப் பெண்ணுக்கு கொடுத்ததும் அன்றி கோயிலுக்கு நிபந்தமாக நிலங்களும் அளித்தான் என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது இந்த செய்தி செவிவழிச் செய்தியாகவும் சொல்லப் படுகின்றது.

பதிகத்தின் முதல் பாடலில் ஆதி அந்தம் இல்லாத பெருமானாக விளங்கும் அவர் ஒருவர் தாம், நமது வினைகளை முற்றிலும் அழித்து, அதன் விளைவாக பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்க முடியும் என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் அடுத்த பாடலில் தேவர்கள் அனைவரும் அவரை வணங்குவதாக குறிப்பிடுகின்றார். மூன்றாவது பாடலில் அவரது உயர்வினைக் கருதி, அவரை தியானித்த தான் அவரைத் தனது தலை உச்சியின் மேல் உள்ள துவாதசாந்தப் பெருவெளியில் வைத்திருப்பதாக கூறுகின்றார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளுமாறு நான்காவது பாடலில் அறிவுரை கூறப்படுகின்றது. நான்காவது பாடலில் பெருமானின் திருவடிகளின் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் ஐந்தாவது பாடலில் பெருமான் திருமேனி அழகு வாய்ந்து என்றும், ஆறாவது பாடலில் அவரது சடைமுடியின் அழகினையும் குறிப்பிடுகின்றார். முந்தைய மூன்று பாடல்களில் குறிப்பிட்ட அழகினை உடைய பெருமான் வீதிவலம் வரும் திருப்புன்கூர் வீதிகளின் சிறப்பு ஏழாவது பாடலில் குறிப்பிடப் படுகின்றது. எட்டாவது பாடலில், அழகராக விளங்கும் பெருமான் வீரமும் கருணையும் கொண்டவராக திகழ்வது எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப் படுகின்றது. அனைவரும் மலைத்து நிற்கும் வண்ணம் ஆற்றல் பொருந்திய திரிபுரத்து அரக்கர்களை அழித்தமை பெருமானது வீரத்தையும், தனது இருப்பிடத்தையே பேர்த்து எடுக்க முயற்சி செய்தவன் என்பதையும் பொருட்படுத்தாது அரக்கன் இராவணனுக்கு பல வரங்கள் அளித்தமை பெருமானின் கருணையையும் உணர்த்துகின்றது. இவ்வாறு அழகும் வீரமும் கருணையும் பொருந்திய பெருமான் ஆடல் பாடல் கலைகளில் வல்லவராக விளங்கும் தன்மை ஒன்பதாவது பாடலில் குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு முதல் ஒன்பது பாடல்களில் பெருமானின் தன்மை, அழகு, கருணை வீரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, பெருமானை நாம் சென்று அடையவேண்டும் என்ற ஏக்கத்தினை நம்மில் ஏற்படுத்தும் திருஞானசம்பந்தர், பதிகத்தின் பத்தாவது பாடலில் நமது ஏக்கத்தினைத் தீர்த்துக் கொள்ளும் வழியினை காட்டுகின்றார். காபாலியாக வரும் பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, மலங்கள் நீங்கியவர்களாய், விருப்பு வெறுப்பு அற்றவர்களாய் வாழ்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு அவனது திருவடிகளைச் சென்று அடையவேண்டும் என்று உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் கடைப்பாடல் மற்ற பதிகங்களின் கருத்திலிருந்து மாறுபட்டு இருப்பது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பதிகத்தின் பாடல்களை மீண்டும்மீண்டும் பாடவேண்டும் என்று கூறுவதன் மூலம், பாடல்கள் உணர்த்தும் பொருட்களை புரிந்து கொண்டு அதனை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று உணர்த்தும் திருஞானசம்பந்தர் காட்டிய வழியில் சென்று இறைவனை வணங்கித் தொழுது அவனது புகழினைப் பாடி வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

முந்திநின்ற வினைகள் (Mundhinindra Vinaigal) is a poetic phrase in Tamil that refers to past actions or past deeds. The term evokes the concept of actions or consequences from previous times that continue to have an impact in the present.

Breakdown of the Phrase:

முந்தி (Mundhi): Means past or before. It denotes something that occurred previously in time.

நின்ற (Nindra): Means standing or remaining. It suggests something that is enduring or persistent.

வினைகள் (Vinaigal): Refers to actions or deeds. In a broader sense, it can refer to the consequences of one's actions or karmic effects.

Full Meaning:

"முந்திநின்ற வினைகள்" can be translated as "past actions that have endured" or "deeds from the past that still persist". The phrase implies that actions taken in the past continue to influence the present or future, highlighting the concept of karma and the enduring nature of one's deeds.

Context:

Karma and Consequence: In many philosophies, particularly in Hindu and Buddhist traditions, the concept of karma plays a significant role. The phrase reflects the idea that past actions (good or bad) have lasting effects on an individual's current life and future experiences.

Moral and Ethical Lessons: The phrase can be used to discuss the moral or ethical implications of one’s actions and the importance of being mindful of one's deeds. It emphasizes that actions from the past cannot be undone but their consequences are continually felt.

Literary Usage: In Tamil literature and poetry, "முந்திநின்ற வினைகள்" may be used to explore themes of fate, destiny, and the enduring impact of one’s actions. It often serves as a reminder of the consequences of past behaviors and the importance of ethical conduct.

Example in Context:

In a poem or philosophical discourse, this phrase might be used to reflect on the enduring consequences of past actions and how they shape one's current circumstances. For instance, a poet might write about how the results of one's past deeds continue to affect their life, emphasizing the importance of living a righteous and mindful life.

Conclusion:

"முந்திநின்ற வினைகள்" poetically encapsulates the idea that actions from the past leave a lasting impact. It serves as a reminder of the enduring nature of karma and the importance of reflecting on past deeds while navigating the present and future. This phrase encourages awareness of how past actions shape one’s current and future experiences, emphasizing the interconnectedness of time and moral responsibility.



Share



Was this helpful?