இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


முன்னிய கலைப்பொருளும்

முன்னிய கலைப்பொருளும்

பதிக எண்: 2.29 - திருப்புகலி (சீர்காழி) - இந்தளம்

பின்னணி:

இந்த திருப்பதிகம் எந்த சூழ்நிலையில் எப்போது அருளப்பட்டது என்பதற்கு பெரிய புராணத்தில் நேரிடையாக குறிப்பு ஏதும் காணப்படவில்லை. எனினும் தனது ஐந்தாவது தல யாத்திரையை தொடங்கும் முன்னர், பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்த திருஞானசம்பந்தர் அந்த தருணத்தில் அருளிய பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்றாக இருக்கலாம் என்று பெரியோர்களால் கருதப்படுகின்றது. தனது நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தருக்கு அவரது தந்தையார் உபநயனச் சடங்கு செய்வித்தார். இந்த சடங்கு முடிந்த சில நாட்கள் கழித்து திருஞானசம்பந்தரைக் காண வேண்டும் என்ற விருப்புடன் தில்லைச் சிதம்பரத்திலிருந்து புறப்பட்ட திருநாவுக்கரசர் சீர்காழி வந்து சேர்ந்தார், சீர்காழி வந்து சேர்ந்த திருநாவுக்கரசரை, பல அடியார்கள் புடை சூழ எதிர்கொண்ட திருஞானசம்பந்தர், அவரை அன்புடன் அப்பரே என்று அழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து சீர்காழி நகரத்தில் உள்ள திருக்கோயிலுக்கும் அருகில் உள்ள திருக்கோலக்கா தலத்திற்கும் ஒன்றாக சென்றனர். கோலக்கா சென்று திரும்பியதும் நாவுக்கரசர், பல சோழ நாட்டு தலங்களைக் காண்பதற்கு ஆவல் கொண்டவராக சீர்காழியிலிருந்து புறப்பட்டுச் செல்ல, திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழியில் தங்கி இருந்தார். அவ்வாறு இருந்த நாட்களில் பல வகையான பதிகங்களை அருளினார். இந்த பதிகங்கள் பல வகையிலும் ஏனைய பதிகங்களிலிருந்து மாறுபட்டு காணப் படுகின்றன. இவற்றுள் சில தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அத்தகைய வித்தியாசமான பதிகங்களில் ஒன்று தான் நடையின் முடுகும் இராகம் என்ற வகையைச் சார்ந்த இந்த பதிகம். இந்த பதிகத்தின் சிறப்புத் தன்மையை குறிப்பிடும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம். நடை=ஓசை; முடுகும்=விரைவு; நெடில் எழுத்துகள் நீண்ட ஓசையினை அளிக்கும் என்பதை நாம் அறிவோம். அதிகமான நெடில் எழுத்துகளை கலக்காது, குறில் எழுத்துகளை அதிகமாக பயன்படுத்தி, அடுத்தடுத்த சீர்களுக்கு இடையே இடைவெளி இன்றி, பாடப்படும் பாடல்கள், நடையின் முடுகும் இராகம் என்று குறிப்பிடப் படுகின்றது என்று தருமபுரம் ஆதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. முன்னிய கலைப் பொருளும் (2.29) சங்கமரு முன்கை (3.81) பெண்ணியல் உருவினர் (3.84) எந்தமது சிந்தை (3.75) பிறையணி படர்சடை (1.19) என்று தொடங்கும் சீர்காழி தலத்தின் மீது அருளப்பட்ட திருப்பதிகங்கள் முடுகும் இராக வகையைச் சார்ந்தவை என்று கருதப் படுகின்றன.

நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்

சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக

மூல இலக்கியமாக எல்லாப் பொருட்களும் உற்ற

ஞாலத்து உயர் காழியாரைப் பாடினர் ஞானசம்பந்தர்

பாடல் 1:


முன்னிய கலைப் பொருளும் மூவுலகில் வாழ்வும்

பன்னிய ஒருத்தர் பழவூர் வினவின் ஞாலம்

துன்னி இமையோர்கள் துதி செய்து வணங்கும்

சென்னியர் விருப்புறு திருப்புகலியாமே

விளக்கம்:

முன்னிய=முதன்மையாக பொருந்தியுள்ள; கலைப் பொருள்=அறுபத்து நான்கு கலைகள்; பன்னிய= மீண்டும் மீண்டும் பல முறை செய்தல் என்று பொருள்;இங்கே அவ்வாறு மீண்டும் மீண்டும் பழகி ஆராய்ந்த என்று பொருள் கொள்ள வேண்டும்; மூவுலகின் வாழ்க்கையையும் அளிப்பவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மூவுலகம் என்று தேவலோகம், நிலவுலகம் மற்றும் பாதாள உலகம் குறிப்பிடப் படுகின்றன. உயிர்களுடன் பிணைந்துள்ள வினைகளின் தன்மைக்கு ஏற்ப உயிர்கள் வாழும் இடம் முடிவு செய்யப் படுகின்றது. உயிர்கள் பெறுகின்ற கல்வியின் தன்மையும், அவ்வாறே அமைகின்றது. வினைகளுக்குத் தக்கவாறு உயிர்களை தகுந்த உடலுடன் இணைக்கும் பெருமான், அந்த உயிர்களின் அறிவின் தன்மையையும் ஆராய்ந்து முடிவு செய்கின்றான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

ஞாலம்=பூமி; துன்னி=நெருங்கி அடைந்து; சென்னியர்=தலைவராக விளங்குபவர்; சென்னி என்பதற்கு தலை என்று பொருள் கொண்டு, தேவர்கள் தாங்கள் விரும்பும் சிவபெருமானது திருவடிகளில் தங்களது தலைகளை தாழ்த்தி வைத்து வணங்குகின்றார் என பொருள் பட, தேவர்களின் சென்னிகளை தனது திருவடியில் வைத்துள்ளவன் என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இவ்வாறு தேவர்கள் வணங்குவதை நமது கண்களால் காண முடியாது அல்லவா. எனினும் தேவர்கள் மணிமுடிகள் தரித்த தங்களது தலையால் பெருமானை வணங்கும் காட்சியினை அருளாளர்கள் கற்பனை செய்து உணர்த்தும் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். நல்லூர் தலத்தில், சிவபெருமானின் திருவடி தனது தலை மீது வைக்கப் பட்டதை உணர்ந்த அப்பர் பிரான், அந்த திருவடி நனைந்து இருந்ததாக கூறுகின்றார். பெருமானின் திருவடிகள் ஏன் நனைந்திருக்க வேண்டும் என்ற ஐயம் நமக்கு எழலாம். அதற்கு உரிய காரணத்தையும் அப்பர் பிரான் இந்த பாடலில் (6.14.1) கூறுகின்றார். கூட்டமாக வந்த தேவர்கள் பெருமானின் திருவடிகளை குனிந்து வணங்கிய போது,அவர்களின் முடிகளில் இருந்த மலர்களிலிருந்து ஒழுகிய தேன் பெருமானின் திருவடிகளை நனைத்தது என்று கூறுகின்றார். தலைகளைக் குனித்து வணங்கும் போது, மகுடங்களில் சூட்டப்பட்டுள்ள மலர்களும் சாய்கின்றன அல்லவா. நைய வைத்தார்= மேன்மேலும் அன்பு பெருகுதலால் மனம் நைந்து போதல்; மனம் மேலும் இளகுதல்; உலகியல் பாசங்கள் சிறிது சிறிதாக கழிந்து அறவே அழிந்து போன நிலையை குறிப்பிடுவதாகவும் பொருள் கூறுவார்கள். மறுபடியும் மறுபடியும் நம்மை பிறவிப் பெருங்கடலில் ஆழ்த்துவதால், வினைகள் தீவினைகள் என்று குறிக்கப் பட்டுள்ளன. திருகு=முறுகிய, வலிமையான, அதிகமான; இனம்= கூட்டம்: துருவி=தேடி; பில்கு=ஒழுகிய; தேவர்கள் கூட்டமாக கூடி, பெருமான் இருக்கும் இடம் தேடிக் கொண்டு வந்து பெருமானின் திருவடிகளை வணங்குவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தன்னையே நினைந்து உருகும் அடியார்களின் தீவினைகள், அவர்கள் பால் சாராமல் நீக்குபவர் சிவபெருமான் என்று முதல் அடியில் அப்பர் பிரான் கூறுகின்றார். தீவினைகள் நீக்கப்படுவதால் சிவபிரானை நினைந்து உருகும் அடியார்களின் பிறவிப்பிணி நீங்குகின்றது. பிறவிப்பிணி நீங்கி முக்திபேறு பெரும் ஆன்மாக்கள் இறைவனுடன் இணைந்து என்றும் அழியாத பேரானந்தம் பெறுகின்ற நிலை ஏற்படும் என்பதை உணர்ந்தால் யார் தான் இறைவனிடம் மேலும் அன்பு கொள்ள மாட்டார்கள். இந்த செய்தியைத் தான், நினைந்து உருகும் அடியார்களின் தீவினைகள் அவர்களைச் சார்ந்து நில்லாமல் விலகுமாறுச் செய்வதால் சிவபெருமான் பால் அடியார்கள் வைத்துள்ள அன்பு மேன்மேலும் பெருகுகின்றது என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்

சினந்திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர்

இனந்துருவி மணி மகுடத்து ஏறத் துற்ற இனமலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கி

நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

இவ்வாறு எண்ணற்ற தேவர்களின் மணிமகுடங்கள் பதிந்த பெருமானின் திருவடிகள் எவ்வாறு இருக்கும் என்று காரைக்கால் அம்மையாரின் தாயுள்ளம் நினைத்துப் பார்க்கின்றது. அந்த நினைப்பு ஒரு கற்பனையாக மிளிர்வதை நாம் அற்புதத் திருவந்தாதி பதிகத்தின் ஒரு பாடலில் காணலாம். பலரும் குழந்தையின் அழகினைக் கண்டு, தங்களது பாராட்டினைத் தெரிவிக்க குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டால், அந்த கன்னம் கன்றிப் போய் சிவந்து விடுவதால், குழந்தையின் அன்னைக்கு பலரும் பாராட்டி குழந்தையை முத்தமிடுவது சில சமயங்களில் பிடிக்காமல் போய்விடுகின்றது அல்லவா. இதே தன்மையில் காரைக்கால் அம்மையாரின் கற்பனை விரிகின்றது. எண்ணற்ற தேவர்கள் பலரும், இறைவன் பால் தங்களுக்கு உள்ள பரிவினை காட்ட, முடி அணிந்த தலைகளால் பெருமானின் திருவடியை வணங்க, அந்த முடிகளின் தழும்பேறி பெருமானின் பாதங்கள் காண்பதற்கு அழகின்றி உள்ளது என்று வருந்துகின்றார். முசிந்து=நலிவடைந்து

விசும்பில் விதி உடைய விண்ணோர் பணிந்து

பசும்பொன் மணி மகுடம் தேய்ப்ப — முசிந்து

எந்தாய் தழும்பேறியே பாவ பொல்லாவாம்

அந்தாமரை போல் அடி.

விலை உயர்ந்த மாணிக்கக் கற்கள் என்றாலும் அவை தங்களது தன்மையில் கற்கள் தாமே, அவை இடைவிடாது தோய்ந்தால், தாமரை மலர் ;போன்று மெல்லிய பாதங்கள் நலிவடையத் தானே செய்யும். இதனால் அல்லவா, திருப்புகலூரில் உழவாரப் பணி செய்த, அப்பர் பெருமான் குப்பைகளுடன் கலந்து இருந்த மாணிக்கக் கற்களை, அவை அடியார்களின் பாதங்களில் குத்தி இடர் விளைவிக்குமே என்று கவலையில், அவற்றை வாரி தூக்கி எறிந்தார். அதே எண்ணம் தான் காரைக்கால் அம்மையாரின் தாயுள்ளத்திற்கும் இங்கே தோன்றுகின்றது.

மணிமுடி தரித்த எண்ணற்ற தேவர்கள் தில்லை அம்பலத்துக் கூத்தனை வணங்க வந்து, ஒருவருடன் மற்றொருவர் நெருங்கி நிற்கும் நிலையினை கற்பனை செய்யும் கண்டராதித்தர் (திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறை) கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காண்போம். உக்க=சிந்திய; திருமால், நான்முகன் மற்றுமுள்ள எண்ணற்ற தேவர்கள், பெருமானின் சன்னதியில் நெருங்கி நிற்பதால், அவர்களது மணிமுடிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, மகுடத்தில் இருக்கும் கற்கள் உதிர்ந்து கீழே விழ, அவற்றை தில்லை அம்பலத்து அடியார்கள் துடைப்பத்தால் பெருக்கித் தள்ளுகின்றார்கள் என்று கண்டராதித்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அப்பர் பிரானைப் போன்று தில்லை அடியார்களும் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்கும் திறத்தினராக இருந்து விலை உயர்ந்த கற்களையும் புறக்கணிக்கும் பற்றற்றவர்களாக இருந்தனர் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

நெடியானோடு நான்முகனும் வானவரும் நெருங்கி

முடியால் முடிகள் மோதி உக்க முழுமணியின் திரளை

அடியார் அலகினால் திரட்டும் அணி தில்லை அம்பலத்துக்

கடியார் கொன்றை மாலையானைக் காண்பதும் என்று கொலோ

கண்டராதித்தர் செய்தது போன்ற கற்பனையை திருமாளிகைக் தேவர் செய்வதை நாம் கீழ்க்கண்ட திருவிசைப்பா (ஒன்பதாம் திருமுறை) பாடலில் காணலாம். நெருங்கி நின்ற தேவர்கள் தங்கள் தலையில் அணிந்துள்ள கிரீடங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால், பெயர்ந்து விழும் இரத்தினக் கற்கள் பெருமானின் சன்னதியின் வாயிற்படியில் விழுந்து ஒளியுடன் மிளிர்கின்றன என்று திருமாளிகைத் தேவர் இங்கே கூறுகின்றார். கருவடி குழை=நீண்ட குழை அணிந்த பெரிய காது; பிறங்கிய=ஒளிவீசிய; முன்றில்=முற்புறம்; அமலம்=தூய்மையான, களங்கமற்ற; செங்கமலம் போன்று அழகாக விளங்கும் பெருமானின் திருமுகம் தனது சிந்தனையில் பதிந்ததாக திருமாளிகைத் தேவர் இந்த பாடலில் கூறுகின்றார்.

திருநெடுமால் இந்திரன் அயன் ஆவோர் திருக்கடைக் காவலில் நெருக்கிப்

பெருமுடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்

செகு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பலக் கூத்தா

கருவடி குழைக் காது அமலச் செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே

உயர்கொடி ஆடை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (ஒன்பதாம் திருமுறை) திருமாளிகைத் தேவர், பெருமானின் திருவடிகளை, தேவர்களின் மணிமுடிகள் தோய்ந்த திருவடிகள் என்று குறிப்பிடுகின்றார். மயர்=அஞ்ஞானம் ஆகிய இருள்; தங்களது மனதினில் இருந்த இருள் நீங்கிய தேவர்கள் தங்களது மகுடங்கள் இறைவனின் திருவடிகளில் படுமாறு பணிந்து வணங்குகின்றார்கள் என்று இந்த பாடலில் திருமாளிகைத் தேவர் கூறுகின்றார். முதல் மூன்று அடிகளில் தில்லைச் சிதம்பரத்தின் செல்வச் செழிப்பு குறிப்பிடப் படுகின்றது. வீடுகளின் மாடங்களில் பறக்கும் சிறந்த துணிகளால் செய்யப்பட்ட கொடிகளின் மேல் வேள்வியிலிருந்து எழும் ஓமப்புகைகளும், வீடுகளிலிருந்து எழும் அகிற்புகைகளும் படிந்து காணப்படும் சிதம்பர நகரத்தினில் உள்ள சிற்றம்பலத்தில் தங்கம் நிறைவாக பதிக்கப் பட்டுள்ளது என்று இந்த பாடல் உணர்த்துகின்றது.

உயர்கொடி ஆடை மிடை படலத்தின் ஓமதூப படலத்தின்

பியர் நெடுமாடத்து அகில் புகைப் படலம் பெருகிய பெரும்பற்றப் புலியூர்

சியரொளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பலக் கூத்தா

மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர்ச் சேவடிகள் என் மனத்து வைத்து அருளே

இணங்கிலா ஈசன் என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகத்தின் (ஒன்பதாம் திருமுறை) பத்தாவது பாடலில் திருமாளிகைத் தேவர், எண்ணற்ற தேவர்கள் தங்கள் மணிமுடிகள் அணிந்த தலைகளால் பெருமானின் திருவடிகளை வணங்குவதால், பெருமானின் திருவடிகள் தேவர்களின் முடிகளில் விளங்கும் கற்களின் ஒளியில் மிளிர்கின்றது என்று கூறுகின்றார். ஆசை=அன்பினால் விளையும் ஆசை; பெருமான் பால் அன்பு கொள்ளாத, முரடர்களை, உள்ளத்தில் தெளிவில்லாத அறிவிலிகளை, உள்ளத்தில் அஞ்ஞானம் நிறைந்த மூடர்களை, வம்பு பேசுபவர்களை, ஆண் தன்மையற்றவர்களை, தனது கண் காணாது என்றும் அவர்களுடன் தன் வாய் பேசாது என்று இந்த பாடலில் குறிப்பிட்டு சாடுவதை நாம் உணரலாம். ;

விண்ணவர் மகுடகோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும்

அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசையில்லாத்

தெண்ணரைக் தெருளா உள்ளத்து இருளரை திட்டை முட்டைப்

பெண்ணரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே

திருவாசகம் திருவெம்பாவை பதிகத்தின் ஒரு பாடலில் (8.7.18) மாணிக்கவாசகர், பெருமானின் திருப்பாதங்களின் ஒளியின் முன்னே, அந்த பாதங்களை தங்களது தலைகள் சாய்த்து வணங்கும் வானவர்களின் மகுடங்களில் காணப்படும் விலையுயர்ந்த கற்கள் தங்களது ஒளி மங்கி காணப்படுகின்றன என்று கூறுகின்றார். வீறு அற்றால் போல்=தனித்தனியாக சிதறியது போல்; கண்ணார் இரவி=காணும் இடம் தோறும் நிறைந்து நிற்கும் சூரியன்; கரப்ப=மறைக்க;

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றால் போல்

கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள் தாம் அகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கு ஒளி சேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்

பெண்ணே இப்பூம் புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

தேவர்களின் மகுடங்களில் காணப்படும் கற்கள் ஒளி மங்கியதற்கு அடிகளார் காட்டும் உதாரணம் நாம் அன்றாடம் காணும் காட்சியே. இரவில் நம்மால் வானில் தோன்றும் ஒளி வீசும் நட்சத்திரங்கள் அனைத்தையும் காண முடிகின்றது. ஆனால் மறுநாள் காலை பொழுது விடிந்து சூரியன் உதித்த பின்னர்,வானமண்டலத்தில் அதே இடத்தில் நட்சத்திரங்கள் இருந்தாலும், சூரியனின் ஒளியின் முன்னே அவைகளின் ஒளி மங்கிவிடுவதால், நட்சத்திரங்களின் ஒளி சிதறியது போல் நமக்கு தோன்றுகின்றது. பகலில் சிதறும் நட்சத்திரங்களின் ஒளியை மழுங்கச் செய்யும் கதிரவன் போன்று, பெருமானின் பாத கமலங்கள் பிரகாசிக்கின்றன என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். மணிமுடி ஒளி மழுங்கி நிற்பதற்கு பேராசிரியர் அ.சா. ஞானசம்பந்தம் அவர்கள் அளிக்கும் விளக்கம் இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும். அமுதம் உண்டு இறவாத நிலை பெற்றோம் என்ற அகங்காரம் தேவர்களின் தலைகளின் பொருந்தி இருப்பதாகவும், அவர்களது அறிவு மற்றும் அகங்காரம் புலப்படும் வண்ணம் அவர்களின் நடத்தை உள்ளது என்றும், பெருமானின் சன்னதியில் அவர்களது அறிவும் அகங்காரமும் செயலிழக்கின்றன என்று பேராசிரியர் விளக்கம் அளிக்கின்றார். எனவே தான் பெருமானை வணங்கும் போது நாம் பணிவுடன் வணங்க வேண்டும் என்று அருளாளர்கள் கூறுகின்றனர்.

பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.41.9) திருஞானசம்பந்தர், முடியுடை அமரர் முறையாக பெருமானின் திருவடிகளைப் பணிந்து ஏத்துகின்றனர் என்று கூறுகின்றார். கடி=நறுமணம்; திருமாலும் பிரமனும் காதலோடு அடிமுடி தேடினார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுவது சற்று சிந்திக்கத் தக்கது. தங்களில் யார் பெரியவர் என்பதை முடிவு செய்யும் பொருட்டு, அடிமுடி தேடும் முயற்சியில் முதலில் ஈடுபட்ட திருமாலும் பிரமனும், தங்களது கடினமான முயற்சி பயன் அளிக்காது என்பதை உணர்ந்த பின்னர், பெருமானின் கருணையை வேண்டி நின்ற போது, பெருமான் அவர்களுக்கு இலிங்க உருவினனாக காட்சி அளித்தான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு அவர்கள் இருவரும் பெருமானை வேண்டி நின்ற தன்மையை தான், காதலோடு அடி முடி தேட என்ற தொடர் மூலம் திருஞான சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். அன்புடன் தன்னை நெருங்க நினைக்கும் உயிர்கள் அனைத்திற்கும், அந்த உயிர்களுடன் பிணைந்திருக்கும் வினைகள் தீர்த்து அருள் புரியும் பரமன் என்பதை இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். படி=தகுதி. தேவர்களும் முனிவர்களும் தொழுது வணங்கும் தகுதி படைத்தவராக பெருமானும் பிராட்டியும் விளங்குகின்றனர் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

கடிபடு கமலத்து அயனொடு மாலும் காதலோடு அடிமுடி தேடச்

செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யும் தீவணர் எம்முடைச் செல்வர்

முடியுடை அமரர் முனிகணத்தவர்கள் முறைமுறை அடி பணிந்தேத்தப்

படியதுவாகப் பாவையும் தாமும் பாம்புர நன்னகராரே

திருக்களர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.7) திருஞானசம்பந்தர், நறுமணம் நிறைந்த மலர்களை பெருமானின் திருவடிகளில் தூவி வானவர் தொழுகின்றனர் என்று கூறுகின்றார். எப்போதும் பறந்து கொண்டிருக்கும் மூன்று பறக்கும் கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயத்தில் மட்டுமே, ஒரே அம்பினைச் செலுத்தி தங்களது கோட்டைகள் அழிக்கப் படலாம் என்ற வரத்தினைப் பெற்றிருந்த திரிபுரத்து அரக்கர்கள், மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வருவதை தவிர்ப்பதன் மூலம், தங்களை எவரும் வெல்ல முடியாது என்று செருக்குடன் திரிந்தனர். மேலும் பெருமானின் ஆற்றலின் முன்னே தங்களின் வலிமை ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ளாமல் இருந்தனர். பெருமானின் ஆற்றலின் முன்னர், தங்களது வலிமை எள்ளளவும் பயன்படாது என்பதை உணராதவர்களாக அவர்கள் இருந்த தன்மை, தம் பலம் அறியாதவர் என்ற தொடர் மூலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. தாங்கு மால் வரை=உலகைத் தாங்கும் மேரு மலை; திண்=சிறந்த; வம்பு=நறுமணம்; வம்பலர்=விரிந்து நறுமணம் பரப்பும்; மேரு மலையை வில்லாக வளைத்து, அந்த வில்லினில் ஒரு அம்பினைப் பொருத்தி திரிபுரத்தவர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்த செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழத்

திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்

வம்பலர் மலர் தூவி நின்னடி வானவர் தொழக் கூத்துகந்து பேர்

அம்பலத்து உறைவாய் அடைந்தார்க்கு அருளாயே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.79.6) திருஞானசம்பந்தர், தேவர்கள் தங்களது முடிகளைத் தாழ்த்தி பெருமானை வணங்குகின்றார்கள் என்று கூறுகின்றார். இந்த பாடலில், மனித உயிர்கள் பின்னால் விளைகின்ற துன்பத்தினை எண்ணிப் பாராது, அந்த நொடிப் பொழுதினில் தாம் விருப்பத்துடன் எதிர்நோக்கும் சிறு இன்பத்தினை அனுபவிக்கத் துடிக்கும் நிலையில் இருப்பதை ஒரு சிறந்த உதாரணத்துடன் விளக்குகின்றார். ஐந்து தலை பாம்பின் வாயில் உள்ள தேரையின் வாயிலிருக்கும் வண்டு பூக்களில் இருந்து ஒழுகும் தேனைச் சுவைத்து இன்புறலாம் என்று விரும்பும் தன்மைக்கு ஒப்பிடுகின்றார். தான் இருப்பதோ தேரையின் வாய்; அதனால் எந்த நிமிடமும் தேரையால் விழுங்கப்படலாம் என்பதை சிறிதும் உணராது தேனைச் சுவைப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வண்டு போன்று, நிலையாமை என்ற பாம்பினால் எப்போது வேண்டுமானாலும் விழுங்கப் படலாம் என்பதையும் சிந்தியாது பலவகையான சிற்றின்பங்களை நாடுவதையும், அந்த சிற்றின்பங்களின் விளைவால் நாளை நேரவிருக்கும் துன்பத்தையும் எண்ணிப் பார்க்காமல், தனது புலன்களுக்கு இன்பம் தேடுகின்ற தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று, திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறும் பாடல். ஐம்பாம்பின் வாய்த் தேரை என்று ஐந்து புலன்களின் ஆளுமையில் அகப்பட்டு தவிக்கும் உயிரை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஐம்புலன்களின் ஆளுமையில் சிறைப்பட்டு வாழும் நெஞ்சினைக் கொண்ட உயிர் என்று ஐம்பாம்பின் வாய்த் தேரை வாய் வண்டு என்று உயிரின் தன்மையை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த நிலையிலிருந்து மீள வேண்டும் என்று விரும்பும் உயிர், திருவாரூர்ப் பெருமானைப் பணிந்து வணங்கி வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று கூறுகின்றார்.

செடிகொள் நோய் யாக்கை ஐம்பாம்பின் வாய்த் தேரை வாய்ச் சிறு பறவை

கடிகொள் பூந்தேன் சுவைத்து இன்புறலாம் என்று கருதினாயே

முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்து முக்கண்

அடிகள் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.81.1) திருஞானசம்பந்தர், தேவர்கள், வேத கீதங்களை பாடியவாறு பெருமானின் திருப்பாதங்கள் மீது நறுமணம் மிகுந்த மலர்கள் தூவி வழிபடுவதாக கூறுகின்றார். ஓதம்=கடலலைகள்;

பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்

ஒதத்தின் ஒலியொடும் உம்பர் வானவர் புகுந்து

வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்தேத்தும்

பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே

தெளிச்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.3.1) திருஞானசம்பந்தர், அனுதினமும் மூன்று வேளைகளில் தேவர்கள் புதியதாக மலர்ந்த மலர்கள் கொண்டு வந்து இறைவனின் பொற்கழல்கள் மீது தூவி இறைவனை வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார். மேவரும்=உயர்ந்த, யாவராலும் செய்ய முடியாத செயல்களைச் செய்யும் பிராட்டி என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் எண்ணத்தை செயலாக செய்து முடிப்பவள் பிராட்டி என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. கேழல்=பன்றி; காட்டினில் தவம் செய்து கொண்டிருந்த விஜயனைத் தாக்க வந்த பன்றியின் வடிவத்தில் மறைந்திருந்த மூகாசுரன் என்ற அரக்கனை. அம்பெய்தி பெருமான் வீழ்த்திய செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. இதே பதிகத்தின் கடைப் பாடலில் திருஞானசம்பந்தர், விண்ணவர் அடி தொழ விளங்கினான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

பூவலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொற்கழல்

தேவர் வந்து வணங்கு மிகு தெளிச்சேரியீர்

மேவரும் தொழிலாளொடு கேழற்பின் வேடனாம்

பாவகம் கொடு நின்றது போலுனும் பான்மையே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.3.2) திருஞானசம்பந்தர், தேவர்கள், பெருமானின் திருப்பாதங்களைத் தொழுது வணங்குகின்றனர் என்று கூறுகின்றார். நிலையுறும் இடர்=நிலையாக உயிருடன் இணைந்து நிற்கும் ஆணவமலம். ஆணவமலம் என்றும் அழியாது, நெல்லுடன் உமி ஒட்டி இருப்பது போன்று, உயிருடன் ஒட்டி இருக்கும் ஆணவ மலத்தினை அடக்கத் தான் முடியுமே தவிர அதனை முற்றிலுமாக ஒழித்து விட முடியாது. எனவே தான் ஆணவமலம் வலுவடைந்து நிற்காத வண்ணம் என்று இங்கே திருஞானசம்பந்தர், நிலையாத வண்ணம் என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். அலைவரு=வருத்தும் நோக்கத்துடன்; இலையுறு மலர்கள்=இலைகளும் மலர்களும், ஏத்துதல்=புகழ்ந்து போற்றுதல் அரிவை=இளம் பெண், இங்கே பார்வதி தேவி; வெருவ=அச்சம் கொள்ளும் வண்ணம்; வன்தோல்=வலிமையான தோல்; கரி=ஆண்யானை; மன்னினை=நிலை பெற்று இருத்தல்; இலையும் மலரும் கொண்டு பெருமானுக்கு அர்ச்சனை செய்து அவரைப் புகழ்வோம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். விபூதிப் பச்சிலையை கரந்தை என்று தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்வதை, சிவபெருமான் மிகவும் விரும்புவதாக கூறுவார்கள். வில்வத்தின் ஐந்து வகைகளாக, நொச்சி, கூவிளம், மாவிலங்கை, கிளுவை மற்றும் விளா இலைகள் கருதப்படுகின்றன. வன்னி இலைகளும் பெருமானை அர்ச்சனை செய்வதற்கு உகந்ததாக கருதப் படுகின்றது.

நிலையுறும் இடர் நிலையாத வண்ணம்

இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம்

மலையினில் அரிவையை வெருவ வன் தோல்

அலை வரு மதகரி உரித்தவனே

இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி

உமையாளொடு மன்னினை உயர் திரு அடி இணையே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.7.3), அப்பர் பிரான், தேவர்கள் பெருமானை முப்போதும் முடி சாய்த்து மலர்கள் தூவி காதலித்து வழிபட்டதாக கூறுகின்றார். போது=அரும்பு: அப்போது மலர்=அப்பொழுது புதியதாக பூத்த மலர்: வானுலகத்தில் உள்ள தேவர்கள் மூன்று பொழுதும், தங்களது கைகளால் மலர்வதற்கு தயாராக உள்ள அரும்புகளையும், புதியதாக மலர்ந்த மலர்களையும், இறைவனின் திருமேனியின் மீது தூவி, மிகுந்த அன்புடன் தங்களது தலைகளைத் தாழ்த்தி வணங்கி, தங்களுக்கு முதல்வனான இறைவனைத் தொழுகின்றார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பதிகத்தின் முதல் இரண்டு அடிகளில் தேவர்கள் எவ்வாறு இறைவனைத் தொழுகின்றனர் என்பதை குறிப்பிடும் அப்பர் பிரான், அடுத்த இரண்டு அடிகளில் தான் பெருமானை வழிபடும் தன்மையை குறிப்பிடுகின்றார். சிவபெருமானை, அந்த பொழுதினில் பூத்த மலர்களைக் கொண்டு வழிபட்டு, எனது ஐந்து புலன்களையும் அடக்கி, மனதினை ஒருமுகப் படுத்திய அடியேன், எனக்கு இனியவனான பெருமானை எனது மனத்தினுள்ளே வைத்துள்ளேன் என்று அப்பர் பிரான் தனது செயல்களைக் குறிப்பிடும் பாடல். இந்த பாடலை, அனுதினமும் சிவபெருமானை பூஜை செய்து வழிபடும் அடியார்கள், பூஜை முடிந்தவுடன், பாட வேண்டிய பாடலாக பெரியோர்களால் கருதப் படுகின்றது.

கைப்போது மலர் தூவிக் காதலித்து வானோர்கள்

முப்போது முடி சாய்த்துத் தொழ நின்ற முதல்வனை

அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்தடக்கி

எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே

ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.1) அப்பர் பிரான், ஒருங்கிய மனத்துடன் மலர்களைத் தூவி பெருமானின் திருவடிகளை விண்ணவர் காண்கின்றனர் என்று கூறுகின்றார். வேதியன்=மறைகளையும் அதன் பொருளையும் நன்கு உணர்ந்தவன்: அண்ணா=தலைவன்; ஓதியே மலர்கள் தூவி என்ற செயலை அப்பர் பிரானுடன் இணைத்துப் பொருள் காண்பதும் சிறப்பே. இந்த முறையில், இறைவனை மனம், மெய், மொழிகளால் அப்பர் பிரான் செய்த வழிபாடு உணர்த்தப் படுகின்றது. மனம் ஒன்றுபட்டு, வாயினால் இறைவனின் திருநாமங்களை கூறியவாறே, இறைவனின் திருமேனியின் மேல் பூக்களைத் தூவியவாறு தான் வழிபட்டதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் என்றும் தந்தையாக இருப்பவன் இறைவன் என்பதால், இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அப்பனே என்று அப்பர் பிரான் இறைவனை அழைக்கின்றார். மறைகளையும் அதன் பொருளையும் நன்கு உணர்ந்தவனே, மறைகளால் புகழப்படும் பெருமானே, விண்ணவர்கள் அனைவருக்கும் மூத்தவனே, என்று உனது திருநாமங்களை ஓதியவாறே, உனது திருமேனியின் மீது மலர்கள் தூவி, ஒன்றிய மனத்துடன் வழிபட்டு வரும் அடியேன், உனது திருப்பாதங்களைக் காண ஆசைப்படுகின்றேன். பார்வதி தேவியை உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனே, படர்ந்து காணப்படும் சடையில் சந்திரனைச் சூடிய பெருமானே, அனைவர்க்கும் முந்தியவனே, ஆலவாயில் அப்பனே, உனது திருவடிகளை அடியேன் காணுமாறு நீ அருள் புரியவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவதாக அமைந்த பாடல்.

வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்றென்று

ஓதியே மலர்கள் தூவி ஒருங்கி நின் கழல்கள் காணப்

பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியம் சூடும்

ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.66.6) அப்பர் பிரான், திரளாக ஒன்று கூடி அமரர்கள், தங்களது முடியால் பெருமானை வணங்கி நின்றனர் என்று கூறுகின்றார். பிறை=இளம்பிறையாகிய சந்திரன்; நான்மறையவன்=நான்கு வேதங்களையும் ஓதும் பிரமன்; முறைமுறை என்று அடுக்குச் சொற்களை பயன்படுத்தி திரளாக அமரர்கள் கூடி இறைவனை வணங்குவதை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நறவு=நறுமணம்; நறுமணம் மிகுந்த பூக்கள் தூவப்பட்டு, அத்தகைய பூக்களால் திருவடியும் நறுமணம் கமழும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. இளம்பிறையாக தன்னிடம் வந்து சரண் அடைந்த சந்திரனைத் தனது சடையில் அணிந்து சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்தவர் சிவபெருமான். அவர் தனது உடலின் ஒரு பாகத்தில் உமையம்மையை ஏற்றுள்ளார்; வேதங்களை ஒதுபவராக விளங்கும் பெருமான், எப்போதும் வேதங்கள் ஓதியவாறு படைப்புத் தொழிலில் ஈடுபடும் பிரமன் உள்ளிட்ட பல தேவர்கள் திரண்டு, தங்களது தலைகளை சாய்த்து வணங்கப் படுபவராக விளங்குகின்றார். அவரை வழிபடும் அடியார்கள், அவரது திருப்பாதங்களில் நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி வழிபடுவதால், அவரது திருப்பாதங்கள் நறுமணம் கமழ்கின்றன. இவ்வாறு காணப்படும் பெருமான், நாகேச்சரம் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிறையுறு சடையர் போலும் பெண்ணொரு பாகர் போலும்

மறையுறு மொழியர் போலும் நான்மறையவன் தனோடும்

முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற

நறவமர் கழலர் போலும் நாக ஈச்சரவனாரே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.72.1) அப்பர் பிரான், கோடி வானவர்களின் மகுடங்கள் சென்றடைந்த சேவடி என்று பெருமானின் திருவடிகளை குறிப்பிடுகின்றார். மிடைந்த=கலந்த; ஏகன் அநேகன் என்பது திருவாசகத் தொடர். ஒப்பற்ற ஒருவனாக இருக்கும் பெருமான், எண்ணற்ற உருவங்கள் உடையவனாக இருக்கும் தன்மை இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. அப்பர் பிரானும் இந்த நிலையினை இந்த பாடலில் உணர்த்துகின்றார். எண்ணுரு என்ற சொல்லுக்கு, எட்டு உருவங்கள் என்று பொருள் கொண்டு, இறைவன் ஐந்து பூதங்கள் இரண்டு சுடர்கள் மற்றும் ஆன்மாவாக அட்ட மூர்த்தியாக இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது என்பதும் பொருத்தமே. எண்ணற்ற தேவர்கள் என்று உணர்த்த கோடி என்ற சொல்லினை அப்பர் பிரான் இங்கே பயன்படுத்தி உள்ளார். எண்ணற்ற தேவர்கள் தங்களது முடிகள் அணிந்த தலைகளை சாய்த்து, பெருமானது திருவடிகளில் தங்களது முடிகள் இணையுமாறு வணங்குகின்றார்கள். அத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகளை உடைய இறைவன், பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகத்தில் கொண்டவர்; தேவி அவரது உடலின் ஒரு பாகத்தில் இருப்பதால், அவர் ஆணாகவும் பெண்ணாகவும், ஆணும் பெண்ணும் கலந்த அலி உருவமாகவும் திகழ்கின்றார். அவர் கருநிற வண்ணனாகிய திருமாலும் பிரமனும் காணாத வண்ணம், மலை போன்று நெடிது உயர்ந்த தீப்பிழம்பாக நின்றவர் ஆவார். தனது அடியார்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப எண்ணற்ற உருவங்களை எடுக்க வல்ல பெருமான், இன்னம்பர் தலத்தில் உறையும் தலைவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும்

பெண்ணொரு பாகர் போலும் பேடு அலி ஆனார் போலும்

வண்ண மால் அயனும் காணா மால் வரை எரியர் போலும்

எண்ணுரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.80.8) அப்பர் பிரான், இந்திரனும் தேவர்களும் பெருமானின் திருப்பாதங்களைத் தவிர்த்து தமக்கு பற்றுகோடு வேறேதும் இல்லை என்று குறிப்பிட்டு பெருமானை வணங்கினார்கள் என்று கூறுகின்றார். பரவை=கடல், இங்கே பாற்கடல்: சுரர்=தேவர்கள், சுரபதி=இந்திரன்: அனங்கன்=உருவம் இல்லாதவன், மன்மதன். தனது தவத்தினைக் கெடுக்க முயன்ற மன்மதனை, தனது நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கி அவனது உடலினை எரித்த பின்னர், இரதி தேவி இறைவனிடத்தில், தனது கணவன் மன்மதனுக்கு உயிர்ப் பிச்சை தருமாறு வேண்டினாள். இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபிரான் மன்மதனை உயிர்ப்பித்தார்: ஆனால் உயிர் பெற்ற மன்மதனை இரதி தேவி மட்டுமே காணமுடியும் என்றும் மற்றவர்களின் கண்ணுக்கு மன்மதன் தோன்ற மாட்டான் என்ற நிபந்தனையும் விதித்தார். இவ்வாறு மற்றவர்களுக்கு உருவம் ஏதும் இல்லாதவனாகவும், தனது மனைவி இரதி தேவிக்கு மட்டும் உருவத்துடன் காட்சி அளித்தமையாலும், மன்மதன், உருவம் இல்லாதவன், அங்கம் இல்லாதவன் என்று பொருள்பட அனங்கன் என்று அழைக்கப் பட்டான். அனங்கன் என்று குறிப்பிட்டு, இறைவன் நெற்றிக் கண்ணால் நிகழ்த்திய வீரச் செயலையும், மன்மதனை உயிர்ப்பித்த இறைவனது கருணையையும் ஒரு சேர உணர்த்தும் விதத்தில் அனங்கன் என்ற இங்கே அப்பர் பிரான் கையாண்டுள்ளார்.

சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால்

பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான்

செற்று அங்கு அனங்கனைத் தீ விழித்தான் தில்லை அம்பலவன்

நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே

தேவர்களும் தேவர்கள் தலைவன் இந்திரனும், சுற்றிலும் சூழ்ந்து கொண்டு, சிவபிரானே உனது திருப்பாதங்கள் அல்லாமல் எங்களுக்கு வேறு பற்றுக்கோடு இல்லை என்று இறைஞ்சி, தங்கள் அனைவரையும் பாற்கடலிலிருந்து எழுந்த விடத்தின் தாக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று வேண்ட, அவர்களை காப்பாற்றும் வண்ணம், ஆலகால விடத்தை உண்டவன் தில்லை அம்பலத்தில் நடமாடும் சிவபெருமான். அத்தகைய வல்லமை வாய்ந்த சிவபெருமான், மிகுந்த கோபத்துடன் மன்மதனை எரித்து, அவனை உருவம் ஏதும் இல்லாதவனாக மாற்றினான். இவ்வாறு மன்மதனை விழித்து எரித்த, நெற்றிக் கண்ணினைக் கண்ட கண்களுக்கு, அதனினும் மேம்பட்ட காட்சி வேறேதும் உளதோ, இல்லை என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

தேவர்கள் பெருமானது திருவடிகளில் மலர் தூவி வணங்கினாலும், அவர்களின் மனதினில் அடிப்படையாக தாங்களும் சிவபெருமானைப் போன்று தேவர்கள் என்ற எண்ணம் ஓங்கி இருப்பதால், பெருமான் அவர்கள் தூவி வழிபடும் மலர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் அவ்வாறு ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், அந்த மலர்கள் பெருமானின் திருவடிகளை மறைப்பதில்லை என்றும், பெருமானின் திருவடிகள் பவள நிறத்துடன் காணப்படுகின்றது என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் (4.92.10) கூறுகின்றார். நின்போல் அமரர்கள்=உன்னைப் போலவே தாங்களும் தேவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் அமரர்கள் உழக்குதல்=அன்பின்மை கருதி ஏற்றுக் கொள்ளாது இருத்தல்: பைம்போது=கற்பகம், மந்தாரம் எனப்படும் தேவலோகத்தில் கிடைக்கும் மலர்கள்: நிமிர்த்து=மனதினில் பணிவு, அன்பு இல்லாத காரணத்தால் நிமிர்ந்த மனது: உகுத்தல்=சிந்துதல், தூவுதல்:

நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்த்து உகுத்த

பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன பாங்கறியா

என் போலிகள் பறித்திட்ட இலையும் முகையும் எல்லாம்

அம்போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே

ஐயாறனின் திருவடிகள், தன்னைப் போன்று சைவ சமய நியமங்கள் தெரியாது இறைவனை வழிபடும் அடியார்கள், அறியாமையால் இடும் இலைகளையும் மொக்குகளையும், தனக்கே உரிய பெருந்தன்மையுடன் அன்று மலர்ந்த புதிய பூக்களாக ஏற்றுக் கொண்டு அத்தகைய அடியார்களுக்கு நன்மை அளிப்பன: சிவபிரானைப் போன்று தாங்களும் தேவர்கள் என்ற எண்ணத்துடன், உடலளவில் தங்களது தலையினை சாய்த்து சிவபிரானை வணங்கினாலும், மனதினில் பணிவு, பக்தி ஏதும் இன்றி நிமிர்ந்த மனத்துடன் வணங்கும் தேவர்கள், உயர்ந்த மலர்களாகிய கற்பகம் மந்தாரம் கொண்டு, சிவபிரானின் திருப்பாதங்களில் தூவினாலும் அந்த மலர்களை பெருமான் ஏற்றுக் கொள்ளாது விலக்குவதால், அத்தகைய மலர்களால் திருவடிகள் மறைக்கப் படாமல், பவள நிறத்துடன் பெருமானின் திருவடிகள் காணப்படும் என்று அப்பர் பிரான் கூறும் பாடல். இதன் மூலம் அன்புடன் நாம் பெருமானை வழிபடவேண்டும் என்று உணர்த்துகின்றார். நமது மனதினில் வஞ்சனை ஏதுமின்றி நாம் பெருமானை வணங்க வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துவது நமக்கு மாசில் வீணையும் என்ற பதிகத்துப் பாடல் ஒன்றினையும் (5.90.9) நினைவூட்டுகின்றது.

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு

நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே

பொக்கம்=பொய்ம்மை. தனது நடிப்பினால் ஒருவன் மனிதர்களை ஏமாற்றலாம். மனத்தளவில் இருக்கும் வஞ்சனையை மறைத்து, ஒருவரை மதிப்பது போலும் வணங்குவது போலும் நடித்து ஏமாற்றுவது எளிது. ஆனால் இறைவனை அவ்வாறு ஏமாற்ற முடியாது என்று அப்பர் பிரான் நமக்கு எச்சரிக்கை தருகின்றார். நெக்கு=உள்ளம் நெகிழ்ந்து; உள்ளம் நெகிழ்ந்து சிவபிரானை வழிபடுவார் மனதினில் புகுந்து உறையும் பொன் போன்ற சடையினை உடைய சிவபிரான்,பொய்ம்மையாளர் செய்யும் வழிபாட்டினை உணர்ந்து அவர்களின் மடமையை நினைத்து அவர்களை நாணி அவர்களை நோக்கி ஏளன நகையுடன் சிரித்து நிற்பான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

பெருமானின் திருவடிகளை வானோர்கள், தங்களது சிரம் தாழ்த்தி வணங்குவதால், அவர்களின் மகுடத்தில் பெருமானின் திருவடிகள் நிலையாக இருக்கின்றன என்று அப்பர் பிரான் ஐயாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.92.11) கூறுகின்றார். மனத்தன=மனதினில் இருப்பன: உமையம்மை சிவபிரானை மனதினில் நிறுத்தி தவம் செய்த வரலாறு உணர்த்தப் படுகின்றது. புலை=புன்மைத் தன்மை, இழிந்த நிலை; அலைகள் மிகுந்த காவிரி நதியால் சூழப்பட்ட திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறனின் திருவடிகள், மலையரசனின் மகளாகிய உமையம்மையின் மனதினில் நிலையாக இருப்பன; இறைவனின் திருவடிகளை எப்போதும் வானவர்கள் வணங்குவதால், அவர்களின் முடிகளில் நிலையாக இருப்பன; சிவபெருமானை வழிபட்டு நிற்கும் அடியார்களால் மதிக்கப்படுவன: இழிந்த நிலையாக மதிக்கப்படும் பிறவிப் பிணியை நீக்கும் தன்மை படைத்தன, மற்றும் அடியார்களுக்கு பொன்னுலகம் அளிப்பன சிவபெருமானின் திருவடிகள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி

நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்துப்

புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும்

அலையார் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.14.9) அப்பர் பிரான், நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் என்ற தொடர் மூலம், பெருமானின் திருவடிகளை அமரர்கள் வணங்கிய தன்மையை குறிப்பிடுகின்றார். கதிர் இரண்டும்=சூரிய சந்திரர்கள்; விசும்பு=ஆகாயம்; நின்று அருளி=உள்ளத்தில் இருந்து அருள் புரிந்து; நன்று=நல்ல தன்மை கொண்ட வீடுபேறு; மறை என்றால் வேதம் என்று பொருள். வடமொழி வேதங்களை எழுதாக் கிளவி என்று குறிப்பிடுவார்கள். எழுதி வைக்கப் படாமல் தலைமுறை தலைமுறையாக ஒருவருக்கு ஒருவர் வாய்மொழியாக சொல்லி நிலவி வந்தவை வேதங்கள். இவ்வாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, வேதங்கள் வழி வழியாக மறைந்து நின்று வந்ததால், மறை என்று மிகவும் பொருத்தமாக தமிழ் மொழியில் அழைக்கப் படுகின்றது என்று தெய்வத்தின் குரல் (முதல் பாகம்) புத்தகத்தில் காஞ்சி பெரியவர் குறிப்பிடுகின்றார். வேதங்களில் மறைந்து காணப்படும் பொருட்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அவற்றை ஒரு குரு மூலம் தான் அறிந்து கொள்ள முடியும். இந்த செய்தியைத் தான் மறை பொருள் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வானில் உருண்டுருண்டு செல்லும் சூரியனையும் சந்திரனையும் வைத்தவர் சிவபெருமான்; எட்டுத் திசைகள் மற்றும் கீழ்த்திசை மேல் திசை என்று பத்து திசைகளை உலகினில் வைத்தவர்; தேவர்களின் உள்ளத்தில் நின்று, அவர்கள் தன்னை வணங்குமாறு அருள் செய்தவர்; நிறைந்த தவமும், பொருள்கள் மறைந்து இருக்கும் நான்மறைகளையும் உலகினில் நிலைத்து நிற்க வைத்தவர்; உயிரினைப் பறிக்க வந்த கூற்றுவனை நடுங்கி ஓடுமாறு தனது கழலணிந்த திருவடியால் உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள் செய்தவர்; தனக்கு வாகனமாக இடபத்தை வைத்துக் கொண்டுள்ளவர்; எல்லையில்லாததும், அழிவற்றதும் ஆகிய, நன்மை பயக்கும் வீடுபேறு என்னும் பேற்றினை அடியார்களுக்கு அருளும் திருவடியினை எனது தலையின் மீது வைத்த நல்லூர் பெருமான் மிகவும் நல்லவர் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.

சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்

நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்

கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி ஓடக் குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார்

நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.99.7) அப்பர் பிரான், தேவர்கள் அனைவரும் பெருமானின் திருவடிகளில் மலர்கள் இட்டுப் பணிந்து வணங்குகின்றனர் என்று கூறுகின்றார். தேவார்ந்த=தெய்வத் தன்மை முற்றிலும் உடைய; அழகிய புகலூர் நகரத்தில் உறையும் புண்ணியனே, தெய்வத் தன்மை மிகவும் அதிகமாக வாய்க்கப் பெற்ற தேவனே; நான்முகன், திருமால், இந்திரன் முதலிட்ட அனைத்துத் தேவர்களும் உனது திருவடியில் மலர்களைத் தூவி வணங்கியும், மறைகள் மூலம் உனது புகழினைப் பாடியும், நடனங்கள் ஆடியும், உன்னைப் போற்றுமாறு, சோலைகள் நிறைந்த கானப்பேர் எனப்படும் காளையார் கோயில் தலத்தில் உறைபவனே, கழுக்குன்றத்து உச்சியில் உள்ளவனே; மனம், மெய் மொழிகளைக் கடந்தவனே; பூப்போன்ற உனது திருவடிகளை நாடி அடியேன் விரைந்து வருகின்றேன், நீ என்னை ஏற்றுக் கொள்வாயாக என்று அப்பர் பிரான் தனது விருப்பத்தை தெரிவிக்கும் பாடல்.

தேவார்ந்த தேவனைத் தேவர் எல்லாம் திருவடி மேல் அலரிட்டுத் தேடி நின்று

நாவார்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற

காவார்ந்த பொழில் சோலைக் கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின்

பூவார்ந்த பொன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

பொழிப்புரை:

முதன்மை நிலையில் பொருந்தியுள்ள கலைகளையும், மூவுலக வாழ்க்கையினையும் வேறுவேறு நிலையில், பல்வேறுபட்ட உயிர்களுடன் பிணைந்துள்ள வினைகளின் தன்மைக்கு ஏற்ப ஆராய்ந்து முடிவு செய்து ஒப்பற்றவராக விளங்கும் பெருமான் உறைகின்ற தொன்மை வாய்ந்த ஊர் யாது என்று கேட்போரே, நான் சொல்கின்றேன் கேட்பீர்களாக; தேவர்கள் மண்ணுலகினை அடைந்து, தங்களது முடிகளை பொருத்தி வழிபடுகின்ற திருவடிகளை உடைய பெருமான் விருப்பமுடன் உறைவது புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும்.

பாடல் 2:

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல் 2, 3 (திதே 0296)

வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல் சூடிப்

பண்டு எரி கையாடு பரமன் பதி அது என்பர்

புண்டரிக வாசம் அது வீச மலர்ச் சோலைத்

தெண்டிரை கடல் பொலி திருப்புகலியாமே

விளக்கம்:

வண்டிரை=வண்+திரை, வலிமையான பெரிய அலைகள்; மிலைத்த=சூடிய; புனல்=கங்கை நதி; பண்டெரி=பழமையான தீ; ஊழிக்காலத்திற்கு பின்னர் உலகினை தோற்றுவிக்க பெருமான் திருவுள்ளம் கொள்ளும் போது, நாதத்திலிருந்து ஆகாயம் முன்னே தோன்ற, அதன் பின்னர் முறையாக காற்று, தீ, நீர் நிலம் ஆகியவை தோன்றுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த வரிசையில் நாம் பார்த்தால், தீ நீருக்கு முன்னமே தோன்றியதை உணர்த்தும் வண்ணம், பண்டெரி என்று கூறினார் போலும். மேலும் பெருமான் தனது சடையினில் கங்கையை ஏற்றது பகீரதன் தவம் செய்து வேண்டிய பின்னர் நடந்த நிகழ்ச்சி (திரேதா யுகம்) தானே. ஆனால் நடராஜப் பெருமானாக, தான் ஐந்து தொழில்கள் செய்வதை பெருமான் எப்போதும் உணர்த்திக் கொண்டு இருக்கின்றார் அல்லவா. எனவே இந்த அடிப்படையில் பார்த்தாலும் பண்டெரி என்று சொல்வது பொருத்தமாக உள்ளது. புண்டரீகம்=தாமரை மலர்; தாமரை மலரின் நறுமணம் தலத்தின் நீர் வளத்தையும் சோலைகள் தலத்தின் நில வளத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளன.

பொழிப்புரை:

வலிமையான அலைகள் பொருந்திய கங்கை நதியினை, பிறைச் சந்திரன் சூட்டப்பட்ட தனது சடையினில் வைத்தவராக காட்சி அளிக்கும் பெருமான், பழமையான தீயினைத் தனது கையினில் வைத்த ஏந்திய வண்ணம் நடமாடும் தலம் யாது என்று கேட்கும் மனிதர்களே, தாமரை மலர்கள் வீசும் நறுமணம் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டதும் தெளிந்த நீரினை உடைய கடல் அலைகள் உலகத்தினை மூழ்கடித்த போதும், தான் அந்த வெள்ளத்தில் ஆழ்ந்து விடாமல் தோணியாக வெள்ளத்தில் மிதந்தது என்று சொல்லப்படும் புகலி எனப்படும் நகரமாகும்.

பாடல் 3:

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல் 2, 3 (திதே 0296)

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0297)

பாவணவு சிந்தையவர் பத்தரோடு கூடி

நாவணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர்

பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூரத்

தேவண விழா வளர் திருப்புகலியாமே

விளக்கம்:

பா=பாடல்கள்; அணவு=பொருந்தும்; எதிர் கூர=எதிர் கொள்ள; தே=தெய்வத்தன்மை; தேவணவு=தெய்வத்தன்மை பொருந்திய; விழா வளர்=தொடர்ந்து வளர்வதைப் போன்று தொடர்ச்சியாக நடைபெறும் திருவிழாக்கள்; அந்தணன்=அழகும் குளிர்ச்சியும் உடையவன், அம்+தணன்; உயிர்கள் பால் மிகுந்த கருணை கொண்டு பல விதமான நன்மைகளையும் இறைவன் செய்வதால், குளிர்ந்த மனதினை உடையவன் என்று இறைவனை அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெருமானை அந்தணன் என்று குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம். கொடிமாட செங்குன்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.1) திருஞானசம்பந்தர் பெருமானை அந்தணர் என்று குறிப்பிடுகின்றார். இந்த தலத்தில் உள்ள மாதொருபாகனின் நின்ற திருக்கோல மூர்த்தம் வெண்மை நிறம் கொண்ட நவபாஷணத்தால் செய்யப்பட்டது. சர்வ சங்காரத்தின் பின்னர் தனது உடல் முழுவதும் வெள்ளை நீறு அணிந்தவராக, மீண்டும் உலகினை படைத்து உயிர்கள் தங்களது வினைகளை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் சிவமும் சக்தியுமாக செயல்பட்ட தத்துவத்தை உணர்த்தும் வண்ணம் அமைந்த திருவுருவம். எனவே தான் வெண்மை நிறத்துடன் மூர்த்தம் காணப்படுகின்றது என்பார்கள். அதனை நினைவூட்டும் வண்ணம், திருஞான சம்பந்தர் இந்த பதிகத்தினை வெந்த வெண்ணீறு அணிந்து என்று தொடங்குகின்றார். வேதங்களை உலகினுக்கு அருளிய பெருமான் எப்போதும் வேதங்களை ஒதுபவராக இருப்பதால், அவரை அந்தணன் என்று திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அவலம்= வினைகளால் வரும் பிறப்பு முதலான பல கேடுகள். வேதங்களையும் ஆகமங்களையும் தனது வாயினால் முனிவர்களுக்கு அருளியவனும் வேதங்களின் விளக்கங்களை சனகாதி முனிவர்களுக்கு அருளியவனும் ஆகிய பெருமானை விடவும், அந்தணன் என்றும் வேதியன் என்றும் அழைக்கப் படுவதற்கு மிகுந்த பொருத்தமாக உடையவர் வேறு எவரேனும் உள்ளரோ. அந்தணர் என்ற சொல்லினை அம் தணர் என்று பிரித்து, குளிர்ந்த உள்ளத்தை உடையவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தனது அடியார்களின் துயரத்தை களைபவனும், அடியார்களுக்கு அளவின்றி வரங்கள் அருள்பவனும் ஆகிய பெருமானை கருணை உள்ளம் கொண்ட பெருமானை, குளிர்ந்த உள்ளம் கொண்டவன் என்று குறிப்பிடுவதும் பொருத்தம் தானே. மாதொரு பாகன் உறையும் தலத்தில் உள்ள இறைவியை, இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாடல்களில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கொந்து=கொத்து; அணவும்= கலக்கும்; நன்றாக தீயினில் வெந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் சுடுகாட்டு சாம்பலை திருநீறாக தனது மார்பினில் அணிந்து கொண்டுள்ள பெருமான், முப்புரி நூல் மார்பினில் திகழும் வண்ணம் அணிந்தவராகவும், அழகான பந்துகள் சென்று அணையும் விரல்களை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவராகவும் காணப்படுகின்றார். அவர் கொத்து கொத்தாக பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூர் தலத்தில், உறைகின்றார். வேதங்களை அருளியதாலும் கருணை உள்ளம் கொண்டவராக இருப்பதாலும் அந்தணன் என்று பொருத்தமாக அழைக்கப் படுபவரும் ஆகிய பெருமானை, தொழுது வணங்கும் அடியார்கள் தங்களது துன்பங்களும் துயரங்களும் தீர்க்கப் பெறுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ் மார்பில் நல்ல

பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்

கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.133.9) திருஞான சம்பந்தர் பெருமானை, அரவம் சேர் சடை அந்தணன் என்று குறிப்பிடுகின்றார். அணங்கு=தெய்வத்தன்மை பொருந்திய; கரவு=மறைத்தல்; வண்=வள்ளல் தன்மை; தங்களிடம் உள்ள செல்வத்தை மறைத்து வைக்காமல், இரவலர்களுக்கு கொடையாக வழங்கும் தன்மை கொண்ட மக்கள்; மரவம்=மல்லிகை, குங்கும மரம் என்று பொருள் சொல்கின்றனர்; கலி=ஆரவாரம்; அந்தணன்=அம்+தணன்; அழகும் குளிர்ச்சியும் கொண்டவன்; பிரமனும் திருமாலும் தங்களின் முன்னே எழுந்த நெடிதுயர்ந்த தீப்பிழம்பின் முடியையும் அடியையும் காணாமல் திகைத்து, தீப்பிழம்பாக எழுந்தவன் பெருமான் என்று புரிந்து கொண்டு, அவர்கள் இருவராலும் வணங்கப் பெறும் பெருமை உடையவன் சிவபெருமான்; அவர், பாம்பினைத் தனது சடையில் அணிந்து கொண்டவரும், அழகும் குளிர்ந்த கருணைப் பண்பினையும் ஒருங்கே உடைய அந்தணனும் ஆகிய பெருமான், தெய்வத்தன்மை பொருந்திய பார்வதி தேவியுடன் இணைந்து அமர்கின்ற தலம் காஞ்சி மாநகரில் உள்ள திருவேகம்பம் திருக்கோயிலாகும். தங்களிடம் உள்ள செல்வத்தை மறைத்து வைக்காமல், இரப்போர்க்கு அள்ளியள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மை உடைய மக்கள் வாழ்கின்றதும், ஆரவாரம் நிறைந்ததும் ஆகிய காஞ்சி மாநகரில், மல்லிகை கொடிகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவேகம்பத்தில் உறையும் பெருமானைத் தொழ, நம்முடன் பிணைந்திருக்கும் வலிமை வாய்ந்த வினைகளும் மாய்ந்து கெட்டுவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிரமனும் திருமாலும் கைதொழப் பேரழலாய பெம்மான்

அரவம் சேர் சடை அந்தணன் அணங்கினொடு அமருமிடம்

கரவில் வண் கையினார்கள் வாழ் கலிக் கச்சி மாநகருள்

மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல்வினை மாய்ந்தறுமே

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.35.1) திருஞானசம்பந்தர் பெருமானை அரவச்சடை அந்தணன் என்று குறிப்பிடுகின்றார். பாரிடம்=பூதகணம்; மேய=பொருந்தி உறைகின்ற; குரவம்=குரா மரம்; பரவ=புகழ்ந்து போற்ற; அரவச்சடை அந்தணன் என்று இந்த பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் ஆறார் சடை அந்தணன் என்று குறிப்பிடுகின்றார்.

பரவக்கெடும் வல்வினை பாரிடம் சூழ

இரவில் புறங்காட்டிடை நின்றெரியாடி

அரவச்சடை அந்தணன் மேய அழகார்

குரவப் பொழில் சூழ் குரங்காடுதுறையே

புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.2) திருஞானசம்பந்தர் பெருமானை, ஐயம் தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் என்று குறிப்பிடுகின்றார். தேர்ந்து=தேர்ந்தெடுத்து; தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாதர். அந்த பெயரினுக்கு ஏற்ப உயிருடன் பிணைந்துள்ள மலமாகிய நோயினைத் தீர்த்து இன்பம் அளிப்பவன் பெருமான். இந்த தன்மையை கருத்தினில் கொண்டு ஐயம் தேர்ந்தெடுத்து என்ற தொடரின் பொருளினை நாம் உணரவேண்டும். பெருமான் பிச்சை ஏற்பதன் நோக்கமே, தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ள விரும்பும் உயிர்கள் தங்களது மலத்தினை பெருமானின் பிச்சை பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதாகும். அந்தணர்= அம்+தணர்; குளிர்ந்த நெஞ்சம் உடையவர்; உயிர்களின் பால் எல்லையற்ற கருணையும் அன்பினையும் வைத்துள்ள பெருமானின் நெஞ்சம் அவனது கருணை இரக்கம் அன்பு காரணமாக ஈரமாக உள்ளது என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை அந்தணர் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

ஈடு=பெருமை; தங்களது உயிர்நிலை இருக்கும் இடத்தினை எதிரிக்கு அறிவித்து விட்டு சண்டை செய்வதை அந்நாளில் வீரர்கள் பெருமையாக கருதினர் போலும். வால்மீகி இராமாயணமும் கம்ப இராமாயணமும் ஜடாயு மற்றும் இராவணனின் இடையே நடைபெற்ற சண்டையை மிகவும் விவரமாக கூறுகின்றது. இராவணன் கூரிய அம்புகளைக் கொண்டு ஜடாயுவை வருத்திய போதும், ஜடாயு அந்த தாக்குதலை முறியடித்து தனது மூக்கினால் இராவணன் வைத்திருந்த இரண்டு விற்களை உடைத்து, வாளினைத் தவிர்த்து வேறு ஆயுதங்கள் இல்லாத வகையில் இராவணனை நிலை குலையச் செய்தது என்று வால்மீகி முனைவர் கூறுகின்றார். இராவணன் தன்னிடம் இருந்த வாளினைக் கையில் ஏந்திய வண்ணம் ஜடாயுவின் சிறகுகளை அறுத்து எறிந்தான் என்று கம்பரும் வால்மீகி முனிவரும் கூறுகின்றனர். ஜடாயுவோ மீண்டும் மீண்டும் இராவணின் தலைகளை குறி வைத்து தாக்கியதாகவும், அரக்கனது கிரீடங்களை உடைத்து கீழே தள்ளியதாகவும், சடாயுவால் கிள்ளப்பட்ட தலைகள் மீண்டும் வளர்ந்ததாகவும், இருவரும் கூறுகின்றனர். எனவே தனது உயிர்நிலை சிறகுகளில் உள்ளது என்ற உண்மையை உணர்த்தி ஜடாயு போரிட்டதாகவும், அரக்கன் இராவணனோ தனது உயிர்நிலை தனது தலைகளில் உள்ளது என்று பொய் சொன்னதாகவும் திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார் போலும். இந்த செய்தி இராமயணத்தில் கூறப்படவில்லை எனினும் தனது ஞானத்தால் திருஞான சம்பந்தர் இதனை அறிந்தார் போலும். நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களிலும் நாம், பாகவதம் மற்றும் இராமாயணம் புராணங்களில் இல்லாத பல சுவையான செய்திகளை விவரங்களுடன் காணலாம்.

ஜடாயுவின் சிறகுகள் வெட்டப்பட்டதை குறிப்பிடும் கம்பர், தெய்வத்தன்மை பொருந்திய வாளினால் சிறகுகள் வெட்டப்பட்டு ஜடாயு கீழே விழுந்தது என்று கூறுகின்றார். எனவே சிவபெருமான் அருளிய சந்திரகாசம் என்ற வாளினை அரக்கன் பயன்படுத்தினான் என்பது தெளிவாகின்றது. இராமயணத்தில் வேறு எங்கும் சிவபெருமான் அருளிய இந்த வாளினை இராவணன் கையாண்டதாக குறிப்பு காணப்படவில்லை. தன்னால் ஏதும் செய்யமுடியாத நிலையில் ஜடாயுவுடன் நடைபெற்ற சண்டையில் உடைவாளை வீசிய இராவணன் ஏன் இராமபிரானுடன் நடைபெற்ற யுத்தத்தில் அந்த உடைவாளினை பயன்படுத்தவில்லை என்பதற்கு ஒரேவொரு விளக்கமே இருக்க முடியும். ஒரேவொரு முறையே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் இந்த தெய்வீக ஆயுதம் இருந்தது போலும். மகாபாரதத்தில் கர்ணனுக்கு இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தின் தன்மை நமது நினைவுக்கு வருகின்றது. ஒரேவொரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்ட இந்த சக்தி ஆயுதத்தை அர்ஜுனனுடன் நடைபெறும் சண்டையில் கையாள வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் கர்ணன் செயல்பட்டு வந்த போதிலும், அவனது விருப்பத்திற்கு மாறாக கர்ணன் இந்த ஆயுதத்தினை கடோத்கஜன் மீது ஏவ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றான். பதினான்காம் நாள் யுத்தத்தில் துரோணர் இறந்த பின்னரும் இரவிலும் சண்டை தொடர்ந்து நடைபெற்ற போது, இரவு நேரத்தில் அரக்கன் கடோத்கஜனின் ஆற்றல் பல மடங்கு பெருகியதால், கௌரவர் படையில் எவராலும் கடோத்கஜனை எதிர்கொள்ள முடியாத நிலையில் துரியோதனன் கர்ணனை சக்தி ஆயுதத்தினை கடோத்கஜன் மீது வீசுமாறு வற்புறுத்துகின்றான். கடோத்கஜனை கொன்ற பின்னர் அந்த சக்தி ஆயுதம் இந்திரனின் கைகளுக்கு திரும்பி விடுகின்றது என்று வியாசபாரதம் கூறுகின்றது. இந்த பாடலில் ஜடாயு குறித்த செய்தி, உண்மை பேசுவதை தனது உயிரினும் மேலாக ஜடாயு கருதியமையை புலப்படுத்துகின்றது. அதே சமயத்தில் தனது உயிர்நிலை மார்பினில் உள்ளது என்று சொல்லாமல், தனது தலையில் உள்ளது என்று பொய் கூறிய அரக்கன் இராவணனின் தன்மையும் சொல்லப் படுகின்றது. மீண்டும் மீண்டும் ஜடாயு பறவை தனது மூக்கினால், இராவணின் தலையையும் கிரீடங்களையும் தாக்கிய காரணத்தையும் நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

தையலாள் ஒரு பாகம் சடை மேலாள் அவளோடும்

ஐயம் தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையும் இடம்

மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்துப்

பொய் சொல்லாது உயிர் போனான் புள்ளிருக்குவேளூரே

அகத்தியான்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.76.10) திருஞானசம்பந்தர் அந்தணன் எங்கள் பிரான் என பெருமானை குறிப்பிடுகின்றார். சிவந்த துவராடையை அணிந்தவர்கள் என்று புத்தர்களை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வெற்றரை=இடுப்பினில் ஆடை இன்றி; புத்தர்களும் சமணர்களும் சிவபெருமானை குறித்து இழிவான சொற்களை, உண்மைக்கு புறம்பாக, பொய்ம்மொழிகளை பேசி, பலரையும் சிவபிரானைத் தொழுவதை தடுக்கின்றனர். எனவே அந்த பொய்ம்மொழிகளை பொருட்படுத்தாமல், சிவபெருமானை சிந்தனை செய்து, வினைகளை கெடுத்துக் கொள்ளுமாறு திருஞான சம்பந்தர் மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார்.

செந்துவர் ஆடையினாரும் வெற்றரையே திரு

புந்தியிலார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி

அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான் பள்ளியைச்

சிந்திமின் நும் வினையானவை சிதைந்து ஓடுமே

கொச்சைவயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.89.11) திருஞான சம்பந்தர், பெருமானை அந்தணன் என்று குறிப்பிடுகின்றார். கொந்தணி=கொத்தாக பூத்த மலர்கள் கொண்ட; ஒரு பாடலுக்கு அழகு சேர்ப்பது சந்தம் தான் என்பதால், சந்தம் பொருந்திய பாடல்களை அழகாய தண்டமிழ் பாடல்கள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

கொந்தணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய

அந்தணன் அடி ஏத்தும் அருமறை ஞானசம்பந்தன்

சந்தமார்ந்து அழகாய தண்டமிழ் மாலை வல்லார் போய்

முந்தி வானவரோடும் புகவலர் முனை கெட வினையே

மாந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.110.7) திருஞானசம்பந்தர், கூற்றினைச் சாடிய அந்தணன் என்று குறிப்பிடுகின்றார். அறவன்=கூற்றுவன், இயமன்; குறிப்பிட்ட நாளில் உயிர்களை உடலிலிருந்து பிரிக்கும் தொழிலை தவறாமல் செய்வதாலும், கடமையிலிருந்து வழுவாமல் உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப நரக தண்டனை அளிப்பதாலும் அறவன் என்றும் தருமன் என்றும் அழைக்கப் படுகின்றான், நறவம்=தேன்; மௌவல்=காட்டு மல்லிகை; இறவில்= மிகுதியாக; வாங்கி=இழுத்து; நிறைய வாங்கி=நன்றாக; நிரை=வரிசை; தேன் நிறைந்த மல்லிகை, முல்லை, காட்டு மல்லிகை போன்று அன்று மலர்ந்த மலர்களையும் மிகுதியாக வாரிக் கொண்டு வந்து தனது இரண்டு கரைகளிலும் வீசி எரியும் காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள மாந்துறை தலத்தில் உறையும் இறைவன், பண்டைய நாளில் தன்னை வழிபாடு செய்து கொண்டிருந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர்வதற்கு முயற்சி செய்த குற்றத்திற்காக இயமன் பால் கோபம் கொண்டு உதைத்தவன் ஆவான். அவன் மேரு மலையினை வில்லாக வளைத்து, நெருப்பு கக்கும் வலிமை வாய்ந்த அம்பினை பூட்டி, இழுத்து வாங்கி எய்து, திரிபுரத்து மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவன் ஆவான். இத்தகைய வல்லமை வாய்ந்த இறைவனின் இணையான திருப்பாதங்களை நாம் பணிந்து வணங்குவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மலர் அவை வாரி

இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு

அறவனாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரை வில்லால்

நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே

திருவாடானை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.112.10) திருஞானசம்பந்தர் மாயனும் மலரானும் கை தொழ ஆய அந்தணன் என்று குறிப்பிடுகின்றார். திருமாலும் பிரமனும் தங்களது கைகளை கூப்பித் தொழும் வண்ணம் சிறப்பினை உடையவன் என்று பொருள்.

மாயனும் மலரானும் கை தொழ

ஆய அந்தணன் ஆடானை

தூய மாமலர் தூவிக் கைதொழத்

தீய வல்வினை தீருமே

கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.12.6) அந்தணனாகிய பெருமானை நினைத்து புகழும் அடியார்களின் வாழ்வினில் துன்பம் ஏற்படாது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வெந்தமரும் பொடி=வெந்து தணிந்த திருநீறு; பிரளய காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் அனைத்து உடல்களும் அழிய, அந்த சாம்பலை எடுத்துத் தனது உடலின் மீது அணிந்து கொள்பவர் சிவபெருமான். இவ்வாறு உலகின் அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னரும் அழியாமல் இருக்கும் வல்லமை உடையவர் சிவபெருமான் ஒருவர் என்பதால் தான், அவரை விகிர்தன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விகிர்தர்=மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர்;

பந்தமரும் விரல் மங்கை நல்லாள் ஒரு பாகமா

வெந்தமரும் பொடி பூசவல்ல விகிர்தன் மிகும்

கொந்தமரும் மலர்ச் சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்

அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.37.7) திருஞானசம்பந்தர் பெருமானை அந்தணன் என்று அழைக்கின்றார். ஒள்ளியர்=சிவஞானம் பெற்றவர்கள்; ஆண்டகை=ஆண்+தகை, ஆண்களில் மிகவும் உயர்ந்தவன்; வேதங்களின் பொருளாக இருப்பவன் இறைவன் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் தனது கையினில் மழுப்படை ஏந்தி இருப்பதே, அடியார்களை பிணித்துள்ள வலிமை வாய்ந்த வினைகளை அறுத்து எரிவதற்காக என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட

ஐயன் ஆண்டகை அந்தணன் அருமாமறைப் பொருள் ஆயினான்

பெய்யும் மாமழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய

வெய்ய வெண்மழு ஏந்தியைந் நினைந்து ஏத்துமின் வினை வீடவே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.19.4) அப்பர் பிரான், பெருமானை, ஆறேற்ற அந்தணர் என்று குறிப்பிடுகின்றார். ஏறு=விடை; ஏற்றம்=உயர்வாக கருதப் படும் நிலை; வாகனமாக கொள்ளப்படும் விலங்குகளில் சிறந்ததாக கருதப்படும் எருதின் மீது ஏறி வரும் பெருமானை எண்வகை அடியார்களும் பின்தொடர்கின்றனர். சிவநெறிக்கு மாறுபட்ட கொள்கையை உடையவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று வலிமையான பறக்கும் கோட்டைகளையும் கோபம் கொண்டு அழித்தவனாகிய பெருமான், சுடுகாட்டு சாம்பலை அணிந்தவனாகவும் தனது நீண்ட சடையில் மீது கங்கை நீர் ததும்பும் வண்ணம் சடையில் ஏற்றவனாகவும் விளங்குகின்றான். அத்தகைய பெருமானை நான் ஆரூர் திருத்தலத்தில் கண்டு இன்பம் கொண்டேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின் படர

மாறேற்றார் வல்லரணம் சீறி மயானத்தில்

நீறேற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப

ஆறேற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே

அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.8.6) அப்பர் பிரான் பெருமானை அந்தணாளர் என்று அழைக்கின்றார். வெந்த நீறு=திருநீறு; சிவம்= மங்களம்; சிவனார்=மங்களம் செய்பவர்; அந்தணாளர்=அம்+தண்+ஆளர், உள்ளத்தில் குளிர்ச்சி, அதாவது கருணை உடையவர்; சிந்தையார்=அடியார்களின் சிந்தனையில் நிறைந்தவர்; இறைவனை அறவாழி அந்தணன் என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. (அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீத்தல் அரிது). உயிர்களின் நன்மை கருதி அறம் உரைத்த பெருமான், அறத்தின் வடிவமாகவும் அறத்தின் பயனாகவும் இருந்து உயிர்களுக்கு அருள் புரிவதன் பொருட்டே, என்பதால் குளிர்ந்த மனதினை உடையவன் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசுபவரும், உயிர்களுக்கு நலம் நல்கும் திருமேனியை உடையவரும் ஆகிய பெருமான், நறுமணம் நிறைந்த மலர்களை விருப்பத்துடன் சூடும் எண்ணத்தினை உடையவராக விளங்குகின்றார். அடியார்களின் சிந்தனையில் நிறைந்துள்ள பெருமான், உயிர்களுக்கு நன்மைகள் செய்பவராகவும், சிவந்த மேனியராகவும், திகழ்கின்றார். உயிர்கள் பால் கருணை கொண்டு உயிர்கள் உய்யும் பொருட்டு அறத்தினை உரைத்த பெருமான், அறத்தின் வடிவாகவும் பயனாகவும் விளங்குகின்றார். அவர் தான் அன்னியூர் தலத்தில் உறைகின்றார் என்பதை உணர்ந்து அவரைக் கண்டு மகிழ்வீராக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெந்த நீறு மெய் பூசு நன்மேனியர்

கந்த மா மலர் சூடும் கருத்தினர்

சிந்தையார் சிவனார் செய்ய தீ வண்ணர்

அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (5.97.10) அப்பர் பிரான் பெருமானை, ஐயன் அந்தணன் என்று குறிப்பிடுகின்றார். ஐயன்=அழகியன்; அந்தணன்=அம்+தணன், உள்ளத்தில் குளிர்ச்சியினை உடையவன்; பரமன்=அனைவர்க்கும் மேலானவன் மேதகு=மேன்மை பொருந்திய மைகொள்=கருமை நிறம் உடைய மை; அழகிய திருமேனியை உடையவனும், உள்ளத்தில் குளிர்ந்த தன்மை உடையவனும், ஆணாகவும் பெண்ணாகவும் உள்ள தனது வடிவத்தை உணர்த்தும் உடலினைக் கொண்டவனும், மேன்மை தரும் திருநீற்றினைத் தனது உடலில் பூசியவனும், கருமையான மையின் நிறத்தினை ஒத்த கழுத்தினை உடையவனும், துள்ளி ஓடும் மான் கன்றினைத் தனது கையினில் ஏந்தி தனது கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருப்பவனும், படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது உடலினில் கச்சாக கட்டியவனும் ஆகிய பெருமான் அனைவரிலும் உயர்ந்தவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்

மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய

மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்

பைகொள் பாம்பரை ஆர்த்த பரமனே

ஆரூர் அரநெறி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.33.4) அப்பர் பிரான், பெருமானை இமையோர் போற்றும் அந்தணன் என்று குறிப்பிடுகின்றார். நம்பன்=விரும்புதற்கு உரியவன், விரும்பத் தக்கவன்; அனைவராலும் விரும்பப் படுபவனும், திருநாகேச்சரம் தலத்தினை அடைந்து உறைபவனும், சந்தி=இரண்டு வேறு நேரங்கள் சந்திக்கும் சமயம், இரவும் பகலும் சந்திக்கும் காலை மாலை நேரங்கள், முற்பகலும் பிற்பகலும் சந்திக்கும் நண்பகல் நேரம் ஆகியவை; தத்துவம்=மெய்ப்பொருள் அந்தணன் என்ற சொல்லினை அம்+தணன் என்று பிரித்து, குளிர்ந்த உள்ளத்தினை உடையவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. குளிர்ந்த கருணை உள்ளம் கொண்ட காரணத்தால் தானே, விடம் என்றும் கருதாமல் தயக்கம் ஏதும் இன்றி, தேவர்களின் துயரினைத் தீர்க்கும் பொருட்டு ஆலகால விடத்தினை பெருமான் உட்கொண்டான். நந்தி என்ற சொல் நமிநந்தி அடிகளை குறிப்பதாக சிலர் விளக்கம் அளித்துள்ளனர். நந்தி தேவர் செய்யும் காவற்பணியை ஏற்றுக் கொண்டவனும், அனைவராலும் விரும்பப் படுபவனும், திருநாகேச்சரம் தலத்தினை அடைந்து உறைபவனும், காலை மாலை மற்றும் நண்பகல் ஆகிய நேரங்களில் தேவர்கள் மலர்களால் அலங்கரித்து வழிபடும் உண்மைப் பொருளாக இருப்பவனும், திருமாலுக்கு சக்கரம் ஈந்தவனும், சந்திரனின் கதிர்கள் நுழைந்து தான் செல்லமுடியும் என்ற நிலையில் அடர்ந்த மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஆரூர் நகரத்து மூலட்டானத்தில் எழுந்தருளியுள்ள இறைவனும், தேவர்கள் போற்றும் வண்ணம் குளிர்ந்த மனம் உடையவனும், ஆரூர் அரநெறி தலத்தில் அரநெறியப்பன் என்ற பெயருடன் விளங்குபவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை சரண் அடைந்து, அடியேன் தீர்க்கமுடியாத எனது வினைகளை நீக்கிக் கொண்டேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

நந்தி பணி கொண்டு அருளும் நம்பன் தன்னை நாகேச்சரம் இடமா நண்ணினானைச்

சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்துத் தத்துவனைச் சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை

இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம் கொண்ட பெருமானைஇமையோர் போற்றும்

அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.46.10) அப்பர் பிரான் பெருமானை, வெண்ணூல் திகழப் பூண்ட அந்தணன் என்று அழைக்கின்றார். கோலமாம்=அழகான; ஐந்து விரல்களையும் ஒன்று சேர்த்தால் பந்து பொருந்துவது போன்று அழகாக பொருந்தும் மெல்லிய விரல்களை உடைய பிராட்டியைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனும், தொடர்ந்து கீதங்கள் பாடுபவனாகவும் நடனம் ஆடுபவனுமாக இருப்பவனும், நறுமணம் வீசும் கொத்தான கொன்றை மலர்களை மாலையாகக் கோத்து அணிந்தவனும், அழகிய நீல வண்ணத்தில் கழுத்தினை உடையவனும், செந்தமிழிலும் ஆரியத்திலும் சிறப்பான புலமை பெற்றவனும், தனது மார்பினில் வெண்ணூல் பூண்ட அந்தணனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் கூறும் பாடல்.

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப் பாடலோடு ஆடல் பயின்றான் தன்னைக்

கொந்தணவு நறும் கொன்றை மாலையானைக் கோலமா நீல மிடற்றான் தன்னைச்

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானைத் திருமார்பில் புரி வெண்ணூல் திகழப் பூண்ட

அந்தணனை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.25.7) சுந்தரர், பெருமானை அந்தணர் என்று அழைத்து தனக்கு அருளவேண்டும் என்று வேண்டுகின்றார். இட்டளம்=துன்பம் இந்த பதிகம் திருவாரூரில் குளக்கரையில் பாடிய பாடல்; எனினும் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் திருமுதுகுன்றம் தலம் குறிப்பிடப்படுவதால், இந்த பதிகம் திருமுதுகுன்றம் மீது அருளிய பதிகமாகவே கருதப் படுகின்றது. திருமுதுகுன்றம் தலத்தினில் பெருமானை வேண்டிப் பெற்ற பொற்காசுகளை, திருவாரூர் வரையில் கொண்டுவரும் வழியில், வழிப்பறிக் கொள்ளையரிடம் பறிகொடுக்கும் ஆபத்தினைத் தவிர்க்கும் முகமாக, அந்த பொற்காசுகளை மணிமுத்தாறு தலத்தில் தான் இட்டு, திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிய சுந்தரர், அந்த பொற்காசுகளை மணிமுத்தாறு குளத்தில் இடுகின்றார். தனது மனைவியுடன் திருவாரூர் குளம் சென்றடைந்த சுந்தரர், குளத்தில் பொற்காசுகள் வாராது போகவே, இறைவனிடம் பொற்காசுகளை வரவழைத்துத் தருமாறு இறைவனிடம் வேண்டும் பதிகம். தனது மனைவியை தன்னுடன் அழைத்துக் கொண்ட வந்த தனக்கு, இறைவன் பொற்காசுகள் வரவழைத்து தாராவிடில் தனது மனைவி வருத்தம் அடைவாள் என்று நயமாக கூறுவதை நாம் உணரலாம்.

கொந்தணவும் பொழில் சூழ் குளிர் மாமதில் மாளிகை மேல்

வந்தணவும் மதிசேர் சடை மாமுதுகுன்று உடையாய்

பந்தணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே

அந்தணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே

கூடலையாற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.85.4) சுந்தரர் பெருமானை அந்தணன் என்று அழைக்கின்றார். திருப்புறம்பயம் தலத்திலிருந்து திருமுதுகுன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த சுந்தரர், வழியில் எதிர்பட்ட அந்தணர் ஒருவரிடம் திருமுதுகுன்றம் செல்லும் வழி யாது என்று வினவ, அந்த அந்தணர், தானும் திருமுதுகுன்றம் செல்வதாக சொல்லி, தவறான வழியில் கூடலையாற்றூர் அழைத்து சென்றதை அதிசயம் என்று சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

சந்தணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன்

பந்தணவும் விரலாள் பாவையொடும் உடனே

கொந்தணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்

அந்தணன் இவ்வழிப் போந்த அதிசயம் அறியேனே

திருப்பெருந்துறையில் அந்தணனாக வந்து தன்னை ஆட்கொண்ட பெருமான் என்று பல திருவாசகப் பாடல்களில் மணிவாசகர் குறிப்பிடுவதை நான் அறிவோம். அடியார்களின் தன்மையை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு, சிவபெருமான் அந்தணனாக தோன்றியதை நாம் பெரிய புராணத்தின் பல நாயன்மார்களின் சரித்திரத்தில் காண்கின்றோம்.

பொழிப்புரை:

இறைவனின் புகழினை உணர்த்தும் பாடல்கள் பாடும் சிந்தையை உடையவர்கள், அடியார்களோடு இணைந்து, இறைவனைப் புகழ்ந்து வணங்க,விருப்பமுடன் அவர்களது நாவினில் அமரும் இறைவன், மகிழ்ந்து உறையும் இடம் யாதென்று வினவுவீராயின், நான் சொல்கின்றேன் கேட்பீர்களாக. பூக்கள் நிறைந்த சோலைகள், இருளினைத் தரும் இரவுக் காலத்தை எதிர் கொள்ளும் முன்பு வரும் மாலை நேரத்தில், தெய்வத்தன்மை பொருந்திய திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும் திருப்புகலி நகரம் இறைவன் விருப்பமுடன் அமரும் தலமாகும்.

பாடல் 4:

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல்கள் 4, 5, 6, 7 (திதே 0298)

மை தவழு மா மிடற்றன் மாநடம் அது ஆடி

கை வளையினாளோடு கலந்த பதி என்பர்

செய்பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடித்

தெய்வமது இணக்குறு திருப்புகலியாமே

விளக்கம்:

மை தவழு=மை போன்று கரிய நிறம் படர்ந்த; மிடறு=கழுத்து; மா நடம்=சிறந்த நடனங்கள்; இந்த தலத்தில் திருப்பணி செய்யும் உருத்திரர்கள் என்று தலத்தில் உள்ள அடியார்களை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் போலும். முதல் பாடலில் வானவர்கள் தொழுது வணங்கும் பெருமான் என்றும் மூன்றாவது பாடலில் புலவர்களும் அடியார்களும் புகழ்ந்து பாடல்கள் பாட நின்ற இறைவன் என்றும், குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில், திருத்தொண்டு புரியும் அடியார்களை குறிப்பிடுகின்றார். பெருமானுக்கு தினமும் திருத்தொண்டு செய்யும் தில்லை வாழ் அந்தணர்கள் அனைவரையும் சிவகணங்களாக, திருஞான சம்பந்தர் கண்ட காட்சியினை நமக்கு, மேற்கண்ட குறிப்பு நினைவூட்டுகின்றது. நமிநந்தி அடிகளின் புராணத்தில், திருவாரூரில் வாழ்வோர் அனைவரும் சிவகணங்களாக இருக்கும் தன்மையை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். திருவாரூரில் உள்ள சிவனடியார்கள் எல்லோரும் சாதி பேதமின்றி சிவகணங்களாக கருதப் படுகின்றனர் என்ற உண்மையை சிவபெருமான் நமிநந்தி அடிகளுக்கு உணர்த்தியதே இந்த நிகழ்ச்சி ஆகும். திருவாரூருக்கும் நமிநந்தி அடிகள் வாழ்ந்து வந்த ஏமப்பேறூர் என்ற ஊருக்கும் இடையே உள்ள ஊர் மணலி என்பதாகும். திருவாரூரில் உள்ள தியாகேசப் பெருமான் ஊர்வலமாக மணலிக்கு எழுந்து அருளும் போது, அங்கே சென்று பெருமானை தரிசனம் செய்து வணங்குவது அடிகளாரின் வழக்கம். அவ்வாறு ஒரு நாள் வழிபட்ட பின்னர் தனது இல்லத்திற்கு அடிகள் திரும்புகின்றார். பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் சென்று வந்த காரணத்தால், தான் குளித்த பின்னரே தான் தினமும் சிவபெருமானுக்கு செய்யும் வழிபாடுகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், மனைவியை தான் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார். அவரது மனைவியும் குளிர்ந்த நீர், உலர்ந்த ஆடை, திருநீறு, முதலானவற்றை தயாராக எடுத்து வைத்தார். இதனிடையில் வெளியே சென்று வந்த அயர்ச்சி காரணமாக சற்றே அடகளார் கண்ணயர்ந்தார். இவ்வாறு தூங்கியபோது கனவின் கண் வந்த சிவபெருமான், அடிகளுக்கு ஆரூரில் பிறந்தார் அனைவரும் தமது கணங்கள் என்றும், அந்தத் தன்மையை அடிகளுக்கு நேரில் காட்டுவதாகவும் கூறினார்.

மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான் தாம்

மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளி

ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்

ஆன பரிசு காண்பாய் என்றருளிச் செய்தங்கு எதிர் அகன்றார்

கனவில் வந்த சிவபெருமான் மறைந்த பின்னர் கண் விழித்த அடிகளார், தான் இரவு பூஜை செய்யாமல் கண்ணயர்ந்ததை நினைத்து வருந்திய பின்னர், தான் செய்யவேண்டிய தினசரி வழிபாட்டினைச் செய்தார். மனைவிக்குத் தான் கண்ட கனவின் விவரங்களைத் தெரிவித்தார். மறுநாள் விடியற்காலையில் எழுந்து தனது நித்திய அனுஷ்டானங்களை முடித்த பின்னர், திருவாரூர் சென்ற அடிகளார் அங்கே கண்ட காட்சி அவரை வியப்படைய வைத்தது. அனைவரையும் சிவகணங்களாகக் கண்ட அடிகளார், நிலத்தில் வீழ்ந்து அனைவரையும் வணங்கி மகிழ்ந்தார்.

தெய்வப் பெருமான் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்

மை வைத்தனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால்

மொய் வைத்து மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த

கை வைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து களி சிறந்தார்

அடிகளார் உண்மையை உணர்ந்த பின்னர், சிவபிரான் தான் அடிகளாருக்குக் காட்டிய காட்சியை மறைத்து திருவாரூர்ப் பிறந்தார்கள் அனைவரையும் முன் போல் மனிதராகவே காட்டினார். உடனே அடிகளார் தனது பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று பெருமானிடம் வேண்டினார். மேலும் திருவாரூர் நகரத்துச் சிறப்பினை இறைவன் உணர்த்தியதை மனதில் கொண்டு, ஏமப்பேறூரை விடுத்து, திருவாரூர் குடிபுகுந்த தனது எஞ்சிய வாழ்நாளை, சிவத்தொண்டில் கழிக்கலானார். இந்த நிகழ்ச்சி தான், சுந்தரர், திருவாரூர்[ பிறந்தார்கள் அனைவரையும் தொகை அடியார்களாக கருதி, திருவாரூர்ப் பிறந்தார் எல்லார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் பாட வைத்ததோ?

படிவம் மாற்றிப் பழம்படியே நிகழ்வும் கண்டு பரமர் பால்

அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று பணிந்து அருளால்

குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து

நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார்

பொழிப்புரை:

ஆலகால நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால், கருமை நிறம் கொண்ட மை படர்ந்தது போன்று காணப்படும் கழுத்தினை உடையவனும், பல வகையான சிறந்த நடனங்கள் ஆடுபவனும், தனது கைகளில் வளையல்கள் அணிந்த உமை அன்னையுடன் கலந்து, மாதொரு பாகனாக ஒரே உருவமாக நிற்பவனும், ஆகிய இறைவன் உறையும் பதி திருப்புகலி என்பர், பெருமானுக்கு திருப்பணி செய்யும் அடியார்கள் பலரும் ஒன்று கூடி, வகைவகையான திருப்பணிகள் தொடர்ந்து செய்ய, அத்தகைய பணிகளை மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் பெருமான் பொருந்தி உறையும் தலம் திருப்புகலி ஆகும்.

பாடல் 5:

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல்கள் 4, 5, 6, 7 (திதே 298)

முன்னம் இருமூன்று சமயங்கள் அவையாகிப்

பின்னை அருள் செய்த பிறையாளன் உறை கோயில்

புன்னிய மலர்ப் பொழில்கள் அக்கின் ஒளி காட்டச்

செந்நெல் வயலார் தரு திருப்புகலியாமே

விளக்கம்:

ஆறு சமயங்களாக இருப்பவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு முதுகுன்றத்து பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் ஒத்தாறு சமயங்கட்கு ஒரு தலைவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஒத்த ஆறு சமயங்கள்=சைவத்தின் பிரிவான ஆறு அகச்சமயங்கள்; பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமம் பைரவம் மற்றும் சைவம் என்பன சைவ சமயத்தின் ஆறு உட்பிரிவுகள்; இந்த ஆறு சமயங்களும் மாறுபாடு ஏதுமின்றி சிவபெருமானை தலைவனாக ஏற்றுக் கொள்வதால் ஒத்த ஆறு சமயங்கள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது.

மெய்த்தாறு சுவையும் ஏழ் இசையும் எண் குணங்களும் விரும்பு நால் வே

தத்தாலும் அறிவொண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம்

ஒத்தாறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்ணீர்

முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே

ஒன்றிய ஆறு சமயங்கள் என்று இன்னம்பர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமம், பைரவம், சைவம் என்பன இந்த ஆறு சமயங்கள். சிவபிரானின் திருவடிகளுக்கு ஒப்பாகவும், அவைகளை விட உயர்ந்ததாகவும் வேறு பொருள் ஏதும் இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஆறு ஒன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அப் பொருள்கள்

வேறு ஒன்றிலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன்

மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்

ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான் தன் இணை அடியே

ஆறு சமயங்கள் என்று வைதீகத்தின் ஆறு சமயங்களை உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. எனவே இந்த ஆறு சமயங்களாக இறைவன் இருக்கும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது என்றும் பொருள் கொள்ளலாம். வெவ்வேறு சமயங்கள் என்று குறிப்பிட்டு அடிப்படையில் இந்த ஆறு சமயங்களும் வேறுபட்டு விளங்கும் தன்மையை அப்பர் பிரான் திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.50.7) குறிப்பிடுகின்றார். சைவம், வைணவம், காணாபத்தியம் (கணபதி வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), சாத்தேயம் (சக்தி வழிபாடு), சௌரம் (சூரியன் வழிபாடு) எனப்படும் இந்த சமயங்களின் தலைவர்கள் வேறுவேறாக இருப்பதை நாம் உணரலாம். சிவபெருமானே இந்த ஆறு சமயங்களின் குறிப்பிடப்படும் தெய்வங்களாக அந்தந்த தெய்வங்களுடன் இணைந்து இயக்குவதால், பெருமானே இந்த ஆறு சமயங்களாக விளங்குவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

மிக்கானைக் குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு மூன்று சமயமாகிப்

புக்கானை எப்பொருட்கும் பொதுவானானைப் பொன்னுலகத்தவர் போற்றும் பொருளுக்கெல்லாம்

தக்கானைத் தானன்றி வேறொன்றில்லாத் தத்துவனைத் தடவரையை நடுவு செய்த

திக்கானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

எல்லோர்க்கும் மேலானவனை, தங்களது குறைகளை சொல்லித் தன்னை வழிபடும் அடியார்களின் குறைகளை நிவர்த்தி செய்பவனும், சைவம் வைணவம் காணாபத்யம் கௌமாரம் சாக்தம் சௌரம் ஆகிய ஆறுவகை வைதீக சமயங்களாக இருப்பவனும், எல்லாப் பொருட்களுக்கும் பொதுவாக இருப்பவனும், தேவர்களால் போற்றப் படுபவனும், தேவர்களின் போற்றுதலுக்கு தக்கவனாக இருப்பவனும், தன்னைத் தவிர வேறு ஒரு மெய்பொருள் இல்லாதவனாக இருப்பவனும், அகன்ற மேரு மலையினை நடுவாக வைத்து எட்டு திசைகளையும் வகுத்தவனும் ஆகிய பெருமான் திருவீழிமிழலை தலத்து இறைவனாக உறைகின்றான். இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய திருவீழிமிழலைப் பெருமானை அணுகி அவனை வழிபடாமல் நிற்கும் மாந்தர்கள் தங்களை அறியாமலே, தீயநெறிக்கு சென்று கெடுகின்றார்கள் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை ஆகும்.

இவ்வாறு வைதீக சமயங்கள் ஆறினையும் வைத்தவர் சிவபெருமான் தான் என்ற கருத்து திருமறைக்காடு தலத்து நேரிசைப் பாடல் ஒன்றினிலும் அப்பர் பிரானால் குறிப்பிடப் படுகின்றது. தன் கை என்ற தொடர் எதுகை கருதி தங்கை என்று மாறியுள்ளது.

அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்

தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்

திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையில் வைத்தார்

மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் அப்பர் பிரான் ஆறுவகைச் சமயங்களை வைத்தவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். கூரிருள் என்பதற்கு அகத்திருள் என்று பொருள் கொண்டு, அகத்திருள், புறத்திருள், உலகத்தினைச் சூழ்ந்துள்ள மாய இருள், ஆகியவற்றை ஒழிக்கும் திறமை வாய்ந்த பெருமான், தனது கழுத்தினில் நஞ்சினால் ஏற்பட்ட இருளினை உடையவராக இருக்கின்றார் என்று நயமாக இங்கே கூறப்படுகின்றது. இருளினைப் போக்கும் சந்திரனை சடையில் வைத்தவர் என்று கூறுவதன் மூலம் அப்பர் பிரான், சந்திரனுக்கு பெருமான் அருள் புரிந்து, அவன் அழியாமல் காத்து அவன் ஒளியுடன் வானில் உலவச் செய்தார் என்று நமக்கு உணர்த்துகின்றார். அனைத்து அண்டங்களிலும் நிறைந்து காணப்படும் மாயை இருள் என்பதால் ஆரிருள் என்று இங்கே கூறுகின்றார்.

கூரிருள் கிழிய நின்ற கொடு மழுக் கையில் வைத்தார்

பேரிருள் கழிய மல்கு பிறை புனல் சடையில் வைத்தார்

ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்

காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

அடர்ந்த இருளையும் கிழித்து விரட்டும் தன்மையில் ஒளி மிகுந்து காணப்படுவதும் கூர்மையானதும், இருளினை கிழித்து விரட்டுவதால் இருளுக்கு கொடுமையானாதாகவும் உள்ள மழு ஆயுதத்தைத் தனது கையில் வைத்திருப்பவர் சிவபெருமான்: இருள் என்பது அறியாமையினை குறிப்பிடுகின்றது. எனவே பெருமானின் கையில் இருக்கும் மழு ஆயுதம் நமது அறியாமையினை பெருமான் நீக்குவதை உணர்த்துகின்றது. தன்னிடம் சரணடைந்த சந்திரனுக்கு வாழ்வளித்து அவன் முன் போல் வானில் திரிந்து இரவின் இருளைப் போக்கச் செய்தவர் சிவபெருமான்; கங்கை நதியைத் தனது சடையில் வைத்தவர் சிவபெருமான்; மாயையாகிய இருளுக்குள் அனைத்து உலகங்களையும் வைத்த பெருமான், அந்த மாயையிலிருந்து ஆன்மாக்கள் விடுபடும் வழியாக ஆறு வகையான சமயங்களையும் வைத்தவர் ஆவார். தான் உண்ட நஞ்சினை, ஊழிக்காலத்தில் தன்னுள்ளே ஒடுங்கவிருக்கும் உயிர்களின் நலன் கருதி, தனது கழுத்திலே தேக்கி வைத்தவர் சிவபெருமான்; இத்தகைய பெருமைகள் வாய்ந்த பெருமான் கழிப்பாலைத் தலத்தில் கடற்கரைத் தலைவராக விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொழிப்புரை:

பல காலங்களுக்கு முன்னமே ஆறு வேறுவேறு சமயங்களாக விளங்கிய பெருமான், அவரவர்கள் மேற்கொண்ட கொள்கைகளுக்கு இணங்க, அவர்களுக்கு அருள் புரிகின்றான். பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு அவனை அழியாமல் காத்த பெருமான், பொருந்தி உறைகின்ற திருக்கோயில் திருப்புகலி எனப்படும் தலத்தில் உள்ளது. புன்னை மலர்ச் சோலைகள் மற்றும் செழுமையான நெல் வயல்களால் சூழப்பட்ட இந்த தலம் சங்குகளும் மணிகளும் திகழ ஒளியுடன் காணப்படுகின்றது.

பாடல் 6:

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல்கள் 4, 5, 6, 7 (திதே 298)

வங்க மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த

அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர்

கொங்கு அணவு வியன் பொழிலின் மாசு பனி மூசத்

தெங்கு அணவு தேன் மலி திருப்புகலியாமே

விளக்கம்:

வங்கம்=மரக்கலங்கள்; ஆலகால விடம் பொங்கி எழுந்தது பாற்கடலில். நூற்றெட்டு வைணவ திவ்ய தேசங்களில் பாற்கடலும் வைகுந்தமும் நிலவுலகில் இல்லை என்று கூறுவார்கள். நிலவுலகில் உள்ள கடல்களில் மட்டுமே கப்பல்களும் மரக்கலங்களும் இயங்குகின்றன. எனினும் பாற்கடலையும் மரக்கலங்கள் மலிந்த கடல் என்று கூறுவது, நிலவுலக கடல் போன்று பாற்கடலும் பெரிதாக உள்ளது என்பதை குறிப்பிடும் பொருட்டு என்பதை நாம் உணரவேண்டும். நுகர்ந்த=உட்கொண்ட; அங்கணன்=அழகிய கண்களை உடையவன்; ஆலகால விடத்தினை பெருமான் தான் உட்கொண்டது, விடத்தின் தாக்கத்திலிருந்து தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றும் நோக்கத்தில் என்பதால் சிறந்த கருணையாளன் என்று இங்கே கூறப்படுகின்றது. கொங்கு=நறுமணம்; வியன்=அகன்ற; தெங்கு=தென்னை; அண=அண்ண என்பதன் இடைக்குறை, நெருங்கிய; அருத்தி=விருப்பம்; மாசு=அழுக்கு; பச்சைப்பசேல் என்று ஓலைகள் கொண்டு தென்னை மரங்களில் பனி படர்ந்திருப்பது மாசு படிந்துள்ளது போன்று தோற்றத்தை அளிப்பதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

பொழிப்புரை:

மரக்கலங்கள் இயங்கும் நிலவுலகக் கடல் போன்று பெரிய பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடத்தினை உட்கொண்டு, அந்த விடத்தின் தாக்குதலால் வருந்திய தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றும் பொருட்டு, மிகுந்த விருப்பத்துடன், அழகும் கருணையும் வாய்ந்த தனது கடைக்கண் பார்வையால் நோக்கியவன் சிவபெருமான்; அவன் உறையும் இடமாவது, நறுமணம் கமழ்வதும், அகன்று திகழ்வதும், தேன் நிறைந்த மலர்கள் உடைய சோலைகளும், மாசு படிந்தது போன்று பனி படர்ந்து காணப்படும் தென்னை மரங்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள தென்னஞ் சோலைகளும் நிறைந்த தலமாகிய திருப்புகலி ஆகும்.

பாடல் 7:

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல்கள் 4, 5, 6, 7 (திதே 298)

நல்குரவும் இன்பமும் நலங்கள் அவையாகி

வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தன் இடம் என்பர்

பல்கும் அடியார்கள் படியார இசை பாடிச்

செல்வ மறையோர் உறை திருப்புகலியாமே

விளக்கம்:

நல்குரவு=வறுமை; மைந்தன்=வலிமை உடையவன்; பல்கும்=பெருகிய; சைவ சமயத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டும் பொருட்டு, பல தலங்களுக்கும் சென்ற திருஞானசம்பந்தரும் அப்பர் பிரானும், தங்களுடன் வந்த அடியார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகியதை உணர்த்தும் வண்ணம், பல்கும் அடியார் கூட்டம் என்று குறிப்பிட்டார் போலும். படி=நிலம்; தங்களது பழவினைகளை நுகர்ந்து கழிக்கும் உயிர்களுக்கு, வறுமையால் துன்பங்களும் நன்மைகளால் இன்பங்களும் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் உயிர்கள் வினைகளை கழிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொள்ளும் இறைவனின் கருணையால் நிகழ்வன; இவ்வாறு தனது அடியார்கள் அல்லாத உயிர்களுக்கு வினைகளைக் கழித்துக் கொள்ள மீண்டும்மீண்டும் பிறவிகள் அளித்து வாய்ப்பினை நல்கும் பெருமான், தனது அடியார்களின் உயிர்களுடன் பிணைந்துள்ள வலிய வினைகளையும் தீர்த்து அருள் புரிகின்றான். உயிர்களுடன் வலிமையாக பிணைந்துள்ள வினைகளை தீர்க்கும் வல்லமை சிவபெருமான் ஒருவருக்கே உள்ளது என்பதால், வல்லமை வாய்ந்தவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். .

பொழிப்புரை:

முந்திய பல பிறவிகளில் சேர்த்த வினைத் தொகுதியின் பயனை, வறுமை வறுமையால் வரும் துன்பங்கள், வாழ்வில் ஏற்படும் நலன்கள், அந்த நலன்களால் விளையும் இன்பங்கள் ஆகியவை மூலம் உயிர்கள் அனுபவித்துக் கழிக்க வகை செய்துள்ள இறைவன், தனது அடியார்களின் வலிய வினைகளை அடியோடும் தீர்த்து அருள் புரிகின்றான். இத்தகைய வல்லமை பொருந்திய இறைவன் பொருந்தி உறையும் இடம் யாதெனின், நாளுக்கு நாள் பெருகும் தன்மை உடையதும் நிலவுலகில் உள்ள பல தலங்களுக்கும் சென்று இசை பாடி இறைவனைப் புகழும் அடியார்கள் வாழ்வதும், சிவானந்தம் எனப்படும் செல்வம் பொருந்திய மறையோர்கள் வாழ்வதும் ஆகிய திருப்புகலி தலமாகும்.

பாடல் 8:

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 299)

பரப்புறு புகழ்ப் பெருமையாளன் வரை தன்னால்

அரக்கனை அடர்த்தருளும் அண்ணல் இடம் என்பர்

நெருக்குறு கடல் திரைகண் முத்தமணி சிந்தச்

செருக்குறு பொழில் பொலி திருப்புகலியாமே

விளக்கம்:

பரப்புறு=உலகெங்கும் பரந்த; வால்மீகி இராமயணத்தில் உத்தர காண்டத்தில், சீதா பிராட்டியை இராவணன் கடத்துவதற்கு முன்னர் அவனது வாழ்வினில் நடந்த பல நிகழ்ச்சிகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. அவனது வீரச் செயல்கள் விளைவித்த புகழ் உணர்த்தப் படுகின்றன. அண்ணல்=தலைவன்;

பொழிப்புரை:

தனது வீரச் செயல்களால் உலகெங்கும் பரந்த புகழ் உடைய அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, அந்த கயிலாய மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றி, அரக்கனை கயிலாய மலையின் கீழே அமுக்கி, அவனது ஆற்றலை அடக்கியவன் சிவபெருமான். அத்தகைய ஆற்றல் வாய்ந்தவனும் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகிய பெருமான் உறையும் இடம் யாதெனின், நெருக்கமாக வரும் கடல் அலைகள் முத்துக்கள் மற்றும் மணிகளையும் கொண்டு வந்து சேர்க்கும் புகழினை உடைய சோலைகள் பொலியும் திருப்புகலி தலமாகும்.

பாடல் 9:

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 299)

கோடலொடு கூன் மதி குலாய சடை தன் மேல்

ஆடரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும்

நேட எரியாகி இருபாலும் அடி பேணித்

தேட உறையும் நகர் திருப்புகலியாமே

விளக்கம்:

கோடல்=வெண் காந்தள் மலர்; கூன் மதி=வளைந்த சந்திரன், பிறைச் சந்திரன்; குலாய=குலவிய; இருவர்=பிரமன் மற்றும் திருமால்; நேட=தேட; பேணி=விரும்பி; தங்களது உள்ளத்தில் அன்பினால் எழும் விருப்பம் கொண்டு, பெருமானைக் காண விரும்பிய பல அடியார்களுக்கு, காட்சி கொடுத்து அருள் புரிந்தவர் சிவபெருமான். பிரமனும் திருமாலும் முறையே பெருமானின் திருமுடியையும் திருவடிகளையும் காண விருப்பம் கொண்டார்கள் எனினும், அந்த விருப்பம் தங்கள் இருவரில் யார் பெரியவர் என்பதனை அடுத்தவருக்கு உணர்த்தும் முகமாக எழுந்தது என்பதால், அவர்கள் விருப்பம் கொண்டு தேடியபோதும் அவர்களுக்கு பெருமான் காட்சி தரவில்லை. இருபாலும்= கீழும் மேலும்:

பொழிப்புரை:

வெண் காந்தள் மலர் மற்றும் வளைந்த பிறைச் சந்திரன் குலாவும் தனது சடையின் மேல், படம் எடுத்து ஆடும் இயல்பினை உடைய பாம்பினையும் வைத்து அருளுபவர் சிவபெருமான். உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாக இருந்து காப்பாற்றும் பெருமான், தங்கள் இருவரில் யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் எதிரே நீண்ட தழற்பிழம்பாக தோன்றினார். அவ்வாறு தோன்றிய பிழம்பின் அடியையும் முடியையும் கண்டு தங்களின் ஆற்றலின் தன்மையை முடிவு செய்வோம் என்ற விருப்பம் கொண்டு, பன்றி உருவத்துடன் கீழே அகழ்ந்தும் அன்னமாக மேலே பறந்தும் முயற்சி செய்த போதும், திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் தோல்வி அடையும் வண்ணம் நீண்ட உருவமாக நின்ற பெருமான் உறையும் நகர் திருப்புகலியாமே.

பாடல் 10:

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 299)

கற்றமணர் உற்றுலவு தேரர் உரை செய்த

குற்ற மொழி கொள்கை இலாத பெருமான் ஊர்

பொற்றொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும்

செற்றவர் விருப்புறு திருப்புகலியாமே

விளக்கம்:

கற்றவர்=புலமை வாய்ந்தவர்கள்; சமணர்கள் தமிழ் இலக்கியத்திற்கு செய்த தொண்டு சிறப்பு வாய்ந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, நாலடியார் போன்ற பல நூல்கள் சமணர்கள் இயற்றியவை. எனவே தான் அவர்களை கற்றவர் என்று திருஞானசம்பந்தர் கூறினார் போலும், சிலப்பதிகாரம் குண்டலகேசி போன்ற நூல்கள் புத்தர்கள் இயற்றியவை. உற்று=தேர்ச்சி அடைந்து; ஏலுதல்=பொருந்துதல், ஏற்றுக் கொள்ளுதல்; தொடி=வளையல்; பொற்றொடி=பொன் வளையல்கள்; மைந்தர்=வலிமை வாய்ந்த ஆடவர்கள்; செற்றவர்=வென்றவர்;

பொழிப்புரை:

தமிழ்ப்புலமை வாய்ந்தவர்களாக விளங்கிய சமணர்களும், நூலறிவில் தேர்ச்சி பெற்றவர்களும் பல இடங்களில் திரிபவர்களும் ஆகிய விளங்கிய புத்தர்களும் கூறும் குற்றமுடைய சொற்களை, மெய்ப்பொருளின் உண்மையான நிலையினை அறியாததால் சொல்லும் குற்றம் பொருந்திய சொற்களை, ஏற்காமல் ஒதுக்கித் தள்ளும் பெருமான் உறையும் ஊர், பொன் வளையல்களைத் தங்களது கைகளில் அணிந்த மங்கையரும், ஆடவர்களும், ஐந்து புலன்களையும் வென்ற ஞானிகளும் விரும்பி உறையும் திருப்புகலி நகரமாகும்.

பாடல் 11:

முன்னிய கலைப் பொருளும் (2.029) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 299)

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன் மேல்

அந்தம் முதலாகி நடுவாய பெருமானைப்

பந்தன் உரை செய்த தமிழ்கள் பத்தும் இசை கூர

வந்த வணம் ஏத்தும் அவர் வானம் உடையாரே

விளக்கம்:

பாடல்களை இசை வடிவினில் பாடத் தொடங்கும் போதே அனைவர்க்கும் இனிமையான இசையுடன் பொருந்தும் வண்ணம் பாட முடிவதில்லை. நாட்கள் செல்லச் செல்ல, அவர்கள் பண்களின் தன்மையை அறிந்து கொண்டு முறையாக பாடுவதை நாம் நமது அனுபவத்தில் காண்கின்றோம். எனவே தான், அத்தகைய மனிதர்களை கருத்தினில் கொண்டு, உம்மால் இயன்ற வண்ணம் பாடுவீர் என்று உலகத்தவர்க்கு அறிவுரையாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது, அவர் அருளிய சோற்றுத்துறை பதிகத்தின் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பெருமானை சிந்தனை செய்யும் அடியார்கள் அனைவரும் தேவாரப் பாடல்களை பாட வேண்டும் என்று திருஞானசம்பந்தர் விரும்புவதை இந்த பாடலில் (1.28.11) உணர்த்துகின்றார்.

அந்தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்

சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்

சந்தம் பரவு ஞானசம்பந்தன்

வந்தவாறே புனைதல் வழிபாடே

ஞானசம்பந்தன் என்ற சொல் திருஞானசம்பந்தன் அருளிய பாடல்களை குறிக்கும். அடியார்களாக உள்ள அனைவரும் தேவார பாடல்கள் பாட வேண்டும் என்றும் உணர்த்தும் திருஞானசம்பந்தர், அவ்வாறு பாடத் தொடங்கும் போது எடுத்தவுடன் முதலில் சந்தத்துடன் பாட இயலாது என்பதை கருத்தினில் கொண்டு, தமக்கு இயன்ற வரையில் பாடுதல் இறைவனுக்கு நாம் செய்யும் வழிபாடு என்று கூறுகின்றார். வந்தவாறே என்ற சொல்லினை ஞான சம்பந்தன் என்ற சொல்லுடன் இணைத்து ஞானசம்பந்தனுக்கு வந்தவாறே என்று உணர்த்துவதாகவும் பொருள் கூறுகின்றனர். அதாவது இறைவனின் அருளால் ஞானசம்பந்தனுக்கு வாய்க்கப் பெற்ற ஆற்றலின் வடிவமாக வெளிவந்த பாடல்கள் என்று கூறுவதும் பொருத்தமே. ஞானசம்பந்தரின் பாடல்கள் இறைவன் அருளால், இறைவனே அவரது மனதிலிருந்து வெளிப்படுத்திய பாடல்கள் என்பதை இவ்வாறு சிலர் உணர்த்துகின்றனர். ஆனால் இந்த இரண்டு விளக்கங்களை விடவும், முந்திய விளக்கமே மிகவும் பொருத்தமாக உள்ளது.

மேற்கண்ட குறிப்பு, நமக்கு திருவைகா தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடலை (3.71.1) நினைவூட்டுகின்றது. கோழை மிடறு=பாடுகின்ற போது குரல் நன்கு ஒலிக்க முடியாதபடி, வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாத படி, கோழை வந்து அடைத்துக் கொள்ளும் கழுத்து; கவி=இறைவனை புகழ்ந்து பாடும் பொருள்கள் அடங்கிய தோத்திரங்கள்; கோளும் இலவாக=பொருள் கொள்ளும்படி நிறுத்தி பாடுதல் இல்லையாயினும், இசை கூடும் வகை=இசை நுணுக்கங்களை நன்கு அறிந்து உணர்ந்து பாடுதல். குரல் நன்கு ஒலிக்க, பாடலின் சொற்களை பிழையின்றி உச்சரித்து,பொருளினை உணர்ந்து கொண்டு பிறரும் பொருள் புரிந்து கொள்ளும் வண்ணம் நிறுத்தியும், இசை நுணுக்கங்களை அறிந்து கொண்டு பாடலுக்கு உரிய இசை பொருந்தும் வண்ணமும் தேவாரப் பாடல்களை நாம் பாட வேண்டும் என்பதை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். தாழை=தென்னை மரத்தினை இங்கே குறிக்கும்; நிலத்தின் செழிப்பினை உணர்த்தும் முகமாக, இறைவனைப் போற்றி பாடும் அடியார்களும் செழிப்புடன் வாழ்வார்கள் என்பதை உணர்த்தும் பாடல். ஏழை அடியார்கள்=மேலே உணர்த்திய மூன்று திறமைகள் அற்ற அடியார்கள்; திறமையில் ஏழைகள் ஆயினும் இறைவனிடத்தில் அன்பு செய்வதில் தாழ்ந்தவரல்லர். இந்த பாடலில் பாடல்களை எவ்வாறு பாடவேண்டும் என்பதை எதிர்மறையாக குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அவ்வாறு பாட இயலாத அடியார்களின் நிலையினை சற்று சிந்தனை செய்தார் போலும். முறையாக பாட இயலவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தேவாரப் பாடல்கள் பாடாமல் இருக்க வேண்டியதில்லை என்று அவர்களைத் தேற்றி அவர்களையும் பாடுமாறு ஊக்குவிக்கும் பாடல்

கோழை மிடறாக கவி கோளும் இலவாக இசை கூடும் வகையால்

ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடமாம்

தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி

வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறு செயும் வைகாவிலே

நல்ல குரலொலியுடன் தகுந்த உச்சரிப்புடன், பாடலின் பொருள் அடுத்தவருக்கு புரியும் வண்ணம் நிறுத்தி பாடும் தன்மையுடன் இசை நுணுக்கங்களை புரிந்து கொண்டு தகுந்த இசை பொருந்தும் வண்ணம் பாட இயலாத வண்ணம் கோழை தொண்டையை அடைக்கின்றதே என்று அடியார்களே நீங்கள் கவலை கொள்ளாதீர். பெருமான் பால் நிறைந்த அன்புடன் நீங்கள் உங்களால் இயன்ற வரையில் இசையுடன் இணைத்து எவ்வாறு பாடினும் அதனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு அருள் புரியும் ஈசனது இடமாக உள்ளது திருவைகா தலமாகும். நீர்வளமும் நிலவளமும் மிகுந்து செழிப்பாக காணப்படும் இந்த தலத்தில் அமைந்துள்ள முற்றிய காய்களை உடைய தென்னை மரத்திலிருந்து காய்கள் அருகில் உள்ள பாக்கு மரத்தின் மீது வீழ, பாக்கு மரத்தின் வரிசையான குலைகள் சிதறி வாழை மரத்தின் மீது வீழ, அந்த வாழை மரத்தின் கனிகள் சிதறி வயலில் வீழ்ந்து ஆங்குள்ள நீரில் ஊறி, வயல்கள் சேறாக மாற்றப்பட்ட தன்மையில் செழிப்பாக காணப்படும் தலம் திருவைகா ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நாம் விளக்கத்தினை சிந்திக்கும் இந்த பதிகத்தின் கடைப் பாடலில் உள்ள கடைசி அடி, வந்தவணம் ஏத்தும் அவர் வானம் உடையாரே என்று கூறுவது, நமக்கு திருஞானசம்பந்தர் அருளிய பழுவூர் தலத்து பதிகத்தின் கடைப் பாடலை (2.34.11) நினைவூட்டுகின்றது. இந்த இரண்டு பாடல்களின் கடை அடி ஒன்றே போல் இருப்பதை நாம் உணரலாம். பதிகத்தின் பொருளை புரிந்து கொண்டு மனமொன்றி பாடுவது தான் முக்கியம். பந்தம்=தொடர்பு; ஆர=மனமார; தங்களால் முயன்ற அளவு இசையோடு இணைத்து பாடும் அடியார்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும்

பந்தம் மலிகின்ற பழுவூரனை ஆரச்

சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி

வந்த வணம் ஏத்தும் அவர் வானம் உடையாரே

இதே கருத்து திருமுதுகுன்றத்து பதிகத்து பாடலிலும் (3.34.11) உணர்த்தப் படுகின்றது. தங்களால் இயன்றவரை பண்ணுடன் இசைத்துப் பாடும் அடியார்களை விட்டு பாவம் விலகிவிடும் என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

திண்ணினார் புறவணி திருமுதுகுன்றரை

நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல்

எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப்

பண்ணினால் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே

அந்தம் முதல் நடுவாய பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே என்ற திருவாசகம் சிவபுராணத் தொடரினை நினைவூட்டுகின்றது. ஆதி, அந்தம் நடுவு என்ற சொற்கள் உயிர்களின் தோற்றம் முடிவு மற்றும் தோற்றம் முடிவு ஆகிய நிலைகளின் இடையே உள்ள நிலை ஆகியவற்றை குறிக்கும். அந்தம்=அழிக்கும் தொழிலைச் செய்யும் உருத்திரன், முதல்=படைப்புத் தொழிலை செய்யும் பிரமன், நடுவு=இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உயிரினை காக்கும் தொழிலைச் செய்யும் திருமால். சிவபெருமான், பிரமன், திருமால் உருத்திரன் ஆகிய மூவராக இருக்கும் நிலையும், அந்த மூவரினும் வேறுபட்டு இருக்கும் நிலையும் திருவாசகம் சிவபுராணத்தில் குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

செந்தமிழ் மொழி பரவி வளரும் புகலி நகரத்தில் உறையும் இறைவன் மீது, பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூவராக இருந்து உயிர்களுக்கு உதவி புரிபவனும் ஆகிய பெருமானைப் புகழ்ந்து, ஞானசம்பந்தன் இயற்றிய தமிழ்ப் பாடல்கள் பத்தினையும், தங்களால் முயன்ற வண்ணம் இசையினில் பொருத்தி பாடும் அடியார்கள் வீடுபேறு அடையும் தகுதியினை உடையவர்கள் ஆவார்கள்.

முடிவுரை;

உயிர்களைப் பிணைத்துள்ள வினைகளின் தன்மைக்கு ஏற்ப, உயிர்களுக்கு கலை ஞானமும் வாழ்வும் அருள்பவன் இறைவன் என்று முதல் பாடலில் உணர்த்தும் திருஞானசம்பந்தர், இரண்டாவது பாடலில் தீயினை ஏந்திய வண்ணம் பெருமான் நடமாடும் ஆற்றலை குறிப்பிடுகின்றார். தன்னைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் நாவினில் பொருந்தி உறைபவர் பெருமான் என்று மூன்றாவது பாடலிலும், உமையன்னையுடன் கலந்து காணப்படுபவன் என்று நான்காவது பாடலிலும், ஆறு வகையான வைதீக சமயங்களாகவும் அந்தந்த சமயங்களின் முடிந்த பொருளாகவும் இருப்பவன் சிவபெருமான் என்று ஐந்தாவது பாடலிலும், ஆலகால விடத்தினை உட்கொண்டு தேவர்கள் அனைவரையும் காத்த கருணையாளன் என்று ஆறாவது பாடலிலும், அடியார்களுடன் பிணைந்துள்ள வினைகள் எத்துணை வலிமை பெற்றிருப்பினும் அதனை நீக்கும் வல்லமை கொண்டவன் என்று ஏழாவது பாடலிலும், புகழ் வாய்ந்த வீரம் கொண்ட இராவணனை அடக்கிய ஆற்றல் உடையவன் என்று எட்டாவது பாடலிலும், சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்த கருணையாளன் என்று ஒன்பதாவது பாடலிலும், ஆண் பெண் ஆகிய இரு பாலர்கள் மற்றும் ஞானிகள் ஆகியோரால் போற்றிப் புகழப்படுபவன் என்று பத்தாவது பாடலிலும் இறைவனது பெருமையை உணர்த்தும் ஞானசம்பந்தர், கடைப் பாடலில் தேவாரப் பாடல்களை மனம் ஒன்றி, நமது திறமைக்கு தக்கவாறு இசையுடன் இணைத்து பாடி,வீடுபேற்றினை அடையுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். பெருமானின் பெருமையினையும், தேவாரப் பாடல்கள் பாடுவதால் ஏற்படும் பயனையும் உணர்ந்து கொண்ட நாம், தினமும் தேவார திருவாசக பாடல்கள் பாடி, வாழ்வினில் உய்வினை அடைவோமாக.



Share



Was this helpful?