பதிக எண்: 2.34 திரு பழுவூர் இந்தளம்
பின்னணி:
தனது நான்காவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவரத்துறை செல்லும் வழியில் திருவரத்துறை இறைவனின் அருளால் முத்துச்சிவிகை, முத்துக்குடை மற்றும் ஊது கொம்புகள் பெற்ற திருஞானசம்பந்தர், திருவரத்துறை பெருமானை வணங்கிப் பதிகம் பாடிய பின்னர், தனது தொண்டர்களுடன் சில நாட்கள் அந்த தலத்தினில் தங்கினார் என்று பெரிய புராணம் தெரிவிக்கின்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெல்வெண்ணெய் முதலிய தலங்கள் சென்ற பின்னர், மீண்டும் திருவரத்துறை தலம் வந்தடைந்து பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு சீர்காழி நகரம் திரும்புவதற்கு அவர் விருப்பம் கொண்டார். அவ்வாறு சீர்காழி நகருக்கு திரும்பும் வழியில் பழுவூர், விசயமங்கை, ஆகிய தலங்கள் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர் திருவைகாவூர் வந்தடைந்தார் என்று பெரிய புராணம் உணர்த்துகின்றது. விரைவில் சீர்காழி சென்றடைய வேண்டும் என்ற ஆவல் மேலோங்கிய படியால், தான் சென்ற வழியிலிருந்த அனைத்து திருக்கோயில்களுக்கும் செல்லாமல், எங்கெங்கு அடியார்கள் தன்னை எதிர்கொண்டு அழைத்தனரோ அங்கெல்லாம் சம்பந்தர் சென்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். ஆனால் அவ்வாறு சம்பந்தர் சென்ற தலங்களின் விவரங்கள் தெரியவில்லை. பல பதிகங்கள் நமக்கு கிடைக்கவில்லை என்பதால், இந்த தலங்கள் மட்டுமே சென்றிருப்பார் என்று உறுதியாகவும் கூற இயலவில்லை. மா=விலங்கு, யானை; பனை மரத்தின் தண்டு போன்று வலிமை வாய்ந்ததும் நீண்டதும் ஆகிய துதிக்கையை கொண்ட விலங்கு.
அனைய செய்கையால் எதிர்கொள்ளும் பதிகள் ஆனவற்றின்
வினை தரும் பாவம் தீர்ப்பவர் கோயில்களு மேவிப்
புனையும் வண்டமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்
பனை நெடும் கை மா உரித்தவர் மிகழ் பெரும் பழுவூர்
யானையின் தோலினை உரித்த வீரச்செயல் இங்கே குறிப்பிடப்பட்டாலும், இந்த தலம் வீரட்டானத் தலங்களில் ஒன்றல்ல. வீரட்டானத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் பழுவூர் மயிலாடுதுறை தலத்துக்கு மிகவும் அருகில் (மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் உள்ளது). அட்ட வீராட்டானத் தலமாகிய பழுவூரின் மீது அருளப்பட்ட தேவாரப் பாடல்கள் ஏதும் இன்றுவரை கிடைக்கவில்லை; எனவே அந்த தலம் வைப்புத் தலமாகவே கருதப் படுகின்றது. இந்த பதிகத்தினில் குறிப்பிடப்படும் பழுவூர் தலம் திருவையாறு அரியலூர் சாலையில் உள்ளது. திருவையாறிலிருந்து 15 கி.மீ. தூரத்திலும் அரியலூரிலிருந்து ஐந்து கி.மீ, தூரத்திலும் உள்ளது. கீழப் பழுவூர் என்று அழைக்கப்படும் இடம் தான் தேவாரப் பாடல் பெற்ற தலம். ஆலமரம் பழு என்று அழைக்கப் படுகின்றது. ஆலமரத்தினை தலமரமாக கொண்டுள்ள இந்த தலம் பழுவூர் என்று அழைக்கப் படுகின்றது. இறைவனின் திருநாமம்; வடமூலநாதர், ஆலந்துறை ஈசர்; இறைவியின் திருநாமம்=அருந்தவ நாயகி, யோகவனேச்வரி; உமை அன்னை, பரசுராமர், பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், அகத்தியர், வசிட்டர், காசிபர், வியாசர் ஆகியோர் இறைவனை இங்கே வழிபட்டு பயன் அடைந்துள்ளனர். தனது தாயினைக் கொன்ற பழி தீரும் பொருட்டு பரசுராமர் இங்கே இறைவனை வழிபட்டதாக தலபுராணம் கூறுகின்றது, மூலவர் சன்னதியில், வழக்கமாக கஜலட்சுமி இருக்கும் இடத்தில் பரசுராமர் உருவச்சிலை உள்ளது. தனக்கு பின்னரும் இறை வழிபாடு முறையாக தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மலையாள தேசத்திலிருந்து முன்னூறு அந்தணர்களை அழைத்து வந்து, வழிவழியாக வழிபாடு செய்யும் வண்ணம் பரசுராமர் ஏற்பாடு செய்தார் என்று கூறுவார்கள். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகம் ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது. இந்த பதிகத்தின் பல பாடல்களில் மலையாளர் இறைவனை வழிபடுகின்றனர் என்ற விவரத்தை (பாடல் எண்கள், 4, 5, 7, 9 & 11) ஞானசம்பந்தர் கூறுகின்றார். இன்றும் இந்த திருக்கோயிலில் கேரளக் கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு முறையே, பின்பற்றப் படுகின்றது. பழுவூர் சென்றடைந்த சம்பந்தர், திருக்கோயில் விமானத்தை வலம் வந்த பின்னர் பெருமானின் தாமரை போன்ற சேவடிகளை தொழுது பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். அவ்வாறு பதிகம் பாடுகையில், எண்ணற்ற தொண்டுகள் புரிந்து மலையாள நாட்டினர் பெருமானை வழிபடுவதை தனது பதிகத்தில் சம்பந்தர் உணர்த்தினார் என்பதை பெரிய புராணம் பதிவு செய்துள்ளது.
பாடல் 1:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல் 1 (திதே 0120)
முத்தன் மிகு மூவிலை நல் வேலன் விரி நூலன்
அத்தன் எமை ஆளுடைய அண்ணல் இடம் என்பர்
மைத்தழை பெரும் பொழிலின் வாசம் அது வீசப்
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே
விளக்கம்:
முத்தன்=இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர்; முக்தி அருள்பவர்; நல்வேலன்= அழகிய வேலினை உடையவன்; விரி நூலன்=கலைகள் அனைத்துமாக விரியும் மறைகளின் பொருளாக விளங்குபவர்; மறைகளை அருளியவர்; அத்தன்=தந்தையாக இருப்பவன்; அண்ணல்=தலைவன்; மை=மேகம்; தழை=மேகம் பொழியும் மழையினால் தழைத்து செழித்து வளர்ந்த; சித்தர்=இறைவனது அருளினால் பல சித்திகள் கைவரப் பெற்று வியக்கத்தகும் செயல்களை செய்பவர்கள்; இந்த தன்மையை உணர்த்தும் வண்ணம் மாணிக்கவாசகர் திருவாசகம் திருப்படையெழுச்சி பதிகத்தில் திண்திறல் சித்தர்கள் என்று கூறுகின்றார். தூசிப்படை=முன்னணிப்படை;
தொண்டர்காள் தூசி செல்லீர் பத்தர்காள் சூழப் போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்‘திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல் படை வாராமே
சிவயாத்திரைக்கு செல்லும் உயிர்களை பத்திரமாக அழைத்துச் செல்வதற்காக ஒரு படையினை எழுப்பவேண்டும் என்று மணிவாசகர் விரும்புகின்றார். அந்த படையினில் எவரெவர் எந்தெந்த நிலையில் நின்று பாதுகாக்கவேண்டும் என்பதை இந்த பாடலில் உணர்த்துகின்றார். பாண்டிய மன்னனின் அவையினில் மந்திரியாக பணியாற்றிய அடிகளாரின் அனுபவம் இந்த பாடலில் வெளிப்படுகின்றது.. பெருமானுக்கு பலவிதமான தொண்டுகள் செய்யும் அடியார்கள் உடல் வலிமை மிகுந்தவர்களாக இருப்பதால், அவர்களை முன்னணிப் படையாக இருக்குமாறு கூறும் அடிகளார், பெருமானின் பக்தர்களாக தன்னலம் அற்றவர்களாக இருக்கும் அடியார்களை, ;பிறருக்கு உதவி செய்வதில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தினை கருத்தினில் கொண்டு அவர்களை, படை வீரர்களுக்கு அவர்கள் வேண்டுவதை தேவையான சமயத்தில் அளிக்கும் பொருட்டு, அவர்களைச் சூழ்ந்து செல்வீர்கள் என்று கூறுகின்றார். முன்னால் செல்லும் படைகள் பின்தங்கிவிடாமல் தொடர்ந்து செல்லும் பொருட்டும், அவர்கள் அச்சம் கொள்ளும் நேரங்களில் தைரியமூட்டி அவர்களை வழிநடத்தவும் திறமை வாய்ந்த யோகிகளை அழைக்கும் அடிகளார், பெருமானின் அருளினால் பல சித்திகள் கைவரப்பெற்ற சித்தர்களை காவற்படையாக இறுதியாக இருக்குமாறு பணிக்கின்றார். கடைக்கூழ்=இறுதி வரிசை. பயிலுதல் என்றால் தொடர்ந்து ஒரு காரியத்தினை செய்தல். நாம் பிறப்பது முதல் இறுதி வரை ஏதோ ஒரு விடயத்தை அறிந்துகொண்டே இருக்கின்றோம் என்பதால் தான் கல்வி பயிலுதல் என்று குறிப்பிட்டு, நமது வாழ்நாள் முழுவதும் நாம் ஏதேனும் கற்றுக்கொண்டே இருக்கின்றோம் என்று கூறுகின்றனர். பத்தர்களும் சித்தர்களும் தொடர்ந்து, இந்த தலத்திலுள்ள பெருமானைப் புகழ்ந்து பணிந்து வந்தமையைக் கண்ணுற்ற திருஞானசம்பந்தர் பத்தர்களும் சித்தர்களும் பயில்கின்ற பழுவூர் என்று குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரை சேக்கிழார் ஆளுடைய பிள்ளை என்று, பெருமானால் ஆட்கொள்ளப் பட்ட குழந்தை என்று பொருள்பட பல பாடல்களில் அழைக்கின்றார். அதற்கு ஏற்றாற்போல், இறைவனை, திருஞானசம்பந்தர், ஆளுடை அண்ணல் என்று இந்த பாடலில் அழைப்பதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனாகிய விளங்கும் பெருமான், மூவிலை வடிவத்தில் உள்ள அழகிய சூலத்தை உடையவனாக விளங்குகின்றான். அவன் அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருந்து காக்கின்றான். அத்தகைய இறைவன், என்னை ஆட்கொண்ட தலைவன், இருக்கும் இடமாவது மழை மேகங்கள் பொழியும் நீரினால் வளமை பெற்றுத் திகழும் சோலைகளில் உள்ள மலர்களின் நறுமணம் வீசும் தலமாகிய பழுவூர் ஆகும். இந்த தலத்தினில் பக்தர்களும் சித்தர்களும் தொடர்ந்து பெருமானைப் பணிந்து வழிபட்டு வருகின்றனர்.
பாடல் 2:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல்கள் 2, 3, 4, 5, 6 (திதே 0121)
கோடலொடு கோங்கு அவை குலாவு முடி தன் மேல்
ஆடரவம் வைத்த பெருமானது இடம் என்பர்
மாடமலி சூளிகையில் ஏறி மடவார்கள்
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே
விளக்கம்:
தலத்தின் நீர்வளத்தினை பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தர் இந்த பாடலில், தலத்தின் செல்வச் செழிப்பினை இந்த பாடலில், உயர்ந்த மாடங்கள் கொண்ட தலம் என்று உணர்த்துகின்றார். சூளிகை=மாளிகையின் மேல் தளம்; கோடல்=வெண் காந்தள்மலர்; குலாவு=கலந்து ;
பொழிப்புரை
வெண் காந்தள், கோங்கம் ஆகிய மலர்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து குலாவும் முடியின் மேல் படம் எடுத்தாடும் பாம்பினை வைத்துள்ள பெருமான் உறையும் இடம் யாது என்பீராகில், உயர்ந்த வீடுகளின் மாடங்களிலும் உச்சி தளத்திலும் ஏறிக்கொண்டு இறைவனின் பெருமையை குறிக்கும் பாடல்களை பாடும் மகளிர் நிறைந்த பழுவூர் தலமாகும்.
பாடல் 3:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல்கள் 2, 3, 4, 5, 6 (திதே 0121)
வாலிய புரத்தில் அவர் வேவ விழி செய்த
போலிய ஒருத்தர் புரிநூலர் இடம் என்பர்
வேலியின் விரைக் கமலம் அன்ன முக மாதர்
பால் என மிழற்றி நடமாடு பழுவூரே
விளக்கம்:
திரிபுரங்களை, வில் அம்பு போன்ற ஆயுதங்கள் எதனையும் துணையாக கொள்ளாமல் பெருமான் சிரித்தே அழித்தான் என்றும் விழித்தே அழித்தான் என்றும் சில புராணங்கள் குறிப்பிடுகின்றன. பல திருமுறைப் பாடல்களும் இந்த கருத்தினை வெளிப்படுத்துகின்றன. அம்பினை எய்தி மூன்று கோட்டைகளையும் அழித்தது ஒரு கற்பத்தில் நடந்தது போன்று, இந்த கோட்டைகளை விழித்தே அழித்ததும் சிரித்தே அழித்ததும் வேறு வேறு கற்பத்தில் நடந்தன என்று கூறுகின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வானவர்கள் முயன்ற வாளி, என்று திருமால் அம்பாகவும், காற்றுக்கடவுள் சிறகாகவும், தீக்கடவுள் அம்பின் முனையாகவும் பங்கெடுத்துக் கொண்ட செய்தி நாம் அறிவோம். இத்தகைய வல்லமை வாய்ந்த அம்பு இருப்பினும், அந்த அம்பினைப் பயன்படுத்தாமல், மூன்று கோட்டைகளையும் எரித்தவர் சிவபெருமான். திருவாசகத்தில் திருவுந்தியார் பதிகத்தில் மிகவும் சுவைபட மணிவாசகர் இதனை கூறுகின்றார். வல்லமை வாய்ந்த அம்பு என்பதால், ஓரே ஒரு அம்புடன் போருக்குச் செல்லும் சிவபெருமான், அந்த ஒரு அம்பும் தனக்கு மிகை என்பதை, அந்த அம்பினை பயன்படுத்தாத செயல் மூலம், உணர்த்தினார் என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற
திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது சிறப்பு வாய்ந்த அம்பினை எடுத்துச் சென்ற பெருமான், அந்த அம்பினையும் பயன்படுத்தாமல், தனது காலின் கீழே அந்த அம்பினை வைத்து விட்டு, அரக்கர்களை வென்றதாக அப்பர் பிரான் உணர்த்தும் வீழிமிழலை தலத்து பாடலை (6.50.9) நாம் இங்கே காண்போம் பரந்தானை இப்பக்கம் என்ற தொடர் பலவிதமாக உலகெங்கும் இறைவன் பரந்து நிற்கும் நிலையினை உணர்த்துகின்றது.
பரந்தானை இப்பக்கம் பல ஆனானைப் பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்துளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்காம்
சரத்தானைச் சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனைச் சடாமகுடத்து அணிந்த பைங்கண்
சிரத்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலிலும் (5.36.5) அம்பு ஏதும் இல்லாமல் மூன்று புரங்களையும் எரித்தவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஏ=அம்பு;
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்
ஏ அலால் எயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே
கச்சி ஏகம்பனை குறித்து பாடிய திருத்தாண்டகப் பதிகப் பாடல் (6.64.8) ஒன்றினில் அம்பினைப் பிடித்தவர் என்று பெருமானை குறிப்பிட்டு, அம்பினை பயன்படுத்தாமல் திரிபுரங்களை எரித்தார் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். வன்கூற்று=கொடிய கூற்றுவன்; பிணையல்=சடையுடன் பிணைந்த; உரு=இடி; வன்கூற்றை என்ற சொல்லை முடித்தவன் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். சாபம்=வில்;
முடித்தவன் காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார் தம் புரம் மூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன் காண் பிஞ்ஞகனாம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி
முடித்தவன் காண் மூவிலை நல்வேலினான் காண் முழங்கி உருமெனத் தோன்றும் மழையாய் மின்னி
இடித்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே
கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.21.1) சம்பந்தர் மூன்று பறக்கும் கோட்டைகளையும் விழித்தே அழித்தவன் என்று கூறுகின்றார். புனல்=கங்கை நதி; அரணம்=கோட்டை; வார் கழல்=கழல் அணிந்த நீண்ட திருவடிகள்; உள்குதல்=நினைத்து தியானம் செய்தல்; ஆடிய=மூழ்கிய, நனைந்த என்று பொருள்.
புனலாடிய புன்சடையாய் அரணம்
அனலாக விழித்தவனே அழகார்
கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய்
உன வார்கழல் கை தொழுது உள்குதுமே
அகத்தியான்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (2.76.5) மூன்று கோட்டைகளும் எரிந்து அழியும் வண்ணம் பார்த்தவர் பெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார்.
போர்த்ததுவும் கரியின் உரி புலித் தோலுடை
கூர்த்ததோர் வெண்மழு ஏந்திக் கோள் அரவம் அரைக்கு
ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே
விழி செய்த=விழித்த, நினைத்த என்ற பொருளில் வந்துள்ளது என்று விளக்கம் அளித்து பெருமான் அம்பினால் மூன்று கோட்டைகளையும் அழித்தார் என்றும் விளக்கம் சிலரால் தரப்பட்டுள்ளது. வாலிய=பெரிய; போலிய=போன்ற; வேலி=வயல்கள்; விரை=நறுமணம்;
பொழிப்புரை
மூன்று பெரிய பறக்கும் கோட்டைகளிலிருந்த திரிபுரத்து அரக்கர்கள் வெந்து அழியும் வண்ணம் தனது கண்களை அகன்று விழித்தவரும், முப்புரி நூல் அணிந்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம், வயல்களில் முளைத்த நறுமணம் மிகுந்த தாமரை மலர்கள் போன்ற முகத்தினை உடைய மாதர்கள்; தங்களது பால் போன்ற இனிய சொற்களால் பாடல்கள் பாடி நடனமாடும் தலமாகிய பழுவூர் என்பதாகும்.
பாடல் 4:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல்கள் 2, 3, 4, 5, 6 (திதே 0121)
எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார்
கண்ணு முதலாய கடவுட்கு இடம் அது என்பர்
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்திப்
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே
விளக்கம்:
இந்த பாடலில் ஞானசம்பந்தர், மலையாளர்கள் பண்ணுடன் இசைந்த பாடல்களைப் பாடியும் அந்த பாடல்களுக்கு ஏற்ப நடனமாடியும் பெருமானைத் தொழுதனர் என்று கூறுகின்றார். இவ்வாறு ஞானசம்பந்தர் குறிப்பிட்டதை சேக்கிழார் பெரிய புராணத்தில் உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மலையர்=மலைநாடு என்று அழைக்கப்பட்ட பகுதி, இன்றைய கேரள மாநிலம்.
மண்ணினில் பொலியும் மலையர் தாம் தொழுது
எண்ணில் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்
நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப்
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்
மலைகள் நிறைந்த கேரள நாட்டினில் வாழும் மாந்தர்களை மலையர் என்று சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் மேற்கண்ட பாடலில் காணலாம். பல வகையில் மலையாளர்கள் பெருமானுக்கு சிறப்பாக திருத்தொண்டுகள் செய்தனர் என்று சம்பந்தர் தனது பதிகத்து பாடல்களில் உணர்த்துவதாக சேக்கிழார் கூறுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட வண்ணம் கேரளத்து மகளிர் பாடியும் ஆடியும் பெருமானைத் தொழுதது போன்று ஆடவர்களும் பெருமானைப் புகழ்ந்து ஆடியும் பாடியும் வணங்கினார்கள் என்பதை நாம் உணருகின்றோம். தங்களது குணநலன்களால் இந்த நிலவுலகினில் சிறந்து விளங்கிய மலையாளர்கள் என்று சேக்கிழார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். கிளவி=சொற்கள்; தேர்தல்=ஆராய்தல்;
பொழிப்புரை:
எண், எழுத்து, இசையுடன் கலந்த சொற்களைக் கொண்ட பாடல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அவற்றின் முதற்பொருள் சிவபெருமான் என்பதை உணரும் சான்றோர்கள், தனது நெற்றியில் கண் கொண்டுள்ள பெருமானது இடம் பழுவூர் என்று கூறுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பழுவூர் தலத்தினில் வாழும் மலையாளர்கள் பண்ணுடன் பொருந்திய பாடல்களைப் பாடியும், அதற்கேற்ப நடனமாடியும், பெருமானைப் புகழ்ந்து தொடர்ந்து அவரை வழிபடுகின்றனர்.
பாடல் 5:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல்கள் 2, 3, 4, 5, 6 (திதே 0121)
சாதல் புரிவார் சுடலை தன்னில் நடமாடும்
நாதன் நமை ஆளுடைய நம்பன் இடம் என்பர்
வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன் தன்
பாதம் அவை ஓத நிகழ்கின்ற பழுவூரே
விளக்கம்:
மறையாளர்=வேதங்கள் பயின்ற மலையாளர்கள்; இந்த திருக்கோயிலில் பெருமானுக்குத் தொண்டு புரிபவர்கள் வழிவழியாக வந்த மலையாளர்கள் என்பதால், மறையவர்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது மலையாளத்து வேதியர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். பரசுராமர் இந்த தலத்து பெருமானை தொடர்ந்து வழிபடும் பொருட்டு முன்னூறு மலையாளர்களை நியமித்தார் என்று தலபுராணம் உணர்த்துகின்றது. இந்த பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிடப்படும் பெரிய புராணத்து பாடலில், மலையர் தாம் தொழுது ஏத்தும் தன்மை என்று குறிப்பிடுவதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். பாடபேதமாக மறையாளர் என்ற சொல் சில பதிப்புகளில் மலையாளர் என்று உள்ளது. இரண்டு சொற்களுமே பதிகத்தின் பொருளுக்கு பொருத்தமாக இருப்பதை நாம் காணலாம்.
பொழிப்புரை:
இறந்து படுகின்ற உடல்கள் எரிக்கப்படும் சுடுகாடு தன்னில் நடமாடும் தலைவனும், நம் அனைவரையும் ஆட்கொண்ட நம்பனும் ஆகிய பெருமானின் உறைவிடம் பழுவூர் என்று கூறுவார்கள். இந்த தலத்தினில், மலையாளத்து அந்தணர்கள் வேதங்கள் ஓதி இறைவனின் திருவடிப் பெருமைகளை உணர்த்துகின்றனர்.
பாடல் 6:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல்கள் 2, 3, 4, 5, 6 (திதே 0121)
மேவ அயரும் மும்மதிலும் வெந்தழல் விளைவித்து
மா அயர அன்று உரி செய் மைந்தன் இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே
விளக்கம்:
மேவ=பொருந்த; அயரும்=துயரினை விளைவிக்கும்; திரிபுரத்து அரக்கர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் தங்களது கோட்டைகளை பொருத்தி, அதன் கீழே அகப்பட்ட உயிர்களை கொன்று துன்புறுத்திய செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது. மா=பொதுவாக விலங்கு; இங்கே விலங்குகளில் பெரியதாக விளங்கும் யானையை குறிப்பிடுகின்றது. பூவை=நாகணவாய்ப் பறவை. தொடர்ந்து இறைவனது புகழினை பாடல்களாக பாடி மகிழ்ந்த, தலத்து மகளிர், அந்த பாடல்களை தாங்கள் வளர்த்து வந்த நாகணவாய்ப் பறவைகளுக்கு கற்பித்து, அந்த பறவைகள் பாடியதைக் கேட்டு மகிழ்ந்தனர் என்று கூறுகின்றார். இறைவனது புகழினை உணர்த்தும் பாடல்களை கேட்பதிலும் பாடுவதிலும் எவ்வளவு ஆர்வம் கொண்டவர்களாக அந்த காலத்து மக்கள் விளங்கினார்கள் என்பதை இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது.
பொழிப்புரை:
தாங்கள் விரும்பிய இடங்களில், தாங்கள் பறந்து சென்ற கோட்டைகளை கீழே இறக்கி, அதன் கீழ் அகப்பட்ட உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றும் கொடிய நெருப்பினில் சிக்கி அழியும் வண்ணம் அம்பினை எய்த பெருமான், தன்னை எதிர்த்து வந்த பெரிய மதயானையின் தோலினை உரித்து அந்த விலங்கினுக்கு துன்பம் இழைத்தான். இத்தகைய ஆற்றல் வாய்த்த பெருமான் உறையும் இடம் பழுவூர் என்று கூறுவார்கள். இந்த தலத்தில் வாழும் கற்புடைய மங்கையர், தாங்கள் வளர்த்து வந்த நாகணவாய்ப் பறவைகளுக்கு, பெருமானின் புகழினை உணர்த்தும் பாடல்களை கற்பித்து, அந்த பாடல்களை பறவைகள் பாடுவதைக் கேட்டு மகிழ்கின்றனர்.
பாடல் 7:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0122)
மந்தணம் இருந்து புரி மாமடி தன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டார்
பைந்தொடி நன்மாதர் சுவடு ஒற்று பழுவூரே
விளக்கம்:
மந்தணம்=இரகசியம்; சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமலும், தனது மகளாகிய தாட்சாயணிக்கும் தெரிவிக்காமல் நடத்த திட்டமிடப்பட்ட வேள்வி என்பதால் இரகசியமாக செய்யப்பட்ட வேள்வி என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தான் இருந்த இடத்திலே இருந்து கொண்டு அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த பெருமான், எங்கும் நடப்பதையும் நடக்கவிருப்பதையும் அறியும் ஆற்றல் படைத்த பெருமான், அறியாத இரகசியம் ஏதேனும் உண்டோ. அந்த வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றால், தனது மகள் என்றும் பாராமல், தக்கன் தாட்சாயணியை இழிவாக நடத்துவான் என்பதையும் முன்கூட்டியே அறிந்திருந்த காரணத்தால் அல்லவா, இறைவன் தனது மனைவி அங்கே செல்லவேண்டாம் என்று கூறுகின்றார். மாமடி=மாமனார், தக்கன்; சிந்த=அழியுமாறு; வேதநெறிகளுக்கு மாறாக செய்யும் வேள்வி இனிதாக முடிவடைந்தால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்ற காரணத்தினால் அந்த வேள்வி அழியும் வண்ணம் பெருமான் செயல்படுகின்றார். சுவடு ஒற்று=அடையாளம் பட ஒற்றிக் கொள்ளுதல்;
பெருமானால் அனுப்பப்பட்ட வீரபத்திரர், வேள்வியில் பங்கேற்ற தேவர்கள் பலருக்கும் தண்டனை அளித்தமை, தக்கனது தலையினை கிள்ளியது ஆகிய செயல்கள், மிகவும் எளிதாக செய்யப்பட்ட தன்மை, விளையாடு சிவலோகன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. திருவாசகம் திருவுந்தியார் பதிகத்திலும் பல தேவாரப் பாடல்களிலும், வீரபத்திரர் நிகழ்த்திய வீரச் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன. தக்கனது வேள்வி அழிக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படும் அதே பாடலில் தலத்து அந்தணர்கள் செய்த வேள்வி குறிப்பிடப் படுவதால், இந்த தலத்தினில் வேள்விகள் முறையாக செய்யப் பட்டன என்பதை நாம் உணரலாம்.
அணிகலன்கள் அணிந்த அழகிய மாதர்களின் காலடிச் சுவடுகள் உடைய தலம் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மங்கையர்கள் ஆடியும் பாடியும் பெருமானைத் தொழுததை உணர்த்தும் சம்பந்தரின் குறிப்புகளின் பின்னணியில், சுவடொற்று என்று சம்பந்தர் குறிப்பது மாதர்கள் நடனமாடுவதால் ஏற்படும் சுவடுகளை தான் என்று நாம் புரிந்து கொள்ளலாம். மட்டு=நறுமணம் மட்டார்=நறுமணம் நிறைந்த; பைந்தொடி=பசும்பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்கள்;
பொழிப்புரை;
பெருமான் அறிந்து கொள்ள முடியாத வண்ணம், இரகசியமாக திட்டமிட்டு பெருமானின் மாமன் தக்கன், வேள்வி செய்யத் தொடங்கிய போதிலும், அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த பெருமான், தனது அம்சமாகிய வீரபத்திரரை தக்கனது வேள்வி நடக்கும் இடத்திற்கு ஏவுகின்றார். அங்கு சென்ற வீரபத்திரர் விளையாடுவது போன்று, வேள்வியில் பங்கேற்ற பலருக்கும் தண்டனை அளித்து, வேள்வி நடக்காமல் அழிக்கின்றார். இவ்வாறு திருவிளையாடல் புரிந்த பெருமானது உறைவிடம் பழுவூர் என்று கூறுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தலத்தினால், அந்தணர்கள் வேள்விகளில் ஆகுதியாக இடும் அகில் கட்டைகளின் புகைகள் எங்கும் நறுமணத்தை பரப்பும் இந்த தலத்தினில், பெருமானைப் பணிந்து நடமாடும் மங்கையர்களின் காலடிச் சுவடுகள் எங்கும் காணப்படுகின்றன.
பாடல் 8:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0122)
உரக்கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்தன்று
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர்
குரக்கினம் விரைப் பொழிலின் மீது கனி உண்டு
பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே
விளக்கம்:
உரம்=வலிமை; உரம் என்ற சொல்லினை விடத்தினது தன்மையை குறிப்பதாக பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. மிடறு=கழுத்து;
பொழிப்புரை
பாற்கடலிலிருந்து எழுந்த வலிமை வாய்ந்த விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கிய பரமன், பண்டைய நாளில் கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்குமாறு அடக்கினார். பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன், சாமகானம் பாடி இறைஞ்சியபோது அவனுக்கு பல வகைகளிலும் பெருமான் அருள் புரிந்தார். இவ்வாறு வியத்தகு ஆற்றலும் கருணையும் ஒருங்கே பொருந்திய பெருமான், அனைவர்க்கும் தந்தையாக திகழும் பெருமான் பழுவூர் தலத்தில் உறைகின்றார். இந்த தலத்தில் உள்ள நறுமணம் வீசும் சோலைகளில் விளையும் பழங்களை உட்கொண்டு, நீர்வளம் நிறைந்த வயல்களில், குரங்குகள் விளையாடுகின்றன.
பாடல் 9:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0122)
நின்ற நெடுமாலும் ஒரு நான்முகனும் நேட
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர்
ஒன்றும் இரு மூன்றும் ஒரு நாலும் உணர்வார்கள்
மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே
விளக்கம்:
ஒன்றும்=ஒப்பற்ற தாரக மந்திரம்; இருமூன்றும் ஒரு நாலும்=ஆறு அங்கங்களை உடைய நால் வேதங்கள்; மன்று=அம்பலம், பொதுவிடம், திருக்கோயில்; நின்ற=உயர்ந்து நின்று மூவுலகினையும் தனது இரண்டு அடிகளால் அளந்த; ஒரு=ஒப்பற்ற; நேட=தேட; எண்கள் ஒன்று இரண்டு மூன்று நான்கு என்று வரிசையாக குறிப்பிடப்பட்டு எண்ணலங்காரமாக இந்த பாடல் திகழ்வதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
மூவுலகங்களையும் தனது ஈரடிகளால் அளக்கும் வண்ணம் நெடியவனாக நின்ற திரிவிக்ரமன் ஆகிய திருமாலும், படைப்புத் தொழில் செய்வதால் ஒப்பற்றவனாக கருதப்படும் பிரமனும், முறையே கீழே குடைந்தும் மேலே பறந்தும் நெடுந்தூரம் சென்று முயற்சி செய்த போதிலும், அவர்கள் தனது திருவடியையோ திருமுடியையோ காண முடியாத வண்ணம், நீண்ட தழலாக நின்றவனும் அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக இருப்பவனும் ஆகிய பெருமான் உறையும் இடம் பழுவூர் என்று கூறுவார்கள். ஒப்பற்ற தாரக மந்திரமாகிய பிரணவ மந்திரத்தையும், நான்கு வேதங்களையும், வேதங்களின் அரணாகத் திகழும் ஆறு அங்கங்களையும் முறையாக கற்று தேர்ந்து உணரும் ஆற்றல் படைத்த அந்தணர்கள், அனைவர்க்கும் பொதுவிடமாகத் திகழும் திருக்கோயில்களில் மற்றவர்களுடன் கலந்து, பெருமானைத் தொழுது மகிழ்கின்றனர்.
பாடல் 10:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0122)
மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர்
முட்டை கண் மொழிந்த முனிவான் தன் இடம் என்பர்
மட்டை மலி தாழை இளநீரது இசை பூகம்
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே
விளக்கம்:
முட்டை=கீழ்மைத் தன்மை; ஆதர்=அறிவிலிகள், மூடர்கள்; துகில்=ஆடை; முனிவான்= வெறுப்பவன்; இசை=இசைந்த, இணைந்த; பூகம்=பாக்கு; தாறு=குலை;
பொழிப்புரை
மயிர் பறிக்கப்பட்டதால் மொட்டை மண்டையராக காட்சி தரும் அறிவற்ற சமணர்களும், துவராடையினால் தங்களது உடலினை மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், சொல்லும் இழிந்த தன்மை உடைய சொற்களை வெறுத்து ஒதுக்கும் பெருமான் உறையும் இடம் பழுவூர் என்று கூறுவார்கள். மட்டைகள் நிறைந்து தாழ்ந்து தொங்கும் இளநீர்கள் மிகுதியாக உடைய தென்னை மரங்களும், அவற்றுடன் இணைந்து வளர்ந்து பட்டைகளுடன் குலைகள் நிறைந்து விரியும் பாக்கு மரங்களும் நிறைந்து பொலியும் தலம் பழுவூராகும்.
பாடல் 11:
முத்தன் மிகுமூவிலை (2.034) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0122)
அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும்
பந்தம் மலிகின்ற பழுவூரனை ஆரச்
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி
வந்த வணம் ஏத்தும் அவர் வானம் உடையாரே
விளக்கம்:
பந்தம்=தொடர்பு; ஆர=மனமார; தங்களால் முயன்ற அளவு இசையோடு இணைத்து பாடும் அடியார்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தேவார திருவாசக பாடல்களை அதற்குரிய பண்ணுடன் பாட முடியவில்லையே என்று கவலை கொள்ளாமல், தங்களால் இயன்ற அளவு பாடினாலும் உரிய பலன் கிடைக்கும் என்று சம்பந்தர் கூறுகின்றார். பதிகத்தின் பொருளை புரிந்து கொண்டு மனமொன்றி பாடுவது தான் முக்கியம். வைகாவூர் தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடல் (3.71.1) நமது நினைவுக்கு வருகின்றது.
கோழை மிடறாக கவி கோளும் இலவாக இசை கூடும் வகையால்
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடமாம்
தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறு செயும் வைகாவிலே
கோழை மிடறு=பாடுகின்ற போது குரல் நன்கு ஒலிக்க முடியாதபடி, வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாத படி, கோழை வந்து அடைத்துக் கொள்ளும் கழுத்து; கவி=இறைவனை புகழ்ந்து பாடும் பொருள்கள் அடங்கிய தோத்திரங்கள்; கோளும் இலவாக=பொருள் கொள்ளும்படி நிறுத்தி பாடுதல் இல்லையாயினும், இசை கூடும் வகை=இசை நுணுக்கங்களை நன்கு அறிந்து உணர்ந்து பாடுதல். குரல் நன்கு ஒலிக்க, பாடலின் சொற்களை பிழையின்றி உச்சரித்து, பொருளினை உணர்ந்து கொண்டு பிறரும் பொருள் புரிந்து கொள்ளும் வண்ணம் நிறுத்தியும், இசை நுணுக்கங்களை அறிந்து கொண்டு பாடலுக்கு உரிய இசை பொருந்தும் வண்ணமும் தேவாரப் பாடல்களை நாம் பாட வேண்டும் என்பதை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.
தாழை=தென்னை மரத்தினை இங்கே குறிக்கும்; நிலத்தின் செழிப்பினை உணர்த்தும் முகமாக, இறைவனைப் போற்றி பாடும் அடியார்களும் செழிப்புடன் வாழ்வார்கள் என்பதை உணர்த்தும் பாடல். ஏழை அடியார்கள்=மேலே உணர்த்திய மூன்று திறமைகள் அற்ற அடியார்கள்; திறமையில் ஏழைகள் ஆயினும் இறைவனிடத்தில் அன்பு செய்வதில் தாழ்ந்தவரல்லர். இந்த பாடலில் பாடல்களை எவ்வாறு பாடவேண்டும் என்பதை எதிர்மறையாக குறிப்பிடும் சம்பந்தர், அவ்வாறு பாட இயலாத அடியார்களின் நிலையினை சற்று சிந்தனை செய்தார் போலும். முறையாக பாட இயலவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தேவாரப் பாடல்கள் பாடாமல் இருக்க வேண்டியதில்லை என்று அவர்களைத் தேற்றி அவர்களையும் பாடுமாறு ஊக்குவிக்கும் பாடல்.
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பாடலிலும் (1.28.11) ஞானசம்பந்தர், அடியார்கள் தங்களுக்கு எவ்வாறு பாட இயலுமோ, அந்த வகையில் பாடினாலும் அத்தகைய பாடல்கள் சிறந்த வழிபாடாக பெருமானால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறுகின்றார். அந்தண்= அழகியதும் குளிர்ந்ததும்; எப்போதும் பெருமானையே சிந்தித்து பெருமானின் அடியார்களாக மாறிய பின்னர், தயக்கம் ஏதும் கொள்ளாமல் தங்களால் இயன்ற வரை தேவார திருவாசகப் பாடல்களை பாட வேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.
அந்தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்தவாறே புனைதல் வழிபாடே
புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலிலும் (2.29.11) இதே கருத்து கூறப்படுகின்றது. தங்களுக்கு எவ்வாறு பாட வருகின்றதோ அவ்வாறு பாடும் அடியார்கள் வீடுபேற்றினை அடைவாரகள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன் மேல்
அந்தம் முதலாகி நடுவாய பெருமானைப்
பந்தன் உரை செய் தமிழ்கள் பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்தும் அவர் வானம் உடையாரே
இதே கருத்து திருமுதுகுன்றத்து பதிகத்து பாடலிலும் (3.34.11) உணர்த்தப் படுகின்றது. தங்களால் இயன்றவரை பண்ணுடன் இசைத்துப் பாடும் அடியார்களை விட்டு பாவம் விலகிவிடும் என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார்.
திண்ணினார் புறவணி திருமுதுகுன்றரை
நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப்
பண்ணினால் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே
பொழிப்புரை:
காலம் காலமாக பெருமானை தொழுது வணங்கிப் பணிவதால் ஏற்பட்ட தொடர்பு பெற்றவர்களாக விளங்கும் மலையாள அந்தணர்களால் போற்றிப் புகழப்படும் பழுவூர்ப் பெருமானை, தனது மனமார மிகுந்த விருப்பத்துடன் சந்தப் பாடல்கள் பாடி போற்றிய ஞானசம்பந்தனது பாடல்களை தங்களால் இயன்ற வண்ணம் இசையுடன் இணைத்து பாடி இறைவனைத் தொழும் ஆற்றல் உடைய அடியார்கள் சிவலோகம் சென்றடைவார்கள்.
முடிவுரை:
தன்னை ஆட்கொண்ட அண்ணல் என்று முதல் பாடலில் பெருமானைக் குறிப்பிடும் ஞானசம்பந்தர், படமெடுத்து ஆடும் பாம்பினைத் தனது சடையில் வைத்த பெருமான் என்று அவரது ஆற்றலை இரண்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். விழித்தே திரிபுரத்து கோட்டைகளை எரித்தவன் என்று மூன்றாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர், எண் எழுத்து சொல் ஆகியவற்றின் தன்மையை ஆராயும் அறிஞர்கள் முழுமுதற் பொருளாக இறைவனை கருதுகின்றனர் என்று கூறுகின்றார். சுடுகாட்டினில் நடமாடும் இறைவனின் தன்மையை புரிந்து கொண்டு, தலத்து மறையவர்கள் வேதங்கள் சொல்லி பெருமானைப் புகழ்வதாகவும், பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் பாடல்களை நாகணவாய்ப் பறவைகளுக்கு கற்றுக்கொடுத்து தலத்து மங்கையர்கள் மகிழ்வதாகவும், ஐந்தாவது மற்றும் ஆறாவது பாடல்களில் குறிப்பிடுகின்றார். தக்கனது வேள்வி முற்றுப்பெறாமல் விளையாட்டாக அழித்த செயலும், ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கி அனைவரையும் காப்பாற்றிய செய்கையும் ஏழாவது மற்றும் எட்டாவது பாடல்களில் உணர்த்தப் படுகின்றன. வழக்கம் போல், இராவணின் கயிலை நிகழ்ச்சி, திருமால் மற்றும் பிரமன் அடிமுடி காணமுடியாமல் திகைத்த சம்பவம், சமணர்கள் மற்றும் புத்தர்களின் இழிந்த சொற்களை பெருமான் வெறுக்கும் தன்மை ஆகியவை எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் உணர்த்தப் படுகின்றன. பதிகத்தின் கடைப் பாடலில், அடியார்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவு பண்ணுடன் இணைத்து தேவாரப் பாடல்களை பாடவேண்டும் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. மலையாள அந்தணர்கள் எவ்வாறெல்லாம் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வணங்குகின்றார்கள் என்ற செய்தி பதிகத்தின் பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. நாமும் அவர்களை பின்பற்றி, இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகத்தின் பாடல்களை இசையுடன் இணைத்துப் பாடி இறைவனது அருளினைப் பெற்று வாழ்வினில் உய்வோமாக.