இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


நாளாய போகாமே

நாளாய போகாமே

பதிக எண்: 1.062 திருக்கோளிலி பண்: பழந்தக்கராகம்

பின்னணி:

திருவாரூருக்கு மிகவும் அருகில் உள்ள தலம். பெருமானின் திருமுடியைக் கண்டதாக பிரமன் பொய் சொன்னதால், அவர் சாபம் பெற நேரிட்டது. அதனால் அவரால் படைப்புத் தொழிலில் முன் போன்று முழுமனதாக ஈடுபடமுடியவில்லை. அவரது படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டதால், அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் நவகிரகங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன. பிரமன் மற்றும் நவகிரகங்கள் இந்த தலம் வந்தடைந்து பெருமானை வழிபட்டு, பெருமானின் அருளால் தமது பணிகளை முன் போன்று மிகுந்த உற்சாகத்துடன் செய்யத் தொடங்கினர். நவகிரக தோஷம் உள்ளவர்கள், இந்த தலத்து இறைவனை வழிபட்டும், இந்த தலத்தின் மீது மூவர் பெருமானார்கள் அருளிய பதிகங்களை பக்தியுடன் ஓதியும், நவகிரகங்களால் ஏற்படும் இடையூற்றை தீர்த்துக் கொள்ளலாம் என்று பெரியோர்கள் கருதுகின்றனர். கோள்களின் துன்பத்தைத் தீர்த்த பெருமானுக்கு கோளிலி என்ற பெயர் வந்தது. தனது நான்காவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூர் சென்ற திருஞானசம்பந்தர், திருவாரூரின் அருகில் உள்ள இந்த தலத்திற்கும் சென்றார். அப்போது அருளிய பதிகம் இந்தப் பதிகம்.

பாடல் 1:

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோ மடநெஞ்சே யரனாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே

விளக்கம்:

நாள்=வாழ்நாள்; போகாமே=வீணாகக் கழியாத வண்ணம்; பெருமானைப் பற்றி பேசாத நாளெல்லாம் பிறவாத நாள் என்று அப்பர் பிரான் கூறுவதும் (6.01)மறந்திட்ட நாள் கெட்ட நாள் என்று சுந்தரர் கூறுவதும் (7.48.2) நமது நினைவுக்கு வருகின்றன. கண்டன்=கழுத்தினை உடையவன்; ஆளாய=அடிமையாக மாறி: மட நெஞ்சே= அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் மனமே; கிளை=சுற்றத்தினர்; சுற்றத்தினர் என்ற சொல் நம்மையும் உட்படுத்துவதாக பொருள் கொள்வது சிறப்பு; கிளைத்தல்=செழிப்புடன் வளர்தல்; இங்கே நலமாக வாழ்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்; கேடு=துன்பங்கள்: கோள்=மாறுபாடு;மாறுபாடு என்று நமது மனதினில் தோன்றும் விகாரங்களை, உயிரின் ஆறு உட்பகைகளாக விளங்கும் காமம், குரோதம், மோகம், உலோபம், மதம்,மாற்சரியம் எனப்படும் குணங்களை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் பிறப்பெடுத்தன் நோக்கமே இறைவனின் தன்மையை உணர்ந்து, அவன்பால் அன்பு கொண்டு அவனது திருவடிகளைச் சென்றடையும் வழியை நாடிச்சென்று, அவனது அருளால் நம்மைப் பிணித்திருக்கும் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, எல்லையில்லா ஆனந்தம் தரும் முக்தி உலகத்தில் ஆழ்ந்து இருப்பது தான். ஆனால் இந்த முயற்சியில் உயிர்கள் வெற்றி பெறாத வண்ணம், தொன்று தொட்டு அந்த உயிர்களைப் பற்றி வரும் வினைகள், உயிர் தங்களது முயற்சியில் வெற்றி கொண்டால், தாங்கள் வலிவிழந்து விடுவோம் என்ற அச்சத்தினால் அந்த வினைகள் செயல்படுகின்றன. தனது நெஞ்சினை அழைத்து நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை வழங்கும் பாடல்.கேடு என்ற சொல்லினை நம் கிளை கிளைக்கும் என்ற தொடருடன் கூட்டி, சிவக்கவிமணியார் ஒரு அருமையான விளக்கம் அளிக்கின்றார். எண்ணற்ற பழைய பிறவிகளில் சேர்த்துக் கொண்டுள்ள வினைகளின் பயனால், ஒவ்வொரு உயிரும் இனியும் கணக்கற்ற பிறவிகள் எடுக்கும் நிலையில் உள்ளன. அவ்வாறு எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும், புதிய உயிர்கள் நமக்கு தாயாகவும், தந்தையாகவும், சுற்றத்தாராகவும் வருகின்றனர். உயிரின் குற்றம், கேட்டின் காரணமாக மேலும் பல பிறவிகள் எடுத்து ஒவ்வோரு பிறவியிலும் வேறுவேறு சுற்றத்தாரை ஏற்றுக்கொள்ளும் தன்மையை கிளை கிளைக்கும் கேடு என்று குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் அளிக்கின்றார். இந்த கேட்டினை நாம் நீக்கிக்கொள்ள வேண்டுமென்றால், நாம் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபடவேண்டும். இந்த விடுதலையை அளிப்பவன் கோளிலி இறைவன் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பு. ஆயம் என்றால் கூட்டம், குழு என்று பொருள். கோளாயம் என்பதற்கு குற்றங்களின் தொகுதி என்று பொருள் கொண்டு, நமது குற்றங்கள் அனைத்தையும் ஒரு சேர நீக்கும் தன்மை படைத்தவன் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஆளாய அன்பு செய்வோம் என்று திருஞான்சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுவது நமக்கு ஆளலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே என்ற மணிவாசகரின் மணிமொழியை (அச்சப்பத்து பதிகம் ஆறாவது பாடல்) நினைவூட்டுகின்றது.

பொழிப்புரை:

உலகம் மற்றும் உலகப்பொருட்களில் நாட்டம் கொண்டு, இறைவனைப் பற்றிய அறிவு ஏதுமின்றி அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் நெஞ்சமே, உனது வாழ்நாளை வீணாக கழிக்காமல், ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கி உலகினை பாதுகாத்த நீலகண்டராக விளங்கும் பெருமான் பால் மிகுந்த அன்பு வைத்து, அவனுக்கு அடிமையாக மாறி, அவனது திருநாமங்களை பலமுறை கேட்பாயாக. அவ்வாறு கேட்பதால், நாமும் நமது சற்றத்தினரும்,செழித்து வாழ்ந்து இன்பம் துய்க்கலாம். மேலும் நம் அனைவரையும் துன்பங்கள் தாக்காத வண்ணமும், நமது மனதினில் எழுகின்ற தீய குணங்களையும் அந்த குணங்களால் ஏற்படும் எண்ணங்களையும் முற்றிலும் தவிர்த்து நம்மை பாதுகாக்கும் தலைவனாகிய பெருமான் கோளிலி எனப்படும் தலத்தினில் உறைகின்றான். இந்த இறைவனின் துணை கொண்டு, நாம் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுதலை பெற்று, மேன்மேலும் பிறவியெடுத்து புதிய சுற்றத்தாரைத் தேடிக் கொள்ளும் கேவலமான நிலையிலிருந்து தப்பிக்கலாம்.

பாடல் 2:

ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே

விளக்கம்:

கோடரவம்=கோணல்; சிந்தனையில் ஏற்படும் கோணல்கள், விகாரமான எண்ணங்கள்; பதிகத்தின் முதல் பாடலில் கோளாய நீக்குமவன் என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அந்த கருத்தினை மீண்டும் வலியுறுத்தும் வண்ணம், கோடரவம் தீர்க்குமவன் என்று கூறுகின்றார். பெருமான் பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில், தலையில் மாலையாக, கழுத்தினில் மாலையாக, தோள்களில் அணிகலனாக, கைகளில் கங்கணமாக, இடுப்பினில் கச்சாக,கால்களில் வீரக்கழலாக, அணிந்து கொள்வதை நாம் பல திருமுறைப் பாடல்களில் காண்கின்றோம். தனது காதினில் தோடாக பெருமான் அணிந்து கொண்டிருக்கும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. திருமுறைப் பாடல்களை நல்ல இசையுடன் பொருத்தி பாடுவதால் நாம் அடையவிருக்கும் பலன் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. கேழற் கொம்பு=பன்றியின் கடைப்பல்; பாடரவம்=பாடலின் ஓசை; துணை மலர் சேவடி என்று பெருமானின் திருவடிகளை குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது. பெருமானின் திருவடிகள், பொன் போன்று அழகுடன் மிளிர்கின்றன. அதே சமயத்தில் மலர் போன்று மென்மையாகவும் உள்ளன. பல பாடல்களில் மலர் சேவடி என்றும் பொற்றாள் என்றும் பொன்னடி என்றும் குறிப்பிடப் பட்டாலும், இந்த உவமை முழுது பெறாமல் இருப்பதால், பெருமானின் திருவடிக்கு பெருமானின் திருவடி தான் இணையானது என்ற முடிவுக்கு திருஞானசம்பந்தர் வந்தார் போலும். அதனால் தான், இணை சேவடி என்ற பொருள் பட, துணை சேவடி என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமானின் திருவடிகளைப் பற்றிக்கொள்ளும் அடியார்களுக்கு அவை நன்மை பயப்பதால் நற்சேவடி என்றும் உணர்த்துகின்றார். கோடு என்ற சொல்லுக்கு வளைவு என்றும் அரவம் என்ற சொல்லுக்கு விடத்தன்மை உடைய ஆணவ மலம் என்றும் பொருள் கொண்டு, உயிர்களுக்கு விடத்தினை விடவும் அதிகமாக கேடு விளைவிக்கும் மலங்களின் தன்மையை நீக்கும் இறைவன் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

பொழிப்புரை:

படம் எடுத்தாடும் இயல்பினை உடைய பாம்பினை மாலையாக அணிந்துள்ள பெருமான், அழகிய ஆமை ஓட்டினையும், பன்றியின் கடைப்பல்லையும் அணிகலனாக தனது மார்பினில் தரித்ததும் அன்றி, பாம்பினை தனது காதினில் தோடாகவும் அணிந்துள்ளான். இவ்வாறு பாம்பு, பன்றிகொம்பு, ஆமையோடு ஆகியவற்றைத் தனது அணிகலனாகக் கொண்டுள்ள பெருமானின் செயல்கள் அவனது ஆற்றலை உணர்த்துகின்றன. இத்தகைய ஆற்றல் கொண்ட பெருமானின், தொழும் அடியார்களுக்கு நன்மை பயக்கும் சேவடிகளை, வேறு உவமை கூறமுடியாத வண்ணம் ஒன்றுக்கொன்று உவமையாக, இணையாக,துணையாக இருக்கும் சேவடிகளை, மலர் போன்று மென்மையான சேவடிகளை, தமது மனதினில் நிறுத்தி பணிந்து வணங்கி இனிய இன்னிசையுட்ன் பொருத்தி பாடியும் தொழுது எழுகின்ற அடியார்களின் மனதினில் பிறர்க்கு குற்றம் விளைவிக்க மூல காரணமாக உள்ள கோணல் சிந்தனைகள் தோன்றாத வண்ணம் தவிர்க்கும் தன்மை உடையவன், கோளிலி நகரினில் உறைகின்ற பெருமானாவான். இந்த இறைவன், கொடிய விடமாக செயல்பட்டு உயிர்களுக்கு கேடு விளைவிக்கும் மலங்களை நீக்கி, உயிர்களை அந்த கேட்டிலிருந்தும் காப்பாற்றுகின்றான்

பாடல் 3:

நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்ற னோங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே

விளக்கம்:

பெருமானின் திருநாமங்களைச் சொல்வதாலும், பெருமானின் புகழினை இசைப்பாடல்களாக பாடுவதாலும், நாம் நமது மனதில் உண்டாகும் குற்றங்களை தவிர்க்கலாம் என்று அறிவுரை கூறிய திருஞானசம்பந்தர், அடுத்து வரும் நான்கு பாடல்களில் பெருமானை வழிபட்டு பயனடைந்த அடியார்களையும், அவர்கள் பெருமானை வழிபட்ட முறையினையும் நமக்கு உணர்த்துகின்றார். இந்த பாடலில் சிறுவன் மார்க்கண்டேயன் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை, கன்றிவரு காலன் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பொதுவாக எவருக்கும் தங்களின் வாழ்நாள், எப்போது எவ்வாறு முடிவடையும் என்பது தெரியாது. எனினும் கொடுமையான நோயால் பாதிக்கப்படும் சமயங்களில், வாழ்க்கையின் இறுதி காலத்தினை எதிர்கொள்கின்றோம் என்ற சிந்தனையே நமக்கு மரணபயத்தை ஏற்படுத்துவதை நாம் உணர்கின்றோம். சிறுவன் மார்க்கண்டேயன் பிறக்கும் முன்னரே, அவனது வாழ்நாள் பதினாறு வருடங்கள் என்பது இறைவனால் தீர்மானிக்கப்பட்டதால், தனது வாழ்நாளின் எல்லையின் தான் இருக்கின்றோம் என்பதை நன்கு அறிந்தவனாக சிறுவன் மார்க்கண்டேயன் இருந்தான். எனினும் அந்த உணர்வின் தாக்கம் ஏதும் அற்றவனாக, வழக்கம் போல் ஒன்றிய சிந்தனையுடன் அவன் பெருமானை வழிபட்ட தன்மையை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இவ்வாறு தனது வாழ்நாள் முடிவடையும் தருவாயிலும், பதட்டம் ஏதுமின்றி அந்த சிறுவன், பெருமானை வழிபட்டுக்கொண்டிருந்த செயல் காலனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த சிறுவனின் உயிரை கவரும் செயல் பெருமானுக்கு கோபத்தை உண்டாக்குமோ என்ற சிந்தனையும், முன்னமே குறித்த நாளில் சிறுவனது உயிரினை கவராமல் இருந்தால், தனது கடமையிலிருந்து தவறிய குற்றத்திற்கு ஆளாக வேண்டி இருக்குமோ என்ற பயமும் கலந்து இரண்டு விதமான உணர்ச்சிகளுக்கு ஆளாகி இருந்ததால், இத்தகைய நிலைக்குத் தன்னை ஆளாக்கிய சிறுவனின் மீது காலனுக்கு கோபம் வந்தது இயற்கையே.கன்றி வரு=மிகுந்த கோபத்துடன் நெருங்கிய; நகு மலர்=மலர்கள் மலர்ந்த தன்மையை விரித்து சிரிக்கும் மலர்கள் என்று குறிப்பிடுகின்றார். இருக்கு மந்திரம்=ரிக் வேதத்தின் மந்திரங்கள்; ஓங்குயிர்=உயர்ந்த உயிர், சிறப்பான உயிர்; இறைவனது அருளால், தனது உயிரினைக் கவர வந்த காலனின் செயல் முறியடிக்கப்படவே, என்றும் அழியாது சிரஞ்சீவியாக சிறுவன் மார்க்கண்டேயன் விளங்கும் தன்மையை, ஓங்குயிர் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார் போலும். ஒன்றி வழிபாடு செய்தல்=தானென்னும் உணர்வு வேறாக புலப்படாமல் சிவனுணர்வே தன்னுணர்வாக நிற்றல். அப்பர் பிரான் தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல், ஒன்றி இருந்து நினைமின்கள் என்ற தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. இந்த பாடலிலும் அவர் மனம் ஒன்றி சிறுவன் மார்க்கண்டேயன் செய்த வழிபாட்டினையும், அதனால் கோபம் கொண்ட இயமனையும், அந்த இயமனை உதைத்து வீழ்த்திய பெருமானின் கருணைச் செயலையும் குறிப்பிடுகின்றார்.

4.81.2). பிறக்க முக்தி என்று திருவாரூரையும், இருக்க முக்தி என்று காஞ்சியையும், இறக்க முக்தி என்று காசியினையும், காண முக்தி என்று சிதம்பரத்தையும்,நினைக்க முக்தி என்று திருவண்ணாமலையையும் குறிப்பிடுவார்கள். அந்தக் கருத்தினை வலியுறுத்தும் முகமாக சென்று தொழுமின்கள் தில்லையை என்று நமக்கு இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். என்று வந்தாய் என்று கேட்ட சிவபிரானுக்கு, அப்பர் இந்த பதிகத்தில் விடை அளிக்கவில்லை. அத்தா உன் ஆடல் காண அடியனேன் வந்தவாறே என்று பத்தனாய் பாட மாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பிரான் விடை கூறுகின்றார். இறைவனே இப்பொழுது தான் வந்தேன் என்று உணர்த்தும் வகையில் வந்தவாறே என்று கூறுவதையும். தனது வருகைக்கும் காரணம் உனது ஆடலைக் காண்பது தான் என்று சொல்லும் அழகும் நாம் ரசிக்கத்தக்கது.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

பொழிப்புரை:

அழகாக மலர்ந்த புதிய மலர்கள் கொண்டு இறைவனின் திருமேனி மீது தூவியும், ஓதுவோருக்கு நன்மை பயக்கும் இருக்கு வேத மந்திரங்கள் சொல்லியும்,மனமொன்றி இறைவனை வழிபட்டு வந்த சிறுவன் மார்க்கண்டேயனின் செயல்களை, முன்னமே குறிப்பிட்ட நாளில் அவனது உயிரினைக் கவர வந்த காலன்,காண்கின்றான். தனது வாழ்நாள் முடிவடையும் நிலையில் உள்ளது என்பதை உணர்ந்த நிலையிலும் பதட்டம் ஏதுமின்றி, இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த சிறுவன் மீது மிகுந்த கோபம் கொண்டவனாக திகழ்ந்த காலன், அந்த சிறுவன் மீது பாசக்கயிற்றினை வீசி அவனது உயிரினைக் கவர முயற்சி செய்த போது, அந்த காலனை காலால் உதைத்து காலனின் உயிரை போக்கிய இறைவன், என்றும் பதினாறு வயதினனாக இருக்கும் வண்ணம் சிறுவனுக்கு வரம் அளித்தான். இவ்வாறு தனது அடியானுக்கு அருள் புரியும் தன்மை படைத்த இறைவன், பொன் போன்று திகழும் கொன்றை மலர்களை மிகுந்த விருப்பத்துடன் தனது சடையில் சூட்டிக் கொள்ளும் எமது தலைவனாகிய பெருமான் கோளிலி தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவான்.

பாடல் 4:

வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் றன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே

விளக்கம்:

மண்ணி=மண்ணி ஆற்றங்கரை; பாலாட்டும்=பால் கொண்டு இறைவனை நீராட்டி வழிபட்ட; சென்ற பாடலில் சிறுவன் மார்க்கண்டேயனுக்கு பெருமான் அருள் புரிந்த செய்கையை குறிப்பிட்ட, திருஞானசம்பந்தர், இந்த பாடலில் சண்டீசருக்கு அருள் புரிந்த தன்மையை குறிப்பிடுகின்றார். வந்த மணல்=ஆற்றினால் அடித்துக் கொண்டு வரப்பட்ட மணல், ஆற்றங்கரையில் உள்ள மணல்; சிந்தை செய்வோன்=தான் மணலால் பிடித்த பெருமானை வழிபடுவதில் சிந்தை ஒன்றியிருந்த சிறுவன் விசாரசருமன், தனது தந்தை தானிருக்கும் இடம் வந்தடைந்ததையோ, ஒரு கோலால் தன்னை அடித்துத் தனது கவனத்தைத் திருப்ப முயன்றதையோ உணரவில்லை; அதனால் கோபம் கொண்ட அவனது தந்தை, பாற்குடத்தை இடறித் தள்ளிய போது பெருமானின் வழிபாட்டிற்கு இடையூறு செய்தவரை, எவரென்றும் பாராமல், அவரது செய்கையை தவிர்க்கும் நோக்கத்துடன், ஒரு கோலை அவரது கால்களின் மீது வீசியெறிய, அந்த கோல் மழுப்படையாக மாறி, அவரது தந்தையின் கால்களை துண்டிதது என்று பெரிய புராணம் உணர்த்துகின்றது. கருமம்=செயல்,பெருமானை வழிபட்டுக்கொண்டிருந்த செயல்: தேர்ந்து=ஆராய்ந்து கண்டு கொண்ட; தன்னிடம் மேய்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த பசுக்களின் பாலை, அந்த பசுக்களின் உரிமையாளர்களுக்கு தெரியாத வண்ணம் பெருமானின் அபிஷேகத்திற்கு சிறுவன் விசாரசருமன் பயன்படுத்துகின்றான் என்று ஊரார் விசாரசருமனின் தந்தை எச்சதத்தரிடம் முறையிடுகின்றனர். தனது மகன் செய்வது தவறான செயலா என்பதை ஆராய்ந்து அறியும் பொருட்டு,எச்சதத்தர் அடுத்த நாள் காலையில், தனது மகன் அறியாதவாறு அவனைப் பின்தொடர்ந்து செல்கின்றார். அப்போது ஊரார் முறையிட்ட வண்ணம், பசுக்கள் பொழிந்த பால் கொண்டு இலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதைக் கண்ணுற்று கோபம் கொண்டு சிறுவனின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தும் தோல்வி அடைந்தமையால், பாற்குடத்தை தனது காலால் இடறித் தள்ளுகின்றார். இந்த செய்தியை தேர்ந்து சிதைப்பான் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கொந்தணவு=கொத்து கொத்தாக நெருங்கி பூத்த கொன்றை மலர்கள்; கால்கள் துண்டுபட்ட நிலையில் எச்சதத்தர் இறந்துபட, தன் பொருட்டு தனது தந்தையை இழந்த சிறுவனின் வழிபாட்டால் மனம் குளிர்ந்த பெருமான், சிறுவன் விசாரசருமனை சண்டீசன் என்று அழைத்து, தனது பூத கணங்களுக்குத் தலைவனாக இருக்கும் பதவியை அளிக்கின்றார். மேலும் தான் தனது சடையில் அணிந்திருந்த மாலையையும் சண்டீசருக்கு சூட்டுகின்றார். இந்த செய்தியே இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது.

பொழிப்புரை:

மண்ணியாற்றால் அடித்துக் கொண்டு வரப்படும் மணல் கொண்டு இலிங்கம் பிடித்து, அந்த இலிங்கத்திற்கு தண்ணீர் மற்றும் பால் கொண்டு நீராட்டி மனமொன்றி இறைவனை வழிபட்டு வந்த சிறுவன் விசாரசருமன், தனது தந்தை தானிருந்த இடம் நாடி வந்ததை உணரவில்லை; தனக்கு உரிமையல்லாத பசுக்கள் பொழிந்த பால் கொண்டு இலிங்கத்தை அபிஷேகம் செய்த செயலை நேரில் கண்ட, அவனது தந்தை எச்சதத்தர், விசாரசருமனின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்த முயற்சிகள் பலனளிக்காததால் கோபம் கொண்டு, தனது மகனின் செய்கையை தடுக்கும் நோக்கத்துடன் பாற்குடத்தை உதைத்து இடறினார். இவ்வாறு சிவவழிபாட்டினுக்கு இடையூறு செய்வதை தடுக்கும் பொருட்டு, சிறுவன் பாற்குடத்தை இடறிய கால்களின் மீது ஒரு கோலினை எறிய,அந்த கோல் மழுப்படையாக மாறி, எச்சதத்தரின் கால்களை துண்டித்தது. இவ்வாறு தனது தந்தை என்றும் பாராமல், சிவவழிபாட்டினுக்கு செய்த தவற்றுக்கு தண்டனை அளித்த சிறுவனின் செயலை மெச்சிய பெருமான், அந்த சிறுவனுக்கு சண்டீசர் என்ற நாமத்தையும் தனது கணங்களுக்கு தலைவராக இருக்கும் பதவியையும் அளித்ததுமன்றி, தனது சடையில் தான் சூட்டிக் கொண்டுருந்த மலர்க் கொத்தையையும் சூட்டி, சிறப்பித்தார். இவ்வாறு தனது அடியார்களின் செயலால் மகிழ்ந்து அவர்களை சிறப்பிக்கும் தன்மை வாய்ந்த எமது தலைவனாகிய இறைவன், கோளிலி தலத்தினில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

பாடல் 5:

வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலுநற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே

விளக்கம்:

நம்பி=தலைவன்; வைகலும்=நாள்தோறும்; மஞ்சு=மேகம், இங்கே மேகம் உலவும் வானம் என்று பொருள் கொள்ள வேண்டும்; நஞ்சமுது செய்து=கொடிய ஆலகால விடம் என்று தெரிந்திருந்தும் அந்த விடத்தால் பாதிக்கப்பட்டிருந்த அனைவரையும் காப்பாற்றும் பொருட்டு, அந்த நஞ்சினை மிகுந்த விருப்பத்துடன் அமுதமாக கருதி உட்கொண்ட செயல்: பஞ்சவர்=பஞ்ச பாண்டவர்கள்; இந்த பாடலில் பார்த்தனுக்கு அருள் புரிந்த செயல் உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

ஐந்து பொறிகளையும் ஒடுக்கி அடக்கி, அந்த பொறிகளின் செயல்களால் மனதினில் ஏற்படும் வஞ்சனையை தவிர்த்து, நாள்தோறும் பெருமானை நல்ல முறையில் வழிபட்டு தவம் செய்து வந்த அர்ஜுனன், ஆலகால விடத்தினை அமுதமாக கருதி உட்கொண்டு அனைவரையும் அழிவிலிருந்து காத்த பெருமானின் தியாகத்தை நினைத்து பெருமானை தலைவனாக போற்றி வந்தான். இந்த செயலால் மகிழ்ந்த பெருமான், பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பார்த்தனுக்கு பாசுபத அத்திரம் அளித்து உவகை கொண்டான். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான், கொஞ்சும் கிளிகள் வான்வெளியில் பறக்கும் திருக்கோளிலி தலத்தில் உறைகின்ற தலைவனாவான்.

பாடல் 6:

தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி யங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே

விளக்கம்:

தற்பரன்=தனது உயிரினும் மேம்பட்டவன்; அங்கணன்=அழகிய கண்களை உடையவன்; கடைக் கண்ணால் தனது அடியார்களை கண்டு, அவர்களுக்கு கருணை புரியும் தன்மை தெய்வங்களின் கண்களுக்கு அழகு சேர்ப்பதாக கருதப்படுவதால், தனது கடைக்கண் நோக்கால் தனது அடியார்களுக்கு அருள் புரியும் பெருமானை அங்கணன் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தாவியவன்=மூன்று உலகங்களையும் திரிவிக்ரமனாக இரண்டு அடிகளால் தாவி அளந்த திருமால்; பெருமானுக்கு மிகவும் நெருங்கியவனாக அவனது உடலில் ஒரு பாகத்தில் இருக்கும் திருமால், மூன்று உலகங்களையும் தாவி அளக்கும் ஆற்றல் உடையவனாக இருந்தபோதிலும், அவனால் பெருமானின் திருவடிகளை காணமுடியாத நிலை இருந்த தன்மையை இங்கே உணர்த்துகின்றார். திருமாலை இறைவன் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டுள்ள தன்மை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. திருமால் பெருமானுக்கு எவ்வாறு மிகவும் நெருங்கிய அடியானாக இருந்தார் என்பதும் பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது.ஆதிசங்கரர் தனது சிவானந்த லஹரியின் எண்பத்திரண்டாவது பாடலில் திருமால் எவ்வாறு பெருமானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறுகின்றார்.திரிபுரத்து அரக்கர்களுடன் இறைவன் தொடுத்த போரினில் அம்பாகவும், தேரின் அச்சு முறிந்த நிலையில் இறைவன் அமரும் இடப வாகனமாகவும், பார்வதி தேவியாக உடலின் இடது பாகத்திலும், பன்றியாக திருவடியை காண முயற்சி செய்தவராகவும், மோகினி வடிவில் தோழியாகவும், பிரதோஷ கால நடனத்தில் மிருதங்கம் வாசிப்பவராகவும் இருந்த திருமால், தனது கண்ணினை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார் என்று ஆதி சங்கரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

பாணத்வம் வ்ருஷபத்வம் அர்த்தவபுஷா பார்யாத்வம் ஆர்யாபதே

கோணித்வம் ஸஹிதா ம்ருதங்கவஹதா சேத்யாதி ரூபம் ததௌ

த்வத்பாதே நயனார்ப்பணஞ்ச க்ருத்வா த்வத் தேஹோ பாகோ ஹரி

பூஜ்யாத் பூஜ்யதரஸ் ஸ ஏவ ஹி ந சேத் கோ வா ததன்யோ திக

சிறுவன் மார்க்கண்டேயன், சிறுவன் சண்டீசர், அர்ஜுனன் என்ற அடியார்கள் மிகவும் பண்டைய காலத்தில் வாழ்ந்தவர்கள். அண்மையில் வாழ்ந்த அடியார்கள் எவருக்கேனும் பெருமான் அருள் புரிந்த தன்மையை நமக்கு உணர்த்தவேண்டும் என்று விரும்பிய திருஞானசம்பந்தர், தான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நமிநந்தி அடிகளுக்கு அருள் புரிந்ததை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். திருவாரூர் திருக்கோயிலில் உள்ள விளக்குகளில் எண்ணெய் இல்லாத காரணத்தால், பெருமானின் சன்னதியில் இருந்த விளக்குகள் அணையும் தருவாயிலிருந்த போது, அடிகளார் அருகிலிருந்த இல்லங்கள் சென்று சிறிது எண்ணெய் கேட்டார். அதற்கு ஆங்கிருந்த சமணர்கள், தனது கையில் அனல் ஏந்திய பெருமானுக்கு தனியாக விளக்கு எதற்கு என்று கேலி செய்தனர்.இத்னைக் கேட்டு மனம் புழுங்கிய அடிகளாரை, அந்த விளக்குகளில் தண்ணீர் விட்டு விளக்கு ஏற்றுமாறு இறைவன் அசரீரியாக பணிக்க, அடிகளாரும் அவ்வாறே செய்ய விளக்குகள் தண்ணீரால் எரிந்த அதிசயம் நிகழ்ந்தது. மற்றொரு தருணத்தில் இறைவன், திருவாரூரில் வாழும் அனைவரும் சிவகணங்களாக இருக்கும் தன்மையை அடிகளாருக்கு உணர்த்த, அடிகளாரும் தான் அந்நாள் வரை வாழ்ந்துவந்த ஏமப்பேறூர் தலத்தினை விட்டு நீங்கி திருவாரூர் தலத்தினில் வாழத் தொடங்கினார். இவ்வாறு இரண்டு முறை அடிகளாருக்கு இறைவன் அருள் புரிந்த தன்மையை இந்த பாடலில் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். கோவியலும்=தலைமை சார்ந்த, சிறந்த; தாவி என்ற சொல்லுக்கு பிணைந்து நிற்றல் என்று பொருள் கொண்டு, வேறாக காணாமுடியாத வண்ணம் உயிர்களுடன் பிணைந்து நிற்கும் பெருமான்,உயிர்களினும் மேம்பட்டவனாக இருக்கும் தன்மை உணர்த்தப்படுகின்றது என்ற் சிறப்பான விளக்கம் சிவக்கவிமணி அவர்களால் அளிக்கப் படுகின்றது. இந்த தன்மையே சிவஞானபோதம் நூலின் இரண்டாம் சூத்திரத்தில் அவையே தானாக இருக்கும் இறைவனின் தன்மை என்று சொல்லப்படுகின்றது. கோ இயலும் பூ என்ற தொடருக்கு அரசர்களால் ஆட்சி செய்யப்படும் நிலவுலகம் என்று பொருள் கொண்டு, அத்தகைய நிலவுலகத்தில் தானாக முளைத்த விடங்கராக விளங்கும் பெருமான் என்ற விளக்கம் சிவக்கவிமணி அவர்களால் அளிக்கப் படுகின்றது. இந்த ஏழு தலங்களிலும் உள்ள விடங்க மூர்த்தங்களை தியாகராஜர் என்றே அழைக்கின்றனர்.திருவாரூரைச் சார்ந்த சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தலத்தினில் அவனி விடங்கராக காட்சி அளிக்கும் பெருமான் பிருங்கி நடனம் ஆடுபவராக உள்ளார்.

பொழிப்புரை:

மூன்று உலகங்களையும் ஈரடியால் தாவி அளந்த ஆற்றல் உடையவனாக இருந்த திருமால், பெருமானுக்கு மிகவும் நெருங்கியவனாக அவனது உடலின் இடது பாகத்தில் இருந்த போதிலும், அவரால் பெருமானின் திருவடிகளை காண முடியவில்லை; ஆயினும் பெருமானைத் தனது உயிரினும் மேம்பட்டவனாக கருதி அவன் பால் அன்பு பாராட்டி, தனது ஐம்பொறிகளையும் அடக்கி, கருணை நிறைந்த அழகிய கண்களை உடையவன் என்று அழைத்து வழிபட்டவரும்,பலரும் தங்களது நாவினால் புகழத்தக்க வாழ்ந்தவரும் ஆகிய நமிநந்தி அடிகளுக்கு அருள் புரிந்த பெருமான், சிறந்த மலர்கள் கொண்ட செடி கொடி மரங்களை உடைய திருக்கோளிலி தலத்தில் உறைகின்ற பெருமான் ஆவான். உயிர்களினின்று வேறாக பிரிக்க முடியாத வண்ணம் உயிர்களுடன் பிணைந்து நின்று அவற்றை இயக்கும் இறைவன், அவ்வாறு உயிர்களுடன் பிணைந்து இருந்தாலும், உயிர்களினும் மேம்ப்பட்டவனாக இருக்கின்றான்.

பாடல் 7:

கன்னவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான்
சொன்னவிலு மாமறையான் றோத்திரஞ்செய் வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியா னங்கையினில்
கொன்னவிலுஞ் சூலத்தான் கோளிலியெம் பெருமானே

விளக்கம்:

பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானின் திருநாமங்களை சொல்வதாலும், அவனை வழிபடுவதாலும் நாம் அடையவிருக்கும் பலன்களை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் அடுத்த நான்கு பாடல்களில் பெருமானின் கருணையால் நலமடைந்த அடியார்கள் நால்வரை குறிப்பிட்டு உணர்த்துகின்றார்.அதற்கு அடுத்த இந்த பாடலில், பெருமானின் பல்வேறு தன்மைகளை உணர்த்துகின்றார். நவிலும்=செறிந்த, அடர்ந்த, பொருந்திய, போன்ற; மால்=பெரிய;வரை=மலை, இமயமலை; இமையமலையினை அடுக்குத் தொடர் மலை என்ற வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள். அந்த தன்மையை உணர்த்தும் பொருட்டு, கல் நவிலும் மலை என்று கூறுகின்றார். மிடறு=கழுத்து; கொன்னவிலும்=கொலைத் தொழில் புரியும்;

பொழிப்புரை:

அடுக்குத் தொடர் மலை வகையைச் சார்ந்த இமயமலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனும், மேகம் போன்று கருமை நிறத்துடன் ஆலகால விடம் படர்ந்த சிறந்த கழுத்தினை உடையவனும், சிறந்த பொருட்களை உணர்த்தும் சொற்கள் கொண்டதும் புகழ் மிகுந்ததும் ஆகிய நான்கு மறைகள் சொல்லும் நாவினை உடையவனும் ஆகிய பெருமான், தன்னை துதித்து பாடும் அடியார்களின் வாயில் பொருந்தி இருப்பவன் ஆவான். மின்னல் போன்று ஒளிவீசும் சிவந்த சடையினை உடைய பெருமான், தனது உடல் முழுவதும் திருநீறு அணிந்தவனாக, கொலைத் தொழிலில் பழகிய சூலத்தைத் தனது அழகிய கையினில் ஏந்தியவனாக காட்சி அளிக்கின்றான். இத்தகைய பெருமான் கோளிலி தலத்தினில் வீற்றிருகின்றான்.

பாடல் 8:

அந்தரத்திற் றேரூரு மரக்கன்மலை யன்றெடுப்பச்
சுந்தரத்தன் றிருவிரலா லூன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே

விளக்கம்:

அந்தரம்=ஆகாய வெளி; கொந்தரத்த=பூங்கொம்பு போன்று இரண்டு முனைகளை உடைய பிறைச் சந்திரன்; தனது இருப்பிடத்தை தகர்க்க முயன்றவன் என்பதையும் பொருட்படுத்தாது அரக்கன் இராவணனுக்கு அருள் புரிந்த நன்னெஞ்சம் கொண்ட பெருமானின் தன்மை இந்த பாடலில் சொல்லப்படுகின்றது.

பொழிப்புரை:

வானவெளியில் பறந்து செல்லும் புட்பக விமானத்தில் பறந்து சென்ற அரக்கன் இராவணன், பண்டைய நாளில், தான் சென்ற வழியினில் குறுக்கே இருந்தது என்பதால் கயிலாய மலையினைப் பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, தனது அழகிய கால் விரலை கயிலாய மலையின் மீது ஊன்றி அரக்கனது உடலை நெரித்து அவனது செருக்கினை அடக்கியவன் பெருமான். பின்னர் அரக்கன் இராவணான், இறைவனைப் புகழ்ந்து போற்றும் மந்திரங்கள் அடங்கிய சாமகானத்தை பாடிய போது, அவனுக்கு சந்திரஹாசம் எனப்படும் சிறந்த வாளை ஈந்து அருள் புரிந்த கருணை உள்ளம் கொண்டவன் சிவபெருமான். அவன் பூங்கொம்பு போன்று வளைந்த இரு நுனிகளைக் கொண்ட பிறைச் சந்திரனைத் தனது சடையில் அனிந்தவன் ஆவான். இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமான் கோளிலி தலத்தினில் உறைகின்றான்.

பாடல் 9:

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
தாணுவெனை யாளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே

விளக்கம்:

நாணமுடை=தனது ஐந்து தலைகளில் ஒன்றினை இழந்ததால் நாணம் அடைந்த பிரமன்; நண்ணுதல்=நெருங்குதல்; தாணு=ஸ்தாணு என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். என்றும் அழிவின்றி நிலையாக இருப்பவன் என்று பொருள்; பாணன்=பாணபத்திரன் என்ற இசைக் கலைஞன்; மதுரை நகரில் வாழ்ந்து வந்த பாணபத்திரன் என்ற இசைக் கலைஞன் அனுதினமும் சொக்கநாதரைப் புகழ்ந்து பாடல்கள் பாடுவதை வழக்கமாகக் கொண்டவன். அவன் பால் கருணை கொண்ட பெருமான், மதிமலி என்று தொடங்கும் பாடல் வடிவில் அமைந்த கடிதத்தை, சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதி அனுப்பி,பொருள் கொடுத்து உதவுமாறு பணித்தார். அந்த கடிதத்தை இசைக்கலைஞன் மூலம் பெற்றுக்கொண்ட சேரமான் பெருமாள் நாயனார், ஒரு யானை மீது ஏற்றிச்செல்லும் அளவு நிறைந்த பொன்னும் பொருளும் கொடுத்து உதவியதாக திருவிளையாடல் புராணம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த பதிகத்தின் 3, 4, 5, 6 மற்றும் 8ஆவது பாடல்களில் அடியார்களுக்கு அருள் புரிந்த இறைவன், மற்றொரு அடியாருக்கு அருள் புரிந்த செய்கையை இந்த பாடலிலும்,பொதுவாக அடியார்களுக்கு இறைவன் அருள் புரிகின்ற தன்மையை அடுத்த பாடலிலும் உணர்த்துகின்றார். பரிந்து=விரும்பி, ஆதரித்து; நாணமுடை வேதியன் என்ற தொடருக்கு, பெருமானின் திருமுடியைக் காணும் முயற்சியில் தோல்வி அடைந்ததை ஏற்க முடியாமல் நாணம் அடைந்து பொய்யாக திருமுடி கண்டேன் என்று சொல்லிய பிரமன் என்று விளக்கம் கொள்வதும் பொருத்தமே. பாணன் என்ற சொல் திருநீலகண்ட யாழ்ப்பாணரைக் குறிக்கும் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. திருவிளையாடல் புராணத்தில், யாழ்ப்பாணரின் யாழ் தரையில் வைக்கப்பட்டால் பாழாகும் என்ற கருத்தினால், பெருமான் யாழ் வைப்பதற்கு ஒரு ஆசனம் இடும் வண்ணம் பணித்த செயல் குறிப்பிடப்படுகின்றது. பெரிய புராணத்திலும் இந்த செய்தி சொல்லப்படுகின்றது.

பொழிப்புரை:

தனது ஐந்து தலைகளில் ஒன்று கிள்ளி எறியப்பட்டதால் நாணம் அடைந்த பிரமனும், நாரணன் என்று அழைக்க்ப்படும் திருமாலும், முறையே தனது திருமுடியையும் திருவடியையும் நெருங்க முடியாத வண்ணம் நெடிதுயர்ந்த அனற்பிழம்பாக நின்றவன் சிவபெருமான்; என்றும் அழியாது நிலை பெற்ற பொருளாக இருக்கும் பெருமான், என்னைத் தனது அடிமையாக ஏற்றுக் கொண்டவன் ஆவான். அவன் தனது அடியார்களுக்கு அன்பு வடிவினனாக இருக்கின்றான். பண்டைய நாளில் பாணபத்திரன் என்ற இசைக்கலைஞன், அனுதினமும் தன்னை பக்தியுடன் இசைப் பாடல்கள் பாடி வழிபட்டமையை கருத்தில் கொண்டு, பரிவுடன் செயல்பட்டு, அந்த கலைஞனுக்கு பொன்னும் பொருளும் கிடைப்பதற்கு வழி வகுத்தவன் பெருமான். அவன் ஒவ்வொரு பிறையாக தேய்ந்து அழிந்து, வளைந்த ஒற்றைப் பிறையுடன் முற்றிலும் அழியும் நிலையில் தனனைச் சரணடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக்கொண்டு, சந்திரனை அழியாமல் காத்தவன் ஆவான். இத்தகைய பெருமான், கோளிலி தலத்தினில் வீற்றிருக்கின்றான்.

பாடல் 10:

தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே யேத்துமின்கள்
நடுக்கமிலா வமருலகம் நண்ணலுமா மண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே

விளக்கம்:

தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம், தங்களுடன் தடுக்குப்பாய், குண்டிகை, மயிற்பீலி ஆகியவை எடுத்துச் செல்லும் பழக்கம் உடையவர்களாக அந்நாளில் சமணர்கள் திகழ்ந்தனர். அந்த தடுக்கினைத் தாம் அமரும் இடங்களில் ஆசனமாக பயன்படுத்தி வந்தனர். இந்த செய்கை இங்கே உணர்த்தப்படுகின்றது. சமணர்கள் மற்றும் புத்தர்கள், பெருமானைப் பற்றி இழிவான வார்த்தைகள் பேசி மக்களை திசைதிருப்பி, அவர்களை தங்களது மதத்தினில் சேர்த்துக் கொண்டனர். இவ்வாறு மதமாற்றம் அடையும் மக்கள், அந்நாள் வரை பெருமானது பாதுகாப்பில் பெற்ற பல பயன்களை இழந்து பல துன்பங்களுக்கு ஆளாகும் நிலையினை, இடுக்கண் என்று இங்கே குறிப்பிடுகின்றார். கொடுக்ககிலா=வேறு எவரும் அளிக்க முடியாத முக்தி நிலை;

பொழிப்புரை:

தடுக்கினைத் தமது ஆசனமாகக் கொள்ளும் சமணர்கள் மற்றும் தர்க்க சாத்திரத்தில் வல்லவராக விளங்கிய புத்தர்கள், பெருமானை குறித்து இழிவான வார்த்தைகள் பேசி மக்களை திசை திருப்பி வருகின்றனர். அவர்களது பயப்பு வார்த்தைகளில் மயங்கி, சைவத்தை விட்டு நீங்கி மாற்று மதத்தினைத் தழுவும் மக்கள், அந்நாள் வரையில் சிவபெருமான் தங்களுக்கு அளித்த பாதுகாப்பிலிருந்து நீங்குவதால் பல விதமான துன்பங்களை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே துன்பங்களைப் பெற்றுத் தருகின்ற அத்தகைய வார்த்தைகளை கேளாமல், தொடர்ந்து சிவபெருமானை தொழுவீர்களாக.சிவபெருமானை தொழுது வணங்குவதால், நீங்கள் உலகத் துன்பங்களிலிருந்து விடுபட்டு, துன்பங்களால் விளையும் நடுக்கமற்ற அமருலகத்தினை அடையலாம், மேலும் நமது தலைவனாகிய பெருமானின் திருவடிகள், வேறு எவரும் அளிக்க முடியாத முக்தி உலகத்தினையும் பல்வேறு வரங்களையும் கொடுக்கும் தன்மை படைத்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமான் கோளிலி தலத்தினில் உறைகின்றான்.

பாடல் 11:

நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும்
கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்
டின்பமர வல்லார்கள் எய்துவர்க ளீசனையே

விளக்கம்:

மாடு=செல்வம்; நம்பனை=நம்பத் தகுந்தவன்; பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் உணர்த்தப் படும் செய்திகள், பெருமான் மிகவும் நம்பத்தகுந்தவன் என்பதை வலியுறுத்துகின்றன. அதனை மீண்டும் நமக்கு நினைவூட்டும் வண்ணம், நம்பன் என்று இந்த பாடலை தொடங்குகின்றார் போலும். எனவே தான் இவ்வாறு பெருமானின் அருளுக்கு பாத்திரமாகி இருக்கும் தன்மையை மிகவும் பெரிய செல்வம் என்று அடியார்கள் கருதிய தன்மையும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. வம்பு=நறுமணம்; கொம்பு=பூங்கொம்பு; தண்=குளிர்ந்த; வண்டமிழ்=சிறந்த, வளம் பொருந்திய; இன்பமர=இன்பத்துடன் விளங்க;

பொழிப்புரை:

தனது அடியார்களுக்கு பலவகையிலும் அருள் புரிவாதால் நம்பத்தகுந்தவனாக விளங்கும் பெருமான், நல்ல அடியார்கள் தங்களது உயர்ந்த செல்வம் சிவபெருமானை பற்றிய சிந்தனைகள் என்று வாழ்கின்றனர்; இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானை, பூங்கொம்பு போன்று அழகிய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், அழகிய கோளிலி தலத்தினில் உறைபவனும் ஆகிய பெருமானை, நறுமணம் நிறைந்தும் குளீர்ந்தும் காணப்படும் நீர் நிறைந்த காழி நகரைச் சார்ந்த ஞானசம்பந்தன் பாடிய, வளம் பொருந்திய தமிழ பாடல்களை பாடி இன்பம் அடையும் அடியார்கள்,மறுமையில் அந்த ஈசனின் திருவடிகளை அடைந்து, என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.



Share



Was this helpful?