இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


நடைமரு திரிபுரம்

நடைமரு திரிபுரம்

பதிக எண்: 1.121 திருவிடைமருதூர் வியாழக்குறிஞ்சி

முன்னுரை:

தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாவடுதுறை தலம் சென்ற திருஞான சம்பந்தர் அந்த தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து சில பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். திருவிடைமருதூர் தலத்தில் உள்ள திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் ஓடே கலன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடிய வண்ணம் சென்ற திருஞான சம்பந்தர், அந்த தலத்தினில் சில நாட்கள் தங்கியிருந்ததாக பெரிய புராணம் உணர்த்துகின்றது. இந்த தலத்தின் மீது, திருஞானசம்பந்தர் மொத்தம் ஆறு பதிகங்கள் அருளியுள்ளார். மேலும் இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் கிடைத்துள்ளன. திருஞானசம்பந்தர் அருளிய ஆறு பதிகங்களில் ஒன்றாகிய நடைமரு திரிபுரம் என்று தொடங்கும் பதிகத்தினை நாம் இந்த பதிவினில் சிந்திக்கின்றோம்.

சேக்கிழார், பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில் விரவுவார் திருப்பதிகம் பல பாடி பெருமானது திருப்பாதங்களைத் தொழுத வண்ணம் திருஞானசம்பந்தர் மேலும் பல நாட்கள் இந்த தலத்தினில் தங்கி இருந்தார் என்று கூறுவதால், ஒடேகலன் என்று தொடங்கும் பதிகம் மற்றும் பொங்குநூல் மார்பினர் என்று தொடங்கும் பதிகம் ஆகிய இரண்டு பதிகங்களை தவிர்த்து, மற்றைய நான்கு பதிகங்களும் பின்னர் அருளப்பட்ட பதிகங்களாக கருதப் படுகின்றன. விரவுதல்= கலத்தல்; இங்கே தனது மனதினில் விருப்பம் உடையவராக திருஞானசம்பந்தர் பதிகம் பாடினார் என்று பொருள் கொள்ளவேண்டும்.இந்த தலத்தினில் தங்கியிருந்த போது, திருஞானசம்பந்தர் தலத்து அடியார்களுடன் கலந்திருந்தார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில்

விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண்மதியோடு

அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால்

உரவு திருத்தொண்டருடன் பணிந்தேத்தி உறையுநாள்

கிழக்கு திசையில் உள்ள இராஜகோபுரம் அமைந்துள்ள தெரு மிகவும் அகலமாக நேர்த்தியுடன் விளங்குகின்றது. உள்ளே இடது பக்கம் விநாயகர் சன்னதி வலது பக்கம் சுப்ரமணியர் சன்னதி உள்ளன. கோபுரத்தின் கீழ்ப்புற சன்னதியில் பட்டினத்தார் சிலை உள்ளது. இதைக் கட்ந்து சென்றால் கொடிமரம்,பலிபீடம், பிரம்மாண்டமான அழகிய நந்தி ஆகியவற்றை காணலாம். இவற்றை அடுத்த நுழைவாயில் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தன்மை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. கருவறை மண்டபத்தின் முன்னே உள்ள துவாரபாலகர்களின் உயரமும் அழகும் நம்மை பிரமிக்க வைக்கும். கருவறை மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வது சிறந்த பயனளிக்கும் என்று சொல்வார்கள். மூலவர் சுயம்பு மூர்த்தம். சுவாமி சன்னதி மற்றும் அம்பிகை சன்னதி இரண்டும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. திருக்கோயிலின் உட்புறத்தில், பிரணவ பிராகாரத்தில், தெற்கே உள்ள விநாயகர் ஆண்ட விநாயகர் என்று அழைக்கப் படுகின்றார். இவர் மகாலிங்கப் பெருமானை சிறப்பாக வழிபடுவதாகவும், அந்த சிறப்பு வழிபாட்டிற்கு தேவர்கள் பூஜைப் பொருட்கள் கொண்டு வந்து தருவதாகவும் நம்பப்படுகின்றது. இந்த னினாயகர் தனது அருட்சக்தியால் உலகினை ஆண்டு வருவதால், ஆண்ட விநாயகர் என்று அழைக்கப் படுகின்றார்.பொதுவாக பல கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு பூஜை நடைபெற்ற பின்னரே சுவாமிக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த விநாயகர் தான்,முதன்முதலில் மகாலிங்கரை வழிபட்டு பயனடைந்தார் என்று சொல்லப் படுகின்றது. அதனால் இங்கே, சுவாமிக்கு வழிபாடு நடைபெற்ற பின்னர்,விநாயகருக்கு பூஜை நடைபெறுகின்றது. பிரணவப் பிராகாரத்தில் முருகருக்கு தனி கோயில் உள்ளது. முருகரின் சன்னதி முன் ஒரு வேல் காணப்படும்.கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், துர்கை, பிரமன், சண்டேசர் ஆகியோரை காணலாம். வித்தியாசமான அமைப்பு கொண்ட தென்முகக் கடவுள். மகிடனைத் தனது காலில் கீழே அழுத்தி மிதிக்கும் துர்கையின் சிலையின் அழகு பிரமாதம். விநாயகரை அடுத்து, குமார சுப்ரமணியர், சண்டி, வீரபத்திரர், சப்த மாதர்கள், ஏகாதச உருத்திரர்கள், சிவன், உருத்திரன், சங்கரர், நீலலோகிதர், ஈசானர், விஜயர், பீமர், ஆகியோரையும் அடுத்து தேவதேவர், பவோத்பவர், கபாலீச்வரர், திரியம்பக ருத்திரர், ஏகநாயகர் ஆகியோரை காணலாம், கருவறைக்கு நேர் பின்புறத்தில் சுப்ரமணியர் சன்னதி உள்ளது. அடுத்து மருதவாணர், அன்பில் பிரியாள் சன்னதி சற்றே உயரத்தில் அமைந்துள்ளது. இதனை அடுத்து மருதமரம் சிற்பமும், மகாலட்சுமி சன்னதியும் உள்ளன. அடுத்து பஞ்சலிங்கங்கள், சோழலிங்கம், ஜூராதேச்வரர், சங்கநிதி, சேரலிங்கம், பாண்டியலிங்கம், காந்திமதி, ஹரிஹரர், விநாயகர்,நாயன்மார்கள் ஆகியோரை காணலாம். வலது பக்கத்தில் அர்த்த நாரீச்வரர், உமாமகேச்வரி, பராசக்தி, கங்கையம்மன் ஆகிய சன்னதிகள் மற்றும் பைரவர்,உஷாதேவி உடனாய சூரியன் சன்னதிகள் உள்ளன. துவாரபாலகர்களின் அருகே பின்புறத்தில் வரகுண பாண்டியனின் சிலை அமைந்துள்ளது. பக்க்தர்கள் எளிதில் பார்க்க முடியாத வண்ணம், ஒரு ரகசிய அறைக்குள் இருப்பது போல் தோன்றும். இவரே இந்த ஆலயத்தை கட்டியவராக கருதப் படுகின்றார். அடுத்து இருப்பது சித்ரகூட பிராகாரம். அழகிய சிலைகள் உள்ள இந்த கூடம், மார்கழி மாதத்தில் மட்டுமே திறக்கப் படுகின்றது. நவகிரக சன்னதியில் நவகிரக இலிங்கங்கள் உள்ளன.

அம்பிகை சன்னதி தனிக்கோயிலாக உள்ளது. சக்கர பீடத்தில் காட்சி தரும் சுதை வடிவ நாயகி; மேல் கரங்களில் பாசம் மற்றும் அங்குசம் தாங்கிய வண்ணம் எழுந்தருளியுள்ள அம்பிகை தனது வலது கீழ்க்கரம் மூலம் அபயமுத்திரை காட்ட, இடது கீழ்க்கரம் தொடையின் மீது படிந்துள்ள ஊரு ஹச்தமாக உள்ளது. பெருநல நன்முலையாள் என்று அம்பிகையின் திருநாமத்தை திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் பாடலில் உணர்த்துகின்றார். இந்த தலத்தில் இரண்டு அம்பிகை சன்னதிகள் உள்ளன. நின்ற திருக்கோலத்தில் தனி கோயில் கொண்டு விளங்கும் அம்மை பெரு நன்முலை நாயகி என்று அழைக்கப்படும் பிருஹத் சுந்தர குஜாம்பாள். அமர்ந்த கோலத்தில் வேண்டி வருபவர்களுக்கு பிள்ளை வரும் அருளும் அம்மை, அன்பில் பிரியாள். இந்த ஆலயத்தில் உள்ள மூகாம்பிகை சன்னதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சன்னதிக்கும் தெற்கு பக்கம் இந்த சன்னதி அமைந்துள்ளது. திருவிடைமருதூர் மற்றும் கர்னாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் ஆகிய இரண்டு இடங்களிலும் உள்ள மூகாம்பிகை அம்மன் சன்னதி மிகவும் பிரசித்தி வாய்ந்தவை. இந்த மூகாம்பிகை சன்னதி வட இந்திய கோபுர அமைப்பில் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த மகாமேரு ப்ரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. கும்பகோணம் கும்பேச்வரர் கோயில் மேலவீதியில் தனியாக மூகாம்பிகை கோயில் ஒன்று உள்ளது. அம்மன் சன்னதியும் மூன்று பிராகாரங்கள் கொண்டது. இரண்டாவது பிராகாரத்தில் அன்பில் பிரியாளுக்கு தனியாக சன்னதி உள்ளது. பிராகாரத்தில் நாகலிங்கம் சோமலிங்கம் சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டலிங்கம் வசிஷ்ட லிங்கம் ஆகிய பிரம்மாண்ட லிங்கங்கள் உள்ளன. சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. அம்பிகை சன்னதியின் நுழைவாயிலில் துவாரமூர்த்தியாக பன்னிரு கைகளுடன் முருகப் பெருமான் காட்சி தருகின்றார். மருதமரத்தின் அடியிலும் ஆறுமுகப் பெருமானின் சன்னதி உள்ளது.

மூலவரின் கருவறை முன், மனைவியுடன் இருக்கும் சாம்ப தட்சிணாமூர்த்தி உருவத்தை காணலாம். சம்பந்தர் இந்த தென்முகக் கடவுளை தனது பதிகத்தில் குறிக்கிறார். கோயிலில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை பத்து மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இடைமருது தலம் ஊழிக்காலத்தும் அழியாது இருப்பது. இந்தத் தலம் மருத நிலத்தில் உள்ளது. மருத நிலத்திற்கு உரிய மரம் பணைமரம் எனப்படும் மருதமரம். அந்த மருத மரத்தடியில் அமர்ந்து ஊழிக்காலத்தில் இறைவன் இறைவிக்கு ஆகமங்களை உபதேசம் செய்ததாக அப்பர் பிரான் கூறுகின்றார். இதிலிருந்து ஆகமங்கள் உமை அம்மைக்கே முதலில் உரைக்கப்படுகின்றது என்ற கருத்தினை நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அவ்வாறு உரைப்பதற்கு உரிய காரணத்தை நகைச்சுவையாக கூறுவது ரசிக்கத் தக்கது. ஊழிக்காலத்தில் அழியாமல் இருப்பன, சிவபிரான், உமை அம்மை மற்றும் சிவபிரானது பேய்க் கணங்கள் ஆகும். பேய்க் கணங்களோடு காலத்தைக் கழித்தல் அரிது என்று கருதி, உமை அம்மைக்கு ஆகமங்கள் உபதேசம் செய்து சிவபெருமான் காலத்தைக் கழிக்கின்றார் என்று நகைச்சுவை மிளிர அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அனைத்து உயிர்களும் இளைப்பாறும் காலம் என்பதைக் குறிக்க தூங்கிருள் என்று அப்பர்பிரான் கூறுகின்றார். பாங்கி என்றால் தோழி, துணைவி என்று பொருள். இங்கே உமை அம்மையைக் குறிக்கும்.

துணை இலாமையில் தூங்கிருள் பேய்களோடு

அணையலாவது எமக்கு அரிதே எனா

இணையிலா இடைமருதில் எழு

பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே

பாடல் 1:

நடைமரு திரிபுரம் எரியுண நகை செய்த

படைமரு தழலெழ மழுவல பகவன்

புடைமருது இளமுகில் வளமமர் பொதுளிய

இடைமருது அடைய நம் இடர் கெடல் எளிதே

விளக்கம்:

இந்த பாடலில் திரிபுரங்கள் மூன்றும் எரியும் வண்ணம் சிரித்த பெருமான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பல தேவாரப் பாடல்களில் பெருமான் சிரித்தே திரிபுரங்களை அழித்தார் என்று சொல்லப் படுகின்றது. ஒரு சில புராணங்களில் தனது சிரிப்பினால் திரிபுரங்களை அழித்தார் என்றும் சொல்லப் படுகின்றது. தேவர்கள் அனைவரும் திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போரிடச் சென்ற போது, பல வகையிலும் பங்கேற்றனர் என்பதை நாம் அறிவோம். எவரது உதவியுமின்றி தான் ஒருவனே திரிபுரத்து அரக்கர்களை அழிக்கமுடியும் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், தேர்த்தட்டினில் பெருமான் தனது திருவடியை வைத்தபோது தேர்த்தட்டு முறிந்தது; பின்னர் திருமால் இடபவடிவம் எடுத்து பெருமானைத் தாங்க பெருமான் பறக்கும் கோட்டைகளை நோக்கி அம்பினை எய்தார் என்ற செய்தி பல தேவாரப் பாடல்களிலும் காணப் படுகின்றது. மேலும் திரிபுரத்தவர்கள் பெற்றிருந்த வரமும்,ஒரே அம்பினால் தங்களது கோட்டைகள் சிதைக்கப்படவேண்டும் என்பது தானே; பெரும்பாலான பாடல்களில் பெருமான் ஒரே அம்பினை எய்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தார் என்று கூறப்படுவதால், திரிபுரங்கள் பெருமான் எய்த அம்பினால் எரிக்கப்பட்டன என்று கொள்வதே பொருத்தமாக உள்ளது. எனினும் சிரித்தே எரித்தார் என்று கூறுவதன் தன்மையை நாம் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும். திரிபுரத்தவர்கள் பெற்றிருந்த வலிமை வாய்ந்த வரத்தினால், அவர்களை அழிக்கவே முடியாது என்ற முடிவுக்கு வந்த தேவர்கள் பெருமானால் எவ்வாறு அந்த அரக்கர்களை அழிக்க முடியும் என்று ஐயப்பாடு உடையவர்களாக விளங்கினர் போலும். அளவற்ற ஆற்றல் உடைய பெருமான், ஒரே அம்பினைக் கொண்டு, திரிபுரத்தவர்களை அழிப்பது தனக்கு சிரிப்பது போன்று மிகவும் எளிதான செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், பெருமான் சிரித்த படியே மூன்று கோட்டைகளையும் எரித்தார் என்று கொள்வது பலவகையிலும் பொருத்தமாக உள்ளது அல்லவா. இவ்வாறு மிகவும் எளிய முறையில் திரிபுரத்து அரக்கர்களை பெருமான் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில், வீழ்த்தினார் என்பதை உணர்த்தும் முகமாக, சில தேவாரப் பாடல்களில் சிரித்தே எரித்தார், விழித்தே எரித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது போலும்.எவருக்கும் விழிப்பதும் நகைப்பதும் எளிதாக செய்யக்கூடிய செயல்கள் அல்லவா. அந்த எளிய செயல்கள் போன்று திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளை அழிப்பதும் அத்தகைய எளியதான செயலாக பெருமானுக்கு விளங்கியது என்று உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.அத்தகைய தேவாரப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

கழுமலம் தலத்தின் மீது (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) அருளிய பதிகத்தின் பாடலில் (1.74.4) திருஞானசம்பந்தர், பெருமான் புரங்கள் தீயெழ விழித்தார் என்று கூறுகின்றார். தேவர்களையும் மனிதர்களையும் வருத்தியதால், திரிபுரத்து அரக்கர்களை அயலவராக கருதி அவர்களுடன் பெருமான் போர் செய்தார் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. வேய்=மூங்கில்; வேய்புரை=மூங்கிலை ஒத்த அழகுடைய தோள்கள் கொண்ட உமையன்னை;அடுத்தடுத்த இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள மூங்கில் மிகவும் மென்மையானதாகவும், அழகாகவும் உள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.மஞ்சு=மேகம், மேகம் போன்று கரிய நிறம் கொண்ட யானை; மருவுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். இங்கே யானைத் தோலினைத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்ட செய்கை இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. இந்த பாடலில் கழுமலம் தலத்தினை, கழுமலம் தலத்தினில் உறைகின்ற பெருமானை நினைக்கும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டுவிட்டு நீங்கிவிடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.வினைநீக்கத்தின் விளைவு வீடுபேறு அடைவது தான். எனவே கழுமலத்தை நினைக்கும் அடியார்கள் வீடுபேறு அடைவர் என்பது தெளிவாக உள்ளது.திருவண்ணாமலை தலம் போன்று நினைப்போர்க்கு முக்தி அளிக்கும் தலமாக சீர்காழி தலமும் விளங்குகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

எரியொரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறுகந்து ஏறுவர் நீறுமெய் பூசித்

திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி

வரிதரு கண்ணிணை மடவரல் அஞ்ச மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த

கரியுரி மருவிய அடிகளுக்கு இடமாம் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.124.6) பகைவர்களுக்கு சிங்கம் போன்று திகழும் பெருமான், ஒரே நேர்க் கோட்டினில் சேர்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், ஒரு நொடியினில் எரிந்து அழியும் வண்ணம் சிரித்தவர் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். அரி=சிங்கம்; திரிபுரத்து அரக்கர்களை வெற்றி கொள்ளும் சிங்கமாக பெருமன் விளங்கிய தன்மை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பெருமானை நினைக்கும் அடியார்கள் வலிமை பெற்று விளங்குவார்கள் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அன்றினர்=பகைவர்; அன்றி=மாறுபட்டு; உலகத்தவர் அனைவரும் சிவநெறியில் ஒழுகிய போது அவர்களுடன் மாறுபட்டு சிவநெறியை புறக்கணித்த திரிபுரத்து அரக்கர்கள்; வானில் திரிந்து கொண்டிருக்கும் கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டினில் வருவது எப்போதோ ஒரு முறை நிகழக் கூடிய அரிய செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், அரிதினில் ஒன்றிய திரிபுரம் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

அன்றினர் அரி என வருபவர் அரிதினில்

ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி

சென்று கொள் வகை சிறுமுறுவல் கொடு ஒளிபெற

நின்றவன் மிழலையை நினைய வலவரே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.21.1) திருஞானசம்பந்தர் மூன்று பறக்கும் கோட்டைகளையும் விழித்தே அழித்தவன் பெருமான் என்று கூறுகின்றார். புனல்= கங்கை நதி; அரணம்=கோட்டை; வார் கழல்=கழல் அணிந்த நீண்ட திருவடிகள்; உள்குதல்= நினைத்து தியானம் செய்தல்; ஆடிய=மூழ்கிய, நனைந்த என்று பொருள்.

புனலாடிய புன்சடையாய் அரணம்

அனலாக விழித்தவனே அழகார்

கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய்

உன வார்கழல் கை தொழுது உள்குதுமே

பழுவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.34.3) மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து அழியும் வண்ணம் விழித்தவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விழி செய்த=விழித்த, நினைத்த என்ற பொருளில் வந்துள்ளது என்று விளக்கம் அளித்து பெருமான் அம்பினால் மூன்று கோட்டைகளையும் அழித்தார் என்றும் விளக்கம் சிலரால் தரப்பட்டுள்ளது. வாலிய=பெரிய; போலிய=போன்ற; வேலி=வயல்கள்; விரை=நறுமணம்;

வாலிய புரத்தில் அவர் வேவ விழி செய்த

போலிய ஒருத்தர் புரிநூலர் இடம் என்பர்

வேலியின் விரைக் கமலம் அன்ன முக மாதர்

பால் என மிழற்றி நடமாடு பழுவூரே

அகத்தியான்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (2.76.5) மூன்று கோட்டைகளும் எரிந்து அழியும் வண்ணம் பார்த்தவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

போர்த்ததுவும் கரியின் உரி புலித் தோலுடை

கூர்த்ததோர் வெண்மழு ஏந்திக் கோள் அரவம் அரைக்கு

ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே

திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.28.7) பெருமான் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து அழியும் வண்ணம் சிரித்தே அழித்தார் என்று திருஞானசம்பந்தரால் சொல்லப்படுகின்றது. எண்ணிலார்=எண்+இலார்=எண்ணம் இல்லாதவர்கள்,சிவபெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத திரிபுரத்து அரக்கர்கள்;

விண்ணிலார் இமையவர் மெய்ம் மகிழ்ந்து ஏத்தவே

எண்ணிலார் முப்புரம் எரி உண நகை செய்தார்

கண்ணினால் காமனைக் கனல் எழக் காய்ந்த எம்

அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே

தேவூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.74.7), முப்பரங்களும் வெந்து அவியும் வண்ணம் நகை செய்து அழித்தவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கன்றி=கோபித்து; வென்றி நிகழ்=வெற்றி பெற்ற; துன்று=நெருங்கிய; நிலை=பற்றுக்கோடு; முன்றின் மிசை நின்ற=வீட்டின் முன்னால் நின்ற; கறவை=கறவைப் பசுக்கள்; குருளைகள்=கன்றுகள்; துளி ஒன்ற=துள்ளி இணைந்து; உலகத்தவர் மீது கோபம் கொண்டு அவர்களை அழிப்பதற்கு பறந்து செல்லும் கோட்டைகள் ஒன்றாக சேர்ந்த ஒரு சமயத்தில் அந்த கோட்டைகள் வெந்து அவியும் வண்ணம் அவற்றை நோக்கி நகை செய்து அழித்த பெருமான் ஒருவன் தான், நான் சென்று அடையக்கூடிய பற்றுக்கோடாக விளங்குபவன் என்று உணர்த்தும் திருஞானசம்பந்தர் வழிவழியாக தங்கள் குலத்திற்கு கடவுளாக பெருமான் இருந்த நிலையினை, தந்தைக்கும் தந்தை என்ற தொடர் மூலம் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகை செய்

என்றனது சென்று நிலை எந்தை தன தந்தை அமர் இன்ப நகர் தான்

முன்றின் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவைக் குருளைகள்

சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.68.3), அப்பர் பிரான், திரிபுரத்தவரின் மூன்று கோட்டைகளையும் சிரித்தே பெருமான் எரித்தார் என்று கூறுகின்றார். ஓவா=இடையறாது ஒலிக்கும்; பண்ணின் ஆர் முழவம்=பண்களின் இசைக்கு. ஏற்ப ஒலிக்கும் முழவம்;முழவம்=மத்தளம் போன்ற தோற்கருவி. எண்ணிலார்=சிவபெருமானை நினைத்து வணங்காமல் வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்கள்;

கண்ணினால் காமவேளைக் கனலெழ விழிப்பர் போலும்

எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உணச் சிரிப்பர் போலும்

பண்ணினார் முழவம் ஒவாப் பைம்பொழில் பழனை மேய

அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், அப்பர் பிரான் அம்பு ஏதுமின்றி மூன்று கோட்டைகளையும் பெருமான் எரித்தார் என்று கூறுகின்றார். பூவுலாம்=பூக்கள் அதிகமாக பொருந்திய; எயில்=கோட்டை; ஏ=அம்பு;

பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்

ஏ அலால் எயில் மூன்றும் எரித்தவன்

தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்

மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.21.9) அப்பர் பிரான், சிவபெருமானை மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து அழியும் வண்ணம் விழித்து நோக்கிய பெருமான் என்று குறுப்பிடுகின்றார். உயிர்களுக்கு காம உணர்ச்சி அதிகமாகத் தோன்றும் இளவேனில் காலத்தில் (வசந்த காலத்தில்), ஒரு நாள் மாலை நேரத்தில் மன்மதன், தவம் செய்து கொண்டிருந்த சிவபெருமானின் கவனத்தைத் திசைதிருப்ப முயன்றான். வசந்த காலமும்,மாலை நேரமும் அவனுக்குத் துணையாக இருந்த போதிலும், ஐந்து புலன்களையும் வென்ற சிவபெருமானை மன்மதன் வெல்ல முடியவில்லை.எல்லையில்=அழிவு இல்லாத வகையில் எங்கும் திரிந்து கொண்டிருந்த

விரியும் தண் இளவேனிலில் வெண்பிறை

புரியும் காமனை வேவப் புருவமும்

திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து

எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.37.1) அப்பர் பிரான், பெருமானை, திரிபுரங்கள் சாம்பலாக மாறும் வண்ணம் நோக்கியவர் என்று குறிப்பிடுகின்றார். ஆரார்=பகைவர்கள்; அனலாடி=தீயில் கூத்து நிகழ்த்துபவன்; அனலாடி என்றும் ஆரமுதே என்றும் இங்கே முதலடியில் அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் காணலாம். அனலும் அமுதமும் ஒன்றுக்கொன்று முரணான பொருட்கள். இவை இரண்டையும் ஒருங்கே வைத்து சொல்லி, பெருமான் அடியார்களுக்கும் மற்றவர்களுக்கும் வேறுவேறாக அருள் புரிவதை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். திரிபுரத்து அரக்கர்களுக்கு அனலாக விளங்கி அவர்களை அழித்த பெருமான், அதே திரிபுரத்து கோட்டைகளில் வாழ்ந்து வந்த சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவருக்கும் அருள் புரிந்து காப்பற்றியமையும் உணர்த்தும் பொருட்டு அனலையும் ஆரமுதையும் அருகே வைத்து பாடினார் போலும். குறட்பூதம்=குள்ளமான பூதப் படைகள்;தெவிட்டாத ஆரமுதாக இறைவன் தனக்கு இருந்த நிலையை நினைத்து அப்பர் பிரான் உள்ளம் நெகிழ்ந்து பாடிய பாடல். உடல் முற்றிலும் பழுதடைந்து,கயிலை யாத்திரையினை மேற்கொண்டு தனது பயணத்தைத் தொடர உடல் ஒத்துழைக்காத நிலையிலும், மனத் திண்மையுடன் தனது யாத்திரையை தான் தொடர வேண்டும் என்று விரும்பிய போது, கயிலை யாத்திரையை தொடர்ந்து மேற்கொள்வது கடினம் என்று உண்மை நிலையை உணர்த்தி, அதே சமயத்தில் தனது உடல் தளர்ச்சியை போக்கி, திருவையாற்றில் கயிலைக் காட்சி காண்பதற்கு அருள் செய்த பெருமானின் திறத்தினை நினைத்து ஆரா அமுதே என்று இறைவனை அப்பர் பிரான் அழைக்கின்றார். இவ்வாறு பெருமான் தனக்கு உதவி செய்து கயிலைக் காட்சி காண்பதற்கு அருள் புரிந்ததை நினைத்து தனது மனம் கசிந்து உருகுகின்றது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே என்றேன் நானே

கூரார் மழுவாட் படை ஒன்றேந்திக் குறட்பூதப் படையாய் என்றேன் நானே

பேராயிரம் உடையாய் என்றேன் நானே பிறைசூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே

ஆரா அமுதே ஐயாறு அன்னே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.37.2) அப்பர் பிரான், மூன்று கோட்டைகளும் தீயினில் வெந்து அழியும் வண்ணம் நோக்கியவன் பெருமான் என்று கூறுகின்றார். தீவாயின் நீறா என்று மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும்; ஏ=அம்பு; ஏவார்=அம்பு பூட்டிய; அம்பு பூட்டப்படினும் அதனை பயன்படுத்தாமையால் அம்பு பூட்டிய நிலையில் வில்லினை ஏந்தியவன் என்று உணர்த்துகின்றார். சிவபெருமானின் வில்லுக்கு பினாகம் என்று பெயர். சிவபெருமானை பினாகபாணி என்றும் அழைப்பார்கள். இடும்பைக் கடல் என்பதற்கு, அப்பர் பிரான் மேற்கொண்டு கயிலை பயணத்தை தொடரமுடியாமல் தவித்த நிலை என்று பொருள் கொண்டு சிவக்கவிமணி அவர்கள் விளக்கம் அளிக்கின்றார். தன் பால் கருணை கொண்டு முனிவராக வந்து உண்மை நிலையினை உணர்த்தி மேற்கொண்டு உடல் பழுதுபடாத வண்ணம் காத்தவரும், கண்ணினால் தான் காயிலைக் காட்சி காணவேண்டும் என்று விண்ணப்பம் வைத்த போது, அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு கயிலைக் காட்சியைக் காட்டியவரும் ஆகிய பெருமானின் கருணையை நினைத்து மனம் நெகிழ்ந்து அப்பர் பிரான் பாடிய பாடல் இது. உடல் முழுவதும் தசைகள் தேய்ந்து சிதற, ஒன்றுக்கொன்று வரிந்து கட்டப்பட்ட எலும்புகளும் கட்டு முரிந்த நிலையிலும், கயிலை மலை சென்றடையும் தனது குறிக்கோளில் மனம் தளராதவராக இருந்த அப்பர் பிரான், தான் தவழ்ந்தும் செல்ல முடியாத நிலையில், வேறு வழியேதும் இல்லாமையால், நிலத்தில் உருண்டும் புரண்டும் சென்றார். ஆயினும் ஒரு நிலையில் நிலத்தில் உந்திப் புரண்டு செல்வதும் முடியாத நிலையில் ஏதும் செய்ய இயலாது அப்பர் பிரான் திகைத்து நின்றார். அத்தகைய தருணத்தில் ஆங்கே ஒரு முனிவரின் வடிவத்தில் தோன்றிய பெருமான், பயணத்தைத் தொடராது மீண்டு நீர் வந்த வழியினில் திரும்பிச் செல்வீராக என்று அப்பர் பிரானிடம் கூறினார். அந்த முனிவருக்கு, ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என்று அப்பர் பிரான் பதிலளித்தார். அப்பர் பிரானின் மன உறுதியைக் கண்ட பெருமான், நாவுக்கரசே எழுந்திரீர் என்று ஆகாயத்திலிருந்து குரல் கொடுக்க, தனது உடல் முழுவதும் பழுதுகள் நீங்கி பொலிவுற்ற நிலையில் அப்பர் பிரான் எழுந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே

மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே

ஏவார் சிலையானே என்றேன் நானே இடும்பைக் கடல் நின்றும் ஏற வாங்கி

ஆவா என்று அருள் புரியும் ஐயாறு அன்னே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே

கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.5) அப்பர் பிரான், பெருமானை, மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் நோக்கியவன் என்று குறிப்பிடுகின்றார். மன்றல் மணம்=நறுமணம்; சென்ற=தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்ற: பூதன்=உயிர்களை ஆட்கொள்பவன்; இந்த பாடலில் நறுமணம கமழும் சடையினை உடையவன் பெருமான் என்று குறிப்பிட்டு, இயற்கையான நறுமணம் வாய்ந்தது பெருமானின் சடை என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமானின் மற்றொரு பக்கமே அம்மை என்பதால், அம்மையின் கூந்தலும் இயற்கை மணம் வாய்ந்தது என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. அன்று அப்பொழுதே அருள் செய்தான் என்பதற்கு, அப்பர் பிரான் தனது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த சம்பவத்தை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது.தீராத சூலை நோயால் வருந்திய போது, தனது தமக்கையார் சொல்லினைப் பின்பற்றி திருவதிகை பெருமானை வணங்கிய உடனே தனது சூலை நோய் தீர்ந்ததை, காலம் தாழ்த்தாமல் அப்பொழுதே அருள் செய்தான் என்று கூறுகின்றார். அதன் பின்னரும், அப்பர் பிரான் துன்பமுற்ற போதெல்லாம் பெருமான் உடனே உதவியதை நாம் அவரது சரித்திரத்தில் காண்கின்றோம். மதயானை அப்பர் பிரானின் தலையை இடற வந்த போதும், நஞ்சு கலந்த அமுதம் ஊட்டப்பட்ட போதும், கல்லுடன் கட்டப்பட்டு கடலில் தள்ளப்பட்ட போதும், தனது உடலினை தூய்மை செய்யும் வண்ணம் உடலின் மீது இடபக்குறி பொறிக்கப் படவேண்டும் என்று பெண்ணாகடம் தலத்தில் வேண்டியபோதும் அப்பர் பிரானுக்கு உடனே உதவி செய்தவர் சிவபெருமான்.

சென்றச் சிலை வாங்கிச் சேர்வித்தான் காண் தீ அம்பன் காண் திரிபுரங்கள் மூன்றும்

பொன்றப் பொடியாக நோக்கினான் காண் பூதன் காண் பூதப் படையாளி காண்

அன்றப்பொழுதே அருள் செய்தான்காண் அனலாடிகாண் அடியார்க்கு அமுதானான் காண்

மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (6.43.5) அப்பர் பிரான், பெருமானை, விண்டார் புரம் மூன்று வேவ நோக்கி நக்கான் என்று குறிப்பிடுகின்றார். மிக்கான்=சிறப்பினை மிகுதியாக உடையவன்; அனைவரிலும் மேம்பட்டவன்; சண்ணித்தல்=பூசுதல்; விண்டார்=வேத நெறியிலிருந்து விலகிச் சென்று பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்; நகுதல்= சிரித்தல்; நக்கான்=சிரித்தவன்

மிக்கானை வெண்ணீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி

நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணிப் பரவ நின்ற

தக்கானைத் தண்டாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரைக்கண் உலகம் எல்லாம்

புக்கானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.44.4) அப்பர் பிரான், கண்கள் இமைப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தினிலும் குறைந்த நேரத்தில், மூன்று பறக்கும் கோட்டைகளையும் சினந்து நோக்கி சிரித்தே பெருமான் எரித்தார் என்று கூறுகின்றார்.

கண்ணவனாய் உலகெங்கும் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே

விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே

எண்ணவனாய் எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க

திண்ணவனே திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே சிவனே உன் அபயம் நானே

திருவீழிமிழலை பதிகத்தின் பாடலில் (6.50.9) அப்பர் பிரான், தன்னிடம் இருந்த வில்லையும் அம்பினையும் பயன்படுத்தாமல் பெருமான் திரிபுரத்து கோட்டைகள் மூன்றையும் எரித்தார் என்று கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது சிறப்பு வாய்ந்த அம்பினை எடுத்துச் சென்ற பெருமான், அந்த அம்பினையும் பயன்படுத்தாமல், தனது காலின் கீழே அந்த அம்பினை வைத்து விட்டு, அரக்கர்களை வென்றதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இப்பக்கம் பல ஆனான் என்று கூறுவதால், பரந்தான் என்ற சொல்லினை அப்பக்கம் பரந்தான் என்று கொள்ளவேண்டும். உலக மாயையின் இரு பக்கங்களில் இறைவன் உள்ள நிலை இங்கே கூறப்படுகின்றது.

பரந்தானை இப்பக்கம் பல ஆனானைப் பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும்

வரத்தானை வணங்குவார் மனத்துளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்காம்

சரத்தானைச் சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனைச் சடாமகுடத்து அணிந்த பைங்கண்

சிரத்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

கயிலை மீது அருளிய போற்றித் திருத்தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.57.1) அப்பர் பிரான், அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி என்று கூறுகின்றார்.தொடை=தொடுக்கப்பட்டது; பாட்டான நல்ல தொடை=இசை பெருந்திய நல்ல பாடல்களால் தொடுக்கப்பட்ட மாலை; பரிசு=தன்மை; சூட்டான=கண்ணி,தலைமாலை; அடங்கார் என்பதற்கு அறிவிலாதார் என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். தங்களுக்கு சொந்த அறிவு இன்மையால் தானே, திரிபுரத்து அரக்கர்கள், திருமால் மற்றும் நாரதரின் வார்த்தைகளில் மயங்கி நாத்திகர்களாக மாறி வேத நெறிகளுக்கு எதிராக செயல்பட தொடங்கினார்கள். பாட்டான நல்ல தொடையாய் என்ற தொடருக்கு, இனிமையான தோத்திரப் பாடல்களாக உள்ளவர் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையினை விடவும் இறைவன் மிகவும் விரும்புவது நல்ல இசையுடன் பொருந்திய பாடல்களே ஆகும். இந்த தகவலை இறைவன் தனது வாய்மொழியாக சுந்தரரிடம் கூறுவதை நாம் பெரிய புராணம் தடுத்தாட் கொண்ட புராணம் பகுதியில் காணலாம். அந்தணராக தோன்றிய பெருமான் கொண்டு வந்த அடிமை ஓலையில் இருந்த கையொப்பம் சுந்தரரின் பாட்டானாருடையது என்று தீர்ப்பான பின்னர், சுந்தரர் அந்தணராக வந்த பெருமானைப் பின்தொடர்ந்தார். அந்தணரோ திருவெண்ணெய் நல்லூர் கோயிலின் உள்ளே சென்று மறைந்து விடுகின்றார். தனது எஜமானனாகிய அந்தணனைக் காணாது திகைத்து நின்ற சுந்தரருக்கு, பெருமான் உமையம்மையுடன் விடையின் மீது அமர்ந்தவராக விண்ணில் காட்சி கொடுத்தபடியே, தான் அவரை தடுத்தாட்கொண்டதன் காரணத்தை சுந்தரருக்கு உணர்த்துகின்றார். பின்னர் தனக்கு அன்பினால் செய்யப்படும் வழிபாட்டினை விடவும்(திருமுழுக்காட்டுதல், திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் ஆகிய முறைகள்) மிகவும் விருப்பமானது இசைப் பாடல்கள் பாடி அடியார்கள் செய்யும் வழிபாடே என்று கூறி, தன்னை குறித்து சொற்றமிழ் மாலை பாடுமாறு சுந்தரரை பெருமான் பணிக்கின்றார்,

பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி

சூட்டான திங்கள் முடியாய் போற்றி தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி

ஆட்டானது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி

காட்டானை மெய்த்தோல் உரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.64.8) அப்பர் பிரான் திரிபுரத்து கோட்டைகள் மூன்றும் பற்றி எரியும் வண்ணம் வில்லினைத் தொட்டவன் என்று கூறுகின்றார். வன்கூற்று=கொடிய கூற்றுவன்; பிணையல்=சடையுடன் பிணைந்த; உரு=இடி; வன்கூற்றை என்ற சொல்லை முடித்தவன்என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். சாபம்=வில்; வில்லை பிடித்தவன் என்று கூறுவதன் மூலம், வில்லினை பயன்படுத்தாமல் மூன்றுகோட்டைகளையும் பெருமான் அழித்தார் என்ற செய்தி உணர்த்தப் படுகின்றது என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்

முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத்தீயால் வலியார் தம்புரம் மூன்றும் வேவச் சாபம்

பிடித்தவன் காண் பிஞ்ஞகனாம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி

முடித்தவன் காண் மூவிலை நல்வேலினான் காண் முழங்கி உருமெனத் தோன்றும் மழையாய் மின்னி

இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன்காண் அவனென் எண்ணத்தானே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.80.10) அப்பர் பிரான் மூன்று பறக்கும் கோட்டைகளும் தழலில் விழுந்து அழியும் வண்ணம் சிரித்தான் என்று கூறுகின்றார். சங்கரன்=இன்பம் செய்பவன்; சம்பு=இன்பம் விளைவிப்பவன்; வடமொழிச் சொற்களாகிய சங்கரன், சம்பு மற்றும் உருத்திரன் ஆகிய சொற்களுக்கு காஞ்சி புராணத்தில் விளக்கம் அளிக்கப் படுகின்றது. அடியார்களுக்கு அருள் புரிந்து அவர்களை இன்புறச் செய்வதால் சங்கரன்;இன்பம் விளைவிப்பதில் சம்பு, இடும்பை மற்றும் நோய் என்பதை ஓட்டும் இயல்பினன் உருத்திரன், என்பதே காஞ்சி புராணத்து விளக்கம். உருத்திரன் என்றால் நோய்களையும் துன்பங்களையும் தீர்ப்பவன் என்று பொருள். அம்மான்=தலைவன்; தரியலர்கள்=பகைவர்கள்

விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பெடுத்த இராவணனை விரலாலூன்றி

நெரித்தானை நின்மலனை அம்மான்தன்னை நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க்கங்கை

தரித்தானைச் சங்கரனைச் சம்புதன்னைத் தரியலர்கள் புரம்மூன்றும் தழல்வாய் வேவச்

சிரித்தானைத் திகழொளியைத் திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன் நானே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.4) அப்பர் பிரான், மூன்று கோட்டைகளும் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் தனது நெற்றிக்கண்ணை விழித்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அன்றினவர்=பகைவர்கள், திரிபுரத்து அரக்கர்கள் மூவர்;: திரிபுரத்து அரக்கர்களை சிவபெருமான் அழித்த விதம், மூன்று விதமாக புராணங்களில் சொல்லப் படுகின்றது. ஒரே அம்பினை எய்து மூன்று கோட்டைகளை எரித்ததாகவும்,புன்முறுவல் சிரித்து எரித்ததாகவும், விழித்தே எரித்ததாகவும் சொல்லப் படுகின்றது. தேவார ஆசிரியர்களும் இந்த மூன்று முறைகளையும் தங்களது பதிகத்தில் குறிப்பிடுகின்றார்கள். இந்த பாடலில், அப்பர் பிரான் திரிபுரத்து கோட்டைகளை விழித்தே அழித்ததாகக கூறுகின்றார். வென்றி=வெற்றி;சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரச் சென்ற நாள் வரையில் தான் எடுத்த காரியத்தில் வெற்றி கொண்டவனாக விளங்கியவன் இயமன்; பொன்றி வீழ=உயிர் அழிந்து உடல் கீழே விழ; விகிர்தன்= மாறுபட்டவன், இயமனது செயலைச் செய்யவிடாமல் தடுத்தவன் சிவபெருமான் ஒருவனே என்பதால் விகிர்தன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர் கோனை

வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன் தன்னை

ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும்

தென்றல் மலி வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

சுந்தரர் தான் பாடிய முதல் பதிகத்தின் பாடலில் (7.1.6) எண்ணார் புரம் மூன்றும் எரி உண்ண நகை செய்தாய் என்று பெருமானை அழைக்கின்றார்.பெருமான் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து தன்னை ஆட்கொண்டார் என்பதையும், அந்த செயலும் கயிலையில் ஆலாலசுந்தரனாக தான் அணுக்கச் தொண்டராக பணி செய்த போது விடுத்த வேண்டுகோளின் படியே என்பதையும், புரிந்து கொள்ளும் சுந்தரர், தான் அடிமையாக இருக்க முடியாது என்று பெருமானிடம் முன்னர் வாதாடியது தவறு என்பதை உணர்ந்தவராக இருந்த நிலை இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் உணர்த்தப்படுகின்றது.அனைத்துப் பாட;ல்களிலும், உனக்கு ஆளாய் இனி அல்லேன் என்று சொன்னது தவறு என்றும் இனியும் அவ்வாறு சொல்லமாட்டேன் என்றும் கூறுகின்றார்.

தண்ணார் மதி சூடீ தழல் போலும் திருமேனீ

எண்ணார் புரம் மூன்றும் எரி உண்ண நகை செய்தாய்

மண்ணார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்

அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.77.6) சுந்தரர், பெருமான் தனது நகைப்பினால் மூர்க்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்தார் என்று குறிப்பிடுகின்றார். நகை என்ற சொல் கை என்று (கையினால்) குறைந்துள்ளது என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். கார் காலத்தில் மிகவும் அதிகமாக பூக்கும் கொன்றை மலர்கள் என்று இந்த பாடலில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். முன் நீ பின் நீ என்ற தொடர் மூலம், அனைத்து உயிர்களையும் அனைத்து பொருட்களையும் தோற்றுவிப்பனாகவும் அழிப்பவனாகவும் முழுமுதற் கடவுளாகவும் பெருமான் இருக்கும் தன்மையை,அனைத்துப் பொருட்களும் அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னரும் அனைத்து பொருட்களும் உயிர்களும் அழிந்த பின்னரும் இறைவன் இருக்கும் தன்மையை, உணர்த்துகின்றார். எனவே இறைவன் முழுமுதற் கடவுளாக விளங்குகின்றார் என்று கூறுகின்றார்.

கார்க்கொள் கொன்றை சடை மேலொன்று உடையாய் விடையாய் கையினான்

மூர்க்கர் புரமூன்று எரி செய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ

வார்க்கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு

ஆர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ

இந்த செய்தி நமக்கு, திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தின் பாடலை நினைவூட்டுகின்றது. இரண்டு அம்புகளை எடுத்துச் செல்லாமல் ஒரே அம்பினை எடுத்துச் சென்ற பெருமான், அந்த அம்பினையும் பயன்படுத்ததால் திரிபுரத்து கோட்டைகளை பெருமான் அழித்ததால் அம்பு மிகையாயிற்று என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.

ஈரம்பு கண்டிலம் ஏகம்பன் தன் கையில்

ஓரம்பே முப்புரம் உந்தீ பற

ஒன்றும் பெருமிகை உந்தீ பற

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று குறிப்பிடுகின்றார். பகவன் என்ற சொல்லினை பகவான் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாக சிலர் கருதுகின்றனர். பகவன்=ஆறு இறை குணங்கள் உடையவன்; பகவன் என்ற சொல்லுக்கு ஆறு விதமான குணங்களை உடையவன் என்று சிவக்கவிமணி விளக்கம் அளிக்கின்றார். ஐஸ்வர்யம், வீரம், புகழ், செல்வம், ஞானம், வைராக்கியம் ஆகிய குணங்களின் தொகுப்பு பகம் என்று அழைக்கப்படுகின்றது, இந்த ஆறு குணங்களை உடைய இறைவன் பகவன் என்று அழைக்கப் படுகின்றான். திருவள்ளுவரும் ஆதி பகவன் என்று தானே தனது முதல் குறட்பாவில் கூறுகின்றார். பகவன் என்று இறைவனை குறிப்பிடும் திருமுறைப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

பகவன் என்ற இந்த சொல் பகவான் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். .பகவான் என்று கீதையில் வரும் சொல்லுக்கு பராசர முனிவர் ஆறு சிறந்த குணங்கள் உடையவன் என்று பொருள் கூறுகின்றார். முழு வலிமை, முழுதான புகழ், முழுமையான செல்வம், முழுமையான அறிவு, முழுமையான அழகு மற்றும் முற்றும் துறந்த தன்மை என்பவையே அந்த ஆறு குணங்கள் என்று கூறுவார்கள். தன்வயத்தன் ஆதல், முதல் இல்லாது ஆதியாக இருத்தல், உருவம் அற்றவனாக இருத்தல், எல்லா நலன்களும் உடையவனாக இருத்தல், எங்கும் பரவி இருத்தல், உலகில் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருத்தல் ஆகிய இந்த ஆறு செயல்களை உடையவன் என்றும் கூறுவார்கள். இந்த ஆறு செயல்களின் தன்மையை நாம் உணர்ந்தால், இந்த ஆறு தன்மைகள் கொண்டவன் பெருமான் ஒருவனே என்பதை நாம் அறிந்து கொள்வோம். எனவே பகவன் என்ற சொல் பெருமான் ஒருவனுக்கே உரிய பெயர் என்பதை நாம் உணர்வோமாக.

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.67.4) திருஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று குறிப்பிடுகின்றார். நறவம்=குருதி,இரத்தம்; பரமன்=கடந்தவன்; பரமேச்சுவரன்= அனைத்து தேவர்களுக்கும் தலைவன்; உரம்=வலிமை; உலறு கோட்டு=வற்றிய கிளைகள்; சுடுகாட்டில் உள்ள மரம் உலர்ந்து காணப்படும் தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. நறவம் என்ற சொல் பொதுவாக கள், தேன் ஆகியவற்றை குறிப்பிடும் என்றாலும்,இங்கே பெருமான் ஏற்கும் உணவினை, அதாவது பலியை குறிப்பிடும் வண்ணம் கையாளப் பட்டுள்ளது.

உரம் மன்னு உயர் கோட்டு உலறு கூகை அலறும் மயானத்தில்

இரவில் பூதம் பாட ஆடி எழிலார் அவர் மேலைப்

பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும்

பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

பூந்தராய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.1.11) இறைவனை பகவனார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனைப் போற்றி பாடிய இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாட வல்ல அடியார்கள் தங்களின், தீவினைகள் அகன்று நல்வினைகள் கூடப் பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல் வாய்ப்

புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய்ப்

பகவனாரைப் பரவு சொன்மாலை பத்தும் வல்லார்

அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவாரே

கொச்சைவயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.5), பகவன் என்று குறிப்பிடும் சம்பந்தர் இனியன அல்லாதவற்றையும் இனியதாக ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று கூறுகின்றார். இந்த தன்மைக்கு ஆலகால விடத்தை உட்கொண்டதும், பாம்பினை அணிகலனாக ஏற்றதும் சான்று ஆகும். இந்த பாடலில் குபேரனை தோழனாக இறைவன் கொண்டுள்ள தன்மை குறிப்பிடப் படுகின்றது. அந்நாளில் சீர்காழி நகரில் இருந்த மறையவர்கள் வளர்த்த வேள்வியிலிருந்து எழுந்த புகை வானளாவச் சென்று வானையும் சந்திரனையும் மறைத்ததாக கூறுகின்றார். குனிமதி=வளைந்த பிறையை உடைய சந்திரன்.

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேரனோடு தோழமைக் கொள் பகவன்

இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன் இடம் கொள் பதிதான்

முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவிக்

குனிமதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே

இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.117.2) பாடலில் சம்பந்தர் இறைவனை பகவன் என்று அழைக்கின்றார். பிறைமதியைச் சூடிய வண்ணம் கூத்தாடும் பெருமான் வினைகளை அழிக்கும் வல்லமை உடையவர் என்றும், அனைவர்க்கும் மேலானவன் என்றும் தூய்மையான ஆறு குணங்களை உடையவன் என்றும் கூறும் சம்பந்தர், இரும்பை மாகாளத்தில் உள்ள மறையவர்கள் இறைவனைத் தொழுது வணங்கியதையும் இந்த பாடலில் சொல்கின்றார். குறைவதாய=கலைகள் குறைந்த; குனித்தான்=கூத்தாடிய பெருமான்; பறைவது=அழிப்பது;

குறைவதாய குளிர் திங்கள் சூடிக் குனித்தான் வினை

பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை

இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை மாகாளம்

மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே

பிரமபுரத்தின் மீது அருளிய பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67.3) ஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானின் திருவடிகள் பிரகாசமான நாகமணி போன்று ஒளி வீசுவதாகவும் விரிந்த செந்தாமரை மலர் போன்று மென்மையாகவும் அழகாகவும் இருப்பதாக கூறுகின்றார். முகம் என்ற சொல் பார்வை என்ற பொருளில் இங்கே வருகின்றது. பெருமான் வாய் திறந்து ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தவாறே தனது திருவருள் நோக்கத்தால் அருள் புரிந்து சனகாதி முனிவர்களுக்கு வேதங்களுக்கு விளக்கம் அளித்தார் என்று கூறுகின்றார். நகமணி=நாகமணி; முகை-விரிந்த

பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு

அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய பகவன் இடமாம்

பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள நிகரில் இமையோர்

புக உலகு புகழ எழில் திகழும் அலர் பெருகு புகலி நகரே

சண்பை நகர் மீது (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.5) திருஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். கெழுவு= பொருந்திய, அம்=அழகிய; பணம்=பண்+அம்; பண்ணுக்கு அழகு இனிமை; பரமேட்டி= மேலானவர்கள் என்று கருதப்படும் தேவர்களால் பெரிதும் விரும்பப் படுபவன்; புறாக்கள் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் உலாவுகின்றன என்ற குறிப்புக்கு ஒரு சுவையான விளக்கமும் தரப் படுகின்றது. சிபிச் சக்ரவர்த்தியை சோதிக்க புறா வடிவினில் வந்த அக்னி, தான் செய்த தவறினுக்கு வருந்தி புறா வடிவினில் பெருமானை வழிபட்டு பயன் அடைந்ததை நினைத்து, தங்களது இனத்தில் ஒரு புறாவுக்கு இறைவன் அருள் புரிந்த இடம் என்று பெருமையுடன் புறாக்கள் மகிழ்வதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது.

பணம் கெழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்

அணங்கு எழுவு பாகம் உடையாக முடை அன்பர் பெருமானது இடமாம்

இணங்கெழுவி ஆடு கொடி மாட மதில் நீடு விரையார் புறவு எல்லாம்

தணம் கெழுவி ஏடலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே

தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் கடைப் பாடலில் (6.2) அப்பர் பிரான் பகவனார் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.பாரிடங்கள்=பூத கணங்கள்; பெருமான் இடையில் தான் உடுத்தியுள்ள பட்டாடையின் மேல் கச்சாக பாம்பினை இறுகக் கட்டிக் கொண்டும், பூத கணங்கள் சூழவும், தீயினைக் கையில் ஏந்தியவாறும், நடனக் கலையில் வல்லவராக நடனம் செய்கின்றார் என்று பாடலின் முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், அந்த பெருமானை தில்லை நகர் சென்று காணுமாறு நம்மை பணிக்கின்றார். அவ்வாறு நடனம் ஆடும் பெருமானை தேடிக் கொண்டு செல்லும் நாம் அவனை அடையாளம் கண்டு கொள்வதற்காக, அவனது அடையாளங்களை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒளியுடன் விளங்கும் சூலம், மார்பினில் திகழும் வெண்ணூல், ஓதும் வேதம், கையில் வீணை மற்றும் கட்டங்கம் என்று குறிப்பிட்டு இறுதியில் வேறு எவருக்கும் இல்லாத நீலக்கறை படிந்த கழுத்து என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். விட்டு=ஒளிவீசும்; சிட்டர்=மேலானவர், நடனக் கலையில் வல்லவர் என்று பொருள் கொள்ளவேண்டும்.அருவுருவமாக, இலிங்க வடிவத்தில் அனைத்து தலங்களிலும் காட்சி அளிக்கும் பெருமானின் அடையாளங்கள் எதற்காக திருமுறை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன என்ற ஐயம் நமக்கு எழலாம். இந்த அடையாளங்கள், பெருமானின் கருணை, வீரச்செயல்கள் மற்றும் அவரது தன்மை ஆகியவற்றை நமக்கு உணர்த்துவதால், அந்த அடையாளங்களை நமது மனக் கண்ணினால் கண்டு, பெருமானின் தன்மையை நாம் சரிவர புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நால்வர் பெருமானர்களின் விருப்பம்.

பட்டுடுத்து தோல் போர்த்துப் பாம்பு ஒன்று ஆர்த்துப் பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம்

சிட்டராய் தீ ஏந்திச் செல்வார் தம்மைத் தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இந்நாள்

விட்டு இலங்கு சூலமே வெண்ணூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே

கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே

கொட்டையூர் மற்றும் வலஞ்சுழி தலங்களின் மீது அருளிய பதிகத்தின் (6.73) பாடலில் அப்பர் பிரான், பெருமானை பகவன் என்று குறிப்பிடுகின்றார்.அணவுதல்=எட்டுதல், எட்டுதற்கு அரியவனாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பணம்=பாம்பின் படம். அவனது அருளின் உதவியாலன்றி எட்டுதற்கு அரியவனாக உள்ளவனும், இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கியவனும், என்றும் அழியாத தன்மை உடையவனும், உலகங்கள் எங்கும் பரந்து நிற்பவனும், அழகான படத்தையும் பெரிய மணியினையும் கொண்டுள்ள பாம்பினை அணிகலனாக உடையவனும், பண்டரங்க கூத்து எனப்படும் கூத்தினை ஆடுபவனும், அளவற்ற செல்வம் முதலான ஆறு தன்மைகளை கொண்டவனும், மணலினை வாரிக் கொண்டு வரும் பொன்னி நதியின் கரையில் அமைந்த வலஞ்சுழி தலத்தின் இறைவனும், திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பும் அதிகாரத்தினை வரமாக அருளுபவனும்,நற்குணங்கள் வாய்க்கப் பெற்ற அடியார்கள் வாழும் கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக, என்று தனது நெஞ்சத்திற்கு கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பதிகம்.

அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவினாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்

பணமணி மாநாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்

மணல் வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்

குணமுடை நல்லடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.92.2) அப்பர் பிரான் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். பல்லாடு தலை=பற்கள் வெளியே தோன்றும் பிரம கபாலம்; என்பறாக் கோலம்=எலும்பு மாலைகள் நீங்காமல் எப்போதும் அணிந்திருக்கும் தன்மை;

பல்லாடு தலை சடை மேல் உடையான் தன்னைப் பாய்புலித் தோல் உடையானைப் பகவன் தன்னை

சொல்லோடு பொருளனைத்தும் ஆனான்தன்னைச் சுடருருவில் என்பறாக் கோலத்தானை

அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுதானானை

கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது பாடிய பதிகத்தில் கருவூர்த் தேவர் பெருமானை பகவன் என்று குறிப்பிடும் பாடலை (9.13.5) நாம் இங்கே காண்போம். சுருதி=வேதம்; பருதி= சூரியன்; வேதங்கள் ஓதும் பிரமனாகவும், திருமாலாகவும், சுவர்க்க லோகத்தை ஆளும் இந்திரனாகவும், வானில் உலவும் சூரியனாகவும், உள்ள பெருமான், மூன்று கண்களை உடையவனாக, சிறந்த ஆறு குணங்களை உடையவனாக, அனைத்து உடலிலும் உள்ளே இருக்கும் உயிரினுக்கு அமுதம் போன்று இனியவனாகவும் இருப்பதாக இங்கே கூறுகின்றார். இவ்வாறு இருக்கும் பெருமான், கருதுவார் கருதும் உருவமாகவும் இருக்கின்றான் என்று பாடலை முடிக்கின்றார்

சுருதி வானவனாம் திருநெடுமாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம்

பருதி வானவனாம் படர்சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம்

எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனாம் பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே

திருமந்திரம் ஆதார ஆதேயம் தந்திரத்தில், பெருமானை பகவன் என்று குறிப்பிடும் திருமூலர், பிராட்டி என்றும் பகவானுடன் பிரியாது நிற்கும் நிலையினை உணர்த்துகின்றார். அத்தகைய சக்தியை, தமது உள்ளத்தில் நிலை நிறுத்தி வழிபடும் அடியார்களின் உள்ளங்கள் அழுக்கு நீங்கிய நிலையில் உள்ள வெண்ணிற ஆடையினைப் போன்று, ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களும் நீங்கப் பெற்று தூய்மையாக விளங்கும் என்று கூறுகின்றார்.

மாது நல்லாளும் மணாளன் இருந்திடப்

பாதி நல்லாளும் பகவனும் ஆனது

சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்

வேதனை தீர்தரும் வெள்ளடையாமே

திருமந்திரம் நான்காம் தந்திரத்தில் வயிரவி மந்திரம் எனும் அதிகாரத்தில், பெருமானை பகவன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அந்தம் என்ற அடைமொழியை அளித்து, அனைத்து உலகினுக்கும், அனைத்துப் பொருட்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் முடிவாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்துகின்றார். திரிபுரை மந்திரத்தை தியானம் செய்யும் அடியார்கள், உலகத்தவரால் சிவனோடு ஒப்ப வைத்து போற்றப்பட்டு வணங்கப்படுவார்கள் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். தென்னன்=சிவபெருமான், தென்னாடு உடைய சிவன் என்பதை உணர்த்தும் வண்ணம் தென்னன் என்று இங்கே அழைக்கப்படுகின்றார். தென் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள் கொண்டு, அழகன் என்று விளக்கமும் அளிக்கப் படுகின்றது. பிடி=பெண் யானை; பரி பிடி=உயிர்கள் பால் பரிவு கொண்டு செயல்படும் உமையன்னை; பொன்னங்கிரி= பொன் மலை, மேரு மலை; மன்னும்=நிலை பெற்ற; உன்னும்=தியானிக்கும்;

தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்

பொன்னங் கீரியிற் பூதலம் போற்றிடும்

மன்னும் பரி பிடி அந்தம் பகவன்னோடு

உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே

வயிரவி மந்திரம் அதிகாரத்தின் நாற்பத்து நான்காவது பாடலிலும், பெருமானை பகவர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சக்தியின் ஆற்றலை திருமூலர் இந்த பாடலில் வியக்கின்றார். சக்தியும் சிவமும் ஒன்றாக கூடி இருப்பது, நிலவுலகத்தில் உள்ள தம்பதிகள் போன்று, உடலுறவுக்காக ஏற்பட்ட உறவு அல்ல.எனவே தான் கன்னியாகவும் கன்னி கழியாதவளாகவும், அதே சமயத்தில் பெருமானின் காதலியாகவும், பிராட்டி இருக்கும் தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஐவர்=பிரமன், திருமால், உருத்திரன், மகேச்சுவரன், சதாசிவம் ஆகியோர். சக்தி, சிவத்தின் சக்தியாயிருந்து நாதத்தையும், நாதத்திடம் விந்து சக்தியாக நின்று சதாசிவம் முதலியோராக தோன்றுதலின் ஐவரைப் பெற்றனள் என்று இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. பக்குவமைடையாத உயிர்களுக்கு அறியாமையாக இருப்பதும் சக்தி என்பதால், இருளது தானே என்று இங்கே கூறுகின்றார்.

கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி

துன்னி அங்கு ஐவரைப் பெற்றனள் தூய்மொழி

பன்னிய நன்னூல் பகவரும் அங்குளர்

என்னே இம் மாயை இருளது தானே

இவ்வாறு சக்தி இறைவனுக்கு தாயாக இருக்கும் தன்மையை, திருவாசகம் திருப்பொற்சுண்ணம் பதிகத்தின் பாடலில் (8.9.13) இமவான் மகட்கு தன்னுடைக் கேள்வன் மகன் என்ற தொடர் மூலம் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். உலகத்தினை படைப்பதற்காக, இறைவன் சிவமும் சக்தியாகவும் இருக்கும் நிலையில் பெருமான் பிராட்டிக்கு கணவனாகின்றார். சக்தியிலிருந்து சதாசிவ தத்துவமாக தோன்றும் போது, பெருமான் பிராட்டியின் மகனாகவும், சிவத்திலிருந்து சக்தி பிரிந்து தோன்றுவதால் பிராட்டி பெருமானுக்கு மகளாகவும் இருக்கும் தன்மை ஏற்படுகின்றன. சுத்த மாயையிலிருந்து ஞானசக்தி அதிகமாக பொருந்த சிவதத்துவம் தோன்றுகின்றது; கிரியாசக்தி அதிகமாக பொருந்த சக்தி தத்துவம் தோன்றுகின்றது. இவ்வாறு இரண்டு தத்துவஙகளும் சுத்த மாயையிலிருந்து தோன்றுவதால், பிராட்டி இறைவனுக்கு தமையனாக இருப்பதாக கூறுவார்கள், எங்கள் அப்பன், எம் பெருமான், இமவான் மகட்கு தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன், எம் ஐயன் என்று குறிப்பிடவதன் மூலம், இத்தனை உறவுப் பெயர்களுக்கும் மூலமாக இருப்பவன் சிவ பரம்பொருள் என்பதை நாம் உணரலாம்.

மின்னிடைச் செந்துவர் வாய்க் கருங்கண் வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்

என்னுடை ஆரமுது எங்கள் அப்பன், எம்பெருமான் இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடிப்

பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர் பொற்றிருச்சுண்ணம் இடித்து நாமே

மேற்கண்ட திருவாசககப் பாடலில் உணர்த்தப்படும் உறவுமுறையை (திருவாசகம் நான்காம் தந்திரம் ஆதார ஆதேயம் அதிகாரம்), குறிப்பிடும் பாடலையும் இங்கே நாம் காண்பது பொருத்தம், வாயு=வாய்; சொல்லையும் சிந்தனையும் கட்ந்து நிற்பவள் மனோன்மணி என்று இங்கே கூறுகின்றார். ஆயும் அறிவு=நுணுகி ஆராயும் அறிவு; ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றார். சிவம் சத்தி தன்னை ஈன்றும் சத்தி தான் சிவத்தை ஈன்றும் என்று சிவஞானசித்தியார் சித்தாந்த நூலும் உணர்த்துகின்றது.

வாயு மனமும் கடந்த மனோன்மணி

பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்கு

தாயும் மகளும் நற்றாரமுமாமே

திருமந்திரம் ஆதார ஆதேயம் தந்திரத்தில், பெருமானை பகவன் என்று குறிப்பிடும் திருமூலர், பிராட்டி என்றும் பகவானுடன் பிரியாது நிற்கும் நிலையினை உணர்த்துகின்றார். அத்தகைய சக்தியை, தமது உள்ளத்தில் நிலை நிறுத்தி வழிபடும் அடியார்களின் உள்ளங்கள் அழுக்கு நீங்கிய நிலையில் உள்ள வெண்ணிற ஆடையினைப் போன்று, ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களும் நீங்கப் பெற்று தூய்மையாக விளங்கும் என்று கூறுகின்றார்.

மாது நல்லாளும் மணாளன் இருந்திடப்

பாதி நல்லாளும் பகவனும் ஆனது

சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்

வேதனை தீர்தரும் வெள்ளடையாமே

ஏழாம் தந்திரம் மாகேசுர பூஜை என்ற அதிகாரத்தில் வரும் பாடலில் திருமூலர் பெருமானை பகவன் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். தமது உள்ளமே பெருங்கோயிலாக திகழ்வதை உணர்ந்து கொண்டு, தமது உள்ளத்தில் உள்ள சிவனை போற்றி வழிபடு செய்யும் அடியார்கள் நடமாடும் கோயிலாகத் திகழ்கின்றனர் என்றும், அத்தகைய அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு இறைவனைச் சென்று சாரும் என்று இங்கே திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆனால் திருக்கோயிலில் உள்ள பெருமானுக்கு செய்யப்படும் வழிபாடு, நடமாடும் உயிர்களின் உள்ளே இருக்கும் சிவனைச் சென்று சாராது என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு பெருமானின் அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு பெருமானை நோக்கி செய்யப்படும் வழிபாட்டினும் சிறந்தது என்பதை திருமூலர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். படமாடக் கோயில்=கொடிகள் ஆடும் திருக்கோயில்கள்; நடமாடும் கோயில்=நடமாடும் உயிர்களின் உள்ளத்தில் இணைந்து நிற்கும் பெருமான் உள்ள இடம்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்

படமாடக் கோயில் பகவற்கு அதாமே

மாகேசுர பூஜை எனப்படும் அதிகாரத்தின் வேறொரு பாடலிலும் திருமூலர் இறைவனை பகவர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடல் சிவஞானிகளின் இயல்பினை உணர்த்துகின்றது. சிவஞானிகள் அதிவர்ணாசிரமிகள்; அதாவது வர்ணாசிரம தருமத்திற்கு உரிய நியதிகளைக் கடந்தவர்கள். எனவே இறைவனை வழிபட அவர்களுக்கு நோன்பு முதலிய சடங்குகள் தேவையில்லை. இதனால் எந்த நியமங்களையும் கடைப்பிடிக்காமல் அவர்கள் வாழும் தன்மையை குறிப்பிடும் வண்ணம், பற்றிலர் என்று கூறுகின்றார். ஆனால் அவர்களது சித்தம் மிகவும் உறுதியாக சிவத்தைப் பற்றியிருக்கும் தன்மையை புகு மத்தர் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். சிவஞானியர் ஆவார் அன்பும் ஆசாரமமும் சீலமும் இலராயினும் இறைவனை எப்பொழுதும் தியானித்துத் தமது வினைகளைத் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இங்கே உணர்த்தப் படும் கருத்து. முகமம்=முகமன், வாயில், வழி; இறைவனை வழிபடும் தன்மையில் ஒத்து நின்று; அகமத்தர்=அகம்+மத்தர்=கருவி கரணங்களின் வழியே செல்லாது இறைவன் பால் சிந்தனை உடையவர்களாக இருக்கும் தன்மை; இத்தகைய சிவஞானிகளின் எச்சிலை உட்கொண்டால், முக்தி நிச்சயம் என்று அடுத்த பாடலில் திருமூலர் கூறுகின்றார்.

பகவற்கு ஏதாகிலும் பற்றிலராகிப்

புகு மத்தராய் நின்று பூசனை செய்யும்

முகமத்தோடு ஒத்து நின்று ஊழிதோறூழி

அகமத்தராகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே

எட்டாம் தந்திரம் முப்பரம் என்ற அதிகாரத்தின் பாடலில், வேதப் பகவனார் என்று பெருமானை திருமூலர் குறிப்பிடுகின்றார். வேதங்களுக்கு விளக்கம் அளித்த தென்முகக் கடவுளாக பெருமான் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. அனைத்துத் தத்துவங்களையும் கடந்த தத்துவாதீதனாக பெருமான் இருக்கும் தன்மையும், மவுன மொழியாலே சொற்களின் தேவையின்றி, சனகாதி முனிவர்களுக்கு வேதங்கள் உணர்த்தும் பொருளை புரிந்து கொள்ளும் தன்மையை அருளிய செயலும், இங்கே உணர்த்தப் படுகின்றது.

ஆறாறு தத்துவத்து அப்புறத்தப் பரம்

கூறா உபதேசம் கூறில் சிவபரம்

வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்

பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே

இதே தந்திரத்தின் வேறொரு பாடலில், ஊழிகளைக் கடந்து நிற்பவன் பகவன் என்று திருமூலர் கூறுகின்றார். பகலோன்=பகுத்தலை உடைய பரமன்:ஊழிக்காலத்தின் முடிவினில் அனைத்து உலகங்களும் தன்னில் ஒடுங்க, தான் எங்கும் ஒடுங்காது மேல் நிற்பவனே முழுமுதற் கடவுள் என்று கூறுகின்றார்.நல்லூழி ஐந்து=நிவர்த்திக்கலை முதலாக ஐந்து வகை தொழில்களில் நிற்கும் ஊழிகள்; சிவபெருமான் தானே தொழில்படும் போது சதாசிவராக விளங்குகின்றார். சதாசிவர் அனந்ததேவரில் பொருந்தி, அவரை செயல்படுத்துகின்றார்; அவ்வாறே அனந்ததேவர் உருத்திரரை செயல்படுத்த, உருத்திரர் திருமாலையும், திருமால் பிரமனையும் செயல்படுத்துகின்றார். இவர்கள் ஐவரும் தொழில் புரியும் தலம், சாந்தீயதீதக் கலை, சாந்தி கலை, பிரதிட்டாக்கலை,வித்தியாக்கலை, மற்றும் நிவர்த்திக் கலை என்று முறையே சொல்லப் படுகின்றன.

பல்லூழிப் பண்பில் பகலோன் இறையவன்

நல்லூழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள்

செல்லூழி அண்டத்துச் சென்ற வண் ஊழியுள்

அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே

பகவான் என்ற சொல் திருமுறை பாடல்களில் காணப்படவில்லை, அதற்கு பதிலாக பகவன் என்ற சொல்லே காணப்படுகின்றது. நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.24.4) ஞானசம்பந்தர், பகவா என்று அழைத்து இறைவனைப் போற்றினால், நம்மைப் பற்றியிருக்கும் வலிமையான வினைகள் நீங்கிவிடும் என்று கூறுகின்றார். நகு=விளங்கும்; தகு=தகுந்த; வார் சடை=நீண்ட சடை; நகுவார் பொழில்=பல்லைக் காட்டி சிரிப்பது போன்று வெண்மையான இதழ்கள் விரிந்து பூத்த மலர்கள் கொண்ட சோலைகள்; தளவம்=பிச்சிப்பூ என்றும் செம்முல்லை என்றும் அழைக்கப்படும் மலர்;

நகுவான் மதியோடு அரவும் புனலும்

தகுவார் சடையின் முடியாய் தளவம்

நகுவார் பொழில் நாகேச்சுர நகருள்

பகவா என வல்வினை பற்று அறுமே

நடைமரு=எப்போதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பறந்து கொண்டிருந்த கோட்டைகள்; நடை என்ற சொல்லுக்கு, இயங்கிய, பெயர்ந்து சென்ற, என்று பொருள் கொள்வது பொருத்தம்; மிகுந்த கூர்மையுடன் விளங்கிய மழுப் படையின் வல்லமை, நெருப்பினைப் போன்று கொடுமையாக இருக்கும் தன்மை என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. தாருக வனத்து முனிவர்களால் ஏவப்பட்ட படை மழுப்படை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.அத்தகைய மழுப்படையைத் தனது கையினால் பற்றி செயலிழக்கச் செய்த பெருமானின் வல்லமையை என்னென்பது. இந்த தலத்தின் தலமரம் மருதமரம்.புடைமருது=அருகில் உள்ள மருத மரங்கள்; மேகங்கள் தவழும் வண்ணம் மருத மரம் உயர்ந்து இருந்ததாக திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.பொதுளிய=செறிந்த, அடர்ந்த காணப்பட்ட;

பொழிப்புரை:

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பறந்து செல்லும் ஆற்றல் உடையதாக, பலருக்கும் தீங்கு இழைத்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் சிக்கி வெந்து அழியும் வண்ணம், சிரித்தவன் சிவபெருமான். அவன் நெருப்பு போன்று கொடிய விளைவுகளை விளைவிக்கும் மழுப் படையை தனது வலது கையில் உடையவன்; அவன் தனக்கே உரிய ஆறு சிறந்த குணங்களை உடையவன் என்பதால் பகவன் என்று அழைக்கப்படுபவன்; அத்தகைய இறைவன் இடைமருது தலத்தினில் மேகங்கள் தழுவும் வண்ணம் செழித்து வளர்ந்து அடர்ந்து காணப்படும் உயர்ந்த மருத மரங்களால் சூழப்பட்ட திருக்கோயிலில் உறைகின்றான். இந்த திருக்கோயில் சென்றடைந்து அவனை வணங்கினால் நமது துன்பங்களை தீர்த்துக் கொள்வது மிகவும் எளிதான செய்லாக மாறிவிடும்.

பாடல் 2:

மழை நுழை மதியமொடு அழிதலை மடமஞ்ஞை

கழை நுழை புனல் பெய்த கமழ்சடை முடியன்

குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வதோர்

இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே

விளக்கம்:

மழை=மேகங்கள்; மழை நுழை=மேகங்களின் இடையே நுழைந்து செல்லும்; அழிதலை=தசைகளும் நரம்புகளும் அழிந்த மண்டையோடு;மஞ்ஞை=மயில்கள்; மட=அழகும் இளமையும் பொருந்திய: கழை=மூங்கில்; புனல்=கங்கை நதி; கமழ் சடை=நறுமணம் கமழும் சடை; இழை=முப்புரி நூல்;பிராட்டியின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் வாய்ந்தது என்பதை உணர்த்த, பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை நாம் திருவிளையாடல் புராணத்தில் காண்கின்றோம். பிராட்டியின் கூந்தலைப் போன்று, பெருமானின் சடையும் இயற்கை மணம் வாய்ந்தது என்பதை கமழ்சடை முடியன் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இவ்வாறு பெருமானின் சடையின் நறுமணத்தை குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம். திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.10.6) திருஞானசம்பந்தர், பெருமானின் சடையை நறுமணம் கமழ் சடை என்று குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து தோன்றிய பொருட்களில் சந்திரனும் இலக்குமி தேவியும் அடங்குவர் என்பதால் தான், இலக்குமியை நாம் சந்திர சகோதரி என்று அழைக்கின்றோம். இதனை குறிப்பிடும் வண்ணம் பிறைச்சந்திரன் சேர் கடல் என்று இங்கே கூறுகின்றார். கடல் என்பதற்கு பாற்கடல் என்று பொருள் கொள்ளவேண்டும். தேவர்களை பல திசைகளிலும் ஓட ஓட விரட்டியது ஆலகால விடம் என்பதை உணர்ந்த பின்னரும், அதனை உட்கொள்வதற்கு தனித் துணிவு வேண்டும் அல்லவா. அந்த துணிவினை உடையவனாக பெருமான் திகழ்ந்த தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது.

பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சை

பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகிக்

கருகும் மிடறு உடையார் கமழ் சடையார் கழல் பரவி

உருகும் மனம் உடையர் தமக்கு உறுநோய் அடையாவே

திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.27.1) திருஞானசம்பந்தர், பெருமானை, கந்தம் மல்கு கமழ் புன்சடையார் என்று அழைக்கின்றார். தலத்து இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பது சிவனார் என்று சொல்லின் மூலம் உணர்த்தப் படுகின்றது. எந்த உயிரும் தான் கொண்டிருந்த உடலை விட்டு நீங்கிய பின்னர், தன்னுடன் பிணைந்துள்ள எஞ்சிய வினைகளைக் கழித்துக் கொள்ளும் பொருட்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. எஞ்சியுள்ள வினைகளின் தன்மை பற்றியே, அடுத்து எடுக்கவிருக்கும் உடலின் தன்மை இறைவனால் தீர்மானிக்கப் படுகின்றது.இவ்வாறு பிறவி எடுக்கும் முன்னமே, வினைகள் முன்னமே சென்று அந்த பிறவியின் தன்மையை நிர்ணயிப்பதையும் தக்க தருணத்தில், புதிய உடலுடன் பிணைந்துள்ள அந்த உயிர்கள், வினைகளை நுகர்ந்து கழிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் நாம் காண்கின்றோம். இவ்வாறு வினைகள் இருக்கும் நிலையினையே முந்தி நின்ற வினைகள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த வினைகளை அனைத்து உயிர்களும் அனுபவித்தே கழிக்க வேண்டிய நிலையில் பொதுவாக இருந்தாலும், சிவபெருமான் கருணையால் பக்குவப்பட்ட உயிர்களின் வினைகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன. அத்தகைய பக்குவம் பெறுவதற்கான முதற்படி பெருமானை வணங்கி வழிபடுதல். எனவே தான் சம்பந்தர் இந்த பாடலில், தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் பத்தாவது பாடலில் காபாலி வேடத்தைக் கண்டு களித்து, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார். தனது கையினில் பிரமகபாலத்தை, உண்கலனாக ஏந்தி, பல இடங்களுக்கும் பலியேற்கச் செல்லும் பெருமானின் கோலமே காபாலி வேடம்.

முந்தி நின்ற வினைகள் அவை போக

சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்

அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்

கந்தம் மல்கு கமழ் புன்சடையாரே

குரங்கணில் முட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.31.3) திருஞானசம்பந்தர், பெருமானின் சடையினை ஏலம் கமழ் புன்சடை என்று குறிப்பிடுகின்றார். ஏலம்=மயிர்ச்சாந்து; நறுமணம் கமழும் எண்ணெய்; பெருமான் எளிமையான திருக்கோலத்தை உடையவர் என்பதால், வாசனை பொருந்திய சந்தனம் முதலான பொருட்களைத் தவிர்ப்பவர் என்பதை நாம் அறிவோம். எனவே இயற்கையாகவே நறுமணம் கமழும் சடையினை உடைய பெருமான் என்று இங்கே திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்பதை நாம் உணரலாம்.

சூலப் படையான் விடையான் சுடுநீற்றான்

காலன் தனை ஆருயிர் வவ்விய காலன்

கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணில்முட்டத்து

ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே

நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.52.7) நறுமணம் கமழும் சடையினில் கங்கையை மறைத்தார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். விருத்தன்= அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் முன்னவனாக இருக்கும் நிலை; பாலனாகி=அனைத்துப் பொருட்களும்,அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் இருக்கும் நிலை: கருத்தன்=முழுமுதற் கடவுள், கர்த்தன் என்ற சொல்லின் திரிபு; அருத்தன்=அனைத்துப்பொருட்களுக்கும் கருவானவன், உட்பொருளானவன்; சிவபெருமானை வழிபடும் அடியார்கள், ஆனந்தத்தினால், ஆடுவதாகவும் பாடுவதாகவும் சம்பந்தர்கூறுகின்றார்.

விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளை கமழ்சடை மேல் கரந்தாய்

அருத்தனாய ஆதி தேவன் அடியிணையே பரவும்

நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

பிரமபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.63.6) பெருமானின் சடையினை கமழ்சடை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஆதி வராகமான திருமால், இரண்யாக்கனைக் கொன்ற பழியினை தீர்த்துக் கொள்வதற்காக சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால் பூந்தராய் என்ற பெயர் வந்ததை இங்கே குறிப்பிடுகின்றார். பூண் அரையர்=தங்களது இடுப்பினில் ஆபரணம் அணிந்த மன்னர்கள்;குடி மக்களைக் காக்கின்ற கடமை உள்ளவர்கள் மன்னர்கள்; அனைத்து உயிர்களையும் காக்கின்ற திருமால், அந்த மன்னர்களையும் விடவும் மிகவும் வலிமை வாய்ந்தவராக இருப்பதால், அந்த மன்னர்களின் மன்னராக கருதப் படுகின்றார். அடல்=வலிமை; தவர்=தவம் செய்கின்ற முனிவர்; இந்த பாடலில் தாருகவனத்து மகளிர் இட்ட பிச்சையை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களது மேன்மையான அணிகலனாகிய கற்பினை கவர்ந்த பெருமான் என்று கூறுகின்றார்.தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளையும் மறந்து, தாங்கள் உணராத வகையில் பெருமானின் அழகில் மயங்கியவர்களாக, தங்களது உடைகள் நழுவதையும் உணராதவர்களாக, பெருமானின் பின்னே சென்ற மகளிர், தங்களது கற்பினை இழந்தவர்களாக கருதப்பட்டனர். மாட்டு-அருகே;தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களில் இருந்த மகளிர் பலரும், சிவபெருமானின் அழகில் மயங்கி, அவருக்கு பலியிட வந்ததாக குறிப்பிடுகின்றார்.பூம்பலி=சுவை நிறைந்த உணவு வகைகள்; அயலே=அருகே;

கவர் பூம்புனலும் தண்மதியும் கமழ்சடை மாட்டு அயலே

அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய் ஆனலம் வவ்வுதியே

அவர் பூண் அரையர்க்கு ஆதியாய அடல் மன்னன் ஆள் மண்மேல்

தவர் பூம்பதிகள் எங்கும் எங்கும் தங்கு தராயாவனே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.118.8) திருஞானசம்பந்தர், பெருமானை, கங்கை நதியினை கமழ் சடையினில் கரந்தவன் என்று கூறுகின்றார். கமழ்சடை என்ற தொடர் தமிழ் இலக்கணத்தின் வழியே வினைத்தொகை என்று சொல்லப்படுகின்றது. பண்டைய நாளில் நறுமணத்துடன் கமழ்ந்த சடை என்றும், நிகழ் காலத்தில் நறுமணத்துடன் கமழ்கின்ற ச்டை என்றும், எதிர் காலத்திலும் நறுமணத்துடன் கமழவிருக்கும் சடை என்றும் பொருள் கொள்ள வேண்டும். நமது மனதினில் எண்ணற்ற நினைவுகள் ஒரே சமயத்தில் தோன்றி நம்மை பலவிதத்திலும் அலக்கழித்து, இறை வழிபாட்டினில் ஈடுபடாத வண்ணம் நமது புலன்களை பலவாறாக திசை திருப்பும் மனதினை, மனதில் தோன்றும் நினைவுகளை, ஆழ்கிணற்றின் தன்மைக்கு ஒப்பிடுகின்றார்.கிணற்றிலிருந்து நாம் நீரினை இறைக்க இறைக்க, நீர் ஊறி நின்று பெருகுவதை போன்று, நாம் நமது மனதினில் எழுகின்ற எண்ணங்களின் வழியே செல்லச் செல்ல, மேன்மேலும் தன்வசப்படுத்தி உயிரினை பல அல்லல்களில் சிக்க வைக்கும் மனதினை, ஊறிப் பெருக்கெடுக்கும் தன்மை உடைய கிணற்றுடன் ஒப்பிடுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. தறிகெட்டோடும் மாட்டினை, மூக்கணாங்கயிறு கொண்டு இழுத்து வழிக்கு கொண்டுவருவது போன்று, தனது மனத்தின் எண்ணங்கள் ஈடேறாத வண்ணம் தான் பற்றி இழுத்ததாக குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அந்த முயற்சியில் தான் மிகவும் தளர்ந்து போனதாக கூறுகின்றார். நமது எண்ணங்களின் வழியே சென்று நிலைகுலைந்து அவலமான நிலை உயிருக்கு ஏற்படுவதை நாம் தவிர்க்க வேண்டுமென்றால், பருப்பதத்து இறைவனின் திருப்பாதங்களை நாம் பற்றிக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றார். மிகுந்த ஆரவாரத்துடன் பெரு வெள்ளமாக பொங்கி கீழே இறங்கி வந்த, கங்கை நதியைத் தனது சடையில் சிறைப்படுத்தி அடக்கிய ஆற்றல் உடைய பெருமான் ஒருவரால் தான், நமக்கு அருள் புரிந்து நமது மனதின் எண்ண ஓட்டங்களை நாம் கட்டுப்படுத்த நமக்கு உதவி புரியமுடியும் என்ற் செய்தியும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்று நின்று அயராதே

மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை

கனைத்து எழு திரள் கங்கை கமழ்சடை கரந்தான் தன்

பனைத் திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே

பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.40.5) திருஞானசம்பந்தர், பெருமானை கமழ்சடையான் என்று அழைக்கின்றார். கமழ்=நறுமணம் கமழ்கின்ற; இதம்=நன்மை; நுதலுதல்= கருதுதல்; செல்வத்தை இயல்பாக அறிந்தோமே என்ற தொடர் மூலம், வீடுபேறு எனப்படும் உயர்ந்த செல்வம்,என்றும் அழியாத பேரின்பத்தைத் தரும் வல்லமை உடையது என்பதை அறிந்து கொண்டவர்கள் பெருமானின் அடியார்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். செல்வம் என்பதற்கு பெருமானை வணங்குவதே சிறந்த செல்வம் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்ற விளக்கமும் அறிஞர்களால் சொல்லப்படுகின்றது. பிராட்டியைத் தனது உடலில் பெருமான் ஏற்றுக்கொண்டுள்ள தன்மை பிராட்டிக்கு நன்மை பயக்கின்றது என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். சிவபிரானின் தீவிர அடியாராக விளங்கிய பிருங்கி முனிவர், பிராட்டியை வணங்காமல் பெருமானை மற்றும் பணிந்து வணங்கியதைக் கண்ட பிராட்டி, வருத்தம் அடைந்து, இனிவரும் நாட்களில் தன்னை எவரும் புறக்கணிக்கலாகாது என்று விருப்பம் கொண்டார். அந்த விருப்பம் ஈடேறும் வண்ணம் பெருமான், தனது உடலில் தன்னை (பிராட்டியை) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினார். பெருமானும் பிராட்டி பால் தான் கொண்டிருந்த அன்பினையும் மதிப்பினையும் உலகுக்கு உணர்த்த எண்ணி, பிராட்டியைத் தனது உடலில் ஏற்றுக்கொண்டுள்ள தன்மை, தேவிக்கு இறைவன் செய்த நன்மையாக சம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம், தான் வேறு பிராட்டி வேறல்ல என்ற செய்தியையும் பெருமான் உலகுக்கு உணர்த்துகின்றார்.

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ் சடையான் விடையேறி

பெண் இதமாம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான்

விண் நுதலாத் தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி

எண்ணுதலாம் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே

புள்ளிருக்குவேளூர் (தற்போதைய பெயர் வைத்தீசுவரன் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.10) கமழ்சடை என்று பெருமானின் சடையினை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கடுத்து வரும்=மிகுந்த கோபத்துடன்; நீர்நிலைகளில் முங்கி, தலை உட்பட உடல் உறுப்புகள் அனைத்தும் நனையும் வண்ணம் குளித்தலே, நீராடல் என்று சொல்லப்படும். பெருமான் தனது சடையில் கங்கை நதியினை மறைத்த போதிலும் அவரது சடை முழுதும் நனையாமல் இருந்தது என்பதை உணர்த்தும் வண்ணம், சடை ஒன்றும் ஆடாமே என்று சம்பந்தர் கூறுகின்றார். பெருமானுக்கு ஒன்பது சடைகள் என்று தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. அந்த ஒன்பது சடைகளில் ஒரு சடை மட்டுமே, கங்கை நதியைக் கரந்திடப் பயன்பட்டது என்பதையும் திருஞானசம்பந்தர் இங்கே, சடை என்று ஒருமையில் குறிப்பிட்டு உணர்த்துகின்றார். விடைத்து=சீறி; கமழ் சடை=பரந்து விளங்கிய சடை;மலங்க=கலங்க; கமழ் சடை என்ற தொடருக்கு நறுமணம் கமழும் பூக்களை சடையில் அணிந்தவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சூரிய மண்டலம் வரை பறந்து சென்றதால் சம்பாதியின் சிறகுகள் எரிந்து அழிந்தன என்று மணிமேகலை காப்பியம், சம்பாதி வனத்தை குறிப்பிடுகையில் சொல்கின்றது. அரக்கன் இராவணன் வைத்திருந்த சந்திரகாசம் என்ற வாள் மிகவும் சிறந்த படைக்கலம் என்பதால். அந்த படைக்கலம் அரக்கன் இராவணன் இராமபிரானுடன் பின்னாளில் செய்யவிருந்த போரினில் பயன்படாத வண்ணம் அந்த படையினை செயலிழக்கச் செயல்பட்ட ஜடாயுவின் உதவி இராமபிரானுக்கு ஜடாயு செய்த மிகப் பெரிய உதவியாகும்.

கடுத்து வரும் கங்கை தனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே

தடுத்தவர் எம் பெருமானார் தாம் இனிதா உறையும் இடம்

விடைத்து வரும் இலங்கைக் கோன் கலங்கச் சென்று இராமர்காப்

புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

கங்கை நங்கையைத் தனது சடையினில் வைத்துக் கொண்டு பெருமான் தேக்கியது, கங்கை நங்கையின் மீது பெருமான் விருப்பம் கொண்டதால் அல்ல என்பதை நாம் அறிவோம். பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி பெருமான் தனது சடையினில் கங்கையை ஏற்றதை உமையம்மையும் அறிவாள். எனினும் புலவர்களுக்கு உரிய சுதந்தரத்தை பயன்படுத்திக் கொண்டு, திருஞானசம்பந்தர், பெருமானுக்கு பிராட்டிக்கும் இடையில் ஊடல் நிகழ்ந்ததாகவும், அந்த ஊடலுக்கு காரணம், பெருமான் கங்கையைத் தனது சடையில் அடக்கி மறைத்த செய்கை என்று நயமாக கற்பனை செய்கின்றார். அந்த கற்பனை மிளிரும் பாடல் ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (2.50.7), இந்த பாடலில், தனது நறுமணம் கமழும் சடையில் பெருமான் கங்கை நதியை மறைத்து வைத்ததாக சம்பந்தர் கூறுகின்றார்.

மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடியூட மணம் கமழ் சடைக்

கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொலாம்

பங்கயம் மது உண்டு வண்டு இசை பாட மாமயில் ஆட விண் முழவு

அங்கையில் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே

புறவார் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.53.5) திருஞானசம்பந்தர் பெருமானின் சடையினை, நறுமணம் கமழ்சடை என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அடியார்களுக்கு அருளவேண்டும் என்று பெருமானிடம் திருஞான சம்பந்தர் வேண்டுகின்றார். அடியார்களுக்கு பெருமான் அருளும் திறத்தினுக்கு இரண்டு உதாரணங்களை குறிப்பிட்டு, நாமும் பெருமானைப் பணிந்து அவ்வாறு வேண்டவேண்டும் என்று ஊக்குவிக்கும் முகமாக உணர்த்தும் நேர்த்தியை நாம் காணலாம். தனது கலைகள் முற்றிலும் அழிந்து தேயும் நிலையில் தன்னை வந்து சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு அவன் அழியாத வண்ணம் காத்தது, தனது அடியான் பகீரதனின் வேண்டுகோளை ஏற்று,வேகமாக கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் தேக்கி வைத்தது ஆகிய இரண்டும் மற்றவர்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகள் எனினும், தனது அடியார்களின் நலன் கருதி, பெருமான் மிகவும் எளிமையாக செய்த செயல்கள்.

செங்கயல்லொடு சேல் செருச்செய சீறி யாழ் முரல் தேன் இனத்தொடு

பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்

கங்கையும் மதியும் கமழ்சடைக் கேண்மையாளொடும் கூடி மான்மறி

அங்கை ஆடலனே அடியார்க்கு அருளாயே

விற்குடி வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.108.2) திருஞானசம்பந்தர் நறுமணம் கமழும் சடையின் மேல், கொன்றை மலர் மற்றும் பிறைச் சந்திரனை ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் என்று கூறுகின்றார், நறுமணம் கமழும் சடையில் கொன்றை மலரை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கூறுவதால்,கொன்றை மலர் இல்லாமலே பெருமானின் சடை தனக்கே இயல்பான நறுமணத்துடன் விளங்கும் தன்மையை உணர்த்துகின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். களம்=களர் நிலம்; பெருமானை மனம் பொருந்தி வழிபட வேண்டும் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடிகமழ் சடைக்கு ஏற்றி

உளம் கொள் பத்தர் பால் அருளிய பெருமையர் பொருகரி உரி போர்த்து

விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடி வீரட்டம்

வளம் கொள் மாமலரால் நினைந்து ஏத்துவார் வருத்தமது அறியாரே

பட்டீசரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.73.4) திருஞானசம்பந்தர், பெருமானை கமழ் செஞ்சடையினான் என்று குறிப்பிடுகின்றார். ஒரு முறை பெருமானின் கண்களை பார்வதி தேவி, விளையாட்டாக பொத்தியபோது, சூரியனும் சந்திரனும் தங்களது ஒளியை இழந்தன. அதனால் உலகமே இருளில் மூழ்க, வெளிச்சமும் வெப்பமும் இன்றி உயிர்கள் தவித்தன. உயிர்களின் தவிப்பைக் கண்ட, இறைவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்கவே,உயிர்களுக்கு தேவையான வெப்பமும் வெளிச்சமும் கிடைத்தன. ஆனால், பெருமானின் நெற்றிக் கண்ணின் மிகவும் அருகே தனது கைகளை வைத்திருந்த பிராட்டி, அந்த நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட வெப்பம் தாங்க முடியாமல், மிகவும் அவசரமாக தனது கைகளை எடுக்கின்றார். எனினும் மிகவும் குறைந்த நேரமே இருந்த நெற்றிக் கண்ணின் தாக்கத்திலிருந்த அன்னையின் கைகளிலிருந்து வியர்வை ஆறாக வெளிப்பட்டது. அச்சமடைந்த தேவி,தனது தவறினை உணர்ந்து, தனது கைகளை உடனே எடுத்த பின்னரும் கைகளில் ஏற்கனவே பரவியிருந்த வெப்ப்த்தினை தாங்க முடியாமல் தனது கைகளை உதறினாள். அப்போது அந்த விரல்களிலிருந்து வழிந்த வியர்வையே ஆறாக ஓடியது என்று புராணம் குறிப்பிடுகின்றது. இந்த நிகழ்ச்சி இங்கே உணர்த்தப்படுகின்றது. கண்ணின் மிசை=கண்களின் இடத்தில்; நண்ணி=நெருங்கி, இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து, அன்னை பெருமானின் இரண்டு கண்களையும் மூடிய தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இழிவிப்ப=பொழிய; அன்னையின் கைகளிலிருந்து வழிந்த வியர்வை ஆயிரம் முகங்களை உடைய கங்கையாறு போன்று பெருகியது என்று புராணம் கூறுகின்றது. இதன் மூலம் அந்த வியர்வை வெள்ளத்தினால் உலகங்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாத வண்ணம் பெருமான், அந்த நீரினைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு காப்பாற்றினார். பெருமானின் இந்த செயலை, பிரமன் உள்ளிட்ட பல தேவர்களும் புகழ்ந்ததும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. பாணி=தாள ஒத்து; பால் மதி=வெண்மை நிறத்தில் உள்ள பிறைச்சந்திரன்;நேரில்=நிகரற்ற, ஒப்பிலாத; மருவுதல்=பொருந்தி இருத்தல்;

கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செஞ்சடையினான்

பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆடவல பான்மதியினான்

மண்ணின் மிசை நேரில் மழபாடி மலி பட்டிசரமே மருவுவார்

விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடனாதல் அது மேவல் எளிதே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.95.4) திருஞானசம்பந்தர் பெருமானை கடிகமழ் சடைமுடியீர் என்று அழைக்கின்றார், தெளிந்த சிந்தனையுடன் இறைவனைத் தொழும் அடியார்கள் வினை நீக்கம் பெற்றவர்களாக இருக்கும் நிலை இந்த பாடலில், இந்த பதிகத்தின் முதல் மூன்று பாடல்களின் தொடர்ச்சியாக உணர்த்தப் படுகின்றது. இந்த பாடல்களில் பெருமானைச் சார்ந்து அவனை வாழ்த்தும் அடியார்களின் தன்மையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வீணை யாழ் குழல் போன்ற வாத்தியங்கள் மிருதுவான இன்னிசை எழுப்பும். தோல் கருவிகளாகிய முரசு, முழவு, பறை போன்ற வாத்தியங்கள் பலமான இசையினை எழுப்பும். இத்தகைய கருவிகளே ஆரவாரத்தை ஏற்படுத்தி திருவிழாவின் சந்தடியை அதிகரிக்கும் திறன் வாய்ந்தவை. எனவே இத்தகைய வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இன்றும் கயிலாய வாத்தியம் எனப்படும் குழுவினர், இத்தகைய வாத்தியங்கள் அதிகமாக வாசிப்பதை நாம் காணலாம். முரல்=எழுப்பும்; கடி=நறுமணம்; நறுமணம் மிகுந்த சடை என்று முதல் பாடலில் குறிப்பிட்டது போன்று இந்த பாடலிலும், பெருமானின் சடை நறுமணம் மிகுந்து காணப்படுவதாக சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றா

இடிகுரல் இசை முரல் இன்னம்பர் மேவிய

கடிகமழ் சடை முடியீரே

கடி கமழ் சடைமுடியீர் உம கழல் தொழும்

அடியவர் அருவினை இலரே

சிறுகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.97.7) திருஞானசம்பந்தர், பெருமானின் சடை நறுமணம் கமழும் சடை என்று குறிப்பிடுகின்றார்.பெருமானின் திருவடிகளைச் சென்று சேரும் விருப்பம் உடைய அடியார்கள், சன்மார்க்க நெறியில் வாழ்வார்கள் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.

செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய

வெறி கமழ் சடைமுடியீரே

வெறி கமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந்

நெறி உணர்வோர் உயர்ந்தோரே

திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் மீது (3.106.2) திருஞானசம்பந்தர் பெருமானை, கமழ் புன்சடை உடையவர் என்று குறிப்பிடுகின்றார்.பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, பெருமானைச் சென்றடைந்து, என்றும் அழியாத நிலையான ஆனந்தத்தில் திளைக்கவேண்டும் என்று உயிர்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள மலங்களை முற்றிலும் கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருமான் கொண்டுள்ள விருப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் தான், பக்குவமடைந்த உயிர்கள் தன்னைத் தேடிவரும் வரையில் காத்திராமல், தானே அந்த உயிர்கள் இருக்கும் இடம் சென்றடைந்து, அந்த உயிர்களின் மலங்களை, பிச்சையாக ஏற்றுக் கொள்ள, மிகுந்த துடிப்புடன் பெருமான் செயல்படுகின்றார். நம்மில் பெரும்பாலோர் இதனை உணர்வதில்லை. பெருமான் பலி ஏற்கும் சிறப்பினை உணர்த்தும் வண்ணம், இந்த தலத்தின் மீது விண்டெலாம் மலர என்று தொடங்கும் பதிகத்தினை அருளிய ஞானசம்பந்தர், பெருமான் மிகுந்த இச்சையுடன் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார்.தான் அருளிய முதல் பதிகத்தின் நான்காவது பாடலில் (1.1.4) உள்ளம் மகிழ்ந்த நிலையில் பெருமான் பிச்சை எடுப்பதாக திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார். பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் ஒரு வகையான கூச்சத்துடன் பிச்சை எடுப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் பெருமான் ஏற்கின்ற பிச்சை பலருக்கும் நன்மை பயக்கும் நோக்கத்துடன் செய்யப்படுவதால், அதற்காக தயக்கமோ வெட்கமோ கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால், அந்த வெட்கம் தயக்கம் எனப்படும் உணர்ச்சிகளுக்கு மாறாக அவர் மகிழ்கின்றார் என்று இங்கே சொல்கின்றார்.

காரணி வெள்ளை மதியம் சூடிக் கமழ்புன் சடை தன்மேல்

தாரணி கொன்றையும் தன்னெருக்கும் தழைய நுழைவித்து

வாரணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்

ஊரணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.109.2) கந்தவார்சடை என்று பெருமானின் சடை இயற்கையில் நறுமணம் வாய்ந்தது என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அயன்=பிரமன்; வந்து=தங்களில் யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலின் எதிரே வந்து தோன்றிய; கந்த=நறுமணம் மிகுந்த; நறுமணம் மிகுந்த சடை உடையவர் பெருமான் என்று இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. ஆதி என்று குறிப்பிட்டு அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக, அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும் பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அனைத்து உயிர்களுக்கும் அந்தமாக பெருமான் இருக்கும் நிலையினையும், வெந்த வெண்ணீறணி என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். பெருமான் வெண்ணீறு அணிந்துள்ள கோலம், பெருமான் ஒருவரே அழியாமல் என்றும் நிலையாக இருப்பவர் என்பதை உணர்த்துகின்றது அல்லவா. கந்தம்=நறுமணம்.

வந்து மாலயன் அவர் காண்பரியார்

வெந்த வெண்ணீறு அணி மயேந்திரரும்

கந்த வார்சடை உடைக் கயிலையாரும்

அந்தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.6.8) அப்பர் பிரான், பெருமானின் சடையினை கமழ்சடை என்று குறிப்பிடுகின்றார். எல்லி=நள்ளிரவு, இங்கே எங்கும் இருள் சூழ்ந்திருக்கும் சர்வசங்கார இரவு என்று பொருள் கொள்ள வேண்டும்; கமழ=விளங்கும்; தனது மனைவியர் இடையே பட்சபாதமாக அன்பு வைத்தமையால் தக்கனின் சாபத்திற்கு உள்ளாகி நாளும் ஒவ்வொரு கலையாக இழந்து, முற்றிலும் அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன், சரணடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் விளங்குமாறு ஏற்றுக் கொண்டு அபயம் அளித்த இறைவனார், தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவராக, சர்வ சங்கார காலத்து நள்ளிருளில் தொடர்ந்து நடனம் ஆடுபவர் ஆவார். தனது தவத்தினை கலைப்பதற்காக முயற்சி செய்த மன்மதன் மீது கோபம் கொண்ட போது தீப்பொறிகளை வெளிப்படுத்திய நெற்றிக் கண்ணினை உடையவரும் அவரே. அவர் நான்கு மறைகளையும் ஆராய்ந்து ஓதுகின்றார். வேதங்களை அருளியவர் பெருமான் என்பதால் தனியாக வேதங்களை கற்றுக்கொண்டு, அவற்றை ஆராய வேண்டிய அவசியம் பெருமானுக்கு இல்லை. மேலும் சிறந்த தவசீலர்களாக கருதப்படும் சனகாதி முனிவர்களுக்கு, அவர்களுக்கு இருந்த சந்தேகத்தைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றிருந்த பெருமான் என்பதால், வேதங்களை ஆராய்ந்து மற்றவர்கள் உணரும் செய்திகளை அறிந்தவராக பெருமான் இருந்தார் என்பது ஆய்ந்த நான்மறை என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. இத்தகைய ஆற்றல் உடைய பெருமான் திருவாரூர் நகரில் உறைகின்றார் என்பதை உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல்

ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்

காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்

ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.29.3) அப்பர் பிரான், பெருமானின் சடையினை கடி கமழும் சடை என்று கூறுகின்றார்.கடி=நறுமணம்; ஏறு=இடபம்: ஏற்றான்=இடபத்தை வாகனமாக ஏற்றுக் கொண்டவன்; இடபத்தை வாகனமாக ஏற்றுக் கொண்டவனும், ஏழு கடல்களாகவும் ஏழு மலைகளாகவும் இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் முடிவான காரணமாக இருப்பவனும். இயமனை காலால் உதைத்தவனும், பகைவர்களுக்கு கொடியதாக விளங்கும் மழுவாளினை கையில் ஏந்தியவனும், காற்றாகவும் தீயாகவும் நீராகவும் மற்றுமுள்ள பஞ்ச பூதங்களாகவும் இருப்பவனும், நறுமணம் கமழ்வதும் வெள்ளமாக பாயந்ததும் ஆகிய கங்கை நதியைத் தனது சுருண்ட சடைமுடியில் ஏற்றவனும் ஆகிய ஆரூர் பெருமானை அறியாது, அவனை மறந்து நாயினும் கீழான அடியேன் எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்தது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் என்று அப்பர் பிரான் தனது வருத்தத்தை இந்த பாடலில் தெரிவிக்கின்றா

ஏற்றானை ஏழுலகும் ஆனான் தன்னை ஏழ் கடலும் ஏழ் மலையும் ஆனான் தன்னைக்

கூற்றானைக் கூற்றம் உதைத்தான் தன்னைக் கொடுமழுவாள் கொண்டதோர் கையான் தன்னை

காற்றானைத் தீயானை நீருமாகிக் கடிகமழும் புன்சடை மேல் கங்கை வெள்ள

ஆற்றானை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே.

அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.10.3) சுந்தரர், பெருமானின் சடையினை கடிகொள் புனற்சடை என்று குறிப்பிடுகின்றார்.கலி=ஆரவாரம் நிறைந்த; கொடிகள்= கொடி போன்று மெலிந்த உருவத்தினை உடைய மகளிர்; கொடி போன்ற இடையினை உடைய மகளிரின் ஆடல் பாடல்களை கேட்டு ரசிக்கும் குயில்கள் கூவியும் மயில்கள் ஆடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதால் ஆரவாரம் நிறைந்து காணப்படும் காஞ்சி மாநகரம் என்று குறிப்பிடுகின்றார். மார்பகலம் எனற சொல்லுக்கு சொல்லுக்கு அகன்ற மார்பினை உடையவன் என்றும் அழகிய அணிகலன்கள் அணியப்பெற்ற மார்பினை உடையவன் என்றும் இரண்டு விதமாக பொருள் விளக்கம் அளிக்கப்படுகின்றது. கலம்=அணிகலன்; கடி=நறுமணம்;நுதல்=நெற்றி; ஒற்றைப் பிறைச் சந்திரனை தனது நெற்றியில் அணிந்துள்ள நீலகண்டன் என்று கூறுகின்றார். பெருமானைச் சார்ந்ததால், எலும்பு மாலை,ஆமையோடு, பன்றிக்கொம்பு, பாம்புகள், ஆகியவை மிகுந்த அழகுடன் பொலிந்து விளங்குவதால், அழகிய அணிகலன்கள் என்று கூறுகின்றார்.

கொடிகள் இடைக்குயில் கூவுமிடம் மயிலாலும் இடம் மழுவாளுடைய

கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக் கண்டன் இடம் பிறைதுண்ட முடி

செடிகொள் வினைப்பகை தீரும் இடம் திருவாகும் இடம் திருமார்பகலத்து

அடிகள் இடம் அழல் வண்ணன் இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே

திருக்கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.61.8) சுந்தரர், பெருமானை கந்தவார் சடைக்கம்பன் என்று அழைக்கின்றார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை, திருவொற்றியூரினை விட்டு அகலமாட்டேன் என்று சொன்ன வார்த்தையை, மீறிய குற்றத்திற்காக, தனது இரண்டு கண்களிலும் பார்வையை இழந்த சுந்தரர், வெண்பாக்கம், திருமுல்லைவாயில், திருவாலங்காடு மற்றும் திரூஊறல் (தற்போது தக்கோலம் என்று அழைக்கப்படும் தலம்–இந்த தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை) ஆகிய தலங்கள் சென்ற பின்னர் திருக்கச்சி ஏகம்பம் சென்றடைகின்றார். ஆங்கே கச்சி ஏகம்பரின் அருளினால், தனது இடது கண் பார்வையை மீண்டும் பெற்ற சுந்தரர், அந்த மகிழ்ச்சியினில் கச்சி ஏகம்பத்துப் பெருமானை காண்பதற்கு தான் கண் பெற்றேன் என்று மகிழ்ந்து பாடுகின்றார். இந்த் குறிப்பிலிருந்து, வெண்பாக்கம் முதலான நான்கு தலங்களில் வீற்றிருக்கும் பெருமானைத் தான் காண முடியாத நிலைக்கு சுந்தரர் எவ்வளவு வருந்தியிருப்பார் என்பதை நம்மால் உணர முடிகின்றது. எப்போதும் பெருமானையே சிந்தித்து வாழும் அடியார்கள், அதிகாலையில் துயிலிலிருந்து எழுகின்ற போதும் இறைவனையே சிந்திப்பார்கள் என்றும் அத்தகைய அடியார்களின் சிந்தையில் பெருமான் உறைகின்றார் என்றும் இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். அனைத்து உயிர்களும் வினைகளால் கட்டுண்டு கிடக்கின்றன. அந்த உயிர்கள் தங்களைப் பற்றியிருக்கும் வினைகளை நீக்கிக் கொள்ள விரும்பினால் பெருமானது திருப்பாதங்களைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் இந்த பாடலில் வழங்கப்படுகின்றது.

சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன் தன்னைப்

பந்தித்த வினைப் பற்றறுப்பானைப் பாலொடு ஆனஞ்சும் ஆட்டுகந்தானை

அந்தமில் புகழாள் உமை நங்கை ஆத்ரித்து வழிபடப் பெற்ற

கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே

கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார்கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.84.1) சுந்தரர், பெருமானின் சடை கோல நறுஞ்சடை என்று குறிப்பிடுகின்றார். அழகும் நறுமணமும் பொருந்திய சடை என்று கூறுகின்றார். சூது என்ற சொல்லுக்கு மாங்கனி என்று சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். புண்டரிகம்=தாமரை மலர் பரிசு=தன்மை; பூசல் என்பதற்கு ஓலம் என்று இங்கே பொருள் கொள்ளவேண்டும்.கொண்டல்=மழை பொழியும் கருத்த மேகம்; வண்ணம்=தன்மை;

தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும் சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்

புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள் பூசலிடக் கடல் நஞ்சு உண்டக் கருத்தமரும்

கொண்டல் எனத் திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறுஞ்சடைமேல் வண்ணமும் கண் குளிரக்

கண்டு தொழப்பெறுவது என்று கொலோ அடியேன் கார்வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே

திருவாசகம் அச்சப்பத்து (8.35.8) பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், பெருமானின் சடையினை வெறிகமழ் சடை என்று குறிப்பிடுகின்றார்.அருளாளர்கள் அனைவரும் பெருமானை வழிபடாத அறிவு, அறிவு என்று கருதப்படாமல் புறக்கணிப்பதை நாம் பல பாடல்கள் மூலம் உணர்கின்றோம்.மணிவாசகர் ஒரு படி மேலே சென்று, அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். அவர்களுடன் பழகினால் அவர்களது கெட்டகுணம் தன்னையும் தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தின் காரணமாக,அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டிய அவசியத்தை இவ்வாறு உணர்த்துகின்றார். தறி=காட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை இயற்கையான நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்,

தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்

வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா

செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க மாட்டா

அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே

பொழிப்புரை:

மேகங்களின் இடையே நுழைந்து செல்லும் பிறைச் சந்திரனையும், தசையும் நரம்பும் அழிந்து உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் மண்டையோட்டினை தலைமாலையாகவும், மூங்கில் காடுகளின் நுழைந்து செல்லும் மயில்கள் நிறைந்த மலையினில் பாய்கின்ற கங்கை நதியையும்,நறுமணம் கமழும் சடையினில் வைத்துள்ள பெருமான், குழை அணிகலன் நுழைந்து மிளிரும் அழகிய காதினை உடையவன் ஆவான். இழையாகத் திரண்ட முப்புரி நூலினை விரும்பி அணிந்துள்ள தலைவனாகிய பெருமான் உறைகின்ற இடம் இடைமருது தலமாகும்.

பாடல் 3:

அருமையன் எளிமையன் அழல் விடம் மிடறினன்

கருமையின் ஒளி பெறு கமழ் சடை முடியன்

பெருமையன் சிறுமையன் பிணை பெணொடு ஒருமையின்

இருமையும் உடல் அணல் இடம் இடைமருதே

விளக்கம்:

இந்த பாடலில் ஒருமையின் இருமையும் உடையவன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த குறிப்பு நமக்கு திருவெழுகூற்றிருக்கை பதிகத்தின் தொடரை, இருமையின் ஒருமை என்ற தொடரினை நினைவூட்டுகின்றது. சிவமும் சக்தியும் ஒன்று என்பதை நாம் அறிவோம். எனினும் பல காரணங்களுக்காக அவர்கள் வேறுவேறு உருவம் கொண்டு செயல்படுகின்றனர். இந்த தன்மையே, மாதொரு பாகனாக இருக்கும் பெருமான், இரண்டு வேறுவேறு உருவங்கள் கொண்டு சிவமாகவும் சக்தியாகவும் கொண்டு செயல்படும் தன்மையே இங்கே உணர்த்தப் படுகின்றது என்ற விளக்கமும் சான்றோர்களால் அளிக்கப் படுகின்றது. சிறந்த விளக்கம். ஒருமையின் என்ற சொல், தேவியுடன் இணைந்து மாதொரு பாகனாக இருக்கும் கோலத்தை உணர்த்துகின்றது. இந்த பாடலில் பெருமானை எளியவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பகட்டான பட்டாடை அணியாமல் புலித்தோலாடையும் கீளும் கோவணமும் அணிந்து காட்சி அளிப்பவர் பெருமான். அவர் திருநீற்றினை வாசனை மிகுந்த சந்தனமாக கருதி பூசிக் கொள்பவர்;அவரது அணிகலன்களோ, ஆமையோடு பன்றிக்கொம்பு பாம்பு முதலானவை; வாகனமோ எளிமையான எருது வாகனம்; வசிப்பதும் நடனம் ஆடுவதும் ஊர்ப்புறத்தில் உள்ள சுடுகாட்டினில்; இவ்வாறு பல தன்மைகளிலும் எளியவனாக இருக்கும் பெருமான், தனது உயர்ந்த நிலையையும் கருதாது,அடியார்களின் மனதினில் எளிவந்த பிரானாக வந்து உறைகின்றவனாகவும் உள்ளான். இந்த தன்மைகளை உணர்த்தும் வண்ணம், பெருமானை எளியவன் என்றும் எளிவந்த பிரான் என்றும் பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. அத்தகைய சில பாடல்களை நாம் இங்கே காண்போம். கருமையின் ஒளி=பெருமை மிகுந்த ஒளி;

திருக்கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.73.6) திருஞானசம்பந்தர், எளியவராக தனது இல்லம் வந்தவர் என்று சம்பந்த நாயகி கற்பனை செய்வதாக சொல்கின்றார். இந்த பாடல் அகத்துறை வகையில் அமைந்த பாடல். முளி=காய்ந்த; தேறல்=தேன்; எளி வந்தார்=இரக்கத்திற்கு உரியவர்; இந்த பாடலில் இறைவனை, சம்பந்த நாயகி கள்வர் என்று குறிப்பிட்டு, தான் அறியாமலே தனது கற்பினையும் நாணத்தையும் திருடிக் கொண்ட பெருமான் என்பதை உணர்த்துகின்றாள். தெளிவு=உள்ளத் தெளிவு; மிகவும் எளியவராக, இரக்கத்திற்கு உரியவராக, பிச்சை கேட்டு வந்தவர் என்பதால், தான் அவரை தனது இல்லத்தின் உள்ளே வருமாறு அழைத்ததாக கூறும் சம்பந்த நாயகி, உள்ளே வந்தவர், தான் நினைத்ததற்கு மாறாக தனது உள்ளத்தில் கலக்கத்தை உண்டாக்கிய பெருமான், தனது கற்பினையும் நாணத்தையும் கொள்ளை கொண்டதாக கூறுகின்றாள். பொதுவாக அயல் ஆண்களைக் கண்டால் நாணம் கொள்வது உயர்ந்த குணமுடைய பெண்களின் பண்பு. எனவே அயலவரைப் பார்ப்பதையும் அவர்களை இல்லத்திற்குள்ளே அனுமதிப்பதும் அத்தகைய பெண்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் பிச்சை எடுக்கும் நோக்கத்துடன் வந்த பெருமான் என்று கருதியதாலும், முப்புரி நூல் தரித்து திருநீறு உடலெங்கும் பூசி வந்தமையாலும், பலியேற்க வந்தவர் பால் இரக்கம் கொண்டு இல்லத்தின் உள்ளே வர சம்பந்த நாயகி அனுமதி தந்தாள் போலும். மேலும் எந்த விதமான அணிகலனும் இன்றி காய்ந்த எலும்புகள் மட்டுமே ஆபரணமாக கொண்டுள்ள இறைவனை எளிய கோலத்தவ்ர் என்று தானே எவருக்கும் நினைக்கத் தோன்றும். இறைவனை, சேடர் என்று குணசீலராக காட்சியளித்த பெருமான் என்று முந்திய பாடலில் குறிப்பிட்டதன் பின்னணியில், இல்லத்தின் உள்ளே வர சம்பந்த நாயகி அனுமதி அளித்தாள் என்று கருதுவதும் பொருத்தமே. இல்லத்தின் உள்ளே அவர் வரும் வரை சம்பந்த நாயகியின் மனதினில் தெளிவு இருந்தது. ஆனால் பெருமான் உள்ளே வந்த பின்னர், அவரது அழகினில், பண்புகளில், தனது மனதினை பறிகொடுத்த நாயகிக்கு உள்ளத்தில் கலக்கம் ஏற்ப்பட்டதை, இங்கே தெளிவும் கொண்ட கள்வர் என்று குறிப்பிடுகின்றாள். மேலும் அயலவரை நேரில் நிமிர்ந்து பார்ப்பதை தவிர்ப்பதை, தனது வழக்கமாக கொண்டிருந்த அவள், தனது மன கலக்கத்தின் காரணமாக, தன்னையும் அறியாமல், வந்தவரை உற்று பார்த்ததை நாணும் கொண்ட கள்வர் என்ற தொடரால் குறிப்பிடுகின்றாள். பண்டைய நாளில், அதன் முன்னர் அறிமுகம் ஆகாத ஆடவரை நினைத்தாலே பெண்கள், தங்களது கற்பு பறிபோயிற்று என்ற எண்ணம் கொண்டிருந்தனர். வந்தவரின் அழகு தந்த மயக்கத்தில், அவரை உள்ளே வரவழைத்தன் பயனாக, தனது நாணம், தெளிவு, கற்பு ஆகிய பண்புகளை இழந்த தலைவி, தனது பண்புக்கு மாறுபட்ட செயல்களுக்கு, வந்தவர் தான் காரணம் என்று அவரை கள்வர் என்று பழிக்கின்றாள். கண்டவுடன் தான் காதல் கொள்ளும் அளவுக்கு பெருமான் மிகுந்த அழகுடன் நல்ல பண்புகளுடன் திகழ்ந்தார் என்பதை தலைவி உணர்த்துவதாக உள்ள பாடல்.

முளி வெள்ளெலும்பு நீறு நூலும் மூழ்கு மார்பராய்

எளி வந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ளத்

தெளிவு நாணும் கொண்ட கள்வர் தேறலார் பூவில்

களி வண்டு யாழ் செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே

இந்த பாடலிலும் சித்தாந்த கருத்து உணர்த்தப் படுவதை நாம் அறியலாம். மனதினில் தெளிவின்றி இருந்த ஆன்மா, இறைவன் தனது உள்ளத்தினில் புகுந்த பின்னர் தனது நிலையில் மாற்றம் அடைகின்றது. அந்நாள் வரை உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டிருந்த ஆசை, பற்று,குறைந்து பாசத்திலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்கின்றது. இந்த நிலையே தெளிவு கொண்டார் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. நிலையற்ற உலகத்துப் பொருட்கள் மீது பாசம் வைத்து வாழ்வதே மனித உயிரின் பண்பு என்பதால், அந்த நிலையினை தெளிவு என்று கேலியாக குறிப்பிட்டார் போலும்.உயிர் தனது உண்மையான விருப்பமான வீடுபேற்றினை அடைவதற்கு தகுதி பெறவேண்டும் என்றால், இந்த நிலையிலிருந்து மாறவேண்டும் என்பதால்,இறைவனே ஆன்மாவின் உள்ளத்தில் புகுந்து, உலகப் பொருட்கள் மீது பாசம் வைத்துள்ள தெளிவான நிலையை மாற்றி, பாசமற்ற நிலையினை உருவாக்குவார் என்ற கருத்து இங்கே கூறப்படுகின்றது.

திருவழுந்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.73.6) திருஞானசம்பந்தர், பெருமானை, எளியார் என்று குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் பெரியவனாக இருந்த போதிலும், எவராலும் காப்பாற்ற முடியாமல் அழியும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுக்கும் ஆற்றல் உடையவனாக இருந்த போதிலும், அனைத்து தேவர்களையும் அச்சமடையச் செய்து பல திசைகளிலும் விரட்டியடித்த ஆலகால விடத்தினை உட்கொண்டு உலகங்களை காப்பாற்றிய ஆற்றல் உடையவனாக இருந்த போதிலும், பிரமன் திருமால் ஆகிய இருவரும் அடிமுடி காணமுடியாத வண்ணம் நீண்ட அனல் பிழம்பாக நின்ற ஆற்றல் உடையவனாக இருந்த போதிலும், உயர்ந்த செல்வமாகிய வீடுபேறு செல்வம் உடையவனாக இருந்த போதிலும், பெருமான் தனது அடியார்களுக்கு மிகவும் எளியவராக இருக்கின்றார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமை சிறுமை அருமை எளிமை ஆகிய அனைத்து குணங்களை உடையவராக பெருமான் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது.

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறு

கரியாய் கரிகாடு உயர் வீடுடையாய்

அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்

வெரியார் தொழ மாமடம் மேவினையே

தனது அன்பர்களுக்கு மிகவும் எளியவனாகவும் அன்பர் அல்லாதாருக்கு அரியவனாகவும் பெருமான் இருக்கும் நிலை, திருஞானசம்பந்தர் திருக்கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.21.4) சொல்லப் படுகின்றது. காயம்=ஆகாயம், ஆகாயம் என்ற சொல்லின் முதற்குறை; வளி=காற்று;

எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ

வளி காயம் என வெளி மன்னிய தூ

ஒளியாய் உனையே தொழுது உன்னும் அவர்க்கு

அளியாய் கழிப்பாலை அமர்ந்தவனே

திருவலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.55.9) அப்பர் பிரான், பெருமானை அருமையில் எளிமை ஆனார் என்று குறிப்பிடுகின்றார்.கருவரை=கரிய மலை; திருவரை= திருமகள் தங்கும் இடமாக கருதப்படும்; அருமை=அரிய தன்மை: ஒரு வரை=ஒப்பற்ற மலையாகிய கயிலை மலை; கரிய மலையினைப் போன்றும் கடலினைப் போன்றும் மேனி நிறத்தினை உடையவனாகிய திருமால் காணமுடியாதபடி நின்றவன் சிவபெருமான்; திருமகள் உறையும் இடம் என்று கருதப்படும் தாமரை மலரில் அமர்பவனாகிய பிரமனும் காணமுடியாதபடி நின்றவன் சிவபெருமான். ஒப்பற்ற மலையென்று கருதப்படும் கயிலை மலையின் உச்சியில் மேம்பட்ட நிலையில் விளங்குபவன் சிவபெருமான். இத்தனை அரியவனாக இருக்கும் சிவபெருமான், அடியார்களுக்கு மிகவும் எளியவனாகத் திகழும் தலம் வலம்புரம் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருவரை அனைய மேனிக் கடல் வண்ணன் அவனும் காணான்

திருவரை அனைய பூமேல் திசைமுகன் அவனும் காணான்

ஒருவரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து

அருமையில் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே

அடியவர்க்கு என்றும் எளியவராக பெருமான் விளங்குகின்றார் என்று இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.72.5) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அளி=வண்டு; அவிர்சடை=ஒளிவீசும் சடை; பெருமானும் பிராட்டியும் இணைந்து ஒரே உருவமாக என்றும் இருந்தனர் என்பதை குறிப்படும் வண்ணம், காமனை விழித்து எரித்த போதும், அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தனர் என்று கூறுகின்றார். தனது மனைவியை உடலின் ஒரு பாகத்தில் வைத்துக்கொண்டு தவம் செய்யும் வல்லமை பெருமான் ஒருவருக்கு தான் உண்டு. அந்த வல்லமை இருந்தமையால் தான், காமனையும் வெற்றி கொண்டு அவனை எரிக்க முடிந்தது. இந்த செய்தியை தான் கருவூர்த் தேவர் மங்கையோடு இருந்தே யோகு செய்வான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதையும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் விளக்குகின்றார்.

அளி மலர் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்

களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்

வெளிவளர் உருவர் போலும் வெண்பொடி அணிவர் போலும்

எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே

காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் என்று திருமறைக்காடு தலத்தின் திருத்தாண்டகப் பதிகத்தின் (6.23) முதல் பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. தொல்லமரர்=தொன்மை வாய்ந்த தேவர்கள்; மனிதர்களின் வாழ்நாளை ஒப்பிடும் போது, அதிகமான வாழ்நாளைப் பெற்றவர்கள் தேவர்கள் என்பதால் தொல்லமரர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சூளாமணி=தலையில் அணியப்படும், விலை உயர்ந்ததும் கிடைத்தற்கு அரியதும் ஆகிய ஆபரணம். கருதுவார்க்கு ஆற்ற எளியான் என்று குறிப்பிட்டமையால், காண்டற்கு அரிய கடவுள் என்பதை நாம் தன்னைக் கருதாத மனிதர்கள் காண்பதற்கு மிகவும் அரியவராக பெருமான் திகழ்கின்றார் என்று பொருள் கொள்ள வேண்டும். மாண்ட=மாட்சிமை பொருந்திய; விரதம் மேற்கொள்பவர்கள், கடைப் பிடிக்கவேண்டிய நியமங்களின் வழியே, சில செயல்களை விலக்கியும் பல கடுமையான நெறிமுறைகளை கடைப்பிடித்தும் விரதம் மேற்கொள்ள மனவுறுதி வேண்டும். அத்தகைய மனவுறுதி படைத்தவர்களை மாண்ட மனத்தார் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். ஈதல் என்றால் உயர்ந்தவர் தன்னிலும் தாழ்ந்தவருக்கு அளிக்கும் கொடையாகும். ஈவான் என்று இறைவனை குறிப்பிடுவதன் மூலம், அப்பர் பிரான், இறைவனை அனைவரையும் விடவும் உயர்ந்தவன் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.

தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணி தான் கண்டாய்

காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்

வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்

மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

தன்பால் காதல் கொண்டு அன்பு செய்யும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாக பெருமான் விளங்குகின்றார் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் திருவாரூர் பதிகத்து பாடலாகும் (6.32.10). ஆற்ற=மிகவும், அருமந்த=அருமையான; அருமருந்த என்ற சொல்லின் திரிபாகக் கருதி அமுதத்தை உண்ட தேவர்கள் என்றும் பொருள் கூறுவதுண்டு. பிரமனின் ஐந்தாவது தலையை நீக்கிய பெரியோனே, உமையம்மைக்கு உடலில் இடம் கொடுத்ததால் பெண்ணுருவமும் ஆணுருவமும் கலந்து நிற்பவனே, நான்கு கரங்களையும் மூன்று கண்களையும் கொண்ட தோற்றத்தை உடையவனே, அன்பு கொண்டு உன்னைத் தொழும் அன்பர்களுக்கு மிகவும் எளியவனே, அமுதத்தை உட்கொண்ட தேவர்களுக்கு அரசனாக விளங்குபவனே, இராவணனது இருபது தோள்களையும், கால்களையும், பத்து தலைகளையும் தனது பாதத்தின் விரலால் நெரித்தவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன் என்று அப்பர் பிரான் இறைவனைப் போற்றும் பாடல்.

பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி

கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி

அருமந்த தேவர்க்கு அரசே போற்றி அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்

சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.1) அப்பர் பிரான், தன்னைக் கருதி வழிபடும் அடியார்களுக்கு பெருமான் மிகவும் எளியவனாக விளங்குகின்றார் என்று கூறுகின்றார். கருமணி=கண்ணின் கருமணியைப் போன்று மிகவும் அருமையானவன். கோவணவன் தன்னை என்றும் ஒரு பாடம் உள்ளது. கோளரவு=கொடிய பாம்பு: அதள்=தோல்; ஆற்ற=மிகவும்: கனகம்=பொன்; திருமணி=திருவினை உடைய மணி, வீடுபேறு ஆகிய செல்வத்தை உடைய மணி; குருமணி=நல்ல நிறமுடைய மாணிக்கக் கல்; குருமணி என்பதற்கு சிறந்த ஆசிரியன் என்று பொருள் கொள்ளலாம். கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்று திருவாசகம் சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமான் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. கருமணி என்பதற்கு சிவக்கவிமணி திரு சி.கே.எஸ். அவர்கள், தனது பெரியபுராண விளக்கம் புத்தகத்தில், ஒரு அருமையான விளக்கத்தை அளித்துள்ளார். முற்றூழிக் காலத்தில், உயிர்கள் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்குவதையும், அவ்வாறு ஒடுங்கும் உயிர்களை பின்னர் இறைவன் விடுவிப்பதையும் நாம் அனைவரும் அறிவோம். எனவே அத்தனை உயிர்களையும் ஈன்ற பெருமானை கருவினை ஈன்றவன் என்ற பொருள் பட கருமணி என்று அழைப்பது பொருத்தம் தானே

கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானைக் கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னைக்

குருமணியைக் கோளரவு ஒன்று ஆட்டுவானைக் கொல் வேங்கை அதளானைக்

கோவணன்னைக்

அருமணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க

திருமணியைத் திருமுதுகுன்றுடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (6.95.8) அப்பர் பிரான் பெருமானின் எளிவந்த தன்மையை குறிப்பிட்டு, தான் மிகவும் வியந்ததையும் நமக்கு உணர்த்துகின்றார். அத்தா=தந்தையே; ஆர்த்தல்=கட்டுதல்; சமண சமயம் சார்ந்து, சிவபெருமானை நினைக்காமல் இருந்த தன்னை, தனது தமக்கையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி சூலை நோய் கொடுத்து பின்னர் அதனைத் தீர்த்தருளி, அன்பினால் கட்டி, வேறு எங்கும் செல்ல முடியாதபடி பிணைத்த தன்மையை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தீர்த்த நீராட்டி=தூய்மை செய்து. சிவபிரானின் கருணை வெள்ளம், அப்பர் பிரானின் விருப்பத்திற்கு இசைந்து, சூலம், இடபம் முதலிய குறிகளைத் அவரது உடலில் பொறித்து, உடலினைத் தூய்மை செய்தது இங்கே, தீர்த்த நீராட்டி என்று குறிப்பிடப்படுகின்றது. நீரின் குணம் உடலைத் தூய்மை செய்வது போல், சிவபிரானின் கருணை வெள்ளம் தன்னை, தூய்மை செய்ததை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அடிமையாக தன்னை, ஏற்றுக் கொண்டதை, ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (4.94) அப்பர் பிரான்.ஏன்றாய் என்று, குறிப்பிடுகின்றார்.

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக்கொண்டாய்

எத்தனையும் அரியை நீ எளியை ஆனாயெனை ஆண்டுகொண்டிரங்கி ஏன்றுகொண்டாய்

பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாயன்றே

இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே

திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.26.9) சுந்தரர், பெருமான் மிகவும் எளிதாக தனது உள்ளத்தில் புகுந்துறையும் தன்மையை குறிப்பிடுகின்றார். அம்பிகை உடனாக பெருமான் தனது உள்ளத்தில் உறைவதாக இங்கே கூறுகின்றார். இத்தகைய எளிமையுடன் திகழும் பெருமானைத் தவிர்த்து தனது உள்ளம் வேறெதையும் உணராது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

தளிர் போல் மெல்லடியாள் தனை ஆகத்து அமர்ந்தருளி

எளிவாய் வந்தென்னுள்ளம் புகுதவல்ல எம் பெருமான்

களியார் வண்டறையும் திருக்காளத்தி உள்ளிருந்த

ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே

தனக்கு பல விதத்திலும் அருள் புரிந்த சிவபெருமானை, அவன் தனக்கு செய்த உதவிகளின் தன்மை மற்றும் அவனது உயர்ந்த தன்மை ஆகியவற்றின் பின்னணியில் பெருமானை எளிவந்த பிரான் என்றும், தான் அந்நாள் வரை செய்த பிழைகளைப் பொறுத்த பெருமானென்றும் திருவாரூர் பதிகத்தின் முதல் பாடலில் (7.59.1) குறிப்பிடும் சுந்தரர், தான் இனிமேல் பிழைகள் செய்வதை தவிர்க்கும் வண்ணம் தனது சிந்தனையை திருத்தி அமைத்தவன் பெருமான் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். தனக்கு பலவகையான செல்வங்களைத் தந்து அந்த செல்வங்களை அனுபவிக்கும் போகத்தினையும் அளித்த பெருமான், உண்மையான மெய்ப்பொருளை, அந்த மெய்ப்பொருளின் தன்மையை உணரும் ஆற்றலையும் தனக்கு அளித்துள்ளார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். .

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப்

பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் பிழை எலாம் தவிரப் பணிப்பானை

இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மானை எளிவந்த பிரானை

அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே

திருவலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.67.10) சுந்தரர், தன்பால் மனதினை பொருத்தி வழிபடும் அடியார்களுக்கு எளியவனாக பெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். உயிர்களின் மலங்களை பிச்சையாக ஏற்றுக்கொண்டு உயிர்களை உய்விக்கும் கருணைச் செயலின் காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் ஏன் பிரம கபாலத்தில் அத்தகைய பிச்சையை ஏற்கவேண்டும் என்பதற்கு விடையினை அறிய நாம் கந்தபுராணத்திற்கு செல்ல வேண்டும். (ததீசி உத்தரப் படலம், தக்ஷ காண்டம்) தங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்று தங்களுக்குள்ளே வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் திருமால் ஆகிய இருவரின் முன்னே நீண்ட தீப்பிழம்பாக தோன்றிய பெருமானின் அடியையும் முடியையும் காண்பதற்கு இருவரும் முனைந்தனர். தங்களது முயற்சியில் இருவரும் தோல்வியடைந்து திகைத்து நின்ற தருணத்தில் பெருமான் மாதொரு பாகனாக அவர்களின் முன்னே காட்சி கொடுத்தார். அப்போது திருமால், பெருமானின் தன்மையை உணர்ந்தவராக பெருமானிடம் தனது தவறினை மன்னித்து விடுமாறு வேண்டினார். ஆனால் பிரமனோ அப்போதும் பெருமானை மதிக்காமல், பெருமானை இழிவாகவும் பேசவே, பெருமான் பைரவரை அழைத்தார். செருக்குடன் தன்னை நிந்தித்த பிரமனின் தலையை கிள்ளி துண்டிக்குமாறும், கர்வம் கொண்டிருந்த தேவர்கள் முனிவர்கள் மற்றும் திருமாலின் உடல்களிலிருந்து இரத்தத்தை வடியச் செய்யுமாறும் ஆணையிட்டார். உடனே, பைரவர் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றை, உச்சியில் இருந்த தலையை தனது நகத்தால் கிள்ளி எறிந்தார். அப்போது பிரமனின் உடலிலிருந்து இரத்தம் அனைத்தும் வடியவே பிரமன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பைரவர் பிரமனை உயிர் பெற்றெழுமாறு செய்தார். கலக்கம் தெளிந்த பிரமன் அப்போது பைரவரை வணங்கி தனது தவறுகளை மன்னிக்குமாறு வேண்டினார். மேலும் மற்றவர்களின் உடலில் உள்ள இரத்தத்தினை சேகரிப்பதற்கு தனது கபாலத்தை பயன்படுத்துமாறும் வேண்டினார். பின்னர் செருக்கு கொண்டிருந்த தேவர்கள் மற்றும் முனிவர்களின் உடலில் இருந்த இரத்தத்தை வடியச் செய்த பைரவர், பின்னர் அவர்களையும் உயிர்ப்பித்தார். அதன் பின்னர் வைகுந்தம் சென்ற பைரவரை,வாயிலில் இருந்த விஷ்வக்ஸேனன் தடுக்கவே, பைரவர் அவனைக் கொன்று அவனது உடலினைத் தனது சூலத்தினில் ஏந்தியவாறு வைகுந்தத்தின் உள்ளே சென்றார். இதனிடையில் பைரவர் வந்த நோக்கத்தை அறிந்து கொண்ட திருமால், தனது மார்பினைத் தனது நகத்தினால் கீறி தனது உடலில் இருந்த உதிரத்தினை, பைரவர் ஏந்தியிருந்த கபாலத்தில் சிந்தினார். திருமால் இவ்வாறு பிரமகபாலத்தை தனது குருதியால் நிறைவு செய்ததை, பாசுரங்களும் குறிப்பிடுகின்றன. (ஆனால் பிரம கபாலம் பெருமானின் கையிலிருந்து விடுபட்டு விலகுவதற்காக திருமால் அவ்வாறு செய்தார் என்று பாசுரங்கள் கூறுகின்றன.) இலக்குமியும் பூமிதேவியும் வேண்ட, பைரவர் திருமாலை உயிர்ப்பித்தார் என்று கந்தபுராணம் குறிப்பிடுகின்றது. பண்டைய நாளில் பிரமன் திருமால் முனிவர்கள் மற்றும் தேவர்கள் கொண்டிருந்த செருக்கினை, பைரவர் ஏந்தியிருந்த பிரம கபாலத்தில் வாங்கிக் கொண்டு அவர்களை உய்வித்த பெருமான், தானே நேராக பலியேற்பது பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு பெருமான் பலியேற்பதன் நோக்கமே, அவர் உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையே. பெருமான் இவ்வாறு பலியேற்பதை நாம் பயன்படுத்திக் கொண்டு, பெருமான் நமது எதிரே நிற்பதாக பாவித்துக் கொண்டு,நமது மலங்களை அவர் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இடுவதாக நினைத்துக் கொண்டு விட்டொழிக்க வேண்டும் என்பதே அருளாளர்கள் நமக்கு உணர்த்தும் அறிவுரை. திருமூலர் திருமாலின் உதிரத்தினை பைரவர் ஏந்திய செய்தியை குறிப்பிடும் பாடலை நாம் காண்பது பொருத்தமாகும். ஏன்ற=ஏற்றுக் கொண்ட; அந்தணன்=பிரமன்; களேபரம்=உயிரற்ற உடல்; தனக்கு ஒப்பாக வேறோர் பொருளையோ தெய்வத்தையே சான்று காட்ட முடியாத தன்மையில் இருக்கும் சிவபெருமான், தனது அடியார்களுக்கு மிகவும் எளியவனாக விளங்குகின்றார் என்று கூறுகின்றார். மான்று=அறியாமை; அறியாமையால் அறிந்து கொள்ளமுடியாதவன் என்று கூறுகின்றார்.

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்றுத்

தோன்று தோள் மிசைக் களேபரம் தன்னைச் சுமந்த மாவிரதத்த கங்காளன்

சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னைத் தன்னிலா மனத்தார்க்கு

மான்று சென்று அணையாதவன் தன்னை வலிவலம் தனில் வந்து கண்டேனே

திருமூலர் திருமாலின் உதிரத்தினை பைரவர் ஏந்திய செய்தியை குறிப்பிடும் பாடலிது. இந்த நிகழ்ச்சி திருக்கண்டியூர் வீரட்டானம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடலிலும் குறிப்பிடப்படுகின்றது.

எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும்

தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள்

பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற

அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே

திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் பாடலில் (8.5.91) எல்லையற்ற பெருமான் எளிய மானிட வடிவம் கொண்டு திருப்பெருந்துறை தலத்தில் குருந்தமரத்தின் நிழலில் குருவாக வந்து அருள் புரிந்த தன்மையை மணிவாசக அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். வெள்ளப்பெருக்கு அளவுடன் இருந்தால் தான் பயிர்கள் செழித்து வளரும். கரை கடந்து வரும் வெள்ளம் பயிர்களை அழித்துவிடும். வெள்ளம் வாராமல் இருந்தாலும் பயிர்கள் வளராது. எனவே தனது நிலையில் மாறாது அளவோடு வரும் வெள்ளமே பயிர்களுக்கு சிறந்தது. அதே போன்று பெருமானின் கருணையின்றி உயிர்கள் தழைத்து வளர முடியாது. அதே சமயத்தில், அவனது கருணை வெள்ளம் முழுவதையும் தாங்கும் ஆற்றலும் உயிர்களுக்கு இல்லை. அதனால் தான் அருளாளர்கள் இறைவன் கடைக்கண் பார்வையே போதும் என்று கூறுகின்றனர். இதனை உணர்த்தும் பொருட்டே மாறிலாத மாகருணை வெள்ளம் என்று பெருமானை அடிகளார் அழைக்கின்றார்.உண்மையான அடியார்கள் (மெய்ம்மை அன்பர்) பெருமானுடன் கூடியிருந்து என்றும் அழியாத இன்பம் அடைவதையே (வீடுபேறு-மெய்ம்மை)விரும்புவார்கள். எல்லையற்ற தன்மைகளை உடைய இறைவன், எளிய அந்தணனாக வந்து குருந்த மரத்தினடியில் காத்திருந்து குருவாக உபதேசம் செய்து தன்னை ஆட்கொண்டதை குறிப்பிடும் அடிகளார், அவ்வாறு பெருமான் ஆட்கொண்டதால் தன்னிடம் நிகழ்ந்த மாற்றத்தையும் இங்கே குறிப்பிடுகின்றார். பல குற்றம் குறைகளுடன் பாமரனாக இருந்த தன்னை, ஒளி செய் மானுடமாக மாற்றியவன் பெருமான் என்றும் அந்த மாற்றம் பெருமானின் கண்ணோக்கத்தால் நிகழ்ந்தது என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். இரும்பாக இருந்த தன்னை பெருமான் பொன்னாக மாற்றிய பின்னரும், கடையனாகிய தனது நெஞ்சத்தில் அத்தகைய மாற்றத்தின் விளைவு தென்படவில்லை என்று குறிப்பிட்டு, தனது நிலையை நினைத்து தானே பரிதாபப்படுகின்றார். கீறிலாத நெஞ்சம் உடையவனாக தான் இருப்பதை குறிப்பிடுகின்றார். பலரும் நடந்த வழியினில் தேய்வும், கையாளப் பட்ட பாத்திரத்தில் கீறல்களும் இருப்பது இயற்கை.இறைவன் தனக்கு ஞானம் அருளிய பின்னரும் அந்த ஞானத்தின் அறிகுறி ஏதும் தனது மனதினில் காணப்படவில்லை என்பதை கீறிலாத நெஞ்சு உடையனாயினேன் என்று தன்னை குறிப்பிட்டு அடிகளார் வருந்துகின்றார். அதாவது தனது மனதினை பயன்படுத்தி, மனமொன்றி முழுமுதற் கடவுளாகிய பெருமானை தான் வழிபடவில்லை என்று கூறுகின்றார்.

மாறிலாத மாக்கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொல் தாளிணை

வேறிலாதப் பதப்பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்

ஈறிலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடமாக நோக்கியும்

கீறிலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே

நீத்தல் விண்ணப்பம் பதினைந்தாவது பாடலில், எளிவந்த எந்தை பிரான் என்று பெருமானை, அடிகளார் குறிப்பிடுகின்றார். பெருமான் தனது அழகிய திருவடிகளைக் காட்டி ஆட்கொண்ட பின்னர் அவரையே நினைத்து உருகி, அவருடன் ஒன்றறக் கலந்து அதே நிலையில் தொடர்ந்து நில்லாமல், அந்த பேரின்ப நிலையிலிருந்து தான் வெளிவந்த தவறினுக்கு தண்டனை அளிக்கும் முகமாக பெருமான் தன்னை விட்டு விட்டுச் சென்றாரோ என்று அடிகளார் நினைப்பதை இங்கே குறிப்பிடுகின்றார். அவ்வாறு தன்னை விட்டுவிடாமல் தன்னை மீண்டும் பெருமான் ஆட்கொள்ள வேண்டும் என்று விரும்பும் அடிகளார்,பெருமான் தன்னை ஆட்கொண்ட நிலையினை எண்ணிப் பார்க்கின்றார். குட்டி எந்த முயற்சியும் செய்யவேண்டிய தேவை இல்லாமல், தாய்ப்பூனை குட்டியை வாயினால் கவ்விச் செல்வது போன்று, எங்கோ சென்று கொண்டிருந்த தன்னை, திருப்பெருந்துறைக்கு, இரும்புத் துண்டினை காந்தம் கவர்வது போன்று இழுத்த பெருமான், மானுடச் சட்டை தாங்கி குருவாக செயல்பட்டு தனக்கு அருள் புரிந்த எளிமைத் தன்மையை குறிப்பிடுகின்றார்.

களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள

வெளி வந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம்

ஒளி வந்த பூங்கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே

எளி வந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என்னப்பனே

திருவாசகம் திருவம்மானை பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், பெருமானை, எளிவந்து இருந்து இரங்கி எண்ணரிய இன்னருள் புரிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். கேழ்=நிறம்; கருமை நிறம் கொண்ட திருமால் மற்றும் அம்பிகையை, பசுமை நிறம் கொண்டவர்கள் என்றும் நீலநிறம் கொண்டவர்கள் என்றும் குறிப்பிடுவது இலக்கிய மரபு. இங்கே பார்வதி தேவியை, கிளியினைப் போன்று இனிய மொழி உடையவள் என்றும் பச்சைக்கிளி போன்ற நிறம் கொண்ட திருமேனியை உடையவள் என்றும் அடிகளார் கூறுகின்றார். பிரமனும் திருமாலும் காண்பரிய வித்தகனாகத் திகழ்ந்த பெருமான், எளி வந்தவனாக தனது உள்ளத்தில் புகுந்து நின்றமையால், தனது உள்ளத்தில் ஞானம் விளங்கித் தோன்றி ஒளி வீசுகின்றது என்று குறிப்பிடுகின்றார்.

கிளி வந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனை

வெளி வந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத்

தெளி வந்த தேறலைச் சீரார் பெருந்துறையில்

எளி வந்து இருந்து இரங்கி எண்ணரிய இன்னருளால்

ஒளி வந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ

அளி வந்த அந்தணனைப் பாடுதும் காண் அம்மானாய்

திருவாசம் ஆசைப்பத்து பதிகத்தின் பாடலில் (8.25.5) மணிவாசகர், பெருமனை, எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என்னார் அமுது என்று அழைக்கின்றார். புளியம்பழம் ஒத்து தான் இருப்பதாக அடிகளார் இங்கே கூறுகின்றார். நன்கு பழுத்த புளியம்பழத்தை நாம் பிரித்தால், அந்த ஓட்டுடன் புளி ஒட்டாமல் இருப்பதை நாம் காணலாம். அந்த நிலையைப் போன்று, தானும் உலகப் பொருட்களின் மீதும் உலகத்து உயிர்களின் மீதும் பற்று அற்றவனாக,தான் திகழ்வதாக இந்த பாடலில் கூறுகின்றார். இந்த தன்மையை இறைவன் உணர்ந்து, தன்னை அளியன் என்று அழைத்து, தனக்கு அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் உணர்த்துகின்றார். அளியன் என்றால் இரங்கத் தக்கவன் (அளியேன் என்ற சொல்லின் திரிபு) என்று பெருமான் தன்னை அழைத்தால், அந்த சொல்லுக்கு ஏற்ப தன் மீது இரக்கம் கொண்டு இறைவன் அருள் புரிவான் என்ற தனது நம்பிக்கையுடன் தனது விண்ணப்பத்தை இங்கே அடிகளார் வைக்கின்றார். புளியம்பழம் என்ற சொல்லுக்கு வேறோர் சுவையான விளக்கமும் முனைவர் அ.ச.ஞானசம்பந்தர் அவர்கள் தனது திருவாசக சிந்தனைகள் என்ற புத்தகத்தில் அளிக்கின்றார். அளி=கேடு; கேட்டினை விளைவிக்கும் ஐந்து புலன்களை உடைய உடலினை அழகாக புறத்தோல் கொண்டு போர்த்த உடலினை உடையவன் என்று தன்னை குறிப்பிடுகின்றார். புளியம்பழம் என்ற சொல் புளியங்காயினை உணர்த்துகின்றது என்று அவர் விளக்கம் அளிக்கின்றார். புளியம்பழத்தை ஒத்து, உலகப் பற்றுகள் அற்றவராகத் திகழும் அடியார்களை இறைவன், அத்தகைய அடியார்கள் உலகப்பற்று அற்றவர்களாக, தங்களது மலங்களைக் கழித்துக் கொண்டு இருக்கும் அடியார்களை, இறைவன் ஆட்கொண்டு முக்தி நிலை அருள்கின்றார் என்வதை வேதங்களும் அருளாளர்களும் கூறுகின்றனர். இதனையே மணிவாசக அடிகளாரும் பல இடங்களில் கூறுகின்றார். அவ்வாறு இருக்கையில், எதற்காக,இருந்தும் என்ற சொல்லுடன் புளியம்பழம் ஒத்திருந்தேன் என்ற தொடரினை இணைத்து அடிகளார் கூறுகின்றார் என்ற கேள்வியை கேட்கும் முனைவர் அ.ச.ஞா அவர்கள் அதற்கும் விடையும் அளிக்கின்றார். பெருமான் மணிவாசகருக்கு திருப்பெருந்துறையில் முதன்முதலாக அருள் புரிந்ததன் பின்னணியில் இந்த பாடலின் பொருளை நாம் உணரவேண்டும் என்பது தான் அந்த விளக்கம். தொண்டித் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அடிகளார் அப்போது பாண்டிய நாட்டின் அமைச்சராகத் தானே இருந்தார். அந்த நிலையில் தானே அவர் பெருந்துறைத் தலத்திற்கு ஈர்க்கப்பட்டார். அப்போது உலகப் பொருட்களின் மீது பற்று கொண்டவராக, புளியங்காயினை ஒத்த நிலையில், பந்தம் பாசம் அவற்றுடன் ஒட்டியவராக இருந்தார் அல்லவா. எனினும் அப்போது இறைவன் அவரை ஆட்கொண்டதை, நினைவூட்டும் வகையில், புளியங்காயினை ஒத்து தான் இருந்த போதிலும், இறைவன் தனக்கு அருள் புரிந்து ஆட்கொண்டதை குறிப்பிடுகின்றார் என்ற விளக்கம் மிகவும் பொருத்தம் உடையதாக தோன்றுகின்றது. அவ்வாறு உலகப் பற்று உடையவனாக தான் இருந்த போதிலும், தொண்டித் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த தன்னை வலிய பெருந்துறைக்கு இழுத்து வந்து, எளிய அந்தணனாக தனக்கு காட்சி கொடுத்து உபதேசமும் செய்து ஆட்கொண்ட இறைவனை, எளிவந்து என்னை ஆட்கொண்ட என்னார் அமுதே என்று அழைக்கின்றார். எனினும் பெருமான், தன்னை விட்டுப் பிரிந்து சென்றமை குறித்து வருத்தம் அடைந்தவராக, மீண்டும் பெருமான் தனக்கு அருள் புரிய வேண்டும் என்ற தனது ஆசையையும் இங்கே வெளிப்படுத்துகின்றார்.

அளி புண்ணகத்துப் புறத்தோல் மூடி அடியேனுடை யாக்கை

புளியம்பழம் ஒத்திருந்தேன் இருந்தும் விடையாய் பொடியாடீ

எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என்னார் அமுதேயோ

அளியன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

திருவாசகம் அதிசய்ப்பத்து பதிகத்தின் பாடலில் (8.26.3) மணிவாசக அடிகளார், அனைவரும் புரிந்து கொள்வதற்கு மிகவும் அரியவனாகத் திகழும் பெருமான் அடியார்களுக்கு மிகவும் எளியவனாகத் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். தனது மகன் எந்த தவறினைச் செய்திருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அன்பு காட்டும் தாயினைப் போன்று, இறைவன் தன்னை ஆட்கொண்டதை குறிப்பிடும் அடிகளார், இவ்வாறு தாயாக செயல்படும் தன்மை இறைவனுக்கு புதியதல்ல என்பதையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். சந்திரன் பல தவறுகளைச் செய்தவன் என்பதை நன்கு அறிந்திருந்த போதிலும்,சந்திரன் தன்னைச் சரணடைந்த போது, அவனது குற்றங்களை பொருட்படுத்தாமல் அவனுக்கு மறுவாழ்வு அளித்த கருணைச் செயலை இங்கே குறிப்பிடுகின்றார். இவ்வாறு அடியவர்களுக்கு எளியவனாக, இரக்கம் கொண்டு, எளிவந்து அருள் புரியும் இறைவனின் தன்மையை அனைவராலும் அறிந்து கொள்ள முடியாத தன்மையையும் இங்கே குறிப்பிடுகின்றார்.

முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண் அது உடை எந்தை

தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்குப்

பொன்னை வென்றதோர் புரிசடை முடி தனில் இளமதி அது வைத்தார்

அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் கடைப் பாடலிலும் (8.37.10) மணிவாசகர் தன்னை எளியையாய் ஆண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.புரை=துளை; புரைபுரை=அனைத்துத் துளைகளும்; சிவானந்தம் தனது எலும்புத் துளைகள் அனைத்திலும் புகுந்து இன்ப ஊற்று பெருக்கெடுக்கும் வண்ணம் மாற்றியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், பெருமானைத் தான் சிக்கெனப் பிடித்ததாக அடிகளார் குறிப்பிடுகின்றார். பெருமான் தானே விரும்பினால் அன்றி எவரது பிடியிலும் அகப்படார் என்பதை நாம் அறிவோம். நமக்கு சுந்தரரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நமது நினைவுக்கு வருகின்றது. நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், மணமேடையில் இருக்கும் சுந்தரர் தனது அடிமை என்று உரிமை கோரிய முதியவர், அந்த அடிமை ஓலையை சுந்தரர் காணவேண்டும் என்று விரும்பிய போது, அந்த ஓலையை காண்பிக்க மறுக்கும் முதியவர், ஓலையுடன் ஓடுவது போன்று பாவனை காட்டுகின்றார். ஆனால் சுந்தரர், முதியவரை துரத்திச் சென்று பிடித்து, அவரைப் பற்றி அவரது கரத்தினில் இருந்த ஓலையை பிடுங்கி கிழித்து விடுகின்றார். பெருமான் நினைத்திருந்தால் சுந்தரர் தன்னை பிடிக்கமுடியாத வண்ணம் ஓடியிருக்கலாம் அல்லவா.ஆனால் அவ்வாறு செய்யாமல், சுந்தரருக்கு மேன்மேலும் கோபமூட்டி தனது ஓலையையும் வேண்டுமென்றே பறிகொடுத்த முதியவர், இவ்வாறு ஓலையினை கிழித்த செயலே, சுந்தரர் தனக்கு அடிமை என்பதை உறுதிபடுத்துகின்றது என்று வாதாடுகின்றார். ஆனால் பத்தி வலையில் படுவோன் என்று அடிகளார் முன்னம் குறிப்பிட்ட வண்ணம், பெருமானை அடிகளார் பிடிக்க முடிந்தது என்றால், அவரது பிடிக்கு அகப்படும் வண்ணம் பெருமான் எளியனாக மாறியதே காரணம் என்பதை விளக்கும் முகமாக, எளியை என்று இங்கே குறிப்பிடுகின்றார் போலும். பெருமான் தன்னை ஆட்கொண்டு, தனது உள்ளத்தின் உள்ளே புகுந்து நின்றதால், தனது துன்பங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, தான் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடும் கோயிலாப் புகுந்தென்

என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே

துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம் தொடக்கெலாம் அறுத்த நற்சோதீ

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே

திருமுகத்தலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.11.8) கருவூர்த்தேவர், பெருமான் மிகவும் எளியவனாக வனது தன்னருகில் இருப்பதாக கூறுகின்றார். அவன் அருளாலே அவன் தாள் பணிந்து என்று மாணிக்கவாசகர் சொல்வது போன்று, பெருமானின் அருள் தான் நாம் பெருமானை வணங்கும் வண்ணம் வழிகாட்டுகின்றது என்று கருவூர்த்தேவர் உணர்த்துகின்றார். அவ்வாறு பெருமானைப் பணிந்து வணங்கிய தனக்கு மிகவும் எளியவனாக வந்து,தனது என்பெலாம் உருகும் வண்ணமும் பெருமான் பால் தான் அன்பு வைக்கும் வண்ணமும், தனது பாசங்கள் தன்னை விட்டு அகலும் வண்ணமும், தன்னை மாற்றிய பெருமான், மிகவும் எளியவனாக வந்து தன்னருகே நிற்பதாகவும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

என்னை உன் பாத பஙகயம் பணிவித்து என்பெலாம் உருக நீ எளிவந்து

உன்னை என் பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே

முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே

கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே

கங்கை கொண்ட சோழபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (9.13.1) கருவூர்த் தேவர், மிகவும் பெரியவனாகிய பெருமான், சிறியவனாகிய தனது உள்ளத்தில் புகுந்து, மிகுந்த எளியவனாக திகழ்ந்த எளிமையை தான் என்றும் மறவேன் என்று கூறுகின்றார்,

அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய

என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்

முன்னம் மால் அறிய ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடந்தோள்

கன்னலே தேனே அமுதமே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், திருமால் பிரமன் முதலாய தேவர்கள் அனைவரும், பன்னெடுங்காலம் காத்து ஏங்கி வருந்தி நின்ற போதும் அவர்கள் காண்பதற்கு மிகவும் அரியவனாக விளங்கிய பெருமான், தனது உள்ளத்தில் பெருமான் புகுந்து இருந்த தன்மை, அடியார்களுக்கு அவன் மிகவும் எளியவனாக இருப்பதை உணர்த்துகின்றது என்று கருவூர்த் தேவர் கூறுகின்றார்.

பாம்பணைத் துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங் காலம் நிற் காண்பான்

ஏம்பலித்திருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்

தேம்புனற் பொய்கை வாளை வாய் மடுப்பத் தெளிதரு தேறல் பாய்ந்தொழுகும்

பூம்பணைச் சோலை ஆவண வீதிப் பூவணம் கோயில் கொண்டாயே

தஞ்சை இராசராசேச்சரம் தல்த்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.16.8) கருவூர்த் தேவர், பற்பல ஆண்டுகளாக திருத்தொண்டு செய்து வரும் பழைய அடியார்கள் பெருமானின் திருவருளை வேண்டிய வண்ணம் வருந்தியிருக்கவும், அவர்களுக்கு அருள் புரியாமல், தனது நெஞ்சத்தை நெடிய கோயிலாக கருதி, புகுந்து உறையும் பெருமானின் எளிய செயலை என்றும் தான் மறக்கமாட்டேன் என்று கூறுகின்றார். தஞ்சை நகரத்து மகளிர், அன்னாளில் ஆடல் மற்றும் பாடல் கலைகளில் சிறந்து விளங்கினார்கள் என்றும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இஞ்சி=மதில்; விலங்கல்=மலை;

பன்னெடுங்காலம் பணி செய்து பழையோர் தாம் பலர் ஏம்பலித்திருக்க

என்னெடுங் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்றும் நான் மறவேன்

மின்னெடும் புருவத்து இளமயில் அனையார் விலங்கல் செய் நாடக சாலை

இன்னடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேசரத்திவர்க்கே

இந்த பாடலில் பிணை பெணோடு ஒருமையின் விளங்குபவன் என்று இறைவனை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிணை என்றால் துணை என்றும் பொருள் உள்ளது. தனக்குத் துணையாக உள்ள பிராட்டியை பெருமான் துணையாகத் தன்னுடன் பிணைத்துக் கொண்டுள்ளான் என்று இங்கே சொல்லப்படுகின்றது. துணையிலி என்றும் இணையிலி என்றும் பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்படும் பெருமானுக்கு இணையாக வேறொருவர் இல்லை என்பதை நாம் நன்கு அறிவோம். அவ்வாறு இருக்கையில் பெருமான், தனக்குத் துணையாக பிராட்டியை வைத்துக் கொண்டுள்ளார் என்ற கருத்து,நம்மை சற்று சிந்திக்கத் தூண்டுகின்றது. சிவம் வேறல்ல சக்தி வேறல்ல என்ற பின்னணியில் நாம் இதனை சிந்திக்க வேண்டும். தனக்குத் துணையாக வேறொருவர் இல்லாத பெருமான், தன்னையே (சக்தியை) தனக்கு (சிவத்திற்கு) துணையாகக் கொண்டுள்ளான் என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

தன் பால் அன்பு வைக்காத மனிதர்களுக்கு மிகவும் அரியவனாகத் திகழ்கின்ற பெருமான், தன் பால் அன்பு செலுத்தி வணங்கி வழிபடும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாகத் திகழ்கின்றான். நெருப்பு போன்ற வெப்பத்தினை எங்கும் பரப்பி அனைவரையும் அச்சுறுத்திய ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியதால், கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனும், ஒப்பற்ற பெருமை மிகுந்த ஒளியுடன் நறுமணம் கமழ்கின்ற சடைமுடியினை உடையவனும், பெரியதாக கருதப்படும் பொருட்களுக்கு எல்லாம் மிகவும் பெரியவனாக விளங்குபவனும் நுண்ணிய பொருட்களுக்கும் மிகவும் நுண்ணியனாக இருப்பவனும், தன்னுடன் பிணைந்துள்ள தனது துணையாகிய உமை அம்மையோடு ஓருருவில் இணைந்து இரண்டாகத் தோன்றுபவனும் நமது தலைவனும் ஆகிய பெருமான் உறைகின்ற இடம் இடைமருது தலமாகும்.

பாடல் 4:

பொரிபடு முதுகு உற முளி களி புடை புல்கு

நரி வளர் சுடலையுள் நடமென நவில்வோன்

வரிவளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வதொர்

எரிவளர் சடை அணல் இடம் இடைமருதே

விளக்கம்:

முளி-நரி; பொரிபடு=நன்றாக வெய்யிலில் காய்ந்த; புடைபுல்கு=சூழ்ந்து காணப்படும்; வரி=சிறிய கோடு; சிறிய கோடு போன்று ஒற்றைப் பிறையுடன் பெருமானின் சடையினைச் சேர்ந்த சந்திரன் நன்றாக வளர்ந்து முழுமதியாக மாறிய தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

வெய்யிலில் திரிவதால் நன்றாக காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள், மிகுந்த களிப்புடன் அங்குமிங்கும் மகிழ்ச்சியுடன் ஓடித் திரியும் நரிகள் மிகவும் அதிகமாக உலவும் சுடுகாட்டினில் மிகுந்த விருப்பத்துடன் நடனமாடுபவனும், மெலிந்த கோடாக, ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் பெருமானிடம் சரணடைந்த பின்னர் அழிவின் விளிம்பிலிருந்து தப்பி முழுமதியாக அழகிய கலைகளுடன் வானில் உலவும் வாழ்க்கையைப் பெற்ற சந்திரனை, குளிர்ந்த கதிர்களை உடைய சந்திரனை, ஒளியுடன் மிளிரும் வண்ணம் தனது சடையினில், நெருப்புச் சுடர் போன்ற நிறத்தினில் காணப்படும் சடையினில், அணிந்து கொண்டுள்ள தலைவனாகிய நம் பெருமான் உறைவது இடைமருது தலமாகும்.

பாடல் 5:

வருநல மயிலன மடநடை மலைமகள்

பெருநல முலையிணை பிணை செய்த பெருமான்

செருநல மதில் எய்த சிவனுறை செழுநகர்

இருநல புகழ் மல்கும் இடம் இடைமருதே

விளக்கம்:

பெருமுலை நன்மங்கை என்பது இந்த தலத்து பிராட்டியின் திருநாமம். அந்த திருநாமத்தை உணர்த்தும் வண்ணம், இந்த பாடலில் பெருநலமுலையிணை என்று பிராட்டியின் மார்பகங்களை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பிராட்டியின் மார்பகங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை என்பதை உணர்த்தும் பொருட்டு, பல தலங்களில் பிராட்டியின் திருநாமம் அமைந்துள்ளதை நாம் காணலாம். குன்றமுலை நாயகி (திருநாகேச்சரம்), நன்முலை நாயகி (திருவிடைமருதூர்), ஒப்பிலா முலையம்மை (திருவாவடுதுறை), போகமார்த்த பூண்முலையாள் (திருநள்ளாறு), அழகுமுலை அம்மை (வீழிமிழலை),உண்ணாமுலை அம்மை (திருவண்ணாமலை), இளமுலை நாயகி (திருவோத்தூர்) என்பன சில தலங்களில் வீற்றிருக்கும் அம்மையின் திருநாமங்கள்; மட நடை=அழகான நடை; அசைந்து ஆடியவண்ணம் வரும் மயில் போன்று அழகிய நடை உடையவள்; செரு நல=பகைவர்களுடன் போர் தொடுப்பதற்கு உதவும் வகையில் பொருத்தமாக இருக்கும் கோட்டைகள்; திரிபுரத்து அரக்கர்கள், தங்களது மூன்று பறக்கும் கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயத்தில் மட்டுமே அழிக்கப்பட முடியும் என்ற வரத்தினை பெற்றிருந்தனர். எனவே மற்ற இரண்டு கோட்டைகளை இணைக்கும் கோட்டிலிருந்து விலகி இருப்பதன் மூலம், மூன்றாவது கோட்டை மற்ற இரு கோட்டைகளுக்கும் சிறந்த பாதுகாப்பாக இருந்த தன்மை, செருநல என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. இருனல புகழ்=பெரும்புகழ்: செருநல என்ற தொடரினை சிவபெருமானுக்கு அடைமொழியாகக் கொண்டு, திரிபுரத்து அரக்கர்களுடன் சண்டை புரிந்ததன் மூலம் உலகினுக்கு நன்மை செய்த பெருமான் என்ற விளக்கமும் சிலரால் அளிக்கப்படுகின்றது. இருநலம்=இம்மை மறுமை ஆகிய இரண்டு நிலைகளிலும் நன்மை பயக்கும் தன்மை;

பொழிப்புரை:

அழகாக நடமாடி அசைந்து வரும் மயில் போன்ற சாயலையும் அன்னம் போன்ற அழகிய நடையினை உடையவளும் மலைமகள் என்று அழைக்கப் படுபவளும், பெருநலநன்முலை அம்மை என்ற திருநாமத்துடன் இந்த தலத்தினில் உறைபவளும் ஆகிய உமையம்மையின், ஒன்றுக்கொன்று இணையான மார்பகங்களுடன் கூடிய பெருமான், பகைவர்களை எதிர்ப்பதற்கு சிறந்த உதவியாக இருக்கும் மூன்று பறக்கும் கோட்டைகள் உடைய திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை ஒரே அம்பினை எய்தி அழித்து வீழ்த்தியவர் ஆவார். அத்தகைய ஆற்றல் உடைய பெருமான் உறைகின்ற இடம், செழுமை வாய்ந்ததும் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டு நிலைகளுக்கும் நலமளிக்கும் புகழ் உடையதும் ஆகிய இடைமருது தலமாகும்.

பாடல் 6:

கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில் புகை

மலையுடை மடமகள் தனை இடம் உடையோன்

விலையுடை அணிகலன் இலன் என மழுவினோடு

இலையுடை படையவன் இடம் இடைமருதே

விளக்கம்:

சிறந்த மேகலை ஆபரணம் அணிந்த தேவி என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பெருமானை மதிப்பு வாய்ந்த அணிகலன் ஏதும் அணியாதவர் என்று சுட்டிக் காட்டுகின்றார். எலும்பு மாலையும், ஆமை ஓடும், பன்றிக்கொம்பும், மண்டையோடும் கொண்டவனாக திகழும் பெருமானின் ஆபரணங்கள் மிகவும் எளிமையானவை என்று உணர்த்தப்படுகின்றன. கலை உடை=மேகலை ஆடை;, மேகலை ஆபரணம் பொருந்திய ஆடை; மேகலை என்பது பெண்கள் தங்களது இடையில் அணியும் ஆபரணம். பார்வதி தேவியை மேகலை ஆபரணம் அணிந்தவள் என்று குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம். முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் மேகலை ஆபரணத்தை (இழை மேவு கலை) அணிந்தவள் என்று தேவியை (1.131.5)திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். உழை=மான்: உழை மேவும் முரி= மான்தோல், கழை=மூங்கில்; இழை=அணிகலன்; எள்குதல்=இகழுதல்,எள்காது=இகழாது; உம்பர்= தேவர்கள், இங்கே தேவர்களின் உலகம்; ஒண்=சிறந்த; கல்லின் முழை=மலையில் அமைந்துள்ள குகையில்; மால் யானை=சிறந்த பெரிய யானை; தனது மனைவியை தனது உடலின் ஒரு பாகத்தே பெருமான் ஒருவன் தான் வைத்துள்ளான். மேலும் மான் தோல் புலித்தோல் ஆகியவற்றை, தவம் செய்யும் போதும் பூஜை வழிபாடுகள் செய்யும் போதும் தாங்கள் அமரும் ஆசனமாக பயன்படுத்தும் எவரும் அந்த தோலினை ஆடையாக அணிவதில்லை. எனவே தான் பெருமான் மான் தோல் அணிந்திருக்கும் நிலையினை குறிப்பிடும் திருஞானசம்பந்தர் தோல் என்று இகழாது மான் தோலினை பெருமான் அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். வேறு எவரும் இத்தகைய கோலத்துடன் காட்சி அளிப்பதில்லை என்பதால் ஒப்பற்ற ஒருவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மட மந்தி=பெண் குரங்கு; ஏந்திழை=சிறந்த நகைகளை உடலில் கொண்டவள்;

இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒரு பாலா ஒரு பால் எள்காது

உழை மேவு முரி உடுத்த ஒருவன் இருப்பிடம் என்பர் உம்பர் ஓங்கு

கழை மேவு மடமந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின்

முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றே

வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.17.5) தனது இடுப்பினில் மேகலை ஆபரணம் அணிந்த தேவி என்று பிராட்டியை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அரை=இடுப்பு; உரை=புகழுரைகள்; பிராட்டியைப் புகழ்ந்து பேசுவதில் பெரும் விருப்பம் உடையவன் பெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

அரையார் கலை சேர் அன மென்னடையை

உரையா உகந்தான் உறையும் இடமாம்

நிரையார் கமுகின் நிகழ் பாளையுடை

விரையார் பொழில் சூழ் வேணுபுரமே

திருபைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.14.6) துடியிடைக் கலை என்று பிராட்டி தனது இடுப்பினில் மேகலை ஆபரணம் அணிந்துள்ள நிலையினை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விடை=இடபம், ரிஷபம்; விடைக்கொடி ஏந்தியவன் என்ற பொருள் பட, விருஷபத்வஜன் என்று வடமொழியில் பெருமானின் திருநாமம் சொல்லப்படுகின்றது. த்வஜம் என்றால் கொடி என்று பொருள். கோழிக் கொடியுடைய முருகப் பெருமானை வாரணத்வஜன் என்று அழைப்பார்கள்; இந்த பாடலில் கூறியுள்ளதைப் போன்று பல பாடல்களில் பெருமானை, வெண்மழு ஏந்தியவன் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெருமானின் கையில் இருந்த வெண்மழு ஆயுதத்தைக் கண்டு பகைவர்கள் அஞ்சி ஓடியதால், மழு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்றும் பரமனுக்கு ஏற்படவில்லை என்பதால், அவன் ஏந்தியிருக்கும் மழு வெண்மை நிறத்தில் இருக்கின்றது என்று சுவையான விளக்கமும் அளிக்கப் படுகின்றது.

விடையுடைக் கொடி வலன் ஏந்தி வெண்மழுப்

படையுடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவலான்

துடியிடைக் கலை அல்குலாளோர் பாகமாச்

சடையிடைப் புனல் வைத்த சதுரன் அல்லனே

திருமீயச்சூர் இளங்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.11.6) அப்பர் பிரான், தேவியை மின்னு மேகலையாள் என்று குறிப்பிடுகின்றார்.மின்னு மேகலையாள் என்பது தலத்து இறைவியின் திருநாமம்; ஒளியுடன் மின்னும் மேகலை எனப்படும் ஆபரணத்தை இடையினில் அணிந்த தேவி என்று பொருள்; இன்ன நாள்=இன்றைய நாள்

பொன்னம் கொன்றையும் பூவணி மாலையும்

பின்னும் செஞ்சடை மேல் பிறை சூடிற்று

மின்னு மேகலையாளொடு மீயச்சூர்

இன்ன நாள் அகலார் இளங்கோயிலே

திருப்புறம்பியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், அப்பர் பிரான், பிராட்டியை, அரை ஏறு மேகலையாள் என்று அழைக்கின்றார்.விரையேறு=நறுமணம் கமழும்; திரை=அலைகள், இங்கே அலைகள் உடைய கங்கை நதி; அரை=இடை; மேகலை=பெண்கள் இடுப்பினில் அணியும் ஆபரணம்; ஆரிடம்=மற்றவர் அணுகுதற்கு மிகவும் அரிதான இடம். சுடுகாடு; புரை=உயர்வு;

விரையேறு நீறணிந்து ஓர் ஆமை பூண்டு வெண்தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தித்

திரையேறு சென்னி மேல் திங்கள் தன்னைத் திசைவிளங்க வைத்து உகந்த செந்தீவண்ணர்

அரை ஏறு மேகலையாள் பாகமாக ஆரிடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன்

புரையேறு தாம் ஏறிப் பூதம் சூழப் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

பொழிப்புரை:

நேர்த்தியான மேகலை ஆபரணம் பொருந்திய இடுப்பினில் விரிந்த ஆடையும், அகில் மணம் கமழும் கூந்தலும் உடையவளும், அழகும் இளமையும் பொருந்தியவளும் ஆகிய மலைமகளைத் தனது உடலின் ஒரு பாகத்தில் உடையவனாகிய பெருமான், விலை மதிப்புள்ள நகைகளை அணியாது, விலை மதிப்பேதும் இல்லாத பன்றிக் கொம்பு, ஆமையோடு, எலும்பு மாலை அணிந்தவனாக, தசை உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் மண்டையோட்டினை உடையவனாக இருக்கின்றார். அவரது படைக்கலம் மழு ஆயுதம் மற்றும் இலை வடிவத்தில் கூரிய நுனியினை உடைய சூலமாகும். அவரது இருப்பிடம் இடமருது தலமாகும்.

பாடல் 7:

வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்

இளமணல் அணைகரை இசை செயும் இடைமருது

உளமென நினைபவர் ஒலி கழல் இணையடி

குளம் அணல் உற மூழ்கி வழிபட குணமே

விளக்கம்:

சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடைமருது தலம் சென்றடைந்தால் நமது துன்பங்களைத் தீர்த்துக் கொள்வது மிகவும் எளிது என்று பதிகத்தின் முதல் பாடல் மூலம் நமக்கு உணர்த்தும் ஞானசம்பந்தர், அடுத்த ஐந்து பாடல்களில் பெருமானின் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார். பெருமானின் தன்மையை முந்தைய ஐந்து பாடல்களில் உணர்த்திய திருஞானசம்பந்தர், பெருமானை வழிபடுவதையே நமது பண்பாக கொள்ளவேண்டும் என்று இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார். வரிப்பாடல்கள் என்பன நாட்டுப்புற இசைப் பாடல்களில் ஒரு வகை. பண்டைய தமிழக மக்கள், நாட்டுப்புறஙகளில் ஆடியும் பாடியும் மிகுந்த களிப்புடன் தங்களது வாழ்வினை அனுபவித்தனர். அவ்வாறு மகிழ்ச்சியுடன் அவர்கள் இருந்ததைக் கண்ட இளங்கோவடிகள், அவர்களது ஆடலுக்கு பாடலுக்கும் இலக்கிய வடிவம் தந்தார். அத்தகைய பாடல்களே, கானல்வரி, வேட்டுவவரி, ஆற்றுவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, அம்மானை,கந்துகவரி, ஊசல்வரி, என்பன. வண்டுகள் முரலும் ஓசை, வரிப் பாடல்களின் இசையை ஒத்து இருப்பதாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.வளமான இடம் என்று தேர்ந்தெடுத்து வண்டுகள் வளர்வதாக குறிப்பிடுகின்றார். வளமான இடம் என்பதால், பூக்கள் செழித்து வளரும் சோலைகள் உடைய இடம் என்று கருதி, வண்டுகள் வந்து அடையும் தலம் என்று உணர்த்துகின்றார். பறக்கும் தன்மை உடைய வண்டுகளை பறவைகள் என்று குறிப்பிடுகின்றார்.இளமணல்= நுண்ணிய மணல்; அணல்=கழுத்து; கழுத்து வரை நீரில் மூழ்கிய வண்ணம் நின்றபடியே மந்திரங்களை தியானம் செய்வது சிறந்த பயன் தரும் என்று நம்பப்படுகின்றது. உருத்திர பசுபதி நாயனார், கழுத்தளவு நீரினில் மூழ்கி ஶ்ரீருத்ர ஜெபம் செய்தார் என்று பெரியபுராணத்தில் சொல்லப் படுகின்றது.இசைப் பயிற்சி மேற்கொள்வோரும் இவ்வாறு நீரினில் நின்ற வண்ணம் பயிற்சி செய்வார்கள் என்று சொல்லப் படுகின்றது.

பொழிப்புரை:

இந்த இடம் மிகவும் வளமான இடம் என்று கருதி இந்த இடைமருது தலத்தினில் வளரும் வண்டுகள், வரிப்பாடல்கள் பாடப்படும் மெல்லிய இசையுடன் முரன்று, நுண்ணிய மணல்கள் சேர்ந்த காவிரி நதியின் கரையில் திரிகின்றன. இத்தகைய சிறப்பான தலத்தினில் நாம் வாழ்கின்றோம் என்ற பெருமையினை உடைய தலத்து மக்கள், இந்த இடைமருது தலத்தினை தங்களது உள்ளத்தினில் நினைத்து, கழுத்தளவு த்ண்ணீர் நிறைந்த குளத்தினில் மூழ்கி எழுந்து,ஒலிக்கின்ற கழல்கள் அணிகின்ற மருதவாணனை வழிபடுவதை,. தங்களது வாழ்வின் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

பாடல் 8:

மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு

துறையவன் எனவல அடியவர் துயரிலர்

கறையவன் மிடறது கனல் செய்த கமழ்சடை

இறையவன் உறைதரும் இடம் இடைமருதே

விளக்கம்:

முந்தைய பாடலில் பெருமானை வழிபடுவதை நமது நோக்கமாகக் கொண்டு வாழவேண்டும் என்று நமக்கு உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் இறைவனை புகழ்ந்து அவனது திருநாமஙகளை சொல்லி வழிபடும் அடியார்கள் அடையவிருக்கும் பலனையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். மதி புல்கு=அறிவு சார்ந்த; பொதுவாக அரக்கன் இராவணனின் கயிலாய நிகழ்ச்சியை தனது பதிகங்களின் எட்டாவது பாடலில் குறிப்பிடும் திருஞானசம்பந்தர்,அந்த வழக்கத்திலிருந்து இந்த பதிகத்தில் வழுவுகின்றார். மொத்தம் இருபத்தேழு பதிகங்களின் பாடல்களில் திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணன் பற்றிய குறிப்பினை சேர்க்கவில்லை. இந்த பதிகத்தின் பாடல்களிலும் அரக்கன் இராவணன் பற்றிய குறிப்பு காணப்படவில்லை; எனினும், பிரமன் மற்றும் திருமால் காண முடியாத வண்ணம் நெடிய தழற்பிழம்பாக பெருமான் இருந்த தன்மையும் புத்தர் மற்றும் சமணர்களின் பொய்யான உரைகள் பற்றிய குறிப்பும் பதிகத்தின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் காணப் படுகின்றன. இவ்வாறு இராவணனின் கயிலாய மலை நிகழ்ச்சி மட்டும் விடுபட்ட பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளும் விடுபட்டுள்ள பதிகங்கள் ஆறு உள்ளன.

பதிக எண் தொடக்கச் சொல் தலம்

1.25 மருவார் குழலி செம்பொன்பள்ளி

1.49 போகமார்த்த பூண்முலையாள் திருநள்ளாறு

1.83 அடையார் புரமூன்றும் அம்பர் மாகாளம்

1.87 சுடுகூர் எரிமாலை வடுகூர்

1.118 சுடுமணி உமிழ்நாகம் பருப்பதம்

1.119 முள்ளின்மேல் முதுகூகை கள்ளில்

1.121 நடைமரு திரிபுரம் இடைமருதூர்

2.31 சுற்றமொடு பற்றவை கருப்பறியலூர்

3.53 வானைக்காவில் வெண்மதி திருவானைக்கா

3.104 விண்கொண்ட தூமதி பரிதிநியமம்

அரக்கன் இராவணன் பற்றிய குறிப்பு மற்றும் பிரமன் திருமால் ஆகிய இருவர்க்கும் அரியவனாக பெருமான் நின்ற நிகழ்ச்சி பற்றிய இரண்டு குறிப்புகளும் காணப்படாத பதிகங்களின் விவரங்களையும் நாம் இங்கே காணலாம். இந்த பதிகத்தின் பாடல்களில் சமணர்கள் பற்றிய குறிப்பு மட்டுமே காணப் படுகின்றது.

பதிக எண் தொடக்கச் சொல் தலம்

1.005 செய்யருகே புனல்பாய கீழைத்திருக்காட்டுப்பள்ளி

2.077 பீடினாற் பெரியோர்களும் அறையணிநல்லூர்

3.001 ஆடினாய் நறுநெய்யொடு தில்லைச் சிதம்பரம்

3.054 வாழ்க அந்தணர் பொது பதிகம்

3.102 காம்பினை வென்றமென் திருநாரையூர்

அரக்கன் இராவணன் பற்றிய குறிப்பு மற்றும் சமணர்கள் பற்றிய குறிப்பு காணப்படாத பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. இந்த பதிகங்களில் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவருக்கும் பெருமான் அரியவராக இருந்த நிலை உணர்த்தப் படுகின்றது.

பதிக எண் தொடக்கச் சொல் தலம்

1.056 காரார் கொன்றை பாற்றுறை

1.073 வானார் சோதி கானூர்

2.067 மண்ணுமோர் பாகம் பெரும்புலியூர்

2.078 ஒளிரிளம்பிறை சென்னி விளமர்

2.079 பவனமாய் சோடையாய் திருவாரூர்

2.112 மாதோர் கூறுகந்து ஆடானை

பொழிப்புரை:

வேதங்களை உலகினுக்கு அருளியவனும், அனைத்து உலகங்களுமாக விளங்குபவனும், திங்களாகத் திகழ்பவனும், அறிவு சார்ந்த அனைத்து கலைகளாக உள்ளவனும் ஆகிய பெருமான் என்று குறிப்பிட்டு போற்றும் அடியார்கள், தங்களது வாழ்வினில் துயரம் இல்லாதவர்களாக வாழ்வார்கள். ஆலகால விடத்தினைத் தேக்கியதால், கழுத்தினில் கருமை நிறத்துடன் படர்ந்த கறையை உடையவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் உள்ள விளங்குவதும் நறுமணம் கமழ்வதும் ஆகிய சடையினை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற தலம் இடைமருது ஆகும்.

பாடல் 9:

மருதிடை நடவிய மணி வணர் பிரமரும்

இருதுடை அகலமொடு இகலினர் இனதெனக்

கருதிடல் அரியதொரு உருவொடு பெரியதொர்

எருதுடை அடிகள் தம் இடம் இடைமருதே

விளக்கம்:

இகலுதல்=மாற்படல்; தங்கள் இருவரில் யார் பெரியவர் என்பதில் ஒருவருக்கொருவர் ஒத்த கருத்து உடையவர்களாக இல்லமல், தங்களுக்குள்ளே வாதம் செய்து கொண்டிருந்த திருமால் மற்றும் பிரமன்; இருதல் உடை=படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கின்ற பெருமையை உடைய சிவபெருமான்; இருத்தல் என்ற சொல் எதுகை கருதி திரிந்தது. மிகவும் அருமையான சொல்லாட்சி என்று புலவர் மணியம் அவர்கள், தேவாரச் சொல்லகராதி புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். இனதென=இன்னதென அறிய முடியாத தன்மை; பாடல்தோறும் இடைமருதே என்று குறிப்பிட்டு, மருதமரம் தலத்தின் தலமரமாக இருக்கும் தன்மையை உணர்த்திய திருஞானசம்பந்தருக்கு, கண்ணனுக்கும் மருத மரங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு நினைவுக்கு வந்தது போலும். பாகவத புராணத்தில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சி ஒன்றினை, மருதிடை நடவிய மணிவணர் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். நீலமணி போன்று திருமேனியை உடையவன் என்ற பொருள் பட, மணிவணர் என்று கண்ணனை அழைக்கின்றார். வண்ணர் என்ற சொல் வணர் என்று குறைந்தது. சிறு குழந்தையாக இருந்த போது கண்ணபிரான் செய்த குறும்புகள், குழந்தைகள் பொதுவாக செய்யும் எல்லைகளை கடந்தவையாக இருந்தன. கோகுலத்து ஆய்ச்சியர்கள் சேமித்து வைத்திருந்த வெண்ணெய் பால் தயிர் ஆகியவற்றை திருடித் தானும் உண்பதுடன்,அவ்ற்றை தனது நண்பர்களுக்கும் பூனை முதலிய பிராணிகளுக்கும் அளித்த குறும்பு விளையாட்டின் விளைவாக பாதிக்கப்பட்ட ஆய்ச்சியர், கண்ணனின் தாய் யசோதையிடம் சென்று முறையிடுகின்றனர். அதனால் கோபம் கொண்ட, யசோதை கண்ணனை ஒரு தாம்புக் கயிற்றினில் கட்டி, உரலுடன் பிணைத்து விடுகின்றாள். அதிகமான எடை கொண்ட உரலை இழுக்க முடியாமல், தோட்டத்தில் ஒரே இடத்தில் கண்ணன் பொருந்தி இருப்பான் என்ற நம்பிக்கையுடன் அவனது தாயார் செய்த செயலிது. இவ்வாறு தாம்புக் கயிற்றால் தனது வயிறு (உதரம்) கட்டப்பட்டு கண்ணபிரான் இருந்தமையால் அவனுக்கு தாமோதரன் என்ற பெயர் வந்தது.

பலவிதமான லீலைகள் செய்த கண்ணனை இவ்வாறு ஒரிடத்தில் கட்டி வைக்க முடியுமா. அவனது திருவிளையாடல்களின் தன்மையைத் தான் எவரேனும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா; எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு செயல் புரியும் கண்ணனின் செயல்களை எவரால் தடுக்க இயலும்; கண்ணன் மெதுவாக தவழ்ந்த வண்ணம், அந்த உரலையும் இழுத்துக் கொண்டு வருகையில், தோட்டத்தில் இருந்த இரட்டை மருத மரங்களின் இடையே புகுந்து வரவே, அவ்னைத் தொடர்ந்து உரல் வரமடியாமல், மரங்களின் இடையே மாட்டிக்கொண்டு விடுகின்றது. தான் தவழ்ந்து செல்வதற்கு தடையாக இருந்த மருத மரங்களில் ஒன்றினை இடது காலாலும் மற்றொன்றை தனது வலது காலாலும் கண்ணன் உதைக்க, இரண்டு மரஙகளும் வேரோடு சாய்ந்து பெருத்த ஒலியுடன் கீழே விழுந்து விடுகின்றன. ஆரவாரம் கேட்டு அச்சம் கொண்ட, கோகுலத்து மக்கள் நடந்ததை அறிந்து கொள்ள, கண்ணன் இருந்த இடத்திற்கு வருகின்றனர். அப்பொது இரண்டு கந்தர்வர்கள் கண்ணனுக்கு நன்றி சொல்லும் முகமாக கண்ணனை வணங்கிக் கொண்டிருப்பதை காண்கின்றனர்.

அந்த இரண்டு கந்தர்வர்களும் தங்களை, நளகூபரன் மணிக்ரீவன் என்றும் தாங்கள் குபேரனின் புதல்வர்கள் என்றும் அறிமுகப் படுத்திக் கொண்டு, தாங்கள் ஒரு சாபத்தின் விளைவாக மருத மரங்களாக இருந்த தன்மையையும், கண்ணனால் தங்களுக்கு சாப விமோசனம் ஏற்பட்டது என்றும் கூறினார்கள். கயிலை மலையின் அருகே இருந்த ஒரு தடாகத்தில் தாங்கள் தங்களது மனைவியருடன், ஆடையேதும் இல்லாமல் குளித்துக் கொண்டிருந்த சமயத்தில்,தடாகத்தின் அருகே நாரத முனிவர் வந்ததாகவும், அவரது வருகையை உணர்ந்த அவர்களது மனைவியர் பதற்றத்துடன் எழுந்து நின்று அவசரமாக தங்களது ஆடைகளை அணிந்து கொண்டு முனிவரை வணங்கிய போதிலும், தாங்கள் நீரினில் இருந்த வண்ணம் அவரை மதியாது இருந்ததால் கோபம் கொண்ட நாரத முனிவர், மரமாக மாறும் வண்ணம் தங்களுக்கு சாபம் இட்டதாகவும் கூறினார்கள். தவற்றினை உணர்ந்து தாங்கள் முனிவரிடம், தங்களை மன்னித்து சாப விமோசனத்திற்கு வழி சொல்லுமாறு இறைஞ்சிய போது, முப்பதாயிரம் வருடங்கள் கழித்து, கண்ணனாக திருமால் அவத்தாரம் எடுக்கும் போது, அவரது கால்களால் உதையுண்டு நீங்கள் இருவரும் சாப் விமோசனம் பெறுவீர்கள் என்று அருள் புரிந்ததாகவும் கூறிய அவர்கள், கண்ணன் தங்களை உதைத்ததால்,தாங்கள் சாப விமோசனம் அடைந்தோம் என்று நன்றியுடன் உரைத்தனர். இந்த நிகழ்ச்சி தான், இங்கே, மருதிடை நடவிய மணிவணர் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது.

இந்த பாடலில் இனதென கருதுவதற்கு மிகவும் அரியவன் இறைவன் என்று திருஞானசம்பந்தர் கூறுவது போன்று பல திருமுறைப் பாடல்கள் இறைவனின் தன்மையை நாம் அறிந்துகொள்ள முடியாது என்று உணர்த்துகின்றன. அத்தகைய சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். இன்ன தன்மையன் என்று அறிவொண்ணாதவன் என்று சுந்தரர் ஒரு பாடலில் (7.59.1) கூறுகின்றார். இன்ன தன்மையன் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவன் சிவபிரான் என்று கூறுவதால் அணுக முடியாதவன் என்று நினைத்து நாம் ஒதுங்கிவிடக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் சிவபிரான் மிகவும் எளிமையானவன் என்று உணர்த்தி, அவன் பால் அன்பு வைத்தால் அவனை நாம் எளிதில் அடையலாம் என்று கூறும் பாங்கு ரசிக்கத்தக்கது.

சுந்தரர் வேண்டியபோதெல்லாம் அவருக்கு, சிவபெருமான் பொன்னும் பொருளும் வழங்கியதை நாம் அனைவரும் அறிவோம். பொன்னையும் பொருளையும் கொடுத்த இறைவன், அவற்றை அனுபவிக்கும் பாக்கியத்தையும் தனக்கு பெருமான் அளித்ததாக சுந்தரர் இங்கே கூறுகின்றார். பலவிதமான செல்வங்கள் இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாமல் பலர் இருப்பதை நாம் உலகினில் காண்கிறோம். நமக்கு உள்ள செல்வத்தை அனுபவிக்கும் வாய்ப்பும்,இறைவனின் அருள் இருந்தால் தான் நிறைவேறும். தனக்கு அத்தகைய அருள் இருந்ததாக சுந்தரர் இந்த பாடலில், போகமும் புணர்ப்பானை என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திரு என்ற சொல், செல்வத்துள் உயர்ந்த செல்வமாகிய வீடுபேற்றினை குறிப்பிடுகின்றது. தான் சுந்தரராக எடுத்த இந்த பிறவியின் முடிவில் வீடுபேறு, தனக்கு அருளப்படும் என்பதை உணர்ந்த சுந்தரர், திருவும் புணர்ப்பானை என்று எதிர்காலத்தை குறிப்பிட்டு உணர்த்துவதை நாம் இந்த பாடலில் காணலாம். பழைய வினைகளின் பயனாக நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை நுகரும் போது, மேலும் பல தவறுகளைச் செய்து வினைகளைப் பெருக்கிக் கொள்வது மனித இயல்பு. அவ்வாறு தான் பிழை செய்யாத வண்ணம் காப்பவன் இறைவன் என்றும் இங்கே சுந்தரர் கூறுகின்றார்.இன்ன தன்மையன் என்று அறிவதற்கு அரியவன் என்றாலும் அடியார்களுக்கு எளியவனாக இருப்பது பெருமானின் சிறப்புத் தன்மை. எனவே எளிவந்த பிரான் என்று கூறி, பெருமானின் தன்மையினை நாம் உணரமுடியாமல் போனாலும், அவனது அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதை உணர்த்தி சுந்தரர் ஊக்குவிப்பதையும் நாம் இங்கே உணரலாம். மணிவாசகரும் சிவபுராணத்தில், சொல்லற்கரியான் என்று சிவபெருமானை குறிப்பிட்டு, சொல்லற்கரியானது திருநாமத்தைச் சொல்லி, அவனது திருவடிகளை வணங்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார். இன்ன தன்மையன் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவன் சிவபிரான் என்று கூறுவதால் அணுக முடியாதவன் என்று நினைத்து நாம் ஒதுங்கிவிடக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் சிவபிரான் மிகவும் எளிமையாக அடியவர்களுக்கு உள்ளான் என்று கூறும் பாங்கு ரசிக்கத்தக்கது.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப்

பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் பிழை எலாம் தவிரப் பணிப்பானை

இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மானை எளிவந்த பிரானை

அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.06.2) திருஞானசம்பந்தர், இறைவனின் தன்மையை அறிபவர் யாரும் இல்லை என்று குறிப்பிடுன்றார்.

தன்மை யாரும் அறிவாரிலை தாம் பிறர் எள்கவே

பின்னும் முன்னும் சில பேய்க்கணம் சூழத் திரிதர்வர்

துன்ன ஆடை உடுப்பர் சுடலைப் பொடி பூசுவர்

அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே

இதே கருத்தினை உள்ளடக்கி, திருஞானசம்பந்தர் வைகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.71) நான்காவது பாடலில் சிவபெருமான் இன்ன உருவினன், இன்ன நிறத்தவன் என்று அறிவது அரிது என்று கூறுகின்ற பாடலை நாம் இங்கே காண்போம். அனைத்து புண்ணியங்களும் சேர்ந்த வடிவினன் என்று புண்ணியங்கள் சொல்லும் வகையில் தவக்கோலம் பூண்டவன் சிவபெருமான் என்றும் இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். அறிவதேல் அரிது=இறைவனின் அருளும் ஞானமும் இல்லையேல் அறிய முடியாதது; மிகுத்த தவன்=மிகுந்த தவத்தினை உடையவன்; நீதியொடு=அருளோடு; நீதி பலவும்=பலவாகிய புண்ணியங்களும்; வகையினால்=முறைமைப்படி முழுதுணர்ந்து; மன்ன=நிலை பெற்று; மருவி=அடைந்து;

இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்

தன்ன உருவாம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம்

முன்னை வினை போய் வகையினான் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர்

மன்ன இரு போதும் மருவித் தொழுது சேரும் வயல் வைகாவிலே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்து பாடல் ஒன்றினில் (4.27.8) அப்பர் பிரான், காட்சிக்கு அரியவராக விளங்கும் பெருமான் இன்ன தன்மையன் இன்ன உருவினன் என்று சுட்டிக் காட்ட இயலாத வண்ணம் இருப்பதால் கருத்தில் வாரார் என்று கூறுகின்றார், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகப் பெருமான் சொல்வது போன்று, நமது கருத்தினில் பெருமான் பற்றிய சிந்தனை வருவதற்கும் அவனது அருள் வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். காணிலார்=காட்சிக்கு அரியவர்:; இன்ன தன்மையன், இன்ன உருவினன் என்று சுட்டிக் காட்ட இயலாதபடி இறைவன் இருப்பதால் கருத்தில் வாரார் என்று கூறுகின்றார். ஏணிலார்=எந்த நிலை என்று எண்ணுதற்கு இயலாதவர்:

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தலாகார்

ஏணிலார் இறப்பும் இல்லார் பிறப்பிலார் துறக்கலாகார்

நாணிலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்

ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகை வீரட்டனாரே

இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான், நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது மனதினில் உருவகித்துக் கொண்டு நாம் இறைவனை வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் வரையறைக்குள்ளே எப்படி நாம் இறைவனின் தோற்றத்தையோ குணத்தையோ அடக்க முடியும். அதனால் தான் அவனது அடையாளத்தையும் (குறி)குணத்தையும் யார் அறிய முடியும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.77.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்

தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்

பூவணக் கிழவனாரைக் புலியுரி அரையனாரை

ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே

இன்ன தன்மையன் என்று கூறவொண்ணா தன்மையன் என்பதால் அவனது குணத்தினை அறிந்தவர்கள் எவரும் இல்லை என்று அப்பர் பிரான் கூறும் பாடல் பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பாடலாகும் (4.88.2). மறி=மான் கன்று; பொறி=புள்ளிகள்; அரவம்=பாம்பு; குறி=அடையாளம்; மாமலை=சிறந்த இமயமலை; வடமொழியில் பர்வதம் என்றால் மலை என்று பொருள். இமயமலையில் வளர்ந்த அன்னையை, பர்வதவர்த்தனி என்றும் பார்வதி என்றும் அழைக்கின்றனர். இந்த பாடலில் மாமலை மங்கை என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். பல திருமுறை பாடல்கள் மலைமங்கை என்றும் மலைமகள் என்று தேவியை குறிப்பிடுகின்றன. மலையில் வளர்ந்த மங்கை பார்வதி தேவி, இறைவனின் காதலியாக மாறியதை உணர்த்தும் வண்ணம் மலைவளர் காதலி என்று பாடல் தோறும் குறிப்பிட்டு, தாயுமானவர் மலைவளர் காதலி என்ற பதிகத்தை, இராமேச்சரம் தலத்து இறைவி மீது பாடியுள்ளார். மலைவளர்காதலி என்று பிராட்டியை, திருஞானசம்பந்தரும் இராமேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

மறி உடையான் மழுவாளினன் மாமலை மங்கை ஓர்பால்

குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன்

பொறியுடை வாளரவத்தவன் பூந்துருத்தி உறையும்

அறிவுடை ஆதி புராணனை நாம் அடி போற்றுவதே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.90.5). இடபத்தை வாகனமாகக் கொண்டு பல இடங்களிலும் திரியும் பெருமானின் பெயர்களையோ குணங்களையோ, வேடத்தின் அடையாளங்களையோ எவராலும் முழுமையாக அறிய முடியாது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். .இறுதி அடியில் இருக்கும் ஆன் என்ற சொல்லுக்கு பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். கை மான் அணைந்து ஆடுபவன் என்று குறிப்பிடுவதன் மூலம், துள்ளித் திரிந்து ஆடும் மான் கன்றினை அடக்கி ஓரிடத்தில் பெருமான் ஒருவன் தான், அலை பாயும் நமது மனதினை ஓரிடத்தில் நிலை பெறச் செய்வதற்கு உதவுபவன் என்று உணர்த்தப் படுகின்றது. ஆன் (முதல் அடி)=இடபம், எருது வாகனம்: ஆன் (இறுதி அடி)=பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்து பொருட்கள்; இறைவனின் உருவ அடையாளத்தையும் அவனது குணத்தையும் யார் அறிய முடியும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் கை

மான் அணைந்து ஆடு மதியும் புனலும் சடை முடியன்

தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திருவேதிகுடி

ஆன் அணைந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே

திருப்பழனம் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தை (5.92) கண்டு கொள்ள அரியான் என்று இறைவனை குறிப்பிட்டு அப்பர் பிரான் தொடங்குகின்றார்.கேட்டிரேல்=கேட்பீராகில்: சூழலே=சூழ வேண்டாம். கனிவித்து=அன்பு பாராட்டி கனியச் செய்து, பக்குவப்படுத்தி: பாணி=கை: துன்னுதல்= சூழுதல்:பாழிமை=அடிமைத் திறத்தின் வலிமை. இந்த பாடல் இயமனின் தூதுவர்களுக்கு எச்சரிக்கை விடும் பதிகத்தின் பாடல். பெருமானின் தொண்டர்களை நீர் சென்று சூழாதீர்கள்; அவர்களது உயிரினைப் பறித்து நரகத்துக்கு கொண்டு போகும் நோக்கத்துடன் சென்று சூழ்ந்தால் உங்களுக்கு தீங்கு விளையும் என்று இந்த பதிகத்து பாடல்களில் அப்பர் பிரான் எச்சரிக்கை விடுகின்றார்.

கண்டு கொள்ள அரியானைக் கனிவித்துப்

பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்

கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்

கொண்ட தொண்டரை துன்னிலும் சூழலே

பொருங்கை மதகரி என்று தொடங்கும் திருவாரூர் பதிகத்தின் (6.33) இரண்டாவது பாடலில் அற்புதன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.அற்புதன் என்ற சொல்லுக்கு இன்ன தன்மையன் என்று அறிய முடியாதவன் என்று சிவக்கவிமணி திரு சி.கே. சுப்பிரமணியம் அவர்கள் பெரிய புராண விளக்கம் நூலில் கூறுகின்றார். அற்புதன் காண்க அநேகன் காண்க என்பது திருவாசகம் திருவண்டப்பகுதியின் ஒரு வாக்கியம். கற்பக மரம், தனது நிழலில் நிற்பவர் நினைப்பதைத் தர வல்லது என்று கருதப்படுகின்றது. பெருமானும் தனது அடியார்கள் விரும்புவன அனைத்தையும் அளிக்க வல்லவர் என்பதால் கற்பக மரத்துடன் பெருமான் ஒப்பிடப்படுகின்றார்.

கற்பகமும் இரு சுடரும் ஆயினானைக் காளத்தி கயிலாய மலையுளானை

விற்பயிலும் மதனழிய விழித்தான் தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப்

பொற்பமரும் பொழிலாரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானைப் பொருந்தார்சிந்தை

அற்புதனை அரநெறியில் அப்பன்தன்னை அடைந்தடியேன் அருவினை நோயறுத்தவாறே

கோகர்ணம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.49.8) அப்பர் பிரான் இன்னவுரு என்று அறிவொண்ணாதான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.உரு=தன்மை. பின்னப்பட்ட சடையின் மேல் பிறைச் சந்திரனை வைத்தவனும், பேரருளானாக விளங்குபவனும், பிறவாமல் தோன்றியவனும், நெடுங்காலம் முன்னமே தோன்றிய உலகங்களுக்கும் முன்னம் தோன்றியவனும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் வெற்றி கொண்டு அழித்து உள்ளம் மகிழ்ந்தவனும், இன்ன தன்மையன் என்று எவராலும் அறிய முடியாதவனாக விளங்குபவனும், ஏழ் கடலாகவும் ஏழ் உலகங்களாகவும் இருப்பவனும்,நிலைபெற்று விளங்கும் தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனும் ஆகிய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பின்னு சடைமேல் பிறைசூடினான்காண் பேரருளன்காண் பிறப்பு ஒன்று இல்லாதான்காண்

முன்னி உலகுக்கு முன்னானான்காண் மூவெயிலும் செற்றுகந்த முதல்வன் தான் காண்

இன்னவுருவு என்று அறிவொண்ணாதான் தான்காண் ஏழ்கடலும் ஏழுலகுமாயினான் காண்

மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

கயிலாய மலையின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் முதல் (6.57.1) பாடலில் அப்பர் பிரான் பரிசை அறியாமை நின்றாய் போற்றி என்று கூறுகின்றார்.பரிசு=தன்மை; பலவகை தன்மைகளாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு நாம் உணர்ந்த பல தன்மைகளை தாண்டியும் வேறோர் தன்மை எடுக்கும் திறமை உடையவன் இறைவன் என்பதால், பரிசு அறியாமை நின்றாய் என்று இறைவனை, அப்பர் பிரான் அழைக்கின்றார். தொடை= தொடுக்கப்பட்டது; பாட்டான நல்ல தொடை=இசை பெருந்திய நல்ல பாடல்களால் தொடுக்கப்பட்ட மாலை; மலர்களால் தொடுக்கப் பட்ட மாலையினை விடவும் இறைவன் மிகவும் விரும்புவது நல்ல இசையுடன் பொருந்திய பாடல்களே ஆகும். இதனை இறைவன் தனது வாய்மொழியாலே சுந்தரரிடம் கூறுவதை நாம் பெரிய புராணம் தடுத்தாட் கொண்ட புராணம் பகுதியில் காணலாம். அந்தணராக தோன்றிய பெருமான் கொண்டு வந்த அடிமை ஓலையின் கையெழுத்து சுந்தரரின் பாட்டானாருடையது என்று தீர்ப்பான பின்னர், சுந்தரர் அந்தணராக வந்த பெருமானைப் பின்தொடர்ந்தார். அந்தணர் திருவெண்ணெய் நல்லூர் கோயிலின் உள்ளே சென்று மறைந்து விடுகின்றார். அடிமையாகிய தனது எஜமானனை முதியவரைக் காணாமல் திகைத்து நின்ற சுந்தரருக்கு பெருமான் உமையம்மையுடன் விடையின் மீது அமர்ந்தவராக காட்சி கொடுத்தபடி, தான் தடுத்தாட்கொண்டதன் காரணத்தையும் சுந்தரருக்கு உணர்த்துகின்றார். பின்னர் தனக்கு அன்பினால் செய்யப்படும் வழிபாட்டினை விடவும் (திருமுழுக்காட்டுதல், திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் ஆகிய முறைகள்) மிகவும் விருப்பமானது இசைப் பாடல்கள் என்று கூறி, தன்னை குறித்து சொற்றமிழ் மாலை பாடுமாறு சுந்தரரை பணிக்கின்றார்,

பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி

சூட்டான திங்கள் முடியாய் போற்றி தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி

ஆட்டானது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி

காட்டானை மெய்த்தோல் உரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

தன்மை யாரும் அறிவாரில்லை என்று திருஞானசம்பந்தர் கூறுவது, அப்பர் பிரான் அருளிய ஒரு பொது பதிகத்தின் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இறைவனின் திருவுருவக் காட்சியினைக் காண்பதற்கே அவனருள் வேண்டும். அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடலை நாம் இங்கே காணலாம் (6.97.10)

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்

ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமனில்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்ட ஒணாதே

இன்ன தன்மையன் என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இறைவனை நாம் உணர்வினால் அவன் இருப்பதை புரிந்து கொண்டு அவனை வழிபட்டு வணங்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவனது தன்மை யாது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது தவறு என்பதை உணர்த்தும் திருவாசகப் பாடலை இங்கே நாம் சிந்திப்பது பொருத்தமாகும். இந்த பாடலில் இறைவனை உண்மையுமாய் இன்மையுமாய் இருப்பவன் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். எப்படி உண்மையாக இருக்கும் ஒரு பொருள், இல்லாத பொருளாக மாற முடியும் என்ற ஐயம் நமக்கு எழலாம். நமது உணர்வினால் உணரப் படுபவன் இறைவன். எனவே அவன் உள்ளதை, அவன் இருக்கும் உண்மையை நாம் யாவரும் உணர்வால் அறிந்து உணர்கின்றோம். ஆனால் அதே இறைவனை நமது அறிவின் துணையால் இன்ன தன்மையன் என்று ஆராயத் தொடங்கினால் அவனை நாம் உணர முடியுமா. முடியாது என்பதே விடை.எனவே தான் அறிவினால் கண்டறியாத பொருள் என்று உணர்த்தும் பொருட்டு இன்மையுமாய் உள்ளவன் என்று கூறுகின்றார். உணர்வால் உணர முடியும் இறைவனை அறிவினால் உணர முடியாது என்பதை சுட்டிக் காட்டவே உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். வளி=காற்று;ஊன்=உடல்; பொம்மலாட்டத்தில் திரையில் பொம்மைகள் கைகால்களை அசைத்து ஆடுவதையும் பாடுவதையும் நாம் காண்கின்றோம். ஆனால்உண்மையில் அந்த செயல்களை பொம்மைகள் செய்வதில்லை என்பதையும், பின்னாலிருந்து எவரோ இயக்குகின்றனர் என்பதையும் நாம் அறிவோம். அதேபோன்றது தான் நமது வாழ்க்கையும் என்று அடிகளார் இங்கே உணர்த்துகின்றார். நாம் எல்லோருமே நான் யார் தெரியுமா என்றும், இவை எல்லாம் எமதுசொத்துக்கள் என்றும் நமது கைகளையும் கால்களையும் ஆட்டி பேசுகின்றோம். இவ்வாறு நம்மை ஆட்டி வைக்கும் தலைவன், பேச வைக்கும் தலைவன்தான், இறைவன் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாய் என் சொல்லி வாழ்த்துவனே

பல வேறு வடிவங்களில் அடியார்களுக்கு காட்சி அளிப்பவனும், எங்கும் நிறைந்தும் காணப்படும் இறைவனை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் அடக்க முடியுமா,முடியாது அல்லவா. எந்த வடிவத்தில் அவனை நினைத்தாலும் அதனையும் கடந்து வேறோர் உருவம் எடுக்கும் சக்தி படைத்த அவனுக்கு எந்த உருவத்தை நாம் கற்பிப்பது. அதனால் தான் மணிவாசகர் தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில், ஓருருவம் ஒருநாமம் இல்லாதவன் என்று கூறுகின்றார்.

திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை

உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்

ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்

திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

பொழிப்புரை:

இரட்டை மருத மரங்களின் இடையே, தனது உடலுடன் பிணைத்துக் கட்டப்பட்ட உரலுடன் தவழ்ந்து வந்து, அந்த இரண்டு மரங்களும் வேருடன் பெயர்ந்து கீழே விழும் வண்ணம் உதைத்து வீழ்த்திய ஆற்றல் உடைய கண்ணனாகிய திருமாலும் பிரமனும் தங்களில் யார் பெரியவர் என்ற கருத்தினில் மாறுபட்ட கொள்கையுடன் வாதம் செய்து கொண்டிருந்தனர். மேலும் அவர்கள், படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கின்ற பெருமை உடையவனாகிய பெருமானின் தன்மையை உணராதவர்களாகவும் இருந்தனர். அப்போது இன்ன தன்மையன் என்று அறியமுடியாதவனாகிய பெருமான், அரிய உருவத்துடன் நீண்டு நெடிதுயர்ந்த தீப்பிழம்பாக தோன்றி அவர்கள் இருவரும் தனது அடியையும் முடியையும் காணமுடியாத வண்ணம் நின்றவனும், பெருமை வாய்ந்த எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவனும் ஆகிய தலைவனும் ஆகிய பெருமான், உறைகின்ற தலம் இடைமருது தலமாகும்.

பாடல் 10:

துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்

அவருறு சிறு சொலை நயவன்மின் இடுமணல்

கவருறு புனலிடை மருது கைதொழுதெழும்

அவருறு வினை கெடல் அணுகுதல் குணமே

விளக்கம்:

துவருறு=துவர்ச்சாயம் பூசப்பட்ட ஆடை; விரிதுகில் என்று துவராடையை விரித்து உடலில் உடுத்தும் மற்றும் போர்வையாக போர்த்துக்கொண்டும் திரியும் புத்தர்கள் என்று குறிப்பிடுகின்றார். அமணர்=சமணர்: நயத்தல்=விரும்புதல்; உண்மையை மறைத்து இனிய மொழிகளுடன் கலந்து சொல்லப் படுவதால்,அத்தகைய சொற்களில் மயங்கி அந்த சொற்களை விரும்பவேண்டாம் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார். கவருறு புனல்=பல கிளைகளாக பாயும் காவிரி நதி; அணுகுதல்=வந்து சேர்தல்; நல்ல குணங்கள் அடியார்களை வந்தடையும் என்று கூறுகின்றார். சிறு சொல்=இழிந்த சொற்கள்;

பொழிப்புரை:

துவர்ச்சாயம் ஏற்றப்பட்ட விரிந்த ஆடையினை தங்களது உடல் முழுவதும் மூடும் வண்ணம் போர்வையாக உடுத்தும் புத்தர்கள் மற்றும் சமணர்கள்,ஆகியோரின் இழிந்த சொற்களை, அந்த சொற்கள் இனிய மொழியுடன் கலந்து சொல்லப்பட்டாலும், அவற்றை விரும்பி ஏற்றுக்கொள்ளாது உலகத்தவரே புறக்கணிப்பீர்களாக. தான் அடித்துக் கொண்டு வரும் வண்டல் மண்ணையும் நீரினையும் சிறிய வாய்க்கால்களாக பிரித்து காவிரி நதி வளம்படுத்தும் தலமாகிய, இடைமருது தலத்தினையும், அந்த தலத்தினில் உறையும் இறைவனையும் நினைத்து தங்களது கைகளால் தொழும் அடியார்களுடன் பொருந்தியுள்ள வினைகள் முற்றிலும் கெட்டு அழிந்துவிடும்; மேலும் பல நற்குணங்கள் அவர்களை சென்று அடையும்.

பாடல் 11:

தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்

இடமலி பொழில் இடைமருதினை இசை செய்த

படமலி தமிழிவை பரவ வல்லவர் வினை

கெடமலி புகழொடு கிளர் ஒளியினரே

விளக்கம்:

தடம்=நீர்நிலைகள்; விரகினன்=ஞானம் உடையவன், புலமை உடையவன்; படமலி=அழகு மிகுந்த; படம் எடுத்து ஆடும் பாம்பினைப் போன்று அழகாக உள்ள தமிழ் மொழி; கிளர்=மேலும் மேலும் பெருகும்; கெழு=சிறந்த; இடமலி-விரிந்த;

பொழிப்புரை:

நீர்நிலைகள் மிகுந்ததும் புகலி என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி நகரினைச் சார்ந்தவனும், தமிழ் மொழியில் சிறந்த புலமை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன், விரிந்த சோலைகளால் சூழப்பட்ட இடமருது தலத்தினில் உறைகின்ற பெருமானை குறிப்பிட்டு பாடிய இசைப்பாடலை, அழகாக விளங்கும் தமிழ்ப் பாடலை, முறையாக பாடி பெருமானை புகழும் ஆற்றல் உடைய அடியார்கள், இறைவனது அருளால் தங்களது வினைகள் கெடுக்கப்பட்டு மேன்மேலும் பெருகும் புகழினை உடைய்வர்களாக திகிழ்வார்கள்.

முடிவுரை:

சுமார் இருநூறு வருடங்களாக தடைபட்டிருந்த பஞ்சரத தேரோட்டம், 2016ஆம் வருடம் ஜனவரி மாதம் நடைபெற்றது. பஞ்ச மூர்த்திகளாகிய வினாயகர்,வள்ளி தெய்வயானை உடனாய முருகப் பெருமான், சுவாமி, அம்பிகை மற்றும் சண்டீசர் ஆகிய ஐவரும் ஐந்து தேர்களில் வீதிவுலா வந்தனர். இந்த திருக்கோயிலில் 32 தீர்த்தங்கள் உள்ளன. எண்ணிக்கையில் மிகவும் அதிகமான தீர்த்தங்கள் கொண்டபெருமை உடைய தலம் இதுவே. இந்த குளங்களில் நீராடி, யுவனாச்வன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதாவை பெற்றெடுத்தான். சித்திரகீர்த்தி என்ற பாண்டிய மன்னனும் ஆண்மகவு பெற்றான். தேவவிரதன் என்ற திருடன், திருக்கோயில் நகைகளை திருட முயற்சி செய்த பாவத்திற்காக நோய் வந்து இறந்த பின்னர் அடுத்த பிறவியில் ஒரு புழுவாக பிறக்க நேரிட்டது. ஒரு நாள் அந்த புழு, இங்குள்ள பூசத்தீரத்தத்தில் நீராடிய ஒருவரின் கால் பட, தனது பாவம் நீங்கப் பெற்று, முக்தி அடைந்தது என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது. சிங்கமுகக் கிணறு ஒன்றும் உள்ளது.

தஞ்சாவூர் இளவரசன் பிராதாபசிம்மனை மணம்புரிய வேண்டும் என்று விரும்பிய அவனது உறவுப்பெண் அம்முனு அம்மணி என்பவள், தனது விருப்பம் நிறைவேறினால் திருவிடைமருதூர் திருக்கோயிலில் இலட்ச தீபம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டாள். பின்னர் இலட்ச தீபம் ஏற்றிய அவள், தன்னுடைய உருவத்தையே பாவை விளக்காக சிற்பமாக செய்து, தனது சிற்பமே தீபம் ஏந்தும் வண்ணம் விளக்கினை வடிவமைத்தாள். பித்தளையால் செய்யப்பட்டு 120செ.மீ. அளவு உயரமுள்ள இந்த பாவை விளக்கு, ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. இந்த பெண் தனது இரண்டு கரங்களாலும் விளக்கினை ஏந்திய வண்ணம் நிற்க, அவளது தோளில் ஒரு கிளி இருப்பது போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கின் பீடத்தில், அவளது சரித்திரம் காவியமாக பொறிக்கப் பட்டுள்ளது. இந்த விளக்கு பிரணவ பிராகாரத்தின் நுழைவாயிலில் உள்ளது.

சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடைமருது தலம் சென்றடைந்தால் நமது துன்பங்களைத் தீர்த்துக் கொள்வது மிகவும் எளிது என்று பதிகத்தின் முதல் பாடல் மூலம் நமக்கு உணர்த்தும் ஞானசம்பந்தர், அடுத்த ஐந்து பாடல்களில் பெருமானின் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார். பெருமானின் தன்மையை முந்தைய ஐந்து பாடல்கள் மூலம் உணர்த்திய திருஞானசம்பந்தர், அத்தகைய பெருமானை வழிபடுவது நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று ஏழாவது பாடலில் கூறுகின்றார். இவ்வாறு இறைவனை வழிபடும் அடியார்கள் தங்களது வாழ்வினில் துயரம் ஏதும் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்று எட்டாவது பாடலில் கூறுகின்றார். பத்தாவது பாடலில் இடைமருது தலத்தையும் அந்த தலத்தினில் உறைகின்ற பெருமானையும் நினைத்து கை தொழுது வழிபடும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்று கூறுகின்றார். இவ்வாறு இந்த பதிகத்தின் பாடல்களில், இறைவனை வழிபடும் அடியார்கள் பெறவிருக்கும் பலனை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் சிறப்பையும் உணர்த்துகின்றார்.பதிகத்தின் முதல் பாடலில், நகைத்தே திரிபுரத்து பறக்கும் கோட்டைகளை இறைவன் அழித்த ஆற்றலும், இரண்டாவது பாடலில் இறைவன் மாதொரு பாகனாக உள்ள நிலையும், மூன்றாவது பாடலில் இறைவன் சர்வ வியாபியாக அனைத்துப் பொருட்களிலும் பரந்து நிற்கும் தன்மையும், நான்காவது பாடலில் சுடுகாட்டினில் நடமாடுவதன் மூலம் பெருமானின் என்றும் அழியாது நிலையாக இருக்கும் இறைவனின் தன்மையும், ஐந்தாவது பாடலில் திரிபுரத்து அரக்கர்களை அழிப்பதன் மூலம் பலருக்கும் பெருமான் நன்மை செய்ததையும், ஆறாவது பாடலில் மிகவும் எளிய தோற்றத்துடன் பெருமான் இருக்கும் தன்மையும், ஏழாவது பாடலில் தனது திருப்பாதங்களை தியானம் செய்யும் அடியார்களுக்கு பெருமான் நன்மை பயக்கும் தன்மையும், எட்டாவது பாடலில் தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களுக்கு துயரமற்ற வாழ்வினை பெருமான் அருளும் தன்மையும், ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரமனும் பெருமானை அளக்க முடியாமல் திகைத்த செய்தியும், சொல்லப் படுகின்றன. பத்தாவது பாடலில் பெருமானின் பெருமையை சரியாக உணராமல், மாற்று மதத்தவர்கள் பெருமானை இகழ்வாக பேசுவதை பொருட்படுத்தாமல், புறக்கணிக்க வேண்டும் என்று திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை வழங்குகின்றார்.கடைப்பாடல் மூலம் இந்த பதிகத்தினை முறையாக பாடும் அடியார்கள் புகழுடன் விளங்குவார்கள் என்று உணர்த்துகின்றார். பெருமானின் பெருமை மிகுந்த தன்மைகளையும், அவரை வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களையும் இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம் அறிந்துகொண்ட நாம், இடைமருது தலம் சென்று மருதவாணரை வழிபட்டு, தேவாரப் பாடல்கள் மூலம் அவரைப் புகழ்ந்தும் பணிந்தும் வழிபட்டு, இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டு நிலைகளிலும் பயனடைவோமாக.



Share



Was this helpful?