Digital Library
Home Books
Naduk Kadhai involves narratives centered around journeys or travels, exploring themes related to movement, exploration, and adventure. These stories often depict the experiences and challenges faced by characters as they embark on journeys, whether they are physical travels across regions or metaphorical quests. The tales may include encounters with new places, people, and events, reflecting on the impact of these journeys on the characters’ growth and understanding. Through detailed descriptions and engaging plots, Naduk Kadhai provides insights into the transformative power of travel and exploration in storytelling.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அஃதாவது-கற்புக் கடவுளாகிய கண்ணகிக்குத் திருவுருச் சமைத்தற்கு வடபேரிமயத்தினின்றும் கொணர்ந்த கல்லின்கண் அக் கண்ணகியின் திருவுருவத்தை நடுதலும், மீண்டும் அக் கல்லை நூன் முறைப்படி திருக்கோயிலின்கண் நிறுத்தி வைத்தலும் மீண்டும் அக் கல்லின்கண் கண்ணகித் தெய்வத்தை நிறுத்துதலும் ஆகிய செய்திகளைக் கூறும் பகுதி என்றவாறு.
இனி, இக் காதையின்கண் செங்குட்டுவன் கோப்பெருந்தேவியுடன் கூடி நிலாமுற்றத்தின்கண் கூத்தாட்டுக் கண்டு மகிழ்தலும் பின்னர் அத்தாணி மண்டபத்தில் அரசு கட்டில் ஏறி இருத்தலும் கனக விசயரைத் தமிழ் வேந்தர் இருவர்க்கும் காட்டி மீண்டு வந்த கஞ்சுக மாக்கள் சோழனும் பாண்டியனும் செங்குட்டுவனை இகழ்ந்தமையை அறிவுறுத்துதலும் அது கேட்டுச் செங்குட்டுவன் பெரிதும் சினந்தெழுதலும் அப்பொழுது நான்மறை முதல்வனாகிய மாடலன் அவ் வரசனுடைய சினத்தைத் தணித்து இளமையும் செல்வமும், யாக்கையும் நிலையுதலில்லாப் பொருள்கள் என்னும் உண்மையைத் திறம்பட அறிவுறுத்துதலும் நல்லறமே செய்யும் நன்னெறியின்கண் செல்லுமாறு அறிவுறுத்துதலும் அவ்வரசனும் மாடலன் மொழிகளாலே மெய்யுணர்டு பெற்றவனாய் அறக்கள வேள்வி முதலியன செய்தலும் கண்ணகித் தெய்வத்திற்குக் கோயில் அமைத்தலும் அத் தெய்வத்திற்குப் படிமம் அமைத்தலும் அப் படிமத்தில் கண்ணகித் தெய்வத்தை நிலை நாட்டுதலும் பிறவும் கூறப்படும்.
தண் மதி அன்ன தமனிய நெடுங் குடை
மண்ணகம் நிழல் செய, மற வாள் ஏந்திய,
நிலம் தரு திருவின் நெடியோன்-தனாது
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்-
ஒண் தொடித் தடக் கையின் ஒண் மலர்ப் பலி தூஉய், 5
வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர்,
உலக மன்னவன் வாழ்க! என்று ஏத்தி,
பலர் தொழ, வந்த மலர் அவிழ் மாலை-
போந்தைக் கண்ணிப் பொலம் பூந் தெரியல்
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் 10
யானை வெண் கோடு அழுத்திய மார்பும்,
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும்,
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்,
வை வாள் கிழித்த மணிப் பூண் மார்பமும்,
மைம்மலர் உண் கண் மடந்தையர் அடங்காக் 15
கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ;
அகில் உண விரித்த, அம் மென் கூந்தல்
முகில் நுழை மதியத்து, முரி கருஞ் சிலைக் கீழ்,
மகரக் கொடியோன் மலர்க் கணை துரந்து,
சிதர் அரி பரந்த செழுங் கடைத் தூது 20
மருந்தும் ஆயது, இம்மாலை என்று ஏத்த,
இருங் கனித் துவர் வாய் இள நிலா விரிப்ப,
கருங் கயல் பிறழும் காமர் செவ்வியின்
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்,
மாந்தளிர் மேனி மடவோர்-தம்மால் 25
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து;
காசறைத் திலகக் கருங் கறை கிடந்த
மாசு இல் வாள் முகத்து, வண்டொடு சுருண்ட
குழலும், கோதையும், கோலமும், காண்மார்,
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி; 30
வணர் கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇ,
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர்,
குரல் குரலாக வரு முறைப் பாலையின்,
துத்தம் குரலாத் தொல் முறை இயற்கையின்,
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின், 35
மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து;
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன்
குடி புறந்தருங்கால் திரு முகம் போல,
உலகு தொழ, தோன்றிய மலர் கதிர் மதியம்
பலர் புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க 40
மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப
ஐங் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த
வெண் நிலா-முன்றிலும், வீழ் பூஞ் சேக்கையும்,
மண்ணீட்டு அரங்கமும், மலர்ப் பூம் பந்தரும்
வெண் கால் அமளியும், விதான வேதிகைகளும், 45
தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள-
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின்,
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய
தமனிய மாளிகைப் புனை மணி அரங்கின், 50
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம்,
பல்லாண்டு ஏத்த, பரந்தன, ஒருசார்,
மண் கணை முழவும், வணர் கோட்டு யாழும், 55
பண் கனி பாடலும், பரந்தன, ஒருசார்;
மான்மதச் சாந்தும், வரி வெண் சாந்தும்,
கூனும் குறளும், கொண்டன, ஒருசார்;
வண்ணமும் சுண்ணமும், மலர்ப் பூம் பிணையலும்,
பெண் அணிப் பேடியர் ஏந்தினர், ஒருசார்; 60
பூவும், புகையும், மேவிய விரையும்,
தூவி அம் சேக்கை சூழ்ந்தன, ஒருசார்;
ஆடியும், ஆடையும், அணிதரு கலன்களும்,
சேடியர் செல்வியின் ஏந்தினர், ஒருசார்-
ஆங்கு, அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் 65
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி
திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்; 70
பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75
பாத்து-அரு நால் வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து; அவன்
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன்
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் -
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80
மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி,
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்தபின்,
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது-
தும்பை வெம்போர்ச் சூழ் கழல் வேந்தே!
செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு, ஆங்கு, 85
வச்சிரம், அவந்தி, மகதமொடு, குழீஇய
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று, தகை அடி வணங்க,
நீள் அமர் அழுவத்து, நெடும் பேர் ஆண்மையொடு 90
வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல் போர்க் கோடல் வெற்றம் அன்று என,
தலைத் தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்,
சிலைத் தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை- 95
ஆங்கு நின்று அகன்றபின், அறக்கோல் வேந்தே!
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண,
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவின் தலைக்கோல், ஆங்கு, 100
கயந் தலை யானையின் கவிகையிற் காட்டி,
இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து,
உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி,
அமர்க்களம் அரசனது ஆக, துறந்து,
தவப் பெரும் கோலம் கொண்டோ ர்-தம்மேல் 105
கொதி அழல் சீற்றம் கொண்டோ ன் கொற்றம்
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று,
ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீள்-மொழி எல்லாம் நீலன் கூற-
தாமரைச் செங் கண் தழல் நிறம் கொள்ளக் 110
கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி
மாடலன் எழுந்து, மன்னவர் மன்னே,
வாழ்க! நின் கொற்றம் வாழ்க! என்று ஏத்திக்
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின்,
சிறு குரல் நெய்தல், வியலூர் எறிந்தபின்; 115
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச் செரு வென்று;
நெடுந் தேர்த் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து,
கொடும் போர் கடந்து; நெடுங் கடல் ஓட்டி;
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை, 120
கடும் புனல் கங்கைப் பேர் யாற்று, வென்றோய்!
நெடுந் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே!
புரையோர் தம்மொடு பொருந்த உணர்ந்த
அரைசர் ஏறே! அமைக, நின் சீற்றம்!
மண் ஆள் வேந்தே! நின் வாழ் நாட்கள் 125
தண் ஆன் பொருநை மணலினும் சிறக்க!
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய், வாழி!
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும்-
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ-ஐந்து இரட்டி சென்றதன் பின்னும், 130
அறக்கள வேள்வி செய்யாது, யாங்கணும்,
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை;
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து,
போந்தைக் கண்ணி, நின் ஊங்கணோர் மருங்கின்,
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும், 135
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு,
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என,
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும், 140
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு,
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்,
மிகப் பெரும் தானையோடு இருஞ் செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உரு கெழு மரபின் அயிரை மண்ணி, 145
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்,
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோ ன் ஆயினும்,
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்,
யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்- 150
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின்
செல்வம் நில்லாது என்பதை வெல் போர்த்
தண்தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ, காவல் வேந்தே?-
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு 155
உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா,
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே!
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை-
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்; 160
மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர்,
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர்
கலங்கு அஞர் நரகரைக் காணினும் காணும்;
ஆடும் கூத்தர்போல், ஆர் உயிர் ஒருவழி, 165
கூடிய கோலத்து ஒருங்கு நின்று, இயலாது;
செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின்,
எழு முடி மார்ப! நீ ஏந்திய திகிரி
வழிவழிச் சிறக்க, வய வாள் வேந்தே! 170
அரும் பொருள் பரிசிலேன் அல்லேன், யானும்;
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர்
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி,
புலவரை இறந்தோய்! போகுதல் பொறேஎன்;
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும், 175
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய,
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்,
நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்; 180
இது என வரைந்து வாழு நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை;
வேள்விக் கிழத்தி இவளொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற,
ஊழியோடு ஊழி உலகம் காத்து, 185
நீடு வாழியரோ, நெடுந்தகை! என்று
மறையோன் மறை நா உழுது, வான் பொருள்
இறையோன் செவி செறு ஆக வித்தலின்-
வித்திய பெரும் பதம் விளைந்து, பதம் மிகுந்து,
துய்த்தல் வேட்கையின், சூழ் கழல் வேந்தன் 190
நான்மறை மரபின் நயம் தெரி நாவின்,
கேள்வி முடித்த, வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி-
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி, 195
பேர் இசை வஞ்சி மூதூர்ப் புறத்து,
தாழ் நீர் வேலித் தண் மலர்ப் பூம் பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி,
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள்,
தம் பெரு நெடு நகர்ச் சார்வதும் சொல்லி, அம் 200
மன்னவர்க்கு ஏற்பன செய்க, நீ என,
வில்லவன்-கோதையை விருப்புடன் ஏவி-
சிறையோர் கோட்டம் சீமின்; யாங்கணும்,
கறை கெழு நாடு கறைவிடு செய்ம் என,
அழும்பில் வேளோடு ஆயக்கணக்கரை 205
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி-
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது,
பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது என,
பண்டையோர் உரைத்த தண் தமிழ் நல் உரை,
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின், 210
ஆர் புனை சென்னி அரசர்க்கு அளித்து;
செங்கோல் வளைய உயிர் வாழாமை,
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து;
வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை, யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை 215
வடதிசை மருங்கின் மன்னவர் அறிய,
குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்து;
மதுரை மூதூர் மா நகர் கேடுற,
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து;
நல் நாடு அணைந்து, நளிர் சினை வேங்கைப் 220
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை-
அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்மியர்-தம்மொடும் சென்று;
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள்
பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து, 225
இமையவர் உறையும் இமையச் செல் வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசி,
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து,
வித்தகர் இயற்றிய, விளங்கிய கோலத்து,
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி, 230
பூப் பலி செய்து, காப்புக் கடை நிறுத்தி,
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து,
கடவுள் மங்கலம் செய்க என ஏவினன்-
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு என்.
உரை
சேரன் செங்குட்டுவன் வஞ்சிபுகுந்த நாளின் மாலைக்கால நிகழ்ச்சி
1-8: தண்மதி...............மாலை
(இதன் பொருள்) தண்மதியன்ன தமனிய நெடுங்குடை மண்ணக நிழல் செய-குளிர்ந்த முழுவெண் திங்கள்போன்ற வடிவத்தை உடைய காம்பும் முகப்பும், பொன்னால் இயன்ற நெடிய தனது குடையானது இந்நில வுலகத்தின்கண் வாழுகின்ற உயிர்களுக்கெல்லாம் இன்ப வாழ்க்கையாகிய நிழலை வழங்கா நிற்ப; மறவாள் ஏந்திய நிலந்தரு திருவின் நெடியோன் தனது-தன்பகைவரை வெல்லுதற்பொருட்டு மறப்பண்பு மிகுந்த வாளை ஏந்திய காரணத்தால் பகையரசர் தம் நிலத்தினின்றும் கொணர்ந்து அளக்கின்ற திறைப் பொருளாகிய செல்வத்தையும் நீண்ட புகழையும் உடையோனாகிய செங்குட்டுவனுடைய; வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்-வடநாட்டு வெற்றி காரணமாக உண்டான புதிய சிறப்பினை உடைய வஞ்சி என்னும் அந்தம் பழைய தலைநகரத்தின்கண்; ஒள்தொடித் தடக்கையின் ஒள் மலர் பிலிதூஉய் வெள்திரி விளக்கம் ஏந்திய மகளிர்-ஒளியுடைய பொன் வளையலணிந்த தமது பெரிய கைகளினாலே ஒள்ளிய முல்லை மலராகிய பலிப்பொருளைத் தூவி வெள்ளிய திரியின்கண் விளக்கினை ஏற்றிக் கையில் ஏந்திய மகளிர்; உலக மன்னவன் வாழ்க என்று ஏத்திப் பலர் தொழவந்த மலர் அவிழ்மாலை-உலகத்தை ஆளுகின்ற மன்னவனாகிய சேரன் செங்குட்டுவன் நீடு வாழ்க என்று வாழ்த்தா நிற்ப, சான்றோர் பலரும் தெய்வந் தொழா நிற்ப வந்தெய்திய மல்லிகை முதலிய மலர்கள் மலர்கின்ற அற்றைநாள் மாலைப்பொழுதின்கண் என்க.
(விளக்கம்) மறவாள் ஏந்தியவனும் நிலந்தரு திருவினை உடையோனும் ஆகிய நெடியோன் என்க. அவன் மூதூரின்கண் மலர்தூவி விளக்கம் ஏந்திய மகளிர் வாழ்கெனப் பலர் தொழவும் வந்த மாலை என்க. ஏத்தி என்னும் எச்சத்தை ஏத்த எனத் திருத்திக் கொள்க.
மறக்குடி மகளிர் செயல்
9-21: போந்தை............ஏத்த
(இதன் பொருள்) போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்-பனம்பூவால் இயன்ற கண்ணியாகிய பொற்பூ மாலையை அணிந்த வராய்ச் சென்று; வேந்து வினை முடித்த ஏந்துவாள் வலத்தர்-தம் அரசன் கருதிய போர்த்தொழிலை முற்றுவித்த தம் கையில் ஏந்திய வாளையும் வெற்றியையும் உடைய மறவர்களுடைய; யானை வெண்கோடு அழுத்திய மார்பும்-பகைவர் யானையின் வெள்ளிய கொம்பு மாய்ந்தமையால் உண்டான புண்ணையுடைய மார்பினையும்; நீள்வேல் கிழித்த நெடும் புண் ஆகமும்-அப்பகைவர் எறிந்த நீண்ட வேல்கள் கிழித்தமையால் உண்டான நெடிய புண்ணையுடைய மார்பினையும்; எய்கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்-அப் பகைவர் எய்த அம்புகள் கிழித்தமையால் உண்டான புண்ணையுடைய பெரிய அழகிய மார்பினையும்; வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்-பகைவருடைய கூரிய வாள் கிழித்தமையால் உண்டான புண்ணையுடைய மணிக்கலன் பூண்ட மார்பினையும்; மைமலர் உண்கண் மடந்தையர்-அம் மறவருடைய காதலிமாராகிய நீலமலர் போன்ற மை உண்ட கண்களை உடைய மகளிர்கள்; அடங்கா-கச்சின் கண் அடங்காத; கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ-பருத்த தேமலையுடைய முலைகளினது வெப்பத்தால் வேது கொண்டு; அகில் உணவரித்த அம் மென் கூந்தல் முகில் நுழை மதியத்து-அகிற் புகையை உட்கொள்ளும்படி விரித்து விடப்பட்ட அழகிய மெல்லிய தமது கூந்தலாகிய முகிலின் உள்ளே நுழைகின்ற தமது முகமாகிய திங்களின்கண் அமைந்த; முரிகருஞ் சிலைக்கீழ்-வளைந்த கரிய புருவமாகிய வில்லின்கீழ் அமைந்த; மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து-மகரமீன் எழுதிய கொடியை உடைய காமவேள் அவர் கண்களாகிய மலரம்புகளை நம்மீது எய்துப் புண்செய்து; சிதர் அரி பரந்த செழுங்கடைத் தூது-சிதரிய செவ்வரி ஓடியவளவிய அவரது கடைக்கண்ணாகிய தூது பண்டு நமக்குத் துன்பம் தருவதாய் இருப்பினும்; இம் மாலைப் பொழுதின்கண் அச் செழுங்கடைக் கண்ணே நம் நெஞ்சின் புண்ணிற்கு மருந்தாகவும் அமைவதாயிற்று என்று அம் மறவர் பாராட்டு எடுப்ப என்க.
(விளக்கம்) வேந்து வினை-அரசன் ஏவிய போர்த்தொழில் போர்த்தொழிலின்கண் யானைக் கோடு முதலியவற்றால் விழுப்புண் பட்ட மறவர்கள் இல்லம் புகுந்தவுடன் அவர்தம் காதலிமார் அன்புடன் முயங்குதலால் அப்புண்கள் வேதுபிடித்தாற் போன்று துன்பம் தாரா தொழிந்தன என்பது கருத்து. பாசறையின்கண் அக்காதலிமாருடைய கூந்தலாகிய முகிலின் கீழ் அமைந்த அவர்தம் முகமாகிய திங்களின்கண் புருவமாகிய வில்லை வளைத்து வில்லின் கீழதாகிய கண்ணாகிய மலர்க் கணையை ஏவி மன்மதன் துன்புறுத்தவும் அவருடைய கடைக்கண் அவர்பால் தம்மை இழுத்துத் துன்புறுத்தவும் கண்டேம். இப்பொழுது அக்கண் பார்வையும் கடைக்கண் தூதும் எமக்கு இன்பமளிக்கின்றன, என்று அம் மறவர் மகிழ்ந்த படியாம்.
இதுவுமது
22-31: இருங்கனி.........தழீஇ
(இதன் பொருள்) இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக்கருங் கயல் பிறழுங் காமர் செவ்வியில்-பெரிய கோவைப் பழம் போன்று சிவந்த வாயானது சிறிய நிலவொளியைப் பரப்பக் கரிய கயல்மீன் போன்று பிறழ்கின்ற அழகிய காட்சியோடே திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்-திருத்தமுற்ற பற்களினின்றும் அரும்புகின்ற புதிய புன்னகையும்; மாந்தளிர் மேனி மடவோர் தம்மால் ஏந்துபூண் மார்பின் இளையோர்க்கு அளித்து -மாவினது தளிர்போன்ற நிறத்தையுடைய மகளிரால் அணிகலன் அணிந்த மார்பினை உடைய இளைய மறவர்க்கு வழங்கி; காசறைத் திலகக் கருங்கறை கிடந்த மாசு இல்லாள் முகத்து-கத்தூரித் திலகமாகிய கரிய களங்கம் கிடந்ததல்லால் பிறிதொரு களங்கமுமில்லாத ஒளிபடைத்த தமது முகத்தின்கண்; வண்டொரு சுருண்ட குழலுங் கோதையும் கோலமும் காண்மார்-மொய்த்த வண்டுகளோடே- சுருண்டு கிடக்கின்ற தம்முடைய கூந்தலையும் கூந்தலின்கண் அணிந்துள்ள மாலையையும் இவற்றின் அழகையும் காணும்பொருட்டு நிழல்கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி-தமது உருவத்தின் நிழலை வெளிப்படுத்துகின்ற கண்ணாடி மண்டிலத்தை அம் மகளிர் தமக்கு முன்னர் நிறுத்தி; வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇ-வளைந்த கோட்டினை உடைய சிறிய யாழை எடுத்து அணைத்துக்கொண்டு என்க.
(விளக்கம்) கனி- கோவைக்கனி துவர்-பவழமுமாம். காமர் அழகு. மாலையானது மடவோர் தம்மால் விருந்தின் மூரல் இளையோர்க்கு அளித்து என்க. காசறை கத்தூரி. கறை-களங்கம் திலகத்தை அன்றி மற்றொரு கறையும் இல்லாத முகம் என்றவாறு மண்டிலம்-ஈண்டுக் கண்ணாடி.
இதுவுமது
32-40: புணர்புரி...............நீங்க
(இதன் பொருள்) புணர்புரி நரம்பின் பொருள்படு பத்தர்-இசையாலே தம்மு ளியைகின்ற நரம்பினையும் இசையின்பமாகிய நுகர் பொருள் தோன்றுதற்கு இடனான பத்தர் என்னும் உறுப்பினையுமுடைய அந்த யாழினின்றும்; குரல் குரலாக வருமுறைப்பாலையில்-குரல் குரலாகப் பிறக்கின்ற செம்பாலை முதலிய பண்ணுடன்; துத்தங்குரலாத் தொல்முறை இயற்கையின் அம்தீம் குறிஞ்சி அகவன் மகளிரின்-துத்தங் குரலாகத் தோன்றுகின்ற படுமலைப் பாலையும் பழைய முறைமையினையுடைய செவ்வழிப் பாலையும் அழகிய இனிய குறிஞ்சிப் பண்ணும் ஆகிய பண்களைப் பாடுகின்ற மகளிர் வாயிலாய்; மைந்தர்க்கு ஓங்கிய வருவிந்தமர்ந்து-அம் மைந்தரக்குச் சிறந்த பெறற்கரிய இசை விருந்தினையும் செய்து; முடிபுறம் உரிஞ்சுங் கழல் கால் குட்டுவன் குடி புறந்த தருங்கால் திருமுகம்போல வணங்குகின்ற பகை மன்னர்களின் முடிக்கலன்கள் தம்மீதிலே உராய்தற்குக் காரணமான வீரக்கழலணிந்த காலையுடைய செங்குட்டுவன் தன் குடிமக்களை அளிசெய்து பேணுங்கால் அவனது அழகிய முகம் விளங்குவது போல விளங்காநின்ற; உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்-சான்றோர்கள் கைகுவித்து வணங்கும்படி வானத்தே தோன்றிய விரிந்த கதிரை உடைய திங்களை, பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க-உலகத்தில் உள்ள சான்றோர் பலரும் புகழா நின்ற பழைய வஞ்சி நகரத்திற்குக் காட்டி மாலைக்காலம் நீங்கா நிற்ப என்க.
(விளக்கம்) பொருள்-இசையாகிய பொருள் இசை மிக்குத் தோன்றுவதற்குப் பத்தர் காரணமாதலின் பொருள்படுபத்தர் என்றார். குரல் குரலாக வரும் முறைப்பாலை என்பது செம்பாலை முதலியவற்றை குரலில் உழை தோன்றக் குறிஞ்சியாழ் என்பர். துத்தங் குரலாகத் தோன்றுவது படுமாலைப்பாலை என்பர். இவற்றின் இயல்புகளை ஆய்ச்சியர் குரவையில் காண்க. மைந்தர் என்றது போர் மறவரை மாலை மடவோர் தம்மால் மூரலையும், அகவன் மகளிரால் இசையையும் மைந்தர்க்கு அளித்து மதியத்தை மூதூர்க்குக் காட்டி நீங்க, என்க. குட்டுவன் குடிபுறந்தருங்கால் இன்முகத்தோடிருத்தலின் அவன் திருமுகம்போல மதியம் என்றார்.
இரவுக்கால நிகழ்ச்சிகள்
41-52: மைந்தரும்........வருவழி
(இதன் பொருள்) மைந்தருள் மகளிரும் வழிமொழி கேட்ப-உலகத்தின்கண் உள்ள ஆடவரும் பெண்டிரும் தன்வழிப்பட்டு நின்று தன் மொழிப்படி ஒழுகா நிற்ப; ஐங்கணை நெடுவேள் அரசு வீற்றிருந்த வெள்நிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும்-ஐந்து வகைப்பட்ட மலர்க்கணைகளை உடைய நெடிய காமவேள் கொலுவீற்றிருந்த வெள்ளிய நிலா முற்றத்திலும் காதலர்கள் ஒருவரை ஒருவர் விரும்புதற்கிடனான மலர்ப் பாயல்களினும்; மண் ஈட்டு அரங்கமும் மலர்ப்பூம் பந்தரும் வெண்கால் அமளியும் விதான வேதிகைகளும்-சுதை தீற்றிய கூத்தாட்டரங்கங்களிலும், மலரால் இயற்றப்பட்ட பூம் பந்தர்களிலும் யானைக் கொம்புகளால் இயன்ற கால்களையுடைய கட்டில்களிடத்தும் மேற்கட்டி இடப்பட்ட மேடைகளிடத்தும்: தண்கதிர் மதியம் தான்கடி கொள்ள-குளிர்ந்த ஒளியினையுடைய திங்கள் ஒளி மிகவும் விளக்கஞ் செய்ய; படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து இடைநின்று ஓங்கிய நெடுநிலை மேருவின்-கடல்சூழ்ந்த பயன் பொருந்திய பெரிய இந்நிலவுலகத்தின் நடுவிடத்தே நின்று உயர்ந்த நீண்ட நிலைமையினையுடைய மேருமலையாகிய பொன்மலைபோன்று; கொடிமதில் மூதூர் நடுநின்றோங்கிய-கொடி உயர்த்தப்பட்ட மதில் சூழ்ந்த வஞ்சி நகரத்தின் நடுநிலத்தே நிலைத்து நின்று உயர்ந்த; தமனிய மாளிகைப் புணைமணி அரங்கின்-பொன்னால் இயன்ற தனது மாளிகையின்கண் அழகுபடுத்தப்பட்ட மணி மேடையின்மேல் செங்குட்டுவனின் வாழ்க்கைத் துணைவியாகிய; வதுவை வேண்மாள் மங்கல மடந்தை மதிஏர் வண்ணங் காணிய வருவழி-வேண்மாள் என்னும் மங்களத் தன்மை பொருந்திய கோப்பெருந்தேவி திங்களினது எழுச்சியில் உண்டான அழகைக் கண்டு மகிழ்தற்கு வருகின்றபொழுது என்க.
(விளக்கம்) மைந்தரும் மகளிரும் என்றது காதற்கேண்மை உடையாரை. வேள்-காமவேள். உலகெங்கும் எவ்வுயிரிடத்தும் அவன் ஆணை செல்லுதலின் அவனது வழிமொழி கேட்ப என்றார். வெண்ணிலா மதியம் முதலிய இடங்களில் மிகுதியும் விளக்கமுறுதலின் மதியம் கடிகொள் என்றார். கடி-விளக்கம்; உரிச்சொல் மனைமாட்சி உடைய பெருந்தேவி என்பார் மங்கல மடந்தை என்றார். என்னை? மங்கலமென்பது மனைமாட்சி எனவரும் திருக்குறளும் காண்க. காணிய-காண்பதற்கு.
இதுவுமது
53-64: எல்வளை........ஒருசார்
(இதன் பொருள்) எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண்டு ஏத்தப் பரந்தன வொருசார்-ஒளியுடைய வளையலணிந்த மகளிரால் ஏந்தப்பட்ட விளக்குகள் அத் தேவியார்க்கு பல்லாண்டு கூறி வாழ்த்துதற்பொருட்டு ஒருபக்கத்தே வந்து பரவின மண்கணைமுழவும் வணர்கோட்டு யாழும் பண்கனி பாடலும் பரந்தன வொருசார்-மண் பூசப்பெற்ற திரண்ட மத்தளமும் வளைந்த தண்டினை உடைய யாழும் ஆகிய இசைக்கருவிகளோடே இசையின்பம் கனிகின்ற பாடல்களும் ஒருபக்கத்தே பரவின; மான் மதச் சாந்தும் வரிவெள் சாந்தும் கூனும் குறளும் கொண்டன-ஒருசார்-கத்தூரிக் குழம்பும் தொய்யில் எழுதுதற்குரிய வெள்ளிய சந்தனமும் கூன் உடையோரும் குறள் உரு உடையோரும் ஒருபக்கத்தே ஏந்திவந்தனர்; வண்ணமும் சுண்ணமும் மலர் பூம்பிணையலும், பெண்அணிப் பேடியர் ஒருசார் ஏந்தின-வண்ணக் குழம்புகளும், சுண்ணங்களும், மலர்ந்த பூமாலைகளும், பெண் இயல்புமிக்க பேடியரால் ஒரு பக்கத்தே ஏந்தப்பட்டன; பூவும் புகையும் மேவிய விரையும் தூவியஞ் சேக்கை சூழ்ந்தன-ஒருசார்-மலர்களும் அகில் முதலிய நறுமணப் புகைகளும் விரும்பப்பட்ட மணப்பொருள்களும் அன்னத் தூவியால் இயன்ற பள்ளியை ஒருபக்கத்தே சூழ்ந்திருந்தன; ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் ஒருசார் சேடியர் செவ்வியன் ஏந்தினர்-கண்ணாடியும் ஆடைகளும் அணிதற்குரிய அணிகலன்களும் ஒருபக்கத்தே அவற்றை வேண்டும் செவ்வி அறிந்து உதவுதற் பொருட்டுப் பணி மகளிர் ஒருபக்கத்தே ஏந்தி நின்றனர் என்க.
(விளக்கம்) எல்-ஒளி. பல்லாண்டு பாடுவோர் கையில் விளக்கேந்திப்-பாடுதல் மரபு. கணை-திரட்சி. வணர்கோடு-வளைந்த யாழ்த்தண்டு. பண்-இன்பம் கனிந்த பாடல் என்க. பெண்ணணிப் பேடியர்-பெண்மையை அவாவிப் பெண்டிர்போல அணிந்துகொள்ளும் பேடியர். ஆடி-கண்ணாடி. ஆடி முதலியவற்றைச் செவ்வி தெரிந்து கொடுப்பதற்காகச் சேடியர் ஏந்தி நின்றனர் என்றவாறு.
அரசனும் தேவியும் கூத்தாட்டுக் கண்டு மகிழ்தல்
45-79- ஆங்கு........பின்னர்
(இதன் பொருள்) ஆங்கு அவள் தன்னுடன் அணி மணி அரங்கம் வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி-அப்பொழுது அக் கோப்பெருந் தேவியோடு அழகிய மணி பதித்த அந்த நிலா முற்றத் தின்கண் கடல் சூழ்ந்த நில உலகத்தை ஆளுகின்ற செங்குட்டுவனும் எறி இனிது வீற்றிருந்து; பாத்தரு நால்வகை மறையோர்-பகுத்துக் காணுதலரிய நான்கு வகைப்பட்ட மறைகளையும் ஓதி உணர்ந்த அந்தணர் வாழுகின்ற; பறையூர்க் கூத்தச் சாக்கையன்-பறையூர் என்னும் ஊரில் பிறந்தவனாகிய கூத்தச் சாக்கையன் என்னும் கலைஞன்; திருநிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்-அழகு நிலைபெற்றிருக்கின்ற சிவந்த அடியின்கண் அணிந்துள்ள சிலம்பு வாய்விட்டு முரலாநிற்பவும்; செங்கையின் பரிதரு படுபறை ஆர்ப்பவும்-சிவந்த கையிலே ஏந்திய ஒலிபடுகின்ற துடிமுழங்கவும்; செங்கண் ஆயிரம் திருக்குறிப்பருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்-சிவந்த கண்கள் எண்ணிறந்த கருத்துகளை வெளியிட்டருளவும் சிவந்த சடை பரந்து சென்று எட்டுத் திசைகளையும் துழாவவும்; பாடகம் பதையாது சூடகம் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை அசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒரு திறன் ஆக-தனது ஒரு கூற்றிலமைந்த தேவியின் உருவின்கண் உள்ள சிலம்பு அசையாமலும் வளையல் குலுங்காமலும் மேகலை ஒலியாமலும் மெல்லிய முலை அசையாமலும் நீண்ட காதணியாகிய தோடு ஆடாமலும் நீலமணிபோன்ற நிறமுடைய கூந்தல் அவிழாமலும் இறைவி தனது ஒரு கூற்றிலே அமைந்திருப்ப; ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் ஆடலின்-ஏனைக் கடவுளரினும் உயர்ந்த கடவுளாகிய பிறவா யாக்கையின் பெரியோன் ஆடி யருனிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தின் ஆடிக் காட்டுதலாலே; மகிழ்ந்து அவன் ஏத்தி நீங்க-பெரிதும் மகிழ்ச்சியடைந்து அக் கூத்தச் சாக்கையன் பரிசில்பெற்று அரசனையும் தேவியையும் வாழ்த்தி அவ்விடத்தினின்றும் போயினனாக; இருநிலம் ஆள்வோன்-பெரிய நிலத்தை ஆளுகின்ற செங்குட்டுவன்; வேத்து இயல் மண்டபம் மேவிய பின்னர்-அரசியல் நடத்துதற்குரிய அத்தாணி மண்டபத்தை அடைந்த பின்னர் என்க.
(விளக்கம்) (74) பாத்தரு நால்வகை மறையோர் வாழ்கின்ற பறையூர் என்னும் ஊரில் உள்ள சாக்கையன் என்னும் கூத்தன்தேவி யோடிருந்த அரசன்முன் வந்து இமையவன் ஆடிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தினை ஆடிக்காட்ட மகிழ்ந்து என இயைபு காண்க. கொட்டிச்சேதம்-கொடுகொட்டி என்னும் ஒருவகைக் கூத்து; இக் கூத்து இறைவனால் ஆடப்பெற்றது என்பர். ஒரு பக்கத்தில் இறைவியின் உறுப்புகளாகிய கை திருவடி இடை காது முதலியவற்றில் அணிந்துள்ள பாடகம் சூடகம் மேகலை குழை முதலியன ஆடாத வண்ணம் இறைவன் கூற்றிலுள்ள சேவடிச் சிலம்பு புலம்பவும் கையில் பறை ஆர்ப்பவும் கண் குறிப்பருளவும் சடை திசைமுகம் அலம்பவும் இமையவன் இக் கூத்தை ஆடினன். சாக்கையனும் அவ்வாறே ஒருபக்கத்தில் ஆண்கோலமும் மற்றொரு பக்கத்தில் பெண் கோலமும் பூண்டு ஒருபக்கம் அசைவின்றி ஒருபக்கத்தால் மட்டும் ஆடிக்காட்டினன் என்றுணர்க. இக் கூத்தின் இயல்பைத் திரிபுரமெரியத் தேவர் வேண்ட, எரிமுகப் பேரம் பேவல் கேட்ப, உமையவளொரு திறனாகவோங்கிய இமையவனாடிய கொடுகொட்டியாடலும் (சிலப். 6:40-43) கொட்டி கொடுவிடையோ னாடிற்றதற்குறுப் பொட்டிய நான்காமெனல் (சிலப் 3: 14; மேற்) படுபறை பலிவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி யாடுங்கால்............கொண்ட சீர் தருவாளோ(கலி கடவுள் 5-7); கொட்டி யாடற்கேற்ற மொட்டிய, உமையவளொருபாலாக வொருபால், இமையா நாட்டத் திறைவ னாகி, அமையா வுட்கும் வியப்பும் விழைவும், பொலிவும் பொருந்த நோக்கித் தொக்க, அவுண ரின்னுயிரிழப்ப வக்களம், பொலிய வாடின னென்ப (கலி. கடவுள் 5-7, மேற்) எனவருவனவற்றா லறிக.
செங்குட்டுவனைக் கஞ்சுக மாக்கள் வந்து காணுதல்
80-83: நீலன்...........தொழுது
(இதன் பொருள்) நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்-பண்டு பால குமரன் மக்களாகிய காவாநாவின் கனகவிசயரைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டி வம்மின் என அவருடன் போக்கிய நீலன் என்பவனை உள்ளிட்ட கஞ்சுக மாக்களாகிய தூதர்கள் அப் பணியைச் செய்துமுடித்து மீண்டவர்; மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி-மாடலன் என்னும் அந்தணனோடு வந்து; வாயிலாளரின் மன்னவர்க்கு இமைத்தபின்-தம் வரவினை வாயில் காப்போர் வாயிலாக அரசனுக்கு அறிவித்தபின்னர்; கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது-அம் மன்னவன் விடுத்த அரண்மனைப் பணியாளர் பின்னர்ச் சென்று அரசனுடைய அடிகளில் வீழ்ந்து வணங்கிச் சொல்லுபவர் என்க.
(விளக்கம்) கோயில் மாக்கள்-அரண்மனையின்கண் குற்றேவன் செய்பவர். நீலன் முதலிய தூதுவர் கொணர்ந்த செய்தி தனித்திருந்து அறியற்பாலதாகலின் அரசன் வேறு பணியாளர்கள் ஏவி அவர்களை அழைத்தான் என்பது கருத்து.
சோழன் இகழ்ந்தமையை மன்னனுக்கு அறிவித்தல்
84-95: தும்பை..........பெருந்தகை
(இதன் பொருள்) தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே-வடநாட்டின்கண் சென்று அந் நாட்டு மன்னரோடு போர்க் களத்திலே தும்பைப்பூச் சூடிச்சென்று வெவ்விய போர் செய்து வாகை சூடிய வீரக்கழல் கட்டிய வேந்தனே கேட்டருளுக; செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு ஆங்கு-அடியேங்கள் கனகவிசயரை அழைத்துக் கொண்டு சோழனுடைய பழைய நகரத்தை எய்தி அவ்விடத்தே; வேந்தன் வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத்து இருக்க-அச் சோழமன்னன் வச்சிரநாட்டரசனும் அவந்திநாட்டரசனும் மகதநாட்டு மன்னனும் திறையாக இறுத்த கொற்றடபந்தரும் பட்டி மண்டபமும் தோரணவாயிலும் பிறவுமாகிய அரும்பொரு ளமைந்த சித்திர மண்டபத்தின்கண் இருந்தசெவ்வியறிந்து அங்கு; அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு தமரின் சென்று தகையடி வணங்க-வடநாட்டுப் போரின்கண் புறங்கொடுத்த கனகவிசயரோடும் அவ்வரசனுடைய பணியாளரோடும்கூடி அம் மன்னவனுடைய கட்டளை பெற்று அவன் முன்னிலையிற் சென்று அழகிய அவன் அடிகளை வணங்கி யாம் கொண்டு சென்ற செய்தியையும் அறிவித்தேம். அது கேட்ட அம் மன்னவன்; நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து கொல்லாக் கோலத்து உயிர் உயர்ந்தோரை-நீண்ட போர்க்களத்தின்கண் எதிர்ந்துவந்து தமது நெடிய பெரிய ஆண்மைத் தன்மையோடே வாளையும், குடையையும் வீரங்கெழுமிய அப் போர்க் களத்திலே ஒழித்துவிட்டுச் சாதற்கு அஞ்சிப் பிறர் கொல்ல வொண்ணாத தவக்கோலம் பூண்டு உயிர் தப்பி ஓடியவரை; வெல் போர்க்கோடல் வெற்றம் அன்று என-வெல்லுதற்குரிய போர்க்களத்திலே கைப்பற்றிக்கொண்டு வருதல் வெற்றியன்று என்று; தலைத் தேர்த்தானைத் தலைவர்க் குரைத்தனன்-தலைமைத் தன்மையுடைய தேர்ப்படைத் தலைவனுக்குக் கூறினன்; சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை-வில்லையும் ஆத்தி மாலையையும் உடைய மார்பினையுடைய அச் சோழர்குலத் தோன்றலாகிய பெருந்தகை மன்னன் என்றார் என்க.
(விளக்கம்) தும்பை வெம்போர்-வலிமை காரணமாக எதிர்த்து வந்த பகையரசரை எதிர் சென்று போர்செய்து அவர் தலைமைத் தன்மையைக் கெடுத்தல். செம்பியன் மூதூர் என்றது உறையூரை. வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சத்திர மண்டபம் என்றது இந் நாட்டிற்குரிய மூன்று அரசர்களும் திறையிட்ட பந்தர் தோரணவாயில் பட்டிமண்டபம் என்னும் இவற்றோடு கூடிய மண்டபம். இதனைப் பிறந்தவழிக் கூறல் என்னும் ஆகுபெயர் என்பர். வச்சிர நன்னாட்டுக் கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும், மகதநன்னாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் அவந்தி வேந்த னுவந்தனன் கொடுத்த, நிவந்தோங்கு மரபிற் றோரண வாயிலும்(சிலப்.5:99-104) என்பதனானுமறிக. தமர்-சோழ மன்னனுடைய பணியாளர். அழுவம்-களப்பரப்பு. கொல்லாக் கோலம்-தவக்கோலம். வெற்றம்-வெற்றி. தேர்த்தானைத் தலைவற்கு உரைத்தனன் என்றது எள்ளியுரைத்தான் என்பதுபட நின்றது. சிலையையும் தாரையும் உடைய செம்பியர் பெருந்தகை என்க, பெருந்தகை என்றது இகழ்ச்சிக் குறிப்பு.
அத் தூதுவர் பாண்டியன் கூறியதுரைத்தல்
96-107: ஆங்கு...........என்று
(இதன் பொருள்) அறக்கோல் வேந்தே-அறத்திற் பிறழாத செங்கோன்மையுடைய வேந்தனே; ஆங்கு நின்று அகன்றபின் அடியேங்கள் அவ்வரசனுடைய நாட்டினின்றும் நீங்கிய பின்னர்; ஓங்குநீர் மதுரை மன்னவன் காண உயர்ந்த-புகழையுடைய மதுரையை ஆளுகின்ற பாண்டிய மன்னன்பால் இக் கனக விசயரோடு சென்று காணா நிற்ப; போர்வேல் செழியன்-போர்த் தொழில் வல்ல வேலேந்திய அப் பாண்டிய மன்னன்; ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த சீர் இயல் வெள் குடைக் காம்பு-வடவாரிய மன்னர்களது போர்க்களத்தின்கண் கைப்பற்றிக் கொண்ட அழகு பொருந்திய தமது வெண்கொற்றக் குடையினது காம்பாகிய மூங்கிற்கோலை; ஆங்கு நனி சிறந்த சயந்தனது வடிவினை உடையதாகக் கருதப்படும் தலைக்கோலாகும்படி; கயந்தலை யானையின் கவிகையிற் காட்டி-பெரிய தலையினையுடைய யானையின் மேல் உம்முடைய மன்னன் கவித்த குடைநிழலிலே வைத்துக் காணும்படி செய்து தாங்கள் போர்க்களத்தினின்றும் புறமிட்டோடி; இமைய சிமையத்து இருங்குயிலாலுவத்து -இமயமலையின் குவட்டிலமைந்த பெரிய குயிலாலுவம் என்னும் இடத்துக் கோயில் கொண்டருளிய; உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி-உமா தேவியார் எழுந்தருளிய ஒரு கூற்றையுடையவனாகிய ஒப்பற்ற கடவுளை வழிபாடு செய்து; அமர்க்களம் அரசனது ஆகத்துறந்து-தங்கள் நாட்டின் கண்ணதாகிய போர்க்களம் நுங்களரசனுக்குரிமையாம்படி உலகினைத் துவரத் துறந்து போய்தவப் பெருங்கோலம் கொண்டோர் தம் மேல்-தவக்கோலமாகியடத்தும் மறக்கள வேள்விகளையே செய்வதன் கண் ஊக்கமுடைமையாய் இருக்கின்றனை; என்றான் என்க.
(விளக்கம்) நெடுந்தார்-நெடிய வாகைமாலை(115) நீ வியலூர் எறிந்த பின்னர் ஒன்பது மன்னரை வென்றது முதலாக ஆரிய மன்னரை வென்றது ஈறாகப் போர்பல செய்து நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தன் ஆதலான் சோழனும் பாண்டியனும் நின்னை இகழ்ந்தமையை இப் பேருலகம் ஏற்றுக்கொள்ளாது. ஆதலால் நின் சீற்றம் அமைக. மேலும் நீ சான்றோரால் மதிக்கப்படும் ஒரு சான்றோன் ஆதலாலும் நின் சீற்றம் அமைக என இம் மாடல மறையோன் ஏதுக்கள் பல கூறுதல் உணர்க. ஆன்பொருநை-ஒருயாறு. யாற்று மணலினும் வாழ்நாட்கள் சிறக்க என்றது வாழ்நாள் எண்ணினால் மிக்கனவாக என்றவாறு. இவ்வாறு வாழ்த்துதல் மரபு. இதனை எங்கோ வாழிய..........பஃறுளி மணலினும் பலவே (புறநா. 9: 8-11) சிறக்க நின்னாயுள், மிக்குவரு மின்னீர்க்காவிரி எக்கரிட்ட மணலினும் பலவே (புறநா, 43: 21-3) நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர் வெண்டலைப் புணரியலைக்குஞ் செந்தில் நெடுவேணிலை இய காமர்வியன்றுறைக் கடுவளி தொகுப்ப வீண்டிய வடுவா ழெக்கர் மணலினும் பலவே( புறநா. 55: 17-21) என வருவனவற்றானும் உணர்க. அகழ்கடல்-அகழ் போன்ற கடலுமாம். அறக்கள வேள்வி-அறம் நிகழ்தற்கிடனான இராசசூயம் குதிரை வேள்வி முதலியன. மறக்கள வேள்வி-வீரத்தால் போர்செய்த களத்தின்கண் பகைவர் ஊனைப் பேய் முதலியவற்றை உண்பித்தல்.
மாடல மறையோன் செங்குட்டுவனுக்குச் செவியறிவுறுத்தல்
133-150: வேந்துவினை...........உணர்ந்தோய்
(இதன் பொருள்) வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணி நின் ஊங்கணோர் மருங்கில்-அரசர்களுக்கென அற நூல்களுள் விதிக்கப்பட்ட வினைகளை நன்கு முடித்தவர்களும் ஏந்திய வாளால் பெறுகின்ற வெற்றியையுடையோரும் பனம்பூ மாலையைச் சூடுவோரும் ஆகிய நின்னுடைய முன்னோர்களுள் வைத்துச் சாலச் சிறந்தவராகிய அரசருள்; கடல் கடம்பு எறிந்த காவலனாயினும் விடர்ச்சிலை பொறிந்த விறலோனாயினும்-கடலின்கண் சென்று அங்குப் பகைவர்களுடைய தீவகத்தில் நின்ற கடப்ப மரமாகிய காவல் மரத்தை வெட்டி வீழ்த்திய புகழ்மிக்க வேந்தனாயினும் அன்றி இமயமலையின் முழையமைந்த புறத்தில் தனது இலச்சினை ஆகிய வில்லைப் பொறித்துவைத்த வெற்றி யையுடைய அரசனாயினும் அன்றி; நால் மறையாளன் செய்யுள் கொண்டு மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்-நான்கு மறைகளையும் ஓதிய பார்ப்பனப் புலவன் ஒருவன் தன்னைப் பாடிய செய்யுளை ஏற்றுக்கொண்டு அதற்குப் பரிசிலாக அப் புலவன் விரும்பிய வண்ணம் அறக்கள வேள்வி பலவும் செய்து அவனை மேலுலகத்திற்கே உடம்போடு செல்வித்தவனாயினும்; போற்றி மன்னுயிர் முறையில் கொள்க எனக் கூற்றுவரை நிறுத்த கொற்றவன் ஆயினும்-அன்றி, பாதுகாத்தலைச் செய்து இவ்வுலகத்தே நிலைபெற்ற உயிர்களைக் கைக் கொள்ளும் பொழுது அவர்க்கியன்ற அகவைக் காலம் நூறாண்டும் கழிந்த பின்னர்க் கொள்ளுகின்ற முறைமையினாலே கொள்ளக் கடவாய் எனக் கூற்றுவனையும் தனது கட்டளையின் கண் நிறுத்திவைத்த வெற்றி வேந்தன் ஆயினும், வன்சொல் மவனர் வளநாடு ஆண்டு பொன் படு நெடுவரை புகுந்தோன் ஆயினும்-கேள்விக்கின்னாத வன்சொல்லைச் சொல்லுகின்ற மவனருடைய வளம் பொருந்திய நாட்டினை வென்று அடிப்படுத்து ஆட்சி செய்து பொன்னாகத் தோன்றுகின்ற நெடிய மேருமலைவரையில் சென்றவனாயினும்; மிகப் பெருந்தானையோடு இருஞ்செரு வோட்டி-மிகவும் பெரிதாகிய படைகளோடே சென்று செய்த பெரிய போரின்கண் பகைவரை ஓடச் செய்து அகப்பா எறிந்த அருந்திறலாயினும்-பகைவர் மதிலை அழித்த அரிய ஆற்றல் படைத்தவனாயினும்; உருகெழு மரபின் அயிரை மண்ணி இருகடல் நீரும் ஆடினேன் ஆயினும்-அச்சம் பொருந்துதற்குக் காரணமான பகைவனுடைய அயிரை ஆற்றிலும் சென்று நீராடி மேலும் குணகடல், குடகடல் என்னும் இரண்டு கடல்களிலும் சென்று நீராடிய அரசனாயினும்; சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோனாயினும்-இந்திரனுடைய அமராபதியினின்றும் சதுக்கப் பூதங்களைத் தனது வஞ்சி நகரத்திற்கும் கொண்டு வந்து மதுவருந்துதற்குக் காரணமான வேள்வியைச் செய்தவனாயினும்; மீக் கூற்றாளர் மாவரும் இன்மையின்-இங்ஙனம் ஒவ்வொரு வகையால் புகழ பெற்றிருந்த இவருள் ஒருவரேனும் இல்லாதொழிந்தமையால்; யாக்கை நில்லாதென்பதை உணர்ந்தோய்-இவ்வுலகத்தின்கண் உடம்பு நிலைநிற்க மாட்டாது என்னும் உண்மையை உணர்ந்திருக்கின்றாய் அல்லையோ என்றான் என்க.
(விளக்கம்) ஊங்கணோர்-இச் சேர நாட்டின்கண் இருந்தவராகிய நின் முன்னோர்களாகிய சேரர்கள். கடற்கடம் பெறிந்த காவலன்-கடலிலுள்ள தீவுகளை ஆளுகின்ற ஓர் அரசனுடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டி அம்மன்னனைத் தன்னடிப்படுத்த ஒரு சேர மன்னன் விடர்ச்சிலை பொறித்தவன் என்பான் குடக்கோச்சேரலன். குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலை பொறித்த வேந்தன் என(மணிமே.28: 103-4) பிறரும் ஓதுதல் உணர்க. நான்மறையாளன் என்றது பாலைக் கவுதமனரை. இவரை மேனிலை உலகம் விடுத்தோன் இமய வரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு சூட்டுவன் என்பர். இவனுடைய வரலாற்றினைப் பதிற்றுப்பத்தில் மூன்றாம்பதிகத்தில் பல்யானைச் செல்கெழு சூட்டுவனைப் பாலைக்கவுதமனார் பாடினார் பத்துப்பாட்டு; பாடிப் பெற்ற பரிசில் நீர் வேண்டியது கொண்மினென யானும் என் பார்ப்பணியும் சுவர்க்கம் புகல் வேண்டு மெனப் பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி கேட்பித்துப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார் என்பதனானறிக. கூற்றுவரை நிறுத்தலாவது-மக்களுக்கென வகுத்த நூறாண்டும் வாழ்ந்த பின்னரே அவர் உயிரைக் கவர்தல் வேண்டும் எனக் கூற்றுவனுக்கும் விதிவகுத்து அவ்வாறே நிகழ்வித்தல். இங்ஙனம் ஒரு சேர மன்னன் செய்தான் என்பர். யவனர்நாடு-மேனாட்டிலுள்ள சோனகர் முதலீயோருடைய நாடு. அகப்பா-இதனை அரண் என்பர். கடற்கடம் பெறிந்த காவலன் முதலாக வேள்வி வேட்டோன் ஈறாக உள்ள பேராற்றலும் பெரும்புகழும் உடைய மன்னர்களும் மாண்டொழிந்தமையாலே யாக்கை நில்லாது என்பதை நீயே உணர்ந்திருக்கின்றனை அல்லையோ என்றவாறு. மீக்கூற்றாளர்-பெரும்புகழாளர். இவற்றால் யாக்கை நிலையாமை கூறி. இனிச் செல்வ நிலையாமையும் இளமை நிலையாமையும் கூறுகின்றான்.
151-158: மல்லன்........கண்டனை
(இதன் பொருள்) மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில் செல்வம் நில்லாது என்பதை-வானம் பொருந்திய இப் பேருலகத்தின்கண் வாழுகின்ற மாந்தர் யாரிடத்தும் செல்வம் நிலைத்து நில்லாது என்னும் உண்மையை; வெல்போர்த் தண் தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் கண்டனை அல்லையோ-சென்ற இடத்திலெல்லாம் வெல்லும் போராற்றல்மிக்க குளிர்ந்த தமிழ் நாட்டுப்படை மறவர்களை அறியாமையால் இகழ்ந்த இக் கனக விசயரை யுள்ளிட்ட ஆரிய அரசரிடத்தே நீ தானும் கண்கூடாகக் கண்டனை யல்லையோ; காவல் வேந்தே-உலகத்தை ஆளுகின்ற அரசனே; இளமை நில்லாது என்பதை ஈங்கு உணர்வுடைய மாக்கள் எடுத்து ஈங்கு உரைக்கல் வேண்டா-இளமைப் பருவம் நிலைத்து நில்லாமல் விரைந்து கழிந்தொழியும் என்னும் உண்மையை இவ்விடத்தே மெய்யுணர்வுடைய சான்றோர்கள் மேற்கோள்கள் எடுத்துக் காட்டிக் கூறிக்காட்டலும் வேண்டுமோ? வேண்டாவன்றோ, எற்றலெனின்; திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே நரை முதிர் யாக்கை நீயுங் கண்டனை-திருமகள் வீற்றிருக்கின்ற திருமார்பினையும் செங்கோலையும் உடைய வேந்தனே நரைத்து முதிர்ந்த உடம்பினை நீயும் இப்பொழுது எய்தினை அல்லையோ? இவ்வுண்மையை நினது பட்ட றிவினாலேயே உணர்ந்து கொண்டிருப்பாய் என்றான் என்க.
(விளக்கம்) கனக விசயர் முதலிய அரசர் நொடிப் பொழுதில் தம் மரச செல்வத்தை இழந்தமையால் கண்டாய். இளமை நில்லாமையை உன்னுடைய நரைத்து முதிர்ந்த யாக்கையே நினக்கு அறிவுறுத்தும் என்றவாறு.
உயிர்போகு பொதுநெறி
159-174: விண்ணோர்.............பொறேஎன்
(இதன் பொருள்) விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர் மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்-தேவர் உருவத்திலே பிறந்து தேவர் உலகத்தை அடைந்த நல்ல உயிரானது அவ்வுடம்பை ஒழித்து மீண்டும் மண்ணுலகத்தில் வாழுகின்ற மக்கட் பிறப்பிலே திரும்பினும் திரும்பும்; மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் மிக்கோய் விலங்கின் எய்தினும்-எய்தும் மக்கள் உடம்பெடுத்து நிலவுலகத்தே நிலைத்து வாழுகின்ற உயிரானது வேந்தருள் மேம்பட்டவனே விலங்குடம்பினை எய்திய பிறத்தலும் கூடும்; விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் கலங்கு அஞர் நரகரைக் காணினுங் காணும்-அவ் விலங்குப் பிறப்பினின்றும் நீங்கிய இனிய உயிரானது நெஞ்சு கலங்குதற்குக் காரணமான துன்பம் பொருந்திய நரகருடைய உடம்பினைப் பெறினும் பெறும் இவ்வாறு; ஆடுங் கூத்தர் போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது-அரங்கத்தில் ஏறிக் கூத்தாடுகின்ற கூத்தர்களைப் போல அரிய உயிரானது ஓரிடத்தே எய்திய கோலத்தோடே ஒருங்கு கூடி ஓரிடத்திலேயே நிலைத்து நின்று இயங்க மாட்டாது; உயிர் செய்வினை வழித்தாய் செலும் என்பது பொய் இல் காட்சியயோர் பொருளுரை ஆதலின்-உயிரானது தான் செய்த வினைக்குத் தக அவ்வினையின் வழியே இயங்கும் என்பது மருளரு காட்சியோர் கண்டுரைத்த வாய்மையான மொழியே ஆதலால்; எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே-ஏழு மன்னர்களுடைய முடிக்கலனைக் கொண்டு சமைத்த ஆரம் பூண்ட மார்பை உடையோய் நீ நின் திருக்கையில் ஏந்திய ஆணைச் சக்கரம் நின் வழிவழியாகச் சிறப்பதாக! பெரிய வாளை உடைய வேந்தனே; யானும் அரும்பொருள் பரிசிலேன் அல்லேன்-இவ்வறிவுரையைக் கூறுகின்ற அந்தணனாகிய யானும் பெறுதற்கரிய பொருளைப் பரிசிலாகப் பெறுகின்ற அவாவினாலே இவற்றைக் கூறுவேனல்லேன்; புலவரை இறந்தோய்-அறிவின் எல்லையைக் கடந்த பெருமைகளை உடைய வேந்தனே; பெரும்பேர் யாக்கை பெற்ற நல்லுயிர்-பெறுதற்கரிய பெருமையினையுடைய இந்த உடம்பினைப் பெற்ற நல்வினையையுடைய சிறந்த நின்னுடைய உயிர்; மலர்தலை உலகத்து உயிர் போகுபொதுநெறி-விரிந்த இடத்தையுடைய இந் நிலவுலகத்தின்கண் உடம்பொடு தோன்றிய வாழுகின்ற எளிய உயிரினங்கள் செல்லுகின்ற பொதுவான நெறியிலே; போகுதல் பொறேன்-செல்லுவதனை நின்பால் அன்பு மிக்க யானோ பொறுக்கில்லேன் காண் என்றான் என்க.
(விளக்கம்) தேவ கதி, மக்கள் கதி, விலங்கு கதி, நரக கதி என நால்வகைக் கதியினும் உயிர்கள் தத்தம் இருவேறு வகை வினைகளுக் கேற்ப மாறிமாறிப் பிறந்துழலும். அங்ஙனம் பிறக்கும் உயிர் நல்வினையின் பயனாகத் தன் வினைக்கேற்ப மக்களாகவே விலங்காகவோ பிறப்பெய்தும். உயிர்கள் தீவினையின் பயனாய் நரகராய்ப் பிறந்துழலும். நரகத்தில் அவ்வினை தீர்ந்தவுடன் விலங்காகவோ மக்களாகவோ பிறக்கும். இங்ஙனம் உயிரெல்லாம் மாறிமாறிப் பிறந்து இன்பதுன்பங்களை நுகர்வதே உயிர்களுக்கியன்ற பொதுநெறி ஆகும் என்பது. இதனால் அம் மாடல மறையோன் செங்குட்டுவனுக்குச் செவியறிவுறுத்த செய்தியாம் என அறிக. உயிர்கள் இவ்வாறு மாறி மாறி உடம்பெடுத்து உழல்வதற்கு ஆடுங்கூத்தர் மாறி மாறி வேடம் புனைந்து வந்து வந்து ஆடுதல் உவமை என்க. எழுமுடி மார்ப என்றது பகை மன்னருடைய ஏழு முடிக்கலன்களைக் கொண்டியற்றிய மணியாரம் பூண்ட மார்பை உடையவனே என்றவாறு. பரிசில் வேண்டி வரும் இரவலர், புரவலர் மகிழும் வண்ணம் புனைந்துரைப்பர்; யான் பரிசில் வேண்டிக் கூறுகின்றேன் அல்லேன். சான்றோனாகிய நீ மக்கட் பிறப்பிற்கியன்ற சிறப்பு நெறியின்கண் செல்ல வேண்டுமென்னும் கருத்தினாலேதான் இங்ஙனம் இடித்துரைக்க நேர்ந்தது என்பான் அரும்பொருள் ..........பொறேஎன் என்றான் என்க.
இதுவுமது
175-178: வானவர்...........வேண்டும்
(இதன் பொருள்) வானவர் வழி நினக்கு அளிக்கும் நான்மறை மருங்கின்-தேவர்களும் விரும்பிப் போற்றுகின்ற வீட்டு நெறியை உனக்கு வழங்குகின்ற சிறப்பு நெறியாகிய; நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்-நான்கு மறைகளிடத்தும் கூறப்பட்ட பல்வேறு வகை வேள்விகளையும் அறிந்த பார்ப்பனனைக் கொண்டு; அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்-உணர்தற்கரிய மறைகளிடத்தே நின்போன்ற அரசர்களுக்கு என விதிக்கப் பட்டிருக்கின்ற உயர்ந்த பெரிய நன்மை தருகின்ற அறக்கள வேள்விகள் பலவற்றையும் இற்றை நாள் தொடங்கி நீ செய்தருள வேண்டும் என்று யான் விரும்புகின்றேன் என்றான் என்க.
(விளக்கம்) வானவர் போற்றும் வழி என்றது வீட்டு நெறியை; பார்ப்பாளைக் கொண்டு என்க. மறையிடத்து அரசர்க்கு விதித்த வேள்விகள் பல ஆதலின் அவற்றை விலக்குதற்கு ஓங்கிய பெருநல் வேள்வி செயல் வேண்டும் என்றான். நீ செயல் வேண்டும் என்றது இற்றைநாள் தொடங்கிச் செய்ய வேண்டும் என்பதுபட நின்றது.
இதுவுமது
179-186: நாளை.........என்று
(இதன் பொருள்) நாளைச் செய்குவம் அறம் எனில் இற்றே கேள்விகல் உயிர் நீங்கினும் நீங்கும்-யாவராயினும் தத்தமக்குரிய அறங்களை எப்பொழுதுமே செய்து கொண்டிருத்தல் வேண்டும், அங்ஙனமின்றி நாளைக்குச் செய்வோம் நாளைக்குச் செய்வோம் எனக் காலம் தாழ்த்திருப்பாராயின் அறக் கேள்வியைக் கேட்டிருக்கின்ற மக்கட்பிறப்பை உடைய நல்ல அவ்வுயிர் தானும் இப்பொழுதே அப் பிறப்பினை நீத்துச் செல்லினும் செல்லும், அன்றியும்; வாழும் நாள் இது என வரைந்து உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை-தாம் வாழுதற்குரிய நாளின் எல்லை இதுவேயாகும் என்று வரையறுத்து அறிந்து கொண்டவர் இதுகாறும் கடல்சூழ்ந்த இந்நில உலகத்தின்கண் யாண்டும் எவ்விடத்தும் இல்லை, ஆதலால் நினக்குரிய அவ்வறத்தினை இன்றே மேற்கொண்டு; வேள்விக்கிழத்தி இளவொடுங் கூடி தாழ் கழல் மன்னர் நின்னடி போற்ற-நீ செய்கின்ற அவ்வறக்கள வேள்விக் களத்தின்கண் தலைவனாகிய நினக்குத் தலைவியாக இருக்கும் உரிமை பூண்ட கோப்பெருந்தேவியாகிய இவ்வரசியாரோடுங் கூடி நின் அடியின் கண் வந்து வணங்குகின்ற வீரக் கழலணிந்த அரசர்கள் பலரும் நின் திருவடியே வணங்கி வாழ்த்தும்படி; நெடுந்தகை ஊழியோடு ஊழி உலகங்காத்து நீடு வாழி அரோ என்று-நெடுந்தகாய் ஊழி ஊழியாக இந்நிலவுலகத்தைப் பாதுகாத்துக் கொண்டு நெடிது வாழ்வாயாக என்று சொல்லி; என்க.
(விளக்கம்) நாளைச் செய்குவோம் என்றது நாளைச் செய்வோம் நாளைச் செய்வோம் எனக் காலந்தாழ்த்திருத்தலைக் கருதிற்று. அறக்கேள்வியுடைய நல்லுயிர் என்க. ஏனைப் பிறப்புகளில் அறத்தைக் கேட்டலும் இயலாமையின் அந் நன்மையையுடைய மக்கள் உயிர் என்பார் கேள்வி நல்லுயிர் என்றார். கேட்டல் மாத்திரையே பயன் தாராமையின் பயனின்றியே அவ்வுயிர் இன்றே நீங்கினும் நீங்கும் என்றவாறு. இனி, கேள்வி மாத்திரையால் உளதாகிய உயிர் என்பாரும் உளர். முதுநீர்-கடல்........முழுவதும் இல்லையென்றது எப்பொழுதும் எவ்விடத்தும் யாரும் இல்லை என்பதுபட நின்றது.
அறிவுரை கேட்ட அரசன் செயல்
187-194: மறையோன்...........ஏவி
(இதன் பொருள்) மறையோன் மறைநா இறையோன் செவி செறுவாக உழுது வான் பொருள் வித்தலின்-அம் மாடல மறையோன் அம் மறைகளை நன்கு பயின்ற தனது நர்வாகிய ஏரினால் சேரன் செங்குட்டுவனுடைய செவிகளைக் கழனிகளாகக் கொண்டு ஆழ உழுது அக் கழனியிடத்தே அறம் என்னும் சிறந்த பொருளாகிய விதையை விதைத்தமையினாலே; வித்திய பெரும்பதம் விளைந்து பதம்மிகுத்து துய்த்தல் வேட்கையின்-அவ்வாறு விதைக்கப்பட்ட பெரிய உணவாகிய விதை நன்கு விளைந்து அவ்வுணவுமிகுதலாலே அவ்வுணவால் உண்டாகின்ற பயனை நுகரவேண்டும் என்னும் விருப்பங் காரணமாக; சூழ்கழல் வேந்தன் நான்மறை மரபின் நயம் தெரி நாவின் கேள்வி முடித்த வேள்வி மாக்களை-சுற்றிய வீரக்கழலையுடைய அவ் வேந்தன் அப் பொழுதே நான்கு மறைகளையும் ஓதும் முறைமையினாலே ஓதி அவற்றின் சொல்நயம் பொருள்நயம் முதலியவற்றை நன்குணர்ந்த செந்நாவினையுடைய வராய்க் கேட்பனவற்றை யெல்லாம் கேட்டு முடித்த வேள்வி செய்தற்கியன்ற பார்ப்பனர்களை; மாடல மறையோன் சொல்லிய முறைமையின் வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி-அம் மாடல மறையோன் என்னும் அந்தணன் அறிவுறுத்த முறைமைப் படியே அழைத்து வேள்வியாகிய அமைதியினையுடைய விழாவை இயற்றும்படியாக ஏவிய பின்னர் என்க.
(விளக்கம்) நாவாகிய ஏரினை எனவும் செவியைச் செறுவாகக் கொண்டு எனவும் வான் பொருளாகிய விதையை எனவும் கூறிக் கொள்க. பெரும்பதம்-விதைக்கு ஆகுபெயர். பதம்-உணவு. மரபின் ஓதிநயம் தெரிந்த நா எனவும் கேள்வியைக் கேட்டு முடித்த எனவும் கூறிக் கொள்க. வேள்வி உயிர்க்கு அமைதி தருதற் பொருட்டாதலின் வேள்விச்சாந்தி என்றார். விழா-வேள்வி செய்யும் செயல்.
இதுவுமது
195-202: ஆரிய...........ஏவி
(இதன் பொருள்) ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி-கனக விசயரை உள்ளிட்ட வடவாரிய மன்னர்களையும் தப்புதற்கரிய சிறைக்கோட்டத்தினின்றும் விடுதலை செய்து அம் மன்னர்களுடைய தகுதிக்கேற்ப; பேர் இசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ் நீர் வேலித் தண் மலர்ப் பூம்பொழில் வேளாவிக்கோ மாளிகை காட்டி-பெரிய புகழையுடைய வஞ்சி நகரமாகிய தனது பழைய தலைநகரின் பக்கத்தே அமைந்த ஆழ்ந்த நீரையுடைய அகழியையும் குளிர்ந்த மலரையுடைய பூம்பொழில்களையும் உடைய வேளாவிக்கோமாளிகை என்னும் பெயரையுடைய மாடமாளிகையை அவ்வரசருக்கு உறையுனாகக் காட்டி அங்கிருக்கச் செய்து; நன் பெரு வேள்வி முடித்ததன் பின்னாள் தம் பெரு நெடுநகர் சார்வதுஞ்சொல்லி-தான் தொடங்கியிருக்கின்ற பெரிய வேள்விச் சாந்தியாகிய திருவிழாவைச் செய்து முடித்ததன் மறுநாள் அம் மன்னர்கள் தம்முடைய பெரிய நெடிய நகரங்களுக்குச் செல்லலாகும் என்பதனையும் அவர்களுக்குச் சொல்லி; நீ அம் மன்னவற்கு ஏற்பன செய்க என-நீ அக் கனக விசயர் முதலிய வட வாரிய மன்னவர்கள் தகுதிக் கேற்பனவாகிய உதவிகளைக் குறைவின்றிச் செய்வாயாக என்று சொல்லி; வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி-வில்லவன் கோதை என்னும் அமைச்சனை அக் காரியத்தின்கண் ஆர்வத்தோடே ஏவிவிட்டுப் பின்னர் என்க.
(விளக்கம்) இப் பகுதியின்கண் செங்குட்டுவனுடைய நெஞ்சம் மறநெறியைக் கைவிட்டு அறநெறியின்கண் ஊக்கத்தோடே செயற்படுதல் உணர்க. இவற்றில் ஆரிய அரசராகிய பகைவர்க்கும் பேரன்பு காட்டி அவரைச் சிறை வீடு செய்தலோடமையாது தான் எடுத்துள்ள வேள்வி விழா முடியுந்துணையும் அவரும் தன்னுடனிருந்து மகிழ்ந்து செல்ல வேண்டும் என்னும் கருத்தால் அவ்வாரிய மன்னருடைய தகுதிக்கேற்ற மாளிகையைக் காட்டச் செய்தலும் மேலும் அவர்க்கு ஏற்பனவெல்லாம் செய்யும் பொருட்டும் அமைச்சர்களுள் முதல்வனாகிய வில்லவன் கோதையையே ஆர்வத்துடன் ஏவுதலும் ஆகிய இச் செய்திகள் எத்துணை இன்பம் பயப்பனவாயுள்ளன உணர்மின்.
இதுவுமது
203-206: சிறையோர்.............ஏவி
(இதன் பொருள்) சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும் கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம் என-நம் நாட்டகத்திலுள்ள சிறைக் கோட்டங்களில் எல்லாம் சிறை செய்யப்பட்டுள்ள குற்றம் புரிந்தோர்களை யெல்லாம் விடுதலை செய்து விடுமின்! நம் நாட்டின்கண் இறைப்பொருள் கொடாமல் இருக்கின்ற நல்ல ஊர்க்குடி மக்களை யெல்லாம் அவ்விறைப்பொருள் செலுத்துதலினின்றும் விடுதலை செய்துவிடுங்கள் என்று அறிவித்து; அழும்பில் வேளோடு ஆயக்கணக்கரை முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி-அழும்பில் வேள் என்னும் அமைச்சனது தலைமையோடே இறைப்பொருள் கணக்குத் தொழிலாளரையும் சேர்த்து முழங்குகின்ற கடல் சூழ்ந்த பழைய ஊர்கள்தோறும் ஏவி விட்டு என்க.
(விளக்கம்) சிறையோர் கோட்டம்-சிறைக்கோட்டம். கறை- இறைப்பொருள். ஆயக்கணக்கர்-இறைப்பொருள் கணக்கை எழுதுபவர். மூதூர் என்றது தனதாட்சியின் கீழ்ப்பட்ட ஊர்களை.
இதுவுமது
207-217: அருந்திறல்...........களித்து
(இதன் பொருள்) அருந்திறல் அரசர் முறை செயினல்லது-வெல்லுதற்கரிய போராற்றல் மிக்க அரசர் அரியணையிலிருந்து செங்கோல் முறைப்படி ஆட்சி செய்தாலன்றி, பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை-பெரிய புகழையுடைய மகளிர்க்கும் கற்பறம் சிறந்து தோன்ற மாட்டாது என்று பண்டைக்காலத்தோர் கூறியருளிய குளிர்ந்த தமிழாலியன்ற அழகிய மொழியின் புகழை; பார் தொழுது ஏத்தும் பத்தினி-ஆகலின்-இவ்வுலகத்தோர் எல்லாம் கைகுவித்துத் தொழுது பாராட்டுகின்ற திருமா பத்தினியாகத் தான் இருத்தலாலே; ஆர்புனை சென்னி அரசற் களித்து-ஆத்தி மாலை சூடுகின்ற சென்னியையுடைய சோழ மன்னனுக்கு வழங்கி; செங்கோல் வளைய உயிர் வாழாமை தென்புலங்காவல் மன்னவற்கு அளித்து-தமது செங்கோல் சிறிது வளைந்தாலும் தாம் உயிர் வாழாப் பெருந்தகைமையாகிய புகழைத் தென்னாட்டரசனாகிய பாண்டியனுக்கு வழங்கி; வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வேந்தர் வெஞ்சினம் விளியார் என்பதை-தாம் கூறிய சூண்மொழி மெய்யாய விடத்தல்லது சிறிதும் சிறந்த குடியிற் பிறந்த அரசர் தமது வெவ்விய சினத்தை விடார், என்னும் புகழை; வடதிசை மருங்கின் மன்னவர் அறியக் குடதிசை வாழுங் கொற்றவற் களித்து-வடநாட்டின்கண் ஆட்சி செய்கின்ற ஆரிய மன்னர் நன்கு அறிதற்குக் காரணமான பெரும் புகழை மேற்றிசையின் கண்ணதாகிய சேர நாட்டின்கண் வாழுகின்ற வெற்றியை உடைய செங்குட்டுவனுக்கு வழங்கி என்க.
(விளக்கம்) அருந்திறல் அரசராகிய சோழ மன்னர் செங்கோன் முறைமையின் சிறந்திருந்தமையின் கண்ணகியைப் போன்ற பார் தொழு தேத்தும் பத்தினி அந் நாட்டில் தோன்றினள் என உலகம் புகழுமாதலின் கண்ணகி தனது பத்தினித் தன்மையால் அப் புகழைச் சோழனுக்கு அளித்தான் என்பது கருத்து. மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனின் இன்றால் என்பது மணிமேகலை(22: 208-9)
அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்
என்பது திருக்குறள்(543) எனவரும் இவற்றால் பண்டையோருரைத்த தண்டமிழ் நல்லுரை அங்ஙனமாதல் உணர்க. தென்புலங் காவல் மன்னவன்-நெடுஞ்செழியன். விளியார்-கெடார். சினம் தணியார் என்றவாறு. குடதிசை வாழும் கொற்றவன்-செங்குட்டுவன்.
218: 221: மதுரை.........நங்கையை
(இதன் பொருள்) மதுரை மூதூர் மாநகர் கேடுற-மதுரையாகிய மிகப் பழைய பெரிய நகரம் அழியும்படி: கொதி அழல் சீற்றம் கொங்கையினின்றும் தோற்றுவித்து; நல் காடு அணைந்து நளிர்சினை வேங்கை-நல்ல தனது நாட்டிற்குத் தானே வந்து செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தினது பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை-பொன் போன்ற மலர்ந்த அழகையுடைய புதிய நிழலின்கண் நின்ற திருமா பத்தினியாகிய கண்ணகித் தெய்வத்தை என்க.
(விளக்கம்) கொதி அழலைத் தனது சீற்றத்தால் தன் கொங்கையினின்றும் விளைத்து என்க, அத்தகைய பத்தினித் தெய்வம் தானே தன்பால் வருதற்குக் காரணமான நன்மையை உடைய தன் நாட்டை அடைந்து என்றவாறு. பொன்போல் மலர்ந்து அழகியதாகிய வேங்கையின் புது நிழல் எனினுமாம். புதிதாகத் தளிர்த்து மலர்ந்து நிழல் தருதலின் புது நிழல் என்றார்.
செங்குட்டுவன் பத்தினிப் படிமத்திற்குக் கடவுள் மங்கலம் செய்வித்தல்
222-234: அறக்கள........ஏறென்
(இதன் பொருள்) அறக்களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று-அறக்கள வேள்வி செய்த அந்தணர்களோடும் தன் நல்லாசிரியனோடும் பெரிய கணிவனோடும் பத்தினிப் படிமமும் திருக்கோயிலும் அமைத்த தம் தொழிலிற் சிறப்பு மிக்க கம்மியரோடும் சென்று; மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து-உயர்ந்தோர் விரும்புகின்ற சிற்ப நூல் நெறியினை அறிந்த அச் சிறப்புடைக் கம்மியர் கோயிலுக்குரிய கூறுபாடுகள் எல்லாம் அமையும்படி இயற்றிய அத் திருமா பத்தினித்தெய்வத்திற்குரிய கோவிலின்கண்; வடதிசை வணங்கிய மன்னவர் ஏறு-தென்தமிழாற்றல் அறியாது இகழ்ந்த வடபுலத்து மன்னர்களை வென்று வணங்கும்படி செய்த அரசர்களுள் வைத்து அரிமான் ஏறு போன்றவனாகிய செங்குட்டுவன் முற்பட; இமையவர் உறையும் இமையச் செவ்வரைச் சிமையச்சென்னித் தெய்வம் பரசி-தேவர்கள் உறைதற்கிடனான இமயமலையின் கண் செங்குத்தான குவட்டின் உச்சியில் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபாடு செய்து பின்னர்; கைவினை முற்றிய தெய்வப் படிமத்து-செய்ய வேண்டிய செய்கை யெல்லாம் செய்து முடிக்கப்பட்ட கண்ணகியினது தெய்வத் திருவுருவத்தின்கண்; வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து முற்று இழை நல்கலம் முழுவதும் பூட்டி-அணிகலன் செய்யும் தொழிலின்கண் வித்தகமுடையோரால் இயற்றப்பட்ட விளங்கிய அழகோடு கூடிய தொழில் திறம் முற்றிய இழைகளாகிய நல்ல அணிகலன் முழுவதையும் அணிவித்து; பூப்பலி செய்து-மலர்தூவி வழிபாடு செய்து; காப்புக்கடை நிறுத்தி-காவல் தெய்வங்களையும் கடை வாயிலின்கண் நிறுத்தி; நாள்தோறும் வேள்வியும் விழாவும் வகுத்து-நாள்தோறும் அத் தெய்வத்திற்கு வேள்வி விழாவும் திருவிழாவும் நடைபெறுமாறு அவற்றிற்குரிய வழிகளையும் வகுத்து; கடவுள் மங்கலம் செய்க என ஏவினன்-பத்தினிக் கடவுளையும் அப் படிமத்திலே நிறுத்தும்படி அத் தெழிலுக் குரிய அந்தணர் முதலியோரைப் பணித்தருளினன் என்பதாம்.
(விளக்கம்) அறக்களத்து அந்தணர் என்றது முன்னர் (194) வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவிய அந்தணரை. ஆசான் தன்னுடைய பேராசிரியன். கணி-முன்பு காட்சிக் காதையில் கூறப்பட்ட கணிவன். கம்மியர்-சிற்பியர்; கோட்டமும் படிமமும் சமைத்தவர். தான் வழிபடும் தெய்வமாதலின் இமையத்துச்சியில் உறையும் தெய்வமாகிய சிவபெருமானை முற்பட வழிபாடு செய்வித்தனன் என்க. காப்புக்கடை நிறுத்துதல்-மந்திர விதியால் காவல் தெய்வங்களை வாயிலின்கண் நிறுத்துதல். கடவுள் மங்கலம் செய்தல்-கண்ணகித் தெய்வத்தைப் படிமத்தில் மந்திர விதியால் நிறுத்துதல்.
பா. நிலைமண்டில ஆசிரியப்பா
நடுகற் காதை முற்றிற்று.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |