இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


நலச்சங்க வெண்குழை

நலச்சங்க வெண்குழை


பதிக எண்: 2.55 - திருத்தலைச்சங்காடு - காந்தாரம்

பின்னணி:


தனது இரண்டாவது தலையாத்திரையை நனிபள்ளி (தற்போது கிடாரம் கொண்டான் என்று அழைக்கப்படுகின்றது) தலத்தில் ஞானசம்பந்தர் தொடங்குகின்றார். இந்த தலத்தில் சம்பந்தர் இருந்த போது, அருகிலுள்ள தலைச்சங்காடு எனப்படும் தலத்தைச் சார்ந்த அந்தணர்கள் இந்த தலம் வந்தடைந்து, சம்பந்தரை தங்களது ஊருக்கு வருமாறு அழைத்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கிய சம்பந்தரும் அவர்களுடன் தலைச்சங்காடு சென்றார். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஊரார் சம்பந்தரை வரவேற்றனர் என்று குறிப்பிடும் பெரிய புராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டிப்

பூவணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி

ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை

மா அணை மலர் மென் சோலை வளம்பதி கொண்டு புக்கார்

இந்நாளில் தலச்சங்காடு என்று அழைக்கப்படும் இந்த தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை தலத்திற்கு 22 கி.மீ. கிழக்கிலும் திருக்கடவூர் தலத்திற்கு எட்டு கி.மீ. வடக்கிலும் உள்ள தலம். மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகள் இந்த தலம் வழியாக செல்கின்றன. சங்குப் பூக்கள் அதிகமாக பூத்து காணப்படுவதால் சங்காரண்யம் என்ற பெயர் வந்து என்று கூறுவார்கள். மாடக்கோயில் அமைப்பில் கோச்செங்கச் சோழனால் கட்டப்பட்ட திருக்கோயில். சுயம்பு மூர்த்தம். மூலவரை நல்லெண்ணையால் அபிடேகம் செய்து விளக்கொளியில் பார்த்தால் இலிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரிவது இந்த கோயிலின் சிறப்பம்சம். கோயிலின் அமைப்பு சங்கு வடிவத்தில் உள்ளது. சிவபெருமானின் சன்னதிக்கும் பார்வதி தேவியின் சன்னதிக்கும் இடையில் முருகனின் சன்னதி, சோமாஸ்கந்த மூர்த்தத்தின் அமைப்பில் அமைந்துள்ளது. பெருமானை வழிபாட்டு திருமால் பாஞ்சஜன்யம் சங்கினைப் பெற்றார் என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது. திருமாலுக்கும் தனி சன்னதி இந்த தலத்தில் உள்ளது. இறைவனின் திருநாமம் சங்காரண்யேஸ்வரர்; தேவியின் பெயர் சவுந்தர நாயகி. இந்த தலம், தலைச்சங்கை என்று சம்பந்தரால் இந்த பதிகத்தில் குறிப்பிடப்படுகின்றது. சோழ நாட்டு தலங்களில் பஞ்சாரண்யத தலங்கள் என்று சொல்லப்படும் வரிசையில் இந்த தலமும் உள்ளது. சங்காரண்யம் என்று இந்த தலம் குறிப்பிடப்படுகின்றது. மற்ற தலங்கள், வேதாரண்யம் (திருமறைக்காடு) சுவேதாரண்யம் (திருவெண்காடு) வடவாரண்யம் (திருவாலங்காடு), வில்வாரண்யம் (கொட்டையூர்). இங்கே குறிப்பிடப்படும் ஆலங்காடு, தென் திருவாலங்காடு என்று அழைக்கப்படும் தலமாகும்.

அப்பர் பெருமானும் காடு என்று முடியும் தலங்களைத் தொகுத்து ஒரு பாடலில் கூறுகின்றார். தனது அடைவுத் திருத்தாண்டகம் எனும் பதிகத்தில் காடு என முடியும் தலங்களை குறிப்பிடும் அப்பர் பிரான் இந்த தலத்தையும் கூறுகிறார். பனங்காடு என்பது வைப்புத் தலமாகும்

மலையார் தம் மகளோடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு

தலையாலங்காடு தடம் கடல்சூழ் அந்தண் சாய்க்காடு தள்ளுபுனல் கொள்ளிக்காடு

பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க

விலையாடும் வளைதிளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறாம் அன்றே

பாடல் 1:

நலச்சங்க வெண்குழையும் (2.055) பாடல் 1 (திதே 0026)

நலச்சங்க வெண்குழையும் (2.055) பாடல் 1 தொடர்ச்சி (திதே 0027)

நலச்சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால்வேதம்

சொலச் சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்

குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர்கொள் சோலைக் குயில் ஆலும்

தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகக் கொண்டீரே

விளக்கம்:

நலம்=அழகு; சங்கை=ஐயம், சந்தேகம்; கமுகின் காய்கள் செம்மை நிறத்தில் இருப்பதால், செங்காய் பைங்கமுகு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்தல்=இறங்கி வருதல்; நிலவுலகத்து மனிதர்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் பெருமான் நிலவுலகம் வந்து பல தலங்களிலும் எழுந்தருளி இருக்கும் நிலையினை, தாழ்ந்தீர் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிட்டார் போலும். திருமாலுக்கு சங்கு அளித்து அருள் புரிந்த தலத்து இறைவனை அழகிய சங்கு என்ற பொருள் தரும் தொடருடன் தொடங்குவது மிகவும் பொருத்தமாக உள்ளது. பெய்து=அணிந்து; தோடும் குழையும் அணிந்தவர் என்று பெருமானை குறிப்பிட்டு அவர் மாதொரு பாகனாக உள்ள நிலையினை சம்பந்தர இந்த பாடலில் உணர்த்துகின்றார். இவ்வாறு அவர் உணர்த்தும் ஒரு சில பாடல்களை நாம் இங்கே காண்போம்.

புகலி தலத்தின் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது பதிகத்தின் பாடலில் (1.30.5) தனது காதுகளில் குழையும் தோடும் அணிந்தவனாக பெருமான் காணப் படுகின்றான் என்று சம்பந்தர் கூறுகின்றார். கனபொற்குழை=எடை மிகுந்த பெரிய பொற்குழை; தாதார்=மகரந்தப் பொடிகள் பொருந்திய, தேனைத் தேடி வரும் வண்டுகள் சுவைப்பதற்கு முன்னர் பறிக்கப்பட்ட மலர்கள்; குழையும் தோடும் அணிந்துள்ள பெருமான், மகரந்த பொடிகள் நிறைந்த மலர்களை தனது குளிர்ந்த சடையில், கங்கை நதியினை அடக்கியதால் குளிர்ந்த சடையில், சூடியவனாக, தனது சடையினை தூக்கி முடிந்த நிலையில் காட்சி அளிக்கின்றான் என்று கூறுகின்றார். நாதன் என்ற சொல் எதுகை கருதி நாதான் என்று நீண்டது. அவன் அனைத்து உயிர்களுக்கும் நாதனகத் திகழ்கின்றான் என்றும் சம்பந்தர் இங்கே கூறுகின்றார். போது=மலர்கள்

காதார் கனபொற் குழை தோடது இலங்க

தாதார் மலர் தண் சடை ஏற முடித்து

நாதான் உறையும் இடமாவது நாளும்

போதார் பொழில் பூம்புகலி நகர் தானே

குரங்கணில்முட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.31.4) சம்பந்தர் இறைவனை தோடார் குழையான் என்று அழைக்கின்றார். இதன் மூலம் இடது காதினில் தோடும் வலது காதினில் குழையும் அணிந்த பெருமான் என்பது உணர்த்தப் படுகின்றது. பாலனம்=காப்பாற்றுதல்; தனது அடியார்களை நன்கு காப்பாற்றும் பெருமான் என்றும் காக்கும் தொழிலைப் புரிபவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமாக உள்ளன. கூடாதன செய்த என்ற தொடர் மூலம் மற்றவர்கள் செய்ய முடியாத பல அரிய செயல்கள் செய்த பெருமான் என்று நமக்கு சம்பந்தர் உணர்த்துகின்றார்.

வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில்

தோடார் குழையான் நல்ல பாலன நோக்கி

கூடாதன செய்த குரங்கணின்முட்டம்

ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே

கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.103.1) ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் தூய குழையும் அணிந்தவன் என்றும் குழை ஆபரணம் தாழ்ந்து தொங்குகின்றது என்று சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். ஏடு உடையான்=தாமரை மலரினை தனது இருப்பிடமாக கொண்டுள்ள பிரமன்; பல நாடுகளும் சென்று பெருமான் பலி ஏற்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம் இரந்து உண்ணும் நாடுடையான் என்று கூறுகின்றார். ஏமம்=ஜாமம்;

தோடுடையான் ஒரு காதில் தூய குழை தாழ

ஏடுடையான் தலை கலனாக இரந்துண்ணும்

நாடுடையான் நள்ளிருள் ஏமம் நடமாடும்

காடுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் (1.61.8), ஞான சம்பந்தர் இறைவனை தோடுடையான் குழையுடையான் என்று குறிப்பிடுகின்றார். சேர்ந்தாடும் என்று பேய்களுடன் இணைந்து நடனம் ஆடுவதை இங்கே சம்பந்தர் கூறுகின்றார். காட்டில் உறைபவனாக இருந்தாலும், பல நாடுகளிலும் உள்ள கோயில்களில் இறைவன் குடி கொண்டு இருப்பதால், சம்பந்தர் நாடுடையான் என்றும் இறைவனை அழைக்கின்றார். பீடு=பெருமை. எவராலும் வெல்ல முடியாதவனாக, செருக்குடன் திரிந்த அரக்கன் இராவணனின் வலிமையை முதலில் அடக்கிய பெருமை உடையவன் எனபதால், அரக்கன் தோளடர்த்த பீடு உடையான் என்று கூறுகின்றார்.

தோடுடையான் குழை உடையான் அரக்கன் தன் தோள் அடர்த்த

பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிகப் பெரியான்

சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்தாடும்

காடு உடையான் நாடு உடையான் கனபதீச்சரத்தானே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.113.6) சம்பந்தர் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பீடு=பெருமை; கோடு=பெரிய கிளைகள்;

தோடு இலங்கும் குழைக் காதர் தேவர் சுரும்பார் மலர்

பீடு இலங்கும் சடைப் பெருமையாளர்க்கு இடமாவது

கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்கப் பெரும் செந்நெலின்

காடு இலங்கும் வயல் பயிலும் அந்தண் கடற் காழியே

தனது தலையினை இடறித் தள்ளும் நோக்கத்ததுடன் மதயானை தன் மீது ஏவப்பட்ட நிலையிலும் மனம் கலங்காது பெருமானின் திருவுருவத்தை தனது மனதில் தியானித்து வந்த அப்பர் பிரானுக்கு பெருமான் உடுத்தியிருந்த புலித்தோலும் அவர் அணிந்திருந்த தோடு மற்றும் குழை ஆபரணங்களும் நினைவுக்கு வந்தன. இதனை உணர்த்தும் பாடலை (4.2.7) நாம் இங்கே காண்போம்.

கொலை வரி வேங்கை அதளும் குவவோடு இலங்கு பொன் தோடும்

விலை பெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்

மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும்

உலவு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுபதிகத்தின் கடைப்பாடலில் (4.8.10) தோடும் சங்கக்குழையும் அணிந்தவனாக பெருமானை அப்பர் பிரான் காண்கின்றார். இந்த பாடலில் நாம் வேறெங்கும் காண முடியாத காட்சியை நமது கண் முன்னே அப்பர் பிரான் கொண்டு வருகின்றார். இறைவன் வேதங்கள் ஓதுவதையும் நடனம் ஆடுவதையும், மிகவும் அருகில் இருந்து எப்போதும் ரசிப்பவள் உமையம்மை. மாதொருபாகனாக இருக்கும் பெருமானின் திருவாயின் வலது பகுதி வேதத்தை சொல்வதாகவும், இடது பகுதி அந்த வேதத்தை கேட்டு ரசித்தபடியே புன்முறுவல் செய்வதாகவும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். ஓலை=தோடு; புதுவிரி பொன் செய் ஓலை=ஒளியை பரப்பிக் கொண்டு இருக்கும் புதியதாக செய்யப்பட்ட பொன் தோடு.

புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஓர் காது சுரி சங்கு நின்று புரள

விதி விதி வேத கீதம் ஒருபாடும் ஓதம் ஒருபாடும் மெல்ல நகுமால்

மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்

இது இவர் வண்ணம் வண்ணம் இவள் வண்ணம் வண்ணம் எழில் வண்ணம் வண்ணம் இயல்பே

புதிய சுருள் பொன்னால் செய்யப்பட்ட தோட்டினை ஒரு காதிலும், மற்றோர் காதினில் வளைந்த சங்கு தோளில் புரளும் படியாக அணிந்துள்ள பெருமானின், திருவாயின் ஒரு பகுதி வேத கீதங்களைப் பாட, திருவாயின் மற்றொரு பகுதி பெருமான் பாடும் வேத கீதத்தை ரசித்தபடியே புன்முறுவல் பூக்கின்றது. சடையாக காணப்படும் வலது பகுதியில், தேன் சொட்டும் கொன்றை மலர் விரிந்த படியே இருக்க, இடது பகுதியில் உள்ள கூந்தல் பின்னப்பட்டு அழகாக காணப்படுகின்றது, இவ்வாறு பெருமானின் தன்மையும் இயல்புகளும் ஒரு புறத்திலும் மற்றோர் புறத்தில் உமை அம்மையின் தன்மையும் இயல்புகளும் காணப்பட்டன என்று மேற்கண்ட பாடலில் அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். .

வாய்மூர் தலத்திற்கு அப்பர் பிரான் சென்றபோது அவருக்கு, சிவபெருமான் தனது நடனக்காட்சியை காட்டி அருளினார். அந்த நடனக் காட்சியை, பாட அடியார் பரவக் கண்டேன் என்று தொடங்கும் திருத்தாண்டகத்தில் (6.77) அப்பர் பிரான் நமக்காக வடித்து இருக்கின்றார். இந்த பதிகத்தின் ஏழாவது பாடலில், சிவபெருமானின் காதினில் தோடும் குழையும் கண்டதாக அப்பர் பிரான் சொல்கின்றார்.

குழையார் திருத்தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்

இழையார் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன்

தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்

மழையார் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

பாண்டி நாட்டில் பூவணம் திருத்தலம் அப்பர் பிரான் சென்றபோது, பெருமான் அவருக்குத் தனது திருக்கோலத்தைக் காட்டினார். அதனைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் தான் கண்ட காட்சியை பதிகமாக வடித்தார். அந்த பதிகத்தின் (6.18) முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு காதினில் வெண் குழையையும், மற்றொரு காதினில் தோட்டினையும் அணிந்து பெருமான் அளித்த காட்சியை காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்

கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும்

இடியேறு களிற்று உரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்

பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.42.5) சுந்தரர் வெண் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு அவரது காதில் இருந்த குழையணி அசைந்தது என்று கூறுகின்றார். குழைக்கும் தோட்டினுக்கும் உள்ள அமைப்பு வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம், துளை உடைய குழை என்று இங்கே கூறுகின்றார். பெருமானின் காதுகள் நீண்டு, அவரது தோள்களைத் தொட்ட நிலையினை தூங்கும் காது என்று உணர்த்துகின்றார். கள்ளையே, பிள்ளை, வெள்ளை என்ற சொற்கள் எதுகை கருதி களையே, பிளை, வெளை என்று இடையெழுத்து குறைந்து காணப் படுகின்றன. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், இறைவன் தனது சீரிய அடியார்களுள் ஒருவனாக தன்னையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தினை வைக்கின்றார்.

துளை வெண் குழையும் சுருள் தோடும் தூங்கும் காதில் துளங்கும் படியாய்

களையே கமழும் மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே

பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுதற்கு அரியாய்

வெளை மால்விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே

கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.84) ஒன்பதாவது பாடலில் சுந்தரர், இறைவனை, மகரக் குழையும் தோடும் அணிந்த காதுகளை உடையவனாக காண்கின்றார். இறைவன் தூது சென்றதையும், தன்னை ஆட்கொண்டதையும், தான் இறைவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டு தனது வாழ்க்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் கூறும் நேர்த்தியை நாம் இங்கே காணலாம். மாதினை ஒரு பாகம் கொண்டுள்ள சிவபிரானை மாதன் என்று அழைக்கின்றார். இறைவனின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து தான், நாதமும் பின்னர் ஓசையும் பிறந்த செய்தியை இங்கே நாதனும் நாதம் மிகுத்து ஓசையது ஆனவன் என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அடியார்கள் உள்ளத்தின் மீது தான் வைத்துள்ள பற்றினை சிறிது நேரம் கூட நீக்காத இறைவன் என்று குறிப்பிட்டு, சிறந்த அடியார்கள் பெரும் பேற்றினையும் நமக்கு உணர்த்துகின்றார்..

நாதனை நாதம் மிகுத்து ஓசை அது ஆனானை ஞான விளக்கொளியாம்ஊனுயிரைப் பயிரை

மாதனை மேதகு பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்

தூதனை என்றனை ஆள் தோழனை நாயகனைத் தாழ் மகரக் குழையும் தோடும் அணிந்த திருக்

காதனை நாயடியேன் எய்துவது என்று கொலோ கார்வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே

மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைந்து குறிப்பிடப்படும் இனிமையான பாடல்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்

பால் வெள்ளை நீரும் பசும் சாந்தும் பைங்கிளியும்

சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை

கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

இந்த கோலத்தைக் கண்டு மணிவாசகர் மனம் குளிர்ந்தது போன்று, நம்பியாண்டார் நம்பி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் இந்த பழமையான கோலத்தை எவ்வாறு தாங்கள் கண்டனர் என்பதை கீழ்க்கண்ட பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன.

கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் இருபத்தோராவது பாடலில் நம்பியாண்டார் நம்பி, இறைவனை, வலது காதில் குழையும் இடது காதில் தோடும் அணிந்தவனாக காண்கின்றார். கோஷன் என்ற சொல்லின் திரிபு கோடன்: விசயனுடன் போர் செய்வதற்காக ஆரவாரத்துடன் வந்த சிவபெருமான் கோஷன் என்று அழைக்கப் படுகின்றார். சிவபிரான் பேரில் காதல் கொண்டு, அதன் காரணமாக உடல் மெலிந்து தனது கை வளையல்களை இழந்த தலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தோடு அணிந்த காது, இடது காது என்று குறிப்பிட்ட அம்மைக்கு உரிய பகுதியில் தோடு அணிந்து இருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார்.

வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்று அளித்த

கோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்ட

தோடன் என்றாள் தொகு சீர் தில்லையம்பலத்து ஆடுகின்ற

சேடன் என்றாள் மங்கை அங்கை சரி வளை சிந்தினவே

மேற்கண்ட பாடலில் தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிட்டு, மாதொரு பாகனின் நிலையை உணர்த்தியதுடன் நம்பியார் திருப்தி அடையவில்லை போலும். இதே பதிகத்தின் ஐம்பதாவது பாடலில் மிகவும் விவரமாக, இறைவனின் வலது பாகத்தில் உள்ள பொருட்களையும் இடது பாகத்தில் உள்ள பொருட்களையும் பட்டியல் இடுகின்றார். இடம் என்ற சொல், இடது பாகம் மற்றும் இருக்கும் இடம் என்ற இரண்டு பொருட்களில் இந்த பாடலில் கையாளப் பட்டுள்ளது. வீ=பூச்செண்டு: பாந்தள்=பாம்பு; சங்கம்=வெண் சங்கால் அமைந்த வளையல்: அக்கு=எலும்பு மாலை: அங்கம்சரி=அங்கு+அம்+சரி: அங்கு, பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்: அம் சரி=அழகாக சரிந்த இடுப்பு. கங்கை, குண்டலம், மழு ஆயுதம், பாம்பு, தோலாடை, அக்கு மாலை, ஆகியவை அம்பலவனை உணர்த்தும் பொருட்களாகவும் தோடு, பூச்செண்டு, சங்கு வளையல், சேலை ஆடை, அழகாக சரிந்த இடுப்பு ஆகியவை அணங்கினை உணர்த்தும் பொருட்களாகவும் இன்கே குறிப்பிடப் பட்டுள்ளன.

கங்கை இடம் வலம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்

தங்கும் கரம் வலம் வெம்மழு வீயிடம் பாந்தள் வலம்

சங்கம் இடம் வலம் தோல் இடம் வலம் அக்கு இடம்

அங்கம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே

சேரமான் பெருமாள் நாயனாரும் தான் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் அறுபத்து ஐந்தாவது பாடலில் மாதொரு பாகனின் கோலத்தை விவரிக்கின்றார் வலது பகுதியில் வீரக்கழல், பாம்பு, திருநீறு, எரி, எலும்பு மாலை, மூவிலை வேல் நீரினைத் தாங்கிய சடை முதலியன பெருமானது வலது பக்கத்திலும், இடது பகுதியில் பாடகம். மேகலை, சாந்து, பந்து, மலர் மாலை, மோதிரம், முதலியன பெருமானது இடது பக்கத்திலும் இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது.

வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடம்

மேகலம் தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு

அலர்ந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்

சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே

பொழிப்புரை:

சங்கினால் செய்யப்பட்ட அழகிய வெண் குழையினையும் தோட்டினையும் தனது காதுகளில் அணிந்துள்ள பெருமானே, ஒப்பற்ற நான்கு வேதங்களையும் ஐயம் ஏதும் ஏற்படாத வண்ணம் அருளிய பெருமானே, சுடுகாட்டினை தவிர்த்து வேறு எந்த இடத்தினையும் தான் நடனம் ஆடுவதற்கு பொருத்தமான இடமாக கருதாமல் இருப்பவரே, நீர் உலகத்து உயிர்களுக்கு அருள் புரியும் பொருட்டு, சிவந்த வண்ணம் கொண்டு குலை குலையாக காய்க்கும் பசுமையான கமுகு மரங்கள் நிறைந்த சோலைகளில் குயில்கள் பாடும் சிறப்பினை பெற்றுள்ள தலைச்சங்கை திருக்கோயிலை, உமது இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளி உள்ளீர்.

பாடல் 2:

நலச்சங்க வெண்குழையும் (2.55) பாடல்கள் 2,3, 4,5,6,7 (திதே 0028)

துணி மல்கு கோவணமும் தோலும் காட்டித் தொண்டு ஆண்டீர்

மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பானீர்

பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச் சங்கை

அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே

விளக்கம்:

மல்கு=நிறைந்த; கண்டம்=கழுத்து; அண்டர்=தேவர்கள்; மாண்பு=மாட்சிமை, பெருமை; அணி=அழகு; கோவணத்தையும் தோல் ஆடையினையும் அணிந்த பெருமானின் எளிய திருக்கோலம் மிகவும் கவர்ந்தது போலும். அந்த எளிமையான கோலத்தினை காட்டி, தன்னை ஆட்கொண்டவர் என்று கூறுகின்றார். அந்தணர்கள் சம்பந்தரை இந்த தலத்திற்கு வரவேற்றனர் என்பதையும் தங்களது ஊருக்கு வந்தவரை பூரண கும்பம் கொடுத்து சிறப்பான முறையில் வரவேற்றனர் என்பதையும் நாம் இந்த பதிகத்தின் பின்னணியில் கண்டோம். அத்தகைய அந்தணர்கள் ஒழுக்கத்தில் சிறப்புடன் விளங்கினார்கள் என்பதை உணர்த்தும் பொருட்டு, பெரியோர் என்று அவர்களை குறிப்பிடுகின்றார். .

பொழிப்புரை:

தேவர்களால் பெருமை உடையவனாக கருதப்படும் சிறப்பினை பெற்றிருந்த போதிலும் துணியிலான கோவணத்தையும் தோல் ஆடையினை அணிந்து எளிமையான தோற்றத்துடன் இருக்கும் பெருமானே, உனது இந்த எளிமையான கோலம் அடியேனை மிகவும் கவரவே, அடியேன் உமக்கு அடிமையாக மாறிவிட்டேன்; அவ்வாறு உமக்கு அடிமையாக என்னை மாற்றி ஆட்கொண்ட பெருமானே, சிறப்பு வாய்ந்த நீல மணி பதிக்கப் பட்டது போன்ற, ஆலகால விடத்தை தேக்கியதால் கருமை நிறத்துடன் காணப்படும் கழுத்தினை உடையவனே, பூணூல் பொருந்திய மார்பினை உடையவர்களாக, பெரியோர்களாக, கருதப்படும் அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தில் உள்ள அழகு வாய்ந்த கோயிலையே உமது கோயிலாகக் கொண்டு நீர் எழுந்தருளியுள்ளீர்.

பாடல் 3:

நலச்சங்க வெண்குழையும் (2.55) பாடல்கள் 2,3, 4,5,6,7 (திதே 0028)

சீர் கொண்ட பாடலீர் செங்கண் வெள்ளேற்று ஊர்தியீர்

நீர் கொண்டும் பூக் கொண்டு நீங்காத் தொண்டர் நின்று ஏத்தத்

தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும் தலைச் சங்கை

ஏர் கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே

விளக்கம்:

சீர்=சிறப்பு; தக்கோர்=தகுந்த பெருமையினை உடையவர்கள்; ஏர்=அழகு; பெருமானிடம் சங்கினைப் பெற்ற திருமாலுக்கும் இந்த கோயிலில் ஒரு சன்னதி உள்ளது. அந்த சன்னதியைக் கண்ட சம்பந்தருக்கு, திரிபுரத்து அரக்கர்களுடன் போரிட பெருமான் சென்ற போது, திருமால் காளை வாகனமாக மாறி பெருமானை தனது முதுகின் மேல் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடுகின்றார். திருமால் சிவந்த கண்களை உடையவர் என்பதால் செங்கண் மால் என்று பல தேவாரப் பதிகங்களிலும் திவ்ய பிரபந்த பாசுரங்களிலும் குறிப்பிடப் படுகின்றார். தார்=மாலை;

பொழிப்புரை:

சிறப்பு மிகுந்த வேத கீதங்களை பாடுபவரே, திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்ற தருணத்தில் தேரின் அச்சு முறிந்த சமயத்தில் சிவந்த கண்களை உடைய திருமாலைத் தனது எருது வாகனமாக ஏற்றவனே, நீரும் மலரும் ஏந்தி வரும் தொண்டர்களால் இடைவிடாது வழிபடப்படும் பெருமையை உடையவனே, மாலையும் பூணூலையும் அணிந்து சிறந்த தகுதியை உடையவர்களாக அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தினில் உள்ள அழகு பொருந்திய கோயிலை, நீர் உமது கோயிலாகக் கொண்டு எழுந்தருளி உள்ளீர்.

பாடல் 4:

நலச்சங்க வெண்குழையும் (2.55) பாடல்கள் 2,3, 4,5,6,7 (திதே 0028)

வேடம் சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண் திங்கள்

ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச் சங்கை

கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும்

மாடம் சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

தனது அடியார்களுக்கு அருளும் பொருட்டு, அந்தந்த நிலைக்கு ஏற்ற வண்ணம், பல விதமான வேடங்களை எடுப்பவர் பெருமான். வேடனாக வந்து அர்ஜுனனுடன் போரிட்டு அவனுக்கு பெருமான் பாசுபதம் அருளிய நிகழ்ச்சி பல தேவாரப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. தனது அடியார்களின் தன்மையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் அந்தணனாக பைரவனாக முதியவராக பெருமான் வந்ததை நாம் பெரிய புராணத்தில் பல அடியார்களின் சரித்திரத்தில் காண்கின்றோம். நடக்கவிருந்த திருமணத்தினை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் ஓலை கொண்டு வந்த முதியவராகவும், திருவதிகை சித்த மடத்தில் தனது காலினை சுந்தரரின் முகத்தில் இருமுறை படுமாறு வைத்து திருவடி தீட்சை அருளிய முதியவராகவும், குருகாவூர் செல்லும் வழியில் தயிர் சாதமும் குடிநீரும் வைத்துக் கொண்டு காத்திருந்த முதியவராகவும், திருமுதுகுன்றம் செல்லவிருந்த சுந்தரரை தடுத்து கூடலையாற்றூர் அழைத்துச் சென்ற முதியவராகவும், திருக்கச்சூர் தலத்தில் உள்ள பல இல்லங்களில் நடுப்பகலில் சென்று இரந்து அமுது கொண்டு வந்து ஈந்த அந்தணராகவும் பெருமான் காட்சியளித்த போதும், அவ்வாறு வந்து அருள் புரிந்தவர் பெருமான் தான் என்பதை சுந்தரர் முதலில் உணரவில்லை. திருப்பைஞ்ஞீலி சென்று கொண்டிருந்த அப்பர் பிரானுக்கு பொதி சோறு அளிக்கும் பொருட்டு அந்தணராக வந்தவரும் பெருமான் தானே. இந்த தன்மையே பெருமானின் கொள்கை என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது.

ஓடம்=வளைந்து காணப்படும் ஒற்றை பிறைச் சந்திரன் ஓடம் போன்று இருப்பதால், கங்கை நதியில் ஓடும் ஓடம் என்று பிறைச் சந்திரனை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருஞான சம்பந்தருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளித்த தலைச்சங்கை மக்கள், வீடுகளையும் தெருக்களையும் மிகவும் அழகாக அலங்கரித்தனர் என்பதை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடும் பாடலை நாம் முன்னர் கண்டோம். அந்த அழகினைத் தான் சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. குலாய=பொருந்திய;

பொழிப்புரை:

மிகுந்த விருப்பத்துடன் தானே பல வேடங்கள் தரித்து அடியார்களை நெருங்கி அவர்களுக்கு அருள் புரிவதை தனது கொள்கையாக கொண்டவரே, ஓடம் போன்று காட்சி அளிக்கும் நீண்ட ஒற்றை பிறைச் சந்திரனை, கங்கை நதியுடன் தனது தலையின் உச்சியில் வைத்தவரே, கூடம் மண்டபம் வீடுகளின் மாடங்கள் முதலியன அழகாக விளங்கும் கொடிகளுடன் காணப்படும் தலைச்சங்கை தலத்தில் உள்ள திருக்கோயிலை உமது இருப்பிடமாக நீர் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர்.

பாடல் 5:

நலச்சங்க வெண்குழையும் (2.55) பாடல்கள் 2,3, 4,5,6,7 (திதே 0028)

சூலம் சேர் கையினீர் சுண்ண வெண்ணீறு ஆடலீர்

நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர்

ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச் சங்கை

கோலம் சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே

விளக்கம்:

ஆலம்=நீர்; கோலம்=அழகு; மன்னும்=பொருந்தும்;

பொழிப்புரை:

மூவிலை வேல் சூலம் ஏந்திய கையினை உடையவரே, திருநீற்றுப் பொடியினால் அபிஷேகம் செய்து கொண்டு மகிழ்பவரே, கொடிய ஆலகால விடத்தை தேக்கியதால் நீல நிறம் கொண்ட கழுத்தினை உடையவரே, நீண்ட சடையினில் கங்கை நீரினை தேக்கி அடக்கியவரே, நீர் வளம் மிகுந்து காணப்படுவதால் அன்னங்கள் பொருந்தி வாழும் சோலைகள் உடைய தலைச்சங்கை தலத்தில் உள்ள அழகிய கோயிலை நீர் உறையும் திருக்கோயிலாக கொண்டுள்ளீர்.

பாடல் 6:

நலச்சங்க வெண்குழையும் (2.55) பாடல்கள் 2,3,4,5,6,7 (திதே 0028)

நில நீரொடு ஆகாசம் அனல் காலாகி நின்று ஐந்து

புலன் நீர்மை புறம் கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார்

சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை

நல நீர கோயிலே கோயிலாக நயந்தீரே

விளக்கம்:

கால்=காற்று; நீர்மை=தன்மை; புறம் கண்டவர்=போரினால் தோற்கடித்து புறம் கண்டவர், வென்றவர்; பொக்கம்=பொய், வஞ்சகம்; போற்று=புகழ்ந்து பாடுதல்; ஓவார்=நீங்காது தொண்டர்ந்து செய்வார்; சலம்=மாறுபாடு; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வஞ்சகர்; நீதர்=இழிந்தவர்; நலநீர=அழகிய தன்மை உடைய; நயத்தல்=மனம் நெகிழ்ந்து விரும்புதல்;

பொழிப்புரை:

நிலம் நீர் ஆகாயம் அனல் காற்று ஆகிய ஐந்து பூதங்களும் மேலும் அவற்றுடன் தொடர்பு கொண்டுள்ள ஐந்து புலன்களின் தன்மைகளும் புறமிட்டு ஓடும் வண்ணம் வெற்றி கொண்டவரே, எந்தவிதமான வஞ்சகத்தில் ஈடுபடாமலும் இடைவிடாமல் உன்னைப் போற்றி புகழ்தலைச் செய்வோரும், சஞ்சலம் ஏதுமின்றி எப்போதும் உன்னையே துதித்து வருவோரும், இழிந்த செயல்களை அறவே தவிர்ப்போரும் ஆகிய தகுதி வாய்ந்த சான்றோர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தில் உள்ள அழகு வாய்ந்த கோயிலினை, நீர் தங்கும் திருக்கோயிலாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 7:

நலச்சங்க வெண்குழையும் (2.55) பாடல்கள் 2,3,4,5,6,7 (திதே 0028)

அடி புல்கு பைங் கழல்கள் ஆர்ப்பப் பேர்ந்து ஓர் அனல் ஏந்தி

கொடி புல்கு மென் சாயல் உமையோர் பாகம் கூடினீர்

பொடி புல்கு நூல் மார்பர் புரி நூலாளர் தலைச் சங்கைக்

கடி புல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே

விளக்கம்:

பைங் கழல்கள்=பசுமையான பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்கள்; தலத்து அம்பிகையின் திருநாமம் சௌந்தர நாயகி; அந்த பெயரினை நினைவூட்டும் வண்ணம் கொடி போன்ற சாயலை உடைய உமையம்மை என்று இங்கே குறிப்பிடுகின்றார். புல்கு=ஒத்து; கடி=காவல்;

பொழிப்புரை:

திருவடிகளில் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்கள் ஒலிக்கும் வண்ணம் கால்களை பேர்த்து நடனம் ஆடுபவரே, நடனம் ஆடும் தருணத்தில் கையில் அனல் ஏந்தி ஆடுபவரே, அழகிய பூங்கொடியை சாயலில் ஒத்து மென்மையும் அழகும் பொருந்திய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவரே, திருநீற்றுப் பொடியினை பூசிக்கொண்டும் மார்பினில் பூணூல் தரித்தும் சிறப்புடன் விளங்கும் வேதங்களை நன்றாக கற்று அறிந்தவர்களும் ஆகிய அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தில், உயர்ந்த மதில்களை காவலாகக் கொண்டுள்ள தலத்தில், உள்ள கோயிலுடன் கலந்து, அந்த திருக்கோயிலை உமது உறைவிடமாக கொண்டுள்ளீர்.

பாடல் 8:

நலச்சங்க வெண்குழையும் (2.55) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0029)

திரை ஆர்ந்த மாகடல் சூழ் தென் இலங்கைக் கோமானை

வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்று மாண்பினீர்

அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை

நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைத்தீரே

விளக்கம்:

திரை=அலைகள்; வரை=மலை; ஆர்ந்த=பொருந்திய, போன்ற, மேகலை என்பது பெண்கள் தங்களது இடுப்பினில் அணியும் ஒரு ஆபரணம். மேகலையாள் என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. திருமீயச்சூர் இளங்கோயிலில் உள்ள அம்பிகை மேகலாம்பிகை என்றே அழைக்கப்படுகின்றாள். மேகலை அணிந்த அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக கொண்டுள்ள இறைவன் என்ற பொருள் பட அரை ஆர்ந்த மேகலையீர் என்று இறைவனை சம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.

இடைமருது தலத்தின் மீது பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.56.2) மேகலையாள் பாகம் கொண்டீர் என்று இறைவனை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஏர்=அழகு; மேகலை எனப்படும் ஆபரணத்தை அணிந்தவளாக மிகவும் அழகுடன் விளங்கும் விளங்கும் தேவி என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்

போர் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர்

ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடை மருதில்

சீர் ஆர்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே

பொழிப்புரை:

அலைகள் பொருந்திய பெரிய கடலால் சூழப்பட்ட தென்னிலங்கைத் தீவுக்கு அரசனாகிய இராவணனின், மலை போன்று வலிமை வாய்ந்த தோள்கள் கயிலை மலையின் கீழ் அமுக்குண்டு வருந்துமாறு, கால் விரலை ஊன்றி மலையினை அழுத்தும் பெருவீரம் உடையவரே, தனது இடுப்பினில் மேகலை என்ற ஆபரணத்தை அணிந்துள்ள தேவியை உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவரே, அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தினில் முறையாக அமைந்துள்ள கோயிலினை, நீர் உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.

பாடல் 9:

நலச்சங்க வெண்குழையும் (2.55) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0029)

பாய் ஓங்கு பாம்பணை மேலானும் பைந்தாமரையானும்

போய் ஓங்கிக் காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார்

தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வத் தலைச்சங்கைச்

சேய் ஓங்கு கோயிலே கோயிலாக சேர்ந்தீரே

விளக்கம்:

பைந்தாமரை=பசுமையான இளம் தாமரை மலர்; ஓங்கி=உயரப்பறந்து; ஓர்தல்=ஆராய்தல்;

பொழிப்புரை:

பாயாக அமைந்த பாம்பணை மேல் பள்ளி கொள்ளும் திருமாலும், இளம் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும், கீழே அகழ்ந்து சென்றும் மேலே பறந்து சென்றும் காண இயலாத வண்ணம் நீண்ட நெடும்பிழம்பாக நின்றவரே, புறச்சமயங்களில் நில்லாமல் அகச்சமயங்களில் நின்று உனது தன்மையை அறிந்து கொண்டு போற்றுவோரும், மூன்று வகையான தீக்களை வளர்த்து வேள்வி செய்வோரும், நான்மறைகளை கற்றறிந்தவர்களும் வாழும் செல்வச்செழிப்பு மிகுந்த தலைச்சங்கை தலத்தில் உள்ள உயர்ந்த மாடத்தினை உடைய கோயிலினை, நீர் உறையும் திருக்கோயிலாக கொண்டுள்ளீர்.

பாடல் 10:

நலச்சங்க வெண்குழையும் (2.55) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0029)

அலையாரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கியர்

தொலையாது அங்கு அலர் தூற்றத் தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்

தலையான நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை

நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே

விளக்கம்:

புனல்=நீர்நிலைகள்; பண்டைய நாளில் நீர்நிலைகளில் சென்று குளிப்பது வழக்கமாக இருந்தது போலும். தொலையாது=இடைவிடாது

பொழிப்புரை:

அலை வீசும் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்த்து அழுக்கு சேர்ந்த உடலும் பருத்த உடலும் கொண்டவர்களாக விளங்கிய சமணர்களும் சாக்கியர்களும் இடைவிடாது பழிச்சொற்கள் சொன்ன போதிலும் அதனை பொருட்படுத்தாது உமது அடியார்களுக்கு காட்சி தந்து ஆட்கொள்ளும் இறைவனே, நூல்களில் சிறந்ததாக கருதப்படும் வேதங்களை ஓதி உணர்ந்து தமது மனதினில் தரித்துள்ள அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தில் நிலையாக பொருந்தி உள்ள கோயிலைத் தனது இருப்பிடமாகக் கொண்டு நீர் எழுந்தருளி உள்ளீர்.

பாடல் 11;

நலச்சங்க வெண்குழையும் (2.55) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0029)

நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்

குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை

ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார்

மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே

விளக்கம்:

நளிரும்=குளிர்ந்த;

பொழிப்புரை:

குளிர்ந்த நீரால் வளம் பெறும் சீர்காழி நகரில் தோன்றியவனும் நல்லறிவு உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன், குளிர்ந்து காணப்படும் தலைச்சங்கு தலத்தில் அமைந்துள்ள உயர்ந்த மாடக் கோயிலில் பொருந்தி உறையும் பெருமானை, சடையினில் ஒளிவீசும் ஒற்றைப் பிறைச்சந்திரனை அணிந்த பெருமானை, புகழ்ந்து உரைத்த இந்த பாடல்களை ஓத வல்லவர்கள், அலைகள் விளங்கும் கடல் சூழ்ந்த உலகத்தவரினும் மேம்பட்டவராக வானவர்க்கு ஒப்பாக கருதப்படுவார்கள்.

முடிவுரை:

சுடுகாட்டினைத் தவிர்த்து வேறு எதனையும் தனது இருப்பிடமாக கருதாத பெருமான் நிலவுலக மக்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் தலைச்சங்காடு தலத்தில் கோயில் கொண்டிருக்கின்றார் என்று முதல் பாடலில் உணர்த்தும் ஞானசம்பந்தர், இரண்டாவது பாடலில் மிகவும் எளிமையான கோலத்தில், கோவணமும் தோலாடையும் கொண்டு பெருமான் காட்சி தருவது, தனது மனதினை பெரிதும் கவர்ந்தது என்றும், அவரது அடியானாக தான் மாறியதற்கு அதுவே காரணம் என்றும் கூறுகின்றார். அவரது எளிமை அழகால் கவரப்பட்டு தான் அவருக்கு அடிமையாக மாறியது போன்று பல தொண்டர்கள் அவருக்கு அடிமையாக மாறி பூவும் நீரும் கொண்டு அவரை வழிபட்டு போற்ற திருக்கோயில் செல்கின்றனர் என்று பதிகத்து மூன்றாவது பாடலில் கூறுகின்றார். அடியார்களின் தன்மைக்கும் அந்தந்த நிலைக்கும் ஏற்றவாறு பலவிதமான வேடங்கள் கொண்டு அவர்களை சந்தித்து அருள் புரிவது பெருமானின் கொள்கை என்று நான்காவது பாடலில் கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானின் திருக்கோலம் உணர்த்தப் படுகின்றது. ஆறாவது பாடலில் பெருமான் ஐந்து புலன்களையும் வென்ற தன்மை குறிப்பிடப் படுகின்றது. ஏழாவது பாடலில் அனல் ஏந்தி அவர் ஆடும் அழகும் எட்டாவது பாடலில் மாதொரு பாகனாக விளங்கும் தன்மையும் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் தலத்து அந்தணர்களின் தன்மையும் உணர்த்தப் படுகின்றன. இந்த பெருமானை போற்றி வழிபடும் அடியார்கள் தேவர்களினும் மிகுந்த சிறப்பினை பெறுவார்கள் என்று கூறுகின்றார். சம்பந்தரின் இந்த பதிகம் மூலம் பெருமானின் தன்மையையும் தலத்தின் சிறப்பையும் உணர்ந்து கொண்ட நாம், இந்த பதிகத்தினை நன்கு கற்றுணர்ந்து மனம் ஒன்றி ஓதி பல நன்மைகளையும் அடைவோமாக.



Share



Was this helpful?