Books / மஹா புராணங்கள்


நாரத புராணம்

(பகுதி-2)


17. சத்வகுணமூர்த்தி-ஸ்ரீமந் நாராயணன்: ஒரு சமயம் முனிவர்கள் ஒன்று கூடி காசியப முனிவரின் தலைமையில் பெரிய வேள்வி ஒன்றை நடத்திக் கொண்டு இருந்தனர். அவ்வமயம் அங்கு வந்த நாரதர் வேள்வியின் சிறப்பைக் கண்டு பாராட்டிப் பேசினார். ஆனால், இடையிலே ஓர் ஐயப்பாட்டை எழுப்பினார் அவர். அத்தகைய சிறப்பான வேள்வியின் அவிர்ப்பாகத்தை யாருக்குக் கொடுக்கப் போகிறார்கள் என்று கேட்க, காசியப முனிவர் மும்மூர்த்திகளில் ஒருவருக்கு என்றார். அந்த ஒருவர் யார் என்பதை முடிவு செய்து விட்டீர்களா என்று கேட்க, சத்வகுணம் உடையவர்க்கே அவிர்ப்பாகம் என்றார். இப்போது மூவரில் சத்வகுணமுடையவர் யார் என்று முடிவு செய்ய ஆலோசித்து அதனை அறிந்து வரக்கூடியவர் பிருகுமுனிவரே என்று கூற, அதை அறிய புறப்பட்டார் பிருகு முனிவர். அவர் முதலில் பிரம்மனின் சத்யலோகம் சென்றார். அங்கு பிரம்மன் சாவித்திரி, காயத்திரி, சரசுவதி மற்றும் தேவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். பிருகு வந்ததை அவர் கவனிக்கவில்லை. பிருகு சிறிது நேரம் அங்கே ஆசனத்தில் அமர்ந்திருந்தும் பிரம்மன் தன்னைக் கண்டு கொள்ளாதது குறித்து கோபம் கொண்டு பூலோகத்தில் பிரம்மனுக்கு எங்கும் கோயில்கள் இல்லாமல் போகும் என்றும், அவரை யாரும் தனியாகப் பூசிக்க மாட்டார்கள் என்றும் சாபம் கொடுத்து விட்டுக் கயிலாயம் சென்றார் முனிவர்.

பிருகு கைலாயம் சென்றபோது சிவபெருமான் பார்வதி மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். எனவே பிருகு வந்ததை அறியவில்லை. எனினும் பார்வதி கவனித்துவிட்டு எழுந்து சிவனிடம் முனிவர் வருகையைக் குறிப்பால் உணர்த்தினாள். அப்போது பரமன் தவத்தில் சிறந்த அவருக்கு நடைமுறை தெரியவில்லை என்றும், தம்பதிகள் உரையாடிக் கொண்டிருக்கும் போது முன்னறிவிப்பின்றி வந்தது சரியில்லை என்றும் குறை கூறினார். இதனால் கோபமுற்ற பிருகு முனிவர் பரமனுக்கு உருவ வழிபாடு இருக்காது மக்கள் லிங்கத்தையே பூசிப்பர் என்று சாபமிட்டு வெளியேறினார். கடைசியாக பிருகு முனிவர் ஸ்ரீமந் நாராயணனின் வைகுந்தம் சென்றார். அங்கு பகவான் லக்ஷ்மியுடன் தனிமையில் இருந்தார்.

இங்கும் அவர் வரவு உடனே நிகழவில்லை. எனவே கோபமுடன் பரந்தாமா என்று உரக்கக் குரல் கொடுத்தார். குரல் கேட்டவுடன் மகாலக்ஷ்மி அவர் பக்கம் திரும்பிப் பார்க்க, திருமாலும் கண் விழித்துப் பார்த்தார். தன்னை வேண்டும் என்றே பரந்தாமன் உதாசீனம் செய்தார் என்று எண்ணி முனிவர் மாதவன் அருகில் சென்று அவர் மார்பில் உதைத்தார். உடனே லக்ஷ்மி கோபம் கொண்டாள். பகவான் முனிவருக்குச் சாபம் கொடுப்பார் என்று எண்ணினாள். ஆனால் ஸ்ரீமந் நாராயணன் பதறிய வாறே எழுந்து பிருகுவின் திருவடிகளைப் பற்றி இவை வலித்திருக்குமே என்று கூறி அவர் பாதத்தில் இருந்த ஒற்றைக் கண்ணைத் தோண்டி எடுத்துத் தூர எறிந்து விட்டார். (பிருகுவின் ஆணவத்துக்கு அந்த கண்ணே காரணமாகும்) இதனால் முனிவர் கோபம் தணிந்தது; ஆணவம் அழிந்தது. பின்னர் முனிவர் தான் வந்த காரணத்தையும் சத்யலோகம், கயிலாயம் இரண்டிலும் என்ன நடந்தது என்பனவற்றையும் கூறி அவரே மும்மூர்த்திகளில் சிறந்தவர்; சத்வகுணமுடையவர் என்று கூறித் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.

பின்னர் முனிவர்கள் வேள்வி செய்து கொண்டிருக்க யாக சாலைக்கு வந்து நடந்தவற்றை விளக்க எல்லோரும் ஏகமனதாக ஸ்ரீமந் நாராயணனே சத்வகுணம் உள்ளவர் என்று ஏகமனதாக முடிவெடுத்து அவருக்கே அவிர்ப்பாகம் அளிக்கப்பட்டது. தான் நிவாசம் கொண்டிருந்த பகவானின் மார்பில் பிருகு உதைக்க, உதைத்த பிருகுவைச் சபிக்காமல் வாழ்த்தி அனுப்பியது பொறாமல் கோபம் கொண்ட மகாலக்ஷ்மி வைகுந்தத்தை விட்டு பூலோகம் வந்து தவம் புரியலானாள். வைகுந்தம் வெறிச்சோடியது. திருமால் திருமகளைத் தேடி பூலோகம் வந்தார். அதன் விளைவாக ஏற்பட்டதே திருப்பதி மலை-திருப்பதி. இங்கே ஸ்ரீநிவாசர் இருந்து கொண்டு காட்சி தருகிறார். அது பூலோக வைகுந்தம் என்றழைக்கப்படுகிறது. ஸ்ரீலக்ஷ்மி நாராயணனே ஸ்ரீநிவாசன் ஆவார்.

தும்புருவும் வேங்கடமும்

நாரதரின் தோழர் தும்புரு. அவரும் வீணை மீட்டி பகவானைக் குறித்து இசை பாடி மகிழ்பவர். ஒருநாள் தும்புருவும், நாரதரும் பாடிக்கொண்டே மகிழ்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நாரதர் தும்புருவின் வீணையில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு ஒளி வீசுவதைக் கண்டு அது பற்றிய விவரத்தைக் கேட்டார். அப்போது தும்புரு தான் தேவேந்திரன் சபையில் அவன் புகழை வீணையில் இசைத்துப் பாடியதால் மனமகிழ்ந்த தேவராஜன் மணிகளை இழைத்துக் கொடுத்தான் என்றார். இவ்வாறு பரிசில் பெற இந்திரனைப் பாடியது தவறு என்றும் பரந்தாமனைத் தவிர பரிசிலுக்காகப் பாடியதால் அவருக்கு தேவலோகம் உகந்ததல்ல என்றும், பூமியே ஏற்றதென்றும் கூறி பூமியில் விழுமாறு சபிக்க, அவர் மிகவும் வருத்தமுற்று வானிலிருந்து பூமியில் வந்து விழுந்தார். அவர் விழுந்த இடம் கோனேரிக் கரையில் ஸ்ரீநிவாசன் வாசம் செய்யும் இடம்.

தும்புரு கோனேரித் தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீமந் நாராயணனைத் தியானித்துத் தவம் செய்ய, ஸ்ரீநிவாசன் பங்குனி மாதம் பூராட்டாதி நாள் அன்று தரிசனம் தந்தார். அப்போது தும்புரு தன் தவறையும், தான் பூலோகம் வந்த விவரத்தையும், நாரதர் சாபத்தையும் கூறி அதனைப் போக்கி அருள வேண்டினார். கோனேரியில் தீர்த்தமாடித் தன்னைத் தியானித்ததால் அவர் பாவம் அகன்றது என்றும், அவர் இனி தடையின்றி தேவலோகம் செல்லலாம் என்றும் அருளினார்.

அகஸ்தியரின் ஆசி

அவ்வமயம் அங்கு அகஸ்தியர் வர தும்புரு அவரை வணங்கி அங்கு தான் வந்த விவரம் கூறினார். அப்போது அகஸ்தியர் பகவானின் கல்யாண குணங்களை எடுத்துரைத்து அவரைத் தவிர வேறெவரையும் வீணை மீட்டி பாட வேண்டாம் என்று கூறினார். தும்புரு பகவானைத் தியானித்த வண்ணம் எழும்பி வானுலகை அடைந்தார். நாரதரைக் கண்டு பகவானுடைய ஆயிரத்தெட்டு நாமங்களையும் இசை அமைத்துப் பாடினார். நாரதரும் அவர் பெற்ற பேற்றினுக்கு மகிழ்ந்து, அவரைப் பாராட்டிப் பரவசமடைந்தார். அன்று முதல் இசை வல்லுநர்களாக தும்புரு, நாரதர் இருவரையும் சேர்த்தே கூறலாயினர். அவர்கள் திரிலோக சஞ்சாரிகள். தேவகானத்தில் திளைத்தவர்கள்.

18. விசாலா நதி தீரத்தில்

சுவாயம்பு மனுவின் மகன் பிரிய விரதன். அவன் தன் ஏழு புத்திரர்களுக்கும் ஏழு தீவுகளையும் பிரித்துக் கொடுத்துவிட்டு விசாலா நதி தீரம் அடைந்து பரந்தாமனைக் குறித்துத் தவம் செய்யலானான். ஒருநாள் நாரதர் அங்கு வர அவரை வணங்கி வரவேற்று உபசரித்தான். திரிலோக சஞ்சாரியாகிய அவரிடம் ஏதேனும் அதிசயம் இருப்பின் கூறுமாறு வேண்டினான். நாரதர் தான் கண்ட ஓர் அற்புதக் காட்சி பற்றிக் கூறலானார். ஸ்வேததீவம் தன்னில் ஒரு குளக்கரையில் ஓர் அழகியைக் கண்டேன். அவள் மவுனமாயிருக்க நான் அவளை உற்று நோக்க நான் என்னையே மறந்துவிட்டேன். கற்றவையும் மறந்து விட்டன. பின்னர் மனம் தெளிவுற்று அவளை வணங்க அவளுடைய இதயத்தில் ஒரு தெய்வப் புருஷனையும், அந்தப் புருஷனின் இதயத்தில் இரண்டாவது தெய்வப் புருஷனையும் கண்டேன். இதனால் அதிசயம் அடைந்த நான் அவளை வணங்கி, அவள் யார் என்றும், அவள் மனத்தில் தோன்றும் இரண்டு தெய்வப் புருஷர்கள் யார்? என்றும் கேட்டேன்.

அப்போது அவள் சாவித்திரி என்றும் அவளை அறிந்து கொள்ளாமையால் சகல சாஸ்திரங்களையும் நான் மறந்து விட்டதையும் எடுத்துக் காட்டினாள். சகல கலைகளுக்கும் நானே அன்னை. என் மனத்தில் தோன்றும் மகாபுருஷர் ரிக் வேதம். அவர் மனத்தில் இருப்பவர் யஜுர் வேதம். அவர் மனத்தில் காண்பவர் சாமவேதம். ஸ்ரீமந் நாராயணன் ரிக்வேதத்தை ஓதி எல்லாப் பாவங்களையும் நீக்குகிறார். பிரம்மன் யஜுர் வேதத்தைக் கொண்டு எல்லாக் கர்மாக்களையும் செய்கிறார். சாமவேதியான பரமசிவனைத் தியானித்தால் எல்லாப் பாபங்களும் அழிந்து போகும். இக்குளத்தில் மூழ்கி எழுந்தால் நீ கற்ற சகல வித்தைகளும் உன்னை மீண்டும் வந்தடையும் என்றார். நாரதர் சாவித்திரியைப் பணிந்து குளத்தில் நீராட அவருடைய குறைகள் நீங்கின. அவர் முற்பிறவி வரலாறுகளை அறிந்தார். மும்மூர்த்தி மயமான விஷ்ணுவை பிர்மபாரமயம் என்ற துதியால் வழிபட்டு, பரந்தாமன் தரிசனம் பெற்று, தேவமயமாக சரீரத்தைப் பெற்றார்-என்ற வரலாறுகளைப் பிரியவிரதனுக்குக் கூறினார்.

19. தர்மபுத்திரர் கண்ட மாயத்தோற்றம்

கிருஷ்ணன் தன் சோதிக்கு எழுந்தருளிய பிறகு பாண்டவர்களுக்கு உலக வாழ்க்கை வெறுத்துவிட, அபிமன்யுவின் மகனாகிய பரீக்ஷித்துக்குப் பட்டம் கட்டிவிட்டு, திரவுபதியுடன் தீர்த்தயாத்திரை செய்து கடைசியில் இமயமலையை அடைந்தனர். தருமரும், அவருடன் சென்ற நாய் ஒன்றும் தவிர மற்றவர் ஒருவர் பின் ஒருவராக விழுந்து உயிர் இழந்தனர். அப்போது அங்கு தோன்றிய தேவேந்திரன் அவருடைய தம்பிகளும், மனைவியும், சொர்க்கம் அடைந்தனர் என்றும், அவர் செய்த புண்ணிய பலனாய் உடலோடு சுவர்க்கம் செல்லப் போகிறீர்கள் என்றும் கூறி விமானத்தில் ஏறுமாறு கூறினான். தருமர் விமானத்தில் ஏறப் போனார். நாயும் அவருடன் ஏற வந்தது. இந்திரன் நாயைத் தடுத்தான். அப்போது தருமர் நாயை அனுமதிக்காவிடில் அதை விட்டுச் செல்வது சரியில்லை என்றார். இந்திரன் வியப்புற்றான். உடனே நாய் மறைந்து விட்டது. அங்கே எமதர்மராஜன் நின்றான். விமானம் ஏறி தருமர் சொர்க்கம் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவருக்கு வியப்பை அளித்தது.

சொர்க்கலோகத்தில் துரியோதனன் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தான். அவன் முகம் பிரகாசமாய் இருந்தது. அவனைச் சுற்றி வீரலட்சுமியும், தேவர்களும் நின்றிருந்தனர். ஒரு மகாபாபியாகக் கருதப்பட்ட துரியோதனனை அந்நிலையில் கண்ட தருமன் அங்கே இருக்கமாட்டேன் என்று கூறித் தன் தம்பிமார்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். நாரதர் தருமருக்குச் சமாதானம் சொன்னார். சுவர்க்கத்தில் விரோதம், பொறாமை, கோபம் ஆகியவை கிடையாது. அவை பூலோகத்துடன் சரி; மேலும் துரியோதனன் க்ஷத்திரிய தருமத்தைக் கடைப்பிடித்தான். இந்தப் பதவி கிடைத்தது என்றார். தருமருக்கு இது பொருத்தமாகத் தெரியவில்லை. தேவர்கள் தருமரை அவர் தம்பியர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். தருமர் அங்கு அவலக் காட்சியைக் கண்டார். இருண்ட பாதை, இரத்தம், மாமிசம், எலும்புகளுடன் துர்நாற்றம் வீசியது. அவர் தேவதூதனை நிறுத்தி திரும்பிவிட நினைத்தார். தரும நந்தனா போக வேண்டாம் என்று தீனக்குரல்கள் வேண்டின. திகைத்து நின்றார் தருமர். நீங்கள் யார்? ஏன் இந்தத் துன்பத்தில் கஷ்டப்படுகிறீர்கள்! என்று கேட்டார் தருமர். அப்போது கர்ணன், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், திரவுபதி ஆகியோர் குரல் கேட்டது.

அப்போது தருமர் பாவி துரியோதனன் இன்பம் அனுபவிக்கிறான். உத்தமத் தம்பியர் வேதனைப் படுகிறார்கள். இதென்ன சோதனை என்று வருத்தமுற்றார். தான் அங்கேயே தங்கி விடுவதாகக் கூறினார். எல்லாம் ஒரு முகூர்த்த காலத்தில் நடந்துவிட்டன. உடனே எல்லாம் மாறிவிட்டன. எமதருமன், தருமனிடம் அவர் பார்த்தது அனைத்தும் மாயத்தோற்றம் என்று விளக்கினார். இந்திரன் தருமனுக்குத் தம்பியர் மீதிருக்கும் அன்பைப் பாராட்டினான். பூவுலகில் அரசு பதவி பெற்று மக்களைப் பரிபாலித்தவர்கள் ஒரு முகூர்த்த காலம் நரகத்தை அவசியம் பார்க்க வேண்டும். எனவேதான் இந்த ஏற்பாடு என்று எமதர்மன் விளக்கினான். அப்போது தருமர் நாரதரிடம் தான் அப்போதுதான் உண்மையை உணர்ந்ததாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் வேண்டினார். அவர் மனித உடல் நீங்கிப் பேரொளியொடு தேவசரீரம் பெற்றார்.

20. முப்பெரும் தேவியரின் பலப்பரீட்சை

அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளின் மனைவியர் சரசுவதி, லக்ஷ்மி, பார்வதி. இந்த முப்பெரும் தேவியர்களுள் ஒருநாள் யார் உயர்ந்தவர்? யாரால் மக்கள் வாழ்கின்றனர்? யார் மிகமிக முக்கியம் ஆனவர்? என்கிற விஷயத்தில் போட்டி ஏற்பட்டது. சத்தியலோகம் சென்றிருந்த நாரதரிடம் கலைமகள் கல்வியே மிகவும் முக்கியம். மற்றபடி செல்வமோ, வீரமோ இல்லாவிட்டாலும் கற்றோனே சிறந்தவன் என்று கூற ஆமாம் தாங்கள் சொல்வதே சரி என்று அங்கிருந்து நழுவினார் நாரதர். அடுத்து வைகுந்தம் சென்ற நாரதரிடம் லக்ஷ்மி செல்வம் இல்லாமல் கல்வி மட்டுமே போதுமா ஒருவனுக்கு? என்று கேட்டார். அதற்கு நாரதர் கல்வி மட்டும் போதாது, செல்வமும் இருந்தால்தான் பரிமளிக்கும் என்று கூறி மழுப்பினார். பின்னர் கைலாயம் அடைந்த நாரதரிடம் மலைமகள், கல்வியும், செல்வமும் இருந்தால் மட்டும் போதுமா? வீரமின்றேல் என்ன பயன்? எனவே வீரமே ஒருவனுக்கு அவசியம் என்று கூறினாள். அதற்கு நாரதர் கல்வியும், செல்வமும் இருந்தாலும் அவற்றைக் காப்பாற்றிக் கொள்ள வீரம் தேவை என்று கூறித் தப்பித்துக் கொண்டார்.

ஒருநாள் முப்பெரும் தேவிகளும் சந்தித்தனர். அப்போது சரசுவதி ஒரு முட்டாளைக் கொண்டு கல்வியே அவசியம் என்று நிரூபித்துக் காட்டுகிறேன் என்றார். அதற்கு லக்ஷ்மி நானும் ஒருவரைக் கொண்டு செல்வமே சிறந்த தென்பதைக் காட்டுகிறேன் என்றாள். பார்வதியும் கல்வியும், செல்வமும் இல்லாத ஒருவன் மூலம் வீரமே மேலானது என்று காட்டுகிறேன் என்றாள். இவ்வாறு மூவரும் சபதம் செய்து அதை நிரூபிக்க முனைந்தனர். கலைமகள் பூலோகத்துக்கு வந்து எழுத்தறிவில்லா மாட்டிடையன் நாவை நீட்டச் செய்து எழுத்தாணியால் எழுதி அவனைச் சிறந்த கவிஞர் ஆக்கினாள். அலைமகள் பூலோகத்திற்கு வந்தாள். அந்த நாட்டு மன்னன் சந்ததியின்றி இறந்து போக ஊரார் பட்டத்து யானையிடம் ஒரு பூமாலையைக் கொடுத்து பின் தொடர்ந்து வர அது அலைமகளின் அருளால் ஓர் ஏழைப் பெண்மணி கழுத்தில் போட அந்த ஏழைப் பெண்ணை மக்கள் முடிசூட்டி அரசி ஆக்கிவிட்டனர். அவள் கலைமகளால் கவிஞனாக்கப்பட்டவனைத் தன் ஆஸ்தான கவிஞன் ஆக்கிக் கொண்டாள்.

மலைமகளும் பூவுலகடைந்து ஒரு கோழையை வீரனாக்கினாள். அவனும் அந்த நாட்டு சேனாபதியாகி தன் நாட்டின் மீது படை எடுத்து வந்த மாற்றான் படையை வென்று வெற்றி முழக்கம் செய்தான். அரசி கவிஞனைத் தன் புகழ் பாடுமாறு கூற, அவன் தான் நரஸ்துதி செய்யமுடியாது என்று மறுத்து விட்டான். அதனால் அவன் சிறையில் அடைக்கப்பட்டான். அப்போதும் கவிஞன் அரசியிடம் அவள் திடீர் அரசியானவள். அவள் செல்வம் நிலைக்காது. ஆனால், தன் கல்விச் செல்வம் அழியாது என்று அரசியை இகழ்ந்தும், தன்னைப் புகழ்ந்தும் கூறினான். இதனால் கோபம் கொண்ட வீரன் அரசியிடம், ஆணை அளித்தால் கவிஞனை யானைக் காலால் இடறச் செய்து கொன்று விடுகிறேன் என்றான். அப்போது அரசி தனக்கு அறிவுரை வழங்க சேனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் தனக்கு அடங்கியே அவன் நடக்க வேண்டும் என்றும் கூற தன் வீரத்தால் படைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவன் அரசியையும் சிறை வைத்துவிட்டான். தானே மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். கவிஞனை யானையின் காலால் இடற விட்டுக் கொல்ல முயன்றான்.

கவிஞனோ சேனாதிபதி அரசிக்குத் துரோகம் விளைவித்து அவளைச் சிறை செய்தது பற்றி கூறி புரட்சியை உண்டாக்கினான். இவ்வாறு அரசி, கவிஞன், வீரன் மூவரின் ஆணவத்தால் மக்கள் அவதியுற்றனர். நாரதர் மூன்று தேவியரிடமும் சென்று அவர்கள் சபதத்தால் மக்கள் அவதியுறுவதை எடுத்துக்காட்டி இதனால் யார் உயர்ந்தவர் என்று கூறமுடியாமல் போய் விடும் என்று கூற, அவர்கள் நாரதரையே திரும்பவும் யார் உயர்ந்தவர் என்று கூறுமாறு சொன்னார்கள். அப்போது நாரதர் ஒவ்வொருவருக்கும் கல்வியும் வேண்டும், செல்வமும் வேண்டும், வீரமும் வேண்டும். எனவே மூன்றுமே சிறந்ததுதான். அவர்கள் மூவரும் சமமானவர்கள்தான் என்று கூறி விளக்க முப்பெருந்தேவியரின் ஆணவம் மறைந்தது. தமக்குள் ஏற்பட்ட போட்டியையும், பகைமையையும் மறந்து சமாதானமடைந்தனர். இதனால் உலகில் ஒவ்வொருவருக்கும் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அவசியம் என்பதை உணர்த்தினர்.

21. சித்தி, புத்தி சமேத கணபதி

முன்பு முருகனை மதியாமல் சிறைப்பட்ட எண்ணம் பிரமனுக்கு தோன்றியது. அவருக்கு அவருடைய படைப்புப் பொருள்கள் தாறுமாறாயின. உடனே பிரமன் முருகனுக்கு மூத்தோனாகிய விநாயகனைத் தான் வணங்காத தவறு குறித்து வருத்தமுற்று அவர் கணபதியைத் தியானிக்க, அவர் முன் விநாயகர் காட்சி அளித்தார். அப்போது விநாயகர், என்னை வணங்காததால் ஏற்பட்ட நிலை அது என்று கூறி, அவர் தவத்துக்கு மெச்சி பிரமனுக்கு கிரியா சக்தியையும், ஞான சக்தியையும் அருளினார். இதனால் நான்முகனின் படைப்புத் தொழில் செம்மையாக நடைபெற்றது. இரு சக்திகளும் சித்தி, புத்தி என்ற பெயரில் பிரமனது இரண்டு பெண்களாக வளர்ந்தனர். அவர்கள் திருமணப் பருவம் அடைய, அவர்களை அவர்களின் விருப்பப்படி கணநாதனுக்கு திருமணம் செய்து வைக்க பிரமன் உளங்கொண்டார்.

ஒருநாள் நாரதர் தந்தையைக் காண வந்தவர் சித்தி, புத்திகளைக் கண்டு செய்தி அறிந்து அவர்கள் கோரியபடி திருமண ஏற்பாட்டிற்காக கைலாயம் சென்று விநாயகரை வணங்கி சித்தி புத்திகளுடைய கோரிக்கையையும், பிரம்மனின் விருப்பத்தையும் கூறி, அவர்களை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுமாறு பிரமன் வேண்டியதாகக் கூறினார். விநாயகரும் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி ஒப்புதல் தந்தார். நாரதர் சத்தியலோகம் சென்று தந்தையிடமும், சித்தி புத்தியிடமும் விநாயகர் சம்மதத்தைக் கூற, பிரமதேவன் பெரு மகிழ்ச்சியுற்று, கைலாயம் சென்று சிவபெருமான், பார்வதியிடம் தன் புத்திரிகளான சித்தி, புத்திகளைக் கணபதிக்குத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டிட அம்மையும் அப்பனும் அதனை ஏற்றனர். விசுவகர்மா திருமண மண்டபம் அமைத்திட, கற்பகத் தருவும், காமதேனுவும் வாரி வழங்கினர். அம்மையப்பருடன் கணநாதர் வந்து சேர்ந்தார். அவர்களை அரியும், அயனும் எதிர்கொண்டு அழைத்துச் சென்று அமரச் செய்தனர். பிரமன் சித்தி, புத்தி இருவரையும் விநாயகருக்குக் கன்னிகா தானம் செய்து கொடுத்தார். திருமணம் இனிதே நடந்தது. அரி, அயன், அலைமகள், கலைமகள் மற்றும் இந்திராதி தேவர்கள் வாழ்த்திட அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

22. இந்திர பதவிக்கு ஆபத்து

தேவேந்திரன் பதவி நிலையானதல்ல. அடிக்கடி அதற்குப் போட்டி வருவதுண்டு. ஒரு சமயம் விகுதி என்னும் பூலோக மன்னனால் இந்திர பதவிக்கு போட்டி ஏற்பட்டது. விகுதி என்னும் பூவுலக மன்னன் தொண்ணூற்று ஒன்பது அசுவமேத யாகங்கள் முடித்து நூறாவது செய்ய முற்பட்டான். அது முடிந்துவிட்டால் அவன் இந்திர பதவியைப் பெற்று விடுவான். இதனால் பெரிதும் வருத்தம் கொண்டான் இந்திரன். தன் பதவிக்கு ஆபத்து என உணர்ந்தான். ஒருநாள் தேவ சபைக்கு நாரதர் வந்தார். அவர் இந்திரனின் வாட்டமுற்ற முகத்திற்குக் காரணம் கேட்க, அவன் விகுதி செய்யப்போகும் நூறாவது அசுவமேத யாகம் குறித்துக் கூறி, தன் பதவி பறிபோகும் நிலைமையைச் சொல்லி அதைத் தடுத்து நிறுத்த நாரதரின் உதவியை நாடினான். நாரதரும் ஆவன செய்வதாகக் கூறி பூலோகம் வந்து, விகுதி யாகம் செய்யும் இடத்திற்குப் புறப்பட்டார்.

நாரதர் ஓர் அந்தண பிரம்மச்சாரி வடிவில் விகுதியை யாக சாலையில் சந்தித்தார். மன்னன் விகுதியும் அவரை வணங்கி, வரவேற்று உபசரித்தான். அவன் அவரிடம் தான் நூறாவது அசுவமேதம் செய்வதாகவும் அவருக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறும் சொன்னான். அப்போது அந்த மாய அந்தணர், ஒருவர் தனக்குத் தேவையானதை மட்டுமே யாசகமாகக் கேட்பார். அதற்கு நிபந்தனை ஏதும் இல்லை. அதனால் தான் எதனைக் கேட்டாலும் கொடுப்பதாக உறுதி அளித்தால்தான் கேட்பதாகவும் இல்லாவிடில் கேட்காமலே செல்வதாகவும் கூறினார். எதைக் கேட்டாலும் தடையின்றி தருவதாக வாக்களித்தான் மன்னன். அப்போது அந்த பிரம்மச்சாரி தான் திருமணம் புரிந்து இல்லற வாழ்க்கை நடத்த விரும்புவதால் அவன் நாட்டில் உள்ள ஒரு பெண்ணையே தானமாகக் கேட்பதாகக் கூறினார். அதற்கு மன்னன் அவள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் அழைத்து வந்து திருமணம் செய்விப்பதாகக் கூறினான்.

அப்போது அந்த அந்தண பிரம்மச்சாரி மன்னனின் பட்டமகிக்ஷியே அவள் என்றார். மன்னன் அதிர்ச்சியுற்றான். அவன் அவள் வயதானவள் என்றும், கைப்பிடித்த அவளைக் காக்கும் கடமை தனக்கு இருப்பதாகவும் கூறினான். பட்டத்தரசியைத் தானமாகக் கொடுத்து விட்டால் யாகம் பூர்த்தியாகாது. எனவே, அந்த பிரம்மச்சாரி யாகத்தைக் கெடுக்கவே வந்திருக்கிறார் என்பதை அறிந்தான் மன்னன். அவர் நிச்சயித்திருப்பதாகவும், தருமத்தை மீறி யாகத்தைக் கெடுத்துக் கொள்வதை விட அவருடைய சாபத்தை ஏற்கத் தயாராகி விட்டான் மன்னன் விகுதி. மேலும் வந்திருப்பவர் உண்மையில் அந்தணர் இல்லை என்று உணர்ந்து, தாங்கள் யார்? யாகத்துக்குத் தடையாக வந்ததேன்? என்று கேட்டான். அப்போது அந்தணர், சுயமான நாரதர் வடிவில் தோன்றினார். அவர் விகுதி மன்னா, கவலைப்படாதே. அடுத்த பிறவியில் நீ அசுரனாகப் பிறந்து இந்திரப் பதவியை விட உயர்வான பதவியை அடைவாய். என்றும் இப்போது இந்திர பதவி கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம் என்று வாழ்த்திவிட்டு, இந்திரலோகம் சென்று தேவேந்திரனிடம் செய்தியைச் சொல்லி மகிழ்வித்தார்.

23. அகலிகை கல்லானாள்

கவுதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி, கற்புக்கரசி. தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான். முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான். கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார். அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளை செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன் என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான். அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.

இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர், ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான். கதவைத் திறந்த அகலிகை தலைவிரி கோலமாக முனிவர் காலில் விழுந்து வணங்கி தன் புனிதத்தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள். ஞான திருஷ்டியால் நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுய உருவில் தலை குனிந்து நின்றான்.

எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும் என்றும் வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு என்றும் சபித்தார். அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் ஸ்ரீமந் நாராயணன்ன ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுயஉருவைப் பெறுவாய் என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர். சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவலநிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும் என்று கூறினார்.

இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்த பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன. எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது.

24. வேதவியாசரும், புராணங்களும்

பராசரர் மகன் வியாசன் ஒரு சமயம் தனது ஆசிரமத்தில் அமர்ந்திருக்கையில் ஒரு காட்சியைக் கண்டார். இரண்டு பறவைகள் தன் குஞ்சுகளுக்கு உணவூட்டி மகிழ்வதைக் கண்ட அவர் தனக்கும் புத்திரப் பேறு தேவை என உணர்ந்தார். எனவே நாரதர் கூறிய அறிவுரைப்படி வாக்பீஜம் என்னும் மந்திரத்தால் பராசக்தியை உபாசனை செய்ய ஈசன் தோன்றிட வியாசர் ஒரு சத்புத்திரனை அருள வேண்டினான். ஈசனும் அவ்வாறே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். ஒருநாள் அவர் அரணி குடைந்து கொண்டிருக்கும் போது (தீ தோற்றுவித்தல்) கிருதாசி என்ற தேவமாது கிளி உருவில் அவர் முன் தோன்ற அதன் அழகு அவர் உள்ளத்தைக் கவர தேஜஸ் வெளிப்பட்டது. அதிலிருந்து சுகர் தோன்றினார். (சுகம்-கிளி) எனவே சுகர் என்று பெயர் பெற்றார் வியாசரின் புத்திரன்.

பலவாறாகப் பிரிந்து கிடந்த வேதங்களை ஒன்றாக்கி வகைப்படுத்தி நான்கு வேதங்களாக்கினார். அதனால் அவருக்கு வேத வியாசர் என்ற பெயர் ஏற்பட்டது. வேத சாரங்களை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு பல புராணங்களையும் வியாசர் இயற்றினார். இருப்பினும் அவர் மனதில் ஏதோ ஒரு குறை இருப்பதாக நாரதரிடம் கூறினார். அப்போது நாரதர் பகவான் வாசுதேவனுடைய மகிமையை இதுவரை விளக்கவில்லை என்றும் அக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் கூறினார். இப்போது வியாசர் மனதில் அமைதி ஏற்பட்டது. அவர் சரசுவதி நதியில் நீராடி, பகவானைத் தியானித்து அவரது கிருஷ்ணாவதாரத்தை விரிவாகக் கூறும் பாகவத புராணத்தை இயற்றினார்.

வேதங்கள் தருமசாஸ்திரங்களைக் கூறும் பகுதி கர்ம காண்டம் என்றும், உபாசனா பகுதி உபாசனா காண்டம் என்றும் பெயர்பெறும். உபாசனா காண்டத்தை விளக்குவதே புராணங்களும், ராமாயணம், மகாபாரதம் என்னும் இதிகாசங்களும் ஆகும். புராணங்கள் பதினெட்டு மற்றும் பதினெட்டு உப புராணங்களும் தோன்றின.

கடவுளைக் காண விரும்பும் பக்தன் உள்ளத்தில் அன்பும் சத்தியமும் நிலைபெற்றிருக்க வேண்டும். பிறருக்கு உதவுவதே உயரிய தத்துவம். இது பற்றிய விவரங்களைப் பாரதத்தின் பழமையான இலக்கியங்களாகிய புராணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவை பதினென் புராணங்கள். வடமொழியில் ஆனவை.

பிரமமாம் புராணம் பற்பம் பீடுசால் வைண வஞ்சீர்
மருவுபேர் சைவ மென்றே வழங்குறூ லிலிங்க நீர்சூழ்
தரைசொல் காருடநல் வண்மை தயங்கிய நார தீயம்
பரமபா கவத மண்ணோர் பகர்தரு மாக்கி நேயம்
காசறு காந்த மின்பங் கலந்துறு பவுடி கம்பார்
பேசிய புகழ்சேர் கின்ற பிரமகை வத்த நன்னூல்
மாசறு மார்க்கண் டேயம் வாமனம் வராக மச்சம்
தேசுறு கூர்மஞ் சீலந் திகழ்பிர மாண்ட மாமால்

1. பிரம்மம், 2. பத்மம், 3. வைணவம் (விஷ்ணு), 4. சைவம் (சிவ), 5. லிங்கம், 6. காருடம் (கருட), 7. நாரதீயம் (நாரதர்), 8. பாகவதம், 9. ஆக்கினேயம் (அக்னி), 10. காந்தம் (கந்த), 11. பவுடிகம், 12. பிரமகைவர்த்தம், 13. மார்க்கண்டேயம், 14. வாமனம், 15. வராகம், 16. மச்சம், 17. கூர்மம், 18. பிரமாண்டம்

மேலும், பதினெட்டு உப புராணங்களும் இயற்றப்பட்டன. அவை:

1. சரத்குமாரியம், 2. நாரசிம்மம், 3. நந்தியம், 4. சிவரகசியம், 5. தௌர்வாசம், 6. நாரதீயம், 7. கபிலம், 8. மானவம், 9. வருணம், 10. தேவி பாகவதம், 11. வசிஷ்டம், 12. கல்கி, 13. காணபதம், 14. ஹம்சம், 15. சாம்பம், 16. ஸெளரம், 17. பராசரம், 18. பார்க்கதவம்

பதினெண் புராணங்களில் சிவபுராணத்துக்குப் பதிலாக வாயுபுராணம் சேர்த்துக் கூறுவர். புராணம் என்பது வேதத்தின் பூதக்கண்ணாடி. வேதத்தில் சொல்லப்படுபவை ஏவலில், அதாவது கட்டளையாக இருக்கும். ஆனால் அதையே புராணங்கள் கதைகள் மூலம் எளியமுறையில் எடுத்துக்காட்டுகின்றன. சத்யம்வத (வேதம்) உண்மை பேசு-அரிச்சந்திர புராணம்; பித்ருதேவோ பவ-தந்தையைத் தெய்வமாகக் கொள். (வேதம் இராமாயணம் படித்தால் இது நன்கு விளங்குகிறது. எனவே வேதக் கருத்துக்களை பெரிதாக்கி எளியமுறையில் காட்டும் பூதக்கண்ணாடி புராணங்கள் ஆகும்.)

25. நாரதர் தமயந்தி திருமணம்

நாரத முனிவரும், பர்வத முனிவரும் நெருங்கிய நண்பர்கள்; திரிலோக சஞ்சாரிகள் இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி எந்த காரியத்தையும், ஒருவர் மற்றவருடன் கலந்தே செய்ய வேண்டும். இரகசியம் கூடாது. இருவரும் மன்னன் சஞ்சயன் மாளிகையை அடைந்தனர். இருவரையும் மன்னன் அன்புடன் வரவேற்று உபசரித்தான். மேலும் தன் அரண்மனையிலேயே சில காலம் தங்கியிருந்து இறைவழிபாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அதனால் இருவரும் மன்னன் வேண்டுகோளின்படி அங்கு தங்கினர். மன்னன் சஞ்சயன் மகள் திருமண வயதை அடைந்திருந்தாள். அவள் இருவருக்கும் பணிவிடை செய்து வந்தாள். அவளுக்கு இசையில் பற்று அதிகம் என்பதால் நாரதர் இன்னிசையில் மயங்கி அவரிடம் தன் மனதைப் பறிகொடுத்தாள். இதனைக் கண்ட பர்வதர் பொறாமை அடைந்தார். நாரதர் ஒப்பந்தத்தை மீறியதாக அவர் மீது கோபம் கொண்டு அவர் முகம் குரங்கு முகமாக மாறிடுமாறு சாபம் கொடுத்தார். இதனால் கோபம் கொண்ட நாரதரும் பர்வதருக்குச் சொர்க்கலோகத்தில் இடம் இல்லாமல் போகட்டும் என்று சாபம் அளித்தார்.

அப்போது நாரதர் தமயந்தி தன்னை விரும்புகிறாள் என்று அறிந்த அவர், அவளை நாரதர் விரும்புகிறாரா என்று விசாரிக்காமல் தடை செய்து, சாபமிட்டதை சுட்டிக்காட்ட பர்வத முனிவர் தான் செய்த தவறை உணர்ந்தார். நாரதர் முகம் குரங்காகிவிட்டால் அவர் அதிகமாக வெளியில் காணப்படவில்லை. தமயந்தியை நேருக்கு நேர் பார்க்காமலும் இருந்தார். மன்னன், தமயந்திக்கு ஓர் இளவரசனை மணம் முடித்து வைக்க எண்ணிட, தமயந்தி நாரதரைத் தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன் என்றாள். அவர் குரங்கு முகத்தைக் காட்டி அவர் வேண்டாம் என்று கூற தமயந்தி தான் அவர் முக அழகை விரும்பவில்லை என்றும், அவர் இசைநயத்தையே விரும்புவதால், அவரையே திருமணம் செய்விக்குமாறும் வேண்டினாள்.

உண்மையை உணர்ந்த பர்வத முனிவர் தன் சாபத்தைத் திருப்பிப் பெற, நாரதர் முகம் பழைய நிலையை அடைய தமயந்தி-நாரதர் திருமண வாழ்க்கை இனிதே அமைந்தது. நாரதரும் பர்வதருக்குக் கொடுத்த சாபத்தை திரும்பப் பெற்றார். இனி அவருக்குச் சொர்க்கலோகம் செல்லத் தடையில்லை என்றார்.

26. நாரதர் உணர்ந்த மாயை

ஒருசமயம் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது உறங்கிக் கொண்டிருக்க அருகில் லக்ஷ்மி அமர்ந்திருந்தாள். அவ்வமயம் நாராயண நாராயண என்று உச்சரித்துக் கொண்டே நாரதர் உள்ளே நுழைய, அவர் குரலைக் கேட்டதும் லக்ஷ்மி சட்டென்று எழுந்து உள்ளே செல்ல, இதுவரையில் அப்படி நடவாததால் திருமகளின் செய்கை நாரதருக்கு வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. உடனே திரும்பி விடலாமா என்று நினைக்க, பரந்தாமன் கண் விழித்து நாரதரைத் தாராளமாக உள்ளே வருமாறு அழைத்தார். ஆனால் அவர் தயங்கினார். அப்போது திருமால் என்ன கேட்க விரும்புகிறீர்கள். தயக்கமின்றி கேளுங்கள் என்று கூறினார் பரந்தாமன். அப்போது நாரதர் நான் வந்தபோது திருமகள் சட்டென்று உள்ளே சென்றது ஏன் என்றுதான் புரியவில்லை என்றார்.

பகவான், மணமான பெண்கள் வேறு ஆவடருக்கு முன் கணவன் அருகில் இருப்பது முறையல்ல என்று எண்ணி லக்ஷ்மி உள்ளே சென்றாள் என்றார். அதற்கு நாரதர் பிரம்மச்சாரியான என்னைக் கண்டுமா என்று கூற, பகவான் நாரதரை வெளியே அழைத்து வந்து, யார் பிரம்மச்சாரி என்று கூற, நாரதன் அதிர்ச்சியுற்று அதில் பகவானுக்கும் சந்தேகம் வந்துவிட்டதா என்று கேட்டார். அப்போது பரந்தாமன் தமயந்தி மாளிகையில் பர்வதர் சாபத்தால் குரங்கு முகம் பெற்றதையும், அதன்பின் தமயந்தியைத் திருமணம் செய்து கொண்டதையும் நினைவூட்டினார். அதற்கு முன்பே ஸ்ரீமதியை மணக்க விரும்பவில்லையா, எனது கிருஷ்ணாவதார காலத்தில் கோபியர்களின் அழகில் மயங்கி விரும்பவில்லையா? என்று கேட்டார். மேலும் அரன், அயன் மற்றும் பிராம்மாதி தேவர்கள், ஏன் நீயும் நானும் கூட மாயைக்குக் கட்டுப்பட்டவரே என்றார்.

அப்போது நாரதர் மாயையை யாராலும் வெல்ல முடியாதா? அதைப் பற்றித் தான் அறிய விரும்புவதாகவும் பகவானிடம் சொன்னார். பகவானும் அதற்கு சம்மதித்து அவரை அழைத்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்தார். அங்கிருந்த குளக்கரையில் தான் உட்கார்ந்திருப்பதாகவும், நாரதரை குளத்தில் நீராடி வருமாறும் கூறினார். நாரதர் வீணையைப் பரந்தாமனிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு நீரில் நீராடிப் பார்க்க கரையில் பரந்தாமனைக் காணவில்லை. தானும் பெண்ணாக மாறியிருப்பது தெரிந்தது. பெண்ணான நாரதர் தான் யார்? எங்கிருந்து வந்தோம்? என்று தெரியாமல் நின்றிட, அங்கு நீர் அருந்த வந்த அந்நாட்டு மன்னன் அந்த அழகிய பெண்ணைக் கண்டு அவளை மணக்க விரும்புவதாகக் கூறி அவள் சம்மதத்தைக் கேட்க, அவள் மவுனமாக இருக்க, அவளை நாட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் புரிந்து, அவளோடு நெடு நாட்கள் வாழ்ந்து வந்தான். அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தனர். அவர்களும் வளர்ந்து திருமணம் ஆக மன்னனுக்குப் பேரக்குழந்தைகளைப் பெற்றனர். இந்நிலையில் அடுத்த நாட்டு மன்னன் படையெடுத்து வந்து போர் செய்ய, மன்னனும் அவர் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர். மன்னனும் அவன் மனைவி மட்டுமே மீதமிருந்தனர்.

அவ்வமயம் அங்கு வந்த ஒரு முனிவர் பிறப்பு, இறப்பு உலகில் இயற்கையானது, அதற்காக துக்கப்படுவதை விடுத்து குளத்தில் மூழ்கி இறந்தவர்களுக்கான கர்மங்களைச் செய்யுமாறும் கூறினார். அவ்வாறே அவர்கள் மூழ்கி எழ நாரதர் சுய உருவு பெற்றார். அது கண்டு மன்னன் திடுக்கிட்டான். தன் மனைவி எங்கே என்று புலம்ப, முனிவர் அவள் பிரிந்துவிட்டாள் என்றும், மன்னன் முதுமை அடைந்து விட்டதால் அவளை மறந்து மனத்தை ஒருநிலைப்படுத்தி தவம் புரிந்து முக்தி அடைவாய் என்றார். மன்னனும் அவர் சொல்லைக் கேட்டு தெளிவுற்று தவம் செய்யச் சென்றான். நாரதர் குளத்திலிருந்து கரை ஏறி வந்தார். அங்கு முனிவர் காணப்படவில்லை. பரந்தாமன் நாரதரின் வீணையைக் கையில் வைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது பரந்தாமன், நாரதா வீணையை வாங்கிக் கொள். இப்போது மாயை என்றால் என்னவென்று புரிந்து கொண்டிருப்பாயே என்றார். நாரதர் மனதில் அவர் பெண்ணானது முதல் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் தோன்றி மறைந்தன. ஆனால், நான் பெண்ணாக இருந்தபோது நான் யாரென்று அறிந்து கொள்ளாமல் இருந்ததே? அது ஏன் என்று பகவானைக் கேட்டார். பரந்தாமன் சிரித்துக் கொண்டே அதுதான் மாயை. நீ பெண்ணாக இருந்த போது மாயையால் ஆட்கொள்ளப்பட்டிருந்தாய். அதனால் தான் முற்பிறவியின் நினைவு ஒன்றும் தெரியாமல் இருந்தது. அந்த மாயையைதான் யாராலும் வெல்ல முடியாது என்று புரிய வைத்தார்.

27. சத்சங்க நன்மை

சத்சங்கத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாரதர் கேட்க, பகவான் நாராயணன் அதுபற்றி விளக்கினார். சத்சங்க நன்மையைப் பற்றி அந்த ஊர்க்கோடியில் உள்ள பேயிடம் கேட்டு அறியுமாறு பகவான் கூற, நாரதரும் அவ்வாறே சென்று பேயை அழைக்க அது பதில் தந்தது. அதனிடம் சத்சங்க நன்மையைப் பற்றி நாரதர் கேட்டார். பேய், அதே காட்டில் உள்ள புலியிடம் கேட்குமாறு கூறி மறைந்தது. அவ்வாறே புலியிடம் வினவ, புலி அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் பசுங்கன்றை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு கூறி உயிர்விட்டது. அடுத்து நாரதர் பசுங்கன்றை அணுகிக் கேட்க, அது உடனே இறந்து விழுந்தது. அப்போது ஓர் அசரீரி குரல் ஒலித்தது. இந்தக் கிராமத்தில் உள்ள அந்தணர் குழந்தையிடம் சென்று கேளுங்கள் என்றது. அவ்வாறே சென்று குழந்தையைக் கண்டு, அவர் அதனிடம் கேள்வி கேட்கத் தயங்கினார். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்று.

அவர் தயக்கம் கண்ட குழந்தை அவரைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கியது. சத்சங்கத்தால் (அ) சாதுக்கள் என்னும் நல்லவர்களால் என்ன நன்மை ஏற்படும் என்பதல்லவா உமது கேள்வி? நான் சொல்கிறேன் கேளுங்கள். நான் முதலில் மர உச்சியில் பேயாய் இருந்தேன். நீங்கள் பேசியதால் எனக்கு புண்ணியம் கிட்ட பேய்ப்பிறப்பு மாறி புலியாகப் பிறந்தேன். அதனாலேயே நான் புலியிலிருந்து பசுங்கன்றானேன். மறுபடியும் தங்கள் தொடர்பால் அதாவது சாதுவான உங்கள் சங்கத்தால் பிராமணரின் குழந்தையாகப் பிறந்தேன். இப்போது உங்கள் தொடர்பால் அதிகப் புண்ணியம் பெற்று பிறந்த உடனேயே பேசமுடிந்தது என்றது அக்குழந்தை. மேலும் சத்சங்கத்தால் நன்மை பெற்று தற்போது சொர்க்கம் போய்க் கொண்டிருக்கிறேன் என்றது. அவர் கண் எதிரிலேயே குழந்தை இறந்து சொர்க்கம் சென்றது. இதன்மூலம் ஆன்மீகத்தில் உள்ள சாதுக்களின் தொடர்பால் ஏற்படும் நன்மையை, அதன் பெருமையை நாரதர் அறிந்தார்.

28. கோபியரின் உயர்ந்த பக்தி

ஒரு நாள் நாரதர் திருமாலைக் காணச் சென்றார். அங்கே விஷ்ணு தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். மகாலக்ஷ்மி அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். நாரதர் லக்ஷ்மியிடம் பரந்தாமனுக்கு என்ன ஆயிற்றென்று கேட்க, அவள் பரந்தாமன் தலைவலியால் அவதிப்படுகிறார் என்றாள். பகவானுக்கே தலைவலி என்றால் எந்த மூலிகையைக் கொண்டு அதை தீர்ப்பது என்று புரியாமல் குழப்பமடைந்தார். அப்போது விஷ்ணு கண்விழித்து, தன்மீது உண்மையான பக்தி செலுத்தும் பக்தனின் பாதத் துகளே தன் தலைவலிக்கு மருந்து என்று கூறினார். நாரதர் தானே சிறந்த பக்தன் என்றாலும் எப்படித் தன் பாதத் துகளை அவர் நெற்றியில் பூசுவது என்று பின்வாங்க வேறு ஏதாவது வழி பார்த்து வர அவர் அனுப்பப்பட்டார்.

உலகெங்கும் அலைந்து திரிந்து கடைசியில் யமுனை நதிக்கரைக்கு வர அங்கே கோபியர்களைக் கண்டார். அவர்கள் பகவான் உடல்நலம் பற்றி விசாரிக்க, நாரதர் வருத்தத்துடன் அவருக்குப் பயங்கர தலைவலி என்றும், சிறந்த திருமால் பக்தனின் பாதத்துகளைப் பற்றாகப் போட்டால்தான் தீரும் என்றார். உடனே கோபியர்களும், எவ்வளவு பாத துகள்கள் வேண்டுமோ தருகிறோம். எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி அவர்கள் கால்களைக் கல்லில் தேய்த்து பாத துகளைச் சேர்த்து நாரதரிடம் கொடுக்க அவரும் அதை எடுத்துச் சென்று இறைவனது தலைவலியைக் குணமாக்கினார்.

பரந்தாமன் நாரதரிடம், தக்க தருணத்தில் தலைவலி நிவாரண மருந்தைக் கொண்டு வந்தாய் என்று கூற, நாரதர் அந்தக் கோபியர்கள் தன்னைவிட சிறந்த பக்தர்களா என்று திருமாலிடம் கேட்டார். அப்போது பரந்தாமன், கோபியர்கள் என்னையே தங்களுள் ஐக்கியமாக்கிக் கொண்டுள்ளனர். நான் வேறு, அவர்கள் வேறாக எண்ணிக் கூடப் பார்ப்பதில்லை. அவர்கள் என்மீது கொண்டுள்ள அன்பு, பக்தி அவ்வளவு உயர்ந்ததாகும் என்று கூற நாரதர் தானே சிறந்த நாராயண பக்தன் என்று எண்ணி ஆணவம் கொண்டிருந்ததை நீக்கவே பகவான் இத்தகைய நாடகத்தை நடத்தினான் எனத் தெரிந்து கொண்டார்.

29. சம்சார சூழலில் ஓர் உண்மை பக்தன்

ஒருநாள் நாரதர் வைகுந்தம் சென்றபோது நாராயணன் உறக்கத்தில் இருந்தார். திருமகள் அருகிலிருந்தாள். நாராயணன் சயனித்திருப்பதால் தான் பிறகு வருவதாகக் கூறி நாரதர் கிளம்ப, திருமகள் திருமாலிடம் தங்கள் பக்தன் வந்துள்ளார் என்று கூற, நாரதரா! என்று அலட்சியமாகக் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நாரதர், தான் அவர் உண்மையான பக்தன் இல்லையா என்று கேட்க, பகவான் நாமத்தை பலமுறை உச்சரிப்பதால் மட்டும் ஒருவன் சிறந்த பக்தன் ஆக முடியாது என்றும், பூலோகத்தில் வேறொரு சிறந்த பக்தன் இருக்கிறான் என்றும் கூற, அவனைத் தேடிப் புறப்பட்ட நாரதர் பூலோகம் அடைந்து அவனைப் பார்த்தான். அவன் ஒரு சக்கரதாரி. சக்கரத்தின் உதவியால் மண்பாண்டம் செய்து பிழைப்பை நடத்தி குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறவன். அவன் துயில் நீங்கி எழுந்திருக்கும் போதும், இரவில் உறங்கப் போகும்போதும் மும்மலத் தூய்மையோடு பகவானை நினைத்தவண்ணம் தன் பணியை ஆற்றிவந்தான். அவனைக் கண்டு வியப்பெய்திய நாரதர் ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே நினைப்பவன் உண்மை பக்தனா? என்று எண்ணி வைகுந்தம் அடைந்தார்.

நாரதர் தன்னைப் பற்றியே பெருமையாகப் பேசிட பகவான் அவருக்கு ஒரு சோதனை வைத்தார். ஒரு கிண்ணத்தில் நிறைய எண்ணெய் நிரப்பி, அதனைச் சிறிதும் சிந்தாமல் மூவுலகையும் ஒருமுறை சுற்றி வருமாறு பணித்தார். அவ்வாறே நாரதரும் சென்றார். முதலில் பகவானை நினைந்து புறப்பட்டாலும், மூவுலகைச் சுற்றிவரும் வரையில் அந்தக் கிண்ணத்தின் எண்ணெய் சிந்தாமலிருக்க அதன் மீதே கவனம் வைத்து பரந்தாமனை மறந்தார். திரும்பி வந்த நாரதரிடம் பகவான் நாரதர் சமர்த்தர் என்றும், எண்ணெய் சிந்தாமல் வந்து விட்டதற்காகப் பாராட்டினார். பின் அந்தச் சமயத்தில் எல்லாம் தன்னை மறந்திருக்க மாட்டார் என்று சிலாகித்துக் கூறிட, நாரதர் வெட்கி தலைகுனிந்தார். அப்போது பகவான், இந்தச் சிறுபணிக்கே என் நினைவு இல்லை என்றால் குயவன் நாள் முழுவதும் தன் பணியில் என் பெயரை உச்சரிக்க முடியாமல் அதிகாலையிலும், இரவிலும் மட்டும் மறவாமல் என்னை உள்ளத்தில் நினைக்கிறான் என்றால் அவன் எனக்கு உகந்த பக்தனல்லவா! என்று கூறினார். நாரதரும் அதனை ஒப்புக் கொண்டார்.

30. சுந்தன், உபசுந்தன் வரலாறு

வில் போட்டியில் வென்று பாஞ்சாலியுடன் திரும்பிய அருச்சுனன் குந்தியிடம் தான் கனியுடன் (கன்னி) வந்திருப்பதாகக் கூற அவனது தாயார், பாண்டவர்கள் ஐவரையும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள பணிந்தாள். உண்மை தெரிந்த குந்தியும், பாண்டவர்களும் வருத்தமுற வியாசர் போன்றோர் பாஞ்சாலி முற்பிறவியில் பெற்ற சாபம் என்று சமாதானம் கூற, பாஞ்சாலி பாண்டவர் ஐவருக்கும் மனைவியானாள். அவ்வமயம் அங்கு வந்த நாரதர், தன்னை வணங்கிய திரவுபதியையும் பாண்டவர்களையும் வாழ்த்தி, திரவுபதியின் காரணமாக ஐவருக்குள் சண்டை ஏற்படாமல் ஓர் ஏற்பாடு செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறினார். அது சமயம் சுந்தன், உபசுந்தன் என்ற சகோதர்களின் வரலாற்றைக் கூறினார்.

சுந்தன், உபசுந்தன் என்ற சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அந்தச் சகோதரர்கள் பிரம்மனை நோக்கி தவமிருந்து சகல வித்தைகளையும் அறிந்து, நினைத்த உருவம் எடுக்கவல்லவராக வரம் பெற்றனர். மேலும் அசையும், அசையாப் பொருள்களாலும் மரணமில்லா வரமும் பெற்றனர். அவர்கள் தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தனர். இப்படி அந்த அசுரர்கள் தங்களை அடக்க ஆளின்றி குரு÷க்ஷத்திரத்தில் இருந்து மூவுலகையும் ஆண்டு வந்தனர். இந்நிலையில் பிரும்மா விசுவகர்மாவிடம் யாரும் ஆசைப்படுமாறு மயக்கும் பெண் ஒருத்தியைப் படைக்கச் செய்தார். அவள் நினைத்த வடிவம் எடுக்கக் கூடியவளாகவும் இருந்தாள். அவளுக்கு திலோத்தமை என்று பெயர் இட்டார். அப்போது பிரம்மா அவளை சுந்தன், உபசுந்தன் இருவரையும் மயக்கி உனக்காக அவர்கள் இருவரும் சண்டையிட்டு மடியும்படிச் செய்யுமாறு திலோத்தமைக்கு ஆணையிட்டார் பிரமன்.

விந்திய மலைச்சாரலில் சுந்தனும் உபசுந்தனும் மதுவருந்தி, பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு அவர்கள் எதிரில் திலோத்தமை திரிய மதி மயங்கிய வெறி கொண்ட சகோதரர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து, சச்சரவு தொடங்கி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாண்டனர். எனவே, திரவுபதி ஒவ்வொருவருடனும் ஓராண்டு வசிக்க வேண்டும். ஒருவரோடு வாழும் போது இன்னொருவர் கண்டால் ஓராண்டு பிரம்மச்சாரியாக காட்டில் வசிக்க வேண்டும் என்று பாண்டவர்களுக்குள் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு கூறினார்.

31. பீஷ்மர், பரசுராமர் மோதல்

விசித்திர வீரியன் சந்தனு-சத்தியவதி தம்பதிகளின் மகன். மன்னன் அவனுக்கு மணம் முடித்து வைக்க பீஷ்மர் காசிராஜனின் கன்னிகையர் மூவராகிய அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவரைக் கவர்ந்து வந்தார். இதில் அம்பை சால்வ மன்னனைக் காதலித்தாள். பீஷ்மர் அவளை சால்வனிடமே அனுப்பி வைக்க, சால்வன் பிறரால் கடத்திச் செல்லப்பட்ட அம்பையை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டான். திரும்பி வந்த அம்பை பீஷ்மரிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தினாள். பீஷ்மர் தன் பிரம்மச்சரிய விரதத்தைக் கூறி மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட அம்பை பீஷ்மரின் குருவான பரசுராமரைச் சரணடைந்து பீஷ்மர் மணந்து கொள்ள வேண்டும். இல்லையேல் பீஷ்மரைப் பரசுராமர் கொல்ல வேண்டும் என்று வேண்டினாள். பீஷ்மர் முடிவாக மறுக்கவே அவருக்கும், பரசுராமருக்கும் பயங்கரப் போர் மூண்டது. அனைவரும் பரசுராமரிடம், போர்த் தொழில் பிராமணனுக்கு வேண்டாம் என்று தடுத்தனர். பீஷ்மரிடம் குருவான பரசுராமரிடம் போர் வேண்டாம். போர்க்களத்தில் பிராமணனுக்கு மரியாதை செய் என்றனர்.

ஒருநாள் பீஷ்மர் கனவில், வசுக்களில் மூவர் அந்தணர் வடிவில் தோன்றி உபதேசித்த பிரஸ்வாப அஸ்திரத்தை வேறு வழியின்றி பரசுராமர் மீது ஏவ எட்டாவது வசுவின் பிறவியான பீஷ்மர் எண்ணினார். உடனே அங்கு வந்த நாரதர் பீஷ்மரிடம் ப்ரஸ்வாப அஸ்திரத்தை குருவும், பிராமணோத்தமருமான பரசுராமர் மீது விடாதே. அவரை அவமதிக்காதே என்று கூறினார். கனவில் தோன்றிய மூவரும் ஆகாயத்திலிருந்து பீஷ்மரிடம் அவ்வாறே கூறினர். பீஷ்மரால் விடப்பட்ட அஸ்திரம் திரும்பி அழைக்கப்பட்டதைப் பரசுராமரும் கண்டார். நாரதர் பரசுராமரிடம் போரிலிருந்து விலகி சமாதானம் செய்து கொள்ளுமாறும் கூறினார். மேலும் அவரால் பீஷ்மரையோ, பீஷ்மரால் அவரையோ கொல்ல முடியாது என்றும் கூறினார் நாரதர்.

அஸ்திரத்தை உபதேசித்தவர்களும் பீஷ்மரைக் குருவிடம் சென்று சமாதானம் செய்து கொண்டு உலகத்திற்கு நன்மை புரியுமாறு அறிவுரை பகன்றார். பின்னர் பரசுராமர் நாரதர் முன்னிலையில் அம்பையை அழைத்துப் பீஷ்மரை வெல்லமுடியவில்லை என்றார். பீஷ்மரை எதிர்த்துப் போரிடுபவரும் இல்லை, பரசுராமருக்கு இணையான போர்க்கலை ஆசிரியரும் இல்லை எனக்கூறி அவர்களுக்குள் நாரதர் சமாதானம் செய்து வைத்தார்.

32. ஐந்து சபைகளின் வருணனை

யுதிஷ்டிரர் நாரதருக்குத் தமது சபையைக் காட்ட, அவரது சபைக்கு சமமான ஐந்து சபைகளைப் பற்றி நாரதர் வருணித்தார்.

1. இந்திர சபை : சூரிய ஒளிக்கு ஒப்பானது இந்திர சபை. சிறந்த சிற்ப வேலைகளுடன் கூடியது. சுகங்களை, நன்மைகளைத் தரக்கூடியது. மனத்திற்கு இனிமையானது. முடியில் கிரீடத்துடன், தூய ஆடை அணிந்து இந்திரன் அமர்ந்து இருக்கிறான். சசி என்னும் இந்திராணி அவன் அருகில் அமர்ந்திருக்கிறாள். தேவலோக வாசிகளில் சிறந்தோர் தத்தம் மனைவியருடன் இந்திரனை வணங்குகின்றனர். நாரதர், தும்புரு ஆகிய முனிவர்கள் தேவசபையில் உள்ளனர். தேவ வடிவ தீர்த்தங்களும், ஓஷதிகளும், அறம் பொருள் இன்பங்களும் அங்கே உண்டு. மற்றும் கார்ஹபத்தியம், அஹவநீயம், தக்ஷிணம், நிர்மந்த்யம், வைத்யுதம், சூரம், ஸம்வர்த்தம், லௌகிகம், ஜாடரம், விஷ்கம், க்ரவ்யாத் ஷேமவான், வைஷ்ணவம், தஸ்யுமான், பலதம், சாந்தம், புஷ்டம், விபாவசூ, ஜோதிஷ்மான், பரதம், பத்ரம், ஸ்விஷ்டக்ருத், வசூமான், க்ரது, ஸோமம், பித்ருமான், அஸ்கீரஸ் ஆகிய இருபத்தேழு அக்னியும் அங்கே உண்டு. மற்றும் அப்ரஸுக்கள், வித்தியாதரர், கந்தர்வர்கள் இருந்து இந்திரனை மகிழ்விக்கின்றனர். பிரும்மாவின் கட்டளைப்படி சப்தரிஷிகளும் அங்கு வந்து போகின்றனர். அந்த இந்திர சபைக்கு புஷ்கரமாலினி என்று பெயர்.

2. எமசபை : நாரதர் அடுத்து யமசபையைப் பற்றி விவரித்தார். முதுமை, சோர்வு போன்ற எத்தகைய கெடுதலும் இல்லாதது. தேவர் மனிதர்க்கான போகங்களும், ஐவகை உணவும், வாசமலர் மரங்களும் எக்காலமும் இங்கே உண்டு. ராஜரிஷிகளும், பிரம்ம ரிஷிகளும் இங்கே உண்டு. யமனை வழிபடுவோர் இங்கு உள்ளனர். அச்சபையில் எங்கும் ஒலியும், ஒளியும், மணமும் நிறைந்துள்ளன.

3. வருண சபை : வருண சபையைப் பற்றி நாரதர் அடுத்து விவரிக்கிறார். இதுவும் யம சபையைப் போலவே பெரியது. இச்சபையை நீருள் விசுவகர்மா நிர்மாணித்தார். இங்கு இனிய குரலையுடைய பறவைகளும், அவை வாழும் சோலைகளும் உள்ளன. இங்கே காய்ச்சல், நோய் இல்லை. வருணனின் மனைவி கவுரி என்னும் வாணி, வருணனுடன் சபையில் அமர்ந்து இருக்கிறான். ஆதித்தியர்கள் வருணனை வழிபடுகின்றனர். நாகர்கள் படமெடுத்து ஆடுகின்றனர். அஷ்டவசுக்களும், கபிலமுனியும் அங்கே உள்ளனர். கருடனும் தமது பரிவாரத்துடன் அச்சபையில் உள்ளார். வாலி, பலி போன்றோரும், சுக்கிரீவன், நரகாசுரன் போன்ற அசுரர்களும் உள்ளனர். கடல்கள், புண்ணிய நதிகள், மலைகள், நீர்வாழ் உயிரினங்கள் வருணனை வணங்குகின்றன. கந்தர்வர்கள், அப்சரசுகள் போற்றுகின்றனர். வருணனது அமைச்சர் சுநாபனும் குடும்பத்துடன் வந்து வருணனைத் துதிக்கிறான்.

4. குபேரன் சபை : குபேரன் சபை சந்திர ஒளி போல குளுமையானது. வெண்மையானது. மின்னல் கொடியென ஆகாயத்தில் பறப்பது போல் இருக்கிறது. அழகிய குபேரன் குண்டலங்களுடன் ரத்தி என்ற மனைவியுடன் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான். அவனது சித்திரரதம் என்னும் சோலையில் மந்தரம் என்னும் கற்பக மரங்களும், அலகம் என்ற ஓடையும் உள்ளன. அப்சரஸ்ஸுகள், கந்தர்வர், யக்ஷர்கள், ரிஷிகள், லக்ஷ்மிதேவி ஆகியோர் அங்கு உள்ளனர். சங்கரரும், பூத கணங்களும் குபேரனிடம் தோழர்களாக இருப்பர். விபீஷணனும், நந்திகேசுவரர் முதலிய சிவகணங்கள், வெள்ளை ரிஷபம் இங்குண்டு. சிவபெருமான் பரிவாரத்துடன் சபைக்கு வரும்போது குபேரன் அவரைத் துதிக்கிறான். இமயம், விந்தியம், கைலாயம், மகேந்திரம் போன்ற தெய்வீக மலைகளும் தனாதிபதியான குபேரனை வணங்குகின்றன. நவநிதிகளில் சங்கநிதியும் பதுமநிதியும் குபேரனை வணங்குகின்றன. இந்தக் குபேர சபை வானில் பறக்கக் கூடியது.

5. பிரம்ம சபை : இதுவரை சொல்லப்பட்ட சபைகளை விட அதிக சிறப்பு வாய்ந்தது. முன்னொரு நாள் சூரியதேவன் பிரம்ம சபையைப் பார்த்துவிட்டு என்னிடம் கூறினார். ஆயிரம் ஆண்டுகள் பெரும் விரத தவமிருந்தவர்களே இச்சபையைக் காண முடியும். இது பலவித தெய்வீகப் பொருளால் தூண்களின்றிப் பரந்த ஆகாயம் போல் மேல் பகுதி உடையது. அதிசயமான சுகமுள்ள சபை. பிரம்மா உலகைப் படைத்த வண்ணம் உள்ளார். தக்ஷன் போன்ற பதினாரு பிரஜாபதிகளும், சிவரிஷிகளும் இவரை அடுத்துள்ளனர். மூலப்ரக்ருதி, மனம், ஐம்பூதங்கள், வித்தைகள், ஐம்புலன்களின் விஷயங்களுடன் இங்குள்ளது. அகஸ்தியர், மார்க்கண்டேயர், ஜமத்கினி போன்ற ரிஷிகள் அவரை வணங்கிக் கொண்டுள்ளனர். உலகிலுள்ள கலைகள், திறமைகள், மனச்சக்திகள் இங்குண்டு. இவற்றிற்கு இங்கே உடலுண்டு. தேவப்பெண்களும் உள்ளனர்.

அசுரர், நரகர், கருடர் ஆகியோரும் பிரம்மாவுடன் இருக்கின்றனர். நித்திய பிரம்மச்சாரிகளும், சந்ததியுள்ள ரிஷிகளும், சுப்பிரமணியனும் இங்கே உள்ளனர். எல்லா ஞானமுடைய பிரம்மதேவர் அனைவரையும் தக்கபடி கவனித்து எண்ணங்களை நிறைவேற்றி மகிழ்வு செய்கிறார். பிரம்ம சபை எல்லாச் சபைகளிலும் உயர்ந்தது. பூவுலகில் தருமன் சபையே சிறந்ததென்று நாரதர் கூறி முடித்தார்.

33. குணகேசி, சுமுகன் திருமணம்

இந்திரனின் சாரதி மாதலியின் ஒரே பெண் குணகேசி. நல்ல அழகி. மாதலி தன் மனைவி சுதர்மாவுடன் குணகேசியின் திருமணம் பற்றி பேசினார். வழியில் நாரதரைச் சந்தித்து பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவது பற்றி கூற இருவரும் வருணனைக் காண தேவலோகம் சென்றனர். அதன்பின் இருவரும் நாகலோகம், ஹிரண்யபுரம், ஐராவதம் சென்று யோகவதி நகரை அடைய அங்கே மாதலிக்குச் சுமுகன் என்ற நாகனைப் பிடித்துவிட்டது. சுமுகன் ஐராவதனின் குலம்; அவனுடைய தந்தை சிசுரன். அவனைக் கருடன் கொன்று விட்டான் என்று சுமுகன் பற்றிய விவரங்களை நாரதர் கூறினார். பிறகு ஆர்யகனிடம் சென்று அவனது பேரனுக்கு மாதலி மகள் குணகேசியை மனைவியாக ஆக்கிக் கொள்ளும்படிக் கூறினர். அப்போது சுமுகனைத் தின்று விட கருடன் சபதம் செய்திருக்கிறான் என்பதை நாரதருக்கு ஆர்யகன் நினைவு கூறினான். அதைக் கேட்டதும் சுமுகனைக் காக்கும் பொருட்டு நாரதர், மாதலி, ஆர்யகன் ஆகிய மூவரும் இந்திரனிடம் சென்றனர்.

நாரதர் விஷ்ணுவிடமும் இதைக் கூற விஷ்ணு சுமுகனுக்கு அமுதம் கொடுத்து காக்கச் சொன்னார். ஆனால், இந்திரன் அமுதல் கொடுக்காமலேயே அவனுக்கு ஆயுளைக் கொடுத்தான். சுமுகன், குணகேசி திருமணம் இனிதே நடந்தேறியது. இதனை அறிந்த கருடன் இந்திரனிடம் தான் சுமுகனைக் கொன்று தன் குடும்பத்தைக் காக்க நினைந்திருந்ததாகவும், அதனைக் கெடுத்து விட்டதாகவும் இரைந்தான். அதைக் கண்டு பயம் கொண்ட சுமுகன் நாகவடிவெடுத்து விஷ்ணுவின் திருவடிகளை சுற்றிக் கொண்டான். விஷ்ணுவிடம் சென்று கருடன், தான் அவரைச் சுமப்பவன் என்றும் தேவாசுரப் போரில் பெரும் பங்கு ஆற்றியவன் என்றும் ஆணவத்துடன் கூறினான். அப்படியானால் தன் கை ஒன்றைத் தாங்குமாறு அவன் மீது வைக்க அவனுக்குப் பாரம் தாங்காததால் உடல் நைந்து, இறக்கை உதிர்ந்து சோர்வு ஏற்பட்டது. அதனால் கீழே விழுந்து, விஷ்ணுவைத் தொழுது சுமுகனை விட்டு விட்டுப் பறந்தான். இவ்வாறு சுமுகன்-குணகேசி திருமணம் நடந்தேறியது.

நாரத புராணம் முற்றிற்று.


© Om Namasivaya. All Rights Reserved.