1.94 நீல மாமிடற்று - திருவாலவாய் - பண்: குறிஞ்சி
திருமறைக்காடு தலத்தினில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த போது மதுரையிலிருந்து வந்த அடியார்கள், பாண்டிய நாட்டு அரசியார் மங்கையர்க்கரசியாரும் மந்திரியார் குலச்சிறையாரும், திருஞானசம்பந்தர் பாண்டிய நாடு வந்தடைந்து, அந்த காலத்தில் நலிவடைந்திருந்த சைவ சமயத்திற்கு புத்தணர்ச்சி அளிக்க வேண்டும் என்றும் சமணர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றும் வேண்டுகின்றனர் என்பதை அவர்களது தூதுவர்களாக வந்த தாங்கள் உணர்த்துவதாக சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து, திருஞான சம்பந்தர் பாண்டிய நாடு நோக்கி செல்கின்றார். அவ்வாறு செல்லும் வழியில் திருமறைக்காடு தலத்தின் அருகிலுள்ள அகத்தியான் பள்ளி மற்றும் கோடிக்கரை தலங்கள் சென்ற பின்னர், கடிக்குளம், இடும்பாவனம், உசாத்தானம், ஆகிய தலங்களைக் கடந்து பாண்டிய நாடு சென்றடைகின்றார். கொடுங்குன்றம் தலத்து பெருமானை வணங்கி பதிகம் பாடிய பின்னர், மதுரை நகரம் நோக்கி சென்ற போது, மந்திரியார் குலச்சிறையார் மதுரை நகரின் எல்லையில் திருஞானசம்பந்தரை வரவேற்றார். திருவாலவாய் தலத்தின் திருக்கோபுரத்தை கண்ணுற்ற, திருஞானசம்பந்தர், மங்கையர்க்கரசி என்று தொடங்கும் பதிகத்தை (3.120) பாடி, அந்த பதிகத்தின் பாடல்களில் அரசியார் மங்கையர்க்கரசியார் மற்றும் மந்திரியார் குலச்சிறையார் ஆகிய இருவரின் தொண்டினையும் சிறப்பித்து பாடுகின்றார். அதன் பின்னர் குலச்சிறையார், திருஞானசம்பந்தரை திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்ல, பெருமானைப் பணிந்து வணங்கிய பின்னர், திருஞான சம்பந்தர் நீல மாமிடற்று என்று தொடங்கும் பதிகத்தை பாடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் திருஞானசம்பந்தர், தலத்தினை ஆலவாய் என்று குறிப்பிடுகின்றார்.
ஆலவாய் என்று இந்த நகரத்திற்கு பெயர் வந்த வரலாறு திருவிளையாடல் புராணம், திருவாலவாயாகிய படலம் என்ற படலத்தில் சொல்லப் படுகின்றது. பாண்டிய நாட்டினை வங்கிய சேகர பாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்த சமயத்தில், மக்கள் தொகை பெருகிய காரணத்தால் மதுரை நகரத்தை விரிவாக்கவேண்டும் என்று மன்னன் நினைத்தான். பண்டைய நாளில் வரையறுக்கப்பட்ட எல்லை நாளடைவில் வெள்ளம் முதலிய இயற்கைச் சீற்றங்களால் அழிந்து போன தன்மையால், அந்த எல்லையை தனக்கு இறைவன் சுட்டிக் காட்டி அருள் புரிய வேண்டும் என்று வேண்டினான். ஒரு சித்தராக உருவெடுத்து வந்த இறைவன், பாம்பினை அரை ஞாணாகவும், பூணுநூலாகவும், குழையாகவும் குண்டலமாகவும் கால் சதங்கையாகவும் அணிந்து வந்த சித்தர், தனது கரத்தில் கங்கணமாக இருந்த பாம்பினை பார்த்து, இந்த நகரத்தின் எல்லையை காட்டுவாயாக, என்று ஆணையிட, அதற்கு பணிந்த அந்த பாம்பு. விரிவாக்கப்பட்ட நகரத்திற்கு தனது பெயரை வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்த பின்னர், இறைவனின் கட்டளையை நிறைவேற்றத் தொடங்கியது. உடனே அந்த பாம்பு கிழக்கு திசையிலிருந்து தனது உடல் வலமாகச் செல்லும் வண்ணம் வளைத்து, ஒரு பெரிய நிலப்பரப்பினை சுற்றி வந்து, தனது வாயினில் வாலை வைத்து, புதிய நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளை சுட்டிக் காட்டிய பின்னர், சித்தரின் கரத்தில் கங்கணமாக மாறியது. பாண்டிய மன்னனும் அந்த பாம்பு வரையறுத்த எல்லையில் மதில் சுவர் எடுத்தான். இவ்வாறு வரையறுக்கப்பட்ட நகரம், தெற்கில் திருப்பரங்குன்றமும் வடக்கில் இடபக்குன்றமும் மேற்கில் திருவேடக நகரும் கிழக்கில் திருப்பூவணமும் எல்லைகளாக கொண்டு திகழ்ந்தது என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் கூறுகின்றார். ஆலம் என்றால் வால் என்று பொருள். தனது வாலினை, ஆலத்தை வாயினில் வைத்து எல்லையை வரையறுத்துக் காட்டியதால் மதுரை நகருக்கு ஆலவாய் என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த பதிகமும் அடிகள் தோறும் இரண்டு சீர்களைக் கொண்டு அமைந்திருப்பதால் திருவிருக்குக்குறள் என்று அழைக்கப் படுகின்றது. குறள் என்றால் சிறியது என்று பொருள். சிறிய அடிகளைக் கொண்ட பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம் குறள் என்று அழைக்கப் படுகின்றது. ஒவ்வொரு அடியிலும் இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். மந்திரம் என்ற சொல், சொல் சுருக்கம் உள்ளது என்ற பொருளினைத் தரும். இருக்கு வேதத்தில் உள்ள மந்திரங்கள் அளவில் சிறியதாக இருக்கும் நிலை பற்றி இந்த பாடலையும் இருக்குக்குறள் என்று பெயரிட்டு சேக்கிழார் அழைத்தார் போலும். மந்திரங்கள், தன்னை எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை கொண்டது போன்று இந்த பதிகமும் அமைந்துள்ளது என்று தண்டபாணி தேசிகர் அவர்கள் கூறுகின்றார். எனவே தான் தேவார, திருவாசகப் பாடல்கள் பெருமானின் புகழினைக் குறிப்பிடும் பாடல்களாகவும் மந்திரங்களாகவும் கருதப்படுகின்றன. மேலும் திருஞானசம்பந்தர் பதிகங்கள் அனைத்துமே இருக்கு வேதத்தின் சாரமாக கருதப் படுவதாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் கூறுகின்றார். முதுகுன்றத்து பதிகத்தை குறிப்பிடும் பாடலில் சேக்கிழார் இருக்குக் குறள் துணை மலர் என்று குறிப்பிடுகின்றார். ஒன்றுக்கொன்று துணையாக உள்ள இரண்டு சீர்கள் கொண்ட அடிகள் என்பதை உணர்த்தும் வண்ணம் சேக்கிழார் இவ்வாறு கூறுகின்றார். எனவே இந்த பதிகங்கள் நான்கு அடிகள் கொண்ட பாடல்களே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பல பதிப்புகளில் இரண்டு அடிகள் கொண்ட பாடலாக இந்த பதிகங்கள் அச்சிடப் பட்டுள்ளன. சில பதிப்புகளில் இரண்டு அடிகளாக இருந்தாலும், இடையில் கமா எனப்படும் நிறுத்தக் குறியுடன் அச்சிட்டு நான்கு அடிகள் கொண்ட பாடல்கள் என்று உணர்த்துவதையும் நாம் காணலாம். இவ்வாறு திருவிருக்குக்குறள் என்று அழைக்கப்படும் பதிகங்கள் முதல் திருமுறையில் ஏழு பதிகங்கள் உள்ளன. அவையாவன, அரனை உள்குவீர் (1.90), சித்தம் தெளிவீர்காள் (1.91), வாசி தீரவே (1.92) நின்று மலர் தூவி (1.93), நீல மாமிடற்று (1.94), தோடொர் காதினன் (1.95) மற்றும் மன்னி யூரிறை (1.96) என்பன. இவை அனைத்தும் குறிஞ்சிப் பண்ணில் இசைத்து பாடும் வண்ணம் இயற்றப் பட்டுள்ளன. மூன்றாம் திருமுறையில் உள்ள இரண்டு பதிகங்கள், கல்லால் நீழல் (3.40) மற்றும் கருவார் கச்சி (3.41), என்று தொடங்கும் பதிகங்களும் திருவிருக்குக் குறள் வகையைச் சார்ந்தவை. இவற்றை கொல்லிப் பண்ணில் இசைத்துப் பாடவேண்டும்.
பாடல் 1:
நீல மாமிடற்று
ஆல வாயினான்
பால தாயினார்
ஞால மாள்வரே
விளக்கம்:
இந்த பாடலின் தொடக்கத்தில் பெருமான் பண்டைய நாளில் விடமுட்கொண்டு அமரர்களை காத்த பெருமான் என்று குறிப்பிடுவதன் மூலம், பாண்டியநாட்டினில் விடம் போன்று பரவியிருந்த சமண சமயத்தவரின் ஆதிக்கத்தை ஒழித்து பாண்டிய நாட்டிலும் தமிழகத்திலும் சைவ சமயம் தழைத்துஓங்குவதற்கு பெருமான் அருள் புரிவார் என்பதை குறிப்பால் உணர்த்துவது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது. பால்=பக்கம்; பாலது=பக்கம் சார்ந்து இருத்தல்; பாலதாயினார் ஞாலம் ஆள்வரே என்ற தொடர் மூலம் பெருமானைச் சார்ந்த அடியார்கள் உலகத்தை ஆட்சி செய்வார் என்று கூறுகின்றார். அனல் வாதம் மற்றும் புனல் வாதம் ஆகிய இரண்டிலும் சமணர்களை வெற்றி கொண்ட திருஞானசம்பந்தர், சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டியதால், உலகத்து சைவர்களின் தலைவராக விளங்கிய நிகழ்ச்சி பின்னர் நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி, இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ள கூற்றினை, அதாவது பெருமானைச் சார்பவர் உலகம் ஆள்வர் என்ற கூற்றினை, நிரூபிப்பதாக அமைந்துள்ளது.
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் பதினைந்து கிமீ தூரத்தில் உள்ள தலமாகிய நீலக்குடியில், ஆலகால விடம் உட்கொண்டதால் ஏற்பட்ட வெம்மையைத் தணிக்கும் பொருட்டு, பிராட்டி பெருமானுக்கு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்ததாக கருதப் படுகின்றது. தற்போது தென்னலக்குடி என்று இந்த தலம் அழைக்கப் படுகின்றது. பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை சிவபிரான் உட்கொண்ட பின்னர், நஞ்சின் வெம்மையினை குறைப்பதற்காக, அம்பிகை எண்ணெய் அபிஷேகம் செய்ததாக தல வரலாறு கூறுகின்றது. கோயிலின் குளத்திற்கு வடக்கே கருங்கல் செக்கு உள்ளது. இந்த செக்கில் தான் பார்வதி தேவி எண்ணெய் ஆட்டி, அதனைக் கொண்டு இறைவனை நீராட்டியதாக நம்பப் படுகின்றது. சில வருடங்கள் முன்பு கூட இந்த செக்கு பயன்படுத்தப் பட்டு அந்த எண்ணெயைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தனர், ஆனால் தற்போது அவ்வாறு செய்வதில்லை. இறைவனின் திருமேனியின் மீது விடப்படும் எண்ணெய் மொத்தமும், இலிங்கத் திருமேனியால் உறிஞ்சப்பட்டு, ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தாத அதிசயத்தை நாம் இன்றும் காணலாம். எண்ணெய் நீராட்டத்திற்கு பின்னர் சுவாமியின் திருமேனிக்கு இளஞ்சூடு கொண்ட வெந்நீர் தான், இறைவனை நீராட்டப் பயன்படுத்தப் படுகின்றது. மேலும் இறைவனுக்கு நைவேத்தியமாக, மிளகு சீரகம். மற்றும் பசுநெய் கலந்த அன்னம் படைக்கப் படுகின்றது. அம்மையே தைல அபிஷேகம் செய்வதாக கருதப் படுவதால், எண்ணெய்க் கிண்ணம் முதலில் அம்மன் சன்னதியில் வைக்கப்பட்டு, பின்னரே இறைவனை நீராட்ட பயன்படுத்தப் படுகின்றது. மேலும் மொத்த எண்ணெயில் பாதி பங்கு இறைவியின் நீராட்டத்திற்கும் பயன்படுத்தப் படுகின்றது. இந்த தலத்திற்கு சென்ற அப்பர் பிரானுக்கு, சிவபெருமான் ஆலகால நஞ்சினை உண்டு உலகத்தினை காத்தது நினைவுக்கு வந்தது போலும். இந்த பதிகத்தின் பாடலில் இறைவன் நஞ்சுண்ட செய்தியை குறிப்பிடுகின்றார். இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. அப்பர் பிரானின் பதிகத்தின் பாடலில் (5.72.4), பெருமானை ஆல நஞ்சுண்ட கண்டன் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆலன்=ஆலின் நிழலில் இருந்தவன், நால்வர்க்கு அறம் உரைத்த போது கல்லால மரத்தின் கீழ் இருந்தமையால் ஆலன் என்ற பெயர் வந்தது.
நாலு வேதியர்க்கு இன்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ்சு உண்ட கண்டத்து அமர்
நீலன் நீலக்குடி உறை நின்மலன்
காலன் ஆருயிர் போக்கிய காலனே
பெருமானின் கழுத்தினில், ஆலகால விடத்தினை உட்கொண்டு அந்த விடத்தினை வயிற்றுக்கு அனுப்பாமல் கழுத்தில் தேக்கியதால், அவரது கழுத்து கருமை நிறம் படர்ந்த கறையாக காணப் படுவதை பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. காளகண்டர் என்றும், கறைக்கண்டர் என்றும் நஞ்சுண் கண்டர் என்றும் கரிய கண்டர் என்றும் பெருமான் குறிக்கப் படுகின்றார். கருமை நிறத்தை கருநீலம் என்றும் நீலம் என்று சொல்வது இலக்கிய மரபு. இந்த மரபின் வண்ணம் பல பாடல்களில் நீல நிறம் படர்ந்த கழுத்தினை உடையவன் பெருமான் என்றும் சொல்வது வழக்கம். நீலகண்டன் என்ற வடமொழித் திருநாமம் நீல மாமிடற்றன் என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. பெருமானை நீலகண்டன் என்று குறிப்பிடும் திருமுறைப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பேணுப் பெருந்துறைப் பதிகத்தின் பாடலில் (1.42.5) திருஞானசம்பந்தர் பெருமானை நீலமாகிய கண்டர் என்று அழைக்கின்றார். துணியார்=துண்டித்துக் கொண்டு செல்ல விரும்பாதவர்; தனது அடியார்கள் தன்னை அன்பால் பிணித்துக் கொண்டுள்ள நிலையிலிருந்து விடுபட்டு செல்லும் மனம் இல்லாத இறைவர் என்று கூறுகின்றார். இறைவனது புகழினைப் பாடும் பாடல்களைப் பாடும் அடியார்கள், அத்தகைய பாடல்கள் பாடுவதால் நன்மை அடைவதால், அத்தகைய நன்மையைப் பெற்றுத் தருகின்ற நாவினை நன்மையுடன் பிணைந்த நாக்கு, நன்மையைத் தழுவிய நாக்கு என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சுமடர்கள்=அறிவற்றவர்கள்; சோதிப்பு அரியார்=இறைவனைப் பற்றி ஆராய்ந்து அவனது தன்மைகளை உணரும் வல்லமை அற்றவர்கள்; அவ்வாறு இறைவனைப் பற்றி நினைத்து அவனைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் துணிவு அற்றவர்கள் என்றும் அவர்களை குறிப்பிடுகின்றார். பெருமானின் கழுத்தினில் உள்ள நீல நிறத்து கறை, அவரது கழுத்தினுக்கு அணிகலனாக, மாணிக்கக்கல் பதிக்கப்பட்டது போன்று உள்ளது என்றும் கூறுகின்றார்.
பணிவாயுள்ள நன்கெழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ளமிலாத சுமடர்கள் சோதிப்பரியார்
அணியார் நீலமாகிய கண்டர் அரிசிலுரிஞ்சு கரை மேல்
மணிவாய் நீலம் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே
வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.50.6) திருஞானசம்பந்தர், பெருமானை நீலமணி மிடற்றன் என்று குறிப்பிடுகின்றார். மிடறு=கழுத்து; நண்ணலார்=வேத நெறியிலிருந்து வழுவிச் சென்ற திரிபுரத்து அரக்கர்கள். கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்றா என்று பெருமானின் திருநாமங்களை சொல்லும் தனக்கு அருள் புரிவாய் பெருமானே என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் வேண்டுகின்றார். திருஞான சம்பந்தரின் விருப்பங்கள் அனைத்தையும் பெருமான் நிறைவேற்றி அருள் புரிந்ததை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். எனவே நாமும் உள்ளன்புடன் பெருமானின் திருநாமங்களை மீண்டும் மீண்டும் சொல்லி, அவரைப் பணிந்து வணங்கினால் நமக்கு பெருமான் அருள் புரிவார் என்பது உணர்த்தப்படுகின்றது.
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே
திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.55.4) பெருமானை நீலமார் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். சால=அதிகமான; மேலையார்கள்=ஒழுக்கத்தினால் உயர்ந்த பெரியோர்கள்; சக்கரம் வேண்டி திருமால் பெருமானை வழிபட்ட தலம் என்று கூறுவார்கள்.
சால மாமலர் கொண்டு சரணென்று
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேறு
நீலமார் கண்ட நின்னையே
தூங்கானை மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.59.2) திருஞானசம்பந்தர் பெருமானை, மணிநீலகண்டம் உடைய பிரான் என்று குறிப்பிடுகின்றார். நீர=தன்மையை உடைய; மேலுலகம்= சிவனுலகம்; துணிநீர்=துள்ளிக் குதித்து ஓடும் நீர்; பிரியாத பேரின்பம்=வரம்பிலா இன்பம் கொடுக்கும் முக்தி உலகத்தின் தன்மையை உணர்த்த பேரின்பம் என்று கூறினார். நிலவுலகத்தில் நாம் அடையும் இன்பம் அளவினில் மிகவும் சிறியது, நிலையற்ற தன்மையால் அழிந்து துன்பமாக மாறக் கூடியது என்பதை உணர்த்தும் பொருட்டு பிரிய என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார். ஆனால் சிவனது உலகத்தில் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்காக காத்திருக்கும் இன்பமோ, துன்பக் கலப்பில்லாதது, நிலையானது. இந்த வேற்றுமையை உணர்த்தும் பொருட்டு பிரியாத பேரின்பம் என்றும் பிரிய இன்பம் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பிணிகள் நமது உடலின் வலிமையை குறைத்து நமக்கு துன்பம் அளிப்பதால், நோய்களால் நாம் சலிப்பினை அடைகின்றோம். பிறப்பு இறப்பு மற்றும் இவையிரண்டின் இடைப்பட்ட வாழ்வின் நெடுகே நாம் பல துன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பதால், நோய்கள் போன்று சலிப்பினைத் தருவதாக இங்கே கூறப்படுகின்றது. அணி நீர=அழகிய தன்மையை உடைய;
பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு
அணி நீர மேலுலகம் எய்தல் உறின் அறிமின் குறைவில்லை ஆனேறு உடை
மணி நீல கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும்
துணி நீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.66.3) திருஞானசம்பந்தர் பெருமானை நீலகண்டர் என்று அழைக்கின்றார். மன்மதனின் கொடியில் அன்னத்தின் சின்னம் பதிக்கப் பட்டிருப்பதை உணர்த்தும் பாடல் ஒன்றினில் இரதி தேவிக்காக அருள் புரிந்து மன்மதனை பெருமான் உயிர்ப்பித்தார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். (1.66.3). மகரம்=மீன்; தாரா=சிறு நாரை; பகன்றில்=அன்றில் பறவை; அழகில் தனக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாதவள் இரதி தேவி என்று குறிப்பிட, நிகரொப்பில்லா தேவி என்று கூறுகின்றார்.
மகரத்தாடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய
நிகர் ஒப்பில்லாத் தேவிக்கு அருள் செய் நீல கண்டனார்
பகரத் தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்தத்
தகரப் புன்னை தழைப் பொழில் சேர் சண்பை நகராரே
கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.79.2) திருஞானசம்பந்தர், பெருமானை, கொண்டலும் நீலமும் புரை திருமிடறர் என்று குறிப்பிடுகின்றார்.
கொண்டல்=மேகம்; மழை பொழியும் மேகம் கருமை நிறத்தில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் கருமேகத்தை நீலமேகம் என்று குறிப்பிடுவது இலக்கிய மரபு. கரிசு=குற்றம்; உயிரின் குற்றமாக கருதப்படும் குற்றங்கள்; படுதலை=இறந்துபட்ட தலை, பிரம கபாலம்; வங்கம்= தோணி; கண்டல்=நீர்முள்ளிச் செடி; கைதை=தாழை; புரை=போன்ற; கொடுமுடி=கொங்கு நாட்டில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி தலம்; அலர்=தாமரை மலர்; அலர் அயன்=தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமன்; வண்டல்=வண்டல் மண்; சுறவும்=சுறா மீன்கள்;
கொண்டலும் நீலமும் புரை திரு மிடறர் கொடுமுடி உறைபவர் படுதலைக் கையர்
பண்டலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர்சடை அடிகளார் பதியதன் அயலே
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறிகடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல்
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே
கொடிமாடச் செங்குன்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.3) பெருமானை நீலநன் மாமிடற்றன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நீதி=நியதி, கடமை, வழிமுறை; ஏலம்= மயிர்ச்சாந்து; இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் அடியார்களின் அவலத்தை களையும் பெருமான் என்றும், அடியார்களின் தடுமாற்றத்தை நீக்குவார் என்றும் குறிப்பிட்ட, ஞானசம்பந்தர், இந்த பாடலில், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறம் ஒரு கறையாக பொருந்திய கழுத்தினை உடைய பெருமான் என்று குறிப்பிட்டு, தன்னை வணங்கிய தேவர்களுக்கு பெருமான் அருள் புரிந்த செய்கையை குறிப்பிடுகின்றார். நஞ்சினைத் தனது கண்டத்தில் தேக்கி வைத்து தேவர்களை காத்த பெருமானின் கருணைச் செயலை குறிப்பிட்டு, அந்த பெருமானைச் சரண் அடைதல் நம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டே செய்யப்படும் செயலாகும் என்று திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். எனவே தான் பெருமானை வாழ்த்துவதே நமது வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்கள் வாழ்க்கையின் நோக்கமே பெருமானை வழிபடுதல் தான் என்று உணர்த்துகின்றன. மேலும் பெருமானைத் தொழுது வணங்காத வாழ்க்கை வீணான வாழ்க்கை என்றும் உணர்த்துகின்றன. பெறுவதற்கு அரிய பிறவி மனிதப்பிறவி என்பதை நாம் அறிவோம். எனவே அத்தகைய வாய்ப்பினைப் பெற்ற நாம், இறைவனைத் தொழுது அந்த வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே தான் பெருமானை வணங்கி வாழ்வதே வாழ்க்கையின் முறை என்று ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். இவ்வாறு அவர் கூறுவது, அப்பர் பிரானின் திருவாய்மொழி ஒன்றினை நமக்கு நினைவூட்டுகின்றது. வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின் என்பது தான் அந்த தொடர். இந்த தொடரினை நாம் தில்லைத் தலத்தின் மீது அருளிய கருநட்டக் கண்டனை என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் காணலாம் (தில்லைச் சிதம்பரம் 4.81.5. வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின், பார்த்தற்கு அன்று பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீர், கோத்தன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக், கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பதன்றோ தந்தம் கூழைமையே)
பாலன நீறு புனை திகழ் மார்பில் பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழல் ஏத்தல் நீதியே
அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கும் திருநீலகண்டத்துத் திருப்பதிகம். இறைவனார் உட்கொண்ட நஞ்சினைத் தடுத்து வானவர்க்கும் உலகத்தவர்க்கும் எங்கும் பொங்கிப் பரவிய ஆலகால விடத்தினால் எந்தவிதமான தீங்கும் நேரிடாமல் பாதுகாத்தது நீல நிறமாக மாறிய கழுத்து என்றும், அந்த நீலகண்டம் அடியார்களுக்கு துன்பம் வாராமல் பாதுகாக்கும் என்ற பொருள் பட இந்த பதிகம் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும் நீலகண்டத்தின் சிறப்பு கருதி, திரு என்ற அடைமொழியை சேர்த்து திருநீலகண்டம் என்று அழைத்து ஆணையிடுவதாக இந்த பதிகம் அமைந்துள்ளது என்றும் சேக்கிழார் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களும் அடியார்களை தீவினை தீண்டப்பெறாது திருநீலகண்டம் பாதுகாக்கும் என்று முடிகின்றன. இதனால் இந்த பதிகம் திருநீலகண்டப் பதிகம் என்றே அழைக்கப் படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். அவ்வினை= சென்ற பல பிறப்புகளில் செய்த தீவினைகள்; இவ்வினை=பழைய வினைகளின் பயனாக இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பங்கள்; பொதுவாக சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளின் பயனை, இன்பமாகவும் துன்பமாகவும் உயிர்கள் இந்த பிறவியில் நுகர்ந்து கழிக்க வேண்டும் என்பதே விதி. இந்த விதியினை மாற்றுவதற்கோ வினைகளை முற்றிலும் அகற்றவோ குறைக்கவோ, பெருமானைத் தவிர்த்து வேறு எவருக்கும் அதிகாரம் கிடையாது. எனவே இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு பெருமானை வணங்கித் தொழுது உயிர்கள் தங்களது வினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதே அருளாளர்கள் மீண்டும் மீண்டும் நமக்கு வழங்கும் அறிவுரை ஆகும். இவ்வாறு நமது வினைகளைத் தீர்த்துக் கொள்ளும் உபாயம் இருக்கையில், அதனை விட்டுவிட்டு, வினைகளைக் கழித்துக் கொண்டு உய்யும் வழியினை நாடாமல் இருப்பது நமது தவறு தானே. இந்த குற்றத்தையே நமது ஊனம் என்று இங்கே திருஞானசம்பந்தர் சுட்டிக் காட்டுகின்றார். பெருமானை நாடுவதற்கு நமக்கு உள்ள சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகளில், சரியை கிரியை ஆகிய இரண்டு வழிகளை, கைவினை என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பது உம் தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்
கள்ளில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.119.8) திருஞானசம்பந்தர் பெருமானை நீல மிடற்று அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். நீலமலர் போன்ற கண்களை உடைய பிராட்டியைத் தனது உடலில் ஒரு பாகத்தில் கொண்டுள்ள பெருமான், நீலநிறம் படர்ந்த கழுத்தினை உடையவன் என்று நயமாக கூறுகின்றார்.
திருநீல மலர் ஓண்கண் தேவி பாகம்
புரிநூலும் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர் விம்மு கள்ளில் என்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணுவதே
கருவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.28.5) திருஞானசம்பந்தர் பெருமானை நீலகண்டர் என்று குறிப்பிடுகின்றார். பங்கயம்=தாமரை மலர்; இந்த பாடலில் பெருமானின் திருப்பாதங்களின் தன்மை குறிப்பிடப் படுகின்றது. அழியும் நிலையில் இருந்த சந்திரனைத் தனது சடையினில் வைத்துக் கொண்டு அபயம் அளித்த பெருமான், நமக்கு அருள் புரிய வேண்டும் என்றால் நாம் பற்றிக் கொள்ள வேண்டியது அவனது திருப்பாதங்களைத் தானே. எனவே தான் பெருமானின் சடையினை இந்த பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், ஐந்தாவது பாடலில் பெருமானின் திருவடிகளை குறிப்பிடுகின்றார் போலும். அங்கை=அழகிய கை, அம்+கை; அம்=அழகிய
பங்கயம் மலர்ப் பாதர் பாதியோர்
மங்கையர் மணி நீலகண்டர் வான்
கங்கையர் கருவூருள் ஆனிலை
அங்கை ஆடரவத்து எம் அண்ணலே
நாலூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.46.4) பெருமானை நீலத்தார் கண்டத்தான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கோலம்=அழகு; நீலத்தார்=நீல நிறம் பொருந்திய; தொல்வினை=எண்ணற்ற பழைய பிறவிகளாக தொன்று தொட்டு தொடர்ந்து வரும் சஞ்சித வினைகள்; இந்த பாடலில் மிகவும் பொருத்தமாக, சூலத்தான் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பெருமான் மூவிலைச் சூலம் வைத்திருப்பதே, தனது அடியார்களின் தொல்வினைகளை முற்றிலும் அறுத்து எறியவே என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
கோலத்தார் கொன்றையான் கொல்புலித் தோலாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார் பால் சூழாவாம் தொல்வினையே
திருக்களர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.6) திருஞானசம்பந்தர், பெருமானை நீலம் மேவிய கண்டர் என்று அழைக்கின்றார். கோலம்=அழகு; ஆல=தோகை விரித்து ஆடி அசைய; கொண்டல்=மேகம்; வானில் கருநிற மேகங்கள் சூழ்வதைக் காணும் மயில்கள் மழை வரப் போவதை அறிந்து மகிழ்ச்சியால் நடமாடுகின்றன என்று கூறுகின்றார், மேவிய=பொருந்திய; சேலிளம் கயலார்=சேல் கயல் ஆகிய இரண்டு வகை மீன்களும் நிறைந்து விளங்கும்; பெருமானைச் சரணடையும் அடியார்கள் அனைவரையும் பெருமான் காக்கவேண்டும் என்று அனைத்து அடியர்களின் சார்பாக திருஞானசம்பந்தர் இந்த பாடல் மூலம் பெருமானிடம் வேண்டுகின்றார்.
கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொழில் குலவும் வயலிடைச்
சேலிளம் கயலார் புனல் சூழ்ந்த திருக்களருள்
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன்சடைப் பெருமானெனப் பொலி
ஆல நீழலுளாய் அடைந்தார்க்கு அருளாயே
தலைச்சங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.55.5) திருஞானசம்பந்தர் பெருமானை, நீலஞ்சேர் கண்டத்தர் என்று அழைக்கின்றார். ஆலம்=நீர்; கோலம்=அழகு; மன்னும்= நிலையாக பொருந்தும் மூவிலை வேல் சூலம் ஏந்திய கையினை உடையவரே, திருநீற்றுப் பொடியினால் அபிஷேகம் செய்து கொண்டு மகிழ்பவரே, கொடிய ஆலகால விடத்தை தேக்கியதால் நீல நிறம் கொண்ட கழுத்தினை உடையவரே, நீண்ட சடையினில் கங்கை நீரினை தேக்கி அடக்கியவரே, நீர் வளம் மிகுந்து காணப்படுவதால் அன்னங்கள் பொருந்தி வாழும் சோலைகள் உடைய தலைச்சங்கை தலத்தில் உள்ள அழகிய கோயிலை நீர் உறையும் திருக்கோயிலாக கொண்டுள்ளீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண்ணீறு ஆடலீர்
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர்
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை
கோலம் சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே
மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.7) திருஞானசம்பந்தர், பெருமானை நீல மிடறர் என்று அழைக்கின்றார். நீல மிடறு வடிவர் என்று சொற்களை மாற்றி அமைத்து பொருள் கொள்ள வேண்டும். தமதாம் கொள்கை அறிவொண்ணார் என்ற தொடர் மூலம், தமது தன்மை இன்னது என்பதை எவரும் அறிந்து கொள்ள முடியாத வண்ணம் விளங்குபவர் என்று உணர்த்துகின்றார். மேலர்=அனைவர்க்கும் மேலானவர்; மதியர்=சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவர்; நெடியர் என்று நீண்ட புகழினை உடையவர் என்று குறிப்பிடுகின்றார்.
நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாம் கொள்கை அறிவொண்ணார்
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே
கொச்சைவயம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தை (2.83.1), நீலநன் மாமிடற்றான் என்றே தொடங்குகின்றார். சினத்தன்=கோபத்தை உடைய; மா=பொதுவாக விலங்கு இங்கே தாருகவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட மதயானை; சேலன= சேல் மீன் போன்ற கண்களை உடைய பார்வதி தேவி: மீன் தனது கண்களின் வழியே வெப்பத்தை பொழிந்து நீரினில் மிதக்கும் தனது முட்டைகளுக்கு வெப்பம் அளித்து பொறிப்பது போன்று, அன்னை தனது கருணைக் கண்களால் உயிர்களின் துன்பத்தை தீர்ப்பதால் மதுரை நகரத்து அன்னைக்கு மீனாட்சி என்றும் அங்கயற்கண்ணி என்றும் பெயர் வந்ததை சேலன கண்ணி என்ற தொடர் நினைவூட்டுகின்றது. தலத்து மகளிரின் கண் வேலின் கூரிய தன்மைக்கு ஒப்பிடப் படுகின்றது.
நீலநன்மா மிடற்றன் இறைவன் சினத்தன் நெடுமா உரித்த நிகரில்
சேலன கண்ணி ஒரு கூறு உருக்கொள் திகழ் தேவி மேவு பதி தான்
வேலன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின்
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடியாடு கொச்சைவயமே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.97.9) திருஞானசம்பந்தர் பெருமானை நீல மேவு கண்டனார் என்று குறிப்பிடுகின்றார். ஏலம்=நறுமணம் உடைய கூந்தல் தைலம்; வயது முதிர்ந்து கால்கை தளர்ந்த நிலையில் இறைவனைப் புகழ்ந்து பாடியும் போற்றியும் வணங்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும், உடல் அதற்கு ஒத்துழைக்க முடியாத நிலையினை அடைவதற்கு முன்னமே, உடல் நலமாக இருக்கும் போதே, இறைவனைப் பணிந்து வணங்கி பயன் அடையுமாறு அறிவுரை கூறுகின்ற பதிகம்.
காலினோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால்
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்பதன் முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே
அம்பர் திருக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.19.11) திருஞானசம்பந்தர், பெருமானை அழகர் என்றும் அடிகள் என்றும் அம்பர் மேவிய நிழல்திகழ் சடைமுடி நீலகண்டர் என்றும் குறிப்பிட்டு, இந்த பதிகத்தை ஓதி சிவகதி அடையுமாறு அடியார்களுக்கு அறிவுரை கூறுகின்றார். கொண்மின் என்ற சொல்லுக்கு முன்னர் சிவகதி என்ற சொல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும். உமிழ் திரை உலகு=அலைகள் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகம்;
அழகரை அடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீலகண்டரை
உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ் செய் மாலையே
திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.36.2) திருஞானசம்பந்தர், பெருமானை நீலமார் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். மரவம்=குங்கும மரம்; காளத்தி தலத்தின் அருகே ஓடும் நதி பொன்முகலி என்று அழைக்கப் படுகின்றது. பெருமானை எவ்வாறு நினைத்தல் தகுதியான செயலோ அவ்வாறு பெருமானை நினைத்து வழிபடுதல் நமது கடமை என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நெஞ்சினை தூய்மை செய்து நினைக்க வேண்டும் (4.23.9) உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும் உன்னையல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் (6.31.7) பொதுநீக்கித் தனை நினைய வல்லோர் (6.1.5) என்ற அப்பர் பிரான் திருவாய்மொழிகள் நமது நினைவுக்கு வருகின்றன.
ஆலமா மரவமோடு அமைந்த சீர் சந்தனம்
சாலமா பீலியும் சண்பகம் உந்தியே
காலமார் முகலி வந்து அணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே
ஆலவாய் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.52.5) ஞானசம்பந்தர் தேவர்கள், நீலகண்டனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது சிந்தையில் நினையாமல் தினமும் வாழ்கின்றனர் என்று கூறுகின்றார். சிறுவர்களாக இருந்த போதிலும் பெருமானின் பெருமையினை புரிந்து கொண்டு பெருமானுக்கு தொண்டு செய்த, சண்டீசர் மற்றும் மார்க்கண்டேயர் ஆகியோரை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கோலம்=அழகிய;
கோலமாய நீள் மதில் கூடல் ஆலவாயிலாய்
பாலனாய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே
நீலமாய கண்டனே நின்னை அன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே
கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.89.2) திருஞானசம்பந்தர், பெருமானை நீலமார் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். நுந்தி=தள்ளிக் கொண்டு; கோலமாம்=அழகிய; ஆலியா=ஆலித்து, ஆரவாரித்து; நச்சி=விரும்பி; பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்து திருமால் பிரமன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் அச்சுறுத்திய ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றிய பெருமான் இருக்கையில் நாம் எதற்காக அஞ்சவேண்டும் என்று அறிவுரை கூறும் பதிகம். இதன் மூலம் பெருமானை வணங்கித் தொழுது நமது துன்பங்கள் எத்துணை கொடியதாக இருந்தாலும் தீர்த்துக் கொள்ளலாம் என்று உணர்த்துகின்றார்.
ஏலமார் இலவமோடு இனமலர்த் தொகுதியாய் எங்கும் நுந்திக்
கோலமாம் மிளகொடு கொழுங்கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு
ஆலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலமார் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே
திருவடகுரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.91.6) திருஞானசம்பந்தர், பெருமானை நீல மாமணி மிடற்று எம் அடிகள் என்று குறிப்பிடுகின்றார். வாலி வழிபட்டமையால் குரங்காடுதுறை என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். கோலம்=அழகு; ஆலும்=அசைந்து வருதல்; வீடு=விடுதலை; மலைகளிலும் காடுகளிலும் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், வேகமாக ஓடி வரும் காவிரி நதி எதிர்ப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அடித்து கொண்டு வரும் நிலை பதிகத்தின் பல பாடல்களில் கூறப் படுகின்றது. சமமான பரந்த நிலவெளிக்கு வந்த பின்னர் காவிரியின் நடையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினையும், அழகாக ஆடியாடி அசைந்து வரும் நிலையினை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் அரக்கன் இராவணனை, தனது வாலில் கட்டிக் கொண்டு திரிந்த வாலி என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக தனது பதிகத்தின் எட்டாவது பாடல்களில், சிவபெருமான் இராவணனின் ஆற்றலை அட்க்கியதை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த பாடலில் சிவபெருமானின் அடியானாகிய வாலி,அரக்கன் இராவணனின் கர்வத்தை அடக்கிய செயலை குறிப்பிடுகின்றார்.
கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலுமா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
நீல மாமணி மிடற்று எம் அடிகளை நினைய வல்வினைகள் வீடே
இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.101.5) திருஞானசம்பந்தர் பெருமானை, நீலமார் கண்டம் உடைய எங்கள் நிமலர் என்று குறிப்பிடுகின்றார். ஒண்மழு=ஓளி பொருந்திய மழு: நின்று=தங்கி; நல்மாது=உமையன்னை; உமையம்மையின் பாடலுக்கு ஏற்ப பெருமான் நடனமாடுகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். குணம்=தன்மைகள்; குணமே குறித்துணர்வார் என்று சிவஞானிகள் பெருமானின் தன்மையை உணர்ந்து கொண்டு அவரை வழிபடுவதை குறிப்பிடுகின்றார்.
சூலமோடு ஒண்மழு நின்றிலங்கச் சுடுகாடு இடமாகக்
கோல நன்மாதுடன் பாட ஆடும் குணமே குறித்து உணர்வார்
ஏல நறும்பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய
நீலமார் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.3) திருஞானசம்பந்தர் பெருமானை நீலமார் மிடற்றன் என்று குறிப்பிடுகின்றார்.திருத்தம்=புண்ணிய தீர்த்தம், இந்த தலத்தில் உள்ள சிறியோர்கள் வயது மிகுந்த சான்றோரை தரையில் விழுந்து பணியும் இயல்பு உடையவர்கள் என்றுகூறுகின்றார். சிறியவர் என்றால் பொதுவாக வயது குறைந்தவர்களை குறிப்பிடுவதால், மேற்கண்ட பொருள் சொல்லப் படுகின்றது. வயது என்ற சொல் எங்கும் பயன்படுத்தப் படாததால், கல்வியிலும் ஒழுக்கத்திலும் தகுதி குறைந்து உள்ளோர், கல்வியும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு விளங்கும் பெரியோர்களை வழிபடுகின்ற தலம் என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பு. தூய்மையான நீர் கொண்டு பெருமானை நீராட்ட வேண்டும் என்று பல திருமுறைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அத்தகைய தூய்மையான நீரே திருத்தம் என்று இங்கே சொல்லப் படுகின்றது.
நிருத்தன் ஆறங்கன் நீற்றன் நான்மறையன் நீலமார் மிடற்றன் நெற்றிக்கண்
ஒருத்தன் மற்றெல்லா உயிர்கட்கும் உயிராயுளன் இலன் கேடிலி உமைகோன்
திருத்தமாய் நாளும் ஆடு நீர்ப் பொய்கை சிறியவர் அறிவினில் மிக்க
விருத்தரை அடி வீழ்ந்திடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (4.8.3) அப்பர் பிரான், நீலவொளி மாமிடற்றர் என்று குறிப்பிடுகின்றார். பல திருமுறைப் பாடல்களில் நீல நிறம் கொண்ட மாணிக்கக் கல் பதிக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் உள்ள கழுத்து என்று பெருமானின் கழுத்து குறிப்பிடப் படுகின்றது.இந்த பாடலில் இறைவன் ஆடும் கூத்தினை இறைவி காண்பதாக கூறப்பட்டுள்ளது. தேய் பொடி=நுண்ணிய பொடிகள் உடைய திருநீறு. வேலை=கடல்: சூரியன் தினமும் கிழக்கில் உள்ள கடலிலிருந்து மேலே எழுந்து மேற்கில் உள்ள மலையில் மறைவதாக கூறுவது மரபு. கரிகாடு=சுடுகாடு: விம்முதல்=மனம்பூரித்தல்; சிவபிரான், நுண்ணிய பொடிகளை உடைய திருநீற்றினை தனது நெற்றியில் பூசிக் கொண்டு, அதன் மேல் சந்திரன் போன்று வளைந்த திலகத்தை அணிந்தவர்: சூரியன் தினமும் தோன்றும் கிழக்கே உள்ள கடலின் நிறம் போன்று கருநீல நிறத்தில் மிளிரும் கழுத்தினை உடையவர்: சுடுகாட்டில் வசிப்பவர்: தனது வலது காலில் வீரக்கழலை அணிந்தவர்: மூங்கில் போன்று அழகான தோள்களை உடைய உமையம்மை மனம் மகிழுமாறு, கொடிய மழுவினை வீசி, யானையின் தோலை உரித்து அதனை போர்வையாக அணிந்தவர்: இவர் எப்போதும் நடனம் ஆடிக் கொண்டு இருக்க, அந்த நடனத்தை உமையம்மை காண்கின்றாள். இவ்வாறு இருப்பதே இவர்கள் இருவரின் இயல்பு என்பதே இந்த பாடலின் கருத்து.
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேலோர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் காலொர் கழலர்
வேயுடன் ஆடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்தே
இவர் ஆடுமாறும் இவள் காணுமாறும் இது தான் இவர்க்கொர் இயல்பே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.22.10) அப்பர் பிரான், பெருமானை நீலஞ்சேர் கண்டனார் என்று அழைக்கின்றார். பனிநிலா=குளிர்ச்சியைத் தரும் நிலவு: அனைத்து உயிர்களும் இறந்த பின்னரும் இருக்கும் பாலனாகவும், அனைத்து உயிர்களுக்கு முன்னே தோன்றியைமையால் அனைவர்க்கும் மூத்தவனாகவும் இருக்கும் இறைவன், குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனைத் தனது நெற்றியில் வைத்துள்ளான். அந்த சந்திரனின் ஒளி இவரது சடையில் தெரிகின்றது. காளையை வாகனமாகக் கொண்ட பெருமான், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த காலன் மீது கோபம் கொண்டு, காலால் அவனை உதைத்தவர். உலத்தவரைக் காக்கும் பொருட்டு விடம் உண்ட காரணத்தால், நீல நிறத்துடன் திகழும் கழுத்தினை உடையவர். இவர் தான், உலகத்தின் இருதயமாக கருதப்படும் தில்லைச் சிற்றம்பலத்தில், நீண்ட தீயின் இடையே நின்று கூத்தாடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் எரி ஆடுமாறே என்று முடிகின்றன. இங்கே எரி எனப்படுவது ஊழித்தீஆகும். பிரளய காலத்தில், அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்கிய பின்னர், அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னர், இறைவன் நடமாடுவது பல திருமுறைப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
பாலனாய் விருத்தனாகிப் பனிநிலா எறிக்கும் சென்னிக்
காலனைக் காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்றேறி
ஞாலமாம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலம் சேர் கண்டனார் தாம் நீண்டு எரி ஆடுமாறே
திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.27.7) அப்பர் பிரான் பெருமானை நீலம் சேர் கண்டர் என்று குறிப்பிடுகின்றார். நுதல்=நெற்றி: வேலை=கடல்: கீறிட்ட=பிளவு பட்ட; திருநீறு பூசிய நெற்றியை உடையவராகவும், கடலில் இருந்த எழுந்த நஞ்சினை உண்டதால் நீல நிறத்தை உடைய கழுத்தினராகவும் காட்சி அளிக்கும் பெருமான், தனது மனைவி பார்வதிக்கு தனது உடலின் ஒரு கூறினை அளித்துள்ளார். அவர் தான் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் விரித்து கூறியவர்; தனது கலைகள் அனைத்தும் தேய்ந்து அழிந்த நிலையில் பிளவு பட்டது போல் தோன்றியஒற்றைப் பிறைச்சந்திரனைத் தனது சடையில் தரித்தவர்: கிளர்ந்து எழுந்த சடையில் கங்கை நதியைத் தேக்கி வைத்துள்ள பெருமான், கெடில நதியை ஒரு புறத்தில் வேலியாகக் கொண்டுள்ள அதிகை நகரத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நீறிட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்யராகிக் கூறினார் ஆறு நான்கும்
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையின் உள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலும் அதிகை வீரட்டனாரே
திருநெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.37.1) அப்பர் பிரான், பெருமானை நீலம் வைத்தனைய கண்டர் என்று குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடி தனது தலை மீது பதிந்த நிகழ்ச்சியை பல பாடல்களில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். எனினும் இரண்டு திருவடிகளும் பதிந்ததாககூறும் இந்த பாடல் மிகவும் அரிய பாடலாகும். மேதக=மேன்மை தரும் வண்ணம்; கோல=அழகு வாய்ந்த; நீலம் வைத்து அனைய=நீல நிறத்தினை வைத்தது போன்று; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த காலனை இடது காலினால் உதைத்து கீழே வீழ்த்திய பெருமானின் வீரச் செயல் அனைவரும் அறிந்ததே. இதே போன்று மற்றொரு அடியானின் உயிரைக் கவர வந்த இயமனை உதைத்து வீழ்த்திய செய்தி திருவெண்காடு தல புராணத்தில் காணப்படுகின்றது. சுவேதகேது என்ற சிறுவனின் ஆயுட்காலம் எட்டு வருடங்கள் தான் என்று விதிக்கப் பட்டிருந்தது. இந்த சிறுவனும் பெருமான் மீது அளவில்லாத பக்தி கொண்டு திருவெண்காட்டு பெருமானை நாள்தோறும் வழிபட்டு வந்தான். அவனது உயிரினைக் கவர வந்த இயமனை காலால் உதைத்து வீழ்த்தியதாக தலபுராணம் கூறினாலும், இயமன் உதைபட்டது இறைவனின் எந்த காலால் என்பது குறிப்பிடப் படவில்லை. காலனை வீழச் சென்ற கழலடி இரண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவதால், திருவெண்காடு தலத்தில், பெருமான் இயமனை வலது காலால் உதைத்தாரோ என்று தோன்றுகின்றது
காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென்
மேலவா இருக்கப் பெற்றேன் மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர் பொழில் கோயில் மேய
நீலம் வைத்து அனைய கண்ட நினைக்குமா நினைக்கின்றேனே
கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.51.4) அப்பர் பிரான் பெருமானை நீலமார் கண்டத்தானே என்று அழைக்கின்றார். ஞாலமாம் பெருமை=உலகங்கள் அனைத்தையும் தனது மாயாசக்தியால் தோற்றுவித்து, தான் அதனைக் கடந்து நிற்கும் நிலை; ஞாலமாம் பெருமை என்பதற்கு, அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் உலகெங்கும் நிறைந்த தன்மை என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. செற்று=உதைத்து:
காலனைக் காலால் செற்று அன்று அருள் புரி கருணையானே
நீலமார் கண்டத்தானே நீள் முடி அமரர் கோவே
ஞாலமாம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும்
கோலமார் சடையினானே கோடிகா உடைய கோவே
திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.2), நீலகண்டா என்று அப்பர் பிரான், பெருமானை அழைக்கின்றார். இதே பதிகத்தின் முந்தைய பாடலில் சிவபெருமானைத் தவிர வேறெந்த நினைப்பும் தனக்கு இல்லை என்று கூறும் அப்பர் பிரான், இந்த பாடலில் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் தான் புகழ்ந்து சொல்ல மாட்டேன் என்று கூறுகின்றார். கொன்றைக் கடவுள்=கொன்றை மலரை தனது சிறப்பான அடையாளமாகக் கொண்டுள்ள சிவபெருமான்: பண் தனை வென்ற இன்சொல் பாவை என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு அவர் திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பண்ணின் நேர் மொழியாள் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. பார்வதி தேவியின் சொற்கள் மிகவும் இனிமையானது என்பதை குறிக்க, பண், யாழ், வீணை, தேன், பால், கிளி, குயில், மழலை மொழி போன்றவை பல தேவாரப் பாடல்களில் உவமையாக கூறப்பட்டுள்ளன. சிலதலங்களில் அம்பிகையின் திருநாமம், அம்பிகையின் குரல் இனிமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. யாழைப் பழித்த மொழியம்மை(திருமறைக்காடு), பாலின் நன்மொழியாள் (திருவாய்மூர்), மதுர பாஷிணி (விளமர்), கரும்பன்ன செல்வி(புறம்பயம்), குயிலினும் நன்மொழியம்மை(சாய்க்காடு), தேன்மொழியம்மை (தேவூர்) என்று அம்பிகை அழைக்கப் படுகின்றாள்.
பண் தனை வென்ற இன்சொல் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே அணி அணாமலை உளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.64.9) அப்பர்பிரான், பெருமானை நீலகண்டர் என்றே அழைக்கின்றார். வித்தின்முளையர்=உயிர்க்கு உயிராக இருப்பவர்: இந்த பாடலில், சித்திகள் செய்ய விரும்புவர்கள் சென்று அடைய வேண்டிய இடம் சிவபெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமாசித்தி அருளிய வரலாறு திருவிளையாடல் புராணத்தில் சொல்லப் படுகின்றது. மணிவாசகரும் திருவாசகம் கீர்த்தித் திருவகவலில் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார் (பட்டமங்கையில் பாங்காய் இருந்தங்கு அட்டமாசித்தி அருளிய அதுவும்); இதே செய்தியை போற்றித் திருவகலிலும் மணிவாசகர் கூறுகின்றார். இத்தி=கல்லால மரம்: அத்தி=யானை: யானைக்கும் கார்த்திகைப் பெண்களுக்கும் அருளிய சிவபெருமான் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. கீழ் இரு மூவர் என்று பல ஆண்டுகளாக கல்லாகக் கிடந்த கார்த்திகைப் பெண்களை குறிப்பிடுகின்றார். (இத்தி தன்னில் கீழ் இரு மூவர்க்கு; அத்திக்கு அருளிய அரசே போற்றி)
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூடப்
பத்தி செய்பவர்கள் பாவம் பறிப்பவர் இறப்பிலாளர்
முத்தி செய் பவள மேனி முதிரொளி நீலகண்டர்
வித்தினின் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.80.5) அப்பர் பிரான், பெருமானை நீலமணி மிடற்றான் என்று அழைக்கின்றார். நின்ற என்ற சொல் ஞின்ற என்று மருவியுள்ளது. நகர ஞகரப் போலி என்று நன்னூல் இலக்கண நூலில் குறிப்பிடப்படும் விதிக்கு, உதாரணமாக இந்த பாடல் நன்னூல் உரையாசிரியர்களால் கருதப் படுகின்றது. செய்=வயல்: நீலம்=நீலோற்பல மலர்; நீலோற்பல மலர்கள் நிறைந்து காணப்படும் வயல்களை உடைய தில்லைத் திருநகரில் உறையும் சிற்றம்பலவன், நின்று எரியும் தீபச்சுடர்போன்று மிளிரும் கழுத்தினை உடையவன். அவனது ஆடலைக் கண்ட, ஒளிநிறைந்ததும் மையினால் மேலும் அழகூட்டப்பட்டதும் ஆகிய கண்களை உடைய உமையம்மை, மிகவும் மகிழ்ந்து நிற்கின்றாள். இவ்வாறு பெருமான்திருநடனம் ஆடும்போது, அவனது திருக்கை என்று வந்தாய் என்ற குறிப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த அழகிய கையினைக் கண்ட கண்களுக்கு வேறு எந்த காட்சியும் உயர்ந்ததாகத் தோன்றாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றன்
கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே
திருப்பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.88.3) அப்பர் பிரான் பெருமானை நீல மிடற்றன் என்று அழைக்கின்றார். மறுத்தவர்=வேத நெறியினை மறுத்து புத்த சமயத்தை பின்பற்றிய திரிபுரத்து அரக்கர்கள்; வேதநெறியினை மறுத்து புத்த சமயக் கொள்கைகளை பின்பற்றிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் அழியும் வண்ணம் கொடிய வில்லினில் ஓர் அம்பினைக் கோத்து அழித்தவனும், ஆல மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கியவனும், ஆலால விடத்தினை உண்டு அந்த விடம் வயிற்றினில் செல்லாத வண்ணம் கழுத்தினில் அடக்கியவனும், பூதப் படையினை உடையவனும், சிவந்த நிறத்தில் திருமேனியை உடையவனும் ஆகிய பெருமான் பூந்துருத்தி தலத்தில் மிகவும் மகிழ்ந்து ஆதிபுராணன் என்ற நாமத்துடன் உறைகின்றான். அவனது திருவடிகளை நான் போற்றுகின்றேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெஞ்சிலை கோத்து ஓரம்பால்
அறுத்தனை ஆலதன் கீழனை ஆல்விடம் உண்டு அதனைப்
பொறுத்தனைப் பூதப்படையனைப் பூந்துருத்தி உறையும்
நிறத்தனை நீலமிடற்றனை யான் அடி போற்றுவதே
சத்திமுற்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (4.96.8) அப்பர் பிரான் பெருமானை, நீலகண்டா என்றே அழைக்கின்றார். இகழ்ந்தவன்=தக்கன். பொறை இரத்தல்= பிழை பொறுக்குமாறு வேண்டுதல். இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் சிவபிரானை மறந்தவர்களின் நிலையினை விளக்கிய அப்பர்பிரானுக்கு, சிவபிரானை இகழ்ந்த தக்கன் நினைவுக்கு வந்தான் போலும். சிவபிரானை இகழ்ந்து, அவரைத் தவிர்த்து மற்றைய தேவர்களை அழைத்துத்தவறாக யாகம் புரிந்தமையால் தக்கனது யாகம் அழிக்கப்பட்டது. யாகத்தில் பங்கெடுத்துக் கொண்ட பல தேவர்கள் தண்டனை பெற்றாலும் அவர்கள் மன்னிக்கப்பட்டு உயிருடன் இருந்தார்கள். தலை வெட்டப்பட்ட தக்கனும், ஆட்டுத்தலை பொருத்தப்பட்ட பின்னர் தனது தவற்றினை உணர்ந்துசிவபிரானை வேண்டினான். மற்றைய தேவர்கள் எல்லாம் தண்டனை பெற்றபோது, திருமாலும் நான்முகனும் இறைவனிடம் எங்களது குற்றத்தைப்பொறுத்து அருளவேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதால், அவர்கள் தப்பினார்கள் என்று அப்பர் பெருமான் தனது தசபுராணத்திருப்பதிகத்தில்(4.14.7) கூறுகின்றார். க்ஷமி என்ற வடமொழிச் சொல் கமி என்று மாற்றப் பட்டுள்ளது. க்ஷமி= மன்னிக்க வேண்டுதல்
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன் தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய்
திகழ்ந்த திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே
திருக்கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.19.5) நீலமலரன கண்டத்தன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சுனை=மலையினில் தானே தோன்றிய நீர்நிலை; நீல மலர்= கருங்குவளை மலர்; புனையும்=அணியும்; கனையும்=ஒலிக்கின்ற; மலையினில் தானே தோன்றிய நீர் நிலையில் பூக்கும் குவளை மலர் போன்று, கருமை நிறத்தினை கழுத்தினில் உடையவன் சிவபெருமான். பொன் நிறத்தில் காணப்படும் கொன்றை மலரைத் தனது சடையில் அணிபவனும், பசும்பொன்னினால் செய்யப்பட்ட கழல்கள் ஒலிக்குமாறு நடனம் ஆடுபவனும் ஆகிய பெருமான் உறையும் கடம்பூர் திருக்கோயிலை உள்ளத்தினில் நினைக்கும் அடியார்களின் வினைகள், பெருமானின் அருளால் நீங்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சுனையுள் நீல மலர் அன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரி சடைக்
கனையும் பைங்கழலான் கரக் கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.28.2) பளிங்கின் வண்ணத்தில் திருமேனி கொண்டுள்ள பெருமான் தனது கழுத்தினில் நீல வண்ணம் உடையவராக இருக்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மூலம்=அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கும் அனைத்து உயிர்களும் உடல்களுடன் இணைவதற்கும் மூல காரணனாக நிற்கும் தன்மை; கோல வண்ணத்தர்=தம்மிடம் ஒடுங்கிய உலகத்தை மீண்டும் தோற்றுவிப்பவர்; நீல வண்ணத்தர்=திருமாலை ஒரு பாகமாக உடையவர்; தேவியை ஒரு பாகமாக உடையவர் எனினும் பொருத்தமே. மாசு ஏதும் இல்லாத நிலையில் எரியும் தீப்பிழம்பில் வெளிப்பகுதி நீல நிறத்தில் இருப்பதை நாம் காணலாம். எனவே தான் நீல நிறத்தை கொழுஞ்சுடர் நீல வண்ணம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார் போலும். ஆல வண்ணத்தர் என்றும் குறிப்பிடுவதால் ஆலகால விடம் கழுத்தினில் தேக்கப் பட்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தினை உடையவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
மூல வண்ணத்தராய் முதலாகிய
கோல வண்ணத்தராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்தராய் நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே
திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.35.5) அப்பர் பிரான் பெருமானை, நீலம் உண்ட மிடற்றன் என்று குறிப்பிடுகின்றார். பால்=ஒருபக்கம்; மால்=மயக்கம்; இறை=சிறிது; நேர்ந்த=பொருந்திய; கோலம்=அழகு; தன்னை சிவபெருமான் பால் காதல் கொண்டுள்ள தலைவியாக உருவகித்து, அவரது தோற்றம் தனது மனதினில் சற்று மயக்கத்தை ஏற்படுத்தியது என்று அப்பர் பிரான் கூறுவதாக விளக்கம் அளித்து, இந்த பாடலை அகத்துறைபாடலாக கொள்வதும் பொருத்தமே.
நீலமுண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
கோலம் உண்ட குணத்தால் நிறைந்ததோர்
பாலும் உண்டு பழனன் பால் என்னிடை
மாலும் உண்டு இறை என்றன் மனத்துளே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.48.8) அப்பர் பிரான், பெருமானை நீல மாமிடற்று அண்ணல் என்று அழைக்கின்றர். ஆலும்=நடனமாடும்; கோலம்=அழகாய; மால்=மயக்கம்; இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில் வெளிப்பகையை குறிப்பிட்ட அப்பர் பிரான் உயிரின் ஆறு உட்பகைகளில் ஒன்றான காமத்தை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இல்லற சுகத்தில் ஆழ்ந்து இறைவனை மறந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடலில் வழங்கப் படுகின்றது. இந்த பாடலில் தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று இருந்தாலும், இந்த அறிவுரை உலகத்தவர்க்கு வழங்கப் பட்ட அறிவுரையாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அப்பர் பிரான் தனது சிறு வயதில் சமண சமயத்தைச் சார்ந்த நாளிலிருந்தே துறவியாக வாழ்ந்தவர் ஆவார். இவ்வாறு இந்த பதிகத்தின் பாடல்களில் நாம் வெளிப் பகையையும் உட்பகையையும் வென்று இறைவனை வழிபட வேண்டிய அவசியம் உணர்த்தப் படுகின்றது.
ஆலும் மாமயில் சாயல் நல்லாரொடும்
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே
நீல மாமிடற்று அண்ணல் ஏகம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே
பாலைத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.51.1) அப்பர் பிரான், பெருமானை நீல மாமணி கண்டத்தர் என்று குறிப்பிடுகின்றார். கோலமாமதி=அழகில் சிறந்த சந்திரன்: நீல மாமணி=கழுத்தில் பெரிய நீல மணி கட்டியது போன்று, நீலநிறம் கொண்டவர்; ஆலகால விடத்தை உண்டதால், கழுத்தினில் பெரிய நீல மணி போன்று கறையினை உடையவர் சிவபெருமான். அவர் தனது நீண்ட சடையில், அழகிய பிறைச் சந்திரனையும் கங்கையையும்சேர்த்து வைத்தவர்: அவர் தனது கையினில் சூலம் மழு ஆகிய ஆயுதங்களுடன், இளம் மான் கன்றினையும் ஏந்தியவர்: அவர் ஒளி வீசும் தனது முடியினைபால் நெய் முதலான ஐந்து பொருட்களையும் கொண்டு நீராடுபவர். இத்தகைய தன்மைகளை உடைய சிவபெருமான் பாலைத்துறை என்ற தலத்தில்உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நீலமாமணி கண்டத்தர் நீள் சடைக்
கோல மாமதி கங்கையும் கூட்டினார்
சூல மான் மழு ஏந்திச் சுடர்முடிப்
பால் நெய் ஆடுவார் பாலைத் துறையரே
கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.56.8) அப்பர் பிரான், நீலகண்டனை நினைக்குமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். மால்=மயக்கம்; மாலதாகி=உலகப் பொருட்களில் மயங்கி; கடை முடியா முனம்=உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னமே; கோலவார்= அழகியதும் நீண்டதும்; உலகப் பொருட்கள் தரும் மயக்கத்தில் ஆழ்ந்து இறைவனை நினைக்காமல் இருக்கும் மனிதர்களே, உங்களது வாழ்வின் இறுதிக் காலம் நெருங்கி உங்களது வாழ்வு முடிவினை அடைவதற்கு முன்னமே, பரந்து அழகாக காணப்படும் சோலைகள் சூழ்ந்த கோளிலி தலத்தில் பொருந்தியுள்ள இறைவனை, நீலகண்டனை நினைத்து வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும், நீலகண்டனை நித்தலும் நினைமினே என்றுஅறிவுரை கூறுகின்றார்.
மாலதாகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடை முடியா முனம்
கோல வார் பொழில் கோளிலி மேவிய
நீலகண்டனை நின்று நினைமினே
தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.63.5) அப்பர் பிரான், நீலத்தார் மிடற்றான் என்று பெருமானை அழைக்கின்றார். ஞாலத்தார்=உலகத்தவர்; காலத்தான்=அந்தந்த உயிர்களுக்கு விதிக்கப்பட்ட உரிய காலத்தில், அந்த உயிர்களை அவை அந்நாள் வரை பிணைந்து இருந்த உடல்களிலிருந்து பிரிக்கும் செயலைச் செய்யும் இயமன்; மிடறு=கழுத்து; மிடற்றான்= கழுத்தினை உடையவன்:
ஞாலத்தார் தொழுதேத்திய நன்மையன்
காலத்தான் உயிர் போக்கிய காலினன்
நீலத்தார் மிடற்றான் வெள்ளை நீறணி
கோலத்தான் குரங்காடுதுறையனே
திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.84.8) நீலகண்டன் என்று அப்பர் பிரான் பெருமானை அழைக்கின்றார். வேலை வென்ற கண்ணார்=வேற்படை நடுவில் அகன்றும் நுனியில் கூராகவும் இருப்பது போன்ற கண்களை உடைய பெண்களை வேற்கண்ணி, வேற்கண்ணாள் என்று சொல்வது தமிழ் இலக்கிய மரபு. ஆனால் இங்கே வேலை வென்ற கண்ணார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வேலின் நுனி கூர்மையாக இருந்தாலும், அந்த ஆயுதம் எய்யப்பட்ட பின்னரே, தான் சென்று அடைந்த பொருளினை தைத்து வருத்தம் அளிக்கும். ஆனால் பெண்களின் கண்களோ, அந்த கண்கள் சென்ற பார்வையில் எதிர்ப்படும் மனிதர்களின் நெஞ்சத்தை தைத்து, அவர்களுக்கு காதல் நோய் அளித்து வருத்தும் என்பதால் வேலை வென்ற கண்ணார் என்று அப்பர் பிரான் நயமாக கூறுகின்றார். காலையே=உடலில் உயிர் உறையும் காலத்திலே. காலையே என்ற சொல்லுக்கு காலைப் பொழுதினில் என்று பொருள் கொண்டு, காலையில் இறைவனைத் தொழுமாறு அப்பர் பிரான் பணிக்கின்றார் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. காலை எழுந்தவுடன், நீராடி உடலைத் தூய்மை செய்து கொண்டு இறைவனைத் தொழுவது ஒரு சுகமான அனுபவம். புறத்தே உள்ள இருள் நீங்கும் நேரத்தில் அகத்தில் உள்ள இருளைப் போக்கிக் கொள்ள இறைவனை நாடுவது மிகவும் பொருத்தமே. சூலை நோயினால் வருந்திய அப்பர் பிரான், தனது தமக்கையாரின் இருப்பிடத்தை அடைந்த பின்னர், அடுத்த நாள் விடியலில், திருவதிகைத் திருக்கோயிலுக்கு சென்றதை குறிப்பிடும் சேக்கிழாரின் பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. தமக்கையாரால் திருநீறு அணியப் பெற்ற அப்பர் பிரானின் அகத்தில் இருந்த இருளும் புறத்தே இருந்த இருளும் ஒருசேர நீங்கப் பெற்ற திருப்பள்ளியெழுச்சி காலம் என்று சேக்கிழார் சிறப்பித்து சொல்கின்றார். சமணர்களின் மாயையில் சிக்கி திகைத்து வாழ்ந்து வந்த தனது மயக்கம் தீர்ந்த வேளை காலை நேரம் என்பது அப்பர் பிரானின் நினைவுக்கும் வந்தது போலும்.
வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர்
சீலம் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை
நீலகண்டனை நித்தல் நினைமினே
திருவதிகை தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.5.5) அப்பர் பிரான், நீல மிடற்றாய் என்று பெருமானை அழைக்கின்றார். இரும் கெடில=பெரிய கெடில நதி: நிழல் திகழும்= ஒளி மிளிரும்; நீல நிறத்தில் காணப்படும் கழுத்தில் திருநீறு அணிந்தவனே போற்றி, ஒளி மிளிரும் வெண் மழுப் படையை ஏந்தியவனே போற்றி, உனது உடலில் ஒரு கூறாக பொருந்த உமை அம்மையை வைத்தவனே போற்றி, கொடிய விடம் கொண்ட பாம்புகளை ஆட்டுவிக்கும் குழகனே போற்றி, கங்கை ஆறு தங்கிய சடையனே போற்றி, அடியார்களுக்கு கிடைத்தற்கு அரிய அமுதமாகத் திகழ்பவனே போற்றி, காளையை வாகனமாக விரும்பி ஏற்பவனே போற்றி, பெரிய கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் இறைஞ்சும் பாடல்.
நீரேறு நீல மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோளரவம் ஆட்டும் குழகா போற்றி
ஆறேறு சென்னி உடையாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி
பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.10.9) அப்பர் பிரான் பெருமானை நீலம் உண்டார் என்று குறிப்பிடுகின்றார். நீலம்=பெருமானின் கழுத்தினில் நீலநிறத்தை உண்டாக்கிய விடம். நெருப்பு=நெருப்பினில் இடப்படும் அவிர்பாகம். பாறு=பருந்து; ஏழுலகும் புகழும்வண்ணம், எருதின் மீதேறி எங்கும் திரியும் பெருமானை, தேவர்கள் எப்பொழுதும் வேண்டி வழிபடுகின்றார்கள். நீறணிந்த மேனியராக காணப்படும்பெருமான், தனது கழுத்தினில் விடத்தை அடைத்து வைத்ததால் நீல நிறமாக மாறிய கழுத்தினை உடையவர் ஆவார். வேள்விகளில் அளிக்கப்படும்அவிர்பாகத்தை விரும்பி ஏற்கும் பெருமான், தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு நடமாடுகின்றார். கங்கை ஆற்றினைத் தனது சடையில் ஏற்றுக்கொண்ட பெருமான், பசுவிலிருந்து பெறப்படும், பால் தயிர் நெய் கோமியம் மற்றும் கோசலம் ஐந்து பொருட்களையும் கொண்டு அடியார்கள் நீராட்ட, அதனை மிகவும் உகந்து ஏற்கின்றார். நெருப்பு போன்ற கொடிய விடத்தை கக்கும் ஐந்து தலைகள் கொண்ட நாகத்தினைத் தனது இடையில் இறுகக்கட்டிச் சுற்றிய பெருமான், புலால் நாற்றம் வீசுவதால் பருந்துகள் சுற்றித் திரியும் பிரமனின் மண்டை ஓட்டினைக் கையில் ஏந்தியவாறு. பசுமையானகண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்று, பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர் தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும்பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஏறேறி ஏழுலகு ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்
பாறேறு வெண் தலையார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே
கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.12.7) அப்பர் பிரான் பெருமானை நீலகண்டர் என்று அழைக்கின்றார். பிணம் புல்கு=அழியக்கூடிய பிணமாக ஒரு நாள் பொருந்த இருக்கும்; பீறல் குரம்பை=ஓட்டைக் குடிசை; நிணம் புல்கு=தசைகள் பொருந்தும்; கணம்புல்லன் கருத்து உகந்தார் என்று தனது தலைமுடியை திருக்கோயிலில் எரித்தது தவறான செய்கை என்றாலும், திருவிளக்கு நின்று நெடுநேரம் எரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்த செய்கையால், நாயனாரது செயலைக் குற்றமாக கருதாது, அதனை விரும்பி பெருமான் ஏற்றார் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இந்தபாடலில் கணம்புல்ல நாயனார் பற்றிய குறிப்பு காணப் படுகின்றது. இருக்குவேளூர் என்ற ஊரினைச் சார்ந்த கணம்புல்லர், தில்லையில் உள்ள திருப்புலீச்ச்சரம் திருக்கோயிலில் நெய் விளக்கு ஏற்றும் திருப்பணியை செய்து வந்தார். தான் வறுமை அடைந்த நிலையிலும் புற்களை அரிந்து அதனை விற்று வரும் பணத்தினைக் கொண்டு தனது திருப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். கையில் செல்வம் இல்லாத நிலையில், அடுத்தவரிடம் இரந்து பணம் பெற்றுத் தனது தொண்டினைச் செய்வதற்கு பதிலாக, தனது உழைப்பில் வரும் பணத்தினைக் கொண்டு திருப்பணி செய்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். ஒரு நாள் தான் அரிந்து கொண்டு வந்த புற்கட்டு விற்காமல் போகவே, கணம்புல்லர் அந்த புல்லினை திருவிளக்கு ஏற்ற பயன்படுத்தினார். ஆனால் புல் மிகவும் விரைவில் எரிந்து போனதால், அதிகமான நேரம் விளக்கு தொடர்ந்து எரிய வேண்டும் என்பதற்காக, தனது முடியையே விளக்காக எரித்தார். இவ்வாறு திருவிளக்கு எரித்து திருப்பணி செய்த நாயனார், நல்வினை தீவினை என்று பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் இருவினைகளின் தொடர்பினை எரித்தார் என்று நயமாக பெரியபுராணப் பாடலில் சேக்கிழார் கூறுகின்றார்.
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப் பேதப்படுகின்ற பேதைமீர்காள்
நிணம் புல்கு சூலத்தர் நீலகண்டர் எண்தோளர் எண்ணிறைந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சியுள்ளார் கழிப்பாலை மேய கபாலப்பனார்
மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.16.9) அப்பர் பிரான், அணி நீலகண்டம் உடையார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஆலகால விடத்தை தேக்கியதால் கருமை நிறத்துடன் பெருமானின் கழுத்தினில் படர்ந்த கறை என்றாலும், இந்த கருமை நிறமும், பெருமானின் கழுத்தினில் மாணிக்கக்கல் பதித்தது போன்ற தோற்றத்தை அளித்ததால், பெருமானுக்கு அணிகலனாக விளங்கியது என்பதை உணர்த்தும் வண்ணம், அணி நீலகண்டம் என்று சொல்லப் படுகின்றது. வரவு=பிறப்பு; செலவு=இறப்பு; படைக் கணாள்=நீண்ட வேற்படையைப் போன்று நடுவில் அகன்றும் முனைகளில்குறுகியும் காணப்படும் கண்களை உடைய உமையம்மை: பசுமையான இளந்தளிர்களின் நடுவே தோன்றும் கொன்றை மலர்களை மாலையாகஅணிந்தவரும், வேற்படை போன்று நடுவில் அகன்றும் முனைகளில் குறுகியும் அழகாக காணப்படும் கண்களை உடைய உமையம்மையைத் தனது உடலின்ஒரு பாகத்தில் கொண்டவரும், காலை மற்றும் மாலை வேளைகளில் காணப்படும் வானம் போன்று சிவந்த மேனியை உடையவரும், கழுத்தினில்அணிந்துள்ள கரிய மணி போன்று தோன்றுமாறு தான் உண்ட நஞ்சத்தை கழுத்தினில் அடக்கியவரும், அனைத்து உயிர்களுக்கும் பிறப்பையும் இறப்பையும்நிகழ்த்துபவரும், நிலையாக எனது உள்ளத்தில் தங்கி நீங்காது இருப்பவரும், என் போன்ற அடியார்களின் இடர்களை தீர்க்க வல்லவரும் ஆகியசிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார் என்பதே பாடலின் பொழிப்புரை.
பைந்தளிர் கொன்றை அம் தாரார் போலும் படைக்கணாள் பாகம் உடையார் போலும்
அந்திவாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீலகண்டம் உடையார் போலும்
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும்
எந்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே
ஆக்கூர் தான்தோன்றி மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.21.3) அப்பர் பிரான் மணிநீலகண்டம் உடையார் என்று பெருமானை அழைக்கின்றார். வை=கூர்மை; வளர் ஞாயிறு= தனது ஒளியில் வளர்ந்து கொண்டிருக்கும் சூரியன்; காலை நேரத்து சூரியன், முதலில் செம்மை நிறத்தில்தோன்றினாலும் சிறிது சிறிதாக ஒளி வளர்ந்து வெண்மை நிறமடைகின்றது; மை பூசப்பட்ட மலர்கள் போன்ற கண்களை உடைய பார்வதி தேவியைத் தனதுஉடலின் ஒரு பாகத்தில் வைத்தவர் சிவபெருமான்; ஒளிவிட்டு பிரகாசிக்கும் நீலமணி போன்ற கறையை தனது கழுத்தினில் உடையவர் சிவபெருமான்; நெய்பூசப்பட்ட திரிசூலத்தைத் தனது கையில் ஏந்தியவர் சிவபெருமான்; திருநீறு பூசப்பட்ட எட்டு தோள்களை உடைய பெருமான், கூர்மையான மழுவாட்படையைத் தனது கையில் வைத்துள்ளார். வளரும் நிலையில் காணப்படும் காலைக் கதிரவன் போன்று சிவந்து ஒளி வீசும் திருமேனி உடையவர்சிவபெருமான்; ஐந்து தலை பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டியுள்ள பெருமான், திருவாக்கூர் தலத்தில் தான்தோன்றி அப்பர் என்றதிருநாமத்துடன் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும், பெருமானை, நீலநற்கண்டத்து இறையார் என்று குறிப்பிடுகின்றார்.
மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும் மணிநீல கண்டம் உடையார் போலும்
நெய்யார் திரிசூலம் கையார் போலும் நீறேறு தோள் எட்டு உடையார் போலும்
வையார் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்
ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.34.5) அப்பர் பிரான், பெருமானை நீலமா மணிகண்டத்து எண்தோளன் என்று குறிப்பிடுகின்றார். தொன்மையான பதியாகிய ஆரூர் நகரத்தின் தொன்மைச் சிறப்பினையும், அந்த நகரத்தில் தொன்மைக் காலத்திலேயே பெருமான் குடிகொண்டுள்ள தன்மையையும் குறிப்பிட்டு பதிகம் பாட அப்பர் பிரான் ஆவல் கொண்டார் போலும். அந்த ஆவலின் விளைவாக எழுந்ததே இந்த பதிகம். எவ்வளவு தொன்மையானது திருவாரூர் திருக்கோயில் என்பதை குறிப்பிடுவதற்கு அளவுகோலாக, அப்பர் பிரான் எந்த வருடக் கணக்கினையும் எடுத்துக் கொள்ளவில்லை. பெருமானின் கருணைச் செயல்கள் மற்றும் வீரச் செயல்கள் பலவற்றையும் குறிப்பிட்டு அந்த செயல்கள் நடைபெற்ற நாளுக்கு முன்னரோ பின்னரோ ஆரூர் திருக்கோயில் எழுந்ததோ என்று கேட்கின்றார். இவ்வாறு கேள்வியை எழுப்பி அதன் மூலம், இந்த கேள்விக்கு பதிலை தான் அறியும் நிலையில் இல்லை என்பதை குறிப்பிட்டு, மனிதர்களால் அளவிட முடியாத தொன்மை உடையது திருவாரூர் தலம் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், முத்தாய்ப்பாக, உலகம் பெருமானை அறிவதற்கு முன்னமே ஆரூர் திருக்கோயில் எழுந்தது போலும் என்று கூறுகின்றார்.பிறப்பில்லாத பெருமான் என்றும் நிலையாக ஒரே கோலத்தில், மூப்பு அடையாத குழகனாக இருப்பதால் அவனை பாலனாக கண்டவர் எவருமில்லை. சிவபெருமானைத் தவிர்த்த மற்ற தெய்வங்களின் குழந்தைப் பருவ விளையாட்டுகளை குறிப்பிட்டு பாடல்கள் பல இலக்கியங்களில் காணப் படுகின்றன. மேலும் பிள்ளைத் தமிழ் நூல்களும் உள்ளன. ஆனால் சிவபெருமான் மீது பிள்ளைத் தமிழ் எவரும் இயற்றவில்லை. இந்த நிலையைத் தான் அப்பர் பிரான் இங்கே, பாலன் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே என்று இங்கே உணர்த்துகின்றார். நெருநல்=நேற்று; குழந்தைப் பருவம் முதலான பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே, தன்னை வழிபடும் அடியார்களுக்கு பற்றுக்கோடாக விளங்குபவனே, விடத்தினை அடக்கியதால் நீலமாமணி பதித்தது போன்று தோன்றும் கழுத்தினை உடையவனே. எட்டு தோள்களை உடையவனே, நேற்று இன்று நாளை எனப்படும் மூன்று காலங்களாகவும் இருப்பவனே, சிவலோக நெறியினை அடியார்களுக்கு அளிக்கும் பண்பினைக் கொண்டவனே, புகழத்தக்க பண்புகளை உடையவனே, நுண்ணிய அறிவினை உடையவனே, நல்லொழுக்க குணங்களை உடையவனே, பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ, மேற்கண்ட குணங்களை எல்லாம் கொள்வதற்கு முன்னோ பின்னோ, நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்றானானே
நீலமாமணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்றாகி நாளையாகும்
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.36.6) அப்பர் பிரான், பெருமானை, நீலம் பொலிந்த மிடற்றார் என்று குறிப்பிடுகின்றார். வௌவுதல் என்றால் திருடுதல் என்பது பொதுவான பொருள். சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்கு சென்ற இயமன், அந்த முயற்சியில் தனது உயிரே பலியாகும் என்பதை சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டான்; அவன் சற்றும் எதிர்பாராத வகையில், அதுவும் அவன் பெருமான் தனக்கிட்ட கட்டளையின் வண்ணம் செயலாற்ற முயற்சி செய்தபோது, தனது வகையில் அவனது உயிரை பெருமான் போக்கிய செய்கை, திருடியதாக சொல்லப் படுகின்றது. நாம் சிறிதும் எதிர்பாராத தருணத்தில் தானே. திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டி, நமது பொருளை கொள்ளை கொள்கின்றனர். கடிதோடும்=விரைவாக ஓடும்; அனைவர்க்கும் முன்னே தோன்றியவர் என்பதை குறிப்பிட விருத்தர் என்றும் அனைத்து உயிர்களும் தத்தம் உடல்களை விட்டு பிரிந்த பின்னரும், வாழ்பவர் என்பதை உணர்த்த பாலன் என்றும் கூறினார் போலும்.
காலனுயிர் வௌவ வல்லார் தாமே கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
கோலம் பலவும் உகப்பார் தாமே கோணாகம் நாணாகப் பூண்டார் தாமே
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே நீள்வரையின் உச்சி இருப்பார் தாமே
பால விருத்தரும் ஆனார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.38.3) அப்பர் பிரான், பெருமானை, திருநீலகண்டன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில்செம்பொற் சோதீ என்று அப்பர் பெருமான் இறைவனை குறிப்பிடுகின்றார். திருவையாறு இறைவனுக்கு சோதீஸ்வரர் என்ற திருநாமமும் உள்ளது. இந்ததிருநாமத்திற்கு பொருந்துவது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்ததை தலபுராணம் குறிப்பிடுகின்றது. சுசரிதன் என்ற சிறுவனுக்கு இறைவன் சோதி வடிவில்தரிசனம் அளித்ததால் இந்த பெயர் ஏற்பட்டது என்று கூறுவார்கள். கனம்=மேகம்; கடுஞ்சுடர்=மிகுந்த ஒளி; வரை=மலை; தனம்= செல்வம்; தகைந்து=தடுத்து; சினத்திருந்த=கோபத்தினால் எழுந்த; மலையுடன் கட்டி கடையப் பட்டதால் உண்டான உடல் வருத்தத்தினால் எழுந்த சினம்; வான்ஆகாயம் ஆகிய ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு சொற்களில் முந்திய சொல்லினை ஆகாயத்தில் இருக்கும் மேகத்தினை உணர்த்துவதாக கொள்ளவேண்டும், மேகத்தில் தோன்றும் மின்னலாக இருப்பவன் நீயே என்றும், கடல் மலை மேகம் ஆகாயம் ஆகியவையாக இருப்பவன் நீயே என்றும், மண்டையோட்டினை பெரும் செல்வமாக கருதி செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்பவன் நீயே என்றும், உன்னைச் சார்ந்த அடியார்கள் தவறான வழியில் செல்லாமல் அவர்களை தடுத்து ஆட்கொண்டு நல்வழியில் செலுத்துபவன் நீயே என்றும், அடியார்களின் உள்ளக் கருத்தினை உணர்ந்து செய்து முடிப்பவன் நீயே என்றும், மலர் போன்று மெல்லிய உனது திருவடிகளை எனது தலை மேல் வைத்து அருள் புரிந்தவன் நீயே என்றும், மந்தர மலையுடன் சேர்த்து கட்டப்பட்டு கடையப் பட்டதால் உடலெங்கும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் உண்டான வருத்தம் தாங்க முடியாமல் சினந்து வெளியிட்ட கொடிய நஞ்சினை உணவாக ஏற்றுக் கொண்டு கழுத்தினில் கருமை நிறமாக நஞ்சு படரும் வண்ணம் நீலகண்டனாக இருப்பவன் நீயே என்றும், திருவையாறு தலத்தினை விட்டு அகலாத செம்பொற் சோதியாகிய இறைவனே உன்னை அடியேன் பலவாறாக அழைத்து வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான் பெருமானை வணங்கும் பாடல். இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் பெருமானை, அப்பர் பிரான் நீலகண்டன் என்று அழைக்கின்றார்.
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே
தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத செம்பொற் சோதீ
ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.46.10) அப்பர் பிரான் பெருமானை, கோலமா நீலமிடற்றான் என்று அழைக்கின்றார். கோலமாம்=அழகான: ஐந்து விரல்களையும் ஒன்று சேர்த்தால் பந்து பொருந்துவது போன்று அழகாக பொருந்தும் மெல்லிய விரல்களை உடையபிராட்டியைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனும், தொடர்ந்து கீதங்கள் பாடுபவனாகவும் நடனம் ஆடுபவனுமாக இருப்பவனும், நறுமணம் வீசும்கொத்தான கொன்றை மலர்களை மாலையாகக் கோத்து அணிந்தவனும், அழகிய நீல வண்ணத்தில் கழுத்தினை உடையவனும், செந்தமிழிலும்ஆரியத்திலும் சிறப்பான புலமை பெற்றவனும், தனது மார்பினில் வெண்ணூல் பூண்ட அந்தணனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும்குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில்உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் நன்றியுடன் தெரிவிக்கும் பாடல்.
பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப் பாடலோடு ஆடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறும் கொன்றை மாலையானைக் கோலமா நீல மிடற்றான் தன்னைச்
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானைத் திருமார்பில் புரி வெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடு தண்துறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேனே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.7) அப்பர் பிரான், பெருமானை மஞ்சு அடுத்த மணிநீல கண்டர் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான் தன்னை ஆட்கொண்டதை குறிப்பிடுகின்றார். தன்னை ஆட்கொண்ட பெருமானின் சிறப்புகளை நமக்கு உணர்த்தி, நாமும் அவனை அடைந்து அவனால் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நமது மனதினில் தோற்றுவிக்கும் பதிகம். அணியார்=நெருக்கத்தில் இருப்பவர்; பஞ்சு அடுத்த=பஞ்சினை ஒத்த; பைந்நாகம்=படம் எடுக்கும் நாகம்; மஞ்சு=மேகம்; விரல்=விரலில் உள்ள நகத்தினை குறிக்கின்றது. கருமேகத்தின் நிறத்தில் கறை படர்ந்த கழுத்தினை உடையவர் என்று குறிப்பிடுகின்றார்.
பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும் பைந்நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும்
மஞ்சு அடுத்த மணிநீல கண்டர் போலும் வட கயிலைமலை உடைய மணாளர் போலும்
செஞ்சடைக் கண் வெண்பிறை கொண்டணிந்தார் போலும் திருவீழிமிழலை அமர் சிவனார் போலும்
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே
திருவாய்மூர் தலத்தினில் பெருமான் தனது நடனக் காட்சியை அப்பர் பிரான் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகிய இருவருக்கும் காட்டியருளிய போது, தான் கண்டு மகிழ்ந்த அந்த நடனக் காட்சியை ஒரு பதிகமாக அப்பர் பிரான் வடிக்கின்றார். அந்த பதிகத்தின் பாடலில் (6.77.2), பெருமானின் கழுத்தினில் நீல நிறம் படர்ந்து இருந்ததை தான் கண்டதாக அப்பர் பிரான் உணர்த்தும் பாடலை நாம் இங்கே சிந்திக்கலாம். பெற்றம்=எருது; காலை=இளமை; காலை நேரம் ஒரு நாட்பொழுதின் தொடக்க நேரம் என்பதால் அதனை இளமையை உணர்த்தும் காலமாக கருதப் படுகின்றது. மேலும் காலைப் பொழுதில் சூரியனின் கதிர்கள், மிகவும் குறைந்த வெப்பத்துடன் காணப்படுவதால், உடலுக்கு மிகவும் இதமாக இருக்கும். அது போன்று உடலுக்கு இதமாக குளிர்ச்சிஅளிக்கும் சந்திரனின் கதிர்களை, காலைக் கதிர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கரந்தை=திருநீற்றுப் பச்சை; பதினெண் கணங்கள்; தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளம், தாராகணம், ஆகாயத்தில் வசிப்பவர், மனிதர்கள்.
பாலின் மொழியாளோர் பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீலநிறம் உண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியம் கண்டேன் கரந்தை திருமுடி மேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (6.93.3) அப்பர் பிரான், பெருமானை நீலகண்டர் என்று அழைக்கின்றார். அமருலகம்=சிவபெருமான் வாழும் மேலுலகம்; வாழ்க்கைக்கு தேவையான பொருளினைத் தேடுவதில் உயிர், எத்தகைய கீழ்நிலைக்கு ஆளாகின்றது என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். காலையில் எழுந்தது முதல் தொடர்ந்து பொய்யினை பேசி பொருள் தேடும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்படும் நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பொய்= நிலையாமை பொய்யாறாவாறே=நிலையாமை என்ற தன்மையிலிருந்து நீங்காத; புனைந்து= சிறப்பித்து; கையாறா=கைவிடாது தொடர்ந்து; கரணம்=தொழிலாகக் கொண்டு; அமருலகம்=இறப்பு என்பது இல்லாத முக்தி உலகம்; முடிவு என்பதொன்று இல்லாமல் நிலையான இன்பத்துடன் தொடர்ந்து வாழும் வாழ்க்கை. தலைமுறை தலைமுறையாக மனிதகுலம் பொருள் தேடி வாழ்வதை இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் உணரலாம். அப்பர் பிரானின் காலத்தில் மிகவும் அதிகமான நெய்யினைக் கொண்டு பெருமானை நீராட்டி மகிழ்ந்தனர் என்பது இந்த பாடலில் புலனாகின்றது. நெய்யாற்றில் நீராடிய நீலகண்டர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
பொய்யாறாவாறே புனைந்து பேசிப் புலர்ந்து எழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீலகண்டர் நிமிர்புன் சடை நெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே
மேற்கண்ட திருத்தாண்டகத்தின் முதல் பாடல் பூந்துருத்தி தலத்தினை குறிப்பிட்டாலும் அடுத்து வரும் பாடல்கள், பூந்துருத்தி தலத்தினை குறிப்பிடாமல் வேறு பல தலங்களை குறிப்பிடுகின்றன. முதல் ஒன்பது பாடல்களில் பல தலங்களை குறிப்பிடும் அப்பர் பிரான் இந்த பதிகத்தின் கடைப் பாடலில் நமச்சிவாய எனப்படும் மந்திரத்தை ஓதுவார்கள் பெறுகின்ற பேற்றினை உணர்த்துகின்றார். ஒரே பதிகத்தில் அந்த தலத்தினை தவிர்த்து வேறு பல தலங்கள் பல பதிகங்களில் குறிப்பிடப் படுகின்றன. ஆனால் ஒவ்வொரு பதிகத்தின் ஈற்றடியில் வேறு வேறு தலங்களை குறிப்பிட்டு, அந்த தலங்களில் பெருமையை உணர்த்தும் பதிகமாக இந்த பதிகம் ஒன்று மட்டுமே அமைந்துள்ளது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். மேலும் முதல் ஒன்பது பாடல்களிலும் பல தலங்களை குறிப்பிடும் அப்பர் பிரான், அந்த திருத்தலங்களின் பெயரைச் சொல்வதால் நாம் அடைய இருக்கும் பலனை குறிப்பிடுகின்றார். அந்த பாடல்களை சிந்திக்கும் நாம், திருத்தலங்களின் பெயரைச் சொல்வதால், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடலாம் என்று அப்பர் பிரான் உணர்த்துவதை அறியலாம். கடைப் பாடலில் பெருமானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய மந்திரத்தைச் சொல்வதால் முக்தி நிலையை அடையலாம் என்று கூறுவதன் மூலம், பெருமானின் திருநாமமும் பெருமான் உறைகின்ற தலங்களின் பெயரும் ஒரே பலனைத் தரும் என்பதை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மேலும் பல தலங்களின் பெருமையை உணர்த்துவதன் மூலம், அந்தந்த தலங்களின் மேல் அமைந்துள்ள பாடல்களைப் போன்றும் இருப்பதால், இந்த பதிகத்தை பல்வகைத் திருத்தாண்டகம் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் அளிக்கின்றனர். பஞ்சாக்கர மந்திரம் அளிக்கும் முக்தி நெறியினைப் போன்று, திருத்தலங்களின் பெயர்களும் முக்தி நிலையினை அளிக்கும் சிறப்பு, பாடல்கள் தோறும் உபதேசமாக நமக்கு வழங்கப் படுகின்றது.
மற்றொரு திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.96.6) அப்பர் பிரான், பெருமானை, நீலநிறம் கோலநிறை மிடற்றில் கொண்டார் என்று குறிப்பிடுகின்றார். பளிங்கு=ஈசான முகத்தின் நிறம் என்றும் திருநீற்றின் வெண்மை என்றும் கூறலாம். ஈசனின் ஐந்து முகங்களும் ஐந்து நிறத்தில் அமைந்திருப்பதாக சொல்வார்கள்; கிழக்கு நோக்கி உள்ள முகமாகிய தத்புருஷம் பொன்னின் நிறத்திலும், தெற்கு முகமாக உள்ள அகோரம் கருமை நிறத்திலும் மேற்கு நோக்கிய சத்யோஜாதம் வெண்மை நிறத்திலும் வடக்கு நோக்கி உள்ள வாமதேவம் சிகப்பு நிறத்திலும் மேல்நோக்கி காணப்படும் ஈசான முகம் பளிங்கு நிறத்திலும் இருப்பதாக கூறுகின்றனர். இதனையே நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் என்று மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தில் கூறுகின்றார். பாரிடங்கள்=பூத கணங்கள்; கருவி=இசைக்கருவி; ஒற்றியூர்=அடமானம் வைக்கப் பட்ட ஊர். தன்னைச் சூழுந்துள்ள பூத கணங்கள் பல வகையான இசைக்கருவிகளை தொடர்ந்து இசைக்க, செம்பவள திருமேனியில் பளிங்கு நிறத்தில் உள்ள திருநீற்றினை பூசிய பெருமான், கங்கை நங்கை அடங்கியுள்ள சடைமுடியில் பிறைச் சந்திரனைக் கொண்டுள்ளார். தனது அழகான மிடற்றினில், நீல நிறம் மிளிருமாறு நஞ்சினைத் தேக்கியுள்ள பெருமானார், தனக்கு பிச்சையிட்ட தாருகவனத்து இல்லத்தரசிகள், கச்சைகளால் இழுத்து கட்டப்பட்ட மார்பகங்களை உடையவர்களாய் பலி கொண்டு வந்து இட்ட போது, தனது அழகினால் அவர்களது மனதினைக் கவர்ந்ததுமன்றி, தன் மீது அவர்கள் கொண்டிருந்த காதலால் உடல் இளைத்து அவர்களது வளையல்கள் கழன்று விழுமாறு செய்தார்; பல தலங்களைத் தனது ஊராக கொண்டுள்ள பெருமான், அடமானம் வைக்கப்பட்ட ஊர் என்ற பொருளில் அமைந்த திருவொற்றியூரையும் தனது ஊராகக் கொண்டு ஆட்சி செய்கின்றார். அவர் தாம் எனது உடலுக்கு உற்ற சூலை நோயினைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவராவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவும் கொண்டார் நீலநிறம் கோலநிறை மிடற்றில் கொண்டார்
வாரடங்கு வன முலையார் மையலாகி வந்திட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார்
ஊரடங்க வொற்றிநகர் பற்றிக் கொண்டார் உடலுறு நோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே
திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.99.8) அப்பர் பிரான் பெருமானை, நீலகண்டா என்று அழைக்கின்றார். கொய்=தளிர், இலை; கூவிளம்=வில்வம்; அப்பர் பிரான் தினமும், இறைவனை வில்வ இலைகளாலும், கொன்றை மலர்களாலும் வழிபட்டமை இங்கே சொல்லப் பட்டுள்ளது. நெய்யினால் நீராட்டப்படுவதை மிகவும் விரும்பவனே; மலங்கள் அற்றவனே; தேவர்களைக் காப்பதற்காக விடம் உண்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தினை உடையவனே; குறை ஏதும் இன்றி நிறைவானவனே; வேதங்களில் வல்லவனே; நீதியானே; கண்களில் மை அணிந்துள்ள உமையம்மையை தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே; மான் தோலினை உடையாக மகிழ்ந்து அணிபவனே; அன்று பறித்த வில்வ இலைகள் மற்றும் கொன்றை மலர்மாலைகள் கொண்டு உன்னை தினமும் வழிபட்டு வந்த அடியேன், உனது திருவடிகளை நாடி வருகின்றேன். என்னை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் இறைஞ்சும் பாடல்.
நெய்யாடி நின்மலனே நீலகண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே
மையாடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே
எதிர்கொள்பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.7.2) சுந்தரர், பெருமானை நீற்றர் ஏற்றர் நீலகண்டர் என்று அழைக்கின்றார். பிறந்தவர் அனைவரும் ஒருநாள் அழிவது நிச்சயம் என்றும், பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இல்லற வாழ்க்கை துயரம் நிறைந்தது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். எனினும் இந்த இல்லற வாழ்க்கையைச் சிறப்பித்து பலரும் பேசும் சொற்கள் அனைத்தும் வஞ்சனையான சொற்கள், பொய் கலந்த சொற்கள்என்று குறிப்பிடும் சுந்தரர், துயரம் தரும் இல்வாழ்க்கைக்கு காரணமாகிய பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்புவோர், தனது திருமேனியில் திருநீற்றைப் பூசிக் கொண்டுள்ளவரும், எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவரும், நிறைந்த கங்கை நதியினைத் தனது சடையில் தேக்கியவரும், பக்குவப்பட்ட உயிர்களை முக்தி நிலைக்கு உயர்த்தும் ஆற்றல் உடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற எதிர்கொள்பாடி தலம் சென்றடைந்து பெருமானை வணங்கி பயனடைவோம் என்று சுந்தரர் அறிவுரை கூறும் பாடல்.
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயர மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீலகண்டர் நிறைபுனல் நீள்சடை மேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.19.9) சுந்தரர், பெருமானை நீல நஞ்சு உண்டவர் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் கழுத்தினில் நீலநிறம் படர்ந்தது போன்ற கறையை ஏற்படுத்திய ஆலகால விடத்தை நீலநஞ்சு என்று குறிப்பிட்டு, அந்த நஞ்சினை உண்டவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மந்திரங்கள் என்று வேத மந்திரங்களை குறிப்பிட்டு, திருமால் பிரமன் இந்திரன் முதலானோர் பெருமானை வேதமோதி புகழ்ந்து போற்றுவதை உணர்த்துகின்றார்.
காலமும் ஞாயிறும் ஆகிநின்றார் கழல் பேணவல்லார்
சீலமும் செய்கையும் கண்டுகப்பார் அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க
நீலநஞ்சு உண்டவருக்கு இடமாம் திருநின்றியூரே
பழமண்ணிபடிக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.22.1) சுந்தரர் பெருமானை, நீல மிடற்றெம்பிரான் என்று அழைக்கின்றார். தோற்றுவிப்பவர் எவருமின்றி தானே தோன்றிய பெருமானுக்கு மூலம் யாது என்பதை எவரும் கண்டறிந்து கொள்ளுதல் அரிது என்று கூறுகின்றார். மன்னிய=நிலையான புகழினை உடைய; பன்னுதல்=உரைத்தல்;
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பரிதாய பிரான்
சென்னியில் எங்கள் பிரான் திருநீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே
திருக்கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.27.4) சுந்தரர், நீல மிடற்றினன் என்று அழைக்கின்றார். செய்யார்=சிவந்த; மிடறு=கழுத்து; இந்த பாடலின் முதல் எட்டு பாடல்களில் சுந்தரர், தான் அச்சம் கொள்ளாமல் இருப்பதற்கு பெருமான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார். அருளாளர்கள் அச்சம் கொள்வது, தாம் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிய தன்மைக்கு தான், என்பதால், பிறவிக் கடலில் விழுந்து துன்பமடையும் தன்னை, பெருமான் மீட்டு அருள் புரிய வேண்டும் என்பதை சுந்தரர் இந்த பாடலில் கோருகின்றார். இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், பெருமான் மிகவும் விரும்பி தன்னையும் ஆட்கொண்டு, பிறவிக் கடலிலிருந்து கரையேற்ற வேண்டும் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் நீல மிடற்றினன் என்று பெருமானை அழைக்கின்றார்.
செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே
மையார் கண்ணி பங்கா மதயானை உரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னி நின்ற
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.38.6) சுந்தரர், நீலகண்டத்து எம் பெருமான் என்று அழைக்கின்றார். மாதவன் என்று பெருமானை குறிப்பிட்டு மிகவும் உயர்ந்த தவம் செய்பவன் என்று உணர்த்துகின்றார். தவசிகளுக்கெல்லாம் தலை சிறந்த பெருமானை, மாதவன் என்று மிகவும் பொருத்தமாக அழைக்கின்றார். மைம்மான=மையினை ஒத்த; மை=கருமையான மை; வல்லேன=வலிமையான பன்றி: தலைமகன் என்ற சொல் தம்மான் என்று மருவியதாக அறிஞர்கள் கூறுகின்றனர். தம்மானை=தனது தலைவன்; பாம்பும் சந்திரனும் இயல்பிலேயே ஒன்றுக்கொன்று பகை வாய்ந்தவை என்பதை நாம் அறிவோம். எனினும் இறைவனின் சன்னதியில் தங்களது பகையை மறந்து அவரது சடையினில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இருந்தாலும் பாம்பின் இயற்கை குணம் அடிக்கடி தலை தூக்கவே, பாம்பு சந்திரனை விழுங்கும் சமயம் பார்த்து பாய்வதற்கு காத்திருக்கின்றது என்றும், இதனைக் கண்ணுறும் சந்திரனும் அதனால் பதட்டம் அடைகின்றது என்றும் சுந்தரர் கற்பனை செய்து, இரண்டும் பதட்டமடைந்து தடுமாறுவதாக கூறுகின்றார். வெம்மான= வெம்மை மிகுந்த; வேத விதியான்=வேதங்களின் பயனைத் தருபவன்; சண்ணித்த=பூசப்பட்ட; திருவதிகை சித்தவடம் மடத்தில் ஒரு இரவில் சுந்தரர் படுத்து உறங்கிய போது, அவரின் அருகே முதியவராக வந்து படுத்து, சுந்தரரின் முகத்தில் தனது திருவடியை பதித்தது, இறைவன் தான் என்பதை உணராத அறிவிலியாக இருந்ததுமன்றி கோபத்துடன் அவரிடம் பேசியதை தனது தவறு என்று குறிப்பிடும் சுந்தரர், இனியும் அவ்வாறு இறைவனை இகழ்வாக பேசமாட்டேன் என்று இந்த பதிகத்தின் பாடல்கள் தோறும் குறிப்பிடுகின்றார்.
மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான் வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும் தடுமாறும் சடையானைத் தாழ்வரைக்
கை வென்ற
வெம்மான மதகரியின் உரியானை வேத விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போலியானே
நன்னிலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.98.6) பெருமானை கருநீலமணி மிடற்றான் என்று குறிப்பிடுகின்றார். நண்புடை=பலரும் நண்பனாக ஏற்றுக் கொள்ளும் தன்மை படைத்தவன்; கருநீல மாணிக்கம் பதித்தது போன்ற கறையினை கழுத்தினில் உடையவன் என்று கூறுகின்றார்.
வெண்பொடி மேனியினான் கருநீல மணி மிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்றேத்திப் பல்கால் வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
உயர்கொடியாடை என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.2.8) திருமாளிகைத் தேவர், பெருமானை, நீலகண்டத்து என் அமுதே என்று அழைக்கின்றார். கணி=எண்ணத்தக்க; விசிறு கரம்=வீசியாடும் கை: துடி=உடுக்கை; விடவாய்=விடத்தைத் தனது வாயினில் கொண்டுள்ள பாம்பு; நெருப்புப்பிழம்பினைத் தனது கையில் ஏந்தியவாறு கைகளை வீசி நடனமாடும் அழகும், முன் கையில் கங்கணமாக பாம்பு திகழ்கின்ற தன்மையும், அபயம் காட்டும் சிவந்த கையும் பொருந்திய பெருமானின் கூத்தினைக் காணும் அடியார்களின் பிறவிப்பிணி கெட்டுவிடும் என்று இந்த பாடலில் திருமாளிகைத் தேவர் கூறுகின்றார். அடர்ந்த கருநீலம் நிறத்து மணி பதிக்கப்பட்டது போன்று ஆலகால விடம் தேக்கப்பட்டதால் ஏற்பட்ட கறை கழுத்தினில் படர்ந்துள்ளது என்றும் இந்த அழகிய கோலத்தைக் கண்ட தனது அறிவு, அந்த கோலத்தை விட்டு அகலாமல் பொருந்தி உள்ளது என்றும் கூறுகின்றார்.
கணிஎரி விசிறுகரம் துடி விடவாய்க் கங்கணம் செங்கை மற்றபயம்
பிணிகெட இவை கண்டுன் பெருநடத்திற் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர்
திணிமணி நீலகண்டத்து என் அமுதே சீர்கொள் சிற்றம்பலக் கூத்தா
அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே
தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (9.3.10) திருமாளிகைத் தேவர், நீலகண்டன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் தாயின் கூற்றாக அமைந்த அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். கூத்த பிரானின் நினைவில் தோய்ந்திருக்கும் தனது மகள், பெருமான் பால் தான் கொண்டிருந்த பித்தம் தலைக்கேறியவளாக எவ்வாறு பிதற்றித் திரிகின்றாள் என்று இந்த பாடலில் தாய் கூறுவதாக அமைந்த அகத்துறைப் பாடல்.
திருநீறிடா உருத் தீண்டேன் என்னும் திருநீறு மெய்த்திரு முண்டம் தீட்டிப்
பெருநீல கண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றிப் பெருந்தெருவே திரியும்
வருநீரருவி மகேந்திரப் பொன்மலையில் மலைமகளுக்கு அருளும்
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே
கருவூர்த்தேவர் களந்தை ஆதித்தேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.9.6) நீலமே கண்டம் என்று குறிப்பிடுகின்றார். நித்திலம்=முத்து; நிரைத்து=வரிசையாக உள்ள நிலை; வரிசையாக முத்துக்கள் அடுக்கப்பட்டது போன்று பெருமானின் முறுவல் காணப் படுகின்றது என்று கூறுகின்றார்.பெருமானின் திருமுகம் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது என்பதை உணரும் அடியார்கள், பெருமானின் திருக்கோலம், அச்சோ பேரழகாக உள்ளதே என்று வியப்பினில் ஆழ்ந்து, மனம் குழைந்து உருகுவார்கள் என்று கருவூர்த்தேவர் இந்த பாடலில் கூறுகின்றார். வெறும் விடத்தினை மட்டும் உட்கொண்ட ஒருவரின் உடல் இத்துணை அழகாக எவ்வாறு திகழ்கின்றது என்ற வியப்பு காண்போரின் உள்ளத்தில் ஓங்கியிருப்பதாக கூறுகின்றார். அச்சோ= வியப்பினை குறிப்பிடும் சொல்.
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவே
போலுமே முறுவல் நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்டது
ஆலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே
கீழ்க்கோட்டூர் மணியம்பலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.10.2) கருவூர்த் தேவர் பெருமானின் நீலகண்டத்தை குறிப்பிடுகின்றார். இந்த பாடலும் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். மொழுப்பு=முடி; சுழியம் என்பது சூழியம் என்ற சொல்லின் திரிபு; சூழியம்=உச்சிக் கொண்டை; உகளும்=துள்ளிக் குதிக்கும்; பழனம்=வயல்கள்; கெழுவு=பொருந்திய; கம்பலை=ஆரவாரம்; மைந்தன்= வலிமை உடையவன்:
துண்ட வெண்பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளும் நீர்ப் பழனம் கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்
வண்டறை மணியம்பலத்துள் நின்றாடும் மைந்தன் என் மனம் கலந்தானே
கங்கைகொண்டை சோளேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.13.6) கருவூர்த் தேவர் பெருமானை நீலகண்டனே என்று அழைக்கின்றார். அண்டங்களை பெருமானின் திருவுருவத்துடன் ஒப்பிடுகையில் அண்டங்கள் அணு போன்று சிறியதாக உள்ளன என்று சொல்லும் வண்ணம் மிகவும் பெரிய உருவத்தை உடையவன் பெருமான் என்றும், பெருமானின் திருவுருவத்துடன் ஒப்பிடுகையில் அண்டங்கள் அணு போன்று மிகவும் சிறிய அளவில் தோன்றுகின்றன என்று அண்டங்களின் சிறுமையையும் இந்த பாடலில் கருவூர்த் தேவர் கூறுகின்றார். ஊண்=தான் நுகர்ந்து கழிக்கும் வினைகள்; தான் நுகர்ந்து கழிக்க வேண்டிய வினைகளை, பெருமான் தான் எடுத்துக் கொண்டு தன்னை உய்விக்க வேண்டும் என்று கருவூர்த் தேவர் கோருகின்றார். எரித்த கண்டன்=எரித்த வீரனே
அண்டமோர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டடியேன்
உண்ட ஊண் உனக்காம் வகையெனது உள்ளம் உள்கலனெழு பரஞ்சோதி
கொண்ட நாண் பாம்பாப் பெருவரை வில்லிற் குறுகலர் புரங்கள் மூன்றெரித்த
கண்டனே நீலகண்டனே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே
பொழிப்புரை:
தான் உட்கொண்ட ஆலகால விடம் வயிற்றின் உள்ளே சென்றால், பிரளய காலத்தில் தன்னில் ஒடுங்கவிருக்கும் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன், ஆலகால விடத்தினைத் தனது கழுத்தில் பெருமான் தேக்கியதால், கருமை நிறம் கறையாக படர்ந்த கழுத்தினை உடையவனும், ஆலவாயில் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானைச் சார்ந்து வாழும் அடியார்கள், இந்த உலகத்தினை ஆளும் வாய்ப்பினை பெறுவார்கள்.
பாடல் 2:
ஞால மேழுமாம்
ஆல வாயிலார்
சீலமே சொலீர்
காலன் வீடவே
விளக்கம்:
ஏழுலகங்களாக பெருமான் இருப்பதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். ஏழு உலகங்களில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் கலந்திருக்கும் இறைவன் என்பதை உணர்த்தவும் ஏழு உலகங்கள் தோன்றுவதற்கு முதற் காரணனாக இருப்பதாலும், ஏழு உலகங்களாக இருப்பதாக கூறுகின்றார். சீலம்=சரிதை, பெருமானின் பல வீரச் செயல்கள் மற்றும் கருணைச் செயல்களை நாம் சொல்ல வேண்டும் என்று கூறுகின்றார். வீட=அழியவே: காலன் என்று காலனால் உயிர்கள் அடைய இருக்கும் துன்பங்கள் உணர்த்தப் படுகின்றன. தூல உடலுடன் இணைந்திருக்கும் உயிர், தன்னுடன் பிணைந்துள்ள வினைகளை இன்பமாகவும் துன்பமாகவும் நுகர்ந்து கழிக்கின்றன. தத்தம் தூல உடலினை விட்டுப் பிரியும் உயிர்கள், சூக்கும உடலுடன் இணைந்து சுவர்கத்திலும் நரகத்திலும் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. இவ்வாறு சூக்கும உடலுடன் இணைந்து உயிர்கள் துன்பமடைவது, காலனால் விளையும் செயல்கள். அத்தகைய செயல்களே இங்கே காலன் என்று குறிப்பிடப் படுகின்றன. பெருமானால் ஆட்கொள்ளப்படும் உயிர்கள், அவ்வாறு நரகத்திலும் சொர்கத்திலும் தங்களது வினைகளை கழிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், அந்த உயிர்கள் சிவலோகம் அழைத்துச் செல்லப்படுகின்றன. அந்த தன்மையே இந்த பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பொழிப்புரை:
ஏழு உலகங்களில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் கலந்து அவற்றை இயக்குவதால், ஏழு உலகங்களாக இருப்பவனாக கருதப்படுபவனும், ஆலவாய் தலத்தினில் உறைபவனும் ஆகிய பெருமானின் பெருமை மிகுந்த புகழினைச் சொல்லி, உலகத்தவரே நீர், எமபயத்தை அழித்துக் கொள்வீர்களாக.
பாடல் 3:
ஆல நீழலார்
ஆல வாயிலார்
கால காலனார்
பால தாமினே
விளக்கம்:
ஆல நீழலார் என்று கல்லால மரத்தின் நிழலில் அமர்ந்த வண்ணம், சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த செய்கை குறிப்பிடப் படுகின்றது. சிவபெருமானைச் சார்ந்து வாழும் அடியார்கள், உலகத்தை ஆளும் வாய்ப்பு பெறுவதாலும், இறந்த பின்னர் அவர்கள் நரகம் செல்வதும் தடுக்கப் படுவதாலும், பெருமானைச் சார்ந்து வாழுமாறு இந்த பாடலில், திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். காலகாலன் என்ற தனது பெயரினுக்கு ஏற்ப, இறந்த பின்னர் உயிர்களுக்கு இயமனால் ஏற்படவிருக்கும் துன்பங்களைத் தவிர்ப்பவராக பெருமான் உள்ள தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.
ஆலவாயில் தலத்தினில் நடைபெற்ற திருவிளையாடல்களில் ஒன்று, வேதங்களுக்கு பொருள் விரித்த படலத்தில் சொல்லப்படும் திருவிளையாடல் ஆகும். வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலத்தில் (திருவிளையாடல் புராணம்) பரஞ்சோதி முனிவர், கண்வர் முதலான முனிவர்களுக்கு வேதத்தின் பொருள் சொன்ன நிகழ்ச்சி சொல்லப் பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்ற வேதியன் ஒருவன், நைமிசாரண்யத்தில் கண்வர் முதலான முனிவர்கள், முகம் வாட்டமடைந்து இருந்ததைக் கண்டு, அதன் காரணத்தை வினவினார். வேதங்களின் பொருளினை அறிய முடியாமல் தாங்கள் வருந்துவதாக அவர்கள் கூறவே, மதுரை வேதியன், மதுரை மாநகரம் சென்று சொக்கநாதப் பெருமானிடம் வேண்டுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறினார். அவ்வண்ணமே கண்வரும் மற்ற முனிவர்களும் மதுரை சென்றடைந்து சொக்கநாதப் பெருமானிடம் வேண்டினார்கள். பின்னர் அவர்கள் ஆங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் வழிபட்ட போது, வேதியச் சிறுவனாக பெருமான் வெளிப்பட்டு, முனிவர்களை நோக்கி அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது முனிவர்கள் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே தங்கள் அவா என்று கூறவே, வேதியச் சிறுவனாக வந்த பெருமானும் வேதங்களின் பொருளை எடுத்துரைத்தார் என்று திருவிளையாடல் புராணம் உணர்த்துகின்றது. இந்த திருவிளையாடல் திருஞானசம்பந்தருக்கு பண்டைய நாளில் சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம் அறம் உரைத்த கருணைச் செயலை நினைவூட்டியது போலும்.
பொழிப்புரை:
கல்லால மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம், சனகாதி முனிவர்களுக்கு வேதங்களின் பொருளை உணர்த்தி, அவர்களின் ஐயப்பாட்டினைத் தீர்த்தவனும், ஆலவாயில் தலத்தில் உறைபவனும், காலனுக்கு காலனாக விளங்குபவரும் ஆகிய பெருமானைச் சார்ந்து வாழ்வீர்களாக.
பாடல் 4:
அந்த மில்புகழ்
எந்தை யாலவாய்
பந்தி யார்கழல்
சிந்தை செய்ம்மினே
விளக்கம்:
அந்தமில் புகழ்=அழிவற்று என்றும் நிலையாக உள்ள புகழ்; பந்தம்=பிணைப்பு, பாசத்தால் ஏற்படும் பிணைப்பு; பந்தமுறுதல்=கட்டுண்டு இருத்தல்; பந்தியார்=பந்தத்ததால் கட்டப்படாது விடுதலை பெற்றவர்: இயல்பாகவே பாசங்களிலிருந்து பெருமான் விடுபட்டுள்ள தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த தன்மை பெருமானின் அரிய எட்டு குணங்களில் ஒன்றாகும். முனிவர்களும் தங்களது மனதினை மிகவும் கட்டுப்படுத்தி, பந்த பாசங்களிலிருந்து விடுதலை அடைகின்றனர். ஆனால் பெருமான் அவர்களிலிருந்து மாறுபட்டுள்ள தன்மையால், அத்தகைய முயற்சிகள் ஏதும் தேவையற்றவராக விளங்குகின்றார். கழல் என்ற சொல்லுடன் பந்தியார் என்ற சொல்லை இணைத்து, வீரக்கழல்கள் இணைந்துள்ள திருப்பாதங்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பதிகத்தின் பெரும்பாலான பாடல்களில், முதல் இரண்டு அடிகளில் பெருமானின் தன்மையும் அடுத்த இரண்டு அடிகளில் நமக்கு அறிவுரையும் குறிப்பிடப் படுவதால், பந்தியார் என்ற சொல்லினை கழலுடன் இணைத்துப் பொருள் காண்பது மிகவும் பொருத்தமாக கருதப் படுகின்றது.
பொழிப்புரை:
எல்லையற்றதும் என்றும் அழிவற்றதும் ஆகிய புகழினை உடையவரும், எமக்கு தந்தையாக விளங்குபவரும் ஆலவாய் தலத்தினில் உறைபவரும், இயல்பாகவே பாசங்களிலிருந்து விடுதலை பெற்றவரும் ஆகிய பெருமானின் வீரக்கழல் அணிந்த திருப்பாதங்களை, அடியார்களே நீர் சிந்தை செய்வீர்களாக.
பாடல் 5:
ஆட லேற்றினான்
கூட லாலவாய்
பாடியே மனம்
நாடி வாழ்மினே
விளக்கம்:
ஆடல்=அடல் என்ற சொல், எதுகை கருதி, ஆடல் என்று திரிந்தது. அடல் என்றால் கொல்லுதல் என்று பொருள். மாயப்பசுவை வதைத்த திருவிளையாடல் உணர்த்தப் படுவதாக திரு சிவக்கவிமணியார், தனது பெரிய புராண விளக்கம் நூலில் கூறுகின்றார். நாடி=விரும்பி: கூடல் என்பது மதுரை நகரத்தின்மற்றொரு பெயர். இந்த பெயர் மதுரை நகரத்திற்கு அமைவதற்கும் பெருமானின் திருவிளையாடல் தான் காரணம். அந்த திருவிளையாடலை நாம் இங்கே காண்போம். மேகங்கள் மாடங்களைப் போலக் கவிந்து மதுரை நகரைக் காப்பாற்றியதால் நான்மாடக்கூடல் என்ற பெயர் வந்தது. இந்த பெயரே சுருக்கமாக கூடல் என்று இங்கே சொல்லப் பட்டுள்ளது. ஒரு சித்திரைத் திங்களில் சித்திரைத் திருநாளில் அபிடேக பாண்டியன் சோமசுந்தரக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். அதே சமயத்தில் தனது வழக்கமான பூஜையை செய்வதற்கு வந்த இந்திரன், பாண்டிய மன்னனின் வழிபாடு முடியும் வரையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனை தனக்கு நேர்ந்த அவமானமாக இந்திரன் கருதியதால், அவன் முகம் வாட்டமடைந்து இருந்தான். அப்போது ஆங்கே வந்த வருணன் இந்திரனின் வருத்தத்தின் காரணத்தை கேட்டறிந்த பின்னர், இந்திரனிடம் மதுரை தலத்தின் சிறப்பு யாது என்று கேட்டான். அதற்கு இந்திரன் முன்னொரு காலத்தில் தனக்கு ஏற்பட்ட பழியையும் வெள்ளை யானைக்கு ஏற்பட்ட இழிவையும் நீக்கியவன் மதுரை இறைவன் என்று பதில் அளித்தான். உடனே வருணன் தனது வயிற்று வலியை நீக்குவது இறைவனால் முடிந்த காரியமா என்று கேட்டான். இறைவனால் முடியாத காரியம் இல்லை என்பதால், முடியும் என்று இந்திரன் பதிலளிக்க, வருணன் பெருமானை மிரட்டி, தனது வயிற்று வலியை நீக்கிக் கொள்ள முடிவு செய்தான். தனது கட்டுப்பாட்டில் இருந்த ஏழு கடல்களையும் பொங்கி எழுந்து மதுரை நகரை அழிக்குமாறு ஆணையிட்டான். ஆனால் இறைவன் தனது சடையிலிருந்த நான்கு மேகங்களை ஏவ, அந்த நான்கு மேகங்களும் ஏழு கடல்களின் நீரை முழுதும் உறிஞ்சி கடல்களை வற்றச் செய்தன. இவ்வாறு தான் தோல்வியடைந்த போதிலும், பெருமானை மிரட்டும் தனது முயற்சியில் தளர்வு அடையாத வருணன், தனது ஆணைக்கீழ் இருந்த நான்கு மேகங்களையும் அடர்ந்த மழை பொழிவித்து பெருவெள்ளம் உண்டாக்கி, மதுரை நகரை அழிக்கும் வண்ணம் ஆணையிட்டான். இடைவிடாத மழையினால் மதுரை மக்கள் பெரிதும் அல்லல் உற்றனர். மக்களின் அவல நிலையை போக்கத் திருவுள்ளம் கொண்ட பெருமான், தனது சடையில் தவழ்ந்த நான்கு மேகங்களை எடுத்து வீச, அந்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக ஒன்று சேர்ந்து வானில் பாய் விரித்தது போன்று, ஒரு சொட்டு மழை நீரும் மதுரை நகரின் உள்ளே புகாமல் பாதுகாத்தன. மேலும் பெருவெள்ளமாக மதுரை நகரில் தேங்கியிருந்த நீரினையும் உறிஞ்சி அகற்றின. இவ்வாறு இரண்டாவது முறையும் தனது முயற்சி பலனளிக்காமல் வீணானதைக் கண்ட வருணன், பெருமானது ஆற்றலைப் புரிந்து கொண்டு பெருமானிடம் சரண் அடைய, பெருமானும் அவனது தவறை மன்னித்து அவனது வயிற்று வலியையும் போக்கினார். இந்த நிகழ்ச்சியால் மதுரைக்கு நான்மாடக்கூடல், கூடல் என்ற பெயர்கள் வந்தன.
பொழிப்புரை:
ஆற்றல் மிகுந்த இடபத்தினைத் தனது வாகனமாக உடையவனும், கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில் உறைபவனும், ஆகிய இறைவனின் புகழினை உணர்த்தும் பாடல்களைப் பாடி, மனதினால் இறைவனை நாடி தியானம் செய்து, உலகத்தவரே நீர் வாழ்வீர்களாக.
பாடல் 6:
அண்ண லாலவாய்
நண்ணி னான்றனை
எண்ணியே தொழத்
திண்ணம் இன்பமே
விளக்கம்:
திண்ணம்=உறுதியாக; நண்ணுதல்=நெருங்குதல்: அண்ணல்=தலைவன்; பெருமானை பல திருமுறைப் பாடல்கள் அண்ணல் என்று குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். ஆலவாய் மற்றும் திருநள்ளாறு தலங்களை இணைத்துப் பாடிய பதிகத்தின் பாடலில் (1.7.3) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். தண்ணறு மத்தம்=தண்+நறு மத்தம்=குளிர்ந்ததும் நறுமணம் வீசுவதும்; கூவிளம்=வில்வ இலைகள்; மாதவர்=சிறந்த தவம் செய்வோர். இழை=அழகிய நகைகள்; அண்ணல்=தலைவன்; புண்ணிய வாணர்=சென்ற பிறவியில் செய்த நற்செயல்களின் விளைவால் இந்த பிறவியில் நல்ல கதியில் வாழும் உயிர்கள்; சென்ற பல பிறவிகளில் செய்த நற்செயல்கள் தாம் இந்த பிறவியில் நாம் இறைவனை வழிபடும் வண்ணம் நம்மை பணிக்கின்றது என்ற குறிப்பு, நமக்கு திருஞானசம்பந்தர் அருளிய வலஞ்சுழி தலத்து பதிகத்தின் முதல் பாடலை (2.106.1), என்ன புண்ணியம் செய்தனை என்று தொடங்கும் பாடலை நமக்கு நினைவூட்டுகின்றது.
தண்ணறு மத்தமும் கூவிளமும் வெண்டலை மாலையும் தாங்கி யார்க்கும்
நண்ணல் அரிய நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்து உடன் ஏத்தப் புனையிழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
சோற்றுத்துறை தலத்தினை, அண்ணல் உறையும் சோற்றுத்துறை என்று இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் (1.28.8) குறிப்பிடுகின்றார். எண்ணாது= இறைவனின் பெருமையை எண்ணாமலும், தனது செய்கையால் தனக்கு ஏற்படவிருக்கும் பின்விளைவுகளை எண்ணாமலும்; பதிகத்தின் இரண்டு பாடல்களில் நடனம் ஆடிய பெருமானின் திருவடிகளைக் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், பதிகத்தின் ஏழாவது பாடலில் காலனை உதைத்த திருவடி என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அந்த திருவடியை ஊன்றி அரக்கன் இராவணனின் செருக்கினை அடர்த்த தன்மையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச் சென்னி
கண்ணோர் பாகம் கலந்த நுதலினார்
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே
அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.77.5) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணலார் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் எண்ணலாகாத தேவர்கள் என்று குறிப்பிடுகின்றார். போகத்தில் ஆழ்ந்திருக்கும் தேவர்கள், தாங்கள் அனுபவிக்கும் இன்பத்திற்கு தடைகள் வரும்போது மட்டுமே பெருமானை நினைப்பது அவர்களது பண்பாக இருந்த தன்மையை இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று சிலர் அளிக்கின்ற விளக்கம், இமையவர் நாளும் ஏத்த என்ற தொடர் இந்த பாடலில் இடம் பெறுவதால், பொருத்தமாக இல்லை. எனவே எண்ணிக்கையில் அடங்காத தேவர்கள், எண்ணற்ற தேவர்கள் என்று பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமாக உள்ளது. பெருமானின் செயல்கள் அனைவர்க்கும் நன்மையை உண்டாக்குவதாக இருப்பதால், பெருமானை பழியிலார் என்று அழைக்கின்றார். அரவம் என்பதற்கு ஓசை என்றும் பாம்பு என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்வதும் இங்கே பொருத்தமாக உள்ளது. தேவர்கள் பெருமானை புகழ்ந்து தேவர்கள் பாடுவதால் எழுகின்ற ஓசையின் பின்னணியில் பெருமான் எழிலுடன் திகழ்கின்றார் என்பதும் பாம்புகளைத் தனது உடலில் அணிந்துள்ள பெருமான் எழிலுடன் திகழ்கின்றார் என்பதும் பொருத்தமாகவே உள்ளது.
விண்ணுலா மதியம் சூடினர் எனவும் விரிசடை உள்ளது வெள்ளநீர் எனவும்
பண்ணுலா மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழியிலர் எனவும்
எண்ணலாகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற
அண்ணலான் ஊர்தி ஏறும் எம்மடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1,95,3) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணன் என்று அழைக்கின்றார். விண் என்றுசிவலோகத்தை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமாகும். பண்ணுடன் கூடிய பாடல்களை பாடி பெருமானை துதித்தால் சிவலோகம் சென்று சேரும் வாய்ப்பினை அளிப்பார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
எண்ணும் அடியார்கள் அண்ணன் மருதரைப்
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமதாமே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.9) திருஞானசம்பந்தர் பெருமானை, அண்ணல் என்று அழைக்கின்றார். சூரியன், இந்திரன், மற்றும் எண்ணற்ற தேவர்களால் வணங்கப்படும் பெருமான், பிரமனும் திருமாலும் காண்பதற்கு மிகவும் அரியவனாக விளங்கினார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமானின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து நின்ற பிரமன் திருமால் ஆகிய இருவரும், தங்களது தவற்றினை உணர்ந்த பின்னர், பெருமானை வணங்கி அவரது அருளால் இலிங்க வடிவில் பெருமானை கண்டனர் என்பதை நாம் அறிவோம்.
விண்ணவர் தம்மொடு வெங்கதிரோன் அனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபடக்
கண்ணனும் பிரமனும் காண்பரிதாகிய
அண்ணல் தன் வளநகர் அந்தண் ஐயாறே
அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.5.9) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். ஐயமாய்=சந்தேகம் கொள்ளும் வண்ணம்; அரிய ஆற்றல் கொண்டுள்ள பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும், தாங்கள் நெடுந்தூரம் அன்னமாக பறந்தும் பன்றியாக கீழே அகழ்ந்தும் சென்ற போதிலும் பெருமானின், திருமுடியை, திருவடியை காண முடியாமல் தளர்ச்சி அடைந்ததால், அவர்களுக்கு தங்களது ஆற்றலின் மீதே சந்தேகம் வந்தது என்பதை உணர்த்தும் வண்ணம், ஐயமாய் என்ற தொடரை திருஞானசம்பந்தர் கையாண்டுள்ளார். நண்ணும் வண்ணம்=சென்றடைந்து வணங்கும்; இந்த தலத்தினைச் சென்றடைந்து இறைவனைப் பணிந்து வணங்கும் அடியார்கள், பெருமானின் கருணையால் தங்களது வினைகள் முற்றிலும் நாசமடையப் பெறுவார்கள் என்று கூறுகின்றார்.
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய்
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்ததோர் ஆரழல்
அண்ணல் நண்ணும் அணிசாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினையாயின நாசமே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.6.4) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். துவர்=செம்மை நிறம்; எண்ணில்=எண்ணிக்கையில் அடங்காத; அண்ணல்=தலைவன்; பண்ணின் நல்ல=நல்ல பண்ணிசை உடைய; திருவையாறு தலத்தில் உள்ள இளம் பெண்கள் பெருமானின் தன்மையையும் வீரச்செயல்களையும் பாடுவதைக் கேட்கும் பெருமான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
பண்ணின் நல்ல மொழியார் பவளத் துவர் வாயினார்
எண்ணில் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார்
வண்ணம் பாடி வலி பாடித் தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே
வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.14.9) திருஞானசம்பந்தர், பெருமானை அண்ணல் என்று குறிப்பிட்டு, அண்ணலைச் சென்றடைந்து பணிந்து வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லையே என்று கூறுகின்றார். அண்ணல்=தலைவன்; அல்லல்=பிறவித்துன்பமும் ஏனைய துன்பங்களும்; பஞ்ச பூதங்களில் முதலாவதாக கருதப்படும் ஆகாயமும், இறுதியாக கருதப்படும் பூமியும் குறிப்பிடப்படுவதால், மற்ற பூதங்களாக இறைவன் உள்ள நிலையும் உணர்த்தப் படுகின்றது என்று பொருள் கொள்ளலாம்.
மண்ணினை வானவரோடு மனிதருக்கும்
கண்ணினைக் கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை விண்ணவர் தாம் தொழும் வெண்ணியில்
அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே
இந்திரநீலப் பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.27.6) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். வேணி=சடை; எண்ணிலார்=சிவபெருமானை நினைக்காமல் பகைவர்களாக வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; வில்=வில்லாக மாற்றப்பட்ட மேரு மலை; உண்ணிலாவுறும்=உள் நிலாவுறும், உள்ளே பொருந்தி உறையும்; ஒருவன்=ஒப்பற்றவன்;
வெண்ணிலா மதி சூடும் வேணியன்
எண்ணிலார் மதில் எய்த வில்லினன்
அண்ணல் இந்திரநீலப் பர்ப்பதத்து
உண்ணிலாறும் ஒருவன் அல்லனே
கருவூர் ஆனிலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.28.3) திருஞானசம்பந்தர் அண்ணலாகிய பெருமான் அடியார்களுக்கு மிகவும் நல்லவராக திகழ்ந்து பல நன்மைகள் புரிகின்றார் என்று கூறுகின்றார். நல்லார் என்ற திருநாமம் நல்லர் என்று திரிந்ததாக சொல்வார்கள். நல்லார் என்பதும் அடியார்க்கு நல்லார் என்பதும் பெருமானின் திருநாமங்கள். நல்லார் நாமம் நமச்சிவாயவே என்று குறிப்பிடும் நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் (3.49.5) நமது நினைவுக்கு வருகின்றது. கண்ணுளார் என்ற தொடரில் உள்ள கண் என்பது அடியார்களின் கண்களைக் குறிக்கும். இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் கழுத்து காது, என்று பெருமானின் அங்கங்களை குறிப்பிட்ட ஞானசம்பந்தர் கண் என்று அடியார்களின் கண்களை குறிப்பிடுகின்றார். பரம்=மேலானது, வேதங்கள் அனைத்து நூல்களுக்கும் முதன்மையானது. பரம் என்பது பெருமானை குறிக்கும் அடைமொழியாகக் கொள்வதும் பொருத்தமே. அண்ணலார்= தலைவர்; கண்ணுளார் என்ற சொல் கூத்தபிரானை குறிப்பதாக சில விளக்கம் அளிக்கின்றனர். எனினும் அடியார்கள் கண்களில் நிறைந்த கோலத்தை உடைய பெருமான் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பண்ணுளார் என்ற சொல்லினை வேதத்துடன் என்ற சொல்லுடன் கூட்டி, வேதங்கள் சொல்வதற்கு உரிய பண்ணாக இருப்பவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் தானே முதன்முதலில் வேத மந்திரங்களை பண்ணுடன் பொருத்தி பாடி, நான்கு வேறுவேறு முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். எனவே பண்களாகவும் அவரே இருக்கின்றார் என்று கூறுவது பொருத்தம் தானே.
̀ விண்ணுலாம் மதி சூடி வேதமே
பண்ணுளார் பரமாய பண்பினர்
கண்ணுளார் கருவூருள் ஆனிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.49.1) திருஞானசம்பந்தர், பெருமானின் அடியார்கள், பெருமானின் அருளை குறையாமல் முழுவதுமாக பெறுவார்கள் என்று கூறுகின்றார். பெருமானைத் தங்களது தலைவனாக பாவித்து என்றும் தியானிக்கும் அடியார்கள் தங்களது வாழ்வினில்குறைவற்ற செல்வமும் அருளும் பெறுவார்கள் என்று கூறுகின்றார்.
பண்ணினேர் மொழி மங்கைமார் பலர் பாடியாடிய ஓசை நாள்தொறும்
கண்ணினேர் அயலே பொலியும் கடற்காழி
பெண்ணினேர் ஒரு பங்குடைப் பெருமானை எம்பெருமான் என்றென்றுன்னும்
அண்ணலார் அடியார் அருளாலும் குறைவிலரே
திருக்களர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.9) திருஞானசம்பந்தர், பெருமானை அண்ணலே என்று அழைத்து, தன்னைச் சரணடையும் அடியார்களுக்கு பெருமான் தொடர்ந்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார். ஆரழல்=அரிய அழல்; பிரமனும் திருமாலும் அடி முடி காண முடியாத வண்ணம் திகைக்கச் செய்த, அரிய தீப்பிழம்பு; திருமாலும் காண முடியாத திருப்பாதங்களின் காட்சியை அடியார்களுக்கு காட்டி அருள் புரிய வேண்டும் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் வேண்டுகின்றார்.
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடலாடலொடு ஆர வாழ்பதி
தெண்ணிலா மதியம் பொழில் சேரும் திருக்களருள்
உண்ணிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆரழல்
அண்ணாலாய எம்மான் அடைந்தார்க்கு அருளாயே
பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.65.11) திருஞான சம்பந்தர் பெருமானை, அண்ணல் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில், திருஞானசம்பந்தர் பெருமானின் பல செயல்களை குறிப்பிட்டு, அவற்றை எல்லாம்செய்யாதவர் போலும் என்று கூறுகின்றனர். இந்த செயல்கள் பலவும் ஏனையோர் செய்ய முடியாத அரிய செயல்களாக திகழ்கின்றன. இவற்றை எல்லாம் செய்யாதவரா பெருமான் என்ற கேள்வியினை கேட்டு, இந்த பதிகத்தில் குறிப்பிடப்படும் அனைத்துச் செயல்களையும் செய்தவர் பெருமான் என்பதை உணர்த்தி, பெருமானின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றார். முதல் பத்து பாடல்களில் கூறிய வண்ணமே, அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து, அவற்றை விரும்பிய ஞானசம்பந்தன் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
விண்ணவரோடு இனிதாக வீற்றிருப்பவர் தாமே
குற்றாலம், குறும்பலா தல மரத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.71.9) திருஞான சம்பந்தர் பெருமானை, அரவணையானும் நான்முகனும் காண்பரிய அண்ணல் என்று கூறுகின்றார்.
அரவின் அணையானும் நான்முகனும் காண்பரிய அண்ணல் சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூஞ்சாரல்
மரவம் இரு கரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்தக்
குரவம் முறுவல் செய்யும் குன்றிடம் சூழ் தண்சாரல் குறும்பலாவே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.11) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். வண்ணம் மூன்றும்=மூன்று விதமான தன்மைகள்; மெலிவு சமன் மற்றும் வலிவு என்பன விளங்கித் தோன்றும் வண்ணம் பாடுவதே இசைக்கு அழகு; பெருமானின் அருளால், தான் தேவாரப் பதிகங்கள் பாடத் தொடங்கியதை, திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக்காழியுள்
அண்ணலந் தண்ணருள் பேணி ஞானசம்பந்தன் சொல்
வண்ணம் மூன்றும் தமிழிற் தெரிந்திசை பாடுவார்
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே
அறையணிநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.77.2) திருஞானசம்பந்தர் பெருமானை, அண்ணலார் என்று அழைக்கின்றார். பிறவிக்குழியில் விழுவதால் உயிர்கள் அடையும் தடுமாற்றம் இங்கே குறிப்பிடப் படுகின்றது. திருவாரூர்த் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.105.6) திருஞானசம்பந்தர் ஆரூர்ப் பெருமானை தமது கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பார் என்று கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.
இலையினார் சூலம் ஏறுகந்தேறியே இமையோர் தொழ
நிலையினால் ஒரு கால் உறச் சிலையினான் மதில் எய்தவன்
அலையினார் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே
தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.82.1) திருஞானசம்பந்தர், அண்ணலாகிய பெருமானின் சேவடியை அடைந்த அடியார்களுக்கு துன்பம் ஏதுமில்லை என்று கூறுகின்றார். பண்ணிலாவிய என்ற தொடர் மூலம், பண் பொருந்தியது போன்று இனிய மொழியுடைய பிராட்டி என்று கூறுகின்றார். பண்ணிலாவிய மொழியுமை என்ற பிராட்டியின் திருநாமம், வடமொழியில் மதுரபாஷிணி அம்மை என்று சொல்லப் படுகின்றது. தெண்ணிலா=தெளிந்த ஒளியுடை நிலா; பெருமானின் திருவடியை அடைந்ததால் அடியார்களாகிய தாங்கள் துன்பம் ஏதும் இல்லாதவராக வாழ்வதாக திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
பண்ணிலாவிய மொழி உமைபங்கன் எம் பெருமான்
விண்ணில் வானவர் கோன் விமலன் விடையூர்தி
தெண்ணிலா மதிதவழ் தரு மாளிகைத் தேவூர்
அண்ணலார் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.9) திருஞானசம்பந்தர் பெருமானை அயனோடு மாலும் அறியாத அண்ணல் என்றுகுறிப்பிடுகின்றார். நீர்மை=இயல்பு, குணம், தன்மை; சீர்மை=சிறப்பு; அறவுரு வேதம்=அறம் பொருந்திய வேதங்கள்; புற=புறவம், தோட்டம்; துன்று=அடர்ந்து; பொதுளி=நெருங்கி; செம்மை நிறமும் நெருப்பும் ஒன்று சேர்ந்து உயர்ந்து தங்களிடையே நின்ற உருவத்தின் தன்மையையும் பெருமையையும் உணர முடியாத வண்ணம், அறங்களை உணர்த்தும் வேதங்களை ஓதும் பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் எதிரே நின்ற சிவபெருமான் உறையும் நகரம் நனிபள்ளி; முல்லை, மௌவல், குளிர்ந்த அசோக மலர்கள், புன்னை, பெருமான் புனையும் கொன்றை ஆகிய மலர் கொடிகளும் செடிகளும் அடர்ந்தும் நெருங்கியும் வளர்வதால் அந்த மலர்கள் விரிந்து மகரந்தங்களை உதிர்த்து புதிய நறுமணங்களை பரப்பும் சோலைகள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நிறவுரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்ற தொகுநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர் தான்
புறவிரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி
நறவிரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்
கோளறு திருப்பதிகத்தின் பாடலில் (2.85.10), திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் உயிர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பல ஆபத்துகளை குறிப்பிட்டு, பெருமானின் அருள் துணையாக இருப்பதால் அனைத்து விதமான ஆபத்துகளும் விலகும் என்று உணர்த்திய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்களை வாதில் வெல்வதற்கும் பெருமானின் அருள் துணையாக இருக்கும் என்று கூறுகின்றார். விசையன்=அர்ஜுனன்; வேட விகிர்தன்=வேடனாக மாறியவன்;
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
திருவாடானை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.112.4) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணலான் என்று அழைக்கின்றார். முப்புரி நூலோடு மான் தோலையும் இணைத்து பெருமான் பூண்டுள்ளார் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. வண்ண=அழகிய; பெருமானின் திருமேனி மீது மலர்கள் தூவி தொழவேண்டும் என்று எண்ணினாலே, பெருமானின் அருள் கிடைக்கும் என்ரு இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
சுண்ண நீறணி மார்பில் தோல் புனை
அண்ணலான் உறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கை தொழ
எண்ணுவார் இடர் ஏகுமே
அரசிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.95.8) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். அண்ணல் என்ற சொல் தலைவன் என்ற பொருள் கொண்டது. அந்த தன்மைக்கு ஏற்ப, பெருமான் இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் நல்லவனாக உள்ள தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. கயிலாய மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றி அரக்கனை நெரித்த பெருமான், அரக்கன் இசைத்த பாடல் கேட்ட பின்னர், தனது அழுத்தத்தை தளர்த்தி அரக்கனை அவன் அடைந்திருந்த துன்பத்திலிருந்து விடுவித்ததும் அன்றி, அவனுக்கு பல வரங்களையும் அருளியவன் பெருமான். பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று பின்னாளில் வள்ளலார் பாடியது, இவ்வாறு அருள் புரிந்ததை குறிப்பிடுகின்றாரோஎன்றும் தோன்றுகின்றது. பெருமான் குடிகொண்டிருந்த வீட்டினை, கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தவனை பகைவன் என்று தானே சொல்ல வேண்டும்.
வண்ணமால் வரை தன்னை மறித்திடல் உற்ற வல்லரக்கன்
கண்ணும் தோளும் நல்வாயும் நெரிதரக் கால் விரலூன்றிப்
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு
அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே
விற்குடி வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.108.6) திருஞானசம்பந்தர், பெருமானை மெய்யார்ந்த அண்ணலார் என்று குறிப்பிடுகின்றார். மெய்யார்ந்த அண்ணலார்=உண்மையான தலைவர்.
பெண்ணோர் கூறினர் பெருமையர் சிறு மறிக்கையினர் மெய்யார்ந்த
அண்ணல் அன்பு செய்வார்க்கு எளியவர் அரியவர் அல்லார்க்கு
விண்ணிலார் பொழில் மல்கிய மலர்விரி விற்குடி வீரட்டம்
எண்ணிலாவிய சிந்தையினார் தமக்கு இடர்கள் வந்தடையாவே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.15.6) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று குறிப்பிட்டு, அண்ணலின் திருவடிகளைத் தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லையே என்று கூறுகின்றார். முதலடியில் உள்ள சொற்களை, தேவர்களின் எண்ணத்துடன் தொடர்பு கொண்டு பொருளினை உணர்ந்தால், தேவர்கள் பெருமானை வணங்குவதன் நோக்கத்தினை திருஞானசம்பந்தர் உணர்த்துவதாக தோற்றம் அளிக்கின்றது. தேவர்கள் வெண்காட்டு இறைவனை வணங்குவதை குறிப்பிடும் திருஞான சம்பந்தர் அவர்கள் எதற்காக பெருமானை வணங்குகின்றனர் என்பதையும் இங்கே கூறுகின்றார். ஏனையோர் தம்மை வணங்கும் நிலைக்கு தாம் உயரவேண்டும் என்பதற்காக தேவர்கள் இறைவனை வணங்குகின்றார்கள் என்று கூறுவது, நமக்கு திருவாசக பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. மதுகரம்=வண்டினங்கள்; தார்=மாலை தாரோய்=மாலை அணிந்தவன்; பாழ்த்த=பயன் ஏதும் இல்லாத; தேவர்களைப் போன்று, தாங்கள் உயரவேண்டும் என்றும் மற்றவர்கள் தம்மைத் தொழவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமானைத் தொழாமல், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக இறைவனை வணங்க வேண்டும் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.(திருச்சதகம் பாடல்; 16—வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால், தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டிச் சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாயடியேன், பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானுமுன்னைத் பரவுவனே)
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே
திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.20.11) திருஞானசம்பந்தர், பெருமானை அண்ணல் என்று குறிப்பிட்டு, தனது தலைவனாகிய பெருமானின் திருவடிகளைத் தொழுது இந்த பதிகத்தினை இயற்றியதாக கூறுகின்றார். பெருமானைத் தொழும் வாய்ப்பு அனைவர்க்கும் கிடைக்காது என்பதை, இந்த பாடலில் புண்ணியர் தொழுதெழு பூவணம் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு என்ன புண்ணியம் செய்தனை என்ற திருவலஞ்சுழி பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது.
புண்ணியர் தொழுதெழு பூவணத்துறை
அண்ணலை அடி தொழுது அந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞானசம்பந்தன்
பண்ணிய தமிழ் சொலப் பறையும் பாவமே
கருக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.21.5) திருஞானசம்பந்தர், பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். நங்கை=பெண்களில் சிறந்தவள்; இங்கே பார்வதி தேவி என்று பொருள் கொள்ள வேண்டும். கூடுவர்=தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவர்; ஐயம்=பிச்சை, பலி; நட்டிருள்=நடு+இருள்; நள்ளிருள்; இங்கே பிரளய காலத்து இருள் என்று பொருள் கொள்வது சிறப்பு; நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே எனும் திருவாசகத் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன், துடி எனப்படும் இசைக் கருவியை இசைத்து நாதம் எழுப்பி அதன் மூலம் ஆகாயத்தையும் மற்ற பூதங்களையும் படைத்து, உலகப் படைப்புக்கு அடிகோலுகின்றார் என்பதை நாம் அறிவோம். அந்த நாதம் எழுப்பப்படுவது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு உலகம் மீண்டும் படைக்கப் படுவதே, உயிர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை, தங்களது வினைகளை கழித்துக் கொள்வதற்கு கொடுக்கும் நோக்கத்துடன் என்பதையும் இதே பதிகத்தின் மூன்றாவது பாடலின் விளக்கத்தில் சிந்தித்தோம். பக்குவப்பட்ட உயிர்களின் மலங்களைத் தானே வாங்கிக் கொள்ளும் நோக்கத்துடன், தானே முன் வந்து பலியேற்கச் செல்லும் பெருமானின் செய்கை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி
பாடுவார் இசை பறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே
இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் (3.21.6) திருஞானசம்பந்தர், பெருமானை அண்ணல் என்று குறிப்பிட்டு தம்பால் அன்பு செலுத்தும் அடியார்கள் பால் அன்பு செலுத்தும் தன்மை உடையவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பூண்=ஆபரணம்; அரா=பாம்பு; பூணரா=பெருமானின் திருமேனியில் பல இடங்களிலும் ஆபரணமாக அமைந்துள்ள பாம்பு; முதல்=முழுமுதற் காரணமாக இருக்கும் இறைவன்; இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் உயிர்களுக்கு உதவி புரிவதற்கு எவ்வாறு பெருமான் முன்வருகின்றார் என்பதை உணர்த்திய திருஞானசம்பந்தர், இவ்வாறு உதவி புரியும் இறைவன் பால் அடியார்கள் அன்பு செலுத்துகின்றனர் என்று கூறுகின்றார். இறைவன் வீணை வாசிப்பதில் மிகவும் வல்லவர் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
இன்புடையார் இசை வீணை பூணரா
என்புடையார் எழில் மேனி மேலெரி
முன்புடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே
திருந்துதேவன்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.25.5) திருஞானசம்பந்தர், பெருமானை அண்ணலான் என்று குறிப்பிடுகின்றார்.விண்=தேவலோகம்; அண்ணல்=தெய்வம்; தெண்ணிலா=தெளிந்த ஒளியினை உடைய நிலவு; பண்டைய நாளில் உயர்ந்த மாடங்கள் உடைய தலமாக இந்த தலம் இருந்தது போலும். ஆனால் தற்போது திருக்கோயிலைச் சுற்றி வயல்கள் மட்டுமே காணப் படுகின்றன. திருக்கோயிலும் பாழடைந்த நிலையில் காணப் படுகின்றது. பெருமானின் அடையாளங்களை போற்றும் அடியார்கள் சிந்தனை, இதே பதிகத்தின் முதல் பாடலில் கூறிய வண்ணம் திருத்தப் படுவதால், அவர்கள் தீய செயல்கள் புரிவதில்லை. அவர்கள் புரியும் நல்ல செயல்களின் பயனாக அவர்கள் சொர்க்கத்தில் (விண்ணுலகில்) இன்பம் அனுபவிக்க நேரிடுகின்றது. எனவே தான் பெருமானின் அடையாளங்கள் அடியார்களை நற்செயல்களை புரிய வைத்து அதன் பயனாக விண்ணுலக இன்பத்தை அனுபவிக்க வழி வகுக்கின்றது என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மயக்கம்=தவறு எது சரி எது என்று புரியாத நிலை
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டு தேவன்குடி
அண்ணலான் ஏறு உடை அடிகள் வேடங்களே
கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார்கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.26.1) திருஞானசம்பந்தர், பெருமானை அண்ணல் என்று குறிப்பிட்டு, பெருமானின் அடியார்கள் அவரது திருவடிகளைத் தவிர்த்து வேறெங்கும் சரணடைய மாட்டார்கள் என்று கூறுகின்றார். பிடி= பெண்யானை; கைமா=கையுடைய விலங்கு யானை, இங்கே ஆண் யானை என்று பொருள் கொள்ள வேண்டும். அடியார்கள் சரணடைவதற்கு தகுதியானது பெருமானின் திருவடிகள் என்று கூறுகின்றார். பல பெண் யானைகள் புடை சூழ, ஆண்யானை அதிகாலையில் நீராடி மலர்களை ஏந்திய வண்ணம் கோயிலுக்கு செல்லும் காட்சியை விவரித்து, இவ்வாறு யானைகளுக்கு முன்மாதிரியாக தலத்து மக்கள் பெருமானை வழிபட்ட தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. ஐராவத யானை இங்கே வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது. இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் திருஞானசம்பந்தர் பெருமானை கானப்பேர் அண்ணல் என்று குறிப்பிடுகின்றார்.
பிடியெலாம் பின் செலப் பெருங் கைமா மலர் தழீஇ
விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல் நின்
அடியலால் அடை சரண் உடையரோ அடியரே
திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.28.7) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணலார் என்று குறிப்பிடுகின்றார். எண்ணிலார்=எண்+இலார்=எண்ணம் இல்லாதவர்கள், சிவபெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத திரிபுரத்து அரக்கர்கள்; இந்த பாடலில் சிரித்தே, திரிபுரங்கள் மூன்றினையும் பெருமான் அழித்தார் என்று சொல்லப் படுகின்றது. பல தேவாரப் பாடல்களில் பெருமான் சிரித்தே திரிபுரங்களை அழித்தார் என்று சொல்லப் படுகின்றது. ஒரு சில புராணங்களில் தனது சிரிப்பினால் திரிபுரங்களை அழித்தார் என்றும் சொல்லப் படுகின்றது. தேவர்கள் அனைவரும் திரிபுரத்தவர்களுடன் பெருமான் போரிடச் சென்ற போது, பல வகையிலும் பங்கேற்றனர் என்பதை நாம் அறிவோம். எவரது உதவியுமின்றி தான் ஒருவனே திரிபுரத்து அரக்கர்களை அழிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், தேர்த் தட்டினில் பெருமான் தனது திருவடியை வைத்தபோது தேர்த்தட்டு முறிந்தது; பின்னர் திருமால் இடபவடிவம் பெருமானைத் தாங்க பெருமான் பறக்கும் கோட்டைகளை நோக்கி அம்பினை எய்தார் என்ற செய்தி பல தேவாரப் பாடல்களிலும் காணப் படுகின்றது. மேலும் திரிபுரத்தவர்கள் பெற்றிருந்த வரமும், ஒரே அம்பினால் தங்களது கோட்டைகள் சிதைக்கப்பட வேண்டும் என்பது தானே; பெரும்பாலான பாடல்களில் பெருமான் ஒரே அம்பினை எய்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தார் என்று கூறப்படுவதால், திரிபுரங்கள் பெருமான் எய்த அம்பினால் எரிக்கப் பட்டன என்று கொள்வதே பொருத்தமாக உள்ளது. எனினும் சிரித்தே எரித்தார் என்று கூறுவதன் தன்மையை நாம் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும். திரிபுரத்தவர்கள் பெற்றிருந்த வலிமை வாய்ந்த வரத்தினால், அவர்களை அழிக்கவே முடியாது என்ற முடிவுக்கு வந்த தேவர்கள் சிவபெருமானால் எவ்வாறு அந்த அரக்கர்களை அழிக்க முடியும் என்று ஐயப்பாடு உடையவர்களாக விளங்கினர் போலும். அளவற்ற ஆற்றல் உடைய பெருமான், ஒரே அம்பினைக் கொண்டு, திரிபுரத்தவர்களை அழிப்பது தனக்கு சிரிப்பது போன்று மிகவும் எளிதான செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், பெருமான் சிரித்த படியே மூன்று கோட்டைகளையும் எரித்தார் என்று கொள்வது பலவகையிலும் பொருத்தமாக உள்ளது அல்லவா. இவ்வாறு மிகவும் எளிய முறையில் திரிபுரத்து அரக்கர்களை பெருமான் ஒரு நொடியில் வீழ்த்தினார் என்பதை உணர்த்தும் முகமாக, சில தேவாரப் பாடல்களில் சிரித்தே எரித்தார், விழித்தே எரித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது போலும்.
விண்ணிலார் இமையவர் மெய்ம் மகிழ்ந்து ஏத்தவே
எண்ணிலார் முப்புரம் எரி உண நகை செய்தார்
கண்ணினால் காமனைக் கனல் எழக் காய்ந்த எம்
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே
மேலைத் திருக்காட்டுபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.29.3) திருஞான சம்பந்தர், பெருமானை தன்னை ஆட்கொண்ட அண்ணலார் என்று குறிப்பிடுகின்றார். பண்ணினார்= பண்ணினோடு பொருந்திய; அண்ணல்=தலைவர்; கடி பொழில்=நறுமணம் வீசும் சோலைகள்;விண்ணினார்=வானுலகினில் பொருந்திய கங்கை நதி. பகீரதன் தனது முன்னோர்கள் உய்வினை அடையும் பொருட்டு, பிரமனை நோக்கி தவமிருந்த பின்னர், பிரமன், வானிலிருந்த கங்கை நதியினை கீழே இறங்கி நிலவுலகில் பாயுமாறு பணித்தார் என்றும் அதன் முன்னர் கங்கை நதி வானில் இருந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன. விரி புனல்=அதிகமான நீர்ப்பெருக்குடன் பல கிளைகளாக கீழே பாய்ந்த கங்கை நதி. மேவுதல்=பொருத்துதல்;
பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி
அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.34.1) திருஞானசம்பந்தர், இந்த தலத்தினை அண்ணலார் ஆயிழையோடு அமருமிடம் என்று குறிப்பிடுகின்றார். ஆயிழை=அழகிய ஆபரணங்கள் அணிந்த பார்வதி தேவி; திண்ணிலார்=திண்மை உடைய; நிலத்தின் தன்மை திண்மையாக இருத்தல்; புறவு=முல்லை நிலம்; புறவணி=முல்லை நிலம் சூழ்ந்து அழகிய அணியாக விளங்கும் முதுகுன்றம்; பல வகையான வண்ண மலர்களைக் கொண்டு வானவர்களால் வழிபடப்படும் தலைவராகிய சிவபெருமான், அழகிய ஆபரணங்களை அணிந்த பார்வதி தேவியுடன் வீற்றிருக்கும் இடம் திருமுதுகுன்றம் ஆகும். வானத்திலிருந்து பொழியும் மழை வெள்ளருவியாக பாய, அதனால் செழித்து திண்மையுடன் அழகுடன் விளங்கும் முல்லை நிலங்கள் சூழ்ந்து அழகு செய்யும் தலம் திருமுதுகுன்றமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வண்ண மாமலர் கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்விடம்
விண்ணின் மாமழை பொழிந்து இழிய வெள்ளருவி சேர்
திண்ணிலார் புறவு அணி திருமுதுகுன்றமே
திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.36.9) திருஞானசம்பந்தர் பெருமானை, அண்ணலார் என்று குறிப்பிடுகின்றார். பீழ்ந்து உந்தி=வேருடன் பிடுங்கி எறியப்பட்டு அடித்து வரப்படும்; வேங்கை மருது=வேங்கை மற்றும் மருது மருதுகள்; மண்ணு மா வேங்கை=கரையில் வளர்ந்துள்ள வேங்கை மரம்; பொன்முகலி என்பது காளத்தி தலத்தின் அருகில் பாயும் நதி; காளத்தி தலத்தினில் பொருந்தி உறைகின்ற தலைவனை அடைந்து வாழ்வினில் உய்வினை அடையுமாறு உலக மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார்.
மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணு மாமுகலியின் கரையினில் நன்மை சேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்மினே
பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.37.2) திருஞானசம்பந்தர், அருளாளனாக பெருமான் அமர்கின்ற இடம் சீர்காழி தலம் என்று கூறுகின்றார். பக்குவப்பட்ட உயிர்களின் மலங்களை பிச்சையாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு முக்தி அளிப்பதால், பெருமான் நாடுகின்ற பலி நன்மை பயக்கும் பலி என்பதை உணர்த்தும் வண்ணம் நன்பலி என்று குறிப்பிடப் படுகின்றது. ஆன்மாக்களின் உயிராகவும் உடலாகவும் இருப்பவன் இறைவன் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் பெருமான், அருளாளனாகவும் இருக்கும் தன்மையை இந்த பாடலில் உணர்த்தும் திருஞான சம்பந்தர், அதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் குறிப்பிடுகின்றார். விண்ணிலார்=விண்ணில்+ஆர்=விண்ணில் உலாவும்; தக்கனது சாபத்தால் முற்றிலும் தேய்ந்து அழியும் நிலையிலிருந்த சந்திரன், பெருமானின் அருளினால், அவ்வாறு அழியாமல் மீண்டும் வானில் உலவுகின்ற தன்மையை பெற்றதை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
விண்ணிலார் மதி சூடினான் விரும்பும் மறையவன் தன்றலை
உண்ண நன்பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலைப்
பெண்ணினார் திருமேனியான் பிரமாபுரத்துறை கோயிலுள்
அண்ணலார் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.42.6) திருஞானசம்பந்தர் அண்ணலாய அடிகள் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சரிதை=புகழத் தக்க செயல்கள்;
பெண்ணொர் கூறினர் பேயுடனாடுவர்
பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடையார் கடற்காழியுள்
அண்ணலாய அடிகள் சரிதையே
கருகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.46.9) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார்.மண்ணு=அலங்கரிக்கப்பட்ட; இந்த பாடலில் பண் போன்று இனிய மொழியினை உடைய தேவி என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சில தலங்களில் அம்பிகையின் திருநாமம், அம்பிகையின் குரல் இனிமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. யாழைப் பழித்த மொழியம்மை (திருமறைக்காடு), பாலின் நன்மொழியாள் (திருவாய்மூர்), மதுர பாஷிணி (விளமர்), கரும்பன்ன செல்வி (புறம்பயம்), குயிலினும் நன்மொழியம்மை (சாய்க்காடு), தேன்மொழியம்மை(தேவூர்) என்று அம்பிகை அழைக்கப் படுகின்றாள். தேவியின் குரல் இனிமைக்கு பண் தேன் யாழொலி குழலொலி மழலை மொழி ஆகியவை உவமையாக, பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றது.
பண்ணின் நேர் மொழியாளையோர் பாகனார்
மண்ணு கோலம் உடையம் மலரானொடும்
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம்
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.44.4) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று குறிப்பிட்டு, அவரைத் தவிர்த்து வேறெவரையும் தனது கடவுளாக கருத மாட்டேன் என்று கூறுகின்றார். பண் நலம்=இனிமையான இன்னிசை; அறை=பாடுகின்ற; தண்= குளிர்ச்சி பொருந்திய; அலங்கல்=மாலை; அண்ணல்=தலைவர்;
பண் நலம் பட வண்டறை கொன்றையின்
தண் அலங்கல் உகந்த தலைவனார்
கண் நலம் கவரும் கழிப்பாலையுள்
அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே
திருஞானசம்பந்தர் தனது அடியார்களுடன், மதுரை மாநகர் வந்ததை அறிந்த சமணகுருமார்கள், பாண்டிய மன்னனிடம், தங்களை வாதினில் வெல்வதற்காக சீர்காழியிலிருந்து ஞானசம்பந்தன் என்ற சிறுவன் வந்தான் என்றும் அவன் தங்கியிருக்கும் மடத்தில் மந்திரத்தால் தாம் தீயெழுப்பி அவனை அச்சுறுத்தி விரட்டிவிடுவோம் என்றும் கூறினார்கள். அதற்கு மன்னவன், செய்ய முடிந்த செயல் அதொன்றே ஆயின் விரைவில் செய்வீராக என்று அவர்களுக்கு அனுமதி அளித்தான். பின்னர் சமணர்கள் மந்திரத்தால் தீயெழுப்பி திருஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்தின் பால் தீ சென்று பற்றும் வண்ணம் ஏவ முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் திட்டமிட்டவாறு, அவர்கள் எழுப்பிய தீ சென்று பற்றாததைக் கண்டு கலக்கம் அடைந்தவர்களாக, தாமே நேரில் சென்று மடத்தின் வெளியே தீ மூட்டினார்கள். மடத்தின் புறச்சுற்றில் தீ பற்றியெழக் கண்ட அடியார்கள், பதைபதைத்து திருஞான சம்பந்தரிடம் சொல்ல, அவர் வஞ்சனையாக சமணர் மடத்திற்கு இட்ட தீ, அனுமதி அளித்த பாண்டிய மன்னனைச் சென்று பற்றுக என்ற பொருள் பட இந்த பதிகத்தை பாடினார். இந்த பதிகத்தின் பாடல்கள் தோறும் அஞ்சல் என்றருள் செய்யெனை என்றும், அமணர் கொளுவும் சுடர் என்றும் பாண்டியர்க்கு ஆகவே என்றும் குறிப்பிடுவது உணரத்தக்கது. அமணர் கொளுவினார் என்ற தொடர் மூலம், சமணர்கள் தங்களது கையினில் தீயேந்தி வந்து மடத்தினில் புறத்தில் கொளுத்தினர் என்பதும், பாண்டியர்க்கு ஆகவே என்ற தொடர் மூலம், இந்த அளவுக்கு சமணர்கள் தீய செயல்களில் ஈடுபட அனுமதி அளித்தது பாண்டிய மன்னனின் தவறு என்பதையும் உறுதியாக சொல்வதை நாம் உணரலாம். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (3,51,5) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். நண்ணலார்=வேத நெறியை அணுகி செயல்படாத திரிபுரத்து அரக்கர்கள்; அண்ணல்=தலைவன்; எண்ணிலா=சைவ மதத்தின் பெருமையை சிந்தை செய்யாது இகழ்ந்த;
நண்ண லார்புர மூன்றெரி யாலவாய்
அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பண்ணி யற்றமிழ்ப் பாண்டியற் காகவே
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.52.1) திருஞானசம்பந்தர், ஆனைக்கா அண்ணலை அபயமாக வாழ்பவர்களுக்கு, சிவபெருமான் துணையாக இருக்க, வேறெந்த காவல் தேவையற்றவர்களாக, எந்த விதமான துன்பமும் இல்லாமல் வாழ்வார்கள் என்று கூறுகின்றார். வானை=செவ்வானத்தை; கா=காப்பது போன்று; வானத்தை பாதுகாப்பது போன்று வானில் சந்திரன் வானில் உலவுகின்றான் என்று கூறுகின்றார். செவ்வானம் போன்ற சடை சந்திரனை காவல் காத்து பாதுகாத்தது என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. தேனைக் காவில்=தேனைப் போன்ற இனிமை உடைய; ஏதம்=தம்மைத் தாமே காத்துக் கொள்ள இயலாமல் அடுத்தவரின் துணையினை நாடும் அவல நிலை; இதே பதிகத்தின் நான்காவது பாடலில், பெருமானை கண்ணு மூன்றுடை அண்ணலார் என்று கூறுகின்றார்.
வானைக்காவில் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதம் ஏதும் இல்லையே
சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.58.8) திருஞானசம்பந்தர், பெருமானை அண்ணலாய் நின்ற எம்மான் என்று குறிப்பிடுகின்றார். பரமயோகியாகி இருக்கும் பெருமான், பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வேண்டிப் பெற்றார் என்று கூறுகின்றார். நமக்கு கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், கருவூர்த்தேவர், மங்கையோடு இருந்து யோகு செய்வான் என்று பெருமானை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. சாத்தமங்கை என்பது தலத்தின் பெயர். அயவந்தி என்பது திருக்கோயிலின் பெயர்.
பண்ணுலாம் பாடல் வீணை பயில்வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை
அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.107.4) திருஞானசம்பந்தர் பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். நண்ணல் அமர்ந்து உறவாக்குமின்=விருப்புடன் அருகில் அமர்ந்து உறவு கொள்ளுதல்; அம் சடை=அழகிய சடை; அண்ணல்=தலைவன்; மன்னி=நிலையாக அணி= அழகு வாய்ந்த; நண்ணல் அமர்ந்து=விரும்பி அடைந்து; பெருமானை மிகவும் விரும்பி, அவன் பால் மிகுந்த அன்பு செலுத்தி அவனுக்கு உறவினராக நாம் மாறவேண்டும் என்று ஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய மாசில் வீணையும் என்ற தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலை நினைவூட்டுகின்றது. (மாசில் வீணையும் மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே, ஈசன் எந்தை இணையடி நீழலே. 5—90) பெருமானுக்கும் நமக்கும் இடையே பெருமான், அவனது அடியான் என்ற உறவு உள்ளது. பத்தி வலையில் படுவோனாகிய பெருமானின் அருளினை நாம் பெறவேண்டும் என்றால், நமக்கு அவனுக்கும் இடையே பாலமாக உள்ள அடியான் என்ற உறவினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் மறைந்து நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான், என்பதே அப்பர் பிரான் அருளிய பாடலின் பொழிப்புரை
வெண்ணிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலையேந்திப்
பெண்ணில் அமர்ந்து ஒரு கூறு அதாய பெருமான் அருள் ஆர்ந்த
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நரையூர் தன்னை
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்குமின்கள் நடலை கரிசு அறுமே
திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.120.9) அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய்த் தலம் என்று திருஞானசம்பந்தர் என்று குறிப்பிடுகின்றார். மண்ணெலாம் நிகழ=உலகம் முழுவதையும் ஒருகுடைக் கீழ் கொண்டுவந்த சோழ மன்னன்; இந்த பதிகத்தின் பாடல்களில் எங்கெல்லாம் பாண்டிமாதேவி குறித்த குறிப்பு வருகின்றதோ, அந்த பாடல்களில், உமையம்மை பற்றிய குறிப்பும் காணப் படுகின்றது.
மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னு மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணிசெய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரிதாம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாயாவதும் இதுவே
சுண்ணவெண் சந்தனச் சாந்தும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.2.1) அப்பர் பிரான், பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். மதம் கொண்ட யானையை ஏவி அப்பர் பிரானின் தலையை இடறித் தள்ளுவதற்கு, சமணர்கள் முயற்சி செய்தபோது, தன்னை நோக்கி யானை வந்தபோது, அப்பர் பிரான் அருளிய பதிகம் இந்த பதிகம். சாந்து என்ற சொல் இரண்டு சொற்களுக்குப் பொதுவாக வருகின்றது. சுண்ணவெண் சாந்து மற்றும் சந்தனச் சாந்து என்றும் பொருள் கொள்ள வேண்டும் என்று விளக்கம் பொதுவாக அளிக்கப் பட்டாலும், சுண்ண வெண்சந்தனச் சாந்து என்ற தொடர் திருநீற்றினை மட்டுமே குறிப்பதாக பொருள் கொள்வது சிறப்பாக கருதப் படுகின்றது. வெண்பொடி என்று அழைக்கப்படும் திருநீற்றினை நறுமணம் வீசும் சந்தனச் சாந்தாக பாவித்து பெருமான், தனது மார்பினில் அணிந்து கொண்டார் என்று பொருள் கொள்வதே சிறப்பு. வெண் சாந்து=வெள்ளை நிறமுடைய திருநீறு. தமர்=அடியவர். அகலம்=மார்பு, சுண்ணம்=பொடி, முரண்=போர்க்குணம் மிகுந்த. உரிவையுடை=உரித்துத் தனது உடலின் மேல் போர்த்துக் கொண்ட போர்வை, வண்ண உரிவை என்பதால் புலியின் தோலை குறிப்பதாக கொள்ள வேண்டும். திண்மை=வலிமை, இங்கே நதியின் தன்மையை குறிப்பதால், அகன்ற கெடில நதியைக் குறிக்கின்றது. அரண் முரண் ஏறு என்பதற்கு சிவபிரானை அடைந்தவர்க்கு அரணாகவும் அடையாதவர்க்கு முரணாகவும் இருக்கும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்.
சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்
திண் நல் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.3.6) அப்பர் பிரான், பெருமானை அண்ணல் என்று அழைத்து, அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு என்று குறிப்பிடுகின்றார். பகன்றில்=பகா அன்றில், இணை பிரியாத அன்றில் பறவை; தையல் நல்லாள்=உமை அம்மை. குளிர்ந்த சந்திரனது தனது சடையில் அணிந்து கொண்ட சிவபிரானை, பெண்களில் சிறந்தவளாகிய உமை அம்மையுடன் இணைத்துப் பாடியபடியே, குழைந்த உள்ளத்துடன் சிவபிரானது திருவடிச் சிறப்பினை உணர்ந்து உருகி வந்த நான் திருவையாறு தலத்தினை அடைந்தேன். தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருவையாற்றில் அழகிய வண்ணமுடைய அன்றில் பறவை தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை, என்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
தண்மதிக் கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி
உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது
வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.68.3) அப்பர் பிரான், அண்ணலார் என்று பெருமானை அழைத்து, அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே என்று கூறுகின்றார். ஓவா=இடையறாது ஒலிக்கும்; பண்ணின் ஆர் முழவம்=பண்களின் இசைக்கு. ஏற்ப ஒலிக்கும் முழவம்; முழவம்=மத்தளம் போன்ற தோற்கருவி. செந்தழல் உருவர் என்று இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், அப்பனின் சிரிப்பிலும்நெற்றிக்கண் விழிப்பிலும் செந்தழல் பொங்கி எழுந்து, தனது எண்ணத்திற்கு விரோதமாக செயல்படுவோரை எரித்து அழிக்கும் என்பதை இந்த பாடலில்உணர்த்துகின்றார். திரிபுரத்தை எரிப்பதற்காக பெருமான் புறப்பட்டுச் சென்ற போது, பல தேவர்கள் அவருக்கு உதவ காத்திருந்த போதிலும், அவர்கள்உதவியேதும் ஏதும் இல்லாமலே பெருமான் திரிபுரத்து கோட்டைகளை எரித்தார் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
கண்ணினால் காமவேளைக் கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவம் ஒவாப் பைம்பொழில் பழனை மேய
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே
ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.74.9) அண்ணலை நினைக்கும் நெஞ்சம் அழகுடையது என்று கூறுகின்றார். நமக்கு சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை என்ற திருவாசகத் தொடர் நினைவுக்கு வருகின்றது. எண்ணிடை=தங்களின் எண்ணத்தின் இடையே, தங்களின் முன்னே எழுந்த நெடிய தீப்பிழம்பு சிவபெருமானாக இருக்கலாமோ என்ற நினைவு அற்றவர்களாக, தமது ஆற்றலையே மிகவும் பெரிதாக நினைத்துக் கொண்டிருந்த திருமால் மற்றும் பிரமன்;
விண்ணிடை மின் ஒப்பானை மெய்ப்பெரும் பொருள் ஒப்பானைக்
கண்ணிடை மணி ஒப்பானைக் கடுவிருள் சுடர் ஒப்பானை
எண்ணிடை எண்ணலாகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.10.9) அப்பர் பிரான், பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். சுண்ணம்=சுண்ணாம்புசுண்ண வெண்பொடி=சுண்ணாம்பு போன்று வெண்மை நிறத்தில் காணப்படும் திருநீறு. பண்ணி=அலங்கரித்து; சுண்ணம் போன்று வெண்மை நிறம்கொண்ட திருநீற்றினை தனது உடலினில் பொருத்தமாக பூசும் இறைவனே, அலங்கரித்த எருதினை மிகவும் மகிழ்ச்சியுடன் வாகனமாக ஏற்ற பரமரே, அண்ணலே, அனைவர்க்கும் ஆதி மூர்த்தியே, அழகிய மறைக்காட்டுத் தலத்தில் உறையும் மறைக்காடரே, உறுதியாக மூடிய நிலையில் உள்ள இந்தகதவுகளைத் திறந்து அருள் செய்ய வேண்டும். என்பதே இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் வைக்கும் விண்ணப்பம்.
சுண்ண வெண்பொடி பூசும் சுவண்டரோ
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ
திண்ணமாக கதவம் திறப்பிம்மினே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.13.2) அப்பர் பிரான், அண்ணலே என்று பெருமானை அழைத்து, தன்னைக் குறியாகக் கொண்டு பெருமான் அருள் பாலிக்க வேண்டும் என்று கூறுகின்றார். இளைத்தல்=வருந்துதல்; பெரிய புராணத்தின் பல பாடல்களில், இறைவனை தரிசனம்செய்த அப்பர் பிரானின் உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை சேக்கிழார் மிகவும் விவரமாக கூறுகின்றார். திருவதிகை வீரட்டானம், தில்லைச் சிதம்பரம். திருவையாறு, திருவாரூர், திருப்புகலூர், வீழிமிழலை முதலிய தலங்களில், இறைவனைக் கண்ணார கண்டு, நெஞ்சம் உருகி, கண்ணீர்பெருக இறைவனை புகழ்ந்து பல பதிகங்கள் பாடிய அப்பர் பிரான், இந்த பாடலில் இறைவனை கண்ணார காண்பது எப்படி என்பதை அறியாதவனாகஉள்ளேன் என்று கூறுகின்றார். இந்த கூற்று, உலகத்தவர் குறித்து அவர் கூறும் கூற்றாகும். தன்னை சுட்டிக் காட்டி, இறைவனை எப்படி வழிபட வேண்டும்என்று கூறுவது அப்பர் பிரானின் வழக்கம். அந்த வழக்கம் தான் இந்த பாடலிலும் பின்பற்றப் பட்டுள்ளது.
கண்ணினால் களிகூரக் கையால் தொழுது
எண்ணுமாறு அறியாது இளைப்பேனை
விண்ணுளார் தொழும் வீழிமிழலையுள்
அண்ணலே அடியேனை குறிக்கொளே
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.36.3) அப்பர் பிரான், பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். ஐ=வியப்பு, காண்போர் வியக்கும் வண்ணம் சிறந்த, பெருமான் அணிந்திருப்பது கோவண ஆடையாக இருந்தாலும், நான்கு வேதங்களே அந்த நால் விரல் கோவண ஆடையாக அமைந்துள்ள நிலையும் அனைவரும் வியப்பு அடைவது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. துகில்=ஆடை: தேறல் ஆவது=தெளிந்துஅறிவது; ஒன்றன்று=உலக மாயைகளில் சிக்குண்ட உயிர்களால் அறியமுடியாத ஒன்று. இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்டஅருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான் நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது நினைவில் நிறுத்திவழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாகசெதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று அப்பர் பிரான் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் கூறுவது (4.77.2; கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும், தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும், பூவணக் கிழவனாரைப் புலியுரி அதளனாரை ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாறே) நமது நினைவுக்கு வருகின்றது.
வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர்
கீறு கோவண ஐ துகில் ஆடையர்
தேறல் ஆவது ஒன்றன்று செம்பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே
கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.40.1) அப்பர் பிரான் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். நிறைவு=மன நிறைவு: கண்=இடம்: உலாம்=பொருந்திய: பெருமானைக் காணாமலே அவன் மீது காதல் கொண்ட பெண்ணின் நிலையை உணர்த்தும் அகத்துறைப் பாடல். பெருமானைக் காணாமலே அவன் மீது காதல் கொள்ளும் நிலை நமக்கு ஆரூர்ப் பதிகத்தின் பாடலில், முன்னம் அவனது நாமம் கேட்டாள் என்று தொடங்கும் பாடலில் குறிப்பிடப்படும் அப்பர் நாயகியை உணர்த்துகின்றது (முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள், அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகல் இடத்தார் ஆசாரத்தைத், தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே) சிவபிரானைச் சென்று உயிர்கள் அடைய, உயிர் மேற்கொள்ள வேண்டிய நிலைகளை படிப்படியாக விவரிக்கும் பாடலாக, இந்த பாடல் கருதப் படுகின்றது. கேட்டல், தெளிதல், சிந்தித்து ஆராய்தல், யான் எனது என்ற நிலை மாறி சிவமாக மாறுதல் என்ற நான்கு நிலைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன. ஆரூர்ப் பெருமானின் பெயரை முதன் முதலாகக் கேட்ட தலைவி, பின்னர் அவனது தன்மைகளை பலர் மூலம் கேட்டறிந்து கொண்டு அவனது நிலை பற்றி தனக்கிருந்த ஐயங்களைத் தெளிவித்துக் கொள்கின்றாள்; பின்னர் அவனைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து, தனது பெயரை மறந்து, தனது பெற்றோர்களை விடுத்து, தனது குல வழக்கங்களை விடுத்து, முடிவில் தன்னையே மறந்து அவனுக்கு ஆளான நிலை, அவளது தோழிக் கூற்றாக இங்கே சொல்லப் பட்டுள்ளது. ஆரூர் பதிகத்தின் நாயகி போன்று, இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்தும் நாயகியும் கழிப்பாலைப் பெருமானை நேரில் பார்க்காது இருந்த போதிலும், அவன் மீது காதல் கொண்டுள்ள இவள், அவனது திருநாமத்தை எத்தனை முறை உச்சரித்தாலும் நிறைவு அடையாதவளாக, அவனது பெயரினை பிதற்றியவாறு இருக்கின்றாள் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்
கண்ணுலாம் பொழில் சூழ் கழிப்பாலை
அண்ணலே அறிவான் இவள் தன்மையே
தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.45.5) அப்பர் பிரான் பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். பெய்வளை=கைகளில்அடர்த்தியாக உள்ள வளையல்கள்: சுண்ணம்=திருநீறு: வளை கொள்வது பற்றி இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறிய அப்பர் பிரான், மறுபடியும், சிவபிரானுடன் இணையாத ஏக்கத்தில், அப்பர் நாயகியின் வளைகள் கழன்று விழுவதை, சிவபெருமான் வளைகள் கவர்ந்து கொண்டார் என்று அவர் மீதுஏற்றிச் சொல்வதை நாம் காணலாம். இது அப்பர் நாயகியின் தாயின் கூற்றாக அமைந்த அகத்துறைப் பாடல். இனிமையான இராகம் போன்ற மொழியினைக்கொண்ட எனது பெண், எங்களது இல்லத்து வாயிலில் பிச்சை கேட்டு வந்த பெருமானுக்கு பிச்சை இட்டாள்: அந்த பெண்ணை, தனது அழகால் மயக்கியசிவபெருமான், அவளை பிரிவுத் துயரில் ஆழ்த்தி அவளது வளையல்கள் கழலுமாறு செய்தான்; இத்தகைய செயல், திருநீற்றினால் அபிஷேகம்செய்யப்படுவதை மிகவும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும், தோணிபுரத்து அண்ணலுக்கு, பெருமை சேர்க்கும் செயலாக கருதப்படாது. எனவே சிவபெருமான், எனது மகளின் காதலை ஏற்றுக் கொண்டு அவளது துயரத்தினைக் களைய வேண்டும் என்று நாயகியின் தாய் தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.
பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து இறை
அண்ணலாருக்குச் சால அழகிதே
திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.53.2) அப்பர் பிரான் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். திரள்=தொகுதி,குவியல்: நண்ணுதல்=அருகில் செல்லுதல், இங்கே அருகே சென்று தொழுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். அண்ணல்=தலைவன், சிறந்தபெருமையினை உடையவன்; சுண்ணம் என்றால் பொதுவாக நறுமணம் கலந்த வாசனைப் பொடியினை குறிக்கும். பலவிதமான வாசனைப் பொடிகளும்மஞ்சளும் கலந்த சுண்ணப்பொடி வண்ணத்துடன் விளங்கும். ஆனால் இங்கே வெண்பொடி என்று குறிப்பிட்டு இருப்பதால், நறுமணம் வீசும் திருநீற்றினைகுறிப்பதாக உள்ளது. பெருமானைச் சென்று அடையாததால், தான் தூக்கமின்றி தவிப்பதாக பெருமான் பால் தீவிர காதல் கொண்டுள்ள அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல். இது தான் ஆன்மாவின் உண்மையான தவிப்பாக இருக்க வேண்டும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல். பண்ணின்வடிவமாக அமைந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவனும், பவளத்தின் குவியலைப் போன்ற நிறத்தினை உடைய மேனியை உடையவனும், அனைவர்க்கும்தலைவனாகத் திகழ்பவனும், தேவர்களால் தொழப்படும் ஆதி முதல்வனும், நறுமணம் வீசும் திருநீற்றுப் பொடியினை உடலில் பூசியவனும் ஆகிய வீரட்டத்துபெருமானின் அருகில் சென்று அவனைத் தொழுதால் தான் என் கண்கள் துயில் கொள்ளும். எனவே நான் அடிக்கடி, அவனருகே சென்று அவனைத்தொழுகின்றேன் என்று அப்பர் நாயகி கூறுவதாக அமைந்த பாடல்.
பண்ணினை பவளத் திரள் மாமணி
அண்ணலை அமரர் தொழும் ஆதியைத்
சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம்
நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.55.7) அப்பர் பிரான் பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். எண்ணிலார்=தெய்வ நெறியினையும் சிவபெருமானையும் நினையாத முப்புரத்து அரக்கர்கள்: இசையோடு பொருந்திய நான்மறைகளை பாடுபவரும், அந்த இசைக்கு ஏற்ப நடனம் ஆடுபவரும், தெய்வ நெறியினை நினையாத திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளை சிரித்தே எரித்தவரும், தன்னை அணுகும் அடியார்களின் துயர் தீர்ப்பவரும் ஆகிய, நாரையூர் அண்ணலின் செய்கைகள் அனைத்தும் அழகாக அமைந்துள்ளன. மேலும் இந்த செய்கைகள் மிகுந்த வியப்பினையும் ஏற்படுத்துகின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பண்ணின் நால்மறை பாடலோடு ஆடலும்
எண்ணிலார் புரம் மூன்று எரி செய்தலும்
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே
திருக்கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.57.2) அப்பர் பிரான் பெருமானை அண்ணல் என்று குறிப்பிட்டு, அண்ணலைத் தொழுது உய்வினை அடைவீர் என்று அறிவுரை கூறுகின்றார். விண்ணுளார்=தேவர்கள்; அண்ணல்=தலைவன்; இதே பதிகத்தின் முதல் பாடலில் இது நாள் வரை இறைவனை நினையாத மனிதர்களுக்கு, இறைவனது திருவடிகளைத் தொழாத மனிதர்களுக்கு, இனியாவது அவனைத் தொழுவீர்கள் என்று அறிவுரை கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் இறைவனது திருவடிகளை பற்றிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்குகின்றார். தொழும் அடியார்களின் வினைகள் தீர்க்கப்படும் என்று உணர்த்தும் அப்பர் பிரான், அவனது புகழினை போற்றி இசைப் பாடல்களாக பாடி தொழவேண்டும் என்றும் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
விண்ணுளார் தொழுது ஏத்தும் விளக்கினை
மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினைப்
பண்ணுளார் பயிலும் திருக்கோளிலி
அண்ணலார் அடியே தொழுது உய்ம்மினே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.77.5) அப்பர் பிரான் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். எரி அயில்=நெருப்பு போன்று கூர்மையை உடைய வேல். எண்ணி நாளும்=நாள்தோறும் உயிர்களின் வாழ்நாட்களை எண்ணி கணக்கிட்டு, வாழ்நாள் முடிவடையும் தருணத்தில் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதை உணர்த்தும் பொருட்டு, நாட்களை எண்ணும் கூற்றுவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். துண்ணென் தோன்றில்=நடுக்கம் உண்டாகும் வகையில் முன்னே தோன்றினால்; துரக்கும் வழி=ஓட்டும் வழி; இயமன் நம்மை அழைத்துச் சென்றால், நாம் நமது வினைத் தொகையின் ஒரு பகுதியை கழிக்கும் தன்மையில் நமது உயிர் நரகத்தில் ஆழ்த்தப்பட்டும் சொர்க்கத்தில் இருத்தப்பட்டும், அதன் பின்னர் அடுத்த பிறவியை எதிர்கொள்ளும் நிலையினை அடைகின்றது. இயமன் நம்மை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, சிவபெருமான் நம்மை சிவலோகம் அழைத்துக் கொண்டு சென்ற பின்னர் நம்மை இயமனின் தூதுவர்கள் என்ன செய்ய முடியும். நம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பெருமான், நமது வினைகள் அனைத்தையும் கழித்து விடுவதால், நாம் பிறவிச் சுழலிலிருந்து விடுதலையும் அடைகின்றோம். நமது வாழ்நாளை எண்ணியவாறு, நமது வாழ்நாள் முடியப்போகும் தருணத்தை எதிர் நோக்கிய வண்ணம் எப்போதும் இருக்கும் கூற்றுவன், நெருப்பினை கக்கும் வேற்படையுடன் நம் முன்னர் தோன்றும் போதும்நாம் கலங்காமல் அவனை துரத்தி அடிக்கும் வழி ஒன்றினை நான் கண்டுகொண்டேன். அதனை நீங்கள் கேட்பீர்களாக. மிகுந்த வல்லமை வாய்ந்தவரும், நமக்கு தலைவராக இருந்த காப்பவரும் ஆகிய திருச்சேறை பெருமான் இருக்கையில் நாம் எதற்காக கூற்றுவனுக்கு அஞ்ச வேண்டும். அவர் நம்மைகூற்றுவனிடமிருந்து நம்மை காத்து சிவலோகம் அழைத்துச் செல்வார், எனவே அவரை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக என்பதே இந்த பாடல் மூலம் நமக்கு சொல்லப்படும் அறிவுரை.
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்
துண்ணென் தோன்றில் துரக்கும் வழி கண்டேன்
திண்ணன் சேறை திருச்செந்நெறி உறை
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே
ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (5.97.26) அப்பர் பிரான், பெருமானை, அனலாடிய அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். குரவைக் கோத்தவன்=குரவைக் கூத்து ஆடிய கண்ணனாகிய திருமால்; கண்ணன் ஆயர்பாடியில் கோபியர்களுடன் கலந்து ஆடிய கூத்து (ராசக்ரீடை என வடமொழியில் அழைக்கப் படுகின்றது) குரவைக் கூத்து என்று நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களில் குறிப்பிடப் படுகின்றது. கரி=சான்று; அரவம்=பாம்பு; ஆர்த்த=இறுகக் கட்டிய. ர என்ற எழுத்து முதல் எழுத்தாக எந்த தமிழ்ச் சொல்லிலும் வருவதில்லை என்பதால், அகரம் சேர்க்கப்பட்டு அரவம் என்று கூறப்பட்டுள்ளது. கரவில்=மறையாமல், அனைவரும் காணும் வண்ணம். இந்த பாடலில் ர மற்றும் வ ஆகிய இரண்டு எழுத்துகள் முதற்சொல்லில் வருவதை நாம் உணரலாம்.இந்த பதிகத்தின் பாடல்களில் தமிழ் எழுத்துகள் முப்பத்தொன்றும் (உயிரெழுத்துகள் 12 ஆயுத எழுத்து, மெய்யெழுத்துகள் 18) முதல் எழுத்தாக வரும் வண்ணம் பாடல்கள் இயற்றப் பட்டுள்ளன.
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப்
பரவுவார் அவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல்
கரவில் நான்முகனும் கரி அல்லரே
ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.09.01) அப்பர் பிரான் பெருமானை, அண்ணலார் என்று அழைக்கின்றார். ஆமாத்தூர் அழகர், பிச்சை ஏற்கச் சென்ற போது, அவருக்கு பிச்சையிடச் சென்ற பெண்மணி, அவரை நேரில் கண்டு அவரது அழகில் மயங்கி, அவர் பால் தீராத காதல் கொண்டு, அவரே தனக்கு உரிய மணாளர் என்று நினைக்கின்றாள். ஆனால் சிவபெருமான், அவளை விட்டு நீங்கிச் செல்லவே, வருத்தமடைந்து, தனது எண்ண ஓட்டங்களை மற்றவர்களிடம் சொல்லி, தன்னை சிவபெருமானுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தும் பதிகம். தன்னை விட்டுவிட்டுச் சென்று விட்டாரே என்ற வருத்தத்தையும் மீறி, வந்து சென்றவர் மிகவும் அழகியவர், என்று ஒவ்வொரு பாடலிலும் கூறுவதிலிருந்து, பெருமானின் அழகு ஏற்படுத்திய தாக்கத்தை நாம் உணர முடிகின்றது. தாருகாவனத்து இல்லத்தலைவிகள், சிவபிரான் பிச்சைப் பெருமானாகச் சென்றபோது அவரது அழகில் மயங்கி, அவரைப் பின்தொடர்ந்துச் சென்றது அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும். பிச்சைப் பெருமானின் (பிக்ஷாடனர்) அழகிய கோலத்தையும், தாருகாவனத்துப் பெண்கள் தங்களை மறந்த நிலையில் சிவபெருமானை பின்தொடர்ந்த நிலையையும் மனக்கண்ணால் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான், அவர் பால் காதல் கொண்ட தலைவியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு, தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அழகிய பதிகம். அப்பர் பிரான் உருவாக்கிய நாயகியை நாம் அப்பர் நாயகி என்றே அழைக்கலாம். அப்பர் நாயகியின் எண்ண ஓட்டங்கள், மிகவும் சுவையாக இந்த பதிகத்தின் பாடல்களில் சொல்லப் படுகின்றன. வண்ணங்கள்=தாளத்தோடு பொருந்தப் பாடும் இசைகள்; வலிசெய்து=வலிமை காட்டி, இங்கே ஆடற்கலையின் தனக்கிருந்த திறமை காட்டி என்று கொள்ள வேண்டும். வளை கவர்ந்தார்= காதலன் சிவபெருமான் வளைகளைக் கவர்ந்தார்; காதலன் பால் கொண்ட அன்பால், அவன் பிரிவு வெகுவாக தலைவியை பாதிக்க, அவளது உடல் மிகவும் இளைத்து விடுகின்றது. உடல் இளைத்த காரணத்தால், கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் நில்லாமல் கழன்று விடுகின்றன. இந்த நிலைக்குத், தன்னை புறக்கணித்த காதலனே காரணம் என்பதால், அவனை வளையல் கவர்ந்த கள்வனாக கருதுவது சங்க இலக்கியங்களின் மரபு. இதே மரபு தேவாரப் பாடல்களிலும் பின்பற்றப் பட்டுள்ளது.
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மைக்
கண் அம்பால் நின்று எய்து கனலப் பேசிக் கடியதோர் விடையேறிக் காபாலியார்
சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித் தோலுடுத்து நூல் பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.23.7) அப்பர் பிரான் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். பரவை=கடல்:ஆலை=ஆல்+ஐ=மிகுந்த அழகு; தடவு=அளாவும்; வேலை=கடல்; துன்பம் என்ற பொருளினைத் தரும் அலை என்ற சொல் ஆலை என்று திரிந்ததாகவும்கூறுவார்கள். தக்கன் செய்த வேள்வியில் பங்கேற்ற பலருக்கும் துன்பமே மிஞ்சியதால், பலருக்கும் துன்பத்தினை சேர்த்த வேள்வி என்று கூறுவதும்பொருத்தமே. பாற்கடலிலிருந்து திரண்டெழுந்த நஞ்சினைத் தனது கழுத்தில் தேக்கியவனும், விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த கயிலை மலையைஉடையவனும், மிகுந்த அழகுடன் விமரிசையாக செய்யப்பட்ட தக்கனது வேள்வியினை அழித்தவனும், தேவர்கள் அனைவராலும் புகழப் படுவானும், பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் பால், நெய், தயிர் கோமியம் சாணம் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடுவானும், பருப்பதம்தலத்தில் உறைபவனும், கடலின் நிறத்தில் தனது திருமேனியை உடைய திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும் ஆகிய இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், அயனவனும் மாலவனும் அறியாவண்ணம் ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் என்றும் குறிப்பிடுகின்றார்.
வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள் தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்
பால் நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டுறையும் மணாளன் தானே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய ஒரு திருத்தாண்டகத்துப் பதிகத்தின் பாடலில் (6.25.5) அப்பர் பிரான், பெருமானை அண்ணலார் என்று குறிப்பிடுகின்றார். தனது பெருமைக்குத் தகுதியான வாழ்க்கை வாழாத சிவபெருமானின் தலங்களைப் பற்றி, தனக்கு ஐயம் ஏற்படுவதாக இந்த பதிகத்தின் நான்காவது பாடலில் கூறும் அப்பர் பிரான், தனக்கு விடை கிடைத்து விட்டதை இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். ஆய்ந்து=ஆராய்ந்து; கண்மாயம்=கண் கட்டுவித்தை, இந்திரஜாலம். தான் மறைந்தது மற்றவர் அறிய முடியாத படி இருக்கும் நிலை. மழுப்படையை கையில் ஏந்திய பெருமான் இன்னம்பரில் ஒரு சமயம்இருந்தார்; ஒளி வீசும் பவளத்தின் நிறத்தையும் தீப்பிழம்பின் நிறத்தையும் ஒத்த திருமேனி உடைய பெருமான் மற்றொரு சமயம் குடமூக்கில் (தற்போதையபெயர் கும்பகோணம்) இருந்தார்; நீண்ட சடையினைக் கொண்டு, வளையல்கள் அணிந்த கைகளை உடைய பார்வதி தேவியை பாகமாகக் கொண்டபெருமான் ஒரு சமயம் வலஞ்சுழி சென்றார்; பின்னர் புறம்பயத்துக்கும் அதனை அடுத்து புகலூருக்கும் சென்றார்; போரிடும் காளையினை வாகனமாகக்கொண்ட இவர், எந்த தலத்தினை இருப்பிடமாகக் கொள்ளலாம் என்று ஆராய்ந்து முடிவு செய்தவர் போல், இறுதியில் திருவாரூர் வந்து குடிபுகுந்துவிட்டார். இவர் இவ்வாறு வருவதும் போவதும் கண்கட்டு வித்தை போல் உள்ளது. எவரும் அறிந்து உணர முடியாத செயல்களாக உள்ளன என்று குறிப்பிட்டு அண்ணலார் புரிகின்ற மாயச் செயல்களின் தன்மை பற்றி குறிப்பிடுகின்றார்.
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள வண்ணர் குடமூக்கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாகமாக வார்சடையார் வந்து வலஞ்சுழியார்
போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினர் போரேறேரி
ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.30.4) அப்பர் பிரான் பெருமானை ஆனேறொன்றது ஏறும் அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். கானேறு=காட்டில் திரிகின்ற; நாட்டில் வளர்க்கப்படும் யானை ஒரு கட்டுப்பாட்டுடன் இயங்கும். ஆனால் காட்டில் திரியும் யானைகள்அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வளர்வதால் மூர்க்க குணம் அதிகமாக உடையதாக இருக்கும். தாருகவனத்து முனிவர்கள் பெருமானின் மேல் ஏவியயானை மூர்க்க குணம் உடையதாகவும் மதம் கொண்டதாகவும் இருந்ததை உணர்த்தும் பொருட்டு கானேறு களிறு என்று அப்பர் பிரான் குறிப்பிட்டார்போலும். காட்டில் திரிகின்ற யானை போன்று மூர்க்க குணம் கொண்டதும் மதம் உடையதாக விளங்கிய யானை தன்னை எதிர்த்து வந்த போது அதனைஅடக்கி, அதன் தோலினை உரித்து போர்வையாக தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனும், நினைத்தை அளிக்கும் கற்பக மரம் போன்று தனதுஅடியார்கள் வேண்டுவன எல்லாம் தரும் கொடையாளியாக விளங்குபவனும், தன்னை வழிபாடு செய்து கொண்டிருந்த சிறுவன் மார்க்கண்டேயனின்உயிரைக் கவர வந்த இயமனைத் தனது காலால் உதைத்து வீழ்த்தியவனும், புலால் நாற்றம் கமழும் மண்டை ஓட்டினில் பலி ஏற்பவனும், உத்தமனும், ஒற்றியூர் தலத்தில் உறைபவனும், காளையைத் தனது வாகனமாகக் கொண்டு அதன் மேல் ஏறுபவனும், அனைவர்க்கும் தலைவனாக விளங்குபவனும், தக்கயாகத்தில் பங்கேற்ற சூரியனை தண்டிக்கும் முகமாக அவனது பற்களைத் தகர்த்தவனும், அனைத்து உயிர்களுக்கும் அனைத்து பொருட்களுக்கும் ஆதியாகவிளங்குபவனும் ஆகிய பெருமானே, தேன் நிறைந்த மலர்ச் சோலைகள் உடைய திருவாரூர் நகரத்து திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எமது செல்வன்ஆவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கானேறு களிற்றுரிவைப் போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதை செய்தான் காண்
ஊனேறு முடைதலையில் பலிகொள்வான்காண் உத்தமன்காண் ஒற்றியூர்மேவினான்காண்
ஆனேறு ஒன்றது ஏறும் அண்ணல் தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதி தான் காண்
தேனேறு மலர்ச்சோலை திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே
திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.80.7) அப்பர் பிரான், பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். பிறப்பு=பலவகை பிறப்புகளாய் உள்ளவன்; அண்ணல்= தலைவன்; நிறம்=வடிவம்; அறத்தான்=தருமமே வடிவமாய் நின்று அதனை நிலை நிறுத்துபவன்; அறவோன்=தருமத்தின் வழியே அனைத்து உயிர்களும் தங்களது வினைகளின் பயனை நுகர்விக்கச் செய்பவன்; ஐயன்=வியக்கத் தக்க ஆற்றல் உடையவன்; இந்த பாடலில்பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டுள்ள அனைத்து உயிர்களிலும் கலந்து நிற்கும் இறைவன் பிறவாத பெருமை உடையவன் என்று அப்பர் பிரான்கூறுகின்றார். இதே கருத்து பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. பல வகையான பிறப்புகளை உடைய உயிர்களாக இருப்பவனும், பிறவாமல் தோன்றியவன் என்ற பெருமையை உடையவனும், ஆற்றல் திறமை புகழ் ஆகியவற்றில் அனைத்து உயிர்களிலும் பெரியவனாக இருப்பவனும், உணர்வதற்கு மிகவும் அரியவனாக இருப்பவனும், பெண் மற்றும் ஆண் வடிவத்தினை ஒரே உருவத்தில் கொண்டவனும், குற்றங்கள் ஏதும் இல்லாதவனும், தன்னை நினைக்காத மாந்தர்களை தானும் அவர்களை நினைத்து அருள் செய்யாமல் இருப்பவனும், தன்னை தங்களது மனதினில் நினைக்கும்அடியார்களை என்றும் நினைத்து அருள் புரிபவனும், தருமமே வடிவமாக நின்று தருமத்தை நிலைநாட்டுவானும், தருமத்தின் வழி நின்று அனைத்துஉயிர்களும் தங்களது வினைகளின் பயனை இன்பமாகவும் துன்பமாகவும் நுகர்தற்கு வழி வகுப்பவனும், வியக்கத் தக்க ஆற்றல் உடையவனும், அனைத்துஉயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், தன்னை நெருங்க முடியாமல் வருந்தும் தேவர்களால் புகழப் படுபவனும், சோதி வடிவாக திகழ்பவனும், சிவந்த பவளக் குன்று போன்ற திருமேனியை உடையவனும் ஆகிய இறைவனை அடியேன் திருமாற்பேறு தலம் சென்றடைந்து கண்டு களித்தேன் என்பதாக இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.
பிறப்பானைப் பிறவாத பெருமையானைப் பெரியானை அரியானைப் பெண் ஆண் ஆய
நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன் தன்னை
அறத்தானை அறவோனை ஐயன் தன்னை அண்ணல் தனை நண்ணரிய அமரர் ஏத்தும்
திறத்தானைத் திகழொளியைத் திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன் நானே
திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.11.2) சுந்தரர், தாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், பெருமானையே தமது தலைவனாக நினைத்து செயல் புரியும் அடியார்களின் வினைகளை தீர்ப்பவர் சிவபெருமான் என்று கூறுகின்றார்.
எண்ணியிருந்து கிடந்தும் நடந்தும்
அண்ணலெனா நினைவார் வினை தீர்ப்பார்
பண்ணிசையார் மொழியார் பலர் பாடப்
புண்ணியனார் உறை பூவணம் ஈதோ
ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (7.45.11) சுந்தரர், பெருமானை ஆமாத்தூர் அண்ணல் என்று அழைக்கின்றார். பொய்யின்றி=வஞ்சனை ஏதுமின்றி, ஒன்றிய மனத்துடன்; தவறேதும் இன்றி தேவார திருவாசகப் பாடல்கள் சொல்ல வேண்டிய அவசியத்தை சுந்தரர் இந்த பாடலில் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தன்னை ஆட்கொண்ட அண்ணல் என்று பெருமானை சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மையன்=மேகம் போன்றவன்; பலனை எதிர்பாராது மழை பொழியும் மேகம் போன்று உயிர்களுக்கு பல விதமான உதவிகள் செய்யும் பெருமான் என்று கூறுகின்றார்.
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருளான விமலனை
மையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன் சொல்
பொய்யொன்றும் இன்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே
திருக்கோலக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.62.3) சுந்தரர் பெருமானை கண்ணொர் மூன்றுடை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். பாடல்களில் இசை கலந்திருப்பது போன்று அனைத்து உயிர்களிலும் பெருமான், வேரறக் கலந்திருப்பது போன்று அனைத்து உயிர்களுடன் பெருமான் கலந்து நின்று அவற்றை இயக்குகின்றார் என்று கூறுகின்றார். பெருமான் பால் பரிவு கொண்டு, அதாவது அன்பு கொண்டு, நினைப்பார்களுக்கு பெருமான் இனிய உணர்வுகளைத் தருகின்றான் என்பதை, பத்தர் சித்தம் பரிவினியான் என்ற தொடர் மூலம் சுந்தரர் குறிப்பிடுகின்றார்.
பாட்டகத்து இசையாகி நின்றானைப் பத்தர் சித்தம் பரிவினியானை
நாட்டகத் தேவர் செய்கையுளானை நட்டம் ஆடியை நம்பெருமானைக்
காட்டகத்து உறு புலியுரியானைக் கண்ணொர் மூன்றுடை அண்ணலை அடியேன்
கோட்டகப் புனலார் செழுங்கழனிக் கோலக்காவினிற் கண்டு கொண்டேனே
திருத்தினை நகர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.64.4) சுந்தரர் பெருமானை, அண்ணல் என்று அழைக்கின்றார். பகர்ந்து என்பதற்கு பொய் பகர்ந்து என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலகினில் வாழ்வதற்கு உரிய வழிகள் தீய காரியங்கள் பல செய்வதும் பொய்கள் பேசுவதும் என்றுதவறாக புரிந்து கொண்டு துன்பங்களில் ஆழ்கின்ற மக்களுக்கு அறிவுரை கூறும் முகமாக அமைந்த பாடல்; அத்தகைய செயல்களை விட்டுவிட்டு, பெருமானின் தன்மைகளை நல்லாசிரியர் பால் கற்றுத் தேர்ந்து சிந்திக்குமாறு ஆலோசனை கூறுகின்றார்.
பாவமே புரிந்து அகலிடம் தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்
காவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல் தன் திறம் அறிவினால் கருதி
மாவின் ஏவுரி உடை புனைந்தானை மணியை மைந்தனை வானவர்க்கு அமுதைத்
தேவதேவனைத் திருத்தினை நகருள் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.2) சுந்தரர், பெருமானை அண்ணலே என்று அழைத்து, தன்னை அஞ்சேல் என்று சொல்லி பெருமான் அருள் புரிய வேண்டும் என்று கோருகின்றார். பெருமானைத் தவிர்த்துத் தனக்கு உறவினர் எவரும் இல்லை என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அமரர்கள் ஏறு=விலங்குகளுக்கு ஆண் சிங்கம் தலைவனாக இருப்பது போன்று தேவர்களுக்கு தலைவனாக விளங்குபவன்; நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அடிமை ஓலை காட்டி, தன்னை அடிமையாக பெருமான் ஏற்றுக் கொண்ட தன்மையை இந்த பாடலில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு தானே வலிய வந்து ஆட்கொண்ட பெருமான், தான் கண்களில் பார்வை இழந்தும் நோயால் வருந்தியும் தவிக்கும் போது, உதவ வேண்டியது அவரது கடமை என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த பாடல் அமைந்துள்ளது. அவ்வாறு தான் பெருமானுக்கு ஒரு பெரும் சுமையாக இருக்கும் தன்மையை, உனக்கே பொறையானேன் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறொருவர் துணையாகவோ அல்லது உறவாகவோ இல்லாத காரணத்தால் பெருமான் தனக்கு அஞ்சேல் என்று சொல்லி உதவுவது மிகவும் அவசியம் என்பதையும் குறிப்பிடுகின்றார்.
மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்தெனை ஆண்டு கொண்டானே
கண்ணிலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறையானேன்
தெண்ணிலா எறிக்கும் சடையானே தேவனே திருவாவடுதுறையுள்
அண்ணலே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு அமரர்கள் ஏறே
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.75.6) சுந்தரர் பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். பெருமானை நாளும் சிந்திக்கும் அடியார்கள், தன்னை அடிமையாக ஏற்றுக் கொள்ளும் தகுதி படைத்தவர்கள் என்று சுந்தரர் கூறுகின்றார். விலையிலி கலன் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். கலன் என்பதற்கு உண்கலன் என்றும் நகை என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். பிரம கபாலம் என்பதற்கு கிடைத்தற்கு அரியது என்பதால் விலையிலி என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமே. பெருமான் அணிகலன்களாக அணிவது, பாம்பு, ஆமையோடு, பன்றிக் கொம்பு போன்ற மிகவும் எளிமையான பொருட்கள் என்பதால், விலையேதும் இல்லாத பொருட்கள் என்ற விளக்கமும் பொருத்தமானதே.
விண்ணின் மாமதி சூடி விலையிலி கலனணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை பசு உகந்தேறி
அண்ணலாகிய ஆனைக்காவுடை ஆதியை நாளும்
எண்ணுமாறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே
திருப்பனையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.87.8) சுந்தரர் பெருமானை அண்ணல் என்று அழைக்கின்றார். அண்ணல் என்றால் தலைவர் என்று பொருள். இந்த பாடலில் விண்ணவரோடு மண்ணவர் தொழ நின்ற அண்ணலாகி நின்ற அழகியர் என்று கூறுகின்றார்.
மண்ணிலா முழவம் அதிர்தர மாடமாளிகை கோபுரத்தின் மேல்
பண்ணியாழ் முரலும் பழனத் திருப்பனையூர்
வெண்ணிலாச் சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ
அண்ணலாகி நின்றார் அவரே அழகியரே
திருவாசகம் அதிசயப்பத்து பதிகத்தின் பாடலில் (8.26.6) மணிவாசக அடிகளார், பெருமானை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். தனது அறியாமையின் காரணமாக, பெருமானின் திருநாமமாகிய ஐந்தெழுத்து மந்திரத்தை நினைக்காது இருந்தேன் என்று குறிப்பிட்டு, தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் மணிவாசக அடிகளார், ஞானமடைந்த அடியார்களோடு தான் சேராமல் இருந்தும், நல்ல செயல்களை புரியாமல் இருந்தும், வீணாகத் தனது வாழ்வினைக் கழித்துக் கொண்டு உயிருக்கு எந்தவிதமான பயனுமின்றி மண்ணோடு மண்ணாகக் கலந்து மக்கிப் போகும் வாழ்வு வாழும் தன்னை, தலைவனாகிய பெருமான் தன்னை ஆட்கொண்டு அடியார்களுடன் கூட்டிய அதிசயம் தனது வாழ்வினில் நிகழ்ந்தது என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றார். இவ்வாறு அடியார்களுடன் கூட்டப்பட்டதால், தான் அவர்களிடமிருந்து ஞானம் பெற்று தனது குறைகளை களைந்து கொள்ளும் நிலை ஏற்பட்டதால், பெருமானின் திருநாமத்தை உணர்ந்து சொல்லும் வாய்ப்பு கிடைத்தமையால், அவர் பெற்ற மகிழ்ச்சி இந்த பாடலில் வெளிப்படுகின்றது.
எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே
திருவாசகம் அச்சப்பத்து பதிகத்தின் பாடலில் (8.35.1) மணிவாசக அடிகளார், அண்ணலாகிய பெருமானின் திருப்பாதங்களின் தன்மையை புரிந்து கொண்ட பின்னரும், வேறோர் தெய்வம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, சிவபெருமானை போற்றாத மனிதர்களைக் கண்டு தான் அச்சம் கொள்வதாக கூறுகின்றார். அத்தகைய மனிதர்களைக் கண்டு அவர்களுடன் பழகினால், அவர்களது தீய குணம் தன்னையும் பாதித்து தனது தன்மையை மாற்றிவிடுமோ என்ற சந்தேகம் இருப்பதால், அடிகளார் அச்சம் கொள்கின்றார் என்பதை நாம் உணரலாம்.
புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினந்து எம்பெம்மாற்கு
கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே
திருவாசகம் அச்சோப் பதிகத்தின் பாடலில் (8.51.4) அண்ணல் தனக்கு அருள் புரிந்த தன்மையை மனம் நெகிழ்ந்து குறிப்பிடுகின்றார். அச்சோ என்பது வியப்பினை குறிப்பிடும் சொல். தன்பால் அளவு கடந்த அன்பு வைத்தவராக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடும் அடிகளார், தன்னை வெண்ணீறு அணியச் செய்த பெருமான் தன்னை முக்திநெறி அடைவதற்கு தகுதி படைத்தவனாக மாற்றி அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். எண்ணமிலா அன்பு என்ற தொடருக்கு, தான் சிறிதும் எதிர்பாராத வகையில் பெருமான் தனக்கு அருள் புரிந்து, தன்னை ஆனந்தத்தில் அழுத்தி திக்குமுக்காட வைத்த பெருமான் என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார். திருமூலரும் எண்ணற்ற பாடல்களில் பெருமானை அண்ணல் என்று குறிப்பிட்டு மகிழ்கின்றார்.
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட்டு என்னையும் தன்
சுண்ண வெண்ணீறு அணிவித்துத் தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவோ
திருமூலரும் எண்ணற்ற பாடல்களில் பெருமானை அண்ணல் என்று குறிப்பிட்டு மகிழ்கின்றார். பாயிரம் அதிகாரத்தில் பாடலில் அண்ணலின் பெருமையை யாரும் அறிய முடியாது என்று திருமூலர் கூறுகின்றார். பாரும் விண்ணும் போதாத வண்ணம் விசுவரூபம் உடைய பெருமானின் நீளத்தையும் அகலத்தையும் எவராலும் அறிய முடியாது என்று குறிப்பிடும் திருமூலர் சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் என்றும் அவனது மூலத்தை எவரும் அறிய முடியாத வண்ணம் சுயம்புவாக தானே தோன்றியவன் என்றும் கூறுகின்றார்.
ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
ஆரறிவார் அவ்வகலுமும் நீளமும்
பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறியாமை விளம்புகின்றேனே
ஆகமச் சிறப்பு அதிகாரத்தின் பாடலில் அண்ணல் என்று பெருமானை குறிப்பிடும் திருமூலர், உயிர்கள் மேல் வைத்த கருணையின் பொருட்டு பெருமான் ஆகமங்களை அருளினார் என்று கூறுகின்றார். ஆகமங்கள் இருபத்தெட்டு என்று பொதுவாக சொன்னாலும், அவை இறைவனின் பெருமையை உணர்த்தும் சாதனங்கள் என்பதால் அவற்றை எண்ணற்றவை என்று கொள்ள வேண்டும் என்று உணர்த்துகின்றார். விழுப்பம்=சிறப்பு. இந்த ஆகமங்களின் உதவி கொண்டே தேவர்களும் பெருமானின் சிறப்பை உணர்த்து கொண்டு அவனைப் போற்றி பாடினார்கள் என்பதால், இறைவனின் பெருமையை அறிந்து கொள்ள அவன் அருளிய வேதங்கள், ஆகமங்கள் மற்றும் புராணங்கள் இல்லையேல் எவரும் அறிந்து கொள்ள முடியாது என்பதை உணர்த்தும் திருமூலர்,அந்த ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்து தான் அவனது பெருமையை உரைப்பதாக சொல்கின்றார்.
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்று அப்பொருள் ஏத்துவன் நானே
திருமந்திரம் முதல் தந்திரம் செல்வம் நிலையாமை அதிகாரத்தில், இயமனின் தூதர்கள் நமது உயிரினை உடலிலிருந்து பிரித்துக் கொண்டு செல்லும் தருணத்தில், நமது உற்றார்களும் நண்பர்களும் செல்வமும் நமக்குத் துணையாக வரமாட்டா என்று உணர்த்தும் திருமூலர், இறைவனை நினைத்து அவனது அருளையே துணையாக பற்றிக் கொள்வீர்களாக என்று கூறுகின்றார். பிறந்ததலிருந்து உடனிருந்த உடலையே அழைத்துச் செல்லாமல், அந்த உடலை சுட்டெரிக்கப் படும் பொருளாக மாற்றும் இயமனின் தூதர்கள், உயிரினை அந்த உடலிலிருந்து பிரித்தெடுத்துச் செல்லும் இயமனின் தூதர்கள், அந்த உயிர் சேர்த்த செல்வத்தை உயிருக்குத் துணையாக எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்பதை மக்களே நீர் புரிந்து கொள்வீர்களாக என்று குறிப்பிடும் திருமூலர், இறைவனின் அருள் ஒன்று தான் அந்த சமயத்திலும் உயிருக்கு உற்ற துணையாக இருக்கும் என்பதால், இறைவனை உயிர்கள் எண்ண வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இறைவனின் அருள் எவ்வாறு உயிருக்குத் துணையாக இருந்து, உயிர்களை இயமன் அளிக்கவிருக்கும் தண்டனையிலிருந்தும் காப்பாற்றும் என்பதை மிகவும் அழகாக குறிப்பிடும் சுந்தரரின் தில்லைப் பதிகப் பாடல்கள் (7.90) நமது நினைவுக்கு வருகின்றன. விடும் பரிசாய் நின்ற மெய் நமன் தூதர் என்ற தொடர், பிராரத்த கன்மங்களை (இந்த பிறவிக்கு ஒதுக்கப் பட்ட வினைத் தொகையின் விளைவாக நுகர வேண்டிய இன்ப துன்பங்கள்) முழுவதுமாக கழிக்கும் வரையிலும் காத்திருந்து அந்த நிலை வந்தவுடன் செயல்பட்டு உயிரினை உடலிலிருந்து பிரிக்கும் இயமனின் தூதர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். சுடும் பரிசத்தையும் சூழகிலார் என்ற தொடர் மூலம், உயிரின் இந்த தன்மையை சுட்டெரித்து மாற்றும் மந்திரங்கள் மற்றும் தந்திரங்கள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் தமது பணியைச் செய்யும் இயமனின் தூதர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். நம்மிடை இருக்கும் செல்வம் கொண்டு, வேள்விகள் செய்தோ வேறு பலவிதமான உபாயங்கள் செய்தோ நமது வாழ்நாளை நீட்டிக்க முடியாது என்று திட்டவட்டமாக திருமூலர் கூறுவதை நாம் உணரலாம்.
உடம்பொடு உயிரிடை விட்டு ஓடும் போது
அடும் பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும் பரிசாய் நின்ற மெய் நமன் தூதர்
சுடும் பரிசத்தையும் சூழகிலாரே
திருமந்திரம் முதல் தந்திரம் அன்புடைமை அதிகாரத்தின் பாடல் ஒன்றினில் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடும் திருமூலர், பெருமான் பால் அன்பு வைத்து அவனை நாடாமல் இருக்கும் உயிர்களின் இழிந்த நிலையை குறிப்பிடுகின்றார். இரவினை தூங்கிக் கழித்து அடுத்த நாள் காலையில் விழிக்கின்றோம் என்றால், நமது வாழ்நாளில் ஒரு நாள் குறைந்துவிட்டது என்றும், நாம் இறக்கின்ற நாள் நம்மை நெருங்குகின்றது என்று தானே பொருள். இது தானே நமது வாழ்க்கையின் தன்மையாக இறைவனால் வைக்கப் பட்டுள்ளது. இதனை புரிந்து கொள்ளாமல், உலகப் பொருட்களும் உலகத்து உயிர்களும் தருகின்ற இன்பத்தில் ஆசை வைத்து, இறைவனை மறந்து உயிர்கள் இருக்கின்ற பரிதாபகரமான நிலையை இங்கே குறிப்பிடுகின்றார்.
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
இசையுளே வைப்பர் எந்தை பிரான் என்று
நச்சியே அண்ணலை நாட கிலாரே
திருமந்திரம் இரண்டாம் தந்திரம் சர்வசிருஷ்டி அதிகாரத்தின் பாடலில் பெருமானை அண்ணல் என்று குறிப்பிடும் திருமூலர், பெருமானின் நிலையுடன் மும்மூர்த்திகளின் தன்மையை ஒப்பிடுகின்றார். சில பதிப்புகளில் பாட பேதமாக உழக்காகி நின்றாரே என்ற தொடருக்கு பதிலாக முடிக்காகி நின்றாரே என்று உள்ளது. இரண்டுமே பொருத்தமாக இருந்தாலும், உழக்காகி நின்றாரே என்ற தொடர் மிகவும் பொருத்தமாக உள்ளது. அண்ணல் என்றால் தலைவன் என்று பொருள். சிவபெருமான் ஒருவரே பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூவரின் உடலினுள்ளே புகுந்து அவர்களை இயக்குகின்றான் என்று இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார். உழக்கு என்பது கொள்ளும் அளவைக்கு உரிய ஒரு கருவி. (சுமார் 330 மில்லி லிட்டர் என்ற அளவு உடையது) இரண்டு ஆழாக்குகள் ஒரு உழக்குக்கு சமம் என்று கூறுவர். 8 ஆழாக்கு ஒரு படி. அளக்கும் கருவிக்கு தனியாக ஏதும் சிறப்பு இல்லை. அந்த கருவியால் அளக்கப்படும் பொருளால் தான் அந்த கருவிக்கு சிறப்பு ஏற்படுகின்றது. அது போல, பெருமான் உள்ளிருந்து மும்மூர்த்திகளையும் இயக்குவதால் தான் அவர்களுக்கு பெருமை ஏற்படுகின்றது என்பதே இங்கே உணர்த்தப் படுகின்றது. முடி என்றால் தலைமை தலைவன் என்று பொருள். முடிக்காகி நின்றான் என்ற தொடர் மூலம் பிரமன், திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளுக்கும் தலைவனாகி நின்ற பெருமான் என்ற விளக்கம் பெரியோர்களால் அளிக்கப் படுகின்றது.
புகுந்தறிவான் புவனாபதி அண்ணல்
புகுந்தறிவான் புரிசக்கரத்து அண்ணல்
புகுந்தறிவான் மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறியும் உழக்கு ஆகி நின்றாரே
திருமந்திரம் இரண்டாம் தந்திரம் அபாத்திரம் அதிகாரத்தின் பாடலில் அண்ணலாகிய சிவபெருமானை வழிபடாத மாந்தர்கள் அடுத்தவரிடமிருந்து தானம் பெறுவதற்கான தகுதியற்றவர்கள் என்று திருமூலர் கூறுகின்றார். மேலும் அத்தகையோருக்கு தானம் அளிப்போருக்கும் எந்த விதமான பயனும் ஏற்படாது என்றும் உரைக்கின்றார். மண்மலை=மலை போன்று மிகவும் அதிகமான தானம்;
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே
திருமந்திரம் மூன்றாம் தந்திரம் அட்டமாசித்தி அதிகாரத்தில் திருமூலர், இறைவன் பால் அன்பு வைத்து அவனை வழிபடுதல் அன்றி இறைவன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்கு வேறு வழியே இல்லை என்று கூறுகின்றார். ஒதம் ஒலிக்கும்=எப்போதும் இரைச்சலுடன் வருகின்ற அலைகள் நிறைந்த கடல்; இறைவன் பால் அன்பு வைக்காமல் நாம் எத்தனைத் தலங்கள் சென்றாலும், எத்தனை புண்ணிய தீர்த்தங்கள் நீராடினாலும், நமக்கு பயனேதும் இல்லை என்று கூறுகின்றார்.
ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகர் அறிவாரே
திருமந்திரம் மூன்றாம் தந்திரம் கலை நிலை அதிகாரத்தில், அண்ணலாகிய சிவபெருமான் பால் அன்பு வைப்பதால் நமது மனதினில் ஏற்படும் இன்ப வெள்ளம் வற்றிப் போகாமல் நமது சிந்தனையில் எவ்வாறு நிறுத்திக் கொள்வது என்பதை திருமூலர் கற்றுக் கொடுக்கின்றார். கலை=சூரியகலை சந்திரகலை ஆகிய கலைகள்; சிவபெருமான் பால் அன்பு வைத்தால் அவனை அடையலாம் என்று அன்பு வழியை வைக்கும் உயிர்கள் சிவபெருமான் தான் என்பதை இந்த பாடலின் முதல் அடியில் உணர்த்துகின்றார். கண்ணுற=ஞானக் கண் கொண்டு; கங்கை= சிவானந்தமாகிய இன்ப வெள்ளம்;
காதல் வழி செய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழி செய்து கண்ணுற நோக்கிடில்
காதல் வழி செய்து கங்கை வழிதரும்
காதல் வழி செய்து காக்கலுமாமே
திருமந்திரம் மூன்றாம் தந்திரம் காய சித்தி உபாயம் என்ற அதிகாரத்தில் திருமூலர், மூலாதாரத்தில் கனலாக வீற்றிருக்கும் இறைவனை தியானித்து, அந்த கனலை முறையாக மற்ற ஆதாரங்களையும் கடந்து செல்லச் செய்து, சகஸ்ரதளம் அழைத்துச் சென்று அண்ணலை உணரவேண்டும் என்று கூறுகின்றார். குதம்=எருக்குழி; கூறா இலிங்கம்=கருவாய்; கூறா உபதேசம்=பிரணவ மந்திரம்; மாறா மலக்குதம்=என்றும் மலம் பொருந்தி இருக்கும் தன்மையிலிருந்து மாறாத எருவாய்; ஆறா உடம்பு=ஆறு ஆதாரங்களை உடைய உடல்:
மாறா மலக்குதம் தன் மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசம் கொண்டது காணுமே
திருமந்திரம் மூன்றாம் தந்திரம் காலச் சக்கரம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், ஜீவன் சிவனாக மாறுவது எவ்வாறு என்று கற்றுக் கொடுக்கையில், சிவனை அண்ணல் என்று குறிப்பிடுகின்றார். அகாரம் என்பது முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை குறிக்கும். உகாரம் என்பது உமையம்மையை குறிக்கும். மகாரம் என்பது மலங்களை உணர்த்தும். குழல்=சுழுமுனை தொடங்கியுள்ள ஆறு ஆதாரங்கள்; தேறும்=தேர்ந்தெடுத்த, பற்றுக்கோடாக தேர்ந்தெடுத்த; சிவபெருமான் மற்றும் சக்தியை தியானம் செய்து நமது சிந்தையில் நிறுத்தி, மூலாதாரக் கனலை மேலே எழுப்பிச் செல்லும் ஆற்றலுடைய உயிர்கள் சிவமாகவே மாறிவிடும் என்று கூறுகின்றார்.
கூறும் பொருளிது அகார உகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிட
கூறும் மகாரம் குழல் வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணுலுமாமே
மேற்கண்ட பாடலுக்கு அடுத்த பாடலிலும் ஜீவனை சிவனாக மாற்றும் உபாயத்தை திருமூலர் கற்றுக் கொடுக்கின்றார். அனைத்து உயிர்களின் உள்ளே உயிருக்கு உயிராய் இருக்கும் பெருமானின் தன்மையை எவரும் அறிந்து கொள்வதில்லை. ஆனால் இறைவன் அவ்வாறு நம்முள் உறைந்து இருப்பதை ஆராய்ந்து புரிந்து கொண்டு அவனை தியானிக்கும் உயிர்கள், தங்களின் உள்ளே நிலையாக பெருமானை நிறுத்திக் கொள்வதும் அன்றி அவனாகவே மாறி விடுகின்றனர் என்று திருமூலர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலார்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன் இவன் ஆகுமே
பொழிப்புரை:
அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருப்பவனும், ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் திருக்கோயிலில் பொருந்தி உறைபவனும் ஆகிய பெருமானை எப்போதும் தங்களது மனதினில் நினைத்துத் தொழுகின்ற அடியார்கள், தங்களது துன்பங்கள் தீர்க்கப் பெற்று இன்பம் அடைவது உறுதி.
பாடல் 7:
அம்பொ னாலாவாய்
நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர்
துன்பம் வீடுமே
விளக்கம்:
அம்=அழகிய; பொன்=பொன் போன்ற: சென்ற பாடலில் பெருமானைத் தொழுகின்ற அடியார்கள் தங்களது துன்பம் தீர்க்கப் பெற்று இன்பம் அடைவது திண்ணம் என்று குறிப்பிட்ட திருஞான சம்பந்தர் இந்த பாடலில், அத்தகைய அடியார்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று இன்பம் அடைவார்கள் என்று கூறுகின்றார். வீடு=விடுதலை பெற்று;
பொழிப்புரை:
அழகிய பொன்மயமாக விளங்கும் திருவாலவாய் தலத்தினில் உறைபவனும், அடியார்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனும் ஆகிய பெருமான் பால் நம்பிக்கை வைத்து, அவனைத் தொழுது வாழ்கின்ற அடியார்கள் துன்பத்திலிருந்து விடுதலை அடைவார்கள்.
பாடல் 8:
அரக்க னார்வலி
நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க்
கிரக்க முண்மையே
விளக்கம்:
நெருக்கன்=கயிலாய மலையின் கீழே அடர்த்து நெருக்கிய பெருமான்; உரைக்கும்=புகழினை எடுத்துரைக்கும்; வலி=வலிமை: இயல்பாகவே இரக்க குணம் உடையவராக உள்ள பெருமான், அடியார்கள் எப்போது தன்னைப் புகழ்ந்து பேசுவார்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். தனது இருப்பிடமாகிய கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் நோக்கத்துடன் மலையை அசைத்தவனாக அரக்கன் இராவணன் இருந்த போதிலும், அவன் சாமகானம் பாடிய போது உடனே தனது கால் அழுத்தத்தை தளர்த்தி அரக்கனது துயரத்தைத் தவிர்த்த பெருமான், அவனுக்கு பல வரங்களையும் அளிக்கின்றார். இந்த இயல்பினைத் தான் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிட்டு, பெருமானின் அந்த பண்பினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். நாமும் இறைவனைப் பணிந்து அவனைப் புகழ்ந்து பாடி அவனது அருளுக்கு பாத்திரமாக மாறுவோமாக.
பொழிப்புரை:
தனது வலிமையில் மிகுந்த நம்பிக்கை உடையவனாக, தான் கயிலாய மலையினைப் பேர்த்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு தனது பயணத்தைத் தொடர்வதை எவரும் தடை செய்ய முடியாது என்ற எண்ணத்துடன், கயிலாய மலையை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அரக்கனது உடலை கயிலாய மலையின் கீழே அடர்த்து நெருக்கி, அரக்கனை வருத்தியவன் சிவபெருமான். அவரே திருவாலவாய் தலத்தினில் உறைகின்றார். இத்தகைய ஆற்றல் வாய்ந்தவர் என்று அவரைப் புகழ்ந்து உள்ளம் கொண்ட அடியார்கள் பால் இரக்கம் கொள்ளும் பெருமான், அவர்களுக்கு தனது கருணையை பரிசாக அளித்து உதவுவது என்றும் நடைபெறுகின்ற நிகழ்ச்சி ஆகும்.
பாடல் 9:
அருவ னாலவாய்
மருவி னான்றனை
இருவ ரேத்தநின்று
உருவ மோங்குமே
விளக்கம்:
அருவன்=உருவம் ஏதும் இல்லாதவன்; பெருமானை அருவன், உருவம் இல்லாதவன் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.26.10) அப்பர் பிரான், பெருமானை அருவன் என்று குறிப்பிடுகின்றார். திருவினாள்=செல்வத்தை உடைய இலக்குமி தேவி: கொழுநன்=கணவன்: நான்கு திசைகளையும் நோக்கும் வகையில் நான்கு முகங்கள் அமைந்திருப்பதால், பிரமனுக்கு திசைமுகன் என்ற பெயரும் உண்டு. பொதுவாக தனது கடைப் பாடலில் இராவணின் கயிலை நிகழ்ச்சியை குறிப்பிட்டு, தனக்கு தீங்குச் செய்யத் துணிந்த அரக்கனுக்கும் கருணை புரிந்த சிவபிரானை குறிப்பிடும் அப்பர் பிரான், அத்தகைய முறையிலிருந்து இந்த பதிகத்தில் வழுவுகின்றார். அதற்கு பதிலாக அண்ணாமலை நிகழ்ச்சியை குறிப்பிட்டு, ஆணவத்துடன் பெருமானை அணுகினால் நாம் அவனைக் காண முடியாது என்றும், அவனை அன்பினால் அணுகினால் அவனது அருள் நமக்கு கிட்டும் என்பதை உணர்த்துகின்றார். உருவம் ஏதும் இல்லாத ஒருவனை நாம் அவனது அருள் இல்லையேல் காண முடியாது அல்லவா. எனவே தான், இறைவனது திருப்பாதம் காண்பதற்கு விருப்பம் கொண்டுள்ள தனக்கு இறைவன் அருள வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இறைவனின் திருப்பாதங்கள் ஒருவரும் காண முடியாதஒப்பற்ற திருப்பாதங்கள், என்பதை உணர்த்தும் பொருட்டு, திருமாலும் பிரமனும் முயற்சி செய்தும் காண முடியாத திருப்பாதங்கள் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
திருவினாள் கொழுநனாரும் திசைமுகம் உடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணையடி காண மாட்டா
ஒருவனே எம் பிரானே உன் திருப்பாதம் காண்பான்
அருவனே அருள வேண்டும் அதிகை வீரட்டனீரே
திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் குறுந்தொகைப் பதிகத்தினை (5.35.1) அருவன் என்ற பெருமானின் திருநாமத்துடன் அப்பர் பிரான் தொடங்குகின்றார். அத்தி=யானை; பருவரால்= பருத்த வரால் மீன்கள்; அருவன்=உருவம் அற்றவன்: எங்கும் நிறைந்து நிற்கும் இறைவன் உருவம் ஏதும் இல்லாதவன். பெருமானின் அருளே மிகவும் உயர்ந்த செல்வம் என்பதால், திரு என்று அப்பர் பிரான் பெருமானின் அருட் செல்வத்தையும் முக்திச் செல்வத்தையும் குறிப்பிடுகின்றார். அழியக் கூடிய செல்வமாகிய பொருளினை, கோயில் திருப்பணிகள் மற்றும் அடியார்களுக்கு உதவுதல் மூலம் செலவு செய்து, அழியாத செல்வமாகிய இறைவனின் அருளினைப் பெறுமாறு, அப்பர் பிரான் செல்வர்களைத் தூண்டுகின்றார். திருப்பழனம் தலத்திற்கு வந்த அப்பர் பிரானுக்கு, அருகில் இருந்த திங்களூரில் வாழ்ந்து வந்த அப்பூதி அடிகளாரின் நினைவு வந்தது போலும். மக்களுக்கு பல வகையிலும் பயன்படும் வண்ணம், மருத்துவ சாலைகள், தங்கும் விடுதிகள், தண்ணீர்ப் பந்தல், முதலியன அமைத்து சேவை செய்யும் அடிகளார் போன்று மற்ற செல்வந்தர்களும் இருக்க வேண்டும் என்று விரும்பினார் போலும். நீர்வளம் மிகுந்த காவிரி நதிக்கரையில் இருந்த செல்வர்களும், அவ்வாறு மக்கள் சேவை மூலமாக மகேசனின் சேவையில் ஈடுபடவேண்டும் என்ற தனது எண்ணத்தினை அப்பர் பிரான் இங்கே வெளியிடுகின்றார்.
அருவனாய் அத்தி ஈருரி போர்த்து உமை
உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும்
பருவரால் வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவினால் திரு வேண்டும் இத்தேவர்க்கே
திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பாடலில் (8.10.14) மணிவாசக அடிகளார், பெருமானை அருவாய் மறை பயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட திரு என்று குறிப்பிடுகின்றார். அருவமாக எங்கும் நிறைந்திருக்கும் பெருமான் தனக்கு அருள் புரியும் நோக்கத்துடன் அந்தணனாக வந்து குருந்த மரத்தின் கீழே இருந்த தன்மையை குறிப்பிடுகின்றார். பெருமானுடன், அவனது அருளின் வடிவமாக திகழும் பிராட்டியும் உடன் வந்ததால் தான், தனக்கு பெருமானின் அருள் கிடைத்தது என்பதை உணர்த்தும் வண்ணம் மருவார் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி என்று கூறுகின்றார். திரு என்றால் தெய்வத் தன்மை என்று பொருள். சிவபெருமான் ஒருவரையே தெய்வமாக அடிகளார் கருதுவதால், திருவான தேவர் என்று பெருமானை குறிப்பிட்டு, மற்ற தேவர்கள் அனைவரும் திருவற்ற தேவர்கள் என்று உணர்த்துகின்றார். பயிலுதல் என்றால் ஒரு செயலை தொடர்ந்து செய்தல் என்று பொருள். அந்தணர்கள் தொடர்ந்து அனுதினமும் வேதம் ஓதிக் கொண்டே இருப்பதால் மறை பயில் அந்தணர் என்று கூறுகின்றார். .
கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறை பயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ
பல வேறு வடிவங்களில் அடியார்களுக்கு காட்சி கொடுத்த இறைவனுக்கு எந்த உருவத்தை நாம் கொடுக்க முடியும். எந்த உருவம் கொடுத்தாலும், அந்த உருவத்தையும் கடந்து நிற்கும் இறைவனுக்கு, எல்லாப் பொருட்களிலும் ஊடுருவி இருக்கும் ஒருவனுக்கு எந்த உருவம் பொருத்தமாக இருக்க முடியும். உருவமற்ற இயல்பே அவனது இயல்பான வடிவம் என்பதால் தான் அருவமாக இறைவனை நமது முன்னோர்கள் கருதினார்கள் எனினும் நமது சிந்தனை அலைகளை ஒருமுகப்படுத்த ஒரு உருவம் தேவைப் படுவதால், பல அடியார்களுக்கு இறைவன் காட்சி அளித்த கோலத்தினை நாம் உருவகித்து வழிபடுகின்றோம். அருவமும் உருவமும் ஆனாய் போற்றி என்று போற்றித் திருவகவல் பதிகத்தில் மணிவாசக அடிகளாரும் குறிப்பிடுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. ஒரு நாமம், ஒரு உருவம் இல்லாத பெருமான், பெருந்துறை குருந்த மரத்தின் அடியில் ஆசானாக காட்சி அளித்ததை குறிப்பிடும் மணிவாசகரின்திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலை (8.11.1) நாம் இங்கே காண்போம்.
திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (8.11.2) அருவாய் உருவமும் ஆய பிரான் என்று அடிகளார் பெருமானை குறிப்பிடுகின்றார். மேய=பொருந்திய; மருவும்=பொருந்தி உறையும்; பண்டைய நாட்களில், அரிசி பருப்பு மற்ற தானியங்களில் கலந்து காணப்படும் சிறு கற்கள், தூசிகள், மணல் முதலான மாசுகள் ஆகியவற்றை பிரிப்பதற்கு, தானியங்களை முறம் கொண்டு புடைப்பார்கள். அந்த செயலை தெள்ளேணம் என்று குறிப்பிடுவர். இத்தகைய செயல்கள் செய்யும் போது இறை சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல்கள் கொண்ட பதிகமாக இந்த பதிகம் அமைந்துள்ளது. உயிர்கள் பிறப்பெடுப்பதன் நோக்கமே, இறைவன் அளித்துள்ள கருவி கரணங்களை பயன்படுத்திக் கொண்டு மலங்களை முற்றிலும் கழித்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று முக்தி உலகம் சென்றடைந்து என்றும் அழியாத ஆனந்தத்தில் திளைத்து இருப்பது தானே. அந்த நிலையினை பெருமான் தனக்கு அருளிய காரணத்தால், தனக்கு வேறு எந்த தேவையும் இல்லை என்று பெருமிதத்துடன் குறிப்பிடும் அடிகளார், அதனால் தான் வேறெந்த தெய்வத்தையும் நினைக்கவும் இல்லை, காணவும் முயற்சி செய்யவில்லை என்று கூறுகின்றார்.
திருவார் பெருந்துறை மேய பிரான் என் பிறவிக்
கருவேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும்
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் பாடலில் (8.22.9) மணிவாசக அடிகளார் அருவம் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இறைவனை சோதியாக தான் கண்ட தன்மையை அடிகளார் இந்த பாடலில் உணர்த்துகின்றார். சோதிக்கு கை கால் உடல் கண் மூக்கு என்ற உறுப்புகள் இல்லாமையில் அருவம் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தம். மேலும் அருவமாக உருவம் ஏதும் இல்லாமல் இருப்பவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகவும், அந்தமாகவும், அந்த பொருட்களின் தோற்றத்திற்கும் அழிவினுக்கும் இடையே உள்ள தன்மையாகவும் இறைவன் இருப்பதை ஆதியே நடுவே அந்தமே என்று குறிப்பிட்ட அடிகளார் சொல்லுதற்கு அரிய என்ற அடைமொழியையும் இறைவனுக்கு அளிக்கின்றார். உலகினில் எந்த உயிரும் பொருளும் தோற்றம் நிலைபாடு மற்றும் அழிவு ஆகிய மூன்று நிலைகளில் இருப்பதை நாம் காண்கின்றோம். எந்த பொருளும் தோன்றுவதற்கு காரணமாக உள்ள கருவி அந்த பொருளை அழிப்பதில்லை. அதே போன்று அந்த பொருளின் அழிவுக்கு காரணமாக இருக்கும் கருவி அந்த பொருளை தோற்றுவிப்பதில்லை. தோற்றம் மற்றும் அழிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த பொருளை காக்கும் கருவி, அந்த பொருளை தோற்றுவிப்பதில்லை, அழிப்பதும் செய்வதில்லை. எனவே எந்த ஒரு பொருளுக்கும் தொடர்புடைய கருவி, சக்தி, ஏதோ ஒன்றினைத் தான் செய்கின்றது. ஆனால் இறைவன் ஒருவன் மட்டும் அனைத்துப் பொருட்களுக்கும் உயிர்களுக்கும், அவ்வவற்றின் தோற்றம் நிலைபாடு மற்றும் அழிவு ஆகிய மூன்றுக்கும் காரணமாக இருக்கின்றான். இந்த ஒப்பற்ற தன்மை, சொல்லுதற்கு அரிய என்ற தன்மையை உடையவன் இறைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். உலக வாழ்க்கையில் நமக்கு நன்மை பயக்கும் பொருளோ உயிரோ நமக்கு தீமை பயப்பதையும் காண்கின்றோம். ஆனால் இறைவனோ எப்போதும் நம்முடன் பிணைந்துள்ள வினைகளைத் தீர்ப்பதற்கு நமக்கு உதவி புரிந்து கொண்டே இருக்கின்றான். எனவே தான் அவரை தீதிலா நன்மை என்று குறிப்பிடுகின்றார். பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டுக் கொண்டு அதனின்று விடுபடும் வழியை அறியாமல் தவிக்கும் தனக்கு உய்யும் வழியினை காட்டி அருள் புரியுமாறு வேண்டுகின்றார்.
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற்கு அரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மாகடலே
தீதிலா நன்மைத் திருவருள் குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே
யாது நீ போவதோர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணையடி தந்தே
திருமந்திரம் ஏழாம் தந்திரத்தின் சதாசிவ லிங்கம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், சதாசிவனின் வடிவம் அருவம் என்றும் சக்தியின் வடிவம் உருவம் என்றும் குறிப்பிடுகின்றார். தாபரம்= நிலையாக ஓரிடத்தில் இருப்பது; சங்கமம்=உலாவும் தன்மை உடையது. இறைவன் திருவுருவம் கொள்கின்ற திருமேனிகள் சக்தியின் கூறாகவும் சதாசிவம் அருவத் திருமேனியாகவும் கருதப் படுகின்றது. சக்தியின் அம்சமாகிய பூமி பீடமாகவும் பரமனின் அம்சமாகிய ஆகாயம் பீடத்தின் மேல் உள்ள லிங்கமாகவும் கருதப் படுகின்றது என்று குறிப்பிடும் இந்த பாடலில் திருமூலர் இறைவனை அருவம் என்று குறிப்பிடுகின்றார்.
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம் மிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவம் தத்துவம் முப்பத்தாறே
மேற்கண்ட பாடலுக்கு அடுத்த பாடலில், பொதுவாக அருவமாக இருக்கும் சதாசிவம் விரிந்து அனைத்துத் தத்துவங்களாக உள்ளன என்றும் திருமூலர் கூறுகின்றார். சுகோதயம்=நலம் தரும் கருவி. தத்துவங்கள், உயிர்கள் தங்களது மலங்களை, மலங்களால் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நுகர்ந்து கழித்துக் கொள்ள உதவுவதால், அவற்றை உயிர்களுக்கு நன்மை பயப்பன என்று திருமூலர் இந்த பாடலில் கருதுகின்றார். அந்த தத்துவங்களாக இறைவனே இருக்கும் நிலையும் அந்த இறைவன் அருவமாக இருக்கும் நிலையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
தத்துவமாவது அருவம் சராசரம்
தத்துவமாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலுமுமாய் நிற்கும்
தத்துவமாகும் சதாசிவம் தானே
திருமந்திரம் ஆறாம் தந்திரத்தின் அபக்குவன் என்ற தலைப்பின் கீழுள்ள பாடலில் திருமூலர் பெருமானை உருவிலி என்று குறிப்பிடுகின்றார். பெருமான் உயிர்களுக்கு அருள் புரியும் தன்மையை உயிர்கள் உணர்ந்து கொண்டு அந்த உதவியை பயன்படுத்திக் கொண்டு உய்வினை அடைய வேண்டும் என்று இந்த பாடலில் திருமூலர் உணர்த்துகின்றார். ஏய் என்பது உயர்ந்தோர்கள் தாழ்ந்தோரை விளிக்கும் சொல்லாகும். நம்மிலும் உயர்ந்தவனாகிய இறைவன் அனைவரின் உள்ளத்திலும் குடி கொண்டுள்ளான். அவன் நம்முள் இருந்து குரல் கொடுக்கும் போது, அவனது குரலை அடையாளம் கண்டு கொண்டு, அவனது திருவுள்ளக் கருத்தினை புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் தான் அவனது அருள் நமக்கு கிடைக்கும். அவனது திருவுள்ளக் கருத்து தான் யாது. நிலையற்ற உலகப் பொருட்களின் மீது பற்று வைக்காமல், நிலையான பொருளாகிய இறைவனின் மீது பற்று வைத்து அவனைப் பணிந்து வணங்கி அவனது அருளால் உயிர்கள் தமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு, என்றும் அழியாத ஆனந்தத்தை தரும் முக்தி உலகம் சென்றடைய வேண்டும் என்பது தான் அவனது திருவுள்ளக் கருத்து. அத்தகைய வேட்கை நமக்கு ஏற்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு ஒரு உலகியல் நிகழ்ச்சியை உதாரணமாக கூறுகின்றார். அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று பொதுவாக சொன்னாலும், உண்மையில் நடப்பது என்ன. குழந்தை தனது வாயினால் தாயின் முலையைப் பற்றிக் கொண்டால் தானே, தாயின் முலையிலிருந்து பால் சுரக்கும். அது போன்றே இறைவன் நமக்கு அருள் புரிவதற்கு தயாராக இருக்கின்றான். தகுந்த உடலுடன் உயிரினை பொருத்தும் இறைவன், அந்த உயிர் தன்னை ஒழுங்காக அறிந்து கொண்டு தன்னை நாடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக கருவி கரணங்களை அளிக்கின்றான். அவற்றை சரியாக பயன்படுத்திக் கொண்டு இறைவனை அறிந்து கொண்டு, அவன் நமக்கு அருள் புரியும் பொருட்டு எப்போதும் தயார் நிலையில் இருப்பதை புரிந்து கொண்டு, அந்த வழியை நாடிச் செல்ல வேண்டும் என்பதை இந்த பாடலில் திருமூலர் உணர்த்துகின்றார்.
ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுரம் நின்று ஊறிடும்
தாய்முலை யாவது அறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே
திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் மோன சமாதி அதிகாரத்தின் பாடலில் திருமூலர், இறைவனை உருவிலி என்று குறிப்பிட்டு அவ்வாறு இருப்பது இறைவனின் இயல்புகளில் ஒன்று என்று கூறுகின்றார். தனக்கென ஒருருவம் இல்லாதவன் இறைவன். அவன் அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு, அந்தந்த அடியார்களின் தேவைக்கு ஏற்ப பல உருவங்களை எடுக்கின்றான். எனினும் அந்த உருவங்கள் எவையும், நமது உடல்கள் போன்று உலக மாயா காரியங்களுக்கு உட்பட்டதல்ல. எனவே ஊனமுடைய நமது உடல்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவையாக அவை விளங்குகின்றன. இதனை உணர்த்தவே ஊனமிலி என்று கூறுகின்றார். குறைவிலா நிறைவாக அவன் இருப்பதால் எந்த விதமான ஊனமும் இல்லாதவனாக அவன் விளங்கும் தன்மையை ஊனமொன்று இல்லி என்று குறிப்பிடுகின்றார். அவனாக எந்த செல்வத்தையும் விரும்பி நாடுவதில்லை; அனைத்துச் செல்வங்களும் தாமே விரும்பி அவனைச் சென்று அடையும் தன்மை இங்கே திருவிலி என்று உணர்த்தப் படுகின்றது. எவருக்கும் தீமை செய்யாமல் நன்மையே புரியும் பெருமான் தீதிலி என்று அழைக்கப் படுகின்றார். பொருவு=ஒப்பு. தனக்கு நிகராக தன்னை மட்டுமே உடைய பெருமானை ஒப்பிலி என்றும் நேரிலி என்றும் துணையிலி என்றும் பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றார். மருவு என்ற சொல்லுக்கு அடையாளம் என்று பொருள் கொண்டு, தான் போந்த சுவடு ஏதும் இல்லாத வண்ணம் தனது மனதினில் புகுந்தவன் பெருமான் என்று திருமூலர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு, என் மனமே புகுந்தனன் போந்த சுவடில்லையே என்று அப்பர் பிரான் தில்லைப் பதிகத்தின் பாடலில் குறிப்பிடுவதை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது (தில்லைச் சிதம்பரம் 4,81.2—ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை, கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்கா, சென்று தொழுமின் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம், என்று வந்தாய் என்னும் எம்பெருமான்றன் திருக்குறிப்பே). ,
உருவிலி ஊனமிலி ஊனமொன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப்படை உடையாளி
மருவிலி வந்தென் மன்ம் புகுந்தானே
அருவமாக விளங்கும் பெருமான் அடியார்களுக்கு அருள் புரிவதற்காக பல உருவங்கள் எடுக்கின்றான் என்பதையும் அவ்வாறு எடுக்கும் உருவங்கள், நமது உடல்களிலிருந்து மாறுபட்டு, ஊனம் அற்றவையாக விளங்குகின்றன என்பதையும் நாம் மேற்கண்ட திருமந்திரம் பாடலிலிருந்து அறிந்து கொள்கின்றோம். தனது அடியார்களாகிய பிரமனும் திருமாலும், தான் எனும் மமதையில் ஆழ்ந்து மயக்கம் அடைந்து, தங்களில் யார் பெரியவர் என்ற வாதத்தில் தொடர்ந்து ஈடுபட்ட போது, அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வண்ணம், பெருமான் நெடிய தீப்பிழம்பாக நின்ற திருக்கோலம் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. உலகத்து உயிர்களின் வடிவங்கள் அனைத்தும் ஒரு நீள அளவைக்கு உட்பட்டவையாக இருக்கும் நிலையில், அத்தகைய அளவைக்கு அடங்காமல், தீப்பிழம்பாக தோன்றிய பெருமான் இருந்ததால் தான் பிரமனும் திருமாலும் தீப்பிழம்பினை அளந்து அடியையும் முடியையும், காண முடியாமல் திகைத்தனர்.
பொழிப்புரை:
அருவனாக, உருவமற்றவனாக விளங்கும் பெருமான், ஆலவாய் என்று அழைக்கப் படும் மதுரை தலத்தினில் பொருந்தி காட்சி தருகின்றான். அத்தகைய பெருமான், பண்டைய நாளில், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும், நெடிய தீப்பிழம்பாகத் தோன்றிய தனது அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம் ஓங்கி நின்றான்.
பாடல் 10:
ஆர நாகமாம்
சீர னாலவாய்த்
தேர மண்செற்ற
வீர னென்பரே
விளக்கம்:
முதல் பாடலில் பின்னாளில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி, திருஞானசம்பந்தர், சமணர்களையும் புத்தர்களையும் வெற்றி கொண்டதன் மூலம் சைவ சமயத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்ததை உணர்த்தியது போன்று, எதிர்காலத்தில் சமணர்களையும் புத்தர்களையும் திருஞானசம்பந்தர் வெற்றி கொண்ட செய்கை, இந்த பாடலில் முன்கூட்டியே உணர்த்தப் படுகின்றது. சீர்=சிறப்பு வாய்ந்த; மதுரை மாநகரம் பல சிறப்புகள் பெற்ற திருத்தலம். அத்தகைய சிறப்புகளில் ஒன்று தான், பாம்பினால் சுட்டிக் காட்டப்பட்ட எல்லைகள் கொண்ட தன்மை. இந்த சிறப்பினை நாம் இந்த பதிகத்தின் முன்னுரையில் கண்டோம். இந்த தன்மையை, ஆலவாய் என்ற பெயர் தலத்திற்கு உள்ள தன்மையை பாடல் தோறும் குறிப்பிட்ட திருஞான சம்பந்தருக்கு, பாம்புகள் இறைவனுக்கு அணிகலனாக இருக்கும் தன்மையை நினைவூட்டியது போலும். பாம்பு இறைவனின் கழுத்தினில் மாலையாக இருக்கும் தன்மையை இந்த பாடல் குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
தனது கழுத்தினில் பாம்பினை மாலையாக அணிந்து கொண்ட பெருமான், பல சிறப்புகள் வாய்ந்த ஆலவாய் என்று அழைக்கப் படும் மதுரை தலத்தினை, தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளான். அவனை புத்தர்களையும் சமணர்களையும் வெற்றி கொண்ட வீரன் என்று அடியார்கள் புகழ்கின்றனர்.
பாடல் 11:
அடி களாலவாய்ப்
படிகொள் சம்பந்தன்
முடிவில் இன்றமிழ்
செடிக ணீக்குமே
விளக்கம்:
செடிகள்=பாண்டிய நாட்டுக்கும் சைவ சமயத்திற்கும் நேர்ந்த கொடுமைகள்; பாண்டிய நாடே பழம்பதி ஆகவும் என்று மணிவாசக அடிகளார் திருவாசகத்தில் குறிப்பிட்ட வண்ணம், பண்டைய நாளிலிருந்தே சிறந்த சிவத்தலமாக விளங்கிய நகரம் மதுரை மாநகரம். அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த தலம், நெடுமாற பாண்டியனின் காலத்தில், சமணர்களின் ஆதிக்கம் மேலோங்க, சைவ சமயம் குன்றிய நிலையில் சிறப்பிழந்து காணப்பட்டது. பெருமானின் திருவருளே துணையாகக் கொண்டு திருஞான சம்பந்தர் அனல் வாதம் மற்றும் புனல் வாதத்தில் சமணர்களை வென்று சைவ சமயத்தின் மேன்மையை மீண்டும் நிலைநாட்டவே, தான் இழந்த பெருமையை மீண்டும் பெற்று பொலிவுடன் விளங்கியது. இந்த பயன் இந்த திருப்பதிகத்தின் விளைவால், உடனே நிகழ்ந்த அதிசயமாகும். அதனை உணர்த்தும் வண்ணம் செடிகள் நீக்குமே என்று திருஞான சம்பந்தர் பாடியதாக பொருள் கொள்வதும் மிகவும் பொருத்தம். அடிகள்=தலைவர். படி கொள்=தோய்ந்த, திருவருளில் தோய்ந்த;
பொழிப்புரை:
ஆலவாய் என்று அழைக்கப் படும் மதுரை நகரத்தின் தலைவராகிய பெருமானைப் புகழ்ந்து, பெருமானின் திருவருளில் தோய்ந்தவனாகிய ஞானசம்பந்தன், இயற்றியதும் என்றும் அழிவின்றி நிலையாக நிற்கும் தன்மை உடையதும் ஆகிய இனிய தமிழ் பதிகம், அதனை ஓதுவோருக்கு கேடு விளவிக்கும் வினைகளை முற்றிலும் நீக்கிவிடும்.
முடிவுரை:
பெருமானின் திருக்கோயிலின் உள்ளே திருஞானசம்பந்தர் நுழைந்தபோதே, அந்த கோயிலில் இருந்த அரசியார், திருஞானசம்பந்தர் முன்னே எதிர்ப்படாமல் ஒதுங்கியிருந்தார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. இந்த நிகழ்ச்சி, அரசியார் திருஞானசம்பந்தர் பால் வைத்திருந்த மதிப்பினை உணர்த்துகின்றது. நாம் மதிக்கும் பெரியவர்கள் வரும் போது அவர்களின் எதிரே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற வாழ்வியல் கருத்தை, அரசியாரின் இந்த செயல் உணர்த்துகின்றது. திருக்கோயிலின் உள்ளே இறைவனைப் பணிந்து வணங்கி பதிகம் பாடி வழிபட்ட திருஞானசம்பந்தர், சன்னதியை விட்டுவெளியே வந்த போது, திருஞானசம்பந்தரின் எதிரே சென்று, அவரது திருவடிகளை அரசியார் வணங்குகின்றார். அப்போது திருஞானசம்பந்தர், தரையில் விழுந்து வணங்கிய அரசியாரை தனது திருக்கைகள் கொடுத்து எழுப்புகின்றார். திருஞானசம்பந்தரைக் கண்ட உடனே, பாண்டிய நாட்டினில் சைவ மறுமலர்ச்சி ஏற்படும் என்றும் சமணர்களின் ஆதிக்கத்திலிருந்து பாண்டிய நாடு விடுதலை அடையும் என்ற நம்பிக்கையும் அரசியாருக்கு ஏற்படவே, அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்த அரசியாரின் வாய் குழறியது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அப்போது அரசியார், தானும் தனது கணவராகிய பாண்டிய மன்னனும், திருஞானசம்பந்தர் மதுரை நகருக்கு வருகை புரிவதற்கு செய்த தவம் தான் என்னே வியந்து கூறுகின்றார். அதற்கு பதிலாக, திருஞானசம்பந்தரும், சுற்றிலும் பரவிய புறச் சமயச் சூழலிலும் இடைவிடாது சைவநெறியை பின்பற்றும் தொண்டர்களாகிய அரசி மங்கையர்க்கரசியாரையும் அமைச்சர் குலச்சிறையாரையும் காணும் பொருட்டு தான் வந்ததாக கூறுகின்றார். அப்போது மந்திரியார் குலச்சிறையார், பாண்டிய நாட்டினில் சமணர்களால், சைவ நெறிக்கும் சைவ அடியார்களுக்கு நிகழ்ந்த கேடுகளை எடுத்துரைத்தார். பின்னர் அரசியாருக்கு விடை கொடுத்த அனுப்ப, குலச்சிறையார் திருஞானசம்பந்தரையும் அவருடன் வந்த தொண்டர்களையும், அவர்கள் ஒதுக்கப் பட்டிருந்த திருமடத்திற்கு அழைத்துச் சென்றார் என்பதை பெரிய புராணம் உணர்த்துகின்றது. பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்து கொடிய விடமாக பரவி, அனைவரையும் அழித்து விடும் நிலையில் இருந்த ஆலகால விடத்தினை அனைவரையும் காத்த பெருமானின் கருணைச் செயலை முதல் பாடலில் குறிப்பிடுவதன் மூலம், கருமேகம் போன்று சைவ சமயத்தைச் சூழ்ந்திருந்த சமண மதத்தவர்களின் ஆதிக்கம் முற்றிலும் ஒடுக்கப் பட்டு சைவ மதத்தின் மேன்மை நிலைநாட்டப் படும் என்பது முதல் பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. மேலும் சிவபெருமானின் அடியார்கள் உலகினை ஆள்வார்கள் என்று குறிப்பிட்டு, சைவ சமயம் எதிர்கொள்ள இருந்த வெற்றியும் உணர்த்தப் படுகின்றது. எமபயம் இன்றி வாழும் வழியினை இரண்டாவது பாடலில் உணர்த்தும் திருஞானசம்பந்தர், மூன்றாவது பாடல் மூலம், காலகாலனாகிய சிவபெருமானின் அடியார்களாக மாறவேண்டும் என்ற அறிவுரையை அளிக்கின்றார். பெருமானை சிந்தை செய்யவேண்டும் என்று நான்காவது பாடலிலும் அவனது புகழினை பாடியே அவனை நாட வேண்டும் என்று ஐந்தாவது பாடலிலும் குறிப்பிடும் திருஞான சம்பந்தர் அவ்வாறு வாழ்வதால் நமக்கு இன்பம் உறுதியாக விளையும் என்று ஆறாவது பாடலிலும் துன்பங்கள் களையப்படும் என்று ஏழாவது பாடலிலும், அவ்வாறு வாழும் அடியார்களுக்கு இறைவன் திண்ணமாக அருள் புரிவான் என்று எட்டாவது பாடலிலும் கூறுகின்றார். ஒன்பதாவது பாடலில் பிரமன் மற்றும் திருமால் கொண்டிருந்த செருக்கு, பெருமானால் நீக்கப் பட்ட தன்மையை குறிப்பிட்டு, அவ்வாறே இறைவனின் திருவருளால் சமணர்களின் கொட்டம் அடக்கப் படும் என்பதை உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த செயலின் காரணமாக அனைவரும் பெருமானை வீரன் என்று புகழ்வார்கள் என்று பத்தாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடல், இந்த பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள், தங்களுக்கு வரும் கேட்டினை நீக்கிக் கொள்வார்கள் என்று உணர்த்துகின்றார். இந்த பதிகம் அளிக்கின்ற பலனையும், சிவபெருமானை வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் பயன்களையும் புரிந்து கொள்ளும் நாம், நால்வர் பெருமானார்கள் அருளிய தேவார திருவாசகப் பாடல்களை முறையாக ஓதி இறைவனின் அருள் பெறுவோமாக.