பதிக எண்: 2.87 திரு நறையூர் சித்தீச்சரம் பியந்தை காந்தாரம்
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக நறையூர் சித்தீச்சரம் சென்ற திருஞான சம்பந்தர், அந்த தலத்தின் மீது அருளிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. ஊருலாவு பலி கொண்டு என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், திருஞானசம்பந்தர், தனது நெஞ்சத்தை விளித்து சித்தீச்சரம் செல்வாய் என்றும், நினைவாய் என்றும், சென்றடைவாய் என்றும், தெளிந்து நினைவாய் என்றும், பல பாடல்களில் குறிப்பிடுவதால், இந்த தலம் செல்லும் வழியில் அருளிய பதிகமாக, இந்த பதிகம் கருதப் படுகின்றது. பிறைகொள் சடையர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல் ஒன்றினில் பல சித்தர்களும் பக்தர்களும், பெருமானைப் புகழ்ந்து பாடி கொண்டாடிய செய்தி குறிப்பிடப்படுகின்றது. அவர்களின் நம்பிக்கைக்கு உரியவனாக, பெருமான் விளங்கிய காரணத்தால் தான், சித்தர்களும் பக்தர்களும் பெருமானை அவ்வாறு கொண்டாடினர் போலும். இந்த தலத்தின் மீது அருளிய மூன்றாவது பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் நறையூர் நம்பன் என்று அழைக்கின்றார். நம்பன் என்றால் நம்பிக்கைக்கு உரியவன் என்றும் விரும்பப்படுபவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். பெருமான் இந்த இறந்த வகையான பொருளுக்கும் பொருத்தமானவனாக இருக்கும் தன்மையை நாம் உணரலாம்.அடியார்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதால் பரமனை, அடியார்கள் மிகவும் பெருமானை விரும்புகின்றனர் என்று உணர்த்தும் வண்ணம், சிவபெருமானை நம்பன் என்று தேவார முதலிகள் பல பாடல்களில் குறிப்பிடுகின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (1.15.04) திருஞான சம்பந்தர், பெருமானை நம்பன் என்று குறிப்பிடுகின்றார். சுடுநீறு=சுடுகாட்டு சாம்பல் ஆகிய திருநீறு; வாள்=ஒளி பொருந்திய; நெடு=நீண்ட; நள்ளிருள்=அடர்ந்த இருள்; எங்கும் இருள் சூழ்ந்து காணப்படும் ஊழிக்காலம்;கடு=கொடுமை நிறைந்த; மந்திர மலையினை மத்தாக பாவித்து, தன்னைக் கயிறாக சுற்றி கடைந்த போது வாசுகி பாம்பு உடல் வருத்தம் தாளாமல் உமிழ்ந்த நஞ்சு; நஞ்சினை உட்கொண்டு அனைவரையும் காப்பாற்றிய பெருமானை அனைவரும் விரும்புகின்றனர் என்று உணர்த்தும் பாடல்.
சுடுநீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி
நடு நள்ளிருள் நடம் ஆடிய நம்பன் உறை இடமாம்
கடு வாள் இள அரவாடு உமிழ் நஞ்சம் அது உண்டான்
நெடு வாளைகள் குதி கொள்ளுயர் நெய்த்தானம் எனீரே
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.25.03) திருஞானசம்பந்தர், நம்பனாகிய பெருமானின் புகழை எடுத்து உரைக்காமல் இருப்பவர்களின் ஊனம் ஒழியாது என்று கூறுகின்றார். பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து மீள முடியாமல் இருக்கும் தன்மையே,உயிரின் ஊனமாக, உயிரின் குற்றமாகக் கருதப்படுகின்றது. இந்த நிலைக்கு காரணம், உயிர்கள் முந்திய பல பிறவிகளில் சேர்த்துக் கொண்டுள்ள வினைகளின் தொகுதியே. ஆணவ மலம் தான், உயிர்கள் சேர்த்துக் கொள்வதற்கு காரணமாக இருப்பதால், ஆணவமலம் முற்றிலும் அடக்கி ஒடுக்கப்பட்டால் தான், உயிர் மேலும் மேலும் மலங்களைச் சேர்த்துக் கொள்வதை தடுக்க முடியும். அவ்வாறு தடுத்த பின்னர், ஏற்கனவே சேர்ந்துள்ள மலங்களை,இறைவனின் அருளாலும் நுகர்ந்தும் கழித்துக் மலமற்ற தன்மையில் விளங்கி உயிர் முக்தி அடைவதற்கு தகுதி பெறமுடியும். எனவே ஆணவ மலம் ஒழிந்து,உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினால், பெருமானின் புகழினை உணர்ந்து அந்த புகழினை மீண்டும் மீண்டும் பேச வேண்டும் என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது.
வரையார் சந்தோடு அகிலும் வரு பொன்னித்
திரையார் செம்பொன்பள்ளி மேவிய
நரையார் விடை ஒன்று ஊரும் நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா ஊனமே
பாம்புரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.41.04) நள்ளிருளில் நடனம் ஆடும் பெருமானை நம்பன் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.நள்ளிருள் என்பது இங்கே முற்றூழிக் காலத்தை குறிக்கின்றது. ஊழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் தாங்கள், அந்நாள் வரையில் குடிகொண்டிருந்த உடல்களை விட்டுப் பிரிந்தாலும், முக்தி நிலை அடைந்த உயிர்கள் தவிர்த்து எஞ்சிய உயிர்கள் அழியாமல் இறைவனிடம் ஒடுங்குகின்றன. அத்தகைய உயிர்களும், தங்களது மலங்களைக் கழித்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பும் இறைவன், அந்த உயிர்களுக்கு பிறப்பினை அளித்து, அந்த பிறவிகள் தங்களது வினைகளை நுகர்ந்துக் கழித்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கின்றார். பெருமான் இவ்வாறு உதவி புரிவது, நள்ளிருளில் நட்டம் புரிகின்ற சமயத்தில் தான் நடைபெறுகின்றது. எனவே இவ்வாறு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்ற உயிர்கள் பெருமானை விரும்புவதில் வியப்பேதும் இல்லை. இந்த செய்தியையே இங்கே திருஞானசம்பந்தர் நள்ளிருளில் நடம் செயும் நம்பர் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். இவ்வாறு உயிர்களை பிறப்பிறப்புச் சுழற்சியில் ஈடுபடுத்தும் பெருமான் தான், இறப்பினையும் பிறப்பையும் கடந்தவராக உள்ளார் என்று கூறுகின்றார். மஞ்சு=மேகம்; துஞ்சு நாள்=இறக்கும் நாள்; பஞ்சு சேர்=செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்ற;
துஞ்சுநாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம் பெருமான்
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள்ளிருள் நடம் செயும் நம்பர்
மஞ்சு தோய் சோலை மாமயிலாட மாடமாளிகை தன் மேலேறிப்
பஞ்சு சேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே
கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், திருஞானசம்பந்தர், நம்பனாக கருதப்படும் இறைவனை, அடியார்கள் தங்களது செல்வமாக மதிக்கின்றனர் என்று கூறுகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வத்தை உடைய பெருமானை, அந்த முக்திச் செல்வத்தை தனது அடியார்களுடன் பகிர்ந்து கொள்ளும் பெருமானை, அடியார்கள் தங்களது செல்வமாகவே கருதுவதால், பெருமானை அவர்கள் மிகவும் விரும்புகின்றனர் என்பதை உணர்த்த, நம்பன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கொம்பு=கொடி கொம்பு; கொம்பனையாள்=பார்வதி தேவி;மாடு=செல்வம்; வம்பு=நறுமணம்; இன்பமர=இன்பு அமர; இன்பம் பொருந்தும் வண்ணம்; தேவாரப் பாடல்களைப் பாடுவதால் பாடுவோருக்கு இன்பம் ஏற்படும் என்று திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.
நம்பனை நல்லடியார்கள் நாமுடை மாடு என்றிருக்கும்
கொம்பனையாள் பாகன் எழில் கோளிலி எம் பெருமானை
வம்பமரும் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ் கொண்டு
இன்பமர வல்லார்கள் எய்துவார்கள் ஈசனையே
பழன நகரத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.67) முதல் பாடலில், தன்னிடம் மிகுந்த நம்பிக்கை வைத்து நம்பா என்று தனது திருப்பாதங்களைத் தொழும் அடியார்களின் பாவங்களைத் தீர்ப்பவர் பழன நகரத்து இறைவன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நக்கன்=குறைந்த ஆடையினை அணிந்தவன்;பெருமான் விலை உயர்ந்த ஆடைகளைத் தவிர்த்து, கோவணம் அணிந்து எளிமையாக இருக்கும் தன்மையை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.இறைவன் நமக்கு பல விதங்களிலும் நன்மை செய்தும், நமது பல வேண்டுகோளை நிறைவேற்றியும் அருள் புரிவதால், நாம் விருப்பம் கொள்வதற்கு அவனை விடவும் அதிகமான தகுதி படைத்தவர் வேறு எவரும் இல்லை அல்லவா.
வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரி தோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே
இதே பதிகத்தின் எட்டாவது பாடலில், கயிலை மலையின் கீழ் இடுக்குண்டு அவதிப்பட்ட அரக்கன் இராவணன், மிகுந்த நம்பிக்கையுடன் சாமகானம் பாடி இறைவனை மகிழ்வித்து, பல அருள்கள் பெற்ற பின்னர், இராவணனால் மிகவும் விரும்பப்படும் தலைவனாக சிவபிரான் இருந்ததைக் குறிப்பிடும் முறையில்,இந்த பாடலில் நம்பான் என்று திருஞானசம்பந்தர் அழைப்பதை நாம் காணலாம். நம்பன் என்ற சொல் நம்பான் என்று விரிந்தது. மாறா எடுத்தான்=தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்பதால் தனக்கு எதிரியாக கருதி மலையை பேர்த்து எடுக்க துணிந்தவன்: மஞ்சு=மேகம்: அரக்கனின் உயர்ந்த உருவம் இங்கே உணர்த்தப்படுகின்றது. பைந்தாமரை=பசுமையான தாமரை மலர்கள்
மஞ்சோங்கு உயரம் உடையான் மலையை மாறா எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சு ஆறு நான்கும் அடர ஊன்றினார்
நஞ்சார் சுடலைப் பொடி நீறு அணிந்த நம்பான் வம்பாரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே
எண்ணற்ற பல பிறவிகளில் செய்த செயல்கள் காரணமாக, உயிர்கள் சேர்த்துக் கொண்டுவரும் வினைகளை, வலிமையாக உயிருடன் பற்றியுள்ள வினைகளை, உயிர்கள் நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து அந்த வினைகளை நுகர்ந்து கழிக்கும் முயற்சியில், உயிர்கள் மேலும் பல புதிய வினைகளை (ஆகாமிய வினைகள் என்று சொல்வார்கள்) சேர்த்துக் கொள்வதால், புதியதாக சேர்ந்த அந்த வினைகளையும் கழிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றன. இவ்வாறு பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீளமுடியாமல் தவிக்கும் உயிர்கள் தங்களின் வினைகளை எளிதில் தீர்த்துக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி சிவபெருமானை வழிபடுவது தான் என்பதால், உயிர்கள் விரும்புவதற்கு உரியவனாக சிவபெருமான் இருக்கின்றார் என்று உணர்த்தும் பாடல் ஈங்கோய் மலை தலத்தின் மீது அருளப்பட்ட பாடலாகும் (1.70.7). வேறு எவராலும் தீர்க்கமுடியாத வினைகளை தீர்க்கும் வல்லமை வாய்ந்தவர் சிவபெருமான் என்பதால், அவரை விகிர்தா என்று திருஞானசம்பந்தர் இங்கே அழைக்கின்றார். விகிர்தர் என்றால் மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்று பொருள். தனையார்=பூக்களில் சிறந்த பூவாக இருப்பதால், தலைமையான பூ என்று தாமரை மலரை குறிப்பிடுகின்றார். மறுவாழ்வு அளித்தமையால் சந்திரன் விரும்பும் தன்மையில் உள்ள பெருமான், தீர்க்க முடியாத வலிய வினைகளைத் தீர்ப்பதால், உயிர்கள் விரும்பும் தகுதி படைத்தவனாக உள்ளான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை
நனையார் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நல மல்கு
தனையார் கமல மலர் மேல் உறைவான் தலையோடு
எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே
அனைவரும் விரும்புவதற்கு தகுதி வாய்ந்தவராக விளங்கும் பெருமானின் தன்மையை புரிந்து கொள்ளாமல், அவரை விரும்பித் தொழுவதற்கு பதிலாக,சிரித்து ஏளனம் செய்யும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் பரிதாப நிலையினை இந்த பாடலில் (1.82.10) திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். சிக்கார்=சிக்கு பிடித்த உடை; தட்டு=ஓலைத் தடுக்கு; சிறிய ஓலைத் தடுக்கையே தங்களது உடையாகக் கொண்ட சமணர்கள்;பெருமானின் தன்மையை புரிந்து கொண்டு, மறைகளை ஓதி, வேள்விகள் செய்தும் மிகுந்த விருப்பத்துடன் பெருமானை வழிபடும் வீழி மிழலை அந்தணர்கள், தகுதி வாய்ந்தவர்களாக உலகினில் மேம்பட்டவர்களாக வாழும் நிலையும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. அலர்=வீண்பழி;
சிக்கார் துவராடைச் சிறுதட்டு உடையாரும்
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்
தக்கார் மறை வேள்வித் தலையாய் உலகுக்கு
மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே
அனைவரின் விருப்பத்துக்கு உரியவனாக விளங்கும் பெருமானின் திருவடிகளின் சிறப்பினை நாள்தோறும் சொல்லாத மனிதர்களின் குற்றங்கள் தீரா என்று அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றனில் (1.83.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உயிரின் குற்றமாக கருதப் படுவது, உயிருடன் பிணைந்துள்ள வினைகளும் அவற்றின் தன்மையால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் நிலையும் தான். எனவே பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொள்வதற்கு நாம் வழிபட வேண்டியது சிவபெருமான் ஒருவனைத் தான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊனம் என்பதற்கு பழி பாவம் என்று பொருள் கொண்டு,சந்திரன் சிவபெருமானை வழிபட்டு, தனது பாவங்களைத் தீர்த்துக் கொண்டது போன்று நாமும் பயனடைய வேண்டும் என்று ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. குற்றம் நீங்கிய சந்திரனை செல்வ மதி என்று கூறுகின்றார். நரையார் விடை=வெண்மையான இடபம்;
திரையார் புனலொடு செல்வ மதி சூடி
விரையார் பொழில் அம்பர் மாகாளம் மேய
நரையார் விடையூரும் நம்பான் கழல் நாளும்
உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே
பெருமானை நம்பி வாழ்பவர்களின் துன்பங்கள் நீங்கிவிடும் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பெருமானை நம்பன் என்று அழைக்கும் பாடல் திருவாலவாய் தலத்து பதிகத்தின் (1.94.7) பாடல்.
அம்பொன் ஆலவாய் நம்பனார் கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே
நம்பான் மேய நன்னகர் போலும் குற்றாலம் என்று உணர்த்தும் பாடல் மூலம் (1.99.1), நமது நம்பிக்கைக்கு உரியவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வம்பு=புதுமை; எத்தனை முறை கண்டாலும் புதுமையுடன் விளங்கும் குற்றாலம் என்று கூறுகின்றார். வம்பு என்பதற்கு நறுமணம் என்று பொருள் கொண்டு, நறுமணம் கமழும் குற்றாலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கொம்பு=கிளைகள், இங்கே வேங்கை மரத்தின் கிளைகள். அம் என்ற சொல்லினை ஆடல் என்ற சொல்லுடன் பொருத்தி, அழகிய நீராடல் என்று பொருள் கொள்ள வேண்டும். கோல வண்டு=அழகிய வண்டுகள்; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமானை, ஞானசம்பந்தர் நம்பான் என்று அழைக்கின்றார். குறும்பலா என்று குறிப்பிட்டு குற்றாலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.71) இரண்டு பாடல்களிலும், பெருமானை நம்பான் என்று சம்பந்தர் அழைக்கின்றார். பெருமானை அபிஷேகப் பிரியன் என்று கூறுவார்கள்;அதற்கு ஏற்றாற்போல் அவன் நீராடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருப்பதால், அழகிய நீராடல் என்று குறிப்பிட்டார் போலும்.
வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக்
கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ் செய் குற்றாலம்
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்
கொடிமாடச் செங்குன்றூர் (தற்போதைய பெயர் திருச்செங்கோடு) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.9) அனைத்து உயிர்களாலும் விரும்பித் தொழப்படும் பெருமானின், திருப்பாதங்களை வணங்கும் அடியார்களின் வினை நாசமாகிவிடும் என்று கூறுகின்றார். தாள்=பாதம்; அம்=அழகிய;அம்பவள=அழகிய பவளம்; திரள்=கூட்டம், கொத்து; கொம்பு= மரக்கிளைகள்; அணவும்=செறிந்து, அடர்த்தியாக காணப்படும்; மேய=நிலையாக பொருந்திய;
செம்பொனின் மேனியனாம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம்பவளத் திரள் போல் ஒளியாய ஆதி பிரான்
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே
கள்ளில் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.119.6) பெருமான் ஏற்கும் பலியினை திருஞானசம்பந்தர் மக்களுக்கு நலம் பயக்கும் பலி என்று குறிப்பிடுகின்றார். சிவபிரான் பலி ஏற்பது நம்மிடம் உள்ள தீய குணங்களை, மலங்களை, அவனது பிச்சை பாத்திரத்தில் இட்டு நாம் தூய்மை அடைவதற்காகத் தான். இந்த கருத்தினை உள்ளடக்கி, மக்களுக்கு நன்மைகள் ஏற்பட பலியேற்கும் கொள்கை உடையவன் சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் நன்மை புரிய காத்திருக்கும் சிவபெருமானை நமது விருப்பத்திற்கு உரியவன் என்று அழைத்து நாம் அவனை ஏன் விரும்பவேண்டும் என்பதையும் நமக்கு திருஞானசம்பந்தர் உணர்த்துகினார். தன்னை அடைய விரும்பி தவம் புரிவோர்க்கு சிவபெருமான் அத்தகைய அடியார்களின் மலங்களை நீக்குவான் என்றும் இங்கே கூறுகின்றார்.
நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்
மலனாய தீர்த்து எய்து மாதவத்தோர்க்கே
இங்கே பல பாடல்களில் குறிப்பிடப்பட்ட வண்ணம், நம்பனாக, அனைத்து உயிர்களும் விரும்பத் தக்கவனாக, அனைத்து உயிர்களும் தன்னிடம் நம்பிக்கை கொள்ளும் வண்ணம் செயல்படுபவனாக விளங்கும் பெருமானின் திருநாமத்தைச் சொல்லாத நாவினை, நா என்று அழைப்பது தவறு என்று திருஞானசம்பந்தர், அநேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.5.3) குறிப்பிடுகின்றார்.
செம்பினாரும் மதில் மூன்று எரியச் சினவாயதோர்
அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம்
கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல்லேறு உடை
நம்பன் நாமம் நவிலாதன நாவெனல் ஆகுமே
தன்னை அணுகும் அடியார்களின் வினைகளை நாசம் செய்யும் பெருமானை நம்பான் என்று அழைப்பது தானே பொருத்தம். நமது வினைகளை நாசம் செய்யும் பெருமான், நமக்கு செய்யும் மற்ற உதவிகளையும் குறிப்பிட்டு, பெருமானை ஏன் நாம் நம்பான் என்று அழைக்கவேண்டும் என்பதை சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடலில் (2.11.7) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நம்மை திருத்தும் வண்ணம் பல துன்பங்களை நமக்கு அளித்து நம்மை நல்வழிப்படுத்தி திருத்தியும், நாம் துயரடையும் தருணங்களில் நமது துன்பங்களைத் தீர்த்தும் அருள் புரியும் இறைவன் இன்ப வடிவினாகவும் அன்பு வடிவினனாகவும் இருக்கின்றார். அவர், ஏழிசையின் நுணுக்கங்களை அறிந்து பாடல்களுக்கு உரிய பண்ணுடன் இசைத்துப் பாடிப் போற்றும் அடியார்களை பேணி பாதுகாக்கின்றார் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
துன்பானைத் துன்பம் அழித்து அருளாக்கிய
இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார்
அன்பானை அணிபொழில் காழி நகர் மேய
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே
அடியார்கள் விரும்பும் நம்பனாக இருப்பதால், அடியார்கள் அவனை என் பொன் என்றும் என் மணி என்றும் அவனை புகழ்கின்றனர் என்று திருஞானசம்பந்தர்,இந்திர நீலபர்ப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடல் ஒன்றினில் (2.27.3) குறிப்பிடுகின்றார்.
என் பொன் என் மணி என்ன ஏத்துவார்
நம்பன் நான்மறை பாடு நாவினான்
இன்பன் இந்திரநீலப் பர்பதத்து
அன்பன் பாதமே அடைந்து வாழ்மினே
அடியார்களை ஆட்கொண்டு ஆட்சி புரிபவன் என்பதால், மிகுந்த விருப்பத்துடன் அவனை நம்பன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் பழுவூர் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (2.34.5). இந்த பாடலில் வேத மந்திரங்களை சொல்லி அந்தணர்கள் இறைவனின் திருவடிப் பெருமைகளை குறிப்பிடுவதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார், சாதல் புரிவார் சுடலை=இறந்தவர்கள் எரிக்கப் படும் சுடுகாடு
சாதல் புரிவார் சுடலை தன்னில் நடமாடும்
நாதன் நமை ஆளுடைய நம்பன் இடம் என்பர்
வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன் தன்
பாதம் அவை ஓத நிகழ்கின்ற பழுவூரே
தாங்கள் மிகவும் விரும்பும் நம்பனாகத் திகழ்கின்ற பெருமானின் சிறந்த நாளாக கருதப்படும் ஆதிரை நாளன்று அவனது திருநாமங்களைச் சொல்லி அடியார்கள் ஏத்துகின்றனர் என்று ஆமாத்தூர் தலத்து பதிகத்தின் பாடலில் (2.44.8) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு பேசப்படும் பெருமானின் திருமானின் திருநாமங்களைக் கேளாத செவிகள் செவிட்டுச் செவிகள் என்றும் இந்த பாடலில் சாடுகின்றார். தாள்=திருப்பாதம்;
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன் தன்
நாள் ஆதிரை நாள் என்றே நம்பன் தன் நாமத்தால்
ஆளானார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே
நாலூர் மயானம் என்ற தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றிலும் (2.46.5) பெருமானை நம்பான் என்று குறிப்பிட்டு, அவனது திருவடிகளையே நினைத்து மயங்கும் அடியார்கள் மேல் பிறவி என்ற குற்றம் படியாது என்று கூறுகின்றார். பால் ஊரும்=பக்கத்தினில் ஊர்ந்து செல்லும்; மேலூரும்= மேலே பொருத்தப்பட்ட; மால்=மயக்கம்; பெருமான் பால் நாம் வைத்துள்ள அன்பு மயக்கமாக மாற வேண்டும் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
பாலூரும் மலைப் பாம்பும் பனி மதியும் மத்தமும்
மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல் சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து
மால் ஊரும் சிந்தையர் பால் வந்து ஊரா மறுபிறப்பே
சிவபெருமான் பால் கொண்டுள்ள அன்பு மயக்கமாக மாறும் வண்ணம் ஆழ்ந்த அன்பு உடைய அடியார்கள் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவது, மணிவாசகர் அருளிய ஆனந்தமாலை பதிகத்தின் மூன்றாவது பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. செறிவு=அன்பு; மிகவும் இழிந்த நிலையில் இருந்ததாக தன்னைக் குறிப்பிடும் மணிவாசகர், தன் (இறைவன்) பால் ஆழ்ந்த இன்பம் கொள்ளும் வண்ணம் வழி காட்டியவர் சிவபெருமான் என்று இங்கே கூறப்படுகின்றது.
சீலம் இன்றி நோன்பு இன்றிச் செறிவே இன்றி அறிவு இன்றி
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறியேறக்
கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே
கோட்டாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (2.52.4) திருஞானசம்பந்தர், பெருமானை நம்பனே என்றும் நடனம் ஆடுபவனே என்றும் நலமே வடிவமாக திகழும் நாதனே என்றும் அழைத்து, அவன் பால் காதல் கொண்டு வழிபடும் அடியார்களை, வலிய வினைகளும் அந்த வினைகளின் செயல்களால் இறை வழிபாட்டினால் ஏற்படும் தடுமாற்றங்களும் வாராது என்று உறுதியாக கூறுகின்றார். அம்பு=வேல்; ஆடகம்=ஆடுகின்ற இடம்; நடன்=கூத்தன்;
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாடமாளிகைக்
கொம்பின் நேர் துகிலின் கொடியாடு கோட்டாற்றில்
நம்பனே நடனே நலந்திகழ் நாதனே என்று காதல் செய்தவர்
தம்பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே
மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.62.4) திருஞானசம்பந்தர், இறைவனை நாகம் அரைக்கசைத்த நம்பன் என்று கூறுகின்றார். படிதம்=புகழ்த் துதி,தோத்திரம்; பொதுவாக யானை சாதுவான பிராணி என்பதால், நல்லியானை என்று கூறினார் போலும். பெருமானின் நடனத்திற்கு ஏற்ப, பிராட்டி பாடுவதாகவும் இந்த பாடலில் கூறுகின்றார்.
வேக நல்லியானை வெருவ உரி போர்த்துப்
பாகம் உமையோடாகப் படிதம் பல பாட
நாகம் அரை மேல் அசைத்து நடமாடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே
நமது விருப்பத்திற்கு உரியவன் சிவபெருமான் என்பதை உணர்ந்து, அவனை நம்பா என்று அழைத்தால், நமக்கு பல விதங்களிலும் அருள் புரிபவன் சிவபெருமான் என்று உணர்த்தும் பாடல் முதுகுன்றம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பாடலாகும் (2.64.6). வம்பு= நறுமணம்;மொய்ம்பு=நெருக்கம்; நறுமணம் நிறைந்த கொன்றை வன்னி ஊமத்தை முதலிய மலர்களை தனது திருமேனியின் மீது தூவி, நம்பா என்று தன்னை அழைத்து தொழும் அடியார்களுக்கு தனது அருளினை நல்கும் பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில் உடைய தலம், கிளைகளை உடைய குரா மரமும் கொகுடி முல்லை கொடிகளும் எங்கும் பரந்து வளர்வதால் நெருக்கமாக உள்ளதும் வண்டுகள் இடைவிடாது பாடுவதும் ஆகிய சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் ஆகும்
வம்பார் கொன்றை வன்னி மத்த மலர் தூவி
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே
குற்றாலம் தலத்தில் காணப்படும் குறும்பலாவின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.71.2) திருஞானசம்பந்தர் இறைவனை, நம்மை ஆட்கொண்டருளும் நம்பான் என்று அழைக்கின்றார். பெருமானால் ஆட்கொள்ளப் படுவதற்கு நாம் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும் என்று அருளாளர்கள் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. அத்தகைய பேறு பெற்றவர்கள், இறைவனை விரும்புவது இயற்கை தானே. அதனால் தான் அவ்வாறு ஆட்கொள்ளப்பட்ட பல மனிதர்களின் நம்பான் என்று இங்கே கூறுகின்றார். நாட்பலவும் சேர் மதியம்=பதினாறு நாட்கள், நாளுக்கு ஒரு கலையாக வளரக் கூடிய சந்திரன்;ஆட்பலவும்=பல வகையிலும் நாம் ஆட்கொண்டு அருள் புரியும் வல்லமை வாய்ந்த; அம்மான்=தாயைப் போன்று கருணை உள்ளம் கொண்ட தலைவன்;அந்தண்=அழகும் குளிர்ச்சியும் உடைய; கீட்பலவு=கிழித்து உண்ணக்கூடிய பலாக்கனி; கிளை=சுற்றம்; கோள்=குலை; கடுவன்=ஆண் குரங்கு. இதே பதிகத்தின் கடைப் பாடலிலும் நம்பான் என்று ஞானசம்பந்தர் இறைவனை குறிப்பிடுகின்றார்.
நாட்பலவும் சேர் மதியம் சூடிப் பொடி அணிந்த நம்பான் நம்மை
ஆட்பலவும் தானுடைய அம்மான் இடம் போலும் அந்தண் சாரல்
கீட்பலவும் கீண்டு கிளை கிளையன் மந்தி பாய்ந்துண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே
தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.82.11) திருஞானசம்பந்தர் தொல்லை நம்பன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.தொல்லை என்றால் தொல்லைக் காலம், பண்டைய காலம் என்று பொருள். தொன்று தொட்டே இறைவன், அனைவரது நம்பிக்கைக்கு உரியவனாகவும்,அனைவராலும் விரும்பப்படுபவனாகவும் இருந்த தன்மை இந்த தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. அதிபன்=தலைவன்; அல்லல் இன்றி விண் ஆள்வார்கள் என்ற தொடரை பாடலின் இறுதியில் வைத்து பொருள் காணவேண்டும்.
அல்லல் இன்றி விண் ஆள்வார்கள் காழியர்க்கு அதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன்
எல்லையில் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே
தென் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.88.5) திருஞானசம்பந்தர், நாம் விருப்பம் கொண்டு பெருமானை நம்பனாக கருதினால்,அவனும் நம் பால் அன்பு கொண்டு அன்பனாகத் திகழ்கின்றான் என்று கூறுகின்றார். கொம்பு=பூங்கொடியின் கொம்பு; கூறன்=ஒரு கூறாக கொண்டுள்ளவன்;விடை=இடபம்; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவன்; சென்னி=தலை; ஒண்=ஒளிவீசும்; கணவர்=கண்களை உடைய பெண்கள்;அம்பன்ன ஒண் கணவர்=அம்பு போன்று கூர்மையான முனைகளை உடையதும் ஒளிவீசுவதும் ஆகிய கண்களை உடைய மகளிர்; அணி=அழகிய;செவ்வி=செம்மையான; பூங்கொம்பு போன்றும் மின்னல் போன்றும் மெலிந்த இடையினை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், இடபத்தின் மீது ஏறிக்கொண்டு நாள்தோறும் பல இடங்கள் செல்பவனும், அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவனும், நமது நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ளவனும், நம் பால் மிகுந்த அன்பு கொண்டுள்ளவனும், முதன்முதலாக நான்மறைகளையும் ஓதிய நாவினை உடையவனும்,வானில் உலவும் பிறைச்சந்திரனைத் தனது தலையில் வைத்துள்ளவனும் ஆகிய பெருமான் உறையும் தலம் திருமுல்லைவாயிலாகும். அம்பு போன்று ஒளி மிகுந்த கண்களை உடைய மகளிர் நடமாடும் அரங்குகளும் அழகிய கோபுரங்களும் அணிகலன் போன்று அழகினை மேம்படுத்த, செம்பொன் போன்று அழகிய செம்மையான மாடங்கள் கொண்ட தலம் திருமுல்லைவாயிலாகும் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.
கொம்பு அன்ன மின்னின் இடையாளொர் கூறன் விடை நாளும் ஏறு குழகன்
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானில் மதியேறு சென்னி அரனூர்
அம்பன்ன ஒண் கணவர் ஆடரங்கின் அணி கோபுரங்கள் அழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே
இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், நம்பனின் திருவடிகளைப் பணியாத புத்தர் மற்றும் சமணர்கள், தாங்கள் பிறந்ததன் நோக்கத்தை அறியாமலும் அடையாமலும் அழிந்து விடுகின்றார் என்று கூறுகின்றார். பிறப்பு எடுப்பதின் நோக்கமே, நமது வினைகளை முற்றிலும் அழித்துக் கொண்டு முக்திநிலை அடைந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, என்றும் குறையாத இன்பத்துடன் இறைவனுடன் இணைந்து இருப்பது தான்; இந்த வழியில் முயற்சி ஏதும் செய்யாத சமணர்களையும் புத்தர்களையும், தங்களது வாய்ப்பினை இழந்தவர்கள் என்பதால், தங்களது வாழ்க்கையை வீணாக அழித்துக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றார். பனைமல்கு=பனை மரத்தின் அடிப்பாகம் போன்று உருண்டு திரண்ட துதிக்கையை உடைய யானை;வகுளம்=மகிழமரம்; முகுளம்=மொட்டுக்கள்; கைதை=தாழை மரங்கள்;
பனைமல்கு திண் கை மதமா உரித்த பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கு நெரியச்
சினை மல்கு புன்னை திகழ் வாச நாறு திருமுல்லைவாயில் இதுவே
திருப்புகலூர் வர்த்தமானீச்ச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.92.9) திருஞானசம்பந்தர் இறைவனை, சடைமுடி நம்பர் என்று குறிப்பிடுகின்றார்.அணங்கு=தெய்வத்தன்மை; சீரணங்கு= சிறப்பான தெய்வத்தன்மை, தங்களில் சிறந்த தெய்வத் தன்மை உடையவர் யார் என்பதை தீர்மானிக்கும் பொருட்டு நின்ற பிரமன் மற்றும் திருமால்; செரு=சண்டை; பிரமன் திருமால் ஆகியோரின் இடையே, தங்களில் யார் பெரியவர் என்று தொடங்கிய வாதம் தொடர்ந்து நடைபெற்ற தன்மையை சண்டை என்று குறிப்பிடுகின்றார். வாரணம்=யானை; பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும், தங்கள் முன்னே தோன்றிய தழற்பிழம்பின் அடியையும் முடியையும் கண்டு விடலாம் என்ற கருத்துடன் செயல்பட்ட போதிலும், அவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெறாத தன்மை,கருத்து அழிந்தது என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நம்பர் ஆகிய பெருமான் பால் அன்பு வைத்து, அவனது அருளை வேண்டி அவர்கள் செயல்படாத தன்மையே பிரமன் மற்றும் திருமாலின் தோல்விக்கு காரணம் என்பதும் உணர்த்தப் படுகின்றது.
சீரணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு
நாரணன் கருத்தழிய நகை செய்த சடைமுடி நம்பர்
ஆரணங்கு உறு உமையை அஞ்சுவித்து அருளுதல் பொருட்டால்
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே
கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.109.3) திருஞானசம்பந்தர், தன் பால் அன்பு வைத்து, நல்ல ,மலர் கொண்டு தன்னை தொழுகின்ற அடியார்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கின்றார் என்று கூறுகின்றார். நம்பன் என்ற திருநாமத்திற்கு பொருந்தும் வண்ணம், கோட்டூர் நற்கொழுந்தே என்று தொழும் அடியார்களுக்கு பொன்னுலகம் தருவார் என்று கூறுகின்றார். பொன்னுலகம் என்பது இங்கே முக்தி உலகத்தை குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ளவேண்டும்.
நம்பனார் நலமலர் கொடு தொழுதெழும் அடியாரவர் தமக்கெல்லாம்
செம்பொனார் தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல
கொம்பனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
அம்பொனார் தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே
மாந்துறை தலத்து பதிகத்தின் பாடலில் (2.110.3) திருஞானசம்பந்தர் பெருமானை நம்பன் என்று குறிப்பிடுகின்றார். வானவர் கை தொழுது ஏத்தும் கேடிலா மணி என்றும் வாடிய தலையில் பலி கொள்பவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். பலியேற்பதற்காக தங்களை நாடி வரும் இறைவனின் பிச்சைப் பாத்திரத்தில், தங்களது மலங்களை பிச்சையாக அளிக்கும் உயிர்களுக்கு முக்தி உலகத்தினை பரிசாக அளிப்பான் என்ற நம்பிக்கையுடன் உயிர்கள் செயல்படுவதால், நம்பான் என்று பொருத்தமாக இறைவனை ஞானசம்பந்தர் அழைக்கின்றார். மேலும் இந்த பாடலில் ஞானசம்பந்தர் பெருமானது திருவடிகளைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார்
கோடு தேன் சொரி குன்றிடைப் பூகமும் கூந்தலின் குலை வாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும்
கேடிலா மணியைத் தொழல் அல்லது கெழு முதல் அறியோமே
நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.119.5), திருஞானசம்பந்தர், நாகேச்சரத்து நம்பன் தன்னை நெருங்கி வணங்கும் அடியார்களை தேவர்கள் புகழ்ந்து தொழும் வண்ணம், தன்னுடன் சேர்த்துக் கொள்கின்றான் என்று கூறுகின்றார். இந்த பேற்றினை விடவும், உயிருக்கு உயர்ந்த பேற்றினை எவருக்கும் அளிக்க முடியாது என்பதால் தான், அனைத்து உயிர்களால் விரும்பப் படுபவனாகவும், அவைகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானாகவும் இறைவன் விளங்குகின்றான் என்பதை குறிப்பிட நம்பன் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர் போலும்.
வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு நீர்
பைம்பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்
உம்பர் வானோர் தொழச் சென்று உடனாவதும் உண்மையே
மேற்கண்ட பாடல்கள் உணர்த்தும் வண்ணம், நாம் விரும்புவதற்கு தகுதி படைத்தவனாக விளங்கும் பெருமானை, தான் நனவிலும் கனவிலும் மனம் ஒன்றி விரும்பி வழிபட்டு மறவாது இருந்த நிலையினை திருவாவடுதுறை தலத்து பாடல் ஒன்றில் (3.4.3) திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மனவினும்=மனம் ஒன்றி; தனது தந்தையார் வேள்வி செய்வதற்காக தேவைப்படும் பணம் நாடி இறைவனிடம் திருஞானசம்பந்தர் விண்ணப்பம் வைக்கும் பதிகம் இந்த பதிகம்.இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், தனது பல தகுதிகளை குறிப்பிட்டு, பெருமானின் அருளினைப் பெறுவதற்கு தான் தகுதி வாய்ந்தவன் என்பதை குறிப்பிடுகின்றார்.
நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபட மறவேன் அம்மான்
புனல் விரி நறுங்கொன்றை போது அணிந்த
கனல் எரி அனல் புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மதுரையில் சமணர்களை அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் முறியடித்த பின்னர், பல பாண்டி நாட்டு தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பாண்டி நாட்டைக் கடந்து சோழநாட்டின் பகுதியான திருக்களர் பாதாளீச்சரம் தலங்கள் சென்ற இறைவனைப் பணிந்த பின்னர், காவிரி நதியின் கிளைநதி,முள்ளிவாய்க்கரை வந்தடைந்தார். இந்த ஆறு இப்போது ஓடம்போக்கியாறு என்று அழைக்கப்படுகின்றது. அடுத்த கரையில் இருந்த திருக்கோயில் செல்வதற்கு ஞானசம்பந்தர் விரும்பிய போதிலும், ஆற்றின் வெள்ளத்தின் காரணமாக அவரால் நதியைக் கடந்து செல்ல முடியவில்லை. மேலும் சுழன்று அடித்த காற்று மற்றும் அடர்ந்த மழை காரணமாக, ஓடம் செலுத்துவோர் அனைவரும், தங்களது ஓடங்களை, துறைகளில் கட்டிவிட்டு சென்று விட்டனர்.பலத்த மழை, சுழன்று அடித்த காற்று, நதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ஆகிய எதனையும் பொருட்படுத்தாத திருஞானசம்பந்தர், ஒரு ஓடத்தின் கட்டை அவிழ்த்து விட்டு, தானும் தன்னுடன் வந்த அடியார்களும் அந்த ஓடத்தில் ஏறிக்கொண்ட பின்னர், தனது நாவின் வல்லமையால் எழுந்த பதிகத்தையே, துடுப்பாக கொண்டு, கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகத்தை (3.6) பாடவே, எவரும் துடுப்பு போடாமலே, அனைவரையும் ஓடம் அடுத்த கரைக்கு கொண்டு சேர்த்த அதிசயம் நிகழ்ந்தது. எனது நம்பிக்கைக்கும் விருப்பத்திற்கும் உரிய பெருமானே, கொள்ளம்பூதூர் தலத்தினில் நடனமாடும் பெருமானே, உன்னை தியானிக்கும் அடியார்களாக நாங்கள், உனது தோற்றத்தைக் கண்டு களிக்கும் வண்ணம், இந்த ஓடத்தினை செலுத்துவாயாக என்று பாட, ஓடம் தானே நகரத் தொடங்கியது. இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், பெருமானை அடியார்கள் உள்க செல்லவுந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே என்று குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் படுகின்றது.கொட்டம்= நறுமணம், வாசனை; உள்குதல்=தியானித்தல்; அகத்தில் உன்னை தொழும் அடியார்கள், தங்களது புறக்கண்களால் உன்னைக் கண்டு களிக்க,ஓடத்தை செலுத்துவதன் மூலம், அருள் புரிவாயாக என்று பெருமானிடம் வேண்டுகின்றார். இந்த நிகழ்ச்சி, நமது விருப்பத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக உள்ள இறைவன், நம்பன் என்ற பெயருக்கு ஏற்ப, அருள் புரிகின்றான் என்பதை உணர்த்துகின்றது.
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தியார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே
கோட்டாறு என்று அழைக்கப்பட்ட தலத்தின் மீது அருளிய பாடலில் (3.12.05), திருஞானசம்பந்தர் நம்பன் என்று, தன்னைப் பணியும் அடியார்களுக்கு அருள் செய்யும் தலைவன் சிவபெருமானை குறிப்பிடுகின்றார்.
வம்பலரும் மலர்க் கோதை பாகம் மகிழ் மைந்தனும்
செம்பவளத் திருமேனி வெண்ணீறு அணி செல்வனும்
கொம்பமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவார்க்கு அருள் செய் எங்கள் நாதனே
மயேந்திரப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.31.11), திருஞானசம்பந்தர், நம்பனாரின் கழல்களைப் போற்றிப் பாடிய பதிகங்களை ஓதும் அடியார்களை, வானவர் எதிர்கொள்ளும் வண்ணம் உயர்ந்த முக்தி உலகத்தினை அடையும் வண்ணம் சிவபெருமான் அருள் புரிவார் என்று கூறுகின்றார்.
வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம்பந்தன் சொல்
நம் பரம் இது என நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர் கொள உயர்கதி அணைவரே
நமச்சிவாய மந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அந்த மந்திரத்தைத் தங்கள் நாவினால் நவிற்றும் அடியார்களுக்கு, நறுமணம் கமழ்வதும் அன்றலர்ந்ததும் ஆகிய மலர்களில் உள்ள தேன் போன்று இனியவனாக இருப்பவன், உலகத்திற்கு செம்பொன் திலகமாகத் திகழ்பவனும் அனைவராலும் நம்பி விரும்பப் படுபவனும் ஆகிய சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் சொல்லும் பாடல் நமச்சிவாயப் பதிகத்தின் இரண்டாம் (3.49.2) பாடலாகும்.நவிற்றுதல்=உச்சரித்தல்
நம்புவாரவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே
பெருவேளூர் தலத்தின் மீது அருளிய கடைப் பாடலிலும் (3.64.11), திருஞானசம்பந்தர் நம்பனாகிய பெருமானின் திருப்பாதங்களைத் துதித்து தேவாரப் பாடல்கள் பாடும் அடியார்களை வலிய வினைகளும் அந்த வினைகளால் வருகின்ற பிறவிப்பிணியும் சாராது என்று கூறுகின்றார்.
பைம்பொன் சீர் மணிவாரிப் பலவும் சேர் கனி உந்தி
அம்பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர்
நம்பன் தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே
மாணிகுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.77.05), திருஞானசம்பந்தர் திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை அழித்து தேவர்களுக்கு நன்மை செய்த நம்பன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். ஊசல்=ஊஞ்சல்;
மாசில் மதி சூடு சடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரம் முன்
நாசமது செய்து நல வானவர்களுக்கு அருள் செய் நம்பன் இடமாம்
வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையின் மன்னி அழகார்
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே
இமையாத கண்களை உடையவராக, எப்போதும் திறந்த நிலையில் உள்ள கண்களுடன் காணப்படும் தேவர்கள், ஒன்று கூடி நின்ற வண்ணம் தம்மைத் தொழுதேத்த, அவர்களுக்கு அருளும் பொருட்டு, அவர்களை வருத்திய ஆலகால விடத்தினை, சிவபெருமான் தான் உட்கொண்டு கழுத்தினில் தேக்கினார்.அதனால் தான், அவரது உடல் முழுவதும் பளிங்கு நிறத்துடன் காணப்பட, அவரது கழுத்து மட்டும் கருமை நிறத்துக் கறையுடன் காணப்படுகின்றது.பெருமானது செய்கை தேவர்களை பெரிதும் மகிழ்விக்கவே, தேவர்களால் விரும்பப் படும் நம்பனாக அவர் திகழ்கின்றார் என்று திருஞானசம்பந்தர்,அவளிவணல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.82.6) குறிப்பிடுகின்றார். அகலம்=மார்பு; அளாவி=சேர்த்துக்கொண்ட, யானையின் தோலை தனது உடல் மீது போர்வையாக போர்த்துக் கொண்ட போது உமையன்னை நடுங்கிய செய்தியும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் ஆலகால விடமும் இரத்தப் பசை மிகுந்த தோலும் பொதுவாக உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று அனைவராலும் கருதப் பாட்டாலும், பெருமானுக்கு எந்தவிதமான கேட்டினையும் விளைவிக்காத தன்மை குறிப்பிடப்பட்டு, பெருமான் எவ்வாறு ஏனையோரிலிருந்து உயர்ந்தவராக விளங்குகின்றார் என்பதை நமக்கு திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். துஞ்சல் என்ற சொல்லுக்கு தளர்ச்சி என்று பொருள் கொண்டு, தளர்ச்சி அற்றவர்களாக தேவர்கள் பெருமானை தொழுகின்ற நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. துஞ்சலிலர் என்ற தொடர் மூலம், இமையாத கண்களை உடைய தேவர்கள் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது.
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுதேத்த அருள் செய்து
நஞ்சு மிடறு உண்டு கரிதாய வெளிதாகி ஒரு நம்பன்
மஞ்சு உற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு வளாவி
அஞ்ச மதவேழம் உரியான் உறைவது அவளிவணலூரே
கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.89.06), தனது நெஞ்சத்திற்கு கூறும் முகமாக, நமக்கு அறிவுரை கூறுகின்றார். நற்றவம் என்பதற்கு முறையாக நல்ல வழியில் செய்யப்படும் தவம் என்று பொருள். மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றும், பெருமானையே வழிபடும் வண்ணம் தவம் புரியும் சான்றோர்களுக்கு அருள் புரியும் நம்பன் பால் விருப்பம் மிகுந்த வைத்து, அவன் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுமாறு நமக்கு அறிவுரை கூறும் பாடல். தக்கன் செய்ய திட்டமிட்ட வேள்வியை அழித்தும், அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் தண்டித்த பெருமான், அன்றே,ஆங்கே இருந்த வேள்விக்குண்டத்தில் தனது உடலை மாய்த்துக்கொண்ட தனது மனைவி தாட்சாயணி இமவானின் மகள் பார்வதியாக பிறக்கவும், தன்னை மணந்து கொண்ட பின்னர் அந்த அம்பிகையை தனது உடலில் ஒரு பாதியாக ஏற்றுக் கொள்ளவும், தீர்மானம் செய்தார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், அந்தணர்கள் நான்மறைகளை ஓதி தன்னை வழிபடவேண்டும் என்பதற்காக உலகத்தை படைத்த பெருமான், தேவர்களின் நடுவில் நம்பனாகத் திகழ்கின்றார் என்று கூறுகின்றார்.
சுற்றமும் மக்களும் தொக்க அத்தக்கனைச் சாடி அன்றே
உற்ற மால் வரை உமை நங்கையைப் பங்கமா உள்கினான் ஓர்
குற்றமில் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி
நற்றவம் அருள் புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே
கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.105.7) திருஞானசம்பந்தர், பஞ்ச பூதங்கள், சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து உயிர்களுடன் இருந்து, அவற்றை இயக்கும் இறைவனை நம்பன் என்று கூறுகின்றார். ஐந்து பூதங்கள் மற்றும் சூரியன் சந்திரன் ஆகியோரையும் இயக்கி, உலக வாழ்க்கை இயல்பாக நடப்பதற்கு வழி வகுக்கும் இறைவன் பால் அனைத்து உயிர்களும் விருப்பம் கொள்வது இயற்கை தானே. கோல=அழகிய; மங்கலியம்= மங்கலப் பொருட்கள், சிவனை பூசை செய்து வழிபட கொண்டுவரப்பட்ட மங்கலப் பொருட்கள்; காலம் பொய்த்தல்=காலத்தில் பெய்ய வேண்டிய மழை பொழியாது வறட்சி நிலவுதல்; வழுவாது=தவறாது; மழை பொய்த்து நிலவளம் குன்றிய காலத்தும், தவறாது இறைவனின் பூசைக்கு உரிய மங்கலப் பொருட்களை கொண்டு வந்து வழிபடும் அடியார்கள் நிறைந்த தலம் கலிக்காமூர் என்று இங்கே கூறுகின்றார். இதன் மூலம் பெருமானை வழிபாட்டு பூசை செய்வதற்கு மிகுந்த விருப்பம் கொண்டவர்களாக கலிக்காமூர் தலத்து மக்கள் இருந்த தன்மை நமக்கு உணர்த்தப் படுகின்றது. ஞாலம்=பூமி; வளி=காற்று; அட்ட மூர்த்தியாக பெருமான் விளங்கும் பொருட்களில் நான்கினை குறிப்பிட்டமையால், மற்ற நான்கினையும் குறிப்பிட்டதாக கொள்ள வேண்டும். ஓலம்=உரக்க கூவுதல்; உணர்வு=சிவஞானம்; பெருமானின் திருநாமத்தை சொல்வதற்கு வெட்கம் ஏதும் கொள்ளாமல், உரத்த குரலில் சொல்ல வேண்டும் என்றும்,அவ்வாறு பெருமானின் திருநாமங்களை ஓலமிட்டு அலறினால், சிவஞானம் கைகூடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
கோல நன் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்
காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர்
ஞாலமும் தீ வளி ஞாயிறாய நம்பன் கழல் ஏத்தி
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வைத் துறந்தாரே
திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதில் திருஞானசம்பந்தருக்கு நாட்டம் இல்லாமல் இருந்தது. எனினும், வேதநெறி தழைத்து ஓங்க அவதாரம் செய்த அவர், வேதநெறியில் குறிப்பிடப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது தவறு அவரது தந்தையாரும் மற்ற பெரியோர்களும் குறிப்பிட்டு வற்புறுத்தவே, தனக்கு முழு விருப்பம் இல்லாதபோதிலும், திருமணம் செய்து கொள்வதற்கு ஞானசம்பந்தர் இசைகின்றார். நல்லூர் பெருமணம் என்று அழைக்கப்பட்ட தலத்தில் (இன்றைய பெயர் ஆச்சாள்புரம்) திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. திருமண நாளன்று,திருஞானசம்பந்தர் இறைவனை நோக்கி, இறைவனே உன்னிடம் நான் எப்போதும் மணவாழ்க்கை அமையவேண்டும் என்று வேண்டவில்லையே, எனது பதிகங்கள் எனது உண்மையான விருப்பத்தை உனக்கு தெரிவிக்கவில்லையா, ஏன் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செய்யப்படும் திருமண வாழ்க்கை எனக்கு நேரிடும் வண்ணம் செய்தாய் என்று இறைவனிடம் தனது கோரிக்கையை விடுக்கின்றார். தனது விருப்பங்கள் (பிறரின் நலனுக்காக விடுத்த வேண்டுகோள்) பலவற்றையும் நிறைவேற்றிய பெருமானை நம்பானே என்று இந்த பாடலில் அழைக்கின்றார். நம்பனே என்ற சொல் நம்பானே என்று நீண்டது. கல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் இந்தப் பதிகம் (3.125) பாடி முடிக்கப் பட்ட பின்னர் வானிலிருந்து எழுந்த ஒரு அசரீரி வாயிலாக பெருமான், ஞானசம்பந்தர் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கொண்டதை தெரிவிக்கின்றார். திருமணம் முடிந்ததும், திருக்கோயிலில் தோன்றும் ஒரு சோதியின் வழியே உட்புகுந்து, தன்னை வந்து அடையுமாறு ஞானசம்பந்தரை பணிக்கின்றார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் முன் செல்ல,ஞானசம்பந்தர் தனது மனைவியுடன் அந்த சோதியின் உள்ளே புகுந்து, சிவலோகம் சென்றடைந்தார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அடியார்கள் விடுக்கும் வேண்டுகோளினை நிறைவேற்றும் பெருமானை, விரும்புவதற்கு உரியவன் என்று அழைப்பது தானே பொருத்தம்.
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய் ஆய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.13.3) அப்பர் பிரான் இறைவனை நம்பான் என்று அழைக்கின்றார். நணியான்=அருகில் இருப்பவன்: சேயான்=தொலைவில் இருப்பவன்; சமணர்கள் இழைத்த பல கொடுமைகளிலிருந்தும் தன்னைக் காத்த பெருமானை, தீர்க்க முடியாத கொடிய சூலை நோயிலிருந்து காப்பாற்றிய பெருமானை, கயிலைக் காட்சி அளித்தது போன்று பல விதங்களிலும் அருள் புரிந்த பெருமானை, அப்பர் பிரான் விரும்பியது இயற்கை தானே. தான் சைவ மதத்திற்கு திரும்பி வந்த பின்னரே, வாழ்வினில் உய்வினை அடைந்ததாகவும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ண வெண்ணீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணி தீர்க்கும்
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.20) கடைப் பாடலில், திருமாலும் பிரமனும் தேடியும் காண முடியாத இறைவன் சிவபெருமான், தன்னை விரும்பி பாடல்கள் பாடி, பணிந்து, பல்லாண்டு இசைக்கும் அடியார்களின் மனதினில் குடி கொண்டிருப்பதை தான் கண்டு கொண்டதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இரணியனின் உடலைக் கிழித்த ஆற்றல் உடைய திருமாலும் தேடிக் காண முடியாத இறைவனை, அவனது அடியார்கள் தங்களது மனதினில் இறைவன் இருக்கும் நிலையை கண்டு கொள்கின்றனர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பிரமனும் திருமாலும், தங்கள் இருவரில் உயர்ந்தவர் யார் என்று வாதம் செய்து கொண்டிருந்த போது, அவர்களின் எதிரே நீண்ட தழற்பிழம்பாக இறைவன் தோன்றியதை, தழலாய நம்பான் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். இறைவன் பேரில் பல பதிகங்கள் பாடிய அப்பர் பிரான், தன்னுள்ளே இறைவன் இருப்பதை,அனுபவ பூர்வமாக உணர்ந்ததை பல பாடல்களில் தெரிவித்துள்ளார். தங்களது அறிவு ஆற்றல் ஆகியவை மீது நம்பிக்கை வைத்து நாடினால் காண முடியாத,பெருமான் பால் மிகுந்த அன்பு வைத்து நாம் அழைத்தால் அவன் அருள் புரிவான் என்பதால் பல அடியார்களும் அவனைப் புகழ்ந்து போற்றி பல்லாண்டு பாடுகின்றனர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்
நாடிக் காண மாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத்
தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானே
திருவதிகை வீரட்டானம் திருக்கோயிலில் உள்ள இறைவன் தானே, அப்பர் பிரானின் சூலை நோயினை நீக்கியதுடன், அவரை தேவார பதிகங்கள் பாட வைத்து அவருக்கு திருநாவுக்கரசர் என்ற பெயரினையும் சூட்டிச் சிறப்பித்தார். அத்தகைய இறைவன், அவரது விருப்பத்திற்கும் நம்பிக்கைக்கும் ஆளானவராக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை அல்லவா. மேலும் கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி, தனது சூலை நோயினை தீர்த்துக் கொண்ட அப்பர் பிரான், அதன் பின்னர், சமணர்களின் பல சூழ்சிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்ததை நாம் அவரது சரித்திரத்திலிருந்து அறிகின்றோம்.நீற்றறையின் உள்ளே சிறையிடப் பட்ட சூழ்ச்சி, மதயானை கொண்டு அவரது தலையை இடறச் செய்த சூழ்ச்சி, பாலில் நஞ்சு கலந்து ஊட்டிய சூழ்ச்சி,கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் தள்ளப்பட்ட சூழ்ச்சி, ஆகிய சூழ்ச்சிகளிலிருந்து இறைவனது அருளால் தப்பிய அப்பர் பிரான், கடலூரில்(திருப்பாதிரிபுலியூர் என்று அன்றைய நாளில் அழைக்கப்பட்ட தலம்) கரை சேர்ந்த பின்னர், திருவதிகை வருகின்றார். இவ்வாறு தன்னை பல துன்பங்களிலிருந்தும் காப்பாற்றிய திருவதிகை பெருமானை, அவர் நம்பிக்கை உரியவனாக கருதியதில் வியப்பு ஏதுமில்லையே. அதனால் தான், நம்பனே என்று திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகம் (4.26) ஒன்றினை அப்பர் பிரான் தொடங்குகின்றார் போலும். தனக்கு நல்ல வழியைக் காட்டி உய்வித்த இறைவனை, தான் நாளும் புகழ்ந்து பாடுவதாக குறிப்பிடும் அப்பர் பிரான், பெருமானின் திருப்பாதங்களைக் காண்பதற்கு தான் ஏங்குவதாகவும் இந்த பாடலில் கூறுகின்றார். அப்பர் பிரானின் நம்பிக்கையை, சிதறடிக்காமல் பெருமான், அவருக்கு தனது திருவடி தீட்சை தந்து அருளிய அதிசயம்,பின்னர் நிகழ்ந்ததை நாம் அறிவோம்.
நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்தி
பங்கனே பரம யோகீ என்றென்றே பரவி நாளும்
செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதம் காண்பான்
அன்பனே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தின் முதல் பாடலில் (4.44.1) அப்பர் பெருமான் இறைவனை நம்பன் என்று அழைக்கின்றார்.எப்போதும் பறக்கும் கோட்டைகளில் திரிந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் கொடுமையிலிருந்து விடுபடத் தெரியாமல், சிவபெருமானிடம் தேவர்கள் சரணடைந்த பின்னர், திரிபுரத்து மூன்று கோட்டைகளையும் நெருப்பு மூட்டி அழித்து, தேவர்கள் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஏற்ப,அவர்களது இடர்களைக் களைந்த சிவபெருமானை, நம்பன் என்று அழைப்பது தானே பொருத்தம். அம்பன்=அம்பினை உடையவன், திருமால் அக்னி வாயு ஆகிய மூவரும் இணைந்த அம்பினைத் தான் கொண்டிருந்த வில்லில் பூட்டிய செயலை இங்கே, அம்பன் என்ற சொல் மூலம் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.ஆறு=வழி, நல்ல வழியை காட்டுபவன். கச்சியுள் ஏகம்பன் என்றும் கச்சியுள்ளே கம்பன் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். கம்பன்=தூணாக நின்றவன்: அனைவரும் பற்றிக்கொள்ளும் தூணாக இருந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. ஏகம்பன்=தலத்து இறைவனின் பெயர். அனைவராலும் விரும்பப்படுவனும், அனைவராலும் தங்களது இடர்களைத் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவர் என்று நம்பப்படுவனும் ஆகிய தலைவனும், எப்போதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் தீக்கு இரையாக மாற்றுவதற்கு கோபத்துடன் விழித்தபோது திருமாலாகிய அம்பினை கையில் ஏந்தியவனும், அமுதமாக அனைவர்க்கும் இனிப்பவனும், அனைவருக்கும் நல்ல வழியினைக் காட்டுபவனும், கச்சி நகரத்தில் ஏகம்பனாக வீற்றிருப்பவனும்,ஒளிவீசும் கிரணங்களை உடைய சந்திரனை தனது சிவந்த செஞ்சடையில் அணிந்தவனும், உயர்ந்த செம்பொன் போன்றவனும், பவளத் தூண் போன்று காட்சி அளிப்பவனும் ஆகிய சிவபிரானை, தியானித்து நான் உள்ளத்தில் கிளர்ச்சி உடையவனாக இங்கே நிற்கின்றேன் என்று அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.
நம்பனை நகரம் மூன்றும் எரி உண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள்ளே
கம்பனைக் கதிர் வெண் திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னைச்
செம்பொனைப் பவளத் துணைச் சிந்தியா எழுகின்றேனே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.52.3), நம்பனே என்று பெருமானை அழைக்கும் அப்பர் பிரான், தனது ஐந்து புலன்கள்,காமம் முதலான குற்றங்களைத் தான் செய்வதற்கு தூண்டுகோலாக இருப்பதை குறிப்பிட்டு, புலன்களின் சேட்டைகளுக்கு தான் அஞ்சுவதாகவும், அந்த அச்சத்தை தீர்க்கும் முகமாக, அஞ்சேல் என்று பெருமான் சொல்ல வேண்டும் என்றும் வேண்டுகின்றார். நம்பிக்கையுடன் பெருமானை வழிபட்ட அப்பர் பிரான் தனது வாழ்நாள் முழுவதும், பெருமானின் கருணையினால், புலன்களை அடக்கியாளும் ஆற்றலுடன் வாழ்ந்ததை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். அவர்கள்=ஐந்து புலன்கள்; பாங்கர்= பக்கம் நிற்பவர்; புலன்கள் செய்யும் சேட்டையினால், தான் பெருமானை நினைப்பதற்கு முயற்சி செய்த போதிலும், தான் பெருமானை நினைக்காத வண்ணம், புலன்கள் தடை செய்கின்றன என்று கூறுகின்றார். இந்த கூற்றினை காணும் நாம், அப்பர் பிரான் தனது புலன்களை அடக்க முடியாமல் தவித்ததாக பொருள் கொள்ளக் கூடாது. தன்னிடம் அத்தகைய குறை ஏதும் இல்லாமல் இருந்த போதிலும் தன்னைச் சுட்டிக் காட்டி, அடுத்தவர்க்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி.
பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சின் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார்
நஞ்சணி மிடற்றினானே நாதனே நம்பனே நான்
அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே
ஆலவாய் (மதுரை) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.2) அப்பர் பிரான் இறைவனை நம்பனே என்று அழைத்து, தான் இனிமேல் பிறவாத வண்ணம் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார். சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் என்று பொதுவாக கூறினாலும், நான்கு திசைகளை பார்த்தவாறு நான்கு முகங்கள் இருப்பதாக கருதுவதால் அவனை நான்முகன் என்றும் அழைப்பதுண்டு. பல திருமுறை பாடல்களில் அவனை நான்முகன்,எண்தோளன் என்று நால்வர் பெருமானார்கள் அவனை அழைக்கின்றார்கள். நான்கு முகங்களை உடையவன் தானே எண்தோளனாக இருக்க முடியும்.
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞான மூர்த்தீ
என் பொனே ஈசா என்றென்று ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.68.7) அப்பர் பிரான், காலன் கீழே விழும் வண்ணம் உதைத்த நம்பர் என்று கூறுகின்றார்.இந்த குறிப்பு, பெருமான் பால் மிகுந்த விருப்பம் வைத்து பெருமானை வழிபட்ட சிறுவன் மார்க்கண்டேயனை காப்பாற்றும் பொருட்டு, பெருமான் செய்த செய்கையை நமக்கு நினைவூட்டுகின்றது. தனக்கு குறிப்பிட்ட வாழ்நாட்கள் வெகு விரைவில் முடியப் போகின்றது என்று தெரிந்த பின்னரும், மிகுந்த நம்பிக்கையுடன் தான் தினமும் செய்து வந்த சிவவழிபாட்டினைத் தொடர்ந்து செய்து வந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாளைப் பறிக்க வந்த இயமன், மிகுந்த வாழ்நாளைக் கொண்டவனாக இருந்தான். ஆயினும் இயமனது காலினை உதைத்து, சிறுவன் மார்க்கண்டேயனைக் காப்பாற்றியவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். வாழ்நாள் இல்லாது இருந்த சிறுவனுக்கு எல்லையில்லாத வாழ்நாட்களும், அதிகமான வாழ்நாட்களைக் கொண்டிருந்த இயமன் உடனே மடிந்து கீழே விழுமாறும் இறைவன் அருளினார் என்று நயம்பட கூறுவதை நாம் உணரலாம். பெருமானின் பாதங்களுக்கு தாமரைச் தண்டினை உவமையாக கூறி, பெருமை படைத்த சேவடிகள் என்று கூறுகின்றார். நாளுடைக் காலன் என்பதற்கு, ஒவ்வொரு உயிரின் வாழ்நாட்களை அறிந்து, அந்த வாழ்நாட்கள் முடியும் தருவாயில் அந்த உயிரினை உடலிலிருந்து பிரிக்கும் செயலைத் தனது கடமையாக கொண்ட காலன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது.
தாளுடைச் செங்கமலத் தடங்கொள் சேவடியார் போலும்
நாளுடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்
கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனி மேய
ஆளுடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே
தாள்=தண்டு; தாளுடை செங்கமலம்=தண்டுகளுடைய செந்தாமரை; தடம்=பெருமை; ஒவ்வொரு உயிரும் பிறக்கும் போதே அதன் வாழ்நாளும் நிச்சயிக்கப்படும் என்பது இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்று. இது பொதுவாக மாறுவதில்லை. சிறுவன் மார்க்கண்டேயன் பிறந்த போதே அவனது வாழ்நாள் பதினாறு வருடம் என்பதும் நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறு நிர்ணயம் செய்ததும், மார்க்கண்டேயரின் தந்தைக்கு அளித்த வரம் மூலம் தீர்மானம் செய்தது, சிவபெருமான் தான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் சிறுவன் மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக வாழும் வண்ணம் அவனது விதியை சிவபெருமான் மாற்றினார். அவனது விதி மட்டுமா அப்போது மாறியது. அவனது உயிரினைக் கவர வந்த இயமனின் வாழ்நாள் முடிவடைய பல வருடங்கள் இருந்த போதிலும், இயமன் பெருமானின் காலால் உதைக்கப்பட்டு கீழே விழுந்தான். பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி பெருமான் அவனுக்கு வாழ்வினை அளித்தார் என்பது புராணம் கூறும் செய்தி. இவ்வாறு தனக்கு வாழ்நாள் இருந்த போதிலும், இயமன் இறந்த செய்தியை நாளுடை காலன் என்ற தொடரினால் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். விதியினை மாற்றி, இறக்கவிருந்த சிறுவன் மார்க்கண்டேயன் நீண்ட நாள் வாழுமாறு செய்வதும், வாழ்நாள் இன்னும் இருக்கும் நிலையில் இயமனை உதைத்து வீழ்த்தியதும் இறைவன் ஒருவனே செய்யக் கூடிய செயல் என்பதை நாம் உணரும் வண்ணம் நாளுடைக் காலன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கோள்=பாசக்கட்டு; உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் மீது நாம் கொண்டுள்ள பாசமே, பல வினைகளுக்கும் காரணமாக உள்ள நிலையும், அதனால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர்கள் மீள முடியாத நிலையில் இருப்பதும் இங்கே குறிப்பிடப் படுகின்றது.
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.97.4), அப்பர் பிரான், தான் தனது கனவினில் சிவபெருமானைக் கொண்டு தொழுததாகவும், அந்த வழிபாட்டினை ஏற்றுக்கொண்ட இறைவன் தனது நெஞ்சத்திலிருந்து என்றும் அகலாதவனாக இருக்கின்றான் என்று கூறுகின்றார். செஞ்சுடர்ச் சோதி=சிவந்த சூரியன் போன்று ஒளிவீசும் திருமேனி உடைய பெருமான்; துஞ்சுதல்=தூங்குதல்; பெருமானின் திருப்பாதங்கள் தனது தலையின் மீது படவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டியதை ஏற்றுக்கொண்ட இறைவன், நல்லூர் தலத்தினில், அப்பர் பிரானின் விருப்பத்தை நிறைவேற்றி, அவரது விருப்பத்திற்கு உரியவனாக திகழ்ந்ததை பெரிய புராணம் நமக்கு உணர்த்துகின்றது. அல்லும் பகலும் சிவபிரானைப் பற்றிய நினைவுகளுடனும் கற்பனைகளுடனும் காலத்தைக் கழித்த அப்பர் பெருமானின் கனவிலும் சிவபிரான் தோன்றியதில் வியப்பு ஏதும் இல்லை. அத்தகைய கனவினை, அப்பர் தன்னை பெருமான் பால் பெருங்காதல் கொண்ட பெண்ணாக உருவகித்து, குறிபிடும் பாடல் இது. சிவபிரானின் மேனி நிறம் சிவப்பு என்பதால் பவளத் திரள் என்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. அவரது கழுத்தில் விளங்கும் நீல நிறம், பவளத் திரளில் முத்து பதித்தது போன்று காணப்படுகின்றது என்று இங்கே அழகாக அப்பர் பிரான் கூறுகின்றார்
செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள் திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒருகால்
துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்க அவன் தான்
நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே
தனது அறிவு வட்டத்தில் புகுந்து நிலையாக உறைகின்ற பெருமானை, தான் மிகவும் விரும்பியதை வெளிப்படுத்தும் வண்ணம் அவனை நம்பன் என்று அப்பர் பிரான் அழைக்கும் பாடல் திருவையாறு தலத்தின் மீது ஒரு பதிகத்தின் முதல் பாடல் (4.98.1). இதே கருத்து வேறொரு பொது பதிகத்தின் முதல் பாடலிலும் (4.113.01) சொல்லப் படுகின்றது.
அந்தி வட்டத்து திங்கள் கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்தென்
புந்தி வட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய் என்பனோ
சிந்தி வட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிதலர்ந்த
நந்தி வட்டதொடு கொன்றை வளாவிய நம்பனையே
பராய்த்துறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.30.06) அப்பர் பிரான் நான்மறை ஓதிய நம்பன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். உயிர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பது முதல் அத்தகைய உயிர்கள் எவ்வாறு முக்தி நிலை அடைவது என்பது வரை நமக்கு சொல்லிக் கொடுக்கும் வேதங்களை அருளிய பரமனை அனைவரும் விரும்புவது இயற்கை தானே. அதனால் தான் வேதங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய பரமனை நம்பன் என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார். இறைவன் உயிர்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்தோடு பலி ஏற்பதை குறிப்பிட்டு, நம்பன் என்று அழைக்கின்றார் என்று கூறுவதும் பொருத்தமான விளக்கமே. தனது நெஞ்சத்தினுக்கு அறிவுரை கூறுவது போன்ற பாடல் இது. உலகத்தவர்க்கு தான் கூறும் அறிவுரையினை, தனது நெஞ்சத்திற்கு கூறுவதாக சொல்வது அப்பர் பிரானின் பாணி.; வாய்மை=உண்மையான அன்பு. நல்ல=நன்மையைத் தருகின்ற;வல்லையாய்= விரைவில் சென்று;
நல்ல நான்மறை ஓதிய நம்பனைப்
பல்லில் வெண் தலையில் பலி கொள்வனைத்
தில்லையான் தென்பராய்த்துறை செல்வனை
வல்லையாய் வணங்கித் தொழு வாய்மையே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.4.9) அப்பர் பிரான், தேவர்கள் தன் மீது கொண்டிருந்த நம்பிக்கை பொய்க்காத வண்ணம், அனைவரையும் நடுங்கச் செய்த முப்பரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தவன் சிவபெருமான் என்று கூறுகின்றார்.அண்டகோசத்துளானே, என்றும் பாடம் உள்ளது. அண்டகோசம்=உலகங்கள் அனைத்தும் சேர்ந்த தொகுதி; கோசரம்=தேசம்: நாண்மலர்=அன்று அலர்ந்த மலர்கள், அந்நாளில் மலர்ந்த பூக்கள்:
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செஞ்சடையெம் பெருமானே தெய்வநாறும்
வம்பின் நாண் மலர்க் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்ட கோசரத்துளானே அவனாகில் அதிகை வீரட்டனாமே
வேட்களம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.42.5), நம்பிக்கையுடன் தன்னைத் தொழுது வணங்கும் அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றி,அவர்களது துன்பங்கள் துயர்கள் ஆகியவற்றை தீர்ப்பதால் பெருமானை நம்பன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். மேலும் மணிகண்டனாக விளங்கி ஆலகால விடத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றிய பெருமான் என்று குறிப்பிட்டு, நம்பனாகத் திகழ்ந்த தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது.பொன்னார் என்ற சொல் பொனார் என்று திரிந்துள்ளது.
துன்பம் இல்லைத் துயர் இல்லையாம் இனி
நம்பனாகிய நன்மணி கண்டனார்
என் பொனார் உறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி ஏத்தி இருப்பதே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.5.6) அப்பர் பிரான் நாகம் அரைக்கசைத்த நம்பா என்று இறைவனை அழைக்கின்றார். இந்த பாடலில் பற்றினை விட்ட பக்குவம் அடைந்த உயிர்களுக்கு வீடுபேறு அருளும் பரமன் என்று குறிப்பிடுகின்றார். தாருகவனத்து முனிவர்கள் முதலில் பெருமான் மீது கோபம் கொண்டு அவரை அழிக்க மதயானை, பாம்புகள் ஆகியவற்றை ஏவிய போதும், யானையின் தோலைக் கிழித்து தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்டும், பாம்புகளை அடக்கி தனது உடலின் பல இடங்களிலும் அணிகலனாக பூண்டு கொண்டும்,தங்களது முயற்சிகளை பெருமான் முறியடித்த பின்னர் பெருமானின் பெருமையை தாருகவனத்து முனிவர்கள் புரிந்து கொண்டனர். பெருமான் பால் விருப்பம் கொண்டு அவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கவே, பெருமானும் தாருகவனத்து முனிவர்கள் தங்களது கொள்கையிலிருந்து மாறியது கண்டு,ஆனந்தக் கூத்து ஆடியதை புராணங்கள் உணர்த்துகின்றன. இவ்வாறு தாருகவனத்து முனிவர்கள் பெருமானை விரும்பிய வரலாறு இங்கே உணர்த்தப் படுகின்றது.
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்றுப் பட்டீச்சரத்தாய் போற்றி
வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி
ஆடும் ஆனைந்தும் உகப்பாய் போற்றி அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி
நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பதால், அனைவராலும் விரும்பப்படும் இறைவனை நம்பனே என்று சோற்றுத்துறை தலத்து பதிகத்தினில் (6.44.5) அப்பர் பிரான், பெருமானே, நான் உன்னிடம் அபயம் கேட்கின்றேன் என்று இந்த பாடலை முடிக்கின்றார்.
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடமாட வல்லானே ஞானக் கூத்தா
கம்பனே கச்சிமாநகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவிலாப் பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆனேறு ஏறும்
செம்பொனே திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே சிவனே உன் அபயம் நானே
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (6.51.8) நம்பர் என்று இறைவனை குறிப்பிடும் அப்பர் பிரான், பெருமானின் இரண்டு கருணைச் செயல்களை குறிப்பிடுகின்றார். பெருமானின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த விடத்திலிருந்து, தங்களைக் காக்குமாறு,திருமால் பிரமன் இந்திரன் உட்பட பல தேவர்களும் வேண்டியபோது, அந்த நஞ்சினை அமுதம் உண்பது போன்று மிகுந்த விருப்பத்துடன் உட்கொண்டு,உலகங்கள் அனைத்தையும் காத்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படும் முதல் நிகழ்ச்சி. இரண்டாவது நிகழ்ச்சி அப்பர் பிரானின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி. பல வருடங்களாக சமண சமயத்தைச் சார்ந்து வாழ்ந்த வந்த தனது தம்பியின் மனதினை சிவபெருமான் ஒருவர் தான் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் சிவபெருமானிடம் வேண்டிய திலகவதியாரின் நம்பிக்கை வீண் போகாத வண்ணம், உமது தம்பிக்கு சூலை நோய் கொடுத்து அவனை சைவ மதத்திற்கு மாற்றுவேன், நீ கவலையை விடுப்பாயாக என்று கனவின் கண் தனது தமைக்கைக்கு உறுதியளித்த சிவபெருமான் தான், தன்னை கொடிய சொற்களைப் பேசும் சமணர்களின் சிறையிலிருந்து தன்னை மீட்டார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவதை நாம் உணரலாம்.
அஞ்சைக்களத்துள்ளார் ஐயாற்றுள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார் தாம்
நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சரத்து உள்ளார் நாரையூரார்
வெஞ்சொல் சமண்சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே
திரிபுரத்து அரக்கர்கள் வேதநெறியில் நின்று, பெருமானை வழிபட்டு இருந்த நாள் வரை, அவர்களுடன் போருக்கு செல்லாத சிவபெருமான், அவர்கள் மனம் பேதலித்து சிவநெறியை நிந்திக்கத் தொடங்கிய பின்னர், அவர்கள் மீது போர் புரிந்து அழித்தார் என்பதை உணர்த்தும் வண்ணம், நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த வில்லான் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் வலிவலம் பதிகத்தின் முதல் பாடலை (6.48.1) நாம் இங்கே காணலாம்.
நல்லான்காண் நான்மறைகள் ஆயினான்காண் நம்பன்காண் நணுகாதார் புரம் மூன்று எய்த
வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலானான்காண் மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
சொல்லான்காண் சுடர் மூன்றும் ஆயினான்காண் தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்லை வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான்காண் அவன் என் மனத்துளானே
நாரையூர் நன்னகரில் தான் கண்ட நம்பன் என்று ஒரு பாடலில் (6.74.10) கூறும் அப்பர் பிரான், நம்பன் என்று அழைத்தற்கு பொருத்தமாக. பெருமான் மீது நம்பிக்கை வைத்து வழிபட்ட மூன்று அடியார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை குறிப்பிடுகின்றார். மீளா அடிமையாக தன்னை பெருமான் ஆட்கொண்ட தன்மையையும், என்றும் மாளாமல் சிரஞ்சீவியாக இருக்கும் நிலையினை சிறுவன் மார்க்கண்டேயனுக்கு அருளிய செயலையும், தனது தோள் வலிமையும் தாள் (கால்கள்) வலிமையும் குன்றிய நிலையில் மலையின் கீழ் அமுக்குண்டு கூழாக மாறவிருந்த நிலையில் நம்பிக்கையுடன் சாமகானம் இசைத்த அரக்கன் இராவணனுக்கு அதிகமான வாழ்நாளும் வாளும் கொடுத்து அருள் புரிந்த செய்கையையும் இந்த பாடலில் அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.வெளி செய்த வழிபாடு=அறிவு ஒன்றி செய்யப்படும் வழிபாடு: மேவுதல்= விரும்புதல்;
மீளாத ஆள் என்னை உடையான் தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன்கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னைத்
தோளாண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்து ஆங்கே
நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
சமண குருமார்கள், தங்களுக்கு தெரிந்த மந்திரங்கள் தந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்திய போதிலும், அவர்களால் தருமசேனரின் சூலை நோயினை தீர்க்கமுடியவில்லை. அப்பர் பிரான் சமண சமயத்து குருவாக இருந்தபோது, சமணர்களால் தருமசேனர் என்று அழைக்கப்பட்டார். எவராலும் தீர்க்கமுடியாத சூலை நோயினை தீர்த்துக் கொள்ள, திருவதிகைப் பெருமானை வேண்டியபோது கூற்றுவனைப் போன்று தனது உடலினை சூலை நோய் வருத்துவதாக சொல்லி புலம்புகின்றார். பின்னர் இறைவன் அருளால் சூலை நோய் தீர்க்கப்படுகின்றது. இதனிடையில் சமணர்கள் அப்பர் பிரான் மீது, அவர் சமணசமயத்தை இழிவாக பேசினார் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்படவே, மன்னன் இவரை விசாரணைக்கு அழைக்கின்றார். அப்போது நாம் ஆர்க்கும் குடியல்லோம் என்று புரட்சிக் குரல் கொடுத்து முழக்கமிடும் அப்பர் பிரான் நாமார்க்கும் என்று தொடங்கும் பதிகத்தை பாடுகின்றார். அந்த பதிகத்தின் கடைப் பாடலில், நாவார நம்பனையே பாடப் பெற்றேன் என்று தன்னை குறிப்பிடுவதை நாம் உணரலாம். எவராலும் தீர்க்க முடியாத சூலை நோயினைத் தீர்த்த பெருமானை, நம்பன் என்று குறிப்பிட்டு, மிகுந்த விருப்பத்துடன் அவனைப் பாடியதாகவும் சொல்கின்றார். பொறுக்க முடியாத வயிற்று வலியால் திருவதிகை வந்தடைந்த நிலைக்கும், வயிற்று வலி தீர்க்கப்பட்டு சிவபிரானால் ஆட்கொள்ளப் பட்ட நிலைக்கும் உள்ள மாற்றத்தினை இந்த பாடலில் நாம் காணலாம். பல்லவ மன்னன் என்ன, அவனையும் விட பெரிய நாவலந் தீவினுக்கு அரசன் என்ன, தென் திசைக்கு அதிபதியாகிய இயமன் என்ன,எவரது கட்டளைக்குமே தான் பணிய வேண்டிய அவசியம் இல்லை என்று வீரமாக முழங்குவதை நாம் உணரலாம். தென்திசைக் கோன்=இயமன்.நாணற்றார்=நாணம் இல்லாத சமணர்கள். உடை இல்லாமல் எங்கும் திரிந்தாலும் அதற்காக வெட்கப்படாத சமணர்கள். கோ ஆடி=தலைமைத் தன்மையை உரைத்து. நள்ளாமே விள்ளப் பெறுதல்=விரும்பாது விலகும் நிலை. எமது நாவார, அதாவது நாக்கு இன்பம் பெற, சிவபெருமானது புகழினைப் பாடப் பெற்றோம்; அதனால் நாணம் ஏதும் இன்றி உடையில்லாமல் திரியும் சமணர்கள் எம்மை விரும்பாது விலகினார்கள்; ஆனால் அமரர் தலைவனாகிய சிவபெருமான் என்னை ஆட்கொள்வான்; பிரமனும், திருமாலும் அறிதற்கு அரிய வகையில், அனற்பிழம்பாகத் தோன்றியவனும், தேவர்க்குத் தேவனும் ஆகிய சிவபெருமான், எனது சிந்தையில் நீங்காது இருந்தமையால், யாம் அவனுடன் வேறறக் கலந்து நின்று அவனைப் போன்று எண்குணங்கள் உடையவனாக மாறிவிட்டோம்; எனவே தென்திசைக்கு அதிபதியாகிய இயமனே நேரில் வந்து, தனது தலைமைத் தன்மைகளை எனக்கு உணர்த்தி, தனக்கு குற்றேவல் செய்க என்றாலும் நாம் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டோம், என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல். எப்போதும் அடக்கமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தும் அப்பர் பிரான், பெருமானின் அருளால், தான் அடைந்த மாற்றத்தினால், தன்னை உயர்ந்தவன் என்று குறிப்பிட்டு பெருமைப் படுவதை, அவர் நான் என்பதற்கு பதிலாக நாம் என்ற சொல்லை பயன்படுத்திய தன்மையிலிருந்து நாம் உணரலாம்.
நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே
ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.47.6) சுந்தரர் நல்லூர் நம்பானே என்று இறைவனை அழைக்கின்றார். திருக்கயிலாயத்தில் பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக பணி புரிந்த போது செய்த சிறிய பிழையின் காரணமாக, நம்பி ஆரூராக பூவுலகில் பிறக்க நேரிடுகின்றது. நிலவுலகம் செல்லுமாறு இறைவனால் பணிக்கப்பட்டபோது, சுந்தரர் இறைவனிடம், தான் பூவுலக மாயையில் சிக்கிக்கொள்ளாத வண்ணம் இறைவன் தன்னை தக்க தருணத்தில் ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றார். நிலவுலகில் பிறந்த பின்னர், இவை அனைத்தும் சுந்தரருக்கு மறந்துவிடுகின்றது. ஆனால் இறைவன், தனது வாக்கினை நிறைவேற்றும் பொருட்டு, சுந்தரர் பால் கருணை கொண்டு, அவருக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி, அவரை திருவெண்ணெய் நல்லூர் தலத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று, அடிமை ஓலை காட்டி அவரை ஆட்கொண்டு அருள் புரிந்த பின்னர், சுந்தரருக்கு அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. இறைவனின் கருணையை நினைத்து மனம் நெகிழ்ந்து பலவாறும் வியந்து அவரைப் புகழ்ந்து பாடுகின்றார். அதன் பின்னர், பல தலங்கள் சென்று பதிகங்கள் பாடியபோது பொன்னும் மணியும் அளித்து இறைவன் அருள் புரிந்ததை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். எனவே சுந்தரர் பெருமானை பெரிதும் விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை. தான் பெருமானை விரும்பியதை நல்லூர் நம்பான் என்ற தொடர் மூலம் சுந்தரர் தெரிவிக்கின்றார்.
தாங்கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே
திருப்பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் பாடலில் (7.48.5) சுந்தரர், நம்பனே என்று பெருமானை அழைத்து, உன்னை நான் மறக்கினும், எனது நா, வழுவாது உனது நாமத்தை சொல்லும் என்று கூறுகின்றார்.
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீயெழச் சிலை கோலினாய்
வம்புலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக்கொடுமுடி
நம்பனே உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.68) முதல் பாடலில் சுந்தரர் இறைவனை நம்பன் என்று அழைக்கின்றார். நம்பனை மறந்து நான் வேறு எவரையும் நினையேன் என்று கூறும் பாடல் இது.
செம்பொன் மேனி வெண்ணீறு அணிவானைக் கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்புவைத் தழல் அங்கையினானைச் சாம வேதனைத் தன்னொப்பில்லானைக்
கும்பமா கரியின் உரியானைக் கோவின் மேல் வரும் கோவினை எங்கள்
நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
திருவெண்ணெய்நல்லூரில் தன்னை ஆட்கொண்ட இறைவன், விரும்பத்தக்கவன் என்று, தான் இரண்டு கண்களின் பார்வையை இழந்து கோலை ஊன்றி நடந்த நிலையிலும் சுந்தரர் அழைப்பதை நாம் திருமுல்லைவாயில் பதிகத்தில் (7.69.8) காணலாம். சம்பு என்ற வடமொழி சொல்லுக்கு இன்பம் உண்டாக்குபவன் என்று பொருள். நச்சரவு ஆட்டிய நம்பன் என்று மணிவாசகர் திருவண்டப்பகுதி அகவலில் குறிப்பிடுகின்றார். கயிலாயத்தில் நந்தவனத்திற்கு பூப்பறிக்கச் சென்ற போது அங்கே வந்த பார்வதி தேவியின் தோழியர்களைக் கண்டு ஒரு நொடி மனம் பேதலித்த குற்றத்திற்காக,மண்ணுலகில் அவதரிக்குமாறு பெருமானால் சுந்தரர் பணிக்கப் பட்ட போது, மண்ணுலக மாயைகளில் தான் மயங்கி விடாமல் இருக்க, உரிய நேரத்தில்,சிவபெருமான் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று சுந்தரர் வேண்டினார். அந்த வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமான், சுந்தரருக்கு திருமணம் நிகழவிருந்த சமயத்தில் அவரைத் தடுத்து ஆட்கொண்டதை குறிப்பிடும் பாடலில், அன்று வெண்ணெய்நல்லூரில் ஆட்கொண்ட நம்பனே என்று சொல்வதை நாம் உணரலாம்.
நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன் மாளிகை சூழ் திருமுல்லை வாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
திருக்கேதாரத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.78.3) ஒரு பாடலில் சுந்தரர், முனிவர்கள் பெருமான் மீது நம்பிக்கை கொண்டு விரும்புவதாக கூறுகின்றார்.கொம்பு=யோக தண்டம்; ஒருக்கு காலர்கள் என்ற சொற்றொடர் ஒருக்காலர் என்று திரிந்தது. ஒருக்கு=ஒடுக்கும், கால்=காற்று, மூச்சினை ஒருவழிப்படுத்தும் தவசிகள்: துறவிகள், இரவும் பகலும் இருக்கு மந்திரத்தைச் சொல்லியவாறு நம்பன் என்றும் நம்மை ஆளும் பெருமான் என்றும் சிவபெருமானை மலர்கள் தூவி வழிபடும் தன்மை இந்த பாடலில் கூறப்படுகின்றது. யானைகள் கூட்டமாக நின்று, தங்களது தும்பிக்கையால் நீரினை இறைத்து விளையாடும் காட்சி இங்கே உணர்த்தப் படுகின்றது.
கொம்பைப் பிடித்து ஒருக்காலர்கள் இருக்கால் மலர் தூவி
நம்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும்
கம்பக் களிற்று இனமாய் நின்று சுனை நீர்களைத் தூவிச்
செம்பொன் பொடி சிந்தும் திருக்கேதாரம் எனீரே
சுந்தரர், புக்கொளியூர் அவினாசி தலம் சென்ற பொது, எதிரெதிர் இல்லங்களில், ஒன்றில் மங்கல ஒலியும் மற்றொன்றில் அழுகை ஒலியும் எழுந்ததை கேட்கின்றார். இவ்வாறு ஒன்றுக்கொன்று மாறுபட்ட ஒலிகள் ஒரே சமயத்தில் எழுவதைப் பற்றி, சுந்தரர் ஆங்கிருந்தவரிடம் விளக்கம் கேட்க,ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருந்த இருவீட்டாரின் மகன்களும், ஐந்து வயதாக இருந்தபோது, ஒன்றாக ஒரு குளத்தில் நீராடச் சென்றனர் என்றும்,அப்போது அந்த குளத்தில் இருந்த முதலை ஒரு சிறுவனை விழுங்கியது என்றும், தப்பிப் பிழைத்த சிறுவனுக்கு இன்று உபநயனம் நடைபெறுவதால் அங்கே மங்கல ஒலியும், மற்றொரு இல்லத்தினில் இறந்த மகனை நினைத்து அழுகை ஒலியும் எழுகின்றன என்று விளக்கம் அளித்தனர். பின்னர் சுந்தரர், அந்த குளம் இருந்த இடத்திற்கு சென்று, எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகத்தை (7.92) பாடுகின்றார். இந்த பதிகத்தின் நான்காவது பாடலை,உரைப்பார் உரை உள்கவள்ளார் என்று தொடங்கும் பாடலில், அவினாசி பெருமானே, கரைக்கால் முதலையை பிள்ளை தரச்சொல்லு காலனையே, என்று சுந்தரர் வேண்ட, அந்த பாடல் முடியும் முன்னரே ஆங்கே தோன்றிய முதலை, இறந்த சிறுவனை உமிழ்ந்தது. மேலும் அந்த சிறுவன், இடைப்பட்ட நாட்களுக்கு உண்டான வளர்ச்சியும் பெற்றவனாக இருந்தமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பிள்ளை பிழைத்தெழுந்து வந்த பின்னர், இந்த பதிகத்தின் ஆறு பாடல்களையும் சுந்தரர் பாடி முடிக்கின்றார். தனது நம்பிக்கைக்கு உரியவனாகத் திகழ்ந்து, தனது விருப்பத்தை நிறைவேற்றி, இறந்த சிறுவனை உயிர்ப்பித்த இறைவனை, நம்பனே என்று பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், மிகவும் பொருத்தமாக சுந்தரர் அழைக்கின்றார். குளத்தில் முழுகிக் குளித்த சிறுவன், உடனே வெளியே எழுந்து வாராமல் சில ஆண்டுகள் கழித்து வந்தமையை மாயம் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார் என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இறைவன் செய்த மாயத்தை, சிறுவன் பால் ஏற்றி குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
நள்ளாறு தெள்ளாறு அரத்துறைவாய் எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளியூர் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே
கூத்தாடி, தனது உணவுக்காக பிச்சை எடுக்கும் பெருமானை நம்பன் என்று நினைத்து அவனை அணுகலாமா என்று கேள்வி கேட்கும் தோழிக்கு, கூத்தாடி பிச்சை ஏற்பதால் அவனை மிகவும் எளியவனாக நினைத்து விட வேண்டாம், நான்மறைகள் தேடியும் காண முடியாதால், அந்த நான்மறைகளால் எனது பெருமானே, ஈசா என்று புகழ்ந்து பாடும் பெருமையை உடையவன் என்று மற்றொரு தோழி கூறும் பாடலை நாம் திருவாசகம் திருச்சாழல் பதிகத்தில் காணலாம். நான்மறைகளும் தேடியும் காண முடியாமல், எம்பெருமான் என்றும் ஈசா என்றும் புகழ்ந்து பாடிய பெருமை உடையவன் சிவபிரான் என்று மணிவாசகர் இங்கே விளக்குகின்றார். நண்ணுதல்=அணுகுதல்
அம்பலத்தே கூத்தாடி அமுது செயப் பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணுவது என்னேடி
நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ
கலங்கி நின்ற தனது சிந்தையின் கலக்கத்தைத் தீர்த்து தெளிவு பெறச் செய்த இறைவனை, நம்பனே என்று கருவூர்த் தேவர் அழைக்கின்றார் (9.17.9).சேற்றுடன் கலந்து தேங்கி கலங்கி காணப்படும் தண்ணீரில் தேற்றாங் கொட்டையை போட்டால், நீர் தெளிவு அடைவது போன்று, தனது கலங்கிய சிந்தையுள் இறைவன் புகுந்தமையால், தனது சிந்தை தெளிவடைந்தது என்று கருவூர்த் தேவர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அருள் புரிந்த இறைவனை, தான் விரும்பியதால், அவனை பொருத்தமாக நம்பன் என்று அழைப்பதையும் நாம் உணரலாம்.
கலங்கலம் பொய்கைப் புனல் தெளிவிடத்துக் கலந்த மண்ணிடைக் கிடந்தாங்கு
நலங்கலந்த அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேன் உடைய
புலங்கலந்தவனே என்று நின்று உருகிப் புலம்புவார் அவம் புகார் அருவி
மலங்கலங் கண்ணில் கண்மணி அனையான் மருவிடம் திருவிடைமருதே
திருவிசைப்பா பாடல் ஒன்றினில் வேணாட்டிகள், இறைவனை நம்பா என்று அழைக்கும் பாடலை (9.21.1) நாம் காண்போம். இந்த பாடலில், தனது அடிமை இழிவான செயலைச் செய்தாலும் அதனை பொருட்படுத்தாது விரும்பும் உரிமையாளர் போன்று, தனது தலைவனாகிய பெருமான் அடிமையாகிய தான் செய்த இழிவான செயல்களைப் பொறுத்துக் கொள்கின்றார் என்று கூறுகின்றார். அடிகளார் இந்த செயலுக்கு ஒரு உதாரணத்தை தருகின்றார். கச்சல் வாழைக் காயையும் வேப்பங் கொழுந்தினையும் கறி சமைத்து உண்பது போல் தனது தவறுகளை பொறுத்துக் கொள்ளும் பெருமான் என்று கூறுகின்றார். தனக்கு வேறு எந்த பற்றுக்கோடும் இல்லை என்பதை உணர்ந்த பின்னரும் தனது தொண்டினை பெருமான் விரும்பி ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்று பெருமானை நோக்கி கேள்வி கேட்கும் பாடல் இது.
துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறு கதலி இலை வேம்பும் கறி கொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி
நச்சாய் காண் திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே
நம்பன் என்றும் நம்பான் என்றும் அருளாளர்கள் இறைவனை அழைத்து மகிழ்ந்ததையும், அவ்வாறு இறைவனை தாங்கள் அழைத்தமைக்கு தகுந்த காரணங்களை குறிப்பிட்டதையும், ரசித்த நாம், இந்த பதிகத்தின் பாடல்களுக்கு உரிய விளக்கத்தையும் பொருளையும் சிந்திக்கத் தொடங்குவோம்.
பாடல் 1:
நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முனாய ஒளியான்
நீரியல் காலுமாகி நிறை வானுமாகி உறு தீயும் ஆய நிமலன்
ஊரியல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நலகண்டு பண்டு சுடலை
நாரியோர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
நேரியன்=நுண்ணியன்; ஆகுமல்லன் என்ற தொடரை நேரியன் என்ற சொல்லுடன் மீண்டும் இணைத்து, நேரியன் நேரியன் ஆகுமல்லன் என்று சொற்களை அமைத்துப் பொருள் கொள்ள வேண்டும். மிகவும் நுண்ணியனாக இருக்கும் பெருமான், அளவிடமுடியாத பெரிய உருவம் எடுப்பவனாகவும் உள்ளான் என்பதையே இந்த தொடர் உணர்த்துகின்றது. நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணியனே என்ற திருவாசகத் தொடர் நமது நினைருக்கு வருகின்றது.முனாய= முன்+ஆய; அனைத்து உயிர்களுக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் முன்னே தோன்றிய ஆதி மூர்த்தி; கால்=காற்று; உறு தீ=மிகுதியாக எரியும் தீ;இயல் கால்=இயங்குகின்ற காற்று; ஊர் இயல்=ஊரார் இயல்பாக, தாங்களாகவே முன்வந்து இடுகின்ற பிச்சை; நேரியன் என்ற சொல்லுக்கு அனைத்தும் பொருந்தியவன் என்றும் அல்லன் என்ற சொல்லுக்கு ஏதும் இல்லாதவன் என்று பொருள் கொண்டு ஒரு சிறப்பான விளக்கம் அளிக்கப் படுகின்றது.அனைத்து உலகங்களும் அவனது உடைமை என்பதால், சிவபெருமான் அனைத்தையும் உடையவனாக இருக்கின்றான்; அதே சமயத்தில் எந்த பொருளின் மீதும் பற்ற அற்றவனாக இறைவன் இருக்கும் தன்மை அல்லன் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. அனைத்துச் செல்வங்களும் பெற்றிருந்த போதும்,எந்த விதமான பொருளின் மீது பற்றற்றவனாக இருப்பதும் இறைவனின் சிறந்த குணங்களில் ஒன்றாகும்.
இந்த பாடலில் மூன்றாவது அடியில் உள்ள நலகண்டு என்ற தொடருக்கு பதிலாக நல்குண்டு என்ற தொடர், கங்கை பதிப்பகத்து தேவாரம் உள்ளிட்டு பல நூல்களில் காணப்படுகின்றது. ஆறுமுக விலாஸ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்ட பதிப்பினில் நலகண்டு என்ற தொடரே காணப்படுகின்றது.சிவக்கவிமணியார் தொகுத்த பெரியபுராணம் விளக்கம் நூலிலும், நலகண்டு என்ற தொடரே காணப்படுகின்றது. நலகண்டு=நலம்+கண்டு, நலன்கள் பல கண்டவனாக, தான் பலி ஏற்பதன் மூலம், பக்குவப்பட்ட பல உயிர்கள் உய்வினை அடைவதால், நலங்கள் பல உயிர்களுக்கு நிகழ, அந்த நலன்களைக் கண்டு மகிழ்பவனாக இறைவன் இருக்கின்றான் என்ற விளக்கம், மிகவும் பொருத்தமாக அமைந்திருப்பதால், நலகண்டு என்ற தொடர் மிகவும் பொருத்தமாக உள்ளது என்று தோன்றுகின்றது. இதற்கு மாறாக, நல்குண்டு (நல்குண்டு= நல்க+உண்டு) என்ற தொடர், நன்றாக உட்கொண்டு என்ற பொருளைத் தருகின்றது; பிறப்பையும், இறப்பையும், முதுமை மற்றும் நோய்களைக் கடந்த இறைவனுக்கு உணவுத்தேவை ஏற்படாது அல்லவா. எனவே இந்த தொடர் பொருத்தம் உடையதாகத் தோன்றவில்லை. உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது பெருமானின் திருநடனம் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. தொன்மைக் கோலம் என்று அருளாளர்கள் பலராலும் போற்றப் பட்ட திருக்கோலம், மாதொருபாகனின் திருக்கோலம் என்பதை உணர்த்தும் முகமாக, பண்டைய நாளிலிலிருந்தே தொடர்ந்து வரும் கோலம் என்று குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு திருவாசகம் திருப்பூவல்லி பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. இந்த கோலத்தை, தொன்மை வாய்ந்த கோலம் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின்தோற்றத்தையும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றத்தையும் இணைத்து குறிப்பிட்டு மகிழும் இனிமையான பாடல்.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ
பொழிப்புரை:
உலகினில் உள்ள அனைத்து பொருட்களினும் மிகவும் நுண்ணியவனாகவும், அதே சமயத்தில் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களினும் மிகவும் பெரிய உருவத்துடன் இருப்பனும் ஆகிய இறைவனின் திருமேனியின் தன்மையை எவராலும் அறியமுடியாது. அவன் அனைத்துப் பொருட்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவன்; சோதி வடிவமாக உள்ள இறைவன், நீர், இயங்கும் காற்று, நிறைந்த வானம், மிகுதியாக எரிகின்ற தீ மற்றும் உலகம் ஆகிய ஐந்து பூதங்களாக இருப்பவனும், இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து விலகியவனும் ஆகிய இறைவன், ஊரார் இயல்பாக, தாங்களே மனமுவந்து முன்வந்து தருகின்ற பிச்சையை மதித்து ஏற்றுக் கொள்கின்றான். இவ்வாறு பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தருகின்ற பிச்சையாகிய மலங்களை ஏற்றுக்கொள்ளும் பெருமான், தனக்கு இடப்பட்ட பிச்சைக்கு பதிலாக முக்தி நிலையினை அந்த ஆன்மாக்களுக்கு வழங்குவதை உணரும் உலகம் போற்றுகின்றது. பண்டைய நாளில், அனைத்து உலகங்களும் அழிந்த நிலையில், உயிரற்ற உடல்கள் எங்கும் பரவிக் கிடந்து சுடுகாடாக காட்சி அளித்த நிலையில், தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டு மாதொருபாகனாக, நடமாடும் வல்லமை வாய்ந்த பெருமான் நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான்.
பாடல் 2:
இட மயில் அன்னசாயல் மடமங்கை தன் கை எதிர் நாணி பூண வரையில்
கடும் அயில் கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன்
மடமயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும்
நடமயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
பொருள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கடுமயில் என்ற தொடர் கடும் அயில் என்று இங்கே பிரிக்கப் பட்டுள்ளது. நான்கு அடிகளிலும் முதற்சீர்,இடமயில், கடுமயில், மடமயில், நடமயில் என்று இருப்பதை நாம் உணரலாம். நான்கு அடிகளிலும் மயில் என்ற சொல் கையாளப் பட்டுள்ள நயத்தினை நாம் உணரலாம். திருஞானசம்பந்தரின் கவிதை நயத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த பாடல் உள்ளது. வானைக்காவில் வெண்மதி (3.53.) என்று தொடங்கும் திருவானைக்கா பதிகத்து பாடலும் வீடலாலவாயிலாய் என்று தொடங்கும் ஆலவாய்ப் பதிகமும் (3.52) நமது நினைவுக்கு வருகின்றன. இந்த இரண்டு பதிகங்களின் முதல் பாடல்களில் முறையே ஆனைக்கா மற்றும் ஆலவாய் என்ற சொற்கள் நான்கு அடிகளிலும் வருகின்றன.
இட மயில்=மயில் போன்ற சாயலுடன் இடது பாகத்தில் பொருந்தி இருக்கும் பார்வதி தேவி; நாணி=நாணினை உடைய வில்; திரிபுர தகனத்தின் போது,அம்பிகை வில்லை பிடித்ததாகவும், இறைவன் அந்த வில்லினில் அம்பினை கோத்து எய்ததாகவும் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இடது கையினால் வில்லினைப் பற்றிக்கொண்டு வலது கையினால் நாணினை இழுத்து, அம்பினை விடுவிப்பதே முறையாக கருதப்படுகின்றது. பெருமானும் அவ்வாறே செய்து, திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் நோக்கி அம்பினை எய்ததாக புராணங்கள் கூறுகின்றன. பெருமான் மாதொருபாகன் என்பதால், வில்லினைப் பற்றிக்கொண்டு இருந்த இடது கை, அம்பிகைக்கு உரியதாக, நயத்துடன் குறிப்பிட்டு அப்பர் பிரான், பெருமானை நோக்கி கேள்வி கேட்பதாக நாகைக் காரோணம் தலத்து பதிகத்தின் பாடல் (4.103.2) அமைந்துள்ளது. சேவகம்= ஆண்மை, வீரச் செயல்: நற்றாள்=நல்ல+தாள், தாள்=பாதம்:செற்றார்=பகைவர்: சென்ற=வெற்றி கொண்ட; தொடர்ந்து கல்வி பயிலும் பெரியோர்கள் நிறைந்த கடல் நாகைக் காரோணத்துக் கண்ணுதலே, திரிபுரத்து அரக்கர்களுடன் நீ போருக்குச் சென்ற போது நீ வில்லினை உனது இடது கையால் தாங்கினாய், உனது உடலின் இடது கை, இடது பாகத்தில் பார்வதி தேவி இருப்பதால், வேல்நெடுங்கண்ணியாகிய தேவிக்கு உரியது. காலால் அந்த வில்லினை தரையில் ஊன்றி மிதித்து, நாணினை வலித்தது உனது வலது கரம். உண்மை இப்படி இருக்கையில், தேவர்களின் பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களை வெற்றி கொண்ட வீரச் செயல் உன்னுடையது என்று எவ்வாறு நீ சொல்லிக் கொள்கின்றாய். தயவு செய்து அடியேனுக்கு விளக்கவும், என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கற்றார் பயில் கடல் நாகைக் காரோணத்து எம் கண்ணுதலே
வில் தாங்கிய கரம் வேல்நெடுங்கண்ணி வியன் கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண் வலித்த கரம் நின் கரமே
செற்றார் புறம் செற்ற சேவகம் என்னை கொல் செப்புமினே
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.25.5) திருஞானசம்பந்தர், திரிபுரத்து கோட்டைகளை எரிக்கச் சென்ற போது,இறைவனுடன் பிராட்டியும் உடனிருந்தாள் என்று குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு, மாதொருபாகனாக பெருமான், திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்றார் என்பதையே உணர்த்துகின்றது.
மலையான் மகளோடு உடனாய் மதில் எய்த
சிலையார் செம்பொன்பள்ளியானையே
இலையார் மலர் கொண்டு எல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே
அரசிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.95.5), திருஞானசம்பந்தர், தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்தவராக பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்றார் என்று கூறுகின்றார். மானின் கண்கள் மருட்சி மிகுந்தவை; மருட்சியில் தனது கண்களை விடவும் பிராட்டியின் கண்கள் மருட்சி மிகுந்து அழகாக காணப்பட்ட கண்ணுற்ற மான், பிராட்டி என்ன காரணத்தினால் அச்சம் கொண்டுள்ளாள் என்று புரியாததால் மான் அச்சம் கொண்டுள்ளது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொதுவாக, சங்க இலக்கியங்கள் அந்த காலத்து பெண்களை, வீரம் மிகுந்தவர்களாகவும் புலமையும் அறிவும் உடையவர்களாக இருந்த தன்மையை குறிப்பிட்டாலும், அதே சமயத்தில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய குணங்கள் உடையவர்களாகவும் சித்தரிக்கின்றது. மேலும் குறிப்பாக, களவியலில் ஈடுபட்ட தலைவிகள், தங்களது தலைவன், தங்களின் அருகில் இருக்கும் போது, அச்சம் நாணம் முதலான நான்கு குணங்களை வெளிப்படுத்தி, தலைவனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டதாக பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. பிராட்டியும் பெருமானும் களவியலில் ஈடுபடவில்லை எனினும், அவர்களின் இடையே இருந்த அன்பு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது என்பதால், காதல் வயப்பட்ட பெண்கள் போன்று அச்சம் உடையவளாக பிராட்டி காணப்பட்டாள் என்று இங்கே ஞானசம்பந்தர் கூறுகின்றார். உண்மையில் வீரமகள் என்று புகழ்ந்து குறிப்பிடும் வகையில், பிராட்டி இருந்த தன்மையை பல புராணங்கள் எடுத்துரைக்கின்றன. சிவபெருமான் தங்களுடன் போர் புரிய வருகின்றார் என்பதை அறிந்த பின்னரும், அச்சம் ஏதுமின்றி அவரை எதிர்கொள்ளத் துணிந்த திரிபுரத்து அரக்கர்களின் தன்மையை, தானஞ்சா என்ற தொடர் மூலம் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். வான்=வானவர்கள்;
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவித்
தான் அஞ்சா அரண் மூன்றும் தழலெழச் சரம் அது துரந்து
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மாமறை ஓதி
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே
துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.98.6), திருஞானசம்பந்தர் மாதொரு பாகனாக, திரிபுரத்தவர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தார் என்று கூறுகின்றார். அடர்ந்து காணப்படும் தன்மையால் வெய்யில் உள்ளே புகாதவாறு செழித்து வளர்ந்த மரங்கள் நிறைந்த குளிர்ந்த பசுஞ்சோலைகளில், உறங்காமல் திரிந்து கொண்டிருந்த பறவைகள் நிறைந்து வாழும் தலம் என்று துருத்தி தலத்தினை குறிப்பிடுகின்றார்.வெய்யில் தாக்கம் இல்லாததால், பறவைகள் சோர்வு அடையாமல் துடிப்புடன் இருந்ததாக கூறுகின்றார். மயிலுடன் மாறுபட்டு, தனது மிகுந்த அழகினால் மயில்கள் பொறாமை கொண்டு வருந்தும் வண்ணம் அழகுடன் திகழ்ந்த உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்ட இறைவன், மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்த வில்லினை உடையவர் ஆவார் என்று கூறுகின்றார்.
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கு எதிர்ந்த புள்ளினங்கள் மல்கு தண் துருத்தியாய்
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாதோர் பாகமாக மூ
வெயிற்கு எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே
இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.117.1), திருஞானசம்பந்தர் பார்வதி தேவியின் கையின் உதவி கொண்டு மூன்று புரங்களையும் எரித்தார் என்று கூறுகின்றார். மான் என்ற சொல் மான் எனப்படும் மிருகத்தை குறிப்பதாகவும், மான் போன்று அழகிய உருவம் உடைய உமை அன்னையை குறிப்பிடுவதாகவும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை, பெருமான் தனது இடது கையினில் ஏந்தி இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். பார்வதி தேவி என்று பொருள் தருவதாக எடுத்துக் கொண்டாலும், பிராட்டி பெருமானின் இடது பாகத்தில் இருப்பதால், இடது கையால் வில்லினை பிடித்துக் கொண்ட பெருமான் என்று பொருள் வருகின்றது. மாதொரு பாகனாகிய பெருமானின் இடது கரம் என்று குறிப்பிடுவது, பிராட்டியின் கையை குறிக்கின்றது என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இதே கருத்தினைத் தான், திருஞானசம்பந்தர், பார்வதி தேவி தனது கரத்தினால் வில்லினைத் தாங்கினாள் என்று கூறுகின்றார். சுலாய்=சுற்றி; இரும்பை என்பது தலத்தின் பெயர்; மாகாளம் என்பது திருக்கோயிலின் பெயர்; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவன்; வண்டுகள் ரீங்காரம் இட்டு ஒலி எழுப்பதை முரலுதல் என்று கூறுவார்கள்; மண்டு=பெருகி வந்த;
மண்டு கங்கை சடையில் கரந்தும் மதிசூடிமான்
கொண்ட கையால் புரம் மூன்று எரித்த குழகன் இடம்
எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை தனுள்
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே
மூக்கீச்சரம் (திருச்சி நகரத்தின் ஒரு பகுதியாகிய உறையூர்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் 2.120.2), திருஞானசம்பந்தர், திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்ற போது, பெருமான் உமை அன்னையுடன் சென்றதாக கூறுகின்றார். கன்மம்=செயல்; கொண்டல்=மேகம்; பெருமான் தனது தலையினில் தாங்கியது வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி என்பதால், மழை நீரால் நிறைந்த கங்கை நதியை பெருமான் தாங்கினார் என்று சொல்வது பொருத்தமன்று. எனினும் நதிகளின் பொதுத் தன்மையை, மழை நீரினால் நதிகளில் வெள்ளம் பெருகும் தன்மையை கருத்தில் கொண்டு, மழை நீரால் நிறைந்த கங்கை நதி என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த காரணம் கருதியே, கொண்டல் என்ற சொல்லுக்கு மேகம் என்றும் மழைநீர் என்றும் பொருள் கொள்ளலாகாது என்றும் கொள்ளுதல் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று தருமையாதீனக் குறிப்பு நமக்கு உணர்த்துகின்றது. விரிசடையைத் தனது இருப்பிடமாகக் கொண்ட கங்கை நதி என்ற விளக்கம் பொருத்தமாக உள்ளது. கூட்டமா=கூடி இருப்பதும்; விண்ட=உடைந்த; சிவநெறியிலிருந்து பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்கள்; வேனில் வேள்=வசந்த காலத்தின் தலைவனாக விளங்கும் மன்மதன்; தேர்ந்து=தேடிக் கொண்டு; வசந்த காலத்தின் மன்மதனின் ஆற்றல் வலுப்பெறுகின்றது என்று கருதும் இலக்கிய மரபினைப் பின்பற்றி, வேனில் வேள் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
வெண்டலை ஓர் கலனாப் பலி தேர்ந்து விரிசடைக்
கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா
விண்டவர் தம் மதில் எய்த பின் வேனில் வேள் வெந்தெழக்
கண்டவர் மூக்கீீச்சரத்து எம் அடிகள் செய் கன்மமே
மேற்கண்ட பாடலில் குறிப்பிடப்பட்ட மன்மதனின் ஆற்றல் முன்னே தோற்காது நின்றவர் சிவபெருமான் ஒருவர் தாம் என்பதால் தான் அவரால், மன்மதனை வெற்றி கொள்ள முடிந்தது. அவனை சுட்டெரித்து வீழ்த்திய பெருமான் ஒருவரால் தான் மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்தது என்பதையும் வேனில்வேள் வெந்து எழக்கண்டவர் என்ற தொடர் மூலம் ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். திரிபுரத்து அரக்கர்களை அழித்தது, எத்தகைய அரிய வரங்கள் பெற்றிருந்தாலும் இறப்பினை எந்த உயிரும் தவிர்க்கமுடியாது என்பதை உணர்த்தவே; தவம் செய்வோரை எவரும் தடுக்கலாகாது என்பதை உணர்த்த மன்மத தகனம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நமது ஆணவத்தை (கர்வம்; செருக்கு) பெருமான் அழிப்பார் என்றும், காமம் முதலான உட்பகைகள் (காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம்) ஆறினையும் பெருமான் அழிப்பார் என்பதையும் உணர்த்துகின்றது என்று சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார்.
பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.64.1) திருஞானசம்பந்தர், திரிபுரங்களை அழித்தவர் பெண்ணாணாம் பெருமானார் என்று கூறுகின்றார்.புரமெரித்த என்ற தொடரைத் தொடர்ந்து பெண்ணாணாம் பெருமானார் என்ற தொடர் வருவதால், திரிபுரங்களை எரிக்கச் சென்ற போதும் பெருமான் மாதொருபாகராகத் தான் சென்றார் என்ற கருத்து வலுப்படுகின்றது. பெருமானை விட்டு பிரியாதவளாக பிராட்டி இருந்தமையால், உமை அன்னையும் உடன் சென்றதாக ஞானசம்பந்தர் குறிப்பிடுவதில் வியப்பு ஏதும் இல்லை. உலகுக்கு என்ற சொல் கண்ணாவார் மற்றும் கருத்தானார் என்ற சொற்களுக்கு இடையில் வருவதால், அந்த இரண்டு சொற்களுக்கும் பொதுவானதாக நாம் கருதவேண்டும். இத்தகைய அமைப்பினை, இடைநிலைத் தீவகம் என்று அழைப்பார்கள். பெருமான், உலகத்தவருக்கு கண்ணாகவும், கருத்தாகவும் உள்ள தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.
அண்ணாவும் கழுக்குன்றும் ஆயமலை அவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள் செய்வார்
கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரமெரித்த
பெண்ணானார் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
பொழிப்புரை:
மயில் போன்று சாயல் உடையவளும், இளமை மற்றும் அழகும் உடையவளும் ஆகிய உமை அன்னை, தனது உடலின் இடது பாகத்தில் பொருந்தியவளாக,தனது கையினில் மேரு மலையை வளைத்துச் செய்யப்பட்ட வில்லினை ஏந்தி நிற்க, வாசுகி பாம்பிணை நாணாக பூட்டி, கொடிய தன்மையும் கூர்மையும் கொண்ட அம்பினை கோத்த பெருமான், மூன்று திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்து வெற்றி கொண்டு, தேவர்களுக்கு புது வாழ்வு அளித்த தலைவன் ஆவான்; இளமையான மயிலைத் தனது வாகனமாகக் கொண்ட முருகப்பெருமானின் தந்தை என்று போற்றும் தொண்டர்களின் மனதினில் நின்றவனும், வலிமை வாயந்தவனும் ஆகிய பெருமான், மயில்கள் நடமாடுவதும் குயில்கள் கூவுவதும் நடைபெறுகின்ற சோலைகள் நிறைந்த நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான்.
பாடல் 3:
சூடக முன்கை மங்கை ஒருபாகமாக அருள் காரணங்கள் வருவான்
ஈடகம் ஆன நோக்கி இடுபிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவத்
தோடகமாய் ஒர்காதும் ஒரு காதிலங்கு குழை தாழ வேழ உரியன்
நாடகமாக ஆடி மடவார்கள் பாடும் நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
சூடகம்=முன்கை; தனது அடியார்களுக்கு அருள் புரிய வருகின்ற பெருமான், பார்வதி தேவியுடன் வருகின்றான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பார்வதி தேவி தானே அருட்சக்தி; எனவே தொண்டர்களுக்கு அருள் புரிய விரும்பும் பெருமான், பிராட்டியுடன் வருவது தானே பொருத்தம்;ஈடகம்=பெரிய வீடுகள், பெருமை மிகுந்த வீடுகள்; பெருமான் பெரிய வீடுகள் சென்று பிச்சை ஏற்பதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார். எனவே அந்த வீடுகளில், தங்களின் மலங்களை பெருமானுக்கு பிச்சையாக அளிக்கும் பொருட்டு, பெருமானின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பக்குவமடைந்த உயிர்கள் இருப்பதை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்கள் இறைவனது அருளினால் செல்வந்தர்களாக, பெரிய வீடுகள் உடையவர்களாக இருந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெரிய வீடு, என்பதற்கு பெருமையில் சிறந்த வீடு என்று பொருள் கொண்டு பக்குவம் அடைந்த அடியார்கள் வாழும் பெருமை படைத்த வீடு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. படு பிச்சன்=ஈடுபாடுடன் பிச்சை ஏற்கும் பெருமான்; மிகவும் அதிகமான உயிர்கள், முக்தி நிலை அடைந்து தன்னை விட்டு பிரியாது இருக்கவேண்டும் என்ற ஆவல் உடையவன் பெருமான். எனவே தான், மிகுந்த ஆர்வத்துடன், பக்குவப்பட்ட உயிர்களைத் தேடிக் கொண்டு அவனே முன்சென்று பிச்சை எடுக்கின்றான். இந்த தன்மையை புரிந்து கொண்ட அடியார்கள் அவனைப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்றும் கூறுகின்றார். வேழம்=யானை; இலங்கு=பொலிந்து விளங்க; நாடகம்= நடனம்; தொண்டர்கள் மனதினில் நின்ற மைந்தன் என்று பொதுவாக, இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில், தலத்து மகளிர்கள் இறைவனின் புகழினை பாடியும் நடனமாடியும் வெளிப்படுத்துவதை குறிப்பிடுகின்றார்.
மாதொருபாகனாக அருள் புரிவதற்காக பெருமான் வருகின்றான் என்று இந்த பாடலின் முதல் அடியில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், பெருமான் தனது ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் குழை ஆபரணமும் அணிந்தவராக உள்ளார் என்று குறிப்பிட்டு மாதொருபாகனாக பெருமான் திகழும் தன்மையை உணர்த்துகின்றார். இருவேறு செவிகளில் தோடும் குழையும் அணிந்தவராக பெருமான், மாதொரு பாகனாக விளங்கும் தன்மை, பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். குரங்கணில்முட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.31.4) ஞானசம்பந்தர் இறைவனை தோடார் குழையான் என்று அழைக்கின்றார். இதன் மூலம் இடது காதினில் தோடும் வலது காதினில் குழையும் அணிந்த பெருமான் என்பது உணர்த்தப் படுகின்றது. பாலனம்= காப்பாற்றுதல்; தனது அடியார்களை நன்கு காப்பாற்றும் பெருமான் என்றும் காக்கும் தொழிலைப் புரிபவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமாக உள்ளன. கூடாதன செய்த என்ற தொடர் மூலம் மற்றவர்கள் செய்ய முடியாத பல அரிய செயல்கள் செய்த பெருமான் என்று நமக்கு சம்பந்தர் உணர்த்துகின்றார்.
வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில்
தோடார் குழையான் நல்ல பாலன நோக்கி
கூடாதன செய்த குரங்கணின்முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே
திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.103.1) ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் தூய குழையும் அணிந்தவன் என்றும் குழை ஆபரணம் தாழ்ந்து தொங்குகின்றது என்று சம்பந்தர் குறிப்பிடுவதை உணரலாம். ஏடுடையான்=தாமரை மலரினை தனது இருப்பிடமாக கொண்டுள்ள பிரமன்; பல நாடுகளும் சென்று பெருமான் பலி ஏற்கின்றான் என்பதை உணர்த்த இரந்துண்ணும் நாடுடையான் என்று கூறுகின்றார்.ஏமம்=ஜாமம், வேளை;
தோடுடையான் ஒரு காதில் தூய குழை தாழ
ஏடுடையான் தலை கலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள் ஏமம் நடமாடும்
காடுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே
செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் (1.61.8), ஞான சம்பந்தர் இறைவனை தோடுடையான் குழையுடையான் என்றுகுறிப்பிடுகின்றார். சேர்ந்தாடும் என்று பேய்களுடன் இணைந்து நடனம் ஆடுவதை இங்கே சம்பந்தர் கூறுகின்றார். காட்டில் உறைபவனாக இருந்தாலும்,பல நாடுகளிலும் உள்ள கோயில்களில் இறைவன் குடி கொண்டு இருப்பதால், திருஞான சம்பந்தர் நாடுடையான் என்றும் இறைவனை அழைக்கின்றார்.பீடு=பெருமை. எவராலும் வெல்ல முடியாதவனாக, செருக்குடன் திரிந்த அரக்கன் இராவணனின் வலிமையை முதன் முதலில் அடக்கிய பெருமை உடையவன்என்பதால், அரக்கன் தோளடர்த்த பீடு உடையான் என்று கூறுகின்றார்.
தோடுடையான் குழை உடையான் அரக்கன் தன் தோள் அடர்த்த
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிகப் பெரியான்
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்தாடும்
காடு உடையான் நாடு உடையான் கணபதீச்சரத்தானே
தனது தலையினை இடறித் தள்ளும் நோக்கத்ததுடன் மதயானை தன் மீது ஏவப்பட்ட நிலையிலும் மனம் கலங்காது பெருமானின் திருவுருவத்தை தனது மனதில் தியானித்து வந்த அப்பர் பிரானுக்கு பெருமான் உடுத்தியிருந்த புலித்தோலும் அவர் அணிந்திருந்த தோடு மற்றும் குழை ஆபரணங்களும் நினைவுக்கு வந்தன போலும், இதனை உணர்த்தும் பாடலை (4.2.7) நாம் இங்கே காண்போம்.
கொலை வரி வேங்கை அதளும் குவவோடு இலங்கு பொன் தோடும்
விலை பெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் கடைப்பாடலில் (4.8.10) தோடும் சங்கக்குழையும் அணிந்தவனாக பெருமானை அப்பர் பிரான் காண்கின்றார். இந்த பாடலில் நாம் வேறெங்கும் காண முடியாத காட்சியை நமது கண் முன்னே அப்பர் பிரான் கொண்டு வருகின்றார். இறைவன் வேதங்கள் ஓதுவதையும் நடனம் ஆடுவதையும், மிகவும் அருகில் இருந்து எப்போதும் ரசிப்பவள் உமையம்மை. மாதொருபாகனாக இருக்கும் பெருமானின் திருவாயின் வலது பகுதி வேதத்தை சொல்வதாகவும், இடது பகுதி அந்த வேதத்தை கேட்டு ரசித்தபடியே புன்முறுவல் செய்வதாகவும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.ஓலை=தோடு; புதுவிரி பொன் செய் ஓலை=ஒளியை பரப்பிக் கொண்டு இருக்கும் புதியதாக செய்யப்பட்ட பொன் தோடு.
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஓர் காது சுரி சங்கு நின்று புரள
விதி விதி வேத கீதம் ஒருபாடும் ஓதம் ஒருபாடும் மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்
இதுயிவர் வண்ணம்வண்ணம் இவள் வண்ணம்வண்ணம் எழில் வண்ணம்வண்ணம் இயல்பே
புதிய சுருள் பொன்னால் செய்யப்பட்ட தோட்டினை ஒரு காதிலும், மற்றோர் காதினில் வளைந்த சங்கு தோளில் புரளும் படியாக அணிந்துள்ள பெருமானின்,திருவாயின் ஒரு பகுதி வேத கீதங்களைப் பாட, திருவாயின் மற்றொரு பகுதி பெருமான் பாடும் வேத கீதத்தை ரசித்தபடியே புன்முறுவல் பூக்கின்றது.சடையாக காணப்படும் வலது பகுதியில், தேன் சொட்டும் கொன்றை மலர் விரிந்த படியே இருக்க, இடது பகுதியில் உள்ள கூந்தல் பின்னப்பட்டு அழகாக காணப்படுகின்றது, இவ்வாறு பெருமானின் தன்மையும் இயல்புகளும் ஒரு புறத்திலும் மற்றோர் புறத்தில் உமை அம்மையின் தன்மையும் இயல்புகளும் காணப்பட்டன என்று மேற்கண்ட பாடலில் அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். .
வாய்மூர் தலத்திற்கு அப்பர் பிரான் சென்றபோது அவருக்கு, சிவபெருமான் தனது நடனக்காட்சியை காட்டி அருளினார். அந்த நடனக் காட்சியை, பாடஅடியார் பரவக் கண்டேன் என்று தொடங்கும் திருத்தாண்டகத்தில் (6.77) அப்பர் பிரான் நமக்காக வடித்து இருக்கின்றார். இந்த பதிகத்தின் ஏழாவதுபாடலில், சிவபெருமானின் காதினில் தோடும் குழையும் கண்டதாக அப்பர் பிரான் சொல்கின்றார்.
குழையார் திருத்தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழையார் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்
மழையார் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.42.5) சுந்தரர் வெண் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு அவரது காதில் இருந்த குழையணி அசைந்தது என்று கூறுகின்றார். குழைக்கும் தோட்டினுக்கும் உள்ள அமைப்பு வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம், துளை உடைய குழை என்று இங்கே கூறுகின்றார். பெருமானின் காதுகள் நீண்டு, அவரது தோள்களைத் தொட்ட நிலையினை தூங்கும் காது என்று உணர்த்துகின்றார். கள்ளையே, பிள்ளை, வெள்ளை என்ற சொற்கள் எதுகை கருதி களையே, பிளை, வெளை என்று இடையெழுத்து குறைந்து காணப் படுகின்றன. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், இறைவன் தனது சீரிய அடியார்களுள் ஒருவனாக தன்னையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தினை வைக்கின்றார்.
வெண் குழையும் சுருள் தோடும் தூங்கும் காதில் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுதற்கு அரியாய்
வெளை மால்விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.84) ஒன்பதாவது பாடலில் சுந்தரர், இறைவனை, மகரக்குழையும் தோடும் அணிந்த காதுகளை உடையவனாக காண்கின்றார். இறைவன் தூது சென்றதையும், தன்னை ஆட்கொண்டதையும், தான் இறைவனைத்தலைவனாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டு தனது வாழ்க்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் கூறும் நேர்த்தியை நாம் இங்கே காணலாம். மாதினைஒரு பாகம் கொண்டுள்ள சிவபிரானை மாதன் என்று அழைக்கின்றார். மிகவும் அருமையான சொல்லாட்சி. இறைவனின் கையில் இருக்கும் உடுக்கையில்இருந்து தான், நாதமும் பின்னர் ஓசையும் பிறந்த செய்தியை இங்கே நாதனும் நாதம் மிகுத்து ஓசையது ஆனவன் என்ற சொற்றொடர் மூலம்குறிப்பிடுகின்றார். அடியார்கள் உள்ளத்தின் மீது தான் வைத்துள்ள பற்றினை சிறிது நேரம் கூட நீக்காத இறைவன் என்று குறிப்பிட்டு, சிறந்த அடியார்கள்பெரும் பேற்றினையும் நமக்கு உணர்த்துகின்றார்.
நாதனை நாதம் மிகுத்து ஓசை அது ஆனானை ஞான விளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை
மாதனை மேதகு பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனை ஆள் தோழனை நாயகனைத் தாழ்மகரக்குழையும் தோடும் அணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவதென்றுகொலோ கார்வயல்சூழ் கானப்பேருறை காளையையே
மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம்என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும்சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைத்து குறிப்பிடும் இனிமையான பாடல்.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ
இந்த கோலத்தைக் கண்டு மணிவாசகர் மனம் குளிர்ந்தது போன்று, நம்பியாண்டார் நம்பி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் இந்தபழமையான கோலத்தை எவ்வாறு தாங்கள் கண்டனர் என்பதை கீழ்க்கண்ட பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த பாடல்கள் பதினோராம்திருமுறையில் உள்ளன.
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் இருபத்தோராவது பாடலில் நம்பியாண்டார் நம்பி, இறைவனை, வலது காதில் குழையும் இடது காதில்தோடும் அணிந்தவனாக காண்கின்றார். கோஷன் என்ற சொல்லின் திரிபு கோடன்: விசயனுடன் போர் செய்வதற்காக ஆரவாரத்துடன் வந்த சிவபெருமான்கோஷன் என்று அழைக்கப் படுகின்றார். சிவபிரான் பேரில் காதல் கொண்டு, அதன் காரணமாக உடல் மெலிந்து தனது கை வளையல்களை இழந்ததலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தோடு அணிந்த காது, இடது காது என்று குறிப்பிட்ட அம்மைக்கு உரிய பகுதியில் தோடு அணிந்துஇருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார்.
வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்று அளித்த
கோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்ட
தோடன் என்றாள் தொகு சீர் தில்லையம்பலத்து ஆடுகின்ற
சேடன் என்றாள் மங்கை அங்கை சரி வளை சிந்தினவே
மேற்கண்ட பாடலில் தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிட்டு, மாதொரு பாகனின் நிலையை உணர்த்தியதுடன் நம்பியார் திருப்தி அடையவில்லைபோலும். இதே பதிகத்தின் ஐம்பதாவது பாடலில் மிகவும் விவரமாக, இறைவனின் வலது பாகத்தில் உள்ள பொருட்களையும் இடது பாகத்தில் உள்ளபொருட்களையும் பட்டியல் இடுகின்றார். இடம் என்ற சொல், இடது பாகம் மற்றும் இருக்கும் இடம் என்ற இரண்டு பொருட்களில் இந்த பாடலில் கையாளப்பட்டுள்ளது. வீ=பூச்செண்டு: பாந்தள்= பாம்பு; சங்கம்=வெண் சங்கால் அமைந்த வளையல்: அக்கு=எலும்பு மாலை: அங்கம்சரி=அங்கு+ அம்+ சரி: அங்கு,பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்: அம்சரி=அழகாக சரிந்த இடுப்பு. கங்கை, குண்டலம், மழு ஆயுதம், பாம்பு, தோலாடை, அக்கு மாலை, ஆகியவைஅம்பலவனை உணர்த்தும் பொருட்களாகவும் தோடு, பூச்செண்டு, சங்கு வளையல், சேலை ஆடை, அழகாக சரிந்த இடுப்பு ஆகியவை அணங்கினைஉணர்த்தும் பொருட்களாகவும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன. அணங்கு= தெய்வத் தன்மை பொருந்திய பெண், இங்கே பார்வதி தேவி;
கங்கை இடம் வலம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்
தங்கும் கரம் வலம் வெம்மழு வீயிடம் பாந்தள் வலம்
சங்கம் இடம் வலம் தோல் இடம் வலம் அக்கு இடம்
அங்கம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே
சேரமான் பெருமாள் நாயனாரும் தான் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் அறுபத்து ஐந்தாவது பாடலில் மாதொரு பாகனின்கோலத்தை விவரிக்கின்றார். வீரக்கழல், பாம்பு, திருநீறு, எரி, எலும்பு மாலை, மூவிலை வேல், கங்கை நீரினைத் தாங்கிய சடை முதலியன பெருமானதுவலது பக்கத்திலும், இடது பகுதியில் பாடகம். மேகலை, சாந்து, பந்து, மலர் மாலை, மோதிரம், முதலியன இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது.
வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடம்
மேகலம் தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு
அலர்ந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்
சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே
பொழிப்புரை:
அழகான வளையல்களை தனது முன்கையில் அடுக்கிக் கொண்டுள்ள பார்வதி தேவியை, அருள் வடிவமாக உள்ள பிராட்டியை, தனது உடலின் இடது பாகத்தில் வைத்தவராக, பெருமான் தனது அடியார்களுக்கு அருள் வழங்கும் பொருட்டு வருகின்றான். அவன் பக்குவப்பட்ட அடியார்கள் வாழும் சிறப்பினை உடைய பெரிய வீடுகளை நோக்கிச் சென்று, அத்தகைய அடியார்கள் இடுகின்ற பிச்சையை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையிலிருந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து முக்தி நிலை அளிக்கின்றான். இவ்வாறு, உயிர்களுக்கு உய்வினை அளிக்கும் தனது நோக்கத்திலிருந்து பிறழாமல் இறைவன் அருள் புரிவதை உணர்ந்த அடியார்கள், பெருமானை மிகுந்த ஈடுபாடுடன் பிச்சை எடுப்பவன் என்று புகழ்ந்து பேசுகின்றனர். இத்தகைய இறைவன், ஒரு காதினில் தோட்டினையும் மற்றொரு காதினில் குழை ஆபரணத்தையும் அணிந்தவனாக, மாதொரு பாகனின் கோலத்தை உணர்த்துபவனாக உள்ளான். அவன், தன்னை எதிர்த்து வந்த மத யானையை அடக்கி, அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்வையாக அணிந்தவன் ஆவான். இத்தகைய சிறப்பு வாய்ந்த இறைவனின் புகழினை பாடியும் நடனமாக ஆடியும் போற்றும் இளம் பெண்கள் உறைகின்ற நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக, இறைவன் உறைகின்றான்.
பாடல் 4:
சாய நன்மாதொர் பாகன் விதியாய சோதி கதியாக நின்ற கடவுள்
ஆயகம் என்னுள் வந்த அருளாய செல்வன் இருளாய கண்டன் அவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு மலையின் கண் வந்து தொழுவார்
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
சாய=அழகிய தோற்றத்தினை உடைய; விதியாய=விதிக்கப் பட்டுள்ள வினைகளாக; ஒவ்வொரு உயிரும், தான் இதற்கு முன்னம் எடுத்திருந்த எண்ணற்ற பிறவிகளில் செய்த செயல்களால், மிகவும் அதிகமாக வினைகளாக சேர்த்துக் கொண்டுள்ளன. இத்தகைய வினைகளை ஒரு தொகுப்பாக பழவினைகள் என்று கூறுவார்கள். இந்த பழவினைகள் மொத்தத்தையும் ஒரே பிறவியில் நுகர்ந்து கழிக்கும் ஆற்றல், நமது உடலுக்கு இல்லை என்பதால், இறைவன் நம் பால் கருணை கொண்டவனாக, மொத்த வினைகளின் ஒரு பகுதியை மட்டும் இந்த பிறவிக்கு ஒதுக்குகின்றான். எஞ்சிய வினைகளுடன், இந்த பிறவியில் நாம் சேர்த்துக் கொள்ளும் வினைகளும் சேர்ந்து, இனிமேல் நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு ஒதுக்கப் படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு உயிரும், அந்த பிறப்பினில் நுகர்ந்து கழிக்கவேண்டிய வினையின் அளவினை இறைவன் நிர்ணயிக்கும் தன்மையை, விதியாய என்ற சொல்லின் மூலம், நமக்கு திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். ஆயகம்=ஆயும் அகம்; எதனையும் ஆராயும் தன்மை கொண்டுள்ள மனம்; இருளாய=இருள் படர்ந்தது போன்று கருமை நிறத்தில் உள்ள கறை; அவனி= உலகம்;
பொழிப்புரை:
அழகிய தோற்றம் கொண்டுள்ள உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவனும், அனைத்து உயிர்களுக்கும் அந்தந்த பிறவிகளில் நுகர்ந்து கழிக்க வேண்டிய வினைகளை நிர்ணயிப்பவனும், உயர்ந்த சோதியாக உள்ளவனும் ஆகிய இறைவன், அனைத்து உயிர்களாலும்,தங்களுக்கு அடைக்கலம் அளிப்பவராக கருதப் படுகின்றார். எதனையும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் தன்மையை உடைய எனது மனத்தின் உள்ளே உறையும், அருள் வடிவமாகிய சிவபெருமான், இருள் படர்ந்தது போன்று கருமை நிறத்தில் உள்ள கறையைத் தனது கழுத்தினில் ஏற்றுக் கொண்டவன் ஆவான்; உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயாக விளங்கும் பெருமானை, தங்களது விருப்பத்தின் வண்ணம் மலைச் சாரலில் தவம் புரிகின்ற முனிவர்களும் சித்தர்களும் தங்களது தலைவனாக பாவித்து சிவபெருமானை, கீழே இறங்கி வந்து சித்தீச்சரம் தலத்தினில் உறையும் பெருமானை வழிபடுகின்றனர். இந்த இறைவனை மறையோர்களும் போற்றி வழிபடுகின்றனர். இந்த பெருமான் நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான்.
பாடல் 5:
நெதிபடு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றமாய இறைவன்
மதிபடு சென்னி மன்னு சடை தாழ வந்து விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
நெதி=நிதி என்ற சொல்லின் திரிபாக கருதப்பட்டு செல்வம் என்றும் நன்மை என்றும் இரண்டு விதமாக பொருள் சொல்லப் படுகின்றது. மெய் என்பதற்கு உண்மை என்றும் மெய்ப்பொருள் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். சிவபெருமானிடம் உள்ள முக்திச் செல்வமே, அனைத்துச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாக கருதப்படுகின்றது. வேறு எவரிடமும் இல்லாத, வேறு எவரும் அளிக்க முடியாத இந்த செல்வத்தை உடையவன் சிவபெருமான் ஒருவனே, என்பதால், அவனே உண்மையான செல்வனாக கருதப்படுகின்றான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நெதி என்ற சொல்லுக்கு நன்மை என்று பொருள் கொண்டு, அனைத்து உயிர்களுக்கும் பல விதமான நன்மைகளை அளிக்கும் உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மூன்றாவது அடியில் வரும் படு என்ற சொல், இருக்கும் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.ஒருத்தன்=ஒப்பற்ற தலைவன்; எமர்= எங்கள், இங்கே அடியவர்கள் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம்.
பொழிப்புரை:
சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தை தனதாகக் கொண்டுள்ள, உண்மையான செல்வனாகிய எமது தலைவன், நிறைந்த சோலைகளால் சூழப்பட்டுள்ள சிதம்பரம் தலத்தில் உள்ள சிற்றம்பலம் என்று அழைக்கப்படும் அரங்கினில், அதிரும் வண்ணம் நடனம் ஆட வல்ல பெருமான் தொடர்ந்து நடனம் ஆடுகின்றான். அவன் தேவர்களின் ஒப்பற்ற தலைவனாகவும் அடியார்களாகிய எங்களுக்கு சுற்றமாகவும் விளங்குகின்றான், பிறைச் சந்திரன் பொருந்தி விளங்கும் சடை தாழ்ந்து தொங்க, தனது இடப வாகனத்தின் மீது ஊர்பவனாக, பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றான். காவிரி நதியின் நீர்ப் பெருக்கால் அடித்துக் கொண்டு வரப்படும் வாளை மீன்கள் நீருடன் கலந்து பாய்கின்ற நறையூர் நகரத்தில், மேலே குறிப்பிடப்பட்ட தன்மைகளை உடைய பெருமான்,அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான்.
பாடல் 6:
கணிகையொர் சென்னி மன்னு மது வன்னி கொன்றை மலர் துன்று செஞ்சடையினான்
பணி கையின் முன்னிலங்க வருவேடம் மன்னு பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்து நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
கணிகை=கங்கை நதி; மன்னு=பொருந்துகின்ற; மது=தேன்; துன்று=நெருக்கமாக; பல விதமான வேடங்களில் பெருமான் தனது அடியார்களின் முன்னே தோன்றுகின்றார் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தனது அடியார்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு, பெருமான் வேறு வேறு வேடங்களில் தோன்றி அருள் புரிந்ததை நாம் பெரிய புராணத்தில், பல நாயன்மார்களின் சரித்திரத்தில் காண்கின்றோம். அந்தந்த அடியார்களின் பக்குவத்திற்கு ஏற்ப, அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு, வேறுபட்ட பல வேடங்களில் தோன்றும் வல்லமை கொண்டவன் சிவபெருமான். வேதங்கள் அனைத்தும், பெருமானது புகழினையே பாடுவதால், இவ்வாறு பெருமானின் பெருமையை எடுத்துரைத்து பெருமானை நெருங்கியதால், பெருமானை அணுகிய வேதங்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
கங்கை நதி பொருந்தி உறைகின்ற தனது சடையினில், தேன் நிறைந்த வன்னி மலர்கள், கொன்றை மலர்கள் நெருக்கமாக இருக்கும் வண்ணம்,சிவபெருமான் தனது செஞ்சடையினில் சூட்டிக் கொண்டுள்ளான். அவன், தனது அடியார்கள் தன்னைப் பணிந்து வணங்கும் முன்னரே, சூழ்நிலைக்கு தக்கவாறு, பலவிதமான வேடங்களை எடுக்கும் ஆற்றல் கொண்டவனாக, தனது அடியார்களுக்கு அருள் புரிகின்றான். தனது புகழினை இனிய மந்திரங்களாக பாடி, தன்னை அணுகும் நான்கு வேதங்கள் மற்றும் அந்த வேதங்களை முறையாக தெரிந்து கொள்ள உதவும் ஆறு அங்கங்களின் பொருளாக இருக்கும் இறைவன், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக இருந்து அருள் புரிகின்றான். இந்த பெருமானின் அருள் வேண்டி, இவனது இருப்பிடம் வந்தடையும் தொண்டர்கள் மலர்கள் தூவி வழிபடுகின்றனர். இவ்வாறு பலராலும் வழிபடப்படும் பெருமான் நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான்.
பாடல் 7:
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் மங்க அவையார ஆடலரவம்
மிளிர் தரு கை இலங்க அனலேந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன்
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழிலார வென்றி அருளும்
நளிர்மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
இந்த பாடலில் விகிர்தன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். விகிர்தன் என்றால் மாறுபட்டவன் என்று பொருள். இந்த பாடலில் பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களிலும் சூட்டிக் கொண்டுள்ள தன்மை, தனது கையில் தீப்பிழம்பை வைத்துக் கொண்டு நடமாடுவது, விடத்தை உட்கொண்ட தன்மை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இந்த மூன்று செயல்களும் சிவபெருமான் ஒருவருக்கே உரிய செயல்கள் என்பதை நாம் அறிவோம்.இவ்வாறு மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டு சிவபெருமான் இருக்கும் தன்மையை உணர்த்தவே, திருஞானசம்பந்தர் இங்கே விகிர்தன் என்று அழைக்கின்றார். பாம்பின் உடல் ஒளி உடையதாக இருக்கும் என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. எனினும் பெருமானின் திருமேனி ஒளியுடன் போட்டி போடமுடியாமல் தோல்வி அடைந்த பாம்புகளின் ஒளி மங்கியதாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். துளிதரு=தேன் துளிகள்; எழிலார=அழகுடன் விளங்க; இந்த தலத்தினில் வேதங்கள் ஓதப்படும் நிலை மிகவும் அழகாக உள்ளது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.குழுவாக பலரும் சேர்ந்து முறையாக வேதங்கள் ஓதுவது, கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். அந்த தன்மையே, இங்கே வேதங்கள் அழகாக ஓதப்படுகின்றன என்று சொல்லப் படுகின்றது.
பொழிப்புரை:
ஒளிவீசும் பெருமானின் திருமேனியின் மேல் பல இடங்களில் படர்ந்து, பெருமானின் மேனியின் ஒளியை மங்கடிக்க முயற்சி செய்து தோற்றுவிடுவதால்,பாம்புகள் ஒளி மங்கி காணப்படுகின்றன. தன்னுடன் சேர்ந்து, தான் அணிந்துள்ள பாம்புகளும் அசைந்து ஆடும் வண்ணம், பெருமான் தனது கையினில் தீப்பிழம்பை ஏந்திய வண்ணம் நடனமாடும் விகிர்தனாக, மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவனாக விளங்குகின்றான். தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, ஆலகால விடத்தினை உட்கொண்ட இறைவன், அந்த விடம் தனது வயிற்றின் உள்ளே சென்றால், பிரளய காலத்தில் தன்னிடம் ஒடுங்கும் உயிர்களுக்கு கேடு விளையும் என்பதால், அந்த விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கிக் கொண்டுள்ளான். இவ்வாறு கழுத்தினில் தேக்கியமையால்,கருமை நிறத்தில் அவனது கழுத்தினில் கறை படிந்துள்ளது. தேன் துளிகள் ஒழுகும் மலர்கள் நிறைந்த சோலைகளும், கரும்பினைப் பிழியும் ஆலைகளும்,அழகாக வேதங்கள் ஓதும் மறையோர்களும், அழகுடன் மிளிர்ந்து செல்வச் செழிப்பினை வெளிப்படுத்தும் மாடவீடுகளும், அழகிய மங்கையரும் நிறைந்த நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக சிவபெருமான் உறைகின்றான்.
பாடல் 8:
அடல் எருது ஏறுகந்த அதிரும் கழற்கள் எதிரும் சிலம்பொடு இசையக்
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன்
உடலோடு தோள் அனைத்து முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆளவல்ல நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
அரையன்=அரசன்; தனது தவறினை உணர்ந்து, இறைஞ்சிய அரக்கன் நலன்கள் பல பெறுகின்ற வண்ணம் அருள் புரிந்த பெருமானை, நம்பன் என்று அழைப்பது பொருத்தம் தானே. அவ்வாறே நாமும் நமது தவறுகளை உணர்ந்து பெருமானிடம் இறைஞ்சி வேண்டினால் நம்மையும் ஆட்கொண்டு பெருமான் அருள் புரிவார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுவதை நாம் உணரலாம். நடலை=துன்பம்; கழல்களும் சிலம்பும் அணிந்த பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் எதிரும் சிலம்பு என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். மாதொரு பாகனாக விளங்கும் பெருமான், தனது வலது காலில் கழலும் இடது காலில் சிலம்பும் அணிவதை நாம் அறிவோம். இவ்வாறு இரு வேறு கால்களில் கழல்கள் மற்றும் சிலம்பு அணிந்துள்ள கோலத்தை இங்கே குறிப்பிடுகின்றார். எதிரே என்ற சொல் மூலம், கழல்கள் பூண்டுள்ள காலினுக்கு எதிரே உள்ள காலில், சிலம்பினை அணிந்துள்ளார், என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
கழலும் சிலம்பும் அணிந்தவனாக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடும் ஒரு சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம். புகலூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.2.6) திருஞானசம்பந்தர், பெருமான் காட்டினில் நடமாடும் தன்மையை குறிப்பிடுகின்றார். குழல் முதலிய இசைக் கருவிகள் ஒலிக்கும் பின்னணியில், குள்ளமான பூத கணங்கள் போற்றிசைப்ப, கழலின் ஓசையும் சிலம்பின் ஓசையும் ஒலிக்கும் வண்ணம், முற்றூழிக் காலத்தினில் நடமாடுகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
கழலின் ஓசை சிலம்பின் ஒலியோசை கலிக்கப் பயில் கானில்
குழலின் ஓசை குறட்பாரிடம் போற்றக் குனித்தார் இடம் என்பர்
விழவின் ஓசை அடியார் மிடைவுற்று விரும்பிப் பொலிந்து எங்கும்
முழவின் ஓசை முந்நீர் அயர்வெய்த முழங்கும் புகலூரே
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.35.7) திருஞானசம்பந்தர் கழலும் சிலம்பும் ஆர்க்க, உமையன்னையுடன் பெருமான் நின்றான் என்று கூறுகின்றார்.
செறியார் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறியார் குழலாளொடு நின்றான்
வெறியார் பொழில் வீழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (1.71.7) கழலும் சிலம்பும் ஒழிக்க பெருமான் வருவதாக கூறுகின்றார்.தவளம்=வெண்மை; புலம்பும்=ஒலிக்கும்; கீள்=பெரிய துணியிலிருந்து கிழிக்கப்பட்டு, கயிறு போல் திரிக்கப்பட்டது; குழல்=சுருண்ட சடை;
குழலார் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்
தழலார் மேனித் தவள நீற்றர் சரி கோவணக் கீளர்
எழிலார் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடையேறிக்
கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே
இடைமருது தலத்தின் மீது அருளிய பாடலில் (1.95.6) திருஞானசம்பந்தர், ஒரு காலில் சிலம்பும் மற்றொரு காலில் கழலும் ஒலிக்க அணிந்து கொண்டுள்ள மாதொரு பாகராகிய மருதர் அழகிய தோற்றத்துடன் விளங்குகின்றார் என்றும், அவரைத் தொழுது பணியும் அடியார்களை விட்டு, அந்நாள் வரை அவர்களை வருத்திய வினைகள் நீங்கிவிடும் என்று கூறுகின்றார்.
கழலும் சிலம்பும் ஆர்க்கும் எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே
பெருமான் தனது கால்களில் கழலும் சிலம்பும் அணிந்திருப்பதாக சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.117.7)திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சொற்களை இடம் மாற்றி வைத்து அருளிய பதிகம் என்பதால் மொழிமாற்றுப் பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. காலது கழல் சிலம்பு, கங்கை கற்றைச் சடை உள்ளால், மாலது பாகம், மழுவது ஏந்தல், வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், அடல் ஏறு ஊர்வர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கொழுங்கோடு=செழிப்பாக உள்ள மரக்கிளை; ஏறு=எருது; ஊர்தல்=எருதினை வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கு செல்லுதல்; சேல்=மீன்; கண்ணி=கண்ணினை உடைய உமையன்னை; மீன் போன்று அழகிய கண்களை உடையவள் என்று பொருள்படும்படி, மதுரை தேவியை அங்கயற்கண்ணி என்று அழைப்பார்கள்.
காலது கங்கை கற்றைச் சடையுள்ளால் கழல் சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர் கொழுங்கோட்டு
ஆலது ஊர்வது ஆடல் ஏற்று இருப்பர் அணிமணி நீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே
திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.4.2) திருஞானசம்பந்தர், கழலும் சிலம்பும் ஆர்க்க வல்லீர் என்று பெருமானை அழைத்து,சிவந்த வண்ணத்தில் திருமேனி கொண்டிருப்பதன் காரணம் யாது என்று கேட்கின்றார். சந்து=சந்தனம்;
சந்து உயர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டு தம்
சிந்தை செய்து அடியார் பரவும் திருவான்மியூர்ச்
சுந்தரக் கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆக்கிய வண்ணமே
திருக்களர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.3) திருஞானசம்பந்தர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் நடமாடும் வல்லமை பெற்றவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். மைந்தர்=மக்கள்; சேடர்=ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர்கள்; நிமலன்=மலங்களின் சேர்க்கை அற்றவன்;நீடவல்ல=நீண்ட காலமாக எழுந்தருளியுள்ள; இந்த பாடலில், அடியார்களின் சார்பாக, திருஞானசம்பந்தர், அடியார்களுக்கு பெருமான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதை நாம் உணரலாம்.
பாடவல்ல நன் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றிச்செய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழுமாடத் திருக்களருள்
நீடவல்ல நிமலனே நிறை கழல் சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆட வல்லானே அடைந்தார்க்கு அருளாயே
கோட்டாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (2.52.5) சம்பந்தர், பேய்க் கணங்கள் புகழும் வண்ணம் கானகத்தில், வளமான சிலம்பும் கழலும் ஒலிக்க நடனமாடும் அழகிய பெருமான் என்று கூறுகின்றார். எழுவார்=பஞ்சாக்கர மந்திரத்தை சிந்திந்து எழும் சித்தர்கள்;
பழைய தம் அடியார் துதி செயப் பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்
குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்
கழலும் வண் சிலம்பும் ஒலி செயக் கானிடைக் கணம் ஏத்த ஆடிய
` அழகனென்று எழுவார் அணியார் வானவர்க்கே
குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.58.2), தனது திருவடிகளில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம், பெருமான் பலியேற்கச் செல்கின்றார் என்று திருஞானசம்பந்தர கூறுகின்றார். செடியார்ந்த=முடை நாற்றம் கொண்ட; குடியார்ந்த=குடியாக உள்ள;குலாவி=கொண்டாடி; படியார்ந்த=படிகள் நிறைந்த; இந்த தலத்தில் உள்ள பெருமான் சன்னதிக்கு செல்வதற்கு படிகள் ஏறிச் செல்ல வேண்டிய நிலையை உணர்த்துகின்றார். படியார்ந்த கோயில் என்று குறிப்பிட்டு, ஈசன் உலகநாதனாக விளங்கி அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் தன்மையை, படியார்ந்த என்ற சொல் நமக்கு நினைவூட்டுகின்றது என்று பொருள் கொள்வதும் சிறப்பே. படி என்ற சொல்லுக்கு உலகம் என்று பொருள் கொண்டு, உலகம் சிறப்புடன் போற்றும் வண்ணம் திகழ்ந்த கோயில் என்ற விளக்கமும் பொருத்தமானதே. பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்; சிலம்பு என்பது பெண்கள் அணியும் அணிகலன். சிலம்பும் கழலும் அணிந்தவர் என்று குறிப்பிடுவதன் மூலம் மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக பெருமானை சித்தரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைபவர் திருஞானசம்பந்தர். தோடும் குழையும் அணிந்தவனாகவும், சிலம்பும் கழலும் அணிந்தவனாகவும், சடையும் கூந்தலும் உடையவனாகவும், பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவனாகவும், எண்ணற்ற பாடல்களில் அவர் குறிப்பிடுகின்றார்.
அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்
செடியார்ந்த வெண்டலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்
படியார்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே
திருவடிகளில் பொருந்திய பசும்பொன் கழலும் சிலம்பும் ஒலித்து ஆரவாரம் செய்ய, தனது அழகிய கையினில் முடை நாற்றம் கொண்டதும் உலர்ந்து வெண்மையாக காணப்படுவதும் ஆகிய பிரமகபாலத்தை ஏந்திய வண்ணம் பலியேற்பதற்காக உலகம் எல்லாம் திரிபவரும் ஆகிய பெருமான், சிறந்த மறையோர்கள் குடிகளாக வாழ்ந்து பெருமானைப் புகழ்ந்து கொண்டாடும் குடவாயில் தலத்தினில் யானை ஏறிச் செல்ல முடியாத வண்ணம் படிகள் நிறைந்த மாடக்கோயிலினை, இறைவனாகிய தான் உறையும் கோயிலாக பாவித்து தொடர்ந்து உறைகின்றார் என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரையாகும்.
வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.4) திருஞானசம்பந்தர், ஒலிக்கும் வீரக்கழலும் சிலம்பும் ஆரவாரம் செய்யும் வண்ணம் பெருமான் நின்று ஆடும் அற்புதம் அதிசயம் என்று கூறுகின்றார். கதிர்=சூரியன்; அறத்திறம்=தருமத்தின் பல வகைகள் மற்றும் வேதங்கள் ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள நுண்ணிய கருத்துக்கள்; மருந்துமாக நின்று உயிர்களை காக்கும் தன்மையன் என்று பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நெஞ்சின் தாக்கத்தினால் உலகம் அழியாத வண்ணம், அந்த விடத்தினை உட்கொண்ட செய்தி,கறைகொள் கண்டத்தர் என்ற தொடரினால் உணர்த்தப் படுகின்றது. காலை மாலை நேரங்களில் சிவந்த வண்ணத்துடன் காணப்படும் சூரியன், பகல் பொழுதினில் வெண்மை நிறத்துடன் காணப் படுகின்றான். சிவந்த திருமேனியை உடைய இறைவன், தனது உடலின் மீது திருநீற்றினை பூசியவண்ணம் வெண்மை நிறத்துடனும் காணப்படுகின்றான். வலஞ்சுழி தலத்தினில் மகிழ்ச்சியுடன் உறையும் பெருமான், அனைத்து உடல்களும் உயிரிலிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் உலகமே சுடுகாடாக காட்சி தரும் நிலையில், அந்த காண்பதற்கு அரிய அந்த காட்டினில், உலகத்தை மீண்டும் தோற்றுவித்து உயிர்களுக்கு தங்களது மலங்களைக் கழித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளிக்கும் எண்ணம் கொண்டு இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடையும் பெருமான், தான் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஆரவாரம் செய்யும் வண்ணம் நடனமாடும் அற்புதத்தை நாம் அறியோம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். .
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கு அன்று
இறைவர் ஆலிடை நீழலிலிருந்து உகந்து இனிது அருள் பெருமானார்
மறைகள் ஓதுவர் வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து
அறை கழல் சிலம்பார்க்க நின்றாடிய அற்புதம் அறியோமே
கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.3) திருஞானசம்பந்தர், தனது உடலின் ஒரு பாகத்தில் தேவியை ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், தனது கால்களில் அணிந்துள்ள சிலம்பும் கழலும் ஒலிக்கும் வண்ணம், பல இல்லங்களுக்கும் பலியேற்கச் செல்கின்றார் என்று கூறுகின்றார்.தான் பிச்சையாக ஏற்கும் உணவினை மிகுந்த விருப்பத்துடன் உட்கொள்ளும் எண்ணத்துடன், பெருமான் பிச்சை ஏற்பதாக இந்த பாடலில் கூறுகின்றார்.பிச்சை ஏற்கும் நாடகத்தில், பெருமான் உண்மையாக விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வது, பக்குவமடைந்த அடியார்கள் தங்களிடமிருந்து பிரித்துக் கொடுக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களைத் தானே.
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பு ஆர்க்க
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவார் அகந்தொறும் இடு பிச்சைக்கு
உண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து
அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவருக்கு அருவினை அடையாவே
புகலி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.3.4) திருஞானசம்பந்தர், தனது பாதங்களில் திகழும் கழலும் சிலம்பும் ஆரவாரத்துடன் ஒலிக்க,முழவத்தின் பின்னணியில் மிகவும் அரிதான நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். நிழல்=ஒளி; முருகு=நறுமணம்; அலம்ப=ஆரவாரத்துடன் ஒலிக்க;
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே
கழல் திகழ் சிலம்பொலி அலம்ப நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
முடிமேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.6) திருஞானசம்பந்தர் பொறுமையாக இருக்கும் பெருமான் என்று குறிப்பிட்டு, அவர் கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். பொறுமையாக இருப்பவர் சிவபெருமான் என்று ஏன் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. அவரே அதற்கு இந்த பாடலின் இரண்டாவது அடியில் விளக்கம் அளிப்பதை நாம் உணரலாம்.கங்கை நதி, பிறைச் சந்திரன் மற்றும் பாம்பினை சுமந்து கொண்டிருக்கும் சடையில், விரிந்த கொன்றை மலர்களையும் சுமந்து கொண்டிருந்தாலும், அந்த சுமையினை பொருட்படுத்தாதமல் அமைதியாக பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகின்றார் போலும். கமை=பொறுமை; அமையொடு= அமைதியாக
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப
சுமையொடு மேலும் வைத்தான் விரிகொன்றையும் சோமனையும்
அமையொடு நீண்ட திண்தோள் அழகாய பொற்றோடு இலங்க
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (4.08.06) கழலையும் சிலம்பினையும் அழகுற அணிந்தவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கணித்தல்=குறிப்பிடுதல்: வேப்ப மரம் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் பூக்கும் தன்மை உடையது. வேப்ப மரம் பூக்கும் காலமும் திருமணங்கள் நடைபெறும் காலமும் ஒன்றாக இருப்பதால், திருமண காலத்தை வேப்ப மரங்கள் பூத்து கணிப்பதாக குறிப்பிட்டு, கணிவளர் வேங்கை என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. அவள் வண்ணம் வண்ணம் அவர் வண்ணம் வண்ணம் அழலே என்ற தொடர் மூலம் பெருமான் மாதொரு பாகனாக திகழும் தன்மையை நேரிடையாக குறிப்பிடுவதையும் நாம் உணரலாம்.
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகார்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ண இயலார் ஒருவர் இருவர்
மணி கிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணிகிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ணம் வண்ணம் அழலே
பாடல் 5:
நெதிபடு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றமாய இறைவன்
மதிபடு சென்னி மன்னு சடை தாழ வந்து விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
நெதி=நிதி என்ற சொல்லின் திரிபாக கருதப்பட்டு செல்வம் என்றும் நன்மை என்றும் இரண்டு விதமாக பொருள் சொல்லப் படுகின்றது. மெய் என்பதற்கு உண்மை என்றும் மெய்ப்பொருள் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். சிவபெருமானிடம் உள்ள முக்திச் செல்வமே, அனைத்துச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாக கருதப்படுகின்றது. வேறு எவரிடமும் இல்லாத, வேறு எவரும் அளிக்க முடியாத இந்த செல்வத்தை உடையவன் சிவபெருமான் ஒருவனே, என்பதால், அவனே உண்மையான செல்வனாக கருதப்படுகின்றான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நெதி என்ற சொல்லுக்கு நன்மை என்று பொருள் கொண்டு, அனைத்து உயிர்களுக்கும் பல விதமான நன்மைகளை அளிக்கும் உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மூன்றாவது அடியில் வரும் படு என்ற சொல், இருக்கும் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.ஒருத்தன்=ஒப்பற்ற தலைவன்; எமர்= எங்கள், இங்கே அடியவர்கள் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம்.
பொழிப்புரை:
சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தை தனதாகக் கொண்டுள்ள, உண்மையான செல்வனாகிய எமது தலைவன், நிறைந்த சோலைகளால் சூழப்பட்டுள்ள சிதம்பரம் தலத்தில் உள்ள சிற்றம்பலம் என்று அழைக்கப்படும் அரங்கினில், அதிரும் வண்ணம் நடனம் ஆட வல்ல பெருமான் தொடர்ந்து நடனம் ஆடுகின்றான். அவன் தேவர்களின் ஒப்பற்ற தலைவனாகவும் அடியார்களாகிய எங்களுக்கு சுற்றமாகவும் விளங்குகின்றான், பிறைச் சந்திரன் பொருந்தி விளங்கும் சடை தாழ்ந்து தொங்க, தனது இடப வாகனத்தின் மீது ஊர்பவனாக, பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றான். காவிரி நதியின் நீர்ப் பெருக்கால் அடித்துக் கொண்டு வரப்படும் வாளை மீன்கள் நீருடன் கலந்து பாய்கின்ற நறையூர் நகரத்தில், மேலே குறிப்பிடப்பட்ட தன்மைகளை உடைய பெருமான்,அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான்.
பாடல் 6:
கணிகையொர் சென்னி மன்னு மது வன்னி கொன்றை மலர் துன்று செஞ்சடையினான்
பணி கையின் முன்னிலங்க வருவேடம் மன்னு பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்து நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
கணிகை=கங்கை நதி; மன்னு=பொருந்துகின்ற; மது=தேன்; துன்று=நெருக்கமாக; பல விதமான வேடங்களில் பெருமான் தனது அடியார்களின் முன்னே தோன்றுகின்றார் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தனது அடியார்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு, பெருமான் வேறு வேறு வேடங்களில் தோன்றி அருள் புரிந்ததை நாம் பெரிய புராணத்தில், பல நாயன்மார்களின் சரித்திரத்தில் காண்கின்றோம். அந்தந்த அடியார்களின் பக்குவத்திற்கு ஏற்ப, அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு, வேறுபட்ட பல வேடங்களில் தோன்றும் வல்லமை கொண்டவன் சிவபெருமான். வேதங்கள் அனைத்தும், பெருமானது புகழினையே பாடுவதால், இவ்வாறு பெருமானின் பெருமையை எடுத்துரைத்து பெருமானை நெருங்கியதால், பெருமானை அணுகிய வேதங்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
கங்கை நதி பொருந்தி உறைகின்ற தனது சடையினில், தேன் நிறைந்த வன்னி மலர்கள், கொன்றை மலர்கள் நெருக்கமாக இருக்கும் வண்ணம்,சிவபெருமான் தனது செஞ்சடையினில் சூட்டிக் கொண்டுள்ளான். அவன், தனது அடியார்கள் தன்னைப் பணிந்து வணங்கும் முன்னரே, சூழ்நிலைக்கு தக்கவாறு, பலவிதமான வேடங்களை எடுக்கும் ஆற்றல் கொண்டவனாக, தனது அடியார்களுக்கு அருள் புரிகின்றான். தனது புகழினை இனிய மந்திரங்களாக பாடி, தன்னை அணுகும் நான்கு வேதங்கள் மற்றும் அந்த வேதங்களை முறையாக தெரிந்து கொள்ள உதவும் ஆறு அங்கங்களின் பொருளாக இருக்கும் இறைவன், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக இருந்து அருள் புரிகின்றான். இந்த பெருமானின் அருள் வேண்டி, இவனது இருப்பிடம் வந்தடையும் தொண்டர்கள் மலர்கள் தூவி வழிபடுகின்றனர். இவ்வாறு பலராலும் வழிபடப்படும் பெருமான் நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான்.
பாடல் 7:
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் மங்க அவையார ஆடலரவம்
மிளிர் தரு கை இலங்க அனலேந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன்
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழிலார வென்றி அருளும்
நளிர்மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
இந்த பாடலில் விகிர்தன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். விகிர்தன் என்றால் மாறுபட்டவன் என்று பொருள். இந்த பாடலில் பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களிலும் சூட்டிக் கொண்டுள்ள தன்மை, தனது கையில் தீப்பிழம்பை வைத்துக் கொண்டு நடமாடுவது, விடத்தை உட்கொண்ட தன்மை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இந்த மூன்று செயல்களும் சிவபெருமான் ஒருவருக்கே உரிய செயல்கள் என்பதை நாம் அறிவோம்.இவ்வாறு மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டு சிவபெருமான் இருக்கும் தன்மையை உணர்த்தவே, திருஞானசம்பந்தர் இங்கே விகிர்தன் என்று அழைக்கின்றார். பாம்பின் உடல் ஒளி உடையதாக இருக்கும் என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. எனினும் பெருமானின் திருமேனி ஒளியுடன் போட்டி போடமுடியாமல் தோல்வி அடைந்த பாம்புகளின் ஒளி மங்கியதாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். துளிதரு=தேன் துளிகள்; எழிலார=அழகுடன் விளங்க; இந்த தலத்தினில் வேதங்கள் ஓதப்படும் நிலை மிகவும் அழகாக உள்ளது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.குழுவாக பலரும் சேர்ந்து முறையாக வேதங்கள் ஓதுவது, கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். அந்த தன்மையே, இங்கே வேதங்கள் அழகாக ஓதப்படுகின்றன என்று சொல்லப் படுகின்றது.
பொழிப்புரை:
ஒளிவீசும் பெருமானின் திருமேனியின் மேல் பல இடங்களில் படர்ந்து, பெருமானின் மேனியின் ஒளியை மங்கடிக்க முயற்சி செய்து தோற்றுவிடுவதால்,பாம்புகள் ஒளி மங்கி காணப்படுகின்றன. தன்னுடன் சேர்ந்து, தான் அணிந்துள்ள பாம்புகளும் அசைந்து ஆடும் வண்ணம், பெருமான் தனது கையினில் தீப்பிழம்பை ஏந்திய வண்ணம் நடனமாடும் விகிர்தனாக, மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவனாக விளங்குகின்றான். தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, ஆலகால விடத்தினை உட்கொண்ட இறைவன், அந்த விடம் தனது வயிற்றின் உள்ளே சென்றால், பிரளய காலத்தில் தன்னிடம் ஒடுங்கும் உயிர்களுக்கு கேடு விளையும் என்பதால், அந்த விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கிக் கொண்டுள்ளான். இவ்வாறு கழுத்தினில் தேக்கியமையால்,கருமை நிறத்தில் அவனது கழுத்தினில் கறை படிந்துள்ளது. தேன் துளிகள் ஒழுகும் மலர்கள் நிறைந்த சோலைகளும், கரும்பினைப் பிழியும் ஆலைகளும்,அழகாக வேதங்கள் ஓதும் மறையோர்களும், அழகுடன் மிளிர்ந்து செல்வச் செழிப்பினை வெளிப்படுத்தும் மாடவீடுகளும், அழகிய மங்கையரும் நிறைந்த நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக சிவபெருமான் உறைகின்றான்.
பாடல் 8:
அடல் எருது ஏறுகந்த அதிரும் கழற்கள் எதிரும் சிலம்பொடு இசையக்
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன்
உடலோடு தோள் அனைத்து முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆளவல்ல நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
அரையன்=அரசன்; தனது தவறினை உணர்ந்து, இறைஞ்சிய அரக்கன் நலன்கள் பல பெறுகின்ற வண்ணம் அருள் புரிந்த பெருமானை, நம்பன் என்று அழைப்பது பொருத்தம் தானே. அவ்வாறே நாமும் நமது தவறுகளை உணர்ந்து பெருமானிடம் இறைஞ்சி வேண்டினால் நம்மையும் ஆட்கொண்டு பெருமான் அருள் புரிவார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுவதை நாம் உணரலாம். நடலை=துன்பம்; கழல்களும் சிலம்பும் அணிந்த பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் எதிரும் சிலம்பு என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். மாதொரு பாகனாக விளங்கும் பெருமான், தனது வலது காலில் கழலும் இடது காலில் சிலம்பும் அணிவதை நாம் அறிவோம். இவ்வாறு இரு வேறு கால்களில் கழல்கள் மற்றும் சிலம்பு அணிந்துள்ள கோலத்தை இங்கே குறிப்பிடுகின்றார். எதிரே என்ற சொல் மூலம், கழல்கள் பூண்டுள்ள காலினுக்கு எதிரே உள்ள காலில், சிலம்பினை அணிந்துள்ளார், என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
கழலும் சிலம்பும் அணிந்தவனாக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடும் ஒரு சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம். புகலூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.2.6) திருஞானசம்பந்தர், பெருமான் காட்டினில் நடமாடும் தன்மையை குறிப்பிடுகின்றார். குழல் முதலிய இசைக் கருவிகள் ஒலிக்கும் பின்னணியில், குள்ளமான பூத கணங்கள் போற்றிசைப்ப, கழலின் ஓசையும் சிலம்பின் ஓசையும் ஒலிக்கும் வண்ணம், முற்றூழிக் காலத்தினில் நடமாடுகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
கழலின் ஓசை சிலம்பின் ஒலியோசை கலிக்கப் பயில் கானில்
குழலின் ஓசை குறட்பாரிடம் போற்றக் குனித்தார் இடம் என்பர்
விழவின் ஓசை அடியார் மிடைவுற்று விரும்பிப் பொலிந்து எங்கும்
முழவின் ஓசை முந்நீர் அயர்வெய்த முழங்கும் புகலூரே
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.35.7) திருஞானசம்பந்தர் கழலும் சிலம்பும் ஆர்க்க, உமையன்னையுடன் பெருமான் நின்றான் என்று கூறுகின்றார்.
செறியார் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறியார் குழலாளொடு நின்றான்
வெறியார் பொழில் வீழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (1.71.7) கழலும் சிலம்பும் ஒழிக்க பெருமான் வருவதாக கூறுகின்றார்.தவளம்=வெண்மை; புலம்பும்=ஒலிக்கும்; கீள்=பெரிய துணியிலிருந்து கிழிக்கப்பட்டு, கயிறு போல் திரிக்கப்பட்டது; குழல்=சுருண்ட சடை;
குழலார் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்
தழலார் மேனித் தவள நீற்றர் சரி கோவணக் கீளர்
எழிலார் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடையேறிக்
கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே
இடைமருது தலத்தின் மீது அருளிய பாடலில் (1.95.6) திருஞானசம்பந்தர், ஒரு காலில் சிலம்பும் மற்றொரு காலில் கழலும் ஒலிக்க அணிந்து கொண்டுள்ள மாதொரு பாகராகிய மருதர் அழகிய தோற்றத்துடன் விளங்குகின்றார் என்றும், அவரைத் தொழுது பணியும் அடியார்களை விட்டு, அந்நாள் வரை அவர்களை வருத்திய வினைகள் நீங்கிவிடும் என்று கூறுகின்றார்.
கழலும் சிலம்பும் ஆர்க்கும் எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே
பெருமான் தனது கால்களில் கழலும் சிலம்பும் அணிந்திருப்பதாக சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.117.7)திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சொற்களை இடம் மாற்றி வைத்து அருளிய பதிகம் என்பதால் மொழிமாற்றுப் பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. காலது கழல் சிலம்பு, கங்கை கற்றைச் சடை உள்ளால், மாலது பாகம், மழுவது ஏந்தல், வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், அடல் ஏறு ஊர்வர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கொழுங்கோடு=செழிப்பாக உள்ள மரக்கிளை; ஏறு=எருது; ஊர்தல்=எருதினை வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கு செல்லுதல்; சேல்=மீன்; கண்ணி=கண்ணினை உடைய உமையன்னை; மீன் போன்று அழகிய கண்களை உடையவள் என்று பொருள்படும்படி, மதுரை தேவியை அங்கயற்கண்ணி என்று அழைப்பார்கள்.
காலது கங்கை கற்றைச் சடையுள்ளால் கழல் சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர் கொழுங்கோட்டு
ஆலது ஊர்வது ஆடல் ஏற்று இருப்பர் அணிமணி நீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே
திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.4.2) திருஞானசம்பந்தர், கழலும் சிலம்பும் ஆர்க்க வல்லீர் என்று பெருமானை அழைத்து,சிவந்த வண்ணத்தில் திருமேனி கொண்டிருப்பதன் காரணம் யாது என்று கேட்கின்றார். சந்து=சந்தனம்;
சந்து உயர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டு தம்
சிந்தை செய்து அடியார் பரவும் திருவான்மியூர்ச்
சுந்தரக் கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆக்கிய வண்ணமே
திருக்களர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.3) திருஞானசம்பந்தர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் நடமாடும் வல்லமை பெற்றவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். மைந்தர்=மக்கள்; சேடர்=ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர்கள்; நிமலன்=மலங்களின் சேர்க்கை அற்றவன்;நீடவல்ல=நீண்ட காலமாக எழுந்தருளியுள்ள; இந்த பாடலில், அடியார்களின் சார்பாக, திருஞானசம்பந்தர், அடியார்களுக்கு பெருமான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதை நாம் உணரலாம்.
பாடவல்ல நன் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றிச்செய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழுமாடத் திருக்களருள்
நீடவல்ல நிமலனே நிறை கழல் சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆட வல்லானே அடைந்தார்க்கு அருளாயே
கோட்டாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (2.52.5) சம்பந்தர், பேய்க் கணங்கள் புகழும் வண்ணம் கானகத்தில், வளமான சிலம்பும் கழலும் ஒலிக்க நடனமாடும் அழகிய பெருமான் என்று கூறுகின்றார். எழுவார்=பஞ்சாக்கர மந்திரத்தை சிந்திந்து எழும் சித்தர்கள்;
பழைய தம் அடியார் துதி செயப் பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்
குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்
கழலும் வண் சிலம்பும் ஒலி செயக் கானிடைக் கணம் ஏத்த ஆடிய
` அழகனென்று எழுவார் அணியார் வானவர்க்கே
குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.58.2), தனது திருவடிகளில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம், பெருமான் பலியேற்கச் செல்கின்றார் என்று திருஞானசம்பந்தர கூறுகின்றார். செடியார்ந்த=முடை நாற்றம் கொண்ட; குடியார்ந்த=குடியாக உள்ள;குலாவி=கொண்டாடி; படியார்ந்த=படிகள் நிறைந்த; இந்த தலத்தில் உள்ள பெருமான் சன்னதிக்கு செல்வதற்கு படிகள் ஏறிச் செல்ல வேண்டிய நிலையை உணர்த்துகின்றார். படியார்ந்த கோயில் என்று குறிப்பிட்டு, ஈசன் உலகநாதனாக விளங்கி அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் தன்மையை, படியார்ந்த என்ற சொல் நமக்கு நினைவூட்டுகின்றது என்று பொருள் கொள்வதும் சிறப்பே. படி என்ற சொல்லுக்கு உலகம் என்று பொருள் கொண்டு, உலகம் சிறப்புடன் போற்றும் வண்ணம் திகழ்ந்த கோயில் என்ற விளக்கமும் பொருத்தமானதே. பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்; சிலம்பு என்பது பெண்கள் அணியும் அணிகலன். சிலம்பும் கழலும் அணிந்தவர் என்று குறிப்பிடுவதன் மூலம் மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக பெருமானை சித்தரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைபவர் திருஞானசம்பந்தர். தோடும் குழையும் அணிந்தவனாகவும், சிலம்பும் கழலும் அணிந்தவனாகவும், சடையும் கூந்தலும் உடையவனாகவும், பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவனாகவும், எண்ணற்ற பாடல்களில் அவர் குறிப்பிடுகின்றார்.
அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்
செடியார்ந்த வெண்டலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்
படியார்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே
திருவடிகளில் பொருந்திய பசும்பொன் கழலும் சிலம்பும் ஒலித்து ஆரவாரம் செய்ய, தனது அழகிய கையினில் முடை நாற்றம் கொண்டதும் உலர்ந்து வெண்மையாக காணப்படுவதும் ஆகிய பிரமகபாலத்தை ஏந்திய வண்ணம் பலியேற்பதற்காக உலகம் எல்லாம் திரிபவரும் ஆகிய பெருமான், சிறந்த மறையோர்கள் குடிகளாக வாழ்ந்து பெருமானைப் புகழ்ந்து கொண்டாடும் குடவாயில் தலத்தினில் யானை ஏறிச் செல்ல முடியாத வண்ணம் படிகள் நிறைந்த மாடக்கோயிலினை, இறைவனாகிய தான் உறையும் கோயிலாக பாவித்து தொடர்ந்து உறைகின்றார் என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரையாகும்.
வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.4) திருஞானசம்பந்தர், ஒலிக்கும் வீரக்கழலும் சிலம்பும் ஆரவாரம் செய்யும் வண்ணம் பெருமான் நின்று ஆடும் அற்புதம் அதிசயம் என்று கூறுகின்றார். கதிர்=சூரியன்; அறத்திறம்=தருமத்தின் பல வகைகள் மற்றும் வேதங்கள் ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள நுண்ணிய கருத்துக்கள்; மருந்துமாக நின்று உயிர்களை காக்கும் தன்மையன் என்று பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நெஞ்சின் தாக்கத்தினால் உலகம் அழியாத வண்ணம், அந்த விடத்தினை உட்கொண்ட செய்தி,கறைகொள் கண்டத்தர் என்ற தொடரினால் உணர்த்தப் படுகின்றது. காலை மாலை நேரங்களில் சிவந்த வண்ணத்துடன் காணப்படும் சூரியன், பகல் பொழுதினில் வெண்மை நிறத்துடன் காணப் படுகின்றான். சிவந்த திருமேனியை உடைய இறைவன், தனது உடலின் மீது திருநீற்றினை பூசியவண்ணம் வெண்மை நிறத்துடனும் காணப்படுகின்றான். வலஞ்சுழி தலத்தினில் மகிழ்ச்சியுடன் உறையும் பெருமான், அனைத்து உடல்களும் உயிரிலிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் உலகமே சுடுகாடாக காட்சி தரும் நிலையில், அந்த காண்பதற்கு அரிய அந்த காட்டினில், உலகத்தை மீண்டும் தோற்றுவித்து உயிர்களுக்கு தங்களது மலங்களைக் கழித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளிக்கும் எண்ணம் கொண்டு இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடையும் பெருமான், தான் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஆரவாரம் செய்யும் வண்ணம் நடனமாடும் அற்புதத்தை நாம் அறியோம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். .
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கு அன்று
இறைவர் ஆலிடை நீழலிலிருந்து உகந்து இனிது அருள் பெருமானார்
மறைகள் ஓதுவர் வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து
அறை கழல் சிலம்பார்க்க நின்றாடிய அற்புதம் அறியோமே
கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.3) திருஞானசம்பந்தர், தனது உடலின் ஒரு பாகத்தில் தேவியை ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், தனது கால்களில் அணிந்துள்ள சிலம்பும் கழலும் ஒலிக்கும் வண்ணம், பல இல்லங்களுக்கும் பலியேற்கச் செல்கின்றார் என்று கூறுகின்றார்.தான் பிச்சையாக ஏற்கும் உணவினை மிகுந்த விருப்பத்துடன் உட்கொள்ளும் எண்ணத்துடன், பெருமான் பிச்சை ஏற்பதாக இந்த பாடலில் கூறுகின்றார்.பிச்சை ஏற்கும் நாடகத்தில், பெருமான் உண்மையாக விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வது, பக்குவமடைந்த அடியார்கள் தங்களிடமிருந்து பிரித்துக் கொடுக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களைத் தானே.
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பு ஆர்க்க
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவார் அகந்தொறும் இடு பிச்சைக்கு
உண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து
அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவருக்கு அருவினை அடையாவே
புகலி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.3.4) திருஞானசம்பந்தர், தனது பாதங்களில் திகழும் கழலும் சிலம்பும் ஆரவாரத்துடன் ஒலிக்க,முழவத்தின் பின்னணியில் மிகவும் அரிதான நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். நிழல்=ஒளி; முருகு=நறுமணம்; அலம்ப=ஆரவாரத்துடன் ஒலிக்க;
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே
கழல் திகழ் சிலம்பொலி அலம்ப நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
முடிமேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.6) திருஞானசம்பந்தர் பொறுமையாக இருக்கும் பெருமான் என்று குறிப்பிட்டு, அவர் கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். பொறுமையாக இருப்பவர் சிவபெருமான் என்று ஏன் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. அவரே அதற்கு இந்த பாடலின் இரண்டாவது அடியில் விளக்கம் அளிப்பதை நாம் உணரலாம்.கங்கை நதி, பிறைச் சந்திரன் மற்றும் பாம்பினை சுமந்து கொண்டிருக்கும் சடையில், விரிந்த கொன்றை மலர்களையும் சுமந்து கொண்டிருந்தாலும், அந்த சுமையினை பொருட்படுத்தாதமல் அமைதியாக பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகின்றார் போலும். கமை=பொறுமை; அமையொடு= அமைதியாக
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப
சுமையொடு மேலும் வைத்தான் விரிகொன்றையும் சோமனையும்
அமையொடு நீண்ட திண்தோள் அழகாய பொற்றோடு இலங்க
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (4.08.06) கழலையும் சிலம்பினையும் அழகுற அணிந்தவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கணித்தல்=குறிப்பிடுதல்: வேப்ப மரம் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் பூக்கும் தன்மை உடையது. வேப்ப மரம் பூக்கும் காலமும் திருமணங்கள் நடைபெறும் காலமும் ஒன்றாக இருப்பதால், திருமண காலத்தை வேப்ப மரங்கள் பூத்து கணிப்பதாக குறிப்பிட்டு, கணிவளர் வேங்கை என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. அவள் வண்ணம் வண்ணம் அவர் வண்ணம் வண்ணம் அழலே என்ற தொடர் மூலம் பெருமான் மாதொரு பாகனாக திகழும் தன்மையை நேரிடையாக குறிப்பிடுவதையும் நாம் உணரலாம்.
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகார்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ண இயலார் ஒருவர் இருவர்
மணி கிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணிகிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ணம் வண்ணம் அழலே
பெருமானின் திருவடிகளின் சிறப்பினை உணர்த்தும், இன்னம்பர் தலத்து பதிகப் பாடல் ஒன்றினில் (4.100.6) சிலம்பும் கழலும் முறையாக பொருந்திய திருவடிகள் பெருமானின் திருவடிகள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கீண்டும்=கிழித்தும்: கிளர்ந்தும்=நிலத்தை கிளறித் தோண்டியும்:ஆரணங்கள்=வேதங்கள்; ஈண்டும்=பொருந்திய, வந்தடைந்த;
கீண்டும் கிளர்ந்தும் பொற்கேழல் முன் தேடின கேடுபடா
ஆண்டும் பல பல ஊழியும் ஆயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு
ஈண்டும் கழலின இன்னம்பரான் தன் இணை அடியே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.101.1) அப்பர் பிரான், பெருமானை சிலம்பு அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இதன் மூலம் மற்றொரு காலில் கழல் அணிந்தவன் என்பது சொல்லமலே உணர்த்தப்படுகின்றது. குலம்=கூட்டம்; பாவரு= பெருகிய, குண்டர்=மூர்க்கர்;அலம்புதல்=ஆர்ப்பரித்தல், ஆரவாரம் செய்தல், பெருத்த ஓசையுடன் ஒலித்தல்; அம்பு=நீர், புலம்பு அலம்பு=பெருமானை நினைத்து உருகுவதால் கண்களில் பெருகும் கண்ணீர். பெருமானிடம் வைத்துள்ள அன்பு ஒரு நிலையினைக் கடக்கும் போதும் அழுகையாக மாறுகின்றது என்று பல திருமுறை பாடல்களில் கூறும் அருளாளர்கள் அத்தகைய அழுகையால் விளைகின்ற பயனையும் நமக்கு உணர்த்துகின்றனர். அழுதால் அவனைப் பெறலாமே என்று தானே நமக்கு திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. பலவிதங்களிலும் தன்னைக் கொல்வதற்கு சூழ்ச்சிகள் செய்த சமணர்களின் கூட்டத்தின் முன்னே, பெருமானின் திருவருளால் காப்பாற்றப் பட்ட தான், சிவபெருமானின் அடியார்களுக்கு அடியவனாக இருக்கும் தன்மை சமணர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் என்ற தனது ஆசையினை இந்த பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமானின் சன்னதியாகிய திருமூலட்டானைத்தில் அவனது பேரருளினை தங்களது கண்களில் கண்ணீர் வழிய எண்ணி உருகி வழிபடும் அடியார்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேற்றினை அடியேன், உடல் வலிமை உள்ளவர்களாகவும் கூட்டமாக திரிபவர்களாகவும் உள்ள சமணர்கள் காணும் வகையில் பெறுவேனோ என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி,பெருமானே, அவ்வாறு பெறுவதற்கு நீரே அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் விண்ணப்பம் வைக்கின்றார். .
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு கொலோ
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பு அலம்பா வரு சேவடியான் திரு மூலட்டானம்
புலம்பு அலம்பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
பெருமானின் திருவடிகளின் சிறப்பினை உணர்த்தும், திருவதிகை வீரட்டானம் பதிகத்தின் பாடலில், பெருமானின் திருவடிகள் கழலும் சிலம்பும் அணிந்துள்ள தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொருகழல், அனைவரையும் வெற்றி கொள்ளும் வீரம் உடைய பெருமான் அணிந்துள்ள வீரக்கழல் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். ஒரு காலத்து ஒன்றாக நின்ற அடி=ஏகபாத திரிமூர்த்தியாக இறைவன் இருக்கும் நிலை. முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில்,மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம்.பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் குடவாயில் திருக்கோயிலிலும் உள்ளது. பிரமனாகவும் திருமாலாகவும் உள்ள நிலையைக் குறிப்பிடும் பாடலில், மாதொரு பாகனின் நிலை உணர்த்தப்படுவது பாடலின் நயம்.
ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழி தோறூழி உயர்ந்த அடி
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம் செல்வன் அடி
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.42.6) அப்பர் பிரான், தனது கால்களில் ஒலிக்கும் சிலம்பினையும் கழலினையும் அணிந்து உலகம் அதிரும் வண்ணம் நடமாடும் பெருமான் என்று கூறுகின்றார். மிறை=துன்பம்; பழைய வினைகளின் பயனால் நாம் துன்பங்கள் மட்டுமன்றி இன்பங்களையும் நுகர்கின்றோம்; ஆனால் அத்தகைய இன்பங்களில் ஆழ்ந்து மகிழும் நாம் நம்மை மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்கின்றோம். அத்தகைய தருணங்கள் தான், நாம் அகந்தை கொண்டு இறைவனை மறக்கும் தருணங்களாக மாறுகின்றன. எனவே தான். இன்பம் நுகரும், நேரங்களிலும் நம்மை உயர்வாக எண்ணிக் கொள்ளமால், அடக்கத்துடன் தாழ்மையாக நினைத்து இறைவனை வணங்க வேண்டும். அவ்வாறு இருப்பவரின் நெஞ்சத்தில் இறைவன் உறைவான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வியவேல்=மகிழாமல் இருத்தல்; நிறைவுடையான் என்ற தொடரினை அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற என்ற தொடருடன் இணைத்து, ஊழிக்காலத்தில் மன நிறைவுடன் நடனம் ஆடும் இறைவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர்.ஊழிக்காலம் முடிந்த பின்னர், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு,உலகத்தை தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் பெருமான், அந்த எண்ணத்தினால் மனநிறைவு அடைகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றாரோ என்று தோன்றுகின்றது
மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி
வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடும் குணம் உடையான் கொலை வேல் கையான்
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவுடையான் இடமாம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
ஆமயம் தீர்த்து என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.96.3) சிலம்பும் கழலும் ஆர்ப்ப முயலகனை அழுத்தியவாறு இறைவன் காணப்படுகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில் கூத்தபிரான் தனது காலின் கீழே வைத்து அடக்கிய முயலகனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முயலகனை பற்றிய குறிப்புகள் காணப்படும் திருமுறை பாடல்கள் மிகவும் அரியதாக காணப்படுகின்றன. முடி=சடைமுடி;முளை=முளைத்த; அலம்பு= ஒலிக்கின்ற; ஆர்க்க=ஒலி செய்ய; மூசு=மொய்க்க, தனது படத்தினால் மறைக்க; வடி=கூர்மை. மாதொருபாகனாக விளங்கும் பெருமான் சங்கரநாராயணராகவும் விளங்குகின்றார் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் சொல்வதை நாம் உணரலாம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்ட தன்மையை அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இளநாகம் உடனாக் கொண்டார்
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ் கொண்டார்
வடி கொண்டு ஆர்ந்து இலங்கு மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே
கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பாடலில் (7.41.2) பசியால் வாடிய தனக்கு உணவு அளிக்கும் பொருட்டு, பெருமான் பிச்சை ஏற்ற அதிசயத்தைக் குறிப்பிடும் சுந்தரர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் உச்சிப் போதினில் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமானே என்று குறிப்பிட்டு உருகுவதை நாம் உணரலாம். பெருமான் அந்த தலத்தில் வாழும் அந்தணர் போன்று பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். எனினும் பெருமானே சென்றார் என்பதை வலியுறுத்தும் வண்ணம் சுந்தரர் தனது பாடலில், பாம்பு அணிந்தவராகவும் கழலும் சிலம்பும் அணிந்தவராகவும் பெருமான் பிச்சை ஏற்கச் சென்றார் என்று குறிப்பிட்டார் போலும். கலிக்க=ஒலிக்க; பெருமானின் செய்யும் செயல்களின் பின்னணியை எவரும் அறிய முடியாது என்பதை இச்சை அறியோம் என்ற தொடர் கொண்டு சுந்தரர் குறிப்பிடுகின்றார். எளியவனாகிய அடியேன் பொருட்டு பிச்சை எடுத்த செயல் கண்டால் மற்ற அடியார்கள் மனம் பதைபதைத்து உருகுவார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார்.
கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கக்
உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்
அச்சமில்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே
பொழிப்புரை:
வலிமை வாய்ந்த எருதினைத் தனது வாகனமாக, விருப்புடன், ஏற்றுக் கொண்டவனும், அதிரும் கழல்களும், கழல்கள் அணிந்துள்ள காலுக்கு எதிரே உள்ள காலில் அணிந்துள்ள சிலம்பும் அசையும் வண்ணம் வருபவனும், உலகத்து உயிர்கள் மீது கொண்ட கருணை காரணமாக, பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினைத் தானே உட்கொண்டு தனது கழுத்தில் தேக்கியவனும், கோபம் கொண்டவனாக இலங்கை தீவுக்கு அரசனாகிய அரக்கன் இராவணனின், உடல் அனைத்து தோள்கள் மற்றும் பத்து தலைகளையும், கயிலை மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும் வண்ணம் செய்தவனும், பின்னர் அவனது சாமகான இசை கேட்டு அவன் பால் இரக்கம் கொண்டு, அவனுக்கு ஓர் வாளையும் கொடுத்து, அவனது துன்பங்களை தீர்த்து அருள் புரிந்தவனும் ஆகிய இறைவன், நமது துன்பங்களையும் தீர்த்து நம்மை ஆட்கொள்ளும் வல்லமை உடையவன் ஆவான். அத்தைகைய பெருமான் நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான்.
பாடல் 9:
குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர் கூடி நேடி நினைவுற்று
இலபல எய்தொணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன்
சிலபல தொண்டர் நின்று பெருமைகள் பேச அருமைத் திகழ்ந்தபொழிலின்
நலமலர் சிந்த வாசம் மணநாறு வீதி நறையூரின் நம்பன் அவனே
விளக்கம்:
குலமலர்=தாமரை, மலர்களில் சிறந்த மலராக தாமரை மலர் கருதப்படுவதை குலமலர் என்று குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார்.எதிர்கூடி நேடி=இருவரும் சேர்ந்து எதிர்த் திசைகளில் தேடியும், திருமாலும் பிரமனும் இறைவனது பெருமையை அறியாதவர்களாக இருந்த போதிலும்,நறையூர் தலத்து தொண்டர்கள், இறைவனின் பெருமையை அறிந்தவர்களாக தங்களிடையே அவனது பெருமையை பேசியவர்களாக இருந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. அருமை=அரிய மேகங்கள்; மிகு மால் என்ற தொடருக்கு நெடியவனாக (திரிவிக்ரமன்) நீண்ட திருமால் என்று விளக்கம் அளித்து, அத்தகைய ஆற்றல் மிகுந்த திருமாலும் திருவடியைக் காண முடியாமல் திகைத்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது என்ற விளக்கும் பொருத்தமே சிலபல என்ற தொடரில் உள்ள சில மற்றும் பல என்ற சொற்களை தொண்டர் என்ற சொல்லுடன் கூட்டி, சில தொண்டர் பல தொண்டர் என்று பொருள் கொள்ள வேண்டும். பல தொண்டர்கள் இருப்பினும், அவர்களில் ஒரு சிலரே பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருப்பதை நாம் பொதுவாக காண்கின்றோம். அத்தகைய அணுக்கத் தொண்டர்கள் மற்ற தொண்டர்களுக்கு பெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்வதாக பொருள் கொள்வதும் சிறப்பே.
பொழிப்புரை:
மலர்களில் சிறந்த மலராக கருதப்படும் தாமரை மலர் மீது பொருந்தி உறையும் பிரமனும், ஆற்றல் மிகுந்த திருமாலும், இருவரும் சேர்ந்து எதிரெதிர்த் திசைகளில் சென்று தேடியும் (ஒருவர் அன்னமாகப் பறந்து மேல்நோக்கிச் சென்றும், மற்றொருவர் பன்றியாக மாறி கீழேத் தோண்டிச் சென்றும்), அவர்கள் இருவரும் உணர்ந்தறியாத பெருமைகள் பல உடையவனாகிய இறைவன், அவர்கள் இருவரும் முறையே தனது திருமுடியையும் திருவடிகளையும் சென்று அடைய முடியாத வண்ணம் நீண்ட தழற்பிழம்பாக உயர்ந்த பெரியவனும் ஆகிய இறைவன், ஒளியுடன் விளங்கும் சடையினை உடையவன் ஆவான். அவனது பெருமையை நன்கு உணர்ந்த தலத்து தொண்டர்கள், இறைவனது பெருமையைத் தங்களின் இடையே பேசுகின்றனர். கருமை நிறத்து மேகங்கள் நிறைந்த சோலைகளில் உள்ள மலர்கள் சிந்தும் நறுமணம் நிறைந்த வீதிகள் உடைய நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக பெருமான் உறைகின்றான்.
பாடல் 10:
துவருறுகின்ற ஆடை உடல்போர்த்து உழன்ற அவர்தாமும் அல்லசமணும்
கவருறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும்
நவமணிதுன்று கோயில் ஒளி பொன்செய் மாடநறையூரின் நம்பன்அவனே
விளக்கம்:
துவர்=காவி நிறம்; அல்ல=புத்தர்கள் அல்லாத சமணர்கள்; கவருறு சிந்தையாளர்=மாறுபட்ட சிந்தை; ஐயுறும் அமணர் என்று திருஞானசம்பந்தர் ஒருருவாயினை என்று தொடங்கும் பதிகத்தில் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. உறுதியான நிலைப்பாடு ஏதுமின்றி சந்தேகத்துடன் தங்களது கொள்கைக்கு விளக்கம் அளிக்கும் சமணர்கள்; இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று இருவகையாக உயிர்களின் அனைத்து தன்மைகளுக்கும் விளக்கம் கூறுவது சமணர்களின் கொள்கையாக அந்நாளில் இருந்தது என்பதை குறிப்பிடும் வகையில் ஐயுறு அமணர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவார்கள். இவ்வாறு தங்களது கொள்கையில் உறுதியாக இல்லாமல் மாறுபடும் சிந்தனை உடையவர்களாக சமணர்கள் இருந்த தன்மை கவருறு சிந்தையாளர் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நீத்து=விட்டு விட்டு; பிறங்கும்=ஒளியுடன் விளங்கும்;மருவும்=சென்றடையும்;
பொழிப்புரை:
காவி நிறம் தோய்க்கப்பட்ட உடையினை அணிந்து திரியும் புத்தர்களும், புத்தர்கள் அல்லாதவரும் தங்களது கொள்கையில் உறுதியாக இல்லாமல் மாறுபட்ட சிந்தனை உடைய சமணர்களும் சொல்லும் சொற்களை பொருட்படுத்தாமல் அடியார்கள் விட்டுவிடுவதைக் கண்டு உவகை அடையும் பெருமான் ஒளியுடன் திகழும் சடை உடையவனாக விளங்குகின்றான். தவத்தில் சிறந்த பக்தர்களும், சித்தர்களும், வேதியர்களும், பெருமானைப் போற்றி வழிபடுகின்றனர். இவ்வாறு பலரும் வழிபடுவதைக் காணும் தலத்து மகளிர்கள், பெருமானின் சன்னதி சென்றடைந்து முறையாக பாடல்கள் பாடி அவரைப் போற்றுகின்றனர். நவமணிகளும் பதிக்கப்பட்டு அழகுடன் விளங்கும் திருக்கோயிலும், பொன் போன்று ஒளியுடன் திகழும் மாடவீடுகளும் உடைய நறையூரில் அனைவரும் போற்றும் நம்பனாக பெருமான் உறைகின்றான்.
பாடல் 11:
கானலுலாவி ஓதம் எதிர்மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரின் நம்பன் அவனை
ஈனமிலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்து நினைவார்
வான நிலாவ வல்லர் நிலமெங்கு நின்று வழிபாடு செய்யுமிகவே
விளக்கம்:
கானல்=கடற்கரைச் சோலைகள்; ஓதநீர்=கடலலைகளால் கொண்டு வரப்படும் நீர்; முந்தி உணர= இளம் வயதில் உணர்ந்த; மூன்று வயதுக் குழந்தையாக இருந்த போதே, உமையம்மையால் ஞானப்பால் அளிக்கப்பட்டு ஞானம் அடைந்த திருஞானசம்பந்தர்; ஈனம்=குற்றம்;
பொழிப்புரை:
கடலலைகளால் கொண்டு வரப்படும் நீர், கடற்கரைச் சோலைகளைத் தாண்டி ஊரினுள்ளே வந்து நிறையும் சீர்காழி நகரைச் சார்ந்தவனும், இளவயதில் உமையம்மையின் ஞானப்பால் பெற்றமையால் சிவஞானம் அடைந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், தனது மனதினில் பெருமானின் திருவடிகளை தியானித்து,மிகுந்த விருப்பத்துடன் நறையூர் நம்பனை, எந்த விதமான குற்றமும் இல்லாமல், சிறந்த இசையுடன் பொருத்தி இறைவனுக்கு சூட்டிய தமிழ் மாலையை,இந்த பத்து பாடல்களை நினைத்து பாடும் அடியார்கள், நிலவுலகத்தில் சிறப்புடன் நிலைத்து நின்று, வானுலகில் உள்ள தேவர்கள் வழிபடும் வண்ணம் வாழ்வார்கள்.
முடிவுரை:
சித்தர்கள் சிறப்பாக இறைவனை வழிபட்டதால் சித்தீச்சரம் என்று பெயர் பெற்ற திருக்கோயிலில் உறையும் இறைவனை, பலதரப்பட்ட அடியார்கள் இறைவனை வழிபட்ட செய்தி இந்த பதிகத்தின் பாடல்களில் சொல்லப்படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில் உலகங்கள் போற்றும் வண்ணம் பலியேற்கும் பெருமான் என்று குறிப்பிட்டு, பெருமானை அனைவரும் போற்றும் தன்மையை உணர்த்திய திருஞானசம்பந்தர், முருகப் பெருமானின் தந்தை என்று தலத்து தொண்டர்கள் கொண்டாடுவதாக கூறுகின்றார். முருகப் பெருமானை தமிழ்க்கடவுள் என்றே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அத்தகைய புகழ் வாய்ந்த முருகப்பெருமானின் தந்தை என்று சிவபெருமானை கொண்டாடி வந்தமை இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. தலத்து மகளிர், பெருமானின் சிறப்புகளை ஆடியும் பாடியும் கொண்டாடிய தன்மை மூன்றாவது பாடலில் கூறப்பட்டுள்ளது. தலத்து மறையோர்கள் தங்களது தலைவன் என்று பெருமானை கொண்டாடிய தன்மை நான்காவது பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு அடியார்கள் கொண்டாடுவதால் மகிழ்ச்சி அடையும் பெருமான், அடியார்களுக்கு சுற்றமாக விளங்குகின்றார் என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். தேவர்களின் தலைவன் என்று இறைவனை குறிப்பிடுவதன் மூலம், எவ்வாறு எளியவனாக பெருமான் அடியார்களுக்கு அருள் புரிகின்றார் என்பது மிகவும் நயமாக சுட்டிக் காட்டப் படுகின்றது. ஆறாவது பாடலில் தொண்டர்கள், மலர்கள் கொண்டு இறைவனின் திருவடிகள் மீதும் திருமேனி மீதும் தூவி வழிபடுவது குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழாவது பாடல் தலத்தின் செல்வ நிலையை உணர்த்துகின்றது. தலத்து தொண்டர்கள் பலரும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வணங்கியதால், இறைவன் தனது அடியார்கள் வாழ்கின்ற இந்த தலம் செல்வச் செழிப்புடன் திகழும் வண்ணம் அருள் புரிந்துள்ளான் என்பதை நாம் உணரலாம். எட்டாவது பாடல், தனது தவறினை உணர்ந்து பெருமானைப் புகழ்ந்து சாமகானம் பாடிய அரக்கன் இராவணனுக்கு கருணையுடன் அருள் புரிந்த இறைவன், நமக்கும் அருள் புரிவார் என்று குறிப்பிட்டு, நம்மையும் இறை வழிபாட்டில் ஈடுபடுத்தி ஊக்குவிக்கும் பாடல். ஒன்பதாவது பாடலில், பெருமானின் பெருமையை நன்கு உணர்ந்த தலத்து அடியார்கள், உற்சாகத்துடன் அவனது பெருமையை பேசுகின்றனர் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில், சமணர்கள் மற்றும் புத்தர்களின் மொழிகளால் தடுமாற்றம் அடையாமல் தலத்து அடியார்கள் விளங்கிய தன்மை கண்டு பெருமான் மகிழும் நிலை குறிப்பிடப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்தின் பாடல்களை நினைத்து பாடும் அடியார்கள், வானவரும் புகழ்ந்து கொண்டாடும் வண்ணம் சிறப்புடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றார். தலத்தின் சிறப்பையும், அடியார்கள் பெருமானை கொண்டாடிய தன்மையயும் இந்த பதிகத்து பாடல்கள் மூலம் உணரும் நாமும், இந்த பதிகத்து பாடல்களாய் பாடி. பெருமானின் கருணையால் வாழ்வினில் உய்வினை அடைவோமாக.