பதிக எண்: 2.38 - திரு சாய்க்காடு - இந்தளம்
பின்னணி:
மண்புகார் என்று தொடங்கும் பதிகத்தை அடுத்து சாய்க்காடு தலத்து இறைவன் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகம் தான் இந்த பதிகம். மண் புகார் என்று தொடங்கும் பதிகத்தின் மூன்றாவது பாடலில், நாள்தோறும் இறைவனின் திருநாமத்தை விருப்பத்துடன் சொல்லி போற்ற வேண்டும் என்று அறிவுரை கூறிய ஞானசம்பந்தர், இந்த பதிகத்தினை நியமத்துடன் இறைவனை போற்றும் அடியார்களுக்கு அருளும் சிவன் உறையும் கோயில் சாய்க்காடு என்று தொடங்குகின்றார்.
பாடல் 1:
நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவிச்
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரித்
தத்து நீர்ப் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே
விளக்கம்:
இந்த பாடலில் மனம் ஒன்றி நியமத்துடன் இறைவனை தினமும் தொழவேண்டும் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய தில்லைப் பதிகத்தின் பாடலை (4.81.2) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. கன்றிய=சினந்த; கருணைக் கடவுளாகிய பெருமானை மனம் ஒன்றி வழிபடுவதால் நமக்கு எந்த விதமான ஊனமும் இல்லை என்றும் மாறாக அவனது கருணை நமக்கு கிடைக்கும் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே
தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலில், சம்பந்தர் தான் மனம் ஒன்றி இறைவனை தியானித்து அவரின் பெருமைகளை உணர்ந்து பாடிய பதிகம் என்பதை குறிப்பிடுகின்றார்.
அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே
நித்தலும்=நாள்தோறும்: நியமம்=முறையாக வழிபடும் நிலை; கோடு=கொம்பு, யானையின் கோடு=யானைத் தந்தம்; பீலி=மயிற்பீலி; வண்=வளமையாக விளங்கும்; தத்து=தாவிக் குதிக்கும் நீர். சாகரம்=கடல்; நீர் மலர்த் தூவி என்று புறப் பூஜையும் சித்தம் ஒன்ற என்று அகப் பூஜையும் இங்கே குறிப்பிடப்படுகின்றது; மேவும்=சென்று அடையும், தங்கும்; பொதுவாக நதிகள் கடலில் சென்று கலப்பதை பாய்தல் என்று குறிப்பிடுவது வழக்கம். பாய்தல் என்றால் வேகத்துடன் சென்று கலத்தல் என்று பொருள். மேவுதல் என்றால் சென்று அடைதல் என்று பொருள். திருச்சியின் அருகே மிகவும் விரிந்து காணப்படும் காவிரி நதி, பூம்புகாரின் அருகே கடலில் கலக்கும் இடத்தில அகலும் மிகவும் குன்றி காணப்படுவதை நாம் காணலாம். இவ்வாறு மிகவும் குறைந்த நீரினை கடலில் சேர்க்கும் காவிரி நதியின் தன்மைக்கு, காவிரி நதி தனது நீர்வளம் முழுவதையும் தமிழ் மண்ணுக்கு தந்துவிட்டு எஞ்சிய நீருடன் கடலில் சென்று கலப்பதே காரணம். இந்த நிலைக்கு சேக்கிழார் சுவையாக வேறொரு காரணத்தை கற்பிப்பதை நாம் பெரிய புராணத்து பாடல் ஒன்றினில் காணலாம். இந்த நயமான பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடல் திருமூல நாயனார் புராணத்தில் உள்ள பாடல். தில்லை நகரில் கூத்தபிரானை தரிசித்த திருமூலர் காவிரி நதிக்கரையினை சென்று அடைந்ததை குறிப்பிடுகின்றது. புலியூர் என்ற சொல், பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரினை உடைய தில்லைச்சிதம்பரத்தினை குறிக்கும்.
தடநிலைப் மாளிகைப் புலியூர் தனில் உறைந்து இறைஞ்சிப் போய்
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணிந்தார்.
மேற்கண்ட பாடலில் சேக்கிழார், பெருமானிடம் சற்றும் பயம் கொள்ளாமல் கடல் அமுதத்தினை அளிப்பதற்கு பதிலாக, நஞ்சினை அளித்தமையால், கடலின் மீது கோபம் கொண்ட காவிரி நதி, தனது நீர் வளத்தினை உலகத்திற்கு பெரிதும் அளித்துவிட்டு, கடலின் வயிறு நிறையாத வண்ணம் மிகவும் குறைந்த நீரினை கடலுக்கு அளிக்கின்றது என்று நயமாக கூறுகின்றார். பொன்னி என்பது காவிரியின் மற்றொரு பெயர். நியமம் என்று இங்கே குறிப்பிட்டது அவரவர்கள் குல வழக்கப்படி, தினமும் காலையிலும் மாலையிலும் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். குறைந்த பட்சம் நீராடி உடலினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பொழிப்புரை:
சிவ வழிபாடு எவ்வாறு செய்வது என்பதை அறிந்து கொண்டு, முறையாக நியமத்துடன் தினமும் பெருமானுக்கு நீரும் மலரும் அளித்து, தங்களது சித்தம் ஒன்றும் வண்ணம் பெருமானை தியானித்து வழிபடும் அடியார்களுக்கு அருளும் சிவபெருமான் உறையும் தலமாக விளங்குவது சாய்க்காடு தலமாகும். இந்த தலம், யானைத் தந்தங்கள் மற்றும் வளமான மயிற்பீலிகளைக் அடித்துக் கொண்டு வந்து கரை சேர்ப்பதும், துள்ளிக் குதித்து பாய்ந்து வருவதும் ஆகிய பொன்னி நதி கடலுடன் பொருந்தும் காவிரிப் பூம்பட்டினத்து நகரில் உள்ளது இந்த சாய்க்காடு தலம்.
பாடல் 2:
பண்டலைக் கொண்டு பூதங்கள் பாட நின்றாடும்
வெண்டலைக் கருங்காடு உறை வேதியன் கோயில்
கொண்டலைத் திகழ் பேரி முழங்கக் குலாவித்
தண்டலைத் தடமா மயிலாடு சாய்க்காடே
விளக்கம்:
பண்டலை=பண்+தலை; தலைக்கொண்டு=முதன்மை அளித்து; கொண்டல்=கிழக்கு திசையில் இருந்து வரும் காற்றினால் உந்தப்படும் மேகம்; தெற்கிலிருந்து வீசும் காற்றினை தென்றல் என்றும், மேற்கிலிருந்து வீசும் காற்றினை கோடை என்றும் வடக்கிலிருந்து வீசும் காற்றினை வாடை என்றும் கூறுவார்கள். பேரி=பேரிகை; தண்டலை=தண்+தலை; தண்டலைத் தடம்=குளிர்ந்து பரந்து காணப்படும் சோலைகள்; இந்த பாடலில் பேரிகைகள் இடி போன்று முழங்க, மயில்கள் களிப்புடன் நடமாடின என்று சம்பந்தர் கூறுகின்றார். பொதுவாக இடிகளின் ஓசையினைக் கேட்கும் மயில்கள், அடுத்து மழை வரும் என்ற நம்பிக்கையில் களிப்புடன் நடமாடும் என்று கூறுவார்கள். இங்கே பேரிகைகளின் முழக்கத்தை கேட்ட மயில்கள், அந்த ஓசையினை இடியின் ஓசையாக கருதி, மழையினை எதிர்பார்த்து களிப்புடன் நடமாடின என்று நயமாக கூறுகின்றார்.
பொழிப்புரை:
பண்களுக்கு முதன்மை அளித்து பூதங்கள் பாட, அத்தகைய பாடலுக்கு பொருந்தும் வண்ணம் நின்று நடனம் ஆடுபவனும், வெண்மையான மண்டையோடுகள் சிதறிக் கிடக்கும் கருங்காட்டினில் உறைபவனும், வேதியனாக விளங்குபவனும் ஆகிய இறைவன் உறையும் திருக்கோயில், சாய்க்காடு தலத்தில் உள்ளது. கிழக்கிலிருந்து வீசும் காற்றினால் உந்தப்படும் மேகங்கள் ஒன்றோடொன்று மோத ஏற்படும் இடியோசையினை ஒத்து பேரிகைகள் முழங்க, பேரிகையின் ஓசையினை இடியின் ஓசை என்று தவறாக நினைத்து, குளிர்ந்தும் பரந்தும் காணப்படும் சோலைகளில் மயில்கள் குலாவி ஆடும் இடம் சாய்க்காடு தலமாகும்.
பாடல் 3:
நாறு கூவிள நாகு இள வெண்மதி அத்தோடு
ஆறு சூடும் அமரர் பிரான் உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலைத்
தாறு தண் கதலிப் புதல் மேவு சாய்க்காடே
விளக்கம்:
நாறு=நறுமணம்; கூவிளம்=வில்வம்; தேன்கனி=முற்றின தேங்காய்; தாறு=குலை; புதல்=புதர்; ஊறு=சுவை ஊறுகின்ற; மணற்பாங்கான கடற்கரை தலத்தில் தென்னந்தோப்புகள் இருப்பது இயற்கை அல்லவா.
பொழிப்புரை:
நறுமணம் கமழும் வில்வம், இளைய பிறைச் சந்திரன் மற்றும் கங்கை நதி ஆகியவற்றைத் தனது சடையினில் சூட்டிக் கொள்பவனும் தேவர்களின் தலைவனும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோயில் சாய்க்காடு தலத்தினில் உள்ளது. சுவை ஊறுகின்ற தேங்காய், மாங்கனி இவற்றை கொண்டுள்ள மரங்கள் உயர்ந்து ஓங்கி இருப்பதும் குளிர்ந்த வாழைப் பழத் தாறுகளை உடைய வாழைப் புதர்களும் பொருந்திய தலம் சாய்க்காடு தலமாகும்.
பாடல் 4:
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கோடும் ஈண்டித்
தரங்க நீள் கழித் தண்கரை வைகு சாய்க்காடே
விளக்கம்:
மன்னிய=பொருந்திய; வண் புகழ்=வளமையான ;புகழ், சிறந்த ;புகழ் என பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும்; மருவார்=பகைவர்; இந்த பாடலில் புகார் நகரம் சிறந்த துறைமுகமாக இருந்தமையால் சங்க காலத்தில் செழிப்பாக கடல் வாணிபம் நடைபெற்ற புகார் நகரத்தில், சம்பந்தர் காலத்திலும் வாணிபம் செழிப்புடன் நடைபெற்று வந்தது போலும். எனவே தான் அவர் மிகுந்த ஆரவாரத்துடன் சரக்குகளை ஏறுவதும் இறக்குவதும் நடைபெற்று வந்தது என்று குறிப்பிடுகின்றார். இரங்கல் ஓசை என்பதற்கு நெய்தல் நிலத்திற்கு உரிய பண் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுவதாலும் அலைகள் எழுப்பும் சத்தமும் சேர்ந்து ஆரவாரம் மிகுந்து காணப்பட்டது என்ற பொருள் பொருத்தமாக உள்ளது. ஈண்டி=கூடி; தரங்கம்=அலைகள்; கடலின் அருகே உள்ள இடங்களில் தாழை செழித்து வளரும் நிலை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.
பொழிப்புரை:
வேண்டிய வரங்களைத் தருவதால் சிறந்த புகழ் உடையவனாகத் திகழும் எமது தந்தையாகிய பெருமான், பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் அம்பினை எய்தான். அவன் உறையும் திருக்கோயில் சாய்க்காடு தலத்தில் உள்ளது. வணிகர்கள் தாங்கள் கொண்டு வந்த சரக்குகளை கப்பல்களில் சேர்ப்பதும், இறக்குமதி ஆகும் பண்டங்களை இறக்குவதும் தொடர்ந்து நடைபெறுவதால் மிகுந்த ஆரவாரத்துடன் காணப்படும் காவிரிப்பூம்பட்டினத்து கடற்கரையில், அலைகள் எழுப்பும் சத்தமும் கலந்து பேரிரைச்சலுடன் காணப்படும் கடற்கரையில், குளிர்ந்த சோலைகள் அமைந்த தலம் சாய்க்காடு ஆகும்.
பாடல் 5:
ஏழைமார் கடை தோறும் இடு பலிக்கென்று
கூழை வாளரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
மாழை ஒண் கண் வளைக்கை துளைச்சியர் வண் பூந்
தாழை வெண்மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே
விளக்கம்:
ஏழைமார்=மகளிர்; பொதுவாக உடல் வலிமையில் ஆண்களை விடவும் குறைந்தவர்களாக இருப்பதால் மகளிரை ஏழை என்று குறிப்பிடுவார்கள். இங்கே தாருகவனத்து மகளிர் என்று பொருள் கொள்ளவேண்டும். கடை=வாயில்; கூழை=கடைப் பகுதியில்; இங்கே வால் பகுதி என்று பொருள் கொள்ளவேண்டும் பாம்பு தலைப்பகுதியில் சற்று பருத்தும் கீழே செல்லச் செல்ல, உடல் மெலிந்து வால் பகுதியில் மிகவும் மெலிந்து காணப்படும் நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மாழை=ஒளி வீசும்; நுளைச்சியர்=நெய்தல் நிலத்து மகளிர் நுளைச்சியர் என்றும் ஆண்கள் நுளையர் என்றும் அழைக்கப் படுவார்கள். நெய்தல் என்பது கடலும் கடலைச் சார்ந்த இடமாகும். வண்=செழுமை மிகுந்த, மாழை என்ற சொல்லுக்கு மான என்று மான் என்று பொருள் கொண்டு, மான் போன்று மருண்ட பார்வையினை உடைய கண்களைக் கொண்ட மகளிர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
பொழிப்புரை:
தாருகவனத்து மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்களின் இல்லத்தின் வாயிலில் நின்று, பிச்சை இடுவீர்களாக என்று கேட்டபடியே, ஒளிவீசுவதும் வால் பகுதியில் மிகவும் மெலிந்தும் காணப்படுவதும் ஆகிய பாம்பினை தனது விருப்பப்படி ஆட்டுவிக்கும் பெருமான் உறைகின்ற இடம் சாய்க்காடு தலத்தில் உள்ள கோயிலாகும். ஒளி வீசும் கண்களையும், ஒளி வீசும் வளையல்களை அணிந்த கைகளையும் உடைய நெய்தல் நிலத்து மகளிர்கள் செழிப்பாக வளார்ந்த தாழை வெண் மடல்களை கொய்து மகிழும் இடம் சாய்க்காடு ஆகும்.
பாடல் 6:
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடை போதில்
அங்கொர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில்
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்து மணியும்
சங்கும் வாரித் தடங்கடல் உந்து சாய்க்காடே
விளக்கம்:
துங்க=உயர்வினை உடைய: கடை போதில்=கடைந்த போது; நீழல்=நிழல்; வெப்பத்தில் வருந்துவோருக்கு வெப்பத்தை தணித்து இன்பம் அளிப்பது நிழல். அதைப் போன்று கடலிலிருந்து பொங்கி எழுந்த விடம் வெளிப்படுத்திய வெப்பத்தை தாங்க முடியாமல் நான்கு திசைகளிலும் ஓடிய தேவர்களுக்கு, விடத்தை உட்கொள்வதன் மூலம், அவர்களுக்கு விடத்தின் வெப்பத்திலிருந்து விடுதலை அளித்தவர் சிவபெருமான் என்பதால் நிழல் அளித்தவர் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றார். வங்கம்=மரக்கலங்கள்; இப்பி=முத்துச் சிப்பிகள்; தடம்=அகன்ற கடற்கரை; உயர்ந்த வானவர்கள் என்று ஆற்றலில் உயர்ந்தவர் என்று குறிப்பிட்டு அவர்களாலும் தாங்க முடியாத ஆலகால் விடம் என்று விடத்தின் கொடிய தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.
நிழல் தந்து அருள் புரியும் பெருமான் என்று சம்பந்தர் குறிப்பிடுவது, நமக்கு அப்பர் பிரான் திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடலை (4.92.19) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. சுழலார் துயர் வெயில்=கடுமையான வெய்யில் போன்று சுட்டிடும் பிறவிச் சுழலாகிய நோய்: கழலா வினைகள்=எளிதில் கழிக்க முடியாத வினைகள்: காலவனம்= இருள், பிறவிப் பிணிக்கு வெய்யிலை உவமையாக கூறியதால், பிறவிப் பிணியினை நீக்கும் இறைவனின் திருவடிகளை நிழல் என்று கூறும் நேர்த்தியை நாம் உணரலாம். துன்னுதல்=நெருங்கி இருத்தல், பொருந்துதல், காலவனம் என்பதற்கு காலம் என்றும் கடு என்று பொருள் கொண்டு, காலத்தையும் கடந்த இறைவனின் திருவடிகள், காலம் எனும் காட்டினை எரித்து பொசுக்கி விடும் ஒளியாக விளங்கும் என்றும் பொருள் கூறலாம்.
சுழலார் துயர் வெயில் சுட்டிடும் போது அடித் தொண்டர் துன்னும்
நிழல் ஆவன என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ கால வனம் கடந்த
அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே
துயர் வெய்யில் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும் நிழலாக அருள் புரிவது சிவபிரானின் திருவடிகள் என்று அப்பர் பிரான் பாடியது, இன்றும் பொய்க்காமல் இருக்கின்றது என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்றினை, சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியம் தனது திருத்தொண்டர் புராண விளக்கத்தில் கூறுகின்றார். ஒரு முறை கடுங்கோடையாகிய வைகாசி மாதத்தில், நல்லூர் பெருமணத்தில் (இன்றைய பெயர் ஆச்சாள்புரம், சீர்காழிக்கு அருகில் உள்ளது) நடைபெற்ற ஞானசம்பந்தர் விழாவிற்குச் சென்ற அவர், வீதி உலா வந்த சம்பந்தப் பெருமானைப் பின் தொடர்ந்து செல்ல முடியாமல் வெய்யிலின் தாக்கத்தால், தொண்டர்கள் தவித்ததைக் கண்டதாகவும். அடிக்கடி சாலை ஓரத்தில் இருந்த வீடுகளின் கூரை நிழலில் தங்கிய பின்னரே அவர்கள் தொடர்ந்து சென்றதாகவும் கூறுகின்றார். அப்போது அவர்களுடன் வலம் வந்த ஓதுவார், மேற்கண்ட பாடலை உருக்கமுடன் பாடினார். அவர் அந்த பாடலைப் பாடிய ஐந்து நிமிடங்களில் வானில் மேகம் சூழ்ந்து சூரியனை மறைத்தது என்றும் அதன் பின்னர் திருவீதி உலா முடியும் வரையிலும், மேகங்களால் சூரியன் மறைக்கப்பட்டு இருந்தமையால் அடியார்கள், இன்பத்துடன் வீதி வலத்தில் பங்கேற்றனர். என்றும், தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இதே போன்ற நிகழ்ச்சி, அவினாசியிலும் ஒரு முறை நிகழ்ந்ததாக அன்பர்கள் சிவக்கவிமணிக்கு தெரிவித்துள்ளனர். எனவே நம்பிக்கை வைத்து தேவாரப் பாடல்கள் ஓதினால் உடனே அடியார்கள் பயன் அடையலாம் என்பது இப்போதும் கைகண்ட உண்மையாகத் திகழ்வதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
ஆற்றல் மிகுந்த தேவர்கள் ஒன்று கூடி பாற்கடலினைக் கடைந்த போது, கடலிலிருந்து எழுந்த விடத்தின் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்த போது, விடத்தினைத் தான் உட்கொண்டு, அந்த வெப்பத்திலிருந்து விடுதலை அளித்து, வெப்பத்தைத் தணிக்க உதவும் நிழல் போன்று செயல்பட்டவன் சிவபெருமான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் உறையும் இடம் சாய்க்காடு தலமாகும். பெரிய மரக்கலங்களையும் முத்துச் சிப்பிகள், ஒளி வீசும் மணிகள் முத்து மற்றும் சங்குகளை வாரித் திரட்டி அகன்ற கடற்கரையில் உந்தித்தள்ளும் அலைகளை உடைய கடலினைக் கொண்ட இடம் சாய்க்காடு ஆகும்.
பாடல் 7:
வேத நாவினர் வெண் பளிங்கின் குழைக் காதர்
ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில்
மாதர் வண்டு தன் காதல் வண்டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே
விளக்கம்:
ஓதம்=இரைச்சலை எழுப்பும் அலைகள் கொண்ட கடல்; மாதர் வண்டு=பெண் வண்டு;
பொழிப்புரை:
வேதங்கள் ஓதும் நாவினை உடையவரும், வெண்மையான பளிங்கினால் செய்யப்பட்ட குழை ஆபரணத்தை அணிந்தவரும், இடைவிடாது இரைச்சலிடும் அலைகள் கொண்ட கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கி மகிழ்ந்தவரும் ஆகிய பெருமான் உறைவது சாய்க்காடு திருக்கோயிலாகும். பெண் வண்டு தனது விருப்பத்திற்கு உரிய ஆண் வண்டுடன் விளையாடியும், புன்னை மலர்களின் தாதுகளை உட்கொண்டும், பின்னர் அருகிலுள்ள சோலைகளில் மறைந்து ஊடியும் விளையாடும் பொழில்கள் கொண்டது சாய்க்காடு தலமாகும்.
பாடல் 8:
இருக்கு நீள்வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து அருள் செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக் குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே
விளக்கம்:
இருக்கும்=வீற்றிருக்கும்; நீள்வரை=நீண்ட கயிலை மலை; ஆகம்=உடல்; மருநறுமணம்; குலாவிய=நிறைந்த; தரு=மரங்கள்;
பொழிப்புரை:
தான் வீற்றிருக்கும் நீண்ட உயர்ந்த கயிலாய மலையினை இருபது கைகளாலும் பற்றி எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடலை, கயிலாய மலையின் கீழே அகப்பட்டு நொறுங்குமாறு தனது கால் பெருவிரலை அழுத்திய பெருமான், பின்னர் அரக்கன் சாமகானம் பாடி இறைஞ்சிய போது, அரக்கனது நிலைக்கு இரங்கி அவனுக்கு பல வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமான், உறையும் திருக்கோயில் சாய்க்காடு ஆகும். நறுமணம் பொருந்திய மல்லிகை சண்பகம் போன்ற வளமான பூக்களைக் கொண்ட மரங்கள் நிறைந்ததும் குளிர்ந்து விளங்குவதும் ஆகிய சோலைகள் நிறைந்த இடம் சாய்க்காடு ஆகும்.
பாடல் 9:
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர் வாய்ந்த
வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில்
சேலின் நேர் விழியார் மயில் ஆலச் செருந்தி
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே
விளக்கம்:
நேர்=ஒத்த; வாய்ந்த=பொருந்திய; செருந்தி=உப்பங்கழிகளிலும் கடற்கரையிலும் பூக்கும், மஞ்சள் நிறத்தில் காணப்படுவது; மலர்கள்; வேலை=கடல்;
பொழிப்புரை:
திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் காண்பதற்கு இயலாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவனும், அலைகள் பொருந்திய கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உண்டவனும் ஆகிய பெருமான் உறையும் இடம், சேல் மீன்களைப் போன்று கண்கள் உடைய மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் நடமாடும் சோலைகள் கொண்டதும், பொன் போன்ற தோற்றத்துடன் காலையில் மலரும் செருந்தி பூக்கள் உடைய மரங்கள் நிறைந்ததும் ஆகிய சாய்க்காடு தலமாகும்.
பாடல் 10:
ஊத்தை வாய்ச் சமண் சாக்கியர்க்கு என்றும்
ஆத்தமாக அறிவரியாதவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே
விளக்கம்:
ஆத்தம்=நெருங்கிய நட்பு; ஆப்தம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். தம்மிடம் அன்பு காட்டும் மனிதர்களுக்கு கருணையுடன் உதவி செய்யும் சிவபெருமானை நண்பனாக கருதாமல் எதிரியாக கருதி, அவன் மீது வீண் பழிச்சொற்களை தொடுக்கும் சமணர்கள் மற்றும் ;புத்தர்கள் என்பதை சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். கையர்=கீழ்மை நிலையில் உள்ளவர்; வாவி=சிறிய குளங்கள்;
பொழிப்புரை:
பல் துலக்காததால் அழுக்கேறிய வாய்களை உடையவர்களாக விளங்கிய சமணர்களும் புத்தர்களும், பெருமானை நண்பனாக கருதாமல் விரோதியாக பாவித்தமையால், அவர்களால் காண இயலாத வண்ணம் இருக்கும் பெருமான் உறையும் கோயில் சாய்க்காடு தலமாகும். தகுதி வாய்ந்து அழகுடன் காணப்படும் மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே பூக்கள் நிறைந்து அழகுடன் பொலிந்து காணப்படும் சிறு குளங்கள் உடையது சாய்க்காடு தலமாகும்
பாடல் 11:
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோன் நவில் பத்தும்
ஊனம் இன்றி உரை செய்ய வல்லவர் தாம் போய்
வானநாடு இனிது ஆள்வர் இம் மானிலத்தோரே
விளக்கம்:
சென்ற பாடலில் குறிப்பிடப்பட்ட சமணர்கள் மற்றும் புத்தர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் புகழ்ந்து கொண்டாடும் பெருமான் என்றும், தலத்தினில் வாழ்ந்த உபமன்யு முனிவர், ஆதிசேஷன், இந்திரன், இந்திரனின் தாயார், இயற்பகை நாயனார், பட்டினத்தார் போன்ற அடியார்களால் வணங்கப்பட்ட இறைவன் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். நவின்ற=விருப்பத்துடன் சொன்ன; வான நாடு=உயர்ந்த உலகம். கயிலை மலையினை ஆளும் தகுதி இறைவன் ஒருவனுக்கே இருப்பதால், இந்த பாடலில் ஆள்வோர் என்று குறிப்பிட்டு இந்திர பதவியை சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும்.
பொழிப்புரை:
சமணர்கள் மற்றும் புத்தர்கள் தவிர்த்து ஏனையோர் புகழ்ந்தும் போற்றியும் வணங்கும், சாய்க்காடு தலத்தில் உறையும் தனது தந்தையாகிய பெருமானை, சீர்காழி நகரின் தலைவனாகிய ஞானசம்பந்தன், விருப்பத்துடன் சொன்ன இந்த பத்து பாடல்களையும் குற்றம் ஏதுமின்றி உரிய பண்ணினை பொருத்தி பாடும் வல்லமை வாய்ந்த நிலவுலகத்து அடியார்கள், அனைவரும் புகழும் வண்ணம் வானநாடு சென்று ஆள்வார்கள்.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலில் தினமும் நியமத்துடன் இறைவனை வழிபடும் மனிதர்களுக்கு அருள் செய்பவன் பெருமான் என்பதை சம்பந்தர் உணர்த்துகின்றார். அடுத்து வரும் பாடல்களில் இறைவனின் தன்மை உணர்த்தப் படுகின்றன. இரண்டாவது பாடலில் பூத கணங்களின் பாடலுக்கு ஏற்ப நடமாடுபவன் பெருமான் என்று கூறும் சம்பந்தர் மூன்றாவது பாடலில் பிறைச் சந்திரனையும் கங்கை நதியையும் தனது சடையில் ஏற்றுக் கொண்டவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நான்காவது பாடலில், வேண்டுவார் வேண்டும் வரங்கள் அருளும் பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், புகார் நகரம் சம்பந்தரின் காலத்தில் கடல் வாணிபத்திற்கு சிறந்த துறைமுகமாக இருந்த நிலையினை ஐந்தாவது பாடலில் உணர்த்துகின்றார். துன்பத்தில் உழலும் உயிர்களுக்கு பெருமானின் திருவடி நீழல் துயரத்தினை நீக்கி இன்பம் தரும் என்பது ஆறாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. வேதங்களை முதன்முதலாக அருளியவர் பெருமான் என்ற செய்தி ஏழாவது பாடலில் கூறப் படுகின்றது. எட்டாவது ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில், வழக்கமாக காணப்படும் இராவணின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கடைப்பாடலில், இந்த பதிகத்தினை எந்தவிதமான குற்றமும் இல்லாமல் பாடும் அடியார்கள் இந்திரபதவியை அடைவாரகள் என்று கூறுகின்றார். நாமும் சம்பந்தர் அருளிய இந்த பதிகத்து பாடல்களை முறையாக பாடி, இம்மையில் நமது துன்பங்கள் தேர்க்கப்பேற்று மறுமையில் நல்ல பலன்களைப் பெற்று வாழ்வோமாக. .