இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


ஓடேகலன் உண்பது

ஓடேகலன் உண்பது

பதிக எண்: 1.32. திருவாவடுதுறை தக்கராகம்

பின்னணி:

இந்நாளில் கும்பகோணம் என்று அழைக்கப்படும் தலத்தினில், பண்டைய நாளில் திருகுடந்தை என்று அழைக்கப் பட்ட தலத்தினில் உள்ள மூன்று திருக்கோயில்களும் சென்ற திருஞானசம்பந்தர் (திருக்குடந்தை, குடைந்தை கீழ்க்கோட்டம், குடந்தைக் காரோணம்) பின்னர் அருகிலுள்ள சில தலங்களும் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு திருநாகேச்சரம் தலம் சென்ற திருஞானசம்பந்தர் அதன் பின்னர் திருவிடைமருது சென்றதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.

மாநாகம் அருச்சித்த மலர்க் கமலத் தாள் வணங்கி

நாணாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி

பானாறு மணிவாயர் பரமர் திருவிடைமருதில்

பூநாறும் புனற் பொன்னித் தடங்கரை போய்ப் புகுகின்றார்

பானாறு மணிவாயர் என்ற தொடர் மூலம் சேக்கிழார், குழந்தை திருஞானசம்பந்தருக்கு பெருமான் பணித்த வண்ணம் பிராட்டி, ஞானப்பால் அளித்ததை குறிப்பிடுகின்றார். பாலமுதின் நறுமணம் வீசுகின்ற திருவாயினை உடையவர் என்று திருஞானசம்பந்தரை அழைக்கின்றார். இந்த காரணம் பற்றியே அவருக்கு பாலறாவாயர் என்ற திருநாமம் அமைந்தது போலும். திருஞானசம்பந்தர் தன்னை பாலறாவாயர் என்று திருப்பதிகத்திலும் குறிப்பிடவில்லை எனினும், பெரியபுராணத்தில் எட்டு பாடல்களில் இந்த பெயர் இடம் பெறுகின்றது. மேற்கண்ட பெரிய புராணப் பாடலுக்கு அடுத்த பாடலில் சேக்கிழார்,திருவிடைமருதூர் செல்லும் வழியில் ஓடே கலன் என்று தொடங்கும் பதிகத்தை பாடியதாக கூறுகின்றார்.

ஓங்கு திருப்பதிகம் ஓடே கலன் என்று எடுத்தருளித்

தாங்கரிய பெருமகிழ்ச்சி தலை சிறக்கும் தகைமையினால்

ஈங்கெனை ஆளுடைய பிரான் இடைமருது ஈதோ என்று

பாங்குடைய இன்னிசையால் பாடி எழுந்து அருளினார்

இந்த திருப்பதிகத்தை ஓங்கு திருப்பதிகம் என்று உயர்வாக சேக்கிழார் கூறுகின்றார். எடுத்தருளி என்ற தொடர் மூலம் ஓடே கலன் என்பது பதிகத்தின் தொடக்கச் சொல்லாக இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார். ஆவடுதுறை தலம் செல்லவேண்டும் என்று திருஞானசம்பந்தர் வெகு நாளாக விருப்பம் கொண்டிருந்தார் போலும். எனவே அந்த தலம் செல்கின்றோம் என்ற எண்ணமே பெருமகிழ்ச்சியை அளிக்க, தலத்திற்கு செல்லும் வழியிலேயே இந்த தலத்து இறைவனை குறிப்பிட்டு, தன்னை ஆட்கொண்ட இறைவன் உறைகின்ற தலம் இங்கே உள்ளது என்று மகிழ்ச்சி பொங்க, தன்னுடன் வந்த தொண்டர்களுக்கு சுட்டிக் காட்டிய வண்ணம் பதிகம் பாடினார் போலும். இந்த திருப்பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் இடைமருது ஈதோ என்று முடிகின்றன. பாங்கு=அமைந்திருக்கும் தன்மை. சொல்லும் பொருளும் அழகாக பொருந்தி அமையும் வண்ணம் பாடிய தன்மை; மிகவும் அதிகமான புகழ் பெற்ற தலங்களுக்கு செல்லும் எவர்க்கும் ஆர்வம் பொங்குவது இயற்கை தானே. அத்தகைய ஆர்வத்தினை திருப்பதிகங்களாக திருஞானசம்பந்தர் வெளிப்படுத்துகின்றார். மேலும் இவ்வாறு திருக்கோயில்களுக்கு செல்லும் வழியிலும் பதிகங்கள் பாடிக் கொண்டு சென்ற தன்மை பெருமான் பால் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினை நமக்கு உணர்த்துகின்றது. அவருடன் சென்ற தொண்டர்களும் இத்தகைய பதிகங்களை கேட்டு அனுபவிப்பதால்,இறைவனைக் குறித்த பேச்சுகள் அன்றி வேறு எந்த பேச்சுகள் இல்லாமல் அவர்களது திருப்பயணங்கள் இருந்த தன்மையை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம், திருக்கோயிலுக்கு செல்லும் வழியிலும் நாம் இறைவனைப் பற்றிய சிந்தைனையுடன் இருக்க வேண்டும் என்பதாகும். திருக்கோயிலுக்கு சென்ற பின்னர், ஒன்றிய மனத்துடன் இறைவனை வழிபட்டு திரும்பும் அடியார்களின் மனதினில் இறை சிந்தையே நிறைந்து ஓங்கி நிற்கும். இவ்வாறு திருக்கோயிலுக்கு செல்லும் போதும், திருக்கோயிலிலிருந்து இல்லத்திற்கு திரும்பிவரும் போதும், திருக்கோயிலின் உள்ளே இருக்கும் நேரத்திலும் இறைவனைப் பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கப் பழகிக் கொண்டால், இறைவன் பால் நாம் வைத்திருக்கும் அன்பு நாளுக்கு நாள் பெருகுவதை நாம் கண்கூடாக உணரலாம்.

வேறு பல திருத்தலங்கள் சென்றபோதும், அந்தந்த தலத்து இறைவனின் சிறப்புகளை பதிகங்களாக பாடிய வண்ணம் திருஞானசம்பந்தர் சென்றதையும் அந்த பதிகங்களின் முதல் பாடல்களையும் நாம் இங்கே காண்போம். தனது தோழராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணரின் ஊராகிய எருக்கத்தம்புலியூர் சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு திருமுதுகுன்றம் சென்ற போதும் முதுகுன்று அடைவோமே என்று முடியும் வண்ணம் பாடல்கள் பாடியவாறு சென்றதை (1.12) நாம் உணர்கின்றோம். இந்த செயலை சேக்கிழார் பெருமான் பால் மிகுந்த அன்புடன் திருஞானசம்பந்தர் சென்றார் என்று குறிப்பிடுகின்றார்.

மத்தா வரை நிறுவிக் கடல் கடைந்து அவ் விடம் உண்ட

தொத்தார் தரு மணி நீள் முடிச் சுடர்வண்ணனது இடமாம்

கொத்தார் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு

முத்தாறு வந்து அடி வீழ் தரு முதுகுன்று அடைவோமே

தொண்டை நாட்டுத் தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், தனது தொண்டை மண்டல பயணத்தை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பும் வழியில் தில்லைச் சிதம்பரம் வந்தடைந்து கூத்தபிரானை வழிபட்ட பின்னர் சீர்காழி நகரம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, சீர்காழி நகரம் நெருங்கிய போது, வெகு நாட்களாகத் தான் பழகிய பிரமபுரத்து அரனைக் காணப் போகின்றோம் என்ற ஆர்வத்துடன் வண்டார் குழல் அரிவை என்று தொடங்கும் பதிகத்தினை (1.09)பாடிய வண்ணம் சீர்காழி நகரினை நெருங்குகின்றார். இந்த தலத்தின் முதல் பத்து பாடல்களும் வேணுபுரம் அதுவே என்று முடிகின்றன. தாமரைச் செல்வியாகிய இலக்குமி தேவி உறைகின்ற நகரம் என்று குறிப்பிட்டு நகரின் செல்வ வளம் உணர்த்தப் படுகின்றது. தவளம் என்பது ஒருவகை முல்லைக் கொடியை குறிக்கும்.

வண்டார் குழல் அரிவையொடு பிரியாவகை பாகம்

பெண்தான் மிக ஆனான் பிறைச் சென்னிப் பெருமானூர்

தண் தாமரை மலராள் உறை தவளம் நெடு மாடம்

விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக கண்டியூர் தலம் சென்ற திருஞான சம்பந்தர் அதன் பின்னர் சோற்றுத்துறை சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அப்பர் என்று சிவபெருமானை குறிப்பிட்டு, அப்பர் சோற்றுத்துறை சென்றடைவோம் என்று பதிகம் பாடியவாறே திருக்கோயிலின் உள்ளே நுழைந்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் (1.28) சோற்றுத்துறை சென்றடைவோம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிட்டதை நினைவூட்டும் வண்ணம், அந்த தொடரினை சேக்கிழார் பெரிய புராண பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்

துப்பன் என்னாது அருளே துணையாக

ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற்று

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே

தனது ஆறாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக அறையணிநல்லூர் தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தருக்கு, அங்கிருந்து தெரிந்த ஒரு மலையினை சுட்டிக் காட்டி அதுவே திருவண்ணாமலை என்று ஆங்கிருந்த அடியார்கள் கூறினார்கள். அப்போது அந்த மலை சிவபெருமானாகவே திருஞானசம்பந்தருக்கு காட்சி அளித்தது. அந்த மலைச் சாரலே தனக்கு பெருமானாக காட்சி அளித்த தன்மையை பூவார் மலர் கொண்டு என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் சாரல் அண்ணாமலையாரே என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பதினோரு பாடல்களிலும் திருஞானசம்பந்தர் மலையைக் குறிப்பிட்டு அண்ணாமலையாரே என்று அழைக்கின்றார். இந்த பதிகம் திருவண்ணாமலை செல்லும் வழியில் அருளிய பதிகம் என்று சேக்கிழாரும் பெரிய புராணத்தில் பதிவு செய்கின்றார். தொறு=ஆடுகள் நிரை=மந்தை, கூட்டம்; ஆமாம் பிணை=காட்டுப்பசுக்கள்; தூமாமழை=மழையைத் தூவும் கரிய மேகங்கள்; அதிர=ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு இடியினை எழுப்பிய வண்ணம்; வெருவி=இடியுடன் கூடிய பெரு மழையால் அஞ்சிய;அணையும் சாரல்=ஒன்றாக கூடும் மலையடிவாரம்;

பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்

மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்

தூமாமழை நின்று அதிர வெருவித் தொறுவின் நிரையோடும்

ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

திருஞானசம்பந்தருக்கு இறைவன் ஞானப்பால் அளித்ததையும், அதன் பின்னர் மூன்று வயதுக் குழந்தை தேவாரப் பாடல்கள் பாடத் தொடங்கிய அதிசயத்தையும் கேள்வியுற்ற நனிபள்ளி தலத்து அந்தணர்கள், சீர்காழி தலம் வந்தடைந்தனர். நனிபள்ளி தலத்தில் இருந்த வந்த மறையவர்கள், தங்கள் பதிக்கு சம்பந்தர் எழுந்தருளி ஆங்கே வீற்றிருக்கும் பெருமானை பணிந்து வழிபட வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை பிள்ளையார் அவர்களிடம் தெரிவித்தார்கள் அவர்களது விருப்பத்தினை ஏற்றுக் கொண்ட திருஞானசம்பந்தர், தோணிபுரத்து இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு, நனிபள்ளி மற்றும் அருகில் உள்ள தலங்கள் செல்ல விருப்பம் கொண்டார். இதுவே அவரது வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட இரண்டாவது தலயாத்திரை ஆகும்.நனிபள்ளி தலம், திருஞான சம்பந்தரின் தாயாரின் பிறந்த ஊர் என்பதால், ஆங்கே வாழ்ந்து வந்த அவரது உறவினர்கள், திருஞான சம்பந்தரின் திறமையை,இறைவன் அவருக்கு அருளிய தன்மையை தங்களது ஊரில் உள்ள மற்றவரும் அறிந்து கொண்டு சிவபெருமானை போற்ற வேண்டும் என்று விரும்பியதால்,தங்களது தலத்திற்கு திருஞான சம்பந்தர் விஜயம் செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டார்கள் போலும். தாமரை மலரின் உள்ளே இருக்கும் இதழ்கள் போன்று சிறியதும் மேன்மை வாய்ந்ததும் ஆகிய திருவடிகளை நிலத்தின் மீது பொருந்தும் வண்ணம் தனது மகன் நடப்பதையும், தனது மகனை தானலாது வேறொருவர் தாங்கிச் செல்வதையும் பொறுக்காத சிவபாத இருதயர், உமையம்மையால் பாலுடன் கலந்து ஞானம் ஊட்டப்பட்ட குழந்தையைத் தனது தோளின் மீது ஏற்றிக்கொண்டு செல்லலானார். அவ்வாறு செல்லும் போது, நனிபள்ளி தலத்தினை நெருங்கவே, மலர் சோலைகள் சூழ்ந்த இந்த பதி யாது என்று குழந்தை வினவ, தந்தையார் மிகழ்ச்சியுடன் குவளை மலர்கள் நிறைந்த வயல்களை உடைய நனிபள்ளி என்று கூறியவுடன், காரைகள் கூகை என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடினார். சிவபெருமான் உறையும் நகர் என்பதால், நனிபள்ளி நகரமே தொழுவதற்கு உரியது என்பதை உணர்த்தும் வகையில், சம்பந்தர் நகரத்தினைத் தொழுத செய்தி பெரிய புராணத்தில் குறிப்பிடப் படுகின்றது. இந்த திருப்பதிகமும் தலத்திற்கு செல்லும் வழியில் அருளிய பதிகமாகும். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

காரைகள் கூகை முல்லை களவாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினிச்

சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர் தான்

தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள

நாரைகள் ஆரல் வாரி வயன் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்

காரைகள் கூகை என்ற சொற்கள் தொடங்கி சுடுகாடு வரை உள்ள இடைப்பட்ட சொற்கள் பாலை நிலத்திற்கு உரிய பொருட்களை குறிப்பதை நாம் உணரலாம். இவை அனைத்தும் பாலை நிலத்தில் மிகவும் அதிகமாக காணப்படும் தாவரங்கள்; நமர்காள் என்று பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும்,தன்னுடன் சூழ வந்த அடியார்களை குறிப்பிட்டு அழைத்து சொல்லிய சொற்களாக இந்த பதிகத்தின் பாடல்கள் அமைந்துள்ளன. ஈகை=இண்டைச்செடி,ஒரு வகை முட்செடி; தொடரி=முட்செடி; கூகை என்பதற்கு கோட்டான் என்றும் ஒருவகை முட்செடி என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள்;கவின்=அழகு; பம்மி=அடர்ந்து படர்ந்தும்; தந்தையாரின் தோளில் இருந்தவாறு நனிபள்ளி தலத்தை நோக்கிய திருஞான சம்பந்தப் பெருமானுக்கு, வளம் குறைந்து பாலையாக இருந்த தன்மை, பெருமான் வாழும் சுடுகாட்டினை நினைவூட்டியது போலும். சுடுகாட்டில் வளரும் செடிகள் மற்றும் கொடிகளை குறிப்பிட்டு பதிகத்தினை தொடங்குகின்றார். சுடுகாட்டின் சூழ்நிலையை உணர்த்திய வண்ணம் பதிகத்தின் தொடக்கப்பாடல் உள்ளது மிகவும் அரிதாகும்.

பெண்ணாகடத்து சுடர்க்கொழுந்தீசரை பணிந்து வணங்கி, ஒடுங்கும் பிணி என்று தொடங்கும் பதிகத்தினைப் (1.59) பாடிய திருஞானசம்பந்தர் அதற்கு பின்னர் திருவரத்துறை தலம் நோக்கி செல்லலானார். அந்நாள் வரை தந்தையாரின் தோள்களில் அமர்ந்து பல தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர்,நாளுக்கு நாள் தந்தையாரின் வயது கூடுவதால் அவரது உடல் நிலையின் தளர்ச்சி கருதி, அவ்வாறு தந்தையாரை வருத்துவதை தவிர்த்து நடந்து சென்றார்.இவ்வாறு சென்றதால் அவரது திருப்பாதங்கள் நொந்தன என்றும் அவரது தந்தையார் வருந்தினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். திருவரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற ஊர் அடைந்த போது, நடந்து வந்த சோர்வினை நீக்கும் பொருட்டும் உடன் வந்த அடியார்கள் இளைப்பாறும் பொருட்டும்,திருஞானசம்பந்தரும் உடன் வந்த அடியார்களும் அந்த ஊரில் தங்கினார்கள். அப்போது இரவுக் காலமும் வந்தது. இதனிடையில் அரத்துறை இறைவனும்,திருஞானசம்பந்தர் ஏறிச் செல்வதற்கு சிவிகையும், அவர் மேலே கவித்துக் கொள்வதற்கு குடையும். அவரது புகழினை குறிப்பிட்டு ஊதுவதற்கு சின்னங்களும் (ஊதுகுழல்) அருளுவதற்கு திருவுள்ளம் கொண்டர். தனது முடிவினை செயல்படுத்தும் வண்ணம் பெருமான், அரத்துறை தலத்து மறையவர்களின் கனவில், சீர்காழி குழந்தை திருஞானசம்பந்தர் தன்னைக் காண்பதற்கு வந்து கொண்டிருக்கும் செய்தியையும், அவரிடத்தில் முத்துச்சிவிகை, முத்துக்குடை மற்றும் குழல்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் பெருமான் கூறுகின்றார். இவ்வாறு தங்களது கனவினில் இறைவனது கருத்து உணர்த்தப்பட்ட மறையவர்கள் அனைவரும், அடுத்த நாள் விடியற் காலையில் திருக்கோயில் முன்னம் வந்து கூடினார்கள். கதவுகளை திறந்தனர்.திறந்த போது செழுமையான முத்துக்கள் பதிக்கப்பெற்ற வெண்குடையும், முத்துச் சிவிகையும், புகழினை எடுத்து ஊதுவதற்கு ஊது கொம்புகளும் கோயிலின் உள்ளே இருந்ததைக் கண்டு பெரு மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்து, தங்களது தலைமேல் கைகளை குவித்து இறைவனை வணங்கினார்கள்.இறைவனின் அருளால் தோன்றிய மூன்று பொருட்களையும் எடுத்துக் கொண்டு, சங்கு துந்துபி தாரை பேரி முதலான வாத்தியங்கள் முழங்க, அந்தணர்கள் மாறன்பாடி நோக்கி சென்றனர். அர அர என்ற ஒலி வானில் எழ, நெல்வாயில் அரத்துறை அடியார்கள் முத்துச்சிவிகை முதலான பொருட்களுடன் ஞானசம்பந்தர் முன்னர் வந்து தோன்றினர். மேலும் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை ஏற்றுக் கொள்ளுமாறு ஞானசம்பந்தரை வேண்டினார்கள்.பெருமானின் அருள் கைகூடியதால் முத்துச்சிவிகையும் மற்ற பொருட்களும் பெறுகின்ற பேறு தனக்கு கிடைத்தது என்பதை உணர்ந்த திருஞானசம்பந்தர்,நெல்வாயில் அரத்துறை இறைவனைப் பணிந்து வணங்கி பதிகம் பாடுகின்றார். இவ்வாறு நெல்வாயில் அரத்துறை தலம் செல்லும் வழியில் பாடிய பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்று ஏத்திச்

சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்

கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரை மேல்

அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

இறைவனின் புகழினை வாயினால் பாடி மனதினால் சிந்திக்கும் அன்பர்களுக்கு இறைவன் அருள் கைகூடும் என்றும் அல்லாதார்க்கு அவனது அருள் கைகூடாது என்பதையும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். சென்று கைகூடுவது என்று திருவருள் தானே வந்தடைந்ததை பிள்ளையார் குறிப்பிடுகின்றார். தான் பயணம் செய்வதற்கு சிவிகை வேண்டும் என்று திருஞான சம்பந்தர் இறைவனிடம் வேண்டியதாக பெரிய புராணத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. எனினும் திருஞானசம்பந்தர் தந்தையாரின் தோளினில் ஏறிக் கொண்டு வாராமல் தானே நடந்து வந்ததைக் கண்ட பெருமான், தானே முன்வந்து அருள் புரிந்தமை இங்கே அருள் சென்று கைகூடியது என்று கூறுகின்றார். நமது தேவைகளை புரிந்து கொண்டு தந்தையார், நாம் கேட்காமல் இருந்த போதும். தாமே வந்து நமது தேவைகளை நிறைவேற்றுவது போன்று, இறைவன் தானே முன்வந்து முத்துச்சிவிகை அளித்ததால் எந்தை என்று பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். திருஞானசம்பந்தருக்கு தந்தையாகவும் இறைவனாகவும் திகழ்ந்தவர் அல்லவா சிவபெருமான். திருஞானசம்பந்தரும் எனது தந்தையே என்று பெருமானை அழைத்து பாடல்கள் அருளியுள்ளார். ஏறு=இடபம்; அந்தண்=அழகு மற்றும் குளிர்ச்சி; ஈசன்=தலைவன்; கந்தம்=நறுமணம்;

மதுரையில் சமணர்களை அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் முறியடித்த பின்னர், பல பாண்டி நாட்டு தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பாண்டி நாட்டைக் கடந்து சோழநாட்டின் பகுதியான திருக்களர் பாதாளீச்சரம் தலங்கள் சென்று இறைவனைப் பணிந்த பின்னர், காவிரி நதியின் கிளைநதி,முள்ளிவாய்க்கரை வந்தடைந்தார். இந்த ஆறு இப்போது ஓடம்போக்கியாறு என்று அழைக்கப்படுகின்றது. அடுத்த கரையில் இருந்த திருக்கோயில் செல்வதற்கு ஞானசம்பந்தர் விரும்பிய போதிலும், ஆற்றின் வெள்ளத்தின் காரணமாக அவரால் நதியைக் கடந்து செல்ல முடியவில்லை. மேலும் சுழன்று அடித்த காற்று மற்றும் அடர்ந்த மழை காரணமாக, ஓடம் செலுத்துவோர் அனைவரும், தங்களது ஓடங்களை, துறைகளில் கட்டிவிட்டு சென்று விட்டனர்.பலத்த மழை, சுழன்று சுழன்று அடித்த காற்று, நதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ஆகிய எதனையும் பொருட்படுத்தாத திருஞானசம்பந்தர், ஒரு ஓடத்தின் கட்டை அவிழ்த்து விட்டு, தானும் தன்னுடன் வந்த அடியார்களும் அந்த ஓடத்தில் ஏறிக்கொண்ட பின்னர், தனது நாவின் வல்லமையால் எழுந்த பதிகத்தையே, துடுப்பாக கொண்டு, கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகத்தை (3.6) பாடவே, எவரும் துடுப்பு போடாமலே, அனைவரையும் ஓடம் அடுத்த கரைக்கு கொண்டு சேர்த்த அதிசயம் நிகழ்ந்தது. எனது நம்பிக்கைக்கும் விருப்பத்திற்கும் உரிய பெருமானே, கொள்ளம்பூதூர் தலத்தினில் நடனமாடும் பெருமானே, உன்னை தியானிக்கும் அடியார்களாகிய நாங்கள், உனது தோற்றத்தைக் கண்டு களிக்கும் வண்ணம், இந்த ஓடத்தினை செலுத்துவாயாக என்று பாட, ஓடம் தானே நகரத் தொடங்கியது. இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், பெருமானை அடியார்கள் உள்க செல்லவுந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே என்று குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் படுகின்றது.கொட்டம்= நறுமணம், வாசனை; உள்குதல்=தியானித்தல்; அகத்தில் உன்னை தொழும் அடியார்கள், தங்களது புறக்கண்களால் உன்னைக் கண்டு களிக்க,ஓடத்தை செலுத்துவதன் மூலம், அருள் புரிவாயாக என்று பெருமானிடம் திருஞானசம்பந்தர் வேண்டுகின்றார். இந்த நிகழ்ச்சி, நமது விருப்பத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக உள்ள இறைவன், நம்பன் என்ற பெயருக்கு ஏற்ப, தனது அடியார்களுக்கு அருள் புரிகின்றான் என்பதை உணர்த்துகின்றது.

கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்

நட்டம் ஆடிய நம்பனை உள்கச்

செல்ல உந்துக சிந்தையார் தொழ

நல்குமாறு அருள் நம்பனே

பாண்டிய நாட்டு அரசியார் மற்றும் மந்திரியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரை மாநகர் செல்கின்றார். பாண்டிய நாட்டு மன்னனின் ஆதரவு பெற்றிருந்த சமண சமயம் ஓங்கி, இந்து சமயம் நலிவடைந்த நிலையிலும் இவர்கள் இருவரும் தொடர்ந்து சைவ சமயத்தைச் சார்ந்து இருந்த தன்மை,திருஞானசம்பந்தரை அவர்கள் இருவர் பால் பெருமதிப்பு கொள்ளச் செய்தது. தனது அடியார்களுடன் மதுரை நகரினை நெருங்கியபோது, தொலைவில் தெரிந்த மாட கோபுரங்ளை சுட்டிக் காட்டிய அன்பர்கள், அவை ஆலவாய் தலத்தின் கோபுரங்கள் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட திருஞானசம்பந்தர்,மங்கையர்க்கரசி என்று தொடங்கும் பதிகத்தை பாடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களும் ஆலவாய் ஆவதும் இதுவே என்று முடிகின்றன.இந்த பதிகமும் திருக்கோயில் சென்றடைவதற்கு முன்னரே பாடிய பதிகம் ஆகும். இந்த பதிகத்தின் பாடல்களில், பெருமானை, அரசி மங்கையர்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் ஆகியோரால் வழிபடப்பட்டவர் என்று குறிப்பிட்டு அவர்களை சிறப்பிக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மட=இளமை வாய்ந்த: மானாபரணன் என்பது சோழர்குல ஆண்களின் பெயர். மானி என்பது சோழ குலத்து பெண்களை குறிக்கும்.வளவர் என்பது பாண்டிய குல அரசர்களைக் குறிக்கும் சொல். ஆலவாய் தலத்து அம்மையின் பெயர் அங்கையற்கண்ணி என்பதாகும். மீன்கள் தங்களது கண்களிலிருந்து வெப்பத்தை வெளிப்படுத்தி தங்களது முட்டைகளை பாதுகாத்து பொறிப்பது போன்று, மீனாட்சி அம்மையும் தனது அடியார்களை தனது கடைக்கண் பார்வையால் பாதுகாப்பதால் இந்த பெயர் வந்தது.

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கை மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவும்

பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி

அங்கையற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே

பாடல் 1:

ஓடே கலன் உண்பது ஊரிடு பிச்சை

காடே இடமாவது கல்லால் நிழற்கீழ்

வாடாமுலை மங்கையும் தானும் மகிழ்ந்து

ஈடா உறைகின்ற இடைமருது ஈதோ

விளக்கம்:

ஓடு=பிரம கபாலம்; உண்கலனை ஏந்திய வண்ணம் பல இடங்களுக்கும் பிச்சைக்காரர்கள் தான் செல்வார்கள் என்பதால் பெருமானை பிச்சைக்காரன் என்றும் அவன் பிச்சை எடுத்து உண்கின்றான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆனால் உண்மையில் பெருமான் அனைத்து உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவன்: பசி தூக்கம் கோபம் தாபம் ஆகியவை அவனுக்கு இல்லை; எனவே அவன் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை; இதனை மிகவும் அழகாக திருமூலர், பிட்சாவிதி என்ற அதிகாரத்தின் பாடலில் எடுத்துரைக்கின்றார். பெருமான் பலியேற்கச் செல்வது,பக்குவமடைந்த ஆன்மாக்கள் தங்களது மலங்களை இறைவன் ஏந்தியிருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்ற உண்மை பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப்படுகின்றது. எனவே எவரேனும் தங்களது மலங்களை அந்த பிச்சைப் பாத்திரத்தில் இட்டால், மிகவும் மகிழ்ச்சி அடைவது சிவபெருமான் தான். பெருமான் வைத்திருப்பது பிச்சைப் பாத்திரம் என்பதாலும், அவர் பலி ஏற்கச் செல்கின்றார் என்று சொல்வதாலும், அடியார்கள் அந்த பாத்திரத்தில் சமர்ப்பிக்கும் ஆணவம் கன்மம் மாயை முதலான மலங்கள் உணவாக உருவகப்படுத்தப் பட்டு பெருமான் மகிழ்ச்சியுடன் உண்கின்றார் என்று பொதுவாக சொல்லப் படுகின்றது. அவனுக்கு உணவுத் தேவை ஏற்படுவதில்லை என்பதால் அவன் ஏன் இரந்துண்ண வேண்டும் என்று திருமூலர் கேள்வி கேட்கின்றார். எனவே இரந்து, அதாவது பிச்சை எடுத்து உண்கின்றான் என்று கூறுவதும் தவறு என்று திருமூலர் இங்கே உணர்த்துகின்றார்.

பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்

நிரந்தரமாக நினையும் அடியார்

இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர், திருமந்திரம் பாடல் ஒன்றினில் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்தவாறு இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது தாங்கள் கொண்டிருந்த பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால்,வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு,அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். இந்த நிலையினை அடைந்த பக்குவப்பட்ட ஆன்மாக்களின் மலங்களைத் தான் வாங்கிக் கொள்வதற்காகவே இறைவன் பிச்சைப் பெருமானாக எங்கும் திரிகின்றார்.

இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை,இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் பாடல் ஒன்றினில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்

சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்

ஆர் தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில்

இறைவனுக்கு நாம் எதனை படைக்க வேண்டும் என்பதை திருவிளையாடல் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் பரஞ்சோதி முனிவர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. விநாயகர் வாழ்த்தாக அமைந்த இந்த பாடலில், ஆணவமலம், கன்மம் மற்றும் உலகப்பொருட்களின் மீதுள்ள பாசம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து (பசுபோதம் எனப்படும்) சோற்றுருண்டையாக அளிக்க வேண்டும் என்று கூறுகின்றார். பதி என்பது இறைவனைக் குறிக்கும். பசு என்பது அனைத்து உயிர்களையும் பாசம் என்பது உயிர்களைப் பற்றியிருக்கும் பந்தங்களையும் குறிக்கும். பசுபோதம் என்பது உலகப்பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்களைப் பற்றிய அறிவினை குறிப்பிடுகின்றது. உயிர் தன்னைப் பிணித்திருக்கும் பற்றுகளை அறவே ஒழித்து, தம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் நீக்கினால் தான், வினைகளை மேலும் பெருக்கிக் கொள்வதை நிறுத்த முடியும். அதனால் தான் மூன்று மலங்களை நாம் வைத்துக் கொள்ளாமல் இறைவனிடம் சமர்ப்பிக்குமாறு பரஞ்சோதி முனிவர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். தறுகண்=வலிமை மிக்க: தள்ளரிய=தளர்வு அடையாத அன்பு,தொடர்ந்து நிற்கும் அன்பு; பாசக் கள்ள வினை=வஞ்சகம் நிறைந்த ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மலங்கள்; இவ்வாறு நாம் இடும் சோற்றுருண்டையை மிகவும் விருப்பத்துடன் கடவுள் ஏற்றுக்கொண்டு நமக்கு கருணை புரிவார் என்று பரஞ்சோதி முனிவர் இந்த பாடலில் கூறுகின்றார்.

உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும் தறி நிறுவி உறுதியாகத்

தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித் தறுகண் பாசக்

கள்ள வினைப் பசுபோதக் கவளம் இடக் களித்துண்டு கருணை என்னும்

கொள் அமுதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்

தான் அருளிய முதல் பதிகத்தின் நான்காவது பாடலில் (1.1.4) உள்ளம் மகிழ்ந்த நிலையில் பெருமான் பிச்சை எடுப்பதாக திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார். பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் ஒரு வகையான கூச்சத்துடன் பிச்சை எடுப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் பெருமானோ,உயிர்களை உய்விக்கும் உயர்ந்த நோக்கத்துடன் பிச்சை எடுப்பதால், தான் பிச்சை எடுப்பதை மிகுந்த மகிழ்வுடன் செய்கின்றார் என்று இங்கே கூறப்படுகின்றது. மகிழ்ந்த=மகிழ்ந்து உலாவிய; தேரிய=தேடிக் கொண்டு வந்து; மண் மகிழ்ந்த அரவம்=தரையில் ஊர்ந்து செல்லும் தன்மை பற்றியும் மண்புற்றினைத் தான் வாழும் இடமாக கொண்டுள்ள தன்மை பற்றியும் மண் மகிழ்ந்த அரவம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் விண் மகிழ்ந்த மதில் என்று திருஞானசம்பந்தப் பெருமான் கூறுகின்றார். எப்போதும் வானில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் மட்டுமே அந்த கோட்டைகளை நோக்கி எய்யப்படும் ஒரே அம்பினைக் கொண்டு மட்டுமே அந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்ற வரத்தினை, திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்ததால், அந்த கோட்டைகள் அவ்வாறு ஒரே நேர்க்கோட்டினில் நேரமும் மிகவும் குறைவானது என்பதால், அந்த வரமே மிகப் பெரிய அரணாக திரிபுரத்து அரக்கர்களுக்கு விளங்கியது என்பதை உணர்த்தும் வண்ணம் விண் மகிழ்ந்த மதில் என்று குறிப்பிடுகின்றார்.

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்

உண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன்

மண் மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை மலிந்த வரை மார்பில்

பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

பலி கொண்டுணும் கள்வன் என்று வலிதாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.3.2) சொல்லப் படுகின்றது. படிறன் என்றால் வஞ்சனை உடையவன் என்று பொருள். உயிர்கள் தங்களது மூன்று மலங்களையும் இட்டு உய்வினை அடைவதற்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு பலியேற்றாலும், அந்த நோக்கத்தினை வெளிப்படுத்தாமல் தனது கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தியவராக செல்லும் பெருமானின் செயல், பொய்யாக பிச்சை கேட்டு செல்வது போல் உள்ளது என்பதால் பெருமானை படிறன் என்றும் கள்வன் என்றும் திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.

படை இலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கலனேந்திக்

கடை இலங்கு மனையில் பலி கொண்டுணும் கள்வன் உறை கோயில் ‘

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலிதாயம்

அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர் தானே

பெருமானின் தன்மையே பிரம கபாலத்தை தனது கையினில் ஏந்திய வண்ணம் பல இடங்களிலும் திரிந்து பலியேற்பது தான் என்று திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.18.07) திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். பற்றி=பறித்து; பெற்றி=தன்மை; உலகத்தவர் உய்வதற்காக பலி ஏற்கும் பெருமான் இன்றும் தொடர்ந்து பலி ஏற்றுக் கொண்டு இருக்கின்றான். உலகத்தவரை உய்விக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக தனது தன்மையை மாற்றிக் கொண்டவன் பெருமான் என்று அவனது கருணைத் திறத்தினை இங்கே உணர்த்துகின்றார்.

பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்

பெற்றி அதுவாகித் திரி தேவர் பெருமானார்

சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்

நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே

புகலி தலத்தின் மீது அருளிய பாடல் (1.30.4) ஒன்றினில் கயல்மீன் போன்று அகன்ற கண்களைக் கொண்ட தேவியுடன், எருதின் மீது ஏறி அமர்ந்தவராக பெருமான் தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு பலி ஏற்கச் சென்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அயலார் என்ற சொல் தாருகவனத்து முனிவர்களை குறிப்பிடுகின்றது. கடை=மனைவாயில்; இயலால்=அழகோடு

கயலார் தடங்கண்ணியொடும் எருது ஏறி

அயலார் கடையில் பலி கொண்ட அழகன்

இயலால் உறையும் இடம் எண்திசையோர்க்கும்

புயலார் கடல் பூம்புகலி நகர் தானே

உண்பது ஊரிடு பிச்சை என்று வேட்களம் தலத்து பதிகத்தின் பாடலிலும் (1.39.2) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். ஏற முடித்து=மேலே எடுத்திக் கட்டி,மேலே பொருந்த; சரிந்து=கீழே தாழ்ந்து; பாரிடம்=பூதம்; போதருமாறு=நிலை; பதிகத்தின் முதல் பாடலில், இறைவன் புரியும் ஐந்து தொழில்களை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இறைவன் உயிர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, மீண்டும் மீண்டும் உலகத்தையும் உலகப் பொருட்களையும் படைப்பதை நமக்கு இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.இந்த பாடலில் உலகத்தவர் இடும் பிச்சையை ஏற்பதற்காக பெருமான் பல இடஙகளுக்கும் செல்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். இதுவும் இறைவன் உயிர்களுக்கு செய்யும் கருணைச் செயலே ஆகும். மேலும் சங்க வெண்தோடு இலங்க என்று குறிப்பிட்டு மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலையும் உணர்த்தப் படுகின்றது.

சடைதனை தாழ்தலும் ஏற முடித்துச் சங்க வெண் தோடு சரிந்து இலங்கப்

புடை தனில் பாரிடம் சூழப் போதருமாறு இவர் போல்வார்

உடை தனில் நால் விரல் கோவண ஆடை உண்பது ஊரிடு பிச்சை வெள்ளை

விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னகராரே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.40.3) ஊரார் இடுகின்ற பிச்சையை ஏற்றுக் கொள்கின்ற பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பிச்சை ஐயம் என்ற இரண்டு சொற்களையும் திருஞானசம்பந்தர் பயன்படுத்தி இருப்பதை நாம்காணலாம். இரண்டும் ஒரு பொருளை உணர்த்துவது போல் தோன்றினும் சிறிய மாறுபாடு உள்ளது. ஐயம் என்பது இடுவோர் இரவலரைத் தேடிச்சென்றுஇடுவது. பலி என்பதும் இதே பொருளில் வருகின்றது. பிச்சை என்பது இரப்போர் இடுவோரைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்வது. ஔவையார் இந்தமாறுபாட்டினை மிகவும் அழகாக உணர்த்துகின்றார். ஐயம் இட்டுண் என்று, தாங்கள் இடும் பிச்சை பெறுகின்ற ஆட்களைத் தாங்களே தேடிக் கொண்டுஇடுவோர் செல்ல வேண்டும் என்று உணர்த்துகின்றார். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று, ஏழையாக இருப்போர் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு,தாங்களே தங்களுக்கு உதவி செய்வோர்களைத் தேடிக்கொண்டு செல்ல வேண்டும் என்று உணர்த்துகின்றார். அதனால் தான் பிச்சை இழிவாகவும் ஐயம்உயர்ந்ததாகவும் கருதப் படுகின்றது.

பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடிப் புன் தலை அங்கையில் ஏந்தி

ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி

வாள் நெடுங்கண் உமை மங்கை ஓர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்த்

தாள் நெடு மாமலர் இட்டுத் தலைவன தாள் நிழல் சார்வோம்

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.43.7) பிரமகபாலத்தில் பிச்சையாக ஏற்ற உணவினை விருப்பத்துடன் உட்கொண்ட பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மானிடம் என்பதை மான் இடம் என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும், பாடலில் உள்ள எதுகை அழகினை ரசிப்பதற்காக சொற்கள் பிரிக்காமல் கொடுக்கப் பட்டுள்ளன. ஆர்தரு= பொருந்திய; சந்து=சந்தன மரம்; சிறை=கிளைகள்; திண்=வலிமையான;மலைச்சாரல் என்பதால் நிலம் சமதளத்தில் இல்லாமல் சற்று சரிந்த தன்மையில் உள்ளது. எனவே ஏரினை பயன்படுத்தி உழுதல் கடினம் என்பதால், மரக் கொம்புகள் கொண்டு நிலத்தினைக் கிளறி பயிர் செய்தனர் என்று குறிப்பிடுவதன் மூலம், திருஞானசம்பந்தர் எந்த அளவுக்கு தான் சென்ற தலங்களின் இயற்கைக் காட்சிகளை மிகவும் நுண்ணியமாக ரசித்தது மட்டுமன்றி அவற்றை சுவையாகவும் தனது பதிகங்களில் கலந்து அளிக்கின்றார் என்பதை உணரும் போது நாம் வியப்பினில் ஆழ்கின்றோம். இவ்வாறு வேடுவர்கள் நிலத்தைக் கிளறி தினை விதைக்கும் தன்மையை உணர்த்துவதன் மூலம் ஒரு தத்துவத்தை திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதாக தருமை ஆதீனக் குறிப்பு சுவையான விளக்கம் அளிக்கின்றது. ஆன்மாக்களுக்கு வினைகளால் ஏற்படும் போகம், அந்த ஆன்மாக்கள் உய்வினை அடைதற்கு தடையாக இருப்பின் அந்த தடையை நீக்கி, சிவபோகத்தை வித்தாக இட்டு விளைச்சல் தரும் புண்ணிய பூமி கற்குடி தலம் என்று உணர்த்தப் படுகின்றது என்பதே அந்த விளக்கம்.

மானிடம் ஆர் தரு கையர் மாமழு ஆரும் வலத்தர்

ஊனிடையர் தலை ஓட்டில் உண்கலனாக உகந்தார்

தேனிடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்திக்

மானிடை வேடர் விளைக்கும் கற்குடி மாமலையாரே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.50.9) திருஞானசம்பந்தர், பார்வதி தேவி உடனாக இருக்கையில் பலி ஏற்பதற்கு மிகுந்த இச்சை கொண்டவராக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். வெற்றிமை=வென்ற தன்மை; பிரமன் திருமால் ஆகிய இருவரும் நீண்ட நெருப்புப் பிழம்பாக நின்ற தனது அடியையும் முடியையும் காண்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை தாண்டிய நிலையில், அவர்கள் இருவரும் காண முடியாமல் இருந்த தன்மை; இச்சை=விருப்பம்; தயங்கு=வெளிப்பட்டு தெரியும் வண்ணம், விளங்குகின்ற; தயங்கு என்ற சொல்லினை தோல் என்ற சொல்லுடன் இணைத்து,அசைகின்ற தோல் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். அரை=இடுப்பு; ஆர்த்த=இறுகக் கட்டிய; ஐயம்=பிச்சை;

செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மாலடி தேட நீண்முடி

வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என்

தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு

ஐயம் ஏற்று உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே

நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.4) திருஞானசம்பந்தர், பெருமானை தலை புரிந்த பலி மகிழ்வாய் என்று குறிப்பிடுகின்றார்.தலை புரிந்த பலி மகிழ்வாய் என்ற தொடர் மூலம், பிரமகபாலத்தில் பிச்சை ஏற்பதை பெருமான் மிகவும் மகிழ்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பெருமான் ஆடியும் பாடியும் பலியேற்கச் செல்லும் தன்மை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. பொதுவாக பிச்சை ஏற்பவர்,வேறு வழியின்றி பிச்சை ஏற்கின்றோம் என்பதால், நாணத்துடன் உடலைக் கோணிக் கொண்டு பிச்சை ஏற்பதை நாம் காண்கின்றோம். ஆனால் பெருமான் பிச்சை ஏற்பது தனது தேவைக்கு அல்ல என்பதை நாம் அறிவோம். பக்குவமடைந்த உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களை பெருமானின் கையில் ஒப்படைத்துவிட்டு, மலமற்றவர்களாக திகழ்ந்து முக்தியுலகம் சென்றடைந்து என்றும் அழியாத ஆனந்தத்தில் திளைத்து இருப்பதற்கு தகுதி படைத்தவர்களாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமான் பலிக்கு செல்கின்றார். எனவே தான் பலியேற்பதன் மூலம், மேலும் மேலும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்த உயிர்கள் தன்னை வந்தடையும் என்ற அவரது மகிழ்ச்சி ஆடலாகவும் பாடலாகவும் வெளிப் படுகின்றது.இந்த நிலையையே பலி மகிழ்வாய் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அவிர்சடை=விரிந்த சடை; விரிந்த சடையினில் எவ்வாறு கங்கை நதியை அடக்கி வைக்க முடியும் என்ற ஐயம் நமக்கு எழலாம். உலகெங்கும் பரந்து நிற்கும் பெரிய உருவத்தினை உடைய பெருமானின் சடையினில் உள்ள ஒரு முடியில், புல்லின் நுனியில் காணப்படும் பனித்துளி போன்று கங்கை நங்கை பொருந்தியது என்று அப்பர் பிரான் திருவீழிமிழலை பதிகத்தின் பாடலில் (6.50.10) குறிப்பிடுகின்றார். பனிதுளியின் பாரத்தைத் தாங்க முடியாமல் புல் வளைந்தாலும், பனித்துளி கீழே விழுந்துவிடாமல் புல்லுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மையை நாம் விடியற் காலையில் காண்கின்றோம் அல்லவா. அதுபோன்றே பெருமான் நடனம் ஆடினாலும் தனது சடையைத் தாழ்த்தினாலும் கங்கை நீர் சடையுடன் பிணைந்து உள்ளது.

மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்

அலை புரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா

தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழற் கீழ்

நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

பிச்சை எடுப்பதால் பெருமானை வறியவர் என்று நினைத்து விடாதீர்கள், உண்மையில் அவர் மிகவும் பெரிய செல்வந்தர் என்று திருக்கானூர் தலத்து பதிகத்தின் பாடலில் (1.56.2) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் சம்பந்த நாயகி பெருமானை வெண்தலைச் செல்வர் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றாள். வெண்தலை என்று பிரமகபாலம் உணர்த்தப்படுகின்றது. பெருமான் கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் ஊரூராக பிச்சைக்கு செல்வது இங்கே கூறப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர் எவ்வாறு செல்வராக இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். உலகங்கள் அனைத்தையும் தனது உடமையாக உடையவர், எவரிடமும் இல்லாத முக்திச் செல்வத்தை உடையவர் பெருமான் ஒருவர் தாமே. எனவே செல்வர் என்று அழைக்கப்படுவதற்கு அவரை விடவும் பொருத்தமானவர் வேறு எவரேனும் உளரோ. இல்லை அல்லவா.

நல்லாரும் அவர் தீயர் எனப்படும்

சொல்லார் நன்மலர் சூடினார்

பல்லார் வெண்தலைச் செல்வர் எம் பாற்றுறை

எல்லாரும் தொழும் ஈசரே

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.072.04) திருஞானசம்பந்தர் மாதொரு பாகனின் கோலத்துடன் பலியேற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக, என்றும் பிராட்டியை விட்டு பிரியாமல் இருக்கும் பெருமான், தான் பலியேற்கச் சென்றபோதும் பிராட்டியுடன் சென்றது இயற்கையே. மேலும் உயர்ந்த நோக்கத்துடன், உயிர்களுக்கு உதவும் எண்ணத்துடன் பலி ஏற்பது பெருமைக்கு உரிய செயல் தானே. எனவே அதற்காக வெட்கம் கொண்டு, தேவியை உடன் அழைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை அல்லவா.

போதார் புனல்சேர் கந்தம் உந்திப் பொலியவ் வழகாரும்

தாதார் பொழில் சூழ்ந்து எழிலார் புறவில் அந்தண் குடமூக்கில்

மாதார் மங்கை பாகமாக மனைகள் பலி தேர்வார்

காதார் குழையர் காளகண்டர் காரோணத்தாரே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.86.3) திருஞானசம்பந்தர் பெருமானை பிச்சை நாடும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மேலும் மேலும் உயிர்கள் தன்னை வந்து சேர வேண்டும் என்பதில் பெருமானுக்கு உள்ள அளவு கடந்த ஆர்வம், பக்குவப்பட்ட உயிர்களை தானே நாடிச் செல்ல அவரை தூண்டுகின்றது என்று உணர்த்துகின்றார் போலும். சிவசிந்தனை மேலோங்கி இருப்பதால், பண்பட்ட உள்ளத்துடன், குற்றங்கள் நீங்கிய உள்ளத்துடன் இருக்கும் அடியார்கள் தீயசெயல்களை இயல்பாகவே தவிர்ப்பார்கள் என்பதால் அவர்களை பாவங்கள் சென்று அடையாது அல்லவா. பிச்சை நாடும் நெறியான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தங்களது மலங்களைக் கழித்துக் கொள்வதற்கும் வினைகளை முற்றிலும் நீக்கிக் கொள்வதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு தங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளதை உயிர்கள் அனைத்தும் உணர்ந்து, செயல்பட்டால் தான், அவைகளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வெளியே வரமுடியும்: அனுபவித்துத் தான் வினைகளை கழித்துக் கொள்ளவேண்டும் என்றால், நாம் இதுவரை சேர்த்துள்ள வினைகளை கழிப்பதற்கே எண்ணற்ற பிறவிகள் நமக்கு தேவைப்படும். இந்த நிலையில், நாம் இந்த பிறவிகளில் மேலும் சேர்த்துக் கொள்ளும் வினைகள் நாம் எடுக்க வேண்டிய பிறவிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து விடுகின்றன. இவ்வாறு தான் நமது வினைகளைக் கழித்துக் கொள்ளும் நாள் எட்டாத கானல் நீராக நம்மிடமிருந்து மேலும் மேலும் விலகிச் செல்லும் நிலையில், பிச்சைப் பெருமானாக நம் முன்னே வந்து நின்று, நமது மலங்களைத் தான் தனது கையில் வைத்திருக்கும் பிரமகபாலத்தினில் நாம் அனைவரும் இட்டு உய்வினை அடைவதற்கு ஏதுவாக, உலகெங்கும் திரிவதை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு நாம் நன்னெறி அடைவதற்காக பெருமான் பிச்சை ஏற்பதால், பிச்சை நாடும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

சூடும் இளந்திங்கள் சுடர் பொன் சடை தாழ

ஓடு உண்கலனாக ஊரூர் இடு பிச்சை

நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்

பாடும் அடியார்கட்கு அடையா பாவமே

ஏற்பது இகழ்ச்சி என்பது முதுமொழி. ஆனால் சிவபெருமான் தன் பொருட்டு பலி ஏற்காமல் மக்களை உய்விப்பதற்காக பலி ஏற்பதால், அவன் எடுக்கும் பிச்சை இகழ்ச்சிக்கு உரியது அல்ல. இதனை புரிந்து கொள்ளாமல் பலர் பெருமான் பிச்சை எடுப்பதை இகழ்வாக கூறினாலும், பெருமான் அதனை பொருட்படுத்துவதில்லை. ஒராது=பொருட்படுத்தாது; உயிர்கள் தங்களது மலங்களை பெருமான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைவதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, பிறரது பழிச் சொற்களை புறக்கணித்து பிச்சை எடுக்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம், பழி ஓராது பெருமான் பலி ஏற்கின்றார் என்று திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.98.8) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில செய்கைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மலைமல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்

தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்

சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்

சில வல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் (1.98.9) திருஞானசம்பந்தர் பெருமானை நோக்கி, செல்வந்தராக இருக்கும் நீர் மனைதோறும் சென்று இரந்தால்,உமது தன்மையை அறியாதவர்கள் உம்மை இகழ்வார்களே என்று கேட்கின்றார். ஞானசம்பந்தரின் குழந்தை உள்ளம், பெருமானை மற்றவர் இகழ்வதை தாங்கமுடியாமல் வருந்தியது போலும், அதனால் தான் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி, பெருமானை பார்த்து மற்றவர் இகழ்வதை தடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு அதற்காக ஆவன பெருமான் செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றார் போலும்..

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்

கரப்புள்ளி நாடிக் கண்டிலர் ஏனும் கல் சூழ்ந்த

சிரப்பள்ளி மேய வார்ச்சடைச் செல்வர் மனை தோறும்

இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் பெருமானின் செய்கைகளின் தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்று கூறுகின்றார். இந்த பாடலில் குறிப்பிட்டுள்ள செயல்கள் மூன்றும், (தையலை, அதாவது உமை அன்னையை, தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றல், நஞ்சு உண்ணுதல், தலை ஓட்டில் பிச்சை எடுத்தல்) சாதாரணமாக எவரும் செய்யாத செயல்கள் என்பதால் சிவபிரானின் செய்கையை, அந்த செயல்களின் காரணத்தை நம்மால் அறியமுடியாது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் போலும். மேலும் இங்கே குறிப்பிட்டுள்ள செயல்கள் ஒன்றுக்கொன்று ஒவ்வாத செயல்களாக இருப்பதால் அவரது செய்கையின் தன்மையை எவரும் அறிய முடியாது என்று கூறுகின்றார். எனினும் இந்த செய்கைகளுக்கு விளக்கம் பல தேவாரப் பாடல்களில் அருளப் பட்டுள்ளது. பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டமை, பிராட்டி வேறு தான் வேறு அல்ல இருவரும் ஒருவரே என்பதை உலகுக்கு உணர்த்தவே. நஞ்சினை உட்கொண்டதாக பல பாடல்களில் கூறப்பட்டாலும், அவ்வாறு கூறுவது ஒரு உபசார வழக்கே தவிர,பெருமானை நஞ்சினை உட்கொள்ளாமல் தனது கழுத்தினில் தேக்கிக் கொண்டார் என்பதை நாம் அறிவோம். மேலும் இந்த செய்கை பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால நஞ்சினால் உலகம் அழிந்து விடாமல் காக்கும் பொருட்டு, நஞ்சு பெருமானால் அருந்தப் பட்டது என்பதும் பல பாடல்களில் கூறப் படுகின்றது.

வெய்ய தண் சாரல் விரிநிற வேங்கைத் தண் போது

செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்

தையலோர் பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலையோட்டில்

ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே

கொடிமாடச் செங்குன்றூர் (இன்னாளில் திருச்செங்கோடு என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.7)திருஞானசம்பந்தர் பலியேற்பதையே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டுள்ள பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சேடன்=சிரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு, சிறந்த ஞானம் உடையவன்; கோடல்=செங்காந்தள் மலர்கள்; குறிஞ்சி நிலத்திற்கு உரிய பூக்கள். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாக கருதப்படுகின்றன. புறவு=நிலம்;

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ வெள்ளை

வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்க்

கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே

இந்நாளிலும் பெருமான் பலி ஏர்கின்றார் என்றாலும் அவ்வாறு பெருமான் பலி ஏற்பதை நமது ஊனக் கண்களால் அறியமுடியாது. நமது மலங்களை நீக்கி,யான் எனது என்ற பற்றற்ற நிலையை அடைந்து நம்மை எதிர்கொள்ளும் வினைகளை இன்பமாயினும் துன்பமாயினும் ஒன்றாக பாவித்து அந்தஇன்பதுன்பங்களால் எந்தவிதமான சலனமும் அடையாமல் அவை இரண்டையும் அனுபவித்து, ஆகாமிய வினைகளை தவிர்க்கும் நிலையினை நாம்அடைந்தால், நாமும் அறியாத வண்ணம் பெருமான் நமது வினைகளை நீக்கி மலங்களையும் களைவான். இந்த நிலையே அவனது பிச்சைப் பாத்திரத்தில்நாம் நமது மலங்களை பிச்சையாக இடுவதற்கு தயாராக உள்ள நிலையாகும். இந்த கருத்தினை உள்ளடக்கி, மக்களுக்கு நன்மைகள் ஏற்பட பலியேற்கும்கொள்கை உடையவன் சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் கீழ்க்கண்ட பாடலில் (1.119.6) கூறுகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் நன்மைபுரிய காத்திருக்கும் சிவபெருமானை நம்பன் என்று அழைத்து நாம் அவன் மீது நம்பிக்கை வைத்து பணிந்து வணங்கவேண்டும் என்பதை நமக்குதிருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். தன்னை அடைய விரும்பி தவம் புரிவோர்க்கு சிவபெருமான் அத்தகைய அடியார்களின் மலங்களைநீக்கி அருள் புரிவான் என்றும் இங்கே கூறுகின்றார்.

நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல

வலனாய மழுவாளும் வேலும் வல்லான்

கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்

மலனாய தீர்த்து எய்து மாதவத்தோர்க்கே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.2), திருஞானசம்பந்தர் பெருமான், தேவியுடன் பலிக்கு சென்றதாக குறிப்பிடுகின்றார்.விடலேறு படம்=விடத்தை மேல் கொண்டுள்ள படம்; விடலம்=நஞ்சு; விடலம் என்ற சொல் விடல் என்று குறைந்தது. விடல் என்ற சொல்லுக்கு வலிமை என்று பொருள் கொண்டு மற்ற உயிர்களை கொல்லும் வல்லமை உடைய பாம்பு என்று பொருள் சொல்வதும் பொருத்தமே. சுரி சங்கு=கூர்மையான வளைந்த மூக்குகளை உடைய சங்கு; அஞ்சொல்=அம்+சொல், அழகிய சொற்களை உடைய மகளிர்; இங்கே தாருக வனத்து மகளிரை குறிப்பிடுகின்றது.திடல்=மணல்மேடு; கங்குல்=இரவு; காவிரியின் மணல் திடலில் முத்துகள் காணப்படும் வகையில் செல்வச் செழிப்பு மிகுந்த நகரம் ஐயாறு என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

விடலேறு படநாகம் அரைக்கு அசைத்து வெற்பரையன் பாவையோடும்

அடலேறு ஒன்று அது ஏறி அஞ்சொலீர் பலி என்னும் அடிகள் கோயில்

கடலேறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகித்

திடல் ஏறி சுரி சங்கம் செழுமுத்து அங்கு ஈன்று அலைக்கும் திருவையாறே.

திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.2.1) பெருமான் தொடர்ந்து, என்றும் பிச்சை ஏற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். விண்டு=விரிந்து, விரிதலால்; விரை= நறுமணம்; விம்மி=தொடர்ந்து, இடைவிடாமல்; நசை=ஆசை; தொண்டு=தொண்டர்கள்; பிச்சை எடுப்பவர்கள் தங்களது வருகையை அறிவிக்கும் முகமாக குரல் கொடுப்பதை நாம் இந்நாளிலும் காண்கின்றோம். அவ்வாறு தனது வருகையை அறிவிக்கும் முகமாக பெருமான் வேத கீதங்கள் பாடியவாறு பலிக்கு செல்கின்றார். பெருமானின் திருமேனி சுடர் போன்று ஒளிவீசி பிரகாசிப்பதால், அந்த ஒளியே பெருமானின் வருகையை சுட்டிக் காட்டும் வண்ணம் இருப்பதால், பெருமான் எதற்காக பாடவேண்டும் என்று திருஞானசம்பந்தர் வினவியதாக சிலர் விளக்கமாக அளிக்கின்றனர். ஆனால் இந்த பதிகத்தின் மற்ற பாடல்கள் உணர்த்தும் பொருளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், மேற்கண்ட விளக்கம் பொருத்தமற்றது என்று தோன்றுகின்றது. பெருமானை நோக்கி, பலி ஏற்கச் சென்றதன் நோக்கம் யாது என்று ஞானசம்பந்தர் கேட்பதாக பொருள் கொள்வதே பொருத்தமாக உள்ளது. ஒலிபாடல் என்ற தொடரை வினைத்தொகை என்று அடையாளம் கொண்டு, ஒலித்த பாடல், ஒலிக்கும் பாடல்,ஒலிக்கவிருக்கும் பாடல் என்று பொருள் கொண்டு, பண்டைய நாளில் பாடி பலியேற்ற பெருமான், இன்றும் அவ்வாறு பாடுகின்றார் என்றும் நாளையும் அவ்வாறு பாடியவண்ணம் பலியேற்பார் என்று ஞானசம்பந்தர் உணர்த்துவதாக விளக்கம் அளிப்பது பொருத்தமாக உள்ளது.

விண்டு எலாம் மலரவ் விரை நாறு தண் தேன் விம்மி

வண்டெலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழித்

தொண்டெலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர்

பண்டெலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே

மேற்கண்ட பாடலில் திருஞானசம்பந்தர் கேட்கும் கேள்விக்கு விடை, பல திருமுறைப் பாடல்களிலும் புராணங்களிலும் பொதிந்துள்ளன. அந்த தகவல்களை நாம் தேவையான இடத்தில் பொருத்திக் கொண்டு விடை காணவேண்டும். தாருகவனத்து முனிவர்கள், வேதங்களில் சொல்லப் பட்டுள்ள கர்ம காண்டத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாக, தாங்கள் செய்யும் செயல்களே தகுந்த பலனை அளிக்கும் என்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக, வாழ்ந்து வந்தனர். நாம் செய்யும் செயல்கள் தகுந்த பலன்களை அளிப்பதற்கு மூல காரணமாக விளங்குபவன் இறைவன் என்பதை சிந்தியாமல், நாம் நற்பலன்களைப் பெறுவதற்கு இறைவனின் திருவருளும் வேண்டும் என்பதை மறந்தவர்களாக, அவர்கள் வாழத் தொடங்கினார்கள்.இத்தகைய மனநிலை உள்ளவர்களிடம், தான் நேரில் தோன்றி உண்மையை உணர்த்தினாலும், பலனேதும் இருக்காது என்பதை உணர்ந்த பெருமான்,புரிந்த திருவிளையாடலே தாருகவனத்து நிகழ்ச்சி ஆகும். இந்த பதிகத்தின் கடைப் பாடலில், இறைவன் பால் நம்பிக்கை வைக்காமல் செய்யப்படும் விரதங்கள், ஞானத்தையும் வீடுபேற்றினையும் பெறுவதற்கு வழி வகுக்காது என்று திருஞானசம்பந்தர் உணர்த்துவதை நாம் காணலாம். எனவே தாருகவனத்து இல்லத்தரசிகளிடம் பெருமான் பலியேற்றுச் சென்றது, தாருகவனத்து முனிவர்கள் கொண்டிருந்த தவறான கொள்கையை மாற்றுவதற்காக என்பதை நாம் விடையாக கொள்ளவேண்டும். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான் பலி ஏற்பது குறித்து திருஞானசம்பந்தர் கேள்விகளை எழுப்புகின்றார்.

பெருமான் பலி ஏற்பது, பக்குவபட்ட உயிருடன் இணைந்துள்ள, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று பொருட்களை தான் பெற்றுக்கொண்டு அந்த உயிர்களுக்கு உய்வினை அளிப்பதற்காக என்று கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.12.5) திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.கடை=வாயில்; உடையான் என்று உயிர்களைத் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமானை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

சடையானைத் தலை கையேந்திப் பலி தருவார் தம்

கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்

புடையே பொன் மலரும் கம்பைக் கரை ஏகம்பம்

உடையானை அல்லாது உள்காது என் உள்ளமே

உமை அன்னையை மட்டும் அழைத்துச் செல்லாமல், கங்கை நங்கையையும் தனது சடை மேல் ஏற்றவனாக பெருமான் பலியேற்கச் சென்றார் என்று புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.2) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேர்ந்து=தேர்ந்தெடுத்து; தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாதர். அந்த பெயரினுக்கு ஏற்ப உயிருடன் பிணைந்துள்ள மலமாகிய நோயினைத் தீர்த்து இன்பம் அளிப்பவன் பெருமான்.இந்த தன்மையை கருத்தினில் கொண்டு ஐயம் தேர்ந்தெடுத்து என்ற தொடரின் பொருளினை நாம் உணரவேண்டும். பெருமான் பிச்சை ஏற்பதன் நோக்கமே,தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ள விரும்பும் உயிர்கள் தங்களது மலத்தினை பெருமானின் பிச்சை பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதாகும். அந்தணர்=அம்+தணர்; குளிர்ந்த நெஞ்சம் உடையவர்; உயிர்களின் பால் எல்லையற்ற கருணையும் அன்பினையும் வைத்துள்ள பெருமானின் நெஞ்சம் அவனது கருணை இரக்கம் அன்பு ஆகியவற்றின் காரணமாக ஈரமாக உள்ளது என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை அந்தணர் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பக்குவம் அடைந்த உயிர்கள் தாமே, முக்தி நிலையினை அடைவதற்கு தகுதி படைத்தவர்கள். எனவே அத்தகைய உயிர்களை தேர்ந்தெடுக்கும் பெருமான், அவர்களை அணுகி, அவர்கள் தங்களது மலங்களை பிச்சையாக இடவேண்டும் என்று பலி கேட்கின்றார் என்று பொருள் கொள்ளவேண்டும். ஈடு=பெருமை. பண்டைய நாளில் போரிடும் வீரர்கள், தங்களது உயிர் நிலையினை அடுத்தவருக்கு சொல்லிவிட்டு போராடுவதை சிறப்பு வாய்ந்த வீரச்செயலாக கருதினர் போலும். ஜடாயு தனது உயிர்நிலை தனது சிறகுகளில் உள்ளது என்று சொல்ல,அரக்கன் இராவணனோ, தனது உயிர்நிலை தனது தலையில் உள்ளது என்று பொய் சொல்லி போரிட்டதாக இராயணம் காவியம் உணர்த்துகின்றது.இதனால் தான், ஜடாயு மீண்டும் மீண்டும் அரக்கனின் தலையை தனது அலகால் கொத்தி போராடியது போலும். அரக்கனின் கிரீடங்கள் பேர்த்து எறியப்பட்டு கீழே விழ, பின்னர் அந்த இடத்திற்கு வந்த இராமரும் இலக்குவனும் அந்த கிரீடத்தை பார்க்கின்றனர். அரக்கன் தனது உயிர்நிலை குறித்து சொன்னது பொய். ஜடாயு சொன்னது மெய். இந்த தகவல் தான் கீழ்க்கண்ட பாடலில் உணர்த்தப் படுகின்றது.

தையலாள் ஒரு பாகம் சடை மேலாள் அவளோடும்

ஐயம் தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையும் இடம்

மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்துப்

பொய் சொல்லாது உயிர் போனான் புள்ளிருக்குவேளூரே

பெரும்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (2.67.3), செல்வராக இருக்கும் பெருமான் கபாலம் ஏந்தி பிச்சை எடுப்பதைத் தனது தொழிலாகக் கொண்டவராக இருக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிள்ளை மதி=இளம் பிறைச் சந்திரன்; கள்ளம்=பொய்; திருமாலை விடவும் தான் அதிகமான ஆற்றல் உடையவன், அதனால் திருமாலை விடவும் பெரியவன் என்று நிரூபிக்கவேண்டும் என்ற முனைப்புடன் அன்னமாக உருவெடுத்து பறந்து சென்று பெருமானின் முடியினைக் காண்பதற்கு பெருமுயற்சி செய்தும் காண முடியாமல் போகவே, பெருமானது சடையிலிருந்து கீழே விழுந்த தாழம்பூவினை சாட்சியாக வைத்துக் கொண்டு பெருமானது முடியினைத் தான் கண்டதாக பிரமன் பொய் கூறியதை உணர்த்தும் வகையில் கள்ளம் மதித்த கபாலம் என்று இங்கே சொல்லப் பட்டுள்ளது. பிரமனின் கபாலத்தை தனது கையினில் ஏந்தியவராகிய பெருமான், துள்ளி குதித்தும் நின்றும் நடனம் ஆடுபவராக, உயிர்களுக்கு உய்வினை அளிக்கும் நோக்கத்துடன், பக்குவம் வாய்ந்த உயிர்கள் அளிக்கும் மலங்களைத் தனது கலனில் ஏற்றுக் கொள்ளும் நோக்கத்துடன், பிச்சை ஏற்கும் தொழிலைத் தொடர்ந்து சிவபெருமான் செய்து வருகின்றார். என்பதை உணர்த்தும் பொருட்டு தொழிலர் என்று குறிப்பிடுகின்றார். பிச்சை எடுப்பதே அவரது தொழிலாக உள்ளதால் தொழிலர் என்று குறிப்பிடப் படுகின்றது. அருமையான சொல்லாட்சி. .

கள்ளம் மதித்த கபாலம் கை தனிலே மிக ஏந்தித்

துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர்

வெள்ள நகு தலை மாலை விரிசடை மேல் மிளிர்கின்ற

பிள்ளை மதிப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே

திருநணா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2,072,07) பிரம கபாலத்தில் இடப்படும் பிச்சையை உகந்து ஏற்றுக் கொள்பவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தாருகவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து எழுப்பிய காட்டு யானை, என்பதால் காடுகளில் திரியும் யானை என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அரை=இடுப்பு; ஊன்=தசை; பெருமான் தனது உணவுத் தேவைக்காக பிச்சை ஏற்பதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் உபசார வழக்காக, கையினில் கபாலத்தை ஏந்திய வண்ணம் வீடுவீடாக செல்வதால், பெருமான் பிச்சை உணவு ஏற்கின்றார் என்றும் அதனை உண்கின்றார் என்றும் சொல்லப்படுகின்றது. தான் பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பிச்சை ஏற்பவர் போல் பெருமான் வருவதன் நோக்கத்தை புரிந்து கொள்ளும் ஆன்மாக்கள், தங்களது மலங்களை தான் (பெருமான்) வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தினில் இட்டு உய்வினை அடைவதை பெருமான் பெரிதும் விரும்புகின்றான் என்ற செய்தியே இங்கே சொல்லப்படுகின்றது. அனைத்து உயிர்களின் உண்மையான ஆசை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, இறைவனின் திருப்பாதங்களை சென்று அடைய வேண்டும் என்பதே ஆகும். உயிர்களின் இந்த விருப்பத்தை விடவும், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள மலங்களையும் வினைகளையும் முற்றிலுமாக கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருமான் கொண்டுள்ள விருப்பம் மிகவும் அதிகமானது. எனவே தான் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் அளிக்கும் மூன்று மலங்களாகிய பிச்சையை பெருமான் பெரிதும் உகந்தான் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

கானார் களிற்று உரிவை மேல் மூடி ஆடரவம் ஒன்று அரை மேல் சாத்தி

ஊனார் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்

நானாவிதத்தால் விரதிகள் நல் நாமமே ஏத்தி வாழ்த்தத்

தேனார் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திருநணாவே

திருநணா (தற்போதைய பெயர் பவானி) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.72.9) திருஞானசம்பந்தர் இறைவனை பலி ஏற்கும் கள்வன் என்று குறிப்பிடுகின்றார். பல பாடல்களில் நால்வர் பெருமானர்கள், பெருமான் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக தங்களை உருவகித்து, தங்களது மனதினைக் கொள்ளை கொண்ட கள்வன் என்று கூறுவதையும் நாம் உணர்கின்றோம். தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன் என்று தனது முதல் பதிகத்தை தொடங்கிய திருஞானசம்பந்தருக்கு பெருமானை கள்வன் என்று அழைப்பது மிகவும் விருப்பம் போலும். தாருகவனம் சென்ற பெருமான், ஆடியும் பாடியும் பிச்சை ஏற்பவர் போன்று சென்றாலும், அவரது நோக்கம் தாருக வனத்து முனிவர்களின் சிந்தனையை மாற்றுவதே ஆகும். இவ்வாறு தனது நோக்கத்தை மறைத்துக் கொண்டு செயல்பட்ட பெருமானை கள்வர் என்று அழைக்கின்றார் போலும். மேலும் எப்போதும் பலி ஏற்பதற்கு தனது உண்கலனை ஏந்திச் செல்லும் பெருமான், பிச்சை எடுப்பது போன்று தோன்றினாலும், உண்மையில் தனது உணவுத் தேவைக்கு பிச்சை எடுப்பதில்லை அல்லவா. எனவே இந்த செயல் புரியும் பெருமானை கள்வர் என்று அழைப்பது பொருத்தம் தானே.

மையார் மணி மிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகள் தோறும்

கையார் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடிப்

பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னிச்

செய்யார் எரியா உருவம் உற வணங்கும் திருநணாவே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.2) திருஞானசம்பந்தர், மடவாளொடும் சென்று பலி ஏற்பதை விரும்பியவன் என்று குறிப்பிடுகின்றார். பரமேட்டி=தனக்கு மேலாக எவரும் இல்லாதவன்; மடவாள்=உமை அன்னை; கலி=வறுமை முதலிய துன்பங்கள்; நம்பன்=விருப்பனாக இருக்கும் தன்மை; நலிய=துன்பம் அடைந்து மனம் வருந்தும் வண்ணம்; பல துன்பங்களை அளித்து நமது மனதினை நலியச் செய்யும் வினைகளை தீர்க்கும் பரமன், நமது விருப்பத்திற்கு உகந்தவனாக இருப்பது இயற்கை தானே.

வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும்

பலி விரும்பியதொர் கையினான் பரமேட்டியான்

கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள்

நலிய வந்த வினை தீர்த்துகந்த எம் நம்பனே

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.3) வீடுகள் தோறும் இடும் பிச்சையை மிகுந்த விருப்பத்துடன் உண்பவர் என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் உணர்த்துவதை நாம் காணலாம். மேலும் மேலும் உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்பும் பெருமான் தானே நேரிடையாக, பல வீடுகளுக்கு பிச்சையேற்கச் செல்கின்றார் என்று கூறுகின்றார். சுண்ணம்=திருநீறு;

பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பு ஆர்க்கச்

சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவார் அகந்தொறும் இடும் பிச்சைக்கு

உண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து

அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவருக்கு அருவினை அடையாவே

பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பாடலில் ஞானசம்பந்தர் (3.37.3) பிரமகபாலத்தில் பலி ஏற்று மகிழும் படிறன் என்று கூறுகின்றார். படிறன் என்றால் வஞ்சகன் என்று பொருள். பலி ஏற்பது போன்று வந்து தாருகவனத்து மகளிரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் படிறன் என்று கூறுகின்றார் போலும்.

எல்லையில் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும்

பல்லையார் தலையில் பலியது கொண்டுகந்த படிறனும்

தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூமலர் சொரிந்து ஏத்தவே

மல்லை அம்பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்துறை மைந்தனே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.44.06) பலியேற்கும் பெருமானை கள்வனார் என்று உயர்வாக, திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். கொள்வனார் என்ற சொல்லினை பலி என்ற சொல்லுடன் இணைத்து பொருள் காண வேண்டும். தனது முதல் பதிகத்தில், உள்ளம் கவர் கள்வன் என்று பெருமானை அழைத்த திருஞானசம்பந்தருக்கு பெருமானை கள்வன் என்று அழைப்பதில் மிகவும் விருப்பம் போலும். தான் உணவு உட்கொள்வதற்காக பிச்சை எடுப்பது போன்று பெருமான் ஊரூராக திரிந்தாலும், பெருமான் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை, தான் திரியும் நோக்கத்தை மறைத்துக் கொண்டு உணவுப்பிச்சை எடுப்பது போன்று தோற்றம் தரும் பெருமானை கள்வனார் என்று அழைக்கின்றார். அவரது நோக்கத்தின் உயர்ந்த தன்மை குறித்து அவருக்கு மதிப்பு கொடுத்து மரியாதையாக கள்வனார் என்று அழைப்பதையும் நாம் உணரலாம்.

துள்ளு மான்மறி அங்கையில் ஏந்தி ஊர்

கொள்வனார் இடு வெண் தலையில் பலி

கள்வனார் உறையும் கழிப்பாலையை

உள்ளுவார் வினை ஆயின ஓயுமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.45.6) உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டுள்ள கோலத்துடன் பெருமான், பல ஊர்களுக்கும் சென்று பிச்சை ஏற்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆர்கணாக என்ற சொல் ஆர்கணா எனக் குறைந்துள்ளது. கொள் என்ற சொல் முதலாவது மற்றும் மூன்றாவது அடிகளில் கொண் என புணர்ச்சி விதியின் படி மாறியுள்ளது. தான் மற்ற தெய்வங்களை விலக்கி பெருமான் ஒருவனைத் தானே பற்றுக்கோடாகக் கொண்டுள்ளேன், அவ்வாறு இருக்கையில் பெருமான் இன்னும் தனக்கு அஞ்சேல் என்று சொல்லி ஆறுதல் கூறாதது ஏன் என்ற கேள்வியை திருஞானசம்பந்தர் திருவாரூர் தலத்து அடியார்களை நோக்கி கேள்வியாக கேட்கும் பாடல். இங்கே பிச்சை கொள் உத்தமன் என்று கூறுகின்றார். பலரும் தன்னைப் பழிப்பதையும் பொருட் படுத்தாமல், பக்குவம் அடைந்த உயிர்களுக்கு வீடுபேறு அளித்து உய்விக்கும் வண்ணம் தொடர்ந்து பிச்சை ஏற்கும் பெருமானை மிகவும் பொருத்தமாக உத்தமன் என்று அழைக்கின்றார்.

வார்கொண் மென் முலையாள் ஒரு பாகமா

ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்

சீர்கொண் மாடங்கள் சூழ் திருவாரூரான்

ஆர்கணா எனை அஞ்சல் எனாததே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.56.5), இறைவன் ஒவ்வொரு நாளும் பலி ஏற்கின்றான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பக்குவப்பட்ட உயிர்கள் இருக்குமிடத்தை நாடிச் செல்கின்ற பெருமான், தானே அவர்களைச் சென்றடைந்து அவர்களை இடுமின் பலி என்று கேட்டு பலி ஏற்பதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த தன்மை பலியேற்பதில் பெருமானுக்கு உள்ள ஆர்வத்தினை வெளிப்படுத்துகின்றது.

நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு

அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல

இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்

பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே

பெருமானுக்கு நாம் இடும் பலி, அறம் வேண்டி (புண்ணியம் கருதி) இடப்படுவதால் இதனை அறப்பலி என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் கூறும் பாடல்(3.63.9) செங்காட்டங்குடி தலத்து பதிகத்தில் உள்ளது. இந்த பாடல் அகத்துறை வகையில் அமைந்த பாடல். நறவு=தேன் நறப்பொலி=தேன் நிறைந்த;நவில்-வாழ்கின்ற; குருகு=பறவை; உழல்வார்=திரிபவர்; அலர்=பழிச்சொல்; தான் பழிச்சொல்லுக்கு ஆளாகும் வகையில் பெருமான் தன்னுடன் இணையாமல்இருப்பது பெருமானுக்கு அழகா என்ற கேள்வியை இந்த பாடலில் தலைவி எழுப்புகின்றாள். தான் பெருமானிடம் ஆழமான காதல் கொண்டிருப்பதைஅனைவரும் அறிந்த நிலையில், தான் பெருமானுடன் இணையாமல் இருந்தால் ஊரார் தன்னை தூற்றுவார்கள் என்றும் அந்த நிலை ஏற்படும் முன்னமேபெருமான் தனது காதலை ஏற்றுக்கொண்டு பெருமான், தன்னை அவனுடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று சம்பந்த நாயகியின் கூற்றாக அமைந்தபாடல் இது. பிறப்பிலியாகிய பெருமானின் நாமத்தை எப்போதும் பிதற்றும் தான் பெருமைக்குரிய நலன்களை இழப்பது தகுமா என்று தலைவி இறைவனைநோக்கி கேட்பதாக அமைந்த பாடல். இந்த பாடலின் உட்கருத்து, தலைவியாக உருவகப்படுத்தப்பட்டுள்ள உயிர், பெருமானுடன் தான் இணைய வேண்டும்என்ற தனது விருப்பத்தை வெளியிடுகின்றது.

நறப்பொலி பூங்கழிக் கான் நவில் குருகே உலகெல்லாம்

அறப்பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே

சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய

பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ எம் பெருநலமே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.76.4) ஞானசம்பந்தர் பல ஊர்கள் சென்று பிச்சையெடுத்து உண்பதில் மிகுந்த விருப்பம் உடையவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். மிசைத்து=மேலதாக; தடவி=பூசி; பல வேறு திசைகளிலிருந்து வந்த வெளி நாட்டவர்கள், இனிய தமிழ் மொழியில் பேசும் இளம் மாதர்களுடன் உரையாடும் நோக்கத்துடன், தமிழ்ச் சொற்களை கற்றுக் கொள்கின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் .

நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி வந்து இடபமே

ஏறி உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதியாம்

ஊறு பொருள் இன்தமிழின் இயல் கிளவி தேரும் மடமாதர் உடனார்

வேறுதிசை ஆடவர்கள் கூற விசை தேரும் எழில் வேதவனமே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.6) மாதொரு பாகனாக விளங்கும் தோற்றத்துடன், பிச்சை இடுவீராக என்று பல இல்லங்கள் சென்று பெருமான் பலியேற்கின்றார் என்று கூறுகின்றார். கருமான்=கரிய உருவம் கொண்ட விலங்கு, யானை; ஐயம்=பிச்சை; மட மங்கை=இளமை பொருந்திய உமையன்னை; வையம்=உலகத்தில்; விலை மாறிடினும்=பஞ்சத்தின் காரணமாக பண்டங்களின் விலை கூடிய போதிலும்; வெய்ய=கொடிய;தண் புலவர்=இனிய சொற்களை உடைய புலவர்கள்; கடுமையான சொற்களை நெருப்புக்கு ஒப்பிட்டு வெய்ய என்று கூறிய ஞானசம்பந்தர், இனிய மொழிகளை குளிர்ந்த சொற்கள் என்று குறிப்பிடும் நயத்தை நாம் உணரலாம். தலத்து மாந்தர்களின் கொடைத் தன்மை இந்த பாடலில் எடுத்துரைக்கப் படுகின்றது. பஞ்சத்தின் காரணமாக பொருட்களின் விலை கூடினும், பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படினும், இல்லையெனாது இனிய மொழிகள் கூறி புலவர்களுக்கு உதவி செய்யும் தன்மையர் என்று இந்த தலத்து மக்களை குறிப்பிடுகின்றார். பெருமான் திருநீற்றினைப் பூசிக் கொண்டுள்ள தன்மை, தான் ஒருவனே என்றும் அழியாத உண்மையான மெய்ப்பொருள் என்பதை உயிர்களுக்கு உணர்த்துகின்றது. கருமை நிறம் கொண்ட யானையின் தோலைக் கிழித்த செய்கை, உயிர்களை அறியாமையில் ஆழ்த்தும் அஞ்ஞானத்தை, அறியாமை எனப்படும் ஆணவ மலத்தினைக் கிழிக்கும் பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றது. தேவி உடனிருக்கும் தன்மை, உயிர்களுக்கு அருள் வழங்கவும் ஞானம் அளிக்கவும் பெருமான் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துகின்றது. தேவி ஞான வடிவாகவும் அருள் வடிவாகவும் இருப்பவள் அல்லவா. இந்த வாய்ப்பினை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று,தானே ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று பெருமான் உணர்த்தும் பொருட்டு பலியேற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் அறிவுறுத்தும் பாடல் இது. இந்த செயல் உயிர்கள் பால் இறைவன் வைத்துள்ள கருணையை உணர்த்துகின்றது.

செய்ய திருமேனி மிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து

ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடமாம்

வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவிலாத வகையார்

வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே

தான் ஏந்தியுள்ள ஓட்டினில் அளிக்கப்படும் பிச்சையை மிகவும் இனியது என்று மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று வீழிமிழலை பதிகத்து பாடலில் (3.85.10) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் பிச்சையேற்கும் நோக்கத்தினை அறியாத சமணர்களும் புத்தர்களும், அவரது பெருமையை அறியாதவர்களாக இருப்பதால் பெருமானை தூற்றுகின்றனர் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். இச்சையர்=விருப்பமுடையவர்; மொச்சைய=நீராடுவதை தவிர்ப்பதால் துர்நாற்றம் வீசும் உடலினை உடையவர்; விச்சை=வித்தை செய்பவர்;

இச்சையர் இனிது என இடுபலி படுதலை மகிழ்வதோர்

பிச்சையர் பெருமையை இறை பொழுது அறிவென உணர்விலர்

மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்

விச்சையர் உறைவது விரைகமழ் பொழில் வீழி மிழலையே

திரு வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.2) திருஞானசம்பந்தர் மிகுந்த விருப்பத்துடன் பலியேற்பவர் பெருமான் என்று கூறுகின்றார். பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, பெருமானைச் சென்றடைந்து, என்றும் அழியாத நிலையான ஆனந்தத்தில் திளைக்கவேண்டும் என்று உயிர்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள மலங்களை முற்றிலும் கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருமான் கொண்டுள்ள விருப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் தான், பக்குவமடைந்த உயிர்கள் தன்னைத் தேடிவரும் வரையில் காத்திராமல், தானே அந்த உயிர்கள் இருக்கும் இடம் சென்றடைந்து, அந்த உயிர்களின் மலங்களை, பிச்சையாக ஏற்றுக் கொள்ள, மிகுந்த துடிப்புடன் பெருமான் செயல்படுகின்றார். நம்மில் பெரும்பாலோர் இதனை உணர்வதில்லை.

காரணி வெள்ளை மதியம் சூடிக் கமழ்புன் சடை தன்மேல்

தாரணி கொன்றையும் தன்னெருக்கும் தழைய நுழைவித்து

வாரணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்

ஊரணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (4.41.3) அப்பர் பிரான், செல்வராக உள்ள பெருமான், பற்கள் இல்லாத வெண்தலையினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். கல்=மேரு மலை; மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. இலம்=இல்லம் என்பதன் திரிபு.சொல்=வேதங்கள்: வேதங்களில் காணப்படும் சொல்லாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் உள்ள தன்மை

கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே

எல்லியும் பகலும் முன்னே ஏகாந்தமாக ஏத்தும்

பல்லில் வெண்தலை கையேந்திப் பல் இலம் திரியும் செல்வர்

சொல்லு நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத்துறையனாரே

உயிர்களுக்கு இருக்கும் தான் என்ற அகந்தையை கழிக்கும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார் என்று அப்பர் பெருமான் சொல்லும் பாடலை (4.53.6) நாம்இங்கே காண்போம். பெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்று தெளிவு படுத்தும் அப்பர் பிரான், நகைச்சுவையாக பெருமானதுஉணவு எது என்பதை குறிப்பிடுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம். நஞ்சு தான் அவர் விரும்பி உண்ணும் உணவு என்று இங்கே கூறுகின்றார்.பொதுவாக பிச்சை ஏற்பவர் பெறும் பயன், பிச்சை இடுவோர் பெறும் பயனை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் சிவபெருமான் பிச்சை ஏற்பது, தான் பயன் அடைவதற்காக அல்ல. அவருக்கு பிச்சை இடுவோர்கள் தங்களது அகங்காரம் (மலங்கள்) அழியப் பெற்று நலம் பெறுவதற்குத் தான். பிச்சை ஏற்கும் பெருமான் உண்பது நஞ்சு என்று பாடலின் மூன்றாவது அடியில் கூறும் அப்பர் பிரான், சிவபெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும் தெளிவு படுத்துவதை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் குறிப்பிடப்படும் பிச்சை ஏற்கும் நிகழ்ச்சியை, தாருகவனத்து நிகழ்ச்சியாக கருதி, தாருகவனத்து மகளிரின் கர்வமும், பெண்மைக்குரிய நாணம் என்ற இயல்பும் ஒழிந்து போகுமாறு, சிவபெருமான் பிச்சைப் பெருமானாக வலம் வந்தார் என்றும் விளக்கம் அளிப்பதும் பொருத்தமே. தானகம் என்ற சொல்லினை தான் அகம் என்று பிரித்து, அடியார்களது அகங்காரம் அழியும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார் என்பதை உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

வானகம் விளங்க மல்கும் வளம்கெழு மதியம் சூடித்

தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்

ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்

ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.58.1) அப்பர் பிரான், உமை அன்னையுடன் ஒன்றியவராக சிவபெருமான் ஊர் பலி ஏற்கச் சென்றார் என்று கூறுகின்றார். கன்றினார்=பகைத்தவர்; நின்றதோர் உருவம்=பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற கோலம்; நீர்மை=வலிமை; நிறை=கற்பு;பிச்சைப் பெருமானாக, தங்களது இல்லத்தின் வாயின் முன்னே நின்று பலியேற்ற பெருமானின் அழகினைக் கண்ட தாருகவனத்து மாதர்களின் கற்பு நிலை குன்றியது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தங்களது மனைவியரின் கற்பு தாருகவனத்து முனிவர்களுக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. அந்த கற்புநிலை குன்றிய பின்னர் அவர்களது வலிமையையும் குறைந்தது என்று இங்கே கூறுகின்றார்.

கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரியாகச் சீறி

நின்றதோர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு

ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும்

பன்றிப் பின் வேடராகிப் பருப்பதம் நோக்கினாரே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.58.8) அப்பர் பிரான், செல்வராகிய பெருமான் வெள்ளை விடையின் மீது ஏறியவராக பல இல்லங்கள் சென்று, தனது கையில் கபாலம் ஏந்தி பிச்சை கேட்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். பாரிடம்=பூதகணம்; பாணி செய்ய=தாளமிட;பிஞ்ஞகன்=அழகிய தலைக் கோலம் உடையவன். கார்=மேகம்; காருடைக் கண்டர்=மேகம் போன்று கரிய நிறத்தினை உடைய கழுத்தினைக் கொண்ட பெருமான்;

பேரிடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்

காருடைக் கண்டராகிக் கபாலம் ஓர் கையில் ஏந்திச்

சீருடைச் செங்கண் வெள்ளேறு ஏறிய செல்வர் நல்ல

பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே

பெருமான் பிச்சை ஏற்பது, தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை பெருமான் ஏற்றுள்ளப் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு கழித்துக் கொண்டு தாங்கள் முக்தியுலகம் செல்வதற்கு தகுந்தவர்களாக தங்களை மாற்றிக் கொள்ளும் பொருட்டு என்பதும் பல திருமுறை பாடல்களில் கூறப்படுகின்றது. பல இல்லங்கள் சென்று ஐயம் ஏற்ற பெருமான், அந்த பிச்சையை எப்போதும் உண்டதில்லை என்றும்,பெருமான் உண்டது நஞ்சு தான் என்றும் நகைச்சுவையாக அப்பர் பிரான் கூறும் பாடல் (4.65.5), திருவாலவாய் (மதுரை) தலத்தின் மீது அருளியது. தனது வாழ்க்கையின் முற்பகுதியில் சிவபிரானை நினைக்காது, அப்பர் பிரான், தான் சமண சமயம் சார்ந்திருந்ததை எண்ணி வருத்தம் தெரிவிக்கும் பாடல் இது.பளகு என்றால் குற்றம் என்று பொருள். சமண சமயம் சார்ந்திருந்ததை குற்றம் என்று ஒப்புக்கொண்டு அப்பர் பிரான் இறைஞ்சுகின்றார். அவ்வாறு இருந்ததற்காக சிவபெருமான் தன்னை புறக்கணித்து விட்டு அருள் செய்யாமல் இருக்கக் கூடாது என்ற வேண்டுகோள் தொனிக்கும் பாடல்.

வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்

உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்

பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளமது ஆர

அண்டனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

திருவண்ணாமலை தலத்து பதிகத்தின் பாடலில் (5.5.1), இட்டமாக இரந்து உண்பவன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று கூறுவார்கள். இலம்=இல்லம்: இல்லம் என்ற சொல்லின் இடைக்குறை, எவராலும் அடக்க முடியாத காளையினை வாகனமாகக் கொண்டு, அதன் மீது ஏறி, தனது விருப்பம் போல் பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்று உண்பவனாகிய சிவபெருமான் அட்டமூர்த்தியாக விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். .

பட்டி ஏறுகந்தேறி பல இலம்

இட்டமாக இரந்து உண்டு உழிதரும்

அட்டமூர்த்தி அண்ணாமலை கை தொழ

கெட்டுப் போம் வினை கேடில்லை காண்மினே

செம்பொன்பள்ளி பதிகத்தின் முதல் பாடலில் (5.36.1) பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாமல் பலி ஏற்கின்றான் என்று நமக்கு அப்பர் பிரான்உணர்த்துகின்றார். கான்=நறுமணம்: வெண் தலை=தசை நீங்காத தலை; அறாத=நீங்காத

கான் அறாத கடி பொழில் வண்டினம்

தேன் அறாத திருச்செம்பொன்பள்ளியான்

ஊன் அறாததோர் வெண் தலையில் பலி

தான் அறாததோர் கொள்கையன் காண்மினே

பெருமான் பலி ஏற்க வருவதையோ அவனது கையில் இருக்கும் பாத்திரத்தையோ நாம் இகழலாகாது என்பதை உணர்த்தும் வண்ணம் அருவருக்கத் தகாதவெண்தலை என்று செம்பொன்பள்ளி குறுந்தொகை பாடலில் (5.36.4) அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபிரானுடன் தொடர்பு கொண்ட காரணத்தினால்,விலை மதிப்பில்லாத தன்மையை மண்டையோடு பெறுகின்றது. மேலும் உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை அந்தமண்டையோட்டில் இட்டு உய்வினை அடைவதற்கு உதவுதலால், நாம் அந்த மண்டையோட்டினை மற்ற மண்டையோடு போன்றது என்று கருதி வெறுக்கக்கூடாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து, பெருமான் மண்டையோட்டினை ஏந்தி திரியும் நோக்கத்தைஉணர்ந்துகொண்டு, நமது மூன்று வகையான மலங்களையும் அவரது உண்கலத்தில் இட்டு நாம் உய்வினை அடையவேண்டும் என்பதே ஆகும். இவ்வாறு பலிஏற்கும் போதும், அன்னையை விட்டு பிரியாமல் இருக்கின்றார் என்பதை உணர்த்தும் வண்ணம் இருவராய் இடுவார் கடை தேடுவார் என்று பெருமானைகுறிப்பிடுகின்றார். மேலும் பெருமான் புரியும் இந்த செயல் உயிர்கள் பால் கருணை கொண்டு செய்யப்படும் ஒப்பற்ற செயல் என்பதை உணர்த்தும் வண்ணம்,ஒப்பற்றவராகிய பெருமான் பல திருநாமங்கள் கொண்டவர் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார.

அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து

இருவராய் இடுவார் கடை தேடுவார்

தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்

ஒருவர் தாம் பல பேருளர் காண்மினே

தான் ஏந்தியுள்ள மண்டையோட்டினில் மற்றவர்கள் அளித்த பிச்சையினை ஏற்றுக் கொள்வதை மிகவும் விரும்பும் பெருமான் என்று அப்பர் பிரான்,திருவதிகை வீரட்டம் மீது அருளிய பதிகம் ஒன்றில் (6.5.2) குறிப்பிடுகின்றார். மிடறு=கழுத்து: உள்குதல்=மனதினில் நினைந்து உருகுதல்;ஓட்டகம்=ஓடு+அகம்; ஓடு=மண்டையோடு அகம்=உள்ளே; ஊண்=உணவு

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல்லூழி ஆய படைத்தாய் போற்றி

ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி

காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி

ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி

ஓட்டகத்தே ஊணாக உகந்தார் என்று திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (6.28.4) ஒன்றிலும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.ஊண்=உணவு; நடை பலவும்=நடைபயில வேண்டிய நெறிகள்; காமரம்=சீகாமரம்; நாட்டகத்தே நடை பலவும் பயின்றார் என்பதற்கு, ஆறு வேறுவேறு சமயங்களை, அவரவர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப படைத்தவர் சிவபெருமான் என்று கூறுவதாக விளக்கம் அளிப்பதும் பொருத்தமே. ஆறு ஒன்றிய சமயங்கள்=சிவபெருமான் ஒருவரையே பரம்பொருள் என்று வழிபடுவதில் ஒத்திருந்தாலும் தங்களுக்கு சிறிய வேறுபாடுகள் பல கொண்ட ஆறு அகச் சமயங்கள், பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமனம், பைரவம் மற்றும் சைவம்.

ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்

நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்

காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடித் திரிவார் போலும்

ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே

உயிர்களை உய்விக்கும் நோக்கத்துடன் பெருமான் பலி ஏற்க வந்தாலும், அந்த வாய்ப்பினை ஒரு சிலரே பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதால் சிலர் மட்டும் இடும் பலி என்பதை உணர்த்தும் வண்ணம் சில்பலி என்று அப்பர் பிரான் குறிப்படும் பாடலை (6.59.7) நாம் இங்கே காண்போம். மட்டு=தேன்;மட்டிலங்கு=தேன் நிறைந்த; மடவாள்=அழகிய பெண், பார்வதி தேவி; சிட்டம் என்றால் ஞானம் என்று பொருள். சிட்டம் என்ற சொல் சிட்டு என்று இங்கே திரிந்தது. மிகவும் குறைவான ஒரு சிலரே தங்களது மலங்களை பிச்சையாக இட்டாலும், அதனைப் பெறுவதற்காக ஊரூராகத் திரிபவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

மட்டிலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்திச்

சிட்டிலங்கு வேடத்தராகி நாளும் சில் பலிக்கு என்று ஊரூர் திரிதர்வாரும்

கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த காலன் தன் காலம் அறுப்பார் தாமும்

விட்டிலங்கும் வெண்குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.4) வெட்கமோ தயக்கமோ கொள்ளாமல், வாய் திறந்த நிலையில் சிரிப்பது போன்று தோன்றும் மண்டையோட்டினை கையில் ஏந்தியவாறு விருப்பத்துடன் பிச்சையேற்கச் செல்பவன் என்று, பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உயிர்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்திற்காக பிச்சை எடுப்பவன், எதற்காக வெட்கம் அடையவேண்டும், தயக்கம் கொள்ளவேண்டும், மாறாக பெருமை தானே கொள்ள வேண்டும். அதனால் தான், நாணாது நகுதலை ஊண் நயந்தான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நற்றவன்=மென்மையான தவத்தினை செய்பவன்; முந்நீர்=கடல்

நற்றவனைப் புற்றரவ நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான் தன்னை

முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான் தன்னைப்

பற்றவனைப் பற்றார் தம் பதிகள் செற்ற படையானை அடைவார் தம் பாவம் போக்க

கற்றவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (6.63.8) அப்பர் பிரான், பிச்சையே இச்சிப்பான் என்று குறிப்பிட்டு, பெருமான் மிகுந்த விருப்பத்துடன் பிச்சை எடுப்பதாக குறிப்பிடுகின்றார். ஏற்பது இகழ்ச்சி என்பது தானே முதியோர்களின் மொழி. உலகத்தவர்கள் ஏற்கும் பிச்சையிலிருந்து மாறுபட்டது,இறைவன் ஏற்கும் பிச்சை என்பதை நாம் உணரவேண்டும். உலகத்தவர்கள் தங்களது தேவைக்கு பிச்சை எடுக்கின்றனர். ஆனால் இறைவனோ,உலகத்தவர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை பெருமான் ஏந்தியுள்ள ஓட்டினில் பிச்சையாக அளித்து வாழ்வினில் உய்வினை பெரும் வண்ணம் பிச்சை ஏற்றுத் திரிகின்றான். உலகத்தவர்கள் மாயையிலிருந்து விடுபட்டு, தனது சேவடிகளை வந்தடைந்து முக்தி பெற வேண்டும் என்ற விருப்பத்தினால் பிச்சை ஏற்கின்றான். தாங்கள் உய்வினை அடையவேண்டும் என்று உயிர்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் உய்வினை அடையவேண்டும் என்ற பெருமானின் விருப்பம் மிகவும் அதிகம். எனவே தான் இச்சையுடன் பிச்சை ஏற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

மகிழ்ந்தானைக் கச்சி ஏகம்பன் தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்திப்

புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானைப் பூதகணப் படையானைப் புறங்காட்டு ஆடல்

உகந்தானைப் பிச்சையே இச்சிப்பானை ஒண் பவளத் திரளை என் உள்ளத்துள்ளே

திகழ்ந்தானைத் திருவானைக்கா உளானை செழுநீர் திரளைச் சென்று ஆடினேனே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.68.6) அப்பர் பிரான் கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் பெருமான் என குறிப்பிடுகின்றார். கழல் என்று பெருமான் அணியும் வீரக்கழலும் கைவளை என்று பிராட்டி அணியும் வளையல்களும் குறிப்பிடப்பட்டு, மாதொருபாகனாக பெருமான் பலிக்கு சென்ற கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்:கடை=கடைவாயில், வாயிற்படி; இந்த பாடலில் ஆகாயத்தின் பண்பு ஒலி என்பதை குறிப்பிடும் வண்ணம் விண்ணொலி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆகாயத்தின் பண்பு ஒலி எனப்படும் குணம் ஒன்று தான். காற்று ஒலி மற்றும் ஊறு ஆகிய இரண்டு பண்புகளையும், தீ ஒலி, ஊறு மற்றும் உருவம் ஆகிய மூன்று பண்புகளையும், தண்ணீர் ஒலி ஊறு உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளையும் நிலம் ஒலி ஊறு உருவம் சுவை மற்றும் வாசனை ஆகிய ஐந்து பண்புகளையும் உடைத்ததாக விளங்குகின்றன.

புகழொளியை புரம் எரித்த புனிதன் தன்னைப் பொன்பொதிந்த மேனியானைப் புராணன் தன்னை

விழவொலியும் விண்ணொலியும் ஆனான் தன்னை வெண்காடுமேவிய விகிர்தன்தன்னைக்

கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் கடைதோறும் இடுபிச்சைக்கு என்றுசெல்லும்

திகழொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

பெருமான் இடும் பணியை தங்களது தலையால் செய்வதற்கு எண்ணற்ற தேவர்களும், பூத கணங்களும் காத்துக் கொண்டு இருக்கையில், பெருமான் தானே பலி ஏற்கச் செல்கின்றார் என்று அப்பர் பிரான் கஞ்சனூர் தலத்து பதிகத்தில் (6.90.7) கூறுகின்றார். அடியார்கள் தான் ஏந்திச் செல்லும் பிச்சைப் பாத்திரத்தில் தங்களுடைய மலங்களை பிச்சையாக இட்டால் அதனை ஏற்று அவர்களை உய்விக்கும் திறன் படைத்தவன் அவன் ஒருவன் தான் என்பதால்,இந்த பணிக்கு வேறு எவரையும் நியமிக்காமல் தானே இறைவன் செல்கின்றான் என்பது பெரியோர்களின் விளக்கம். இந்த செய்கை உயிர்களின் பால் பெருமான் கொண்டுள்ள கருணையினையும், உயிர்கள் தங்களது மலங்களைக் களைந்து வீடுபேறு பதவியைப் பெற்று நிலையான இன்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்பதில் பெருமான் கொண்டுள்ள அக்கறையினையும் வெளிப் படுத்துகின்றது. பெருமான் பலியேற்க வருவதை நமது ஊனக் கண்களால் நாம் காணமுடியாது. எனவே, நாம் இடவிருக்கும் பலியினை ஏற்றுக் கொள்வதற்கு, அவர் நம்மைத் தேடி வருவதாக நாம் கற்பனை செய்து கொண்டு, யான் எனது என்ற செருக்கினையும், நம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் அவனது திருப்பாதங்களில் சமர்ப்பித்து, உய்வினை அடைவோமாக.

நாரணனும் நான்முகனும் அறியாதானை நால்வேதத்து உருவானை நம்பி தன்னைப்

பாரிடங்கள் பணி செய்யப் பலி கொண்டு உண்ணும் பால்வணனைத் தீவணனைப் பகல் ஆனானை

வார் பொதியும் முலையாள் ஓர் கூறன் தன்னை மான் இடம் கை உடையானை மலிவார் கண்டம்

கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.6) சுந்தரர், பிராட்டியுடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கூறுபட்ட கொடியும் நீரும் என்று சுந்தரர் குறிப்பிடுவதால், மாதொருபாகன் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக உணர்த்துகின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானை காட்டு யானை என்பதை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். மாறுபட்ட=பெருமானை எதிர்த்து வந்த தன்மை சொல்லப் படுகின்றது. தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்ற பின்னர் அந்த யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட போதிலும் தனது உடலுக்கு எந்த விதமான கேடும் அடையாதிருந்த ஆற்றலை உடைய பெருமானின் தன்மைக்கு, பிறர் இடுகின்ற பிச்சையை நாடி அவர்களது இல்லத்திற்கு செல்லுதல், பெருமானின் பெருமைக்கு தகுந்த செயல் அல்ல என்று கூறுகின்றார்.

மாறுபட்ட வனத்தகத்தின் மருவ வந்த வன்களிற்றைப்

பீறி இட்டமாகப் போர்த்தீர் பெய்பலிக்கு என்று இல்லம் தோறும்

கூறு பட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி

வேறுபட்டுத் திரிவதென்னே வேலை சூழ் வெண்காடனீரே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.19.7) சுந்தரர், பெருமானை, தலை ஓட்டில் பொருந்துகின்ற பிச்சையை வேண்டி இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மை உடைய செல்வர் என்று கூறுகின்றார்,

தலையிடையார் பலி சென்று அகந்தோறும் திரிந்த செல்வர்

மலையுடையாள் ஒரு பாகம் வைத்தார் கல் துதைந்த நன்னீர்

அலையுடையார் சடை எட்டும் சுழல அருநடம் செய்

நிலையுடையார் உறையும் இடமாம் திருநின்றியூரே

தனது மனைவியுடன் பலி ஏற்கச் சென்றதாக சிவபெருமானை குறிப்பிடும் ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரானின் பாடல்கள் நமக்கு, சுந்தரரின் பைஞ்ஞீலி பதிகத்துப் பாடல் ஒன்றினை (7.36.5) நினைவூட்டுகின்றன. இந்த பதிகம் தாருகவனத்து மகளிர் கூற்றாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம் என்று கூறுவார்கள். பெருமானுக்கு பிச்சை இடுவதற்காக வந்த ஒரு பெண், பெருமானின் திருமேனியில் வெண்முத்து போன்று பிரகாசிக்கும் திருநீற்றினைக் கண்டு வியக்கின்றாள். பெருமானின் திருமேனியை உற்று நோக்கிய அவளுக்கு, பெருமானின் இடது பாகத்தில் நீண்ட கண்களோடும் காணப்படும் உமை அம்மை கண்ணில் தெரிகின்றாள். அவளுக்கு உடனே கோபம் வருகின்றது. என்ன துணிச்சல் இருந்தால், தனது உடலில் ஒரு பெண்ணினை வைத்திருக்கும் கோலத்தோடு பிச்சை கேட்க பெருமான் தனது இல்லத்திற்கு வருவார் என்று எண்ணுகின்றாள். அந்த கோபம் பாடலாக வெளிப்படுகின்றது. பெருமானே நாங்கள் உமக்கு பலியிட மாட்டோம், நீர் இந்த விடத்தை விட்டு அகன்று செல்லலாம் என்று கூறுகின்றாள். அவ்வாறு சொன்ன பின்னர் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்றுகின்றது. தனது உடலில் ஒரு பெண்கொடியை கொண்டுள்ள பெருமான் சடையிலும் கங்கையை வைத்துள்ளாரோ என்பது தான் அந்த சந்தேகம். கங்கை ஆற்றினை உமது சடையில் சூடியவாறு வந்தீரோ, சொல்வீராக என்று பெருமானை வினவுகின்றாள். பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்மணிகள், அவர் இரண்டு மனைவியருடன் இருப்பதால் கோபம் கொண்டு பிச்சை இட மாட்டோம் என்று சொன்னதாக, சுவையான கற்பனை செய்த பாடல்.

நீறு நும் திருமேனி நித்திலம் நீள் நெடுங் கண்ணினாளொடும்

கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடகிலோம் பலி நடமினோ

பாறு வெண்தலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்

ஆறு தாங்கிய சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே

கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.41.2) சுந்தரர், பசியால் வருந்திய தனக்கு, ஒரு அந்தணர் வேடம் தரித்தவராக பல இல்லங்கள் சென்று உணவினை பிச்சையாக கேட்டு வாங்கி வந்து தனக்கு அளித்த பெருமானின் கருணைச் செயலை நினைவு கூர்ந்த சுந்தரர், பிச்சைப் பெருமானின் திருக்கோலத்தை இந்த பாடலில் வடித்து மகிழ்கின்றார். தனது கால்களில் அணிந்திருந்த கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் சென்ற பெருமான் என்று குறிப்பிட்டு, மாதொருபாகனாக பெருமான் பலியேற்கச் சென்ற தன்மை குறிப்பிடப் படுகின்றது.

கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்று

உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே

இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்

அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.46.6) பெருமான் பலி ஏற்பதையும், நஞ்சு உண்டதையும் மிகவும் நயமாக இணைத்து,பெருமானின் எல்லையற்ற கருணையை குறிப்பிட்டு, தனது கோரிக்கையை சுந்தரர் பெருமானிடம் சமர்பிக்கும் பாங்கினை நாம் உணரலாம்.இலவ=இலவம்பூ; பஞ்சு போன்று மென்மையான இதழ்கள் உடைய அன்னை என்று கூறுகின்றார். கலவ மயில்=தோகை உடைய மயில்; பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமான், தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்கி நஞ்சினையும் உட்கொண்டார் என்று கூறுகின்றார். தன்னிடும் முறையிடும் அடியார்களின் வேண்டுகோளைக் கேட்ட பின்னர், அவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்க இயலாத பெருமான், தனக்கு பட்டாடைகளும் வாசனைப் பொருட்களும் தாராமல் இருப்பது தவறன்றோ என்று சுந்தரர் முறையிடும் பாடல். எச்சும் போது= உச்சி வேளை, நண்பகல்; பிராட்டியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு எருது ஏறியவராக வேத கீதங்களைப் பாடிக் கொண்டு பலரும் இடுகின்ற பிச்சையை ஏற்பதற்காக பெருமான் உச்சிப் போதினில் பல இல்லங்கள் சென்றார் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார்.

இலவ இதழ் உமையோடு எருது ஏறிப் பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சும் போது

பல அகம் புக்கு உழிதர்வீர் பத்தோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ

உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச் செய்தது உமக்கு இருக்கொண்ணாது இடவே

கலவ மயில் இயலவர்கள் நடமாடும் செல்வக் கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.57.2) சுந்தரர், பிச்சை ஏற்கும் தொழிலை காதலித்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

படைக்கண் சூலம் பயில வல்லானைப் பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானைக்

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானைக் காமன் ஆகம் தனை கட்டழித்தானைச்

சடைக்கண் கங்கையை தாழவைத்தானைத் தண்ணீர் மண்ணிகரையானைத் தக்கானை

மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.77.7) மலை மங்கையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்ட தோற்றத்துடன் உலகத்தின் பல இடங்களிலும் திரிந்து பெருமான் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். ஒருபால்=ஒரு பாகத்தில்; சிலை=கல், இங்கே மேருமலை;எயில்=கோட்டை; பறக்கும் மூன்று கோட்டைகள்; தீர்த்தன்=உயிர்களின் பாவங்களை நீக்கி புனிதமாக்குபவன்;

மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்

சிலைக் கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய் தீர்த்தன் நீ

மலைக் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு

அழைக்கும் திரைக் காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகேளோ

கூடலையாற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.85.3) சுந்தரர், ஊர்தொறும் சென்று, தான் வைத்திருந்த பிரம கபாலத்தில் பலி இடுவீர்களாக என்று கேட்ட பெருமான், தன்னுடன் பார்வதி தேவியையும் அழைத்துக் கொண்டு மழுப்படை ஏந்தியவராக சென்றார் என்று கூறுகின்றார்.ஆர்வன்=பேரன்பு உடையவன்; திருமுதுகுன்றம் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக, முதுகுன்றம் செல்வதற்கான வழி யாது என்று சுந்தரர், தனக்கு எதிர்ப்பட்ட ஒரு முதியவரிடம் வினவ, அந்த முதியவரோ தானும் அந்த வழியில் செல்வதாக உணர்த்தி, வேண்டுமென்றே கூடலையாற்றூர் அழைத்து வந்ததை குறிப்பிட்டு, அவ்வாறு தன்னுடன் வந்த அந்தணர் பெருமான் தான் என்பதை உணராமல் இருந்த பேதையேன் என்று தன்னை சுந்தரர் குறிப்பிடுகின்றார்.எனவே தான், தன்னுடன் நடந்து வந்த பெருமானின் செயலை அதிசயம் என்று இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் சுந்தரர் கூறுகின்றார். சுந்தரர் தனது வாழ்க்கையில், ஐந்து வேறு வேறு தருணங்களில் பெருமான் தனது முன்னே தோன்றியதை, முதலில் புரிந்து கொள்ளாமல் இருந்தார் என்பதை பெரியபுராணம் நமக்கு உணர்த்துகின்றது. முதியவராக வந்து அடிமை ஓலையை காட்டி நடக்கவிருந்த திருமணத்தை தடுத்தது, திருவதிகை சித்தவடம் மடத்தில் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தின் மீது தனது காலை படுமாறு வைத்தது, குருகாவூர் வெள்ளடை செல்லும் வழியில் பந்தரின் கீழே அமர்ந்து தயிர் சாதமும் குளிர்ந்த நீரும் தந்து உபசரித்தது, கச்சூர் தலத்தினில் அருகில் இருந்த வீடுகளில் பிச்சை ஏற்று அந்த உணவினை சுந்தரருக்கு அளித்தது ஆகியவை மற்ற நான்கு நிகழ்ச்சிகள்;

ஊர்தொறும் வெண்டலை கொண்டு உண்பலி இடும் என்று

வார்தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே

கூர்நுனை மழுவேந்திக் கூடலையாற்றூரில்

ஆர்வன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே

கலன்=உண்கலன், ஓடு=பிரம கபாலம்; காடு=சுடுகாடு; உலகினில் உள்ள அனைத்துப் பொருட்களும் அழிந்த நிலையில், அனைத்து உடல்களிலிருந்தும் உயிர்கள் பிரிந்த நிலையில், உயிரற்ற உடல்களுடன் உலகமே ஒரு சுடுகாடாக காட்சி அளிக்கும் நிலையில், அழியாமல் எஞ்சி இருப்பவர் பெருமான் ஒருவரே. அந்த நிலையில் அனைத்து உயிர்களையும் இளைப்பாற்றி, அந்நாள் வரை எண்ணற்ற பிறவிகள் எடுத்து களைத்த உயிர்கள் ஒய்வு பெறுகின்ற நிலையை நினைத்து பெருமான் மகிழ்ச்சி அடைகின்றார். அந்த மகிழ்ச்சி நடனமாக வெளிப்படுகின்றது. இதனையே நள்ளிருளில் ஆடும் நட்டம் என்றும் காட்டினில் ஆடும் நடனம் என்றும் கூறுகின்றனர். இந்த தன்மையே காட்டில் வாழ்வதாகவும் பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. அம்பிகையின் திருநாமம் பெருநல முலையம்மை; அந்த திருநாமம் தான் வாடாமுலை அம்மை என்று சற்று மாற்றப் பட்டுள்ளது. ஈடு=பெருமை; உமை அன்னையுடன் சேர்ந்திருக்கும் பெருமான், பெருமையுடன் வீற்றிருப்பதாக இங்கே சொல்லப் படுகின்றது. தனது எண்ணங்கள் அனைத்தையும் செயலாக்கும் துணைவி இருப்பது, எவர்க்குமே பெருமை அளிக்கும் அல்லவா. மிகவும் எளியவனாக பல் இல்லங்கள் திரிந்து பிச்சை ஏற்பவனாகவும் காட்டினில் வாழ்பவனாகவும் தோற்றம் அளித்தாலும், பெருமானின் ஆற்றல் எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை என்பதை மிகவும் அழகாக ஞானகுருவாக பெருமான் விளங்கும் தன்மையை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

பிரமகபாலத்தைத் தனது உண்கலனாக ஏந்திய வண்ணம் ஊரூராகச் சென்று பிச்சை எடுத்து உண்பவனும், சுடுகாட்டினைத் தனது இடுப்பிடமாகக் கொண்டு வாழ்பவனும், கல்லால நிழல் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தவனும் ஆகிய பெருமான், என்றும் இளமையாக உள்ள மார்பகஙகளுடன் விளங்கும் உமை அன்னையுடன் மகிழ்ந்து பெருமையோடு வீற்றிருக்கும் இடம் இடைமருது தலமாகும்.

பாடல் 2:

தடங் கொண்டதோர் தாமரைப் பொன்முடி தன்மேல்

குடங் கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்தாட்டப்

படங் கொண்டதோர் பாம்பு அரை ஆர்த்த பரமன்

இடங் கொண்டிருந்தான் தன் இடைமருது ஈதோ

விளக்கம்:

தடம்=குளம்; இந்த பாடலில் பெருமான் தனது முடியின் மீது தாமரை மலர் அணிந்துள்ளதாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு பெருமானை தாமரை மலர் அணிந்தவனாக குறிப்பிடும் தேவாரப் பாடல்கள் மிகவும் அரிது. ஆக்கூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் அப்பர் பிரான் முடித் தாமரை அணிந்த மூர்த்தி என்று குறிப்பிடுகின்றார். கடித்தாமரை= நறுமணம் மிகுந்த தாமரை மலர்; கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் என்பதற்கு இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப்படுகின்றது; நறுமணம் மிகுந்த தாமரை மலர் போன்ற தனது கண்ணினை மலருக்கு பதிலாக திருமால் அர்ச்சனை செய்தபோது, அதனை ஏற்றவர் என்பது ஒரு பொருள். தாமரை மலர்கள் போன்ற கண்ணினை உடைய திருமாலாக இருந்து உலகினை காப்பவர் என்பது மற்றொரு பொருளாகும். இரண்டாவது பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளதாக தோன்றுகின்றது; கொடித்தாமரைக் காடே நாடும் தொண்டர்=மூலாதாரத்திலிருந்து, இதயம் வழியாக ஆறு ஆதாரங்கள் வழியாக குண்டலினி சக்தியை தலையின் உச்சிக்கும் மேல் அமைந்துள்ள சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபடும் தொண்டர்கள் என்று பெரிய புராணம் விளக்கம் புத்தகத்தில் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியம் விளக்கம் அளிக்கின்றார். கல்லலகு என்பது ஒரு வகையான இசைக்கருவி; கல்லலகு என்ற சொல்லுக்கு நேரத்தை குறிக்கும் அளவு என்ற பொருளும் பொருந்தும். கல்லலகு=கற்கப்படும் மாத்திரை அளவு; பாணி=கைகளால் இடப்படும் தாளம்; இடைப்பட்ட நேரத்தின் அளவு கெடாதவாறு தனது கைகளால் தாளம் இசைத்த வண்ணம் பாடல்கள் பாடும் வல்லமை படைத்தவர் பெருமான் என்பது மற்றொரு விளக்கமாகும்.

தொண்டர் குற்றவேல் என்பதற்கு தொண்டர்கள் செய்யும் குற்றேவல் என்றும் தொண்டர்களுக்கு பெருமான் செய்த குற்றேவல் என்றும் இரண்டு விதமாக பொருள் கூறப்படுகின்றது. தொண்டர்கள் தங்களை பெருமானுக்கு அடிமையாக கருதி திருத்தொண்டுகள் புரிவதையும், அத்தகைய தொண்டுகளை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அதற்கு பரிசாக மேலான முக்தி நிலையினை பெருமான் அளிப்பதையும் நாம் பெரிய புராணத்தில் கூறப்படும் பல நிகழ்ச்சிகளில் காண்கின்றோம். தனது அடியார்களின் பக்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், பெருமானும் அடியார்களுக்கு தொண்டனாக இருந்ததையும் பல அடியார்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகின்றது. சுந்தரருக்காக திருவாரூர் வீதிகளில் நடந்து சென்று பரவை நாச்சியாருடன் அவரை இணைத்தது, சுந்தரருக்கு உணவளிக்க வேண்டி திருக்கச்சூர் தலத்தில் பல இல்லங்களுக்கு சென்று உணவினை பிச்சையாக பெற்றது, குருகாவூர் வெள்ளடை தலம் சென்று கொண்டிருந்த சுந்தருக்காக பந்தல் அமைத்து பொதி சோறுடன் காத்து இருந்தது, மணிவாசகரின் பெருமையை பாண்டிய மன்னனுக்கு உணர்த்தும் வண்ணம் மன்னனிடம் பிரம்படி பெற்றது, மணிவாசகர் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று சொன்ன வாக்கினை காப்பாற்றும் பொருட்டு நரியை பரியாக்கி திருவிளையாடல் புரிந்தது, திருப்பைஞ்ஞீலி தலம் சென்று கொண்டிருந்த அப்பர் பிரானுக்கு தயிர்சோறும் குளிர்ந்த தண்ணீரும் அளித்தது ஆகிய பெருமானின் செயல்கள் நமது நினைவுக்கு வருகின்றன. முடித்தாமரை எனற தொடருக்கு, பிரளய காலத்தில் இறந்துபட்ட பிரமன், திருமால், இந்திரன் மற்றும் பல தேவர்களின் தலைகளை மாலையாகக் கோத்து தலைமாலையாக அணிந்த பெருமான் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. பெருமான் தாமரை மலர் அணிவதாக சொல்லப்படும் குறிப்புகள் மிகவும் அரிது என்பதால், மேற்கண்ட விளக்கமும் பொருத்தமாக தோன்றுகின்றது.

முடித்தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூவுலகும் தாமாகி நின்றார் போலும்

கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும்

கொடித்தாமரைக் காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்

அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

இந்த பாடலில் குடங்கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்தாட்ட என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சிவபெருமானை அபிஷேக பிரியர் என்று கூறுவார்கள். தேவார காலத்தில் அடியார்கள் திருக்கோயிலுக்க்குச் சென்றபோது நீரும் மலரும் சுமந்து சென்றதை நாம் தேவாரப் பாடல்களிலிருந்து அறிகின்றோம். இதனைக் குறிப்பிடும் சில பாடல்களை நாம் இங்கே காண்போம்.

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.2.10) அடியார்கள் இறைவனுக்கு சமர்பிக்க அன்றலர்ந்த புது மலர்களையும் நீரும் கொண்டு வந்து பெருமானின் திருமேனி மீது தூவுவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இத்தகைய தவத்தினைச் செய்யும் அடியார்கள் வானகம் எய்துவார்கள் என்றும் கூறுகின்றார். பெருமானைத் தொழுகின்ற அடியார்கள், சமணர்களும் சாக்கியர்களும் சொல்லும் வஞ்சகச் சொற்களை புறக்கணிப்பார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

செய் தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர் செப்பில் பொருளல்லாக்

கை தவத்தர் மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்

கொய்து பத்தர் மலரும்புனலும் கொடு தூவித்துதி செய்து

மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே

கீழைத் திருகாட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.5.7) திருஞானசம்பந்தர் பெருமானை மனதினில் தியானித்து, நீரும் மலரும் கொண்டு சென்று அவனது திருவடிகளில் சமர்ப்பித்து தொழும் தொண்டர்கள், தங்களுடன் பிணைந்திருந்த வலிமையான வினைகளையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களாக விளங்குவார்கள் என்று கூறுகின்றார். இந்த பாடலில், தலத்தின் உழவர்கள் செய்யும் செயலை நமக்கு உணர்த்துகின்றார். முடி=நாற்றுமுடிகள்; மோட்டுழவர்=வலிமையான உடல் கொண்ட உழவர்கள்; மோடு என்பதற்கு பெருமை என்று பொருள் கொண்டு,பெருமை படைத்த உழவர்கள் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற சிறப்பினைப் பெற்றது உழவுத் தொழில் அல்லவா. தருக்கு= தினவு; வலிமையான உடல் கொண்ட உழவர்களின் கைகள், வேலையேதும் செய்யாமல் இருந்ததால் தினவெடுப்பதாக, உழவர் குல மக்கள் உழைப்பாளிகளாக திகழ்ந்த தன்மையை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். கடி=உடைத்து; உடல் வலிமை உடைய உழவர்கள் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அந்த உழவர்கள் நாற்று முடிகளைத் தொடுவதாக, மிகவும் நளினமாக நாற்றினை அவர்கள் கையாள்வதாக இங்கே குறிப்பிடுகின்றார். வளர்ந்த நாற்றுகளை, நிலத்திலிருந்து எடுக்கும் போது, மிகவும் பக்குவமாக வேர் அறுபடாமல் எடுக்க வேண்டும். அதனை நன்கு உணர்ந்தவர்களாக உழவர்கள் விளங்கிய தன்மை, இங்கே கையினால் தொடும் என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. அருவினை=அருவமாக கண்ணுக்கு புலப்படாமல் உள்ள வினை. பொடியணி மேனியினானை உள்கி (மனம்) போதொடு நீர் சுமந்து (மெய்) ஏத்தி (மொழி) என்று மனம் மொழி மெய்யால் செய்யப்படும் வழிபாடு இங்கே உணர்த்தப் படுகின்றது.

முடி கையினால் தொடும் மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின் கட்டிக்

கடி கையினால் எறி காட்டுப்பள்ளி காதல் செய்தான் கரிதாய கண்டன்

பொடி அணி மேனியினானை உள்கிப் போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று

அடி கையினால் தொழவல்ல தொண்டர் அருவினையைத் துறந்து ஆட்செய்வாரே

புளமங்கை தலத்தின் மீது ப்திகத்தின் பாடலில் (1.16.7) திருஞானசம்பந்தர் பூவும் நீரும் கொண்டு தன்னைத் தொழுகின்ற அடியார்களுக்கு பெருமான் இனியவனாக இருப்பதாக கூறுகின்றார்.

முடியார்தரு சடைமேல் முளை இளவெண்மதி சூடிப்

பொடியாடிய திருமேனியர் பொழில் சூழ் புளமங்கை

கடியார் மலர் புனல் கொண்டு தன் கழலஎ தொழுது ஏத்தும்

அடியார் தமக்கு இனியான் இடம் ஆலந்துறை அதுவே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.21.4) நிறைந்த நீர் கொண்டு பெருமானை வழிபடவேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.சரியை முதலான நான்கு வழிபாட்டு முறைகளில், சரியை மற்றும் கிரியை வகையைச் சார்ந்த சில வழிபாட்டு முறைகளை இந்த பாடலில் குறிப்பிட்டு,அத்தகைய வழிபாடுகள் மூலம் அடியார்கள் மறுமையில் பெறவிருக்கும் பதவிகளை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அளறு என்றால் பொதுவாக சேற்றினை குறிக்கும். இங்கே சேறு போன்று அடர்ந்து காணப்படும் சந்தனக் குழம்பினை உணர்த்துகின்றது. நறைமலி தரும் அளறு=நறுமணத்தை மிகுதியாகக் கொண்டதும் சேறு போன்று அடர்த்தியாக காணப்படுவதும் ஆகிய சந்தனக் குழம்பு; முகை=மொட்டு; முகை நகுமலர்=மலராக விரிந்த மொட்டு,மொட்டு விரிந்து மலர்வதை சிரிப்பினுக்கு ஒப்பிடுகின்றார். புகை=தூபம்; புகை மிகு=மிகுதியான தூபங்கள்; வளரொளி=வரிசையாக உள்ள தீபங்கள்,வரிசையாக மிகவும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிவீசும் நிலை, வளர்ந்து கொண்டிருக்கும் ஒளி என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. நிறை புனல்=மிகுதியான தண்ணீர்; நீரும் பூவும் கொண்டு இறைவனை வழிபடும் நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. நியதம்-ஒழுங்கான முறை; குறைவில பதம்=என்றும் குறையாத ஆனந்தம் தருகின்ற சாலோகம் மற்றும் சாமீப பதவிகள்; நினைவொடு என்ற சொல் மூலம், அனுதினமும் செய்யப்படும் அகப்பூஜை குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு அகப்பூசை மற்றும் புறப்பூசை செய்யும் அடியார்கள் என்று உணர்த்துகின்றார். சிறைபுனல்=வயல்களுக்கு நீர் பாய்ச்சும் பொருட்டு பல இடங்களில் மதகுகள் கட்டப்பட்டு சிறைப்படுத்தப் பட்ட நதியின் நீர்; வனபதி=வனப்பு (அழகு) மிகுந்த தலம்;

நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி

நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு மடியவர்

குறைவில பதமணை தரவருள் குணமுடை யிறையுறை வனபதி

சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே

நறுமணம் கொண்ட மலர்களையும் நீரும் கொண்டு பெருமானின் திருவடிகளில் தூவி அடியார்கள் பெருமானை வழிபடுகின்றனர் என்று அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.33.7) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். செடி=முடை நாற்றம்; அடியார்கள் பெருமானின் புகழினை குறிப்பித்து வணங்குகின்றனர் என்று கூறுகின்றார்.

செடியார் தலையில் பலி கொண்டு இனிதுண்ட

படியார் பரமன் பரமேட்டி தன் சீரைக்

கடியார் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும்

அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே

அடியார்களின் இடரினைக் களைய வேண்டும் என்று பெருமானிடம் விண்ணப்பம் வைக்கும் திருஞானசம்பந்தர், நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.3), பெருமானின் பொன்னடிகளை தினமும் புகழ்ந்து, அந்த திருவடிகளின் மீது தூவும் பொருட்டு நீரும் மலரும் சுமந்து வரும் அடியார்களின் இடர்களை பெருமான் களைய வேண்டும் என்று வேண்டுகின்றார். வவ்வுதல்=திருடுதல்; நிமலன்=இயற்கையாகவே மலங்கள் நீங்கப் பெற்றவன், குற்றமற்றவன்; அடல்=வலிமை மிகுந்த; பெருமானுக்கு சிறுவன் மார்க்கண்டேயன் செய்து கொண்டிருந்த வழிபாட்டினுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இயமன் தனது பாசக் கயிற்றினை சிறுவன் மீது வீசியதை திருடுதல் என்று குறிப்பிடுகின்றார் போலும். பெருமானிடம் அனுமதி பெறாமல், சிவ வழிபாடு செய்து கொண்டிருந்த சிறுவனின் உயிரைக் கவர முயற்சி செயலை, கண்டிக்கத் தக்க செயல் என்று பெருமான் கருதினார் போலும்.எனவே தான் பெருமான் செய்த செயல் குற்றமற்றது என்பதை உணர்த்தும் பொருட்டு, நிமலனே என்று பெருமானை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அழைக்கின்றார்.

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத

என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த

பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்

நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.4.2) திருஞானசம்பந்தர், குளிர்ந்த நீர் கொண்டு திருவான்மியூர் பெருமானை நீராட்டி,தங்களது சிந்தையில் அவனை நினைத்து, போற்றி வழிபடும் அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய அடியார்கள் சந்தனம் மற்றும் அகில் கட்டைகளையும் பெருமானுக்கு சமர்பிக்கின்றார். பெருமானுக்கு தூபம் காட்டி வழிபடும் முறை இங்கே உணர்த்தப் படுகின்றது. கழலும் சிலம்பும் அணிந்து மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் தன்மையும் சொல்லப்பட்டுள்ளது. அந்திமாலையின் நிறமாகிய செம்மை நிறத்தில் தனது திருமேனி உடையவ்ராக இருப்பதன் காரணத்தை இங்கே வினவுகின்றார்.

சந்து உயர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டு தம்

சிந்தை செய்து அடியார் பரவும் திருவான்மியூர்

சுந்தரக் கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர்

அந்தியின் ஒளியின் நிறம் ஆக்கிய வண்ணமே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.38.1) திருஞானசம்பந்தர் பெருமானை, ஒன்றிய மனத்தவராக தினமும் நீரும் மலரும் தூவி இறைவனை வழிபடும் அடியார்களுக்கு அருள் புரியும் சிவன் என்று குறிப்பிடுகின்றார். நியமம் என்று இங்கே குறிப்பிட்டது அவரவர்கள் குல வழக்கப்படி,தினமும் காலையிலும் மாலையிலும் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். குறைந்த பட்சம் நீராடி உடலினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.பீலி=மயிற்பீலி; வண்=வளமையாக விளங்கும்; தத்து=தாவிக் குதிக்கும் நீர். சாகரம்=கடல்; நீர் மலர்த் தூவி என்று புறப் பூஜையும் சித்தம் ஒன்ற என்று அகப் பூஜையும் இங்கே குறிப்பிடப்படுகின்றது; மேவும்=சென்று அடையும், தங்கும்;

நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவிச்

சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்

மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரித்

தத்து நீர்ப் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே

ஆக்கூர் தான்தோன்றிமாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.42.8) திருஞான சம்பந்தர் பெருமானின் பொன்னடிக்கே அடியார்கள் நாள்தோறும் பூவும் நீரும் சுமந்து சென்றனர் என்று குறிப்பிடுகின்றார். கல் நெடிய குன்று=கற்கள் நிறைந்த கயிலை மலை.

கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி

இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்

பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர் சுமக்கும்

தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே

பெருமானின் திருவடிகளை விட்டு நீங்காமல் இடைவிடாது பெருமானை வழிபடும் தொண்டர்கள், பூவும் நீரும் அவனது திருவடிகளில் சமர்ப்பித்து அவனது புகழினை பாடுகின்றனர் என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடல் தலைச்சங்காடு பதிகத்தின் பாடல் (2.55.3). சீர்=சிறப்பு; தக்கோர்=தகுந்த பெருமையினை உடையவர்கள்; ஏர்=அழகு; தார்=மாலை;

சீர் கொண்ட பாடலீர் செங்கண் வெள்ளேற்று ஊர்தியீர்

நீர் கொண்டும் பூக் கொண்டு நீங்காத் தொண்டர் நின்று ஏத்தத்

தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும் தலைச் சங்கை

ஏர் கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தினில் வாழ்ந்த தொண்டர்கள் பெருமானின் திருநாமத்தை நாள்தோறும் ஓதி, பூவும் நீரும் கொண்டு வந்து பெருமானுக்கு அளித்து வழிபட்டதாக திருஞானசம்பந்தர் ஒரு பாடலில் (2.63.2) கூறுகின்றார். ஈசனைப் போற்றி துதித்து மலர்கள் கொண்டு அவனது திருமேனியின் மீது தூவி வணங்குதலும், அவனது திருநாமத்தை ஓதுதலும் நாள்தோறும் நாம் ஆற்றவேண்டிய பணிகளாக கொள்ளவேண்டும் என்பது இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. மேவுதல்=பொருந்துதல்; மேவா அசுரர்=பொருந்தாத, சிவநெறியில், வைதீக நெறியில் பொருந்தாது பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்கள்; மேவெயில்=மேவிய எயில், பொருந்திய கோட்டைகள்; வேவ=தீயினில் வெந்து அழிய; வெங்கணை=வெப்பத்தை வெளிப்படுத்திய அம்பு; அம்பு தீப்பிழம்புகளை வெளிப்படுத்தியது என்று கூறுகின்றார். எரிகணை=அக்னியை தனது நுனியில் கொண்டிருந்த அம்பு; ஏ=அம்பு; எய்தும்=குடி கொண்டிருக்கும்; சுரர் என்றால் உயர்ந்தவர்கள் என்று பொருள். அதனால் தான் தேவர்களை சுரர் என்று குறிப்பிடுவார்கள். பூசுரர் என்றால் நிலவுலகத்தில் உள்ள உயர்ந்தவர்கள்; இங்கே சிவவேதியர்களை குறிப்பிடும் சொல்லாக உள்ளது.

மேவா அசுரர் மேவெயில் வேவ மலை வில்லால்

ஏவார் எரி வெங்கணையால் எய்தான் எய்தும் ஊர்

நாவால் தன் நாமம் ஓதி நாள் தோறும்

பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.64.3) திருஞானசம்பந்தர், தொடர்ந்து நீரும் மலரும் கொண்டு பெருமானை வழிபட்டு,அவ்னது பண்புகளையும் தன்மைகளையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் அடியார்களின் சிந்தையில் பெருமான் உறைகின்றார் என்று கூறுகின்றார்.தேடுதல் என்ற சொல் ஆராய்தல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. நிரந்தரம்=எப்போதும்; நீடு=மிகுதியான; புனல்=நீர்; இரண்டாவது பாடலில் தலத்தின் உள்ள குரங்குகள் எவ்வாறு இறைவனை வழிபடுகின்றன என்று கூறிய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் கிளிகள் இறைவனின் திருநாமங்களை சொல்ல பழகிக்கொண்டு அவனை புகழ்கின்றன என்று கூறுகின்றார்.

நீடு மலரும் புனலும் கொண்டு நிரந்தரம்

தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானைப்

பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த

மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.3) திருஞானசம்பந்தர், பெருமான் இடைவிடாது தொண்டர்களால் வழிபடப்படுவதாக கூறுகின்றார். பெறுமலர்=தங்களுக்கு கிடைத்த மலர்கள்; ஒழியாது=இடைவிடாது; காளை=தலைவன்; வெறுமலர்=தேன் இல்லாமல் வெறுமையாக இருக்கும் மலர்கள்; எண்ணற்ற வண்டுகள் தேன் நுகர்ந்ததால் தேன் இல்லாமல் வெற்று மலர்கள் நிறைந்த கொம்புகள் உடைய மரங்கள், அந்த வண்டுகள் அமர்ந்ததால், வண்டுகளின் பாரம் தாங்காமல் கீழே தாழ்ந்து இருந்தன. அந்த மலர்களில் இருந்த தேனை பருகிய வண்டுகள் பறந்து சென்றதும் அந்த கிளைகள் அதுவரையில் தங்களை அழுத்தியிருந்த பாரம் விலகியதால் மேலேழுந்து செல்ல, அவ்வாறு மேலெழுந்து செல்வதால் ஏற்படும் அதிர்வினில் அரும்பாக இருந்த பல மலர்கள் மலர்வதால், அவ்வாறு புதியதாக மலர்ந்த பூக்களின் நறுமணம் எங்கும் பரவ, அந்த நறுமணத்தால் கவரப்பட்ட வண்டுகள் மீண்டும் வந்து அவ்வாறு மலர்ந்த பூக்களில் பொருந்தி தேன் உண்ட களைப்பில் உறங்கும் இதழ்களைக் கொண்ட மலர்கள் கொண்ட சோலைகள் நிறைந்துள்ள தலமே நனிபள்ளி என்று இந்த தலத்தினில் தான் கண்ட காட்சியை மிகவும் நயமாக கூறுகின்றார். விடம் உண்ட காளை என்ற தொடர் மூலம்,விடத்தினை உட்கொண்ட பின்னரும் தான் இறவாது இருந்த தன்மையை உலகுக்கு உணர்த்திய ஆண்மகன் பெருமான் என்று கூறுகின்றார்.,

பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான்

கறு மலர் கண்டமாக விடம் உண்ட காளை இடமாய காதல் நகர் தான்

வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடுபோது அலர்த்த விரைசூழ்

நறுமலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்

இறைவனை நீராட்டி, அலங்காரம் செய்து, அவனுக்கு அழகான மாலைகள் சூட்டி அழகு பார்ப்பது தொண்டர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாகும்.புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.92) மூன்றாவது பாடலில் முருக நாயனார், இறைவனுக்கு மாலைகள் சூட்டி அழகு பார்த்ததை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தண்கயம்=குளிர்ந்த நீர்நிலை: துணையல்=மாலை:

தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும்

கொண்டு கொண்டு அடி பரவிக் குறிப்பறி முருகன் செய் கோலம்

கண்டு கண்டு கண் குளிரக் களி பரந்து ஒளிமல்கு கள்ளார்

வண்டு பண் செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.115.4) திருஞானசம்பந்தர், பெருமானின் புகழினைத் தங்களது நாவினால் சொல்லும் வல்லமை உடைய அடியார்கள், அவனது பெருமையைத் தவிர்த்து வேறு எதனையும் தங்களது காதுகளில் வாங்கிக் கொள்ளாத தன்மையர்களாக உள்ளார்கள் என்றும்,அவர்கள் பூவும் நீரும் நிவேதனப் பொருட்களும் எடுத்துக் கொண்டு சென்று புகலூர் தலத்தினை அடைகின்றார்கள் என்று கூறுகின்றார். பலி=நிவேதனப் பொருட்கள்; ஓவார்=நீங்காதவர்களாக; ஏத்தல் ஓவார்=இடைவிடாது பெருமானை புகழ்ந்து பேசி வணங்கும் அடியார்கள்; அத்தகைய அடியார்கள் பெருமானின் பெருமையை, பேசாத நாட்களை, கேளாத நாட்களை, பயனேதும் இன்றி கழித்த நாட்கள் என்றும் உணர்வின்றி செயல்பட்ட நாட்கள் என்றும் கருதுகின்றனர் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே

நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவித் துலைகளால்

யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள் தாம்

ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உள்ளம் கொள்ளவே

விசயமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.17.6) திருஞானசம்பந்தர், பெருமான் மீது உண்மையான அன்பு கொண்டு பூவும் நீரும் சுமந்து சென்று பணிவுடன் வணங்கும் அடியார்களுக்கு பெருமான் அருள் புரிகின்றார் என்று கூறுகின்றார். ஒப்புரை=ஒப்பாக சொல்லப் பட்ட; மை=கருமை; இங்கே கருமை நிறத்தில் உள்ள நீலோற்பல மலரை குறிப்பிடுகின்றது. புரை=போன்ற; வண்+தழல்=வண்டழல்; சிறந்த நெருப்பு; மெய்ப்பட=உண்மையாக;அப்பு=நீர்; உடையவன்=ஆட்கொண்டவன்; வானவர்=உயர்ந்தவர்; தேவர்கள் என்று பொருள் கொள்வதை விடவும், பெருமானை வழிபடுவதால் உயர்ந்தவர்களாக கருதப்படும் அடியார்கள் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

மைப்புரை கண் உமை பங்கன் வண்டழல்

ஒப்புரை மேனி எம் உடையவன் நகர்

அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர்

மெய்ப்பட அருள் புரி விசயமங்கையே

சக்கரப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.27.10) திருஞானசம்பந்தர் நீரும் மலர் மாலைகளும் கொண்டு இறைவனை வழிபடும் அடியார்கள் நிறைந்த தலம் சக்கரப்பள்ளி என்று கூறுகின்றார். சீவரம் என்பது மஞ்சள் அல்லது காவி நிறத்தில் உள்ள துவர் ஆடை. இதனை பண்டைய நாளில் புத்தத் துறவிகள் உடுத்தி வந்தனர். சீவர ஆடையை அணிந்தவர்களை சீவரர் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். ஊண்=உணவு;விடம் படும் உரை= விடம் போன்று கொடிய சொற்கள்; வடம்=மாலை;

உடம்புபோர் சீவரர் ஊண் தொழில் சமணர்கள்

விடம்படும் உரை அவை மெய்யல விரிபுனல்

வடம்படு மலர் கொடு வணங்குமின் வைகலும்

தடம்புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே

திருவேதிகுடி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.78.4) திருஞானசம்பந்தர், அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் என்று கூறுகின்றார். புனல் என்றால் நீர் என்று பொருள். இசை=புகழ்; காடு=சுடுகாடு; காடர்=சுடுகாட்டினில் உறைபவர்; கரி=ஆண் யானை; கரிகாலர்=கரிக்கு காலனாக விளங்கியவர்;அனல் மெய்யர்=சோதி வடிவமாக உள்ளவர்; செய்யர்=சிவந்த திருமேனியை உடையவர்; கீளர்=அரைஞாண் கயிறு உடையவர்; சரி=தொங்கும்; தொல்லை நகர்=தொன்மை வாய்ந்த நகர்; ஆவணவர் என்ற சொல்லுக்கு இரண்டு விதமாக பொருள் சொல்லப் படுகின்றது. சிவக்கவிமணியார், உயிர்களை ஆவணம் கொண்டு தனக்கு அடிமையாக கொண்டுள்ள பெருமான் என்று விளக்கம் அளிக்கின்றார். தருமபுர ஆதீனத்து குறிப்பு, ஆ வண்ணம் அவர் என்று பிரித்து,பசுவினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமான் என்று விளக்கத்தை உணர்த்துகின்றது. எருது என்பதற்கு பதிலாக, பெருமானின் வாகனம் பசு என்று திணை மயக்கத்துடன் கையாளப் பட்டுள்ளது, பெருமானைப் புகழ்ந்து பாடல்கள் பாடும் அடியார்கள், மலர்களையும் நீரினையும் கொண்டுவந்து நீரினால் பெருமானை நீராட்டியும் மலர்கள் தூவியும் பணிந்து வணங்குகின்றனர். அத்தகைய அடியார்கள், தங்களது உடலில் திருநீற்றினை பூசிக்கொண்டு அழகிய சிவவேடத்துடன் விளங்கும் அடியார்கள், சிறந்த புகழுடன் பொருந்தி வாழ்கின்ற நகரம் திருவேதிகுடி என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

காடர் கரிகாலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில்

தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர் தான்

பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார்

வேடம் ஒளியான பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே

நீரும் மலரும் கொண்டு அடியார்கள் பெருமானை வழிபடும் தன்மை திருசேறை பதிகத்தின் பாடலில் (3.86.2) திருஞானசம்பந்தரால் உணர்த்தப் படுகின்றது.அத்தகைய அடியார்களின் துயரங்களை பெருமான் முற்றிலும் களைந்து அவர்களது துன்பங்களை நீக்குகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.புனம்=வனம், காடு, நந்தவனம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமானுக்கு அழகான மலர்களை தொடுத்து மாலைகளாக அணிவித்து அழகு பார்க்கும் நோக்கத்துடன் திலகவதியார் திருவதிகை நகரில் நந்தவனம் அமைத்து பெருமானுக்கு திருத்தொண்டு செய்தது நமது நினைவுக்கு வருகின்றது.புரிவினர்=விருப்பம் உடையவர்கள்; மனம்=உறுதியான மனம் என்று பொருள் கொள்ளவேண்டும்; வாய்மையார்=தன்மையர்; இனம் உடை=கூட்டமாக உள்ள;அரசிலை=அரச மரத்தின் இலை போன்ற வடிவம் உடைய நகை; இதனை மாட்டின் கழுத்தினில் கட்டுவது வழக்கம்;

புனமுடை நறுமலர் பல கொடு தொழுவதொர் புரிவினர்

மனமுடை அடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்

இனமுடை மணியினொடு அரசிலை ஒளிபெற மிளிர்வதோர்

சினமுதிர் விடையுடை அடிகள் தம் வளநகர் சேறையே

புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.87.5) திருஞானசம்பந்தர், பூவும் நீரும் கொண்டு பிரமன் இறைவனை வழிபட்டதாக குறிப்பிடுகின்றார். அழல் கொள=நெருப்பினில் எரியும் வண்ணம்; கருதலா=வேத நெறிகளையும் ஒரு பொருட்டாக கருதாத; கடி=வலிமை வாய்ந்த; தூமம் உற=புகை எழும் வண்ணம்; விறல்=வலிமை; கொளுவிய= நெருப்பு பற்றிக் கொள்ள; தொகுபதி=தங்கியிருக்கும் பதி; பிற=மற்ற வாத்தியங்கள்; இய=இயங்க; ஓமம்=ஹோமம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்;

காமனை அழல் கொள விழி செய்து கருதலா கடி மதில்

தூமமது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி

ஓமமொடு உயர் மறை பிற இய வகை தனொடு ஒளி கெழு

பூ மகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே

பெருமை வாய்ந்த தொண்டர்கள் நறுமணம் மிகுந்த மலர்களும் நீரும் தூபமும் கொண்டு கழுமலத்து இறைவனின் திருவடிகளை வழிபடுகின்றனர் என்று (3.118.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பருவ காலத்தில் உரிய அளவு மழை பொழியப் பெறுவதும், பிரளய காலத்தில் தோணி போன்று மிதக்கும் சிறப்பினையும் உடைய தலம் கழுமலம் என்று கூறுகின்றார்.

சீருறு தொண்டர் கொண்டடி போற்றச் செழுமலர் புனலொடு தூபம்

தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கிடமெங்கும்

ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலிபுனல் கொள உடன் மிதந்த

காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனலாமே

எவராலும் தீர்க்க முடியாத சூலை நோயால் வருந்திய அப்பர் பிரான், தனது தமக்கை திலகவதியாரின் ஆலோசனை பேரில் திருவதிகை வீரட்டானம் திருக்கோயிலுக்கு சென்றார். ஆங்கே திருக்கோயிலை வலம் வந்து பெருமானின் சன்னதியில் தரை மீது விழுந்து வணங்கிய அப்பர் பிரானுக்கு,பெருமானைப் புகழ்ந்து பாடல்கள் பாடவேண்டும் என்ற உணர்வு தோன்றவே, கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தை பாடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலில், இரவும் பகலும் பிரியாது பெருமானை வணங்குவேன் என்று உறுதி கூறிய அப்பர் பிரான், பெருமானை நினையாது ஒரு போதும் இருக்கமாட்டேன் என்றும் பூவும் நீரும் தூபமும் கொண்டு மறவாமல் பெருமானை வழிபடுவேன் என்றும் பெருமானின் புகழினை உணர்த்தும் தமிழிசைப் பாடல்கள் பாடுவேன் என்றும் கூறுகின்றார். தான் செய்த தவற்றினை உணர்ந்து வருந்தி, இறைவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டும் அப்பர் பிரான்,தான் தனது வாழ்க்கையை இனி எவ்வாறு நடத்துவேன் என்பதையும் இங்கே விளக்குகின்றார். துன்பம் ஏற்பட்டபோது இறைவனின் அருளை வேண்டுவதும் அந்த துன்பம் இறைவனின் அருளால் துடைக்கப்பட்ட பின்னர், இறைவனை மறப்பதும் மனித இயல்பு. அந்த மனித இயல்பிற்கு மாறாக, தான் நலமாக இருக்கும் தருணத்திலும், இடர்ப்படும் நேரங்களிலும், எப்போதும் உன்னையே நினைத்த வண்ணம் இருப்பேன் என்று இறைவனிடம் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இதற்கு ஏற்றாற்போல் தனக்கு பல இடர்பாடுகளை சமணர்கள் செய்தபோதும் கலங்காமல் சிவபிரானையே நினைந்து இருந்தார். சமணர்கள் செய்த பல சூழ்ச்சிகளில் இருந்து சிவபெருமான் அருளால் தப்பிய அப்பர் பிரான் தனது எஞ்சிய வாழ்நாளில், பல தலங்கள் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி நாடெங்கும் சைவ சமய உணர்வினை பரப்பி, அதன் மறுமலர்ச்சிக்கு அடிகோலினார். உலந்தார் தலை= பிரமனின் தலை: அலந்துதல்=வருந்துதல்,உடல் என்பது இங்கே குடலைக் குறிக்கின்றது.

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்

நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என் நாவில் மறந்தறியேன்

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறுசூலை தவிர்த்தருளாய்

அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

கயிலாய மலை சென்று இறைவனை நேரில் காண வேண்டும் என்ற ஆசையில், தனது உடல் வருத்தத்தையும் பொருட் படுத்தாமல் பயணம் மேற்கொண்ட அப்பர் பிரானை, எலும்புகள் தேய்ந்து தசைகள் கிழிந்த நிலையிலும் தனது பயணத்தை தொடர்ந்த அப்பர் பிரானை, முனிவர் வேடத்தில் எதிர்கொண்ட பெருமான், அருகில் இருந்த ஒரு குளத்தினில் நீராடுமாறு பணிக்கின்றார். குளத்தில் மூழ்கிய அப்பர் பிரான், தான் எழுந்த போது திருவையாறு தலத்தினில் இருப்பதை உணர்கின்றார். மேலும் அடியார்கள் பலரும் வரிசை வரிசையாக, தங்களது கைகளில் பூவும் நீரும் ஏந்திய வண்ணம் திருக்கோயில் செல்வதைக் கண்டு தானும் அவர்களுடன் செல்கின்றார். அப்போது பெருமான், திருவையாறு கோயில் கோபுரத்தில் கயிலாயக் காட்சி காட்டி அருள் புரிகின்றார். தான் கண்ட காட்சியினை பதிகமாக (4.03) வடிக்கும் அப்பர் பிரான், பதிகத்தின் முதல் பாடலில், வரிசை வரிசையாக அடியார்கள் பூவும் நீரும் ஏந்திய வண்ணம்,திருக்கோயிலுக்கு சென்ற தன்மையை உணர்த்துகின்றார்.

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப் பிடியொடும் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

பெருமானை தினமும் நியமத்துடன் சிறுவன் மார்க்கண்டேயன் வழிபட்டார் என்று அப்பர் பிரான் குறுக்கை வீரட்டம் திருப்பதிகத்துப் பாடல் ஒன்றினில் (4.49.2) கூறுகின்றார். சாற்றும் நாள்= முன்னமே சொல்லிய நாள்; தனக்கு குழந்தை இல்லை என்று சிவபிரானை நோக்கி தவம் செய்த மிருகண்டு முனிவருக்கு, சிவபிரான் பிள்ளை வரம் அளித்த போது ஒரு நிபந்தனை விதித்தார்; பதினாறு ஆண்டுகள் மட்டும் வாழ்நாள் கொண்ட அறிவுடைய மகன் வேண்டுமா அல்லது நூறு ஆண்டு வாழ்நாள் கொண்ட அறிவில்லாத மகன் வேண்டுமா என்று கேட்டார். பதினாறு ஆண்டுகள் இருந்தாலும் அறிவுடைய மகனே வேண்டும் என்று வேண்டிய மிருகண்டு முனிவர் அவ்வாறே பதினாறு ஆண்டுகள் வாழ்நாள் கொண்ட மகனைப் பெற்றார். அந்த காலம் முடிந்த பின்னர் தான் இயமன் சிறுவனின் உயிரைப் பறிக்க வந்தான். பூரித்து=நிறைவாக; குமைத்தல்= தண்டித்தல், வதைத்தல். இறைவனை நீராட்டும் பொருட்டு தனது தவ வலிமையால், கங்கை நீரினை, கடவூர் மயானத்தில் உள்ள ஒரு கிணற்றில் வரவழைத்த மார்கண்டேயர், அந்த நீரினைக் கொண்டு இறைவனை நீராட்டினார்.இந்த செய்தியே இங்கே ஆற்றுநீர் என்ற தொடரால் குறிப்படப் படுகின்றது. இன்றும் கடவூர் மயானத்தில் உள்ள கிணற்றில் இருந்து நீர் கொண்டுவரப் பட்டு திருக்கடவூர் தலத்து இறைவனுக்கு நீராட்டல் நடைபெறுகின்றது.

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து

ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணாளரைக் கொல்வான்

சாற்று நாள் அற்றது என்று தரும ராசற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.8) அப்பர் பிரான், தினமும் தூய நீரினைக் கொண்டு உன்னை நீராட்டியும் பின்னர் நறுமணம் வீசும் மலர்களைக் கொண்டு உனது திருமேனியில் தூவியும், உன்னை வாழ்த்திப் பாடியும், உனது திருவுருவத்தினை மனதினில் தியானித்தும், உனது மலர்ப்பாதங்களை அடைய தான் முயற்சி செய்வதாகவும், பெருமானிடம் முறையிட்டு பெருமானே நீ தான் அருள் கூர்ந்து, உனது திருவடிகளில் என்னை சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று பெருமானிடம் வேண்டுகின்றார். மறிகடல்=மடிந்து விழும் அலைகளைக் கொண்ட கடல்: செறிவு=யோகம்: இறைவனை வழிபடும் முறைகள் நான்கு. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று இவற்றை கூறுவார்கள். சரியை என்பது உடலால் வழிபடுவது (திருக்கோயில் சென்றடைந்து ஆங்குள்ள இறைவனை வழிபடுவது, திருக்கோயிலில் துப்புரவுப் பணிகள் செய்வது), கிரியை (வாயினால் வழிபடுவது–அஞ்செழுத்து மந்திரங்களை ஓதுவது, திருமுறைகள் ஓதுவது, திருமுறை கருத்துக்களை, சாத்திர தோத்திரக் கருத்துக்களை அடுத்தவர்க்கு எடுத்துரைப்பது),யோகம்(இறைவனின் திருவுருவத்தை மனதினில் தியானித்து வழிபடுதல்), ஞானம் (மேற்கண்ட மூன்று வழிகளில் ஒன்றினை நாள்தோறும் கடைபிடித்தால்,இறைவன் குரு வடிவினில் வந்து அருளுவது) இறைவனே முழுமுதற் கடவுள் என்பதை உணர்ந்து அவனது திருவடிகளில் சென்றடையும் வழிகளை முறையாக அறிந்து கொண்டு, அந்த நெறியினில் வாழ்வது.

நறுமலர் நீரும் கொண்டு நாடொறும் ஏத்தி வாழ்த்திச்

செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்

மறிகடல் வண்ணன் பாகா மாமறை அங்கம் ஆறும்

அறிவனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

அப்பர் பெருமான் நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.70) இரண்டாம் பாடலில், மற்றவர்களைப் போல், பூவும் நீரும் கொண்டு வழிபட முடியாதசிலந்தி, பந்தல் அமைத்து இறைவனுக்கு திருத்தொண்டு ஆற்றியதாக கூறுகின்றார். யானையும் நீர் கொணர்ந்து இறைவனை நீராட்டிய தலம் அல்லவாதிருவானைக்கா. அரையன்=மன்னன். இந்த குறிப்பிலிருந்து பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபடுதல் எந்த அளவுக்கு முக்கியமாக கருதப்பட்டது என்பதை நாம் உணரலாம்.

புலர்ந்தகால் பூவும் நீரும் கொண்டு அடி போற்ற மாட்டா

வலம் செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த

சிலந்தியை அரையனாக்கிச் சீர்மைகள் அருள வல்லார்

நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே

ஒரு பொதுப் பதிகத்தினை (4.75.1) அப்பர் பிரான், இறைவனை நாம் எவ்வாறு வழிபடவேண்டும் என்ற விளக்கத்துடன் தொடங்குகின்றார். தான் சமண சமயத்தைச் சார்ந்து இருந்ததால் அன்னாள் வரையிலும், அவ்வாறு இறைவனை வழிபடாது காலத்தை வீணாக கழித்ததற்கு வருத்தமும் தெரிவிக்கின்றார்.இருக்கு=ரிக் வேதம், வேத மந்திரங்கள்: இறைவனுக்கு அபிடேகம் செய்யும் போது வேதங்கள் அல்லது தமிழ் மறைகள் பாடுவது மரபு. இந்த மரபு அப்பர் பிரானால் இங்கே உணர்த்தப்படுகின்றது. வேதங்கள் ஓதியவாறே புனித நதிகளின் நீரினைக் கொண்டு இறைவனை நீராட்டி, பின்னர் சந்தன குங்குமச் சாந்தினால் அலங்காரம் செய்து, மலர்களை சூட்டி, இறைவனை கண்ணாரக் கண்டு அழகு பார்க்கும் வழக்கம் முறையாக இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.கண்டன்=பாசத்தை துண்டிப்பவன்.

தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன்னீர்

கொண்டு இருக்கு ஓதி ஆட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி

இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானைக்

கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.24.6) அப்பர் பிரான், ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகளிலும் தமது தலையினைத் தாழ்த்தி பெருமானை வணங்கி அவனது திருவடிகளில் புதிய மலர்களையும் நீரினையும் தூவும் அடியார்களின் பாவங்கள் கெட்டு அழிந்துவிடும் என்று கூறுகின்றார்.போது=மொட்டு என்றும் பொழுது என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். தாழ்ந்து=நீக்கி என்றும் தலை சாய்த்து வணங்கி என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. எனவே மொட்டுகளை நீக்கி புது மலர்களை கொண்டு இறைவனை வணங்குதல், தமது தலையை சாய்த்து வணங்கி புது மலர்கள் கொண்டு வழிபடுதல் என்று இரண்டு விதமான வழிபாடுகள் பாடலின் முதல் அடியில் குறிப்பிடப்படுகின்றன.

போது தாழ்ந்து புதுமலர் கொண்டு நீர்

மாது தாழ்சடை வைத்த மணாளனார்

ஓது வேதியனார் திருவொற்றியூர்

பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே

தேன் நிரம்பிய பூக்களும் நீரும் கொண்டு தன்னை வழிபட்ட சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த, குறைவில்லாத வலிமையினை உடைய கூற்றுவனை உதைத்து, சிறுவனின் உயிரை காத்தவன் சிவபெருமான் என்று வலஞ்சுழி தலத்து குறுந்தொகைப் பதிகத்து பாடலில் (5.67.4) அப்பர் பிரான் கூறுகின்றார். மாணி=பிரம்மச்சாரி, சிறுவன் மார்க்கண்டேயன்; குறைவிலா=தனது வலிமையில் என்றும் குறையாத; நறை=தேன். என்று கொல் காண்பதே என்று இறைவனை காண வேண்டும் என்ற தனது ஏக்கத்தினை வெளிப்படுத்தும் அப்பர் பிரான், இனி என்ற சொல்லினை பயன்படுத்தி இருப்பதால்,மறுபடியும் வலஞ்சுழி வாணனை காணவேண்டும் என்று எண்ணும் அளவுக்கு, அப்பர் பிரானின் கருத்தினை, வலஞ்சுழி வாணன் கவர்ந்தார் போலும்

நறை கொள் பூம்புனல் கொண்டு எழு மாணிக்காய்க்

குறைவிலாக் கொடும் கூற்று உதைத்திட்டவன்

மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய

இறைவனை இனி என்று கொல் காண்பதே

கருவிலி கொட்டிட்டை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.69.2) அப்பர் பிரான், மலரும் நீரும் கொண்டு கொட்டிட்டை சேர்மினே என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஏலமாமலர்=நறுமணம் வீசும் சிறந்த மலர்கள்; கோல=அழகிய; வார் பொழில்=நீண்ட சோலைகள்; அப்பர் பிரான், இறைவனை தொழுவதற்கு உரிய காலம் எது என்பதை இந்த பாடலில் தெளிவு படுத்துகின்றார். காலன் நமது வாழ்க்கையை முடிக்கும் முன்னர் நாம் இறைவனை வழிபடுவதை தொடங்கலாம் என்று இங்கே கூறுகின்றார். ஆனால் காலன் நம்மை ஆட்கொள்ளும் நாள் எது என்பதை எவரும் அறியாத காரணத்தால்,இன்றே நாம் இறைவனை வழிபடுவதை தொடங்க வேண்டும் என்பது பதிகத்தின் உட்கருத்து; இறைவனை நாம் எவ்வாறு தொழவேண்டும் என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபடுவீர்களாக என்று அறிவுரை கூறுகின்றார்.

ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும்

ஏல மாமலரோடு இலை கொண்டு நீர்

காலனார் வருதன் முன் கருவிலிக்

கோலவார் பொழில் கொட்டிட்டை சேர்மினே

இவ்வாறு இறைவனை பூவும் நீரும் கொண்டு வழிபடும்போது, நாம் வஞ்சனையை தவிர்க்க வேண்டும் என்று அப்பர் பிரான் மற்றொரு பாடலில் அறிவுரை கூறுகின்றார். வஞ்சனை உடைய மனத்துடன் தன்னைத் தொழும் அடியார்களை இனம் கண்டுகொண்டு நாணி நிற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் கூறுவது (5.90.9) நமது நினைவுக்கு வருகின்றது. பொக்கம்=பொய்ம்மை. தனது நடிப்பினால் ஒருவன் மனிதர்களை ஏமாற்றலாம். மனத்தளவில் இருக்கும் வஞ்சனையை மறைத்து, ஒருவரை மதிப்பது போலும் வணங்குவது போல் நடித்து ஏமாற்றுவது எளிது. ஆனால் இறைவனை அவ்வாறு ஏமாற்ற முடியாது என்று அப்பர் பிரான் நமக்கு எச்சரிக்கை தருகின்றார். நெக்கு=உள்ளம் நெகிழ்ந்து. எனவே இறைவனை வழிபடும்போது நாம் வஞ்சனையை தவிர்க்க வேண்டும் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு

நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே

பெருமானை நீராட்டி அலங்கரிக்க நீரும் மலர்களும் உள்ளன; ஐந்தெழுத்து மந்திரத்தையும் அவனது பெருமையினையும் கற்றுக் கொள்வதற்கு வாயும் நாக்கும் உள்ளன; நமது வழிபாட்டினை ஏற்றுக் கொள்வதற்கு பெருமான் உள்ளான்; இவ்வாறு பெருமானை வழிபட அனைத்து வசதிகளும் உள்ள நிலையில்,அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இறைவனை வழிபடுவதை விட்டு விட்டு, எதற்காக இயமனின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டும். எனவே மனிதர்களே,நமக்கு அருள் வழங்க காத்திருக்கும் பெருமானை வழிபட்டு, அவனது அருளுக்குப் பாத்திரமாகி இயமனின் கோபத்தை தவிர்த்து விடுங்கள் என்பதே அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் நமக்கு வழங்கும் அறிவுரையாகும். இந்த பொது பதிகத்தின் பாடலில் (5.91.6) காலனின் கோபத்தை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் பாடலில், அப்பர் பிரான், இறைவனை நாம் நீராட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார்.

கற்றுக் கொள்ள வாயுள நாவுள

இட்டுக் கொள்வன பூவுள நீருள

கற்றைச் செஞ்சடையான் உளன் நாம் உளோம்

எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே

தூபம், மலர்கள், நீர், சந்தனம் முதலியன கொண்டு இறைவனை வழிபடும் அடியார்கள் பற்றிய குறிப்பு காணப்படும் பொதுப் பதிகத்தின் பாடலை (5.92.6)நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் வாமதேவம் ஒன்றாகும். இந்த முகம் வடக்கு நோக்கிய திருமுகம்.கிழக்கு நோக்கி உள்ள முகம் தத்புருஷம். தெற்கு நோக்கி உள்ள முகம் அகோரம். சத்யோஜாதம் மேற்கு நோக்கி உள்ள முகம். ஈசானம் மேல் நோக்கி உள்ள முகம். விடியற்காலையில், பொழுது விடிவதற்கு முன்னமே நீராடி, மலர்களை பறித்து, இறைவனை வழிபட வேண்டும் என்று பல பாடல்களில் அப்பர் பெருமான் கூறியுள்ளார். அவ்வாறு வழிபடும் அடியார்கள், தங்களுக்கு உதவியாக கையில் விளக்கு ஏந்திச் சென்றனர் போலும். ஏமம்= திருநீற்றுக் காப்பு:திருநீற்றினை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல உதவும் பை அல்லது பெட்டகம்: தாமம்=மலர் மாலைகள்: இயமனின் தூதர்களை சிவனடியார்களின் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கும் அப்பர் பிரான், அடியார்களின் அடையாளங்களை குறிப்பிடும் வண்ணம், வாமதேவராகிய சிவபெருமான் உறையும் திருக்கோயிலுக்கு, தினமும், பெருமானின் மீது வைத்த விருப்பம் அன்றி வேறு எந்த பொருளிலும் விருப்பம் இல்லாதவர்களாய், கையில் சிறிய விளக்கோடு,பெருமானுக்கு சூட்டுவதற்காக மலர் மாலைகளும், தூபம், சந்தனம் முதலான வாசனைப் பொருட்களும், திருநீறும் எடுத்துச் செல்லும் அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார்.

வாமதேவர் வளநகர் வைகலும்

காமம் ஒன்று இலராய்க் கை விளக்கொடு

தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும்

ஏமமும் புனைவார் எதிர் செல்லலே

மிகுந்த ஆற்றல் உடையவர்களாக இருந்த போதிலும், பிரமன் திருமால் ஆகிய இருவரும், தங்களின் முன்னே தோன்றிய நெடிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டதன் காரணம். தங்களின் முன்னே தோன்றியது இறைவன் என்பதை உணர்ந்து, உரிய முறையில் இறைவனை அவர்கள் வழிபடாமல் இருந்தது தான், என்று இலிங்க புராணக் குறுந்தொகை பதிகத்தின் பாடல்களில் (5.95) அப்பர் பிரான் கூறுகின்றார்.இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் இருவர் இருவர் என்றே அப்பர் பிரான் குறிப்பிட்டு அவர்கள் செய்யத் தவறிய செயல்களை பட்டியல் இட்டு,அவர்கள் இருவரும் இறைவனைக் காண்பதற்கு முயற்சி செய்தனர் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில் தான், செங்கணான் (திருமால்) மற்றும் பிரமன் ஆகிய இருவரே பதிகத்தின் முந்திய பாடல்களில் குறிப்பிடப் படுகின்றனர் என்று நமக்கு உணர்த்துகின்றார். அவர்கள் இருவரும் இறைவனைக் காண்பதற்கு கடும் முயற்சிகள் செய்தனர் என்று பாடல் தோறும் குறிப்பிடுவதால், அவர்கள் முயற்சி வீண் முயற்சியாக மாறியது என்ற செய்தி குறிப்பால் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில், பூவும் நீரும் கொண்டு இறைவனுக்கு அபிடேகம் செய்யத் தவறினார்கள் என்று கூறுகின்றார். அலர்=மலர்கள்; ஆட்டி=அபிடேகம் செய்து; தீட்டி=எழுதி; திலக மண்டலம்=பொட்டு; முதல் பாடலில் விளக்கியவாறு இறைவனின் அருகில் செல்லும் நாம், இறைவனை நீராட்டி, பொட்டிட்டு அழகு செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். செலவு=சென்று; திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் இறைவனை நீராட்டி, அழகு செய்யாததற்கு காரணம் அவர்கள் தெளிந்த மனம் உடையவர்களாக இல்லாதது தான் என்று கூறுகின்றார். செலவு என்று,திருமால் பன்றியாக கீழ் நோக்கி பூமியைத் தோண்டிக் கொண்டு சென்றதையும் பிரமன் அன்னப்பறவையாக பறந்து மேல் நோக்கி சென்றதையும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இதே கருத்து பதிகத்தின் மூன்றாவது பாடலிலும் சொல்லப் படுகின்றது.

அலரும் நீரும் கொண்டு ஆட்டி தெளிந்திலர்

திலகம் மண்டலம் தீட்டித் திரிந்திலர்

உலக மூர்த்தி ஒளிநிற வண்ணனைச்

செலவு காணல் உற்றார் அங்கு இருவரே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.40.2) அப்பர் பிரான், மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு தன்னை வழிபடும் அடியார்களுக்கு,வானத்தை ஆள்கின்ற வாய்ப்பினை பெருமான் அருள்வார் என்று கூறுகின்றார்.

அறைகலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தில் கந்தருவர் அமரர் ஏத்த

மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆளக் கொடுத்தி அன்றே

கறை கலந்த பொழில் கச்சிக் கம்பம் மேய கனவயிரத் திரள் தூணே கலிசூழ் மாட

மறை கலந்த மழபாடி வயிரத் தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

மறவாது முப்போதும் பூநீர் கொண்டு, பெருமான் பால் மிகுந்த அன்பு கொண்டு வழிபடும் அடியார்களின் மனதினில் பெருமான் உறைகின்றார் என்று அப்பர் பிரான் கன்றப்பூர் தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (6.61.1) உணர்த்துகின்றார். வாசனை என்ற சொல் எதுகை கருதி வாதனை என்று திரிந்தது;மனம் உருகி மனதினில் வஞ்சகம் ஏதுமின்றி, வாயினால் இறைவனது பெருமைகளை சொல்லி, கைகளால் பூவும் நீரும் கொணர்ந்து இறைவனை வழிபடவேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். நமது மனம், வாக்கு காயம் ஆகிய மூன்றும் இறைவனின் வழிபாட்டினில் ஈடுபடவேண்டும் என்பது அப்பர் பிரான் விருப்பம்.

மாதினையோர் கூறு உகந்தாய் மறைகொள் நாவா மதிசூடி வானவர்கள் தங்கட்கு எல்லாம்

நாதனே என்று என்று பரவி நாளும் நைஞ்சு உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து

வாதனையால் முப்பொழுதும் பூ நீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்திக்

காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.5) அடியார்கள் குடங்களில் நீரும் பூவும் சுமந்து கொண்டு வந்து திருத்தொண்டு செய்வதாக சுந்தரர் கூறுகின்றார். ஏவல் செய்வதற்கு அடியார்களும் ஆடும் நடனத்தைக் கண்டு களிக்க உமையன்னை உடனிருக்க, பெருமானே எதற்காக நீர் நஞ்சினை உட்கொண்டு கழுத்தினில் தேக்கிக் கொண்டுள்ளீர் என்று கேள்வி கேட்கும் பாடல்.

குடமெடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய

நடமெடுத்து ஒன்று ஆடிப்பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம்

வடமெடுத்த கொங்கை மாதோர் பாகமாக வார் கடல் வாய்

விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே

பெருமான் மீது அதிகமான பக்தி கொண்டிருந்த புகழ்த்துணை நாயனார், அருகில் உள்ள அரிசில் ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு சென்று தினமும் பெருமானை நீராட்டுவதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் வாழ்ந்த காலத்தில், ஒரு சமயத்தில் இங்கே, கடும் பஞ்சம் ஏற்பட்ட போதிலும், பெருமானை நீராட்டி மலர்கள் தூவி, பூஜை செய்வதை தவறாமல் நாயனார் செய்து வந்தார். பஞ்சத்தின் காரணமாக பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்த நாயனார், ஒரு நாள், பசி மற்றும் களைப்பு காரணமாக தள்ளாடிய படியே பெருமானை நீராட்டுவதற்காக நீர்க்குடத்தை சுமந்து கொண்டு வந்தார். ஒருவாறு, பெருமானின் சன்னதியை அடைந்த நாயனார், பெருமானை நீராட்ட முயற்சி செய்கையில், உடல் தளர்ச்சியின் காரணமாக,நிலை தடுமாறி, தான் சுமந்து கொண்டு வந்த நீர்க்குடத்தை தவறவிட்டார். அந்த நீர்க்குடம் மூலவர் லிங்கத்தின் மீது விழுந்தது. மேலும் உடல் தளர்ச்சி அவரை உறக்கத்தில் ஆழ்த்தியது. சங்கரனின் அருளால், நாயனார் உறக்கத்தில் ஆழ்ந்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.இவ்வாறு, உடல் தளர்ச்சியால் சன்னதியில் உறங்கிய நாயனாரின் கனவில் தோன்றிய பெருமான், பஞ்சம் தீருமளவும் தினமும் ஒரு பொற்காசு அவருக்கு அளித்து உதவுவதாக வாக்களித்தார். இறைவன் அளித்த பொற்காசின் உதவி கொண்டு, நாயனார் தன்னை நாள்தோறும் வருத்திய பசிப்பிணியைப் போக்கிக் கொள்ள, மேலும் அதிக உற்சாகத்துடன் தனது திருப்பணியை, அவர் தொடர்ந்து செய்து வந்தார். இவ்வாறு தனது அடியானுக்கு தினமும் ஒரு பொற்காசு அளித்து அவரது வறுமையையும் பசிப்பிணியையும் நீக்கிய பெருமான், படிக்காசு நாதர் என்று, அன்று முதல் அழைக்கப்பட்டார். இவரது செய்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் உணர்த்தும் பாடலை நாம் (7.9.6) இங்கே காண்போம்.

அகத்து அடிமை செய்யும் அந்தணன் தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான்

மிகத் தளர்வு எய்திக் குடத்தையும் நும் முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்

வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி

புகழ்த்துணை கை புகச் செய்து உகந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனாரே

இந்த நாயனாரின் அரிய செய்கை, அரிசிற்கரைப்புத்தூர் தலத்து பாடலில் (2.63.7) திருஞான சம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது. நீர்மை=இயல்பு;ஐம்பூதங்களின் தன்மையாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. ஐம்பூதங்கள் என்றதும், திருஞான சம்பந்தருக்கு, ஐம்பூதத் தலங்களில் ஒன்றாகிய திருவானைக்கா தலத்தினில் வழிபட்ட கோச்செங்கட்சோழன் நினைவுக்கு வந்தார் போலும். கோச்செங்கட் சோழனையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அலந்த=வருந்திய; அற்றைக்கு=பண்டைய நாளில் அன்று; இந்த பாடலில் புகழ்த்துணை நாயனார், இறைவனின் அருளால் தினமும் ஒரு பொற்காசு பெற்றமை குறிப்பிடப்படுகின்றது. பெற்றம்=இடபம்; அற்றம்=வறுமை;

நிலம் தணீரோடு அனல் கால் விசும்பு நீர்மையான்

சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தான் ஊர்

அளந்த அடியான் அற்றைக்கு அன்றோர் காசு எய்திப்

புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே

உணவினைத் தேடி வெளியே சென்ற ஆண் குரங்கிற்கு தேவையான பழங்கள் கிடைக்க வேண்டும் என்று பெண் குரங்கு நீரும் பூவும் இட்டு மூன்று காலங்களிலும் பெருமானை வழிபடும் தலம் அவினாசி என்று சுந்தரர் அவினாசி தலத்து பதிகத்து பாடலில் (7.92.7) கூறுகின்றார். இந்த தலம் பண்டைய நாட்களில் புக்கொளியூர் என்று அழைக்கப் பட்டது. திருக்கோயிலின் பெயர் அவினாசி ஆகும். மந்தி=பெண் குரங்கு; கடுவன்=ஆண் குரங்கு; நீரும் மலரும் கொண்டு அடியார்கள் வழிபடுவதைக் கண்ட குரங்குகளும் அவ்வாறு இறைவனை வழிபட்டன என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம்

சந்திகள் தோறும் சலம் புட்பம் இட்டு வழிபடப்

புந்தி உறைவாய் புக்கொளியூர் அவினாசியே

நந்தி உன்னை வேண்டிக்கொள்வேன் நரகம் புகாமையே

சிவபூஜையின் தன்மை அறியாத கண்ணப்ப நாயனாரும், தனது வாயினில் நீரினை நிரப்பிக் கொண்டு வந்து பெருமானை நீராட்டிய தன்மையை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். இதிலிருந்து பெருமானை நீராட்டுவது வழிபாட்டினில் மிகவும் முக்கியமான அம்சம் என்ப்தை நாம் புரிந்து கொள்கின்றோம்.கண்ணப்ப நாயனாரின் செய்கையும் பக்தியும் நால்வர் பெருமானார்களால் பல பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. மணிவாசகர் தெள்ளேணம் பதிகத்தின் பாடலில் கண்ணப்பர் செய்த பூஜை எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்று கூறுகின்றார். கண்ணப்ப நாயனார் செய்த பூஜைகளை மிகவும் விருப்பமுடன் ஏற்றுக்கொண்ட சிவபெருமானின் உடல் குளிர்ந்ததாக மணிவாசகர் தோள்நோக்கம் பதிகத்தின் மூன்றாவது பாடலில் கூறுகின்றார். சேடு=பெருமை;பொருள்=ஆகமப் பொருள். ஆகம விதிகளின் படி செய்யப்படுகின்ற பூசையினை மகிழ்ந்து ஏற்றுக் கொள்வது போல் கண்ணப்பர் செய்த பூஜையை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார் என்று இங்கே கூறுகின்றார்.

பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச்

செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்

விருப்புற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து அங்கு

அருள் பெற்று நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ

கண்ணப்பர் செய்த திருத்தொண்டின் வர்ணனை நமக்கு ஆதி சங்கரர் அருளிய சிவானந்த லஹரியின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. கண்ணப்பர் நடந்து நடந்து தேய்ந்த செருப்பு, சிவபெருமானுக்கு புனிதமான கூர்ச்சமாகவும், கண்ணப்பர் கொப்பளித்த நீர், சிவபிரானை அபிஷேகம் செய்வதற்கு தகுதியான புனித நீராகவும், கண்ணப்பர் சுவைத்துப் பார்த்த மாமிசம் சிறந்த நைவேத்தியப் பொருளாகவும் மாறியது கண்ணப்பர் சிவபிரான் வைத்திருந்த அளவு கடந்த பக்தியினால் தான் என்று இங்கே ஆதிசங்கரர் கூறுகின்றார்.

மார்காவர்த்தித பாதுகா பசுபதே ரங்கஸ்ய கூர்ச்சாயதே

கண்டூ ஷாம்பு நிஷேசனம் புரரிபோர் திவ்ய அபிஷேகாயதே

கிஞ்சித் பக்ஷித மாம்ச சேஷ கவளம் நவ்யோ பஹாராயதே

பக்தி கிம் நகரோத்யஹோ வனச்சரோ பக்தாவதம்சாயதே

பெருமானை நீராட்ட வைத்திருக்கும் குடத்தினை, அந்த குடத்தின் புனிதம் கருதி கலசம் என்று அழைப்பார்கள். கண்ணப்ப நாயனார், தனது வாயினில் கொண்டு வந்த நீர் கொண்டு பெருமானை நீராட்டிய தன்மையை தூயவாய்க் கலசத்தில் நீர் கொண்டு வந்து நீராட்டினார் என்று அப்பர் பெருமான் குறுக்கை வீரட்டம் பதிகத்துப் பாடலில் (4.49.7) கூறுகின்றார். இரவு முழுதும் துயிலாமல் பெருமானுக்கு அருகினில் பாதுகாப்பாக, தனது கையினில் வில்லும் அம்பும் ஏந்தியவாறு கண்ணப்பர் நின்றார் என்பதை காப்பதோர் வில்லும் அம்பும் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் உணர்த்தும் பாடலை (4.49.7) இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். சிவபெருமானின் கண்களை தீப்பெரும் கண்கள் என்று, அவரது வலக்கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் உள்ள தன்மை உணர்த்தப்பட்டுள்ளது. காட்டில் தான் கண்ட சிவபெருமானின் உருவத்தை நீராட்ட, அருகில் பாத்திரம் ஏதும் இல்லாததால், கண்ணப்பர் தனது வாயில் நீரினைக் கொண்டு வந்தார். இவ்வாறு நீரினைக் கொணர்ந்த வாயினை தூயவாய்க் கலசம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

காப்பதோர் வில்லும் அம்பும் கையதோர் இறைச்சிப் பாரம்

தோல் பெரும் செருப்பு தொட்டுத் தூய வாய்க் கலசம் ஆட்டித்

தீப்பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுகத் தன் கண்

கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை வீரட்டனாரே

பொழிப்புரை

தடாகத்திலிருந்து பறிக்கப்பட்ட பெரிய தாமரை மலர் சூட்டப்பட்டதும், பொன்னின் நிறத்தில் மின்னும் சடைக் கற்றைகள் கொண்டதும் ஆகிய சடைமுடியின் மீது, குடங்களில் கொண்டுவரப் பட்ட குளிர்ந்த நீர் கொண்டு அடியார்கள் பெருமானை நீராட்டுகின்றனர். இந்த பெருமான், படம் எடுத்தாடும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டியுள்ளான். இத்தகைய பெருமான், தனது இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளி இருக்கும் இடம் இடமருது தலம் தானோ.

பாடல் 3:

வெண் கோவணங் கொண்டொரு வெண்டலை ஏந்தி

அங்கோல் வளையாளை ஒர் பாகம் அமர்ந்து

பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்

எங்கோன் உறைகின்ற இடைமருது ஈதோ

விளக்கம்:

வெண்கோவணம் என்பதற்கு ஒளி வீசும் கோவணம் என்று சிலரால் விளக்கம் அளிக்கப் படுகின்றது. வேதங்களே பெருமானுக்கு கோவணமாக இருப்பதால் பெருமானின் கோவணத்தை சாதாரண கோவணமாக கருதக்கூடாது என்ற கருத்து இந்த தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது போலும். ஒரு=ஒப்பற்ற;பக்குவம் அடைந்த அடியார்கள் தன்னில் இடுகின்ற ஆணவம் கன்மம் மாயம் எனப்படும் மலங்களுக்கு பதிலாக முக்தி நிலையினை பரிசாக அளிக்கும் மண்டையோடு என்பதால் ஒப்பற்ற வெண்டலை என்று சிறப்பிக்கப் பட்டது போலும். கோல்வளை=திரண்ட வளையல்கள்; வேலைப்பாடுகள் நிறைந்த வளையல்கள்; பொங்காவரு=பொங்கிய வண்ணம் பாய்ந்து வரும்; கோலம்-அழகிய; கோல்வளையாள் என்று பல திருமுறைப் பாடல்களில் பிராட்டி குறிப்பிடப் படுகின்றாள். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். சில பாடல்களில் இள மங்கையரையும் கோல்வளை என்று தேவார ஆசிரியர்க்ள் குறிப்பிடுகின்றனர்.

சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.47.7) திருஞானசம்பந்தர் பிராட்டியை கோல்வளையாள் என்று அழைக்கின்றார். ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற தீராத ஆசையை வேட்கை என்பர். ஆனால் பலருக்கும் அந்த பொருளை அடைந்த பின்னர்,பெரும்பாலும் அந்த பொருள் பால் அதுவரையில் அவர்கள் வைத்திருந்த ஆசை குறைவதையே நாம் உலகியலில் காண்கின்றோம். ஆனால் உமையன்னை இந்த தன்மையிலிருந்து மாறுபட்டவள் என்பதை உணர்த்தும் வகையில் குறைபடாத வேட்கை என்று இங்கே கூறுகின்றார். இமவானின் மகளாக வளர்ந்த பார்வதி தேவி, பெருமான் பால் தீராத காதல் கொண்டு பெருமானையே தனது கணவனாக அடையவேண்டும் என்ற நோக்கத்துடன். கடுந்தவம் புரிகின்றாள்.தனது தவத்தின் வலிமையால் பெருமானை மகிழ்வித்து பெருமானை மணந்து கொள்ளும் பேற்றினையும் பெருகின்றாள். பிராட்டி செய்த கடுந்தவத்தின் தன்மை திருமங்கை ஆழ்வாரால், பெரியதிருமடல் என்ற பாசுரத்திலும் குறிப்பிடப் படுகின்றது. பிராட்டி பெருமான் பால் கொண்டிருந்த வேட்கை,திருமணத்திற்கு பின்னரும் சற்றும் குறையாமல் இருந்தது. பெருமானை விட்டு ஒரு நொடியும் பிரியாது இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த பிராட்டி, பெருமானை வேண்டி, பெருமானின் உடலில் ஒரு பாகத்தில் இருக்கும் பேற்றினையும் பெற்றாள். இவ்வாறு பெருமான் பால் பிராட்டி கொண்டிருந்த வேட்கை, பெருமானை அடைந்த பின்னரும் சற்றும் குறையாமல் இருந்த தன்மையை, குறைபடாத வேட்கை என்று இங்கே குறிப்பிடுகின்றார். பொறைபடாத இன்பம்-பொறுக்க முடியாத இன்பம், அளவு கடந்த இன்பம்; மெய்ம்மை= உண்மையான கருத்து; பெருமான் பிராட்டியிடமிருந்து என்றும் பிரியாமல் இருந்த தன்மையின் பின்னணியில் உள்ள தத்துவம்; இறை=சற்றும்; படாத=தளராத; இளமையான மகளிர்; சிறை= குற்றம்; இளமகளிர் பாடும் குற்றமற்ற பாடல்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் இறைவன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

குறைபடாத வேட்கையொடு கோல்வளையாள் ஒரு பால்

பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மை என்னே

இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து

சிறைபடாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே

பிரமாபுரம் என்று அழைக்கப்ப்டும் சீர்காழி நகரின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.63.4) திருஞானசம்பந்தர், தாருகவனத்து இல்லத்தரசிகளை அங்கோல் வளையார் என்று குறிப்பிட்டு, அவர்களது இல்லத்திற்கு பிச்சைப் பெருமானாக சென்ற நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடுகின்றார்.ஆநலம்=கற்புநெறி; ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் குழையும் அணிந்து மாதொரு பாகனாக இறைவன் திகழும் தோற்றம் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. வெங்கோ=கோபம் கொண்ட தலைவன், இயமன்; தங்களின் இல்லத்திற்கு பலியேற்க வந்த பிச்சைப் பெருமானின் அழகில் தங்களது நிலையினை மறந்த தாருகவனத்து இல்லத்தரசிகள், தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு, பெருமானை பின்தொடர்ந்தனர். இந்த செய்கையால் அவர்கள் கற்பு நிலையிலிருந்து தவறியதாக கருதப்பட்டது. இதற்கு மூல காரணமாக இருந்த பெருமானை,கற்பினைக் கவர்ந்த கள்வன் என்று இங்கே கூறுகின்றார். உரிய காலத்தில், உயிர்களை, அவை அந்நாள் வரை குடிகொண்டிருந்த உடல்களிலிருந்து பிரிக்கும் இயமனை, அனைவரும் பழிக்கின்றனர். எனினும் அவன், தனது கடமையை தொடர்ந்து செய்ய வேண்டிய கடடாயத்தில் இருப்பதால்,பெருமானிடம் தனது நிலையினை அவன் எடுத்துரைக்க, பெருமான் அவனுக்கு தருமநெறியிலிருந்து வழுவாமல், எவ்வாறு தனது கடமையை நிறைவேற்றுவது என்பதை இயமனுக்கு கற்றுக் கொடுத்தார் என்ற செய்தி இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. இவ்வாறு இயமனுக்கு குருவாக இருந்த காரணத்தால், இயமனுக்கு தனது கடமையை அவன் செவ்வனெ செய்யும் வண்ணம் கற்றுக் கொடுத்து அவனை ஊக்குவித்த பெருமான் உறைகின்ற தலம் என்பதால் வெங்குரு என்ற பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது என்றும் கூறுவார்கள். இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், தாருகவனத்து மகளிரின் கோல்வளைகளை பெருமான் திருடியதாகவும் கூறுகின்றார்.

சங்கோடு இலஙகத் தோடு பெய்து காதிலொர் தாழ்குழையன்

அங்கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆனலம் வவ்வுதியே

செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்கும் செய்வினை மெய் தெரிய

வெங்கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே

நல்லம் (தற்போதைய பெயர் கோனேரிராஜபுரம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.85.7) திருஞானசம்பந்தர் பிராட்டியை அங்கோல்வளை மங்கை என்று குறிப்பிடுகின்றார். கொங்கு=நறுமணம் நிறைந்த தேன்; குழகாக=இளமைக் கோலத்தில்; தனது கையில் தீப்பிழம்பை ஏந்திய பெருமான்,ஊழித்தீயினில் நின்று நடமாடுவதை, உமை அன்னை கண்டு இன்பம் அடைகின்றாள் என்று கூறுகின்றார். பெருமானின் நடனக் கோலத்தை, இளமையும் அழகும் ஒன்றிய கோலம் என்று குறிப்பிடுகின்றார்.

அங்கோல் வளைமங்கை காண அனலேந்தி

கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக

வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்

நங்கோன் நமை ஆள்வான் நல்ல நகரானே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.9) திருஞானசம்பந்தர், பெருமானின் திரு முன்பும், பெருமான் திருவுலா வருகையிலும் நடனமாடும் பெண்மணிகளை கோல்வளையார் என்று குறிப்பிடுன்றார். விசும்பு=ஆகாயம்; அணவி=நெருங்கி கலந்து; வியன்= அகன்ற; அகழ்ந்து=ஊடுருவிக் கொண்டு; மன்னும்=நிலையாக இருக்கும்; கோல்=நடனம் ஆடுவோர் அபிநயம் பிடிப்பதற்காக தங்களது கையில் வைத்திருக்கும் கோல்; சிலை=வில்; நடன மாதர்களின் திறமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் நடனமாடும் போது, மீன் போன்ற அவர்களது கண்கள் அங்குமிங்கும் வேகமாக அசைவது,மீன்கள் வேகமாக பாய்வது போல அழகாகவும் வில் போன்று அழகாக வளைந்த புருவங்கள் மேலும் கீழும் செல்வதும் அழகாக உள்ளது என்று கூறுகின்றார்,

மேலொடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும்

மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்

கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தில் நின்று

சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடும் திருவையாறே

பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (2.19.8) திருஞானசம்பந்தர் கோல்வளை என்று கங்கை நங்கையை குறிப்பிடுகின்றார். பிணி=சேர்த்துக் கொண்ட; மிறைத்தல்=வருத்துதல்; மிகை=மிகுந்த அகம்பாவம்; குறைத்தல்=வலிமையை குறைத்து அடக்குதல்; குளிர் கோல்வளை என்ற தொடர் மூலம், குளிர்ந்த நீரினை உடைய கங்கை நதி என்று உணர்த்துகின்றார். நிறைத்தல்=சடையில் நிரம்பி இருக்கும் வண்ணம்;பிராட்டியை தன்னுடன் பிணைத்துக் கொண்டு மறைத்தவன் என்று கூறுவது சற்று சிந்திக்கத் தக்கது. எப்போதும் மாதொரு பாகனின் திருக்கோலத்தில் பெருமான் இருந்தாலும், அத்தகைய கோலத்தை அனைவர்க்கும் பெருமான் காட்டுவதில்லை. அவனது அருள் பெற்ற ஒரு சிலரே அந்த கோலத்தினை காணும் வாய்ப்பினை பெறுகின்றனர். இந்த தன்மையைத் தான், திருஞானசம்பந்தர் இங்கே மறைத்தான் என்ற சொல் மூலம் உணர்த்துகின்றார் போலும்.கங்கை நதி பெருமானின் சடையில் அடைக்கப்பட்டு இருந்தாலும், பெருமான் நடனம் ஆடும்போதும் மற்றும் எந்த நிலையிலும் கங்கை நீர் வெளியே வருவதில்லை. அதன் காரணம், புல் நுனியில் இருக்கும் பனித்துளி புல் காற்றில் அசைந்து ஆடினாலும் விழாமல் ஒட்டிக் கொண்டிருப்பது போன்று,பெருமானின் சடையில் பனித்துளி போன்று கங்கை வெள்ளம் ஒட்டிக் கொண்டிருப்பது தான். நிறைகுடம் தளும்பாது என்பது முதுமொழி. எனவே சடையில் நிறைந்து நிற்கும் கங்கை வெள்ளம் தளும்பாமல் நிற்கின்றது என்று உணர்த்துகின்றார் போலும்.

மறைத்தான் பிணி மாதொரு பாகம் தன்னை

மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையை

குறைத்தான் சடை மேல் குளிர் கோல்வளையை

நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

இரும்பூளை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.36.2) திருஞானசம்பந்தர், பிராட்டியை கோல்வளையாள் என்று அழைக்கின்றார்.தொழலார்=பலரும் தொழும் தன்மையை உடைய; குழல்=புல்லாங்குழல்; கோல்வளை=திரண்டவளையல்கள்; கோல்வளையாள்=திரண்ட வளையல்கள் அணிந்த பிராட்டி; கரிகாடு=சர்வ சங்காரத்தின் பின்னர் இருக்கும் உலகம்; ஆடும் கருத்து= வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்களுக்கு, தங்களது வினைகளை கழித்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் கருத்து; உமை அம்மையின் குரல் இனிமைக்கு, தேனையும், பாலையும், கரும்பின் சாற்றையும், வெல்லப் பாகினையும், யாழின் இசையையும், குழலின் இசையையும், பண்ணையும், கிளி, குயில் ஆகிய பறவைகளின் குரலையும் உவமையாக கூறுவது திருமுறை மரபு. பல தேவாரப் பாடல்களில் இத்தகைய உவமைகளை நாம் காணலாம். வலம் கொள்ளுதல்=வெல்லுதல்: கடந்து நிற்றல், பண்டைய நாட்களில் தோற்றவர், தங்களை வென்றவரை வலம் வந்து பணிந்து தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுதல் வழக்கமாக இருந்தது போலும். குழலும்,யாழும், தேவியின் குரலுடன் போட்டியிட முயன்று தோற்றதால், தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு தேவியை வலம் வந்ததாக, தேவார ஆசிரியர்கள் நயமாக கூறுகின்றார்கள். சிவந்த திருமேனி உடையவனாக அழகுடன் திகழும் பெருமான், எதற்காக கருகிய உடல்கள் நிறைந்து கருமை நிறம் கொண்ட காட்டினில், தனது அழகிய பாதங்கள் பதிய நடமாடுகின்றார் என்ற வினாவினை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் எழுப்புகின்றார்.

தொழலார் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்

குழலார் மொழிக் கோல்வளையாளொடு உடனாகி

எழிலார் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

கழல் தான் கரிகானிடை ஆடும் கருத்தே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.44.4) திருஞானசம்பந்தர் கோல்வளைக்கை மாதாகிய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கோணாகம் என்ற சொல்லினை, கோள் நாகம் என்று பிரித்து துன்பம் செய்யும் பாம்பு என்றும் கோண் நாகம் என்று பிரித்து வளையும் தன்மை கொண்ட உடலினைப் பெற்றுள்ள பாம்பு என்றும் இரண்டு வகையாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமே. அல்குல்=இடுப்பு; பூண்=அணிகலன்; புல்கி=தழுவி; நாகத்தின் படம் போன்று விரிந்து பரந்த இடுப்பினை உடைய் உமையன்னை என்றும் வேலைப்பாடு மிகுந்த வளையல்கள் அணிந்த தேவி என்றும் ஆபரணங்கள் அணிந்த தேவி என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஆமாத்தூர் அம்மானை அனைவரும் கண்டு மகிழவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்லும் முகமாக, பெருமானைக் காணாத கண்கள் குருட்டுக் கண்கள் என்று நயமாக சாடுவதையும் நாம் உணரலாம். பெரும்பாலான பாடல்களில் நாம் உமையன்னை பெருமானை காதலிப்பதாக தேவார முதலிகள் சொல்வதை காண்கின்றோம். இந்த பாடலில் பெருமான் பிராட்டியை காதலிப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

கோணாகப் பேரல்குல் கோல்வளைக்கை மாதராள்

பூணாகம் பாகமாப் புல்கி அவளோடும்

ஆணாகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக்

காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.13.2) அப்பர் பிரான் பெருமானை, கோல்வளையாள் பாகர் என்று குறிப்பிடுகின்றார்.மருங்குல்=இடை. அப்பர் பிரான், கொடி மருங்கல் என்ற சொல் மூலம், கொடியிடையாள் என்று உமையம்மையை குறிப்பிடுகின்றார். செம்பவளம் போன்று அழகிய வடிவினை உடையவராய், ஒளி வீசும் குழைகளை காதினில் அணிந்தவராய் காட்சி அளிக்கும் சிவபெருமான், கொம்பினை விரும்பிப் படரும் கொடி போன்று மெல்லிய இடையினைக் கொண்டவளும் அழகான வளையல்கள் அணிந்தவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக கொண்டவர் ஆவார். புதியதாக மலர்ந்து நறுமணம் வீசும் கொன்றை மலரினைத் தனது சடையின் மேல் வைத்து மகிழ்பவனும் அழகிய செம்மையான பவளத்தின் நிறத்தை உடையவனும் ஆகிய ஐயாற்றுப் பெருமானுக்கு ஆளாக, அடிமையாக மாறி தான் உய்ந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல். .

செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்

கொம்பு அமரும் கொடி மருங்குல் கோல் வளையாள் ஒரு பாகர்

வம்பு அவிழும் மலர்க் கொன்றை வளர்சடை மேல் வைத்து உகந்த

அம்பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.24.5) அப்பர் பிரான், பெருமானை கோல்வளைக்கை மாதோர் பாகன் என்று குறிப்பிடுகின்றார். கொப்பளித்த=விளங்கும். பொருந்தி இருக்கும்: நிழல் திகழ்=ஒளி; ஒளியுடன் திகழும்; ஏறு=எருது, இடபம்; கோதை=நீண்ட அழகிய கூந்தலை உடைய உமையன்னை; இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும் கோல்வளை பாகன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.

நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்றேந்திக்

கூறு கொப்பளித்த கோதைக் கோல்வளை மாதோர் பாகம்

ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த

ஆறு கொப்பளித்த சென்னி அதிகை வீரட்டானாரே

தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.81.6) அப்பர் நாயகி கோல்வளை என்று குறிப்பிடப்படுகின்றாள். பொற்சடை=பொன்+சடை.பொன் போன்று பொலிகின்ற சடை., புரி கணம்=விரும்பும் அடியார் கூட்டம். ஆர்த்தல்=ஆரவாரம் செய்தல். அரித்தல்=வாத்தியங்கள் முழங்குதல். இந்த பாடல் ஒரு தாயின் கூற்றாக அமைந்த அகத்துறைப் பாடலாக அமைந்துள்ளது. நடமாடும் சிவபிரானின் அழகினையும், அவனது நடனத்தின் நேர்த்தியையும் காணும் தாய், நடனத்தில் சிறந்த ஒருவனே தனது மகளுக்கு கணவனாக வரவேண்டும் என்று விரும்பிய தாய், சிவபிரானை விட நடனத்தில் சிறந்தவர் வேறு எவரும் உளரோ என்று அதிசயப்படுகின்றாள்.

பூத்தன பொற்சடை பொன்போல் மிளிரப் புரி கணங்கள்

ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறட் பூத கணம்

தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து

கூத்தனில் கூத்து வல்லார் உளரோ என்றன் கோல் வளைக்கே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.39.1) அப்பர் பிரான், தனது நாயகி. பெருமான் பால் தீவீர காதல் கொண்டுள்ள காரணத்தால்,பெருமானின் திருநாமங்களை உள்ளம் உருகி சொல்வதாக குறிப்பிடுகின்றார். காதன்மை=காதல் நோய். இந்த தலத்து பெருமானுக்கு வள்ளல் என்ற பெயரும் உள்ளது. அந்த பெயர் இந்த பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இந்த கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் உள்ள கோயில்களும் வள்ளலார் கோயில்கள் என்று அழைக்கப் படுகின்றன. கிழக்கே துறை காட்டும் வள்ளல் கோயிலும் (விளநகர், பாடல் பெற்ற தலம்), மேற்கில் வழி காட்டும் வள்ளல் கோயிலும் (மூவலூர்), வடக்கே ஞானம் காட்டும் வள்ளல் கோயிலும் (தட்சிணாமூர்த்தி கோயில்) தெற்கே மொழி காட்டும் வள்ளல் கோயிலும்(பெருஞ்சேரி) உள்ளன. அப்பர் பெருமான் பயன்படுத்திய வள்ளல் என்ற சொல் இந்த நான்கு கோயில்களையும் நினைவூட்டுகின்றது. இந்த பாடல்,சிவபெருமான் பால் ஆழ்ந்த காதல் கொண்டுள்ள அப்பர் நாயகியின் தாய் கூறுவதாக அமைந்த அகத்துறைப் பாடல். எப்போதும் பெருமானின் பெயரை உரைத்தவாறு இருக்கும் தனது மகளின் காதல் தன்மையைக் குறித்து தாய் கவலை கொண்டு தனது உணர்வினை வெளிப்படுத்தும் பாடல்.

கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை

உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர்

வள்ளல் மா மயிலாடுதுறை உறை

வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.3.6) அப்பர் பிரான், பெருமானை கோல்வளைக்கை மாதராள் பாகன் என்று குறிப்பிடுகின்றார். கூறு=பொருட்களின் நுண்ணிய கூறுகள்; பாய்ந்து வந்த கங்கை நதியைத் தனது சடையில் ஏற்கும் வல்லமை படைத்தவனும், மை போன்று கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவனும், பொருட்களின் நுண்ணிய பகுதிகளிலும் உள்ளே இருந்து அந்த கூறுகளுக்கு பற்றுக்கோடாக உள்ளவனும், அழகிய வளையல்களை தனது கையில் அணிந்துள்ள உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், திருநீற்றினை பூசிய அகலமான மார்பினை உடையவனும், களங்கம் ஏதும் இல்லாதவனும், பிறரது களங்கங்களை போக்க வல்லவனும், மலங்கள் அணுக முடியாத தன்மை படைத்தவனும், காளையை வாகனமாக ஏற்று, வல்லமையுடன் அதனைச் செலுத்த வல்லவனும் ஆகிய சிவபெருமானை, தான் பண்டைய நாட்களில் இகழ்ந்தேன். என்று தனது பரிதாபமான பண்டைய வாழ்க்கையை குறிப்பிட்டு அப்பர் பிரான் அஙகலாய்க்கும் பாடல்.

ஆறு ஏற்கவல்ல சடையான் தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னைக்

கூறு ஏற்கக் கூறமர வல்லான் தன்னைக் கோல் வளைக்கை மாதராள் பாகன் தன்னை

நீரேற்கப் பூசும் அகலத்தானை நின்மலன் தன்னை நிமலன் தன்னை

ஏறேற்க ஏறுமா வல்லான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

திருக்கருகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.15.3) அப்பர் பிரான், பெருமானை கோல்வளையாள் கூறன் என்று குறிப்பிடுகின்றார். தனது சொல்லாகவும், கருத்தாகவும் இருந்து செயல்படும் பெருமான் என்று முந்தைய இரண்டு பாடல்களில் கூறிய அப்பர் பிரான் இங்கே, காலன் தன்னை அடையாத வண்ணம் இறைவன் காக்கின்றான் என்று கூறுகின்றார். பிறப்பெடுத்த எவரும் இறப்பது திண்ணம். அவ்வாறு இருக்கையில் காலன் அடையா வண்ணம் காத்தான் என்று அப்பர் பிரான் ஏன் குறிப்பிடுகின்றார் என்ற ஐயம் நமக்கு எழலாம் என்பது. தன்னை பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து மீட்டதன் மூலம், தனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்று இல்லாமல் செய்த இறைவன், பிறப்பு இல்லாத காரணத்தால், காலனும் தன்னை அடையாமல் காக்கின்றான் என்று கூறுகின்றார் என்பது ஒரு வகையான விளக்கம். பொதுவாக எந்த உயிரும் உடலை விட்டுப் பிரிந்த பின்னர், சூக்கும உடலுடன் பொருத்தப்பட்டு, இயமனின் தூதுவர்களால் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் அழைத்துச் செல்லப் படுவது வழக்கம். ஆனால் பெருமான் தனது அடியார்களை இவ்வாறு இயமன் தூதர்கள் நெருங்காத வண்ணம் பாதுகாத்து அவர்களை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றார் என்பது இரண்டாவது விளக்கம். இந்த விளக்கமே மிகவும் பொருத்தமாக தோன்றுகின்றது. இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளாகக் கருதப்படுவன, சைவம் (சிவபிரான்), வைணவம் (திருமால்), காணாபத்தியம்(விநாயகர்), கௌமாரம் (முருகப்பெருமான்), சாத்தேயம் (சக்தி), சௌரம் (சூரியன்) ஆகியவை. இந்த பிரிவுகள் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. சைவ சித்தாந்தத்தில், சமயங்களை நான்கு வகையாகப் பிரித்து ஒவ்வொரு வகையிலும் ஆறு சமயங்களை குறிப்பிடுகின்றனர். கொண்ட சமயத்தார் தேவனாகி என்று கூறப்பட்டுள்ளதால், வேறு வேறு தேவர்களைக் கொண்ட ஆறு சமயங்கள் என்பது புலனாகின்றது. அனைத்து தேவர்களாக இருந்து, அவர்களை இயக்குபவன் சிவபிரான் தான் என்பது திருமுறையில் கூறப்படும் பொதுவான கருத்து என்பதால், இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுவது இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள் எனக் கொள்ளலாம்.

பூத்தானாம் பூவின் நிறத்தானுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற

கோத் தானாம் கோல்வளையாள் கூறனாகும் கொண்ட சமயத்தார் தேவனாகி

ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவானாம் என் நெஞ்சத்தின் உள்ளே நின்று

காத்தானாம் காலன் அடையா வண்ணம் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

கருப்பறியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.30.2) சுந்தரர், கோல்வளையாள் உடனாக பெருமான் அமர்ந்திருக்கும் தலம் என்று குறிப்பிடுகின்றார். பெருமானை மனதினால் நினைக்கும் அடியார்களுக்கு அவர் மிகவும் இனியவர் என்று கூறுகின்றார். திருவருளாகிய சக்தி உடனிருப்பதால், அடியார்களுக்கு அருள் தாமதம் ஏதுமின்றி உடனே கிடைக்கும் என்பதால், மிகவும் இனியவராக பெருமான் விளங்குகின்றார் என்று கூறினார் போலும். கொகுடி=ஒரு வகை முல்லைச் செடி. தலத்து அம்மையின் திருநாமம் கோல்வளை நாயகி. இதே பதிகத்தின் நான்கு மற்றும் ஏழாவது பாடல்களிலும் அம்பிகையின் இந்த திருநாமம் இடம் பெறுகின்றது.

நீற்றாரு மேனியராய் நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும்

காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக் கருப்பறியலூர்

கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில்

எற்றானை மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனியவாறே

திருவாரூர் பரவையுண் மண்டளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.96.8) சுந்தரர், பெருமானை கோல்வளையாள் பாகன் என்று குறிப்பிடுகின்றார். காற்றாக உள்ளவனும், கரிய மேகத்தைப் பொன்ற கழுத்தினை உடையவனும், கோல்வளையை தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும், உடல் முழுவதும் திருநீறு அணிந்தவனும், நீண்ட சடையின் மேலே நிறைவாக கங்கை நதியைத் தேக்கியவனும் ஆகிய பெருமான்,பரவையுண் மண்டளி தலத்தினில் எழுந்தருளியுள்ளான் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

காற்றானே கார்முகில் போல்வதொர் கண்டத்தெம்

கூற்றானே கோல்வளையாளை ஒர் பாகமாய்

நீற்றானே நீள்சடை மேல் நிறை உள்ளதோர்

ஆற்றானே பரவையுண் மண்டளி அம்மானே

திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் பாடலில் மாணிக்கவாசகர், கோல்வளையாளாகிய பிராட்டியின் நலம் பயக்கும் தன்மையையும் நாம் புகழ்ந்து பாடவேண்டும் என்று கூறுகின்றார். குலம்=இறைவனைப் புகழ்ந்து பாடும் அடியார்கள் கூட்டமும், தேவர்கள் கூட்டமும்; இந்த பாடலில் அடியார்களை,பெருமான் மற்றும் பிராட்டி ஆகிய இருவரின் முன்னே வைத்து, குறிப்பிடுவதன் மூலம், நாம் பெருமானின் அடியார்களை முதலில் வழிபட்ட பின்னரே பெருமானையும் பிராட்டியையும் வழிபடவேண்டும் என்று அடிகளார் நமக்கு உணர்த்துகின்றார் போலும். குரண்டாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதன் அடையாளமாக கொக்கிறகினை தனது சடையினில் அணிந்துள்ள சிறப்பினையும், ஆலகால நஞ்சினை உட்கொண்டு அனைவ்ரையும் காத்த தியாகத்தின் சிறப்பையும், பிராட்டி அனைத்து உயிர்களுக்கும் நலம் பயக்கின்ற தன்மையையும் சிலம்பும் கழலும் ஒலிக்க தில்லைச் சிதம்பரத்தில் பெருமான் நடனம் ஆடுகின்ற அழகினையும் நாள்தோறும் நாம் பாடவேண்டும் என்று அடிகளார் அறிவுரை கூறும் பாடல். அலம்பார் புனல் என்று, ஆரவாரத்துடன் சிதம்பரத்தில் ஓடும் நதியினை குறிப்பிடுகின்றார். .

குலம் பாடிக் கொக்கிறகும் பாடிக் கோல்வளையாள்

நலம் பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும்

அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

களந்தை ஆதித்தேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.9.8) கருவூர்த் தேவர், கோல்வளையாள் மையர் என்று குரிப்பிடுகின்றார். தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டதால், பெருமானின் உடல் இடது பாகத்தில் கருமை நிறத்தில் உள்ளது என்பதை உனர்த்தும் முகமாக,மையர் என்று குறிப்பிடுகின்றார். உண்மையான அடியார்களுக்கு திரி இடப்பட்டு ஏற்றப்பட்ட விளக்கு போன்று அவர்களின் அறியாமையை நீக்கி ஞானம் அளிப்பவனும், எழுதப் பட்டது போன்று அழகிய வரிகளை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டதால் உடலின் இடது பாகத்தில் கருமை நிறம் படர்ந்தவனும், உலகம் முழுவதும் திரிந்து பலியேற்பவனும், அனைத்து உயிர்களுடனும் கலந்திருந்த போதிலும் பொய்யர்கள் காண முடியாத வண்ணம் தன்னை ம்றைத்துக் கொள்பவனும், தங்களது மலங்களை முற்றிலும் கழித்துக் கொண்டு ஜீவன் முக்தர்களாக விளங்கும் அருளாளர்க்ளின் சொற்கள் மற்றும் செயல்கள் கொண்டு பக்குவப்பட்ட உயிர்களின் அறியாமையை நீக்கி ஞானம் புகுத்தும் தலைவனும் ஆகிய பெருமான், அழகுடன் பொலியும் களந்தை ஆதித்தேச்சரம் தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. எழுதுதல் என்றால் ஒவியமாக வரைதல் என்று பொருள்.

மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள்

மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும்

பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்தெழுந்த

ஐயரே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பாடலில் (9.27.3) புருடோத்தம நம்பி தன்னை இறைவன் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக, நடனம் ஆடும் பெண்மணியாக உருவகித்து, தனது கோல்வளைகளை திருடும் கள்வர் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். வைதீக நெறியுடன் சாராத திரிபுரத்து அரக்கர்கள் என்று இந்த பாடலை தொடங்குகின்றார். கொட்டா=முழவம் முதலிய இசைக்கருவிகள் பொருத்தமாக முழங்க;

ஒட்டா வகை அவுணர் முப்புரங்கள் ஒரம்பால்

பட்டாங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார்

சிட்டார் மறை ஒவாத் தில்லைச் சிற்றம்பலவர்

கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே

பெருமான் பிரளய காலத்தில் சுடுகாட்டினில் நடனமாடும் போது தேவியும் உடன் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். காரைக்கால் அம்மையாரின் தாயுள்ளம் பெருமானிடம், பிராட்டியை சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்லாதீர் என்று வேண்டும் அற்புதத் திருவந்தாதி பாடலில், அம்மையார், கோல்வளை என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். ஆரழல் என்று ஏனையொர் அணுகுதற்கு அரிய நெருப்பினில் பெருமான் நடனமாடுவதாக கூறுகின்றார். ஆடும் இடம் சுடுகாடு மற்றும் ஆடுவதோ நெருப்பின் இடையில் நின்று கொண்டு, பார்வையாளர்களோ பூதகணம் என்பதால், அந்த நடன அரங்கத்திற்கு அழகூட்டும் பொருட்டு, பிராட்டியை உடன் அழைத்துச் செல்வதாக அம்மையார் நயமாக கற்பனை செய்கின்றார்.

குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்து

எழிலாக வைத்து ஏக வேண்டா — கழலார்ப்ப

பேரிரவில் ஏமப் பெருங்காட்டில் பேயோடும்

ஆரழல்வாய் நீயாடும் அங்கு

பொழிப்புரை:

வெண்மையான கோவணத்தை அணிந்தவனாகவும் ஒப்பற்ற பிரம கபாலத்தை, வெண்மை நிறத்தில் காணப்படும் மண்டையோட்டினைத் தனது கையினில் ஏந்தியவனாகவும் விளங்கும் பெருமான், அழகிய திரண்ட வளையல்களை அணிந்தவளாகிய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனாக விளங்கும் எமது தலைவனாகிய பெருமான் உறைகின்றதும், பொங்கிய வெள்ளத்துடன் பாய்ந்து வரும் காவிரி நதியின் அழகிய கரையில் உள்ளதும் ஆகிய இடைமருது எனப்படும் தலம் இதுதானோ.

பாடல் 4:

அந்தம் அறியாத அருங்கலம் உந்திக்

கந்தம் கமழ் காவிரி கோலக் கரைமேல்

வெந்த பொடி பூசிய வேத முதல்வன்

எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ

விளக்கம்:

வேத முதல்வன் என்ற தொடரினை அந்தம் அறியாத என்ற தொடருடன் கூட்டி பொருள் காண வேண்டும். அருங்கலம்=அரிய ஆபரணங்கள்; அந்தம் அறியாத பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் வெந்த பொடி பூசியவன் என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தனக்கு முடிவு என்பது என்றும் இல்லை என்றும் தன்னைத் தவிர்த்து அனைத்து உயிர்களும் அனைத்துப் பொருட்களும் ஒரு நாள் அழியக்கூடியவை என்பதை உணர்த்தும் பொருட்டே, பெருமான் சாம்பலைத் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டுள்ளார். அருங்கலன் என்று விலையுயர்ந்த சந்தனக் கட்டைகள், அகில் கட்டைகள், மாணிக்கம் முத்து போன்ற அரிய பொருட்கள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. அந்தமற்றவன் பெருமான் என்ற குறிப்பு, பெருமான் ஆதியும் இல்லாதவன் என்பதையும் உணர்த்துகின்றது.

பொழிப்புரை:

விலையுயர்ந்த சந்தனக் கட்டைகள், அகில் கட்டைகள், மாணிக்கம் முத்து போன்ற அரிய பொருட்களை தனது இரண்டு கரைகளிலும் வீசி எறிந்து செல்வவளம் சேர்க்கும் காவிரி நதியின் அழகிய கரையின் மீது, தனது திருமேனி முழுவதும் வெண்ணீறு பூசியவனாக, முடிவு என்பதையும் தோற்றம் என்பதையும் அறியாதவனும் வேதங்களால் முழுமுதற்கடவுள் என்று போற்றப் படுவானும் எமது தந்தையும் ஆகிய பெருமான் எழுந்தருளும் இடைமருது எனப்படும் தலம் இது தானோ.

பாடல் 5:

வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே

தேசம் புகுந்து ஈண்டி ஓர் செம்மை உடைத்தாய்ப்

பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய

ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ

விளக்கம்:

தேசம்=பல இடங்கள்: இந்த பாடலில் தைப்பூச நாளில் பெருமானுக்கு சிறப்பு நீராட்டல் செய்யப்படுவது உணர்த்தப் படுகின்றது. பல தேவாரப் பாடல்கள் பல தலங்களில் கொண்டாடப் படும் திருவிழாக்களை குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். தைப்பூச நாளில் காவிரி நதியில் நீராடும் திருவிழா இடைமருது தலத்தினில் கொண்டாடப் பட்ட செய்தி, இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.76.5)திருஞானசம்பந்தரால் சொல்லப் பட்டுள்ளது. வானோரும் கொண்டாடும் பூசத் திருவிழா என்று குறிப்பிட்டு, இந்த் திருவிழாவின் மகத்துவம் உணர்த்தப் படுகின்றது.

வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்தீண்டி

பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவெய்த

திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில்

பொருந்திய கோயிலே கொயிலாகப் புக்கீரே

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (5.14.1) இந்த தலத்தினில் பூசநாள் சிறப்பாக கொண்டாடப் பட்ட செய்தியை குறிப்பிடுகின்றார். நாண்மலர்=அன்றைய நாளில் பூத்த மலர்; பாசம்=உலகப் பொருட்களின் மீதும் உலகத்தில் உள்ள உயிர்களின் மீதும் கொண்டுள்ள விருப்பம்; பூச=தைப் பூச நாள்; தை மாதம் பூச நாளன்று காவிரி நதியில் நீராடுதல் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. வைகலும்= தினமும்;பத்தர்=பத்து சிறந்த குணங்களை கொண்ட அடியார்கள். சிவனடியார்கள் கொள்ள வேண்டிய குணங்கள் அக குணங்கள் என்றும் புற குணங்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டுள்ளன. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்திருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும். இறைவனை நீராட்டி சிறப்பாக கொண்டாடும் தைப்பூச நாளன்று நாமும் காவிரி நதியில் நீராடி இறைவனைத் தொழுவோம் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

பாசம் ஒன்று இலராய்ப் பல பத்தர்கள்

வாச நாண்மலர் கொண்டு அடி வைகலும்

ஈசன் எம் பெருமான் இடை மருதினில்

பூச நாம் புகுதும் புனல் ஆடவே

திருமயிலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.47.5) திருஞானசம்பந்தர், பூம்பாவை என்று விளித்து, ஐப்பசி திருவோண விழாவினைக் காணாது செல்லுதல் முறையோ என்று வினவுகின்றார். பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் ஒரு திருவிழா அல்லது முக்கியமான நிகழ்ச்சியை குறிப்பிடும் திருஞான சம்பந்தர், அதனைக் காணாமல் செல்லலாமா பூம்பாவாய் என்று கேட்கின்றார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இறந்த ஏழு வயதுப் பெண் பூம்பாவையின் எலும்புகளும் சாம்பலும் நிறைந்திருந்த குடத்தினை, பூம்பாவை என்றே அழைக்கும் திருஞானசம்பந்தர், பல திருவிழாக்களை குறிப்பிட்டு,அவற்றைக் காணாமல் சென்றது முறையா என்று கேட்கின்றார். பதிகத்தின் முதல் பாடலில், பொதுவாக திருவிழாக் காலங்களில் அடியார்களை அமுது செய்விக்கும் காட்சியை காணாமல் செல்வது முறையா என்ற கேள்வியை எழுப்பிய திருஞான சம்பந்த்ர், அடுத்த ஒன்பது பாடல்களில் அத்தகைய திருவிழாக்கள் யாவை என்பதை உணர்த்துகின்றார். ஐப்பசி ஓணவிழா, கார்த்திகை விளக்கீடு விழா, மார்கழி திருவாதிரை விழா, தைப்பூச விழா, மாசிக் கடலாட்டு விழா, பங்குனி உத்திர நாள்விழா, சித்திரை அட்டமி விழா, வைகாசி ஊஞ்சலாட்டு விழா, பெருஞ்சாந்தி விழா என்று குறிப்பிடுகின்றார். ஐந்தாவது பாடலில் தைப்பூச விழா சொல்லப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில், நெய்பொங்கல் செய்து அடியார்கள் மற்றும் வறியவர்களுக்கு அளித்தமை, இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. புழுக்கல்=பொங்கல்

மைபூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலை

கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்

நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்

தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

திருவையாற்றில் ந்டைபெற்ற ஆதிரை நாள் திருவிழாவின் சிறப்பினை, அப்பர் பெருமான் ஒரு பதிகமாகவே (4.21) பாடியுள்ளார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். விதானம்=மேற்பகுதி: பலி=பெருமானுக்கு அளிக்கப்படும் நிவேதனப் பொருட்கள். எண் கணத்தார்களில் மாவிரதியர் ஒருவர். சிவபிரான் மாவிரதியர் கோலத்தில் வந்தது மானக் கஞ்சாறர் புராணத்தில் கூறப்படுகின்றது. மூன்று பாடல்களில் சேக்கிழார் பெருமான்,சிவபிரானின் மாவிரதி கோலத்தை விவரிக்கின்றார். அந்த மூன்று பாடல்களும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. நெற்றியில் மூன்று கீற்றாக திருநீறு; மழித்த தலையின் உச்சியில் ஓர் இடத்தில் மட்டும் கற்றையாக குடுமி மற்றும் அதன் மேல் எலும்பின் மணி; காதினில் எலும்பினைக் குடைந்து எடுத்த மணிகள் போன்ற அணி; கழுத்தில் எலும்புகளாலான பெரிய மாலை; தோளில் யோகப் பட்டை; மார்பினில் கருநிறம் உடைய மயிர்க் கற்றையால் செய்யப்பட்ட பூணூல், கையில் திருநீற்றுப் பை, முன்கையில் எலும்பினால் செய்யப்பட்ட காப்பு, இவை அனைத்தும் அடங்கிய கோலம் மாவிரதிக் கோலம் என்று பெரிய புராணத்தில் கூறப்படுகின்றது.

முத்து விதானம் மணிப் பொன் கவரி முறையாலே

பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே

வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்

அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

ஆதிரைத் திருநாள், ஞான சம்பந்தர் அருளிய மயிலைப் பதிகத்திலும் (2,47.4) கூறப்படுகின்றது.

ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்

கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்

கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

ஆதிரைத் திருநாளின் சிறப்பினை நேரில் காண்பதற்காக நாராயணன், நான்முகன், இந்திரன், அக்னி, சூரியன் உள்ளிட்ட பல தேவர்கள் வருவதால், ஆரூர் நகரத்தின் வீதிகள் நிறைந்து இருப்பதாக சேந்தனார், திருப்பல்லாண்டுப் பதிகத்தின் ஒரு பாடலில் கூறுகின்றார்.

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள்

நாரயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்

தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து

பாரார் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே

ஒற்றியூர் தலத்தினில் பங்குனி உத்திர நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டமை அப்பர் பிரானால் (6.45.5) சொல்லப் பட்டுள்ளது. களிறு=ஆண் யானை. இந்த பாடல் பங்குனி உத்திர நாள் மிகவும் விமரிசையாக அந்நாளில் திருவொற்றியூர் தலத்தில் கொண்டாடியதை உணர்த்துகின்றது. பங்குனி உத்திர நாள்,பெருமானின் திருமண விழாவாக கொண்டாடப்படுவதை நாம் இன்றும் பல திருக்கோயில்களில் காண்கின்றோம். அந்நாளில் தீர்த்தவிழாவாக கொண்டாடப்பட்டது போலும்.

மத்தமா களியானை உரிவை போர்த்து வானகத்தார் தான் அகத்தாராகி நின்று

பித்தர் தாம் போல் அங்கோர் பெருமை பேசிப் பேதையரை அச்சுறுத்திப் பெயரக் கண்டு

பத்தர்கள் தாம் பலருடனே கூடிப் பாடிப் பயின்று இருக்கும் உம்மூர் ஏதோ பணியீர் என்ன

ஒத்தமைந்த உத்திர நாள் தீர்த்தமாக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே

ஆரூரில் பங்குனி உத்திர நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட செய்தியை நாம் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாற்றிலிருந்து அறிகின்றோம். சங்கிலி நாச்சியாரை மணந்து ஒற்றியூரில் தங்கியதால், திருவாரூரில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருநாள் விழாவுக்கு செல்ல முடியாத நிலையை நினைத்து சுந்தரர் வருந்தி, இன்னும் எத்தனை நாள் ஆரூர் இறைவனைப் பிரிந்து இருப்பது என்ற ஏக்கத்துடன் ஒற்றியூரிலிருந்து அகலுகின்றார். சுந்தரருக்காக சிவபெருமான் பரவை நாச்சியாரிடம் தூது சென்ற போது, பரவை நாச்சியார் கேட்கும் கேள்வியிலும் பங்குனித் திருநாள் இடம் பெறுகின்றது. பங்குனித் திருநாளுக்கு வழக்கம் போல் வருவேன் என்று சொல்லிச் சென்ற சுந்தரர், அவ்வாறு வாராது ஒற்றியூரில் ஏன் சங்கிலியாருடன் தங்கினார் என்றும்,வாக்கினில் தவறிய அவருக்கு என்னுடன் கூடுவதற்கு என்ன உரிமை இருக்கின்றது என்று கேட்கும் கேள்வியை நாம் கீழ்க்கண்ட பெரிய புராணப் பாடலில் காணலாம்.

பங்குனித் திருநாளுக்குப் பண்டு போல் வருவாராகி

இங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே

சங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கொரு சார்வு உண்டோ நீர்

கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிது என்றார்

பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்ட செய்தி ஒற்றியூர் மற்றும் மயிலை தேவாரப் பதிகங்களிலும் காணப்படுகின்றது. மயிலைப் பதிகத்தின் (2.47.7) பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆரவாரத்துடன் நடக்கும் விழா என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்

கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

பலிவிழாப் பாடல் செய் பங்குனி உத்தர நாள்

ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்

திருமுருகன்பூண்டி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.49.7) ஒற்றியூர் உத்திர நாள் விழாவினை சிவபெருமான் மிகவும் விரும்பியதாக, சுந்தரர் கூறுகின்றார். நடுக்காட்டில் வேடர்களிடம், சேரமான் பெருமாள் நாயனார் தனக்கு அளித்த பரிசுப் பொருட்களை பறிகொடுத்த பின்னணியில் சுந்தரர் இறைவனை நோக்கி, கள்வர்கள் மற்றும் வேடர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், எதன் பொருட்டு, எதனைக் காவல் கொண்டு இங்கு உள்ளாய் பெருமானே, என்று மிகுந்த அன்புடன் கேள்வி கேட்கும் பாடல்.

வேதம் ஓதி வெண்ணீறு பூசி வெண்கோவணத்து அயலே

ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்திர நீர் மகிழ்வீர்

மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மாநகர்வாய்

ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே

திருவொற்றியூரில் பங்குனி உத்திரநாள் சிறப்பாக கொண்டாடப் பட்டது போன்று திருவாரூரிலும் இந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டதையும் நாம் அறிகின்றோம். திருவாரூர் மீது அருளிய விருத்தப் பதிகத்தின் பாடலில் (4.102.2.) பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டதை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

ஆராய்ந்து அடித் தொண்டர் ஆணிபொன் ஆரூர் அகத்தடக்கி

பாரூர் பரிப்பத் தம் பங்குனி உத்திரம் பால் படுத்தான்

நாரூர் நறுமலர் நாதன் அடித் தொண்டன் நம்பி நந்தி

நீரால் திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே

இவையன்றி திங்கள் நாள் திருவிழா, தேர்த்திருவிழா, பெருஞ்சாந்தி விழா, பருவநாள் விழா, கொடித் திருவிழா போன்றவை பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன.

பொழிப்புரை:

பல இடங்களிலும் சுற்றித் திரிந்த வண்டுகள் இடைமருது தலத்தில் உள்ள நறுமணம் கமழும் மல்ர்கள் உடைய சோலைகளை வந்தடைந்து தஙகளது இனிமையான குரலில் சிறந்த முறையில் ரீங்காரம் இடுகின்றன. தைப்பூச்த் திருநாளன்று காவிரி நதி சென்று நீராடி பொலிவும் அழகும் உடையவனாக விளங்கும் உறைகின்ற இடைமருது தலம் என்பது இது தானோ

பாடல் 6:

வன் புற்றிள நாகம் அசைத்து அழகாக

என்பிற் பல மாலையும் பூண்டு எருதேறி

அன்பிற் பிரியாதவளோடும் உடனாய்

இன்புற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ

விளக்கம்:

வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து உறைகின்ற தலம் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில், அன்பில் பிரியாதவளோடு உடனாக இன்புற்று வீற்றிருக்கும் தலம் என்று இந்த பாடலில் கூறுகின்றார். வன்புற்று=வலிமையான புற்று; பெருமானது உடலின் பல பாகங்களில் பிணைந்திருக்கும் பாம்புகள் எப்பொதும் பெருமானை விட்டு பிரியாமல் இருக்கின்றன. அவை புற்றில் வாழ்வதில்லை. எனினும் பாம்பு இனத்தின் பொதுத் தன்மை கருதி புற்றில் வாழும் நாகம் என்று கூறுகின்றார். தனது உடலின் பல இடங்களில் பாம்புகளை அணிந்தவனாக, எலும்பு மாலைகளை பூண்டவனாக, எளிமையான எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவனாக பெருமான் இருக்கும் தோற்றம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. எனினும் பெருமானை விட்டு என்றும் பிரியாதவளாக பிரட்டி இருக்கும் தன்மையின் சிறப்பினை உணர்த்தும் பொருட்டு அன்பில் பிரியாதவள் என்று கூறினார் போலும்.

பொழிப்புரை

வலிமையான புற்றுகளில் வாழும் பாம்பினைத் தனது இடுப்பினில் அழகாக கட்டிக்கொண்டு தனது விருப்பம் போன்று அசைக்கும் ஆற்ற்ல் உடைய பெருமான், எலும்பு மாலைகளை அணிந்தவனாக எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளான். இவ்வாறு எளிமையான கோலத்துடன் இறைவன் இருந்த போதிலும், இறைவன் பால் தான் வைத்திருந்த அளவு கடந்த அன்பின் காரணமாக, பிராட்டி இறைவனை விட்டு பிரியாதவளாக என்றும் அவனுடன் இணைந்து இருக்கின்றாள். இதனால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கும் இறைவன் உறைகின்ற இடைமருது தலம் என்பது இதுதானோ.

பாடல் 7:

தேக்கும் திமிலும் பலவுஞ் சுமந்து உந்திப்

போக்கிப் புறம் பூசல் அடிப்ப வருமால்

ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்

ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ

விளக்கம்:

திமில்=வேங்கை மரம். புறம் போக்கி=தன்னிடமிருந்து வெளியே தள்ளி; பூசல் அடிப்ப=கரையுடன் மோதும்; ஆர்க்கும்=ஆரவாரத்துடன் வரும்; திரை=அலை;ஏற்க=பொருத்தமாக;

பொழிப்புரை:

தேக்கு, வேங்கை, பலா ஆகிய பல மரங்களை, தனது அலைக் கரங்களால் தள்ளிக் கொண்டு வரும் காவிரி நதி, ஆரவாரம் எழுப்பும் தனது அலைகள் கொண்டு தான் அடித்து வருகின்ற மரங்களை வெளியே இருகரைகளிலும் வீசி எறிகின்றன. இவ்வாறு நதியின் அலைகள் எழுப்பும் ஆரவார ஒலி இரு கரைகளிலும் பட்டு எதிரொலிக்கின்றன. இத்தகைய நீர்வளம் நிறைந்த காவிரி நதியின் அழகிய கரையினில் இறைவன் பொருந்தி உறைகின்ற இடைமருது தலம் என்பது இதுதானோ

பாடல் 8:

பூவார் குழலார் அகில் கொண்டு புகைப்ப

ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த

ஆவா அரக்கன் தனை ஆற்றல் அழித்த

ஏவார் சிலையான் தன் இடைமருது ஈதோ

விளக்கம்:

ஆவா=இரக்கம் வேண்டி இறைஞ்சிய தன்மையை உணர்த்தும் குறிப்புச் சொல். கயிலாய மலையினை பேர்த்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு, தனது பயணத்தைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன், அந்த முயற்சியில் ஈடுபட்ட அரக்கன் இராவணன், பெருமான் கயிலாய மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றியதால், மலையின் கீழே அகப்பட்டு தவித்த நிலையில், தன் மீது இரக்கம் கொண்டு பெருமான் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கதறிய தன்மை ஆவா என்ற சொல் மூலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. ஓவாது=இடைவிடாது; ஏ=அம்பு; சிலை=வில்லாக வளைக்கப்பட்ட மேருமலை;ஆவா என்ற சொல்லுக்கு ஐயோ பாவம் என்று கண்டவர் இரக்கம் கொள்ளும் நிலையில் இருந்த அரக்கன் இராவணன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மேலே குறிப்பிட்ட வண்ணம் அரக்கன் இராவணன், கயிலை மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும் நிலையில் இருந்ததைக் கண்ட வாகீசர் என்ற முனிவர், அரக்கன் பால் இரக்கம் கொண்டு, சாமகானம் பாடி பெருமானை மகிழ்வித்து அவனது அருள் பெற்று தனது உயிரினை காப்பாற்றிக் கொள்ளுமாறு அரக்கனுக்கு ஆலோசனை வழங்கினார் என்றும் சொல்லப் படுகின்றது. இந்த கருத்து சிவக்கவிமணியாரால், பெரிய புராண விளக்கம் புத்தகத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பொழிப்புரை:

கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடல் வருந்தும் வண்ணம், அவனது ஆற்றலை அழித்து அவனை கயிலாய மலையின் கீழே அமுக்கியவர் சிவபெருமான். தஙகளது விருப்பம் போன்று எங்கும் திரிந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழிக்கும் பொருட்டு மேரு மலையினை வில்லாக வளைத்து அந்த வில்லினில் சிறந்த அம்பினை பொருத்தி, திரிபுரங்களை அழித்தவர் சிவபெருமான். மென்மையான மலர்கள் சூடிய கூந்தலை உடைய மங்கல மகளிர், பெருமானின் சன்னதியில் நறுமணம் எழுப்பும் அகில் கட்டைகளை எரிக்க, அடியார்கள் பெருமான் பால் கொண்ட அன்பின் காரணமாக குளிர்ந்த மனத்துடன் சற்றும் ஓய்வின்றி இடைவிடாது இறைவனின் திருவடிகளின் பெருமையைப் புகழ்ந்து பாடல்கள் பாடி இறைவனை வணங்கிட, பெருமான் எழுந்தருளியிருக்கும் இடைமருது தலம் என்பது இதுதானோ.

பாடல் 9:

முற்றாததோர் பால்மதி சூடு முதல்வன்

நற்றாமரையானொடு மால் நயந்தேத்தப்

பொற்றோளியும் தானும் பொலிந்து அழகாக

எற்றே உறைகின்ற இடைமருது ஈதோ

விளக்கம்:

முற்றாத=வளராத; ஒற்றைப் பிறையுடன் தான் முற்றிலும் அழியும் நிலையில் இருந்த போது தானே, சந்திரன் பெருமானிடம் சரணடைந்தான். பெருமான் அந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்ட பின்னர், அழிவிலிருந்து தப்பியதுமன்றி, நாளொரு கலையாக வளரவும் தொடங்கிய சந்திரனின் தன்மையை உணர்த்தும் பொருட்டு, முற்றாத மதி, வளர்ந்து கொண்டிருக்கும் சந்திரன், என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.பால்மதி=பால் போன்று வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரன்; தாமரையான்=தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமன்; சிறந்த பொருளினை பொன்னுக்கு ஒப்பிடுவது வழக்கம். அந்த வகையில் அழகில் சிறந்த பிராட்டியின் தோள்களை, பொன்னுக்கு ஒப்பிடுகின்றார். பல தேவாரப் பாடல்கள் மூங்கில் போன்று அழகிய தோள் என்று பிராட்டியின் தோள்களை, குறிப்பிடுகின்றன. பொற்றோளி=பொன் போன்று சிறந்து அழகுடன் பொலியும் தோளினை உடைய பிராட்டி. எற்றே=எந்த தன்மை;

பொழிப்புரை:

வளராத தன்மையில் உள்ள ஒற்றைப் பிறைச் சந்திரனுடன் இருப்பதும், பால் போன்று வெண்மை நிற்த்துடன் காணப்படுவதும் ஆகிய பிறைச்சந்திரனை,தனது சடையில் அணிந்து கொண்ட முதல்வனாகிய பெருமானை, நல்ல தாமரை மலர் மீது அமரும் பிரமனும் திருமாலும் நயமான சொற்களைச் சொன்ன வண்ணம் புகழ்ந்து வழிபடுகின்றனர். இத்தகைய பெருமை உடைய பெருமான், பொன் போன்று சிறந்த அழகினை உடைய தோளினை உடையவளாகிய பிராட்டியுடன், அழகுடன் பொலிந்து உறைகின்ற தலமாகிய இடைமருது என்பது இதுதானோ.

பாடல் 10:

சிறு தேரரும் சில் சமணும் புறங் கூற

நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த

வெறியா வரு காவிரி கோலக் கரைமேல்

எறியார் மழுவாளன் இடைமருது ஈதோ

விளக்கம்:

சிறு தேரர்=சிறுமதி உடைய புத்தர்கள்; சில்=சிற்றறிவு உடைய; சிவபெருமானின் தன்மையை ஒழுங்காக புரிந்து கொள்ளாமல், உண்மைக்குப் புறம்பான செய்திகளை இட்டுகட்டி இழிவாக பேசுவதால், இழிந்த தன்மை உடையவர்கள் என்று புத்தர்களையும் சமணர்களையும் குறிப்பிடுகின்றார். நெறி=முறை;வெறி=நறுமணம்; எறியார் மழு=கொல்லும் தன்மை உடைய மழு ஆயுதம். தாருகவனத்து முனிவர்கள் யாகத்திலிருந்து எழுப்பிய மழு ஆயுதம் பெருமானை கொல்வதற்காக ஏவப்பட்டது. ஆனால் பெருமான் அந்த ஆயுதத்தை செயலிழக்கச் செய்து அந்த ஆயுதத்தைத் தனது கையில் ஏந்திக் கொண்டார். அதனால் அவரை மழுவாளன் என்று அழைக்கின்றனர். இந்த பதிகத்தின் ஏழாவது பாடலில், தேக்கும் திமிலும் பலவும் சுமந்து வருகின்ற காவிரி நதி என்று குறிப்பிட்ட வண்ணம், காவிரி நதி நறுமணம் கமழும் சந்தன மரத்தின் துண்டுகள், அகில் கட்டை, மலர்களையும் அடித்துக் கொண்டு வருவதால் காவிரி நீர் நறுமணம் கமழ்கின்றது. அந்த தன்மையைத் தான் திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை

குற்றமுடைய அறிவு படைத்த புத்தர்களும் சிற்றறிவு படைத்த சமணர்களும், தங்களது குறைந்த அறிவின் காரணமாக பெருமானின் தன்மைகளை சரிவர புரிந்து கொள்ளாமல், உண்மைக்கு புறம்பான பல செய்திகளை இட்டுக்கட்டி பெருமானை இழிவாக பேசும் சொற்களை பொருட்படுத்தாமல் ஒதுக்கித்தள்ளும், அடியார்கள் தங்களது கைகளை கூப்பி முறையாக இறைவனை பணிந்து புகழ்கின்றனர். இத்தகைய அடியார்கள் நன்னெறியில் செல்ல விருப்பம் உடையவர்களாக பெருமான் பால் அன்பு கொண்டு விளங்குகின்றார்கள். இவ்வாறு முறையாக அடியார்களால் தொழப்படும் பெருமான், கொல்லும் படையாகிய மழு ஆயுதத்தை தனது கையில் ஏந்தியுள்ள பெருமான், நறுமணம் கமழும் நீரினை உடையதாகப் பாய்ந்து வரும் காவிரி நதியின் அழகிய கரையினில் உறைகின்ற தலமாகிய இடைமருது என்பது இது தானோ.

பாடல் 11:

கண்ணார் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்

எண்ணார் புகழ் எந்தை இடைமருதின் மேல்

பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்

விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே

விளக்கம்:

கண்ணார்=கண்களைக் கவரும் கண்ணுக்கினிய காட்சிகள் நிறைந்த; எண்ணார்=எண்ணுதற்கு அரிய. பெருமானின் அருள் கைகூட அடியார்கள் தேவர்களும் பணிந்து வணங்கும் வண்ணம் சிறப்பாக விளங்குவார்கள் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுவது, நமக்கு அப்பர் பிரானின் பாடல் ஒன்றினை (4.112.5) நினைவூட்டுகின்றது. தன்னைத் தொழுகின்ற தேவர்கள், தனது அடியார்களயும் தொழும்வண்ணம், தனது அடியார்களின் நிலையை சிவபெருமான் உயர்த்துகின்றார் என்று உணர்த்தும் பாடல். தவளப்பொடி=திருநீறு: இகழ்திர்=இகழ்வீரோ, எதிர்மறைப் பொருளில் இகழாதீர் என்று பொருள் கொள்ளவேண்டும். கனகக் குன்றம்= பொன் நிறம் கொண்ட மேரு மலை: முழுமையான அனல் போன்று சிவந்த திருமேனியில், வெண்மை நிறம் கொண்ட திருநீற்றை அணிந்தவராய் சிவபெருமான் விளங்குகின்றார். மேருமலை போன்று ஒளி திகழும் மேனியினை உடைய எங்கள் தலைவனாகிய சிவபெருமானை இகழும் மாந்தர்களே உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன்; நீங்கள் நான் சொல்வதை கேட்பீர்களாக. இந்த உலகத்து மக்களால் தொழப்படும் பல தேவர்களும் சிவபிரானைத் தொழுகின்றார்கள். அந்த தேவர்கள் தன்னைத் தொழுத பின்னர்,தனது அடியார்களையும் அந்த தேவர்கள் தொழுமாறு செய்பவன் சிவபெருமான். இவ்வாறு தனது அடியார்களை, தன்னைத் தொழும் தேவர்கள் வணங்கும் நிலைக்கு உயர்த்தும் சிவபெருமானை நீங்கள் இகழலாமா, இகழக்கூடாது.

முழுத் தழல் மேனித் தவளப் பொடியன் கனகக் குன்றத்து

எழில் பெரும் சோதியை எங்கள் பிரானை இகழ்திர் கண்டீர்

தொழப் படும் தேவர் தொழப் படுவானைத் தொழுத பின்னைத்

தொழப்படும் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே

பொழிப்புரை:

கண்ணுக்கு இனிய காட்சிகளை உடையதும் நறுமணம் கமழ்வதும் ஆகிய சீர்காழி நகரைச் சார்ந்த ஞானசம்பந்தன், எண்ணுதற்கு அரிய புகழினை உடையவனும், எமது தந்தையும், இடைமருது தலத்தினில் உறைபவனும் ஆகிய பெருமானின் மீது இயற்றிய பத்து பாடல்களையும் முறையான பண்ணுடன் இணைத்து பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், விண்ணவர் உலகத்தினில் பலரும் போற்றும் வண்ணம் வீற்றிருப்பார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் பல பாடல்களில் பெருமானின் எளிய தோற்றமும் அவனது ஆற்றலும் சொல்லப் பட்டுள்ளன. பதிகத்தின் முதல் பாடலில் அவனது எளிய தோற்றமும் அவனது எல்லையற்ற ஞானமும் உணர்த்தப்படுகின்றன. இரண்டாவது பாடலில் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக கட்டிய பெருமான்,அந்த பாம்பினைத் தனது விருப்பம் போன்று அசைக்கின்றான் என்று குறிப்பிட்டு அவனது ஆற்றல் சொல்லப் பட்டுள்ளது. மூன்றாவது பாடலும் பெருமான் வெண் கோவணம் அணிந்தவனாக இருக்கும் எளிய கோலம் கூறப் பட்டுள்ளது. அந்தமும் ஆதியும் இல்லாத பெருமான் என்று, முழுமுதற் கடவுளாக அவன் இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது. இந்த பாடலிலும் திருநீற்றினை சந்தனமாக பூசிக் கொள்ளும் அவனது எளிய தன்மை குறிப்பிடப்பட்டுள்ளது.ஐந்தாவது பாடல் இந்த தலத்தினில் அடியார்கள் சிறப்பாக கொண்டாடும் பூசத் திருவிழா குறிப்பிடப்படுகின்றது. ஆறாவது பாடலும் எலும்பு மாலை அணிந்தவனாக இருக்கும் பெருமான், எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ளான் என்று அவனது எளிய தன்மையை உணர்த்துகின்றது. ஏழாவது பாடலில் தலத்தின் நீர்வளமும் செல்வச் சிறப்பும் சொல்லப் பட்டுள்ளன. எட்டாவது பாடல் இராவணனின் கயிலாய நிகழ்ச்சி மற்றும் திருபுரங்களை எரித்த செய்கை இவற்றை குறிப்பிட்டு அவனது எல்லையற்ற ஆற்றலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. ஒன்பதாவது பாடல் அவனது கருணைத் தன்மையை உணர்த்துகின்றது. பதிகத்தின் இரண்டாவது, ஐந்தாவது, எட்டாவது மற்றும் பத்தாவது பாடல்கள், தலத்து அடியார்கள் செய்கின்ற வழிபாட்டின் சிறப்பினை உணர்த்தி, நாமும் அவ்வாறு இறைவனை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்பதை உணர்த்துகின்றன. கடைப்பாடல் இந்த பதிகத்தை முறையாக பாடும் அடியார்கள் தேவர்கள் போற்ற விண்ணுலகில் வீற்றிருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றது. இந்த பதிகம் மூலம், பெருமானின் எளிய தன்மையையும். அவனது ஆற்றல் மற்றும் கருணையின் தன்மையையும், அடியார்கள் பெருமானை எவ்வாறு சிறப்பாக கொண்டாடினார்கள் என்பதையும் அறிந்து கொள்ளும் நாமும் திருவிடைமருதூர் அடியார்களைப் பின்பற்றி பெருமானைப் போற்றிப் புகழ்ந்து வணங்கி நற்கதி அடைவோமாக.

ஓடேகலன் உண்பது (Odaekalan Unpathu) is a phrase that can be translated as “consuming the remaining or leftover food”. Let’s break down the components:

Breakdown of the Phrase:

ஓடேகலன் (Odaekalan): This term combines ஓடே (Odae), which means remaining or leftover, and கலன் (Kalan), which can imply to consume or to eat. Together, it refers to something that is left behind or remaining.

உண்பது (Unpathu): Means to eat or consuming.

Full Meaning:

"ஓடேகலன் உண்பது" translates to "eating the remaining food" or "consuming leftovers." The phrase indicates the act of eating what is left after a meal or what remains from previous servings.

Context:

Practical Usage: In everyday Tamil, this phrase might be used to describe the act of eating leftovers from a previous meal. It can reflect practical aspects of managing food and ensuring that nothing is wasted.

Cultural and Ethical Implications: In some contexts, this phrase can also reflect values related to modesty and not wasting food. In many cultures, consuming leftovers is seen as a practical and respectful way of handling food resources.

Literary Usage: In literary or poetic contexts, this phrase could be used metaphorically to describe the act of using or consuming what remains after something significant has occurred. It might symbolize making the most of what is left or the remnants of past efforts or experiences.

Example in Context:

In a story or poem, "ஓடேகலன் உண்பது" might be used to depict a character's resourcefulness or humility. For instance, a character who consumes the remaining food could be portrayed as practical, thrifty, or appreciative of the value of resources.

Conclusion:

"ஓடேகலன் உண்பது" conveys the simple act of eating leftover food. It reflects practical aspects of managing resources and might carry cultural or ethical connotations related to food consumption and respect for resources. In literature, it can be used both literally and metaphorically to explore themes of resourcefulness, humility, and the value of what remains.



Share



Was this helpful?