பதிக எண்: 1.59 - பெண்ணாகடம் - தக்கராகம்
பின்னணி
முதுகுன்றம் தலத்தில் பல நாட்கள் தங்கியிருந்து பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், அடுத்து பெண்ணாகடம் தலம் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக, முதுகுன்றத்து பெருமானை வணங்கி விடை பெற்றுக் கொண்ட பின்னர் பெண்ணாகடம் சென்று அடைந்தார் என்று நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். சென்னை திருச்சி இரயில் பாதையில், முதுகுன்றம் தலத்திற்கு (விருத்தாச்சலத்திற்கு) அருகில் உள்ள இரயில் நிலையம். பெண்ணாகடம். இந்த தலம் விருத்தாசலம் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தொழுதூரிலிருந்து பதினைந்து கி.மீ. தொலைவில் உள்ள தலம். தலத்தில் உள்ள திருக்கோயில் தூங்கானைமாடம் என்று அழைக்கப்படுகின்றது. சம்பந்தர் தனது பதிகத்தில் ஊரின் பெயரையும் திருக்கோயிலின் பெயரையும் இணைத்து சொல்வதை நாம் காணலாம். மூலவர் விமானம், படுத்திருக்கும் யானையின் பின்புறம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதனால் தூங்கானை மாடம் என்ற பெயர் வந்தது. பெண் (தேவ கன்னியர்கள்), ஆ (காமதேனு பசு) மற்றும் கடம் (ஐராவதயானை) வழிபட்டமையால் இந்த தலத்திற்கு பெண்ணாகடம் என்ற பெயர் வந்தது. இந்த பெயர் நாளடைவில் பெண்ணாடம் என்று மருவியுள்ளது. இறைவனின் திருநாமம் சுடர்கொழுந்து நாதர். இந்த பெயர் சேக்கிழால் குறிப்பிடப்படுவதை நாம் உணரலாம்.
ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசை
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற பெருந்தனிப் பரஞ்சோதிப்
பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ் மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப் பதிகமும் தெரிவித்தார்.
தேவ கன்னியர், காமதேனு, ஐராவத யானை, இந்திரன், பார்வதி தேவி வழிபட்ட தலம். இந்திரன் ஒரு முறை இரண்டு தேவ கன்னியரை, தான் சிவபிரானை பூஜை செய்வதற்காக மலர்கள் எடுத்து வருமாறு பூவுலகம் அனுப்பினான். பூமிக்கு வந்த அந்த கன்னியர்கள், இந்த தலத்து இறைவனை கண்டு மகிழ்ந்து வழிபாடு செய்தனர். கன்னியர்கள் வராததை கண்ட இந்திரன், அவர்களை தேடி வருமாறு தனது பசு காமதேனுவை அனுப்பினான். காமதேனு பசுவும், அந்த லிங்கத்தையும் தேவ கன்னியர்கள் வழிபாடு செய்வதை பார்த்த பின்னர், தானும், அந்த வழிபாட்டில், பால் பொழிவது மூலம் கலந்து கொண்டது. கன்னியர்களும், பசுவும் வராததை கண்ட இந்திரன், தனது யானையை அனுப்பினான். பூமிக்கு வந்த ஐராவத யானை, சிவபிரான் மீது வெய்யில் படாதவாறு நிழல் கொடுத்தது. நடந்ததை அறிந்து, யானையும் தலத்தில் தங்கி வழிபட ஆரம்பித்தது. திகைத்து நின்ற இந்திரன், தானே பூமிக்கு வந்து, அனைவரும் சிவ வழிபாட்டில் திளைத்து இருப்பதைக் கண்டான். தானும் அவர்களுடன் சேர்ந்து சிவபிரானை வழிபட்டான். அனைவரும் சிவபிரான் அருள் பெற்று பின்னர் தேவலோகம் திரும்பினர்.
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில்களில் இதுவும் ஒன்று. நந்தி கருவறையை நோக்கி இல்லாமல் திரும்பி இருப்பதை காணலாம். ஒரு சமயம் ஊழிக்காலத்தில், தேவர்கள் அனைத்து உயிரினங்களின் மூலக் கருவினையும் இந்த தலத்தில் வைத்து பாதுகாத்தனர். அப்போது ஊழி வெள்ளத்தைத் தடுப்பதற்காக நந்தி திரும்பி நின்று செயல்பட்டார். அந்த நிகழ்ச்சியை நினைவூட்டும் வண்ணம் நந்தி அமைந்துள்ளது. கோயிலின் முன் வாயிலில் குடவரை விநாயகரை காணலாம். மூலவர் சற்று உயரமான சுயம்பு லிங்கம். கட்டு மலையின் மீது அமைந்துள்ளது. சன்னதியின் மூன்று பக்கங்களிலும் ஜன்னல் போன்ற அமைப்பு இருப்பதை காணலாம். கோயிலின் மேற்கு பகுதியில் மெய்கண்டார் சன்னதி காணப்படுகின்றது. சைவ சித்தாந்தக் கருத்துகளை நூல் வடிவில் முதலில் தொகுத்த இவர், சந்தானக் குரவர்களில் முதல்வராக கருதப் படுகின்றார். இவர் தோன்றுவதற்கு எவ்வாறு ஞானசம்பந்தரின், கண்காட்டு நுதலானும் என்று தொடங்கும் பதிகம் வழி வகுத்தது என்பதை நாம் அந்த பதிக விளக்கத்தில் சிந்தித்தோம். சந்தானம் என்றால் தொடர்ச்சி என்று பொருள். மெய்கண்டார், அருள்நந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோர் நான்கு சந்தானக் குரவர்கள். சமயக் குரவர்கள் நால்வருடன், இந்த நால்வரின் உருவச்சிலைகளும் பல திருக்கோயில்களில் காணப்படுகின்றன. மறைஞானசம்பந்தரும் இந்த தலத்தில் சில காலம் வாழ்ந்தார் என்று கூறுவார்கள். மெய்கண்டாரின் சன்னதிக்கு அருகே, கலிக்கம்ப நாயனாரின் சன்னதி உள்ளது. இவரது சரித்திரத்தை நாம், சுருக்கமாக பதிகத்தின் முடிவுரையில் காணலாம். இராஜகோபுரத்தின் வடக்கே, தனி கோபுரத்துடன் நடராஜர் சன்னதி உள்ளது. உயரமான கலை நுணுக்கங்கள் வாய்ந்த அழகான சிலை. கட்டுமலையின் கீழே பிரளயகாலேஸ்வரியின் சன்னதி உள்ளது.
கருவரையின் வடக்கு பகுதியில் சௌந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது. சௌந்தரவல்லி என்ற அடியார், ஆடியும் பாடியும் இறைவனுக்குத் திருத்தொண்டு செய்து வந்த அடியார், கடைத்தெருவில் இருந்த தனது இல்லத்திலிருந்து பெருமானை காண்பதற்கு வசதியாக, கருவறையின் மூன்று பக்கங்களிலும் சாளரங்கள் அமைக்கப்பட்டது என்று கூறுவார்கள். வெள்ளாற்றின் கரையில் உள்ள இந்த தலத்து இறைவன், தன்னை வழிபட வந்த சோழமன்னன் வெள்ளத்தின் காரணமாக அடுத்த கரையில் தங்கி தவம் செய்த பொது, அவன் காண்பதற்கு வசதியாக கருவறை உயர்ந்தது என்றும் செவிவழிச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பல பாடல்களில், உயிருக்கு ஏற்பட்டுள்ள தீங்கினை நீக்கிக் கொள்ள விரும்பும் மனிதர்கள், தூங்கானை மாடத்து இறைவனை வணங்கி பயன் பெறலாமென்று சம்பந்தர் அறிவுரை கூறுவதை உணர்த்தும் முகமாக தீங்கினை நீங்குவீர் தொழுமின்கள் என்று சம்பந்தர் இசைப் பதிகம் பாடியதாக சேக்கிழார் கூறுகின்றார். அந்தணர்கள் பெருமானை வேத கீதங்கள் ஓதி புகழ்வதாலும், தங்களது இல்லங்களில் வேதங்கள் ஒதி பயில்வதாலும் வேதவொலி நிறைந்து காணப்படும் தலம் என்று சேக்கிழார் கூறுகின்றார். திருஞான சம்பந்தரும் தனது பதிகத்தின் முதல் பாடலில் இந்த செய்தியை கூறுவதை நாம் காணலாம் மூவர் பெருமானார்கள் அருளிய தேவார பதிகங்களை, பெரிய புராணத்தில் பல இடங்களில் குறிப்பிடும் சேக்கிழார், அந்த பதிகங்களை குறிப்பிடுகையில், அந்தந்த பதிகத்தில் உள்ள சொற்களைக் கையாண்டும், சில தேவாரப் பாடல்களின் பொருளை பெரிய புராண பாடல்களில் உணர்த்தியும், பதிகங்களின் பெயர்களை குறிப்பிட்டும் கூறுவது, தேவாரப் பதிகைகள் எந்த அளவுக்கு சேக்கிழாரின் மனதினை ஈர்த்தன என்பதை நமக்கு உணர்த்துகின்றது.
பாடல் 1:
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்தாய வாழ்க்கை ஒழியத் தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழற்கீழ் ஆளாம் வண்ணம்
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழுமனைகள் தோறும் மறையின் ஒலி
தொடங்கும் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்:
பிணி=வினைகளும் வினைகளால் வரும் துன்பங்களும்; முந்தைய பிறவிகளில் நாம் தேடி சேர்த்துக் கொண்ட வினைகளின் தன்மைக்கு ஏற்ப, இந்த பிறவியில் நமக்கு உடல் அமைகின்றது. உடலுடன் சேர்ந்த உயிரும் சிறிது சிறிதாக வினைகளின் பயனை, இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்து கழிப்பதை நாம் அறிவோம். பிறவி எடுத்த நாளிலிருந்து இந்த பிறவியினில் நாம் அனுபவித்து கழிக்க வேண்டிய வினைகள் என்று இறைவனால் நிர்ணயிக்கப் பட்ட வினைகள் இந்த உயிருடன் பிணைந்து இருக்கின்றன. ஆனால் இந்த வினைகள் அனைத்தும் ஒரே நாளில் அவற்றின் பலனை தருவதில்லை. ஒடுங்கி இருக்கும் வினைகள், அந்த வினைகளால் நாம் அனுபவிக்க ஏற்ற காலம் வரும் வரை வெளிப் படுவதில்லை. தக்க காலம் வரும் வரை காத்திருக்கும் வினைகள், உரிய காலம் வந்ததன் பின் வெளிப்பட்டு நமக்கு இன்பமும் துன்பமும் அளிக்கின்றன. இவ்வாறு உள்ள தன்மையை ஒடுங்கும் பிணி என்று சம்பந்தர் கூறுகின்றார். கிடங்கு=அகழி; சுலாவி=சுற்றி;
கேடு=கேட்டுப் போவது; பிறவியுடன் இணைத்து சொல்லப் பட்டுள்ளமையால் பிறவிக்கு கெடுதியை உண்டாக்கும் இறப்பு. இந்த சொல் இறப்பினை மட்டும் குறிப்பிடாமல் நாம் இறப்பதற்கு முன்னர் அனுபவிக்க வேண்டிய பல துன்பங்களையும் குறிப்பிடுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். தவம் அடங்குதல்=தவத்தில் அடங்கி நிற்றல்; தவமாகிய சாதனத்தில் அழுந்தியிருத்தல்; இந்த பாடலில் தூங்கானை மாடத்து பெருமானின் திருவடி நிழலின் கீழே ஆளாகி நிற்க வேண்டும் என்று கூறுகின்றார். இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.90.3). சொல்வதை நினைவூட்டுகின்றது.
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே
ஆளாதல்=சிவபிரானுக்கு அடியவராக இருத்தல். மீளா ஆள்=என்றும் மாறாத அடிமைத் திறம். மெய்ம்மை=உண்மையான பரம்பொருள். தோளாத=உட்குழி இடப்படாத சுரைக் குடுக்கை. தொழும்பர்=அடிமை, இங்கே அடிமை நிலையில் இருக்கும் தாழ்ந்தவர் என்ற பொருளில் வருகின்றது. பெருமானினும் நாம் தாழ்ந்தவர் என்ற எண்ணத்துடன் பெருமானைப் பணிந்து வணங்க வேண்டும். வாளா=பயன் அற்று, வீணாக. கழிதல்=இறத்தல்.
அறிவில் முழு வளர்ச்சி அடைந்து தனது காலில் நிற்கும் திறமை பெற்ற மனிதனை ஆள் என்று அழைக்கின்றோம். அப்பர் பிரான் சிவபிரானின் தொண்டர்கள் அல்லாதவரை ஆள் என்று கருதவில்லை. இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து வெளியே வாராமல் பெருமானுக்கு திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார்.
மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே
கடந்தை=வீரம் நிறைந்த மக்கள்; பண்டைய நாளில் வீரர்கள் வசித்த இடமாக பெண்ணாகடம் இருந்தது போலும். கடந்தை என்ற அடைமொழியுடன் சம்பந்தர் இந்த பாடலில் இந்த தலத்தினை குறிப்பிடுகின்றார். அப்பர் பிரானும் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில் (மூன்று பாடல்களே நமக்கு கிடைத்துள்ளன) கடந்தையுள் தூங்கானை மாடம் என்று குறிப்பிடுகின்றார். ஊர் மக்கள் இந்த கோயிலினை பெருங்கோயில் என்று அழைக்கின்றனர். ஊரில் பல சிவாலயங்கள் இருந்தால், அந்த ஆலயங்களில் அதிகமான சிறப்பு வாய்ந்த திருக்கோயிலை பெருங்கோயில் என்று அழைப்பது வழக்கமாக இருந்தது போலும். தஞ்சை பெரிய கோயில் என்று அழைப்பது இன்றும் வழக்கில் உள்ளது.
பொழிப்புரை:
பிணியாக கருதப்படுவதும் உயிருடன் ஓடுங்கி இருந்து தக்க சமயத்தில் வெளிப்பட்டு துன்பங்களை விளைவிக்கும் வினைகளுயும், இவ்வாறு வினைகளை அனுபவிப்பதற்கு காரணமான பிறவியும், இறப்பு மற்றும் இறப்பினுக்கு முன்னே அனுபவிக்க வேண்டிய பல துன்பங்களையும் ஒழித்து விட்டு, பிறப்பிறப்பு இல்லாத பேரின்பம் அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் செய்வதற்கு உரிய இடத்தினைத் தேடி நிற்கும் மனிதர்களே, நீங்கள் அனைவரும் பெருமானின் திருவடி நிழலில் தங்கும் வாய்ப்பினைப் பெற்று அவனது கருணைக்கு ஆளாக விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய ஒரு இடத்தினை நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன், கேட்பீர்ககாக. நான்கு புறங்களிலும் அகழிகளாலும் மதில்களாலும் சூழப்பட்டிருப்பதும் இல்லங்கள் தோறும் வேதங்களின் ஒலி ஒலிப்பதும், ஆகிய கடந்தை என்று அழைக்கப்படும் நகரத்தில் உள்ள அகன்ற தூங்கானைமாடம் திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு நீங்கள் விரும்பிய தன்மையை பெறுவீர்களாக.
பாடல் 2:
பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு
அணி நீர மேலுலகம் எய்தல் உறின் அறிமின் குறைவில்லை ஆனேறு உடை
மணி நீல கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும்
துணி நீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்;
நீர=தன்மையை உடைய; மேலுலகம்=சிவனுலகம்; துணிநீர்=துள்ளிக் குதித்து ஓடும் நீர்; பிரியாத பேரின்பம்=வரம்பிலா இன்பம் கொடுக்கும் முக்தி உலகத்தின் தன்மையை உணர்த்த பேரின்பம் என்று கூறினார். நிலவுலகத்தில் நாம் அடையும் இன்பம் அளவினில் மிகவும் சிறியது, நிலையற்ற தன்மையால் அழிந்து துன்பமாக மாறக் கூடியது என்பதை உணர்த்தும் பொருட்டு பிரிய என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார். ஆனால் சிவனது உலகத்தில் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்காக காத்திருக்கும் இன்பமோ, துன்பக் கலப்பில்லாதது, நிலையானது. இந்த வேற்றுமையை உணர்த்தும் பொருட்டு பிரியாத பேரின்பம் என்றும் பிரிய இன்பம் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பிணிகள் நமது உடலின் வலிமையை குறைத்து நமக்கு துன்பம் அளிப்பதால், நோய்களால் நாம் சலிப்பினை அடைகின்றோம். பிறப்பு இறப்பு மற்றும் இவையிரண்டின் இடைப்பட்ட வாழ்வு அனைத்தும் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வழி வகுப்பதால், நோய்கள் போன்று சலிப்பினைத் தருவதாக இங்கே கூறப்படுகின்றது. அணி நீர=அழகிய தன்மையை உடைய;
பொழிப்புரை:
நமது உடலினை வருத்தி சலிப்படைய வைக்கும் நோயின் தன்மையை உடைய பிறப்பு இறப்பு மற்றும் இவையிரண்டின் இடைப்பட்ட வாழ்வு ஆகியவற்றை விட்டுப் பிரிந்து, என்றும் அழியாமல் நம்மை விட்டு பிரியாத பேரின்பத்தைத் தருவதும் அழகியதும் ஆகிய சிவலோக வாழ்க்கையினை அடைய விரும்பும் மனிதர்களே, உங்களுக்கு எந்த விதத்திலும் குறை ஏற்படாத வழியினை நான் சொல்லுகின்றேன் நீங்கள் கேட்பீர்களாக; எருதினை தனது வாகனமாக உடையவனும் அழகிய நீலமணி போன்ற கழுத்தினை உடையவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவன், மலைமகளுடன் இணைந்து மகிழ்ந்து வாழும் தூங்கானை மாடம் திருக்கோயிலை உடையதும், துள்ளி குதித்து வரும் நீரினை உடைய நிவா நதிக்கரையினில் உள்ளதும் ஆகிய கடந்தை தலம் சென்றடைந்து, ஆங்குள்ள இறைவனை வணங்கி நீங்கள் விரும்பிய பயன் அடைவீர்களாக.
பாடல் 3:
ஒடுங்கும் பிணிபிறவி (1.059) பாடல்கள் 3, 4, 5, 6, 7 (திதே 0112)
சாநாளும் வாழ்நாளும் தோற்றம் இவை சலிப்பாய வாழ்க்கை ஒழியத் தவம்
ஆமாறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவில்லை ஆனேறு உடைப்
பூ மாண் அலங்கல் விலங்கு கொன்றை புனல் பொதிந்த புன்சடையினான் உறையும்
தூ மாண் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்:
தோற்றம்=பிறவி; இறப்பு என்பது அனைவர்க்கும் வருத்தத்தை தருவது; உடலுடன் உயிர் ஒட்டி வாழ்கின்ற நாளில், உயிர் வினைகளை நுகரும் போது உடலும் உள்ளமும் சலிப்பு அடைவதால் சலிப்பாய வாழ்க்கை என்று குறிப்பிடுகின்றார்./ உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னரும் உயிர் தொடர்ந்து சலிப்படைகின்றது. வினைகளின் ஒரு பகுதியை கழித்துக் கொள்ளும் பொருட்டு சூக்கும உடல் நரகத்தில் பல துன்பங்களை அடைகின்றது. அவ்வாறு நரகத்தில் பல தண்டனைகள் எதிர்கொண்டு வருந்திய பின்னரும், நமது வினைகளின் தொகுதி மிகவும் அதிகமாக இருப்பதால், எஞ்சி இருக்கும் வினைகளை கழித்துக் கொள்ள மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது. எனவே இவ்வாறு தொடர்ந்து வினைகளை கழிக்கும் பாதையில் பயணம் செய்யும் உயிர் சலிப்பு அடைவதை, தடுக்கும் ஒரே வழி இந்த பிறப்பிறப்புச் சுழற்சியிலுருந்து விடுதலை பெறுவது தான். இவ்வாறு உயிர் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வருத்துவதை மணிவாசகர், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் என்று சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அலமந்து=வருந்தி; தவம் ஆமாறு=தவம் எவ்வாறு செய்வது; தூமாண்=தூய்மையும் மாட்சிமையும் பொருந்திய; சலிப்பினைத் தரும் வாழ்க்கை என்று முந்திய பாடலில் கூறியதை வலியுறுத்தும் வண்ணம் இந்த பாடலில் சலிப்பாய வாழ்க்கை என்று சம்பந்தர் கூறுகின்றார். விலங்கல்= மாலை; இலங்கு=விளங்கும்; பூமாண்=பூக்களில் சிறந்தது என்ற பெருமையுடன்;
சாநாளும் வாழ்நாளும் சலிப்பினைத் தருவதால் அவற்றைத் தவிர்க்கும் வழியினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நமக்கு அவர் அருளிய சாய்க்காடு பதிகத்தின் பாடல் ஒன்றினை (2.41.3) நினைவூட்டுகின்றது. நமது வாழ்நாள் எத்தனை, நாம் இறக்கும் நாள் எது என்பதை அறிந்தவர் யாரும் இல்லை. எனவே இப்போதிருந்தே, தினமும், சிவபெருமானை வழிபட மலர்களைத் தலையில் சுமந்தும், அவரது திருநாமத்தை காதுகளால் கேட்டும், அவரது பெருமையை தினமும் நாக்கினால் புகழ்ந்து பாடியும், அவரது நினைவுகளை நமது நெஞ்சத்தில் வைத்தும் நாம் வாழ்ந்தால் நல்வினைகளை அடையமுடியும் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றினையும் ஈடுபடுத்தி பெருமானை வணங்கி வழிபடும் நிலை உணர்த்தப் படுகின்றது.
நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யார் அறிவார்
சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்பப் புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே
பொழிப்புரை:
சலிப்பினை ஏற்படுத்தும் இறத்தல், வாழ்தல் மீண்டும் பிறந்து தொடர்ந்து வருந்துதல் ஆகிய இந்த வாழ்க்கையினை ஒழித்து விடுதலை பெறுகின்ற நோக்கத்துடன் செய்யப்படும் தவத்தின் தன்மைகளை உணர்ந்து தவம் எவ்வாறு செய்வது என்பதை அறியாமல் திகைக்கும் மனிதர்களே, நீங்கள் தவம் செய்யும் முறையினை அறியாமல் இருப்பதால் உங்களுக்கு இருக்கும் குறையினை நீக்கும் வழியினை நான் சொல்கின்றேன் கேட்பீர்களாக. எருதினை வாகனமாகக் கொண்டவனும், பூக்களில் சிறந்தது என்ற பெருமையினை உடைய கொன்றை மலரினையும் கங்கை நதியும் தாங்கும் செம்பட்டை நிறத்தில் உள்ள சடையினை உடையவனும் ஆகிய பெருமான் உறையும் தூங்கானை மாடம் என்று அழைக்கப்படும் அகன்ற திருக்கோயிலை உடைத்ததும், தூய்மையும் மாட்சிமையும் பொருந்திய கடந்தைத் தலம் சென்று ஆங்குள்ள பெருமானை வணங்கித் தொழுது பயன் அடைவீர்களாக.
பாடல் 4:
ஒடுங்கும் பிணிபிறவி (1.059) பாடல்கள் 3, 4, 5, 6, 7 (திதே 0112)
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்தாய வாழ்க்கை ஒழியத் தவம்
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம், திரிந்து மண்ணின் மயங்காது நீர்
மூன்று மதில் எய்த மூவாச் சிலை முதல்வருக்கு இடம் போலும் முகில் தோய் கொடி
தோன்றும் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்:
ஊன்றும்=அழுந்துவிக்கும்; மான்றும்=மயங்கும்; இறப்பினுக்கு முன்னர் அனுபவிக்கும் துன்பங்களை கேடு என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் கேடு என்று உயிருக்கு கெடுதியை விளைவிக்கும் பிறவியை குறிப்பிடுகின்றார். மூவா= மூப்பு அடையாத, என்றும் நிலையாக உள்ள; தவம் செய்ய நினைக்கும் மனதினை மயங்கும் மனம் என்று சம்பந்தர் கூறுகின்றார். எளிதாக முக்திப் பேற்றினை அடையும் வழி இருக்கையில், அதனை விட்டுவிட்டு தவம் செய்ய நினைப்பதை மயங்கும் மனம் என்று கூறுகின்றார். முகில்=மேகம்
பொழிப்புரை:
உடலை துன்பத்திலும் உயிரினை வருத்தத்திலும் அழுத்தும் நோய், உயிருக்கு பல விதத்திலும் கெடுதியை விளைவிக்கும் பிறவி ஆகியவை கொண்டுள்ள இந்த இழிந்த வாழ்க்கை ஒழிய வேண்டும் என்ற நோக்கத்துடன் தவம் செய்ய வேண்டும் என்று தலைப்பட்டு மயங்கிய மனத்துடன் இருக்கும் மனிதர்களே, நீங்கள் அனைவரும் உலகப் பொருட்களின் கவர்ச்சியில் ஏமாறி மனம் மயங்குவதை தவிர்த்து, மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்த வில்லினை, நிலையான மேரு மலையினை வளைத்து செய்யப்பட்ட வில்லினை உடைய முதல்வனாகிய இறைவனுக்கு இடமாகிய தூங்கானை மாடம் எனப்படும் அகன்ற திருக்கோயில் உடையதும், மேகத்தினை தொடும் வண்ணம் உயர்ந்து ஓங்கி நிற்கும் கொடிகளை உடைய மாடங்கள் கொண்டதும் ஆகிய கடந்தை தலத்தினைச் சென்று அடைந்து ஆங்கே உள்ள இறைவனைத் தொழுது நீங்கள் விரும்பும் பயனை அடைவீர்களாக.
பாடல் 5:
ஒடுங்கும் பிணிபிறவி (1.059) பாடல்கள் 3, 4, 5, 6, 7 (திதே 0112)
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து ஒழியுமாறு ஆதலால்
வியல் தீர் மேலுலகம் எய்தல் உறின் மிக்கொன்றும் வேண்டா விமலன் இடம்
உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல் செய்
துயர் தீர் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்;
தீர்மை=தீர்வு; ஆறு=வழி; ஓவாது=இடைவிடாது; வியல் தீர=பலவகையாக படுதல், பல வகையான பிறப்புகள் எடுத்தல்; உயர் தீர=ஓங்கி உயர்ந்து; மரணம்=அழிவு; நமது உயிரினை மலங்கள் பிணித்து உள்ளமையால் நாம் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது., நமது மலங்களின் கட்டினை அறுத்து, முக்தி உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வல்லமை, இயல்பாகவே மலங்களின் சேர்க்கை இல்லாத சிவபெருமான் ஒருவருக்கே உண்டு என்பதை உணர்த்தும் முகமாக, இந்த பாடலில் பெருமானின் பெயரினை விமலன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
உலகத்து உயிர்கள் மீதும் உலகத்து பொருட்கள் மீது கொண்டுள்ள மயக்கம் தொடர்ந்து இருக்கச் செய்யும் வாழ்க்கைக்கு வழி வகுக்கும் பிறப்பும், ஒரு நாள் அழிந்துவிடும் என்பதால் நிலையற்ற தன்மை கொண்டவை; எனவே பல வகையான பிறப்புகள் எடுப்பதற்கு காரணமாக உள்ள பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு சிவனது உலகம் சென்று அடையவதற்கு விருப்பம் கொண்டவர்களாக விளங்கும் மனிதர்களே, நீங்கள் மிகவும் அதிகமான முயற்சி மேற்கொண்டு, பல்வேறு நெறிகளில் ஈடுபட்டு ஏதும் செய்ய வேண்டிய அவசியமில்லை; இயற்கையாகவே மலங்களின் சேர்க்கை இல்லாமல் தூயவனாக திகழும் பெருமான் உறையும் இடம் சென்று, அவனது திருநாமங்கள் பலவற்றை சொல்லி, இடைவிடாது அவனது திருவடிகளை புகழ்ந்து பணிந்து வணங்கினால் போதும். எனவே நமது துயர்களைத் தீர்க்கும் தலமாகிய கடந்தை நகர் சென்று ஆங்குள்ள அகன்ற தூங்கானை மாடமாக விளங்கும் திருக்கோயில் சென்று, அங்கே உறையும் பெருமானைத் தொழுது நீங்கள் விரும்பும் பயன் அடைவீர்களாக.
பாடல் 6:
ஒடுங்கும் பிணிபிறவி (1.059) பாடல்கள் 3, 4, 5, 6, 7 (திதே 0112)
பன்னீர்மை குன்றிச் செவி கேட்பிலா படர் நோக்கில் கண் பவளந்நிற
நன்னீர்மை குன்றித் திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன்
பொன்னீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும்
தொன்னீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்;
மூப்பினால் உடலில் தோன்றும் பல மாற்றங்களை குறிப்பிட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்த்தி, அத்தகைய காலம் வந்து நாம் ஏதும் செய்ய இயலாத நிலை வருமுன்னம் பெருமானைத் தொழுது பயன் அடையுமாறு இந்த பாடலில் சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். நீர்மை=தன்மை; பன்னீர்மை=பற்களின் வலிமை; பற்கள் உடைந்தும் விழுந்தும் வலிமையற்று காணப்படும் நிலை என்று சிலர் பொருள் கூறுகின்றனர்.; பன்னீர்மை என்ற சொல்லுக்கு பல வகையான உடலின் வலிமைகள், இன்பத்தை அனுபவிக்க உதவும் புலன்கள் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். பல் வீழ்ந்து நாத்தளர்ந்து என்று இதே பதிகத்தின் மற்றோர் பாடலில் வருவதால், இரண்டாவது பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளது. கண் பவளந்நிற நன்னீர்மை=செவ்வரி ஓடும் கண்கள்; நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் மனிதனின் கண்களில், சுத்தமான இரத்த ஓட்டத்தினால் கண்களில் சிவப்பு நிறத்தில் கோடுகள் தெரியும். மருத்துவர்கள் கீழ் இமையினை சற்றுத் தாழ்த்தி கண்களில் சிவப்பு கோடுகள் உள்ளதா என்று பார்ப்பார்கள். இரத்த ஓட்டம் குறைந்தால் கண்கள் வெளுத்து தோன்றுவது இயல்பு. திரை=சுருக்கம்; தோளில் சுருக்கம் காணப்படுவதும், முடிகள் நரைப்பதும் முதுமையின் அடையாளங்கள். முதுமை அடைந்த பின்னர், உடல் நலம் குன்றுவதால் பல தலங்கள் சென்று இறைவனை வணங்க மனம் விரும்பினாலும் உடல் ஒத்துழைக்காது என்பதால், உடலில் வலிமை உள்ள போதே பெண்ணாகடம் சென்று இறைவனை வணங்கி பயன் அடையுமாறு உணர்த்தும் பாடல்..
பொழிப்புரை:
மனிதர்களே, உடலில் உள்ள பல்வகை சிறப்புத் தன்மைகள் குறைந்து, காதுகள் தாங்கள் கேட்கும் சக்தியை இழந்து, கண்கள் தங்களது பவளம் போன்ற செம்மை நிறமும் பார்வையும் குன்றி, செழிப்புடன் காணப்பட்ட உடலின் தோல் சுருங்கி, முடிகள் நரைத்து முதுமைப் பருவம் உம்மை வந்து அடைவதன் முன்னம், பொன்னின் நிறம் மேலே தோன்றுமாறு நீர்ப்பெருக்கினை உடைய கங்கை நதியினைத் தனது செம்பட்டை நிறத்து சடையினில் ஏற்ற பெருமான் உறையும் தூங்கானை மாடம் திருக்கோயில் உள்ளதும் தொன்மையான நதியாகிய நிவா பாய்வதும் கடந்தை நகரம் சென்றடைந்து, ஆங்கே உள்ள பெருமானை வணங்கித் தொழுது நீங்கள் விரும்பிய பயனை அடைவீர்களாக.
பாடல் 7:
ஒடுங்கும் பிணிபிறவி (1.059) பாடல்கள் 3, 4, 5, 6, 7 (திதே 0112)
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பாய வாழ்க்கை ஒழியத் தவம்
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள்கழலே நாளும் நினைமின் சென்னிப்
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறை சூழ் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்:
அலங்கல்=மாலை; பிணையும்=விரும்பும்; இறை=சிறிது; துகள்=தூள், சிறிய அளவு; இளமை நிலையாமை தத்துவத்தை சென்ற பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தர் இந்த பாடலில் செல்வம் நிலையாமையை உணர்த்துகின்றார். ஒருவரது செல்வம் குறைந்த பின்னர் அவரது அன்றாடத் தேவைகளின் தரங்களும் குறைகின்றன. ஊட்டச்சத்து மிகுந்து செழிப்பான உணவினை அந்நாள் வரை உண்டு வாழ்ந்தவர்கள், எளிமையான உணவினை உண்ணத் தலைப்படுகின்றனர். மேலும் செல்வத்தின் துணை கொண்டு வசதி மிகுந்து வாழ்ந்து வந்த வாழ்க்கையும், தரத்தில் தாழ்கின்றது. இவ்வாறு வாழ்வதையே இழிப்பாய வாழ்க்கை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் மறுமையில் பேரின்ப வாழ்வினை அளிக்கும் பெருமான் இம்மையிலும் உதவி செய்வான் என்பதும் இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிருக்கு ஊட்டத்தை, வலிமையை அளிக்கும் தவ வாழ்க்கையினை நிறை ஊண் நெறி வாழ்க்கை என்று கூறுகின்றார். எளியனாக அனைத்து உயிர்களுக்கும் இரங்கி, அருள் புரியும் திருப்பாதங்கள் என்பதால் நீள்கழல்கள் என்று இங்கே கூறுகின்றார்.
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பாய வாழ்க்கை என்ற தொடருக்கு, சிறிதளவே உணவினை உட்கொண்டு உடலை வருத்திக் கொண்டு புரியும் தவம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஒழுக்கத்துடன் புரியும் தவம், மனதினுக்கு நிறைவு தரும் நிலையை குறிப்பிடும் சம்பந்தர், மிகவும் அழகாக உடலுக்கு சிறிதளவே உணவு சென்றாலும் மனம் நிறையும் வண்ணம் செய்யப்படும் தவம் என்று நயமாக கூறுகின்றார்.
பொழிப்புரை:
மிகவும் சிறிய அளவினில் உணவினை உட்கொண்டு பல துன்பங்களை அனுபவித்து இழிந்த வாழ்க்கை வாழ்வதால் அத்தகைய இழிந்த வாழ்க்கையினை நீக்கி, உயிரினுக்கு வலிமையையும் வளமும் சேர்க்கும் ஒழுக்க நெறி நிறைந்த தவ வாழ்க்கையை எவ்வாறு அடைவது என்று திகைத்து நிற்கும் மனிதர்களே, நீங்கள் அனைவரும் பெருமானின் நீண்ட திருப்பாதங்களை தினமும் நினைப்பீர்களாக. தனது சடைமுடியில் பிறைச் சந்திரனை சூட்டிக் கொண்டு அருள் புரிந்தவரும், அழகுடன் பொலிந்து விளங்கும் கொன்றை மாலையினை விருப்பத்துடன் அணிந்தவரும் ஆகிய பெருமான், நீர்வளம் குன்றாத நிவா நதியினால் சூழப்பட்ட கடந்தை தலத்தில் உள்ள தூங்கானை மாடம் திருக்கோயிலில் உறைகின்றார். நீங்கள் அங்கே சென்று இறைவனைத் தொழுது வணங்கி நீங்கள் விரும்பும் பயனை இம்மையிலும் மறுமையிலும் அடைவீர்களாக.
பாடல் 8:
ஒடுங்கும் பிணிபிறவி (1.059) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0113)
பல் வீழ்ந்து நாத் தளர்ந்து மெய்யில் வாடிப் பழிப்பாய வாழ்க்கை ஒழியத் தவம்
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்
கல் சூழ் அரக்கன் கதறச் செய்தான் காதலியும் தானும் கருதி வாழும்
தொல் சீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்:
இல் சூழ் இடம்=இல்லமாக கருதி வாழுமிடம்; இந்த பாடலிலும் மூப்பின் தன்மை குறிப்பிடப்பட்டு, மூப்பு அடைந்து உடல் தளர்வதன் முன்னமே தூங்கானை மாடத்து தூண்டா விளக்கினைத் தொழவேண்டும் என்ற அறிவுரை கூறப்படுகின்றது. இறை=சிறிது நேரம்; பிரியாது=தாழ்த்தாது; போதும்=செல்வீர்கள்; கல்=கயிலை மலை;
பொழிப்புரை:
மூப்பு அடைவதால் பற்கள் விழுந்து நாத் தளர்ந்து பேச்சு குழறி உடல் வாடி பலரது பழிப்பினுக்கும் ஆளாகும் வாழ்க்கையினைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தவம் செய்வதற்கு தகுந்த இடத்தினை தேடி நிற்கும் மனிதர்களே, சிறிது நேரத்தையும் வீணாக்காமல் நான் சொல்லும் இடத்திற்கு நீங்கள் அனைவரும் செல்வீர்களாக. தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலாய மலையினைச் சூழ்ந்து நின்று அதனை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணன் கதறி அழும் வண்ணம், அவனை மலையின் கீழே அழுக்கிய பெருமான் சிறந்த இடம் என்று கருதி தனது காதலியுடன் உறைகின்றதும், தொன்மை வாய்ந்த கடந்தை நகரினில் உள்ளதும் ஆகிய அகன்ற தூங்கானை மாடம் திருக்கோயில் சென்று ஆங்குள்ள இறைவனை வணங்கித் தொழுது உங்கள் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்வீர்களாக.
பாடல் 9:
ஒடுங்கும் பிணிபிறவி (1.059) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0113)
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை ஒழியத் தவம்
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும்
தாய அடி அளந்தான் காண மாட்டாத் தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண்
தோயும் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்
வாயும் மனம்=பொருந்திய மனம்; தாய=தாவிய; பிணி=வருத்தம்;
பொழிப்புரை:
நோயினால் உடல் மெலிந்து மனம் வருத்தமடைந்து துன்பங்களையே நுகரும் வாழ்க்கை ஒழிய வேண்டும் என்ற எண்ணத்துடன் தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தினைத் தேடி அலையும் மனிதர்களே, தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், மண்ணையும் விண்ணையும் தனது ஈரடிகளால் அளந்த திருமாலும் காண முடியாமல் நின்ற தலைவனாகிய சிவபெருமான் உறையும் இடமாகிய தூங்கானை மாடம் செல்வீர்களாக. குளிர்ந்ததும் வானளாவ உயர்ந்தும் காணப்படும் சோலைகள் சூழ்ந்த கடந்தை நகரில் உள்ள தூங்கானை மாடம் திருக்கோயில் சென்று ஆங்குள்ள இறைவனைத் தொழுது. இழிந்த இந்த பிறவி ஒழிய வேண்டும் என்ற உங்களது விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்வீர்களாக.
பாடல் 10:
ஒடுங்கும் பிணிபிறவி (1.059) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0113)
பகடூர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பாய வாழ்க்கை ஒழியத் தவம்
முகடூர் மயிர் கடிந்த செய்கையாகும் மூடு துவர் ஆடையரும் நாடிச் சொன்ன
திகழ் தீர்ந்த பொய்ம் மொழிகள் தேற வேண்டா திருந்திழையும் தானும் பொருந்தி வாழும்
துகள் தீர் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்
பகடு=யானை; பகடூர்=யானைப் பசி, பெரும்பசி; முகடு=தலையின் உச்சி; கடிந்த=நீக்கிய; திகழ் தீர்ந்த=விளக்கம் அற்ற; துகள்=குற்றம்; சமணர்களும் புத்தர்களும் பெருமானை குறித்து சொல்லும் மொழிகள் தகுந்த விளக்கத்துடன் சொல்லப் படாமையால் அவை அனைத்தும் பொய் மொழிகள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
யானைப்பசி என்று சொல்லப்படும் பெரும்பசி வருத்த மேலும் மேலும் நோய்கள் வருத்துவதால், அனைவரின் பழிப்புக்கு ஆளாகும் இந்த பிறவி நீங்க வேண்டும் என்று நோக்கத்துடன் தவம் செய்ய விரும்பும் மனிதர்களே, தங்களது தலையுச்சியின் மீதுள்ள முடியினை ஓவ்வொன்றாக பிடுங்கி நீக்கிக் கொள்ளும் சமணர்களும் தங்களது உடலினைத் துவராடையால் மூடிக் கொள்ளும் புத்தர்களும், ஆதாரமின்றி விளக்கம் ஏதுமின்றி சிவபெருமானைக் குறிப்பிட்டு சொல்லும் பொய் மொழிகளை உண்மை என்று நினைத்து தவறான வழியில் செல்லாதீர்கள். கடைந்தை நகரிலுள்ள தூங்கானை மாடம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் அழகிய நகைகளை அணிந்த உமையன்னையுடன் பொருந்தி உறைகின்ற பெருமானைத் தொழுது வணங்கி நீங்கள் விரும்பும் பயனை அடைவீர்களாக.
பாடல் 11:
ஒடுங்கும் பிணிபிறவி (1.059) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0113)
மண்ணார் முழவு அதிர மாட வீதி வயல் காழி ஞான சம்பந்தன் நல்ல
பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான்
கண்ணார் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டரும் போய்
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே
விளக்கம்;
கருத்து உணர்ந்து கற்றார் என்று தேவாரப் பதிகங்களை பொருள் உணர்ந்து கற்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பல பதிகங்களில் பண் பொருந்த தேவார பாடல்களை பாட வேண்டிய அவசியத்தையும் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இவ்வாறு முறையான பண்ணுடன் பொருத்தி, பாடல்களின் பொருளை புரிந்து கொண்டு, மனம் ஒன்றி பாடும் அடியார்களையே வல்லவர் என்று பெரும்பாலான பாடல்களில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். எனவே நாமும் தேவார பதிகங்களின் பொருளினை உணர்த்து கொள்ள முயற்சி செய்வோமாக. கண்ணார் கழல்=உலகத்தின் கண் போன்று கருதப்படும் திருப்பாதங்கள்;
பொழிப்புரை:
நிலம் அதிரும் வண்ணம் ஒலிக்கும் முரசுகள் உடையதும் மாட வீதிகள் நிறைந்ததும் ஆகிய சீர்காழி நகரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன், பெண்ணாகடம் நகரில் உள்ளதும் நன்மைகள் பல அருளும் தன்மை வாய்ந்ததும் ஆகிய பெருங்கோயிலாகிய தூங்கானை மாடம் திருக்கோயிலில் உறைகின்ற இறைவனின் திருப்பாதங்களை, பல நன்மைகளை அனைவர்க்கும் அருளுவதால் கண் போன்று கருதப்படும் திருவடிகளை, புகழ்ந்து பாடிய பத்து பாடல்களையும், பாடல்களின் பொருளினை உணர்ந்து கற்று இசையுடன் பொருந்தி பாடும் அடியார்களும் அத்தகைய பாடல்களை கேட்கும் அடியார்களும், தவத்தின் பயன்கள் பெற்று, சிவலோகத்தைச் சென்றடைந்து ஆங்கே நிலையாக பொருந்தி வாழும் தன்மையை பெருவார்கள், அவர்களின் வினைகள் முற்றிலும் அழிந்துவிடும். இதுவே நியதி என்பதை உணர்வீர்களாக.
முடிவுரை
இந்த பதிகத்து பாடல்கள் மூலம் தூங்கானை மாடத்து பெருமானின் பெருமைகளை நமக்கு உணர்த்தி, இந்த பெருமானை பணிந்து வணங்குவதால் நாம் பெறவிருக்கும் நன்மைகளை குறிப்பிட்டு, நாமும் இந்த பெருமானை வணங்கிப் பணியும் வண்ணம் நம்மை சன்பந்தர் வழிப்படுகின்றார். உயிருக்கு உற்ற தீங்கினை மட்டுமன்றி உடலுக்கு உற்ற தீங்கினையும் நீக்கும் வண்ணம் இந்த தலம் அமைந்துள்ள நிலையினை நாம் அப்பர் பிரானின் வாழ்க்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம். பல வருடங்கள் சமணர்களுடன் வாழ்ந்ததால் இழிந்த தன்மை அடைந்த உடலுடன் உயிர் வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்று நினைத்த அப்பர் பிரான், இடபக் குறி பொறித்து தனது உடலினை தூய்மை செய்யுமாறு இந்த தலத்து இறைவனிடம் வேண்டியதாக சேக்கிழார் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
புன் நெறியாம் அமண் சமயத் தொடக்கு உண்டு போந்த உடல்
தன்னுடனே உயிர் வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழும் தமிழ் மாலை முன் நின்று பாடுவார்
சமண சமயத்தில் இருந்து பாழ் பட்ட உடலை தரியேன் என்று அப்பர் பிரான் கூறிய பின்னர், நாவுக்கரசர் என்று தானே பட்டம் சூட்டி அவரது தமிழ்ப் புலமையை உலகு அறியச் செய்த பின்னர், அப்பர் பிரானின் தீஞ்சுவை பாடல்களை கேட்காமல் சிவபிரானால் இருக்க முடியாது அல்லவா. எனவே அப்பர் பிரானின் வேண்டுகோளை ஏற்று அவரது உடலை தூய்மை படுத்த தீர்மானித்த பெருமான். தனது சிவகணம் ஒன்றினுக்கு ஆணை இடுகிறார். வேறு யாரும் அறியாதவாறு அந்த சிவகணமும் அப்பர் பிரானின் அருகில் வந்து அவரது தோளில் மூவிலை சூலம் மற்றும் இடபக் குறிகளை பொறிக்கின்றது. இந்த நிகழ்ச்சியை கூறும்போது சேக்கிழார் பெருமான் உழவாரப் படை கொண்டு தொண்டு செய்த அப்பர் பிரானின் தோள்களை திரு என்ற அடைமொழி கொடுத்து சிறப்பிப்பதை நாம் பெரிய புராணத்தில் காணலாம். மாடு என்றால் அருகில் என்று பொருள். அப்பர் பிரானுக்கு அருகில் இருந்தவர் கூட அறியாதவாறு சின்னங்கள் பொறிக்கப்பட்டன என்று சேக்கிழார் இந்தப் பாடலில் கூறுகிறார். சின்னத்தை தனது தோளில் கண்ட அப்பர் பிரான் தனது வேண்டுகோளை ஏற்று உய்யச் செய்த இறைவனின் கருணையை நினைந்து மகிழ்ந்தார்.
நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவுகின்ற
ஆடக மேருச்சிலையான் அருளால் ஓர் சிவ பூதம்
மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திருத் தோளில்
சேடு உயர் இலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த
அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தில் மூன்று பாடல்கள் தான் நமக்கு தற்போது கிடைத்துள்ளன. மூன்று பாடல்களிலும் மூன்று விண்ணப்பங்கள் இருப்பதை நாம் காணலாம். முதல் பாடலில் மூவிலைச் சூலம் பொறிக்குமாறும், இரண்டாவது பாடலில் சிவபிரானின் திருவடியில் உள்ள திருநீற்றை தன் உடலின் மீது பூசுமாறும், கடைப் பாடலில் இடப இலச்சினை பொறிக்குமாறும் வேண்டுவதை நாம் காணலாம். பொன் போன்ற திருவடிக்கு எனது விண்ணப்பம் என்று பணிவாக பதிகத்தினை தொடங்கும் அப்பர் பிரான், அந்த பணிவின் ஊடே தனது தீர்க்கமான முடிவினை எடுத்துக் கூறுவதையும் நாம் காணலாம். சூல இலச்சினை தனது உடலின் மீது பொறிக்கபடாவிடில் தனது உயிரைப் போக்கிக் கொள்வதாக இறைவனிடம் தெரிவிக்கும் பயமற்ற தன்மையை நாம் உணரலாம். தனது உயிரைத் தான் போக்கி கொள்வதற்கான காரணம் இங்கே கூறப்படாவிட்டாலும், நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. சூலம் பொறிக்கப்பட்டால் தான் உயிர் வாழ்வேன் என்று கூறுவதிலிருந்து நாம், சூலத்தின் உருவம் தனது உடலினை புனிதப்படுத்தும் என்று அப்பர் பிரான் கருதியதை நாம் தெளிவாக புரிந்து கொள்கின்றோம். எனவே சமணர்களுடன் தான் வாழ்ந்ததால் தனது உடல் புனிதம் கெட்டதாக அப்பர் பிரான் கருதியதையும் நம்மால் உணரமுடிகின்றது. மேலும் சூலம் தனது உடலில் சிவபிரான் அருளால் தோன்றினால், உலகில் உள்ளவர் அனைவரும், சிவபிரான் அப்பரின் தவற்றை மன்னித்து ஏற்றுக் கொண்டதனை உணருவார்கள் என்பதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்பதையும் நாம் உணரமுடிகின்றது. மேலும் என்னாவி காப்பதற்கு இச்சை உண்டேல் என்ற கேள்வியை எழுப்பிய அப்பர் பிரானை காப்பாற்றியதன் மூலம், தனக்கு அப்பர் பிரானின் தீஞ்சுவைப் பாடல்களை கேட்பதற்கு எத்தனை விருப்பம் இருந்தது என்பதை சிவபிரான் தெளிவுபடுத்தி உள்ளார் என்பதும் இந்த நிகழ்ச்சியில் இருந்து நாம் உணரலாம். சமணர்கள் அளித்த பெரிய இடர்களில் இருந்து காப்பாற்றிய இறைவனுக்கு, சூலம் பொறிப்பது ஒன்றும் அரிய செயல் அல்லவே. இறைவன் மனது வைத்தால் எந்த இடரும் இடரல்ல என்பதையும், எந்த வேண்டுகோளும் நிறைவேற்ற முடியாத வேண்டுகோள் அல்ல என்பதையும் அப்பர் பிரானின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகின்றது. இந்தப் பாடலில் அப்பர் சிவபிரானை தூங்கானை மாடச் சுடர் கொழுந்து என்று அழைக்கின்றார்.
பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல
மின்னாரும் மூவிலைச் சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே
வணிகர் குலத்தவரான கலிக்கம்ப நாயனார் வாழ்ந்த தலம். இந்த தலம் வரும் சிவனடியார்களை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களது பாதங்களை தானே கழுவிய பின்னர் அவர்களுக்கு அமுது அளிப்பது அவரது பழக்கம். அந்த சமயத்தில் அவரது மனைவியார், கலிக்காமருக்கு உதவியாக மலர்கள் உடைய வாசனை நீர் ஊற்றுவது வழக்கம். இவ்வாறு கணவன் மனைவியர் இருவரும் சிவத்தொண்டு செய்து வரும் நாளில், ஒரு நாள், ஒரு சிவனடியார் அவர்களது இல்லம் வந்து சேர்ந்தார். வந்த அடியவர், அதற்கு முன்னர் அவர்களிடம் வேலையாளாக பணி செய்த காரணத்தால், கலிக்கம்பரின் மனைவியார் நீர் வார்க்கத் தயங்கினார். மனைவி செய்த தாமதத்தால் கோபம் உற்ற கலிக்கம்பர், தனது மனைவியின் கைகளை வெட்டிவிட்டார். அந்த நீரினை தானே வாங்கி அடியவரின் கால்களை கலிக்கம்பர் கழுவினார்; பின்னர் அவருக்கும் அமுது செய்வித்தார். மனைவியின் தயக்கத்தின் காரணம் புரிந்தாலும், முன்பு தனது ஏவலாளாக இருந்தாலும், தற்போது அவர் அடியாராக தனது இல்லம் வந்த காரணத்தால், மனைவியின் தயக்கம் தவறு என்று அவர் கருதினார். சிவபிரான் இருவருக்கும் காட்சி கொடுத்து முக்தி பெறச் செய்தார். சிவபிரானின் அருளால் வெட்டப்பட்ட கை மீண்டும் துளிர்த்ததால், தலத்து இறைவன் கைவழங்கீசர் என்றும் அழைக்கப் படுகின்றார். இந்த சம்பவம் இந்த தலத்தில் தான் நடந்தது. இந்த சம்பவம் பெரிய புராணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
இல்லற வாழ்க்கையின் பல விதமான சுகங்களை அனுபவித்துப் பழக்கப்பட்ட நமது உடலினை வருத்திக் கொண்டு தவம் செய்வது என்பது இன்றைய சூழ்நிலையில் நினைத்தும் பார்க்க முடியாத செயலாக நம் அனைவர்க்கும் தோன்றுகின்றது. அதே சமயத்தில் உயிர் பிறவிகள் எடுத்து வேதனைகளை அனுபவிப்பதையும் நாம் உணர்கின்றோம். எனவே இந்த நிலையில், உயிர் தனது விருப்பத்தை எளிதாக நிறைவேற்றிக் கொள்வதற்கான வழியாக சிவபெருமானை குறித்து செய்யப்படும் வழிபாடு அமைந்துள்ள நிலையை பின்பற்றுமாறு ஞானசம்பந்தர் நமக்கு வழி காட்டும் பதிகம். வினைகளின் தன்மையால் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் உயிர், அந்த பிறவிகளில் அடைகின்ற துயரங்கள் இங்கே உணர்த்தப் படுகின்றன. பல விதமான நோய்களுக்கு இடமாக உள்ள உடல் தொடர்ந்து நமக்கு துன்பத்தை தருகின்றது என்று முதல் பாடலில் உணர்த்தும் ஞானசம்பந்தர், இரண்டாவது பாடலில் நிலவுலக வாழ்க்கை அவ்வப்போது சிறிய இன்பங்களைத் தந்தாலும், அந்த இன்பங்கள் துன்பங்களாக மாறும் நிலை உள்ளது என்பதால், நாம் என்றும் பிரியாத பேரானந்தத்தை தருகின்ற முக்தி உலகம் செல்ல விருப்பம் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். பிறப்பது இறப்பது மீண்டும் மீண்டும் இறப்பதற்காக பிறப்பது என்ற நிலை உயிர்க்கு சலிப்பினை ஊட்டுவதால் இந்த பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுதலை பெறுவதற்கு நாம் முயலவேண்டும் என்று மூன்றாவது பாடல் மூலம் நமக்கு அறிவுரை சொல்லப் படுகின்றது, தவம் செய்வதில் உள்ள பலவிதமான கஷ்டங்களை எண்ணி மயங்கி நிற்கும் உயிர்கள், அதற்கு பதிலாக மிகவும் எளிதான முறையாகிய இறை வழிபாட்டினை பின்பற்றலாம் என்ற அறிவுரை நான்காவது பாடல் மூலம் நமக்கு வழங்கப் படுகின்றது. உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது நாம் கொண்டுள்ள மயக்கத்தினை எவ்வாறு தீர்த்துக் கொண்டு நமது வினைகளை கழித்துக் கொள்வது என்ற வழியினை அறியாமல் கலக்கத்துடன் இருக்கும் உயிர்கள், பெருமானை வழிபடுவதன் மூலம் தங்களது மயக்கத்தையும் கலக்கத்தையும் தீர்த்துக் கொள்ளலாம் என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். உடலில் உள்ள பல உறுப்புகள் நலிவடைந்து உயிரின் எண்ணத்துடன் ஒத்துழைக்க முடியாமல் இறைவனை குறித்து நாம் தியானம் செய்ய இயலாத காலம் வரும் முன்னரே, உடல் பல விதமான வளங்கள் கொண்டதாக விளங்கும் இளமைப் பருவத்திலே நாம் இறைவனைத் தொழவேண்டும் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். இல்லற வாழ்க்கையின் பல இன்பங்களையும், அதனால் விளையும் பல துன்பங்களையும் அனுபவித்த பின்னர் சலித்துப் போய் தவநெறியை நாடுவோம் என்றில்லாமல் இல்லற வாழ்க்கை நடத்திக் கொண்டே இறைவனை நாள்தோறும் நினைக்க வேண்டும் என்று ஏழாவது பாடலில் நம்மை வழிநடத்துகின்றார். முதுமை அடைந்து எதுவும் செய்ய இயலாத நிலையில், பல நோய்களுடன் வருந்தி, பிறரை ஆதாரமாகக் கொண்டு வாழ்வதால் பலரது பேச்சுக்கும் ஏச்சுக்கும் இடமாவதன் முன்னரே பெருமானை வழிபடுவீர் என்று எட்டாவது பாடலில் கூறுகின்றார். இல்லற வாழ்க்கையில் நமக்கு இறுதியாக மிஞ்சுவது நோய்களும் பிணிகளும் நிறைந்த வாழ்க்கை என்பதை உணரும் தருணத்தில், உடல் வலிமையற்ற நிலையில் தவமும் செய்ய முடியாமல் தவிப்பதற்கு பதிலாக இறை வழிபாட்டினில்ஈடுபடுவீர் என்ற அறிவுரை ஒன்பதாவது பாடலில் வழங்கப் படுகின்றது. மாற்று மதத்தவரின் பொய்யான பிரசாரத்தில் மயங்காமல் தொடர்ந்து சிவபெருமானை வணங்குவீர் என்று பத்தாவது பாடல் மூலம் நமக்கு அறிவுரை கூறுகின்றார். இந்த பதிகத்தின் பொருளை உணர்ந்து கற்றவர்களும், அவ்வாறு பொருள் உணர்ந்து பாடும் அடியார்கள் பாடுவதைக் கேட்டு, பதிகத்தின் பொருளை உணர்ந்து கொள்ளும் அடியார்களும் தங்களது வினைகள் தீர்க்கப் பெற்று, மேலான முக்தி உலகினில் வாழும் வாய்ப்பினை பெறுவார்கள் என்று பதிகத்தை முடிக்கின்றார். இவ்வாறு தவங்கள் எதற்காக செய்யப்படுகின்றன என்பதையும் இந்த பதிகத்தின் பாடல்களில் விளக்கும் ஞானசம்பந்தர் தவம் செய்து முக்திப் பேற்றினை அடைவதை விடவும் எளிதான வழி தூங்கானை மாடத்து பெருமானைப் பணிந்து போற்றி வழிபடுவது என்று கூறுகின்றார். நாமும் சம்பந்தர் காட்டிய வழியில் சென்று பெருமானைப் பணிந்து இம்மை மற்றும் மறுமையிலும் பல பயன்கள் பெற்று வாழ்வினில் உய்வினை அடைவோமாக.
ஒடுங்கும் பிணிபிறவி (Oduṅgum Piṇipiṟavi) is a Tamil phrase that can be translated to "escaping from the cycle of birth and death" or "liberation from bodily existence." Here’s a breakdown of the components to understand the meaning more clearly:
ஒடுங்கும் (Oduṅgum): Means "escaping" or "getting rid of". It comes from the root word "ஒடுங்கு (Oduṅgu)", which means "to escape" or "to be freed from."
பிணி (Piṇi): Refers to "bodily existence" or "physical suffering." It can denote the physical body or the suffering associated with it.
பிறவி (Piṟavi): Means "birth" or "rebirth." It refers to the cycle of birth, life, and death.
"ஒடுங்கும் பிணிபிறவி" translates to "escaping from the cycle of birth and death" or "liberation from bodily existence." The phrase emphasizes the idea of overcoming or transcending the continuous cycle of rebirth and physical suffering.
Religious and Spiritual: In religious and spiritual contexts, particularly in Hinduism and Buddhism, this phrase signifies the attainment of moksha (liberation) or nirvana (enlightenment), where one is freed from the cycle of reincarnation and physical suffering. It reflects the ultimate goal of spiritual practice.
Philosophical: In Tamil philosophy, escaping the cycle of birth and death is seen as the ultimate achievement, reflecting the transcendence of material existence and entry into a state of eternal peace or bliss.
Literary Usage: In Tamil literature and poetry, this phrase might be used to describe the quest for spiritual liberation and the liberation from worldly suffering.
In a devotional poem or philosophical text, "ஒடுங்கும் பிணிபிறவி" might be used to describe the spiritual journey towards liberation from the physical body and the cycle of rebirth, emphasizing the profound nature of achieving such a state.
"ஒடுங்கும் பிணிபிறவி" reflects the concept of escaping the cycle of birth and death, highlighting the desire for spiritual liberation and freedom from bodily suffering. It signifies the ultimate goal of transcending material existence and achieving a state of eternal peace and enlightenment.