பாடக மெல்லடிப்
1.007 பாடக மெல்லடி திருநள்ளாறு மற்றும் திருவாலவாய் பண்:நட்டபாடை
பின்னணி:
பாண்டிய நாட்டு அரசியார் மங்கையர்க்கரசி மற்றும் அமைச்சர் குலச்சிறையார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கிய திருஞானசம்பந்தர் மதுரை மாநகர் சென்று, ஆங்கே வெப்பு நோயால் வருந்திய பாண்டிய மன்னனின் பிணியை தீர்த்தும், அனல் வாதம் புனல் வாதம் ஆகியவற்றில் ச்மணர்களை வென்றும், சமணர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் அழித்தார். பாண்டிய மன்னனும் சைவனாக மாறி, திருஞானசம்பந்தருடன் பாண்டிய நாட்டுத்தல்ங்கள் அனைத்தும் சென்று இறைவனை வழிபட்டான். அதன் பின்னர் திருஞானசம்பந்தர், பாண்டிய நாட்டு மன்னன், அரசியார், அமைச்சர், மற்ற தொண்டர்களிடமிருந்து விடை பெற்று, பாண்டிய நாட்டின் எல்லையைக் கடந்து சோழநாடு புகுந்தார். திருக்களர், பாதாளீச்சரம், கொள்ள்ம்பூதூர் ஆகிய த்லங்களும் வேறு பல தலங்களும் சென்று இறைவனை வழிபட்ட பின்னர், திருநள்ளாறு வந்தடைகின்றார். இந்த தலம் சனிபகவான் பெருமானை வழிபட்டு நலமடைந்த தலம் என்பதால், சனி பகவானால் வாழ்க்கையில் ஏற்படும் இடரினைத் தீர்த்துக் கொள்வதற்கு திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகங்களை ஓத வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
முக்கியமாக ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருப்போருக்கு இந்த பதிகங்களை ஓதுவது மிகவும் உதவியாக இருக்கும். திருநள்ளாற்றுத் தலத்து பெருமானைப் பணிந்து வணங்கிய திருஞானசம்பந்தருக்கு மதுரையில் சமணர்களுடன் நடைபெற்ற அனல் வாதத்தில், திருநள்ளாறு த்லத்தின் மீது அருளிய போகமார்த்த பூண்முலையாள் என்று தொட்ங்கிய பதிகம் கொண்ட ஏட்டினை நெருப்பினில் இட்டதும், அந்த ஓலை நெருப்பினில் எரிந்து அழியாத வண்ணம், நள்ளாற்று நாதனும் ஆலவாய் அண்ணலும் பாதுகாத்து, சைவத்தின் பெருமையை நிலைநாட்டிய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். நெருப்பினில் இடப்பட்ட ஓலை, எரிந்து அழியாமல் இறைவன் பாதுகாத்த அதிசய்த்தை நினைவு கூர்ந்த திருஞானசம்பந்தர், இறைவனுக்கு நன்றி கூறும் முகமாக, திருநள்ளாறு மற்றும் திருவாலவாய் தலங்களை குறிப்பிட்டு இந்த பதிகத்தை பாடுகின்றார். இந்த பதிக்த்தின் பாடல்கள் தோறும் நள்ளாற்றெம் பெருமான் ஆலவாய் தலத்தில் அமர்ந்த வண்ணம் தனது உள்ளத்திற்கு துணையாகி நின்ற தன்மையை மனம் நெகிழ்ந்து குறிப்பிடுகின்றார். இதனைக் குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்ப்ட்டுள்ளது.
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சையாக்கி
என்னுள்ளத் துணையாகி ஆலவாயில் அமர்ந்திருந்தவாறு என்கொல் எந்தாய் என்று
பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவிப் போந்து பண்பினிய தொண்டருடன் அங்கு வைகி
மன்னு புகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்பை வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்
பாடல் 1:
பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக்காடு இடம் பற்றி நின்று
நாடகம் ஆடும் நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த
ஆடக மாட நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
விளக்கம்:
பாடகம் என்பது மகளிர் தங்களது காலில் அணியும் ஆபரணம். இந்த அணியினை குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.ஐயாறன் அடித்தலத்தைப் புகழ்ந்து பாடும் திருவிருத்தப் பாடலில் (4.92.12) அப்பர் பிரான் பாடகத்தை குறிப்பிடுகின்றார். பொலம் புண்டரீகம்=அப்போது மலர்ந்த தாமரை மலர்: அலம்பும்=ஒலிக்கும். இறைவன் சிவபெருமானின் திருவடிகள், பார்வதி தேவி அணியக்கூடிய அணிகலன்கள் ஒலிக்கும் தன்மை உடையன என்று கூறுவதன் மூலம், திருவடிகளில் ஒன்று தேவியின் திருவடி என்று உணர்த்தி, இறைவன் மாதொரு பாகனாக இருக்கும் நிலை இங்கே,அப்பர் பெருமானால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஐயாறனின் திருவடிகள் புதியதாக மலர்ந்த பொற்றாமரைப் பூக்களைப் போல்வன: தம்மை வழிபடும் அடியார்கள் தனித்து வருந்தும் பொழுது, அவர்களது வருத்தத்தைப் போக்கும் துணையாக விளங்குவன; பொன் போன்று ஒளியுடைய பார்வதி தேவியின் சிலம்பு, பாடகம், கிண்கிணி போன்ற அணிகலன்கள் தம்மிடையே ஒலிக்கும் தன்மை உடையன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பொலம் புண்டரீகப் புதுமலர் போல்வன போற்றி என்பார்
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன்னனையாள்
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணித் திரளும்
அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே
திருவையாறு தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலிலும் (4.98.2) பாடக அணியினை குறிப்பிட்டு, பெருமானின் திருப்பாதத்தை பாடகக்கால் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கழல்=வீரக்கழல்; உக்க=சிந்திய; அந்தி=அந்தி மாலை நேரம்; பரிதி=சூரியன்; கணம்=கூட்டம்; காடகக் கால்=காட்டில் நடந்த கால்; ஆடகம்=பொன்; அந்தி நாடகம்=இரவில், நள்ளிரவில் ஆடப்படும் கூத்து; அடி தேர=தேடித் தெரிந்து கொள்ள முயற்சி செய்யப்பட்ட திருவடிகள்; ஐயாற்றன=ஐயாறனது; அரி தேர் வலவன் ஐயாற்றனவே என்பது பாட பேதம். திருமாலால் தேடப்பட்ட வல்லமை வாய்ந்தது என்று பொருள்; ஒரு காலில் பாடக ஆபரணமும் மற்றொரு காலில் வீரக்கழலும் அணிந்த கால்கள் என்று குறிப்பிட்டு, பெருமான் மாதொரு பாகனாக இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. அந்தி என்ற சொல்லினை பரிதிக்கதிர் உக்க என்ற தொடருக்கும் நாடகக்கால் என்ற தொடருக்கும் பொதுவாக கொண்டு பொருள் கொள்ள வேண்டும். இந்த பாடலில் பெருமானின் திருவடிகளின் தன்மை குறிப்பிடப்படுகின்றன.
பாடககால் கழற்கால் பரிதிக் கதிர் உக்க அந்தி
நாடகக்கால் நங்கை முன் செங்கண் ஏனத்தின் பின்னடைந்த
காடக்கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால்
ஆடகக்கால் அன்றோ அரி மால் தேர வல்லன ஐயாற்றனவே
பாடகம் எனப்படும் அணியினை அணிந்த திருவடி, வீரக்கழல் அணிந்த திருவடி, சூரியனின் கதிர்கள் தங்களது வலிமை இழந்து சிந்திய நிலையில் தோற்றமளிக்கும் சிவந்த நிறத்தில் காணப்படும் திருவடிகள், பிரளய காலத்து நள்ளிரவில் நடமாடும் திருவடிகள், பார்வதி தேவியை அழைத்துக் கொண்டு சிவந்த பன்றியின் பின்னே காட்டில் நடந்த திருவடிகள், பதினெண் கணங்களும் தொழுகின்ற திருவடிகள், எமக்கு கண் போன்று சிறந்ததும் இன்றியமையாததுமாக திகழ்ந்து பற்றுக்கோடாக விளங்கும் திருவடிகள், பொன் போன்று சிறந்த திருவடிகள், பிரமனும் திருமாலும் அரிய முயற்சி செய்து தேடியும் காண முடியாத திருவடிகள் அல்லவோ ஐயாற்றெம் பெருமானின் திருவடிகள் என்று பெருமானின் திருவடிகளின் தன்மையை அப்பர் பிரான் வியந்து பாடிய பாடல்.
திருவாரூர் தலத்தின் பழமையை உணர்த்தும் திருத்தாண்டகக் பாடலில் (6.34.3) பாடகம் சேர் மெல்லடிப்பாவை என்று பிராட்டியை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பாடகம்=பெண்கள் காலில் அணியும் அணிகலன்; பார்த்தன்=அர்ஜுனன்: அர்ஜுனனின் பலத்தினை பரீட்சை செய்வதற்காக பெருமான் வேடுவக் கோலம் தாங்கி, அன்னை பார்வதி தேவி உடன் வர சென்றதாக இந்த பாடலில் கூறப்படுகின்றது. போர்க் கலையில் சிறந்து விளங்கிய அர்ஜுனனுக்கு முதுகினில் மச்சம் இருந்ததாகவும், அர்ஜுனன் எவரிடமும் தோற்று ஓடாததால் அந்த மச்சத்தினை பார்க்கும் வாய்ப்பு எவருக்கும் கிடைக்கவில்லை என்றும் கூறுவார்கள். அன்னை பார்வதி தேவிக்கு இந்த மச்சத்தினைக் காண ஆவல் உண்டானதாகவும், அதனால் தான் தன்னை நோக்கி தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் வழங்கச் சென்ற இறைவன், தன்னுடன் அன்னையையும் அழைத்துக் கொண்டு சென்றதாகவும்,அர்ஜுனனை போரில் தோற்கடித்து அவனது முதுகு மச்சத்தை பார்வதி தேவி காண வைத்ததாகவும் கூறுவார்கள். சிதம்பரத்தை அடுத்த வேட்களம் தலத்தில் தான் அர்ஜுனன் பாசுபதம் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த தலத்து இறைவனின் பெயர் பாசுபத நாதர் என்பதாகும். இங்கு உள்ள அர்ஜுனன் உருவச் சிலையில் முதுகில் ஒரு வடு இருப்பதையும் நாம் காணலாம். தில்லைச் சிதம்பரத்தில் ஆடப்படும் திருக்கூத்தை, நிலையாக ஆடப்படும் கூத்து என்று குறிப்பிடுகின்றார். விராட் புருடனின், இருதயமாக, மையத்தானமாக விளங்கும் தில்லைச் சிதம்பரத்தில் பெருமான் தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருப்பதாகத் தானே புராணங்கள், வேதங்கள் மற்றும் அருளாளர்கள் அருளிய கீதங்கள் குறிப்பிடுகின்றன.
பாடகம் சேர் மெல்லடி நற்பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
திருவாசகம் திருப்பொற்சுண்ணம் பதிகத்தின் பாடலில் மகளிர் அணீந்திருந்த நகைகளில் பாடகம் ஒன்றாக சொல்லப்படுகின்றது. சூடகம்=கை வளையல்;தோள்வளை=தோளில் அணிந்து கொள்ளும் வளையம்; பிராட்டி இந்த பாடலில் பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை என்று குறிப்பிடப்படுகின்றால்.ஆர்ப்ப=ஒலி எழுப்புதல், ஆரவாரம் செய்தல் என்பது பொதுவான பொருள். பாடலின் இரண்டாவது அடியில், இகழ்ச்சிக் குறிப்புடன் சிரித்தலை உணர்த்துகின்றது. மகளிர் ஒன்றுகூடி பெருமானை நீராட்டுவதற்கு, நறுமணம் கலந்த சுண்ணப்பொடி இடிக்கும் செயலில் ஈடுபடும் தருணத்தில்,இறைவனைப் புகழ்ந்து கொண்டும் தங்களது எண்ணங்களை வெளிப் படுத்தியும் பாடுகின்றனர். இவ்வாறு அவர்கள் சுண்ணப்பொடி இடித்துக் கொண்டிருந்த போது அவர்களின் உடல் அடைந்த மாற்றங்களும் இந்த பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன. தாங்கள் அணிந்து கொண்டுள்ள அணிகள்,உரலில் உலக்கை வைத்துக்கொண்டு இடிக்கின்ற செயலால் அசைவதால் ஒன்றுக்கொன்று உராய்ந்து ஒலி எழுப்பும் தன்மை ஆர்ப்ப என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. பரன் என்றால் உயர்ந்தவன் என்று பொருள். பராபரன் என்ற தொடர் மூலம், நம்மிலும் உயர்ந்தவர்களாக கருதப்படும் பலருக்கும் உயர்ந்தவனாக பெருமான் இருக்கும் தன்மை, உணர்த்தப் படுகின்றது. ஆடகம்=பொன்; பொன்னார் மேனியனாக பெருமான் விளங்கும் தன்மை ஆடக மாமலை என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. பொன்மலையில் வெள்ளிக் குன்றது போல் பொலிந்திலங்கி என்ற அப்பர் பிரானின் அருள்மொழி (4.81.3) நமது நினைவுக்கு வருகின்றது. நாடவர் நந்தம்மை ஆர்ப்ப நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப என்ற தொடர் மூலம் மணிவாசக அடிகளார் தமது நிலையை உணர்த்துவதாக முனைவர் அ.ச.ஞா. அவர்கள் விளக்கம் அளிக்கின்றார். யான் மற்றும் எனது, எனப்படும் அகப்பற்று மற்றும் புறப்பற்றினை நீக்கியவனாக எங்கும் சிவத்தை எதிலும் சிவத்தைக் காணும் பக்குவம் அடைந்த மணிவாசகரின் தன்மையை புரிந்து கொள்ளாமல் பலரும் அவரைக் கண்டு எள்ளி நகையாட, அவர்கள் அறியாமையில் மூழ்கி இருக்கும் தன்மையைக் கண்டு தான் எள்ளி நகையாடுவதாக அடிகளார் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் அளிக்கின்றார். இதே கருத்தினை பொற்சுண்ணம் இடிக்கும் மகளிர் மேல் ஏற்றி பொருள் கொள்வதும் பொருத்தமே.
சூடகம் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்ப தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப
நாடவர் நம் தம்மை ஆர்ப்ப நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மாமலை அன்ன கோவுக்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
வயிரவி மந்திரம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், தேவியை பாடகச்சீறடி என்று குறிப்பிடுகின்றார். ஊடகம் என்பதை அகத்து ஊடு என்று மாற்றிக்கொள்ள வேண்டும். குண்டலினி சக்தியை எழுப்பி இன்பம் காணாமல் தான் வீணாக காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பதை, உறங்குவதாக பொருள் கொள்ளவேண்டும். யோக முயற்சியால் மூலாக்னியை எழுப்பி அதன் மூலம் உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலியை எழுப்பினால் பிராட்டியின் சிலம்பொலியை கேட்கலாம் என்று கூறுகின்றார். இடை பிங்கலை சுழுமுனை எனப்படும் மூன்று நாடிகளில் நடுவே ஓங்குகின்ற சுழுமுனை நாடியின் உள்ளே பொருந்தி நிற்பவளும், என்றும் இளமையுடன் இருப்பவளும், கன்னிகையும் ஆகிய சக்தி, பாடகம் அணிந்துள்ள சிறிய பாதத்தில் பொருந்தி இருக்கும் சிலம்பின் ஒலி அந்த நாடிக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதனை கேட்க முடியாத அறிவிலியாக தான் இருப்பதாக குறிப்பிட்டு, தனது வருத்தத்தை தெரிவிக்கின்றார்.
நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞானத்துக்
கூடியிருக்கும் குமரி குலக்கன்னி
பாடகச் சீறடி பைம்பொன் சிலம்பொலி
ஊடகம் மேவி உறங்குகின்றேனே
சேரமான் பெருமான் நாயனாரும் தான் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் அறுபத்து ஐந்தாவது பாடலில் மாதொரு பாகனின் கோலத்தை விவரிக்கையில் பிராட்டியின் காலில் காணப்படும் பாடகம் அணிகலனை குறிப்பிடுகின்றார். வீரக்கழல், பாம்பு, திருநீறு, கனல் ஏந்திய கை,எலும்பு மாலை, மூவிலை வேல் நீரினைத் தாங்கிய சடை முதலியன பெருமானது வலது பக்கத்திலும், பாடகம். மேகலை, சாந்து, பந்து, மலர் மாலை,மோதிரம், முதலியன மாதொருபாகனாகிய பெருமானது இடது பக்கத்திலும் இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது.
வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடம்
மேகலம் தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு
அலர்ந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்
சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே
இந்த பாடலில் நாடகமாடும் நள்ளாறர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருவாரூரைச் சார்ந்த சப்த விடங்கத் தலங்களில் ஆடப்படும் நடனங்கள் பின்வருமாறு; ஆரூர் (அஜபா நடனம், வீதி விடங்கர்), நாகை காரோணம் (கடற்கரை நடனம், சுந்தர விடங்கர்), காறாயில் (ஆதி விடங்கர்,குக்குட நடனம்), கோளிலி (பிருங்க நடனம், அவனி விடங்கர்), மறைக்காடு (ஹஸ்த பாத நடனம், அன்ன நடனம், புவனி விடங்கர்), வாய்மூர் (கமல நடனம்,நில விடங்கர்), நள்ளாறு (உன்மத்த நடனம், நகர விடங்கர்). சமணர்களுடன் வாதம் புரிந்து தான் வெற்றி பெற்றது சிவபிரான் நடத்திய திருவிளையாடல் என்ற பொருள் பட நாடகமாடும் பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் சிவபெருமான் நடமாடும் சுடுகாட்டினைச் சுட்டிக் காட்டி, அத்தகைய காட்டினில் அணிகலன் அணிந்த மனைவி அருகில் நிற்க நடனம் ஆடலாமா என்று கேள்வி கேட்பதாகவும் பொருள் கொள்ளலாம். மிகவும் நயமான் கற்பனை. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நம்பெருமான் என்று பெருமானின் திருநாமம் குறிப்பிடப்பட்டிருப்பதை உணரலாம். பண்டைய நாளில் பெருமான் இந்த திருநாமம் கொண்டு அழைக்கப்பட்டார் போலும். சூடகம்=வளையல்;
பொழிப்புரை:
பாடகம் எனப்படும் ஆபரணத்தை தனது மெல்லிய கால்களில் அணிந்து கொண்ட பாவையாகிய பார்வதி தேவியுடன், உயிரற்ற உடல்கள் இடப்படுவதும் சுட்டெரிக்கப்படுவதும் ஆகிய காட்டினை, தனது உறைவிடமாக பற்றிக்கொண்டு நடனமாடுபவனும் நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. தங்களது முன்கைகளில் வளையல்கள் அணிந்துள்ள மகளிர், தங்களது தத்தம் துணைவர்களோடு உம்மைப் பொற்றித் தொழும் வண்ணம், பொன் போன்று அழகிய மாட வீடுகள் நெருங்கி காணப்படுவதும் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில், பெருமானே, நீவிர் உறைகின்றீர்.
பாடல் 2:
திங்களம் போதும் செழும் புனலும் செஞ்சடை மாட்டு அயல் வைத்துகந்து
நங்கண் மகிழும் நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
பொங்கிள மென்முலையார்களோடும் புனமயிலாட நிலா முளைக்கும்
அங்கழகச் சுதை மாடக்கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
விளக்கம்:
போது=அன்றலர்ந்த மலர்கள்; புனம்=முல்லை வனத்துக் காடுகள்;
பொழிப்புரை:
ஒற்றைப் பிறைச் சந்திரன், அன்றலர்ந்ததும் செழித்து வளர்ந்ததும் ஆகிய மலர்கள், செழுமையான கங்கை நதி ஆகியவற்றை, மிகுந்த விருப்பத்துடன், தனது சிவந்த சடையினில் அருகருகே வைத்துக்கொண்டு, நமது கண்கள் மகிழும் வண்ணம் காட்சியளிக்கும் பொருட்டு, நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. பூரித்து எழுகின்ற மென்மையான மார்பகங்களை உடைய மகளிருடன் முல்லை வனத்துக் காடுகளில் வாழும் ஆண் மயில்கள் களித்து விளையாடும் அழகிய மாடங்களை உடையதும், பெருமை மிகுந்த தமிழ்ச் சங்கம் வளர்க்கப்பட்டதும்,நிலவொளியினை பிரதிபலிக்கும் உயர்ந்த மாடவீடுகள் உடையதும் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில், பெருமானே, நீவிர் உறைகின்றீர்.
பாடல் 3:
தண்ணறு மத்தமும் கூவிளமும் வெண்டலை மாலையும் தாங்கி யார்க்கும்
நண்ணல் அரிய நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்து உடன் ஏத்தப் புனையிழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
விளக்கம்:
தண்ணறு மத்தம்=தண்+நறு மத்தம்=குளிர்ந்ததும் நறுமணம் வீசுவதும்; கூவிளம்=வில்வ இலைகள்; மாதவர்=சிறந்த தவம் செய்வோர். இழை=அழகிய நகைகள்; அண்ணல்=தலைவன்; புண்ணிய வாணர்=சென்ற பிறவியில் செய்த நற்செயல்களின் விளைவால் இந்த பிறவியில் நல்ல கதியில் வாழும் உயிர்கள்;சென்ற பல பிறவிகளில் செய்த நற்செயல்கள் தாம் இந்த பிறவியில் நாம் இறைவனை வழிபடும் வண்ணம் நம்மை பணிக்கின்றது என்ற குறிப்பு, நமக்கு திருஞானசம்பந்தர் அருளீய வலஞ்சுழி தலத்து பதிகத்தின் முதல் பாடலை (2.106.1) நமக்கு நினைவூட்டுகின்றது. இருங்கடல்=பெரிய கடல்; கடல் வையம்=கடலால் சூழப்பட்ட உலகம்; முன்ன=சென்ற பல பிறவிகள்; பாடுதல்=வாயின் தொழில்; ஆதரித்தல்=மனத்தின் தொழில்; வழிபடுதல்=உடலின் செயல்; மூன்று விதமான கரணங்களாலும் இறைவனை வழிபடும் முறை இங்கே உணர்த்தப் படுகின்றது. நிலையான காவிரி நதி என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பண்டைய நாளில் வற்றான ஜீவநதியாக காவிரி இருந்த நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பன்னி= மீண்டும் மீண்டும்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்ன நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே
முன்னைப் பிறவியின் பயன் தான், தான் வலஞ்சுழி பெருமானை வழிபடச் செய்தது என்று திருஞானசம்பந்தர் கூறும் கருத்து, சூலை நோய் தந்து அப்பர் பெருமானை ஆட்கொள்வதாக சிவபிரான் திலகவதியாரிடம் கூறியதை நினைவூட்டுகின்றது. சிவபிரான் அப்போது, முன்னமே முனியாகி என்னை அடைய தவம் செய்தவன் என்று அப்பர் பிரான் வாகீச முனிவனாக சென்ற பிறவியில் இருந்ததையும் அந்த பிறவியில் தவம் செய்ததையும் குறிப்பிடுகிறார். எனவே சென்ற பிறவிகளில் புன்ணியம் செய்திருந்தால் தான், இந்த பிறவியில் நாம் பெருமானை வழிபட முடியும் என்பது மிகவும் தெளிவாக புலனாகின்றது. இதனை விளக்கும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மன்னு தபோதனியார்க்குத் கனவின் கண் மழ விடையார்
உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்
அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வோம் என அருளி
துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.98.5) ஒரு பாடலில் சம்பந்தர், தான் சென்ற பிறவியில் இறைவனை ஒரு பொழுதும் மறக்காமல் இருந்ததாகவும், அவ்வாறு இருந்த தனக்கு முக்தி அளிக்காமல் மறுபடியும் மண்ணுலகில் பிறக்கச் செய்தது ஏன் என்றும் வினவுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். பிறப்பிறப்பினைத் தவிர்க்கும் வழியை நீ எனக்கு உணர்த்தாமல், பிறவிப் பிணியினை எனக்குத் தந்து சென்ற பிறவியில் இறக்குமாறும் இந்த பிறவியில் மறுபடியும் இந்த மண்ணுலகில் பிறக்குமாறும் செய்தது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. துறத்தல் என்பதை ஒரு துறவி தான் அடுத்தவருக்கு கற்றுத் தரமுடியும் என்பதால், பகலில் துறவிக் கோலம் பூண்டு வேதங்களை உபதேசம் செய்தவனாகிய துருத்திப் பெருமானை நோக்கி இந்த கேள்வி கேட்கப்படுகின்றது. இவ்வாறு மறுபடியும் நான் பிறப்பு எடுப்பதற்கு நான் செய்த தவறு தான் என்னே என்றும் கேட்கின்றார்.
துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப் படும் உடம்பு விட்டு
இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே
சென்ற பிறவிகளில் நல்வினைகள் செய்தவர்களே இந்த பிறவியில் பெருமானை தொழுதெழும் சிந்தை உடையவர்களாக இருப்பார்கள் என்பதை திருஞானசம்பந்தர் உணர்த்தும் சீர்காழி தலத்தின் பாடலை (3.03.11) இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். நடலை=துன்பம்; பிறவி எடுத்தால் உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்கள்; புண்ணியர்=சென்ற பிறவிகளில் நல்வினைகள் புரிந்தவர்கள்;
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவர் அடி தொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்
நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித் தாம் எய்துவர் தவநெறியே
கடந்த பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பயனாக, இந்த பிறவியில் பெருமானை வழிபடும் பாக்கியம் நமக்கு கிடைக்கும் என்று நெல்வெணெய் தலத்து பதிகத்தின் பாடலில் (3.96.10) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நீக்கிய=தனது நீர்வளத்தினால் தலத்து மக்களின் வறுமை மற்றும் பிணிகளை நீக்கிய ஆறு;சாக்கியச் சமண் கெடுத்தீர் என்று புத்தம் மற்றும் சமண சமயங்களின் அழிவுக்கு காரணமாக விளங்கிய பெருமான் என்று கூறுகின்றார். சமணம் மற்றும் புத்த மதங்கள் இந்தியாவில் தோன்றிய போதிலும், பல்வேறு அரசர்களின் ஆதரவு பெற்று விளங்கிய போதிலும், இந்த இரண்டு சமயங்களும் இந்தியத் துணைக் கண்டத்தில் வேரூன்றவில்லை. காலத்தால் அழியாது இன்றும் இந்து மதமே சிறந்து விளங்குகின்றது. இதற்கு காரணம் பெருமானின் அருள் என்றே இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகம் அருளிய பல ஆண்டுகள் கழித்தே, மதுரை நகரில் அனல்வாதம் புனல்வாதம் முதலியவை நிகழப்பெற்று சமணர்களின் கொட்டம் அடக்கப்படுகின்றது. இந்தப் பதிகம் அருளியதற்கு முன்னமே, காஞ்சி நகரினில் ஓங்கியிருந்த சமண சமயம் பல்லவ மன்னர்களின் ஆதரவையும் இழந்து மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட நிலை ஏற்படுகின்றது. அப்பர் பிரானை பல சூழ்ச்சிகள் மூலம் கொல்வதற்கு முயற்சி செய்த போதிலும், பெருமானின் அருளினால் அந்த சூழ்ச்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு, சைவ மதத்தின் உயர்ந்த நிலை அனைவர்க்கும் உணர்த்தப் பட்டமையே இந்த மாற்றத்திற்கு காரணம் அல்லவா. இந்த தன்மையை குறிப்பிடும் வண்ணம் சமண் சாக்கியம் கெடுத்தமை என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்றே தோன்றுகின்றது.
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கெடுத்தீரே
சாக்கியச் சமண் கேடுத்தீர் உமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே
இந்த கருத்து அப்பர் பிரான் திருவாரூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் (5.07.2) ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. தனது நெஞ்சத்தினை நோக்கி அப்பர் பிரான், நெஞ்சமே ஆரூர் அரநெறி அப்பன், உனது சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்க நீ என்ன தவம் செய்தாய், என்று வினவுகின்றார்.
என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடு அவை ஆய பராபரன்
அந்தமில் புகழ் ஆரூர் அரநெறி
சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே
சென்ற பிறவியில் நாம் செய்த நல்வினைகள் தாம், இந்த பிறவியில் நாம் சிவபெருமானை வழிபடத் தூண்டும், இது சிவபெருமானின் அருளால் நிகழ்வது.இதனையே மணிவாசகர் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இதே கருத்தினை மயிலாடுதுறை மீது அருளிய குறுந்தொகைப் பதிகம் (5.39) ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். சிவபெருமான் மீது கொண்ட காதலால்.அவனது பெருமைகளை அறிந்த தலைவி சிவபெருமானின் நினைவுகளை தனது நெஞ்சினுள்ளே வைத்தும், தலையில் தாங்கியும் பெருமை கொள்கின்றாள்.அதற்கு தான் செய்த தவம் என்ன என்று தனது நெஞ்சினை நோக்கி வினவும் பாடல்.
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
கலைகள் ஆய வல்லான் கயிலாய நன்
மலையன் மா மயிலாடுதுறையான் நம்
தலையின் மேலும் மனத்துளும் நிற்கவே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றிலும் (5.77.2) அப்பர் பிரான் நெஞ்சமே செந்நெறி மன்னு சோதி இறைவனார் உன்னுள் வந்து தங்குவதற்கு நீ என்ன தவம் செய்தாய், என்று வினவுகின்றார். விழுப்பொருள்=கருப்பொருள்; மன்னு சோதி=நிலை பெற்ற சோதி; வைகுதல்=வெளிப் படுதல்:
என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
மின்னு வார் சடை வேத விழுப் பொருள்
செந்நெலார் வயல் சேறையுள் செந்நெறி
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே
வழிவழியாக, பாண்டிய மன்னனுக்கு அமைச்சர் தொழில் செய்து வந்த, ஆமாத்தியர் குடியில் பிறந்தவர் மணிவாசகர். எனவே சிறு வயதில் அவர் தன்னை,அமைச்சுத் தொழிலுக்கு தகுந்தவனாக உருவாக்கிக் கொள்வதிலும், அமைச்சரான பின்னர், அரசுப் பணிகளில் முழு கவனம் செலுத்துவதிலும் அவர் காலத்தை கழித்திருக்க வேண்டும். அதுவும் முதல் அமைச்சராக பதவி வகுத்த, மணிவாசகருக்கு அரசுப் பணிகள் செய்வதைத் தவிர வேறு எதிலும் நாட்டமும் நேரமும் இருந்திருக்காது, அதனால் தான், திருஏசறவு பதிகத்தில் நானேயோ தவம் செய்தேன், பெருமானின் திருநாமத்தைச் சொல்வதற்கு என்று மிகவும் வியந்து பாடுகின்றார். சிவபெருமான் இவரைத் தடுத்து ஆட்கொண்ட சமயத்திலும், அரசுப் பணியினை மேற்கொண்டு குதிரைகள் வாங்குவதற்காக தொண்டித் துறைமுகம் நோக்கி மணிவாசகர் சென்று கொண்டிருந்தார். எனவே சிவபெருமான் அவரை ஆட்கொண்டதற்கு காரணம், அவர் சென்ற பிறப்பில் செய்த தவமாகத் தான் இருக்க வேண்டும். கயிலாயத்தில் அணுக்கத் தொண்டராக பணியாற்றிய ஆலாலசுந்தரர். நம்பி ஆரூரராக அவதாரம் செய்ததை நாம் அறிவோம். இவ்வாறு நால்வருமே, சென்ற பிறப்பில் செய்த தவப் பயனால் எத்தைகைய பேற்றினைப் பெற்றார்கள் என்பதை நாம் உணரலாம். நால்வர் பெருமானார்கள், தாங்கள் பெற்ற பேற்றினை, தங்களது அனுபவத்தினை பாடல்களாக வடித்து, அந்த பாடல்களை பாடுவதன் மூலம் நாமும் இறைவனைப் புகழ்ந்து பாடி மகிழுமாறு செய்துள்ளார்கள்.
நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்
தேனாய் இன்னமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்தெனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்
ஊனாரும் உயிர் வாழ்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே
நாம் செய்த தவத்தினால் இந்த நிலவுலகில் பிறக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ள நாம், இந்த தவத்தின் முழுப் பயனை அடைய விரும்பினால் செய்ய வேண்டியது என்ன என்று அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடலையும் இங்கே காண்போம். இந்த பாடல் தில்லையின் மீது அருளப்பட்டுள்ள பதிகத்தின் பாடல் (4.81.5). எனவே நாம் பெற்றுள்ள மனிதப் பிறவியை இறைவன் நமக்கு அளித்த வரமாக கருதி, பெருமான் நிலவுலகில் பல தலங்களில் எழுந்தருளி அருள் புரியும் நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவனை வணங்கி வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தின் பாடல் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். கூழைமை=கடமை;
வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்கு பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நந்தம் கூழைமையே
நண்ணுதல்=நெருங்குதல்; பெருமானின் திருவருள் இருந்தாலன்றி பெருமானை எவரும் நெருங்க முடியாது என்பதை உணர்த்தும் பொருட்டு நண்ணல் அரிய பெருமான் என்று கூறுகின்றார். திருக்கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.62.9) பிரமனும் நாரணனும் நண்ணவொணாத் தன்மையன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தனது ஐந்து தலைகளில் ஒன்றினை இழந்ததால், நாணமடைந்த பிரமன் என்று சொல்லப்படுகின்றது. ஸ்தாணு என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் தாணு, தானே தோன்றியவன் என்று பொருள்; திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஒரு முறை மதுரை சென்ற போது, அவர் யாழில் இசைத்த பாடலைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் யாழின் நரம்புகள் தரையின் குளிர்ச்சி காரணமாக கெட்டு விடக் கூடாது என்று ஒரு பலகை இடுமாறு அசரீரியாக குரல் கொடுத்ததாக பெரியபுராணத் தகவல்கள் கூறுகின்றன என்று கூறுவார்கள். திருவிளையாடல் புராணத்தில் பாணனுக்கு பலகை அளித்த படலம் என்ற படலத்தில், பாணபத்திரன் என்ற புலவர்க்கு பலகை அளித்ததாக சொல்லப் படுகின்றது.
நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
தாணு எனை ஆளுடையான் தன்னடியார்க்கு அன்புடைமை
பாணனிசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்
கோணல் இளம் பிறைச் சென்னி கோளிலி எம் பெருமானே
திருவேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.90.6) நண்ணலரிய அமுது பெருமான் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.நண்ணுதற்கு மிகவும் அரியவனாகத் திகழ்ந்தாலும், பெருமானின் அருளே துணையாகக் கொண்டு அவனை நெருங்கும் அடியார்களுக்கு அமுதம் போன்று இனிப்பவனாக பெருமான் இருக்கின்ற நிலை நண்ணரிய அமுது என்ற் தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. குறி=பெயர்; திண்=திண்ணமாக பற்றிய வினைகள், எளிதில் பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ள வினைகள்;
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இசை மொழி பாடிய வானவர் தாம் பணிவார்
திண் என் வினைகளைத் தீர்க்கும் பிரான் திருவேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே
திருநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.14.5) பெருமானின் திருவடி மிகவும் நண்ணரிய திருவடி என்றும் அத்தகைய பெருமை வாய்ந்த திருவடி தனது தலை மீது வைக்கப்பட்டது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். விண்=ஆகாயம், இங்கே ஆகாயத்தில் உள்ள தேவர்களைக் குறிக்கின்றது. இரிதல்=பயந்து ஓடுதல்; கமலமலர்= தாமரை மலர். இதயத்தை தாமரை மலருக்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. எனவே இங்கே அடியார்களின் இதயத் தாமரை குறிக்கப்படுகின்றது. என்று பொருள் கொள்வது பொருத்தம். கடி=மணம், இங்கே பக்திமணம்; திண்ணெரி=வலிமையான நெருப்பு; நண்ணுதல்=எட்டுதல், கிட்டே நெருங்குதல்; நண்ணரிய=நெருங்க முடியாத, எட்ட முடியாத. மிசை=(மிகை என்ற சொல்லின் திரிபு) மேல்
விண்ணிரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார்
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடிக் கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார்
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.57.9) அப்பர் பிரான், பெருமான் நண்ணல் அரியவன் என்று கூறுகின்றார். அடியார்கள் உனது திருவடிகளைப் போற்றி இசைப்பாடல்கள் பாட அதனை மகிழ்ந்து ஏற்றுக் கொள்பவனே, தருமமே வடிவமாக உள்ளவனே, தங்களது முயற்சியால் எவரும் அடைய முடியாத வண்ணம் இருப்பவனே, இடி முழங்கும் வானத்தையும் கடந்து நிற்பவனே, எண்ணற்ற திருநாமங்களை உடையவனே, நான்கு திசைகளுக்கும் ஒளி வழங்கும் தலைவனே, நான்முகனும் திருமாலும் அடியும் முடியும் காண முடியாத வண்ணம் நெடிதுயர்ந்து நின்றவனே, பல திசைகளிலும் காற்று வீசுவதற்கும் மூல காரணனாக இருப்பவனே, கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாக கொண்டவனே, உன்னை நான் பலமுறையும் போற்றி வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான், கயிலாயக் காட்சியைக் கண்ட போது மகிழ்ந்து பாடிய பாடல்.
போற்றி இசைத்து நின்னடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிர நூறு பெயராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்றிசைக்கும் திசைக்கெல்லாம் வித்தே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.80.7) அப்பர் பிரான் தேவர்களும் நண்ணுதற்கு அரியவனாகத் திகழ்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். பிறப்பு=பலவகை பிறப்புகளாய் உள்ளவன்; அண்ணல்=தலைவன்; நிறம்=வடிவம்; அறத்தான்=தருமமே வடிவமாய் நின்று அதனை நிலை நிறுத்துபவன்; அறவோன்=தருமத்தின் வழியே அனைத்து உயிர்களும் தங்களது வினைகளின் பயனை நுகர்விக்கச் செய்பவன்; ஐயன்=வியக்கத் தக்க ஆற்றல் உடையவன்; இந்த பாடலில் பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டுள்ள அனைத்து உயிர்களிலும் கலந்து நிற்கும் இறைவன் பிறவாத பெருமை உடையவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்
பிறப்பானைப் பிறவாத பெருமையானைப் பெரியானை அரியானைப் பெண் ஆண் ஆய
நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன் தன்னை
அறத்தானை அறவோனை ஐயன் தன்னை அண்ணல் தனை நண்ணரிய அமரர் ஏத்தும்
திறத்தானைத் திகழொளியைத் திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன் நானே
சுந்தரர் திருவாரூர் தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் பாடலில் (7.83.9) பெருமானை நண்ணரிய ஆதி என்று குறிப்பிடுகின்றார். திருவொற்றியூர் எல்லையைத் தாண்டி காலடிப்பேட்டை ஊரில் அடி எடுத்த உடனே, தனது இரண்டு கண்களிலும் பார்வை இழந்த சுந்தரர், பெருமானின் திருவருளால் கச்சி ஏகம்பம் தலத்தினில் இடது கண் பார்வை கிடைக்கப்பெற்றார். திருவாரூர் செல்லும் நோக்கத்துட்ன் திருவொற்றியூர் தலத்தை விட்டு வெளியேறிய சுந்தரர்,திருவாரூர் செல்ல வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியதால், கச்சி மாநகரிலிருந்து புறப்பட்ட போதும் திருவாரூரை நினைத்து பாடிய பதிகம்.
மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர் மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்
திண்ணிய மாமதில் சூழ் தென் திருவாரூர் புக்கு
எண்ணிய கண் குளிர என்று கொல் எய்துவதே
நனிபள்ளி தல்த்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.97.5) நண்ணற்கரிய பிரான் என்று பெருமானை சுந்தரர் குறிப்பிடுகின்றார். செய்வதற்கு மிகவும் அரிய படை என்று சக்கரப்படையை இந்த பாடலில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். அதனால் தானே, இந்த படையை மிகவும் வேண்டி திருமால் பெறுகின்றார்.எளிதில் செய்யக்கூடிய படை என்றால், இந்த படை வேண்டுமென்று பெருமானை அணுகியிருக்க மாட்டார் அல்லவா. சக்கரப்படை பெறுவதற்காக தனது கண்ணையே திருமால் நோண்டியெடுத்து அர்ச்சனை புரிந்த செயலை நினைவூட்டும் விதமாக கண்ணன் என்ற பெயரை பயன்ப்டுத்துகின்றார் போலும்.
பண்ணற்கு அரிய்தொரு படை அழி தனைப் படைத்து
கண்ணற்கு அருள் புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி
உண்ணற்கு இமையவரை உருண்டோட உதைத்து உகந்து
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே
திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடலில் (8.20.9) மணிவாசக அடிகளார் விண்ணகத் தேவரும் நண்ண மாட்டா பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.கண்ணகத்தே வரு களி தருதல்=கண்ணில் பாவையாய் விளங்கி மகிழ்ச்சி விளைவித்தல்; விழுப்பொருள்=சிறந்த பொருள். தேவர்களும் பெருமானை விரும்பி அவனைச் சென்று அணுக நினைத்தாலும் அணுகுவதற்கு அரிய பொருளாக உள்ள பெருமான், நிலவுலகத்தில் பல தலங்களில் நிலையாக பொருந்தி இருக்கும் தன்மை, பெருமான் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நிலவுலகத்தவரை மதிக்கின்றான் என்பது புலப்படுத்துகின்றது.தேவர்களினும் பல படிகள் மேம்பட்டவர்கள் அடியார்கள் என்பதை உணர்த்தும் பொருட்டு, உன் தொழுப்பு அடியோங்கள் என்று குறிப்பிடுகின்றார்.தொழுப்படியோம்= அருகில் இருந்து ப்ணி செய்யும் அணுக்கத் தொண்டர்கள்; பொதுவாக அடிமைகள் என்றால், பணத்திற்காகவோ, உணவு உடை இருப்பிடம் ஆகியவை பெறுவதற்காகவோ, தங்களது எஜமானனுக்கு அடிமையாக வாழ்ந்து, எஜமானின் விருப்பப்படி செயல்களைச் செய்வது வழக்கம்.இவர்கள் உடலால் மட்டுமே தஙகள்து எஜமானனுக்கு ஆட்பட்டவர்கள். ஆனால் இறைவனுக்கு எண்ணத்தால், மனத்தால், சிந்தனையால் இறைவனுக்கு ஆட்பட்டவர்கள், தொழுப்படியார்கள். அவர்கள் இறைவனின் திருவுள்ளக் கருத்தினை புரிந்து கொண்டவர்களாக வாழ்கின்றனர். மானுட வாழ்வின் முக்கிய நோக்கமே, இறை சிந்தனையில் ஆழ்ந்து பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக்கொண்டு, நிலையான ஆனந்தத்திற்கு வழிவகுக்கும் முக்தி நிலை அடைவதற்கு தகுதி படைத்தவர்களாக தம்மை மாற்றிக் கொள்வது தான். எனவே அத்தகைய வாழ்க்கையே அர்த்தமுள்ள வாழ்க்கையாக கருதப்படுகின்றது.அத்தகைய வாழ்க்கை இறைவனின் அருளால் அமைவது என்பதால், வாழச் செய்பவன் இறைவன் என்று இந்த பாடலில் அடிகளார் குறிப்பிடுகின்றார்.இவ்வாறு அவர்கள் வாழ்வதற்கு காரணம், அத்தகைய அடியார்களின் எண்ணமாகவே இறைவன் விளங்கி அவர்களை வழிநடத்துவது தான்.
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே உன் தொழுப்படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப்பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகதே நின்று களி தரு தேனே கடலமுதே கரும்பே விரும்புடியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
திருவாசகம் அச்சப்பத்து பதிகத்தின் பாடலில் (8.35.8) மணிவாசகர் பெருமானின் திருப்பாதங்கள் விண்ணவர் நண்ண மாட்டா திருப்பாதங்கள் என்று கூறுகின்றார். பொதுவாக அருளாளர்கள் பெருமானை வழிபடாத அறிவை, அறிவு என்று கருதுவதில்லை. மணிவாசகர் ஒரு படி மேலே சென்று, அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். அத்தகைய அறிவற்றவர்களுடன் பழகுவதால், பெருமானின் பெருமையை உணர்ந்து அவனை வழிபடும் நமது அறிவு கெடுவதற்கு வாய்ப்பினை அளிக்கலாகாது என்பது தான் காரணம். தறி=கட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்
தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்
வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா
செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க மாட்டா
அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே
திருப்பாண்டிப்பதிகத்தின் பாடலில் மணிவாசகர், திருமால் பிரமன் மற்றுமுள்ள தேவர்கள் நண்ணரியவன் பெருமான் என்று கூறுகின்றார். நமது வாழ்நாள் எப்போது முடிவடையும் என்பதை அறியமுடியாமல் வாழ்கின்ற வாழ்க்கை என்பதால், நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்திலேயே பெருமான் பால் அன்பு செலுத்தி, வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று அடிகளார் அறிவுரை கூறும் பாடல் இது. ஞாலம் உண்டான் என்று திருமாலின் ஆற்றல் குறிப்பிடப்பட்டு அத்தகைய ஆற்றல் உடைய்வனும் நெருங்க முடியாதவன் பெருமான் என்று கூறுகின்றார். பெருமானின் திருவருளை விடவும் உயர்ந்த செல்வம் வேறேதும் இல்லை என்பதால், பெருமானின் திருவருள் மூலப்பண்டாரம் என்று அழைக்கப்படுகின்றது. தனது அடியார்களுக்கு பெருமான், திருவருளை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு, தாமதம் ஏதும் செய்யாமல், நாம் முந்திக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றார்.
காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின் கருதரிய
ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்பிரான் தன் அடியவர்க்கு
மூலப்பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே
பெருமானை நெருங்குவது மிகவும் எளிதான காரியம் என்று திருமூலர் கூறுகின்றார். பெருமான் பால் அன்பு செலுத்தி, பூவும் நீரும் கொண்டு அவனை வழிபட்டால், அதனைக் காண்கின்ற இறைவன் நமக்கு அருள் புரிவான் என்பதை புரிந்து கொள்ளாத எண்ணற்ற பாவிகள் அந்த வாய்ப்பினை நழுவவிடுகின்றார்கள் என்று குறிப்பிடும் திருமூலரின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பூவும் நீரும் எளிதில் அனைவர்க்கும் கிடைக்கும் சாதனங்கள் என்பதால், மிகவும் எளிதான வழியாக கருதப்படுகின்றது.
புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு
அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறியாமல் நழுவுகின்றார்களே
இந்த பாடலில் சிறந்த தவம் செய்தவர்கள் ஆலவாய் திருக்கோயிலின் உள்ளே புகுந்து இறைவனை வழிபடுகின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். எது தவம் என்று தேவாரப் பாடல்கள் குறிப்பிடுவதை நாம் இங்கே சிந்திப்போம். புளமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (1.16.11), திருஞானசம்பந்தர் சந்தங்களுடன் பொருத்தி தேவாரப் பாடல்களை பாடியும் ஆடியும் பெருமானைக் கொண்டாடுவது தவம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அதாவது தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு காட்டினில் உறைந்து தங்களது புலன்களை அடக்கி ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து தவம் செய்வதால், பண்டைய நாட்களில் முனிவர்கள் பெற்ற பலனை நாம் எளிதில் அடையும் வழி தேவாரப் பதிகங்களை முறையாக ஓதுவது என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். கலியுகத்தில் பெருமானை நினைத்து அவனது திருநாமங்களை சொல்வதே பெரிய பலன்களைத் தேடித் தரும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். நால்வர் பெருமானார்களும் தங்களது பாடல்களில் எத்தகைய செயல்கள் தவத்திற்கு சமமாக இறைவனால் மதிக்கப்பட்டு நமக்கு பலன்களைத் தரும் என்று கூறுகின்றனர்.
பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை
அந்தண் புனல் வருகாவிரி ஆலந்துறையானைக்
கந்தம் மலி கமழ் காழியுள் கலி ஞானசம்பந்தன்
சந்தம் மலி பாடல் சொலி ஆடத் தவமாமே
திருவண்ணாமலை பதிகத்தின் கடைப் பாடலில் (1.10.11) அண்ணாமலை குறித்து ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகத்தினை முறையாக ஓதும் வல்லமை பெற்ற அடியார்களின் திருவடிகளைப் பேணிப் போற்றுதல் தவம் என்று சொல்லப் படுகின்றது. கதிரவனின் ஒளி உள்ளே புகாத வண்ணம், மரங்கள் நெருங்கியும் அடர்ந்தும் வளர்ந்துள்ள மலைச் சாரல் உடையது திருவண்ணாமலை என்று கூறுகின்றார். கொம்பு வாத்தியங்களிலிருந்து எழும் இனிய ஓசை கேட்கும் குயில்கள் தாங்களும் பதிலுக்கு கூவி இனிய ஒலி எழுப்பும் தலம் சீர்காழி தலம் என்று கூறுகின்றார்.
வெம்புந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல்
அம்புந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனைக்
கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே
நறையூர் சித்தீச்சரம் தலம் சென்று இறைவனை வழிபடுதலே சிறந்த தவம் என்று திருஞான சம்பந்தர் கூறும் பாடலை (1.29.10) நாம் இப்போது காண்போம்,.தவம் செய்வது எதற்காக, உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்திப் பேற்றினை அடைவதற்காகத் தானே.அத்தகைய முக்திப் பேறு எளிதாக கிடைக்கும் வேறு வழி இருப்பின் நாம் நமது உடலினை வருத்திக் கொண்டு தவம் செய்வதைத் தவிர்க்கலாம் அல்லவா.நீராடுவதை தவிர்ப்பதாலும் நுண்ணிய ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பதாலும் உடலில் மாசு உடையவர்களாக விளங்கும் சமணர்களின் பேச்சினை பொருட்படுத்தாமல் இருக்குமாறு அறிவுரை கூறும் திருஞானசம்பந்தர், வாழ்க்கையில் உய்வினை அடைய வேண்டும் என விரும்புவோர் நறையூர் சித்தீச்சரம் சென்று வழிபடவேண்டும் என்று கூறுகின்றார். அத்தகைய வழிபாடே, சிறந்த தவமாக பெருமானால் கருதப்பட்டு முக்தி நெறி வாய்க்கும் என்று கூறுகின்றார்.
மெய்யின் மாசர் விரிநுண் துகிலினார்
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சரமே தவமாமே
தூங்கானை மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.59.1) ஞானசம்பந்தர், தவம் செய்வதற்கு தகுந்த இடம் தேடி அலையும் மனிதர்களே, நீங்கள் தூங்கானைமாடம் (இன்றைய நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப் படுகின்றது) தலம் சென்று பெருமானை வழிபட்டு தவத்தின் பயனை அடைவீர்கள் என்று அறிவுரை கூறுகின்றார், பிணியாக கருதப் படுவதும் உயிருடன் ஓடுங்கி இருந்து தக்க சமயத்தில் வெளிப்பட்டு துன்பங்களை விளைவிக்கும் வினைகளும், இவ்வாறு வினைகளை அனுபவிப்பதற்கு காரணமான பிறவியும், இறப்பு மற்றும் இறப்பினுக்கு முன்னே அனுபவிக்க வேண்டிய பல துன்பங்களையும் ஒழித்து விட்டு, பிறப்பிறப்பு இல்லாத பேரின்பம் அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் செய்வதற்கு உரிய இடத்தினைத் தேடி நிற்கும் மனிதர்களே, நீங்கள் அனைவரும் பெருமானின் திருவடி நிழலில் தங்கும் வாய்ப்பினைப் பெற்று அவனது கருணைக்கு ஆளாக விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய ஒரு இடத்தினை நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன், பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலத்தினில் உள்ள தூங்கானைமாடம் திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு நீங்கள் விரும்பிய தன்மையை பெறுவீர்களாக என்று இந்த பாடலில் கூறுகின்றார்,
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்தாய வாழ்க்கை ஒழியத் தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழற்கீழ் ஆளாம் வண்ணம்
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழுமனைகள் தோறும் மறையின் ஒலி
தொடங்கும் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
பண்டைய நாட்களில் முனிவர்கள் தவம் புரிந்தது எதற்காக, நிலவுலக வாழ்க்கையைக் கடந்து என்றும் அழியாத முக்தி உலகத்தினை பெரும் நோக்கத்துடன் தானே, அவர்கள் தவம் புரிந்தனர். உயிர்க்கு சலிப்பினை ஏற்படுத்தும் பிறப்பு, இறப்பு மீண்டும் இறப்பதற்காக பிறப்பு என்ற தன்மையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தூங்கானை மாடம் சென்று பெருமானை தொழுவீர்கள் என்று, இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார். தவம் செய்யும் முறையினை அறியாமல் இருப்பதால் உங்களுக்கு இருக்கும் குறையினை நீக்கும் வழியினை நான் சொல்கின்றேன் கேட்பீர்களாக என்று தூங்கானை மாடம் சென்று இறைவனை வழிபட்டு பயன் அடையுமாறு வழிகாட்டுகின்றார். இதே அறிவுரை இந்த பதிகத்தின் நான்காவது, ஏழாவது, எட்டாவது ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களிலும் கூறப்படுகின்றது
சாநாளும் வாழ்நாளும் தோற்றம் இவை சலிப்பாய வாழ்க்கை ஒழியத் தவம்
ஆமாறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவில்லை ஆனேறு உடைப்
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன்சடையினான் உறையும்
தூ மாண் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடல் (1.102.8) ஒன்றினில் பெருமானின் புகழினை குறிப்பிட்டு அவனது திருநாமங்களை சொல்லித் தொழும் தன்மை தவத்திற்கு ஒப்பாகும் என்று கூறுகின்றார். பாடலின் முதல் இரண்டு அடிகளில், சீர்காழி நகரினில் கடல் வாணிபம் செழித்து வளர்ந்திருந்த தன்மையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இலங்கை அரசன் இராவணனை முதலில் வருத்தி, பின்னர் அவனது நிலைக்கு இரக்கம் கொண்டு அருள் செய்த மன்னவனே என்றும் மிகவும் வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் தாங்கிய வல்லமை உடைய அரசே என்றும் பெருமானைப் புகழ்ந்து பணிவதே தவம் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார், உலம்=வலிய; ஆர்கலி=ஆரவாரம் செய்யும் கடல்; ஓதம்=அலை;
உலம் கொள் சங்கத்தார் கலி ஓதத்து உதையுண்டு
கலங்கள் வந்து கார் வயலேறும் கலிக்காழி
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த
சலம் கொள் சென்னி மன்னா என்னத் தவமாமே
தேவாரப் பதிகங்களை பலமுறை மனதினில் எண்ணிப் பெருமானை புகழ்ந்து வணங்குதல் தவம் என்று பருப்பதம் தலத்தின் பாடலில் (1.118.11)திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். பெருமானின் உருவத்தினை நாம் மனதினில் கற்பனை செய்து தியானிக்கும் வண்ணம், பெருமானின் திருவுருவச் சிறப்புகள் அருளாளர்களால் சொல்லப் படுகின்றன.
வெண் செநெல் விளை கழனி விழவொலி கழுமலத்தான்
பண் செலப் பல பாடலிசை முரல் பருப்பதத்தை
நன்சொலினால் பரவு ஞானசம்பந்தன் நல்ல
ஒண் சொலின் இவை மாலை உருவெணத் தவமாமே
களர் எனப்படும் தலத்தின் மீது அருளிய பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள் தவம் செய்தவர்களாக கருதப் படுவார்கள் என்று அந்த பதிகத்தின் கடைப் பாடலில் (2.51.11) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். செந்து என்பது தமிழ் பண் வகைகளில் ஒன்று. அந்த பண் போன்று இனிய மொழியினை உடைய மகளிர் திருக்களர் தலத்தில் வாழ்ந்து வந்ததாக திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அந்தி வானம் போன்று சிவந்த மேனி உடையவனும் தேவர்களின் தலைவனாக விளங்குபவனும் ஆகிய பெருமானை ஞானசம்பந்தன் அருளிய பத்து பாடல்களையும் முறையாக பாடுதல் தவத்திற்கு ஒப்பான செயலாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
இந்து வந்தெழு மாட வீதி எழில் கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள்
அந்தி அன்னதோர் மேனியானை அமரர் தம் பெருமானை ஞானசம்
பந்தன் சொல்லிவை பத்தும் பாடத் தவமாமே
கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.105.10), பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குதல் தவம் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் சிவபெருமானை வணங்கிப் போற்றுவதை விரும்பாத பலர் நம்மை திசை திருப்ப முயற்சி செய்வதை நாம் இன்றும் காண்கின்றோம்.அன்றும் இந்த நிலை இருந்ததை தேவாரப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. குறிப்பாக சமணர்களும் புத்தர்களும், இந்து மதத்தின் பெருமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்த பல செயல்களை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். அத்தகையோரின் பேச்சினில் மயங்கி அறிவிழந்து தமது நிலையிலிருந்து தடுமாறாமல் தொடர்ந்து சிவபெருமானின் திருவடிகளை போற்றி வழிபடுதல் சிறந்த தவம் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சீறுதல்=அழித்தல்; முடி அழிக்கப்பட்டு மழித்த தலையை உடைய சமணர்கள்; கொடியன்=கொடியினை உடையவன்;வீறு=பெருமை; ஏதம்=குற்றம்; பேறு=ஆன்மாக்கள் அடையவேண்டிய சிவானந்தப் பேறு.
சீறுலாவிய தலையினர் நிலையிலா அமணர்கள் சீவரார்
வீறிலாத வெஞ்சொல் பல விரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறுலாவிய கொடியனை ஏதமில் பெருந்திருக்கோயில் மன்னு
பேறுலாவிய பெருமையன் திருவடி பேணுமின் தவமாமே
காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.29.8) நமது தலையினைத் தாழ்த்தி, உணர்வு பூர்வமாக, பெருமானின் பெருமையையும் நமது சிறுமையையும் நினைத்து, ஒன்றிய மனத்துடன் இறைவனை வணங்குதல் தவம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சிலை=வில்; கலை= மலை;புறவு=முல்லை நிலம்; ஒவ்வொரு பிரளயத்திலும் கயிலாய மலை, தான் அழியாமல் இருப்பது மட்டுமன்றி மேலும் சற்று வளரும் தன்மை உடையது என்றும் கூறுவார்கள். அதனை உணர்த்தும் பொருட்டு சிறப்புடைய கயிலாய மலை என்று ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார் போலும்.
சிலை தனால் முப்புரம் செற்றவன் சீரினால்
மலை தனால் வல்லரக்கன் வலி வாட்டினான்
கலை தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி
தலை தனால் வணங்கிடத் தவமது ஆகுமே
கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில் (3.38) தலத்து அடியார்களிடம் சில வினாக்களை தொடுத்து, பெருமானின் தன்மைகளை தனக்கு விளக்குமாறு திருஞானசம்பந்தர் கேட்கின்றார். இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் தலத்து அடியார்களை, உயர்வாய தவம் பேணும் அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார். மிகு மங்கையாள்=தவத்தினில் மேம்பட்ட பார்வதி தேவி; உமையன்னைக்கும் கங்கைக்கும் உள்ள வேறுபாடு மிகவும் அழகாக இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமானையே மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தவம் செய்து தனது அன்பினால் பெருமானைக் கவர்ந்து அவனது உடலில் இடம் பெற்றவள் உமையன்னை. கங்கையின் நிலையோ வேறு; அவளது செருக்கினை அடக்கும் பொருட்டு, தனது சடையினில் கங்கை நதியினை சிறை வைக்கின்றார் பெருமான்.
உள்ளவாறு எனக்கு உரை செய்ம்மின் உயர்வாய மாதவம் பேணுவீர்
கள்ளவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை காதலான்
பிள்ளை வான்பிறை செஞ்சடைம் மிசை வைத்ததும் பெரு நீரொலி
வெள்ளம் தாங்கியது என் கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே
மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.48.4) மழபாடி மன்னனைத் தங்களது தலையினைத் தாழ்த்தி தொழும் அடியார்கள் தவப்பலனை பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வேதநெறி மற்றும் சிவநெறியை பின்பற்றும் அடியார்களுடன் சேராத தன்மையை உடைய திரிபுரத்து அரக்கர்களை மருவார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உலகில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் கலை நயத்துடன் திகழ்வதும், அந்த பொருட்களுடன் இறைவன் இணைந்து இருப்பதையும் கலையினான் என்ற சொல் மூலம் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
கலையினான் மறையான் கதி ஆகிய
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான் சேர் திருமழபாடியைத்
தலையினால் வணங்கத் தவம் ஆகுமே
பெருமானின் திருவடிகளைத் தங்களது மனதினில் தியானிப்பவர்களின் செயல் தவமாக மதிக்கப்பட்டு, அவர்கள் தவத்தின் பயனை அடைவார்கள் என்று சீர்காழி (வெங்குரு என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்து பாடல் ஒன்றினில் (3.94.5) ஞானசம்பந்தரால் உணர்த்தப் படுகின்றது. மிக்கவர்=அன்பின் மிக்கவர்; அக்கு=எலும்பு; தவம் செய்யப்படுவது வீடுபேறு அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான். பெருமானின் திருவடிகளை தியானித்தால் வீடுபேற்றினை அடையலாம் என்பதால், பெருமானின் திருவடி வழிபாடு தவமாக மதிக்கப் படுகின்றது.
மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவு அசைத்தீரே
அக்கினொடு அரவு அசைத்தீர் உமது அடியிணை
தக்கவர் உறுவது தவமே
சிறுகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.97.6) பெருமானை வாழ்த்தும் அடியார்கள் தவப்பேறு உடையவர்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அவர்கள் எதனைக் கண்டும் அச்சம் கொள்ளாதவர்களாகவும் பல நலன்கள் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.
செங்கயல் புனல் அணி சிறுகுடி
மங்கையை இடம் உடையீரே
மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார்
சங்கை அது இலர் நலர் தவமே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.110.10) திருஞானசம்பந்தர், பெருமானின் திருநாமத்தைக் கற்றுக் கொள்ளுதல் தவம் என்று கூறுகின்றார். ஆழி=சக்கரப்படை; அங்கை= அழகிய கை; இந்த பாடலில் பெருமானின் திருநாமங்களைக் கற்றல் தவமாக திருஞான சம்பந்தரால் கருதப் படுகின்றது. இந்த கருத்தை பின்பற்றியே பின்னாளில் அபிராமிபட்டரும் கற்பது உன்னாமம் என்று பாடினார் போலும்
ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவொணாததோர் வடிவு கொண்டவன்
காழி மாநகரக் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே
ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.120.6) அமைச்சர் குலச்சிறையாரை தவம் புரிந்தவர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.அமைச்சராக பணி புரிந்தவர் எத்தகைய தவத்தினை செய்திருக்க முடியும். பெருமானின் அடியர்களைக் கண்டபோது, அவர்களது நாடு, குலம், கோத்திரம்,குணம் ஆகியவற்றை ஆராயாது, அனைவரையும் வழிபட்ட செய்கையே இங்கே தவம் என்று குறிப்பிடப்படுகின்றது.
நலமிலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற
குலமிலராக குலமதுண்டாகத் தவம் பணி குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல் ஆலவாயாவதும் இதுவே
பெருமானை முறையாகத் தொழுவதே தவம் என்று திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.27.8) அப்பர் பிரான் கூறுகின்றார்.முன்னையாறு=முன்+நையாறு, நையாறு=துன்ப நெறி; துன்பம் அளிக்கும் பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு, அதினின்று விடுதலை தேடும் மனிதர்கள்;பேதைகாள்=அறிவிலிகள் உயிர்கள்; பின்னையாறு=பின்+நையாறு; மன்னையாறு= மன்+ஐயாறு, மன்=நிலை பெற்ற; ஆறு=முறை, பெரியோர்கள் வகுத்த வழிமுறை; பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு அந்த நிலை தரும் துன்பங்களில் உழன்று எத்துணை முயற்சி செய்தாலும் வெளியே வர முடியாமல் தவிக்கும் மாந்தர்களே, நான் உங்களுக்கு தீர்வினை சொல்கின்றேன் கேட்பீர்களாக; சிவபெருமானை நோக்கி, பெருமானே இந்த துன்பச் சுழலிலிருந்து என்னை பிரித்து ஆட்கொள்வாயாக என்று நீங்கள் வேண்டுவீர்களாக. நிலையான திருவையாறு தலத்தில் உறைபவனும், பெரிய தவத்தோனாகவும் திகழ்கின்ற பெருமான் தன்னை முறையாக அடியார்கள் தொழுவதை தவமாக ஏற்றுக்கொண்டு அருள் புரிகின்றான் என்று அப்பர் பிரான் உணர்த்துவதாக அமைந்த பாடல்.
முன்னையாறு முயன்று எழுவீர் எலாம்
பின்னையாறு பிரி எனும் பேதைகாள்
மன்னையாறு மருவிய மாதவன்
தன்னையாறு தொழத் தவமாகுமே
கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், நமது தலையினைத் தாழ்த்தி இறைவனை வணங்குவதே தவம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நிலையினார் வரை= ஊழிக்காலத்திலும் அழியாது நிற்கும் கயிலாய மலை; விறல்=வலிமை;
நிலையினர் வரை நின்று எடுத்தான் தனை
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான்
குலையினார் பொழில் கொண்டீச்சுரவனைத்
தலையினால் வணங்கத் தவமாகுமே
மருகல் பெருமானை வணங்குவதே தவம் என்று திருமருகல் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.88.1) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடிகளை வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகும் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இதன் மூலம் இறைவனின் திருவடிகளை வாழ்த்தி வணங்குவதே தவம் என்று நமக்கு உணர்த்துகின்றார்,
பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே
சிவனடியார்களின் வேடம் கண்டு அவர்களை அடையாளம் ;புரிந்து கொண்டு மகிழ்வுடன், அவர்களைத் தலைவராக மதித்து, அவர்களது திருப்பாதங்களை விளக்கி பின்னர் பலவிதமாக தொண்டுகள் செய்து, அவர்களது கால்களைக் கழுவிய நீரினைத் தலையினில் தெளித்துக் கொள்ளுதல் பெரிய தவத்திற்கு ஒப்பானது என்று திருமூலர் கூறுகின்றார். இந்த செயலை செய்யும் பழக்கத்தினை ஒருவரது இளைய வயதினிலே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றார்.
அறியாப் பருவத்து அரன் அடியாரைக்
குறியால் அறிந்து இன்பம் கொண்டு அது அடிமை
குறியார் சடை முடி கூட்டி நடப்பார்
மறியார் புனல் மூழ்க மாதவமாமே
மேற்கண்ட பாடல்கள், மனம் ஒன்றி உணர்வு பூர்வமாக பெருமானைத் தலை தாழ்த்தி வணங்குதலும், இறைவன் குடிகொண்டிருக்கும் திருத்தலங்கள் சென்று அவனை வழிபடுவதும், பெருமானின் திருநாமங்களையும் அவனது பெருமையையும் சொல்லி அவனை வழிபடுவதும், தேவாரப் பாடல்களை பாடும் அடியார்களின் திருவடிகளைப் பேணிப் போற்றுவதும், திருமுறை பாடல்கள் மூலம் பெருமானின் திருவுருவத் தன்மையை அறிந்து கொண்டு அவற்றை மனதினில் நிலைநிறுத்தி தியானம் செய்து வழிபடுவதும், தேவாரப் பாடல்களை பொருள் உணர்ந்து முறையான பண்ணுடன் இசைத்து மனம் ஒன்றி பாடி இறைவனை வழிபடுவதும், பெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவதும், பெருமானின் அடையர்களது திருப்பதங்களை கழுவிய நீரினை புனித நீராக கருதி தங்களது தலையில் தெளித்துக் கொண்டு போற்றுவதும் தவத்திற்கு சமமான செயல்கள் என்று அருளாளர்கள் கூறியுள்ளனர். இந்த செயல்கள் அனைத்தும் மிகவும் எளிய செயல்கள் என்பதால், அவற்றை பின்பற்றி நாமும் பெருமானின் அருளின் துணை கொண்டு தவப்பயனை அடைவோமாக.
பொழிப்புரை:
குளிர்ச்சியும் நறுமணமும் நிறைந்த ஊமத்தை மலர்கள், வில்வ இலைகள், வெணமை நிறத்தில் காணப்படும் தலைமாலையும் தனது சடையில் தாங்கியவராக,அவனது அருள் பெற்றவரன்றி வேறு எவரும் அருகில் நெருங்க முடியாதவரும் நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. சென்ற பிறவிகளில் புண்ணியம் செய்தோரும் சிறந்த தவத்தை புரிந்து பெருமானைப் புகழ்ந்து பாடப்படும் தன்மை உடையதும், அழகிய நகைகள் அணிந்த மகளிர் அண்ண்லின் பெருமையை குறிப்பிடும் பாடலகளை இசையமைத்துப் பாடுவதும் தன்மை உடையதும், கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில், பெருமானே, நீவிர் உறைகின்றீர்.
பாடல் 4:
பூவினில் வாசம் புனலில் பொற்புப் புதுவிரைச் சாந்தினில் நாற்றத்தோடு
நாவினில் பாடல் நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
விளக்கம்:
இந்த பாடலில் பூவினில் வாசமாக இருப்பவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நறுமலரிலிந்து எழுகின்ற நாற்றம் பரந்தும் விரிந்தும் இருப்பினும் அதனை முகர்ந்து அனுபவிகலாமே தவிர, அது நுண்பொருளாக இருப்பதால், அதனைக் கண்ணால் காண்பதோ பற்றிக் கொள்வதோ முடியாது.எங்கோ ஓரிடத்தில் மலர்ந்திருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் நறுமணம் கமழ்வதை நாம் உணர்கின்றோம். மேலும் பூவின் எந்தப் பகுதியிலிருந்து மணம் வீசுகின்றது என்பதையும் நம்மால் சொல்ல முடியாது. அது போல எங்கும் பரந்திருக்கும் இறைவனை, எதிலும் படிந்திருக்கும் இறைவனை, நாம் கண்ணால் பார்த்து உணர முடியாது, இந்த இடத்தில் தான் இறைவன் இருக்கின்றான் என்று திண்ணமாக சொல்லவும் முடியாது.இறைவன் இருப்பதை ஊகித்து, மனதினில் தியானித்து மட்டுமே அவனை நாம் பற்றிக் கொள்ள முடியும். இறைவனின் இந்த தன்மை தான் பூவினில் நாற்றம் என்று குறிப்பிடுகின்றனர். திருவண்டப்பகுதியில், பூவினில் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை என்று மணிவாசக அடிகளார் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. நறுமணத்தை பரப்பும் மலர் போன்று பெருமானும் தனது அருளை பரப்புகின்றார்.
அரும்பாக இருக்கும் போது பூவினில் மறைந்துள்ள நாற்றத்தை நம்மால் உணரவும் முடிவதில்லை. பூவாக விரியும் போது தான், அதன் நாற்றத்தை நம்மால் உணரமுடிகின்றது. காய்ந்து போன பூவிலும் அதன் வாசனை வெளிப்படுவதில்லை. மேலும் அந்த நாற்றத்தை உண்ர்வதற்கு நமது மூக்கு சரியாக செயல்படவேண்டும். அது போன்று நமது மனதினில் அன்பு மலர, அந்த அன்பினைக் கொண்டு நாம் இறைவனை உணர முயற்சி செய்தால் மட்டுமே இறைவனை உணர முடியும். இந்த தன்மையை அப்பர் பிரான் மிகவும் அழகாக, மாசில் வீணையும் பதிகத்தின் கடைப் பாடலில் (5.90.10) உணர்த்துகின்றார்.விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. ஆனால் பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது.சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்ட பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது.மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். தகுந்த முறையில் அவனை அறிந்துகொண்டு அவனை வழிபடவேண்டும் என்று இங்கே கூறுகின்றார். அரணிக் கட்டை என்பது பழங்காலத்தில் தீ மூட்டுவதற்காக பயன்பட்டது. ஒரு அரணிக் கட்டையுடன் மற்றொன்றைத் தேய்த்து தீ எழுப்புதலை கடைதல் என்று கூறுவார்கள். சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் மறைந்து நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான்.
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே
அதிசயப்பத்து பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (8.26.9) மணிவாசக அடிகளார், நறுமலர் எழுதரு நாற்றம் போல் இறைவன் இருப்பதாக குறிப்பிடுகின்றார்.மலரின் கண் உள்ள நாற்றம் எங்கும் நிறைந்துள்ளது என்றாலும், மலரின் மணத்தை மிகவும் அதிகமாக நுகர, நாம் அந்த நறுமணத்தின் மூலமாகிய மலரின் அருகே செல்லவேண்டும். அதே போன்று பரம்பொருளும் எங்கும் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தாலும், அப்பொருளுடன் இணைந்து அதனை அனுபவிக்க வேண்டும் என்றால், அதன் மூலத்திற்கே செல்ல வேண்டும். அனைத்து உயிர்களுடனும் இணைந்து இருக்கும் பெருமான், மறைந்து நின்று கொண்டு, தன்னை வெளிக்காட்டமல் இருந்து கொண்டிருக்கின்றான். அவ்வாறு அவன் இருப்பதை நாம் முதலில் உணரவேண்டும், அவ்வாறு உணர்ந்த பின்னர், நமது மனதினுள்ளே இருக்கும் பெருமானை, அப்பர் பிரான் தன்னுளே தேடிக் கண்டு கொண்டது போன்று, நாமும் தேடிக் காணவேண்டும். ஆனால் நாம் அவ்வாறு செயல்படுவதில்லை. அவ்வாறு நாம் இருக்கும் பரிதாப நிலையைத் தான் அடிகளார் இந்த பாடலில் உணர்த்துகின்றார். நிலையிலா பரம்பொருள் என்று, அருவம் அருவுருவம் மற்றும் உருவம் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து ஒரு குறிப்பிட்ட நிலையில் இல்லாத பரம்பொருள் குறிப்பிடப் படுகின்றது. அந்த பொருளைத் தான், உணர வேண்டும் என்பதால், உயிர் உணரத்தக்க பொருளாக இருக்கும் நிலையை உறுபொருள் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். மலரின் உள்ளே மறைந்து நிற்கும் நறுமணம் போன்று நமது உடலின் உள்ளே இருக்கும் மனதின் கண் மறைந்து உறைகின்ற பெருமானை உணராமல், அவரை உணர்ந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடாமல், நமக்கு கிடைத்துள்ள இந்த உடலே மாபெரும் சிறப்பு உடையது என்று கருதி, அந்த உடலை பயன்படுத்திக் கொண்டு நிலையற்ற சிற்றின்பத்தில் ஆழ்ந்து காலத்தை வீணாக கழிக்கும் பித்தர்களாக நாம் செயல்படுகின்றோம். அவ்வாறு இருந்த தன்னையும் இறைவன் ஆண்டு கொண்டது அதிசயம் என்று கூறுகின்றார்.
உற்ற யாக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல்
பற்றல் ஆவாதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே
பூவினுக்கு உள்ளே இருக்கும் வாசனை அந்த பூ மலர்வதற்கு முன்னம் வெளிப்படுவதில்லை. தக்க தருணத்தில் பூ மலரும்போது அதுவரையில் வெளிபடாது இருந்த நறுமணம் வெளிப்படுகின்றது. அது போன்று உயிர் பக்குவப்படுவதற்கு முன்னர், அந்த உயிரின் அறிவாக இறைவன் இருந்தாலும், அதனை உயிர் உணருவதில்லை. உயிர் சிறிது சிறிதாக அன்பவத்தால் பக்குவம் அடைய, ஒரு தருணத்தில் அந்த உயிர் சிவம் தன்னுள் இருப்பதை உணர்ந்து கொள்கின்றது. இந்த தன்மையை திருமூலர் சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது என்று குறிப்பிடுகின்றார். அப்போது அவர்களது உடலும் மனமும் சிவமயமாக விளங்கும். புனுகுப் பூனையின் மதனீர் நிறைந்த மூங்கில் குழலும் நறுமணம் வீசுவது போன்று, சிவத்தை உணரும் உயிர் பொருந்தியுள்ள உடலும் சிவமணத்துடன் விளங்கும் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். நாவி=புனுகு பூனை; நடுதறி=பூனை கூடும் மூங்கில் குழாய்; ஓவியம் போல உணர வல்லார் என்று மூச்சினை அடக்கி ஓவியம் போன்று அசையாது இருக்கும் யோகிகளை குறிப்பிடுகின்றார்.
பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல்
சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர வல்லார்கட்கு
நாவி அணைந்த நடுதறி ஆமே
பொற்பு=தனித்தன்மை; இங்கே நீரின் தனித்தன்மையாகிய தண்மை என்றும் இன்சுவை என்றும் கொள்ள வேண்டும். இந்த பாடலில் நீரினில் தணமையாக இருப்பது இறைவன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பஞ்ச பூதங்களாகவும் அவற்றின் தன்மையாக இறைவன் இருக்கும் தன்மை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது.
திருவண்டப்பகுதி அகவலில் மணிவாசக அடிகளார் எவ்வாறு இறைவன் ஐந்து பூதங்களுடன் இணைந்து இருக்கின்றார் என்று சொல்கின்றார். பொய்தீர் வான் என்று குறிப்பிடுகின்றார். பிரளய காலத்தில் நிலம் நீரில் ஒடுங்க, நீர் தீயினில் ஒடுங்க, தீ காற்றினில் ஒடுங்க, காற்று ஆகாயம் ஆகிய வெட்ட வெளியில் ஒடுங்குகின்றது. பிரளயம் முடிந்த பின்னர், இறைவன் உலகினை தோற்றுவிக்க திருவுள்ளம் கொள்ளும் போது ஆகாயத்திலிருந்து காற்று வெளிப்பட,காற்றிலிருந்து தீ வெளிப்படுகின்றது; இவ்வாறு வெளிப்பட்ட தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் வெளிப்படுகின்றன. இவ்வாறு மற்ற பூதங்களையும் தன்னில் அடக்கிக் கொள்ளும் வானம் மற்ற பூதஙகள் ஒடுங்கிய பின்னரும், மற்ற பூதங்கள் நிலையான நிலையிலிருந்து பொய்யாக மாறிய பின்னரும்,அழியாமல் இருப்பதால் பொய்தீர் வானம் என்று குறிப்பிடுகின்றார். மேலும் இவ்வாறு மற்ற பூதஙகளைத் தன்னில் கலந்து கொள்ளும் தன்மையை, கலப்பு என்ற சொல் மூலம் உணர்த்துகின்றார். கால்=காற்று: காற்று புகாத இடமே இல்லை என்று சொல்லும் வண்ணம் காற்று அனைத்து இடங்களிலும் புகுவதால் மேதகு காற்று என்று கூறுகின்றார். மேலும் உடலில் உள்ள காற்று பிரிந்தால், உடலினை விட்டு உயிர் பிரிந்து விட்டது என்று கருதுகின்றோம். எனவே உயிர் தங்குகின்ற உடம்பினை நிலைப்படுத்தி இயங்க வைப்பதால், காற்று உடலுக்கு கிளர்ச்சியை அளித்து இயங்க வைக்கின்றது. இந்த தன்மை மேதகு காலின் ஊக்கம் என்று சொல்லபபடுகின்றது. நிழல்=பிம்பம்; நீரினில் மற்ற பொருட்களின் பிம்பம், நிழல் தோன்றும் தன்மை நிழல்திகழ் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. மேலும் ஆகாயம், காற்று மற்றும் தீ ஆகிய மூன்று பூதங்களுக்கு இல்லாத சுவை தண்ணீருக்கு உள்ளது. மற்ற எந்த பூதஙகளுக்கு இல்லாத திண்மை எனப்படும் குணம் நிலத்திற்கு உண்டு. இந்த தன்மையால் தான், நிலம் அனைத்தையும் தாங்குகின்றது. அகழ்வாரையும் தாங்கும் நிலம் என்று வள்ளுவர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. இவ்வாறு அந்தந்த பூதங்களுக்கு உரிய விசேஷ குணமாக இருப்பது இறைவன் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது.
தீயின் வெம்மை செய்தோன் பொய் தீர்
வானில் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ்
நீரின் இன்சுவை னிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணின் திண்மை வைத்தோன்
புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.54.5) அப்பர் பிரான், ஐந்து பூதங்களின் தன்மையையும் அந்த தன்மையாக இறைவன் இருப்பதையும் குறிப்பிடுகின்றார். ஐம்பூதங்களின் தன்மை விளக்கப்படும் பாடல். பரந்த வெளியிலிருந்து நாதம் பிறந்தமையால், ஆகாயத்தின் குணம் ஒலி என்று கூறுவார்கள். வீசும் காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு (ஊறு) ஆகிய இரண்டு பண்புகள் இருப்பதை நாம் உணர்கின்றோம். தீ, ஒலி கொண்டு உணரப்படுவதாகவும், தொடு உணர்வினால் அறியப்படுவதாகவும் விளங்குவதுடன், ஒளியுடனும் திகழ்கின்றது. நீருக்கு, ஒலி, ஊறு, ஒளி, மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன. நிலத்திற்கு, நீரின் நான்கு குணங்களுடன் வாசனை ஆகிய ஐந்தாவது குணமும் உள்ளது. மேற்கண்ட குணங்களாக இறைவனே இந்த ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். கால்=காற்று: தாழ் புனல்=பள்ளம் நோக்கி பாய்ந்து ஓடும் தன்மை உடைய நீர்; எஞ்சா=அழியாத; தஞ்சம்=புகலிடமாக விளங்கும் தன்மை; வான்பவளம்=சிறந்த பவளம்;
மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும் கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த் தரணிதலத்து அஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான் பவளக் கொழுந்தை முத்தை வளரொளியை வயிரத்தை மாசு ஒன்றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
இதே கருத்து கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.60) பாடலிலும் கூறப்படுகின்றது. ஒளிர்கின்ற நெருப்பு என்பதைக் குறிக்க வயங்கு எரி என்று கூறப்பட்டுள்ளது வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை நம்மால் அறிய முடியாது அல்லவா. அத்தகைய விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமான திருநாமங்களை உடையவன் பெருமான் என்பதை உணர்த்தும் முகமாக தாரகைகள் தம்மின் மிக்க எண் என்று இறைவனை அப்பர் பிரான் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார்
மண்ணதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை மாருதத்து இரண்டை
விண்ணதனில் ஒன்றை விரிகதிரை தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக் காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனை கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
இந்த கருத்தையே மணிவாசகர், போற்றித் திருவகவலில் கூறுகின்றார்.
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அயிலுறு படையினர் எனத் தொடங்கும் கழுமல வளநகரின் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது இயற்றிய பதிகத்தின் பாடலில் (1.79.3)எண் அலங்காரமாக ஒன்று முதல் பத்து எண்களை கையாண்டுள்ள பாடலில், திருஞானசம்பந்தர் இதே கருத்தை தெரிவிப்பதை காணலாம். இந்த பாடலில் வரும் முதல் ஏழு எண்களுக்கான விளக்கம் பல பாடல்களில் கூறப்பட்டுள்ளன. எட்டிரும் கலை என்பதற்கு எட்டு அரிய கலைகள் என்று விளக்கம் அளித்து அந்த எட்டு கலைகளில் ஒன்றாகிய இசை என்று சிலர் கூறுகின்றனர். பண்ணிடை ஒன்பது என்று பண்களுக்கு உரிய அடிப்படை குணங்கள் ஒன்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.
எண்ணிடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரியிடை மூன்றினர் நான்மறையாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டிரும் கலை சேர்
பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட
கண்ணிடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தின் ஒரு பாடலில் (4.64.6) அப்பர் பிரான் ஐந்து பூதங்களிலும் அவ்வவற்றின் பண்பாக இறைவன் கலந்திருக்கும் நிலையினை குறிப்பிடுகின்றார். இவ்வாறு ஐந்து குணங்களாக மேற்கண்ட பூதங்களில் விளங்குபவன் இறைவன் தான் என்பதை, பரந்தாய்,நிகழ்ந்தாய், திகழ்ந்தாய், மகிழ்ந்தாய், விளைந்தாய் என்று சொற்கள் மூலம் மணிவாசகர் போற்றித் திருவகவலில் விளக்கும் செய்தியை அப்பர் பெருமான் இந்த பாடலில் கூறுகின்றார். இறைவனே அந்த பண்புகளாக இருக்கும் காரணத்தால், இருவர், ஐவர், நால்வர், மூவர், ஒருவர் என்று பன்மை விகுதிகள் கொடுத்துள்ளார். இவ்வாறு எங்கும் பரந்திருக்கும் பெருமான் வீழிமிழலை தலத்தில் உறைகின்றார் என்று உணர்த்தி, அவரை நாம் வழிபடவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தும் பாடல். அரையர்=பாதியாக கொண்டுள்ளவர்; இறைவன் நமது எண்ணங்களுடன் இணைந்து இருக்கும் நிலையும் அதே சமயத்தில் நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு சொற்களுக்கும் எண்ணங்களுக்கும் எட்டாதவராக இருக்கும் நிலையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. நாம் இங்கே சிந்திக்கின்ற பாடலில் திருஞானசம்பந்தர் இவ்வாறு ஐந்து பூதங்களுடன் இணைந்து நின்று அவற்றை இயக்கும் இறைவனை, அவரின் தனித்தன்மை குறித்து விகிர்தன் என்று குறிப்பிடுவது போன்ற குறிப்பு, இந்த வீழிமிழலை பதிகத்தின் பாடலிலும் காணப்படுகின்றது.
எண்ணகத்தில்லை அல்லர் உளரல்லர் இமவான் பெற்ற
பெண்ணகத்து அரையர் காற்றில் பெருவலி இருவராகி
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீயதனில் மூவர்
விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
பொழிப்புரை:
பூவினில் நறுமணமாகவும் நீரினில் அதன் தனித்தன்மையாகிய குளிர்ச்சியாகவும், புதிய சந்தனத்தில் வீசும் நறுமணமாகவும் நாவினில் கலந்து ஒலிக்கும் இன்னிசைப் பாடல்களாகவும் கலந்து விளங்குபவனும் நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. தேவர்கள் தானவர்கள் என்று அழைக்கப்படும் அசுரர்கள் சித்தர்கள் வித்தியாதரர்கள் ஆகியோர் நிறைந்த கூட்டத்தோடு கலந்து சிறந்து விளங்குவோரும் பசுவிடமிருந்து கிடைக்கப்பெறும் பால் தயிர் நெய் கோமியம் பசுஞ்சாணம் ஆகிய பொருட்களைக் கொண்டு நீராட்டப்பட்டு வழிபடப்படும் பெருமானாகிய நீர் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில், உறைகின்றீர்.
பாடல் 5:
செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும்
நம்பும் பெருமை நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலிகடல் சூழ்ந்த உலகத்தோரும்
அம்புத நால்களால் நீடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
விளக்கம்:
வாசிகை=திருவாசி போன்று வட்டமாக அமைந்த மாலை; திருந்து புகை=நறுமணம் வீசும் புகை; அவி=நிவேதனப்பொருள்; அம்புதம்=மேகங்கள்;நால்கள்=நான்கு; இந்த பதிகத்தின் பாடல்களில் மதுரை நகரம் கூடல் ஆலவாய் ஆகிய இரண்டு பெயர்களை குறிப்பிட்டு உணர்த்தப்படுகின்றது. மதுரை நகருக்கு நான்மாடக்கூடல் என்ற பெயரும் உள்ளது. மேகங்கள் மாடங்களைப் போலக் கவிந்து மதுரை நகரைக் காப்பாற்றியதால் நான்மாடக்கூடல் என்ற பெயர் வந்தது. இந்த பெயரே சுருக்கமாக கூடல் என்று இங்கே சொல்லப் பட்டுள்ளது. ஒரு சித்திரைத் திங்களில் சித்திரைத் திருநாளில் அபிடேக பாண்டியன் சோமசுந்தரக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். அதே சமயத்தில் தனது வழக்கமான பூஜையை செய்வதற்கு வந்த இந்திரன், பாண்டிய மன்னனின் வழிபாடு முடியும் வரையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனை தன்க்கு நேர்ந்த அவமானமாக இந்திரன் கருதியதால்,அவன் முகம் வாட்டமடைந்து இருந்தான். அப்போது ஆங்கே வந்த வருணன் இந்திரனின் வருத்ததின் காரணத்தை கேட்டறிந்த பின்னர், மதுரை தலத்தின் விசேஷம் யாது என்று கேட்டான். அதற்கு இந்திரன் முன்னொரு காலத்தில் தனக்கு ஏற்பட்ட பழியையும் வெள்ளை யானைக்கு ஏற்பட்ட இழிவையும் நீக்கியவன் மதுரை இறைவன் என்று பதில் அளித்தான். உடனே வருணன் தனது வயிற்று வலியை நீக்குவது இறைவனால் முடிந்த காரியமா என்று கேட்டான்.இறைவனால் முடியாதே காரியம் இல்லை என்பதால், முடியும் என்று இந்திரன் பதிலளிக்க, வருணன் பெருமானை மிரட்டி, தனது வயிற்று வலியை நீக்கிக்கொள்ள முடிவு செய்தான். தனது கட்டுப்பாட்டில் இருந்த ஏழு கடல்களையும் பொங்கி எழுந்து மதுரை நகரை அழிக்குமாறு ஆணையிட்டான்.ஆனால் இறைவன் தனது சடையிலிருந்த நான்கு மேகங்களை ஏவ, அந்த நான்கு மேகங்களும் ஏழு கடல்களின் நீரை முழுதும் உறிஞ்சி கடல்களை வற்றச் செய்தன. இவ்வாறு தான் தோல்வியடைந்த போதிலும், பெருமானை மிரட்டும் தனது முயற்சியில் தளர்வு அடையாத வருணன், தனது ஆணைக்கீழ் இருந்த நான்கு மேகங்களையும் மழை பொழிவித்து மதுரை நகரை அழிக்கும் வண்ணம் ஆணையிட்டான். இடைவிடாத மழையினால் மதுரை மக்கள் பெரிதும் அல்லல் உற்றனர். மக்களின் அவல நிலையை போக்கத் திருவுள்ளம் கொண்ட பெருமான், தனது சடையில் தவழ்ந்த நான்கு மேகங்களை எடுத்து வீச, அந்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக ஒன்று சேர்ந்து வானில் பாய் விரித்தது போன்று, ஒரு சொட்டு மழை நீரும் மதுரை நகரின் உள்ளே புகாமல் பாதுகாத்தன. இரண்டாவது முறையும் தனது முயற்சி பலனளிக்காததைக் கண்ட வருணன், பெருமானிடம் சரண் அடைய, பெருமானும் அவனது தவறை மன்னித்து அவனது வயிற்று வலியையும் போக்கினார். இந்த நிகழ்ச்சியால் மதுரை நகருக்கு நான்மாடக்கூடல் என்றும் கூடல் என்றும் பெயர் வந்தது.
பொழிப்புரை:
செம்பொன்னால் செய்த மாலைகள், திருவாசி போன்று வட்ட வடிவிலான மாலைகள், நறுமணம் நிறைந்த தூபங்கள், ப்ல விதமான நிவேதனப் பொருட்கள்,தோத்திரப் பாடல்கள் ஆகியவற்றை விருப்பத்துடன் பெருமானுக்கு அளித்து அவற்றை ஏற்றுக் கொள்ளும் பெருமான் நமக்கு சிறந்த வகையில் அடைக்கலம் அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அடியார்களால் தொழப்படும் நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. தேவர்களும் நாகலோகத்தில் வாழும் நாகர்களும் ஒலிக்கும் கடல்களால் சூழப்பட்ட உலகத்தில் வாழும் மக்களும் புகழ்ந்து போற்றப்படும் வண்ணம் நான்கு மேகங்கள் மாடங்களாகத் திகழ்ந்து மதுரை நகரினை காப்பாற்றும் வண்ணம் அரிய செயலைப் புரிந்த பெருமானே, கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில், நீவிர் உறைகின்றீர்.
பாடல் 6:
பாகமும் தேவியை வைத்துக் கொண்டு பைவிரி துத்திப் பரிய பேழ்வாய்
நாகமும் பூண்ட நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்து வைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
விளக்கம்:
ஆலவாய் என்று இந்த நகரத்திற்கு பெயர் வந்த வரலாறு திருவிளையாடல் புராணம், திருவாலவாயாகிய படலம் என்ற படலத்தில் சொல்லப் படுகின்றது.பாண்டிய நாட்டினை வங்கிய சேகர பாண்டியன் என்பான் ஆட்சி புரிந்த சமயத்தில், மக்கள் தொகை பெருகிய காரணத்தால் மதுரை நகரத்தை விரிவாக்க எண்ணம் கொண்டான். ஆதிகாலத்திலிருந்து வரையறுக்கப்பட்ட எல்லை நாளடைவில் வெள்ளம் முதலிய இயற்கைச் சீற்றங்களால் அழிந்து போன தன்மையால், அந்த எல்லையை தனக்கு இறைவன் காட்டி அருள் புரிய வேண்டும் என்று வேண்டினான். ஒரு சித்தராக உருவெடுத்த வந்த இறைவன்,பாம்பினை அரை ஞாணாகவும், பூணுநூலாகவும், குழையாகவும் குண்டலமாகவும் கால் சதங்கையாகவும் அணிந்து வந்த சித்தர், தனது கரத்தில் கங்கணமாக இருந்த பாம்பினை பார்த்து, இந்த நகரத்தின் எல்லையை காட்டுவாயாக, என்று ஆணையிட, அதற்கு பணிந்த அந்த பாம்பு. விரிவாக்கப்பட்ட நகரத்திற்கு தனது பெயரை வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தது. உடனே அந்த பாம்பு கிழக்கு திசையிலிருந்து தனது உடல் வலமாகச் செல்லும் வண்ணம் வளைத்து, ஒரு பெரிய நிலப்பரப்பினை சுற்றி வந்து, தனது வாயினில் வாலை வைத்து, புதிய நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளை காட்டிய பின்னர்,சித்தரின் கரத்தில் கங்கணமாக மாறியது. பாண்டிய மன்னனும் அந்த பாம்பு வரையறுத்த எல்லையில் மதில் சுவர் எடுத்தான். இவ்வாறு வரையறுக்கப்பட்ட நகரம், தெற்கில் திருப்பரங்குன்றமும் வடக்கில் இடபக்குன்றமும் மேற்கில் திருவேடக நகரும் கிழக்கில் திருப்பூவணமும் எல்லைகளாக கொண்டு திகழ்ந்தது என்று பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார். ஆலம் என்றால் வால் என்று பொருள். தனது வாலினை, ஆலத்தை வாயினில் வைத்து எல்லையை வரையறுத்துக் காட்டியதால் மதுரை நகருக்கு ஆலவாய் என்ற பெயர் ஏற்பட்டது. பை=படம்; துத்தி=புள்ளிகள்; பரிய=பெரிய; பேழ்=பிளந்த; போகம் என்பது இங்கே சிவபோகத்தை குறிப்பிடுகின்றது. புணர்வு= தொடர்பு; ஆகம்-திருமேனி;
போகம் என்பது சிவபோகத்தையே குறிக்கும். தலை சிறந்த அடியார்கள் விரும்புவது சிவபோகமே அன்றி வினைகளின் பயனாக ஏனையோர் அனுபவித்துக் கழிப்பதும் மேன்மேலும் விரும்புவதும் ஆகிய உலகியல் போகங்கள் அல்ல. சிவபோகம் என்பது தசகாரியத்தின் முடிபாக கருதப் படுகின்றது. ஒவ்வொரு உயிரும் இந்த பத்து படிகளைக் கடந்து தன்னுடன் வந்து இணைவதையே இறைவன் விரும்புகின்றான். தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ நீக்கம்,ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்ம நீக்கம், சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம் சிவபோகம் என்பன தச காரியங்கள் என்று ஒரு தொகுப்பாக அழைக்கப்படும். குருவருளால் ஞானத்தை கேட்டல் என்ற நிலையில் எல்லோருக்கும் நிட்டையாகிய சீவன் முக்தி நிலை வந்துவிடுவதில்லை. அதன் பின்னர் சிந்தித்தல், தெளிதல் நிகழ்ந்த பின்னரே அத்தகைய சீவன்முக்தி நிலை ஏற்படும். ஞானத்தின் மேற்கூறிய நான்கு படிநிலைகளையே வேறொரு வகையால் பகுத்து தசகாரியம் என்று குறிப்பிடுவார்கள். இவை அனைத்தும் அறிவின் கண் நிகழும் நிலை வேறுபாடுகளே அன்றி உடற்கண் நிகழும் செயல்கள் அல்ல.மேற்கண்ட தசகாரிய நிலைகளில் தத்துவம், ஆன்மா, சிவம் என்ற மூன்று பொருட்கள் கூறப்பட்டிருப்பதை நாம் உணரலாம். இவை மூன்றும் பாசம், பசு, பதி அன்றே தவிர வேறல்ல.
ஆசிரியரின் உபதேசம் மற்றும் நூல்களின் துணை கொண்டு தமது அறிவுக்குப் பொருந்தும் வண்ணம் ஆராய்தலே சிந்தித்தல். அவ்வாறு சிந்திக்கும் போது முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும் நூல்களில் சொல்லிய வண்ணம் விளக்கமாக அறிந்து கொள்ளுதல் தத்துவரூபம் ஆகும். இந்த தத்துவங்கள் பொருந்துமா அல்லது பொருந்தாதா என்றும் எந்த அளவுக்கு அவை நமக்கு பொருந்தும் என்றும் ஆராய்தல் தத்துவ தரிசனமாகும். பின்னர் இந்த தத்துவங்கள் அனைத்தும் சடப் பொருட்கள் என்றும், இவை ஆன்மாவாகாது, ஆன்மா வேறு இந்த தத்துவங்கள் வேறு என்று உணர்தல் தத்துவசுத்தியாகும்.தத்துவங்கள் அல்லது அவற்றின் கூட்டங்களோ ஆன்மா அல்ல என்றும் ஆன்மா வேறு என்றும் அறிதல் ஆன்ம தரிசனமாகும், ஆன்மாவின் இயல்பினை நூல்களில் சொல்லிய வண்ணம் அறிந்து கொள்ளுதல் ஆன்ம ரூபம். ஆன்மா தத்துவங்கள் போல் சடம் அல்ல எனினும் தனித்து நின்று அறிய இயலாது என்றும் ஆன்மாவிற்கு எப்போதும் துணையாக உடன் நின்று உணர்த்தி வருவது இறைவனின் திருவருள் என்றும் உணர்ந்து, யான் மற்றும் எனது எனப்படும் இரண்டு செருக்குகளும் அற்று, எந்த செயலையும் தனது செயல் அல்லது பிறர் செயல் என்ற எண்ணங்கள் அற்று இருப்பது ஆன்ம சுத்தியாகும். சிவ பரம்பொருளின் பொது இயல்பு (ஐந்தொழில் படுத்துதல்) மற்றும் உண்மை இயல்பு (எண்குணம் உடைமை) என்று நூல்களில் சொல்லியவாறு அறிந்து கொள்ளுதல் சிவரூபம். இந்த ரூபத்தை தனது அறிவினுக்கு பொருந்துமாறு ஆராய்தல் சிவதரிசனம். சிவபிரானின் இயல்பு அறிவினில் பொருந்தும்போதே,யான் எனது என்ற உணர்வு அற்று நிற்றலும், இதனால் எங்கும் எதிலும் சிவமயமாய் காட்சி காணுதலும், அந்த காட்சியால் சிவானந்த விளைவு ஏற்படுதலும்,சிவதரிசனமாகும். சிவதரிசனம் வாய்த்த போது, பழைய வாசனையால் அவ்வப்போது யான் எனது என்ற எண்ணம் எழுந்தாலும், அந்த தற்போதத்தை,சீவபோதத்தை, சிவதரிசன முறையில் சிந்தித்து அடக்கி தன் செயலற்று சிவத்தில் ஒன்றி இருத்தலே உண்மை யோகம் எனப்படும் சிவயோகம் ஆகும்.சிவயோகத்தில் திளைத்து இருக்கும்போது தோன்றும் சிவானந்தத்தை நுகர நுகர, சிவானந்தம் பெருகி, ஆன்ம அறிவை விழுங்கிவிடும். ஆன்மபோதம் அறவே மூழ்கடிக்கப்பட்ட நிலையில் ஆன்மா தன்னையோ அல்லது பிறரையோ பிற பொருட்களையோ உணருவதில்லை. சொல்லற்ற, இரவு பகல் அற்ற,ஏதும் அற்ற இந்த நிலைக்கு மேல் ஆன்மா அடையவேண்டிய பயன் வேறு ஏதும் இல்லை. இந்த நிலை சிவபோகம் ஆகும். இந்த சிவானந்தத்தை இடையறாது அனுபவிக்க தடையாக உள்ள உடலும் நீங்கவே முக்திநிலை வாய்த்துவிடும். இந்த பத்து நிலைகளையும் கடந்து முக்தி நிலை அடையக்கூடிய வாய்ப்பு, பல பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களுக்கே வாய்க்கும் என்பதால், புண்ணியர் என்று அத்தகைய சான்றோரை இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஆகம் உடையவர்=உடலினை உடையவர்; புண்ணியருடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு உடையவர்கள் என்று பொருள் கொள்ளுதல் பொருத்தம்.
பொழிப்புரை:
தனது உடலின் இடது பாகத்தில் தேவியை வைத்துக் கொண்டும், உடலில் புள்ளிகள் உடையதும் படம் எடுத்தாடும் தன்மை உடையதும் பெரிதாக பிளந்த வாயினை உடையதும் ஆகிய பாம்பினை தனது உடலில் ஆபரணமாக பூண்டும் காட்சி அளிப்பவனாக நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. சிவபோகம் அடைவதையே தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு, எப்பொதும் பெருமான் பற்றிய சிந்தைனையில் ஆழ்ந்து புண்ணியராக விளங்கும் பெரியோர்களுடன் கூடிப்பழகும் தன்மை உடைய அடியார்கள் ஒன்று கூடி சேர்ந்து உறைகின்ற கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில், பெருமானே, நீவிர் உறைகின்றீர்.
பாடல் 7:
கோவண ஆடையும் நீறுப் பூச்சும் கொடுமழு ஏந்தலும் செஞ்சடையும்
நாவணப் பாட்டும் நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
பூவண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
விளக்கம்:
நாவணப் பாட்டு=நாவில் பல வண்ணங்களுடன், பல வேறுபட்ட தன்மைகளுடன் திகழும் பாடல்கள்; வேறு வேறு பண்களுடன் இசைக்கப்படும் வேத மந்திரங்கள்; தாருகவனத்து முனிவர்கள் சிவபெருமான் மீது ஏவிய கொடிய ஆயுதம் என்பதால் கொடு மழு என்று இங்கே சொல்லப் பட்டுள்ளது. ஏந்திய என்ற சொல் மூலம், அந்த ஆயுதத்தை மிகவும் இலாவமாகத் தனது கையில் ஏந்தி பெருமான், செயலிழக்கச் செய்ததும் இங்கே உணர்த்தப்படுகின்றது. பூவண மேனி=பூப்போலும் மெல்லிய மேனி; ஆவண வீதி=கடை வீதி; ஆடும் வீதி என்பதற்கு மகளிர் விளையாடும் வீதி என்று பொருள் சொல்லப்படுகின்றது. கடை வீதியில் விளையாடுவதற்கு இடம் ஏது. எனவே நடமாடும் என்று பொருள் கொண்டு, கடைவீதி சென்று பொன்னும் பொருளும் வாங்கும் அழகிய மகளிர் நடமாடும் மதுரை நகர் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது.
பொழிப்புரை:
கோவண ஆடையும் திருநீறு பூசப்பட்ட திருமேனியும், தாருகவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட கொடிய மழு ஆயுதத்தைச் செயலற்றுச் செய்து ஏந்திய கையும், சிவந்த சடையும், வேறு வேறு பண்களில் தன்னைப் புகழ்ந்து இசைக்கப்படும் வேத மந்திரங்கள் மற்றும் அருளாளர்களின் பாடல்கள் கொண்டவனும் நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. மலர்கள் போன்ற மெல்லிய மேனியை உடைய இளைய மாதர்கள் செல்வத்தில் கொழித்தவர்களாக, பொன்னும் பொருளும் ஏந்தியவர்களாக நடமாடும் கடைவீதிகள் உடையதும் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில், பெருமானே, நீவிர் உறைகின்றீர்.
பாடல் 8:
இலங்கை இராவணன் வெற்பெடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி
நலம் கொளச் சேர்ந்த நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியை நீக்கிப் புந்தியிலும் நினைச் சிந்தை செய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
விளக்கம்:
வெற்பு=மலை, இங்கே கயிலாய மலை; செற்று=வெற்றி கொண்டு; அலங்கல்=மாலை; மாலை என்பது வெற்றியின் அடையாளமாக அணியப்படுவது;உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொள்ள உதவும் பொருட்டு, உயிர்கள் இணைந்துள்ள உடலுக்கு அறிவுக் கருவிகளாகிய ஐந்தும் இறைவனால் அளிக்கப்பட்டுள்ளன. மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அந்த பொறிகளைத் தனக்கு உதவும் வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய நிலையில் உயிர் இருக்கவேண்டும் என்பதை குறிப்பிடும் முகமாக, உயிரை எஜமானன் என்றும் புருடன் என்றும் அழைக்கின்றனர். ஆனால் பெரும்பாலான உயிர்கள், அந்த பொறிகளை தாங்கள் அடக்கி ஆள்வதற்கு பதிலாக, தாமே அந்த பொறிகளுக்கு அடிமையாக மாறி அந்த பொறிகள் விரும்பும் செய்கைகளை மிகுந்த விருப்பத்துடன் செய்கின்றனர். மேலும் அத்தகைய செயல்களால் விளையும் சிற்றின்பத்தையும் மிகவும் விரும்பி ரசிக்கத் தொடங்குகின்றனர். இத்தகைய நிலைக்கு ஆளாகாமல், பொறிகளை வெற்றி கொண்டு பெருமானையே சிந்தனை செய்யும் பெரியோர்களை சிறப்பாக கருதி, அவர்களை வெற்றி மாலை சூடியவர்கள் என்ற பொருள் பட அலங்கல் நல்லார் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
இலங்கை மன்னனாகிய அரக்கன் இராவணன். தான் செல்லும் வழியில் குறுக்கே நின்றது என்று கருதி கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, தனது அழகிய கால் விரலை ஊன்றி அரக்கனது உடலை மலையின் கீழே நெருக்கி அவனது வலிமையை அடக்கியவன் பெருமான். பின்னர் அரக்கன் பாடிய சாமவேத இசையினை மிகவும் விரும்பியவனாக, அவன் பால் கருணை கொண்டு, மலையின் அழுத்தத்திலிருந்து அவனை விடுவித்ததும் அன்றி,இராவணன் என்ற பெயர் நீண்ட வாழ்நாள் மற்றும் சந்திரஹாசம் எனப்படும் வாள் ஆகிய நலங்கள் பல அளித்து அருள் புரிந்தவனும், நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. தங்களது ஐந்து புலன்களையும் அடக்கி அந்த பொறிகளின் சேட்டைகளை முற்றிலும் தவிர்த்து மனதினில் எப்போதும் உன்னை சிந்தனை செய்தவர்களாக வாழ்க்கையில் வெற்றி அடைந்ததன் அடையாளமாக புகழ் மாலை சூட்டிக் கொண்ட அடியார்கள் அமர்கின்றதும், கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில், பெருமானே, நீவிர் உறைகின்றீர்.
பாடல் 9:
பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல் அரிய நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
மணியொலி சங்கொலியோடு மற்றை மாமுரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
விளக்கம்:
பணி=ஆதிசேஷன் எனப்படும் பாம்பு; வென்றி=வெற்றி கொண்ட; தனது முன்னே எழுந்த நீண்ட தழற்பிழம்பின் முடியைக் காணும் முயற்சியில் அன்னப் பறவையாக மாறிய பிரமன், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத மனம் உடையவனாக, முடியைக் கண்டதாக பொய் சொல்லி வெற்றி அடைந்ததாக சொன்ன தகவலை உணர்த்தும் முகமாக இகழ்ச்சியாக வென்றிப் பறவை என்று சொல்லப்படுகின்றது. தமது ஆற்றலின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக தங்களது முயற்சியில் ஈடுபட்ட பிரமன் மற்றும் திருமால் ஆகியோர், பெருமானின் அருள் பெறாததால், பெருமானின் அடியையும் முடியையும் நெருங்க முடியாமல் நின்ற தன்மை, நணுகலரிய என்ற தொடர் மூலம் உணர்த்தபப்டுகின்றது. மன்னர்கள் அணிவகுத்து செல்லும் போது முரசுகள் ஒலிக்கப் படுவது வழக்கம். அத்தகைய முரசுகள் ஒலிக்கும் வகையிலிருந்தே அணி வகுத்து வரும் ப்டைகளின் நோக்கத்தை தெரிவிக்கும் முகமாக முரசுகள் ஒலிக்கப்பட்டு வந்தன என்று பண்டைய இலக்கியங்கள் உணர்த்துகின்றன. போருக்கு செல்லும் போதும் வேறு விதமாகவும், வெற்றியுடன் திரும்பும் போது வேறு விதமாகவும், நட்பு நாடி மற்றொரு நாட்டுக்கு செல்லும் போது வேறு விதமாகவும், திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மற்றொரு விதமாகவும் முரசுகள் ஒலிக்கப்பட்டன. இந்த பாடலில், அண்டை நாட்டு மன்னர்கள், பாண்டிய மன்னனின் நட்பு நாடி, கப்பம் செலுத்தும் தன்மையில் வந்த போது ஒலித்த முரசுகள் என்று குறிப்பிட்டு பாண்டிய மன்னனின் வீரத்தை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இரண்டாம் புலிகேசியை நரசிம்ம வர்ம பல்லவன் வெற்றி கொண்டு வாதாபி நகரத்தை எரித்தழித்த பின்னர், அதற்கு பழி தீர்க்கும் முகமாக புலிகேசியின் மகன் விக்ரமாதித்தன் காஞ்சி நகரின் மீது படையெடுக்கின்றான். பரமேச்வர பல்லவனை வெற்றி கொண்ட பின்னர், தெற்கே படையெடுத்து பாண்டியனுடன் போர் செய்கின்றான். சளுக்கிய மன்னனை நெல்வேலி (மதுரைக்கு தெற்கே உள்ள திருநெல்வேலி தலத்தினின்றும் வேறுபட்டது, மதுரைக்கு வடக்கே சோழ நாட்டில் உள்ள இடம்) என்ற இடத்தில் எதிர்கொண்ட நெடுமாற பாண்டியன் வெற்றி அடைந்ததை குறிப்பிடும் வகையில், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகின்றார் என்று டாக்டர் மா. இராசமாணிக்கனார் தனது ஆராய்ச்சியில் கூறுகின்றார்.மன்னன் நெடுமாறன் சமண சமயத்தைச் சார்ந்திருந்த போது, மதுரைத் தலத்தில் சிவாலயங்களில் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறவில்லை. மதுரை சென்ற திருஞானசம்பந்தர், அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் சமணர்களை வெற்றி கொண்ட பின்னர், பாண்டிய மன்னனும் பெரும்பாலான மக்களும் மீண்டும் சைவ சமயம் திரும்பிய பின்னர், மதுரையில் பெருமானின் திருக்கோயில்களில் திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டதை மணியொலி சங்கொலி என்றும் ஒவாது இருந்த நிலை என்று குறிப்பிடுகின்றார் போலும்.
பொழிப்புரை:
ஆதிசேஷனைத் தனது படுக்கையாகக் கொண்ட திருமாலும், சிறந்த தாமரை மலரின் மீது உறைபவனாகிய பிரமனும், முறையே பன்றியாகவும் வெற்றி கொண்டதாக பொய் சொன்ன அன்னப் பறவையுமாக மாறிய உருவத்துடன் தங்களின் முன்னே எழுந்த நீண்ட தழற்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பதற்கு முயற்சி செய்தபோது, அவர்களால் நெருங்க முடியாத வண்ணம் நீண்டு உயர்ந்து நின்றவனும், நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. மணியொலி சங்கொலி ஒயாது ஒலிப்பதும் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் நோக்கத்துடன் நட்பு நாடி வரும் அண்டைய நாட்டு மன்னர்களின் வருகையை உணர்த்தும் முரசின் ஒலியும் இடையறாது ஒலிப்பதும் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படுவதும் ஆகிய தலத்தினில், பெருமானே, நீவிர் உறைகின்றீர்.
பாடல் 10:
தடுக்குடைக் கையரும் சாக்கியரும் சாதியின் நீங்கிய வத்தவத்தர்
நடுக்குற நின்ற நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள் விழவும் இரும்பலி இன்பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக்கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
விளக்கம்:
தடுக்கு=பாய்; ஓரிடத்தில் நிலையாக இருந்தால் அந்த இடத்தின் மீது பந்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இரவினில் இடங்கள் மாறிமாறி உறங்குவதை பழக்கமாக கொண்டவர்கள் சமணர்கள். எனவே தாங்கள் செல்லும் இடங்களுக்கு பாயினையும் தமது கையில் இடுக்கிக் கொண்டுச் செல்லும் பழக்கம் உடையவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அந்த தன்மையே இங்கே தடுக்குடைக் கையர் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. சமண மதமும் புத்த மதமும் தோற்றுவிக்கப்பட்ட நாட்களில் கொல்லாமை அன்பு ஆகிய குணங்களை அடிப்படையாகக் கொண்டு பலராலும் போற்றப்படும் தன்மையுடன் விளங்கின. ஆனால் நாளடைவில், மன்னர்களிடம் அவர்களுக்கு இருந்த நெருக்கம் அதிகரித்து அவர்களது செல்வாக்கு பெருகிய நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது கொள்கையிலிருந்து அவர்கள் விலகிய தன்மை, சாதியின் நீங்கிய வத்தவத்தார் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.அவத்தவத்தர்=தவம் என்ற பெயரில் அவம் செய்யத் தொடங்கிய நிலை.
நடுக்குற நின்றனர் என்ற குறிப்பு அனல் வாதம் மற்றும் புனல் வாதத்தின் முடிவில் சமணர்கள் இருந்த நிலையை உணர்த்துகின்றது. போகம் ஆர்த்த பூண்முலையாள் என்று தொடங்கும் திருநள்ளாறு தலத்தின் பதிகம் அடங்கிய ஏட்டினை, தளரிள வளரொளி என்று தொடங்கும் பதிகம் பாடியவாறு திருஞானசம்பந்தர் நெருப்பில் இட, அந்த ஏடு தீயினில் வேகாது இருந்ததும் அன்றி பச்சை வண்ணத்துடன் விளங்கியது. சமணர்கள் இட்ட ஏடோ தீயிடைப் பட்ட பஞ்சு போன்று எரிந்து சாம்பலாக மாறியது. சிறிது நேரம் கழித்த பின்னர், திருஞானசம்பந்தர் தான் தீயினில் இட்ட ஏட்டினை எடுத்து மனனவனுக்கும் அவையோருக்கும் காட்டினார். அந்த ஏடு எங்கும் கருகாமலும், முன்னை விடவும் அதிகமான பசுமையுடனும் புதிய தன்மையும் உடையதாக இருந்த நிலையைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். தாங்க்ள் இட்ட ஏட்டின் நிலையைக் காண்பதற்கு சமணர்கள் சென்ற போது, அந்த நெருப்புத்தீ மெலும் பெருகி சுட்டமையால், சமணர்கள் கல்ங்கியதைக் கண்ட மன்னன் நீரினைக் கொண்டு அந்த தீயினை அணைத்தான். செய்வதறியாது திகைத்த சமணர்,தீக்குண்டத்தைத் துழாவிப் பார்க்க, அவர்களுக்கு கரிக் கட்டையும் சாம்பலுமே கண்ணில் பட்டதே தவிர, அவர்கள் இட்ட் ஏட்டினை காண முடியவில்லை.எனவே தாங்கள் தோற்றதை அறிந்த அவர்கள் நடுக்கம் அடைந்தனர். இவ்வாறே புனல் வாதத்தின் போது தாங்கள் இட்ட ஏடு, மிகவும் விரைவாக கடலை நோக்கிச் சென்றதையும் கண்டு அவர்கள் திகைத்தனர். இந்த தன்மையே நடுக்குற நின்ற என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நாள்தோறும் நடைபெறுகின்ற விழாவின் ஒரு அங்கமாக, அன்னம் பாலிப்பு நடைபெற்ற தன்மை, இரும்பலி என்ற சொல் மூலம் குறிப்பிடப்படுகின்றது. இரும்பலி=சிற்ப்பு வாய்ந்த பலி;
பொழிப்புரை:
தங்களது அக்குளில் பாயினை இடுக்கிக்கொண்டு திரியும் சமணரும் புத்தர்களும், தத்தம் மரபிலிருந்து தவறியவர்களாக வீணான தவத்தினில் ஈடுபடுகின்ற்னர். அனல் வாதம் மற்றும் புனல் வாதத்தினில் தோற்று நடுங்கும் வண்ணம் திருவருள் புரிந்தவரும், நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. அன்றாடம் நடைபெறும் வழிபாடுகளும் சிறப்பு நாட்களில் நடைபெறும் வழிபாடுகளும் சிறப்பாக கொண்டாடப்பட்டு, பெரிய அளவில் அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நடைபெறுவதால் விளையும் மகிழ்ச்சி நகரின் நாற்புரங்களிலும் பரவும் தலத்தினில், கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில், பெருமானே, நீவிர் உறைகின்றீர்.
பாடல் 11:
அன்புடையானை அரனைக் கூடல் ஆலவாய் மேவியது என்கொல் என்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெறப் போற்றி நலம் குலாவும்
பொன்புடை சூழ் தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே
விளக்கம்:
அன்பே சிவமாக இருக்கும் தன்மை அன்புடையான் என்று சொல்லப்படுகின்றது. இமையவர் ஏத்த இருப்பர் என்று கூறுகின்றார். இமையவர்களை விட ஒரு படி மேலாக் இருந்தால் தானே இஜையவர் ஏத்துவார்கள். எனவே இமையவ்ர்கள் தலைவனாகவோ தேவருலகத்தை விடவும் சிறப்பு வாய்ந்த முக்தி உலகம் அடைவார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். பூசுரன்= தேவர்களை போன்று உயர்வாக கருதப்படும் அந்தணர்கள்;
பொழிப்புரை:
தூய பொன் போன்றவனும் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருப்பவனும் நள்ளாறு தலத்தினில் உறைபவனும் ஆகிய பெருமான் அன்பே வடிவமாக இருப்பவனும் அரன் என்று அழைக்கப்படுவானும் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் மதுரை தலத்தினில் உறைவதன் காரணம் யாது என்று,பொருள் நயம் பொருந்திய பாடல்கள் மூலம், நல்ல பயனை அளிக்கும் பாடல்கள் மூலம், வினவி, செம்பொன் மாடங்கள் நிறைந்த சீர்காழி நகரைச் சார்ந்தவனும், தேவர்கள் போன்று உயர்ந்தவர்களாக கருதப்படும் அந்தணனும் ஆகிய ஞான சம்பந்தன், பெருமானை போற்றி உரைத்த பாடல்களை,அனைவர்க்கும் இன்பம் அளிக்கும் பாடல்களை முறையாக கற்று உரிய பண்ணுடன் இணைத்து பாடும் வல்ல்மை பெற்ற அடியார்கள், தேவர்கள் புகழ்ந்து போற்றும் வண்ணம், அவர்களினும் உயர்ந்த பதவியை பெறுவார்கள்.பாடக மெல்லடிப் (Paadaga Melladip) is a poetic phrase often found in Tamil devotional literature and classical poetry. Let's break it down:
பாடக: Refers to a "singer" or someone who is involved in the act of singing or praising. In a devotional context, it typically refers to a person who is singing the praises of a deity.
மெல்லடிப்: "Melladi" means "soft feet" or "gentle steps." The word அடி (adi) refers to "feet," and மெல்ல means "softly" or "gently."
"பாடக மெல்லடிப்" refers to a person or singer who is gently walking or treading with soft steps, often used to describe a devotee or a celestial being approaching a deity with humility and reverence while singing praises.
In Tamil devotional hymns or classical poetry, such as Thevaram or Thiruppugazh, this phrase could describe a scene where a devotee, filled with devotion, approaches the temple or the divine, singing sacred hymns with gentle, reverent steps. It paints a picture of someone who is deeply respectful and focused on their devotion, walking softly towards the divine presence.
The imagery also conveys a sense of grace and spiritual surrender, where the act of walking and singing become acts of worship. The gentle steps symbolize humility and the soft, melodious singing indicates heartfelt devotion. This poetic expression emphasizes the tender and loving approach a devotee takes when in the presence of the divine.