பதிக எண்: 2.46 - திரு நாலூர் மயானம் - சீகாமரம்
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக வலஞ்சுழி சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு பழையாறை, சத்திமுற்றம், பட்டீச்சரம், இரும்பூளை முதலான தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் அரதைப் பெரும்பாழி தலம் செல்கின்றார். அதன் பின்னர் திருச்சேறை, திருநாலூர், குடவாயில், நறையூர், தென்திருப்புத்தூர் ஆகிய தலங்கள் சென்றதாக பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். நாலூர் தலத்தினில் இருக்கும் திருக்கோயில் நாலூர் மயானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த ஒரு பதிகம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. குடமூக்கு சென்று இருந்த அப்பர் பிரான் அங்கிருந்து நாலூர், குடவாயில், மற்றும் நறையூர் தலங்கள் சென்றதாக பெரிய புராணத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த தலங்கள் மீது அப்பர் பிரான் அருளிய பதிகங்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை..
பாடும் அரதைப் பெரும்பாழியே முதலாகச்
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடிய சீர் நறையூர் தென்திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
நீடு தமிழ்த் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், கும்பகோணத்திலிருந்து சுமார் பதினேழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருச்சேறை தலத்தை தாண்டியவுடன், இஞ்சிக்கொல்லை என்ற ஊருக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள நாலூர் தலத்தில் உள்ள திருக்கோயில், நாலூர் மயானம் என்று பண்டைய நாளில் அழைக்கப்பட்டது. புராதன காலத்தில் பலாசவனம் என்று அழைக்கப்பட்டது பெருமானின் திருநாமத்திலிருந்து தெரிய வருகின்றது. தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படும் நான்கு மயானங்களில் ஒன்று. கடவூர் மயானம், கச்சி மயானம், நாலூர் மயானம் மற்றும் காசி மயானம் என்பன அந்த நான்கு தலங்களாகும். கச்சி மயானமும், காசி மயானமும் வைப்புத் தலங்களாகும். காழிமயானம் மற்றும் வீழிமயானம் தலங்களிலும் பெருமானுக்கு திருக்கோயில்கள் உள்ளன. நான்கு வேதங்களும் கற்ற அந்தணர்கள் வாழ்ந்ததால் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட இந்த தலம் நால்வேதியூர் என்று முதலில் அழைக்கப்பட்டு பின்னர் நாலூர் என்று மருவியதாக கூறுவார்கள். பெருமானின் திருநாமம் பலாசவனநாதர், பலாசவனேசுவரர், அம்பிகையின் திருநாமம் பெரியநாயகி: சுவாமியின் திருமேனி பலாப்பழத் தோலின் மேற்புறம் முள்ளுடன் இருப்பதன் போன்று காட்சி அளிக்கின்றது. முயற்சி செய்து தோல் உரிக்கப்பட்ட பலாப்பழம் இனிப்பது போன்று, பெருமானை அன்பினால் நினைக்கும் அடியார்கள் இனிமையான உணர்வினையும், கிடைத்ததற்கு அரிய பயனையும் பெறுவார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமானின் திருமேனி அமைந்துள்ளது போல் தோன்றுகின்றது. வட்டமான வடிவம் உடைய ஆவுடையாருடன் சற்று உயர்ந்த பாணம் கொண்ட திருமேனி. கிழக்கு பார்த்த சன்னதி. சுயம்பு மூர்த்தி; கோச்செங்கட் சோழனால் கட்டுவிக்கப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்று. எனவே ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட திருக்கோயில். தூங்குகின்ற யானையின் வடிவத்தில் அமைந்த விமானத்தையும் அத்துடன் இணைந்த வௌவால் மண்டபத்தையும் கொண்டுள்ள சிறிய கோயில். திருமால் ஆபச்தம்ப முனிவர், நான்கு வேதங்கள் மற்றும் சூரியன் வழிபட்ட தலம். கல்பத்தின் முடிவினில் முக்தி நிலை பெற விரும்பிய பிரமன் வழிபட்ட தலம் என்றும் கூறப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், 3, 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சூரியன் தனது கதிர்கள் கொண்டு பெருமானை வழிபடுவதை காணலாம். யானை செல்ல முடியாத வண்ணம் குறுகலான படிகள் கொண்டுள்ள நுழைவாயில். நுழைவாயிலில் கோபுரம் ஏதும் இல்லை. கருவறையின் வெளிச்சுற்றில் தென்முகக் கடவுளின் சன்னதி உள்ளது. சற்று பெரிய அழகான உருவம். இந்த சன்னதிக்கு அருகில் விநாயகர் சன்னதியும் உள்ளது. .கருவறையில் பெருமானின் சன்னதிக்கு இருபுறமும் விநாயகர் மற்றும் சுப்ரமணியரின் உருவங்கள் உள்ளன. இறைவியின் சன்னதி தெற்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. விமானத்தின் மேற்பகுதியில் இரண்டு எருதுகளின் வடிவத்தையும் காணலாம். பிராகாரத்தின் வெளியில் சண்டீசருக்கு தனியாக ஒரு சன்னதி உள்ளது. வெளியில் உள்ள நந்தி பெருமானை பார்க்கும் வண்ணம் பலகணி போன்ற அமைப்பு உள்ளது. வீணா தட்சிணாமூர்த்தியின் உருவம் மிகவும் அழகாக உள்ளது. பாலூரு மலைப்பாம்பு என்று திருஞானசம்பந்தர் பாடியதற்கு ஏற்ப, சில நாட்களில் பெருமானின் இலிங்கத் திருவருவத்தின் மீது பாம்பு படர்கின்றது என்று கூறுகின்றனர். பெருமானுக்கு ஞானபரமேஸ்வரர் என்ற திருநாமும் பிராட்டிக்கு ஞானாம்பிகை என்ற திருநாமமும் உள்ளன. இந்த திருக்கோயில் மெய்ஞானம் என்றும் அழைக்கப் படுகின்றது. திருமணத் தடை நீங்கவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், இந்த திருக்கோயிலில் செய்யப்படும் வழிபாடு உதவும் என்று கருதப்படுகின்றது. வெளிப் பிராகாரத்தின் மேற்குச் சுற்றில் அமிர்தகடேஸ்வரர், சட்டநாதர், ஏகம்பர், வீழிநாதர் ஆகிய சிவலிங்கங்களை காணலாம். வடக்கு பிராகாரத்தில் விஷ்ணு துர்கையை கோஷ்டத்தில் காணலாம். சோழர்கள் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டது. கருவறை சதுர வடிவிலும் கருவறை விமானம் உருண்டையாகவும் அமைந்துள்ளது. நாலூர் தலமும் வைப்புத் தலமாக கருதப்படுகின்றது. அப்பர் பிரான் இந்த தலத்தினை ஒரு பாடலில் (6.71.4) குறிப்பிடுகின்றார். கஜப்ருஷ்ட விமானம் கொண்டுள்ள சிறிய திருக்கோயில். இறைவனின் திருநாமம் பலாசவன நாதர்; இறைவியின் திருநாமம் பெரியநாயகி; மூலவர் சுயம்புத் திருமேனி; லிங்கத் திருமேனியில் ரேகைகள் படிந்துள்ளன, மயானம் என்று திருமுறைத் தளங்களுடன் இணைந்து வந்தால் அத்தகைய தலங்கள், பிரளயத்தின் முடிவில் சர்வ சங்காரம் நடைபெற்ற இடங்கள் என்று சொல்லப்படுகின்றது. அத்தகைய நான்கு இடங்கள், கச்சி மானம், கடவூர் மயானம், காழி மயானம், நாலூர் மயானம் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன.
பாடல் 1:
பாலூரு மலைபாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல் சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான் தனடி நினைந்து
மாலூரும் சிந்தையர் பால் வந்தூரா மறுபிறப்பே
விளக்கம்:
பால்=அருகே; பாலூரும்=அருகில் ஊர்ந்து செல்லும்; பனிமதி=குளிர்ச்சி தரும் சந்திரன்; மாலூரும்=திருவடிகளின் நினைவில் சிக்குண்டு மயக்கமடைந்து நிற்கும்; இந்த பாடலில் நாலூர் மயானத்து நம்பான் அடியை நினைத்து நெஞ்சம் உருகி வழிபடும் அடியார்கள் பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவார்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நமது சிந்தை மயக்கம் அடையும் வண்ணம், எப்போதும் பெருமானின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்த பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானைத் தவிர்த்து வேறு எந்த நினைவும் சிந்தனையில் இருக்கலாகாது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். பெருமானையே நினைத்து மயங்கிய சிந்தனை உடைய அடியார்கள் என்று குறிப்பிடும் சில திருமுறைப் பதிகங்களை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும்.
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.33.4) அப்பர் பிரான், தனது மனமும் உயிரும் இறைவன் பால் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் மயக்க நிலையில் இருக்கும் வண்ணம் செய்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் இறைவன் நமது உடலினை அமைத்த நிலையை, வீடு கட்டுவதற்கு அப்பர் பிரான் ஒப்பிடுகின்றார். அடிக்கால் நாட்டுதல், அடிக்கல் (கை) ஏற்றுதல், மூங்கில் கழிகள் கொண்டு நிறைத்தல், கூரை வேய்தல், சேற்றையும் நீரினையும் கலந்து பூசி சுற்றுச் சுவர் எடுத்தல், வாசல் அமைத்தல், சன்னல்கள் (சாலோகம்) வைத்தல் ஆகிய ஏழு நிலைகளை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நமது உடலில் உள்ள ஒன்பது துவாரங்கள், இரண்டு வாசல்களாவும் ஏழு ஜன்னல்களாகவும் உருவகிக்கப் படுகின்றன. மால்=விருப்பம், மயக்கம், காற்று ஆகிய மூன்று பொருட்களும் இங்கே பொருந்தும். மால் என்ற சொல்லுக்கு, மயக்கத்தையும் மறதியையும் தரும் திரோதானமாகிய மலம் என்று பொருள் கொண்டு, நமது உயிர்கள் திரோதான மலத்தால், பழைய பிறவிகளின் நினைப்பினை மறக்குமாறு செய்தார் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. மிகவும் அருமையான கருத்துகள் கொண்ட பாடல்.
கால் கொடுத்து இருகை ஏற்றிக் கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து
தோல் படுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல்
ஏல் உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலோகம் பண்ணி
மால் கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக்காடனாரே
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.034.9), பெருமான் பால் தாங்கள் கொண்டிருக்கும் அன்பின் மிகுதியால் மயக்கம் கொண்டவர்களாக விளங்கும் அடியார்களுடன் பிணைந்துள்ள வினைகள் முற்றிலும் வாடிவிடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சேல்= மீன்களில் ஒரு வகை; செரு=சண்டை; நல்ல உடல் வளத்துடன் மீன்கள் வாழும் நிலை குறிப்பிடப்பட்டு, தலத்தின் நீர்வளமும் நிலவளமும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. கடையடியில் உள்ள மால் என்ற சொல் மயக்கத்தினை குறிக்கும். பெருமான் மீது கொண்ட அன்பினால் மயக்கம் கொண்டவர்களாக விளங்கும் அடியார்கள்;
மாலொடும் மறை ஓதிய நான்முகன்
காலொடும் முடி காண்பரிது ஆயினான்
சேலொடும் செருச் செய்யு நெய்த்தானனை
மாலொடும் தொழுவார் வினை வாடுமே
திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.35.5) அப்பர் பிரான், பெருமான் மீது காதல் கொண்ட தலைவியாக தன்னை உருவகித்துக் கொண்டு அருளிய பாடலில், சிவபெருமானின் நற்பண்புகளும் அழகும் தன்னை மயக்கத்தில் ஆழ்த்தியதாக கூறுகின்றார். பால்=ஒரு பக்கம்; மால்=மயக்கம்; இறை=சிறிது; நேர்ந்த=பொருந்திய; கோலம்=அழகு; பெருமான் பால் தான் கொண்டிருந்த அன்பு மயக்கமாக மாறிவிட்டது என்று தலைவி கூறுவதாக அமைந்த பாடல். எனவே இந்த பாடலை அகத்துறை பாடலாகவும் கொள்ளலாம்.
நீலமுண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
கோலம் உண்ட குணத்தால் நிறைந்ததோர்
பாலும் உண்டு பழனன் பால் என்னிடை
மாலும் உண்டு இறை என்றன் மனத்துளே
ஒரு பொதுப் பதிகத்தின் கடைப் பாடலில் (4.113.10) அப்பர் பிரான், பெருமான் பால் கொண்டிருந்த மிகுதியான அன்பு, சிறுவன் மார்க்கண்டேயனின் சிந்தைனையில் மயக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறுகின்றார். அவ்வாறு தனது சிந்தையை மயக்கத்தில் ஆழ்த்திய சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த சிறுவன் என்று குறிப்பிடுகின்றார். மறிதல்=காலால் உதைபட்டு செயலற்று வீழ்தல்: பாசம் விசிறி=கையில் கொண்டுள்ள பாசக் கயிற்றினை வீசி எறிந்து: பொதுவாக பதிகங்களின் கடைப்பாடலில் இராவணனுக்கு சிவபெருமான் அருள் புரிந்ததைக் கூறும் அப்பர் பிரான், இந்த பதிகத்தில் அந்த வழக்கத்திலிருந்து வழுவுகின்றார். சிவ அபராதம் செய்த இராவணனுக்கு பதில், சிவனடியாருக்கு அபராதம் செய்த இயமன், சிவபெருமானால் தண்டிக்கப்பட்ட நிகழ்ச்சி இங்கே கூறப்படுகின்றது. நகைச்சுவையாக திருமாலும் பிரமனும் அறிய முடியாத திருவடியை, உதை வாங்கியதால் காலன் காண முடிந்தது என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்து
மாலும் அறிந்திலன் மாலுற்றதே வழிபாடு செய்யும்
பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே
மற்றொரு பொதுப் பதிகத்தின் பாடலில் (5.96.6) அப்பர் பிரான், தனது சிந்தனை மயங்கும் வண்ணம் தான் பெருமான் மீது அன்பு வைத்துள்ளதாகவும், வேறு எந்த பொருளும் தனக்கு அத்தகைய மயக்கத்தைத் தரவில்லை என்றும் கூறுகின்றார். பசு என்பது இங்கே பசுவின் இனத்தைச் சார்ந்த எருதினை குறிக்கும்.
பைம் மாலும் அரவா பரமா பசு
மைம்மால் கண்ணியோடு ஏறு மைந்தா எனும்
அம்மால் அல்லது மற்று அடி நாயினேற்கு
எம்மாலும் இலேன் எந்தை பிரானிரே
பெருமான் பால் தான் வைத்துள்ள அன்பினைப் போன்று வேறு எந்த பொருளின் மீதும் அன்பு வைக்கவில்லை என்று அப்பர் பிரான் மேற்கண்ட பாடலில் கூறுவது, நமக்கு மணிவாசகர் குழைத்தபத்து பதிகத்தில், பெருமானிடம் சமர்பிக்கும் விண்ணப்பத்தினை நினைவூட்டுகின்றது. நான் ஏதாவது உன்னிடம் வேண்ட வேண்டும் என்று பெருமானே, நீ விரும்பினால், உன்னிடம் நான் என்றும் அன்புடன் இருப்பதே தான் வேண்டும் பரிசு என்று குறிப்பிடுகின்றார்.
வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி
கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் உன்னை வேண்டின்
அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உந்தன் விருப்பு
அன்றே
தான் விரும்பும் பொருட்களால் தனக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா என்பதை மனித மனம் எளிதில் உணர முடிவதில்லை. ஆனால் இதனை நன்கு அறிந்த இறைவன், நமக்கு தீங்கினை விளைவிக்கும் பொருட்களை நமக்கு உடனே தருவதில்லை. ஆனால் இந்த நிலையை புரிந்து கொள்ளாத நாம், இறைவனிடம் மறுபடியும் வேண்டி வேண்டி, அவன் நமக்குத் தவிர்த்துள்ள பொருட்களை மன்றாடி கேட்கின்றோம். இறைவனும் நாம் மீண்டும் மீண்டும் வேண்டுவதால் நமக்கு அந்த பொருட்களைத் தந்து அருள் புரிகின்றான். இந்த கருத்தையே பாடலின் முதல் அடியில் அடிகளார் கூறுகின்றார். இவ்வாறு ஏன் நமக்கு தீமை பயக்கக்கூடிய பொருட்களை, அதன் தன்மையை அறிந்திருந்தும் இறைவன் நமக்கு அளிக்கின்றான் என்ற ஐயம் நமக்கு எழலாம். சற்று சிந்தித்தால் நமக்கு காரணங்கள் புலன்படும். நாம் வேண்டும் பொருள் கிடைத்ததும், தொடக்கத்தில் மகிழ்ச்சியுடன் நாம் அதனை அனுபவித்தாலும் பின்னர் அந்த பொருளால் தீமை விளையும் போது, நமது அனுபவம் விரிகின்றது. நாமும் இந்த அனுபவத்தின் பயனால், நாம் வேண்டும் பொருட்கள் நமக்கு அளிக்கவிருக்கும் நன்மை தீமைகளை ஆராய முற்படுகின்றோம்.
இரண்டாவது காரணம், நம்மைப் பற்றியுள்ள வினையாகும். நாம் தீமையை அனுபவிக்க காரணமாக உள்ள வினை நம்மை, அத்தகைய பொருட்களின் மீது நாட்டம் ஏற்படும் வகையில் நம்மை உந்துமேயானால், நமது மனம் அதனை நாடத் தான் செய்யும். பொருளின் உண்மை நிலையை அறியாமல் நாம் விரும்பும் போது, இறைவனும் அந்த பொருட்களை நமக்கு அளித்து, நமது அனுபவம் விரிவடைய உதவுவதுடன், ஒரு வகையில் நமது வினையின் ஒரு பகுதி கழியவும் உதவி செய்கின்றான். இந்த காரணங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது தான். நாம் விரும்பும் பொருள் நமக்கு கிடைக்காவிடில், அதற்காக வருத்தம் அடையாமல், நமக்கு வரவிருக்கும் தீமை தவிர்க்கப் பட்டுள்ளது என்பதை உணர்ந்து நாம் மகிழ்ச்சி அடையவேண்டும். இவ்வாறு நாம் விரும்பிய பொருள் கிடைப்பினும் கிடைக்காவிடினும் ஒரே தன்மையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தால் நமக்கு பொருள் கிடைக்காத ஏமாற்றமும் இராது, எந்த பொருளின் மீது நமக்கு தேவையற்ற பற்றும் ஏற்படாது.
அடுத்த அடியில் அடியையும் முடியையும் காண வேண்டுமென்று விரும்பிய அயனுக்கும் மாலுக்கும் அரியவனாக இருந்த பெருமான் தானே வந்து தன்னை ஆட்கொண்டதாக அடிகளார் குறிப்பிடுகின்றார். திருமாலுக்கும் பிரமனுக்கும், பெருமானது அடியையும் முடியையும் காண வேண்டுமென்ற விருப்பம் இருந்த போதிலும், தங்களது முயற்சியில் ஈடுபடுமுன்னர், அடியையும் முடியையும் காண்பதற்கான தகுதியைப் பெறுவதற்கு அவர்கள் முயலவில்லை. எனவே தான், தற்போதம் நீங்காத நிலையில் அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அடிகளாரோ குதிரை வேண்டும் என்று அரசன் கட்டளையிட்ட போது, தான் வேறு எவரையும் அனுப்பாமல், தானே குதிரைகள் பெற்று வர தொண்டித் துறைமுகம் செல்வதற்கு உடன்பட்டார். இறைவனைக் காண வேண்டும் என்றோ இறைவனது உபதேசம் கேட்க வேண்டும் என்றோ அவர் விரும்பாவிடினும், அடிகளாருக்கு அருள்வதற்கு இறைவன் திருவுள்ளம் கொள்கின்றான். தொண்டித் துறைமுகம் செல்லும் வழியில் திருப்பெருந்துறையில், தனது சீடர்களுக்கு விளக்கம் சொல்லும் ஆசானாக காட்சி அளித்த பெருமான், தானே வந்து ஆட்கொண்டதை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.
இறுதி அடிக்கு இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். முந்தைய அடியில் இறைவனே வந்து தன்னை ஆட்கொண்டதை குறிப்பிடும் அடிகளார் அவ்வாறு இறைவன் விருப்பத்துடன் தன்னை ஆட்கொண்டதை தானும் விரும்புவதாக சொல்கின்றார் என்று பொருள் கொள்ளலாம். இறைவனுக்கு ஆட்பட்டு அடிமையாக வாழ்வதே தனது விருப்பம் என்று அடிகளார் கூறுவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த இரண்டு விதமான பொருளுக்கும் வேறுபாடு அதிகமாக இல்லை என்பதையும் நாம் உணரலாம்.
கயிலை மலை சென்றடைந்த காரைக்கால் அம்மையாரிடம் இறைவன், அம்மையே நீ வேண்டும் வரம் யாது என்று கேட்டபோது, சிறிதும் தயக்கம் ஏதுமின்றி, இறைவனிடத்தில் என்றும் மாறாத விருப்பம் தனக்கு இருக்க வேண்டும் என்று அம்மையார் வரம் கேட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இறவாத=மறையாத; அம்மையார் இறைவனிடம் கேட்ட வரங்களாவன: இந்தப் பிறவியில் நான் உன்னிடம் வைத்துள்ள அன்பு, நான் இறக்கும் வரையில் இருக்க வேண்டும்; அடுத்த பிறவி என்பது இல்லாத நிலை; ஒருக்கால் அடுத்த பிறவி நேரிடுமாயின் அப்போதும் உன்னை என்றும் நினைந்து மறவாமல் இருக்கும் நிலை; உனது திருவடிக்கீழ் இருந்து நீ உனது நடனத்தைப் பார்த்துகொண்டே நான் மகிழ்ந்து பாடும் நிலை.
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாட
அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்
இறைவன் பால் நமக்கு அன்பு ஏற்படுவதற்கும் காரணமாக இருப்பது அவனது அருள் என்பதை நாம் அறிவோம். மணிவாசக அடிகளார், ஆனந்தமாலை பதிகத்தின் மூன்றாவது பாடலில், மாலும் காட்டி வழி காட்டிய இறைவன் என்று குறிப்பிடுகின்றார். மாலும் என்ற சொல்லுக்கு, தனது சிந்தையில் அன்பு மிகுதியினால் ஏற்பட்ட மயக்கம் என்று பொருள் கொண்டு, அத்தகைய மயக்கத்தையும் அதன் விளைவாக ஈடுபடுத்தப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய வழிகளையும் காட்டிய பெருமான் என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். சிறந்த ஒழுக்கமும் விரதங்களும் இறைவழிபாட்டினில் ஈடுபாடும், மெய்ஞானமும் இல்லாமல், எந்தவிதமான கட்டுப்பாடின்றி பொம்மலாட்டத்தில் ஆட்டுவிக்கப்படும் தோல் பொம்மையை போன்று ஆடுபவன் என்று தன்னை குறிப்பிடுகின்றார். இவ்வாறு தன்னை ஆட்டுவிப்பது யான் எனது என்ற பற்றுக்களே என்பதை உணர்த்தும் அடிகளார், தான் இத்தகைய ஆட்டத்தால் களைத்து சுழன்று விழுந்து வருந்துவதாகவும் குறிப்பிடுகின்றார். விழுந்து கிடப்பேன் என்று அடிகளார் கூறுவதை, நாம் பிறப்பிறப்புச் சுழற்சியில் விழுந்து கிடப்பதாக பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். யான் மற்றும் எனது என்ற உணர்வுகளால் ஆட்டுவிக்கப்படும் உயிர்கள், மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, களைத்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் என்று கூறுகின்றார். எனவே தான், தனது உயிர் இறைவனின் திருவடிகளில் சென்று சேர்வது எந்நாளோ என்று ஏங்கும் அடிகளார், தனது உயிர் உய்வினை அடைவதற்காக இறைவன் அருளிய தன்மையையும் இங்கே. மாலும் காட்டி வழிகாட்டி கோலம் காட்டி ஆண்டான் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார்.
சீலமின்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்
கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே
பொழிப்புரை:
குளிர்ந்த பிறைச் சந்திரனையும் ஊமத்தை மலரினையும் தாங்கியுள்ள பெருமானின் செஞ்சடையில் அருகே மலைப்பாம்பும் ஊர்ந்து செல்கின்றது. இத்தகைய செஞ்சடையை உடைய பெருமான், வெண்ணூலைத் தனது மார்பினில் அணிந்தவனாக நாலூர் மயானம் தலத்தில் காட்சி அளிக்கின்றான். அடியார்களுக்கு பல விதங்களிலும் உதவி புரிந்து, அவர்களின் நம்பிக்கைக்கு உரியவனாக விளங்கும் பெருமானின் திருவடிகளையே எப்போதும் நினைத்த வண்ணம் மயங்கும் அடியார்களுக்கு மறுபிறப்பு என்ற தன்மை வந்து பொருந்தாது.
பாடல் 2:
சூடும் பிறைச் சென்னிச் சூழ் காடிடமாக
ஆடும் பறை சங்கொலியோடு அழகாக
நாடும் சிறப்பு ஓவா நாலூர் மயானத்தைப்
பாடும் சிறப்போர் பால் பற்றாவாம் பாவமே
விளக்கம்:
ஓவா=இடையறாத; நாடும்=பலராலும் நாடப்படும்; ஞானத்தின் உருவமாக திகழும் பெருமானை வழிபட்டு, மெய்ஞானம் பெற்று, எப்போதும் அவனையே சிந்திக்கும் தன்மையில், அவன்பால் மயக்கம் கொண்டு திளைக்கும் அடியார்களுக்கு மறுபிறப்பு ஏற்படாது என்று முதல் பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தர், இரண்டாவது பாடலில் இம்மையில் நாம் அடையவிருக்கும் நன்மையை, பாவங்கள் நம்மை பற்றாது என்ற தன்மையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது நெற்றியில் சூட்டிக் கொண்டவனாக, உயிரற்ற பல உடல்களாலும் சூழப்பட்ட சுடுகாட்டினில், பறை மற்றும் சங்கு எழுப்பும் ஓசைகளின் பின்னணியில் அழகாக நடமாடும் இறைவன், தொடர்ந்து இடையறாத சிறப்புகளுடன் என்றும் விளங்கும் நாலூர் மயானத்தில் உறைகின்றான். அத்தகைய இறைவனைப் புகழ்ந்து பாடும் மனிதர்களை பாவங்கள் பற்றாது ஒழிந்துவிடும்.
பாடல் 3:
கல்லால் நிழல் மேவிக் காமுறு சீர் நால்வர்க்கு அன்று
எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்தைச்
சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே
விளக்கம்:
காமுறுசீர்=வேதங்களின் பொருளை புரிந்து கொள்வதில் தங்களுக்கு இருந்த ஐயங்களை தீர்த்துக் கொள்வதில் மிகுந்த விருப்பம் உடையவர்களாக விளங்கிய சனகாதி முனிவர்கள்; தொல்நெறி=பழமையான சிவநெறி; சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே; சிவபெருமானைத் தொழாத மனிதர்கள் நன்னெறிக் கண் சேராதார் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு அப்பர் பிரான் திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில் (6.50) அப்பர் பிரான் சிவபெருமானைத் தொழாத மாந்தர்கள் தீநெறிக்கண் சேர்கின்றனர் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் நான்காவது பாடலை நாம் இங்கே சிந்திப்போம். சேயான்=தொலைவில் உள்ளவன். தலத்து இறைவனின் திருநாமங்களில் ஒன்று, நேத்ர அர்ப்பணேஸ்வரர். ஆயிரத்தெட்டு என்ற எண்ணிக்கைக்கு குறைந்த மலருக்கு பதிலாக தனது கண்ணினையே நோண்டி திருமால் அர்ச்சனை செய்ததால், பெருமானுக்கு இந்த பெயர் வந்தது. அதனால் மகிழ்ந்த பெருமான், தான் வைத்திருந்த சக்ராயுதத்தை திருமாலுக்கு அருளினார். இந்த தலபுராண வரலாற்றினை நினைவூட்டும் வகையில் சக்கரம் மாற்கு ஈந்தான் என்று சிவபெருமானின் கருணைச் செயலை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சங்கரன் என்ற சொல்லுக்கு இன்பம் அளிப்பவன் என்று பொருள். சாமவேதத்தைச் சார்ந்த உபநிடதங்கள் இரண்டு, கேனோ உபநிடதம் மற்றும் சாந்தோக்ய உபநிடதம் என்பவையே அந்த இரண்டு உபநிடதங்கள். சந்தோக்ய உபநிடதத்தில் உள்ள மந்திரங்களை சொல்லிய பின்னர் சாமவேதம் ஓதுவது வழக்கம். பெருமானும் அவ்வாறு சாந்தோக்ய உபநிடத்தின் மந்திரங்களை சொல்லிய பின்னர், பெருமான் சாம வேத கீதங்களை இசைப்பது, சந்தோக சாமம் ஓதும் வாயான் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது சாந்தோக்ய உபநிடதத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் முதல் இருபத்திரண்டு காண்டங்கள் சாமகானத்தை எப்படி தியானம் செய்யவேண்டும் என்று விளக்குகின்றன. காஞ்சி மகா பெரியவர் ஒரு முறை, சந்தோக சாமம் ஓதும் வாயான் என்று பாடியது யார் என்ற கேள்வியை கேட்டு விட்டு, பின்னர் அவரே அதற்கு விடையை சொல்லி, சந்தோக சாமம் என்றால் என்ன என்று விளக்கினார்கள் என்று கூறுவார்கள்.
தூயானைச் சுடர்ப் பவளச் சோதியானைத் தோன்றிய எவ்வுயிர்க்கும்
துணையாய் நின்ற
தாயானைச் சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னைச் சங்கரனைச் சந்தோக
சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்துளானை வஞ்சனையால் அஞ்செழுத்தும்
வழுத்துவார்க்குச்
சேயானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே
திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்தும் கருத்து, பெருமானின் திருநாமத்தை சொல்லாத மாந்தர்கள் தொன்மையான சிவநெறிக்கு செல்லமாட்டார்கள் என்பது, நமக்கு அப்பர் பிரான் அருளிய (4.11.9) நமச்சிவாயப் பதிகத்தின் பாடலை நினைவூட்டுகின்றது. முதல்வனாகிய முக்கண்ணனின் நெறி சிறந்த நெறி மட்டுமன்றி மற்ற அனைத்து நெறிகளுக்கும் முன்னே தோன்றிய நெறி என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மேலும் அந்த நெறியினை அடைந்து பெருமானின் திருப்பாதங்களை அடையும் உயிர்களுக்கு என்றும் நன்மையே ஏற்படும் என்றும் கூறுகின்றார்.
முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே
திருவீழிமிழலை தலத்து பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்டதை போன்று திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் அனைத்து பாடல்களிலும், நாகேச்சரத்து பெருமானை சேராதார் நன்னெறிக்கண் சேரார் என்று அப்பர் பிரான் அறிவுரை கூறுகின்றார், இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். தீயவன் என்பதை தீ+அவன் என்று பிரித்து, பஞ்சபூதங்களில் ஒன்றான தீயாகவும் மற்ற நான்கு பூதங்களாகவும் இருக்கும் இறைவன் என்று பொருள் கொள்வது சிறப்பு. அணியான்=அருகில் இருப்பவன்; சேயவன்=தொலைவில் உள்ளவன் மாயவன் என்பதற்கு திருமால் என்று பொருள் கொண்டு, மாயவனை மறையவனை என்ற தொடருக்கு திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. இந்த பாடலில் அப்பர் பிரான் இறைவனை, மறையோர்களின் மந்திரன் தந்திரன் என்று கூறுகின்றார். தந்திரம் என்ற சொல்லுக்கு, வழிமுறைகள் என்றும் ஆகமங்கள் என்று இரண்டு பொருள்கள் கூறப்படுகின்றன. மறையோர்கள் தங்கள் மந்திரன் தந்திரன் என்று கூறுவதால், வேள்வி போன்ற சடங்குகளில் மந்திரங்களைச் சொல்லுகையில் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை குறிப்பதாக பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பல தேவாரப் பாடல்களில் மந்திரமும் தந்திரமுமாக இருக்கும் இறைவன் என்று கூறப்பட்டுள்ளது.
தாயவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை
உலகம் எல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை அழலவனை நிழலவனை
அறியவொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை
வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
நாலூர் மயானத்து நம்பானின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளும் அடியார்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் பயன்களை பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட, ஞானசம்பந்தர், இந்த இறைவனை நாடாத மனிதர்களின் நிலையினை இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
வேதங்களின் பொருளை புரிந்து கொள்வதில் தங்களுக்கு இருந்த ஐயங்களை தீர்த்துக் கொள்வதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்களாக விளங்கிய சனகாதி முனிவர்களுக்கு, கல்லால மரத்தின் நிழலில் பொருந்தி அமர்ந்தவனாக, அனைத்து அறங்களையும் விளக்கி இன்னருள் புரிந்த சிவபெருமான் நாலூர் மயானம் தலத்தினில் உறைகின்றான். நல்லவர் தொழுது புகழ்ந்து பாடும் வண்ணம் இந்த தலத்தினில் உறைகின்ற பெருமானின் திருநாமத்தை சொல்லாத மனிதர்கள், தொன்மையான சிவநெறியை சென்றடைய மாட்டார்கள்.
பாடல் 4:
கோலத்தார் கொன்றையான் கொல்புலித் தோலாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார் பால் சூழாவாம் தொல்வினையே
விளக்கம்:
கோலம்=அழகு; நீலத்தார்=நீல நிறம் பொருந்திய; தொல்வினை=எண்ணற்ற பழைய பிறவிகளாக தொன்று தொட்டு தொடர்ந்து வரும் சஞ்சித வினைகள்; இந்த பாடலில் மிகவும் பொருத்தமாக, சூலத்தான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பெருமான் மூவிலைச் சூலம் வைத்திருப்பதே, தனது அடியார்களின் தொல்வினைகளை முற்றிலும் அறுத்து எரிப்பதற்காக என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இரண்டாவது பாடலின் கருத்து, இங்கே மீண்டும் வலியுறுத்தப் படுகின்றது.
பொழிப்புரை:
அழகுடன் விளங்கும் கொன்றை மாலை அணிந்தவனும், எதிர்பட்ட விலங்குகளை கொல்லும் தன்மை உடைய புலியினை அடக்கி, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தவனும், ஆலகால விடத்தை தேக்கியதால் நீல நிறம் பொருந்திய கழுத்தினை உடையவனும், நெற்றியில் கண் உடையவனும், உலகத்தவர் பலரும் சென்று புகழ்ந்து தொழும் தன்மை உடையவனாக நாலூர் மயானம் தலத்தினில் உறைபவனும் ஆகிய பெருமானின் திருநாமத்தை, சூலத்தான் என்று அழைக்கும் அடியார்களின் தொல்வினைகள் முற்றிலும் அறுக்கப்பட்டு, அத்தகைய வினைகள் அந்த உயிர்களை சூழாத வண்ணம் பெருமான் அருள் புரிவான்.
பாடல் 5:
கறையார் மணி மிடற்றான் காபாலி கட்டங்கன்
பிறையார் வளர் சடையான் பெண்பாகன் நண்பாய
நறையார் பொழில் புடை சூழ் நாலூர் மயானத்தெம்
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்துமாம் இன்பமே
விளக்கம்:
மணி=நீலமணி; மிடறு=கழுத்து; நண்பு என்ற சொல் இங்கே அன்பு விருப்பம் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. தன் பால் மிகுந்த அன்பு கொண்டுள்ள உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நறையார்=தேன் மிகுந்த; கட்டங்கம்=மழுப்படை; நமது பாவங்களும், பாவங்களால் விளையும் துன்பங்களும், முந்திய பாடலில் கூறப்பட்ட வண்ணம் நீக்கப் பட்டால் நாம் அடைவது இன்பம் தானே. அந்த செய்தி தான் இங்கே உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
ஆலகால விடத்தை உட்கொண்டு தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையானும், தனது கையினில் பிரமகபாலம் ஏந்தி பலியேற்க செல்பவனும், கட்டங்கம் என்ற மழு ஆயுதத்தை ஏந்தியவனும், பிறைச் சந்திரன் வளரும் சடை உடையவனும், தன் பால் மிகுந்த அன்பு வைத்துள்ள பார்வதி பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், தேன் மிகுந்த மலர்களுடன் அழகாக விளங்கும் சோலைகள் சூழ்ந்துள்ள நாலூர் மயானத்தில் உறைகின்றவனும் ஆகிய பெருமானை, எனது இறைவன் என்று குறிப்பிட்டு புகழ்ந்து வணங்கும் அடியார்களுக்கு இன்பம் உண்டாகும்.
பாடல் 6:
கண்ணார் நுதலான் கனலாடு இடமாகப்
பண்ணார் மறைபாடி ஆடும் பரஞ்சோதி
நண்ணார் புரம் எய்தான் நாலூர் மயானத்தை
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நன்னெறியே
விளக்கம்:
நன்னெறி என்பது சரியை, கிரியை, யோகம் எனப்படும் தவநெறிகளைச் சார்ந்து, அத்தகைய தவத்தால் விளையும் ஞானத்தை குறிப்பிடுகின்றது. நண்ணார்=சிவநெறியை அடையாமல் பகைவர்களாக திரிபுரத்து அரக்கர்கள்; சிவநெறி என்பதை அன்பினை அடிப்படையாகக் கொண்டது. மற்ற உயிர்களையும் அன்புடன் அணுகாமல், அனைவருடன் பகைமை பாராட்டி, அவர்களை அழிக்கும் நோக்கத்துடன் பறக்கும் கோட்டைகளில் பல இடங்களுக்கு சென்ற திரிபுரத்து அரக்கர்களை, சிவநெறியை அணுகாதவர்கள் என்று இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கனலாடு இடமாக என்ற தொடரை, ஆடு இடம் கனலாக என்று மாற்றி அமைத்து பொருள் காண்பது சிறப்பாக உள்ளது. பெருமான் ஊழித்தீயின் இடையே நின்று நடமாடுவது இதனால் உணர்த்தப் படுகின்றது. தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடகளிலும் அப்பர் பிரான், பெருமான் ஊழித்தீயின் நடுவே நின்ற வண்ணம் பெருமான் நடனம் ஆடுவதை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலில், அப்பர் பிரான் (4.22.1) உயிர்களின் அறியாமையை அழிக்கும் நோக்கத்துடன் ஊழித்தீயின் நடுவே நின்று நடனம் ஆடுகின்றார் என்று குறிப்பிடுகின்றார். நறவம்=தேன்: நாறுதல்=நறுமணம் வீசுதல் துஞ்சடை இருள்=மரணத்திற்கு காரணமாகிய ஆணவமலம். ஆணவமலத்தின் காரணமாகத் தான், உயிர்கள் வினைகளைப் பெருக்கிக் கொண்டு, அந்த வினைப்பயன்களை அனுபவிக்க கணக்கற்ற பிறப்புகள் எடுக்க நேரிடுகின்றது, இறப்பே பிறப்புக்கு காரணம் என்பதால், நமது இறப்புக்கும் ஆணவ மலமே காரணம் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். ஆணவ மலத்தினை இருளுக்கு ஒப்பிடுவது சைவ சித்தாந்த மரபு. அந்த ஆணவ மலம் ஒடுங்க நடனம் ஆடுகின்றார் என்பதால், இருள் கிழியுமாறு ஆடுகின்றார் என்று ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ளது.
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னிச்
நஞ்சடை கண்டனாரைக் காணலா நறவ நாறு
மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடுமாறே
துன்னம் பெய் கோவணமும் என்று தொடங்கும் பதிகத்தின் (2.44) ஏழாவது பாடலில் தீயாடி என்று ஞானசம்பந்தர் சிவபிரானை குறிப்பிடுகின்றார். எவராலும் வெல்லமுடியாத கூற்றுவன் என்பதால் மாறாத கூற்றுவன் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். தணியாத தீ, ஆறாத தீ என்று ஊழித்தீ குறிப்பிடப்படுகின்றது. ஊழித்தீயில் நின்று ஆடும் பெருமானை தீயாடி என்று அழைக்கின்றார். கூறாத நாக்கள் என்றால் பேசாத நாக்கள், அதாவது ஊமையின் நாக்குகள்.
மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாள் எல்லாம் கூறாத நாக்களே
அப்பர் பிரானும் காளத்தித் திருத்தாண்டகத்தில் (6.8.4), தன் வினைகளை எல்லாம் அழித்து ஒழிக்கும் பெருமானை தீயாடி என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு தீயாடி என்றும் ஊழித்தீயில் நின்று ஆடுபவர் என்றும் சிவபிரானை குறிப்பிடப்படுவதன் மூலம், அவர் சங்கார காரணர் என்பதும், சங்கார காரணராகிய அவரே (சங்காரத்தில் அனைத்து உயிர்களும் அழித்து விடுவதால்) மறுபடியும் தோற்றத்திற்கு காரணமாக இருக்கும் நிலையும் நமக்கு உணர்த்துப் படுகின்றது. சுறா வேந்தன்=மீன் கொடியை உடைய மன்மதன். ஏவலம்=அம்பு செலுத்தி வெற்றி கொள்ளும் ஆற்றல். மன்மதனின் காம பாணத்திற்கு அனைவரும் வயப்படும் தன்மை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
செற்றான் காண் என் வினையைத் தீயாடி காண் திருவொற்றியூரான்
காண் சிந்தை செய்வார்க்கு
உற்றான்காண் ஏகம்பமேவினான் காண் உமையாள் நற்கொழுநன் காண்
இமையோரேத்தும்
சொற்றான் காண் சோற்றுதுறையுளான் காண் சுறாவேந்தன் ஏவலத்தை
நீறா நோக்கக்
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என்
கண்ணுளானே
பொழிப்புரை:
கண் பொருந்திய நெற்றியை உடையவனும், ஊழித்தீயினைத் தான் நடனமாடும் அரங்காகக் கொண்டவனும், பண்ணுடன் பொருத்தி வேதங்களை ஓதுபவனும், நடனம் ஆடுபவனும், மென்மையான சோதியாக விளங்குபவனும், சிவநெறியை அணுகாமல் அனைவர்க்கும் பகைவர்களாகத் திகழ்ந்த திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினை எய்தி எரித்து அழித்தவனும், ஆகிய பெருமான் உறைகின்ற தலம் நாலூர் மயானமாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த நாலூர் மயானம் தலத்தினை நெருங்கி அடைந்து, இறைவனைச் சாராத மாந்தர்கள் நன்னெறியைச் சார மாட்டார்கள்.
பாடல் 7:
கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான்
பெண் பாவு பாகத்தான் நாகத் தோல் ஆகத்தான்
நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர் தானே
விளக்கம்:
நாகம்=யானை; எண்பாவு=எண்ணத்தில் முற்றிலும் மூழ்கிய; கண் பாவு=கண்ணிலிருந்து பரவிய; பாவு=பரவிய; மன்மதனை எரித்தழித்த பெருமான், மகிழ்ந்தான் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தனது தவத்தினை கலைக்க முயற்சி செய்தவன் என்ற காரணத்தினால் மட்டுமே இறைவன் மன்மதனை அழிக்கவில்லை. தவம் புரிவோர்களுக்கு இடையூறு செய்து அவர்களின் தவத்தைக் கலைப்பது மிகவும் தவறான செயல் என்பதை உணர்த்தும் வண்ணம் இறைவன் செய்த திருவிளையாடல் என்பதால் மகிழ்ந்தான் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. நண்பார் குணத்தோர்கள் என்று தலத்து மாந்தர்களை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அன்பின் தன்மையால் விளைவது நட்பு; அன்பே சிவம் என்ற கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்து வந்த மாந்தர்கள் என்று குறிப்பிடுகின்றார். எண்பாவு=எண்ணங்களில் நிறைந்த; ஏலாது=வாராது; முதல் இரண்டு பாடல்களில் குறிப்படப்படும் மறுமை மற்றும் இம்மையில் நாம் அடையவிருக்கும் பயன்கள் ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில் உணர்த்தப் படுகின்றன. மெய்ஞானம் அளிக்கும் பெருமான் என்பதால், மறுமைப் பயனை முதலில் குறிப்பிட்டு, பின்னர் இம்மைப் பயனைக் குறிப்பிடும் நயத்தை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
தனது நெற்றிக் கண்ணிலிருந்து வேகமாக வெளிப்பட்ட தீப்பொறிகள் கொண்டு பண்டைய நாளில் கோபம் கொண்டவனாக தனது தவத்தினைக் கலைப்பதற்கு முயற்சி செய்த மன்மதனை எரித்து அழித்து மகிழ்ந்தவனும், பெண்ணின் உருவம் படர்ந்த திருமேனியை உடையவனும், தன்னை எதிர்த்து வந்த மதயானையை அடக்கி அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நாலூர் மயானம் தலம், அன்பே சிவம் என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி வாழ்ந்து வந்த சான்றோர்கள் வாழ்ந்த தலமாகும். இத்தைகைய சிறப்பு வாய்ந்த நாலூர் மயானம் தலம், அந்த தலத்தினில் உறையும் பெருமான், பற்றிய சிந்தனைகள் நிறைந்த எண்ணம் உடையவர்களை, எந்த விதமான இடர்களும் சென்று அடையா.
பாடல் 8:
பத்துத் தலையோனைப் பாதத்து ஒரு விரலால்
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான்
நத்தின் ஒலி ஓவா நாலூர் மயானத்து என்
அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே
விளக்கம்:
இடர்கள் வார என்று முந்திய பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தர், துன்பங்களும் விலக்கப்படும் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார். நத்து=சங்கு; அத்தன்=தந்தை; அத்தன், ஆத்தான், ஆத்தாள், அத்தை என்பன தந்தை தாயினை குறிக்கும் சொற்களாக பண்டை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. ஆத்தான் என்ற சொல் சிவபெருமானைக் குறிப்பதற்கு சுந்தரரால் வலிவலம் தலத்து பாடல் (7.67.4) ஒன்றினில் கையாளப் பட்டுள்ளது. சிவபெருமானின் புகழைச் சொல்லுவதில் தனது நாக்கு என்றும் மாறுபடாத வண்ணம் ஒரே தன்மையில் பொருந்தியுள்ளது என்று குறிப்பிடும் சுந்தரர், தனது உள்ளத்தில் சிவானந்த அமுதம் ஊற்றாக பொங்கி எழுந்து நிறைந்துள்ளது என்று கூறுகின்றார். அத்தன் என்ற சொல் ஆத்தான் என்று நீண்டுள்ளது என்றும், ஆத்தன் (ஆப்தன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்) ஆத்தான் என்று நீண்டுள்ளது என்றும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப்படுகின்றது. சோத்தான்=பலராலும் தோத்திரம் (ஸ்தோத்ரம்) செய்யப்பட்டு வணங்கப் படுபவன். சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சுடர்களிலும் பெருமான் பொருந்தி நின்று அவற்றை இயக்கும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. மாத்தான்=அனைவரிலும் பெருமையுடன் பெரியவனாக விளங்குபவன்; பஃறேவர்கள்=பல தேவர்கள்;
நாத்தான் தன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம்
பொதிந்து ஊறும்
ஆத்தானை அடியேன் தனக்கு என்றும் அளவிறந்த பஃறேவர்கள்
போற்றும்
சோத்தானைச் சுடர் மூன்றிலும் ஒன்றித் துருவி மால் பிரமன்
அறியாத
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம் தன்னில் வந்து
கண்டேனே
பொழிப்புரை:
பத்துத் தலைகள் உடைய அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்து வேறோர் இடத்தில் வைக்க முயற்சி செய்த போது, தனது பாதத்து ஒரு விரலை கயிலை மலையின் மீது ஊன்றி, அந்த மலையின் கீழே இராவணனின் உடலை நெருக்கி அரக்கனை வருத்தியவன் சிவபெருமான்; பின்னர், அரக்கன் இறைஞ்சி சாமகானம் பாட. அவனுக்கு எண்ணற்ற வாழ்நாளும் வாளும் கொடுத்து அருள் புரிந்த கருணையாளன் சிவபெருமான்; அவ்வாறு ஆற்றலும் கருணையும் ஒருங்கே கொண்டுள்ள பெருமான், சங்குகள் இடைவிடாது மங்கல ஒலியை எழுப்ப, நாலூர் மயானம் தலத்தில் உறைகின்றான். உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாக இருந்து காப்பாற்றும் இறைவனின் திருவடிகளை நினைத்து போற்றும் அடியார்களை துன்பங்கள் அணுகா.
பாடல் 9:
மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய்
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே
விளக்கம்:
வளர் எரி என்று மேலும் மேலும் நீண்டு கொண்டிருந்த தழற்பிழம்பு என்று திருமால் மற்றும் பிரமனின் எதிரே தோன்றிய தன்மையை குறிப்பிடுகின்றார். அவர்கள் இருவரும் நெடுந்தூரம் முறையே ஆழ்ந்தும் பறந்தும் சென்ற போதிலும் அவர்களால் காணமுடியாத தன்மை, தங்களின் எதிரே தோன்றிய தீப்பிழம்பு மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருந்தது போன்ற உணர்வினை அவர்களுக்கு ஏற்படுத்தியது என்பதை குறிப்பிடும் முகத்தான், வளரெரி என்று கூறினார் போலும்; நேட=நாடி தேடிச் சென்ற; நாலோடும்=நான்கு வேதங்களும்; முதல் எட்டு பாடல்களில் உணர்த்தப் பட்ட செய்தியை அறிந்து கொண்ட நாம், பெருமானை நெய்யும் பாலும் கொண்டு நீராட்டி மகிழ வேண்டும் என்று இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார்.
பொழிப்புரை:
திருமாலும் நான்முகனும் தங்களது ஆற்றலை அடுத்தவருக்கு உணர்த்தும் நோக்கத்துடன் தங்களின் முன்னர் எழுந்த நீண்ட தீப்பிழம்பின் அடியையும் முடியையும் தேடிச் சென்ற போது அவர்கள் இருவரும் தனது அடியையோ முடியையோ காண முடியாத வண்ணம் நெடிது உயர்ந்தவன் சிவபெருமான்; நெடுந்தொலைவு அவர்கள் இருவரும் அகழ்ந்தும் பறந்தும் சென்று தேடிய போதிலும், அவர்கள் இருவராலும் காண முடியாத தன்மை, தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பு மேலும் மேலும் வளர்ந்து கொண்டு இருந்ததோ என்ற உணர்வினை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இவ்வாறு அவர்கள் இருவரிலும் மேன்மையானவனாக விளங்கிய பெருமான், நான்கு வேதங்களையும் அந்த வேதங்கள் அழியாமல் காக்கும் பொருட்டு ஆறு அங்கங்களையும் அருளிய பெருமான், நாலூர் மயானம் தலத்தினில் உறைகின்றான். அந்த இறைவனை, நாம் பாலும் நெய்யும் கொண்டு நீராட்டி வழிபடுவோமாக.
பாடல் 10:
துன்பாய மாசார் துவராய போர்வையார்
புன்பேச்சு கேளாத புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பால் சிவாய எனா நாலூர் மயானத்தே
இன்பால் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே
விளக்கம்:
இந்தப் பாடலில் முதல் இரண்டு அடிகளில் சமணர்களையும் புத்தர்களையும் குறிப்பிடும் சம்பந்தர் அவர்களது புன்மையான பேச்சுகளை கேட்கவேண்டாம் என்று அறிவுறுத்துகின்றார். அவர்கள் போல், பெருமானை இழித்தும் வெறுத்தும் பேசுவதைத் தவிர்த்து, நட்புடன் சிவனை அணுக வேண்டும் என்று நயமாக குறிப்பிடுகின்றார். இறைவன் பால் அன்பு பாராட்டி சிவாய என்ற பஞ்சாக்கர மந்திரத்தை சொல்லும் அடியார்களின் துன்பங்களை தீர்த்து, அவர்களுக்கு இன்ப வடிவினனாக பெருமான் இருப்பார் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்களில், அருளாளர்கள் நம்மை பஞ்சாக்கர மந்திரத்தை சொல்லி பயனடையுமாறு பணிக்கின்றனர். தலத்து இறைவனின் திருநாமம் ஞானபரமேஸ்வரர்; தலத்து அம்பிகையின் திருநாமம் ஞானாம்பிகை. இந்த திருநாமங்கள் ஞானம் அருள்பவர்கள் பிராட்டியும் பெருமானும் என்பதை உணர்த்துகின்றன. அதற்கேற்ப, இந்த தலத்தின் மீது அருளப்பட்ட இந்த பதிகத்தின் பாடலில், சிவாய என்ற பஞ்சாக்கர மந்திரம், உயிர்களுக்கு மெய்ஞானத்தை அருளும் திருமந்திரம், உணர்த்தப்படுவது மிகவும் பொருத்தமாக உள்ளது.
பஞ்சாக்கர மந்திரமே பெருமானின் திருநாமம் என்று திருஞானசம்பந்தர், காதலாகிக் கசிந்து என்று தொடங்கும், நமச்சிவாயப் பதிகத்தின் பாடல்களில் கூறுகின்றார். இந்த பாடல்களில், நமச்சிவாய மந்திரம் நம்மை நன்னெறிக்கு உய்ப்பது என்றும், இனிய உணர்வினைத் தருவது என்றும், வானவர் போன்று மேலான நிலைக்கு உயர்த்துவது என்றும், பல நன்மைகள் புரிந்தும் துன்பங்களைக் களைந்தும் இனியவாக இருப்பது என்றும், அனைத்து தீங்குகளையும் நீக்குவது என்றும், நமது உயிர்களுடன் பிணைந்துள்ள வலிமை வாய்ந்த வினைகளை சிந்த வைத்து மேலும் செல்வம் அளிப்பது என்றும், பெருமானைச் சூழ்ந்துள்ள உருத்திர கணங்களுடன் நம்மை சேர்த்துவிடும் தன்மை வாய்ந்தது என்றும் பஞ்சாக்கர மந்திரம் உயிர்களுக்கு உதவும் தன்மையை குறிப்பிடுகின்றார்.
சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தின் பாடல்களில் அப்பர் பிரான், நமச்சிவாய மந்திரம் எப்போதும் நமக்கு நற்றுணையாக, தோன்றாத் துணையாக நம்முடன் இருக்கும் என்றும், நமது நாவினுக்கு சிறந்த அணிகலன் என்றும், நமது பாவங்களை வேரோடு களைந்துவிடும் என்றும், துன்பங்களை எதிர்கொள்ளும் போது அந்த துன்பங்களை விலக்கி நமது நடுக்கத்தை கெடுக்கும் என்றும், நமக்கு வரும் தீங்குகள் அனைத்தையும் நீக்கிவிடும் என்றும், உயர்ந்த குலத்தவர்கள் அடையும் நலன்களை நமக்கு அளிக்கும் என்றும், இந்த மந்திரத்தை நாடிச் சொல்லும் அடியார்களை இந்த மந்திரம் தானே நாடி வந்து உதவிகள் செய்யும் என்றும், நமது அறியாமையை நீக்கி ஞானம் தரும் என்றும், நன்னெறி காட்டி நம்மை நல்வழிப்படுத்தும் என்றும் கூறுகின்றார்.
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடலில் (3.09.09) நக்கராக, அதாவது, மிகவும் எளியவராக விளங்கும் பெருமானின் திருநாமத்தை சொல்லும் அடியார்கள் நாடு போற்றும் நல்லவராக திகழ்வார்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். சொக்கம்=ஒரு வகையான கூத்து. பிரமன் மேலே அன்னமாக பறந்து சென்றதை, பல அண்டங்கள் கடந்து தேடியதாகவும், திருமால் பன்றி உருவம் எடுத்து கீழே அகழ்ந்து தோண்டியதை மண்ணுலகம் மற்றும் பாதாளம் தாண்டியதை குறிப்பிட்டு மண் தலம் என்று கூறுகின்றார். மண் மற்றும் தலம் என்ற சொற்கள் மண்டலம் என்று இணைந்தன. நல்லவர் என்ற சொல்லுக்கு சிவபுண்ணியம் செய்தவர் என்று அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர்.
திக்கமர் நான்முகன் மால் அண்டம் மண்டலம் தேடிட
மிக்கமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார்
சொக்கமது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும்
நக்கர் தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே
நமச்சிவாய மந்திரத்தை சொல்லியவாறு திருநீறு அணிந்து கொண்டால் தீயில் இடப்பட்ட விறகு போன்று, நமது வினைகளும், நோயும் வெந்து அழிந்துவிடும் என்று அப்பர் பிரான், ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.77.4) கூறுகின்றார்.
சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
அந்தரத்து அமரர் பெம்மான் நல் வெள்ளூர்தியான் தன்
மந்திர நமச்சிவாயவாக நீறு அணியப்பெற்றால்
வெந்து அறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகு இட்டன்றே
இந்த பாடலில் அப்பர் பிரான், நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லியவாறே திருநீறு அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவது நமக்கு, பாதிரிப்புலியூர் பதிகத்தின் (4.94) ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. சிவபிரானே, உனது அருளால் உனது திருநாமத்தை இடைவிடாமல் சொல்லும் எனக்கு, உனது நாமத்தைச் சொல்லி திருநீறு அணியும் எனக்கு, நீ சிவகதி தரவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவதை நாம் உணரலாம். பொலிதல் என்றால் அழகுடன் விளங்குதல் என்று பொருள். சிவபிரானின் நாமத்தை நாம் சொல்வதால் நமது வாய் அழகு பெற்று விளங்கும் என்ற கருத்தும் இங்கே கூறப்படுகின்றது. மனம், மொழி, மெய்களால் (உடலினால்) இறைவனை வழிபடவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த பாடலில் மூன்று வகையான வழிபாடுகளும் சொல்லப்பட்டுள்ளன. மனத்தால் நினைந்து, வாயினால் அவனது நாமத்தை சொல்லி, உடலில் திருநீறு அணிந்து சிவபிரானை வழிபடுதல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தெரிதல் என்பதற்கு ஆராய்தல் என்ற பொருள் கொண்டு, சிவபிரானால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் சிவபிரானது தன்மைகளை ஆராய்ந்து தெரிந்து கொண்டு அவனது திருநாமங்களை இடைவிடாது பல பதிகங்கள் மூலம் எடுத்துரைத்த செய்கையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவார்கள்.
கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உன்றன் நாமம் பயின்றேன் உனது அருளால்
திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே
நாம் இளைய வயதினில் சொல்கின்ற நமச்சிவாய மந்திரமே, பின்னாளில் நமக்கு சிறந்த சேமிப்பாக உதவி புரியும் என்று அப்பர் பிரான் தில்லைப் பதிகத்தின் பாடல் (4.80.4) ஒன்றினில் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் சிவபிரானின் பெயர் நந்தி என்று அப்பர் குறிப்பிடுவதை நாம் காணலாம். நந்துதல் என்றால் அழிதல், குறைதல் என்று பொருள். நமது வினைகளை நந்தச் செய்யும் ஆற்றல் படைத்த காரணத்தால் சிவபெருமானை நந்தி என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். திருஞானசம்பந்தரும், நமச்சிவாயத் திருப்பதிகத்தில் நந்தி நாமம் நமச்சிவாயவே என்று கூறுகின்றார்; திருமூலரும் பல இடங்களில் சிவபெருமானை நந்தி என்று அழைக்கின்றார். தனது வினைகளை அடியோடு களைந்து, பிறவிப் பிணியினை தீர்த்து தனது அச்சத்தை போக்கிய சிவபெருமானை, வினைகளை அழித்தவன் என்ற பொருள் பட நந்தி என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது அல்லவா. உந்தி=கொப்பூழ்.
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்றெண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே
நமது வாழ்வில் தேவையான சமயத்தில் பயன்படக்கூடிய செல்வம் நமச்சிவாய என்னும் சொல் என்பதை தான் உணர்ந்ததால், தனது எதிர்காலம் பற்றிய அச்சம் ஏதும் இல்லாமல் தான் இருப்பதாக கூறும் அப்பர் பிரான் அவ்வாறே நாமும் பயப்படாமல் இருப்பதற்கு நமக்கு அந்த மந்திரத்தை கற்றுக்கொடுப்பதை இங்கே உணரலாம். வைச்ச பொருள்=வயது முதிர்ந்த காலத்திலும் உடல் வலிமை குன்றிய காலத்திலும் பயன்படுவதற்காக சேமிப்பாக நாம் வைத்துள்ள பொருள். அருளாளர்கள் பொதுவாக பயப்படுவது அடுத்த பிறவி ஒன்று எடுக்க நேரிடுமோ என்பது தான். பஞ்சாக்கர திருநாமத்தை தான் உச்சரித்து வந்ததால், தனக்கு அந்த பயம் நீங்கியது என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.
இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் நமது மனதினில் சிவபெருமானைப் பற்றிய சிந்தனைகளை அடக்கி, சித்தம் ஒன்ற சிவாயநம என்ற மந்திரத்தை கூறினால், சிவபெருமானின் அருளைப் பெறலாம் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறுகின்றார். பேதை=பேதமையால் மயங்கிக் கிடத்தல். பேதமை=அறியாமை. மொய்த்த=நிறைந்த, அடர்ந்த; ஆணவ மலமாகிய அறியாமை நமது மனத்தினை மறைத்து இருப்பதால், உண்மையான மெய்ப் பொருளாகிய சிவபிரானிடத்தில் நாட்டம் இல்லாமல் நாம் இருக்கின்றோம். சிவபிரானை உணரும் அறிவு மட்டுமே அறிவாக அப்பர் பிரானால் கருதப்படுவதால், அவ்வாறு இல்லாத நெஞ்சத்தை அறிவிலாத பேதை நெஞ்சம் என்று கூறுகின்றார். உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நிலையற்றவை. என்றேனும் ஒரு நாள் அழிந்து விடக் கூடியவை. நமது உடலில் உயிர் பொருந்தியிருக்கும் வரை அவை அழியாமல் இருந்தாலும், உயிர் பிரியும் போது எடுத்துச் செல்ல முடியாதவை. ஆனால் சிவபிரானை எப்போதும் நினைத்து அந்த நினைவினால் நாம் பெறுகின்ற ஞானம் வீடுபேற்றினை அடைவதற்கு வழி வகுப்பதால், அது தான் அழியாத சேமிப்பாக கருதப் படுகின்றது. மொய்த்த கதிர் போல்வார் அவர் பாதிரிப்புலியூர் அத்தன் என்பதற்கு, நிறைந்த ஒளியினை உடைய சந்திரனின் கிரணங்கள் போன்று குளிர்ந்த தன்மை கொண்ட (உயிர்கள் பால் கொண்ட கருணையால்) பாதிரிப்புலியூர் தலைவன் சிவபிரான் என்றும் பொருள் கொள்ளலாம்.
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கின் அல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே
இறக்கும் தருவாயில், பெரும்பாலோருக்கு புலன்கள் தங்களது செயலிழந்து நிற்க, மெல்ல மெல்ல உணர்வுகள் இழக்கும் நிலை ஏற்படும். நமது உடல் பூரண நலத்துடன் இருக்கையிலே, நாம் சிவபிரானை நினைப்பதற்கு அவனது அருள் தேவைப் படுகின்றது. அவ்வாறு இருக்கையில், நமது இறுதிக் காலத்தில், உடலும் மனமும் நம்முடன் ஒத்துழைக்காத போது, இறைவனை நினைப்பதென்பது மிகவும் அரிதான செயலாக மாறிவிடுகின்றது. அதனால் தான், உடலும் மனமும் தனக்கு வஞ்சனை செய்யும் இறுதி நாளில், இறைவனின் நினைவு தோன்றவேண்டும் என்றால் அவனது அருள் வேண்டும் என்று நாகைக் காரோணம் தலத்து பதிகத்தின் பாடலில் (4.103.3) அப்பர் பிரான் வேண்டுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் உணரலாம். காசி மற்றும் முதுகுன்றம் (விருத்தாசலம்) தலங்களில் இறக்கும் தருவாயில் உள்ள உயிர்களுக்கு, அம்பிகை அவர்களது காதினில் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்வதால் தான் அந்த உயிர்கள் முக்தி அடைய முடிகின்றது என்று பெரியோர்கள் கூறுவார்கள். எனவே தான், தான் இறக்கும் சமயத்தில் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லும் பேறு தனக்கு வாய்க்க வேண்டும் என்றும் அப்பர் பிரான் வேண்டுகின்றார். இத்தகைய வேண்டுகோள் அப்பர் பிரானால் பல பாடல்களில் விடுக்கப் பட்டுள்ளது.
தூமென் மலர்க்கணை கோத்துத் தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக் காரோண நின்
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்
சாம் அன்று உரைக்கத் தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே
திருமூலரும் ஒரு திருமந்திரப் பாடலில், இறக்கும் தருவாயில், சிவபெருமானை நினைத்து அவனது திருப்பாதங்களே சரணம் என்று சொல்லி வாழ்த்தினால், இறைவனது அருள் நமக்கு நிச்சயமாக உண்டு என்று கூறுகின்றார்.
நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று
துஞ்சும் பொழுது உன் துணைத் தாள் சரண் என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே
பாலைத்துறை பதிகத்தின் பாடலில் (5.51.6) அப்பர் பிரான் சிவாய என்று பெருமானின் திருநாமத்தை மறவாது சொல்லும் அடியார்கள் உய்வினை அடைந்து மறுமையில் நிலையாக தங்கி பேரின்பம் அடைவதற்காக, அழகு மிகுந்த முக்தி உலகினை பெருமான் படைத்தான் என்று கூறுகின்றார். விண்ணவர்கள் பெருமானைப் பணிந்து புகழ்ந்து வணங்குவதை அறியும் மனிதர்கள், பெருமானின் பெருமையை உணர்ந்து வியப்பு அடைகின்றனர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத் துறையரே
நல்லம் தலத்தின் மீது அருளிய பாடலில், தம்மால் இயன்ற அளவு சிவாயநம என்று கூறினால், வினைப் பகைகளையும், பூதங்களாக நம்மை ஆட்டுவிக்கும் பொறிகளிலிருந்தும் விடுதலை பெறலாம் என்று அப்பர் பிரான் (5.43.6) கூறுகின்றார். நம்மை வென்று, உலகப் பொருட்களின் மாயையில் நம்மை ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் பிறப்பிறப்புச் சுழற்சியில் ஆழ்த்துவதே வினைகளின் நோக்கம் என்பதால், நம்மை வெற்றி கொண்டு மயக்கத்தில் ஆழ்த்தும் வினைகள் என்பதை உணர்த்தும் வண்ணம், வெல்ல வந்த வினைப்பகை என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும்
வல்லவாறு சிவாயநம என்று
நல்லம் மேவிய நாதன் அடி தொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே
நமச்சிவாய மந்திரத்தை தூல பஞ்சாக்கரம் என்று கூறுவார்கள். ந என்ற எழுத்து திரோதான மலத்தையும், ம என்ற எழுத்து ஆணவம் முதலான மலத்தையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், சி என்ற எழுத்து சிவத்தையும் வ என்ற எழுத்து சிவனின் அருளாகிய சக்தியையும் குறிக்கும். உயிர்க்கு தனியாக எந்த குணமும் இல்லாததால், உயிர் சார்ந்ததன் வண்ணமாகத் திகழும். ய என்ற எழுத்தால் குறிக்கப்படும் உயிர், ஒரு பக்கத்தில் மலங்களாலும் மறு பக்கத்தில் சிவத்தாலும் சூழப்பட்டுள்ளது. சிவத்தைச் சென்று அடைய வேண்டும் என்று உயிர் விரும்பினாலும், அவ்வாறு நிகழாதவாறு மலங்கள் உயிரைத் தடுக்கின்றன. பிறப்பு மற்றும் இறப்பினை விளைவிக்கக் கூடிய பாசம் ஒரு புறம் இழுக்க, முக்தி அளிக்கக்கூடிய சிவத்தைச் சார வேண்டும் என்று உயிர் விரும்ப, உயிருக்கும் பாசங்களுக்கும் இடையே ஒரு போராட்டம் நடைபெறுகின்றது. பாசத்தை வெல்லவேண்டும் என்று விரும்பும் உயிர்கள் ஐந்தெழுத்தை ஓதி, இறைவனின் துணையுடன் பாசத்தை வெல்லலாம். இதனை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (5.59.1) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும் உயிர்களின் மனதில் சிவனும் அவனது அருட்சக்தியும் உறைந்திருப்பார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும்
ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்கு
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறைவனுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பு மாறுவதில்லை. தொடர்ச்சியாக, அவன் இறைவன், நாம் அவனுக்கு அடியான் என்று உள்ள நிலையினை மறவாமல், தினமும் காலையிலும் மாலையிலும் அஞ்செழுத்து ஓதி வழிபட்டால், நாம் இறைவன் மீது வைத்துள்ள அன்பு அதிகமாகும் என்று கூறும் அப்பர் பிரானின் பாடல் (4.70.5) நனிப்பள்ளி பதிகத்தில் உள்ள பாடலாகும்.
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே
அஞ்செழுத்து ஓதி நாளும் அரனடிக்கு அன்பதாகும்
வஞ்சனைப் பால் சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சு அமுது ஆக்குவித்தான் நனிப்பள்ளி அடிகளாரே
நமச்சிவாய மந்திரத்தை சொல்பவர் யாராக இருந்தாலும், தங்களது அச்சத்தை நீக்கும் தவநெறியை சார்கின்றனர். இவ்வாறு தங்களது வாழ்க்கையினை செம்மையாக அமைத்துக் கொண்டுள்ள அடியார்கள், தங்களின் பிறவிப்பிணி நீக்கப் படுவதால், அவர்கள் மீண்டும் பிறவி எடுத்து வாழ்வது என்பது மிகவும் அரிய செயலாக மாறிவிடுகின்றது என்று அப்பர் பிரான் பாடலை (5.97.22) இங்கே சிந்திப்பதும் பொருத்தமாக உள்ளது. இமைத்து நிற்பது=வாழ்வது; மீண்டும் பிறப்பெடுத்து வாழ்வது; நமச்சிவாய மந்திரம் பிறவிப் பிணியினை அறவே நீக்கும் என்ற உபதேசம் இங்கே வழங்கப்படுகின்றது. நமச்சிவாய மந்திரத்தை சொல்வதே தவநெறி என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். கண்கள் இமைத்து வாழ்வது மனிதர்களின் அடையாளங்களில் ஒன்று என்பதால் மீண்டும் மனிதனாக பிறப்பது என்ற நிலையினை இமைத்து நிற்பது என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
நமச்சிவாய என்பார் உளரேல் அவர்
தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையன் ஆகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே
நேர்ந்தொருத்தி என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (6.93.10) அப்பர் பிரான், நமச்சிவாய மந்திரத்தை தியானிக்கும் அடியார்கள் அகன்ற சிவலோகத்தையும் ஆளலாம் என்று கூறுகின்றார். மேலும் இந்த பிறவியில் நமக்கு வாய்த்துள்ள பல்வேறு உறவினர்களும் நிலையான உறவு அல்ல என்பதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. எனவே இந்த உயிருக்கு நிலையான உறவாக, அனைத்துப் பிறவிகளிலும் திகழும் பெருமானை நமது நிலையான உறவாக கருதி அவரை போற்றி வணங்கி மகிழ வேண்டும் என்று உணர்த்துகின்றார். திளைத்தல்=நட்பு கொண்டு விளையாடி மகிழ்தல்; இருவிசும்பு= சிவலோகம்
தந்தையார் தாயார் உடன் பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர்
தாம்தாம் ஆரே
வந்தவாறு எங்ஙனே போமாறேதோ மாயமாம் இதற்கு ஏதும்
மகிழ வேண்டா
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக்கேண்மின் திகழ்மதியும் வாளரவும்
திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில்
இருக்கலாமே
சமணத் துறவிகளால் தவறான வழியில் செலுத்தப் பட்ட மகேந்திரவர்ம பல்லவன், தன்னை இழுத்து வருமாறு கட்டளையிட்டான் என்பதை, பல்லவ மந்திரிகளின் வாய்மொழியாகக் கேட்ட அப்பர் பிரான், தான் பல்லவ நாட்டின் குடிமகன் அல்ல என்பதை உணர்த்தும் வண்ணம், நாமார்க்கும் குடியல்லோம் என்று வீரமுழக்கம் இட்டு, அவ்வாறு தொடங்கும் புரட்சிக் கவியை பாடிய அப்பர் பிரான், அந்த பதிகத்தில் (6.98.4) நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டவர்கள் என்று கூறுகின்றார். செறுவார்= பகைவர். பொன்னிதழி=பொன்னின் நிறத்தினை உடைய கொன்றை மலர். நறவு=தேன். தார்= மாலை. சுறவம்=மீன். சுறவக் கொடியான்=மீன் கொடி உடைய மன்மதன். மன்மதனை எரித்த கண்களைக் கொண்ட சோதி வடிவினானான சிவபிரானுடன் தொடர்பு கொண்டமையால் தனக்குத் துன்பம் அளிப்பவர் சிவபிரானால் அழிக்கப்படுவார்கள் என்பதையும் இங்கே குறிப்பால் உணர்த்துவதை உணரலாம். சிவபெருமானுடன் தொடர்வு உற்றோம் என்று அப்பர் பிரான் கூறுவது, தான் மீளா அடிமையாக மாறி அவருக்கு திருப்பணி செய்யும் நிலையை. இந்த நிலை பதிகத்தின் முதல் பாடலில் உணரத்தப் பட்டுள்ளது. உருத்திர பல் கணத்தோர்=சிவவேடம் தாங்கிய சிவனடியார்கள்.
உறவாவார் உருத்திரபல்கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு
கீளுளவாம் அன்றே
செறுவாரும் செறமாட்டார் தீமை தானும் நன்மையாய்ச் சிறப்பதே
பிறப்பில் செல்லோம்
நறவார் பொன் இதழி நறுந்தாரோன் சீரார் நமச்சிவாயச் சொல்ல
வல்லோம் நாவால்
சுறவாரும் கொடியானைப் பொடியாக்கண்ட சுடர்நயனச் சோதியையே
தொடர்வுற்றோமே
சிவவேடத்தை உடைய சிவனடியார்கள் அனைவரும் எமக்கு உறவினர் ஆவார்கள். கீளும் கோவணமுமே யாம் உடுப்பன ஆகும். எம்மிடம் வேறு பொருள் ஏதும் இல்லாமையால், பகைவரும் எம்மீது கோபம் கொள்ளமாட்டார்கள். சிவபெருமானின் அடியார் என்பதால், எம்மை அணுகும் தீமைகளும் நன்மையாக மாறிவிடும்; மேலும் சிவபெருமானது அருளால் பிறவிப்பிணி நீங்கப்பெற்று, மீண்டும் மற்றுமோர் பிறவியில் செல்லக்கூடிய நிலை எமக்கு இல்லை. தேன் நிறைந்ததும், பொன்னின் நிறத்தினை உடையதும் ஆகிய கொன்றை மலரை மாலையாக அணியப் பெற்ற சிவபெருமானின் சிறப்பு வாய்ந்த திருநாமமாகிய நமச்சிவாய என்ற சொல்லை எங்களது நாவார சொல்ல வல்ல நாம், மீன் கொடியினை உடைய மன்மதனைத் தனது நெற்றிக்கண் சுடரால் எரித்த, சோதி வடிவினானாகிய சிவபெருமானிடம் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை. இந்த பாடல் தன்னை அழைத்துச் செல்ல வந்த பல்லவ நாட்டு அமைச்சர்களுக்கு அப்பர் பிரான் அளித்த விடையாகும்.
ஐம்புலன்கள் சேட்டை செய்து உயிரினுக்கு கேடு விளைவிக்காத வண்ணம் அவைகளை அடக்கி காவலில் வைத்து, மனதினில் கலக்கம் ஏதுமின்றி சிவாயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தை தியானிப்பதன் விளைவாக, சிந்தனையில் ஏற்படும் மயக்கத்தை அறவே நீக்கி, துன்பக்கடல் என்று கருதப்படும் பிறப்பிறப்பு சுழற்சிக் கடலின் வெள்ளத்திலிருந்து முக்தி நிலை ஆகிய கரையேறி என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பதே தங்களது வாழ்வின் நோக்கம் என்று கருதும் அடியார்கள், சூரியனின் பற்களை பறித்தவனே, பாவங்களை நாசம் செய்து போக்குபவனே, மென்மையான ஒளிச்சுடரே, என்று நாளும் இறைவனைத் தொழுது வணங்குகின்றார்கள். அத்தகைய அடியார்களின் மனதினில், கன்றாப்பூர் தலத்தில் கன்றுக்குட்டி கட்டப்படும் முளையில் தோன்றிய சிவபெருமான் உறைகின்றான் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடலையும் (6.61.8) இங்கே காண்பது பொருத்தமாகும். திருதி=மன உறுதி; ஐவர்=ஐம்பொறிகள்; திகையாமல்=மனம் கலங்காமல் சுருதி=மறை; துயக்கு=மயக்கம்; கருதி=தியானித்து; பரிதி=சூரியன்;
திருதிமையால் ஐவரையும் காவல் ஏவித் திகையாதே சிவாயநம
என்னும் சிந்தைச்
சுருதி தனைத் துயக்கறுத்துத்துன்ப வெள்ளக்கடல் நீந்திக் கரையேறும்
கருத்தே மிக்குப்
பரிதி தனைப் பற்பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றென்று பரவி
நாளும்
கருதிமிகத் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக்
காணலாமே
நமச்சிவாய மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்லியதால், பழக்கப்பட்ட தனது நாக்கு, நான் மறந்தாலும், இடைவிடாது அந்த திருநாமத்தை சொல்லும் என்று பெருமை கொள்ளும் சுந்தரர், இந்த செய்தியை நமச்சிவாயப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் கூறுகின்றார். திருச்சதகத்தின் பாடல் ஒன்றினில், மணிவாசகர் நிலையில்லாத உலகப் பொருட்களின் இடையில் சிக்குண்ட தான் மயங்குவதாகவும், சிவபிரானைத் தவிர புகலிடம் தனக்கு ஏதும் இல்லாமையால், சிவபெருமான் தன்னை புறந்தள்ளாது ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று முறையிட்டு, நமச்சிவாய மந்திரத்தின் பொருளாய் உள்ள சிவபிரானே என்று அழைக்கின்றார்
போற்றி ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிதொன்று இல்லை
போற்றி ஓம் நமச்சிவாய புறம் எனைப் போக்கல் கண்டாய்
போற்றி ஓம் நமச்சிவாய சயசய போற்றி போற்றி
செத்திலாப்பத்து பதிகத்தின் ஏழாவது பாடலில் மணிவாசகர் சிவபெருமானின் திருவடிகளை எப்படிப் பணிய வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார். நமச்சிவாய என்று அவனது பஞ்சாக்கரத் திருநாமத்தை சொல்லியவாறே அவனைப் பணியவேண்டும் என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தங்களை பேயன் என்றும் நாயேன் என்றும் தாழ்த்திக் கூறிக் கொள்வது அருளாளர்களின் இலக்கணம். அந்த வகையில் தான் மணிவாசகர் தன்னை பேயன் என்று குறிப்பிடுகின்றார். ஆனால் உண்மையில் பேயன் யார் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. சிவபெருமானை மனத்தால் நினைத்து, நமது வாயால் நமச்சிவாய என்று அவனது திருநாமத்தைச் சொல்லி, உடலால் அவனை பணிந்து வணங்க வேண்டும். இவ்வாறு மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபடாதவர்கள் தான் பேயர்கள். திருபெருந்துறையில், தன்னை ஆட்கொண்டு, உபதேசமளித்து பின்னர் மறைந்து விட்டமையால் மாயன் என்று இறைவனை குறிப்பிடும் மணிவாசகர், திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு பின்னர், எவ்வாறு இறைபணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதை நாம் அறிவோம். அவ்வாறு இருந்ததால் தான், பெருநெறி (முக்திநெறி) காட்டவேண்டும் என்று உரிமையுடன் சிவபிரானைக் கேட்கின்றார். இறைவன் தன்னை அவரது அருகில் அழைத்துக் கொள்ளாததால், தான் அவரிடமிருந்து தொலைவில் நின்று அவரது அருளினை வேண்டி அலறுவதாக கூறுகின்றார்,
மாயனே மறிகடல் விடம் உண்ட வானவா மனிகண்டத்து எம்
அமுதே
நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன்னடி
பணியாப்
பேயனாகிலும் பெருநெறி காட்டாய் பிறை குலாம் சடைப்
பிஞ்ஞகனேயோ
சேயனாகி நின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே
கருவூர்த் தேவர், அன்போடு அஞ்செழுத்து ஓதினால் இறைவன் நமக்கு அளிக்கும் பல பேறுகளை குறிப்பிட்டு, அவரினும் அற்புதத் தெய்வம் வேறு எவரும் இல்லை என்று சொல்லும் பாடல், ஒன்பதாம் திருமுறையில் உள்ள கங்கை கொண்ட சோளேச்சரத்து பதிகத்தின் மூன்றாவது பாடல். மலைகள் போன்ற பொற்குவியல்கள், மாளிகைகள், பலவிதமான செல்வங்கள், அழகிய இளம் மகளிருடன் இணையும் வாய்ப்பு, கற்பகச் சோலை என்று நாம் பெறவிருக்கும் பேறுகளை அடுக்குகின்றார்.
அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னை
அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு
எண்திசைக் கனகம்
பற்பதக் குவியும் பைம்பொன் மாளிகையும் பவளவாயவர்
பணைமுலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்ட
சோளேச்சரத்தானே
சிவாயநம என்று கூறினால் நமது உள்ளத்தில் வெள்ளம் போன்று பெருகி வரும் ஞான ஒளி உண்டாகும் என்றும் இந்த மந்திரத்தை உச்சரிக்காதவர் மீன்டும் மீண்டும் பிறவிக் கடலில் சுழன்று தவிப்பார்கள் என்றும் திருமூலர் கூறும் பாடல் இது. நீர் சுழலும் போது துள்ளும் நீர், மறுபடியும் அந்த நீர்ச் சுழலில் விழுவதைப் போன்று, சிவாயநம என்ற மந்திரத்தை உச்சரிக்காதவர்கள், தாங்கள் இறந்தபின்னரும் மறுபடியும் பிறவிச் சுழலில் விழுவார்கள் என்று நமக்கு விளக்கும் பாடல்.
தெள்ளமுது ஊற சிவாயநம என்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே
சிவாயநம என்ற மந்திரத்தில் மலங்களைக் குறிக்கும் கடைசி இரண்டு எழுத்துக்கள் நீங்கிய நிலையில் இருக்கும் மீதி மூன்று எழுத்துக்களே சிவாய என்பதாகும். எனவே இந்த எழுத்துக்களை பாசம் நீங்கிய முக்தி பஞ்சாக்கரம் என்றும், கூறுவர். முக்தி பஞ்சாக்கர நாமத்தை சொல்பவர்க்கு முக்தி அளிப்பவர் சிவபிரான் என்பதால், அப்பர் பிரான் பாலைத்துறை பதிகத்து பாடலில் எழில் வானகம் பண்ணினார் என்று சிவலோகம் ஏற்படுத்தி உள்ள நிலையை குறிக்கின்றார். இந்த மந்திரத்தை ஓதினால், அருவினைகள் தீர்க்கப்படும் என்று திருமூலர் குறிக்கின்றார். வினைகள் தானே, பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து நாம் விடுபடாமல் இருப்பதற்கு காரணம். அந்த வினைகள் தீர்க்கப்பட்டால், முக்தி பெறுவது எளிதல்லவா. ஆயம்=கூட்டம். பிராமி, வைஷ்ணவி, காளி முதலாகிய பல விதமான சக்தியின் அம்சங்கள் இணைந்த கூட்டம், ஆயம் என்ற தொடரால் உணர்த்தப்பட்டு, சிவபிரான் அருள் வடிவாகிய சக்தியை குறிக்கின்றது. வினைகளுக்கு ஏற்ப உயிரினை உடலுடன் பொருத்தச் செய்வதால், சிவபெருமானை உயிரை ஈன்றவர் என்று குறிப்பிடுகின்றார்.
அருள் தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
திரிமலம் நீங்க சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழும் தாமே
நமச்சிவாய மந்திரத்தின் சிறப்பினை, சுருக்கமாக ஒரு பாடலில் (5.90.2) அப்பர் பிரான் கூறுகின்றார். விச்சை=மந்திரம். ஞானம்=கல்வியால் விளையும் அறிவு. திருநாவுக்கரசர் தமிழ் மொழியில் நல்ல புலமை பெற்றிருந்தது மட்டுமல்லாமல், வடமொழி, பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். அத்தகைய புலமை பெற்றிருந்த காரணத்தால் தான், சமண மதத்து கொள்கைகளை, ஐயம் திரிபறக் கற்று, புத்தர்களுடன் வாது செய்து அவர்களை வெல்லும் திறம் கொண்டிருந்தார். அப்படி இருந்தும், நமச்சிவாய மந்திரம் தான் கற்ற கல்வி என்று கூறுவதிலிருந்து நமச்சிவாய மந்திரத்தினை எவ்வளவு உயர்வாக அவர் மதித்தார் என்பது நமக்கு புலனாகின்றது. நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம் தான் வீடுபேற்றை அடையும் வழியாகும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் இது. .
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
துன்பாய மாசார் என்று அன்றைய நாளில் வாழ்ந்து வந்த, சமணத் துறவிகளை ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவதை நாம் காணலாம். நீராடாமல் இருப்பதால் மாசுடைய மேனியுடைய சமணர்கள் என்று பல பாடல்களில் ஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் இந்த பாடலில் துன்பாகிய மாசு என்று கூறுகின்றார். சிவனடியார்களுக்கு துன்பம் இழைப்பதை தங்களது குணமாகக் கொண்டுள்ள சமணர்கள், என்று தங்களது மனதிலும் மாசு படிந்த சமணர்கள் என்று குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. அப்பர் பிரான் மற்றும் தண்டியடிகள் ஆகியோருக்கு சமணர்கள் இழைத்த துன்பங்கள் நமது நினைவுக்கு வருகின்றன. புன் பேச்சு=கீழ்த்தரமான பேச்சுகள்;
பொழிப்புரை:
தங்களது மனதிலும் உடலிலும் மாசு படிந்த சமணர்களும், துவராடையை போர்த்துத் திரியும் புத்தர்களும், சொல்கின்ற பொருளற்ற வார்த்தைகளை பொருட்படுத்தாது, உலகத்தவரே, அவற்றை கேளாது நீங்கள் இருப்பீர்களாக. புண்ணியத்தின் வடிவமாக விளங்கும் சிவபெருமானை நெருங்கி, அவன் பால் அன்பு செலுத்தி, சிவாய என்ற பஞ்சாக்கர மந்திரத்தை சொல்லி அவனை வணங்கி வழிபடுவீர்களாக; நாலூர் மயானம் தலத்தில் இன்பமாக உறையும் பெருமானை புகழ்ந்து வணங்கும் அடியார்களுக்கு இன்பம் விளையும். .
பாடல் 11:
ஞாலம் புகழ்காழி ஞானசம்பந்தன் தான்
நாலு மறையோதும் நாலூர் மயானத்தைச்
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லார்க்கு
ஏலும் புகழ் வானத்து இன்பா இருப்பாரே
விளக்கம்:
ஏலும்=சென்றடையும்; சீலம்=சிவபெருமானின் ஒழுக்கத்தை மேன்மையான தன்மைகளை;;
பொழிப்புரை:
உலகத்தவரால் புகழப்படும் சீர்காழி தலத்தினில் தோன்றிய ஞானசம்பந்தன், நான்கு மறைகளை ஓதும் அந்தணர்கள் நிறைந்த நாலூர் மயானத்து தலத்தில் உறைகின்ற பெருமானின் உயர்ந்த குணங்களையும் புகழினையும் குறிப்பிட்டு பாடிய சிறப்பான பாடல்களை சிறந்த முறையில் முறையான பண்ணுடன் இணைத்துப் பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் மறுமையில் வானுலகில் புகழும் இன்பமும் பெற்று வாழ்வார்கள்.
முடிவுரை:
மெய்ஞானம் என்ற தலத்தின் பெயருக்கு ஏற்ப, இறைவனின் திருவடிகளை நினைத்து மயங்கும் தன்மை, இந்த தலத்து இறைவனைத் தொழும் அடியார்களுக்கு ஏற்படும் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பலராலும் நாடப்படும் சிறப்பு குன்றாத தலம் என்று தலத்தின் பெருமையை இரண்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். தொன்மையான சைவநெறியின் கண் ஈடுபட்டு, வாழ்வினில் உய்வினை அடைய வேண்டும் என்று விரும்பும் மனிதர்கள், இந்த தலத்து இறைவனை புகழ்ந்து பாட வேண்டும் என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். அவ்வாறு இறைவனின் புகழினைப் பாடும் அடியார்களை விட்டு தொல்வினைகள் நீங்கிவிடும் என்று நான்காவது பாடல் உணர்த்துகின்றது. மேலும் அத்தகைய அடியார்கள் இம்மையில் இன்பத்தால் சூழப்பட்டவர்களாக விளங்குவார்கள் என்று கூறுகின்றார். இவ்வாறு இம்மையிலும் மறுமையிலும் பலன்களை அளிக்க வல்லவன் என்று இந்த இரண்டு பாடல்கள் மூலம் உணர்த்தப் படுகின்றது. இந்த தலத்து இறைவனை அணுகி, அவரைத் தொழுது வணங்காத உயிர்கள் சிவஞானமாகிய நன்னெறியை சாரார் என்று ஆறாவது பாடல் உணர்த்துகின்றது. இந்த தலத்தையும் தலத்து இறைவனையும் தியானிக்கும் மனிதர்களுக்கு இடர்கள் வாராது என்று ஏழாவது பாடலும் அல்லல்கள் அணுகாது என்று எட்டாவது பாடலும் எடுத்துரைக்கின்றன. ஒன்பதாவது பாடல் மூலம், நமக்கு பல விதங்களிலும் அருள் புரியும் பெருமானை, நாம் நெய்யும் பாலும் கொண்டு நீராட்டி வழிபடவேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். மேலும் பஞ்சாக்கர மந்திரத்தை ஓதியவண்ணம் அவனை அணுகவேண்டும் என்று நம்மை பத்தாவது பாடல் மூலம் வழிநடத்துகின்றார். இந்த பதிகத்தை முறையாக பாடும் அன்பர்கள், இம்மையில் புகழுடன் வாழ்ந்து மறுமையில் மறுமையில் உயர்ந்த சிவலோகம் சென்றடைந்து அழியாத பேரானந்தத்தில் திளைத்து இருப்பார்கள் என்று கூறுகின்றார். திருஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகத்தின் மூலம் நாலூர் மயானத்தின் பெருமையையும் தலத்து இறைவனின் சிறப்பையும் அறிந்து கொள்ளும் நாம், இந்த தலத்திற்கு சென்று இறைவனைப் பணிந்து, இம்மையிலும் மறுமையிலும் இன்பமுடன் வாழ்வோமாக.