இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பாலுந்துறு திறள்

பாலுந்துறு திறள்

பதிக எண்: 1.16 திரு புள்ளமங்கை நட்டபாடை

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி சென்ற திருஞான சம்பந்தர், அந்த ஊரிலிருந்த மூன்று தேவாரத் தலங்களுக்கும் (மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா) சென்று, இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர், பாற்றுறை, நெடுங்களம், காட்டுப்பள்ளி, ஆலம்பொழில், பூந்துருத்தி, கண்டியூர், சோற்றுத்துறை, வேதிகுடி வெண்ணியூர் சக்கரப்பள்ளி ஆகிய தலங்கள் சென்ற பின்னர் புள்ளமங்கை சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். புள்ளமங்கை தலம் சென்றதை குறிப்பிடும் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காண்போம். பணை=பண்ணை வயல்கள்; குலவுதல்=மகிழ்ந்து உறைதல்; அருமறைப் புனல் உறும் சிந்தையார் என்று திருஞானசம்பந்தரை சிறப்பித்து சேக்கிழார் கூறுகின்றார். அரிய நான்கு மறைகளின் முடிவான ஞானமே, திருஞானசம்பந்தரின் அறிவினில் நிறைந்திருந்த தன்மை இந்த தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. தலத்தின் பெயர் புள்ளமங்கை; திருக்கோயிலின் பெயர் ஆலந்துறை; இவை இரண்டுமே ஞானசம்பந்தப் பெருமான் அருளிய பதிகத்து பாடல்களில் குறிப்பிடப் படுகின்றன. மேலும் இந்த திருக்கோயிலில் நிலையாக பொருந்தி உறைபவரும் மான்கன்றினைத் தனது கையினில் ஏந்தியவரும் ஆகிய பெருமானின் பொன்னார் திருவடிகளை அன்புடன் தொழுது இனிய இசையினை உடைய பாமாலையை ஞானசம்பந்தர் சாத்தினார் என்றும் சேக்கிழார் கூறுகின்றார்.

தலைவர் தம் சக்கரப்பள்ளி தன்னிடை அகன்று

அலைபுனல் பணைகளின் அருகு போய் அருமறைப்

புனலுறும் சிந்தையார் புள்ளமங்கைப் பதி

குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்

இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த ஒரு பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த தலம் தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில், தஞ்சையிலிருந்து பதினான்கு கி.மீ. தொலைவில் உள்ள பசுபதி கோயில் பேருந்து நிறுத்தத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஐயம்பேட்டையிலிருந்து கண்டியூர் செல்லும் சாலையில் உள்ளது. சக்கரப்பள்ளி தலத்தைச் சப்த ஸ்தானங்களில் ஒன்று. இந்த விவரங்களை நாம் சக்கரப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிக விளக்கத்தில் சிந்தித்தோம். புள்=பறவை; இங்கே கழுகினை குறிக்கும். திருக்கோயில் மாடங்களில் கழுகினை காணலாம். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விடத்தின் தன்மையை மாற்றி இறைவன் அதனை உட்கொண்ட தலம் என்பது பண்டைய நாளிலிருந்து தொடர்ந்து வரும் நம்பிக்கை. முதலாம் பராந்தகச் சோழனின் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில். ஆலமரத்தினை தலமரமாகக் கொண்டதால் ஆலந்துறை என்று கோயிலுக்கு பெயர் வந்தது. பிரமன் இங்கே வழிபட்டதால் இறைவன் பிரமபுரீஸ்வரர் என்று அழைக்கப் படுகின்றார். ஆலந்துறை நாதர் என்பதும் அவரது திருநாமமே. இறைவியின் திருநாமம் அல்லியங்கோதை, சௌந்தரவல்லி; அகழி போன்ற அமைப்பினை உடைய கருவறை.. விமானத்தின் கீழே சிவபுராண நிகழ்ச்சிகளும் நாட்டிய கரணங்களும், இராமாயண நிகழ்ச்சிகளும் சிறந்த சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன. கஜசம்ஹாரர், அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி, காலசம்ஹார மூர்த்தி, தாண்டவ மூர்த்தி, சண்டேச அனுக்ரக மூர்த்தி, வராகர் பூமியை மீட்டு வருதல், பிரகலாதனை அணைத்தபடி தனது மடியினில் அமர வைத்துள்ள நரசிம்மர், அலைகடலில் துயில் கொள்ளும் ஆனந்தசயனர், ஆகிய சிற்பங்கள் கலை நுணுக்கம் வாய்ந்தவை. படகினில் இராமர் இலக்குவன் சீதை ஆகியோர் அமர்ந்து கங்கை நதியைக் கடந்து செல்லுதல், சூர்ப்பனகை மானபங்கம், ஜடாயு வதம், போன்ற இராமாயணக் காட்சிகள் அழகானவை. இவை அனைத்தும் சிறிய அளவிலான நுட்பமான சிற்பங்கள். இராமாயணச் சிற்பங்களில் உள்ள கலை நயங்கள், கம்ப இராமாயண வர்ணனையுடன் ஒத்துப் போவதை பார்த்தால், கம்பர் இந்த சிற்பங்களைப் பார்த்து தான் இராமாயணம் எழுதினாரோ என்று தோன்றுகின்றது. சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட தலம். எட்டு நாகங்களுடன் சாமுண்டி தேவி வழிபட்ட இடம் என்பதால், இங்கே செய்யப்படும் வழிபாடு நாக தோஷத்தை நீக்கும் என்று நம்பப்படுகின்றது. பார்வதி தேவி சிவபெருமனை வழிபட்டு நாகாபரணம் அணிந்த நிலையில் பெருமானின் தரிசனத்தைப் பெற்றாள் என்று செவிவழிச் செய்திகள் உணர்த்துகின்றன. இந்த கோயிலில் நவக்ரகங்களுக்கு நடுவினில் நந்தி இருப்பதை காணலாம். அர்த்த மண்டபத்தின் மேல் உள்ள பூத கணங்களும் விமானத்தில் உள்ள சுப்பிரமணியர் ரிஷபாரூடர் அர்த்த நாரீஸ்வரர் சிற்பங்கள் சிறந்த வேலைப்பாடு கொண்டவை.

இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சன்னதி தனிச் சிறப்பு வாய்ந்தது. கருங்கல் குடை நிழலில் எருமைக்கடா தலையின் மீது நின்ற உருவம். ஒரு காலை மடித்து இடுப்பை வளைத்து தலையை சாய்த்த நிலையில் (திரிபங்க நிலை—உடல் மூன்று இடங்களில் வளைந்து காணப்படும் நிலை) சங்கு சக்கரம் வாள் வில் கதை சூலம் கேடயம் அங்குசம் ஆகிய ஆயுதங்களை ஏந்திய வண்ணம் காட்சி அளிக்கும் அம்பிகையின் இருபுறங்களிலும் மான் மற்றும் சிங்கத்தின் உருவங்களை காணலாம். அருகே இரண்டு வீரர்கள் தங்களது தலையை வாளால் அரிந்து கொண்டு பலி தருவது போலவும், தங்களது தொடையைக் கிழித்துக் கொண்டு இரத்தம் தருவது போலவும் காட்சி தருகின்றனர். அம்பிகையின் ஒரு கையினில் வில் காணப்படுகின்றது. மற்றொரு கை, மோதிரவிரலை மடக்கி அபய முத்திரை காட்டுகின்றது. அம்பிகையின் தோளில் அம்பறாத்தூணி தொங்குகின்றது. திருநாகேச்சரம், பட்டீச்சரம் மற்றும் புள்ளமங்கை ஆகிய மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் செய்யப்பட்டது என்று கூறுவார்கள். கருவறை கோஷ்டத்தில், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், விஷ்ணு துர்க்கை ஆகியோரை காணலாம். கோயிலின் இடது புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. ஞானசம்பந்தர் கடைப்பாடலில் பாடியதற்கு ஏற்ப, கோயில் சாளரத்தில் தேனடை இருக்கின்றது. சப்தஸ்தான உலா செல்லும் இறைவன் எழுந்தருளும் பல்லக்கு இந்த திருக்கோயிலில் உள்ளது. அலங்காரங்களுடன் அழகாக உள்ள பல்லக்கு.

பாடல் 1

பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான்

போலும் திறல் அவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை

காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்

ஆலந்துறை தொழுவார் தமை அடையா வினை தானே

விளக்கம்:

பால் உந்துறு திரள்=பாலைக் கடைய கிடைக்கும் வெண்ணெய் மற்றும் நெய் போன்று இனிமையானவர். பொதுவாக இறைவனை பால் போன்றும் தேன் போன்றும் இனியவன் என்று சொல்வது வழக்கம். வெண்மை நிறம் தூய்மைக்கு அடையாளமாக கருதப் படுகின்றது. அதனால் தூய்மையே உருவமாக உள்ள இறைவனை பாலுக்கு ஒப்பிடுவது பொருத்தமே. மேலும் அனைத்து பருவத்தினருக்கும் பால் உணவாக பயன்படுவது போன்று, இறைவன் அனைத்துப் பருவத்தினரும் வணங்கி பயன்படும் வண்ணம் அருள் புரிகின்றார். பாலினும் அதன் திரட்சியான வெண்ணெய் உண்பதற்கு மிகவும் இனியது. பாலின் திரட்சியாகிய வெண்ணெய் போன்று நமக்கு இனியவனாக இருக்கும் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

இவ்வாறு அனைவர்க்கும் பொதுவாக அருள் புரியும் இறைவன், தனது அடியார்களுக்கு எவ்வாறு உள்ளான் என்பதை இந்த பதிகத்தின் முதல் அடி உணர்த்துகின்றது. பெருமான் பால் அன்பு வைத்துள்ள அடியார்கள், தங்களது உள்ளம் கசிந்து வழிபட, நெய்யாக மாறுகின்றான். நமக்கு வெளிப்படையாக கண்ணுக்கு தெரிவது பால்; பாலின் உள்ளே நெய் மறைந்து இருந்தாலும் நாம் அதனை உணர முடிவதில்லை. பக்குவப்பட்ட அடியார்கள் ஆகிய புளமங்கை அந்தணர்கள், பாலின் உள்ளே நெய் இருப்பதை உணர்வது போன்று, அனைத்துப் பொருட்களிலும் இறைவன் கலந்திருப்பதை உணர்கின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று பொருள் கொள்வது சிறப்பான விளக்கம். இந்த விளக்கம் நமக்கு அப்பர் பெருமான் அருளிய மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலை (4.90.10) நினைவூட்டுகின்றது. விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. ஆனால் பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்ட பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். தகுந்த முறையில் அவனை அறிந்துகொண்டு அவனை வழிபடவேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் மறைந்து நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக இணைத்துக் கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

இந்த தன்மையை, அனைத்துப் பொருட்களிலும் அனைத்து உயிர்களிலும் இறைவன் கலந்து நிற்கும் தன்மையை காணும் திறனை நாம் எளிதில் அடையமுடியாது. இவ்வாறு எங்கும் எதிலும் இறைவனைக் காணும் தன்மையை சிவதரிசனம் என்று குறிப்பிடுகின்றனர். அப்பர் பிரான் இந்த தன்மையை அடைந்தவர். திருவையாற்று தலத்தில் உள்ள திருக்கோயில் நோக்கி சென்ற கொண்டிருந்த போது, எதிர்பட்ட விலங்குகள் அனைத்திலும் சிவனையும் சக்தியையும் தான் கண்ட காட்சியை மாதர் பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்து பாடல்களில் குறிப்பிடுகின்றார். இத்தகைய காட்சியினை தான் இதுவரை கண்டதில்லை, என்பதை உணர்த்தும் வண்ணம், பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் என்று கூறுகின்றார். பின்னர் திருக்கோயிலை நெருங்கிய போது, கோயில் கோபுரத்தில் கயிலாயக் காட்சியையும் காண்கின்றார்.

தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ நீக்கம், ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்ம நீக்கம், சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம் சிவபோகம் என்பன தச காரியங்கள் என்று ஒரு தொகுப்பாக அழைக்கப்படும். குருவருளால் ஞானத்தை கேட்டல் என்ற நிலையில் எல்லோருக்கும் நிட்டையாகிய சீவன் முக்தி நிலை வந்துவிடுவதில்லை. அதன் பின்னர் சிந்தித்தல், தெளிதல் நிகழ்ந்த பின்னரே அத்தகைய சீவன்முக்தி நிலை ஏற்படும். ஞானத்தின் மேற்கூறிய நான்கு படிநிலைகளையே வேறொரு வகையால் பகுத்து தசகாரியம் என்று குறிப்பிடுவார்கள். இவை அனைத்தும் அறிவின் கண் நிகழும் நிலை வேறுபாடுகளே அன்றி உடற்கண் நிகழும் செயல்கள் அல்ல. மேற்கண்ட தசகாரிய நிலைகளில் தத்துவம், ஆன்மா, சிவம் என்ற மூன்று பொருட்கள் கூறப்பட்டிருப்பதை நாம் உணரலாம். இவை மூன்றும் பாசம், பசு, பதி அன்றே தவிர வேறல்ல.

ஆசிரியரின் உபதேசம் மற்றும் நூல்களின் துணை கொண்டு தமது அறிவுக்குப் பொருந்தும் வண்ணம் ஆராய்தலே சிந்தித்தல். அவ்வாறு சிந்திக்கும் போது முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும் நூல்களில் சொல்லிய வண்ணம் விளக்கமாக அறிந்து கொள்ளுதல் தத்துவரூபம் ஆகும். இந்த தத்துவங்கள் பொருந்துமா அல்லது பொருந்தாதா என்று ஆராய்தல் தத்துவ தரிசனமாகும். பின்னர் இந்த தத்துவங்கள் அனைத்தும் சடப் பொருட்கள் என்றும், இவை ஆன்மாவாகாது, ஆன்மா வேறு இந்த தத்துவங்கள் வேறு என்று உணர்தல் தத்துவசுத்தியாகும்.

தத்துவங்களோ அல்லது அவற்றின் கூட்டங்களோ ஆன்மா அல்ல என்றும் ஆன்மா வேறு தத்துவங்கள் வேறு என்றும் அறிதல் ஆன்ம தரிசனமாகும், ஆன்மாவின் இயல்பினை நூல்களில் சொல்லிய வண்ணம் அறிந்து கொள்ளுதல் ஆன்ம ரூபம். ஆன்மா தத்துவங்கள் போல் சடம் அல்ல எனினும் தனித்து நின்று அறிய இயலாது என்றும் ஆன்மாவிற்கு எப்போதும் துணையாக உடன் நின்று உணர்த்தி வருவது இறைவனின் திருவருள் என்றும் உணர்ந்து யான் எனது என்ற செருக்கு அற்று, எந்த செயலையும் தனது செயல் அல்லது பிறர் செயல் என்ற எண்ணங்கள் அற்று இருப்பது ஆன்ம சுத்தியாகும்.

சிவ பரம்பொருளின் பொது இயல்பு (ஐந்தொழில் படுத்துதல்) மற்றும் உண்மை இயல்பு (எண்குணம் உடைமை) என்று நூல்களில் சொல்லியவாறு அறிந்து கொள்ளுதல் சிவரூபம். இந்த ரூபத்தை தனது அறிவினுக்கு பொருந்துமாறு ஆராய்தல் சிவதரிசனம். சிவபிரானின் இயல்பு அறிவினில் பொருந்தும்போதே, யான் எனது என்ற உணர்வு அற்று நிற்றலும், இதனால் எங்கும் எதிலும் சிவமயமாய் காட்சி காணுதலும், அந்த காட்சியால் சிவானந்த விளைவு ஏற்படுதலும், சிவதரிசனமாகும். சிவதரிசனம் வாய்த்த போது, பழைய வாசனையால் அவ்வப்போது யான் எனது என்ற எண்ணம் எழுந்தாலும், அந்த தற்போதத்தை, சீவபோதத்தை, சிவதரிசன முறையில் சிந்தித்து அடக்கி தன் செயலற்று சிவத்தில் ஒன்றி இருத்தலே உண்மை யோகம் எனப்படும் சிவயோகம் ஆகும். சிவயோகத்தில் திளைத்து இருக்கும்போது தோன்றும் சிவானந்தத்தை நுகர நுகர, சிவானந்தம் பெருகி, ஆன்ம அறிவை விழுங்கிவிடும். ஆன்மபோதம் அறவே மூழ்கடிக்கப்பட்ட நிலையில் ஆன்மா தன்னையோ அல்லது பிறரையோ பிற பொருட்களையோ உணருவதில்லை. சொல்லற்ற, இரவு பகல் அற்ற, ஏதும் அற்ற இந்த நிலைக்கு மேல் ஆன்மா அடையவேண்டிய பயன் வேறு ஏதும் இல்லை. இந்த நிலை சிவபோதம் ஆகும். இந்த சிவானந்தத்தை இடையறாது அனுபவிக்க தடையாக உள்ள உடலும் நீங்கவே முக்திநிலை வாய்த்துவிடும்

திறல்=தன்மை, திறமை; பொழில்=சோலை; அறச் சாடிய=குன்றும் வண்ணம் உதைத்த; தலத்தின் பெயர் புளமங்கை; திருக்கோயிலின் பெயர் ஆலந்துறை; பிரமன் எப்போதும் வேதங்களை ஓதிக் கொண்டே படைப்புத் தொழில் செய்வதால், வேதங்களில் வல்லவராக கருதப்படுகின்றார். பிரமன் போன்று இந்த தலத்து அந்தணர்களும் வேதங்களில் வல்லவர்களாக இருந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பரமன்=அனைவரிலும் மேலானவன்;

பொழிப்புரை:

பக்குவப்பட்ட அடியார்கள் தங்களது தீவிர முயற்சியால், இடைவிடாமல் ஒன்றிய மனத்துடன் இறைவனை தியானம் செய்து, அனைத்துப் பொருட்களிலும் கலந்து நிற்கும் இறைவனை அவர்கள் கண்டு உணரும் வண்ணம் அருள் புரியும் சிவபெருமான் அனைத்து தெய்வங்களிலும் மேம்பட்டவர் ஆவார். பிரமனைப் போன்று வேதங்களில் வல்லவர்களாக விளங்கும் அந்தணர்கள் பலர் வாழும் புளமங்கை தலத்தினில், சோலைகள் சூழ்ந்த புளமங்கை தலத்தினில் உறைபவர் சிவபெருமான். அவர் இயமனின் வலிமையை அடக்கி, அவனை காலால் உதைத்து வீழ்த்தியவர் ஆவார். புளமங்கை தலத்தினில் ஆலந்துறை என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் அவரை நினைத்து, அவரைத் தொழும் அடியார்களை வினைகள் சென்று அடையா. .

பாடல் 2

மலையான் மகள் கணவன் மலி கடல் சூழ் தரு தன்மை

புலை ஆயின களைவான் இடம் பொழில் சூழ் புளமங்கை

கலையால் மலி மறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த

அலையார் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே

விளக்கம்:

கடல் சூழ் தரு தன்மைப்புலை=பொங்கி வரும் கடல் போலப் பெருகிச் சூழ்கின்ற தன்மை உடைய புலை; புலை=இழிந்த தன்மை உடைய பிறப்புகளுக்கு காரணமாக விளங்கும் வினைகள்; சில பதிப்புகளில் தண்மை என்று குறிப்பிடப்பட்டு, கடலால் சூழப்பட்டு குளிர்ந்த உலகம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. புலையாயின என்ற சொற்றொடர் தன்மை என்ற சொல்லுடன் இணைந்து வருவதால், தன்மை என்ற சொல்லே பொருத்தமாக உள்ளது. சிவக்கவிமணியாரும் புலையாயின என்ற தொடருக்கு, இழிந்த தன்மை கொண்ட வினைகள் என்று குறிப்பிடுவதால், தன்மை என்ற சொல்லே பொருந்தும் என்பது புலனாகின்றது. கலையான் மலி=கலைகள் பல கற்ற; கடலால் சூழப்பட்ட தன்மையால் எழும் புலை நாற்றத்தை போக்கடிக்கும் வண்ணம் நறுமணம் நல்கும் பொழில்கள் சூழ்ந்த புளமங்கை என்று சிலர் அளித்துள்ள விளக்கம் பொருந்துவதாக தோன்றவில்லை. கடற்கரைக்கும் இந்த தலத்திற்கும் இடையே உள்ள தூரம் மிகவும் அதிகம். மேலும் கடற்கரைக்கு மிகவும் அருகில் இருக்கும் காவிரிப்பூம்பட்டினம், தென்திரு முல்லைவாயில், கழிப்பாலை, போன்ற தலங்கள் மீது அருளப்பட்டுள்ள தேவாரப் பதிகங்களில் கடற்கரையில் எழும் புலை நாற்றம் எங்கும் குறிப்பிடப் படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பின்னணியில் புளமங்கை தலத்துடன் புலை நாற்றத்தை இணைத்து பொருள் கூறுவது எவ்வாறு பொருத்தமாக இருக்க முடியும்.

பொழிப்புரை:

மலை அரசன் என்று அழைக்கப்படும் இமவானின் மகளாகிய பார்வதி தேவியின் கணவனாகிய பெருமான், கடலால் சூழப்பட்ட இந்த பரந்த உலகினில் வாழும் உயிர்களுடன் பிணைந்து நின்று அந்த உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பதற்கு காரணமாக இருந்து இழிவான செயலைச் செய்யும் வினைகளை களைந்து, அந்த உயிர்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் கொண்டவன் ஆவான். சோலைகளால் சூழப்பட்ட புளமங்கை தலத்தினில் வாழ்பவர்களும் பலவகையான கலைகளையும் கற்றுச் தேர்ந்தவர்களும் ஆகிய மறையோர்களால் தங்களது மனதினில் கருதி தொழுது போற்றப்படுபவன் சிவபெருமான். அத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் உறையும் இடம், அலைகளுடன் பெருகிவரும் நீர் நிறைந்த காவிரி ஆற்றின் கரையில் அமைந்த ஆலந்துறை திருக்கோயிலாகும்.

பாடல் 3:

கறையார் மிடறு உடையான் கமழ் கொன்றைச் சடைமுடி மேல்

பொறையார் தரு கங்கைப் புனல் உடையான் புளமங்கைச்

சிறையார் தரு களி வண்டறை பொழில் சூழ் திரு ஆலந்

துறை ஆனவன் நறையார் கழல் தொழுமின் துதி செய்தே

விளக்கம்:

மிடறு=கழுத்து; பொறை=சுமை; பொறையார் தரு=சுமையாக பொருந்திய; நறை=நறுமணம்; நறையார்=நறுமணம் பொருந்திய; பெருமானின் சடைமுடியில் என்றும் பொருந்தி இருந்த கங்கை நதி அவருக்கு ஒரு சுமையாக இருந்ததாக ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். ஆனால் சர்வ வல்லமை உடைய பெருமானுக்கு கங்கை நதி எவ்வாறு சுமையாக இருக்கமுடியும். அதனால் பெருமானின் சடையில் எப்போதும் பொருந்தி இருக்கும் கங்கை நதி என்று பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும். இந்த குறிப்பு நமக்கு அப்பர் பிரான் அருளிய பாடல் (6.53.10) ஒன்றினை நினைவூட்டுகின்றது. பெருமானின் உருவத்தின் முன்னே, கங்கை நதி ஒரு பனித்துளி போன்று இருந்தது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பனிக்காலத்தில் புற்களின் மீது படியும் பனித்துளிகள், புல்லின் நுனியில் பொருந்தி இருப்பதை நாம் கண்டிருக்கின்றோம்.

அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை

எடுத்த அரக்கன் தோள்கள்

இறுத்தானை எழுநரம்பின் இசை கேட்டானை இந்துவினைத் தேய்த்தானை

இரவி தன் பல்

பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப் பரந்து இழியும் புனல்

கங்கை பனி போல் ஆங்குச்

செறித்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே

சேர்கின்றாரே

பொழிப்புரை:

ஆலகால விடத்தினை உட்கொண்டு தனது வயிற்றின் உள்ளே செலுத்தாமல் கழுத்தினில் தேக்கியதால், அதன் அடையாளமாக கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனும், நறுமணம் கமழும் கொன்றை மலர்களைத் தனது சடைமுடி மீது அணிந்து கொண்டவனும் ஆகிய பெருமான், என்றும் தனது சடையில் இருக்கும் வண்ணம் கங்கை நதியினைத் தனது சடைமுடியில் ஏற்றுக் கொண்டவன் ஆவான். மலர்களில் இருந்த தேனை உட்கொண்ட களிப்பினில் தங்களது சிறகுளை விரித்து அடித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்த வண்ணம் முரலும் வண்டுகளால் சூழப்பட்ட சோலைகள் நிறைந்த புளமங்கை தலத்தினில் உள்ள ஆலந்துறை என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமானின் நறுமணம் பொருந்திய திருவடிகளைத் துதித்து தொழுது பலன் அடைவீர்களாக. .

பாடல் 4:

தணியார் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்தெம்

பணியாயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை

மணியார் தரு கனகம் அவை வயிரத் திரளோடும்

அணியார் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே

விளக்கம்:

தணியார் மதி=குளிர்ந்த சந்திரன்; பணி=திருப்பணி; திருத்தொண்டுகள்; பணியாயவன்=அடியார்கள் செய்யும் தொண்டுகளுக்கு உரியவன்; மொய்த்து=நெருங்கி ஒன்றுகூடி; மொய்த்து எம் பணி என்ற தொடரின் மூலம், பல அடியார்களுடன் இணைந்து பெருமானுக்கு திருத்தொண்டு செய்தலின் சிறப்பும், பல அடியார்களுடன் இணைந்து பெருமானை வழிபடுதலின் சிறப்பும் இங்கே உணர்த்த படுகின்றது. கனகம்=பொன்; பொன் பொடிகளை மணலுடன் கலந்து அடித்து கொண்டு வருதலின் பொன்னி என்ற பெயர் வந்தது என்று சிவக்கவிமணியார் பெரிய புராணம் விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார். மணலுடன் பொன் பொடிகளையும் ஒன்றாக அடித்துக் கொண்டு வரும் தன்மை உடைய காவிரி நதி என்று குறிப்பிட்டு, தலத்து அடியார்களின் தன்மை போன்று காவிரி நதியும் விளங்கியது என்று விளக்கம் அளிக்கின்றனர், இந்த விளக்கம் நமக்கு, பெரியபுராணத்தில் திருக்கூட்டச்சிறப்பு என்ற தலைப்பின் கீழே சேக்கிழார் அருளிய பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. விறல்=தன்மை;

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்

உலகப்பொருள் யாதாயினும் அதன் மீது பற்று வைத்திருந்தால், அந்த பொருள் நமக்கு கிடைக்கும் போது அல்லது நம்மிடம் உள்ள அந்த பொருள் வளரும் போதும் இன்பம் அடைவது மனித இயல்பு. அவ்வாறே, அந்த பொருள் நமக்கு கிடைக்காத சமயத்திலும், நம்மிடம் இருந்த அந்த பொருளை நாம் இழந்த போதிலும், துன்பம் அடைவதும் மனித இயல்பு. இவ்வாறு நாம் பற்று வைத்துள்ள பொருள் இழக்கும் நிலை மற்றும் கிடைக்கும் நிலையையே கேடு மற்றும் ஆக்கம் என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுகின்றார். அத்தகைய கேட்டினாலும் ஆக்கத்தினாலும் சலனம் அடையாமல் இரண்டு நிலைகளையும் ஒன்றாக பாவிக்கும் தன்மை உடைய அடியார்களுக்கு, மண் ஓடு மற்றும் செம்பொன்னால் செய்யப்பட்ட ஓடு இரண்டும் ஒன்றாகவே தோன்றும். பெருமானிடத்தில் அவர்கள் வைத்துள்ள பக்தி எத்தகையது என்றால், பெருமானை எப்போதும் கும்பிட்டுக் கொண்டு இருந்தாலே போதும், வீடுபேறும் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் இயல்பினராக உள்ளனர் என்று அடியார்களின் தன்மையை சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் என்ற சேக்கிழாரின் மொழிக்கு உதாரணமாக திகழ்ந்தவர் அப்பர் பிரான். தனது வாழ்க்கையின் கடைப் பகுதியில், அப்பர் பிரான் புகலூர் தலத்தினை அடைந்து அங்கே திருமடம் ஒன்று நிறுவி, திருப்பணிகள் செய்து வந்தார். பல பதிகங்களும் பாடி, இறைத்தொண்டு செய்து வந்த அப்பர் பிரானின் பெருமையை உலகறியச் செய்வதற்காக சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிந்தார். பெருமானின் செயலால் அப்பர் பெருமான் உழவாரம் செய்ய வந்த இடங்களில் பொன்னும் நவமணிகளும் கற்களுடன் கலந்து தரையில் இருந்தன.

அந்நிலைமை தனில் ஆண்ட அரசு பணி செய்ய அவர்

தன் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்

தன்னில் வரும் உழவாரம் நுழைந்து விடத் தான் எங்கும்

பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்கச் அருள் செய்தார்

ஒளி வீசிக் கொண்டிருந்த பொன்னினையும் நவமணிகளையும், கற்களுக்கு சமமாக பாவித்த, அப்பர் பிரான் அவை அனைத்தையும் கற்களுடன் வாரிக் கொண்டு, அருகில் இருந்த குளத்தில் வீசி எறிந்தார். சேண்=அருகாமையில்; பருக்கை=கற்கள்; அப்பர் பிரானின் மற்ற பெயர்கள், வாகீசர், திருநாவுக்கரசர். ஏனைய கற்கள் போன்று, மாணிக்கக் கற்களும் அடியார்களின் திருப்பாதங்களை வருத்தும் என்ற உணர்வினால், கற்களை அப்புறப்படுத்துவது போன்று, நவமணிகளையும் அப்புறப்படுத்தினார்.

செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும்

உம்பர் பிரான் திரு முன்றில் உருள் பருக்கையுடன் ஒக்க

எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி

வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார்

பொழிப்புரை:

உலகத்தவரே, குளிர்ந்த கதிர்களை வீசும் பிறைச் சந்திரனையும் பாம்பையும் ஒருங்கே தனது சடையினில் வைத்துள்ள பெருமான் இருக்கும் இடம் யாது என்ற வினாவுக்கு விடை அளிக்கின்றேன் கேட்பீர்களாக. அடியார்கள் பலரும், தாங்கள் தொண்டுகள் செய்வதற்கு உரியவன் என்று ஒன்று கூடி நெருங்கித் தொழுது பெருமானின் புகழினைப் பாடுகின்ற இடமாகிய புளமங்கைத் தலமே அவன் உறையும் தலமாகும். சிறந்த மணிகளையும் வைரக் கற்களையும் பொன் பொடிகளையும் குவியல் குவியலாக அழகிய மணலையும் அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் இரண்டு கரைகளை உடைய காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள புளமங்கை தலத்தினில் அமைந்துள்ள ஆலந்துறை திருக்கோயிலே அவன் வீற்றிருக்கும் இடமாகும். .

பாடல் 5:

மெய் தன்னுறும் வினை தீர் வகை தொழுமின் செழு மலரின்

கொத்தின்னொடு சந்தார் அகில் கொணர் காவிரிக் கரை மேல்

பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை

அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே

விளக்கம்:

மெய்=உடல்; மெய் தன்னுறும்=உடலில் பொருந்தியுள்ள பழவினைகள்; உலகத்தவர் தங்களது வினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்று திருஞானசம்பந்தர் அறிவுரை கூறும் வண்ணம் அமைந்த பாடல். இந்த பாடலில் காவிரி நதி கொத்து கொத்தாக மலர்களையும் சந்தனம் மற்றும் அகில் கட்டைகளையும் அடித்துக் கொண்டு வருவதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார். இதற்கு நயமான விளக்கம் பெரியோர்களால் அளிக்கப் படுகின்றது. பெருமானைத் தொழுவதற்காக திருக்கோயில் செல்லும் மக்கள், மலர்கள், நிவேதனத்திற்கு பழங்கள் முதலான பொருட்கள், நறுமணப் பொருட்கள் முதலியன எடுத்துச் செல்வது இன்றும் பழக்கமாக உள்ளது. காவிரி நதி அவை அனைத்தையும் அடித்துக் கொண்டு வருவதால், காவிரி நதியிலிருந்தே அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்று ஞானசம்பந்தர் உணர்த்துகின்றரோ என்று தோன்றுகின்றது. மனிதர்களைப் போன்று காவிரி நதியும் பெருமானை வழிபடுவதற்கு உரிய பொருட்களைக் கொணர்ந்து அவனது திருவடிகளில் சேர்க்கின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அத்தன்=தலைவன்; ஆந்தைகளின் அலறலை, ஆந்தைகள் இறைவனைக் குறித்து பாடுவதாக ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களும் இறைவனைத் தொழுவதாக அருளாளர்கள் உணர்கின்றனர். புலி, மான், சுண்டெலி, பாம்பு, யானை, கொக்கு, நாரை, அணில், காகம், குரங்கு, குருவி, நண்டு, பன்றி முதலிய பல விலங்குகள், பறவைகள் இறைவனைத் தொழுது உய்வினை அடைந்ததை நாம் திருவிளையாடல் புராணத்திலும் பல தலங்களின் தலங்களின் தலபுராணத்திலும் காண்கின்றோம்.

பொழிப்புரை:

உயிருடன் தன்னுடன் பிணைந்துள்ள பழவினைகளை, தீர்த்துக் கொள்ள உதவி புரியும் வகையில் பெருமான் உயிரினைத் தகுந்த உடலுடன் பொருத்தி, பிறப்பு எடுக்குமாறு செய்கின்றான். எனவே உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்புகள் எடுப்பதற்கு காரணமாக உள்ளவை வினைகளே. எனவே பிறப்பினைத் தடுக்க வேண்டும் என்றால், நாம் அந்த வினைகளை முற்றிலும் களைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அத்தகைய வினைகளை முற்றிலும் தீர்த்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று நீர் விரும்பினால், சிவபெருமானைத் தொழுவீர்களாக. உங்களது வினைகளை முற்றிலும் ஒழிக்கும் ஆற்றல் உடைய பெருமான் உறையும் இடத்தினை சொல்கின்றேன் கேட்பீர்களாக. கொத்து கொத்தாக செழுமையான மலர்களையும், நறுமணம் வீசும் சந்தனம் மற்றும் அகில் கட்டைகளை அடித்துக் கொண்டு வரும் காவிரிநதி சேர்க்கும் கரைகளை உடையதும், மரப் பொந்துகளில் ஆந்தைகள் தங்கி இறைவனைப் புகழ்ந்து பாடும் வண்ணம் செழித்து வளர்ந்த மரங்கள் உடையதும் ஆகிய புளமங்கை தலத்தினில் இறைவன் உறைகின்றான். அவன் நம் அனைவருக்கும் தலைவனாக விளங்கி நம்மை ஆட்கொண்டு அருள் புரியும் கருணை உள்ளத்தன் ஆவான். அவன் வீற்றிருந்து நமக்கு அருள் புரியும் இடம் இந்த தலத்தில் உள்ள ஆலந்துறை திருக்கோயிலாகும். எனவே அவனை வணங்கி உங்களது வினைகளை தீர்த்துக் கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவீர்களாக.

பாடல் 6:

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்

பொன்னானவன் முதலானவன் பொழில் சூழ் புளமங்கை

என்னானவன் இசையானவன் இள ஞாயிறின் சோதி

அன்னானவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே

விளக்கம்:

என்னானவன்=எனக்கு இனியவனாக இருப்பவன்; எனக்கு உயிர் போன்று இன்றியமையாது இருப்பவன்; ஆன் என்ற சொல் பசுவினைக் குறிக்கும். பசு என்ற சொல்லோ அனைத்து உயிர்களையும் குறிக்கும் வண்ணம் சைவ சித்தாந்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. எனவே என்னானவன் என்ற சொல்லினை என் ஆன் ஆனவன் என்று பிரித்து எனக்கு உயிர் போன்றவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மன்=பொருந்தி உறைதல்; உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் பொருந்தி நின்றும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் கலந்து நின்று இயக்குபவன் இறைவன் அல்லவா. உலகத்தினுக்கு மழையாக பொழிந்து பயிர்கள் தழைத்து வாழவும் உயிர்கள் தங்களது தேவைக்கான நீரினைப் பெறுவதற்கு உதவுகின்ற மழையாக பொழிந்து அருள் செய்பவன் என்று பெருமானை ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மழை பிரதிபலன் எதிர்பாராது உலகினுக்கு வளம் சேர்ப்பது போன்று, பெருமானும் உயிர்களுக்கு பல விதமான நன்மைகளை, பிரதிபலன் எதிர்பாராது செய்கின்றான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. உலகிற்கு மழையாக பொழிந்து அருள் புரிபவன் சிவபெருமான் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருவல்லம் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.113.4) திருஞானசம்பந்தர், பெருமழையாக பெய்து உலகத்தை உய்விப்பன் பெருமான் என்று கூறுகின்றார். இரண்டாவது அடியில் உள்ள மை என்ற எழுத்தினை முதலடியுடன் சேர்த்து தம்மை என்று பொருள் கொள்ள வேண்டும்; செல்வம் ஓரிடத்தில் நிலையாக நில்லாது பல இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கும் தன்மையை, தவழ் திருமகள் என்று நயமாக குறிப்பிடுகின்றார். ஆனால் பெருமானை வணங்கும் அடியார்களிடம் பொருத்தியுள்ள செல்வம், அவ்வாறு பிரிந்து செல்லாது அடியார்களிடம் நிலையாக நிற்கும் என்பதை உணர்த்தும் முகமாக, திருமகள் வணங்க வைத்து என்று சம்பந்தர் இங்கே சொல்கின்றார். அதாவது, பெருமானின் அடியார்களை திருமகள் வணங்கி, அவர்களை விட்டு விலகாமல் இருப்பாள் என்று உணர்த்துகின்றார். எவரிடமும் இருக்கும் செல்வம் ஒரே சமயத்தில் பெருகுவதுமில்லை, ஒரே சமயத்தில் தேய்வதுமில்லை. செல்வ நிலையில் மாற்றங்கள் சிறிது சிறிதாகவே நிகழ்கின்றன. இதனைக் உணர்த்தும் வண்ணம் தவழ் திருமகள் என்று கூறினார் போலும். தவழும் குழந்தை மெதுவாகத் தானே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்கின்றது.

கொய்து அம்மலர் அடி கூடுவார் தம்

மைதவழ் திருமகள் வணங்க வைத்துப்

பெய்தவன் பெருமழை உலகம் உய்யச்

செய்தவன் உறைவிடம் திருவல்லமே

பிரமாபுரம் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.37.7) திருஞானசம்பந்தர், பெய்யும் மழையாக இருப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். செய்யன்=சிவந்த திருமேனியை உடையவன்; வெள்ளியன்=உடல் முழுவதும் திருநீறு பூசியதால், வெண்மை திறத்துடன் காட்சி அளிப்பவன்; ஒள்ளியார்=சிவஞானம் பெற்ற அடியார்கள். ஆண்தகை=ஆண்களில் சிறந்தவன்; நான்கு வேதங்களின் பொருளாக உள்ளவன் பெருமான் என்று இங்கே ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட

ஐயன் ஆண்தகை அந்தணன் அருமாமறைப் பொருள் ஆயினான்

பெய்யும் மாமழை ஆயினான் அவன் பிரமாபுரம் இடம் பேணிய

வெய்ய வெண்மழு ஏந்தியை நினைந்து ஏத்துமின் வினை வீடவே

பேரெயில் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.13.3) மழை சொரிய வைத்து அருள் புரிபவர் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். குறித்த காலத்தில் மழை பொழிவித்து நிலத்தினை வளம் பெறச் செய்யும் பெருமான், உலகினை குளிர்விக்கும் சந்திரனின் கதிர்களை விரித்தும், உலகினுக்கு தேவையான வெப்பத்தை அளிக்கும் சூரியனின் கதிர்களை எங்கும் படரச் செய்தும் உலகினில் உயிர்கள் வளர்வதற்கு வழி வகுக்கின்றார் என்று இந்த பாடலில் பெருமான் உயிர்களுக்கு செய்யும் உதவிகளை குறிப்பிடுகின்றார். மேலும் தான் நினைத்த மாத்திரத்தில் எந்த பொருளின் ஆற்றலையும் அடக்கும் வல்லமை கொண்ட பெருமான், இணைந்து நிற்கும் பொருட்களையும் பிரிக்க வேண்டிய நேரத்தில் பிரிக்கும் வல்லமை பெற்றவர் ஆவார் என்றும் நமக்கு பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றார். ..

சொரிவிப்பார் மழை சூழ்கதிர் திங்களை

விரிவிப்பார் வெயில் பட்ட விளங்கொளி

எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும்

பிரிவிப்பார் அவர் பேரெயில் ஆளரே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.46.2), வெண்முகிலாய் எழுந்து மழை பொழிவான் தன்னை என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மின்னானை=மின்னலாக இருந்து ஒளி தருபவன்; உருமு=இடி; ஒளியின் வேகத்தை விடவும் ஒலியின் வேகம் குறைவு என்பதால் நாம் மின்னலை முன்னர் காண்கின்றோம், அதன் பின்னரே இடியின் ஓசையைக் கேட்கின்றோம். எனவே இந்த வரிசை முறையை பின்பற்றி மின்னலும் முன்னமும் இடியை பின்னரும் வைத்து அப்பர் பிரான் பாடியுள்ளார். வெண்முகிலாய் மழை பொழிவான் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு சற்றே வியப்பினைத் தரலாம். நீர்த்திவலைகளை அதிகமாக உள்ளடக்கியதால் மேகங்கள் கருத்து காணப் படுவதையும், அத்தகைய மேகங்கள் ஒன்றோடு ஒன்று இடித்து மழை பொழிவதையும் நாம் அறிவோம். அப்படி இருக்கையில் வெண்முகில் என்று சொல்வதேன். நம்மைச் சற்று சிந்திக்க வைக்கும் தொடர் இது. கரு மேகங்களாக இருப்பினும், ஒன்றுடன் ஒன்று இடிப்பதால் ஏற்படும் மின்னல் ஒளியின் பின்னணியில், மேகங்கள் வெண்மை நிறத்துடன் காணப்படுவதை இங்கே குறிப்பிடும் வண்ணம் மழை பொழியும் வெண்முகில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

மின்னானை மின்னிடைச் சேரும் உருமினானை வெண்முகிலாய் எழுந்து

மழை பொழிவான் தன்னைத்

தன்னானைத் தன் ஒப்பார் இல்லாதானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர்

தந்தையாகி

என்னானை எந்தை பெருமான் தன்னை இருநிலமும் அண்டமுமாய்ச்

செக்கர் வானே

அன்னானை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன்

அடைந்து உய்ந்தேனே

உலகத்தின் வித்தாக இருக்கும் பெருமான், அந்த வித்து வளர்வதற்கு உதவி செய்யும் வண்ணம் வானிலிருந்து பொழியும் மழையாக இருந்து உயிர்களை வாழவைப்பவன் பெருமான் என்று வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்துப் பாடல் (648.4) ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொழில் ஏழு=ஏழுலகங்கள்; உய்த்தல்=செலுத்துதல்; அனைத்து உடல்களின் உள்ளே உயிராக இருந்து அந்த உடல்களை செலுத்துபவனும், ஓங்காரத்தால் உணர்த்தப் படுபவனும், அனைத்து உலகங்களும் தோன்றுவதற்கு விதையாக, முதற்காரணனாக இருப்பவனும், வானத்து மழையாக உலகை வாழ வைப்பவனும், மழையின் விளைவால் தோன்றும் பொருட்களாக இருப்பவனும், தன்னை விரும்பாதார் மனதினில் தோன்றாமல், இல்லாத பொருளாக இருப்பவனும், ஏழுலகங்களையும் தாங்குபவனும், கங்கை நதி மற்றும் பாம்பு ஆகியவற்றுடன் தன்னைச் சரணடைந்த பின்னர் வளரும் நிலைக்கு மாறிய சந்திரனையும் தனது சடையில் ஏற்றவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் தனது மனதினில் நிலையாக உள்ளான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

உய்ந்தவன் காண் உடல் தனக்கோர் உயிரானான் காண் ஓங்காரத்து

ஒருவன் காண் உலகுக்கு எல்லாம்

வித்தவன் காண் விண்பொழியும் மழையானான் காண் விளைவவன்

காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும்

பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு

வளர்மதியும் பாம்பும் சென்னி

வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான்

காண் அவன் என் மனத்துளானே

உலகெங்கும் மழையாக பெய்து அருள் புரிபவன் பெருமான் என்று அப்பர் பிரான், வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.50.6) கூறுகின்றார். மைவான மிடறு=கரிய மேகம் போன்ற கழுத்தினை உடையவன்; ஆர்த்தல்=ஆரவாரம் செய்ய; மதியான்=மதியை அணிந்தவன்; பிலம்=ஆழ்ந்த குகை; பொய்த்தல்=பறித்தல்; பிச்சாடல்=பித்து பிடித்தவரைப் போன்று நடமாடல்:, திருவீழிமிழலைப் பெருமானை அணுகி அவனை வழிபடாமல் நிற்கும் மாந்தர்கள் தங்களை அறியாமலே, தீயநெறிக்கு சென்று கெடுகின்றார்கள் என்று இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களையும் அப்பர் பிரான் முடிக்கின்றார். .

மைவான மிடற்றானை அவ்வான் மின் போல் வளர்சடை மேல் மதியானை

மழையாய் எங்கும்

பெய்வானைப் பிச்சாடல் ஆடுவானைப் பிலவாய பேய்க் கணங்கள் ஆர்க்கச்

சூலம்

பொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப் பூதலமும் மண்டலமும்

பொருந்து வாழ்க்கை

செய்வானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே

சேர்கின்றாரே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.64.8) அப்பர் பிரான், இடியாகத் தோன்றி முழங்கி மின்னலாக மின்னி மழையாகப் பெய்பவன் பெருமான் என்று கூறுகின்றார். வன்கூற்று=கொடிய கூற்றுவன்; பிணையல்=சடையுடன் பிணைந்த; உரு=இடி; வன்கூற்றை என்ற சொல்லை முடித்தவன் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். சாபம்=வில்; வில்லை பிடித்தவன் என்று கூறுவதன் மூலம், வில்லினை பயன்படுத்தாமல் மூன்று கோட்டைகளையும் பெருமான் அழித்தார் என்ற செய்தி உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு அம்பினையும் வில்லையும் பயன்படுத்தாமல் பெருமான் சிரித்தே மூன்று கோட்டைகளையும் எரித்தார் என்ற செய்தி சில புராணங்களில் காணப்படுகின்றது.

முடித்தவன் காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார் தம் புரம் மூன்றும்

வேவச் சாபம்

பிடித்தவன் காண் பிஞ்ஞகனாம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ்

கொன்றை அரவு சென்னி

முடித்தவன் காண் மூவிலை நல்வேலினான் காண் முழங்கி உருமெனத் தோன்றும்

மழையாய் மின்னி

இடித்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என்

எண்ணத்தானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.59.3) மழையாய் நின்று பொழிபவன் என்று பெருமானை சுந்தரர் குறிப்பிடுகின்றார். கலைக்கு எலாம் பொருளாக இருப்பவன் என்று நூல்கள் உணர்த்தும் பொருளாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

கார்க்குன்ற மழையாய்ப் பொழிவானைக் கலைக்கு எலாம் பொருளாய்

உடன் கூடி

பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானைப் பகலும் கங்குலும் ஆகி நின்றானை

ஓர்க்கின்ற செவியைச் சுவை தன்னை உணரும் நாவினைக் காண்கின்ற

கண்ணை

ஆர்க்கின்ற கடலை மலை தன்னை ஆரூரானை மறக்கலுமாமே

பொழிப்புரை:

உலகிலுள்ள அனைத்து உயிர்களில் பொருந்தியும் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் கலந்தும் அவற்றை இயக்குவதன் மூலம் உலகினுக்கு ஒப்பற்ற மன்னவனாகத் திகழும் பெருமான், மழையாகப் பொழிந்து பயிர்களும் பல்வேறு உயிர்களும் தழைத்து வாழும் வண்ணம் அருள் புரிகின்றான். குற்றமற்ற பொன் போன்று குறையேதும் இன்றி சிறந்த குணங்களைக் கொண்டு மிளிரும் பெருமான் அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கும் வாழ்வதற்கும் முழுமுதற் காரணமாக விளங்குகின்றான். எனது உயிர் போன்று இனிய தலைவனாக இருப்பவனும், இசை வடிவமாக உள்ளவனும், இள ஞாயிறு போன்று ஒளி திகழும் திருமேனியை உடையவனும் ஆகிய பெருமான் உறையும் இடம், சோலைகள் சூழ்ந்த புளமங்கை தலத்தினில் உள்ள ஆலந்துறை என்று அழைக்கப்படும் திருக்கோயிலாகும்.

பாடல் 7:

முடியார் தரு சடைமேல் முளை இளவெண்மதி சூடிப்

பொடியாடிய திருமேனியர் பொழில் சூழ் புளமங்கை

கடியார் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்

அடியார் தமக்கு இனியான் இடம் ஆலந்துறை அதுவே

விளக்கம்:

தனக்கு இனிய தலைவனாக உள்ள பெருமான், பல அடியார்களுக்கும் இனியவனாக விளங்கும் தன்மையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் அவ்வாறு பெருமான் பலருக்கும் இனியவனாக இருக்கும் காரணத்தையும் உணர்த்துகின்றார். நாமும் அந்த வழியை பின்பற்றி, நமக்கும் இனியவனாக இறைவனை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே ஞானசம்பந்தரின் விருப்பம் என்பதை நாம் இந்த பாடல் மூலம் உணரலாம். கடியார் மலர்=நறுமணம் மிகுந்த மலர்கள்; எளியவனாக விளங்கும் பெருமான் தனியாக கிரீடம் ஏதும் அணிந்து கொள்வதில்லை; அவரது நிமிர்ந்த சடைமுடியே அவருக்கு கிரீடமாக விளங்கும் தன்மை இங்கே சுட்டிக் காட்டப் படுகின்றது. முளை இளவெண்மதி என்று குறிப்பிட்டு, தக்கனின் சாபத்தால் அனைத்துக் கலைகளும் தேய்ந்து அழியும் நிலையில் இருந்து, முளைத்தெழுந்து இளைய வெண்மதியாக மாறிய தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இதன் மூலம் அடியார்களுக்கு இனியவனாக இருக்கும் இறைவன், தன்னைச் சரணடைந்த சந்திரனை அழியாமல் வாழவைத்து அவனுக்கு இனியவனாக இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

கிரீடம் போன்று நிமிர்ந்து நிற்கும் சடைமுடியை உடைய பெருமான், அந்த சடை முடியின் மேல், முளைத்து எழுந்த வெண்மதியினை சூட்டிக் கொண்டுள்ள பெருமான், திருநீற்றினைத் தனது திருமேனி முழுவதும் பூசியவராக காணப்படுகின்றார். புளமங்கை தலத்தினில் வீற்றிருக்கும் இறைவன், நறுமணம் மிகுந்த மலர்களும் நீரும் கொண்டு தனது திருப்பாதங்களை தொழுது தன்னைப் புகழ்ந்து பாடும் அடியார்களுக்கு மிகவும் இனியவனாக இருக்கின்றான். இத்தகைய பண்புகளை உடைய இறைவன் உறைவது, புளமங்கை தலத்தில் உள்ள ஆலந்துறை திருக்கோயில் ஆகும்.

பாடல் 8:

இலங்கை மனன் முடிதோள் இற எழிலார் திரு விரலால்

விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்திப்

புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை

அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே

விளக்கம்:

விலங்கல்=மலை, இங்கே கயிலை மலையை குறிப்பிடுகின்றது. மனன்=மன்னன்; எழில்=அழகு; விலங்கல் இடை=மழையின் கீழே; அலங்கல்= மாலை;

பொழிப்புரை:

இலங்கை மன்னனாகிய இராவணனின் கிரீடம் அணிந்த தலைகளும் தோள்களும் நெரிந்து அறுந்து விழும் வண்ணம், இராவணனின் உடலினை கயிலாய மலையின் கீழே அழுத்தியது பெருமானின் அழகிய கால் விரல்; வேதங்களை முறையாக கற்றறிந்து அந்த வேதமந்திரங்களை ஓதி பெருமானை புகழ்ந்து வழிபடும் தலத்து அந்தணர்கள், தங்களது புலன்களின் செயல்பாட்டினை அடக்கி புலன்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆளும் புகழினை உடையவர்கள் ஆவார்கள். அத்தகைய சிறப்பு மிகுந்த அந்தணர்கள் வாழும் இடமாகிய புளமங்கை தலத்தினில் உள்ள ஆலந்துறை என்று அழைக்கப்படும் திருக்கோயிலே மலர்கள் நிறைந்த சடையினை உடைய பெருமான் உறையும் இடமாகும்.

பாடல் 9:

செறியார் தரு வெள்ளைத் திருநீற்றின் திரு முண்டப்

பொறியார் தரு புரிநூல் வரை மார்பன் புளமங்கை

வெறியார் தரு கமலத்து அயன் மாலும் தனை நாடி

அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே

விளக்கம்:

முண்டம்=நெற்றி; செறியார் தரு=நெருக்கமாக அமைந்த பொருந்தி கலந்த; பொறியார் தரு=உத்தம இலக்கணங்கள் பொருந்திய; வரை=மலை போன்று அகன்ற; வெறியார்=நறுமணம் பொருந்திய;

பொழிப்புரை:

ஒன்றுக்கொன்று நெருங்கிய மூன்று பட்டைகளாக திருநீற்றினை அணிந்து கொண்டுள்ள நெற்றியை உடையவனும், உத்தம இலக்கணங்களுடன் பொருந்தி மலை போன்று அகன்று காணப்படும் மார்பினில் முப்புரிநூல் திகழும் வண்ணம் அணிந்தவனும் ஆகிய பெருமான், நறுமணம் பொருந்திய தாமரை மலர் மேலுறையும் பிரமனும் திருமாலும், முறையே தனது திருமுடி மற்றும் திருவடியைக் காண்பதற்கு முயற்சி செய்த போது, அவர்களால் அறிய முடியாத வண்ணம் நீண்ட நெடுந்தழலாக நின்றான். இவ்வாறு பிரமன் திருமால் ஆகிய இருவராலும் அறியமுடியாத வண்ணம் நின்ற பெருமான், நாம் அனைவரும் எளிதினில் காணும் வண்ணம், புளமங்கை தலத்தினில் ஆலந்துறை என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறைகின்றான்.

பாடல் 10:

நீதி அறியாதார் அமண் கையரொடு மண்டைப்

போதி அவர் ஓதும் உரை கொள்ளார் புளமங்கை

ஆதியவர் கோயில் திருவாலந்துறை தொழுமின்

சாதிம்மிகு வானோர் தொழு தன்மை பெறலாமே

விளக்கம்:

கையர்=கீழ்மையானவர்கள்; அமண்=சமணர்கள்; மண்டை=புத்தர்கள் தங்களது கையில், அடுத்தவர் தரும் உணவினை ஏற்றுக் கொள்வதற்காக, வைத்திருக்கும் ஓடு; போதி அவர்=போதி மரத்தினை புனிதமாக கொண்டாடும் புத்தர்கள். புத்தர் ஞானம் அடைந்தது போதி மரத்தின் அடியில் என்பதால், இந்த மரம் புத்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. சாதிம்மிகு=பலவகையான தேவர்கள்; முப்பத்துமுக்கோடி தேவர்கள் என்று பொதுவாக கூறுவார்கள். கோடி என்றால் வடமொழியில் வகை என்று ஒரு பொருள். எனவே முப்பத்து மூன்று வகையான தேவர்கள் என்று பொருள் கொள்கின்றனர். பதினோரு வகையான ருத்ரர்கள், பன்னிரண்டு வகையான சூரியன், எட்டு வசுக்கள், இரண்டு அஸ்வினி தேவர்கள் என்று முப்பத்துமூன்று வகை தேவர்களை வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு தேவர்க்கும் ஒரு கோடி பரிவாரங்கள் உண்டு என்றும் கூறுவார்கள். கோடி என்பது எண்ணற்ற பரிவாரங்கள் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்றும் பொருள் கொள்ளலாம். இந்த பாடலில் சமணர் மற்றும் புத்த குருமார்களை ஞானசம்பந்தர் குறிப்பிடுவது, அவரது வாழ்நாளில் வாழ்ந்த சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நீதி=முறையான வாழ்க்கை; சிவபெருமானை வழிபட்டு வாழ்வதே முறையான வாழ்க்கை. முறையான வாழ்க்கை வாழ்ந்து சிவபெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடையாமல், வீணான வாழ்க்கையை வாழும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று கூறுகின்றார். .

பொழிப்புரை:

முறையான வாழ்க்கை என்றால் என்னவென்று அறியாத கீழ்மை குணம் உடைய சமண குருமார்களும், மண்டைப் பாத்திரத்தை ஏந்தியவண்ணம் அடுத்தவர் அளிக்கும் உணவினை ஏற்றுக்கொள்ளும் புத்த குருமார்களும், சொல்லும் உரைகளை உண்மையானவை என்று கொள்ளாமல், அவற்றின் பொய்த் தன்மையை புரிந்து கொண்டு, அவற்றை புறக்கணித்து விலக்கி, வாழ்பவர்கள் புளமங்கை தலத்து மக்கள்; உலகத்தவரே, அனைத்து உயிர்கட்கும் ஆதியாக விளங்கும் சிவபெருமான் உறையும், புளமங்கை தலத்தில் உள்ள ஆலந்துறை திருக்கோயில் சென்றடைந்து பெருமானைத் தொழுவீர்களாக. அவ்வாறு இறைவனைத் தொழும் அடியார்கள், முப்பத்து முக்கோடி தேவர்களும் தொழும் சிறப்பினை உடையவர்களாக விளங்குவார்கள்.

பாடல் 11:

பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை

அந்தண் புனல் வருகாவிரி ஆலந்துறையானைக்

கந்தம் மலி கமழ் காழியுள் கலி ஞானசம்பந்தன்

சந்தம் மலி பாடல் சொலி ஆடத் தவமாமே

விளக்கம்:

இந்த பாடலில் சந்தங்களுடன் பொருத்தி தேவாரப் பாடல்களை பாடியும் ஆடியும் பெருமானைக் கொண்டாடுவது தவம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். அதாவது தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு காட்டினில் உறைந்து தங்களது புலன்களை அடக்கி ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து தவம் செய்வதால், பண்டைய நாட்களில் முனிவர்கள் பெற்ற பலனை நாம் எளிதில் அடையும் வழி தேவாரப் பதிகங்களை முறையாக ஓதுவது என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். கலியுகத்தில் பெருமானை நினைத்து அவனது திருநாமங்களை சொல்வதே பெரிய பலன்களைத் தேடித் தரும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். நால்வர் பெருமானார்களும் தங்களது பாடல்களில் எத்தைகய செயல்கள் தவத்திற்கு சமமாக இறைவனால் மதிக்கப்பட்டு நமக்கு பலன்களைத் தரும் என்று கூறுகின்றனர். அத்தகைய பாடல்களில் இந்த பாடல் ஒன்று. இவ்வாறு தவம் என்றால் யாது என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருவண்ணாமலை பதிகத்தின் கடைப் பாடலில் (1.10.11) அண்ணாமலை குறித்து ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகத்தினை முறையாக ஓதும் வல்லமை பெற்ற அடியார்களின் திருவடிகளைப் பேணிப் போற்றுதல் தவம் என்று சொல்லப் படுகின்றது. கதிரவனின் ஒளி உள்ளே புகாத வண்ணம், மரங்களின் நெருங்கியும் அடர்ந்தும் வளர்ந்துள்ள மலைச் சாரல் உடையது திருவண்ணாமலை என்று கூறுகின்றார். கொம்பு வாத்தியங்களிலிருந்து எழும் இனிய ஓசை கேட்கும் குயில்கள் தாங்களும் பதிலுக்கு கூவி இனிய ஒலி எழுப்பும் தலம் சீர்காழி தலம் என்று கூறுகின்றார்.

வெம்புந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல்

அம்புந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனைக்

கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞான

சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே

நறையூர் சித்தீச்சரம் தலம் சென்று இறைவனை வழிபடுதலே சிறந்த தவம் என்று சம்பந்தர் கூறும் பாடலை (1.29.10) நாம் இப்போது காண்போம்,. தவம் செய்வது எதற்காக, உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்திப் பேற்றினை அடைவதற்காகத் தானே. அத்தகைய முக்திப் பேறு எளிதாக கிடைக்கும் வேறு வழி இருப்பின் நாம் நமது உடலினை வருத்திக் கொண்டு தவம் செய்வதைத் தவிர்க்கலாம் அல்லவா. நீராடுவதை தவிர்ப்பதாலும் நுண்ணிய ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பதாலும் உடலில் மாசு உடையவர்களாக விளங்கும் சமணர்களின் பேச்சினை பொருட்படுத்தாமல் இருக்குமாறு அறிவுரை கூறும் ஞானசம்பந்தர், வாழ்க்கையில் உய்வினை அடைய வேண்டும் என விரும்புவோர் நறையூர் சித்தீச்சரம் சென்று வழிபடவேண்டும் என்று கூறுகின்றார். அத்தகைய வழிபாடே, சிறந்த தவமாக பெருமானால் கருதப்பட்டு முக்தி நெறி வாய்க்கும் என்று கூறுகின்றார்.

மெய்யின் மாசர் விரிநுண் துகிலினார்

கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்

உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்

செய்யும் சித்தீச்சரமே தவமாமே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடல் (1.102.8) ஒன்றினில் பெருமானின் புகழினை குறிப்பிட்டு அவனது திருநாமங்களை சொல்லித் தொழும் தன்மை தவத்திற்கு ஒப்பாகும் என்று கூறுகின்றார். பாடலின் முதல் இரண்டு அடிகளில், சீர்காழி நகரினில் கடல் வாணிபம் செழித்து வளர்ந்திருந்த தன்மையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இலங்கை அரசன் இராவணனை முதலில் வருத்தி, பின்னர் அவனது நிலைக்கு இரக்கம் கொண்டு அருள் செய்த மன்னவனே என்றும் மிகவும் வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் தாங்கிய வல்லமை உடைய அரசே என்றும் பெருமானைப் புகழ்ந்து பணிவதே தவம் என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார், உலம்=வலிய; ஆர்கலி=ஆரவாரம் செய்யும் கடல்; ஓதம்=அலை;

உலம் கொள் சங்கத்தார் கலி ஓதத்து உதையுண்டு

கலங்கள் வந்து கார் வயலேறும் கலிக்காழி

இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த

சலம் கொள் சென்னி மன்னா என்னத் தவமாமே

தேவாரப் பதிகங்களை பலமுறை மனதினில் எண்ணிப் பெருமானை புகழ்ந்து வணங்குதல் தவம் என்று பருப்பதம் தலத்தின் பாடலில் (1.118.11) ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். பெருமானின் உருவத்தினை நாம் மனதினில் கற்பனை செய்து தியானிக்கும் வண்ணம், பெருமானின் திருவுருவச் சிறப்புகள் அருளாளர்களால் சொல்லப் படுகின்றன.

வெண் செநெல் விளை கழனி விழவொலி கழுமலத்தான்

பண் செலப் பல பாடலிசை முரல் பருப்பதத்தை

நன்சொலினால் பரவு ஞானசம்பந்தன் நல்ல

ஒண் சொலின் இவை மாலை உருவெணத் தவமாமே

களர் எனப்படும் தலத்தின் மீது அருளிய பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள் தவம் செய்தவர்களாக கருதப் படுவார்கள் என்று அந்த பதிகத்தின் கடைப் பாடலில் (2.51.11) ஞானசம்பந்தர் கூறுகின்றார். செந்து என்பது தமிழ் பண் வகைகளில் ஒன்று. அந்த பண் போன்று இனிய மொழியினை உடைய மகளிர் திருக்களர் தலத்தில் வாழ்ந்து வந்ததாக சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அந்தி வானம் போன்று சிவந்த மேனி உடையவனும் தேவர்களின் தலைவனாக விளங்குபவனும் ஆகிய பெருமானை ஞானசம்பந்தன் அருளிய பத்து பாடல்களையும் முறையாக பாடுதல் தவத்திற்கு ஒப்பான செயலாகும்.

இந்து வந்தெழு மாட வீதி எழில் கொள் காழிந் நகர்க் கவுணியன்

செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள்

அந்தி அன்னதோர் மேனியானை அமரர் தம் பெருமானை ஞானசம்

பந்தன் சொல்லிவை பத்தும் பாடத் தவமாமே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.105.10), பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குதல் தவம் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் சிவபெருமானை வணங்கிப் போற்றுவதை விரும்பாத பலர் நம்மை திசை திருப்ப முயற்சி செய்வதை நாம் இன்றும் காண்கின்றோம். அன்றும் இந்த நிலை இருந்ததை தேவாரப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. குறிப்பாக சமணர்களும் புத்தர்களும், இந்து மதத்தின் பெருமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்த பல செயல்களை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். அத்தகையோரின் பேச்சினில் மயங்கி அறிவிழந்து தமது நிலையிலிருந்து தடுமாறாமல் தொடர்ந்து சிவபெருமானின் திருவடிகளை போற்றி வழிபடுதல் சிறந்த தவம் என்று இங்கே ஞானசம்பந்தர் கூறுகின்றார். சீறுதல்=அழித்தல்; முடி அழிக்கப்பட்டு மழித்த தலையை உடைய சமணர்கள்; கொடியன்=கொடியினை உடையவன்; வீறு=பெருமை; ஏதம்=குற்றம்; பேறு=ஆன்மாக்கள் அடையவேண்டிய சிவானந்தப் பேறு.

சீறுலாவிய தலையினர் நிலையிலா அமணர்கள் சீவரார்

வீறிலாத வெஞ்சொல் பல விரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர்

ஏறுலாவிய கொடியனை ஏதமில் பெருந்திருக்கோயில் மன்னு

பேறுலாவிய பெருமையன் திருவடி பேணுமின் தவமாமே

காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.29.8) நமது தலையினைத் தாழ்த்தி, உணர்வு பூர்வமாக, பெருமானின் பெருமையையும் நமது சிறுமையையும் நினைத்து, ஒன்றிய மனத்துடன் இறைவனை வணங்குதல் தவம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். சிலை=வில்; கலை=மலை; புறவு=முல்லை நிலம்; ஒவ்வொரு பிரளயத்திலும் கயிலாய மலை தான் அழியாமல் இருப்பது மட்டுமன்றி சற்று வளரும் தன்மை உடையது என்றும் கூறுவார்கள். அதனை உணர்த்தும் பொருட்டு சிறப்புடைய கயிலாய மலை என்று ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

சிலை தனால் முப்புரம் செற்றவன் சீரினால்

மலை தனால் வல்லரக்கன் வலி வாட்டினான்

கலை தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி

தலை தனால் வணங்கிடத் தவமது ஆகுமே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.48.8) மழபாடி மன்னனைத் தங்களது தலையினைத் தாழ்த்தி தொழும் அடியார்கள் தவப்பலனை பெறுவார்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். வேதநெறி மற்றும் சிவநெறியை பின்பற்றும் அடியார்களுடன் சேராத தன்மையை உடைய திரிபுரத்து அரக்கர்களை மருவார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உலகில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் கலை நயத்துடன் திகழ்வதும், அந்த பொருட்களுடன் இறைவன் இணைந்து இருப்பதையும் கலையினான் என்ற சொல் மூலம் ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

கலையினான் மறையான் கதி ஆகிய

மலையினான் மருவார் புரம் மூன்று எய்த

சிலையினான் சேர் திருமழபாடியைத்

தலையினால் வணங்கத் தவம் ஆகுமே

பெருமானின் திருவடிகளைத் தங்களது மனதினில் தியானிப்பவர்களின் செயல் தவமாக மதிக்கப்பட்டு, அவர்கள் தவத்தின் பயனை அடைவார்கள் என்று சீர்காழி (வெங்குரு என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்து பாடல் ஒன்றினில் (3.94.5) ஞானசம்பந்தரால் உணர்த்த படுகின்றது. மிக்கவர்=அன்பின் மிக்கவர்; அக்கு=எலும்பு; தவம் செய்யப்படுவது வீடுபேறு அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான். பெருமானின் திருவடிகளை தியானித்தால் வீடுபேற்றினை அடையலாம் என்பதால், பெருமானின் திருவடி வழிபாடு தவமாக மதிக்கப் படுகின்றது.

மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய

அக்கினொடு அரவு அசைத்தீரே

அக்கினொடு அரவு அசைத்தீர் உமது அடியிணை

தக்கவர் உறுவது தவமே

சிறுகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.97.6) பெருமானை வாழ்த்தும் அடியார்கள் தவப்பேறு உடையவர்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். அவர்கள் எதனைக் கண்டும் அச்சம் கொள்ளாதவர்களாகவும் பல நலன்கள் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

செங்கயல் புனல் அணி சிறுகுடி

மங்கையை இடம் உடையீரே

மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார்

சங்கை அது இலர் நலர் தவமே

பெருமானை முறையாகத் தொழுவதே தவம் என்று திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.27.8) அப்பர் பிரான் கூறுகின்றார். முன்னையாறு=முன்+நையாறு, நையாறு=துன்ப நெறி; துன்பம் அளிக்கும் பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு, அதினின்று விடுதலை தேடும் மனிதர்கள்; பேதைகாள்=அறிவிலிகள் உயிர்கள்; பின்னையாறு=பின்+நையாறு; மன்னையாறு= மன்+ஐயாறு, மன்=நிலை பெற்ற; ஆறு=முறை, பெரியோர்கள் வகுத்த வழிமுறை; பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு அந்த நிலை தரும் துன்பங்களில் உழன்று எத்துணை முயற்சி செய்தாலும் வெளியே வர முடியாமல் தவிக்கும் மாந்தர்களே, நான் உங்களுக்கு தீர்வினை சொல்கின்றேன் கேட்பீர்களாக; சிவபெருமானை நோக்கி, பெருமானே இந்த துன்பச் சுழலிலிருந்து என்னை பிரித்து ஆட்கொள்வாயாக என்று நீங்கள் வேண்டுவீர்களாக. நிலையான திருவையாறு தலத்தில் உறைபவனும், பெரிய தவத்தோனாகவும் திகழ்கின்ற பெருமான் தன்னை முறையாக அடியார்கள் தொழுவதை தவமாக ஏற்றுக்கொண்டு அருள் புரிகின்றான் என்று அப்பர் பிரான் உணர்த்துவதாக அமைந்த பாடல்.

முன்னையாறு முயன்று எழுவீர் எலாம்

பின்னையாறு பிரி எனும் பேதைகாள்

மன்னையாறு மருவிய மாதவன்

தன்னையாறு தொழத் தவமாகுமே

கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், நமது தலையினைத் தாழ்த்தி இறைவனை வணங்குவதே தவம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நிலையினார் வரை=ஊழிக்காலத்திலும் அழியாது நிற்கும் கயிலாய மலை; விறல்=வலிமை;

நிலையினர் வரை நின்று எடுத்தான் தனை

மலையினால் அடர்த்து விறல் வாட்டினான்

குலையினார் பொழில் கொண்டீச்சுரவனைத்

தலையினால் வணங்கத் தவமாகுமே

சிவனடியார்களின் வேடம் கண்டு அவர்களை அடையாளம் ;புரிந்து கொண்டு மகிழ்வுடன், அவர்களைத் தலைவராக மதித்து, அவர்களது திருப்பாதங்களை விளக்கி பின்னர் பலவிதமாக தொண்டுகள் செய்து, அவர்களது கால்களைக் கழுவிய நீரினைத் தலையினில் தெளித்துக் கொள்ளுதல் பெரிய தவத்திற்கு ஒப்பானது என்று திருமூலர் கூறுகின்றார். இந்த செயலை செய்யும் பழக்கத்தினை ஒருவரது இளைய வயதினிலே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றார்.

அறியாப் பருவத்து அரன் அடியாரைக்

குறியால் அறிந்து இன்பம் கொண்டு அது அடிமை

குறியார் சடை முடி கூட்டி நடப்பார்

மறியார் புனல் மூழ்க மாதவமாமே

மேற்கண்ட பாடல்கள், மனம் ஒன்றி உணர்வு பூர்வமாக பெருமானைத் தலை தாழ்த்தி வணங்குதலும், இறைவன் குடிகொண்டிருக்கும் திருத்தலங்கள் சென்று அவனை வழிபடுவதும், பெருமானின் திருநாமங்களையும் அவனது பெருமையையும் சொல்லி அவனை வழிபடுவதும், தேவாரப் பாடல்களை பாடும் அடியார்களின் திருவடிகளைப் பேணிப் போற்றுவதும், திருமுறை பாடல்கள் மூலம் பெருமானின் திருவுருவத் தன்மையை அறிந்து கொண்டு அவற்றை மனதினில் நிலைநிறுத்தி தியானம் செய்து வழிபடுவதும், தேவாரப் பாடல்களை பொருள் உணர்ந்து முறையான பண்ணுடன் இசைத்து மனம் ஒன்றி பாடி இறைவனை வழிபடுவதும், பெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவதும், பெருமானின் அடையர்களது திருப்பதங்களை கழுவிய நீரினை புனித நீராக கருதி தங்களது தலையில் தெளித்துக் கொண்டு போற்றுவதும் தவத்திற்கு சமமான செயல்கள் என்று அருளாளர்கள் கூறியுள்ளனர். இந்த செயல்கள் அனைத்தும் மிகவும் எளிய செயல்கள் என்பதால், அவற்றை பின்பற்றி நாமும் பெருமானின் அருளின் துணை கொண்டு தவப்பயனை அடைவோமாக.

பொழிப்புரை:

மரப்பொந்துகளின் இடையே உள்ள தேனடைகளில் தேனீக்கள் மிகுதியாக தேனினை சேகரித்து வைக்கும் மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட புளமங்கை தலத்தினில், குளிர்ச்சி பொருந்திய நீரைக் கொண்டுவந்து தருகின்ற காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஆலந்துறை திருக்கோயிலில் உறையும் பெருமானை, நறுமணம் கமழும் சீர்காழி நகரில் தோன்றியவனும், கலை ஞானம் உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் இயற்றிய, சந்தநடை பொருந்திய பாடல்களை முறையாக பாடி, அந்த பாடல்கள் உணர்த்தும் பொருளில் லயித்து தன்னை மறந்து பக்திப் பரவசத்துடன் ஆட தவம் செய்வதால் வரும் பலன்கள் நம்மை வந்தடையும்.

முடிவுரை:

பாலினும் இனியவனாக விளங்கும் பெருமான் என்று பதிகத்தைத் தொடங்கும் திருஞானசம்பந்தர், பெருமான் பல விதமாகவும் உயிர்களுக்கு அருள் புரிவதால் இனியவனாக உள்ளார் என்று உணர்த்தும் முகமாக, உயிர்களுக்கு அவர் புரியும் கருணைச் செயல்களை இந்த பதிகத்தினில் குறிப்பிடுகின்றார். தன்னைத் தொழும் அடியார்களை வினைகள் அணுகாத வண்ணம் காக்கின்ற பெருமான் என்று முதல் பாடலில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு வினைகள் மேலும் சேராத வண்ணம் அடியார்களை காக்கும் பெருமான், அவர்களுடன் இணைந்துள்ள பழவினைகளையும் களைந்து, தனது அடியார்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்கின்றான் என்று இரண்டாவது பாடலில் உணர்த்துகின்றார். முதல் இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட வண்ணம் அருள் புரியும் பெருமானின் திருப்பாதங்களைத் தொழுதும், அவனைப் புகழ்ந்து போற்றியும் வந்து அருளினைப் பெறுவதற்கு நாம் வழி வகுத்துக் கொள்ளவேண்டும் என்று பதிகத்தின் மூன்றாவது பாடலில் அறிவுரை கூறுகின்றார். இவ்வாறு பெருமான் அருள் புரிவதை புரிந்து கொண்ட, அடியார்கள் பலரும் அவன் உறையும் இடங்களில் சூழ்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு திருப்பணிகள் பல செய்வதை நமக்கு சுட்டிக்காட்டி, நாமும் அத்தகைய தொண்டர்கள் போல் பெருமானுக்கு திருப்பணி செய்யவேண்டும் என்பதை நான்காவது பாடலில் உணர்த்துகின்றார். பெருமானை வழிபடுவதற்கான பொருட்கள் அனைத்தையும் காவரி நதியே வழங்குகின்றது என்று குறிப்பிட்டு, பெருமானை வணங்குவது மிகவும் எளிதான செயல் என்று குறிப்பிட்டு நம்மை ஊக்குவிப்பதை ஐந்தாவது பாடலில் உணரலாம். பெருமான் எவ்வாறெல்லாம் நமது அன்றாட வாழக்கைக்கு இன்றியமையாதவனாக இருந்து உதவுகின்றான் என்பதை ஆறாவது பாடல் உணர்த்துகின்றது. தனது திருப்பாதங்களை புகழ்ந்து பாடி வணங்கும் அடியார்களுக்கு இனியவனாக பெருமான் இருக்கும் நிலை, சந்திரனுக்கு அருள் புரிந்த தன்மையை ஏழாவது பாடலில் குறிப்பிடுவதன் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. வேதங்களை நன்கு கற்றுச் தேர்ந்து தங்களது புலன்களை அடக்கி ஆளும் தலத்து வேதியர்களின் சிறப்பான தன்மை எட்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பிரமன் திருமால் ஆகிய இருவரும் காணமுடியாத வண்ணம் அரியோனாக திகழ்ந்த போதிலும், நம்மைப் போன்ற அடியார்கள் வழிபட்டு உய்வினை அடையும் வண்ணம், நிலவுலகில் உள்ள புளமங்கை தலத்தில் இறைவன் உறைகின்றான் என்று குறிப்பிட்டு, இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஒன்பதாவது பாடலில் உணர்த்துகின்றார். மாற்று மதத்தவரின் வீணான சொற்களை புறக்கணித்து விளக்கிய மக்கள் என்று தலத்து மக்களின் சிறப்பை குறிப்பிட்டு, அவர்களை நாமும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை பத்தாவது பாடலில் வழங்கப் படுகின்றது. சந்த இசை பொருந்திய தேவாரப் பாடல்களின் பொருளை உணர்ந்து, அந்த பொருளின் வழியே மனம் லயித்து, முறையான பண்ணுடன் பொருத்தி பாடி, பக்திப் பரவசத்தில் தன்னையும் மறந்து பாடும் அடியார்கள், தவத்தின் பயனை பெறுவார்கள் என்று குறிப்பிட்டு, தவம் செய்யாமலே, தவத்தின் பயனை அடையும் வழியை நமக்கு பதிகத்தின் கடைப் பாடலில் ஞானசம்பந்தர் சொல்லிக் கொடுக்கின்றார். ஞானசம்பந்தர் காட்டிய வழியே சென்று, தேவாரப் பாடல்களை முறையாக பாடி, தவம் செய்வதால் அடையும் பயன்களை, மிகவும் எளிதாக நாம் பெறுவோமாக.

பாலுந்துறு திறள் (Paalunthuruth Thiral) is a poetic phrase commonly found in Tamil classical and devotional literature. The phrase evokes imagery of pure, nurturing, and abundant qualities, often used in connection with divine figures or nature. Let’s break it down:

Breakdown of the Phrase:

பால் (Paal): Refers to milk, a symbol of purity, nourishment, and divinity in Tamil literature and culture.

உந்துறு (Unthuruthu): Means flowing or oozing. In this context, it refers to something flowing in abundance, especially in a gentle, nurturing manner, like the flow of milk.

திறள் (Thiral): Refers to strength, abundance, or energy. It often conveys the idea of might, power, or the presence of something in large quantities.

Full Meaning:

"பாலுந்துறு திறள்" can be translated as "the abundant flow of milk" or "milk flowing in strength and abundance." The imagery here is one of nurturing power and divine abundance, emphasizing both the gentle nature of milk and its life-giving, nourishing qualities.

Context:

In Tamil devotional hymns and classical poetry, the flow of milk is often used as a metaphor for divine grace, compassion, and nurturing. It represents purity, spiritual nourishment, and the care that the divine gives to its devotees. Milk is also associated with maternal love and the giving of life.

In the context of Goddess Parvati or Divine Mother figures, the phrase could refer to her nurturing and life-sustaining qualities.
In the context of Lord Shiva or other gods, it could signify the divine's provision of grace and blessings in abundance to their devotees.
This phrase could also be used in a more literal sense to describe rituals where milk is offered to deities in temples, symbolizing purity and devotion.

Symbolism:

Milk: Represents purity, nourishment, spiritual knowledge, and divine grace.
Flowing: Suggests abundance, generosity, and the unending nature of divine blessings.
Strength (Thiral): Emphasizes the power and might behind the nurturing qualities, showing that even something as gentle as milk can have immense divine energy.

Thus, "பாலுந்துறு திறள்" captures the essence of the divine's nurturing, abundant, and powerful grace that flows endlessly to sustain and uplift the universe and its beings.



Share



Was this helpful?