இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பந்தார்விரல் மடவாள்

பந்தார்விரல் மடவாள்

பதிக எண்: 2.72 - திரு நணா (பவானி) - காந்தாரம்

பின்னணி:

தனது ஐந்தாவது திருத்தலப்பயணத்தில் முதன் முறையாக கொங்கு நாடு நோக்கிச் சென்ற திருஞானசம்பந்தர், முதலில் கொடிமாடச் செங்குன்றூர் (இந்நாளில் திருச்செங்கோடு என்று அழைக்கப் படும் தலம்) தலத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருநணா சென்றார் என்று பெரிய புராணம் உணர்த்துகின்றது. குடபுலம்=மேற்கு திசை; பாந்தள்=பாம்பு; மேற்கு திசையில் உள்ள கோயில்கள் எல்லாம் சென்றதாக சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார். அவ்வாறு ஞானசம்பந்தர் சென்ற தலங்கள் யாவை என்பது தெரியவில்லை. சிவக்கவிமணியார் தனது பெரிய புராண விளக்கம் நூலினில், பேரூர், அவினாசி, கொல்லிமலை, மாத்தூர், சேவூர், தோழூர், ஏழூர், திருமுருகன்பூண்டி, குரக்குத்தளி, குமரிகொங்கு ஆகிய தலங்கள், ஞானசம்பந்தர் சென்றிருக்கலாம் என்று கருதுகின்றார். ஆனால் அந்த தலங்களின் மீது அவர் அருளிய பதிகங்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை என்பதால் நம்மால் உறுதியாக ஏதும் சொல்ல முடிவதில்லை. திருநணா தலம் தற்போது பவானி என்று அழைக்கப்படுகின்றது. இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகம் ஒன்றும் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

அப்பாலைக் குடபுலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில்

எப்பாலும் சென்று ஏத்தித் திருநணாவினை இறைஞ்சிப்

பைப்பாந்தள் புனைந்தவரைப் பரவிப் பண்டு அமர்கின்ற

வைப்பான செங்குன்றூர் வந்தணைந்து வைகினார்

இந்த தலம் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து பதினைந்து கி,மீ. தூரத்தில் உள்ளது. இறைவனின் திருநாமம் சங்கமேஸ்வரர்; இறைவியின் திருநாமம் வேதநாயகி; பவானி நதியும் காவிரி நதியும் கூடுமிடம் என்பதால் பவானிகூடல் என்றும் அழைக்கப் படுகின்றது. பராசர முனிவர் அமுதக்குடம் வைத்திருந்த இடத்திலிருந்து அமுத நதி பெருகி, எவரும் அறியாத வண்ணம் பூமிக்கு அடியில் ஓடி, காவிரி பவானி நதிகளுடன் கலப்பதாக நம்பப்படுகின்றது. எனவே இந்த தலத்தினை தென்திரிவேணி சங்கமம் என்றும் கூறுவார்கள். நாககிரி, வேதகிரி, மங்களகிரி, மற்றும் சங்கிரி ஆகிய நான்கு மலைகளுக்கு நடுவில் இந்த தலம் உள்ளது. இந்த தலத்தில் உறையும் சிவபெருமானை வழிபடும் அடியார்களை யாதொரு தீங்கும் அணுகாத (நணுகாத) தலம் என்பதால் நண்ணாவூர் என்று அழைக்கப்பட்ட தலம் நாளடைவில் மருவி நணா என்று மாறியது போலும். இந்த காரணம் பற்றியே திருஞானசம்பந்தரும் இந்த தலத்தின் சிறப்பினை பதிகத்தின் பல பாடல்களில் எடுத்துரைக்கின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், திருஞானசம்பந்தர் திருநணா என்று அடைமொழி கொடுத்து சிறப்பிப்பதை நாம் உணரலாம். குபேரன், விஸ்வாமித்திரர், பராசரர் ஆகியோர் வழிபட்டு பேறுகள் பெற்ற தலம். அளகாபுரி என்பது குபேரனின் நகரம். அளகை நகரை உடைய குபேரன் வழிபட்டு பயன் பெற்றமையால், இறைவனுக்கு அளகேசன் என்ற பெயரும் உள்ளது. சங்கமேஸ்வரர் மற்றும் பவானி அன்னை சன்னதிகளின் இடையே முருகர் சன்னதி, அமைந்துள்ள தன்மை நமக்கு, சோமாஸ்கந்தர் அமைப்பினை நினைவூட்டுகின்றது. காஞ்சிபுரம் தலத்தினில், கச்சிஏகம்பர் திருக்கோயிலுக்கும் காமாட்சி அம்மை திருக்கோயிலுக்கும் இடையில் குமரகோட்டம் அமைந்திருப்பதும் நமது நினைவுக்கு வருகின்றது. இறைவன் சுயம்பு மூர்த்தம். இங்கே ஆதிகேசவப் பெருமாள் மற்றும் சௌந்தரவல்லி தாயார் சன்னதிகளும் உள்ளன. பெருமாள் மற்றும் பிராட்டி சன்னதியின் நடுவே, யோகநரசிம்மர் சன்னதி உள்ளது. சாந்தமான கோலத்துடன் காட்சி தரும் நரசிம்மர், இங்கே இலக்குமி தேவியுடன் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். கோயிலில் சிவபெருமான் மற்றும் திருமால் சன்னதிகள் கொண்டுள்ள சில அரிய கோயில்களில் இந்த திருக்கோயில் ஒன்றாகும். திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் பெருமான் ஏற்றுக்கொண்ட நிலையினை நினைவூட்டும் வகையில் திருமாலின் சன்னதி, பெருமானுக்கு இடது பக்கத்தில் அமைந்துள்ளது. மூதாதையர்களுக்கு உரிய வழிபாடுகள் செய்ய சிறந்த தலமாக கருதப்படுகின்றது. இந்த கோயிலில் இராஜ கோபுரம் லிங்கமாக கருதப்படுவதால், நந்தி கோபுரத்திற்கு வெளியே காணப்படுகின்றது. கோஷ்டமூர்த்தமாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தி பெரிய அளவில் அழகாக உள்ளது. பெருமானின் சன்னதியிலிருந்து படித்துறை செல்லும் வழியில் சந்தான இலிங்கேஸ்வரர் எனும் சிறிய சன்னதி உள்ளது. இங்குள்ள இலிங்கத்தை ஆவுடையாரிலிருந்து பிரித்து எடுக்கலாம். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், இந்த இலிங்கத்தைத் தங்களது மடியில் வைத்துக் கொண்டு பெருமானின் சன்னதியை மூன்று முறை வலம் வந்தால், அவர்களுக்கு இறைவன் குழந்தை பாக்கியம் அருள்வார் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.

அம்மன் சன்னதியின் வெளிச்சுவற்றில் மூன்று துவாரங்கள் உள்ளன. 1804ஆம் ஆண்டில் வில்லியம் கரோ என்பவர் இங்கே மாநில ஆட்சியராக பணியாற்றி வந்தார். அவர் பவானி அம்மனை தரிசனம் செய்வதற்கு மிகுந்த விருப்பம் கொண்டவராக இருந்தார். வெளிநாட்டவர் என்பதால் அவரை கோயிலின் உள்ளே அனுமதிக்கவில்லை. எனினும், அம்மன் சன்னதியின் சுவற்றில் மூன்று துவாரங்கள் இட்டு, அந்த துவாரங்கள் வழியே அவர் அன்னையை தினமும் தரிசித்து வந்தார். ஒரு நாள் இரவு, அவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த போது, ஒரு சிறுமி அவரது படுக்கையறைக்கு வந்து, அவரை கைப்பிடித்து வீட்டின் வெளியே இழுத்துக் கொண்டு வந்தாள். அவர் அந்த சிறுமியுடன் வெளியே வந்த ஒரு சில நொடிகளில், அந்த வீட்டின் மாடிப்பகுதி இடிந்து பெரும் சேதம் ஏற்பட்டது. தனது உயிரினை, சிறுமி வடிவத்தில் வந்த பவானி அன்னை தான் காப்பாற்றினாள் என்று மாவட்ட ஆட்சியர் கருதினார். தனது நன்றிக்கடனை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், அவர் தங்கத்தால் ஒரு கட்டில் செய்து திருக்கோயிலுக்கு காணிக்கையாக அளித்தார். இந்த கட்டில் திருக்கோயிலின் பள்ளி அறையில் வைக்கப் பட்டுள்ளது. இது செவிவழிச் செய்தியாகும். ஆடிப்பெருக்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றது.

பாடல் 1:

பந்தார் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறது ஏறி

அந்தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அந்தண் சாரல்

வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச்

செந்தேன் தெளி ஒளிரத் தேமாங் கனி உதிர்க்கும் திருநணாவே

விளக்கம்:

வந்தார் மடமந்தி=மலைச் சாரல்களிலிருந்து கீழே இறங்கி வந்த குரங்குகள்; இந்த தலம் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, மற்றும் சங்கிரி ஆகிய நான்கு மலைகளுக்கு நடுவில் இருப்பதால், அந்த மலைச் சாரல்களிலிருந்து கீழே இறங்கி வரும் குரங்குகள் திருக்கோயிலின் அருகே திரியும் நிலை இங்கே சம்பந்தரால் சுட்டிக் காட்டப்படுகின்றது. தேன் தெளி=தெளிந்த தேன்; தே= இனிப்பினை உடைய, தித்திக்கும்; மாங்கனிகள் உதிர்வதை, குரங்குகளின் கூத்தாடுவதையும் பாடுவதையும் கண்டு பரிசு அளிப்பது போல் மாமரங்கள் மாங்கனிகளை உதிர்க்கின்றன என்று நகைச்சுவையாக கூறுகின்றார். இந்த நிகழ்ச்சி மூலம், அடியார்களின் பக்தியைக் கண்டு ஆனந்தம் கொள்ளும் இறைவன், அவர்கள் கேளாமலே அவர்களுக்கு அருளுகின்றான் என்பதை ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்று அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர். செங்காட்டங்குடி தலத்தில் மாதொரு பாகனின் திருவுருவத்தை கண்ணாரக் கண்டு களித்த ஞானசம்பந்தரின் மனம், அந்த தலத்தினை விட்டு அடுத்த தலம் வந்த போதிலும் அதனையே நினைத்துக் கொண்டிருந்தது போலும். மாதொரு பாகன் என்பதை உணர்த்த, மடவாள் பாகமாப் பெருமான் இருந்த நிலையினை குறிப்பிட்டு இந்த பதிகத்தினை அவர் தொடங்குகின்றார். அந்தார்=அம்+தார், அழகிய மாலை; மந்திகள்=பெண் குரங்குகள்; மந்தி என்ற சொல் பொதுவாக பெண் குரங்கினை குறித்தாலும், ஆடும் பொதுத் தன்மை குறித்து ஆண் குரங்குகளையும் உள்ளடக்கியதாக பொருள் கொள்ளவேண்டும். அம்மான் அருமகன் என்பதன் திரிபு.

பொழிப்புரை:

பந்து சென்று அணையும் வண்ணம் அழகிய விரல்கள் கொண்டவளும், இளமையும் அழகும் ஒருங்கே உடையவளும் ஆகிய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள நமது தலைவனாகிய பெருமான், அழகிய மாலையாக பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களிலும் பூண்டு காணப்படுகின்றார். அவரது வாகனம் எருதாகும். அத்தகைய பெருமான் காணப்படும் இடம் திருநணா தலமாகும். குளிர்ந்த மலைச் சாரல்களிளிருந்து கீழே இறங்கி வந்த குரங்குகள் குதித்து கூத்தாடுகின்றன. அந்த கூத்துக்கு ஏற்ப நீண்ட சோலைகளில் உள்ள வண்டுகள் பாடுகின்றன. இசைக் கலைஞர்களாகிய வண்டுகள் ஆடற்கலையில் வல்ல குரங்குகள் இவற்றை மெச்சி, மாமரங்கள் இனிய பழங்களையும் (குரங்குகள் உண்ணவும்) தேன் துளிகளை சிந்தியும் (வண்டுகள் பருகும் பொருட்டு) பரிசு அளிக்கும் சூழ்நிலையினை உடையது திருநணா.

பாடல் 2:

நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை

வீணை ஏந்தி

ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில்

ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை

சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திருநணாவே

விளக்கம்:

நாட்டம்=கண்; பெருமான் வீணை ஏந்தி இசைப்பது உலகத்தினை மீண்டும் தோற்றுவிக்க திருவுள்ளம் கொள்ளும் தருணத்தில் என்று தேவாரப் பதிகங்கள் உணர்த்துகின்றன. அப்போது பெருமான், தன்னிடம் ஒடுங்கியிருக்கும் உயிர்களை விடுவித்து அவை தகுந்த உடல்களுடன் பொருந்தும் வண்ணம் அருள் புரிகின்றார். ஈட்டும் துயர்=பிறக்கும் போதே நம்முடன் மூட்டையாக கொண்டு வந்த பிராரத்த, சஞ்சித வினைகள்; சஞ்சிதம் என்றால் மூட்டை என்று பொருள். அந்த உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளின் பயனாக பல இன்பங்களையும் துன்பங்களையும் நுகர்கின்றன, அவ்வாறு நுகரப்படும் துயரங்களை ஈட்டும் துயர் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பவம் என்றால் பிறப்பு என்று ஒரு பொருள் உண்டு; பவக்கடல் என்று பிறவிக்கடலை அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார். பவத்தை அறுப்பதால், பிறப்பிறப்புச் சுழற்சியை அறுத்து உயிர்களுக்கு முக்தி அளிப்பதால் இந்த தலத்திற்கு பவானி என்ற பெயர் வந்ததாகவும் விளக்கம் கூறுவார்கள். முந்தூழ் என்பதற்கு பழவினை என்றும் பொருள் கொள்கின்றனர்.

பிரளய காலத்தில் உலகம் அழிந்து, திருமால் பிரமன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் தங்களது உடல்களை விட்டுப் பிரிய, அந்த உடல்களும் உலகத்துப் பொருட்கள் அனைத்தும் அழிந்த நிலையில், பெருமான் மீண்டும் உலகினைப் படைப்பதைத் தனது கடமையாக கருதி, வீணை வாசிக்கின்றார் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் (4.112.7) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரது உயிரற்ற உடல்களைத் தாங்கி நிற்கும் இறைவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமான் வாசிக்கும் வீணையிலிருந்து நாதம் எழ, அந்த நாதம் ஆகாயத்தை தோற்றுவிக்கின்றது. ஆகாயம் மற்ற நான்கு பூதங்களும் (முறையே காற்று, தீ, நீர், நிலம்) தோன்றுவதற்கு ஆதாரமாக இருக்க, பஞ்சபூதங்களின் கலவையாக உலகமும், உலகப் பொருட்களும், உடல்களும் தோன்றுகின்றன. இவ்வாறு மீண்டும் உலகினைத் தோற்றுவிப்பதை பெருமான் தனது கடமையாக கருதி செயல்படுகின்றார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். உயிர்களை, அவற்றைப் பிணித்துள்ள வினைகளின் தகுதிக்கு ஏற்ப தக்க உடல்களுடன் பிணித்து, உயிர்கள் தங்களது வினைகளைத் தீர்த்துக் கொண்டு தன்னிடம் வந்து சேர வேண்டும் என்பதில் தான் பெருமானுக்கு எத்தனை ஆர்வம். அந்த ஆர்வம் தான், அவரை மீண்டும் உலகத்தினைத் தோற்றுவிப்பதை தனது கடமையாக கருதி செயல்படத் தூண்டுகின்றது என்று அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். உலகம் படைக்கப்படுவதற்கு காரணமாக வீணை இருப்பதால், நல்வீணை என்று குறிப்பிடப்படுகின்றது.

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்

இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்

கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்

வரும் கடன் மீள நின்று எம்மிறை நல்வீணை வாசிக்குமே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பாடலிலும் (6.35.2) அப்பர் பிரான் ஊழி வெள்ளம் பெருகி உலகங்கள் அனைத்துயும் அழிந்து ஓய்ந்து ஒலி அடங்கிய பின்னர், வீணையில் வேதத்தின் ஒலியை வாசித்து, சிவபெருமான் இன்பம் அடைவார் என்று கூறுவதன் மூலம், ஊழிக் காலத்தையும் தாண்டி நிற்பவர் சிவபெருமான் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். வீணையிலிருந்து எழும் இசை, மீண்டும் உலகம் படைக்கப்பட்டு உயிர்கள் தங்களது வினைகளைத் தீர்த்துக் கொள்ள மற்றுமோர் வாய்ப்பினைப் பெறுவதால், பெருமான் இன்பம் அடைகின்றார் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். ஏதம்=துன்பம்: ஒத்து=ஒன்றாகக் கலந்து. இந்த பாடலில் திருவடிப் பெருமை கூறப்படுகின்றது. தரித்தல்=மனதினில் நினைத்தல்: ஏதம்=துன்பம்: ஓதம்=கடலலைகள் எழுப்பும் ஒலி; ஊர் உண்டு=பல ஊர்கள் அடங்கிய உலகத்தினை விழுங்கி; உலகமும் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும் தான் ஒடுங்காது இருக்கும் இறைவனின் தன்மை, மற்றவரிடமிருந்து மாறுபட்டது என்பதால், மிகவும் பொருத்தமாக விகிர்தனார் என்று இறைவன் அழைக்கப் படுகின்றார்.

பாதம் தரிப்பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழும் உருவப்

பாய்ந்த பாதர்

ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ் உலகுமாய் நின்ற ஏக பாதர்

ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டேறி ஒத்து உலகம் எல்லாம்

ஒடுங்கிய பின்

வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய

விகிர்தனாரே

இந்த பாடலில் ஏகபாதர் என்று இறைவனின் இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களில் ஒன்று குறிப்பிடப்படுகின்றது. இந்த மூர்த்தங்கள் இறைவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை என்று கூறுவார்கள். சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர்: தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திரிபுராரி (திருபுரங்களை அழித்தவர்) ஆகியவை. சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமா மகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்தநாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும்,

முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் உள்ளது.

முந்தூழ்=மூங்கில்; முந்தூழ் ஓசை என்ற தொடருக்கும், கானகத்தில் எழும் பல விதமான ஓசைகளையும் மிஞ்சி எழும் ஓசை, இரு கரைகளிலும் மோதி வரும் காட்டாற்றின் ஓசை என்று கூறுவதாவும் விளக்கம் அளிக்கப்படுகின்றது., சேடார் என்ற சொல் எதுகை கருதி சேட்டார் என்று திரிந்தது; சேடு=பெருமை; மணிகளுக்கு அழகு சேர்ப்பது அவற்றிலிருந்து மிளிரும் ஒளி தான் என்பதால், ஒளியுடன் மிளிரும் மணிகளை பெருமை வாய்ந்த மணிகள் என்று கூறுகின்றார். நீரின் மீது வரிசை வரிசையாக மணிகள் திகழ்வது அந்த நீர்நிலைகளுக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக திகழ்கின்றது என்பதை உணர்த்தும் வண்ணம் மணிகள் அணியும் திரை என்று கூறுகின்றார். மலைகளிலிருந்து கீழே விழும் அருவிகளின் வேகத்தின் தன்மையை மூங்கில்கள் வளையும் தன்மை மற்றும் அலைகளினால் ஒன்று சேர்க்கப்படும் மணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம் என்று தலத்தின் இயற்கை வளத்தினை ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். பெருகி வரும் அருவிகள் நீரினை மிகவும் அதிகமாக உடையது போன்று, பெருமானின் அருளும் மிகவும் அதிகமாக இந்த தலத்தினில் வெளிப்படுகின்றது என்பதையும் சம்பந்தர் குறிப்பாக உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

கண் அழகுடன் பொலிந்து விளங்கும் நெற்றியினை உடையவனும், ஒரு கையினில் வீணை உடையவனும் ஆகிய பெருமான், உயிர்க்கூட்டங்கள் தங்களது முந்திய பிறவிகளில் ஈட்டிய வினைகளை முற்றிலும் களைந்து அவர்களது துயரங்களை அறுத்தெறியும் எமது பெருமான், உறையும் இடம் திருநணா ஆகும். இலைகள் நிறைந்து வளமுடன் திகழும் மரங்கள் நெருங்கி அடர்ந்துள்ள காட்டினில் ஓடும் அருவிகள், தாங்கள் அலைக்கழிக்கும் மூங்கில்கள் எழுப்பும் ஓசைகள் மூலம் தாங்கள் இருக்கும் இடத்தை காட்டுகின்றன. மேலும் அந்த அருவிகள் தங்களது அலைக் கரங்களால் திரட்டிக் கொண்டு வரும் மணிகள், அந்த நீர்நிலைக்கு அணிகலனாகத் திகழ்ந்து அழகு சேர்ப்பதும் அன்றி, தங்களுக்கு பெருமை தரும் வகையில் ஒளியுடன் மிளிர, அந்த ஒளி அந்த நீரோட்டங்கள் செல்லும் இடத்தை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. இத்தகைய காட்சிகள் உடைய அழகான இடம் திருநணா ஆகும்.

பாடல் 3:

நன்று ஆங்கு இசை மொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலம்

ஏத்த

மின்றாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ்

வெற்பில்

குன்றோங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி

சென்றோங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திருநணாவே

விளக்கம்:

நல்ல இசையுடன் பொருத்தி இசைக்கப்படும் வேதங்கள் என்று பாடலில் முதல் அடியில் உணர்த்துகின்றார். வேதங்களை நான்கு வேறுவேறு முனிவர்களுக்கு மொழிந்த பெருமான் அந்த வேதங்களை நல்ல இசையுடன் சேர்த்து நன்றாக பாடுகின்றார். அனைத்து கலைகளையும் தோற்றுவித்து உலகத்தவர்க்கு கற்றுவித்த பெருமான் என்று பொருள் கொள்வது ஒரு வகை. இசை என்று இந்த பாடலில் குறிப்பிடப்படுவது முதல் பாடலில் குறிப்பிட்ட வீணை இசை என்று பொருள் கொண்டு, பிரளயத்தால் உலகத்தின் அனைத்து உடல்களும், உலகமும் உலகிலுள்ள அனைத்து பொருட்களும் அழிந்த பின்னர், உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அருளுவதற்கு பெருமான் திருவுள்ளம் கொண்டு வீணை இசைக்க, பெருமானின் திருவுள்ளக் கிடைக்கையினை புரிந்து கொள்ளும் அம்பிகை உலகினை படைத்தார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. தேவதேவன் மற்றும் தேவியின் இந்த செயலால், தங்களது வினைகளைக் கழித்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பினை பெறுகின்ற உயிர்கள், இறைவனின் இந்த கருணைச் செயலின் நோக்கத்தை புரிந்து கொண்டு பெருமானை புகழ்கின்றன என்ற செய்தி இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. மின் தாங்கு= மின்னலைத் தாங்கியது போன்று ஒளியுடன் மிளிரும்; சடை என்பது பெருமானின் அடையாளமாக கருதப் படுகின்றது. பல முனிவர்களும் தவசிகளும் சடையுடன் காணப்பட்டாலும் சடையன் என்று பெருமானை மட்டுமே அழைக்கின்றோம் அல்லவா. பலரும் தவம் செய்வதற்கு முன்னோடியாகத் திகழும் அவனைத் தவிர்த்து சடையன் என்று அழைக்கப்படுவதற்கு தகுதி படைத்தோர் வேறொருவரும் இல்லை. விகிர்தன்=மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன்; வேதங்களை முதன்முதலில் மொழிந்தவன் என்பதால் ஏனையோரிலிருந்து மாறுபட்டு இறைவன் இருக்கும் தன்மை இங்கே சுட்டிக்காட்டப் படுகின்றது விரை=நறுமணம்; வெற்பு=மலை; செவ்வி=சிறப்பாக; நுதல்=நெற்றி; நன்றாங்கு இசை என்பதற்கு இசையுடன் பொருந்திய சாமவேத கீதங்கள் என்று விளக்கம் தரப்படுகின்றது. சாமவேதம் கேட்பதிலும் பாடுவதிலும் மிகவும் விருப்பம் உடைய பெருமான் என்று வேதங்களும் திருமுறை பாடல்களும் உணர்த்துகின்றன.

பொழிப்புரை:

நல்ல இசையை எழுப்பி அந்த இசையின் மூலம் ஆகாயத்தை தோற்றுவித்து, அதன் மூலமாக மற்ற நான்கு பூதங்கள், உலகப் பொருட்கள், உலகம் ஆகியவற்றை உண்டாக்கும் செயலை, பெருமான், அழகிய நெற்றியை உடைய உமையன்னைத் தன்னுடன் இணைந்திருக்க, செய்கின்றார். வேறு ஒருவரும் செய்ய முடியாத இந்த செயலை செய்யும் பெருமானை விகிர்தனாக விளங்கும் பெருமானை உலகத்தவர்கள் போற்றுகின்றனர். இத்தகைய பெருமான், மின்னல் போன்று ஒளிவீசும் செஞ்சடையை உடையவர் ஆவார். அவர் பொருந்தி உறையும் திருநணா தலம், நறுமணம் நிறைந்த சோலைகள் படர்ந்த மலைச் சாரல்களை உடையது; அங்கே உயர்ந்து காணப்படும் குன்றுகளின் சுவர்களில் வலிமையான அலைகள் கொண்ட காட்டாறுகள் மோத, அந்த சூழ்நிலையைக் காணும் மயில்கள் ஆடியும் அகவியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. மலைச் சாரல் அருவிகளின் ஒலி, மிகவும் சிறப்பாக மற்ற ஒலிகள் அனைத்தையும் விஞ்சும் வகையில் ஒலிக்கின்ற திருநணா தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை, தேவர்கள் புகழ்ந்து போற்றி அவரது திருவடிகளை பணிந்து வணங்குகின்றனர்.

பாடல் 4:

கையின் மழு ஏந்திக் காலில் சிலம்பு அணிந்து கரித்தோல் கொண்டு

மெய்யின் முழுது அணிந்த விகிர்தக்கு இடம் போலும் மிடைந்து

வானோர்

ஐய அரனே பெருமான் அருள் என்றென்று ஆதரிக்கச்

செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திருநணாவே

விளக்கம்:

சிலம்பு என்பது பெண்கள் அணியும் ஆபரணம்; கழல் என்பது ஆண்கள் அணிவது. சிலம்பு அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு, மாதொரு பாகனாக திகழும் பெருமானின் தன்மையை ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மற்ற எந்த விலங்குகளுக்கும் இல்லாத வகையில் கையினை (தும்பிக்கை) உடையதால் கரம் உடையது என்ற பொருள் பட கரி என்று யானை அழைக்கப் படுகின்றது என்று கூறுவார்கள். கரி=ஆண் யானை; மிடைந்து=நெருங்கி; இரத்தப்பசை மிகுந்த யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று அனைவரும் அதனை தவிர்க்க முயல்வார்கள். ஆனால் பெருமானோ, அந்த யானையின் தோலினை தனது உடல் மீது போர்த்துக் கொண்ட போதிலும் எந்தவிதமான கேடும் அவரது உடலுக்கு ஏற்படவில்லை என்பதால், அவர் ஏனையோரிலிருந்து மாறுபட்டவர் என்பதை உணர்த்த, விகிர்தர் என்று ஞானசம்பந்தர் அழைக்கின்றார். செந்தாமரை மலர்களும் சோலைகளும் தேன் பொழியும் இடம் என்று குறிப்பிட்டு, பெருமான் தன்னை ஐயனே, அரனே, பெருமானே என்று அழைத்து அருள் வேண்டும் அடியார்களுக்கு அருள்மழை பொழிகின்றார் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

தனது கையில் மழு ஏந்தியும், திருவடிகளில் கழலும் சிலம்பும் அணிந்து காட்சி தரும் பெருமான், தன்னை எதிர்த்து வந்த மதங்கொண்ட ஆண் யானையின் தோலினைத் தனது உடல் முழுதும் போர்த்துக் கொண்ட பெருமான், மற்ற தெய்வங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவர்; அவர் வீற்றிருக்கும் இடம் யாதெனில், வானவர்கள் கூட்டமாக நெருங்கி வந்து, ஐயனே, அரனே, பெருமானே அருள் புரிவாய் என்று மிகுந்த விருப்பத்துடன் போற்றி வணங்கி நிற்கவும், ஆங்குள்ள செந்தாமரை மலர்களும் சோலைகளும் தேன் சொரியும் இடம் திருநணா ஆகும். இங்குள்ள மலர்கள் தேன் சொறிவதைப் போன்று இறைவனும், தனது அருள் வேண்டும் அடியார்களுக்கு அருள் மழை பொழிகின்றான்.

பாடல் 5:

முத்தேர் நகையாள் இடமாகத் தம் மார்பில் வெண்ணூல் பூண்டு

தொத்தேர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை

சூழ்ந்த

அத்தேன் அளி உண் களியால் இசை முரல ஆலத் தும்பி

தெத்தே என முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திருநணாவே

விளக்கம்:

அடியார்களின் வினைகளைத் தீர்க்கும் தன்மை உடைய தலம் என்பதால், இந்த தலத்திற்கு திருநணா என்ற பெயர் வந்தது என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தேனை உண்ட களிப்பில், ஆடியும் பாடியும் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வண்டுகள் போல் இந்த தலம் வந்தடைந்து பெருமானைத் தொழுகின்ற அடியார்கள் சிவானந்தத்தில் திளைத்து ஆடியும் பாடியும் மகிழ்வார்கள் என்பதை ஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். முத்தேர்=முத்து+ஏர்; ஏர்=அழகு; அளி=வண்டு; தும்பி=ஆண் வண்டு; ஆல=நடமாட; முத்து போன்று அழகிய சிரிப்பினை உடையவள் தேவி என்று இங்கே ஞானசம்பந்தர் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்களில் தேவியின் பற்களுக்கு வெண் முத்து, மற்றும் முல்லை அரும்பு உவமையாக சொல்லப்படுகின்றது. ஞானசம்பந்தர் ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பாடலில் ஒரு படி மேலே சென்று, முத்தினை வென்ற புன்முறுவலை உடைய பிராட்டி என்று கூறுகின்றார். பிராட்டியின் புன்முறுவல் முத்தினை வென்றதாக கூறும் பாடல் ஆமாத்தூர் பதிகத்தின் (2.50) பத்தாவது பாடலாகும்.

புத்தர் புன்சமண் பொய்ம்மொழி நூல் பிடித்தவர் துற்ற நின்னைப்

பத்தர் பேண நின்ற பரமாய பான்மை அது என்

முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன் என்று இமையோர்

பரவிடும்

அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே

பல பாடல்களில் ஞானசம்பந்தர் முத்து போன்ற பற்களை உடைய அன்னை என்று குறிப்பிட்டாலும், பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.14.8) அதற்கும் மேலே சென்று முத்தினை முறுவல் செய்தாள் என்று குறிப்பிடுகின்றார். முறுவல்=பரிகசித்து சிரித்தல், ஏளனச் சிரிப்பு; தனது பற்களின் அழகின் முன்னே வெண்முத்து தோற்றோடியது என்பதால், முத்தினை நோக்கி ஏளனமாக அம்பிகை சிரித்ததாக ஞானசம்பந்தர் கற்பனை செய்கின்றார். தேவியின் குரல் இனிமை, வீணை யாழ் தேன் முதலியவற்றை விஞ்சியதாக இருந்தமையால் அவை தோற்றோடின என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்படுவது நமது நினைவுக்கு வருகின்றது.

தொத்தின தோள் முடி உடையவன் தலை

பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்

முத்தினை முறுவல் செய்தாளோர் பாகமாப்

பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே

ஒளிவீசும் வெண்முத்துப் போன்ற பற்கள் கொண்ட பிராட்டி என்று பூந்தராய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.2.2) ஞானசம்பந்தர் கூறுகின்றார். காவி=நீலோற்பல மலர்; நீலோற்பல மலர் போன்ற கருமையான கண்களை உடையவள் தேவி என்று கூறுகின்றார். தொண்டைக்கனி=கோவைக் கனி; கோவைக்காய் போன்ற சிவந்த உதடுகளை உடைய தேவி என்று சொல்லப் படுகின்றது; தூவி=இறகு; வெண்மையான இறகுகள் கொண்ட அன்னம் போன்ற நடையினை உடைய உமையன்னை; கருமையான கண்களையும் சிவந்த இதழ்களையும் வெண்முத்து போன்று ஒளிவீசும் பற்களையும் அன்னம் போன்ற மென்மையான நடையினையும் சுருண்ட கூந்தலையும் உடைய பார்வதி தேவி என்று தேவியின் அழகினை இங்கே வர்ணிக்கின்றார். சீர்காழி தலத்திற்கு பன்னிரண்டு பெயர்கள் உள்ளன என்றும், அந்த வரிசையில் ஆறாவதாக வருவது பூந்தராய் என்ற பெயர் என்பதும் பாடலின் கடைப் பகுதியில் உணர்த்தப் படுகின்றன. பிரமனைப் போன்று வேதங்களில் சிறந்து விளங்கிய அந்தணர்கள் என்று சீர்காழி அந்தணர்களை ஞானசம்பந்தர் உயர்த்திப் பேசுகின்றார்.

காவியங் கருங்கண்ணினாள் கனித் தொண்டை வாய்க்கதிர் முத்த

நல் வெண்ணகைக்.

தூவியம்பெடை அன்ன நடைச் சுரி மென்குழலாள்

தேவியும் திருமேனியோர் பாகமாய் ஒன்றிரண்டு மூன்றொடு

சேர் பதி

பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே

வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.10) ஞானசம்பந்தர் முத்து போன்று வெண் பற்களை உடைய அன்னை என்று குறிப்பிடுகின்றார். அத்தமண்=அத்தம்+மண், செந்நிற காவி மண்; யாதும் அல்லா உரை=பொருள் ஏதுமில்லாத உரை; மூரி=வலிமை; செந்நிற காவி மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த புத்தர்கள் மற்றும் சமண் குண்டர்கள் ஆகியோர், பொருளற்ற சொற்களையே பேசி, பொய்யான தவத்தினை அனுசரித்து, பெருமானின் தன்மைகளை பண்புகளை திரித்து பேசுகின்றனர். உலகத்தவரே அத்தகைய வார்த்தைகளை பொருட்படுத்தாமல் புறக்கணிப்பீர்களாக. வெண்முத்து போன்ற புன்னகையை உடைய உமையன்னை அஞ்சும் வண்ணம், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் வலிமையை அடக்கி அதன் இரத்தப்பசை உடைய தோலினைத் தனது உடல் மீது போர்வையாக போர்த்த திறமையாளரும் வேதமுதல்வரும் ஆகிய பெருமான் வேட்கள நன்னகரில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை ஆகும்.

அத்தமண் தோய் துவரார் அமண் குண்டர் யாதும் அல்லா

உரையே உரைத்துப்

பொய்த்தவம் பேசுவது அல்லால் புறனுரை யாதொன்றும்

கொள்ளேல்

முத்தன வெண்முறுவல் உமை அஞ்ச மூரி வல்லானையின்

ஈருரி போர்த்த

வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன்னகராரே

கருகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (3.46), ஞானசம்பந்தர் முத்திலங்கு முறுவல் உமை என்ற தொடருடன் தொடங்குகின்றார். முத்து போன்று ஒளிவீசும் புன்னகை என்று இங்கே குறிப்பிடுகின்றார். அழலும்=கடுமையான நெருப்பு; கத்தை=தோல்;

முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவே

மத்த யானை மருகவ் வுரி வாங்கியக்

கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்

அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே

தருமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.136.10) ஞானசம்பந்தர், உமை அன்னையை முத்தன வெண்ணகை ஒண் மலைமாதுமை என்று குறிப்பிடுகின்றார். கடத்துவர்= கடுவிதையால் செய்யப்பட்ட சாயம் பூசப்பட்ட; மொய்த்து=நெருங்கிய, அடர்ந்த; உறி புல்கிய கையர்=தாங்கள் செல்லும் இடமெல்லாம் உறியைத் தூக்கிச் செல்லும் சமணர்கள்; மொழிந்து= புத்தர்களும் சமணர்களும் மொழியும் பொய்யான சொற்கள்; அழிவில் பெற்றி=பொருட்படுத்தாது ஒதுக்கித் தள்ளும் தன்மை; நற்றவர்=நல்ல தவத்தை உடைய அடியார்கள்; பெருமானைப் போற்றி வணங்கி வழுபடுவதே தவம் என்பதால், பெருமானின் அடியார்களை நற்றவர் என ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மெய்ப்பயன்=என்றும் அழியாமல் உண்மையாக இருக்கும் முக்தி உலகினை பயனை தரும் தவம்; நிகழ்ந்தவர்=நெகிழ்ந்தவர் என்று பொருள் கொள்ளவேண்டும்; அடியார்கள் தன்பால் வைத்துள்ள அன்புக்கு நெகிழும் பெருமான்; ஒண்=ஒளி வீசும்; தத்தருவி=தாவிக் குதிக்கின்ற அருவி; திரள்=அலைகள்; மால் கடல்=பெரிய கடல்; ஓதம்=ஓசை; தடம்=அகன்ற;

புத்தர் கடத்துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய்ம்

மொழிந்து அழிவில் பெற்றி உற்ற நற்றவர் புலவோர்

பத்தர்களத் தவ மெய்ப்பயனாக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர்

சுடலைப் பொடி அணிவர்

முத்தன வெண்ணகை ஒண் மலை மாதுமை பொன்னணி புணர்ம்

முலை இணை துணை அணைவதும் பிரியார்

தத்தருவித் திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும்

தடம் பொழில் தருமபுரம் பதியே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் முதல் பாடலில் (6.19.1) அப்பர் பிரான், தேவியை தூமுத்த வெண் முறுவல் உமை என்று குறிப்பிடுகின்றார். முளைத்தான்=வேறு எவராலும் தோற்றுவிக்கப்படாமல் தானே தோன்றியவன்; சிந்திக்கப் பெற்றேன் என்று தானும் தினமும் இறைவனை வழிபாடு செய்ததை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். மற்ற பொருட்களும் உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவன் இறைவன் என்று குறிப்பிடுவதன் மூலம், பெருமான் தான் அத்தகைய உயிர்களும் பொருட்களும் தோன்றுவதற்கு நிமித்த காரணனாக உள்ளான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. முதிரும்=நன்கு வளர்ந்து அடர்த்தியாக அமைந்துள்ள; முகிழ்=பிறை வளைத்தான்=அணிந்தான்; துவள=மெலிய; உமையம்மையுடன் பெருமான் விளையாடியதாக அப்பர் பிரான் இந்த பாடல் கூறினார். அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் நிகழ்ந்த தலம் மதுரை. பெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களில், தடாதகை பிராட்டியை மணந்து பாண்டிய நாட்டு அரசனாக திகழ்ந்ததும் ஒரு திருவிளையாடல் தானே. இதனையே, உமையோடு ஆடி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் போலும்.

முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும்

சடைமுடி மேல் முகிழ் வெண்திங்கள்

வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா

வாசுகி மா நாணாக் கோத்துத்

துளைத்தானைச் சுடுச் சரத்தால் துவள நீறாத் தூமுத்த வெண் முறுவல்

உமையோடு ஆடித்

திளைத்தானைத் தென்கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப்

பெற்றேன் நானே

கூடலையாற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.85.6) சுந்தரர் முத்தன வெண் முறுவல் மங்கை என்று குறிப்பிடுகின்றார். திருமுதுகுன்றம் செல்ல எண்ணிய சுந்தரர், தான் செல்லும் வழியில் தென்பட்ட முதியவர் ஒருவரிடம், திருமுதுகுன்றம் செல்லும் பாதையை சுட்டிக் காட்டுமாறு வேண்ட, முதியவரும் அதற்கு உடன்பட்டு தானும் அந்த வழியே செல்வதாக கூறி, முதுகுன்றம் அழைத்துச் செல்வதற்கு பதிலாக கூடலையாற்றூர் வழியில் அழைத்துச் சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. அந்த தலத்திற்கு அருகில் சென்றபோது, முதியவர் மறைந்துவிடவே, தன்னுடன் வந்தது பெருமான் தான் என்பதை சுந்தரர் புரிந்து கொள்கின்றார். பெருமானின் இந்த திருவிளையாடலை சுந்தரர் அதிசயம் என்று குறிப்பிட்டு, தன்னுடன் வந்தது பெருமான் என்பதை தான் புரிந்து கொள்ள முடியாமல் இருந்த நிலை குறித்து வருத்தம் தெரிவிக்கின்றார்.

வித்தக வீணையொடும் வெண்புரி நூல் பூண்டு

முத்தன வெண்முறுவல் மங்கையொடும் உடனே

கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்

அத்தன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே

பொழிப்புரை:

வெண்முத்தினைப் போன்று பற்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டுள்ள பெருமான், தனது மார்பினில் வெண்மை நிறத்தில் முப்புரி நூல் அணிந்துள்ளார். அவர் கொத்து கொத்தாக பூக்கும் கொன்றை முதலான மலர்களை தனது சடையில் அணிந்துள்ளார். அவர் கோயில் கொண்டு உறையும் இடமாவது, சோலைகளால் சூழப்பட்டதும், அந்த சோலைகளில் உள்ள பூக்களில் கிடைக்கும் தேனை உண்ட களிப்பினில், ஆடியும் முரன்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆண் வண்டுகளின் இசையைக் கேட்கும் அடியார்களின் வினைகளை முற்றிலும் தீர்க்கும் திருநணா தலம் ஆகும்.

பாடல் 6:

வில்லார் வரையாக மாநாகம் நாணாக வேடம் கொண்டு

புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும்

அல்லாத சாதிகளும் அங்கழல் மேல் கை கூப்ப அடியார் கூடிச்

செல்லா அருநெறிக்கே செல்ல அருள் புரியும் திருநணாவே

விளக்கம்:

வரை=மலை, இங்கே மேருமலை; மாநாகம்=வாசுகி பாம்பு; வேடம்=போர்க்கோலம்; நிலவுலகத்தில் பல தலங்கள் சென்று வழிபட்ட, குபேரன் இந்த தலம் வந்த போது, இங்கே யோகிகள் ஞானிகள் முனிவர்கள் கந்தர்வர்கள் தவம் செய்வதையும், மான் பசு புலி யானை சிங்கம் நாகம் எலி ஆகிய அனைத்து உயிரினங்களும் தங்களுக்குள்ளே சண்டையோ அதனால் விளையும் பயமோ இல்லாமல் ஒன்றாக நீர் அருந்துவதையும் தவம் செய்பவர்களுக்கு எந்தவிதமான இடையூறு செய்யாமல் இருந்ததையும் கண்டு மிகவும் வியப்படைந்தான். அனைத்து உயிர்களும் இறை சிந்தனையில் மூழ்கி இருந்தமையால் இந்த நிலை உள்ளது என்பதையும் புரிந்து கொண்டான். இந்த இடத்தில் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்த குபேரன், இறைவனை நோக்கி தவம் செய்தான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த பெருமானும் திருமாலும், குபேரனுக்கு காட்சி அளித்தனர். மேலும் இங்குள்ள இலந்தை மரத்தின் நிழலில், சிவபெருமான் சுயம்புவாக தோன்றி நிலையாக தங்கினார் என்றும் தலபுராணம் குறிப்பிடுகின்றது. திருஞானசம்பந்தர் இந்த தலத்திற்கு வருகை புரிந்த போதும், பல வகையான விலங்குகளும் தங்களது இயல்பான நிலையிலிருந்து மாறி, இறைவனின் திருவடிகளைத் தொழுத வண்ணம் இருந்தன போலும், தனது பெயரினுக்கு ஏற்ப, இந்த தலம் வந்து வழிபடும் அடியார்கள் தங்களது வினைகள் தீர்க்கப் பெறுவதால், வினைகளின் பிணைப்பு ஏதுமின்றி இருப்பதால், அவரால் முக்தி உலகினைத் சென்று அடைவார்கள் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். எளிதில் எவரும் சென்று அடைய முடியாத முக்தி உலகம் என்பதால், செல்லா அருநெறி என்று இங்கே குறிப்பிடுகின்றார். செல்லா அருநெறி என்ற தொடரினை புலியும் மானும் அல்லாத சாதிகளும் என்ற தொடருடன் கூட்டி, அனைத்து விலங்குகளும் தாங்கள் இதுவரை செல்லாத வழியினில், தங்களது இயல்பினை முற்றிலும் மறந்து, பகைமை அச்சம் ஆகிய குணங்களை நீக்கி, இறையுணர்வில் ஒன்றி நின்று இறைவனை வழிபடுவதை,. செல்லா அருநெறி என்று ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்று சுவையான விளக்கமும் அளிக்கப் படுகின்றது. புல்லார்=தழுவாது வாழ்ந்த; செல்ல அருநெறி என்பதற்கு அடையர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் விலங்குகள் விலகிச் சென்ற வழி என்று ஒரு விளக்கமும் அளிக்கப்படுகின்றது. அருநெறி மற்றும் இறைவன் அருளும் நெறி என்று குறிப்பிடப்படுவதால், இந்த விளக்கம் பொருத்தமாக தோன்றவில்லை.

பொழிப்புரை:

மேருமலை வளைக்கப்பட்டு வில்லாக மாற, வாசுகி பாம்பினை நாணாக அதனில் பூட்டிய இறைவன், தேவர்களின் துயரத்தினை தீர்க்கும் பொருட்டு போர்க்கோலம் கொண்டு திரிபுரத்து அரக்கர்களுடன் போர் செய்வதற்கு திருவுள்ளம் கொண்டு, சிவநெறியைத் தழுவாது வாழ்ந்த கீழ்மை குணம் கொண்ட அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினால் வீழ்த்தி நெருப்பினில் பற்றி எரியும் வண்ணம் அழித்தான். அத்தகைய வல்லமை வாய்ந்த இறைவன் உறையும் இடம் யாதெனில், புலிகள் மான்கள் மற்றும் பல விலங்குகள், தங்களுக்கு இடையே இருந்த பகையையும் மறந்து, தங்களது இயல்பிலிருந்து பெரிதும் மாறி, இறைவனது திருப்பாதங்களைத் தொழுவதைக் கண்ட அடியார்களும் ஒன்று கூடி, தங்களது கைகளை கூப்பி இறைவானின் அழகிய திருவடிகளைத் தொழுகின்ற தலமாகிய திருநணா ஆகும். அத்தகைய அடியார்களின் வினைகளை முற்றிலும் நீக்கி, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களின் வயப்பட்ட எந்த உயிரும் சென்று அடையமுடியாத முக்தி உலகினுக்கு அவர்கள் செல்வதற்கு வழிவகுக்கும் தலம் திருநணா ஆகும்.

பாடல் 7:

கானார் களிற்று உரிவை மேல் மூடி ஆடரவம் ஒன்று அரை

மேல் சாத்தி

ஊனார் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்

நானாவிதத்தால் விரதிகள் நல் நாமமே ஏத்தி வாழ்த்தத்

தேனார் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திருநணாவே

விளக்கம்:

தாருகவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து எழுப்பிய காட்டு யானை, என்பதால் காடுகளில் திரியும் யானை என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அரை=இடுப்பு; ஊன்=தசை; பெருமான் தனது உணவுத் தேவைக்காக பிச்சை ஏற்பதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் உபசார வழக்காக, கையினில் கபாலத்தை ஏந்திய வண்ணம் வீடுவீடாக செல்வதால் பிச்சை உணவு ஏற்கின்றார் என்றும் அதனை உண்கின்றார் என்றும் சொல்லப் படுகின்றது. தான் பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பிச்சை ஏற்பவர் போல் வருவதன் நோக்கத்தை புரிந்து கொள்ளும் ஆன்மாக்கள், தங்களது மலங்களை தான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தினில் இட்டு உய்வினை அடைவதை பெருமான் பெரிதும் விரும்புகின்றான் என்ற செய்தியே இங்கே சொல்லப்படுகின்றது. அனைத்து உயிர்களின் உண்மையான ஆசை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, இறைவனின் திருப்பாதங்களை சென்று அடைய வேண்டும் என்பதே ஆகும். உயிர்களின் இந்த விருப்பத்தை விடவும், உயிர்கள் மலங்களையும் வினைகளையும் முற்றிலுமாக கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருமான் கொண்டுள்ள விருப்பம் மிகவும் அதிகமானது. எனவே தான் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் அளிக்கும் மூன்று மலங்களாகிய பிச்சையை பெருமான் பெரிதும் உகந்தான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். இந்த விளக்கம் நமக்கு கச்சி ஏகம்பம் தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பாடலை (2.12.5) நினைவூட்டுகின்றது. கடை=வாயில்; உடையான் என்று உயிர்களைத் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமானை சம்பந்தர் இங்கே குரிப்பிடுகின்றார். மூன்றும் என்று ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களை உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது, உயிருடன் இணைந்துள்ள, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று பொருட்களை பெறுவதற்காக என்பது மிகவும் தெளிவாக இங்கே கூறப்பட்டுள்ளது.

சடையானைத் தலை கையேந்திப் பலி தருவார் தம்

கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்

புடையே பொன் மலரும் கம்பைக் கரை ஏகம்பம்

உடையானை அல்லாது உள்காது என் உள்ளமே

நானாவிதத்தால் ஏத்தி வாழ்த்தி என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

நானாவிதம் என்று சரியை கிரியை ஞானம் யோகம் ஆகிய நான்கு வழிகளில் பெருமானை வழிபடுவது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மெய்யடியார்கள் தங்களது நிலை மறந்து ஆடியும் பாடியும் அழுதும் நகைத்தும் கீழே வீழ்ந்து புரண்டு அலறியும் ஓலமிட்டும் வாழ்த்துகின்றனர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாகும். இந்த விளக்கம் நமக்கு திருவாசகம் திருச்சதகம் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. இறைவனைத் தொழும் நிலையில் நமது உடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மணிவாசகர் திருச்சதகம் பதிகத்தின் முதல் பாடலில் சொல்வதைப் போன்று பொருத்தமாக வேறு எவராலும் சொல்ல இயலாது. கைகள் கூப்பி, வாயினால் தோத்திரங்களை உச்சரித்தாலும், நமது மனம் நமது கட்டுப்பாட்டில் இராமல் எங்கோ சஞ்சரித்தால், நாம் செய்யும் வழிபாட்டில் உருக்கம் ஏற்படாது. மனம் ஒன்றி செய்யப்படும் வழிபாடு தான், மனதினை நெகிழ்வித்து உள்ளம் உருகும் நிலைக்கு வழி வகுக்கும். அந்த நிலையில் உடலில் பல மாறுதல்கள் ஏற்படும், உடல் புளகாங்கிதம் அடைதல், கண்ணீர் ததும்புதல், பேச்சு எழாத நிலை ஏற்படுதல், உடல் நடுங்குதல், பொய்யான வெளித் தோற்றங்களைத் தவிர்த்தல், முதலானவை அந்த மாறுதல்கள். இத்தகைய மாறுதல்கள் ஏற்படும் வண்ணம், தான் உள்ளம் உருகி இறைவனை வழிபடுவதாக குறிப்பிடும் மணிவாசகர், இவ்வாறு வழிபடும் தன்னை இறைவன் அடிமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த பாடலில் இறைஞ்சுகின்றார். அரும்பி=புளகாங்கிதம் கொண்டு, விரை=நறுமணம்; ததும்பி=இமைகள் வழியாக வழியும் அளவு நிரம்பி; உடையாய்=என்னை அடிமையாக உடையவனே; கண்டு கொள்ளே=எனது இயல்பினை கண்டு அடிமையாக ஏற்றுக் கொள்வாயாக

மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் கழற்கு என்

கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்

பொய் தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்

கை தான் நெகிழவிடேன் உடையாய் என்னை கண்டு கொள்ளே

விடம் தீர்த்த திருப்பதிகத்தில் (4.18.10) அடியார்களின் செய்கை பத்து வகைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர்.. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்

பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்

பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன

பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை

பத்து கொலாம் அடியார் செய்கை தானே

நன்னாமம் என்பதற்கு பிறவிப் பிணியைத் தீர்த்து நன்மை புரியும் ஐந்தெழுத்து மந்திரம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. நானாவிதத்தால் நாமம் ஏத்தி என்ற தொடருக்கு, நூறு, ஆயிரம், இலட்சம், கோடி என்று பல்வேறு கணக்கினில் பெருமானின் நாமத்தை சொல்லும் பழக்கம் குறிப்பிடப்படுகின்றது என்றும் பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை:

தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார வேள்வி செய்து எழுப்பிய வலிமை மிகுந்த காட்டானை மதம் கொண்டு தன்னை எதிர்த்து வந்த போது, அதனை அடக்கி அதன் தோலை உரித்து, தனது உடல் மேல் அந்த இரத்தப்பசை மிகுந்த தோலினை போர்வையாக போர்த்து கொண்ட வீரச்செயல் புரிந்த சிவபெருமான், படமெடுத்து ஆடித் சீறும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக கட்டி, தனது விருப்பம் போன்று அந்த பாம்பை ஆட்டுவிகின்றான். தசை மிகுந்த பிரம கபாலத்தில் பிச்சை ஏற்று பெற்ற உணவினை மிகுந்த களிப்புடன் ஏற்றுக்கொள்ளும் பெருமான் விருப்பத்துடன் உறையும் இடம் யாதெனில் அது திருநணா ஆகும். இந்த தலத்தினில் அடியார்கள் பலவிதமாக அவனது திருநாமங்களை கூறியும், தேன் நிறைந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவியும், பணிந்து வணங்குகின்றனர்.

பாடல் 8:

மன்னீர் இலங்கையர் தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி

முந்நீர்க் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முனை சேர் சீயம்

அன்னீர்மை குன்றி அழலால் விழி குறைய வழியும் முன்றில்

செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திருநணாவே

விளக்கம்:

அன்னீர்மை=அல் மற்றும் நீர்மை ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கை. அல்=பகைமை நீர்மை=தன்மை, சீயம்=சிங்கம்; முந்நீர்=மூன்று விதமான நீர் கலந்ததால் ஏற்பட்ட கடல், ஆற்றுநீர், மழைநீர், ஊற்று நீர் என்ற மூவகை நீர்; முந்நீர் என்ற சொல்லுக்கு வேறு வகையாக விளக்கமும் அளிக்கப்படுகின்றது. மண்ணை படைத்தும், மண்ணைக் காத்தும், மண்ணை அழித்தும் மூன்று வகையான செயல்கள் செய்யும் தன்மை உடைய கடல் என்பதால் முந்நீர் என்று அழைக்கப் படுகின்றது என்பதே அந்த விளக்கம். முனை சேர் சீயம்=போர்க்களத்திற்கு சென்று எதிர்ப்பட்ட விலங்குகளை வென்று கொல்வதற்கு முயற்சி செய்யும் சிங்கம், செந்நீர்=இரத்தம்; யானைக்கும் சிங்கத்திற்கும் எப்போதும் பகை இருக்கும். வலிமை குறைந்த சிங்கத்தை கண்ட யானை அதனுடன் போரிட்டு, அதன் இரத்தம் வழியும் வண்ணம் அதனை காயப்படுத்திய பின்னர் தனது இருப்பிடம் சென்று ஒளிந்து கொண்டதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

பொழிப்புரை:

கயிலை மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்த, பெருகிய கடல் நீரால் சூழப்பட்டு விளங்கும் இலங்கைத் தீவின் அரசன் இராவணனின் வலிமையை அழிக்கும் வண்ணம், தனது கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றிய பெருமான், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டவரும் ஆகிய பெருமான், உறையும் இடமாவது திருநணா ஆகும். போர்க்களத்திற்கு சென்று எதிர்ப்பட்ட விலங்குகளை வென்று கொல்வதற்கு முயற்சி செய்யும் சிங்கம், தனது முதுமை காரணமாக வலிமை குன்றியதால் அத்தகைய முனைப்பு ஏதும் செய்யாமல், தனது கண்களிலிருந்து நெருப்பு குறைந்த பார்வையுடன் குகையினில் இருக்கும் தருணத்தில், அதனைக் காணும் யானை அதனுடன் போரிட்டு சிங்கத்தின் இரத்தம் குகையின் முன்வாசலில் வழியும் வண்ணம் அதனைக் காயப்படுத்திய பின்னர், தனது இருப்பிடம் சென்று தன்னை ஒழித்துக் கொள்ளும் யானை உள்ள தலம் திருநணா ஆகும்.

பாடல் 9:

மையார் மணி மிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகள்

தோறும்

கையார் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடிப்

பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னிச்

செய்யார் எரியா உருவம் உற வணங்கும் திருநணாவே

விளக்கம்:

பலி ஏற்ற கள்வன் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பல பாடல்களில் நால்வர் பெருமானர்கள், பெருமான் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக தங்களை உருவகித்து, தங்களது மனதினைக் கொள்ளை கொண்ட கள்வன் என்று கூறுவதையும் நாம் உணர்கின்றோம். தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன் என்று தனது முதல் பதிகத்தை தொடங்கிய திருஞானசம்பந்தருக்கு பெருமானை கள்வன் என்று அழைப்பது மிகவும் விருப்பம் போலும். தாருகவனம் சென்ற பெருமான், ஆடியும் பாடியும் பிச்சை ஏற்பவர் போன்று சென்றாலும், அவரது நோக்கம் தாருக வனத்து முனிவர்களின் சிந்தனையை மாற்றுவதே ஆகும். இவ்வாறு தனது நோக்கத்தை மறைத்துக் கொண்டு செயல்பட்ட பெருமானை கள்வர் என்று அழைக்கின்றார் போலும். மேலும் எப்போதும் பலி ஏற்பதற்கு தனது உண்கலனை ஏந்திச் செல்லும் பெருமான், பிச்சை எடுப்பது போன்று தோன்றினாலும், உண்மையில் தனது உணவுத் தேவைக்கு பிச்சை எடுப்பதில்லை அல்லவா. எனவே இந்த செயல் புரியும் பெருமானை கள்வர் என்று அழைப்பது பொருத்தம் தானே. .

இதே கருத்து வலிதாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.3.2) சொல்லப் படுகின்றது. படிறன் என்றால் வஞ்சனை உடையவன் என்று பொருள். உயிர்கள் தங்களது மூன்று மலங்களையும் இட்டு உய்வினை அடைவதற்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு பலியேற்றாலும், அந்த நோக்கத்தினை வெளிப்படுத்தாமல் தனது கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தியவராக செல்லும் பெருமானின் செயல், பொய்யாக பிச்சை கேட்டு செல்வது போல் உள்ளது என்பதால் பெருமானை படிறன் என்றும் கள்வன் என்றும் ஞானசம்பந்தர் அழைக்கின்றார்.

படை இலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கலனேந்திக்

கடை இலங்கு மனையில் பலி கொண்டுணும் கள்வன் உறை

கோயில் ‘

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலிதாயம்

அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்

தானே

பல்லவனீச்சரம் (காவிரிபூம்ப்படினம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.65.3), கங்கை நதியினைத் தனது சடையில் மறைத்து வைத்த பெருமானை கள்வனென்று ஞானசம்பந்தர் அழைக்கின்றார். தன்னிடம் உள்ள பொருளை, அடுத்தவர் அறியாத வண்ணம் மறைப்பவன் கள்வன் தானே. தனது உடலில் ஒரு பங்காக ஏற்றுக்கொண்டுள்ள பார்வதி தேவியும் அறியாத வண்ணம், கங்கை நதியை மறைத்து வந்தவர் என்று நகைச்சுவை பட ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். கங்கை அங்கே வாழவைத்த கள்வன் என்று ஞானசம்பந்தர் கூறுவது சிந்தைக்கு உரியது. கங்கை நதியினை பெருமான் தனது சடையினில் தாங்கிய பின்னர் சிறிது சிறிதாக வெளியேற்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு பெருமான் கங்கை நதியைத் தாங்காது இருந்தால், கங்கை நதி பூமியையும் புரட்டிக் கொண்டு பாதாளத்தில் சேர்த்து தானும் பாதாளத்தில் கலந்திருக்கும். அவ்வாறு நேரிடுவதை பெருமான் தவிர்த்தார் என்பதை குறிப்பிடும் வண்ணம் கங்கை வாழவைத்த கள்வன் என்று சம்பந்தர் கூறுகின்றார் போலும். அயம்=பள்ளம்; புணரி=கடல்; பங்கயம்=தாமரை மலர்கள்; உயர் பொய்கை=கடலில் நீர் மிகுந்த காணப்படுவதால் நீர்நிலைகளிலும் தண்ணீர் மேல் உயர்ந்து காணப் படுகின்றது என்று கூறுகின்றார்.

மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவு வார் சடை மேல்

கங்கை அங்கே வாழ வைத்த கள்வன் இருந்த இடம்

பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்

பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே

வாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில், அகத்துறை வகைப் பாடலில் (2.111.9), சம்பந்த நாயகி பெருமான் தனது கனவில் வந்து தொல்லை செய்வதால் கள்வர் என்று கூறுவதை நாம் காணலாம். எப்போதும் பெருமானது நினைவாகவே இருந்த நாயகிக்கு, தான் எவ்வாறெல்லாம் பெருமானுடன் கூடி மகிழ்ந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த நாயகிக்கு, கனவிலும் பெருமான் தோன்றியதும் இயல்பானது. நாள் முழுவதும் தான் ஏங்கிக் கற்பனை செய்து கொண்டிருந்த காட்சிகள் நமது கனவில் வருவதை நாம் உணர்வது இன்றும் நடைபெறுகின்றது அல்லவா. கனவு கலைந்து விழித்தெழும் தலைவிக்கு, கனவு நனவாக மாறவில்லையே என்ற ஏக்கமும், துயரமும் தோன்றவே, தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெருமானை கள்வர் என்று அழைக்கின்றார். கனவில் தான் அனுபவித்த காட்சிகள் நனவில் தோன்றவில்லை என்பதால் அவளது ஏக்கம் அதிகரிக்க அவள் துயரம் கொள்கின்றாள் என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

ஏன மருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு ஓர் ஏறேறிக்

கானமதில் இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து

தேனுண மலர்கள் உந்தி விம்மித் திகழ் பொற்சடை மேல்

திகழ்கின்ற

வானநன் மதியின்னொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.17.4) கரியுரியர் வஞ்சக் கள்வர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நிட்டுருவர்=கொடியவர்; தேசர்=ஒளியுடையவர்; திறம்=அருள் புரியும் தன்மை; எவருக்கும் எளிதில் அகப்படாமல் தன்னை மறைத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவர் என்பதால் பெருமானை வஞ்சக்கள்வர் என்று கூறுவதாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. நமக்கு ஒளிக்கும் சோரனைக் கண்டனம் என்று மணிவாசகர் திருவண்டப்பகுதி அகவலில் கூறுவதும் நினைவுக்கு வருகின்றது. .

தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திருவாரூர்

என்றும் உள்ளார்

வாச மலரின் கண் மான்தோல் போர்ப்பர் மருவும் கரியுரியர்

வஞ்சக் கள்வர்

நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுருவர் கட்டங்கர்

நினைவார்க்கு என்றும்

ஈசர் புனல் பொன்னித் தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி

இடம் கொண்டாரே

கரியுரியர் என்ற தொடருடன் வஞ்சக் கள்வர் என்று அப்பர் பிரான் கூறுவது சிந்தைனைக்கு உரியது. பல தேவாரப் பாடல்களிலும் ஆனையின் தோலுரித்த கள்வர் என்று சொல்ல படுகின்றது. தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்த செய்கையில் கள்ளத்தனம் எங்கே உள்ளது என்ற ஐயம் நமக்குத் தோன்றலாம். இதற்கான விடையை நாம் அப்பர் பிரானின் பாடலில் (4.32.1), திருப்பயற்றூர் தலத்து பதிகத்தின் பாடலில் நாம் காணலாம். அலக்கம்=நடுக்கம்; எயிறு=பல்; உதிரம்=இரத்தம்; கருநிறம் கொண்ட யானையை ஆணவ மலத்தினுக்கும் அஞ்ஞானத்திற்கும் ஒப்பிடுவது வழக்கம். அஞ்ஞானம் ஞானத்தை வரவிடாமல் தடுப்பதால் ஞானமே உருவாகிய உமையம்மை அஞ்ஞானத்திற்கு அச்சப்படுவது இயற்கையே. உமையம்மை நடுங்கிய விதம் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. நடுக்கத்தால் பல முறை தனது விரல்களை தேவி உதறியதாக அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உமை அம்மையின் நடுக்கத்தைக் கண்டு சிவபெருமானார் தனது பற்கள் புலப்பட சிரித்ததாகவும், சிறிது நேரம் கழித்து தனது உடல் மீது போர்த்து இருந்த யானையின் தோலை கழற்றியதாகவும் இங்கே கூறப்படுகின்றது. உமையம்மையின் அச்சத்தைக் கண்டு தாம் பொறதாவராகி, யானையின் தோலை கழற்றியதாக அப்பர் பிரான் கூறுகின்றார்.

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட

விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கல்

நோக்கித்

தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலராகித் தாமும்

சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே

பெருமான் யானையுடன் போருக்குச் சென்றது பற்றியோ, யானையின் தோலை கிழித்தது பற்றியோ உமையம்மை கவலை கொள்ளவில்லை; தான் கொன்ற யானையின் தோலைத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்டது பற்றியே உமையம்மை கவலை கொண்டதாக இந்த பாடலில் கூறப்படுகின்றது. யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப் படுகின்றது. எனவே தான் யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்திக் கொண்ட பெருமானின் உடலுக்கு கேடு ஏதேனும் விளையுமோ என்று அன்னையின் தாயுள்ளம் அச்சம் கொள்கின்றது. ஆனால் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த கொடிய ஆலகால நஞ்சே, பெருமானின் உடலுக்கு எந்த விதமான கேட்டினையும் விளைவிக்காத போது, யானையின் பசுந்தோல் எவ்வாறு பெருமானின் உடலுக்கு கேடு விளைவிக்க முடியும். எனவே தான் இந்த உண்மையினை மறந்து, தான் பெருமான் மீது கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அன்னை அச்சம் கொண்டது குறித்து பெருமான் ஏளனமாக, தனது பற்கள் தோன்ற சிரித்ததாகவும், அம்மையின் அச்சத்தினைக் கண்டு சிறிது நேரம் கழித்து தான் தரித்திருந்த யானைத் தோல் போர்வையை பெருமான் கழற்றினார் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். யானையின் தோல் தனக்கு எந்தவிதமான கேடும் விளைவிக்காது என்று தெரிந்திருந்த போதிலும், பெருமான் தானும் அஞ்சியது போன்று நடித்து அந்த தோல் போர்வையைக் கழற்றியது, தனது உண்மை நிலையை மறைக்கும் வஞ்சகமான செயல் தானே. எனவே தான் பல திருமுறை பாடல்களிலும், யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட செயல் வஞ்சக் கள்வரின் செயலாக குறிப்பிடப்படுகின்றது போலும்.

பொழிப்புரை:

பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடத்தை உட்கொண்டு தேக்கியதால், தனது கழுத்தினில் கருமை நிறத்து மணி பதிக்கப்பட்டது போன்ற கழுத்தினை உடையவனும், மங்கை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், பல இல்லங்களின் வாயில் முன்னே நின்று பிச்சை ஏற்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் இடம் திருநணா ஆகும். என்றும் பொய்க்காத செய்திகளை உடைய மறையினை எப்போதும் ஓதிக் கொண்டு படைத்தல் தொழிலைச் செய்யும் பிரமனும், நெடிய திருமாலாக வளர்ந்து மண்ணையும் விண்ணையும் ஈரடியால் தாவி அளந்த திருமாலும், பெருமானது திருப்பாதங்களைத் தேடிக் காணும் முயற்சியில் தோல்வி அடைந்த பின்னர், தங்களது தவறினையும் ஆற்றல் இல்லாத தன்மையையும் உணர்ந்த பிரமன் மற்றும் திருமால் நிலத்தில் விழுந்து வணங்கி போற்றும் வண்ணம், நிலை பெற்று செம்மை நிறத்துடன் நீண்ட எரியாக உருவம் எடுத்த பெருமான் உறையும் இடம் திருநணா ஆகும்.

பாடல் 10:

ஆடை ஒழித்து அங்கே அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி

மூடுருவம் உகந்தார் உரை அகற்று மூர்த்தி கோயில்

ஓடு நதி சேரு நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சாரச்

சேடர் சிறந்து ஏத்தத் தோன்றி ஒளிபெருகும் திருநணாவே

விளக்கம்:

அமணே திரிந்து=நிர்வாணமாக திரிந்து; சமணர்களின் பேச்சுகளை அல்லல் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பெருமானைப் பழித்துப் பேசுவதால், மேலும் மேலும் பாவங்களை சேர்த்துக் கொண்டு தங்களுக்கு துன்பங்கள் இழைத்துக் கொள்ளும் சமணர்கள், பெருமானின் அடியார்களின் மனம் வருந்தும் வண்ணம், பெருமானைக் குறித்து பழிச் சொற்கள் பேசுவதால் அவர்களுக்கும் துன்பம் இழைப்பவர்களாக விளங்குகின்றனர் என்பதை குறிப்பிடவே அல்லல் விளைவிக்கும் சொற்கள் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தங்களது உடல் முழுதும் போர்த்துக் கொள்ளும் புத்தர்களை மூடுருவம் உகந்தார் என்று குறிப்பிடுகின்றார். நித்திலம்=முத்து; சேடர்= ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள்; சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல் சேடர் என்று தமிழ் மொழி இலக்கணத்திற்கு ஏற்ப மாற்றப் பட்டுள்ளது.

பொழிப்புரை:

ஆடைகள் அணிவதை விட்டுவிட்டு, நிர்வாணமாகத் திரிந்து அடுத்தவர்கள் கொடுக்கும் சோற்றினை உண்டு வாழும் சமணர்கள், சிவபெருமானை நிந்திப்பதன் மூலம் தங்களுக்கு தாங்களே துன்பம் விளைவித்துக் கொண்டும், பெருமான் அடியார்கள் மனம் வருத்தமுறும் வண்ணம் பேசி அவர்களுக்கும் துன்பம் இழைக்கின்றனர். அத்தகைய சமணர்களின் உரையையும், தங்களது உடலினை ஆடையினால் மூடுவதில் பெருவிருப்பம் உடைய புத்தர்களின் உரையையும், அவை பொய்யான பழிச்சொற்கள் என்பதால் பொருட்படுத்தாமல் அகற்றும் பெருமான் உறைகின்ற திருக்கோயில் உள்ள இடம் திருநணா ஆகும். தான் அடித்துக் கொண்டு வரும் முத்துக்களும் அகில் கட்டைகளும் இரு கரைகளிலும் சேரும் வண்ணம் வேகமாகப் பாயும் நதிகள் உடையதும். அறிவு மற்றும் ஒழுக்கத்தில் சிறந்த அடியார்கள் பெருமானைப் போற்றிப் புகழ சிவானந்த ஒளி திகழ்வதும் ஆகிய தலம் திருநணா ஆகும்.

பாடல் 11:

கல்வித்தகத்தால் திரை சூழ் கடற்காழிக் கவுணி சீரார்

நல்வித்தகத்தால் இனிது உணரு ஞானசம்பந்தன் எண்ணும்

சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்

வல்வித்தகத்தால் மொழிவார் பழியிலர் இம் மண்ணின் மேலே

விளக்கம்:

கல்வித்தகம்=உயர்ந்த குன்றுகள்; திரை=அலை; நல்வித்தகம்=ஞானம்; சொல்வித்தகம்=திருத்தமான சொற்கள்; வல்வித்தகம்=வலிமையான உறுதிப்பாடு; பழியிலர் என்று இங்கே கூறுகின்றார். நமது தீய செயல்களால் நமக்கு பாவங்கள் செருவதுடன், அந்த தீய செயல்களைக் காணும் பெரியோர்கள் நம்மை பழிக்கின்றனர். பெருமானை வணங்கும் அடியார்களின் மனம் தூய்மை அடைவதால், அவர்கள் இயல்பாகவே தீய செயல்களைத் தவிர்த்து, மற்றவர்கள் தங்களைப் பழிப்பதையும் தவிர்க்கின்றனர் என்பது உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

குன்றுகள் போன்று உயர்ந்த அலைகளால் சூழப்பட்ட கடற்கரையில் இருக்கும் சீர்காழி நகரினில் வாழ்பவனும், சிறப்பு வாய்ந்த கவுணியர் கோத்திரத்தை சார்ந்தவனும். பெருமானின் அருளினால் கிடைத்த ஞானம் கொண்டு அனைத்தையும் உணரும் ஆற்றல் பொருந்தியவனும் ஆகிய ஞானசம்பந்தன், திருத்தம் வாய்ந்த சொற்களால் திருநணா தலத்தில் வீற்றிருக்கும் இறைவனைப் புகழ்ந்து தான் கருதிய வண்ணம் பாடிய இந்த பாடல்களை, தொடர்ந்து உறுதியான மனத்துடன் ஓதும் அடியார்கள் இந்த நிலவுலகினில் பழி மற்றும் பாவம் அற்றவர்களாக வாழ்வார்கள்.

முடிவுரை:

செங்காட்டங்குடியில் மாதொரு பாகனின் திருக்கோலத்தைக் கண்டு களித்த ஞானசம்பந்தரின் மனதினை விட்டு அந்த அற்புதமான காட்சி, அகலவில்லை போலும். பந்தார் விரல் மடவாள் பாகமா என்று பதிகத்தின் முதல் பாடலைத் தொடங்கும் ஞானசம்பந்தர், நன்னுதலாள் பாகமா என்று மூன்றாவது பாடலிலும், காலில் சிலம்பணிந்து என்று நான்காவது பாடலிலும், முத்தேர் நகையாள் இடமாக என்று ஐந்தாவது பாடலிலும் மங்கையோர் பங்குடையன் என்று ஒன்பதாவது பாடலிலும் குறிப்பிட்டு மகிழ்கின்றார். வெந்த வெண்ணீறு என்று தொடங்கும் கொடிமாடச் செங்குன்றூர் (செங்காட்டங்குடி) தலத்து பதிகத்தின் (1.107) முதல் ஐந்து பாடல்கள் பிராட்டி பெருமானின் உடலில் ஓர் பாகமாக உள்ள தன்மை குறிப்பிடப்படுகின்றது நமது நினைவுக்கு வருகின்றது.

பதிகத்தின் முதல் பாடலில் குரங்குகள் மற்றும் வண்டுகள் தங்களது ஆடற்கலைக்கும் பாடலுக்கும் பரிசு பெருகின்ற தன்மையை குறிப்பிடும் ஞானசம்பந்தர், இந்த நிகழ்ச்சி மூலம், தன்னை வழிபடும் அடியார்களின் பக்தியின் தன்மைக்கு ஏற்ப அந்த அடியார்களுக்கு தகுந்த அருள் வழங்குகின்றார் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். அடியார்கள் பழைய பிறப்புகளில் சேர்த்த வினைகள் காரணமாக அனுபவிக்கும் இன்ப துன்பங்களையும், அந்த வினைகளின் விளைவாக அகப்பட்டுக் கொண்டிருக்கும் பிறவிக் கடல் என்றும் துன்பத்தையும் நீக்கும் ஆற்றல் வாய்ந்த பெருமான் என்று இரண்டாவது பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். வானவர்களும் இறைவனைப் பணிந்து வணங்கும் இடம் என்று மூன்றாவது பாடலிலும், இந்த தலத்து இறைவனை வணங்கி பெருமானே அருளாய் என்று பணியும் அடியார்களுக்கு சிவானந்தத் தேன் வழங்கும் தலம் என்று நான்காவது பாடலிலும், இந்த தலத்து பெருமானை வணங்கும் அடியார்களின் வினைகளை கெடுக்கும் தலம் என்று ஐந்தாவது பாடலிலும், இந்த தலத்தினை வணங்கும் அடியார்கள் முக்தி நிலை அடைவதற்கு வழிவகுக்கும் தலம் என்று ஆறாவது பாடலிலும், இறைவனின் திருநாமங்களை பல வகையாலும் சொல்லிப் புகழ்ந்து ஏத்தும் துறவிகள் வாழும் தலம் என்று ஏழாவது பாடலிலும் அரக்கன் இராவணனின் தவறுகளை மன்னித்து அருள் புரிந்த இறைவன் வாழும் இடம் என்று எட்டாவது பாடலிலும் பிரமனும் திருமாலும் போற்றி வணங்கிய தலம் என்று ஒன்பதாவது பாடலிலும், சிவனாந்த ஒளி பெருகும் தலம் என்று பத்தாவது பாடலிலும் தலத்தின் புகழினை ஞானசம்பந்தர் எடுத்துரைக்கின்றார். இந்த பதிகத்தினை ஓதுவதால் பழியும் பாவமும் இன்றி நாம் இந்த நிலவுலகில் வாழலாம் என்று கடைப்பாடலில் கூறுகின்றார். பெருமானின் தன்மையையும், இந்த தலத்தின் பெருமைகளையும் புரிந்து கொண்ட நாம், இந்த தலம் சென்று சங்கமேஸ்வரரையும் பவானி தேவியையும் வழிபட்டு, பக்தியுடன் இந்த பதிகத்தை முறையாக பாடி, நிலவுலகில் வாழ்வில் வளம் பெற்றும், மறுமையில் முக்தி உலகம் செல்லும் பேற்றினையும் அடைவோமாக.



Share



Was this helpful?