Digital Library
Home Books
வசிஷ்டரின் பேரரான பராசரர், சக்தி ரிஷியின் புத்திரராக அவதரித்தார். சக்தி ரிஷியையும், அவருடைய சகோதரர்கள் நூறுபேரையும் ருதிரன் என்னும் ராட்சஷன் கொன்று குவித்தான். பூலோகத்தில் நன்மையையும், தீமையையும் ஒரு மனிதன் அனுபவித்தே தீரவேண்டும் என்ற நியதியை வசிஷ்டர் அறிந்திருந்தார். ஆனாலும், சக்திரிஷி இறந்ததால், கடல்போன்ற புத்திரசோகத்தை மனதில் தேக்கிக் கொண்டு திரிந்தார்.
தந்தைக்கே இப்படி என்றால் தாய்க்கு எப்படி இருக்கும்? வசிஷ்டரின் மனைவி அருந்ததியும் கணவரோடு மனம் கலங்கித் திரிந்தாள். குலமே வேரோடு சாய்ந்து விட்டதே! இனி வம்ச விருத்தி எப்படி உண்டாகும் என்ற எண்ணம் வசிஷ்டருக்கு உண்டானது. அப்போது, வசிஷ்டரின் மருமகளான அத்ருச்யந்தீ (சக்தி முனிவரின் மனைவி) தன் மாமனாரிடம் மாமா! நம் குலம் நிர்மூலமாகிவிடவில்லை.
உங்கள் மகன் இறந்தபோது, நான் கருவினை வயிற்றில் சுமந்திருந்தேன். என் கர்ப்பத்தில் இருக்கும் நம் வம்சம் தழைக்க வந்த இந்தச் சிசு குலப்பெருமை காக்கும் மகாஞானியாக வருவான், என்று கூறி அவரைத் தேற்றினாள். ஆண்டுகள் உருண்டோடின. அத்ருச்யந்தீயின் வயிற்றில் இருந்த கரு 12 ஆண்டுகள் தாயின் வயிற்றிலேயே இருந்தது. ஒருமுறை தன் மருமகளின் முன்னே சென்று கொண்டிருந்த வசிஷ்டர் திடீரென நின்றார்.
அம்மா! அத்ருச்யந்தீ! என் பின்னால் யாரோ சுந்தரமொழியில் வேதகோஷம் செய்வதை என்னால் கேட்கமுடிகிறதே! இக்குரலைக் கேட்டால் என்பிள்ளை சக்தியின் பேச்சைப் போல இனிக்கிறதே! இது என்ன அதிசயம்! என்றார். மாமா! கர்ப்பவாசம் செய்யும் உங்கள் பேரன் தான் வேதமந்திரங்களை ஓதுகிறான். அடிக்கடி நான் இந்த மந்திர சப்தங்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். உபநயனகாலம் வந்து விட்டதால், தாமாகவே, சகலவேதங்களையும் அவன் அறிந்து கொண்டுவிட்டான், என்றாள்.
தங்கள் குலம் காக்க வரும் கோமகனை எண்ணி வசிஷ்டர் மனம் மகிழ்ந்தார். தாயின் வயிற்றிலேயே 12 ஆண்டுகள் இருந்து அந்த வயதுள்ள சிறுவனாக பிறந்தான் அந்தக்குழந்தை. தாத்தா வசிஷ்டர் அந்தப் பிள்ளைக்கு பராசரர் என்ற பெயர் வைத்தார். பராசரர் என்ற சொல்லுக்கு, பிறந்தவுடனேயே பகைவர்களை தன் தவவலிமையினால் சிதறிப் போகும்படி செய்பவன் என்பது பொருள். தாத்தா வசிஷ்டரை, அந்தக் குழந்தை தனது தந்தை என்று எண்ணிக் கொண்டு அவரை அப்பா என அழைத்தான். அத்ருசயந்தீ இதை எண்ணி மிகவும் மனவேதனைப்பட்டாள்.
ஆனாலும், ஆரம்பத்தில் இதைத் தடுக்க முடியவில்லை. எத்தனை நாள் தான் இந்த அவலத்தை அவளால் பொறுக்க முடியும்? ஒருநாள் பராசரரிடம் உண்மையை மறைக்காமல் சொல்லிவிட்டாள். அத்துடன், அவனது தந்தை, சித்தப்பாக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் எடுத்துச் சொன்னாள். பராசரருக்கு கோபம் கொப்பளித்தது.
தன் வம்சத்தாரைக் கொன்ற ராட்சஷன் ருதிரனையும், ராட்சஷ வம்சத்தையும் அழிக்க முடிவெடுத்து யாகம் ஒன்றைத் துவக்கினார். மந்திரங்களைச் சொல்லி ஹோமாக்னியை வளர்த்தார். பிரபஞ்சத்தில் இருக்கும் ராட்சஷர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இந்த யாகத்தை நிறுத்தும்படி புலஸ்தியர் என்ற மகரிஷி பராசரரிடம் மன்றாடினார். ஒருவன் செய்த குற்றத்திற்காக ஒரு இனத்தையே பழிவாங்குவது தர்மம் அல்ல! நிரபராதிகளையும் அநியாயமாகக் கொல்வது முறையல்ல! என்று வேண்டினார். மாமுனிவனே! என் பேச்சைக் கொஞ்சம் கேள்.
கல்மாஷபாதன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடிக் களைத்து, தண்ணீர் தாகத்தால் ஒற்றையடிப்பாதையில் வந்து கொண்டிருந்தான். அப்போது உன் தந்தை சக்திரிஷி எதிரில் வந்தார். அவனுக்கு அவர் வழிவிட மறுத்ததோடு மட்டுமல்லாமல் ஒதுங்கிப் போ என்று ஆவேசமாகக் கோபித்தும் கொண்டார். நாட்டில் உள்ள பிரஜைகள் மன்னனை மதிப்பது தானே தர்மம். இதை மறந்து பேசிய உன் தந்தைமீது வெகுண்டான் கல்மாஷபாதன். குதிரை சாட்டையால் அவரை அடித்துவிட்டான். வலியால் துடித்த உன் தந்தை, கல்மாஷபாதனை ராட்சஷனாகப் போகும்படி சபித்துவிட்டார்.
ராட்சஷனான அவன் உன்தந்தையையும், அவரது நூறு சகோதரர்களையும் கொன்று தின்றான். இது தான் உண்மையாகவே நடந்தது. குற்றம் முழுவதையும் ராட்சஷர்களின் மீது சுமத்துவது சரியல்ல,என்றார். வயதில் பழுத்த அவரது நியாயமான பேச்சு பராசரரின் மனதை மாற்றியது. யாகத்தை நிறுத்திவிட்டு அவரது பாதத்தில் விழுந்து வணங்கினார். பராசரா! பரதேவதை நிர்ணயம் என்ற விஷயஞானத்தைப் பெற்று உலக÷க்ஷமத்திற்கு வழிகாட்டுவாயாக! என்று ஆசியளித்தார். பராசரர் தந்த பொக்கிஷமே விஷ்ணுபுராணம். வேதத்தின் சாரத்தை நமக்களிக்கும் புராண நூலாக இது திகழ்கிறது.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |