இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பரவக்கெடும் வல்வினை

பரவக்கெடும் வல்வினை

பதிக எண்: 2.35 - திருதென்குரங்காடுதுறை - பண்; இந்தளம்

பின்னணி::

இந்நாளில் கும்பகோணம் என்று அழைக்கப்படும் தலத்தினில், பண்டைய நாளில் திருகுடந்தை என்று அழைக்கப் பட்ட தலத்தினில் உள்ள மூன்று திருக்கோயில்களும் சென்ற திருஞானசம்பந்தர் (திருக்குடந்தை, குடந்தை கீழ்க்கோட்டம், குடந்தைக் காரோணம்) பின்னர் அருகிலுள்ள திருநாகேச்சரம் திருவிடைமருதூர் ஆகிய தலங்களும் அருகிலுள்ள வேறு சில தலங்களுக்கும் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. திருவிடைமருதூர் தலத்தினில் பல நாட்கள் தங்கி இருந்த திருஞானசம்பந்தர் அதன் பின்னர், குரங்காடுதுறை சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். அருங்கலை நூல் என்ற தொடர் மூலம் அரிய வேதங்கள், புராணங்கள் மற்றும் உபநிடதங்கள் ஆகிய நூல்களில் உள்ள பொருளை உணர்த்தும் பாடல்கள் கொண்ட பதிகம் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர் தான் பதிகங்களை பாடும் பொழுதே இன்னிசையுடன் பாடினார் என்பதையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

மருங்குள நற்பதிகள் பல பணிந்து மாநதிக்கரை போய்க்

குரங்காடுதுறை அணைந்து குழகனார் குரை கழல்கள்

பெருங்காதலால் பணிந்து பேணிய இன்னிசை பெருக

அருங்கலை நூல் திருப்பதிகம் அருள் செய்து பரவினார்

மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில், குடந்தைக்கு வடகிழக்கில் பன்னிரண்டு கி.மீ தூரத்தில் உள்ள ஆடுதுறை என்ற தலம் தான் தென் குரங்காடுதுறை என்று பண்டைய நாளில் அழைக்கப்பட்டது. தில்லைச் சிதம்பரத்தில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் முனிவர்களுக்கு பெருமான் தனது ஆனந்த நடனக்காட்சியை காட்டியதை அறிந்த பல முனிவர்களும் தேவர்களும் தாங்களும் அந்த நடனக் காட்சியை காண வேண்டவே, பெருமான் அவர்களுக்கு தனது நடனக் காட்சியை காட்டிய இடம் என்பதால் ஆடுதுறை என்ற பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். இறைவனின் திருநாமம், ஆபத் சகாயேசுவரர், நல்ல நாயகர், இறைவியின் திருநாமம் பவளக்கொடி, பவளக்கொடி அம்மை, வண்டார் கருமென்குழல் அம்மை; குரங்குகளாகிய சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரால் வழிப்டப்பட்ட தலம் என்பதால் குரங்காடுதுறை என்றும், வாலி வழிபட்ட தலத்திலிருந்து (வட குரங்காடுதுறை) வேறுபடுத்திக் காட்டவும் தென்குரங்காடு துறை என்று அழைக்கப்பட்டது. இந்த பெயர் நாளடைவில் ஆடுதுறை என்று மருவிவிட்டது போலும்.

அகத்தியர் மிருகண்டு முனிவர் சுக்ரீவன் மற்றும் அனுமன் வழிபட்ட தலம்; இந்த தலத்தில் தான் வாலியை இராமபிரான் கொன்றதாக கருதப் படுகின்றது. வாலியால் மிகவும் துன்புறுத்தபப்ட்ட நிலையில் வருந்திய சுக்ரீவன், இந்த தலத்து இறைவனை வழிபட, அவனை அன்னமாக மாற்றி பெருமான் காத்தார் என்று செவிவழிச் செய்தி உணர்த்துகின்றது. அதனால் தான் இறைவனுக்கு ஆபத்சகாயேச்வரர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். பெருமான் தமது ஊழி நடனக் காட்சியை சுக்ரீவனுக்கு காட்டி அருள் புரிந்தார் என்றும் கூறுவார்கள். இந்த செய்தியை மெய்ப்பிப்பது போன்று, திருஞானசம்பந்தர், இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் எட்டு பாடல்களில் ஊழி நடனத்தை குறிப்பிடுகின்றார். நாரத முனிவர் கொடுத்த சாபத்தால் தனது சங்கீத ஞானத்தை இழந்த அனுமன், இந்த தலத்து இறைவனை வழிபட்டு சங்கீத ஞானம் திரும்பப் பெற்றார் என்று கூறுவார்கள்.

கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளெ செல்கையில் வலது புறத்தில் நாம் விநாயகரை காணலாம். இரண்டாவது வாயிலுக்கு முன்னே இடது புறத்தில் உள்ள முன்மண்டபத்தின் ஒரு புறத்தில் பள்ளியறையும் அருகில் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும் உள்ளன. அம்பிகை சன்னதியில் துவாரபாலகிகளை காணலாம். இடது புறத்தில் மூத்த விநாயகர் காட்சி தருகிறார். மூன்றவது வாயிலைக் கடந்து சென்றால் கருவறையை காணலாம். கம்பீரமாக காட்சி தரும் துவார பாலகர்களை புடைச் சிற்பமாகக் கொண்ட கருவறையில் மூலவர் காட்சி அளிக்கின்றார். சுயம்பு லிஙம். கருவறை சுற்றி அகழி போன்ற அமைப்பு காணப்படுகின்றது. சித்திரை மாதம் 5 6 7தேதிகளில் சூரியனனின் கதிர்கள், பெருமான் சன்னதிக்கு எதிரே உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்து இறைவனின் திருமேனி மீது படர்வதை காணலாம். மூலவருக்கு தெற்கே நடராஜர், சிவகாமசுந்தரி, சோமாச்கந்தர், முதலிய பஞ்சலோகச் சிலைகளை காணலாம். அற்புதமான வேலைப்பாடுகள் உடையவை. உள் பிராகாரத்தின் தெற்கே நால்வர் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதிகளையும், கோஷ்டத்தில் அகத்தியர், நடராஜர், காரைக்கால் அம்மையார், விநாயகர் ஆகியோரை புடைச் சிற்பங்களாக காணலாம். அவற்றின் அருகே கண்டராதித்த சோழரின் மனைவி செம்பியான் மாதேவியார் பெருமானை வழிபடுவதாக அமைந்துள்ள சிற்பத்தை காணலாம். அறுபத்துமூவர் சன்னதி மற்றும் சண்டேசர் சன்னதிகளும் உள்ளன். வெளி பிராகாரத்தில், விசாலாட்சி உடனாய விச்வநாதர், விநாயகர், சூரியன், சந்திரன், முருகன் மற்றும் நவகிரக சன்னதிகளை காணலாம். எதிரில் தோன்றும் மண்டபத்தின் மேல் மாடத்தில், இறைவனை சுக்ரீவன் வணங்கும் காட்சியும், இறைவன் சுக்ரீவனை அன்னப் பறவையாகவும் அவனது மனைவியை பவளமல்லி மரமாகவும் மாற்றிய தல வரலாற்றுக் காட்சியை காணலாம். சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. கருவறைச் சுற்றுச் சுவற்றில் காணப்படும் விஷ்ணு துர்க்கை மிகவும் பிரசித்தம். வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விநாயகர், வாயுலிங்கம், காசி விநாயகர், அம்பாள், சுக்ரீவன் அமைத்த சன்னதி, கஜலட்சுமி, இந்திர லிங்கம், குபேர லிங்கம், சந்திரன், சூரியன், சன்னதிகள் காணப்படுகின்றன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை, உள்ளனர். பவளக்கொடி அம்மை சன்னதியை வலம் வருகையில் புடைப்பு சிற்பங்களாக சுக்ரீவன் வழிபாடு செய்வதையும் செம்பியன் மாதேவி வழிபாடு செய்வதையும் காணலாம். மற்றும் கோஷ்டத்தில் காணப்படும் கங்கா விசர்ஜனர், பிட்சாடனர் உருவங்கள் கலை நயம் பொருந்தியவை. எட்டு கரங்களுடன் காணப்படும் இந்த துர்கை அம்பிகைக்கு இராகு காலத்தில் செய்யப்படும் அபிஷேகம் மிகவும் பிரசித்தம். அப்போது அபிஷேகம் செய்யப்படும் பால் நீலநிறமாக மாறுவதை நாம் காணலாம். இங்கே உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் அகத்திய முனிவரால் தாபிக்கப்படது. தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அகத்தியருக்கு தனி சன்னதி உண்டு. இங்கே தியானம் செய்வோர், தாம் விரும்பியதை அடைவார்கள் என்று சொல்லப் படுகின்றது.

முன்னொரு சம்யம் கல்லும் கரைந்துருகும் வண்ணம் அனுமார் இசை பாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நாரதர், அந்த இன்னிசையில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தார். அவர் தான் புறப்படும் சமயத்தில் தான் கீழே வைத்திருந்த தனது மகதி வீணையை எடுக்க முயற்சி செய்தபோது, அந்த வீணை எடுக்க் முடியாமல் மலையுடன் புதைந்திருந்தது. அதனால் கோபம் கொண்ட நாரதர், அனுமன் தனது இசைக்கலையை மறக்கும் வண்ணம் சாபம் கொடுத்தார். அனுமன் இந்த தலத்து இறைவனை வழிபட்டு, தான் மறந்திருந்த இசைக்கலையை மீண்டும் பெற்றார் என்று கூறுவார்கள்.

கஞ்சனூர் தலத்தைத் சார்ந்த அரதத்தர் என்ற வைணவர் சிறந்த சிவபக்தராக திகழ்ந்தார். அவர் கஞ்சனூர் தலத்தில் உள்ள தென்முகக்கடவுளின் அருளால் சிவஞானம் கைவரப் பெற்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியின் மீது அமர்ந்தவராக, சிவபரத்துவத்தை நிலை நாட்டிய பெருமை உடையவர். அவர் தினமும் கஞ்சனூர், கோடிக்கா, தென் திருவாலங்காடு, ஆவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய ஏழு சிவத்தலங்களை தரிசனம் செய்த பின்னரே உணவு உட்கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்தார். ஒரு முறை இவர் ஆடுதுறை தலத்து இறைவனை தரிசனம் செய்து திரும்பும்போது தொடர்ந்து பெய்த அடர் மழையால், வானம் இருண்டு காணப்படவே வழி தெரியாமல் திகைத்தார். அப்போது தனது கையில் கோல் ஏந்தியவராக இறைவன் இவரது அருகே தோன்றி, வழிநடத்தித் சென்றதாக கூறுவார்கள்.

ஒரு பெணமணி இந்த தலத்து இறைவனை தொடர்ந்து வழிபடும் பழக்கம் கொண்டிருந்தாள். ஒரு சமயம் அவள் பூரண கர்ப்பிணியாக இருந்தபோது இறைவனை வழிபட்ட பின்னர் தனது இல்லம் செல்ல முயற்சி செய்கையில், காவிரி நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடவே, அவள் தனது ஊர் செல்லமுடியாமல், மீண்டும் திருக்கோயிலுக்கு திரும்பிவிட்டாள். கரை புரண்டு ஓடிய வெள்ளத்தின் காரணமாக எவரும் நதியைத் தாண்டி அடுத்த கரைக்கு செல்லமுடியவில்லை. தனது திருக்கோயிலுக்கு திரும்பிய பெணமணிக்கு, பெருமான் தாயாகத் தோன்றி, சுகப் பிரசவம் ஏற்பட உதவியதுமன்றி, பெண்மணியின் ஊராகிய திருமங்கலக்குடி சென்று அவளது பெற்றொர்களுக்கும், குழந்தை பிறந்ததையும் தாயும் சேயும் நலம் என்பதையும் தெரிவித்தார். பெண்ணின் பெற்றோர்கள், உமது ஊர் யாது என்று கேட்டதற்கு பெருமான் மருத்துவக்குடி என்று தெரிவித்தார் என்றும் கூறுவார்கள். மருத்துவக்குடி என்பது அருகில் உள்ள தலம்.

இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளியுள்ள தேவாரப் பதிகமும் நமக்கு கிடைத்துள்ளது. சோழ அரசி செம்பியன் மாதேவியார், இந்த தலத்து செங்கல் கட்டிடத்தை கற்றளியாக மாற்றினார். கோயிலை முதலில் கட்டியவர்கள் நிறுவிய கல்வெட்டுக்களை மறுபடியும் அதே நிலையில் புதிதாக கட்டப்பட்ட கோயில் சுவர்களில் பொறித்த செயல் பாராட்டுக்கு உரியது பவள மல்லிகை தலமரம். சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் காலத்தைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த தலத்து முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளி உள்ளார்.

பாடல் 1:

பரவக்கெடும் வல்வினை பாரிடம் சூழ

இரவிற் புறங்காட்டிடை நின்று எரியாடி

அரவச் சடை அந்தணன் மேய அழகார்

குரவப் பொழில் சூழ் குரங்காடுதுறையே

விளக்கம்:

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானை இரவில் புறங்காட்டிடை நின்று எரியாடி என்று குறிப்பிடுகின்றார். இரவு என்பது இங்கே பிரளய காலத்தினை, சூரிய சந்திரர்களும் அழிந்த பின்னர் உலகமே இருண்டு கிடக்கும் நிலையை குறிப்பிடுகின்றது. உலகம் அனைத்தும் பிரளய காலத்து வெள்ளத்தால் அழிந்த பின்னர், அந்த வெள்ளமும் வடவாக்னி பொங்கி வருவதால் சுண்டி காணப்படும் நிலையை குறிப்பிடுகின்றார். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இறந்து உயிரற்ற உடல்கள் எங்கும் இருப்பதால் புறங்காடு என்று கூறுகின்றார். அந்த தருணத்தில், எண்ணற்ற பிறவிகள் எடுத்து களைத்திருக்கும் உயிர்களுக்கு தேவையான இளைப்பாற்றலை அருளியதை நினைத்து பெருமான் மிகவும் மகிழ்ச்சியாக நடன்மாடுவது, பிரளயத்தீயில் நின்ற வண்ணம் நடனமாடுவது பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றாது. இதனையே மணிவாசக அடிகளாரும் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று திருவாசகம் சிவபுராணத்தில் கூறுகின்றார். இத்தகைய குறிப்புகள் காணப்படும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.10.7) திருஞானசம்பந்தர் பெருமானை எரியாடிய இறைவர் என்று குறிப்பிடுகின்றார். எரிந்து கொண்டிருக்கும் பிணங்களின் அருகே இருப்பதால், கால்கள் கரிய நிறத்தை உடைய பேய்கள்; மண்டையோடுகளில் பொதிந்திருக்கும் உலர்ந்த தசைகளை விரும்பி உட்கொள்ளும் நரிகளால் மண்டையோடுகள் உருட்டப் படுவதை குறிப்பிடுகின்றார். அரியாடிய கண்=செவ்வரி படர்ந்த கண்கள்;

கரிகாலன குடர் கொள்வன கழுதாடிய காட்டில்

நரியாடிய நகு வெண்டலை உதை உண்டவை உருள

எரியாடிய இறைவர்க்கு இடம் இன வண்டிசை முரல

அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.18.5) திருஞானசம்பந்தர், அழலின் வலன் அங்கையது ஏந்தி அனலாடும் பெருமான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அழலின் வலன்=வலமாக சுழித்துக் கொழுந்து விட்டெரியும் அனல்; புரி கடவுள்=விரும்பத்தக்க கடவுள்; களைகண்=பற்றுக்கோடு; ஒருவர் பாடுவதைக் கேட்கும் அடுத்தவருக்கும் பாடத் தோன்றுவது உலக இயல்பு. அந்த இயல்பினால் குழலின் இசையையும் வண்டின் இசையையும் கேட்கும் குயில்களும் பாடத் தொடங்குகின்றன என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்

குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும்

நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்

அழலின் வலன் அங்கை அது ஏந்தி அனலாடும்

கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.40.3) திருஞானசம்பந்தர் பெருமானை அனலாடி என்ரு குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பிச்சை ஐயம் என்ற இரண்டு சொற்களையும் சம்பந்தர் பயன்படுத்தி இருப்பதை நாம் காணலாம். இரண்டும் ஒரு பொருளை உணர்த்துவது போல் தோன்றினும் சிறிய மாறுபாடு உள்ளது. ஐயம் என்பது இடுவோர் இரவலரைத் தேடிச்சென்று இடுவது. பலி என்பதும் இதே பொருளில் வருகின்றது. பிச்சை என்பது இரப்போர் இடுவோரைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்வது. ஔவையார் இந்த மாறுபாட்டினை மிகவும் அழகாக உணர்த்துகின்றார். ஐயம் இட்டுண் என்று, தாங்கள் இடும் பிச்சை பெறுகின்ற ஆட்களைத் தாங்களே தேடிக் கொண்டு இடுவோர் செல்ல வேண்டும் என்று உணர்த்துகின்றார். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று, ஏழையாக இருப்போர் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு, தாங்களே தங்களுக்கு உதவி செய்வோர்களைத் தேடிக்கொண்டு செல்ல வேண்டும் என்று உணர்த்துகின்றார். அதனால் தான் பிச்சை இழிவாகவும் ஐயம் உயர்ந்ததாகவும் கருதப் படுகின்றது. பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் பலி ஏற்பதன் நோக்கத்தை புரிந்து கொள்ளும் உயிர்கள், மிகவும் பணிவுடன், தமது மலங்களை பிச்சையாக பெருமான் ஏற்றிருக்கும் பாத்திரத்தில் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்கள். இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் அனலாடி என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடிப் புன் தலை அங்கையில் ஏந்தி

ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி

வாள் நெடுங்கண் உமை மங்கை ஓர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்த்

தாள் நெடு மாமலர் இட்டுத் தலைவன தாள் நிழல் சார்வோம்

திருப்பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.41.2) திருஞானசம்பந்தர் அனலது ஆடும் எம்மடிகள் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மிகவும் எளிமையான பொருட்களாக விளங்குவதும் ஏனையோரால் தவிர்க்கப்படுவதும் ஆகிய பொருட்களை, சிவபெருமான் பூண்டுள்ள தன்மை இந்த பாடலில் சொல்லப்படுகின்றது. கொக்கிறகு, வில்வ இலைகள், ஊமத்தை மற்றும் கொன்றை மலர்கள், எருக்கு ஆகியவற்றைத் தனது சடையில் அணிந்து கொண்டுள்ள பெருமான், எலும்பு மாலை மற்றும் ஆமையோட்டினை அணிந்தவராக, அனலில் நின்று ஆடுகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும், பெருமானை அனலது ஆடும் எம் அடிகள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் அனலது ஆடும் எம் அண்ணல் என்று பெருமானை அழைக்கின்றார்.

கொக்ககிறகோடு கூவிள மத்தம் கொன்றையொடு எருக்கணி சடையர்

அக்கினோடு ஆமை பூண்டழகாக அனலது ஆடும் எம் அடிகள்

மிக்க நல்வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்

பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னகராரே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.45.3) கனலாடி என்று திருஞான சம்பந்தர் பெருமானை அழைக்கின்றார். கண்ணி=சடையில் சூடப்படும் மாலை; கந்தம்=நறுமணம்; வெந்த பொடி நீறு=திருநீறு; திருநீற்றைனைத் தனது உடலெங்கும் பூசும் தன்மை, இவர் ஒருவருக்கே உரியது என்பதால், இவ்வாறு மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டு காணப்படும் தன்மையை விகிர்தர் என்ற சொல் மூலம் உணர்த்துகின்றார். கொந்தண்=பூங்கொத்துகள்; கோடல்= செங்காந்தள் மலர்; பாம்பு படம் எடுத்து ஆடுவது போன்று காந்தள் மலரின் இதழ்கள் இருப்பதால், அரவில் தோன்றி கோடல் என்று குறிப்பிடுகின்றார். அந்தண்=அழகியதும் குளிர்ந்ததும் ஆகிய;

கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடிக் கனலாடி

வெந்த பொடி நீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்

கொந்தண் பொழில் சோலை அரவில் தோன்றிக் கோடக் பூத்து

அந்தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.48.3) திருஞானசம்பந்தர் பிராட்டி காணும் வண்ணம் பெருமான் மகிழ்ந்து எரியாடுகின்றார் என்று கூறுகின்றார். நோக்கி=நோக்கம் உடையவள்; பொதுவாக மருண்ட பார்வை பெண்களுக்கு அழகினை அளிக்கும் என்று கூறுவார்கள். மருண்ட பார்வைக்கு மானின் பார்வையை உதாரணமாக சொல்வது இலக்கிய மரபு. தருமபுர ஆதீனத்தின் வலைத்தளத்தில் மான்னோக்கி என்ற தொடருக்கு சுவையான விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. மான் பார்வையை கற்றுக் கொள்வதற்காக உமையன்னை அருகே வந்து, அன்னையின் பார்வை அழகினை பார்த்து கற்றுக் கொள்வதாக உரையாசிரியர் கூறுகின்றார். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவை பெண்களுக்கு உரிய நான்கு சிறந்த குணங்களாக பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. வரவிருக்கும் அபாயம் குறித்தும் எந்த அவப்பெயரும் தனக்கு தனது வாழ்வினில் வாராமல் வாழவேண்டும் என்ற எண்ணத்தினாலும் பெண்களுக்கு ஏற்படும் ஒருவகையான மனக்கலக்கம் அச்சம் என்று சொல்லப்படுகின்றது. தனக்கு தெரிந்த விஷயத்தையும் நாலு பேர் முன்னிலையில் தனக்கு தெரிந்ததாக காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக இருத்தல் மடம் என்று சொல்லப்படுகின்றது. வெட்கம் என்ற பண்பே நாணம் என்று சொல்லப் படுகின்றது. கணவனைத் தவிர்த்து வேறொரு ஆண்மகனின் தொடுதல் ஏற்படுத்தும் ஒருவகையான கூச்சம் பயிர்ப்பு என்று சொல்லப் படுகின்றது. பேய்களுடன், நடனம் ஆடுவது, காட்டினில் நடனம் ஆடுவது, கையினில் தீப்பிழம்பு ஏந்தி நடனம் ஆடுவது ஆகிய மூன்றுமே எவருக்கும் அச்சமூட்டும் காட்சிகள் ஆகும். அத்தகைய காட்சியினை பொதுவாக மென்மையான உள்ளம் கொண்ட பெண்கள் காண்பது வியப்புக்கு உரியது. மேலும் அந்த பெண்மணியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த நடனத்தை காண்பது பெரும் வியப்பினை ஏற்படுத்தும் அல்லவா. இறைவனின் நடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையும் அன்னைக்கு எந்த சூழ்நிலையும் தடையாக இருக்க முடியாது அல்லவா. இருப்பினும் அச்சமூட்டும் சூழ்நிலையில் நடனம் ஆடுவது ஏன் என்ற கேள்வியை சம்பந்தர் இங்கே பெருமானை நோக்கி கேட்கின்றார். மகிழ்ந்த செயலை இறைவன் பால் ஏற்றி, நடனமாடும் இறைவன் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம். இறைவனின் மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன். ஒன்று தனது நடனத்தை பிராட்டி கண்டு மகிழ்வது; இரண்டாவது அழிந்து பட்ட உயிர்களில் பலவும் மலங்களுடன் பிணைந்து இருப்பதை கருத்தில் கொண்டு, அந்த உயிர்கள் தங்களது மலங்களை கழித்துக் கொள்ள மீண்டும் வாய்ப்பு அளிக்க திருவுள்ளம் கொள்வது.

ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து

கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே

மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரியாடல் என்னே

தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே

ஈங்கோய்மலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.70.4) திருஞானசம்பந்தர், எரி ஆடும் இறைவர் என்று குறிப்பிடுகின்றார். நெறி=ஒழுங்கான வடிவம்; நிலவும்=நிலவுதல், தங்குதல்; இந்த பதிகத்தின் பல பாடல்களில் பிரளய காலத்தில் பெருமான் நடனம் ஆடுவது குறிப்பிடப்படுகின்றது. முதல், இரண்டாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களில் பெருமான் நெருப்பினில் நின்று நடனம் ஆடுவது குறிப்பிடப்படுகின்றது. படுகாடு=சுடுகாடு; குறை வெண்பிறை=தக்கன் இட்ட சாபத்தினால் தனது கலைகள் குறைந்து அழியும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன்; வேதங்கள் ஓதப்படும் இசை வடிவமாக இருப்பவரும், ஒழுங்கான வடிவுடன் அமைந்ததும் மென்மை வாய்ந்ததும் ஆகிய கூந்தலை உடைய மலையான் மகளாகிய பார்வதி தேவியுடன் கூடிய பெருமான், குறைந்து தேய்ந்து அழியும் நிலையில் தன்னைச் சரணடைந்த பிறைச் சந்திரன் அழியாமல் வளரும் வண்ணம் தனது சடையினில் ஏற்றுக் கொண்டவரும், பிறைச் சந்திரனுடன் கங்கை நதியும் பொருந்தியுள்ள குளிர்ந்த புன்சடை தாழும் வண்ணம், பறை குழல் ஆகிய வாத்தியங்கள் அதிர்ந்து முழங்க, தனது திருவடிகளில் அணிந்துள்ள கழல்கள் ஆரவாரம் செய்ய, பிரளய காலத்தில் சுடுகாடாக விளங்கும் உலகினில் நடனம் ஆடுகின்றார். இத்தகைய இறைவன், சிறகுகள் உடைய வண்டுகள் ரீங்காரம் இட்டு ஒலி செய்யும் பூஞ்சோலைகள் நிறைந்த மலைச் சாரலை உடைய ஈங்கோய்மலையில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரையாகும். இந்த் பதிகத்தின் ஐந்தாவது பாடலில் எரியாடும் எந்தம் அடிகள் என்று குறிப்பிடுகின்றார்.

மறையின் இசையார் நெறி மென்கூந்தல் மலையான் மகளோடும்

குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர் புன்சடை தாழப்

பறையும் குழலும் கழலும் ஆர்ப்பப் படுகாட்டு எரி ஆடும்

இறைவர் சிறை வண்டு அறை பூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே

புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.74.3) கரி காட்டெரி ஆடி என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பந்தம்=பிரியாத பிணைப்பு; பந்தம் என்ற சொல்லுக்கு உதரபந்தம் அணிகலன் என்று பொருள் கொண்டு அந்த ஆபரணத்தை அணிந்த பூத கணங்கள் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். ஆர்க்க=ஒலிக்க கந்தம்=நறுமணம் அந்தண்=அழகியதும் குளிர்ந்ததும்; அமர்வு எய்தி=விரும்பி அமர்ந்து; பந்தம் உடைய என்ற சொல்லுக்கு தீப்பந்தத்தை ஏந்திய பூதங்கள் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். இரவில் நடனம் ஆடுவதால், வெளிச்சம் வேண்டி தீப்பந்தங்கள் பிடிக்கப் படுகின்றன

பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்கக்

கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி

அந்தண் கடல் சூழ்ந்த அழகார் புறவம் பதியா அமர்வு எய்தி

எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

இடைச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.78.1) திருஞானசம்பந்தர் பெருமானை கனலெரியாடுவர் என்று குறிப்பிடுகின்றார். வணம்=வண்ணம் என்ற சொல்லின் இடைக்குறை. இங்கே இயல்பு என்ற பொருளில் வந்தது. இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் பல்வேறு பண்புகளும் வீரச் செயல்களும் குறிப்பிடப்படுகின்றன. அவை எண்ணற்றவை என்பதால், இந்த பதிகத்த்தின் முதல் பத்து பாடல்களையும் இவர் வணம் என்னே என்று முடிக்கின்றார். இந்த தலத்தில் உள்ள இலிங்கம் மரகதப் பச்சை வண்ணத்தில் உள்ளது. கற்பூர ஆரத்தி காட்டப்படும் சமயத்தில், கறபூர ஒளி இலிங்கத்தின் திருவுருவத்தில் பிரதிபலிப்பதை காணலாம். மேலும் பெருமானை தேன் கொண்டு அபிஷேகம் செய்யும் போது மரகதப் பச்சை வண்ணம் மிகவும் தெளிவாகத் தெரிகின்றது. வரிவளர் அவிரொளி=தனது உடலில் வரிகளுடன் கூடியதாக ஒளியுடன் திகழும் பாம்பு; அரை=இடுப்பு; தேய்ந்து கொண்டிருந்த பிறைச் சந்திரனின் அழிவு தடுக்கப்பட்டு வளரத் தொடங்கியமையால் வளர்மதி என்று குறிப்பிடுகின்றார். கரிவளர் தருகழல்=யானையின் உருவம் பொறிக்கப்பட்ட வீரக்கழல்; கால்வலன் என்று வலது காலினை குறிப்பிட்டு, இடது காலில் சிலம்பினை அணிந்தவராக, மாதொரு பாகனாக பெருமான் இருப்பதை குறிப்பிடுகின்றார் போலும். திண்ணென வீழும் என்று அருகில் உள்ள அருவியில் ஆரவாரத்துடன் நீர் பொழியும் தன்மை உணர்த்தப்படுகின்றது. பாடலின் கடை இரண்டு அடிகளில் தலத்தின் இயற்கை வளம் குறிப்பிடப் படுகின்றது.

வரிவளர் அவிரொளி அரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்

கரிவளர் தரு கழல் கால் வலனேந்திக் கனலெரி ஆடுவர் காடரங்காக

விரிவளர் தரு பொழில் இளமயிலால வெண்ணிறத்து அருவிகள் திண்ணென வீழும்

எரிவளர் இனமணி புனமணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

நல்லம் (தற்போதைய பெயர் கோனேரிராஜபுரம்) என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.85.3) திருஞானசம்பந்தர் பெருமானை, முதுகாட்டு எரியாடி என்று அழைக்கின்றார். தீராவினை=இறைவனின் திருவருளால் அன்றி தீர்க்க முடியாத வினை; நந்துதல் என்றால் குறைத்தல் என்று பொருள்; உயிர்களின் வினைகளை இறைவன் குறைப்பதால், சிவபெருமானை நந்தி என்று அழைக்கின்றார். திருமூலர் மிகவும் அதிகமான பாடல்களில் பெருமானை நந்தி என்று அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது. முதுகாடு=சுடுகாடு; ஊழித் தொடக்கத்தினில் தனது கையினில் தீப்பிழம்பை ஏந்திய வண்ணம் நடனமாடும் பெருமான், ஊழி முடிவினில் பிரளயத் தீயினில் நின்று ஆடுகின்றார் என்பதை இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

அந்தி மதியோடும் அரவச் சடை தாழ

முந்தி அனலேந்தி முதுகாட்டெரி ஆடி

சிந்தித்து எழவல்லார் தீரா வினை தீர்க்கும்

நந்தி நமையாள்வான் நல்ல நகரானே

திருச்சிராபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.98.4) திருஞானசம்பந்தர் பெருமானை கனலெரி ஆடும் கடவுள் என்று குறிப்பிடடுகின்றார். தும்பி=பெண் வண்டு; கறை=ஆலகால விடத்தினை தேக்கியதால், பெருமானின் கழுத்தில் ஏற்பட்ட கருமை நிறம் கொண்ட கறை; சிறை=இறக்கை; மல்கு=நிறைந்த, பொருந்திய; இவ்வாறு ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும் சூழ்ந்து பாடும் நிலை, சிராப்பள்ளி நகரில் உள்ள ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக இந்த தலத்து இறைவனை வழிபடுவதற்கு செல்லும் தன்மையை உணர்த்துகின்றது என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. துறை=வழிகள்; கனல் என்று ஊழித்தீ இங்கே குறிப்படப்படுகின்றது.

துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்திடை வைகிச்

சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்

கறை மல்கு கண்டன் கனல் எரியாடும் கடவுள் எம்

பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.133.3) எரியாடல் பேணிய பிஞ்ஞகன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நெருப்பின் இடையே நின்று நடனம் ஆடுவதை விரும்பிய பெருமான் என்று கூறுகின்றார்.

வண்ண வெண்பொடிப் பூசு மார்பின் வரியரவம் புனைந்து

பெண்ணமர்ந்து எரியாடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்

விண்ணமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்

திண்ணமாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே

பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.135.5) திருஞானசம்பந்தர் பெருமானை, இரவில் நின்று எரி ஆடுவர் என்று குறிப்பிடுகின்றார். விரவி=கலந்து; திருமேனி முழுவதும் மறையும் வண்ணம் பூசுதல்; மெய்=உண்மை; பரவுதல்=புகழ்ந்து பேசுதல்; வேதம் பரவுதல்=வேதங்களால் புகழ்ந்து பேசப்படுபவர்; நீறு மெய் என்ற சொற்களை மெய் நீறு என்று மாற்றி பொருள் கொள்ளவேண்டும். மெய்ப்பொருளாகிய நீறு, என்றும் அழிவில்லாத நீறு என்பதே பொருள்; உண்மையில் உள்ளது நீறு சத்தியமாவது நீறு என்ற திருநீற்றுப் பதிகத்தின் சொற்றொடர்கள் நினைவுக்கு வருகின்றன. பெருமான் தீயினில் நின்று ஆடுவது, ஊழித்தீ என்பதால் இங்கே இரவு என்பது பிரளய காலத்து இரவினையே குறிக்கும். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே என்ற திருவாசகத் தொடர் நினைவுக்கு வருகின்றது.

விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல்

இரவில் நின்று எரி ஆடுவர்

பரவினார் அவர் வேதம் பராய்த்துறை

அரவம் ஆர்த்த அடிகளே

திருவழுந்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.20.3) பெருமானை கனலாடலினாய் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கழித்தல்=தவிர்த்தல்; பலராலும் வெறுக்கப்பட்டு தவிர்க்கப்படும் சுடுகாடு, இங்கே கழிகாடு என்று சொல்லப் பட்டுள்ளது. கனலில் நின்று ஆடும் பெருமான், மற்றவர்களால் பழிக்கப்படாத வண்ணம் இருக்கும் தன்மை உணர்த்தப்படுகின்றது.; அழிவில்லாத புகழினை உடைய இந்த தலத்து மறையோர்கள் பெருமானின் பழியற்ற தனமையை புகழ்ந்து பாடி அவரை வழிபடும் தன்மையை இந்த பாடல் உணர்த்துகின்றது.

கழிகாடலனே கனல் ஆடலினாய்

பழி பாடிலனே அவையே பயிலும்

அழிபாடு இலராய் அழுந்தை மறையோர்

வழிபாடு செய் மாமடம் மன்னினையே

கழிப்பாலைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.21.1) திருஞானசம்பந்தர் பெருமானை, அழகார் கனல் ஆடினார் என்று அழைக்கின்றார். புனல்=கங்கை நதி; அரணம்= கோட்டை; வார் கழல்=கழல் அணிந்த நீண்ட திருவடிகள்; உள்குதல்=நினைத்து தியானம் செய்தல்; ஆடிய=மூழ்கிய, நனைந்த என்று பொருள். அரணம் அனலாக விழித்தவனே என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் இறைவன் வீழ்த்தினான் என்று கந்த புராணம் குறிப்பிட்டாலும் விழித்தே திரிபுரத்தை அழித்தான் என்றும் சிரித்ததே திரிபுரத்தை அழித்தான் என்று பல புராணங்கள் குறிப்பிடுகின்றன. கங்கை நதியின் நீரில் நனையும் வண்ணம் சடையினில் கங்கை நதியை அடக்கியவனே, முப்புரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளையும் நெருப்பு பற்றி எரியும் வண்ணம் விழித்து அழித்தவனே, நெருப்பினில் நின்ற வண்ணம் அழகாக நடனம் ஆடுபவனே, நீ கழிப்பாலை தலத்தில் உறைகின்றாய்; கழல் அணிந்த உனது நீண்ட திருவடிகளை நாம் கைதொழுது தியானம் செய்கின்றோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புனலாடிய புன்சடையாய் அரணம்

அனலாக விழித்தவனே அழகார்

கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய்

உன வார்கழல் கை தொழுது உள்குதுமே

நெல்வாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.26.5) திருஞானசம்பந்தர் பெருமானை கனலாட்டு உகந்தவர் என்று கூறுகின்றார். விருத்தனர்=முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள்; நிருத்தம்=நடனம்; ஒருத்தனார்=ஒப்பற்ற தனித் தன்மை உடையவர்; தலைவன் என்ற பொருளை உணர்த்தும் கர்த்தா என்ற வடமொழிச் சொல் கருத்தன் என்று மிகவும் அழகாக தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. கருத்தன் என்பதற்கு கருத்து என்று பொருள் கொண்டு, அனைவராலும் மனதாரத் தொழப்படும் பெருமான் என்று பொருள் கொள்வது சிறப்பு. அடியார்களின் கருத்தாக இருப்பவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

விருத்தனாகி வெண்ணீறு பூசிய

கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர்

நிருத்தன் ஆர நெல்வாயில் மேவிய

ஒருத்தனார் எமது உச்சியாரே

புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகதின் பாடலில் (2.43.4) திருஞானசம்பந்தர் பெருமானை எரியாடி என்று அழைக்கின்றார். காயம்=உடல்; மா=பெரிய; மாகாயம் என்ற சொல் இறைவனது திருமேனியை குறிக்கும். மான்=யானை; ஏகாயம்=மேலாடை, அங்கவஸ்திரம்; ஈரப்பசை உள்ள யானையின் தோலை உடல் மீது போர்த்துக் கொள்வது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனைவரும் அதனை தவிர்ப்பார்கள்; ஆனால் பெருமானோ அத்தகைய அச்சம் ஏதும் கொள்ளாமல், மிகுந்த மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார் என்பதை உணர்த்தும் வகையில், இட்டு உகந்த எரியாடி என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். எரியாடி=ஊழித் தீயினில் நின்று ஆடும் பெருமான்; புட்பக விமானத்தில் பறந்து கொண்டு சீதையை கவர்ந்து சென்ற இராவணனின் பயணம் தடைப்படும் வண்ணம் அரக்கனைத் தாக்கி ஜடாயு போர் புரிந்த செய்கை இங்கே கூறப்படுகின்றது. மாகாயம் என்ற சொல்லுக்கு பருத்த உடலினை உடைய யானை என்றும் பொருள் சொல்லப் படுகின்றது. அழித்தான்=வலிமையை குறைத்தவன்;

மாகாயம் பெரியது ஒரு மான் உரிதோல் உடையாடை

ஏகாயம் இட்டு உகந்த எரியாடி உறையும் இடம்

ஆகாயம் தேரோடு இராவணனை அமரின் கண்

போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

கண்ணார் நுதலான் கனலாடு இடமாக உள்ள தலம் என்று நாலூர் மயானம் தலத்தினை திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடலை (2.46.6) நாம் இங்கே காண்பது பொருத்தம். நன்னெறி என்பது சரியை, கிரியை, யோகம் எனப்படும் தவநெறிகளைச் சார்ந்து, அத்தகைய தவத்தால் விளையும் ஞானத்தை குறிப்பிடுகின்றது. நண்ணார்=சிவநெறியை அடையாமல் பகைவர்களாக திரிபுரத்து அரக்கர்கள்; சிவநெறி என்பதை அன்பினை அடிப்படையாகக் கொண்டது. மற்ற உயிர்களையும் அன்புடன் அணுகாமல், அனைவருடன் பகைமை பாராட்டி, அவர்களை அழிக்கும் நோக்கத்துடன் பறக்கும் கோட்டைகளில் பல இடங்களுக்கு சென்ற திரிபுரத்து அரக்கர்களை, சிவநெறியை அணுகாதவர்கள் என்று இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கனலாடு இடமாக என்ற தொடரை, ஆடு இடம் கனலாக என்று மாற்றி அமைத்து பொருள் காண்பது சிறப்பாக உள்ளது. பெருமான் ஊழித்தீயின் இடையே நின்று நடமாடுவது இதனால் உணர்த்தப் படுகின்றது. தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடகளிலும் அப்பர் பிரான், பெருமான் ஊழித்தீயின் நடுவே நின்ற வண்ணம் பெருமான் நடனம் ஆடுவதை குறிப்பிடுகின்றார்.

கண்ணார் நுதலான் கனலாடு இடமாகப்

பண்ணார் மறைபாடி ஆடும் பரஞ்சோதி

நண்ணார் புரம் எய்தான் நாலூர் மயானத்தை

நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நன்னெறியே

பெரும்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.67.5) பெருமானை அனலாட காடு உடையார் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.பிரளய காலம் முடிந்து உலகின் அனைத்துப் பொருட்களும் அனைத்து உடல்களும் எரிந்து சாம்பலாக மாறும் நிலையில், எங்கும் இருள் சூழ்ந்து காணப்படும் நேரத்தில், நெருப்புப் பிழம்பு ஏந்தியுள்ள கரம் வீசி, ஊழித்தீயின் நடுவில் நின்று பெருமான் ஆடும் நடனமே, இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. அனலாட என்று முதல் அடியிலும், எரி வீசும் கை உடையார் என்று இரண்டாவது அடியிலும் குறிப்பிடப்படுவதை நாம் உணரலாம். தனது உடலெங்கும் திருநீறு அணிந்து கொள்ளும் வழக்கம் உடைய பெருமான், தனது காதுகளிலும் திருநீறு அணிந்து கொள்கின்றார் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.

தோடுடையார் குழைக் காதில் சுடுபொடியார் அனலாடக்

காடு உடையார் எரி வீசும் கையுடையார் கடல் சூழ்ந்த

நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த

பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே

அகத்தியான்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.76.1) திருஞானசம்பந்தர், எரி ஆடிய எம்பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வாடிய=வற்றிய, தசை வற்றிய; மயங்கிருள்= அடர்ந்த இருள்; நிவந்த=உயர்ந்த;

வாடிய வெண்டலை மாலை சூடி மயங்கிருள்

நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி

ஆடிய எம் பெருமான் அகத்தியான் பள்ளியைப்

பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே

அறையணிநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.77.1) திருஞானசம்பந்தர் பெருமானை அழல் ஆடினார் என்று அழைக்கின்றார். வீடிலார்=அழிவில்லாத நித்தியர்; பீடு= பெருமை; பேதைமை=அறியாமை; தீதிலா வீடு=முற்றும் துறந்து பற்றற்ற நிலை; தங்களது இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து பெருமானைத் தொழும் அடியார்கள்,

பீடினால் பெரியோர்களும் பேதைமை கெடத் தீதிலா

வீடினால் உயந்தார்களும் வீடிலார் இள வெண்மதி

சூடினார் மறை பாடினார் சுடலை நீறணிந்தார் அழல்

ஆடினார் அறையணிநல்லூர் அங்கையால் தொழுவார்களே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.79.11) திருஞானசம்பந்தர், பெருமானை எல்லியம்போது எரியாடும் எம்பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பல்லிதழ் மாதவி=பல இதழ்களை உடைய மாதவி மலர்; எல்லி=இரவு வேளை; எங்கும் இருள் சூழ்ந்த பிரளய காலம் என்பதால் எல்லியம்போது என்று கூறுகின்றார். ஓதம்=கடல்;

பல்லிதழ் மாதவி அல்லி வண்டியாழ் செயும் காழியூரன்

நல்லவே நல்லவே சொல்லிய ஞான்சம்பந்தன் ஆரூர்

எல்லியம் போது எரியாடும் எம் ஈசனை ஏத்து பாடல்

சொல்லவே வல்லவர் தீதிலார் ஓதநீர் வையகத்தே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.6) திருஞானசம்பந்தர் பெருமானை அனலாடும் எந்தை பெருமான் என்று அழைக்கின்றார். ஊகம்=கருங்குரங்கு; மந்தி=பெண் குரங்கு; உகளும்=பாயும், குதிக்கும்; நாகம் என்ற சொல் இங்கே நாகத்தின் கழுத்தில் இருக்கும் இரத்தினத்தை குறிக்கின்றது. ஆரம்=முத்து; மேகத்துடன் உறவாடி வானில் உலவும் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் மலராக அணிந்து கொண்டு, தனது பொன்மேனியில் மலையரசன் இமவானின் மகளாகிய பார்வதி தேவியை ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டு, நெருப்புப் பிழம்பினைத் தனது உள்ளங் கையினில் ஏந்தி நடமாடும் எங்களது பெருமான் அமர்ந்துள்ள நகரம் தான் நனிபள்ளி. பெண் குரங்குகளும் கருங்குரங்குகளும் பாய்ந்து விளையாடும் மலையில் கிடைக்கும் அகில், சந்தனம், பொன், நாக இரத்தினங்கள், முத்து ஆகியவற்றை புரட்டி வாரிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காவிரி நதி பாயும் தலத்தில் இறைவன் உறைகின்றான். அத்தகைய தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக என்று இந்த பாடலில் தன்னுடன் வந்த தொண்டர்களுக்கு கூறுகின்றார். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (2.84.5) பெருமானை கனலாடும் எந்தை என்று குறிப்பிடுகின்றார்.

மேகமொடு ஆடு திங்கள் மலரா அணிந்து மலையான் மடந்தை மணி பொன்

ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர் தான்

ஊகமொடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி

நாகமொடு ஆரம் வாரும் புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள்

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.115.11) திருஞானசம்பந்தர் பெருமானை அந்தமில்லா அனல் ஆடலான் என்று குறிப்பிடுகின்றார். அனைத்துப் பொருட்களையும் எரித்து அழித்த அனல் என்பதால் அந்தமில்லா அனல் என்று கூறுகின்றார் போலும். அந்தமில்லா என்ற சொல்லினை பெருமானுக்கு உரித்தாக்கி அழிவற்ற பெருமான் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. இந்த பாடலில் சிறந்த அறிவினை உடைய பெரியோர்கள் புகழ்ந்து ஏத்தும் புகலூர் என்று குறிப்பிடுகின்றார். பெருமானுடன் இணைந்த விடை, நித்தியத்துவம் பெற்ற தன்மையால், இடபமும் இங்கே குறிப்பிடப்படுகின்றது. யுக முடிவினில் அழிந்த உடல்களின் சாம்பலைப் பூசிய வண்ணம் பெருமான் இருக்கும் கோலமும் இங்கே உணர்த்தப் படுகின்றாது.

புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர் தனுள்

வெந்த சாம்பற் பொடி பூசவல்ல விடையூர்தியை

அந்தமில்லா அனல் ஆடலானை அணி ஞானசம்

பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆடக் கெடும் பாவமே

இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.117.11) திருஞான சம்பந்தர், பெருமானை அந்தமில்லா அனல் ஆடுவான் என்று குறிப்பிடுகின்றார். தேவாரப் பாடல்கள் அனைத்தும் தீந்தமிழ் பாடல்கள் என்பதை உணர்த்தும் வண்ணம், தமிழ் பாடல்கள் என்று குறிப்பிடுகின்றார். மந்தம்=தென்றல்; தென்றல் உலாவும் சோலைகள் நிறைந்த இடம்; இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் பெருமான், கானத்து எரியாடுவான் என்று குறிப்பிடுகின்றார்.

எந்தை எம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை தனுள்

மந்தமாய பொழில் சூழ்ந்து அழகாரும் மாகாளத்தில்

அந்தமில்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்

பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே

பண்டைய நாளில் மூக்கீச்சரம் என்று அழைக்கப்பட்டதும் இந்நாளில் உறையூர் என்று திருச்சி நகரத்தின் ஒரு பகுதியாக இருப்பதும் ஆகிய தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.5) பெருமானை அழல் ஆடுவார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அழல்=நெருப்பு; நெருப்பு போன்று கொடிய விடம்; அரை=இடுப்பு; வீக்கி=இறுகக்கட்டி; மன் நீடு=நிலைத்த நீண்ட புகழினை உடைய; பூழியன்=பாண்டிய மன்னன்; அடல்=வலிமை; கோழிமன்=கோழியூர் என்று அழைக்கப்படும் உறையூரினைத் தனது தலநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கோச்செங்கட் சோழன்; வட என்ற சொல் ஆலமரத்தினை குறிப்பதால், வடமன் நீடு என்ற தொடர் ஆலமரம் போன்று தழைத்து நீண்டு நிலையான புகழ் உடைய என்ற பொருள் தருகின்றது. ஆரவ்வழல்=ஆர மற்றும் அழல் என்ற இரண்டு சொற்களின் இணைப்பு. எந்த பொருளும் பெருமானைச் சார்ந்தவுடன் தனது கொடிய குணங்களை விட்டொழித்து நல்லவையாக மாறி விடுகின்றன என்பதை உணர்த்தவே பாம்பு இறைவனின் உடலில் பல இடங்களில் அணிந்து கொள்ளப் படுகின்றது. நள்ளிருளில் (ஊழிக்காலத்தின் முடிவில்) நடனம் ஆடுவது, பல பிறவிகள் எடுத்து இழைத்து வருந்திய உயிர்கள் இளைப்பாறும் வண்ணம் தன்னிடம் ஒடுக்கிய மகிழ்ச்சியை இறைவன் வெளிப்படுத்தும் தன்மை. அவனது நடனமே, ஐந்து தொழில்களையும் தான் செய்வதை அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு தானே. இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் பெருமானை அழல் ஆடுவர் என்று குறிப்பிடுகின்றார்.

விடமுன் ஆரவ்வழல் வாயதோர் பாம்பு அரை வீக்கியே

நடமுன் ஆரவ்வழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள்

வடமன் நீடு புகழ்ப் பூழியன் தென்னவன் கோழி மன்

அடல் மன் மூக்கீீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் அச்சமே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.01.08) பெருமானை, இடுகாட்டெரி ஆடல் அமர்ந்தவன் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். வேயின்=மூங்கில் போல்; ஆர்=பொருந்திய; பணைத்தோளி=திரண்ட தோள்களை உடைய உமை அன்னை; மூங்கில் போன்று பருத்து திரண்டு அழகிய தோள்களை உடைய காளி தேவியுடன் நடனம் ஆடுவதை விரும்பியவனே, ஏனைய தேவர்களிடமிருந்து மாறுபட்டவனே, உயிர்களுக்கு அமுதமாக பல நன்மைகளை செய்பவனே, இடுகாட்டின் தீயினில் உகந்து நடனம் ஆடுபவனே, தீக்கடவுளை கூர்மையான முனையாகவும் திருமாலினைத் தண்டாகவும் காற்றினை சிறகுகளாகவும் கொண்ட அம்பினை எய்தி பறக்கும் மூன்று கோட்டைகளையும் தீ மூட்டி அழித்தவனே, அழகுடன் சிறந்து விளங்கும் சிற்றம்பலத்தினை திருநடனம் ஆடும் அரங்காகக் கொண்டவனே, உனது திருப்பாதங்களைத் தொழும் அடியார்கள் மேலான உலகமாகிய சிவலோகத்தினை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வேயினார் பணைத் தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது

ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே

தீயினார் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம்

மேயினாய் கழலே தொழுது எய்துதும் மேல் உலகே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.7.6) திருஞானசம்பந்தர் பெருமானை இரவிடை ஒள்ளெரி ஆடினான் என்று குறிப்பிடுகின்றார். செரு=சண்டை, போர்; இரவு என்று மகாசங்கார காலம் குறிப்பிடப்படுகின்றது. மகாசங்கார காலத்தில் உலகமெல்லாம் நெருப்பு மயமாக இருந்த தருணத்தில் அந்த நெருப்பின் நடுவில் நின்று நடனம் ஆடியவன் பெருமான் என்று புராணங்கள் ;உணர்த்தும் செய்தி இங்கே கூறப்படுகின்றது. பொரு விடை=போர்க்குணம் கொண்ட இடபம்; அரவிடை=பாம்பு போன்று மெலிந்த இடை; இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில், சாம்பலோடும் தழல் ஆடினான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

இரவிடை ஒள்ளெரி ஆடினானும் இமையோர் தொழச்

செருவிடை முப்புரம் தீயெரித்த சிவலோகனும்

பொருவிடை ஒன்று உகந்து ஏறினானும் புகலிந்நகர்

அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே

கருக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.21.1) திருஞானசம்பந்தர் பெருமானை, அனலெரி ஆடும் எம்மடிகள் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், தான் விழித்திருக்கும் பொழுதும் போதும் கனவு காணும் பொழுதும், பெருமான் தனது உள்ளத்துள்ளே ஒளியாக நிற்கின்றார் என்று கூறுகின்றார். எப்போதும் இறைவனின் சிந்தனையில் தங்களது காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த அருளாளர்களின் கனவிலும் இறைவன் தோன்றுவது இயற்கையே; பல சமயங்களில் இறைவன், அந்த அடியார்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்களின் கனவினில் தோன்றி உணர்த்துவதை, நாம் பல அருளாளர்களின் வாழ்வினில் நடந்த நிகழ்ச்சிகள் மூலம் அறிகின்றோம். திருவாலங்காடு சென்ற திருஞான சம்பந்தர், காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வழிபட்ட இறைவன் உறைகின்ற தலத்தின் புனிதத்தன்மை கருதி அந்த தலத்தினைத் தனது காலால் மிதிக்க அஞ்சி, ஊருக்கு வெளியே ஓரிடத்தில் தங்கினார். அன்றிரவு திருஞானசம்பந்தரின் கனவில் தோன்றிய ஆலங்காட்டு அடிகள், எம்மை பாடுவதற்கு மறந்தனையோ என்று வினவ, நடு இரவினில், தனது உறக்கம் கலைந்து எழுந்த திருஞானசம்பந்தர், துஞ்ச வருவாரும் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். திருப்பூவணம் சென்ற மூவரும், வைகை மணல் அனைத்தும் சிவலிங்கமாகத் தோன்றியதால், அடுத்த கரையிலிருந்தே பதிகம் பாடி இறைவனை வழிபட்டதாகவும், இறைவனும் அவர்கள் மூவருக்கும் காட்சி அளித்ததாக சொல்லப் படுகின்றது. திருஞானசம்பந்தர் திருக்காளத்தி தலம் சென்ற போது, ஆங்கிருந்த வண்ணமே, இறைவனின் அருளினால் வடநாட்டுத் தலங்களை காண முடிந்தது என்பதையும் இராமேச்சரம் தலத்தினில் இருந்த வண்ணமே இலங்கைத் தலங்களைக் காண முடிந்தது என்பதையும் சுந்தரரும் அவ்வாறே கேதீச்சரம் தலத்துக் காட்சியைக் கண்டார் என்பதையும் அப்பர் பிரான் திருவையாற்றுத் திருக்கோயிலில் கயிலைக் காட்சியைக் கண்டார் என்பதையும் நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம்.

நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி

நினைவிலும் எனக்கு வந்து எய்து நின்மலன்

கனைகடல் வையகம் தொழு கருக்குடி

அனலெரி ஆடும் எம் அடிகள் காண்மினே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.45.4) திருஞானசம்பந்தர் பெருமானை, எல்லி வந்திடு காட்டெரியாடுவான் என்று குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர் திருவாரூர் வருவதை அறிந்த அந்த நகரத்து அடியார்கள், நகரத்து எல்லையில் கூடி திருஞானசம்பந்தரை பணிந்து வரவேற்கின்றனர். அப்போது அவர்களை தானும் பணிந்த திருஞானசம்பந்தர், அவர்களை நோக்கி, தன்னை அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளித்து ஆரூர்ப்பெருமான் காப்பாற்றுவாரா என்று கேட்கின்றார். ஆரூர்ப் பெருமானை தினமும் தவறாது வழிபடும் அடியார்கள் என்பதால், அவரது திருக்குறிப்பினை அறியும் ஆற்றல் அந்த அடியார்களுக்கு இருப்பதை இந்த பதிகத்தின் பாடல்கள் தோறும் உணர்த்துகின்றார். பல்லில் ஓடு=பற்கள் அற்ற பிரமகபாலம்; எல்லி=இரவு, இங்கே பிரளய காலத்து இருள் என்று பொருள் கொள்ளவேண்டும். அல்லல் என்று இங்கே பிறவிப்பிணி உணர்த்தப்படுகின்றது. திருவாரூர் முக்தித் தலங்களில் ஒன்று என்பதை நாம் அறிவோம்.

பல்லில் ஓடு கையேந்தி பலி திரிந்து

எல்லி வந்து இடுகாட்டெரி யாடுவான்

செல்வம் மல்கிய தென் திருவாரூரான்

அல்லல் தீர்த்தெனை அஞ்சல் எனும் கொலோ

திருவக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.60.4) திருஞானசம்பந்தர் கனல் மேவிய ஆடலினான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். கனல்=பிரளய காலத்து நெருப்பு; மேவிய=பொருந்தி ஆடும்; விரி கோவணம்=விரித்து ஓதப்படும் வேதங்கள் பெருமானுக்கு கோவணமாக இருக்கும் தன்மை; மையணி=கருமை நிறம் படர்ந்த; ஆலகால விடத்தைத் தேக்கியதால் படர்ந்த கருமை நிறத்துக் கறை; மெய்யணி=உடலுக்கு அழகு சேர்க்கும் விதமாக அணிந்த திருநீறு;

நெய்யணி சூலமொடு நிறை வெண்மழுவும் அரவும்

கையணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான்

மெய்யணி வெண்பொடியான் விரிகோவண் ஆடையின் மேல்

மையணி மாமிடற்றான் உறையும் இடம் வக்கரையே

வெண்டுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.61.1) திருஞானசம்பந்தர் பெருமானை அனலாடிய ஆரழகன் என்று குறிப்பிடுகின்றார். பரமாபரன்=மேலான பொருட்களினும் மேலானவன்; பயிலும்=தொடர்ந்து நிலையாக பொருந்திய; போது=மலர்கள்; அனலில் நின்ற வண்ணம் பெருமான் நடனமாடிய போதும் அழகனாக காணப்படுகின்றான் என்று இங்கே கூறுகின்றார். வேதியன்=வேதங்களை அருளியவன்;

ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்

பாதியொர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்

போதியலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த

வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.70.7) திருஞானசம்பந்தர் பெருமானை எரியாடும் எமதீசன் என்று அழைக்கின்றார். அவ்வதிசை=அந்தந்த திசையில் உள்ள அடியார்கள், உலகத்தில் உள்ள அனைத்து அடியார்கள் என்ரு பொருள் கொள்வது பொருத்தம்; உளராக அருள்=நன்றாக வாழும் பொருட்டு அருள் புரியும் இறைவன்; எவ்வம் அற=வினைகள் நீங்க; இரங்கி=இரங்கி அருள் புரியும்; அடியார்கள் பால் கருணை கொள்ளும் இறைவன் நெருப்பினில் நின்று ஆடுவதாக குறிப்பிடுகின்றார். பிரளய காலத்தில் ஊழித்தீயினில் நின்று நடனம் ஆடும் இறைவன் மிகுந்த மகிழ்ச்சியால் நடனமாடுவதாக பல பாடல்கள் எடுத்து உரைக்கின்றன. இறைவன் இவ்வாறு மகிழ்ந்து ஆடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. எண்ணற்ற பிறவிகள் எடுத்து அல்லலுற்று வருந்திய உயிர்களுக்கு இளைப்பாறும் வாய்ப்பினை அளித்தமை முதல் காரணம். பிரளய காலத்தில் தனது வயிற்றினில் ஒடுங்கும் உயிர்களில் பெரும்பான்மையான உயிர்கள் வினைகளுடன் பிணைந்திருப்பதை உணரும் இறைவன், அந்த உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதற்காக உலகத்தை தோற்றுவிக்க திருவுள்ளம் கொள்வது இரண்டாவது காரணம். இறைவன் இவ்வாறு உயிர்களுக்கு தேவையான சமயத்தில் இளைப்பாற்றலை அளித்தும் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பினை அளித்தும் அருள் புரிகின்ற தன்மையை, இரங்கி என்ற சொல் மூலம் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் போலும். கவ்வை=ஆரவாரம்; மவ்வல்= மல்லிகை; மயங்கி=கலந்து; நிரந்து=பரவி;

அவ்வதிசையாரும் அடியாரும் உளராக அருள் செய்தவர்கள் மேல்

எவ்வமற வைகலும் இரங்கி எரியாடும் எமதீசன் இடமாம்

கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ

மவ்வலொடு மாதவி மயங்கி மணநாறு மயிலாடுதுறையே

தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.74.4) திருஞானசம்பந்தர், பெருமானை எரியாடி என்று குறிப்பிடுகின்றார். மாசில் மனநேசர்=களங்கம் அற்ற மனம் உடைய அடியார்கள்; சூல தரன்=சூலத்தை ஏந்தியவன், சூலத்தை தரித்தவன்; ஆசை=அன்பு, பக்தி என்ற பொருளில் வந்தது; கோது குயில்=மூக்கால் மலர்களைத் தோண்டும் குயில்; குயில் வாசகம்=குயிலின் கூவல்; பூவை=நாகணவாய்ப்பறவை; தேசவொலி=வேற்று நாடுகளிலிருந்து வந்த அயலவர்கள்; இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (3.74.5) பெருமானை கனலாடல் ;புரிவோன் என்று அழைக்கின்றார்.

மாசின் மன நேசர் தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர்

ஈசன் மறையோதி எரியாடி மிகு பாசுபதன் மேவுபதி தான்

வாசமலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும்

தேசவொலி வீணையொடு கீதமது வீதி நிறை தேவூர் அதுவே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.76.6) திருஞானசம்பந்தர் பெருமானை, அனலாடும் அரன் என்று குறிப்பிடுகின்றார். வாளரவு=ஒளி பொருந்திய உடல் கொண்ட பாம்பு; துன்று=நெருங்கி அடர்ந்த; பெருமான் தனது சடையில் வைத்துள்ள கொன்றை மலர், பாம்பு பிறைச் சந்திரன் ஆகிய மற்ற பொருட்களுடன் சேர்ந்து சுழல்வதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சடையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கங்கை நீர் சுழல்வதால், அந்த நீருடன் சேர்ந்து சுழல்வதாக கற்பனை செய்கின்றார் போலும். சுவையான கற்பனை. மடங்க=மங்க: பெருமானின் ஒளிவீசும் திருமேனியின் முன்னே, அவர் தனது உடலில் பூசிக்கொண்டுள்ள திருநீற்றின் ஓளியின் முன்னே, காலைக் கதிரவனின் ஒளியும் நட்சத்திரங்களின் ஒளியும் மங்கியதாக கூறுகின்றார். மிண்டி=நெருங்கி;

மாலைமதி வாளரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழலக்

காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனலாடும் அரனூர்

சோலையின் மரங்கள் தொறும் மிண்டி இளவண்டு மது உண்டு இசை செய

வேலைஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே

துருத்தி மற்றும் வேள்விக்குடி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (3.90.2) திருஞானசம்பந்தர் பெருமானை சுடலையில் சுடரெரி ஆடுவர் என்று சொல்கின்றார். தூறு=கூட்டமாக அமைந்த சிறிய புதர்ச் செடிகள்; வீறு=பெருமை; தலத்து அம்மையின் திருநாமம், பரிமள சுகந்த நாயகி. இந்த வடமொழிப் பெயர் மிகவும் அழகாக நாறுசாந்து இளமுலை என்று தீந்தமிழ் மொழியில் கொடுக்கப் பட்டுள்ளது. புல்கு=பொருந்திய; அம்மையுடன் உடனாக பெருமான் இருப்பதாக இந்த பதிகத்தின் பல பாடல்களில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். திருமணம் நடைபெற்ற தலத்தினில் அம்மையுடன் சேர்ந்து உறைவது தானே முறை. உலகினில் உள்ள அனைத்து உடல்களும் எரிந்து அழித்து உலகமே ஒரு சுடுகாடாக காட்சி அளிக்கும் தருணத்தில், ஊழித்தீயினில் நின்று பெருமான் நடனம் ஆடுவது இங்கே உணர்த்தப்படுகின்றது.

தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கொளி சேர்

நீறு சாந்து என உகந்து அணிவர் பிறை புல்கு சடை முடியார்

நாறு சாந்து இளமுலை அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்

வீறு சேர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.6) திருஞானசம்பந்தர், பெருமானை இரவினர் பகலெரி கானிடை ஆடிய வேடர் என்று குறிப்பிடுகின்றார். படுதலை= இறந்தவர்களின் தலை; பிரம கபாலம், என்று பொருள் கொள்ளவேண்டும்; பிரளய காலத்தில் எரியும் ஊழித்தீயினை இரவினை பகலாக்கும் ஒளி என்று குறிப்பிட்டு, ஊழித் தீயின் வெம்மைத் தன்மையை உணர்த்துகின்றார்.

பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார் பால்

கரவினர் கனல் அன உருவினர் படுதலைப் ப்லி கொடேகும்

இரவினர் பகலெரி கானிடை ஆடிய வேடர் பூணும்

அரவினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே

திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.10) திருஞானசம்பந்தர் பெருமானை அழலாடி என்று அழைக்கின்றார். செற்ற=அழித்து வெற்றி கண்ட; தக்கன் முயற்சி செய்த வேள்வியை பெருமான் அழித்த செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது. யாகத்தை அழித்த செய்கையை ஏன் வெற்றியாக கொண்டாடுகின்றனர் என்பதை அறிய, தக்கன் எந்த நோக்கத்துடன் யாகம் செய்தான் என்பதை நாம் அறிய வேண்டும். தனக்கு சிவபெருமான் பால் இருந்த வெறுப்பின் காரணமாக, சிவபெருமானை புறக்கணித்து வேள்விகள் செய்ய வேண்டும் என்று பிரமனின் சபையில் ஒரு முறை தக்கன் முழங்கினான். மேலும் சிவபிரானை அழைத்து எவரேனும் வேள்வி செய்ய முற்பட்டால், அந்த வேள்வியை அழித்தும், அத்தகைய வேள்வி செய்வோருக்கு தண்டனை அளித்தும் தான் பழி தீர்த்துக் கொள்வேன் என்றும் கூறினான். ஆனால் சிவபெருமான் பால் தாங்கள் வைத்திருந்த மதிப்பு காரணமாகவும், வேத நெறிகள் சிவபெருமானை முன்னிலைப் படுத்தி வேள்விகள் செய்யவேண்டும் என்று கூறுவதாலும், எவரும் அதற்கு மாறாக, தக்கனின் ஆலோசனைப் படி வேள்வி செய்யத் தயாராக இல்லை; மேலும் தக்கனிடம் இருந்த பயம் காரணமாக சிவபெருமானுக்கு முன்னுரிமை கொடுத்து வேள்விகள் செய்யவும் எவரும் முன்வரவில்லை. இந்த சூழ்நிலையில் தான் தக்கன், தானே ஒரு முன்மாதிரியாக சிவபெருமானை புறக்கணித்து யாகம் செய்யத் துணிந்தான். தக்கன் செய்ய திட்டமிட்ட வேள்வி, முடிவடைந்தால், ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்பதால், சிவபெருமான் அந்த வேள்வியை அழித்தார். மேலும் அந்த வேள்வியை அழித்ததன் மூலம், வேதங்களில் சொல்லப் பட்டுள்ள நெறியினை நிலைநாட்டினார். இதுவே சிவபெருமான் பெற்ற வெற்றி. பரிசு=தன்மை; குண்டர்களாகிய புத்தர்களும் ஆடையேதும் இல்லாமல் கூட்டமாக திரியும் சமணர்களும் சொல்லும் சொற்களை பொருட்படுத்தாது ஒதுக்கித் தள்ளும் அடியார்கள், தாங்கள் செய்யும் சரியைத் தொழிலை, தொடர்ந்து செய்யும் வண்ணம் அவர்களை பாதுகாக்கும் இறைவன், வீரக்கழல் அணிந்தவர் ஆவார என்றும் இந்த பாடலில் அவர் குறிப்பிடுகின்றார்.;

குண்டரும் புத்தரும் கூறை இன்றிக் குழுவார் உரை நீத்துத்

தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழலாடி

வண்டமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழி வாணன் எம்மான்

பண்டொரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.107.2) திருஞானசம்பந்தர் பெருமானை எரியாடி என்று அழைக்கின்றார். மின்னேர்=மின்+நேர்=மின்னலை ஒத்த, துத்தி=புள்ளிகள்; பெண் என்று கங்கை நங்கை குறிப்பிடப் படுகின்றாள்; எரி=நெருப்பு; இதே பதிகத்தின் முதல் பாடலில் தனது அடியார்களின் வினைகளை முற்றிலும் தீர்த்து மகிழ்பவன் என்று உணர்த்தி நம்மையும் பெருமானின் வழிபாட்டினில் ஈடுபடும் வண்ணம் வழிப்படுத்தும் ஞானசம்பந்தர், இந்த பாடலில், முதல் பாடலில் குறிப்பிட்ட அடியார்களுடன் கலந்து பெருமானை தியானித்து நமது வினைகளை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். அடியார்களுடன் கலந்து என்று உணர்த்துவதன் மூலம், திருநாரையூர் செல்லவேண்டும் என்றும் எண்ணுமின் என்பதன் மூலம் மனதினால் பெருமானை தியானிக்க வேண்டும் என்றும் இறைஞ்சும் என்பதன் மூலம், பணிவாக பெருமானிடம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டு, மனம் மொழி மெய்களை, பெருமானை குறித்து செய்யப்படும் வழிபாட்டினில் ஈடுபடுத்த வேண்டும் என்று உணர்த்தும் பாடல். இந்த பாடலில் கங்கையின் முன்னே, பெருமான் பிறைச் சந்திரனையும் நாகங்களையும் கொன்றை மலரையும் தனது சடையில் வைத்துக் கொண்டதாக குறிப்பிடுகின்றார். கங்கை நதியைத் தனது சடையில் பெருமான் வைத்துக் கொண்ட நிகழ்ச்சி, திரேதா யுகத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். எனவே தான், பகீரதனின் காலத்திற்கு முன்னமே, பெருமான் தனது சடையினில் கொன்றை மலர், பிறைச் சந்திரன் மற்றும் நாகங்கள் ஆகியவற்றை தனது சடையினில் சூடிக் கொண்டவராக இருந்தார், என்பதை உணர்த்தும் வண்ணம், முன்னமே என்ற சொல் கையாளப் பட்டுள்ளது. மேலும் மிகுந்த வேகத்துடன் கங்கை நதி, பெருமானின் சடையில் இறங்கிய போதும், பெருமானின் சடையில் இருந்த பொருட்கள் ஏதும் தங்களது நிலை குலையாமல் இருந்த தன்மையும் இந்த குறிப்பு மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது.

விண்ணின் மின்னேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர்க் கொன்றை

பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி

நண்ணிய தன் அடியார்களோடும் திருநாரையூரான் என்று

எண்ணுமின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.115.7) திருஞானசம்பந்தர், பெருமானை அனலாடிய மெய்யன் என்று கூறுகின்றார். குட்டியே=கையால் குட்டி, சூரியன் பல்லைப் பேர்த்த நிகழ்ச்சி; கையது குட்டியே=கையினில் பாம்புக் குட்டி; மாசுணம்=பாம்பு; அனலாடிய மெய்யன்= பிரளயத் தீயினில் நீராடும் உடலினை உடையவன்; அருள் மெய்யனே=அருள் புரியும் மெய்ப் பொருள்; காளம்=ஆலகால விடம்; கங்காளம்=உயிரற்ற உடல், இறந்து பட்ட பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் உடல்கள்; பெருமான் பிச்சை ஏற்பதாக உலகத்தவர் பலரும் பழித்தாலும், பெருமான் தனது கொள்கையிலிருந்து தவறாமல் பலியேற்பார் என்ற பொருள்பட, பெருமான் பிச்சை எடுப்பதாக பலரும் கூறுவது வீண் என்று இங்கே குறிப்பிடுகின்றார்

வெய்யவன் பல் உகுத்தது குட்டியே வெங்கண் மாசுணம் கையது குட்டியே

ஐயனே அனலாடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே

வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே

ஐயம் ஏற்பது உரைப்பது வீணையே ஆலவாய் அரன் கையது வீணையே

நல்லூர்ப் பெருமணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.125.5) திருஞானசம்பந்தர் பெருமானை, இடுகாட்டெரியாடி என்று குறிப்பிடுகின்றார். நிறை=வரிசையாக; விரி=மலர்ந்த; ஆர்=பொருந்திய; பெருமான் மிகவும் உகந்து செய்யும் செயல்களை திருஞானசம்பந்தர் இங்கே பட்டியல் இடுகின்றார். இடபத்தைத் தனது வாகனமாக விரும்பி ஏற்றுக்கொண்டு அதனில் பயணிப்பதும், உடல் முழுதும் திருநீறு அணிந்து கொள்வதும், கொன்றை மலர்களின் நறுமணத்தை விரும்பி தனது சடையில் சூட்டிக்கொள்வதும் நல்லூர்ப் பெருமணம் தலத்தினில் நிலையாக உறைவதும், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொள்வதும் பெருமானுக்கு உகந்த செயல்கள் என்று இங்கே கூறுகின்றார். நல்லூர்ப் பெருமணம் தலத்தினில் தனக்கு திருமணம் நடந்த போது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் இந்த பதிகம். மற்றவர்கள் போன்று திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஏடுபடுவதில் சிறிதும் நாட்டம் இல்லாதவராக திகழ்ந்த திருஞானசம்பந்தர், தனது பெற்றோர் மற்றும் சுற்றத்தார் ஆகியோரின் விருப்பத்திற்கு இணங்கி வேதங்களில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ள திருமண வாழ்க்கையினை மேற்கொள்கின்றார். எனினும் தனது விருப்பம் அதுவல்ல என்பதை பெருமானிடம் தெரிவித்து, பெருமானே, நீர் என்னை திருமண பந்தத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகின்ற பாடல்கள் கொண்ட பதிகம். இந்த பதிகம் பாடி முடிக்கப்பட்ட பின்னர், பெருமான் ஒரு அசரீரி வாயிலாக, திருஞானசம்பந்தருக்கும் அவரது துணைவியாருக்கும் மற்றும் அவரைச் சார்ந்த அனைவருக்கும் உடனே முக்தி அளிப்பதாகவும், அவ்வாறு முக்தி பெற விரும்புவோர் அனைவரும் நல்லூர்ப் பெருமணம் திருக்கோயிலில் எழவிருக்கும் சோதியுள்ளே புகலாம் என்றும் உணர்த்துகின்றார். தான் விரும்பும் பல செயல்களை புரிகின்ற பெருமான், அடியார்களின் விருப்பத்தைக் கேட்டவுடன் அதனையும், நிறைவேற்றும் கருணை உள்ளம் கொண்டவராக இருக்கும் தன்மை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுகின்றது.

ஏறுகந்தீர் இடுகாட்டெரியாடி வெண்

ணீறுகந்தீர் நிரையார் விரி தேன் கொன்றை

நாறு உக்ந்தீர் திருநல்லூர்ப் பெருமணம்

வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே

பரவ=புகழ்ந்து பாட; வல்வினை=நீக்கிக் கொள்வதற்கு மிகவும் அரிய வலிமை வாய்ந்த வினைகள்; உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நுகர்ந்து, அதாவது அதன் பயனாகிய இன்ப துன்பங்களை அனுபவித்துத் தான் கழிக்க முடியும் என்பது எழுதாத சட்டம். அந்த தன்மையை குறிப்பிடவே வல்வினை என்று இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். எனினும், உயிர்கள் சிவபோதம் அடையப்பெற்று, தற்போதம் அற்றவர்களாக திகழ்ந்து, மலபரிபாக நிலையை அடைந்து பக்குவம் பெற்றால், பெருமான் அந்த உயிர்களுடன் பிணைந்திருக்கும் எஞ்சிய வினைகளை (இனி வரப்போகும் பிறவிகளில் இணைய வேண்டிய வினைகளை) கழித்து விடுகின்றான். இந்த தன்மையே பெருமானைப் பரவ வலிய வினைகளும் கெடும் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. பாரிடம்=பூத கணங்கள்; அந்தணன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதம் ஓதுவதும் வேதம் ஓதுவிப்பதும் அந்தணர்களின் கடமைகளாக சொல்லப் படுகின்றன. முதன்முதலாக வேதங்களை ஓதியவரும், வேதங்களையும் வேதங்களின் பொருளையும் பலருக்கும் அறிவுறுத்தியவரும் ஆகிய பெருமானை விடவும் அந்தணர் என்ற சொல்லுக்கு பொருத்தமானவராக எவர் இருக்க முடியும். எனவே தான் பெருமானை அந்தணர் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றன்ர். குரவம்=குராமரம்; எரியாடி என்ற சொல் இங்கே வினைச்சொல்லாக வாராமல், பெயர்ச் சொல்லாக பெருமானின் திருநாமமாக திகழ்கின்றது. பெருமானின் அருளினால் வினைகள் கெட, அதனால் மகிழ்ந்து இருக்கும் உயிர்கள், குரவ மலர்கள் தரும் நறுமணத்தினால் மேலும் மகிழ்ச்சி அடைகின்றன என்பதை உணர்த்தும் வண்ணம், அழகார் குரவப்பொழில் என்று கூறுகின்றார். மலர்களுக்கு சிறப்பினைத் தருவது நறுமணம் என்பதால், இனிய நறுமணத்தை தரும் குரவ மலர் சோலைகளை அழகார் குரவப்பொழில் என்று குறிப்பிட்டார் போலும்.

பொழிப்புரை:

பூத கணங்களால் சூழப்பட்டு, பிரளய காலத்து அடர்ந்த இருளிலும் ஊழித்தீயினில் நின்ற வண்ணம் நடனம் ஆடுபவனும், தனது சடையில் பாம்பினை அணிந்தவனும், அந்தணனாக முதன் முதலில் வேதங்களை பலருக்கு கற்பித்தவனும் எப்போதும் வேதங்களை ஓதிக் கொண்டு இருப்பவனும் ஆகிய பெருமான், அழகிய குராமரப் பொழில்கள் சூழ்ந்த தென் குரங்காடுதுறை தலத்தினில் உறைகின்றார். இத்தகைய தன்மைகள் வாய்ந்த தலைவனாகிய பெருமானையும் அவர் உறைகின்ற தென் குரங்காடுதுறை தலத்தினையும் புகழ்ந்தால், நம்மை பீடித்திருக்கும் வலிமை வாய்ந்த வினைகளும், தங்களது வலிமை கெட்டு நம்மை விட்டு நீங்கிவிடும்.

பாடல் 2:

விண்டார் புரம் மூன்று எரித்த விமலன்

இண்டார் புறங் காட்டிடை நின்று எரியாடி

வண்டார் கருமென் குழல் மங்கையொர் பாகம்

கொண்டான் நகர் போல் குரங்காடுதுறையே

விளக்கம்:

இந்த பாடலிலும் பெருமான் கனலில் நின்று நடனம் ஆடும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. சென்ற பாடலின் விளக்கத்தில் கனலெரி ஆடும் பெருமான் என்று உணர்த்தும் திருஞான சம்பந்தரின் சில பாடல்களை சிந்தித்த நாம், இங்கே அத்தகைய குறிப்பு கொண்ட அப்பர் பிரானின் பாடல்களை சிந்திப்போம். கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.7.1) அப்பர் பிரான் பெருமானை இரவாடும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இரவு என்று பிரளய காலத்து இருள் குறிப்பிடப்படுகின்றது. கரவு=கள்ளம், வஞ்சனை. இறைவனுக்கு உரிய நமது மனம், மொழி மெய்களை வேறு பொருட்களுக்கு உரித்தாக்குதல் வஞ்சனையான செயலாக அப்பர் பெருமானால் கருதப் படுகின்றது. அவ்வாறு இருப்பவர்களின் நெஞ்சத்தை வலிமையான நெஞ்சம் (கல் நெஞ்சம்) என்று இங்கே அப்பர் பெருமான் சாடுகின்றார். இவ்வாறு அப்பர் பெருமான் கூறுவது நமக்கு மணிவாசகரின் மொழிகளை நினைவூட்டுகின்றது. விரவாடுதல்-கலந்து இருத்தல்: இரவாடுதல்=இரவினில் ஆடுதல்: இங்கே இரவு என்பது ஊழிக் காலத்தினை குறிக்கும். இதனையே நள்ளிருளில் நட்டம் ஆடும் நாதன் என்று மணிவாசகர், சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். தனது மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒன்றிய நிலையில் இறைவனை நினைக்காது, இறைவனை வழிபடுவதாக நடிக்கும் மனிதர்களுக்கு மிகவும் அரியவனாக, சிவபெருமான் திகழ்கின்றான். வஞ்சனை ஏதும் இல்லாமல் மனம் ஒன்றி இறைவனை நினைக்கும் அடியார்களுடன் இறைவன் ஒன்று கலந்து அவர்களின் மனத்தினில் உறைகின்றான். அவ்வாறு கரவாடும் மனிதர்களையும், கரவாமல் பக்தி செய்யும் அடியார்களையும் வேறுபடுத்தும் சிவபெருமான், கோபம் கொண்டு சீறும் காளையை வாகனமாகக் கொண்ட திறமை உடையவன். படம் எடுத்து ஆடும் பாம்புகளைத் தனது உடலில் ஏற்றுள்ள சிவபெருமான், உள்ளங்கையில் நெருப்பு பிழம்பினை ஏந்தியவாறு, இருள் சூழ்ந்த ஊழிக் காலத்தில் நடமாடுகின்றார். அத்தகைய இறைவனை நான் எனது மனத்துள்ளே வைத்துள்ளேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானைக் கரவார் பால்

விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை

அரவாடச் சடை தாழ அங்கையினில் அனலேந்தி

இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (4.08.07) அப்பர் பிரான் இறைவன் எரியாடும் தன்மையை குறிப்பிடுகின்றார். நகை=விளக்கம்; எளிதில் அடையாளம் கொண்டு கொள்ளும் வண்ணம் அதிகமாக வளர்ந்து காணப்படும் மலர். துன்று=நெருங்கிய: நகுவெண் தலை=சதைப் பகுதிகள் நீக்கப்பட்டு எலும்பும், பற்களும், மண்டையோடும் காட்சி தரும் தலைகள். பற்கள் வெளியே காணப்படுவதால், நகைப்பது போன்று தோற்றம் உடைய தலை என்று குறிப்பிடும் வகையில் நகு வெண்தலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாகர்=நாகம், பகையை வளர்ப்பதால் இகழ்ச்சி குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதைக்கு அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. சங்கார காலத்தில் அழித்தல் செயலைச் செய்யும் சிவபெருமான் கோபம் கொண்ட கோலத்தில் இருப்பார்; அந்த சமயத்தில் கையில் அனலேந்தி அவர் வேகமாக ஆடும் நடனத்திற்கு ஏற்ப கோப உணர்ச்சிகள் தொனிக்கும் பாடல்களை உமையம்மை படுவதாக கூறுவார்கள். இந்த நிகழ்ச்சி தான் இந்த பாடலின் மூன்றாவது அடியில் குறிப்பிடப் படுகின்றது. பின்னர் உயிர்களுக்கு இந்த ஊழி முடிவு மற்றும் தோற்றம் ஆகியவற்றின் காரணமாக விளைகின்ற நன்மைகள் குறித்து பெருமையுடன் நினைக்கும் பெருமானின் கோபம் படிப்படியாக குறைய அவர் மகிழ்ச்சி அடைகின்றார்.

நகை வளர் கொன்றை துன்று நகு வெண்தலையர் நளிர் கங்கை தங்கு முடியர்

மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணி செய் மிடறர்

முகை வளர் கோதை மாதர் முனி பாடுமாறும் எரியாடுமாறும் இவர் கைப்

பகை வளர் நாகர் வீசி மதி இயங்குமாறும் இது போலும் ஈசர் இயல்பே

பெருமானின் திருநடனத்தின் தன்மையை குறிப்பிடும் தில்லைச் சிதம்பரம் தலத்து பாடலில் அப்பர் பிரான் (4.22.4) கையெரி வீசி நின்று கனலெரி ஆடுமாறே என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலின் கடைசி வரியில், கையெரி மற்றும் கனல் எரி என்று இரண்டு விதமான நெருப்புகளை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். எனவே எரி ஆடுமாறே என்று இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் கடைசியில் அப்பர் பிரான் கூறுவது, நடராஜப் பெருமான் கையில் ஏந்தியுள்ள எரி அல்ல என்பது தெளிவாகின்றது. எனவே தான், ஊழித் தீயின் இடையே நின்று பெருமான் ஆடுவதையே அப்பர் பிரான் அனைத்துப் பாடல்களிலும் குறிக்கின்றார் என்று சிவக்கவிமணி, சி.கே. சுப்பிரமணியம் அவர்கள், தனது பெரியபுராண விளக்கம் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் இத்தகைய நடனம் தொடர்ச்சியாக நடைபெறுவதால், அப்பர் பிரான் எரி ஆடுமாறே என்று நிகழ்காலத்தில் கூறுகின்றார் போலும். ஊழித்தீயினை ஞானத்தீ என்றும் குறிப்பிடுவதுண்டு.

பை அரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னிச்

மையரிக் கண்ணியாளும் மாலுமோர் பாகமாகிச்

செய்யரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே

கையெரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே

மேற்கண்ட பதிகத்தின் முதல் பாடலில் (4.22.1). பெருமான் நடனம் ஆடுவது ஆணவ மலம் ஒடுங்கும் பொருட்டு என்று கூறுகின்றார். நறவம்=தேன்: நாறுதல்=நறுமணம் வீசுதல் துஞ்சடை இருள்=மரணத்திற்கு காரணமாகிய ஆணவமலம். ஆணவமலத்தின் காரணமாகத் தான், உயிர்கள் வினைகளைப் பெருக்கிக் கொண்டு, அந்த வினைப்பயன்களை அனுபவிக்க கணக்கற்ற பிறப்புகள் எடுக்க நேரிடுகின்றது, இறப்பே பிறப்புக்கு காரணம் என்பதால், நமது இறப்புக்கும் ஆணவ மலமே காரணம் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்

செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னிச்

நஞ்சடை கண்டனாரைக் காணலா நறவ நாறு

மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே

துஞ்சடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடுமாறே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (4.22.5) அப்பர் பிரான் பெருமானை கனலெரி ஆடுமாறே என்று குறிப்பிடுகின்றார். பூதனார்=ஐந்து பூதங்களாய் இருப்பவர்; நவின்ற=பல காலம் பழகிய; அதள்=தோல்; செய்=நன்செய் நிலம், நன்செய் நிலத்தில் விளையும் நெல்லினை இங்கே குறிக்கின்றது. அரி=அறுவடை செய்யப்படும். ஐம்பூதங்களாகத் திகழும் சிவபிரான், தமது வாயால் வேதம் ஓதியவராய், சந்திரனின் ஒளி படிந்த சென்னியராய், பூதகணங்கள் சூழ நின்று, புலித் தோலை ஆடையாக அணிந்தவராய், தான் பலகாலும் பழகிய தில்லைச் சிற்றம்பலத்துள் தீயின் இடையே நடம் ஆடுகின்றார். எல்லோர்க்கும் தலைவரான சிவபிரான் அத்தகைய நடனம் ஆடும்போது அவர் காதில் அணிந்துள்ள வெண்குழைகள் தாழுமாறு ஆடுகின்றார். நெல் விளையும் நன்செய் நிலங்களைக் கொண்ட தில்லை சிற்றம்பலத்தில், அனல் ஏந்திய தனது கையினை வீசி ஆடும் சிவபிரான், ஊழித்தீயின் நடுவே நின்று நடனம் ஆடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஓதினார் வேதம் வாயால் ஒளிநிலா எறிக்கும் சென்னிச்

பூதனார் பூதம் சூழப் புலியுரி அதளனார் தாம்

நாதனார் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே

காதில் வெண்குழைகள் தாழக் கனல் எரி ஆடுமாறே

இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில் (4.22.6) பெருமான் பிறங்கெரி ஆடுமாறே என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இருவர்=சக்தி, சிவம் ஆகிய இருவர்: பாரிடம்=பூதகணம்; பாணி செய்ய=தாளம் கொட்ட: கார்=மேகங்கள்; பிறங்கு=ஒளி வீசும்; ஆணும் பெண்ணுமாய் ஒரே உடம்பினில் இருவராய் கலந்து நிற்கும் எம்பெருமான், சந்திரனின் ஒளி பரவிய சென்னியராய், அருகிலுள்ள பூதகணங்கள் தாளமிட, நடனக் கலையில் தேர்ந்தவராய், மேகங்கள் தங்கும் உயர்ந்த மாடங்களையும் சோலைகளையும் உடைய தில்லைச் சிற்றம்பலத்தில், ஒளிவீசும் தீயினிடை நடமாடுகின்றார். இவ்வாறு சிவபிரான் நடனமாடும்போது, அவர் நடமாடும் அரங்கு மேலும் விரிகின்றது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஓரிடம்பு இருவராகி ஒளிநிலா எறிக்கும் சென்னிச்

பாரிடம் பாணி செய்யப் பயின்ற எம் பரம மூர்த்தி

காரிடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே

பேரிடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடுமாறே

இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் அப்பர் பிரான் பெருமானை அன்லெரி ஆடுமாறே என்று குறிப்பிடுகின்றார். சிறை=நீரினைத் தடுத்து வயல்களுக்கு நீர் பாய்ச்சும் மடை. தில்லையின் நீர் வளத்தைக் குறிக்கின்றது. வேதங்கள் ஓதுபவராய், மழுப்படையைக் கையினில் ஏந்திய சிவபெருமானின் நெற்றியில் சந்திரனின் ஒளி வீசுகின்றது; எனது பிரானாகிய இறைவன், அவரைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் துயர்களைத் தீர்ப்பார்: நீர்ப்பாசனத்திற்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும் அளவுக்கு நீர் வளம் நிறைந்த தில்லை சிற்றம்பலத்தே, தனது கழல்கள் ஒலி செய்ய, சிவபிரான் அனலிடை நின்று நடமாடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் பெருமானை அனலெரி ஆடுமாறே என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

மறையனார் மழு ஒன்றேந்தி மணிநிலா எறிக்கும் சென்னிச்

இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்

சிறை கொள் நீர் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே

அறைகழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.37.8) அந்திப்போது அனலாடும் அடிகள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பந்தித்த=முடித்து கட்டிய; பெருமானை வணங்கி, அவரது புகழினைக் கூறி வாழ்த்தி, அவரது நினைவுகளை சிந்தையில் நிறுத்தி வழிபட வேண்டும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். மெய், வாய், மனம் ஆகிய மூன்றும் ஒன்றி பெருமானின் வழிபாட்டில் ஈடுபடவேண்டும் என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது. அவ்வாறு மூன்றும் ஒருங்கே இணையாத வழிபாடு, வழிபாடாக கருதப்பட மாட்டாது. பிரளய காலத்தினை அந்திப்போது என்று குறிப்பிடுகின்றார் போலும்.

பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து

அந்திப் போது அனலும் ஆடி அடிகளை ஆறு புக்கார்

வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயினுள்ளார்

சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.58.3) அப்பர் பிரான் எரியதாடி இன்னருள் செய்யும் எந்தை என்று பெருமானை அழைக்கின்றார். கரவு=உள்ளதை மறைத்தல்; மருவலார்=பகைவர்; மாட்டிய=நெருப்பால் கொளுத்திய; பரவுதல்=வாழ்த்துதல்; அல்லும் பகலும் எப்போதும் நடனமாடியவராக இருப்பவர் சிவபெருமான். ஊழிக்காலத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருக்கும் நிலையிலும் விடாது பெருமான் நடனம் ஆடுவதை, நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அதே போன்று அப்பர் பிரானும் இந்த பாடலில் இரவு நின்று எரியதாடி என்று குறிப்பிடுகின்றார். பிரளயத் தீயினில் பெருமான் நடனம் ஆடும்போது, உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் தத்தம் உடல்களிலிருந்து விடுபட்டு, இறைவனிடம் ஒடுங்குகின்றன. அத்தகைய உயிர்களில் ஒரு சில, பக்குவம் அடைந்து மலபரிபாகம் அடைந்த காரணத்தால், முக்தி உலகம் சென்றுவிடுகின்ற்ன. எஞ்சிய உயிர்கள், மலங்களுடன் பிணைந்து நிற்கும் காரணத்தால், அத்தகைய உயிர்களுக்கு, தங்களது மலங்களை கழித்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பதற்கு இறைவன் திருவுள்ளம் கொள்கின்றான். இந்த செயலே, பெருமான் உயிர்களுக்கு புரிகின்ற இன்னருள் ஆகும். இதனையே அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் நான்காவது பாடலிலும் (4.58.4) பெருமானை கனலெரியாடி என்று அழைக்கின்றார்.

கரவிலா மனத்தராகிக் கைதொழுவார்கட்கு என்றும்

இரவு நின்று எரியதாடி இன்னருள் செய்யும் எந்தை

மருவலார் புரங்கள் மூன்று மாட்டிய வகையராகிப்

பரவுவார்க்கு அருள்கள் செய்து பருப்பதம் நோக்கினாரே

பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.60.1) அப்பர் பிரான் பெருமானை கனலெரி ஆடினான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் வேதங்கள் பெருமானின் நாவினுக்கு அணிகலனாகத் திகழ்வதாக அப்பர் பிரான் கூறுகின்றார். வேதங்கள் அணிகலனாக விளங்கும் நாவினை உடையவனும், தன்னை மறவாது நினைப்பவர் நெஞ்சத்தைத் தனது இருப்பிடமாக கொண்டவனும், தேக்கிய விடம் கருமை நிறத்து கறையாக அமைந்து அழகு செய்யும் கழுத்தினை உடையவனும், ஒளி வீசி கொழுந்து விட்டெரியும் நெருப்பினில் கூத்தினை நிகழ்த்துபவனும், பிறையை அணிந்த சடையை உடையவனும், பெருவேளூர் தலத்தினை மிகவும் விரும்பி உறைபவனும் ஆகிய பெருமானை, அடியேன் நாள்தோறும் மலர்கள் தூவி வணங்குவேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

மறையணி நாவினானை மறப்பிலார் மனத்துளானைக்

கறையணி கண்டன் தன்னைக் கனல் எரி ஆடினானைப்

பிறையணி சடையினானைப் பெருவேளூர் பேணினானை

நறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்குவேனே

இந்த பதிகத்தின் நான்காவது பாடலிலும் பெருமானை கனலெரி ஆடினான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மைஞ்ஞவில்=மை+நவில், கருமை நிறம் படர்ந்த; கைஞ்ஞவில்=கை+நவில், கையில் பழகிய, பொருந்தியுள்ள; அந்தண்=அம்+தண், அழகும் குளிர்ச்சியும் உடைய; பொய்ஞ்ஞெக=பொய்+நெக, பொய்கள் நீங்கி; விடத்தை தேக்கியதால் கருமை நிறம் அடர்ந்து படர்ந்த கழுத்தினை உடையவனும், வலது கையில் மழுவினையும், இடது கையில் நெடுநாட்களாக பழகி பொருந்தி இருக்கும் மான் கன்றினை ஏந்தியவனும், ஒளிவீசும் தீயின் இடையே நின்று ஆடுபவனும், அழகிய தலைக் கோலம் உடையவனும், அழகும் குளிர்ச்சியும் உடைய பெருவேளூர் தலத்தினில் மிகுந்த விருப்பத்துடன் உறைபவனும் ஆகிய பெருமானை, எனது மனதினுள்ளே இருந்த வஞ்சகங்களை நீக்கி, நினையாமல் இருக்கின்றேன். பெருமானை உணர்வதற்கு உதவி புரியும் பொறிகள் இருந்தும் அவற்றை பயன்படுத்தி பெருமானை அறியாமல் அடியேன் இருப்பது மிகவும் பரிதாபமான நிலை. பெருமானே நீ தான் இந்த நிலையிலிருந்து என்னை விடுவித்து உன்னை நினைக்குமாறு அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல். இந்த பதிகத்தின் ஆறாவது பாடலிலும் அப்பர் பிரான் பெருமானை, கனலெரி ஆடுவான் என்று குறிப்பிடுகின்றார்.

மைஞ்ஞவில் கண்டன் தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்திக்

கைஞ்ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானைப்

பிஞ்ஞகன் தன்னை அந்தண் பெருவேளூர் பேணினானைப்

பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறியிலா அறிவிலேனே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.2.3) அப்பர் பிரான் பெருமான் மிகுந்த விருப்பத்துடன் இடுகாட்டு எரியில் நின்று ஆடுவதாக குறிப்பிடுகின்றார். எட்டனைப் பொழுது=மிகவும் சிறிய பொழுது. எள், தினை போன்ற தானியங்கள் அளவில் மிகவும் சிறியவை. மிகவும் சிறிய நேரம், வினாடிக்கும் குறைந்த நேரம் என்பதை உணர்த்தும் பொருட்டு தினைத்தனைப் பொழுதும், எட்டனைப் பொழுதும் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தில் கூறுகின்றார். ச்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு சிட்டர் ஆகும். நல்லொழுக்கம் மிகுந்தவர்கள் என்று பொருள். தனது கையில் பாம்பினைச் சுற்றிக் கட்டிக் கொண்டு இருப்பவனும், கையில் கபாலத்தையும் மான் கன்றினையும் ஏந்தியவனும், முற்றூழிக் காலத்தில் மிகவும் விருப்பத்துடன், சுடுகாட்டில் ஊழித்தீயின் இடையே கூத்து ஆடுபவனும், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள் வாழும் தில்லை நகரத்தில் உள்ள அம்பலத்தில் கூத்தாடுபவனும் ஆகிய சிவபெருமானை எள் போன்று சிறிய நேரத்தில் மறந்தாலும் நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே எப்பொழுதும் நான் அவரை நினைத்தவாறே இருப்பேன், என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி

இட்டமா இடுகாட்டு எரி ஆடுவான்

சிட்டர் வாழ் தில்லை அம்பலக்கூத்தனை

எட்டனைப் பொழுதும் மறந்து உய்வனோ

அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.26.2) பெருமான் கனலில் நின்று ஆடும் தன்மை அப்பர் பெருமானால் குறிப்பிடப்படுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், பெருமான் தனது கையில் தீப்பிழம்பை ஏந்திய வண்ணம் கனலில் நின்று ஆடுகின்றார் என்று கூறுகின்றார். செங்கண்=கோபத்தினால் சிவந்த கண்களை உடைய பாம்பு; அரை=இடுப்பு; தீத்திரள்= நெருப்புக் கொழுந்து; அங்கை=அழகிய கை; இந்த பதிகத்தின் முதல் பாடலில் தலைவி வாட்டம் அடைந்து, பசலை படர்ந்து, மேனியின் நிறம் மாறி ஏங்குவதாக கூறிய அப்பர் பிரான், அந்த ஏக்கத்திற்கு காரணம் என்ன என்பதை இந்த பாடலில் தெரிவிக்கின்றார். கங்கை நங்கை மற்றும் உமையன்னை ஆகிய இருவரை ஏற்றுக்கொண்டு, எப்போதும் தன்னுடனே வைத்திருக்கும் பெருமான், தன்னை அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே தலைவியின் ஏக்கம்

செங்கண் நாகம் அரையது தீத்திரள்

அங்கை ஏந்தி நின்று எரி ஆடுவார்

கங்கை வார்சடை மேல் இடம் கொண்டவர்

மங்கை பாகம் வைத்தார் அன்னியூரரே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.55.9) அப்பர் பிரான் பெருமானை, இரவில் நின்று எரியாடுபவன் என்று குறிப்பிடுகின்றார். பலரும் இரவில் பிச்சை எடுக்க, வித்தியாசமாக நண்பகலில் பிச்சை எடுக்கும் பெருமான் என்று இந்த பதிகத்தின் முந்தைய பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், பகலில் வெளிச்சத்தில் அனைவரும் காண நடமாடாமல் இரவில் சுடுகாட்டினில் நின்று பெருமான் நடமாடும் தன்மையினை இந்த பாடலில் உணர்த்துகின்றார். இரவு என்பது இங்கே பிரளய காலத்தையும் எரி என்பது பிரளய காலத்து நெருப்பையும் உணர்த்துகின்றது. முரலும்=இனிய இசையோடு ஒலிக்கும்; கின்னரம்=ஒரு வகை நரம்பு வாத்தியம், யாழ் போன்றது: மொந்தை=பறை போன்ற இசைக்கருவி; கின்னரம் எனப்படும் இசைக்கருவி இன்னிசை எழுப்பவும், மொந்தை கொண்டு பூத கணங்கள் முழங்கவும், இரவினில் இடுகாட்டில் நெருப்பின் நடுவே நின்று ஆடும் பெருமான், தனது நீண்ட அலைகளைக் கொண்டு ஆரவாரம் செய்யும் கடலால் சூழப்பட்ட உலகினில் சிறந்ததாக விளங்கும் நாரையூர் நகரத்தில் நம்பனாக வீற்றிருக்கின்றார். அவர் பாம்பினை, அணிகலனாக பூண்டிருப்பது மிகவும் அழகாகவும் வியப்பினைத் தருவதாகவும் உள்ளது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. .

முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே

இரவில் நின்று எரியாடலும் நீடுலாம்

நரலும் வாரி நன்னாரையூர் நம்பனுக்கு

அரவும் அம்ம அழகிதே

ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (5.96.5) அப்பர் பிரான் பெருமானை அனலாடிய கூத்தா என்று அழைக்கின்றார். பூத்தார்=நல்ல வண்ணம் முழுவதும் மலர்ந்த; அதள்=தோல்; ஆர்த்தல்=இறுக கட்டுதல்; குரையார்=ஒலி பொருந்திய; ஏத்துதல்=புகழ்ந்து கூறுதல்; நன்கு மலர்ந்த கொன்றை மலர் மாலையினை அணிந்தவனே, புலியின் தோலை இடுப்பினில் கட்டியவனே, படம் எடுத்தாடும் பாம்பினை இடுப்பினில் கச்சாக கட்டி, அனலையும் கையில் ஏந்திய வண்ணம் நடனம் ஆடுபவனே, ஒலிக்கும் கழல்கள் பொருந்திய உனது திருவடிகளைத் தவிர வேறு எந்த பொருளையும் புகழ்ந்து பேசாத நா எனக்கு உள்ளது என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல். பாம்போடு அனலாடிய என்று குறிப்பிட்டிருப்பதால், தனது கையினில் தீப்பிழம்பினை ஏந்திய வண்ணம் பெருமான் நடனம் ஆடுகின்றான் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. தீயினில் நின்று நடனம் ஆடுபவன் என்று விளக்கம் சிலர் அளிக்கின்றனர்.

பூத்தார் கொன்றையினாய் புலியின் அதள்

ஆர்த்தாய் ஆடரவோடு அனல் ஆடிய

கூத்தா நின் குரை கழலே அலது

ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே

தில்லைச் சிதமபரம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.2.3) அப்பர் பிரான், பெருமானை புறங்காட்டெரியாடி என்று அழைக்கின்றார். துறம்=ஒழுக்கம்; வேதங்கள் வாழ்க்கை நெறிமுறையை உணர்த்துவதாக அமைந்துள்ளன. இத்தகைய அரிய நூலாகிய வேதங்களை முதன்முதலில் உலகினுக்கு எடுத்து உரைத்தவர் சிவபெருமான் என்பதை இந்த பாடலின் முதல் அடியில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். சந்திரனின் மாசு களையப்ப்ட்டு தூய மதியாக விளங்கிய தன்மையும், திரிபுரங்களை எரித்து அழித்த ஒப்பற்ற வீரச்செயலும். சனகாதி முனிவர்களுக்கு இருந்த சந்தேகத்தை தீர்த்து வைத்த செயலும் குறிப்பிடப்பட்டு, மந்திரமாகவும் தந்திரமாகவும் பெருமான் இருக்கும் தன்மை சொல்லப் பட்டுள்ளது. இத்தகைய ஆற்றல் கொண்ட பெருமான், பிரளய காலத்திலும் அழியாமல் நின்று, நடனம் ஆடுபவராக இருக்கும் தன்மை கடை அடியில் உணர்த்தப் படுகின்றது.

துறங்காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூமதியும் பாம்பும் உடையார் போலும்

மறங்காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும்

அறங்காட்டி அந்தணர்க்கு அன்று ஆலநீழல் அறமருளிச் செய்த அரனார் இந்நாள்

புறங்காட்டெரி ஆடி பூதம் சூழப் புலியூர் சிற்றம்பலமே புக்கார் தாமே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.14.7) எரியாடல் நிலவ வைத்தார் என்று அப்பர் பிரான் பெருமானின் செய்கையை உணர்த்துகின்றார். மாறு=மாறுபாடு கொண்ட, பகை உணர்வு கொண்ட; மலைந்தார்=போர் செய்தவர்; நிலையம்=திருக்கோயில்கள். நாறு மலர்=மணம் வீசும் மலர்கள்; சிவநெறியிலிருந்து மாறுபாடு கொண்டு, பகை உணர்வுடன் அனைவருடன் போர் செய்த, திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை சிவபெருமான் எரித்து அழித்தார்: தனது அழகிய சடைமுடி மேல் பாம்பினை வைத்துள்ளார்; அவர் தனது அழகிய திருமேனியில் நீற்றினைப் பூசி, ஊழித்தீயினில் நின்ற வண்ணம் நடனம் ஆடுபவர் ஆவார்; தனது நெற்றியில் கண்ணை உடையவர்; பல திருக்கோயில்களை உடையவர்; கரைகளில் மோதி கரையை உடைக்கும் வல்லமை கொண்ட அலைகளை உடைய கங்கை ஆற்றினை, தனது சடையில் அடக்கி வைத்தவர்; தேவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தனது திருவடிகளை வழிபட வைத்தார்; நறுமணம் வீசும் மலர்களைக் கொண்ட தனது திருவடியினை எனது தலையின் மீது வைத்த நல்லூர்ப் பெருமானார் மிகவும் நல்லவர்.

மாறு மலைந்தாரரணம் எரியவைத்தார் மணிமுடிமேல் அரவு வைத்தார் அணிகொள்மேனி

நீறுமலிந்து எரியாடல் நிலவ வைத்தார் நெற்றிமேல் கண்வைத்தார் நிலையம் வைத்தார்

ஆறு மலைந்து அறுதிரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் நாறுமலர்த் திருவடி என்தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே

நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.22.8) அப்பர் பிரான் பெருமானை எண்டிசையும் எரியாட வல்லான் என்று குறிப்பிடுறார். இந்த பாடலில் விரி கோவணம் என்று பெருமான் அணிந்துள்ள கோவண ஆடையினை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஏன் இவ்வாறு அப்பர் பிரான் கூறுகின்றார் என்பதற்கு விடையினை நாம் மணிவாசகர் திருவாசகம் திருச்சாழல் பதிகத்தில் தெளிவு படுத்துவதை நாம் அறிவோம். எனது தலைவன் எனக்கு தந்தை போன்றவன் என்று எல்லா உயிர்களாலும் சிறப்பித்து அழைக்கப்படும் ஈசன், பெரிய துணியிலிருந்து கிழித்து தைக்கப்பட்ட கோவணத்தை அணிந்திருக்கும் நிலை இறைவனுக்கு பொருத்தமான செயலா என்று முதல் பெண்மணி கேள்வி கேட்கின்றாள். அதற்கு விடையாக அடுத்தவள் கூறுகின்றாள், பெருமான் அணிந்திருக்கும் கோவணத்தை நீ என்னவென்று கருதுகின்றாய். பெருமான் அணிந்திருப்பது பஞ்சு நூலால் செய்யப்பட்ட கோவணம் அல்ல; ஞான நூலாகிய நான்கு வேதங்களே இணைந்து கோவணமாக அமைந்துள்ளன என்று புரிந்து கொள்வாயாக என்று கூறுகின்றாள். மேலும் இந்த கோவணத்தை தாங்குகின்ற அரை ஞாண் கயிறாக, நிலையாக உள்ள ஞானக் கலைகள் இருக்கின்றன என்று கூறி பெருமான் அணிந்திருக்கும் கோவண ஆடையின் உயர்வு இந்த திருவாசகப் பாடலில் விளக்கப் படுகின்றது. இந்த கருத்தினை உள்ளடக்கியே, வேதங்களாக விரியும் கோவணம் என்ற பொருள் பட, விரி கோவணம் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. எட்டு திசைகளையும் தழுவும் வண்ணம் தனது பிரம்மாண்டமான விசுவரூபத்துடன் பெருமான் நெருப்பினில் நின்ற வண்ணம் பிரளய காலத்தில் நடனமாடுவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அங்குசத்தால் குத்தப்படுவதால் புண் நிறைந்த மத்தகத்துடன் (தலையுடன்) இருக்கும் யானைகளின் பொதுத் தன்மையை, தாருக வனத்து முனிவர்கள் ஏவிய யானையின் மீது ஏற்றிக் சொல்கின்றார்.

வெண்டலையும் வெண்மழுவும் ஏந்தினானை விரிகோவணம் அசைத்த வெண்ணீற்றானைப்

புண் தலைய மால்யானை உரிபோர்த்தானைப் புண்ணியனை வெண்ணீறணிந்தான்தன்னை

எண்திசையும் எரியாட வல்லான் தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்தன்னைக்

கண்டலம் கழனி சூழ் அந்தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணலாமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.24.1) அப்பர் பிரான், அனலாடி காண் என்று குறிப்பிட்டு, பெருமானைக் கண்டு வழிபடுமாறு நம்மை வழிநடத்துகின்றார். கை=துதிக்கை; மானம்=பெருமை; கை மானம் மதம் ஆகிய மூன்று சொற்களையும் தனித்தனியாக களிறு என்று சொல்லுடன் இணைத்து பொருள் கொள்ள வேண்டும். விலங்குகளில் யானை ஒன்றினுக்கு தான் கையாக பயன்படும் துதிக்கை அமைந்துள்ளது. அம்மான்=அனைவர்க்கும் தலைவன். செவ்வானம் என்ற சொல் செம்மானம் என்று எதுகை கருதி திரிந்தது. தான் எப்போதும் சிவபெருமானையே நினைத்துக் கொண்டிருந்ததால், தனது சிந்தையில் திருவாரூர் பெருமான் நிலையாக உறைவதாக குறிப்பிட்டு நாமும் அத்தகைய பேற்றினை அடையவேண்டும் என்ற விருப்பம் கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் பாடல். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலிலும் அப்பர் பிரான் பெருமானை அனலாடி என்று அழைக்கின்றார்.

கைம்மான மத களிற்றின் உரிவையான் காண் கறைக் கண்டன் காண் கண்ணார் நெற்றியான் காண்

அம்மான் காண் ஆடரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில்வாய்ச் சூலத்தான் காண்

எம்மான் காண் ஏழுலகும் ஆயினான் காண் எரிசுடரோன் காண் இலங்கு மழுவாளன் காண்

செம்மானத்து ஒளியன்ன மேனியான்காண் திருவாரூரன்காண் அவனென் சிந்தையானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.30.1) அப்பர் பிரான், பெருமானை அனலாடி என்று குறிப்பிடுகின்றார். பந்தம்=உலகப் பொருட்களின் மீது நாம் வைத்திருக்கும் விருப்பு வெறுப்புகள்; வம்பு=நறுமணம்; வம்புந்து=நறுமணத்தை எழுப்புகின்ற; அடியேனுடன் இறுக்கமாக பிணைக்கப்பட்டு இருந்த கொடிய வினைகளையும், அடியேன் உலகப் பொருட்களின் மீது கொண்டிருந்த பாசத்தையும் அறவே நீக்கியவனும், ஏழ்கடலாகவும் ஏழுலகமாகவும் இருப்பவனும், நறுமணம் நிறைந்த அழகிய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், அனைத்துப் பிறைகளும் தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் வந்து சரணடைந்த சந்திரனை அடைக்கலமாக தனது சடையில் ஏற்றுக் கொண்டு ஒற்றைப் பிறைச் சந்திரனை வளரும் சந்திரனாக மாற்றியவனும், வானோர்களின் வேண்டுதலுக்கு இணங்கி வானில் பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் வீழ்த்தி எரியச் செய்தவனும், ஊழிக் காலத்தில் பெருந்தீயின் நடுவே நின்று நடனம் ஆடுபவனும், பசுவிலிருந்து கிடைக்கப் பெரும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடுபவனும் ஆகிய பெருமானே, செம்பொன்னினால் செய்யப்பட்ட அழகிய மணிகள் பதிக்கப்பட்ட மாடங்களை உடைய திருவாரூர் நகரத்து திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எமது செல்வன் ஆவான் என்று அப்பர் பிரான் இறைவனை குறிப்பிடும் பாடல்.

எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழுலகும் ஆயினான் காண்

வம்புந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர்மதி சேர் கண்ணியன் காண்

வானோர் வேண்ட

அம்பொன்றால் மூவெயிலும் எரி செய்தான்காண் அனலாடிகாண் ஆனஞ்சும் ஆடினான் காண்

செம்பொன் செய் மணிமாடத் திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.36.3) அப்பர் பிரான் பெருமானை அனலாடி என்று அழைக்கின்றார். மறித்தல்=தடுத்தல்; தங்களது வினைப் பயன்களால் துன்பம் அடைந்த உயிர்கள் அந்த துன்பங்களை கண்டு அஞ்சுகின்றன. அத்தகைய உயிர்களுக்கு அஞ்சேல் என்று அபயகரம் காட்டும் பெருமான், இன்பங்களையும் துன்பங்களையும் நுகர்ந்து வினைகளை கழிப்பதற்கு அருள் புரிவது மட்டுமன்றி, தன்னுடைய அடியார்களுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக பாவிக்கும் பக்குவத்தையும் அளிக்கின்றார். அந்த பக்குவம் அடைந்த அடியார்கள், இனியும் தங்களுக்கு பிறப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்று அஞ்சுகின்றனர். பக்குவம் அடைந்து தனது மலங்களைக் கழித்துக் கொண்ட அடியார்களுக்கு முக்தி நிலை அளித்து, அவர்களது அச்ச்த்தை போக்கும் பெருமான், அபய கரம் காட்டும் தன்மையை மறித்தார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தனது அடியார்களுக்கு வேறுவேறு வேடங்கள் தரித்தவராக அருள் புரியும் தன்மை கோலங்கள் மேன்மேல் உகப்பார் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். பாங்கர்=உடன் நின்று உதவுபவர், தோழர். அனைத்து உயிர்களுடன் உடனாக நின்று அவற்றை இயக்கும் பெருமான், தேவைப்படும் தருணங்களில் அந்த உயிர்களுக்கு உதவியும் புரிகின்றார் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

இரவும் பகலுமாய் நின்றார் தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார் தாமே

அரவம் அரையில் அசைத்தார் தாமே அனலாடி அங்கை மறித்தார் தாமே

குரவம் கமழும் குற்றாலர் தாமே கோலங்கள் மேன்மேல் உகப்பார் தாமே

பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே பழனநகர் எம் பிரானார் தாமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.37.1) அப்பர் பிரான் பெருமானை, அனலாடி ஆரமுதே என்று அழைக்கின்றார். ஆரார்=பகைவர்கள்; அனலாடி=தீயில் கூத்து நிகழ்த்துபவன்; அனலாடி என்றும் ஆரமுதே என்றும் இங்கே முதலடியில் அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் காணலாம். அனலும் அமுதமும் ஒன்றுக்கொன்று முரணான பொருட்கள். இவை இரண்டையும் ஒருங்கே வைத்து சொல்லி, பெருமான் அடியார்களுக்கும் மற்றவர்களுக்கும் வேறுவேறாக அருள் புரிவதை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். திரிபுரத்து அரக்கர்களுக்கு அனலாக விளங்கி அவர்களை அழித்த பெருமான், அதே திரிபுரத்து கோட்டைகளில் வாழ்ந்து வந்த சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவருக்கும் அருள் புரிந்து காப்பற்றியமையும் உணர்த்தும் பொருட்டு அனலையும் ஆரமுதையும் அருகே வைத்து பாடினார் போலும். குறட்பூதம்=குள்ளமான பூதப் படைகள்; தெவிட்டாத ஆரமுதாக இறைவன் தனக்கு இருந்த நிலையை நினைத்து அப்பர் பிரான் உள்ளம் நெகிழ்ந்து பாடிய பாடல். உடல் முற்றிலும் பழுதடைந்து, கயிலை யாத்திரையினை மேற்கொண்டு தொடர முடியாத நிலையிலும், மனத் திண்மையுடன் தனது யாத்திரையை தான் தொடர்ந்த போது, கயிலை யாத்திரையை தொடர்ந்து மேற்கொள்வது கடினம் என்று உண்மை நிலையை உணர்த்தி, அதே சமயத்தில் தனது உடல் தளர்ச்சியை போக்கி, திருவையாற்றில் கயிலைக் காட்சி காண்பதற்கு அருள் செய்த பெருமானின் திறத்தினை நினைத்து ஆரா அமுதே என்று இறைவனை அப்பர் பிரான் அழைக்கின்றார்.

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே என்றேன் நானே

கூரார் மழுவாட் படை ஒன்றேந்திக் குறட்பூதப் படையாய் என்றேன் நானே

பேராயிரம் உடையாய் என்றேன் நானே பிறைசூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே

ஆரா அமுதே ஐயாறு அன்னே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.38.10) அப்பர் பிரான், திண்டோள் விட்டெரியாடல் உகந்தாய் என்று குறிப்பிடுகின்றார். விண்டார்=நீங்கினார்; வேத நெறியை விட்டு நீங்கிய திரிபுரத்து அரக்கர்கள்; பண்டைய நாளில் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்து பரவிய ஆலகால விடம், தான் படர்ந்தவர்களின் உயிரையும் கொல்லும் வண்ணம் கொடிய விதமாக திகழ்ந்தது. வேத நெறியிலிருந்து வழுவி வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்து அழித்தவன் நீயே என்றும், தேவர்களுக்கும் மேம்பட்ட தலைவனாக நிற்பவன் நீயே என்றும், காண்பர் அனைவரையும் கொல்லும் கொடிய நெஞ்சினை அச்சம் ஏதுமின்றி உண்டு பின்னர் கழுத்தினில் அடக்கியவன் நீயே என்றும், அடியேனை திருத்தொண்டு புரியும் அடிமையாக ஏற்றுக்கொண்டவன் நீயே என்றும், உனது தூய்மையானதும் மலர் போன்று மிருதுவானதும் ஆகிய சிறந்த திருவடிகளை எனது தலையின் மீது வைத்தவன் நீயே என்றும், வலிமையான தோள்களை வீசிய வண்ணம் ஊழித்தீயினில் நின்று கூத்தாட வல்லவன் நீயே என்றும், திருவையாறு தலத்தினை விட்டு அகலாத செம்பொற் சோதியாகிய இறைவனே உன்னை அடியேன் பலவாறாக அழைத்து வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான் குறிப்பிட்டு இறைவனை வணங்குவதாக அமைந்த பாடல்.

விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே

கண்டாரைக் கொல்லு நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே

தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே

திண்டோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திருவையாறு அகலாத செம்பொற்சோதீ

கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.49.5) அப்பர் பிரான் பெருமானை அனலாடி என்று அழைக்கின்றார். மன்றல் மணம்=நறுமணம்; சென்ற=தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி; பூதன்=உயிர்களை ஆட்கொள்பவன்; இந்த பாடலில் நறுமணம கமழும் சடையினை உடையவன் பெருமான் என்று குறிப்பிட்டு, இயற்கையான நறுமணம் வாய்ந்தது பெருமானின் சடை என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமானின் மற்றொரு பக்கமே அம்மை என்பதால், அம்மையின் கூந்தலும் இயற்கை மணம் வாய்ந்தது என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. அன்று அப்பொழுதே அருள் செய்தான் என்பதற்கு, அப்பர் பிரான் தனது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த சம்பவத்தை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. தீராத சூலை நோயால் வருந்திய போது, தனது தமக்கையார் சொல்லினைப் பின்பற்றி திருவதிகை பெருமானை வணங்கிய உடனே தனது சூலை நோய் தீர்ந்ததை, காலம் தாழ்த்தாமல் அப்பொழுதே அருள் செய்தான் என்று கூறுகின்றார். அதன் பின்னரும், அப்பர் பிரான் துன்பமுற்ற போதெல்லாம் பெருமான் உடனே உதவியதை நாம் அவரது சரித்திரத்தில் காண்கின்றோம். மதயானை அப்பர் பிரானின் தலையை இடற வந்த போதும், நஞ்சு கலந்த அமுதம் ஊட்டப்பட்ட போதும், கல்லுடன் கட்டப்பட்டு கடலில் தள்ளப்பட்ட போதும், தனது உடலினை தூய்மை செய்யும் வண்ணம் உடலின் மீது இடபக்குறி பொறிக்கப் படவேண்டும் என்று பெண்ணாகடம் தலத்தில் வேண்டியபோதும் அப்பர் பிரானுக்கு உடனே உதவி செய்தவன் சிவபெருமான்.

சென்றச் சிலை வாங்கிச் சேர்வித்தான் காண் தீ அம்பன் காண் திரிபுரங்கள் மூன்றும்

பொன்றப் பொடியாக நோக்கினான் காண் பூதன் காண் பூதப் படையாளி காண்

அன்றப்பொழுதே அருள் செய்தான் காண் அனலாடி காண் அடியார்க்கு அமுதானான் காண்

மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

கயிலாயம் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.55.4) அபப்ர் பிரான் பெருமானை, கானத்தீயாடல் உகந்தாய் என்று குறிப்பிடுகின்றார். விண்ணில் வாழும் தேவர்கள் போற்றும் மருந்தே, எனது சிந்தையில் வந்து புகுந்த இறைவரே, உயிர்களின் ஊனமாகிய மலங்களை நீக்கும் கருணை உள்ளம் கொண்டவரே, திருமாலும் பிரமனும் உன்னைத் தேடித் திரிந்து உன்னைக் காணாமல் தவித்த போது அவர்கள் முன்னே விண் முட்டும் அளவுக்கு தீப்பிழம்பாக உயர்ந்தவனே, வடிகட்டப்பட்ட தேனைப் போல் தெளிவாக உள்ளவனே, தேவர்களுக்கு எல்லாம் தேவனாகத் திகழ்பவனே, சுடுகாட்டுத் தீயில் கூத்து ஆடுவதை விரும்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான் இறைவனைப் போற்றும் பாடல்.

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்றன் சிந்தை புகுந்தாய் போற்றி

ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி

கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (6.59.3) அப்பர் பிரான் கரிகாட்டில் எரியாடும் கடவுள் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சண்ணித்தல்=பூசிக் கொள்ளுதல்; செய்=வயல்; பையுலாம்=படம் எடுத்து ஆடும்; கரிகாடு=உடல்கள் எரிக்கப்பட்டு கருகுவதால், கரிகாடு என்று அழைக்கப் படுகின்றது; பாற்றுதல்=அழித்தல்; வயல்களில் மீன்கள் துள்ளிப் பாய்கின்றன என்று திருப்புன்கூர் தலத்தின் நிலவளமும் நீர்வளமும் உணர்த்தப் படுகின்றது. முற்றூழிக் காலத்தில் அனைத்து உடல்களிலிருந்தும் உயிர்கள் பிரிய, எரியும் உயிரற்ற உடல்களிலிருந்து எழும் நெருப்பின் நடுவே நின்று நடனம் ஆடுவது, மற்றவரிடமிருந்து மிகவும் மாறுபட்ட செயல் என்பதால் இறைவனை விகிர்தனார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தனது கையினில் மூன்று இலைகளைக் கொண்ட சூலத்தினை ஏந்தியவர் சிவபெருமான். அவர் முற்றூழிக் காலத்தில் அனைத்து உடல்களும் அழிந்த பின்னரும், எரியும் நெருப்பின் இடையே நின்று நடனம் ஆடுகின்றார்; படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது விருப்பம் போல் ஆட்டுவிக்கும் பெருமான், தன்னைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் பாவங்களை முற்றிலும் அழிக்கின்றார்; மீன்கள் துள்ளி விளையாடும் வண்ணம் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த திருப்புன்கூர் தலத்தில் பொருந்தி உறையும் அவர் வீடுபேறு எனப்படும் உயர்ந்த செல்வத்தை உடையவர் ஆவார்; தனது திருமேனி முழுவதும் வெண்ணீறு பூசியவாறு காணப்படும் பெருமான், ஏனைய தெய்வங்களிலிருந்தும் தேவர்களிலிருந்தும் மாறுபட்டவர். அவர் வெண்ணி என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கையுலாம் மூவிலை வேல் ஏந்தினாரும் கரி காட்டில் எரி ஆடும் கடவுளாரும்

பையுலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும்

செய்யுலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூர் மேவிய செல்வனாரும்

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.85.6) அப்பர் பிரான், பெருமானை புற்ங்காட்டில் எரியாடல் புரிந்தான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தில் எல்லா உறவுமாக இறைவன் நமக்கு இருக்கும் நிலையினை அப்பர் பிரான் உணர்த்துவது, நமக்கு அவரது அப்பன் நீ என்று தொடங்கும் பாடலை (6.95.1) நினைவூட்டுகின்றது. ஆன்மாவிற்கு நிரந்தரமான உறவினர்கள் சிவபிரானைத் தவிர வேறு எவரும் இல்லை. சென்ற பிறவியில் நாம் எவ்வாறு இருந்தோம், எவர் நமக்கு உறவினராக இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. அடுத்த பிறவி நமக்கு எவ்வாறு அமையும் என்பதும் நமக்குத் தெரியாது. இந்தப் பிறவியில் நமக்கு உறவினர்களாக இருப்பவர்களும், நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்முடன் இருப்பதில்லை. அவர்கள் அனைவரும் இடையில் வந்து சேர்பவர்களாகவோ, இடையில் நம்மை விட்டு போகின்றவர்களாகவோ இருக்கின்றனர். எனவே நாம், எப்போதும் நமக்கு உறவினனாக இருக்கும் இறைவனிடம் அன்பு செலுத்துவதை விட்டு விட்டு, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதால் நமக்கு பயன் ஏதும் இல்லை. இந்த உண்மையை வலியுறுத்தி, இறைவனை நமது உறவினனாக மதித்து, அவனிடம் அன்பு செலுத்தி உய்யவேண்டும் என்று அறிவுரை கூறும் பாடல். உற்றவன்=உயிர்களோடு இணைந்து நிற்பவன்; உலப்பு=அழிவு; எங்கும் ஒழிவற நின்று=எந்த இடமும் எஞ்சாமல் அனைத்து இடங்களிலும் நிறைந்து நின்ற; நணுகிய=நெருங்கிய; மாணி= பிரம்மச்சாரி, இங்கே சிறுவன் மார்க்கண்டேயன்;

உற்றவன்காண் உறவெல்லாமாவான் தான்காண் ஒழிவற நின்றெங்கும் உலப்பிலான் காண்

புற்றரவே ஆடையுமாய்ப் பூணுமாகிப் புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான் தான் காண்

நற்றவன் காண் அடியடைந்த மாணிக்காக நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவடியினால்

செற்றவன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (6.93.9) அப்பர் பிரான் பெருமானை எரிவீசி இரவாடும் இறைவர் என்று குறிப்பிடுகின்றார். வளம்=வெண்மை; தவள நீறு=வெண்முத்து போன்று வெண்மை நிறத்தில் உள்ள திருநீறு; வீடாத=கெடாத, எத்தனை பிறவிகள் எடுத்த பின்னரும் தான் கெடாமல் உயிரினைப் பற்றி இருக்கும் வினைகள்; வீட்டுதல்=கெடுத்தல்; கண் காட்டா=கடைக் கண்ணினால் நோக்கி; கருவரை=கருமை நிறத்தில் அமைந்துள்ள மலை; காஞ்சி=மேகலை எனப்படும் இடுப்பினில் அணியும் ஆபரணம்; எண் காட்டா=அளவில்லாத; இந்த பாடலில் பிராட்டி கலந்து காண்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். மாதொரு பாகனாக இருக்கும் பெருமானின் உடலில் இடது பாகத்தில் உள்ள பிராட்டி தானும் பெருமானுடன் கலந்து நடனம் ஆடுவதுடன், தனது கடைக் கண்ணினால் பெருமான் ஆடும் நடனத்தையும் கண்டு களிக்கின்றாள் என்று கூறுகின்றார். பெருமானின் நடனத்தை மிகவும் விருப்பத்துடன் காணும் தேவி, பெருமானுடன் கலந்ததால், நடனத்தைக் கண்டு மகிழும் வாய்ப்பினை இழந்து விடாமல், தான் பெருமானுடன் கலந்து நடனம் ஆடிய போதும் அவரது நடனத்தைத் தனது கடைக் கண்ணால் கண்டு களிக்கின்றாள் என்று மிகவும் நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். குளிர்ச்சியைத் தரும் சந்தனமும், வெண்முத்து போன்று வெண்மையான நிறத்தில் உள்ள திருநீறும், இலைகள் இடையே வைத்துக் கட்டப்பட்ட பிறை வடிவத்தில் அமைந்துள்ள கொன்றை மாலையும் சூடிக் கொண்டுள்ள இறைவனை, கார் காலத்தில் மகிழ்ந்து ஆடும் மயில் போன்ற சாயலை உடையவளும் காஞ்சி என்று அழைக்கப்படும் மேகலை ஆபரணத்தைத் தனது இடுப்பினில் அணிந்தவளும் ஆகிய உமையம்மை, பெருமானின் உடலில் கலந்து தானும் பெருமானுடன் இணைந்து நடனம் ஆடினாலும், தனது கடைக் கண்ணால் நோக்கி மகிழும் வண்ணம், எண்ணற்றவர்கள் இறந்த இடமாகிய இடுகாட்டினை அரங்கமாகக் கொண்டு தீப்பிழம்பினை ஏந்திய கையினை வீசி உலகம் ஒடுங்கிய நிலையிலும் இருளில் நடமாடும் வல்லமை பெற்றவர் சிவபெருமான் ஆவார். இத்தகைய திறமை வாய்ந்த பெருமான் உறையும் தலமாகிய திருவெண்காட்டின் பெயரினை, வெண்காடே வெண்காடே என்று நீர் சொல்வீராயின், பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்து உம்மை விட்டு நீங்காது நின்ற வலிய வினைகள் கெட்டுப்போய் உம்மை விட்டு விலகும் நிலை ஏற்படும் என்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

தண் காட்டச் சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறுங்கொன்றை மாலை சூடிக்

கண் காட்டாக் கருவரை போல் அனைய காஞ்சிக் கார் மயிலம் சாயலார் கலந்து காண

எண் காட்டாக் காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவாடும் இறைவர் மேய

வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டலாமே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (6.95.2) அப்பர் பிரான் பெருமானை அனலாடி என்று அழைக்கின்றார். வெம்ப=நாம் வருந்தும்படி; வெய்ய=கொடிய, வருத்தம் செய்விக்கும், குறித்த காலத்தில் மிகவும் விரைவாக வந்து துன்பம் தருபவன் கூற்றுவன்; உடனிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக நம்மைத் துன்புறுத்துவது வினைகள். இவ்வாறு தங்களுக்கே உரித்த தன்மையில் வேறு வேறு வகையில் நம்மை துன்புறுத்தும் கூற்றம் மற்றும் வினைகளிலிருந்து நம்மைக் காப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பாடலில் தன்னைக் குறிப்பிடும் இடங்களில், நான் என்பதைத் தவிர்த்து நாம் என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். சிவபெருமான் தனது சிந்தையில் புகுந்ததால் தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறும் அப்பர், அந்த மாற்றங்களால் மற்றவர்களை விட தான் ஒரு உயர்ந்த நிலையில் இருப்பதை உணர்த்தும் வகையில் நாம் என்று தன்னை இறுமாப்புடன் கூறுகின்றார். இந்த பாடலில் பைய நையும் வினைப்பகை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எண்ணற்ற, பழைய பிறவிகளில் நாம் சேர்த்துள்ள வினைகளை ஒரே பிறவியில் கழிக்க வேண்டும் என்றால் அது முடியாத காரியம். மேலும் அவ்வாறான நிலை ஏற்பட்டால், அந்த வினைப் பயன்களான இன்ப துன்பங்களைத் தாங்கவும் நம்மால் முடியாது. எனவே தான் நம் மீது கருணை கொண்டுள்ள இறைவனால், இந்த வினைகள் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியின் பயனை உயிர் உடலினை விட்டு பிரிந்த பின்னர் சொர்க்க நரகங்களில் அனுபவிக்கின்றது,; எஞ்சிய பகுதி சஞ்சித வினையாக பின்னர் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு கொண்டு செல்லப் படுகின்றது. சிவபெருமானை, நாம் எல்லா வகையான உறவாகவும், எல்லாப் பொருட்களாகவும் கருதி நாம் வாழ்ந்தால் நமக்குக் கிடைக்கக்கூடிய பயன்களை இந்தப் பாடலில் அப்பர் பிரான், தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலமாக உணர்த்துகின்றார். சிவபிரான் தனது சிந்தையில் பொருந்தியதால் தனக்கு கிடைத்த பலன்களை விவரிக்கும் அப்பர் பிரான், இத்தகைய பலன்கள் பெற்றமையால், உலகத்தில் எது நடந்தாலும் தனக்கு அக்கறையில்லை, கவலையில்லை என்பது போல் பேசுகின்றார்.

வெம்ப வருகிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப் பகையும் பைய நையும்

எம்பரிவும் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கெழிலென் ஞாயிறு எளியோம் அல்லோம்

அம்பவள செஞ்சடை மேல் ஆறு சூடி அனலாடி ஆன் அஞ்சும் ஆட்டுகந்த

செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர் செவ்வான வண்ணர் என் சிந்தையாரே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (6.99.2) அப்பர் பிரான் பெருமானை நோக்கி அனலாடினாய் என்று கூறுகின்றார். அங்கம்=உயிரற்ற உடலின் பாகங்கள், எலும்பு, எலும்புக்கூடு. எலும்பு மாலை அணிந்தவன் என்று பல பதிகங்களில் சிவபெருமான் குறிப்பிடப் படுகின்றார். உலகமெல்லாம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் ஊழிக் காலத்தின் போது பிரமனும், திருமாலும், தங்கள் கடமைகள் முடிந்தன என்று இறக்க, அவர்கள் இருவரது எலும்புக் கூடுகளை, அணிந்தவனாய், ஒடுங்கிய உலகம் மீளத் தோன்ற, சங்கற்பம் செய்து கொண்டு இறைவன் வீணையை வாசித்துக் கொண்டு இருப்பான் என்று கூறுவார்கள்;.

அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆனேறு ஊர்ந்தாய்

பங்கம் ஒன்றில்லாத படர் சடையினாய் பாம்போடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்

சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்

சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய தேவதேவே

விண்டார்=விலகிச் சென்றவர்; வைதீக நெறியில் ஒழுகி வந்த திரிபுரத்து அரக்கர்கள், திருமால் செய்த மாயத்தால் வைதீக மதத்தை விட்டொழிந்து நாத்திகம் பேசுபவர்களாக மாறினார்கள். இதனை சிலர் திருமால் எடுத்த புத்த அவதாரம் என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறு திருபுரத்து அரக்கர்கள் மனம் மாறிய செய்தி பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. திருவிடை மருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.95.02) திருஞானசம்பந்தர் திரிபுரத்து அரக்கர்களை கருதார், சிவநெறியில் கருத்தினில் கொள்ளாதவர்கள் என்று குறிப்பிடுகின்றார். அன்பின் வழியாகிய சிவநெறியின் உயர்ந்த தன்மையை கருதாமல், சிவநெறியை பின்பற்றாமல் அனைவர்க்கும் பகைவர்களாக விளங்கிய திருபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்த சிவபெருமான், எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் உலவுகின்றார். இடைமருது தலத்தினைத் தான் உறைகின்ற இடமாகக் கொண்டுள்ள பெருமானைத் தொழுது வணங்கும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தேய்ந்துவிடும், மேலும் அத்தகைய அடியார்கள் சிறந்த புகழினையும் அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருதார் புரம் எய்வர்

எருதே இனிதூர்வர்

மருதே இடமாகும்

விருதாம் வினை தீர்ப்பே

திருமால் செய்த மாயத்தால் திரிபுரத்தில் வாழ்ந்த அரக்கர்கள் நீசர்களாக மாறினார் என்று நீலக்குடி பதிகத்தின் பாடலில் (5.72.5) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முதலில் சிவபிரானை வணங்கி, வேத நெறிக்கு மதிப்பு கொடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்த காரணத்தால் சிவபிரான் அவர்களுடன் சண்டை செய்ய விரும்பவில்லை. திருமாலும் நாரதரும் சேர்ந்து செய்த சூழ்ச்சியால், அவர்கள் மனம் பேதலித்து, புத்த சமயத்தைச் சார்ந்து சிவபிரானை நிந்திக்க தொடங்கினர். இதனால் சிவபிரான் அவர்களை அழிக்க முற்படுகின்றார்.

நேச நீலக்குடி அரனே எனா

நீசராய் நெடுமால் செய்த மாயத்தால்

ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய்

நாசமானார் திரிபுர நாதரே

திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் முதலில் வேதநெறியை கடைப்பிடித்து சிவபிரானை தொழுது வாழ்ந்ததாகவும், அதனால் அவர்களுடன் போர் செய்ய சிவபிரான் உடன்படாத நிலையும், திருமால் வேதியர் உருவம் கொண்டு திரிபுரங்கள் சென்று அரக்கர்களின் மனதில் மயக்கத்தை தோற்றுவித்து அவர்களின் சிந்தனையைக் கெடுத்து வேதநெறியிலிருந்து வழுவி சிவ நிந்தனை செய்யும் அளவுக்கு அவர்களை கெடுத்ததுவும், பின்னர் சிவபிரான் அவர்களை அழித்த வரலாறும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்றில் விளங்கும் திருமாலின் பங்கு, நம்மாழ்வாரால் திருவாய்மொழி பாசுரத்தில் (5.10.4) கூறப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில், திரிபுரத்து அரக்கர்களை அழிக்கின்ற நோக்கத்தினில் சிவனும் திருமாலும் வேறு அல்லாமல் ஒன்றாக விளங்கி செயல்பட்டனர் என்று நம்மாழ்வார் கூறுவதையும் காணலாம்

கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்கவாறும் கலந்து அசுரரை

உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்

வெள்ள நீர்ச் சடையானும் நின்னுடை வேறு அலாமை விளங்க நின்றதும்

உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே

விண்டார்=வைதீக நெறியிலிருந்து விலகிச் சென்று, ஏனைய உயிர்களின் மீது அன்பு பாராட்டாமல் பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்; விமலன்=இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து விலகியவன்; இண்டார்=இண்டைச் செடிகள் நிறைந்த; இண்டை=ஒரு வகை முட்செடி; சுடுகாட்டினில் காணப்படுவது; பெருமான் நடனமாடியது பிரளய காலத்தில் என்பதால் உலகின் அனைத்து உயிர்களும் அழிந்த நிலையில் பெருமான் நடனமாடுகின்றார். எனினும் உலகமே சுடுகாடாக காட்சி அளித்தமையால் சுடுகாடு என்றும், சுடுகாட்டின் அடையாளமாக இண்டைச் செடிகள் இருப்பதால், இண்டைச் செடிகள் நிறைந்த சுடுகாட்டினில் நடனம் ஆடிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவள் பிராட்டி என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வண்டார்குழலி என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. தேன் நிறைந்த புதுமலர்களை அம்பிகை சூட்டிக்கொண்டுள்ள தன்மையால் வண்டுகள் மொய்க்கின்றன என்றும், தேவியின் கூந்தலின் இயற்கை நறுமணம் காரணமாக வண்டுகள், தேன் நிறைந்த மலர்களின் இருப்பிடம் என்று தவறாக கருதி அந்த கூந்தலை அணுகுகின்றன என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை:

சிவநெறியிலிருந்து விலகி பலருக்கும் பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்தவனும், இயற்கையாகவே மலங்களிலிருந்து விலகியவனும், இண்டைச் செடிகள் நிறைந்த சுடுகாட்டினில், பிரளய காலத்தினில் உலகமே சுடுகாடாக விளங்கிய நிலையில் பிரளயத்தீயினில் நின்று நடமாடுபவனும் ஆகிய பெருமான், வண்டுகள் மொய்ப்பதும் கருமை நிறமும் மென்மையும் இணைந்ததும் ஆகிய கூந்தலை உடையவளாகிய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவளும் ஆகிய பெருமான் உறையும் நகரம் தென்குரங்காடுதுறை என்பதாகும்.

பாடல் 3:

நிறைவில் புறங்காட்டிடை நெரிழையோடும்

இறைவில் எரியான் மழுவேந்தி நின்றாடி

மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும்

குறை இல்லவனூர் குரங்காடுதுறையே

விளக்கம்:

நிறைவில்=நிறைவு அற்ற; இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இடமில்லை என்று சொல்ல முடியாத வண்ணம் எப்போதும் மேன்மேலும் இடம் உடையதாக விளங்கும் சுடுகாடு என்பதால், என்றும் நிறையாத காடு என்ற பொருள்பட, நிறைவில் காடு, என்று இங்கே கூறுகின்றார். பெருமான் கனலில் நின்று நடனம் ஆடுவது பிரளய காலத்து நள்ளிருள் என்பதால் உலகினில் உள்ள அனைத்து உடல்களும் எரிந்து அழிந்த பின்னர் இனியும் இறந்து போவதற்கு உயிருடன் கூடிய உடல் ஏதுமில்லை என்பதால், அந்த காட்டினில் இடம் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை; எனினும் சுடுகாட்டின் பொதுவான தன்மை குறித்து நிறைவில் புறங்காடு என்று கூறுகின்றார். நேரிழை=தேர்ந்தெடுத்த ஆபரணங்களை அணிந்த பார்வதி தேவி; இறைவில்=இறைவு அற்ற; இறைவு=அழிவு, இறந்து படுதல்; எரியான்=தீப்பிழம்பைத் தனது கையினில் ஏந்தியவன்; பெருமானது கையில் இருக்கும் தீச்சுடர் அழிவின்றி எப்போதும் எரிந்து கொண்டே இருப்பதால், இறைவில் எரி என்று சொல்லப் படுகின்றது. ஏத்தும்=புகழ்ந்து பாடும்; பெருமான் குறையே இல்லாதவன் என்றும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. தானவர்=அசுரர்;

தனக்கு வாய்த்த பொருள் ஏதாயினும் அதனை ஏற்றுக்கொண்டு போதும் என்ற மன நிறைவுடன், குறை இல்லாமல் வாழ்ந்தால், நமக்கு வாழ்க்கையில் பல துன்பங்கள் ஏற்படாது என்பதை நமக்கு உணர்த்தும் முகமாக, கோவண உடை. எருது வாகனம். காடு உறைவிடம், கபாலம் உண்கலன், என்று சிவபிரான் இருக்கின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. இதனால் தான் எந்த குறையினையும் நிறையாக ஏற்றுக் கொள்ளும் பண்பு கொண்ட சிவபிரானை குறைவிலா நிறைவே என்று அருளாளர்கள் அழைத்தனர் போலும். திருமங்கலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.10.04) சம்பந்தர் குறைவிலா நிறைவே என்று பெருமானை அழைக்கின்றார். உயிரின் செயல்களை இராஜசம் தாமசம் சாத்துவீகம் ஆகிய மூன்று குணங்களே தீர்மானிக்கின்றன. ஆனால் பெருமான் இந்த மூன்று குணங்களைக் கடந்தவன்; உணர்வுகளைக் கடந்தவன். எனவே தான் குணமிலி என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அதனால் பெருமான் குணம் ஏதும் இல்லாதவன் என்று நாம் கருதுதல் தவறு. அவன் மேலே குறிப்பிட்ட மாயாகாரிய குணங்களுக்கு மாறாக அருட்குணங்கள் எட்டு கொண்டவன். எனவே தான் குணமில் குணமே என்று பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, எல்லையற்ற ஆற்றல் உடைமை, வரம்பிலாத இன்பம் உடைமை, ஆகிய சிறந்த எட்டு குணங்களை உடையவனாக இறைவன் திகழ்கின்றான். முன்னெறி=எல்லா நெறிகளுக்கும் முதன்மையான சிவநெறி; பாரிடம்=பூதகணம்;

பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம்

மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி

குறைவிலா நிறைவே குணமில் குணமே என்று

முறையினால் வணங்கும் அவர் முன்னெறி காண்பரே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.1) திருஞானசம்பந்தர் பெருமானை ஊனமில்லி என்று குறிப்பிடுகின்றார். எந்தவிதமான குறையும் இல்லாமல் நிறைவான குணங்களுடன் இருக்கும் பெருமான் என்று உணர்த்துகின்றார். சசி என்றால் சந்திரன் என்று பொருள். பெருமான் அணிந்துள்ள சங்குத்தோடு சந்திரன் போன்று வெண்மை நிறத்தில் காணப்படுவதாக கூறுகின்றார். வெண்மழு=பயன்படுத்தப்படாமையால், இரத்தகறை தோயாமல் வெண்மை நிறத்துடன் உள்ள நிலை;

விடையவன் விண்ணுமண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாட்

படையவன் பாய்புலித்தோல் உடை கோவணம் பல்கரந்தைச்

சடையவன் சாம்வேதன் சசி தங்கிய சங்க வெண்தோடு

உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.014.01) குறைவிலர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். காட்டினைத் தவிர்த்து வேறு எந்த இடத்தையும் தான் உறையும் இடமாக ஏற்றுக்கொள்ளாத இறைவன், அதனால் எந்த குறையும் இல்லாதவராக விளங்குகின்றார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்

ஓரிடம் குறைவிலர் உடையர் கோவணம்

நீரிடம் சடை விடை ஊர்தி நித்தலும்

பாரிடம் பணி செயும் பைஞ்ஞீலியே

மிகவும் வல்லமை வாய்ந்த சிவபெருமான், எந்த விதத்திலும் குறைவு இல்லாதவர். ஆயினும் அவர் கோவணம் அணிந்து காட்சி தருவது வஞ்சனையான செயல் ஆகும் என்று நகைச்சுவையாக சம்பந்தர் குறிப்பிடும் பாடல் பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.121.1) முதல் பாடலாகும். கடறு=காடு; படிறு=வஞ்சகம்: கொடிறனார்=உறுதி படைத்தவர். காற்று போல் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கும் சிவபெருமானை, காற்றுளார் என்று இங்கே கூறுகின்றார்.

இடறினார் கூற்றைப் பொடி செய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த

கடறினார் ஆவர் காற்றுளார் ஆவர் காதலித்து உரை தரு கோயில்

கொடிறனார் யாதும் குறைவிலார் தாம் போய்க் கோவணம் கொண்டு கூத்தாடும்

படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரான் ஆகிய இருவரும் சமகாலத்தவர் என்பதை நாம் அறிவோம். தனது ஐந்தாவது யாத்திரையின் ஒரு பகுதியாக திருஞானசம்பந்தர் இந்த தலம் வந்தடைந்தார் என்பதை நாம் முன்னுரையில் கண்டோம். இதன் பின்னரே அவர் திருமறைக்காடு செல்கின்றார். இவர்கள் இருவரும் திருமறைக்காடு தலத்தில் ஒன்றாக இருந்ததையும் அதன் பின்னர் அப்பர் பிரான் வாய்மூர் சென்று திருமறைக்காடு திரும்பிய பின்னர், பைஞ்ஞீலி நோக்கி பயணம் செய்ததையும் பெருமான் அவருக்காக காத்திருந்து பொதிசோறு அளித்த விவரங்களையும் நாம் முன்னமே கண்டோம். எனவே, இவர்கள் இருவரில் ஞானசம்பந்தரே இந்த தலத்திற்கு முதலில் வந்து பதிகம் பாடினார் என்பதை நாம் உணர்கின்றோம். பின்னர் வந்த அப்பர் பிரான், இந்த தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடலில் குறையேதும் இல்லாத பெருமானின் தன்மையை குறிப்பிடப்பட்டதை கவனித்து தானும் அவ்வாறே பாடவேண்டும் என்று நினைத்தார் போலும். உடையர் கோவணம் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (5.41.1) குறையேதும் இல்லாதவர் பெருமான் என்று அப்பர் குறிப்பிடுகின்றார்.

உடையர் கோவணம் ஒன்றும் குறைவிலர்

படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்

சடையில் கங்கை தரித்த சதுரரை

அடைய வல்லார்க்கு இல்லை அவலமே

குறைவிலாது நிறைந்து நிற்கும் தன்மையை நிறைவார்ந்த நீர்மை என்று அப்பர் பிரான் குறிப்பிடும் திருத்தாண்டகப்பாடல் (6.3.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னை நெற்றிமேல் கண் ஒன்று உடையான்தன்னை

மறையானை மாசொன்று இலாதான்தன்னை வானவர் மேல் மலரடியை வைத்தான் தன்னைக்

கறையானைக் காதார் குழையான் தன்னைக் கட்டங்கம் ஏந்திய கையினானை

இறையானை எந்தை பெருமான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

இந்த குறிப்பு அப்பர் பிரான் ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினை (6.09.08) நமக்கு நினைவூட்டுகின்றது. நிறை=அடக்க குணம், கற்பு; ஒற்றியூர்=அடமானம் வைக்கப்பட்ட ஊர். ஒன்றாலும் குறைவில்லை என்ற தொடர் மூலம் சிவபிரான் குறையேதும் இல்லாதவர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தேர், குதிரை, யானை போன்ற வாகனங்கள் இல்லை என்ற குறையோ (வாகனம், எருது), உயர்ந்த பட்டாடைகள் இல்லை என்ற குறையோ (உடை, கோவணம் மற்றும் தோலாடை), பொன்னாபரணம் இல்லை என்ற குறையோ (அணிகலன்கள், நாகம் மற்றும் எலும்பு மாலை), உயர்ந்த மாலைகள் இல்லை என்ற குறையோ (எலும்பு மாலை அல்லது தலைமாலை), வாசனை தரும் பொடிகள் பூசவில்லை என்ற குறையோ (மேனியில் பூசுவது திருநீறு), தமது தலமாகிய ஒற்றியூர், அடமானம் வைக்கப்பட்டு உள்ளது என்ற குறையோ இல்லாமால் இருப்பவர் சிவபெருமான் என்று உணர்த்தப்படுகின்றது.

ஒன்றாலும் குறைவில்லை ஊர்தி வெள்ளேறு ஒற்றியூர் உம் ஊரே உணரக் கூறீர்

நின்று தான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர்

என்றும் தான் இவ்வகையே இடர் செய்கின்றீர் இருக்குமூர் இனியறிந்தோம் ஏகம்போ

அன்றித் தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

மேலே குறிப்பிட்ட பாடல் பெருமான் பால் தீராத காதல் கொண்ட தலைவியின் கூற்றாக அமைந்த அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். தனக்கு காளை தான் வாகனம் என்ற குறையோ, அல்லது தமது ஊர் அடமானம் வைக்கப்பட்டுள்ளது என்ற குறையோ இல்லாத நீர், உமது ஊர் ஒற்றியூர், அடமானம் வைக்கப்பட்டது ஏன் என்பதை எமக்கு உணர்த்தாமல் இருக்கின்றீர்; எனது இல்லத்தில் இருக்கும் போது ஒன்றும் செய்யாமல் நிற்கின்றீர்; ஆனால் போகும்போது உனது நெற்றியில் உள்ள கண்ணினைக் காட்டி, எமது அடக்க குணத்தை கைப்பற்றி நான் உம்மை காதல் செய்யுமாறு செய்கின்றீர்; நீர் எப்போதும் இவ்வகையில் எங்களுக்கு துன்பம் இழைக்கின்றீர்; உமது ஊர் யாது என்பதை நாம் அறிந்துகொண்டோம்; என்னை உடன் அழைத்துச் செல்லாமல் நீர் இப்போது செல்லும் இடம் ஏகம்போ (காஞ்சி நகரத்தில் உள்ள ஏகம்பரநாதர் கோயில், ஏகம்பம் என்று தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப் படுகின்றது). ஆமாத்தூர் தலைவராகிய நீர் அழகியரே என்று தலைவி கூறுவதாக அமைந்த பாடல்.

குறைவிலா நிறைவே என்று பெருமானை தனது ஆவடுதுறை பதிகத்தில் (7.70.6) அழைக்கும் சுந்தரர், பெருமானைத் தவிர்த்துத் தனக்குத் துணையாக, உறவாக, வேறு எவரும் இல்லாததால் பெருமான் தான், அஞ்சல் என்று சொல்லி தனக்கு அருளவேண்டும் என்று கூறுகின்றார். நம் அனைவருக்கும் கூட, இறைவன் ஒருவன் தான் துணை. என்பதை உணர்த்தும் பாடல். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் தான் உறவாகக் கருதாததால், தனது பிழை ஒன்றினை பொறுத்து அருளினால் இறைவனுக்கு தாழ்வு ஏதும் ஏற்படாது என்று இறைவனுக்கே உணர்த்தி, தனது பிழைகளை பொறுக்குமாறு இறைவனை பணியும் பாடல்.

குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்காது உடையானே

உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே

சிறை வண்டார் பொழில்சூழ் திருவாரூர்ச் செம்பொனே திருவாவடுதுறையுள்

அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் கோதிலா அமுது என்று குறிப்பிட்டு மணிவாசகர் அமுதமும் குறை உடையது என்று நமக்கு உணர்த்துகின்றார். பொதுவாக அமுதம் இறப்பினை தவிர்க்கக் கூடியது என்ற கருத்து உள்ளபோதிலும், அமுதம் உண்ட தேவர்கள் எவரும் இறப்பிலிருந்து தப்பிக்கவில்லை: மேலும் அமுதம் தோன்றிய இடம், நஞ்சு தோன்றிய பாற்கடலாகும். இந்த இரண்டு குற்றங்களை உடையது அமுதம். ஆனால் சிவபெருமானோ எத்தகைய குறையும் இல்லாதவர். அதனால் தான் அவரை கோதிலா அமுது என்று இங்கே மணிவாசகர் குறிப்பிடுகின்றார். குறையேதும் இல்லாமல் நிறைவாக இருப்பவனும், குற்றங்கள் இல்லாத அமுதமாக இருப்பவனும், முடிவு என்பது இல்லாமல் எப்போதும் எரியும் சுடராக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான், வேதத்தின் சொற்களாகவும், அந்த சொற்களின் பொருளாகவும் தனது மனதினில் நிலை பெற்று இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார். கரைகள் ஏதும் இல்லாத நீர் பாய்வது போன்று, தங்கு தடை ஏதும் இன்றி தனது சிந்தையில் ஊறும் சிவபெருமான், தனது உடலில் இடம் கொண்டமையால், தான் இனிமேல் இறைவனிடம் ஏதும் வேண்டிப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இங்கே உணர்த்துகின்றார்.

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே

மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே

சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே

இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே

கபிலதேவர் அருளிய சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை (பதினோராம் திருமுறை) பதிகத்தின் பாடல் ஒன்றினில், இறைவனுக்கு குறை ஏதும் இல்லை என்று சொல்லப் படுகின்றது. நறை=தேன்; கோமளம்=அழகு; நக்கு=ஒளிவீசி; இறையே=சிறிதளவு; இறைவனைப் பழிப்பது போன்று புகழும் பாடல் இது. இளி=இளிவரல், இரக்கத்தினை கருத்தினில் கொண்டு செய்யப்படும் செயல்; தனது சடையினில் தான் ஏற்றுக்கொண்ட சந்திரன், பிறைச் சந்திரனாக ஒரு பகுதி மட்டும் ஒளியுடன் திகழ, இருண்டிருந்த மற்றொரு பகுதிக்கு ஒளி கொடுக்கும் பொருட்டு, ஒளியுடன் திகழும் தனது திருமேனியில் கோவணத்தைத் தவிர்த்து வேறு எந்த ஆடையும் இல்லாது இருப்பதே இறைவனின் ஒரே குறை என்று நகைச்சுவையாக கபிலதேவர் இந்த பாடலில் கூறுகின்றார். சூரியனின் ஒளியிலிருந்து தானே சந்திரன் ஒளி பெறுவதாக கூறுகின்றனர் அல்லவா. எனவே சூரியனின் ஒளியை விடவும் மிஞ்சிய உனது திருமேனியின் ஒளி கொண்டு சந்திரனுக்கு ஒளி கொடுக்க நினைத்தாயோ என்பதாக பெருமானிடம் கேள்வி எழுப்பும் பாடல்.

இறைக்கோ குறைவில்லை உண்டு இறையே எழிலார் எருக்கு

நறைக் கோமளக் கொன்றை துன்றும் சடைமுடி நக்கர் சென்றிப்

பிறைக்கோர் பிளவும் பெறு விளிக்கொண்டு எம் பிரான் உடுக்கும்

குறைக் கோவணம் ஒழிந்தால் பின்னை ஏதும் குறைவில்லையே

பொழிப்புரை:

என்றும் நிறையும் தன்மை அடையாமல், உயிரற்ற உடல்கள் எத்தனை வந்தாலும் அவைகளுக்கு இடம் அளிக்கும் தன்மையில் உள்ள சுடுகாட்டினைப் போன்று பிரளய காலத்தில் சுடுகாடாக மாறும் உலகமும் அனைத்து உயிரற்ற உடல்களுக்கும் இடம் அளிக்கின்றது. அந்த காட்டினில் பிரளயத் தீயினில் நின்ற வண்ணம் நடமாடும் பெருமான், தேர்ந்தெடுத்த நகைகளை அணிந்து கொண்டுள்ள உமையன்னையுடன் கூடியவனாக, என்றும் அழியாத தன்மையில் இருப்பவனாக, தனது கையில் மழு ஆயுதம் ஏந்தியவனாக இருக்கின்றான். அவனை தேவர்களும் அசுரர்களும் வேத மந்திரங்களை ஓதியவாறு புகழ்ந்து பாடுகின்றனர். எந்த விதமான குறையும் இல்லாமல், நிறைவான பண்புகளுடன் காணப்படும் இறைவன் உறைவது தென் குரங்காடுதுறை தலமாகும்.

பாடல் 4:

விழிக்கும் நுதன் மேல் ஒரு வெண்பிறை சூடித்

தெழிக்கும் புறங்காட்டிடைச் சேர்ந்து எரியாடிப்

பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவனூர் பொன்

கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே

விளக்கம்:

திருவஞ்சைக்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.4.6) சுந்தரர், பெருமான் இடுகாட்டில் கனலில் நின்று எரியாடுவதை குறிப்பிடுகின்றார். ஊழிக்காலத்து இருள் இரவு என்று குறிப்பிடப்படுகின்றது. ஊழி முடிவினில் இடுகாட்டெரியில் நடனம் ஆடுவது எதற்காக என்றும், இறந்தவர்களின் தலையில் பலி ஏற்பது எதற்காக என்றும், பெருமானை கேள்வி கேட்கும் சுந்தரர், அந்த செயல்களால் உமக்கு பயன் ஏதும் இல்லை என்பதால், நீர் எவ்வாறு அடியார்களுக்கு பல நன்மைகளை செய்ய முடியும் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

இரவத்திடு காட்டெரி ஆடிற்றென்னே இறந்தார் தலையில் பலி கோடலென்னே

பரவித் தொழும்வார் பெறுபண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்தருளாய்

உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு

அரவக்கடல் அங்கரை மேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே

திருக்கச்சி அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.10.1) சுந்தரர் பெருமானை, எரியாடி என்று அழைத்து அந்த எரியாடி உறைகின்ற தலம் கச்சி அனேகதங்காவதம் என்று குறிப்பிடுகின்றார். ஐங்கணையான்=மன்மதன், ஐந்து வேறுவேறு மலர்களை அம்பாக கொண்ட மன்மதன்; கலிக் கச்சி=ஆரவாரங்கள் நிறைந்த கச்சி மாநகரம். தேன் பால் நெய் முதலான பொருட்களைக் கொண்டு நீராட்டப்படுவதை மிகவும் விரும்பும் பெருமான் என்பதால் பெருமானின் சடை தேனையும் நெய்யினையும் விரும்புகின்றது என்று கூறுகின்றார். குலவான்= மேலானவன்; பெருமானைப் போன்று பிராட்டியும் குறைகள் ஏதும் இல்லாதவளாகவும், என்றும் மறையாமல் நிலைத்து நிற்பதாலும், அதாவது அழியாமல் இருப்பதாலும் பிராட்டியை குறையா மறையா மான் என்று குறிப்பிடுகின்றார் போலும். கையன் என்பதால் மான் என்பது தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மான்கன்றினை உணர்த்துகின்றது என்ற விளக்கமும் அளிக்கப்படுகின்றது. பெருமானைச் சார்ந்த மற்ற பொருட்கள் போன்று மான் கன்றும் என்றும் இறைவனை விட்டு பிரியாமல் இருப்பதாகவும் அளிக்கப் பட்டாலும், பிராட்டி என்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.

தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணையக்

கோனை எரித்து எரியாடி இடம் குலவானதிடம் குறையா மறையா

மானை இடத்ததோர் கையன் இடம் மதமாறு படப்பொழியும் மலை போல்

ஆனை உரித்த பிரானதிடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே

திருநாவலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.17.8) சுந்தரர் பெருமானை தீயாடி என்று அழைக்கின்றார். நா என்பது தலைமைப் பண்பை குறிக்கும் சொல். இதனின்றே நாயகன், நாயகி, நாதன், நாயன், நாச்சி என்ற் சொற்கள் பிறந்தன. நாயாடியார்=தலைவர்; வாயாடி= வாய்ச்சொல் பேசி, நீ எனக்கு அடிமை என்று உரிமை கோரி வழக்காடி தன்னை இறைவன் ஆட்கொண்ட செயலை இங்கே குறிப்பிடுகின்றார். வேய்=மூங்கில்; இங்கே மூங்கிலால் செய்யப்பட்ட வில்லினை உணர்த்துகின்றது.

வாயாடி மாமறை ஓதி ஓர் வேதியனாகி வந்து

தீயாடியார் சினக்கேழலின் பின் சென்றோர் வேடுவனாய்

வேயாடியார் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளும் கொண்ட

நாயாடியார்க்கு இடம் ஆவது நந்திரு நாவலூரே

கானாட்டுமுள்ளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.40.8) சுந்தரர் பெருமானை, தனது எட்டு தோள்களும் வீசி ஊழித்தீயினில் நின்று நடமாடுபவன் என்று குறிப்பிடுகின்றார். பாம்பாகிய அணிகலமும், அதனோடு சேர்ந்த வெண்மையான முப்புரிநூலும் பொருந்திய அழகிய மார்பினை யுடைய கடவுளும், தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம் ஆடுதற் பொருட்டு, குழைபொருந்திய காதில் கொடிய பாம்பையும் இட்டு, உடையைக் கோவணமாக உடுத்த அழகனும், கங்கை நீரால் குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், தழைத்தலை உடைய பசுமையான நிறத்தையுடைய செந்நெற் பயிரின் பக்கத்தில், பெரிய முத்துக்களை உடைய மென்மையான கரும்பின் ஆழ்ந்த கிடங்குகளின் அருகே வண்டுகள் அக்கரும்பைப் பொருந்தித் தேன் கூட்டை அமைக்கின்ற வயல்கள் சூழ்ந்த பண்ணைகளையுடைய திருக் கானாட்டுமுள்ளூரில் கண்டு வணங்கப்பெற்றேன்; இது என் தவப் பயன் இருந்தவாறு என்று சுந்தரர் வியக்கும் பாடல்.

இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின் ஈசன் தன் எண்டோள்கல் வீசி எரியாடக்

குழை தழுவு திருகாதில் கோளரவம் அசைத்துக் கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை

தழை தழுவு தண்ணிறத்த செந்நெல் அதன் அயலே தடந்தாள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே

கழை தழுவித் தேன் தொடுக்கும் கழனி சூழ் பழனக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.60.8) சுந்தரர் பெருமானை எரியாடீ என்று அழைக்கின்றார். அரையர்=அரசர்; ஐந்து பொறிகளும் ஒவ்வொரு வகையில் உயிரினை தங்களது வழியில் வசமாக்கி ஆட்சி செயவதால் ஏளனமாக அரசர் என்று கூறினார் போலும். வேறு வேறு வழியில் இழுத்துச் செல்ல அவை முயற்சி செய்வதால், எந்த வழி செலவது என்று புரியாமல் தான் தவிப்பதாக சுந்தரர் கூறுகின்றார். இவ்வாறு புலன்களின் ஆளுகையில் சிக்குண்டு தவிக்கும் தன்னை பெருமான் தான் காப்பாற்றி, தான் உய்யும் வகையினை தந்தருள வேண்டும் என்று சுந்தரர் வேண்டும் பாடல்.

ஐவகை அரையர் அவர் ஆகி ஆட்சி கொண்டொருகால் அவர் ஒருகால் நீங்கார்

அவ்வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து

செய்வகை அறியேன் சிவலோகா தீவணா சிவனே எரியாடீ

எவ்வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே

திருவலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.72.2) சுந்தரர் பெருமானை இரவெரியாடி என்று குறிப்பிடுகின்றார். விரும்பி நின்று என்ற தொடரினை, பெருமான் பலியேற்ற செய்கை மற்றும் இரவின் கண் தீயில் நின்று ஆடும் செய்கை ஆகிய இரண்டுக்கும் பொதுவாக கொண்டு பொருள் கொள்வது சிறப்பே. இரவு என்பது இங்கே பிரளய காலத்து இருளினை குறிப்பிடுகின்றது.

புரமவை எரிதர வளைந்த வில்லினன் அவன்

மரவுரி புலியதள் அரை மிசை மருவினன்

அரவுரி நிரந்து அயல் இரந்துண விரும்பி நின்று

இரவெரியாடி தன் இடம் வலம்புரமே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் எரியாடி என்று பெருமானை சுந்தரர் குறிப்பிடுகின்றார். பிரளய காலத்தில் அனைத்து உயிர்களின் உடல்களும் அழிகின்றன என்பதால், நரிகள் அந்த சமயத்தில் உலாவுவதில்லை. எனினும் சுடுகாட்டின் பொதுத் தன்மையை குறிக்க நரிகள் குதித்து விளையாடும் காடு என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் வரிபுரி என்று குறிப்பிடப்படும் யாழில் இசை வாசிப்பதாக பெருமான் இருக்கும் நிலையை சுந்தரர் உணர்த்துகின்றார். பஞ்ச பூதங்கள் உட்பட அனைத்தும் அழிந்த நிலையில், மலங்களுடன் பிணைந்து இருக்கும் உயிர்களுக்கு தங்களது மலங்களை கழித்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்க திருவுள்ளம் கொள்ளும் பெருமான், யாழின் ஒலி மூலம் நாதத்தை எழுப்பி அந்த நாதத்திலிருந்து ஆகாயம் முதலான ஐந்து பூதங்களையும் உருவாக்கும் செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது. எரியாடி என்பது பெருமானின் திருநாமமாக பெயர்ச்சொல்லாக வருகின்றது. எரி என்பது பிரளயத்தீயினை குறிக்கும்.

நரிபுரி காடரங்கா நடமாடுவர்

வரிபுரி பாட நின்றாடும் எம்மான் இடம்

புரிசுரி வரிகுழல் அரிவை ஓர் பால் மகிழ்ந்து

எரி எரியாடி தன் இடம் வலம்புரமே

திருவாசகம் அதிசயப்பத்து பதிகத்தின் பாடலில் (8.26.5) மணிவாசக அடிகளார், இரவு நின்றாடிய எம்மிறை என்று குறிப்பிடுகின்றார். பெருமானைப் புகழ்ந்து அடியார்களுடன் இணைந்திருப்பது, பல விதமான நறுமணங்கள் கொண்ட மலர்களை கொய்து பெருமானின் திருவடிகளில் தூவுதல், ஆகிய செயல்களைச் செய்து இறைவனின் அருளைப் பெறுவதில் நாட்டம் செலுத்தாமல், மகளிர் தரும் சிற்றின்பத்தை அனுபவிப்பதில் விருப்பம் உடையவனாக ஏங்கி நின்ற தன்னையும் ஒரு பொருட்டாக கருதி தனது அடியார்களுடன் என்னை இறைவன் சேர்த்து வைத்தது அதிசயம் என்று இறைவனின் கருணையை அடிகளார் இந்த பாடலில் வியக்கின்றார்.

பரவுவார் பாடு சென்று அணைகிலேன் பன்மலர் பறித்து ஏத்தேன்

குரவுவார் குழலார் திறத்தே ;நின்று குடிகெடுகின்றேனை

இரவு நின்று எரியாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற

அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

திருக்கோவையார் மதியுடம்படுத்தல் அதிகாரத்தின் பாடலில் (பாடல் எண் 52) மணிவாசக அடிகளார் அனலாட வல்லோன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். தலைவியின் தோழியுடன் ஏதாவது பேச்சு கொடுத்து தலைவியை எவ்வாறேனும் நெருங்க வேண்டும் என்ற அவாவுடன், தோழியிடம் இந்த வழியாக யானை ஏதேனும் வந்ததா, நீ கண்டாயா என்று தலைவன் வினவுவதாக அமைந்த பாடல். வேடனாக வேடம் தரித்து தலைவன் வந்தமையால், தான் வேட்டையாடிய மதயானை இந்த வழி வந்ததா என்று கேட்பது இயறகையாக அமைந்தது போல் தோன்றினாலும், எந்த யானையையும் கண்டறியாத தோழி, தலைவன் வேறேதோ பேசுவதற்கு முகாந்திரமாக இந்த கேள்வியை கேட்கின்றான் என்பதை புரிந்து கொள்கின்றான். அனலாட வல்லோனாகிய பெருமானின் அடியார்களுடன் தான் இணைந்து நின்ற் தான் இன்பம் அடைந்ததை நினைத்து தான் இறுமாந்து இருப்பதாக கூறும் தலைவன், அந்த இன்பத்தில் மேன்மேலும் திளைத்திருக்கும் தன்மையில் சிவத்தை நாடுவதாக உயிராகிய தலைவன் உணர்த்துகின்றான் என்பதே இந்த பாடலின் உட்பொருள். பொதுவாக யானையை ஆணவ மலத்திற்கு ஒப்பிடுவது சைவ சித்தாந்த மரபு. அந்த வகையில் இறைவனின் அருளால் விளைந்த சிவஞானம் என்ற அம்பினைக் கொண்டு மதயானையைத் தான் துரத்தியதாக தலைவன் கூறுகின்றான் என்றும், அந்த மத யானை தனது மூன்று உறுப்புகளில் (கண்கள், காதின் அருகே உள்ள இடம் மற்றும் ஆண்குறி) மதநீர் பொழிய அந்த மதநீரினைப் பருகும் நோக்கத்துடன் வண்டுகள் ஆரவாரத்துடன் சூழ்ந்து நிற்பதாகவும், இரண்டு தந்தங்கள் கொண்டதாகவும் காணப்படும் யானை ஆங்கே வந்ததா என்பதே கேள்வி. இந்த பாடலில் தலைவன், தலைவியின் தோழியை இருங்களியாய் என்று அழைப்பதை நாம் உணரலாம். சிவமாகிய தலைவியுடன் சேர்ந்து இருக்கும் காரணத்தால், திருவருளாகிய தோழியும் ஆனந்தத்தில் மூழ்கி இருப்பதை உணர்த்தும் விதமாக இருங்களியாய் என்று அழைக்கின்றான். தானும் அத்தகைய ஆனந்தத்தில் திளைத்திருக்க விரும்புவதாக குறிப்பால் தலைவன் உணர்த்துகின்றான். யானை ஆணவத்திற்கும், மதம் அதன் செருக்கினுக்கும், மதநீரை மொய்க்கும் வண்டுகள் செருக்கினை போகமாக நினைத்துக் கொண்டு அதனில் மயங்கி நிற்கும் உயிர்களுக்கும், யானையின் இரண்டு கொம்புகள் ஆணவ மலத்தின் இரண்டு கொடிய செய்கைகளுக்கும் உருவகமாக அமைந்துள்ளன. ஆணவ மலத்தின் இரண்டு கொடிய செய்கைகளாவன, தன்னை (ஆணவத்தை) வெளிக்காட்டமல் மறைத்துக் கொள்ளுதல் மற்றும் தலைவனை உயிர் காணவிடாமல், உணரவிடாமல் மறைத்தல் என்பன ஆகும். அடியார்களுடன் கூடி இருத்தலும், ஆணவத்தின் வழியே செல்லாமல் தொடர்ந்து இறைவன் பால் அன்பு வைத்து இருத்தலும், தலைவன் பக்குவம் அடைந்த நிலையை, திருவருளாகிய தோழிக்கும் புரிய வைத்து, தலைவியாகிய சிவத்துடன் கூடுவதற்கு தகுதி உடையவனாக தான் இருக்கும் நிலையை தலைவன் உணர்த்துகின்றான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. திருவருளே சிவத்திற்கு என்றும் பிரியாத இன்றியமையாத துணையாக இருப்பதை உணர்ந்த தான், அந்த சிவத்துடன் இணைய விரும்புகின்றேன் என்வதை தலைவன் திருவருளுக்கு உணர்த்துவதாக உட்பொருள் கொண்ட பாடல்.

இருங்களியாய் இன்று யான் இறுமாப்ப இன்பம் பணிவேர்

மருங்களியா அனலாட வல்லோன் தில்லையான் மலை ஈங்கு

ஒருங்களி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள்

கருங்களியார் மதயானை உண்டோ வரக் கண்டதுவோ

திருக்கோவையார் பகற்குறி அதிகாரத்துப் பாடலில் (பாடல் எண் 127) தென்தில்லையில் உறையும் எரியாடி என்று மணிவாசக அடிகளார் இறைவனை அழைக்கின்றார். ஆன்மாவை தலைவனாகவும் சிவத்தை தலைவியாகவும் திருவருளை தோழியாகவும் பாவித்து, அகப்பொருள் இலக்கணத்தை ஒட்டி எழுதிய பாடல்கள் கொண்ட கோவை இலக்கியப் பாடல் இந்த பாடல். சிவத்தின் பால் உயிர் செலுத்தும் அன்பினை உணரும் திருவருள் எவ்வாறு சிவத்துடன் கூட்டுகின்றது என்பதை உணர்த்தும் பாடல்கள் கொண்ட அதிகாரம் பகற்குறி என்று பெரியோர்கள் விளக்கம் அளித்துள்ளனர். குறமகளாகிய தலைவியின் தோழி, தனது ஊர் வந்தடைந்த தலைவனைப் பார்த்து, தலைவா இன்று எங்களுடன் இந்த சிற்றூரினில் தங்கி இருந்து, யாம் அருந்தும் தேனையும் கிழங்கையும் உண்டு களித்து இன்றிரவு எங்களுடன் தங்கி இருந்து, குறவர்கள் ஆடுகின்ற குரவைக்கூத்தைக் கண்டு களித்து, நாளை இயல்பாகவே பாசங்களில் இருந்து விடுபட்டவனும் தனது அடியார்களுக்கு முக்திநிலை அளிக்கும் ஆற்றல் உடையவனும், ஊழித்தீயினில் நடமாடுவானும் ஆகிய பெருமான் உறைகின்ற தில்லை நகர் சென்று சேர்வாயாக என்று கூறும் வண்ணம் அமைந்த பாடல். உயிருக்கு சிவாநுபூதி அளித்த திருவருள், மிகுந்த மகிழ்ச்சியுடன் உயிரினை நோக்கி அந்த சிவானுபவத்தை மேன்மேலும் பருகி களிக்க வேண்டும் என்று விரும்புகின்றது என்பதே இந்த பாடலின் தத்துவப் பொருள். உயிர் சிவானந்தத்தை அனுபவிப்பதில் உயிர் கொள்ளும் வேட்கையை விடவும், உயிர் தொடர்ந்து சிவானந்தம் அடைய வேண்டும் என்பதில் திருவருள் கொண்டுள்ள வேட்கை மிகவும் அதிகம் என்று உணர்த்தும் பாடல்.

தழங்கும் அருவி எம் சீறூர் பெரும இதுமதுவும்

கிழங்கும் அருந்தி இருந்து எம்மோடு இன்று கிளர்ந்து குன்றர்

முழங்கும் குரவை இரவின் கண்டு ஏகுக முத்தன் முத்தி

வழங்கும் பிரான் எரியாடி தெந்தில்லை மணி நகர்க்கே

திருக்கோவையார் உடன்போக்கு என்ற அதிகாரத்தின் கண் அமைந்த பாடல் (எண் 213) ஒன்றினில், பெருமானை மணிவாசகர் சிறந்தெரியாடி என்று அழைக்கின்றார். தலைவனுடன் தலைவியை சேர்த்த தோழியின் கூற்றாக அமைந்த பாடல். பெருமானே என்று தலைவனை விளித்து அழைக்கும் தோழி, தலைவனே எமது தலைவிக்கு பற்றுகோடாவர் இனி உன்னையன்றி பிறர் யாருமில்லர். எனவே நீ இனி இவளை உமது கண்மணி போன்று பாதுகாப்பீராக. இவள் பால் நீர் வைத்துள்ள அன்பு, இன்றுள்ள நிலையிலிருந்து மாறுபடுமாயின், அறம் பொருள் இன்பம் ஆகிய அனைத்தும் அழிந்தொழியும். எனவே அங்ஙனம் நிகழாத வண்ணம் என்றும் குறையாத அன்பினை தலைவி பால் வைத்து வாழவேண்டும் என்று கூறுவதாக அமைந்த பாடல். தலைவி தனது குடும்பத்தினை விட்டு, தலைவனுடன் இணைந்த வாழ்க்கை தொடங்க உடன்பட்டமையால், தலைவனின் பொறுப்பினை உணர்த்தும் பாடல்கள் கொண்ட தொகுப்பு. தலைவனே அடைக்கலம் என்று கருத்துடன் அவனுடன் செல்லும் தலைவியை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் தோழி கூற்றாக, சிவனருள் வாய்க்கப்பெற்ற ஆன்மா எவ்வாறு, அந்த அருளினை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் பாடலிது. திரிபுரத்து அரக்கர்கள் பலம் வாய்ந்த பறக்கும் கோட்டைகளில் அமர்ந்த வண்ணம் பல இடங்களுக்கும் பறந்து சென்று அழித்ததைக் கண்டு வான்வர்கள் நடுங்கினார்கள் என்றும் பெருமான் அந்த கோட்டைகளை அழித்து வானவர்களின் நடுக்கத்தை போக்கினான் என்றும் உணர்த்தும் குறிப்பு உணர்த்தும் தத்துவப் பொருளினை நாம் இப்போது காண்போம். திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகள் மூன்றும் உயிர்கள் பால் பொருந்தியுள்ள காமம், வெகுளி மயக்கங்கள்; இந்த மூன்று குணங்களும் நிரம்பிய மனிதர்களின் மனம், முழுவதும் அந்த குற்றங்களால் ஆட்கொள்ளப்பட்டு அந்த உயிர் கொண்டிருந்த நற்குணங்களை, ஈதல் முதலான் நற்பண்புகளை அழித்து விடுகின்றன. சிவமாகிய ஞானக்கனல், இந்த கொடிய குணங்களை அழித்து நன்மையை பயப்பாள்; எனவே சிவம் தனது ;மனதினில் நிலைத்து நிற்கும் வண்ணம் பாதுகாப்பது ஆன்மாவின் கடமையாக உள்ளது. அவ்வாறு ஆன்மா செயல்படாவிடில், உலகினில் அறம் திரிந்து அரிய மறைகளின் வழக்கமும் ஒழிந்து, கடல்களும் வற்றும் வண்ணம் இயற்கை உபாதைகள் நிகழும் என்று திருவருள் எச்சரிப்பதாக அமைந்துள்ள பாடல். எனவே ஆன்மா இறைவன் பால் உயிர் வைத்துள்ள அன்பு கெடாதவாறு நடந்து கொள்ளவேண்டிய அவசியத்தை திருவருள் உணர்த்துவதாக அமைந்த பாடல். வாசனாமலத்தின் காரணத்தால் அவ்வப்போது உயிரின் குற்றங்களை தலைதூக்கி, உயிரின் தன்மையை மாற்ற முயற்சி செய்தாலும், உயிர் தொடர்ந்து இறைவன் பால் அன்பு கொண்டு அவனது திருநாமத்தை பக்தியுடன் உச்சரித்து வந்தால், அந்த உயிர் இறைவனால் பாதுகாக்கப்படும். எனவே இறைவனைப் பற்றிய சிந்தனையிலிருந்தும் பஞ்சாக்கர மந்திரத்தை தியானம் செய்யும் தன்மையிலிருந்தும் உயிர் பிறழாது இருக்க வேண்டிய அவசியம் திருவருளால் உணர்த்தப் படுகின்றது.

பறந்திருந்து உம்பர் பதைப்பப் படரும் புரம் கரப்பச்

சிறந்து எரியாடி தென்தில்லை அன்னாள் திறத்துச் சிலம்பா

அறந்திருந்து உன்னருளும் பிறிதாயின் அருமறையின்

திறம் திரிந்தார் கலியும் முற்றும் வற்றும் இச்சேண் நிலத்தே

திருக்கோவையார் பொருட்வயிற்பிரிவு அதிகாரத்தின் பாடலில் (எண் 338) மணிவாசக அடிகளார் பெருமானை எரியாடும் இறை என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக தென்திசைக்கு காவலனாக இயமன் கருதப்படுவதால், தென் திசை விசேஷமாக கருதப்படுவதில்லை. வடதிசை கயிலாயம் இருக்கும் காரணத்தால் அது சிறந்த திசையாகவும் கருதப்படுகின்றது. ஆனால் இந்த நிலையை மாற்றி தென் திசைக்கு சிறப்பு சேர்க்கும் பொருட்டு, தென் திசையில் இருக்கும் திருப்பெருந்துறை தலத்தினில், தனது தலை மீது பெருமானின் கழலடி பதிந்தது என்று பெருமையுடன் ம்ணிவாசகர் கூறுகின்றார். இந்த குறிப்பு நமக்கு பெரியபுராணத்தில், ஏன் சுந்தரர் தென் திசையில் அவதாரம் செய்தார் என்று தனது சீடர்கள் கேட்ட கேள்விக்கு உபமன்யு முனிவர் அளித்த பதிலை குறிப்பிடும் பகுதியை நமக்கு நினைவூட்டுகின்றது. தென் திசையில், தில்லைச் சிதம்பரம் சீர்காழி, திருவையாறு திருவாரூர் கச்சி ஏகம்பம் போன்ற பல முக்கியமான தலங்கள் இருப்பதே காரணம் என்று உப்மன்யு முனிவர் கூறுவதாக சேக்கிழார் எடுத்து உரைக்கின்றார். ஏன் உப்மன்யு முனிவரே தென் திசையில் உள்ள தில்லைச் சிதம்பரத்தில் வளர்ந்தவர் தாமே. அவ்வாறு தனது தலையில், திருப்பாதத்தினை பதித்தவர் எரியாடும் இறைவன் என்றும்,. தென் திசையின் மீது உள்ள பழி தீரும் பொருட்டு இந்த செயலைச் செய்தார் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். பொன்னே என்று தலைவி தோழியால் விளிக்கப்படுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவிக்கு, தோழி தலைவன் இல்லற வாழ்க்கைக்குத் தேவையான பொருள் தேடுவதற்காக பிரிந்து சென்றுள்ளான் என்று சொல்லி, தலைவியை தேற்றும் முகமாக அமைந்த பாடல். வலிமையான களிற்றினில் தலைவன் சென்றதாக குறிப்பிட்டு, நாற்படைகளுடன் தலைவன் சென்று இருப்பதால், தலைவனின் நிலை குறித்து வீண் கவலை கொள்ளவேண்டாம் என்பதும் இங்கே குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. நேரிடையாக தலைவியிடம் தான் பிரிந்து செல்வதை உணர்த்தினால் தலைவி வாடும் தன்மையை பார்க்க சகியாதவனாக, தன் மூலமாக சொன்னதாக தோழி உணர்த்துகின்றாள் என்று உரை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கின்றனர். சிவத்தைப் பிரிந்து செல்வது ஆன்மாவின் கருத்து அல்ல என்பதே இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து. அதாவது உயிர் தனது கடமை கருதி பிரிகின்றதே தவிர, உயிர் சிவத்தின் பால் வைத்த அன்பினில் எந்த மாற்றமும் இல்லை என்றும், உயிர் சிவத்தின் பால் என்றும் குறையாத பிரியாத அன்பினை வைத்துள்ளது என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது.

தென் மாத்திசை வசை தீர்தரத் தில்லை சிற்றம்பலத்துள்

என்மா தலைக்கழல் வைத்து எரியாடும் இறை திகழும்

பொன்மாப் புரிசை பொழில் திருப்பூவணம் அன்ன பொன்னே

வன்மா களிற்றொடு சென்றனர் இன்று நம் மன்னவரே

இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலில் (எண் 344) மணிவாசக அடிகளார் பெருமானை தீ மேவிய நிருத்தன் என்று குறிப்பிடுகின்றார். ஆன்மா தனது நெஞ்சத்திற்கு தனது நிலையை உணர்த்துவதாக அமைந்த பாடல்; சிவத்தை விடவும் உயர்ந்த செல்வம் வேறேதும் இல்லை என்பதை உணர்ந்த ஆன்மா, ஏன் பல இடங்களிலும் அலைந்து திரிந்து பல துன்பங்களுக்கு உள்ளாகி, பொன்னைத் தேடி அலையவேண்டும் என வினாவுகின்றது. தானே (சிவமே) தன்னை (ஆன்மாவை) வந்தடைந்த உயர்ந்த செல்வமாகிய சிவத்தை, தனது இல்லத்திலிருந்தவாறே நுகர்ந்து அனுபவிப்பதை விட்டுவிட்டு, செல்வத்தைத் தேடி எதற்காக் வெங்கானில் நடக்க வேண்டும் என்பதை தான் உணர்ந்ததாக நெஞ்சினுக்கு அறிவுறுத்தும் ஆன்மா, இனி அவ்வாறு அல்லற்பட்டு வேறு செல்வத்தைத் தேடுவதற்கு தான் முனையேன் என்று கூறுவதாக அமைந்த பாடல். பூ மேவிய பொன்=செந்தாமரை மலர் மேல் உறைகின்ற திருமகள் போன்ற தலைவி; சிவமாகிய செல்வம் தான் ஆன்மாவை வாழவைக்கும் என்பது இந்த பாடலில் உணர்த்தப்படும் செயுதியாகும்.

தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய

பூ மேவிய பொன்னை விட்டுப் பொன் தேடியிப் பொங்கு வெங்கான்

நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சியன்ன

வாமே கலையை விட்டோ பொருள் தேர்ந்தெமை வாழ்விப்பதே

பரத்தையிற் பிரிவு என்ற அதிகாரத்தின் பாடலில் (எண்; 374) மணிவாசக அடிகளார் இறைவனை தீயாடி என்று அழைக்கின்றார். பிறதெய்வங்கள் பரத்தை என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. சிவமாகிய தலைவி, தன்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை நாடிய செயல் கண்டு சிவம் வெட்கம் அடைகின்றது என்றும் தலைவனின் இந்த செயலை மற்றவர் அறிந்தால் தலவனுக்கு பழி ஏற்படும் என்ற எண்ணத்தினால் தன்னிடமும் ம்றைத்தாள் என்று தோழியாகிய திருவருள் சொல்வதாக அமைந்த பாடல். என்னே இவளது கற்பின் திறம் என்று வியக்கும் தோழி, தலைவியின் கற்பு மற்றும் நாணம் ஆகியவை நமக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று கூறுகின்றாள். தலைவன் பிரிந்ததால், தலைவியின் நிலை, கூந்தலில் அணிந்து கொள்ளப்படாது செப்புப் பாத்திரத்தில் அடைத்து வைக்கப்பட்ட பூவின் நிலையை ஒத்தது என்று இந்த பாடலில் சொல்லப்படுகின்றது. வைகும்=வாடும்; சிவம் உயிரின் பால் கொண்டுள்ள அன்பின் மிகுதியால், உயிரின் குற்றங்களை தனது தோழியாகிய திருவருளுக்கு சொல்லாது மறைக்கீன்றது என்பதே உட்பொருள்.

வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயின் அன்ன

தீயாடி சிற்றம்பலமனை ஆடில்லை ஊரனுக்கு இன்று

யாமே பழியென நாடி என்கண் இங்ஙனே மறைத்தாள்

யாயாம் இயல்பு இவள் கற்பு நற்பால இயல்புகளே

திருவாலியமுதனார் தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.25.3) ஒள்ளெரியின் நடுவே பரந்து ஓங்கிய உருவுடன் பெருமான் நடனமாடுகின்றார் என்று கூறுகின்றார். ஒளிவீசும் தீப்பிழம்பின் நடுவே நடுவே நின்று பரந்து உருவுடன் நடனம் ஆடும் பெருமான் என்று குறிப்பிடுவதன் மூலம் கனலின் ஒளியை விடவும் பெருமானின் திருமேனி சிறந்த ஒளியுடன் திகழ்கின்றது என்பதை உணர்த்துகின்றார். இத்தகைய பெருமானின் சிறப்பினை உள்ளவாறு உணர்தல் மிகவும் அரிது என்றும் கூறுகின்றார்.

கள்ளவிழ் தாமரை மேல் கண்டு அயனோடு மால் பணிய

ஒள்ளெரியின் நடுவே உருவாய்ப் பரந்து ஓங்கிய சீர்த்

தெள்ளிய தண்பொழில் சூழ் தில்லை மாநகர் சிற்றம்பலத்

துள் எரியாடுகின்ற ஒருவனை உணர்வரிதே

இரட்டை மணிமாலை பதிகத்தின் பாடலில் காரைக்கால் அம்மையார் அனலாடி என்று பெருமானை அழைக்கின்றார். அரக்கன் இராவணனின் இருபது தோள்களை பெருமானே நீ நெரித்ததன் காரணம் யாது என்று அம்மையார் இந்த பாடலில் வினவுகின்றார். பின்னர் அருள் புரிந்தமையால் முதலில் ஏன் நெரித்தாய் என்று கேட்கின்றார். செய்த பிழைக்கும், கயிலாயத்தை அசைத்து எடுக்க முயற்சி செய்த பிழைக்கு தண்டனையும் பின்னர் சாமகானம் பாடியதற்கு பரிசும் அளித்த தன்மையும் இங்கே குறிப்பிடப்படுகின்றது. அருள் புரியும் தருணத்தில், இதன் முன்னம் தவறு செய்தவன் என்றும் தனக்கே தீங்கு செய்ய முயன்றவன் என்றும் பெருமான் பொருட்படுத்தாமல் அருள் புரியும் பாங்கு இங்கே உணர்த்தப் படுகின்றது.

அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்

முடித்தலமும் நீ முரித்தவாறென் முடித்தலத்தின்

ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்

நீறாடி நெய்யாடி நீ

அற்புதத்திருவந்தாதி பதிகத்தின் பாடலில் (11.4.85) காரைக்கால் அம்மையார், எரியாடி என்று பெருமானை குறிப்பிட்டு, அந்த பெரியானை கண்டால் தன்னிடம் ஏற்படவிருக்கும் மாற்றங்களை அமமையார் எடுத்துரைக்கும் பாடல் இது. எல்லாரினும் பெரியவனாகிய இறைவனை நேரில் கண்டால், தனது கண்கள் வேறொன்றையும் பாராமல் அவனது திருவுருவத்தையே தன்னில் நிறைத்துக் கொள்ளும்; தனது கைகள் ஒன்றாக பொருந்தி அவனை வழிபட்டுக் கொண்டே இருக்கும்; தனது சிந்தனை முழுவதும் இறைவன் குறித்த எண்ணங்களே நிறைந்து நிற்கும் என்று குறிப்பிடும் அம்மையார், தான் இறைவனை தேவதேவன் என்றும் எரியாடி என்றும் அழைத்து மகிழ்வேன் என்று கூறுகின்றார்.

கண்ணாரக் கண்டும் என் கையாரக் கூப்பியும்

எண்ணார எண்ணத்தால் எண்ணியும் விண்ணோன்

எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ

பெரியானைக் காணப்பெறின்

அற்புதத்திருவந்தாதி பதிகத்தின் இரண்டாவது பாடலில், காரைக்கால் அம்மையார் எரியாடும் எம்மானார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். படரும் நெறி=முக்தி உலகுக்கு செல்லும் வழி; என்பறாக்கோலம் என்று கங்காளராக பெருமான் இருக்கும் திருக்கோலத்தை உணர்த்துகின்றார் போலும். தனக்கு பெருமான் அருள் புரியாமல் இருப்பினும் தான் பெருமான் வைத்துள்ல அன்பு என்றும் மாறாது இருக்கும் என்று காரைக்கால் அம்மையார் உணர்த்துகின்றார். நல்காது ஒழியான் நமக்கென்று அவனது திருநாமத்தை தொடர்ந்து பிதற்றிய வண்ணம் தமது கண்களில் நிர் வழிய அவன் பால் அன்பு செலுத்த வேண்டும் என்று மணிவாசக அடிகளார் கூறுவது காரைக்கால் அம்மையாரின் சிந்தனையை உணர்ந்ததன் காரணமோ என்று தோன்றுகின்றது.

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்

படரும் நெறி பணியாரேனும் சுடருருவில்

என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்கு

அன்பறாது என் நெஞ்சு அவர்க்கு

நுதல்=நெற்றி; விழிக்கும்=விழித்துப் பார்க்கும் நெற்றிக்கண்; தெழிக்கும்=ஒலிக்கும், பூத கணங்களின் ஆரவாரம்; பழிக்கும் ப்ரிசே=பலராலும் பழிக்கப்படும் வண்ணம் பலியேற்றல்;

பொழிப்புரை:

விழித்துப் பார்த்து எதிர்ப்படும் பொருளை எரித்து அழிக்கும் ஆற்றல் வாய்ந்த நெற்றிக் கண்னை உடைய நெற்றியின் மேல் ஒரு வெண்பிறை சூடியவனும், பூத கணங்களின் ஆரவாரம் ஒலிக்கும் பிரளய காலத்து சுடுகாட்டினில் தீயினில் நின்று நடனமாடுபவனும், பலரும் பழிக்கும் வண்ணம் பல ஊர்கள் திரிந்து பலியேற்க அலைபவனும் ஆகிய சிவபெருமான் உறைவது பொன் கொழிக்கும் செல்வ வளம் வாய்ந்த தென் குரங்காடுதுறை தலமாகும்.

பாடல் 5:

நீறார்தரு மேனியன் நெற்றியோர் கண்ணன்

ஏறார் கொடி எம் இறை ஈண்டெரியாடி

ஆறார் சடை அந்தணன் ஆயிழையாளோர்

கூறான் நகர் போல் குரங்காடுதுறையே

விளக்கம்:

ஈண்டு=மிகுதியான; பிரளய வெள்ளத்தை வற்றி வடியச் செய்யும் தன்மை கொண்ட வடவாக்னி என்பதை குறிப்பிடும் முகமாக மிகுதியான தீ என்று குறிப்பிடுகின்றார். பிரளய காலத்தில் உலகம் முழுவதையும் கடல் பொங்கி மூழ்கடிக்க, அந்த வெள்ளத்தை வடவாக்னி வற்றச் செய்து விடுகின்றது. பின்னர் இந்த ஊழித்தீயும் பலமாக வீசும் காற்றினால் அணைக்கப்பட, அவ்வாறு தீயினை அணைத்த காற்று வெட்ட வெளியாகிய ஆகாயத்தில் ஒடுங்குகின்றது. இவ்வாறு பஞ்ச பூதங்களும் ஒன்றினில் ஒன்று ஒடுங்கும் தன்மை இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. ஏறு= எருது; ஆர்=பொருந்திய; ஏறார் கொடி=பெருமானின் கொடி எருதின் சித்திரம் பொருந்தியதாக உள்ளமை இடபக்கொடி என்று திருமுறை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. ஆயிழை=தேர்ந்து எடுத்த அழகிய ஆபரணங்களை அணிந்த பார்வதி தேவி; ஆறு=கங்கை நதி; அந்தணன் என்ற் சொல் இங்கே கருணையாளன் என்ற் பொருளில் கையாளப்பட்டுள்ளது. தணன்=குளிர்ச்சி பொருந்தியவன்; அம்+தணன்=அகத்தினுள்ளே குளிர்ச்சி பொருந்தியவன்; கருணையாளன்; கங்கை நதியைத் தனது சடையில் பெருமான் சூட்டிக்கொண்டது, பகீரதன் பால் தான் வைத்திருந்த கருணை மற்றும் உலகம் கங்கை வெள்ளப் பெருக்கினில் அடித்துக் கொண்டு அழிக்கப்படாமல் காபாற்றும் பொருட்டு என்பதை நாம் அறிவோம். பிராட்டியின் பால் பெருமான் கொண்டிருந்த அன்பே, பெருமான் பிராட்டிக்கு தனது உடலில் ஒரு பாகத்தை கொடுப்பதற்கு காரணமாக இருந்தது.

பொழிப்புரை:

தனது உடல் முழுவதும் திருநீற்றினை பூசியவனும், தனது நெற்றியில் ஒரு கண்ணினை உடையவனும், இடபக் கொடியினை உடையவனும், பிரளய காலத்து தீயினில் நின்று நடனம் ஆடுபவனும், கங்கை நதி பொருந்திய சடையை உடையவனும், தேர்ந்தெடுத்த நகைகளை அணிந்துள்ள தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில், கருணை உள்ளத்தவனாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமான் உறையும் நகரம் தென் குரங்காடுதுறை ஆகும்.

பாடல் 6:

நளிரும் மலர்க் கொன்றையும் நாறு கரந்தைத்

துளிரும் சுலவிச் சுடுகாட்டு எரியாடி

மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில்

குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே

விளக்கம்:

நளிரும்=குளிர்ந்த; சுலவி=கலந்து; மிளிரும்=ஒளியுடன் தோன்றும்; ஆர்த்தவன்=இறுக கட்டியவன்; தனது இடுப்பினில் கச்சையாக இறுகக் கட்டிக்கொண்ட தன்மை; மேவிய=நிலையாக பொருந்திய; கரந்தை=விபூதிப் பச்சை எனப்படும் இலை; பெருமான் மிகவும் விரும்பி இதனை அணிந்து கொள்வதால் இதனை சிவக்கரந்தை என்றே அழைப்பார்கள். கரந்தையை மிகவும் விரும்பி சிவபெருமான் அணிவதை குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.61.3) திருஞானசம்பந்தர் பெருமானை, கரந்தையை விரும்பி அணியும் பெருமானை, கரந்தையான் என்றே குறிப்பிடுகின்றார். வரந்தை கிரந்தை என்பன ஒரு வைப்புத் தலங்கள்; சோபுரம் என்பது தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலம். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் ஒரு தேவாரப் பதிகம் அருளியுள்ளார். மந்திரம்=வேதம்; தந்திரம்=ஆகமம்; சிரந்தை=உடுக்கை; கையிலோர் சிரந்தையான் என்று ஒரு தொடராக வருவதால், சிரந்தை என்பதற்கு, சிரத்தை (கபாலத்தை) உடையவன் என்றும் கபாலத்தை உடையவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். கயாசுரனைக் கொன்ற பழி தீர, விநாயகர், பெருமானை வழிபட்ட தலம் என்பதால் கணபதீச்சரம் என்ற பெயர் வந்தது.

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்

கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்

சிரந்தையான் செங்காட்டங்குடியான் செஞ்சடை சேரும்

கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச்சரத்தானே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.5), திருஞானசம்பந்தர் பெருமானை தண் கரந்தை சடைக்கணிந்தவர் என்று கூறுகின்றார். கரந்தை=விபூதிப் பச்சை; கரந்தை, கூவிளம் (வில்வம்), வெள்ளெருக்கு, கொன்றை முதலிய மலர்கள் பெருமானுக்கு உகந்த மலர்கள்; நீர்=இங்கே கங்கை நதி; தத்துவன்=உயர்ந்த பொருளாக இருப்பவன்; கார்=மேகம்; சேயிழை=சிறந்த அணிகலன்கள்; தேரோடும் வீதிகளில் நடன அரங்குகள் இருந்த நிலை, பண்டைய நாட்களில் இறைவன் வீதிவலம் வரும் போது, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றதை நமக்கு உணர்த்துகின்றன

நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கு நிறைந்த கொன்றைத்

தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்

காரோடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித்

தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம் பயிலும் திருவையாறே

கைச்சினம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.45.3) அடர்த்த கரந்தையைத் தனது சடையில் பாம்பு, பிறைச் சந்திரன், கொன்றை மலர்கள் ஆகியவற்றுடன் சூட்டிக்கொண்டுள்ள பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். காடலான் என்று இடுகாட்டினில் பெருமான் உறையும் தன்மையை குறிப்பிடுகின்றார்.

பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினோடும்

சூடலான் வெண்மதியம் துன்று கரந்தையொடும்

ஆடலான் அங்கை அனலேந்தி ஆடரவக்

காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே

விபூதிப் பச்சிலை பறித்துப் பல நாட்களான பின்னரும் நல்ல மணம் வீசுவதை நாம் காண்கின்றோம். இந்த தன்மையால் வண்டுகள் இந்த செடியை நாடிவந்து வாழ்கின்றன என்று குறிப்பிட்டு, அத்தகைய செடிகள் மிகவும் அதிகமாக காணப்பட்ட தலம் வாழ்கொளிபுத்தூர் என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடலை (2,94,6) நாம் இங்கே காண்போம். கரந்தை=திருநீற்றுப் பச்சை; புறவம்=காடு இங்கே சுடுகாட்டினை குறிப்பிடுகின்றது. பெருமான் பால் உண்மையான அன்பு கொண்டவர்களாக விளங்கிய பெருமான் தங்கள் முன்னே வேறு வேறு வேடங்களில் தோன்றிய போது, அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாதவர்களாக பலரும் இருந்ததை நாம் பெரியபுராணத்தில் காண்கின்றோம். அந்த தன்மை, கண்டு கோடலும் அரியார் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.

தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக் கருவியும் புறவில்

கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல உடையார்

கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதொர் கரந்தை

வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

கயிலாயத்தில் அணுக்கத் தொண்டராக விளங்கும் பேற்றினை பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் ஐந்து சமயங்களில் இருந்ததை நாம் இங்கே நினைவு கொள்ளலாம். .புத்தூர் என்ற ஊரைச் சார்ந்த சடங்கவிச் சிவாச்சாரியாரின் மகளுடன் சுந்தரருக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, சுந்தரர் தனக்கு அடிமை என்று அடிமை ஓலை கொண்டு வந்த முதியவர் சிவபெருமான் என்பதை அறியாமல் சுந்தரர் இருந்தார். பின்னர் திருவதிகைத் தலம் சென்ற சுந்தரர், திருநாவுக்கரசரின் திருப்பாதங்கள் பட்ட தலத்தில் தனது கால்கள் படலாகாது என்ற எண்ணத்தில், ஊருக்கு வெளியே இருந்த சித்தவடம் என்ற மடத்தினில் இரவு தங்கினார். இவரது அருகினில் வந்து படுத்த ஒர் முதியவரது கால்கள் தனது தலையின் மீது பட்டமையால், தனது தூக்கம் கலைந்து எழுந்த சுந்தரர், முதியவர் அருகில் இருப்பதை உணர்ந்து களைப்பு மிகுதியால் அவரது கால் தனது தலை மீது பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்தவராக, தான் இடம் மாறி படுத்தார். முதியவரும் தனது நிலையை மாற்றிக் கொண்டு படுக்கவே, அவரது கால்கள் சுந்தரரின் தலையின் மீது மீண்டும் படிந்தன. இதனால் கோபம் கொண்ட சுந்தரர் மீண்டும் மீண்டும் எனது தலையினை மிதித்த நீர் யாரோ என்று கேட்டார். அப்போது முதியவராக வந்த சிவபெருமான், என்னை நீர் அறியவில்லையா என்று வினவியவாறு மறைந்தார். வந்தவர் சிவபெருமான் தான் என்பதை அப்போது தான் சுந்தரர் அறிந்துகொண்டார். சுந்தரரும் அவரது தொண்டர்களும் குருகாவூர் வெள்ளடை என்ற தலத்திற்கு செல்லும் வழியில், வெய்யிலில் நடந்து களைத்து வரும் சுந்தரரின் பசியை போக்க திருவுள்ளம் கொண்ட பெருமான், ஒரு முதியவராக, சுந்தரர் வரும் வழியில் அமர்ந்து, அவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் தயிர்சோறு மற்றும் குளிர்ந்த நீர் அளித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட அடியார்கள் உணவினை உண்ட களைப்பினில், ஆங்கே அமைக்கப் பட்டிருந்த பந்தரின் கீழே உறங்கிய போது, பெருமான் மறைந்துவிட்டார். விழித்த எழுந்த சுந்தரரும், மற்ற தொண்டர்களும் முதியவர் மறைந்ததையும் அவர்கள் தங்கியிருந்த பந்தலும் அவருடன் மறைந்ததையும் உணர்ந்து, வந்தவர் சிவபெருமான் தான் என்று தெளிந்தார்கள். திருப்புறம்பயம் தலம் சென்ற சுந்தரர் அங்கிருந்து முதுகுன்றம் செல்ல ஆர்வம் கொண்டவராக முதுகுன்றம் நோக்கி செல்லலானார். அவ்வாறு செல்லும் வழியில், தென்பட்ட ஒரு முதியவரிடம் முதுகுன்றம் செல்லும் வழி யாது என்று சுந்தரர் வினவினார். அதற்கு அந்த முதியவர் தானும் அங்கே செல்வதாக கூறி, முதுகுன்றத்திற்கு பதிலாக கூடலையாற்றூர் என்று அழைக்கப்படும் தலத்திற்கு அழைத்துச் சென்றார். கூடலையாற்றூர் நெருங்கிய போது, தனக்கு முன்னே சென்ற அந்தணர் மறைந்ததை உணர்ந்த சுந்தரர், அப்போது தான், தனக்கு வழிகாட்டிய அந்தணர் சிவபெருமான் என்பதை உணர்ந்தார். திருக்கச்சூர் சென்ற சுந்தரர், பெருமானை கும்பிட்டு வெளியே வந்தபோது அமுது செய்ய வேண்டிய நேரம் வந்த படியால், அமுது படைத்தளிக்கும் தொண்டர்கள் வரவினை எதிர்நோக்கி, திருக்கோயில் மதிற்சுவரின் அருகே காத்திருந்தார். அப்போது ஒரு மண் திருவோட்டினை ஏந்தியவாறு வந்த வேதியர் ஒருவர், சுந்தரரை அணுகி, உமது உடலில் ஏற்பட்ட பசியினால் மிகவும் வருந்தி நீர் இளைத்து காணப்படுகின்றீர்; யான் அருகிலிருக்கும் இல்லங்களில் இரந்து உமக்கு சோறு கொண்டுவருகின்றேன், நீர் எங்கும் செல்லாமல் இங்கே இருப்பீர் என்று சொல்லிவிட்டு, அருகிலிருந்த இல்லங்களில் தான் இரந்து பெற்ற சோற்றினை கொணர்ந்து சுந்தரருக்கு கொடுத்தார். தமக்கு உணவளித்த வேதியரை வணங்கி, அவரது அன்பினை பாராட்டிய சுந்தரர், தனது தொண்டர்களுடன் அந்த சோற்றினை உண்டு மகிழ்ந்திருந்த தருணத்தில் வந்த வேதியர் மறைந்துவிட்டார். அப்போது தான், வந்தவர் சிவபெருமான் தான் என்பதை சுந்தரர் உணர்ந்தார்.

இவ்வாறு பல வேடங்களில் அடியார்களுக்கு காட்சி தரும் பெருமான், அவரே தன்னை உணர்த்தினாலன்றி அவரை நாம் அடையாளம் கண்டு கொள்ள இயலாது என்பதை நாம் அப்பர் பெருமானது சரித்திரத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்ளலாம். திருமறைக்காடு தலத்திற்கு சென்ற அப்பர் பிரான், அந்நாள் வரை அடைந்து கிடந்திருந்த திருக்கோயிலின் கதவுகள் திறப்பதற்கு பதிகம் பாடியதையும், கோயில் கதவுகள் அடைப்பதற்கு திருஞானசம்பந்தர் பதிகம் பாடியதையும், இறைவன் அவர்கள் இருவருக்கும் அருள் புரிந்ததையும் நாம் அறிவோம். பின்னர் இருவரும் தாங்கள் தங்கியிருந்த மடத்திற்கு திரும்பினார்கள். அப்போது அப்பர் பிரான், நடந்ததை நினைத்துப் பார்க்கின்றார். தாம் பத்து பாடல்கள் பாடிய பின்னரே கதவுகள் திறந்த தன்மையையும், திருஞான சம்பந்தர் ஒரேவொரு பாடல் பாடி கதவினை மூடிய தன்மையையும் நினைத்துப் பார்த்த அப்பர் பிரான், தனது அரிய முயற்சியினையும் ஞானசம்பந்தரின் எளிதான முயற்சியையும் ஒப்பிட்டு பார்க்கின்றார். பெருமானின் திருவுள்ளக் கிடக்கையை அறியாமல் தான் இருந்ததற்கு மனம் வருந்திய அப்பர் பிரான், கவலை மேலிட சற்று அயர்ந்து உறக்கம் கொண்டார். அப்போது அவரது கனவில், தனது மேனியில் முழுதும் திருநீறு அணிந்தவராக வேதியர் வேடத்தில் தோன்றிய பெருமான், வாய்மூரில் இருக்கின்றோம் தொடர்ந்து வா என்று கூறினார். கனவு கலைந்த நிலையில் எழுந்த அப்பர் பிரான், வாய்மூர் செல்ல முடிவு செய்த போது, கனவில் தோன்றிய வேடத்துடன் ஒரு வேதியர் தனக்கு வழிகாட்டுவதை கண்டார். தன்னைத் தொடர்ந்து வா என்று பெருமானே கனவில் உணர்த்தியதால், தனக்கு முன்னே சென்றவர் பெருமான் என்பதை உணர்ந்தவராக அப்பர் பிரான், அவரைத் தொடர்ந்து சென்று வாய்மூர் தலத்தில் உள்ள திருக்கோயில் சென்றடைகின்றார். பெருமானே உணர்த்தியதால் அப்பர் பிரானால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

ஆனால் அப்பர் பெருமானும் தன் முன்னே தோன்றிய பெருமானை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் இருந்த இருவேறு நிகழ்ச்சிகளை நாம் இங்கே காண்போம். திருவானைக்கா தலத்திலிருந்து புறப்பட்ட அப்பர் பிரான், அருகிலிருக்கும் பல தலங்களையும் தரிசனம் செய்த பின்னர், திருப்பைஞ்ஞீலி தலம் நோக்கி செல்கின்றார். பசி வேட்கை இளைப்பு முதலியவற்றால் தளர்ச்சி அடைந்த போதிலும் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்து சென்ற அப்பர் பிரான் காணும் வண்ணம், அவர் சென்ற வழியினில், ஒரு சோலையையும் குளத்தினையும் படைத்து, திருநீறு அணிந்த வேதியராக கட்டுச்சோற்றினை வைத்துக் கொண்டு பெருமான் காத்திருந்தார். தன்னருகில் அப்பர் பிரான் வந்த போது, அவரை நோக்கி நெடுந்தூரம் வந்த களைப்பாலும் பசியாலும் இளைத்துக் காணப்படும் நீர் நான் தரும் பொதிசோற்றினை உண்டு அருகிலுள்ள குளத்து நீரினைப் பருகி, உமது இளைப்பினை போக்கிக் கொள்வீர் என்று விண்ணப்பம் வைத்தார். வேதியர் அளித்த பொதிசோற்றினை இறைவனது கருணை என்று நினைத்து அப்பர் பிரான் அதனை ஏற்றுக்கொண்டு தனது களைப்பினை நீக்கிக்கொண்டார். உணவு உட்கொண்டு தனது களைப்பினை போக்கிக்கொண்ட அப்பர் பிரானை பார்த்து, வேதியர் நீர் எங்கே போகிறீர் என்று கேட்க, அப்பர் பிரானும் தான் திருப்பைஞ்ஞீலி செல்வதாக பதில் கூறினார். உடனே முதியவர், தானும் அவ்விடத்திற்கே செல்வதாக கூறி, அவருடன் நடந்தார். பைஞ்ஞீலி தலம் நெருங்கிய தருணத்தில், தன்னுடன் வந்த வேதியர் மறைந்ததைக் கண்ட அப்பர் பிரான், தன்னுடன் அதுவரை வந்தது பெருமான் என்பதனை உணர்ந்து அவரது கருணையை வியந்து பதிகம் பாடுகின்றார்.

கயிலாயம் செல்லும் வழியில் முனிவர் ஒருவர் அப்பர் பிரானை எதிர்கொள்கின்றார். கொடிய பாலைவனத்தில் உடல் உறுப்புகள் தேய்ந்து அழியும் வண்ணம் நீர் எங்கே செல்கின்றீர் என்று அப்பர் பிரானை முனிவர் கேட்க, அப்பர் பிரானும், தான் கயிலாயம் செல்வதாக கூறுகின்றார். அதற்கு முனிவர், உலகினில் வாழும் மனிதர்கள் சென்று அடைவதற்கு எளிய மலை அல்ல கயிலை என்று உணர்த்தி, அங்கிருந்து மீண்டு அப்பர் பிரான் தமிழகம் செல்வதே உத்தமம் என மொழிந்தார். அதற்கு அப்பர் பிரான், என்றேனும் ஒரு நாள் அழியக்கூடிய இந்த உடலுடன் கயிலை மலையினைக் காணாது திரும்பி செல்லமாட்டேன் என்று பதில் கூறிய பின்னர் தனது பயணத்தை தொடர நினைக்கின்றார். ஆனால் அப்போது முனிவர் மறைந்துவிடவே அப்பர் பிரான் முனிவரை காணமுடியாமல் திகைத்தார். வானிலிருந்து, உயர்ந்த நாவுக்கரசனே எழுந்திரு என்ற குரல் பிறக்கின்றது. அந்த குரலினைக் கேட்ட அப்பர் பிரான், முனிவராக வந்தது, பெருமான் தான் என்பதை உணர்கின்றார். மேலும் பெருமானே, நான் கயிலைக் காட்சி காண்பதற்கு அருள் புரிவாயாக என்று விண்ணப்பம் வைக்கின்றார். பெருமானும், திருவையாறு திருக்கோயில் கோபுரத்தில் அப்பர் பிரானுக்கு, கயிலைக் காட்சி காட்டி அருள் புரிகின்றார்.

திருநீல கண்ட குயவனாரும், முதிய வேதியராக தோன்றி தன்னிடம் திருவோட்டினை பத்திரமாக வைக்கும் வண்ணம் பணித்தவர் பெருமான் என்பதை முதலில் உணரவில்லை. இயற்பகை நாயனாரும், தன்னை அணுகி தனது மனைவியை தனக்கு கொடுக்குமாறு வேண்டியவர் சிவபெருமான் தான் என்பதை முதலில் உணரவில்லை; இளையான்குடி மாற நாயனாரும், தனது இல்லத்திற்கு நள்ளிரவில் வந்து உண்பதற்கு உணவு கேட்டவர் சிவபெருமான் தான் என்பதை முதலில் அறியவில்லை; தன்னிடம் கோவணத்தை கொடுத்து பாதுகாக்குமாறு பணித்தவர் சிவபெருமான் தான் என்பதை முதலில் அமர்நீதிநாயனார் அறியவில்லை; மாவிரதியர் வேடத்தில் வந்து, திருமணப்பெண்ணின் கூந்தல் தனக்கு பூணூலாக உதவும் என்று கேட்டவர் பெருமான் தான் என்பதை முதலில் மானக்கஞ்சாறர் உணரவில்லை; தனது வேட்டியினை வெளுத்துத் தருமாறு கொடுத்த முதியவர் சிவபெருமான் தான் என்பதை திருக்குறிப்புத் தொண்டரும் முதலில் அறியவில்லை; பைரவராக தனது இல்லம் வந்து பிள்ளைக்கறி கேட்டவர் சிவபெருமான் தான் முதலில் சிறுத்தொண்டரும் அறியவில்லை; மேற்கண்ட குறிப்புகள் உணர்த்தும் செய்தியை, மிகவும் அழகாக, பெருமானின் திருவருளே துணையாக இருந்தால் தான் பெருமானை நாம் காண முடியும், அடையாளம் புரிந்து கொள்ள முடியும் என்று அப்பர் பிரான் கூறும் பாடலை (6.97.10) நாம் இங்கே காண்போம்.

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்

ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன் ஓரூரன் அல்லன் ஓருவமன் இல்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்டொணாதே

துருத்தி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.98.7) திருஞானசம்பந்தர், பெருமானை, கரந்தை இலையை சடைக்கு அணிந்தவர் என்ற பொருள்பட கரந்தையாய் என்று அழைக்கின்றார். கணிச்சியம்=கணிச்சிப்படை, மழுப்படை; கழிந்தவர்=பல ஊழிக்காலங்களிலும் இறந்த பட்ட எண்ணற்ற, திருமால் பிரமன் இந்திரன் மற்ற தேவர்கள்; துணிச் சிரக் கிரந்தை=இறந்தவர்களின் உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட தலைகள் கொண்ட மாலை; அழகியதும் குளிர்ந்ததும் ஆகிய பிறைச் சந்திரனை விழுங்குவதற்காக நெருங்கும் தன்மை கொண்டதும் அழகிய நாகமணியினைத் தனது படத்தில் கொண்டதுமான பாம்பினை அணிகலனாக மகிழ்ந்தவர் பெருமான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர்

துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்

அணிப்படும் தனிப்பிறைப் பனிக்கதிர்க்கு அவாவுநல்

மணிப்படும்பை நாக நீ மகிழ்ந்த வண்ணம் இல்லையே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.1) திருஞானசம்பந்தர் பெருமானை பல்கரந்தைச் சடையவன் என்று குறிப்பிடுகின்றார். ஊனமில்லி என்ற தொடருக்கு, அடியார்களின் ஊனத்தை நீக்கி, அவர்களை குற்றமற்றவர்களாக செய்யும் தன்மை கொண்டவன் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

விடையவன் விண்ணுமண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாட்

படையவன் பாய்புலித்தோல் உடை கோவணம் பல்கரந்தைச்

சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண்தோடு

உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே

இராமேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.10.6) திருஞானசம்பந்தர் பெருமானை கரந்தை சூடும் அடிகள் என்று குறிப்பிடுகின்றார். கையிலேந்தி என்பது பெயர்ச் சொல்லாக கொள்ளவேண்டும். தனது கையில் ஏந்தியவன் என்று பொருள். மன்மதனின் கணைகள் மென்மை தன்மை வாய்ந்த மலர்கள் என்பதை நாம் அறிவோம். எனினும் அந்த கணைகள் கொண்டுள்ள வில்லினை வெஞ்சிலை என்று குறிப்பிடுகின்றார். மன்மதனின் வில் கரும்பு வில என்பதால் அவனது வில்லும் மற்ற வில்லினைப் போன்று மூங்கிலால் செய்யப்பட்ட வலிமையான வில் அல்ல. காமனின் அம்பினால் காயப்பட்டவர்கள், அவனது கணைகளுக்கு இலக்காகி காமவலையில் வீழ்வது தவறாமல் நடைபெறுகின்ற நிகழ்ச்சி என்பதால் வெஞ்சிலை என்று குறிப்பிட்டார் போலும். சிவபெருமான் ஒருவர் தாம், காமனின் மலர்க் கணைகளுக்கு ஆளாமல் இருந்ததுமன்றி., அவனையே எரித்தவராக திகழ்கின்றார். பிணை=மான்; மான் போன்ற மருண்ட பார்வையை உடையவள் என்று இங்கே சொல்லப்படுகின்றது. இணை மலர்=அடுக்கு அடுக்காக இதழ்கள் கொண்ட தாமரை மலர்; தாமரை மலர்கள் மீது அன்னம் அமர்ந்து உலவும் செய்தி இங்கே சொல்லப் படுகின்றது.

கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர் தாம்

இணைபிணை நோக்கி நல்லாளோடு ஆடும் இயல்பினராகி நல்ல

இணைமலர் மேலன்னம் வைகு கானல் இராமேச்சரம் மேயார்

அணைபிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.4.3) அப்பர் பிரான் பெருமானை, நாறு கரந்தையினான் என்று குறிப்பிடுகின்றார். எரிபுரை மேனியினான்=தீயின் நிறத்தை ஒத்தவன்: பொதுவாக நாம் அணிந்துகொள்ளும் திருநீறு பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படுகின்றது. ஆனால் சிவபெருமான், ஊழி முடியும் சமயத்தில், அணிந்து கொள்ளும் திருநீறு நாம் அணிந்து கொள்ளும் திருநீறு போன்றது அல்ல. பிரமன் திருமால் முதலான தேவர்களின் இறந்த உடலை எரித்த பின்னர் சாம்பலை அவன் தனது மேனியில் பூசிக்கொண்டு, உலகில் தான் ஒருவனே நிலையானவன் என்றும் மற்ற உடல்கள் அனைத்தும் அழியக்கூடியவை என்றும், மற்ற உயிர்கள் அனைத்தும் தன்னிடம் ஒடுங்கும் என்பதையும் உணர்த்துகின்றான். இவ்வாறு சர்வ சங்கார காலத்தில் அழிந்த உடல்களின் சாம்பலை பூசிக்கொள்ளும் வல்லமை வேறு எவருக்கும் இல்லை என்பதால், நீறு மெய் பூச வல்லான் என்று குறிப்பிட்டு அப்பர் பிரான், சிவபிரானின் அழியாத தன்மையை நமக்கு உணர்த்துகின்றார். மெய் என்று நமது உடலினை குறிப்பிட்டாலும், உண்மையில் நமது உயிர்கள் அனைத்தும் (பிரமன், திருமால் மற்ற தேவர்கள் உட்பட) பொய்யான உடல்கள் தாம். சிவபிரானது உடல் ஒன்றே நிலையானது, மெய்யானது என்பதும் இங்கே கூறப்படுகின்றது. நாறு கரந்தை=நறுமணம் வீசும் கரந்தை; நான்மறை கண்டத்தான்=நான்மறைகள் ஓதும் கழுத்தினை உடையவன்; தன்னை நினைக்கும் அடியார்களின் நெஞ்சத்தில் குடியிருக்கும் பெருமான் என்றும் இந்த பாடலில் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார்.

நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும்

ஏறு உகந்து ஏற வல்லானும் எரிபுரை மேனியானும்

நாறு கரந்தையினானும் நான்மறைக் கண்டத்தினானும்

ஆறு சடைக் கரந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

திருவாய்மூர் தலத்தினில் பெருமான் தனது நடனக்காட்சியை திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரான் ஆகிய இருவருக்கும் காட்டி அருளிய செய்தி பெரியபுராணத்தில் சொல்லப் படுகின்றது. அவ்வாறு தான் கண்ட காட்சியை அப்பர் பிரான் ஒரு பதிகமாக வடித்துள்ளார். அந்த பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.77.3) பெருமானின் திருமுடி மேல் கரந்தையை கண்டதாக அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெற்றம்=எருது; காலை=இளமை; காலை நேரம் ஒரு நாட்பொழுதின் தொடக்க நேரம் என்பதால் அதனை இளமையை உணர்த்தும் காலமாக கருதுகின்றனர். மேலும் காலைப் பொழுதில் சூரியனின் கதிர்கள், மிகவும் குறைந்த வெப்பத்துடன் காணப்படுவதால், உடலுக்கு மிகவும் இதமாக இருக்கும். அது போன்று பகலெல்லாம் வெய்யிலில் வாடி வருந்திய உடலுக்கு இதமாக குளிச்சி அளிக்கும் சந்திரனின் கதிர்களை, புத்துணர்ச்சி தந்து நமது மனதினை இளமையாக மாற்றும் கதிர்களை, காலைக் கதிர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கரந்தை=திருநீற்றுப் பச்சை; பதினெண் கணங்கள்; தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளம், தாராகணம், ஆகாயத்தில் வசிப்பவர், நிலவுலகில் வசிப்பவர். பால் போன்று இனிய மொழிகளை பேசும் பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகம் வைத்தவராகவும், தொடர்ந்து பெருமானுக்கு திருப்பணி செய்வதற்காக குழுமியிருந்த பதினெண் கணங்களாலும் சூழப்பட்டவராகவும், தான் உட்கொண்ட விடத்தை தேக்கியதால் நீல நிறமாக காட்சியளிக்கும் கழுத்தினை உடையவராகவும், நெற்றியில் மூன்றாவது கண்ணினை உடையவராகவும், தனது வாகனமாகிய எருதினை அருகில் உடையவராகவும், குளிர்ந்து உடலுக்கு இதமாக உள்ள ஒளிக் கதிர்களை வெளிப்படுத்தும் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவராகவும், சடையினில் கரந்தை இலைகளை சூடியவராகவும், கொன்றை மாலையை அணிந்த சடையினராகவும் உள்ள கோலத்துடன் வாய்மூர் அடிகளை அடியேன் கண்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாலின் மொழியாளோர் பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயிலக் கண்டேன்

நீலநிறம் உண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன்

காலைக் கதிர்செய் மதியம் கண்டேன் கரந்தை திருமுடி மேல் தோன்றக் கண்டேன்

மாலைச் சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (7.33.2) சுந்தரர் பெருமானே, உமது சடையில் இருப்பது நறுமணம் வீசும் கரந்தையோ என்று கேட்கின்றார். இட்டிதாக=சிறியதாக; இசையுமா இசைந்து ஏத்துவீர் என்ற தொடருக்கு, அடியார்கள் தங்களது விருப்பம் போன்று இறைவனை பாவித்து இறைவனைப் புகழ்ந்து வேண்ட, அவரவர் வேண்டிய வண்ணம் அருள் புரியும் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். போகம் வேண்டுவார் போக வடிவிலும் யோகம் வேண்டுவார் யோக வடிவிலும் துன்பம் நீங்க வேண்டுவார் வேக வடிவிலும் இறைவனை வேண்டுகின்றனர். பெருமான், தான் ஏந்தியிருக்கும் பிரம கபாலத்தில், தங்களது மலங்களை பிச்சையாக இடும் அடியார்களை ஆட்கொண்டு அவர்களுக்கு முக்தி அளிக்கின்றார் என்றும் இந்த பாடலில் சுந்தரர் சொல்கின்றார்.

இட்டிதாக வந்து உரைமினோ நுமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர்

கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ

பட்டி ஏறுகந்து ஏறரோ படு வெண்டலை கொண்டு வந்து

அட்டி ஆளவும் கிற்பரோ நமக்கு அடிகளாகிய அடிகளே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளீய பதிகத்தின் பாடலில் (7,76.6) சுந்தரர், கரந்தை கூவிள மாலை (வில்வமாலை) நறுமணம் வீசும் கொன்றை மலர்மாலை ஆகியவற்றை சூட்டிக் கொண்டு காட்சி தருகின்றார் என்று கூறுகின்றார். பாரிடம்=பூத கணங்கள்; பரந்த=மிகவும் அதிகமான; பரிசு= இயல்பு; தனது அடியார்களுடன் பிணைந்துள்ள வலிமை வாய்ந்த வினைகளையும் நீக்கி அவர்களை மலமற்றவர்களாக மாற்றி, முக்தி நிலைக்கு தகுதி படைத்தவர்களாக மாற்றுவது இறைவனது இயல்பான செயல் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். இதன் மூலம் முக்தி நிலை வேண்டும் என்று விரும்பும் எவரும் பெருமானின் அடியாராக மாறி அவரை வழிபட்டு துதித்தாலே போதும்; முக்தி நிலை தர வேண்டும் என்று இறைவனிடம் வேண்ட வேண்டிய அவசியமே இல்லாமல் அருள் புரியும் தன்மை உடைய்வர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையும் சூடிப்

பரந்த பாரிடம் சூழ வருவர் நம் பரமர் தம் பரிசால்

திருந்து மாடங்கள் நீடு திகழ்தரு வாஞ்சியத்து உறையும்

மருந்தனார் அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே

பரவையுண்மண்டலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.96.10) சுந்தரர், தேவாரப் பதிகங்களை விரும்பி பாடும் அடியார்கள் மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலோராக விளங்குவார்கள் என்று கூறுகின்றார். அனைத்து உலகங்களுக்கும் மேலான உலகமாக சிவலோகம் விளங்குவதால், தேவாரப் பதிகங்களை முறையாக ஒன்றிய மனத்துடன் ஓதும் அடியார்கள், சிவலோகம் சென்றடைந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்று உணர்த்துகின்றார்.

கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம்

பரந்த சீர் பரவையுண்மண்டலி அம்மானை

நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை

விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே

பொழிப்புரை:

குளிர்ந்த கொன்றை மலர்கள், நறுமணம் வீசும் கரந்தைத் துளிர்கள் ஆகியவற்றை கலந்து தனது சடையில் சூட்டிக்கொண்டவனாக, பிரளயத்தீயினில் நின்று நடனம் ஆடுபவனும், ஒளிவீசும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக இறுகக்கட்டிக் கொள்பவனும் ஆகிய பெருமான், நிலையாக உறைகின்ற திருக்கோயில், குளிர்ந்த நீரால் சூழப்பட்ட தென் குரங்காடுதுறையில் உள்ளது.

பாடல் 7:

பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும்

முழவம் குழல் மொந்தை முழங்கெரியாடும்

அழகன் அயின் மூவிலை வேல் வலனேந்தும்

குழகன் நகர் போல் குரங்காடுதுறையே

விளக்கம்:

பழகும் வினை=உயிர் எடுக்கின்ற அனைத்துப் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து ஒட்டிக்கொண்டு பழகும் வினைகள்; மலபரிபாகம் நேர்ந்து, உயிர் தற்போதம் அற்ற நிலையை அடைந்த பின்னர், பக்குவம் அடைந்த அந்த உயிரின் வினைகள் முழுவதும் இறைவனால் தீர்க்கப்படுகின்றன. இந்த தன்மையே பழகும் வினை தீர்ப்பவன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. முழங்கும்= ஒலிக்கும்; அயின்=கூர்மையான; மூவிலை வேல்=திரிசூலம்;

பொழிப்புரை:

தனது அடியார்களுடன் எண்ணற்ற பிறவிகளாக பிணைந்து பழகியிருந்த வினைகளை முற்றிலும் தீர்க்கும் வல்லமை வாய்ந்த இறைவன், பார்வதி தேவியுடன் கூடியவனாக முழவம் குழல் மொந்தை முதலிய கருவிகள் பின்னணியில் ஒலிக்க, ஒலித்த வண்ணம் பொங்கிப் பெருகி எழுகின்ற பிரளயத்தீயினில் நின்றவாறு நடனம் ஆடுகின்றான். அவன் சிறந்த அழகனாக, இளமை வாய்ந்தவனாக, தனது கையினில் கூர்மையான நுனிகளை கொண்ட மூவிலை சூலம் ஏந்தியவனாக காணப்படுகின்றான். இத்தகைய இறைவன் உறைகின்ற தலம் தென் குரங்காடுதுறையாகும்.

பாடல் 8:

வரை ஆர்த்தெடுத்த அரக்கன் வலி ஒல்க

நிரையார் விரலால் நெரித்திட்டவன் ஊராம்

கரை ஆர்ந்து இழி காவிரி கோலக்கரை மேல்

குரையார் பொழில் சூழ் குரங்காடுதுறையே

விளக்கம்:

இந்த பாடலில் ஆரவாரத்துடன் அரக்கன் இராவணன் கயிலாய மலையினைப் பேர்த்தெடுக்க முயற்சி செய்தான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஒருமுறை அரக்கன் இராவணன் தனது புட்பக விமானத்தில் சென்று கொண்டிருந்த போது கயிலை மலை வழியாக செல்ல நேரிட்டது. கயிலை மலையினை தாண்டிச் செல்ல முடியாமல் விமானம் நின்று விடவே, தனது பயணம் தடைப்பட்டதன் காரணம் கயிலாய மலை என்பதை அரக்கன் உணர்ந்தான். எதிர்பட்ட கயிலாய மலையின் புனிதம் கருதி, அந்த மலையினை வலம் வந்து தனது பயணத்தை தொடராமல், தனது அகந்தையின் காரணமாக, அந்த மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, பயணத்தைத் தொடருவேன் என்ற தவறான முடிவினை எடுத்த அரக்கன், விமானத்திலிருந்து கீழே இறங்கிய அரக்கன், மிகுந்த ஆர்வாரத்துடன் கயிலாய மலையினை நெருங்கினான். அப்போது அவனது தேர்ப்பாகன் எச்சரித்ததையும் பொருட் படுத்தாமல், மிகுந்த வேகத்துடன் அரக்கன் இராவணன் கயிலாய மலையினை நெருங்கிய தன்மை இந்த பாடலில் ஆர்த்தெடுத்த என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு மிகுந்த ஆரவாரத்துடன் அரக்கன் இராவணன் கயிலாய மலையினை நொக்கிச் சென்ற செய்தி பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.12.8) திருஞானசம்பந்தர் பொல்லாத எண்ணங்களுடன் அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்கச் துணிந்தான் என்று கூறுகின்றார். செது வாய்மைகள்=பொல்லாத சொற்கள்; முது=முதிர்ந்த; வேய்= மூங்கில்; கயிலை மலையின் பெருமையை உணராமல், கயிலை மலை தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி தகாத வார்த்தைகள் பேசி, அரக்கன் இராவணன் கயிலை மலையினை இழித்து கூறிய மொழிகள் இங்கே உணர்த்தப் படுகின்றன. அடுத்த=நெருங்கிய; கது=பிளந்த, மலைப் பிளவுகள் போன்று பெரியதாக பிளந்த; செதுவாய்மை என்ற தொடருக்கு வரங்களால் பெற்ற வலிமை குன்றிய நிலை, வலிமைகள் குன்றிய வரங்கள் என்று சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார். செது=குறைந்த; வாய்மை=வலிமை; வரங்களால் தான் பெற்றிருந்த வலிமையை மிகவும் பெரியது என்று கருதிய இராவணன், தனது வலிமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவனாக கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தான். ஆனால் பெருமானின் கால் விரலின் வலிமையின் முன்னே தனது உடல் வலிமை எவ்வளவு குறைந்தது என்பதை உணர்ந்தான் என்பதை குறிப்பிடும் வகையில், குறைந்த வலிமை (செது வாய்மை) என்று குறிப்பிட்டார் என உணர்த்தும் விளக்கமும் பொருத்தமாக உள்ளது.

செது வாய்மைகள் கருதிவ் வரை அடுத்த திறல் அரக்கன்

கது வாய்கள் பத்து அலறீ இடக் கண்டான் உறை கோயில்

மதுவாய செங்காந்தண் மலர் நிறையக் குறைவில்லா

முது வேய் கண் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே

வியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.13.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் மிகுந்த ஆணவத்துடன் கயிலாய மலையினை பேர்த்து எடுப்பதற்காக அந்த மலையை நோக்கிச் சென்றதாக குறிப்பிடுகின்றார். தனது வலிமையின் மீது கொண்டிருந்த ஆணவம் காரணமாக, எனக்கு எதிராக போரிடும் ஆற்றல் கொண்டவர் ஒருவரும் இல்லை என்று ஆராவரத்துடன் முழங்கிய தன்மையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பொருவார்=எதிராக சண்டையிடுவார்; பொருப்பு=மலை, கயிலை மலை; அரக்கன் இராவணனின் வலிமையுடன் தன்னை வெல்பவர் எவரும் இல்லை என்ற அவனது செருக்கும் அடக்கப்பட்டது என்று நயமாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

பொருவார் எனக்கு எதிர் ஆர் எனப் பொருப்பை எடுத்தான் தன்

கருமால் வரை கரம் தோள் உரம் கதிர் நீண்முடி நெரிந்து

சிரம் ஆயின கதறச் செறி கழல் சேர் திருவடியின்

விரலால் அடர்வித்தான் இடம் விரிநீர் வியலூரே

இடும்பாவனம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.17.8) அரக்கன் இராவணன் சிறிதும் சிந்திக்காமல் கயிலாய மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஓராது=யோசிக்காது, ஆராய்ந்து பார்க்காமல்; குணநாமம்= அவனது குணத்தினை ஒட்டி அவனுக்கு அமைந்த பெயர்; கயிலை மலையின் கீழெ நெருக்குண்ட அரக்கன், வருத்தம் தாளாமல் உலகம் முழுவதும் கேட்கும் வண்ணம் உரத்த குரலில் அலறினான். அதனைக் கண்ட பெருமான், தனது குரல் உலகெங்கும் கேட்கும் வண்ணம் அலறியவன் என்ற பொருள் பட இராவணன் என்று அழைத்ததை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் சொல்லுகின்றார். அதற்கு முன்னர் தசக்ரீவன் என்பதே அவனது பெயராக இருந்தது. இவ்வாறு பெருமானால் பெயர் இடப்பட்டு அழைக்கப்பட்ட மற்ற சிவனடியார்கள், சுந்தரர், சண்டீசர், திருநாவுக்கரசர், கண்ணப்பர், மாணிக்கவாசகர் ஆவார்கள்.

தேரார் தரு திகழ் வாளெயிற்று அரக்கன் சிவன் மலையை

ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃதவை நெரித்துக்

கூரார் தரு கொலை வாளொடு குணநாமமும் கொடுத்த

ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.28.8) திருஞானசம்பந்தர், கயிலை மலையின் சிறப்பையும் சிவபெருமானின் ஆற்றலையும் எண்ணிப் பாராதவனாக அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று கூறுகின்றார். அண்ணல்=தலைவர்; எண்ணாது=இறைவனின் பெருமையை எண்ணாமலும், தனது செய்கையால் தனக்கு ஏற்படவிருக்கும் பின்விளைவுகளை எண்ணாமலும்; இந்த பதிகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில் நடனம் ஆடிய பெருமானின் திருவடிகளைக் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், ஏழாவது பாடலில் காலனை உதைத்த திருவடி என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அந்த திருவடியை ஊன்றி அரக்கன் இராவணனின் செருக்கினை அடர்த்த தன்மையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பெண்ணோர் பாகம் உடையார் பிறைச் சென்னி

கண்ணோர் பாகம் கலந்த நுதலினார்

எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய

அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே

திருவோத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.54.8) திருஞானசம்பந்தர், கயிலாய மலையின் சிறப்பினை கருத்தினில் கொள்ளாமல் மிகவும் இழிவாக கருதிய அரக்கன் இராவணனை வென்ற பெருமான் என்று குறிப்பிடுகின்றார். தனது வலிமைக்கு முன்னரே இந்த மலை எம்மாத்திரம் என்று சொல்லியவாறே அரக்கன் இராவணன் கயிலாய மலையை நோக்கி ஆரவாரத்துடன் சென்றதாக கூறுகின்றார். ஒன்றார்=சைவ நெறியில் ஒன்றி ஒழுகாமல், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டாமல் பகைவர்களாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; ஏகும்= வெளியேறிச் சென்றுவிடும்.

என்றான் இம்மலை என்ற அரக்கனை

வென்றார் போலும் விரலினால்

ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்

என்றார் மேல் வினை ஏகுமே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.69.8) தனது ஆற்றல், வலிமை, வீரம் ஆகியவற்றை மிகவும் பெரியதாக கருதிய அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்தான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நிறம்=மார்பு. மாறா எடுத்தான்=தன்னுடன் மாறுபட்டு, பகைவன் போன்று மலையை எடுக்கத் துணிந்த அரக்கன்; இந்த பாடலின் கடை இரண்டு அடிகள் சிவபெருமான் திரிபுரத்தை எரித்த நிகழ்ச்சி குறிப்பிடுவதாக உரை ஆசிரியர்கள் உனர்த்துகின்றனர். பலருக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் கோட்டையை அழிக்க வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமான், திரிபுரத்தவர்களை அழித்து அறத்தை நிலைநாட்டினான் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

மறம் தான் கருதி வலியை நினைந்து மாறா எடுத்தான் தோள்

நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார்

திறம் தான் காட்டி அருளாய் என்று தேவரவர் வேண்ட

அறம் தான் காட்டி அருளிச் செய்தார் அண்ணாமலையாரே

நல்லம் (தற்போதைய பெயர் கோனேரிராஜபுரம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.85.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் தான் செய்யத் துணிந்த செய்லின் பின் விளைவுகளை கருத்தினில் எண்ணாது, கயிலாய மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்தான் என்று கூறுகின்றார். இறையே=மிகவும் சிறிய அளவினில்; இறையே விரல் ஊன்றி=அதிகமான அழுத்தம் கொடுக்காமல்; பெருமான் சற்று அதிகமாக அழுத்தம் கொடுத்திருந்தால், இராவணன் வேறு எவரும் அவனை காணமுடியாத வண்ணம் கூழாக மாறியிருப்பான் என்று அப்பர் பெருமான் ஒரு பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. பெருமானின் ஆற்றலை கருத்தில் கொள்ளாது அரக்கன் இராவணன் செயல்பட்ட தன்மை, திருஞான சம்பந்தருக்கு திரிபுரத்து அரக்கர்களின் செயலை நினைவூட்டியது போலும். ஒரு காலத்தில் அனைவருடன் அன்பு பாராட்டி சைவநெறியில் வாழ்ந்து வந்த அவர்கள், அந்த நிலையிலிருந்து மாறி அனைவரிடமும் பகைமை பாராட்டி பலரையும் அழித்த அவர்களை நண்ணார் என்று இங்கே குறிப்பிடுகின்றார். நண்ணுதல்=நெருங்குதல்; சிவநெறியை அணுகி தொடர்ந்து செயல்படாமல் விலகிச் சென்றவர்கள்.

பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு

கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்

எண்ணாது எடுத்தானை இறையே விரலூன்றி

நண்ணார் புரம் எய்தான் நல்ல நகரானே

கண்ணார்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.101.8) திருஞானசம்பந்தர், பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் என்று இராவணனை குறிப்பிடுகின்றார். பெருக்கு=பெருமை; வரை=மலை, இங்கே கயிலை மலையினை குறிக்கின்றது; முருக்கு=அழிவு; பேதை=அறிவற்றவன், பெருமான் இராவணனுக்கு தேர் ஈந்ததாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் சொல்வதை நாம் உணரவேண்டும். பதிகத்தின் ஆறாவது பாடலில் பெருமானின் அடியார்களுக்கு இயமனால் துன்பங்கள் ஏதும் ஏற்படாது என்று கூறிய சம்பந்தர், இந்த பாடலில், இயமனால் ஏற்படும் துன்பங்கள் எவ்வாறு தவிர்க்கப்படும் என்பதை உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்களை, இயமன் நரகத்திற்கு அழைத்துச் செல்வதை தடுத்து, பெருமான் அவர்களை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஏழு பாடல்களில் இந்த தலம் சென்று இறைவனை வணங்குமாறு நம்மைத் தூண்டும் சம்பந்தர், உதாரணமாக இந்திரனும் திருமாலும் வழிபாட்டு பயன் அடைந்ததை நமக்கு உணர்த்தும் சம்பந்தர், இந்த தலத்திற்கு நேரில் செல்ல முடியவில்லையே என்று வருத்தம் அடையும் அன்பர்களின் நிலையினை உணர்ந்து அத்தகையோர் தலத்தின் உறையும் பெருமானின் திருநாமத்தினை சொல்லி உய்வினை அடையலாம் என்று கூறுகின்றார்.

பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக் கீழால்

நெருக்குண்ணாத் தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த

முருக்குண்ணாதோர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த

திருக் கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே

திருவூறல் தலத்தின் (தற்காலத்தில் தக்கோலம் என்று அழைக்கப்படுகின்றது) மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.106.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை, செறுத்தெழு வாளரக்கன் என்று குறிப்பிடுகின்றார். கறுத்த மனம்=சினம் கொண்ட மனம்; பொதுவாக இயமன் எவரது உயிரையும் கவர்வதற்கு தானே நேரில் செல்வதில்லை. தனது தூதர்களையே அனுப்புவது அவனது வழக்கம். சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரை குறிப்பிட்ட காலத்தில் கவர்வதற்கும் இயமன் அவ்வாறே தனது தூதர்களை முதலில் அனுப்பியிருக்க வேண்டும்; ஆனால் அந்த சிறுவன் சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தமையால், அந்த தூதர்கள் சிறுவனின் உயிரினை கவர்வதற்கு தயங்கியவர்களாக திரும்பியதால், வேறு வழியின்றி இயமனே நேரில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது போலும். அதனால் இயமனுக்கு கோபம் வந்தது இயற்கை தானே. இயமனைக் கண்டதும் சிறுவன் கலங்கி மயங்கியதாக திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தனது ஆயுள் பதினாறு வயது தான் என்பதை நன்கு அறிந்தவன் சிறுவன் மார்க்கண்டேயன். இந்த வரையறை இறைவன் தனது தந்தைக்கு இறைவன் கொடுத்த வரத்தின் விளைவு என்பதையும் அறிந்தவன் சிறுவன் மார்க்கண்டேயன். எனவே பதினாறு வயதினில் தனக்கு மரணம் ஏற்படும் என்ற நிலைக்கு பக்குவப்பட்ட சிறுவனுக்கு கலக்கம் இயமனைக் கண்டதால் ஏற்படவில்லை. தான் செய்து கொண்டிருந்த சிவவழிபாட்டினுக்கு இடையூறு வந்ததே என்பதால் தான் அந்த சிறுவன் கலக்கம் அடைந்தான் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். செறுத்து=கோபம் கொண்டு; ஒறுத்து=தண்டனை அளித்து; தான் செல்லும் வழியில் குறுக்கிட்ட கயிலை மலை என்பதால் கோபம் கொண்டு, மலையை நெருங்கிய அரக்கன் இராவணன், செய்த தவற்றுக்கு, கயிலாய மலையினை அசைத்துப் பார்த்த குற்றத்திற்கு தண்டனை அளித்த பெருமான் பின்னர் இராவணன் சாமகானம் இசைத்து இறைவனைப் புகழ்ந்து பாடியதும் அதே அரக்கனுக்கு பல அருள்கள் புரிந்தான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். எப்போதும் அடியார்களுக்கு அருள் புரிவதில் மகிழ்ச்சி அடையும் பெருமானின் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.

கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்தலும் கலங்கி

மறுக்குறு மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில்

செறித்தெழு வாளரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று

ஒறுத்தருள் செய்த பிரான் திருவூறாலை உள்குதுமே

திருவல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.113.8) அரக்கன் இராவணன், கயிலாய மலையினை இகழ்ந்து கூறிய பின்னர், அந்த மலையை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நேடுவார்=தேடுபவர்; பிரமனும் திருமாலும் பெருமானின் திருப்பாதத்தைத் தேடி அலைந்து அந்த திருப்பாதத்தை காணமுடியாமல் வருந்தினர் என்றாலும், தன்பால் அன்பு கொண்டு தேடும் அடியார்களின் மனதினில் தானே மிகவும் எளியவனாக வந்து அவர்களது உள்ளத்தில் உறைபவன் பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அரக்கன் தனது இருபது கைகளையும் கயிலாய மலையின் கீழே கொடுத்து பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கனது செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

இகழ்ந்து அருவரையினை எடுக்கலுற்றாங்கு

அகழ்ந்த வல்லரக்கனை அடர்த்த பாதம்

நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே

திகழ்ந்தவன் உறைவிடம் திருவல்லமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் அஞ்சாதே கயிலாய மலையெடுத்தான் என்று கூறுகின்றார். தேரிலிருந்து வேகமாக கீழே குதித்து கோபத்துடன் மலையை நோக்கி ஓடிய அரக்கனிடம் அவனது தேர்ப்பாகன், தவறு செய்யவேண்டாம் என்று சொன்ன அறிவுரை அரக்கனது காதில் விழவில்லை. புனிதமான மலையினை வலம் வந்து வணங்காமல், அந்த மலையினை பேர்த்து எடுக்கத் துணிவது தவறு அல்லவா, அந்த தவற்றின் பின் விளைவுகள் மோசமாக இருக்குமே என்று அச்சம் கொண்டு, தவிர்த்திருக்க வேண்டும். சர்வ வல்லமை உடைய சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவதால் என்ன நேரிடுமோ என்று கவலை கொண்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய அச்சம் ஏதும் கொள்ளாமல், தனது வலிமையின் மீது அளவு கடந்த நம்பிக்கை உடையவனாக, அரக்கன் இராவணன் தனது வழியில் குறுக்கிட்ட கயிலாய மலையினைப் பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தைத் தொடர நினைத்தான். இந்த செய்கையைத் தான் அஞ்சாதே மலை எடுத்தான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வலிமை என்று உணர்த்தும் மைந்து என்ற சொல், எதுகை கருதி மஞ்சு என்று திரிந்தது. நெரிய=நொறுங்கும் வண்ணம்; அடர்த்த=மலையின் கீழே அமுக்கிய; இன், சாயல் ஆகிய இரண்டு சொற்களும் சேர்ந்து இஞ்சாயல் என்று மாறின. இன்=இனிய; சாயல்=நிழல்; மேதி=எருமை மாடு; இரிந்து=அச்சம் கொண்டு; உழக்கி=காலால் மிதித்து நசுக்கி; தேங்காய் தாமாக மரத்திலிருந்து விழுவதைத் தவிர்த்து எவரும் தேங்காயை பறிப்பதில்லை என்று குறிப்பிட்டு, நகரின் செல்வ வளம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. செஞ்சாலி=சிறந்த வகை நெல்;

அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர் கோன் தலைகள் பத்தும்

மஞ்சாடு தோள் நேரிய அடர்த்து அவனுக்கு அருள் புரிந்த மைந்தர் கோயில்

இஞ்சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இளமேதி இரிந்து அங்கு ஓடிச்

செஞ்சாலிக் கதிர் உழக்கிச் செழுங்கமல வயல் படியும் திருவையாறே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.132.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, கர்வம் மிகுந்த உடலை உடைய்வன் என்று குறிப்பிடுகின்றார். அளவு கடந்த வலிமை உடையவனாக இருந்த தன்மை தானே, ஆராயாது கயிலை மலையினை பேர்த்தெடுக்கும் செயலில் ஈடுபடத் தூண்டியது; அந்த கர்வம் தானே மிகுந்த ஆரவாரத்துடன் கயிலை மலை நொக்கிச் செல்லவும் காரணமாக இருந்தது. தருப்பம்=செருக்கு; பெருமானின் ஆற்றலை கருத்தினில் கொள்ளாது, தனது வலிமையில் கர்வம் கொண்டவனாக செயல்பட்ட அரக்கன் இராவணனை குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு, கர்வத்துடன் சிவபெருமானை நாடிச் சென்ற சலந்தரனின் தன்மையும் நினைவுக்கு வந்தது போலும். தனக்கு எதிராக போரிட எவரும் இல்லாத நிலையில், மிகுந்த தோள் தினவுடன், சிவபெருமானுடன் சண்டையிடலாம் என்று தானே சலந்தரன் அவரை நாடிச் சென்றான்.

கருப்பமிகு உடல் அடர்த்துக் காலூன்றிக் கை மறித்துக் கயிலையென்னும்

பொருப்பு எடுக்கலுறும் அரக்கன் பொன்முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில்

தருப்பமிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு

விருப்பொடு மால் வழிபாடு செய்ய விழிவிமானம் சேர் மிழலையாமே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.2.09) ஆர்த்து வந்த அரக்கனை அடர்த்த பெருமான் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். சீர்மை=பெருமை; தீர்த்தநீர்= புனிதமான நீர்; புண்ணிய நதிகளை, அதன் பெருமை கருதி மலர் தூவி வழிபடும் பண்பாடு தேவார முதலிகளின் காலத்தில் இருந்ததை இந்த பாடல் உணர்த்துகின்றது. இந்த செய்தியின் மூலம், புண்ணிய நதிகளில் நீராடத் தொடங்கும் முன்னர், அந்த நதியின் சிறப்பு கருதி, புண்ணிய தீர்த்தங்களை தொழவேண்டும் என்பது உணர்த்தப் படுகின்றது. குடைவார்=குடைந்து நீராடும் அடியார்கள்; ஆர்த்து வந்த=ஆரவாரம் செய்து வந்த; பலவிதமான பெருமைகள் உடையவர் என்று பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், அந்நாள் வரை பலரையும் வெற்றி கொண்டு செருக்குடன் திரிந்து கொண்டிருந்த அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கிய பெருமையான செயலை இங்கே குறிப்பிடுகின்றார். அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் இகழத் தக்க மண்டையோட்டில் பலியேற்பது அவரது பெருமைக்கு தகுதியானதா என்ற கேள்வியை இங்கே எழுப்புகின்றார். விருப்பு வெறுப்புகளை கடந்த பெருமான் தான் செய்யும் செயல்களின் விளைவாக தோன்றும் நன்மையை கருதுவாரே தவிர, அந்த செயல்களின் தகுதியை கருதுவதில்லை, என்பதே இந்த கேள்விக்கு விடையாகும். இந்த பதிகத்தின் பல பாடல்களில் பெருமான் தனது கையினில் ஏந்தியிருக்கும் மண்டையோட்டின் இழிந்த தன்மையை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமை வாய்ந்த மண்டையோடு என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக இழிவானதாக மண்டையோடு கருதப்பட்டாலும், பெருமானுடன் இணைந்ததாலும், பக்குவப்பட்ட உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் முக்திநிலை பெறுவதற்கு ஒரு கருவியாக செயல்படுவதாலும், பெருமை உடையது என்று குறிப்பிட்டார் போலும்.

தீர்த்த நீர் வந்து இழிபுனல் பொன்னியில் பன்மலர்

வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி

ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர்

சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.4.8) திருஞானசம்பந்தர் தக்கில் வந்த தசக்கிரிவன் என்று அரக்கன் இராவணனை குறிப்பிடுகின்றார். கிரிவம் என்றால் கழுத்து என்று பொருள்; தசக்கிரிவன்=பத்து கழுத்துகளை, அதாவது பத்து தலைகளை உடையவன் என்று பொருள். பெருமான் இராவணன் என்ற பெயரை அரக்கனுக்கு வழங்கும் முன்னர் அவன், தசக்கிரிவன் என்றே அழைக்கப்பட்டான் என்று வால்மீகி இராமயணம் உணர்த்துகின்றது. மலையின் கீழே அகப்பட்டு கதறிய அரக்கனின் குரல் எட்டு திக்குகளிலும் எதிரொலித்தது என்றும், இவ்வாறு உலகத்தவர் கேட்கும் வண்ணம் உரத்த குரல் உடையவன் என்ற பொருள் பட இராவணன் என்று அரக்கன் பெருமானால் அழைக்கப்பட்டான் என்பது திக்கில் வந்தலற என்ற தொடர் மூலம் இங்கே உணர்த்தப்படுகின்றது. தக்கில்=தகுதியற்ற முறையில் வந்த; கயிலாய மலையின் சிறப்பினை கருதி, மிகுந்த பக்தியுடன் அந்த மலையினை அணுகவேண்டும் என்பதே நெறி. ஆனால் அந்த மலை தான் செல்லும் வழியில் குறுக்கே இருந்தது என்ற எண்ணம் அரக்கனுக்குத் தோன்றியதால், அவனுக்கு வந்த கோபம், அவனது கண்களை மறைத்தது. கோபத்தில் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமல் அந்த அரக்கன் செயல்பட்ட நிலையை தகுதியற்ற நெறிமுறை என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தொக்க=இணைந்த; அம்மை உம்மோடு துணையாக இணைந்து இருக்கையில், நீர் எதற்காக பல பூத கணங்களும் பேய்க்கணங்களும் சூழ காணப்படுகின்றீர் என்று திருஞான சம்பந்தர் இறைவனை நோக்கி கேள்வி கேட்பதாக அமைந்த பாடல்.

தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்திறத்

திக்கில் வந்த அலறவ் வடர்த்தீர் திருவான்மியூர்த்

தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என்சொலீர்

பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே.

அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.05.08) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் ஈரமேதும் இலனாக கயிலாய மலையினை பேர்த்தெடுக்க எழுந்தான் என்று குறிப்பிடுகின்றார். ஈரம் என்பதற்கு அன்பு என்று பொருள் கொண்டு, பெருமானின் இருப்பிடமாகிய கயிலாய மலையின் மீது அன்பு வைத்தவனாக, பக்தி உள்ளவனாக இருக்கும் நிலைக்கு மாறாக அரக்கன் இருந்த தன்மை குறிப்பிடப்படுகின்றாது. அன்பும் பக்தியும் இன்றி தனது வீரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவனாக அரக்கன் செருக்குடன் இருந்த நிலை இங்கே புலப்படுத்தப் படுகின்றது. ஈரம் என்பதற்கு எதிர்மறை வெம்மை என்பதால் வெம்மை நிறைந்த மனதுடன் அரக்கன் தனது முயற்சியில் ஈடுபட்டான் என்று பொருள் கொள்வது பொருத்தமே. மனதில் வெம்மை என்றால் மனதில் கோப உணர்வு கொண்டவன் என்று பொருள். எனவே, தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி அரக்கன் கோபம் கொண்டு மிகுந்த ஆரவாரத்துடன் கயிலை மலையை பேர்த்தெடுக்கும் நோக்கத்துடன் அந்த மலையை நெருங்கினான் என்பது புலனாகின்றது. விலங்கல்=மலை, கயிலாய மலை; விலங்கலான்=கயிலை மலையின் உரிமையாளனாகிய பெருமான்; வாரம்-அன்பு;

ஈரமேதும் இலனாகி எழுந்த இராவணன்

வீரமேதும் இலனாக விளைந்த விலங்கலான்

ஆரம் பாம்பது அணிவான் தன் அனேகதங்காவதம்

வாரமாகி நினைவார் வினையாயின மாயுமே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.33.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் மிகுந்த கோபத்தோடு கயிலாய மலை நோக்கி வந்தான் என்று உணர்த்துகின்றார். கடுத்து=கோபத்துடன்; வரை=கயிலாய மலை; மிகு தோள்=வலிமையில் மிகுந்த தோள்கள்; அளி= வண்டு; நடத்த=அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்; கலவத் திரள்கள்=நறுமணம் மிகுந்த பொருட்களின் கலவை; வைகிய=நிறைந்த

கடுத்து வல அரக்கன் முன் நெருக்கி வரை தன்னை

எடுத்தவன் முடித்தலைகள் பத்து மிகு தோளும்

அடர்த்தவர் தமக்கு இடமது என்பர் அளி பாட

நடத்த கலவைத் திரள்கள் வைகிய நள்ளாறே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.57.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை, கறுத்த அரக்கன் என்று குறிப்பிடுகின்றார். மாது=பெருமை, காதல்; கறுத்த=கோபம் கொண்ட, தான் செல்லும் வழியில் இருந்துகொண்டு தனது பயணத்திற்கு தடையாக கயிலை மலை இருந்தது என்று எண்ணியதால் கோபம் கொண்ட அரக்கன் இராவணன். மறுகும் வண்ணம்=கலக்கம் அடையும் வண்ணம்; மாது என்ற சொல்லுக்கு அழகினை உடையவள் என்று பொருள் கொண்டு, தலத்து அம்பிகையின் திருநாமம் கல்யாண சுந்தரி என்பதை உணர்த்துவதாக சிலர் விளக்கம் கூறுவதும் பொருத்தமாக உள்ளது.

காதமரும் வெண்குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப

மாதமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டுகந்தீர்

தீதமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திருநல்லூர்

மாதமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.63.8) திருஞானசம்பந்தர், தான் செல்லும் வழியில் கயிலாய மலை எதிர்ப்பட்டதைக் கண்ட அரக்கன் இராவணன், தனது தேர் பயணத்தைத் தொடரும் வண்ணம் இந்த கயிலாய மலையினை பேர்த்து வேறொர் இடத்தில் வைத்து விட்டு பயணத்தை தொடருவேன் என்று வீரமொழி பேசியவனாக, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று கூறுகின்றார். ஏந்தும்=தாங்கும்; எண்ணத்தை தாங்கியவனாக; வரை=மலை; ஒரு முறை அரக்கன் இராவணன் கயிலாய மலையைக் கடந்து செல்ல முயற்சி செய்த போது அவனால் முடியவில்லை. தான் செல்லும் வழியில் குறுக்கே நின்று இடையூறு செய்தது என்று கருதிய அரக்கன், இந்த மலையை பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தை மேற்கொள்வேன் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதை ஏந்தும் என்ற சொல் மூலம் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த தலத்தினை காண வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணம் மேற்கொள்ளும் அடியார்கள் தங்களது வினைகள் நீங்கப் பெறுவார்கள் என்று கூறுகின்றார்.

இத்தேர் ஏக இம்மலை பேர்ப்பன் என்று ஏந்தும்

பத்தோர் வாயான் வரைக் கீழ் அலறப் பாதம் தான்

வைத்தார் அருள் செய் வரதன் மருவும் ஊரான

புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை மதியா அரக்கன் என்று குறிப்பிடுகின்றார். கயிலாய மலையின் சிறப்பினை கருதி அந்த மலையினை வலம் வராமல், அதனை பேர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அணுகிய அரக்கனின் செயல் குறித்து மதியா அரக்கன் என்று இங்கே கூறுகின்றார். வாளன்= வாளினை உடையவன்; உலம்=கற்றூண்; நலமிகு கீழுமேலும்=நலமுடைய கீழ் ஏழ் மற்றும் மேலேழ் உலகங்கள்; வலமிகு வாளன் வேலன் என்ற தொடரினை அரக்கன் என்பதுடன் கூட்டி. வலிமை மிகுந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடைய அரக்கன் இராவணன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வலிமை மிகுந்தவனும், சிறந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடையவனும் ஆகிய பெருமான், வளைந்த வாள் போன்று நீண்ட பற்களை உடைய அரக்கன் இராவணன், கயிலை மலையை மதியாது அதனைப் பேர்த்து எடுக்கத் துணிந்த போது, அரக்கனது கற்றூண் போன்று வலிமையான தோள்களும் வலிமை இழக்கும் வண்ணம் தனது விரலை மலையின் மீது ஊன்றி அரக்கனை மலையின் கீழே அழுத்தினான். அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் மிகுந்த விருப்பத்துடன் உறையும் நகரம் தான் நனிபள்ளி. நலங்கள் பல உடைய கீழேழ் மற்றும் மேலேழ் உலகங்களிலும் தனக்கு நிகராக எவரும் இல்லாதவனாக திகழும் சிவபெருமானை, நீதியின் வடிவமாக திகழும் பெருமானை வணங்கி, நாள்தோறும் அவனது திருவடிகளைப் போற்றி புகழும் அடியார்கள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாகஎன்று தனது தொண்டர்களிடம் திருஞானசம்பந்த்ர் கூறும் பாடல்.

வலமிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு

உலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர் தான்

நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை

நலமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்

அரக்கன் இராவணன் தனது வலிமையின் மீது அளவு கடந்த வலிமை கொண்டிருந்த காரணத்தால் தான், அவன் மிகுந்த ஆரவாரத்துடன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தான் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல் சீர்காழி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பாடல் (2.96.8); கார்கொள் மேனி=கறுத்த உடல்; ஏர்கொள்=அழகுடைய; தார்=பூ; கயிலை மலையின் மேன்மை கருதி எழில்கொள் மலை என்று கூறுகின்றார்.

கார்கொள் மேனியவ்வரக்கன் தன் கடுந்திறலினைக் கருதி

ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் எரியச்

சீர்கொள் பாதத்தொர் விரலால் செறுத்த எம் சிவனுறை கோயில்

தார் கொள் வண்டினம் சூழ்ந்த தண்வயல் காழி நன்னகரே

கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.8) அறிவு இழந்தவனாக அரக்கன் இராவணன் ஆரவாரத்துடன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க ஒடினான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மடுத்த=உட்புகுத்திய; பகைவர்களின் உடலில் உட்புகுத்திய என்று பொருள் கொள்ளவேண்டும். இற=முரிந்து விழ; கடுத்து=தனது செயலுக்கு வருந்தி; பேரருள் கூத்தன்=ஞான நாடகமாடும் பெருமான்; பெருமான் ஆடும் நடனத்தை அதன் பயன் கருதி, ஊன நடனம் என்றும் ஞானநடனம் என்றும் பெரியோர்கள் கூறுவார்கள்; கை எடுத்து அலறி என்ற தொடர் மூலம், அரக்கன் உடல் வருத்தத்தினால் அலறியது மட்டுமன்றி, தன்னை காப்பற்றும் வண்ணம் பெருமானை இறைஞ்சி கையெடுத்து கூப்பினான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். குணம் உடையவர் என்று பெருமான் விரும்பும் எட்டு நல்ல குணங்களைக் கொண்ட அடியார்கள் என்று உணர்த்துகின்றார். அக மலர்கள் என்று நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய குணங்கள் எட்டு இங்கே குறிப்பிடப் படுகின்றன. அவை, கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாகும். நாம் அனைவரும் இந்த குணங்களைக் கொண்டு, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் விரும்புகின்றார்.

மடுத்த வாளரக்கன் அவன் மலைதன் மேல் மதியிலாமையில் ஓடி

எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரலூன்றக்

கடுத்து வாயொடு கையெடுத்து அலறிடக் கடிக்குளம் தனில் மேவிக்

கொடுத்த பேரருள் கூத்தனை ஏத்துவார் குணமுடையவர் தாமே

மாந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.110.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை நிந்தியா எடுத்தார்த்த வல்லரக்கன் என்று குறிப்பிடுகின்றார். நிந்தியா=நிந்தனை செய்து; இந்த பாடலில் பெருமானின் பெருமையை உணராது அவனை நிந்தனை செய்த அரக்கன் இராவணன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கயிலை மலையின் சிறப்பு கருதி அதனை வலம் வந்து தனது பயணத்தை அரக்கன் தொடர்ந்திருந்தால், அவனுக்கு எந்த கேடும் ஏற்பட்டிருக்காது. ஆனால் அரக்கனோ கயிலை மலையினை துச்சமாக மதித்து அதனைப் பேர்த்து எடுப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்தான். இந்த செய்கையைத் தான் ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். நிந்தித்து சிந்தியா=சிந்தனை செய்யாத; தீநெறி=தீயநெறி, நரகம் செல்வதற்கு வழி வகுக்கும் செய்கைகள்; இந்த பாடலில் இறைவனைப் பற்றி சிந்தனை செய்யாது வாழும் மனிதர்கள் தீயநெறியைச் சென்று அடைவார்கள் என்று கூறுகின்றார். பெருமானைச் சிந்தியாத மனிதர்கள் தீநெறி சென்று சேர்வார் என்று கூறுவதன் மூலம், எதிர்மறைக் கருத்தாக, இறைவனைச் சிந்திக்கும் மனிதர்கள் நன்னெறி சேர்வார்கள் என்று நமக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். மந்திகள் மாந்திட என்று மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். மந்தம்=தென்றல்;

மந்தமார் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்

உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை

நிந்தியா எடுத்து ஆர்த்த வல்லரக்கனை நெரித்திடு விரலானைச்

சிந்தியா மனத்தார் அவர் சேர்வது தீநெறி அது தானே

திலதைப்பதி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.118.8) திருஞானசம்பந்தர், மிகுந்த கோபத்துடன் கயிலாய மலையினை நொக்கிச் சென்ற அரக்கன் இராவணன் என்று கூறுகின்றார். கடுத்து=மிகுந்த கோபத்தோடு கனல்=தீ; பூகம்=பாக்கு மரம்; மது=கள், தேன்; மடுத்து=பருகி, உண்டு; கருவரை=சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் என்பதால் கருவரை என்று சொல்லப் படுகின்றது.

கடுத்த வந்த கனல் மேனியினான் கருவரை தனை

எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க்கு இடமாவது

புடைகொள் பூகத்திளம்பாளை புல்கும் மதுப்பாயவாய்

மடுத்து மந்தி உகளும் திலதைம் மதிமுத்தமே

மூக்கீச்சரம் (தற்போதைய பெயர் உறையூர்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.8), திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை ஆர்க்கும் வாயான் என்று குறிப்பிடுகின்றார். ஈர்க்கு நீர்=தன்னை நெருங்கும் மனிதர்களை இழுக்கும் தன்மை; கங்கை நதியில் இருக்கும் வெள்ளப் பெருக்கு, நதியினை நெருங்கும் மனிதர்களை இழுத்து வெள்ளச் சுழலில் அழுத்தி மூழ்கடிக்கும் வண்ணம், நிறைந்த வேகமாக ஓடும் நீரினை உடையது; ஆர்க்கும்=ஆரவாரம் செய்த; உரம்=உடல் வலிமை; அடல்=வலிமை; மூர்க்கன் என்ற சொல்லினை அரக்கன் என்பதற்கு முன்னர் வைத்து பொருள் காணவேண்டும். மொய்ம்பு=வல்லமை மிகுந்த செயல்; முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார் என்ற மொழிக்கு ஏற்ப தேர்ப்பாகனது எச்சரிக்கையையும் புறக்கணித்து செயலில் இறங்கிய இராவணனின் செய்கை, மூர்க்கனது செய்கை என்று குறிப்பிடப்பட்டது. சிவ வழிபாட்டுக்கு எவரும் இடையூறு செய்யலாகாது என்பதை உணர்த்த, கூற்றுவனை உதைத்தவர் சிவபெருமான்; மூவிலைச் சூலம் ஏந்தியது, தோற்றுவித்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்வது தானே என்பதை உணர்த்தும் பொருட்டு; இராவணனுக்கு அருள் புரிந்தது இந்நாள் வரை நாம் எந்த தவறுகளைச் செய்திருந்தாலும், இன்று முதல் நாம் இறைவனை வணங்கத் தொடங்கினால், தயக்கம் ஏதுமின்றி இறைவன் நமக்கு அருள் புரிவான் என்பதை உணர்த்தும் பொருட்டு. கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றதற்கான காரணம் இந்த் பதிகத்தின் முந்தைய பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது.

ஈர்க்கு நீர் செஞ்சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும்

கூர்க்கு நன் மூவிலை வேல் வலன் ஏந்திய கொள்கையும்

ஆர்க்கும் வாயான் அரக்கன் உரத்தை நெரித்து அவ்வடல்

மூர்க்கன் மூக்கீீச்சரத்து அடிகள் செய்யா நின்ற மொய்ம்பு அதே

கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.12.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் வஞ்சனையாக கயிலாய மலையை பேர்த்தெடுக்கத் துணிந்தான் என்று கூறுகின்றார். கரவு அமரக் கயிலை எடுத்தான் என்று கூறுகின்றார். கரவு=வஞ்சனையான எண்ணம். இந்த நிகழ்ச்சி, இராவணன் தனது அண்ணன் என்றும் கருதாது குபேரனுடன் போர் புரிந்து அவனது புட்பக விமானத்தைக் கைப்பற்றிய பின்னர், வேறு பலரையும் வெற்றி கொள்ளும் நோக்கத்துடன் திக்விஜயம் செய்தான். தான் செல்லும் வழியில் எதிர்ப்பட்டது என்று கருதி கயிலாய மலையின் மீது கோபம் கொண்ட அரக்கனுக்கு இரண்டு வழிகள் இருந்தன; முதலாவது கயிலாய மலையின் தலைவனாகிய பெருமானுடன் போரிட்டு வெற்றி கொண்ட பின்னர் அந்த மலையினை அங்கிருந்து அகற்றியிருக்க வேண்டும்; அல்லையேல் பெருமானின் எல்லையற்ற ஆற்றலையும் பெருமானின் முன்னே தான் மிகவும் எளியவன் என்பதையும் கருத்தினில் கொண்டு, பெருமானின் அனுமதி பெற்று தனது பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்; இந்த இரண்டினில் எதனையும் மேற்கொள்ளாத அரக்கன், தனது தேர்ப்பாகன் சொன்ன அறிவுரையை கருத்தினில் கொண்டு கயிலை மலையினை வலம் செய்தாவது தனது பயணத்தைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் இவை எதையும் செய்யாமல், கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைக்கலாம் என்று வஞ்சனையாக செயல்படத் துணிந்தான். இந்த தன்மை தான் இங்கே குறிப்ப்பிடப்படுகின்றது. அரக்கனின் கருமை நிறத்தினை இரவமரும் நிறம் என்று சொல்கின்றார். இருள் படர்ந்த மேனி என்று பொருள்: அவனது உடல் மட்டுமா இருள் படர்ந்து கருமை நிறத்துடன் காணப்பட்டது, அவனது மனமும் அல்லவா வஞ்சனையாகிய இருள் படர்ந்து இருந்தது. அந்த நிலையை குறிப்பாக உணர்த்தினார் போலும்.

இரவமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை

கரவமர்க் கயிலை எடுத்தான் வலி செற்றவன்

முரவமரும் குலமலர்ச் சோலை சூழ்ந்த திருக் கோட்டாற்றுள்

அரவமரும் சடையான் அடியார்க்கருள் செய்யுமே

திருவழுந்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.20.9) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் தணியாது மலையை எடுத்தான் என்று கூறுகின்றார். கோபம் வருவது உயிரின் இயற்கை. ஒரு சில நொடிகள் ஆற அமர யோசித்தால் அந்த கோபம் குறைவதையும் நாம் உணர்கின்றோம். அதனால் தானே கோபம் கொள்ளும்போது உடனே செயல்படாமல், சிறிது நேரம் கழித்து எந்த செயலிலும் ஈடுபடுமாறு பெரியோர்கள் ஆலோசனை அளிக்கின்றனர். ஆனால் அரக்கன் இராவணனுக்கோ கயிலை ம்லையின் மீது கோபம் மிகவும் அதிகமாக இருந்ததால், அந்த கோபம் சிறிதும் தணியாதவனாக அவன் மலையை நெருங்கினான் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். மணிநீள் முடி=இரத்தினங்கள் பதிக்கப்பட்ட நீண்ட கிரீடம்; அணியார் விரல்=அழகிய விரல்: பணி=பணிகின்ற; மாமடம்=பெருங்கோயில்;

மணிநீள் முடியான் மலையை அரக்கன்

தணியாது எடுத்தான் உடலம் நெரித்த

அணியார் விரலாய் அழுந்தை மறையோர்

பணிமா மடம் மன்னி இருந்தனையே

திருவுசாத்தனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.33.8) மதியிலா அரக்கன் என்று அரக்கன் இராவணனை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கோபம் அவனது கண்களை மறைக்க, அவன் மதியிலாதவனாக, மிகுந்த ஆத்திரத்துடன் தனது முயற்சியில் ஈடுபட்டதை, சடசட என்ற ஒலிக்குறிப்பு மூலம் உணர்த்துகின்றார். ம்டவரல்=என்றும் இளமைத் தன்மை உடைய பார்வதி தேவி; திடமென=உறுதியாக

ம்டவரல் பங்கினன் மலை தனை மதியாது

சடசட எடுத்தவன் தலை பத்து நெரிதர

அடர்தர ஊன்றி அங்கே அவற்கருள் செய்தான்

திடமென உறைவிடம் திருவுசாத்தானமே

திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.52.8) கருத்திலா இலங்கை மன்னன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கயிலாய மலையின் புனிதத் தன்மை மற்றும் பெருமானின் ஆற்றல் ஆகிய்வற்றை கருத்தில் கொள்ளாதவனாக அரக்கன் செயல்பட்ட தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. நிறையிலங்கு=புலன்களின் வழியே செல்லாமல், ஒன்றிய மனத்துடன், இறைவன் பற்றிய் சிந்தனைகளே மனதினில் நிறைந்து நிற்கும் வண்ணம்; இவ்வாறு இறைவனை வழிபடுவதே முறையான வழிபாடு என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மறையிலங்கு பாடலாய்=வேதங்களில் உள்ள பாடல்களால் போற்றப் படுபவனே;

க்றையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்

துறையிலங்கு மன்னனைக் தோள் அடர ஊன்றினாய்

மறையிலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய்

நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே

வெண்டுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.61.8) திருஞானசம்பந்தர் மிகுந்த சினத்துடன் அரக்கன் இராவணன் கயிலாய மலையை எடுத்தான் என்று குறிப்பிடுகின்றார். கடுவன் சினமா=கடுமையான கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டு; பகைவர்களாக இருந்தாலும் அவர்களை வருத்துவதில் பெருமானுக்கு விருப்பம் ஏதுமில்லை. எனவே, செற்றுகந்தான் என்று இந்த பாடலில் குறிப்பிடுவது, இராவணனுக்கு அருள் புரிந்து பெருமான் மகிழ்ந்த செய்தியை குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்வதே பொருத்தம். தனக்குத் தீமை இழைக்க முயற்சி செய்த அரக்கனுக்கு அருள் புரிந்த கருணையாளர், தன்னைப் புகழ்ந்து பாடும் அடியார்களுக்கும் மிகுந்த விருப்பத்துடன் அருள் புரிவார் என்பதை உணர்த்தும் பொருட்டு, பரவவல்லார் வினைகள் அறுப்பான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

கரமிரு பத்தினாலும் கடுவன் சினமா எடுத்த

சிரமொரு பத்தும் உடை அரக்கன் வலி செற்றுகந்தான்

பரவ வில்லார் வினைகள் பற்றறுப்பான் ஒரு பாகமும் பெண்

விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே

திருக்கயிலாய மலையின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை கருத்திலா ஒருத்தன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் கால் பெருவிரலினை நிருத்த விரல் என்று இங்கே குறிப்பிட்டு, அதன் நளினத்தையும் மென்மைத் தன்மையையும் நமக்கு உணர்த்துகின்றார். எப்பொதும் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் பெருமானின் பாதங்களும் பாதத்தின் விரல்களும் நளினமாக இருப்பது இயற்கை தானே. மலையின் மீது மோதும் மதயானையின் நிலைக்கு அரக்கன் மிகவும் பொருத்தமாக ஒப்பிடுகின்றார். மருப்பு=கோடு, இங்கே தந்தம் என்று பொருள் கொள்ளவேண்டும். மிகுந்த ஆவேசத்துடன் மலையின் மேல் மோதும் யானையின் தந்தங்களிலிருந்து நெருப்புப் பொறிகள் பறக்கும் தன்மை, தனது வலிமையின் மீது செருக்கு கொண்டு மோதும் யானையின் நிலை, முதலியவை அரக்கனின் நிலையை ஒத்து இருந்ததை நாம் உணரலாம். செரு=போர்; பருத்த=உடல் பருத்த; பொருப்பு=கயிலாய மலை; விருப்புற இருக்கை=விருப்பத்துடன் அமரும் இருக்கை; ஒருக்கு=ஒருங்கே, மலையையும் மலையின் மேல் அமர்ந்திருகும் இறைவன், இறைவி மற்றும் அனைவரையும், ஒருங்கே அசைத்து பேர்க்கும் முயற்சி; ஒருத்தி=ஒப்பற்ற உமையன்னை; வெருக்குற=அச்சம் எழ; கருத்தில= மலையின் புனிதத் தன்மை மற்றும் பெருமானின் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல்; மிகுந்த ஆவேசத்துடன், தனது வலி வலிமையின் மீது மிகவும் அதிகமான நம்பிக்கை கொண்டவனாக, தனது வலிமையால் கர்வம் கொண்டவனாக, கயிலாய மலையின் புனிதத் தன்மை மற்றும் பெருமானின் ஆற்றல் ஆகிய்வற்றை கருத்தில் கொள்ளாதவனாக அரக்கன் செயல்பட்ட தன்மை மிகவும் நேர்த்தியாக, மதயானையுடன் தன்மைக்கு ஒப்பிடப்பட்டு, இந்த பாடலில் சொல்லப்படுகின்றது.

மருப்பிடை நெருப்பெழு தருக்கோடு செருச் செய்த பருத்த களிற்றின்

பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராத்

ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்த விரலால்

கருத்தில ஒருத்தனை எருத்திற நெரித்த கயிலாயமலையே

திருமாணிக்குழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.77.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனின் செயலை எண்ணமதுவின்றி செய்த செயல் என்று குறிப்பிடுகின்றார். கயிலாய மலையின் பெருமையையும் சிவபெருமானின் அளவுகடந்த ஆற்றலையும் எண்ணிப் பார்க்காமல், முன்யோசனை ஏதும் இல்லாமல் தேவையற்ற துணிச்சலுடன் அரக்கன் இராவணன் செய்த செயல் என்பதை உணர்த்துகின்றார். திறல்=ஆற்றல், வலிமை; பண்ணமரும்=இசைப் பண்கள் சென்று அமர்ந்தது போன்று இனிய மொழிகளை உடைய மகளிர்; பணை=பருத்த; இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் உதவி மாணிக்குழி என்று குறிப்பிடப் பட்டுள்ளமையால் உதவி என்பது இந்த தலத்தின் பெயராகவும் மாணிக்குழி என்பது இந்த தலத்தின் பெயராகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கலாமோ என்று சிலர் கருதுகினறனர்.

எண்ணமதுவின்றி எழிலார் கைலைமாமலை எடுத்த திறலார்

திண்ணிய அரக்கனை நெரித்து அருள் புரிந்த சிவலோகன் இடமாம்

பண்ணமரும் மென்மொழியினார் பணை முலைப் பவள வாய் அழகதார்

ஒண்ணுதல் மடந்தையர் குடைந்து புனலாடுதவி மாணிகுழியே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன், தான் செல்லும் வழியில் கயிலாய மலை குறுக்கிட்டது என்ற எண்ணம் உடையவனாக இருந்ததால், அவனது மனம், கோபம் என்ற நெருப்பால் நிரம்பி வழிந்தது என்று கூறுகின்றார். உரக்கர=உரம் மற்றும் கரம்; உரம் என்பது இங்கே நெஞ்சினை குறிப்பிடுகின்றது. வரை=மலை; அங்கணன்=அழகிய கண்களை உடையவன்; முருக்கு=முருங்கைப்பூ;மொய்த்த= மிகவும் அதிகமாக பூசிய; கயிலை மலை தான் செல்லும் வழியில் தடங்கலாக இருந்தது என்பதால் அதனை பேர்த்து எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு, தனது பயணத்தை தொடர நினைத்த அரக்கனின் மனம் கோபம் என்ற நெருப்பால் நிரம்பி வழிந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.மிகுந்த கோபத்தால், அரக்கன் தனது தோள்களை தட்டிக் கொண்டும் கைகளை ஒன்றோடொன்று அடர்த்து பிசைத்துக் கொண்டும் இருந்ததால்,நெருப்புப் பொறிகள் பறந்தன, என்று அரக்கன் இருந்த ஆவேச நிலையினை இங்கே குறிப்பிடுகின்றார்.

உரக்கர நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள்

அரக்கனை அடர்த்து அவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடமாம்

முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை

விரைக் குழல் மிகக் கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.86.8) திருஞானசம்பந்தர், கயிலை நன்மலையின் சிறப்பினைக் கருதாது நிந்தனை செய்தவன் அரக்கன் இராவணன் என்று கூறுகின்றார். கட்டுரம்=உடல் வலிமை; நிட்டுரன்=நிந்தனைக்கு தகுந்த; நிஷ்டூரன் என்றார் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; மட்டுரம்=வாசனை; தனக்கு தீங்கு இழைத்த அரக்கன் இராவணனுக்கு கருணை கொண்டு அருள் புரிந்த மலையினை கயிலை நன்மலை என்று கூறுகின்றார். சிட்டர் என்ற சொல் நல்லியல்பு உடையவர், மேலானவர், ஒழுக்க சீலர் என்று பல பொருள் பட திருமுறைப் பதிகங்களில் கையாளப்பட்டுள்ளது. மட்டு=நறுமணம்; மட்டுர=நறுமணம் பொருந்திய புது மலர்கள்;

கட்டுரம் அது கொடு கயிலை நன்மலை மலி கரமுடை

நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரி செய்தார்

மட்டுர மலரடி அடியவர் தொழுதெழ அருள் செயும்

சிட்டர் தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே

கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.89.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை ஆரவாரம் செய்த வாய்களை உடையவன் என்று குறிப்பிடுகின்றார். அடலெயிறு=வலிமை வாய்ந்த பற்கள்; நெருக்கி=நெருங்கி; அரக்கனார் என்று இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதை விகுதி கொடுக்கப் பட்டுள்ளது. முத்தமும்=முத்து போன்ற அரும்புகளும்; மாடு=அருகே; புன்னை மாடு=புன்னை மரங்களில்; பெருகும்=மகிழ்ச்சி பெருகும் வண்ணம் துணையுடன் இணைந்த குருகுகள்;

அடலெயிற்று அரக்கனார் நெருக்கி மாமலை எடுத்து ஆர்த்த வாய்கள்

உடல்கெடத் திருவிரல் ஊன்றினான் உறைவிடம் ஒளிகொள்வெள்ளி

மடலிடைப் பவளமும் முத்தமும் தொத்து வண்புன்னை மாடே

பெடையொடும் குருகினம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே

அவளிவணல்லூர் தலத்தின் மீது அருளீய பதிகத்தின் பாடலில் (3.82.8) திருஞானசம்பந்தர், இந்த கயிலாய மலையின் மீது பெருமானும் உளனோ என்று மிகவும் இகழ்ச்சியாக பேசிய வண்ணம், தனது பயணத்தைத் தடுத்த மலை என்ற எண்ணத்தினால் மிகுந்த கோபத்துடன் மலையை பேர்த்து எடுக்கும் முயற்சியில் அரக்கன் இராவணன் இறங்கினான் என்று கூறுகின்றார். விறலோன்=வலிமை உடையவன்; கருவரை=கரிய மலை; அன்ன=போன்ற; தன்னை விடவும் வலியவனாக ஒருவரையும் காண்பதை சகிக்க முடியாத அரக்கன் இராவணன், தான் செல்லும் வழியில் குறுக்கிட்ட கயிலை மலையின் மீது பெருமானும் உளனோ என்று செருக்குடன் கேள்வி எழுப்பியவனாக, மிகுந்த கோபத்துடன் பெரிய மலை போன்றும் ஆழமான கடல் போன்றும் வலிமை உடைய தனது கைகள் கொண்டு, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அந்த அரக்கன், அரிதான கயிலை மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் ஊன்றியவன் சிவபெருமான். அத்தகைய வலிமை வாய்ந்த வன் பெருமான் அவளிவணல்லூர் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஒருவரையும் மேல்கொடேன் என எழுந்த விறலோன் இப்

பெருவரையின் மேலொர் பெருமானும் உளனோ என வெகுண்ட

கருவரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை

அருவரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே

துருத்தி மற்றும் வேள்விக்குடி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (3.90.8) திருஞானசம்பந்தர், தான் செல்லும் வழியில் எதிர்ப்பட்ட கயிலாய மலையினை தோண்டி எடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு பயணத்தை தொடர்வேன் என்று வீரமாக முழங்கியதாக கூறுகின்றார். நீண்டு இலங்கு=நெடுந்தூரம்; அவிர் ஒளி=பிரகாசிக்கும் ஒளி; நீள்வரை=நீண்டு உயர்ந்த =கயிலாய மலை; ஆள்வினை-முயற்சி; கீழப்படுத்துதல்=முயற்சி மேலெழுந்து வெற்றி பெறாத வண்ணம் அரக்கனை மலையின் கீழே அழுத்தி, அவனது வலிமையை அழித்து, அவனது முயற்சியினை முறியடித்த செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடுமுடி அரக்கன் இந் நீள்வரையைக்

கீண்டிடந்து இடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார்

பூண்ட நூல் மார்பினர் அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்

வேண்டிடம் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே

புனிதமான கயிலாய மலையினை பேர்த்தெடுக்க நினைப்பது செய்யத் தகாத செய்கை அல்லவா. பொதுவாக அத்தகைய செயலைச் செய்வதற்கு எவரும் கூச்சம் கொள்வார்கள்; ஆனால், கயிலை மலை தான் செல்லும் வழியில் இருந்து தன்னைத் தடுததது என்ற என்ணத்தினால் அரக்கன் இராவணன் கொண்டிருந்த கோபம், அவனது புத்தியை மழுங்கடிக்கவே, கூச்சம் ஏதும் இலாதவனாக அரக்கன் இந்த இழிவான செயலைச் செய்யத் துணிந்தான் என்று திருஞான சம்பந்தர் நமக்கு உணர்த்தும் பாடல் திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (3.107.8). கூசம்=கூச்சம்; புனிதம் வாய்ந்த கயிலாய மலையினை வலம் சென்று தனது பயணத்தைத் தொடராது, அந்த மலையினை பேர்த்து எடுக்க நினைப்பது தவறு என்பதை உணராதவனாக இருந்ததால் அரக்கன் இராவணன் கூச்சம் ஏதும் கொள்ளாமல் தனது முயற்சியினை மேற்கொண்டான் என்பது இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. அவனது முயற்சியினால் கயிலாய மலை ஆட்டம் கண்டதையும், அதனால் அச்சம் கொண்ட பார்வதி தேவி நடுங்கியதையும் பல தேவாரப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அந்த நிகழ்ச்சியே, அரக்கன் மலையினை குலுங்க எடுத்தான் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இற=அறுந்து வீழ; கரவாதார்=நெஞ்சினில் வஞ்சனை இல்லாமல் இறைவனை வழிபடும் அடியார்கள்.

கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள்

நாசமதாகி இற அடர்த்த விரலான் கரவாதார்

பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும்

தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திருநாரையூர் தானே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.8) திருஞானசம்ப்ந்தர் அரக்கன் இராவணனை, கடுத்த வாளரக்கன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் (3.119.8) திருஞானசம்பந்தர், கிளிகள் வேதத்தின் சொற்களை ஓதுவதைக் கேட்கும் அந்தணச் சிறுவர்கள் தங்களது காதுகளைத் தீட்டிக் கொண்டு அந்த சொற்களை தாங்களும் கேட்டு இன்பம் அடைவதாக கூறுகின்றார். வேதங்களை எவரேனும் தவறாக ஓதினால், அந்த தவறுகளை திருத்தும் வல்லமை பெற்ற கிளிகள் என்பதால், அந்த கிளிகள் சொல்வதை உன்னிப்பாக சிறுவர்கள் கவனித்தனர் போலும். விடைக்குலம் என்ற சொல்லுக்கு பசுவின் கூட்டம் என்று பொருள் கொண்டு, கிளிகள் சொல்வதைக் கேட்ட பசுக்கள் தங்களது காதுகளை நீட்டி பழக்கிக் கொள்கின்றன என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பாடு=அருகே; படித்த=கற்றுக் கொண்ட, அந்நாளில் வீழிமிழலை தலத்தில் வேதபாடசாலைகள் இருந்தன போலும். கடுத்த=கோபம் கொண்ட; அரக்கன் இராவணன் அஞ்செழுத்தை ஓதியதாக இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். எனவே சிவபெருமானின் திருநாமங்களை எடுத்துரைக்கும் சாமவேத ருத்ரம் மற்றும் சமகம் ஆகியவற்றை இராவணன் பாடினானோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

கடுத்த வாளரக்கன் கைலை அன்றெடுத்த கரம் உரம் சிர நெரித்தலற

அடுத்ததோர் விரலால் அஞ்செழுத்து உரைக்க அருளினன் தடமிகு நெடுவாள்

படித்த நான்மறை கேட்டிருந்த பைங்கிளிகள் பதங்களை ஓதப்பாடிருந்த

விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே

பொழிப்புரை:

தான் செல்லும் வழியில் குறுக்கே நின்றது என்று கருதி, கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தைத் தொடர நினைத்த அரக்கன் இராவணன், மிகுந்த ஆரவாரத்தோடு அந்த மலையை நெருங்கிய அரக்கன், அந்த முயற்சியில் ஈடுபட்ட போது, பெருமான் தனது வரிசையாக அமைந்துள்ள கால் விரல்களின் ஒன்றான பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றி அந்த அரக்கனை கயிலாய மலையின் கீழே அமுக்கி அவனது வலிமையை குன்றச்செய்து வருத்தினார். அத்தகைய ஆற்றல் உடைய பெருமான் உறைகின்ற தலம் தென்குரங்காடுதுறையாகும். இந்த தலம், இரண்டு கரைகளையும் பொருந்தும் வண்ணம் மிகுந்த நீர்ப்பெருக்குடன் ஓடிவரும் காவிரியின் அழகிய கரை மேல், பல பறவைகள் வசிப்பதால் ஆரவாரம் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டு உள்ளது.

பாடல் 9:

நெடியானொடு நான்முகனும் நினைவொண்ணாப்

படியாகிய பண்டங்கன் நின்றெரியாடி

செடியார் தலை ஏந்திய செங்கண் வெள்ளேற்றின்

கொடியான் நகர் போல் குரங்காடுதுறையே

விளக்கம்:

படி=தன்மை, உருவம்; செடியார் தலை=பறிக்கப்பட்டதால் தனது தன்மையில் கெட்ட பிரம கபாலம்; செங்கண்=கோபத்தால் சிவந்த கண்களை உடைய இடபம்; செங்கண் என்பதால் திரிபுரத்தவர்களுடன் பெருமான் போரிடச் சென்றபோது, தேரின் தட்டு முறிந்த நிலையில் திருமால் எருதாகி மாறி பெருமானுக்கு வாகனமாக இருந்த தன்மையை குறிப்பிடுகின்றார் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றன்ர். மால்விடை என்பது வெணமை நிறம் கொண்டதல்ல என்பதால், தரும தேவதையாகிய இடபம் என்று பொருள் கொள்வதே பொருத்தம். திரிபுரத்தை அழித்த பின்னர் பெருமான் பண்டரங்கக் கூத்தை ஆடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. பல தேவாரப் பாடல்கள் இந்த கூத்தினை உணர்த்துகின்றன. பண்டரங்கக் கூத்தினை ஆடிய பெருமானை, திருஞான சம்பந்தர் பண்டரங்கர் என்று குறிப்பிடும் பாடல் தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (1.60.1). பஞ்ச தாண்டவங்கள் (ஆனந்த தாண்டவம், அஜபா தாண்டவம், ஞானசுந்தர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம தாண்டவம்) என்றும், சப்த தாண்டவங்கள் (ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹார தாண்டவம், கௌரி தாண்டவம், காளிகா தாண்டவம்) என்றும், சப்த விடங்க தாண்டவம் (உன்மத்த தாண்டவம், அஜபா தாண்டவம், வீசி தாண்டவம், குக்குட தாண்டவம், பிருங்க தாண்டவம், கமலா தாண்டவம், அம்சபாத தாண்டவம்) என்றும், நவ தாண்டவங்கள் (ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், புஜங்க தாண்டவம், முனி தாண்டவம், பூத தாண்டவம், சுத்த தாண்டவம், சிருங்கார தாண்டவம்) என்றும், பன்னிரு தாண்டவங்கள் (ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், சிருங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், முனி தாண்டவம், சம்ஹார தாண்டவம், உக்ர தாண்டவம், பூத தாண்டவம், பிரளய தாண்டவம், புஜங்க தாண்டவம், சுத்த தாண்டவம்) என்றும் பலவகையாக பிரிக்கப் பட்டுள்ளன. இவையன்றி நூற்றெட்டு தாண்டவ வகைகளையும் பெருமான் ஆடியதாக சொல்லப் படுகின்றது. வண்டினை தூதாக அனுப்ப எண்ணும், சம்பந்த நாயகி, பெருமான் நடனம் ஆடுபவர் என்பதை வண்டுக்கு உணர்த்துகின்றாள். வண்டுகள் இசை பாடும் தன்மை உடையதால் வண்டினை இசைக் கலைஞனாக சம்பந்த நாயகி காண்கின்றாள். இசைக் கலைஞர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நாம் இன்றும் காண்கின்றோம். எனவே நடனமாடும் பெருமானிடம் தூது செல்வதற்கு வண்டினை விடவும் பொருத்தமானவர் வேறு எவரும் இல்லை என்று நினைத்தாள் போலும். மேலும் பெருமான் அணிந்துள்ள மலர்களில் உள்ள தேனைப் பருகுவதற்கு வண்டுகள் பெருமான் இருக்கும் இடம் செல்வது பழக்கம் என்பதால், தயக்கம் ஏதும் இன்றி தூதுவனாக பெருமானை அணுகுவதற்கு வண்டுகள் மிகவும் தகுதி வாய்ந்தவை என்று நினைத்தாள் போலும். எனவே தான் தூது அனுப்புவது என்று முடிவு செய்த சம்பந்த நாயகி, முதலில் வண்டினை தேர்ந்தெடுக்கின்றாள்.

வண்=வளமை; தரங்கம்=அலை; மது=தேன்; பெடை=பெண் வண்டு; துண்டர்+அங்க=துண்டரங்க; ஒண்=சிறந்த; அங்கம்=உடலின் ஒரு அங்கமாகிய எலும்பு; மாந்தி=வயிறார; அளி=வண்டு; அளி என்ற சொல்லுக்கு இன்பம் என்ற பொருளும் பொருந்தும் என்றாலும், இங்கே அளி அரசே என்று விளிப்பதால் வண்டினை உணர்த்துவதாகவே நாம் பொருள் கொள்ள வேண்டும். அளி என்ற சொல்லுக்கு அன்பு என்று பொருள் கொண்டு, தனது அன்பையே வண்டாக உருவகித்து, பெருமானிடம் தூதுக்கு அனுப்புகின்றாள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. சீற்றம் ஏதும் இல்லாமல் சாதாரண நிலையில் இருக்கும் கடலின் அலைகள் மெதுவாக தவழ்ந்து வருவது கண் கொள்ளா காட்சியாக இருப்பதை நாம் உணர்கின்றோம். மேலும் கீழும் சென்று அலை மிதந்து வருவது போன்று வண்டுகள் இடும் ரீங்காரம் மேலும் கீழுமாய் அசையும் நடையில் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் மிருதுவாகவும் இருப்பதை ஒண் தரங்க இசை என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மதியத் துண்டு=சந்திரனின் ஒரு பகுதியாகிய ஒற்றைப் பிறைச் சந்திரன்; ஆண் வண்டும் பெண் வண்டும் இணைந்து இன்புற்றிருக்கும் தருணத்தில், குரல் கொடுத்து அவர்களுக்கு இடையூறாக தான் இருப்பதை, அவை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசே என்று உயர்வாக அழைப்பதை நாம் உணரலாம். மேலும் இறைவனாகிய ஆணிடம் ஒரு பெண்ணை தூது செல்ல அனுப்புவது முறையல்ல என்பதால் ஆண் வண்டு தூதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. மேலும் எதற்காக இந்த தூது என்பதை பெண் வண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன் தூதின் நோக்கமும் இங்கே உணர்த்தப் படுகின்றது. அல்லையேல், தனது காதலனிடமிருந்து தன்னைப் பிரிக்க முயற்சி செய்வதாக நினைத்து கோபம் கொள்ளும் பெண் வண்டு, ஆண் வண்டு தூது செல்வதை தடுக்கலாம் அல்லவா.

வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்

ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதியத்

துண்டரங்கப் பூண் மார்பர் திருத்தோணிபுரத்து உறையும்

பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே

திருநாரையூர் தலத்து பதிகத்தின் முதல் பாடலில் (3.102.1) திருஞானசம்பந்தர் பெருமானை பண்டரங்கன் என்று அழைக்கின்றார். நலந்தாங்கு என்ற சொல்லினை நாரையூர் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். காம்பு=மூங்கில்; இரண்டு கணுக்களுக்கு இடையே இருக்கும் மூங்கில் வழவழுப்பு, பளபளப்பு கொண்டு அழகாக இருக்கும். ஆனால் பிராட்டியின் தோள்கள் அழகிலும் ஒளியிலும் மூங்கிலை விடவும் விஞ்சியதாக இருப்பதால், மூங்கிலை வென்ற தோள் என்று கூறப்படுகின்றது. மேலும் மூங்கிலில் காணப்படாத மென்மை உடையதாகவும் இருப்பதாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார். தேம்=இனிய புனல்=நீர்; மடு=நீர் நிலைகள்; பூம்=அழகிய; வீக்கிய=கச்சினில் இறுகக் கட்டிய

காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான் நலந்தாங்கு

தேம் புனல் சூழ் திகழ் மாமடுவில் திருநாரையூர் மேய

பூம்புனல் சேர் புரி புன்சடையான் புலியின் உரி தோல் மேல்

பாம்பினை வீக்கிய பண்டாரங்கள் பாதம் பணிவோமே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.44.3) திருஞானசம்பந்தர் பெருமானை பண்டரங்கன் என்று குறிப்பிடுகின்றார். தேம்பல்=இளைத்தல், மெலிதல், மெலிந்த ஒற்றைப்பிறைச் சந்திரன்; அரை=இடுப்பு; விண்டதோர்=பிளந்த; அகலம்=மார்பு; பெருமானின் அடியார்கள் அன்றி வேறு எவரையும் சாரமாட்டேன் என்று மிகவும் உறுதியாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்

தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்

ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்

சாம்பல் அகலத்தார் சார்பல்லால் சார்பிலமே

வெண்டுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.61.2) பெருமானை பண்டரங்கன் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். மாலை மதி=மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன்; புனைந்த=அணிந்த; பயின்று ஆடிய=தொடர்ந்து நீராடிய; உயிர் வீடு செய்தல்=உடலிலிருந்து உயிரை நீக்குதல்; வார் கழல்=வாரால் கட்டிய கழல்கள்; வார்சடை=நீண்ட சடை; வேலன= வேலை ஒத்த;

காலனை ஓருதையில் உயிர் வீடு செய் வார்கழலான்

பாலொடு நெய் தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்

மாலை மதியொடு நீர் அரவம் புனை வார்சடையான்

வேலன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான், பண்டரங்க வேடத்தான் (4.12.2) என்று குறிப்பிடுகின்றார். சிவபிரான் பால் காதல் கொண்ட பெண்களின் வரிசையில் புதியவளாகச் சேர்ந்துள்ள தனது காதலை, சிவபிரான் இகழாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கவலையில் இருந்த அப்பர் நாயகியின் கற்பனை விரிகின்றது. தான் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, குளத்தில் மூழ்க இருந்த தன்னை சிவபிரான் காப்பாற்றி கரை சேர்த்ததாக கற்பனை செய்கின்றாள். அவ்வாறு கரை சேர்த்தபோது சிவபிரான் தன்னைத் தழுவிக் கொண்டதாக கற்பனை செய்யும் அப்பர் நாயகி, அதனை இனிய அனுபவமாக நினைத்து மகிழ்கின்றாள். அந்த கற்பனைக் காட்சியின் தொடர்ச்சியாக இந்த பாடல் அமைந்துள்ளது. அந்த கற்பனைக் காட்சியில் அவளுக்கு, தான் குளித்த இடமும், அந்த இடத்தில் வளர்ந்திருந்த மலர்களும் தெரிகின்றன. எனவே, தான் சிவபிரானுடன் இணைந்திருந்த காட்சியினைக் கண்ட, நீர் நிலைகளில் வளரும் மலர்களும், அதனருகே காணப்படும் மலர்களும் தூது செல்வதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. கண்டகம்=நீர் முள்ளி; முண்டகம்=தாமரை; கைதை=தாழை; நெய்தல்= வெள்ளாம்பல் மலர்;

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்

பண்டரங்க வேடத்தான் பாட்டோவாப் பழனத்தான்

வண்டுலாம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம்

கொண்ட நாள் தான் அறிவான் குறிக் கொள்ளாது ஒழிவானோ

திருப்பராய்த்துறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.30.10) அப்பர் பிரான் பண்டரங்கர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.அப்பர் பிரான், தான் அவனை எவ்வாறு வணங்குவேன் என்று கூறுகின்றார். தொண்டு=அடிமைத் திறம்; பண்டரங்கம் எனப்படும் கூத்தினை ஆடியதால் பண்டரங்கர் என்று இறைவன் அழைக்கப்படுகின்றார். இந்த கூத்தினை இறைவன், திரிபுரத்து அரக்கர்களை அழித்த பின்னர் அந்த ஆனந்தத்தில் திளைத்து ஆடியதாக கருதப்படுகின்றது. தாருகவனத்து முனிவர்களின் மனதினை மாற்றி அவர்களை சிவநெறிக்கு அழைத்து வந்த பின்னர், பெருமான் அந்த ஆனந்தத்தில் ஆங்கும் ஒரு கூத்து ஆடியதாக சொல்லப் படுகின்றது. பராய்த்துறை சென்ற அப்பர் பிரானுக்கு இந்த இரண்டு கூத்துகளும் நினைவுக்கு வந்தன போலும்.

தொண்டு பாடியும் தூமலர் தூவியும்

இண்டை கட்டி இணையடி ஏத்தியும்

பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்

கண்டு கொண்டு அடியேன் உய்ந்து போவனே

திருவாரூர் பதிகத்தின் பாடலில் (6.31.9) அப்பர் பிரான், பெருமானை பண்டரங்கா என்று அழைக்கின்றார். தேசத்து ஒளி விளக்கு=உலகில் உள்ள விளக்குகளுக்கெல்லாம் ஒளி கொடுப்பவன்; ஏசற்று நிற்றல்=கூசி இருத்தல்; சிவபிரானது பெருமையின் முன்னர் நாம் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து, தாழ்மை உணர்ச்சியால் கூசி நிற்றல்;

பாசத்தைப் பற்று அறுக்கலாகும் நெஞ்சே பரஞ்சோதி பண்டரங்கா பாவநாசா

தேசத்து ஒளிவிளக்கே தேவதேவே திருவாரூர்த் திருமூலட்டானா என்றும்

நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்றடி மேல் வீழ்ந்து நின்று

ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்றென்றே ஏத்தா நில்லே

திருவையாறு தல்த்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (6.37.6) அப்பர் பிரான், பெருமானை பண்டரங்கா என்றே அழைக்கின்றார். பற்றார்=வேதநெறியை பின்பற்றி வாழாத திரிபுரத்து அரக்கர்கள்; பசு=உயிர்கள்; பசுபதீ=அனைத்து உயிர்களின் தலைவன், அற்றார்=வேறு பற்றுக்கோடு இல்லாதவர்கள்; திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது பழமொழி.

பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே

கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடுவிடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே

பற்றானார் நெஞ்சுளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள் செய்தாய் என்றேன் நானே

அற்றார்க்கு அருள் செய்யும் ஐயாறு அன்னே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.52.2) அப்பர் பிரான் பெருமானை பண்டரங்க வேடன் என்று குறிப்பிடுகின்றார்.அண்ணிக்கும்=தித்திக்கும் சீலம்=நல்லொழுக்கம்; சிலை=வில்; கரும்பு ஆலையில் வெளிப்படும் கருப்பஞ்சாறு போன்று தித்திக்கும் பஞ்சாக்கர மந்திரத்தைத் தனது பெயராக உடையவனும், நல்லொழுக்கம் உடையவர்களின் சிந்தையில் இருப்பவனும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் தீயின் கண் படுமாறு எரித்த வில்லினை உடையவனும், பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் பால் தயிர் நெய் முதலான ஐந்து பொருட்களைக் கொண்டு நீராட்டப்படுவானும், திரிபுரங்களை எரித்த பின்னர் பண்டரங்கக் கூத்து ஆடியவனும் உலகெங்கும் திரிந்து பலி கொள்பவனும் ஆகிய இறைவன் சிவபெருமான். அடர்ந்த சோலைகள் சூழ்ந்திருப்பதால் குளிர்ந்து காணப்படும் திருவீழிமிழலை தலத்தில், விண்ணுலகத்திலிருந்து திருமாலால் கொண்டுவரப் பெற்ற விமானத்தை உடைய திருக்கோயிலில் இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் உறைகின்றார் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை.

ஆலைப் படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான் காண்

சீலம் உடையார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரி படுத்த சிலையினான் காண்

பாலினொடு தயிர் நறுநெய்யாடினான் காண் பண்டரங்க வேடன் காண் பலிதேர்வான் காண்

வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண்ணிழி தண்வீழி மிழலையானே

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.82.8) அப்பர் பிரான், பெருமானை, பண்டரங்க வேடனே என்று அழைக்கின்றார். மேல் உலகத்தில் வாழும் தேவர்கள் அசுரர்களுடன் ஒன்று கூடி பாற்கடலைக் கடைந்த போது, கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலால விடத்தைக் கண்டு அனைவரும் நடுங்கினார்கள். கடல்களால் சூழப்பட்ட உலகின் எட்டு திசைகளையும் ஆலால நஞ்சம் சுடுகின்ற தன்மையைக் கண்ட பெருமான், இமைப்பொழுதில் அந்த நஞ்சினைத் தான் உண்டார். அவ்வாறு உண்ட நஞ்சம், ஊழிக்காலத்தில் தனது உடலில் ஒடுங்கவிருக்கும் உயிர்களுக்கு கேடேதும் செய்யா வண்ணம் அந்த நஞ்சினைத் தனது கழுத்தினில் அடக்க, அவரது கழுத்து கருமை நிறம் கொண்டதாக மாறியது. இவ்வாறு உலகினைக் காத்த பெருமானை, தேவர்களும் அசுரர்களும் அடியார்களும் வண்டுகள் மொய்க்கும் வண்ணம் தேன் நிறைந்த மலர்களை தூவி வணங்கி வழிபடுகின்றனர். அவர் பண்டைய நாளில் திரிபுரங்களை எரித்த பின்னர் பண்டரங்கக் கூத்து ஆடியவர் ஆவார். இத்தகைய பெருமைகள் உடைய பெருமான் பாசூர் தலத்தில் பொருந்தி உறையும் பரஞ்சுடராக இருக்கின்றார். அவரைக் கண்டு தொழுது அடியேன் வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்த்து எழுந்த ஆலாலம் வேலைஞாலம்

எண்டிசையும் சுடுகின்ற ஆற்றைக் கண்டு இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர்

வண்டுபடு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும்

பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

நன்னிலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில்(7.98.1) சுந்தரர், பெருமானை, பண்டரங்கன் என்று அழைக்கின்றார். தண்ணியல் வெம்மையினான் என்ற தொடர் மூலம் அறக்கருணை மற்றும் மறக்கருணையால் உயிர்களுக்கு அருள் புரிபவன் பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். உயிர்களின் தன்மைக்கு ஏற்றவாறு பெருமானின் கருணைத்திறம் மாறுபடுகின்றது.

தண்ணியல் வெம்மையினான் தலையிற் கடை தோறும் பலி

பண்ணியன் மென்மொழியார் இடம் கொண்டுழல் பண்டரங்கன்

புண்ணிய நான்மறையோர் முறையாலடி போற்றிசைப்ப

நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே

பொழிப்புரை:

திரிவிக்ரமானாக நெடிய உருவம் கொண்ட திருமாலும் நான்முகனாகிய பிரமனும் நினையவும் முடியாத இயல்பினை உடையவனும் பண்டரங்கம் எனப்படும் கூத்தினை ஆடுபவனும், ஊழித்தீயினில் நின்றவாறு நடனம் ஆடுபவனும், பறிக்கப்பட்டதால் தனது தன்மை கெட்ட பிரம கபாலத்தை ஏந்தியவனாக பலியேற்பவனும், சிவந்த கண்களை உடைய இடபத்தினைத் தனது கொடியில் சித்திரமாக ஏற்றுக்கொண்டவனும் ஆகிய பெருமான் உறைகின்றது தென்குரங்காடு துறை தலமாகும்.

பாடல் 10

துவர் ஆடையர் வேடமிலாச் சமண் கையர்

கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊராம்

நவையார் மணி பொன் அகில் சந்தனம் உந்திக்

குவையார் கரை சேர் குரங்காடுதுறையே

விளக்கம்:

வேடமிலா=ஆடை அணியாத; கையர்=கீழ்மைத் தன்மை உடைய சமணர்கள்; கவர் வாய்மொழி= அடுத்தவரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உண்மையைத் திரித்து சொல்லும் ஆற்றல் உடைய; நவை=சிதைந்து உருண்டு வந்த: குவையார்=குவியலாக

பொழிப்புரை:

துவராடை அணிந்த புத்தர்களும், கீழ்மைத் தன்மை உடையவர்களும் ஆடை அணியாதவர்களும் ஆகிய சம்ணர்களும், உண்மையை பலவாறாக திரித்து கேட்போரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் சொல்லும் வீண் பழிச்சொற்களை விரும்பாமல் புறக்கணிக்கும் சிவபெருமான் உறையும் தலம் தென் குரங்காடுதுறை. மலைகளில் உள்ள மணிகளை சிதைத்து உருட்டிக் கொண்டும், பொன் அகில் சந்தனம் முதலிய பொருட்களை அடித்துக் கொண்டும் குவியல் குவியலாக சேர்க்கும் கரைகளை உடைய காவிரி நதியின் கரையில் உள்ள தலம் தென்குரங்காடு துறையாகும்.

பாடல் 11:

நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்

கொல்லேறு உடையான் குரங்காடுதுறை மேல்

சொல்லார் தமிழ் மாலை பத்தும் தொழுதேத்த

வல்லார் அவர் வானவரோடு உறைவாரே

விளக்கம்:

பயில்=வாழும்; நல்லார்=சிவஞானிகள்; சொல்லார்=அழகிய சொற்கள் நிறைந்த;

பொழிப்புரை:

நல்ல உள்ளம் படைத்த சிவஞானிகள் வாழும் சீர்காழி நகரைத் சார்ந்தவனாகிய ஞானசம்பந்தன், கொல்லும் ஆற்றல் வாய்ந்த எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக்கொண்ட பெருமான் உறையும் தென்குரங்காடுதுறை தலத்தின் மீது, அருளியதும் அழகிய சொற்கள் நிறைந்ததும் ஆகிய தமிழப் பாடல்களை முறையாக ஓதி பெருமானைத் தொழும் ஆற்றல் உடைய அடியார்கள், முக்தி நிலை அடைவதற்கு தகுதி படைத்தவர்களாக விளங்கி, முக்தி உலகம் சென்றடைந்து ஆங்குள்ள உயர்ந்த சிவஞானிகளுடன் இணைந்து இருப்பார்கள்.

முடிவுரை

பெருமானைப் புகழ்ந்து பாடுவதால் நம்மைப் பிணித்துள்ள வினைகள் முற்றிலும் அழிந்து, வீடுபேறு சென்றடையும் தகுதியை நாம் அடையலாம் என்று முதல் பாடலில் உணர்த்தும் திருஞானசம்பந்தர், பதிகத்தின் கடைப்பாடலில் இந்த கருத்தினை மீண்டும் வலியுறுத்தி பெருமானைப் புகழும் பாடல்கள் பாடினால் முக்தி உலகம் சென்றடையலாம் என்று கூறுகின்றார். முதல் மற்றும் கடைப்பாடல்களில் சிவஞானிகளுக்கு முக்தி நிலை பெருமான் அளிப்பதை உணர்த்தும் திருஞானசம்பந்தர், நான்காவது பாடலில் பக்குவமைடைந்த உயிர்களை முக்தி உலகினுக்கு அழைத்து செல்லும் ஆர்வத்துடன் அவர்களை நாடி பலியேற்கச் செல்கின்றான் என்று கூறுகின்ரார். வினைகளை தீர்க்கும் பெருமான் என்று ஏழாவது பாடலிலும் கூறுகின்றார். பிராட்டியை விட்டு என்றும் பிரியாது இருக்கும் பெருமான், பிரளய காலத்தில் ஊழித்தீயினில் நடனம் ஆடும் போதும் பிராட்டியை விட்டு பிரியாதவனாக இருக்கின்றான் என்று பதிகத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாடல்கள் உணர்த்துகின்றன. சிவனுடன் சேர்ந்து என்றும் அழியாத தன்மையில் இருப்பதை இரண்டாவது மூன்றாவது, ஐந்தாவது மற்றும் ஏழாவது பாட;ல்கள் நமக்கு உணர்த்துகின்றன. நான்காவது பாடலில் பெருமான் விரும்பும் மலர்கள் குறிப்பிடப்படுகின்றன. எட்டாவது ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்கள் மற்றும் கடைப்பாடல் திருஞானசம்பந்தரின் பெரும்பாலான பதிகங்களின் தன்மையை ஒத்துள்ளன. இந்த பதிகத்தின் ஒன்பது பாடல்களில் (எட்டாவது பத்தாவது மற்றும் பதினோராவது பாடல்கள் தவிர்த்து மற்ற அனைத்துப் பாடல்களிலும்) பெருமான், பிரளயத்தீயினில் நின்று ஆடும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. இந்த ப்திகத்தின் பாடல்கள் மூலம், என்றும் அழியாது பிறப்பையும் இறப்பையும் கடந்த பெருமான் ஒருவனே, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்க வல்லவன் என்பதை புரிந்து கொண்டு, அவனை வழிபட்டு நாம் உய்வினை அடிவோமாக.



Share



Was this helpful?