இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பத்தரோடு பலரும்

பத்தரோடு பலரும்

1.03 திருவலிதாயம் பண்; நட்டபாடை

பின்னணி:

தொண்டை நாட்டு தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருக்காளத்தி தலம் சென்ற திருஞான சம்பந்தர், அதன் பின்னர் மலைகளையும் காடுகளையும் கடந்து திருவேற்காடு தலம் வந்தடைந்து பரமனைப் பணிந்து பதிகம் பாடிய பின்னர், அருகிலுள்ள திருவலிதாயம் தலம் செல்கின்றார். சென்னை நகரின் ஒரு பகுதியாகிய பாடியில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலம். இங்கே குரு பகவானுக்கு தனியாக சன்னதி உள்ளது. இந்த தலத்து இறைவனை வழிபட்டு, குரு பகவான், தான் பெற்ற சாபத்தை நீக்கிக்கொண்டமையால், குரு பரிகாரத் தலமாக கருதப்படுகின்றது. இந்த பதிகத்தை முறையாக பாடும் அடியார்கள் திருமணத்தடை நீங்கப் பெறுவார்கள் என்றும் தங்களது நோய்கள் நீங்கப்பெற்று நலமடைவார்கள் என்றும் நம்பபப்டுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் இந்த தலம் சென்றடைந்து பெருமானை வழிபடுவதால், நாம் அடைய இருக்கும் நன்மைகள் குறிப்பிடப்படுகின்றன.

பாடல் 1:

பத்தரோடு பலரும் பொலியம் மல்ர் அங்கைப் புனல் தூவி

ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுதேத்த உயர் சென்னி

மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம்

சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்றிடர் நோயே

விளக்கம்:

பத்தரோடு பலரும் என்ற தொடருடன் இந்த பதிகத்தின் முதல் பாடலை திருஞானசம்பந்தர் தொடங்குகின்றார். பெருமானைத் தொழும் அடியார்கள் அனைவரும் பக்தியுடன் தானே இறைவனைத் தொழுகின்றனர். அவ்வாறு இருக்கையில் பத்தர்கள் மற்றும் பலர் என்று ஏன் வேறுபடுத்தி காட்டுகின்றார் என்ற ஐயம் நமக்கு எழலாம். பொதுவாக பக்தர் என்ற வடமொழிச் சொல் பத்தர் என்றே தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இங்கே பத்தர் என்ற சொல் பத்து குணங்களை உடையவர் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது போலும். அதனால் பத்தரோடு பலரும் என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பத்து கொலாம் அடியார் செய்கை தானே என்ற அப்பர் பிரானின் திருவாய்மொழி (4.18.10) நமது நினைவுக்கு வருகின்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அடியார்களை பத்தர் என்ற் சொல் மூலம் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர்.. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல்,சிவபுராணங்கள் மற்றும் சிவச்சரிதைகள் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல்,சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல்,கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும். இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த அடியார்களும் மற்றும் வேறு பல அடியார்களும் வலிதாயத்து இறைவனை தொழுவதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பத்தர் என்ற சொல்லுக்கு இறைவ்னை பூஜை செய்து வழிபடும் அடியார்கள் என்று விளக்கம் அளித்து, அவரைச் சூழ்ந்து இருப்போரை பலரும் என்ற சொல் மூலம் குறிப்பிடுவதாக தருமபுரம் ஆதீனக்குறிப்பு விளக்கம் அளிக்கின்றது. அங்கை=உள்ளங்கை; அகங்கை (அகம்+கை) என்ற சொல் அங்கை என்று குறைந்தது போலும்.

இறைவனுக்கு பூஜை செய்யும் முன்பு, தங்களது கையில் சில மல்ர்கள் மற்றும் ஒரு உத்தரணி தீர்த்தமும் வைத்துக் கொண்டு இறை வழிபாட்டினை தொடங்க சங்கல்பம் செய்து கொள்ளும் வழக்கத்தை சிலர் பின்பற்றுவதை நாம் இன்றும் காணலாம். சங்கல்பம் என்றால் ஒரு செயலை செய்யும் முடிவுடன் மனதினை ஒருமுகப்படுத்துதல் என்று பொருள். திருக்கோயில்களில் இறைவனுக்கு அர்ச்சனை செய்யும் முன்னர், கோயில் குருக்கள், நம்மை மலர்கள் அடங்கிய தட்டினை தொடச் செய்த பின்னர் நமது வலது கையில் சிறிது நீரினை வார்த்து, பூமியில் விடச் செய்வதை நாம் காண்கின்றோம். இதன் பின்னர், நமது சார்பாக, இறைவனது திருநாமங்களை வடமொழி அல்லது தமிழ்மொழியில் சொல்லி, இறைவனின் திருமேனி மீது மலர்கள் தூவி, இறைவனுக்கு அர்ச்சனை செய்வதையும் நாம் காண்கின்றோம். இந்த செயலையே மலர் அங்கைப் புனல் தூவி என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொலிய=அழகுடன் விளங்கும்; ஒத்த=ஒப்பிடும் வகையில்; ஒரு குழுவாக சேர்ந்து வேத மந்திரங்க்ள் சொல்லியும் பதிகங்கள் பாடியும் இறைவனை வழிபடும் அடியார்கள் ஒருமித்து ஒரே இசையுடன் வேத மந்திரங்கள் சொல்வதையும் பதிகங்கள் பாடுவதையும் நாம் இன்றும் காண்கின்றோம். உயர் சென்னி=எப்போதும் உயர்ந்து காணப்படும் பெருமானின் தலை; தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாக விளங்கும் பெருமானுக்கு, எவரையும் தனது தலையை தாழ்த்தி வழிபடவேண்டிய அவசியம் எப்போதும் ஏற்படுவதில்லை. இந்த தன்மையை சேர்ந்தறியா கையான் என்று மிகவும் அழகாக மணிவாசகர் திருவாசகத்தில் (திருவம்மானை 13ஆம் பாடல்) குறிப்பிடுகின்றார். மத்தம்=ஊமத்தை மலர்: இறைவன் எங்கும் நிறைந்தவனாக, அனைத்துப் பொருட்களுடனும் அந்தந்த பொருட்கள் அழியும் வரையிலும் இணைந்தும், அனைத்து உயிர்களும் தமக்குரிய உடல்களுடன் பிணைந்து உள்ளளவும் இணைந்து பிரியாது நிற்கின்றான்; எனினும் இந்த தன்மையை நாம் உணர்ந்து, இவ்வாறு நம்முடன் இணைந்து நம்மை இயக்கும் இறைவனை நம்து மனக் கண்ணால் கண்டு அவனை வழிபடுவதில்லை. இதனை உணரும் இறைவன், நம்து நலன் கருதி, மிகவும் எளியவனாக நிலவுலகம் வந்து, பல திருக்கோயில்களில் நிலையாக பொருந்தி உறைவதன் மூலம், நாம் அனைவரும் அவனை வழிபட்டு உய்வினை அடையும் பொருட்டு, நம்பால் மிகுந்த கருணை கொண்டு, விளங்குகின்றான். இந்த உண்மையைத் தான், பிரியாது உறைகின்ற வலிதாயம் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் விளக்குகின்றார். இடர்=வினைகளால் வரும் துன்பங்கள்; நோய்=பிறவிப்பிணி நோய்;

பொழிப்புரை:

சிறந்த பத்து குணங்கள் உடைய்வர்களாகத் திகழும் அடியார்களும் வேறு பலரும் ஒன்று கூடி, தங்களது உள்ளங்கைகளில் கொண்டுள்ள அழகிய மலர்களுடன் நீரினைக் கலந்து அர்க்கியம் விட்டு, தாங்கள் இறைவனை வழிபட ;சித்தமாக இருப்பதை தெரிவிக்க, குழுக்களாக ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட இசையுடன் வேத மந்திரங்களையும் பதிகங்களையும் அன்பர்கள் இசைக்க, உலகின் பல இடங்களில் உள்ளவர்களும் வலிதாயத்து பெருமானைத் தொழுதும் புகழ்ந்தும் வணங்குகின்றனர். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமையால் எவரையும் வணங்க வேண்டிய அவசியமற்றவனாகத் திகழ்வதால்,தாழ்ந்து அறியாது எப்போதும் உயர்ந்து காணப்படும் தலையினை உடையவனாகிய சிவபெருமான், தனது தலையினில் ஊமத்தை மலர்களை சூட்டிக் கொண்டுள்ளான். அவன் பிரியாது உறையும் வலிதாயம் தலத்தினைத் தங்களது மனதினில் நிலைநிறுத்தி வழிபடும் அடியார்களை, வினைகளால் விளையும் துன்பங்களும், பிறவிப்பிணி நோயும் அணுகாமல் விலகிவிடும்.

பாடல் 2:

படை இலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கல்னேந்திக்

கடை இலங்கு மனையில் பலி கொண்டுணும் கள்வன் உறை கோயில்

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலிதாயம்

அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர் தானே

விளக்கம்:

படையிலங்கு கரம் எட்டுடையான் என்று பெருமானை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். எண்தோளன் என்று பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்படும் பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்றபோது தனது எட்டு கைகளிலும் எட்டு ஆயுதங்களை ஏந்திச் சென்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. தக்கயாகத்தை அழிக்கச் சென்ற வீரபத்திரரும் தனது கைகளில் எட்டு வேறுவேறு ஆயுதங்களை ஏந்திச் சென்றார் தக்கயாக பரணி கூறுகின்றது. பொதுவாக மழுவும் சூலமும் ஏந்தியவன் என்று பெருமானை பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிட்டாலும்,பெருமானின் மற்ற படைகளும், ஆங்காங்கே தேவாரப் பாடல்களால் உணர்த்தப்படுகின்றன. கட்டங்கம் என்பது எலும்புத் தண்டின் நுனியில் கபாலம் பொருத்தப்பட்ட ஆயுதம். வில்லும் அம்பும் ஏந்தியவனாக பெருமான் திரிபுரம் எரித்த வீரச்செயலை நாம் அனைவரும் அறிவோம். பினாகம் என்றும் சிவதனுசு என்றும் பெருமானின் வில் அழைக்கப்படுகின்றது. சந்திரஹாசம் எனப்படும் வாள், அரக்கன் இராவணனுக்கு அளிக்கப்பட்ட ஆயுதம். பாசுபதம் மற்றும் சக்கரப்படை முறையே அர்ஜுனனுக்கும் திருமாலுக்கும் அளிக்கப்பட்ட ஆயுதங்கள்; எனவே இந்த மூன்று ஆயுதஙகளும் பெருமானின் கரங்களை அலங்கரித்த ஆயுதங்கள் என்பது நமக்கு புலனாகின்றது. வேல் வலன் ஏந்திய கையான் என்று பல தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. கையலகு என்பது பெருமான் ஏந்திய ஆயுதமாக கருதப்படுகின்றது. கையலகு என்பதற்கு சிறுவாள் என்றும் குறுவாள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. பாசம் என்பதும் சிவபெருமானின் படையாக கருதப்படுகின்றது. முசலம் என்று மழுப்படை உணர்த்தப் படுகின்றது. தஞ்சை பெரிய கோயிலின் உட்புறத்து விமானச் சுவற்றின் வடபகுதியில், காணப்படும் சோழர்கள் காலத்து சிற்பம் ஒன்று, திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போருக்குச் சென்ற கோலத்தை சித்தரிக்கின்றது.இந்த ஒவியத்தில் பெருமானின் எட்டு கரங்களிலும் எட்டு ஆயுதங்கள் வரையப் பட்டுள்ளன. எல்லோரா குகைச் சிற்பம் ஒன்றில் பெருமான் தனது எட்டு கரங்களிலும் ஆயுதம் ஏந்தியவராக காட்சி அளிக்கின்றார். அருகில் பார்வதி தேவி இருப்பதையும் நாம் காணலாம். இலங்கு=பொருந்திய; கடை=வீட்டின் வாயில்; மடை=நீர் வரும் வழிகள்; நிழல்=ஒளி; பதிகத்தின் முதல் பாடலில் வலிதாயம் தலத்தினை நினைக்கும் அடியார்கள் மேல் துன்பங்களும் பிறவிப்பிணி நோயும் படராது என்று குறிப்பிட்ட திருஞான்சம்பந்தர், இந்த பாடலில் வலிதாயம் தலம் சென்றடையும் அடியார்களை துன்பங்களும் அத்னால் விளையும் துயரங்களும் அணுகாது என்று கூறுகின்றார்.

கள்வன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் இறைவனை அழைக்கின்றார். தனது திறமை, ஆற்றல் முதலியவற்றை மறைத்துக் கொண்டு பிச்சைப் பெருமானாக கோலம் கொண்டு உலகெங்கும் பலியேற்றுத் திரியும் பெருமானை கள்வன் என்று அழைப்பது பொருத்தம் தானே. படிறு=வஞ்சகம், பொய்;இவ்வாறு பிச்சைத் தேவனாக பெருமான் வேடம் ஏற்றிருப்பத்து மிகவும் பொருத்தமாக உள்ளது என்று குறிப்பிடும் திருக்காளத்தி திருத்தாண்டகத்தின் முதல் பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. உணவு ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவை. எனவே தான் உணவுக்காக நம்மிடம் உள்ள எந்த பொருளையும் விற்பதற்கு தயாராக எவரும் இருப்பதை நாம் உலகினில் காண்கின்றோம். இறைவன் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை; மேலும் உலகனைத்தும் தன்னுடையதாக கொண்டுள்ள இறைவனிடம் இல்லாத செல்வம் வேறு எவரிடத்தில் உள்ளது. இருந்தாலும் இறைவனையும் நம்முள் ஒருவனாக கருதி, அருளாளர்கள் தமது கருத்தினை இறைவன் பால் ஏற்றிச் சொல்வது பழக்கம். பிச்சைப் பெருமானாக சென்ற இறைவன், தனது உணவுத் தேவைக்காக பலியேற்கவில்லை; எனினும் அவன் உணவுக்காக பிச்சை ஏற்றதாக கற்பனை செய்து பல அருளாளர்களும் பாடியுள்ளனர். பெருமான் அணிந்திருந்தது நாகம், பன்றிக் கொம்பு. எலும்பு மாலை முதலியன. இவற்றை விற்றால் வாங்குவார் யார். எனவே தான், தனது உணவுக்காக விற்கக்கூடிய நிலையில் தன்னிடம் பொருள் ஏதும் இல்லாத வறியவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நல்கூர்ந்தான்= வறியவன்; சதுரன்=வல்லமை உடையவன், சாமர்த்தியம் உடையவன். சதுரன் என்று இறைவனை குறிப்பிடுவதன் மூலம், இறைவன் உண்மையில் வறியவன் அல்லன், வறியவனாக தத்ரூபமாக நடித்தவன் என்று அப்பர் பிரான் உணர்த்துவதையும் நாம் காணலாம். பொழில்=சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்கள்; பொய்யாது=இடைவிடாது;மாசு ஒன்றில்லா=அழியும் தன்மையாகிய குற்றம் இல்லாத; தாங்குதல்=உலகம் இயங்குமாறு தாங்குதல்;

விற்றூண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான்காண் வியன் கச்சிக்கம்பன்காண் பிச்சையல்லால்

மற்றூண் ஒன்று இல்லாத மாச்சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசொன்றில்லா

பொற்றூண்காண் மாமணி நற்குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழிலேழும் தாங்கிநின்ற

கற்றூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண்ணுளானே

நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.22.11) அப்பர் பிரான் பெருமானை படிறன் என்று குறிப்பிடுகின்றார். நேடி=தேடி;படி=உருவம்; சென்றான் என்று இறந்த காலத்தை குறிப்பிடுவதால், பலிக்குச் சென்றதாக இந்த பாடலில் கூறப்படுவது, பண்டைய நாளில் தாருகவனம் சென்றதை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்று நாம் பொருள் கொள்ளலாம். ஆங்கே, தாருகவனத்து முனிவர்களின் மனைவிமார்களின் கற்பு நிலையை குலைக்கும் வண்ணம் அழகனாக பெருமான் அவர்களது இல்லத்திற்கு சென்றதால் படிறன் என்று குறிப்பிட்டார் போலும். கடி நாறும்=நறுமணம் கமழும் பூஞ்சோலைகள்

நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற

படியானைப் பாம்புரமே காதலானைப் பாம்பு அரையோடு ஆர்த்த படிறன் தன்னைச்

செடிநாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்தன்னைக்

கடி நாறு பூஞ்சோலை அந்தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணலாமே

பொழிப்புரை:

படைகள் பொருந்திய எட்டு கரங்களை உடையவனாகிய சிவபெருமான், தனது ஆற்றலையும் கோலத்தையும் வஞ்சனையாக மறைத்துக் கொண்டு, பிச்சைப் பெருமானின் வேடத்தை ஏற்றுக் கொண்டு பல வீடுகளின் வாயில்கள் சென்றடைந்து பலியேற்கின்றான். இத்தகைய கள்வன் உறைகின்ற திருக்கோயில் வலிதாயம் தலத்தில் உள்ளது. நீர் நிறைந்த வாய்க்கால்களால் சூழப்பட்ட சோலைகளில் காணப்படும் ஒளிவீசும் மலர்களில் உள்ள தேன் மணம் கமழும் தலமாகிய வலிதாயம் தலம் சென்றடைந்து, ஆங்குறையும் இறைவனைச் சரணடைந்து தொழும் அடியார்களை வினைகளால் விளைகின்ற துன்பங்களும் துயரங்களும் அணுகாது.

பாடல் 3:

ஐயன் நொய்யன் அணியன் பிணியில்லவர் என்றும் தொழுதேத்த

செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில்

வையம் வந்து பணியப் பிணி தீர்த்துயர்கின்ற வலிதாயம்

உய்யும் வண்ணம் நினைமின் நினைந்தால் வினை தீரும் நலம் தானே

விளக்கம்:

வலிதாயம் சென்றடைவீர் என்று பதிகத்தின் இரண்டாவது பாடல் மூலம் நம்மை வழிநடத்தும் திருஞானசம்பந்தர், அந்த தலம் சென்றடைந்த் பின்னர் தலத்து இறைவனிடம் நாம் உண்மையாக கோரவேண்டியது யாது என்பதையும் உணர்த்துகின்றார். நாம் வாழ்வில் உய்வினை அடைவதற்கான வழியை பெருமானிடம் யாசித்துப் பெற வேண்டுமே அன்றி உலகியல் இன்பம் பெறும் நோக்கத்துடன் பொருளோ பொகமோ வேண்டும் என்று இறைஞ்சலாகாது என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். இந்த பாடல் நமக்கு தில்லைத் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் பாடலை (4.81.3) நினைவூட்டுகின்றது. உயிரின் வேட்கை இறைவனைச் சென்று அடைவது. இதனை புரிந்து கொள்ளாத நாம், உயிரின் விருப்பத்தை விட்டு விட்டு, எப்போதும் இந்த உடலின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் நமது விருப்பங்களையே இறைவனிடம் தெரிவிக்கின்றோம். இந்த உடலின் தேவைகள் அனைத்தும் நிலையற்றவை, ஒரு நாள் அழியக்கூடியவை. ஆனால் உயிர் விரும்பும் முக்தி நிலை, என்றும் அழிவற்றது, சற்றும் குறையாத பேரின்பத்தை கொடுக்க வல்லது. எனவே அந்த முக்தி நிலையை வேண்டிப் பெறாது, அழியும் இன்பங்களை இறைவனிடம் யாசிப்போரை கல்மனவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தில்லையுள் உள்ள அடியார்கள் இறைவனிடம் முக்தி நிலை வேண்டுவதால், அவர்களை நல்மனவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பேரின்பத்தைத் தரவல்ல சிவபெருமானிடம் சென்று சிற்றின்பத்தை யாசிப்பது, ஒரு பெரிய பணக்காரரிடம் சென்று பத்து காசுகள் யாசித்துப் பெறுவது போன்று நகைக்கு உரியதல்லவா. அதனால் நமக்கு ஏற்படும் பயன் என்ன?

கல் மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே

நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல பொலிந்திலங்கி

என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடில்லையே

ஐயன்=தலைவன்; அணியன்=அண்மையில், அருகில் இருப்பவன்; நொய்யன்=நுண்ணியன்; மிகவும் சிறியதாக கருதப்படும் அணுவிலும் நிறைந்து, அங்கிங்கு எனாதபடி எங்கும் பெருமான் நிறைந்து நிற்கும் தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. பிணியில்லவர்=அனாதி மலமாகிய ஆணவ மலத்தினை அடக்கி அதன் பிடியிலிருந்து விடுபட்ட பெரியோர்கள்; ஆணவ மலமே உயிர்களை உலக மாயையில் ஆழ்த்தி மேன்மேலும் வினைகளை சேர்த்துக்கொண்டு பல பிறவிகள் எடுப்பதற்கு வழிவகுப்பதால், ஆணவ மலத்தினை அடக்கி செயலறச் செய்வதற்கு இறைவனின் அருளை பெரியோர்கள் நாடி, இறைவனின் உதவியுடன் தங்களது தற்போதத்தை நீக்கிக்கொண்டு இன்ப துன்பங்களை சரிசமமாக பாவிக்கும் பக்குவம் அடைவார்கள். அத்தகைய நிலையை அடைந்த உயிர்கள் பால் கருணை கொள்ளும் இறைவன், அவர்களை பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுவிக்கின்றான். பிறவிப்பிணியால் பீடிக்கப்படாத உயிர்களால் போற்றித் தொழப்படும் பெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தங்களது பிறவிப் பிணியை நீக்கிக்கொண்ட பெரியோர்கள், அதற்கு உதவியாக இருந்தது சிவபெருமான் தான் என்பதை உணர்ந்தவர்களாக, பெருமானை தொழுது வணங்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது. வெய்ய படை=கொடிய மழுப்படை; தங்களது மனைவியர் கற்பு நிலையிலிருந்து வழுவியமைக்கு சிவபெருமான் தான் காரணம் என்ற எண்ணம் கொண்டதால் சீற்றமடைந்த தாருகவனத்து முனிவர்கள், கொடிய மழுப்படையை பெருமான் மீது ஏவுகின்றனர். பெருமான் அந்த மழுப் படையை மிகவும் இலாவகமாக பற்றி செயலிழக்கச் செய்த தன்மை, வெய்யபடை ஏந்த வல்லான் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. வையம்=உலகத்தவர்கள்;திருமாது= அன்னை பார்வதி தேவி; உயர்கின்ற=மேன்மேலும் புகழில் உயர்கின்ற; தன்னை நாடி வரும் அடியார்களின் இடர்களைக் களைந்து துன்பங்கள் தவிர்ப்பதால், நாளுக்கு நாள் புகழ் பெருகும் தன்மை உடைய வலிதாயம் தலம்; ஐ என்ற் சொல்லுக்கு அழகு என்று பொருள் கொண்டு, அழகன் என்று இறைவனை குறிப்பிடுவதும் பொருத்தமே.

பொழிப்புரை:

அனைத்து உயிர்களின் தலைவனும் அழகனும் மிகவும் நுண்ணிய தன்மையுடன் சிறிய அணுவின் உள்ளே இருப்பவனும், உயிர்களுக்கு மிகவும் அருகில் இருப்பவனும் ஆகிய பெருமானை, தங்களுடன் பிணைந்துள்ள ஆணவ மலத்தினை அடக்கியவர்களாக தற்போதம் நீங்க்ப்பெற்று, இறைவனின் அருளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்ற பெரியோர்கள், அந்த விடுதலைக்கு மூல காரணமாக விளங்கியவன் பெருமான் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக பெருமானை போற்றி வணங்குகின்றனர். அவன் சிவந்த திருமேனி உடையவன்; மேலும் தாருகவனத்து முனிவர்கள் மிகுந்த சினத்துடன் தன் மீது ஏவிய மழுப்படையை லாவகமாக பற்றிக் கொண்டு செயலறச் செய்த ஆற்றல் உடையவன். இத்தகைய பெருமை படைத்த இறைவன், பார்வதி தேவியுடன் உறைகின்ற திருக்கோயில் வலிதாயம் தலத்தில் உள்ளது. உலகத்தவர் தன்னை வந்தடைந்து தன்னில் உறைகின்ற பெருமானைப் பணிந்து வணங்க, அவர்களது பிறவிப்பிணியை தீர்க்கும் தன்மையால் மேன்மேலும் புகழ் அடைகின்ற திருத்தலம், வலிதாயமாகும். அந்த தலம் சென்றடைந்து ஆங்கே உறைகின்ற பெருமானை மனதினில் நினைத்து வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினால், உங்களது வினைகளை முற்றிலும் தீர்த்துக்கொண்டு நலமடையலாம்.

பாடல் 4:

ஒற்றை ஏறது உடையான் நடமாடியோர் பூதப்படை சூழப்

புற்றின் நாகம் அரையார்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு

உற்ற கோயில் உலகத்தொளி மல்கிட உள்கும் வலிதாயம்

பற்றி வாழும் அதுவே சரணாவது பாடும் அடியார்க்கே

விளக்கம்:

மேற்கண்ட பதிகத்தில் பெருமானிடம் நாம் வாழ்வினில் உய்வினை அடைய்வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறு எதனையும் வேண்டலாகாது என்று அறிவுரை கூறிய திருஞானசம்பந்தர், பெருமானின் இந்த கருணைச் செயலின் காரணமாக அடியார்கள் வலிதாயத்து பெருமானிடம் சரண் அடைகின்றனர் என்று கூறுகின்றார். ஒற்றை ஏறு=தனித்தன்மை வாய்ந்த எருது வாகனம். அறத்தின் வடிவமே பெருமானுக்கு வாகனமாக அமைந்துள்ளதால், தனிச்சிறப்பு வாய்ந்த எருது என்று பெருமானின் வாகனத்தின் சிறப்பை உணர்த்துகின்றார். பொதுவாக பாம்புகள், மற்றவர் கண்ணில் படாது, புற்றினில் மறைந்து வாழும் தன்மை உடையவை. ஆனால் இறைவனின் திருமேனி மீது பல இடங்களிலும் படர்ந்துள்ள பாம்புகள் அவ்வாறு மறைந்து கொள்வதில்லை. எனினும் பாம்பின் பொது இயல்பு குறித்து, புற்றில் வாழும் பாம்பு என்று கூறுகின்றார். ஒளி என்ற சொல்லுக்கு புகழ் என்று பொருள் கொள்வது பொருத்தம்.

பொழிப்புரை:

தனிச்சிறப்பு வாய்ந்த எருதினைத் தனது வாகனமாக உடையவனும், பூதப்படைகள் சூழ நடனம் ஆடுபவனும், புற்றினில் மறைந்து வாழும் தன்மை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக இறுகக்கட்டி தனது விருப்பம் போன்று அந்த பாம்பினை ஆட்டுபவனும் ஆகிய பெருமான், எருதின் மீது அமர்ந்தவனாக, நடனம் ஆடிக்கொண்டே பூதப்படைகளால் சூழப்பட்டு பல இடங்களிலும் திரிகின்றான். இத்தகைய பெருமை உடைய எமது பெருமான்,அழகும் இளமையும் ஒருங்கே பெற்ற பார்வதி தேவியுடன் உறைகின்ற திருக்கோயில் திருவலிதாயம் தலத்தினில் உள்ளது. உலகினில் நிலையாக நிறைந்த புகழுடன் வாழ விரும்பும் அடியார்கள், வலிதாயம் தலத்தினை நினைந்து, அந்த தலத்தினில் உறைகின்ற இறைவனது திருவடிகளைச் சரணாகப் பற்றிக்கொண்டு, அவனது புகழினை பாடலாக பாடிக் கொண்டு வாழ்கின்றனர்.

பாடல் 5:

புந்தி ஒன்றி நினைவார் வினையாயின தீரப் பொருளாய

அந்தி அன்னதொரு பேரொளியான் அமர் கோயில் அயல் எங்கும்

மந்தி வந்து கடுவன்னொடு கூடி வணங்கும் வலிதாயம்

சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிதன்றே

விளக்கம்:

மந்தி வந்து கடுவன்னொடு வணங்கும் வலிதாயம் என்ற் தொடர் மூலம், ஆண் குரங்கு தனது துணையொடு தலத்து இறைவனை வழிபட்டதாக திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வலியன் என்ற கருங்குருவி மற்றும் அனுமன், இந்த தலத்து இறைவனை வழிபட்டதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது.பரத்வாஜ முனிவர் ஒரு சாபத்தால் கருங்குருவியாக மாறிய பின்னர், இறைவனை வழிபட்டு, தனது சாபத்தை நீக்கிக் கொண்ட்தாக கூறுவார்கள். தங்களது சாபத்தால் பறவையாகவும் விலங்காகவும் மாறிய தேவர்கள் பல தலங்களில் இறைவனை வழிபட்டதை நாம் அறிவோம். குரங்காகிய வாலியும் அணிலாக மாறிய இந்திரனும் காகமாக மாறிய இயமனும் இறைவனை வழிபட்ட தலம் குரங்கணில்முட்டம் எனப்படும் தலம். ஆதிசேடன் பாம்பு ஒவ்வோரு சிவராத்திரியும் வழிபடும் தலங்கள், குடந்தை கீழ்க்கோட்டம், திருநாகேச்சரம், பாம்புரம், நாகைக்காரோணம் என்பர். பாதாளேச்சரம் தலமும் ஆதிசேடனால் வழிபடப்பட்ட தலம். ஐராவத யானை வழிபட்டு பயன் அடைந்த தலங்கள், மதுரை ஆலவாய், கோட்டூர், வெண்காடு, சாய்க்காடு, ஆமாத்தூர், கானப்பேர்,எதிர்கொள்பாடி என்பன. யானை சிவபிரானை பூசித்த ஒன்பது தலங்களாவன, இன்னம்பர், எதிர்கொள்பாடி, கானப்பேர், கோட்டாறு, திருவானைக்கா,திருக்காளத்தி, திருவெண்காடு, பெண்ணாடகம் மற்றும் ஆலவாய் ஆகும். பாம்பு சிலந்தி மற்றும் யானை ஆகியவை இறைவனை வழிபட்டு பயனடைந்த தலம் திருக்காளத்தி. அகத்திய முனிவர் ஈயின் வடிவமெடுத்து இறைவனை வணங்கிய தலம் ஈங்கோய்மலை. புலி, தேனீக்கள், கழுகுகள், வண்டு, நண்டு,சக்ரவாகப்பறவை, பூனை, தவளை, மீன், பாம்பு, பறவை, கருங்குருவி, குயில் முதலியன இறைவனை வழிபட்ட தலங்கள் முறையே புலிவனம். நன்னிலம்,திருக்கழுக்குன்றம், வண்டுறை, திருந்துதேவன்குடி, சக்கரப்பள்ளி, மேலப்பாதி, ஆத்தூர், தேவராயன்பேட்டை, தேப்பெருமாநல்லூர், நறையூர் சித்தீச்சரம்,வலிவலம், கோழம்பம் என்பன. அரக்கர்களுக்கு பயந்த தேவர்கள் எறும்பாக மாறி இறைவனை வழிபட்ட தலம் திருவெறும்பியூர். அம்பிகை பசுவாக இறைவனை வழிபட்ட தலங்கள், சங்கரன்கோயில் திருவிடைச்சுரம், கோழம்பம், கொண்டீச்சரம் மற்றும் ஆவடுதுறை என்பன. மயிலாக அம்பிகை இறைவனை வழிபட்ட தலங்கள் மயிலாடுதுறை மற்றும் சென்னை நகரிலுள்ள திருமயிலை என்பன. வண்டாக மாறிய பிருங்கி முனிவர் வழிபட்ட தலங்கள்,திருச்செங்கோடு மற்றும் பருப்பதம். சிலந்தியும் யானையும் வழிபட்ட தலம் திருவானைக்கா. ஆமை வடிவம் எடுத்த திருமால் வழிபட்ட தலம் திருக்கச்சூர்.பன்றியாக திருமால் வழிபட்ட தலம் சிவபுரம்; நரசிம்மராக திருமால் வழிபட்ட தலம் திருபுவனை; கிளி வடிவத்தில் சுகமுனிவர் வழிப்ட்ட தலங்கள் சேலம் மற்றும் இடையாறு. கழுகுகள் ஜடாயு மற்றும் சம்பாதி வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர். வாலி மற்றும் சுக்ரீவன் வழிபட்ட தலங்கள் பல உள்ளன. கரடி ஜாம்பவான், அனுமன், சுக்ரீவன் முதலிய குரங்குகள் வழிபட்ட தலம் குரக்குக்கா, சிட்டுக்குருவி வழிபட்ட தலம் வடகுரங்காடுதுறை. எலி வழிபட்டு பயனடைந்த தலம் திருமறைக்காடு. காமதேனு வழிபட்டு சாபம் தீர்த்துக்கொண்ட தலங்கள் சிக்கல், நெய்த்தானம் மற்றும் ஆவூர் பசுபதீச்சரம். காமதேனு வழிபட்ட தலம் தென்குடிதிட்டை; காமதேனுவின் மகள் பட்டி வழிபட்ட தலம் பட்டீச்சரம். கருடன் வழிபட்ட தலங்கள் திருவேடகம் மற்றும் சிறுகுடி. வாசுகி பாம்பு வழிபட்ட தலம் வலம்புரம். புறாவாக மாறிய அக்னியும் பருந்தாக மாறிய இந்திரனும் வழிபட்டு பயனடைந்த தலம் புறவம் எனப்படும் சீர்காழி. பாம்பாகிய இராகு பகவான் வழிபட்டு பயன் அடைந்த தலங்கள் திருநாகேச்சரம் மற்றும் சீர்காழி. புறாவாக மாறி சிபிச் சக்ரவர்த்தியை சோதனை செய்த அக்னி வழிபட்ட தலம் குருகாவூர் வெள்ளடை. இவ்வாறு ஐந்து அறிவே பெற்றுள்ள விலங்குகளும் பறவைகளும் இறைவனை வழிபட்டு பயனடையும் போது, அவற்றினும் உயர்ந்த நிலையில், பகுத்தறிவு பெற்று விளங்கும் மனிதர்கள், பெருமானை வழிபடாமல் இருந்தால் அவ்ர்களது வினை தீராது என்பதை இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். பொருளாய=தியானிக்கும் பொருளாக இறைவன் உள்ள நிலை; அந்தி=மாலை நேரத்தில் சிவந்த வண்ணத்துடன் ஒளிவீசும் வானம்; அயல்=அருகில்; அடும்=தீமூட்டி சமைத்தல்; வெந்துயர்=வெப்பம் விளைவிக்கும் துயரம்; அடுத்தடுத்து உயிர்கள் எடுக்கும் பிறப்புகள்,உயிருக்கு தொடர்ந்து இன்ப துன்பங்கள் கொடுத்து, மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்து துன்பத்தில் ஆழ்த்துவதால், சுட்டெரிக்கும் கொடுமையான் துயரத்தை உண்டாக்கும் வினைகள் என்று இங்கே சொல்லப்படுகின்றது. மந்தி=பெண் குரங்கு; கடுவன்=ஆண் குரங்கு; குரங்குகள் தங்களது துணையுடன் திருக்கோயில் சென்றடைந்து பெருமானை வணங்குவதை குறிப்பிட்டு, இல்லறத்தில் ஆழ்ந்துள்ள மனிதர்கள் அனைவரும், தங்களது துணையுடன் ஆலயங்கள் சென்று பெருமானை வழிபட்டு, வாழ்வில் பல நலங்கள் அடைய வேண்டும் என்பதை உணர்த்துகின்றார் போலும். மேலும் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு உலகப் பொருட்கள் மீது பற்று கொண்டவர்களாக வாழும் மனிதர்களும் பெருமானை வழிபட்டு நலம் பெறலாம் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது.

ஒன்றிய சிந்தனையுடன் இறைவனை வழிபடும் அடியார்கள், தங்களது வினைகள் முற்றிலும் தீர்த்துக்கொள்ளும் பேற்றினை அடைவார்கள் என்று இந்த பாடலில் சொல்லப்படும் கருத்து அப்பர் பிரான் தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலை (4.81.2) நமது நினைவுக்கு கொண்டுவருகின்றது. கன்றிய=சினந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிரினைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது. பிறக்க முக்தி என்று திருவாரூரையும், இருக்க முக்தி என்று காஞ்சியையும், இறக்க முக்தி என்று காசியினையும், காண முக்தி என்று சிதம்பரத்தையும், நினைக்க முக்தி என்று திருவண்ணாமலையையும் குறிப்பிடுவார்கள். அந்தக் கருத்தினை வலியுறுத்தும் முகமாக சென்று தொழுமின்கள் தில்லையை என்று நமக்கு இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். என்று வந்தாய் என்று கேட்ட சிவபிரானுக்கு, அப்பர் இந்த பதிகத்தில் விடை அளிக்கவில்லை. அத்தா உன் ஆடல் காண அடியனேன் வந்தவாறே என்று பத்தனாய் பாட மாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பிரான் விடை கூறுகின்றார். இறைவனே இப்பொழுது தான் வந்தேன் என்று உணர்த்தும் வகையில் வந்தவாறே என்று கூறுவதையும். தனது வருகைக்கும் காரணம் உனது ஆடலைக் காண்பது தான் என்று சொல்லும் அழகும் நாம் ரசிக்கத்தக்கது.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் முதல் பாடலில் (2.38.1) திருஞானசம்பந்தர், இறைவ்னை சித்தம் ஒன்றி வழிபடவேண்டும் என்று குறிப்பிட்டு,அவ்வாறு சித்தம் ஒன்றி நியமத்துடன் நீரும் மலரும் தூவி வழிபடும் அடியார்களுக்கு பெருமான் அருள் புரிவான் என்பதை உணர்த்துகின்றார்.நித்தலும்=நாள்தோறும்: நியமம்=முறையாக வழிபடும் நிலை; கோடு=கொம்பு, யானையின் கோடு=யானைத் தந்தம்; பீலி=மயிற்பீலி; வண்=வளமையாக விளங்கும்; தத்து=தாவிக் குதிக்கும் நீர். சாகரம்=கடல்; நீர் மலர்த் தூவி என்று புறப் பூஜையும் சித்தம் ஒன்ற என்று அகப் பூஜையும் இங்கே குறிப்பிடப்படுகின்றது; மேவும்=சென்று அடையும், தங்கும்; பொதுவாக நதிகள் கடலில் சென்று கலப்பதை பாய்தல் என்று குறிப்பிடுவது வழக்கம். பாய்தல் என்றால் வேகத்துடன் சென்று கலத்தல் என்று பொருள். மேவுதல் என்றால் சென்று அடைதல் என்று பொருள். திருச்சியின் அருகே மிகவும் விரிந்து காணப்படும் காவிரி நதி, பூம்புகாரின் அருகே கடலில் கலக்கும் இடத்தில் அகலம் மிகவும் குன்றி காணப்படுவதை நாம் காணலாம். இவ்வாறு மிகவும் குறைந்த நீரினை கடலில் சேர்க்கும் காவிரி நதியின் தன்மைக்கு, காவிரி நதி தனது நீர்வளம் முழுவதையும் தமிழ் மண்ணுக்கு தந்துவிட்டு எஞ்சிய நீருடன் கடலில் சென்று கலப்பதே காரணம். இந்த நிலைக்கு சேக்கிழார் சுவையாக வேறொரு காரணத்தை கற்பிப்பதை நாம் பெரிய புராணத்து பாடல் ஒன்றினில் காணலாம். இந்த நயமான பாடலில் சேக்கிழார், பெருமானிடம் சற்றும் பயம் கொள்ளாமல் கடல், இறைவனுக்கு அமுதத்தினை அளிப்பதற்கு பதிலாக,நஞ்சினை அளித்தமையால், கடலின் மீது கோபம் கொண்ட காவிரி நதி, தனது நீர் வளத்தினை உலகத்திற்கு பெரிதும் அளித்துவிட்டு, கடலின் வயிறு நிறையாத வண்ணம் மிகவும் குறைந்த நீரினை கடலுக்கு அளிக்கின்றது என்று நயமாக கூறுகின்றார்.

நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவிச்

சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்

மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரித்

தத்து நீர்ப் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே

பொழிப்புரை:

தங்களது சிந்தையில் நிலையாக நிறுத்தி, ம்னம் ஒன்றி பெருமானை வழிபடும் அடியார்களின் வினைகளைத் தீர்க்கும் பெருமான், அனைத்து உயிர்களும் நினைத்து தியானம் செய்வதற்கு தகுதி படைத்தவனாக விளங்குகின்றான். மாலை நேரத்தில் சிவந்த நிறத்தில் ஒளிவீசும் வானத்தைப் போன்று திருமேனி கொண்டுள்ள பெருமான், திருவலிதாயம் தலத்தில் உள்ள திருக்கோயிலில் உறைகின்றான். இந்த தலத்திற்கு அருகில் உள்ள ஆண் குரங்குகள் தங்களது துணையுடன் வலிதாயம் தலத்தின் கோயில் சென்றடைந்து பெருமானை வணங்குகின்றன. இசவ்வாறு ஐந்து அறிவு படைத்த விலங்குகளும் பெருமானை வழிபட்டு நலமடைவதை கண்ட பின்னரும், பெருமானை சிந்தியாது தங்களது வாழ்வினை வீணாக கழிக்கும் மனிதர்கள், தங்களைத் தாக்கும் கொடிய வினைகளிலிருந்து தப்பித்தல் என்பது எளிதல்ல.

பாடல் 6:

ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்துள்ளவர் ஏத்தக்

கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை தன் மேல்

வான் இயன்ற பிறை வைத்த எம்மாதி மகிழும் வலிதாயம்

தேன் இயன்ற நறுமாமலர் கொண்டு நின்று ஏத்தத் தெளிவாமே

விளக்கம்:

இயன்ற=கூடிய; உலகத்துள்ளவர் ஏத்த என்ற தொடரை, பெருமான் பலியேற்கும் செயல் மற்றும் யானையின் தோலை போர்த்துக் கொண்ட செயல் ஆகிய இரண்டுக்கும் உரிய அடைமொழியாக கொண்டு பொருள் கொள்வது சிறப்பு. பெருமான் பலி ஏற்பதன் காரணத்தை பெரியோர்கள் மிகவும் சரியாக புரிந்து கொள்கின்றன்ர். பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலங்களை இறைவன் ஏந்தியுள்ள பிச்சைப் பாத்திரத்தில் இட்டு, உய்வினை அடைவதற்கு ஏதுவாக பெருமான் உலகெங்கும் திரிந்து பலியேற்பதால், மிகவும் உயர்ந்த செய்கையாக இந்த செய்கை கருதப் படுகின்றது. கள்வன் என்ற சொல்லை, நாம் பெருமான் பலியேற்கும் செயலுடன் இணைத்து பொருள் கொள்ளவேண்டும். ஏதோ தனது உணவுத்தேவையை நிறைவெற்றிக் கொள்ளும் பொருட்டு பிச்சை எடுப்பது போன்று பொய்யான தோற்றத்துடன் பெருமான் திரிவதால், தனது செயலுக்கு உரிய காரணத்தை வெளிப்படுத்தாமல் திரிவதால், அவரை கள்வன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் அழைக்கின்றார் போலும். பெருமான் பலியேற்கும் செயலை அடுத்து, தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து, அந்த தோலைத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்ட செய்கை குறிப்பிடப்படுகின்றது. யானையின் இரத்தப்பசை உடைய தோல், உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால், அனைவரும் யானைத் தோலை பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலையில், பெருமான் அதனை அணிந்து கொண்டு, யானைத் தோல் தனது உடலுக்கு எத்தகைய கேட்டினையும் விளைவிக்கவில்லை என்பதை அனைவர்க்கும் உணர்த்தியதால், அந்த வீரச்செயலின் வியத்தகு தன்மையை பலரும் பாராட்டுகின்றனர். இவ்வாறு மேற்கூறிய இரண்டு செயல்களும் பாராட்டுக்கு உரிய செயல்களாக விளங்குவதை நமக்கு திருஞானசம்பந்தர், உலகத்துள்ளவர் ஏத்த என்ற அடைமொழி மூலம், விளக்குகின்றார். பெருமானை எதிர்த்து வந்த மதயானை தாருகவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட யானை, அந்த யானை காட்டு யானை அன்று. எனினும் தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையின் வலிமையை புலப்படுத்தும் வண்ணம் காட்டுயானை என்று கூறுகின்றார். தக்கனது சாபத்தால் தனது கலைகள் அனைத்தும் தேய்ந்து தான் முற்றிலும் அழியும் நிலையில் சந்திரன் பெருமானிடம் சரணடைகின்றான். பெருமானுடன் இணைந்த எந்த பொருளும் அழிவதில்லை என்பதை நாம் அறிவோம். ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் சூட்டிக்கொண்ட பெருமான், சந்திரனின் அழிவைத் தவிர்த்து, தொடர்ந்து அவன் வானில் உலவுகின்ற நிலைக்கு உயிர்ப்பிக்கின்றார். வானியன்ற பிறை என்ற தொடர் மூலம், சந்திரனை காத்த கருணைச் செய்கை குறிப்பிடப்ப்டுகின்றது.

பெருமானை சிந்தியாதவர்களின் நிலையை, அவர்கள் தங்கள்து வினைகளை தீர்த்துக் கொள்ள் முடியாமல் தவிக்கும் நிலையை சென்ற பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமானை வழிபடும் அன்பர்களின் சிந்தை தெளிவடையும் என்று கூறுகின்றார். நமது எண்ணங்கள் தாமே செயல்களாக உருவெடுத்து, நாம் மேன்மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வதற்கு வழிவகுக்கின்றது. எனவே நமது சிந்தை தெளிவுடன் இருந்தால் தான்,நாம் உண்மையான ஞானம் பெற்று, உயிரின் நோக்கத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு, நிலையான இன்பத்தை அளிக்கும் முக்திப் பெற்றை விரும்பி செயல்படுவோம் என்பதால் நாம் தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம். பெருமானின் அருள் தான் நமது சிந்தையை திருத்தும் என்பதால், நாம் பெருமானை வழிபட்டு நமது சிந்தையை திருத்திக் கொள்ளலாம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

இந்த அறிவுரை நமக்கு பாற்றுறை தலத்தின் மீது அவர் அருளிய பதிகத்தின் பாடலை (1.56.1) நினைவூட்டுகின்றது. காரார்=கார் காலத்தில் அதிகமாக பூக்கும் கொன்றை மலர்கள்; எங்கெங்கோ திரிந்து கொண்டிருந்த தனது சிந்தையை திருத்தி, தன் பால் செல்ல வைத்தவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற திருவாசகத் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. ஆதி என்பது ஆத்தி மலரை குறிக்கும் என்று விளக்கம் அளிக்கப்பட்டு, ஆத்தி மலரைச் சூடிய இறைவன் என்று பொருள் கூறப்படுகின்றது. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் என்பது இறைவனின் திருநாமங்கள். ஆத்திச்சூடி கடவுள் வாழ்த்தினில் ஔவையார் ஆத்திச்சூடி என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். ஆத்தி மலர் வெற்றிக்கு அடையாளமாக பண்டைய நாளில் மன்னர்கள் அணிந்த மாலை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தனது சிந்தனை சென்று கொண்டிருந்த பாதையை மாற்றி, செம்மையான வழியில் செல்லும் வண்ணம் திருத்தியவர் பெருமான் என்று சம்பந்த நாயகி கூறுவதை நாம் உணரலாம்.ஆரார்=தெவிட்டாதவர்; தன்னை பெருமான் பால் தீவிரமாக காதல் கொண்ட பெண்ணாக உருவகித்து, திருஞானசம்பந்தர், தனது சிந்தனை அனைத்தும் பெருமான் பால் செல்வதாக கூறுகின்றார். காதல் வயப்பட்ட தலைவியின் சிந்தனை தலைவனை நோக்கியன்றி வேறெங்கும் செல்லாது அல்லவா. மேலும் அந்த சிந்தனை எவ்வளவு நேரம் நீடித்தாலும் தெவிட்டாத சிந்தனையாக இருக்கும் அல்லவா. அந்த பண்புகள் தாம் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றன.அவ்வாறு தனது சிந்தனையை முழுவதுமாக ஆட்கொண்டவர் யார் என்பதையும் சம்பந்த நாயகி இந்த பாடலில் உணர்த்துகின்றாள். காரார் கொன்றை கலந்த முடியினரும் பாற்றுறை உறையும் ஆரார் முதல்வருமே அந்த தலைவன் என்று உணர்த்துகின்றாள். தெளிவாக சிந்திக்கும் சிறப்பினைத் தருவது,இறைவன் பால் செல்வது என்பதால், அத்தகைய தன்மை உடைய சிந்தையை சீரார் சிந்தை என்று அடைமொழி கொடுத்து சிறப்பிக்கின்றார். தலைவி தோழியிடம் தனது மனதினைக் கவர்ந்த தலைவனை அடையாளம் காட்டும் வண்ணம் அமைந்த பாடல் என்றாலும், உலகத்தில் உள்ள ஆன்மாக்கள்,உயிர்களின் தலைவனாகிய சிவபெருமானையே எப்போதும் நினைத்த வண்ணம் இருக்கவேண்டும் என்பதையும் அத்தகைய நினைவு தெவிட்டாத இனபத்தினை அளிக்கும் என்பதையும் இந்த பாடல் உணர்த்துகின்றது. பல தேவார திருவாசகப் பாடல்களில் மயங்கிய நிலையினில் இருக்கும் சிந்தனையை நல்வழிப்படுத்துபவர் பெருமான் என்று குறிப்பிடப் படுகின்றது.

காரார் கொன்றை கலந்த முடியினர்

சீரார் சிந்தை செலச் செய்தார்

பாரார் நாளும் பரவிய பாற்றுறை

ஆரார் ஆதி முதல்வரே

ஆனைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (3.53.2) திருஞானசம்பந்தர், ஆனைக்கா அண்ணலை வணங்கி வழிபடும் அடியார்கள், தாங்கள் உலகப் பொருட்கள் பால் கொண்டுள்ள பற்றின் காரணத்தால் மயக்கம் மிகுந்த சிந்தனை உடைய மற்ற மனிதர்களிலிருந்து மாறுபட்டு வேறுபட்ட சிந்தையர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். நுண்=சிறிய; துறை=வழி, இங்கே வாய்க்கால் என்று பொருள் கொள்ள வேண்டும்; சேணுலா=நெடும் தொலைவிலிருந்து பாய்ந்து வரும் காவரி ஆறு; பதி ஞானம் என்பது இறைவனைப் பற்றிய அறிவு. பசு ஞானம் என்பது உலகம் உலகப் பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் பற்றிய அறிவு. பொதுவாக மனிதர்களில் பெரும்பாலோர் பதிஞானத்தை விடவும் பசுஞானத்தை அதிகமாக பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் பெருமானின் அடியார்களாக விளங்குவோர், மாறுபட்ட சிந்தையராக, பதி ஞானம் அதிகமாக உள்ளவர்களாக இருப்பார்கள் என்று இங்கே ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.

சேறுபட்ட தண்வயல் சென்று சென்று சேணுலா

ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்

நீறுபட்ட மேனியார் நிகரில் பாதம் ஏத்துவார்

வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே

திருப்பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பாடலிலும் (3.14.7) ஞானசம்பந்தர் தனது தன்மையை மாற்றிய பெருமான் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள். பெருமானைக் கண்டதால் தனது மனதில் ஏற்பட்ட மாறுதலை உணர்ந்த சம்பந்த நாயகி, இறைவன் அவ்வாறு செய்ததன் காரணம் தான் யாது என்று தனது வியப்பினைத் தெரிவிக்கும் முகமாக அமைந்த பாடல்.தோடுடைய என்று தொடங்கும் தனது முதல் பதிகத்தின் பாடல்களில், உள்ளம் கவர்ந்த கள்வன் என்று பெருமானை அழைத்த திருஞானசம்பந்தர், தனது மனதினில் மாற்றத்தை விளைவித்து இறை வழிபாட்டினில் தன்னை ஈடுபடுத்தியவன் இறைவன் என்பதை இங்கே உணர்த்துகின்றார். ஜீவனாகத் திகழ்ந்த தன்னை சிவமாக மாற்றிய இறைவனின் கருணையை நினைத்து திருஞானசம்பந்தர் உள்ளம் நெகிழ்ந்து கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

தூயவன் தூய வெண்ணீறு மேனி மேல்

பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா

மேயவன் வேய்புரை தோளி பாகமா

ஏயவன் எனைச் செயும் தன்மை என் கொலோ

திருந்து தேவன்குடி என்ற தலத்தில் உறையும் தேவன் தன்னை வழிபடும் அடியார்களின் சிந்தனையைத் திருத்துவதால், அந்த தேவனை மக்களின் சிந்தனையை திருத்துபவர் என்பதை உணர்த்தும் வண்ணம், திருந்து தேவன் என்றே திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் முதல் பாடலில் (3.25.1) என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் மற்றைய பாடல்களில் தேவன்குடி என்றே இந்த தலம் அழைக்கப்படுகின்றது.. திருந்துதேவன்குடி தலத்து பெருமானது அடையாளங்களாகிய திருநீறு உருத்திராக்கம் மற்றும் சடைமுடி ஆகியவற்றை கண்ணால் கண்டாலும் அல்லது மனதினால் நினைத்தாலும் ஏற்படும் பயன் யாதென்பதை இங்கே கூறுகின்றேன், கேட்பீர்களாக; இந்த அடையாளங்கள், தங்களது நோய்களை தீர்த்துக் கொள்ள விரும்பும் அடியார்களுக்கு மருந்தாகவும், ஐந்தெழுத்து மந்திரம், வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாடல்கள் ஆகியவற்றை சொல்ல விரும்பும் அடியார்களுக்கு அத்தகைய மந்திரங்களாகவும், சிவ புண்ணியங்கள் செய்ய விரும்பும் அடியார்களுக்கு, அத்தகைய புண்ணியங்கள் அளிக்கும் பயன்களாகவும் விளங்குகின்றன,இத்தகைய வேடங்களை தனது அடையாளமாகக் கொண்டுள்ள இறைவன், தேவதேவன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் தலம் திருந்துதேவன்குடி என்பதாகும். இந்த பெருமானின் திருவேடங்களை, அரிய தவம் புரியும் முனிவர்கள் தியானித்து தொழுகின்றனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை

திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய

அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

தெளிவான சிந்தனை நமக்கு வாய்க்க வேண்டும் என்று விரும்பினால் சிவபெருமானைத் தொழ வேண்டும் என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் திருநாரையூர் தலத்து பாடல் (2.86.9) நமது நினைவுக்கு வருகின்றது. வினைகள் உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு செயல்படுவதால், வினைகளை உயிரின் பகை என்று கூறுகின்றார். வேறுயர் வாழ்வு=பிறப்பிறப்புக்கு மாறுபட்டு பேரின்பம் தரும் முக்தி நிலை; கரவு=தன்னை மறைத்துக் கொள்ளும் இறைவனின் தன்மை; திகழும்=இறைவனின் அருட்சக்தி வெளிப்பட்டு திகழும் நிலை; பிறந்து இறந்து மீண்டும் பிறந்து பிறப்பிறப்புச் சுழலில் சிக்கி வாழும் வாழ்க்கைக்கு மாறுபட்டு நிலையான பேரின்ப வாழ்வு பெறுவதற்கான தகுதியை பெற்று, உயிருடன் பிணைந்திருந்தாலும் உயிரின் விருப்பத்துக்கு மாறாக பகையாக செயல்பட்டு துக்கத்தினை விளைவிக்கும் வினைகளை ஒழித்து, தெளிவான சிந்தனை பெற்று மெய்ப்பொருளின் உண்மை நிலையினை உணர்ந்து, இறை உணர்வினை மறைக்கும் மாயையை ஒழித்து, இறைவனின் அருட்சக்தியை உணர வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், சேற்றிலிருந்து தோன்றும் தாமரையில் பொருந்தி விளங்கும் நான்முகனும் மற்றும் திருமாலும் தேடிய போது சீறியெழுந்து நீண்டு சிவந்த தழற்பிழம்பாக நின்றவனாகிய சிவபெருமான் உறையும் செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலத்தினை கைகளால் தொழுது வணங்குவீர்களாக என்று திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

வேறுயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில்

தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்

சேறுயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும் நேட எரியாய்ச்

சீறிய செம்மையாகும் சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே

சிவபிரானது திருப்பாதங்களை நினைப்பதற்கும் அவனது திருவருள் கூட வேண்டும் என்று மணிவாசகப் பெருமான் திருவாசகம் (அவன் அருளாலே அவன் தாள் வணங்கி) சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் தனது வாழ்வில் சிவனருள் கூடாத போது நடந்ததையும், பின்னர் அவனருள் கூடியபோது நடந்த நிகழ்சிகளையும் நினைத்துப் பார்க்கின்றார். அதனால் சிவபிரான் அருள் செய்யாவிடில் தான் செய்யக்கூடியது ஏதும் இல்லை என்ற முடிவினுக்கு வந்தவராக, உனக்கு அடிமையாக இருக்க நான் விரும்புகின்றேன்; நீ அதற்கு அருள் புரிய வேண்டும் என்று இங்கே இறைஞ்சுகின்றார். எனது தந்தையாகிய சிவபெருமானே, எனது சிந்தையில் திகைப்பு ஏதும் ஏற்பாடாவண்ணம், எனது மனதினில் நிறைந்த அன்புடன் நான் உனக்கு அடிமைத் தொழில் செய்வதற்கு,உனது திருவருள் கூடவேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல் (4.23.4) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஓவாது=இடைவிடாது. செந்தீ என்பது எதுகை கருதி செந்தி என குறுகியது. செறிவு=நிறைந்த அலசுதல்=வருந்துதல், சோர்வு அடைதல்

சிந்தையைத் திகைப்பியாதே செறிவுடை அடிமை செய்ய

எந்தை நீ அருளிச் செய்யாய் யாது நான் செய்வது என்னே

செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே

அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசும் கொல்லோ

மத்தால் கடையப்பட்டு கலங்கும் தயிர் போன்று, புலன்கள் நெருப்பு போன்று தனது மனதினைப் பற்றிக் கொள்வதால் தனது சிந்தை கலங்குகின்றது,என்பதை பெருமானுக்கு உணர்த்தி, தனது சிந்தனையின் மயக்கத்தை பெருமான் தான் தீர்த்தருளவேண்டும் என்று சத்திமுற்றத்து தலத்தின் மீது அருளிய பாடல் (4.96.3) ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொத்து=ஓட்டை; பொத்தார்=ஓட்டைகளை உடைய; குரம்பை=உடல்; ஐவர்=மெய், வாய், கண்,மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகள்; மறுக்கு=மயக்கம்; மத்தார் தயிர்=மத்தால் கடையப் படும் தயிர் போல்

பொத்தார் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகலழிப்ப

மத்தார் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி

அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள் தம்

சித்தா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

மாறுபடும் சிந்தைனையில் உள்ள மாறுபாட்டினை ஒழித்து செம்மைப்படுத்தி சிவானந்த அனுபவத்தை ஊறச் செய்யும் பெருமான் என்று ஆனைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் ஒன்றினில் அப்பர் பிரான் (5.31.2) கூறுகின்றார்.

திருகு சிந்தையைத் தீர்த்துச் செம்மை செய்து

பருகி ஊறலைப் பற்றிப் பதம் அறிந்து

உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே

அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே

திருஞானசம்பந்தர் கூறியே கருத்தே, அப்பர் பிரானால் திருமருகல் தலத்தின் மீது அருளப்பட்டுள்ள குறுந்தொகைப் பதிகத்தின் முதல் பாடலில் சொல்லப்படுகின்றது. நமது சிந்தனை திருந்தவேண்டும் என்று நாம் நினைத்தால் மருகல் பெருமானை வழிபடுவது ஒன்று தான் தீர்வு என்று இந்த பாடலில்(5.88.1) அப்பர் பிரான் கூறுகின்றார். மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அத்தகைய சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், பெருமானை வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் வேறு பலன்களையும் இங்கே குறிப்பிடுகின்றார். மருகல் எனப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருவடிகளை வாழ்த்திப் பாடி வணங்கினால், தவம் செய்வதால் ஏற்படும் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கும்; மேலும் நமது உயிரைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமை நீங்கும்: உண்மையான மெய்ப்பொருளை நாம் உணர்ந்து உலகப் பொருட்களால் நமக்கு ஏற்படும் மாயையிலிருந்து விடுபடலாம்; வேறு ஏதேனும் மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அந்த சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும்; பரம்பொருளாகிய சிவபெருமானைத் தியானம் செய்து அதன் மூலம் நமக்கு ஏற்படும் பரமானந்தத்தை, சிவானந்தத் தேனை நாம் பருகலாம் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை. .

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்

திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்

பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

மற்ற ஒளிகளைப் போன்று புற இருளைத் தீர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தின் அக இருளைப் போக்கி சிந்தையில் உள்ள மயக்கங்களைத் தீர்க்கும் பேரொளி படைத்தவன் பெருமான் என்று தில்லைத் திருத்தாண்டகத்தின் பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். கார் ஒளிய=கரிய உடல் ஒளியை உடைய திருமால்; ஏரொளி=தோன்றும் ஒளி; மற்ற ஒளிகள் இருட்டை நீக்கி வெளிச்சம் மட்டும் அளிக்கும் தன்மை உடையன. ஆனால் இந்த ஒளி, மனதில் இருக்கும் அறியாமை ஆகிய இருளை நீக்கி ஞானத்தை அளிப்பதால் மயக்கம் தீர்க்கும் ஒளி என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றா

காரொளிய திருமேனிச் செங்கண் மாலும் கடிக்கமலத்து இருந்தவனும் காணா வண்ணம்

சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியைச் சிந்தைதனை மயக்கம் தீர்க்கும்

ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகும் கடந்து அண்டத்தப்பால் நின்ற

பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.84.4) அப்பர் பிரான் தனது மயங்கி கிடந்த சிந்தனையை மயக்கத்திலிருந்து விடுவித்து திருவருள் புரிந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். கன்னி=கங்கை நதி; பன்னிய=தானே சொல்லிய; வடமொழி மற்றும் தமிழ்மொழி ஆகிய இரண்டையும் இறைவ்னே தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தமிழ் இலக்கணத்தை அகத்திய முனிவருக்கும் வடமொழி இலக்கணத்தை பாணினிக்கும் போதித்தவன் இறைவன் என்று கச்சிப்புராணம் குறிப்பிடுகின்றது. இந்த பாடலில் பெருமான் தான் தன்னை, அவனது புகழினை உணர்த்தும் பதிகங்கள் பாடவைத்தவன் என்றும், எதனால் அவ்வாறு பாட வைத்தான் என்றும், அவ்வாறு பாடியதால் தனக்கு ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் அப்பர் பிரான் கூறுகின்றார். தெரிவை=பார்வதி தேவி; பெண்களை அவர்களது வயதிற்கு தக்கவாறு ஏழு பிரிவுகளாக தமிழ் இலக்கியங்கள் பிரிக்கின்றன. பேதை,பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பன இந்த ஏழு பிரிவுகள். 25 வயதிலிருந்து 30 முப்பது வயதுக்கு வயதுக்கு உட்பட்ட பெண்களை தெரிவை என்று பிங்கள நிகண்டு குறிப்பிடுகின்றது. என்றும் மூப்பு அடையாமல் ஓரே நிலையில் இளமையாக இருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் ஏது வயது. வயது நிலைகளை கடந்த அன்னையை, மங்கை என்றும் மடந்தை என்றும் அரிவை என்றும் தெரிவை என்றும் பலவாறு தேவார ஆசிரியர்கள் அழைக்கின்றனர். மணி என்பது இங்கே மரகத மணியை குறிக்கும். தேவியின் உடல் வண்ணத்திற்கு மரகத மணி உவமையாக சொல்லப்படுகின்றது. சராசரம்=சரம் மற்றும் அசரம்; அசையும், இயங்கும் உயிர்கள் மற்றும் இயங்காமல் ஒரே இடத்தில் இருக்கும் உயிர்கள், பன்னிய தமிழ் மாலை=முன்னோர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிய இலக்கண விதிகள்;

கந்தமலர் கொன்றையணி சடையான்தன்னைக் கதிர்விடு மாமணி பிறங்கு கனகச் சோதிச்

சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானைச் சராசர நல் தாயானை நாயேன் முன்னைப்

பந்தமறுத்து ஆளாக்கப் பணி கொண்டு ஆங்கே பன்னியநூல் தமிழ்மாலை பாடுவித்தென்

சிந்தை மயக்கு அறுத்த திருவருளினானைச் செங்காட்டங்குடியதனில் கண்டேன் நானே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய இந்த பதிகத்தின் பாடலில் தமிழ்மாலை பாடுவித்து என் சிந்தை மயக்கு அறுத்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பன்னிய நூல் என்றால் இலக்கண முறைப்படி அமைந்த பாடல்கள் என்று பொருள். இந்த பாடல்களைப் பாடியதால் தனது மனதில் இருந்த மயக்கும் சிந்தைகள் அறுந்தன என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அப்பர் பிரானின் பாடல்களை, மற்ற அருளாளர்கள் அருளிய திருமுறைப் பாடல்களை, பொருள் உணர்ந்து ஓதினால், நாமும் நமது சிந்தைகளில் உள்ள மயக்கங்களை அறுத்துத் தூய்மை பெறலாம் என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது. தன்னை எதற்காக பாடவைத்தான் என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். முன்னை பந்தம் அறுத்து ஆளாக்க,தன்னை பதிகம் பாட வைத்தவன் என்று கூறுகின்றார். தான் அதற்கு முன்னர் உலகப்பொருட்களின் மீதும் உலகத்தவர் மீதும் வைத்திருந்த பற்றினை அறுத்து, எப்போதும் பெருமானுக்கே திருப்பணி செய்யும் வண்ணம், இறைவன் பாடவைத்தான் என்று பாடவைத்த காரணத்தையும் இந்த பாடலில் கூறுகின்றார்.

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.57.3) சுந்தரர், தனது தடுமாற்றத்தை அறுத்த தேவதேவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். வேதங்களில் உள்ள அறம் மற்றும் திருமால் விடையாக மாறி பெருமானின் வாகனமாக இருக்கும் நிலை வேதமால் விடை என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுவதாக சிவக்கவிமணியார் பெரிய புராண விளக்கம் நூலில் உணர்த்துகின்றார்.

வெந்தநீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை

அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறலைத்த சடையானை அம்மானைச்

சிந்தை என் தடுமாற்று அறுப்பானைத் தேவதேவனை என் சொல் முனியாதே

வந்தென் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என்னினைக்கேனே

திருவாசகம் கண்டப்பத்து பதிகத்தின் முதல் பாடலில் மணிவாசகர், தனது சிந்தனையை தெளிவாக்கி, தன்னுள் இருந்த சிவத்தன்மையை வெளிப்படுத்தி ஆட்கொண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அந்தரம்=பல புவனங்கள்; இந்திரியங்களின் வயப்படும் உயிர்கள், தனது விருப்பத்திற்கு மாறாக இந்திரியங்களால் இழுத்துச் செல்லப்பட்டு, மேலும் மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வதால் அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் வினைகளை கழிப்பதற்காக மேலும் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது. இந்த தன்மையே இறப்பதற்கு காரணமாகி அந்தரமே திரிந்து போய் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. அந்த நிலைக்கு செல்லாமல் தன்னை அந்தமிலா ஆனந்தம் தரும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்பவன் பெருமான் என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார்.

இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்

அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேனை

சிந்தை தனை தெளிவித்து சிவமாக்கி எனையாண்ட

அந்தமில்லா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே

நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர், மத்தால் கடைந்து கலக்கப்படும் தயிர் கலங்குவது போல், புலன்கள் நெருப்பு போல் என்னைப் பற்றிக்கொள்வதால் எனது மனம் கலங்கி இருக்கின்றது. அதனால் மேலும் பல பிறவிகளுக்கு வழிகோலும் செயல்களைச் செய்யும் என்னை விட்டுவிடாதீர் என்று வேண்டுகின்றார். வித்துறுவேன்=தான் புரிகின்ற பல செயல்களால் வினைகளை சேர்த்துக்கொண்டு அடுத்த பிறவிக்கு அடிகோலுபவன்;மிலைச்சுதல்=தலையில் சூடுதல். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய வெண்தலை தன்னைக் கொல்ல வந்த போது அதனைத் தனது திருக்கரத்தால் பிடித்துத் தனது சடையினில் சிவபிரான் தரித்தார் என்பது வரலாறு. கொத்துறு போது=கொத்தாக உள்ள பூக்கள்.. குடர் நெடுமாலை=சரபமாக மாறி நரசிம்மரின் திறனை அடக்கியபோது, நரசிம்மரின் குடலை மாலையாக அணிந்து கொண்ட நிகழ்ச்சி புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது. தத்துறு நீறு=உடலில் பரந்து பூசப்பட்ட திருநீறு. ஆரம்=சந்தனக் கட்டை.

மத்துறு தண்தயிரில் புலன் தீக்கதுவக் கலங்கி

வித்துறுவேனை விடுதி கண்டாய் வெண்தலை மிலைச்சிக்

கொத்துறு போது மிலைந்து குடர் நெடு மாமாலை சுற்றித்

தத்துறு நீறுடன் ஆரச் செஞ்சாந்து அணி சச்சையனே

பொழிப்புரை:

தசை ஒட்டுக்கொண்டிருக்கும் பிரம கபாலத்தை தனது கையில் ஏந்தியவனாக உலகெங்கும் திரிந்து பலியேற்கும் பெருமான், காட்டில் திரியும் யானை போன்று வலிமையுடன் திகழ்ந்த மதயானை தாருகவனத்து முனிவர்களால் தன்னை நோக்கி ஏவப்பட்ட போது, அந்த யானையை அடக்கி அதன் தோலை உரித்து போர்த்துக் கொண்டவன் ஆவான். இவ்வாறு உயிர்கள் பால் கருணை கொண்டு பலியேற்கும் செயலும், வேறெவரும் செய்யது துணியாத, யானைத் தோலினைத் தனது உடல் மீது போர்த்துக் கொள்ளும் வீரச்செயலும் உலகத்தில் உள்ள மக்களால் போற்றப் படுகின்றன. தனது ஆற்றலையும் உண்மையான நோக்கத்தையும் மறைத்துக் கொண்டு பலியேற்பதால், அவன் கள்வனாகத் திகழ்கின்றான். அவன் தனது சடையின் மீது, முற்றிலும் அழிந்து தேயும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த பிறைச் சந்திரனை சூட்டிக் கொண்டு, சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்து வானில் இயங்கும் வண்ணம் அருள் புரிந்தவன் ஆவான். அனைத்து உயிர்களுக்கும் பொருட்களுக்கும் ஆதியாகத் திகழும் பெருமான், மகிழ்ந்து உறைகின்ற தலம் திருவலிதாயம். அந்த தலம் சென்றடைந்து, தேன் நிறைந்ததும் நறுமணம் மிகுந்ததும் ஆகிய மலர்கள் கொண்டு அவனை வழிபடும் அடியார்களின் சிந்தனை தெளிவடைந்து சிவஞானத்துட்ன் பொலியும்.

பாடல் 7:

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டிப்

பெண் நிறைந்த ஒரு பால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில்

மண் நிறைந்த புகழ் கொண்ட அடியார்கள் வணங்கும் வலிதாயத்து

உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மைக் கதியாமே

விளக்கம்:

பெருமானை வழிபடுவதால் நமது சிந்தை தெளிவடைந்து சிவஞானம் கைகூடும் என்று சென்ற பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர், தெளிவடைந்த சிந்தனையின் பயனாக உயிர்கள் பெருமானின் திருப்பாதங்களைப் போற்றிப் புகழ்ந்து, என்றும் அழியாது நிலையான ஆனந்தத்தைத் தருகின்ற முக்தி நிலை அடையலாம் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வரு காமன் என்று இந்த பாடலில் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது. தனது மனைவி தாட்சாயணி தந்து உயிரினை மாய்த்துக்கொண்ட பின்னர், பெருமான் தவத்தினில் ஆழ்ந்து விடுகின்றார். அந்த தருணத்தில் மிகுந்த வலிமையுடன் திகழ்ந்து தேவர்களுக்கு துன்பம் இழைத்து வந்த சூரபதுமனை அடக்கும் வழி அறியாமல் திகைத்து நின்ற இந்திரன், சிவாம்சம் பெற்ற ஒருவனால் மட்டுமே சூரபதுமனை அழிக்க முடியும் என்பதால், சிவபெருமான் தனது தவம் கலைந்து உமையன்னையுடன் கூடி, சிவாம்சம் பெற்ற குழந்தை உருவாக வேண்டும் என்று விரும்பினான்.அந்த விருப்பம் நிறைவேற முதல் படியாக, பெருமானின் தவம் கலைக்கப்பட வேண்டும் என்பதற்காக மனமதனை அணுகினான். தவத்தைக் கலைப்பது பாவம் என்பதாலும், பெருமானின் தவத்தைக் கலைத்து அவரது கோபத்திற்கு ஆளானால் தான் அழிக்கப்ப்டுவோம் என்பதையும் உணர்ந்த மன்மதன்,முதலில் பெருமானின் தவத்தைக் கலைப்பதற்கு தயங்கினான். எனினும், இந்திரன் மற்றுமுள்ள தேவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பெருமானின் தவத்தைக் கலைப்பதற்கு, கலங்கிய மனத்துடன் மன்மதன் சென்ற தன்மை வருகாமன் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. உள்-உள்ளம். கண் நிறைந்த விழியின் அழல்=பெருமானின் நெற்றிக்கண் எப்போதும் தீயினை உடையதாக விளங்கும் என்பதால் தான் பெருமான் அதனை மூடிய வண்ணம் இருக்கின்றார். ஆனால் தனது தவத்தை கெடுக்க மன்மதன் முயற்சி செய்த போது, பெருமான் தனது நெற்றிக் கண்ணை முழுவதுமாக திறக்க, அதனின்று வெளிப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை அழித்த செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது. பெருமானின் தவத்தை கலைப்பதற்காக மன்மதன் மேற்கொண்ட முயற்சி தவறானதாக இருந்தாலும், அந்த முயற்சியின் அடிப்படை நோக்கத்தை புரிந்து கொள்ளும் பெருமான், அந்த நோக்கத்தை நிறைவேற்றிய தன்மையை, உமையம்மையை மணந்த பின்னர் தன்னுடன் இணைத்துக் கொண்ட செய்கையை, பெண் நிறைந்த ஒரு பால் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். ஒரு பால்=ஒரு பக்கம், உடலின் இடது பக்கம்; பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாக்த்தில் பெருமான் ஏற்றுகொண்ட செய்கை பெருமானுக்கு மகிழ்வைத் தந்தது என்று கூறுகின்றார். மண்=உலகம்;

பொழிப்புரை:

தான் ஆழ்ந்திருந்த தவத்தினை கெடுக்கும் நோக்கத்துடன் தன்னை நோக்கி வந்த மனமதனின் உடலை சம்பலாக எரித்தழித்து அதனின்று அவனது உயிரினை விடுவிக்கும் நோக்கத்துட்ன, பெருமான், தனது நெற்றியில் நிறைந்து காணப்பட்ட கண்ணினை முழுவதுமாக திறந்து, அந்த கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளால் மனமதனின் உடலை எரித்தார். பெருமானின் உடலில் ஒரு பாகமாக இருந்து எப்போதும் பெருமானை விட்டு பிரியாது இருக்க வேண்டும் என்று பிராட்டி விரும்பிய போது, அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம், பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டவர் பெருமான். இவ்வாறு வீரமும் கருணையும் பொருந்திய பெருமான் உறைகின்ற தலம் வலிதாயம் ஆகும். நிலவுலகெங்கும் புகழ் நிறைந்த அடியார்கள் போற்றி வணங்கும் வலிதாயம் தலத்தினில் நிறைந்து பொருந்தி உறையும் பெருமானின் திருப்பாதங்களை புகழ்ந்து போற்றும் அடியார்கள்,நிலையான இன்பம் அளிக்கும் வீடுபேறு நிலையை அடையலாம்.

பாடல் 8:

கடலின் நஞ்சு அமுதுண்டு இமையோர் தொழுதேத்த நடமாடி

அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில்

மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலிதாயம்

உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ளத் துயர் போமே

விளக்கம்:

மறுமையில் உயிர் அடைய்விருக்கும் பலனை சென்ற பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில், இம்மையில் உயிர் அடையவிருக்கும் பலனை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் உடலில் உயிர் உள்ளவரையிலும் பெருமானைத் தொழவேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு அப்பர் பிரான் திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலை (4.12.5) நினைவூட்டுகின்றது. தீர்த்த=புனிதம் உடைய; மாதீர்த்த=மிகவும் புனிதமான; இசை பாடும் என்ற வினைச் சொல்லை, அப்பனை என்ற பெயர்ச் சொல்லுடன் சேர்த்து, பண் பொருந்த இசை பாடும் இறைவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.நாம் இறக்கும் சமயத்திலும் சிவபிரானது நினைவு இருக்க வேண்டும் என்ற தனது கவலையை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடல்களில் இதுவும் ஒன்று.இந்த கவலை நமக்கும் இருக்கவேண்டும், திருப்புகலூர் தலத்தில் இறைவனைப் பற்றிய சிந்தைனையில் இருந்தபோதே இறைவனின் திருவடிகளில் சேர்ந்த அப்பர் பிரானுக்கு அருளியது போல், நமக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாம் இறைவனை வேண்டும் முகமாக, தினமும் சிவபூஜை செய்யும் அன்பர்கள் தாங்கள் பூசையினை முடிக்கும் சமயத்தில், இந்த பாடலை சொல்லவேண்டும் என்று பெரியோர்கள் கருதுகின்றனர். கண் பொருந்துதல்=இறப்பினைக் குறிக்கும் மங்கலச் சொல். கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ என்று (இறக்கும் சமயத்தில் பழனத்து அப்பனின் நினைவை நான் கை விட்டு விடுவேனோ) தனது அச்சத்தை வெளிப்படுத்தும் அப்பர் பிரான், தான் இறக்கும் சமயத்திலும் சிவபிரானைப் பற்றிய நினைவு தனக்கு இருக்கவேண்டும் என்ற தனது விண்ணப்பத்தை, மறைமுகமாக இறைவனிடம் தெரிவிக்கின்றார்.

மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்

விண் பொருந்து தேவர்க்கும் வீடு பேறாய் நின்றானைப்

பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என்

கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ

அப்பர் பிரான் பல பாடல்களில், தனது உடலிலிருந்து உயிர் பிரியும் சமயத்தில் இறைவனைப் பற்றிய எண்ணங்கள் தனது மனதில் தோன்றவேண்டும் என்றும்,சிவபிரானின் திருநாமத்தைத் தான் சொல்ல வேண்டும் என்றும் வேண்டுகின்றார். அத்தைகைய நேரத்தில், இறைவனும் தனக்கு அருள் புரிய வேண்டும் என்று கோரும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (4.113.3 — வெள்ளிக் குழைத் துணி என்று தொடங்கும் பதிகம்):

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இம்மூவுலகுக்கு

அன்னையும் அத்தனும் ஆவாய் அழல் வணா நீ அலையோ

உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததற்பின்

என்னை மறக்கப் பெறாய் எம் பிரான் உன்னை வேண்டியதே

இறக்கும் தருவாயில், பெரும்பாலோருக்கு புலன்கள் தங்களது செயலிழந்து நிற்க, மெல்ல மெல்ல உணர்வுகள் இழக்கும் நிலை ஏற்படும். நமது உடல் பூரண நலத்துடன் இருக்கையிலே, நாம் சிவபிரானை நினைப்பதற்கு அவனது அருள் தேவைப் படுகின்றது. அவ்வாறு இருக்கையில், நமது இறுதிக் காலத்தில், உடலும் மனமும் நம்முடன் ஒத்துழைக்காத போது, இறைவனை நினைப்பதென்பது மிகவும் அரிதான செயலாக மாறிவிடுகின்றது. அதனால் தான், உடலும் மனமும் தனக்கு வஞ்சனை செய்யும் இறுதி நாளில், இறைவனின் நினைவு தோன்றவேண்டும் என்றால் அவனது அருள் வேண்டும் என்று நாகைக் காரோணம் தலத்து பதிகத்தின் பாடலில் (4.103.3) அப்பர் பிரான் வேண்டுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் உணரலாம். காசி மற்றும் முதுகுன்றம்(விருத்தாசலம்) தலங்களில் இறக்கும் தருவாயில் உள்ள உயிர்களுக்கு, அம்பிகை அவர்களது காதினில் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்வதால் தான் அந்த உயிர்கள் முக்தி அடைய முடிகின்றது என்று பெரியோர்கள் கூறுவார்கள். எனவே தான், தான் இறக்கும் சமயத்தில் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லும் பேறு தனக்கு வாய்க்க வேண்டும் என்றும் அப்பர் பிரான் வேண்டுகின்றார். இத்தகைய வேண்டுகோள் அப்பர் பிரானால் பல பாடல்களில் விடுக்கப் பட்டுள்ளது.

தூமென் மலர்க்கணை கோத்துத் தீ வேள்வி தொழிற்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக் காரோண நின்

நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்

சாம் அன்று உரைக்கத் தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே

திருமூலரும் ஒரு திருமந்திரப் பாடலில், இறக்கும் தருவாயில், சிவபெருமானை நினைத்து அவனது திருப்பாதங்களே சரணம் என்று சொல்லி வாழ்த்தினால்,இறைவனது அருள் நமக்கு நிச்சயமாக உண்டு என்று கூறுகின்றார்.

நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று

துஞ்சும் பொழுது உன் துணைத் தாள் சரண் என்று

மஞ்சு தவழும் வடவரை மீதுறை

அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே

ஆலகால நஞ்சினை தானே உட்கொண்டு, அனைது உலகங்களையும் ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து காப்பற்றியதால் மகிழ்ச்சி அடைந்த பெருமான் நடனமாடிய நேரம் தான் பிரதோஷமாக கொண்டாடப்ப்டுகின்றது. இந்த பிரதோஷ நடனத்தை தேவர்கள் உட்பட அனைவரும் கண்டு களித்தனர். இந்த செய்தி தான் இந்த பாடலின் முதல் அடியில் சொல்லப் படுகின்றது. அடல்=வலிமை; அரையன்=தலைவன், அரசன்;

பொழிப்புரை:

பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றும் பொருட்டு, அந்த ஆலகால விடத்தை பெருமான் உட்கொண்டு தனது கழுத்தினில் அடக்கியதைக் கண்ட தேவர்கள் பெருமானைப் புகழ்ந்து போற்ற, பெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடனம் ஆடியதை அனைத்து தேவர்களும் கண்டு களித்தனர். மிகுந்த வலிமை வாய்ந்தவனாக விளங்கியவனும் இலங்கைக்கு அரசனும் ஆகிய அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கி வெற்றி கண்ட பின்னர், அந்த அரக்கன் பாடிய சாமகானம் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு பல விதமாக அருள் புரிந்தவனும் அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருப்பவனும் ஆகிய சிவபெருமான் அமர்கின்ற திருக்கோயில் வலிதாயம் ஆகும். மடல்கள் பொருந்திய கமுகு, மற்றும் பலா மரங்கள் தேன் மிகுந்து காணப்படும் சோலைகள் நிறைந்த வலிதாயம் தலத்தினை, உடலில் உயிர் உள்ள வாழ்வின் இறுதி நாள் வரையில் தொழும் அடியார்கள் மனத்துயரம் இல்லாமல் திகழ்வார்கள்.

பாடல் 9:

பெரிய மேரு வரையே சிலையா மலை உற்றார் எயில் மூன்றும்

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவொண்ணா வடிவாகும்

எரியதாகி உற ஓங்கியவன் வலிதாயம் தொழுதேத்த

உரியராக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே

விளக்கம்:

வரை=மலை; சிலை=வில்; மலைவு=மாறுபாடு; மலைவுற்றார்=வேதாகம வழியிலிருந்து மாறுபட்டு வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; எயில்=கோட்டை;ஒருவன்=ஒப்பற்றவன்; இருவர்=பிரமன் மற்றும் திருமால்; உரியர்=கடமையாக உடையவர்;

பொழிப்புரை:

பெரிய மேரு மலையை வில்லாக வளைத்த பெருமான், அந்த வில்லினில் ஒரு அம்பினை பூட்டி எய்தி, வேதாகமங்கள் குறிப்பிடும் நெறியிலிருந்து மாறுபட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்த ஒப்பற்ற ஆற்றல் உடையவனும், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம் நெடிய தழற்பிழம்பாக நிமிர்ந்தவனும் ஆகிய பெருமான் உறைவது வலிதாயம் தலத்தினில். இத்தகைய பெருமை வாய்ந்த வலிதாயம் தலத்தைத் தொழுவதைத் தங்களது கடமையாக கொண்ட அடியார்களை, சிறந்த பெரியோர்கள் என்று கருதி உலகத்தவர் போற்றுவார்கள்.

பாடல் 10:

ஆசியார மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி

ஏசி ஈரம் இலராய் மொழி செய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்

வாசி தீர அடியார்க்கு அருள் செய்து வளர்ந்தான் வலிதாயம்

பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப்பேணும் பெரியோரே

விளக்கம்:

மொழியார்=எதிர்மறைப் பொருளை உணர்த்தும் சொல்; சொற்களை பேசாதவர்கள்; ஆசி=மனமார வாழ்த்துதல்; ஈரம்=அன்பு, இரக்கம்; அன்பே சிவம் என்பது ஆன்றோர் வாக்கு; அன்பே வடிவமாக விளங்கும் சிவன் பால் அன்பு வைக்கும் அடியார்கள் பால் பெருமான் கருணையுடன் அருள் புரிகின்றார்.இவ்வாறு பெருமானின் அருள் பெறுவதை தடுத்து திசை திருப்பும் சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை பொருட்படுத்தாதீர் என்று அறிவுரை கூறுகின்றார். ஏசி=இழிவாக பேசி; வாசி=குற்றம்; தொன்றுதொட்ட நாளிலிருந்தே இறைவன் அருள் புரிந்து வருவதை அருள் செய்து வளர்ந்தான் என்று குறிப்பிடுகின்றார். அல்லாதவர்கள்=சைவ சம்யத்திற்கு புறம்பானவர்கள், சைவர் அல்லாதவர்கள்; வாசி தீர என்று பெருமான் அடியார்களின் குற்றங்களை நீக்கும் தன்மை, கோதாட்டி என்ற திருவாசகத் தொடரை நினைவூட்டுகின்றது. உயிரின் குற்றமாக கருதபப்டுவது உயிருடன் பிணைந்துள்ள மலமும், அந்த மலத்தின் விளைவாக உள்ள வினைகளும் தான்.

பொழிப்புரை:

அடுத்தவரும் நன்றாக வாழவேண்டும் மனமார வாழ்த்தும் பண்பு அற்றவர்களாகத் திகழ்ந்த சமணர்களும் புத்தர்களும் சைவ சமயத்திற்கு புறம்பானவர்களுடன் ஒன்று கூடி, சிவபெருமானை குறித்து இகழ்வாகவும், மனதில் இரக்கம் ஏதும் இல்லாதவராக ஆதாரமற்ற பழிச்சொற்களையும் பேசி திரிகின்றனர்.உலகத்தவரே, அத்தகைய இழிவான பேச்சுகளை பொருட்படுத்தாது புறக்கணிப்பீர்களாக. தனது அடியார்களின் குற்றமாகிய வினைகளை நீக்கும் செயலை பண்டைய நாளிலிருந்தே தொடர்ந்து செய்து வரும் இறைவன் உறைகின்ற தலம் வலிதாயம். இந்த வலிதாயம் தலத்தின் சிறப்பினை பேசுவதில் விருப்பம் கொண்டவர்கள், சிறந்த அடியார்கள் என்று பெரியோர்களால் கருதப்பட்டு போற்றப்படுவார்கள்.

பாடல் 11:

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து

அண்ட வாணன் அடி உள்குதலால் அருள் மாலைத் தமிழாகக்

கண்டல் வைகு கடற்காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்

கொண்டு வைகி இசை பாடவல்லார் குளிர் வானத்து உயர்வாரே

விளக்கம்:

வைகும்=மொய்க்கும்; அண்ட வாணன்=அனைத்து உலகங்களுக்கு தலைவனாக விளங்கும் பெருமான்; கண்டல்=தாழை மடல்கள்; கொண்டு வைகி=ஏற்றுக்கொண்டு பொருந்தி; துன்பங்கள் உடலுக்கும் மனதிற்கும் வெம்மை விளைவிப்பதாகவும் இன்பங்கள் உடலையும் மனத்தையும் குளீர்விப்பதாக கருதுவது மரபு; பெருமானின் அருளால் கிடைக்கும் முக்தி உலகம், எல்லையற்ற என்றும் அழிவற்ற ஆனந்த்தத்தை அளிப்பதால், குளிர் வானம் என்று அழைக்கப்படுகின்றது. வானம்=உயர்ந்த முக்தி உலகம். முக்தி உலகினை அடையும் உயிர்கள் நான்கு விதமான நிலையை அடைகின்றன. சாலோகம்,சாமீபம், சாரூபம், சாயுஜ்ஜியம் என்பன இந்த நான்கு நிலைகள். இந்த நான்கினில் சாயுஜ்ஜியம் என்ற பதவி மிகவும் சிறந்ததாக கருதப்படுகின்றது.அத்தகைய உயர்ந்த நிலையை, பதிகம் பாடி இறைவனைத் தொழும் தொண்டர்கள் அடைவார்கள் என்பது உயர்வாரே என்ற சொல் மூலம் உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

வண்டுகள் மொய்க்கும் வண்ணம் நறுமணம் நிறைந்த சோலைகள் மலிந்து வளரும் வலிதாயம் தலத்தில் உறைபவனும் அனைத்து உலகங்களுக்கும் தலைவனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளை எப்போதும் தியானிப்பவனாக திகழ்பவனும் தாழை மடல்கள் செழித்து வளரும் கடற்கரைச் சோலைகள் நிறைந்த காழி நகரைச் சார்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் அவனது அருளால் தமிழ்ப் பாடல்களால் தொடுக்கப்பட்ட இந்த பத்து தமிழ் பாடல்களையும் முறையாக இனிய இசையுடன் கலந்து ஓதும் வல்லமை வாய்ந்த அடியார்கள், எல்லையற்ற ஆனந்தமும் இன்பமும் அளிக்கும் முக்தி உலகம் சென்றடைந்து,உயர்ந்த பதவியாகிய சாயுஜ்ஜிய நிலையை அடைவார்கள்.

பத்தரோடு பலரும் (Pattarodu Palarum) is a phrase from the famous Tamil hymn Thiruvempavai, composed by the Saivite saint Manikkavacakar as part of his work Thiruvasagam. The phrase is found in the verse that begins with "தோடுடைய செவியன்", and the full line goes:

"தோடுடைய செவியன் விதான முழுதும் பத்தரோடு பலரும் பாடுகின்றாற்போல்"

Meaning of the phrase:

பத்தர் refers to devotees, especially those who are spiritually enlightened and deeply devoted to Lord Shiva.
பலரும் means "many others" or a multitude of people.

Together, பத்தரோடு பலரும் conveys the idea that not only the enlightened devotees but also many other ordinary people gather together to sing the praises of Lord Shiva.

Context:

In this verse, Manikkavacakar describes a scene where both enlightened devotees (பத்தர்) and common worshippers (பலரும்) are joyfully singing the glories of Lord Shiva, who is adorned with a simple earring (தோடு) in his ear. The verse paints a picture of collective devotion, where people of different spiritual levels come together to worship Shiva.

This phrase emphasizes the inclusivity of Lord Shiva’s worship. Whether one is an enlightened saint or a common devotee, everyone is welcomed and finds a place in the worship of Lord Shiva. It also signifies the universal appeal of devotion and the spiritual unity that transcends individual differences.

The Thiruvempavai hymn, in which this phrase appears, is sung during the Tamil month of Margazhi to awaken the spirit of devotion and invoke the blessings of Lord Shiva.



Share



Was this helpful?