இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பெண்ணமரும் திருமேனி

பெண்ணமரும் திருமேனி


பதிக எண்: 2.57 - திரு நல்லூர் - காந்தாரம்

பின்னணி:

நல்லூர் தலத்தினில் பல நாட்கள் தங்கியிருந்த திருஞானசம்பந்தர் அருளிய பதிகம். திருக்கோயிலின் முகப்பில் உள்ள ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்தை கடந்து சென்றால் கொடிமரம் மற்றும் பலிபீடத்தை காணலாம். அடுத்து உள்ள நந்திமண்டபத்தைக் கடந்தால் மற்றொரு கோபுரத்தை காணலாம். வெளிச் சுற்றில் நந்தவனம், மடப்பள்ளி, அஷ்டபுஜகாளி சன்னதி, நடராஜர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. உட்சுற்றில் நாயன்மார்கள், கன்னி விநாயகர், முசுகுந்த லிங்கம், சங்குகர்ண லிங்கம், சுமதி லிங்கம், வருணலிங்கம், விஷ்ணு லிங்கம், பிரம லிங்கம் ஆகியவரை காணலாம். தொடர்ந்து நடராஜர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், மகாலிங்கம், பாணலிங்கம், ஜுரஹரேஸ்வரர், ஜுரஹரேச்வரி சன்னதிகளை காணலாம். மேலும் உமா மகேசுவரர், சங்கரநாராயணர், லிங்கோத்பவர், சுகாசனர், நடராஜர், ரிஷபாரூடர் ஆகியோரின் சுதைச் சிற்பங்களை காணலாம். கோஷ்டத்தில் உச்சிஷ்ட கணபதி, கயிலாய கணபதி, தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி பிரமன் துர்க்கை உருவங்களையும் அருகில் சண்டீசர் மண்டபத்தையும் காணலாம். மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் கட்டுமலை மீது கிழக்கு நோக்கிய சன்னதியில் உள்ளார். அவருக்கு எதிரே பலிபீடமும் நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதிக்கு அருகே வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணிய சன்னதியும், பள்ளியறையும் உள்ளன. நந்திக்கு அருகே கணபதியை காணலாம்.

அமர்நீதி நாயனார் பழையாறை நகரைச் சார்ந்தவர். ஆனால் இங்கே குடி புகுந்து திருமடம் உருவாக்கி அடியார்களுக்கு அமுதூட்டியும் திருவிழாக்கள் நடத்தியும் தொண்டு செய்து வந்தார். அவர் நிறுவிய திருமடம், கோயிலுக்கு எதிரே உள்ள குளத்தின் மேல் கரையில் சிதலமடைந்த நிலையில் உள்ளது. இவர் நல்லூர் தலத்தில் வாழ்ந்து வந்த துணி வணிகர். சிறந்த சிவ பக்தராக இருந்த இவர், சிவன் அடியார்களுக்கு உணவு அளித்து பின்னர் அவர்களுக்கு உடைகளும் (கோவணம் உட்பட அனைத்து வகை உடைகளும்) அளித்து மகிழ்ந்தவர்; தனது வருவாயில் பெரும் பகுதியை கோயில் திருப்பணிக்காக செலவு செய்தவர். அவரது பெருமையினை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்ட பெருமான் ஒரு நாள் வயதான சிவன் அடியார் வேடத்தில் இந்த தலத்திற்கு வந்தார். வந்த சிவன் அடியாரை வரவேற்ற அமர்நீதி நாயனார் தனது இல்லத்திற்கு வந்து உணவு உட்கொள்ளுமாறு வேண்டினார். வந்த அடியவர் தான் நீராடி விட்டு வருவதாக கூறி, தனது கையில் இருந்த கோவணம் ஒன்றினை பாதுகாப்பாக வைக்குமாறு அமர்நீதி நாயனாரிடம் கூறிவிட்டு நீராடச் சென்றார். நீராடச் சென்ற வேதியர் கோவணத்தை எவரும் காணாதவாறு போக்கிவிட்டார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இதனை உணர்த்தும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம். பானல்=நீலம்

போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்

பானலத்துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ

தூநறுஞ்சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ

வானநீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்

நீராடிவிட்டு வந்த அடியவர் தான் கொடுத்து இருந்த கோவணத்தை திரும்பத் தருமாறு நாயனாரிடம் கேட்டார். ஆனால் பாதுகாப்பாக வைத்த இடத்தில் கோவணம் இல்லாது மாயமாக மறைந்து விட்ட காரணத்தால் நாயனாரால் கோவணத்தை திரும்பித் தர முடியவில்லை. நடந்ததை கூறி அடியவரிடம் மன்னிப்பு கேட்டு வேறு ஒரு கோவணம் தருவதாக நாயனார் வேண்டினார். அடியவர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல், நாயனாரை நோக்கி இப்படித்தான் கோவணங்களையும் ஆடைகளையும் திருடி அடுத்தவர்க்கு தானம் செய்து நீர் புகழ் ஈட்டினரோ, இது தகுமா என்று ஏசினார். நாயனார் கூறிய எந்த சமாதானத்தையும் அவர் ஏற்கவில்லை. தொலைந்து போன கோவணத்திற்கு ஈடு செய்வதாக நாயனார் கூறியபோது, வந்த அடியார் அதற்கு வேண்டா வெறுப்பாக ஒப்புவது போல் பாவனை செய்தார். அடியவர் தன்னிடம் இன்னொரு கோவணம் இருப்பதாகவும் அந்த கோவணத்திற்கு சம எடையுள்ள இன்னொரு கோவணம் தந்தால் ஒப்புக்கொள்வதாக இறுதியில் கூறினார்.

ஒரு பெரிய தராசு வரவழைக்கப்பட்டு அடியவரின் கோவணம் ஒரு தட்டிலும் மற்றைய தட்டில் ஈடு செய்யும் அளவுக்கு துணிகள் ஏதேனும் வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, அடியவரின் கோவணம் ஒரு தட்டில் வைக்கப்பட்டது. அடுத்த தட்டில் பல கோவணங்கள் வைக்கப்பட்டும் ஈடு செய்ய முடியாத நிலையில், அமர் நீதி நாயனார் தன்னிடம் இருந்த அனைத்து துணிகளையும் (விற்பனைக்கு வைத்து இருந்த) தராசுத் தட்டில் வைத்தார். அப்போதும் ஈடு செய்ய முடியாத நிலையில் தனது இல்லத்தில் இருந்த அனைத்து செல்வங்களையும், பொருட்களையும், (நகைகள், வெள்ளி பாத்திரங்கள் உட்பட அனைத்தையும்), தராசுத் தட்டில் வைத்தும் ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தனக்கு வந்த சோதனையை நினைத்து வருந்திய நாயனார் தன்னையும் தன் குடும்பத்தினரையும் வந்த அடியவருக்கு கோவணத்திற்கு ஈடாக தரத் தீர்மானித்து, இறைவனை வேண்டி குடும்பத்தினருடன் தராசுத் தட்டினால் அமர்ந்தார். பாதுகாப்பாக வைப்பதற்கு கொடுக்கப்பட்ட கோவணத்தை தொலைத்த குற்றத்திற்கு தண்டனையாக தன்னையும் தனது குடும்பத்தவரையும் சிவனடியாருக்கு அடிமையாக இருப்பதற்கு உடன்பட நாயனார் தயாரானதும் தராசின் இரண்டு தட்டுக்களும் ஒரே நிலையில் நின்று, கொடுத்த வாக்கிற்காக தன்னையும் தன் குடும்பத்தினரையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணம் கொண்ட அமர்நீதி நாயனாரை உலகுக்கு அடையாளம் காட்டியது.

எதிர் தட்டில் வைக்கப்பட்டிருந்த கோவணமும் மறைந்தது, வந்த அடியவரும் மறைந்தார். ரிஷபாரூடராக அன்னை பார்வதியுடன் ஈசன் அனைவருக்கும் காட்சி தனது அருளி, அமர்நீதி நாயனாரின் புகழை உலகு அரிய செய்ததும் அல்லாமல், அவர்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் முக்தி அளித்தார். அமர்நீதி நாயனாரும் அவரது குடும்பத்தாரும் ஏறி உட்கார்ந்த தராசே விமானமாக மாறி அனைவரையும் சிவபுரத்திற்கு அழைத்துச் சென்றதாக சேக்கிழார் கூறுகின்றார். இந்த அரிய சம்பவம் நடந்த இடம் நல்லூர் தலம் தான். துலை என்றால் தராசு.

நாதர் தம் திருவருளினால் நற்பெரும் துலையே

மீது கொண்டெழு விமானம் அதாகி மேல் செல்லக்

கோதில் அன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த

ஆதி மூர்த்தியாருடன் சிவபுரியினை அணைந்தார்

கோவணத்தை காப்பாற்று என்று சொல்லி கொடுத்துவிட்டு, தொண்டனை சோதிக்கும் பொருட்டு, பின்னர் அந்த கோவணத்தை மாயமாக மறையச் செய்த பிரானை, உரிமையுடன் பொய் கூறியவன் என்று திருஞானசம்பந்தர் பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.121.1) அழைப்பது நாம் ரசிக்கத் தக்கது. பொய் சொன்னதும் எதற்காக என்பதை, தொண்டனை ஆட்கொள்ளத்தான் என்பதை நாயனாரின் சரித்திரம் உணர்த்துகின்றது.

இடறினார் கூற்றைப் பொடி செய்தார் மதிலை இவை சொல்லி

உலகு எழுந்து ஏத்தக்

கடறினார் ஆவர் காற்றுளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில்

கொடிறனார் யாதும் குறைவிலார் தாம் போய் கோவணம் கொண்டு

கூத்தாடும்

படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே ,

பாடல் 1:

பெண்ணமரும் திருமேனி உடையீர் பிறங்கு சடை தாழப்

பண்ணமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்

திண்ணமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திருநல்லூர்

மண்ணமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

பிறங்கு=ஒளியுடன் திகழும்; அமரும்=பொருந்தும்; கோயில்=கோ+இல், தலைவன் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்து உறையும் இடம். மண்ணமரும்=நிலவுலகில் பொருந்திய; திண்மை=உறுதி; இந்த பாடலில் நிலவுலகில் பொருந்திய திருக்கோயிலைத் தான் உறையும் இடமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுத்த பெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். ஏன் மண்ணுலகில் வாழும் மனிதர்கள் பால் பெருமானுக்கு அத்துணை கருணை என்பதை நாம் சற்று சிந்திப்போம். தேவர்கள் தாங்கள் முந்தைய பிறவிகளில் செய்த நற்செயல்களின் விளைவாக, இன்பம் அனுபவிக்கும் பொருட்டு போக லோகமாகிய சுவர்கத்தில் வாழ்கின்றனர். அவர்கள் அந்த பிறவிக்கு ஒதுக்கப்பட்ட நல்வினைகளை இன்பம் அனுபவித்து கழித்த பின்னர், தங்களது எஞ்சிய வினைகளைக் கழிக்க பல பிறவிகள் எடுக்கவேண்டிய நிலையில் உள்ளனர். மேலும் போக வாழ்க்கை வாழ்வதற்காக தேவர்களாக இருக்கும் அவர்களால் மனிதர்கள் போன்று இறைவனை வழிபட்டு, தங்களது வினைகளைக் கழித்துக் கொண்டு முக்தி நிலையை அடைய முடியாது. இறைவனோ, பல உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொண்டு முக்தியுலகம் வந்தடைந்து அழியாத பேரின்பத்தை பெறவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவனாக இருப்பதால், உயிர்களுக்கு அத்தைகைய அருள் புரிவதற்காக நிலவுலகில் பல கோயில்களில் உறைந்து மகிழ்கின்றான். எனவே மனிதர்களைக் கண்டால் திருமால் பிரமன் ஆகியோருக்கும், அவர்கள் பெற்ற பேற்றினைத் தாங்கள் பெறவில்லையே என்ற ஏக்கம் உள்ளது. இதனை மிகவும் அழகாக மணிவாசகர் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் கடைப் பாடலில் தெரிவிக்கின்றார்.

சிவபெருமானால் உய்யக் கொள்ளப்பட வேண்டுமானால், இந்த பூவுலகத்தில் போய் பிறப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே மண்ணுலகில் சென்று பிறக்காமல் இங்கே இருந்துகொண்டு தம் வாழ்நாளை வீணாக கழிக்கின்றோமே என்று திருமாலும் பிரமனும் கவலைப்படுவதாக மணிவாசகர் கூறும் பாடலை நாம் இங்கே காண்போம்; அவனை முந்திக் கொண்டு அவனது கருணையும் பூமியை வந்தடைகின்றது என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த நிலைக்கு காரணம் பூவுலகத்தில் இருப்போர்கள் செய்த தவம் தானே.

புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம்

அவமே இந்த பூமி

சிவன் உய்யக்கொள்கின்ற ஆறென்று நோக்கித் திருப்பெருந்துறை

உறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த

மெய்க் கருணையும் நீயும்

அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே பள்ளி

எழுந்தருளாயே

கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.105.5) உயிர்கள் தன்னை வந்தடைந்து தொழுது உய்வினை அடையவேண்டும் என்ற விருப்பம் கொண்டவராக பெருமான் நிலவுலகினில் உறைகின்றார் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். மேலும் பெருமான் நிலவுலகில் உறையும் தன்மையை, தேவர்களும் அடையாத பேற்றினை மண்ணுலுகத்தவர்கள் பெற்றுள்ளதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

வானிடை வாண்மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம்

கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்

ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த

நான் அடைவாம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனும் திருவாசகத் தொடர் கூறுவது போன்று, பெருமானை நாம் நினைத்து வணங்குவதற்கு அவனது அருளே காரணம். பெருமான் நம் மீது கருணை கொண்டுள்ள அன்பே, அத்தகைய அருளாக மிளிர்கின்றது. இந்த அருளால் நமக்கு விளைந்த நன்மையை, பெருமானை நினைக்கும் தன்மையை நாம் பெற்றிருப்பதை, நாம் நினைத்து போற்றுவோம் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். தேவர்கள் அடையாத நலனைத் தான் அடைந்ததாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார். தேவர்கள் போகம் தரும் உலகில் வாழ்பவர்கள். எனவே அவர்கள் அந்த உலகம் தரும் இன்பத்தில் ஆழ்ந்து இறைவனை மறந்து இருத்தல் இயற்கையே. ஆனால் தாங்கள் துன்பம் அடையும் தருணத்தில், தங்களது துன்பங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு பெருமானை நாடும் குணம் உடையவர்கள் அவர்கள். மூன்று வயது குழைந்தையாக இருந்த போது, இறைவனின் அருளால் ஞானப்பால் ஊட்டப்பெற்ற சம்பந்தரோ, அன்றிலிருந்து என்றும் இறைவனை மறவாது இருந்தைமையால், தேவர்களை விடவும் நலன் அடைந்தவனாகத் தன்னை கருதுகின்றார். கண்டல்=தாழை; வாண்மதி=ஒளிவீசும் சந்திரன்; அடைவாம்=அடையும் வண்ணம்; அடைவோம் என்று பன்மையில் கூறியுள்ளமையால் உலகத்தவர்கள் பெருமானின் அன்பு காரணமாக அடைந்துள்ள நன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாகும். நாம் என்ற சொல் நான் என்று எதுகை கருதி திரிந்தது என்றும் கொள்ளலாம். நான் அடைவாம் வண்ணம் அன்பு தந்த நலமே நினைவோமே, என்ற தொடருக்கு, தேவர்களும் அடைய முடியாத பேற்றினை நாம் அடையும் வண்ணம், பெருமான் அருள் புரியும் சிறப்பினை நினைந்து உருகுவோம் என்று சம்பந்தர் கூறுவதாகவும் விளக்கமும் அளிக்கப்படுகின்றது.

நெல்வாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.26.3), பெருமான் இச்சையால் இந்த உலகத்தில் உறைவதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார். நிச்சலும்=அனுதினமும், நாள்தோறும்; கச்சை=இடுப்பினில் கட்டும் கயிறு; கவின்=அழகு; இச்சையார்=இச்சா சக்தி; பெருமான் உயிர்கள் பலவிதமான செயல்களைச் செய்வதற்கு விருப்பம் ஏற்படும் வண்ணம் இச்சா சக்தியாக விளங்குகின்றார் என்று ஒரு விளக்கம் கூறப்படுகின்றது. பிரளயத்தின் போது தன்னுள் ஒடுங்கிய அனைத்து உயிர்களுக்கும், அவைகள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவ மலத்தினை அடக்கி முக்தி நிலை அடைவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்று பெருமான், எண்ணுகின்றார். இவ்வாறு உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையின் காரணமாக, உயிர்களை மீண்டும் தகுந்த உடலுடன் இணைக்கவும், உலகத்தினை மீண்டும் படைக்கவும் பெருமான் சித்தம் கொள்ளும் மாத்திரத்தில், அவரது கருணையாக விளங்கும் பிராட்டி கிரியா சக்தியாக செயல்பட்டு உலகத்தை படைக்கின்றார். இந்த தன்மையைத் தான், உலகினை மீண்டும் படைக்கவேண்டும் என்று விருப்பம் கொள்ளும் இச்சா சக்தியாக பெருமான் செயல்படுவதை இச்சையார் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்ற விளக்கமும் தரப்படுகின்றது. இச்சையார் என்பதன் மூலம், இச்சா சக்தி, ஞானசக்தி மற்றும் கிரியாசக்தியாக செயல்படுபவர் பெருமான் என்று கூறுவதும் பொருத்தமே.

நிச்சல் ஏத்து நெல்வாயிலார் தொழ

இச்சையால் உறைவார் எம் ஈசனார்

கச்சை ஆவது ஓர் பாம்பின் ஆர் கவின்

இச்சையார் எமது உச்சியாரே

பொழிப்புரை:

பார்வதி தேவியை, தனது உடலின் ஒரு பாகத்தில் பொருத்திக் கொண்டுள்ளவனும், ஒளிவீசும் சடை தாழும் வண்ணம் பண்ணுடன் பொருந்திய நான்கு வேத மந்திரங்களையும் பாடியவாறு தொடர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருப்பவனும் ஆகிய நீர், உறுதியான பசுஞ்சோலைகளும் வயல்களும் சூழ்ந்த நல்லூர் திருத்தலத்தில் உள்ள திருக்கோயிலை, தலைவனாகிய நீர் உறையும் இடமாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 2:

அலைமல்கு தண்புனலும் பிறையும் சூடி அங்கையில்

கொலைமல்கு வெண்மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர்

சிலைமல்கு வெங்கணையால் புரம் மூன்று எரித்தீர் திருநல்லூர்

மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

தண்புனல்=குளிர்ந்த கங்கை நீர்; மலைமல்கு கோயில்=மலை போன்ற தோற்றம் உடைய கோயில். வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் நடைபெற்ற பலப்பரீட்சையில் சிதறி விழுந்த கயிலை மலையின் சிறிய பகுதியின் மீது மூலவர் அமர்ந்திருப்பதாக கூறுவார்கள். இந்த மலையை சுந்தரகிரி என்று அழைப்பார்கள். இப்போது நாம் கட்டுமலையை தான் காணமுடியும். இந்த கட்டுமலை அமைப்பினை ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் கொலைமல்கு வெண்மழு என்று குறிப்பிடப்படுகின்றது. கொலைத் தொழிலை புரியும் வல்லமை வாய்ந்த மழு ஆயுதம் ஏந்தியவன் பெருமான் என்றாலும், சிவபெருமானின் பல வீரச் செயல்களை நாம் ஆராய்ந்தால், மழு ஆயுதம் எவரையும் அழிக்கவோ கொல்லவோ பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் உணரலாம். எனவே இந்த மழு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் பெருமானுக்கு ஏற்படவில்லை என்பதால் பெருமானின் கையிலிருக்கும் மழு இரத்தக்கறை படியாமல் வெண்மையாக இருக்கின்றது என்று சுவையான விளக்கம் கூறப்படுகின்றது. தாருகவனம் நிகழ்ச்சிக்கு முன்னர் பெருமான் மானும் மழுவும் இன்றி இருந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. தாருகவனத்து முனிவர்கள் சிவபெருமான் மீது கோபம் கொண்டு, தாங்கள் செய்த அபிசார ஹோமத்திலிருந்து எழுப்பி ஏவப்பட்ட மான்கன்று மற்றும் மழு ஆகிய இரண்டினையும், பெருமான் தனக்கு அவை இரண்டும் எந்தவிதமான கேடும் விளைவிக்காத வண்ணம் தனது கைகளில் ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் புராணத்திலிருந்து அறிகின்றோம். எனவே தான் மழு ஆயுதத்தின் கொலைத் தன்மையையும் அந்த மழு ஆயுதம் பயன்படுத்தப் படாத நிலையையும் குறிப்பிடும் வண்ணம் கொலைமல்கு வெண்மழு என்று ஞானசம்பந்தர் குறிப்பிட்டார் போலும்.

பெருமான் தனது கையினில் மழு ஆயுதம் வைத்திருப்பது எதற்காக என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கு பதில், திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் மூலம் (1.105.4), ஞானசம்பந்தர் நமக்கு அளிக்கின்றார். திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.105.4) திருஞானசம்பந்தர் வெந்துறு வெண்மழுவாள் என்று குறிப்பிடுகின்றார். கறையற்ற வெண் மழு என்று குறிப்பிட்டு, எவர் மீதும் எய்யப்படாத மழு ஆயுதம் என்று குறிப்பிடும் சம்பந்தர், வெந்துறு வெண்மழு என்று குறிப்பிடுவது முன்னுக்குப் பின் முரணாக இருப்பது போன்று தோன்றுகின்றது அல்லவா. மழு ஆயுதம் எவர் மீதும் வீசப் படாததால் கறையேதும் இன்றி காணப்படும் மழு, அடியார்களுடன் பிணைந்துள்ள வினைகள் அனைத்தும் வெந்து அழியும் வண்ணம், அழிப்பதால், வெந்துறு வெண்மழு என்று அழைக்கப்படுகின்றது.

வெந்துறு வெண் மழுவாள் படையான் மணிமிடற்றான் அரையின்

ஐந்தலை ஆடரவம் அசைத்தான் அணி ஆரூர்ப்

பைந்தளிர் கொன்றை அந்தார்ப் பரமன் அடி பரவப் பாவம்

நைந்துறும் வந்து அணையும் நாள்தொறும் நல்லனவே

பல தேவாரப் பாடல்களில் அருளாளர்கள் வெண்மழு என்று குறிப்பிடுகின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பாடலில் (1.10.10) திருஞானசம்பந்தர் கூர்மையான வெண்மழு ஏந்தியவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். வேர்=வியர்வை; மாசு=அழுக்கு சீவரம்=துவர்ச்சாயம் ஏற்றப்பட்ட ஆடை; ஆன்மீகப் பயிற்சியில் மிகவும் தொடக்க நிலையில் உள்ள சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று இந்த பாடலில் குறிப்பிட்டு, அவர்கள் சிவபெருமானை குறித்து பேசும் பேச்சுகள் முதிர்ச்சி அடையாத பேச்சுகள் என்று குறிப்பிட்டு அத்தகைய சொற்களை புறக்கணிக்கும்படி நமக்கு அறிவுரை கூறும் பாடல். ஆரம்பர் மிகவும் அழகான சொல்லாட்சி.

வேர் வந்துற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும்

மார்பம் புதை மலிசீவர மறையா வருவாரும்

ஆரம்பர் தம் உரை கொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்

கூர் வெண்மழுப் படையான் நல்ல கழல் சேர்வது குணமே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.40.11) வெண் மழுவாள் ஆயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவன் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். கல்=மலை; கல்லுயர்=மலை போன்று உயர்ந்த;

கல்லுயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழிய மூதூர்

நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்

வல்லுயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்ச்

சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிதாமே

சிரபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது பாடல் ஒன்றினில் (1.47.6), திருஞானசம்பந்தர், தனது கையினில் வெண்மழு ஏந்தியவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஆகவனீயம் காருகபத்தியம் தக்ஷிணாக்னி ஆகிய மூன்று விதமான தீக்களை வளர்க்கும் அந்தணர்கள் வாழும் சிரபுரம் என்று சீர்காழி தலத்தின் சிறப்பினை உணர்த்துகின்றார்.

கண்ணும் மூன்று உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்

பண்ணு மூன்று வீணையோடு பாம்புடன் வைத்தல் என்னே

எண்ணு மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய்

திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே

திருச்சோபுரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.51.2) சம்பந்தர், இடபத்தினை தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமான், ஒளி வீசும் வெண்மழுவாட் படையினை ஏந்தி உள்ளான் என்று கூறுகின்றார். தனது விரிந்த சடையினில் குளிர்ந்த நீரினை உடைய கங்கை நதியினை பெருமான் தேக்கி வைத்துள்ளதன் காரணம் யாதோ என்று திருஞான சம்பந்தர் கேள்வி கேட்கும் பாடல் இது. கடை உயர்ந்த மதில்கள் என்று, சிறந்து உயர்ந்த வாயில்கள் கொண்ட மூன்று கோட்டைகள் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தொடை=அம்பு; நெகிழ்ந்த=செலுத்திய

விடை அமர்ந்து வெண்மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கி

சடை ஒடுங்கத் தண்புனலைத் தாங்கியது என்னை கொலாம்

கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்தத்

தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுரம் மேயவனே

பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பாடலில் (1.135.7) வெண்மழுவாளர் என்று பெருமானை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அடைய=பொருந்தும் வண்ணம்; விடையும் ஏறுவர் என்று சிறப்பு உம்மைத் தொகை கொடுத்து, பெருமான் இடபத்தினை தனது வாகனமாக ஏற்றுக் கொண்ட செய்தி இங்கே உணர்த்தப் பட்டுள்ளது. மிகவும் எளிமையான தன்மை உடையவராக விளங்கும் பெருமான், குதிரை யானை சிங்கம் புலி போன்று உயர்ந்ததாக கருதப்படும் விலங்குகளையோ தனது வாகனமாக ஏற்றுக் கொள்ளாமல் இடபத்தை வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. தனக்கு பகைவராக எவரும் இல்லாததால் மழுவாளினை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏதுமின்றி, எந்த கறையும் படாமல் வெண்மை நிறத்துடன் மழுவாள் இருக்கும் தன்மையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. மேலும் மழு ஆயுதம் தாருகவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட ஆயுதம் என்பதையும் நாம் கந்தபுராணத்திலிருந்து அறிகின்றோம். அந்த ஆயுதம் எந்த விதமான தீங்கினையும் எவருக்கும் செய்யாத வண்ணம், சிவபெருமான் தனது கையினில் மழு ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டமையால் கறை ஏதுமின்றி இந்த ஆயுதம் காணப்படுகின்றது. சீர்காழி தலத்தினில் இரண்டாவது தளத்தில் இருக்கும் கயிலாயக் காட்சியில் நாம் சிவபெருமானை மான் மற்றும் மழுவின்றி இருக்கும் கோலத்தில் காணலாம். இந்த காட்சி நமக்கு, சீர்காழி தலம் பிரளயத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் மிதந்தது என்பதையும், மீண்டும் உலகம் தோற்றுவிக்கப் பட்ட பின்னரே தாருகவனத்து நிகழ்ச்சிகள் நடந்தன என்பதையும் உணர்த்துகின்றன. எனவே தான் மானும் மழுவும் தன்னுடன் இல்லாத நிலையில் பெருமான் காட்சி தருகின்றார். .

விடையும் ஏறுவர் வெண்பொடிப் பூசுவர்

சடையில் கங்கை தரித்தவர்

படை கொள் வெண் மழுவாளர் பராய்த்துறை

அடைய நின்ற அடிகளே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பாடலில் (4.90.9) அப்பர் பிரான் வெண்மழு வாட்படையன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். செய்ய கமலம்=செந்தாமரை மலர்கள்; வெண்மழு=வெண்மையாக ஒளி திகழும் மழுப்படை; இரத்தக் கறை படியாமல் தூய்மையாக விளங்குவது. விழுமிய=சிறந்த

மையணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த

மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான்

செய்ய கமல மணம் கமழும் திருவேதிகுடி

ஐயனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.12.3), வெண்மழுவாளினன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். புனை=அலங்கரிக்கப்பட்ட; ஈசன்=தலைவன். வினையிலார் தொழும் வீழிமிழலை என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இதன் மூலம் வீழிமிழலை தலத்தில் வாழும் அடியார்கள் வினையின் தாக்கத்திலிருந்து நீங்கியவர்கள் என்று தலத்தின் சிறப்பினை கூறுகின்றார். நாகத்தன் என்று நாகங்களை பெருமான் அணிகலனாக, மாலையாக கழுத்தினில், ஆபரணமாக சடைமுடியினில், கங்கணமாக முன்கையில், கச்சாக இடுப்பினில், ஆபரணமாக தோளில், என்று பல இடங்களிலும் அணிந்திருக்கும் தன்மையை, நாகத்தன் என்று குறிப்பிடுகின்றார். நாகத்தைக் உடையவன் நாகத்தன் அருமையான சொல்லாட்சி.

புனை பொற்சூலத்தன் போர் விடை ஊர்தியான்

வினை வெல் நாகத்தன் வெண்மழுவாளினான்

நினைய நின்றவன் ஈசனையே எனா

வினையிலார் தொழும் வீழிமிழலையே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.48.9) அப்பர் பிரான் வெண்மழு ஏந்திய கையன் என்று குறிப்பிடுகின்றார். பொய்=நிலையானதாகவும் உண்மையாக இருப்பது போன்று தோன்றினாலும் அழியக்கூடிய, தற்காலிகமான உலகப் பொருட்களும் உலகத்து உயிர்களும் அவற்றால் கிடைக்கும் இன்பமும்; புந்தி=மனம்; மெய்யன்=உண்மைப் பொருளாக விளங்குபவன்; ஐயன்=தலைவன்; நிலையற்ற சிற்றின்பங்கள் வழங்கும் உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்களிடம் இருந்து மனதளவில் விலகி துறந்து வாழும் பெரியோர்களின் மனதினில் உண்மைப் பொருளாகிய இறைவன் உறைகின்றான் என்று குறிப்பிட்டு உலகப் பொருட்களின் மீது நாம் வைத்துள்ள பற்றினை முற்றிலும் விலக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார்.

பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள்

மெய்யனைச் சுடர் வெண்மழு ஏந்திய

கையனைக் கச்சி ஏகம்பம் மேவிய

ஐயனைத் தொழுவார்க்கு இல்லை அல்லலே

நாகைக் காரோணம் மீது அருளிய பாடலில் (5.83.05) அப்பர் பிரான், பெருமானை வெண்மழுக் கையன் என்று குறிப்பிடுகின்றார். மை=மை போன்று கரிய நிறத்தில் இருந்த ஆலகால விடம்; அனுக்கிய=வருத்திய, விடத்தினை வருத்தி அதன் தன்மையை மாற்றிய செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஐயன்=தலைவன்; மெய்யன்=உண்மையே வடிவானவன்;

மெய்யனை விடை ஊர்தியை வெண்மழுக்

கையனைக் கடல் நாகைக் காரோணனை

மை அனுக்கிய கண்டனை வானவர்

ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே

ஆக்கூர் தான்தோன்றிமாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.21.4) அப்பர் பிரான் கூர்மையாக வடிக்கப்பட்ட வெண்மழுவாள் என்று பெருமானின் மழுப்படையை குறிப்பிடுகின்றார். வடிவிளங்கு=கூர்மையாக வடிக்கப்பட்ட; பொடி=திருநீறு; கடி=நறுமணம்; அந்தாரார்=அம்+தாரார்= அழகிய மாலை; அமுதம் வேண்டி கடலைக் கடைந்த போது அமுதத்தை வெளிப்படுத்தாமல் நஞ்சினை வெளிப்படுத்தியதால் கடலினை வஞ்சக் கருங்கடல் என்று கூறுகின்றார். வஞ்சமான கடலிலிருந்து எழுந்த நஞ்சினை தயக்கம் ஏதுமின்றி உண்டவர் சிவபெருமான்; திருநீற்றுடன் பூணூலையும் தனது மார்பினில் அணிந்தவர் சிவபெருமான்; பூங்கங்கை=அழகிய கங்கை;

வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும் வஞ்சக்கருங்கடல்

நஞ்சுண்டார் போலும்

பொடிவிளங்கும் முந்நூல் சேர் மார்பர் போலும் பூங்கங்கை

தோய்ந்த சடையார் போலும்

கடிவிளங்கு கொன்றை அந்தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய

கையார் போலும்

அடிவிளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி

அப்பனாரே

வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.59.9) அப்பர் பிரான் வெண்மழு ஏந்தியவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். விளங்கு கிளரும் என்பது விளம் கிளரும் என்று, எதுகை நோக்கி குறைந்தது. விளம்=ஒளியுடன் விளங்கும்; கிளரும்=மிகுந்து காணப்படும்; வேணி=கூந்தல், பெருமானிடம் சரண் அடைந்த பின்னர், சந்திரன் வளம் மிகுந்து காணப்பட்ட நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மன்னுதல்=நிலை பெற்று இருத்தல்; களம்=இருப்பிடம்; அண்ணித்தல்=இனிமையாக இருத்தல்; தேவர்கள் அனைவரும் நஞ்சின் தாக்கத்தினை தாங்க முடியாமல் சிதறி ஓடிய தருணத்தில், அவர்களை காப்பாற்றும் பொருட்டு விடத்தை உட்கொண்ட பெருமானது செயல், ஏனையோரிடமிருந்து மாறுபட்ட செயலாகும். ஏனையோரை பயந்து ஓடச் செய்த விடம், பெருமானிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதால் வல்லமை மிகுந்தவன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். மைந்தன்=வலிமை பெற்றவன்.

வளம் கிளர் மாமதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சுண்ட மைந்தனாரும்

களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும்

உளம் குளிர அமுதூறி அண்ணிப்பாரும் உத்தமராய் எத்திசையும் மன்னினாரும்

விளங்கிளரும் வெண்மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.61.5) சுந்தரர் வெல்லும் வெண்மழு உடையவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

வெல்லும் வெண்மழு ஒன்று உடையனை வேலை நஞ்சுண்ட

வித்தகன் தன்னை

அல்லல் தீர்த்து அருள் செய்ய வல்லானை அருமறையவை

அங்கம் வல்லானை

எல்லையில் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

நல்ல கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே

பொழிப்புரை:

அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கை நதியினையும் பிறைச் சந்திரனையும் தனது சடையில் சூட்டிக்கொண்டு, தனது அழகிய கையினில், கொல்லும் தன்மை வாய்ந்ததும் வெண்மையான நிறத்துடன் இரத்தக்கறை ஏதும் இன்றி காணப்படுவதும் ஆகிய வெண்மழு மற்றும் தீச்சுடர் ஆகியவற்றை ஏந்தும் தன்மையனாக இருக்கும் பெருமானே, நீர் தீக்கடவுள் பங்கேற்றதால் வெம்மை வாய்ந்ததாக காணப்படும் முனையைக் கொண்ட அம்பினை மேரு மலையை வளைத்துச் செய்யப்பட்ட வில்லினில் பொருத்தி பறந்து கொண்டிருந்த மூன்று திரிபுரத்து அரக்கர்கள் கோட்டைகளையும் எரித்தீர்; இத்தகைய ஆற்றல் கொண்டுள்ள நீர், நல்லூர் தலத்தினில் கட்டுமலையின் மீது அமைந்துள்ள திருக்கோயிலை, தலைவனாகிய நீர் உறையும் இடமாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 3:

குறை நிரம்பா வெண்மதியம் சூடிக் குளிர்புன் சடை தாழப்

பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணிப் பயில்கின்றீர்

சிறை நவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திருநல்லூர்

மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

குறை நிரம்பா வெண்மதியம்=வளராமல் என்றும் ஒற்றைப் பிறையுடன் இருக்கும் சந்திரன்; ஒவ்வொரு பிறையாகத் தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் பெருமானிடம் சரணடைந்த சந்திரன், ஒற்றைப் பிறையாக, எந்தவிதமான மாறுதலுமின்றி அவரது சடையினில் திகழ்கின்றது. அந்த நிலையையே குறை நிரம்பா மதி என்று இங்கே ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நவின்ற=மிக்கொலித்த; சிறை=அணை; சடையினில் மறைக்கப்பட்டுள்ள கங்கை நீர், சாதியைத் தாழ்த்திய போதிலும் பெருமானின் சடையை விட்டு வெளியே வரமுடியவில்ல என்ற செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. புல்லின் மீது படிந்துள்ள பனிநீர், புல் வளைந்தாலும், புல்லை விட்டு பிரியாது இருப்பதை நாம் காண்கின்றோம். பெருமானின் விசுவரூபத்தின் முன்னே, கங்கை நதி புல்லின் மீது படியும் பனித்துளி போன்று சிறியதாக மாறிவிடுகின்றது என்று இங்கே உணர்த்தப் படுகின்றது.

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடலில் (6.50.10) அப்பர் பிரான், வானோர் வேண்ட பரந்து இழிந்த கங்கை நதியினை புல்லின் நுனியில் உள்ள பனித்துளி போன்று ஏற்றவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே

வரை எடுத்த அரக்கன் தோள்கள்

இறுத்தானை எழுநரம்பின் இசை கேட்டானை இந்துவினைத்

தேய்த்தானை இரவி தன் பல்

பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப் பரந்து இழியும்

புனல் கங்கை பனி போல் ஆங்குச்

செறித்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே

சேர்கின்றாரே

பொழிப்புரை:

என்றும் வளராது ஒற்றைப் பிறையுடன் உள்ள சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ள நீர், கங்கை நீரின் தன்மையால் குளிர்ந்து காணப்படும் உமது சடை தாழ்ந்து தொங்கும் வண்ணம், பூதங்கள் இசைக்கும் பறைகளின் இசைகளுக்கு ஏற்ப வேத கீதங்களை பாடிக்கொண்டு தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டு இருக்கின்றீர். அணைகள் மடைகள் மூலம் தேக்கி வைக்கப்பட்ட குளிர்ந்த நீரால் வளம் பெற்ற வயல்களால் சூழப்பட்ட திருநல்லூர் தலத்தினில் அமைந்துள்ள திருக்கோயிலை, இடைவிடாது வேதங்கள் ஒலிக்கும் திருக்கோயிலை, தலைவனாகிய நீர் தங்கும் இடமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளீர்.

பாடல் 4:

கூனமரும் வெண்பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்

மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்

தேனமரும் பைம்பொழிலின் வண்டு பாடும் திருநல்லூர்

வானமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

கூன்=வளைந்த; மானமரும்=மான் போன்று மருண்ட பார்வை கொண்ட;

பொழிப்புரை:

வளைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனையும் கங்கை நதியினையும் தனது சடையில் ஏற்றுக்கொண்ட தன்மை உடைய பெருமானே, மான் போன்ற மருண்ட பார்வையினைக் கொண்டுள்ள பார்வதி தேவியை உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள பெருமையை உடையவராக நீர் விளங்குகின்றீர். பசுமையான சோலைகளில் உள்ள மலர்களில் தேன் நிறைந்து காணப்படுவதால் சூழ்ந்த வண்டுகள் இசை பாடும் திருநல்லூர் தலத்தினில் உள்ள வானளாவும் திருக்கோயிலினை, தலைவனாகிய நீர் தங்கும் இடமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 5:

நிணம் கவரும் மூவிலையும் அனலும் ஏந்தி நெறி குழலாள்

அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்

திணம் கவரும் ஆடரவும் பிறையும் சூடித் திருநல்லூர்

மணம் கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

நிணம்=தசைக்கொழுப்பு; நெறி=ஒழுங்காக வாரி முடிக்கப்பட்ட கூந்தல்; அணங்கு=தெய்வத்தன்மை கொண்ட பெண், பார்வதி தேவி; அமரும்=கூடி; மேவுதல்=விரும்புதல்; திணம் திண்ணம் என்ற சொல்லின் இடைக்குறை; திண்ணம்=உறுதியாக; மணம் என்ற சொல் பொதுவாக நறுமணத்தை குறிக்கும் என்றாலும், இங்கே சிவமணம் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பெருமானின் சடையைக் காணும் ஞானசம்பந்தருக்கு நெறிப்படுத்தப்பட்ட அம்பிகையின் கூந்தல் நினைவுக்கு வந்தது போலும். கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற தலத்து இறைவனின் திருநாமத்தை நினைவூட்டும் வகையில் பெருமானை அழகினீர் என்று ஞானசம்பந்தர் அழைக்கின்றார்.

பொழிப்புரை:

தசைக் கொழுப்புகளை பிய்த்தெடுக்கும் வண்ணம் கூறாக அமைந்துள்ள மூவிலைச் சூலத்தையும், தீச்சுடரையும் கையில் ஏந்திய வண்ணம் உள்ள பெருமான், ஒழுங்காக நெறிபடுத்தப்பட்ட கூந்தலை உடையவளும் தெய்வீகம் வாய்ந்த பெண்ணும் ஆகிய உமை அன்னையுடன் கூடி ஆடலும் பாடலும் புரியும் அழகியரே, தனது விடம் கொண்ட பற்களால் கடித்து உயிர்களை உறுதியாக கவரும் கொலைத் தன்மை வாய்ந்த பாம்பினையும் பிறைச் சந்திரனையும் தனது சடையினில் சூட்டிக் கொண்டவராக காட்சி தரும் நீர், திருநல்லூர் தலத்தில் அமைந்துள்ள சிவமணம் கமழும் திருக்கோயிலை, தலைவனாகிய நீர் தங்கும் இடமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 6:

கார்மருவு பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை தாழ

வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்

தேர்மருவு நெடுவீதிக் கொடிகள் ஆடும் திருநல்லூர்

ஏர்மருவு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

ஏர்=அழகு; மருவு=பொருந்தும்;

பொழிப்புரை:

குளிர் காலத்தில் மிகவும் அதிகமாக மலரும் கொன்றை மலர்களை சூட்டிக்கொண்டு நறுமணம் கமழும் சுருண்ட சடை தாழ்ந்து தொங்கும் காட்சி தந்தவாறு, கச்சணிந்த மென்மையான மார்பகங்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்ட பெருமையை உடைய பெருமானே, கொடிகள் அசைந்தாடும் தேர்கள் ஓடும் வண்ணம் நீண்ட வீதிகளைக் கொண்ட நல்லூர் தலத்தினில் உள்ள அழகிய திருக்கோயிலை, தலைவனாகிய நீர் தங்கும் இடமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 7:

ஊன் தோயும் வெண்மழுவும் அனலும் ஏந்தி உமை காண

மீன் தோயும் திசை நிறைய ஓங்கியாடும் வேடத்தீர்

தேன் தோயும் பைம்பொழிலின் வண்டு பாடும் திருநல்லூர்

வான் தோயும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

வான் என்ற சொல்லுக்கு வானவர்கள் என்று பொருள் கொண்டு, இறையுணர்வில் தோய்ந்த வாணர்களால் தொழப்படும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஊன் தோயும் வெண்மழு என்று குறிப்பிட்டிருப்பதால், ஊன் தோயும் வண்ணம் கூர்மையாக உள்ள மழு ஆயுதம் என்று பொருள் கொள்வது பொருத்தம். மீன்=விண்மீன்கள், நட்சத்திரங்கள்; எட்டு திசைகளுடன், மேலும் கீழும் என்று சேர்த்து பத்து திசைகள் என்றும் கூறுவர். பத்தாவது திசையாக ஆகாயம் விளங்கும் தன்மை, விண்மீன்கள் தோயும் திசை என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. பெருமானின் விசுவரூபநிலையில் அவரது உருவம் ஆகாயத்தைத் தாண்டி இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த குறிப்பு நமக்கு திருவாசகம் குயில்பத்து பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. இறந்து=கடந்து; இறைவனது திருப்பாதங்கள் கீழுள்ள ஏழு உலகங்களையும் தாண்டிச் செல்லும் என்பதையும் அவனது திருமுடி சொல்லுக்கும் கற்பனைக்கும் அடங்காத வண்ணம் மேலே செல்கின்றது என்றும் மணிவாசகர் கூறுகின்றார். குணம் ஒன்றும் இல்லாதவன் என்று இங்கே, உயிர்களுக்கு உரிய ராஜசம் தாமசம் சாத்துவீகம் என்று சொல்லப்படும் மூன்று குணங்கள் அற்றவன் பெருமான் என்றும், உயிர்களைப் போன்று அழியும் தன்மை உடைய உடலைக் கொண்டிராதவன் என்றும் அடிகளார் குறிப்பிடுகின்றார்.

கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்

பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால்

சோதி மணிமுடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை

ஆதி குணம் ஒன்று இல்லான் அந்தமிலான் வரக் கூவாய்

பொழிப்புரை:

ஊன் தோயும் வண்ணம் கூர்மையாக இருப்பதும் வெண்மை நிறத்துடன் தூய்மையாக இருப்பதும் ஆகிய மழு ஆயுதத்தையும் நெருப்புச் சுடரினையும் தனது கைகளில் ஏந்தியவனாக, உமை அன்னை காணும் வண்ணம் மண் விண் உள்ளிட்ட எட்டு திசைகளையும் தொடும் வண்ணம், விச்வரூபியாக நடனம் ஆடும் கோலத்தை உடையவராகிய நீர், தேன் பொருந்திய பசுமையான மலர்கள் நிறைந்ததும் வண்டுகள் பாடுவதும் ஆகிய சோலைகள் நிறைந்த தலமாகிய திருநல்லூரில் காணப்படும் வானளாவ உயர்ந்து நிற்கும் திருக்கோயிலை, தலைவனாகிய நீர் தங்கும் இடமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 8:

காதமரும் வெண்குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப

மாதமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டுகந்தீர்

தீதமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திருநல்லூர்

மாதமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

மாது=பெருமை, காதல்; கறுத்த=கோபம் கொண்ட, தான் செல்லும் வழியில் இருந்துகொண்டு தனது பயணத்திற்கு தடையாக கயிலை மலை இருந்தது என்று எண்ணியதால் கோபம் கொண்ட அரக்கன் இராவணன். மறுகும் வண்ணம்=கலக்கம் அடையும் வண்ணம்; மாது என்ற சொல்லுக்கு அழகினை உடையவள் என்று பொருள் கொண்டு, தலத்து அம்பிகையின் திருநாமம் கல்யாண சுந்தரி என்பதை உணர்த்துவதாக சிலர் விளக்கம் கூறுவதும் பொருத்தமாக உள்ளது.

திருமுறை பாடல்களில் தேவி அச்சம் கொண்டதாக மூன்று நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. மிகவும் அதிகமாக குறிப்பிடப்படும் நிகழ்ச்சி, பெருமான் தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலினை உரித்து தனது உடல் மீது போர்த்துக் கொண்ட நிகழ்ச்சி. இரண்டாவது நிகழ்ச்சி பெருமான் உண்ட நஞ்சு அவரது உடலினுள்ளே சென்று தங்கினால், ஊழிக்காலத்தில் அவரது உடலில் ஒடுங்கும் உயிர்களுக்கு ஏதேனும் தீங்கு விளையுமோ என்ற அச்சத்தினால் தேவிக்கு பயம் ஏற்பட்டது. மூன்றாவது நிகழ்ச்சி அரக்கன் இராவணன் கயிலை மலையினை அசைத்த போது ஏற்பட்ட அச்சம். பெருமான் இராவணனின் செயலால் கோபம் கொண்டு அவனை மலையின் கீழே நெருக்கினார் என்று பொருள் கொள்வது தவறு என்றும் தேவியின் அச்சத்தை தீர்க்கும் பொருட்டே அரக்கனின் வலிமையை குறைத்தார் என்பதையும் உணர்த்தவே, உமையன்னை கொண்ட அச்சம் தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. கோபதாபங்களைக் கடந்த பெருமான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இருபதுக்கும் மேற்பட்ட திருமுறைப் பாடல்களில் இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி அச்சம் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய ஞானசம்பந்தர் பதிகத்து பாடல்களை நாம் இங்கே காண்போம்.

பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.108.8) சம்பந்தர் உமையன்னை இராவணனின் செயலால் அச்சம் கொண்டு நடுங்கியதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காண்போம். மறுக=அச்சம் கொள்ள; தொல்லை மலை=மிகவும் பழமையான கயிலாய மலை; கொல்லை விடை=முல்லை நிலத்திற்கு உரிய கடவுளாகிய திருமால், திரிபுர தகனத்தின் போது விடையாக பெருமானை தாங்கிய நிலை; திருமால் விடையாக தன்னைத் தாங்கியதை பெருமான் உகந்து ஏற்றுக் கொண்டான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போர் செய்ய புறப்பட்ட போது, தேவர்கள் பலரும் அந்த போரினில் பெருமானுக்கு உதவும் பொருட்டு பல விதங்களில் பங்கேற்றனர். அவ்வாறு பங்கேற்றமை குறித்து அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டது போலும். அந்நாள் வரை திரிபுரத்து அரக்கர்களிடம் அஞ்சி நடுங்கி ஒளிந்து கொண்டிருந்த தேவர்களால் பெரிதாக என்ன உதவி செய்து விடமுடியும் என்பதையும் மறந்து அவர்கள் கர்வம் கொண்டது தவறான செய்கை தானே. எவரின் உதவியும் தேவைப்படாமல் திரிபுரத்து அரக்கர்களை தன்னால் வெல்ல முடியும் என்பதை அனைவர்க்கும் உணர்த்தும் பொருட்டு, தேவர்கள் பங்கேற்ற தேரின் மீது தனது காலினை பெருமான் வைத்த போது தேரின் அச்சு முறிந்தது. தேரின் அச்சு முறிந்ததால் தேரின் மீது பெருமான் செல்ல முடியாமை கண்டு, திருமால் விடையாக மாறி தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார், திருமாலின் வேண்டுகோளினை ஏற்று விருப்பத்துடன் பெருமான் விடையின் மீது அமர்ந்தார் என்பதை உணர்த்தும் பொருட்டு கொல்லை விடை உகந்தான் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்

மல்கிய நுண்ணிடையாள் உமை நங்கை மறுக அன்று கையால்

தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்

கொல்லை உடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்

பல்லிசை பாடலினான் உறை கோயில் பாதாளே

மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.8) உமையன்னைக்கு அச்சம் விளைவித்த, திரண்ட தோள்களையும் வலிமையையும் உடைய அரக்கனின் வலிமை நலியுமாறு, மலையின் கீழே, சிவபெருமான் அடக்கினார் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஒலி கொள் புனல் என்று மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி என்று கூறுகின்றார்.

புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடி நீற்றர்

ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச

வலிய திரள் தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை

மெலிய வரைக் கீழ் அடர்த்தார் மீயச்சூராரே

வெண்காடு தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (2.48.8) அரக்கன் இராவணனின் செயலால் தேவி நடுங்கிய செய்தி ஞானசம்பந்தரால் குறிப்படுகின்றது. மொழியாள்=சொல்லினை உடையவள்; கண்=மயில் தோகையில் உள்ள கண்கள்; மஞ்ஞை=மயில்; கருமை என்று குறிப்பிட்டாலும் அந்த சொல் நீல நிறத்தினை உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். உரம்=வலிமை; மொய்த்த=பொருந்திய; பண் மொய்த்த என்று குறிப்பிடுவதன் மூலம், இனிமையான பண்கள் தாமே சென்று தேவியின் சொற்களில் சென்று அமர்ந்தது போன்று இனிமையான சொற்களை உடையவள் தேவி என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். உன்மத்தன்=பைத்தியக்காரன்; கயிலாய மலையினை பேர்த்து எடுக்க நினைப்பதே பெரிய குற்றம். அரக்கன் இராவணன் அறியாமையால் செய்தான் என்று எண்ணுவது என்பது தவறு என்று உணர்த்தும் முகமாக, இராமாயணம் தேர்ப்பாகன் அறிவுரை செய்ததை உணர்த்துகின்றது. பல தேவாரப் பாடல்களும், தேர்ப்பாகன் செய்த அறிவுரையை குறிப்பிடுகின்றன. எனவே தான், தேர்ப்பாகன் செய்த எச்சரிக்கையினையும் புறக்கணித்து, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் எண்ணத்துடன் அந்த மலையை நோக்கி ஓடியவனை பித்துக்குளி என்றும் பைத்தியக்காரன் என்று அழைப்பது மிகவும் பொருத்தம் தானே. சில பதிப்புகளில் உண்மத்தன் என்று காணப்படுகின்றது. எதுகை கருதி உன்மத்தன் என்ற சொல் உண்மத்தன் என்று திரிந்ததாக கருதினார்கள் போலும்.

பண் மொய்த்த இன் மொழியாள் பயம் எய்த மலை எடுத்த

உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்

கண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க

விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே

வெண்காடு தலத்தின் மீது அருளிய மற்றோர் பதிகத்தின் பாடலிலும் (2.61.8) ஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் கயிலாய மலையினை அசைத்ததால் பார்வதி தேவி நடுங்கியதாக குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம்.வளையார்=வளையல்கள் பொருந்திய; மலையாள்=இமயமலையில் வளர்ந்தவளாகிய அன்னை பார்வதிதேவி; வெருவ=அச்சம் கொள்ள; முளையார்=முளைத்து வளரும் தன்மை கொண்ட பிறைச்சந்திரன்; இளையாது=தளர்ச்சி அடையாது;

வளையார் முன் கை மலையாள் வெருவ வரை ஊன்றி

முளையார் மதியம் சூடி என்று முப்போதும்

இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும்

விளையார் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே

மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.8) உமையன்னைக்கு அச்சம் விளைவித்த, திரண்ட தோள்களையும் வலிமையையும் உடைய அரக்கனின் வலிமை நலியுமாறு, மலையின் கீழே, சிவபெருமான் அடக்கினார் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஒலி கொள் புனல் என்று மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி என்று கூறுகின்றார்.

புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடி நீற்றர்

ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச

வலிய திரள் தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை

மெலிய வரைக் கீழ் அடர்த்தார் மீயச்சூராரே

சீர்காழி நகரத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.96.8) தனது வலிமையை பெரிதாக கருதிய அரக்கன் இராவணனின் வலிமை கண்டு, கயிலாய மலையினை எடுக்கும் ஆற்றலைக் கண்டு, உமையன்னை அஞ்சியதாக சம்பந்தர் கூறுகின்றார்; ஏர்=அழகு; ஏர்கொள் மங்கை=அழகுடைய பார்வதி தேவி; சீர்கொள் பாதம்=சிறப்புடைய திருவடி; செறுத்த=வெற்றி கொண்ட; தார்=பூ; கடுந்திறல்=மிகுந்த வலிமை;

கார் கொள் மேனி அவ் வரக்கன் தன் கடுந்திறலினைக் கருதி

ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரியச்

சீர்கொள் பாதத்து ஒரு விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில்

தார்கொள் வண்டினம் சூழ்ந்த தண்வயல் காழி நன்னகரே

கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.109.8) சம்பந்தர் கயிலாய மலையினை அரக்கன் இராவணன் எடுக்க முயற்சி செய்த போது உமையம்மை அஞ்சவே, அந்த அச்சத்தினை நீக்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை சற்று சுளித்து மலையின் மீது ஊன்றி, அரக்கன் சோர்வு அடையுமாறு செய்தார் என்று கூறுகின்றார். சோர்வடைந்த இராவணன் தனது தவறினை உணர்ந்து பெருமானை போற்றி சாமகானம் பாடிய பின்னர் அவன் செய்த தவறினை பொருட்படுத்தாது அவனுக்கு அருள் நல்கிய பெருமானின் திருவடிகளைத் தொழும் அடியார்கள் இறைவனின் திருவடித் தாமரைகளைச் சென்றடைய தவம் செய்யும் முனிவர்கள் போன்றவர்கள் ஆவார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் பெருமானின் திருவடிப் பெருமையை உணர்த்துகின்றார். அரக்கனது பற்கள் ஒளி வீசும் வாள் போன்று இருந்தன என்று சம்பந்தர் கூறுகின்றார்.

ஒளிகொள் வாள் எயிற்று அரக்கன் அவ் உயர் வரை எடுத்தலும்

உமை அஞ்சிச்

சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள் செய்த

குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நல் கொழுந்தினைத்

தொழுவார்கள்

தளிர் கொள் தாமரைப் பாதங்கள் அருள் பெரும் தவம் உடையவர்களே

வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (3.103.8) கயிலை மலையினை அரக்கன் இராவணன் பேர்த்தேடுக்க முயற்சி செய்த போது, உமையன்னை நடுங்கியதாக ஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். தண்டணை=தண்டு+அணை; அணை=சென்று சேர்ந்த, இங்கே கொண்ட என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்டணை=ஒண்டு+அணை, உடலுடன் ஒன்றாக இணைந்த; மிண்டு=செருக்கு; விகிர்தன்=மாறுபட்ட தன்மை உடையவன்; வைகும்=தாங்கும்; வண்டு என்பது இங்கே ஆண் வண்டினை குறிப்பதாக கொண்டு, தன்னோடும் என்ற சொல்லுக்கு பெண் வண்டு என்று விளக்கம் அளித்துள்ளனர்.

தண்டணை தோள் இரு பத்தினொடும் தலை பத்து உடையானை

ஒண்டணை மாதுமை தான் நடுங்க ஒரு கால் விரல் ஊன்றி

மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும்

வண்டு அணை தன்னொடு வைகு பொழில் வலம்புர நன்னகரே

கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் ஞானசம்பந்தர் (3.105.8) அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, உமையம்மை நடுங்கிய செய்தி குறிப்பிடப்படுகின்றது. ஊர் அரவம்=தரையில் ஊரும் பாம்பு; தரையில் ஊரும் தன்மையை உடைய பாம்பினைத் தனது நீண்ட முடியின் மீது சூட்டிக் கொண்டுள்ள பெருமான், இரைச்சலை எழுப்பும் அலைகள் கொண்ட கடலால் சூழப்பட்ட உலகினை ஆள்கின்றான். அத்தகைய பெருமான், கருமை நிறம் உடையதும் ஒலி எழுப்புவதும் ஆகிய கடலால் சூழப்பட்ட கலிக்காமூர் தலத்தில் உறைகின்றார். தேர் போன்று அகன்ற மார்பகங்களை உடைய உமையன்னை அஞ்சும் வண்ணம், சிறந்த கயிலை மலையினை பேர்த்தேடுக்கத் துணிந்த அரக்கன் இராவணன், உடல் வருந்தி கதறும் வண்ணம் கயிலை மலையின் மீது தனது பாதத்தை ஊன்றிய சிவபெருமானின் இருப்பிடம் கலிக்காமூர் ஆகும் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை .

ஊர் அரவம் தலை நீள்முடியான் ஒலி நீர் உலகாண்டு

கார் அரவக் கடல் சூழ வாழும் பதியாம் கலிக்காமூர்

தேர் அரவ அல்குல் அம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான்

ஆரரவம் பட வைத்த பாதம் உடையான் இடமாமே

இவ்வாறு பிராட்டி நடுங்கியதைக் கண்ட பெருமான், தனது கால் பெருவிரலை ஊன்றி அன்னை கொண்டிருந்த அச்சத்தை தவிர்த்ததாக மேற்கண்ட பாடல்கள் அனைத்திலும் கூறப்பட்டுள்ளன. இந்த விளக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு அவ்வாறு பிராட்டி கலங்கிய போது, பெருமான் மகிழ்ச்சி கொண்டதாக இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுவது, சிந்தனைக்குரியது. இவ்வாறு மகிழ்ந்தது பெருமானின் திருவிளையாடல்களில் ஒன்று என்று சான்றோர்கள் பொருள் கண்டனர். கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்ற செயலுக்கு கோபம் கொண்ட பார்வதி அன்னையின் கோபத்தினை தணிப்பதற்காக, பெருமான் இந்த திருவிளையாடலை புரிந்தாரோ என்று நமக்கு தோன்றுகின்றது. இத்தகைய கற்பனை ஒன்றினை உள்ளடக்கி அப்பர் பிரான் பிரான் பாடிய பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தமாகும், கயிலை மலையினை அரக்கன் அசைத்த போது, பார்வதி தேவி கொண்ட அச்சத்தினை நீக்கிய பெருமான், அதனை ஒரு வாய்ப்பாக கருதி தேவி தன்னிடம் கொண்டிருந்த ஊடலைத் தீர்த்தான் என்று சுவையாக தனது கற்பனையை ஏற்றி அப்பர் பிரான் பாடிய பாடல் மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.34) கடைப் பாடலாகும். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அரக்கன் இராவணனின் கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. கங்கை நங்கையை பெருமான் தனது சடையில் மறைத்ததை காரணமாக கொண்டு தேவி ஊடல் செய்ததாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். உருவம் வேறுவேறாக திகழ்ந்தாலும், பெருமானும் பிராட்டியும் இணைந்தே செயல்படுவதாக சைவ சித்தாந்தம் சொல்கின்றது. பெருமானின் கருணை தான் தேவி. எனவே அவர்களுக்குள்ளே ஊடல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனினும் புலவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, அப்பர் பிரான், ஒரு கற்பனை நிகழ்ச்சியை புகுத்தி, தேவாரப் பாடலுக்கு நயம் சேர்ப்பதை நாம் இந்த பாடலில் காணலாம்.

கங்கை நங்கையைத் தனது தலையில் மறைத்து வைத்ததால் தேவிக்கு கோபம் ஏற்படுகின்றது. அந்த கோபம் ஊடலாக மாறுகின்றது. அரக்கன் இராவணன் கயிலை மலை அசைத்ததால் ஏற்பட்ட அசைவு, அன்னைக்கு அச்சத்தை ஏற்படுத்த, அந்த அச்சத்தை தீர்க்கும் முகமாக, அன்னையிடம் அஞ்சேல் என்று சொல்லிய பெருமான், தனது கால் பெருவிரலால் மலையினை அழுத்தி, மலையின் ஆட்டத்தை நிறுத்துகின்றார். தேவியின் அச்சம் மட்டுமா மறைகின்றது. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஊடலும் மறைந்து விடுகின்றது என்பதை சொல்லாமல் சொல்லி விளக்கும் நயமான பதிகம்.

கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்

தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை

முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட

அங்கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடு தானே

உலகியலில் வாழும் நாம், எத்துனை கருத்தொத்த தம்பதியராக இருப்பினும் அவர்களின் இடையே, சிறுசிறு விஷயங்களில், கருத்து ஒவ்வாது இருப்பதையும், அந்த வேறுபாடு காரணமாக ஊடல்கள் ஏற்படுவதையும் காண்கின்றோம். சங்க இலக்கியங்களில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் ஊடல் வெகுவாக விவரிக்கப் படுகின்றது. திருக்குறளிலும் ஊடல் காதலுக்கு மேலும் சுவை ஊட்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு ஊடலுவகை என்று தனி அதிகாரம் கொடுக்கப்பட்டு பத்து பாடல்கள் உள்ளன. அந்த ஊடல் அதிக நேரம் நீடிப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் உண்மையான பாசமும் நேசமும் கொண்டு தம்பதியர் திகழ்வதால், அவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறிய இடர் நேர்ந்தாலும், அடுத்தவர் அந்த இடரினைக் களையும் போது, அந்நாள் வரை அவர்களின் இடையே இருந்த ஊடல் காணமல் போய்விடுகின்றது. இதனை உலக வாழ்க்கையில் அடிக்கடி காண்கின்றோம். அத்தகைய நிகழ்ச்சியாக, இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி கொண்ட அச்சத்தை பெருமான் களைந்த விதத்தினை அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இறைவனின் செயல் வடிவமே சக்தி. சக்திக்கும் சிவத்திற்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. சிவபிரானின் எண்ணத்திற்கு ஏற்ப செயல் படும் சக்திக்கும் சிவத்திற்கும் வேறுபாடு இல்லாத போது, அவர்களிடையே ஊடல் வருவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. ஆனாலும், அவர்களுக்கு ஊடல் ஏற்பட்டது போன்று அப்பர் பிரான் கற்பனை செய்து அந்த ஊடல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர், கயிலாய மலை இராவணனால் அசைக்கப் பட்டதால் அன்னை நடுங்கியதைக் கண்ட பெருமான், சிரித்த வண்ணமே தனது கால்பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியதாக கூறுகின்றார். இந்த நகைப்பின் காரணம், இந்த பாடலில் குறிப்பிடப்படவில்லை. தன்னால் முடியாத காரியத்தை அரக்கன் செய்யத் துணிந்ததற்காக, அரக்கன் மீது பரிதாபம் கொண்டதால் விளைந்த நகைப்பா, தேவியின் அச்சம் தேவையற்றது என்ற எண்ணத்தில் எழுந்த நகைப்பா, தேவி தன்னுடன் கொண்டிருந்த ஊடலைத் தீர்ப்பதற்காக தனக்கு கிடைத்த வாய்ப்பு என்று கருதியதால் விளைந்த நகைப்பா என்பது பற்றி ஞானசம்பந்தர் குறிப்பிடாமல் நமது கற்பனைக்கு விட்டுவிடுகின்றார். ஓரான்=உணராதவன்;

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான்

மிக்கு மேற்சென்று மலையை எடுத்தாலும் மலைமகள் நடுங்க

நக்குத் தன் திருவிரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன்

பக்க வாயும் விட்டலறப் பரிந்தவன் பதி மறைக்காடே

பொழிப்புரை:

தனது ஒரு காதினில் வெண்குழை அணிந்தவராகிய நீர், கயிலாய மலை தான் செல்லும் வழியில் குறுக்கே நின்று தனது பயணத்திற்கு இடையூறாக இருந்தது என்று கருதி, மிகுந்த கோபத்துடன் அந்த மலையினை அப்புறப்படுத்திவிட்டு தனது பயணத்தைத் தொடரவேண்டும் என்ற முடிவுக்கு வந்த அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்தேடுக்க முயற்சி செய்த போது, தன்பால் நீர் கொண்டுள்ள அன்பினை மேலும் அதிகரிக்கும் வண்ணம் மென்மையான மொழிகள் பேசும் உமையன்னை, அச்சம் கொண்டு நடுங்கியதைக் கண்ட நீர், மகிழ்ச்சி கொண்டு நகைத்தீர்; தீய செயல்களை விரும்பாத நல்லூர் தலத்து அந்தணர்கள் உம்மைப் புகழ்ந்து போற்றும் வண்ணம், இந்த தலத்தினில் உள்ள பெருமை மிகுந்த திருக்கோயிலினை, தலைவனாகிய நீர் தங்கும் இடமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 9:

போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மைக் காணாது

நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர்

தீதிலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திருநல்லூர்

மாதராள் அவளோடு மன்னு கோயில் மகிழ்ந்தீரே

விளக்கம்:

போது=பொதுவாக மலரை உணர்த்தும் சொல்; இங்கே தாமரை மலரை குறிக்கின்றது. அயன்= பிரமன்; போற்றியும் என்ற சொல்லில் உள்ள சிறப்பு உம்மைத்தொகை, திருமால் பிரமன் ஆகிய இருவரும் போற்றிய போதும், சிவபெருமான் அவர்களுக்கு காட்சி தரவில்லை என்பதை உணர்த்துகின்றது. அவர்கள் இருவரும், சிவபெருமானே தங்களை விடவும் உயர்ந்த தெய்வம் என்று ஒப்புக்கொண்டு விருப்பமுடன் மகிழ்ந்து ஏத்திய போது, பெருமானின் தரிசனம் அவர்களுக்கு கிடைத்தது என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது. நயந்து=மிகுந்த விருப்பத்துடன்; மாது=அழகு; மாதராள்=அழகிய உமையன்னை; பிரமனுக்கும் திருமாலுக்கும் இடையே வாதம் தொடர்ந்த காரணமே,. அவர்கள் இருவரும் தாங்களே உயர்ந்த பரம்பொருள் என்று கருதியதால் தான். வேதங்களும் முனிவர்களும், அவர்களை நெருங்கி அவர்களை காட்டிலும் சிவபெருமான் உயர்ந்தவர் என்று சொன்ன போதிலும், அதனை ஒப்புக்கொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து வாதம் செய்தனர் என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே தான், முதலில் அவர்கள் இருவரும் தன்னைப் போற்றிய போதும் பெருமான் அவர்களுக்கு காட்சி கொடுக்காமல், சிவபெருமானே அனைவர்க்கும் மேலான பரம்பொருள் என்று ஒப்புக்கொண்ட பின்னரே, பெருமான் அவர்களுக்கு காட்சி கொடுத்தார் என்பதை உணர்த்தும் முறையில், நாதனே இவனென்று மகிழ்ந்து அளித்தீர் என்ற தொடர் மூலம் விளக்குகின்றார்.

பொழிப்புரை:

பெருமானே, தாமரை மலர் மேல் உறையும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் தங்களது முயற்சியால் உனது திருமுடியையும் திருவடியையும் காண முயற்சி செய்து அந்த முயற்சியில் தோற்ற பின்னர் உன்னை போற்றிய போதும் அவர்களால் உன்னை காண முடியவில்லை. நீர் தான் அனைவருக்கும் மேலான பரம்பொருள் என்று அவர்கள் இருவரும் குறிப்பிட்டு, நாதனே என்று அவர்கள் உன்னை பக்தியுடன் அழைத்தபோது, மகிழ்ந்து காட்சியளித்த பெருமானே, தீமை பயக்கும் சொற்கள், சிந்தைகள் மற்றும் குணங்கள் ஏதும் இல்லாத அந்தணர்கள் தவறாமல் மூன்று வகையான தீக்களையும் வளர்த்து, உலகுக்கு நலன் விளைவிக்கும் அந்தணர்கள் வாழும் நல்லூர் திருத்தலத்தினில் அமைந்துள்ள திருக்கோயிலில் அழகிய பார்வதி தேவியுடன் நீர் மிகவும் மகிழ்ந்து உறைகின்றீர். .

பாடல் 10:

பொல்லாத சமணரொடு புறம் கூறும் சாக்கியர் ஒன்று

அல்லாதார் அறவுரை விட்டு அடியார்கள் போற்றோவா

நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திருநல்லூர்

மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

மல்=மலை; மாற்று மதங்களின் வளர்ச்சியை கண்டு பொறுக்காத அந்நாளைய சமணர்கள், பல மன்னர்களிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கினை பயன்படுத்திக்கொண்டு, பல வகையான சூழ்ச்சிகள் செய்ததை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். அதனால் தான் பொல்லாத சமணர்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். அல்லாதார்=சேராதார்; இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற சமணர்கள் மற்றும் புத்தர்களின் உரைகளை அறவுரைகள் என்று இங்கே குறிப்பிடுகின்றார். போற்றோவா=தொடர்ந்து சிவபெருமானைப் போற்றி புகழ்வதை நிறுத்தாத

பொழிப்புரை:

பல சூழ்ச்சிகளின் மூலம் மாற்று மதத்தவரை அச்சுறுத்தும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் அறிவுரை என்ற பெயரிட்டு கூறும், ஆதாரம் இல்லாத வீண்பழிச் சொற்களை பொருட்படுத்தமால் புறக்கணிக்கும் அடியார்கள், தொடர்ந்து சிவபெருமானை போற்றுகின்றனர். இத்தகைய அடியார்களும், உலகினுக்கு பல வகையிலும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்யும் அந்தணர்களும் நாள்தோறும் புகழ்ந்து போற்றும் வண்ணம் திருநல்லூர் மலையில் விளங்கும் திருக்கோயிலை, தலைவனாகிய நீர் தங்கும் இடமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 11

கொந்தணவும் பொழில் புடைசூழ் கொச்சை மேவு குலவேந்தன்

செந்தமிழின் சம்பந்தன் சிறை வண்புனல் சூழ் திருநல்லூர்ப்

பந்தணவு மெல்விரலாள் பங்கன் தன்னைப் பயில் பாடல்

சிந்தனையால் உரை செய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே

விளக்கம்:

கொந்து=பூங்கொத்து; புடை=பக்கம்; அணவுதல்=சேர்த்தல், நெருங்குதல்; சிறை=தேக்கப்பட்ட;

பொழிப்புரை:

பூங்கொத்துகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட கொச்சைநகர் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தைத் சார்ந்தனவும், அந்தணர் குலத்தில் தோன்றிய தலைவனும் ஆகிய ஞானசம்பந்தன், தேக்கப்பட்ட நீர்நிலைகளால் சூழப்பட்ட திருநல்லூர் தலத்தினில் உறைபவனும், பந்துகள் பொருந்தும் மெல்லிய விரல்களை உடைய உமையன்னையைத் தனது உடலினில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவனும் ஆகிய சிவபெருமானைப் போற்றி பாடிய இந்த பதிகத்தின் பாடல்களை, ஒன்றிய சிந்தனையுடன் முறையாக பண்ணுடன் பொருந்தும் வண்ணம் ஓதும் அடியார்கள், மறுமையில் சிவலோகம் சென்றடைந்து இன்பமாக வாழ்வார்கள்.

முடிவுரை:

பெருமான் மகிழ்ந்து உறையும் திருக்கோயில் என்று பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், ஒவ்வொரு பாடலிலும் தலத்தின் சிறப்பையோ திருக்கோயிலின் சிறப்பையோ உணர்த்துகின்றார். முதல் பாடலில் நிலவுலகத்தின் உள்ள உயிர்கள் தன்னை வழிபாட்டு உய்வினை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் குடிகொண்டிருக்கும் கோயில் என்று குறிப்பிட்டு, நாம் அனைவரும் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் ஞானசம்பந்தர், கட்டுமலை மீது அமைந்துள்ள திருக்கோயில் என்று இரண்டாவது பாடலிலும் மறைகள் ஓங்கி ஒலிக்கும் திருக்கோயில் என்று மூன்றாவது பாடலிலும், வானளாவ உயர்ந்த திருக்கோயில் என்று நான்காவது பாடலிலும், சிவமணம் கமழும் திருக்கோயில் என்று ஐந்தாவது பாடலிலும், அழகிய திருக்கோயில் என்றும் ஆறாவது மற்றும் எட்டாவது பாடல்களிலும், வானவர்கள் இறையுணர்வில் ஈடுபட்டு வணங்கும் திருக்கோயில் என்று ஏழாவது பாடலிலும், உமையம்மையுடன் இணைந்து கல்யாணகோலத்தில் உறையும் திருக்கோயில் என்று ஒன்பதாவது பாடலிலும், மலையின் மீது அமைந்துள்ள மாடக்கோயில் என்று பத்தாவது பாடலிலும் உணர்த்துகின்றார். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த திருக்கோயிலை, சிவபெருமானின் அருள்மணம் கமழும் இந்த திருக்கோயில் சென்று வணங்கி பெருமானின் புகழினை உணர்த்தும் இந்த பதிகத்தை பாடும் அடியார்கள் சிவலோகம் செல்வார்கள் என்று கடைப் பாடலில் ஞானசம்பந்தர் உணர்த்துவதை எண்ணியவர்களாக, நாமும் இந்த தலம் சென்று நாவுக்கரசர் பெற்ற பேற்றினை, இந்த திருக்கோயிலில் சூட்டப்படும் சடாரியை இறைவனின் திருவடியாக நினைத்து பெறுவோமாக.



Share



Was this helpful?