பதிக எண்: 2.69 - திருபாண்டிக்கொடுமுடி - காந்தாரம்
பின்னணி:
கொடிமாடச் செங்குன்றூர் தலத்தில் தனது அடியார்களுடன் திருஞானசம்பந்தர் தங்கி இருந்த போது, அந்த நிலத்தின் இயல்பினால் அந்த நகரத்தில் வாழும் மக்களும், ஞானசம்பந்தருடன் வந்த அடியார்களும் குளிர்ஜுரம் அடைந்து வருந்தியதைக் கண்ட ஞானசம்பந்தர், அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கும் திருநீலகண்டப் பதிகம் (1.116) பாடவே, அனைவரும் தங்களது விஷஜுரம் நீங்கப்பெற்ற அதிசயம் நடைபெற்றது. அதன் பின்னர் மற்றொரு கொங்கு நாட்டுப் பதியான பாண்டிக்கொடுமுடி சென்றடைந்தார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. கருவூர் (இந்நாளில் கரூர் என்று அழைக்கப்படும் தலம்) எனப்படும் தலத்திற்கு அருகில் உள்ள வெஞ்சமாக்கூடல் என்ற தலத்திற்கும் ஞானசம்பந்தர் சென்றார் என்று கீழ்க்கண்ட பாடல் குறிப்பிடுகின்றது. ஆனால் இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. பாண்டிக் கொடுமுடி தலம் காவிரி நதிக்கரையின் மீது அமைந்துள்ளது. என்றும் வற்றாமல் பாயும் நதி என்று குறிப்பிட, பருவம் அறாப் பொன்னி நதி என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். நீர்வளம் மிகுந்த காவிரி நதி மற்றும் அதனால் செழிப்படைந்த தலத்தினைக் கண்ட ஞானசம்பந்தருக்கு, மீண்டும் சோழ நாட்டுத் தலங்கள் பலவற்றையும் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது போலும். பாண்டிக் கொடுமுடிப் பெருமானைப் புகழ்ந்து பதிகம் பாடிய பின்னர், கிழக்கு திசை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
பருவம் அறாப் பொன்னிப் பாண்டிக் கொடுமுடியார் தம் பாதம்
மருவி வணங்கி வளந் தமிழ்மாலை சாத்தி
விரிசுடர் மாளிகை வெஞ்சமாக்கூட விடையவர் தம்
பொருவில் தனம் பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார்
பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது மூவர் பெருமானார்கள் அருளிய பதிகங்கள் நமக்கு மூன்று கிடைத்துள்ளன. அப்பர் பிரான் ஒரு குறுந்தொகைப் பதிகம் இந்த தலத்தின் மீது அருளியுள்ளார். மற்றுப் பற்று ஒன்று என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகம் இந்த தலத்தில் தான் சுந்தரர் பெருமானால் அருளப் பட்டுள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த திருக்கோயில் கொண்டுள்ள இந்த தலம், ஈரோடு மாவட்டத்தில், கரூர் ஈரோடு இரயில் பாதையில் ஈரோடு நகரத்திற்கு 47கி.மீ, தூரத்தில் தென்கிழக்கில் அமைந்துள்ள தலமாகும். கொடுமுடி இரயில் நிலையத்திற்கு மிகவும் அருகில் அமைந்துள்ள திருக்கோயில். கரூர் நகரத்திலிருந்து 34 கி.மீ. தூரத்தில் உள்ளது. கொடுமுடி இரயில் நிலைத்திற்கு மிகவும் அருகில் கோயில் உள்ளது. ஈரோடு கரூர் ஆகிய நகரங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. மலையத்வஜ பாண்டியனால் விரிவு படுத்தப் பட்ட திருக்கோயில் என்பதால் தென்பாண்டிக் கொடுமுடி என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். பிரமன் திருமால் ஆகிய இருவருக்கும் இந்த திருக்கோயிலில் சன்னதி இருப்பதால் மும்மூர்த்திகள் கோயில் என்றும் அழைப்பார்கள். இறைவனின் திருநாமம், கொடுமுடி நாதர், மகுடேசர்; இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி, சௌந்தராம்பிகை. சுயம்பு இலிங்கம்.
தலத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த வன்னிமரத்தின் நிழலில் அமர்ந்த வண்ணம் பிரமன் மூன்று முகங்களுடன் காட்சி, தருகின்றார். வன்னி மரத்தினை நான்காவது முகமாக கருதவேண்டும். இந்த மரத்தின் வயது என்ன என்பதை தீர்மானிக்க முடியவில்லை. குறைந்தது இரண்டாயிரம் வருடங்களுக்கும் முந்தியது என்று கூறுகின்றனர். இந்த மரத்தில் பூக்கும் பூக்கள, பழமாக மாறுவதில்லை. மேலும் மரத்தின் ஒரு பகுதியில் முட்கள் காணப்பட்டாலும், மற்றொரு பகுதியில் முட்கள் ஏதும் இல்லாமல் உள்ள அதிசயத்தை நாம் காணலாம். இந்த மரத்தின் இலைகள் நீரில் விழுந்தாலும் அழுகுவதில்லை. பிரமன் இறைவனை வழிபட்டதால், இந்த தலத்தினை பிரமபுரம் என்றும் அழைக்கின்றனர். பழனி முருகனுக்கு தீர்த்தக் காவடி எடுக்கும் அன்பர்கள், தாங்கள் சுமந்து செல்லும் காவிரி தீர்த்தத்தில் இந்த மரத்து இலைகளை போட்டுக் கொண்டு செல்வார்கள்.
பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடி வரும் நதியினை புண்ணிய தீர்த்தம் என்று கூறுவார்கள். அத்தகைய தீர்த்தங்களில் நீராடுவது புண்ணியம் சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இங்கே காவிரி நதியில் நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப் படுகின்றது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடி வரும் காவிரி நதி இங்கே கிழக்கு திசை நோக்கி மாறி ஓடத் தொடங்குகின்றது. நதிக்கரையில் திருக்கோயில் அமைந்திருப்பதால், நதியின் இந்த திசை மாற்றம், திருக்கோயிலுக்கு நதி மாலை போன்று அமைந்துள்ள தோற்றத்தினைத் தருகின்றது. இந்த நிலை, பெருமானை வலம் வந்து காவிரி நதி வணங்கிச் செல்வதைப் போன்ற அமைப்பில் உள்ளதை, சுந்தரர் தனது நமச்சிவாயப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.48.2) உணர்த்துகின்றார். பல மணிகளையும் பூக்களையும் நிறைவாக அடித்துக் கொண்டு வரும் காவிரி நதி, வட்டத்தின் ஒரு வடிவமாக உள்ள தனது கரையில் சேர்ப்பது, பெருமானின் திருவடிகளுக்கு மாலை சூட்டுவது போன்று அமைந்துள்ளது என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார். அடியேன் உன்னை மறந்து உனது திருநாமத்தைச் சொல்லாமல், உன்னைத் தொழாமல் இருந்த நாட்களை குறிப்பிட்டு, அடியேன் நிலையற்ற தன்மையனாக இருந்த நிலையினை அடியார்கள் இகழ்ந்து கூறியதால், பயனேதும் இன்றி கெட்டுப்போன நாட்கள் என்று அத்தகைய நாட்களை நானும் கருதுகின்றேன். எனவே அத்தகைய நாட்கள் மீண்டும் எனது வாழ்வினில் நிகழாத வண்ணம், நான் மறக்கினும் எனது நா உனது திருநாமத்தைச் சொல்லும் வண்ணம் பழக்கியுள்ளேன்.
இட்டன் உன்னடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்ட நாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுதேத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில், ஆதிசேடனின் தலையில் இருந்த மணிகள் சிதறி விழுந்த இடங்களில் பாண்டிக்கொடுமுடி ஒன்று என்று கூறுவார்கள். சிகப்பு மணி விழுந்த இடம் திருவண்ணாமலை என்றும், மரகத மணி விழுந்த இடம் ஈங்கோய்மலை என்றும் மாணிக்க மணி விழுந்த இடம் வாட்போக்கி என்றும் நீலமணி விழுந்த இடம் பொதிகை மலை என்றும் வைரமணி விழுந்த இடம் பாண்டிக்கொடுமுடி என்றும் கூறுவார்கள். அந்த போட்டியில் சிதறி விழுந்த மேருமலையின் துண்டே இங்கே சிகரமாக உள்ளது என்றும் கூறுவார்கள்.
அகத்தியர் திருமால் பிரமன் பரத்வாஜ முனிவர் மலயத்வஜ பாண்டியன் ஆதிசேஷன் ஆகியோர் வணங்கி பயனடைந்த தலம். அகத்திய முனிவருக்கு பெருமான் திருமணக்கோலம் காட்டிய தலம் என்று கூறப்படுகின்றது. மகுடேசுவரர் சன்னதிக்கும் சௌந்தரநாயகி அம்பாள் சன்னதிக்கும் இடையில், பள்ளிகொண்ட கோலத்தில், வீரநாராயணப் பெருமாள் மற்றும் மகாலட்சுமி சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த தலத்து இறைவனை வழிபாட்டு, பாண்டிய மன்னனொருவன் தனது நோயினைத் தீர்த்துக் கொண்டமையால் கறையூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. கறை=நோய்; சுந்தரமூர்த்தி அடிகள், தனது நமச்சிவாயப் பதிகத்தில் கறையூரில் பாண்டிக் கொடுமுடி என்று குறிப்பிடுகின்றார். ஆடிப்பெருக்கு மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகின்றது. திருமணத் தடை நீக்கிக் கொள்வதற்கும், குழந்தைப் பேறு பெறுவதற்கும், இந்த தலத்து இறைவனுக்கு செய்யப்படும் வழிபாடு, வழிவகுக்கும்.
பாடல் 1:
பெண்ணமர் மேனியினாரும் பிறை புல்கு செஞ்சடையாரும்
கண்ணமர் நெற்றியினாரும் காதமரும் குழையாரும்
எண்ணமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும்
பண்ணமர் பாடலினாரும் பாண்டிக் கொடுமுடியாரே
விளக்கம்:
அமர்தல் என்பது அடங்குதல், அமைதல், இருத்தல், நெருங்குதல், படித்தல், பொருந்துதல், பொலிதல், மிகுதியாக இருத்தல், வாய்த்தல், விரும்புதல் என்று பல பொருள்கள் தரும் ஒரு சொல். எண்ணமரும் குணத்தார் என்ற தொடரினை அமரும் எண் குணத்தார் என்று மாற்றி வைத்து பொருள் காணவேண்டும். தனக்கே உரித்தான, தன்வயத்தனாதல், தூயவுடம்பினான் ஆதல், இயற்கை உணர்வினனாக இருத்தல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவிலாத ஆற்றல் உடைமை, வரம்பிலாத இன்பம் உடைத்தல் ஆகிய எட்டு குணங்கள் இறைவன் மீது தாமே சென்று அமர்ந்தன என்று ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.
இறைவனின் அருள் வடிவம் தான் பிராட்டி என்று கூறுவார்கள். அந்த பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டுள்ள தன்மையால் அவனிடத்தில் திருவருள் பொதிந்து உள்ளது. பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டுள்ள தன்மை, அழிவின் விளிம்பிலிருந்த சந்திரனை அழியாமல் பாதுகாத்து வாழச் செய்த இறைவனது ஆற்றலை உணர்த்துகின்றது. இறைவனது நெற்றியில் உள்ள கண் அவனது தனித்தன்மையை உணர்த்துகின்றது. என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
இந்த பாடலில் பண்ணமர் பாடலினார் என்ற தொடர் மூலம், இறைவன் பண் பொருந்திய பாடல்களை பெரிதும் விரும்புகின்றார் என்று ஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலின் சொற்றமிழ் பாடுக என்று சுந்தரரை பதிகங்கள் பாடுமாறு இறைவன் பணித்ததை நாம் அனைவரும் அறிவோம். திருமூலர் ஒரு பாடலில் நாம் பக்தியுடன் இறைவனைப் புகழ்ந்து பாடும் பாடல்களை அவன் பால் அடிசில் உண்பதைப் போன்று மகிழ்ந்து ஏற்றுக் கொள்வான் என்று கூறுகின்றார்.
வேட்டவி உண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி ஆவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால் அவியாமே
வேட்டவி=வேள்வியில் இறைவனுக்கு அளிக்கப்படும் ஆகுதி; காட்டவி என்றும் இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கையில், தங்களது கைகளை அசைத்து, நைவேத்தியமாக படைக்கப் பட்ட பொருளினை இறைவன் காணுமாறு செய்தல். இவ்வாறு வேட்டவி ஊட்டியும் காட்டவி காட்டியும் வழிபடும் அடியார்கள், இறைவன் அந்த உணவினை உட்கொள்வதாக கருதி மகிழ்கின்றனர். இறைவனும் இந்த கருத்துக்கு உடன்பட்டு நின்று அத்தகைய அடியார்களுக்கு அருள் புரிகின்றான். இவ்வாறு வேட்டவி ஊட்டவும் காட்டவி காட்டவும் இயலாத அடியார்கள், தினமும் காலையும் மாலையும் அவனது உள்ளத்தை மகிழ்விக்கும் பாடல்களை பாடலாம் என்று திருமூலர் நமக்கு வழிகாட்டுகின்றார். பாடல்களைப் பாடி அவனது உள்ளத்தை குளிர்வித்தல் சிறந்த வழிபாட்டு முறை என்று கூறுகின்றார். இந்த பாடல்கள் உண்மையில் சொற்களின் வடிவினில் இருப்பினும், நமது கருத்தினை புரிந்து கொள்ளும் இறைவன், பாடல்களை பால் சோறாக ஏற்றுக்கொள்வான். எனவே இறைவனுக்கு ஊட்டுவதற்கும் காட்டுவதற்கும் ஏதும் இல்லாத நாம், காலை மாலை ஆகிய இரண்டு பொழுதுகளிலும் பாட்டவி படைப்போம் என்று திருமூலர் இங்கே கூறுகின்றார்.
பொழிப்புரை:
உமை அன்னையை இடது பாகத்தில் கொண்டுள்ள திருமேனியை உடையவரும், பிறைச் சந்திரன் பொலிவுடன் பொருந்தி விளங்கும் செம்பட்டை சடையினை உடையவரும், தனிச்சிறப்பு பெற்ற கண் ஒன்றினைத் தனது நெற்றியில் உடையவரும், குழை பொருத்தப்பட்ட வலது காதினை உடையவரும், எண் வகையான உயர்ந்த அரிய குணங்கள் உடையவரும், தேவர்கள் தொழும் வண்ணம் விளங்குபவரும், பண்களுடன் கூடிய பாடல்களைத் தனது புகழினை எடுத்துரைக்கும் தோத்திரமாக கொண்டுள்ளவரும் ஆகிய பெருமான் பாண்டிக் கொடுமுடி தலத்தினில் எழுந்தருளி உள்ளார்.
பாடல் 2:
தனைக் கணி மாமலர் கொண்டு தாள் தொழுவார் அவர் தங்கள்
வினைப் பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்கப்
பனைக் கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடியாரே
விளக்கம்:
தனை=தன்னை; விஞ்சை=வித்தைகள்; விஞ்சையர்=பல வித்தைகளின் தலைவராகிய சிவபெருமான். பல விதமான கலைகளையும் தோற்றுவித்த பெருமானைத் தானே, நாம் அந்த கலைகளின் தலைவனாக கருத வேண்டும்; பனைக்கை பகடு=பனைமரத்தின் அடிபாகம் போன்று பருத்து வலிமையுடன் காணப்படும் துதிக்கையை உடைய யானை; கணி=மருத நிலத்தையும் மருத நிலத்தில் விளையும் கொன்றை மலர்களையும் குறிக்கும்.; வினைகளை பகை என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வினைகளை ஏன் பகையாக அவர் கருதுகின்றார் என்பது பற்றி நாம் சற்று சிந்திப்போம். உயிர்களின் உண்மையான விருப்பம், தங்களைப் பிணித்துள்ள வலிமை வாய்ந்த வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, இறைவனைச் சென்றடைந்து அழியாத பேரின்பத்தில் திளைத்து இருப்பதே ஆகும். ஆனால் உயிர்களுடன் பிணைந்துள்ள வினைகளோ, உயிர் தனது விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ள தடையாக உள்ளன. எனவே தான் வினைகள், தங்களை விட்டு உயிர் பிரிந்துவிடாமல் இருப்பதற்காக பல விதமான மாயைகள் செய்கின்றன. அந்த வினைகளை உயிர்கள் அனுபவித்துக் கழிக்க முயற்சி செய்யும் தருணங்களில் மேலும் பல ஆகாமிய வினைகளை தோற்றுவித்து, வினைகளற்ற நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. எனவே தான் வினைப்பகை என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இவ்வாறு உயிர்களுக்குப் பகையாக விளங்கும் வினைப்பகையைத் தீர்ப்பவர் இறைவன் ஒருவனே என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மாமலர்=பெருமைக்கு உரிய மலர்; சிறந்த மலர்;
புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.30.6) தன்னை நினைக்கும் அடியார்களின் வினைக்கு பகையாக இருப்பவர் சிவபெருமான் ஒருவன் தான் என்று சம்பந்தர் கூறுகின்றார். பெருமான் ஒரு பொருளைத் தனது பகையாக நினைத்த பின்னர், அந்த பொருள் நிலையாக இல்லாமல் அழிந்துபோகும் அல்லவா. அனல் படு தடக்கையர்=வேள்விக்காக தீ வளர்க்கும் அந்தணர்கள்; எத்தொழிலர்=வேறு எந்த தொழில் புரிபவராக இருந்தாலும்; தணல் என்ற சொல் எதுகை கருதி தனல் என்று மாறிவிட்டது. கிடக்கை=இருக்கும் நிலை; தனிப்பிறை=ஒப்பற்ற தன்மை உடைய பிறைச் சந்திரன். பெருமான் ஏற்றுக் கொண்டதால் சிறப்பு பெற்று விளங்கும் பிறைச் சந்திரன். தடம்=நீண்ட; வினைப்பகை=வினைக்கு பகையாக நின்று அவற்றை முற்றிலும் அழிப்பவன்;
அனல்படு தடக்கையர் எத்தொழிலர் ஏனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே
தனல் படு சுடர்ச்சடை தனிப்பிறையொடு ஒன்றப்
புனல் படு கிடைக்கையை புறம்பயம் அமர்ந்தோய்
வேள்விக்காக தீ வளர்க்கும் நீண்ட கைகளை உடைய அந்தணர்கள் ஆயினும், அந்தணர்கள் அன்றி வேறு ஏதேனும் தொழில் புரிபவராக இருப்பினும், பெருமானை தங்களது மனதினில் நினைப்பவர் ஆயின் அவரது தீவினைகளுக்கு பகையாக உள்ளவனும், கொழுந்து விட்டெரியும் தீச்சுடர் போன்று ஒளி வீசும் செஞ்சடையினை உடையவனும், ஒப்பற்ற ஒற்றைப் பிறையுடன் சந்திரன் ஒன்றியிருக்கும் சடையினை உடையவனும், கங்கை நதி தங்கியிருக்கும் தன்மையை உடைய சடையினை உடையவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளான் என்பதே மேற்கண்ட பாடலில் திரண்ட பொழிப்புரை.
ஐந்தெழுத்துப் பதிகத்தின் ஒரு பாடலில் (3.22.10) இறைவனின் திருநாமாகிய பஞ்சாக்கர மந்திரம் அடியார்களின் வினைப் பகையினைத் தீர்க்கும் அத்திரமாக செயல்படும் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். வினைப்பகை=வினைகளை உயிரின் பகையாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார். உயிரின் எண்ணத்திற்கு விருப்பத்திற்கு மாறாக வினைகள் செயல்பட்டு உயிரினை மீண்டும் மீண்டும் பிறவிக் கடலில் ஆழ்த்துவதால், வினைகள் உயிரின் பகையாக கருதப் படுகின்றன. அத்தகைய கொடிய வினைகளை அழிக்கும் படையாக ஐந்தெழுத்து மந்திரம் செயல்படும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்
சித்தத்து அவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே
நல்லம் என்று அழைக்கப்பட்ட தலத்தின் (தற்போதைய பெயர் கோனேரிராஜபுரம்) அருளிய பதிகத்தின் பாடலில் (5.43.6) அப்பர் பிரான், உயிரினை வென்று தனது கைப்பிடிக்கீழ் வைத்துக் கொள்ள நினைக்கும் வினைகள், உயிர்கள் சிவாயநம என்று பெருமானின் திருவடிகளைத் தொழுதால், உயிரினை விட்டு ஓடிவிடும் என்று கூறுகின்றார்.
அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும்
வல்லவாறு சிவாய நம என்று
நல்லம் மேவிய நாதன் அடி தொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே
வினைகள் எவ்வாறு உயிர்களை வெல்வதற்கு முயற்சி செய்கின்றன என்பதை, அல்லல் தரும் ஐம்பூதங்களின் மூலம் உயிர்களுக்கு துன்பம் இழைத்து உயிர்கள் இறைவனை நாடும் முயற்சிகளுக்கு இடையூறு செய்கின்றன. சிவனது அடியார்களுக்கு ஐம்பூதங்களால் தொல்லைகள் ஏற்படாது என்பதை நாவுக்கரசரின் சரித்திரம் உணர்த்துவதை நாம் பெரிய புராணத்தில் காணலாம். நீற்றறையில் அடைக்கப் பட்டபோது, அந்த வெப்பம் அப்பர் பிரானை தாக்கவில்லை; அவரது கழுத்தினை இடறித் தள்ளி கொல்வதற்காக, ஏவிவிடப்பட்ட மதயானை அவரை வலம் வந்து அகன்று சென்றது; பால் சோற்றுடன் கலந்து கொடுக்கப்பட்ட நஞ்சு, அவரது உயிருக்கும் உடலுக்கும் எந்த விதமான தீங்கினையும் ஏற்படுத்தவில்லை; கல்லுடன் பிணைத்து கடலில் விட்டபோதும் கடல்நீர் அப்பர் பிரானுக்கு எந்த விதத்திலும் கெடுதி செய்யவில்லை. இவ்வாறு அதிசயங்கள் நிகழ்ந்தது இறைவனின் திருநாமத்தை அப்பர் பிரான் தொடர்ந்து ஓதியமையால் தானே.
ஒரு பொதுத் திருத்தாண்டகப் பாடலிலும் (6.95.2), உயிருக்கு பகையாக உள்ள வினை எவ்வாறு செயல்படுகின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வெம்ப=நாம் வருந்தும்படி; வெய்ய=கொடிய, வருத்தம் செய்விக்கும், குறித்த காலத்தில் மிகவும் விரைவாக வந்து துன்பம் தருபவன் கூற்றுவன்; உடனிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக நம்மைத் துன்புறுத்துவது வினைகள். இவ்வாறு தங்களுக்கே உரித்த வேறு வேறு வகையில் நம்மை துன்புறுத்தும், கூற்றம் மற்றும் வினைகளிலிருந்து நம்மைக் காப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பாடலில் தன்னைக் குறிப்பிடும் இடங்களில், நான் என்பதைத் தவிர்த்து நாம் என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். சிவபெருமான் தனது சிந்தையில் புகுந்ததால் தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறும் அப்பர், அந்த மாற்றங்களால் மற்றவர்களை விட தான் ஒரு உயர்ந்த நிலையில் இருப்பதை உணர்த்தும் வகையில் நாம் என்று தன்னை இறுமாப்புடன் கூறுகின்றார். தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும், தான் அதற்காக கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை இல்லை என்பதை, மிகவும் அழகாக, எந்த திசையில் சூரியன் உதித்தாலும் நான் கவலைப் பட மாட்டேன் என்றும், இறைவனின் திருவருள் தன் மீது படிந்துள்ள காரணத்தால், தான் எளியவன் அல்ல என்றும் முழக்கம் இடுவதை நாம் உணரலாம்.
வெம்ப வருகிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப்
பகையும் நையும்
எம் பரிவும் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கெழில் என் ஞாயிறு
எளியோம் அல்லோம்
அம்பவள செஞ்சடை மேல் ஆறு சூடி அனலாடி ஆன் அஞ்சும்
ஆட்டுகந்த
செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர் செவ்வான வண்ணர் என்
சிந்தையாரே
கச்சி அனேகதங்காவதம் உயிர்களின் வினைப்பகையைத் தீர்க்கும் இடம் என்று சுந்தரர் ஒரு பாடலில் (7.10.3) குறிப்பிடுகின்றார். செடி=துன்பம்; உயிர்களை மீண்டும் மீண்டும் பிறவிக்கடலில் ஆழ்த்துவதால், வினைகளை துன்பம் தரும் வினைகள் என்று சுந்தரர் இந்த பாடலில்
கொடிகள் இடைக் குயில் கூவுமிடம் மயிலாலும் இடம் மழுவாள்
உடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதல் கறைக்கண்டன் இடம் பிறைச்
துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீரும் இடம் திருவாகும் இடம் திரு
மார்பகலத்து
அடிகள் இடம் அழல் வண்ணன் இடம் கலிக்கச்சி அனேகதங்கா
வதமே
திருவாசகம் சென்னிப்பத்து பதிகத்தின் பாடலில் (8.42.9) உயிர்களுக்கு பகையாகிய வலிமை வாய்ந்த வினையை அழிப்பவன் சிவபெருமான் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். வம்பன்= வீணாகப் பொழுதைக் கழிப்பவன்; அனைத்து உலகங்களையும் ஊடறுத்துச் செல்லும் நெடியத் தோற்றத்தினை உடையவன் பெருமான் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார். குதிரைகள் வாங்கும் நோக்கத்துடன் தொண்டித் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த தன்னை, காந்தம் இரும்புத் துண்டினைக் கவர்வது போன்று தன்னை பெருந்துறைக்கு இழுத்து அருள் புரிந்த தன்மையை குறிப்பிடுகின்றார். அத்தகைய கருணையை நினைத்து, இறைவனின் திருவடிகளில் தான் தலை வைத்து வணங்குவதாகவும் அதனால் தனது தலை பெருமானின் திருவடிகளில் பொருந்தி திகழ்கின்றது என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.
வம்பனாய்த் திரிவேனை வாவென்று வல்வினைப் பகை
மாய்த்திடும்
உம்பரான் உலகு ஊடறுத்து அப்புறத்தனாய் நின்ற எம்பிரான்
அன்பரானவர்க்கு அருளி மெய்யடியார்கட்கு இன்பம் தழைத்திடும்
செம்பொன் மாமலர்ச் சேவடிக் கண் நம் சென்னி மன்னித்
திகழுமே
பொழிப்புரை:
பெருமை வாய்ந்ததும் அழகுடன் விளங்குவதும் ஆகிய கொன்றை மலர் கொண்டு தனது திருப்பாதங்களில் தூவி வழிபடும் அடியார்களின் வினைகளைத் தனது பகையாக கருதி, அந்த வினைகளை முற்றிலும் அழித்து அருள் புரிபவர் சிவபெருமான். தேவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்குபவரும், அனைத்து கலைகளையும் தோற்றுவித்து அவற்றின் தலைவராக விளங்குபவரும், உறக்கத்திலிருந்து விழித்தெழும் நேரங்களில் தன்னை மனதினில் நினைத்துத் தொழும் அடியார்களின் துயரங்களைத் தீர்ப்பவரும், வரிசையாக அமைந்துள்ள வளையல்களைத் தனது கையினில் அணிந்துள்ள பார்வதி தேவி அச்சம் கொண்டு நடுங்கும் வண்ணம் தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவரும் ஆகிய சிவபெருமான் பாண்டிக்கொடுமுடி தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 3:
சடையமர் கொன்றையினாரும் சாந்த வெண்ணீறு அணிந்தாரும்
புடையமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும்
விடையமரும் கொடியாரும் வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையினாரும் பாண்டிக் கொடுமுடியாரே
விளக்கம்:
இந்த பாடலில் வெண்மழு என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நன்கு கூரியதாக தீட்டப்பட்டு வெண்மையான ஒளி வீசும் மழுப்படை. பெருமானது திருக்கரத்தில் இந்த படை இருப்பதே, தீயவருக்கு அச்சத்தை விளைவிப்பதால் எவர் மேலும் செலுத்தப்பட்டு அதனால் குருதிக்கறை படிய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பதால், என்றும் வெண்மையாகவே இருக்கும் மழு ஆயுதம் என்று பொருள் கொள்ள வேண்டும். பல திருமுறைப் பாடல்களில் வெண்மழு என்று குறிப்பிடப்படுகின்றது.
சாந்த வெண்ணீறு என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஏனையோர் அனைவரும் வாசனை தரும் சந்தனத்தைத் தங்களது திருமேனியில் பூசிய வண்ணம் காட்சி தர, பெருமானோ, திருநீற்றினையே சந்தனமாக கருதி தனது திருமேனியில் பூசிக் கொண்டு உள்ளார் என்று விளக்கம் அளிப்பது ஒரு வகை. பெருமானின் திருமேனியின் மீது பூசிய திருநீற்றினை அணிவோர்கள் சாந்தம் பெறுகின்றனர் என்று விளக்கம் கூறுவது மற்றொரு வகை. சாந்த வெண்ணீறு என்று குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.52.7) நறுமணம் வீசும் சந்தனம் என்று கருதி, பெருமானின் திருமேனி மீது அபிஷேகம் செய்யப்பட்ட திருநீற்றினை அணிந்து கொள்ளும் அடியார்களின் இடரினைக் களைய வேண்டும் என்று பெருமானிடம் ஞானசம்பந்தர் விண்ணப்பிக்கும் பாடல் இது. திருநீற்றினை இட்டுக் கொள்ளும் போதும், இறைவனின் திருநாமத்தை சொல்ல வேண்டும் என்றும் அவனது புகழினைப் பேச வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றார்.
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈதென்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களைவாய் நெடுங்களம் மேயவனே
காவிரிப்பூம்பட்டினம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.65.4) நீரில் குழைத்த சாம்பலைத் தனது உடலில் சந்தனம் போல் பூசியுள்ள பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தயங்க=போல் விளங்க; தார்=மாலை; ஆர்கின்ற என்ற சொல்லுக்கு உலகம் இன்பமடைதல் என்று பொருள் கொண்டு, அடியார்கள் பாடும் இசைப் பாடலினை கேட்கும் உலகத்தவர்கள் இன்பம் அடைகின்றனர் என்று சொல்வதும் பொருத்தமே. மைந்தர்=வலிமை வாய்ந்தவர்கள்; புகார் என்ற பெயருக்கு ஏற்ப வலிமை மிகுந்த வீரர்கள் வாழ்ந்த தலமாக காவிரிப்பூம்பட்டினம் இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.
தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பகலம்
நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்
போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால்
பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே
பெருமான் தனது திருமேனியில் பூசியுள்ள திருநீறு, சந்தனம் போன்று நறுமணம் கமழ்வதாக உள்ளது என்று பெருமான் மேல் தீராத காதல் கொண்ட தாருகவனத்து மகளிர் சொல்வதாக, கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் (1.73.2) கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் தாருகவனத்து மகளிரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த பாடல்கள் என்று கூறுவார்கள். பிச்சைப் பெருமானாக, தனது கையினில் ஓட்டினை ஏந்தியவராக பலியேற்க தாருகவனம் சென்ற பெருமானின் அழகினால் கவரப்பட்டு, முனிவர்களின் மனைவியர் பலரும், தங்களையும் அறியாத நிலையில், தாங்கள் இல்லத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை இடையிலே விட்டுவிட்டு, பெருமானின் பின்னே தொடர்ந்து சென்றதாக புராணம் கூறுகின்றது. அன்று, தாங்கள் வாழ்ந்து வந்த இல்லங்களின் வழியே வீதிவலம் வந்த பெருமானின் கோலத்தினை, தனது அழகிய வாயினால் இனிமையான சொற்கள் கொண்டு பலி இடுவீர்களாக என்று கேட்டதை நினைக்கும் தாருகவனத்து மகளிரின் தன்மையை எடுத்துரைக்கும் பாடலாக உள்ளது. நீத்தலாகா வெள்ளம்=நீந்திக் கடக்க முடியாத அளவு பெருகிய வெள்ளம்; மூழ்கு=மூழ்கி மறைந்த; ஏய்ந்த=பொருந்த; போந்த=வாயிலிருந்து வெளிவந்த; மைந்தர்=ஆண்மகன்; கோணல்=வளைந்த; வெகு நாட்களாகத் தன்னை விட்டு பிரிந்திருக்கும் தலைவனின் வருகையை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கும் தலைவி, கடந்த நாட்களில் தலைவனுடன் தான் சேர்ந்திருந்த இனிமையான பொழுதுகளை நினைத்து அசை போடும் தலைவியின் தன்மையை குறிப்பிடும் சங்க இலக்கியப் பாடல்களைப் போன்று இந்த பாடல் அமைந்துள்ள விதம் ரசிக்கத் தக்கது. தனது உள்ளம் கவர்ந்த தலைவன் பெருமான் தான் என்பதை சுட்டிக் காட்டும் வண்ணம் பெருமானின் சடையில் உள்ள பொருட்கள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. இந்த பாடல் போன்றே பதிகத்தின் மற்றைய பாடல்களிலும் இறைவனின் அடையாளத்தினை சுட்டிக் காட்டும் சம்பந்த நாயகி, இறைவனை தனது உள்ளம் கவர்ந்த கள்வன் என்று கூறுகின்றாள். எப்படியெல்லாம் தனது உள்ளம் கவரப்பட்டது என்பதை விரிவாக கூறும் நோக்கம் தான் என்னே. அந்த அடையாளங்கள் கொண்ட இறைவனை நாம் கண்டு சம்பந்த நாயகியுடன் சேர்த்து வைத்து அவளின் துயர நிலையினை மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.
நீத்தலாகா வெள்ளம் மூழ்கு நீள்சடை தன் மேலோர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆரப்
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போலாம்
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே
குற்றாலம் (குறும்பலா) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.71.8) சாந்தம் என நீறு அணிந்த பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திணி=நெருங்கிய; பலம் மிகுந்து பருத்து காணப்படுவதால் ஒன்றுக்கொன்று நெருங்கிய தன்மையில் தோள்கள் இருந்தததாக கூறுகின்றார். சாரல் சாரல்=மழைச் சாரலை உடைய மலைச்சாரல்; பூந்தண் நறு=நறுமணமும் குளிர்ச்சியும் கொண்ட வேங்கைப் பூக்கள்; பிடி=பெண்யானை; பெண்பால் என்ற தகுதியில் கூந்தல் உடையது என்று சொன்னார் போலும். யானைகள் பூக்களைப் பறித்து வந்து சிவபெருமானை வழிபாடு செய்வதாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார்
ஏந்து திணி திண்தோள் இராவணனை மால் வரைக் கீழ் அடர
ஊன்றிச்
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல்
பூந்தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய
ஏந்திக்
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே
முக்கீச்சரம் (தற்போதைய பெயர் உறையூர், திருச்சி நகரத்தின் ஒரு பகுதி) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.120) திருநீற்றினை சாந்தமாக பூசிய பெருமான் என்று சம்பந்தர் கூறுகின்றார். கோச்செங்கட் சோழன் கட்டிய கோயில் என்பதால் வேந்தன் முக்கீச்சரம் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. காந்தள் ஆரும் விரல் ஏழை=காந்தள் மலரை ஒத்த விரல்களைக் கொண்ட உமையம்மை. உமையம்மையுடன் இறைவன் கூடி இருப்பதன் காரணத்தை நாம் யாரும் ஆராய்ந்து அறிய முடியாது என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
சாந்தம் வெண்ணீறு எனப் பூசி வெள்ளம் சடை வைத்தவர்
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டு ஆங்கு அறிய நிறைந்தார் அவர் ஆர் கொலோ
வேந்தன் முக்கேச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே
திருநீற்றினை விலையிலி சாந்தம் என்று அப்பர் பிரான் ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.8.9) குறிப்பிடுகின்றார். சந்தனம் மிகவும் விலை உயர்ந்த பொருள் என்பதை நாம் அறிவோம். சிவபிரான், மலிந்து கிடந்து மற்றவரால் ஒதுக்கப்படும் பொருட்களையே விரும்பி அணிபவர் என்பதால், சுடுகாட்டில் கிடைக்கும் சாம்பலையே திருநீறாக அணியும் தன்மை இங்கே கூறப்பட்டுள்ளது. எருக்கு, கொன்றை, எலும்பு மாலை, பாம்பு, ஆகியவை போன்று மற்றவர்கள் விலக்கும் பொருட்கள் போல், திருநீறும் இறைவனால் விரும்பப்பட்டு உடல் முழுவதும் பூசிக் கொள்ளப் படுவதால் விலையிலி சந்தனம் என்று திருநீற்றினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். வடநாட்டில் பாயும் கங்கை நதி இங்கே வடகங்கை என்று அழைக்கப் படுகின்றது. உமையம்மை மற்றும் கங்கை இருவருக்கும் மணவாளராக சிவபெருமான் இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. வேட விகிர்தர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, வேடுவக் கோலம் தாங்கி அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளியதை குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
மலை மட மங்கையோடும் வடகங்கை நங்கை மணவாளராகி
மகிழ்வர்
தலை கலனாக உண்டு தனியே திரிந்து தவவாணராகி முயல்வர்
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட
விகிர்தர்
அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம்
உண்ட அவரே
சடையனார் என்றும் சாந்த நீற்றர் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் தில்லைச் தலத்தின் மீது அருளப்பட்ட பாடலாகும் (4.22.3). சடையன், சடையனார் என்பது ஒப்பற்ற சடையினைக் கொண்ட சிவபெருமானுக்கு மட்டுமே உரித்தான பெயர். சிவபெருமானின் சடை பல சிறப்புகளை உடையது. கடல் போல் பாய்ந்து வந்த கங்கை நீரினை ஏற்றுத் தேக்கிய சடை; அழிந்து தேய்ந்த நிலையில் தன்னை வந்து சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்த சடை; பல விதங்களிலும் வேறுபாடு கொண்ட தண்ணீர், சந்திரன், பாம்பு ஆகிய மூன்றினையும் ஏற்றுக்கொண்டு, மூன்றினையும் ஒருங்கே வைத்த சடை. இத்தகைய சிறப்புத் தன்மைகள் மற்றவர்களின் சடைக்கு இல்ல என்பதால், சடையன் என்பது சிவபெருமானுக்கே உரித்த பெயராகும். தனிநிலா=ஒப்பற்ற நிலா; சாந்தம்=சந்தனம். மற்றவர்கள் வாசனை பொருந்திய சந்தனத்தை உடலில் பூச, அவர்களிலிருந்து மாறுபட்டவரான சிவபெருமான், திருநீற்றினை சந்தனம் என்று பூசிக் கொள்வதாக அப்பர் பிரான் இங்கே சொல்கின்றார். பெருமானின் எளிமையான திருக்கோலம் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
சடையனார் சாந்த நீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னிச்
உடையனார் உடைதலையில் உண்பதும் பிச்சை ஏற்றுக்
கடி கொள் பூந்தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே
திருநீற்றினை சாந்தமாகக் கொண்டவன் பெருமான் என்று மீயச்சூர் இளங்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (5.11.7) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.பைங்கொன்றை=பசிய கொன்றை மலர்கள், புத்தம்புதிய கொன்றை மலர்கள்; தார்=மாலை; இடம்=நேரம், தகுந்த நேரம்
படைகொள் பூதத்தன் பைங்கொன்றை தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்த வெண் நீற்றினன்
விடைகொள் ஊர்தியினான் திரு மீயச்சூர்
இடை கொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே
திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.8310.) அப்பர் பிரான் சாந்தம் என்று கருதி திருநீறு அணிந்த பெருமானின் மலை கயிலை மலை என்று குறிப்பிடுகின்றார். பாந்தள்=பாம்பு; ஏந்து=உயர்ந்த; தாள் என்ற சொல் இங்கே கால் விரலை குறிக்கும்; சாந்தம்=சந்தனம்;
வேந்தன் நெடுமுடி உடைய அரக்கன் கோமான் மெல்லியலாள் உமை
வெருவ விரைந்திட்டு ஓடிச்
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பைத் தடக் கைகளால்
எடுத்திடலும் தாளால் ஊன்றி
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன் தன் இசை
கேட்டு இரக்கம் கொண்ட
பாந்தள் சடைமுடி எம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன்
உய்ந்தவாறே
திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.19.4) சுந்தரர், பெருமான் உவகையுடன் ஏற்றுக்கொள்ளும் பொருட்கள் எவையெவை என்று பட்டியல் இடுகின்றார். வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்தவரும், வலிமை வாய்ந்த இடபத்தை வாகனமாக விரும்பி ஏற்றவரும், ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும், பகீரதனுக்கு அருள் புரியும் பொருட்டு கங்கை நதியினைத் தனது சடையில் விரும்பி ஏற்றவரும், முப்புரி நூலை விரும்பி அணிபவரும், பூசிக் கொள்கின்ற சந்தனமாக திருநீற்றினை மிகுந்த விருப்பத்துடன் தனது திருமேனியில் பூசியவரும் ஆகிய பெருமான், நால்வேதங்களை ஓதியவாறு எங்கும் நிறைந்து காணப்படும் பெருமான், எழுந்தருளியுள்ள இடம் திருநின்றியூர் என்று இந்த பாடலில் சுந்தரர் கூருகின்றார். கங்கை தன்னை வேறு உகந்தார் என்று கூறுவது சற்று சிந்திக்கத் தக்கது. பெருமான் தனது உடலினில் உமை அன்னையையும் சடையினில் கங்கை நங்கையையும் ஏற்றுக் கொண்டுள்ள தன்மையை நாம் அறிவோம். அருளே வடிவமாக விளங்கும் உமையன்னையைத் தனது உடலில் பெருமான் ஏற்றுக் கொண்டது பொதுவாக உயிர்களுக்கு அருள் புரியும் நோக்கத்தை உடையது. கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டது, பகீரதனுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் என்பதால், உமை அன்னையை ஏற்றுக் கொண்டுள்ள நோக்கத்திலிருந்து மாறுபட்டது என்பதை உணர்த்தும் வண்ணம் வேறு உகந்தார் என்று சுந்தரர் கூறுகின்றார். கங்கை நதியினை ஏற்ற செய்கையும் பின்னர், பாரத நாட்டின் ஒரு பகுதி செழிப்புடன் விளங்க கங்கை நதி, உதவுவதையும் நாம் இங்கே நினைக்கவேண்டும்.
ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்குமாகி அடல்
ஏறு உகந்தார் இசை ஏழு உகந்தார் முடிக் கங்கை தன்னை
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தமதா
நீறு உகந்தார் உறையும் இடமாம் திரு நின்றியூரே
பெருமானின் எளிய தன்மையை குறிப்பிட்டு, பெருமானே ஏன் உனக்கு வேறு பொருட்கள் கிடைக்கவில்லையோ என்று நகைச்சுவையாக குறிப்பிடும் ஒரு பாடலில் (7.44.2) சுந்தரர் திருநீற்றினைத் தவிர்த்து உமக்கு நறுமணம் வீசும் பொருள் ஏதும் பூசிக் கொள்வதற்கு கிடைக்கவில்லையா என்று கேட்பதை நாம் இங்கே காணலாம். தூறு=காடு;
தூறு அன்றி ஆடரங்கு இல்லையோ சுடலைப் பொடி
நீறன்றி சாந்தம் மற்றில்லையோ இமவான் மகள்
கூறன்றிக் கூறு ஆவது இல்லையோ கொல்லைச் சில்லை வெள்
ஏறு அன்றி ஏறுவதில்லையோ எம் பிரானுக்கே
திருமுருகன்பூண்டி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.49.9) தன்னந்தனியாக காட்டில் இருப்பது ஆபத்து அல்லவா என்று பரிவுடன் கேட்கும் பாடலில், திருநீற்றினை சந்தனமாக பூசிக் கொண்டு எளிய தோற்றத்துடன் பெருமான் இருப்பதை சுந்தரர் குறிப்பிடுகின்றார். தனது தோழன் சேரமான் பெருமான் அளித்த எண்ணற்ற பரிசுப் பொருட்களுடன் சுந்தரர் திருவாரூருக்கு திரும்பிச் செல்லும் வழியில் வேடுவர்கள் சுந்தரரின் பரிசுப் பொருட்களை கொள்ளையடித்த பின்னணியில், தன்னந்தனியாக பெருமான் வீற்றிருப்பது அவருக்கு கவலை அளிக்கவே, பெருமானின் நிலை கண்டு பரிந்து, பெருமானே வழிப்பறி கொள்ளையர் நிறைந்த இந்த காட்டினில் பலவிதமான நகைகளைத் தனது மார்பினில் தாங்கிய உம்னையன்னையுடன் பாதுகாப்பு ஏதுமின்றி தனியாக ஏன் வீற்றிருக்கின்றீர் என்று கவலையுடன் கேட்கின்றார். தனக்குத் தோழனாக இருந்து பல சமயங்களில் உதவி செய்த பெருமானின் நிலை கண்டு சுந்தரர் கவலை கொள்வது இயற்கை தானே.
சாந்தமாக வெண்ணீறு பூசி வெண் பல் தலைக் கலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து உகந்தீர்
மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்
பிரானீரே
பொழிப்புரை:
கொன்றை மலர்கள் பொருந்திய சடையினை உடையவரும், திருநீற்றினை சந்தனமாக கருதி மிகுந்த விருப்புடன் தனது திருமேனியில் அணிந்தவரும், எப்போதும் பூதகணங்கள் சூழ இருப்பவரும், தனது உடலிலும் படத்திலும் பொறிகள் கொண்டுள்ள பாம்பினைத் தனது இடையில் கச்சாக கட்டி தனது விருப்பம் போன்று அசைப்பவரும், சின்னமாக இடபம் இடம் பெறுகின்ற கொடியினை உடையவரும், வெண்மை நிறத்தில் ஒளியுடன் மிளிரும் மழுப்படையினை தனது கையினில் ஏந்தியவரும், மூவிலைச் சூலத்தைத் தனது ஆயுதமாகக் கொண்டவரும் ஆகிய சிவபெருமான் திருப்பாண்டிக் கொடுமுடி தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 4:
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்தக்
கறை வளர் மாமிடற்றாரும் காடு அரங்காக் கனல் ஏந்தி
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை
பறை வளர் பாடலினாரும் பாண்டிக் கொடுமுடியாரே
விளக்கம்:
நறை=தேன்; நறைவளர்=தேன் பெருகும்; மாமிடறு=சிறப்பு வாய்ந்த கழுத்து; ஆலகால விடத்திலிருந்து உலகத்தை காத்த சிறப்பு உடையது; திருநீலகண்டம் என்று குறிப்பிட்டு. உலகத்தையே கொடிய ஆலகால நஞ்சின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிய பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு திருநீலகண்டப் பதிகம் பாடி, அடியார்களின் குளிர் சுரத்தைத் தீர்த்த ஞானசம்பந்தருக்கு, திருநீலகண்டத்தின் சிறப்பு நினைவுக்கு வந்தது போலும்; உலகத்தவர் அனைவரும் நீலகண்டத்தின் சிறப்பினை உணர்ந்து பெருமானை போற்றிய செய்தியும் இங்கே உணர்த்தப் படுகின்றது. கொடிமாடச் செங்குன்றூர் தலத்திலிருந்து தானே பாண்டிக்கொடுமுடி தலம் வந்தடைந்தார். பெருமானது கழுத்தின் சிறப்பினை வலியுறுத்தி மாமிடறு என்று இங்கே கூறுகின்றார்.
கண்ணார்கோயில் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.101.5) திருஞானசம்பந்தர், கருமை நிறம் பொருந்தியதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய கழுத்தினை உடைய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வாமனர் வணங்கியதால் இந்த தலத்திற்கு குறுமாணிக்குடி என்ற பெயரும் உள்ளது. குறு மாண் உருவன்=குள்ளமான பிரமச்சாரி உருவம் எடுத்த திருமால்; தற்குறி=தன்னால் குறிப்பிட்டு வணங்கப் படும் அடையாளம்; இந்த தலத்தில் உள்ள இலிங்கம் வாமனரால் தாபிக்கப் பட்டதாக கருதப் படுகின்றது. மறு=குற்றம்; உருவத்தில் சிறியவனாக, குள்ளனாக மூன்றடி மண் இரந்த பின்னர், அவ்வாறு பெற்ற மூன்றடிகளை அளக்கும் தருவாயில் நெடுமாலாக வளர்ந்தது குற்றமுடைய வஞ்சக செயலாக இங்கே குறிப்பிடப்படுகின்றது. அசுரர்களில் சற்று மாறுபட்டவனாக இருந்தவன் மாவலி. வலிமையுடைவனாக இருந்தாலும் மக்களை அன்பால் அரவணைத்து அறம் தவறாமல் ஆட்சி புரிந்தவன்; வேதங்களை மதித்து வேள்விகளை வளர்த்து இறையுணர்வுடன் திகழ்ந்தவன். எனவே தான் மற்றிணை இன்றி வாழ்ந்தவன் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தேவர்களை வென்ற மாவலியின் செயல் இங்கே வானோரைச் செறு மாவலி என்றார் தொடரால் உணர்த்தப் படுகின்றது.
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்
செறு மாவலி பால் சென்று உலகெல்லாம் அளவிட்ட
குறு மாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறு மா கண்டன் மேயது கண்ணார் கோயிலே
கொடிமாடச் செங்குன்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.3) திருஞானசம்பந்தர் நீலநன்மாமிடற்றான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். நீதி=நியதி, கடமை, வழிமுறை; ஏலம்=மயிர்ச்சாந்து; மா=பெருமை வாய்ந்த; நன்=நன்மை பயந்த, நல்ல; உலகினுக்கு நன்மை பயந்த பெருமை வாய்ந்த கழுத்து என்று பெருமானது கழுத்து இங்கே உணர்த்தப் படுகின்றது.
பாலன நீறு புனை திகழ் மார்பில் பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழல் ஏத்தல் நீதியே
கொச்சைவயம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தை (2.83.1), நீலநன் மாமிடற்றான் என்றே தொடங்குகின்றார்.
நீலநன்மா மிடற்றன் இறைவன் சினத்தன் நெடுமா உரித்த நிகரில்
சேலன கண்ணி ஒரு கூறு உருக்கொள் திகழ் தேவி மேவு பதி தான்‘
வேலன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத
ஒலியின்
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடியாடு கொச்சைவயமே
பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (4.60.10) நல்ல கருகிய கண்டன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நல்ல என்பது இருபொருட்சொல்; நல்ல=நன்மை பயக்கும், அழகிய
பொருகடல் இலங்கை மன்னன் உடல் கெடப் பொருந்தி நல்ல
கருகிய கண்டத்தானைக் கதிரிளம் கொழுந்து சூடும்
பெருகிய சடையினானைப் பெருவேளூர் பேணினானை
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே.
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.48.8) நீலமாமிடற்று அண்ணல் என்று குறிப்பிட்டு, அப்பர் பிரான், பெருமானின் கழுத்தின் சிறப்பினை உணர்த்துகின்றார். ஆலும்=நடனமாடும்; கோலம்=அழகாய; மால்=மயக்கம்; பதிகத்தின் ஆறாவது பாடலில் வெளிப்பகையை குறிப்பிட்ட அப்பர் பிரான் உயிரின் ஆறு உட்பகைகளில் ஒன்றான காமத்தை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இல்லற சுகத்தில் ஆழ்ந்து இறைவனை மறந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடலில் வழங்கப் படுகின்றது. இந்த பாடலில் தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று இருந்தாலும், இந்த அறிவுரை உலகத்தவர்க்கு வழங்கப் பட்ட அறிவுரையாகவே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் அப்பர் பிரான் தனது சிறு வயதில் சமண சமயத்தைச் சார்ந்த நாளிலிருந்தே துறவியாக வாழ்ந்தவர் அப்பர் பிரான். .
ஆலும் மாமயில் சாயல் நல்லாரொடும்
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே
நீல மாமிடற்று அண்ணல் ஏகம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.38.6) பெருமானின் கழுத்தின் சிறப்பினை உணர்த்தும் வண்ணம் திரு என்ற அடைமொழி கொடுத்து திருநீலகண்டன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் என்று சிவபிரானை குறிப்பதை காணலாம். வள்ளுவப் பெருந்தகை கூறுவது போல், நாம் கற்ற கல்வியின் உண்மையான பயன் இறைவனைத் தொழுதல் தான். அதனால் தான் பல பாடல்களில் அருளாளர்கள் இறைவனை தொழுது ஏத்துபவர்களை கற்றவர்கள் என்றும் மற்றவரை கல்லாதவர் என்றும் குறிப்பதை காணலாம். எனவே தான் அப்பர் பிரான் கற்றவர் என்று இங்கே இறைவனை தொழுபவர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு சிவபிரான் கற்பகமாய் இருப்பான், அதாவது வேண்டுவன எல்லாம் தருவான் என்று கூறுகின்றார். உற்றிருந்த=உணர்வதற்கு உதவி புரியும் தன்மைகள்; உற்றவர்=அடைந்த அடியார்கள்;
உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய்
நின்றாய் நீயே
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய்
நின்றாய் நீயே
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என்மேல்
வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத செம்பொன்
சோதீ
நீடூர் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (7.56.1) கறை மாமிடற்றான் என்று இறைவனை அழைக்கின்றார். ஒண்ணுதல்=ஒளி பொருந்திய நுதல்; நுதல்=நெற்றி; நெற்றிக் கண் உடையவர் சிவபெருமான் ஒருவரே என்பதால், ஒப்பற்ற கண்ணினை உடையவர் என்று பெருமானை சுந்தரர் குறிப்பிடுகின்றார். காரதார் கரை=கருமையான மேகம் போன்ற கறை;
ஊர்வதோர் விடை ஒன்று உடையானை ஒண்ணுதல் தனிக்
கண்ணுதலானைக்
காரதார் கறை மாமிடற்றானைக் கருதலார் புரம் மூன்று எரித்தானை
நீரில் வாளை வரால் குதி கொள்ளும் நிறைபுனல் கழனிச் செல்வ
நீடூர்ப்
பாருளார் பரவித் தொழ நின்ற பரமனைப் பணியா விடலாமே
பொழிப்புரை:
தேன் ஒழுகும் கொன்றை மலர் மாலைகளை உடையவரும், உலகத்தவர் அனைவரும் புகழ்ந்து தொழும் வண்ணம் ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கி அனைத்து உயிர்களையும் விடத்தின் தாக்குதலிலிருந்து காத்த பெருமை வாய்ந்த, கறை படிந்த கழுத்தினை உடையவரும், சுடுகாட்டினை அரங்காகக் கொண்டு தனது கையினில் தீச்சுடரினை ஏந்தி நடனம் ஆடுபவரும், நாளும் புகழில் வளரும் வேதங்களை இசைத்த வண்ணம் மண் முழவம் குழல் மொந்தை பறை ஆகிய இசைக்கருவிகள் முழங்க அதன் பின்னணியில் நடனம் ஆடுபவரும் ஆகிய சிவபெருமான், பாண்டிக் கொடுமுடி தலத்தினில் உறைகின்றார். ,
பாடல் 5:
போகமும் இன்பமுமாகி போற்றி என்பார் அவர் தங்கள்
ஆகம் உறைவிடமாக அமர்ந்தவர் கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி நன்னுதல் மங்கை தன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடியாரே
விளக்கம்:
உயிர் இருக்கும் நிலையினை பொதுவாக மூன்றாக கூறுவார்கள். கேவல நிலை, சகலநிலை மற்றும் சுத்த நிலை என்பவையே அவை மூன்று. இருள்நிலை, மருள்நிலை அருள்நிலை என்று அந்தந்த தன்மைகளில் உள்ள நிலை பற்றி, இந்த மூன்று நிலைகளையும் சொல்வது வழக்கம். கேவலநிலையில், உயிரின் கருவி கரணங்கள் ஏதும் இல்லாமல், செயல்பாடு ஏதுமின்றி செயலற்று கிடக்கும். அதனுடன் என்றும் பிரியாதிருக்கும் ஆணவமலம் மட்டும் பிணைந்து இருக்கும். இந்த நிலையில் ஆன்மாவுக்கு அறிவு இல்லை, இச்சை இல்லை, செயல் இல்லை, உடம்பு இல்லை, மனம் உட்பட்ட உட்கருவிகளும் புறக்கருவிகளும் இல்லை. இந்த நிலையில் உயிர் வினைகளை ஈட்டுவதில்லை; வினைகளை நுகர்ந்து கழிப்பதுமில்லை. மேலும் சொல்லப் போனால், அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிரினுக்கு தான் இருக்கும் இழிவான நிலையினை அறிந்து கொள்ளவோ, தன்னைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினை புரிந்து கொள்ளவோ, அந்த நிலையினை போக்கிக் கொள்ளவோ ஆற்றல் இல்லை. ஆணவ மலத்துடன் பிணைந்து இருப்பதால், அறியாமையின் வடிவமாக இருக்கும். எனவே தான் இருள் நிலை என்றும் அழைக்கப்படுகின்றது..
அறிவு இச்சை செயல் ஏதுமின்றி ஆணவ மலத்துடன் பிணைந்து கேவல நிலையில் கிடக்கும் உயிரின் நிலை கண்டு இறைவன் கருணை கொள்கின்றான். உயிருக்கு அறியாமையை உண்டாக்கும் ஆணவ மலத்தினைக் கழித்துக் கொள்வதற்கு உயிருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர திருவுள்ளம் கொள்கின்றான். உயிருடன் பிணைந்து நிற்கும் ஆணவ மலத்தின் தன்மைக்கு ஏற்ப ஒரு உடலுடன் உயிரினை கூட்டுகின்றார். பின்னர் அந்த உடலுக்கு கருவி கரணங்களை அளித்து, தனது அறியாமையை போக்கிக் கொள்ள உதவி செய்கின்றார். எனவே இந்த நிலையில் உயிருக்கு செயல் புரியும் ஆற்றல் ஏற்படுகின்றது, அறிவு உண்டு, இச்சை உண்டு, மேலும் தான் செய்யும் செயல்களால் வினைகளை ஈட்டுதலும் நடைபெறுகின்றது. பழைய பிறவிகளில் ஈட்டிய வினைகளை நுகர்ந்து ஆணவ மலத்தினை சிறிது சிறிதாக கழித்துக் கொள்ளும் ஆற்றலும் உயிருக்கு ஏற்படுகின்றது. இதனை சகல நிலை என்றும் கூறுவர். சகல என்றால் கலைகளுடன் பொருந்திய என்று பொருள். கலை என்றால் மாயா காரியம் என்று பொருள். உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் இதனில் அடங்கும். இந்த மாயா காரியத்தால், உலகில் உள்ள பொருட்களை நிலையான பொருளாக கருதி, உயர்ந்த பொருளாக கருதி, உயிர் அந்த பொருட்கள் தரும் மயக்கத்தில் ஆழ்ந்து பலவிதமான சிற்றின்பங்களை அனுபவிக்கின்றது. மேலும் தன்னுடன் பிணைந்துள்ள வினைகளின் பயனை நுகர்ந்தும் கழிக்கின்றது. எனவே தான் இந்த நிலையினை சகல நிலை என்றும் மருள் நிலை என்றும் கூறுவார்கள். தனு என்றால் உடல் என்று பொருள்; கரணம் என்றால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவுக் கருவிகள் (மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐந்து ஞானேந்திரியங்கள்) செயற்கருவிகள் (கால் கை வாய் எருவாய் மற்றும் கருவாய் ஆகிய ஐந்து கன்மேந்திரியங்கள்) மற்றும் நான்கு உட்கருவிகள் (மனம் சித்தி புத்தி அகங்காரம்) ஆகும். புவனம் என்பது உலகினையும் உலகினில் உள்ள மாயா காரியங்கள் நிகழ்த்தும் பொருட்களையும் குறிக்கும். இவ்வாறு உயிர், உடலுடன் இணைந்து, பல கருவிகளின் உதவியால் உலகப் பொருட்களின் மூலம் இன்பம் பெறுவதையே, தனுகரணபுவன போகம் என்று கூறுவார்கள். இதுவே இந்த பாடலில் போகம் என்று குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய போகத்தை அனுபவிக்கும் உயிர், மேலும் பல வினைகளையும் ஈட்டிக் கொள்கின்றது. இவ்வாறு இறைவன், உயிரினை, உடல், கருவிகள், உலகம், உலகத்திலுள்ள நுகர்ச்சிப் பொருட்கள் ஆகியவற்றுடன் கூட்டும் செயலை, அவனைத் தவிர்த்து வேறு எவரும் செய்ய இயலாது என்பதால், இறைவனே போகமாக இருப்பதாக கூறுவது வழக்கம்.
இத்தகைய சகல நிலையில் உள்ள உயிர், மாறி மாறிப் பிறந்து பிறவிகள் தோறும் இன்ப துன்பங்களை அனுபவித்து படிப்படியாக பக்குவம் பெறுகின்றது. உலகத்தில் உள்ள பொருட்களை நிலையாக கருதி வந்த உயிர், நாளடைவில் ஆணவமலம் மெலிவடைந்து தனது வலிமையினை இழக்க, உலகப் பொருட்களினும் பெரியதும், என்றும் அழிவில்லாமல் இருப்பதும், மிகுந்த ஆற்றல் உடையதும் ஆகிய பொருள் ஒன்று உண்டு என்பதை உணர்த்து அதனை அறியத் தலைப்படுகின்றது. இந்த நிலையில் உள்ள பக்குவம் பெற்ற உயிர்களுக்கு இறைவனே, ஞானாசிரியனாக தோன்றி, பதி பசு பாசம் ஆகிய மூன்று பொருட்களின் தன்மையை முழுவதுமாக அறிந்து கொள்ளும் ஆற்றலை உயிர்க்கு வழங்கி, உயிரினை ஆட்கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிரினுக்கு விடுதலை அளித்து, என்றும் அழியாத பேரின்பத்தில் உயிரினை ஆழ்த்துகின்றான். இந்த நிலையே சுத்தநிலை என்று அழைக்கப் படுகின்றது. இவ்வாறு போகமுமாக நின்று இறைவன் உயிர்களுக்கு உதவி புரியும் நிலையினை எடுத்துரைக்கும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்க காண்போம்.
தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.2.2) அப்பர் பிரான், உயிர்கள் அனுபவிக்கும் போகத்திற்கு காரணமாக இருக்கும் பெருமான், என்றும் அழிவற்ற நிலையான பொருளாகவும் உள்ளார் என்று கூறுகின்றார்.
நாகம் அரைக்கசைத்த நம்பர் இந்நாள் நனிபள்ளி உள்ளார் போய்
நல்லூர்த் தங்கி
பாகப் பொழுதெலாம் பாசூர்த் தங்கிப் பரிதிநியமத்தார் பன்னிருநாள்
வேதமும் வேள்விப் புகையும் ஓவா மிழலை எழுநாள் தங்கிப்
போகமும் பொய்யாப் பொருளும் ஆனார் புலியூர்ச் சிற்றம்பலமே
புக்கார் தாமே
திருவஞ்சைக்களத்தில், தனது தோழன் சேரமான் பெருமான் நாயனாரின் வேண்டுகோளுக்கு இணங்கி வெகுநாட்கள் தங்கிய சுந்தரருக்கு திருவாரூர்ப் பெருமானைப் பிரிந்து இத்தனை நாட்கள் இருந்தது தவறு என்று தோன்றவே, ஆரூர்ப் பெருமானை மறந்து இருக்கலாமா என்ற பொருள்பட பாடிய திருப்பதிகத்தின் முதல் பாடலில், போகமும் திருவும் புணர்ப்பான் என்று இறைவனை குறிப்பிட்டு பாடுகின்றார்.
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும்
உணர்ப்பானைப்
பின்னை என பிழையைப் பொறுப்பானைப் பிழையெலாம் தவிரப்
பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மானை எளிவந்த
பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்தணி ஆரூரானை மறக்கலுமாமே
அற்புதப்பத்து பதிகத்தின் பாடலில் (8.41.5) மணிவாசகர் பலவகையான போகங்களில் மூழ்கி களித்துத் திரிந்த தன்னை, அந்த போகங்களிளிருந்து விடுவித்து அற்புதம் புரிந்தார் என்று கூறுகின்றார். எனவே போகத்தில் ஆழ்த்தும் பெருமான், போகத்திலிருந்து விடுவிக்கவும் செய்வார் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து புரிந்து கொள்கின்றோம். பக்குவப்பட்ட உயிர்களுக்கு பெருமான் அருளும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.
மாடும் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடும்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை
வீடு தந்து என்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல் காட்டி
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டதோர் அற்புதம் அறியேனே
போகம்=உயிர்கள் சிற்றின்பம் நுகரும் நிலை; இன்பம்=சிற்றின்பத்திற்கு மாறாக உள்ளதும் என்றும் அழியாமல் இருப்பதும் ஆகிய பேரின்பம்; ஆகம்=உடல்; நுதல்=நெற்றி; நன்னுதல்=அழகிய நெற்றி; அடியார்களின் உள்ளத்தைத் தனது உறைவிடமாக இறைவன் கொள்கின்றார் என்று ஞானசம்பந்தர் கூறுவது நமக்கு திருமூலரின் பாடலை நினைவூட்டுகின்றது. நமது உள்ளமாகிய மனமண்டலமே சிவபெருமான் உறையும் கருவறை என்றும், தசையால் ஆகிய நமது உடல் நமது ஆன்மாவின் ஆற்றலைக் குறைத்து வைத்துள்ள கோயில் என்றும், வள்ளலாகிய சிவபெருமானை சென்று வழிபட உதவும் கோயில் வாசலாக நமது வாய் உள்ளது என்றும், நன்றாக புரிந்து கொண்டு தெளிவு பெற்ற ஜீவர்களுக்கு, பொதுவாக அனைவர்க்கும் தீங்கு செய்யும் ஐம்புலன்களும் ஞான ஒளி பொருந்திய விளக்குகளாக மாறிவிடும் என்று இங்கே திருமூலர் கூறுகின்றார்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே
தனது உடலினையே கோயிலாக பாவித்து உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசங்களை கடிந்து நீக்கிய மனதினை சிவபிரானுக்கு அடிமையாக மாற்றி, மலங்கள் நீக்கப் பெற்ற தூய்மையான மனத்துடன், தனது மனதின் மணியாக விளங்கும் ஆன்மாவையே இலிங்கமாக பாவித்து, தனது அன்பினையே நீராகவும் பாலாகவும் நினைத்து அந்த நீரினால் இறைவனை நன்றாக நீராட்டி, தனது வணக்கங்களை இறைவனுக்கு அளிக்கும் நிவேதனப் பொருளாக படைத்து, இறைவனை தான் பூசை செய்தததாக அப்பர் பிரான் கூறும் பாடல் (4.76.4) நமது நினைவுக்கு வருகின்றது. காயம்=உடல்: கடிமனம்=உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசத்தைக் கடிந்து ஒதுக்கும் மனம்: தினமும் சிவபூஜை செய்வோர், இந்த பாடலை முதலில் ஓதிவிட்டு பின்னர் புறப் பூஜை தொடங்குதல் வழக்கம். தான் சிவபெருமானுக்கு புரிந்த அகப்பூசையை அப்பர் பிரான் இந்த பாடலில் விளக்குகின்றார்
காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே
பொழிப்புரை:
உயிர்கள் அனுபவிக்கும் சிற்றின்பமாகவும், பக்குவப்பட்ட ஆன்மாக்கள் அனுபவிக்கும் வீடுபேற்று இன்பமாகவும் விளங்கும் பெருமானே உன்னைப் போற்றுகின்றோம் என்று புகழுந்து வணங்கும் அடியார்களின் மனதினைத் தனது உறைவிடமாக ஏற்றுக்கொண்டு அமர்பவரும், கொன்றை மலர் நாகம் பிறைச் சந்திரன் ஆகிய பொருட்களைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவரும், அழகிய நெற்றியினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டவரும் ஆகிய பெருமான் பாண்டிக்கொடுமுடி தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 6:
கடிபடு கூவிள மத்தம் கமழ்சடை மேல் உடையாரும்
பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும்
வடிவுடை மங்கை தன்னோடு மணம் படு கொள்கையினாரும்
படிபடு கோலத்தினாரும் பாண்டிக் கொடுமுடியாரே
விளக்கம்:
சிலை=வில்; கூவிள=வில்வம்; மத்தம்=ஊமத்தை மலர்; கடி படு=நறுமணம் பொருந்திய; மணம்படு கொள்கை=திருமணம் செய்து கொள்வதற்கு இசைந்த தன்மை; தனது தந்தை தக்கனால் தனக்கும் தனது கணவருக்கும் நேர்ந்த அவமானத்தைத் தாங்க முடியாத தாட்சாயணி ஹோமகுண்டத்தில் விழுந்து தனது உடலை நீக்கிக் கொண்ட பின்னர், சிவபெருமான் யோகத்தில் ஆழ்ந்தார். இதனிடையில் சூரபத்மனும் அவனது தம்பியரும் மிகுந்த வலிமை பெற்றவர்களாக அரக்கர்கள் அல்லாத அனைவரையும் துன்புறுத்தி வந்தனர். அவர்களை அழிப்பதற்கு சிவனது அம்சம் பொருந்திய பாலகன் வேண்டும் என்ற எண்ணத்தில், சிவபெருமான் தனது தவத்தைக் கைவிட்டு பார்வதி தேவியை திருமணம் புரியவேண்டும் என்று தேவர்கள் அனைவரும் விரும்பினார்கள். பார்வதி தேவியும் இமவானின் மகளாக பிறந்து, இறைவனை அடையவேண்டும் என்று தவம் இருந்தார். பார்வதி தேவியின் தவத்தினால் மகிழ்ந்த பெருமான், பார்வதி தேவியைத் திருமணம் செய்துகொள்ள இசைந்தார். இந்த செய்கையே, மணம்படு கொள்கை என்ற தொடர் மூலம் குரிப்பிடப்படுகின்றது. சௌந்தர்ய நாயகி, வடிவுடை மங்கை என்பன தலத்து இறைவியின் திருநாமங்கள்; படிபடு கோலம் என்ற தொடருக்கு பல வகையான விளக்கங்கள் தரப்படுகின்றன. தனது அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு பெருமான் எடுக்கும் வேடங்கள் என்பது ஒரு விளக்கம், இந்த கோலங்கள், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், பல தல புராணங்களில் காணப்படுகின்றன. படிபடு கோலத்தினார் என்பதற்கு, அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு அளிக்கப் பட்ட கோலங்கள் என்று அனைத்து உயிர்களுடனும் கலந்திருக்கும் இறைவனின் தன்மையை குறிப்பிடுவதாக ஒரு விளக்கம் கூறப்படுகிர்னது. எல்லா உயிர்களிலும் படிந்த தன்மை என்று தருமையாதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. .
பொழிப்புரை:
நறுமணம் கமழும் வில்வ இலைகள் மற்றும் கொன்றை மலர்கள் பொருந்தி விளங்கும் வண்ணம் அணிந்துள்ள பரந்த சடையினை உடையவரும், மூன்று பறக்கும் கோட்டைகளும் சாம்பல் பொடியாக அழியும் வண்ணம் அழிக்கும் ஆற்றல் உடைய அம்பினையும் வில்லினையும் உடையவரும், அழகு மிகுந்த பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்துடன் தான் மேற்கொண்டிருந்த தவத்தினை விடுத்தவரும், உலகிலுள்ள அனைத்து உயிர்களுடனும் இணைந்து நிற்பவரும் ஆகிய சிவபெருமான் பாண்டிக்கொடுமுடி தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 7:
ஊனமர் வெண்தலை ஏந்தி உண்பலிக்கென்று உழல்வாரும்
தேன் அமரும் மொழி மாது சேர் திருமேனியினாரும்
கானமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக் கரை மேல்
பானல நீறு அணிவாரும் பாண்டிக் கொடுமுடியாரே
விளக்கம்:
பண்மொழியம்மை என்ற தலத்து தேவியின் திருநாமத்தை உணர்த்தும் வகையில் தேன் அமரும் மொழி மாது என்று குறிப்பிடுகின்றார். பானல நீறு=பால் நல நீறு என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும். பாலைப் போன்ற நீறு. திருநீற்றினை பாலுக்கு ஒப்பிடுகின்றார். பால் போன்று பல நன்மைகளை செய்யவல்ல திருநீறு என்று கூறுகின்றார். பால் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவது போன்று திருநீறும் நோயினைத் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது. கூன் பாண்டியனின் வெப்பு நோயினைத் தீர்க்க திருநீறு பயன்பட்ட விவரம் பெரிய புராணத்தில் மிகவும் விரிவாக கூறப்படுகின்றது. உடலுக்கு அழகினைத் தருவது உணவாக உட்கொள்ளப்படும் பால். திருநீறும் அணிந்தவர்களுக்கு அழகினையும் பிணிநீக்கம் வினைநீக்கம் போன்ற நன்மைகளையும் செய்கின்றது. .இறைவனின் பாலில் நீராட்டுவதை மிகவும் விரும்புவதைப் போன்று திருநீறு கொண்டு நீராட்டுவதையும் மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கின்றான். எனவே தான் பால் போன்ற வெண்ணீறு என்று மட்டும் சொல்லாமல், திருநீற்றின் மற்ற குணங்களையும் நமக்கு உணர்த்தும் வண்ணம் பால் போன்ற நீறு என்று கூறுகின்றனர்.
கொடிமாடச் செங்குன்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.3) பாலன நீறு புனைந்த என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாலன நீறு என்று பால் போன்று வெண்மை நிறம் கொண்ட திருநீறு என்று மட்டும் இங்கே உணர்த்தப் படவில்லை. பருகுவதற்கு இனியதாக இருக்கும் பால், உடலுக்கு சக்தியையும் அளிக்கின்றது. பூசுவதற்கு இனியதாக உள்ள திருநீறு, ஞானம் அளித்து உயிர்களின் ஆன்மப் பசியையும் தீர்க்கின்றது. எனவே தான் பாலுடன் திருநீறு ஒப்பிடப்படுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பத்தி தருவது நீறு, பரவ இனியது நீறு, முத்தி தருவது நீறு, பூச இனியது நீறு என்று குறிப்பிடும் திருநீற்றுப் பதிகம் நமது நினைவுக்கு வருகின்றது. நீதி=நியதி, கடமை, வழிமுறை; ஏலம்=மயிர்ச்சாந்து; மா=பெருமை வாய்ந்த; நன்=நன்மை பயந்த, நல்ல; உலகினுக்கு நன்மை பயந்த பெருமை வாய்ந்த கழுத்து என்று பெருமானது கழுத்து இங்கே உணர்த்தப் படுகின்றது.
பாலன நீறு புனை திகழ் மார்பில் பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழல் ஏத்தல் நீதியே
அச்சிறுப்பாக்கம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.77.2) பாலன நீற்றர் என்று ஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். தேன் உண்ணும் போது இனிய சுவை தந்தாலும், பின்னர் ஒரு வகையான புளிப்புச் சுவையினைத் தருகின்றது. ஆனால் பெருமானோ எப்போதும் இனிய உணர்வுகளை மனதினில் ஊறச்செய்பவர் என்பதால் தேனினும் இனியர் என்று கூறினார் போலும். கரும்பு, கடித்து உண்பவரின் முயற்சிக்கு ஏற்ப, அவரது பருவத்திற்கு ஏற்ப இனிப்பினை நல்குகின்றது. பெருமானும் அடியார்களின் பக்குவத்திற்கு ஏற்ப இன்பத்தை அருளுவதால் கரும்பு போன்றவர் என்று கூறுகின்றார். வானகத்தை விடுத்து மண்ணுலகில் பெருமான் பொருந்தி இருப்பதாக இங்கே ஞானசம்பந்தர் கூறுகின்றார். வானுலகம் போகபூமி ஆதலின், அங்கே உயிர்கள் தாம் செய்த வினைகளின் ஒரு பகுதியை நுகர்ந்து கழித்துக் கொள்ள முடியுமே தவிர தங்களது வினைகளை முற்றிலும் நீக்கிக்கொள்ள முடியாது. ஆனால் நிலவுலகம் அந்த தன்மையிலிருந்து மாறுபட்டது. உயிர்கள் தங்களது வினைகளின் ஒரு பகுதியை, இன்ப துன்பங்களை துய்ப்பதன் மூலம் கழித்துக் கொள்வதன்றி, மனம் ஒன்றி பக்குவ நிலை அடைந்து பெருமானை வழிபட்டால் தங்களது மொத்த வினைகளையும் தீர்த்துக் கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் முடியும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
தேனினும் இனியர் பாலன நீற்றர் தீங்கரும்பு அனையர் தம் திருவடி
தொழுவார்
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று
அலாது ஊரார்
வானகம் இறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை
உடையார்
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுப்பாக்கம் அது ஆட்சி
கொண்டாரே
பொழிப்புரை:
தசைத் துகள்கள் பொருந்திய பிரம கபாலத்தைத் ஏந்தியவராக ஊர்கள் தோறும் பலி ஏற்பதற்காக திரிபவரும், தேன் பொருந்தியது போன்று இனிய மொழியினை உடைய பார்வதி தேவி சேர்ந்த உடலினை உடையவரும், காடுகளில் வாழ்வதை விரும்பும் மயில்கள் நடமாடுகின்ற காவிரிக் கரையில் அமர்ந்த வண்ணம், பால் போன்று பல நன்மைகளை அளிக்க வல்ல திருநீற்றினைத் தனது உடலெங்கும் பூசியவரும் ஆகிய சிவபெருமான் பாண்டிக் கொடுமுடி தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 8:
புரந்தரன் தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும்
பெருந்திறல் வாள் அரக்கன்னை பேரிடர் செய்து உகந்தாரும்
கருந்திரை மா மிடற்றாரும் காரகில் பன்மணி உந்திப்
பரந்து இழிப் பாங்கர்ப் பாண்டி கொடுமுடியாரே
விளக்கம்:
கர்வத்துடன் நடந்து கொண்ட காவிரி நதியினை அகத்தியர் தனது கமண்டலத்தில் அடக்கி சிறை வைத்தார் என்றும், அகத்தியர் வைத்திருந்த கமண்டலம் ஒரு காகத்தினால் உருட்டி விடப்பட காவிரி நீர் ஆறாகப் பாய்ந்தது என்றும் புராணம் கூறுகின்றது. வினாயகரே காகத்தின் வடிவில் வந்து கமண்டலச் சிறையிலிருந்து காவிரியை மீட்டார் என்பதை உணர்த்தும் வகையில், இந்த தலத்தில் காவிரி கண்ட விநாயகர் என்று தனி சன்னதியே உள்ளது. திருக்கோயிலின் உள்ளே அகத்தியர் உருவமும் உள்ளது. அகத்தியர் இறைவனை இங்கே வழிபட்டார் என்றும் கூறுவார்கள். இந்த வரலாற்றினை உணர்த்தும் வகையில், பரந்து கீழே இறங்கி ஓடிய காவிரி நதி என்று சம்பந்தர் கூறுவதாக சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார். கருந்திரை=கருமையான அலைகள் கொண்ட கடல். அமுதம் பெறுவதற்காக கடையப் பட்டது பாற்கடல் என்றாலும், கடலின் பொதுவான தன்மை கருதி கருந்திரை என்று சொல்லப் பட்டுள்ளது. அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே அடர்த்து நெருக்கியது, பெருமான் விளையாட்டாக செய்த செயல் என்பதை உணர்த்த உகந்தார் என்று கூறினார் எனலாம். பின்னர் அவர் இசைத்த சாமகானம் கேட்டு மனம் மகிழ்ந்து பல வரங்கள் அளித்ததையும் குறிப்பிடும் வகையில் உகந்தார் என்ற சொல்லுக்கு பொருள் கொள்வதும் பொருத்தமே. கார்கில்=கரிய அகில் கட்டைகள்;
இந்த திருக்கோயிலில் திருமால் மற்றும் பிரமனின் சன்னதிகள் உள்ளன. எனினும் சிவபெருமான் அவர்களினும் மேம்பட்ட கடவுள் என்பதை உணர்த்தும் வண்ணம், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் முழுமுதற்கடவுள் என்று சிவபெருமானை வழிபட்டதை குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் அடுத்த பாடல், பிரமனும் திருமாலும், பெருமானின் அடிமுடியை காணாமல் திகைத்த வரலாறு சொல்லப் படுகின்றது.
பொழிப்புரை:
இந்திரன் உள்ளிட்ட பல வானவர்கள் போற்றி என்று புகழ்ந்து வணங்கும் வண்ணம் முழுமுதற் கடவுளாக இருப்பவரும், பெருத்த வலிமை உடைய அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே நெருக்கி தாங்கொணாத் துன்பம் இழைத்துப் பின்னர் அவன் சாமகானம் இசைத்து இறைஞ்சிய போது வரங்கள் அளித்து உவகை அடைந்தவரும், கருமையான அலைகள் கொண்ட கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடத்தினை உணர்த்தும் வண்ணம் கருமையான கறை படிந்த கழுத்தினை உடையவரும் ஆகிய பெருமான், கரிய அகில் கட்டைகளையும் பல மணிகளையும் அடித்துத் தள்ளிக்கொண்டு பாய்வதும் பரந்த நீர்ப்பரப்பினை உடையதும் ஆகிய காவிரி நதியின் கரையில் உள்ள பாண்டிக் கொடுமுடி தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 9:
திருமகள் காதலினானும் திகழ் தரு மாமலர் மேலைப்
பெருமகனும் அவர் காணாப் பேரழல் ஆகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறையாரும் பாண்டிக் கொடுமுடியாரே
விளக்கம்:
மாமலர்=சிறப்பு வாய்ந்த தாமரை மலர்; மறு=நறுமணம்; சந்து=சந்தனக் கட்டைகள்; மாடே=அருகில்
பொழிப்புரை:
திருமகளின் காதலனாக விளங்கும் திருமாலும், சிறப்புடன் திகழும் தாமரை மலரினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள பிரமனும், தங்களது முன்னே தோன்றிய நீண்ட தழற்பிழம்பின் அடியையும் முடியையும் காண முடியாது தவிக்கும் வண்ணம், பேரழலாக தோன்றியவர் சிவபெருமான். நறுமணம் மிகுந்ததும் மேன்மை பொருந்தியதும் ஆகிய மலர்களும், சந்தனக் கட்டைகளும் அடித்துக் கொண்டு வரப்படும் காவிரி ஆற்றின் கரைகளில் பருத்த மணிகளும் காவிரியின் நீர்ப்பெருக்கினால் ஒதுக்கப்பட்டு உள்ளன. இத்தகைய செல்வச் செழிப்பு வாய்ந்த காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள பாண்டிக்கொடுமுடி தலத்தினில் இறைவன் சிவபெருமான் உறைகின்றார்.
பாடல் 10:
புத்தரும் புந்தியிலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால்
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபலவற்றால்
சித்தரும் தேவரும் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம் பணிந்து ஏத்தும் பாண்டிக் கொடிமுடியாரே
விளக்கம்:
புந்தி=புத்தி; மெய்த்தவம்=சிவபெருமானை வழிபடுவதே உண்மையான தவம் என்று பல திருமுறை பாடல்கள் எடுத்துரைக்கின்றன. எனவே சிவபெருமானை நிந்தனை செய்து வாழ்ந்த சமணர்கள் மற்றும் புத்தர்கள் செய்த தவத்தினை மெய்த்தவம் அல்ல என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகிறார். வெங்குரு (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.94.5) பெருமானின் திருவடிகளை வழிபடுவதே தவம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார்.
மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவு அசைத்தீரே
அக்கினொடு அரவு அசைத்தீர் உமது அடியிணை
தக்கவர் உறுவது தவமே
சிறுகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.97.6) பெருமானை வாழ்த்தும் அடியார்கள் தவப்பேறு உடையவர்கள் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். அவர்கள் எதனைக் கண்டும் அச்சம் கொள்ளாதவர்களாகவும் பல நலன்கள் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.
செங்கயல் புனல் அணி சிறுகுடி
மங்கையை இடம் உடையீரே
மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார்
சங்கை அது இலர் நலர் தவமே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.3.11) அப்பர் பிரான், தவம் செய்வதாக சொல்லிக் கொண்டு பாவங்களை புரியும் சமணர்கள் என்று கூறுகின்றார். உடை உடுத்தாமல் இருத்தல் மற்றும் நீராடாமை சமணத் துறவிகளுக்கு உரிய நெறியாக கருதப் பட்டாலும், சமணப் பெண் துறவிகள் உடை அணிந்து வாழ்ந்தனர் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து அறிகின்றோம். சமணப் பெண் துறவிகள், ஆண் துறவிகளுக்கு சேவை செய்து வந்தனர். அத்தகைய சேவைகளில் ஒன்று தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. சமணசமய நூல்களைக் கற்றுத் தேர்ச்சி அடைவதால் மட்டுமே எவருமே சமண குருவாக மாற முடியாது. அவர்கள் பொறுமையின் எல்லையை சோதனை செய்து பார்த்த பின்னரே, அவர்கள் குருவாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். முடி பறித்தல் என்பது அத்தைகைய ஒரு சோதனை. தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றாக, அடுத்தவரால் பிடுங்கப்படும் போது ஏற்படும் வலியினைப் பொறுத்துக் கொண்டு கண்களில் நீர் வாராமல் இருக்கும் பக்குவத்தை அடைந்தவர்களே பொறுமையில் சிறந்தவர்களாக கருதப் படுவார்கள். கொன்றை மலர்கள் மலரும் பருவத்தில், அவை கொத்தாக மலர்ந்து மரத்தில் உள்ள இலைகளை மறைக்கும் அளவுக்கு, மிகவும் அதிக அளவினில் பூக்கும் என்ற செய்தியை, அப்பர் பிரான் இங்கே இலைகளை மறைக்கும் கொன்றை மலர்கள் என்று கூறுகின்றார்.
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால் நம்
தெய்வம் என்று தீண்டித்
தலை பறிக்கும் தன்மையர்களாகி நின்று தவமே என்று அவம் செய்து
தக்கது ஓரார்
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதனழியச் செற்ற
சேவடியினானை
இலை மறித்த கொன்றை அந்தாரான் தன்னை ஏழையேன் நான் பண்டு
இகழ்ந்தவாறே
பொழிப்புரை:
அறிவில்லாத புத்தர்களும் சமணர்களும் பொய்யான சொற்களைப் பேசுவார்கள்; மேலும் உண்மையான தவசிகள் பேசுவதைப் போன்று உண்மையான வார்த்தைகளை எப்போதும் பேச மாட்டார்கள். எனவே அவர்களது பொய்மொழிகளை முற்றிலும் புறக்கணிப்பீர்களாக. தங்களது பழக்கத்திற்கு ஏற்ப பல விதவிதமான உடைகளை உடுத்திக் கொண்டு வாழும் சித்தர்களும், தேவர்களும் அடியார்களும் ஒன்று கூடி பெருமானை வணங்க, செழிப்பான மலர்களைத் திருவடிகளில் தூவி அடியார்களால் பணிந்து வணங்கிப் புகழப்படும் பெருமான் திருபாண்டிக் கொடுமுடி தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 11:
கலமல்கு தண் கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம்பந்தன்
பல மல்கு வெண்டலை ஏந்தி பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தையராகி நன்னெறி எய்துவர் தாமே
விளக்கம்:
ஏந்தி=ஏந்தியவராகிய பெருமான்; நன்னெறி=வீடுபேறு; நலமல்கு=நலம் பயக்கும் சிந்தனைகள்; கலம்=மரக்கலம்; தண்=குளிர்ச்சி பொருந்திய; பலமல்கு வெண்டலை என்று பெருமான் தனது கையினில் ஏந்தியுள்ள பிரமகபாலத்தின் சிறப்பினை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பிரமனின் ஆணவத்தினை அடக்கியதன் அடையாளமாக உள்ள தலை; அடியார்கள் இடும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய இழிவான பொருட்களையும் ஏற்றுக் கொள்ளும் தலை; எத்தனை மனிதர்கள் தங்களது மலங்களை சமர்ப்பித்தாலும், நிறையாமல் நின்று, அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் படைத்த தலை; வேறு எவராலும் தீண்ட முடியாத தலை; என்று பலவிதமான சிறப்புகளைக் கொண்டது.
பொழிப்புரை:
மரக்கலங்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய கடலால் சூழப்பட்ட சீர்காழி நகரினைச் சார்ந்த ஞானசம்பந்தன், பல சிறப்பான தன்மைகள் பொருந்திய தலையினை, உலர்ந்து வெண்மையாக காணப்படும் பிரம கபாலத்தைத் தனது கையினில் ஏந்தியவராக. திருப்பாண்டிக் கொடுமுடி தலத்தினில் உறையும் பெருமானைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் பத்தினையும் முறையாக சொல்லும் வல்லமை வாய்ந்த அடியார்கள் தங்களது துயரங்கள் தீர்ந்து, நலம் தரும் சிந்தனை உடையவர்களாகி, அதன் பயனாக மறுமையில் முக்திநெறியினை அடைந்து என்றும் அழியாத பேரின்பத்தில் திளைப்பார்கள்
முடிவுரை:
பெண்ணமர் மேனியராகவும், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவனாகவும், நெற்றியில் கண் உடையவனாகவும், காதினில் குழை அணிந்தவராகவும், மிகவும் அரியதான எட்டு குணங்களை உடையவராகவும் இருக்கும் பெருமான் என்று பதிகத்தினைத் தொடங்கும், ஞானசம்பந்தர், சிவபெருமானுக்கு மட்டுமே உரித்தான தன்மைகளை பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்துகின்றார். வேறு எவராலும் செய்யமுடியாத அருளினைத் தனது அடியார்களுக்கு அருளும் தன்மையன் என்றும், அடியார்களின் வினைப் பகையைத் தீர்ப்பவன் என்றும் இரண்டாவது பாடலில் கூறுகின்றார். திருநீற்றினைத் தனது உடலின் மீது, சந்தனமாக கருதி பூசிக் கொண்ட பெருமான் என்று மூன்றாவது பாடலிலும் உலகத்தைக் காப்பதற்காக, அனைவரையும் பதைபதைத்து ஓடச் செய்த ஆலகால விடத்தினை உட்கொண்டவன் என்று நான்காவது பாடலிலும், அனைத்து உயிர்களும் நுகரும் போகமாகவும் பக்குவப்பட்ட உயிர்கள் மறுமையில் அடையும் வீடுபேற்று இன்பமாகவும் இருப்பவன் என்று ஐந்தாவது பாடலிலும், திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளையும் ஒரு நொடியில் அழித்து பொடியாக்கிய அம்பினை உடைய பெருமான் என்று ஆறாவது பாடலிலும், பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் ஊரூராகச் சென்று அடியார்களின் மலங்களை ஏற்றுக் கொண்டு அதற்கு பதிலாக முக்திநெறியை அளிக்கும் ஆற்றல் வாய்ந்தவன் என்று ஏழாவது பாடலிலும், தனது அடியார்களுக்கு வரம்பற்ற இன்பம் அளிப்பவன் என்று எட்டாவது பாடலிலும், பிரமனும் திருமாலும் காண முடியாத வண்ணம் நெடுந்தழலாக உயர்ந்தவன் என்று ஒன்பதாவது பாடலிலும், பெருமானின் தனித்துவம் வாய்ந்த தன்மைகளை ஞானசம்பந்தர் எடுத்துரைக்கின்றார். பத்தாவது பாடலில் பலதரப்பட்ட அடியார்கள் பெருமானைப் போற்றி புகழ்கின்றனர் என்று குறிப்பிட்டு, நாமும் அவர்களைப் பின்பற்றி பெருமானை வழிபடவேண்டும் என்று உணர்த்துகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள், தங்களது துயரங்கள் தீர்க்கப்பட்டு, நலம் பயக்கும் சிந்தனை உடையவர்களாக மாறி, மறுமையில் வீடுபேறு அடைவார்கள் என்று கூறுகின்றார். பெருமானின் ஒப்பற்ற பல குணங்களையும் அவரது ஆற்றல்களையும் அவரது வரம்பிலாத கருணையையும் அறிந்து கொண்ட நாம், பாண்டிக்கொடுமுடி தலத்து இறைவனைப் பணிந்து வணங்கி, ஞானசம்பந்தப் பெருமான் அருளிய பதிகத்தினை முறையாக ஓதி, இம்மையிலும் மறுமையிலும் இறைவனின் அருளால் பல நன்மைகளைப் பெற்று வாழ்வினில் உய்வினை அடைவோமாக.