இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பிறைகொள் சடையர்

பிறைகொள் சடையர்

பதிக எண்: 1.71 திரு நறையூர் சித்தீச்சரம் தக்கேசி

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக வலஞ்சுழி சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு பழையாறை, சத்திமுற்றம், பட்டீச்சரம்,இரும்பூளை முதலான தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் அரதைப் பெரும்பாழி தலம் செல்கின்றார். அதன் பின்னர் திருச்சேறை, திருநாலூர்,குடவாயில், நறையூர் சித்தீச்சரம், தென்திருப்புத்தூர் ஆகிய தலங்கள் சென்றதாக பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன. தலத்தின் பெயர் நறையூர் திருக்கோயிலின் பெயர் சித்தீச்சரம். தலத்தின் பெயரையும் திருக்கோயிலின் பெயரையும் இணைத்து நறையூர் சித்தீச்சரம் என்று தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. ஊருலாவு பலி கொண்டு என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், திருஞானசம்பந்தர், தனது நெஞ்சத்தை விளித்து சித்தீச்சரம் செல்வாய் என்றும், நினைவாய் என்றும், சென்றடைவாய் என்றும், தெளிந்து நினைவாய் என்றும், பல பாடல்களில் குறிப்பிடுவதால், இந்த தலம் செல்லும் வழியில் அருளிய பதிகமாக, இந்த பதிகம் கருதப் படுகின்றது. இந்த பதிகத்தை சிந்தித்த நாம், இந்த தலம் சென்றடைந்த பின்னர் அருளிய ஒரு பதிகத்தை இங்கே சிந்திக்கின்றோம். பிறை கொள் சடையர் என்று பெருமானின் சடையில் பிறைச் சந்திரன் இருக்கும் தன்மையை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அடுத்த ஏழு பாடல்களிலும் பெருமானின் சடையின் மற்ற சிறப்புகளை உணர்த்துகின்றார். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன.

கும்பகோணத்திலிருந்து பத்து கி.மீ. தூரத்தில் நாச்சியார்கோயில் செல்லும் வழியில் உள்ள தலம். இறைவனின் திருநாமம் சித்த நாதேஸ்வரர்; இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி, அழகாம்பிகை; கோரக்கர் சித்தர் ஒரு சமயம் தோல் வியாதியால் வருந்திய போது, இங்குள்ள இறைவனை வழிபட்டு, தனது நோயினைத் தீர்த்துக் கொண்டமையால், இறைவனுக்கு சித்தநாதர், சித்தநாதேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இந்த தலத்தில் வாழ்ந்து வந்த மேதாவி என்ற முனிவர், இலட்சுமி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று சிவபெருமனை நோக்கி தவம் இருந்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த பெருமானும், முனிவரின் வேண்டுகோளை திருமாலிடம் தெரிவிக்க, இலக்குமி தேவி, இந்த தலத்தின் தீர்த்தக் குளத்தில் இருந்த தாமரை மலரில் குழந்தையாக தோன்றினாள். அந்த குழந்தையை வஞ்சுளாதேவி என்ற பெயரில் வளர்ந்து வந்த முனிவர், தகுந்த பருவம் வந்ததும் மகளை திருமாலுடன் மணமுடிப்பதற்கு விரும்பவே, அதற்குரிய ஏற்பாடுகளை பார்வதி தேவியும் சிவபெருமானும் செய்தனர். இலக்குமி தேவியின் அவதாரத் தலமாக கருதப் படுவதால், தலத்து சன்னதியில், குழந்தை வடிவினில் நாம் மகாலட்சுமியை இங்கே காணலாம். மழலை மகாலட்சுமி என்று அழைக்கின்றனர். இந்த பெயருக்கு ஏற்றாற்போல், தாயாருக்கு பாவாடை சட்டை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். மேதாவி முனிவரின் உருவச்சிலை திருக்கோயிலில் உள்ளது. நரன் நாராயணர் என்ற இருவர், இந்த தலத்தினில் தவம் செய்து கொண்டு இருக்கையில், ஒரு அசுரன் அவர்களது தவத்திற்கு இடையூறு செய்தான். எளிதில் வெல்ல முடியாத அந்த அரக்கனை நேர்வழியில் வெல்ல முடியாமல், அவனது கவச குண்டலங்களை அவனிடமிருந்து தானமாக பெற்ற பின்னர், அவனுடன் போர் புரிந்து நரநாராயணர் வென்றனர். பின்னர், அந்த பாவத்தை போக்கிக் கொள்ள, சித்தநாதரை நோக்கி தவம் இருந்தனர்.தியானத்தில் இவர்கள் ஆழ்ந்திருந்த நேரத்தில், துருவாச முனிவர் அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வருகை தந்தார். ஆனால் நர நாராயணர்களோ துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட முனிவர், அவர்கள் இருவரையும் பறவைகளாக மாறுமாறு சாபம் கொடுத்தார். அவர்கள் இருவரும் முறையே நறையூர் மற்றும் நாரையூர் தலத்தில் எழுந்தருளிய இறைவனை வழிபாட்டு சாப விமோசனம் பெற்றனர் என்று தல புராணம் கூறுகின்றது. திருநாரையூர் தலபுராணம் நாரை செய்த வழிபாட்டுக்கு காரணம் வேறொரு நிகழ்ச்சி என்றும் உணர்த்துகின்றது. அந்த நிகழ்ச்சியும் துர்வாச முனிவருடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சியாகும். இந்த திருக்கோயிலில் பறவைகளாக மாறிய நரநாராயணர் இறைவனை வழிபடுவது போன்ற புடைப்புச் சிற்பம் உள்ளது. மேலும் குபேரன், தேவர்கள், கந்தர்வர்கள், சூரியன், பிரமன், இறைவனை வழிபட்டு பயன் அடைந்ததாக கூறுகின்றனர்.வேதங்கள் வழிபட்டமையால் இறைவனை வேதலிங்கம் என்றும் அழைக்கின்றனர்.

மாடக்கோயில் அமைப்பில் உள்ள திருக்கோயில். சோழர்களால் திருப்பணி செய்யப்பட்ட இந்த திருக்கோயில், மேற்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் கொண்டுள்ளது. இறைவன் சன்னதியும் மேற்கு நோக்கியுள்ளது. ஆவணி மற்றும் மாசி மாதங்களில் மூன்று நாட்கள், மாலை நேரத்து சூரியனின் கதிர்கள் நேரே இறைவனின் சன்னதி சென்றடைந்து பெருமான் மீது படர்கின்றன. இதனை சூரியன் செய்யும் வழிபாடு என்று கூறுகின்றனர்.கருவறைச் சுற்றில் கோஷ்டத்தில் காணப்படும் தென்முகக் கடவுள், கோயிலின் மேற்குச் சுற்றிலும் காணப் படுகின்றார். மகாலட்சுமி சன்னதிக்கு அருகில் மேற்கு நோக்கிய வண்ணம் தென்முகக்கடவுள் இங்கே காட்சி தருகின்றார். இவருக்கு எதிரில் நவகிரக சன்னதி உள்ளது. தனது வாகனமாகிய இடபத்தின் தலை மீது கை வைத்தவராக மாதொருபாகனாக இறைவன் காட்சி அளிக்கும் சிற்பம் கலைநயம் பொருந்தியது. மற்றும் கோஷ்டத்தில் உள்ள இலிங்கோத்பவர் பிட்சாடனர், சிற்பங்களும் அழகாக அமைந்துள்ளன. பிரமன் மற்றும் துர்கையையும் நாம் கோஷ்டத்தில் காணலாம். சுவாமி கோஷ்டத்தில் கோரக்கர் செய்யும் வழிபடு, சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. பிராகாரத்தில், ஒரே சன்னதியில் மூன்று சண்டீசர்களையும் நாம் காணலாம். செம்பியன் மாதேவி காலத்தில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை மிகவும் அழகாக உள்ளது. கோஷ்டத்தில் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்திய வண்ணமும், தனது வலது காலினை சற்று முன்புறமாக வைத்தும் நளினமான தோற்றத்தில் துர்கையன்னை காட்சி தருகின்றாள். பிராகாரத்தில் முருகர், சப்த கன்னியர், பஞ்சலிங்கம்,கால பைரவர் மற்றும் வீர பைரவர் சன்னதிகள் உள்ளன. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள், பெருமான் மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரும், நாச்சியார் கோயிலில் உள்ள பெருமாள் கோயிலுக்கு (வைணவ திவ்யதேசங்களில் ஒன்று) சென்று, தங்களது இல்லத்து மகளை பார்த்துவிட்டு வருவதாக நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளை ஒட்டி, பிறந்த வீட்டிலிருந்து சீரும், பெருமாள் கோயிலுக்கு அனுப்பப் படுகின்றது.

பாடல் 1:

பிறைகொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர்

கறைகொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர்

மறைகொள் கீதம் பாடச் சேடர் மனையின் மகிழ்வெய்தி

சிறைகொள் வண்டு தேனார் நறையூர் சித்தீச்சரத்தாரே

விளக்கம்:

சேடு=பெருமை; சேடர்=பெருமை உடையவர்; சேடர் என்ற சொல்லினை சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்று கொண்டால், சிறந்த ஒழுக்கமும் புகழும் உடையவர்கள் என்று பொருள். பேழ் வாய்=பிளந்த வாய்; பாம்பின் நாக்கு இரண்டாக பிளந்திருக்கும்; எனவே பேழ்வாய் நாகம் என்று கூறுகின்றார். வேதங்கள், பெருமானின் பல தன்மைகளையும் சிறப்புகளையும் உணர்த்துகின்றன. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் அனைத்து விஷயங்களையும் அனைவராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே தான் அருளாளர்கள், பல மொழிகளிலும், வேதங்களில் சொல்லப் பட்டுள்ள விவரங்களை, தங்களது பாடல்களில், மிகவும் எளிமையான முறையில், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உணர்த்துகின்றனர். இந்த தன்மையையே,திருஞானசம்பந்தர் மறை கொள் கீதம் என்று இங்கே குறிப்பிடுகின்றார். வேதங்கள் ஓதுவதை விரும்பி கேட்பது போன்று, சிவபெருமான் இத்தகைய பாடல்களையும் விரும்பி கேட்கின்றார். எனவே தான் நாமும் இத்தகைய கீதங்களை பாடி பெருமானின் அருள் பெற வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். தேவாரப் பாடல்கள் பாடுவதால், நாம் அடையவிருக்கும் பலன்களையும் பல தேவாரப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிறை=சிறகுகள்; தேனார்=தேனை விரும்பி உட்கொள்ளும்;

பொழிப்புரை:

ஒற்றைப் பிறைச்சந்திரனை ஏற்றுக்கொண்ட சடையினை உடையவரும், புலியின் தோலை ஆடையாக உடையவரும், இரண்டாக பிளந்த நாக்கினை உடைய பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களிலும் ஆபரணமாக அணிந்தவரும், ஆலகால விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கறை படர்ந்த கழுத்தினை உடையவரும், தனது கையினில் பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்பவரும், பிரளய காலத்தினில், பிரமன் திருமால் இந்திரன் ஆகியோரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளினில் ஏற்ற வண்ணம் கங்காளராக காட்சி தருபவரும் ஆகிய பெருமான், வேதங்களின் பொருளை உணர்த்தும் பாடல்களை ஒழுக்கத்தில் சிறந்த அடியார்கள் பாட, அந்த பாடல்களின் இன்னிசையாலும் தேனுண்ட களிப்பினாலும் தங்களது சிறகுகள் படபடக்க வண்டுகள் முரலும் காட்சி உடைய நறையூர் சித்தீச்சரம் தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 2:

பொங்கார் சடையர் புனலர் அனலர் பூதம் பாடவே

தம் காதலியும் தாமும் உடனாய்த் தனியோர் விடையேறிக்

கொங்கார் கொன்றை வன்னி மத்தம் சூடிக் குளிர் பொய்கைச்

செங்கால் அனமும் பேடையும் சேரும் சித்தீச்சரத்தாரே

விளக்கம்:

பொங்கு=வளர்ச்சி; பொங்கார்=நன்கு வளர்ந்து நீண்டு தாழ்ந்து தொங்கும் சடை; கொங்கு=தேன்; இந்த பாடலில் அன்னம் தனது துணையுடன் சேர்ந்து மகிழ்ந்து இருக்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலின் இரண்டாவது அடியில், இறைவன் பிராட்டியுடன் உடனாக இருக்கும் கோலத்தையும் திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதால், இறைவன் இறைவியுடன் இணைந்திருந்து, உயிர்களுக்கு போகநிலை நல்குவதாக தருமபுரம் ஆதீனக் குறிப்பு விளக்கம் அளிக்கின்றது. இந்த குறிப்பு நமக்கு திருவாசகம் திருச்சாழல் பாடலை நினைவூட்டுகின்றது. உயிர்களுக்கு போகம் அளிக்க வேண்டி சிவபிரான் உமையம்மையோடு இருக்கின்றான் என்று மணிவாசகர் தனது திருச்சாழல் பதிகத்தில் கூறுகின்றார். திருச்சாழல் பதிகத்தில் வரும் ஒரு பாடல் இது.

தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்

பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ

பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்

விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுகின்றார். முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.12.2) பெருமான் பிராட்டியுடன் இனிதாக உறைகின்றான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வடவீ=வட ஆலமரம்; சைவன்=சிவபெருமான்;இழை=நூலிழை; முழை=குகை; வளை=வளைந்த; வாள்= ஒளி பொருந்திய; உகிர்=நகம்; முழை=குகை; அரி=சிங்கம்; குமிறும்=கர்ஜனை செய்யும்; தற்போது மலை ஏதும் இல்லாமல் இருப்பினும் ஞானசம்பந்தர் காலத்தில் சிறிய குன்றேனும் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. தழைகள் நிறைந்த ஆலமரத்தின் அகன்ற நிழலில் அமர்ந்த வண்ணம் தவம் புரிந்த சைவனாகிய சிவபெருமான், நூலிழை போன்று மெலிந்த இடையினையும் இளமையும் உடைய பிராட்டியுடன் மகிழ்வுடன் உறையும் இடம் முதுகுன்றம் என்று இறைவனும் பிராட்டியும் இணைந்திருக்கும் கோலத்தை குறிப்பிடுகின்றார்.

தழையார் வட வியவீ தனில் தவமே புரி சைவன்

இழையார் இடை மடவாளொடும் இனிதா உறைவிடமாம்

மழை வானிடை முழவ அவ் எழில் வளை வாள் உகிர் எரி கண்

முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே

இதே கருத்து சம்பந்தர் அருளிய வலிவலம் பதிகத்தின் பாடல் ஒன்றில் (1.123..6) உணர்த்தப் படுகின்றது. விரவது=கலப்பது இந்த பாடலில் பெருமான் உமை அன்னையுடன் கூடி இருப்பது போன்று தோற்றம் தருவது, நிலவுலகம் மற்றுமுள்ள பல உலகங்களில் வாழும் உயிர்களில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புணர்ந்து தத்தம் இனங்களைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை முன்னிட்டே என்று சம்பந்தர் கூறுகின்றார்.

தரை முதலினில் உயிர் புணர் தகை மிக

விரை மலி குழல் உமையொடு விரவது செய்து

நரை திரை கெடு தகை அது அருளினன் எழில்

வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே

இதே கருத்தினை அப்பர் பெருமானும் திருவீழிமிழலைப் பதிகத்தின் (6.50.3) மூன்றாவது பாடலில், நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். இமவானின் மகளாகப் பிறந்த உமையம்மை, பெருமானை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் புரிந்த தவத்தின் தன்மையை, முதியவராய் சிவபெருமான், அளக்கச் சென்ற நிகழ்ச்சியும் இங்கே உணர்த்தப்படுகின்றது.

அன்றாலின் கீழ் இருந்தங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட

நின்றானைக் கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்

வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்றுச்

சென்றானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும்.இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களும் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான், உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும். இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலிலிலும் மற்ற திருமுறைப் பாடல்களிலும் உணர்த்தப் படுகின்றது.

இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.

மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம் திங்கள் முடிமேல்

கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை

அங்கை ஓடு ஏந்திப் பலிதிரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள் கடலே

பொழிப்புரை:

நன்கு வளர்ந்ததால் நீண்டு தாழ்ந்து தொங்கும் சடையை உடையவரும், கங்கை நதியைத் தனது சடையில் மறைத்து வைத்திருப்பவரும், தனது கையில் அனற்பிழம்பு ஏந்தியவராக நடனம் ஆடுபவரும், பாடும் பூத கணங்களால் சூழப்பட்டவரும் ஆகிய இறைவன் தனது காதலியாகிய பிராட்டியுடன், ஒப்பற்ற விடை மீது அமர்ந்தவராக பல இடங்களுக்கும் செல்கின்றார். அவர், தேன் பொருந்திய கொன்றை மலர்கள் வன்னி இலைகள் மற்றும் ஊமத்தை மலர்கள் ஆகியவற்றை தனது சடையில் சூட்டிக் கொண்டவராக, சிவந்த கால்களை உடைய அன்னங்கள் தங்களது துணையுடன் கூடி இன்புற்று இருக்கும் குளிர்ந்த பொய்கைகள் நிறைந்த சித்தீச்சரம் தலத்தில் உறைகின்றார்.

பாடல் 3:

முடிகொள் சடையர் முளை வெண்மதியர் மூவா மேனி மேல்

பொடிகொள் நூலர் புலியின் அதளர் புரிபுன்சடை தாழக்

கடிகொள் சோலை வயல் சூழ் மடுவில் கயலார் இனம் பாயக்

கொடிகொள் மாடக் குழாமார் நறையூர் சித்தீச்சரத்தாரே

விளக்கம்:

முளை வெண்மதி=முளைத்தெழுந்த வெண்மதி; மூவா=மூப்பு அடையாத; பெருமான் எளிமையாக இருப்பதையே விரும்புவர்; ஆகையால் தான், மற்ற தேவர்களைப் போன்று கிரீடம் ஏதும் அணியாமல், தனது சடை முடியையே கிரீடமாகக் கொண்டுள்ளார். அந்த தன்மை தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. மிகவும் எளிமையாக பெருமான் இருக்கும் தன்மை பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. எளிமையான கோவண ஆடை, எளிய எருது வாகனம், உண்ணும் கலனாக பிரம கபாலம், அணிகலனாக பன்றிக்கொம்பும் கொக்கிறகும் கொண்டுள்ள தன்மை, சந்தனமாக திருநீறு, ஆகிய தன்மைகள் பெருமானின் எளிய தன்மையை நமக்கு உணர்த்துகின்றன.

எப்போதும் கோவணத்தையே ஆடையாக அணிந்திருக்கும் பெருமான், தனது திருமண நாளன்றும் கோவணமே அணிந்திருந்தாரோ என்ற சந்தேகம் அப்பர் பிரானுக்கு எழுகின்றது. அந்த ஐயத்தினைப் போக்கிக் கொள்ளும் வண்ணம், அப்பர் பிரான் இறைவனை நோக்கி கேள்வி கேட்கும் ஒரு நயமான பாடலை(4.77.1) நாம் இங்கே சிந்திப்பது பொருத்தமாக இருக்கும். கோவண ஆடை பெருமானின் அடையாளங்களில் ஒன்றாகவே கருதப் படுகின்றது. யோகியாக இருந்த சிவபெருமான் கோவண ஆடை அணிந்து காணப்பட்டது இயல்பானது. ஆனால் மணவாழ்க்கை வாழும் ஒருவர் கோவணாண்டியாக இருத்தல் நகைப்புக்கு உரியது அல்லவா. அதனால் தான் அப்பர் பிரான், உமையம்மையை மனைவியாக ஏற்ற அன்றும் கோவண ஆடை அணிந்து இருந்தீரோ என்று நகைச்சுவை உணர்வுடன் பெருமானிடம் கேள்வி கேட்கின்றார். இறைவன் மீது தாங்கள் கொண்டிருந்த எல்லையற்ற அன்பு, அடியார்களுக்கு வழங்கும் உரிமை தான் என்னே. கடும்பகல் நட்டம் என்று தாருக வனத்து மகளிர் இல்லங்களுக்கு, பகலில் பலி கேட்டுச் சென்றதை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நகைச்சுவை உணர்வுடன் இந்த கேள்வி கேட்கப்பட்டாலும், தனது திருமண நாளன்று சிவபெருமான் கோவண ஆடையின்றி திருமணக்கோலத்துடன் நல்ல ஆடைகள் அணிந்திருக்க வேண்டுமே என்ற கவலையும் இந்த பாடலில் தொனிப்பதை நாம் உணரலாம். அந்த கவலை தான் இங்கே கேள்வியாக ஒலிக்கின்றது.

கடும்பகல் நட்டம் ஆடிக் கையிலோர் கபாலம் ஏந்தி

இடும் பலிக்கு இல்லம் தோறும் உழிதரும் இறைவனீரே

நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென்கூந்தல்

கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ

பொழிப்புரை:

தனியாக கிரீடம் ஏதும் அணியாமல், தனது சடையையே முடியாக அணிந்து கொண்டுள்ள பெருமான், அன்று முளைத்தெழுந்த ஒற்றைப் பிறைச் சந்திரனையும் தனது சடைமுடியில் அணிந்து கொண்டுள்ளார். மூப்படையாமல் என்றும் இளமையான தோற்றத்துடன் காணப்படும் தனது திருமேனியின் மீது திருநீறும் முப்புரி நூலும் அணிந்து கொண்டு, புலியின் தோலுடை அணிந்தவராக, முறுக்கப் பட்டும் தாழ்ந்தும் காணப்படும் சடையினை உடைய பெருமான்,நறுமணம் கமழும் சோலைகளும் வயல்களும் சூழ்ந்த நீர்நிலைகளில் பாய்ந்து விளையாடும் கயல் மீன்கள் உள்ள சித்தீச்சரம் தலத்தினில் உறைகின்றார்.கொடிகள் உயர்ந்து பறக்கும் மாட வீடுகள் நிறைந்த வீதிகள் கொண்டதாக இந்த தலம் செழிப்புடன் காணப்படுகின்றது.

பாடல் 4:

பின்தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி

மின்தாழ் உருவில் சங்கார் குழை தான் மிளிரும் ஒரு காதர்

பொன்றாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம்

சென்றார் செல்வத் திருவார் நறையூர் சித்தீச்சரத்தாரே

விளக்கம்:

குழை ஆபரணத்தை ஒரு காதினில் அணிந்தவர் என்று குறிப்பிடுவதன் மூலம், மற்றோர் காதினில் தோட்டினை அணிந்தவராக, மாதொரு பாகனாக,பெருமான் திகழும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த பாடலில் இரண்டு வேறுவேறு தலைகள் குறிப்பிடப் படுகின்றன. பெருமானின் சடையின் மீது ஒரு தலையும், பெருமானின் கையில் ஒரு தலையும் உள்ள நிலை உணர்த்தப் படுகின்றது. தாருகவனத்து முனிவர்கள் ஏவிய தலை, தலை மாலையாக அணிந்து கொள்ளப்பட்டுள்ளது. பிரம கபாலம் பெருமானின் கையில் பிச்சைப் பாத்திரமாக திகழ்கின்றது. நீண்டு வளர்ந்த சடை என்று இரண்டாவது பாடலிலும், தாழ்ந்து தொங்கும் சடை என்று மூன்றாவது பாடலிலும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பின்னால் தாழ்ந்து தொங்கும் சடை என்று குறிப்பிடுகின்றார். தலை மாலையாக சூட்டிக் கொண்டுள்ள தலை, பிளந்துபட்ட வாயினை உடைய தலை, நகைப்பதாக பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. அவ்வாறு குறிப்பிடப்படும் பாடல்களில் சொல்லப் பட்டுள்ள வேறு பல செய்திகள், இந்த தலை நகைத்ததன் காரணத்தை நமக்கு உணர்த்துவது போன்று அமைந்துள்ளன.

வியலூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.13.1), பிராட்டி அச்சம் கொண்டதையும், அதனை பொருட்படுத்தாது பெருமான் யானைத் தோலைத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டு தேவியின் அச்சம் தேவையற்றது என்று உணர்த்தியதையும் அருகில் இருந்த வேடிக்கை பார்த்த தலைமாலையில் இருந்த தலைக்கு நகைப்பு ஏற்பட்டது போலும் என்று நாம் கற்பனை செய்யும் வண்ணம் அமைந்துள்ள நயமான பாடல். குரவம்=குராமலர்;அரிவை=இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெண்களைக் குறிக்கும் சொல். அம்பிகை என்றும் மூப்பு அடையாமல், இளமையும் அழகும் ஒரு சேர வாய்க்கப் பெற்று இருப்பதால் தேவியை அரிவை என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொரு=போருக்கு சென்ற; கயாசுரன் என்ற அரக்கன், யானை உடலைக் கொண்டவனாக இருந்தவன், சிவபெருமானுடன் போருக்குச் சென்றான். சிவபெருமானால் அவனுக்கு மரணம் நேரும் என்பதை பிரமதேவன் எடுத்துச் சொல்லியிருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல், தேவர்களுக்கு அடைக்கலம் தந்த காரணத்திற்காக பெருமான் மீது சினம் கொண்டு, போருக்கு சென்றதையே, பொருவெங்கரி என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பட=இறந்து பட; உரிவை=தோல்; விரவும்=ஒன்றாக கலந்திருத்தல்;ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களும் தங்களுக்குள்ளே பகையும் கொண்டுள்ள பொருட்கள் தங்களது பகையினை மறந்து, பெருமானின் சடையினில் இருப்பதை இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமேது. இந்த பாடலின் முதல் இரண்டு அடிகளில், தன்னை எதிர் நோக்கி வந்த வலிமையான யானையை அடக்கி, அதன் தோலை உரித்து அத்தகைய அச்சம் தேவையற்றது என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமான், ஈரப்பசை மிகுந்திருந்த யானையின் தோலைத் தனது உடலின் மீது அணிந்து கொண்டார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் அருகில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தலை (பெருமானின் சடை மீதிருந்த தலை நகைத்தது போலும் என்று உணர்த்தும் வண்ணம் நகுதலை என்று ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்

குரவம் கமழ் நறுமென் குழல் அரிவை அவள் வெருவப்

பொரு வெம் கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன்

அரவும் அலை புனலும் இளமதியும் நகு தலையும்

விரவும் சடை அடிகட்கு இடம் விரிநீர் வியலூரே

பெருமான் நடனம் ஆடுவதை எப்போதும் ரசிப்பதற்காகவே, பெருமானின் அருகில் எப்போதும் நிற்பவள் பிராட்டி என்பதை நாம் அறிவோம். இவ்வாறு நடனம் ஆடும் பெருமானை ரசித்து பிராட்டி கண்கொட்டாமல் பார்ப்பதைக் கண்ட தலை (சடைமுடியில் இருக்கும் தலை) தானும் மகிழ்ச்சி அடைந்து நகைத்தது போலும் என்பதை உணர்த்தும் வேட்களம் தலத்து பாடலை (1.39.1) நாம் இங்கே காண்போம். அந்தம்=முடிவு; சங்கார காரணனாக இறைவன் இருக்கும் நிலை; ஆதி=தொடக்கம், சங்கார காரணனாக இருக்கும் இறைவன், மீண்டும் உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. நமது கண்ணெதிரே விரிந்து பரந்து காணப்படும் உலகும், உலகிலுள்ள பலவகையான பொருட்களும் நிலையானவை என்ற மாயத் தோற்றத்தை அளிப்பதால், அந்த நிலை உண்மை நிலையல்ல என்பதை தெளிவுபடுத்தும் திருஞானசம்பந்தர், இறைவன் ஒருவனே நிலையானவன் என்றும், அவனே உலகம் மற்றும் உலகப் பொருட்கள் அழிவதற்கு காரணமாக இருப்பவன் என்பதையும் இங்கே உணர்த்துகின்றார். மேலும் இந்த உலகமும் உலகப் பொருட்களும் மீண்டும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவனும் சிவபெருமான் தான் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் என்றும் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம் ஒவ்வொரு ஊழியின் முடிவிலும், உலகத்தை அழிப்பதும் மீண்டும் உலகத்தை படைப்பதும் செய்பவன் இறைவன் என்பதனை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்து இலங்க

மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச்

சந்தம் இலங்கு நகுதலை கங்கை தண்மதியம் அயலே ததும்ப

வெந்த வெண்ணீறு மெய் பூசும் வேட்கள நன்னகராரே

பாம்புரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.41.5) திருஞானசம்பந்தர், பெருமானின் சடையில் சிறையுண்டு கிடக்கும் கங்கை நதியின் அருகில், சிரித்த வண்ணம் தலைமாலை இருப்பதாக கூறுகின்றார். தாருக வனத்து முனிவர்கள், பெருமான் மீது கோபம் கொண்டவர்களாக ஒரு தலையை யாகத்திலிருந்து எழுப்பி பெருமான் மீது ஏவியது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் நிகழ்ந்த நிகழ்ச்சி. கங்கை நதியினை பெருமான் ஏற்றுக் கொண்டதோ, பகீரதனுக்கு அருள் புரிவதற்காக துவாபர யுகத்தில் நடந்தேறியது. எனவே, வானிலிருந்து மிகவும் ஆவேசத்துடன் வேகமாக இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் தேக்கி பெருமான் சிறை பிடித்ததை தலைமாலை பார்த்திருக்க வேண்டும்; மேலும் கங்கை நதியின் ஆணவம் அடங்கியதைக் கண்டு ஏளனமாக,தலைமாலை சிரித்தது போலும். அந்த ஏளனச் சிரிப்பையே நகுதலைமாலை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது.

நதி அதன் அயலே நகு தலைமாலை நாண்மதி சடை மிசை அணிந்து

கதி அதுவாகக் காளி முன் காணக் கானிடை நடம் செய்த கருத்தர்

விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி ஓவாப்

பதி அதுவாகப் பாவையும் தாமும் பாம்புர நன்னகராரே

பிச்சைப் பெருமானாக, சிவபெருமான் தாருகவனம் சென்றது, அவனது திருவிளையாடல்களில் ஒன்று அல்லவா. தனது உணவுத் தேவைக்காக பிச்சை ஏற்கும் அளவுக்கு தாழ்வதற்கு இறைவன் வறியவன் அல்லன்; மேலும் அவனுக்கு உணவும் தேவைப்படுவதில்லை. பிறப்பிறப்பு, மூப்பு, பிணி ஆகியவற்றை கடந்தவனுக்கு உணவு எதற்காக தேவை. எனினும், தனக்கு உணவு தேவைப் படுவது போலவும், தன்னிடம் உணவு ஏதும் இல்லை என்றும் நாடகமாடும் பெருமானின் தன்மையை அருகில் இருந்து காணும் தலைமாலைக்கு நகைப்பு வருவது இயற்கை தானே. பொதுவாக பிச்சை எடுப்பவர்கள், வேறு வழி இல்லாத காரணத்தால், தங்களைத் தாங்களே நொந்துகொண்ட வண்ணம், பிச்சை எடுக்கச் செல்வார்கள். அவர்கள் அப்போது, பாடிக் கொண்டு செல்வதும்,தங்களது வருகையை அடுத்தவர்க்கு உணர்த்தவேண்டும் என்ற நோக்கத்துடன் தான். ஆனால் பெருமானோ மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆடியும் பாடியும், பிச்சை ஏற்கப் புகுகின்றார். பக்குவப்பட்ட ஆன்மாக்கள், தங்களது மலங்களை அவரிடம் பிச்சையாக இட்டு, முக்திவுலகம் சென்றடைய தகுதி பெற்றவர்களாக மாறும் நிலையினை நினைத்து பெருமான் மகிழ்வதால், அந்த மகிழ்ச்சி ஆடலாகவும் பாடலாகவும் வெளிப்படுகின்றது. அவர் தானே விரும்பி ஏற்றுக் கொண்டுள்ள பிச்சைப் பெருமானின் கோலத்திற்கு மாறுபட்ட நிலையில் அவரது மகிழ்ச்சி நிலை காணப்படுவதை காணும் பிரம கபாலம் (அவர் கையில் ஏந்தியுள்ள உணவுப் பாத்திரம்) நகைக்கின்றது போலும் என்று உணர்த்தும் வண்ணம், எருக்கத்தம்புலியூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பாடல் (1.89.6) அமைந்துள்ளது. அயம்=ஐயம், பிச்சை; அயம் பெய்ய=பெண்கள் பிச்சை இடும் பொருட்டு; ஐயம் என்ற சொல் திரிந்து அயம் என வந்தது;தகைந்து=பொருந்தி; தொகுவான்=கூர்ந்து வெளிப்பட நிற்பவர்; வாய் பிளந்த நிலையில் இருக்கும் பிரமகபாலத்தை, நகு வெண்தலை என்று நகைச்சுவை தோன்ற சம்பந்தர் கூறுகின்றார்

நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடிப்

புகுவான் அயம் பெய்யப் புலித்தோல் பியற்கு இட்டுத்

தகுவான் எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே

தொகுவான் கழல் ஏத்த தொடரா வினை தானே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.08.07) அப்பர் பிரான், பெருமான் கை வீசி நடனமாடுவதற்கு ஒரு நயமான காரணத்தை கற்பனை செய்து குறிப்பிடுகின்றார். பெருமானின் சடையில் உள்ள பாம்பு, தன்னுடன் பகை பாராட்டாமல் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்தாலும், பெருமானின் கைகளிலும் தோள்களிலும் உள்ள பாம்புகள் தன்னை அழித்து விடுமோ என்ற பயத்தில் அச்சம் கொண்டுள்ள சந்திரனின் பயத்தை நீக்கும் நோக்கத்துடன் தனது கைகளை வீசி நடனம் ஆடுவதன் மூலம், பாம்புக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள அச்சத்தை பெருமான் நீக்கியதால், பயம் நீங்கிய சந்திரன் இயங்குகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த காட்சியை காணும் எவருக்கும் நகைப்பு தோன்றுவது இயற்கை தானே,அதனால் தான் நகுவெண்தலை என்று இங்கே குறிப்பிடுகின்றார் போலும். நகை=விளக்கம்; எளிதில் அடையாளம் கொண்டு கொள்ளும் அதிகமாக வளர்ந்து காணப்படும் மலர். துன்று=நெருங்கிய: நகு வெண்தலை=சதைப் பகுதிகள் நீக்கப்பட்டு எலும்பும், பற்களும், மண்டையோடும் காட்சி தரும் தலைகள். பற்கள் வெளியே காணப்படுவதால், நகைப்பது போன்று தோற்றம் உடைய தலை என்று குறிப்பிடும் வகையில் நகு வெண்தலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.நாகர்=நாகம், பகையை வளர்ப்பதால் இகழ்ச்சி குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதைக்கு அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது.

நகை வளர் கொன்றை துன்று நகு வெண்தலையர் நளிர் கங்கை தங்கு முடியர்

மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணி செய் மிடறர்

முகை வளர் கோதை மாதர் முனி பாடுமாறும் எரியாடுமாறும் இவர் கைப்

பகை வளர் நாகர் வீசி மதி இயங்குமாறும் இது போலும் ஈசர் இயல்பே

இங்கே குறிப்பிடப்படும் பல நிகழ்ச்சிகளை கண்டதால், பெருமான் சூட்டிக் கொண்டுள்ள தலைமாலை செய்யும் நகைப்பினை கள்ளநகு என்று திருஞானசம்பந்தர், கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.80.5) குறிப்பிடுகின்றார் போலும்; விரிதோடு= விரிந்து பரந்த ஒளியினை உடைய தோடு; ஒரு காதினில் தோடு அணிந்தவர் என்று குறிப்பிட்டு பெருமான் மாதொருபாகனின் கோலத்தை, ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.மிசை=மேல்; மான்மறி=மான் கன்று;

வெள்ளை எருத்தின் மிசையார் விரிதோடு ஒரு காதில் இலங்கத்

துள்ளும் இள மான்மறியார் சுடர் பொற்சடைகள் துளங்கக்

கள்ளநகு வெண்தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்

பிள்ளை மதியம் உடையார் அவர் எம் பெருமான் அடிகளே

சிவபெருமானின் சடையினில் பாம்பு, கங்கை நதி மற்றும் பிறைச் சந்திரன் இருக்கும் தன்மையைக் கண்ட அப்பர் பிரான், மேற்கூறிய மூவரும் ஒருவருக்கொருவர் பயந்து அடங்கியிருந்த தன்மையை காணும் தலைமாலை சிரித்ததாக கூறும் பாடல் அதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (4.10.8). சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், பாம்பு தனது வேகத்தைத் தவிர்க்கின்றது.இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்து கொள்வதும், பாம்பு சென்று விட்டதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்க்கின்றதும் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதாலும், தொடர்ந்து வெளிப்படாமல் வெளியே வருவதும் மறைந்து கொள்வதுமாக இடையிடையே தோன்றுவதால், ஒளிந்து கொண்டிருந்த சந்திரனை மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கி விடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். நெளிந்து பாயும் கங்கை நதி மயில் ஆடுவதைப் போன்ற தோற்றத்தை அளிப்பதால், எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று கங்கை நங்கையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல் தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார்.

கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்

கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுறக்

கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்து தான் நகு தலை கெடில வாணரே

பொழிப்புரை:

நீண்டு வளர்ந்து பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடையினை உடைய பெருமான், அந்த சடையில் தாருகவனத்து முனிவர்கள் ஏவிய தலையினை தலைமாலையாக அணிந்து கொண்டுள்ளார். வாய் பிளந்த நிலையில் அந்த தலை, சிரிப்பது போன்ற தோற்றத்தை அளிக்கின்றது. அவர் தனது கரத்தினில் பிரம கபாலத்தை ஏந்தியவராக, மின்னலை தோற்கடிக்கும் வண்ணம் ஒளிவீசும் சங்கு குழையைத் தனது காதொன்றினில் அணிந்துள்ளார். இத்தகைய பெருமான், பொன்னை வெல்லும் நிறத்தினை உடைய கொன்றை, செவ்வந்தி, புன்னை, செண்பகம் மலர்களை சூட்டிக் கொண்டவராக செல்வம் மிகுந்த நறையூர் தலத்தில் உள்ள சித்தீச்சரம் திருக்கோயில் உறைகின்றார்.

பாடல் 5:

நீரார் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர்

பாரார் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே

தேரார் வீதி முழவார் விழவின் ஒலியும் திசை செல்லச்

சீரார் கோலம் பொலியும் நறையூர் சித்தீச்சரத்தாரே

விளக்கம்:

சித்தர்கள் இறைவனைப் புகழ்ந்து வணங்கிய தலம் என்பதை குறிப்பிடும் வண்ணம் சித்தர்கள், பெருமானைப் புகழ்ந்து ஆடியும் பாடியும் கொண்டாடிய தலம் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருவிழாக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்ட செய்தியும் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. நீரார்=பெருகிய நீரை உடைய கங்கை நதி; பாரார்= உலகெங்கும் பரவிய புகழ்; வேதங்களை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பதால், நாத்தழும்பு ஏறிய நாவினை உடையவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

பரந்து பெருகிய நீரினை உடைய கங்கை நதியினைத் தனது சடைமுடியில் அடக்கி மறைத்தவரும், ஆலகால விடத்தைத் தேக்கியதால் கறை படிந்த கழுத்தினை உடையவரும், வேதங்கள் நிறைந்து பொருந்திய நாவினை உடையவரும் ஆகிய பெருமானை, உலகெங்கும் பரவிய பெருமானின் புகழினை அறிந்து கொண்ட பத்தர்களும் சித்தர்களும் அந்த புகழினை பாடலாக வடித்து பாடியும் ஆடியும் பெருமானை கொண்டாடுகின்ற தலம் சித்தீச்சரம் ஆகும்.தேரோடும் வண்ணம் அகன்ற வீதிகளைக் கொண்டுள்ள இந்த தலத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களின் ஆராவார ஒலிகள், இசைக்கப்படும் முழவுக் கருவிகளின் ஓசையோடு கலந்து எண்திசையும் பரவுகின்றன. இத்தகைய சீரும் சிறப்பும் கொண்டு பொலியும் நறையூர் சித்தீச்சரம் தலத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டு சிவபெருமான் விளங்குகின்றார்.

பாடல் 6:

நீண்ட சடையர் நிரைகொள் கொன்றை விரைகொள் மலர் மாலை

தூண்டு சுடர் பொன்னொளி கொள் மேனிப் பவளத்து எழிலார் வந்து

ஈண்டு மாடம் எழிலார் சோலை இலங்கு கோபுரம்

தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச்சரத்தாரே

விளக்கம்:

நிரை கொள் கொன்றை=அடுக்கடுக்காக, சரம் சரமாக பூக்கும் கொன்றை மலர்கள் இதனை சரக்கொன்றை என்று அழைப்பார்கள்; தூண்டு சுடர்=தூண்டப்பட்டது போன்று மேலும் மேலும் அழகுடன் ஒளிரும்;

பொழிப்புரை:

நீண்ட சடையினை உடையவரும், நிறைந்து அடுக்கடுக்காக மலர்ந்ததும் நறுமணம் நிறைந்ததும் ஆகிய சரக்கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிந்தவரும், தூண்டப்பட்ட சுடர் போன்று மிகுந்த ஒளியுடன் திகழும் பொன் போன்றும் பவளம் போன்றும், ஒளி மிகுந்த அழகுடன் திகழும் திருமேனி உடையவரும் ஆகிய பெருமான், நெருங்கிய மாடவீடுகளும் அழகிய சோலைகளும், வானில் உலவும் சந்திரனை தீண்டும் வண்ணம் உயர்ந்த கோபுரங்கள் உடைய திருக்கோயிலும் திகழ்கின்ற நறையூர் சித்தீச்சரம் தலத்தினில், உறைகின்றார்.

பாடல் 7:

குழலார் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்

தழலார் மேனித் தவள நீற்றர் சரி கோவணக் கீளர்

எழிலார் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடையேறிக்

கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே

விளக்கம்:

தவளம்=வெண்மை; புலம்பும்=ஒலிக்கும்; கீள்=பெரிய துணியிலிருந்து கிழிக்கப்பட்டு, கயிறு போல் திரிக்கப்பட்டது; குழல்=சுருண்ட சடை; இந்த பாடலில் கொக்கின் இறகர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கொக்கிறகு=கொக்கின் உருவத்தில் மற்றவருக்கு துன்பம் செய்து கொண்டிருந்த குரண்டாசுரன் என்ற அசுரனைக் கொன்றதன் அடையாளமாக பெருமான் தனது தலையில் சூடிக் கொண்ட இறகு; குரண்டாசுரன் என்ற அரக்கன், கொக்கின் உருவம் கொண்டு மனிதர்களை துன்புறுத்தி வந்தான் என்றும், பெருமான் அந்த கொக்கினை அழித்து மனிதர்களின் இடரினை தீர்த்ததும் அன்றி, கொக்கை அழித்ததன் அடையாளமாக கொக்கிறகினை தனது தலையில் அணிந்து கொண்டார் என்று புராணம் கூறுகின்றது. கந்த புராணத்திலும் இந்த செய்தி சொல்லப்படுகின்றது (பாடல் எண். 8-9-64) இந்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.41.2), திருஞானசம்பந்தர், பெருமான் தனது சடையில் வில்வம் மற்றும் ஊமத்தை கொன்றை எருக்கு ஆகிய மலர்களுடன் கொக்கின் இறகையும் சூட்டிக் கொண்டுள்ளதாக கூறுகின்றார்.

கொக்கிறகோடு கூவிள மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர்

அக்கினோடு ஆமை பூண்டு அழகாக அனலது ஆடும் எம் அடிகள்

மிக்க நால்வேத வேள்வி எங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்

பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னகராரே

நல்லம் (தற்போது கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது (1.85.2) அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் திருஞான சம்பந்தர்,பெருமான் ஒளி வீசுவதும் தாழ்ந்தும் காணப்படும் தனது சடையினில் கொக்கின் இறகுடன் குளிர்ந்த பிறைச் சந்திரனையும் சூட்டிக் கொண்டு திகழ்கின்றான் என்று கூறுகின்றார்.

தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்

துக்கம் பல செய்து சுடர் பொற்சடை தாழக்

கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்

நக்கன் நமை ஆள்வான் நல்ல நகரானே

காடது அணிகலம் என்று தொடங்கும் மொழிமாற்றுப் பதிகத்தின் பாடலில் ஞானசம்பந்தர் (1.117.6) இறைவன் கொக்கின் இறகினை சூடிக் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார். இந்த பதிகத்து பாடல்களில் பல சொற்கள் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளன. சாத்துவர் கோவணம், பாசம் தடக்கையில் ஏந்துவர், தம் கூத்தவர், கச்சுக் குலவி நின்று ஆடுவர், கொக்கிறகும் சூடுவர், பேர்த்தவர் பல்படை பேயவை என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும்.பேர்த்தவர்=காலினை பெயர்த்து நின்று நடனமாடியவர்; இந்த பாடலில் சம்பந்தர் கச்சு குலவி நின்று ஆடுவர் என்று கூறுகின்றார். குலவி=விளங்கித் தோன்றும் வண்ணம்; நடராஜப் பெருமானின் நடனத் தோற்றத்தை காணும் நாம் அவரது இடுப்பினில் அணிந்துள்ள கச்சின் ஒரு முனை வெளிவட்டத்தை தொடும் நிலையில் அமைந்துள்ளதை காணலாம். பொதுவாக நிலையாக நிற்கும் ஒருவரின் இடுப்புக் கச்சு தரையை நோக்கியே சரிந்து காணப்படும்.ஆனால் இடைவிடாது நடனம் ஆடும் பெருமானின் கச்சும், அவரது நடனச் சுழற்சிக்கு ஏற்றவாறு ஆடுவதால், கீழ்நோக்கி சரிந்து நில்லாமல் பறக்கும் நிலையில் காணப்படுகின்றது. இதனையே விளங்கித் தோன்றும் கச்சு என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். தம் கூத்தவர் என்று ஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமான் ஆடும் கூத்து அவருக்கே உரியது; வேறு எவராலும் ஆடமுடியாத கூத்து என்று இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.

சாத்துவர் பாசம் தடக்கையில் ஏந்துவர் கோவணம் தம்

கூத்தவர் கச்சுக் குலவி நின்று ஆடுவர் கொக்கிறகும்

பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்

பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே

பிரமபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.65.2) கொக்கின் இறகினை அணிந்தவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் எதிர்மறையாக கூறிய அனைத்தையும் மாற்றி பொருள் கொள்ளவேண்டும் என்று பதிகத்தின் கடைப் பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார்.

கூரம்பது இலர் போலும் கொக்கின் இறகிலர் போலும்

ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும்

தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும்

பேரும் பல இலர் போலும் பிரமபுரத்து அமர்ந்தாரே

திருநாரையூர் தலத்தில் கொக்கு பெருமானை நோக்கி செய்த வழிபாட்டினை நினவு கூர்ந்த ஞானசம்பந்தருக்கு கொக்கின் இறகினை பெருமான் சூட்டிக் கொண்டு வரலாறு நினைவுக்கு வந்தது போலும். பெருமானை திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.107.6) சம்பந்தர் இறைவன் கொக்கிறகு அணிந்திருப்பதை குறிப்பிடுகின்றார். குழகாக=இளமையுடன்: குலாய=செழுமை மிகுந்த; புகல்=திருவருள் சக்தி பதிதல்; நாரையூர்ப் பெருமானை விருப்பத்துடன் வழிபடும் அடியார்களின் மனதினில் திருவருளின் சக்தி பதியும் என்று சம்பந்தர் கூறுகின்றார்.

கொக்கிறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி

அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகாக

நக்கமரும் திருமேனியாளன் திருநாரையூர் மேவிப்

புக்கமரும் மனத்தோர்கள் தம்மை புணரும் புகல் தானே

திருவாரூர் தலத்தில் தான், மனக்கண்ணில் கண்ட பெருமானின் உருவத்தை விவரிக்கும் பாடல் ஒன்றினில் (4.19.2) பெருமான் அணிந்திருக்கும் கொக்கிறகு மிகவும் பொலிவுடன் காணப்படுகின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பூதகணங்கள் சூழ பல ஊர்கள் சென்று பிச்சை ஏற்கும் பெருமான், நிறைந்த கோவணமும் சங்குமணி மாலையும் இடுப்பினில் அணிந்தவராக காணப்படுகின்றார் என்றும் இங்கே கூறுகின்றார்.

பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்

புக்க ஊர் பிச்சை ஏற்றுண்டு பொலிவு உடைத்தாய்க்

கொக்கிறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு

அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.72.8) கொக்கின் இறகு இறைவனின் சடையில் மலர்ந்து இருப்பதாக கூறுகின்றார்.கடிகுரல்=கடுமையான குரல்; விளியர்=ஆரவாரம் செய்பவர்; மகா சங்கார காலத்தில் மிகவும் கடுமையான குரலில் ஆரவாரம் செய்பவராக இறைவன் கருதப் படுகின்றார். கோடு= கொம்பு;, கிளை;

காடு இடம் உடையர் போலும் கடிகுரல் விளியர் போலும்

வேடுரு உடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலும்

கோடலர் வன்னித் தும்பை கொக்கிறகு அலர்ந்த கொன்றை

ஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

நாரை என்றால் கொக்கு என்று பொருள். கொக்கு வழிபட்டு உய்வினை அடைந்த தலம் திருநாரையூர். அந்த தலத்திற்கு சென்ற அப்பர் பிரானுக்கு இறைவன் கொக்கிறகினை அணிந்திருப்பது நினைவுக்கு வந்தது போலும். தூவல்=இறகு; கொக்கின் இறகு பூண்டு இறைவன் இருப்பது மிகவும் அழகாக உள்ளது என்று இந்த பதிகத்தின் பாடலில் (5.55.4) குறிப்பிடுகின்றார். கொக்கின் இறகு, வில்வ இலைகள், மண்டையோட்டு மாலை, விரிந்த சடை, குறைந்த ஆடை,எலும்பு மாலை ஆகியவை அணிந்த பெருமானாக தான் கண்டதை அப்பர் பிரான் இங்கே எடுத்துரைக்கின்றார். மேலே குறிப்பிட்ட பொருட்களில் எதுவும் எவருக்கும் அழகினை சேர்க்காது என்பதை நாம் உணரலாம். ஆனாலும் இவை அனைத்தும் அணிந்த பெருமான் அழகுடன் திகழ்வதால், தான் வியப்புக்கு உள்ளாகியதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.

கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்

மிக்க வெண்டலை மாலை விரிசடை

நக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்கு

அக்கின் ஆரமும் அம்ம அழகிதே

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய ஒரு பாடல் (5.80.5) கொக்கிறகர் என்றே தொடங்குகின்றது. கொக்கின் இறகை சூடியும், எலும்பு மாலைகளையும் அணிந்தும், மிகவும் குறைந்த ஆடைகளுடன் காண்போர் நகைக்கும் தோற்றத்துடன் இருக்கும் சிவபெருமானை எளியவர் என்று எண்ணிவிட வேண்டாம் என்று உணர்த்தும் வண்ணம் அவர், செருக்கு மிகுந்த மூன்று அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தவர் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். அவ்வாறு குறிப்பிட்ட பின்னர், பெருமானது வீரம் மிகுந்த செயலைக் கேட்கும் நாம், அவரிடம் அச்சம் கொண்டு அவரை அணுக தயக்கம் காட்டுவோம் என்ற சந்தேகம் அப்பர் பிரானுக்கு வந்தது போலும். அந்த சந்தேகத்தை தெளிவு படுத்தும் வண்ணம், சிவபெருமான் கருணை மிகுந்தவர் என்று, சந்திரனுக்கு அடைக்கலம் அளித்ததை நினைவூட்டி, பெருமான் நம்மை நன்றாக அறிந்தவர் என்று இங்கே உணர்த்தும் நயத்தையும் இந்த பாடலில் நாம் காணலாம்.

கொக்கிறகர் குளிர் மதிச் சென்னியர்

மிக்க அரக்கர் புரம் எரி செய்தவர்

அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை

நக்கு உருவரும் நம்மை அறிவரே

சுண்ண வெண்சந்தன என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (4.2.2) காண்டகு புள்ளின் சிறகு என்று பெருமான் கொக்கின் இறகினை அணிந்ததை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் உணர்த்தப்படும் பெருமானின் அடையாளங்கள் அவருக்கே உரியதாக தனித்துவம் பெற்று விளங்குவதை நாம் உணரலாம். இத்தகைய அடையாளங்கள் உடைய பெருமானின் அடியானாக உள்ள தான் எவருக்கும் எதற்கும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பூண்டதோர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள

நீண்ட திண்தோள் வலம் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்

காண் தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்கக் கொடியும்

ஈண்டு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

மழபாடி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.39.2) அப்பர் பிரான், பெருமானை கொக்கிறகு சென்னி உடையான் என்று அழைக்கின்றார்.இந்த பாடலில் பெருமானை கொல்லை விடையேறும் கூத்தன் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார்.

கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடையேறும் கூத்தன் கண்டாய்

அக்கு அரை மேல் ஆடலுடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதிகண்டாய்

அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுது ஆனான் கண்டாய்

மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே

தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.79.2) அப்பர் பிரான் கொக்கிருந்த மகுடத்து எம் கூத்தன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மகுடம்=பெருமான் தனியாக மகுடம் ஏதும் அணிவதில்லை. எனவே அவரது சடையே மகுடமாக கருதப் படுகின்றது. கொக்கு என்பது இங்கே கொக்கின் இறகினை குறிக்கும். குழைவார்=உள்ளம் குழைந்து உருகி வழிபடும் அடியார்கள்; சீர்ப் போகம்=செல்வத்தால் வரும் இன்ப போகங்கள்;தக்கிருந்த=வாய்த்து இருக்கும்;

அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானைக்

கொக்கிருந்த மகுடத்து எம் கூத்தன் தன்னைக் குண்டலம் சேர் காதானைக் குழைவார் சிந்தை

புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப் புண்ணியனை எண்ணரும் சீர்ப் போகம் எல்லாம்

தக்கிருந்த தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.36.8) சுந்தரர், பெருமான் தனது தலையில் கொக்கின் இறகினை சூட்டிக் கொண்டுள்ள நிலையை குறிப்பிடுகின்றார். இரத்தம் ஒழுகியவாறு இருக்கும் யானையின் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், யானையின் ஈருரி போர்த்தவாறு வந்து நின்று பிச்சை கேட்பதேன் என்று, தாருகவனத்து மங்கை ஒருத்தி கேட்பதாக அமைந்த பாடல். உமக்கு பிச்சை இடுவதற்கு எங்களுக்கு விருப்பம் இருந்தாலும், யானையின் ஈருரி போர்த்த உமது அருகில் வந்து பிச்சையிட அச்சமாக உள்ளது என்று உணர்த்தும் பாடல். சிவபெருமான் தனது சடையில்,கொன்றை மலர், ஊமத்தை மலர், வன்னி இலைகள், கங்கை நதி, சந்திரன், கொக்கின் இறகு, வெள்ளெருக்கு ஆகியவற்றை நெருக்கமாக அணிந்துள்ளார் என்று பிச்சை இடுவதற்காக வந்த ஒரு மங்கை கூறுவதாக அமைந்த பாடல்.

மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்

மொய்த்த வெண்டலை கொக்கு இறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம்

பத்தர் சித்தர்கள் பாடி ஆடு பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்

அத்தி ஈருரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே

கானப்பேர் தலத்தின் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.84.2) பெருமான் குளிர்ந்து இருக்கும் தனது சடையில் கொடிய பாம்பையும் ஊமத்தை மலரையும் கொக்கின் இறகையும் பொருத்தி வைத்துள்ளார் என்று சுந்தரர் கூறுகின்றார். பெருமான் தனது சடையினில் கங்கை நதியினைத் தேக்கியதை, கூதலிடும் (கூதல்=குளிர்) சடை என்று உணர்த்துகின்றார். விரவுதல்=கலத்தல்; விரசும் ஓசை=செறிந்த ஒலி,அடர்த்தியான ஒலி; பெருமானின் பெருமைகளை உணர்ந்து, உள்ளம் நைந்து அவனது பெருமைகளை இசைப் பாடலாக பாடும் அடியார்கள் சிவமாக மாறி விடுவார்கள் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

கூதலிடும் சடையும் கோளரவும் விரவும் கொக்கிறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள்

ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள்ளுருகா விரசும் ஓசையைப் பாடலும் நீ

ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையின் மாமலர் கொண்டு என் கணது அல்லல் கெடக்

காதல் உறத் தொழுவது என்றுகொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே

திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் கடைப் பாடலில், பெருமானைச் சிறப்பித்து பாடியவாறே தெள்ளேணம் கொட்டுவோம் என்று மணிவாசகர் கூறுகின்றார். அரிசியில் கலந்துள்ள கல்லினை பிரிப்பதற்கு, அரிசியை முறத்தில் கொட்டி, இடமும் வலமுமாக புடைத்து அசைத்தலை தெள்ளுதல்,கொளித்தல் என்று கூறுகின்றனர். பெண்கள் ஒன்றாக கூடி இந்த செயலில் ஈடுபடுவது வழக்கம். அந்த சமயத்தில் அவர்கள் அனைவரும் இறைவனின் புகழினைப் பாடியவாறு தங்களது செயலில் ஈடுபடுமாறு அடிகளார் தூண்டுகின்றார். சிவபெருமானை வணங்கும் தேவர்கள் கூட்டத்தினை, அவர் அணிந்துள்ள கொக்கின் இறகினை, அவரின் மணாட்டியாகிய உமையம்மையின் சிறப்புகளை, அவர் நஞ்சுண்ட திறத்தினை, அவர் நடமாடும் அழகினை,நடமாடும்போது அசையும் அவரது கால் சிலம்பினை, பாடி தெள்ளேணம் கொட்டுவோமாக என்று இந்த பாடல் கூறுகின்றது.

குலம் பாடி கொக்கிறகும் பாடிக் கோல்வளையாள்

நலம் பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும்

அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

திருக்கோவையார் பாடல் ஒன்றினில் பெருமான் கொக்கிறகு அணிந்து காணப்படும் காட்சியை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். எட்டு திக்குகளை எட்டுமாறு பரந்த தோள்களை உடைய தில்லைக் கூத்தன், கொக்கின் இறகு அணிந்துள்ளான் என்று இங்கே கூறுகின்றார். தோழியின் கூற்றாக அமைந்த இந்த பாடலில், கூடல் நகரத்து முத்து போன்ற பற்களை உடைய தலைவியை விட்டுவிட்டு, அயல் மாதரிடம் நாட்டம் கொண்டு பிரிந்த தலைவனைப் பழித்து உரைப்பது போன்ற பாடல். தலைவியை சிவனருளாக உருவகித்து, அந்த அருளினைப் பிரிந்து பிற தெய்வத்தை நாடும் ஆன்மாவினை, தகுதி இல்லாத ஆன்மா என்று இழித்துக் கூறுவது இந்த பாடலின் உட்பொருளாகும்.

திக்கின் இலங்கு திண்தோள் இறை தில்லைச் சிற்றம்பலத்துக்

கொக்கின் இறகது அணிந்து நின்றாடி தென் கூடல் அன்ன

அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்

தக்கின்று இருந்திலன் நின்ற செவ்வேல் என் தனி வள்ளலே

ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா) பாடல் ஒன்றினில் திருமாளிகைத் தேவர் (உயர்கொடி ஆடை என்று தொடங்கும் பதிகத்தின் பத்தாவது பாடல்)கொக்கின் இறகையும் கொன்றை மலரையும் தனது சடையில் அணிந்தவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். அடியார்கள் நினைப்பதைத் தரும் இறைவன் என்பதால் கற்பகம் என்று இங்கே கூறுகின்றார். கொக்கின் இறகையும், கொன்றை மலரையும், கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், ஊமத்தம் பூவினையும் சடையில் சூடி, நடனமாடும் தில்லைக் கூத்தனின் உருவம் தனது சிந்தையுள் நிறைந்து உலவுகின்றது என்று இங்கே கூறுகின்றார்.

ஏர்கொள் கற்பகம் ஒத்து இரு சிலைப் புருவம் பெருந்தடம் கண்கள் மூன்றுடை உன்

பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்

சீர்கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா

நீர்கொள் செஞ்சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே

இந்த பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானை சரி கோவணக்கீளர் என்று அழைக்கின்றார். கீள் என்பது இடுப்பினில் காட்டப்படும் அரைஞாண் கயிறு.அந்த அரைஞாண் கயிற்றிலிருந்து தொங்கும் தன்மை உடைய கோவணம் சரிகோவணம் என்றும், அந்த கோவணம் கீளிலிருந்து தொங்குகின்றது என்பதை உணர்த்த, சரி கோவணக் கீளர் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பல திருமுறைப் பாடல்கள், கீளும் கோவணமும் அணிந்து எளிமையான கோலத்துடன் இருப்பவன் சிவபெருமான் என்று உணர்த்துகின்றன. சாம்பல் பூச்சும் கீளுடையையும் கொண்டவன் பெருமான் என்று கோலக்கா பதிகத்தின் முதல் பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். சடை பிறை சாம்பல் பூச்சு மற்றும் கீளுடை என்பன பெருமானின் அடையாளங்கள்; இறைவனது பற்றற்ற தன்மையை குறிக்கும் விதத்தில் மெய்யில் சாம்பல் பூசி கோவண ஆடை அணிந்திருக்கும் நிலையை நமக்கு இந்த பாடல் உணர்த்துகின்றது.மாதர்கள் குடைந்து விளையாடும் பொய்கைகள் கொண்ட தலம் என்று குறிப்பிட்டு, அந்த தலத்திலும், வாசனைப் பொடிகள் பூசி பட்டாடை உடுத்தி ஒய்யாரமாக இல்லாமல் பற்றின்றி விளங்கும் ஈசனை குறிக்கும் சம்பந்தப் பெருமான் இறைவன் ஏன் அவ்வாறு இருக்கிறான் என்ற கேள்வியை கேட்டு,இறைவனது பற்று அற்ற நிலை தான் காரணம் என்ற விடையை நமக்கு சொல்லாமல் சொல்லி விளக்கும் நேர்த்தியை இந்த பாடலில் நாம் காணலாம்.எல்லாம் இருந்தும் தான் பற்று அற்ற யோகியாக இருப்பதன் மூலம் உயிர்களுக்கு யோக நெறி காட்டி விடுதலை பெறுவதற்கான வழியையும் காட்டும் தலைவன் என்று பரமனை குறிப்பதை நாம் உணரலாம். கீள் என்றால் கிழிக்கப்பட்டது என்று பொருள். எனவே கீள் என்பதற்கு இடையில் கட்டியுள்ள துணியாலான கயிறு என்று பொருள் கொள்வதே பொருத்தம். சில பதிப்புகளில் கீழ் என்று உள்ளது. அது பொருத்தமற்றது. கீளுடை என்பது அந்த துணிக்கயிற்றுடன் சேர்ந்த கோவண ஆடையைக் குறிக்கும். தான் பற்றற்ற கோலத்தில் இருப்பதன் மூலம், உயிர்களும் உலகப் பொருட்கள் மற்றும் உலகிலுள்ள உயிர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றினை நீக்கி, இனிமேலும் பாசத்தால், அகப்பற்று மற்றும் புறப்பற்று ஆவிய இரண்டு விதமான பற்றுகளால் விளையும் வினைகளை தவிர்த்து, தன்னை வந்தடையும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்ற பெருமானின் விருப்பம் இந்த நிலை மூலம் உணர்த்தப் படுகின்றது.

மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கை கோலக்கா உளான்

சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்

உடையும் கொண்ட உருவம் என் கொலோ

வேதிகுடி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.77.4), திருஞானசம்பந்தர், கீளர் சரி கோவணவர் என்று குறிப்பிடுகின்றார். இசை=புகழ்;காடு=சுடுகாடு; காடர்=சுடுகாட்டினில் உறைபவர்; கரி=ஆண் யானை; கரிகாலர்=கரிக்கு, மதம் கொண்ட ஆண் யானைக்கு காலனாக விளங்கியவர்; அனல் மெய்யர்=சோதி வடிவமாக உள்ளவர்; செய்யர்=சிவந்த திருமேனியை உடையவர்; கீளர்=அரைஞாண் கயிறு உடையவர்; சரி=தொங்கும்; தொல்லை நகர்=தொன்மை வாய்ந்த நகர்; ஆவணவர் என்ற சொல்லுக்கு இரண்டு விதமாக பொருள் சொல்லப் படுகின்றது. சிவக்கவிமணியார், உயிர்களை ஆவணம் கொண்டு தனக்கு அடிமையாக கொண்டுள்ள பெருமான் என்று விளக்கம் அளிக்கின்றார். தருமபுர ஆதீனத்து குறிப்பு, ஆ வண்ணம் அவர் என்று பிரித்து,பசுவினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமான் என்று விளக்கத்தை உணர்த்துகின்றது. எருது என்பதற்கு பதிலாக, பெருமானின் வாகனம் பசு என்று திணை மயக்கத்துடன் கையாளப் பட்டுள்ளது,

காடர் கரிகாலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில்

தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர் தான்

பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார்

வேடம் ஒளியான பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே

தெரி கீளர் என்று தேர்ந்தெடுத்து கீளாக அணிந்து கொண்டுள்ளார் என்று சொல்வது, எதனை பெருமான் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வியை எழுப்புகின்றது.இதற்கு விடை காண நாம் திருவாசகம் திருச்சாழல் பதிகத்திற்கு செல்லவேண்டும்; கிழிக்கப்பட்ட துணியினைத் தைத்து கோவணமாக இறைவன் கட்டிக் கொள்வது ஏன் என்று ஒரு பெண்மணி கேள்வி கேட்க, அதற்கு விடையாக அவளது தோழி, நான்கு மறைகள் இறைவனது கோவணமாக இருப்பதாக குறிப்பிட்டு, இறைவனது கோவணத்தின் பெருமையை உணர்த்துகின்றாள். மேலும் கலைகள் அனைத்தும் அந்த கோவணத்தை தாங்கி நிற்கும் கீளாக இருப்பதாகவும் உணர்த்துகின்றாள். வேதங்களே உலகத்தில் எழுந்த முதல் நூல்கள் என்றும், அந்த வேதங்களின் கருத்துகள் பல நூல்களிலும் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள். இந்த செய்தியைத் தான், நான்கு மறைகளின் பொருள், பல நூல்களில் காணப்படும் பொருளாக தொடர்ந்து நிற்கும் சரடு போல் இருக்கின்றது என்ற உண்மையை, பொருள் மறை நான்கே வான் சரடா என்ற தொடர் மூலம் மணிவாசகர் இங்கே உணர்த்துகின்றார்,

என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன்

துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும் அது என்னேடி

மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடாத்

தன்னையே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ

சமணர்களின் சூழ்ச்சியால், பல்லவ மன்னனின் பட்டத்து யானை, கழுத்து வரை நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த அப்பர் பிரானின் தலையை இடறித் தள்ளுவதற்காக ஏவப்படுகின்றது. அந்த சமயத்திலும் நிலை கலங்காமல், பெருமானின் அடியார்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் அஞ்சும் வண்ணம் ஏதும் நிகழாது என்றும், தனது மனக்கண்ணில் தான் கண்ட பெருமானது தோற்றத்தினை உணர்த்தும் வண்ணம் ஒரு பதிகம், அப்பர் பிரான், பாடுகின்றார். அந்த பதிகத்தின் பாடல் ஒன்றனில் (4.2.9) ஒரு பெரிய துணியிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட கோவண ஆடையையும் கீளினையும் உடையவர் பெருமான் என்று கூறுகின்றார். கீள்=அரை ஞாண் கயிறு. துணியிலிருந்து கிழிக்கப்படுவதால் கீழ் என்று அழைக்கப்படுவது. இங்கே கீள் என்று மருவிவிட்டது. இந்தப் பாடலில் சிவபிரான் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை உரித்த செயல் குறிப்பிடப்பட்டுள்ளது. மலை போன்ற யானை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தனது அடியார்களுக்காக எதனையும் செய்யவல்ல சிவபிரானின் வல்லமை இந்த தொடர் மூலம் குறிப்பிடப்பட்டு,இந்த குறிப்பினை, தன்னைத் தாக்க வரும் யானைக்கு, அப்பர் பிரான் ஓர் எச்சரிக்கையாக விடுப்பதை நாம் உணரலாம்.

சூழும் அரவத் துகிலும் துகில் கிழி கோவணக் கீளும்

யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அருவரை போன்ற

வேழம் உரித்த நிலையம் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்த

தாழும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.36.3) கோவண ஆடையை சிறந்த ஆடை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஐ=சிறந்த;துகில்=ஆடை: தேறல் ஆவது=தெளிந்து அறிவது; ஒன்றன்று=உலக மாயைகளில் சிக்குண்ட உயிர்களால் அறியமுடியாத ஒன்று.

வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர்

கீறு கோவண ஐ துகில் ஆடையர்

தேறல் ஆவது ஒன்றன்று செம்பொன்பள்ளி

ஆறு சூடிய அண்ணல் அவனையே

பாண்டி நாட்டுத் தலமாகிய திருப்பூவணம் சென்ற அப்பர் பிரானுக்கு இறைவன் தனது காட்சியை நல்குகின்றார். அந்த காட்சியின் விவரங்களை அவர் ஒரு பதிகமாக பதிவு செய்கின்றார். அந்த பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.18.4) கோவணமும் கீளும் அணிந்தவராக பெருமான் காட்சி தந்ததை பதிவு செய்கின்றார். படை மலிந்த=படைகளில் சிறந்த; நடை மலிந்த=விரைந்து செல்லக் கூடிய; பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும் என்று அப்பர் பிரான், சிவபிரான் தனக்கு அளித்த காட்சியில் முருகப் பெருமானையும் கண்டதாக கூறுகின்றார். சிவபிரானின் மகேச்வர மூர்த்தங்களில் சோமாஸ்கந்த மூர்த்தமும் ஒன்று. இந்த மூர்த்தத்தில் சிவபிரான், பார்வதி மற்றும் முருகப் பெருமானுடன் இணைந்திருப்பார். (சோ+உமா+ஸ்கந்தர்: சோ என்ற எழுத்து சிவபிரானை குறிக்கும். ஸ்கந்தன் என்பது முருகப்பெருமானின் பெயர்களில் ஒன்று); நயனம்=கண். நெற்றியில் கண் கொண்டு மற்றவர்களின் கண்ணினின்று வேறுபட்டு காணப்படுவதால், நயனம் என்று சிறப்பாக உணர்த்தப்பட்டுள்ளது. மூரல்=நகைப்பு; உலர்ந்த வெண்தலையில் காணப்படும் பற்கள், சிரிக்கும் நிலையினை உணர்த்துவதால் மூரல் வெண் சிரமாலை என்று கூறப்பட்டுள்ளது. சிவபெருமானின் அருகில் இருப்பதால் பூதகணங்கள் மிகவும் மகிழ்ச்சியாக பொலிந்து காணப்படுவதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.

படைமலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டுகையுடைய பிள்ளை தோன்றும்

நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும்

உடைமலிந்த கோவணமும்கீளும் தோன்றும் மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்

புடைமலிந்த பூதத்தின் பொலிவுதோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.67.1) தனது இடுப்பினில் கீள் அணிந்த பெருமானை கீளான் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். ஆளான அடியார்=பெருமானுக்கு அடிமையாக மாறி திருத்தொண்டு செய்யும் அடியார்கள்; ஆளான அடியார்கட்கு அன்பனாக பெருமான் இருந்த தன்மை, நாயன்மார்களின் சரித்திரத்திலிருந்து நாம் அறிகின்றோம். சண்டீசருக்கு பதவி அளித்தது. திருஞான சம்பந்தருக்கு பொற்றாளம் அளித்தது, முத்துப் பல்லக்கு அளித்தது, முத்துப் பந்தர் அருளியது, உலவாப் பொற்கிழி அருளியது, திருநாவுக்கரசு நாயனாருக்கு பொதிசோறு அளித்தது,அவரது தோள்களில் இடப இலச்சினைகள் பொறித்தது, தனது திருவடியை அவரது தலையினில் வைத்தது, சுந்தரருக்கு வேண்டிய போதெல்லாம் பொருள் அளித்தது முதலான நிகழ்ச்சிகள் அடியார்களுக்கு அன்பனாக விளங்கும் பெருமான் செய்யும் உதவிகள். பெரிய புராணத்தில் உணர்த்தப்படும் கருணைச் செயல்கள் அனைத்தும் இறைவன் அடியார்களுக்கு அன்பனாக இருந்த தன்மையால் எழுந்தது தானே. இவ்வாறு அடியார்களுக்கு உதவும் அன்பனாக விளங்கும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. துளையில்லாத முத்து என்று அப்பர் பிரான் இறைவனை குறிப்பிடுகின்றார். துளையிடப்பட்ட முத்தினை விடவும் துளையிடப்படாத முத்து சிறந்ததாக கருதப்படும். கீள்=கிழிக்கப்பட்ட துணியால் முறுக்கிய கயிறு, கோவணத்தை தாங்குவதற்காக இடுப்பினில் கட்டப்படுவது.

ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க

தாளானை தன்னொப்பார் இல்லாதானைச் சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த

தோளானை தோளாத முத்து ஒப்பானைத் தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த

கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே

திருவாய்மூர் தலத்தில், பெருமான், திருஞானசம்பந்தருக்கும் அப்பர் பிரானுக்கும் தனது நடனக் காட்சியை காட்டுகின்றார். அப்போது அப்பர் பிரான் தான் கண்ட கோலத்தை ஒரு பதிகமாக வடிக்கின்றார். அந்த பதிகத்தின் ஒரு பாடலில் (6.77.6) கோவணத்தையும் கீளையும் பெருமான் மிகுந்த விருப்பத்துடன் அணிந்து கொண்டதாக குறிப்பிடுகின்றார். அவ்வவர்க்கு ஈந்த கருணை என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்றவாறு பெருமான் கருணை புரியும் நிலையும் வேறுபடுகின்றது. இவ்வாறு கருணை வேறுபடும் நிலை இங்கே கூறப்படுகின்றது. மூரி=பெருமை;

அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக் கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்

முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரிப் பிறை போல் மறையக் கண்டேன்

கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்

வடி ஆரும் மூவிலைவேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

மழபாடி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.24.2) கீளார் கோவணத்தைத் தனது உடையாகக் கொண்டுள்ளா பெருமான், தனது உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டுள்ள தன்மையை சுந்தரர் குறிப்பிடுகின்றார். கேள்=உறவு;

கீளார் கோவணமும் திருநீறும் பூசி உன்றன்

தாளே வந்தடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ

வாளார் கண்ணி பங்கா மழபாடியுள் மாணிக்கமே

கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடல் ஒன்றினில் (7.27.6), சுந்தரர் கீளோடு கோவணமும் அரவும் அசைத்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.மன்னி=நிலையாக பொருந்தி நின்ற; இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் சரி கோவண ஆடையனே என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார்.

அரையார் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து

விரையார் கொன்றையுடன் விளங்கும் பிறை மேலுடையாய்

கரையாரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற

அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே

பெருமான் அணிந்திருக்கும் அரைஞாண்கயிறு துணியால் செய்யப்பட்டது என்று சுந்தரர் உணர்த்தும் பாடல் கடவூர் மயானம் தலத்தின் மீது (7..53.6)அருளப்பட்டது. பணி=பாம்பு: பஞ்சவடி என்பது கயிறு கொண்டு முறுக்கப்பட்ட பூணூல். மகாசங்கார காலத்தில் இறக்கும் தேவர்களின் தலைகளை மாலையாகவும் தலைக்கண்ணியாகவும் அணிந்து கொள்ளும் பெருமான், அத்தகைய தேவர்களின் முடியையும் பஞ்சவடியாக அணிந்து கொள்கின்றான் போலும் என்று தருமபுர ஆதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. பெருமானடிகள் என்பது கடவூர் மயானத்தில் உள்ள பெருமானின் திருநாமம். எனவே இந்த பாடலில் உள்ள கடவூர் என்பது கடவூர் மயானத்தைக் குறிக்கின்றது என்று பொருள் கொள்ளவேண்டும். திணிவார் குழை=அடர்ந்தும் நீண்டும் காணப்படும் குழை ஆபரணம்; பிணிவார் சடை=கட்டப்பட்டு நீண்ட சடை;

துணிவார் கீளும் கோவணமும் துதைந்து சுடலைப் பொடி அணிந்து

பணி மேலிட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர்த்

திணிவார் குழையர் புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்

பிணிவார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே

பொழிப்புரை:

குழல் போன்று சுருண்டும் நீண்டும் இருக்கும் சடையை உடையவரும், கொக்கின் இறகினைத் தனது சடையினில் அணிந்தவரும், அழகிய வண்ணம் கொண்ட ஊமத்தை மலரைச் சூட்டிக் கொண்டவரும், கொழுந்து விட்டெரியும் நெருப்புப் பிழம்பு போன்ற நிறத்தில் திருமேனி உடையவரும், வெண்மை நிறத்தில் உடைய சாம்பலைத் தனது திருமேனி முழுவதும் பூசிக்கொண்டவரும், கீளிலிருந்து சரிந்து தொங்கும் கோவண ஆடையை அணிந்தவரும்,அழகான தோற்றத்துடன் இருக்கும் பாம்பினைத் தனது திருமேனியின் பல இடங்களிலும் அணிந்தவரும், புலியின் தோலை உடையாக இடுப்பினில் அணிந்தவரும், விடையின் மீது ஏறிக்கொண்டு, தனது கால்களில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் நடனம் ஆடிக்கொண்டு வருபவரும் ஆகிய பெருமான் சித்தீச்சரம் திருக்கோயிலில் உறைகின்றார்.

பாடல் 8:

கரையார் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை தன்னை

வரையார் தோளால் எடுக்க முடிகள் நெரித்து மனம் ஒன்றி

உரையார் கீதம் பாட நல்ல உலப்பில் அருள் செய்தார்

திரையார் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சரத்தாரே

விளக்கம்:

கரை=அலைகள்; வரையார்=மலை போன்று வலிமையான; உலப்பில்=வற்றாத, அழியாத; கயிலை மலையின் கீழே இடுக்குண்ட அரக்கன் இராவணன் மனமொன்றி இறைவனை வழிபட்டதாக இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வேறு சிந்தனைகளில் மனம் அலை பாயாமல், மனம் ஒன்றி இறைவனை வழிபடவேண்டும் என்று பல திருமுறை பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. மனம் ஒன்றி இறைவனை வழிபடுவதால் நமக்கு நட்டம் ஏதும் இல்லை என்று உணர்த்தி மனம் ஒன்றி இறைவனை வழிபடவேண்டும் என்று அறிவுரை கூறும் அப்பர் பிரானின் பாடல் (4.81.3) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.கன்றிய=சினந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிரினைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு கோபம் அடைந்த காலனை கன்றிய காலன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

திருஞான சம்பந்தரும் தான் அருளிய முதல் பதிகத்தின் கடைப் பாடலில் (1.1.11). ஒன்றிய உணர்வுடன் இறைவனை குறித்து தான் பதிகம் பாடியதை நமக்கு உணர்த்தி, ஒன்றிய மனத்துடன் இறைவனை வணங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு முன்மாதிரியாக இருப்பதை நாம் காணலாம்.

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய

பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.50.1) பெருமானை எவ்வாறு வழிபடவேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுவதை சித்திப்பது இங்கே பொருத்தமாக இருக்கும். ஒல்லை=வேகம்; ஒல்லையாறி=பரபரப்பு அடங்கிய மனத்துடன், கள்ளம்=வஞ்சனை; வெய்ய சொல்=கடுஞ் சொற்கள்; பரபரப்பு ஏதும் இன்றி அமைதியான ஒன்றிய மனத்துடன், வஞ்சனையான எண்ணங்களையும் கடுமையான சொற்களையும் தவிர்த்து,தூய்மையான சிந்தனையுடன், காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய குற்றங்களையும் அந்த குற்றங்களால் விளையும் வினைகளையும் முழுவதும் அகற்றி, நல்ல முறையில் இறைவனின் திருநாமங்களை மீண்டும் மீண்டும் ஓதி வழிபடும் தனக்கு இறைவன் தக்கவாறு அருள் புரிய வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இறைஞ்சும் பாடல்.

ஒல்லையாறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய

சொல்லையாறித் தூய்மை செய்து காமவினை அகற்றி

நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்றேத்த

வல்லவாறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே .

சீர்காழி தலத்தின் மீது அருளிய திருவிருக்குக்குறள் பாடல் ஒன்றில் (1.90.10), திருஞானசம்பந்தர் மனமொன்றி வழிபட்ட திருமாலும் பிரமனும் சிவபெருமானின் அருள் பெற்ற தன்மையை குறிப்பிட்டு, மனம் ஒன்றி வழிபடுவதால் இறைவனின் அருள் எளிதில் கிடைக்கும் என்பதை உணர்த்துகின்றார்.பெயல்=அருள் மழை; பெயலவை=அருள் பொழிதல்; இயலல்=உள்ளத்தை பொருத்துதல்; இறைவன் பால் உள்ளத்தை பொருத்தி மனம் ஒன்றி அவனை வழிபட வேண்டும் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

அயனும் மாலுமாய்

முயலும் காழியான்

பெயலவை எய்தி நின்று

இயலும் உள்ளமே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.38.1) மனம் ஒன்றி நியமத்துடன் இறைவனை தினமும் தொழவேண்டும் என்று திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். நித்தலும்=நாள்தோறும்: நியமம்=முறையாக வழிபடும் நிலை; கோடு=கொம்பு, யானையின் கோடு=யானைத் தந்தம்; பீலி=மயிற்பீலி; வண்=வளமையாக விளங்கும்; தத்து=தாவிக் குதிக்கும் நீர். சாகரம்=கடல்; நீர் மலர்த் தூவி என்று புறப் பூஜையும் சித்தம் ஒன்ற என்று அகப் பூஜையும் இங்கே குறிப்பிடப்படுகின்றது; மேவும்=சென்று அடையும், தங்கும்; பொதுவாக நதிகள் கடலில் சென்று கலப்பதை பாய்தல் என்று குறிப்பிடுவது வழக்கம். பாய்தல் என்றால் வேகத்துடன் சென்று கலத்தல் என்று பொருள். மேவுதல் என்றால் சென்று அடைதல் என்று பொருள். திருச்சியின் அருகே மிகவும் விரிந்து காணப்படும் காவிரி நதி, பூம்புகாரின் அருகே கடலில் கலக்கும் இடத்தில் அகலம் மிகவும் குன்றி காணப்படுவதை நாம் காணலாம். இவ்வாறு மிகவும் குறைந்த நீரினை கடலில் சேர்க்கும் காவிரி நதியின் தன்மைக்கு, காவிரி நதி தனது நீர்வளம் முழுவதையும் தமிழ் மண்ணுக்கு தந்துவிட்டு எஞ்சிய நீருடன் கடலில் சென்று கலப்பதே காரணம். இந்த நிலைக்கு சேக்கிழார் சுவையாக வேறொரு காரணத்தை கற்பிப்பதை நாம் பெரிய புராணத்து பாடல் ஒன்றினில் காணலாம். இறைவனுக்கு ஆலகால விடம் அளித்ததால், கடலின் மீது கோபம் கொண்ட காவிரி நதி, மிகவும் குறைந்த நீருடன் கடலில் சென்று கலந்தது என்று நயமாக கூறுகின்றார், இந்த பாடல் திருமூல நாயனார் புராணத்தில் உள்ள பாடல்.தில்லை நகரில் கூத்தபிரானை தரிசித்த திருமூலர் காவிரி நதிக்கரையினை சென்று அடைந்ததை குறிப்பிடுகின்றது. புலியூர் என்ற சொல், பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரினை உடைய தில்லைச்சிதம்பரத்தினை குறிக்கும்.

தடநிலைப் மாளிகைப் புலியூர் தனில் உறைந்து இறைஞ்சிப் போய்

அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே

விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே

கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்

புள்ளிருக்குவேளூர் (தற்போதைய பெயர் வைத்தீச்வரன்கோயில்) தலத்தின் மீது அருளிய பாடலில், திருஞானசம்பந்தர், மனமொன்றி ஜடாயு இறைவனை வழிபட்டான் என்று கூறுகின்றார். அத்தி=யானை; பசி, தாகம், தூக்கம் ஆகியவற்றைக் கடந்த பெருமான், தான் உயிர் வாழும் வண்ணம் உதவி புரியும் உணவினுக்காக பிச்சை எடுப்பது போன்ற தோற்றத்தை தருவதால், அவரை பித்தர் என்று சம்பந்தர் அழைக்கின்றார். யானையின் பசுமைத் தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனைவரும் அதனைத் தவிர்ப்பார்கள். ஆனால் பெருமானோ யானையின் தோலை தனது உடல் மீது போர்த்துக் கொண்டதும் அன்றி, எரியும் தீப்பிழம்பினை தனது கையினில் ஏந்திய வண்ணம் நடமாடுகின்றார். இவ்வாறு அனைவரும் தவிக்கும் மூன்று செயல்களை செய்யும் பெருமானை மிகவும் பொருத்தமாக பித்தர் என்று சம்பந்தர் அழைப்பதை நாம் உணரலாம். பத்தி=பக்தி; உகந்தான்=உயர்ந்த நிலையினை அடைந்து மகிழ்ச்சியுடன் இருந்தான்;

அத்தியின் ஈருரி மூடி அழகாக அனல் ஏந்திப்

பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணுமிடம்

பத்தியினால் வழிபட்டுப் பலகாலம் தவம் செய்து

புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.101.4), ஐந்து புலன்களும் சேட்டைகள் ஏதும் செய்யாமல், மனதுடன் இணைந்து ஒன்றி செயல்பட, காமம் முதலான ஆறு குற்றங்களையும் வீசி எறிந்து, திருநீறு பூசியவர்களாக, தங்களது தலையினைத் தாழ்த்தி வழிபடும் அடியார்களுக்கு அஞ்சேல் என்று அபயம் அளிக்கின்ற பெருமான் உறைகின்ற தலம் திருவாரூர் என்று சம்பந்தர் கூறுகின்றார். அஞ்சு=ஐந்து புலன்கள்; ஆறு=காமம் முதலான ஆறு குற்றங்கள்; குஞ்சி=தலைமுடி; வந்தி செய்ய=வந்தனை செய்ய; மன்னும் ஊர்=நிலையாக பொருந்தி உறையும் ஊர்; பணைத்த=பருமையான;அஞ்சொலார்=அழகிய சொற்களை உடைய மகளிர்; அந்தண்=அழகும் குளிர்ச்சியும் பொருந்திய;

அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில்

குஞ்சியார வந்தி செய்ய அஞ்சல் என்னி மன்னுமூர்

பஞ்சியாரும் மெல்லடிப் பணைத்த கொங்கை நுண்ணிடை

அஞ்சொலார் அரங்கு எடுக்கும் அந்தண் ஆரூர் என்பதே

கள்ளம் மற்றும் வஞ்சனையற்ற மனத்தினை உடையவர்களாக, வஞ்சனை காரணமாக செய்யப் படும் வஞ்சனைச் செயல்களை அகற்றியவர்களாக, அன்பு மிகுந்த உள்ளத்துடன் மனமொன்றி வழிபாடும் அடியார்களின் உள்ளத்தில் இறைவன் விளங்குகின்றார் என்று திருவாரூர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.101.6) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அருத்தி=அன்பு; உள்குதல்= தியானித்தல், நினைத்தல்; சுரும்புகள்=வண்டுகள்; அள்ளல்=சேறு;வாரும்=கவர்ந்து உண்ணும்; ஆரல்=ஒரு வகை மீன்;

கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு

உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துளான் உகந்த ஊர்

துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய்

அள்ளல் நாரை ஆரல் வாரும் அந்தண் ஆரூர் என்பதே

கோகரணம் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.79.1) திருஞானசம்பந்தர், ஒன்றிய மனத்து அடியார்களுடன் கூடிய தேவர்கள் புகழ்ந்து வணங்கும் தலம் கோகரணம் என்று கூறுகின்றார். அடியார் அல்லாத மற்றவர்கள் காண்பதற்கு அரியவனாக உள்ள பெருமான், தனது உள்ளத்தில் இயற்றமிழாகவும் இசைத்தமிழாகவும் இருக்கின்றான் என்று உணர்த்துவதன் மூலம், தான் பாடிய பதிகங்கள் அனைத்தும் பெருமானால் பாடப்பட்டவை என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

என்றும் அரியான் அயலவர்க்கு இயலிசைப் பொருள்களாகி எனதுள்

நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன்முடிக் கடவுள் நண்ணும் இடமாம்

ஒன்றிய மனத்து அடியார் கூடி இமையோர் பரவு நீடரவமார்

குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.73.3), அப்பர் பிரான் மனமொன்றி தவம் செய்த விஜயன் என்று குறிப்பிட்டு, ஒன்றிய மனத்துடன் தன்னைத் தொழும் அடியார்களுக்கு இறைவன் அருள் புரிகின்றான் என்று நமக்கு உணர்த்துகின்றார். தவத்தினில் மனம் ஒன்றி இருந்ததால் தான், மூகாசுரன் என்ற அரக்கன் பன்றி வடிவம் கொண்டு தன்னைத் தாக்க வந்ததையும் உணராதவனாக முதலில் அர்ஜுனன் இருந்தான். பின்னர் ஆங்கே வந்த வேடன் அம்பு எய்ததைக் கண்ட தானும் அந்த பன்றியின் மீது அம்பு எய்தான். மனம் ஒன்றி இறைவனை நினைப்பவர்களுக்கு ஊனம் ஏதும் இல்லை என்ற அப்பர் பிரானின் வாக்கிற்கு இணங்க, சிவபிரான் தனது பக்தனைக் கொல்ல வந்த பன்றியை அம்பினால் வீழ்த்தினார். அர்ஜுனனது தவத்திற்கு இடையூறாக வந்த பன்றியை கொன்று வெற்றி கொண்ட வேடன் என்பதை உணர்த்தும் வகையில், வென்றிகொள் வேடன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தவம் செய்யும் காலத்தும் வில்லினை விட்டுப் பிரியாமல் இருந்த விஜயன் என்பதைக் குறிக்க, நீள்சிலை விசயன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பில் காலம்

நின்று தம் கழல்கள் ஏத்து நீள் சிலை விசயனுக்கு

வென்றி கொள் வேடனாகி விரும்பி வெம் கானகத்துச்

சென்று அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான், கங்கை வெள்ளத்தை அடக்கிய சிவபெருமான், தனது உள்ளத்தில் இருந்த ஆணவ மலத்தினையும் அடக்கி, தான் மனம் ஒன்றி அவனை நினைப்பதற்கு வழி வகுத்தவன் என்று கூறுகின்றார். வெள்ளத்தார்=அருள் வெள்ளத்தை உடையவர்; கள்ளம்=ஆணவ மலம்; விஞ்சையர்=வித்தியாதரர், ஆடல் மற்றும் பாடல் கலைகளில் தேர்ந்தவர்கள்; தேவர்களில் ஒரு வகை; விகிர்தன்=ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன்.பகீரதன் தனது மூதாதையர்கள், கபில முனிவரின் சாபத்தினால் சாம்பலாக பாதாளத்தில் குவிந்து கிடந்த சகர புத்திரர்களை கடைத்தேற்றும் நோக்கத்துடன், மேல் உலகத்தில் உள்ள கங்கை நதியினை நிலவுலகத்திற்கு கொண்டு வர பிரமனை நோக்கி தவம் செய்ய, பிரமன் கங்கை நதியினை உலகத்திற்கு செல்லுமாறு பணித்தார். ஆனால் மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கும் கங்கை நதியினை தாங்க வல்லவர் யார் என்று பகீரதன் திகைத்துக் கொண்டிருந்த நேரத்தில், பிரமன் சிவபெருமான் ஒருவருக்கே கங்கை நதியின் வேகத்தை அடக்கி தாங்கிக் கொள்ளும் வல்லமை உள்ளது என்று கூறினார்.ஏனையோரிடம் இல்லாத ஆற்றல் உடையவனாக திகழும் பெருமானை, விகிர்தன் என்று அழைப்பது தானே பொருத்தம். உலகப் பொருட்களின் மீது உலகத்து உயிர்களின் மீது ஒருவன் வைத்துள்ள விருப்பம் தானே, ஒன்றிய மனத்துடன் இறை வழிபாட்டில் ஈடுபடவொட்டாமல் அவனைத் தடுக்கின்றது.உலகப் பொருட்களின் மீது ஏற்படும் ஆசையைக் கடந்தவராக இருந்ததால் தானே, அப்பர் பிரான் ஒளி மிகுந்த இரத்தினக் கற்களையும் சாதாரண கற்களாக,குப்பை போன்று ஒன்றாக கருதி வீசி எறிந்தார்; அவ்வாறு தனது மனம் சிவபிரானைத் தவிர்த்து வேறு எந்த சிந்தனையும் இன்றி ஒன்றியதால், தனது உள்ளத்தின் உள்ளே விளங்கும் ஞானவொளியாக பெருமான் இருப்பதை தான் அறிய முடிந்தது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

வெள்ளத்தார் விஞ்சையர்கள் விரும்பவே

வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்

கள்ளத்தைக் கழியம் மனம் ஒன்றி நின்று

உள்ளத்தில் ஒளியைக் கண்டது உள்ளமே

.

பொழிப்புரை:

அலைகள் நிறைந்த கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவுக்கு அரசனாகிய அரக்கன் இராவணன், மலை போன்று வலிமை வாய்ந்த தனது தோள்களைக் கொண்டு கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி அரக்கனது தலைகள் நொறுங்குமாறு அழுத்தியவர் சிவபெருமான். தனது தவறினை உணர்ந்த அரக்கன், மனமொன்றி, நல்ல உரைகள் கொண்ட சாம வேதத்தினை இசைத்துப் பாடி இறைவனைப் போற்றவே, பெருமான் அரக்கனுக்கு அழியாத வரங்கள் கொடுத்து அருள் புரிந்தார். அவர் தாம், அலைகள் நிறைந்த நீர்நிலைகளால் சூழப்பட்டதும் செல்வம் நிறைந்ததும் ஆகிய நறையூர் தலத்தினில் உள்ள சித்தீச்சரம் திருக்கோயிலில் உறைகின்றார்.

பாடல் 9:

நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார் மனத்தாராய்

அடியார் அவரும் அருமா மறையும் அண்டத்து அமரரும்

முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி முதல்வா அருள் என்னச்

செடியார் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சரத்தாரே

விளக்கம்:

நேடி=தேடி; திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாத சிவபெருமான், தன்னை நினைப்பவர் மனதினில் உறைகின்றார், என்று குறிப்பிடுவதன் மூலம்,பிரமனும் திருமாலும் தங்களது ஆற்றல் மீது நம்பிக்கை கொண்டவர்களாக, பெருமானின் பெருமையை நினையாதவர்களாக, தங்களது தேடும் முயற்சியில் ஈடுபட்டனர் என்பதை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். செடி=புதர்;

பொழிப்புரை:

திரிவிக்ரமனாக நீண்டு உயர்ந்து மூன்று உலகங்களையும் அளந்த ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும், மிகுந்த முயற்சியுடன் தேடியும், அவர்கள் இருவரும் தனது திருவடியையும் திருமுடியையும் காண முடியாத வண்ணம், நீண்ட பேரழலாக நிமிர்ந்த சிவபெருமான், தன்னை தியானிக்கும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாக, அவர்களது மனதினில் உறைகின்றார். அத்தகைய அடியார்களும், அரிய சிறப்பு வாய்ந்த நான்மறைகளும் பல அண்டத்திலும் உள்ள தேவர்களும், தங்களது தலைகளை சாய்த்து பெருமானை வணங்கி, அவனது புகழ் மிகுந்த குணங்களை வீரச்செயல்களை கருணைச் செயல்களை எடுத்துரைத்து, முதல்வனே நீ அருள் புரியவேண்டும் என்று வேண்டுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமான், புதர்களாக நெற்பயிர்கள் செழித்து வளரும் திருநறையூர் தலத்தில் உள்ள சித்தீச்சரம் தலத்தில் உறைகின்றார்.

பாடல் 10:

நின்றுண் சமணும் இருந்துண் தேரர் நீண்ட போர்வையார்

ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்

கன்றுண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல் பொழியச்

சென்று உண்டார்ந்து சேரு நறையூர் சித்தீச்சரத்தாரே

விளக்கம்:

ஒன்றும்=சைவ சமயத்தின் சிறப்பு ஒன்றையும்; ஊமர்=மூடர்; பயப்பு=விருப்பு; கபாலம்=பாத்திரம்; பசுவிடமிருந்து பால் பெறவேண்டும் என்று விரும்புவோர்,முதலில் கன்றினை அவிழ்த்து விட்டு, பசுவின் மடியினை கன்று முட்டுமாறு செய்து, பால் சுரக்கச் செய்வார்கள். பின்னர் அந்த கன்றினை பசுவிடமிருந்து பிரித்து தனியே கட்டி விட்டு, தங்களுக்கு வேண்டிய பால் அனைத்தையும் கறந்த பின்னர், மீண்டும் கன்றுக்குட்டியினை அவிழ்த்து விடுவதை நாம் இன்று காணலாம். இந்த நிகழ்ச்சியை மிகவும் சுவையாக திருஞானசம்பந்தர் வர்ணனை செய்கின்றார்.

பொழிப்புரை:

நின்று கொண்டும் நடந்து கொண்டு உணவு உட்கொள்ளும் பழக்கம் உடைய சமணர்களும், ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு உணவு உட்கொள்வது மற்றும் நீண்ட போர்வை அணிவது ஆகிய பழக்கம் உடைய புத்தர்களும், சைவ சமயத்தின் சிறப்பினை அறியாத மூடர்கள் ஆவார்கள்; எனவே அவர்கள் சிவபெருமானை குறித்து சொல்லும் சொற்கள், உண்மைக்கும் புறம்பானவை. அத்தகைய மூடர்களின் வாயிலிருந்து வரும் வெற்றுரைகளை கேட்டு திரியும் மனிதர்களே, நீங்கள் சிவபெருமானைச் சார்ந்து உய்வினை அடைவீர்களாக. அவர் உறைகின்ற திருக்கோயில், செல்வ வளம் நிறைந்த நறையூர் தலத்தின் சித்தீச்சரம் ஆகும். இந்த தலத்தில் வாழும் பசுக்களின் முலைகள் பால் சுரப்பதைக் கண்ட, கன்றுகள் ஆவலுடன் பால் பருகிய பின்னரும், பாத்திரங்கள் நிறையும் வண்ணம் பசுக்கள் பால் சொரிவதைக் கண்ட தலத்து மக்கள், கன்றுகளை மீண்டு அவிழ்த்து விட, அந்த கன்றுகள் மீண்டும் தங்களது தாய்ப்பசுவினைச் சென்றடைந்து தங்களது வயிறு நிறைய பால் பருகிய பின்னர், கொட்டில் சென்றடையும் தலம் நறையூர். .

பாடல் 11:

குயிலார் கோல மாதவிகள் குளிர் பூஞ்சுரபுன்னை

செயிலார் பொய்கை சேரு நறையூர் சித்தீச்சரத்தாரை

மயிலார் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன்

பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவ நாசமே

விளக்கம்:

மாதவி=குருக்கொத்தி கொடிகள்; கோலம்=அழகு; செயில்=வயல்;

பொழிப்புரை:

குயில்கள் வாழும் அழகிய குருக்கத்திக் கொடிகள், மற்றும் குளிர்ந்த சுரபுன்னை மலர்கள் செழித்து வளர்வதும், வயல்களுக்கு நீரினை செலுத்தும் பொய்கைகளும் நிறைந்த நறையூர் தலத்தினில் உறையும் சித்தீச்சரத்தாரை, மயில்கள் உலாவும் சோலைகள் சூழ்ந்த சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தன் அருளியதும் கற்போருக்கு இனியதும் ஆகிய பாடல்களை நன்கு கற்றுத் தேர்ந்து வல்லவர்களாக விளங்கும் அடியார்களின் பாவங்கள் நாசமடையும்.

முடிவுரை:

பிறைகொள் சடையர் என்று தொடங்கும் இந்த பதிகத்தின் முதல் ஏழு பாடல்களில் பெருமானின் சடை குறிப்பிடப்படுகின்றது. அழியும் நிலையில் தன்னிடம் சரணடைந்த பிறைச் சந்திரனை ஏற்றுக்கொண்டு, அவனுக்கு மறுவாழ்வு அளித்த பெருமை உடைய சடை, மிகுந்த வேகத்துடன் பாய்ந்து கீழே இறங்கி வந்த கங்கை நதியைத் தாங்கி மறைத்த பெருமையையும் உடைய சடை என்பதை நாம் அறிவோம். மேலும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களையும்,தங்களிடையே பகைமை உணர்வையும் கொண்டுள்ள பாம்பு, சந்திரன், தண்ணீர் ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில், சடையில் வைத்துக்கொண்டு,பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமில்லை என்பதை உணர்த்தும் பெருமை படைத்தது அவரின் சடை. தவம் புரியும் முனிவர்கள் பலரும் சடை வளர்த்தாலும், சிவபெருமான் ஒருவரைத் தானே நாம் சடையன் என்று அழைக்கின்றோம். ஊருலாவு பலி கொடு என்று தொடங்கும் பதிகத்தின் மூலம்,நம்மை இந்த தலம் செல்லுமாறு வழிபடுத்திய திருஞானசம்பந்தர், இந்த பதிகத்தின் முதல் பாடலை, பெருமானின் பல அருட்செயல்களை குறிப்பிட்டு தொடங்குகின்றார்; சந்திரனுக்கு அடைக்கலம் அளித்தது, பாற்கடலிலிருந்து பொங்கி வந்த நஞ்சிலிருந்து உலகினை காப்பாற்றியது, கபாலம் ஏந்தியவண்ணம் பலிக்கென்று திரிந்து பக்குவப்பட்ட ஆன்மாக்களின் மலங்களை பிச்சையாக ஏற்றுக் கொண்டு முக்தி அளிப்பது என்பவை இந்த பாடலில் உணர்த்தப்படும் செயல்கள்; இரண்டாவது பாடல் மூலம், தனது காதலியுடன் மகிழ்ந்து இருப்பது போன்று உலகுக்கு உணர்த்தி, உலகத்து உயிர்களை போகத்தில் ஆழ்த்தி, உலகினில் தொடர்ந்து இனப்பெருக்கம் ஏற்படுவதற்கு பெருமான் வழிவகுக்கின்றார் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார்.மூப்படையாதவர் என்று பெருமான் காலத்தைக் கடந்து நிற்கும் தன்மை மூன்றாவது பாடலிலும், உலகத்தவரின் அறியாமை கண்டு பெருமான் சூட்டிக்கொண்டுள்ள தலை மாலை நகைக்கின்றது என்று நான்காவது பாடலிலும், பெருமானின் புகழினை அடியார்களும் சித்தர்களும் பாடல்களாக பாடியும் ஆடியும் கொண்டாடுகின்றனர் என்று ஐந்தாவது பாடலிலும், பெருமானின் திருமேனி பொன்னை விடவும் சுடர் விட்டு பிரகாசிக்கின்றது என்று ஆறாவது பாடலிலும், அழகு உடையவராக இருப்பினும் எளிமையான கோவண ஆடையுடன் காணப்படும் பெருமான் என்று ஏழாவது பாடலிலும், மனமொன்றி வழிபட்ட அரக்கன் இராவணனுக்கு அருள் புரிந்த கருணையாளர் என்று எட்டாவது பாடலிலும், தன்னை தியானிக்கும் அடியார்கள் மனதினில் உறையும் வண்ணம் எளிதில் நெருங்கக் கூடியவர் என்று ஒன்பதாவது பாடலிலும், குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், பத்தாவது பாடலில் தலத்தின் செல்வச்சிறப்பை உணர்த்துகின்றார். கடைப்பாடல் இந்த பதிகத்தை முறையாக பாடும் அடியார்களின் பாவங்கள் நாசமடையும் என்று உணர்த்துகின்றது. பெருமானின் அருள் புரியும் தன்மையை இந்த பதிகம் மூலம் அறிந்து கொண்ட நாம், பல சித்தர்கள் வழிபட்ட இந்த தலம் சென்றடைந்து, பரமனைப் பணிந்து வணங்கி, நமது பாவங்களையும் வினைகளையும் தீர்த்துக் கொண்டு வாழ்வினில் உய்வினை அடைவோமாக.



Share



Was this helpful?