பின்னணி:
மதுரையில் சமணர்களுடன் அனல் வாதம் செய்ய வேண்டிய தருணத்தில், ஒரு பதிகம் அடங்கிய ஓலைச் சுவட்டினை நெருப்பினில் இடவேண்டிய அவசியம் திருஞானசம்பந்தருக்கு ஏற்பட்டது. பாண்டிய மன்னனை வாட்டிய வெப்பு நோயினைத் தீர்ப்பதற்கு சமண குருமார்கள் செய்த அனைத்து முயற்சிகளும் பயனற்ற போது, திருஞானசம்பந்தர் திருநீற்றைனை மன்னனது உடலில் பூசிய வண்ணம் மந்திரமாவது நீறு என்ற பதிகத்தினை பாடியபோது வெப்பு நோய் மறைந்தது. திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் திறனை, நேரில் கண்ட சமண குருமார்கள், சொற்வாதம் செய்து அவரை வெல்லமுடியாது என்பதை உணர்ந்தவர்களாக, அவரை அனல் வாதம் புரிய அழைத்தனர். தத்தம் சமயக் கொள்கையின் உண்மைகளை ஏட்டினில் எழுதி அந்த ஓலைகளை நெருப்பினில் இட, எவரது ஓலை எரிந்து அழியாமல் இருக்கின்றதோ அந்த சமயக் கொள்கையே சிறந்தது என்று சமணர்கள் முன்மொழிந்தனர்.திருஞானசம்பந்தரும் அனல் வாதம் செய்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று அதற்கு உடன்பட்டார். அப்போது அவர் இறைவனை மனதினில் தியானம் செய்தவண்ணம், எந்த பதிகத்தை நெருப்பினில் இடுவது என்பதை கயிறு சார்த்திப் பார்த்த போது, பெருமானின் திருவருள் இந்த பதிகத்தை அடையாளம் காட்டியது. முதன் முதலில் கயிறு சார்த்திப் பதிகத்தினை தேர்ந்தெடுத்தவர் திருஞானசம்பந்தர் தான். மன்னனின் ஆணையின் பேரில் அரசவையில் தீக்குண்டம் அமைக்கப்பட்டது.
தான் கயிறு சார்த்தும் முறையால் தேர்ந்தெடுத்த பதிகம் அடங்கிய ஓலையினை திருஞானசம்பந்தர், தளிரிள வளரொளி (3.87) என்ற பதிகத்தை பாடியவாறு,நெருப்பினில் இட்டார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், நள்ளாறர் தம் நாமமே, எரியிடில் பழுதிலை மெய்ம்மையே என்ற தொடர் காணப் படுகின்றது. இந்த பின்னணியில் நெருப்பினில் இடப்பட்ட இந்த பதிகம் அடங்கிய ஓலை, தொடர்ந்து பச்சை நிறத்துடன் விளங்கியதால் பச்சைப் பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த ஓலையை தீக்குண்டத்திலிருந்து எடுத்து திருஞானசம்பந்தர் அவையோருக்கும் மன்னனுக்கும் காட்டியபோது, தீயில் இடப்படுவதற்கு முன்னம் இருந்ததை விடவும் அதிக பொலிவு பெற்று விளங்கியதைக் கண்டு மன்னன் உட்பட அனைவரும் வியந்தனர். பின்னர் திருஞானசம்பந்தர் அந்த ஓலையினை, தான் வைத்திருந்த சுவடிக் கட்டின் நடுவே கோத்தார். அப்போது அரசன், சமணரைப் பார்த்து, நீவிர் தீயினில் இட்ட ஓலையினை எடுத்துக் காட்டும் என்று சொன்னான். சமணர்கள் தீக்குண்டத்தை நெருங்கிய போது தீச்சுடர் மேலும் பெருகவே, அவர்கள் தங்களது கைகள் வெந்து அகன்றதைக் கண்ட மன்னன், தண்ணீர் கொண்டுவந்து அந்த தீக்குண்டத்தை தணிவித்தான். ஆங்கே சாம்பலும் கரியும் அன்றி வேறேதும் இல்லமை கண்ட, சமணர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். இத்தகைய அதிசயம் நிகழ்வதற்கு காரணமாக இருந்த இந்த பதிகத்தினை பக்தியுடன் ஓதும் அடியார்கள், சனிகிரகத்தால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று நம்பப்படுகின்றது. போகமார்த்த பூண்முலையாள் என்பது திருநள்ளாறு தலத்தின் அம்பிகையின் திருநாமம். அம்பிகை அளித்த ஞானப்பால் குடித்ததால் ஞானம் வரப்பெற்ற திருஞானசம்பந்தருக்கு சமணர்களுடன் அனல்வாதம் புரியும் இந்த நேரத்தில், அம்பிகையின் அருளும் துணையாக இருக்கும் என்று உணர்த்தும் முகமாக, கயிறு சார்த்தும் போது இந்த பாடல் வெளிப்பட பெருமான் திருவுள்ளம் கொண்டார் போலும்.
இந்தப் பதிகத்தின் மற்றொரு சிறப்பு, தருமபுரம் பதியினில், மாதர் மடப்பிடியும் என தொடங்கும் பதிகத்தினை, தனது யாழினில் வாசிக்க முயன்ற அறியாமையை நினைத்து வருந்தி தனது யாழினை உடைக்க நினைத்த திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருஞானசம்பந்தப் பெருமானால் ஆறுதல் சொல்லப்பட்ட பின்னர் யாழில் இசைத்த முதல் பதிகம் இந்தப் பதிகம் ஆகும். மறுபடியும் திருநீலகண்ட யாழ்ப்பாணர், யாழில் தேவாரப் பதிகங்களைப் பாடியது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. இந்த தலத்தின் மீது சம்பந்தப் பெருமான் அருளிய மூன்று பதிகங்களும், உமையம்மை பற்றிய குறிப்பினை தனது முதல் அடியில் கொண்டுள்ளன. மற்ற இரண்டு பதிகங்கள், பாடக மெல்லடிப் பாவையோடும், தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்.
தலத்து இறைவியின் பெயருடன் தொடங்கும் ஞானசம்பந்தர் பதிகங்களில் ஒன்று. மற்றவை :
வண்டார்குழல் அரிவையோடு சீர்காழி வண்டார்குழலி
உண்ணாமுலை உமையாளொடும் அண்ணாமலை உண்ணாமுலை அம்மை
மருவார் குழலி செம்பொன்பள்ளி மருவார்குழலி
பண்ணிலாவிய மொழயுமை தேவூர் தேன்மொழியம்மை
பூங்கொடி மடவாள் ஓமமாம்புலியூர் பூங்கொடி மடவாள்
பாடல் 1:
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே
விளக்கம்;
சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைத் தொகுதிகளின் பயனை, இன்பமாகவும் துன்பமாகவும் அனைத்து உயிர்களும் கழிக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. உயிர் பிறப்பெடுக்கும் அந்த தருணத்திலேயே அந்தந்த உயிர்கள் அந்த பிறவியில் கழிக்கப்பட வேண்டிய வினைகள் அந்த உயிர்களுடன் பொருந்துகின்றன. இது இறைவனின் செயல் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தேவி என்றாலும் இறைவன் என்றாலும் ஒருவரைத் தானெ குறிக்கின்றது. இந்த தன்மையே, போகமார்த்த பூண்முலையாள் என்ற தொடர் மூலம் உயிர்கள் அனுபவித்துக் கழிக்க வேண்டிய வினைகளின் பயன்களை,இன்ப துன்ப அனுபவங்களாகிய போகத்தை, தனது மார்பகத்திலே தேக்கி, உயிர்களுக்கு தேவி அளிக்கின்றாள் என்ற குறிப்பு தோன்றும் வண்ணம் பயன்படுத்தப் பட்டுள்ளது போலும். ஆர்த்த=நிறைந்த, சேர்ந்துள்ள, பிணைந்து நிற்கும்; அகலம்=மார்பு; ஆகம்=உடல், இங்கே மார்பு என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம்; பெருமானின் திருமேனி பொன் போன்று மிகவும் அழகாகவும் சிவந்த நிறத்தில் இருப்பதை உணர்த்த பொன்னகலம் என்று கூறுகின்றார். பரமேட்டி=அனைவரிலும் மேலானவன், தனக்கு மேலாக ஒருவரும் இல்லாதவன்;
பொழிப்புரை:
போகமார்த்த பூண்முலையாள் என்ற திருநாமம் தாங்கிய தேவியைத் தனது பொன்னுடலின் இடது பாகத்தில் தாங்கியவனும், பசுமை நிறைந்த கண்களும் வெண்மை நிறமும் கொண்ட எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவனும், அனைவர்க்கும் தலைவனும், தனக்கு மேலாக வேறொருவர் இல்லாத வண்ணத்தினை தனது தன்மையாகக் கொண்டவனும், தனது திருமேனியில் தோலாடைகளை உடையவனும், இடையில் தான் அணிந்துள்ள கோவண ஆடையின் மேல் நாகத்தை இறுகக் கச்சாக கட்டியவனும் எம்பெருமான் என்று அனைவராலும் அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் திருநள்ளாறு தலமாகும்.
பாடல் 2:
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே
விளக்கம்:
பிராட்டியின் திருநாமத்துடன் பதிகத்தின் முதல் பாடலைத் தொடங்கி, பிராட்டியுடன் இணைந்து மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு திருப்தி ஏற்படவில்லை போலும். இந்த பாடலில் தோடுடைய காதன் என்று பெருமானை குறிப்பிட்டு, மாதொருபாகனாக அவர் இருக்கும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார். சிலம்பணிந்தவன், துகிலாடை உடுத்தவன், மேகலை அணிந்தவன் என்றெல்லாம் பல பாடல்களில் மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் நிலையை குறிப்பிடுவதில் திருஞானசம்பந்தருக்கு அளவு கடந்த ஆர்வம் இருப்பதை நாம் அவரது பாடல்களிலிருந்து உணரலாம். தொலையா=என்றும் குறையாத, என்றும் அழியாத; ஏடுடைய=ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக; பீடு=பெருமை; உப்பு,தேன், தயிர், பால், நெய், கருப்பஞ்சாறு, மற்றும் நீர். என்பன ஏழு கடல்கள்; அவர் ஆளுகைக்கு உட்பட்ட கீழ் மேல் உலகங்கள் ஏழு ஆகும். ஏழு மேலுலகங்கள் பூலோகம், புவர்லோகம், சுவர்கலோகம், ஜனலோகம், தவலோகம், மகாலோகம் மற்றும் சத்யலோகம். மேவுதல்=பொருந்தி உறைதல்;
பொழிப்புரை:
தனது ஒரு காதினில் தோடு ஆபரணத்தையும் மற்றொரு காதினில் குழை ஆபரணமும் அணிந்து மாதொருபாகனாக இருக்கும் நிலையை உணர்த்துபவனும்,புலித்தோலாடையை அணிந்தவனும், என்றும் குறையாதும் அழியாதும் இருக்கும் பெருமையை உடைய்வனும், போர்க்குணம் கொண்ட எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவனும், தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டது போல் திகழும் மேலேழ் உலகங்களுடன் ஏழு வகையான் கடல்களால் சூழப்பட்ட நிலவுலகத்தையும் தனது நாடாகக் கொண்டவனும், நம்பெருமான் என்று அனைவராலும் அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பமுடன் பொருந்தி உறைவது திருநள்ளாறு தலமாகும்.
பாடல் 3:
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி யணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே
விளக்கம்:
பசுஞ்சாணம் கொண்டு திருநீறு தயாரிப்பதற்கு முறை யாது என்பது ஆகம நூல்களில் சொல்லப் படுகின்றது. அத்தகைய திருநீறு கொண்டு இறைவனை நீராட்டுவது மிகவும் சிறப்பாக கருதப் படுகின்றது. இறைவனும் அவ்வாறு முறையாக தயாரிக்கப்ப்ட்ட திருநீறு கொண்டு நீராட்டப் படுவதையே விரும்புகின்றான் என்பதை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். ஆற்ற=மிகுந்த; அணியிழை=நேர்த்தியான ஆபரணங்கள் அணிந்த பார்வதி தேவி; பக்தர் என்ற வடமொழிச் சொல் பத்தர் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவார்கள்; ஒன்று கொலாம் என்று தொடங்கும் பதிகத்தின் கடைப்பாடலில் பத்து கொலாம் அடியார்கள் தம் செய்கை தாமே என்று அப்பர் பிரான் கூறுவதிலிருந்து அந்த சிறந்த பத்து குணங்கள் உடையவரே பத்தர் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானவர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும். மான்மறி=மான் கன்று; வெறி குணம் ஏற்றப்பட்ட மானினை, வேள்வியிலிருந்து தோற்றுவித்து சிவபெருமான் மீது தாருகவனத்து முனிவர்கள் ஏவினார்கள். தன்னை அந்த மான் நெருங்கிய போது, பெருமான், அந்த மானின் குணத்தை மாற்றி, இயல்பான குணத்துடன் துள்ளித் திரியும் மானாக மாற்றித் தனது கையில் ஏற்றுக்கொண்டார் என்பது புராணம். அவ்வாறே அவர்கள் ஏவிய மழு ஆயுதத்தையும் பற்றிக்கொண்டு பெருமான், செயலறச் செய்தார் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இதனை உணர்த்தும் பொருட்டே பற்றிய கை என்று மிகவும் பொருத்தமாக திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
நான்மறைகளை அருளிய காரணத்தால் சிவபிரான் நான்மறையான் என்று இங்கே அழைக்கப்படுகின்றார். வடகிழக்கை நோக்கி உள்ள பளிங்கு நிறமான ஈசான முகத்தில் இருந்து சிவ ஆகமங்களும், கிழக்கு நோக்கிய தத்புருஷ முகத்தில் இருந்து இருபத்தியொரு சாகைகள் கொண்ட இருக்கு வேதமும்,தெற்கு நோக்கிய கருநிற அகோர முகத்தில் இருந்து நூறு சாகைகள் கொண்ட யஜுர் வேதமும், வடக்கு நோக்கிய செம்மை நிற வாமதேவ முகத்தில் இருந்து ஆயிரம் சாகைகள் கொண்ட சாம வேதமும், மேற்கு நோக்கிய சத்தியோஜாதம் முகத்தில் இருந்து ஒன்பது சாகைகள் கொண்ட அதர்வண வேதமும் தோன்றியது. இதனைக் குறிக்கும் திருவிளையாடல் புராணம் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
கீழ்த்திசை முகத்தொன்று அடுத்த நால் ஐந்தில் கிளைத்ததால் இருக்கு அது தென்பால்
ஈட்டிய இரண்டாம் வேத நூறு உருவோடு எழுந்தது வட திசை முகத்தின்
நீட்டிய சாமம் ஆயிரம் முகத்தான் நிமிர்ந்தது குடதிசை முகத்தில்
நாட்டிய ஒன்பது உருவோடு கிளைத்து நடந்தது நான்கதாம் மறையே
பொழிப்புரை:
பசுஞ்சாணம் கொண்டு முறையாக தயாரிக்கப்பட்ட திருநீற்றினால் அபிடேகம் செய்யப்படுவதை மிகவும் விரும்புபவனும், அழகிய ஆபரணங்கள் அணிந்துள்ள பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், தனது அடியார்களால் முறையாக போற்றப்படும் திருவடிகள் உடையவனும், தாருகவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட மான் கன்று, மழு, சூலம் ஆகியவற்றைத் தனது கைகளால் பற்றி ஏற்றுக்கொண்டவனும்,உலகினுக்கு நான்மறைகளை அருளியவனும், நம்பெருமான் என்று அனைவராலும் அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பமுடன் பொருந்தி உறைவது திருநள்ளாறு தலமாகும்
பாடல் 4:
புல்கவல்ல வார்சடைமேற் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாதநி ழற்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே
விளக்கம்:
புல்க=தழுவிக்கொள்ள; பெருமானின் சடை நீண்டும் மென்மையாகவும் இருப்பதால், அந்த சடையைக் காணும் எவருக்கும் தழுவிக் கொள்ள விருப்பம் ஏற்படுத்தும் என்று கூறுகின்றார். வார்சடை=நீண்ட சடை; பூம்புனல்=பல வகையான பூக்களையும் அடித்துக் கொண்டு வரும் கங்கை நதி;பெய்து=சூட்டிக்கொண்டு; அயலே-அருகே; மல்க=நிறைந்த; பல்க=இறுக; நல்குதல்=அருளல்;
பொழிப்புரை:
காண்பவர் தழுவிக் கொள்ளவேண்டும் என்ற ஆசையினை ஏற்படுத்தும் மென்மையான நீண்ட சடையினை உடைய பெருமான், அந்த சடையின் மேல் பல விதமான பூக்களை அடித்துக் கொண்டு வரும் கங்கை நதியினையும் அதன் அருகே நிரம்ப கொன்றை மலர்மாலைகளையும் ஒற்றைப் பிறைச் சந்திரனோடு சூட்டிக்கொண்டுள்ள பெருமானின், பொன் போன்று உயர்ந்த திருப்பாதங்களை தொண்டர்கள் இறுகப் பற்றிக்கொண்டு வழிபடுகின்றனர். அத்தகைய அடியார்கள் தனது திருவடிகளின் நிழலைச் சார்ந்து இருக்கும் வண்ணம் அருள் புரிபவனும் நம்பெருமான் என்று அனைவராலும் அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறைவது திருநள்ளாறு தலமாகும்.
பாடல் 5:
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே
விளக்கம்:
ஏறு தாங்கி=தனது கொடியினில் எருதின் உருவத்தைத் தாங்கும் தன்மை; பேணி=சிறப்பித்து; பெருமான் எருதினைத் தவிர்த்து வேறு எதனையும் தனது வாகனமாக ஏற்றுக் கொள்ளாமை, எருதினை சிறப்பித்தாக கருதப்படுகின்றாது. ஏர்=அழகு; இளமதியம்=ஒவ்வொரு கலையாக தேய்ந்து அழியும் நிலையிலிருந்து மாறி வளரத்தொடங்கிய பிறைச் சந்திரன்; ஆறு=கங்கை நதி; சென்னி=சடையுடைய தலை; ஆடரவம்=படமெடுத்தாடும் குணம் கொண்ட பாம்பு; நாறு=நறுமணம்.
நிரை=வரிசை; நிரை கொன்றை=வரிசையாக தொடுத்து கட்டப்பட்ட கொன்றை மாலை;
பொழிப்புரை:
தனது கொடியில் சித்திரமாக ஏற்றுக்கொண்டும், வாகனமாக ஏற்றுக்கொண்டும் எருதுக்கு சிறப்பை அருளியவர் பெருமான்; அழகியதும் வளரும் நிலைக்கு மாற்றப்பட்டதும் ஆகிய ஒற்றைப் பிறைச் சந்திரனையும் கங்கை நதியையும் தனது சடைத்தலையில் படம் எடுத்தாடும் பாம்பினையும் சூட்டிக் கொண்டுள்ளார்; திருநீறு பூசப்பட்ட மார்பினில், பூணூல் புரளும் வண்ணம் அணிந்துள்ள பெருமான், அதன் அருகே வரிசையாக கட்டப்பட்ட கொன்றை மலர் மாலையினையும் அணிந்து உள்ளதால், அந்த கொன்றை மலர்களின் நறுமணம் பொருந்திய மார்பினை உடையவனாக விளங்கும் பெருமானை நம்பெருமான் என்று அனைவரும் அழைக்கின்றனர். அத்தகைய பெருமான் பொருந்தி உறைவது திருநள்ளாறு தலமாகும்.
பாடல் 6:
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே
விளக்கம்:
எங்களுச்சி=தலை மேல் வைத்து எம்மால் கொண்டாடப்படுபவன்; இறைஞ்ச=இறைஞ்சி வழிபட; உச்சி=தலை; தேவன்=உயர்ந்தவன்;இமையோர்கள்=தேவர்கள்; கண் இமைக்காமல் இருக்கும் தன்மையால், இமையாதவர் என்ற பொருள் பட இமையோர் என்று அழைக்கப்படுகின்றனர்.தங்களது தலையால் வணங்கும் பக்தர்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு இறைவன் அளித்துள்ள அங்கங்களின் கடமைகளை கூறும் அங்கமாலை திருப்பதிகத்தினையும், வாழ்த்த வாயும் என்று தொடங்கும் அப்பர் பிரானின் பாடலையும் நினைவூட்டுகின்றது. .
தலையே நீ வணங்காய் தலைமாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய்
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவி துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே
பொழிப்புரை:
சந்திரனைத் தனது தலையின் மீது வைத்துக் கொண்டு அபயம் அளித்து காப்பாற்றிய தேவனாகிய பெருமானை, இமையோர்கள் எங்களது இறைவன்,எங்களது தலையின் மீது வைத்து கொண்டாடும் தகுதி வாய்ந்த தலைவன் என்று புகழ்ந்து, பெருமானின் திருவடிகளை பணிந்து வழிபடுகின்றனர்.இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானை தங்களது தலையைத் தாழ்த்தி வணங்கும் தனது அடியார்கள் அனைவரும் எங்களது உச்சியில் வைத்து வணங்கப் படுபவன் என்றும் நம்பெருமான் என்றும் குறிப்பிட்டு வழிபடுகின்றனர். இவ்வாறு பலராலும் தங்களது உச்சி என்று வணங்கப்படும் இறைவன் பொருந்தி உறைவது திருநள்ளாறு தலமாகும்.
பாடல் 7:
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொண் முழவதிர
அஞ்சிடத்தோ ராடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே
விளக்கம்:
விண்கொள் முழவு=உரத்த ஓசையை எழுப்பும் முழவு இசைக்கருவி; ஆகாயத்தின் தன்மை ஒலி என்பதால், ஒலி எழுப்பும் முழவு இசைக் கருவியை விண்கொள் முழவு என்றார் போலும். அஞ்சிடம்=அனைவரும் அஞ்சும் இடமாகிய சுடுகாடு; வெஞ்சுடர்=கொடிய வெப்பத்தையும் ஒளியையும் வெப்பத்தையும் வீசும் தீச்சுடர்; ஏனையோர் அஞ்சும் மூன்று செயல்களை பெருமான் செய்த தன்மை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. அச்சம் காரணமாக சுடுகாடு செல்வதற்கே ஏனையோர் அச்சமும் தயக்கமும் கொள்வார்கள். அத்தகைய சுடுகாட்டினில் நடனம் ஆடுபவன் இறைவன்; இங்கே சுடுகாடு என்பது பிரளயத்தின் முடிவில் உலகமே சுடுகாடாக காட்சி தரும் நிலையை குறிப்பிடுகின்றது. எனினும் சுடுகாட்டின் பொதுத்தன்மை காரணமாக, அஞ்சிடம் என்று சொல்லப் படுகின்றது. ஆலகால விடத்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்க திசைக்கு ஒருவராக அனைத்து தேவர்களும் ஓடிய போது, அச்சம் ஏதும் கொள்ளாமல் பெருமான் நஞ்சினை உட்கொண்டு உலகினை காப்பாற்றியது நாம் அனைவரும் அறிந்ததே. தக்கனுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக,தக்கன் சந்திரனுக்கு அளித்த சாபத்திற்கு மாற்றாக சந்திரன் முற்றிலும் அழிந்து தேயாமல் காப்பாற்ற எவரும் முன்வரவில்லை; சந்திரன் பிரமனை அணுகிய போது, பிரமன், சிவபெருமானிடம் சரணடையுமாறு ஆலோசனை கூற சந்திரனும் பெருமானிடம் சரண் அடைந்து பலனடைந்தான். எந்த தருணத்திலும் எவரிடமும் எதற்காகவும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமற்ற ஆற்றல் உடையவன் பெருமான் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. பெருமானை தங்களது தலைமேல் வைத்து கொண்டாடத் தக்கவன் என்று தேவர்களும் தொழும் பெருமை படைத்தவன் பெருமான் என்று முந்தைய பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அதற்கான காரணத்தை, எதற்கும் அஞ்சாதவனாக பெருமான் இருக்கும் நிலையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார் போலும்.
பொழிப்புரை:
கொடிய வெப்பத்தை வெளிப்படுத்தும் தீச்சுடரினைத் தனது கையில் ஏந்தியவனாக, மிகுந்த ஓசையை எழுப்பும் முழவு இசைக்கருவி பின்னணியில் முழங்க,ஏனையோர் அஞ்சும் சுடுகாட்டினில் சிறப்பாக பாடியவண்ணம் நடனமாடுபவனும்; தனது செஞ்சடையில், தக்கனது சாபத்தின் காரணமாக அழியும் நிலையில் தன்னிடம் வந்து சரணடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனை அணிந்து கொண்டு காத்தவனும், மாணிக்கம் பதித்தது போன்று ஒளியுடன் திகழும் கழுத்தினில் ஆலகால விடத்தைத் தேக்கியவனும் நம்பெருமான் என்று அனைவராலும் அழைக்கப் படுபவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறைவது திருநள்ளாறு தலமாகும்.
பாடல் 8:
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பான்ம தியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே
விளக்கம்:
சிட்டம்=பெருமை; திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளும் வானில் பறக்கும் தன்மை கொண்டிருந்தமை குறித்து பெருமை படைத்த கோட்டைகள் என்று கூறுகின்றார். ஆர்ந்த= பொருந்திய; சிலை வரை=வில்லாக வளைக்கப்பட்ட மந்தர மலை; தீயம்பு=அக்னிக் கடவுள் முனையாக பொருந்திய அம்பு;திரிபுரத்து அரக்கர்களை அழிக்க பெருமான் பயன்படுத்திய அம்பினில், தண்டாக திருமாலும், இறகுகளாக வாயுவும், கூரிய முனையாக தீக்கடவுளும் பங்கேற்றதாக புராணம் குறிப்பிடுகின்றது. சுட்டு=சுட்டெரித்து; மாட்டி=மாளச்செய்து; பட்டம்= ஆண்கள் நெற்றியில் அணியும் அணிகலன்; தன்னைச் சரண் அடைந்தோரை பெருமான் காக்கும் தன்மை, தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி திரிபுரத்து கோட்டைகளை அழித்தமை மற்றும் சந்திரனை அழியாமல் காத்தமை ஆகிய செயல்கள் மூலம் உணர்த்தப்படுகின்றது. சப்த விடங்கத் தலங்களில் திருநள்ளாறு தலமும் ஒன்று. ஏழு விடங்கத் தலங்களாவன,திருவாரூர் (அஜபா நடனம், வீதி விடங்கர்), நாகை காரோணம் (கடற்கரை நடனம், சுந்தர விடங்கர்), காறாயில் (ஆதி விடங்கர், குக்குட நடனம்), கோளிலி(பிருந்த நடனம், அவனி விடங்கர்), மறைக்காடு (ஹஸ்த பாத நடனம், அன்ன நடனம், புவனி விடங்கர்), வாய்மூர் (கமல நடனம், நில விடங்கர்), நள்ளாறு(உன்மத்த நடனம், நகர விடங்கர்). எதற்கும் அஞ்சாத வீரத்துடன் கருணை உள்ளமும் கொண்டவன் பெருமான் என்பது அவனது இரண்டு கருணைச் செயல்கள் மூலம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
வானில் பறக்கும் தன்மையால் பெருமை வாய்ந்ததாக கருதப்பட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும், மந்தர மலையை வளைத்து செய்யப்ப்ட்ட வில்லினில் பொருந்திய அம்பு கொண்டு, தீக்கடவுள் அம்பின் நுனியாகவும் திருமால் அம்பின் தண்டாகவும் வாயு அம்பின் சிறகுகளாகவும் பொருந்திய அம்பு கொண்டு, எரித்து அழித்தவன் சிவபெருமான்; அவன் வெண்மை நிறம் பொருந்திய திருநீறு கொண்டு அபிடேகம் செய்யப்படுவதை மிகவும் விரும்புகின்றான். மேலும் பட்டம் எனும் அணிகலனை நெற்றியில் அணிந்த போதிலும், ஒற்றைப் பிறைச் சந்திரனையும் நெற்றியில் சூட்டிக் கொண்டுள்ளான்.இத்தகைய பெருமான், நம்பெருமான் என்று பலராலும் அழைக்கப்படும் பெருமான், நகர விடங்கராக, உன்மத்த நடனம் ஆடுபவராக பொருந்தி உறைவது திருநள்ளாறு தலமாகும்.
பாடல் 9:
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுடனே யொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழல் ஆரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே
விளக்கம்:
உண்ணலாகா=எந்த தேவரும் உண்ணமுடியாத; கண்டம்=கழுத்து; தான் உட்கொண்ட ஆலகால விடம், தனது வயிற்றினைச் சென்று அடைந்தால் பிரளய காலத்தில் ஆங்கே ஒடுங்கும் உயிர்களின் நலன் கருதிய பெருமான், அந்த விடத்தினை வயிற்றுக்கு செலுத்தாமல், தனது கழுத்தினில் அடக்கிக்கொண்ட கருணைச் செயல், இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பெருமானின் அனைத்து கருணைச் செயல்களினும் தலையாயது, ஆலகால விடத்தினை உண்டதும், அந்த விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கிக் கொண்டதும் ஆகும். இந்த செயல் பற்றியே பெருமான் தியாகராஜன் என்று அழைக்கப்படுகின்றார். இரண்டு கருணைச் செயல்கள் குறிப்பிடப்பட்ட எட்டாவது பாடலின் தொடர்ச்சியாக இந்த பாடல் அமைந்துள்ளது. அண்ணுதல்=அணுகுதல், நெருங்குதல்; அண்ணலாகா=நெருங்க முடியாத; அண்ணல்=தலைவன்; தங்கள் இருவரில் எவர் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த திருமாலும் பிரமனும், திடீரென்று தோன்றிய நெடிய தீப்பிழம்பின் சிறப்புத் தன்மையை உணர்ந்திருக்க வேண்டும்; அவ்வாறு அவர்கள் உணராத வண்ணம் தடுத்தது அவர்களது வினை என்று இந்த பாடலில் விளக்கம் அளிக்கப் படுகின்றது. எள்க=இகழும் வண்ணம்; வலித்து=வருந்தி;
பொழிப்புரை:
வேறு எவராலும் உண்ண முடியாத ஆலகால விடத்தினை உட்கொண்ட பெருமான், தனது வயிற்றினில் பிரளய காலத்தில் ஒடுங்கவிருக்கும் உயிர்களின் நலன் கருதி, அந்த கொடிய விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கிக்கொண்டவர் ஆவார்; அவர், தனது அருள் பெறாத எவராலும் அணுக முடியாத தலைவராவார்; யார் பெரியவர் என்று தங்களின் இடையே வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலின் இடையே, நீண்டு நெடிதுயர்ந்த நெருப்புத் தூணாக தோன்றியவர் பெருமான்; எனினும் திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும், அவ்வாறு தோன்றியது பெருமான் தான் என்பதை உணரமுடியாத வண்ணம், அவர்களது வினை அவர்களை தடுத்தது; இதனால் பலராலும் இகழப்பட்டு எள்ளி நகையாடப்பட்டதால், திருமால் பிரமன் ஆகிய இருவரும் வருந்தினர். இத்தகைய பெருமை உடையவனும் நம்பெருமான் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறைவது திருநள்ளாறு தலமாகும்.
பாடல் 10:
மாசுமெய்யர் மண்டைத் தேரர் குண்டர்கு ணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி ளும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே
விளக்கம்:
நீராடுவதை தவிர்ப்பதால் மாசு படிந்த மேனியராக சமணர்கள் விளங்கிய தன்மை, மாசு மெய்யர் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. தேரர்=புத்தர்:மண்டை என்பது வைத்திருந்த உண்கலனின் பெயர்; குணமிலி=நற்குணம் இல்லாத்வர்கள்; மூசு=மொய்க்கின்ற; உடனே=மிகவும் குறைந்த நேரத்தில்;கண்கள் இமைக்கும் நேரத்திற்கும் குறைவான நேரத்தில் மூன்று கோட்டைகளும் தீயினில் பற்றி எரியுமாறு அம்பு எய்தவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிட்டதை சோற்றுத்துறை பதிகத்தின் விளக்கத்தில் நாம் கண்டோம். இவ்வாறு மிகவும் குறைந்த நேரத்தில் மூன்று கோட்டைகளையும் அழித்த செய்தி, பெருமானின் அருள் வேண்டி கயிலாயத்தின் கடை வாயிலில் இருந்த மணியினை அசைத்து எழுப்பிய ஒலி அடங்கும் முன்னரே, மூன்று கோட்டைகளையும் பெருமான் எரித்து அழித்தார் என்று மிகவும் நயமாக கூறும் அப்பர் பிரானின் பாடலையும் (4.113.3) நாம் அந்த விளக்கத்தில் சிந்தித்தோம். தனது அடியார்கள் தங்களது துன்பத்தை முறையிட்டவுடன், எவ்வளவு விரைவாக பெருமான் அந்த துன்பத்தைக் களைகின்றார் என்பதை இந்த இரண்டு பாடல்களும் உணர்த்துகின்றன.
பொழிப்புரை:
நீராடுவதை தவிர்ப்பதால், மாசு படிந்த உடலினை உடைய சமணர்களும், மண்டை என்று அழைக்கப்பட்ட உண்கலனை ஏந்தியவர்களாக திரிந்த புத்தர்களும் குண்டர்கள் மற்றும் நற்குணம் இல்லாதவர்கள்; எனவே உலகத்தவரே, சிவபெருமானை குறித்தும் இந்து மதத்தை குறித்தும் அவர்கள் இழித்துப் பேசும் பேச்சுகளை உண்மை என்று நம்பி, அவர்களது சம்யத்தை சாராது இருப்பீர்களாக. வண்டுகள் மொய்க்கும் புதிய கொன்றை மலர்களை விரும்பி சூட்டிக்கொள்ளும் பெருமான், திரிபுரத்து அரக்கர்கள் தங்களுக்கு இழைத்த கொடுமைகள் பற்றி தேவர்கள் தன்னிடம் முறையிட்ட உடனே அந்த மூன்று மதில்களையும் நாசம் செய்தவனும், நம்பெருமான் என்று அனைவராலும் அழைக்கப் படுபவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறைவது திருநள்ளாறு தலமாகும்.
பாடல் 11:
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகில் உறைவாரே
விளக்கம்:
நண்பு நல்லார்=நல்ல இயல்புகளை கொண்டுள்ள தன்மையால், நட்பு வைத்துக்கொள்ள தகுதி படைத்தவர்களாக விளங்கும் நல்லோர்கள்; வானவர் என்ற சொல் தேவர்களை குறிப்பதாக பொருள் கொள்வதை விடவும், உயர்ந்த முக்தி உலகில் வாழும் உயிர்கள் என்று பொருள் கொள்வது சிறப்பு; உண்பு நீங்கி=உணவு உட்கொள்ள வேண்டிய அவசியம் அற்றவர்களாக; பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, மீண்டும் பிறப்பு எடுக்கவேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால், பிறப்பெடுத்து உணவு உட்கொள்பவர்களாக இல்லாமல், மீண்டும் மீண்டும் பிறந்து உணவு உட்கொள்ளும் மற்ற பிறவிகளிலிருந்து மாறுபட்டவர்களாக விளங்குவார்கள்;
பொழிப்புரை:
குளிர்ந்த கங்கை நதியையும் வெண்மை நிறத்தில் உள்ள ஒற்றைப் பிறைச் சந்திரனையும், தாழ்ந்து தொங்கும் தனது சடையில் தாங்கிய சிவபெருமான் எழுந்தருளியுள்ளதும், பலரும் நட்பு கொள்ள விரும்பும் வண்ணம் பல நல்ல குணங்களை உடைய நல்லோர்கள் நிறைந்து வாழ்வதும் ஆகிய சீர்காழி நகரினைச் சார்ந்த ஞானசம்பந்தன், நற்பண்புகள் கொண்ட சான்றோர்கள் வாழும் திருநள்ளாறு தலத்தினை போற்றிப் புகழ்ந்து பாடிய இந்த பத்து பாடல்களை நன்கு கற்றுத் தேர்ந்து முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், உயர்ந்த முக்தி நிலை அடையப் பெற்று, மீண்டும் பிறப்பெடுத்து உணவு உட்கொள்ள வேண்டிய அவசியம் அற்றவர்களாக, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்றவர்களாக, அத்தகைய பேற்றினை அடைந்த உயர்ந்த உயிர்களுடன் சிவலோகத்தில் வாழ்வார்கள்.
பின்னுரை
இந்தப் பதிகத்தில் எட்டாவது பாடலில் வழக்கமாக குறிப்பிடப்படும் இராவணன் பற்றிய நிகழ்ச்சி குறிப்பிடப்படவில்லை. இந்த பதிகத்தை பக்தியுடன் பாடினால் நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எதிர்பாராத இடர்பாடுகள் நீங்கி நாம் வளமுடன் வாழலாம். பாண்டியமன்னனின் அவையில் எரிகின்ற நெருப்பினில் பதிகம் அடங்கிய ஓலைச்சுவடி இடப்பட்டது என்பதனை சம்பந்தர் தனது தளிரிள வளரொளி என்று தொடங்கும் திருநள்ளாறு பதிகத்தின் கடைப் பாடலில் குறிப்பிடுகின்றார்.
சிற்றிடை அரிவைதன் வனமுலை இணையொடு செறிதரும்
நற்றிறம் உறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவன் எதிரிடை எரியினிலிட இவை கூறிய
சொற்றெரி ஒருபதும் அறிபவர் துயரிலர் தூயரே
போகமார்த்த பூண்முலையாள் திருநள்ளாறு பண் (Pogamaartha Poonmulaiyal Thirunallaaru Pan) is a line from Tamil literature, specifically from classical Tamil poetry. Let’s break down each component of the phrase to understand its meaning:
போகமார்த்த (Pogamaartha): Means "to be given away" or "to be used up". It comes from the root "போக" (Poga), which means "to go" or "to be given away", and "ஆர்த்த" (Aartha), which can imply "to be used up" or "to be spent".
பூண்முலையாள் (Poonmulaiyal): Refers to "a woman with soft, full breasts". "பூண்முலை" (Poonmulai) denotes "full breasts" or "bounteous bosom", and "ஆள்" (Aal) means "woman". Together, "பூண்முலையாள்" refers to a woman characterized by her physical attributes, often used metaphorically to describe beauty and grace.
திருநள்ளாறு (Thirunallaaru): Refers to "the holy land of Thirunallaaru", a place associated with Lord Shiva in Tamil culture. "திரு" (Thiru) denotes "holy" or "sacred", and "நள்ளாறு" (Nallaaru) refers to the location.
பண் (Pan): In this context, "பண்" means "poem" or "song". It is used to denote a verse or lyrical composition.
"போகமார்த்த பூண்முலையாள் திருநள்ளாறு பண்" can be interpreted as "a poem or song about the woman with full breasts, set in the holy land of Thirunallaaru". It describes a poetic composition focused on a woman characterized by her physical beauty, set against the backdrop of the sacred location of Thirunallaaru.
Literary and Poetic: This phrase is likely used in classical Tamil poetry to describe a specific type of poem or song that praises the beauty of a woman and situates the narrative within a sacred or revered location. The reference to Thirunallaaru adds a layer of sanctity and cultural depth to the composition.
Cultural Significance: In Tamil literary tradition, such descriptions often serve to enhance the poetic and cultural imagery, connecting physical beauty with spiritual or sacred significance.
In Tamil literature, this phrase might appear in a verse where a poet describes a beautiful woman and situates her within the context of a sacred place, highlighting both her physical attributes and the revered nature of the setting.
"போகமார்த்த பூண்முலையாள் திருநள்ளாறு பண்" refers to a poetic composition or song that describes a woman of notable beauty, set in the sacred context of Thirunallaaru. It combines elements of physical description with spiritual and cultural significance, reflecting the richness of classical Tamil poetry and its thematic depth.