இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பொங்கு நூல் மார்பினர்

பொங்கு நூல் மார்பினர்

பதிக எண்: 2.56 திருவிடைமருதூர் காந்தாரம்

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருநாகேச்சரம் தலத்திலிருந்து திருவிடைமருதூர் சென்ற திருஞானசம்பந்தர், திருவிடைமருதூர் திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் ஓடே கலன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடிய வண்ணம் சென்ற திருஞான சம்பந்தர், அந்த தலத்தினில் சில நாட்கள் தங்கியிருந்ததாக பெரிய புராணம் உணர்த்துகின்றது. இந்த தலத்தின் மீது, திருஞானசம்பந்தர் மொத்தம் ஆறு பதிகங்கள் அருளியுள்ளார். மேலும் இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் கிடைத்துள்ளன. பொங்கு நூல் மார்பினீர் என்று தொடங்கும் இந்த பதிகம் இறைவனின் சன்னதி முன்பு திருஞான சம்பந்தர் அருளிய பதிகமாக கருதப் படுகின்றது. இந்த தலம் வந்தடைந்த பின்னர்,திருஞானசம்பந்தர் இந்த திருக்கோயில் சென்ற பின்னர், இந்த பதிகம் பாடியதற்கான குறிப்பு இந்த பதிகத்தின் கடைப்பாடலில் உணர்த்தப் படுகின்றது.இந்த தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தரை தலத்து அடியார்கள் எதிர் கொண்டழைத்து சிறப்பிக்க, திருஞானசம்பந்தர் திருக்கோயிலை சென்றடைந்து கோயில் கோபுரத்தை வணங்கிய பின்னர் திருக்கோயிலை வலம் வந்தார் என்றும் இறைவனின் சன்னதி முன்னர் நிலத்தில் விழுங்கி வணங்கினார் என்றும் அப்போது இறைவன் பால் அவர் கொண்டிருந்த எல்லையற்ற அன்பின் காரணமாக அவரது கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் இடைவிடாது பொழிந்தது என்றும் சேக்கிழார் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம்.

அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கணைந்து

முடிவில் பரம்பொருளானார் முதற்கோயில் முன் இறைஞ்சி

படியில் வலம் கொண்டு திரு முன்பு எய்திப் பார் மீது

நெடிது பணிந்து எழுந்து அன்புநிறை கண்ணீர் நிரந்து இழிய

இந்த பாடலுக்கு அடுத்த பாடலில், சேக்கிழார், பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில் விரவுவார் திருப்பதிகம் பல பாடி பெருமானது திருப்பாதங்களைத் தொழுத வண்ணம் திருஞானசம்பந்தர் மேலும் பல நாட்கள் இந்த தலத்தினில் தங்கி இருந்தார் என்று கூறுவதால், மற்றைய நான்கு பதிகங்களும் இந்த பதிகம் அருளிய பின்னர், அருளப்பட்ட பதிகஙகளாக கருதப் படுகின்றன. விரவுதல்=கலத்தல்; இங்கே தனது மனதினில் விருப்பம் உடையவராக பதிகம் பாடினார் என்று பொருள் கொள்ளவேண்டும்.

பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில்

விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண்மதியோடு

அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால்

உரவு திருத்தொண்டருடன் பணிந்தேத்தி உறையுநாள்

மருத மரத்தினைத் தலமரமாகக் கொண்டதால் இடைமருதூர் என்று அழைக்கப்படும் இந்த தலம் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில்,கும்பகோணத்திலிருந்து ஒன்பது கி.மீ தொலைவில் உள்ளது. மருத மரத்தினைத் தலமரமாகக் கொண்ட மூன்று தலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் மல்லிகார்ஜுனம், கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர், திருநெல்வேலிக்கு அருகே உள்ள திருப்புடைமருதூர் என்பனவே இந்த மூன்று தலங்கள். இவை மூன்றும் முறையே தலைமருதூர் இடைமருதூர் மற்றும் கடைமருதூர் என்று அழைக்கப்படுகின்றன. அர்ஜுனம் என்றால் மருதமரம் என்று பொருள். இறைவனின் திருநாமம் மகாலிங்கேச்வரர், மருத வாணர், மருதப்பர், இறைவியின் திருநாமம் பெருநன்முலை நாயகி, ப்ருஹத் சுந்தர குஜாம்பாள், கிரிகுஜாம்பாள், வார்சடையாள். உமை அன்னையின் மார்பகத்தை குறிப்பிட்டு சிறப்பிக்கும் வகையில் அம்மையின் திருநாமம் அமைந்துள்ள தலங்களில் இந்த தலம் ஒன்று. மற்றவை உண்ணாமுலை அம்மை (அண்ணாமலை), முற்றிலாமுலை அம்மை (கடம்பந்துறை–குளித்தலை) அரும்பன்ன வனமுலை அம்மை (திருத்துருத்தி), அழகுமுலையம்மை (திருவீழிமிழலை). ஒவ்வொரு திருக்கோயிலிலும் மூலவரை ஒட்டியுள்ள கோஷ்டங்களில் பரிவார தேவதைகள் இருப்பதை நாம் காண்கின்றோம். இந்த தலத்தைச் சுற்றிலும், அத்தகைய பரிவார தேவதைகளால் புகழ் பெற்ற பல தலங்கள் இருப்பதை நாம் உணரலாம். இதனால் தான், அனைத்து இலிங்களிலும் பெரிய இலிங்கம் என்ற பொருள் பட மகாலிங்கம் என்ற பெயர், இந்த தலத்து இறைவனுக்கு ஏற்பட்டது போலும். வலஞ்சுழி விநாயகர், சுவாமிமலை சுவாமிநாதர், தில்லை நடராஜர், சீர்காழி பைரவர், திருவாவடுதுறை நந்தி, ஆலங்குடி தென்முகக் கடவுள், திருவாரூர் சோமாஸ்கந்தர், சூரியனார் கோயில் நவகிரகங்கள், என்பன இந்த பரிவார தேவதைகள்; பட்டிச்சரம் துர்கை அம்மனையும் நாம் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

உமையம்மை, வினாயகர், இராமபிரான், அகத்தியர், சூரியன், சந்திரன், சனி பகவான், கருவூர்த் தேவர், கௌதம முனிவர், உரோமச முனிவர், பராசர முனிவர்,பாண்டவர்கள், பிரமன், பகீரதன், கலைமகள் சரச்வதி தேவி, காளிதேவி, அலைமகள் இலக்குமி தேவி, வசிட்டமுனிவர், நளன், வரகுண பாண்டியன், கபிலர்,சிவவாக்கியார், ஐராவத யானை, ஆகியோர் வழிபட்ட தலம். நால்வர் பெருமானார்கள் சென்று வழிபட்ட தலங்களில் இந்த தலமும் ஒன்று. மற்ற தலங்கள்,தில்லைச் சிதம்பரம், திருக்கழுக்குன்றம், சீர்காழி, முதுகுன்றம், காஞ்சீபுரம், திருவாரூர், என்பன. இந்த தலங்களில், திருவிடைமருதூர், காஞ்சிபுரம்,முதுகுன்றம் தலங்களில் மாணிக்கவாசகர் அருளிய பதிகம் ஏதும் அருளவில்லை. ஆனால் ஐந்து இடங்களில் இந்த தலம் திருவாசகத்தில் குறிப்பிடப் படுகின்றது. ஏகாதச உருத்திரர்கள் வழிபட்ட தலம் என்று ஸ்காந்த புராணம் குறிப்பிடுகின்றது. தலமரம் மருது. மருதமரம் மருத்தவ குணம் வாய்ந்தது.ஔஷனாம்பதி என்று ஸ்ரீருத்ரத்தில் குறிப்பிடப்படும் தலங்களில் இந்த தலம் ஒன்று என்று தமிழ்த்தாத்தா திரு உ.வே.சா. அவர்கள் குறிப்பிடுகின்றார்.தைப்பூசத் திருவிழா அன்று இந்த தலத்தின் அருகில் உள்ள காவிரியில் நீராடுதல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தைப்பூசத் திருவிழா இந்த தலத்தினில் சிறப்பாக கொண்டாடப்படும் செய்தி, திருஞானசம்பந்தரால், இரண்டு பதிகங்களில் குறிப்பிடப் படுகின்றது.

இங்குள்ள இறைவ்னை வழிபட்டு இராமபிரான், கும்பகர்ணனைக் கொன்றதால் விளைந்த பாவத்தை நீக்கிக் கொண்டார் என்று கூறுகின்றனர். இங்கே தவம் செய்து தன்னை வழிபட்ட உரோமச முனிவருக்கு, மருத மரங்களின் இடையே ஜோதி வடிவினில் இறைவன் தரிசனம் தந்தார் என்றும் இதனால் தான் இந்த தலத்திற்கு மருதூர் என்ற பெயர் வந்தது என்றும் தலபுராணம் உணர்த்துகின்றது. காச்யப முனிவருக்கு பலவகையான குறும்புகள் செய்த குழந்தை கண்ணனைக் காணவேண்டும் என்ற ஆசை தோன்றியது. தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர் இந்த தலம் வந்தடைந்து தவமிருந்த போது,சிவபெருமான் பாலகிருஷ்ணனாக அவருக்கு தரிசனம் அளித்தார். இந்த நிகழ்ச்சியை நினைவூட்டும் வண்ணம், மருத மரத்தின் கீழே கட்டுண்ட கண்ணனையும் அருகில் கூப்பிய கைகளுடன் காச்யப முனிவரையும் நாம் காணலாம். உமையன்னை இந்த தலம் வந்தடைந்து தவம் இருக்க, அந்த தவத்தினால் மகிழ்ந்த இறைவன், ஒரு வைகாசித் திங்கள் விசாக நன்னாளில் அன்னையை திருமணம் செய்து கொண்டார். அதே சமயத்தில் அகத்தியரும் இந்த தலத்தினில் தவம் இருந்தார் என்றும், இறைவன் உமையன்னை மற்றும் அகத்தியர் ஆகிய இருவருக்கும் காட்சி கொடுத்தார் என்றும் கூறுவார்கள்.ஆதி சங்கரர் இந்த தலம் வந்து இறைவனை வழிபட்டபோது, இலிங்கத்திலிருந்து இரண்டு கைகள் தோன்றி, சங்கரரின் அத்வைத கொள்கை உயர்ந்தவை என்று உலகுக்கு உணர்த்தியதாகவும் கூறுவார்கள்.

திருஞானசம்பந்தர் இந்த தலம் வந்த போது கோயிலின் அருகே எங்கும் லிங்கங்கள் இருப்பதாகவே அவர் கண்களுக்கு தோன்றியதாகவும், அதனால் தரையில் கால் வைத்து நடக்க அவர் தயங்கியதாவும் கூறுவர். திருஞானசம்பந்தரின் பாடலை கேட்க மிகவும் விருப்பம் கொண்ட சிவபிரான் உமா அம்மையை அனுப்பி, ஞானசம்பந்தரை இடுப்பில் வைத்து தூக்கி வரச் செய்ததாகவும் ஒரு செவி வழிச் செய்தி இந்த தலத்தில் உலாவுகின்றது. முருகனின் மறு அவதாரமாக திருஞானசம்பந்தர் கருதப்படுவதால், தனது குழந்தையாக கருதி ஞானப்பால் கொடுத்த அம்மை, அந்த குழந்தையை. பல தேவாரப் பாடல்கள் பாடிய குழந்தையை பாராட்டி கொஞ்சும் முகமாக, தனது இடுப்பினில் வைத்துக் கொள்வதற்கு தயங்காது இருந்த நிலை இயல்பு தானே. முனிவர் மார்க்கண்டேயருக்கு இறைவன், மாதொருபாகனின் தோற்றத்தில் காட்சி கொடுத்தார் என்றும் தலபுராணம் உணர்த்துகின்றது.

பாடல் 1:

பொங்கு நூல் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை

தங்கு செஞ்சடையினீர் சாமவேதம் ஓதினீர்

எங்கும் எழிலார் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில்

மங்குல் தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

விளக்கம்:

எழிலார் மறையோர் என்று இந்த பாடலில் தலத்து அந்தணர்களை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம் என்ற அப்பர் பிரானின் வாக்கினுக்கு ஏற்ப முறையாக நான்மறைகளை கற்றுணர்வதும் ஒழுக்க சீலர்களாக இருப்பதும் அந்தணர்களுக்கு அழகு சேர்க்கின்றன. எனவே இந்த தலத்து அந்தணர்கள் அவ்வாறு இருந்தமை இங்கே திருஞானசம்பந்தரால் உணர்த்தப்படுகின்றது என்று நாம் பொருள் கொள்ளலாம். இந்த பதிகத்தின் பாடலை, திருஞான சம்பந்தர் பொங்கு நூல் மார்பினர் என்ற தொடருடன் தொடங்குகின்றார். அப்பர் பிரானும் இந்த தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.56.5) பெருமானை பொங்கு வெண்ணூலர் என்று அழைக்கின்றார். சிவபெருமான் தனது மார்பினில் அணிந்துள்ள முப்புரி நூல் (பூணூல்) பொலிவுடன் அழகாகத் திகழ்கின்றது என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. பண்டைய நாட்களில் ஒருவர் செய்து வந்த தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவரை அந்தணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என்று வகைப்படுத்தி அழைத்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் இந்த பிரிவுகள் ஒருவரின் குலத்தை குறிப்பதாக மாறியது காலத்தின் கோலம். வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேள்விகள் செய்தல்,வேள்விகள் செய்வித்தல், தானம் வாங்கிக் கொள்ளுதல், தானம் அளித்தல் முதலியன அந்தணர்களின் ஆறு கடமைகளாக கருதப்பட்டன. அவர்கள் தஙகளது அடையாளமாக பூணூல் (பூணும் நூல்) அணிந்து கொள்ளத் தலைப்பட்டனர். பண்டைய நாட்களில் பெரும்பாலான அந்தணர்கள் முப்புரி நூல் அணிந்து, சிகை உடையவர்களாக விளங்கினார்கள் என்று சொல்லப் படுகின்றது. கடந்த இருநூறு ஆண்டுகளில் சிகை வைத்துக் கொள்ளும் பழக்கம்,பல்வேறு காரணங்களுக்காக அந்தணர்களின் இடையே வெகுவாக குறைந்து விட்டது. எனினும் பெரும்பாலானோர் தொடர்ந்து பூணூல் அணிந்து கொள்கின்றனர். எனினும் சிகை வைத்துக் கொள்வது மற்றும் பூணூல் அணிந்து கொள்வது ஆகியவற்றின் நோக்கத்தை அவர்களில் பெரும்பாலோர் உணருவதில்லை என்றே சொல்லலாம். சிகை மற்றும் பூணூல் ஆகியவை எவற்றை குறிக்கின்றன என்பதை திருமூலர் மிகவும் அழகாக திருமந்திரப் பாடலில் எடுத்துரைக்கின்றார். முப்புரிநூல் என்பது வேதங்களின் முடிவாகிய வேதாந்தம் என்பதை அவர்கள் உணர்ந்த நிலையையும், சிகை என்பது ஜீவாத்மா மற்றும் பரமாத்மா (உயிர் மற்றும் இறைவன்) ஆகியவற்றின் தன்மையை அவர்கள் முழுவதுமாக உணர்ந்த நிலையையும் குறிப்பிடுகின்றன என்று வரையறுத்துக் கூறும் திருமூலர், இந்த உண்மையை அறியாமல் வெறுமனே நூலும் சிகையும் பூண்பதால் தங்களை அந்தணர் என்று கருதுவோர் மூடர்கள் என்று கூறுகின்றார். இவ்வாறு, வேதங்களின் முடிவான பொருளையும் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகியவற்றின் தன்மையையும் ஒழுங்காக புரிந்து கொண்டவர்களே, அந்தணர் என்று அழைக்கப்படுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என்று திருமூலர் கருதுவதை நாம் உணரலாம். அந்தணர்களின் முதன்மைக் குணமாகத் திகழ்வது வேதங்களின் தன்மை மற்றும் பரம்பொருளின் தன்மையை சரியாக புரிந்து கொள்வது என்பதால், அவற்றை உணர்வதே முக்கியம்.அவ்வாறு உணர்வோர் ஓங்காரத்தின் பொருளை உணர்த்தும் வேதங்களை ஓதுவார்கள் என்றும் கூறுகின்றார். பார்த்தல்=ஆராய்ந்து உணர்தல்; நான்கு வேதங்களும் பெருமானின் கோவணமாகத் திகழ்கின்றன என்று அருளாளர்கள் பல பாடல்களில் உணர்த்தும் பின்னணியில், வேதங்களின் முடிவான பொருளாக பெருமான் அணிந்துள்ள முப்புரிநூல் திகழ்கின்றது என்பதை நாம் நோக்கவேண்டும். வேதாந்தம்=வேதங்கள் உணர்த்தும் முடிவான கொள்கை.

நூலும் சிகையும் உணரார் நின்மூடர்கள்

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர்

ஓரொன்று இரண்டு என்னில் ஓங்காரம் ஓதிலே

அந்தணர் ஒழுக்கம் என்ற அதிகாரத்தில் திருமூலர் அந்தணர்களின் இயல்பினை உணர்த்துகின்ரார். வேதம் ஓதல், வேதம் ஓதுவித்தல், வேள்விகள் செய்தல்,வேள்விகள் செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் ஏற்றுக் கொள்ளுதல் என்பன அவர்கள் செய்ய வேண்டிய ஆறு தொழில்களாக கருதப் படுகின்றன.காலை நண்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று போதுகளிலும் செய்ய வேண்டிய நியமங்ளை கடைப்பிடித்து, காலையிலும் மாலையிலும் வேதமோதி சடங்குகள் செய்தல் அவர்களது நியமமாக கருதப் படுகின்றன. ஆறு தொழில்கள் செய்வதை தங்களது கடமையாக எற்றுக்கொண்டு பண்டைய நாளில் அந்தணர்கள் வாழ்ந்த தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமமும் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

அந்தணர் என்போர் அறுதொழில் பூண்டுளோர்

செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்து

அந்தவ நற்கருமத்து நின்று ஆங்கிட்டு

சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே

வெறும் புறத் தோற்றங்களால் மட்டுமே ஒருவன் அந்தணன் ஆகிவிடமுடியாது என்பதை உணர்த்தும் திருமந்திரப் பாடலையும் இங்கே சிந்திப்பது பொருத்தமாகும். கார்ப்பாசம்=பஞ்சு; கேசம்=மயிர்; வேதாந்தம் மற்றும் பரம்பொருளின் தன்மையை முழுவதுமாக உணர்வதே ஞானம் என்பதால், அத்தகைய ஞானம் அற்றவர்களுக்கு பூணூல் வெறும் பஞ்சு நூல்; சிகை என்பது தலைமுடி அன்றி வேறில்லை என்று கூறுகின்றார்.

நூலும் சிகையும் நுவலின் பிரமமோ

நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

நூலுடை அந்தணர் காண நுவலிலே

வேதங்களை உலகினுக்கு அளித்த பெருமான், எப்போதும் வேதஙகளை இசைத்துப் பாடுபவராகவும், வேதங்களுக்கு விளக்கம் அளிக்கும் திறமை உடையவராகவும் இருந்து வந்த காரணத்தால், அவரை மிகவும் பொருத்தமாக அந்தணர் என்று வேதங்களும் திருமுறைப் பாடல்களும் குறிப்பிடுகின்றன.மேலும் பெருமான், அருளாளர்களுக்கு பூணூல் அணிந்தவராக காட்சி அளித்திருக்க வேண்டும். அதனால் தான் அவரை பூணூல் அணிந்தவராக திருமுறை ஆசிரியர்கள் சித்தரிக்கின்றனர். அந்தணர் என்ற சொல்லுக்கு திருமூலர் அளித்த விளக்கம் சிவபெருமானுக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். திருஞானசம்பந்தரும் மற்ற தேவார ஆசிரியர்களும் பல பாடல்களில் பெருமானை பூணூல் அணிந்தவர் என்று குறிப்பிடுகின்றார்.அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.2.2.) திருஞானசம்பந்தர், பெருமானை இழை சேர் திருமார்பன் என்று குறிப்பிடுகின்றார்.காதில் குழை உடையவன் என்று குறிப்பிட்டு, மாதொரு பாகன் தோற்றத்தையும் இங்கே நினைவூட்டுகின்றார். கருமான் என்று கரிய நிறம் கொண்ட விலங்காகிய யானை குறிப்பிடப் படுகின்றது. நசை=விருப்பம்; போது=அன்றலர்ந்த மலர்கள்; அன்றலர்ந்த மலர்களில் உள்ள தேனினைப் பருகும் விருப்பத்துடன் வண்டுகள் ரீங்காரம் இட்ட வண்ணம் மலர்களை மொய்க்கின்றன என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

காதிலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒரு பாகம்

மாதிலங்கு திருமேனியினான் கருமானின் உரியாடை

மீதிலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலைப்

போதிலங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே

கீழைத் திருக்காட்டுபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.5.4) திருஞானசம்பந்தர் பெருமானை நூலுடையான் என்று அழைக்கின்றார்.இமையோர் பெருமான்=இந்திரன்; விருத்திராசுரனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு,இந்திரன் பெருமானை வழிபட்டு பயன் அடைந்த தலபுராண வரலாறு இங்கே உணர்த்தப்படுகின்றது. கால்=திருவடிகள்; நுண்ணறிவு=சிவ ஞானம்.தோல்=புலித்தோல், போர்வை=யானைத்தோல்; இமையோர் பெருமான் என்ற தொடர் தேவர்களுக்கு தலைவனாக சிவபெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர். துதைந்து= செறிந்து, இங்கே மிகவும் அதிகமாக பூசிக்கொண்டு என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த பதிகத்தின் முந்தைய இரண்டு பாடல்களில் காட்டுப்பள்ளிப் பெருமானை நினைத்து உருகி வணங்கும் அடியார்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்றும்,தங்களது துன்பங்களிலிருந்து விடுதலை அடைவார்கள் என்றும் உணர்த்திய திருஞானசம்பந்தர், அவ்வாறு தனது அடியார்களுக்கு உதவும் பொருட்டே,பெருமான் தானாகவே விருப்பம் கொண்டு இந்த தலத்தில் உறைகின்றான் என்று கூறுகின்றார். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, நாமும் இந்த தலத்து இறைவனைப் பணிந்து வணங்கி பயனடையவேண்டும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. துதைந்து என்ற சொல்லினை நூலோடு என்ற சொல்லுடன் இணைத்து, திருநீறு தோய்ந்த பூணூல் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

தோலுடையான் வண்ணப் போர்வையினான் சுண்ண வெண்ணீறு துதைந்து இலங்கு

நூலுடையான் இமையோர் பெருமான் நுண்ணறிவால் வழிபாடு செய்யும்

காலுடையான் கரிதாய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

மேலுடையான் இமையாத முக்கண் மின்னிடையாளொடும் வேண்டினானே

கற்குடி (இன்றைய பெயர் உய்யக்கொண்டான் மலை, திருச்சிக்கு அருகில், வயலூர் செல்லும் வழியில் உள்ளது) தலத்தின் மீது அருளிய பாடலில் (1.43.1),திருஞானசம்பந்தர் பெருமானை இடம் திகழ் முப்புரி நூலர் என்று குறிப்பிடுகின்றார். இடது தோளிலிருந்து இடுப்பின் வலது புறம் வருகின்ற வண்ணம் அணிந்து கொண்ட முப்புரிநூல் என்பதை உணர்த்தும் வண்ணம் இடந்திகழ் நூலர் என்றும் மூன்று இழைகளைக் கொண்டது என்பதை உணர்த்தும் வண்ணம் முப்புரி நூலர் என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார், இந்த பாடலில் தாழ்சடை வைத்த சதுரன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சதுரன் என்றால் சாமர்த்தியம் வாய்ந்தவன் என்று பொருள். உயரத்திலிருந்து கீழ் நோக்கிப் பாயும் இயல்பினை உடைய தண்ணீரைத் தனது தொங்குகின்ற சடையினில் அடைத்து வைப்பதற்கு தனி ஆற்றல் வேண்டும் அல்லவா. அந்த ஆற்றல் உடையவராக திகழ்ந்தவர் பெருமான் என்பதால் தான் அவரை சதுரன் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அழைக்கின்றார். பெருமானின் பல செயல்கள் சதுரப்பாடு வாய்ந்ததாக கருதப்பட்டு நால்வர் பெருமானர்களால் சதுரன் என்று இறைவன் பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றார்.

வடம் திகழ் மென்முலையாளைப் பாகமதாக மதித்துத்

தடம் திரை சேர் புனல் மாதைத் தாழ் சடை வைத்த சதுரர்

இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பமது எல்லாம்

கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே

மேற்கண்ட பாடலில் காணப்படும் துன்பமொடு இன்பமதெல்லாம் கடந்தவர் என்ற தொடருக்கு, இன்பங்களையும் துன்பங்களையும் கடந்தவராக பெருமான் இருக்கும் நிலை என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். இந்த தொடரினை அடுத்து காதலில் வாழும் என்ற தொடர் வருகின்றது. எனவே காதலில் வாழும் என்ற தொடரினை துன்பமொடு இன்பமதெல்லாம் கடந்தவர் என்ற தொடருடன் இணைத்துப் பொருள் காண்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது. இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் கலந்தவர் காதலில் வாழும் என்ற தொடர் அடியார்களை குறிப்பிடுவதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இருவினை ஒப்பு நிலையை அடைந்து, மலபரிபாகம் அடைந்த அடியார்கள், இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று போல் கருதி, இன்ப துன்பங்களால் சலனம் ஏதும் அடையாமல் இருப்பதால், அவர்களையே துன்பமொடு இன்பமதெல்லாம் கடந்தவர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது. எனவே அத்தகைய அடியார்களால் காதலிக்கப்பட்டு அன்பு பாராட்டப்படும் தலைவன் சிவபெருமான் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் என்று தானே அடியார்களைக் குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் தனது நமச்சிவாயப் பதிகத்தினைத் தொடங்குகின்றார். வடம்=வரிசையாக கட்டப்பட்ட மாலை; திருக்கூட்டச் சிறப்பு அதிகாரத்தில் அடியார் பெருமக்களின் தன்மையை குறிப்பிடும் சேக்கிழார், இன்பமும் துன்பமும் கடந்த நிலையில் அவர்கள் உள்ளதை சிறப்பித்துச் சொல்கின்றார். தங்களது பொருளை இழத்தலால் வரும் கேடும் தங்களது பொருட்கள் மேலும் மேலும் வளர்தலால் வரும் ஆக்கமும் இல்லாத தன்மை உடையவர்கள் என்று அடியார்களை உணர்த்துகின்றார். எந்த பொருளின் மீதேனும் நமக்கு பற்று இருந்தால், அந்த பொருளினைப் பெற்றாலும் அவ்வாறு பெற்ற பொருள் வளர்ந்தாலும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இதற்கு மாறாக அத்தகைய பொருளினை இழந்தால் நமக்கு துன்பம் ஏற்படுகின்றது. அந்த பொருளின் மீது நாம் வைத்துள்ள பற்று நீங்கினால், நமக்கு அந்த பொருள் வளர்ந்தாலும் கெட்டாலும் இன்பமோ துன்பமோ ஏற்படுவதில்லை. இவ்வாறு பற்றற்ற நிலையில் அடியார்கள் இருப்பதைத் தான் கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் என்ற தொடர் மூலம் சேக்கிழார் பெரியபுராணத்து பாடல் ஒன்றினில் கூறுகின்றார். எனவே அவர்கள் செம்பொன்னையும் மண் ஓட்டினையும் ஒரே தன்மை உடையதாக கருதுகின்றனர். மேலும் அவர்கள், தங்களது மனதினில் தோன்றுகின்ற அன்பு காரணமாக,பெருமானைக் கும்பிட்டு வாழ்ந்தால் போதும் என்ற முடிவுடன், வீடுபேற்றினையும் வேண்டாத தன்மையர்களாக விளங்கினார்கள் என்றும் சேக்கிழார் கூறுகின்றார்.

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.49.5) திருஞானசம்பந்தர் பெருமானை நூல் கிடந்த மார்பர் என்று அழைக்கின்றார். தனது கொடியின் கண் சித்திரமாக தாங்கியும், தனது ஊர்தியாகவும் பயன்படும் வண்ணமும் எருதினை பெருமான் சிறபித்த தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஏர்கொள்=அழகு நிரம்பிய; நிரை கொன்றை=அழகாக மலர்ந்த கொன்றை மலர்; நாறு=நறுமணம்.

ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர்கொள் இளமதியம்

ஆறு தாங்கும் சென்னி மேலோர் ஆடரவம் சூடி

நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை

நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே

அச்சிறுப்பாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.77.01) திருஞானசம்பந்தர், பெருமானை தனது மார்பினில் கலந்த வெண்ணூலர் என்று குறிப்பிடுகின்றார். குலாய=கலந்த, குலவிய; கொழும் பொடி=வளமையான விபூதி; அகலம்=மார்பு; பொருகடல்=பெரிய கடல்; அழல் நிறம்=நெருப்பு போன்று சிவந்த நிறம்; புரைய=போன்ற; மின்றிரண்டன்ன=மின்னல் திரண்டது போன்று ஒளி வீசுவதும் நுண்ணியதும் ஆகிய இடை; இந்த திருக்கோயிலில் இரண்டு பெருமான் சன்னதிகள் இருப்பதை நாம் காணலாம். கோயிலின் நடுவே கொடிமரத்துடன் ஒரு கருவறையும், அதற்கு வலது புறத்தில் இராஜ கோபுரத்திற்கு எதிராக மற்றொரு கருவறையும் இருப்பதை நாம் காணலாம். இவை முறையே ஆட்சிபுரீச்வரர் என்றும் உமை ஆட்சீச்வரர் என்றும் அழைக்கப் படுகின்றன.இந்த தகவல் தான் கீழ்க்கண்ட பாடலில், அன்றிரண்டு உருவம் ஆய எம்மடிகள் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது என்று விளக்கம் அளிக்கின்றனர். உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக்கொண்டுள்ள இறைவனை, ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே உருவத்தில் இரண்டு விதமாகவும் இருக்கும் தன்மையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. பாண்டிய மன்னன் ஒருவன் கங்கை மணலினை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு தனது இருப்பிடம் சென்று கொண்டிருந்த போது, இந்த தலம் வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது வண்டியின் அச்சு முறிந்ததால், தனது பயணத்தை அவனால் தொடர முடியவில்லை. அந்த சமயத்த்தில் ஒரு தங்க நிற உடும்பு வண்டிக் சக்கரத்தின் அடியிலிருந்து ஓடுவதைக் கண்ணுற்ற சேவகர்கள், அந்த உடும்பு திருக்கோயிலின் சரக்கொன்றை மரத்தின் அடியில் புகுந்ததையும் கண்டனர். அந்த உடும்பு எப்படி மறைந்தது என்பதை அறியும் முயற்சியில், காவலர்கள் மரத்தினை வெட்டிய போது இரத்தம் வரவே உடும்பு வெட்டுண்டது என்று நினைத்தனர்.ஆனால் எவ்வளவு நேரம் தேடியபோதும் உடும்போ உடும்பின் உடலோ அவர்களுக்கு கிடைக்கவில்லை. அப்போது ஒரு அதிசயமாக ஒரு சுயம்பு இலிங்கம் அங்கே வெளிப்பட்டது. அந்த இலிங்கத்தை வழிபட்ட பாண்டிய மன்னன் கோயில் அமைத்து இறைவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என முடிவெடுத்தான். அந்த சமயத்தில் ஆங்கே வந்த முனிவர் ஒருவரிடம் கோயில் திருப்பணியை ஒப்படைத்தான். சில மாதங்கள் கழித்து பாண்டிய மன்னன் இந்த தலம் வந்தடைந்த போது, இரண்டு இலிங்கங்கள் வேறு வேறு சன்னதியில் இருப்பதைக் கண்டான். மூன்று கண்களை உடைய அந்த முனிவரிடம்,எதற்காக இரண்டு சன்னதிகள் என்று வினவிய போது, அவர் தன்னை ஆட்சி செய்த இறைவனுக்கு ஒரு சன்னதி என்றும், உம்மை (பாண்டிய மன்னனை)ஆட்சி செய்த ஈசனுக்கு மற்றொரு சன்னதி என்றும் பதிலளித்தார். மன்னனை ஆட்கொண்ட இறைவனுக்கு பிரதான வாயிலும், ஏற்கனவே தலத்தில் இருந்த இறைவனுக்கு திருக்கோயிலின் நடுவே இடமும் அமைந்துள்ளன என்றும் கூறினார். பிராகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் உள்ள சுயம்பு இலிங்கத்தின் அருகே த்ரிநேத்ரதாரி முனிவர், இலிங்கத்தை வழிபட்ட நிலையில் இருப்பதை நாம் இன்றும் காணலாம்.

பொன் திரண்டன்ன புரிசடை புரளப் பொருகடல் பவளமொடு அழல் நிறம் புரையக்

குன்று இரண்டன்ன தோளுடை அகலம் குலாய வெண்ணூலொடு கொழும்பொடி அணிவர்

மின் திரண்டன்ன நுண்ணிடை அரிவை மெல்லியலாளை ஓர் பாகமாப் பேணி

அன்று இரண்டு உருவம் ஆய எம்மடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே

இராமனதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.115.3) திருஞானசம்பந்தர் பெருமானை, மார்பின் இழையவன் என்று அழைக்கின்றார்.முருகப்பெருமானை தழைத்த பீலியை உடைய மயிலினைத் தனது வாகனமாகக் கொண்டவன் என்றும் சிவபெருமானை முருகரின் தந்தை என்றும் இந்த பாடலில் குறிப்பிடுவதையும் நாம் உணரலாம். இழையவன்=முப்புரி நூல் அணிந்தவன். திருஞானசம்பந்தர் அருளிய பதின்மூன்று பதிகங்களும், அப்பர் பிரான் அருளிய இருபத்துமூன்று பதிகங்களும் சுந்தரர் அருளிய பதினான்கு பதிகங்களும் முருகப் பெருமான் பற்றிய குறிப்பு உடைய பாடல்களைக் கொண்டுள்ளன.

தழைமயில் ஏறவன் தாதையோ தான்

மழை பொழி சடையவன் மன்னு காதில்

குழையது விளங்கிய கோலமார்பின்

இழையவன் இராமனதீச்சரமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.1) திருஞானசம்பந்தர், பெருமானை தோலொடு நூல் துதை மார்பினர் என்று குறிப்பிடுகின்றார். துணிந்தவன் என்ற சொல்லுக்கு திருவுள்ளம் கொண்டவன் என்று பொருள் கொள்ளவேண்டும்.

பணிந்தவர் அருவினை பற்றறுத்து அருள் செயத்

துணிந்தவன் தோலொடு நூல் துதை மார்பினில்

பிணிந்தவன் அரவொடு பேரெழில் ஆமை கொண்டு

அணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய திருப்பதிகத்தின் பாடலில் (1.121.2) திருஞானசம்பந்தர், பெருமானை இழை நுழை புரியண்ணல் என்று குறிப்பிடுகின்றார். இழையாகத் திரண்ட முப்புரி நூலை அணிந்த பெருமான் என்று பொருள். கழை=மூங்கில்; அழிதலை=தசையும் நரம்புகளும் வற்றி காய்ந்து அழிந்த மண்டையோடு; மழை=மேகம்; மேகங்களின் இடையே புகுந்து செல்லும் பிறைச் சந்திரனையும், தசையும் நரம்புகளும் வற்றி அழிந்த மண்டையோட்டினையும், மலையில் தோன்றிய கங்கை நதியையும், நறுமணம் வீசும் தனது சடையின் இடையே வைத்த இறைவன், குழை ஆபரணம் நுழைந்த காதினை உடைய அழகனாக, இழையாகத் திரண்ட முப்புரி நூலினை அணிந்தவனாக, எழுந்தருளும் இடம் செழித்து வளர்ந்த மூங்கில்களின் இடையே நுழைந்து செல்லும் இளமையான மயில்கள் நிறைந்த இடைமருது தலம் என்பதே பாடலின் பொழிப்புரை.

மழை நுழை மதியமொடு அழிதலை மடமஞ்ஞை

கழை நுழை புனல் பெய்த கமழ்சடை முடியன்

குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வதோர்

இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே

திருப்பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.135.4) திருஞானசம்பந்தர், ஒளிவீசும் நூலினை உடைய மார்பினர் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். தோல்=புலித்தோல் அரை=இடுப்பு; தாருகவனத்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று, அதன் தோலினை ஆடையாக இறைவன் உடுத்திக் கொண்ட நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது. பயின்றாடுதல்= தொடர்ந்து நீராடுதல்; வேதங்களை விரித்து ஓதியவர் என்று இந்த பதிகத்தின் முந்திய பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு இறைவன், வேதங்களின் பொருளை சனகாதி முனிவர்களுக்கு உணர்த்திய செய்கை நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த தலத்தில் உள்ள வீராசன தட்சிணாமூர்த்தி சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.கல்லால மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம் சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளினை விளக்கியவர் சிவபெருமான். இந்த செய்தியை பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. இந்த தலத்து அடியார்கள் தொடர்ந்து இடைவிடாது, பெருமானை பாலும் நெய்யும் கொண்டு நீராட்டி வழிபட்ட செய்தியும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

தோலும் தம் அரை ஆடை சுடர் விடு

நூலும் தாம் அணி மார்பினர்

பாலு நெய் பயின்றாடு பராய்த்துறை

ஆல நீழல் அடிகளே

தலைச்சங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.55.3) திருஞானசம்பந்தர் நூல் மார்பர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சீர்=சிறப்பு;தக்கோர்=தகுந்த பெருமையினை உடையவர்கள்; ஏர்=அழகு; பெருமானிடம் சங்கினைப் பெற்ற திருமாலுக்கும் இந்த கோயிலில் ஒரு சன்னதி உள்ளது.அந்த சன்னதியைக் கண்ட சம்பந்தருக்கு, திரிபுரத்து அரக்கர்களுடன் போரிட பெருமான் சென்ற போது, திருமால் காளை வாகனமாக மாறி பெருமானை தனது முதுகின் மேல் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடுகின்றார். திருமால் சிவந்த கண்களை உடையவர் என்பதால் செங்கண் மால் என்று பல தேவாரப் பதிகங்களிலும் திவ்ய பிரபந்த பாசுரங்களிலும் குறிப்பிடப் படுகின்றார். தார்=மாலை;

சீர் கொண்ட பாடலீர் செங்கண் வெள்ளேற்று ஊர்தியீர்

நீர் கொண்டும் பூக் கொண்டு நீங்காத் தொண்டர் நின்று ஏத்தத்

தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும் தலைச் சங்கை

ஏர் கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே

குறும்பலா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.71.6) திருஞானசம்பந்தர் பெருமானை, நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் என்று குறிப்பிடுகின்றார். விரவி=கலந்து; ஏற்றேனம்=ஆண் பன்றி; பெருமானது மார்பினில் பூசப்பட்ட திருநீற்றினில் முப்புரி நூலும் தோய்ந்துள்ளது என்று கூறுகின்றார். வண்டுகள் முரலும் இன்னிசை கேட்டு ரசித்த குயில் தானும் கூவி இன்னிசை எழுப்பும் இயற்கைக் காட்சி இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக் கண்ணர்

கூற்றேர் சிதையக் கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில்

ஏற்றேனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூஞ்சாரல்

கோற்றேன் இசை முரலக் கேளாக் குயில் பயிலும் குறும்பலாவே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.86.5) திருஞானசம்பந்தர், பெருமானை மார்பிலங்கு விரிநூலர் என்று குறிப்பிடுகின்றார்.நாரையூர் செல்வனைத் தொழுவதால், கடல் அளவு குற்றம் செய்திருப்பினும் அந்தக் குற்றங்களால் ஏற்படும் பழிகள் நீக்கப்பட்டுத் தவமான தன்மை ஏற்படும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உவரோதம் என்ற சொல்லை உவர் ஓதம் என்று பிரித்து (உவர்=உப்புத்தன்மை ஓதம்=கடல்)கடலளவு செய்த பாவம் என்றும் கூறுவர். உவரோதம் என்றால் இடையூறு என்றும் பொருள் உண்டு. நாம் செய்த பாவங்கள் தாம், நாம் தவநிலை அடைவதற்கு இடையூறாக இருப்பதால் அவற்றைக் களையும் இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம். இசைதல் என்றால் நிறைந்து என்று பொருள். விண்ணும் மண்ணும் நிறைந்து இறைவன் இருக்கும் நிலைமை இதனால் புலப்படுத்தப் படுகின்றது. வசை=பழி; அபராதம்=குற்றம்; ஆசி=வாழ்த்து;திசையவர்=அனைத்து திசைகளிலும் பரவியுள்ள உலகத்தவர்; அமையாத காதல்=எத்தனை புகழ்ச் சொற்களை சொல்லிப் புகழ்ந்தாலும் நிறைவு அடையாத மனம் உள்ள அடியார்கள். நமது எண்ணங்களையும் சொற்களையும் கடந்து நிற்கும் இறைவனை, நாம் எத்தனை புகழ்ந்தாலும் அவனது புகழுக்கு எல்லை காண இயலாது அல்லவா.

வசை அபராதமாய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான்

மிசையவர் ஆதியாய திரு மார்பிலங்கு விரிநூலர் விண்ணு நிலனும்

இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர்

திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே

கொச்சைவயம் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.89.2) திருஞானசம்பந்தர் பெருமானை நூல்சேர் மார்பினர் என்று குறிப்பிடுகின்றார். சுண்ணம்=திருநீறு; துன்னிய=நெருக்கமாக இருக்கும்; கணத்தர் என்ற சொல் எதுகை நோக்கி கண்ணத்தர் என விரிந்தது. கங்குல்-நள்ளிரவு, ஊழிக்காலம்; கேடில் எண்ணத்தர்= குற்றமற்ற சிந்தனை உடையவர்; கேள்வி=வாய்மொழியாக கற்றுக் கொள்ளப்படும் வேதங்கள்; மாலெரி=பெருமை மிகுந்த வேள்விகள்; வண்ணத்தர்=தன்மை உடைய;

சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்

கண்ணத்தர் வெங்கனல் ஏந்திக் கங்குல் நின்றாடுவர் கேடில்

எண்ணத்தர் கேள்வி நல்வேள்வி அறாதவர் மாலெரி ஓம்பும்

வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே

நுண்ணிய வெள்ளி நூல் போன்று விளங்கும் முப்புரி நூலை அணிந்தவர் பெருமான் என்று திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.3) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கலி=ஆரவாரம் மிகுந்த; யாழின் இசை போன்று இனிமை மற்றும் மிருதுவான மொழியை உடைய பிராட்டி என்று கூறுகின்றார்.

நுண்ணிதாய் வெளிதாகி நூல் கிடந்திலங்கு பொன் மார்பில்

பண்ணி யாழென முரலும் பணிமொழி உமையொரு பாகன்

தண்ணிதாய வெள்ளருவி சலசல நுரை மணி ததும்ப

கண்ணி தானுமொர் பிறையார் கலிமறைக்காடு அமர்ந்தாரே

அரசிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.95.4) திருஞானசம்பந்தர் பெருமானின் மார்பினில் தகுதி வாய்ந்த நூல் திகழ்கின்றது என்று பெருமான் முப்புரி நூல் அணிந்த நிலையை குறிப்பிடுகின்றார். நல்லவன் கெட்டவன், சிறுவன் முதியவர் ஆண் பெண் என்ற பேதிக்காமல், அறவழியின் வழியே தகுந்த நேரத்தில், அனைவரின் உயிரையும், அந்தந்த உயிர்கள் பிறக்கும் சமயத்தில் வரையறுக்கப்பட்ட நாளில், முறையாக கவரும் இயமனை,சிறுவன் மார்க்கண்டேயன் செய்த சிவவழிபாட்டினுக்கு இடையூறு செய்தமைக்காக அழித்தவனும், தனது தவத்தினைக் கெடுப்பதற்கு முயற்சி செய்த காமனின் உடலை எரித்து அழித்தவனும் ஆகிய பெருமான் பல ஊர்களிலும் புகுந்து பக்குவமடைந்த உயிர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்றுக் கொள்பவன் ஆவான் என்று குறிப்பிடுகின்றார். தவளம்=வெண்மை நிறம். அக்கு என்பது இங்கே எலும்பு மாலைகளை குறிக்கும். தக்க நூல் என்ற தொடருக்கு தகுந்த நூலாகிய வேதாந்தம் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. நான்கு வேதங்களே பெருமானின் கோவணமாக திகழ்கின்றன என்று அருளாளர்கள் கூறுவது போன்று, இங்கே வேதாந்தமே (வேதங்கள் உணர்த்தும் முடிவான பொருளே) பெருமானுக்கு முப்புரி நூலாகத் திகழ்கின்றன என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்று கொள்வது சுவையான விளக்கம். இதே கருத்து திருமந்திரப் பாடல் ஒன்றினில் குறிப்பிடப்படுவதையும் நாம் முன்னரே சிந்தித்தோம்.

மிக்க காலனை வீட்டி மெய் கெடக் காமனை விழித்துப்

புக்க ஊரிடு பிச்சை உண்பது பொற்றிகழ் கொன்றை

தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண்ணீறு அணிந்து ஆமை

அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே

திருக்கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.38.3) திருஞானசம்பந்தர் பெருமானை, மார்பினில் புரிநூல் பூண்டவர் என்று குறிப்பிடுகின்றார். படி=உலகம்; பொற்பு= தன்மை; தனது உடல் முழுவதும் திருநீற்றினை பூசிக்கொண்டு காட்சி அளிக்கும் பெருமானின் தன்மையின் காரணம் யாது என்று திருஞானசம்பந்தர் கேள்வி கேட்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் செய்கைகளுக்கான காரணத்தை வினாக்களாக வினவி, அதற்கான விடைகளை சிந்திக்கும் வண்ணம் நம்மை ஈடுபடுத்துவது திருஞானசம்பந்தரின் நோக்கமாக உள்ளது. உலகம் முழுதும் அழிந்து, உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் தாங்கள் குடி கொண்டிருந்த உடலினை விட்டுப் பிரிந்த பின்னரும், அந்த உடல்கள் எரிந்த சாம்பலை பூசிக் கொண்டு, தான் ஒருவனே என்றும் அழியாமல் நிலைத்து நிற்பவன் என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் பெருமான் சுடுகாட்டுச் சாம்பலை தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டு இருக்கின்றார் என்பதை அருளாளர்கள் மூலம் நாம் அறிந்துகொண்டுள்ளோம். அந்தணர் வேடத்தினை பெருமான் தாங்கும் காரணம் யாது என்ற வினாவும் இங்கே எழுப்பப் படுகின்றது. வேதம் ஓதுதலும் வேதம் ஓதுவித்தலும் அந்தணர்களின் கடமை என்று வகுத்த பெருமானே அந்த விதியை மீறலாகாது அல்லவா. எனவே வேதத்தை முதன்முதலில் உலகுக்கு உரைத்தவனும், வேதங்களின் பொருளை உமையன்னை, சனகாதி முனிவர்கள், கண்வர் முதலான முனிவர்கள் ஆகியோருக்கு விளக்கியவனும் ஆகிய பெருமான், அந்தணர் கோலத்தில் இருப்பது தானே முறை.

அடியர் ஆயினீர் சொல்லுமின் அறிகின்றிலேன் அரன் செய்கையைப்

படி எலாம் தொழுதேத்து கண்டியூர் வீரட்டத்து உறை பான்மையான்

முடிவுமாய் முதலாய் இவ்வையம் முழுதுமாய் அழகாயதோர்

பொடியதார் திருமார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பதே

சிற்றேமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.42.7) திருஞானசம்பந்தர், பெருமானை, ஒளிரும் வெண்ணூல் மார்பன் என்று அழைக்கின்றார்.மாதவன் என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்று; உயர்ந்த தவம் செய்பவன் என்று பொருள். தவசிகளுக்கு எல்லாம் முன்மாதிரியாக இருக்கும் பெருமானை, மன்மதனும் கலைக்கமுடியாத வண்ணம் ஆழ்ந்த தவத்தினில் இருக்கும் வல்லமை வாய்ந்த பெருமானை விடவும் உயர்ந்த தவத்தினை வேறு எவரும் செய்யமுடியாது என்பதை இங்கே உணர்த்துகின்றார். மன்மதனால் பெருமானின் தவம் கலைக்கப்படவில்லை. மன்மதன் செய்த முயற்சி, தவத்தில் ஈடுபட்டோரின் தவத்தை கலைக்கும் செயல், தவறானது என்பதை உலகினுக்கு எடுத்துக் காட்டும் வண்ணம், பெருமான் தானாகவே தவத்திலிருந்த்து விழித்தவராக, மன்மதனை எரித்து அவனுக்கு தண்டனை அளிக்கின்றார். தாமம்=மலர்மாலை; வளரும் திங்கள்=அழிவு தவிர்க்கப்பட்டு வளரும் நிலைக்கு மாறிய ஒற்றைப் பிறைச் சந்திரன்;

கிளரும் திங்கள் வாண்முக மாதர் பாடக் கேடிலா

வளரும் திங்கள் சூடியோர் ஆடல் மேய மாதவன்

தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான்

ஒளிரும் வெண்ணூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.4) திருஞானசம்பந்தர், பெருமானை விரவி வெண்ணூல் கிடந்த மார்பன் என்று குறிப்பிடுகின்றார். விரவி=கலந்த; வரை= மலை; விரையார்=நறுமணம் மிகுந்த; மார்பினில் சூட்டிக் கொண்டிருந்த கொன்றை மலர்களின் நறுமணம் இங்கே உணர்த்தப் படுகின்றது. பறைத்து=ஓட்டி; உரவு நீர்=உலாவும் நீர்; ஏற்ற=தாங்கிய

அரவமே கச்சதாக அசைத்தான் அலர் கொன்றையந்தார்

விரவி வெண்ணூல் கிடந்த விரையார் வரை மார்பன் எந்தை

பரவுவார் பாவமெல்லாம் பறைத்துப் படர்புன்சடை மேல்

உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே

சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.58.3) திருஞானசம்பந்தர் பெருமானை, நூல் நலம் தங்கு மார்பினர் என்று குறிப்பிடுகின்றார்.சாத்தமங்கை என்பது தலத்தின் பெயர். அயவந்தி என்பது திருக்கோயிலின் பெயர். மானன நோக்கி=மான் போன்று மருண்ட பார்வை உடைய பிராட்டி. ஆ நலம்=பசுவிடமிருந்து கிடைக்கும் நலம் மிகுந்த பொருட்களாகிய பால் தயிர் நெய் கோசலம் கோமியம் ஆகியவை கலந்த பஞ்சகவ்யம். நுகர்=பூசிக் கொண்ட

நூல் நலம் தங்கு மார்பின் நுகர் நீறு அணிந்து ஏறதேறி

மானன நோக்கி தன்னொடு உடனாவதும் மாண்பதுவே

தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை

ஆ நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.3) திருஞானசம்பந்தர், பெருமானை மார்பில் விரி நூலர் என்று குறிப்பிடுகின்றார்,போழும்=பிளவுபட்ட, முழு மதியாக இல்லாமல் அதன் ஒரு பகுதியாக இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன்; துன்று=நெருக்கமாக; வென்றி=வெற்றி கொண்ட;கங்கை நதியினைத் தனது மூதாதையர்கள் சாம்பலாக குவிந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றி கொண்ட பகீரதன்;புக=ஆகாயத்தை விட்டுவிட்டு பூமியில் புகும் வண்ணம்; மேல் வாழு=மேலே ஆகாயத்தில் இருந்த; தாழும்=பூமியில் பாயும் வண்ணம்; இருள்=கருமை மிடறு=கழுத்து; இரத்தல்=வேண்டுதல்; இரவாளர்=இரப்போர்களை ஆட்கொள்பவர்; வரி=வரிவரியாக கோடுகள் உடைய புலித்தோல்; வேழம்=யானை;மேவும் பதி=பொருந்தி உறையும் பதி;

போழும் மதி பூணரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல்

வாழு நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர்

சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடைமேல்

வேழ உரி போர்வையினார் மேவு பதி என்பர் வேதிகுடியே

வேள்விக்குடி மற்றும் திருத்துருத்தி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (3.90.5) திருஞானசம்பந்தர், பெருமானின் திருமார்பினில் முப்புரி நூல் அசைந்து ஆடுகின்றது என்று கூறுகின்றார். களம் கொள்=இருக்கும் இடம்; விளங்குநீர் துருத்தி என்ற தொடர், ஆற்றின் இடையே இந்த தலத்து திருக்கோயில் பண்டைய நாளில் அமைந்து இருந்ததை உணர்த்துகின்றது. வளம்=அழகு; கிளர்-திகழ்; துளங்கும்=அசையும்; இந்த பதிகத்து பாடல்களில் திருஞானசம்பந்தர் மணவாளக் கோலத்துடன் உள்ள பெருமான் பகலில் துருத்தி தலத்தில் உறைவதாகவும் இரவினில் வேள்விக்குடி தலத்தினில் உறைவதாகவும் குறிப்பிடுகின்றார். எனவே இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் இந்த இரண்டு தலங்களும் குறிப்பிடப்படுகின்றன.ஆதலால் இந்த இரண்டு தலங்களுக்கும் பொதுவான பதிகமாகக் கருதப் படுகின்றது.

வளம் கிளர் மதியமும் பொன் மலர்க் கொன்றையும் வாள் அரவும்

களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல் கபாலியார் தாம்

துளங்கு நூல் மார்பினர் அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்

விளங்கு நீர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே

பொன் போன்ற தனது திருமேனியில் புரிநூல் அணிந்து பொலிவுடன் திகழும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.3) உணர்த்துகின்றார். சிந்தையின் நீங்க கில்லார்=சிந்தையிலிருந்து நீக்க முடியாமல் பெருமானை இடைவிடாது நினைக்கும் அன்பர்கள்; இயலும்=போன்ற; மன்னிய=நிலை பெற்ற பெருமை உடைய; உயர்வாம் என்ற சொல்லினை பிணி என்ற சொல்லுடன் இணைத்து, அனைத்துப் பிணிகளிலும் கொடியதாக, மிகவும் உயர்ந்ததாக கருதப்படும் பிறவிப்பிணி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொன்னியலும் திருமேனி தன்மேல் புரிநூல் பொலிவித்து

மின்னியலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவாட

மன்னிய மாமறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர் தம்மேல்

உன்னிய சிந்தையின் நீங்க கில்லார்க்கு உயர்வாம் பிணி போமே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.121.5), திருஞானசம்பந்தர் பெருமானை தனது மார்பினில் நூல் புரளும் வண்ணம் முப்புரிநூல் அணிந்தவர் என்று கூறுகின்றார். பொறிகிளர் என்ற சொற்றொடரை பொன்னினார் என்ற சொல்லுடன் இணைத்துப் பொருள் காணவேண்டும்.கேடு=அழித்தல்; பன்னுதல்=மீண்டும் மீண்டும் ஒரே செயலைச் செய்தல். ஒருமுறை பேசிய சொற்களையே மீண்டும் மீண்டும் பேசுதலை பன்னி பன்னி பேசுதல் என்று கூறுவார்கள். வடம்=மாலை; பொறி=புள்ளிகள், இங்கே புள்ளிகள் உடைய வண்டு; துன்னிய= நெருங்கிய, தன்னை வந்தடைந்த;இரு=பெரிய;

பொன்னினார் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள

மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம் மேவு வெண்ணீறு மெய் பூசித்

துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளித் தொன்மையார் தோற்றமும் கேடும்

பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

பூங்கங்கை=அழகிய கங்கை நதி; பூணூல் அணிந்த மார்பினர் என்று குறிப்பிட்டதற்கு ஏற்ப, சாமவேதம் ஓதும் பெருமான் என்று கூறுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. முறை=வேதம் மற்றும் ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள முறை; வேதங்கள் அருளிய மறையவனை, தலத்து அந்தணர்கள் முறையாக வேதங்கள் ஓதி வழிபடுவதே முறை என்பதை இந்த பாடலில் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். மங்குல்=மேகம்; வானாளாவ உயர்ந்த கோயில் கோபுரம் என்று உணர்த்துகின்றார். எங்கும் என்று தலத்து அந்தணர்கள் நகரெங்கும் பரவியிருந்த தன்மை உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

தனது திருமார்பினில் பொலிவுடன் விளங்கித் தோன்றும் முப்புரிநூல் அணிந்தவரே, பூத கணங்களை படையாக உடையவரே, அழகிய கங்கை நதி தங்கும் செஞ்சடை உடையவரே, இன்னிசையுடன் சாம கானம் இசைப்பவரே, நீர், கேட்பதற்கு இனிதாக விளங்கும் வேதங்களை கற்றுணர்ந்தோரும் ஒழுக்கமுடையோரும் ஆகிய அந்தணர்கள், இடைமருது தலத்தினில் பல இடங்களிலும் பரவி முறையாக ஆகம விதிகளின் வழியே வேத கீதங்கள் கொண்டு உம்மைப் புகழ்ந்து பாடும் வண்ணம் இடைமருது தலத்தினில், வானளாவிய திருக்கோயிலை, மேகங்கள் தவழ்வதால் குளிர்ந்து விளங்கும் திருக்கோயிலை,உமது இருப்பிடமாகக் கொண்டு ஆங்கே மகிழ்ந்து உறைகின்றீர்.

பாடல் 2:

நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்

போரார்ந்த வெண்மழு ஒன்றுடையீர் பூதம் பாடலீர்

ஏரார்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில்

சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே

விளக்கம்:

பூதப் படையை உடையவர் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பூத கணங்கள் பெருமானைப் புகழ்ந்து பாடல்கள் பாடுவதாக கூறுகின்றார். நீர்=கங்கை; ஆர்ந்த= தங்கிய; நிகழ்வித்தீர்=விளங்குமாறு செய்தவர்: போர்க்கருவியாக இருப்பினும் மழு ஆயுதம் பயன்படுத்தப் படாமல் இரத்தக்கறை ஏதும் படியாமல் வெண்மை நிறத்துடன் இருப்பதால், வெண்மழு என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. தாருகவனத்து முனிவர்கள்,பெருமானை கொல்வதற்காக ஏவிய மழுப்படையினை செயலறச் செய்த பெருமான், தனது கையினில் அந்த ஆயுதத்தை ஏந்திய வண்ணம் காட்சி தருவது உணர்த்தப் படுகின்றது. எந்த ஆயுதத்தாலும் வெல்ல முடியாதவர் சிவபெருமான் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. ஏர்=அழகு;

பொழிப்புரை:

கங்கை நதி தேக்கி வைக்கப்பட்ட செஞ்சடையை உடைய பெருமானே, தனது நெற்றியில் அழகிய கண் கொண்டு விளங்குபவரே, சிறந்த போர்க்கருவியாகிய வெண்மழுவினை ஏந்தியவரே, சூழ்ந்துள்ள பூத கணங்கள் மகிழ்ந்து உம்மைப் புகழ்ந்து பாடும் வண்ணம் வீற்றிருப்பவரே, அழகிய மேகலை ஆபரணம் அணிந்த பார்வதி தேவியாரை தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவரே, நீர் இடைமருதில் உள்ள சிறப்பு மிகுந்த திருக்கோயிலை,தலைவனாகிய நீர் உறைகின்ற இடமாக கருதி, சென்றடைந்து எழுந்தருளியுள்ளீர்.

பாடல் 3:

அழல் மல்கும் அங்கையில் ஏந்திப் பூதம் அவை பாடச்

சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்

எழில் மல்கு நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில்

பொழில் மல்கு கோயிலே கோயிலாகக் பொலிந்தீரே

விளக்கம்:

இந்த பாடலில் மறையோர்கள் முறையாக நான்கு வேதங்களையும் ஓதி பெருமானைப் புகழ்ந்து பாடிப் பணிந்து வணங்கினார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இதிலிருந்து மூவர் பெருமானார்கள் வாழ்ந்த காலத்தில், திருக்கோயில்களில் வடமொழி வேதங்களை பாடி அந்தணர்கள் வழிபட்டனர் என்பது புலனாகின்றது. இத்தகைய குறிப்புகள் காணப்படும் சில தேவாரப் பதிகங்களை நாம் இங்கே சிந்திப்போம்.

திருமருகல் மற்றும் செங்காட்டங்குடி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்துப் பாடிய பதிகத்தின் பாடலில் (1.6.4) திருஞானசம்பந்தர் நான்மறைகளை ஓதி உணர்ந்தவர்களும் இடைவிடாது வேள்விகள் செய்வோரும் ஆகிய அந்தணர்கள் வழிபடும் திருக்கோயில், மருகல் திருக்கோயில் என்று கூறுகின்றார்.திருமருகல் தலத்தில் சில நாட்கள் திருஞானசம்பந்தர் தங்கிய போது, அருகிலுள்ள செங்காட்டங்குடி தலத்து அன்பர்கள், திருஞானசம்பந்தரை தங்களது தலத்திற்கு வருமாறு அழைத்தனர். அடுத்த நாள் திருஞானசம்பந்தர் மருகல் தலத்தில் உள்ள திருக்கோயில் சென்றபோது, ஆங்கே பெருமான் மாறுபட்ட தோற்றத்தில் இருந்ததைக் கண்டார். அந்த திருக்கோலம் செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள திருக்கோலம் என்பதை அறிந்த திருஞானசம்பந்தர், மருகல் பெருமான் செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள கோலத்தினை விரும்பி ஏற்றுக் கொண்டதன் காரணம் யாதோ என்று பெருமானின் தன்மையை வியந்து பதிகம் பாடுகின்றார். இவ்வாறு காட்சி அளித்ததன் மூலம், தான் மேலும் சில நாட்கள் மருகல் தலத்தினில் தஙக வேண்டும் என்பதே பெருமானின் திருக்குறிப்பு என்பதை புரிந்துகொண்ட அவர், அவ்வாறே மேலும் சில நாட்கள் மருகலில் தங்கிய பின்னார், செங்காட்டங்குடி சென்றார் என்று பெரியபுராணம் நமக்கு உணர்த்துகின்றது.

நாமருவும் கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய

மாமருவும் மணிக்கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்

தேமரு பூம்பொழில் சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்

காமரு சீர் மகிழ்ந்து எல்லியாடும் கணபதியீச்சரம் காமுறவே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.12.5) திருஞானசம்பந்தர், பல முனிவர்கள் வேத மந்திரங்களை முறையாக சொல்லி பெருமானைப் புகழ்ந்து போற்றினார்கள் என்று கூறுகின்றார். அந்தன்=அந்தகாசுரன்; அறையார்=ஒலிக்கின்ற; அயில்=கூர்மையான; கறை= இரத்தத்தால் ஏற்பட்ட கறை; ஒண் மலர்=சிறந்த மலர்கள்; முறையாயின=முறையாக சொல்லப் படும் வேத மந்திரங்கள்; வேத மந்திரங்களை முறையாக மொழிந்து பல முனிவர்களும் சிறந்த மலர்களை இறைவனின் திருவடியில் முறையாக சார்த்தி பெருமானை வழிபடும் தலம் முதுகுன்றம் என்று உணர்த்துகின்றார்.

அறையார் கழல் அந்தன் தனை அயில் மூவிலை அழகார்

கறையார் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில்

முறையாயின பல சொல்லி ஒண் மலர்ச் சாந்து அவை கொண்டு

முறையால் மிகு முனிவர் தொழ முதுகுன்று அடைவோமே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.20.7) திருஞானசம்பந்தர், நலம் தருகின்ற வேத மந்திரங்களை ஓதியும், நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவியும், நதியின் நீரினைக் கொண்டு நீராட்டியும், தூபம் தீபம் முதலான ஆராதனைப் பொருட்கள் காட்டியும் முறையாக வழிபட்ட சிறுவன் மார்க்கண்டேயன் என்று கூறுகின்றார். நதியுறு புனல் என்று குறிப்பிடுவதை நாம் சிந்திக்கவேண்டும். திருக்கடவூர் தலத்தினில் பெருமானை சிறுவன் மார்க்கண்டேயன் வழிபட்டுக்கொண்டு இருந்தபோது தான் இயமன், அந்த சிறுவனின் உயிரினை கவர நினைத்தான். எனவே அந்த தலத்தினில் மார்க்கண்டேயர் செய்த வழிபாடே இங்கே குறிப்பிடப் படுகின்றது. திருக்கடவூர் தலபுராணம், பெருமானை நீராட்டுவதற்காக கங்கை நதியினை மார்க்கண்டேயர் வரவழைத்தார் என்று குறிப்பிடுகின்றது. எனவே நதியுறு புனல் என்று குறிப்பிடுவது, மார்க்கண்டேயர் வரவழைத்த கங்கை நதிநீர் என்று பொருள் கொள்வதே பொருத்தம். மறலி=இயமன்; சலம்=வஞ்சகம்; மார்க்கண்டேயரின் விருப்பத்திற்கு ஏற்ப கங்கை நீர் பொங்கிய கிணறு, கடவூர் மயானத்து திருக்கோயிலில் உள்ளது. இன்றும் இறைவனை நீராட்ட, அங்கிருந்து தான் தண்ணீர் கொண்டுவரப்படுகின்றது.

நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல்

மலரவை கொடுவழி படுதிறன் மறையவன் உயிரது கொளவரு

சலமலி தருமறலி தனுயிர் கெட உதை செய்தவன் உறைபதி

திலகம் இதுவென உலகுகள் புகழ் தரு பொழில் அணி திருமிழலையே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.22.6) திருஞானசம்பந்தர், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வழியை பின்பற்றி, பிரமனால்,முறையாக வழிபடப் பெற்றவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் நான்காவது அடியிலுள்ள கடையெழுத்து தவிர்த்து அனைத்து எழுத்துகளும் குறில் எழுத்துகளாகவே உள்ளன. இந்த தலத்தின் பெயர், வேதவனம், திருமறைக்காடு, வேதாரண்யம் என்பன. இந்த சொற்களில் நெடிலெழுத்து வருவதால், அந்த பெயர்களைத் தவிர்த்து, அதே பொருள்பட, அந்த பெயரினைச் சற்று மாற்றி, மறைவனம் என்று கையாண்டுள்ள திருஞானசம்பந்தரின் புலமை வியக்கத் தக்கது. ஐ எனப்படும் உயிரெழுத்து இரண்டு மாத்திரை கொண்டடிருந்தாலும், கை ஙை சை என்ற வரிசையில் வரும் உயிர்மெய் எழுத்துக்கள், மாத்திரை அளவு குறைந்து உச்சரிக்கப்படுவதால், அவை குறில் எழுத்துகளாக கருதப்பட வேண்டும் என்று தொல்காப்பியம் மற்றும் நன்னூல் இலக்கண நூல்கள் விளக்கம் அளிப்பதை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். கணி= கணிச்சி=மழு போன்று கூர்மையான நுனி கொண்ட படை; சிகை=தலை; அடல்=வலிமை வாய்ந்த; வெறிமறி=வெறித்த பார்வை, மருண்ட பார்வை உடைய மான்கன்று; வடமுகம்=வடவாக்னி; கரன்=கரங்களை உடையவன்; மலர் மறையவன்=தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்; இரத்தக்கறை படிந்த முத்தலைச் சூலம், பகைவரை நெருப்பு போன்று வருத்தும் மழுவாயுதம், கையிலிருந்து எழுவது போன்ற தோற்றத்துடன் இரண்டு விரல்களின் மீது அமர்ந்திருக்கும் மிரண்ட கண்களை உடைய மான்கன்று, முறையான ஒலியெழுப்பும் உடுக்கை, முடைநாற்றம் கொண்டுள்ள பிரமகபாலம், முகிழ் போன்று கூர்மையாக உள்ள கணிச்சியம்படை, வடவாக்னி ஆகியவற்றை ஏந்திய கரங்களை உடைய சிவ்பெருமானை, தான் உலகினில் உயர்ந்த புகழோடு விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வழியின் படி முறையாக, பிரமன் வழிபடுகின்றான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இதிலிருந்து வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வழியே முறையாக இறைவனை வழிபட்டால், நாம் உயர்ந்த புகழுடன் விளங்கலாம் என்பதையும் உணரலாம்.

கறைமலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறிமறி

முறைமுறை ஒலி தமருகம் உடை தலை முகிழ் மலி கணி வடமுகம்

உறைதரு கரன் உலகினில் உயரொளி பெறுவகை நினைவொடு மலர்

மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே

பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.41.3) திருஞானசம்பந்தர், நறுமணம் நிறைந்த மலர்களைத் தூவி அடியார்கள் வழிபட, வேதியர்கள் நான்மறைகள் பாடி பெருமானைப் புகழ, பிராட்டியுடன் பெருமான் காட்சி தருகின்றார் என்று கூறுகின்றார். பெருமான் திருவுலா வருவதை திருஞானசம்பந்தர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் போலும். துன்ன ஆடை என்று பெருமான் அணியும் கோவண ஆடையை குறிப்பிடுவது திருமுறை மரபு.துன்னல் என்றால் தைக்கப்பட்ட என்று பொருள். இதற்கு கிழிந்ததால் தைக்கப்பட்ட கோவணம் என்று பொருள் கொள்வது தவறு. பெரிய துணியிலிருந்து கிழிக்கப்பட்டு தைக்கப்பட்டது என்று பொருள் கொள்வதே பொருத்தம். சூறை=காற்று; பாம்பு புஸ் புஸ் என்று சத்தமிட்டபடி இருப்பதால், காற்றினை உட்கொள்வதாக கருதப் படுகின்றது.

துன்னலின் ஆடை உடுத்து அதன் மேலோர் சூறை நல்லரவது சுற்றி

பின்னு வார்சடைகள் தாழ விட்டாடிப் பித்தராய்த் திரியும் எம் பெருமான்

மன்னுமா மலர்கள் தூவிட நாளும் மாமலையாட்டியும் தாமும்

பன்னு நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன்னகராரே

பேணுப் பெருந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.42.7) திருஞானசம்பந்தர், நான்கு வேதங்களையும், அந்த வேதங்களை பிழையின்றி சொல்வதற்காக பெருமான் உருவாக்கிய ஆறு அங்கங்களையும், தங்களது முன்னோர்கள் ஓதிய முறையில் விருப்பத்துடன் ஓதி, பெருமானைப் பணிந்து வழிபடும் பெரியோர்களால் வணங்கப்படும் பெருமான் பேணுப் பெருந்துறை பெருமான் என்று கூறுகின்றார். அவ்வாறு வேதங்களை ஓதும் அடியார்களின் வினைகள் முற்றிலும் கெடும் வண்ணம் பெருமான் அருள் புரிகின்றார் என்றும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். விழையார்=மிகுந்த விருப்பம்;

விழையார் உள்ளம் நன்கெழு நாவில் வினை கெட வேதம் ஆறங்கம்

பிழையா வண்ணம் பண்ணிய வாற்றால் பெரியோர் ஏத்தும் பெருமான்

தழையார் மாவின் தாழ்கனி உந்தித் தண்ணரிசில் புடை சூழ்ந்து

குழையார் சோலை மென்னடை அன்னம் கூடு பெருந்துறையாரே

சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.48.8) திருஞானசம்பந்தர், தாமரைச் செல்வனாகிய பிரமன் போன்று பூசுரர் போற்றிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சே=இடபம்; மா=குதிரை; பொதுவாக தேர்கள் என்றால் குதிரைகளால் இழுக்கப்படும் என்பதை நாம் அறிவோம். இராவணன் பயன்படுத்திய தேர், புட்பக விமானம், வானில் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தது என்பதால் குதிரைகள் தேவைப்படாத தேராக விளங்கியது. என்றாலும் தேரின் பொதுத் தன்மை கருதி மா அடைந்த தேர் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தேர்ப்படை குதிரைப்படை உடையவனாக விளங்கினான் என்று உணர்த்தும் வண்ணம் மாவடைந்த தேர் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.பூசுரர்=அந்தணர்;

மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன் தன்

நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே

பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்

சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.62.3) திருஞானசம்பந்தர், அன்று பூத்த அழகிய மலர்களும் ரிக் முதலான நான்கு வேதங்களின் மந்திரங்கள் கொண்டும் மனமொன்றி வழிபாடு செய்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனின் உயிரினை நீக்கி, சிறுவனுக்கு நீண்ட ஆயுளை அளித்தவன் இறைவன் என்று கூறுகின்றார்.

நன்று நகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரம் கொண்டு

ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல்

கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான்

கொன்றை மலர் பொன் திகழும் கோளிலி எம் பெருமானே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.118.5) திருஞானசம்பந்தர் வானோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேதகீதங்களை பாடி இறைவனைப் புகழ்ந்தேத்த, இறைவன் பருப்பதம் தலத்தினில் உறைகின்றான் என்று கூறுகின்றார். சிறை=சிறகுகள்; சிறைகள் படபடக்க அங்குமிங்கும் பறந்து திரியும் கிளிகள், தேனினும் இனிய தங்களது குரலால் எழுப்பும் ஒலியும் வண்டுகளின் ரீங்காரமும் இடைவிடாது ஒலிக்க, பின்னணியில் பறை போன்று முழங்கும் வண்ணம் அருவி நீர் பொழிகின்றது என்று பருப்பத தலத்தின் இயற்கை அழகினை வர்ணனை செய்கின்றார்.

துறை பல சுனை மூழ்கித் தூமலர் சுமந்தோடி

மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்தச்

சிறையொலி கிளி பயிலும் தேனினம் ஒலி ஓவாப்

பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே

கருப்பறியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.31.3) திருஞானசம்பந்தர், வேத மந்திரங்கள் கொண்டு எங்களது நாதனே என்று அழைத்து,அர்ச்சனைகள் செய்து அந்தணர்களால் வழிபடப்பட்ட இறைவன் என்று குறிப்பிடுகின்றார். வேள்வி முதலாக=வேள்வி முதலாகிய பல நற்செயல்களில் ஈடுபட்டு; போதினொடு=பொழுதோடு, உரிய காலத்தில்; போது=அப்போது மலர்ந்த மலர்; திருஞானசம்பந்தர் இந்த தலம் சென்ற காலத்தில், இந்த தலத்தில் வேதியர்கள் அதிகமாக இருந்தனர் போலும்; அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய ஆறு தொழில்களையும் செய்து இருந்தமை, வேள்வி முதலாக என்ற சம்பந்தரின் கூற்று நமக்கு உணர்த்துகின்றது.

வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாக

போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற

நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும்

காதவன் இருப்பது கருப்பறியலூரே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.33.6) வேதங்களில் சொல்லப் பட்டுள்ள நெறியின் வழியே நின்று அடியார்கள் பெருமானை நீராட்டி வழிபடுகின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நீராட்டும் போது ஶ்ரீருத்ரம் மந்திரம் சொல்வது மரபு. ஶ்ரீருத்திர மந்திரத்திற்கு சமமாக கருதப்படும் நின்ற திருத்தாண்டகம் சொல்லி பெருமானை நீராட்டுவதும் சிறப்பே. போற்றித் திருத்தாண்டகங்கள், போற்றித் திருவகவல்,சிவபுராணம் முதலிய பதிகங்கள் சொல்வதும் சிறப்பே. பெருமானின் திருவடிகளின் சிறப்பினை உணர்த்தும் திருவதிகை வீரட்டானம் (6.06),இன்னம்பர்(4.100), திருவையாறு(4.92) பதிகங்கள் ஓதுவதும் பொருத்தமே.

பாலன் அடி பேண அவன் ஆருயிர் குறைக்கும்

காலன் உடல் மாள முன் உதைத்தவன் ஊராம்

கோல மலர் நீர்க்குடம் எடுத்து மறையாளர்

நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே

பழுவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.34.5) திருஞானசம்பந்தர், வேத மொழிகளைச் சொல்லி மறையாளர்கள் இறைவனைப் போற்றி வழிபட்டனர் என்று கூறுகின்றார். மறையாளர்=வேதங்கள் பயின்ற மலையாளர்கள்; இந்த திருக்கோயிலில் பெருமானுக்குத் தொண்டு புரிபவர்கள் வழிவழியாக வந்த மலையாளர்கள் என்பதால், மறையவர்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவது மலையாளத்து வேதியர்களை என்று பொருள் கொள்ள வேண்டும். பரசுராமர் இந்த தலத்து பெருமானை தொடர்ந்து வழிபடும் பொருட்டு முன்னூறு மலையாளர்களை நியமித்தார் என்று தலபுராணம் உணர்த்துகின்றது. பெரிய புராணத்து பாடலிலும் சேக்கிழார், மலையர் தாம் தொழுது ஏத்தும் தன்மை என்று குறிப்பிடுவதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். பாடபேதமாக மறையாளர் என்ற சொல் சில பதிப்புகளில் மலையாளர் என்று உள்ளது. இரண்டு சொற்களுமே பதிகத்தின் பொருளுக்கு பொருத்தமாக இருப்பதை காணலாம்.

சாதல் புரிவார் சுடலை தன்னில் நடமாடும்

நாதன் நமை ஆளுடைய நம்பன் இடம் என்பர்

வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன் தன்

பாதம் அவை ஓத நிகழ்கின்ற பழுவூரே

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.35.3) திருஞானசம்பந்தர், தேவர்களும் அசுரர்களும் வேதமந்திரங்கள் சொல்லி இறைவனை வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார். இனியும் வருகின்ற உயிரற்ற உடலுக்கு இங்கே இடமில்லை என்று சொல்லாத வண்ணம், என்றும் நிறையாது இருக்கும் சுடுகாடு என்பதை உணர்த்த, நிறைவில் புறங்காடு என்று கூறுகின்றார். நேரிழை=ஒப்பற்ற ஆபரணங்களை தேர்ந்தெடுத்து அணிகின்ற உமையன்னை; இறைதல்=அழிதல்; இறைவில் எரி=அழிதல் இல்லாது என்றும் தொடர்ந்து எரிகின்ற தீச்சுடர்; குறைவில்லவன்=எந்த விதமான குறையும் இல்லாதவன்;

நிறைவில் புறங்காட்டிடை நேரிழையோடும்

இறைவில் எரியான் மழுவேந்தி நின்றாடி

மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும்

குறைவில்லவன் ஊர் குரங்காடுதுறையே

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.5) திருஞானசம்பந்தர், வேத மந்திரங்கள் கொண்டு ஜடாயு, பெருமானை வழிபட்டதாக குறிப்பிடுகின்றார். போதம்=ஞானம்; கீதம்=இனிய இசையுடன் கூடிய பாடல்கள்; குடி=புகலிடம்; பரஞ்சோதி=உயர்ந்த சோதி; பெருமான் சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று சுடர்களுடன் உடன் இருந்து அந்த சுடர்களுக்கு ஒளி கொடுக்கும் ஈசன், தானே ஒளிவிடும் சோதியாகவும் உள்ளான். அவ்வாறு ஒளிவீசும் சோதியாக விளங்கும் ஈசனுக்கு ஒளி கொடுப்பவர் எவரும் இல்லை என்பதால், உயர்ந்த சோதி என்ற பொருளைத் தரும் வண்ணம் பரஞ்சோதி என்று இங்கே குறிப்பிடுகின்றார். பயிலும்= தொடர்ந்து இந்த தலத்தில் உறையும் நிலை; மண்ணி ஆற்றின் கரையில் இருந்த வெண்மணலில் இலிங்கம் செய்து வழிபட்டவர் சண்டீசர். தான் கண்ட அனைத்துப் பொருட்களிலும் சிவத்தை காணும் ஞானம் பெற்றவர் அப்பர் பிரான்.அவ்வாறே வெண்மணலில் சிவபெருமானின் உருவத்தைக் கண்ட ஞானம் உடையவர்களாக ஜடாயுவும் சம்பாதியும் திகழ்ந்தனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்

கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடியாகப்

பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.63.2) திருஞானசம்பந்தர், நாவால் நாமம் ஓதி நாள்தோறும் பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூர் என்று குறிப்பிடுகின்றார்.

மேவுதல்=பொருந்துதல்; மேவா அசுரர்=பொருந்தாத, சிவநெறியில், வைதீக நெறியில் பொருந்தாது பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்கள்;மேவெயில்=மேவிய எயில், பொருந்திய கோட்டைகள்; வேவ=தீயினில் வெந்து அழிய; வெங்கணை=வெப்பத்தை வெளிப்படுத்திய அம்பு; தீப்பிழம்புகளை வெளிப்படுத்திய அம்பு என்று கூறுகின்றார். எரிகணை=அக்னியை தனது நுனியில் கொண்டிருந்த அம்பு; ஏ=அம்பு; எய்தும்=குடி கொண்டிருக்கும்; சுரர் என்றால் உயர்ந்தவர்கள் என்று பொருள். அதனால் தான் தேவர்களை சுரர் என்று குறிப்பிடுவார்கள். பூசுரர் என்றால் நிலவுலகத்தில் உள்ள உயர்ந்தவர்கள்;இங்கே சிவவேதியர்களை குறிப்பிடும் சொல்லாக உள்ளது.

மேவா அசுரர் மேவெயில் வேவ மலை வில்லால்

ஏவார் எரி வெங்கணையால் எய்தான் எய்தும் ஊர்

நாவால் தன் நாமம் ஓதி நாள் தோறும்

பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.8) திருஞானசம்பந்தர், ஒன்றிய சிந்தனையுடன் பெருமானின் திருப்பாதங்களின் மீது தூவியும் தொன்மையான ரிக் வேதங்களின் மந்திரங்களையும் ஓதி, வேதியர்கள் வழிபட, அந்த வழிபாட்டினை மகிழ்ந்து ஏற்றுக் கொள்கின்ற பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கலிக்காழி=ஆரவாரம் மிகுந்த சீர்காழி நகரம்; நல்லொருக்கியதொர்=நன் வழியில் ஒன்றி;

வல்லரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள்முடி

கல்லரக்கிவ் விறல் வாட்டினான் கலிக் காழியுள்

நல்லொருக்கியதொர் சிந்தையார் மலர் தூவவே

தொல் இருக்கும் மறை ஏத்து உகந்து உடன் வாழுமே

வேணுபுரம் என்றும் அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.81.1) திருஞானசம்பந்தர், வானவர்கள் வேதகீதங்கள் பாடியும் இறைவனின் திருப்பாதங்களில் நறுமணம் பொருந்திய மலர்கள் தூவியும் வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார்.

பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்

ஒதத்தின் ஒலியொடும் உம்பர் வானவர் புகுந்து

வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும்

பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே

அறையணிநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.77.8) திருஞானசம்பந்தர், முனிவர்கள் பலரும் முறையாக வேதகீதங்கள் ஓதும்பொருட்டு,நான்மறைகளையும் அருளியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில், தக்கன் செய்த வேள்வி முற்றுப்பெறாமல் தடை செய்து மகிழ்ச்சி அடைந்தவன் சிவபெருமான் என்றும் குறிப்பிடுகின்றார். வேதங்களை அருளி, அந்த வேதங்கள் மூலம் எவ்வாறு முறையாக வேள்விகள் செய்யப்படவேண்டும் என்று அனைவர்க்கும் உணர்த்திய பெருமான், ஏன் தக்கனது வேள்வியை அழிக்கவேண்டும் என்ற ஐயம் எழலாம். வேள்விகள், யாகங்கள், இல்லறத்தோர் ஈடுபடுகின்ற வைதீக சடங்குகள் அனைத்தும், சிவபெருமானை முன்னிறுத்தியே செய்யப்படவேண்டும் என்று வேதங்கள் உணர்த்துகின்றன. ஆனால் தக்கனோ, சிவபெருமான் மீது தான் கொண்டிருந்த பகைமை காரணமாக, சிவபெருமானுக்கு உரிய மரியாதை கொடுக்காமல், வேள்வி செய்யத் துணிந்தான். இந்த செய்கை தவறு என்று பல முனிவர்கள் எடுத்துச் சொல்லியும், தக்கன் தனது போக்கினை மாற்றிக் கொள்ளவில்லை. தவறான முறையில் வேள்வி செய்தால், தாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று சிறந்த ஏழு முனிவர்கள் சொன்னபோதிலும், தக்கன் தனது பிடிவாதத்தில் சற்றும் தளராமல், தனது விருப்பப்படியே தவறான முறை என்று தெரிந்தும், அந்த முறையில் வேள்வி செய்யத் துணிந்தான். இந்த வேள்வி நடைபெற்று முடிந்தால், ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்பதால், வேதங்களை பாதுகாக்கவேண்டிய கடமை உடைய பெருமான், தக்கனது வேள்வி முற்றுப் பெறாமல் தடுத்து,வேதங்கள் உணர்த்தும் நெறிமுறையை பாதுகாக்கின்றார். எனவே தான், தக்கனது வேள்வி தகர்க்கப் பட்டதற்கு பெருமான் மகிழ்ச்சி அடைகின்றார். மேலும் இந்த பாடலில் பெருமானைச் சார்ந்து நிற்போம் என்றும் வேறெவரையும் சாரமாட்டோம் என்றும் மிகவும் உறுதியாக திருஞானசம்பந்தர் சொல்வதை நாம் உணரலாம்.

தக்கனார் பெருவேள்வியைத் தகர்த்து உகந்தவன் தாழ்சடை

முக்கணான் மறை பாடிய முறைமையால் முனிவர் தொழ

அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர்

நக்கனாரவர் சார்வலால் நல்கு சார்விலோம் நாங்களே

திருத்தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.82.3) திருஞானசம்பந்தர், சிறுவன் மார்க்கண்டேயரைப் பற்றிக் குறிப்பிடுகையில், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகள் வழியே, வழிபாடு செய்த அடியார் என்று கூறுகின்றார்.

மறைகளால் மிக வழிபடு மாணியைக் கொல்வான்

கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்த எம் கடவுள்

செறுவில் வாளைகள் சேலவை பொரு வயல் தேவூர்

அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே

புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.92.7) திருஞானசம்பந்தர் அடியார்கள், தென்சொல் எனப்படும் தமிழ்மொழியிலும் உயர்ந்த வடமொழியிலும் வேறு பல திசை மொழிகளிலும், யாழிசையுடன் பொருந்தும் வண்ணம் இனிய குரலில் தோத்திரங்கள் பாடி பெருமானை தொழுகின்றனர் என்று கூறுகின்றார். இதிலிருந்து பல தேசத்தவர்களும் புகலூர் பெருமானைப் புகழ்ந்து போற்றினார்கள் என்பதை நாம் அறிந்துகொள்கின்றோம். இவ்வாறு பாடும் அடியார்களின் மனதினில் உள்ள இருள், பெருமானின் கருணையால் நீக்கப்படுகின்றது என்பதை குறிப்பிடுவதன் மூலம், பெருமானைப் புகழ்ந்து தோத்திரங்கள், வேத கீதங்கள், பதிகங்கள் பாட வேண்டிய அவசியத்தை நாம் புரிந்து கொள்ளலாம். விஞ்சமர்=உயர்ந்த;அஞ்சனம்=பெண்கள் தங்களது கண்களில் இட்டுக் கொள்ளும் மை கருமை நிறத்தில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். மை படர்ந்தது போன்று ஆலகால விடம் எங்கும் படர்ந்தது என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பெடுத்துத்

துஞ்சு நெஞ்சின் இருள் நீங்கத் தொழுதெழ தொல் புகலூரில்

அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலைகடல் கடைய அன்றெழுந்த

வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.114.5) திருஞானசம்பந்தர், உயர்ந்த கருத்துகளை சொல்லும் வேத மந்திரங்களை சொல்லி,எந்தையே வாழ்க என்று பெருமானை வாழ்த்துகின்ற தலம் திருக்கேதாரம் என்று குறிப்பிடுகின்றார். மேழி=கலப்பை; கேழல்=பன்றி; பூழ்தி=புழுதி;கிளைக்க=கிளற;

ஊழியூழி உணர்வார்கள் வேதத்தின் ஒண் பொருள்களால்

வாழி எந்தை என வந்திறைஞ்சும் இடம் என்பரால்

மேழி தாங்கி உழுவார்கள் போலவ்விரை தேரிய

கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே

தென்குடித்திட்டை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.35.9) ஆரணம் கொண்டு பூசுரர்கள் இறைவனின் திருவடிகளைத் தொழுதனர் என்று கூறுகின்றார். ஆரணம் என்றால் வடமொழி வேதங்கள் என்று பொருள். காரணன்=உலகம் தோன்றுவதற்கு நிமித்த காரணனாக விளங்கும் பெருமான்; காண ஒண்ணான்=காண முடியாத வண்ணம்; பூசுரர்=அந்தணர்கள்; பூ என்றால் பூவுலகம்; சுரர் என்றால் தேவர்கள், தேவர்கள் போன்று புகழுடன் நிலவுலகில் வாழ்ந்த அந்தணர்கள்; சீர்=சிறந்த; அணங்கும்=தெய்வத்தன்மை உடைய

நாரணன் தன்னோடு நான்முகன் தானுமாய்க்

காரணன் அடிமுடி காண ஒண்ணான் இடம்

ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழச்

சீர் அணங்கும் புகழ்த் தென்குடித் திட்டையே

குடந்தை (தற்போது கும்பகோணம் என்று அழைக்கப்ப்டும் தலம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.59.2) திருஞானசம்பந்தர், அந்தணர்கள் கூட்டாக சேர்ந்து வேதங்கள் ஓதினார்கள் என்று குறிப்பிடுகின்றார். வேதங்கள் பக்தியுடன் ஓதப்படுவதால் ஓத்து என்று வேதங்கள் அழைக்கப்படுகின்றன.குழுவாக சேர்ந்து வேதங்களை ஓதும் வழக்கம், இன்றிருப்பதைப் போன்று, பண்டைய நாளிலும் பழக்கத்தில் இருந்த நிலையினை இந்த பாடல் உணர்த்துகின்றது. அரவம் என்றால் ஒலி என்று பொருள். அரவங்கள் என்று பன்மையில் சொல்லியபடியால் பலர் ஒன்று சேர்ந்து கூட்டமாக வேதங்கள் ஓதினார்கள் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார் என்று பொருள் கொள்ளவேண்டும். இன்றும் பல வேத பாடசாலைகள் கொண்டுள்ள குடந்தை நகரம், பண்டைய நாளிலும் வேத பாடசாலைகளும் வேத விற்பன்னர்களும் மிகுதியாக கொண்டிருந்த தலமாக விளங்கியது போலும். வேதங்கள் இறைவனை வழிபட்ட இடம் என்பதை உணர்த்தும் முகமாக திருவோத்தூர் என்றே தொண்டை நாட்டில் ஓரு தேவாரத் தலம் அழைக்கப் படுகின்றது. முதல் அடியில் உள்ள அரவங்கள் என்ற சொல் வேத மந்திரங்களை குறிப்பிடுவது போன்று இரண்டாவது அடியில் உள்ள அரவங்கள் என்ற சொல் பெருமானின் திருநாமங்களை சொல்வதாலும் தேவார பதிகங்களை பாடுவதாலும் ஏற்படும் ஓசைகளை உணர்த்துகின்றன என்று பொருள் கொள்வது சிறப்பு.

ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து அயலே

பூத்து அரவங்களோடும் புகை கொண்டடி போற்றி நல்ல

கூத்து அரவங்கள் ஓவாக் குழகன் குடமூக்கு இடமா

ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே

சீர்காழி என்று அழைக்கப்படும் பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.67.1) திருஞானசம்பந்தர், பிரமன் வேதகீதங்களை பாடி இறைவனை வழிபட்டதாக கூறுகின்றார். சுரர்=தேவர்கள்; சுரர் உலகு=தேவர்கள் வாழும் உலகம்; பயில்=வாழ்கின்ற; நரர்கள்=மனிதர்கள்; தரணி தலம்=நிலவுலகம்; முரண்=வலிமை; அரணம்=காவல்; விசை=வேகம்; வரன்முறை=எவ்வாறு ஓதவேண்டும் என்று வரையறுக்கப்பட்ட முறை; சுருதி=வேதங்கள்;சுருதி சிரம்=வேதங்களின் முடிவான கருத்துகள் கொண்ட உபநிடதங்கள்; நிரை=வரிசை; சரண இணை=இணையாக உள்ள திருப்பாதங்கள்;பரவ=புகழ்ந்து பாட; விரவு வகை எரிய=கலந்து பல இடமும் எரியும் வண்ணம்; இசை என்ற சொல்லுக்கு புகழ் என்று பொருள் கொண்டு, திரிபுரங்களை அழித்து புகழ் பெற்ற அம்பினை ஏந்திய கரம் என்று பொருள் கூறுவதும் பொருத்தமே. தேவர்கள் வாழ்கின்ற தேவர் உலகமும் மற்றும் மனிதர்கள் வாழ்கின்ற நிலவுலகமும் தங்களது நிலையிலிருந்து மாறுபட்டு, வலிமை அழியும் வண்ணம் துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை, ஒன்றுக்கொன்று காவலாகத் திகழ்ந்த கோட்டைகளை, வலிமையான மதில்களைக் கொண்டிருந்த மூன்று கோட்டைகளை, ஒருங்கே பல இடங்களும் கலந்து எரியும் வண்ணம் விரைவாக செல்லக்கூடிய அம்பினை எய்த ஆற்றல் கொண்ட கரத்தினை உடையவர் சிவபெருமான். வேதங்களின் முடிவான பொருளை உணர்த்தும் உபநிடதங்களின் வாக்கியங்களை, எல்லா ஸ்வரங்களும் வரிசை முறையில் நிறைவாக அமையும் வண்ணம் முறையாக அவற்றை ஓதவேண்டிய முறையில், தான் மேலும் மேலும் உயர்வடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓதிய பிரமன், பெருமானின் அழகிய இணையான மலரடிகளை புகழ்ந்து பாடி,தான் வேண்டிய வரங்களை பெற்றான். இவ்வாறு பிரமன் போற்றி வணங்கியமையால் பிரமபுரம் என்று பெயர் பெற்ற இந்த தலம் ஓங்கிய புகழுடன் விளங்குகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.80.4) திருஞானசம்பந்தர் செந்தமிழ் மொழி பேசுவோரும், தெய்வத் தன்மை பொருந்திய நான்மறைகளை ஓதும் அந்தணர்களும் நற்பயன்கள் தருகின்ற கலைகளை அறிந்த சான்றோரும் நற்குணங்கள் உடைய ஞானிகளும் அர்ச்சனை செய்து வழிபட, வீழிமிழலை நக்ரினில் உறைகின்ற பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மேலும் வேள்வி செய்யும் அந்தணர்கள் விரும்பி உறைகின்ற பதி வீழிமிழலை என்றும் குறிப்பிடுகின்றார்.

செந்தமிழர் தெய்வமறை நாவர் செழு நற்கலை தெரிந்த அவரோடு

அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்

கொந்தலர் பொழில் பழனவேலி குளிர் தண்புனல் வளம் பெருகவே

வெந்திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே

இதே பதிகத்தின் இரண்டாம் பாடலில் (3.80.2) திருஞானசம்பந்தர், நல்லொழுக்கம் உடையோரும் நான்கு வேதங்களையும் ஓதும் திறமை வாய்ந்தோரும் ஆகிய மறையவர்கள் சயத்துதிகள் செய்தனர் என்று கூறுகின்றார். சயத்துதிகள்=வாழ்க, வெல்க எனப்படும் வாழ்த்து துதிகள்; இட்ட= ஊதும்;பணிலம்=சங்கு: மட்டு=நறுமணம்;

பட்ட முழவு இட்ட பணிலத்தொடு பன்மறைகள் ஒது பணி நல்

சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள் செய் தழல்கொள் மேனியவன் ஊர்

மட்டுலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில் வாய்

விட்டுலவு தென்றல் விரைநாறு பதி வேதியர்கள் வீழிநகரே

புறவம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.84.5), சீர்காழி தலத்து இறைவனை, வேள்வி வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி தீபமேற்றி மலரும் நீரும் கொண்டு முறையாக பிரமன் வழிபட்டதாக குறிப்பிடுகின்றார். தூமம்= புகை; தூமமது உற=புகை எழும் வண்ணம் வலிய நெருப்பு பற்றி கொள்ளும் வண்ணம்; விறல்= திறமை; கடி=காவல் மிகுந்த; திரிபுரத்து அரக்கர்களின் ஒவ்வொரு கோட்டைக்கும் மற்ற இரண்டு கோட்டைகள் விலகி நின்று காவலாக இருந்த தன்மை, இங்கே குறிப்பிடப் படுகின்றது. பிறவிய= மற்ற வாத்தியங்கள் ஒலிக்க;

காமனை அழல் கொள விழி செய்து கருதலர் கடிமதில்

தூமமது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகுபதி

ஓமமொடு உயர் மறை பிறவிய வகை தனொடு ஒளிகெழு

பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.33.5) அப்பர் பிரான், உலகத்தவர் வேதங்களை விரும்பி ஓதும் வண்ணம் செய்தவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். கின்னரம்= இசை கலந்த பாடல்கள்; மண்ணினார்=மண்ணுலகில் வாழ்பவர்: விண்ணுலகில் உறையும் பெருமானார்,விண்ணவர்களை விடவும் உயர்ந்தவர்; உலகத்தவர் வேதங்களை விரும்பி ஓதுமாறு செய்பவர் சிவபெருமான்; இசையுடன் கலந்த பாடல்களை அவரது அடியார்கள் பாடி ஆடுகின்றனர். கண் போன்று மிகவும் அரிய பொருளாக நம் அனைவராலும் கருதப்படும் பெருமான், நமது கண்ணின் உள்ளே உள்ள ஒளியாகத் திகழ்கின்றார். இத்தகைய பண்புகளை உடையவராக சிறப்பு வாய்ந்த மறைக்காடு தலத்தில் உறையும் இறைவனை, உலகத்தவர்கள் வலம் வந்து வணங்கி வாழ்த்துகின்றார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓதப்

பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக்

கண்ணினார் கண்ணின் உள்ளே சோதியாய் நின்ற எந்தை

மண்ணினார் வலம் கொண்டு ஏத்து மாமறைக்காடனாரே

இடைம்ருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.35.5) அப்பர் பிரான், நான்கு வேதங்களில் உள்ள கீதங்களை பாடி, இறைவனைப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்று கூறுகின்றார். ஏதங்கள்=துன்பங்கள்; புனிதன்=தூய்மை வடிவினன். தூய்மை வடிவினன் என்பது பெருமானின் எட்டு குணங்களில் ஒன்று. மற்ற குணங்களாவன, தன் வயத்தன், இயற்கை உணர்வினன், முற்றும் உணர்ந்தவன், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன், பேரருள் படைத்தவன், முடிவில்லாத ஆற்றல் உடையவன், வரம்பிலா இன்பம் உடையவன். தங்கள் மேலை ஏதங்கள் என்ற தொடருக்கு உயிர்கள் இனியும் எடுக்கவிருக்கின்ற பிறவிகளுக்காக ஒதுக்கப்ப்ட்ட வினைத் தொகுதிகள் என்று பொருள் கொள்ளவேண்டும். சஞ்சித வினைகள் என்று இவற்றை குறிப்பிடுவார்கள். அடியார்களின் மேல் படர்ந்துள்ள மூன்று விதமான வினைகள், பிராரத்தம், ஆகாமியம் மற்றும் சஞ்சிதம் என்றும் விளக்கம் அளிப்பதுண்டு.ஆகாமியம் என்பது, முந்தைய வினைகளின் விளைவாகிய நன்மைகளையும் தீமைகளும் அனுபவிக்கும் சமயத்தில் நாம் செய்யும் செயல்கள் ஏற்படுத்தும் வினைகள் ஆகாமியம் என்று அழைக்கப்படுகின்றன. முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைகளின் தொகுதி தொல்வினை என்றும், அந்த தொல்வினைகளின் ஒரு பகுதியாக இந்த பிறப்பினில் நாம் அனுபவித்து கழிக்கப்படுவதற்காக ஒதுக்கப்படும் வினைகள் பிரார்த்த வினைகள் அல்லது ஊழ்வினைகள் என்று அழைக்கப் படுகின்றன. இந்த பிறவியில் நாம் ஈட்டும் வினைகள், தொல்வினைகளுடன் எஞ்சிய தொகுதியுடன் சேர்ந்து இனி எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு தொல்வினைகளாக மாறுகின்றன.

வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்தப்

பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை

பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை

ஏதங்கள் தீர நின்றான் இடைமருது இடம் கொண்டாரே

ஒரு பொதுப்பதிகத்தின் முதல் பாடலில் (4.75.1) அப்பர் பிரான், ரிக் வேத மந்திரங்களை பாடி பெருமானை காவிரி நதியின் நன்னீர் கொண்டு நீராட்டாமலும், சந்தனக் குழம்பு சாத்தியும் இண்டை முதலான மலர்கள் சூட்டியும் பெருமானை அழகுபடுத்தி கண்ணாரக் காணாமலும், தான் தனது காலத்தை வீணாக கழித்ததாக குறிப்பிட்டு, தனது வருத்தத்தை தெரிவிக்கின்றார். இருக்கு= ரிக் வேதம், வேத மந்திரங்கள்: இறைவனுக்கு அபிடேகம் செய்யும்போது வேதங்கள் அல்லது தமிழ் மறைகள் பாடுவது மரபு. இந்த மரபு அப்பர் பிரானால் இங்கே உணர்த்தப்படுகின்றது. வேதங்கள் சொல்லியவாறே புனித நதிகளின் நீரினைக் கொண்டு இறைவனை நீராட்டி, பின்னர் சந்தன குங்குமச் சாந்தினால் அலங்காரம் செய்து, மலர்களை சூட்டி, இறைவனை கண்ணாரக் கண்டு அழகு பார்க்கும் வழக்கம் முறையாக இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. கண்டன்=பாசத்தை துண்டிப்பவன்

தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன்னீர்

கொண்டு இருக்கு ஓதி ஆட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி

இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானைக்

கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே

பேரெயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.18.6) பெருமானின் திருவடிகளை, இருக்கு முதலாகிய நான்கு வேதங்களின் மொழியால் புகழ்ந்து பாடும் அடியார்களின் வினைகளை, உயிர்கள் அடையவிருக்கும் துன்பங்களின் மூல காரணமாகிய வினைகளின் ஆற்றலை, கெடுத்து பெருமான் அருள் புரிவார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மேலும் அத்தகைய அடியார்களின் நல்வினைகள் தரும் வினைகளின் செயல்பாட்டினை பெருக்கி, பல மடங்கு இன்பங்கள் அடையும் வண்ணம் அருள் புரிவார் என்றும் கூறுகின்றார். திருக்கு=வளைத்து முறுக்கி முடிந்த; வார் குழல்=நீண்ட குழலினை உடைய உமையன்னை; ஆற்றர=ஆற்றல் பெருக; தோற்றங்கள்=நன்மைகள்;

திருக்கு வார்குழல் செல்வன சேவடி

இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார்

சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றர

பெருக்குவார் அவர் பேரெயில் ஆளரே

கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.19.7) உலகத்தவர்கள் வேதகீதங்கள் பாடியும் பலவிதமான பூஜைகள் செய்தும் இறைவனை வழிபடுவதைக் காணும் விண்ணவர்கள் வியப்படைகின்றனர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தேவாரப் பாடல்களுக்கு முறையான பண்கள் அமைந்திருப்பது போன்று, வேதங்கள் ஓதுவதற்கும் வழிமுறை வகுக்கப் பட்டுள்ளது. அந்த முறையில் அடியார்கள் வேதங்கள் ஓதினார்கள் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

பண்ணினார் மறை பல் பல பூசனை

மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும்

விண்ணினார்கள் வியக்கப் படுவன

கண்ணினார் கடம்பூர் கரக் கோயிலே

பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.81.5) அப்பர் பிரான், இசையுடன் இருக்கு வேத மந்திரங்களை பாடி வானவர்கள் புகழ்ந்தேத்த இறைவன் வீற்றிருக்கின்றான் என்று கூறுகின்றார். தாங்கள் அணிந்திருந்த மணிமுடிகள் ஒன்றுடன் ஒன்று உராயும் வண்ணம் தேவர்கள் நெருக்கமாக நின்று இறைவனை வணங்கினார்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். ஒருவருக்கொருவர் நெருங்கி நின்று கொண்டு,தங்களது கிரீடங்கள் உராயும் வண்ணம் தேவர்கள் நின்றனர் என்று குறிப்பிடுவதன் மூலம், எண்ணற்ற தேவர்கள் இறைவனை வழிபட்ட நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.

நெருக்கி அம்முடி நின்று இசை வானவர்

இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்

திருக்கொடும்முடி என்றலும் தீவினைக்

கருக்கெடும் இது கை கண்ட யோகமே

மழபாடி திருத்தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்து பாடல் ஒன்றினில் (6.40.2) அப்பர் பிரான், மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு தன்னை வழிபடும் அடியார்கள் வானுலகு ஆள்வதற்கு அருள் புரிபவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். அறை=ஓசை; அரசனுக்கு கட்டியம் கூறி, வாழ்த்துகள் பாடி,நறுமணம் மிகுந்த மலர்கள் தூவி, இசைக்கருவிகள் இசைத்து, வேத மந்திரங்களை சொல்லி, நறுமணப் பொடிகள் கலந்த நீர் கொண்டு அவனை நீராட்டுவது வழக்கம். இறைவனது அருளால் வானாளும் பேறு பெறுகின்ற அடியார்களும் அத்தகைய சிறப்பினை பெறுவார்கள் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அந்தரம்=வானுலகம்; கறை=இருள்; கலி=ஆரவாரம்;

அறைகலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தில் கந்தருவர் அமரர் ஏத்த

மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆளக் கொடுத்தி அன்றே

கறை கலந்த பொழில் கச்சிக் கம்பம் மேய கனவயிரத் திரள் தூணே கலிசூழ் மாட

மறை கலந்த மழபாடி வயிரத் தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (6.71.5) பெருமானின் பலவகையான திருக்கோயில்களை குறிப்பிடும் அப்பர் பிரான், இளங்கோயில் என்று ஒரு வகையினை குறிப்பிடுகின்றார். திருமீயச்சூர் தலத்தில் உள்ள திருக்கோயில், மீயச்சூர் இளங்கோயில் என்று அழைக்கப்பட்டாலும், பொதுவாக குடமுழக்கு விழாவினை முன்னிட்டு, பாலாலயம் செய்யப்படுகின்ற கோயில்களையும் இளங்கோயில் என்று சொல்வது பழக்கம். குடமுழக்கு விழாவிற்கு முன்னர்,திருக்கோயிலில் உள்ள பிரதான சன்னதியை மூடிவைத்து விட்டு, அந்த சன்னதியில் உள்ள இறைவனின் திருவுருவத்தினை ஒரு வரைபடமாக வரைந்து அந்த படத்திற்கு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் வேதங்கள் ஓதப்பட்டு, குறிப்பிட்ட நாட்கள் முடிந்த பின்னர், கோயிலில் உள்ள கோபுரக் கலசங்களுக்கும் இறைவனுக்கும் நீராட்டல் நடைபெறும். இந்த முறையை பாலாலயம் என்று வடமொழியிலும் இளங்கோயில் என்று தமிழ் மொழியிலும் குறிப்பிடுவார்கள். இதனையே, இருக்கோதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றாரொ என்று தொன்றுகின்றது.

பெருக்காறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்

கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்

இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்

திருக்கோயில் சிவன் உறையும் கோயில்சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே

நன்னிலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.98.1) சுந்தரர், நான்கு மறைகளையும் முறையாக சொல்லி பெருமானை வழிபடும் அடியார்களை,புண்ணிய நான்மறையோர் என்று குறிப்பிட்டு, அத்தகைய வழிபாடு, ஒருவருக்கு புண்ணியங்கள் அளிக்கும் என்று உணர்த்துகின்றார். பெருமான் தண்ணிய இயல்பினையும் வெவ்விய இயல்பினையும் ஒருங்கே உடையவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். நற்செயல்களை செய்வோருக்கு நன்மைகள் புரியும் குளிர்ந்த மனத்தவனாகவும், தீய செய்ல்களை செய்வோருக்கு தண்டனை அளிப்பவனாகவும் பெருமான் இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.

தண்ணியல் வெம்மையினான் தலையில் கடைதோறும் பலி

பண்ணியல் மென்மொழியாரிடம் கொண்டுழல் பண்டரங்கன்

புண்ணிய நான்மறையோர் முறையால் அடி போற்றிசைப்ப

நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் நான்காவது பாடலில், பெருமானை வழிபடும் பலவகை அடியார்களின் செய்கைகளை குறிப்பிடுகையில்,இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். இருக்கு என்று ரிக் வேதம் முதலாகிய நான்கு வேதங்களையும் தோத்திரம் என்று தீந்தமிழ் வடமொழி உள்ளிட்டு பல மொழிகளில் உள்ள இறைவனைப் புகழும் பாடல்களையும் உணர்த்துகின்றார். இன்னிசை எழுப்பும் வீணை வாசிப்போர், யாழ் இசைக்கருவியில் பயிற்சி பெற்றோர், ரிக் முதலாகிய நான்மறை மந்திரங்கள் சொல்வோர், பல மொழியில் தோத்திரங்கள் சொல்வோர்,நெருக்கமாக தொடுக்கப்பட்ட மாலைகளை தங்களது கைகளில் ஏந்தியோர், பெருமானைத் தொழுகின்ற அடியார்கள், பெருமான் பால் அன்பு வைத்து காதலுடன் கசிந்து கண்ணீர் மல்கும் அடியார்கள், பெருமானின் அருள் வேண்டிய பின்னரும் அவனது அருள் கிட்டாமையால் மனம் வருந்தி உடல் மெலிந்து உருகும் அடியார்கள், தங்களது கைகளை தலையின் மீது கூப்பி பெருமானை வணங்கும் அடியார்கள், என்று பலவகை அடியார்கள் திருப்பெருந்துறை பெருமானை வணங்குகின்றனர் என்று குறிப்பிடும் அடிகளார், அத்தகைய அடியார்களையும் தன்னையும் ஆண்டுகொண்டு அருள் புரியும் பொருட்டு,பெருமான் பள்ளி எழுந்தருளவேண்டும் என்று வேண்டுகின்றார்.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர்

ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பொழிப்புரை:

தனது அழகிய உள்ளங்கையினில் கொழுந்து விட்டெரியும் நெருப்புச் சுடரை ஏந்தியவாறே தன்னைச் சூழ்ந்துள்ள பூதகணங்கள் பாடுவதற்கு ஏற்ப, சுழன்று சுழன்று நடனமாடும் பெருமானே, நீர், சுடுகாட்டினைத் தவிர்த்து, வேறு எந்த இடத்தையும் தனது இருப்பிடமாக கருதுவதில்லை. நான்மறைகள் ஓதுவோரும் ஒழுக்க சீலர்களாக இருப்போரும் ஆகிய அழகிய அந்தணர்கள், வேத ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள வழியே முறையாக வேதகீதங்கள் பாடி உம்மைப் புகழ்ந்தேத்த, நீர் பூஞ்சோலைகள் நிறைந்த இடைமருது தலத்தினில் உள்ள திருக்கோயிலைத் தனது உறைவிடமாக, தலைவனாகிய ஏற்றுக்கொண்டு மிகுந்த பொலிவுடன் விளங்குகின்றீர்.

பாடல் 4:

பொல்லாப் படுதலை ஒன்று ஏந்திப் புறங்காட்டு ஆடலீர்

வில்லால் புரமூன்றும் எரித்தீர் விடையார் கொடியினீர்

எல்லாக் கணங்களும் முறையால் ஏத்த இடைமருதில்

செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே

விளக்கம்:

செல்வாய கோயில்=உயிரினங்கள் சென்றடைய வேண்டிய திருக்கோயில். அழியாத செல்வமாக விளங்கும் ஈசன், மன்னுயிர்களுக்கு அழியாத செல்வமாகிய முக்தியை வழங்கும் தன்மையில் இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கின்றான் என்பதை உணர்த்தும் பொருட்டு செல்வாய கோயில் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இம்மைக்கும் மறுமைக்கும் செல்வம் அளிக்கும் கோயில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பொல்லா=பொலிவு இல்லாத, படு என்ற சொல்லுக்கு இறந்துபட்ட என்றும் பொருந்திய என்றும் இரண்டு விதமான பொருள்கள் சொல்லப் படுகின்றன. பெருமான் பலியேற்பது, பிரம கபாலத்தில்: இந்த தலை, ஒரு காலத்தில் ஐந்து தலைகளை உடையவனாக இருந்த பிரமனின் அகந்தையை அழிக்கும் பொருட்டு, பிரமன் பொய் பேசியதற்கு தண்டனையாக, கிள்ளப் பட்ட தலையாகும். தனது தலை இவ்வாறு கிள்ளப்பட்ட பின்னர், அந்த தலையினை பெருமான் பலியேற்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரமனே வேண்டியதாக கந்த புராணம் உணர்த்துகின்றது. எனவே தான் பிரமனின் தலையினை, பரமன் பலியேற்பதற்காக எடுத்துச் செல்கின்றார். எனவே இந்த தலையினை, இறந்து பட்ட தலை என்று சொல்வது தவறு. ஒரு காலத்தில் பிரமனின் உடலில் பொருந்தியிருந்த தலை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். அன்றேல் கிள்ளப் பட்டதால் உயிரோட்டம் இழந்த தலை என்று வேண்டுமானால் கூறலாம். பெருமான், தனது தலையில் மாலையாக சூட்டிக் கொண்டுள்ள தலைகள், பிரளய காலத்தில் இறந்துபடும் பிரமன் திருமால் இந்திரன் ஆகியோரின் தலைகள். எனவே தலைமாலையில் உள்ள தலைகளை, இறந்து பட்ட தலைகள் என்று சொல்வது பொருத்தம். இடத்திற்கு ஏற்ப, படுதலை என்பதற்கு நாம் பொருள் கொள்ளவேண்டும். பெருமான் படுதலையில் பலி கொள்வதாக குறிப்பிடும் தேவாரப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

வேணுபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.9.9) திருஞானசம்பந்தர் பிரமனின் படுதலை ஏந்திய பரன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பரன் என்றால் அனைவரிலும் உயர்ந்தவனாகிய சிவபெருமான். வயம் என்பது வையம் என்ற சொல்லின் திரிபு. அலமாக்கும்=வருந்தச் செய்த; பெருமானின் அடியும் முடியும் காணமுடியாத நிலையில் பிரமனும் திருமாலும் திரிந்து வருந்திய செய்தி குறிப்பிடப் படுகின்றது. நல்வினைகளின் பயனாக உயிர்கள் சென்றடையும் இடம், பிரமலோகம் என்று கூறுகின்றார். கயம்=ஆழ்ந்த நீர்நிலைகள்; கடலுக்கு சற்று அருகில் இருந்தாலும், உப்பங்கழிகள் இன்றி, வளமான அகன்ற செந்நெல் வயல்கள் உடைய தலம் சீர்காழி என்றும் கூறுகின்றார்.

வயம் உண்ட மாலும் அடி காணாது அலமாக்கும்

பயனாகிய பிரமன் படுதலை ஏந்திய பரனூர்

கயமேவிய சங்கம் கழி விட்டு உயர் செந்நெல்

வியன் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே

கழுமலம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.79.2) திருஞானசம்பந்தர் படுதலைக்கையர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கொண்டல்=மேகம்; மேகம் மற்றும் நீலமலர் போன்ற கறை படர்ந்த கழுத்தினை உடைய பெருமான்; புரை-போன்ற;மிடறர்=கழுத்தினை உடையவர்; கொடுமுடி=கயிலாய மலைச் சிகரம்; பண்டு=பண்டைய நாளில்; அலர் அயன்=தாமரை மலரைத் தனது ஆசனமாக உடைய பிரமன்; பொருந்தும்=அழகுடன் பொருந்தும்; அயலே=அருகே; வங்கம்=இலவங்கம்; சுறவு=சுறா மீன்கள்; கண்டல்=நீர் முள்ளி; கைதை=தாழை;குலவும்=பூத்து விளங்கும்; கரிசு=தீயவை;

கொண்டலும் நீலமும் புரை திருமிடறர் கொடுமுடி உறைபவர் படுதலைக்கையர்

பண்டலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர்சடை அடிகளார் பதியதன் அயலே

வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறிகடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல்

கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.65.8), திருஞானசம்பந்தர், பெருமானை படுதலை பூண்டவர் என்று கூறுகின்றார். இந்த பாடலில் இலர் என்று எதிர்மறைச் சொல்லினை பயன்படுத்தியிருந்தாலும், நாம் எதிர்மறையாக பொருள் கொள்ளாமல், உடன்பாட்டு முறையில் பொருள் கொள்ளவேண்டும். புரை=பரண்; புனம்=வயல்கள்; வயற்புரங்களில் பரண் அமைத்து, பரணின் மீது அமர்ந்த வண்ணம், காட்டு மிருகங்கள் வருவதைக் கண்காணித்து வேட்டையாடுவது பண்டைய நாளில் பழக்கமாக இருந்தது.

பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்

அரசன் இலங்கையர் கோனை அன்று அடர்த்திலர் போலும்

புரை செய் புனத்து இளமானும் புலியின் அதள் இலர் போலும்

பிரசமலர்ப் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே

சக்கரப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.27.2) திருஞானசம்பந்தர், படுதலை சூட்டிக் கொண்டவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் படுதலை சூடினார் என்று சொல்லப் பட்டுள்ளதால், பிரளயத்தின் முடிவினில் நடந்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது என்பதை நாம் உணரலாம். இடுபலி நாடினார் என்று இறந்த காலத்தில் சொல்லப் பட்டுள்ளதால், தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. பனிமதி= குளிர்ந்த சந்திரன்; படுதலை=இறந்து பட்டோரின் தலை; பிரளய காலத்தில் திருமால் பிரமன் இந்திரன் ஆகியோரின் இறந்த உடல்களிலிருந்து பிரிக்கப்பட்டு தலை மாலையாக அணிந்த நிலை; துன் எருக்கு=நெருக்கமாக கட்டப்பட்ட எருக்கு மலர்கள்;நண்ணிய காலன்=சிறுவன் மார்க்கண்டேயன் சிவபூஜையில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட பின்னரும், அவனது உயிரினைக் கவரும் நோக்கத்துடன் நெருங்கிய இயமன்; சாடுதல்=உதைத்தல்;

பாடினார் அருமறை பனிமதிச் சடை மிசைத்

சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும்

நாடினார் இடு பலி நண்ணியோர் காலனைச்

சாடினார் வளநகர் சக்கரப்பள்ளியே

திருவுசாத்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.33.2) திருஞானசம்பந்தர், பல்லையார் படுதலைப் பலி கொளும் பரமனார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கொல்லை ஏறு=முல்லை நிலத்து விலங்காகிய எருது என்றும் முல்லை நிலத்து கடவுளாகிய திருமாலைத் தனது வாகனமாக,திருபுர தகனத்தின் போது ஏற்றுக் கொண்டவன் என்று இரண்டு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமே. நறை கமழ்=தேன் துளிர்க்கும் மலர்கள் கொண்ட சோலை; புறவு=முல்லை நிலம்:

கொல்லை ஏறு உடையவன் கோவண ஆடையன்

பல்லையார் படுதலைப் பலி கொளும் பரமனார்

முல்லையார் புறவணி முதுபதி நறை கமழ்

தில்லையான் உறைவிடம் திருவுசாத்தானமே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.85.10) படுதலையில் இடப்படும் பலியினை மனமகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் பெருமானின் செய்கையில் பொதிந்துள்ள உயர்ந்த நோக்கத்தினை அறியாமல் இருக்கும் அறிவற்ற மூடர்கள் என்று சமணர்களையும் புத்தர்களையும் திருஞான சம்பந்தர் சாடுகின்றார். த்ங்களது மலங்களை முற்றிலும் கழித்துக் கொண்டு, மேலும் மேலும் உயிர்கள் முக்தி உலகம் வந்தைடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் பலியேற்கும் பெருமான், பக்குவபட்ட உயிர்கள் எவையேனும் தன்னுடன் பிணைந்துள்ள மலங்களை பிச்சையாக இட்டால், அதனை இனியது என்று ஏற்றுக்கொள்வதாக இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறை=ஒரு சிறிதும்: பொழுதும்=எப்பொழுதும்; மொச்சைய= நீராடுதலைத் தவிர்ப்பதால் துர்நாற்றம் வீசும் உடலினை உடைய சமணர்கள்; முடைபடு துகிலர்= முடை நாற்றம் வீசும் ஆடையை அணிந்த புத்தர்கள்; அந்நாளில் சமணர்களும் புத்தர்களும் அரசர்களிடம் தஙகளுக்கு இருந்த செல்வாக்கினை பயன்படுத்திக் கொண்டு சைவ சமயத்தை நலிவடைய பலவிதமான முயற்சிகள் செய்தனர். அதற்காக, சைவ சமயத்தையும் சிவபெருமானையும் பலவாறாக இழித்துப் பேசி வந்தனர். இத்தகைய கொடிய செயல்களைச் செய்த,சமணர்களும் புத்தர்களும், அழியும் வண்ணம் பெருமான் செய்ததை விச்சை (வித்தை) என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

இச்சையர் இனிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்

பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவென உணர்விலர்

மொச்சைய அமணரும் உடைபடு துகிலரும் அழிவதோர்

விச்சையர் உறைவது விரைகமழ் பொழில் விழிமிழலையே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.86.7) திருஞானசம்பந்தர், பெருமான் தான் படுதலையில் பெறுகின்ற பிச்சையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக, குறிப்பிடுகின்றார். வாடினர்=வாட்டம் அடைந்த, வருந்திய, அலர்=மலர்; சேடர்=சிறந்த ஒழுக்கம் உடையவர்; முறைமுறை=எந்த வகையில் பாட வேண்டுமோ அந்த வகையினில் முறையாகவும், பாடல்கள் தொகுக்கப்பட்ட வரிசையிலும்; பொருள் வரு நடம்=பொருளினை உணர்த்தும் நடனம், பெருமான் ஐந்தொழில்கள் புரிவதை உணர்த்தும் நடனம்; பெருமான் புரியும் செயல்களின் அடிப்படையில், சிவபெருமான் ஆடும் நடனத்தை ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் உண்மை விளக்கம் சைவ சித்தாந்த நூலின் ஆசிரியர் மனவாசகம்கடந்தார் கூறுகின்றார். ஆன்மாக்கள் உலக இன்பங்களை நுகரும் பொருட்டு நடத்தப்படும் கூத்தினை ஊன நடனம் என்றும், ஆன்மாக்கள் வீடுபேறு பெறுவதற்கு உதவி செய்யும் நடனத்தை ஞான நடனம் என்றும் ஆசிரியர் கூறுகின்றார். பெருமானின் ஒரே நடனம் இந்த இரண்டு வகைகளில் செயல்படுவதால், நடனம் விளைவிக்கும் பயன் கருதி, ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் கருதப்படுகின்றது.

பாடினர் அருமறை முறைமுறை பொருள் என வருநடம்

ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதி செய

வாடினர் படுதலை இடுபலி அதுகொடு மகிழ் தரும்

சேடர் தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.3) திருஞானசம்பந்தர், படுதலையில் பலியேற்பதற்காக பல இடங்களும் சென்று பெருமான் இரக்கின்றார் என்று கூறுகின்றார். தம்மைப் புகழ்ந்து பாடும் அடியார்கள் படுகின்ற துயரங்களை கெடுத்து அருள் புரியும் பரமனார், அன்புடன் தன்னை அணுகாத மனிதர்களுக்கு தோன்றாமல் மறைந்து கொள்கின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கரவினர்=மறைத்துக் கொள்பவர்;பரிவு=அன்பு; கனலன உருவினர்=நெருப்பு போன்று சிவந்த நிறத்தில் திருமேனி உடையவர்; இரவினர்=இரத்தல் தொழிலை செய்பவர்; இரத்தல்=பிச்சை எடுத்தல்; காட்டில் உறைகின்ற தன்மை பற்றி, பெருமானை வேடர் என்று அழைத்தார் போலும்.

பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார் பால்

கரவினர் கனல் அன உருவினர் படுதலைப் பலி கொடு ஏகும்

இரவினர் பகலெரி கானிடை ஆடிய வேடர் பூணும்

அரவினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.121.11) படுதலை ஏந்திய பரமன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.பல்லிசை=பற்கள் பொருந்திய; பகு வாய்=அகன்று திறந்த வாய், மண்டையோடு; கல்லிசை=கற்பதானால் ஏற்படும் ஓசை; பல தரப்பட்ட மக்களும் ஏதேனும் கற்றுக் கொண்டே இருப்பதால் எழும் ஆரவாரம்; ஓவா=நீங்காத; நல்லிசை=நல்ல பெருமை; புல்லிசை=புன்மைத் தன்மையுடன் இணைந்த சொற்கள்,புறச்சமயவாதிகளின் கீழ்மையான மொழிகள்; கிலாவே என்று தேவாரப் பதிகங்கள் முறையாக ஓதும் அடியார்களை வலிமை வாய்ந்த தொல்வினைகளும் சூழ்ந்துநிற்க முடியாமல் பிரிந்துவிடும் என்று உறுதியாக கூறுகின்றார். பலவகை மக்களும் ஏதேனும் ஒரு கலையை கற்றுக்கொண்டே இருப்பதால் எழும் ஆரவாரம் ஓயாததும் தொன்மை வாய்ந்ததும் ஆகிய கழுமலம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களின் ஒன்று) தலத்தில் தோன்றியவனும், பெருமை உடையவனும், புறச்சமய வாதிகளின் கீழ்மைத் தன்மை மிகுந்த சொற்களைக் கேளாதவனும், நன்மை செய்யும் தமிழ் பாடல்களை அருளுபவனும் ஆகிய ஞானசம்பந்தன், பற்களுடன் கூடி பிளந்த வாயினை உடைய மண்டை ஓட்டினை ஏந்தி பிச்சை ஏற்கும் பெருமானை, பந்தணைநல்லூர் தலத்து இறைவனைப் புகழ்ந்து சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்லும் வல்லமை உடையவார்கள் மேல், அவர்களைத் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பழைய வினைகள் சூழாது; அத்தகைய அடியார்களை ஏற்கனவே சூழ்ந்து இருக்கும் தொல்வினைகளும் நீங்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கல்லிசை பூண கலையொலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்

நல்லிசையாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம்பந்தன்

பல்லிசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்

சொல்லிய பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழ கிலாவே

திருக்கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.7.5) படுதலையில் பலி கொள்ளும் பரம்பரன் என்று அப்பர் பிரான் இறைவனை குறிப்பிடுகின்றார். தூவி=:திமில்: தூவி என்ற சொல்லுக்கு வால் என்றும் ஒரு பொருள் உண்டு. நீண்ட வாலினை உடைய எருதினை வாகனமாகக் கொண்ட பெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். பாறு=பருந்து; பொதுவாக மண்டை ஓட்டினில் ஒட்டிக் கொண்டுள்ள உலர்ந்த தசைச் துணுக்குகளை கொத்தித் தின்பதற்கு பருந்துகள் வட்டமிடும். பெருமானின் கையில் உள்ள பிரம கபாலத்தை எந்த பருந்தும் நெருங்காது; எனினும் மண்டை ஓடுகளின் பொதுத் தன்மை குறித்து பருந்துகள் சூழும் படுதலை என்று சொல்லப் பட்டுள்ளது.

ஆறேறு சடையானை ஆயிரம் பேர் அம்மானைப்

பாறேறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை

நீரேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி

ஏறேறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.19.2) படுதலையில் பிச்சை ஏற்று உண்ணும் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.பாரிடங்கள்=பூத கணங்கள்; இந்த பாடலில் பூத கணங்கள் புடை சூழ பலி ஏற்றதை குறிப்பிடுகின்றார். பக்கம்=இருபுறமும் படுதலை=பிரம கபாலம்;தூவல்=இறகு: அக்கு என்பதற்கு எலும்பு மாலை என்றும் சங்கு மாலை என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டுமே இங்கே பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். கோவணத்தை மட்டுமே தனது உடையாகக் கொண்டு, கொக்கிறகினையும் அக்கு மாலையையும் அணிந்தவராக பெருமான் இருந்த போதிலும், அவரது கோலம் அழகுடன் பொலிந்து இருப்பதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்

புக்க ஊர் பிச்சை ஏற்றுண்டு பொலிவு உடைத்தாய்க்

கொக்கிறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு

அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.56.5) வெடிபடு தலையர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் உயிரற்ற உடலிலிருந்து பிரிக்கப்பட்ட தலை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கடியதோர்=விரைந்து செல்லும்: விடை=பெருமானின் வாகனமாகிய நந்தி:தலையர்=தலை மாலையை உடையவர்: வெடிபடு=சுடுகாட்டில் நெருப்பு மூட்டப்பட்டபோது, சூட்டினால் வெடித்த தலை: ஊழிக்காலத்தில் அழிந்து போன உடல்களின் தலையை, மாலையாக சிவபெருமான் அணியும் செயல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயல் பெருமான் ஒருவனே என்றும் நிலையானவன் என்பதையும், மற்ற அனைத்து உயிர்களும் உலகப் பொருட்களும் ஒரு நாள் அழியக்கூடியவை என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.

பொடியணி மெய்யர் போலும் பொங்கு வெண்ணூலர் போலும்

கடியதோர் விடையர் போலும் காமனைக் காய்வர் போலும்

வெடிபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர்

அடிமையை ஆள்வர் போலும் ஆவடுதுறையனாரே

சரக்கறைத் திருப்பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (4.111.10) அப்பர் பிரான், பெருமானைச் சார்ந்த பல பொருட்கள் வைக்கப்படும் சரக்கறையாக தனது மனம் மாற்றப்பட வேண்டும் என்று விரும்பி, அத்தகைய விருப்பத்தை விண்ணப்பமாக பெருமானிடம் வைக்கின்றார். அனைத்துப் பாடல்களிலும் தனது நெஞ்சம் தனி நெஞ்சமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தனி என்றால் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட, ஒப்பற்ற தன்மை உடைய என்று பொருள்.தனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு சிவபெருமான் தன்னுடைய நெஞ்சினில் அமர்ந்திருந்தால், ஒப்பற்ற நெஞ்சமாக தனது நெஞ்சம் மாறிவிடும் என்ற எண்ணத்தில், தனி நெஞ்சம் என்று குறிப்பிடுகின்றார். பரந்த உலகத்தினையும் பல்வேறு அண்டங்களையும் உடைய சிவபிரானுக்குத் தனது உடைமைகளை வைப்பதற்கு இடமா இல்லை. சிவபெருமான் பால் அப்பர் பிரான் கொண்ட அன்பு, தனது நெஞ்சத்தை சிவபெருமானும் சிவபெருமானைச் சார்ந்த பொருட்களையும் ஏற்றுக் கொள்ளும் சரக்கறையாக மாற்றவேண்டும் என்ற விருப்பத்தை உணடாக்குகின்றது. இந்தப் பதிகத்தின் பத்தாவது பாடலில்,பெருமான் தனது தலையில் மாலையாக சூட்டிக் கொண்டுள்ள மண்டையோடுகள் இருக்கும் சரக்கறையாக தனது நெஞ்சம் மாறவேண்டும் என்று அப்பர் பிரான் விரும்புகின்றார். இந்த பாடலில், சூளாமணி, பிறைச் சந்திரன் என்ற வரிசையில், பெருமான் தனது சடையினில் சூட்டிக் கொள்ளும் பொருட்களின் வரிசையில், படுதலைத் துண்டம் என்று சொல்லியிருப்பதால், பிரளய காலத்தில் இறந்துபடும் உடல்களிலிருந்து துண்டிக்கப்ப்ட்ட தலைகள் என்று பொருள் கொள்வது பொருத்தமாகும். வேதித்த=தண்டித்த: சாதித்து=விளங்கி: சோதித்து இருக்கும்=ஒளி விடும், பாதிப் பிறை என்று அப்பர் பிரான் குறிப்பிட்டாலும் நாம், அளவில் குறைந்து தேய்ந்து சிவபிரானிடம் அடைக்கலம் வேண்டி சடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒற்றைப் பிறைச் சந்திரன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு

சோதித்து இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும்

பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய் புலித்தோல்

சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

மற்றொரு பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.113.7) அப்பர் பிரான், பெருமானை படுதலை ஏந்து கையான் என்று குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் அருளிய சுவையான பாடல் இந்த பாடல். சின்னம்=சிறியது: சின்னஞ் சிறிய பிள்ளை என்று வழக்கிலுள்ள சொல்லில் வருவது போன்று, சிறிய அளவிலான கோவணத் துண்டு என்று பொருள் கொள்ள வேண்டும். வான் இரைக்கும் இரைப்பா என்று விண்ணில் ஒலிக்கும் ஒலியாக உள்ளவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இல்லற வாழ்க்கையை நடத்தும் நீ கோவண ஆடையுடன் இருக்கலாமா என்று அப்பர் பிரான் கேள்வி கேட்பதை நாம் உணர்கின்றோம். உரைப்பார் என்பதை இங்கே பெருமானை பழித்து அவரது செயல்களை விமரிசிக்கும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். நான்மறைகள் தேடும் வண்ணம் அரியவனாக உயர்ந்தவனாக விளங்கும் பெருமான், தசைகள் கழிந்து உலர்ந்து வெண்மை நிறத்தில் அனைவரும் அருவறுக்கும் வண்ணம் காணப்படும் பிரம கபாலத்தை ஏந்தியவாறு பிச்சைக்கு செல்லலாமா என்று, கவலை தொனிக்கும் முறையில் அப்பர் பிரான் கேள்வி கேட்பதை நாம் உணர முடிகின்றது.

அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள் ஐயம் உணல்

வரைப் பாவையைக் கொண்டது எக்குடி வாழ்க்கைக்கு வான் இரைக்கும்

இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய்

உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே

தில்லைத் திருத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.2.9) அப்பர் நாயகி, பெருமான் எங்கு சென்றார் என்பதை நீங்கள் எவரேனும் அறிவீர்களா என்று ஆவலுடன் வினவுகின்றாள். பெருமானைக் கண்டவர்கள் எவரேனும் இருந்தால், தனக்கு தகவல் அளிப்பதற்கு வசதியாக, தான் கண்ட பெருமானின் அடையாளங்களையும் எடுத்துரைக்கின்றாள். கோவண ஆடையை அணிந்தவராக, வெண்ணூல் மார்பில் அணிந்தவராக தனக்கு காட்சி கொடுத்த பெருமான், காண்போர் அனைவர்க்கும் இன்பம் பயப்பவர் என்பதை உணர்த்தும் முகமாக சங்கரர் என குறிப்பிடுகின்றாள். இந்த கேள்விக்கு விடையளிக்கும் முகமாக மற்றோர் பெண்மணி, தான் சங்கரரை கண்டதாக விடை பகர்கின்றாள். கேள்வி கேட்ட பெண்மணி தான், சங்கரர் பால் ஆராத காதல் கொண்டு,அவரைக் காணவேண்டும் என்று துடிக்கின்றாள்; விடை பகர்ந்த பெண்மணியும் சங்கரர் பால் தீவிர காதல் கொண்டிருந்தாள் போலும். பந்தித்த=கட்டப் பட்டிருந்த; தன்னுடன் பேசிக் கொண்டிருந்த சங்கரர், அதுவரையில் கட்டப்பட்டிருந்த காளையை கட்டவிழ்த்து அதன் மீது பாய்ந்து ஏறிய வண்ணம், தான் வைத்திருந்த படுதலையில் ஏதோ ஏந்திக்கொண்டு சென்றதாகவும், அவ்வாறு சென்றவர், த்னது கைகளில் இருந்த வெண்வளைகளையும் கவர்ந்து சென்றதாக இரண்டாவது பெண்மணி குற்றம் சாட்டுகின்றாள். படுதலையில் என்கொலோ ஏந்திக் கொண்டு சென்றார் என்று குறிப்பிடுவதால், பெருமான் படுதலையில் ஏந்திக் கொண்டு சென்ற பொருள், இவள் அளித்ததல்ல என்பது புலனாகின்றது. அதனால் தான் வெறுப்பு மேலிட, ஏதோ எடுத்துச் சென்றதாக குறிப்பிடுகின்றாள் போலும். தன்னிடம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல், வேறு எவரிடமோ எதனையோ பெற்றுக் கொண்டதால், பெருமான் பால் கோபம் கொண்டாள் போலும். பெருமான் படுதலை ஏந்திச் செல்வதே, பக்குவமடைந்த உயிர்கள் பிச்சையாக அளிப்பதை பெற்றுக் கொள்வதற்காகத் தான் என்பதால், இதன் மூலம் பக்குவமடைந்த பல உயிர்களும், பெருமானிடம் தங்களது மலங்களை பிச்சையாக அளிப்பதற்கு ஏக்கம் கொண்டு காத்திருக்கின்றன என்பதை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பாடலில் அந்திப் பொழுதில் திருவாரூர் தலத்தினில் நின்ற பெருமான், இரவினில் தில்லை சென்றடைந்த்ததாக சொல்லப் படுகின்றது. இரவில், அனைத்து சிவன் கோயில்களில் உள்ள கலைகளும், சிற்றம்பலத்தில் நடமாடும் நடராஜப் பெருமானின் உருவத்தில் கலப்பதாக நம்பப் படுகின்றது. இந்த காரணத்தால் தான், அர்த்த ஜாம பூஜை, சிதம்பரத்தில் தினமும் இரவு பத்து மணிக்கு,அனைத்துக் கோயில்களிலும் அர்த்த ஜாம பூஜை முடிந்த பின்னர், நடைபெறுகின்றது. தினமும் மாலை வேளையில், நித்ய பிரதோஷமாக கொண்டாடப்படும் திருவாரூரில், அனைத்துக் கோயில்களில் உள்ள பெருமானின் கலைகளும் திருவாரூரில் உள்ள மூர்த்தத்தில் சங்கமம் ஆகின்றன என்றும் கருதுகின்றனர்.தில்லைச் சிதம்பரம் வந்தடைந்த நேரம் இரவு நேரம் என்பதை உணர்த்தும் பொருட்டு, அழகிய தீ போன்ற விளக்குகளை பூதங்கள் ஏந்தி வர, பெருமான் சிற்றம்பலம் புகுந்தார் என்று சொல்லப் பட்டுள்ளது.

சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர் சங்கரரைக் கண்டீரோ கண்டோம் இந்நாள்

பந்தித்த வெள்விடையைப் பாய ஏறிப் படுதலையில் என் கொலோ ஏந்திக் கொண்டு

வந்து இங்கு என் வெள்வளையும் தாமும் எல்லாம் அணி ஆரூர் நின்று அந்திக் கொள்ள

பொன் தீ மணி விளக்குப் பூதம் பற்றப் புலியூர் சிற்றம்பலமே புக்கார் தாமே

திருவதிகை வீரட்டானம் தல்த்தின் மீது அருளிய அடையாளத் திருத்தாண்டகம் என்ற பதிகத்தின் பாடலில் (6.4.2) பாறேறு ப்டுதலையில் பலி கொள்பவன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். பாறு=பருந்து: உழிதர்தல்=சுற்றி வருதல், திரிதல்; பொதுவாக மண்டை ஓட்டினில் ஒட்டிக் கொண்டுள்ள உலர்ந்த தசைச் துணுக்குகளை கொத்தித் தின்பதற்கு பருந்துகள் வட்டமிடும். ஆனால் பெருமானின் கையில் உள்ள பிரம கபாலத்தை எந்த பருந்தும் நெருங்காது; எனினும் மண்டை ஓடுகளின் பொதுத் தன்மை குறித்து பருந்துகள் சூழும் படுதலை என்று இங்கே சொல்லப் பட்டுள்ளது. இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், பெருமானின் பல விதமான அடையாளங்கள் உணர்த்தப்பட்டு, பெருமானின் உருவ்ம் சுட்டிக் காட்டப் படுவதால், அடையாளத் திருத்தாண்டகம் என்று அழைக்கப்படுகின்றது.

ஏறேறி ஏழுலகும் உழி தர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே

பாறேறு படுதலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே

நீறேறு செழும் பவளக் குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே

ஆறேறு சடைமுடி மேல் பிறை வைத்தானே அவனாகில் அதிகை வீரட்டனாமே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.9.6) அப்பர் பிரான், பெருமான் பாறுடைய படுதலை கையில் ஏந்திப் பலி கொள்வார் என்று குறிப்பிடுகின்றார். வீறு=ஆற்றல்; படிறு=வஞ்சனையான பேச்சுக்கள்; பாறு=பருந்து. இந்த் பாடலும் அகத்துறை வகையில் அமைந்துள்ள பாடல். பலி ஏற்பதற்காக தனது இல்லம் புகுந்த பெருமான், அழகிய தோற்றம் கொண்ட பெருமான், தன்னுடன் உமையன்னை மற்றும் கங்கை ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு வந்ததுமன்றி, வஞ்சகமாக பேசினார் என்றும் தன்னிடம் பிச்சை ஏதும் ஏற்காமலே சென்றுவிட்டார் என்றும் தனது வருத்தத்தை அப்பர் நாயகி தெரிவிக்கின்றாள். ஆற்றல் உடைய எருதினை வாகனமாகக் கொண்டவராய், உடலில் நீறு பூசியவராய், ஒரு காதினில் வெண்தோடு அணிந்தவராய்,இடது கையில் வீணை வைத்திருப்பவராய், தனது உடலில் இடது பாகத்தில் உமையம்மையைக் கொண்டவராய் மற்றொரு காதில் அணிந்துள்ள குழை ஆடுமாறு, கொடுகொட்டிப் பறை முழங்க, கபாலத்திலிருந்து வீசும் புலால் நாற்றத்தினை உணர்ந்த பருந்துகள் அணுகும் தலையைக் கையில் ஏந்தியவராய்,பிச்சை கேட்டு சிவபிரான் எனது இல்லம் வந்தார். ஆனால் பிச்சையினை ஏற்காமல், வஞ்சகமான பேச்சுக்களைப் பேசிய அவர், கங்கை நதியைத் தனது சடையில் சூடிக் கொண்ட அடிகள் தாம் மிகவும் அழகியரே என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.

வீறுடைய ஏறேறி நீறு பூசி வெண்தோடு பெய்து இடங்கை வீணையேந்திக்

கூறுடைய மடவாள் ஓர் பாகம் கொண்டு குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து

பாறுடைய படுதலை ஓர் கையில் ஏந்திப் பலி கொள்வார் அல்லர் படிறே பேசி

ஆறுடைய சடைமுடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.24.2) அப்பர் பிரான், பெருமானை ஊனேறு படுதலையில் உண்டியான் என்று குறிப்பிடுகின்றார். ஊனேறு=புலால் நாற்றம் வீசும்; படுதலை=கொய்யப்பட்டு உடலிலிருந்து பிரிக்கப்பட்ட தலை; பெருமான் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை நாம் அனைவரும் அறிவோம். எனினும் பிச்சை எடுப்போரின் பொதுத்தன்மை கருதி, பிச்சை எடுத்து உண்பவன் என்று குறிப்பிடுகின்றார்.

ஊனேறு படுதலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழிமுதல் ஆனான் காண்

ஆனேறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண்

மானேறு கரதலத்து எம் மணிகண்டன் காண் மாதவன் காண் மாதவத்தின் விளைவு ஆனான் காண்

தேனேறும் மலர்க் கொன்றைக் கண்ணியான் காண் திருவாரூரன் காண் அவன் என் சிந்தையானே

திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.6) அப்பர் பிரான் பெருமானை, படுதலையில் பலி கொள்வோன் என்று அழைக்கின்றார்.காம்பு=மூங்கில்; ஆடு=உவமை உருபு; காம்பாடு=மூங்கில் போன்ற; பகடு=யானை; தாம்பாடு=கயிற்றில் பொருந்திய; பொங்கு=சினம் மிகுந்த;வெய்ய=நெருப்பு போன்று கொடிய விடம் கொண்ட; படுதலை=மண்டையோடு; இறந்தவர்களின் தலை என்பது பொதுவான பொருள்; பிரமனின் தலை கொய்யப்பட்டதால், உடலிலிருந்து நீக்கப்பட்டு உயிரற்று விளங்கிய தலை என்று பொருள் பட படுதலை என்று கூறப்பட்டுள்ளது; படிவத்தான்=வடிவத்தை உடையவன்; யானையை இரும்புச் சங்கிலி கொண்டு கட்டுவோர் எருதினை தாம்புக் கயிற்றினை கொண்டு கட்டுவார்கள். இந்த செயல் எருதின் எளிமையான சாதுவான தன்மையை குறிக்கின்றது; சேம்பு=தண்ணீரில் வளரும் ஒரு வகை செடி

காம்பாடு தோள் உமையாள் காண நட்டம் கலந்தாடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய

பாம்பாடப் படுதலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பருவரை போல் படிவத்தான் காண்

தாம்பாடு சினவிடையே பகடாக்கொண்ட சங்கரன்காண் பொங்கு அரவக்கச்சையோன் காண்

சேம் பாடு வயல் புடை சூழ் திருப்புத்தூரில் திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே

திருப்புத்தூர் தலத்தில் பெருமான் ஆடும் தாண்டவக் கோலம் கௌரி தாண்டவம் என்று அழைக்கப்படுகின்றது. தாருக வனத்து முனிவர்களின் மனதினை மாற்றிய களிப்பில், தன்னுடன் வந்த மோகினி காணும் வகையில், பெருமான் நடனம் ஆடினார் என்று புராணங்கள் உணர்த்துகின்றன. நாராயணனும் நாரணியும் ஒன்று தானே. அந்த தாண்டவத்தை தான், மட்டும் தனியாக காண அம்பிகை ஆவல் கொள்ள, பெருமான், நந்தி மத்தளம் வாசிக்க உமையம்மை காணுமாறு, நடனம் ஆடியதை கௌரி தாண்டவம் என்று கூறுகின்றனர். இந்த தாண்டவத்தினை காணும் விருப்பம் கொண்டிருந்த இலக்குமி தேவி பெருமானை நோக்கி தவம் செய்ய, பெருமான் இலக்குமி தேவிக்கு அருள் புரிந்து நடனக்காட்சி அளித்தது இந்த தலத்தில் தான் என்று நம்பப்படுகின்றது.இந்த தலத்தில் உள்ள நடராஜர் மற்றும் சிவகாமி அம்பிகை சிலை கல்லாலானது. கெளரி தாண்டவத்தினை கண்ட அப்பர் பிரானுக்கு, பெருமான் அம்பிகை காண இந்த நடனம் ஆடியது நினைவுக்கு வந்தது போலும். உமையாள் காண நட்டம் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சங்கரன்=இன்பம் தருபவன்;

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் அப்பர் பிரான், பெருமானை பாறேறு படுதலையில் பலி கொள்வான் என்று குறிப்பிடுகின்றார்.நீர் ஏறு செஞ்சடை=கங்கை நீரினை ஏற்ற சடை; போரேறு=போர்க்குணம் கொண்ட சிங்கம்; தன் முன்னே எதிர்ப்படும் யானையின் தோலைக் கிழித்து சிங்கம் வெற்றி கொள்ளும்; தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையைக் கிழித்த சிவபிரானை சிங்கத்திற்கு ஒப்பிடுகின்றார். பாரேறு தலை=பருத்த தலை, அகந்தையினால் பருத்த தலை என்றும் கழுகுகள் மொய்க்கும் தலை என்றும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப் படுகின்றது.

நீர் ஏறு செஞ்சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே

பாரேறு படுதலையில் பலி கொள்வானே பண்டு அனங்கன் காய்ந்தானே பாவநாசா

காரேறு முகில் அனைய கண்டத்தானே கருங்கை களிற்று உரிவை கதறப் போர்த்த

போர் ஏறே உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

ஓணகாந்தன்தளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.5.4), சுந்தரர், பெருமானை நோக்கி, தன்னை அடிமையாக விரும்பி ஏற்றுக் கொண்ட பெருமான், அடிமையின் தேவைகளை கருத்தில் கொண்டு ஒழுங்காக அந்த தேவைகளை நிறைவேற்ற வேண்டாமா என்று வினவுகின்றார். தான் பலவாறும் வாழ்த்தி பெருமானிடம் வேண்டிய போதும், இல்லை என்றும் சொல்லாமலும் உண்டு என்று சொல்லாமலும் வாளா இருப்பது, அடிமையின் எஜமானனுக்கு அழகா என்று வினவுகின்றார். மேலும், பகலெல்லாம் படுதலையை ஏந்திக் கொண்டு வெளியே திரிந்து அல்லல் மிகுந்த வாழ்க்கை வாழ்வதை, பெருமானே,ஏன் விடாமல் இருக்கின்றீர் என்றும் கேள்வி கேட்கின்றார். உக்க=சிந்திய;

வல்லதெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்தொன்று

இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பதென் நீர்

பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்திங்கு

ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே

பழமண்ணிபடிக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.22.4) தசைப்பற்று உலர்ந்து காய்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் தலையை விரும்பியவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அடுதல்=அழித்தல் தொழிலை விரும்பி செய்பவன்; கோல்=அம்பு; சிலை=வில்; கான்றிட்ட=உமிழ்ந்த,எச்சில்; பெருமான் தனது கையில் வைத்திருக்கும் பிரமகபாலம், நரிகளும் கழுகுகளும் பருந்துகளும் அணுக முடியாதவை; எனினும் மண்டையோடு என்ற பொருளின் பொதுத் தன்மை கருதி, நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைத் தலை என்று இங்கே சொல்லப் படுகின்றது. உலர்ந்த மண்டையோடுகளில் இருக்கும் தசைத் துணுக்குகளை இழுத்துத் தின்பதற்காக நரிகள் சுடுகாட்டில் திரியும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. உலகத்து உயிர்களை விரும்பி அழிப்பவனும், வானத்தில் திரிந்து கொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழிப்பதை விரும்பியவனும், அதற்காக மந்தர மலையை வளைத்து செய்யப்பட்ட வில்லினில் ஏற்றப்பட்ட நாணினில் அம்பினைக் கோர்ப்பதை விரும்பியவனும், நரிகள் உமிழும் தன்மை கொண்ட எச்சில் மண்டை ஓட்டினை தனது உண்கலனாக விரும்பி ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமான் பழமண்ணிப் படிக்கரையில் உறைகின்றான் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

அடுதலையே புரிந்தான் அவை அந்தர மூவெயிலும்

கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல்

நடுதலையே புரிந்தான் நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்

படுதலையே புரிந்தான் பழமண்ணிப் படிக்கரையே

திருநாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.46.3), பெருமானிடம், எதற்காக படுதலையில் பலியேற்கும் கொள்கையை தவிர்க்காது கடைப்பிடிக்கின்றீர் என்று சுந்தரர் கேட்கின்றார். எவரும் விரும்பாத வேடத்தினைப் பூண்ட பெருமான் என்று பெருமான், பிச்சைப் பெருமானாக வேடம் பூண்டதை சுந்தரர் குறிப்பிடுகின்றார்.

பூண்பதோர் இளவாமை பொருவிடை ஒன்றேறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண

பாண் பேசிப் படுதலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர்சடை மேல் மதி வைத்த பண்பீர்

வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால் வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்

காண்பினிய மணிமாட நிறைந்த நெடுவீதிக் கடல்நாகைக் காரோணம் மேவி இருந்தீரே

இந்த பாடலில் செல்வாய கோயில் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். செல்வமாய என்ற சொல்லின் இடைக்குறை, செல்வாய என்ற சொல்.அனைத்துச் செல்வங்களினும் சிறந்த செல்வம் என்பதால், மற்ற செல்வங்களைப் பெற்றுத் தரும் தன்மையை உடையது என்பதால், இந்த திருக்கோயிலே சிறந்த செல்வமாக கருதப் படுகின்றது. செல்வாய செல்வம் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் திருவையாறு தலத்து பாடல் (6.38.7) நமது நினைவுக்கு வருகின்றது. எங்கும் பரந்து நின்று சர்வ வியாபியாக இருக்கும் இறைவனின் தன்மை எல்லா உலகமும் ஆனாய் என்ற தொடரின் மூலம் உணர்த்தப் படுகின்றது. எங்கும் பரந்து நின்று எல்லா உலகத்திலும் அனைத்து இடங்களிலும் இருப்பவன் நீயே என்றும், கச்சி ஏகம்பம் திருத்தலத்தில் பொருந்தி இருப்பவன் நீயே என்றும், நல்லவர்களின் தன்மையை அறிந்து அவர்களுக்கு அருள் புரிபவன் நீயே என்றும், ஞான ஒளி வீசும் விளக்காக இருப்பவன் நீயே என்றும், கொடிய வினைகளை அறுப்பவன் நீயே என்றும், புகழ் மிக்க திருவடிகளை அடியேனின் தலை மீது வைத்தவன் நீயே என்றும், நீங்காத செல்வமாகிய முத்திப் பேற்றினை வழங்கும் வள்ளல் நீயே என்றும், திருவையாறு தலத்தினை விட்டு அகலாத செம்பொற் சோதியாகிய இறைவனே உன்னை அடியேன் பலவாறாக அழைத்து வணங்குகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே

நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே

பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே

செல்வாய செல்வம் தருவாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

உலகின் பெரும்பாலான செயல்கள் நடைபெறுவதற்கு தேவையானது பொருட்செல்வம். அத்தகைய செல்வமாக இருப்பவன் சிவபெருமான் என்று நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.41.3) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அல்=இரவு: செல்வாய்=நடப்பித்தல்;பொருட்செல்வத்தால் தான் உலகில் அனைத்தும் இயங்குகின்றன என்பதை உணர்த்தும் பொருட்டு செல்வாய்த்திரு என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பகலாகவும் இரவாகவும் இருப்பவனும், தொன்மை வாய்ந்த கயிலாய மலையில் உறைபவனும், கல்லால மரத்தின் கீழே அமர்ந்து நால்வர்க்கு அறம் உணர்த்தியவனும், திருக்காளத்தி தலத்தில் அடியார்கள் வேண்டும் வரமனைத்தும் அளிக்கும் கற்பகமாக இருப்பவனும், சொற்களாகவும் சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் இருப்பவனும், சோற்றுத்துறை தலத்தில் உறைபவனும், உலகினில் பல செயல்களும் நடப்பதற்கு மூல காரணமாக உள்ள செல்வமாக இருப்பவனும் ஆகிய பெருமானாகிய நீ, நெய்த்தானம் தலத்தில் நிற்கின்றாய். நீ எனது நெஞ்சினில் நிறைந்து நிற்கின்றாய் என்று அப்பர் கூறுவதாக அமைந்த பாடல்.

அல்லாய்ப் பகலானாய் நீயே என்றும் ஆதிக்கயிலாயன் நீயே என்றும்

கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்திக் கற்பகமும் நீயே என்றும்

சொல்லாய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறையாய் நீயே என்றும்

செல்வாய்த் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே

இந்த பாடலில் விடையார் கொடியினீர் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் தனது கொடியினில் எருதின் உருவத்தை ஏற்றுக் கொண்டுள்ள செய்தி பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.7)திருஞானசம்பந்தர், பெருமானை நோக்கி, கொடிமேல் ஏறு கொண்டாய் என்று கூறுகின்றார். உலகத்தவர் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு இடையூறாக இருந்து பல இடர்களை விளைவித்த திரிபுரத்து அரக்கர்களை அழித்த செய்தி இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. கூறு=உமையன்னையை ஒரு கூறாகத் தனது உடலில் பெருமான் கொண்டுள்ள நிலை; மூன்றும் ஒன்றாக் கூட்டி என்ற தொடருக்கு திருமாலை அம்பின் தண்டாகவும், தீயினை அம்பின் கூரிய நுனியாகவும் காற்றினை அம்பின் இறகுகளாகவும் கூட்டி பெருமான் திரிபுரத்து பறக்கும் கோட்டைகளின் மீது எய்தார் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. மூன்றையும் என்ற சொல், திருமால் அக்னி வாயு ஆகியவற்றை குறிப்பிடுகின்றது என்று பலரும் பொருள் கொண்டாலும், மூன்று என்ற சொல் திரிபுரத்து கோட்டைகள் என்று சொல்வதும் பொருத்தமாக உள்ளது. மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் மட்டுமே தங்களது கோட்டைகள் ஒரே அம்பு கொண்டு துளைக்கப்பட்டு அழிக்கப் படலாம் என்பதை நன்றாக அறிந்தவர்கள் திரிபுரத்து அரக்கர்கள். ஏனெனில் அத்தகைய வரம் அவர்கள் தானே வேண்டிப் பெற்றனர். எனவே, அவ்வாறு ஒன்றாக சேருவதை, அவர்கள் தவிர்க்க முயல்வது இயற்கையே. எனவே திரிபுரதகனம் நடைபெற்ற போதும் அவர்கள் தாமாகவே ஒரே நேர்க்கோட்டினில் வந்திருக்க முடியாது. இந்த பின்னணியில் வேறுவேறு திசையினில் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்க்கோட்டினில் வரச்செய்தவர் சிவபெருமான் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம் பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

ஈங்கோய்மலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.70.6) திருஞானசம்பந்தர், ஏறார் கொடியார் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார்.அகலம்=அகலமான மார்பு; நிரை=வரிசை; அயில்=கூர்மையான; வெங்கணை=நெருப்புப் பிழம்புகள் கக்கும் அம்பு, கொடுமை விளைவிக்கும் அம்பு,அவுணர்=திரிபுரத்து அரக்கர்கள்; அடல்=வலிமை; ஏறு=எருது, இடபம்; தலபுராணத்து தகவல் படி, உமையன்னை இங்கே அமர்ந்து தவம் செய்து இறைவனின் உடலில் ஒரு பாதியைப் பெற்றாள். இரண்டு சிகரங்களை உடையதாக, சிவமும் சக்தியும் இணைந்திருக்கும் கோலத்தை நினைவூட்டும் இந்த மலை, சிவசக்தி மலை என்றும் அழைக்கப் படுகின்றது. இந்த தன்மையை உணர்த்தும் வண்ணம், அன்னையுடன் பெருமான் இங்கே வீற்றிருக்கின்றார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார் போலும். இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் கடை அடியில் மலையின் தன்மை, இயற்கை வளம் முதலியன குறிப்பிடப்படுவதால், உமையாளொடும் என்ற சொல் மலையின் தன்மையை குறிப்பதாக கொள்வது பொருத்தமாக உள்ளது. சரக்கொன்றை என்பது ஒரு வகை கொன்றை மலர் .

நீறார் அகலம் உடையார் நிரையார் கொன்றை அரவோடும்

ஆறார் சடையார் அயில் வெங்கணையால் அவுணர் புரம் மூன்றும்

சீறா எரி செய் தேவர் பெருமான் செங்கண் அடல் வெள்ளை

ஏறார் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே

புறவம் என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.74.7) திருஞானசம்பந்தர்,பெருமானை, விடை சேர் கொடி அண்ணல் என்று அழைக்கின்றார். தோழம்=எண்ணிறந்த; பாற்கடலிலிருந்து கருமையான விடம் பொங்கி வந்த போதே அதன் தாக்கத்தினால் அனைத்து தேவர்களும் இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எவரும் இறவாமல், விண்ணில் பொலிவுடன் வாழும் வண்ணம், அந்த நஞ்சினை உட்கொண்டவன் பெருமான் என்று, பெருமான் நஞ்சினை உண்டு அமரர்களைக் காத்த செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது.

உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர்

விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்

பண்ணில் சிறை வண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதியாக

எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

பிரமபுரம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரு பெயர்களில் ஒன்றாகும். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.117.10) திருஞானசம்பந்தர்,தனது கொடியில் அணிந்துகொள்ளும் எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவன் பெருமான் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பதினொரு பாடல்களில் ஒவ்வொரு அடியிலும் இரண்டு சொற்களை இடம் மாற்றி வைத்து, திருஞானசம்பந்தர் சொல்விளையாட்டு ஆடுகின்றார். அடியிணை கண்டிலன் மால், முடி கண்டிலன் தாமரையோன், கொடியணியும் ஏறு உகந்து ஏறுவர், புலித்தோல் உடுப்பர், பிடியணியும் நடையாள் ஓர் கூறுடையார், வெற்பு இருப்பது என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பிடி=பெண் யானை; வெற்பு=மலை, இங்கே இமயமலை; கடி= நறுமணம்;

அடியிணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன்

கொடியணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோலுடுப்பர்

பிடியணியும் நடையாள் வெற்பு இருப்பதோர் கூறுடையர்

கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக் கண்டரே

கழுமலம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.129.1) திருஞானசம்பந்தர், சே உயரும் திண்கொடி என்று பெருமானின் கொடியில் இடபம் இடம் பெற்றதை குறிப்பிடுகின்றார். சே=எருது; நா இயலும் மங்கை=கலைமகள்; வாவிகளில் மலரும் தாமரை மலர்கள் தலத்து மகளிரின் முகத்தையும், செங்கழுநீர் மலர்கள் மகளிரின் வாயினையும் காவி கருங்குவளை மற்றும் நெய்தல் மலர்கள் மகளிரின் கண்களையும் உணர்த்துகின்றன என்று தலத்து மகளிரின் வனப்பினை இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால்

நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கொள் கோயில்

வாவிதொறும் வண்கமல்ம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட

காவி இரும் கருங்குவளை கருநெய்தல் கண் காட்டும் கழுமலமே

கடவூர் மயானம் தல்த்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.80.6) திருஞானசம்பந்தர், பெருமான், தான் ஊர்ந்து செல்கின்ற வாகனமாகிய எருதினையே தனது கொடியாகவும் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார்.

பொன்றாது திருமணங் கொள் புனை பூங்கொன்றை புனைந்தார்

ஒன்றா வெள்ளேறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார்

கன்றாவினம் சூழ் புறவில் கடவூர் மயானம் அமர்ந்தார்

பின்றாழ் சடையர் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

கோவலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.100.1), பெருமானை, விடையதேறும் கொடியினான் என்று, திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். உயிர்கள் செய்த பாவங்களுக்கு தகுந்த தண்டனை அளிப்பதற்காகவும் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதற்காகவும் படைகள் வைத்திருப்பவன் இயமன். இடைகொள்வார்=தடுப்பவர்: இவ்வாறு இயமனால் பிரிக்கப் படும் உயிர்கள் தங்களை எதிர்நோக்கி இருக்கும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று விரும்பினால், கோவலூர் வீரட்டம் திருக்கோயில் சென்றடைந்து இறைவனை வணங்க வேண்டும் என்று நமக்கு அறிவுரை வழங்குகின்றார்.

படைகொள் கூற்றம் வந்து மெய்ப் பாசம் விட்ட போதின் கண்

இடை கொள்வார் எமக்கிலை எழுக போது நெஞ்சமே

குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர் தனுள்

விடை அதேறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.105.10) பெருமானை ஏறுலாவிய கொடியன் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.சீறுதல்=அழித்தல்; சீறுலாவிய=முடிகள் மழித்து அழிக்கப்பட்ட தலையினை உடைய சமணர்கள்; சமணர்களின் கொள்கைகள் பல, இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று இரண்டிரண்டு மாறுபட்ட நிலைபாடுகளை கொண்டு இருப்பதை உணர்த்தும் பொருட்டு, நிலையிலா அமணர்கள் என்று குறிப்பிட்டார் போலும். வீறு=பெருமை; வீறிலாத=பெருமை இல்லாத கீழ்ச்சொற்கள்; சுரும்பு=வண்டுகள்; ஏதம்=குற்றம்; பேறு=உயிர்களுக்கு என்றும் அழியாத ஆனந்தத்தை அளிக்கும் முக்திப்பேறு;

சீறுலாவிய தலையினர் நிலையிலா அமணர்கள் சீவரார்

வீறிலாத வெஞ்சொல் பல விரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர்

ஏறுலாவிய கொடியனை ஏதமில் பெரும் திருக்கோயில் மன்னு

பேறுலாவிய பெருமையன் திருவடி பேணுமின் தவமாமே

கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.12.11) திருஞானசம்பந்தர், பெருமானை கொடியுயர் மால்விடை ஊர்தியினான் என்று குறிப்பிடுகின்றார். மால்விடை= பெருமை வாய்ந்த இடபம்; ஆர்க்க=ஒலிக்க; படி=முறை; தேவாரப் பாடல்களை முறையாக பாடியும் ஆடியும் பெருமானை போற்றும் அடியார்களின் பாவங்களைத் தீர்ப்பவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு தனது அடியார்களின் பாவங்களைப் போக்கும் பெருமானை அருளாளன் என்று குறிப்பிடுவதை நாம் இந்த பாடலில் காணலாம்.

கொடியுயர் மால்விடை ஊர்தியினான் திருக் கோட்டாற்றை

அடிகழல் ஆர்க்க நின்று ஆடவல்ல அருளாளனைக்

கடிகமழும் பொழிற் காழியுண் ஞானசம்பந்தன் சொல்

படியிவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே

அரதைப்பெரும்பாழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.30.6) தனது கொடியினில் எருதினை உடையவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெற்றம்=எருது; பெற்றர்=எருதினை உடையவர்; தற்று=இடையில் உடுத்து, தரித்து; பெற்று, தாழ்தரு=தாழ்ந்து வணங்குகின்ற;பாரிடம்=சுற்றியுள்ள பூதப்படை; அரை=இடுப்பு; இரவு=ஊழிக்கால நள்ளிரவு; மிசை=மேல்;

புற்றரவம் புலித் தோல் அரைக் கோவணம்

தற்று இரவின் நடம் ஆடுவர் தாழ்தரு

சுற்றமர் பாரிடம் தொல்கொடியின் மிசைப்

பெற்றர் கோயில் அரதைப் பெரும்பாழியே

வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (3.54.11) பெற்று ஒன்று உயர்த்த பெருமான் என்று, தனது வாகனமாகிய இடபத்தைத் தனது கொடியில் ஏற்றுக்கொண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கொடி உயரத்தில் பறக்கும் தன்மை உடையது என்பதால், எருதினை கொடியில் வைத்து உயர்த்திய பெருமான் என்று உணர்த்தும் முகமாக, பெற்று ஒன்று உயர்த்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். தொகை=கூட்டம், இங்கே சங்கம் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. பெருமான் தமிழ்ச்சங்கம் நிறுவிய செய்தியை உணர்த்துகின்றார். தெற்றென்று=தெளிவு அடைந்து; தெற்றென்று தெய்வம் தெளியார் என்று சிவபெருமான் குறித்து தெளிவான அறிவு அற்றவர்களாக விளங்கிய சமணர்களை குறிப்பிடுகின்றார். கரை=எல்லை; கரைக்கோலை=சமணர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிய ஓலை; பற்றற்ற ஞானிகள், பிறவிப் பெருங்கடலை எதிர்த்து கரையேறுவது போன்று, திருஞானசம்பந்தர் இட்ட ஏடும், வகை ஆற்றின் போக்கினை எதிர்த்து நீரோட்டத்திற்கு எதிரே சென்றதை உணர்த்துகின்றார். பெருமானும் பெருமான் அன்றே என்ற தொடர் மூலம்,சிவபெருமான் ஒருவன் தான் முழுமுதற்கடவுள் அல்லவா என்று பாடலை முடிக்கின்றார்.

அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்

தெற்றென்று தெய்வம் தெளியார் கரைக்கோலைத் தெண்ணீர்

பற்றின்றி பாங்கெதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில்

பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.72.9) அப்பர் பிரான் ஏறுடைக் கொடியர் என்று பெருமானை அழைக்கின்றார். நினைப்பினை அரியர்=நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர்: காறிடு=கைப்புச் சுவையினை உடைய;

காறிடு விடத்தை உண்ட கண்டர் எண்தோளர் போலும்

நீறுடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும்

பாறுடை தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்

ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (5.12.5) அப்பர் பிரான், வெல்லும் தன்மை கொண்டுள்ள பெருமானின் கொடி இடபக்கொடி என்று கூறுகின்றார். எடுத்த=தூக்கிய; வீழிமிழலையில் உள்ள சிவனது அடியார்கள் பெருமானைப் போன்று நடந்து கொள்வதையும், அதனால் ஏற்படும் பலனையும்.,அவர்களது வினைகள் கெடுகின்ற தன்மையையும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் ஏற்று வெல்கொடி என்று பெருமானது கொடியினை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தமர்=தொண்டர்கள், அடியார்கள்;

எடுத்த வெல்கொடி ஏறுடையான் தமர்

உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே

கெடுப்பதாவது கீழ் நின்ற வல்வினை

விடுத்துப் போவது வீழிமிழலைக்கே

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.14.11) அப்பர் பிரான், பெருமானை எற்றினார் கொடியார் என்று குறிப்பிடுகின்றார். முற்றிலா மதி=முற்றாத சந்திரன், இளம்பிறைச் சந்திரன்; ஒற்றுதல்=மெதுவாக தொடுதல்; கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை அழுத்தாமல் மெதுவாக வைத்தார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமான் தனது கால் விரலை மெதுவாக வைத்த நிலையே, அரக்கன் இராவணன் வாய் விட்டு கதறும் நிலைக்கு அவனைத் தள்ளியது என்றால், பெருமான் வலிய ஊன்றியிருந்தால் என்னவாகி இருக்கும் என்பதை நமது கற்பனைக்கு அப்பர் பிரான் விட்டு விடுகின்றார். ஏற்றினார் என்ற சொல் எற்றினார் என்று, எதுகை கருதி, குறுகியுள்ளது. ஏற்று=எருது;

முற்றிலா மதி சூடும் முதல்வனார்

ஒற்றினார் மலையால் அரக்கன் முடி

எற்றினார் கொடியார் இடைமருதினைப்

பற்றினாரைப் பற்றா வினை பாவமே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.53.8) அப்பர் பிரான், பெருமானை ஏறுடைக் கொடியான் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அகத்துறை வகையைச் சார்ந்தவை. தடம்=அகன்ற; நின்மலன்=மலமற்றவன்; பெருமான் உறைகின்ற திருக்கோயில்களின் பெருமை பற்றியும், பெருமானின் மாண்பினையும் கூறாவிடில் தனது கண்கள் உறக்கம் கொள்ளாது என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்துள்ள பாடல்.

நீறுடைத் தடம் தோளுடை நின்மலன்

ஆறுடைப் புனல் பாய் கெடிலக்கரை

ஏறுடைக் கொடியான் திரு வீரட்டம்

கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (5.97.16) ஙகர வெல்கொடியான் என்று பெருமானை அப்பர் பிரான் அழைக்கின்றார். வெல்கொடி=எவரையும் வெல்லும் கொடி; ஙகர=ங எழுத்தினைப் போன்று படுத்த நிலையில் இருக்கும் இடபம்; மகர வெல்கொடி மைந்தன்=மீனைத் தனது கொடியின் சின்னமாக வைத்துள்ள மன்மதன்; பெருமானிடம் மட்டுமே தோல்வி கண்ட மன்மதன், ஏனையோரிடம் வெற்றி பெற்றமையால் வெல்கொடி என்று மன்மதனின் கொடியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தைப் பாடிக்கொண்டு சென்ற அப்பர் பிரானுக்கு ங என்ற எழுத்தினைக் குறித்த கவலை காரணமாக, பல முறை ங் என்ற மெய்யெழுத்து அடங்கிய பல சொற்களை இந்த பாடலுக்கு முந்தைய பாடலில், (கங்கை, தங்கிய, திங்கள், வணங்கிய, இங்கணார்,அங்கணன் என்ற சொற்கள்) குறிப்பிட்டார் போலும் என்று முந்திய பாடலில் கூறப்பட்டது. ஆனால் அந்த பாடலை முடிக்கும் முன்னரே பெருமானின் திருவருளினால், நந்தி படுத்திருக்கும் நிலை ங எழுத்தினை ஒத்திருக்கும் தன்மையினை அப்பர் பிரான் உணர்ந்தார் போலும். எங்கும் எதிலும் பெருமானையோ பெருமானைச் சார்ந்த பொருட்களையும் காணும் அப்பர் பிரானுக்கு ங என்ற எழுத்தின் அமைப்பு, நந்தி படுத்திருக்கும் நிலையினை உணர்த்தவே, அந்த எழுத்தினையே நந்தியம்பெருமானாக உருவகித்து, நந்திக் கொடியினை உடைய பெருமான் என்பதற்கு பதிலாக ஙகர வெல்கொடியான் என்று பெருமானை அழைக்கின்றார். எங்கும் எதிலும் சிவபெருமானைக் காணும் தன்மை உடையவராக விளங்கிய அப்பர் பிரான், ங எனற எழுத்தினில் பெருமானைச் சார்ந்த நந்தியை காண்கின்றார்.

ஙகர வெல் கொடியானொடு நன்னெஞ்சே

நுகர நீ உனைக்கொண்டு உயப் போக்குறில்

மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்

புகரில் சேவடியே புகலாகுமே

வீழிமிழலை பதிகத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.3) அப்பர் பிரான், ஏறு அணிந்த கொடி உடைய பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.நேமி=சக்கரம்; எயில்=கோட்டை; சரம்=அம்பு; வேறு அணிந்த கோலம்=உலக இயல்புக்கு மாறான கோலம்; கோவண ஆடை, புலித்தோல் மேலாடை, பாம்பு கச்சு, எலும்பு மாலை ஆபரணம், விரித்த சடை ஆகியவை கொண்டுள்ள கோலம் என்பதால் மாறுபட்ட கோலம் என்று கூறுகின்றார். விகிர்தன் என்றால் மற்றவரிடமிருந்து மாறுபட்டவன் என்று பொருள். மாறுபட்ட கோலம் உடைய பெருமானை விகிர்தன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். வியன்=அகன்ற; பரந்த நிமலர்=மலங்களின் சேர்க்கை இல்லாமல் தூய்மையாக காணப்படுபவர்; திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற போது பயன்படுத்திய அம்பின் முனையில் தீக்கடவுள் பங்கேற்றமை குறித்து எரிசரம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எரிசரம் என்ற சொல்லுக்கு மூன்று கோட்டைகளையும் எரித்த அம்பு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

நீறு அணிந்த திருமேனி நிமலர் போலும் நேமி நெடுமாற்கு அருளிச் செய்தார் போலும்

ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும்

வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும்

ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

நாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.5) அப்பர் பிரான், பெருமானை நரைவிடை நற்கொடி உடைய நாதன் என்று குறிப்பிடுகின்றார்.புரை=துளை: துதிக்கையில் உள்ள துளையினை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மனித வாழக்கையில் நேரும் இன்பங்களும் துன்பங்களும்,இருவினைத் தொடர்பால் உண்டக்கின்றன. மனிதர்கள் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் வினைகளை மேலும் பெருக்குவதால், அவ்வாறு பெருக்கப்படும் வினைகளைத் தீர்ப்பதற்காக மறுபடியும் மறுபடியும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் தன்மையை நோய் என்று அப்பர் பிரான் கருதுவதால், வருபிணி நோய் என்று இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளை இங்கே குறிப்பிடுகின்றார். நரை விடை=நரைமுடி போன்று வெண்மை நிறமுடைய இடபம்.

புரை உடைய கரி உரிவைப் போர்வையானைப் புரிசடை மேல் புனல் அடைத்த புனிதன் தன்னை

விரை உடைய வெள்ளெருக்கம் கண்ணியானை வெண்ணீறு செம்மேனி விரவினானை

வரை உடைய மகள் தவம் செய் மணாளன் தன்னை வருபிணி நோய் பிரிவிக்கும் மருந்து தன்னை

நரைவிடை நற்கொடி உடைய நாதன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

குடந்தை கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.3) எருது பொருந்திய நிமிர்கொடி உடையவர் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அலைத்த என்றால் வருத்திய என்பது பொதுவான பொருள். ஆனால் இங்கே பொருந்திய என்ற பொருளில் இந்த பாடலில் பல இடங்களில் கையாளப் பட்டுள்ளது.

நீறு அலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும் நிலா அலைத்த பாம்பினோடு

நிறைநீர்க் கங்கை

ஆறு அலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும் அடியவர்க்குக் காட்டி அருள் புரிவார் போலும்

ஏறு அலைத்த நிமிர்கொடி ஒன்று உடையார் போலும் ஏழுலகும் தொழும் கழல் எம் ஈசர் போலும்

கூறு அலைத்த மலை மடந்தை கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (6.97.5) அப்பர் பிரான் ஏறுடைய கொடி என்று பெருமானின் கொடியினை குறிப்பிடுகின்றார். பெருமை அளவிடமுடியாத எருது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானின் கொடியில் இடம் பெற்றிருக்கும் தன்மையே அளவற்ற பெருமை அல்லவா.

நீறுடைய திருமேனி பாகம் உண்டோ நெற்றிமேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ

கூறுடைய கொடுமழுவாள் கையில் உண்டோ கொல்புலித்தோல் உடையு உண்டோ கொண்ட வேடம்

ஆறுடைய சடையுண்டோ அரவம் உண்டோ அதனருகே பிறையுண்டோ அளவிலாத

ஏறுடைய கொடியுண்டோ இலயம் உண்டோ எவ்வகை எம்பிரானைக் கண்டவாறே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.7.3) சுந்தரர், கொடிகொள் ஏற்றர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். துன்பங்களில் தோய்ந்து உடல் தளர்ந்து கீழே விழும் முன்னர், எதிர்கொள்பாடி தலம் சென்றடைந்து இறைவனை வழிபடுமாறு சுந்தரர் அறிவுரை கூறுகின்றார்.செடி=துன்பம்; செடிகொள்=துன்பங்களில் ஆழ்கின்ற; வடிகொள் கண்ணார்=மாவடு போன்ற கண்களை உடைய மாதர்கள்;

செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை வீழாமுன்

வடிகொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே

கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை

அடிகள் கோயில் எதிர்கொள் பாடி என்பது அடைவோமே

திருக்கச்சி அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.10.2) சுந்தரர், பெருமானது கொடி விடைக்கொடி என்று குறிப்பிடுகின்றார்.குறுநடை என்ற சொற்றொடர் எதுகை கருதி கூறுநடை என மாறியது. குறுகிய கால்களை உடைய பூதகணங்கள் என்பதால், குறுநடை என்று குறிப்பிடுகின்றார். பகுவாய்=பிளந்த வாய்; கலிகச்சி=ஆரவாரம் நிறைந்த காஞ்சி நகரம். குழிகண்=குழி விழுந்த கண்கள்; ஓரி=நரி: இட=ஊளையிட;குடகத்திசை=மேற்கு திசையில், கொங்கு நாட்டில் உள்ள பேரூர் தலம்.

கூறு நடைக் குழிகண் பகுவாயன பேய் உகந்தாட நின்று ஓரி இட

வேறுபடக் குடகத் தில்லை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம்

ஏறு விடைக் கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள் கணவன்

ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலிக்கச்சி அனேகதங்காவதமே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.27.1) விடையாருங் கொடியாய் என்று சுந்தரர் பெருமானை அழைக்கின்றார். விரையார்=நறுமணம் பொருந்திய; பரம்பரன்=மேலோர்க்கும் மேலானவன்; அருளாளர்கள் அனைவரும் அஞ்சுவது, மீண்டும் பிறப்பெடுக்க நேரிடுமோ என்பதற்கு தான். எனவே பிறவிப்பிணிக்கு அஞ்சேல் என்று இறைவன் சொல்லவேண்டும் என்பதே அவர்களது வேண்டுகோளாக இருக்கின்றது. இந்த பின்னணியில், சுந்தரர் வேண்டுவதும், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

விடையாருங் கொடியாய் வெறியார் மலர்க் கொன்றையினாய்

படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே

கடியார் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற

அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே

திருகச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் சுந்தரர் (7.41.4) விடையும் கொடியும் சடையும் உடையாய் என்று பெருமானை அழைக்கின்றார். பெருமான் இடபத்தைத் தனது வாகனமாகவும், கொடியில் இலச்சினையாகவும் ஏற்றுக் கொண்டுள்ள தன்மை அவரது தனித்தன்மையை குறிக்கின்றது. அது போன்றே சடை உடையவனாக பெருமான் இருப்பதும் அவரது தனித்தன்மை.

விடையும் கொடியும் சடையும் உடையாய் மின்னேர் உருவத்து ஒளியானே

கடையும் புடைசூழ் மணிமண்டபமும் கன்னிமாடம் கலந்தெங்கும்

புடையும் பொழிலும் புனலும் தழுவிப் பூமேல் திருமாமகள் புல்கி

அடையும் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே

திருச்சுழியல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.82.8) சுந்தரர், சேவேந்திய கொடியான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சே=எருது;மா=விலங்கு; இங்கே பெருமானின் கையில் தங்குகின்ற மான் கன்றினை குறிப்பிடுகின்றது. எம என்று அடியார்கள் அனைவரையும் உள்ளடக்கி, அடியார் பெருமக்கள் சிவபெருமானைத் தங்களது தலை மேல் வைத்து கொண்டாடும் தன்மையை உணர்த்துகின்றார். இதற்கு நேர் மாறாக, பிரமனும் திருமாலும் இருந்த தன்மையும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. தங்கள் இருவரில் யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலிடம், வேதங்கள் சென்று, உங்கள் இருவரிலும் பெரியவ்னாகிய சிவபெருமான் இருக்கையில், எதற்காக வீணே வாதம் புரிகின்றீர் என்று எடுத்துச் சொல்லிய போதிலும், அவர்கள் தங்களது வாதத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். மேலும் அவர்கள் இருவரின் எதிரே நீண்ட தீப்பிழம்பாக பெருமான் தோன்றிய போதிலும், அவ்வார் தோன்றியது சிவபெருமான் என்பதை புரிந்து கொள்ளாமல், அந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பதற்கு தலைப்பட்டனர். அந்த முயற்சியும், தங்கள் இருவரிலும் யார் உயர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தவே மேற்கொள்ளப்பட்டது என்பதால், அவர்களது முயற்சியில் பணிவேதும் இல்லை. வினயம்=பணிவு; தங்களின் ஆற்றல் மீது மமதை கொண்டவர்களாக, அந்த முயற்சியில் ஈடுபட்டமை, வினயத்தொடு முறுகப் புகலறியார் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்ரது. கோவேந்திய வினயம் என்று முழுமுதற் கடவுளை அணுகவேண்டிய வினயம் இன்றி அவர்கள் செயல்பட்டனர் என்று இங்கே உணர்த்துகின்றார்.

பூவேந்திய பீடத்தவன் தானும் அடல் அரியும்

கோவேந்திய வினயத்தொடு குறுகப் புகலறியார்

சேவேந்திய கொடியான் அவன் உறையும் திருச்சுழியல்

மாவேந்திய கரத்தான் எம சிரத்தான் தன அடியே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.91.6) சுந்தரர் பெருமானை விடையார் கொடியன் என்று அழைக்கின்றார். தன்னைச் சரணடையும் அடியார்களின் வினைகளை அறுக்கும் பரமன், தன்னை ஆட்கொண்டவன் என்று இந்த பாடலில் சுந்தரர் குறிப்பிடுகின்றார்.

படையார் மழுவன் பால் வெண்ணீற்றன்

விடையார் கொடியன் வேத நாவன்

அடைவார் வினைகள் அறுப்பான் என்னை

உடையான் உறையும் ஒற்றியூரே

திருப்பொற்சுண்ணம் பதிகத்தின் பாடலில் மணிவாசகர், சேவகம் ஏந்திய வெல்கொடியான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஆவகை=உய்வினை அடையும் வழியில், உயர்ந்த கதியாகிய முக்தி நிலை அடையும் வழியில்; ஆட்செயும் வண்ணங்கள்=அடிமையாக பெருமானுக்கு திருப்பணி செய்யும் தன்மைகள்; சே=இடபம்; சேவகம்=இடபத்தினை தன்னகத்தே கொண்ட; வெல் கொடி=வெற்றி தவிர்த்து வேறொன்றையும் அறியாத கொடி; செற்ற=அழித்து வெற்றி கொண்ட; கொற்றவன்=வெற்றி கண்டவன்; சேவகன்=வீரன்

ஆவகை நாமும் வந்து அன்பர் தம்மோடு ஆட்செயும் வண்ணங்கள் பாடி விண்மேல்

தேவர் கனாவிலும் கண்டறியாச் செம்மலர் பாதங்கள் காட்டுஞ் செல்வச்

சேவகம் ஏந்திய வெல்கொடியான் சிவபெருமான் புரஞ் செற்றக் கொற்றச்

சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச் செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே

திருவாசகம் தசாங்கம் பதிகத்தினில், அடிகளார் அழகு பொலிய விளங்குவது பெருமானின் இடபக்கொடி என்று கூறுகின்றார். கொடி என்பது வருபவர் யார் என்பதை உணர்த்தும் அடையாளமாக, பண்டைய நாளில் கருதப் பட்டது. இந்நாளிலும் கொடி அடையாளமாக கருதப் படுவதை நாம் உணர்கின்றோம்.ஏதிலார்=பகைவர்; பெருமானின் இடபக்கொடி, அவரது பகைவர்கள் திடுக்கிட்டு அஞ்சும் வண்ணம் செய்கின்ற, அழகிய குற்றமற்ற கொடி என்று இந்த பாடலில் அடிகளார் உணர்த்துகின்றார்.

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக் கோன்

கோலம் பொலியும் கொடி கூறாய் — சாலவும்

ஏதிலார் துண்ணென்ன மேல் விளங்கி ஏர் காட்டும்

கோதிலா ஏறாம் கொடி

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் முதல் பாடலில், மணிவாசகர் பெருமானை ஏற்றுயர் கொடி உடையாய் என்று குறிப்பிடுகின்றார். நமது வாழ்வுக்கு ஆதாரமாக பெருமான் இருக்கும் தன்மையை வாழ்முதல் என்ற சொல் மூலம் குறிப்பிடுகின்றார். அடிகளார் இந்த பாடலில், பெருமான் தன்னை அடிமையாக உடையவர் என்று குறிப்பிடுகின்றார். நால்வர் பெருமானார்கள் அனைவரும், தங்களை பெருமானின் அடிமையாக குறிப்பிடுவதை அவர்களது பல பாடல்கள் உணர்த்துகின்றன.

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கு இணை துணை மலர் கொண்டு

ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ் கமலங்கள் மலருந் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடி உடையாய் எனை உடையாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

ஒளிவளர் விளக்கே என்று தொடங்கும் திருவிசைப்பா பாடலில் (9.1.6) திருமாளிகைத் தேவர், ஏறணிக்கொடி எம் ஈசன் என்று குறிப்பிடுகின்றார்.இசைதல்=கூடுதல்; அவனது தாள் பணிய அவனது அருள் தேவைப்படுதல் போன்று, அவனொடு கூடுவதற்கும் அவனது அருள் தேவைப் படுகின்றது. அந்த அருளையே இந்த பாடலில் திருமாளிகைத் தேவர் வேண்டுகின்றார். உலகினில் உயிர்கள் அனுபவிக்கும் பலவகை இன்பங்களாக விளங்குபவனும் இறைவன் என்று திருமாளிகைத் தேவர் கூறுகின்றார்.

நீறணி பவளக் குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே

வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா

ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா அம்பொன் செய் அம்பலத்தரசே

ஏறணி கொடியெம் ஈசனே உன்னைத் தொண்டனேன் இசையுமாறு இசையே

உறவாகிய யோகம் என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகத்து பாடலில் (9.3.8) திருமாளிகைத் தேவர், சேவேந்து வெல்கொடியான் என்று அழைக்கின்றார்.சே=எருது; ஏந்து=கொண்ட: சேமத் துணை=பாதுகாப்பு அளிக்கும் துணை; மாவேந்து சாரல்=பல வகையான விலங்கள் உலவும் மலைச்சாரல்; இது அகத்துறை வகையைச் சார்ந்த பாடல்; பெருமான் பால் ஆராத காதல் கொண்ட நாயகி, பெருமான் தன்னை வந்தடைய வேண்டும் என்று இறைஞ்சுவதாக அவளது தாயின் கூற்றாக அமைந்துள்ள பாடல்.

சேவேந்து வெல்கொடியானே என்னும் சிவனே என் சேமத் துணையே என்னும்

மாவேந்து சாரல் மகேந்திரத்தின் வளர்நாயகா இங்கே வாராய் என்னும்

பூவேந்தி மூவாயிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்ற

கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

பொழிப்புரை:

தசைகள் வற்றிக் காய்ந்து, பொலிவேதும் இன்றி, உலர்ந்து வெண்மை நிறத்தினில் காணப்படும் மண்டையோட்டினைத் தனது கையினில் ஏந்தியவாறு ஊருக்கு ஒதுக்குப் புறத்தினில் உள்ள சுடுகாட்டினில் நடனம் ஆடுபவரே, மேரு மலையினை வில்லாக வளைத்து அதனில் பொருத்தப் பட்ட அம்பினை எய்தி,வானில் எப்போதும் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் எரித்தவரே, எருதின் உருவம் வரையப்பட்ட கொடியினை உடையவரே, தேவர் மனிதர் சிவகணங்கள் உள்ளிட்டு அனைத்து கணங்களாலும் முறையாக போற்றப்படும் தாங்கள், தங்களது உயர்ந்த செல்வமாக மக்களால் மதிக்கப்படும் இடைமருது திருத்தல்த்து திருக்கோயிலை, தலைவனாகிய தான் உறைகின்ற இடமாக நீர் ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 5:

வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்தீண்டிப்

பொருந்திய தைப்பூசம் ஆடியுலகம் பொலிவு எய்தத்

திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில்

பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே

விளக்கம்:

வருந்திய=தவத்தில் ஈடுபடுவதால் மெலிந்து வருந்தி இளைத்த உடல்; ஏனோர்=மண்ணுலகத்து மாந்தர்கள்; ஈண்டி=ஒன்றாக கூடி; பொலிவு=சிவப்பொலிவு;திருந்திய=செம்மையான முறையில்; இந்த பாடலில் தைப்பூசநாள் கொண்டாடப்பட்ட செய்தி சொல்லப் பட்டுள்ளது. தைப்பூச நாளன்று, காவிரி நதியினில் இறைவன் மிகவும் சிறப்பாக நீராட்டப்படும் நன்னாளில் துறவிகள், வானோர் மற்றும் மண்ணுலகத்து மாந்தர் பலரும் காவிரி நதியில் நீராடி, சிவவேடத்துடன் பொலிந்து விளங்குவதை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார், பல தேவாரப் பாடல்கள், அந்நாளில் மிகவும் விமரிசையாக கொண்டாடப் பட்ட திருவிழாக்களை குறிப்பிடுகின்றன. வானோரும் கொண்டாடும் பூசத் திருவிழா என்று இந்த பாடலில் குறிப்பிட்டு, இந்த திருவிழாவின் மகத்துவம் உணர்த்தப் படுகின்றது. தைப் பூசநாள் சிறப்பாக கொண்டாடப்படும் தலங்களில் திருவிடைமருதூர் ஒன்று. ஓடே கலன் என்று தொடங்கும் பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (1.32.5) தைப் பூசத் திருவிழா இந்த தலத்தினில் கொண்டாடப்பட்ட செய்தி காணப்படுகின்றது. தைப்பூச நன்னாளில் காவிரி நதியினில் நீராடுவதை சிறப்பாக கருதி இன்றும் அடியார்கள் நீராடுகின்றனர்.

வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே

தேசம் புகுந்து ஈண்டி ஓர் செம்மை உடைத்தாய்ப்

பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய

ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ

திருமயிலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.47.5) திருஞானசம்பந்தர், பூம்பாவை என்று விளித்து, ஐப்பசி திருவோண விழாவினைக் காணாது செல்லுதல் முறையோ என்று வினவுகின்றார். பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் ஒரு திருவிழா அல்லது முக்கியமான நிகழ்ச்சியை குறிப்பிடும் திருஞான சம்பந்தர், அதனைக் காணாமல் செல்லலாமா பூம்பாவாய் என்று கேட்கின்றார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இறந்த ஏழு வயதுப் பெண் பூம்பாவையின் எலும்புகளும் சாம்பலும் நிறைந்திருந்த குடத்தினை, பூம்பாவை என்றே அழைக்கும் திருஞானசம்பந்தர், பல திருவிழாக்களை குறிப்பிட்டு,அவற்றைக் காணாமல் சென்றது முறையா என்று கேட்கின்றார். பதிகத்தின் முதல் பாடலில், பொதுவாக திருவிழாக் காலங்களில் அடியார்களை அமுது செய்விக்கும் காட்சியை காணாமல் செல்வது முறையா என்ற கேள்வியை எழுப்பிய திருஞான சம்பந்தர், அடுத்த ஒன்பது பாடல்களில் அத்தகைய திருவிழாக்கள் யாவை என்பதை உணர்த்துகின்றார். ஐப்பசி ஓணவிழா, கார்த்திகை விளக்கீடு விழா, மார்கழி திருவாதிரை விழா, தைப்பூச விழா, மாசிக் கடலாட்டு விழா, பங்குனி உத்திர நாள்விழா, சித்திரை அட்டமி விழா, வைகாசி ஊஞ்சலாட்டு விழா, பெருஞ்சாந்தி விழா என்று குறிப்பிடுகின்றார். ஐந்தாவது பாடலில் தைப்பூச விழா சொல்லப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில், நெய்பொங்கல் செய்து அடியார்கள் மற்றும் வறியவர்களுக்கு அளித்தமை, இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. புழுக்கல்=பொங்கல்

மைபூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலை

கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்

நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்

தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (5.14.1) இந்த தலத்தினில் பூசநாள் சிறப்பாக கொண்டாடப் பட்ட செய்தியை குறிப்பிடுகின்றார். நாண்மலர்=அன்றைய நாளில் பூத்த மலர்; பாசம்=உயிர்கள், உலகப் பொருட்களின் மீதும் உலகத்தில் உள்ள உயிர்களின் மீதும் கொண்டுள்ள விருப்பம்; பூச=தைப் பூச நாள்; தை மாதம் பூச நாளன்று காவிரி நதியில் நீராடுதல் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.வைகலும்=தினமும்; பத்தர்=பத்து சிறந்த குணங்களை கொண்ட அடியார்கள். சிவனடியார்கள் கொள்ள வேண்டிய குணங்கள் அக குணங்கள் என்றும் புற குணங்கள் என்றும் வகைபடுத்தப் பட்டுள்ளன. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல்,சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும். இறைவனை நீராட்டி சிறப்பாக கொண்டாடும் தைப்பூச நாளன்று நாமும் காவிரி நதியில் நீராடி இறைவனைத் தொழுவோம் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

பாசம் ஒன்று இலராய்ப் பல பத்தர்கள்

வாச நாண்மலர் கொண்டு அடி வைகலும்

ஈசன் எம் பெருமான் இடை மருதினில்

பூச நாம் புகுதும் புனல் ஆடவே

பொழிப்புரை:

தங்களது உடலினை பலவிதத்திலும் வருத்திக் கொண்டு சிறப்பான முறையில் தவம் செய்கின்ற முனிவர்களும் வானோர்களும் மண்ணுலகத்து மாந்தர்களும் ஒன்றாக கூடி, சிவபெருமான் சிறப்பாக நீராட்டப்படும் பெருமை உடைத்தாய தைப்பூச நன்னாளில் காவிரி நதியினில் நீராடி, அழகுடைய சிவக்கோலம் பூண்கின்றனர். அந்நாளில் உலகத்தவருடன் பெருமானாகிய நீரும் நீராடுகின்றீர். இவ்வாறு பூசநாளினை சிறப்பிக்கும் உம்மை, சிறந்த முறையில் நான்கு வேதங்களை ஓதும் மறையோர்கள் புகழ்ந்து வழிபட, இடைமருது தலத்தினில் சிறப்பாக விளங்கும் திருக்கோயிலை, தலைவனாகிய தான் உறைகின்ற இடமாக நீர், ஏற்றுக்கொண்டுள்ளீர்.

பாடல் 6:

சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்

வலமல்கு வெண்மழு ஒன்றேந்தி மயானத்து ஆடலீர்

இலமல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில்

புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே

விளக்கம்:

சலம்=தண்ணீர், இங்கே கங்கை நதி; வலம்=வெற்றி; வெற்றி பொருந்திய ஆயுதமாக மழுப்படை மாறியது பெருமானைச் சென்றடைந்த பின்னர் தான்.தாருகவனத்து முனிவர்கள் இந்த வலிமை மிகுந்த படையினை யாகத்திலிருந்து எழுப்பி, சிவபெருமான் மீது ஏவிய போதிலும், சிவபெருமான் இந்த ஆயுதத்தை தனது கையில் ஏந்தி செயலிழச் செய்தார். ஆனால் பெருமான் இந்த ஆயுதத்தைத் தனது கையினில் ஏந்திய பின்னர், வெற்றி தரும் ஆயுதமாக மாறி விடுகின்றது. பெருமான் தனது வலது கையினில் இந்த ஆயுதத்தை ஏந்தியிருக்கும் தன்மை, வலமல்கு வெண்மழு என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பாடலில், சாந்தநீறு பூசியவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இல்லம் என்ற சொல் இலம் என்று சுருங்கியுள்ளது. இல்லம் என்று தலத்து மறையோர்கள் வாழ்ந்த இல்லம் குறிப்பிடப்படுகின்றது.இலமல்கு=வீடுதோறும் வாழ்ந்த மறையோர்கள்; திருஞானசம்பந்தரின் காலத்தில், மறையோர்கள் மிகவும் அதிகமாக வாழ்ந்த தலமாக இடைமருது விளங்கியது போலும். இலமல்கு=இல்லாதவர்களாக: இலமல்கு என்ற தொடருக்கு, ஆசைகள் ஏதும் இல்லாமல், ஆசைகள் அற்றவர்களாக தலத்து மறையோர்கள் அந்நாளில் விளங்கினார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. புலம் என்ற சொல்லுக்கு அறிவு, இடம் என்று இருவேறு பொருள்கள் கொள்ளலாம். ஞானம் மிகுந்த திருக்கோயில் என்றும் ஞானம் அளிக்கும் திருக்கோயில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மற்றவர் போன்று நறுமணம் கமழும் சந்தனத்தை பெருமான் விரும்புவதில்லை. பகட்டான ஆடைகளையும் அவர் விரும்புவதில்லை. எளிய கோலத்துடன் இருப்பதையே அவர் எப்போதும் விரும்புகின்றார். எனவே தான் திருநீற்றைனை சந்தனமாக கருதி பூசிக் கொள்கின்றார் என்று அருளாளர்கள் தங்களது பாடல்களில் குறிப்பிடுகின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும்.

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.18.1) சாந்தமாக கருதப்பட்ட சுடுநீறு என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாலம் என்ற சொல்லுக்கு பலவிதமாக பொருள் கொள்ளப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகின்றது. பாலம் என்ற தொடர் பால்+அம் என்று பிரிக்கப்பட்டு பால் போன்ற வெண்மை நிறத்தில் காணப் படும் அழகிய சந்திரன் என்பது ஒரு பொருள். பாலன் என்று சொல்லின் திரிபாக (எதுகை கருதி) எடுத்துக் கொண்டு, இளைய பிறைச் சந்திரன் என்பது மற்றொரு பொருள். பாலம் என்ற சொல்லுக்கு நெற்றி என்று பொருள் கொள்ளப்பட்டு பெருமானின் நெற்றியின் மீது உள்ள பிறைச் சந்திரன் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். சடைமுடி மேல் என்று பின்னர் வருவதால், நெற்றி என்று பொருள் கொள்வது பொருத்தமாக தோன்றவில்லை. நிலையோர்=நிலையாக உறைபவர்; சுண்ணப் பொடி=வாசனைப் பொடி; சாந்தம்=குழைத்த சந்தனம்; பவளச்சடை=பவளம் போன்று செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடைமுடி; பண்டைக் காலனின் வலிமையை போக்கினார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அதற்கு பண்டைய நாளில் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த காலன், அப்போது பெருமானிடம் உதை வாங்கி அழிந்த பின்னர், இயமன் சிவபெருமானது அடியார்கள் பால் செல்வதை தவிர்த்து விட்டான் என்ற பொருள் பட பண்டைக் காலன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு

பாலம் மதி பவளச் சடைமுடி மேலது பண்டைக்

காலன் வலி காலின்னொடு போக்கிக் கடி கமழும்

நீலம் மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே

திருப்பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.5) திருஞானசம்பந்தர் பெருமானை சாந்தணி மார்பர் என்று பெருமான் திருநீற்றை சந்தனமாக கருதி அணிந்துள்ள தன்மையை உணர்த்துகின்றார். வாய்மூரி=இசையில் ஒரு வகை; கங்கை நதியினைத் தனது தலையில் வைத்துள்ள பெருமான், பெண்ணாகிய மழவன் மகள் பால் இரக்கம் கொள்ளாது இருப்பது தவறு அல்லவா என்று நயமாக உள்ளது. சதுர்=சதுரப்பாடு,சாமர்த்தியம்;

மாந்தர் தம் பால் நறு நெய் மகிழ்ந்தாடி வளர்சடை மேல் புனல் வைத்து

மோந்தை முழாக் குழல் தாளமொர் வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி

ஆந்தை விழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வோ

பெருமானைப் போன்றே பெருமானின் அடியார்களும், பெருமான் அணிந்த திருநீற்றினை சாந்தமாக கருதி பூசிக் கொள்கின்றனர் என்று திருநெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.7) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். உலகத்தவர் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு இடையூறாக இருந்து பல இடர்களை விளைவித்த திரிபுரத்து அரக்கர்களை அழித்த செய்தி இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. கூறு=உமையன்னையை ஒரு கூறாகத் தனது உடலில் பெருமான் கொண்டுள்ள நிலை; மூன்றும் ஒன்றாக் கூட்டி என்ற தொடருக்கு திருமாலை அம்பின் தண்டாகவும், தீயினை அம்பின் கூரிய நுனியாகவும் காற்றினை அம்பின் இறகுகளாகவும் கூட்டி பெருமான் திரிபுரத்து பறக்கும் கோட்டைகளின் மீது எய்தார் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. மூன்றையும் என்ற சொல், திருமால் அக்னி வாயு ஆகியவற்றை குறிப்பிடுகின்றது என்று பலரும் பொருள் கொண்டாலும், மூன்று என்ற சொல் திரிபுரத்து கோட்டைகள் என்று சொல்வதும் பொருத்தமாக உள்ளது. மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் தங்களது கோட்டைகள் ஒரே அம்பு கொண்டு துளைக்கப்பட்டு அழிக்கப் படலாம் என்பதை நன்றாக அறிந்தவர்கள் திரிபுரத்து அரக்கார்கள். ஏனெனில் அத்தகைய வரம் அவர்கள் தானே வேண்டிப் பெற்றனர். எனவே, அவ்வாறு ஒன்றாக சேருவதை, அவர்கள் தவிர்க்க முயல்வது இயற்கையே. எனவே திரிபுரதகனம் நடைபெற்ற போதும் அவர்கள் தாமாகவே ஒரே நேர்க்கோட்டினில் வந்திருக்க முடியாது. இந்த பின்னணியில் வேறுவேறு திசையினில் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் பறந்து கொண்டிருந்த கோட்டைகளை ஒரே நேர்க்கோட்டினில் வரச்செய்தவர் சிவபெருமான் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம் பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

சந்தனமாக கருதி திருநீற்றினைத் தனது மார்பினில் வைத்த பெருமான் என்று பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.65.4)திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தயங்க=போல் விளங்க; தார்=மாலை; ஆர்கின்ற என்ற சொல்லுக்கு உலகம் இன்பமடைதல் என்று பொருள் கொண்டு,அடியார்கள் பாடும் இசைப் பாடலினை கேட்கும் உலகத்தவர்கள் இன்பம் அடைகின்றனர் என்று சொல்வதும் பொருத்தமே. மைந்தர்=வலிமை வாய்ந்தவர்கள்; புகார் என்ற பெயருக்கு ஏற்ப வலிமை மிகுந்த வீரர்கள் வாழ்ந்த தலமாக காவிரிப்பூம்பட்டினம் இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.

தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பகலம்

நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்

போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால்

பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே

திருக்கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.73.2) திருஞானசம்பந்தர், பெருமானை சாந்த நீற்றர் என்று அழைக்கின்றார். இந்த பாடல் அகத்துறை வகையில் அமைந்த பாடலாக உள்ளது. தாருகவனத்து மகளிரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த பாடல் என்று கூறுவார்கள்.பிச்சைப் பெருமானாக, தனது கையினில் மண்டை ஓட்டினை ஏந்தியவராக பலியேற்க தாருகவனம் சென்ற பெருமானின் அழகினால் கவரப்பட்டு,முனிவர்களின் மனைவியர் பலரும், தங்களையும் அறியாத நிலையில், தாங்கள் இல்லத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை பாதியில் விட்டுவிட்டு,பெருமானின் பின்னே தொடர்ந்து சென்றதாக புராணம் கூறுகின்றது. அன்று, தாங்கள் வாழ்ந்து வந்த இல்லங்களின் வழியே வீதிவலம் வந்த பெருமானின் கோலத்தினை, பெருமான் தனது அழகிய வாயினால் இனிமையான சொற்கள் கொண்டு பலி இடுவீர்களாக என்று கேட்டதை நினைக்கும் தாருகவனத்து மகளிரின் தன்மையை எடுத்துரைக்கும் பாடலாக உள்ளது. நீத்தலாகா வெள்ளம்=நீந்திக் கடக்க முடியாத அளவு பெருகிய வெள்ளம்; மூழ்கு=மூழ்கி மறைந்த;ஏய்ந்த=பொருந்த; போந்த=வாயிலிருந்து வெளிவந்த; மைந்தர்=ஆண்மகன்; கோணல்=வளைந்த; வெகு நாட்களாகத் தன்னை விட்டு பிரிந்திருக்கும் தலைவனின் வருகையை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கும் தலைவி, கடந்த நாட்களில் தலைவனுடன் தான் சேர்ந்திருந்த இனிமையான பொழுதுகளை நினைத்து அசை போடும் தலைவியின் தன்மையை குறிப்பிடும் சங்க இலக்கியப் பாடல்களைப் போன்று இந்த பாடல் அமைந்துள்ள விதம் ரசிக்கத் தக்கது.தனது உள்ளம் கவர்ந்த தலைவன் பெருமான் தான் என்பதை சுட்டிக் காட்டும் வண்ணம் பெருமானின் சடையில் உள்ள பொருட்கள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. இந்த பாடல் போன்றே இந்த பதிகத்தின் மற்ற பாடல்களிலும் இறைவனின் அடையாளத்தினை சுட்டிக் காட்டும் சம்பந்த நாயகி, இறைவனை தனது உள்ளம் கவர்ந்த கள்வன் என்று கூறுகின்றாள். எப்படியெல்லாம் தனது உள்ளம் கவரப்பட்டது என்பதை விரிவாக கூறும் நோக்கம் தான் என்னே.அந்த அடையாளங்கள் கொண்ட இறைவனை நாம் கண்டு சம்பந்த நாயகியுடன் சேர்த்து வைத்து அவளின் துயர நிலையினை மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.

நீத்தலாகா வெள்ளம் மூழ்கு நீள்சடை தன் மேலோர்

ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆரப்

போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போலாம்

காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே

திருப்பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.69.3) திருஞானசம்பந்தர், சாந்த வெண்ணீறு அணிந்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஏனையோர் அனைவரும் வாசனை தரும் சந்தனத்தைத் தங்களது திருமேனியில் பூசிய வண்ணம் காட்சி தர, பெருமானோ,திருநீற்றினையே சந்தனமாக கருதி தனது திருமேனியில் பூசிக் கொண்டு உள்ளார் என்று விளக்கம் அளிப்பது ஒரு வகை. பெருமானின் திருமேனியின் மீது பூசிய திருநீற்றினை அணிவோர்கள் சாந்தம் பெறுகின்றனர் என்று விளக்கம் கூறுவது மற்றொரு வகை.

சடையமர் கொன்றையினாரும் சாந்த வெண்ணீறு அணிந்தாரும்

புடையமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும்

விடையமரும் கொடியாரும் வெண்மழு மூவிலைச் சூலப்

படையமர் கொள்கையினாரும் பாண்டிக் கொடுமுடியாரே

குற்றாலம் (குறும்பலா) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.71.8) சாந்தம் என நீறு அணிந்த பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திணி=நெருங்கிய; பலம் மிகுந்து பருத்து காணப்படுவதால் ஒன்றுக்கொன்று நெருங்கிய தன்மையில் அரக்கன் இராவணனின் தோள்கள் இருந்தததாக கூறுகின்றார். சாரல் சாரல்=மழைச் சாரலை உடைய மலைச்சாரல்; பூந்தண் நறு=நறுமணமும் குளிர்ச்சியும் கொண்ட வேங்கைப் பூக்கள்;பிடி=பெண்யானை; பெண்பால் என்ற தகுதியில் கூந்தல் உடையது என்று சொன்னார் போலும். யானைகள் பூக்களைப் பறித்து வந்து சிவபெருமானை வழிபாடு செய்வதாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார்

ஏந்து திணி திண்தோள் இராவணனை மால் வரைக் கீழ் அடர ஊன்றிச்

சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல்

பூந்தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக்

கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.94.8) திருஞானசம்பந்தர், சாந்தம் உடையார் என்று பெருமான் திருநீற்றினை,சந்தனமாகக் கருதி அணிந்துள்ள நிலையினை குறிப்பிடுகின்றார். ஏழும் மூன்றும்=பத்து தலைகள்; வேள்வி என்ற சொல் எதுகை கருதி வேழ்வி என்று திரிந்தது; கேழல்=பன்றி; சாந்தமும் உடையார் என்பதற்கு என்றும் அமைதியாக இருப்பவர் என்று விளக்கமும் அளிக்கபடுகின்றது.

ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர் பட அடர்த்து

வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல உடையார்

கேழல் வெண்பிறை அன்ன கெழுமணி மிடறு நின்று இலங்க

வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மூக்கீச்சரம் (தற்போதைய பெயர் உறையூர், திருச்சி நகரத்தின் ஒரு பகுதி) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.120) திருநீற்றினை சாந்தமாக பூசிய பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கோச்செங்கட் சோழன் கட்டிய கோயில் என்பதால் வேந்தன் மூக்கீச்சரம் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. காந்தள் ஆரும் விரல் ஏழை=காந்தள் மலரை ஒத்த விரல்களைக் கொண்ட உமையம்மை. உமையம்மையுடன் இறைவன் கூடி இருப்பதன் காரணத்தை நாம் யாரும் ஆராய்ந்து அறிய முடியாது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

சாந்தம் வெண்ணீறு எனப் பூசி வெள்ளம் சடை வைத்தவர்

காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்

ஆய்ந்து கொண்டு ஆங்கு அறிய நிறைந்தார் அவர் ஆர் கொலோ

வேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.5) திருஞானசம்பந்தர், நறுமணம் வீசும் சந்தனமாக கருதி திருநீற்றை பெருமான் பூசிக் கொள்கின்றார் என்று கூறுகின்றார். கூசுமா மயானம்=எவரும் சென்றடைவதற்கு கூச்சம் கொள்ளும் சுடுகாடு; குடவயிறு=குடம் போன்று பெரிய வயிறு;மெல்லோதி=மென்மையான கூந்தல் உடைய உமை அன்னை; பொங்கரவு=சினத்துடன் பொங்கி படமெடுத்தாடும் பாம்பு; அரையோன்=இடுப்பில் கச்சாக கட்டியவன்; மலர்களின் மீது படர்ந்து வரும் தென்றல் காற்று மலர்களின் நறுமணத்தையும் சுமந்து கொண்டு வருவதாகவும், தேன் துளிகளும் காற்றுடன் கலந்து வருவதாகவும் கூறுகின்றார். வீழிமிழலையான் திருநாமத்தை சொன்னால், நமது வினைகள் கெட்டுவிடும் என்றும் உணர்த்துகின்றார்..

கூசுமா மயானம் கோயில் வாயில் கண் குடவயிற்றன சில பூதம்

பூசுமா சாந்தம் பூதி மெல்லோதி பாதி நற்பொங்கரவு அரையோன்

வாசமாம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல்

வீசுமாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடல்களில் (3.120) திருஞானசம்பந்தர், பாண்டிய அரசி மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் ஆகிய இருவரின் தன்மைகளையும் விவரிக்கின்றார். அந்த பதிகத்தின் ஏழாவது பாடலில், அரசியார், முத்தின் தாழ்வடமும் சந்தனக் குழம்பு நீறும் தனது மார்பினில் அணிந்தவராக விளங்கியதாக குறிப்பிடுகின்றார். வடமும் மற்றும் நீறும் என்று குறிப்பிட்டிருப்பதால், சந்தனக் குழம்பு என்பதை, நாம் திருநீற்றுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக எடுத்துக் கொள்வதே பொருத்தம். திருநீற்றினை, சந்தனக் குழம்பாக பாவித்து அரசியார் அணிந்து கொண்டார் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து உணரலாம். சமண மதத்தைச் சார்ந்த தனது கணவனாரின் மனம் புண்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக, அரசியார் தனது நெற்றியில் திருநீறு இடாமல், மார்பினில் திருநீறு பூசிக்கொண்டு இருந்த தன்மை இங்கே விளக்கப் படுகின்றது என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பின்னர் திருஞானசம்பந்தர், சமணர்களை வாதத்தில் வென்று, மன்னனையும் திருநீறு இடச் செய்தமை சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டமை ஆகியவை, சைவசமய வரலாற்றினில் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகள். அதன் பின்னர் அரசியாரும், மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது நெற்றியில் அனைவரும் காண திருநீற்றினை இட்டிருப்பார் என்பதை நாம் எவரும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம். திருநீறு அணிந்ததால் பளிங்கு திருமேனியுடன் காட்சி தந்த பெருமான், ஒளிவீசும் பச்சை மரகத நிறத்தில் திருமேனி உடைய உமையன்னை தனது அருகில் இருக்கும் வண்ணம் ஆலவாய் தலத்தினில் வீற்றிருக்கின்றார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

முத்தின் தாழ்வடமும் சந்தனக் குழம்பு நீறும் தன் மார்பினில் முயங்கப்

பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணி செய நின்ற

சுத்தமார் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தாற் போல்

அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.121.3) சாந்த வெண்ணீறு பூசியவர் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். சுவடு தாமறியார் என்றும் பெருமானை திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பூவினில் பொருந்தியுள்ள நறுமணத்தை நம்மால் உணர முடிந்தாலும் காண இயலாதது போன்று இறைவன் எங்கும் இருப்பதை நாம் உணர முடிந்தாலும் அவ்வாறு இறைவன் பொருந்தி இருக்கும் சுவட்டினை நாம் காண முடியாது என்ற செய்தியைத் தான் திருஞானசம்பந்தர் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். காட்டில் வாழ்பவர் என்றும், நாட்டினில் உறைபவர் என்றும், தக்க தருணத்தில் உடல்களிலிருந்து உயிர்களை பிரிக்கும் கொடிய தொழிலைச் செய்யும் காலனைத் தனது காலால் உதைத்து வீழ்த்தியவர் என்றும், நறுமணம் கமழும் திருநீற்றினைத் தனது உடலில் பூசியவர் என்றும் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ளவர் என்றும், தான் அனைத்துப் பொருட்களிலும் கலந்து நிற்கும் தன்மையை எவரும் அறிய முடியாத வண்ணம் சுவடு ஏதும் வைக்காதவர் என்றும் அடியார்கள் அவரை குறிப்பிடுகின்றனர். எத்தனை புகழ்ச் சொற்கள் உள்ளனவோ அத்தனைப் புகழ்ச் சொற்களையும் பயன்படுத்தி வேதங்களால் புகழ்ந்து பேசப்படும் இறைவன் வேதத்தின் பொருளாகவும் உள்ளார். இத்தகைய தன்மையைக் கொண்டுள்ள இறைவன் பந்தணைநல்லூர் தலத்தினில் பசுபதியாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடுந்தொழில் காலனைக் காலால்

வீட்டினார் எனவும் சாந்த வெண்ணீறு பூசியோர் வெண்மதி சடை மேல்

சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல்லுள சொல்லு நால் வேதப்

பாட்டினர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

சமணர்களின் சூழ்ச்சியால், பல்லவ மன்னன் அப்பர் பிரான் மீது மதம் கொண்ட யானையை ஏவி, அவரது தலையை இடறச் செய்வதற்கு முயற்சி செய்த தருணத்திலும் கலங்காமல் இருந்த அப்பர் பிரான், அப்போது இறைவனின் திருக்கோலத்தை நினைத்தவாறு அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.2.1)பெருமானை வெண் சாந்து அணிந்தவனாக காண்கின்றார். சாந்து என்ற சொல் இரண்டு சொற்களுக்குப் பொதுவாக வருகின்றது. சுண்ணவெண் சாந்து மற்றும் சந்தனச் சாந்து என்றும் பொருள் கொள்ளவேண்டும் என்று விளக்கம் பொதுவாக அளிக்கப்பட்டாலும், சுண்ண வெண் சந்தனச் சாந்து என்ற தொடர் திருநீற்றினை மட்டுமே குறிப்பதாக பொருள் கொள்வது சிறப்பாக கருதப் படுகின்றது. வெண்பொடி என்று அழைக்கப்படும் திருநீற்றினை நறுமணம் வீசும் சந்தனச் சாந்தாக பாவித்து பெருமான், தனது மார்பினில் அணிந்து கொண்டார் என்று பொருள் கொள்வதே சிறப்பு. வெண் சாந்து=வெள்ளை நிறமுடைய திருநீறு. தமர்=அடியவர். அகலம்=மார்பு, சுண்ணம்=பொடி, முரண்=போர்க்குணம் மிகுந்த. உரிவையுடை=உரித்துத் தனது உடலின் மேல் போர்த்துக் கொண்ட போர்வை, வண்ண உரிவை என்பதால் புலியின் தோலை குறிப்பதாக கொள்ளவேண்டும். திண்மை=வலிமை, இங்கே நதியின் தன்மையை குறிப்பதால், அகன்ற கெடில நதியைக் குறிக்கின்றது. அரண் முரண் ஏறு என்பதற்கு சிவபிரானை அடைந்தவர்க்கு அரணாகவும் அடையாதவர்க்கு முரணாகவும் இருக்கும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்

சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்

வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்

அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்

திண் நல் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

திருநீற்றினை விலையிலி சாந்தம் என்று அப்பர் பிரான் ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.8.9) குறிப்பிடுகின்றார். சந்தனம் மிகவும் விலை உயர்ந்த பொருள் என்பதை நாம் அறிவோம். சிவபிரான், மலிந்து கிடப்பதும் மற்றவரால் ஒதுக்கப்படும் பொருட்களையே விரும்பி அணிபவர் என்பதால், சுடுகாட்டில் கிடைக்கும் சாம்பலையே திருநீறாக அணியும் பெருமானின் தன்மை இங்கே கூறப்பட்டுள்ளது. எருக்கு, கொன்றை, எலும்பு மாலை, பாம்பு, ஆகியவை போன்று மற்றவர்கள் விலக்கும் பொருட்களை பெருமான் விரும்பி ஏற்றுக்கொள்வது போன்று, திருநீறும் இறைவனால் விரும்பப்பட்டு உடல் முழுவதும் பூசிக் கொள்ளப் படுவதால் விலையிலி சந்தனம் என்று திருநீற்றினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். வடநாட்டில் பாயும் கங்கை நதி இங்கே வடகங்கை என்று அழைக்கப் படுகின்றது. உமையம்மை மற்றும் கங்கை இருவருக்கும் மணவாளராக சிவபெருமான் இருக்கும் தன்மையும் குறிப்பிடப் பட்டுள்ளது. வேட விகிர்தர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, வேடுவக் கோலம் தாங்கி அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளியதை குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

மலை மட மங்கையோடும் வடகங்கை நங்கை மணவாளராகி மகிழ்வர்

தலை கலனாக உண்டு தனியே திரிந்து தவவாணராகி முயல்வர்

விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்

அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே

சடையனார் என்றும் சாந்த நீற்றர் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் தில்லைச் தலத்தின் மீது அருளப்பட்ட பாடலாகும் (4.22.3). சடையன்,சடையனார் என்பது ஒப்பற்ற சடையினைக் கொண்ட சிவபெருமானுக்கு மட்டுமே உரித்தான பெயர். சிவபெருமானின் சடை பல சிறப்புகளை உடையது.கடல் போல் பாய்ந்து வந்த கங்கை நீரினை ஏற்றுத் தேக்கிய சடை; அழிந்து தேய்ந்த நிலையில் தன்னை வந்து சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்த சடை; பல விதங்களிலும் வேறுபாடு கொண்ட தண்ணீர், சந்திரன், பாம்பு ஆகிய மூன்றினையும் ஏற்றுக்கொண்டு, மூன்றினையும் ஒருங்கே வைத்த சடை. இத்தகைய சிறப்புத் தன்மைகள் மற்றவர்களின் சடைக்கு இல்ல என்பதால், சடையன் என்பது சிவபெருமானுக்கே உரித்த பெயராகும்.தனிநிலா=ஒப்பற்ற நிலா; சாந்தம்=சந்தனம். மற்றவர்கள் வாசனை பொருந்திய சந்தனத்தை உடலில் பூச, அவர்களிலிருந்து மாறுபட்டவரான சிவபெருமான்,திருநீற்றினை சந்தனம் என்று பூசிக் கொள்வதாக அப்பர் பிரான் இங்கே சொல்கின்றார். பெருமானின் எளிமையான திருக்கோலம் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

சடையனார் சாந்த நீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னிச்

உடையனார் உடைதலையில் உண்பதும் பிச்சை ஏற்றுக்

கடி கொள் பூந்தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே

அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.24.3) அப்பர் பிரான், நிலவு போன்று வெண்மை நிறத்தில் உடைய திருநீற்றினை,நறுமணம் கமழும் சந்தனமாக கருதி பூசிக் கொள்பவர் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். கொப்பளித்த பாதம்=தழும்பினை உண்டாக்கும் வண்ணம் இடைவிடாது இடபத்தின் மீது பெருமான் அமர்ந்து செல்லும் நிலை உணர்த்தப் படுகின்றது. கொப்பளித்த=பொருந்திய; அடையும்=சென்று சேரும் தன்மை;தக்கனிடம் கொண்டிருந்த அச்சம் காரணத்தால், சந்திரனுக்கு அவனிட்ட சாபத்தை மாற்றும் விருப்பம் இல்லாதவர்களாக பிரமனும் மற்ற தேவர்களும் இருந்த பின்னணியில், பெருமான் சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்ததை, தேவர்கள் புகழ்ந்தனர் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த

சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண்ணீறு பூசி

உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்தென்றும்

அடையும் கொப்பளித்த சீரார் அதிகை வீரட்டானாரே

திருநீற்றினை சாந்தமாகக் கொண்டவன் பெருமான் என்று மீயச்சூர் இளங்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (5.11.7) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பைங்கொன்றை=பசிய கொன்றை மலர்கள், புத்தம்புதிய கொன்றை மலர்கள்; தார்=மாலை; இடம்=நேரம், தகுந்த நேரம்

படைகொள் பூதத்தன் பைங்கொன்றை தாரினன்

சடைகொள் வெள்ளத்தன் சாந்த வெண் நீற்றினன்

விடைகொள் ஊர்தியினான் திரு மீயச்சூர்

இடை கொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே

திருவீழிமிழலை தலத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.12.2) அப்பர் பிரான் பெருமானை நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார் என்று குறிப்பிடுகின்றார்.இந்த தலத்தில் ஆதிரைத் திருநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் தன்மையை அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். அனைவரையும் வெற்றி கொள்ளும் வல்லமை படைத்த ஈசனின் கொடி என்பதால் வெல்கொடி என்று சிறப்பித்து சொல்வதை நாம் உணரலாம். விரவுதல் என்றால் கலத்தல் என்பது பொதுவான பொருள்; இங்கே பூசிக்கொள்ளுதல் என்று பொருள் கொள்வது பொருத்தம். ஏனைய கொடிகளை வென்று வெற்றி வாகை சூடும் இடபக்கொடியினை உடையவன். இறைவன்; அவன் நிறைந்த திங்களைத் தனது சடையில் சூடியுள்ளான்; இந்த தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் ஆதிரைத் திருநாள் அன்று, எப்போதும் திருநீற்றினை சந்தனமாக தனது உடலெங்கும் பூசிக்கொள்ளும் இறைவன் சாம்பலைத் தவிர்த்து, நறுமணம் மிகுந்த கஸ்தூரி புனுகு ஆகிய வாசனைப் பொருட்களை பூசிக் கொண்டு வேறு கோலத்தில் காட்சி அளிக்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஏற்று வெல்கொடி ஈசன் தன் ஆதிரை

நாற்றம் சூடுவர் நல் நறும் திங்களார்

நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்

வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.24.9) அப்பர் பிரான் பெருமானை, சாந்த வெண் நீற்றினர் என்று குறிப்பிடுகின்றார்,வேதத்தர்=வேதம் ஓதுபவர்; கீதத்தர்=இன்னிசைப் பாடல்களை பாடுபவர்; அல்கும்=சுருங்கும்; பூத கணங்களை தனது படை வீரர்களாக கொண்டவரும்,வேதங்களை விரும்பி ஓதுபவரும், இன்னிசை கீதங்களை விரும்பிப் பாடுபவரும், தனது சடையில் கங்கை நீரினைத் தேக்கி அடைத்தவரும்,வெண்ணீற்றினை நறுமணம் மிகுந்த சந்தனமாக பாவித்துத் தனது உடல் முழுவதும் பூசிக் கொள்பவரும், புலித்தோலினை தனது உடையாக உகந்து ஏற்றுக் கொண்டவரும், ஆகிய பெருமான் திருவொற்றியூர் தலத்தில் உறைகின்றார். அவரை அடைந்து அவரது திருவடிகளை வணங்கும் அடியார்களின் வினைகள் சுருங்கிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;

படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்

சடைகொள் வெள்ளத்தர் சாந்த வெண் நீற்றினர்

உடையும் தோலும் உகந்தார் உறை ஒற்றியூர்

அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே

சாந்த வெண்ணீறணி அழகர் என்று பெருமானை திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.52.8) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.சாந்தம்=சந்தனம்; ஏனையோர் நறுமணம் வீசும் சந்தனத்தை விரும்பி உடல் முழுவதும் பூசிக் கொள்வது போன்று, திருநீற்றினை இறைவன் தனது உடல் எங்கும் பூசிக் கொள்ளும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பொதுவாக பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வயது முதிர்ந்தவராகவும் மாணவர்கள் இளைஞர்களாக இருக்கும் நிலையையே நாம் எங்கும் காண்கின்றோம். பெருமான் இந்த விதத்திலும் மற்றவரிடமிருந்து மாறுபட்டவராக, இருப்பதை நாம் காண்கின்றோம். பாடம் கேட்ட சனகாதி முனிவர்கள் முதியவராக காணப்பட, அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் பெருமான் மிகவும் இளையவராக இருக்கும் நிலையை நாம் பல திருக்கோயில்களில் உள்ள சிற்பங்களில் காண்கின்றோம், இந்த நிலையை உணர்த்தும் பொருட்டு, இளமையுடன் அழகாக விளங்கும் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

கழல் கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்

தழல் கொள் மேனியர் சாந்த வெண்ணீறு அணி

அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய

குழகர் போல் திரு நாகேச்சரவரே

திருப்புன்கூர் மற்றும் திருநீடூர் தலங்களின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.11.6) அப்பர் பிரான், வேறு எவரும் பூசிக்கொள்ள விரும்பாத சுடுகாட்டுச் சாம்பலை, சந்தனமாக கருதி பூசிக் கொள்பவர் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். பூணலாப் பூண்=எவரும் அணிய முடியாத அணிகலன், கொடிய விடம் கொண்டு படம் எடுத்தாடும் பாம்பினை அணிகலனாக உடலில் பூணும் வல்லமை உடையவன் சிவபெருமான் ஒருவனே என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊணலா ஊணான்=தான் உண்பதற்காக அன்றி பிச்சை எடுப்பவன்; பிச்சை எடுத்த உணவினை உண்ணாதபோது அவன் எதற்காக பிச்சை எடுக்கவேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கை. இறைவன் பிச்சை எடுப்பதே, தான் வாழ்வதற்கன்றி என்பதையும், உலகத்தவர்கள் தங்களது ஆணவம்,கன்மம், மாயை ஆகிய மலங்களை பிச்சையாக இறைவனிடம் சமர்ப்பித்து தாங்கள் உய்வதற்காகத் தான் என்பதையும் பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன.

பூணலாப் பூணானைப் பூசாச் சாந்தம் உடையானை முடைநாறும் புன்கலத்தில்

ஊணலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளிதிகழும் மேனியானைச்

சேணுலாம் செழும்பவளக் குன்று ஒப்பானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோகனை

நீணுலா மலர்க்கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையாவாறே

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.83.10.) அப்பர் பிரான் சாந்தம் என்று கருதி திருநீறு அணிந்த பெருமானின் மலை கயிலை மலை என்று குறிப்பிடுகின்றார். பாந்தள்=பாம்பு; ஏந்து=உயர்ந்த; தாள் என்ற சொல் இங்கே கால் விரலை குறிக்கும்; சாந்தம்=சந்தனம்;

வேந்தன் நெடுமுடி உடைய அரக்கன் கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடிச்

சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பைத் தடக் கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி

ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன் தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட

பாந்தள் சடைமுடி எம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.19.4) சுந்தரர், பெருமான் உவகையுடன் ஏற்றுக்கொள்ளும் பொருட்கள் எவையெவை என்று பட்டியல் இடுகின்றார். வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்தவரும், வலிமை வாய்ந்த இடபத்தை வாகனமாக விரும்பி ஏற்றவரும், ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும், பகீரதனுக்கு அருள் புரியும் பொருட்டு கங்கை நதியினைத் தனது சடையில் விரும்பி ஏற்றவரும், முப்புரி நூலை விரும்பி அணிபவரும், பூசிக் கொள்கின்ற சந்தனமாக திருநீற்றினை மிகுந்த விருப்பத்துடன் தனது திருமேனியில் பூசியவரும் ஆகிய பெருமான், நால்வேதங்களை ஓதியவாறு எங்கும் நிறைந்து காணப்படும் பெருமான், எழுந்தருளியுள்ள இடம் திருநின்றியூர் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். கங்கை தன்னை வேறு உகந்தார் என்று கூறுவது சற்று சிந்திக்கத் தக்கது. பெருமான் தனது உடலினில் உமை அன்னையையும் சடையினில் கங்கை நங்கையையும் ஏற்றுக் கொண்டுள்ள தன்மையை நாம் அறிவோம். அருளே வடிவமாக விளங்கும் உமையன்னையைத் தனது உடலில் பெருமான் ஏற்றுக் கொண்டது பொதுவாக உயிர்களுக்கு அருள் புரியும் நோக்கத்தை உடையது. கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டது, பகீரதனுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் என்பதால், உமை அன்னையை ஏற்றுக் கொண்டுள்ள நோக்கத்திலிருந்து மாறுபட்டது என்பதை உணர்த்தும் வண்ணம் வேறு உகந்தார் என்று சுந்தரர் கூறுகின்றார். மேலும் உமையன்னை, தவ்மிருந்து பெருமானின் உடலில் தான் இருக்கும் பேற்றினைப் பெற்றாள். ஆனால் கங்கை நதியின் ஆணவத்தை அடக்குவதற்காக, மிகுந்த வேகத்துடன் வானிலிருந்து மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய நதியினைத் தாங்கி தனது சடையினில் ஏற்றுக் கொண்டவர் பெருமான். எனவே உமை அன்னை மற்றும் கங்கை நதி ஆகிய இருவரும் பெருமானுடன் இணைந்து இருப்பதன் காரணங்கள் அடிப்படையில் வேறானவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். கங்கை நதியினை ஏற்ற செய்கையும் பின்னர், பாரத நாட்டின் ஒரு பகுதி செழிப்புடன் விளங்க கங்கை நதி,உதவுவதையும் நாம் இங்கே நினைக்கவேண்டும்.

ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்குமாகி அடல்

ஏறு உகந்தார் இசை ஏழு உகந்தார் முடிக் கங்கை தன்னை

வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தமதா

நீறு உகந்தார் உறையும் இடமாம் திரு நின்றியூரே

பெருமானின் எளிய தன்மையை குறிப்பிட்டு, பெருமானே ஏன் உனக்கு வேறு பொருட்கள் கிடைக்கவில்லையோ என்று நகைச்சுவையாக குறிப்பிடும் ஒரு பாடலில் (7.44.2) சுந்தரர் திருநீற்றினைத் தவிர்த்து உமக்கு நறுமணம் வீசும் பொருள் ஏதும் பூசிக் கொள்வதற்கு கிடைக்கவில்லையா என்று கேட்பதை நாம் இந்த பாடலில் காணலாம். தூறு=காடு;

தூறு அன்றி ஆடரங்கு இல்லையோ சுடலைப் பொடி

நீறன்றி சாந்தம் மற்றில்லையோ இமவான் மகள்

கூறன்றிக் கூறு ஆவது இல்லையோ கொல்லைச் சில்லை வெள்

ஏறு அன்றி ஏறுவதில்லையோ எம் பிரானுக்கே

திருமுருகன்பூண்டி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.49.9) தன்னந்தனியாக காட்டில் இருப்பது பெருமானுக்கு ஆபத்து அல்லவா என்று பரிவுடன் கேட்கும் பாடலில், திருநீற்றினை சந்தனமாக பூசிக் கொண்டு எளிய தோற்றத்துடன் பெருமான் இருப்பதை சுந்தரர் குறிப்பிடுகின்றார். தனது தோழன் சேரமான் பெருமான் அளித்த எண்ணற்ற பரிசுப் பொருட்களுடன் சுந்தரர் திருவாரூருக்கு திரும்பிச் செல்லும் வழியில் வேடுவர்கள் சுந்தரரின் பரிசுப் பொருட்களை கொள்ளையடித்த பின்னணியில், தன்னந்தனியாக பெருமான் வீற்றிருப்பது அவருக்கு கவலை அளிக்கவே, பெருமானின் நிலை கண்டு கவலை கொண்டு பெருமான் பால் பரிந்து, பெருமானே வழிப்பறிக் கொள்ளையர் நிறைந்த இந்த காட்டினில் பலவிதமான நகைகளைத் தனது மார்பினில் தாங்கிய உமையன்னையுடன் பாதுகாப்பு ஏதுமின்றி தனியாக ஏன் வீற்றிருக்கின்றீர் என்று கவலையுடன் கேட்கின்றார். தனக்குத் தோழனாக இருந்து பல சமயங்களில் உதவி செய்த பெருமானின் நிலை கண்டு சுந்தரர் கவலை கொள்வது இயற்கை தானே. பின்னர் தான், சுந்தரருக்கு, தான் கொண்டுவந்த செல்வத்தை. பூதகணங்கள் மூலம் கொள்ளையடிக்கச் செய்தது பெருமானின் திருவிளையாடல், என்பது புரிகின்றது.

சாந்தமாக வெண்ணீறு பூசி வெண் பல் தலைக் கலனா

வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து உகந்தீர்

மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மாநகர் வாய்

ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம் பிரானீரே

திருவாசகம் அன்னைப்பத்து பதிகத்தின் பாடலில் (8.17.8) மணிவாசகர் சந்தனச் சாந்தினர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். தலைவியின் பேச்சுகளையும் செய்கைகளையும் உற்று கவனித்த தோழியின் கூற்றாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம். தலைவியின் போக்கினில் மாற்றத்தை உணர்ந்த அவளது தாய், அந்த மாற்றத்திற்கு காரணம் யாது என்பதை அறியமுடியாதவளாக இருக்கின்றாள். அதன் காரணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் அவள், தலைவியின் தோழியை அணுக, அந்த தோழி, தலைவியின் நடவடிக்கை மூலம் தான் அறிந்து கொண்ட தகவல்களை, தலைவியின் தாய்க்கு உணர்த்துவதால், மிகவும் பொருத்தமாக இந்த பதிகத்திற்கு அன்னைப் பத்து என்ற தலைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. தாளி அறுகு=அறுகம்புல்;மிகவும் எளிமையாக அறுகம்புல் மாலையினை அணிந்து கொள்ளும் பெருமான், நறுமணம் வீசும் சந்தனத்தை பூசிக்கொண்டுள்ளார் என்று சொல்வது பொருத்தமாக காணப்படவில்லை. எனவே, திருநீற்றினை சந்தனமாக பாவித்து பெருமான் அணிந்து கொண்டுள்ளார் என்று பொருள் கொள்வதே பொருத்தமாக உள்ளது. எளிமையான கோலத்துடன், அறுகம்புல் மாலையை அணிந்து கொண்டு, திருநீற்றைனை பூசிக் கொண்டுள்ள பெருமான், தனது உள்ளத்தைக் கவர்ந்து ஆட்கொண்டார் என்று சொல்லும் மணிவாசகநாயகி, பெருமான் தனது கையினில் தாளம் ஏந்தியவாறு காணப்பட்டதாகவும் சொல்கின்றாள் என்று தோழி இங்கே உணர்த்துகின்றாள். மிகவும் எளிமையான கோலத்துடன் காணப்படும் பெருமான், வேறெதிலும் நாட்டம் கொள்ளாமல் வேத கீதங்களை தாளத்துடன் இசைத்துப் பாடும் பொருட்டு, தாளம் ஏந்தியதாக குறிப்பிடுகின்றாள் போலும்.

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்

ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்

ஆளெம்மை ஆளும் அடிகளார் தம் கையில்

தாளம் இருந்தவாறூ அன்னே என்னும்

பொழிப்புரை:

கங்கை நதி தேக்கப்பட்ட சிவந்த சடையினை உடைய பெருமானே, திருநீற்றினை நறுமணம் தருகின்ற சந்தனமாக பாவித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் உடலில் பூசிக் கொண்டவரே, வலது கையினில் வெண்மழு ஆயுதத்தை ஏந்திய வண்ணம் மயானத்தில் நடனம் ஆடுபவரே, இந்த தலத்தினில் உள்ள இல்லங்களில் வாழும் மறையோர்கள் நான்கு மறைகளையும் இனிமையான பண்களுடன் இசைத்து, இறைவனைப் போற்றி பாட, இடைமருது தலத்தினில் உள்ள ஞானமயமான திருக்கோயிலை, தலைவனாகிய தான் வாழும் இடமாக நீர் ஏற்றுக்கொண்டு பொலிவுடன் விளங்குகின்றீர்.

பாடல் 7:

புனமல்கு கொன்றையீர் புலியின் அதளீர் பொலிவார்ந்த

சினமல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர்

இனமல்கு நான்மறையோர் ஏத்தும் சீர்கொள் இடைமருதில்

கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே

விளக்கம்:

புனம்=காடு, கொல்லை; செய்யீர்=சிவந்த திருமேனி உடையவர்; இனம்=கூட்டம்; கனம்=மேகம்; மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்த கோபுரத்தை உடைய திருக்கோயில் என்று திருஞான சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். சீர்= சிறப்பு; அதள்=தோல்;

பொழிப்புரை:

காடுகளில் மிகுதியாக வளரும் கொன்றை மலர்களைச் சூட்டிக்கொள்பவரும், புலித்தோலை ஆடையாக உடுத்துபவரும், அழகியதும் பெருமை வாய்ந்ததும் சினம் மிகுந்ததும் ஆகிய எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவரும், சிவந்த திருமேனி உடையவரும், ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவரும் ஆகிய பெருமானே, நீர், நான்மறைகள் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் கூட்டமாக ஒன்றுகூடி உமது சிறப்பினைப் பாடும் வண்ணம், சிறப்பு வாய்ந்த இடைமருது தலத்தினில், மேகம் தவழும் வண்ணம் உயர்ந்த கோபுரம் உடைய திருக்கோயிலை, தலைவனாகிய நீர் உறைகின்ற இருப்பிடமாகக் கொண்டு, அதனுடன் கலந்து வாழ்கின்றீர்.

பாடல் 8:

சிலையுய்த்த வெங்கணையால் புரமூன்று எரித்தீர் திறலரக்கன்

தலை பத்தும் திண்டோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர்

இலை மொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில்

நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே

விளக்கம்:

உய்த்த=செலுத்திய; மொய்த்த=அடர்ந்த; தண் பொழில்=குளிர்ந்த சோலை; நலம் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள் கொண்டு, அழகு மிகுந்த கோயில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அடியார்களுக்கு நலங்கள் பயக்கும் கோயில் என்பதும் பொருத்தமான பொருளாகும்.நயத்தல்=விரும்புதல்;

பொழிப்புரை:

மேரு மலையினை வளைத்து செய்யப்பட்ட வில் கொண்டு செலுத்தப்பட்ட தீப்பொறிகள் கக்கும் அம்பினால், வானில் எப்போதும் பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவரே, வலிமை வாய்ந்த அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் திரண்ட இருபது தோள்களும் கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நெரியும் வண்ணம் செய்தவரே, தையலாள் உமையன்னையை தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்ட பெருமானே, அடர்ந்த இலைகள் கொண்டு செழிப்பாக வளரும் மரங்கள் நிறைந்த சோலைகளும் வயல்களும் சூழ்ந்த இடைமருது தலத்தினில் உள்ள, அழகு மிகுந்ததும் அடியார்களுக்கு நன்மை பயப்பதும் ஆகிய திருக்கோயிலை, தலைவனாகிய தான் உறைகின்ற இடமாக விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளீர்.

பாடல் 9:

மறைமல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர்

கறைமல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்து கையினீர்

அறைமல்கு வண்டினங்கள் ஆலும் சோலை இடைமருதில்

நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்த்தீரே

விளக்கம்:

மல்கும்=மிகுதியாக, இங்கே எப்போதும் வேதங்கள் ஓதிக் கொண்டிருக்கும் பிரமனின் தன்மை உணர்த்தப் படுகின்றது. அறை மல்கு=அதிகமான ஓசை எழுப்பி; ஆலும்=ரீங்காரம் இடுகின்ற; நிகழ்தல்=விளங்குதல்;

பொழிப்புரை:

எப்போதும் வேதங்கள் ஓதியவாறு படைப்புத் தொழிலில் ஈடுபடுகின்ற நான்முகனும், திருமாலும் அறிய முடியாத வண்ணம் நெடிய தீத்தழலாக தோன்றியவரே,ஆலகால விடத்தினை தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவரே, பிரம கபாலம் கையினில் ஏந்திய வண்ணம் பல இடங்களிலும் திரிந்து பலி ஏற்கும் பெருமானே, மிகுதியாக நல்லிசையாம் ஓசை எழுப்பிய வண்ணம் வண்டினங்கள் ரீங்காரம் எழுப்பும் சோலைகள் நிறைந்த இடமருது தலத்தின் நிறைவான திருக்கோயிலை, தலைவனாகிய தான் உறைகின்ற இடமாக, நீர் தேர்ந்தெடுத்து விளங்குகின்றீர்

பாடல் 10:

சின்போர்வைச் சாக்கியரும் மாசு சேரும் சமணரும்

துன்பாய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே

இன்பாய அந்தணர்கள் ஏத்தும் ஏர்கொள் இடைமருதில்

அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே

விளக்கம்:

சின்=அற்பமான; ஏர்=அழகு; சாக்கியருமாசு என்ற தொடரினை, சாக்கியரும் ஆசு என்று பிரித்து, குற்றங்கள் சேரும் சமணர்கள் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. தங்களது மதத்தினை பரப்பும் முயற்சியில், சமணர்கள் எத்தகைய கொடிய வழிகளை கையாண்டனர் என்பதை நாம், திருநாவுக்கரசர்,தண்டியடிகள் மற்றும் நமிநந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றினில் காண்கின்றோம். இந்த காரணத்தால், குற்றங்களை சேர்த்துக் கொள்ளும் சமணர்கள் என்று குறிப்பிட்டார் போலும். அதற்கு மாறாக சைவர்கள், அன்பினை தங்களது வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ்ந்தமை, அன்பாய கோயில் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

அற்பமான துவராடையினைத் தங்களது உடலில் போர்த்துக் கொள்ளும் புத்தர்களும், நீராடுவதைத் தவிர்ப்பதால் அழுக்கு சேர்ந்த உடலினை உடையவர்களும் குற்றமுடைய செயல்கள் செய்யும் சமணர்களும், அடுத்தவரின் மனங்களை வருத்தும் வண்ணம் இட்டுக்கட்டிய கட்டுரைகளை,சிவபெருமானை குறித்து ஆதாரமற்ற பழிச் சொற்களை அள்ளி வீசிய சொற்களை தவிர்த்து, அழியாத முக்தி இன்பம் பெறுகின்ற வழியில் இறைவனை வழிபடும் அந்தணர்கள் புகழ்ந்து போற்றுகின்ற அழகிய இடைமருது தலத்தினில் உள்ளதும் அன்பினை பரப்புவதும் ஆகிய திருக்கோயிலை, தலைவனாகிய தான் உறைகின்ற இல்லமாக ஏற்றுக்கொண்டு, பெருமானே, நீர் விரும்பி அமர்ந்துள்ளீர்.

பாடல் 11:

கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்

நல்ல அருமறையான் நற்றமிழ் ஞானசம்பந்தன்

எல்லி இடைமருதில் ஏத்து பாடலிவை பத்தும்

சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே

விளக்கம்:

எல்லி=இரவு; அருமறை=கற்பதற்கு அரிய நான்மறைகள்; இடைமருது தலம் இதுதானோ என்று அனைத்துப் பாடல்களிலும் வினவியவாறு இடைமருது சென்று கொண்டிருந்த திருஞானசம்பந்தர், ஒரு இரவுப் பொழுதினில் இந்த திருக்கோயில் சென்றடைந்ததாக இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது.இந்த பதிகத்தின் பாடல்களில் திருக்கோயிலின் தன்மைகளை திருஞான சம்பந்தர் உணர்த்துவதால், இந்த தலம் சென்ற திருஞானசம்பந்தர் முதன்முதலில் திருக்கோயிலுக்கு சென்றார் என்பதையும் அப்போது இந்த பதிகம் அருளினார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். எல்லி என்ற சொல்லுக்கு ஒளி என்று பொருள் கொண்டு, ஒளி மிகுந்து பொலிவுடன் விளங்கும் இடைமருது தலம் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. இந்த பாடலில் காணப்படும் துயரம் என்ற சொல்லுக்கு, உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அடைகின்ற துயரம் என்று பொருள் கொண்டு, அந்த துயரம் தீர்க்கப்படும் என்று அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, இந்த பதிகத்தினை ஓதுவோரும் கேட்போரும், பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

கற்கள் கொண்டு கட்டப்பட்ட அழகிய மாடவீடுகளை உடைய கழுமலம் நகரின் காவலனாக, தலைவனாக விளங்கிய ஞானசம்பந்தன், நன்மை தருவதும் கற்பதற்கு அரியதும் ஆகிய நான்கு மறைகளையும் கற்றவனும் தமிழ் மொழியில் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன், ஒரு இரவுப் பொழுதினில் இடைமருது தலத்து திருக்கோயில் வந்தடைந்து, தலத்து இறைவனைப் புகழ்ந்து பாடிய இந்த பத்து பாடல்களையும் முறையாக சொல்வோரும் அவ்வாறு சொல்லப்படுவதை கேட்போரும், இம்மையில் தங்களது வாழ்வினில் துயரம் என்பதே இல்லாதவர்களாகவும் மறுமையில் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டவர்களாக நிலையான முக்தி உலகினில் நிலைத்து இருப்பார்கள்.

முடிவுரை:

இந்த பதிகம் பாடப்பட்ட சூழ்நிலையை பதிகத்தின் கடைப்பாடல் நமக்கு உணர்த்துகின்றது. இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் திருக்கோயிலின் தன்மை உணர்த்தப்பட்டு, நமது தலைவனாகிய பெருமான் தான் உறைகின்ற இடமாக இந்த திருக்கோயிலைத் தேர்ந்தெடுத்த செயலும் சொல்லப்பட்டுள்ளது. வானளாவ உயர்ந்த கோயில் என்று முதல் பாடலிலும், சிறப்பு வாய்ந்த கோயில் என்று இரண்டாவது பாடலிலும், சோலைகள் நிறைந்த தலத்தினில் உள்ள கோயில் என்று மூன்றாவது பாடலிலும், உயிர்கள் சென்றடைந்து பயன் அடையவேண்டிய கோயில் என்று நான்காவது பாடலிலும், சிறப்பு வாய்ந்த இடைமருது தலத்தினில் பொருத்தமாக அமைந்துள்ள திருக்கோயில் என்று ஐந்தாவது பாடலிலும், அடியார்களின் ஞானத்தை வளர்க்கும் கோயில் என்று ஆறாவது பாடலிலும், பெருமை மிகுந்த கோயில் என்று ஏழாவது பாடலிலும், அடியார்களுக்கு நலங்கள் நல்கும் கோயில் என்று எட்டாவது பாடலிலும், நிறைந்த பெருமையினை உடைய கோயில் என்று ஒன்பதாவது பாடலிலும், அன்பு நெறியினை வளர்க்கும் கோயில் என்று பத்தாவது பாடலிலும் குறிப்பிடுகின்றார். பதிகத்தின் பாடல்களில் பெருமானின் பல தன்மைகளும் உணர்த்தப் படுகின்றன. சிறந்த அந்தணனாக சாமவேதம் ஓதும் பெருமானை,பல அந்தணர்கள் முறையாக வேத கீதங்கள் பாடி போற்றுகின்றனர் என்று முதல் பாடலிலும், நெற்றிக் கண் உடையவர் என்று இரண்டாவது பாடலிலும்,கையினில் தீச்சுடர் ஏந்திய வண்ணம் சுடுகாட்டினில் நடனம் ஆடுகின்றார் என்று மூன்றாவது பாடலிலும், எவராலும் அழிக்க முடியாத திரிபுரத்தவர்களின் கோட்டைகளை அழித்தார் என்று நான்காவது பாடலிலும், பெருமான் காவிரி நதியினில் நீராடும் சிறப்பினை உடையது தைப்பூச நன்னாள் என்று ஐந்தாவது பாடலிலும், திருநீற்றைனை சந்தனமாக பாவித்து தனது உடலில் பூசிக் கொண்டவர் என்று ஆறாவது பாடலிலும், ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவர் என்று ஏழாவது பாடலிலும், பெருமான் அரக்கன் இராவணனை அடக்கிய தன்மை எட்டாவது பாடலிலும், கபாலம் ஏந்தியவராக பல இடங்களிலும் திரிந்து பலியேற்று உயிர்களை உய்விப்பவர் என்று ஒன்பதாவது பாடலிலும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுவோரைத் தனது அடியார்களாகக் கொண்டவர் என்று பத்தாவது பாடலிலும் பெருமானின் தனித் தன்மைகளை இந்த பதிகத்து பாடல்களில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பதிகத்தின் கடைப் பாடல், இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்களும் அவ்வாறு ஒதப்படும் பதிகத்தினை கேட்போரும், தங்களது பிறவித்துயர் தீர்க்கப்பட்டு, இன்பம் அடைவார்கள் என்று கடைப்பாடல் நமக்கு உணர்த்துகின்றது. இந்த பதிகத்து பாடல்கள் மூலம் பெருமானின் தனிப்பெருமையை அறிந்து கொள்ளும் நாம், இந்த தலம் சென்றடைந்து, பெருமானைப் பணிந்து வணங்கி,இம்மை மற்றும் மறுமையில் இன்பங்கள் அடைவோமாக.



Share



Was this helpful?