இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பொன்னேர் தரு மேனியனே

பொன்னேர் தரு மேனியனே

பதிக எண்: 2.24 திருநாகேச்சரம் இந்தளம்

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருஞானசம்பந்தர் குடந்தை நகரில் உள்ள மூன்று தேவாரத் தலங்களுக்கும் சென்றார் என்று பெரியபுராணம் நமக்கு உணர்த்துகின்றது. பின்னர் குடந்தைக்கு அருகில் உள்ள பல தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர் அதன் பின்னர் நாகேச்சரம் தலம் சென்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். இந்த தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய இரண்டு பதிகங்கள் நமக்கு இதுவரை கிடைத்துள்ளன.திருஞானசம்பந்தர் இந்த தலம் சென்றதை இரண்டு பாடல்களில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் ஆர்வத்துடன் பெருமானைப் பணிந்து பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இன்பமடைந்தர் என்று கூறும் சேக்கிழார் அதற்கு அடுத்த பாடலில் நாள்தோறும் இறைவனைப் பணிந்துப் புகழும் அடியார்களின் பிணியினைத் தீர்க்கும் நாகேச்சரத்து இறைவன் என்று குறிப்பிடுகின்றார். உயிர்களுடன் பிணைந்துள்ள வினைகள் தாமே, உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து வெளியே செல்லாத வண்ணம் சிக்கவைத்து, மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு வழி வகுக்கின்றன. இந்த பிறவிப்பணி தானே,உயிர்களை வருத்தும் நோய்களில், நீக்கிக் கொள்வதற்கு மிகவும் அரிதாகவும் கொடுமையானதாகவும் விளங்குகின்றது. பல பரிமாணங்களில் வளர்ந்துள்ள இன்றைய விஞ்ஞானமும் நிரந்தரமாக இறப்பினைத் தடுப்பதற்கு வழி எதனையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லையே. இந்த பதிகத்தின் முதல் பாடலில் வினைகள் மாய்ந்துவிடும் என்றும், குற்றங்களாக விளங்கும் வினைகள் அழிந்துவிடும் என்றும் மூன்றாவது பாடலில் வினைகள் தேய்ந்து அறும் என்றும் வினைகளுடன் உயிர் கொண்டுள்ள தொடர்பு அறுந்துவிடும் என்று நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களிலும் வினைகளால் உயிர்கள் அடையும் துயரம் நீங்கிவிடும் என்று ஆறாவது பாடலிலும் வலிமை வாய்ந்த வினைகள் தாமே அறுந்துவிடும் என்று ஏழாவது மற்றும் எட்டாவது பாடல்களிலும் தீவினைகள் தேய்ந்து அறும் என்று பத்தாவது பாடலிலும் வினைகள் நில்லா என்று கடைப் பாடலிலும் திருஞானசம்பந்தர் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதால் உயிரினைப் பிணைத்துள்ள வினைகளையே பெரிய பிணியாக ஞானசம்பந்தர் கருதுகின்றார் என்பது புலனாகின்றது. இவ்வாறு இறைவன், அடியார்களின் வினைகளைக் களைந்து அருள் புரிவதையே நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலன் என்று சேக்கிழார் பெரியபுராணத்து பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் இந்த பாடலில் பால் மணம் வீசும் வாயினை உடையவர் என்று குறிப்பிட்டு, திருஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப் பால் ஊட்டிய நிகழ்ச்சியை நமக்கு சேக்கிழார் நினைவூட்டுகின்றார். இந்த காரணம் பற்றியே திருஞான சம்பந்தருக்கு பாலறாவாயர் என்ற பெயர் வந்தது. இந்த பெயரை சேக்கிழார் பெரிய புராணத்தின் எட்டு பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். ஆனால் திருஞானசம்பந்தர் இந்த பெயரினை எந்த பதிகத்திலும் தனது பெயராக குறிப்பிடவில்லை.

மாநாகம் அர்ச்சித்த மலர்கமலத் தாள் வணங்கி

நாணாநாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றிப்

பானாரும் மணிவாயர் பரமர் திரு இடைமருதில்

பூநாறும் புனல் பொன்னித் தடங்கரை போய்ப் புகுகின்றார்

பாடல் 1:

பொன் நேர் தரு மேனியனே புரியும்

மின்னேர் சடையாய் விரை காவிரியின்

நன்னீர் வயல் நாகேச்சுர நகரின்

மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே

விளக்கம்:

ஏர்=ஒத்த; பெருமானின் திருமேனி பொன் போன்று ஒளியுடன் மிளிர்கின்றது என்பதால் பெருமானின் திருமேனியை பொன்மேனி என்றும் பெருமானை பொன்னார் மேனியன் என்றும் எண்ணற்ற திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. பல திருமுறைப் பாடல்கள் பெருமானின் திருவடிகளை பொன்னடி என்றும், பெருமானின் சடையினை பொற்சடை என்றும் குறிப்பிடுகின்றன. பொன்னை நாம் உயர்ந்த பொருளாக கருதுகின்றோம். ஆனால் அருளாளர்கள் பெருமானை பொன்னை விடவும் உயர்ந்த பொருளாக கருதுவதால், பெருமானையே பொன் என்றும் பொன் ஒப்பவனே என்றும் அழைத்து மகிழ்கின்றனர்.இங்கே நாம் பெருமானின் திருமேனியை பொன்னுடன் ஒப்பிடும் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.49.1) பெருமானின் திருமார்பினை பொன்னகலம் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அகலம்=மார்பு; ஆகம்=மார்பு

போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்

பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பரமேட்டி

ஆகம் ஆர்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்

நாகம் ஆர்த்த நம் பெருமான் மேயது நள்ளாறே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.71.6) திருஞானசம்பந்தர், பெருமானை பொன் போன்ற ஒளி வீசும் திருமேனி உடையவர் என்று கூறுகின்றார். நிரை கொள் கொன்றை=அடுக்கடுக்காக, சரம் சரமாக பூக்கும் கொன்றை மலர்கள்; இதனை சரக்கொன்றை என்று அழைப்பார்கள்; தூண்டு சுடர்=தூண்டப்பட்டது போன்று மேலும் அழகுடன் ஒளிரும் சுடர்;

நீண்ட சடையர் நிரைகொள் கொன்றை விரைகொள் மலர் மாலை

தூண்டு சுடர் பொன்னொளி கொள் மேனிப் பவளத்து எழிலார் வந்து

ஈண்டு மாடம் எழிலார் சோலை இலங்கு கோபுரம்

தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச்சரத்தாரே

அறையணிநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.77.4) திருஞானசம்பந்தர் தனது பொன் மார்பினில் திருநீறு விளங்குமாறு பூசிய வேதியன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். உரவு=கடல்; உறுதி பேணுவது=அழியாமல் காத்தது; சடைக் கண்ணியார்=தலை மாலையாக உடையவர்; பாம்பினைத் தனது கழுத்தினில் மட்டுமன்றி, தலையிலும் மாலையாக பெருமான் பூண்டுகொண்டுள்ளார் என்று கூறுகின்றார்.

விரவு நீறு பொன்மார்பினில் விளங்கப் பூசிய வேதியன்

உரவு நஞ்சம் அமுதாக உண்டு உறுதி பேணுவது அன்றியும்

அரவு நீள் சடைக் கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர்

பரவுவார் பழி நீங்கிடப் பறையும் தாம் செய்த பாவமே

தென்திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.8) திருஞான சம்பந்தர், உரைத்து தரமாக உள்ளது என்று கண்டறியப்பட்ட பொன்னின் நிறத்தில் திருமேனி உடைய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வரை=மலை, கயிலைமலை; வலி=வலிமையான; உரை வந்த=உரைத்துத் தரமாக உள்ளது என்று கண்டறியப்பட்ட; தேறல்=தேன்; சென்னைக்கு அருகே உள்ள வடமுல்லைவாயில் தலத்திற்கு வேறானது என்பதை உணர்த்தும் வண்ணம், காவிரி நதியின் வடகரையில் உள்ள தலம் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம்.

வரை வந்தெடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய

உரை வந்த பொன்னின் உரு வந்த மேனி உமைபங்கன் எங்கள் அரனூர்

வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்

திரை வந்து வந்து செறி தேறல் ஆடு திருமுல்லைவாயில் இதுவே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.3) திருஞானசம்பந்தர் பெருமானின் திருமார்பினை பொன்மார்பு என்று குறிப்பிடுகின்றார்.கலி=ஆரவாரம்; கலி மறைக்காடு=அடியார்கள் மிகவும் அதிகமாக கூடுவதாலும் திருவிழாக்கள் அடிக்கடி நடப்பதாலும் ஆரவாரம் மிகுந்து காணப்படும் தலம்.பண்ணியாழ்=பண்+யாழ்; இனிய பண்களை வெளிப்படுத்தும் யாழ் இசைக்கருவி; இந்த தலத்தின் அம்பிகையின் திருநாமம் யாழின் மொழியம்மை; இதனை உணர்த்தும் வண்ணம், பண்ணியாழ் என முரலும் பணிமொழி உமை என்று கூறுகின்றார். பணிமொழி=அடக்கமாக மொழிகளை பேசுபவர்;

நுண்ணிதாய் வெளிதாகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில்

பண்ணி யாழ் என முரலும் பணிமொழி உமையொரு பாகன்

தண்ணிதாய வெள்ளருவி சலசல நுரைமணி ததும்பக்

கண்ணி தானுமொர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே

திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.111.7) திருஞானசம்பந்தர், பெருமானின், பாம்பணிந்த திருமார்பு பொன் போல மிளிர்கின்றது என்று கூறுகின்றார். பொன் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளும் உள்ளது. கடிபடு=நறுமணம் கமழும்; கண்ணியர்= மாலையை சடையில் அணிந்தவர்,பில்கும்=சிதறும்; கனமணி=பருத்த ரத்தினக் கற்கள்; மறுகு= வீதி; வடி=கூர்மை; பெருமானின் திருவடிகளில் தங்களின் தலைகளை வைத்து தேவர்கள் வணங்கும் போது, அந்த திருவடிகளின் ஒளியின் முன்னே எடுபடாது தேவர்களின் முடிகளில் உள்ள பலவகையான கற்களின் ஒளிகள் சிதறுகின்றன என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கனமணி சேர்

முடிபில்கும் இறையவர் மறுகின் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார்

பொடியணி வடிவொடு திருவகலம் பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்

வடிநுனி மழுவினொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.3) திருஞானசம்பந்தர், பொன்னியலும் திருமேனி என்று பெருமானின் திருமேனியை குறிப்பிடுகின்றார். சிந்தையின் நீங்க கில்லார்=சிந்தையிலிருந்து நீக்க முடியாமல் பெருமானை இடைவிடாது நினைக்கும் அன்பர்கள்; சுந்தார் நமச்சிவாயப் பதிகத்தின் பாடல்களில், நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்று சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. திருஞானசம்பந்தர் குறிப்பிடும் அடியார்கள் எப்போதும் இறைவனையே சிந்தித்த காரணத்தால், அவர்களால் தங்களது சிந்தையிலிருந்து இறைவன் பற்றிய நினைவுகளை நீக்கமுடியவில்லை என்று கூறுகின்றார் போலும். இயலும்= போன்ற; மன்னிய=நிலை பெற்ற பெருமை உடைய; உயர்வாம் என்ற சொல்லினை பிணி என்ற சொல்லுடன் இணைத்து, அனைத்துப் பிணிகளிலும் கொடியதாக, மிகவும் உயர்ந்ததாக கருதப்படும் பிறவிப்பிணி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொன்னியலும் திருமேனி தன்மேல் புரிநூல் பொலிவித்து

மின்னியலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவாட

மன்னிய மாமறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர் தம்மேல்

உன்னிய சிந்தையின் நீங்க கில்லார்க்கு உயர்வாம் பிணி போமே

அதிகை வீரட்டானம் தலத்தின் மீது பாடிய பதிகத்தின் பாடலில் (4.1.9) அப்பர் பிரான், பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் என்று பெருமானை அழைக்கின்றார். மெலியும் பிறை=தேய்ந்து ஒற்றைக் கலையுடன் நின்ற சந்திரன். புரிசடை=சுருண்ட சடை. புன்சடை=செம்பட்டை நிறத்தில் உள்ள சடை:பொன் போன்ற மேனியை உடையவரும், சுருண்டு செம்பட்டை நிறத்தில் உள்ள சடையினை உடையவரும், மெலிந்த நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனுக்கு அபயம் அளித்து அவனுக்கு வாழ்வு அளித்தவரும் ஆகிய சிவபெருமானே, கொடிய சூலை நோயினால் எனக்கு ஏற்பட்டுள்ள துன்பம் கவலை ஆகியவற்றைக் களைந்து அருள் புரிவீராக. என்னைப் போன்றவர்கள் உமது கருணையின் திறத்தை அறியாததால் தெளியாத நிலையில் உள்ளனர்.கவலைகள் மற்றும் துன்பங்களால் கட்டுண்டு இருக்கும் அடியார்களின் கவலைகளை, துன்பங்களை நீக்கினால் அவர்களும் தெளிவு அடைவார்கள்.உலகெங்கும் அன்பே நிலவும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர்

துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்

என் போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில்

அன்பே அமையும் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

பொன்மலை போன்று திரண்ட தோள்களை உடைய பெருமான் என்று அப்பர் பிரான், திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.04.08)கூறுகின்றார். பொன்வரை=மேரு மலை: ஆயிரம் என்ற சொல் எண்ணிக்கையற்ற என்ற பொருளில் இந்த பாடலில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இறைவன் சிவபெருமான் உண்மையில் உருவம் ஏதும் இல்லாதவனாக இருந்தாலும் அடியார்களின் தவத்திற்கும் அன்புக்கும் இரங்கி, பல வடிவங்களில் அவர்களுக்கு காட்சி அளித்திருக்கின்றான். பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்தில் அனைத்து இடங்களிலும் அவன் பரவி இருப்பதால், அவன் ஒரே சமயத்தில் பல இடங்களில் இருக்க முடிகின்றது. அவ்வாறு அவன் இருக்கும் நிலை, இறைவனுக்கு எண்ணற்ற கால்கள் இருப்பதால் போலும் என்ற சிந்தனை அப்பர் பிரானுக்கு வருகின்றது. அதே போன்று, ஆயிரம் கைகள் இருந்தாலும் நாம் செய்ய முடியாத காரியங்களை, இறைவன் அனாயாசமாக செய்கின்ற நிலை,அப்பர் பிரானுக்கு, இறைவனுக்கு எண்ணற்ற கைகள் இருக்கின்றன என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. இந்த எண்ணத்தைத் தான் ஆயிரம் தோளுடையான். ஆயிரம் சேவடியான் என்று இந்த பாடலில் வடிக்கின்றார்.

ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்

ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோளுடையானும்

ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடியானும்

ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.05.05) சிவபெருமான் தனது பொன் போன்ற திருமேனியில், தன்னை (அப்பர் பிரானை) புக வைத்ததாக கூறுகின்றார். பெருமானின் திருமேனி பற்றிய சிந்தனையில் தன்னை புகப்பெய்து, தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து அருள் புரிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். புகப்பெய்து=தூய்மையற்று இருந்த உடலையும் மனதினையும் தூய்மை செய்து; துன்னாகத்தேன் என்ற சொல்லை துன் ஆகத்தேன் என்றும் துன் நாகத்தேன் என்றும் இரண்டு விதமாக பிரித்து பொருள் கூறுவதுண்டு. துன் நாகத்தேன் என்று கொடிய பாம்பினை ஒத்தவன் என்றும் துன் ஆகத்தேன் என்று பயனின்றி பருத்த உடம்பினன் என்றும் பொருள் கூறுவதுண்டு. சமண சமயத்தில் இருந்து உடல் பருத்து இருந்தேன் என்று முந்தைய பாடலில் சொல்லி இருப்பதால், துன் ஆகத்தேன் என்று பிரித்து பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. துர்ச்சனவர்=தீயவர்கள்: ஜனம் என்ற வடமொழிச் சொல் சனம் என்று திரிக்கப்பட்டு, துர்ச்சனம் என்று கையாளப்பட்டுள்ளது. துவர்வாய்=துவர்ப்புச் சுவை உடைய கடுக்காயை உண்பதால் துவர் (கறை) படிந்த பற்களை உடையவர்: கடுக்காய் உண்ணுதலும், இரண்டு கைகளிலும், அடுத்தவர் இடும் பிச்சையை ஏற்று உண்பதும் சமணர்கள் வழக்கம்.ஆதன் என்றால் தொடர்பு ஏதும் இல்லாதவன்; பிறப்பால் சைவனாக இருந்ததால் சமணர்களோடு தொடர்பு ஏதும் இல்லாதவனாக இருந்த தான்,சமணர்களிடை அகப்பட்டு, அவர்கள் மற்ற மதத்தவருடன் தொடுத்த சண்டைகளில் அகப்பட்டு தான் துன்பம் அடைந்ததாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

துன் ஆகத்தேன் ஆகித் துர்ச்சனவர் சொல் கேட்டுத் துவர் வாய்க் கொண்டு

என் ஆகத் திரி தந்து ஈங்கு இருகை ஏற்றிட உண்ட ஏழையேன் நான்

பொன் ஆகத்து அடியேனைப் புகப் பெய்து பொருட்படுத்த ஆரூரரை

என்னகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே

பொன்னிறத்தில் காணப்படும் திருமேனியின் மீது வெண்ணீறு பூசியவண்ணம் காணப்படும் இறைவனை, பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல் பொலியும் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல், தில்லைப் பதிகத்தின் பாடலாகும் (4.81.3). உயிரின் வேட்கை இறைவனைச் சென்று அடைவது. இதனை புரிந்து கொள்ளாத நாம், உயிரின் விருப்பத்தை விட்டு விட்டு, இந்த உடலின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் நமது விருப்பங்களை இறைவனிடம் தெரிவிக்கின்றோம். இந்த உடலின் தேவைகள் அனைத்தும் நிலையற்றவை, ஒரு நாள் அழியக்கூடியவை. ஆனால் உயிர் விரும்பும் முக்தி நிலை, என்றும் அழிவற்றது, சற்றும் குறையாத பேரின்பத்தை கொடுக்க வல்லது. எனவே அந்த முக்தி நிலையை வேண்டிப் பெறாது, அழியும் தன்மை உடைய இன்பங்களையும் பொருட்களையும் வேண்டுவோரை கல்மனவர் என்று அப்பர் பிரான் சாடுகின்றார். தில்லையுள் உள்ள அடியார்கள் இறைவனிடம், நிலையற்ற பொருட்களை வேண்டாமல் முக்தி நிலை வேண்டுவதால், அவர்களை நல்மனவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.பேரின்பத்தைத் தரவல்ல சிவபெருமானிடம் சென்று சிற்றின்பத்தை யாசிப்பது, ஒரு பெரிய பணக்காரரிடம் சென்று பத்து காசுகள் யாசித்துப் பெறுவது போன்று நகைப்புக்கு உரியதல்லவா. அதனால் நமக்கு ஏற்படும் பயன் என்ன? ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியான் என்று மணிவாசகப் பெருமான் பாடியது போல், எப்போதும் சிவபிரானை நினைந்து உருகும் அப்பர் பிரானின் உள்ளத்தில் சிவபெருமான் புகுந்ததில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் அப்பர் பிரானும் அறியாத வகையில் அவரது மனத்தினுள்ளே புகுந்ததும் புகுந்த சுவடு காணப்படாததும், அப்பர் பிரானுக்கே வியப்பைத் தருகின்றது. அந்த வியப்பினை இந்த பாடலில் அப்பர் பிரான் தெரிவிக்கின்றார்.

கல் மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே

நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல பொலிந்திலங்கி

என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடில்லையே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (4.81.9) அப்பர் பிரான், பெருமானின் திருமேனியை பொன்னொத்த மேனி என்று குறிப்பிடுகின்றார். விடங்க வேடம்=உளியால் செதுக்கப் படாத வேடம், இயல்பான வேடம். பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு என்றும் பொன் மலையில் வெள்ளிக் குன்று என்றும் இறைவனின் திருமேனி வண்ணத்தை இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் விவரித்த அப்பர் பிரானின் மனதினை இந்தக் கோலம் கொள்ளை கொண்டு விட்டது போலும். தன் மனதினை விட்டு அகலாத அந்த கோலத்தை மறுபடியும் நம் கண் முன்னர் இங்கே கொண்டு வருகின்றார். சிவபிரானின் நடனத்தைக் கண்டு இன்புற்ற அப்பர் பிரான், இந்த நடனத்தால் ஈர்க்கப்பட்டவர் வேறு யார் யார் என்று யோசிக்கின்றார். உலகம் அனைத்தும் இந்த நடனத்தின் அழகால் கவரப்பட்டு இன்புற்று இருக்கும் நிலையினை உணர்கின்றார். அந்த தகவலை இங்கே பதிவு செய்கின்றார்.

பொன் ஒத்த மேனிமேல் வெண்ணீறு அணிந்து புரிசடைகள்

மின் ஒத்து இலங்கப் பலி தேர்ந்து உழலும் விடங்க வேடச்

சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என் அத்தன் ஆடக் கண்டு இன்புற்றதால் இவ்விருநிலமே

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய திருப்பதிகத்தின் பாடலில் (4.88.9) அப்பர் பிரான், தீயினில் சுட்டு வாட்டப்பட்டு தூயதாக மாற்றப்பட்ட செம்பொன்னின் நிறத்தில் திருமேனி உடைய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அந்தி=அந்தி மற்றும் சந்திப் பொழுது; இரண்டு வேறுபட்ட வேளைகள் சந்திக்கும் நேரம்;இரவும் பகலும் சந்திக்கும் விடியற்காலைப் பொழுதும், முன்பகலும் பின்பகலும் சந்திக்கும் நண்பகல் நேரமும், பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரமும்,சூரியனை வழிபடும் நேரங்களாக அந்தணர்களால் கருதப்பட்டு. அவர்கள் சூரியனை வழிபடுகின்றனர். ஆனால் அந்த சூரியனாக இருப்பது சிவபெருமான் தான் என்பதால், சிவபெருமானை அந்தி என்று திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன.

அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவரிய

செந்தியை வாட்டும் செம்பொன்னினைச் சென்று அடைந்தேனுடைய

புந்தியைப் புக்க அறிவினைப் பூந்துருத்தி உறையும்

நந்தியை நங்கள் பிரான் தனை நான் அடி போற்றுவதே

நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.103.7) அப்பர் பிரான் பெருமானை செம்பொன் மாமலை என்று குறிப்பிடுகின்றார்.சீர்மலி=சிறப்பு மிக்க செல்வம்: சுலவு=சூழ்ந்த: மாதிமை=பெருமை

சீர்மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மாமலையே

கார்மலி சோலை சுலவு கடல் நாகைக் காரோணனே

வார்மலி மென்முலையார் பலி வந்திடச் சென்று இரந்து

ஊர்மலி பிச்சை கொடு உண்பது மாதிமையோ உரையே

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.105.2) அப்பர் பிரான் பொன்னை வகுத்தன்ன மேனியன் என்று குறிப்பிடுகின்றார்.வகுத்த=செய்யப்பட்ட; தமியேன்=தனியேன்; பெருமானின் துணையின்றி, தான் தனியனாக ஐந்து புலன்களின் சேட்டையின் இடையே அகப்பட்டு தவிப்பதாக குறிப்பிட்டு, தான் உய்வினை அடைவதற்கு பெருமான் அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் இறைஞ்சுகின்றார். பல வகையான துன்பங்கள் வந்தடைந்து தன்னிடம் தங்குமாறு இறைவன் தன்னை படைத்துள்ளான் என்று குறிப்பிடுவதன் மூலம், தன்னைச் சூழ்ந்துள்ள பழவினைகளையும் குறிப்பிட்டு அத்தகைய வினைகளால் ஏற்படும் உலகியல் துன்பங்களிலிருந்து தன்னை விடுவித்து இறைவன் தனக்கு முக்தி நிலை தரவேண்டும் என்று வேண்டும் பாடல். புகலூர் தலத்தினில் அருளிய பதிகம், எண்ணுகேன் என்சொல்லி என்று தொடங்கும் பதிகம் தான் அப்பர் பிரான் தனது வாழ்வினில் இறுதியாக அருளிய பதிகம். இந்த பதிகம் பாடியவாறே இறைவனின் திருவடிகளைச் சென்றடைந்தார் என்று பெரிய புராணம் உணர்த்துகின்றது. இந்த பதிகம் பாடுவதற்கு முன்னம் பாடிய பதிகம் தான், கீழ்க்கண்ட பாடல் அடங்கிய பதிகம்: தன்னைச் சரணென்று தாளடைந்தேன் என்று தொடங்குகின்றது இந்தப் பதிகம்.

பொன்னை வகுத்தன்ன மேனியனே புணர் மென்முலையாள்

தன்னை வகுத்தன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய்

புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர் அரசே

என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.113.10) அப்பர் பிரான், முக்கண் முதல்வனாகிய பெருமானைத் தொழும் அடியார்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று கூறுகின்றார். எந்த விதமான இயற்கை சீற்றங்கள் தோன்றினும், அத்தகைய சீற்றங்களால் கலங்காமல் இருக்க வேண்டும் என்றால், பொன் நெடும் குன்றத்தைப் பற்றிக்கொண்டு இடர்களை வெல்லலாம் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். பொன் நெடும் குன்றம் என்று நீண்டு உயர்ந்த பெருமானின் திருவுருவம் குறிப்பிடப்படுகின்றது. கடுமையான பஞ்சம் ஏற்பட்டு உணவு பற்றாக்குறை இருந்த காலத்திலும், வீழிமிழலை தலத்து இறைவன்,அப்பர் பிரானுக்கும் திருஞானசம்பந்தருக்கும் பொற்காசுகள் தினமும் அளித்து, அவர்களைச் சார்ந்த அடியார்கள் உணவின்றி வாடாமல் காப்பாற்றிய நிகழ்ச்சி அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும். ஆகாயம் அசைதல், நிலநடுக்கம் ஏற்படுதல், மலைகள் இடம் பெயர்ந்து தடம் புரளுதல், கடல்நீர் வற்றி நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தும் மாய்தல், சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவை வானத்திலிருந்து கீழே விழுதல் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. ஆனால், இறைவனுக்கு ஆட்பட்ட உத்தமர்கள் இவற்றைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கல்=மலை: வெதும்புதல்=பசுமை குறைந்து சூடேறிக் கிடக்கும் நிலை:

கல் நெடுங்காலம் வெதும்பிக் கருங்கடல் நீர் சுருங்கிப்

பல் நெடுங்காலம் மழை தான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்றும்

என்னொடும் சூள் அறும் நெஞ்சமே இமையாத முக்கண்

பொன் நெடுங்குன்றம் ஒன்று உண்டு கண்டீர் இப்புகலிடத்தே

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.32.5) அப்பர் பிரான், செம்பொனே ஒக்கும் மேனியன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். உம்பர்=தேவர்கள்; செம்பொன்=அழகிய பொன்; ஆர்=பொருந்திய; சிவந்த பொன்னை ஒத்த நிறமுடைய திருமேனி கொண்டவனும்,நிலவுலகத்தில் பல தலங்களில் உறைபவனாக இருந்தாலும் தேவர்கள் வாழும் வானுலகத்தில் இருப்பவனாக இருந்தாலும், பொன்னும் செல்வமும் பெரிதும் உடைத்த பூந்துருத்தி நகரில் உறைபவனாக சிவபெருமான் விளங்குகின்றார். அடியார்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் பெருமானின் சிவந்த திருவடிகளின் கீழே இருந்து திருப்பணி செய்யும் வாய்ப்பினை அடியேன் பெற்றேன் என்று உணர்த்தும் அப்பர் பிரான், நாமும் அத்தகைய திருப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தூண்டும் பாடல்.

செம்பொனே ஒக்கும் மேனியன் தேசத்தில்

உம்பரார் அவரோடு இங்கு இருக்கிலும்

பொன்பொன்னார் செல்வப் பூந்துருத்தி நகர்

நம்பன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (5.61.9) அப்பர் பிரான், பொன்னை ஒக்கும் திருமேனி உடையவராக பெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். அன்னம்=சோறு; உண்டவரின் களைப்பினை ஆற்றி அவர்களது உடலுக்கு சக்தி அளிக்கும் உணவு போன்று,வருத்தத்துடன் தன்னை வந்து வணங்கும் அடியார்களின் வருத்தங்களைக் களைந்து இன்பம் அளிப்பவர் பெருமான் என்று கூறுகின்றார். பகைவர்களுக்கு நெருப்பு போன்று இருக்கும் பெருமான், தனது அன்பர்களுக்கு மிகவும் குளிர்ந்த மனத்தராய் இருக்கும் தன்மை இந்த பாடலில் கூறப்படுகின்றது. அன்னம் என்ற சொல்லுக்கு முக்தி உலகம் என்றும் பொருள் சொல்லப் படுகின்றது. அடியார்களுக்கு முக்தி அருள்பவராகத் திகழ்கின்றார் பெருமான் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே.

முன்னம் முப்புரம் செற்றனர் ஆயினும்

அன்னம் ஒப்பர் அலந்து அடைந்தார்க்கு எலாம்

மின்னும் ஒப்பர் விரிசடை மேனி செம்

பொன்னும் ஒப்பர் புத்தூர் எம் புனிதரே

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.79.4) அப்பர் பிரான், பெருமானை பொன்னுருவன் என்று அழைக்கின்றார்.மின்னுருவன்=மின்னல் போன்று ஒளி பொருந்திய மேனியை உடையவன்; ஒருவர்க்கு=திருமால், பிரமன் ஆகியோருக்கு;

தன்னுருவை ஒருவர்க்கு அறிவொணா

மின் உருவனை மேனி வெண் நீற்றனைப்

பொன் உருவனைப் புள்ளிருக்குவேளூர்

என்ன வல்லார்க்கு இல்லை இடர்களே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (5.93.6) அப்பர் பிரான், பொன்னைப் போன்ற திருமேனி உடையவன் பெருமான் என்று குறிப்பிடும் வண்ணம் பொன்னன் என்று அழைக்கின்றார். அருமையான சொல்லாட்சி; கன்னல்=கரும்பு; தேறல்=தெளிந்த கரும்புச்சாறு; என்னன்=என்னை உடையவன்; பிறங்கிய=விளங்கிய;கரும்பு கடித்து உண்பதற்கு சற்று கடினமாக இருப்பினும், கடித்து சுவைப்பதற்கு இனிமையாக உள்ளது. கரும்பின் சாறு பருக மிகவும் எளிதாக உள்ளது.பெருமான் பக்குவம் அடையாத உயிர்களுக்கு, எளிதில் அடைய முடியாமல் கடினமானவனாக தோன்றுவதும் பக்குவப் பட்ட ஆன்மாக்களுக்கு எளிமையாக தோன்றுவதும் இங்கே, கன்னல் கரும்பின் தேறல் என்ற உதாரணங்களால் உணர்த்தப் படுகின்றது. கடித்து சுவைக்கத் தொடங்கினால் கரும்பின் இனிய சுவையினை நாம் உணர்வது போன்று, பக்குவம் அடையாத உயிர்களும் இறைவனை உணரத் தலைப்பட்டால், இறைவனின் எளிய தன்மை இனிய தன்மை அவர்களுக்கு விளங்கும் என்பதை உணர்த்தும் வண்ணம் இறைவனை கரும்பு என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார்.

கன்னலைக் கரும்பு ஊறிய தேறலை

மின்னலை மின் அனைய உருவனைப்

பொன்னனை மணிக்குன்று பிறங்கிய

என்னனை இனி யான் மறக்கிற்பனே

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில் அப்பர் பிரான், பெருமான் தனக்கு காட்சி அளித்த போது, எவ்வாறெல்லாம் திகழ்ந்தார் என்று விவரமாக கூறுகின்றார். அந்த பதிகத்தின் ஏழாவது பாடலில் (6.18.7) பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றியது என்று கூறுகின்றார். தகவு=தகுதி;பெருமான் தனது அடியார்களுக்கு அருள் புரிந்த வரலாறு மற்றும் கோலங்களை திருப்பூவணத்தில் தான் கண்டதாக கூறுகின்றார். சண்டேச அனுகிரக மூர்த்தி, கால சம்ஹார மூர்த்தி, பாசுபத அனுகிரக மூர்த்தி ஆகிய மூர்த்தங்கள் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன. பாம்பு, சந்திரன், தண்ணீர் ஆகியவை ஒன்றுக்கொன்று பொருந்தாத பொருட்கள். ஆனால் இவை மூன்றினையும் ஒரே இடத்தில் வைத்து, மூன்றும் அடங்கி நிற்கும் நிலையை ஏற்படுத்தும் வல்லமை உடையவன் சிவபெருமான் என்று அவரது வல்லமை இங்கே உணர்த்தப் படுகின்றது.

தன்னடியார்க் கருள்புரிந்த தகவுதோன்றும் சதுர்முகனைத் தலையரிந்த தன்மைதோன்றும்

மின்னனைய நுண்ணிடையாள் பாகம்தோன்றும் வேழத்தினுரி விரும்பிப்போர்த்தல் தோன்றும்

துன்னிய செஞ்சடை மேலோர் புனலும் பாம்பும் தூய மாமதியுடனே வைத்தல் தோன்றும்

பொன்னனைய திருமேனி பொலிந்துதோன்றும் பொழிற்றிகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.19.2) அப்பர் பிரான் பெருமானை பசும்பொன்னின் நிறத்தான் என்று குறிப்பிடுகின்றார்.மேலார்கள்=தேவர்கள்; மேலாடு=மேலே உள்ள ஆகாயத்தில் உலாவும்; பண்ணிலவு=பண்+நிலவு; பண்=வண்டுகளால் இசைக்கப்படும் ரீங்காரம்;நிலவு=நிலையாக பொருந்தி இருக்க; உண்ணிலவு=உள்+நிலவு: உள் நிலவு=சடையின் உள்ளே பொருந்தி அடங்கிய; தெண்ணிலவு=தெள் நிலவு;தெள்=தெளிந்த ஞானம்; பைம்பொழில்= பசுமையான சோலைகள்; தெளிந்த ஞானம் உடைய மதுரை என்பதற்கு இரண்டு விதமாக பொருள் கூறுகின்றனர்.மூன்று சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டு தெளிந்த ஞானம் உடைய மதுரை என்றும் திருஞானசம்பந்தரால் பெருமான் தான் உண்மையான மெய்ப்பொருள் என்றும் சிவநெறியே உயர்ந்த நெறி என்றும் தெளிந்த ஞானம் படைத்த மக்கள் நிறைந்த மதுரை நகர் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். அப்பர் பிரான் மதுரைக்கு சென்ற சூழ்நிலையின் பின்னணியில் இரண்டாவது விளக்கம் மிகுவும் பொருத்தமாக உள்ளது;

விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை மேலாடு புரம் மூன்றும் பொடிசெய்தானைப்

பண்ணிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானைப் பசும்பொன்னின் நிறத்தானைப் பால் நீற்றானை

உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்துமையோடு உடனாகியிருந்தான் தன்னைத்

தெண்ணிலவு தென்கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே

ஆக்கூர் தான்தோன்றி மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.21.9) அப்பர் பிரான், பெருமான் தனது திருமேனியின் ஒரு புறத்தில் செம்பொன்னின் வண்ணத்திலும் மற்றொரு புறத்தில் மாணிக்க மணியின் வண்ணத்திலும், அதாவது மாதொரு பாகனின் கோலத்தில் இருப்பதாக கூறுகின்றார். கடி ஆர்=புதுமை நிறைந்த; நெடியான்=நெடிது உயர்ந்து மூன்று உலகங்களையும் தனது இரண்டு அடிகளால் அளந்த திருமால்; நீல நற்கண்டம் என்று பெருமானின் கழுத்தினை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அனைவரையும் அச்சுறுத்திய நஞ்சினை தனது கழுத்தினில் அடக்கி உலகத்து உயிர்களை காத்ததால், பெருமானின் கழுத்தினை நற்கண்டம் என்று கூறுகின்றார். படி=உருவம்; மணி=நீலமணி;

கடியார் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாதணிந்த கண்ணி போலும்

நெடியான் சதுர்முகனும் நேட நின்ற நீல நற்கண்டத்து இறையார் போலும்

படியேல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணிவண்ணம் தம்வண்ணம் ஆவார்போலும்

அடியார் புகலிடமது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

திருவாரூர் திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.29.2) அப்பர் பிரான், பெருமானை பொன்னே போல் திருமேனி உடையான் என்று கூறுகின்றார்.மின்னான்=மின்னல் போன்று ஒளியுடையவன்; பொங்கு=விளங்கித் தோன்றும்; இந்த பாடலில் வேழத்தின் உரியை விரும்பி போர்த்தவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். யானையின் பசுந்தோல் உடலுக்கு கெடுதி விளைவிக்கும் என்பதையும் கருதாது, தனது உடலின் மீது விருப்பத்துடன் போர்த்துக் கொண்டவன் சிவபெருமான். அனைவரையும் அச்சுறுத்திய ஆலகால நஞ்சே பெருமானுக்கு எந்த விதமான கேட்டினையும் விளைவிக்காத போது,யானையின் பசுந்தோல் அவனை என்ன செய்ய முடியும். தன்னான்=தன் வயத்தனாக இருத்தல். பெருமானின் எட்டு அரிய குணங்களில் இது ஒன்றாகும்.மற்றைய குணங்கள் பின்வருமாறு, தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். இந்த எட்டு குணங்களும் கோளில் பொறியின் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்ற குறட்பாவுக்கு விளக்கமாக பரிமேலழகர் உரையில் கூறப்படுகின்றது. இந்த எட்டு குணங்களே, பெருமானின் குணங்களாக சைவசமய சாத்திரத்தில் கருதப் படுகின்றன.

பொன்னே போல் திருமேனி உடையான் தன்னைப் பொங்கு வெண்ணூலானைப் புனிதன் தன்னை

மின்னானை மின்னின் இடையாள் பாகன் தன்னை வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான் தன்னைத்

தன்னானைத் தன்னொப்பாரில்லாதானைத் தத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனி

அன்னானை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய போற்றித் திருத்தாண்டகத்தின் பாடலில் (6.32.4) அப்பர் பிரான், பெருமானை பொன்னியலும் மேனியனே என்று அழைத்துப் போற்றுகின்றார். இயலும்= செய்யப்பட்டது; உன்னுதல்=நினைத்தல்; பெருமானை நினைத்து தியானம் செய்யும் அடியார்களுக்கு, உண்மையான முழுமுதற் கடவுளாக தான் இருக்கும் நிலையினை பெருமான் உணர்த்துவர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பொன்னியலும் மேனியனே போற்றிபோற்றி பூதப்படை உடையாய் போற்றிபோற்றி

மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி மறியேந்து கையானே போற்றிபோற்றி

உன்னுமவர்க்கு உண்மையனே போற்றிபோற்றி உலகுக்கொருவனே போற்றி போற்றி

சென்னிமிசை வெண்பிறையாய் போற்றிபோற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.39.8) அப்பர் பிரான் பெருமானை, பொன்னியலும் திருமேனி உடையான் என்று கூறுகின்றார்.இயலும் என்றால் செய்யப்பட்டது போன்று என்று பொருள். தாங்கரிய சிவம் என்பதற்கு சுவையான மற்றொரு விளக்கமும் கொடுக்கப் படுகின்றது.ஞாயிற்றின் ஒளியினை நமது கண்கள் நேரே ஏற்க முடியாமல், கண்கள் கூசுவதை நாம் அனைவரும் உணர்வோம். ஆனால் சூரியனின் ஒளி நமது வாழ்க்கைக்கு இன்றியமையாததாக உள்ளது. இறைவனின் கருணையினை சூரியனின் ஒளிக்கு ஒப்பிட்டு, அவனது பேரருளையும் பேராற்றலையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனும் உண்மை இங்கே தாங்கரிய சிவம் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. இறைவனது பேரருளை நாம் பெற்று அனுபவிக்கவே, சக்தி எனும் நிலைவாயில் உள்ளது என்பதால் சக்தியை இறைவனின் கருணை வடிவமாக, அருள் வடிவமாக நமது பெரியோர்கள் கண்டனர்.

பொன்னியலும் திருமேனி உடையான் கண்டாய் பூங்கொன்றைத் தார் ஒன்று அணிந்தான் கண்டாய்

மின்னியலும் வார்சடை எம் பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய்

தன்னியல்பார் மற்றொருவர் இல்லான் கண்டாய் தாங்கரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்

மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே

அழகாய பொன்னார் மேனியன் என்று பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பாடலில் (6.43.6) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆர்த்தல்=இடுப்பினில் இறுக கட்டுதல்; தானம்=இருப்பிடம்; தாமரைப் பூவினை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள பிரமன்; பதைத்தல்=நடுங்குதல்;

ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகாய பொன்னார் மேனிப்

பூத்தானத்தான் முடியைப்பொருந்தா வண்ணம் புணர்ந்தானைப் பூங்கணையான் உடலம்

பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர் கங்கை படர்சடைமேல் பயின்றானைப்பதைப்ப யானை

போர்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.51.2) அப்பர் பிரான், பெருமானை பொன்னிறத்தர் என்று அழைக்கின்றார். பூதியணி(திருநீறு) பொன்னிறத்தர் என்ற தொடர், பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல் பொலிந்திலங்கி என்ற அப்பர் பிரானின் கூற்றினை (4.81.3)நினைவூட்டுகின்றது.

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர் பொங்கரவர் சங்கரர் வெண்குழையோர் காதர்

கேதிச்சரம் மேவினர் கேதாரத்தார் கெடில வட அதிகை வீரட்டத்தார்

மாதுயரம் தீர்த்து என்னை உய்யக் கொண்டார் மழப்படி மேய மழுவாளனார்

வேதிகுடி உள்ளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.5) அப்பர் பிரான், பெருமானை பொன்னொத்த திருமேனிப் புனிதர் என்று அழைக்கின்றார்.துன்னம்=துண்டிக்கப்பட்ட துணி, இடுப்பில் அரைஞாண் கயிறு போன்று கட்டப்படுவது; அன்னத்தேர்=அன்னப் பறவையை தனது வாகனமாக கொண்ட பிரமன். கயிலாயத்தில் உலா வரும் பெருமான், பிரமன் வலது புறத்திலும் திருமால் இடது புறத்திலும் தங்களது வாகனத்தின் மீது அமர்ந்தவாறு உடன் வர இறைவன் திருவுலா வருகின்றார் என்று திருக்கயிலாய ஞான உலாவினில் சேரமான் பெருமாள் நாயனார் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.திருவிளையாடல் புராணம் தடாதகை பிராட்டியார் திருமணப் படலத்தில், சிவபெருமான் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரால் சூழப்பட்டு வந்ததாக பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார். ஆனாத=நீங்காத; கைப்போத=பக்கத் துணையாக வர;

துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய்த் தூயார் போலும்

பொன் ஒத்த திருமேனிப் புனிதர் போலும் பூதகணம் புடை சூழ வருவார் போலும்

மின்னொத்தசெஞ்சடை வெண்பிறையார் போலும் வியன்வீழி மிழலைசேர் விமலர்போலும்

அன்னத் தேர் அயன்முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.54.5) அப்பர் பிரான், பெருமானை பொன்னுருவன் என்று அழைக்கின்றார்.ஐம்பூதங்களின் தன்மை விளக்கப்படும் பாடல். பரந்த வெளியிலிருந்து நாதம் பிறந்தமையால், ஆகாயத்தின் குணம் ஒலி என்று கூறுவார்கள். வீசும் காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு (ஊறு) ஆகிய இரண்டு பண்புகள் இருப்பதை நாம் உணர்கின்றோம். தீ, ஒலி கொண்டு உணரப்படுவதாகவும், தொடு உணர்வினால் அறியப்படுவதாகவும் விளங்குவதுடன், ஒளியுடனும் திகழ்கின்றது. நீருக்கு, ஒலி, ஊறு, ஒளி, மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன.நிலத்திற்கு, நீரின் நான்கு குணங்களுடன் வாசனை ஆகிய ஐந்தாவது குணமும் உள்ளது. மேற்கண்ட குணங்களாக இறைவனே இந்த ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய்மிக்கு வீசுங்கால் தன்னகத்திலிரண்டாய்ச் செந்தீத்

தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த் தரணிதலத்து அஞ்சாத் தஞ்ச

மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை வளரொளியை வயிரத்தை மாசு ஒன்றில்லாப்

பொன்னுருவைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.68.6) அப்பர் பிரான், பொன் பொதிந்த மேனியன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்: கடை=கடைவாயில், வாயிற்படி; இந்த பாடலில் ஆகாயத்தின் பண்பு ஒலி என்பதை குறிப்பிடும் வண்ணம் விண்ணொலி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆகாயத்தின் பண்பு ஒலி எனப்படும் குணம் ஒன்று தான்.

புகழொளியை புரமெரித்த புனிதன்தன்னைப் பொன்பொதிந்த மேனியானைப் புராணன் தன்னை

விழவொலியும் விண்ணொலியுமானான் தன்னை வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்

கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் கடைதோறுமிடு பிச்சைக்கென்று செல்லும்

திகழொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

பள்ளியின் முக்கூடல் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.69.3) அப்பர் பிரான் பெருமானை, பொன் வரையே போல்வான் என்று குறிப்பிடுகின்றார். பொன் வரையே போல்வான் என்று பொன்னார் மேனியனாக இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது. அஞ்சனாக்ஷி, மைம்மேவு கண்ணி என்பது தலத்து தேவியின் திருநாமம். இந்த பெயர் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. முக்கோண நாதர் முக்கூடல் நாதர் என்பன தலத்து பெருமானின் திருநாமங்கள். இந்த பதிகத்தின் பாடல் தோறும் முக்கூடலான் என்று தலத்து பெருமானின் நாமத்தை குறிப்பிடுகின்றார். பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் திருவாதிரை என்பதால் ஆதிரை நன்னாளன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால் தான்,நரசிங்க முனையரையர், ஆதிரை நாட்களில் சிவனடியார்களுக்கு பொற்காசுகள் வழங்கினார். ஆதிரைத் திருநாள் மிகவும் சிறப்பாக கொண்டாப்படுவதை திருவாரூரில் நேரில் கண்ட அப்பர் பிரானுக்கு, அந்த நினைவுகள் மிகவும் பசுமையாக அவரது மனதினில் இருந்தன போலும். பெருமானை ஆதிரை நன்னாளன் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். திருவாரூரிலிருந்து புகலூர் செல்லும் வழியில் சென்ற முதல் தலம் இது தானே. ஆதிரை நட்சத்திரம்,மற்ற நட்சத்திரங்களை விடவும் அளவில் மிகவும் பெரியது. ஆதிரை நட்சத்திரத்தின் வண்ணம் சிவப்பு. செம்மேனியான் என்று பல திருமுறைப் பாடல்களில் அழைக்கப்படுபவனும், அனைத்து தேவர்களுக்கும் தலைவனும் ஆகிய சிவபெருமானை ஆதிரை நட்சத்திரத்துடன் ஒப்பிட்டு ஆதிரையான் என்று அழைப்பது மிகவும் பொருத்தம்.

பூதியனைப் பொன் வரையே போல்வான் தன்னைப் புரிசடை மேல் புனல் கரந்த

வேதியனை வெண்காடு மேயான்தன்னை வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம்

ஆதியனை ஆதிரைநன்னாளான் தன்னை அம்மானை மைம்மேவு கண்ணியாளோர்

பாதியனைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழே நான் உழன்றவாறே

குடந்தைக் கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.6) அப்பர் பிரான் பெருமானை, செம்பொன் மலை போல் திகழும் பெருமான் என்று கூறுகின்றார். சடையில் பொருந்திய வளர்மதி, மூன்று கண்களின் மென்மையான பார்வை, அருளினை உணர்த்தும் புன்முறுவல், ஒளிவீசும் மேனி,கொவ்வைச் செவ்வாய், துடி போன்று தோற்றத்தில் சிறுத்த இடை, இடது பாகத்தில் அம்மை, செம்பொன் மலை போன்ற தோற்றம் என்று பெருமானின் கூத்தினை அப்பர் பிரான் ரசித்து நமக்கு உணர்த்துவது, கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்களில் (4.81) தில்லை நடராஜப் பெருமானின் குறிப்பிட்டதை நமக்கு நினைவூட்டுகின்றது. கூத்தனார் என்று பாடல் தோறும் பெருமானின் சிறப்பனை நடனக் கோலத்தை உணர்த்தி அழைத்த அப்பர் பிரான், தன்னைக் கவர்ந்த கோலத்தை மிகவும் அழகாக இந்த பாடலில் விளக்குகின்றார்.

முடி கொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர்க் கண்கள் மூன்றும்

அடி கொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி அணி முறுவல் செவ்வாயும் அழகாய்த் தோன்ற

துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர்ச் சோதிக் கடிச் செம்பொன் மலை போல் இந்நாள்

குடி கொண்டு என் மனத்து அகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

கஞ்சனூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.90.6) அப்பர் பிரான், பெருமானை செம்பொன் மால் வரையான் என்று குறிப்பிடுகின்றார்.ஏடு=இதழ்கள்; வான் இழிந்த=வானிலிருந்து இறங்கிய; சேடு=அழகு; கிறி=பொய்கள்; காடவன்=அதிசயத் தக்க திறமை உடையவன்; காடம் என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது; கேடிலியப்பர் என்பது கீழ்வேளூர் தலத்தில் உறையும் இறைவனின் திருநாமம். மடவார்=இளைய பெண்கள்; கேடிலி என்பதற்கு நீங்காமல் இருப்பவன் என்ற பொருளும் பொருந்தும். இங்கே சிந்தைக் கேடிலி என்று கேடு இல்லாத தன்மையினை அடியார்களின் சிந்தனையுடன் இணைத்துச் சொல்லியிருப்பதால், அடியார்களின் சிந்தையிலிருந்து நீங்காமல் இருப்பவன் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம்.

ஏடேறு மலர்க் கொன்றை அரவு தும்பை இளமதியம் எருக்கு வானிழிந்த கங்கை

சேடெறிந்தசடையானைத் தேவர்கோவைச் செம்பொன் மால்வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்

கேடிலியைக் கீழ் வேளூர் ஆளும் கோவைக் கிறி பேசி மடவார் பெய்வளைகள் கொள்ளும்

காடவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

ஒரு பொதுப் பதிகத்தின் கடைப் பாடலில் (6.97.11) அப்பர் பிரான், பொன்னொத்த மேனி மேல் பொடியும் கண்டேன் என்று பொன்னர் மேனியின் மேல் திருநீறு அணிந்த நிலையில் பெருமான் இருப்பதை குறிப்பிடுகின்றார். பொடி=திருநீறு; தன்மேல் புணர என்ற தொடரை தனது உடலில் புணர என்று மாற்றி அமைத்து, பெருமானின் உடலில் பிராட்டியும் கூடியிருக்கும் கோலத்தை அப்பர் பிரான் கண்டதாக பொருள் கொள்ள வேண்டும். அன்னத்தேர்=அன்னம் போன்ற வெண்மை நிறத்தில் இருந்த புட்பக விமானம். இடைவிடாது பெருமான் பற்றிய சிந்தைனையில் ஆழ்ந்திருந்த அப்பர் பிரானின் சிந்தையில் பெருமான் தோன்றியது வியப்பினுக்கு உரியது அல்லவே. மேலும் வாய்மூர் மற்றும் பூவணம் ஆகிய தலங்களில் பெருமானின் திருக்காட்சியைக் காணும் வாய்ப்பு பெற்றவர் அல்லவா அப்பர் பிரான். தான் கண்ட காட்சியை, நீரும் கண்டீரோ என்று உலகத்தவரை நோக்கி வினவும் பாடல். அப்பர் பிரான் போன்று நாமும் இடையறாது இறைவனை நினைத்தால், இறைவன் நமது சிந்தையுள்ளே தோன்றுவான் என்பதை உணர்த்தும் பாடலிது.

பொன்னொத்த மேனிமேல் பொடியும்கண்டேன் புலித்தோலுடை கண்டேன் புணரத் தன்மேல்

மின்னொத்த நுண்ணிடையாள் பாகம்கண்டேன் மிளிர்வதொரு பாம்பும் அரைமேல் கண்டேன்

அன்னத்தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்

சின்ன மலர்க்கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நாம் சிந்தையுள் கண்டவாறே

மழபாடி தலத்து பதிகத்தினை (7.24) சுந்தரர் பொன்னார் மேனியனே என்ற தொடருடன் தொடங்குகின்றார். திருவாலம்பொழில் தலத்து இறைவனை வணங்கிய பின்னர், அந்த தலத்தினில் சுந்தரர் இரவு தங்கியபோது, இறைவன் அவரது கனவில் தோன்றி, மழபாடி வருவதற்கு மறந்தனையோ என்று நினைவூட்ட, அடுத்த நாள் திருமழபாடி தலம் சென்ற சுந்தரர் பொன்னர் மேனியனே என்று இறைவனை அழைத்து பாடிய பதிகம். அன்னே=இப்பொழுது;மன்னே=நிலையாக இருப்பவன்; மன்னன் என்று பொருள் கொண்டு தலைவனே என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து

மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

திருஞானசம்பந்தர் அருளிய இந்த பாடலில் உள்ள பொன்நேர் தரு மேனியன், மின்னேர் சடையாய், மன்னே என்ற தொடர்களுக்கு ஒப்பான சொற்கள் சுந்தரரால் இந்த பாடலில் கையாளப் பட்டுள்ளதை நாம் உணரலாம். சுந்தரரின் இந்த செய்கை நமக்கு அவர் வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரான், தன்னைக் குறித்து சொன்னவற்றை மற்றவர்களும் பாட அதனைக் கேட்டு மகிழ்பவன் சிவபெருமான் என்று சொல்கின்றார்.

நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கு அரையனும் பாடிய நற்றமிழ் மாலை

சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானைத் தொண்டனேன் அறியாமை அறிந்து

கல்லியல் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டி என் களைகளை அறுக்கும்

வல்லியல் வானவர் வணங்கி நின்றானை வலிவலம் தனில் வந்து கண்டேனே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலையும் (7.25.1) சுந்தரர், பொன் செய்த மேனியினீர் என்று தொடங்குகின்றார். திருமுதுகுன்றத்தில் தான் பெற்ற பொற்காசுகளை, மணிமுத்தாறு குளத்தில் இட்டுவிட்டு, பெருமானே இந்த பொற்காசுகள் எனக்கு திருவாரூர் குளத்தில் கிடைக்கும் வண்ணம் கிடைக்கும் வண்ணம் அருள் புரிய வேண்டும் என்று விண்ணப்பம் செய்த சுந்தரர், அந்த பொற்காசுகளை பெறுவதற்காக திருவாரூர் கமலாலயம் குளத்திற்கு செல்கின்றார். பொற்காசு என்றவுடன், பெருமானின் பொன்னார் திருமேனி சுந்தரருக்கு நினைவு வந்தது போலும். பொன் செய்த மேனியினீர் என்று குறிப்பிட்டு பதிகத்தை தொடங்குகின்றார். இட்டளம்=துன்பம்; தனது மனைவி பரவை நாச்சியார் தன்னருகே இருப்பதையும் பெருமானுக்கு உணர்த்தி,தனது துன்பம் தீரும் வண்ணம் பொற்காசுகள் திருவாரூர் குளத்தில் தோன்றச் செய்து, பெருமான் அருள் புரியவேண்டும் என்று கூறுகின்றார்.

பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்

முன் செய்த மூவெயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்

மின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே

என் செய்தவாறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே

கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.28.4) சுந்தரர், பெருமான் தனது பொன் மேனியின் ஒரு பாகத்தில் பிராட்டியை ஏற்றுக்கொண்டதை குறிப்பிடுகின்றார். காராரும் மிடறு=ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்து;

போராரும் கரியின் உரி போர்த்துப் பொன் மேனியின் மேல்

வாராரும் முலையாள் ஒரு பாகம் மகிழ்ந்தவனே

காராரும் மிடற்றாய் கடவூர் தனுள் வீரட்டானத்து

ஆரா என்னமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலை (7.68.1) செம்பொன் மேனி என்று தொடங்கும் சுந்தரர், செம்பொன் மேனியின் மீது வெண்ணீறு அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். சம்பு=இன்பம் அளிப்பவன்; கும்ப மாகரி=கும்பத்தைப் போன்ற தலையினை உடைய ஆண் யானை;

செம்பொன் மேனி வெண்ணீறு அணிவானைக் கரிய கண்டன் மாலயன் காணாச்

சம்புவைத் தழல் அங்கையினானைச் சாமவேதனைத் தன்னொப்பில்லானைக்

கும்ப மாகரியின் உரியானைக் கோவின் மேல் வரும் கோவினை எங்கள்

நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே

திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் பாடலில், மணிவாசகர் பொன்னே திகழும் திருமேனி எந்தாய் என்று இறைவனை அழைக்கின்றார். தானே எதிர்பாராத வகையில் தன்னை, தொண்டித் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தன்னை, பெருந்துறை தலத்திற்கு வரவழைத்து ஆட்கொண்டு அருள் புரிந்த பெருமான், பின்னர் தன்னை விட்டுவிடுதல் நியாயமா என்ற கேள்வியை அடிகளார் இங்கே எழுப்புகின்றார்.

தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான

புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ

என்னை நோக்குவார் யாரே என் நான் செய்கேன் எம்பெருமான்

பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே

திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் பாடலில் நீறு பட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே என்று மணிவாசகர் பெருமானை குறிப்பிடுகின்றார். நெடிது நீண்ட பொன்னார் மேனியின் மீது ஒளிவீசும் திருநீறு பூசியவனாக பெருமான் இருக்கின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.மேலும் பெருமானின் இனிய நினைவுகள் தனது மனதினில் தேன் போன்று சுரந்து ஆனந்த பரவசத்தை அளிக்கின்றது என்றும் கூறுகின்றார். மட்டு=தேன்;வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு முக்தி நிலை அடையவேண்டும் என்ற தனது விருப்பத்திற்கு மாறாக, தனது ஐந்து புலன்களும் செயல்படுவதால்,தான் இறைவனின் திருப்பாத மலர்களை நினையாது இருந்ததாகவும், அதனால் இறைவனை தன்னை இந்த நிலவுலகில் விட்டுவிட்டு சென்று விட்டார் என்று மணிவாசகர் வருத்தம் அடைகின்றார்.

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணிமலர்த்தாள்

வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே

ஊறு மட்டே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

நீறு பட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே

திருவாசகம் திருவம்மானை பதிகத்தின் பாடலில், மணிவாசகர் பெருமானின் திருமேனி, பாண்டிய மன்னனின் கை சாட்டையால் அடிக்கப்பட்டு, புண் அடைந்ததே என்று அங்கலாய்ப்பதை நாம் உணரலாம். கலி மதுரை=ஆரவாரம் மிகுந்த மதுரை நகரம்; விண் சுமந்த கீர்த்தி=வானளாவ உயர்ந்த புகழ்;முறையான பண்ணுடன் இசைத்துப் பாடும் அடியார்களுக்கு, முக்தி உலகினை பரிசாக அளிக்கும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் இங்கே குறிப்பிடப் படுகின்றது.

பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்

பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்

விண் சுமந்த கீர்த்தி வியன்மண்டலத்து ஈசன்

கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை

மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு

புண் சுமந்த பொன்மேனி பாடுதும் காண் அம்மானாய்

திருப்படையாட்சி பதிகத்தின் பாடலில், மணிவாசகர் பொன்னியலும் திருமேனி என்று ஒரு பாடலை தொடங்குகின்றார். ஈசன் எழுந்தருளினால் என்னென்ன நடக்கும் என்று இந்த பதிகத்தின் பாடல்களில் அடிகளார் பட்டியல் இடுகின்றார் பல அரிய நிகழ்ச்சிகள், எளிதில் நடைபெற இயலாத நிகழ்ச்சிகள்,இறைவன் நம் முன்னே தோன்றி அருளினால் நடைபெறும் என்று கூறுகின்றார். இறைவனது பொன்னார் திருமேனியில் வெண்ணீறு படிந்துள்ள காட்சியை காணலாம் என்றும், அத்தகைய நல்ல தருணத்தில் வானவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் என்றும்,மின்னல் போன்று நுண்ணிய இடையினை உடைய மாதர்களின் வஞ்சக எண்ணங்களும் வெளிப்பட்டு தோன்றும் என்றும், வீணையின் நாதங்கள் இன்பம் ஏற்படுத்தும் என்றும், அடியார்களின் திருவடிகள் நமது தலை மீது பதியும் என்றும், அடியார்கள் உய்வினை அடையும் வண்ணம் பெருமான் தன்னுடன் சேர்த்துக் கொள்வான் என்றும் உலகெங்கும் இனிய ஓசைகள் எழும் என்றும் அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.

பொன்னியலும் திருமேனி வெண்ணீறு பொழிந்திடும் ஆகாதே

பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே

மின்னியல் நுண்ணிடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே

வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே

தன்னடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே

தானடியோம் உடனே உய வந்து தலைப்படும் ஆகாதே

இன்னியம் எங்கும் நிறைந்து இனிதாக இயம்பிடும் ஆகாதே

என்னை முன் ஆளுடை ஈசன் என் அத்தன் எழுந்தருளப் பெறிலே

பதினோராம் திருமுறையில் அமைந்துள்ள பொன்வண்ண திருவந்தாதியின் முதல் பாடலில், சேரமான் பெருமாள் நாயனார், பொன் வண்ணத்தில் பெருமானின் திருமேனி பொலிந்து விளங்குவதாக கூறுகின்றார். இறைவனின் பேரெழில் உருவினைக் கண்டு மயங்கி அவன் பால் தீராத காதல் கொண்ட பெண்ணின் தன்மையை சொல்வதாக அமைந்துள்ள அகத்துறைப் பாடல். பொன் வண்ணத்தில் திருமேனி கொண்டுள்ள பெருமானின் உருவினைக் கண்ட பின்னர், அவனை அடைய வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த தலைவி, இறைவனை அடையமுடியாததால் ஏக்கமடைந்து, தனது மேனியின் நிறம் மாறி பசலை படிந்து, பெருமானைப் போன்று தானும் பொன்னின் நிறத்தவளாக மாறிவிட்டேன் என்று கூறுகின்றாள். பெருமானைச் சென்று அடையமுடியாத நாயனாரின் ஏக்கம் இந்த பாடலில் தொனிக்கின்றது.

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்து இலங்கும்

மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்ச்சடை வெள்ளிக்குன்றம்

தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக் கண்ட

என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே

பொன்னேர் தரு=பொன்+ஏர்+தரு=பொன்னைப் போன்று ஒளிரும்; புரியும் சடை=வளைத்துக் கட்டப்பட்ட சடை; விரை காவிரி=விரைந்தோடும் காவிரி நதி என்றும் நறுமணம் கமழும் நீ உடைய காவிரி என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். மன்னே=இறைவனே, எக்காலத்திலும் அழியாமல் நிலையாக நிற்கும் ஈசன்;

பொழிப்புரை:

பொன்னைப் போன்று மிளிரும் ஒளியினை உடைய திருமேனியனே, வளைத்துக் கட்டப்பட்டதும் மின்னல் போன்று ஒளிவீசுவதும் பொன் நிறத்தில் உள்ளதும் ஆகிய சடையினை உடையவனே, நறுமணம் கமழும் நீர்ப் பெருக்கினை உடைய காவிரி நீரால் வளமடையும் வயல்கள் உடைய நாகேச்சுர நகரத்தில் நிலையாக, என்றும் அழியாமல் நிலையாக குடிகொண்டிருப்பவனே, என்றெல்லாம் இறைவனை அழைத்து வணங்கும் அடியார்களின் வலிய வினைகளும் அழிந்து விடும்.

பாடல் 2:

சிறவார் புரம் மூன்று எரியச் சிலையில்

உறவார் கணை உய்த்தவனே உயரும்

நறவார் பொழில் நாகேச்சுர நகருள்

அறவா என் வல்வினை ஆசு அறுமே

விளக்கம்:

சிறவார்=சிறப்பினை அடையாதவர்கள்; இங்கே திரிபுரத்து அரக்கர்களை குறிக்கும்; தங்களது எல்லையற்ற வலிமையை பயன்படுத்தி பலருக்கும் நன்மைகள் செய்து வாழாமல், பலரையும் துன்புறுத்தி வந்ததால், அனைவரும் அவர்களை இகழ்ந்து பேசி வந்தமை இங்கே உணர்த்தப் படுகின்றது. அதனால் தான் சிறப்பினை இழந்தவர்கள் என்று பொருள்பட சிறவார் புரம் என்று கூறுகின்றார் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. சிறகுகள் உடைய பறவைகள் போன்று பறக்கும் தன்மை கொண்ட கோட்டைகள் என்று பொருள்பட சிறவார் புரம் என்று அளிக்கும் விளக்கமும் பொருத்தமே. சிலை=மேரு மலையினை வளைத்துச் செய்யப்பட்ட வில்; உறவார் கணை=பொருத்தப்பட்ட அம்பு; உய்த்தவன்=திரிபுரத்து அரக்கர்களை அழித்து தேவர்களை உய்வித்தவன்;நறவு=கள், இங்கே வண்டுகளுக்கு மயக்கம் ஏற்படுத்தும் தேனை குறிப்பிடுகின்றது; ஆசு=குற்றம்; அறவா=தருமத்தின் உருவமாக இருப்பவன்; பலருக்கும் இன்னல் விளைவித்து வந்த திரிபுரத்து அரக்கர்களை வீழ்த்தி தருமத்தை நிலைநாட்டிய பெருமானை அறவா (புண்ணியத்தின் உருவமே) என்று அழைக்கின்றார். வினைகளை உயிரின் குற்றங்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வினைகள் தாமே உயிர்களை இன்ப துன்பங்களில் ஆழ்த்தி, அவ்வாறு இன்ப துன்பங்களை நுகரும் தருணங்களில் உயிர்களை மேலும் பல தவறுகளைச் செய்யவைத்து, பிறவிப் பிணியிலிருந்து மீளாத வண்ணம் உயிர்களை ஆட்டுவிக்கின்றது என்பதால், வினைகளை உயிரின் குற்றம் என்று கூறுகின்றார். இறைவனை அறவா என்று குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.47.5) அப்பர் பிரான், இறைவனை அறவா என்று அழைத்து, தன்னை நோக்கி அஞ்சேல் என்று இறைவன் சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றார். நம்மை பீடித்துள்ள வினைகளின் பயனாக வரும் துன்பங்களை எந்த உயிரும் அனுபவித்து தான் கழிக்க முடியும். எனவே அத்தகைய துயரங்களை நீக்குவது என்பது எவர்க்கும் இயலாத காரியம். இறைவனின் அருளால் தான் அதனை நீக்க முடியும்.அவ்வாறு இறைவனின் அருளினை பெறுவதற்கு அவனை வழிபடல் வேண்டும். அவ்வாறு தான் வழிபட்டதால், தன்னை ஊழ்வினைகள் ஏதும் செய்யாது என்று இறுமாப்புடன் அப்பர் பிரான் சொல்வதை நாம் இந்த பாடலில் உணரலாம். வினைகளால் இந்த பிறவியில் எதிர்கொள்ள இருந்த துன்பங்களை,இறைவனின் அருளால் நீக்கிக் கொண்ட போதிலும், இனிமேல் தான் எடுக்கவிருக்கும் பிறவிகளை நினைத்து தான் அஞ்சுவதால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து அஞ்சேல் என்று இறைவன் சொல்லவேண்டும் என்று கேட்கின்றார். தினமும் நீராடிய பின்னர் நறுமணம் நிறைந்த மலர்களை தானே கொய்து, பெருமானின் திருப்பாதங்கள் மேல் தூவி பெருமானை வழிபட்டு எளிதில் நீக்கிக் கொள்ள முடியாத துன்பங்களையும் தான் இறைவனின் அருளால் நீக்கிக் கொண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார்.

நறுமா மலர் கொய்து நீரின் மூழ்கி நாடோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தித்

துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழுலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே

உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரைநீர்க் கடல் நஞ்சுண்டு உய்யக்கொண்ட

அறவா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

திருக்கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.27.2) சுந்தரர் மறையோர் மற்றும் வானவர்களால் வணங்கப்படும் இறைவனே, எம்பெருமானே,எனக்கு இனிய அமுதம் போல் இனிப்பவனே, அறவா, அழகிய கண்களை உடையவனே என்று அழைத்து, தன்னையும் அஞ்சேல் என்று உய்விக்கவேண்டும் என்று வேண்டுகின்றார். அருளாளர்கள் அனைவரும் அடுத்து பல பிறவிகள் எடுக்க நேரிடுமோ என்ற அச்சம் கொண்டு வாழ்வதால், அந்த அச்சத்தினை நீக்கும் வண்ணம், அஞ்சேல் என்று இறைவன் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். தனது கடைக்கண் நோக்கினால் இறைவன் உயிர்களுக்கு அருள் புரிவதால், இறைவனது கண்களை அழகிய கண்கள் என்று கூறுகின்றார். கண்களுக்கு அழகு சேர்ப்பது கருணை தானே.

மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற

இறைவா எம்பெருமான் எனக்கு இன்னமது ஆயவனே

கறையார் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற

அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சல் என்னே

தருமமே உருவமாக இருக்கும் பெருமானை அறவாழி அந்தணன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆழி என்றால் கடல் என்று பொருள். வள்ளுவரும் அறவாழி அந்தணன் என்று இறைவனை அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது. தனக்கு, பிறவா நெறி தந்த இறைவனை அறவாழி அந்தணன் என்றும் ஆதி பராபரன் என்றும் குறிப்பிடும் திருமூலர், அந்த இறைவன் தனக்கு உறவாகி வந்து தனது உள்ளம் புகுந்ததாக கூறுகின்றார். அவன் தான் நம்மை ஆட்கொண்டு அருள் புரியும் இறைவன் என்பதையும் நாம் அவனுக்கு அடியான் என்ற உணர்வையும் தாங்கியவர்களாக அவனை நமது உறவாக கருதினால்,அவனும் நம்மை உறவினனாக கருதி நம்முடன் இணைந்திருப்பான் என்று இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார். தருமத்தின் வழியே வாழ்பவன் என்பதால் அறவாழி என்று இறைவனை அழைக்கின்றனர்.

பிறவா நெறி தந்த பேரருளாளன்

மறவா அருள் தந்த மாதவன் நந்தி

அறவாழி அந்தணன் ஆதி பராபரன்

உறவாகி வந்து என் உளம் புகுந்தானே

பெரியபுராணம் காரைக்கால் அம்மையார் புராணம் பாடல் ஒன்றில், அறவா என்று அம்மையார் இறைவனை அழைத்தாக சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார். கையிலாயம் சென்ற காரைக்கால் அம்மையாரை, அம்மையே என்று அழைத்து வரவேற்ற பெருமான், தனக்கு வேண்டிய வரம் வேண்டுமாறு காரைக்கால் அம்மையிடம் சொன்னார். அம்மையார் அப்போது விடுத்த வேண்டுகோள் தான் இங்கே பாடலாக சேக்கிழாரால் கொடுக்கப் பட்டுள்ளது.பெருமானிடத்தில் தான் கொண்டுள்ள இன்ப அன்பு என்றும் தொடரவேண்டும் என்று வேண்டிய அம்மையார், அடுத்து பிறவாமை என்ற வரத்தினை வேண்டுகின்றார். ஒருகால் பிறவாமை என்ற வரம் தனக்கு கிடைக்காமல், மீண்டும் பிறவி எடுக்க நேரிட்டால், அந்த பிறவியிலும் இறைவனை தான் மறவாமல் நினைக்கும் தன்மையை வேண்டிய அம்மையார், இந்த பிறவியின் எஞ்சிய நாட்களில், இறைவன் நடனமாடுவதை, மிகவும் அருகில் இருந்து, அவனது திருவடிக்கீழ் இருந்த வண்ணம் தான் காண வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்துகின்றார்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்

பொழிப்புரை:

சிறப்பான வாழ்க்கை நடத்தாது பலராலும் இகழப்பட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயில் எரிந்து நாசமாகும் வண்ணம், மேரு மலையினை வளைத்துச் செய்யப்பட்ட வில்லினில் அம்பினை பொருத்தி எய்தவனும், தேவர்கள் உய்வினை அடையும் வண்ணம் அருள் புரிந்தவனும் ஆகிய பெருமான், உயர்ந்ததும் தேன் பொருந்திய மலர்களை உடையாய் சோலைகள் நிறைந்த நாகேச்சுரம் நகரத்தில் உறைகின்றான். தருமத்தின் வழியே வாழும் இறைவனை அறவா என்று போற்றி வாழ்த்தும் அடியார்களின் வலிய வினைகளும் அழிந்து கெடவே, அத்தகைய அடியார்கள் வினையாகிய குற்றங்கள் இன்றித் திகழ்வார்கள்.

பாடல் 3:

கல்லால் நிழல் மேயவனே கரும்பின்

வில்லான் எழில் வேவ விழித்தவனே

நல்லார் தொழு நாகேச்சுர நகரில்

செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே

விளக்கம்:

எழில்=அழகிய உருவம்; கரும்பின் வில்லான்=கரும்பு வில்லினை ஏந்திய மன்மதன்; நல்லார்=குற்றங்கள் நீங்கி நல்லவர்களாகத் திகழும் சான்றோர்கள்;காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பன உயிரின் உட்பகைகளாக விளங்குகின்றன. இந்த பகைளை வென்றவர்கள், இந்த குணங்களால் நாம் அன்றாடம் செய்கின்ற பல பாவச் செயல்களை தவிர்க்கின்றனர். எனவே இந்த கொடிய குணங்களை அறவே நீக்கிய அடியார்கள் நல்லவர்களாக விளங்குவதில் வியப்பு ஏதும் இல்லை. இந்த பாடலில் செல்வா என்று இறைவனை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். அனைத்துச் செல்வங்களினும் சிறந்ததும் வேறு எவரிடமும் இல்லாததும் ஆகிய முக்திச் செல்வத்தை தன்னிடம் உடையவன் சிவபெருமான். எனவே அவனை செல்வனாக அருளாளர்கள் கருதுகின்றனர். அவ்வாறு இறைவனை செல்வனாக குறிப்பிடும் திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.05.3) உத்தமராக வாழும் அடியார்கள், செல்வராகிய பெருமானின் அருளினால் இம்மையில் துன்பம் ஏதுமின்றி வாழ்வார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தாங்கள் உலகப் பொருட்களின் மீதும் உலகத்திலுள்ள உயிர்கள் மீதும் வைத்திருந்த பற்றினைத் துறந்து, பெருமானை தியானிக்கும் அடியார்கள் மறுமையில் வீடுபேற்றினை அடைவார்கள் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர், அத்தகைய வீடுபேற்றினை உடைய பெருமானை மிகவும் பொருத்தமாக செல்வர் என்று அழைக்கின்றார். திரைகள் என்று காவிரியின் வாய்க்காலில் உள்ள அலைகளை குறிப்பிடுகின்றார். வரன்றி=வாரிக்கொண்டு வந்து; உரிஞ்சி=உராய்ந்து கொண்டு; காவிரி கால்=காவிரி நதியின் வாய்க்கால்கள்.. இதே பதிகத்தின் மூன்றாவது பாடல் மற்றும் ஆறாவது பாடலிலும் பாம்பு அரை ஆர்த்த செல்வர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். விலை உயர்ந்த ஆபரணங்கள் ஏதுமின்றி, பாம்பினைத் தனது உடலின் பல இடங்களிலும் அணிந்து எளிமையாக காட்சி தரும் பெருமான்,உண்மையாகவே மிகவும் பெரிய செல்வர் என்று உணர்த்துகின்றார் போலும். இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் குறட்பூதச் செல்வன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

திரைகள் எல்லா மலரும் சுமந்து செழுமணி முத்தொடு பொன் வரன்றிக்

கரைகள் எல்லாம் மணி சேர்ந்து உரிஞ்சிக் காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி

உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்

அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கலாமே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.12.9) திருஞானசம்பந்தர் இறைவனை செல்வா என்று அழைக்கின்றார். இகல் (மாறுபட்ட)என்ற சொல் இயல் என்று எதுகை கருதி மாறியது. தங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்பதில் மாறுபட்டு வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமால் படப்பை=தோட்டம்; செயல்=திருவிளையாடல்; புயலாடு= மேகங்கள் தவழும்; தடம்=நீர்நிலை; வண்பொழில்=சிறந்த சோலைகள்; பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவராலும் அறிய முடியாத தன்மை சிறந்த செல்வமாக கருதப்பட்டது போலும்.

இயலாடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவரிய

செயல் ஆடிய தீயாய் உருவாகி எழு செல்வன்

புயலாடு வண் பொழில் சூழ் புனல் படைப்பைத் தடத்து அருகே

முயலோட வெண் கயல் பாய்தரு முதுகுன்று அடைவோமே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.15.11) பெருமானை, சில மல்கிய செல்வன் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.சில மல்கிய என்ற தொடரில் உள்ள சில என்ற சொல். சில் (நுண்ணிய பொருள்) என்பதன் திரிபாக கருதி, நுண்ணிய பொருட்களிலும் நிறைந்து நிற்பவன் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது. தல மல்கிய=தலங்களில் சிறந்த தன்மை உடைய; ஒப்பற்ற பலனை தரும் பாடல்கள் என்று இந்த பதிகத்து பாடல்களை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடிகளைச் சென்றடைந்து சிவகதி பெறலாம் என்று பதிகத்தின் பலனை குறிப்பிடுகின்றார். சிவகதி என்றால் சிவஞானமாகிய நெறி என்று பொருள். சிவபெருமானுடன் ஆன்மா சேர்வதற்கு வழி வகுக்கும் நெறியே சிவஞானம் என்றும் சிவகதி என்றும் அழைக்கப்படுகின்றது. மிகவும் நுண்ணிய பொருட்களிலும், அதே சமயத்தில் பெரிய பொருட்களிலும் பெருமான் கலந்து நிற்கும் தன்மை, பெருமானது அரிய தன்மையாக, செல்வமாக குறிப்பிடப்படுகின்றது போலும்.

தல மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்

நில மல்கிய புகழான் மிகு நெய்த்தானனை நிகரில்

பல மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்

சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவகதியே

செல்வராகிய சிவபெருமானின் திருவடிகள் தவிர்த்து வேறு எதனையும் தனது சிந்தை உணராது என்று திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (1.18.9) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தமது முன்னர் எழுந்த அழற்றூணின், இயல்பினை அறியமாட்டாது, பகைவரோ எவரோ என்று இன்னதொன்று அறியாத நிலையில் பிரமனும் திருமாலும் திகைத்து நின்ற நிலை, அல்லர் என ஆவர் என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது. மற்ற எவரும் உயிர்களுக்குத் தலைவர் அல்லர் தாம் ஒருவனே உயிர்களுக்குத் தலைவன், வேறு எவரும் உயிர்களுக்குத் தலைவன் அல்லர் என்று செருக்குடன் நின்ற நிலையை குறிப்பிடுவதாக கொள்வதும் பொருத்தமே. அல்லர் என ஆவர் என நின்றும் என்ற தொடருக்கு வேறுவிதமாகவும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.தான் பெருமானின் திருமுடியைக் கண்டதாக பொய் பேசிய பிரமன் மற்றும் தன்னால் திருவடியைக் காண இயலவில்லை என்று உண்மை பேசிய திருமால் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. நல்ல மலர்=தாமரை மலர்; கண்ணனாக அவதாரம் செய்த போது, தனது மகன் மண்ணைத் தின்று விட்டானே என்ற கவலையில் அவனது வாயினைத் திறத்து யசோதை பார்த்தபோது, அவனது வயிற்றினில் உலகம் இருப்பதைக் கண்ட செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது.

நல்லம் மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்

அல்லர் என ஆவர் என நின்றும் அறிவரிய

நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரின் நிலையார் எம்

செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே

திருக்கோலக்கா தலத்தின் மீது அருளிய பாடலிலும் (1.23.4) திருஞானசம்பந்தர் பெருமானை செல்வா என்று அழைக்கின்றார். தழுக்கொள் பாவம்=உயிரினை உறுதியாக பற்றிக் கொண்டிருக்கும் தீய வினைகளும் அவைகளால் ஏற்படும் தீமைகளும்; மறி=மான் கன்று; இழுக்கா வண்ணம்=தவறாத வண்ணம்; மனிதர்களே, உங்களை இறுகப் பற்றியுள்ள தீய வினைகளும் அந்த வினைகளால் ஏற்படும் துன்பங்களும், தங்களது பிடிப்பினில் தளர்ந்து உங்களை விட்டு விலக வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாயின், மழுப்படையினைத் தாங்கிய செல்வனும், மான் கன்றினைத் தனது சிவந்த கையினில் ஏந்தியவனும், கூட்டமாக உள்ள பூதப் படையினால் சூழப் பட்டவனும், கோலக்கா தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனை தவறாமல் வழிபட்டு வணங்கி வாழ்த்துவீர்களாக என்று நமக்கு அறிவுரை கூறும் பாடல். மழுக்கொள் செல்வர் என்ற தொடர் மூலம், பெருமான் வைத்திருக்கும் மழு ஆயுதத்தின் சிறப்பு உணர்த்தப் படுகின்றது. .

தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்

மழுக்கொள் செல்வன் மறி சேர் செங்கையன்

குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே

திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.26.11) செல்வரும் சேடரும் ஆகிய பெருமான் உறையும் திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பாடலை முறையாக பாடும் அடியார்களை துன்பங்களும் அத்தைகைய துன்பங்களால் ஏற்படும் அவலங்களும் சென்று அடையாது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சேடர்=ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள். ஒழுக்கத்தில் சிறந்தவராக விளங்கும் தன்மை சிறந்த செல்வமாக மதிக்கப் படுகின்றது.

நல்ல கேள்வி ஞானசம்பந்தன்

செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்

சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்

அல்லல் தீரும் அவலம் அடையாவே

திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.27.11) சேடர் என்றும் செல்வர் என்றும் பெருமானை குறிப்பிட்டு, பெருமான் உறைகின்ற தலம் திருப்புன்கூர் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த கடைக்காப்பு பாடல் மற்ற பதிகங்களிலிருந்து மாறுபட்டது. இந்த பாடலில் இந்த பதிகம் பாடுவதால் நாம் அடையவிருக்கும் பலன் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடி வாழ்வீர்களாக என்று சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானின் தன்மைகளையும் பண்புகளையும் கருணைத் திறனையும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அந்த பாடல்கள் குறிப்பிடும் கருத்தினை உள்வாங்கி, அவற்றை பின்பற்றி, பெருமானை வணங்கித் தொழுது நாம் அனைவரும் வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று விரும்புகின்றார் போலும். அதனால் தான் பதிகத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடி வாழ்வீர்களாக என்று கூறுகின்றார். நாடவல்ல=ஆராய்ந்து அறியும் வல்லமை வாய்ந்த; சேடர் செல்வர் என்று இந்த தலத்தினில் உறையும் அடியார்களை குறிப்பிடுகின்றார் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. எனினும் சேடர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார் என்ற விளக்கமே சிறப்பாக கருதப் படுகின்றது. ஒழுக்கத்தில் சிறந்தவராக விளங்கும் பெருமான் அனைவரிலும் சிறந்தவராக, செல்வராக கருதப் படுகின்றார்.

மாடம் மல்கு மதில் சூழ் காழிமன்

சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்

நாட வல்ல ஞானசம்பந்தன்

பாடல் பத்தும் பரவி வாழ்மினே

வீடுபேறு எனப்படும் செல்வத்தை உடைய செல்வர் என்று பெருமானை குறிப்பிடும் பாடல் (1.28.5) திருஞானசம்பந்தர் சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும். அறையும்= மோதும், இரு கரைகளிலும் மோதும் நீர்ப்பெருக்கு; செல்வம் உடையவர் என்று பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். செல்வராகிய பெருமான் தனது சடையில் அணிந்திருக்கும் நகைகள் தான் என்னே, பிறைச் சந்திரன், கங்கை ஆறு மற்றும் பாம்பு.உடலில் அணிந்துள்ள நகைகளோ, பன்றிக் கொம்பு, எலும்பு மாலை, கங்கணமாக பாம்பு; உடையோ புலித்தோல்; உண்கலனாக கையில் ஏந்தியிருப்பதோ மண்டையோடு; மேற்கூறிய பொருட்களில் எவையும் செல்வரது வாழ்க்கைக்கு பொருந்தும் பொருட்கள் அல்ல; உறையும் இடமாவது அவரது செல்வ நிலைக்கு பொருத்தமாக உள்ளதா என்றால் அதுவும் சுடுகாடாக உள்ளது. இத்தகைய தன்மையில் வாழும் இறைவனை செல்வர் என்று ஏன் ஞானசம்பந்தர குறிப்பிடுகின்றார். உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தும், நிலையற்றவை மேலும் அவை அளிக்கும் இன்பங்களும் நிலையல்ல. ஆனால் முக்தி உலகமோ என்றும் அழியாதது; முக்தி தரும் இன்பமோ, என்றும் அழியாதது, குறையாதது. எனவே வேறு எவரிடமும் இல்லாததும் அனைத்துச் செல்வங்களிலும் சிறந்ததும் என்றும் அழியாமல் நிலையாக இருப்பதுவும் ஆகிய முக்திச் செல்வம் உடைய இறைவனை விடவும், செல்வம் உடையார் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் வேறு எவரேனும் உளரோ. இந்த தலத்து இறைவனுக்கு தொலையாச் செல்வர் என்று ஒரு திருநாமும் உள்ளது.

பிறையும் அரவும் புனலும் சடை வைத்து

மறையும் ஓதி மயானம் இடமாக

உறையும் செல்வம் உடையார் காவிரி

அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.29.3) திருஞான சம்பந்தர், செல்வராகிய பெருமான் உறைகின்ற சித்தீச்சரம் தலம் சென்றடைவாயாக என்று தனது நெஞ்சத்திற்கு கட்டளை இடுவது போன்று, நமக்கு அறிவுரை கூறுகின்றார். புல்கு=பொருந்திய; கல்வியாளர் என்ற தொடரினை, தலத்தில் உள்ள மக்களுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கருதி பொருள் கொள்வது சிறப்பாகும். சிறப்பு வாய்ந்த மறையோர்கள் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அடுத்த பாடலில் அந்த மறையோர்களின் சிறப்புத் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் தலத்து மக்கள், கல்வியாளர்களாக திகழ்ந்த தன்மையை குறிப்பிடுகின்றார். சிவநெறியைக் கற்று, அதனில் ஒழுகும் அடியார்களையே கற்றவர் என்று தேவார முதலிகள் கருதுவதால், கல்வியாளர்களாக விளங்கிய தலத்து மக்கள், பெருமானின் அடியார்களாக, பெருமானின் அருட்செல்வம் பெற்றவர்களாக விளங்கிய தன்மை செல்வர் என்பதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. கல்வியாளர் என்ற சொல்லினை பெருமானை குறிக்கும் சொல்லாக கருதி, அனைத்துக் கலைகளிலும் தேர்ந்தவர் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இதே வகையில் செல்வர் என்ற சொல்லையும் பெருமானை குறிப்பதாக பொருள் கொண்டு, சிறந்த செல்வமாகிய முத்திச் செல்வத்தை உடையவர் பெருமான் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

கல்வியாளர் கனகம் அழல் மேனி

புல்கு கங்கை புரி புன்சடையான் ஊர்

மல்கு திங்கள் பொழில் சூழ் நறையூரில்

செல்வர் சித்தீச்சரம் சென்றடை நெஞ்சே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடலில் (1.34.1) திருஞானசம்பந்தர், திரையார் புனல் சூடிய செல்வன் என்று கூறுகின்றார். திரை=அலைகள்; அலைகள் வீசும் வண்ணம் பெரிய நீர்ப்பெருக்கு உடைய கங்கை நதியைத் தனது சடையில் தேக்கிய ஆற்றல் உடைய பெருமான், என்பதால் செல்வர் என்று குறிப்பிட்டார் போலும். துளித்துளியாக அவர் விடுவிக்கும் கங்கை நதி தானே நமது நாட்டினை வளம்படுத்துகின்றது. இத்தகைய கங்கை நதியைத் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமான் செல்வர் தானே, இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானை, மலர் தூவி வழிபாடுமாறு நம்மை பணிக்கும் பாடல்.

திரையார் புனல் சூடிய செல்வன்

வரையார் மகளோடு மகிழ்ந்தான்

கரையார் புனல்சூழ் தரு காழி

நிரையார் மலர் தூவுமின் இன்றே

வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.3) திருஞானசம்பந்தர் பெருமானை, சீதமும் வெம்மையும் ஆகிச் சிறப்புடன் விளங்கும் செல்வர் என்று குறிப்பிடுகின்றார். சீதம்=குளிர்ச்சி; வெம்மை=வெப்பம்; பெருமான் சீதமும் வெம்மையுமாக நிற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். உயிர்கள் செழிப்புடன் வாழ வெப்பமும் குளிர்ச்சியும் தேவைப்படுகின்றது. அவ்வாறு இருந்து, உயிர்களின் தேவையை பெருமான் நிறைவேற்றுகின்றார் என்று ஒரு விதமாக பொருள் கொள்ளலாம். வெப்பம் சுட்டெரிப்பது போன்று, தீயசெயல்களை, பாவத்தை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பவராகவும், நல்ல செயல்களையும் புண்ணியங்களையும் செய்யும் உயிர்களுக்கு இன்பம் தரும் வாழ்வையும் அளிப்பவர் என்றும் மற்றொரு விதமாக பொருள் கொள்ளலாம். பாவங்கள் செய்பவர்களுக்கு நரக தண்டனையையும் புண்ணியம் செய்பவர்களுக்கு சொர்க்க போகமும் கிடைக்கும் வண்ணம் வழி வகுத்தவன் இறைவன் அல்லவா. இவ்வாறு உயிர்களுக்கு தண்டனையும் போகத்தையும் அளித்து, உயிர்கள் தங்களின் வினைத் தொகுதியின் ஒரு பகுதியை கழித்துக் கொள்ளுமாறு இறைவன் அருள் புரிகின்றார். ஓதம்=இரைச்சலை எழுப்பும் அலைகள் கொண்ட கடல்; பக்குவப்பட்ட உயிர்களை தன்னிடம் அழைத்துக் கொள்ளும் முயற்சியில் பெருமான் ஊரெங்கும் பலியேற்பவர் போன்று திரிகின்றார் என்று பல பாடல்களில் குறிப்பிடும் திருஞான சம்பந்தர், இந்த பாடலில் பக்குவம் அடையாத உயிர்களுக்கு எவ்வாறு அருள் புரிகின்றார் என்பதை உணர்த்துகின்றார். இவ்வாறு அருள் புரிந்து அத்தகைய உயிர்களும் மெல்ல மெல்ல பக்குவம் பெறுவதற்கு, அந்தந்த உயிர்களின் பாவங்களின் தன்மைக்கு ஏற்ப தண்டனை அளித்து, அந்த உயிர்களை திருத்தி இறைவன் உதவுகின்றார் என்பதையும் நாம் உணரலாம்.

பூதமும் பல்கணமும் புடை சூழப் பூமியும் விண்ணும் உடன் பொருந்தச்

சீதமும் வெம்மையும் ஆகிச் சீரொடு நின்ற எம் செல்வர்

ஓதமும் கானலும் சூழ் தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த

வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னகராரே

எட்டு செல்வங்கள் என்று குறிப்பிடப்படும் செல்வங்களில் வீரம் என்பதும் ஒரு வகைச் செல்வம். வீரச் செல்வராக பெருமான் விளங்கும் தன்மை பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.41.1) திருஞானசம்பந்தரால், திரிபுரங்களை எரித்த நிகழ்ச்சி மூலம், குறிப்பிடப் படுகின்றது. சீர்= சிறப்பு;வார்=கச்சு; மான்மறி=மான்கன்று; மிடறு=கழுத்து; காரணி=கரிய மாணிக்கக் கல்; மேலும் புகழ் மற்றும் அழகு ஆகிய செல்வங்களை உடையவர் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. அழகிய திருமேனி உடையவர் என்று பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் சொல்லப் பட்டுள்ளது.

சீரணி திகழ் திரு மார்பில் வெண்ணூலர் திரிபுரம் எரி செய்த செல்வர்

வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் மான்மறி ஏந்திய மைந்தர்

காரணி மணி திகழ் மிடறுடை அண்ணல் கண்ணுதல் விண்ணவர் ஏத்தும்

பாரணி திகிழ் தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே

பேணுப்பெருந்துறை என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.42.1) திருஞான சம்பந்தர் பெருமானை செல்வர் என்று அழைக்கின்றார்.பொதுவாக, அடுத்தவரிடம் பிச்சை ஏற்போர், ஒரு விதமான தயக்கம், வெட்கம் காரணமாக உடலும் உள்ளமும் குறுகிய தன்மை உடையவர்களாக, தமக்கு ஏதும் கிடைக்காதா என்ற நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் இருப்பதை காண்கின்றோம். ஆனால் பிச்சை ஏற்கும் பெருமானோ இறுமாப்புடன் இருப்பதாகவும், பிச்சை இடுவீர்களாக என்று கட்டளை இடுபவராகவும் இருக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் பெருமான்,தான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் தங்களது மலங்களை பிச்சையாக இடும் உயிர்களுக்கு, செல்வத்தை அளிக்கும் செல்வந்தர் என்பதை செய்தொழில் பேணி ஓர் செல்வர் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். முக்திச் செல்வத்தை தனக்கென்று மட்டும் வைத்துக் கொள்ளாமல் தன்னைப் பேணி போற்றும் அடியார்களுக்கு அருளும் செல்வர் அல்லவா பெருமான். பெய்தல்=இடுதல்; செய்தொழில் பேணி=தாங்கள் செய்ய வேண்டிய தொழில்களை போற்று செய்பவர்கள்; பிறவி எடுத்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை, உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானைப் போற்றிப் புகழ்ந்து,பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற முயற்சியில் ஈடுபடுவது தானே. அம்மான்= அழகிய நோக்கி=மான் போன்ற மருண்ட பார்வை உடைய பார்வதி தேவி; தொல்புகழ்=பண்டைய நாளிலிருந்து அழியாமல் நிலைத்து நிற்கும் புகழினை உடையவர்;

பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றி வெண்கொம்பு ஒன்று பூண்டு

செம்மாந்து ஐயம் பெய்கென்று சொல்லிச் செய்தொழில் பேணி ஓர் செல்வர்

அம்மான் நோக்கிய அந்தளிர் மேனி அரிவை ஓர் பாகம் அமர்ந்த

பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணுப்பெருந்துறையாரே

சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பாடலில், திருஞானசம்பந்தர், பெருமானை சேடு அடைந்த செல்வர் என்று குறிப்பிடுகின்றார். சேடு என்றால் பெருமை என்று பொருள். பெருமையைத் தேடிச் செல்லாதவர் பெருமான். பெருமையும் புகழும், தாம் பெருமானைச் சென்றடைந்தால் புகழ் அடையலாம் என்ற நோக்கத்துடன் பெருமானைச் சென்றடைந்ததாக சேடு அடைந்த செல்வர் என்ற தொடர் மூலம் இங்கே குறிப்பிடுகின்றார். அந்த தலத்து செல்வர்களை,பெருமானின் அருள் பெற்ற சிறப்பினை பெற்ற செல்வர்கள் என்று திருஞானசம்பந்தர் பெருமை படுத்துவதாகவும் சிலரால் விளக்கம் அளிக்கப் படுகின்றது.இந்த விளக்கமும் பொருத்தமாகவே உள்ளது. கோடு= தந்தம்; மால்களிறு=பெரிய ஆண் யானைகள். சிறந்த யானைப் படையை உடைய கோச்செங்கட் சோழன் என்று குறிப்பிடுகின்றார். களிற்றுக் கோச்செங்கணான் என்ற தொடருக்கு சென்ற பிறப்பின் தொடர்பாக யானையின் மீது எப்போதும் பகை கொண்டவனாக திகழ்ந்த கோச்செங்கட்சோழன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சேய்ஞலூர் செல்வன் என்று இந்த பதிகத்தின் கடைப் பாடலில் குறிப்பிடுகின்றார்.

காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணமாகி வந்து

வேடு அடைந்த வேடனாகி விசயனொடு எய்தது என்னே

கோடு அடைந்த மால் களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள் செய்

சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.53.3) திருஞானசம்பந்தர், பெருமானை பலி ஏற்கும் செல்வர் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் பலி கொள்வது வறுமை காரணமாக அல்ல என்பதை உணர்த்தும் பொருட்டு, செல்வன் என்று பெருமானை, திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்ததும் வேறு எவரிடமும் இல்லாத முக்திநிலையினை உள்ளவனை பெருஞ்செல்வன் என்று தானே அழைக்க வேண்டும். மேலும் பெருமானின் தனது கையில் வைத்திருக்கும் மண்டையோட்டின் தன்மையை குறிப்பிட்டு, அத்தகைய உண்கலன் வேறு எவரிடமும் இல்லை என்பதால் செல்வன் என்று கூறினார் போலும் என்றும் தோன்றுகின்றது. இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்து இருக்கும் பெருமானை தன்மையை உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் அவனது பல வீரச் செயல்களையும் கருணைச் செயல்களையும் உணர்த்துகின்றார். கடல் போன்று பெருகி வந்த கங்கை ஆற்றினைத் தனது சடையில் அடக்கியதும், விடமுடைய பாம்பின் தன்மையை மாற்றி கச்சையாக அணிந்து கொண்டதும், பிரமனின் தலையை நகத்தால் கிள்ளியதும், வலிமை வாய்ந்த யானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டதும் வீரச் செயல்கள். அழியும் நிலையில் இருந்த திங்களை சடையில் அணிந்து கொண்டு காப்பாற்றியதும், பிராட்டியைத் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்றுக் கொண்டதும், உயிர்களை உய்விக்கும் நோக்கத்துடன் உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொள்ள பலி ஏற்பதும் கருணைச் செயல்கள். மூரி=வலிமை வாய்ந்த;நாகம்=யானை; சீரிதாக=சிறப்பாக; செற்றலும்= கோபம் கொண்ட குணத்துடன்; வாரி=கடல், கடல் போன்று பெருகி வந்த கங்கை நதி; மாகம்=ஆகாயம்;வைகு=பொருந்தும்

வாரி மாகம் வைகு திங்கள் வாளரவம் சூடி

நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன் தன் தலையில்

சீரிதாகப் பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியதோர்

மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே

பல இடங்கள் திரிந்து சென்று பலியேற்றாலும் பெருமான் சிறந்த செல்வர் என்று பாற்றுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.56.2)திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையில் அமைந்த பாடலாகும். இந்த பாடலில் சம்பந்த நாயகி பெருமானை வெண்தலைச் செல்வர் என்று குறிப்பிடுகின்றாள். வெண்தலை என்று பிரமகபாலம் உணர்த்தப் படுகின்றது. பெருமான் கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் ஊரூராக பிச்சைக்கு செல்வது இங்கே கூறப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர் எவ்வாறு செல்வராக இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். உலகங்கள் அனைத்தையும் தனது உடமையாக உடையவர், எவரிடமும் இல்லாத முக்திச் செல்வத்தை உடையவர் பெருமான் ஒருவர் தாமே. எனவே செல்வர் என்று அழைக்கப்படுவதற்கு அவரை விடவும் பொருத்தமானவர் வேறு எவரேனும் உளரோ. இல்லை அல்லவா. தீயர் என்பதற்கு தீயினைத் தனது கையில் ஏந்தி நடமாடுபவர் என்றும் தீயவர் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். நல்லவருக்கு நல்லவராக இருக்கும் அவர் தீயவர்களுக்கு தீயவராக, அவர்கள் அஞ்சி நடுங்கும் வண்ணம் வீரம் உடையவராக இருப்பதை குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம். தனது உள்ளம் கவர்ந்த தலைவன் வீரம் மிகுந்தவராக இருப்பது தனக்கு சிறந்த அரணாக இருக்கும் என்பதால், அத்தகையவரை பெண்கள் விரும்புது இயற்கை தானே. ஈசர்=தலைவர்; எல்லாரும் தொழும் ஈசர் என்பதற்கு, மனிதர்கள் மட்டுமன்றி தேவர்கள் அசுரர்கள் முனிவர்களாலும் தொழப் படுபவர் என்றும், மனிதர்களன்றி மற்ற உயிர்க் கூட்டங்களாலும் தொழப்படுபவர் என்றும், பக்குவமடைந்த ஆன்மாக்கள் பக்குவம் அடையாத ஆன்மாக்கள் என்று அனைவராலும் தொழப்படுபவர் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. சொல்லார் நன்மலர் சூடினார் என்ற தொடருக்கு நன்பொருளை உணர்த்தும் சொற்கள் கொண்ட தோத்திரங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று பொருள் கொள்ளவேண்டும்.

நல்லாரும் அவர் தீயர் எனப்படும்

சொல்லார் நன்மலர் சூடினார்

பல்லார் வெண்தலைச் செல்வர் எம் பாற்றுறை

எல்லாரும் தொழும் ஈசரே

குடந்தைக் காரோணத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.72.11) திருஞானசம்பந்தர் பெருமானை, செல்வக் காரோணத்தார் என்று குறிப்பிடுகின்றார்.. இந்த பாடலில், தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள், மீண்டும் ஒரு கருப்பையில் புகுந்து துன்பமடையும் வாழ்வினை விடுத்து கவலைகள் நீங்கப்பெற்று வாழ்வார்கள் என்று கூறுகின்றார். இவ்வாறு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து தனது அடியார்களுக்கு விடுதலை அளிக்கும் ஆற்றல் உடைய பெருமானை செல்வர் என்று பொருத்தமாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் செல்வக் காரோணத்தார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

கருவார் பொழில் சூழ்ந்து அழகார் செல்வக் காரோணத்தாரைத்

திருவார் செல்வ மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன்

. உருவார் செஞ்சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்துக்

கருவார் இடும்பைப் பிறப்பு அறுத்துக் கவலை கழிவாரே

திருக்கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.73.10) திருஞானசம்பந்தர் திருமாலும் பிரமனும் தங்களைப் பாதுகாக்கும் செல்வராக கருதி பெருமானை வழிபடும் தன்மையை உணர்த்துகின்றார். ஏனம்=பன்றி; அக்கு=எலும்பு; வெள்ளர்=வெள்ளை உள்ளம் கொண்டவர்; எளிய பொருட்களை,எவரும் பொதுவாக தவிர்க்கும் பொருட்களை, அணிந்து கொண்டு வெள்ளை உள்ளம் கொண்டவர் போல் காட்சி அளித்த பெருமான் தனது கோலத்திற்கு பொருந்தாத வண்ணம் கள்வராக செயல்பட்டு தனது உள்ளத்தை கொள்ளை கொண்டதாக சம்பந்தநாயகி இங்கே குற்றம் சாட்டுகின்றாள்.சேமம்=பாதுகாப்பு; கோணாகம்=வளைந்த பாம்பு; சிறந்தவர்களாக கருதப்படும் திருமால் ,மற்றும் பிரமன் ஆகிய இருவருக்கும் பாதுகாப்பினை அளிக்கும் வல்லமை படைத்த பெருமான், வேறு எவரிடமும் இல்லாத ஆற்றல் உடையவராக இருக்க வேண்டும் அல்லவா. அந்த ஆற்றலே இங்கே சிறந்த செல்வமாக கருதப் படுகின்றது. இதே பதிகத்தின் முதல் பாடலில் ஆனூர்ச் செல்வர் என்று குறிப்பிடுகின்றார்.

ஆமை அரவோடு ஏன வெண் கொம்பு அக்கு மாலை பூண்டு

தாமோர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்

ஓம வேத நான்முகனும் கோணாகணையானும்

சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே

கோங்கு, செருந்தி, கூவிளம், ஊமத்தை, கொன்றை ஆகிய மலர்களுடன் பிறைச் சந்திரன், கங்கை நதி பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள பெருமானது சடை, சிவந்த வண்ணத்தில் அழகாக காணப் படுகின்றது என்பதால், செஞ்சடைச் செல்வர் என்று வெங்குரு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.8) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பாங்கிலா அரக்கன் கயிலை அன்றெடுப்பப் பலதலைமுடியொடு தோளவை நெரிய

ஓங்கிய விரலால் ஊன்றி அவர்க்கே ஒளிதிகழ் வாளது கொடுத்து அழகாய

கோங்கொடு செருந்தி கூவிள மத்தம் கொன்றையும் குலாவிய செஞ்சடைச் செல்வர்

வேங்கை பொன்மலரார் விரைதரு கோயில் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே

இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.76.10) சமணர்களும் புத்தர்களும் அறிய முடியாத சிறப்புகள் உடைய பெருஞ்செல்வன் என்று இறைவனை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில், இறைவன் தனது மொழிகளை எனது உரையாக வெளிப்படுத்தியுள்ளான் என்று குறிப்பிட்டு, தேவாரப் பாடல்கள் வேதங்களின் சாரம் என்று உணர்த்துகின்றார். உரிஞ்சன கூறை=ஆடைகள் உரித்துவிடப்பட்டது போன்று, உடைகள் ஏதுமின்றி அம்மணமாகத் திரியும் சமணர்கள்; பெருமானிடம் தனது மனதினை பறிகொடுத்த சம்பந்தர், தன்னை ஒரு பெண்ணாக உருவகித்துக் கொண்டு தனது அழகினை பெருமான் கவர்ந்து கொண்டார் என்று இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் கூறுகின்றார் என்பதால் இந்த பதிகத்தை அகத்துறை சார்ந்த பதிகம் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்..

உரிஞ்சன கூறைகள் உடம்பினராகி உழிதரு சமணரும் சாக்கியப் பேய்கள்

பெருஞ்செல்வன் எனதுரை தனதுரையாகப் பெய்பலிக்கென்று உழல் பெரியவர் பெருமான்

கருஞ்சினை முல்லைநன் பொன்னடை வேங்கை கழிமுக வண்டொடு தேனினம் முரலும்

இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே

செல்வம் என்ற சொல்லுடன் தொடர்பு கொண்ட சொற்களை மிகவும் அதிகமாக பயன்படுத்தி, தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.80.5),திருஞானசம்பந்தர் பெருமானின் புகழினைப் பாடுவதே சிறந்த செல்வம் என்று குறிப்பிடுகின்றார். செல்வ வளம் நிறைந்த மாடங்கள் கொண்ட வீடுகள் ஆகாயத்தை அளாவும் வண்ணம் உயர்ந்த நிலையில் இருக்க, வானில் உலவும் அழகிய சந்திரன் அந்த வீட்டு மாடங்களில் தோய்கின்றது. இத்தகைய செல்வவளம் நிறைந்த வீடுகள் கொண்ட தில்லை நகரில் வாழும் மனிதர்கள் ஞானத்தில் சிறந்து விளங்குகின்றனர். இந்த ஞானச் செல்வர்கள், வேறு எவரிடமும் இல்லாததும் அழிவில்லாததும் ஆகிய முக்திச் செல்வத்தை உடைய சிறந்த செல்வனாகிய பெருமானின் திருப்பாதங்களை புகழ்ந்து பாடுவதால் ஏற்படும் ஒப்பிலாத அருள் செல்வத்தை உடையவர்களாக விளங்குகின்றனர் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்

செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற

செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே

நாகைக் காரோணம் தலத்தில் ஆரவாரமாக தேர்த் திருவிழா நடைபெறுவதை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இவ்வாறு இடைவிடாது தொடர்ந்து நடத்தப்படும் அத்தகைய விழாக்களைத் தனது செல்வமாகக் கொண்டவன் பெருமான் என்று ஒரு பாடலில் (1.84.3) குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் விடையூரும் செல்வன் என்றும் குறிப்பிடுகின்றார்.

பாரோர் தொழ விண்ணோர் பணியம் மதின்மூன்றும்

ஆரார் அழல் ஊட்டி அடியார்க்கு அருள் செய்தான்

தேரார் விழவு ஓவாச் செல்வன் திரை சூழ்ந்த

காரார் கடல் நாகைக் காரோணத்தானே

சிறந்த செல்வம் படைத்தவன் என்று உணர்த்தும் வண்ணம் பெருமானை திருவுடையான் என்று திருஞானசம்பந்தர், திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.98.1) குறிப்பிடுகின்றார். பெருமானிடம் இருக்கும் முக்திச் செல்வத்தை சென்றடையாத திரு என்று திருஞானசம்பந்தர்கூறுகின்றார். வீடுபேறு என்பது நமது விருப்பப்படி நாம் சென்று அடைய முடியாத செல்வம் என்றும் அவன் அருள் இருந்தால் மட்டுமே, நமக்கு முக்தி கிட்டும்என்பது நமக்கு இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. நன்றுடையான், தீயதில்லான் என்ற இரண்டும் இந்த தலத்து தீர்த்தங்களின் பெயர்கள். நல்லதன்மையை உடையவன் என்றும் தீய தன்மைகளை ஏதும் இல்லாத இறைவன் என்றும் இந்த உணர்த்துவதாக விளக்கம் கூறுவார்கள். சென்றடையாத் திருவுடையான் என்று அப்பர் பிரானும் திருவாரூர் தலத்தின் மீது அருளிய விருத்தப் பாடல் ஒன்றினில் (4.101.3) கூறுகின்றார்.

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு

ஒன்று உடையானை உமை ஒரு பாகம் உடையானைச்

சென்று அடையாத திரு உடையானைச் சிராப்பள்ளி

குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே

திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் (1.98.9) திருஞானசம்பந்தர், செல்வராக திகழும் பெருமான் மனைதோறும் சென்று பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். செல்வர் என்று பெருமானை குறிப்பிட்டு, அவர் மனைதோறும் பலி ஏற்கின்றார் என்று கூறுவதால், அடிப்படையாக பெருமான் பலியேற்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்துகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம், பெருமான் பலியேற்பதன் காரணத்தை நாம் சிந்திக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றார். பல இல்லங்கள் சென்று பெருமான் பலியேற்பது அவரது இயலாமையால் அல்ல. ஆற்றலில் எவர்க்கும் குறைந்தவர் அல்லாத பெருமான், என்பதை உணர்த்தும் வண்ணம், பிரமனும் திருமாலும், நெடுந்தீப்பிழம்பாக நின்ற பெருமானின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்த செய்தி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும் அவ்வாறு சிந்தித்து காரணத்தை அறிந்து கொள்ளாமல், சிலர் பெருமானை பழித்து கூறுவதை திருஞானசம்பந்தரின் குழந்தை உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாமல் வருந்தும் தன்மை இந்த பாடலில் வெளிப்படுகின்றது. கரப்பு=மறைத்துக் கொள்ளுதல்;அரப்பள்ளியான்=பாம்பினைத் தான் பள்ளி கொள்ளும் படுக்கையாக உடைய திருமால்; உள்ளி=காரணத்தை நினைத்து; இரப்பு=பிச்சை ஏற்கும் தன்மை.இதே பதிகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில், சிராப்பள்ளி மேய செல்வனார் என்று குறிப்பிடுகின்றார். ஏதிலர் கண்டால் இகழ்வார் என்ற தொடர் மூலம், அடியார்கள் பெருமானின் சிறப்பையும் பெருமான் பலியேற்கும் நோக்கத்தையும் அறிந்தவர்கள் என்பதால் அவர்கள் இகழமாட்டார்கள் என்பதை மிகவும் நயமாக உணர்த்துகின்றார். ஏதிலர்= அயலார், அடியார்கள் அல்லாத அயலார்;

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்

கரப்புள்ளி நாடிக் கண்டிலர் ஏனும் கல் சூழ்ந்த

சிரப்பள்ளி மேய வார்ச்சடைச் செல்வர் மனை தோறும்

இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே

திருநீலகண்டப் பதிகத்தின் கடைப் பாடலில் (1.116.11) திருஞானசம்பந்தர், செல்வனாகிய பெருமானின் திருப்பாதங்களைச் சென்றடைந்து பணிந்து வணங்கும் அடியார்கள், மறுமையில் சிவபிரானுடன் சென்று கூடுவார்கள் என்று கூறுகின்றார். வானவர் கோன்=சிவபெருமான்; இறந்த=கடந்து; கிடைத்தற்கு அரிய மானிடப் பிறவி வாய்க்கப் பெற்ற நாம் இந்த பிறவியினில் பெருமானின் திருவடிகளைச் சரணடைந்து போற்றுவோம் என்று இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார். முதல் அடியில் உள்ள எம் செல்வன் கழல் அடைவான் பிறந்த பிறவி என்று மாற்றி அமைத்து பொருள் கொண்டால், மானிடப் பிறவி கிடைத்ததே இறைவனைப் போற்றி வாழ்வதற்கே என்ற பொருள் அமைகின்றது. திறம் பயில்=உறுதி வாய்ந்த; வானவர் கோன் என்ற சொல்லுக்கு இந்திரன் என்று பொருள் கொண்டு, அடுத்த பிறவியில் தேவர்களாக பிறப்பார்கள் என்று பொருள் கொள்வதும் ஒரு வகை. சிவபெருமானின் திருவடிகளைச் சார்வோம்,அவரது திருவடிகளைச் சென்று அடைவோம் என்று பல இந்த பதிகத்தின் பாடல்களில் திருஞானசம்பந்தர் கூறி இருப்பதால், வானவர் கோனென்று சிவபெருமானையே அவர் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. உயிர்கள் கொள்ளும் எழுவகை பிறப்புகள், தாவரம்,நீரில் வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் என்பன.

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்

இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோன் அடிக் கண்

திறம் பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே

திருப்பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (1.135.11) திருஞானசம்பந்தர் பெருமானை செல்வர் என்றும் தன்னை பெருமானின் அருள் பெற்ற செல்வன் என்று குறிப்பிடுகின்றார். சிதையாதன=அழிவற்ற; இந்த பாடலில் செல்வர் என்று பெருமானை ஞானசம்பந்தர் அழைக்கின்றார். செல்வர் என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்று. அந்த பெயர் வந்ததற்கான காரணத்தை நாம் இங்கே காண்போம். முன் காலத்தில் இந்த இடம் தான் தாருக வனமாக இருந்தது. இங்கு தவம் புரிந்து வந்த முனிவர்கள் அவர்கள் செய்யும் கருமமே மோட்சத்தை கொடுக்கும் என்றும் கடவுள் என்று ஒருவர் தேவையில்லை என்று கூறிக்கொண்டு அகந்தையில் உழன்று கொண்டிருந்தனர். இதனால் இறைவனை மறந்தது மட்டும் அல்லாமல், இறைவனை இகழவும் செய்தனர். தாருகவனத்து முனிவர்கள் தங்களது அறிவு காரணமாக மிகுந்த கர்வம் உடையவர்களாய் இருந்துவந்தனர். அவர்களது மனைவியர்களும் தங்களது அழகு மற்றும் கற்பு நெறி குறித்து மிகுந்த பெருமை உடையவர்களாய் இருந்தனர். தங்களது அறிவு திறமை, ஒழுக்கம், தவம் முதலிய பண்புகளால்,அந்த முனிவர்கள் தாங்கள் மும்மூர்த்திகளுக்கு சமமான நிலை அடைந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, தாங்கள் நினைத்தால் மும்மூர்த்திகள் போல எதையும் சாதிக்க முடியும் என நம்பினார். இந்த தற்பெருமையின் பயனாக அவர்களின் இறை நம்பிக்கை குறையலாயிற்று. சிவபிரான் அவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்த விரும்பி திருமாலுடன் தாருகாவனம் சென்று அடைந்தார். சிவபிரான், பிட்சாடனர் வடிவத்திலும் திருமால் மோகினி வடிவத்திலும் அங்கு சென்றனர். பிட்சாடனரின் அழகு கண்டு மயங்கி முனிவர்களின் மனைவிகள் தங்களது வீட்டுக் கடமைகளை மறந்து, தங்களது ஆடைகள் நழுவுவதை கூட உணராமல், சிவபிரான் பின்னர் செல்லத் துவங்கினர். தமது மனைவியர்களின் நிலை கண்டு கோபமுற்ற முனிவர்கள், இதற்கு காரணமான சிவனை அழிக்க தீர்மானம் செய்தனர், முனிவர்கள் அனைவரும் கூடி ஒரு வேள்வி தொடங்கி, அந்த வேள்வி மூலம் ஒரு புலியைப் படைத்து,அந்த புலியை சிவபிரான் மீது ஏவினர். சிவபிரான் அந்த புலியின் தோலை உரித்து, அந்த தோலையே ஆடையாக அணிந்துகொண்டார். புலி பயனற்று போனதை கண்ணுற்ற முனிவர்கள் பாம்புகளைத் தோற்றுவித்து சிவபிரான் மீது ஏவினர். சிவபிரான் அந்த பாம்புகளை அடக்கி, பாம்பையே தனக்கு அணியாக கொண்டு தனது உடலில் பல இடங்களிலும், தனது கழுத்தில் மாலையாகவும் அணிந்து கொண்டார். அதனை கண்ட முனிவர்கள் முயலகன் எனும் அரக்கனை தோற்றுவித்து அந்த அரக்கனை சிவபிரானை கொல்வதற்காக அனுப்பினர். முயலகனை அடக்கிய சிவபிரான் முயலகனை தரையில் போட்டு மிதித்தார். இவ்வாறு தங்களது பல முயற்சிகள் பயனற்று போன நிலையில், முனிவர்களுக்கு உண்மை நிலை புரிந்தது. சிவபிரானை அணுகி வணங்கி தங்களது தவறுகளை மன்னித்து அருளுமாறு வேண்டினர். அவர்களது வழிபாட்டால் மனம் மகிழ்ந்த சிவபிரான், ஆனந்த கூத்து ஆடினார். அந்த கூத்தைக் காண அனைத்து தேவர்களும் கூடினர்; கண்டு மகிழ்ந்தனர். மோகினி வடிவத்துடன் சிவபிரானை தொடர்ந்து சென்ற திருமாலும் அந்த ஆனந்தக் கூத்தை கண்டு மகிழ்ந்தார். சிவபிரான் தாருக வனத்து முனிவர்களுக்கு வரங்களும் கொடுத்து அருளினார். தாருகவனத்து முனிவர்களுக்கு சிவஞானம் எனும் செல்வத்தை அளித்ததால் பெருமான் செல்வர் என்று அழைக்கப்படுகின்றார். சிவஞானம் மற்றும் முக்திச் செல்வம் உடையவராக விளங்கும் பெருமானே முழுமையான செல்வராவார். குபேரன் உட்பட செல்வர்கள் அனைவரும் இவருக்கு ஈடாகமாட்டர்கள். செல்வம் மல்கிய செல்வர் என்ற தொடர்,சிவபெருமானின் அடியார்களை குறிப்பதாக பொருள் கொண்டு, பெருமானின் கருணையால் பொருட்செல்வமும் அருட்செல்வமும் மிகுதியாக வாய்க்கப் பெற்ற பராய்த்துறை அன்பர்கள் என்றும் விளக்கம் அளிக்கின்றனர். இரண்டு விதமான செல்வங்களை குறிப்பிட்டு, இம்மையிலும் மறுமையிலும் செல்வம் அளிக்கும் பெருமான் என்று இங்கே சொல்லப் படுகின்றது.

செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்

செல்வர் மேல் சிதையாதன

செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்

செல்வமாம் இவை செப்பவே

தெளிச்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.3.11) திருஞானசம்பந்தர், பெருமானை தெளிச்சேரிச் செல்வன் என்று அழைக்கின்றார்.திக்கெலாம்=எட்டு திசைகளிலும்; மிக்க=புகழ் மிக்க, மற்ற நகரங்களினும் மேம்பட்ட; விளம்பிய=போற்றிப் பாடிய; தட=பெரிய; தொக்க=சூட்டிக் கொண்டுள்ள; வானவர் சூழ இருப்பார்கள் என்பதன் மூலம், இந்திர லோகத்தை ஆளும் வாய்ப்பினைப் பெறுவார்கள் என்று குறிப்பிடுகின்றார்.

திக்குலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை

மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய

தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்

தொக்க வானவர் சூழ இருப்பர் சொல்லிலே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.07.03) திருஞானசம்பந்தர் வாஞ்சியம் மேவிய செல்வனார் என்று கூறுகின்றார். ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்களை அமைத்து, எண்ணலங்காரப் பாடலாக இந்த பாடல் திகழ்கின்றது. தன்னை விரும்பி வழிபடும் அடியார்கள் வேறு, தான் வேறு என்றில்லாமல், அடியார்களோடு ஒன்றாக பொருந்தி வாழும் இறைவன், தான் செயலாற்றும் போது சிவம் சக்தி என இரண்டாக விரிகின்றார். உயிர்களுடன் ஒன்றாகவும் வேறாகவும் இருப்பதுடன் உடனாக இருந்து மூன்று நிலைகளில் இருக்கும் பெருமான் என்றும் மூன்று மூர்த்திகளாக இருப்பவர் என்று இரண்டு விதமாக பொருள் சொல்லப் படுகின்றது. ஆதியாகவும் பரையாகவும் இருக்கும் பெருமான், இச்சை கிரியை ஞானம் ஆகிய சக்திகளுடன் இணைந்து ஐந்து விதமான சக்திகளாக இருக்கின்றார். பகவன் என்ற பெயருக்கு ஏற்ப, செல்வம், வீரம், புகழ், ஞானம், முழுமையான ஆற்றல், விருப்பு வெறுப்பு இல்லாத தன்மை ஆகிய சிறந்த ஆறு குணங்களை உடையவன் பெருமான்; ஏழு விதமான ஓசைகளாக, சுரங்களாக உள்ளவனும் பெருமானே; அட்ட மூர்த்தியாக,பஞ்ச பூதங்கள் சூரியன் சந்திரன் மற்றும் ஆன்மாவாக பெருமான் இருக்கும் தன்மை எட்டர் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது. தேவில்=தெய்வத் தன்மை உடையவன்; இத்தகைய சிறப்புகள் உடைய வாஞ்சியத்து செல்வனை வணங்கும் அடியார்கள் தங்களது பாவங்கள் தீர்க்கப் பெற்று, வீண் பழிகள் தம்மை வந்து அடையாத வண்ணம் சிறப்பாக வாழ்வார்கள் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆறர் என்ற சொல்லுக்கு கங்கை நதியைத் தனது சடையில் கொண்டுள்ளவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய்

நாவின் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழோசையர்

தேவில் எட்டர் திருவாஞ்சியம் மேவிய செல்வனார்

பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம்மடியார்கட்கே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.37.5) திருஞானசம்பந்தர், செல்வா என்று பெருமானை அழைக்கின்றார்.ஏனோர்=தானல்லாத மற்ற அனைவரும்; உலகினில் உள்ள அனைவராலும் தொழப்படும் அரிய குணத்தை உடைய செல்வன் என்று பெருமானை, இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இத்தகைய ஆற்றல் உடைய பெருமான், காட்டினில் வேடனாகத் திரிந்ததன் காரணம் தான் யாதோ என்று வினவும் பாடல். இதே பதிகத்தின் ஏழாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களிலும் பெருமானை, செல்வா என்று திருஞான சம்பந்தர் அழைக்கின்றார்.

வானோர் மறை மாதவத்தோர் வழிபட்ட

தேனார் பொழில்சூழ் மறைக்காட்டு உறை செல்வா

ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என் கொல்

கானார் கடு வேடுவன் ஆன கருத்தே

கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.52.4), திருஞானசம்பந்தர், பெருமானை வெண்ணீறு அணி செல்வன் என்று குறிப்பிடுகின்றார்.திருநீற்றினை பெருமான் சிறந்த செல்வமாக மதிப்பதால், அவனது அடியார்களும் திருநீற்றினைச் செல்வமாக மதிக்கின்றனர். அத்தகைய செல்வத்தைத் தனது உடல் முழுவதும் பூசிக்கொண்டுள்ள பெருமானை செல்வன் என்று அழைக்கின்றார். நம்பன் என்று பணிந்து வணங்கும் அடியார்களுக்கு அருள் செய்பவன் என்று கூறி, பெருமானிடம் நம்பிக்கை வைத்து வணங்குதலின் பலனை உணர்த்துகின்றார். வம்பு=நறுமணம்; கோதை=அழகிய கூந்தல், இங்கே அழகிய கூந்தலை உடைய உமை அம்மையைக் குறிக்கின்றது; கொம்பு=கொடி; கெண்டு=கிளரும்;

வம்பு அலரும் மலர்க் கோதை பாகம் மகிழ் மைந்தனும்

செம்பவளத் திருமேனி வெண்ணீறு அணி செல்வனும்

கொம்பமரும் மலர் வண்டு கெண்டும் திருக் கோட்டாற்றுள்

நம்பன் எனப் பணிவார்க்கு அருள் செய் எங்கள் நாதனே

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.60.5) பெருமானை, சேடச் செல்வர் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். சேடர் என்றால் ஒழுக்கத்தில் சிறந்தவர் என்று பொருள். அனைவரிலும் சிறந்த ஒழுக்கம் உடைய பெருமான், மிகவும் பொருத்தமாக செல்வர் என்று அழைக்கின்றார்.செல்வராக இருப்பினும், தவறாமல் பலி ஏற்கும் கொள்கையர் என்று சொல்லப்பட்டுள்ளது. .

ஆடல் புரியும் ஐவாய் அரவொன்று அரைச் சாத்தும்

சேடச் செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார்

வாடல் தலையில் பலிதேர் கையார் ஊர் போலும்

பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே

எழில் மிகுந்த அழகுடன் திகழ்ந்த செல்வர் என்று பெரும்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.67.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.பிள்ளை மதி=இளம் பிறைச் சந்திரன்; கள்ளம்=பொய்; திருமாலை விடவும் தான் அதிகமான ஆற்றல் உடையவன், அதனால் திருமாலை விடவும் பெரியவன் என்று நிரூபிக்கவேண்டும் என்ற முனைப்புடன் அன்னமாக உருவெடுத்து பறந்து சென்று பெருமானின் முடியினைக் காண்பதற்கு பிரமன் பெருமுயற்சி செய்தார். மிகவும் உயரமாக பறந்து சென்ற போதிலும் அவரால் பெருமானின் சடையினை காணமுடியவில்லை. எனினும் தனது முயற்சியை தொடர்ந்த பிரமன் தான் பறந்து சென்ற வழியினில், ஒரு தாழை மலரின் இதழ் கீழே விழுவதைக் கண்டார். தாழை மலரின் இதழை நோக்கிய பிரமன், நீ எங்கிருந்து வருகின்றாய் என்று கேட்ட போது, தாழை மலர் தான் சிவபெருமானின் சடையிலிருந்து கீழே விழுந்ததாகவும், தான் வெகு தூரம் கீழே இறங்கிய பின்னர் பிரமனைக் கண்டதாகவும் கூறியது. இதனைக் கேட்ட பிரமன், எவ்வாறேனும் திருமாலை விடவும் தான் பெரியவன் என்பதை உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பிரமன், தாழை மடலிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். பிரமனாகிய தான் பெருமானின் சடையைக் கண்டதாகவும் அதற்கு சாட்சியாக தாழை மடலும் பொய் சொல்ல வேண்டும் என்று வேண்டினார். பின்னர் கீழே இறங்கி வந்த பிரமன் திருமாலிடம் தான் பெருமானின் முடியைக் கண்டதாக பொய் சொன்னார். இவ்வாறு பொய் சொன்ன பிரமனை, கள்ளம் மதித்த பிரமன் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். அப்போது அங்கே தோன்றிய பைரவர், பொய் சொன்ன பிரமனின் தலையை தனது நகத்தால் கிள்ளவே, உடலிலிருந்து பிரிக்கப் பட்ட அந்த தலை உலர்ந்து பிரமனின் கபாலமாக மாறியது. இந்த கபாலத்தைத் தனது கையினில் பிச்சைப் பாத்திரமாக பெருமான் ஏற்றுக்கொண்டார். இதுவே பொய் சொன்ன பிரமனின் தலை,பெருமானின் உண்கலனாக மாறிய வரலாறு. இந்த இரண்டு செய்திகளையும் உணர்த்தும் வகையில் கள்ளம் மதித்த கபாலத்தைத் தனது கையினிலே ஏந்திய பெருமான் என்று பாடலின் முதல் அடியில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பொய் சொல்வதை தவறு என்பதை கருத்தினில் கொண்டு, பொய்யினை தவிர்க்காமல், அந்த பொய்யான சொல் மூலம் புகழினை அடையக் கருதியதால் பிரமனை பொய்யினை, கள்ளத்தை மதித்த பிரமன் என்று இழிவாக கூறுகின்றார். பெருமான் தனது கையினில் பிரமகபாலத்தை ஏந்தி பலிக்காக திரிவதை தொழில் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உலக இயக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டி பெருமான் நடனமாடுவதை தொழில் என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் தன்னிடம் ஏதுமில்லை என்பதற்காக பிச்சை எடுக்கவில்லை என்பதை உணர்த்தும் வண்ணம், செல்வர் என்று குறிப்பிடும், ஞானசம்பந்தர், எழில் மிகு செல்வர் என்று குறிப்பிட்டு, அழகான உருவத்துடன் பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்றதை உணர்த்தும் பாங்கினையும் நாம் இந்த பாடலில் காணலாம்.

கள்ளம் மதித்த கபாலம் கை தனிலே மிக ஏந்தித்

துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர்

வெள்ள நகு தலை மாலை விரிசடை மேல் மிளிர்கின்ற

பிள்ளை மதிப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் (2.67.7) நம் செல்வர் என்று திருஞானசம்பந்தர் உரிமையுடன் அழைக்கின்றார். தனது அடியார்களுக்கு சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தை அளிப்பவர் சிவபெருமான் என்பதால், தலை சிறந்த அடியாராகிய திருஞானசம்பந்தர், தன்னையும் மற்ற அடியார்களுடன் இணைத்துக் கொண்டு, உரிமையாக நம் செல்வர் என்று அழைத்தார் போலும். தங்களது மனதினில் குறைகள் உடைய அடியார்களின் குறைகளைத் தீர்ப்பவர் பெருமான் என்று குறிப்பிட்டு, இரண்டு செய்திகளை ஞானசம்பந்தர் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பினும் அந்த குறைகளை இறைவனுக்கு உணர்த்தி, அந்த குறைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிறிதுமின்றி இறைவனை எப்போதும் நினைத்து வணங்கும் அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார். உயர்ந்த அடியார்கள், தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவனை வழிபடாமல் இறைவனை வழிபடுவதே தங்களது கடமையாக நினைத்து இறைவனை வழிபடுவார்கள் என்று அவர்களின் உயர்ந்த தன்மையை நமக்கு உணர்த்தும் ஞானசம்பந்தர், கூறும் அடுத்த செய்தியையும் இப்போது காண்போம். எவரும் உணர்த்தாமலே அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த இறைவன், அடியார்கள் தங்களது குறைகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றி, அவர்களது குறைகளை புரிந்து கொண்டு, அந்த குறைகளை தீர்க்கும் கருணை உள்ளம் கொண்டவன் என்றும் இந்த பாடலில் ஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். பலன் ஏதும் எதிர்பாராமல், இறைவனை வணங்கும் தன்மையை நிஷ்காம்ய பக்தி என்று கூறுவார்கள்.

மறை உடையார் ஒலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்

குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர்

கறை உடையார் திகழ் கண்டம் கங்கை சடையில் கரந்தார்

பிறை உடையர் சென்னி தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே

குறும்பலா (குற்றாலம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.71.1) பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்த செல்வர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிராட்டியைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டுள்ள தன்மையை பொருந்திய வேடம் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பொருந்தாத வேடத்துடன் காட்டில் உறைவதாக கூறுகின்றார். பெருமானது ஆற்றல், அழகு, பண்பு முதலியவற்றுக்கு பொருந்தாத செய்கைகள் சுடுகாட்டில் உறைவதும்,உடலெங்கும் சாம்பல் பூசியவண்ணம் இருப்பதும், கையில் கபாலம் ஏந்தியவண்ணம் ஊரெங்கும் திரிந்து பலி ஏற்பதும் போன்ற பல செய்கைகள். தான் ஒருவனே என்றும் நிரந்தரமாக அழியாமல் இருப்பவன் என்பதை உணர்த்தும் வண்ணம், திருநீறு பூசிக்கொண்டு இருக்கும் பெருமான், பக்குவம் அடைந்த உயிர்களை உய்விக்க வேண்டி பலியேற்கின்றார். அவர் படைத்த உலகங்கள் அனைத்தும் அவரது உடைமை. எனினும் அவர் எளிமையாக காட்டினில் வாழ்கின்றார். இவ்வாறு அவர் இருக்கும் தன்மையே பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்த செல்வர் என்று சொல்லப் படுகின்றது. காட்டினில் உறைவதும் அவரது பெருமைக்கு ஏற்புடைத்த செயல் அல்லவே.

திருந்த மதி சூடித் தெண்ணீர் சடைக் கரந்து தேவி பாகம்

பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்த செல்வர்

இருந்த இடம் வினாவில் ஏலம் கமழ சோலை இன வண்டியாழ் செய்

குருந்த மணம் நாறும் குன்றிடம் சூழ் தண்சாரல் குறும்பலாவே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.5), திருஞானசம்பந்தர், பெருமானை செல்வன் என்று அழைக்கின்றார். பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யம் என்ற பொருளால் நீராட்டப்படும் பெருமை உடைய பெருமானை, ஆனைந்து ஆடிய செல்வன் என்று அழைக்கின்றார்.

தூநயம் கொள் திருமேனியில் பொடிப் பூசிப் போய்

நாநயம் கொள் மறையோதி மாதொருபாகமாக்

கானயம் கொள் புனல் வாசமார் கலிக் காழியுள்

தேனயம் கொள் முடி ஆனைந்தாடிய செல்வனே

கோளறு திருப்பதிகத்தின் ஒரு பாடலிலும் (2.85.7), விடையேறு செல்வன் என்று திருஞானசம்பந்தர் பெருமானை அழைக்கின்றார். பெருமானின் வாகனமாகிய எருதின் சிறப்பு கருதி இவ்வாறு அழைத்தார் போலும். அடைவார்=அடைதலுற்ற; வாதம்=காற்று; வெப்பம் குளிர் காற்று பித்தம் ஆகிய தன்மைகளால் வரும் நோய்களும் அந்த நோய்களால் ஏற்படும் வருத்தமும், பெருமானின் அடியார்களை வந்து அடையா என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவார்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

இறைவனிடம் உள்ள அனைத்துச் செல்வங்களினும் மிகவும் உயர்ந்தது அவனது கருணையே ஆகும். அனைத்து உயிர்களின் பால் கருணை கொண்டு, அந்த உயிர்களுடன் இணைந்து அவற்றை அவன் இயக்குவதால் தான், உயிர்கள் வாழ முடிகின்றது. இதனைக் கருத்தில் கொண்டே திருஞானசம்பந்தர் அருளாய செல்வன் என்று நறையூர் சித்தீச்சரம் தலத்து பதிகத்தினில் (2.87.4) அழைக்கின்றார். சாய=அழகிய தோற்றத்தினை உடைய; விதியாய= விதிக்கப்பட்டுள்ள வினைகளாக ஒவ்வொரு உயிரும், தான் இதற்கு முன்னம் எடுத்திருந்த எண்ணற்ற பிறவிகளில் செய்த செயல்களால், மிகவும் அதிகமாக வினைகளாக சேர்த்துக் கொண்டுள்ளன. இத்தகைய வினைகளை ஒரு தொகுப்பாக பழவினைகள் என்று கூறுவார்கள். இந்த பழவினைகள் மொத்தத்தையும் ஒரே பிறவியில் நுகர்ந்து கழிக்கும் ஆற்றல், நமது உடலுக்கு இல்லை என்பதால், இறைவன் நம் பால் கருணை கொண்டவனாக, மொத்த வினைகளின் ஒரு பகுதியை மட்டும் இந்த பிறவிக்கு ஒதுக்குகின்றான். எஞ்சிய வினைகளுடன், இந்த பிறவியில் நாம் சேர்த்துக் கொள்ளும் வினைகளும் சேர்ந்து, இனிமேல் நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு ஒதுக்கப் படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு உயிரும், அந்த பிறப்பினில் நுகர்ந்து கழிக்கவேண்டிய வினையின் அளவினை இறைவன் நிர்ணயிக்கும் தன்மையை, விதியாய என்ற சொல்லின் மூலம், நமக்கு திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். ஆயகம்=ஆயும் அகம்; எதனையும் ஆராயும் தன்மை கொண்டுள்ள மனம்; இருளாய=இருள் படர்ந்தது போன்று கருமை நிறத்தில் உள்ள கறை; அவனி=உலகம்;

சாய நன்மாதொர் பாகன் விதியாய சோதி கதியாக நின்ற கடவுள்

ஆயகம் என்னுள் வந்த அருளாய செல்வன் இருளாய கண்டன் அவனித்

தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு மலையின் கண் வந்து தொழுவார்

நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்பன் அவனே

மீண்டும் நிலவுலகத்திற்கு வர வேண்டிய நிலையினைத் தடுக்கும் முக்தி உலகத்தினை தனது செல்வமாக உடைய சிவபெருமான் என்பதை வாராத நாடன் என்ற தொடர் மூலம், தென் திரு முல்லைவாயில் பதிகத்தின் பாடலில் (2.88.3) திருஞானசம்பந்தர் விளக்குகின்றார். வில்லின் உரு= வானவில்லின்; வானவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மனதினுக்கு இன்பம் தருவதாக இருந்தாலும் மிகவும் சிறிய நேரமே நிலைத்து நின்று அதன் பின்னர் மறைந்து விடுகின்றது;அதே போன்று மனிதப்பிறவி நமக்கு இன்பம் தருவது போன்று தோன்றினாலும் அந்த இன்பமும் நிலைத்து நீடிப்பதில்லை; மனிதப்பிறவியும் நிலையற்றதாக உள்ளது. வில்லின் உரு என்பதற்கு வயது முதிர்ந்த காலத்தில் உடலில் கூன் விழுவதால் வில் போன்று வளையும் உடல் என்று இளமை நிலையாமையை உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. பேராத=நீங்காத; அலர்=மலர், இங்கே தாமரை மலரை குறிக்கின்றது; பிரியாத மார்பின் அலர் மேவு பேதை என்று, தாமரை மலரினில் உறையும் இலக்குமி தேவி திருமாலின் மார்பினை விட்டு பிரியாது இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது.

வாராத நாடன் வருவார் தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில்

ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர்

பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்

தீராத காதல் நெதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே

நெல்வாயில் அரத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.90.2) திருஞானசம்பந்தர் பெருமானின் கருணையை சிறந்த செல்வமாக குறிப்பிட்டு,பெருமானின் சிறப்பையும் கருணைத் தன்மையையும் புகழ்ந்து போற்றாத மனிதர்களை சிதடர்கள் என்று குறிப்பிடுகின்றார். ஈர=குளிர்ந்த வார்சடை=நீண்ட சடை; சிதடர்=கீழ் மக்கள்; செல்வம்=சிறந்த குணங்கள்; சீர்=பெருமை; பெருமானின் கருணைத் தன்மையை, கருணையின் அடையாளமாக பெருமானின் சடையினில் தங்கியுள்ள கங்கை நதியையும் பிறைச் சந்திரனையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பகீரதன் பால் கொண்டுள்ள கருணை தானே,பெருமான் கங்கை நதியைத் தனது சடையில் தாங்கிக்கொள்ள காரணமாக இருந்தது. ஈரவார்ச்சடை என்ற தொடர் மூலம், கங்கை நதி பெருமானின் சடையில் தங்கும் தன்மையை உணர்த்துகின்றார்.

ஈர வார்சடை தன் மேல் இளம்பிறை அணிந்த எம் பெருமான்

சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால்

வாரி மாமலர் உந்தி வருபுனல் நிவா மல்கு கரை மேல்

ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.96.1) திருஞானசம்பந்தர், தனது விருப்பம் போன்று படமெடுத்தாடும் பாம்பினை ஆட்டும் ஆற்றல் உடையவர் என்று குறிப்பிடுகின்றார். அந்த அரிய ஆற்றல் செல்வம் என்று குறிப்பிடப்படுகின்றது.. பொற்பு=அழகு; பங்கம்=தோல்வி; என்றும் உண்மையாக நிலைத்து நிற்கும் கருத்துகளை சொல்வதால் பங்கமில் மறைகள் என்று சொல்லப் பட்டுள்ளது.

பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பன் எம் பெருமான்

செங்கண் ஆதரவு ஆட்டும் செல்வன் எம் சிவனுறை கோயில்

பங்கமில் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும்

தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழி நன்னகரே

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.98.7). திருஞானசம்பந்தர் கணிச்சியம் படைச் செல்வா என்று குறிப்பிடுகின்றார். கணிச்சியம் என்றால் மழுப்படை என்று பொருள். சிவபெருமானைக் கொல்வதற்காக தாருகவனத்து முனிவர்கள் வேள்வியிலிருந்து தோற்றுவிக்கப் பட்ட மழுப்படையை ஏவ, மிகவும் இலாகவமாக தனது கையில் மழுவினை ஏற்றுக்கொண்டு பெருமான், அந்த மழுவினை செயலிழக்கச் செய்கின்றார். இந்த படையின் கூர்மையான தன்மை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. அத்தகைய சிறந்த படையை உடையவரை, மழுப்படைச் செல்வர் என்று அழைக்கின்றார். கிரந்தை=ஒன்றாக சேர்த்துக் கட்டப்பட்ட தலைகளின் மாலை; ஒருவருக்கொருவர் பகை கொண்டுள்ள இருவரையும் ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதற்கு தனித் திறமை வேண்டும். அத்தகைய திறமை உடைய தலைவர் சிவபெருமான் என்று பெருமான் தனது சடையினில் பாம்பினையும் சந்திரனையும் வைத்திருக்கும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. கரந்தை=விபூதி பச்சிலை. பை நாகம்= விடமுடைய நாகம். தங்களது பகையை மறந்து நாகமும் சந்திரனும் இருந்த நிலை கண்டு பெருமான் மகிழ்ச்சி அடைகின்றார் என்றும் கூறுகின்றார். கழிந்தவர்=இறந்தவர்கள்; இறந்து பட்ட பிரமன் திருமால் இந்திரன் ஆகியோரின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலைகளை, மாலையாக அணிந்த நிலையும் உணர்த்தப் படுகின்றது.

கணிச்சியம் படைச் செல்வா கழிந்தர்க்கு ஒழிந்த சீர்

துணிச் சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்

அணிப்படும் தனிப்பிறைப் பனிக்கதிர்க்கு அவாவுநல்

மணிப் படும்பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே

கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.4) திருஞானசம்பந்தர், பெருமானின் திருவருளை சிறப்புடைய செல்வம் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் அடியார்களுக்கு அருள் புரியும் தன்மைகளை புகழ்ந்து பாடும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தேய்ந்து அறவே நீங்கிவிடும் என்று கூறுகின்றார்.

நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப்

பார்கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தைப் பசும்பொனை விசும்பாரும்

கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம் தன்னைச்

சீர்கொள் செல்வங்கள் எத்த வல்லார் வினை தேய்வது திணமாமே

நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.119.4) திருஞானசம்பந்தர், நாகேச்சரம் தலத்துத் திருக்கோயிலை உடைய செல்வன் என்று குறிப்பிடுகின்றார். தேசம்=தேஜஸ் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. தங்களது குற்றங்களையும் அந்த குற்றங்களால் விளைந்த பாவங்களையும் தீர்த்துக் கொள்வதற்காக பல நாடுகளிலிருந்தும் அடியார்கள் வந்து நீராடுவதால் பொலிவு பெற்று விளங்கும் திருக்கோயில் என்று கூறுகின்றார். ஆடுதல்=தீர்த்தத்தில் நீராடுதல்; பொய் பேசுதல் மிகப் பெரிய குற்றமாக பண்டைய நாளில் கருதப்பட்டது. பொய் பேசுதல் மிகப்பெரிய தீமை விளைவிக்கும் என்பதை உணர்ந்தும், அஞ்சாது பொய் சொல்வதால் வருகின்ற பாவம் என்று கூச நோக்காது முன் சொன்ன பொய் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார்.அறத்தார்=புண்ணியம் உடையவர்கள், சிவபுண்ணியம் உடையவர்கள்; நேசம்=அன்பு; உயிரினைப் பிணித்துள்ள வினைகள், உயிர் தங்களை (வினைகளை)நீக்கிக் கொள்ள செய்கின்ற முயற்சிகளுக்கு தடையாக நின்று, உயிருடன் எப்போதும் பிணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. எனவே ஐந்து புலன்கள் மற்றும் உயிர் உலகப் பொருட்களின் மீது கொண்டுள்ள பற்று ஆகிய இரண்டையும் பயன்படுத்தி, உயிர்களை குற்றம் செய்யும் வண்ணம் தூண்டி,உயிர்களின் வினைகளை மேலும் பெருக்கி பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர் எப்போதும் விடுபடாத வண்ணம், வினைகள் செயல் படுகின்றன. எனவே தான் அத்தகைய வினைகளை நீக்கிக் கொள்ள உயிர் முயற்சி செய்ய வேண்டும்; வினைகளை நுகர்ந்து கழித்துக் கொள்வதற்கு எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ, அதனை நாம் எவரும் அறிய மாட்டோம். ஆனால் இறைவனை வழிபடுவதன் மூலம், வாழ்க்கையில் நடப்பது அனைத்தும் இறைவனின் செயல் என்பதை உணர்ந்து, இன்ப துன்பங்களால் எத்தைகைய சலனமும் அடையாமல் அவற்றை சரி சமமாக பாவித்து வாழ்வதன் மூலம், இறைவனின் அருளினால்,நமது வினைகளை தீர்த்துக் கொள்ளலாம். இந்த செய்தியே வினை குற்றமும் நாசமாக்கும் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வத்தை உடைய பெருமானை, செல்வன் என்று குறிப்பிடுகின்றார். நெறிப்பாலர்=வீடுபேறு அடையக் கூடிய நெறியின் கண் செல்பவர். பொய் என்ற சொல்லினை கூச என்ற சொல் மற்றும் நோக்காது முன் சொன்ன என்ற தொடருடனும் இணைத்து, கேட்பவர் கூசி நாணமடையும் வண்ணம் சொன்ன பொய்ச் சொற்கள் என்றும் பின்விளைவுகளை ஆராயாது சொல்லப்பட்ட பொய்ச் சொற்கள் என்று இருவகையான பொய்ச் சொற்களை இங்கே குறிப்பிடுகின்றார் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது.

கூச நோக்காது முன் சொன்ன பொய் கொடு வினை குற்றமும்

நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரம்

தேசம் ஆக்கும் திருக்கோயிலாக் கொண்ட செல்வன் கழல்

நேசமாக்கும் திறத்தார் அறத்தார் நெறிப் பாலரே

மூக்கீச்சரம் (திருச்சி உறையூர்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.11) திருஞான சம்பந்தர், தமிழகத்து மன்னர்கள் மூவரும் (சேர சோழ பாண்டிய மன்னர்கள்) மூக்கீச்சரத்து அடிகளை, தங்களினும் உயர்ந்த செல்வராக மதித்தார்கள் என்று கூறுகின்றார். மல்=வலிமை; சேர்த்திய=வழிப்படுத்திய;ஆற்றுப்படுத்திய; ஆற்றுப்படை என்பது தமிழ் இலக்கிய வகைகளில் ஒருவகை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாக அமைந்துள்ளன. திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை(மலைபடுகடாம்) ஆகியவை இந்த ஐந்து நூல்கள்; இந்த நூல்களில் புலவர்கள், வள்ளல்கள் இருக்கும் நாடு, அதன் தன்மை, வள்ளலின் கொடைத்திறன் ஆகியவற்றை குறிப்பிட்டு, அடுத்தவரை அந்த வள்ளலைச் சந்தித்து பயனடையும் வண்ணம் வழிகாட்டுவார்கள். சிவபெருமானது அருளினால் பயனடைந்த திருஞானசம்பந்தர், மூக்கீச்சரம் தலத்தில் உறையும் பெருமானின் தன்மைகளை விளக்கி, நம்மையும் பெருமான் இருக்கும் இடம் சென்று பயனடையும் வண்ணம் வழிநடத்துவதை, சேர்த்திய செந்தமிழ் என்ற தொடர் நமக்கு உணர்த்துகின்றது அருட்செல்வம் மிகுந்த பெருமான், என்பதால் நாம் கேட்பன அனைத்தும் கிடைக்கும் என்பதை உணர்த்தும் பொருட்டு, பெருமானை செல்வர் என்று, அருட்செல்வம் மிகுந்த செல்வர் என்று அறிமுகப்படுத்துவது நயமாக உள்ளது. மும்முடி மன்னர்=சேர, பாண்டிய மன்னர்களை வென்று அவர்களது முடியினையும் சூட்டிக் கொண்டமையால், கோச்செங்கட் சோழனை மும்முடி மன்னர் என்ற விளக்கமும் பொருத்தமாகவே உள்ளது.

மல்லையார் மும்முடி மன்னர் மூக்கீீச்சரத்து அடிகளைச்

செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்

நல்லராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன

சொல்ல வல்லார் அவர் வானுலகு ஆளவும் வல்லரே

பூந்தராய் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.13.7) திருஞானசம்பந்தர் பெருமானை சேவது ஏறிய செல்வன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் வாகனமாகிய இடபத்தின் சிறப்பு கருதி, சேவது ஏறிய செல்வன் என்று அழைத்தார் போலும். பரமன்=அனைவர்க்கும் மேலானவன். பெருமானின் திருமேனியில் இருக்கும் எப்போதும் அவருடனே இருந்தாலும், பாம்பின் பொதுவான தன்மை பற்றி புற்றில் வாழும் நாகம் என்று கூறுகின்றார். பாவம் ஆயின என்று கூறுவதை, மனம் மெய் மொழிகளால் நாம் செய்யும் பாவங்கள் என்று விளக்கம் அளிக்கின்றனர்.

புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்

பற்றி வாழும் பரமனைப் பாடிடப்

பாவம் ஆயின தீர்ப் பணித்திடும்

செவது ஏறிய செல்வன் தானே

புகழ் பெற்ற இராமேச்சரம் தலத்தினைத் தனது இருப்பிடமாக ஆக்கிக் கொண்ட செல்வனாகிய பெருமான் என்று இராமேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.10.10) திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். கையர்=கீழ்மைக் குணம் கொண்டவர்கள்; மெய்யில்=உண்மை அற்ற சொற்கள்,ஆதாரம் இல்லாத பழிச் சொற்கள்; தடுமாற்றத்தார்=தடுமாற்றம் உடைய உரைகள்; ஒண்மை=ஒளிமிகுந்த; ஏ=அம்பு; சிலை=வில்; ஏக்கியலும் சிலை=அம்பினைச் செலுத்தும் வில்; இராமபிரான் ஏற்படுத்திய திருக்கோயிலில் நிலையாக எழுந்தருளி, தனது இடமாக ஏற்றுக் கொண்ட செல்வன் என்று கூறுகின்றார்.

சாக்கியர் வன்சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார்

வாக்கியலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால்

ஏக்கியலும் சிலையண்ணல் செய்த இராமேச்சுரம்

ஆக்கிய செல்வனை எத்தி வாழ்மின் அருளாகவே

திருப்புனவாயில் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.11.6) திருஞானசம்பந்தர், பெருமான் தனது அடியார்களுக்கு சிறப்புடைய செல்வம் வழங்குகின்றார் என்று கூறுகின்றார். பெருமான் அளிக்கும் முக்திப்பரிசே இங்கே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. கார் காலத்தில் அதிகமாக பூக்கும் கொன்றை மலர்கள் என்பதால் காருறு கொன்றை என்று சொல்லப் பட்டுள்ளது. பெருமான் மண்ணுலகில் உள்ள திருக்கோயில்களில் எழுந்தருளி இருக்கும் காரணம், தன்னை மனமொன்றி வழிபடும் அடியார்களுக்கு சிறப்பான பரிசாக முக்தி நிலை அருள்வது என்று இங்கே உணர்த்தப் படுகின்றது.

வாருறு மென்முலை மங்கை பாட நடமாடிப் போய்க்

காருறு கொன்றை வெண்டிங்களானும் கனல்வாயதோர்

போருறு வெண்மழு ஏந்தினானும் புனவாயிலில்

சீருறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே

அருளாளர்கள் திருநீற்றினை விடவும் உயர்ந்த செல்வமாக வேறு எதையும் கருதுவதில்லை. கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.12.5)திருஞானசம்பந்தர் , பெருமானை வெண்ணீறு அணிந்த செல்வன் என்று குறிப்பிடுகின்றார். தங்களது நம்பிக்கைக்கு உரியவனாக கருதி, பெருமானை நம்பன் என்று வழிபடும் அடியார்களுக்கு பெருமான் அருள் புரிய வேண்டும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் விண்ணப்பம் வைக்கின்றார்.

வம்பமரும் மலர்க் கோதை பாகம் மகிழ் மைந்தனும்

செம்பவள திருமேனி வெண்ணீறு அணி செல்வனும்

கொம்பமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்

நம்பன் எனப் பணிவார்ர்க்கு அருள் செய் எங்கள் நாதனே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.15.11) திருஞானசம்பந்தர் செல்வனாகிய எமது பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.இந்த பாடலில் ஐயனை, ஒன்றிய மனத்துடன் தொழுபவர்களின் அல்லலும் அருவினையும் அறுதல் திண்ணம் என உறுதி கூறுகிறார். சம்பந்தரின் இந்த உறுதி தான் சிவபிரானின் மனத்தை மாற்றி அச்சுதக் களப்பாளரின் பழவினையின் தீப்பயனை கருகச் செய்ததோ? அச்சுத களப்பாளரின் கனவில் தோன்றிய சிவபெருமான், அவரது பழைய வினைகளின் காரணமாக அவருக்கு குழந்தைப்பேறு பெறுகின்ற வாய்ப்பு இந்த பிறவியில் இல்லை என்று கூறுகின்றார்.ஆனால், அடுத்த நாள் திருக்கோயிலுக்கு சென்று பெருமானை தரிசித்த களப்பாளர், பெருமானிடம் திருஞானசம்பந்தரின் திருவாக்கு பொய்ப்பதற்கு தனது பழவினை காரணமாகி விட்டதே என்று நொந்த போது, திருஞானசம்பந்தரின் திருவாக்கின் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு, களப்பாளரின் வினைகளின் தன்மையை அறவே மாற்றிய பெருமான் அவருக்கு குழந்தைச் செல்வத்தை அருளுகின்றார். இவ்வாறு அருவினையை, வெண்காட்டனை நோக்கி செய்யும் தொழுகை அறுத்துவிடும் என ஆணையிடும் சம்பந்தரின் வாக்கு எந்நாளும் பொய்க்காது என்பதனை மெய்கண்டாரின் பிறப்பு நிரூபித்துவிட்டது. மேலும் தேவாரப் பாடல்கள், அவை பாடப்பெற்ற காலத்தில் அதிசயங்கள் நிகழ்த்தியது மட்டுமன்றி என்றும் அதிசயங்கள் நிகழ்த்த வல்லவை என்பதையும் நமக்கு,இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது என்று சொன்னால் மிகையாகாது.

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்

செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்

சொல்லிய அருந் தமிழ் பத்தும் வல்லவர்

அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே

வைகல் மாடக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.18.7) திருஞான சம்பந்தர் வீரம் நிறைந்த செல்வர் என்று குறிப்பிட்டு, அதற்கு சான்றாக பெருமான் திரிபுரம் எரித்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். சரம்=அம்பு; எரிசரம் என்று அக்னித்தேவன் பெருமான் பயன்படுத்திய அம்பினில் ஒரு பாகமாக அமர்ந்ததையும் வரிசிலை வளைய என்ற தொடர் மூலம் மேருமலை வில்லாக வளைக்கப்பட்டதையும் நினைவூட்டுகின்றார். அணவுதல்=தொடுதல்;

எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்

திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்விடம்

வரிவளையவர் பயில் வைகல் மேற்றிசை

வருமுகில் அணவிய மாடக் கோயிலே

கண்டியூர் வீரட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.38.7), பலவிதமான திறமைகளை உடைய செல்வன் என்று குறிப்பிடுகின்றார்.ஒன்றுக்கொன்று மாறுபடும் இரண்டு திறமைகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன, வேதங்களில் வல்லவனாக இருந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்த செய்கையும், வீரனாக திகழ்ந்து முப்புரத்து கோட்டைகளை எரித்த நிகழ்ச்சியும் சொல்லப் பட்டுள்ளன. கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.38.7) திருஞானசம்பந்தர் பெருமானை மிகு செல்வன் என்று அழைக்கின்றார். மிகுந்த செல்வன் உடையவன் என்றும் அனைத்துச் செல்வங்களிலும் சிறப்பான செல்வம் உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். திருந்து தொண்டர்கள்=மக்கள் திருந்தி வாழ்வதற்கு முன் மாதிரியாக திகழும் தொண்டர்கள்; திருந்து என்ற சொல்லினை திரு மற்றும் உந்து என்று பிரித்து, திரு என்பதற்கு சிறந்த செல்வமாகிய சிவஞானம் என்று பொருள் கொண்டு, சிவஞானத்தை உடைய அடியார்கள் என்று கூறுவதும் பொருத்தமே. சிவஞானம் உடைய காரணத்தினால் தானே அவர்களிடம் விடையளிக்குமாறு ஞானசம்பந்தர் வேண்டுகின்றார். தடம்= அகன்ற; ஆனிழல்=ஆல மரத்தின் நிழல்; செல்வன்=அனைத்துச் செல்வங்களிலும் சிறந்ததும், வேறு எவரிடமும் இல்லாததும் ஆகிய முக்திச் செல்வத்தை உடைய சிவபெருமான்; வெம்மை=கொடுமை; மாட்டிய=தீ மூட்டிய; இந்த பாடலில், தனது ஞானத்தின் திறனை காட்டி சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் வேதங்களின் பொருளை விளக்கிய பெருமான், தனது வீரத்தின் தன்மையை காட்டி திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்த வீரச் செயலும் குறிப்பிடப் படுகின்றது.

திருந்து தொண்டர்கள் செப்புமின் மிகச் செல்வன் தன்னது திறமெல்லாம்

கருந்தடங் கண்ணினார்கள் தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன்

இருந்து நால்வரொடு ஆனிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார்

வருந்த வன் சிலையால் அம்மாமதில் மூன்றும் மாட்டிய வண்ணமே

சிற்றேமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.42.9) திருஞானசம்பந்தர், மழுவாட் செல்வன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பல சிறப்புகள் வாய்ந்ததும் வேறு எவரிடமும் இல்லாததும் ஆகிய மழுவாட் படையைக் கொண்டுள்ளதால், செல்வன் என்று குறிப்பிட்டார் போலும். பிரமனும் திருமாலும் காணமுடியாத ஆற்றல் உடைய பெருமான் என்பதால் செல்வன் என்று கூறினார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பதிகத்தின் கடைப் பாடலில், இந்த தலத்தை செல்வனது ஊர் என்று குறிப்பிடுகின்றார்.

தனி வெண்டிங்கள் வாண்முக மாதர் பாட தாழ்ச்சடைத்

துணி வெண்டிங்கள் சூடியோர் ஆடல் மேய தொன்மையான்

அணிவண்ணச் சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும்

மணிவண்ணனும் முன் காண்கிலா மழுவாட் செல்வன் அல்லனே

கருகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.46.4) திருஞானசம்பந்தர், பெருமானை செல்வத்தர் என்று அழைக்கின்றார். தீய எண்ணங்களற்ற உள்ளம் இருப்பது, அடியார்களின் சிறந்த குணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. உயிரின் உட்பகைகளாக கருதப்படும் காமம், குரோதம், மோகம்,உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய குற்றங்கள் அற்று இருக்கும் நிலை, அவனது அருளால் தான் ஏற்படும். இத்தகைய உயர்ந்த உள்ளத்தை தருகின்ற பெருமானை செல்வத்தர் என்று அழைப்பது தானே பொருத்தம். இந்த பாடலில் சிவனை வழிபடும் முறை சொல்லப்பட்டுள்ளது. மெய்யில் நீறு பூசி, மலர் கொணர்ந்து, மற்ற அடியார்களுடன் கூடி, மனதில் எந்த விதமான மாசு படிந்த எண்ணங்கள் இல்லாமல், எந்த வேண்டுதலும் கலந்த ஆசை இல்லாமல் பூஜை செய்ய வேண்டும் என்று இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. உடலில் பதினாறு இடங்களில் திருநீறு அணிய வேண்டும் என்பது முறை. மலர் கொய்து என்று குறிப்பிடுவதால், அப்போது தான் பறித்துக் கொண்டு வரப்பட்ட புதிய மலர்கள் என்பதை நாம் உணரலாம். செடியர்= தீயவர்; கடி=நறுமணம். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும், செய்ய உள்ளம் நல்கிய செல்வத்தர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில், தன்னை வணங்கும் அடியார்களுக்கு ஆசையார அருள் நல்கிய செல்வத்தர் என்று குறிப்பிடுகின்றார். ஏழாவது பாடலில் சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தான் என்று கூறுகின்றார். தொண்டர்கள் எந்த நிலையிலும், தொடர்ந்து இறைவனை வழிபடுவதால், மகிழ்ச்சி அடையும் இறைவன், வேறு புகலிடமின்றி தம்மை வழிபடும் இந்த அடியார்களுக்கு அருள் புரிவதற்கு தானே நாம் இருக்கின்றோம் என்ற முடிவினில், அவர்களது ஆசைகள் அனைத்தையும், அவர்கள் கேட்காவிடில் கூட தானே முன்வந்து நிறைவேற்றுகின்றான். உலகத்தவரின் செல்வம் ஒரு வரையறைக்கு உட்பட்டது. எனவே உதவ மனம் இருந்தாலும் ஒருவரது செல்வத்தின் அளவு காரணமாக குறிப்பிட்ட நிலைக்கு மேல் உதவி செய்ய முடியாமல் போகலாம். ஆனால் இறைவனோ வரம்பிலா செல்வமும் ஆற்றலும் உடையவன்.எனவே அடியார்கள் எதனை விரும்பினாலும் அவர்களது ஆசை தீரும் வண்ணம் அவற்றை அளிக்கவல்லவன் இறைவன் என்பது, ஆசையார அருள் நல்கிய செல்வத்தர் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.

பொடி மெய் பூசி மலர் கொய்து புணர்ந்துடன்

செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்

கடிகொள் முல்லை கமழும் கருகாவூர் எம்

அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.48.5), திருஞானசம்பந்தர், பெருமானை செல்வன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் உருத்திரனாகத் திகழ்வது சிவபெருமான் தான் என்று உணர்த்துகின்றார். பெருமானின் ஒரு அம்சம் தானே உருத்திரன்; புல்கி=சேர்ந்து, நெருங்கி, தழுவி;கருத்தன்=கருத்தினில் உள்ளவன்; தாங்கள் செய்யும் தவத்தின் பயனாக, முனிவர்கள் சிறந்த புகழுடன் விளங்குவது போன்று, மழபாடி தலத்தினைப் போற்றும் அடியார்களும் சிறந்த புகழுடன் விளங்குவார்கள் என்று இங்கே கூறுகின்றார்.

நல்வினைப் பயன் நான்மறையின் பொருள்

கல்வி ஆய கருத்தன் உருத்திரன்

செல்வன் மேய திருமழபாடியைப்

புல்கி ஏத்தும் அது புகழ் ஆகுமே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.53.6), திருஞானசம்பந்தர் இறைவனை பேணுறாத செல்வர் என்று கூறுகின்றார். பேணுதல் என்றால் போற்றி பாதுகாத்தல் என்று பொருள். இன்றைய உலகினில், தங்களது செல்வத்தைப் பேணி பாதுகாப்பதில் எத்தனை அக்கறை மனிதர்கள் எடுத்துக் கொள்கின்றனர் என்பதை நாம் கண்ணாரக் காண்கின்றோம். தங்களது செல்வம் குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தில், எவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் பலரும் இருப்பதையும் நாம் உணர்கின்றோம். எவரிடமும் இல்லாத ஒப்பற்ற முக்திச் செல்வத்தினை உடையவன் பெருமான். எனினும் அதற்காக அவன் அந்த செல்வத்தைப் பேணி பாதுகாக்கும் பொருட்டு, எவருக்கும் அளிக்காமல் ஒளித்து வைப்பதில்லை; தகுதி வாய்ந்த அடியார்களுக்கு முக்தி உலகினில் இடமளித்து, அவர்களையும் மகிழ்வித்து தானும் மகிழ்ச்சி அடைகின்றான். இந்த தன்மையே பேணுறாத செல்வம் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. பெருமானின் இந்த குணங்களைப் புகழ்ந்து அடியார்கள் பேசுகின்றார் என்ற செய்தியை பேச நின்ற பெற்றியான் என்று குறிப்பிடுகின்றார். பெற்றி=தன்மை; ஐஸ்வர்யம் வீர்யம் ஞானம் புகழ் செல்வம் வைராக்கியம் என்ற இந்த ஆறு குணங்களை ஒரு தொகையாக கருதி பகம் என்று கூறுவார்கள். பகம் உடையவன் பகவான். உலகம் முழுவதும் தனது உடைமையாகக் கொண்டுள்ள பெருமான், உலகின் செல்வங்கள் அனைத்திற்கும் அதிபதி அல்லவா. ஐஸ்வர்யம் செல்வம் ஆகிய இரண்டும் பொருட் செல்வத்தையும் முக்திச் செல்வத்தையும் முறையே உணர்த்துகின்றன. இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் என்றும் குறிப்பிடுகின்றார். அடியவர்கள் ஒன்று கூடி அவனது திருநாமத்தையும் அவன் உறையும் ஊரினையும் சிறந்த செல்வமாக விளங்கும் அவனது செல்வங்களையும் பேசுகின்றனர் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

நாணும் ஓர்வும் சார்வு முன் நகையும் உட்கு நன்மையும்

பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான்

ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்

காணும் கண்ணு மூன்றுடைக் கறை கொள் மிடறன் அல்லனே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.10) திருஞானசம்பந்தர், பெருமானை ஆகமச் செல்வனார் என்று அழைக்கின்றார்.ஆகமங்களை வழங்கிய செல்வன் என்றும் ஆகம விதிகளின் வழியே வழிபடப்படுபவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். கூகை=கோட்டான்;மா=விலங்கு; பெருமானைப் புகழாத சமணர்களும் புத்தர்களும், கோட்டான்கள் போன்று ஐந்து அறிவினை உடைய விலங்குகளுக்கு ஒப்பானவர்கள் என்பதால் அவர்களது சொற்களை பொருட்படுத்த வேண்டாம் என்று கூறுகின்றார். ஓகை=மகிழ்ச்சி; அலர் தூற்றுதல்=பழித்துரைத்தல்;

தோகையம்பீலி கொள்வார் துவர்க்கூறைகள் போர்த்து உழல்வார்

ஆகமச் செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக்

கூகையும் மாக்கள் சொல்லைக் குறிக்கொள்ளன்மின் ஏழுலகும்

ஓகை தந்து ஆளவல்லான் உறையும் இடம் ஒற்றியூரே

திருநெல்வேலி தலத்தினில் உறைகின்ற பெருமானை, திருநெல்வேலி உறை செல்வர் என்று பதிகத்தின் (3.92.1) அனைத்துப் பாடல்களிலும்,திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். இறைவனது திருநாமம், மருந்தாகவும் மந்திரமாகவும்,மறுமையில் நமக்கு நன்னெறி அளிக்கும் வல்லமை வாய்ந்ததாகவும், பெரிய துன்பங்களையும் கெடுத்து நன்மை பயப்பதாகவும், மேலும் பல வகையில் நமக்கு இன்பம் அளிப்பதாகவும் விளங்குகின்றது. எனவே நெஞ்சமே இறைவனின் திருநாமத்தை சிந்தை செய்வாயாக என்று திருஞானசம்பந்தர், தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறும் பாடல். மேலும் மழபாடி மேய மருந்து என்றும் வலஞ்சுழி மருந்து என்றும், மாத்தூர் மேய மருந்து என்றும், தேவர்கள் தேடும் மருந்து என்றும், மணஞ்சேரி மருந்து என்றும், பல பாடல்களில் தேவார ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறியவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்

செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே

தோணிபுரம் என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரு பெயர்களில் ஒன்று. இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.100.9), திருஞானசம்பந்தர்,தனது சிந்தையில் இடம் கொண்ட செல்வர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பிரளயம் வந்து உலகனைத்தையும் மூடிய நிலையில், அனைத்து வகையான உயிர்களின் கருவையும் கொண்டிருந்த தோணியை பறவைகள் சுமந்துவர, அந்த தோணி வந்தைடையும் வண்ணம் உயர்ந்து நின்ற தலம் தோணிபுரம் என்று ஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றினில் (3.100.9) சொல்லப் படுகின்றது. வெல்பறவை=வெற்றி கொள்ளும் தன்மை உடைய கருடன்;திருமாலின் கொடியினில் கருடனின் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது என்ற தகவல் இங்கே சொல்லப் பட்டுள்ளது. பல் பறவைப் படியாய்=பல பறவைகள் சேர்ந்து ஓருருவம் கொண்டது போன்று விரைந்து மேலே பறந்து சென்ற அன்னம்; பிரமனும் திருமாலும் அன்னமாகவும் பன்றியாகவும் மாறி பெருமானின் முடியையும் அடியையும் தேடிக் கொண்டு வெகு தூரம் சென்ற பின்னரும் தங்களால் காண முடியாததால் வருந்தி, தங்களது பயணத்தை விட்டொழிந்தார்கள் என்று கூறும் சம்பந்தர், அவ்வாறு நீண்ட பெருமான் தனது சிந்தையிலும் தோணிபுரத்திலும் இடம் பெற்றுள்ளார் என்று கூறுகின்றார். செல்வற=தாங்கள் உயர்ந்தும் ஆழ்ந்தும் செல்வதை நிறுத்திய பிரமன் மற்றும் திருமால்;

வெல் பறவைக் கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும்

பல் பறவைப் படியாய் உயர்ந்தும் பன்றியதாய்ப் பணிந்தும்

செல்வற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும்

தொல்பறவை சுமந்து ஓங்கு செம்மைத் தோணிபுரம் தானே

வலம்புரம் பதிகத்தின் கடைப் பாடலில் (3.103.11), இந்த பதிகத்தின் பாடல்களை முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், தங்களது பழ வினைகள் முற்றிலும் தீர்க்கப்பட்டு சிவலோகம் சென்றடைந்து வேறு எவராலும் அளிக்க முடியாத சிறந்த முக்திச் செல்வத்தை அருளும் பெருமானின் திருவடிகளைச் சார்ந்து இருப்பார்கள். வல்லியம்=புலி; நல்லியல்= நல்லொழுக்கம்; புகலி=சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று; செல்வன்=வேறு எவராலும் அளிக்கமுடியாத சிறந்த முக்திச் செல்வத்தை உடைய பெருமான்;

நல்லியல் நான்மறையோர் புகலித் தமிழ் ஞான சம்பந்தன்

வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்னகரை

சொல்லிய பாடல்கள் பத்தும் வல்லவர் தொல்வினை போய்ச்

செல்வன சேவடி சென்று அணுகிச் சிவலோகம் சேர்வாரே

பாவநாசப் பதிகத்தின் பாடலில் (4.15.6) அப்பர் பிரான், பெருமானை திருவாஞ்சியத்துச் செல்வன் என்று குறிப்பிடுகின்றார். பிறப்பிலியாக பெருமான் இருக்கும் தன்மையை, பிறவா யாக்கைப் பெரியோன் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பிறப்பிலி ஆகிய பெருமானை, தனது மனத்தினில் நிலையாக வைத்துள்ளதாக அப்பர் பிரான் பாவநாசத் திருப்பதிகத்தின் பாடலில் கூறுகின்றார். மருகல் தலத்தில் உறையும் இறைவனின் பெயர் மாணிக்க வண்ணர். தேவலோகத்தில் உள்ள கற்பகமரம், அதன் நிழலில் நிற்போர்க்கு அவர்கள் நினைப்பதை எல்லாம் அளிக்க வல்லது என்று கூறுவார்கள்.சிவபிரான், தன்னை உண்மையான அன்புடன் வழிபடும் அடியார்களுக்கு, அவர்கள் வேண்டியதை அருளுவதால் கருகாவூர் கற்பகம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மருகல் தலத்தில் உறையும் மாணிக்க வண்ணரை, வலஞ்சுழி தலத்தில் அடியார்கள் பாடிய தமிழ்ப் பாமாலைகளை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்பவனை, அடியார்கள் வேண்டுவதை அளிக்கும் கற்பகமாக கருகாவூர் தலத்தில் திகழ்பவனை, காண்பதற்கு அரிய ஒளியாக உள்ளவனை,பெருவேளூரில் அமர்ந்து இருக்கும் பிறவா யாக்கைப் பெரியோனை, விரும்பித் தொழுபவர்கள் பிரிந்து செல்ல மனம் உடையாதவர்களாய் இருக்கும் திருவாஞ்சியத்துச் செல்வனை, அடியேன் எனது மனதினில் நிலையாக வைத்துள்ளேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

மருகலுறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையைக்
கருகாவூரில் கற்பகத்தைக் காண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூரெம் பிறப்பிலியைப் பேணுவார்கள் பிரிவரிய
திருவாஞ்சியத்தெம் செல்வனைச் சிந்தையுள்ளே வைத்தேனே

ஆதிரைத் திருநாள் விழாவினில் பங்கேற்கும் அடியார்கள் யார்யார் என்று பட்டியலிடும் அப்பர் பிரான், செல்வனாகிய இறைவனின் திருவடிகளை சிந்திக்கும் அடியார்கள் அத்தகையோரில் ஒருவர் என்று குறிப்பிடுகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திப் பேற்றினை உடையசெல்வனாகிய சிவபெருமானின் திருவடிகளை சிந்தித்த வண்ணம் இருக்கும் அடியார்கள் செம்பவளம் போன்று சிவந்த வாயினை உடையவர்களாககாணப்படுகின்றார்கள். சிவபிரானின் அழகில் மயங்கிய பல ஆடவர்களும் மகளிர்களும் மார்கழி ஆதிரைத் திருநாள் விழாவில் கலந்து கொள்கின்றார்கள்;மேலும் இந்திரன் முதலான தேவர்கள், சித்தர்கள் பலவாறு இறைவனை துதித்து பாடல் பாடிவரும் காட்சிகள் நிறைந்தது ஆரூரில் நடைபெறும்திருவாதிரைத் திருவிழாவாகும் என்பதே இந்த பாடலின் (4.21.7) பொழிப்புரை.

செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்

மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்

இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்

அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.41.3) பலி ஏற்பவராக பல இல்லங்கள் திரியும் செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கல்=மேரு மலை; மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.இலம்=இல்லம் என்பதன் திரிபு. சொல்=வேதங்கள்: வேதங்களில் காணப்படும் சொல்லாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் உள்ள தன்மை; தன்னிடம் உள்ள முக்திச் செல்வத்தை, பக்குவம் அடைந்த அடியார்களுக்கு வழங்கவே பெருமான் பலி ஏற்கின்றார் என்பதை நாம் அறிவோம்.

கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே

எல்லியும் பகலும் முன்னே ஏகாந்தமாக ஏத்தும்

பல்லில் வெண்தலை கையேந்திப் பல் இலம் திரியும் செல்வர்

சொல்லு நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத்துறையனாரே

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.43.5), அப்பர் பிரான் கொடையாளர்களின் செல்வமாக இருப்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். தானவர்=தானம் அளிப்பவர், கொடையாளிகள்; கொடையாளிகளுக்கு, அவர்கள் அடுத்தவர்களுக்கு உதவும் வண்ணம், அவர்களுக்கு செல்வம் தந்து அருளுபவர் பெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். பொருள் இல்லாதவர்களுக்கு பொருள் உள்ளவர்கள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு ஈந்து உதவுவார்களை உலகம் புகழ்கின்றது.

ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழியாகித்

தானவர் தனமுமாகி தனஞ்சயனோடு எதிர்ந்த

கானவர் காளகண்டர் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்

ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியானாரே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (4.44.3) அப்பர் பிரான், திரிபுரங்கள் எரித்த பெருமானின் வீரச்செயலைக் குறிப்பிட்டு, செல்வர் என்று உணர்த்துகின்றார். எட்டு வகையான செல்வங்களில் வீரம் என்பது ஒரு செல்வமாக கருதப் படுகின்றது அல்லவா. பெருமான் புரிந்த வீரச் செயல்களில் தலையான செயலாக, திரிபுரங்களை எரித்த செய்கை கருதப்படுகின்றது. மைந்தன்=வலிமை உடையவர்: செற்ற=வெற்றி கொண்ட. தலைமாலை தலைக்கு அணிந்து தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் என்று அங்கமாலை பதிகத்தில் தலை செய்ய வேண்டிய பணியினை குறிப்பிடும் அப்பர் பிரான், அவ்வாறு வணங்குவதால் ஏற்படும் நன்மையை எடுத்து உரைக்கின்றார். தன்னுடன் வந்த அடியார்களுக்கு எடுத்துரைக்கும் அறிவுரையாக இருந்தாலும் நமக்கும் பொருந்துவதை நாம் உணரவேண்டும். தலைவர்க்கும் தலைவர் என்பது சிவபிரானை குறிக்கும் சொற்றொடர் என்று பொருள் கொண்டு, தலைவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் சிவபெருமான், நமது தலைகளால் வணங்கக் தக்கவர் ஆவார் என்றும் பொருள் கொள்ளலாம்.

மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார் மழு ஒன்று ஏந்திச்

சிலையினால் மதில்கள் மூன்றும் தீயெழச் செற்ற செல்வர்

இலையினார் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரைத்

தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில், புண்ணிய தீர்த்தமாக கருதப்படும் கங்கை நதியினைத் தனது சடையில் வைத்த செல்வர் என்றார் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். காஞ்சி மாநகரத்திற்கு வந்த அப்பர் பிரானுக்கு, காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவ நாட்டில் சமணர்கள் அரசனதுஆதரவினைப் பெற்று வாழ்ந்த நிலையும், அவர்களுடன் சேர்ந்து தானும் சிவபிரானைத் தொழாது வீணாகக் கழித்த நாட்களும் நினைவுக்கு வருகின்றன.அவ்வாறு மயக்கத்துடன் தான் இருந்த நிலையைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவுக்கும் பாடல் இது. மையினார் மலர் நெடுங்கண் என்று அம்பிகையின் கண்புகழ்ந்து பேசப் படுகின்றது. மையின் வண்ணமும், மலரின் மென்மையும், குவளை மலரின் நீளமும் தன்மையும் ஒருங்கே கொண்ட கண்கள் அம்பிகையின்கண்கள். கச்சி ஏகம்பம் திருக்கோயிலில் தனியாக அம்பிகை சன்னதி கிடையாது. அருகில் உள்ள காமாட்சி அம்மனே, கோயிலுக்கு உரிய அம்பிகைஆவாள். காமாட்சி என்பதற்கு தனது கருணை நோக்கினால் அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவள் என்று பொருள்

பூத்த பொன் கொன்றை மாலை புரிச்சடைக்கு அணிந்த செல்வர்

தீர்த்தமாம் கங்கையாளைத் திருமுடித் திகழ வைத்து

ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை

வாழ்த்துமாறு அறிய மாட்டேன் மால்கொடு மயங்கினேனே.

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.51.6) அப்பர் பிரான், கூழை ஏறுடைய செல்வா என்று இறைவனை குறிப்பிடுகின்றார். பெருமானின் வாகனமாகிய எருது ஏன் சிறந்த வாகனமாக கருதப் படுகின்றது என்பது குறித்து நாம் ஏற்கனவே சிந்தித்தோம். அப்பர் பிரான் இல்வாழ்க்கையில் ஈடுபடாமல் துறவியாக வாழ்ந்த்தை நாம் அனைவரும் அறிவோம். தன்னை குறையுடையவனாக சுட்டிக்காட்டி, அந்த குறையினைத் தவிர்த்து வாழ வேண்டும் என்று அடுத்தவருக்கு அறிவுரை சொல்வது அப்பர் பிரானின் பாணி. அந்த பாணியில், பெண்களின் வலையில் தான் மயங்கி இறைவனை வழிபடாது இருந்ததாக அப்பர் பிரான் உணர்த்தி, இல்வாழ்க்கையில் ஈடுபட்டாலும் இறைவனை மறவாமல் வழிபட வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறும் பாடல்.ஏழை=அறிவினில் ஏழையாக திகழ்ந்து மெய்ப்பொருளை கண்டு கொண்டு நிலையான இன்பத்தில் திளைக்காமல், சிற்றின்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் நிலை;மாழை=அழகு; ஒண்கண்=ஒளி வீசும் கண்கள்; கூழையேறு=உயரத்தில் குறைந்த எருது;

கேழல் வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பினானே

ஏழையேன் ஏழையேன் என் செய்கேன் எந்தை பெம்மான்

மாழை ஒண் கண்ணினார்கள் வலை தனில் மயங்குகின்றேன்

கூழை ஏறுடைய செல்வா கோடிகா உடைய கோவே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.58.8)., அப்பர் பிரான், இறைவனை செங்கண் வெள்ளேறு ஏறிய செல்வர் என்று குறிப்பிடுகின்றார்.தருமதேவதையே பெருமானின் இடபமாக உள்ள தன்மையை நாம் அறிவோம். இத்தகைய உயர்ந்த வாகனத்தை உடைய பெருமானை செல்வர் என்று அழைப்பது பொருத்தம் தானே. மேலும் பலவிதமான ஆற்றல்கள் கொண்ட திருமாலைத் தனது விடை வாகனமாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்.செங்கண் வெள்ளேறு என்று, திரிபுரத்தவர்களுடன் பெருமான் போருக்குச் சென்ற போது, தேரின் அச்சு முறிந்த தருணத்தில், திருமால் விடையாக மாறி சிவபெருமானைத் தாங்கிய வரலாறு இங்கே உணர்த்தப் படுகின்றது. பாரிடம்=பூதகணம்; பாணி செய்ய=தாளமிட; பிஞ்ஞகன்=அழகிய தலைக் கோலம் உடையவன். கார்=மேகம்; காருடைக் கண்டர்=மேகம் போன்று கரிய நிறத்தினை உடைய கழுத்தினைக் கொண்ட பெருமான். சிவன் என்றால் மங்கலம்,மங்கலம் செய்பவன் என்று பொருள். அனைத்து உயிர்களுக்கும் நன்மை புரிகின்ற பெருமானை மிகவும் பொருத்தமாக சிவன் என்றும் செல்வர் என்று குறிப்பிடுகின்றார். உலகத்தவர்களால் புகழ்ந்து ஏத்தப்படும் சிறப்பினை உடையதால் செல்வர் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பேரிடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்

காருடைக் கண்டராகிக் கபாலம் ஓர் கையில் ஏந்திச்

சீருடைச் செங்கண் வெள்ளேறு ஏறிய செல்வர் நல்ல

பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (4.58.9) சிவன் என நின்ற செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அங்கண்=அவ்விடத்தில்; உயிர் குடி கொண்டிருக்கும் உடலில் என்று பொருள். மாலுடையர்=மயக்கம் ஏற்படுத்தும் திறன் உடைய; சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். மங்கலத்தின் வடிவமாக, அனைத்து உயிர்களுக்கும் மங்கலத்தை அருள்பவனாக பெருமான் இருக்கும் தன்மையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகத்து மாந்தர்களே, உங்களது உடலில் இருந்து கொண்டு உங்களை மயக்கி, தங்களது விருப்பம் போல் ஆட்டுவிக்கும் ஐந்து புலன்களால் ஏற்படும் மயக்க நிலை முற்றிலும் தீர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களது மனதினில் நீங்கள் இறைவனை தியானித்து அவனைப் புகழ்ந்து வணங்குவீர்களாக. சிவந்த கண்களை உடைய திருமால், வாழ்வினில் அனைத்து விதமான மங்கலங்களையும் (இன்பங்களையும்) அளிக்கும் பெருமானே என்று புகழ்ந்து வணங்கும் வண்ணம் நின்ற பெருமான் பசுமையான கண்களை உடைய இடபத்தின் மீது ஏறி தான் விரும்பும் இட்னகளுக்கு செல்கின்றார். அத்தகைய இறைவனார் பருப்பதத்தை நோக்கி அதனை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அங்கண் மாலுடையராய ஐவரால் ஆட்டுணாதே

உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்

செங்கண் மால் பரவியேத்தச் சிவன் என நின்ற செல்வர்

பைங்கண் வெள்ளேறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே

மேரு மலையைச் சிலையாக வளைத்து, வாசுகிப் பாம்பினை நாணாக அந்த வில்லினில் பூட்டி, திருமால் அக்னி வாயு ஆகியோரை பாகமாகக் கொண்ட அம்பினை அந்த வில்லினில் பொருத்தி எய்தி, பெருமான் திருபுரங்களை அழித்தார் என்பதை நாம் அறிவோம். இத்தகைய உயர்ந்த வில்லினை உடையவர் சிறந்த செல்வராகத் தானே இருக்கமுடியும். இந்த குறிப்பு காணப்படும் பாடல் அவளிவணல்லூர் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (4.59.4). வலம்=வெற்றி,வலிமை: நேர்மையாக செயல்படுவோர் தான் நிலையான வெற்றியை அடைய முடியும். நேர்மையற்ற செயல்களில் ஈடுபடுவோர் எத்தகைய வல்லமை உடையவர் ஆயினும், அவர்களது வெற்றி நிலையாக இருக்காது என்ற செய்தி இந்த பாடலில் கூறப்படுகின்றது. சிலை=மலை, இங்கே மேரு மலையினை குறிக்கும். தலைவலம்=தலையான வலிமை. வேறு எவர்க்கும் இல்லாத இருபது தோள்களின் வலிமை.

நிலை வலம் வல்லன் அல்லன் நேர்மையை நினைய மாட்டான்

சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்

தலை வலம் கருதிப் புக்குத் தாக்கினான் தன்னை அன்று

அலை குலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே

திருச்சேறை தலத்தினில் உறைகின்ற பெருமானை அப்பர் பிரான் செந்நெறிச் செல்வனார் என்றே அனைத்துப் பாடல்களிலும் (4.73) குறிப்பிடுகின்றார்.செந்நெறி என்பது சிறந்த முறையில் வாழ்க்கையை நடத்தி, பெருமானுக்கு அடியார்களாக திகழும் அடியார்கள் மறுமையில் சென்றடையக் கூடிய முக்திநிலையை குறிப்பிடுகின்றது. தனது தந்தை தட்சன், சிவபெருமானை புறக்கணித்து நடத்திய யாகத்திற்குச் சென்ற தாட்சாயணி, அங்கே சிவபெருமான் அவமதிக்கப் படுவதை பொறுக்க முடியாமல் தந்தையிடம் வாதம் செய்தாள். ஆனால் தட்சன் தனது மகள் என்றும் பாராமல் உமையம்மையையும் தாழ்த்திப் பேசலானான்; மேலும் சிவபெருமானை, அனைவர் முன்னிலையிலும் சிவபெருமானை மிகவும் அதிகமாக பழித்தான்.இதனால் மிகவும் வருத்தமடைந்த உமை அன்னை, தட்சன் தந்த உடலுடன் வாழ்வது தவறு என்று கருதி தனது உடலை மாய்த்துக் கொள்ள தீர்மானித்தாள்.தனது தந்தையிடம், தான் இனிமேல் தட்சனது மகளாக அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் கூறினாள். பின்னர் தனது உடலையும் மாய்த்துக் கொண்டாள். இவ்வாறு உமையம்மை தனது உடலை மாய்த்துக் கொண்டு சிவபிரானிடமிருந்து பிரிந்ததைத் தான், பெண்கொடி பிரிந்த பின்னை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். ஆனால் தாட்சாயணி என்று கூறாமல், ஏன் இமவான் பெற்ற பெண்கொடி என்று கூறுகின்றார் என்ற ஐயம் நமக்கு எழலாம். தாட்சாயணி தனது உடலை மாய்த்துக் கொண்ட பின்னர் தான் இமவானின் மகளாகத் தோன்றுகின்றாள்; மேலும் இமவானின் மகளாகிய பார்வதி தேவி. சிவபிரானை திருமணம் செய்து கொண்ட பின்னர், சிவபிரானை விட்டு பிரியவில்லை. தனது தந்தையாகிய தட்சனுக்கும் தனக்கும் தொடர்பு கொண்ட உடல் வேண்டாம் என்று குறிப்பிட்டு உமையம்மை உடலை நீத்த பின்னர், தாட்சாயணி என்று பிராட்டியை அழைப்பது தவறு அல்லவா. அதனால் தான் அப்பர் பிரான், இமவான் பெற்ற பெண்பிள்ளை என்று இங்கே குறிப்பிடுகின்றார். பெருந்திரு என்பதை உமையம்மைக்கு அடைமொழியாகக் கொண்டு,திருமகள் போன்ற அனைத்து பெண் தெய்வங்களிலும் உயர்ந்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். தனது தந்தை தட்சன், சிவபெருமானை புறக்கணித்து நடத்திய யாகத்திற்குச் சென்ற தாட்சாயணி, அங்கே சிவபெருமான் அவமதிக்கப் படுவதை பொறுக்க முடியாமல் தந்தையிடம் வாதம் செய்தாள். ஆனால் தட்சன் தனது மகள் என்றும் பாராமல் உமையம்மையையும் தாழ்த்திப் பேசலானான்; மேலும் சிவபெருமானை, அனைவர் முன்னிலையிலும் மிகவும் அதிகமாக பழித்தான். இதனால் மிகவும் வருத்தமடைந்த உமையம்மை, தட்சன் தந்த உடலுடன் வாழ்வது தவறு என்று கருதி தனது உடலை மாய்த்துக் கொள்ள தீர்மானித்தாள். தனது தந்தையிடம், தான் இனிமேல் தட்சனது மகளாக அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் கூறினாள். பின்னர் தனது உடலையும் மாய்த்துக் கொண்டாள். இவ்வாறு உமையம்மை தனது உடலை மாய்த்துக் கொண்டு சிவபிரானிடமிருந்து பிரிந்ததைத் தான் பெண்கொடி பிரிந்த பின்னை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஆனால் தாட்சாயணி என்று கூறாமல், ஏன் இமவான் பெற்ற பெண்கொடி என்று கூறுகின்றார் என்ற ஐயம் நமக்கு எழலாம். தாட்சாயணி தனது உடலை மாய்த்துக் கொண்ட பின்னர் தான் இமவானின் மகளாகத் தோன்றுகின்றாள்; மேலும் இமவானின் மகளாகிய பார்வதி தேவி. சிவபிரானை திருமணம் செய்து கொண்ட பின்னர், சிவபிரானை விட்டு பிரியவில்லை. தனது தந்தையாகிய தட்சனுக்கும் தனக்கும் தொடர்பு கொண்ட உடல் வேண்டாம் என்று குறிப்பிட்டு உமையம்மை உடலை நீத்த பின்னர், தாட்சாயணி என்று உமையம்மையை அழைப்பது தவறு அல்லவா. அதனால் தான் அப்பர் பிரான், இமவான் பெற்ற பெண்பிள்ளை என்று இங்கே குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலிது.

பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை

வருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்

அருந்திரு மேனி தன் பால் அங்கொரு பாகமாகத்

திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

இந்த பதிகத்தின் மற்றொரு பாடலில் பைரவரின் திருக்கோலம் விவரமாக சொல்லப் படுகின்றது. பயிரவருக்கு சிறப்பு வழிபாடுகள் தற்போது நடைபெறுவது போன்று அப்பர் பிரானின் காலத்திலும் சிறப்பு வழிபாடுகள் இந்த தலத்தில் நடைபெற்றன போலும். அதனால் தான் அவரின் திருக்கோலத்தை குறிப்பிடும் முகமாக ஒரு பாடலை இந்த பதிகத்தில் கொடுத்துள்ளார். சிரித்த முகத்துடன் அழகாக காணப்படும் பயிரவரின் தோற்றத்தைக் கண்ட அப்பர் பிரான்,பெருமான் சிரித்ததின் காரணத்தை ஆராய்ந்தார் போலும். பயிரவர் கோலத்துடன் சென்று தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலினைத் தனது உடலில் போர்த்துக் கொண்ட பெருமான், அந்த தருணத்தில் உமையம்மை கொண்டிருந்த தேவையற்ற அச்சத்தை நினைத்து சிரித்த நிகழ்ச்சி, அவரது நினைவுக்கு வந்தது போலும்.. கதிர்=ஒளி; விரித்த பல்=பலவாறு விரிந்த; வெடிபடு=ஓசையை உண்டாக்கும்; வேழம்=யானை; விள்ளுதல்=மலர்தல். இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பயிரவர் திருக்கோலத்தை விவரிக்கும் பாடலை பாடும் அடியார்கள், தங்களது அச்சம் இடர் வறுமை பிணி முதலியன நீங்கப் பெற்று செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப் படுகின்றது.

விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை

தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்

உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்

சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.75.8) சங்கொத்த மேனிச் செல்வா என்று, அப்பர் பிரான், இறைவனை குறிப்படுகின்றார். அழகு என்பதும் எட்டுச் செல்வங்களில் ஒன்று தானே. அப்பர் பிரான் தனது ஆசையை வெளிப்படுத்தும் பாடல். தனது உடலை விட்டு உயிர் பிரியும் நாளில், தனக்கு அடுத்த பிறவி ஏதும் இல்லாத வண்ணம் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்பதால், இறைவன் எங்குள்ளான் என்று தான் தேடும் போது, தான் இருக்கும் இடத்தை இறைவன் தனக்கு காட்டியருள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல். நாம் தினமும் சொல்ல வேண்டிய பாடலாக பெரியோர்களால் கருதப்படும் பாடல். அனைவருக்கும் மேம்பட்ட இறைவனே, உடல் முழுதும் திருநீறு பூசப்பட்டதால் சங்கை ஒத்த வெண்ணிறமான மேனி கொண்டவனே, மண்ணுடன் கலக்கப்போகும் உடலினை புறக்கணித்து, எனது உள்ளத்தில் உன்னை பற்றிய ஆர்வத்தை வளர்த்து, உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசம் என்னை விட்டு அகலுமாறு நீக்கி, மனதினில் உன்னை தியானித்து, இறக்கும் தருவாயில், இறைவனே நீ எங்கு உள்ளாய் என்று நான் வினவினால், நான் இங்கே தான் இருக்கின்றேன் என்று உனது இருப்பிடத்தைக் காட்டி எனக்கு நீ அருள் புரியவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவதாக அமைந்த பாடல். .

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து

பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்

சங்கொத்த மேனிச் செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை

எங்குற்றாய் என்ற போது இங்குற்றேன் என் கண்டாயே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.90.7) அப்பர் பிரான், பெருமானை, விடையுகந்து ஏறிய செல்வன் என்று குறிப்பிடுகின்றார். இடப வாகனத்தை உடைய பெருமானை செல்வன் என்று அழைப்பதன் காரணத்தை நாம் முன்னமே சிந்தித்தோம். வெம்மையான நஞ்சினை உண்டவனாக பல பாடல்களில் சித்தரிக்கப்படும் பெருமான் அடியார்க்கு குளிர்ந்த அமுதமாக இருக்கின்றான் என்று குறிப்பிடும் அப்பர் பிரானின் நயம் ரசிக்கத் தக்கது. தலத்து இறைவியின் பெயர் மடமொழி மங்கை. மங்கையர்க்கரசி என்ற திருநாமமும் அன்னைக்கு இந்த தலத்தில் உள்ளது. பாடல் தோறும் பெருமானின் பெயரை,ஆராவமுதன் என்று குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் தேவியின் திருநாமத்தையும் குறிப்பிடுகின்றார். மடமொழி=இனிமையான மொழிகள்; ,

ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்

ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாகம் மகிழ்ந்து உடையான்

சேர்ந்த புனற்சடைச் செல்வப் பிரான் திரு வேதிகுடிச்

சார்ந்த வயலணி தண்ணமுதை அடைந்து ஆடுதுமே

சத்திமுற்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.98.4) அப்பர் பிரான், இறைவனை செல்வா என்று அழைக்கின்றார். குரம்பை=உடல்;வில்லேர்=வில்லினை ஒத்த; அல்லாக்குழி= ஒன்றுக்கும் பயனில்லாத வினைக்குழி. முக்திக்கு வழி வகுக்காத சமயக் குழியாக உள்ள சமண மதம் என்று பொருள். வில் போன்று வளைந்த புருவத்தைக் கொண்ட உமையம்மையின் கணவரே, செல்வனே, திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே,நிலையில்லாத இந்த உடலை நிலையெனக் கருதி, நீண்ட இந்த உலகத்திலே பல துன்பக்குழிகளில் ஆழ்ந்து சோர்ந்து இருக்கும் என்னை வந்து ஆண்டுகொண்டவனே, நீ என்னை கைவிட்டால் நான் அழிந்துவிடுவேன், எனவே நீ என்னை கைவிடாமல் காப்பாயாக என்று இறைவனிடம் அப்பர் பிரான் விண்ணப்பம் வைக்கும் பாடலிது.

நில்லாக் குரம்பை நிலையாக் கருதி இந் நீள் நிலத்தில் ஒன்று

அல்லாக் குழி வீழ்ந்து அயர்வு உறுவேனை வந்து ஆண்டு கொண்டாய்

வில்லேர் புருவத்து உமையாள் கணவா விடில் கெடுவேன்

செல்வா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.103.7) அப்பர் பிரான், சீர்மலி செல்வம் பெரிதுடையவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். முக்திச் செல்வம் தானே அனைத்துச் செல்வங்களினும் உயர்ந்த செல்வம். மேலும் எத்தனை உயிர்கள் பக்குவமடைந்து உய்வினை அடைந்தாலும், இடமில்லை என்று சொல்லாமல் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடைய பரந்த உலகம் அல்லவா முக்தி உலகம். எனவே தான் சிறந்ததும் பெரியதும் ஆகிய செல்வம் என்று கூறப்படுகின்றது. சீர்மலி=சிறப்பு மிக்க செல்வம்: சுலவு=சூழ்ந்த: மாதிமை=பெருமை; பொருள் இன்றி வறுமையில் வாடும்ஒருவன் பிச்சை எடுக்கலாம். ஆனால் சிறப்பு வாய்ந்த செல்வங்களை உடைய பெருமான் பிச்சை எடுத்துண்பது அவரது பெருமைக்கு ஏற்ற செயலா என்றுவினவும் பாடல் இது.

சீர்மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மாமலையே

கார்மலி சோலை சுலவு கடல் நாகைக் காரோணனே

வார்மலி மென்முலையார் பலி வந்திடச் சென்று இரந்து

ஊர்மலி பிச்சை கொடு உண்பது மாதிமையோ உரையே

பேரெயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.16.6) அப்பர் பிரான், திருக்கு வார்குழல் செல்வன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.திருக்கு=வளைத்து முறுக்கி முடியப்பட்ட கூந்தல்; வார்குழல்=நீண்ட குழலினை உடைய உமையன்னை; ஆற்றற=ஆற்று அற; ஆற்று=வந்த வழி, மூல காரணம்; உயிர்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு மூல காரணமாக விளங்கும் வினைகளின் ஆற்றலை கெடுத்து நன்மைகளை பெருக்கும் பெருமான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. ஆற்றற என்ற சொல்லுக்கு ஆற்றல் அற என்று பொருள் கொண்டு,துயரங்களுக்கு காரணமாக விளங்கும் வினைகளின் ஆற்றலை அழித்து என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நாம் உலகியலில், சிறந்த மனைவியர் வாய்க்கப்பெற்ற ஆண்கள் வாழ்வினில் வெற்றி அடைவதையும், தங்களது துணைவியரின் செய்கைகளால் வீழ்ந்த ஆண்களை நாம் காண்கின்றோம்.பெருமானுக்கு வாய்த்த மனைவியோ, பெருமானின் செயல்கள் அனைத்திலும் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளும் பிராட்டி, பெருமான் வேறு பிராட்டி வேறு என்று சொல்ல முடியாத வண்ணம், செயல்படுவதை நாம் காண்கின்றோம். இத்தகைய மனைவியை விடவும், சிறந்த செல்வம் ஒரு ஆண்மகனுக்கு இருக்க முடியாது அல்லவா. அதனால் தான், வார்குழல் செல்வன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார.

திருக்கு வார்குழல் செல்வன சேவடி

இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார்

சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றற

பெருக்குவார் அவர் பேரெயில் ஆளரே

நின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.23.6) பாடித் திரிதரும் செல்வர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். உரைப்பொன்=பொன்னின் தரத்தினை ஒப்பிட்டு பார்ப்பதற்காக பொற்கொல்லர்கள் பயன் படுத்தும் பொன்; திரைத்து=அலைத்து; நிரைப் பொன்=வரிசையாக அழகுடன் அமைந்த;அகத்துறை வகையில் அமைந்த பாடல். தனது மகள், தன்னை இறைவன் ஏற்றுக் கொள்ளாதது குறித்து இறைவனை ஏசியது தவறு என்று கூறிய தாய்க்கு,மகள் பதில் அளிப்பதாக அமைந்துள்ள பாடல்; பல இடங்களும் சென்று பலி ஏற்பதற்காக திரியும் பெருமானை செல்வர் என்று பலரும் அழைத்தாலும்,செல்வராக இருக்கும் பெருமான் ஏன் பலி ஏற்பதற்காக திரிகின்றார் என்ற சந்தேகம் அப்பர்நாயகிக்கு எழுகின்றது. தான் அவரைப் பின் தொடர்ந்து செல்வதை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவன், பல இடங்களிலும் திரிகின்றார் போலும் என்று கற்பனை செய்கின்றாள். எனவே அவர் உயிர்களை உய்விக்கும் பொருட்டு அல்ல என்ற முடிவுக்கு வரும் அப்பர் நாயகி, இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற செல்வர் என்று குறிப்பிடுகின்றாள் போலும்.

உரைப்பக் கேண்மின் நும் உச்சி உளான் தனை

நிரைப் பொன் மாமதில் சூழ் திரு நின்றியூர்

உரைப் பொன் கற்றையார் இவரோ எனில்

திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.25.1) அப்பர் பிரான், பெருமானை, தன்னைச் சிந்திக்கும் அடியார்களின் வினைகளை தீர்ப்பவர் என்று கூறுகின்றார், பொதுவாக, அனைத்து உயிர்களும் தங்களது வினைகளை நுகர்ந்து தான் கழிக்கவேண்டும். எனினும் இறைவன் ஒருவரால், எவரது வினைகளையும் குறைக்க முடியும். இவ்வாறு இறைவனின் அருளால் வினைகள் நீங்கப்பெற்ற அடியார்கள், முக்தி உலகம் சென்றடைவதற்கு தகுதி படைத்தவர்களாக விளங்குவதால் மறுமையில் முக்தி நிலை அடைகின்றனர். அத்தகைய ஆற்றல் படைத்த இறைவனை, செல்வனார் என்று இங்கே குறிப்பிடுகின்றார். அந்திக்கோன்=சந்திரன், மாலைப் பொழுதுக்குத் தலைவனாக உள்ள சந்திரன்; ;

முந்தி மூவெயில் எய்த முதல்வனார்

சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்

அந்திக் கோன் தனக்கே அருள் செய்தவர்

பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே

பராய்த்துறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.30.06) அப்பர் பிரான் பராய்த்துறை செல்வன் என்றும் நான்மறை ஓதிய நம்பன் என்றும் இறைவனை குறிப்பிடுகின்றார். உயிர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பது முதல் அத்தகைய உயிர்கள் எவ்வாறு முக்தி நிலை அடைவது என்பது வரை நமக்கு சொல்லிக் கொடுக்கும் வேதங்களை அருளிய பரமனை அனைவரும் விரும்புவது இயற்கை தானே. அதனால் தான் வேதங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய பரமனை நம்பன் என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார். இறைவன் உயிர்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்தோடு பலி ஏற்பதை குறிப்பிட்டு, நம்பன் என்று அழைக்கின்றார் என்று கூறுவதும் பொருத்தமான விளக்கமே. தனது நெஞ்சத்தினுக்கு அறிவுரை கூறுவது போன்ற பாடல் இது.உலகத்தவர்க்கு தான் கூறும் அறிவுரையினை, தனது நெஞ்சத்திற்கு கூறுவதாக சொல்வது அப்பர் பிரானின் பாணி.; வாய்மை=உண்மையான அன்பு.நல்ல=நன்மையைத் தருகின்ற; வல்லையாய்=விரைவில் சென்று; இங்குள்ள இறைவனின் திருநாமம் செல்வர் என்பதாகும்.தாருக வனத்து முனிவர்களுக்கு சிவஞானமாகிய செல்வத்தை அளித்த பெருமானை செல்வர் என்று அழைக்கின்றனர். அப்பர் பிரானும் இந்த பதிகத்தின் பல பாடல்களில் செல்வர் என்று இறைவனை அழைப்பதை நாம் காணலாம். தாருகவனத்தில் நடந்த பல நிகழ்ச்சிகள் இந்த பதிகத்தில் கூறப்படுகின்றன.

நல்ல நான்மறை ஓதிய நம்பனைப்

பல்லில் வெண் தலையில் பலி கொள்வனைத்

தில்லையான் தென்பராய்த்துறை செல்வனை

வல்லையாய் வணங்கித் தொழு வாய்மையே

பொய்யான செயல்கள் நிறைந்த இந்த உலகினில், எவர் நம்மீது உண்மையான அன்பு செலுத்துகின்றனர், எவர் நம்மீது பொய்யான அன்பு செலுத்தி வஞ்சகமாக நடிக்கின்றனர் என்பதை நம்மால் அறியமுடியாது. ஆனால் முற்றும் உணர்ந்த பெருமான், வஞ்சகமாகத் தன்னைப் பணிவோரை எளிதில் இனம் கண்டு கொள்வார். இத்தகைய அரிய ஆற்றல் உடைய பெருமானை செல்வர் (5.030.4) என்று குறிப்பிடுகின்றார் போலும். இந்த பதிகத்தின் பாடல்கள் சிவபெருமான் பிச்சைப் பெருமானாய் தாருகவனம் சென்றதை குறிப்பிடும் பாடல்கள் ஆகும். மோழைமை= அறியாமையால் சொல்லப்படும் சொற்கள்.தன்னைப் பின்தொடர்ந்து வந்த தாருகவனத்து முனிவர்களின் மனைவியர் முன்னே, அறியாமையால் மற்றவர்கள் பேசும் சில வார்த்தைகளை சிவபெருமான் பேசியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். பிச்சைப் பெருமான் வேடமும், அவர் பேசிய பேச்சுக்களும், தாருகவனத்து முனிவர்கள் தங்களது மனைவியரின் கற்புத் திறன் பற்றி கொண்டிருந்த கர்வத்தை அடக்குவதற்காக செய்த காரியங்கள் என்று புராணம் கூறுகின்றது..

முன்பெலாம் சில மோழைமை பேசுவர்

என்பெலாம் பல பூண்டு அங்கு உழி தர்வர்

தென் பராய்த்துறை மேவிய செல்வனார்

அன்பராய் இருப்பாரை அறிவரே

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.32.6) பூந்துருத்தி நகரச் செல்வனாகிய பெருமானின் சிவந்த திருவடிகளின் கீழ் நாம் இருப்போமாக என்று அறிவுரை கூறுகின்றார். வல்லம்=வலிமையான, கடுமையான சொற்கள்; வலி=கொடிய செயல்கள்; கொல்லம் பேசி= கொன்று அழிக்கும் கருத்தினை உடையவனாய்; நூறினான்=அழித்தான்; புல்லம்=கீழ்மையான சொற்கள்; ஒரே சமயத்தில் மூன்று கோட்டைகளையும் ஊடுருவிச் சென்று அழிக்கும் வல்லமை உடைய அம்பினை எய்த பெருமானை செல்வன் என்று அழைக்கின்றார்.

வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினைக்

கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்

புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர்ச்

செல்வன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.33.1) தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார் என்று குறிப்பிட்டு, வலிமை உடையவராக திகழ்ந்து இறைவனுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். இறை பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கு நமக்கு தேவையானவை, மன வலிமையும் உடல் வலிமையும் என்பதை உணர்த்தும் வகையில் வலிமையுடன் பணி செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அடுத்தவரின் கேலிப் பேச்சுகளையும், இகழ்வினையும் பொருட்படுத்தாமல், மனம் ஒன்றி ஈடுபட மனவலிமை அவசியம். திருக்கோயில் பிராகாரத்தை சுத்தம் செய்வதற்கும், கோயிலில் பயன்படுத்தும் பொருட்களையும், பெருமானுக்கு அணிவிக்கும் ஆடைகளையும் சுத்தமாக வைத்திருக்க உடல் வலிமையும் தேவை. எனவே தான், தனது நெஞ்சத்தை நோக்கி வலிமையுடன் பணி செய்வாயாக என்று கூறுகின்றார். கொல்லை என்றால் முல்லை நிலம் என்று பொருள். முல்லை நிலத்திற்கு உரிய விலங்கு எருது முல்லை நிலத்திற்கு உரிய கடவுள் திருமால். எனவே கொல்லை ஏறு என்ற தொடருக்கு இரண்டு விதமாக, முல்லை நிலத்திற்கு உரிய விலங்காகிய எருதினை வாகனமாகக் கொண்டவன் என்றும் திரிபுரத்து அரக்கர்களுடன் போர் செய்த பொது,இடபமாக மாறிய திருமாலைத் தனது வாகனமாக் கொண்டவன் என்று இரண்டு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமே.

கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர்

தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்

தொல்லை ஊழியர் சோற்றுத் துறையர்க்கே

வல்லையாய்ப் பணி செய் மட நெஞ்சமே

வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.42.9) அப்பர் பிரான், பெருமானை வேட்களச் செல்வர் என்று அழைக்கின்றார். திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளை சுட்டெரித்த பெருமான், தனது அடியார்களின் வினைகளைத் தீர்த்து அவர்களை குளிர்விக்கின்றார் என்று பெருமானின் இருவேறு தன்மைகளை அப்பர் பெருமான் நயமாக குறிக்கின்றார். சிட்டர் என்பது ச்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. குட்ட வல்வினை=குமைக்கும் வல்வினை; இதே கருத்து நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (5.52.9) குறிப்பிடப் படுகின்றது.

வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்

சுட்ட கொள்கையர் ஆயினும் சூழ்ந்தவர்

குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்

சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே

இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் அப்பர் பிரான், பெருமானை செல்வர் என்று அழைக்கின்றார். அல்லல்=பிறவியால் ஏற்படும் துன்பங்கள்:அருவினை=நீக்குதற்கு அரிய வினைகள்; மல்கு=நிறைந்து விளங்குதல்; செல்வனார்=முக்திச் செல்வத்தை உடைய செல்வர்; தன்னைச் சரணடைந்த சந்திரன் நிறைந்து விளங்குமாறு, சந்திரனைத் தனது சடையில் சூடிய மணாளனும், முக்தி எனப்படும் அழிவில்லாத செல்வத்தை உடைய செல்வரும் ஆகிய திருவேட்களத்து இறைவனைத் தங்களது கையால் தொழுது வணங்க வல்ல அடியார்களுக்கு, இந்த பிறவி எடுத்ததால் ஏற்படும் துன்பங்களும் இல்லை,அவர்களை, அந்நாள் வரை பிரிக்க முடியாதபடி பிணைத்திருந்த வினைகளும் அவர்களை விட்டு நீங்கிவிடும். எனவே வேட்களம் சென்று பெருமானை கைதொழுது உய்வதே சிறந்த வழி என்பதை உணர்ந்து செயல்படுவீராக என்று அப்பர் பிரான் அறிவுறுத்தும் பாடல்..

அல்லல் இல்லை அருவினை தான் இல்லை

மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்

செல்வனார் திருவேட்களம் கை தொழ

வல்லர் ஆகில் வழியது காண்மினே

திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.50.1) அப்பர் பிரான், பெருமானை செல்வனார் என்று குறிப்பிடுகின்றார். தனக்கு அருள் புரிந்த பெருமானை, அருட்செல்வம் உடையவர் என்று கூறுகின்றார். வாய்மூர்ச் செல்வனார் அப்பர் பிரானுக்கு புரிந்த அருள் தான் என்னே. திருமறைக்காடு தலத்தினில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ஆலய திருக்கதவுகளை திறப்பதற்கு, தான் பதினோரு பாடல்கள் பாடும் வரை தாமதம் செய்த பெருமானின் செயலையும், அதே கதவுகளை மீண்டும் மூடுவதற்கு திருஞானசம்பந்தர் முதல் பாடல் பாடிய அளவிலே, கோயில் திருக்கதவுகள் மூடப்பட்ட நிலையும்,மீண்டும் சிந்தித்து பார்த்த அப்பர் பிரான், பெருமானின் திருக்குறிப்பினை, தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று வருத்தம் அடைந்தார். இந்த வருத்தத்தால் மனம் தளர்ந்த அப்பர் பிரான், சற்று நேரம் கண்ணயர்ந்தார். அப்போது அவரது கனவில், முதியவர் வேடத்தில் தோன்றிய பெருமான், யாம் வாய்மூரில் இருப்போம் தொடர்ந்து வா என்று பணித்தார். திடுக்கிட்டு விழித்தெழுந்த அப்பர் பிரான், உடனே வாய்மூர் செல்லத் தொடங்கினார். தனக்கு கனவின் கண் காட்சியளித்த அதே கோலத்தில், பெருமான் முன்னே சென்றதை கவனித்த அப்பர் பிரான் ஓட்டமும் நடையுமாக அவரைப் பின் தொடர்ந்தார்.அப்பர் பிரான் வாய்மூர் சென்றதை அறிந்த திருஞானசம்பந்தரும் வாய்மூர் சென்றார். அந்த தலத்தினில், அப்பர் பிரான் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய இருவருக்கும் பெருமான் தனது நடனக் கோலத்தை காட்டினார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. இவ்வாறு தனக்கு அருள் புரிந்த தன்மையை உணர்த்தி, தான் இருக்கும் இடத்தையும் உணர்த்திய பெருமான் தனது நடனக் கோலத்தையும் காட்டிய அருட்செயலை குறிப்பிட்டு, அருட்செல்வம் பெரிதும் உடையவர் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இருந்திடம்=இருந்த இடம்; கொலோ=வியப்பினைக் குறிக்கும் சொல்;தெங்கு=தென்னை மரங்கள்;

எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு

அங்கே வந்து அடையாளம் அருளினார்

தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்

அங்கே வா என்று போனார் அது என் கொலோ

நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.52.1) அப்பர் பிரான் பெருமானை அருட்செல்வர் என்று குறிப்பிடுகின்றார். விடம் கொண்டுள்ள தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பு நல்ல குணமுடைய நாகம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. இறைவனின் சன்னதியில் நல்லன அல்லாத பொருட்களுக்கு இடம் ஏது. கொலை வெறியுடன் தாக்க வந்த மான்கன்று, தனது கொலை வெறியை விடுத்து, துள்ளி விளையாடும் மான்குட்டியாக பெருமானின் கைகளில் திகழ்வது போல் பாம்பும் தனது கொடிய குணத்தை விட்டுவிட்டு நல்ல குணமுடைய பாம்பாக அடங்கி விடுகின்றது. சந்திரனிடம் தான் கொண்டுள்ள பகையையும் மறந்து, சந்திரனுடன் பெருமானின் சடையில் தாங்கும் பாம்பு பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. நல்லான் ஆகிய பெருமானுடன் இணைந்த பாம்பு, தனது கொடிய குணத்தினை விட்டு விட்டு நல்ல குணத்துடன் திகழ்கின்றது. தான் அருள் புரிவதற்காக,பக்குவப்பட்ட உயிர்களை தேடிய வண்ணம், பலியேற்கத் திரிபவர் பெருமான் என்பதால், பலிதிரி செல்வர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.பல இடங்களுக்கும் பலி ஏற்கும் நோக்கத்துடன் பெருமான் திரிவதே, தன்னிடம் உள்ள சிறந்த செல்வமாகிய முக்தி உலகினில் வாழும் தன்மையை பக்குவப்பட்ட உயிர்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன் என்பதை உணர்த்தும் பொருட்டு, பலிதிரி செல்வர் என்று பெருமானை அப்பர் பிரான் அழைக்கின்றார்,

நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்

பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி

செல்வர் போல் திரு நாகேச்சரவரே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.53.9) அப்பர் பிரான், பெருமானை, செங்கண் மால்விடை ஏறிய செல்வனார் என்று குறிப்பிடுகின்றார். திருபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற போது, தேரின் அச்சு முறிந்த தருணத்தில், திருமால் இடபமாக மாற, பெருமான் இடபமாக மாறிய திருமாலைத் தனது வாகனமாக ஏற்றுக்கொண்ட செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது. திருமாலைத் தனது வாகனமாக ஏற்றுக்கொண்ட தன்மை, பெருமான் ஒருவருக்கே உடையது என்பதால், செங்கண் மால்விடை ஏறிய செல்வனார் என்று குறிப்பிடுகின்றார். மால் விடை என்ற தொடருக்கு,சிறப்பு வாய்ந்த இடபம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அகத்துறை வகையில் அமைந்துள்ள பாடல். அதிகை வீரட்டத் தலத்து இறைவன் நேரில் கண்டால் தான், தனக்கு தூக்கம் வரும் என்று தலைவி சொல்வதாக அமைந்த பாடல். கங்குல்=இருளினால் மறைக்கப்பட்ட இரவுப் பொழுது.

செங்கண் மால்விடை ஏறிய செல்வனார்

பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்

அங்கண் ஞாலமது ஆகிய வீரட்டம்

கங்குலாக என் கண் துயில் கொள்ளுமே.

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.56.5) அப்பர் பிரான், கோளிலி செல்வன் சேவடி சென்று தொழுமினே என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்றதுமன்றி, அந்த யானையின் தோலைத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக்கொண்ட வீரச் செயல் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. இரத்தப்பசை மிகுந்த யானையின் ஈரத்தோல், உடலை அழித்துவிடும் என்பதால் எவரும் அந்த தோலை பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள். ஆனால் பெருமானோ, யானையின் தோல் தனக்கு எத்தகைய கேட்டினையும் விளைவிக்காது என்பதை உணர்த்தும் வண்ணம், உமையனை அஞ்சியதையும் பொருட்படுத்தாது, அந்த தோலினைத் தனது உடல் மீது போர்த்துக் கொள்கின்றார். இத்தகைய ஆற்றல் உடைய பெருமானை செல்வன் என்று குறிப்பிடுகின்றார். அல்லல் என்பதற்கு கண்ணுக்கு புலனாகாதவாறு தோன்றும் இடர்.என்று பொருள் கூறுவார்கள்.

அல்லல் ஆயின தீரும் அழகிய

முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே

கொல்லை யானை உரித்தவன் கோளிலி

செல்வன் சேவடி சென்று தொழுமினே

விசயமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.71.6) இந்த தலத்து இறைவனை, செல்வ போற்றி என்று சொல்லி புகழும் அடியார்களுடன்,இயமன் இனிய மொழியில் பேசுவான் என்று கூறுகின்றார். இயமன் என்றாலே அவன் ஆட்சி புரியும் இயமலோகமும் ஆங்கே உயிர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளும் நமது நினைவுக்கு வரும். எனவே கடுமையான மொழியையே இயமனும் அவனது ஊழியர்களும் பேசுவார்கள். அந்த தன்மையை மாற்றும் ஆற்றல் உடைய இறைவனை செல்வா என்று அழைப்பது தானே பொருத்தம். மேலும் இந்த பாடலில் பொன்மலையை வில்லாக உடைய பெருமான் என்றும் சொல்லப்படுகின்றது. கொல்லை=முல்லை நிலம். முல்லை நிலத்திற்கு உரிய விலங்கு எருது.

கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை

வில்லை ஏற்றுடையான் விசயமங்கை

செல்வ போற்றி என்பார்க்குத் தென்திசை

எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே

திருமங்கலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.73.5.) அப்பர் பிரான் பெருமானின் அருள் செல்வம் உடையவர்களாக நியமத்துடன் வழிபடும் சிவனடியார்கள் என்று குறிப்பிடுகின்றார். செல்வம் (முதல் அடி)=பல வகையான செல்வங்கள்: செல்வம் (இரண்டாவது அடி)=-அருட் செல்வம்.செல்வம்(மூன்றாவது அடி)=நிலவளம் மற்றும் நீர் வளம்: செல்வன்=வீடுபேறு ஆகிய நிலையான செல்வத்தை உடைய பெருமான். பல வகையான செல்வங்கள் மலிந்த திருமங்கலக்குடியில், சிவ ஒழுக்கம் நிறைந்து வாழ்தலால் அருட்செல்வத்தை உடைய செல்வர்கள் வாழ்கின்றார்கள். நீர் வளமும் நில வளமும் நிறைந்து காணப்படும் இந்த தலத்தில் உள்ள திருக்கோயிலில், தனது தேவியோடும் உறைகின்ற பெருமான், நிலையானதும் பேரின்பம் அளிக்கக் கூடியதும் ஆகிய வீடுபேறு செல்வத்தினை உடையவனாவான். அவனது திருப்பாதங்களைத் தொழுது அந்த செல்வம் பெற்று இன்பம் அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செல்வம் மல்கு திருமங்கலக்குடி

செல்வம் மல்கு சிவநியமத்தராய்ச்

செல்வம் மல்கு செழு மறையோர் தொழச்

செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.78.3) அப்பர் பிரான், தில்லையம்பலத்தில் உறைகின்ற பெருமானை, காலம் தாழ்த்தாமல் தொழும் அடியார்களுக்கு ஊனம் ஏதும் இல்லை என்று உறுதி அளிக்கின்றார். ஒல்லை=விரைந்து; காலம் தாழ்த்தாது உடனே இறைவனை வழிபடுவதை ஒல்லை என்று உணர்த்துகின்றார் போலும்.

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்

தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்

கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு

ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்றில்லையே

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.80.1) அப்பர் பிரான், ஆலந்துறை தலைவனாகிய பெருமான் தனது செல்வன் என்று குறிப்பிட்டு, தனது நெஞ்சத்தை நோக்கி, நெஞ்சமே நீ அந்த பெருமானை நினைக்காமல் இருந்தால் கெட்டுவிடுவாய் என்று எச்சரிக்கை விடுகின்றார். இது நமக்கு அவர் கூறும் அறிவுரை ஆகும். வானம் சேர்=ஆகாயத்தில் உலவும்; மைந்தன்=வல்லமை உடையவன்; பெருமானை நினைக்காது இருந்தால் கெட்டு விடுவாய் என்று அப்பர் பிரானின் எச்சரிக்கையுடன் இந்த பதிகம் தொடங்குகின்றது. ஆணவ மலத்தின் சேர்க்கையால் அறியாமையில் ஆழ்ந்திருக்கும் உயிர்,நல்ல வழியில் செல்லாமல் தடுக்கப்படுகின்றது. உயிருக்கு உதவ வேண்டிய ஐந்து புலன்களும் தங்களின் விருப்பப்படியே உயிரை அலைக்கழித்து உயிரினை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. இவ்வாறு கேட்டினை நோக்கி பயணம் செய்யும் உயிரினை நல்வழிப் படுத்தும் தன்மை இறைவன் ஒருவனுக்கே உண்டு என்பதால், இறைவனை நினைத்து வழிபட்டு உய்யுமாறு அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். கிற்றல் என்றால் இயலுதல் என்று பொருள். கூறிட இயலுதல் என்று இறைவனின் திருநாமங்களைச் சொல்ல பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

வானம் சேர் மதி சூடிய மைந்தனை

நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை

ஆனஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறைக்

கோன் எம் செல்வனைக் கூறிட கிற்றியே

திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.84.1) அப்பர் பிரான் பெருமானை, சிராப்பள்ளி செல்வர் என்று குறிப்பிடுகின்றார்.மட்டு=தேன் பொருந்திய: வார் குழல்=நீண்ட குழல்: மால் விடை=திருமாலாகிய இடபம் என்றும் பெருமை பொருந்திய இடபம் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். கட்டு=பாசக்கட்டு: சிட்டர்=மேன்மையானவர், பாசக் கட்டுகளை நீத்தவர்க்கு இன்னருள் புரியும் ஈசனார் என்று தலத்து இறைவனை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். யான் எனது எனப்படும் அகப்பற்று மற்றும் புறப்பற்றினை முதலில் விட்டு விடுவதே, அத்தகைய பற்றுகளால் நாம் செய்யும் பல தவறுகளை தவிர்ப்பதற்கு சிறந்த வழியாகும்.

மட்டுவார் குழலாளொடு மால் விடை

இட்டமா உகந்து ஏறும் இறைவனார்

கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும்

சிட்டர் போலும் சிராப்பள்ளிச் செல்வரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.02.7) அப்பர் பிரான், பெருமானை மழுவாட் செல்வர் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களுமே புலியூர் சிற்றம்பலமே சென்று புக்கார் தாமே என்று முடிகின்றன. அனைத்து கோயில்களிலும் உள்ள மூர்த்தங்களில் பொதிந்துள்ள கலை, தினமும் அர்த்தஜாம பூஜை முடிந்த பின்னர், சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானின் திருவுருவத்தில் சேர்வதாக ஐதீகம். இந்த காரணம் பற்றியே தில்லைச் சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை, மற்ற திருக்கோயில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்த பின்னரே, சுமார் ஒரு மணி நேரம் கழித்து, செய்யப்படுகின்றது. இந்த செய்தியே புலியூர் சிற்றம்பலமே புக்கார் தாமே என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது என்று கூறுவார்கள்.இறவாதார் என்ற சொல்லுக்கு, நீண்ட வாழ் நாள் உடையவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். யோகம் முதலியவற்றால் தங்களது வாழ்நாளை நீட்டிக் கொண்டவர்கள். அனைவரும் தமது பெருமையே பேசும் வண்ணம், பெருமான் அனைவரின் மனதினிலும் பொருந்தி நிற்கின்றார் என்றும் இங்கே கூறுகின்றார். இதே பதிகத்தின் எட்டாவது பாடலில், நெய்த்தானம் மேய செல்வர் என்று கூறுகின்றார்.

இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று

பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியார் தம் பெருமையே பேச நின்று

மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாட் செல்வர்

புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார் தாமே

அடையாளத் திருத்தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.5.3) அப்பர் பிரான் வீரட்டானத்துச் செல்வன் என்று பெருமானை அழைக்கின்றார். சில்லை=வட்டம்,சிரை தலை=முடிகள் மழிக்கப்பட்ட தலை; எல்லையற்ற நற்குணங்களை உடையவன் என்பதாலும், வேறு எவரிடமும் இல்லாத பிரம கபாலத்தை தந்து உண்கலனாகக் கொண்டவன் என்பதாலும் செல்வர் என்று அழைத்தார் போலும்.

முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி

எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி

சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய்போற்றி

தில்லைச் சிற்றம்பலம் மேயாய் போற்றி திருவீரட்டானத்து எம் செல்வா போற்றி

பெருமானின் திருவடிகளின் சிறப்பினை எடுத்து உரைக்கும் திருவடித் தாண்டகப் பாடலில் (6.6.5) அப்பர் பிரான் திருவீரட்டானத்து செல்வன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் கழலும் சிலம்பு ஒலிக்கும் திருவடி என்று குறிப்பிடுகின்றார். ஒரு காலத்து ஒன்றாக நின்ற அடி=ஏக பாத திரிமூர்த்தியாக இறைவன் இருக்கும் நிலை. முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில்,அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் திருவானைக்கா தலத்திலும் உள்ளது.

ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழி தோறூழி உயர்ந்த அடி

பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி

இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி

திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.09.10) அப்பர் பிரான், பெருமானை செழுங் கயிலாயத்தெம் செல்வர் என்று கூறுகின்றார்.மழுங்கலா=ஒளி குறையாத; அழுங்கினார்= துன்பப்பட்டு தம்மை அடைந்தவர்; குவளைக் கோதை=குவளை மலர்கள் பொருந்திய மாலையை அணிந்த உமையம்மை; குவளை போன்று கருமை நிறத்தில் அழகிய கண்களை உடையவள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஐயுறவு=ஐயம், சந்தேகம்,துன்பத்தை களைவாரோ, மாட்டாரோ என்ற ஐயம். கொடுகொட்டி=பறை போன்ற ஒரு வித தோல் கருவி. மிழலை மேய மணாளர்=திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பவர்; வீழிமிழலையில் வாழ்ந்து வந்த காத்யாயனர் என்ற முனிவர், இறைவனை வேண்டி ஒரு பெண் மகவு பெற்றார். பார்வதி தேவியே குழந்தை வடிவம் எடுத்த அந்த குழந்தை, காத்யாயனி என்ற பெயரில் வளர்க்கப்பட்டது. மணப்பருவம் எய்திய அந்த குழந்தை, சிவபிரானையே மணவாளனாக அடைய வேண்டும் என்று முனிவர் விரும்பினார். ஒரு நாள் சிவபிரான், முனிவரின் இல்லத்திற்கு வந்து, அவரது பெண்ணைத் தனக்கு மணமுடித்துத் தருமாறு வேண்ட,முனிவர் வந்தவரை தனது அடையாளம் காட்டுமாறு வேண்டினார். வந்தவர், திருமால் தன்னை வழிபட்டபோது சமர்ப்பித்த கண்ணினைக் காட்ட, வந்தவர் சிவபிரான் தான் என்பதை உணர்த்த முனிவர், மிகவும் மகிழ்ந்து தனது பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தார். இதனால் இந்த தலம் திருமணத் தலம் என்று கருதப்படுகின்றது. மகா மண்டபத்தில் இருக்கும் கல்யாண சுந்தரர் சன்னதியில் சிவபிரான் மணக்கோலத்தில், கையில் ஒரு மலரினை ஏந்தி இருப்பதை காணலாம். இந்த சன்னதியில் பெருமானின் திருவடிக்கு அருகிய திருமாலின் கண் இருப்பதையும் நாம் காணலாம். இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் வண்ணம், அப்பர் பிரான் மிழலை மேய மணாளர் என்று இங்கே கூறுகின்றார்.

மழுங்கலா நீறாடும் மார்பர் போலும் மணிமிழலை மேய மணாளர் போலும்

கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர்போலும் கொடுகொட்டி தாளம் உடையார்போலும்

செழுங்கயிலாயத்து எம் செல்வர் போலும் தென்னதிகை வீரட்டம் சேர்ந்தார் போலும்

அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

தன்னைச் சார்ந்தவர்களின் இடர்களைக் களையும் ஆற்றல் உடைய பெருமான் என்பதால் அவரை செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் கருகாவூர் தலத்தின் பாடலாகும் (6.15.6). மூலன்=அனைத்துப் பொருட்களுக்கும் மூலமானவன். மூவாத மேனியான் என்று அழைப்பதன் மூலம், சிவபிரானின் மூப்படையாத தன்மையும், அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் சிவபிரான் இருக்கும் தன்மையும் உணர்த்தப் பட்டுள்ளன.இந்த பாடலில் திருமால் மற்றும் உமையம்மை இருவரையும், தனது உடலில் பாகமாகக் கொண்டவன் சிவபெருமான் என்று கூறப்படுகின்றது.மாலன்=திருமாலைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவன். அருமையான சொல்லாட்சி. சீலன்=நற்குணங்களை உடையவன்.

மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம் மூவாத மேனி முக்கண்ணினானாம்

சீலனாம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வனாம் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்

மாலனாம் மங்கையோர் பங்கனாகும் மன்றாடியாம் வானோர் தங்கட்கெல்லாம்

காலனாம் காலனைக் காய்ந்தானாகும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.16.6) அப்பர் பிரான், திசை அனைத்தும் நிறைந்த செல்வர் என்று கூறுகின்றார். பெருமானின் விசுவரூபம் அனைத்து திசைகளையும் தொடுவதாக உள்ள நிலை, அட்ட திகாம்பரன் (எட்டு திசைகளையே ஆடையாக உடையவன்) என்ற தொடரால் குறிப்பிடபடுகின்றது. ஐயிரண்டு=பத்து திசைகள், எட்டு திசைகள் மற்றும் கீழ் மேல் எனப்படும் இரண்டையும் சேர்த்து பத்து திசைகள் என்று அப்பர் பிரான் சொல்கின்றார். ஆறொன்று=ஆறும் ஒன்றும் என்று பொருள் கொண்டு ஏழு இசைகளை குறிப்பதாக கொள்ள வேண்டும். அறுமூன்று=பதினெட்டு புராணங்கள் என்றும் ஆறு அங்கங்கள் நான்கு வேதங்கள் நான்கு உபவேதங்கள் நான்கு உப அங்கங்கள் என்றும் இருவிதமாக பொருள் கூறப்படுகின்றது.நான்மூன்று=பன்னிரண்டு சூரியர்கள்; ஒவ்வொரு மாதத்திற்கும் அதிபதியாகிய சூரியன் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றான். பன்னிரண்டு வடமொழிப் பெயர்களாவன, தாதா, அர்யமா, மித்ரா, வருணா, இந்திரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்சுமான், பகா, பூஷா, பர்ஜனா. அறுமூன்று என்ற தொடருக்கு, பதினெட்டு கணங்களை குறிப்பதாகவும் பொருள் கொள்வது வழக்கம். ஐயிரண்டும் ஆறொன்றும் என்ற தொடருக்கு, இரண்டு ஐந்து ஒரு ஆறு என்று கொண்டு பதினாறு என்று பொருள் கொண்டு பதினாறு பேறாக விளங்குவதாகவும் பொருள் கொள்வார்கள். ,

ஐயிரண்டும் ஆறொன்றும் ஆனார் போலும் அறுமூன்றும் நான்மூன்றும் ஆனார் போலும்

செய்வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும்

கொய்மலர் அம் கொன்றைச் சடையார் போலும் கூத்தாடவல்ல குழகர் போலும்

எய்யவந்த காமனையும் காய்ந்தார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.4), அப்பர் பிரான், இறைவனை அடியார்களின் சிந்தையில் சேரும் செல்வர் என்று குறிப்பிடுகின்றார். தன்னை அடைந்த அடியார்களுக்கு நேசராக பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். தேசர்-ஒளியுடையவர்; ஈசர்=தலைவராக தாங்குபவர்; நிட்டுருவர்=நேசம் இல்லாதவர், கடுமையான சித்தம் உடையவர்; திறம்=தன்மை; தனது தன்மைகளை நினைத்து தன்னைத் தொழுகின்ற அடியார்களின் சிந்தனையில் உறைபவர் சிவபெருமான் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், தன்னைச் சரணடையும் அடியார்களை நேசிப்பவராக உள்ளார் என்று கூறுகின்றார். அதே சமயத்தில் தன்னை நினையாத மனிதர்களுக்கு கடுமையான சிந்தை உடையவராக இருப்பார் என்றும் கூறுகின்றார். வஞ்சக் கள்வர் என்று எவரும் காண்பதற்கு அரியவராக இறைவன் இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது.

தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திருவாரூர் என்றும் உள்ளார்

வாசமலரின் கண் மான்தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்சக் கள்வர்

நேசரடைந்தார்க்கு அடையாதவர்க்கு நிட்டுருவர் கட்டங்கம் நினைவார்க்கு என்றும்

ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம் கொண்டாரே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (6.20.5) அப்பர் பிரான், உலப்பில் செல்வம் சிலந்திக்கு அருள் செய்த தேவதேவன் என்று குறிப்பிடுகின்றார்.உலப்பில் என்றால் அழியாத என்று பொருள். சருகுகள் மற்றும் குப்பைகள் இலிங்கத் திருமேனியின் மேல் வீழாத வண்ணம் திருவானைக்கா தலத்தினில் பந்தல் அமைத்து திருத்தொண்டு செய்த சிலந்திக்கு, அடுத்த பிறவியில் சோழ அரசனாக திகழும் வாய்ப்பினை அளித்த பெருமான், அதன் பின்னர், என்று அழியாத, நிலையாக உள்ள பேரின்பம் அளிக்கும் முக்தி உலகினை பரிசாக அளித்த செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு என்றும் அழியாத முக்திச் செல்வத்தை இறைவன் கொண்டுள்ள தன்மை உணர்த்தப் படுகின்றது. உலந்தார்=இறந்தவர்கள்; உலப்பு=குறைவு, அழிவு; உலப்பில் செல்வம்=அழிவில்லாத முக்திச் செல்வம்; நலம்=அழகிய, அழகிய மாலைகள்; கலந்தார்=தான் வேறு சிவம் வேறு என்று சொல்ல முடியாத படி, பெருமானை தியானித்து அவனுடன் கலந்த அடியார்கள்;

உலந்தார் தம் அங்கம் கொண்டு உலகமெல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பில் செல்வம்

சிலந்தி தனக்கு அருள் செய்த தேவதேவைத் திருச்சிராப்பள்ளி எம் சிவலோகனைக்

கலந்தார் தம் மனத்து என்றும் காதலானைக் கச்சி ஏகம்பனைக் கமழ் பூங்கொன்றை

நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே

அனைத்து உலகங்களையும் தனது உடைமையாக, செல்வமாக உடையவர் பெருமான் என்பதை அப்பர் பிரான், ஆக்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.21.6) திசை எட்டும் தாமேயாம் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் இறைவன் மலைமகளை தனது மார்பகத்தில் அணைத்துத் தனது உடலில் நிலையாக வைத்த செய்தியும் கூறப்படுகின்றது. தீதூர=தீவினையை வெல்லும் வண்ணம்; ஊர்தல்=வெல்லுதல்; .தலத்து இறைவியின் திருநாமம் வாள்நெடுங்கண்ணம்மை என்பதாகும். அதனை உணர்த்தும் வகையில், பிராட்டியின் கண்கள் வாள் போன்று நுனிகளில் கூர்மையாகவும், நீண்டும் காணப்படுகின்றன என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மாதூரும்=பெருமானிடம் தான் கொண்டுள்ள ஆழ்ந்த காதலை, தனது கண்களால் தெரிவிக்கும் அன்னை என்று கூறுகின்றார். மூதூர்=பழமையான உலகம்; முது திரை=முதிர்ச்சி அடைந்த பெரிய அலைகள்; தீதூர=தீய வினைகளை வெல்லும்

மாதூரும் வாள் நெடுங்கண் செவ்வாய் மென்தோள் மலைமகளை மார்பகத்து அணைத்தார் போலும்

மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும்

தீதூர நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமேயாம் செல்வர் போலும்

ஆதிரை நாளா அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

திருமறைக்காடு தலத்தின் பாடலில் (6.23.5) அப்பர் பிரான் பெருமானை, ஏரி நிறைந்தனைய செல்வன் என்று குறிப்பிடுகின்றார். ஏரி நிறைய தண்ணீர் இருந்தால், ஊரிலுள்ள அனைத்து மக்களுக்கும், பாகுபாடு ஏதுமின்றி பயன்படும். அதே போன்று, பெருமானிடம் உள்ள முக்திச் செல்வம், பாகுபாடு ஏதுமின்றி, பக்குவமடைந்த அடியார்கள் அனைவர்க்கும் பயன்படுகின்றது. அவனது கருணையாகிய செல்வமோ, அனைத்து உயிர்களுக்கும் எப்போதும் வழங்கப் படுகின்றது. அதனால் தான் ஏரி நிறைந்தனைய செல்வன் என்று குறிப்பிட்டார் போலும். இந்த பாடலில் பெருமானை ஆரியன் என்றும் தமிழன் என்றும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மூரி=மிகுந்த ஒலி; வாரி=கடல், இங்கே வெள்ளம் என்று பொருள் கொள்வது சிறப்பு. மிகுதியான மதநீரினை பெருக்கும் யானை போன்று வல்லமை மிகுந்தவனாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. உலகத்தில் தோன்றிய முதல் இரண்டு மொழிகளாக தமிழும் வடமொழியும் கருதப் படுகின்றன. மேலும் இந்த இரண்டு மொழிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்த மொழிகளாகவும் உள்ளன.வடமொழியில் வேதங்கள் அருளியவன் சிவபெருமான். மேலும் சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டின் அரசனாக இருந்து, தமிழ் சங்கத்தில் பங்கேற்று தமிழ் மொழியை வளர்த்த பெருமான், அகத்தியருக்கு, இன்னம்பர் தலத்தில் தமிழ் இலக்கணம் கற்பித்ததாக கருதப் படுகின்றது. எனவே தான் பெருமானை ஆரிய மொழியாக இருப்பவன் என்றும் தமிழ் மொழியாக இருப்பவன் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்

மூரி முழங்கொலி நீரானான் கண்டாய் முழுத் தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்

ஏரி நிறைந்தனைய செல்வன்கண்டாய் இன்னடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறை எம் அண்ணல் கண்டாய்

வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

திருவையாறு முதலாக பல தலங்களை குறிப்பிட்டு, அந்த தலங்களைத் தனது இடமாகக் கொண்ட செல்வர் என்று திருவாரூர் பதிகத்துப் பாடல் ஒன்றினில் அப்பர் பிரான் (6.25.11) கூறுகின்றார். தனது சிவந்த திருமேனியை மூடும் வண்ணம், யானைத் தோலைத் தனது உடல் மீது பெருமான் போர்த்துக் கொண்டபோது உமையன்னை நடுக்கம் உற்றாள் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். துத்தி=பாம்பின் படத்தில் உள்ள புள்ளிகள்;அடர்த்தல்=சுமத்தல்; அரிப்பெருத்த=தசை மடிப்புகளில் கோடுகள் மிகுந்த: கரிய புள்ளிகளைத் தனது படத்தில் கொண்ட, கோப குணம் நிறைந்த பாம்பினை கையில் ஏந்தியவாறே, பார்வதி தேவி அச்சப்படும்படியாக, தன்னை எதிர்த்து வந்த மலை போன்ற பெரிய மதயானையை, கையால் உரித்து அதன் தோலினைத் தனது சிவந்த உடலின் மீது பொருத்தமாக மூடியவரும், ஒளி பொருந்திய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபெருமானார், திருத்துருத்தி,திருப்பழனம், நெய்த்தானம், திருவையாறு ஆகிய தலங்களில் உறைபவர். அவர் இப்போது, தசை மடிந்து பிடரியினில் கீற்றுகளைக் கொண்ட வலிமை வாய்ந்த எருதின் மீது ஏறி திருவாரூரில் விருப்பமுடன் வீற்றிருக்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

கருத்துத்திக் கதநாகம் கையில் ஏந்திக் கருவரைபோல் களியானை கதறக் கையால்

உரித்தெடுத்துச் சிவந்த தன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்

திருத்துருத்தி திருப்பழனம் திருநெய்த்தானம் திருவையாறு இடங்கொண்ட செல்வர் இந்நாள்

அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி அப்பனார் இப்பருவம் ஆரூராரே

திருப்புகலூர் தலத்தினில் அப்பர் பிரான் உழவார திருப்பணி செய்து கொண்டு இருந்தபோது, அந்த திருப்பணிக்கு இடையூறாக, ஊர்வசி ரம்பை ஆகிய தேவலோக மாதர்கள், நடனமாடி தங்கள் நடனத்தின் மூலம் அப்பர் பிரானின் கவனத்தை ஈர்க்க முயன்றனர். அப்போது அவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு அப்பர் பிரான் வேண்டுகின்றார். அகலாது அங்கே நின்ற அரம்பையர்களை நோக்கி, அவர்கள் அகன்று செல்லாவிடில் இறைவனிடம் முறையிடுவேன் என்று எச்சரிக்கை விடுகின்றார். உழவார திருப்பணிக்கு இடையூறாக இருந்து பெருமானின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று அவர்களுக்கு உணர்த்தும் பதிகத்தின் பாடலில் (6.27.6), தான் ஆரூர்ச் செல்வனைச் சார்ந்து முக்திவுலகம் சென்றடைவேன் என்றும், அரம்பையர்களின் அழகில் மயங்கி அவர்களால் ஆட்டுவிக்கப்படும் நிலைக்கு ஆளாகமாட்டேன் என்று உறுதிபட கூறுகின்றார்.

பொங்கு மத மானமே ஆர்வச் செற்றக் குரோதமே உலோபமே பொறையே நீங்கள்

உங்கள் பெரு மாநிலத்தில் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல்

அங்கமலத்து அயனொடு மாலுமாகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்றாகி அறியவொண்ணா

செங்கனகத் தனிக் குன்றைச் சிவனை ஆரூர்ச் செல்வனைச் சேர்வேன் நும்மால் செலுத்து உணேனே

பொறை=சுமை, துன்பச் சுமைகள்; குரோதம்=கோபம், அடுத்தவரிடம் நமக்கு பிடிக்காத குணம் இருப்பதால், அவரிடம் பகைமை பாராட்டுகின்றோம்.அதனால் விளைவதே கோபம் என்பதால் செற்றக் குரோதம் என்று கூறுகின்றார். பெருமாநிலம்=உலகம். இந்த நமக்கு கருகாவூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் (6.15.6) அப்பர் பிரான், இறைவனை, தன்னைச் சார்ந்தவர்களின் இடர்களைத் தீர்க்கும் செல்வன் என்று குறிப்பிடுகின்றார். மூலன்=அனைத்துப் பொருட்களுக்கும் மூலமானவன். மூவாத மேனியான் என்று அழைப்பதன் மூலம், சிவபிரானின் மூப்படையாத தன்மையும், அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் சிவபிரான் இருக்கும் தன்மையும் உணர்த்தப் பட்டுள்ளன.மாலன்=திருமாலை தனது உடலில் ஒரு பாகமாக உடையவன். அருமையான சொல்லாட்சி. இதே பாடலில் மாதொருபாகனாக இருக்கும் நிலையும் குறிப்பிடப்படுகின்றது. தான் செய்து கொண்டிருந்த உழவாரப் பணிக்கு இடையூறாக இருக்கும் அவர்கள் விலகவேண்டும் என்று கோரும் அப்பர் பிரான்,அவர்கள் தாமாகவே விலகாவிடின், சிவபெருமானிடம் முறையிடுவேன் என்று எச்சரிக்கை விடுக்கின்றார். தன்னைச் சார்ந்த அடியார்களின் இடரினைக் களையும் செல்வன், உழவாரப் பணிக்கு இடையூறாக இருக்கும் அவரையும் அங்கிருந்து அகற்றி விடுவார் என்ற குறிப்பு இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.

தூய்மையான உடலைப் பெற்றிருப்பதும் சிறந்த செல்வமாக மதிக்கப் படுகின்றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று தானே சொல்லப்படுகின்றது. எந்த விதமான குறைகளோ குற்றங்களோ இல்லாமல், நோய்கள் பற்றிகொள்ளும் தன்மையற்ற திருமேனியை உடைய பெருமானை,தூய திருமேனிச் செல்வர் என்று அப்பர் பிரான் திருவாரூர்ப் பதிகத்தின் பாடலில் கூறுகின்றார். சிவபெருமானை நாம் புகழ்ந்து பேச வேண்டும் என்ற எண்ணத்துடன் பேச முயற்சி செய்தாலும், பெருமானின் புகழ், சொற்களைக் கடந்த நிலையில் இருப்பதால், நமது பேச்சுகளுக்கு அடங்காதது பெருமானின் புகழ் என்பதை உணர்த்தும் வண்ணம், பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் என்றும் திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.28.3) அப்பர் பிரான் கூறுகின்றார். துணி உடை=துண்டிக்கப்பட்ட சிறிய உடை, கோவண ஆடை

துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திருமேனிச் செல்வர் போலும்

பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும்

மணியுடைய மாநாகம் ஆர்ப்பார் போலும் வாசுகி மா நாணாக வைத்தார் போலும்

அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும் அணியாரூர் திருமூலட்டானனாரே

திருவாரூரில் பல நாட்கள் தங்கி, உழவாரப் பணிகள் செய்தவண்ணம் பல பதிகங்கள் பெருமானைப் புகழ்ந்து பாடிய அப்பர் பிரான் திருவாரூரின் செல்வச் செழிப்பை கண்டார். எந்த பொருளிலும் இறைவனைக் காணும் தன்மையைப் பெற்றிருந்த அப்பர் பிரான், திருவாரூரின் செல்வச் செழிப்பிலும் பெருமானின் கருணையை காண்கின்றார். நகரின் செல்வச் செழிப்பினைக் கண்ட அவர், அந்த செழிப்பிற்கு காரணமான பெருமானை செல்வன் என்று இந்த பாடலில் அழைக்கின்றார். மேலும், மக்களும் மன்னர்களும் மனமுவந்து திருக்கோயிலுக்கு அளித்த எண்ணற்ற காணிக்கைகளையும் கண்டார் போலும். இத்தனைச் செல்வங்களையும் உடைய திருவாரூர்ப் பெருமான் மிகுந்த செல்வன் என்று தான் உணர்ந்ததை எம் செல்வன் சிவபெருமான் என்று பதிகத்தின் (6.30)அனைத்துப் பாடல்களும் முடியும் வண்ணம் ஒரு பதிகத்தை பாடுகின்றார். உலகத்தையும் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து என்றும் அழியாத முக்திப் பேற்றினையும் உடைய பெருமான் பெரும் செல்வன் என்பதில் அருளாளர்களுக்கு என்றுமே ஐயம் இருந்ததில்லை. இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். பந்தம்=உலகப் பொருட்களின் மீது நாம் வைத்திருக்கும் விருப்பு வெறுப்புகள்; வம்பு=நறுமணம்; வம்புந்து=நறுமணத்தை எழுப்புகின்ற;

எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழுலகும் ஆயினான் காண்

வம்புந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர்மதி சேர் கண்ணியன் காண்

வானோர் வேண்ட

அம்பொன்றால் மூவெயிலும் எரி செய்தான் காண் அனலாடி காண் ஆன் அஞ்சும் ஆடினான் காண்

செம்பொன் செய் மணிமாடத் திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.38.7) உண்மையான செல்வம் பெருமான் வைத்திருக்கும் முக்திச் செல்வம் தான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். செல்வமாய என்ற சொல் எதுகை கருதி செல்வாய செல்வம் குறுகியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மற்ற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையது என்பதால் செல்வம் என்பது முக்திச் செல்வத்தையே குறிப்பிடுகின்றது. எனவே செல்வன் என்ற சொல்லும், முக்திச் செல்வத்தை உடைய பெருமான் ஒருவரையே குறிக்கின்றது. எங்கும் பரந்து நின்று சர்வ வியாபியாக இருக்கும் இறைவனின் தன்மை எல்லா உலகமும் ஆனாய் என்ற தொடரின் மூலம் உணர்த்தப் படுகின்றது.

எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே

நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே

பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே

செல்வாய செல்வம் தருவாய் நீயே திருவையாறு அகலாத செம்பொற் சோதீ

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.41.3) செல்வாய்த் திரு ஆனாய் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். செல்வாய்=நடப்பித்தல்;அல்=இரவு; அனைத்துப் உயிர்களுடன் தானுடன் இருந்து அவற்றை இயக்கும் ஆற்றல் படைத்தவன் பெருமான். அந்த ஆற்றல் திரு (செல்வம்) என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. பகலாகவும் இரவாகவும் இருப்பவனும், தொன்மை வாய்ந்த கயிலாய மலையில் உறைபவனும், கல்லால மரத்தின் கீழே அமர்ந்து நால்வர்க்கு அறம் உணர்த்தியவனும், திருக்காளத்தி தலத்தில் அடியார்கள் வேண்டும் வரமனைத்தும் அளிக்கும் கற்பகமாக இருப்பவனும், சொற்களாகவும் சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் இருப்பவனும், சோற்றுத்துறை தலத்தில் உறைபவனும், உலகினில் பல செயல்களும் நடப்பதற்கு மூல காரணமாக உள்ள செல்வமாக இருப்பவனும் ஆகிய பெருமானாகிய நீ, நெய்த்தானம் தலத்தில் நிற்கின்றாய். நீ எனது நெஞ்சினில் நிறைந்து நிற்கின்றாய் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

அல்லாய்ப் பகலானாய் நீயே என்றும் ஆதிக்கயிலாயன் நீயே என்றும்

கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்திக் கற்பகமும் நீயே என்றும்

சொல்லாய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறையாய் நீயே என்றும்

செல்வாய்த் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே

திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.40.1) அப்பர் பிரான், பெருமானை திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் என்று அழைக்கின்றார். இந்த பாடலில், திரிபுர தகனத்தின் போது பயன்படுத்தப்பட்ட வில்லின் தன்மையை உணர்த்துகின்றார். செம்பொன் போன்று மிளிரும் மேருமலையை வில்லாகவும்,வாசுகி எனப்படும் மாநாகத்தை அந்த வில்லின் நாணாகவும், திருமால் தண்டாகவும் காற்று இறகுகளாகவும் நெருப்பு நுனியாகவும் செயல்பட்ட அம்பாகவும் இருந்த தன்மை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்பு, சிவபெருமானிடம் மட்டுமே காரணத்தால், செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அடுத்த=பொருந்திய; உயிரினை தலைக்கு ஈடாக சொல்லி, உயிர் காத்தலை தலை காத்தல் என்று சொல்வது வழக்கம். அதனை பின்பற்றி ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து தேவர்களை பெருமான் காத்ததை தலை காத்தது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.ஐயர்=தலைவர்;

அலையடுத்த பெருங்கடல் நஞ்சமுதா உண்டு அமரர்கள் தம் தலைகாத்த ஐயர் செம்பொன்

சிலையெடுத்து மாநாகம் நெருப்பு கோத்துத் திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்

நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால்நீண்ட நிரைவயிரப் பலகையால் குவை ஆர்த்துற்ற

மலையடுத்த மழபாடி வயிரத் தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.41.3) அப்பர் பிரான், அனைத்து உயிர்களையும் இயக்கும் செல்வமாக விளங்குபவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். தாங்கள் சார்ந்துள்ள உடல்களின் இயக்கம் நின்றுவிட்டால், உயிர் செயல்பட முடியாது அல்லவா. எனவே தான் உயிர்கள் குடிகொண்டுள்ள உடல்கள் இயங்குவதற்கு உதவி புரியும் இறைவனை சிறந்த செல்வம் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களுடன் பொருந்தி அந்தந்த உடல்களில் உறையும் இறைவன், அந்த உயிர்களின் செய்கைகளின் தன்மையில் எவ்விதத்திலும் குறுக்கிடாமல்,உயிர்கள் இயங்குவதற்கு வழிசெய்யும் தன்மையே இங்கே உணர்த்தப் படுகின்றது. அல்=இரவு: செல்வாய்=நடப்பித்தல்;

அல்லாய்ப் பகலானாய் நீயே என்றும் ஆதிக்கயிலாயன் நீயே என்றும்

கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்திக் கற்பகமும் நீயே என்றும்

சொல்லாய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறையாய் நீயே என்றும்

செல்வாய்த் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.53.1) அப்பர் பிரான் ஆனேறது ஏறும் அழகர் என்றும் வீழிமிழலை அமர் செல்வர் என்றும் பெருமானை குறிப்பிடுகின்றார். வரை= மலை; மால்வரை=பெரிய மலை, இங்கே மேரு மலையினை குறிக்கின்றது. கால் வளை=இரண்டு முனைகளும் வளையுமாறு மேரு மலையை வளைத்த தன்மை; கான்=காடு; கரி=ஆண் யானை; துடி=நடுவில் சுருங்கி உள்ள உடுக்கை எனப்படும் இசைக்கருவி;இதழி=கொன்றை மலர்; அடிகள் என்பதற்கு தலைவர் என்று பொருள். கட்டங்கம்=மழு ஆயுதம்

மானேறு கரமுடைய வரதர்போலும் மால்வரை கால் வளை வில்லாவளைத்தார் போலும்

கானேறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கைக்கொண்டார் போலும்

தேனேறு திரு இதழித் தாரார் போலும் திருவீழிமிழலை அமர் செல்வர் போலும்

ஆனேறது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.54.8), அப்பர் பிரான் வாராத செல்வம் வருவிப்பான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.வாராத செல்வம் என்றால் எளிதில் கிடைக்காத செல்வம் என்று பொருள். இங்கே முக்திச் செல்வத்தை குறிப்பிடுகின்றது.. எளிதில் எவரும் பெறமுடியாத செல்வத்தை வருவிக்கும் ஆற்றல் பெற்றவன், அத்தகைய செல்வம் உடையவனாகத் தானே இருக்க முடியும். பஞ்சாக்கர மந்திரத்தை மந்திரம் என்றும்,பஞ்சாக்கர மந்திரத்தால் விளக்கப்படும் ஆகம நூல்களை தந்திரம் என்றும் அந்த நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ள முறையின் வழியே செய்யப்படும் தியானம்,பூஜை, ஜெபம் ஆகியவற்றை மருந்து என்றும் அப்பர் பிரான் உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம். தாருகனுடன் செய்த போரினில் காயம் அடைந்ததனது வீரர்களுக்கு இறைவன் சிகிச்சை செய்ய வேண்டும் என்று முருகப் பெருமான் வேண்டியதற்கு இணங்கி, வைத்தியநாதனாக இறைவன் எழுந்தருளியதலம் அல்லவா. இந்த கோயிலில் உள்ள வேப்ப மரத்தின் அடியில் பெருமான் அமர்ந்து மருத்துவம் பார்த்ததாக நம்பப் படுகின்றது. இன்றும் இந்த மரத்தின் கீழே ஆதி வைத்தியநாதர் சன்னதி உள்ளது. இறைவனுடன் இறைவியும், எண்ணெய் கிண்ணத்துடன், சிவபிரான் கொடுக்கும் மருந்துகளை குழைத்து காயங்களில் தடவுதற்கு வசதியாக வருகிறார். இதனால் அம்மைக்கு தைல நாயகி என்ற பெயர் வந்தது. தைல நாயகி நாளைடைவில் தையல்நாயகி என்று மருவிவிட்டது. இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர் வந்த காரணம் இது தான்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைகொண்ட

போரானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

திருக்கயிலாயத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.57.3) அப்பர் பிரான், பெருமானை செல்லாத செல்வம் உடையாய் என்று குறிப்பிடுகின்றார்.உலகினில் உள்ள செல்வங்கள் அனைத்தும், உலகினைப் படைத்தவருக்கு உரியது தானே. இவ்வாறு இருக்கையில், செல்வம் அவரை விட்டு பிரியாமல் தானே இருக்கின்றது. மேலும் பெருமான் வைத்திருக்கும் உயர்ந்த செல்வமாகிய முக்திச் செல்வம், அவரை விட்டு என்றும் பிரியாமல் தானே உள்ளது. எனவே தான் மிகவும் பொருத்தமாக செல்லாத செல்வம் உடையாய் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். செம்மை, கருமை மற்றும் வெண்மை ஆகியவை மூன்று அடிப்படை நிறங்களாக கருதப் படுகின்றன. மேலும் அவை இராசத, தாமச, சாத்துவீக குணங்களை குறிப்பதாகவும் கூறுவார்கள்.பெருமானின் திருமேனியில் இந்த மூன்று நிறங்களும் காணப்படுவதை நாம் உணரவேண்டும். இயல்பாகவே செம்மேனியைப் படைத்த இறைவன், தனது திருமேனியின் மேல் திருநீற்றினை பூசியபடியால் வெண்மை நிறத்துடன் காட்சி அளிக்கின்றான். மேலும் தனது கழுத்தினில் ஆலகால விடத்தை தேக்கியதால் அவனது கழுத்து கருமை நிறத்துடன் காட்சி அளிக்கின்றது. செய்யான் என்பது சிவபெருமானையும், கரியான் என்பது திருமாலையும்,வெளியான் என்பது வெண்மை நிறமுடைய பிரமனையும் குறிக்கும் என்று விளக்கம் அளித்து. திருமாலாகவும் பிரமனகவும் இருப்பவன் சிவபெருமானே என்பதை உணர்த்தும் வண்ணம் செய்யாய். கரியாய் வெளியாய் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்று கூறுவதும் மிகவும் பொருத்தமே.

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வம் உடையாய் போற்றி

ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி ஆகாய வண்ணம் உடையாய் போற்றி

வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி

கையார் தழலார் விடங்கா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், பிராட்டியையும் திருமாலையும் தனது உடலின் இடது பக்கத்தில் ஏற்றுக்கொண்ட செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான், தன்னை இறைவன் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக தன்னை உருவகித்துக் கொண்டு, தனது அருகில் வந்த பெருமான், வாக்கால் மறை விரித்துப் பேசிய பெருமான், மாயமாக தன்னை விட்டு பிரிந்து விட்டாரே என்று ஏங்குவதாக, வலம்புரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.58.3) கூறுகின்றார். தீக்கூரும்=நெருப்பு மிகுந்து எரிவது போன்று தோன்றும்; அரி=திருமால்; தன்னிடம் ஆக்கூர் செல்வதாக கூறிய பெருமான், அந்த இடத்திற்கு செல்லாமல் வலம்புரம் தலத்திற்கு சென்றதாக அப்பர் நாயகி இந்த பாடலில் கூறுகின்றாள். தான் செல்வதாக சொன்ன இடத்திற்கு செல்லாமல், வேறு ஒரு இடத்திற்கு சென்ற பெருமான் வஞ்சகம் புரிந்ததாகவும் மாயம் பேசியதாகவும் கூறுகின்றாள்.இவ்வாறு பெருமான் செய்த செயல், அவரது வேடத்திற்கு சற்றும் பொருந்தாத செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், அவரது கோலத்தினை இந்த பாடலின் மூன்றாவது மற்றும் நான்காவது அடிகளில், அப்பர் நாயகி குறிப்பிடுகின்றாள்.

தீக்கூரும் திருமேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்

ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல் வருவினையேன் செல்வதுமே அப்பால் எங்கும்

நோக்கார் ஒரு இடத்து நூலும் தோலும் துதைந்து இலங்கும் திருமேனி வெண்ணீறாடி

வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.59.3) அப்பர் பிரான், திருப்புன்கூர் மேவிய செல்வனார் என்று குறிப்பிடுகின்றார்.சண்ணித்தல்=பூசிக் கொள்ளுதல்; செய்=வயல்; பையுலாம்=படம் எடுத்து ஆடும்; கரிகாடு=உடல்கள் எரிக்கப்பட்டு கருகுவதால், கரிகாடு என்று அழைக்கப்படுகின்றது; பாற்றுதல்=அழித்தல்; வயல்களில் மீன்கள் துள்ளிப் பாய்கின்றன என்று திருப்புன்கூர் தலத்தின் நிலவளமும் நீர்வளமும் உணர்த்தப் படுகின்றது.முற்றூழிக் காலத்தில் அனைத்து உடல்களிலிருந்தும் உயிர்கள் பிரிய, எரியும் உயிரற்ற உடல்களிலிருந்து எழும் நெருப்பின் நடுவே நின்று நடனம் ஆடுவது,மற்றவரிடமிருந்து மிகவும் மாறுபட்ட செயல் என்பதால் இறைவனை விகிர்தனார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமான் தனது திருமேனி மீது வெண்ணீறு பூசி இருப்பதால், அவரை செல்வம் அற்றவர் என்று நினைப்பது தவறு என்றும், உண்மையில் அவர் பெருஞ்செல்வர் என்பதையும் உணர்த்தும் வண்ணம், செல்வர் என்று குறிப்பிடுகின்றார் போலும். வீடுபேறு என்ற அரிய பெரிய செல்வத்தை உடையவர் அல்லவா சிவபெருமான்.

கையுலாம் மூவிலை வேல் ஏந்தினாரும் கரி காட்டில் எரி ஆடும் கடவுளாரும்

பையுலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும்

செய்யுலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூர் மேவிய செல்வனாரும்

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில், கருணைச் செல்வம் உடைய பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் தனது சடையில் வெண்திங்களை சூட்டிக் கொண்டுள்ள பெருமான் திருவாலவாய் தலத்தினில் உறையும் செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் யானையின் தோலினை உரித்த செயலும், அழியும் நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனுக்கு கருணையுடன் மறுவாழ்வு அளித்தமையும் விகிர்தனின் செயல்களாக குறிப்பிடப் படுகின்றன. யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று கருதப்பட்டாலும், அந்த தோலினைத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பின்னரும், தனது உடல் எந்த விதமான கேடும் அடையாமல் நின்றவர் சிவபெருமான். இந்த செயலும் வேறு எவருக்கு சாத்தியம் ஆகாத செயலே.இத்தகைய சிறந்த ஆற்றல் உடைய பெருமான் என்பதால் செல்வர் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

செஞ்சடைக்கோர் வெண் திங்கள் சூடினாரும் திருவாலவாய் உறையும் செல்வனாரும்

அஞ்சனக்கண் அரிவை ஒரு பாகத்தாரும் ஆறங்கம் நால்வேதமாய் நின்றாரும்

மஞ்சடுத்த நீள் சோலை மாடவீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும்

வெஞ்சினத்த வேழம் அது உரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.62.1) அப்பர் பிரான், இந்த தலத்தினைத் தனது உறைவிடமாக கொண்டுள்ள செல்வர் என்று கூறுகின்றார். செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை என்று நமது உறவினர்களை குறிப்பிட்ட அப்பர் பிரான், நாம் இறந்த பின்னர் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் இங்கே கூறுகின்றார். சிறு விறகால் தீமூட்டி செல்லா நிற்பர் என்று கூறுகின்றார். இந்த பாடலில், சுள்ளிக் குச்சியால் இறந்தஉடலுக்கு தீ வைத்த பின்னர், எப்போது சுடுகாட்டினை விட்டு செல்லலாம் என்று தயக்கத்துடன் நிற்பது தான் உறவினர்களின் செயல் என்று கூறுகின்றார்.சடலத்திற்கு இறந்தவரின் மூத்த மகன் கொள்ளி வைத்த பின்னர் சுற்றியிருக்கும் ஏனையோரும் சிறிய விறகு கட்டைகளை தீ மூட்டி, சடலத்தின் மீது போடுவது வழக்கம். அவ்வாறு போட்ட பின்னர் உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்தால், மற்றவர்கள் தன்னைத் தவறாக நினைப்பாரோ என்ற எண்ணத்தில்,தயக்கத்துடன் பலர் இருப்பதையும் அந்த தருணத்தில் நாம் காணலாம். இந்த நிலைமைத் தான் சிறு விறகால் தீ மூட்டி செல்லா நிற்பர் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த செயல் இது உயிரினுக்கு செய்யும் உதவி அல்ல. உயிர் பிரிந்த உடல் முற்றிலும் எரிந்து சாம்பலாக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல்.

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக்கா உடைய செல்வா என்றன்

அத்தாவுன் பொற்பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டடியேன் என்செய்கேனே.

எத்தாயார்=எத்துணை மேம்பட்ட தாயார்; மாடு=செல்வம்; சும்மாடு-சுத்தமான செல்வம், நமது செல்வங்களையும் நமது உறவுகளையும் குறிப்பிட்டு, அவற்றில்உண்மையாக நமக்கு உதவக் கூடியது யாது என்ற கேள்வியை அப்பர் பிரான் இந்த பாடலில் எழுப்புகின்றார். நமக்கு என்று அவர் குறிப்பிடுவது நமதுஉயிரைத் தான். உயிர் தனது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ளவும், உண்மையான மெய்ப் பொருளை அறிந்து கொள்ளவும் உதவும் பொருட்டு,இறைவன் நமக்கு கருவி கரணங்களை அளித்துள்ளார். அந்த கருவிகள் இல்லாமல் நாம் எதனையும் அறிய முடியாது. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர்,அந்த கருவி கரணங்களால் எந்த உதவியும் உயிருக்கு செய்ய முடியாது. எனவே உடலை விட்டு பிரிந்த உயிருக்கு உதவி தேவைப் படுகின்றது. ஈட்டியவினைகளின் ஒரு பகுதியை சூக்கும் உடல் அனுபவித்து கழிக்கும் போதும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவும், முடிந்தால் பிறப்பிறப்புச்சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் உயிர் விரும்பும் போது, உதுவுவார் யார். இந்த பிறவியில் நமக்கு வாய்த்த தாய் தந்தையாரோ சுற்றத்தாரோ உதவமுடியுமா, அவர்கள் எவராலும் உதவ முடியாது. நாம் ஈட்டிய செல்வத்தால் ஏதேனும் உதவியை விலைக்கு வாங்க முடியுமா அதுவும் நடக்காது என்பதேநிதர்சமான உண்மை. இந்த உண்மை தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. செத்த பிறகு அந்த உயிர்க்கு உதவி தேவைப்படும் போது, யார் உதவி செய்யவல்லவர், எந்த செல்வம் உதவக் கூடியது என்ற கேள்வியை அப்பர் பிரான் இங்கே கேட்கின்றார் இறைவன் ஒருவனே நமக்கு அந்த தருணத்தில் துணையாகஇருந்து உதவி செய்வான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. எத்தந்தை என்று ஒருமையில் குறிப்பிட்ட அப்பர் பிரான் எத்தாயர் என்றுபன்மையில் குறிப்பிட்டதை நாம் உணரலாம். ஒருவனை ஈன்ற தாயைத் தவிர, வேறு நான்கு பேரையும் தாயாருக்கு சமமாக கூறுவதுண்டு. அரசனின் மனைவிகுடிமக்கள் அனைவர்க்கும் தாய், குருவின் மனைவி சீடர்கள் அனைவர்க்கும் தாய், அண்ணனின் மனைவி, அந்த குடும்பத்தில் மற்ற அனைவர்க்கும் தாய்,தாயை ஈன்றவளும் தனது பேரக் குழந்தைகள் அனைவர்க்கும் தாயாக மதிக்கப் படுகின்றாள்.

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.65.7) அப்பர் பிரான், பெருமானை வடகயிலைச் செல்வன் என்று குறிப்பிடுகின்றார்.உழலும்=திரியும்; தத்துவன்=மேம்பட்டவன்; நல்குரவு=வறுமை; சைவத்தின் ஆறு உட்பிரிவுகள், பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமம், பைரவம், சைவம்இந்த ஆறும் வெவ்வேறு சமயங்கள் போல் தோன்றினாலும், இந்த ஆறு சமயங்களும் பெருமானையே தலைவனாக ஏற்றுக் கொள்கின்றன. இல்லங்கள் தோறும் பலிக்குச் சென்று திரியும் பெருமான், உண்மையில் மிகப் பெரிய செல்வந்தன் என்பதை உணர்த்தும் வகையில், இவ்வாறு கூறினார் போலும்.பிக்ஷாடனர் திருக்கோலத்தில் வறியவனாக பெருமான் காட்சியளிக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

உமையவளை ஒரு பாகம் சேர்த்தினான் காணுகந்து ஒலிநீர்க் கங்கை சடை ஒழுக்கினான் காண்

இமய வடகயிலைச் செல்வன் தான் காண் இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந்தான் காண்

சமயமவை ஆறினுக்குத் தலைவன் தான்காண் தத்துவன்காண் உத்தமன்காண் தானேயாய

இமையவன்காண் எழிலாரும் பொழிலார்கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.10) நிறைந்து ஓங்கு செல்வன் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.சீர்த்தான்=புகழினை உடையவன். அனைத்துச் செல்வங்களினும் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுவதும் நிறைந்து விளங்குவதும் ஆகிய முத்திச் செல்வம் உடையவன் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது. முக்திநிலை அடைந்த உயிர்கள் நிறைந்து காணப்படும் உலகம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

சீர்த்தானை உலகேழும் சிறந்து போற்றச் சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன் தன்னைப்

பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப் பனிமதியம் சடையானைப் புனிதன் தன்னை

ஆர்த்தோடி மலை எடுத்த அரக்கனஞ்ச அருவிரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம்

தீர்த்தானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

தனது அடியானுக்கு அரசினையே அளிக்கக் கூடிய வள்ளல் செல்வனாகத் தானே இருக்க வேண்டும். அதனால் தான் சிலந்திக்கு அரசாளும் வாய்ப்பினை அளித்த பெருமானை, அப்பர் பிரான், மிகவும் பொருத்தமாக, சிலந்திக்கும் அரசளிக்கும் செல்வன் என்று நாரையூர் தலத்து பதிகத்தின் பாடலில் கூறுகின்றார். இந்த பாடலில் (6.74.8) திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அடியார்களுக்கு பெருமான் அருள் புரிந்ததை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.இயமனுக்கு அந்தகன் என்ற பெயரும் உண்டு. தான் பறிக்கவேண்டிய உயிரின் தன்மையை, அந்த உயிர் எந்த நிலையில் உள்ளது, எப்படிப்பட்டது என்பதை நோக்காமல், குருடனைப் போன்று உயிர் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் அந்தகன் என்று இயமன் அழைக்கப் படுகின்றான். அந்த இயமனுக்கும் இயமனாக செயல்பட்டு பெருமான் இயமனுகு முடிவைத் தேடித் தந்தமை, இங்கே அந்தகனுக்கு அந்தகன் என்ற தொடர் இந்த செய்தியை மிகவும் பொருத்தமாக உணர்த்துகின்றது.

அரிபிரமர் தொழுது ஏதும் அத்தன் தன்னை அந்தகனுக்கு அந்தகனை அளக்கலாகா

எரிபுரியும் இலிங்க புராணத்துளானை எண்ணாகிப் பண்ணார் எழுத்துளானை

திரிபுரம் செற்றொரு மூவர்க்கு அருள்செய்தானைச் சிலந்திக்குமரசளித்த செல்வன் தன்னை

நரிவிரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், அப்பர் பிரான், பெருமானை செல்வர் என்று கூறுகின்றார். சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தைத் தனது உடைமையாக வைத்துள்ள பெருமான், பக்குவப்பட்ட உயிர்கள், முக்தி உலகம் வந்தடைந்து என்றும் அழியாத பேரின்பத்தை அனுபவிக்கும் வண்ணம் அருள் புரியும் வள்ளலாக திகழும் தன்மை, செல்லும் நெறி காட்ட வல்லார் என்ற தொடர் மூலம் இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் (6.78.5) அப்பர் பிரான், சொல்லாகவும் பொருளாகவும் இருப்பவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அல்=இரவுப் பொழுது;பொதுவாக திருக்கோயில்களில் ஆறு கால பூஜைகள் செய்வது வழக்கம்; காலை நேரம், உச்சிக் காலம், மற்றும் இரவுக் காலம் ஆகிய நேரங்கள் தவிர,காலையும் பகலும் சந்திக்கும் நேரம் (காலசந்தி=காலை எட்டு மணிக்கு), பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரம் (சாயரட்சை மாலை ஐந்தரை மணி)மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் (மாலை இரண்டாம் கால பூஜை மாலை ஏழரை மணி) ஆகிய நேரங்களிலும் இறைவனுக்கு வழிபாடுகள் நடக்கின்றன.இவ்வாறு வழிபாடு நடக்கும் நேரங்களாக இறைவன் இருக்கின்றார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே

சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே

பல்லுரைக்கும் பாவெலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே

செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.80.1) அப்பர் பிரான், பெருமானை செல்வன் என்று குறிப்பிடுகின்றார். பாரினதுபயன்=உலகத்தில் கிடைக்கும் பல பொருட்களை மனிதனும் மற்ற உயிர்களும் தங்களது தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் இறைவன்அமைத்துள்ள தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. சீர்=புகழ்; காலனை வென்ற வீரச்செயல் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. எல்லையற்ற வீரத்தினைத் தனது செல்வமாக உடையவன் பெருமான் என்று கூறுகின்றார்.

பாரானை பாரினது பயன் ஆனானைப் படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னை

ஆராத இன்னமுதை அடியார் தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர் கோனைக்

காராரும் கண்டனைக் கயிலை வேந்தைக் கருதுவார் மனத்தானைக் காலன் செற்ற

சீரானைச்செல்வனைத் திருமாற்பேற்றெம் செம்பவளக்குன்றினைச் சென்றடைந்தேன்நானே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.82.6), அப்பர் பிரான், சாய்க்காடு தலத்தினில் இனிதாக உறைகின்ற பெருமான் என்று கூறுகின்றார். இந்த பாடலில் பெருமானின் நிலை, திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கும் நிலை, உணர்த்தப் படுகின்றது. மாவாய்ப் பிளந்து உகந்த=குதிரையின் வாயினைப் பிளந்த: குதிரை வடிவம் எடுத்துத் தன்னை அழிக்கவந்த கேசி என்ற அரக்கனின் வாயைப் பிளந்து அவனது குதிரை உடலைக் கிழித்து கொன்ற கண்ணன், அதனால் கேசவன் என்ற பெயரினைப் பெற்றான் என்று பாகவத புராணம் கூறுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானை, திருச்சாய்க்காட்டு இனிதுறையும் செல்வர் என்று கூறுகின்றார். தேவாதி தேவர்கட்கும் அரியாராகத் திகழும் தன்மை குறித்து, செல்வர் என்று கூறினார் போலும்.

மாவாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும்

மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்றம் உடையார் போலும்

கோவாய முனி தன் மேல் வந்த கூற்றைக் குரைகழலால் அன்று குமைத்தார் போலும்

தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திருச்சாய்க்காட்டு இனிதுறையும் செல்வர் தாமே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.84.2) அப்பர் பிரான், செங்கனகத் திரள்தோளெம் செல்வன் என்று சொல்கின்றார்.பொன்னார் மேனியனாக விளங்கும் பெருமானின் தோள்களும் பொன்னின் நிறத்தில் மின்னுவது இயற்கை தானே. துங்க=உயர்ந்த; இரணியனின் உடலைக்கிழித்த நரசிம்மரின் நகத்தை உயர்ந்த நகம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். என்றும் இறவாமல் இருக்கும் வரத்தினை வேண்டிய அரக்கன் இரணியன்,அத்தகைய வரம் கிடைக்காது என்பதை உணர்ந்த பின்னர், எந்த விதமான ஆயுதத்தாலும், உயிரற்ற பொருளாலும், உயிருள்ள பொருளாலும், இரவிலும்பகலிலும், தனது வீட்டினில் உள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும், ஆகாயத்திலும் பூமியிலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தினைப் பெற்றான். நமதுநகம் மற்றும் முடி வளர்ச்சி அடைகின்றன; ஆனால் அவற்றை வெட்டும்போது நமக்கு வலி ஏற்படுவதில்லை. இவ்வாறு உயிரற்றது என்றும், உயிருள்ளதுஎன்றும் சொல்ல முடியாத நகத்தினைக் கொண்டு, அரக்கனின் உடலைக் கிழித்த நரசிம்மரின் நகத்தை உயர்ந்த நகம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் வெளியேயும் அல்லாமல், வாயிற்படியில் அரக்கனது மரணம் நிகழ்கின்றது. பூமியிலும் அல்லாமல், ஆகாயத்திலும்அல்லாமல், திருமாலின் தொடை மீது அரக்கனது மரணம் நிகழ்கின்றது. இதன் மூலம், பெருமான் ஒருவனைத் தவிர, ஏனையோர் அனைவரும் ஒருநாள்இறப்பினை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் புலனாகின்றது. ஆகம்=மார்பகம்; அங்கனக= அம்+கல்+நகு+அத்; அரக்கனது மாளிகையில் இருந்த அழகியகற்றூணில், மிகுந்த ஆவேசத்துடன் சிரித்தவாறு நரசிம்மர் தோன்றியதை, அங்கனக என்று ஒரே சொல்லில் நயமாக அப்பர் பிரான் கூறுவது அவரதுபுலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மங்க நக=மங்குமாறு கண் மலர, கண் விழித்த; மருந்து=அமுதம்; வண்கயிலை= சிறந்த கயிலை மலை; கயிலை மலைக்குசென்று காண வேண்டிய பெருமானை, தான் கயிலை மலை செல்லாமல் செங்காட்டங்குடி தலத்தில் கண்டேன் என்று நயமாக அப்பர் பிரான் கூறுவதை நாம்உணரலாம். இதே பதிகத்தின் பத்தாவது பாடலில் சீரரவக் கழலானை செல்வன் தன்னை என்று குறிப்பிடுகின்றார்.

துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றித் தொகுதிறல் அவ்விரணியனை ஆகங்கீண்ட

அங்கனகத் திருமாலும் அயனும் தேடும் ஆரழலை அனங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து

மங்க நகத்தான் வல்ல மருந்து தன்னை வண்கயிலை மாமலை மேல் மன்னி நின்ற

செங்கனகத்திரள் தோளெம் செல்வன்தன்னைச் செங்காட்டங்குடியதனில் கண்டேன்நானே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.87.6) அப்பர் பிரான், பெருமானை சிவபுரத்து எம் செல்வர் என்று அழைக்கின்றார். பொதுவாக பன்றி என்றால் கருமை நிறத்தில் இருப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் திருமால் எடுத்ததோ வெண்மை நிறம் கொண்ட பன்றி. வெள்ளைப் பன்றி பிரியாது நாளும் வழிபட்ட பெருமான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். சிவன்=இன்பம் விளைவிப்பவன்; நிலமாகவும், நிலத்தில் வளரும் பயிராகவும், பயிரினை வளர்க்கும் மழைத் துளியாகவும், அந்த மழைத் துளியில் உள்ள நீராகவும் உள்ளவனும், தனது சடை மேல் நீரினை தேங்கச் செய்து நிறுத்தியவனும்,நாடுகளை ஆளும் மன்னர்கள் தங்களது மனதினில் இறைவனை நினைத்து வணங்கும் தன்மையால் அவர்கள் ஓங்கி வளர்வதற்கு அருள் புரிபவனும்,சந்திரனின் பிறை போன்று வெண்மையாகவும் வளைந்தும் காணப்பட்ட பற்களை உடைய பன்றியாக அவதாரம் எடுத்த திருமால் நீங்காமலும் பிரியாமலும் வழிபட்ட பெருமையை உடையவனும், சிறப்பான தேவர்களுக்கெல்லாம் இன்பம் அளிக்கும் தன்மை கொண்டுள்ள சிவபெருமான், சிவபுரம் என்று அழைக்கப்படும் தலத்தின் செல்வனாக விளங்குகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் முதல் பாடலில், சென்றடையாச் செல்வன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். ஒரு சமயத்தில் செல்வம் இல்லாமல் இருந்தும் செல்வம் குறைவாக இருந்தும் செல்வம் சென்று சேர்வதால் செல்வந்தனாகவோ அல்லது முன்னம் இருந்ததை விடவும் செல்வம் அதிகமாக உடையவனாகவோ மாறுபவர்கள் ஏனையோர். ஆனால் இயல்பிலேயே செல்வம் உடைய பெருமானை செல்வம் சென்று சேருவதில்லை. அவனை விட்டு செல்வம் பிரிந்து செல்வதுமில்லை. அவன் அளிக்கும் செல்வம் தானே அனைவரிடமும் சென்று சேர்கின்றது. மேலும் உலகத்தையும் உலகப் பொருட்களையும் படைக்கும் வல்லமை படைத்த ஒருவனுக்கு, அவனிடம் இல்லாத செல்வம் ஏதுமில்லை; அவ்வாறு இருக்கையில் எந்த செல்வத்தை அவனிடம் இல்லாததாக கருதி, வேறு எவர் ஒருவர் இறைவனுக்கு அளிக்க முடியும். இந்த தன்மையை உணர்த்தும் முகமாக சென்றடையாச் செல்வன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.. அவனே பெருஞ் செல்வமாக உள்ளான்.சென்று அடையாத செல்வம் என்பதற்கு, அவனது அருளின் துணை இல்லாமல் எவரும் அடைய முடியாத முக்திச் செல்வம் என்று பொருள் கொண்டு,அத்தகைய முக்திச் செல்வத்தை உடையவன் என்று விளக்கம் அளிப்பதும் பொருத்தமாக உள்ளது. இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானை சிவபுரத்தெம் செல்வன் என்று அழைக்கின்றார்.

பாரவன்காண் பாரதனில் பயிரானான்காண் பயிர்வளர்க்கும் துளியவன்காண் துளியில்நின்ற

நீரவன் காண் நீர்சடை மேல் நிகழ்வித்தான் காண் நிலவேந்தர் பரிசாக நினைவுற்றோங்கும்

பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளைப் பன்றிப் பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்

சீரவன்காண் சீருடைய தேவர்க்கெல்லாம் சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.5) வடதளி எம் செல்வன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வடதளி என்பது திருக்கோயிலின் பெயர். தனது தொண்டர்கள் நரகத்தினைப் பாராத வண்ணம் அவர்களுக்கு சிவலோகம் அருளும் தன்மை படைத்தவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். ஓம்புதல் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். தினமும் நம்மைப் பாதுகாக்கும் இறைவன் உறையும் இடமாகவிளங்குவதாலும் வியாக்ரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) வழிபட்ட திருக்கோயில் என்பதாலும் ஓமாம்புலியூர் என்ற பெயர் வந்தது என்பர். உடலுடன் உயிர் ஒட்டியிருக்கும் சமயங்களில் பல உதவிகளை செய்த இறைவன், அந்த உடலினை விட்டு உயிர் பிரிந்த பின்னரும், அந்த உயிருக்கு இறைவன் செய்கின்ற உதவி இது. இத்தகைய உதவியை செய்யும் ஆற்றல், பெருமானின் உயர்ந்த செல்வமாக மதிக்கப் படுவதால், இந்த பாடலில் அப்பர் பிரான் பெருமானை எமது செல்வன் என்று குறிப்பிடுகின்றார்.

பாங்குடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை

பாங்கிலா நரகு அதனைத் தொண்டரானார் பாராத வகை பண்ண வல்லான் தன்னை

ஓங்குமதில் புடைதழுவும் எழிலோமாம்புலியூர் உயர்புகழ் அந்தணரேத்த உலகர்க்கென்றும்

தீங்கில் திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.9) அப்பர் பிரான், தேவர்க்கும் தேவராம் செல்வர் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.உயர்ந்தவர்களுக்கும் தலைவனாக விளங்கும் தன்மையும், ஒரு வகையில் சிறந்த செல்வம் தானே. தான் தனது தாயின் கருவில் இருந்த போது இறைவனின் நினைவுடன் இருந்ததற்கு, இறைவன் தன்னை அப்போதே ஆட்கொண்டது தான் காரணம் என்று அப்பர் பிரான் இன்னம்பர் திருத்தாண்டகத்தில் கூறுகின்றார் செரு=போர். அட்டுதல்=அழித்தல்; கூடிப் பிரியாத மைந்தர் போலும் என்று, உயிர்கள் மெய்ஞானம் அடைந்து தன்னோடு கூடும் உயிர்களை என்றும் பிரியாதவர் பெருமான் என்று இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் சிவபிரானின் திருவடியை நாடி வணங்கிய பின்னர், அவர்களுக்கு ஒப்பற்ற தலைவராய் விளங்கினார் என்றும் இங்கே கூறப்படுகின்றது.;

கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்தளித்த கள்வர் போலும்

செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவராம் செல்வர் போலும்

மருவிப் பிரியாத மைந்தர் போலும் மலரடிகள் நாடி வணங்கலுற்ற

இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

நேர்ந்தொருத்தி என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் முதல் பாடலில் (6.94.1) படவரவும் பனி மதியும் ஒருங்கே சடையில் வைத்த செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பகைவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் வைத்து, அவர்கள் தங்களது பகை உணர்ச்சியை மறந்து அமைதியாக இருக்கும் வண்ணம் செய்வதற்கு தனி ஆற்றல் தேவைப்படும் அல்லவா. அந்த ஆற்றல் உடைய பெருமானை, மிகவும் பொருத்தமாக செல்வர் என்று அழைக்கின்றார்.நேர்ந்து= ஒரு செயல் நடைபெறவேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பம் வைத்து தீர்மானத்துடன் செயல்படுவது; இன்றைய சூழ்நிலையிலும், தங்களது வாழ்க்கையில் தங்களால் தீர்க்க முடியாத துன்பம் நேரிட்டால், இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பலரும் தங்களது துன்பம் தீர்க்க பெற்ற பின்னர் இறைவனுக்கு காணிக்கை அளிப்பதாக தீர்மானம் செய்வதை நேர்ந்து கொள்வது என்று கூறுவார்கள். இறைவனுக்கு பணமாகவோ பொருளாகவே காணிக்கை அளிப்பது என்று முடிவு செய்தால், அந்த பொருளையோ பணத்தையோ ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைப்பதை நேர்ந்து முடிந்து வைப்பது என்று கூறுவதை இன்றைய வழக்கினில் காணலாம். பெருமானின் திருமேனியில் ஒரு பாகத்தினை அடைவது என்ற தீர்மானத்துடன் இறைவனை நோக்கி தவம் இருந்த பார்வதி தேவி, திருவண்ணாமலையினில் இறைவனின் திருமேனியில் ஒரு பாகத்தினை பெற்றது புராண வரலாறு. இந்த நிகழ்ச்சியினைத் தான் அப்பர் பிரான், தேவி நேர்ந்து கொண்டு ஒரு பாகத்தினை அடைந்தாள் என்று, இங்கே குறிப்பிடுகின்றார். கங்கை நதியினைத் தனது சடையினில் பெருமான் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியின் பின்னணியை நாம் அனைவரும் அறிவோம். எனினும் புலவர்களுக்கு உரிய சுதந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளும் அப்பர் பிரான், பார்வதி தேவி பெருமானின் உடலில் இடம் பெற்றதைக் கண்டு, தானும் அவ்வாறே பெருமானின் உடலில் இடம் பெறுவதற்கு கங்கை நங்கை விரும்பினாள் என்று கூறுகின்றார்.

நேர்ந்து ஒருத்தி ஒரு பாகத்து அடங்கக் கண்டு நிலை தளர ஆயிர மாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடை மேல்பயிலக் கண்டு படவரவும் பனிமதியும் வைத்த செல்வர்

தாம் திருத்தித் தன் மனத்தை ஒருக்காத் தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம்

பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில், பெருமானை மழுவாட் செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பல திருமுறைப் பாடல்கள் மிகவும் கூர்மையான மழுவாட்படை என்று உணர்த்துகின்றன. சிவபெருமானை அழிப்பதற்காக, வல்லமை வாய்ந்த மழுவாட்படையை, தாங்கள் செய்த வேள்வியிலிருந்து எழுப்பி, தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவுகின்றனர். ஆனால் பெருமானோ, அந்த மழுவாட் படையை, மிகவும் இலாகவமாக தனது கையில் ஏந்திக்கொண்டு, அதனை செயலற்றதாக செய்து விடுகின்றார். தன் மீது ஏவப்பட்ட படையினையும், செயலறச் செய்து, தனதாக்கிக் கொண்ட செயல், சிறப்பான மழுவாட்படை உடைய செல்வராக இறைவனை மாற்றி விடுகின்றது. விடமுக்க என்ற சொல் விடமூக்க என்று எதுகை கருதி திரிந்தது.உக்க=உமிழ்ந்து விட்ட; மந்திரத்திற்கு கட்டுப்பட்ட பாம்பு தன்னிடம் உள்ள விடத்தினை உமிழ்ந்து விட்டு அடங்கி இருப்பது போன்று, தீய எண்ணங்களை தவிர்த்து விட்டு நெஞ்சம் இறைவனை சிந்திக்க வேண்டும் என்று அப்பர் பிரான் அறிவுரை கூறுகின்றார். வடம்= ஆலமரம்; வடமூக்கமுனிவர்=ஆலமரத்தினை மிகுந்த ஊக்கத்துடன் சென்று அடைந்த முனிவர்கள்; ஆலமரத்தின் அடியில் தென்முகக்கடவுளைக் கண்ட முனிவர்கள் அவரையே தங்களது ஆசானாக,கடவுளாக கருதி வழிபட்டமை போன்று, பெருமானது அடியார்களைக் கண்டால் அவர்களை ஆசானாகவும் கடவுளாகவும் கருத வேண்டும் என்பது உணர்த்தப் படுகின்றது. தமர்=அடியார்;

விடமூக்கப் பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள்ளேற்றான் தன் தமரைக் கண்டபோது

வடமூக்க மாமுனிவர் போலச் சென்று மாதவத்தார் மனத்துள்ளார் மழுவாள் செல்வர்

படமூக்கப் பாம்பணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவிக் காணா

குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகலாமே

நின்ற திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.94.4) அப்பர் பிரான் பெருமானை ஏறூர்ந்த செல்வன் என்று குறிப்பிடுகின்றார். களிறு=யானை, இங்கே கூற்றுதைத்த சிவபெருமான் யானையாக உருவகப்படுத்தப் பட்டுள்ளார். கங்குல்=இரவு; நாளின் ஒரு பகுதியான இரவினைக் குறிப்பிட்டு, மற்றொரு பகுதியான பகலையும் இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். ஏற்றான்= ஏற்றுக்கொண்டவன். தான் நடத்தும் ஐந்து தொழில்களையும் விருப்பத்துடன் தானே ஏற்றுக் கொண்டவன். உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையின் பேரில், அந்த உயிர்கள் உய்வதற்காக, ஐந்தொழில்களையும் ஏற்றுக்கொண்டவன்.தனக்குத் தலைவன் யாரும் இல்லாத காரணத்தால், சிவபிரானை, இன்ன செயல் செய்க என்று பணிப்பார் எவரும் இல்லாத நிலை, தொழில்களை அவன் தானே ஏற்றுக்கொண்ட நிலையை குறிப்பிட்டு, இங்கே மறைமுகமாக உணர்த்தப் பட்டுள்ளது. சிவபெருமான், படைக்கும் தொழிலை பிரமனுக்கும், காக்கும் தொழிலை திருமாலுக்கும், ஒப்படைத்து அவர்கள் மூலம் அந்த தொழில்கள் செய்வதைப் போன்று எவரும், சேர்ந்தறியாக் கையானான சிவபிரானுக்கு எந்த பொறுப்பினையும் ஒப்படைக்கவில்லை. தனக்கு மேலாக வேறு எவரும் இல்லாத தன்மை, பெருமானுக்குத் தவிர வேறு எவருக்கும் வாய்க்காத தன்மை,சிறந்த செல்வமாக கருதப் பட்டது என்று பொருள் கொள்வதும் சிறப்பே. இந்த பதிகத்தின் ஆறாவது பாடலிலும் ஏறூர்ந்த செல்வன் என்று அழைக்கப் படுகின்றார்.

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க் கனவாகி நனவாகிக் கங்குலாகிக்

கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறுமாகிக் குரைகடலாய் குரைகடற்கோர் கோமானுமாய்

நீற்றானாய் நீர் ஏற்ற மேனியாகி நீள் விசும்பாய் நீள்விசும்பின் உச்சியாகி

ஏற்றானாய் ஏறு ஊர்ந்த செல்வனாகி எழும்சுடராய் எம்மடிகள் நின்றவாறே.

தான் அனுபவிக்கும் செல்வங்களாக இருக்கும் இறைவனை, பொன் மணி முத்து என்று குறிப்பிட்டு சிறப்பிக்கும் அப்பர் பிரான் (6.95.1) ஏறூர்ந்த செல்வன் என்று இறைவனை அழைக்கின்றார். இந்த பாடலில் தன்பால் அன்பு கொண்டுள்ள மாமானாகவும் மாமியாகவும் இறைவன் இருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். அப்பர் பெருமான் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்; நிலையாக ஒரு ஊரிலும் தங்கவில்லை.எனவே இல்லற வாழ்க்கை பற்றிய குறிப்புகள் கொண்டுள்ள இந்த பாடல், நமது நிலையிலிருந்து அப்பர் பிரான் உரைக்கும் பாடலாக கொள்ளப்பட்டு, நாம் எவ்வாறு இறைவனை கருதவேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடலாக உணர வேண்டும். இயல்பாகவே தங்களது குழந்தைகள் மீது தாய்க்கும் தகப்பனுக்கும் அன்பு இருப்பதை நாம் அறிவோம். அவ்வாறான அன்பு மாமனுக்கும் மாமிக்கும் நம் மேல் இருக்குமா என்ற ஐயம் கொள்ளவேண்டாம் என்பதை உணர்த்தவே அன்புடைய என்ற அடைச்சொல் இங்கே சேர்க்கப் பட்டுள்ளது. தங்களது மக்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு காரணமாக நமது மாமனுக்கும் மாமிக்கும் நம் மீது அன்பு இருக்கும் என்பதால் அன்புடைய மாமன் மாமி என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். அன்புடைய என்ற சொல்லை, அப்பன் நீ, அம்மை நீ என்ற சொற்களுக்கு முன்னர் வைத்து பொருள் கொள்ள வேண்டும் என்றும் கூறுவார்கள். ஐயன்=தலைவன், குரு,முன்னோன்; ஒப்புடைய மாதர்= நம்முடன் ஒத்த கருத்து கொண்டு பலவிதங்களிலும் நம்முடன் ஒத்துழைத்து இல்லறம் நடத்தும் மனைவி;ஒண்பொருள்=இல்லற வாழ்க்கையின் பயனாக நாம் அடையும் மக்கட்செல்வம் மற்றும் அறநெறியால் வந்த செல்வம்; துய்ப்பன=நாம் அனுபவிக்கும் இன்பங்கள்; உய்ப்பன=நாம் இன்பம் அனுபவிக்க உதவும் கருவிகள், வாகனம் முதலியன;

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துணையா என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ

இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.19.7) சுந்தரர், பெருமானை, தலை ஓட்டில் பொருந்துகின்ற பிச்சையை வேண்டி இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மை உடைய செல்வர் என்று கூறுகின்றார், கல் என்று மலைகளை குறிப்பிடுகின்றார். பொதுவாக நதிகள் மலைகளிலிருந்து தோன்றுவது வழக்கம். துதைந்து=நிறைந்து வீழ்கின்ற; மலையில் சேர்கின்ற மழை நீர் வழிந்து நதிகளின் தோற்றம் ஏற்படும் நிலை இங்கே சுட்டிக் காட்டப்படுகின்றது

தலையிடையார் பலி சென்று அகந்தோறும் திரிந்த செல்வர்

மலையுடையாள் ஒரு பாகம் வைத்தார் கல் துதைந்த நன்னீர்

அலையுடையார் சடை எட்டும் சுழல அருநடம் செய்

நிலையுடையார் உறையும் இடமாம் திருநின்றியூரே

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.34.11) சுந்தரர், புகலூர் மேவிய செல்வன் என்று கூறுகின்றார். இந்த தலத்தினில் சுந்தரர், திருவாரூர் பெருமானுக்கு ஆதிரை திருவிழா மிகவும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக, பெருமானைத் தொழுது வேண்டுகின்றார்.திருக்கோயிலிலிருந்து வெளியே வந்த சுந்தரர், அருகே இருந்த மண்டபம் ஒன்றினில் இருந்த செங்கற்களைத் தலையணையாக வைத்துக் கொண்டு உறங்குகின்றார். துயில் கலைந்து எழுந்து பார்த்தபோது, பெருமானின் அருளால், தான் தலையணையாக வைத்துக் கொண்டிருந்த செங்கற்கள் பொற்கட்டியாக மாறியிருந்த நிலை கண்ட சுந்தரர் நடந்த அதிசயத்தை உணர்ந்தவராக அருளிய பதிகம் இந்த பதிகம். இவ்வாறு தனக்கு பொற்கட்டி அளித்த பெருமானை, மிகவும் பொருத்தமாக புகலூர் மேவிய செல்வர் என்று பாடுகின்றார். செறு=வயல்; நறவம்=தேன்; அறவனார்=புண்ணியமே வடிவினனாக விளங்கும் பெருமான்;

செருவினில் செழுங் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வன்

நறவம் பூம்பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்றன்

சிறுவன் வன்தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்திவை வல்லார்

அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயம் இல்லையே

முடிப்பது கங்கையும் என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (7.44.4) சுந்தரர், சிவபெருமானின் தோற்றம் இகழத்தக்கது போல் தோன்றினாலும்,அவர் சிறந்த செல்வர் என்று குறிப்பிட்டு, அவரது தோற்றத்தின் உண்மை நிலையை புரிந்து கொண்டு, என்றும் அவனை விட்டு பிரியாது வணங்குவீர்களாக என்று கூறுகின்றார். ஓரி என்ற சொல்லும் நரியையே குறிக்கும். ஊழிக் காலத்தில் அனைத்து உடல்களில் இருந்தும் உயிர்கள் பிரிக்கப்பட்டு உலகமே சுடுகாடாக காட்சியளிக்கும் நிலையில் நடனமாடும் இறைவன், சுடுகாட்டினைத் தனது நடன அரங்காக தேர்ந்து எடுப்பதில் வியப்பேதும் இல்லை. இதன் மூலம் தான் ஒருவனே என்றும் அழியாது இருப்பவன் என்பதை நமக்கு பெருமான் நினைவூட்டுகின்றார். சுடுகாடு என்பதால் நரிகளும் பேய்களும் உலவுவது இயற்கை தானே. ஊழிக்காலத்தில் இறந்து பட்ட உடல்களின் தலையினை மாலையாக அணிந்து கொள்வதும், அவரைத் தவிர்த்து அனைவரும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்கள் என்பதை நினைவூட்டவே. வாய் பிளந்த நிலையில் உள்ள அந்த தலைகள் சிரிதலை என்று கூறுகின்றார்.

நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள்

எரிதலைப் பேய் புடை சூழ வாரிருள் காட்டிடைச்

சிரி தலை மாலை சடைக்கணிந்த எம் செல்வனைப்

பிரிதலைப் பேசன்மின் தொண்டர்காள் எம் பிரானையே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.54.10) சுந்தரர், பெருமானை ஒற்றியூர் உறை செல்வன் என்று குறிப்பிடுகின்றார். நான்கு வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களை முதன்முதலில் உலகுக்கு அளித்த செய்கை குறித்து செல்வன் என்று குறிப்பிட்டார் போலும். திருவொற்றியூர் தலத்தினை விட்டு நீங்கமாட்டேன் என்று சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதற்கு தண்டனையாக, பெருமான் தனது கண் பார்வையைப் பறித்த போது அருளிய பதிகம் இந்த பதிகம். தான் செய்த தவறு தெரிந்திருந்தும், அந்த தவறு திருவாரூர் பெருமானை காண வேண்டும் மற்றும் அந்த பெருமான் பொருட்டு நடைபெறுகின்ற விழாவினில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் செய்த தவறு என்பதால், தான் செய்த தவறு பெரிதாக கருதப்படக் கூடாது என்று சுந்தரர் நினைத்தார் போலும். அதனால் தான் தன்னை சீலம் பெரிதும் மிக உடையவன் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார் போலும். மேலும் தன்னை சிறுவன் என்று கூறிக் கொள்வதன் மூலம் தன் பால் இறைவன் கருணை கொள்ளாது, தண்டனை அளித்தது தவறு என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த பாடல் அமைந்துள்ள நயம் ரசிக்கத் தக்கது. ஓதம்=கடல் அலைகள்;

ஓதம் வந்துலவுங் கரை தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும்

ஞாலம் தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன்

சீலம் தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன்தொண்டன் ஊரன் உரைத்த

பாடல் பத்திவை வல்லவர் தாம் போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே

பொன்னும் மெய்ப்பொருளும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் சுந்தரர் (7.59.10) பெருமானை செல்வ ஆரூரன் என்றும் தேவர்கள் பால் வைத்திருந்த அன்பின் காரணமாக முருகப் பெருமானை தோற்றுவித்து அவனுக்கு தந்தையாக பெருமான் விளங்கினார் என்றும் கூறுகின்றார். ஒட்டி= வழக்கு தொடுத்து;திருமணம் புரிந்து கொள்ளவிருந்த தன்னை அடிமை என்று வழக்கு தொடுத்து ஆட்கொண்ட பெருமான், வழக்கினில் வென்ற பின்னர் எதிரே தோன்றாமல் மறைந்து விட்டார் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். உச்சிப் போதன்=நண்பகல் போன்று ஒளிவீசுபவன்; பட்டியை=பட்டாடை உடையவன்;பெருமான் தான் அணிந்துள்ள பட்டாடையின் மேல் நாகத்தை கச்சாக இறுகக் கட்டியுள்ளார் என்று திருமுறைப் பாடல்கள் கூறுகின்றன. செட்டி என்பது முருகப் பெருமானை குறிக்கும் செட்டியப்பன்=சிவபெருமான்.

ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை நச்சரவு ஆர்த்த

பட்டியைப் பகலை இருள் தன்னைப் பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை

கட்டியைக் கரும்பின் தெளி தன்னைக் காதலால் கடற் சூர் தடிந்திட்ட

செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே

நின்றியூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.65.5) சுந்தரர், மூன்று பொழுதிலும் தன்னை வழிபாடு செய்த அகத்திய முனிவருக்கு இறைவன் செய்த அருட்செயலை நினைத்தவாறு நின்றியூர் தலம் சென்று வழிபட்டதாக கூறுகின்றார். தாபரம்=தாபித்து வணங்கிய உருவம், இலிங்க உருவம்; சகளி செய்து=இறைவனை ஆவாகித்து, இறைவனது கலைகளை மந்திர தந்திரங்களால் பொருந்தச் செய்து; பொதி=பொதிகை மலை; பெருமானின் அருள் சிறந்த செல்வமாக மதிக்கப் பட்டு, அத்தகைய செல்வம் அகத்தியருக்கு அளித்ததை குறிப்பிடுகின்றார். பொதிகை மலையில் பெருமானின் திருமணக் காட்சி அகத்தியருக்கு கிடைத்தது. மேலும் பொதிகை மலையில் உள்ள குற்றாலம், பண்டைய நாளில் திருமால் கோயிலாக இருந்ததாகவும், ஒரு சமயம் அங்கே சென்ற அகத்தியர், குறுக குறுக என்று திருமால் சிலையின் மீது தனது கையை வைத்து அழுத்த, பெருமாள் மூர்த்தம் இலிங்கமாக மாறியது என்றும் சொல்வார்கள். இந்த இரண்டு செயல்களையும் சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும்.

வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்கென அருளிச்

சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியன் தனக்குச்

சிந்து மாமணி அணி திருப்பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன்

செந்தண் மாமலர்த் திருமகள் மருவும் செல்வத் திருநின்றியூரானே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.68.3) சுந்தரர் பெருமானை, சேவின் மேல் வரும் செல்வன் என்று குறிப்பிடுகின்றார்.பெருமானின் வாகனமாகிய எருதின் சிறப்பு கருதி, சேவின் மேல் வரும் செல்வன் என்று குறிப்பிட்டார் போலும். தன்னிடம் செல்வம் ஏதுமில்லை என்பதன் காரணமாக பெருமான் எருதினைத் தனது வாகனமாக பெருமான் தேர்ந்தெடுத்தார் என்று தவறாக கருத வேண்டாம் என்று உணர்த்தும் பொருட்டு இவ்வாறு கூறினார் என்றும் பொருள் கொள்ளலாம். நினைத்தாலே தேன் போன்று இனிக்கும் பெருமானைப் புகழ்ந்து பாடினால் அமுதம் போன்று இனிப்பதால்,அவனை மறந்து நாம் வேறு நினைவுகளில் ஆழ்ந்துவிடக் கூடாது என்று இங்கே சுந்தரர் உணர்த்துகின்றார். சுந்தரர் சிவபெருமானை புகழ்ந்து காமரத்து இசை பாட, தனது நாவில் அமுதம் ஊறுகின்றது என்று கூறி மகிழ்கின்றார்.

பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப் புவியைக் காற்றினைப் புனல் அனல் வெளியைச்

சேவின் மேல் வரும் செல்வனைச் சிவனை தேவதேவனைத் தித்திக்கும் தேனைக்

காவியங்கண்ணி பங்கனைக் கங்கை சடையனைக் காமரத்து இசை பாட

நாவில் ஊறு நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே

வடதிருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (7.69.9) சுந்தரர், இறைவனை உயர்ந்தவன் என்ற பொருள் பட சிட்டன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் அருட் செல்வமும் பொருட் செல்வமும் உடையவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். அனைத்து உலகங்களும், அந்த உலகங்களில் உள்ள அனைத்து உயிர்களும், பெருமானின் பொருட்செல்வமாக கருதப்படுகின்றன. ஏனெனில், நாம் குறிப்பிடும் பொருட்செல்வம் பெருமானுக்கு தேவையற்றது அல்லவா. இந்த பதிகத்தின் முதல் பாடலே திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் என்று துவக்கப்பட்டு பெருமானை,வீடுபேறாகவும், உண்மையான மெய்ப்பொருளாகவும், செல்வமாகவும், தான் கருதுவதாக சுந்தரர் கூறுகின்றார். சிறுவன் மார்க்கண்டேயனின் பெருமையை மதிக்காமல், அவன் மீது பாசக் கயிற்றினை வீசத் துணிந்த காலன் என்று குறிப்பிட்டு, சிவனடியார்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்ற செய்தியினை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். பட்டன்=சிறந்த ஆசிரியன்; இந்த பதிகத்தின் ஏழாவது மற்றும் பதினோராவது பாடல்களில், திருமுல்லைவாயில் செல்வனே என்று இறைவனை அழைக்கின்றார்.

மட்டுலா மலர் கொண்டு அடியிணை வணங்கும் மாணி தன் மேல் மதியாதே

கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த

சிட்டனே செல்வத் திருமுல்லைவாயில் செல்வனே செழுமறை பகர்ந்த

பட்டனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.70.3) சுந்தரர், பெருமானை ஆல் நிழல் கீழிருந்து அருளும் செல்வன் என்று குறிப்பிடுகின்றார். சனகாதி முனிவர்களுக்கு வேதங்களின் பொருளை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட ஐயத்தினை தீர்க்கும் வண்ணம் ஞானம் பெற்றிருந்த செல்வன் என்று உணர்த்துகின்றார் போலும்.

ஒப்பிலா முலையாள் ஒரு பாகா உத்தமா மத்தம் ஆர் தரு சடையாய்

முப்புரங்களைத் தீ வளைத்தங்கே மூவருக்கு அருள் செய்ய வல்லானே

செப்ப ஆல் நிழற்கீழ் இருந்தருளும் செல்வனே திருவாவடுதுறையுள்

அப்பனே எனை அஞ்சல் என்றரருளாய் ஆர் எனக்குறவு அமரர்கள் ஏறே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.79.8) சுந்தரர், பெருமானின் திரிபுரங்கள் எரித்த வீரச் செயலை குறிப்பிட்டு செல்வன் என்று குறிப்பிடுகின்றார். அவனது வீரக்கழலை திருமாலும் பிரமனும் காணமுடியாமல் திகைத்த செய்தியும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது

திரியும் புரம் நீறாக்கிய செல்வன்றன கழலை

அரிய திருமாலோடு அயன் தானும் அவர் அறியார்

கரியின் இனமோடும் பிடி தேன் உண்டவை களித்துத்

திரிதந்தவை திகழ்வால் பொலி சீபர்ப்பத மலையையே

திருப்பனையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.87.3) சுந்தரர், பிறை சூடிய செல்வனார் என்று குறிப்பிடுகின்றார். தக்கன் இட்ட சாபத்தின் விளைவாக, நாளுக்கொரு கலையாக தேய்ந்து முற்றிலும் அழியும் நிலையினை நெருங்கிய சந்திரன், பிரமனை அணுகி தன்னை காத்துக் கொள்ளும் வழி யாது என்று வினவ, பிரமன் சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் சந்திரனைக் காத்தல் இயலாது என்று சொல்ல, சந்திரனும் பெருமானை அணுகிப் பணிந்து அவரது அருளாலே, அழியும் நிலையினைத் தவிர்த்துக் கொண்டான். இத்தகைய ஆற்றல் உடைய பெருமானை, மிகவும் பொருத்தமாக செல்வன் என்று அழைக்கின்றார். மேல்வினை= இனியும் நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளில் அனுபவித்து கழிப்பதற்காக ஒதுக்கப் பட்டுள்ள வினைகள்; தனது அடியார்களைப் பற்றியிருக்கும் மேல்வினைகளை அழித்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து அவர்களை விடுவிக்கும் ஆற்றல் வாய்ந்தவன் என்றும் குறிப்பிடுகின்றார். மேலும் பெருமான் உறையும் தலங்களை விட்டு என்றும் நீங்காது வாழும் அடியார்கள் அழகு மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறுகின்றார்.

செங்கண் மேதிகள் சேடெறிந்து தடம் படிதலில் சேலினத்தொடு

பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப்பனையூர்த்

திங்கள் சூடிய செல்வனார் அடியார் தம் மேல் வினை தீர்ப்பராய் விடில்

அங்கிருந்து உறைவார் அவரே அழகியரே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.94.9) சுந்தரர், தலத்து பெருமானின் திருநாமம் தொலையாச் செல்வர் என்பதை உணர்த்துகின்றார். தொலையா=அழியாத; பெருமான் பால் அன்பு கொண்டு, இலை தூவி வழிபட்டாலும் அவர் ஏற்றுக்கொண்டு அருள் புரிவார் என்பதை சுந்தரர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். தனது அடியார்களுக்கு இறைவன், அழியாத பேரின்பம் அளிக்கும் முக்திநிலை அருளும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு

நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்

தலையால் தாழும் தவத்தோர்க்கு என்றும்

தொலையாச் செல்வச் சோற்றுத்துறையே

திருச்சதகப் பாடல் ஒன்றினில் மணிவாசகர் சிந்தையாலும் அறிவரும் செல்வன் என்று கூறுகின்றார். தனக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் பெருமான்அனைத்து உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து அருள் புரிந்தாலும், தனக்கு ஓர் தந்தையும் தாயும் இல்லாத நிலையில் உள்ளான் என்றுகூறுகின்றார். உயிர்களுடன் எந்த விதத்தில் கலந்திருந்தாலும், அந்த தன்மையை உயிரால் அறிய முடியாத தன்மையில் இருக்கின்றான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. உயிர்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பது, சிந்தையாலும் அறிவரும் செல்வன் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.

எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்

தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான்

முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்

சிந்தையாலும் அறிவரும் செல்வனே

பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல் பொலிந்திலங்கும் பெருமான் என்று தில்லைப் பதிகத்தில் அப்பர் பிரான் குறிப்பிட்ட அழகிய கோலத்தை, நமது கண் முன்னே கொண்டு வரும் மணிவாசகர், திருவெம்பாவை பதிகத்தின் பாடலில், இறைவனை செய்யா வெண்ணீறாடி செல்வா என்று குறிப்பிடுகின்றார்.வழிவழியாக உனக்கு ஆட்பட்டு தொண்டு செய்யும் குடியில் பிறந்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டு பாவை நோன்பு நோற்கும் பெண்களை நாம் திருவெம்பாவை பதிகத்தில் காணலாம். மருங்குல்=இடை: எய்த்தல்=இளைத்தல் மொய்=வண்டுகள் மொய்க்கின்ற: எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் என்று சிவபுராணத்தில் கூறிய மணிவாசகர் இங்கும் எண்ணற்ற பிறவிகள் எடுத்து உயிர் இளைத்துள்ள நிலையினை குறிப்பிடுகின்றார்.பழவடியார் குடியில் வந்து உன் திருவடிகளை நினைத்து பாடிவரும் தாங்கள், உய்யும்நிலை அடைந்ததாக கூறும் பெண்கள், தாங்கள் இனியும் பிறப்பெடுத்து இளைக்காமல் இறைவன் தங்களை பிறவிச் சுழற்சியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகின்றார்கள்.

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்

கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல்

செய்யா வெண்ணீறாடி செல்வா சிறு மருங்குல்

மையார் தடம் கண் மடந்தை மணவாளா

ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம்

எய்யாமல் காப்பாய் எமை ஏலோர் எம்பாவாய்

திருவம்மானை பதிகத்து பாடலில், மணிவாசகர் சேர்ந்தறியா கையான் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். சேர்ந்து அறியாக் கையான் என்பதற்குஇரண்டு விதமாக பொருள் கூறுகின்றனர். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத காரணத்தால், எவரையும் சிவபெருமான் வணங்குவது இல்லை. எனவேஅடுத்தவரை வணங்குவதற்காக அவர் தனது கைகளை குவிக்க வேண்டிய அவசியம் இல்லையென்பதால், அவரது கைககள் ஒன்றுக்கொன்று சேர்வதில்லைஎன்பதை உணர்த்தும் வண்ணம் சேர்ந்தறியாக் கையான் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார் என்பது ஒரு விளக்கம். கை என்பதற்கு இடம் என்று ஒருபொருளும் உண்டு. பெருமானது அருள் துணை இல்லாமல், நாம் சென்று சேர முடியாத இடம் முக்தி நிலை. அந்த முக்தி நிலையை தனது செல்வமாகஉடையவன் என்ற பொருள்பட சேர்ந்தறியா கையான் என்று கூறுவதாக மற்றொரு வகையிலும் விளக்கம் கூறப்படுகின்றது.

கையார் வளை சிலம்பக் காதார் குழை ஆட

மையார் குழல் புரளத் தேன் பாய வண்டு ஒலிப்ப

செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை

ஐயாறு அமர்ந்தானை பாடுதும் காண் அம்மானாய்

திருவாசகம் திருப்பொற்சுண்ணம் பதிகத்தின் பாடலில் (8.9.19) மணிவாசகர், சிற்றம்பலத்து எங்கள் செல்வன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.சிட்டர்கள் என்ற சொல் இங்கே தில்லைவாழ் அந்தணர்களை குறிப்பிடுகின்றது. தில்லை வாழ் அந்தணர்கள், நடராஜப் பெருமானை தங்களது செல்வமாக மதிக்கின்றனர் என்று கூறுகின்றார். மாசுணம்=பாம்பு; கவித்த=மூடிய, கவிழ்ந்த;

வட்டமலர்க் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியும் பாடிச்

சித்தர்கள் வாழும் தென்தில்லை பாடிச் சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடிக்

கட்டிய மாசுணக் கச்சை பாடிக் கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல்

இட்டு நின்றாடும் அரவம் பாடி ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே

எந்த ஒரு உயிருக்கும் தனது தாயினைத் தவிர்த்து, வேறு எவரிடமும் கிடைக்காதது தாய்ப்பாசம். உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் விளங்கும் பெருமான், பெற்ற தாயினை விடவும் அதிகமான பாசத்தை உயிர்கள் பால் வைத்து காப்பற்றுகின்றான். தாயினுஞ் சாலப் பரிந்து உதவும் பெருமானை, செல்வர் என்று கோத்தும்பீ பதிகத்தினில் மணிவாசகர் கூறுகின்றார். தேசம் என்ற சொல் தேயம் என்று இங்கே திரிந்துள்ளது.அனைத்து தேசங்களையும் உடைமையாக உடைய ஒருவனை, செல்வர் என்று தானே சொல்ல வேண்டும்.

நோயுற்று மூத்து நான் நுந்துகன்றாய் இங்கிருந்து

நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்

தாயுற்று வந்து என்னை ஆண்டு கொண்ட தன் கருணைத்

தேயுற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

நுந்துதல் என்றால் தள்ளுதல் ஒதுக்குதல் என்று பொருள். எந்த தாய்ப்பசுவும் தனது கன்றினை ஒதுக்கித் தள்ளாது. எனவே வேறு எவரோ ஒருவர் தாயிடமிருந்து பலவந்தமாக பிரித்த கன்று என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். நோயென்று பிறவிப் பிணியை அடிகளார் குறிப்பிடுகின்றார்.இறைவனுடன் இணைந்திருக்க வேண்டிய தன்னை, தனது உயிரைப் பிணித்துள்ள வினைகள், இறைவனிடமிருந்து பிரித்துப் பிறவிக்கடலில் ஆழ்த்தி,தாயைப் பிரிந்த கன்று போன்று தான் தவிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். மேலும் தன்பால் கருணை கொண்டுள்ள இறைவன், திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்ட போதிலும் அவனது கருணையின் பெருமையை உணரமுடியாது தான் இருந்தததாக குறிப்பிடுகின்றார். நாயினை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்து பால்சோறு வைத்தாலும், தெருவில் விழும் எச்சில் சோற்றினுக்கு ஓடுவதைப் போன்று,இறைவனின் கருணைத் திறத்தினை அறியாது தான் பிரிந்து வந்ததாக வருந்துகின்றார். தனது வருத்தத்தை இறைவனிடம் தெரிவித்து, மறுபடியும் இறைவனின் அருள் தனக்கு கிடைப்பதற்கு வழி வகுக்கும் வண்ணம் கோத்தும்பீ இறைவனிடம் தூது செல்லவேண்டும் என்று இறைஞ்சும் பாடல்.

கோத்தும்பீ பதிகத்தின் மற்றொரு பாடலில் குன்றாத செல்வன் என்று மணிவாசகர் இறைவனை அழைக்கின்றார். என்றும் அழியாமல் இருக்கும் பெருமானின் தன்மை என்றும் நிலையான பேரின்பம் தரும் முக்தி நிலை என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமாகவே உள்ளன.இறைவன் ஒருவனாக இருந்தாலும், கவடு=கிளை; உலகினை தொழிற் படுத்தும் பொருட்டு எண்ணற்ற வடிவங்கள் எடுப்பவனாக, அத்தகைய வடிவங்கள் காரணமாக எண்ணற்ற பெயர்கள் உடையவனாக இருக்கும் நிலை, எத்தனையோ கவடு விட்டு என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.

ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு

நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த

என்றாதை தாதைக்கும் எம்மனைக்கும் தம்பெருமான்

குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ

குயிற்பத்து பதிகத்தின் பாடலில் மணிவாசகர் பெருமானை, சீருடைச் செங்கமலத்தில் திகழுருவாகிய செல்வன் என்று குறிப்பிடுகின்றார். செந்தாமரை நிறத்தில் திகழும் திருமேனி என்று பெருமானின் திருமேனி அழகினை சுட்டிக்காட்டி பெருமானை செல்வன் என்று அழைக்கின்றார். ஆர்=ஆத்தி மாலை,ஆத்தி மாலை வெற்றியின் அடையாளமாக கருதப் படுகின்றது. பெருமான் திருப்பெருந்துறையில் தனக்கு திருவடி தீட்சை அருளியது, உபதேசம் அளித்தது,பற்றுகள் (யான் எனது எனப்படும் அகப்பற்று மற்றும் புறப்பற்று) நீங்கிய மனிதனாக தன்னை மாற்றியதை ஆகிய செயல்களை இங்கே குறிப்பிடுகின்றார்.

காருடைப் பொன் திகழ் மேனி கடிபொழில் வாழும் குயிலே

சீருடைச் செங்கமலத்தில் திகழுரு ஆகிய செல்வன்

பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை ஆண்ட

ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீ வரக் கூவாய்

அருள்நிதி தர வரும் ஆனந்த மலையே என்று மணிவாசகர், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தில் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. ஆராத இன்பம் அருளும் மலை என்றும் முத்தி அளிக்கும் மலை என்றும் உணர்த்தும் திருவாசகத் தொடர்களும் நமது நினைவுக்கு வருகின்றன. இறைவனுக்கு உவமையாக மலையினை கூறுவதை பழைய இலக்கியங்களில் நாம் மிகவும் அதிகமாக காணலாம். தொலை தூரத்திலிருந்து பார்க்கும் போது மலை உயரமற்றதாக தோன்றினாலும், நாம் அருகில் செல்லச் செல்ல மலையின் உயரத்தை உணர்கின்றோம். மலை என்பது நுனி சிறுத்தும் அடி பெருத்தும் காணப்பட்டாலும்,நம்மால் காணப்படும் பகுதியை விடவும் பல மடங்கு பெரிய பகுதி நமது கண்களுக்குத் தென்படாமல் பூமியின் உள்ளே புதைந்து கிடப்பதையும் நாம் உணரவேண்டும். மலையின் அருகே செல்லச் செல்ல, மலையின் உயரத்தை நாம் உணர்வது போன்று, இறைவனின் அருகில் நாம் செல்லச் செல்ல,இறைவனது பெருமையை நாம் உணர்கின்றோம். மேலும் மலை நமக்கு பல அரிய மூலிகைகளையும் செல்வங்களையும் அளிக்கின்றது. அது போன்று இறைவனும் நமக்கு பல விதங்களிலும் அருள் புரிகின்றான். மேலாகப் பார்த்தால் மலையில் செல்வங்கள் உள்ள நிலை நமக்கு தெரியாமல் இருப்பது போன்றி, இறைவன் நமக்கு புரியும் நன்மைகளையும் நாம் சிந்தித்தால் தான் விளங்கும். மலை பருவ காலங்களுக்கு ஏற்ப தனது தன்மையை மாற்றிக் கொள்கின்றது. ஆனால் இறைவன் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதால் ஆனந்த மலை என்று கூறுகின்றார். மலையின் பெரும்பகுதி பூமிக்குள்ளே மறைந்து இருப்பது போன்று, இறைவன் நமக்கு அளிக்கும் ஆனந்தமும், நமது மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கிலும் நிரம்பியும், அதற்கு மேலும் விரிந்து நம்மை ஆட்கொள்ளும் அளவில் உள்ளது. சங்கநிதி பதுமநிதி போன்று செல்வங்களை ஒரு பொருட்டாக கருதாத அடியார்கள், இறைவனின் கருணையை மிகவும் பெரிதாக மதித்து அதனை வேண்டி நிற்கின்றனர். அந்த கருணையை பெரிய செல்வமாக மதித்து அருள்நிதி என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர்த் திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழவெழ நயனக் கடிமலர் மலர மற்று அண்ணலம் கண்ணாம்

திரள் நிரை அருபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

அருள்நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி எழுந்தருளாயே

அலைகடல் என்றும் பெருமானை மேற்கண்ட பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். அளவற்ற ஆழமும் எல்லையற்ற பரப்பும் கொண்டுள்ள கடல், தனது ஆழத்தில் முத்து பவளம் ஆகிய விலை மதிப்பற்ற பொருள்களை அடக்கியுள்ளது. மூச்சினை அடக்கி, பயிற்சி செய்து கடலுள் அழுந்துவோர் முத்து மணி பவளம் ஆகியவற்றை எடுத்து வருகின்றனர். அது போன்று நிலையான அமைதி, எல்லையில்லா ஆனந்தம், வீடுபேறு ஆகிய செல்வங்கள் இறைவனாகிய கடலின் ஆழத்தில் உள்ளன. ஒன்றிய சிந்தனையுடன் இறைவனை வழிபாட்டு வணங்கும் அடியார்களுக்கு, இந்த மூன்றையும் அளிப்பதற்கு இறைவன் சித்தமாக உள்ளதால், இறைவனை கடலே என்றும் அழைக்கின்றார். பொதுவாக கடலும் மலையும் அளவிட முடியாத பொருளாக இருப்பதையும் நாம் காண்கின்றோம். அது போன்று இறைவனும் அளவிட முடியாத பண்பினையும் தன்மைகளையும் உடையவன் என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது

உயிர்கள் விரும்புகின்ற உயர்ந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடைய பெருமானை, செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே என்று மாணிக்கவாசகர் பிடித்தபத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் அழைக்கின்றார். நாம் அவனது திருவடி பால் வைக்கும் அன்பே சிவமாக மிளிர்கின்றது என்பதை மணிவாசக பெருமானார் பிடித்த பத்து பதிகத்தில் கூறுகின்றார். அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்கவேண்டும் என்றால், நாம் சிவபிரான் பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும் போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை=பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை; சுருக்கும்=வீணாக்கும்: பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயப்பட்டது.இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அடிகளார் இந்த பாடலில் அழைக்கின்றார். அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை கொண்டுள்ள தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக்கொள்வதை நாம் உணரலாம்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

பிடித்தபத்து பதிகத்தின் மற்றொரு பாடலிலும், மணிவாசகர் பெருமானை செல்வமே என்று அழைக்கின்றார். இந்த பாடலில் அடிகளார், தக்க நேரத்தில் தனது குழந்தைக்கு பாலினை நினைந்து ஊட்டும் தாயினும் பரிந்து உதவி செய்பவன் சங்கரன் என்று கூறுகின்றார். குழந்தையின் உடல் உரம் பெறுவதற்காக தாய், தனது குழந்தைக்கு காலம் தவறாமல் பால் அளித்து வளர்க்கின்றாள். அழியக் கூடிய உடலினை விடவும் அழியாத தன்மை படைத்த உயிர் முக்கியம் வாய்ந்தது அல்லவா. அதனால் தான், உயிருக்குத் தேவையான ஞானத்தைத் தரும் பெருமானை, தாயினும் சாலப் பரிந்து உதவி செய்யும் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். தனது உயிர் உரம் பெறுவதற்காக இறைவன் தனது உள்ளத்தில் இருந்த இருளினை அகற்றி ஞானத்தை ஏற்படுத்தி ஒளி பெருக்கியதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் உள்ளொளி மட்டுமா பெருக்கினான், அவரது ஊனினை உருக்கினான், உள்ளத்தில் அழிவில்லாத ஆனந்தம் ஊறி தேன் போன்று தித்திக்குமாறும் செய்தான். இவ்வாறு அருள் புரிந்த பெருமான், தான் செல்லுமிடமெல்லாம் வந்ததாக மணிவாசகர் கூறுகினார். இவ்வாறு பக்குவபடுத்தப் பட்ட மணிவாசகரின் உள்ளம், அந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க அவருடனே திரிந்த சிவபெருமானை தான் கண்டு கொண்டு அவரை இறுகப் பிடித்து கட்டியதாக இந்த பாடலில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் எட்டு பாடல்களில், மணிவாசகர் இறைவனை செல்வமே என்று பெருமானை அழைக்கின்றார்.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருகி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

திருவாசகம் பிடித்தபத்து பதிகத்தின் மற்றொரு பாடலும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது இந்த பாடலில் (8.37.4) பெருமானை அளிந்ததோர் கனி என்று மணிவாசகர் அழைக்கின்றார். அளிந்ததோர் கனி=பக்குவமாக கனிந்த பழம்; பெருமானை ஞானவொளி வீசும் சுடராகவும், அவனது அருளை சுடர் தரும் ஒளிக்கும் ஒப்பிட்டு கூறுகின்றார். பெருமானுக்கும் சுடருக்கும் அடிப்படையில் ஒரு வேற்றுமை உள்ளது. உலகத்தில் உள்ள சுடர்கள் அனைத்தும் ஒளியைத் தந்தாலும், அதன் அருகினில் செல்லும்போது நாம் வெம்மையை உணர்கின்றோம். ஆனால் ஒளிச்சுடராகிய இறைவனின் அருகில் நாம் சென்றால்,இன்பத்தை உணர்கின்றோம். எனவே தான் அருளுடைச் சுடர் என்று கூறுகின்றார். பக்குவப்பட்ட கனி போன்று தன்னை நினைக்கும் அடியார்களின் மனதினில் சிவானந்தத்தை உண்டாக்கி, அதனை அனுபவிக்கும் போகத்தையும் தருகின்ற பெருமான் என்றும், கடுமையான தவங்கள் புரிவோருக்கும் தலையாய தலைவனாக திகழும் இறைவன் என்றும் முதலடியினில் கூறுகின்றார். ஆய கலைகள் அறுபத்து நான்காக உள்ள இறைவன், ஒவ்வொரு கலையும் ஒரு பயனைத் தரும் வண்ணம் அமைத்துள்ளான். கலைகளின் இருப்பிடமாக உள்ள இறைவன், தன்னை அணுகும் அடியார்களுக்கு மெய்ப்பொருளின் தன்மையை உணர்த்தும் மெய்ஞானத்தை அளிக்கின்றார். இறைவனை நாம் எவ்வளவு புகழ்ந்தாலும் அது முற்றுப்பெறாத புகழாகவே இருத்தலின்,புகழினைக் கடந்தவன் என்று அழைக்கின்றார். அறிவினால் அறியப்படாமால் உணர்வினால் அறியப்படுவதால், இறைவனை போகமே என்று விளிக்கின்றார்.பொதுவாகவே, யோகத்தில் ஆழும் மனிதர்களின் முகத்தினில் தனி ஒரு பொலிவினை நாம் உணர்கின்றோம். அனைத்து யோகிகளுக்கும் முன்னோடியாக இருக்கும் பரமயோகியின் பொலிவினை நம்மால் அளக்கமுடியுமா. தெருள்=மயக்கம். அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலத்தால் சூழப்பட்டு, தடுமாறும் மனிதர்களின் சிந்தையுள் புகுந்து செம்மைப்படுத்தி, தெளிவினை ஏற்படுத்தும் திறன் பெருமான் ஒருவனுக்கே உண்டென்பதால், செல்வன் என்று அழைக்கும் மணிவாசகர், தான் அறியாமை ஆகிய இருளில் ஆழ்ந்திருந்தாலும், இறைவன் பால் தான் கொண்டுள்ள நம்பிக்கையைப் பற்றுக்கோடாகக் கொண்டு இறைவனை நெருங்கியதாக கூறுகிறனர். இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம், இறைவனை நாம் நெருங்கவேண்டும் என்றால், அவன் பால் நம்பிக்கை வைத்து அன்புகொண்டு அவனைப் புகழவேண்டும் என்பது உணர்த்தப் படுகின்றது.

அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க்கு அரசே

பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே

தெருளிடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே

இருளிடத்து உன்னை சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்துப் பாடலில் (9.4.7) திருமாளிகைத் தேவர், தில்லைச் செல்வன் என்று பெருமானை அழைக்கின்றார்.தேறல்=தேன்; மிகுந்த மகிழ்ச்சியுடன் தில்லை அம்பலத்தில் நடனமாடும் பெருமான், தனது அடியார்களின் மனதினிலும் தேன் போன்று இனிய உணர்வினை ஏற்படுத்துகின்றார் என்று கூறுகின்றார். அள்ளல்=சேறு, இங்கே நரகக்குழி; அவியா=அழியாத, குறையாத; பாவப்பெருக்கர்=நாள்தோறும் பாவங்களை பெருக்கிக் கொள்ளும் மனிதர்கள்; தில்லைச் செல்வன் பால் அன்பு செலுத்தி அவனை வணங்காத மாந்தர்கள், பக்குவமற்று சுருங்கி காணப்படும் மனதினை உடையவர்கள் என்றும், கொடுநரகக் குழியில் வீழ்வதற்கு வழி தேடிக் கொள்கின்றனர் என்றும், மேலும் மேலும் பாவங்களை பெருக்கிக் கொள்கின்றனர் என்றும் குறிப்பிடும் திருமாளிகைத் தேவர் அத்தகையோரை, தான் காணமாட்டேன் என்றும் அவர்களுடன் பேச மாட்டேன் என்றும் கூறுகின்றார்.

உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அந்தேறல் மாறாத்

திருக்குறிப்பு அருளும் தில்லைச் செல்வன் பால் செல்லுஞ் செல்லில்

அருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியாப் பாவப்

பெருக்கரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே

தில்லைச் சிதம்பரம் மீது அருளிய பாடலில் புருடோத்தமநம்பி (ஒன்பதாம் திருமுறை, திருவிசைப்பா), பெருமான் பால் காதல் கொண்டுள்ள பெண்ணின் ஏக்கத்தை விவரிக்கையில், பெருமான் அருள் புரியாவிடின், அவள் உயிர் வாழ்வது அரிது என்று உணர்த்துகின்றார். நீ தரித்திருக்கும் புலித்தோல் ஆடை மற்றும் உனது தூக்கிய திருவடி ஆகியவற்றின் அழகினைக் கண்டு உன்பால் காதல்கொண்டுள்ள இந்த பெண், பிரிவாற்றாமையால் ஏங்கி உடல் மெலிந்து தனது வெண்சங்கு வளையல்களை இழந்துள்ளாள். அவளது தனிமைத் துயரினை ஒரு கணம் நினைத்துப் பார்த்து, அவள் மேல் நீ இரக்கம் கொள்ளாவிடில்,ஏக்கத்தினால் அவள் இறப்பது உறுதி என்று உணர்த்தும் பாடல். இந்த பாடலில் அவர், திருச்சிற்றம்பலத்தில் உறைகின்ற எங்கள் செல்வனே என்று பெருமானை அழைக்கின்றார். பெருமான் பால் காதல் கொண்ட தலைவியாக தன்னை உருவகித்துக் கொண்டு, தனது உணர்வுகளை இந்த பாடலில் நம்பி வடிக்கின்றார்.

சேயிழையர்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வா

தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன்

பாயிரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொற்பாதமும் கண்டே

இவள் இழந்தது சங்கம் ஆவா எங்களை ஆளுடை ஈசனேயோ

இதே பதிகத்தின் மற்றொரு பாடலிலும் தில்லையம்பலத்துச் செல்வன் என்று குறிப்பிடுகின்றார். வண்டு பஞ்சமப் பண்ணில் இசைப்பதாக அவர் இங்கேகூறுகின்றார். சிவபிரானை தலைவனாக நினைத்து காதல் கொண்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை விளக்கும் விதமாக அமைந்த பாடல் இது. வண்டுகள்முரலும் பஞ்சமப் பண், மாலை நேரம், செண்பக மாலை ஆகியவை காதலனின் பிரிவால் ஏற்பட்ட வருத்ததை மேலும் பெருக்குவதால் தனது உடல்மெலிவதாக கூறும் நாயகி, சிவபிரானின் வரவு மட்டுமே, தனது வருத்தத்தை நீக்கும் என்றும், அவன் அதுவரை வராத காரணத்தால், தனது ஏக்கம் தனதுஉயிரை நீக்கும் அளவுக்கு கொடியதாக உள்ளது என்றும் தலைவி கூறுவதாக அமைந்த பாடல். தனது காதலன் சிவபெருமான் ஒருவன் தான் தன்னைஅஞ்சேல் என்று தேற்றத் தகுதி வாய்ந்தவர் என்றும் தலைவி இங்கே கூறுகின்றாள்.

வாரணி நறுமலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை

வாரணி வனமுலை மெலியும் வண்ணம் வந்துவந்திவை நம்மை மயக்குமாலோ

சீரணி மணி திகழ் மாடமோங்கு தில்லையம்பத்து எங்கள் செல்வன் வாரான்

ஆரெனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் என்றன் ஆதரவே

பொழிப்புரை:

சனகாதி முனிவர்களுக்கு அவர்களின் ஐயப்பட்டினை நீக்கும் பொருட்டு, கல்லால மரத்தின் நிழலில் தென்முகக் கடவுளாக அமர்ந்த பெருமானே, கரும்பு வில் ஏந்திய மன்மதனின் அழகான உடல் மற்றவர்களின் கண்களுக்கு தெரியாத வண்ணம் அவனது உடலினை, தனது நெற்றிக்கண்ணை விழித்து எரித்தவனே,நல்லவர்கள் போற்றித் தொழும் வண்ணம் நாகேச்சர நகரினில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, செல்வனே என்று உன்னை அழைத்து தொழும் அடியார்களைப் பிணித்துள்ள வலிமை வாய்ந்த வினைகளும் தேய்ந்து முற்றிலும் அழிந்துவிடும்.

பாடல் 4:

நகுவான் மதியோடு அரவும் புனலும்

தகுவார் சடையின் முடியாய் தளவம்

நகுவார் பொழில் நாகேச்சுர நகருள்

பகவா என வல்வினை பற்றறுமே

விளக்கம்:

நகு=விளங்குகின்ற; புனல்=கங்கை நதி; தகு=தகுந்த; வார்சடை=நீண்ட சடை; தளவம்=முல்லை மலர்கள்; பகவன்=ஒப்பற்ற ஆறு தெய்வீக குணங்களை உடையவன்; பகவன் என்ற சொல்லுக்கு ஆறு விதமான குணங்களை உடையவன் என்று சிவக்கவிமணி விளக்கம் அளிக்கின்றார். ஐஸ்வர்யம், வீரம், புகழ்,செல்வம், ஞானம், வைராக்கியம் ஆகிய குணங்களின் தொகுப்பு பகம் என்று அழைக்கப்படுகின்றது, பகவன் என்ற இந்த சொல் பகவான் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் என்றும் சிலர் கருதுகின்றனர். பகவான் என்று கீதையில் வரும் சொல்லுக்கு பராசர முனிவர் ஆறு சிறந்த குணங்கள் உடையவன் என்று பொருள் கூறுகின்றார். முழு வலிமை, முழுதான புகழ், முழுமையான செல்வம், முழுமையான அறிவு, முழுமையான அழகு மற்றும் முற்றும் துறந்த தன்மை என்பவையே அந்த ஆறு குணங்கள் என்று கூறுவார்கள். தன்வயத்தன் ஆதல், முதல் இல்லாது ஆதியாக இருத்தல், உருவம் அற்றவனாக இருத்தல்,எல்லா நலன்களும் உடையவனாக இருத்தல், எங்கும் பரவி இருத்தல், உலகில் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருத்தல் ஆகிய இந்த ஆறு செயல்களை உடையவன் என்றும் கூறுவார்கள். இந்த ஆறு செயல்களின் தன்மையை நாம் உணர்ந்தால், இந்த ஆறு தன்மைகள் கொண்டவன் பெருமான் ஒருவனே என்பதை நாம் அறிந்து கொள்வோம். எனவே பகவன் என்ற சொல் பெருமான் ஒருவனுக்கே உரிய பெயர் என்பதை நாம் உணர்வோமாக. இந்த ஆறு குணங்களை உடைய இறைவன் பகவன் என்று அழைக்கப் படுகின்றான். பகவான் என்ற சொல் திருமுறைப் பாடல்களில் எங்கும் காணப்படவில்லை; அதற்கு பதிலாக பகவன் என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. பகவன் என்று பெருமானை குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.67.4) திருஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். நறவம்=குருதி, இரத்தம்;பரமன்=கடந்தவன்; பகவன்=ஆறு இறை குணங்கள் உடையவன்; பரமேச்சுவரன்=அனைத்து தேவர்களுக்கும் தலைவன்; உரம்=வலிமை; உலறு கோட்டு=வற்றிய கிளைகள்; சுடுகாட்டில் உள்ள மரம் உலர்ந்து காணப்படும் தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. நறவம் என்ற சொல் பொதுவாக கள்,தேன் ஆகியவற்றை குறிப்பிடும் என்றாலும், இங்கே பெருமான் ஏற்கும் உணவினை, அதாவது பலியை குறிப்பிடும் வண்ணம் கையாளப் பட்டுள்ளது

உரம் மன்னு உயர் கோட்டு உலறு கூகை அலறும் மயானத்தில்

இரவில் பூதம் பாட ஆடி எழிலார் அவர் மேலைப்

பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும்

பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.121.1) ஒன்றில் சம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். நடைமரு திரிபுரம்=இயங்கும் தன்மை கொண்ட கோட்டைகள், பறக்கும் கோட்டைகள்; பொதுளிய=செறிந்த, அடர்ந்த; தீயினை உமிழும் படைக்கலம் என்று பெருமானின் மழுப்படையினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மேகங்கள் தவழும் வண்ணம் மருதமரங்கள் உயர்ந்து காணப்படுகின்றன என்று குறிப்பிட்டு சம்பந்தர் தலத்தின் நீர் வளத்தினையும் நில வளத்தினையும் இங்கே கூறுகின்றார்.

நடைமரு திரிபுரம் எரி உண நகை செய்த

படை மரு தழல் எழ மழு வல பகவன்

புடை தரு மருது இளமுகில் வளம் அமர் பொதுளிய

இடைமருது அடைய நம் இடர் கெடல் எளிதே

பூந்தராய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.1.11) இறைவனை பகவனார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனைப் போற்றி பாடிய இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாட வல்ல அடியார்கள் தங்களின், தீவினைகள் அகன்று நல்வினைகள் மட்டுமே உடையவர்களாக இருப்பார்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல் வாய்ப்

புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய்ப்

பகவனாரைப் பரவு சொன்மாலை பத்தும் வல்லார்

அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவாரே

கொச்சைவயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.5), பகவன் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் இனியன அல்லாதவற்றையும் இனியதாக ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று கூறுகின்றார். இந்த தன்மைக்கு ஆலகால விடத்தை உட்கொண்டதும், பாம்பினை அணிகலனாக ஏற்றதும் சான்று ஆகும். இந்த பாடலில் குபேரனை தோழனாக இறைவன் கொண்டுள்ள தன்மை குறிப்பிடப் படுகின்றது. அந்நாளில் சீர்காழி நகரில் இருந்த மறையவர்கள் வளர்த்த வேள்வியிலிருந்து எழுந்த புகை வானளாவச் சென்று வானையும் சந்திரனையும் மறைத்ததாக கூறுகின்றார். குனிமதி=வளைந்த பிறையை உடைய சந்திரன்.

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேரனோடு தோழமைக் கொள் பகவன்

இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன் இடம் கொள் பதிதான்

முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவிக்

குனிமதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே

இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.117.6) பாடலில் சம்பந்தர் இறைவனை பகவன் என்று அழைக்கின்றார். பிறைமதியைச் சூடிய வண்ணம் கூத்தாடும் பெருமான் வினைகளை அழிக்கும் வல்லமை உடையவர் என்றும், அனைவர்க்கும் மேலானவன் என்றும் தூய்மையான ஆறு குணங்களை உடையவன் என்றும் கூறும் சம்பந்தர், இரும்பை மாகாளத்தில் உள்ள மறையவர்கள் இறைவனைத் தொழுது வணங்கியதை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். குறைவதாய=கலைகள் குறைந்த; குனித்தான்=கூத்தாடிய பெருமான்; பறைவது=அழிப்பது;

குறைவதாய குளிர் திங்கள் சூடிக் குனித்தான் வினை

பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை

இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை மாகாளம்

மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே

பிரமபுரத்தின் மீது அருளிய பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67) ஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானின் திருவடிகள் பிரகாசமான நாகமணி போன்று ஒளி வீசுவதாகவும் விரிந்த செந்தாமரை மலர் போன்று மென்மையாகவும் அழகாகவும் இருப்பதாக கூறுகின்றார். முகம் என்ற சொல் பார்வை என்ற பொருளில் இங்கே வருகின்றது. பெருமான் வாய் திறந்து ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தவாறே தனது திருவருள் நோக்கத்தால் அருள் புரிந்து சனகாதி முனிவர்களுக்கு வேதங்களுக்கு விளக்கம் அளித்தார் என்று கூறுகின்றார். நகமணி=நாகமணி; முகை-விரிந்த

பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு

அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய பகவன் இடமாம்

பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள நிகரில் இமையோர்

புக உலகு புகழ எழில் திகழும் அலர் பெருகு புகலி நகரே

சண்பை என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.5) திருஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். கெழுவு=பொருந்திய; பணம்=பண்+அம்=அழகிய பண், கேட்பதற்கு இனிய பண்; அணங்கு=தெய்வப் பெண்ணாகிய பார்வதி தேவி; ஆகம்=உடல்; அன்பர்=தம்மிடம் அன்பு செலுத்தும் அடியார்கள் பால் கருணை கொண்டு உதவி புரிபவன்;இணங்கெழுவி=இணங்கு+எழுவி; ஒன்றோடு ஒன்று ஒத்த கொடிகள் அருகருகே நடப்பட்ட நிலை; கொடிமாடம்=கொடிகளை உடைய மாடங்கள்; நீடு மதில்=நீண்டு உயர்ந்த மதில்கள்; விரை=நறுமணம்; புறவு=புறாக்கள்; தணங்கெழுவி=தண்+அம்+ கெழுவி, மகிழ்ச்சியால் உள்ளம் குளிர்ந்த புறாக்கள் ஏற்பட்ட ஒன்று கூடி உலாவும் இடம்; ஏடலர் கொள்=இதழ்கள் விரிந்த தாமரை மலர்கள்; சீர்காழி நகரத்திற்கு புறவம் என்ற பெயரும் உள்ளது. புறாவாக வடிவெடுத்து அக்னி பகவானும் கழுகாக வடிவெடுத்து இந்திரனும், சோழ மன்னன் சிபியின் கொடைத் தன்மையை சோதனை செய்ததால் விளைந்த பாவத்தை நீக்கிக் கொள்ளும் பொருட்டு, அக்னியும் இந்திரனும் வழிபட்ட தலம் என்பதால் புறவம் என்ற பெயர் வந்தது. பண்டைய நாளில் தங்களது இனத்தைச் சார்ந்த புறா ஒன்றினுக்கு அருள் புரிந்த பெருமான் உறைகின்ற இடம் என்பதால், புறாக்கள் மகிழ்ச்சியுடன் உலவுகின்றன என்று சுவையாக விளக்கம் அளிக்கப் படுகின்றது.

பணங்கெழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்

அணங்கெழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடமாம்

இணங்கெழுவி ஆடு கொடிமடல் நீடு விரையார் புறவெலாந்

தணங்கெழுவி ஏடலர் கொடு தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே

தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் கடைப் பாடலில் (6.2.11) அப்பர் பிரான் பகவனார் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.பாரிடங்கள்=பூத கணங்கள்; பெருமான் இடையில் தான் உடுத்தியுள்ள பட்டாடையின் மேல் கச்சாக பாம்பினை இறுகக் கட்டிக் கொண்டும், பூத கணங்கள் சூழவும், தீயினைக் கையில் ஏந்தியவாறும், நடனக் கலையில் வல்லவராக நடனம் செய்கின்றார் என்று பாடலின் முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், அந்த பெருமானை தில்லை நகர் சென்று காணுமாறு நம்மை பணிக்கின்றார். அவ்வாறு நடனம் ஆடும் பெருமானை தேடிக் கொண்டு செல்லும் நாம் அவனை அடையாளம் கண்டு கொள்வதற்காக, அவனது அடையாளங்களை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒளியுடன் விளங்கும் சூலம், மார்பினில் திகழும் வெண்ணூல், வேதம் ஓதும் தன்மை, கையில் வீணை மற்றும் கட்டங்கம் என்று குறிப்பிட்டு இறுதியில் வேறு எவருக்கும் இல்லாத நீலக்கறை படிந்த கழுத்து என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். விட்டு=ஒளிவீசும்; சிட்டர்=மேலானவர், நடனக் கலையில் வல்லவர் என்று பொருள் கொள்ளவேண்டும்.அருவுருவமாக, இலிங்க வடிவத்தில் அனைத்து தலங்களிலும் காட்சி அளிக்கும் பெருமானின் அடையாளங்கள் எதற்காக திருமுறை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன என்ற ஐயம் நமக்கு எழலாம். இந்த அடையாளங்கள், பெருமானின் கருணை, வீரச்செயல்கள் மற்றும் அவரது தன்மை ஆகியவற்றை நமக்கு உணர்த்துவதால், அந்த அடையாளங்களை நமது மனக் கண்ணினால் கண்டு, பெருமானின் தன்மையை நாம் சரிவர புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நால்வர் பெருமானர்களின் விருப்பம்.

பட்டுடுத்து தோல் போர்த்துப் பாம்பு ஒன்று ஆர்த்துப் பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம்

சிட்டராய் தீ ஏந்திச் செல்வார் தம்மைத் தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இந்நாள்

விட்டு இலங்கு சூலமே வெண்ணூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே

கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே

கொட்டையூர் மற்றும் வலஞ்சுழி தலங்களின் மீது அருளிய பதிகத்தின் (6.73.7) பாடலில் அப்பர் பிரான், பெருமானை பகவன் என்று குறிப்பிடுகின்றார்.அணவுதல்=எட்டுதல், எட்டுதற்கு அரியவனாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பணம்=பாம்பின் படம். அவனது அருளின் உதவியாலன்றி எட்டுதற்கு அரியவனாக உள்ளவனும், இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கியவனும், என்றும் அழியாத தன்மை உடையவனும், உலகங்கள் எங்கும் பரந்து நிற்பவனும், அழகான படத்தையும் பெரிய மணியினையும் கொண்டுள்ள பாம்பினை அணிகலனாக உடையவனும், பண்டரங்க கூத்து எனப்படும் கூத்தினை ஆடுபவனும், அளவற்ற செல்வம் முதலான ஆறு தன்மைகளை கொண்டவனும், மணலினை வாரிக் கொண்டு வரும் பொன்னி நதியின் கரையில் அமைந்த வலஞ்சுழி தலத்தின் இறைவனும், திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பும் அதிகாரத்தினை வரமாக அருளுபவனும்,நற்குணங்கள் வாய்க்கப் பெற்ற அடியார்கள் வாழும் கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக, என்று தனது நெஞ்சத்திற்கு கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பதிகம்.

அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவினாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்

பணமணி மாநாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்

மணல் வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்

குணமுடை நல்லடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.92.2) அப்பர் பிரான் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். பல்லாடு தலை=பற்கள் வெளியே தோன்றும் பிரம கபாலம்; என்பறாக் கோலம்=எலும்பு மாலைகள் நீங்காமல் எப்போதும் அணிந்திருக்கும் தன்மை;

பல்லாடு தலை சடை மேல் உடையான் தன்னைப் பாய்புலித் தோல் உடையானைப் பகவன் தன்னை

சொல்லோடு பொருளனைத்தும் ஆனான் தன்னைச் சுடருருவில் என்பறாக் கோலத்தானை

அல்லாத காலனை முன் அடர்த்தான்தன்னை ஆலின்கீழ் இருந்தானை அமுது ஆனானை

கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது பாடிய பதிகத்தில் கருவூர்த் தேவர் பெருமானை பகவன் என்று குறிப்பிடும் பாடலை (9.13.5) நாம் இங்கே காண்போம். சுருதி=வேதம்; பருதி= சூரியன்; வேதங்கள் ஓதும் பிரமனாகவும், திருமாலாகவும், சுவர்க்க லோகத்தை ஆளும் இந்திரனாகவும், வானில் உலவும் சூரியனாகவும், உள்ள பெருமான், மூன்று கண்களை உடையவனாக, சிறந்த ஆறு குணங்களை உடையவனாக, அனைத்து உடலிலும் உள்ளே இருக்கும் உயிரினுக்கு அமுதம் போன்று இனியவனாகவும் இருப்பதாக இங்கே கூறுகின்றார். இவ்வாறு இருக்கும் பெருமான், கருதுவார் கருதும் உருவமாகவும் இருக்கின்றான் என்று பாடலை முடிக்கின்றார்

சுருதி வானவனாம் திருநெடுமாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம்

பருதி வானவனாம் படர்சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம்

எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனாம் பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே

திருமந்திரம் ஆதார ஆதேயம் தந்திரத்தில், பெருமானை பகவன் என்று குறிப்பிடும் திருமூலர், பிராட்டி என்றும் பகவானுடன் பிரியாது நிற்கும் நிலையினை உணர்த்துகின்றார். அத்தகைய சக்தியை, தமது உள்ளத்தில் நிலை நிறுத்தி வழிபடும் அடியார்களின் உள்ளங்கள் அழுக்கு நீங்கிய நிலையில் உள்ள வெண்ணிற ஆடையினைப் போன்று, ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களும் நீங்கப் பெற்று தூய்மையாக விளங்கும் என்று கூறுகின்றார்.

மாது நல்லாளும் மணாளன் இருந்திடப்

பாதி நல்லாளும் பகவனும் ஆனது

சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்

வேதனை தீர்தரும் வெள்ளடையாமே

மாகேசுர பூஜை என்ற தந்திரத்தில் வரும் பாடலில் திருமூலர், பெருமானை பகவன் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். தமது உள்ளமே பெருங்கோயிலாக திகழ்வதை உணர்ந்து கொண்டு, தமது உள்ளத்தில் உள்ள சிவனை போற்றி வழிபடு செய்யும் அடியார்கள் நடமாடும் கோயிலாகத் திகழ்கின்றனர் என்றும், அத்தகைய அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு இறைவனைச் சென்று சாரும் என்று இங்கே திருமூலர் குறிப்பிடுகின்றார்.ஆனால் திருக்கோயிலில் உள்ள பெருமானுக்கு செய்யப்படும் வழிபாடு, நடமாடும் உயிர்களின் உள்ளே இருக்கும் சிவனைச் சென்று சாராது என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு பெருமானை நோக்கி செய்யப்படும் வழிபாட்டினும் சிறந்தது என்பதை திருமூலர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். படமாடக் கோயில்=கொடிகள் ஆடும் திருக்கோயில்கள்; நடமாடும் கோயில்=நடமாடும் உயிர்களின் உள்ளத்தில் இணைந்து நிற்கும் பெருமான் உள்ள இடம்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்

படமாடக் கோயில் பகவற்கு அதாமே

பொழிப்புரை:

வானத்தில் பொலிந்து விளங்கும் பிறைச் சந்திரனையும் பாம்பினையும் கங்கை நதியினையும் ஒருங்கே தனது நீண்ட சடையில் பொருந்தும் வண்ணம் வைத்தவனே என்றும் வாய் திறந்து வெண்மையான பற்கள் தெரியும் வண்ணம் உள்ள சிரிப்பினைப் போன்று காணப்படும் விரிந்து மலர்ந்த முல்லை மலர்கள் விளங்கும் நீண்ட சோலைகள் சூழ்ந்த நாகேச்சர நகரத்தின் திருக்கோயிலில் விளங்கும் பெருமானே, ஒப்பற்ற ஆறு தெய்வீக குணங்கள் உடையவனே என்றும் குறிப்பிட்டு இறைவனைத் தொழும் அடியார்களை, அந்நாள் வரை பற்றியிருந்த வினைகள், அந்த அடியார்களை விட்டு நீங்கிவிடும். .

பாடல் 5:

கலைமான் மறியும் கனலும் மழுவும்

நிலையாகிய கையினனே நிகழும்

நலமாகிய நாகேச்சுர நகருள்

தலைவா என வல்வினை தானறுமே

விளக்கம்:

கலைமான் மறி=ஆண் மான் கன்று; மான் கன்று, மழு ஆயுதம் மற்றும் தீப்பிழம்பு ஆகியவை பெருமானை விட்டு என்றும் நீங்காத தன்மை இங்கே கூறப்பட்டுள்ளது. பெருமானை கொல்வதற்காக வெறி பிடித்த மான் கன்றும் வலிமை வாய்ந்த மழு ஆயுதமும் தாருக வனத்து முனிவர்களால் பெருமான் மீது ஏவப்பட்டன. பொதுவாக மான் ஓரிடத்தில் நிலையாக நிற்காமல், எங்கும் திரிந்து கொண்டே இருக்கும் பண்பினை உடையது. எனினும் சிவபெருமானைச் சென்றடைந்த மான் கன்று அவரை விட்டு நீங்காமல் அவரது கைகளில் தங்கியுள்ளது. தன்னைத் தாக்க வந்த மழு ஆயுதத்தைத் மிகவும் இலாகவமாக தனது கையில் தாங்கிய பெருமான், அந்த மழு ஆயுதத்தை எவர் மீதும் பயன்படுத்த வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை. தான் ஐந்து தொழில்களையும் புரியும் தன்மையை உணர்த்தும் வண்ணம், ஏந்தியுள்ள தீச்சுடர் அவரது இடது கையினை விட்டு அகலவில்லை. மான் பிரியாது இருக்கும் தன்மை, தனது அடியார்களின் அலை பாயும் மனதினையும் ஒரே கருத்தினில் ஒன்றச் செய்யும் ஆற்றல் பெருமானுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் வகையிலும் அமைந்துள்ளது என்று கூறுவார்கள். இந்த பொருட்களை நிலையாகத் தனது கையில் பெருமான் ஏந்தியுள்ளார் என்ற தகவல் மூலம், திருஞானசம்பந்தர்,பெருமான் ஏன் இந்த பொருட்களைத் தனது கையினில் நிலையாக ஏந்தியுள்ளார் என்று நம்மை சிந்திக்க வைத்து, இந்த தன்மையில் உள்ள பின்னணியை உணர்ந்து, பெருமானின் பெருமையை புரிந்துகொள்ள வைக்கும் நேர்த்தியை நாம் உணரலாம்.

இந்த பாடலில், திருஞானசம்பந்தர் நலமாகிய நாகேச்சர நகர் என்று குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பினை சேக்கிழார் தனது பெரிய புராணப் பாடலில்,பரவுவார் பிணிதீர்க்கும் நலம் போற்றி என்ற தொடர் மூலம் குறிப்பிடுவதை, நாம் இந்த பதிகத்தின் பின்னணியில் சிந்தித்தோம். இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாடல்கள், மற்றும் ஏழாவது, எட்டாவது பத்தாவது மற்றும் கடைப்பாடலில், மொத்தம் ஒன்பது பாடல்களில் திருஞானசம்பந்தர், நாகேச்சரத்து இறைவனைப் போற்ற, நமது வினைகள் மாய்ந்துவிடும் என்று கூறுகின்றார். உயிருடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கிக் கொள்வதை விடவும் உயர்ந்த நன்மை வேறேதும் இல்லை அல்லவா. எனவே, நலம் பயக்கும் நாகேச்சர நகர் என்று இந்த பாடலில் உள்ள குறிப்பு மிகவும் பொருத்தமானது. நம்மைப் பற்றியுள்ள வலிமையான வினைகளை நீக்கிக் கொள்வதன் மூலம், நாம் முக்தி உலகம் சென்றடைய தகுதி படைத்தவர்களாக மாறிவிடுகின்றோம்.பெருமானின் புகழினை உணர்த்தும் திருநாமங்களை, அவனது கருணைத் தன்மையை உணர்த்தும் திருநாமங்களை மீனும் மீண்டும் சொல்வதன் மூலம், நாம் உய்வினை அடையலாம் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

ஆண்மான் கன்று, தீச்சுடர் மற்றும் மழு ஆயுதம் ஆகிய மூன்று பொருட்களும் தன்னிடமிருந்து என்றும் பிரியாத வண்ணம், நிலையாக தனது கையில் ஏந்தியுள்ள தன்மை மூலம் தனது பெருமையை உணர்த்தும் சிவபெருமானே, பல நலன்களை நிகழ்விக்கும் நாகேச்சர தலத்தினில் உள்ள திருக்கோயிலில் உறையும் பெருமானே, எனது தலைவனே என்று அழைத்து பெருமானைப் பணிந்து வணங்கி தொழுகின்ற அடியார்களுடன் வலிமையாக பிணைந்துள்ள வினைகளும் அவர்களை விட்டு நீங்கிவிடும்.

பாடல் 6:

குரையார் கழலாட நடம் குலவி

வரையான் மகள் காண மகிழ்ந்தவனே

நரையார் விடையேறு நாகேச்சுரத்து எம்

அரைசே என நீங்கும் அருந்துயரே

விளக்கம்:

குரை=ஒலி; குலவுதல்=மகிழ்ச்சி அடைதல்; வரையான்=இமயமலையை உடைய அரசன், இமவான்; நரை=வெண்மை நிறம்; அரைசே=அரசே; இடபத்தின் வெண்மை நிறத்தை குறிப்பிட, நரையார் விடை என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன.

பொழிப்புரை:

திருப்பாதத்தில் அணிந்துள்ள வீரக்கழல்கள் ஒலிக்கும் வண்ணம் நடனம் ஆடி மகிழ்பவனே, இமவானின் மகளும் மலைமகள் என்று அழைக்கப் படுபவளும் ஆகிய பார்வதி தேவி கண்டு மனம் மகிழும் வண்ணம் நடனம் ஆடுபவனே, வெண்மை நிறத்தில் விளங்கும் இடப வாகனத்தின் மீது ஏறியவண்ணம் எங்கும் செல்பவனே, நாகேச்சரம் தலத்தில் எங்களது அரசனாக எழுந்தருளும் பெருமானே, என்று பெருமானைப் போற்றி வணங்கும் அடியார்களின், நீக்குதற்கு அரிய துன்பங்களும் நீங்கிவிடும்.

பாடல் 7:

முடையார் தரு வெண்டலை கொண்டு உலகில்

கடியார் பலி கொண்டு உழல் காரணனே

நடையார் தரு நாகேச்சுர நகருள்

சடையா என் வல்வினை தான் அறுமே

விளக்கம்:

கடையார்=இல்லத்தின் வாயில்கள்; காரணன்=முழுமுதற் காரணமாக விளங்குபவன், உலகத்தின் தோற்றத்திற்கும், உலகம் தனது தோற்றம் மற்றும் அழிவு ஆகிய தன்மைகளுக்கு இடையே நிலைத்து நிற்பதற்கும், அழிவதற்கும் மூல காரணமாக இருக்கும் தன்மை; நடை=ஒழுக்கம்; முடையார்=முடை நாற்றம் வீசும்; தவம் செய்த முனிவர்கள் பலரும் சடை வளர்த்ததை நாம் புராணங்களிலிருந்து அறிந்து கொள்கின்றோம். இந்நாளில், பலரும் சடை வளர்ப்பதையும் நாம் காண்கின்றோம். சடை என்பது துறவோர்களின் அடையாளமாக கருதப்படுகின்றது. எனினும் அவர்கள் எவரையும் சடையா என்று நாம் அழைப்பதில்லை. சிவபெருமான் ஒருவரையே சடையா என்று அழைக்கின்றோம். துறவிகளில் முதன்மையான துறவியாக விளங்கும் பெருமான்,இயல்பாகவே பாசங்களைத் துறந்த பெருமான் என்பதால், சடையா என்று அழைக்கப் படுவதற்கு பொருத்தமாக பெருமான் விளங்குகின்றார். இந்த பின்னணியில் தான் பெருமானின் சடை, அவரது ஞானத்தை உணர்த்துவதாக பெரியோர்கள் கூறுகின்றனரோ.

திருவாசகம் அன்னைப்பத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் மணிவாசகர் உமை அன்னையுடன் கூடி இருந்து இல்லறம் நடத்தும் பெருமான், தவ வேடத்துடன் இருப்பதாக கூறுகின்றார். இல்லறமும் துறவும் ஒன்றுக்கொன்று எதிரான நெறிகள், முரண்பட்ட நெறிகள் என்று பலரும் சொல்வதால் எவ்வாறு அவ்வாறு,இந்த இரண்டு கோலங்களும் இணைந்தவராக பெருமான் இருக்க முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழுவது இயற்கையே. இயல்பாகவே ஐந்து புலன்களையும் அடக்கி வென்ற பெருமானுக்கு இல்லறம் துறவறம் இரண்டையும் ஒன்றாக கடைப்பிடிப்பது எளிதான காரியம் தானே. பிச்சை ஏற்பதற்காக தலைவியின் இல்லத்தினுள் புகுந்த பெருமான், பிச்சை மட்டுமா ஏற்றுக்கொண்டு சென்றார்; தலைவியின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டதால் தான்,அவர் சென்றதை நினைத்து தலைவி, அவரை மீண்டும் காண்பது எப்போது என்ற ஏக்கத்துடன் உள்ளம் நைந்தவளாக காணப் படுகின்றாள் என்று தலைவியின் தோழி தலைவியின் அன்னைக்கு உணர்த்தும் பாடல் இது.

தையல் ஓர் பங்கினர் தாபத வேடத்தர்

ஐயம் புகுவரால் அன்னே என்னும்

ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம்

நையும் இது என்னே அன்னே என்னும்

எந்த கோலத்துடன் பெருமான் பிச்சை ஏற்பதற்காக தனது இல்லம் வந்தார் என்று தலைவியின் கூற்றாக அன்னைப்பத்து பதிகத்தில் உணர்த்திய மணிவாசகர், அவ்வாறு பிச்சை கேட்டு தனது இல்லம் வந்த பெருமான், தனது இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர், தனது உள்ளம் நைந்து போனதின் காரணம் தனக்கு புரியவில்லை என்று தலைவி கூறுவதாக சொல்கின்றார். பெருமானின் அழகினில், நற்பண்புகளில், ஆற்றலில் தனது மனதினை பறிகொடுத்த தலைவி, வெகு விரைவில் பெருமானுடன் இணையவேண்டும் என்று விரும்புவதே காரணம் என்று தேவார திருவாசக நூல்களில் காணப்படும் அகத்துறை பாடல்கள் நமக்கு விளக்குகின்றன. நாமும், இந்த பாடல்களில் சுட்டிக் காட்டப்படும் தலைவி போன்று, பெருமான் பால் தீவிரமான காதல் கொண்டு, அவனை அடைவதற்கு விருப்பம் கொள்ள வேண்டும் என்பதையே இந்த பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.

மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம் திங்களை முடிமேல்

கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை

அங்கை ஓடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள் கடலே

ஏன் பற்றற்றவனாக இருக்கும் பெருமான் இவ்வாறு தேவியுடன் எப்போதும் இணைந்து இருப்பவராக காட்சி தருகின்றார் என்ற நமது ஐயத்தினை போக்கும் வண்ணம், திருச்சாழல் பதிகத்தினில் மணிவாசகர் ஒரு பாடலை அருளியுள்ளார். அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுவார். இதே கருத்து திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகரால் உணர்த்தப் படுவதையும் நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.பெருமான் பெண்ணைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டிராவிடில் உலகத்து உயிர்கள் எல்லாம் துறவு மேற்கொண்டு யோகத்தில் புகுவர்; அதனால் உலகம் வளராது நிற்கும். எனவே போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோற்றத்தை நமக்கு பெருமான் நல்குகின்றான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும்.

தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்

பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி

பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்

விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும்.இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான்,உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும்.இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகத்தில் வாழும் பல்வேறு உயிரினங்கள் தொடர்ந்து வளரும் பொருட்டு, அனைத்து உயிர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலில் உணர்த்தப் படுகின்றது. அதே சமயத்தில், மனிதர்கள் தங்களது கடமையை, இனத்தைப் பெருக்கும் கடமையை நெறியான இல்லற வாழ்க்கை வாழ்ந்து முடித்த பின்னர், உலகப் பொருட்களின் மீது வைத்திருந்த பாசத்தை எவ்வாறு துறப்பது என்பதற்கும் முன்மாதிரியாக பெருமான் வாழ்ந்து காட்டுகின்றார்.

பொழிப்புரை:

தசைகள் உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படுவதும், முடை நாற்றம் உடையதும் ஆகிய பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம், உலகிலுள்ள பல இல்லங்களின் வாயில் சென்று பலி ஏற்கும் பெருமானே, உலகம், உலகிலுள்ள பொருட்கள், உலகத்து உயிர்கள் ஆகிய அனைத்தும் தோன்றுவதற்கும் அழிவதற்கும் அத்தகைய தோற்றத்திற்கும் அழிவுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிலைத்து நிற்பதற்கும் முழுமுதற் காரணனாக செயல்படும் பெருமானே,ஒழுக்கம் நிறைந்த அடியார்கள் வாழும் நாகேச்சர தலத்தின் தலைவனே, தலைசிறந்த துறவியாக வாழும் தன்மையை உணர்த்தும் சடையானே என்றெல்லாம் இறைவனைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களுடன் வலிமையாக பிணைந்துள்ள வினைகளும் கெட்டு, அத்தகைய அடியார்களை விட்டு நீங்கிவிடும்.

பாடல் 8:

ஓயாத அரக்கன் ஒடிந்து அலற

நீ ஆரருள் செய்து நிகழ்ந்தவனே

வாயார வழுத்துவர் நாகேச்சுரத்து

தாயே என வல்வினை தான் அறுமே

விளக்கம்:

ஓயாத=இடைவிடாது, இடைவிடாது போர் செய்த அரக்கன் இராவணன்; நொடிந்து=மனம் உடைந்து; ஆரருள்=பூரணமான கருணை; அரக்கன் இராவணன் தனது செய்கைக்கு வருந்தி, பெருமானின் புகழை உணர்த்தும் சாம கீதங்களை பாட, மகிழ்ச்சி அடைந்த பெருமான், அரக்கனுக்கு அருள் புரிந்ததை நாம் அறிவோம். இந்த செய்கையை ஆரருள் என்று இங்கே குறிப்பிடுகின்றார். முதலில், அரக்கனின் உடல் வருத்தத்தை நீக்கும் வண்ணம் கயிலாய மலையின் மீது தான் கொடுத்த அழுத்தத்தை நீக்கிய பெருமான், அதன் பின்னர், ஏதோ பேருக்கு அருள் புரிவதாக அருள் புரியவில்லை. எண்ணற்ற வாழ்நாள் ஒப்பற்ற வீரவாள் இவற்றை அரக்கனுக்கு அளித்து தனது அருள் பரிபூரணமான அருள் என்பதை உணர்த்துகின்றார். இந்த தன்மை தான் இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஓயாது என்ற சொல்லுக்கு தொடர்ந்து பல குற்றங்கள் செய்து வந்த அரக்கன் இராவணன் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. கடுந்தவம் மேற்கொண்டு, அந்த தவங்களின் பயனாக தங்களுக்கு வலிமை சேர்க்கும் வரங்களை பெற்ற அரக்கர்கள் அனைவரும், தங்களது வல்லமையை நிலைநாட்டும் பொருட்டு பலருடன் போருக்கு சென்றதையும், மமதையுடன் திரிந்து பல தீய செயல்கள் புரிந்ததையும் நாம் புராணங்களில் காண்கின்றோம்.அரக்கன் இராவணனும் இவ்வாறு திரிந்ததை, இராமாயணம் உத்தர காண்டத்தில் குறிப்பிடப்படும் பல நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன. இவ்வாறு ஆணவம் மேலிட அரக்கன் இராவணன் தொடர்ந்து செய்தமையும், தான் செய்த குற்றங்களை உணர்ந்து திருந்தாது இருந்த தன்மையும் இங்கே குறிப்பிடப்படுகின்றது என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.

மூன்று வயதுக் குழந்தையாக இருந்த போதே தோணிபுரத்து கோபுரத்தை பார்த்து அம்மையே அப்பா என்று அழுது பெருமானை அழைக்க, அம்மையால் ஞானப் பால் ஊட்டப்பட்ட திருஞானசம்பந்தர், தாயினும் மேலாக பெருமானை கருதுவதில் வியப்பு ஏதும் இல்லை. சிவபிரானை தனது தந்தையாகவும் உமையம்மையை தனது தாயாகவும் வரித்துக் கொண்ட ஞானசம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் (1.50) ஏழாவது பாடலில் தாயும் நீயே தந்தை நீயே என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பல சிவஞானிகள் ஆராய்ந்து உணரும் பெருமான் பால் செல்ல வேண்டும் என்று தனது உள்ளம் விரும்பினாலும், உள்ளத்தை அவ்வாறு செல்ல ஒட்டாமல் தனது உடலில் இருக்கும் ஐந்து புலன்களும் ஒன்று சேர்ந்து தடுக்கும் மாயத்திற்கு தான் அஞ்சுவதாக சம்பந்தர் இந்த பாடலில் கூருகின்றார்.

தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்

ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்

ஆய மாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்

மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே

ஒரு தாய், தனது மகன் செய்யும் குற்றங்களை பொருட்படுத்தாமல், மகன் பால் பாசம் வைத்து அன்பு காட்டுகின்றாள். அத்தகைய தன்மையில் தான் பெருமான், அரக்கனுக்கு புரிந்த அருளும் காணப்படுகின்றது. எனவே தான் பெருமானை தாயே என்று அழைத்தார் போலும். தாயைப் போன்று அருள் புரிபவன் என்றும், தாயினும் மேலானவன் என்றும் குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம். தாயின் தன்மையை உடைய பெருமான் என்று திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.86.4) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் தேய்பிறை வைத்துகந்த சிவன் என்று கூறுகின்றார். ஒற்றைப் பிறையுடன் தான் அழியும் நிலையில் சரணடைந்த சந்திரன் என்பதை உணர்த்தும் வண்ணம் இவ்வாறு கூறுகின்றார். தீ உறவாகிய=தீய வினைகளுடன் உறவு கொண்டுள்ள; ஆக்கை=உடல்; செற்ற= நெருங்கிய, பிணைந்துள்ள; உற்ற என்ற சொல்லினை உலகின் என்ற சொல்லுக்குப் பின்னர் வைத்துப் பொருள் கொள்ளவேண்டும். தீய வினைகளோடு உறவு கொண்டுள்ள உடலும், அந்த உடலினை ஆதாரமாகக் கொண்டுள்ள வினைகளும் நெருங்கி அடர்ந்துள்ள உலகினையும் அந்த உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தாயாகிய தன்மையுடன் பாதுகாக்கும் தலைவனாகிய இறைவனின் திருநாமம் நிலையாக நின்று பொருந்தியிருக்கும் திருநாரையூர் தலத்தினை, உங்களது கைகளை தூக்கித் தொழுவீர்களாக என்று நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

தீ உறவாய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின்

தாயுறு தன்மையாய தலைவன் தன் நாமம் நிலையாக நின்று மருவும்

பேய் உறவாய கானில் நடமாடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல்

தேய் பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே

இந்த கருத்து நமக்கு ஈன்றாளுமாய் (4.94.1) என்று அப்பர் பிரான் பெருமானை அழைத்ததை நினைவுக்கு கொண்டு வருகின்றது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற மொழியினுக்கு ஏற்ப ஈன்றாள் என்று தாயினை முன்னே சொல்லி பின்னர் தந்தையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கூற்றுவனே நேரில் வந்து வருத்துவதைப் போல் தன்னை வருத்திய சூலை நோயினைத் தான் போக்கிக் கொள்ளத் தெரியாமல் தவித்த போது, தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபிரான் தானே உண்மையாக அனைவருக்கும் துணையாக இருந்து உதவுகின்றான். மேலும் நாயனாரின் வாழ்க்கையில், சமணர்களின் சூழ்ச்சிகளிலிருந்து அவர் தப்பியதற்கு சிவபிரானின் கருணை தானே காரணம். எனவே தான், தனக்கு முன்னே தோன்றாவிட்டாலும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். ஏன்றுதல்=தாங்கிக் கொள்ளுதல்.

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்

மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க

ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்

தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே

அருளாளர்கள் பெருமானை தங்களுக்கு மட்டும் தாயாக இருப்பவன் என்று கூறுவதில்லை. வீழிமிழலை பதிகத்தின் பாடலில் (6.50.4) பெருமானை எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற தாயான் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். சேயான்=தொலைவில் உள்ளவன். சங்கரன் என்ற சொல்லுக்கு இன்பம் அளிப்பவன் என்று பொருள்.

தூயானைச் சுடர்ப் பவளச் சோதியானைத் தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற

தாயானைச் சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னைச் சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்

வாயானை மந்திரிப்பார் மனத்துளானை வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச்

சேயானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

இறைவனை தனது தந்தை தாய் என்று பல அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தனது தமக்கையார் தனக்கு செய்த உதவியினை நினைத்து சிவபிரானைத் தனது சகோதரியாகவும் அப்பர் பிரான் காண்கின்றார். துறவுநிலை பூண்டதால் சுற்றம் ஏதும் இல்லாத அப்பர் பிரான், சிவபிரானையே தனக்கு அனைத்துச் சுற்றங்களாக காண்பதை கீழ்க்கண்ட பாடலில் (6.95.1) நாம் காணலாம். தான் அனுபவிக்கும் போகமாகவும், தன்னை உய்விக்கும் பொருளாகவும், தனக்குத் துணையாகவும், தனது செல்வங்களாகவும் சிவபிரானையே அப்பர் பிரான் காண்கின்றார். துறப்பித்தல் என்றால் உலகச் சுற்றங்களைத் துறக்கச் செய்தல் என்று பொருள்.

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சத்து துறப்பிப்பாய் நீ

இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே

பெற்ற தாயினும் நல்லவனாக சிவபெருமானை திருமூலர் கருதுகின்றார். இந்த பாடலில் திருமூலர் தாயினும் நல்லன் தாழ்சடையோன் என்று கூறுகின்றார்.உயிர்களுக்கு தேவையான வெப்பத்தை அளிப்பதில் கதிரவனை விடவும் சிறந்தவன் என்றும் உயிர்களுக்கு தேவையான சமயத்தில் குளிர்ச்சியை அளிக்கும் தண்ணீரை விடவும் சிறந்தவனாக விளங்கும் பெருமானின் அருள் புரியும் தன்மையை எவரும் அறியாமல் இருக்கின்றனரே என்று திருமூலர் இந்த பாடலில் வருந்துகின்றார்.

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை

சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ் சடையோனே

இதே கருத்தை தான் மணிவாசகரும் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து அருள் புரிபவன் சிவபெருமான் என்று பிடித்த பத்து பதிகத்தின் ஒரு பாடலில் கூறுகின்றார். இந்த பாடலில் அவர், தக்க நேரத்தில் தனது குழந்தைக்கு பாலினை நினைந்து ஊட்டும் தாயினும் மேலாக பரிந்து உதவி செய்பவன் சங்கரன் என்று கூறுகின்றார். குழந்தையின் உடல் உரம் பெறுவதற்காக தாய், தனது குழந்தைக்கு காலம் தவறாமல் பால் அளித்து வளர்க்கின்றாள். அழியக் கூடிய உடலினை விடவும் அழியாத தன்மை படைத்த உயிர் முக்கியம் வாய்ந்தது அல்லவா. அதனால் தான், உயிருக்குத் தேவையான ஞானத்தைத் தரும் பெருமானை, தாயினும் சாலப் பரிந்து உதவி செய்யும் பெருமான் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். தனது உயிர் உரம் பெறுவதற்காக இறைவன் தனது உள்ளத்தில் இருந்த இருளினை அகற்றி ஞானத்தை ஏற்படுத்தி ஒளி பெருக்கியதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் உள்ளொளி மட்டுமா பெருக்கினான், அவரது ஊனினை உருக்கினான், உள்ளத்தில் அழிவில்லாத ஆனந்தம் ஊறி தேன் போன்று தித்திக்குமாறும் செய்தான். இவ்வாறு அருள் புரிந்த பெருமான், தான் சென்ற இடத்திற்கெல்லாம் வந்ததாக மணிவாசகர் கூறுகினார். இவ்வாறு பக்குவபடுத்தப் பட்ட மணிவாசகரின் உள்ளம், அந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க அவருடனே திரிந்த சிவபெருமானை, தான் கண்டு கொண்டு அவரை இறுகப் பிடித்து கட்டியதாக இந்த பாடலில் கூறுகின்றார். சிவபுராணத்தில் தாயினும் சிறந்த தயா ஆன தத்துவனே என்று குறிப்பிடுவதும் நாம் இங்கே சிந்திக்கத் தக்கது.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருகி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

தாயினும் சிறந்து இறைவன் விளங்கும் தன்மை திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் மற்றொரு பாடலிலும் உணர்த்தப் படுகின்றது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயப்பட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அடிகளார் இந்த பாடலில் அழைக்கின்றார். நாம் அவனது திருவடி பால் வைக்கும் அன்பே சிவானந்தமாக மிளிர்கின்றது என்பதை மணிவாசக பெருமானார் இந்த பாடலில் கூறுகின்றார். அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்கவேண்டும் என்றால், நாம் சிவபிரான் பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும் போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை=பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை; சுருக்கும்=வீணாக்கும்:பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக்கொள்வதை நாம் உணரலாம்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

தேவர்களும் காண்பரிய தன்மையில் விளங்கும் சிவபெருமான், தானே வந்து தாய் போல் தன் பால் கருணை கொண்டு அருள் புரிந்ததாக மணிவாசகர் கூறும் பாடல், திருவாசகம் திருவம்மானை பதிகத்தில் வருகின்றது. கான் நின்று வற்றி=தவம் செய்ய காட்டில் புகுந்து உடல் இளைத்து; புற்று எழுந்து=உடல் முழுதும் புற்றால் மூடப்பட்டு; வான் வந்த=சிறப்பு வாய்ந்த; தானே வந்து கருணை கொண்டு பெருமான் செய்த செயல், தனது திருவடிகளை காட்டியது, தனது உடல் மயிர் கூச்செறியும் வண்ணம் பரவசம் அளித்தது என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.

வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும்

கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பரிய

தான் வந்து நாயேனைத் தாய் போல் தலையளித்திட்டு

ஊன் வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்து

தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த

வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய்

திருமருகல் தலத்தில் சடையாய் எனுமால் என்று தொடங்கும் பதிகத்தை ஞான சம்பந்தர் பாடியதை விவரிக்கும் சேக்கிழார், எவ்வுயிர்க்கும் தாயானான் என்று பதிகத்தில் உள்ளடக்கி பாடியதாக குறிப்பிடுகின்றார். இறைவன் தாய் போல் நின்று நமக்கு அருள் புரிந்தால் விளைவது இன்பம் தானே. இதனை குறிப்பிடும் வண்ணம் தாயான சங்கரன் என்று இங்கே கூறுகின்றார். சாபத்தால் தனது கலைகள் அனைத்தும் இழந்த சந்திரனுக்கே மறு வாழ்வு அளித்த பெருமானுக்கு,தன்னையே முப்பொழுதும் தொழுது கொண்டிருந்த அடியாளுக்கு அருள் புரிவது எளிமையான செயல் தானே. எனவே சசி கண்ட மவுலியான் என்று பிறைச் சந்திரனை சடையில் வைத்துள்ள இறைவனே என்று அழைக்கின்றார்.

சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானைச் சங்கரனைச் சசிகண்ட மவுலியானை

விடையானை வேதியனை வெண்ணீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற

படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பணையில் துயின்றானும் பரவும் கோலம்

உடையானை உடையானே தகுமோயிந்த ஒள்ளிழையாள் உண்மெலிவு என்றெடுத்துப் பாட

வாயார வழுத்தும் அடியார்களுக்கு இறைவன் அருள் புரிகின்ற தன்மையை திருஞானசம்பந்தர குறிப்பிடுவது, காளத்தி தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடலை (6.8.5) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம் என்பது முதுமொழி. அதற்கேற்ப, அப்பர் பிரான் தலை என்பதை முழுவுடலையும் குறிப்பதாக இங்கே கூறுகின்றார். மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் என்று உயிர்களின் மனதினையும் மொழியினையும் உடலையும் இறைவன் செயல்படுத்தும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. புனம்=நிலம் இங்கே குறிஞ்சி முதலாய ஐவகை நிலங்களை குறிக்கின்றது.; புனத்தகம்=மலையும் மலை சார்ந்த இடமும், குறிஞ்சி நிலம். பொருப்பு=மலை; கனம்=மேகம்; பெருமான் தனது மனக்கண்ணில் நிறைந்துள்ளான் என்று அப்பர் பிரான் இந்த பாடலை முடிக்கின்றார்.

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர்

இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான் ஏழண்டத்து அப்பாலான் இப்பாற் செம்பொன்

புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்

கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் என் கண்ணுளானே

பொழிப்புரை:

இடைவிடாது போர் புரிந்து பலரையும் வெற்றி கொண்ட அரக்கன் இராவணன், மனம் ஒடிந்து அலறும் வண்ணம், அந்த அரக்கன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றிய சிவபெருமான், பின்னர் அரக்கன் மனம் வருந்தி சாம கீதங்கள் பாடி புகழ்ந்த போது, அவன் பால் பூரணமான கருணை கொண்டு நன்மைகள் புரிந்து, அடியார்களின் தன்மைக்கு இளகும் மனம் கொண்டவன் தான் என்பதை சிவபெருமான் உணர்த்தினார். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, பல அடியார்கள் வாயாரப் புகழ்ந்து போற்றுகின்றனர்.நாகேச்சரத்தில் எழுந்தருளி உறையும் இந்த பெருமானை, தாயே என்று நினைந்து போற்றும் அடியார்களின் வலிய வினைகளும் நாசமடைந்து அந்த அடியார்களை விட்டு நீங்கிவிடும். .

பாடல் 9:

நெடியானொடு நான்முகன் நேடலுறச்

சுடுமால் எரியாய் நிமிர் சோதியனே

நடுமா வயல் நாகேச்சர நகரே

இடமா உறைவாய் என இன்புறுமே

விளக்கம்:

நெடியான்=திரிவிக்ரமன்;நேடல்=தேடுதல்; சுடுமால்=சுடும் வெப்பத்தைக் கொண்டதும் பெரியதும்;

நடு=நாற்று நடப்படும்;

பொழிப்புரை:

மூன்று உலகங்களையும் தனது இரண்டு அடிகளால் தாவி அளந்த வல்லமை வாய்ந்த திரிவிக்ரமனாகிய திருமாலும், நான்முகனும், பெருமானின் திருவடியையும் திருமுடியையும் தேடிக் காண்பதற்கு முயற்சி செய்யும் வண்ணம், வெப்பத்தை வெளிப்படுத்தும் பெரிய தீப்பிழம்பாக, சோதியாக நிமிர்ந்த பெருமானே, நெல் நாற்றுகள் நடுவதற்கு தகுந்த வண்ணம் வளமான வயல்கள் நிறைந்த நாகேச்சர நகரினைத் தனது இடமாக கொண்டுள்ள பெருமானே,என்று போற்றும் அடியார்கள் இம்மையிலும் மறுமையிலும் இன்புறும் வண்ணம் பெருமான் அருள் புரிகின்றார்.

பாடல் 10:

மலம் பாவிய கையொடு மண்டியது உண்

கலம் பாவியர் கட்டுரை விட்டுலகில்

நலம் பாவிய நாகேச்சுர நகருள்

சிலம்பா எனத் தீவினை தேய்ந்து அறுமே

விளக்கம்:

மலம்=அழுக்கு; பாவிய=பரவிய; மண்டை=புத்தர்களின் உண்கலன், பனையோலை கொண்டு செய்யப்படுவது; சிலம்பா=சிலம்பினை அணிந்தவன்;சிலம்பினை அணிந்தவன் என்ற குறிப்பு மாதொரு காலில் கழலை அணிந்த தன்மையையும், இவ்வாறு மாதொருபாகனாக பெருமான் திகழ்கின்ற நிலையையும் நமக்கு உணர்த்துகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானை எப்படியெல்லாம் அழைத்துப் போற்ற வேண்டும் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் அவ்வாறு அழைக்காத சமணர்களையும் புத்தர்களையும் பாவியர் என்று அழைக்கின்றார்.

பொழிப்புரை:

அழுக்கேறிய கைகளை உடைய சமணர்களும், விரிந்த பனையோலையால் செய்யப்பட்டதும் மண்டை என்று அழைக்கப்படுவதும் ஆகிய உண்கலத்தினை பயன்படுத்தும் புத்தர்களும், பாவியர்களாக, பொய்யான மொழிகளை இட்டுக்கட்டி இழிவாக பேசும் உரைகளை புறக்கணித்து, பலருக்கும் நன்மை பயக்கும் வண்ணம் நாகேச்சர நகரினில் வீற்றிருக்கும் பெருமானே, மாதொரு பாகனாக விளங்கும் தன்மையை உணர்த்தும் வகையில் சிலம்பினை அணிந்தவனே என்று அழைத்து வழிபடும் அடியார்களைப் பற்றியுள்ள தீவினைகள் தேய்ந்து அழிந்துவிடும்.

பாடல் 11:

கலமார் கடல் சூழ் தரு காழியர்கோன்

தலமார் தரு செந்தமிழின் விரகன்

நலமார் தரு நாகேச்சுரத்து அரனை

சொல மாலைகள் சொல்ல நில்லா வினையே

விளக்கம்:

கலம்=மரக்கலங்கள்; விரகன்=வல்லவன், அறிஞன்; தலமார் தரு என்ற தொடரினை, காழி என்ற சொல்லுக்கு முன்னம் வைத்து பொருள் காண்பது பொருத்தமாகும். அரன்=அழிக்கும் தொழிலை திறம்பட செய்பவன்;

பொழிப்புரை:

மரக்கலங்கள் பல நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகினில் உள்ள சிவத்தலங்களில் சிறந்ததாக விளங்கும் சீர்காழி நகரின் தலைவனும், செந்தமிழில் புலமை பெற்றவனும் ஆகிய திருஞானசம்பந்தன், நன்மைகள் நிறைந்த நாகேச்சரம் நகரில் எழுந்தருளி இருக்கும் அரனைப் போற்றி புகழ்ந்து சொன்ன பாடல்கள் கொண்ட மாலைகளை ஓதும் அடியார்கள் மேல் வினைகள் நில்லாமல் அவர்களை விட்டு நீங்கிவிடும்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாடல்கள், மற்றும் ஏழாவது, எட்டாவது பத்தாவது மற்றும் கடைப்பாடலில், மொத்தம் ஒன்பது பாடல்களில் திருஞானசம்பந்தர், நாகேச்சரத்தை இறைவனைப் போற்ற, வினைகள் மாய்ந்துவிடும் என்று கூறுகின்றார். பதிகத்தின் ஆறாவது பாடலில் உயிர்களைப் பற்றியுள்ள அருந்துயரங்கள் நீங்கும் என்றும் ஒன்பதாவது பாடலில் உயிர்கள் இன்பம் அடையும் என்றும் கூறுகின்றார். சற்று சிந்தித்தால், இந்த இரண்டு குறிப்புகளும் வினை நீக்கத்தையே உணர்த்துகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். உயிர்களுக்கு துன்பம் அளிப்பதே வினைகள் என்பதை நாம் அறிவோம். எனவே அந்த துன்பம் அளிக்கும் வினைகள் களையப் பெற்றால் உயிர்கள் அடைவது இன்பம் தானே. இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் பண்பினை உணர்த்தும் பல திருநாமங்களை சொல்லி, பெருமானைப் புகழும் அடியார்கள் தங்களது வினைகளை தீர்த்துக் கொள்வார்கள் என்று கூறுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில் பொன்னார் மேனியன் என்றும் ஒளியுடன் மிளிரும் சடையன் என்றும் நிலையாக அழியாமல் இருப்பவன் என்றும் அழைக்கும் திருஞானசம்பந்தர் இரண்டாவது பாடலில் திரிபுரத்து அரக்கர்களை அழித்த புண்ணியனே என்று அழைக்கின்றார். மூன்றாவது பாடல் தென்முகக் கடவுள், காமாரி, செல்வன் ஆகிய திருநாமங்களை உணர்த்துகின்றது. நான்காவது பாடல், பாம்போடு புனலும் மதியும் சடையில் அணிந்தவன் என்றும் பகவன் என்றும் குறிப்பிடுகின்றன. ஐந்தாவது பாடல் மான்கன்று தீச்சுடர் மற்றும் மழுவாட்படை ஆகியவற்றை நிலையாக, தனது கையில் வைத்திருக்கும் தலைவன் என்று உணர்த்துகின்றது. பார்வதி அன்னை கண்டு மகிழும் வண்ணம் கழல்கள் ஒலிக்க நடமாடும் பரமன் என்று ஆறாவது பாடலில் அழைக்கின்றார். ஏழாவது பாடலில், பிச்சைப் பெருமான் என்றும், உலகின் தோற்றம் நிலை மற்றும் அழிவு ஆகிய தன்மைகளுக்கு முழுமுதற் காரணன் என்றும் சடையன் என்றும் அழைத்து மகிழ்கின்றார். மகனின் குற்றங்களைப் பொருட்படுத்தாது போற்றும் தாயினைப் போன்று தனது அடியார்களுக்கு அருள் புரியும் தாயே என்று எட்டாவது பாடலில் குறிப்பிடும் திருஞானசம்பந்தர் நெடிய அனற்பிழம்பாக நின்றவனே என்று ஒன்பதாவது பாடலில் குறிப்பிடுகின்றார்.பத்தாவது பாடல் சிலம்பன் என்று மாதொருபாகனின் தன்மையை குறிப்பிடுகின்றது. மேலே குறிப்பிட்ட திருநாமங்களை உணர்த்தும் இந்த பதிகத்தின் பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள் பால் பிணைந்துள்ள வினைகள் நில்லாமல் நீங்கிவிடும். பெருமானின் பல திருநாமங்களையும் அந்த திருநாமங்கள் உணர்த்தும் செய்திகளையும் புரிந்து கொண்ட நாம், அந்த திருநாமங்கள் அடங்கியுள்ள பதிகங்களை முறையாக பாடி, இறைவனின் அருள் பெற்று, நமது வினைகளை, இறைவனின் அருளால், முற்றிலும் அழித்துக் கொண்டு, மறுமையில் முக்தி உலகம் சென்றடைந்து பேரானந்தத்தில் திகழ்வோமாக.



Share



Was this helpful?