பதிக எண்: 1.24. - சீர்காழி - தக்கராகம்
பின்னணி:
இறைவன் அளித்த திருத்தாளத்துடன் சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தர், நேராக திருக்கோயில் சென்று வலம் வந்த பின்னர், தோணிபுரத்து பெருமானின் சன்னதியில் பாடிய திருப்பதிகம் இந்த பதிகம் ஆகும். திருப்பெருகு என்று சீர்காழி தலத்தின் செல்வ வளம் குறிப்பிடப் படுகின்றது. கட்டளை என்பது ஒரே பண்ணில் அமைந்த பாடல்களில் உள்ள யாப்பமைதி, தாளபேதம், சீர்களின் நீட்டல் குறுக்கல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிந்து அதன் வகையில் பிரிக்கும் பாகுபாடு. அத்தகைய கட்டளை பேதங்கள், தக்கராகப் பண்ணில் அமைந்துள்ள ஞானசம்பந்தர் பாடல்களில் எட்டு இருப்பதாக கூறுவார்கள். அந்த எட்டு பிரிவுகளில் ஒரு வகையைச் சார்ந்தது இந்த பதிகம் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
திருப்பெருகு பெருங் கோயில் சூழ வலம் கொண்டருளித் திரு முன் நின்றே
அருட்பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளையாக்கி அவற்றுள் ஒன்று
விருப்புறு பொன் திருத் தோணி வீற்றிருந்தார் தமைப் பாட மேவு காதல்
பொருத்தம் உற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை
மேற்கண்டவாறு பதிகத்தினை தொடங்கிய சம்பந்தர், பெருமான் தனக்கு அளித்த தாளத்தை, பாடலின் இசைக்கு தகுந்தவாறு பயன்படுத்தினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். அடுத்த நடை பெறப் பாடி என்று, இதற்கு முன்னர் அருளிய மடையில் வாளை என்று தொடங்கும் பதிகத்தினை ஒட்டி, அதே பண்ணமைதியும் தாள அமைதியும் வரும் வண்ணம் பாடினார் என்று உணர்த்துகின்றார். மழை பொழிவது போன்று, சரளமாக பாடல்கள் பாடியமையை உணர்த்தும் வண்ணம் ஞானக் கொண்டல் என்று கூறுகின்றார். கொண்டல்=மழை பொழியும் மேகம். சீர்காழி தலத்தில் அந்நாளில் வாழ்ந்த மக்கள் உய்யும் பொருட்டு பதிகங்கள் பாடினார் என்றும் சேக்கிழார் கூறுகின்றார்.
எடுத்த திருப்பதிகத்தின் இசை திருத்தாளத்தினால் இசைய ஒத்தி
அடுத்த நடை பெறப் பாடி ஆர்வம் உற்ற வணங்கிப் போந்து அலைநீர் பொன்னி
மடுத்த வயல் பூந்தராயவர் வாழ மழ இளம் கோலத்துக் காட்சி
கொடுத்து அருளி வைகினார் குறைவிலா நிறை ஞானக் கொண்டலார் தாம்
பாடல் 1:
பூவார் கொன்றை புரிபுன்சடை ஈசா
காவாய் என நின்று ஏத்தும் காழியார்
மேவார் புரம் மூன்றும் அட்டார் அவர் போலாம்
பாவார் இன் சொல் பயிலும் பரமரே
விளக்கம்:
மேவார்=பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்கள்; பயிலும் என்ற சொல்லுக்கு தங்கி இருக்கும், பொருந்தி இருக்கும், அமைந்து இருக்கும் என்றும் பொருள் உள்ளது. பாவார்=பாடல்களில் பொருந்திய; பூவார்=பூக்கள் பொருந்திய; பொன்சடை என்றார் சொல் புன்சடை என்று மருவியதாக சிலர் பொருள் கூறுகின்றனர். பரமர்=மேலானவர். சொற்களின் பொருளாக இருப்பவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய நின்ற திருத்தாண்டகத்தின் (6.94) மூன்றாவது பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் சொல்லாகவும் சொல்லின் பொருளாகவும் இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கல்=மலை: களறு=புல்லும் முளைக்காத நிலம், களர் நிலம்;. கான்=காடு; கால்=நீர்க்கால், வாய்க்கால்; புதர் என்ற சொல் புதல் என்று மருவியுள்ளது. சுலாவு=போக்குவரவு; கழி=கடற்கரையில் உள்ள நிலம்
கல்லாகிக் களறாகிக் கானுமாகிக் காவிரியாய்க் கால் ஆறாய்க் கழியுமாகிக்
புல்லாகிப் புதலாகிப் பூடுமாகிப் புரமாகிப் புரம் மூன்றும் கெடுத்தானாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளுமாகிச் சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழலாகி
நெல்லாகி நிலனாகி நீருமாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே
கல்லாகவும், களர் நிலமாகவும், காடாகவும், காவிரி போன்று பல நதிகளாகவும், நதிகளிலிருந்து பிரியும் வாய்க்கால்களாகவும், கடற்கரைக் கழிகளாகவும், புல்லாகவும், புதராகவும், சிறிய செடிகளாகவும், பெரிய நகரங்களாகவும், சொற்களாகவும், அந்த சொற்களுடன் பொருந்திய பொருளாகவும், பல வகையான உயிர்கள் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருக்கும் நிலையாகவும், உயிர்களின் போக்குவரவு நடைபெறும் இடமான உலகங்களாகவும், நிலனாகவும், நீராகவும். நிலனும் நீரும் இணைந்தால் உண்டாகும் நெல் போன்ற பயிர்களாகவும் உள்ள எம்பெருமான், நெடியசுடராக எங்கும் பரவி இருக்கும் நிலை மிகவும் வியக்கத்தக்கது. இவ்வாறு எங்கும் வியாபித்து இருக்கும் சிவபெருமான், பறந்துகொண்டு மற்றவர்களை வருத்திய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் அழித்த வல்லமை படைத்தவன். என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்தாகும்.
சொல் என்பது பொதுவாக வேதங்களில் காணப்படும் சொற்களை குறிக்கும். வேதங்களில் காணப்படும் சொல்லாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் உள்ள தன்மை, அப்பர் பிரானால் நாரையூர் தாண்டகத்தின் (6.74) முதல் பாடலில் கூறப்பட்டுள்ளது.
சொல்லானைப் பொருளானைச் சுருதியானைச் சுடராழி நெடுமாலுக்கு அருள் செய்தானை
அல்லானைப் பகலானை அரியான் தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த
வில்லானைச் சரம் விசயற்கு அருள் செய்தானை வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி ஏத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
சோற்றுத்துறை தலத்தின் அருளிய நேரிசைப் பாடலில் அப்பர் பிரான், சொற்களுக்கு நல்ல பொருளாக பெருமான் உள்ளார் என்று கூறும் பாடல் (4.41.3) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கல்=மேரு மலை; மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. இலம்=இல்லம் என்பதன் திரிபு. சிவபிரானை, என்றும் குறையாத அன்பினோடு அவரை இரவும் பகலும் உங்கள் உள்ளத்தில் தியானித்து, ஏகாந்தமாக இருந்து வழிபடுவீராக அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல் .
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே
எல்லியும் பகலும் முன்னே ஏகாந்தமாக ஏத்தும்
பல்லில் வெண்தலை கையேந்திப் பல் இலம் திரியும் செல்வர்
சொல்லு நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத் துறையனாரே
திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.78.5) அப்பர் பிரான் சொல்லாகவும் பொருளாகவும் இருப்பவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அல்=இரவுப் பொழுது; பொதுவாக திருக்கோயில்களில் ஆறு கால பூஜைகள் செய்வது வழக்கம்; காலை நேரம், உச்சிக் காலம், மற்றும் இரவுக் காலம் ஆகிய நேரங்கள் தவிர, காலையும் பகலும் சந்திக்கும் நேரம் (காலசந்தி=காலை எட்டு மணிக்கு), பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரம் (சாயரட்சை மாலை ஐந்தரை மணி) மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் (மாலை இரண்டாம் கால பூஜை மாலை ஏழரை மணி) ஆகிய நேரங்களிலும் இறைவனுக்கு வழிபாடுகள் நடக்கின்றன. இவ்வாறு வழிபாடு நடக்கும் நேரங்களாக இறைவன் இருக்கின்றார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே
பல்லுரைக்கும் பாவெலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே
அஞ்சைக்களத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.4.7) சுந்தரர் இறைவனை நோக்கி அனைவரும் சொல்லும் சொற்களின் பொருளாக இருப்பவன் நீயே என்று கூறுகின்றார். சேரர்களின் தலைநகரின் ஒரு பகுதியாக இருந்த இந்த தலம் பண்டைய நாளில் கடல் வாணிகத்திற்கு மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது போலும். கடல் வாணிபத்தில் கொண்டு வரப்படும் விலையுயர்ந்த பொருட்களாக விளங்குபவனும் இறைவன் தான் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஆக்கும் அழிவும் ஐயன் நீ என்பன் நான் சொல்லுவார் சொற்பொருள் அவை நீ என்பன் நான்
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனேஇனி நான் உன்னை நன்கு உணர்ந்தேன்
நோக்கும் நெதியம் பல எத்தனையும் கலத்தில் புகப் பெய்து கொண்டேற நுந்தி
ஆர்க்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைகளத்து அப்பனே
பொழிப்புரை:
கொன்றை பூக்கள் பொருந்திய சுருண்டு முறுக்கேறிய மிருதுவான சடைகள் உடைய ஈசனே என்று சீர்காழி நகரில் வாழும் அடியார்கள் துதித்து போற்றும் வண்ணம், சீர்க்காழி நகரினில் உறையும் பெருமான், பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து வீழ்த்தியவர் ஆவார். அவரே பாடல்களில் உள்ள இனிய சொற்களில் பொருளாக கலந்து நிற்கும் மேலான தலைவர் ஆவார்.
பாடல் 2:
எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமலர் அவர் போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே
விளக்கம்:
இமையோர்=தேவர்கள்; கந்தம்=நறுமணம். அந்தி வேளையில் ஆடப்படும் நடனத்திற்கு சந்தியா தாண்டவம் என்று பெயர். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விடத்தினை குடித்த பெருமான், தேவர்கள் போற்றும் வண்ணம் பிரதோஷ நேரத்தில் (மலை நேரத்தில்) ஆடிய நடனம் என்பதால் சந்தியா தாண்டவம் என்ற பெயர் வந்தது.
பொழிப்புரை:
எமது தந்தையே என்று அன்புடன் இறைவனை அழைக்கும் தேவர்கள், சீர்காழி தலத்தில் உள்ள திருக்கோயிலின் உள்ளே புகுந்து நறுமணம் பொருந்திய மலர்களைத் தூவி பெருமானை வழிபடுகின்றனர்; இவ்வாறு தேவர்களால் வழிபடப்படும் இறைவன் நன்றாக வெந்த சாம்பலைத் தனது திருமேனியில் பூசியுள்ள பெருமான், மலங்களின் சேர்க்கை இல்லாதவராக விளங்குகின்றார்.
பாடல் 3:
தேனை வென்ற மொழியாள் ஒரு பாகம்
கான மான் கைக் கொண்ட காழியார்
வானம் ஓங்கு கோயில் அவர் போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே
விளக்கம்:
ஆன இன்பம்=முற்றிய இன்பம்; தேனினை விடவும் இனிமையான மொழியை உடையவள் தேவி என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்கள் தேவியின் மொழி மிகவும் இனிமையாக உள்ளது என்பதை மட்டும் கூறாமல், பால், தேன், வீணையின் நாதம், குழலின் இசை, ஆகியவற்றை விடவும் இனிமையாக உள்ளது என்று உணர்த்துகின்றன. ஈங்கோய்மலையின் மீது தான் அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (முதல் திருமுறை பதிக எண்: 70) சம்பந்தர், உமையம்மையை தேன் ஒத்தன மென்மொழி மான் விழியாள் என்று குறிப்பிடுகின்றார்.
வானத்துயர் தண்மதி தோய் சடை மேல் மத்தமலர் சூடித்
தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமாக்
கானத்து இரவில் எரி கொண்டாடும் கடவுள் உலகேத்த
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே
திருப்பரங்குன்றத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் திருஞான சம்பந்தர் தேன்மொழி என்று இறைவனை குறிப்பிட்டு தேன்மொழியைத் தனது உடலின் ஒரு பங்காக ஏற்றுக் கொண்டவன் பெருமான் என்று கூறுகின்றார்.
அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து
பொங்கு வெண்ணூலும் பொடியணி மார்பில் பொலிவித்து
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்ததோர் தேன்மொழி
பங்கினன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே
திருபாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பாடல் (2.69.7) ஒன்றினில் திருஞானசம்பந்தர், தேன் சென்று பிராட்டியின் குரலில் அமர்ந்தது போன்று பிராட்டியின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது என்று கூறுகின்றார். உடலுக்கு பால் பல நன்மைகள் அளிப்பது போன்று திருநீறும் நமக்கு பல நன்மைகள் அளிக்கும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இந்த தலத்து இறைவியின் திருநாமம் பண்மொழியம்மை என்பதாகும். இனிமையான பண் போன்ற மொழியினை உடைய அம்மையை, தேன் அமர்ந்தது போன்ற குரலினை உடையவள் என்று அழைப்பது பொருத்தம் தானே.
ஊனமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும்
தேன் அமரும் மொழி மாது சேர் திருமேனியாரும்
கானமரும் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக் கரை மேல்
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக் கொடுமுடியாரே
திருவையாறு தலத்து இறைவனை புகழ்ந்து பாடும் பதிகத்து (4.03) பாடல் ஒன்றினில் அப்பர் பிரான் தேனைப் போன்ற இனிய மொழியினை உடைய தேவி என்று குறிப்பிடுகின்றார்.
திங்கள் மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி
எங்கு அருள் நல்கும் கொல் எந்தை எனக்கினி என்னா வருவேன்
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது
பைங்கிளி பேடையொடாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்
கிளியைப் போன்று இனிமையான மழலை மொழி பேசும் உமையம்மையின் குரல், தேனினும் இனியதாக இருப்பதால் தேன் மிகவும் திகைத்து அம்மையை நோக்குவதாக அப்பர் பிரான், கரவாடும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.07.2) கூறுகின்றார். அம்மையின் குரல் வளத்தைக் கண்டு தேன் திகைத்து நிற்க, இறைவனின் மேனி நிறத்தினைக் கண்டு, பவளம் திகைத்து நிற்பதாகவும் இங்கே கூறுகின்றார். கேள்வன்=கணவன்
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம்
தான் நோக்கும் திருமேனி தழல் உருவாம் சங்கரனை
வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே
ஓசை ஒலி எலாம் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (6.38.4) அப்பர் பிரான் பிராட்டியை தேன் போன்ற இனிமையான சொற்களை உடைய தேவி என்று கூறுகின்றார். வானுற்ற=ஆகாயத்தை அளவளாவி நின்ற;; தேனுற்ற=தேன் கலந்தது போன்று:
வானுற்ற மாமலைகள் ஆனாய் நீயே வடகயிலை மன்னி இருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளி மழுவாட் படையாய் நீயே ஒளிமதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல் மடவாள் பங்கன் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ
வலிவலம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.48.6) அப்பர் பிரான், பிராட்டியின் குரல் தேனைப் போன்று இனிமையானது என்று தேன்மொழி என்று கூறுகின்றார். கறுத்தவன்=கோபம் கொண்டவன், வெகுண்டவன்; நிலை=நிலையாக பாதுகாக்கும் செயல்; நிறை=இறுதி, அழிக்கும் செயல்: உலகமும், உலகத்தில் உள்ள பொருட்களும், உலகத்து உயிர்களும் தோன்றுவதற்கும், சில காலம் நிலைத்து நிற்பதற்கும், பின்னர் அழிவதற்கும் காரணமாக உள்ளவன் பெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.
நிலையவன் காண் தோற்றவன் காண் நிறையானான் காண் நீரவன் காண் பாரவன் காண் ஊர் மூன்று
எய்த
சிலையவன் காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை ஒரு பாகம் சேர்த்தினான் காண்
கலையவன் காண் காற்றவன் காண் காலன் வீழக் கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே
தேனை வென்ற இன்மொழியாள் என்று பிராட்டியை திருஞான சம்பந்தர் கூறுவது சற்று சிந்திக்கத் தக்கது. பொதுவாக உவமையாக கூறப்படும் பொருள் உவமேயப் பொருளினை விடவும் மேலானதாக இருக்கும். ஆனால் பிராட்டியின் தன்மைக்கு உவமையாக கூறப்படும் பொருட்கள் எந்த விதத்திலும் பிராட்டியின் தன்மைக்கு ஈடாகாது என்பதை உணர்த்தும் வண்ணம், பிராட்டியின் தன்மை உவமானப் பொருட்களை வென்றதாக பல திருமுறைப் பாடல்கள் கூறுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வில்லினைப் போன்று வளைந்த புருவங்கள் என்று இலக்கியங்களில் கூறுவதுண்டு. சம்பந்தர், வளைவில், பொலிவில் வில்லினை வென்ற பிராட்டியின் புருவங்கள் என்று கூறும் பாடல் சோபுரம் பதிகத்தின் (1.51) நான்காவது பாடலாகும். கடை=வீட்டின் வாயில்கள் பல இடங்களிலும் திரிந்து பிச்சை எடுப்பதை அல்லல் வாழ்க்கை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
பல் இல் ஓடு கையில் ஏந்திப் பல் கடையும் பலி தேர்ந்து
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொலாம்
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங் கண்ணியொடும்
தொல்லை ஊழியாகி நின்றாய் சோபுரம் மேயவனே
பிராட்டியின் புன்முறுவல் முத்தினை வென்றதாக கூறும் பாடல் ஆமாத்தூர் பதிகத்தின் (2.50) பத்தாவது பாடலாகும்.
புத்தர் புன்சமண் பொய்ம்மொழி நூல் பிடித்தவர் தூற்ற நின்னைப்
பத்தர் பேண நின்ற பரமாய பான்மை அது என்
முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன் என்று இமையொர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே
அழகினில் மூங்கிலை வென்ற தோள்களை உடைய பிராட்டி என்று சொல்லும் பாடல் திருநாரையூர் தலத்து பதிகத்தின் (1.102) முதல் பாடலாகும்.
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடுவில் திருநாரையூர் மேய
பூம்புனல் சேர் புரிபுன் சடையான் புலியின் உரி தோல் மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே
பண்ணின் இன்மையை வென்ற இனிய குரலினை உடையவள் என்று அண்ணாமலை பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.69.2) திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.
பண் தனை வென்ற இன்சொல் பாவையோர் பங்க நீல
கண்டனே கார் கொள் கொன்றைக் கடவுளே கமலபாதா
அண்டனே அமரர் கோவே அணி அணாமலை உளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமாறு சொல் இலேனே
சுந்தரர் தனது திருநாட்டுத்தொகை பொதுப் பதிகத்தில் (1.12.7) குழலை வென்ற மொழி மடவாள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். கீழைவழி, கிழையம் ஆகிய வைப்புத் தலங்களின் விவரங்கள் கிடைக்கவில்லை.
குழலை வென்ற மொழி மடவாளை ஓர் கூறனாம்
மழலை ஏற்று மணாளன் இடம் தடமால் வரைக்
கிழவன் கீழை வழி பழையாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலை வெண்ணிந் நாட்டு மிழலையே
பண்டைய நாளில் போட்டியில் தோற்றவர்கள் வென்றவர்களை வலம் வந்து தங்களது தோல்வியை ஒப்புக் கொள்வது பழக்கமாக இருந்தது போலும். இந்த பாடலில் அப்பர் பிரான் ஆரூர்ப் பெருமானைத் தொழுது வலம் வந்து வணங்குபவர்கள் பிறந்த பயனை அடைந்தவர்கள் என்று கூறுகின்றார். தோன்றினார் தோன்றினாரே=பிறந்தவர் பிறந்தவர்களாவர்கள். நாம் பிறந்ததன் பயன், சிவபிரானை கும்பிட்டு உய்வினை அடைதல் தானே. அந்த கருத்து தான் இங்கே கூறப்படுகின்றது.
குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேற்கண்ணி தன்னைக்
கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்களைக் கணங்கள் ஆர
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல் வலம் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே
குழலும், யாழும், தேவியின் குரலுடன் போட்டியிட முயன்று தோற்றதால், தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு தேவியை வலம் வந்ததாக, தேவார ஆசிரியர்கள் நயமாக கூறுகின்றார்கள். இவ்வாறு இவர்கள் கூறுவது நமக்கு ஆதி சங்கரரின் சிவானந்த லஹரியின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. உமையம்மைக்கு சிவபிரானின் புகழினை, அடுத்தவர் பாடக் கேட்பது மிகவும் பிடித்தமானது. அவ்வாறு ஒரு நாள், கலைவாணி சிவபிரானின் புகழினை பாடல்களாக வீணையுடன் இசைத்துப் பாடியபோது உமையம்மை, பாடலின் கருத்தில் மெய்ம்மறந்து, தனது தலையை அசைத்து, ஆஹாகாரம் (ஆஹா, ஆஹா என்று சொல்லுதல்) செய்து பாராட்டினார். அப்போது அம்மையின் குரல் இனிமையைக் கேட்ட கலைவாணி, இவ்வளவு இனிமையான குரலின் எதிரே, வீணை இசைக்க முயன்ற தனது செய்கைக்கு வெட்கம் கொண்டு, வீணையினை உரையில் இட்டு மூடிவிட்டாள் என்று சங்கரர் இந்த பாடலில் கூறுகின்றார். மிகவும் நயமான கற்பனை. இந்த கற்பனையை மெய்ப்பிப்பது போன்று, யாழைப் பழித்த மொழியம்மை என்ற திருநாமத்துடன் அம்மை விளங்கும் மறைக்காடு தலத்தில் உள்ள கலைவாணியின் சன்னதியில், கையில் வீணை இல்லாத கலைவாணியை நாம் காணலாம்.
விபஞ்ச்யா காயந்தி விவிதமபதானம் பசுபதேஸ்
த்வயா ரப்தே வக்தும் சலித சிரசா சாது வசனே
ததீயைர் மாதுர்யைர் ரபலபித தந்த்ரீ கலரவாம்
நிஜாம் வீணாம் வாணிம் நிசுலயதி சோலேனே நிப்ருதம்
விபஞ்ச்யா=விபஞ்சி என்று அழைக்கப்படும் பிரமனின் மனைவியாகிய கலைவாணி: காயந்தி=வீணையில் இசைத்துப் பாடும்: பசுபதே=பசுபதி என்று அழைக்கப்படும் சிவபெருமானின்: விவிதம்=விதம்விதமான, பலவிதமான: அபிதானம்=திருவிளையாடல்கள்: த்வயா=உன்னால் (தேவியால்): வக்தும் ஆரப்தே=சொல்ல ஆரம்பித்த போது: சலித சிரசா=தலை அசைத்து சம்மதம் தெரிவித்தல்: வசனே=சொல்வதற்கு: ததீயை=அதனுடைய, அத்தகைய சொல்லின்: மாதுர்யை=இனிமை: அபலபித தந்த்ரீ=வீணையின் அழகிய தந்திகள்: கலரவாம்=அவமதிப்பு அடைதல்: நிஜாம்=தன்னுடைய: வீணாம்=வீணையினை: நிசுலயதி= மூடுதல்: சோலேன=உரையினால்: நிப்ருதம்=வெளியில் தெரியாதபடி
இந்த பாடலில் காட்டு மானை கைக்கொண்ட காழியார் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது சினம் கொண்டு பெருமானை அழிப்பதற்கு, கோபவெறி பிடித்த மானை, யாகத்திலிருந்து எழுப்பி அவர் மீது ஏவுகின்றார்கள். மான் பொதுவாக சாதுவான பிராணி. எனவே தனது இயல்பு மாற்றப்பட்ட இந்த மானை பழைய இயல்பு உடைய மானாக பெருமான் மாற்றிவிடவே மான் அவரது கைகளில் துள்ளி விளையாடுகின்றது. மான் ஒரே இடத்தில் தங்காமல் தெரிந்து கொண்டே இருக்கும். பெருமானைச் சென்று சார்ந்த மான், எப்போதும் அவரது கைகளில் பொருந்தி இருக்கின்றது. இந்த தன்மை, கட்டுப்பாடு ஏதும் இன்றி எங்கும் திரிந்து கொண்டு இருக்கும் மனதினை அடக்குவதற்கு பெருமானின் கருணை வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.
பொழிப்புரை:
தேனை வெல்லும் வண்ணம் இனிமையான குரலினை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், காட்டில் திரியும் மான் கன்றினைத் தனது கையில் ஏந்தியவராக காணப்படுகின்றார். மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நடனமாடும் பெருமானார், வானளவ உயர்ந்த கோபுரங்களை உடைய சீர்காழி நகரத்துத் திருக்கோயிலில் உறைகின்றார்.
பாடல் 4:
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்
நாணார் வாளி தொட்டார் அவர் போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே
விளக்கம்:
மாண்பு என்ற சொல்லினை ஆதாரமாகக் கொண்ட எதிர்மறைச் சொல் மாணா; மாட்சிமை இல்லாத, பெருமையற்ற என்று பொருள் கொள்ளவேண்டும்; உயிர்களின் வினைகளுக்கு தக்கவாறு, குறிப்பிட்ட காலத்தில் அந்த உயிரிலிருந்து உடலினை பிரிக்கும் பணி பெருமானால் இயமனுக்கு இடப்பட்ட பணியாகும். எனவே இயமன் அந்நாள் வரை பல்லாயிரக் கணக்கான உயிர்களை வேறு வேறு உடல்களிளிளிருந்து பிரித்து இருந்தாலும், அத்தகைய செயல்களைச் செய்வதில் அவனுக்கு பெருமானின் துணை இருந்து வந்தது. அதனால் தான் தனது செயல்களில் அவனால் வெற்றி கொள்ள முடிந்தது. எனவே அந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் பெருமானின் உதவி தான். அதனால் தான் அவன் அந்நாள் வரை பெற்ற வெற்றிகள் பெருமைக்கு உரியன அல்ல என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். சிறுவன் மார்க்கண்டேயன் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தொழுது வணங்காத நிலை இங்கே காணா மாணி என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது. வாளி=அம்பு; நாணார்=நாணில் பொருந்திய;.
பொழிப்புரை:
பெருமையற்ற வெற்றிகளை உடையவனாக விளங்கிய இயமன், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் கண்டு வணங்காமல் இருந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிப்பதற்காக முயற்சி செய்த போது, காலனை தனது காலால் உதைத்து வீழ்த்தி சிறுவன் மார்க்கண்டேயனுக்கு நீண்ட வாழ்நாள் அளித்தவர் காழி நகரத்து இறைவன் ஆகிய சிவபெருமான் ஆவார். மேரு மலையினை வில்லாக கொண்டு வாசுகிப் பாம்பினை நாணாக பூட்டி, அந்த வில்லினில் அம்பினைப் பொருத்தி, வேத நெறியினை புறக்கணித்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தவரும் அவரே.
பாடல் 5:
மாடே ஓதம் எறிய வயல் செந்நெல்
காடேறிச் சங்கு ஈனும் காழியார்
வாடா மலராள் பங்கர் அவர் போலாம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே
விளக்கம்:
மாடே=அருகினில்; ஓதம்=கடல் அலைகள்; ஏடு=குற்றம்; இந்த பாடலில் அன்னை பார்வதி தேவியை, வாடா மலராள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கற்புக்கரசியாக திகழும் மாதர்கள் அணியும் மாலைகள் வாடுவதில்லை என்ற நம்பிக்கை பண்டைய நாளில் இருந்து வந்தது போலும். பயிர்கள் அடர்ந்ந்து கிடந்த வயல்கள் என்பதால் வயற்காடு என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
கடல் அலைகளால் வீசி எறியப்பட்ட சங்குகள், செந்நெல் பயிர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த காடுகளில் அமர்ந்து முத்தினை ஈனும் செல்வம் படைத்ததாக விளங்கிய காழி நகரினில் உறையும் இறைவன், கற்பில் சிறந்தவளாக விளங்கியவளும் தான் அணிந்துள்ள மாலை வாடாமல் இருக்கும் தன்மையைப் பெற்றவளும் ஆகிய அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டுள்ள இறைவன், குற்றங்கள் புரிந்து பலரையும் துன்புறுத்தி வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவர் ஆவார்.
பாடல் 6:
கொங்கு செருந்தி கொன்றை மலர் கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர் போலாம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே
விளக்கம்:
அங்கண்=அழகிய கண்கள்
பொழிப்புரை:
கோங்கு செருந்தி கொன்றை ஆகிய மலர்களுடன் கங்கை நதியையும் தனது சடையில் சூடிக் கொண்டுள்ள பெருமான் காழி நகரத்தில் உறைகின்றார். அவர் அழகிய கண்களை உடைய பாம்புகளைத் தனது உடலின் பல்வேறு இடங்களில் அணிகலனாக பூண்டுள்ளார். கோபத்தினால் சிவந்த கண்களை உடையவர்களாக திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவர் ஆவார்,
பாடல் 7:
கொல்லை விடை முன் பூதம் குனித்தாடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார்
அல்ல இடத்து நடந்தார் அவர் போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே
விளக்கம்:
கல்லவடம்=பறை போன்ற ஒரு வகை தோலிசைக் கருவி: வடாரண்யம் என்பதற்கு ஆலங்காடு என்று பொருள். எனவே கல்லவடம் என்ற சொல் கல்லால மரத்தினை குறிப்பதாகவும் பொருள் கூறுவார்கள். அல்ல இடம்=பிறர் செல்ல தயங்குமிடம், சுடுகாடு; கொல்லை என்பது முல்லை நிலத்தினை குறிக்கும். முல்லை நிலத்திற்கு உரிய விலங்கு எருது என்பதால் கொல்லை ஏறு என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் திருமால். பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போர் புரியச் சென்றபோது, தனது காலினை தேர்த்தட்டில் வைத்த போது அவரது பாரத்தை தாங்க முடியாமல் தேரின் அச்சு முறிந்தது. அந்த தருணத்தில் திருமால், எருதின் வடிவம் எடுத்து பெருமானை தாங்கிய வரலாறு புராணத்திலும் பல திருமுறை பாடல்களிலும் கூறப்படுகின்றது. அந்த நிகழ்ச்சியினை நினைவூட்டும் வகையில், முல்லை நிலத்திற்கு உரிய தெய்வமாகிய திருமாலை வாகனமாக ஏற்றவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பாடலில் குறிப்பிட்டது போன்று பல திருமுறைப் பாடல்கள் கொல்லை விடை என்றும் கொல்லை ஏறு என்றும் பெருமானின் வாகனத்தை குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
சண்பை நகர் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.66.5) ஒன்றினில் கொல்லை எருது ஏறுபவன் என்று இறைவனை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மருப்பு=கொம்பு; சலமார் யானை=வஞ்சனை மிகுந்த யானை; நாளிகேரம்= தென்னை; தென்னை மரத்தின் பாளை யானையின் தந்தம் போன்று வெண்மையாக காணப்படும் சோலைகள் நிறைந்த நகரம் என்று சீர்காழியினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் நஞ்சினை உண்டு தேவர்களின் இடர் தீர்த்ததால் தான், அவர்களால் அமுதம் உண்ண முடிந்தது என்பதால் விடம் உண்டு தேவர்க்கு அமுதம் அருள் செய்தவன் என்று கூறுவதை நாம் உணரலாம்.
கலமார் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த
குலமார் கயிலைக் குன்றது உடைய கொல்லை எருது ஏறி
நலமார் வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை
சலமார் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.97.6) கொல்லை ஏறது ஏறுவான் என்று இறைவனை சம்பந்தர் அழைக்கின்றார். தவறு, பொய் என்ற பொருள் தரும் அபத்தம் என்ற வடமொழிச் சொல் அவத்தம் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது, இயங்கு-நடத்தல்; பிணக்கு=மாறுபாடு; துன்பமயமான வாழ்க்கையை நடத்தி, பெறுவதற்கு அறிய மனித வாழ்க்கையை வீணாக நடத்தி, உலக மாயைகளில் முரண்பாடுகளில் ஆழ்ந்து கிடக்கும் உலகத்தவர்களே, நீங்கள் எழுந்து புறப்பட்டு சீர்காழி தலத்தினை அடைந்து இறைவனை வழிபட்டு உய்வினை அடைவீர்களாக. நமக்கு அருள் புரியும் நோக்கத்துடன், நாம் அவனுக்கு பிச்சையாக இடும் மும்மலங்களையும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பலி கேட்டு திரியும் இறைவனிடம் நமது மலங்களை சமர்ப்பித்து விட்டு உய்வினை அடைய வேண்டும் என்று இந்த பாடல் மூலம் சம்பந்தர் உணர்த்துகின்றார். பல் இல் வெண்தலை என்று பறிக்கப்பட்ட பிரமனின் தலையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர்
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழுமினோ
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்
கொல்லை ஏறது ஏறுவான் கோலக் காழி சேர்மினே
தோணிபுரம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.81.4) திருஞானசம்பந்தர் கொல்லை விடையேறு உடையவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். நா அணவு மாலை=அடியார்களின் நாவினில் பொருந்தும் சொல்மாலை; ஒல்லை=ஓசை; மாலை ஒல்லை உடையான்= அடியார்கள் பாடும் பாமாலைகளின் ஓசையை கேட்பவன்; அடையலார்=வேதநெறியினை அடையாத திரிபுரத்து அரக்கர்கள்; ஒள்ளழல்=ஒளிவீசும் நெருப்பு; அடைவு=சாக்கு, காரணம்; பெருமான் இடர்களை மிகவும் விரும்பத்துடன் தீர்த்து அருள்பவன். பெருமான், அடியார்கள் இடும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு அதனை ஒரு காரணமாக கொண்டு அவர்களின் இடர்களை தீர்ப்பதாக சம்பந்தர் கூறுகின்றார்.
கொல்லை விடை ஏறுடைய கோவணவன் நா அணவும் மாலை
ஒல்லை உடையான் அடையலார் ஆரரணம் ஒள்ளழல் விளைத்த
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவிவளர் தொண்டர்
சொல்லை அடைவாக இடர் தீர்த்தருள் செய் தோணிபுரமாமே
உசாத்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.33.2) சம்பந்தர் கொல்லை ஏறு என்று குறிப்பிடுவதை நாம் காணலாம். பல்லை ஆர் படுதலை, முன்னம் ஒரு காலத்தில் பற்கள் நிறைந்திருந்த தலை என்று பிரமனின் மண்டை ஓட்டினை சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். படுதலை=இறந்தவரின் தலை, கிள்ளி பறிக்கப்பட்டு உயிரின் தொடர்பு அறுக்கப்பட்டமையால் இறந்தவரின் தலை என்று கூறுகின்றார். நறை கமழ்=தேன் மணம் வீசும்
கொல்லை ஏறுடையவன் கோவண ஆடையன்
பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்
முல்லை ஆர் புறவணி முதுபதி நறை கமழ்
தில்லையான் உறைவிடம் திருவுசாத்தானமே
பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.108.8) திருஞானசம்பந்தர் கொல்லை விடை உகந்தான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் இராவணனின் கயிலாய நிகழ்ச்சியை குறிப்பிடும் சம்பந்தர், மலையின் ஆட்டத்தால் நடுங்கிய உமையன்னை என்று குறிப்பிட்டு, அன்னையின் நடுக்கத்தை தீர்ப்பதற்காக, பெருமான் தனது கால் பெருவிரலை ஊன்றி அரக்கனது வலிமையை அடக்கினார் என்று கூறுகின்றார். மறுக=அஞ்ச; இசையில் வல்லவர்களே அடுத்தவர் பாடும் இசையினை இரசித்து மகிழ முடியும். சிவபெருமான் இசையில் வல்லவராக பல வகையான இசைகளையும் பாடுவராக இருந்தார் என்று குறிப்பிட்டு அரக்கனின் இசையை பாராட்டிய தன்மையை நமக்கு சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
மல்கிய நுண்ணிடையாள் உமை நங்கை மறுக அன்று கையால்
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்
கொல்லை விடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறை கோயில் பாதாளே
திருப்பழனம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் (5.33) முதல் பாடலில் அப்பர் பிரான் பெருமானை கொல்லை ஏற்றினர் என்று குறிப்பிடுகின்றார். இறை பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கு நமக்கு தேவையானவை, மன வலிமையும் உடல் வலிமையும் என்பதை உணர்த்தும் வகையில் வலிமையுடன் பணி செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அடுத்தவரின் கேலிப் பேச்சுகளையும், இகழ்வினையும் பொருட்படுத்தாமல், மனம் ஒன்றி ஈடுபட மனவலிமை அவசியம். திருக்கோயில் பிராகாரத்தை சுத்தம் செய்வதற்கும், கோயிலில் பயன்படுத்தும் பொருட்களையும், பெருமானுக்கு அணிவிக்கும் ஆடைகளையும் சுத்தமாக வைத்திருக்க உடல் வலிமையும் தேவை. எனவே தான், தனது நெஞ்சத்தை நோக்கி வலிமையுடன் பணி செய்வாயாக என்று கூறுகின்றார்.
கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர்
தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்
தொல்லை ஊழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லையாய்ப் பணி செய் மட நெஞ்சமே
நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.83.4) அப்பர் பிரான் கொல்லை மால்விடை ஏறிய கோ என்று குறிப்பிடுகின்றார். மால் என்று சொல்லுக்கு சிறப்பு வாய்ந்த என்று ஒரு பொருளும் திருமால் என்று ஒரு பொருளும் பொருந்தும், எனவே முல்லை நிலத்தில் வளரும் சிறப்பு வாய்ந்த இடபத்தினை வாகனமாகக் கொண்டவன் என்று ஒரு பொருளும், முல்லை நிலத்துக் கடவுளாகிய திருமாலை தனது வாகனமாக கொண்ட இறைவன் என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமாகவே அமைந்து உள்ளன. எல்லி=இரவு; மாநடம் என்ற சொல்லுடன் கூடி வருவதால், எல்லி என்ற சொல்லுக்கு வெளிச்சம் அற்ற ஊழிக்காலம் என்று கொள்வது பொருத்தம். உயிருடன் பிணைந்துள்ள வினைகள் உயிர்கள் சோர்வடையும் வண்ணம் வருத்துவதே தங்கள் தொழிலாக கொண்டுள்ளன. ஆனால் இறைவனின் திருநாமத்தை நாம் சொன்னால், இறைவனின் அருளால் வினைகள் சோர்வடைந்து விடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வினைகள் சோர்வடைய வினைகளால் நமக்கு ஏற்படும் வருத்தங்களும் நீங்கும் என்பது இதனால் உணர்த்தப் படுகின்றது.
கொல்லை மால்விடை ஏறிய கோவினை
எல்லி மாநடம் ஆடும் இறைவனைக்
கல்லினார் மதில் நாகைக் காரோணனைச்
சொல்லவே வினையாயின சோருமே
திருக்கோடிகா தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றனில் (5.78.3) அப்பர் பிரான் கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று இறைவனை அழைத்து புகழும் அடியார்களுக்கு ஊனம் ஏதும் இல்லை என்று கூறுகின்றார். ஒல்லை=விரைந்து; காலம் தாழ்த்தாது உடனே இறைவனை வழிபடுவதை ஒல்லை என்று உணர்த்துகின்றார் போலும்.
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்றில்லையே
இடைமருதில் உறையும் ஈசனை கொல்லை ஏற்றினர் என்று அப்பர் பிரான் அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (6.17.3) காணலாம். காலம் பல கழித்தார்=காலத்தின் தாக்கத்தால் மாறுபாடு அடையாது என்றும் ஒரே உருவத்தராய் காலங்களைக் கடந்து இருப்பவர்; சேயார்=தொலைவில் உள்ளவர்; தம்மை அறியாத மாந்தர்களுக்கு தொலைவில் உள்ளவர்
ஆலநீழல் இருப்பர் ஆகாயத்தர் அருவரையின் உச்சியார் ஆணர் பெண்ணர்
காலம் பல கழித்தார் கறைசேர் கண்டர் கருத்துக்குச் சேயார் தாம் காணாதார்க்குக்
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடுமழுவர் கோழம்பம் மேய ஈசர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம் கொண்டாரே
இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் அப்பர் பிரான் பெருமானை கொல்லை ஏற்றினான் என்று குறிப்பிடுகின்றார்.
மலை வளர்த்த மடமங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண்
இலை வளர்த்த மலர்க் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறிதிரை நீர் நஞ்சு உண்டான் காண்
கொலை வளர்த்த மூவிலைய சூலத்தான் காண் கொடுங்குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண்
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திருவாரூரன் காண் அவன் என் சிந்தையானே
மழபாடி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.39.2) அப்பர் பிரான் பெருமானை கொல்லை விடையேறு கூத்தன் என்று அழைக்கின்றார். கொக்கிறகு=கொக்கின் உருவத்தில் இருந்த குரண்டாசுரன் என்ற அரக்கனை அழித்ததன் அடையாளமாக கொக்கின் இறகினை பெருமான் தனது முடியினில் அணிந்துள்ளார் என்பது கந்த புராண வரலாறு (பாடல் எண்: 8–9–64) இரிந்து ஓடுதல்=பயத்தால் நாலாபுறமும் ஓடுதல்; குரண்டம்=கொக்கு சிறை=இறகு;
கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லைவிடையேறும் கூத்தன் கண்டாய்
அக்கு அரை மேல் ஆடலுடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதிகண்டாய்
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுது ஆனான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே
பொழிப்புரை:
திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்ற போது முல்லை நிலத்திற்கு உரிய கடவுளாகிய திருமாலைத் தனது வாகனமாக ஏற்றவனும் பூதங்கள் வளைந்தும் நெளிந்து ஆடியவாறு கல்லவடம் என்ற இசைக்கருவியை இசைப்பதை விரும்புவனும், பிறர் செல்வதற்கு தயங்கும் இடமாகிய சுடுகாட்டில் தயக்கம் ஏதும் இன்றி நடப்பவரும் நடனம் ஆடுபவரும், அடியார்களுக்கு அருள் புரிவதற்காக உலகின் பல இடங்களுக்கும் செல்வானும் ஆகிய இறைவன் சீர்காழி தலத்தில் உறைகின்றார்.
பாடல் 8:
எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற்கு இரங்கும் அவர் போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே
விளக்கம்:
கடுத்து=கோபம் கொண்டு: பாடல்=சாமகானம்; பொடி=திருநீறு
பொழிப்புரை:
தனது வழியில் குறுக்கிட்டது என்று தவறாக கருதி கயிலை மலையினைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடல் நெரியும் வண்ணம் கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றி, அரக்கனது ஆற்றலை அடக்கியவர் சீர்காழி தலத்தில் உறையும் பெருமானாவார். மேற்கண்டவாறு மலையின் கீழே அமுக்குண்டு வருந்திய அரக்கன் இராவணன், தனது தவறினை உணர்ந்து, சாமகானத்தால் பெருமானைப் புகழ்ந்து பாட அரக்கனுக்கு அருளிய பெருமான், தனது திருமேனி முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு புனிதராக விளங்குகின்றார்.
பாடல் 9:
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்
ஏற்றம் ஏறு அங்கு ஏறும் அவர் போலாம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே
விளக்கம்:
இந்த பாடலில் திருமாலையும் பிரமனையும் ஆற்றல் உடையவர்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். திருமாலின் வலிமை அனைவரும் அறிந்ததே. நெடிய உருவம் கொண்ட திருவிக்ரமனாக அவதாரம் எடுத்து, இரண்டு அடிகளால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் அளந்த வல்லமை படைத்தவர் திருமால்; மேலும் வராகமாக அவதாரம் எடுத்து கடலின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூமியையும் மீட்டெடுத்த வல்லமை படைத்தவர் திருமால். இத்தகைய வல்லமை படைத்த திருமால் பன்றியாக ஊடுருவி நீண்ட தூரம் சென்ற போதிலும், அவரால் பெருமானின் திருவடியை காண முடியவில்லை. எப்போதும் வேதங்களைப் படித்தவாறு படைத்தல் தொழிலில் எடுபடும் பிரமனும் ஆற்றல் மிக்கவர். எனினும் அவராலும் பெருமானின் திருமுடியைக் காண முடியவில்லை. எனவே ஆற்றல் மட்டும் எந்த விதத்திலும் இறைவனைக் காண்பதற்கும் உணர்வதற்கும் உதவாது; இறைவனின் அருளும் வேண்டும். இந்த கருத்தினை மிகவும் அழகாக அப்பர் பிரான், இறைவனின் அருளே கண்ணாகக் காணின் அல்லால், அவனது திருவுருவத்தை நாம் அறிய முடியாது என்று கூறும் பாடலையும் நாம் இங்கே காண்போம். மேலும், அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடல் (6.97.10) இது
மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்
ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமனில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்ட ஒணாதே
பொழிப்புரை:
மிகுந்த ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும் காண முடியாத வண்ணம் நீண்ட அழலாக நின்ற பெருமானின் தன்மை, அவர்கள் இருவரது ஆற்றலையும் வெற்றி கொண்டது. சிறப்பு மிக்கதாக கருதப்படும் இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளவனும், சீர்காழி நகரத்தில் உறைபவனும் ஆகிய இறைவன், கூற்றுவனையும் வெற்றி கொண்டு, சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் காப்பாற்றியவர்; அவர் அழகும் இளமையும் ஒருங்கே கொண்டவர் ஆவார்.
பாடல் 10:
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவர் அவர் போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே
விளக்கம்:
பெருக்க=மிகவும் அதிகமாக; பிதற்றும்=சாரமற்ற சொற்களைப் பேசும்; கரக்கும்=உண்மையை மறைத்து பேசும்; அருப்பின் முலையாள்=அரும்பு போன்று மென்மை வாய்ந்த மார்பகங்கள்;’ இருக்கின் மலிந்த=இருக்கு முதலான நான்கு வேதங்களில் நிறைந்துள்ள;
பொழிப்புரை:
மிகவும் அதிகமாக சாரமற்ற சொற்களைப் பேசும் சமணர்களின் சொற்களையும், உண்மையை மறைத்துப் பேசும் புத்தரின் சொற்களையும், சீர்காழியில் வீற்றிருக்கும் பெருமான் ஒரு பொருட்டாக கருதாமல் நீக்குகின்றார்; இருக்கு முதலாகிய நான்கு வேதங்களில் நிறைந்துள்ள பெருமான், அரும்பு போன்று மென்மையான மார்பகங்களை கொண்டுள்ள உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்
பாடல் 11:
காரார் வயல் சூழ் காழிக்கோன் தனைச்
சீரார் ஞான சம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத்து இனிதா இருப்பரே
விளக்கம்:
கார்=நீர் காரார்=நீர்வளம் மிகுந்த; ஏரார்=அழகு பொருந்திய; திருஞான சம்பந்தரின் பதிகங்களை பாடும் அடியார்களை உலகத்தவர் புகழ்வார் என்று இங்கே கூறுகின்றார்.
பொழிப்புரை:
நீர்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீர்காழி நகரில் உறையும் இறைவனை, சிறப்பு வாய்ந்த திருஞான சம்பந்தர் சொன்ன பாடல்கள் கொண்டு, உலகத்தவர் புகழும் வண்ணம் பாடி இறைவனை புகழ வல்லவர்கள், அழகிய முக்தி உலகம் சென்றடைந்து நிலையான இன்பத்துடன் இருப்பார்கள்.
முடிவுரை:
தோடுடைய, நறவநிறை வண்டு, என்று தொடங்கும் இரண்டு பதிகங்கள் மற்றும் இந்த பதிகத்தில் காணப்படும் முதல் பத்து பாடல்களில் பெருமானின் பெருமை உணர்த்தப் படுகின்றது, தேவர்கள் காவாய் என்று இறைவனை வேண்டிப் புகழ அவர் திரிபுரத்து அரக்கர்களை அழித்து அவர்களுக்கு அருள் புரிந்தார் என்று பதிகத்தின் முதல் பாடலிலும், எமது தந்தையே என்று தன்னிடம் சரணடைந்த வானோர்களை காக்கும் பொருட்டு ஆலகால விடத்தை உண்ட பெருமான் ஒரு மாலை நேரத்தில் நடனம் ஆடினார் என்று இரண்டாவது பாடலிலும், நமது மனதினை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு உதவும் பெருமான் என்று மூன்றாவது பாடலிலும், தனது அடியவன் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை காலால் உதைத்து வீழ்த்தி சிறுவனுக்கு அருள் புரிந்தவர் என்று நான்காவது பாடலிலும் பறக்கும் திரிபுரத்து கோட்டைகளை எரித்தவர் என்று ஐந்தாவது பாடலிலும், பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றவர் என்று ஆறாவது பாடலிலும், சுடுகாட்டினில் நடனம் ஆடுவதன் மூலம் தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்பதை உலகுக்கு உணர்த்துபவன் என்று ஏழாவது பாடலிலும், இசைப் பாடலுக்கு இரங்கி அருள் புரியும் தன்மையாளன் என்று எட்டாவது பாடலிலும், உயிர்கள் தங்களது ஆற்றலால் அவனை அறிந்து கொள்ள முடியாது என்றாலும் அவனது கருணையின் துணையோடு அவனை நாம் அறிந்து கொள்ளலாம் என்று ஒன்பதாவது பாடலிலும்நான்கு வேதங்களிலும் நிறைந்துள்ள பெருமான் என்று பத்தாவது பாடலிலும் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாடல்களில் பெருமானைத் தொழுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் எங்கும் நேரிடையாக குறிப்பிடப்படவில்லை. எனினும் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் தன்மைகள் விளைவாக பல அடியார்கள் அடைந்த நன்மைகளை நாம் புரிந்து கொள்ளலாம். பதிகத்தின் கடைப்பாடலில், இந்த பதிகத்தினை சொல்லி பெருமானைத் தொழும் அடியார்கள் பெறுகின்ற பயன் கூறப்பட்டுள்ளது. பெருமானின் பெருமையை தன்மையை உணரும் மாந்தர்கள், எவரும் சொல்லாமலே, பெருமானைத் தொழுது பயன் அடைவார்கள் என்பது சம்பந்தரின் திருவுள்ளக் கருத்து போலும். நாம் அவரது திருவுள்ளக் கருத்தினை புரிந்து கொண்டு, பெருமானைத் தொழுது பயன் அடைவோமாக.
பூவார் கொன்றை (Pooar Konrai) is a poetic phrase that refers to a specific type of flower and its significance in Tamil literature and culture. Here's a breakdown of the terms:
பூவார் (Pooar): This term is often associated with flowers. In the context of Tamil literature, it generally denotes something that is flower-like or related to flowers.
கொன்றை (Konrai): Refers to the Konrai flower, also known as the Cannonball tree (Couroupita guianensis). The Konrai flower is known for its fragrant and vibrant blossoms.
"பூவார் கொன்றை" can be interpreted as "the Konrai flower" or "flower-like Konrai". The phrase may evoke imagery of the flower’s beauty, fragrance, and significance.
Konrai Flower: The Konrai flower, also known as Cannonball flower, is known for its large, fragrant blooms and is often associated with spiritual and cultural significance. In Tamil Nadu, it is used in religious ceremonies and as an offering in temples, particularly in worship of Lord Shiva.
Religious Significance: The Konrai flower is commonly associated with Lord Shiva, who is depicted as having the flower in his matted hair or being offered the flower during worship. Its vibrant color and fragrance make it a preferred choice for devotional offerings.
Literary and Poetic Usage: In Tamil literature and poetry, flowers are often used symbolically to represent beauty, purity, and devotion. The Konrai flower, with its rich aroma and striking appearance, is used to convey these qualities.
In Tamil devotional hymns or literature, phrases like "பூவார் கொன்றை" might be used to describe the beauty of Lord Shiva or to depict the offering of flowers in a temple setting. It symbolizes purity and the divine grace associated with worship.
"பூவார் கொன்றை" poetically highlights the significance of the Konrai flower, emphasizing its role in worship and its representation of beauty and devotion. It evokes images of fragrant, vibrant blossoms that are cherished in religious and cultural contexts, particularly in the worship of Lord Shiva.