இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பூமகனூர் புத்தேளுக்கு

பூமகனூர் புத்தேளுக்கு

பதிக எண்: 2.74 - திருபிரமபுரம் (சீர்காழி) - காந்தாரம்

பின்னணி:

தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தல யாத்திரைகளுக்கு இடையே பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கிய திருஞானசம்பந்தர், சீர்காழி தலத்தின் மீது பல வகையான பாடல்களை பாடுகின்றார். அத்தகைய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக விளங்கின என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த பதிகத்தினை மற்ற மிறைக் கவிகளுடன் சேர்த்து ஆதி விகற்பம் என்று சேக்கிழார் கூறுகின்றார். விகற்பம் என்றால் மாறுபட்டது என்று பொருள். பெரும்பான்மையான பதிகங்களின் அமைப்பிலிருந்து மாறுபட்டதால் சேக்கிழார் இவ்வாறு அழைத்தார் போலும். பல்பெயர்ப் பத்து என்று அழைக்கப்படும் எரியார் மழு ஒன்று என்று தொடங்கும் பதிகமும் விளங்கிய சீர் (2.73) என்று தொடங்கும் கோமுத்திரி அந்தாதி பதிகமும் இந்த ஆதி விகற்பங்கள் என்று சேக்கிழார் கருதும் பதிகங்களில் அடங்கியவை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த பதிகமும் பன்னிரண்டு பாடல்களை உடையதாக, சீர்காழி தலத்தின் பன்னிரு பெயர்களையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

இந்த பதிகம் கோமூத்திரி என்ற சித்திரக்கவி வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள். வடமொழியில் இயற்றப்பட்ட காவ்யாதர்சனம் எனப்படும் நூலினை ஆதாரமாகக் கொண்டு தமிழில் தண்டி அலங்காரம் என்று ஒரு நூல் இயற்றப் பட்டுள்ளது. இந்த நூலில் சித்திரக் கவிகளின் வகைகள் எடுத்துரைக்கப் படுகின்றன. இதனில் உள்ள ஓர் பாடல் பன்னிரண்டு வகையான சித்திரக் கவிகளை குறிப்பிடுகின்றது. இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மாலைமாற்று வகைக்கு, ஞானசம்பந்தர் அருளிய யாமாமா என்று தொடங்கும் பதிகம் சிறந்த உதாரணம். கூடச் சதுக்கம் என்ற வகைக்கு எடுத்துக் காட்டாக மூன்றாம் திருமுறைப் பதிகப் பாடல்கள் (3.106) அமைந்துள்ளன. வினாவிடைப் பதிகங்கள் பல முதல் மூன்று திருமுறைகளில் காணப்படுகின்றன.

கோமூத்திரியே கூடசதுக்கம் மாலை மாற்றே எழுத்து வருத்தனம்

நாகபந்தம் வினா உத்தரமே காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்

சக்கரம் சுழிகுளம் சாருப்பதோபத்திரம் அக்கரச் சதகமும் அவற்றின் பால

நடந்து செல்லும் பசு, சிறுநீர் கழித்தால், வளைந்துவளைந்து பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற அடையாளத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பாடலின் அடிகளை ஒன்று விட்டு ஒன்று சேர்த்து பொருள் காணும் வகையில் அமைந்திருப்பது கோமூத்திரி வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள். அதாவது நான்கு அடிகள் கொண்ட பாடலாக இருந்தால், முதல் அடியையும் மூன்றாம் அடியையும் சேர்த்து பொருள் கொண்ட பின்னர், இரண்டாவது அடியையும் நான்காவது அடியையும் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். ஆனால் இந்த பதிகத்தில் அமைந்துள்ள பாடல்களை கோமூத்திரி அந்தாதி என்று பெரியோர்கள் வகைப்படுத்தி உள்ளனர். இந்த பதிகம், கோமூத்திரி வகை மற்றும் அந்தாதி வகை ஆகிய இரண்டின் கலவையாக காணப்படுகின்றது.

தேவாரப் பதிகங்களில் அந்தாதி வகையைச் சார்ந்த பாடல் தொகுப்பு ஏதும் இல்லை. ஆனால் திருவாசகத்தில் அந்தாதி வகையில் பல பாடல் தொகுப்புகள் (திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், கோயில் திருப்பதிகம், கோயில் மூத்த திருப்பதிகம் முதலியன) அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகம், கோமூத்திரி அந்தாதி வகையில் அமைந்துள்ளது. அதாவது அந்தாதி போன்று முந்திய பாடலின் கடைச் சொல்லினை அடுத்த பாடலின் முதற் சொல்லாக கொள்ளாது, முந்திய பாடலில் கடைச் சொல்லுக்கு முன்னர் அமைந்துள்ள சொல்லினை அடுத்த பாடலின் முதற் சொல்லாக கொண்டு அமைந்துள்ள தொகுப்பு. இப்படி ஒரு வித்தியாசமான தொகுப்பினை திருஞானசம்பந்தர் அருளியிருப்பது அவரது தமிழ்ப் புலமையை நமக்கு உணர்த்துகின்றது. மேலும் வழி முடக்கு மாவின் பாய்ச்சல் என்று பெயரிட்டு இந்த பதிகத்தின் தன்மையை மிகவும் அழகாக உணர்த்துகின்றார். ஒரு மாடு பாய்ந்து செல்லும் போது அதன் காற்தடங்கள் வளைந்து செல்லும் பாதையைத் தானே காட்டும். அந்த தன்மையே இங்கே கூறப்படுகின்றது. கோமூத்திரி என்ற சொல்லினை விடவும் வழிமுடக்கு மாவின் பாய்ச்சல் என்ற தொடர் சொல்வதற்கும் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது அல்லவா.

கோமூத்திரி எனப்படும் சித்திரக்கவி வகைக்கு வேறு விதமாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. முதல் அடியினை மேல் வரியாகவும் அதற்கு அடுத்த அடியினை கீழ் வரியாகவும் வரைந்து, அவ்விரண்டு அடிகளில் உள்ள எழுத்துக்களை மேலும் கீழுமாக ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அதே செய்யுளாக அமையும் பாடல்கள் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. இந்த முறையினை இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் உணரலாம்.

மேலே குறிப்பிட்ட வகையில் ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகத்தின் பாடல்கள் அமையவில்லை. எனினும் இந்த பாடலை கோமூத்திரி அந்தாதி என்று அறிஞர்கள் அழைக்கின்றனர். ஆனால் திருஞானசம்பந்தர் இந்த பாடலுக்கு வழிமுடக்கு மாவின் பாய்ச்சல் என்ற பெயரினையே அளித்துள்ளார். .பாடல் 1:


பூமகனூர் புத்தேளுக்கு இறைவன் ஊர் குறைவிலாப் புகலி பூ மேல்

மாமகளூர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்

சேமம் மிகு சிரபுரம் சீர்ப் புறவ நிறை புகழ்ச் சண்பை காழி கொச்சை

காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே

விளக்கம்:

இந்த பாடலில் சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களும் சொல்லப்பட்டுள்ள வரிசை, விளங்கிய சீர் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடல் (2.73.1) பிரமனூர் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடல் (2.70.1) மற்றும் எரியார் மழு என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்கள் (1.63) உள்ள வரிசையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். இதே பதிகத்தின் மற்ற பாடல்களில் அந்த வரிசை பின்பற்றப் படவில்லை. பூமகன்=தாமரை மலரினைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமன்; பிரமனூர் என்ற பெயர் பூமகனூர் என்று மாற்றப் பட்டுள்ளது. தான் மேற்கொண்டுள்ள படைத்தல் தொழில் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உபநிடதங்களை முறையாக ஓதி பிரமன் வரம் பெற்றதால் இந்த தலத்திற்கு பிரமபுரம் என்ற பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகின்றது. பிரமன் செய்த வழிபாட்டினை உணர்த்தும் ஞானசம்பந்தரின் பாடல் ஒன்றினை (3.67.1) நாம் இங்கே காண்போம். சுரர்=தேவர்கள்; சுரர் உலகு=தேவர்கள் வாழும் உலகம்; பயில்=வாழ்கின்ற; நரர்கள்=மனிதர்கள்; தரணி தலம்=நிலவுலகம்; முரண்=வலிமை; அரணம்=காவல்; விசை=வேகம்; வரன்முறை=எவ்வாறு ஓதவேண்டும் என்று வரையறுக்கப்பட்ட முறை; சுருதி=வேதங்கள்; சுருதி சிரம்=வேதங்களின் முடிவான கருத்துகள் கொண்ட உபநிடதங்கள்; நிரை=வரிசை; சரண இணை=இணையாக உள்ள திருப்பாதங்கள்; பரவ=புகழ்ந்து பாட; விரவு வகை எரிய=கலந்து பல இடமும் எரியும் வண்ணம்; இசை என்ற சொல்லுக்கு புகழ் என்று பொருள் கொண்டு, திரிபுரங்களை அழித்து புகழ் பெற்ற அம்பினை ஏந்திய கரம் என்று பொருள் கூறுவதும் பொருத்தமே.

சுரர் உலகு நரர்கள் பயில் தரணி தலம் முரண் அழிய அரணம் மதில் முப்

புரம் எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடமாம்

வரம் அருள வரன் முறையின் நிரை நிறை கொள் வரு சுருதி சிரவுரையினால்

பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே

தேவர்கள் வாழ்கின்ற தேவர் உலகமும் மற்றும் மனிதர்கள் வாழ்கின்ற நிலவுலகமும் தங்களது நிலையிலிருந்து மாறுபட்டு, வலிமை அழியும் வண்ணம் துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை, ஒன்றுக்கொன்று காவலாகத் திகழ்ந்த கோட்டைகளை, எப்போதும் வானில் பறந்து திரியும் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கோட்டினில் வரும் தருணத்தில் தான் ஒரே அம்பு கொண்டு அழிக்கப்பட முடியும் என்று தாங்கள் பெற்றிருந்த வரத்தினால், தனித்தனியாக இருந்த போதிலும் ஒன்றுக்கொன்று துணையாகத் திகழ்ந்த வலிமையான மூன்று கோட்டைகளை, ஒன்று சேர்த்து கலந்து எரியும் வண்ணம் விரைவாக செல்லக்கூடிய அம்பினை எய்த ஆற்றல் கொண்ட கரத்தினை உடையவர் சிவபெருமான். வேதங்களின் முடிவான பொருளை உணர்த்தும் உபநிடதங்களின் வாக்கியங்களை, எல்லா ஸ்வரங்களும் வரிசை முறையில் நிறைவாக அமையும் வண்ணம் முறையாக அவை ஓதவேண்டிய முறையில், தான் மேலும்மேலும் உயர்வடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓதிய பிரமன், பெருமானின் அழகிய இணையான மலரடிகளை தான் புகழ்ந்து பாடி, தான் வேண்டிய வரங்களை பெற்றான். இவ்வாறு பிரமன் போற்றி வணங்கியமையால் பிரமபுரம் என்று பெயர் பெற்ற இந்த தலம் ஓங்கிய புகழுடன் விளங்குகின்றது. என்பதே மேற்கண்ட பாடலில் பொழிப்புரை.

புத்தேள்=தேவர்கள்; சூரபதுமனுக்கு பயந்து இந்திரன் இங்குள்ள மூங்கிலில் மறைந்து கொண்டமையால் வேணுபுரம் என்ற பெயர் சீர்காழி தலத்திற்கு வந்தது. அப்போது இந்திரனுடன் வந்த தேவர்கள் இறைவனை வணங்கிய செய்தி இங்கே புத்தேளுக்கு இறைவனூர் என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது. மாமகள்=செல்வத்தை தரும் இலக்குமி தேவி; இஞ்சி=மதில்; சேமம்= பாதுகாப்புடன், க்ஷேமம் என்ற வடமொழியின் தமிழாக்கம்; இந்திரன், இந்த தலத்தில் இருந்த மூங்கில் மரத்தில் ஒளிந்து கொண்டு அதன் உச்சியில் அமர்ந்த வண்ணம் அமராவதி நகரினை பார்த்தான் என்று திருஞானசம்பந்தர் கூறும் பாடலை (3.67.2) நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். வேணு என்றால் மூங்கில் என்று பொருள். மூங்கிலில் ஒளிந்து கொண்டமையால் வேணுபுரம் என்ற பெயர் வந்தது என்று இந்த பாடலில் திருஞாசம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் விநாயகப் பெருமானின் தோற்றமும் குறிப்பிடப் படுகின்றது. தாணு மிகு ஆண் இசை கொடு என்ற தொடரை முதல் அடியில் கடையில் மாற்றி வைத்து பொருத்தி பொருள் காண வேண்டும்; ஆணு=அன்பு கொண்டு பெருமானை வழிபட்ட தேவர்கள்; ஸ்தாணு என்றால் நிலையாக உயர்ந்த கம்பம் என்று பொருள். ஸ்தாணு என்ற வடமொழிச் சொல் இங்கே தாணு என்று மாற்றப் பட்டுள்ளது. கஜமுகாசுரனின் தொல்லைக்கு ஆளான தேவர்கள் நிலையான தூணாக நின்ற பெருமானை பற்றுக்கோடாக கருதினார்கள் என்ற நயம் வெளிப்படும் வண்ணம் தாணு என்ற பெயரினை, திருஞானசம்பந்தர் பயன்படுத்தி உள்ளது உணர்ந்து ரசிக்கத் தக்கது. வியர்=சினம்; மது= கஜமுகாசுரன்; மாகதர் எனப்படும் முனிவருக்கும் ஒரு அசுரப் பெண்ணுக்கும் பிறந்தைமையால் மது என்ற பெயர் இந்த அசுரனுக்கு வந்தது .காணும் அளவில்=கண்டு, அறிந்து; மிகு=வலிமை மிகுந்து; ஆண் இசை கொடு=ஆண் யானையின் வடிவத்தைக் கண்டு, அந்த உருவத்துடன் இசைந்து நின்ற; கோணு நுதல்=வளைந்த நெற்றி; நீள் நயனி=நீண்ட கண்களை உடைய உமை அன்னை; கோணில்=குற்றம் இல்லாத வண்ணம்; பிடி=பெண் யானை; மாண்பு=பெருமை, மாண்பினை உடையவள் மாணி; மாணி என்ற சொல் பெருமானை குறிப்பதற்கும் இந்த பாடலின் மூன்றாவது அடியில் திருஞானசம்பந்தரால் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணும் மது காணும் அளவில்

கோணு நுதல் நீள் நயனி கோணில் பிடி மாணி மது நாணும் வகையே

ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர் கோன்

வேணு வினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே

தன்னிடம் மிகுந்த அன்பு கொண்டு தேவர்கள் வழிபட்டதைக் கண்ட பெருமான், தாணு என்று அழைக்கப்படும் பெருமான், கஜமுகன் என்ற அரக்கன் தேவர்கள் மீது கொண்டிருந்த சினத்தின் விளைவாக தேவர்கள் அடைந்த துன்பத்தினைக் கண்டு அவர்கள் பால் கருணை கொண்டு அவர்களது துன்பத்தினை தீர்க்க திருவுள்ளம் கொண்டார். பிரணவ வடிவம் பொறிக்கப் பட்டிருந்த சித்திரத்தில் இருந்து எழுந்த வலிமை மிகுந்த ஆண் யானையைக் கண்ட பெருமான், அதன் உருவத்துடன் இணைந்து நிற்க, வளைந்த நெற்றியும் நீண்ட கண்களும் கொண்டு பெருமை உடையவளாகத் திகழும் உமையன்னை குற்றமிலாத வகையில் பெண் யானையாக மாறியதைக் கண்டு அந்த உருவத்துடன் இணைய, விநாயக பெருமான் தோன்றினார்; போரில் தோற்று கஜமுகாசுரன் நாணம் அடையும் வண்ணமும், வல்லமை மிகுந்த கஜமுகன் செய்து வந்த தீய செயல்கள் அழியும் வண்ணமும், கஜமுகனை அழித்தவனும் ஆண்மை இயல்பு கொண்டவனும் ஆகிய விநாயகப் பெருமானை தோற்றுவித்த பெருமையை உடைய சிவபெருமானது பதி சீர்காழியாகும். இந்த தலம், புகழ் மிகுந்த தேவர்களின் தலைவனாகிய இந்திரன், தான் ஒளிந்து கொண்டிருந்த மூங்கிலின் உச்சியில் ஏறி, தனது நகரமாகிய அமராவதியை காணும் பொருட்டு நட்ட மூங்கில் மரத்தினை உடையதால் வேணுபுரம் என்ற பெயர் பெற்றது என்பதே இந்த பாடலில் பொழிப்புரை.

பொழிப்புரை:

தாமரை மலரினில் உறையும் பிரமனால் வழிபடப் பட்டதால் பிரமபுரம் என்றும், சூரபதுமனுக்கு பயந்து கொண்டு மூங்கில் காட்டினில் இந்திரன் ஒளிந்து கொண்ட போது தேவர்களும் இந்திரனுடன் சேர்ந்து இறைவனை வழிபட்டதால் வேணுபுரம் என்றும், குறைவில்லாத வளம் கொண்ட புகலி நகரம் என்றும்,உலகில் உள்ள மற்ற நகரங்களினும் செல்வச் சிறப்பினை அதிகமாக உடைத்ததாக இலக்குமி தேவி உறையும் வெங்குரு என்றும், நல்ல தோணிபுரம் என்றும், பூந்தராய் என்றும், வலிமையான மதில் சுவர்களைக் கொண்டு பாதுகாப்பாக விளங்கும் சிரபுரம் என்றும், சிறப்பினை உடைய புறவம் என்றும்,நிறைந்த புகழினை உடைய சண்பை நகரம் என்றும், காழி என்றும், கொச்சைவயம் என்றும், தனது நெற்றிக் கண்ணினைத் திறந்து காமனை அழித்த இறைவனின் ஊர் கழுமலம் என்றும் பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலமே, அடியேன் எப்போதும் கருத்தினில் கொள்ளும் தலமாகும்.

பாடல் 2:


கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய்த் தோணிபுரம் கனக மாட

உருத் திகழ் வெங்குருப் புகலி ஓங்கு தராய் உலகாரும் கொச்சை காழி

திருத் திகழும் சிரபுரம் தேவேந்திரனூர் செங்கமலத்து அயன் ஊர் தெய்வத்

தருத் திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே

விளக்கம்:

கனகம்=பொன்; திரு=இலக்குமி தேவி; தரு=மரம்; தெய்வத்தரு=தெய்வத்தன்மை வாய்ந்த கற்பக மரம்; மெய்=பிரளயத்திலும் அழியாது நிலைத்து நிற்கும்; பல திருமுறைப் பாடல்களில் தனது அடியார்கள் நினைக்கும் பொருட்களைத் தருகின்ற பெருமானை, கற்பகம் என்றே அழைக்கின்றனர்.

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், அந்த தலத்து மக்களின் கொடைத் தன்மையை உணர்த்தும் பொருட்டு, கற்பக மரத்தினை அவர்களுக்கு உவமையாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இகழுரு=பலரும் இகழும் வகையில் ஆடையின்றி திரிந்த தன்மை; பறிதலை=முடி பறிக்கப்பட்ட மொட்டைத் தலை; இழிதொழில்=பெருமானை பலவாறாக பழித்துக் கூறும் செயல் செய்வோர்; விரகினர்=சாமர்த்தியமாக செயல் படுவோர்; பொதிபவர்=உடலில் பொதியும் வண்ணம் போர்த்துக் கொள்ளுதல்; சமணர்களும் புத்தர்களும் கெடுமாறு அருள் புரிந்தவன் பெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகம் அருளிய பல நாட்கள் கழித்தே, திருஞானசம்பந்தர் பாண்டிய நாடு சென்று ஆங்கே அனல்வாதம் மற்றும் புனல் வாதத்தில், சமணர்களை தோற்கடித்து சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டுகின்றார் என்பதால், மதுரை நிகழ்ச்சி இங்கே உணர்த்தப் படவில்லை என்பது தெளிவாகின்றது. எனினும், திருஞான சம்பந்தர், தேவாரப் பாடல்கள் பாடுவதற்கு முன்னமே, அப்பர் பிரானை கொல்வதற்கு சமணர்கள் புரிந்த பல சூழ்ச்சிகளை முறியடித்து, சமணர்களின் ஆதிக்கத்தை முறியடித்து, பல்லவ மன்னன் மகேந்திர வர்மனும் சைவ மதத்திற்கு திரும்பும் வண்ணம் பெருமான், அருளிச் செய்த செயல்களை கருத்தில் கொண்டு, இவ்வாறு திருஞானசம்பந்தர் கூறினார் என்று பொருள் கொள்ளவேண்டும். சுரர்=தேவர்கள்; சுரர்தரு=தேவலோகத்தில் இருக்கும் கற்பக மரம், நினைத்ததை அளிக்க வல்லது என்று சொல்லப் படுகின்றது. பதிகத்தின் மூன்றாவது பாடலில் தலத்து மாந்தர்களின் கொடைத் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அந்த கருத்தை வலியுறுத்தும் முகமாக மீண்டும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த தலத்தில் மிகவும் அதிகமான நாட்கள் தங்கிய திருஞான சம்பந்தருக்கு தலத்து மனிதர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது போலும்.

இகழுருவொடு பறிதலை கொடும் இழிதொழில் மலி சமண் விரகினர்

திகழ் துவர் உடையுடல் பொதிபவர் கெட அடியவர் மிக அருளிய

புகழுடை இறை உறைபதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி

திகழ் சுரர் நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திருமிழலையே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.22.2) திருஞானசம்பந்தர், அந்த தலத்து மக்களை கொடையில் கற்பக மரம் ஒத்தவர்கள் என்று சிறப்பித்து கூறுகின்றார். இமையவர் புரம் எழில் பெற வளர் மரம் என்று கற்பக மரம் உணர்த்தப் படுகின்றது. தனது நிழலில் அமர்வோர் நினைக்கும் பொருளினை அளிக்கும் கற்பக மரம் போன்று, தங்களை நாடிவரும் இரவலர்கள் வேண்டுகின்ற பொருளினை அளித்த கொடையாளர்கள் வாழ்ந்த நகரம் திருமறைக்காடு என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மேலும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர், கொலைத் தொழிலில் வல்லமை பெற்றுத் திகழ்ந்த புலியினைக் கொன்று அதன் தோலினை ஆடையாக பெருமான் அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். ஆடையாக புலித்தோலை அணிந்துள்ள பெருமான், தனது உடலில் கைகள் தொடங்கி பல அவயவங்களில் ஆபரணமாக பாம்பினை அணிந்துள்ளார் என்றும் இந்த பாடல் குறிப்பிடுகின்றது. பண்டைய இலக்கியங்கள் ஆண்கள் அணியும் ஆபரணங்களை பட்டியல் இடுகின்றன. காப்பு கடகம் வளையல் வங்கி என்பன ஆண்கள் தங்களது கைகளில் அணியும் நகைகள்; வீரக்கழல் மற்றும் தண்டை என்பன ஆண்கள் தங்களது காலில் அணியும் நகைகள்; கணையாழி என்பது அரச குடும்பத்தினரும் உயர் பதவிகளில் இருப்போரும் விரலில் அணியும் நகை; இப்போது மோதிரமாக மாறி விட்டது. அரைஞாண் அரையணி பவளவடம் என்பன இடுப்பில் அணிவன; கடுக்கன், குண்டலம், என்பன காதில் அணிவன; நெற்றிப் பட்டம் நெற்றியில் அணிவது; வாகுவலயம் பதக்கம் என்பன கழுத்தில் அணிவன. இத்தகைய அணிகலன்களாக தனது உடலெங்கும் வரன்முறையாக அணிந்து கொள்வதற்கு பதிலாக, பெருமான் பாம்பினை தனது உடல் உறுப்புகள் பலவற்றில் அணிந்துள்ளார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அடல் வலி=கொல்லும் தன்மை கொண்ட வலிமை; இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும், கடை வரியில் உள்ள கடைச் சொல் தவிர்த்து வேறெங்கும் நெடில் எழுத்து வாராத வண்ணம் இயற்றப் பட்ட பாடல். இதற்கு ஒப்ப, மறைக்காடு, வேதவனம் என்ற பெயர்கள் தவிர்க்கப்பட்டு. தலம் மறைவனம் என்று அழைக்கப் படுவது, திருஞானசம்பந்தரின் தமிழ் ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

கரமுத லியவவ யவமவை கடுவிட வரவது கொடுவரு

வரன்முறை அணிதரும் அவனடல் வலிமிகு புலியத ளுடையினன்

இரவலர் துயர்கெடு வகைநினை யிமையவர் புரமெழில் பெறவளர்

மரநிகர் கொடைமனி தர்கள்பயில் மறைவன மமர்தரு பரமனே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.73.2) திருஞானசம்பந்தர், இந்த தலத்தினை தெய்வத்தரு வளரும் பொழில் புறவம் என்று குறிப்பிடுகின்றார். தெய்வத்தரு=கற்பக மரம். கற்பக மரம் தனது நிழலில் அமர்வோர் நினைத்ததை அளிக்கும் என்று கூறுவார்கள். சீர்காழி தலத்தில் உள்ள மரங்கள் செழிப்புடன் வளர்ந்து மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதால், கற்பக மரங்களுக்கு ஒப்பாக இங்கே குறிப்பிடப் படுகின்றன. அயன்=பிரமன்; அயனூர்=பிரமபுரம்; திரு=செல்வம், அழகு; சுவர்பானு என்ற அரக்கன், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த அமுதத்தை, மோகினியாக வந்த திருமால், வஞ்சகமாக தேவர்களுக்கு மட்டும் அளித்து வந்ததைக் கண்டு, தானும் தேவர்களின் நடுவே அமர்ந்து அமுதம் பெறுவதற்கு முயற்சி செய்தான். தங்களின் இடையே அமர்ந்து அவன் அமுதம் பெற்றதை உணர்ந்து, சூரியனும் சந்திரனும், திருமாலிடம் அவன் வரிசை மாறி அமர்ந்ததை சுட்டிக் காட்டி உணர்த்தியதால், திருமால் அவனது தலையினை வெட்டினார். ஆனால் அமுதம் உள்ளே சென்றதால் சுவர்பானு உடனே இறக்கவில்லை. அவனது தலை சீர்காழி சென்று இறைவனிடம் இறைஞ்சி முறையிட, அரக்கனது உடலுடன் பாம்பின் தலையை பொருத்தியும், அரக்கனது தலையுடன் பாம்பின் உடலை பொருத்தியும் பெருமான் வாழ்வளித்தார். அவர்கள் இருவரும் முறையே இராகு என்றும் கேது என்று அழைக்கப் பட்டனர். இந்த சுவர்பானு எனப்படும் அரக்கனே சிலம்பன் என்று தேவாரப் பாடல்களில் அழைக்கப் படுகின்றான். சுவர்பானுவின் தலை சென்று இறைவனை வழிபட்டமையால் சிரபுரம் என்ற பெயரும் தலத்திற்கு வந்தது. இராகு என்ற பாம்பு வழிபட்டமையால், நாகநாதன் என்று பெருமானும் அழைக்கப் படுகின்றார். எனவே சிலம்பன் என்ற சொல் பெருமானை வழிபட்டு அருள் பெற்ற சுவர்பானுவை குறிப்பதாகவும், நாகநாத சுவாமி என்ற பெயரினை பெற்ற பெருமானை குறிப்பதாகவும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. இந்த பாடலில் சிரபுரம் என்ற சொல் இல்லாமல் இருப்பதன் பின்னணியில், சிலம்பனூர் என்ற சொல்லுக்கு சிரபுரம் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. வேணுபுரம் என்ற பெயர் இந்திரன் வந்து பெருமானை வழிபட்டதால் வந்த பெயர். எனவே தேவேந்திரன் ஊர் என்று வரும் இடங்களில் வேணுபுரம் என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்பா=சிறந்த பாடல்கள்;உருவளர்=புகழ் வளரும்; சான்றோர்கள் மேலும்மேலும் இறைவனைப் புகழ்ந்து பாடுவதால், பெருமானின் சிறப்பும் தலத்தின் சிறப்பும் மேலும்மேலும் வளர்கின்றது என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உயர்ந்த தேவர்=பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட உயர்ந்த தேவர்கள்;வெருவளர்=அச்சம் வளரும் நிலை; தெய்வத் தரு வளர் புறவம் என்பதற்கு தெய்வத் தரு என்று பெருமானை குறிப்பிட்டதாக பொருள் கொண்டு, தனது அடியார்கள் வேண்டுவன எல்லாம் அளிக்கும், கற்பக மரம் போன்ற கொடையாளனாகிய பெருமான் உறைகின்ற தலம் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன் ஊர் அயனூர் தெய்வத்

தரு வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தரு சண்பை ஒண்பா

உரு வளர் வெங்குருப் புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர்

வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே

பொழிப்புரை:

சிவஞானக் கருத்துகள் உடையவர்களாக விளங்கும் மறையவர் சேர்ந்து வாழும் கழுமலம் என்றும், பிரளய வெள்ளத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் தோணிபுரம் என்றும், பொன் போன்று அழகிய மாடங்கள் கொண்ட மாளிகைகள் கொண்ட வெங்குரு என்றும், புகலி என்றும், ஓங்கிய புகழினை உடைய பூந்தராய் என்றும், பரந்த உலகினில் சிறப்புடன் திகழும் கொச்சைவயம் என்றும், காழி என்றும், செல்வ வளத்துடன் விளங்கும் சிரபுரம் என்றும், தேவேந்திரனின் ஊர் என்பதை உணர்த்தும் வேணுபுரம் என்றும் சிவந்த தாமரை மலரில் உறையும் பிரமன் வழிபட்ட பிரமனூர் என்றும், தெய்வத்தன்மை பொருந்திய கற்பகம் முதலான மரங்கள் நிறைந்த சோலைகள் உடைய புறவம் என்றும் சண்பை என்றும் அழைக்கப்படும் சீர்காழி தலம் நமது தலைவனும் சடைமுடி உடையவனும் ஆகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாகும்.

பாடல் 3:


ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை

கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய்த் தோணிபுரம் கற்றோர் ஏத்தும்

சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய்ப் புறவம் அயனூர் பூங்கற்பகத்

தார் மருவும் இந்திரன் ஊர் புகலி வெங்குருக் கங்கை தரித்தோன் ஊரே

விளக்கம்:

கதுவ=பற்ற; ஊர்மதி=விண்ணில் ஊர்ந்து செல்லும் சந்திரன், கார்=மேகங்கள்; முதலடியில் உள்ள சொற்களை, உயர் மதில் ஊர் மதியைக் கதுவ என்று மாற்றி அமைத்து பொருள் காணவேண்டும். அருளாளர்கள், சிவபெருமானை வழிபடும் சான்றோர்களையே கற்றவர் என்று அடையாளம் காண்கின்றனர். அத்தகைய கற்றோர்கள், சிவபெருமான் பொருந்தி உறைகின்ற சீர்காழி தலத்தினை கொண்டாடுவதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அயன்=பிரமன்; அயனூர்= பிரமனால் வழிபடப்பட்டதால் பிரமாபுரம் என்ற பெயரினைக் கொண்ட சீர்காழி தலம்; மெய்ப் புறவம் என்று இந்த பாடலில் குறிப்பிடுவதை உணரலாம். மற்ற தலங்கள் ஊழிக் காலத்தில் அழிந்து பட, ஊழிக்காலத்திலும் அழியாமல் இருக்கும் தன்மை உடையது காழி தலம் என்பதை உணர்த்தும் முகமாக மெய்ப் புறவம் என்று அழைத்தார் போலும்.

பொழிப்புரை:

வானில் ஊர்ந்து செல்லும் சந்திரனைப் பற்றும் வண்ணம் உயர்ந்த மதில்களை உடைய சண்பை என்றும், ஒளியுடன் திகழும் காழி என்றும், கொச்சை வயம் என்றும், மேகங்கள் தவழும் அழகிய சோலைகளால் சூழப்பட்ட கழுமலம் என்றும், பிரளய வெள்ளத்தில் மூழ்கி அழியாமல் மிதந்து நிலையாக நின்ற தோணிபுரம் என்றும், கற்றோர்கள் புகழும் சிறப்பினை உடைய பூந்தராய் என்றும், சிரபுரம் என்றும், என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் புறவம் என்றும், அயன் என்று அழைக்கப்படும் பிரமனின் ஊர் என்பதை உணர்த்தும் பிரமனூர் என்றும், அழகிய கற்பக மரங்களை உடைய இந்திரன் வழிபட்ட வேணுபுரம் என்றும், புகலி என்றும், வெங்குரு என்றும் அழைக்கப்படும் சீர்காழி நகரம், கங்கை நதியினைத் தனது சடையினில் மறைத்த சிவபெருமானின் ஊர் ஆகும்.

பாடல் 4:


தரித்த மறையாளர் மிகு வெங்குருச் சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி

எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன் ஊர்

தெரித்த புகழ்ச் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம்

விரித்த புகழ்ப் புறவம் விரைக் கமலத்தோன் ஊர் உலகில் விளங்கும் ஊரே

விளக்கம்:

தரித்த=வேதங்களை நாவில் தரித்த; தரியார்=பொறுக்க முடியாதவர்கள், தேவர்களும் மனிதர்களும் நிம்மதியாக வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு தொடர்ந்து துன்பம் இழைத்த திரிபுரத்து அரக்கர்கள்; இஞ்சி=கோட்டை, மதில்; விரை=நறுமணம்; தெரித்த=விளங்கிய; கமலத்தோன் ஊர் என்று பிரமபுரம் எனப்படும் தலத்தின் பெயரை சற்று மாற்றி, திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கையாண்டுள்ளார். தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்டுள்ள பிரமன், கமலத்தோன் என்று இங்கே அழைக்கப் படுகின்றார். பிரமபுரம் என்ற பெயர் வந்ததன் காரணத்தை நாம் முதல் பாடலின் விளக்கத்தில் கண்டோம்.

பொழிப்புரை:

இடைவிடாது வேதங்கள் ஓதுவதால், தங்களது நாவினில் வேதங்களை தரித்தவர்களாக விளங்கும் அந்தணர்கள் மிகுந்த வெங்குரு என்றும், சிறப்பு வாய்ந்த தோணிபுரம் என்றும், தேவர்களும் மனிதர்களும் நிம்மதியாக வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு தொடர்ந்து துன்பம் இழைத்து அனைவர்க்கும் பகைவர்களாக திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் வலிமை வாய்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒருங்கே எரித்த இறைவனாகிய சிவபெருமான் சேரும் இடமாகிய கழுமலம் என்றும், கொச்சைவயம் என்றும், பூந்தராய் என்றும், புகலி என்றும், வானவர்களின் தலைவனாகிய இந்திரன் ஒளிந்து கொண்டதால் வேணுபுரம் என்று பெயரினை பெற்ற தலம் என்றும் விளங்கிய புகழினை உடைய சிரபுரம் என்றும், சிறப்புகள் பொருந்தி திகழும் காழி என்றும், சண்பை என்றும், செழுமை வாய்ந்த வேதங்களால் புகழ் விரித்து சொல்லப்படும் புறவம் என்றும், நறுமணம் வாய்ந்த தாமரை மலரில் உறையும் பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் என்றும், அழைக்கப்படும் சீர்காழி நகரம் உலகினில் சிறந்து விளங்குகின்றது.

பாடல் 5:


விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம் ஏய்க்கும்

இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏரார்

வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மாச் சிரபுரம் வன் நஞ்சம் உண்டு

களங்கம் மலி களத்தவன் சீர்க் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே

விளக்கம்:

ஏய்க்கும்=ஒன்றி நிற்கும்; ஏர்=அழகு; ஏரார்=அழகு நிறைந்த; காய்ந்தோன்=கோபம் கொண்டு; தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதன் பால் கோபம் கொண்டு, நெற்றிக் கண் திறந்து மன்மதனை பெருமான் எரித்த செயல் இங்கே குறிப்பிடப் படுகின்றது. கமுக மரம்=பாக்கு மரம்; வன்னஞ்சம்=வலிமை வாய்ந்த கொடிய ஆலகால விடம்; களங்கம்=குற்றம், இங்கே கறை என்று பொருள் கொள்ள வேண்டும். களம்=கழுத்து;அயனூர்=பிரமபுரம்;

பொழிப்புரை:

சிறப்புடன் விளங்கும் பிரமபுரம் என்றும், பூந்தராய் என்றும், புகழ் மிகுந்த சண்பை என்றும், வேணுபுரம் என்றும், மேகங்களுடன் ஒன்றி நிற்கும் வண்ணம் உயர்ந்த பாக்கு மரங்கள் நிறைந்த சோலைகள் உடைய தோணிபுரம் என்றும், காழி என்றும், எழிலுடன் விளங்கும் புகலி என்றும், புறவம் என்றும், செழுமையும் அழகும் கலந்து தோன்றும் வயல்கள் நிறைந்த கொச்சைவயம் என்றும், வெங்குரு என்றும், பெருமை வாய்ந்த சிரபுரம் என்றும், கொடிய ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை கறை படிந்த கழுத்தினை உடையவனாக விளங்கும் சிவபெருமான் உறையும் சிறந்த தலமாகிய கழுமலம் என்றும் அழைக்கப்படும் இந்த தலம், தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதன் பால் கோபம் கொண்டு, நெற்றிக் கண்ணை விழித்து மன்மதனின் உடலை பொடியாக்கிய பெருமான் உறையும் தலம் ஆகும்.

பாடல் 6:


காய்ந்து வரும் காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மாத் தோணிபுரம் சீர்

ஏய்ந்த வெங்குருப் புகலி இந்திரனூர் இருங்கமலத்து அயனூர் இன்பம்

வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை

சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே

விளக்கம்:

காய்ந்து=கோபத்துடன்; முன்னமே குறிப்பிடப்பட்ட நேரத்தில் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வந்த காலன், சிறுவன் சிவபூஜை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து மேலும் கோபம் கொண்டு அவனது கழுத்தினில் பாசக் கயிறு வீசிய நிகழ்ச்சி இங்கே, காய்ந்து வரும் காலன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. சீர்=சிறப்பு; ஏய்ந்த=பொருந்திய; இந்திரனூர்=வேணுபுரம்; இரும்=பெரிய; சேந்தன்=முருகப்பெருமான்; சேய் என்றால் குழந்தை என்று பொருள். பெருமானின் சேயாகிய முருகப்பெருமான் என்று சேந்தன் என்ற சொல்லுக்கு பொருள் கொள்ள வேண்டும். பயந்து=பெற்றெடுத்து; முருகப்பெருமான், சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்புப் பொறிகளால் உருவானவன் என்பதால், ஒரு தாயின் கருவிலிருந்து உருவாகாதவன் என்பதை குறிப்பிடும் வண்ணம், முருகனைப் பெற்றவன் சிவபெருமான் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார் போலும். தேவர்களுக்கு பகைவனாக விளங்கிய சூரபதுமனை கொல்வதற்காக பெருமான், முருகப்பெருமானை தோற்றுவித்தார் என்ற கருத்து உணரப்படும் வண்ணம், முருகனை தோற்றுவித்து தேவர்கள் பகையினை கெடுத்த சிவபெருமான் என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிவபெருமானை, முருகனைப் படைத்து தேவர்களின் இடர்களைத் தீர்த்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. முருகப் பெருமானை சேந்தன் என்று குறிப்பிடும் பாடல்களையும் நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும்.

திருமீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.1) திருஞானசம்பந்தர் முருகப் பெருமான், மாமரமாகி மாயமாக நின்ற சூரபத்மனை கொன்றதை குறிப்பிடுகின்றார். மைந்தன்= வலிமை வாய்ந்தவன்; காயம்=உடல்; செவ்வி=அழகிய; அழகிய உடலை படைத்த மன்மதன் என்று முருகப் பெருமானுக்கு அடைமொழி கொடுக்கின்றார். மீயச்சூர் தலத்தைத் தொழுவதால் நாம் நமது வினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றார். வீட்டும்=அழித்துவிடும். இந்த பாடலில் முருகப் பெருமானை சேந்தனை என்று குறிப்பிடுவதையும் நாம் உணரலாம்.

காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்

பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி

மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தன் தாதை தன்

மீயச்சூரே தொழுது வினையை வீட்டுமே

சுரருலகு என்று தொடங்கும் சீர்காழி பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67.3) தேவர்களின் பகையினைக் களையும் வகையில் ஆறுமுகப் பெருமானை தோற்றுவித்து தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன்னை வழிபடச் செய்த இறைவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தனது ஐந்து முகங்களோடு அதோமுகம் என்று மேலும் ஒரு முகத்தினைச் சேர்த்து முருகப் பெருமானை இறைவன் படைத்த தன்மை, மிக அருள என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நிகழ்=போன்ற; நகமணி=நாகமணி; முகை=மொட்டு; முகைமலர்=அன்று வரை மொட்டாக இருந்து அப்போது தான் மலர்ந்த மலர், நாண்மலர்; பகவன்=சிவபெருமான்; முகம்=திருவருள் நோக்கம்; பகை=தேவர்களின் பகைவராகிய அசுரர்கள்; மிக அருள=மிகுந்த கருணையுடன் தர; நிகரில் இமையோர்=அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்த தேவர்கள்; புக=சரண் புக; அகவு=விருப்பம்; பகலில் ஒளிரும் சூரியன் போன்று பிரகாசம் உடைய நாகமணிகள் போன்று ஒளிவீசுவதும், அன்றலர்ந்த செந்தாமரை மலர் போன்று மென்மையாக இருப்பதும் ஆகிய இறைவனின் திருப்பாத கமலங்களை, மிகுந்த விருப்பத்துடன் வணங்கிய சனகாதி முனிவர்களுக்கு, விரிவான கலைகள் அனைத்தையும் தெளிவுடன் உணரும் வண்ணம் தனது திருவருளால் நோக்கி அருள் புரிந்த பெருமான் ஆறு சிறந்த குணங்களை உடையவன் ஆவான். அவன் வீற்றிருந்து அருள் புரியும் இடம் சீர்காழி தலம் ஆகும். இவ்வாறு முனிவர்களுக்கு அருளிய பெருமான் தேவர்களுக்கும் அருளியவன் ஆவான். தேவர்களின் பகையாக விளங்கிய சூரபதுமனையும் அவனுடன் இருந்த அரக்கர்களையும் வேரோடு களையும் வகையில் ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமானை இறைவன் தோற்றுவிக்க, அதனால் மிகவும் மகிழ்ந்த தேவர்கள், முருகப் பெருமானின் தோற்றத்திற்கு முன்னம் சரண் அடைவதற்கு தகுந்த இடமாக, புகழ் மிகுந்ததும் அழகு வாய்ந்ததுமாக விளங்கியது சீர்காழி நகரம்,தேவர்கள் புகல் அடைந்தமையால் புகலி நகர் என்ற பெயரினைப் பெற்றது. என்பதே இந்த பாடலில் பொழிப்புரை

பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு

அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய பகவன் இடமாம்

பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள நிகரில் இமையோர்

புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே

அதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய திருவிருத்தப் பாடல் ஒன்றினில், (4.104.5) சூரபதுமனைக் கொன்ற முருகவேளின் தந்தை என்று அப்பர் பிரான் இறைவனை குறிப்பிடுகின்றார். முருகப் பெருமானிடம் தோற்றுக் களைத்த நிலையில், ஏதும் செய்ய இயலாத சூரபதுமன் மாயமாக மறைந்து போய் கடலின் நடுவே மாமரமாக நின்ற நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. விரிநீர்ப் பரவை சூர் என்ற தொடர் மூலம் இந்த நிலை உணர்த்தப் படுகின்றது. னஅதிகை வீரட்டத்துப் பெருமானை வணங்காவிடின் என்ன ஏற்படும் என்பதை அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். வறுமையின் காரணமாக இரந்து வாழ்ந்தாலும் சிலர் அனைவரையும் அணுகி உதவி கோருவதில்லை. தரம் வாய்ந்து ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் சிலரையே அவர்கள் அணுகுவதை நாம் இன்றும் காண்கின்றோம். ஆனால் வறுமையின் கொடுமையால் தேர்ந்தெடுத்த ஒரு சிலரிடம் உதவி கோராமல் அனைவரிடமும் இரக்கும் நிலை பலருக்கும் இருப்பதையும் நாம் காண்கின்றோம். இந்த நிலைக்கு காரணம் யாது என்பதை அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சென்ற பல பிறவிகளில் வீரட்டத்துப் பெருமானை வணங்காமல் இருந்ததே, இந்த பிறவியில் அத்தகையோர், தகுதி படைத்தோர் ஏனையோர் என்று ஆராய்ந்து பார்க்காமல் அனைவரின் இல்லங்களின் முன்னே சென்று வீடு வீடாக திரிந்து இரந்து உண்கின்றனர்; இந்த நிலை அவர்களின் வாழ்நாள் முழுவதும் வேரூன்றி நிலையாக அவர்களுடன் நிற்கின்றது; இத்தகைய நிலை, பெருமானைத் தொழாமல் நின்ற பாவத்தால் வரும் வேதனை, மறுமையில் உங்களுக்கு ஏற்படுவதை தவிர்க்க விரும்பினால் பெருமானைத் தொழுது அந்த நிலையினை தவிர்ப்பீர் என்று அப்பர் பிரான் உலகினுக்கு உணர்த்தும் பதிகம். அகம் அகவன் திரிந்து=பல வீடுகள் முன்னே சென்று நின்று; பரவை=கடல்

ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம் அகவன் திரிந்து

வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர்ப் பரவை

சூர் அட்ட வேலவன் தாதையைச் சூழ் வயலார் அதிகை

வீரட்டத்தானை விரும்பா வரும் பாவ வேதனையே

கோழம்பம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.64.10) அப்பர் பிரான் போரினில் வல்ல சூரபதுமனைக் கொன்ற வேலினை உடைய முருகப் பெருமானின் தந்தை என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். சமரன்=போரில் வல்லவன்; தடிந்த=கொன்ற;

சமர சூரபன்மாவைத் தடிந்த வேல்

குமரன் தாதை நல் கோழம்பம் மேவிய

அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள்

அமரலோகம் அது ஆளுடையார்களே

திருத்தினைநகர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.64.6) சுந்தரர் பெருமானை, சேந்தர் தாதை என்று குறிப்பிடுகின்றார். அம் கை=அழகிய கை; பாந்தள்=பாம்பு; கடற் சூர்=கடலில் மாமரமாக நின்ற சூரபதுமன்; சிவக்கொழுந்து என்ற சொல்லுக்கு நன்மையின் மேலெல்லை என்று தருமபுர ஆதீனம் வலைத்தளம் விளக்கம் அளிக்கின்றது. தடிந்திட்ட=இரு கூறாக பிளந்த; எத்துணை அதிகாரத்துடன் பெருமிதத்துடன் வாழ்ந்த வாழ்க்கையாயினும், அந்த வாழ்க்கைக்கும் ஒரு நாள் முடிவு வரும் என்பதை இந்த பாடலில் சுந்தரர் உணர்த்துகின்றார்.

வேந்தராய் உலகாண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இவ்வுடலிது தன்னைத்

தேய்ந்து இறந்து வெந்துயர் உழந்திடும் இப்பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே

பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானைப் பரமனைக் கடற்சூர் தடிந்திட்ட

சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை:

பண்டைய நாளில், மிகுந்த கோபத்துடன் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைப் பறிக்க வந்த காலனை உதைத்து வீழ்த்திய சிவபெருமானின் ஊர் கழுமலம் என்றும், சிறப்பு வாய்ந்த தோணிபுரம் என்றும், சிறப்புகள் பொருந்திய வெங்குரு என்றும், புகலி என்றும், இந்திரனின் ஊர் எனப்படும் வேணுபுரம் என்றும், சிறந்த தாமரைப் பூவினில் அமர்ந்துள்ள பிரமனின் ஊர் எனப்படும் பிரமபுரம் என்றும், இறையுணர்வு மற்றும் செல்வச் செழிப்பு காரணமாக அனைவரும் இன்பமுடன் வாழும் புறவம் என்றும், வளமையுடன் திகழும் சிரபுரம் என்றும், பூந்தராய் என்றும் கொச்சைவயம் என்றும் காழி என்றும் சண்பை என்றும், தேவர்களின் பகையாகிய சூரபதுமனை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த முருகப்பெருமானைப் பெற்றெடுத்த சிவபெருமான் திகழும் சீர்காழி தலம் அழைக்கப் படுகின்றது.

பாடல் 7:

திகழ் மாட மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசார்

மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம்கொச்சை புறவம் விண்ணோர்

புகழ் புகலி கழுமலம் சீர்ச் சிரபுரம் வெங்குரு வெம்போர் மகிடற் செற்று

நிகழ் நீலி நின்மலன் தன் அடியிணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே

விளக்கம்:

மலி=மலிந்த; தேசு=ஒளி; தேசார்=ஒளி பொருந்திய; சூரபதுமனுக்கு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்த இடம் என்பதால் புகலி என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். இந்த செய்தியை உணர்த்தும் திருஞானசம்பந்தரின் பாடல் ஒன்றினை (3.67.3) நாம் இதே பதிகத்தின் ஆறாவது பாடலின் விளக்கத்தில் சிந்தித்தோம். தாருகனைக் கொல்வதற்காக காளியை படைத்ததும், அதன் பின்னர் காளிக்கு ஏற்பட்ட கோபத்தை அடக்கும் வண்ணம் நடனமாடியதும் பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். இந்த நிகழ்ச்சி மச்ச புராணத்தில் காணப்படுவது.

பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.41.5) காளி தேவி காண பெருமான் நடனமாடினார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் நகுதலை மாலை அணிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மனிதர்கள் அனைவரும் தங்களது உடல் நிலையானது என்ற எண்ணத்துடன் இருப்பதைக் கண்டு அந்த தலைகள் சிரிப்பதாக திருஞானசம்பந்தர் கற்பனை செய்வதாக அழகான விளக்கம் ஒன்றினை திரு தண்டபாணி தேசிகர் அளிக்கின்றார். கான்=சுடுகாடு, ஓத்து ஒலி=வேதங்களின் ஒலி; ஓவா=நீங்காத; பாம்புர நகரத்து வேதியர்கள் முறையாக வேள்விகள் செய்தனர் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். எண்ணற்ற திருமுறைப் பாடல்கள், பார்வதி தேவி காண பெருமான் நடமாடுகின்றான் என்று உணர்த்துகின்றன. காளி தேவி என்பவள் பிராட்டியின் அம்சம் என்றாலும், பார்வதி தேவி என்று சொல்லும் போது காளி தேவியை உணர்த்துவதில்லை. காளி காண நடனம் ஆடிய நிகழ்ச்சி, காளி தேவிக்கும் பெருமானுக்கும் நடந்த போட்டியின் ஒரு நிகழ்ச்சியை உணர்த்துகின்றது. காளி தேவியும் நடனத்தில் வல்லவள். இருவரின் இடையே நடந்த போட்டி, தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பெருமான் தனது இடது காதினில் அணிந்திருந்த குழை ஆபரணத்தை வேண்டுமென்றே நழுவ விடுகின்றார். பின்னர் தனது வலது கால் விரல்களால் அந்த குழை ஆபரணத்தை எடுத்து, வலது காலைத் தூக்கி, இடது கையால் அந்த ஆபரணத்தை காதினில் பொருத்துகின்றார். கீழே விழுந்த ஆபரணத்தை கால் விரல்களால் பற்றி எடுப்பது, அந்த ஆபரணத்தை கைக்கு மாற்றுவது மற்றும் காதினில் அணிவது ஆகிய அனைத்தையும் தான் ஆடும் நடனத்தின் ஒரு பாகமாகவே பெருமான் நிறைவேற்றுகின்றார். தனக்கு இருந்த பெண்மை உணர்ச்சியின் காரணமாக, நடனப் போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முனிவர்கள் மற்றும் தேவர்களின் முன்னிலையில், தனது காலைத் தூக்கி நடனம் ஆடுவதை தவிர்த்த காளி தேவி, தனது தோல்வியை ஒப்புக் கொண்டு விடுகின்றாள். கதியதுவாக= நடன கதி அதுவாக; பெருமான் ஆடிய நடனத்தை வியந்து காளிதேவி பார்த்த நிகழ்ச்சியே காளி காண பெருமான் நடனம் ஆடினார் என்று, பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது.

நதியதன் அயலே நகுதலை மாலை நாண் மதி சடை மிசை அணிந்து

கதி அதுவாகக் காளி முன் காண கானிடை நடம் செய்த கருத்தர்

விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி ஓவாப்

பதி அதுவாகப் பாவையும் தாமும் பாம்புர நன்னகராரே

இராமனதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.115.6) தான் ஆடிய கூத்தினை காளி தேவி புரிந்து கொள்ள முடியாத வண்ணம் நடனம் ஆடியவன் சிவபெருமான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். எரி=தீப்பிழம்பு; தனது கையில் பெருமான் தீப்பிழம்பை ஏந்திய வண்ணம் நடமாடும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெரிய கூத்து=ஊர்த்துவ தாண்டவம். தையல் என்ற சொல் இங்கே பார்வதி தேவியை குறிப்பிடுகின்றது. பெருமான் ஆடிய ஊர்த்துவ தாண்டவத்தை புரிந்து கொள்ள முடியாத நிலையில் தானே காளி தேவி நடனப் போட்டியில் தோல்வி அடைந்தாள்; இந்த செய்தி இங்கே சொல்லப் பட்டுள்ளது. இந்த தலத்து இறைவியின் திருநாமம் சரியார் குழலி. இதனை உணர்த்தும் வண்ணம் சரிகுழல் இலங்கிய தையல் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

சரிகுழல் இலங்கிய தையல் காணும்

பெரியவன் காளி தன் பெரிய கூத்தை

அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும்

எரியவன் இராமனதீச்சரமே

தாரகனைக் கொன்ற காளியம்மையின் கோபம் தணியாத நிலையில், ஆவேச நடனம் ஆடி வந்த காளியை நடனத்தில் வென்ற நிகழ்ச்சி மிகவும் விரிவாக கழுமலம் பதிகத்தின் (1.126) ஐந்தாவது பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது. தாரகனை வெட்டி வீழ்த்திய காளி ஊழித்தீ பொங்கி வருவது போன்று கோபத்துடன் உலகில் உள்ள உயிர்களை எல்லாம் அழிக்க வந்தவள் போல் ஆவேச நடனம் ஆடி வந்த செய்தியும். உலகத்து துயர்களைக் களையும் பொருட்டு சிவபெருமான் நடனம் ஆடி காளியைத் தோல்வியுறச் செய்து பின்னர் காளியின் கோபத்தைத் தணித்ததும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. சீறார்=சீறி வந்த தாரகன், வீறு=தனித்து இருத்தல், சொக்கத்தே=சொக்கம் என்ற நடனம், செங்கதம்=சிவந்த கோபம், கைக்க=வெறுக்க, ஏயாமே=பொருந்தாதபடி, பேர் யுக்கம்=பெரிய ஊழித் தீ.

திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் சீறார் வீறார் போரார் தாரகன் அவன் உடல் எதிரே

புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கான் மீப்புணர் தரும் உயிர்கள் திறம்

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோகத் துயர் களைபவனது இடம்

கைக்க பேர் யுக்கத்தே கனன்றும் மிண்டு தண்டலைக் காடே ஓடா ஊரே சேர் கழுமல வளநகரே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய ஏகபாதம் திருப்பதிகத்தின் பாடலில் (1.127.8) திருஞானசம்பந்தர் பெருமானை பொன்னடி மாதர் சேர் புறவத்தவன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் காளி தேவி பெருமானுடன் நடனம் ஆடி தோற்ற செய்தி குறிப்பிடப் படுகின்றது. பொருள் புரிந்து கொள்ள இந்த பாடலின் முதல் அடியை, பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன் என்று பிரித்து பொருள் காண வேண்டும். பொன்=பொன் போன்று பொலிவினை உடைய; நடி=கூத்தினை உடைய; மாது=காளி; அவர்=பூதகணங்கள்; சேர்=சென்று அடைந்து தங்கும்; புறவம்=ஊருக்கு புறத்தே உள்ளே சுடுகாடு; புறவத்தவன்=சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாக உடையவன்; சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான் என்று உணர்த்துகின்றார். பொன் போன்று பொலிவினை உடைய கூத்தினை ஆடும் மாதாகிய காளிதேவியும், பூத கணங்களும் சென்று அடைந்து தங்கும் சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான்; தூய்மையான முறையில் சிறந்த தவம் செய்யும் முனிவர்கள் திரண்டு சேரும் முல்லை நிலத்தில் தானும் தவம் செய்பவனாக விளங்கி அவர்கள் அனைவராலும் சிறந்த தவசியாக மதிக்கப் படுபவன் சிவபெருமான்; அழகிய ஆபரணங்கள் அணிந்து இலக்குமி தேவியைப் போன்று அழகுடன் விளங்கிய தாருகவனத்து இல்லத்தரசிகள், தனது அழகில் மயங்கி தாங்கள் (தாருகவனத்துப் பெண்கள்) செய்வது இன்னதென்று அறியாமல் தன்னைப் பின்தொடர்ந்து செல்லும் வண்ணம், அவர்களின் முன்னே பிச்சைப் பெருமானாக தோன்றி, அவர்களது கற்பு நிலை குலையச் செய்தவன் பெருமான். பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்த பாதங்களை உடைய மகளிர், கூட்டமாக சேர்ந்து வணங்கும் இறைவன், புறவம் தலத்தில் உறைபவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.32.5), திருஞானசம்பந்தர், காளியின் கோபத்தை அடக்கும் பொருட்டு பெருமான் நடனமாடினார் என்று கூறுகின்றார். வென்றி=வெற்றி: வென்றி மிகு தாருகன்=வெற்றிகள் பல அடைந்த தாருகன் அரக்கன்; மடங்க=உயிர் மடிய; கன்றி=மிகுந்த கோபம்; கதம்=கோபாவேசம்; மிகுந்த கோபத்துடன் தாருகனுடன் போருக்குச் சென்ற காளிதேவியின் கோபம், தாருகனை வெற்றிகொண்டு, அவனது உயிரினை மாய்த்த பின்னரும் அடங்கவில்லை; இவ்வாறு அடங்காத கோபத்துடன் திரிந்த காளியைக் கண்டு அனைத்து உயிர்களும் அஞ்சி நடுங்கின; உயிர்களின் அச்சத்தை நீக்கத் திருவுள்ளம் கொண்ட பெருமான், காளி தேவியை, நடனப் போட்டிக்கு அழைத்து, அந்த நடனப் போட்டியில் தேவியை தோற்கடிக்க, காளி தேவி தோற்றதால் வெட்கித் தலை குனிய தேவியின் கோபம் மறைந்து விடுகின்றது. இந்த நிகழ்ச்சி தான் இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஓவ=நீங்க; மன்றல்=நறுமணம்; நடமாடி இங்கே பெயர்ச் சொல்லாக வந்து, நடமாடிய நடராஜப் பெருமான் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. தில்லைச் சிதம்பரம், நடராஜப் பெருமானின் சன்னதிக்கு எதிரே ஒரு தூணில், பெருமானின் ஊர்த்துவ தாண்டவத்தையும், அருகே காளி தேவி வெட்கி தலை குனிந்து நிற்பதையும் நாம் காணலாம். திருவாலங்காடு தலத்தில் உள்ள காளி தேவியின் உற்சவச் சிலையும், தோற்றதால் தேவி அடைந்த வெட்கத்தை வெளிப்படுத்தும் நேர்த்தியை நாம் காணலாம்.

வென்றி மிகு தாருகனது ஆருயிர் மடங்கக்

கன்றி வரு கோபமிகு காளி கதம் ஓவ

நின்று நடமாடி இட நீடுமலர் மேலால்

மன்றன் மலியும் பொழில் கொள் வண் திருவையாறே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.65.3), திருஞானசம்பந்தர், காளி தேவியின் அளவு கடந்த கோபம் தணியும் வண்ணம் நடனமாடியவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கத்தி வரும் காளி என்ற தொடர் மூலம், மிகுந்த ஆவேசத்துடன் ஆரவாரமாக திரிந்த காளி தேவி என்பது உணர்த்தப் படுகின்றது. இடந்தார்=பேர்த்து எடுத்து தனது கண்ணினை பெருமானின் திருவடியில் சமர்ப்பித்த திருமால்; மெய்த்த=உடலில் உள்ள; திருநீறு பூசி, பாம்பினை அணிகலனாக அணிந்து, கோவணம் மற்றும் புலித்தோல் ஆடையாகக் கொண்டு பெருமான் திகழும் திருக்கோலத்தினை பித்த வடிவம் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். போலும் என்ற சொல் மூலம், எதிர்மறையாக குறிப்பிட்ட செயல்களை உடன்பாடாக திருஞான சம்பந்தர் மாற்றுகின்றார்.

சித்த வடிவிலர் போலும் தேசம் திரிந்திலர் போலும்

கத்தி வரும் காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்

மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும்

பித்த வடிவிலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.73.8) திருஞானசம்பந்தர், புறவம் தலத்தினை மோடி புறம் காக்கும் ஊர் என்று குறிப்பிடுகின்றார். மோடி என்றால் காளி தேவி என்று பொருள். பெருமானிடம் நடனப் போட்டியில் தோற்று ஊருக்கு வெளிப்புறம் சென்று அமர்ந்து காளிதேவி காவல் காக்கும் ஊர் என்று கூறுகின்றார். காளியுடன் நடந்த நடனப் போட்டியின் விதியின் படி, போட்டியில் வென்றவர் ஊருக்குள் இருக்க, தோற்றவர் ஊர் எல்லைக்கு சென்று விடவேண்டும் என்பதாகும். சிலையன்=வில்லினை உடையவன்; அருளி=அருள்பவன்; மலைச் சிலையன்=மேரு மலையினை வில்லாக வளைத்த பெருமான்; நீடு இயலும்=நீண்ட காலமாக, பல ஊழிகளைக் கடந்தும், நிலைத்து நிற்கும்; கமல நீடு கூடியவன்=நீண்ட காலமாக தாமரையில் வாழும் பிரமன்; வளர்=நாள்தோறும் புகழுடன் வளரும்; கூடப் போர் தேடி உழல்=போர்களைத் தேடித் திரிந்த திரிபுரத்து அரக்கர்கள்; போர் கூட என்று மாற்றி வைத்து பொருள் கொள்ள வேண்டும். பறக்கும் கோட்டைகளில் திரிந்த வண்ணம் தாம் விரும்பிய இடங்களில் கீழே இறங்கி, ஆங்கிருந்த மக்களை அழித்த செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த மூன்று அரக்கர்களும் பெற்றிருந்த வல்லமை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி ஓடியதால், அவர்களைத் தேடி போர் புரிய எவரும் வராத நிலையில், அவர்களே போரினைத் தேடிச் சென்ற நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் ஒருவனே திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்றவன். அவுணர்=அரக்கர்கள்; உழலுதல்=திரிதல்; செற்ற=வெற்றி கொண்ட;

மோடி புறம் காக்கும் ஊர் புறவம் சீர்ச் சிலம்பனூர் காழி மூதூர்

நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமல நீடு

கூடியவன் ஊர் வளர் வெங்குருப் புகலி தராய் தோணிபுரம் கூடப் போர்

தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலைச் சிலையன் ஊரே

மூக்கீச்சரம் என்று பண்டைய நாளில் அழைக்கப்பட்ட திருச்சி நகரத்து உறையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.1) பெருமான் காளி தேவியுடன் நடனம் ஆடிய காரணத்தை நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருநீற்றினை சாந்தமாக கருதி பூசிக் கொண்ட பெருமான் என்று இந்த பாடலை திருஞானசம்பந்தர் தொடங்குகின்றார். பெருமானின் எளிய தன்மை இதன் மூலம் குறிப்பிடப் படுகின்றது. ஏனையோர் அனைவரும் வாசனை தரும் சந்தனத்தைத் தங்களது திருமேனியில் பூசிய வண்ணம் காட்சி தர, பெருமானோ, திருநீற்றினையே சந்தனமாக கருதி தனது திருமேனியில் பூசிக் கொண்டு உள்ளார் என்று விளக்கம் அளிப்பது ஒரு வகை. பெருமானின் திருமேனியின் மீது பூசிய திருநீற்றினை அணிவோர்கள் சாந்தம் பெறுகின்றனர் என்று விளக்கம் கூறுவது மற்றொரு வகை; வெள்ளம்=நீர், கங்கை நதி; காந்தள் ஆரும்=காந்தள் மலர்கள் போன்று மெலிந்தும் மென்மையாகவும் நீண்டும் காணப்படும் விரல்கள்; ஏழை=பார்வதி தேவி; பொதுவாக பெண்கள் ஆண்களை விடவும் உடல் வலிமையில் குறைந்தவர்களாக காணப்படுவதால் அவர்களை ஏழை என்று குறிப்பது இலக்கிய மரபு. வேந்தன் என்ற சொல் இங்கே, சோழ வேந்தன் கோச்செங்கட் சோழனை குறிப்பிடுகின்றது. அவன் கட்டிய மாடக்கோயில் இந்த கோயில். அடிகள்=தலைவர்; பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் செய்கைகளின் தன்மையை எவரும் புரிந்து கொள்ள முடியாது என்று உரைத்த கருத்து அனைத்து பாடல்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. வேந்தன் என்பதற்கு உலகுக்கெல்லாம் அரசனாக விளங்கும் சிவபெருமான் என்று பொருள் கொண்டு, உலகத்து மக்கள் அனைவரையும் பாதுகாத்து, அவரவர்களின் வினைகளுக்கு ஈடாக படியளிக்கும் தலைவனாக, அருள் புரியும் நாதனாக விளங்கும் பெருமான், எல்லா உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் தலைவனாகவும் அந்த உயிர்களை இயக்குபவனாகவும் இருக்கும் தன்மையை வேந்தன் என்ற சொல் மூலம் உணர்த்துகின்றார் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பெரும்பாலான உரைகளில் வேந்தன் என்ற சொல் கோச்செங்கட் சோழனை குறிப்பதாக உணர்த்தப் படுகின்றது.

சாந்தம் வெண்ணீறு எனப் பூசி வெள்ளம் சடை வைத்தவர்

காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்

ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியந் நிறைந்தார் அவர் ஆர் கொலோ

வேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே

வெண்மையான திருநீற்றினை, நறுமணம் நிறைந்த சந்தனமாக கருதித் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டுள்ள பெருமான், தனது சடையினில் மிகுந்த நீர்ப்பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியைத் தாங்கியவன்; காந்தள் மலரைப் போன்று, மென்மையாகவும் மெலிந்தும் நீண்டும் அழகாக காட்சி தரும் விரல்களை உடைய பார்வதி தேவி காணும் வண்ணம் பெருமான் நடனமாடும் காரணத்தை ஆராய்ந்து அறியும் நிறைந்த ஞானம் உடையவர் எவரேனும் உளரோ, இல்லை என்பதே விடை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நடனத்தை தினமும் ஆடுபவராக உள்ள பெருமான், சோழ வேந்தனாகிய கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக் கோயிலாகிய மூக்கீச்சரம் தலத்தினில் உறைகின்றார் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை;

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.56.3) திருஞானசம்பந்தர், பெருமானை, காளி காண ஆடல் கொண்டான் என்று குறிப்பிடுகின்றார். மாணி=பிரம்மச்சாரி சிறுவன், இங்கே மார்க்கண்டேயர்; செற்று=வெற்றி கொண்டு; மாய்தர=மடியும் வண்ணம் உதைத்து; காணிய=காணும் வண்ணம்; ஊண்=உண்ணுதல்;

மாணியை நாடு காலன் உயிர் மாய்தரச் செற்றுக் காளி

காணிய ஆடல் கொண்டான் கலந்தூர் வழி சென்று பிச்சை

ஊணியல்பாகக் கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும்

பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணுமினே

தாரகன் எனப்படும் மகிடனின் கொடுமை தாளாமல் தேவர்கள் வருந்தி சிவபெருமானிடம் முறையிட்ட போது, பார்வதி தேவியின் அம்சமாகிய காளியை, தாரகனைக் கொல்வதற்காக விடுத்த செய்தி காளத்தி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் (3.69.3) மூன்றாவது பாடலில் கூறப்பட்டுள்ளது. பல வகையான பழங்களை உண்ட களிப்பில் குரங்குகள் கூட்டமாக மலை அதிரும் வகையில் விளையாடும் காட்சி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

வல்லை வருகாளியை வகுத்து வலியாகி மிகு தாரகனை நீ

கொல் என விடுத்து அருள் புரிந்த சிவன் மேவு மலை கூறி வினவில்

பல்பல இருங்கனி பருங்கி மிக உண்டு அவை நெருங்கி இனமாய்க்

கல் அதிர நின்று கருமந்தி விளையாடு காளத்தி மலையே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.6) திருஞானசம்பந்தர் பெருமானை, காளி ஏத்தும் அழகனார் என்று குறிப்பிடுகின்றார். தோற்றவர் எவருக்கும் தம்மை வென்றவர் மீது கோபமும் வெறுப்பும் ஏற்படுவது இயற்கையே. இந்த இயற்கைக்கு மாறாக, பெருமானிடம் நடனப் போட்டியில் தோல்வி அடைந்த காளியன்னை, பெருமானை புகழ்ந்தனள் என்று குறிப்பிட்டு, போட்டியிட்ட காளிதேவியும் புகழும் வண்ணம் பெருமானின் நடனம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று நமக்கு திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். அம்பர் மாகாளம் தலத்தில் உள்ள காளிதேவி சன்னதி மிகவும் ப்ரசித்தி பெற்றது. திருக்கோயிலின் தெற்கு பகுதியில் காளிதேவி சன்னதி உள்ளது. அம்பன் அம்பாசுரன் ஆகிய இரண்டு அரக்கர்களை கொன்ற பாவம் தீர, காளிதேவி இறைவனை வழிபட்டதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது. கழகனார்=கூட்டத்துடன் இருப்பவர்; பழக=ஒரு நாளும் தவறாமல்; நாள்தோறும் மலர்கள் பறித்து தன்னை அர்ச்சித்து வழிபடும் அடியார்களை விட்டு நீங்காதவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். செறிந்த=நெருங்கி பொருந்திய;

பழக மாமலர் பறித்தி இண்டை கொண்டு இறைஞ்சுவார் பால் செறிந்த

குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற

கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும்

அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.110.7) காளி தேவியை தோற்றுவித்தவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சுரர்=தேவர்கள்; சுரபுரம்=தேவர் உலகம்; தாருகன் என்றால் அரக்கன் என்று ஒரு பொருள் உள்ளது. இங்கே மகிடாசுரனை குறிக்கும். துஞ்ச=இறந்துபட தேவருலகத்தினை துன்புறுத்திய அரக்கர்களின் தலைவனாகிய மகிடாசுரன் மடிந்து வீழும் வண்ணம் வல்லமையும் கோபமும் கொண்ட காளியை, அம்பிகையின் அம்சமாக தோற்றுவித்த சிவபெருமானை, சிரபுரம் என்று அழைக்கப்படும் நகரில் உறைபவனே என்று அழைத்து வணங்கும் அடியார்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சுரபுரத்தினைத் துயர் செய் தாரகன் துஞ்ச வெஞ்சினக் காளியை தரும்

சிரபுரத்து உளான் என வல்லவர் சித்தி பெற்றவரே

கொள்ளி நெருப்பினை விளக்காகக் கொண்டுள்ள பூதங்கள் சூழ்ந்து நிற்க, காளியுடன் நடனம் புரிந்தவர் பெருமான் என்று திருவீழிமிழலை பதிகத்தின் முதல் பாடலில் (3.119.1) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அள்ளல்=சேறு: அகடு=முதுகு; சேற்றில் காணப்படும் ஆமையின் முதுகு போன்று வளைந்த பிறைச் சந்திரனும், யானையின் தந்தங்கள் போன்று வெண்மையான மடல்கள் கொண்ட தாழைப் புதர்களும் நிறைந்த சோலைகள் கொண்ட இடம் வீழிமிழலை என்று கூறுகின்றார்.

புள்ளித் தோலாடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு

கொள்ளித் தீ விளக்குக் கூளிகள் கூட்டம் காளியைக் குணம் செய் கூத்து உடையோன்

அள்ளல் காராமை அகடுவான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை

வெள்ளைக் கொம்பு ஈனும் விரிபொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே

இந்த நிகழ்ச்சி பருவரை சுற்றி என்று தொடங்கும் பதிகத்தின் பாடலிலும் (4.14.4) அப்பர் பிரானால் குறிப்பிடப் படுகின்றது. நெடுவேலை=நெடிய, பரந்த கடல், சூடிய கையர்=தொழுத கையர், நெடிது உயர்ந்த ஆகாயம், நிலவுலகம், கடல், மலைகள், மற்றுமுள்ள ஏழுலகங்கள் அனைத்தும் வருந்துமாறு தாரகன் துன்புறுத்த, அதனால் வருந்திய தேவர்கள் சிவபெருமானை அணுகி, தங்களது கைகளைத் தலை மேல் குவித்து அவரைத் தொழுது வேண்டினார்கள்: அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவியின் அம்சமாகிய காளிக்கு வேண்டிய வல்லமை அளித்து தாருகனைக் கொல்லுமாறு பணித்தார்: மிகுந்த வல்லமையுடன் காளி வருவதைக் கண்டு, தனது இறுதிநாள் நெருங்கிவிட்டதை உணர்ந்த தாரகன் தப்பி ஓட முயற்சி செய்த போது, அவனைத் துரத்திக் கொன்ற பின்னும் தனது கோபம் தணியாமல் காளியம்மை இருந்த போது, போட்டி நடனம் ஆடி அவளது கோபத்தைத் தணித்த சிவபெருமானின் திருப்பாதங்கள் நமக்கு ஒப்பற்ற அடைக்கலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

நீடுயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச்

சூடிய கையராகி இமையோர் கணங்கள் துதியோதி நின்று தொழலும்

ஓடிய தாரகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய

ஆடிய மாநடத்து எம் அனலாடி பாதம் அவையாம் நமக்கொர் சரணே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.66.8) அப்பர் பிரான், போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். காளி தேவி பார்வதியின் அம்சமாக கருதப் படுவதால், இங்கே பார்வதி தேவி என்று பொருள் கொள்வது பொருத்தம். போகம்=இன்பம்: மோடி=துர்க்கை தேவி; கொங்கை=மார்பகம்; அன்னை பார்வதி தேவியுடன் கூடியிருந்து இன்பம் துய்ப்பவன் போன்று இறைவன் நமக்கு காட்சி அளித்தாலும், இறைவன் இன்ப சுகங்களில் ஈடுபடாமல் தூயவனாகவே உள்ளான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு கங்கை கொண்ட சோளேச்சரம் பதிகத்தின் கடைப் பாடலில் கருவூர்த் தேவர் கூறுவதை நினைவூட்டுகின்றது. பார்வதி தேவியோடு எப்போதும் கூடி இருந்தாலும் யோகத்தில் ஆழ்பவன் சிவபெருமான் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல் கங்கை கொண்ட சோளேச்சரம் மீது கருவூர்த் தேவர் அருளிய பதிகத்தின் கடைப் பாடலாகும். இன்பம் தரும் துர்க்கை தேவியின் மார்பகங்களைத் தழுவியவராக காணப்பட்டாலும் புனிதராக உள்ளவர் சிவபெருமான். அவர் விரைந்து செல்லும் காளையைத் தனது வாகனமாகக் கொண்டவர்; வெண்ணீறு அணிந்த தனது மேனியின் ஒரு பாகத்தில் திருமாலை ஏற்றுள்ள பெருமான், மேரு மலையினை வில்லாக வளைத்து, அந்த வில்லினுக்கு பொருந்துமாறு வாசுகி பாம்பினை நாணாக உடையவர் ஆவார். அவர் தான் திருநாகேச்சரம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்

வேகமார் விடையர் போலும் வெண்பொடி ஆடும் மேனிப்

பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும்

நாகம் நாண் உடையார் போலும் நாக ஈச்சரவனாரே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.68.8) அப்பர் பிரான், பெருமான் காளி காண நடனமாடினார் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் உமையம்மை, கங்கை நங்கை, மற்றும் காளியம்மை ஆகிய மூவரையும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மூவரையும் ஒரே பாடலில் குறிப்பது சற்று அரிதாக உள்ளது. குறிப்புடை வேடம்=குறிப்பினை தெரிவிக்கும் வேடம், காதற்குறிப்பு; பெருமான் பால் பிராட்டி கொண்டிருந்த அதீதமான அன்பினை உணர்ந்த பெருமான், பிராட்டிக்குத் தனது உடலின் ஒரு பாகத்தை அளித்ததை, அப்பர் பிரான் உமை தன்னோடு கூடினார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சுவறிட்டது=வற்றியது; பெருகிய வெள்ளத்துடன் கீழே இறங்கி வந்த கங்கைநதி, பெருமானின் சடையில் அகப்பட்டு மறைந்ததால், கங்கை நதியை வற்ற வைத்த சடை என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஊர்த்துவ தாண்டகம் இந்த தலத்தில் நடந்ததாகவும் கூறுவார்கள். நடனப்போட்டியில் தோற்ற காளிதேவி, தலத்தில் தனிக்கோயிலில் இருப்பதை நாம் காணலாம். மேலும் கோயிலில் உள்ள உற்சவ சிலைகளில் ஒன்றான காளியம்மையின் சிலையில், காளிதேவி முகத்தில், தோல்வியால் ஏற்பட்ட நாணம் பொங்க, நின்ற நிலையில் இருப்பதையும் நாம் காணலாம். உமையம்மை தன் பால் வைத்திருந்த காதலின் தன்மையை உணர்ந்த பெருமான், தான் அதனைப் புரிந்து கொண்டதை உணர்த்தும் வகையில் பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டவர் ஆவார். மிகவும் அதிகமான வெள்ளப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதி வற்றியது போன்ற தோற்றம் அளிக்கும் வண்ணம், அதனைத் தனது சடையினில் அடக்கியவர் சிவபெருமான் ஆவார். சாமவேதம் பாடுபவராகவும், பசுமையான சோலைகள் சூழ்ந்த பழையனூர் தலத்தில் பொருந்தி உறைபவரும் ஆகிய பெருமான் ஆலங்காட்டு அடிகளாக திகழ்கின்றார். பண்டைய நாளில் நடந்த நடனப் போட்டியில் தான் தோற்றுவிட்டதை உணர்ந்த காளிதேவி தனது நடனத்தை நிறுத்தி விட்டு, பெருமானின் நடனத்தினை வியப்புற்று காணும் வண்ணம் சிறப்பாக நடனம் ஆடியவர் சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கூடினார் உமை தனோடே குறிப்புடை வேடம் கொண்டு

சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்

பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார்

ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே போலும்

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.100.2) பெருமானின் திருவடிச் சிறப்பினை உணர்த்தும் அப்பர் பிரான், காளி தேவியின் கோபத்தினை தணித்த திருவடிகள் என்று கூறுகின்றார். பைதல்=இளமையான, குழந்தை. குழந்தையின் பிணத்தை காதில் குழையாக காளி தேவி அணிந்ததாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு திருவக்கரை காளியின் தோற்றத்தை நினைவூட்டுகின்றது. இளம் பிள்ளைகளின் பிணங்களை தனது காதினில் குழையாக அணிந்த காளிதேவியின் கொடிய சீற்றத்தினை தணிக்கும் பொருட்டு, மற்றவர்கள் செய்வதற்கு அரிய திருநடனம் ஆடியவை, சிவபிரானின் திருப்பாதங்கள். இந்த திருவடிகள் சிறப்பு வாய்ந்த அந்தணச் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் காக்கும் பொருட்டு,கோபத்துடன் வந்த கொடிய கூற்றுவனை உதைத்தன தேவர்களும் நெருங்க முடியாதன இந்த திருவடிகள். இத்தகைய சிறப்புகள் பெற்றவை இன்னம்பரில் வீற்றிருக்கும் பெருமானின் இணை அடிகள் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பைதல் பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப் படுப்பான்

செய்தற்கு அரிய திருநடம் செய்தன சீர் மறையோன்

உய்தற் பொருட்டு வெங்கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம்

எய்தற்கு அரியன இன்னம்பரான் தன் இணை அடியே

குடமூக்கு தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்திலும் (5.22.2) இந்த நிகழ்ச்சியை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். விசை=ஆடலின் வேகம். சிவபெருமானை நடனத்தில் எவ்வாறேனும் வெல்ல வேண்டும் என்று ஆடியமையால், காளியின் ஆட்டத்தில் வேகம் இருந்தது, உடலும் வியர்த்தது. தீயின் கண் நின்று ஆடிய பெருமான் தீத்தாடி என்று இங்கே அழைக்கப் படுகின்றார். பூத்தாடி=தோன்றி; கழியாதே=இறவாமல். ஏதோ இந்த நிலவுலகில் பலரும் பிறக்கின்றார்கள், வாழ்கின்றார்கள் தங்களது காலம் முடிந்த பின்னர் இறக்கின்றார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கையில் செய்த பயனுள்ள செயல்கள் ஏதும் உள்ளனவா என்று ஆராய்ந்து பார்த்தால் ஏதும் இல்லை என்று நமக்கு புரிகின்றது. அவ்வாறு பயனுள்ள செயல்கள் ஏதும் செய்யாமல் வாழ்க்கையை வீணாக கழிக்கும் மனிதர்களை, பூத்தாடிக் கழியும் மாந்தர்கள் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நமக்கு பிறவி என்பது பயனுள்ள செயல்களைச் செய்து, அந்த செயல்கள் மூலம் நமது வினைகளை கழித்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவதற்காக கொடுக்கப் படுகின்றது. எனவே தான், நாம் அவ்வாறு செய்யாமல் வீணாக நமது வாழ்க்கையை கழிப்பது தவறு என்று இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. தீத்தாடி=தீயினில் நின்று ஆடுபவன், சர்வ சங்கார காலத்தில் இறைவன் ஆடும் நடனம் இங்கே குறிப்பிடப் படுகின்றது. அழியும் தன்மையில் உள்ள மற்றவர்கள் எவ்வாறு நாம் அழிவதை தடுத்து நமக்கு உதவி செய்ய முடியும். பிறப்பு இறப்புகளைக் கடந்து என்றும் அழியாமல் நிலையாக இருக்கும் பெருமான் தானே, நாம் அழியாத பேரின்பத்தை பெறுவதற்கு நமக்கு உதவி செய்ய முடியும். எனவே தான் தீத்தாடி என்று இறைவனை அழைத்து, ஊழிக் காலத்திலும் அழியாத தன்மை உள்ளவன் சிவபெருமான் என்று நமக்கு உணர்த்தி, அவனது உதவியை நாம் பெறவேண்டும் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். தாருகன் என்ற அரக்கனை வென்ற பின்னர் காளி ஆடிய கூத்திற்கு உலகமே அஞ்சி நடுங்கிய நிலையில், காளியை நடனப் போட்டிக்கு அழைத்து, போட்டியில் அவளை வென்று, அவளது சீற்றத்தை தவிர்த்த வல்லமை படைத்த இறைவனுக்கு நமது வினைகளைத் தீர்த்து, பிறவிப் பிணியினை நீக்குவது எளிதான செயல் என்பதை உணர்த்த அவனது வல்லமை அப்பர் பிரானால் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. தன்னை நடனப் போட்டிக்கு அழைத்த பெருமானிடம் தான் தோற்கலாகாது என்று பெருமுயற்சி செய்து ஆடிய காளியின் செய்கை, உடல் வேர்க்க ஆடிய தன்மை இங்கே கூறப்படுகின்றது. விசை=வேகம்

பூத்து ஆடிக் கழியாதே நீர் பூமியீர்

தீத்தாடித் திறம் சிந்தையுள் வைம்மினோ

வேர்த்து ஆடும் காளி தன் விசை தீர்க என்று

கூத்தாடி உறையும் குடமூக்கிலே

கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.38.5) காளிதேவியின் ஆவேசத்தை தணித்தவர் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கத்து=ஆரவாரம் செய்த; கதம்=கோபம்; மத்தர்=ஊமத்தை (மத்தமலர்) மலரை அணிந்தவர்; அசுரன் தாரகனைக் கொன்று அவனது உதிரத்தை குடித்த காளிதேவியின் கோபம் தணியாத நிலையில், ஆவேசமாக நடனம் ஆடியவாறு உலகில் உள்ள உயிர்களை காளிதேவி துன்புறுத்த தொடங்கினாள். ஆவேசத்துடன் நடனம் ஆடிய காளியை, நடனப் போட்டிக்கு அழைத்து பெருமான், போட்டியில் வென்ற பின்னர், தோல்வியால் ஏற்பட்ட நாணம் தேவியை ஆட்கொள்ள, காளியின் கோபம் தணிந்தது. தாரகனை கொன்ற பின்னரும் அந்த கோபம் அடங்காமல், மிகுந்த ஆரவாரத்துடன் திரிந்து கொண்டிருந்த காளிதேவியை நடனப் போட்டிக்கு அழைத்து, போட்டியில் தோற்கடித்து தேவியின் கோபத்தை தணித்தவர் சிவபெருமான் ஆவார். ஊமத்தை மலரை சூடியுள்ள அவர் தாம் கடவூர் மயானம் திருத்தலத்தில் உறையும் பெருமான் அடிகள் ஆவார். தனது பெருமைக்கும் தகுதிக்கும் ஒவ்வாத பல செயல்களையும் இயற்கைக்கு மாறான பல செயல்களையும், பித்தரைப் போன்று செய்பவராகவும் அவர் உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கத்து காளி கதம் தணிவித்தவர்

மத்தர் தாம் கடவூரின் மயானத்தார்

ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு

பித்தர் காணும் பெருமான் அடிகளே

இந்த பாடலில் ஒத்து ஒவ்வாதன செய்யும் பித்தர் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பல திருமுறை பாடல்களில் பெருமானை பித்தர் என்று அழைக்கும் அருளாளர்கள், அதற்கான காரணத்தையும் கூறுகின்றனர். அவரது பல கருணைச் செயல்களை, அவரது பெருமைக்கும் தகுதிக்கும் பொருந்தாத செயல்கள் என்று கருதி, அத்தகைய செயல்கள் செய்த அவரை பித்தர் என்று அழைக்கின்றார்கள். ஒவ்வாத செயல்கள் என்று அருளாளர்கள் கருதிய சில செயல்கள் இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன. தனது அடியார்களுக்கு அருள் புரிவதில் எல்லை இல்லாமல் நடந்து கொள்வது; பாற்கடலில் அமுதம் வரும் என்று எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கையில், பொங்கி வந்த விடத்தை உண்டது, யானை குதிரை தேர் முதலானவற்றை தனது வாகனமாக கொள்ளாமல் எருதினை வாகனமாக கொண்டது, செல்வங்கள் பல இருந்தும் ஊரூராக பிச்சைக்கு அலைந்து திரிவது, பட்டாடை பகட்டான ஆடைகளை தவிர்த்து கோவணம் அணிந்து காட்சி தருவது; அனைவரும் காணும் வண்ணம் நகரத்தின் மையப் பகுதியில் நடனம் ஆடாமல் சுடுகாட்டினை தனது நடன அரங்கமாகவும் இருப்பிடமாகவும் கொண்டது, நறுமணப் பொடிகளைத் தவிர்த்து சாம்பலை தனது உடலில் பூசிக் கொள்வது, எலும்பு மாலைகளையும் தலை மாலைகளையும் அணிகலனாக கொண்டது, பலரும் வெறுக்கும் பாம்பினை ஆபரணமாக அணிவது, காலால் தேய்த்த சந்திரனைத் தனது தலையில் சூடிக் கொண்டது, பெண் பித்தனைப் போன்று எப்போதும் தேவியுடன் இருக்கும் நோக்கத்துடன் தேவியைத் தனது உடலின் ஒரு பாதியிலேற்றுக் கொண்டது. உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனைவரும் அச்சம் கொண்டு தவிர்க்கும் யானையின் பசுந்தோலை போர்வையாக போர்த்துக் கொண்டது, தான் உருவாக்கிய சிறந்த படைக்கலமாகிய சக்கரத்தை தானே வைத்துக் கொள்ளாமல் திருமாலுக்கு அருளியது ஆகிய செயல்கள், இயற்கையில் எவரும் செய்யாத செயல்களாக கருதப்படுகின்றன.

அப்பர் பிரானும் குரங்காடுதுறையின் மீது அருளிய பதிகத்தின் (5.63) ஒரு பாடலில் தாரகனின் உயிரை உண்ட காளியின் கோபத்தையும் முயலகனின் கோபத்தையும் தணித்த சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். மாத்தன்=பொன்னினும் உயர்ந்த மாற்று போன்றவன், மறை ஓத்தன்=மறைகளை ஓதுபவன், போத்தன் தானவன்=வீரத்துடன் வந்த அரக்கன் முயலகன்,

மாத்தன் தான் மறையார் முறையான் மறை

ஓத்தன் தாரகன் உயிர் உண்ட பெண்

போத்தன் தானவன் பொங்கு சினம் தணி

கூத்தன் தான் குரங்காடு துறையனே

வில்லுக்கு விசயன் என்பது பழமொழி. விசயனின் விற்போர் திறத்தினைப் போன்று புகழ் பெற்றது காளியின் நடனம். விற்போரில் விசயனையும், நடனத்தில் காளியையும் முறியடித்து வெற்றி கொண்டது பெருமானின் திறமை. அந்த திறமை திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.83.5) குறிப்பிடப் பட்டுள்ளது. பண்டைய நாளில் பெருமானுக்கும் காளியம்மைக்கும் இடையே நடந்த நடனப் போட்டியில், நடனத்தில் வல்லமை பெற்ற காளியம்மை சிவபிரானுக்கு இணையாக ஆடிக்கொண்டு இருந்ததால் இருவரது நடனமும் காண்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது மட்டும் அல்லாமல் எவர் வெற்றி பெறுவார் என்று சொல்லவொண்ணாத வகையில் இருந்தது. போட்டியின் நடுவே வேண்டுமென்றே சிவபிரான் தனது காதில் இருந்த குழை கழன்று தரையில் விழ வைத்தார். கீழே விழுந்த காதணியை, தனது நடனத்தை நிறுத்தாமலே, எவரும் அறியா வண்ணம் தனது காலால் எடுத்து, தனது கைக்கு மாற்றி, பின்னர் காதிலும் பொருத்தினார். இந்த மூன்று நாட்டியத் தோற்றங்களும், ஒன்றின் மேல் ஒன்றாக பொருத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ள ஒரு சிற்பம் காஞ்சி கைலாசநாதர் கோயிலின் சுவர்களில் செதுக்கப் பட்டுள்ளது. மேலும் அதன் தொடர்ச்சியாக தனது இடது காலை செங்குத்தாக தலைக்கு மேல், கால் கட்டை விரல் ஆகாயத்தை நோக்கியிருக்குமாறு காலை தூக்கினார். இந்த நடனத் தோற்றத்தை ஊர்த்துவ தாண்டவம் என்று கூறுவர். தனது பெண்மை உணர்வு காரணமாக, நாணம் தலை தூக்கவே, காளியம்மையால் இந்த மாதிரி தோற்றத்தை நடனத்தில் காண்பிக்க முடியவில்லை. காளியம்மை தனது தோல்வியை ஒப்புக்கொண்டு தில்லையை விட்டு அகன்றாள் என்று புராணம் கூறுகின்றது. தில்லையின் எல்லை தாண்டிச் சென்ற காளியம்மை, எல்லைக் காளியாக கோயில் கொண்டிருப்பதை இன்றும் நாம் காணலாம். இவ்வாறு பெருமான் ஆடிய நடனத்தை காளியம்மை வியப்புடன் பார்த்ததை காளி காண நடனம் ஆடினார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான் விற்பிடித்து கொம்புடைய ஏனத்தின் பின்

கூடினார் உமையவளும் கோலம் கொள்ளக் கொலைப் பகழி உடன் கோத்துக் கோரப் பூசல்

ஆடினார் பெருங்கூத்துக் காளி காண அருமறையோடு ஆறங்கம் ஆய்ந்து கொண்டு

பாடினார் நால்வேதம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

கையில் வில்லினை ஏந்தி, வேடுவப்பெண் வேடம் தாங்கி உமையம்மை உடன்வர வேடுவக் கோலம் தாங்கி, ஆங்கே தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனைத் தாக்க வந்த கொம்புடைய பன்றியின் பின்னே சென்ற பெருமான், கொல்லும் தன்மை கொண்ட அம்பினை வில்லில் பூட்டி அந்த பன்றியைக் கொன்றார். அதனால் அவருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே சண்டை மூள, அந்நாள் வரையில் எவரிடமும் விற்போரில் தோல்வி அடையாதிருந்த அர்ஜுனன் தோல்வியுற்று, தன்னை வென்ற பெருமானின் திறமை கண்டு வியக்கின்றான். இவ்வாறு அர்ஜுனனை வென்று அவன் வியப்படைந்ததைக் கண்ட பெருமான், முன்னொரு நாளில் காளியை நடனப் போட்டியில் வென்று, காளி வியந்து காணும் வண்ணம் நடனம் ஆடியவராவார். அத்தகைய வீரச்செயல்களைப் புரிந்து வீரனாக விளங்கும் பெருமான் அரிய நான்கு மறைகளையும் அதன் அரணாக விளங்கும் ஆறு அங்கங்களையும் ஆராய்ந்து, அதன் பொருளை உணர்ந்தவராக, வேதங்களை பாடுகின்றார். இவ்வாறு பல திறமைகளை உடையவராக பாசூர் தலத்தில் பொருந்தி உறையும் பரஞ்சுடராக இருக்கின்றார் அவரைக் கண்டு தொழுது அடியேன் வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

கலயநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.16.9) அரக்கன் தாரகனைக் கொன்ற காளியை படைத்தவன் பெருமான் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். கரும் புனை=பசுமையான புன்னை மரங்கள்; பொரும் பலம்=போர் புரிகின்ற ஆற்றல்; பொருது=போர் செய்து; பொன்றுவித்த=அழித்து பொருள்=காளி தேவி; வாளி=அம்புகள்; கண்ணுதலோன்=நெற்றிக் கண் உடையவன்; இரும் புனல்=பெரு வெள்ளம் போல் வரும்; பொருதலைக்கும்=கரைகளில் மோதி இடிக்கும்; தாரகன் என்ற சொல் சூரபதுமனின் தம்பி தாருகாசுரனை குறிப்பதாக பொருள் கொண்டு, பெருமானால் படைக்கப் பட்ட பொருள் முருகப் பெருமான் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. போர் செய்கின்ற வலிமை உடைய அரக்கன் தாரகன் என்பவனுடன் போர் செய்து அழித்த காளி தேவியை படைத்த பெருமான், தூய்மையே வடிவமாக திகழும் பெருமான், கரும்பு வில்லினையும் மலரம்புகளையும் கொண்ட மன்மதன் தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த போது, அவனைத் தனது நெற்றிக் கண்ணால் விழித்து எரித்தவன் ஆவான். அத்தகைய பெருமான், அரிசிலின் தென் கரையில் வீற்றிருக்கும் கலயநல்லூர் தலத்தினைத் தான் உறைகின்ற இடமாக ஏற்றுக் கொண்டுள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொரும் பலமது உடை அசுரன் தாரகனைப் பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன்

கரும்பு வில் மலர் வாளிக் காமனுடன் வேவக் கனல் விழித்த கண்ணுதலோன் கருதும் ஊர் வினவில்

இரும் புனல் வெண்டிரை பெருகி ஏலம் இலவங்கம் இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின் தென் கரை மேல்

கரும் புனை வெண் முத்தரும்பிப் பொன் மலர்ந்து பவளக் கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே

நாவலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.17.3) சுந்தரர் மோடி என்று கொற்றவையை குறிப்பிடுகின்றார். கொற்றவை என்ற சொல், குமரி முனையில் இருக்கும் பார்வதி தேவியையும், கோடிக்கரை தலத்தில் உள்ள காடுகிழாள் என்ற கொற்றவையை குறிக்கும் என்றும் இரண்டு விதமாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

வேகம் கொண்டோடிய வெள் விடை ஏறியோர் மெல்லியலை

ஆகம் கொண்டார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்

போகம் கொண்டார் கடற் கோடியின் மோடியைப் பூண்பதாக

நாகம் கொண்டார்க்கு இடமாவது நந்திரு நாவலூரே

இந்த நிகழ்ச்சி சுந்தரர் அருளிய ஆவடுதுறை பதிகத்தின் (7.70) நான்காவது பாடலில் குறிப்பிடப் படுகின்றது. கொதி=சீற்றம்: விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவன்: விதி=ஆகம நூல்களில் விதிக்கப்பட்ட வழிமுறை: அதிபன்=தலைவன். நோய் என்று இங்கே சுந்தரர் குறிப்பிடுவது, அவரை வருத்திய தோல்நோயாகும். இந்த நோய் திருத்துருத்தி தலத்தில் வழிபட்டு தீர்க்கப்பட்டது. இறைவன் சிவபெருமான் அல்லாமல் தனக்கு வேறு எவரும் உறவினர் இல்லை என்று சொல்லி, இறைவனே நீர் தான் என்னை அஞ்சேல் என்று சொல்லி தேற்ற வேண்டும் என்று கூறுகின்றார்.

கொதியினால் வரு காளி தன் கோபம் குறைய ஆடிய கூத்துடையானே

மதியிலேன் உடம்பில் அடு நோயால் மயங்கினேன் மணவாளா

விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திருவாவடுதுறையுள்

அதிபனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

மணிவாசகரும் தனது திருச்சாழல் பதிகத்தில், காளியுடன் நடம் புரிந்து அன்று சிவபெருமான் காளியை வென்றிராவிட்டால், உலகம் முழுவதும் காளியின் கோபத்திற்கு இரையாக மாறியிருக்கும் என்று குறிப்பிடுவது இங்கே நினைவு கூரத்தக்கது. தண்பணை=நீர் வளம் நிறைந்ததால் குளிர்ந்து காணப்படும் வயல்கள்

தேன் புக்கு தண்பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்

தான் புக்கு நட்டம் பயிலும் அது என்னேடீ

தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம்

ஊன் புக்க வேற்காளிக்கு ஊட்டாம் காண் சாழலோ

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் பொற்றில்லைக் கூத்து அதிகாரத்தில், திருமூலர், பெருமான் காளியோடு நடமாடுகின்றார் என்று கூறுகின்றார். இந்த பாடல் நாதன் நடம் புரியும் இடங்களை குறிப்பிடுகின்றது. அரக்கன் தாரகனைக் கொன்ற பின்னரும் ஆவேசம் அடங்காமல், உலகினை அழிக்கப் புகுந்த காளியோடு நடனமாடி வென்ற பெருமான், சுடுகாட்டினில் பேய்க்கூட்டத்தின் நடுவில் நின்றும் நடனம் ஆடுகின்றான். உலகத்தின் பல தலங்களில் நடனமாடும் பெருமான்,நீர், தீ, காற்று மற்றும் நீண்ட வானம் ஆகிய ஏனைய பூதங்களிலும் நடனம் ஆடும் பெருமான், தொடர்ந்து தில்லைச் சிதம்பரத்தில் சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. கூளி= பேய் கணங்கள்; குவலயம்=பூமி; கால்=காற்று;

காளியோடாடிக் கனகாசலத்தாடி

கூளியோடாடிக் குவலயத்தே ஆடி

நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி

நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே

பொழிப்புரை:

பொலிவுடன் திகழும் மாடங்கள் நிறைந்த சண்பை என்றும், பூந்தராய் என்றும், பிரமனூர் என்றும், காழி என்றும், மிகவும் அதிகமான ஒளி பொருந்திய தோணிபுரம் என்றும், சிறப்புடன் திகழும் வேணுபுரம் என்றும், கொச்சைவயம் என்றும், புறவம் என்றும், விண்ணோர்களால் புகழப்படும் புகலி என்றும், கழுமலம் என்றும், சிறப்பு வாய்ந்த சிரபுரம் என்றும், வெங்குரு என்றும், அழைக்கப்படுவது, கடுமையான போரின் முடிவினில் மகிடாசுரனை வெற்றி கொண்ட நீலி என்று அழைக்கப்படும் காளி, மகிடனைக் கொன்றதால் ஏற்பட்ட பழியினை நீக்கிக் கொள்ளும் பொருட்டு, பணிந்து வணங்கும் திருவடிகளை உடைய நின்மலனாகிய சிவபெருமான் உறையும் ஊராகிய சீர்காழி ஆகும்.

பாடல் 8:


நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில்

ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி

சென்று புறம் காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்கோனூர்

வென்றி மலி பிரமபுரம் பூதங்கள் தாம் காக்க மிக்க ஊரே

விளக்கம்:

பூதங்கள்=ஐந்து பூதங்கள்; பஞ்ச பூதங்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் நீரினை உணர்த்தும் பிரளய வெள்ளத்திலும் அழியாமல் மிதந்த நிலையினை பூதங்கள் காக்க நின்ற ஊர் என்று இங்கே குறிப்பிடுகின்றார். மோடி=துர்க்கை, காளி; பெருமானிடம் நடனப் போட்டியில் தோற்ற காளி, ஊர் எல்லையில் சென்று அமர்ந்ததாக சீர்காழி தலபுராணம் கூறுகின்றது. அரக்கன் தாரகனை வென்ற பின்னரும் தனது கோபம் அடங்காமல், கோபத்தினால் அனைத்து உயிர்களையும் துன்புறுத்தியது தனது தவறு என்பதை உணர்ந்த காளி, தனது குற்றம் நீங்கும் பொருட்டு சிவபெருமானை வழிபட்டதை குறிப்பிடும் வகையில் காழி என்ற பெயர் அமைந்தது என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடலை (3.67.10) நாம் இங்கே காண்போம்.

பாழி உறை வேழ நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா

ஏழின் இசை யாழின் மொழி ஏழையவள் வாழும் இறை தாழும் இடமாம்

கீழ் இசை கொள் மேல் உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு

ஆழிய சில் காழி செய ஏழுலகில் ஊழி வளர் காழிநகரே

கூட்டமாக பாழியில் தங்குபவர்களும், யானை போன்று பருத்த உடலுடன் திரிபவர்களும் பாழான கொள்கைகள் உடையவர்களும் ஆகிய சமணர்களும், தங்களது உடலினை பாதுகாப்பதில் அதிகமான கவனம் செலுத்தும் புத்தர்களும் பெருமானை உணராதவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு அவர்களால் உணர முடியாதவனாக திகழ்ந்த பெருமான், ஏழு சுரங்களை உடைய யாழின் இசை போன்று இனிமையான மொழியை உடைய பார்வதி தேவியுடன் தங்கும் இடம் சீர்காழி நகரமாகும். பூமியில் உள்ள பல அரசர்களும் மேலுலகில் வாழும் இந்திரனும் அவனைச் சூழ்ந்துள்ள பல தேவர்களும், காளிதேவியின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு துன்பமின்றி வாழும் பொருட்டு நடனம் புரிந்த சிவபெருமானிடம் நடனப்போட்டியில் தோற்றவளும் வரிசையாக மணிகள் பதிக்கப்பெற்ற மேகலை ஆபரணத்தை அணிந்தவளும் ஆகிய காளியன்னை தனது குற்றம் நீங்கும் வண்ணம் பெருமானை வழிபட்டு அருள் பெற்றமை ஏழுலகிலும் பல ஊழிகளையும் தாண்டியும் பேசப்படுகின்றது. இத்தகைய பெருமையைப் பெற்றதால் காழி என்ற பெயர் வந்தது என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

பொழிப்புரை:

மதில்கள் சூழ்ந்து விளங்கும் வெங்குரு என்றும், தோணிபுரம் என்றும், பொலிவுடன் விளங்கும் மன்றில் கொண்ட வேணுபுரம் என்றும், ஒப்பற்ற கழுமலம் என்றும், கொச்சைவயம் என்றும், உயர்ந்த காழி என்றும், வளர்ந்த புகழ் உடைய புறவம் என்றும், காளிதேவி ஊர் எல்லையில் கோயில் கொண்டு காக்கும் சிரபுரம் என்றும், பூந்தராய் என்றும், புகலி என்றும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனின் ஊர் வேணுபுரம் என்றும், வெற்றிகள் வழங்கும் பிரமபுரம் என்றும் அழைக்கப்படும் சீர்காழி நகரம், ஐந்து பூதங்களும் சேர்ந்து எப்போதும் அழியாமல் நிலையாக இருக்கும் வண்ணம் காக்கும் நகரமாகும்.

பாடல் 9:


மிக்க கமலத்து அயனூர் விளங்கு புறவம் சண்பை காழி கொச்சை

தொக்க பொழில் கழுமலம் தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர்

மைக்கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல்லரக்கன் திண்தோள்

ஒக்க இருபது முடிகள் ஒருபதும் ஈடழித்து உகந்த எம்மான் ஊரே

விளக்கம்:

மிக்க=சிறப்பு மிக்க; அயனூர்=பிரமபுரம்; தொக்க=இணைந்த; ஈடு=வலிமை; இந்த பாடலில் சிலம்பன் சேர் ஊர் திருஎன்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல் தோறும் சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களை குறிப்பிட்டு வருவதால், இந்த பாடலிலும் பன்னிரண்டு பெயர்கள் இருக்க வேண்டும் என்பதை உணரலாம். சிரபுரம் என்ற பெயர் மேற்கண்ட பாடலில் இல்லாமல் இருப்பதால், சிலம்பன் சேர் ஊர் என்பது சிரபுரம் என்ற பெயரை குறிப்பதாகவே நாம் பொருள் கொள்ள வேண்டும். இதே போன்று, பன்னிரண்டு பெயர்களையும் குறிக்கும் பல பாடல்களில் (2.70.5, 2.73.2, 2.073.3, 2.73.4,2.73.5, 2.73.8, 2.73.9, 2.73.10. 2.74.10) சிரபுரம் என்ற பெயருக்கு பதிலாக சிலம்பனூர் என்ற பெயர் காணப்படுகின்றது. சிலம்பன் என்ற சொல்லுக்கு அபிதான சிந்தாமணி, குறிஞ்சி நிலத் தலைவன் என்றும் முருகப் பெருமான் என்று பொருள் உரைத்தாலும், அந்த பொருள் சிரபுரம் என்ற பெயரின் காரணத்திற்கு பொருத்தமாக படவில்லை. சில அறிஞர்கள் சிலம்பன் என்பதற்கு நாகநாதன் என்று பொருள் கொண்டு, நாகநாதனாகிய இறைவன் உறையும் இடம் என்று பொருள் கூறுகின்றனர். இராகு வழிபட்டதால் சிரபுரம் என்று பெயர் வந்ததாக தலபுராணம் குறிப்பிடுகின்றது. இராகுவை பாம்பின் அம்சமாக கொண்டு, பாம்பு வழிபட்டதால் இராகுக்கு நாதனாக, தலைவனாக, திகழ்ந்த பெருமான் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது.

மேலும் சிலம்பன் என்ற சொல் அரக்கன் ஒருவனை குறிப்பதாக சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். எனவே இராகு கிரகமாக மாறுவதற்கு முன்னர்,சுவர்பானுவாக இருந்த அரக்கனே சிலம்பன் என்று திருஞானசம்பந்தரால் குறிப்பிடப் படுகின்றது என்ற சிவக்கவிமணியாரின் விளக்கம் பொருத்தமாக உள்ளது. சுவர்பானு என்ற அரக்கன், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த அமுதத்தை, மோகினியாக வந்த திருமால், வஞ்சகமாக தேவர்களுக்கு மட்டும் அளித்து வந்ததைக் கண்டு, தானும் தேவர்களின் நடுவே அமர்ந்து அமுதம் பெறுவதற்கு முயற்சி செய்தான். தங்களின் இடையே அமர்ந்து அவன் அமுதம் பெற்றதை உணர்ந்து, சூரியனும் சந்திரனும், திருமாலிடம் அவன் வரிசை மாறி அமர்ந்ததை சுட்டிக் காட்டி உணர்த்தியதால், மோகினி வடிவத்தில் இருந்த திருமால், தான் வைத்திருந்த கரண்டியால் அவனது தலையினை வெட்டினார். ஆனால் அமுதம் உள்ளே சென்றதால் சுவர்பானு உடனே இறக்கவில்லை. அவனது தலை சீர்காழி சென்று இறைவனிடம் இறைஞ்சி முறையிட, அரக்கனது உடலுடன் பாம்பின் தலையை பொருத்தியும், அரக்கனது தலையுடன் பாம்பின் உடலை பொருத்தியும் பெருமான் வாழ்வளித்தார். அவர்கள் இருவரும் முறையே இராகு என்றும் கேது என்று அழைக்கப் பட்டனர். இந்த சுவர்பானு எனப்படும் அரக்கனே சிலம்பன் என்று தேவாரப் பாடல்களில் அழைக்கப் படுகின்றான். சுவர்பானுவின் தலை சென்று இறைவனை வழிபட்டமையால் சிரபுரம் என்ற பெயரும் தலத்திற்கு வந்தது. இராகு என்ற பாம்பு வழிபட்டமையால், நாகநாதன் என்று பெருமானும் அழைக்கப் படுகின்றார். எனவே சிலம்பன் என்ற சொல் பெருமானை வழிபட்டு அருள் பெற்ற சுவர்பானுவை குறிப்பதாகவும், நாகநாத சுவாமி என்ற பெயரினை பெற்று பெருமானை குறிப்பதாகவும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. இந்த பாடலில் சிரபுரம் என்ற சொல் இல்லாமல் இருப்பதன் பின்னணியில், சிலம்பனூர் என்ற சொல்லுக்கு சிரபுரம் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. தெய்வத்தரு=கற்பக மரம். கற்பக மரம் தனது நிழலில் அமர்வோர் நினைத்ததை அளிக்கும் என்று கூறுவார்கள். சீர்காழி தலத்தில் உள்ள மரங்கள் செழிப்புடன் வளர்ந்து மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதால், கற்பக மரங்களுக்கு ஒப்பாக இங்கே குறிப்பிடப் படுகின்றன. வேணுபுரம் என்ற பெயர் இந்திரன் வந்து பெருமானை வழிபட்டதால் வந்த பெயர். எனவே தேவேந்திரன் ஊர் என்று வரும் இடங்களில் வேணுபுரம் என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்பா=சிறந்த பாடல்கள்; உருவளர்=புகழ் வளரும்; சான்றோர்கள் மேலும்மேலும் இறைவனைப் புகழ்ந்து பாடுவதால், பெருமானின் சிறப்பும் தலத்தின் சிறப்பும் மேலும்மேலும் வளர்கின்றது என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உயர்ந்த தேவர்=பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட உயர்ந்த தேவர்கள்; வெருவளர்=அச்சம் வளரும் நிலை; மேற்கண்ட விளக்கத்திற்கு பொருத்தமான பாடல் ஒன்றினை (2.73.2) நாம் இங்கே காண்போம்.

திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன் ஊர் அயனூர் தெய்வத்

தரு வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தரு சண்பை ஒண்பா

உரு வளர் வெங்குருப் புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர்

வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே

பொழிப்புரை:

சிறப்பு மிகுந்த தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமனின் பெயரால் அழைக்கப் படும் பிரமபுரம் என்றும், சிறந்த புகழுடன் விளங்கும் புறவம் என்றும், சண்பை என்றும், காழி என்றும், கொச்சை வயம் என்றும், சோலைகள் இணைந்த கழுமலம் என்றும், தூய்மை நிறைந்த தோணிபுரம் என்றும், பூந்தராய் என்றும், சிலம்பன் சேர்ந்த சிரபுரம் என்றும், இருள் படரும் வண்ணம் அடர்ந்து காணப்படும் சோலைகள் நிறைந்த வேணுபுரம் என்றும், மதில்கள் உடைய வெங்குரு என்றும் அழைக்கப்படும் ஊர், வலிமை வாய்ந்த அரக்கன் இராவணனின் திண்மையான இருபது தோள்களும் பத்து தலைகளும் ஒன்று சேர்ந்து வலிமை இழக்கும் வண்ணம் கயிலை மலையின் கீழே அழுத்திய எமது பெருமானாகிய சிவபெருமானின் ஊர்.

பாடல் 10:


எம்மான் சேர் வெங்குருச் சீர்ச் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும்

பொய்ம் மாண்பிலோர் புறவம் கொச்சை புரந்தரனூர் நல் தோணிபுரம் போர்க்

கைம்மாவை உரி செய்தோன் காழி அயனூர் தராய் சண்பை காரின்

மெய்ம் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே

விளக்கம்:

மாண்பு=புகழ்; பொய்ம்மாண்பு=நிலையற்ற புகழ்; கைம்மா=கை உடைய விலங்கு, யானை; கார்=மேகம்; காரின் மெய்ம் மால்=மேகம் போன்ற மேனியை உடைய திருமால்; சிலம்பனூர்= சிரபுரம் (விளக்கம் சென்ற பாடலில் அளிக்கப்பட்டது); புரந்தரன்=இந்திரன்; அயனூர்=பிரமபுரம்;

பொழிப்புரை:

எமது பெருமான் சென்று சேர்ந்து உறையும் வெங்குரு என்றும், சிறப்புகள் வாய்ந்த சிரபுரம் என்றும், கழுமலம் என்றும், அடியார்களுக்கு பல நன்மைகள் பயக்கும் புகலி என்றும், நிலையான புகழினை உடைய சான்றோர்கள் போற்றும் புறவம் என்றும், கொச்சைவயம் என்றும், தேவேந்திரனின் ஊர் என்று சொல்லப்படும் வேணுபுரம் என்றும், நன்மைகள் நல்கும் தோணிபுரம் என்றும், போர்க்குணம் கொண்டதும் துதிக்கை உடையதும் ஆகிய யானையினை அடக்கி அதன் தோலை போர்வையாக போர்த்துக் கொண்ட இறைவனது ஊராகிய காழி என்றும், பிரமபுரம் என்றும், பூந்தராய் என்றும், சண்பை என்றும் அழைக்கப்படும் சீர்காழி நகரம், கருமேகத்தைப் போன்று கருமையான மேனி கொண்ட திருமாலும் பூமகன் என்று அழைக்கப்படும் பிரமனும் காண்பதற்கு அரியவனாக நெடிய தீப்பிழம்பாக நின்ற எமது இறைவனாகிய சிவபெருமானின் ஊராகும்

பாடல் 11


இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு அதிபன் சேரூர்

குறைவில் புகழ்ப் புகலி வெங்குருத் தோணிபுரம் குணமார் பூந்தராய் நீர்ச்

சிறை மலி நல் சிரபுரம் சீர்க்காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றிப்

பறிதலையோடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மானூரே

விளக்கம்:

அம்மான்=தாய் போன்று கருணை உள்ளம் கொண்டவன்; இமையோர்க்கு அதிபன், தேவர்களின் தலைவன், இந்திரன்; சிறை=அணை; தேசு=ஒளி; கையர்=கீழ்த்தன்மை உடைய சமணர்கள்; அணிகள் மிகுந்து காணப்படும் ஆறு என்று குறிப்பிட்டு, காவிரி நதியின் நீர் வளத்தினை திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

இறைவனாகிய சிவபெருமான் அமர்ந்து உறையும் சண்பை என்றும், அழகு வாய்ந்த புறவம் என்றும், பிரமனூர் என்றும், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வந்து சேர்ந்து இறைவனை வழிபட்ட வேணுபுரம் என்றும், குறைவற்ற புகழினை உடைய புகலி என்றும், வெங்குரு என்றும், தோணிபுரம் என்றும்,நற்குணங்கள் நிறைந்த மாந்தர்கள் உறையும் பூந்தராய் என்றும், ஆற்றில் அணைகள் மிகுந்த நல்ல சிரபுரம் என்றும், சிறப்புகள் வாய்ந்த காழி என்றும், என்றும் வளரும் புகழினை உடைய கொச்சைவயம் என்றும், கழுமலம் என்றும் அழைக்கப்படும் சீர்காழி ஊரானது, உடலில் ஒளியேதும் இன்றி முடிகள் பறிக்கப்பட்டு மொட்டைத் தலையோடு திரியும் கீழ்த்தன்மை வாய்ந்த சமணர்களும் புத்தர்களும் தனது (சிவபெருமானது) தன்மையை அறியமுடியாமல் இருக்கும் சிவபெருமான் உறையும் ஊராகும்.

பாடல் 12


அம்மான் சேர் கழுமலம் மாச் சிரபுரம் வெங்குருக் கொச்சை புறவம் அஞ்சீர்

மெய்ம்மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்கோனூர்

அம்மான் மன்னுயர் சண்பை தராய் அயனூர் வழிமுடக்கு மாவின் பாச்சல்

தம்மான் என்று ஒன்றிய ஞான சம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர் தாமே

விளக்கம்:

பெருமான் உறையும் தலங்களின் பெயர்களும் பெருமானின் திருநாமங்கள் போன்று புனிதமான மந்திரங்கள் என்று கருதப்படுவதால், தலத்தின் பெயர்களை பலமுறை திரும்பத் திரும்பச் சொல்வது மந்திர ஜெபம் செய்வதற்கு ஒப்பாகும். அதனால் தான் திருஞான சம்பந்தரும் இந்த பதிகத்தை ஓதுவோர் தவம் செய்தவராவர் என்று பதிகத்தின் கடைக்காப்புப் பாடலில் குறிப்பால் உணர்த்துகின்றார். இறைவனைக் குறித்து தவம் செய்வோர் தாமே அவனது அருளினை பெறுவதற்கு தகுதியானவர்கள். மா=பெருமை, செல்வம்; அஞ்சீர்=அம்+சீர், அழகும் சிறப்பும் வாய்ந்த; மானம்=பெருமை; மெய்ம்மானம்=உண்மையான பெருமை; முடக்கு=மாறி மாறிப் பாயும்;

பொழிப்புரை:

தாய் போன்று கருணை உள்ளத்துடன் அருள் புரியும் தலைவனாகிய பெருமான் சென்று சேர்ந்து உறையும் கழுமலம் என்றும், செல்வமும் பெருமையும் உடைய சிரபுரம் என்றும், வெங்குரு என்றும், கொச்சைவயம் என்றும், அழகும் சிறப்பும் சேர்ந்ததால் நிலையான பெருமையுடன் மிளிரும் புகலி என்றும், சிறப்புகள் மிகுந்த காழி என்றும், தோணிபுரம் என்றும், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வழிபட்ட வேணுபுரம் என்றும், இறைவனாகிய பெருமான் நிலையாக தங்குவதால் உயர்ந்த புகழினை உடைய சண்பை என்றும், பூந்தராய் என்றும், பிரமபுரம் என்றும், சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் குறிப்பிட்டு, மாறிமாறி குதித்து பாய்ந்து ஓடும் பசுவின் பாய்ச்சல் வழி போன்ற அமைப்பினில், கோமூத்திரி அமைப்பில் அந்தாதியாக, தனது இறைவன் சிவபெருமான் என்ற உணர்வுடன் ஒன்றி ஞானசம்பந்தன் பாடிய இந்த தமிழ் மாலையை ஓதும் அடியார்கள், புகழுக்கும் இறைவனின் கருணைக்கும் தகுந்தவர்களாக விளங்குவார்கள்.

முடிவுரை:

சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களையே திரும்பத் திரும்ப உணர்த்தும் பாடல்கள் கொண்ட பதிகமாக இருப்பினும், பெருமானின் சிறப்பையும், தல வரலாற்றையும், தலத்தின் சிறப்பையும் இடையிடையே புகுத்தி அழகிய தமிழில், கோமூத்திரி அந்தாதி எனப்படும் புதிய வகையில், திருஞானசம்பந்தர் அமைத்துள்ள இந்த பதிகத்தினை, மந்திரமாக பாவித்து ஓதி இறைவனின் கருணைக்கு தகுதி படைத்தவர்களாக நாமும் மாறுவோமாக.



Share



Was this helpful?