இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பூத்தேர்ந்தாயன திருவோத்தூர்

பூத்தேர்ந்தாயன திருவோத்தூர் பழந்தக்கராகம்

பின்னணி;

தமது ஐந்தாவது தல யாத்திரையில் பல சோழநாட்டுத் தலங்களும், பாண்டி நாட்டுத் தலங்களும் சென்று பரமனைப் பணிந்து வணங்கி, பல பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், சீர்காழி தலம் திரும்பிய பின்னர், சில நாட்கள் கழித்து காஞ்சிபுரம் உள்ளிட்ட தொண்டை நாட்டுத் தலங்கள் செல்லும் விருப்பம் உடையவராக, தனது ஆறாவது தலயாத்திரையை தொடங்குகின்றார். காஞ்சிபுரம் செல்லும் வழியில், முதலில் தில்லைச்சிதம்பரம் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் பல நடுநாட்டுத் தலங்கள் செல்கின்றார். நடுநாட்டுத் தல யாத்திரையின் கடைசியில் திருவண்ணாமலை தலம் சென்று,அண்ணாமலை அண்ணலை வழிபட்டு இரண்டு பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், தொண்டை நாடு புகுகின்றார். அவர், திருவோத்தூர் தலம் வந்த போது,ஆங்கிருந்த அடியார்கள், வீதிகளை வாழைமரங்கள், தோரணங்கள், விளக்குகள் கொண்டு அலங்கரித்தும், நீர்க்குடங்கள் பொரி சுண்ணம் ஆகிய மங்கலப் பொருட்கள் கொண்டும் அவரை சிறப்பாக வரவேற்றனர் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. அடியார்கள் புடைசூழ திருக்கோயிலின் உள்ளே சென்ற திருஞான சம்பந்தர் பெருமானைப் புகழ்ந்து சொல்மாலைகள் அணிவித்து பணிந்தார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. அந்த சமயத்தில் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. வெளியே வந்த திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கிய தொண்டர் ஒருவர் அழுதபடியே தனது குறையை சொன்னார்.தான் வளர்த்த பனை மரங்கள் செழித்து உயர்ந்து வளர்ந்த போதிலும், காய்க்காமல், ஆண் பனைகளாக இருப்பதைக் கண்ட சமணர்கள் எள்ளி நகையாடுவதால் தான் வருந்துவதாக தெரிவித்தார். மேலும் இது தான் சிவபெருமான் உமக்கு புரிகின்ற அருளின் தன்மையா என்று ஏளனமாக பேசுவதாகவும் கூறினார். அந்த அடியாரின் துயரத்தைக் கேட்டு அவர் பால் பரிவு கொண்ட திருஞான சம்பந்தர், பெருமானைப் பணிந்து, பூத்தேர்ந்தாயன என்று தொடங்கும் இந்த பதிகத்தை பாடினார். இந்த பதிகத்தின் திருக்கடைகாப்பில், குரும்பைகளை ஆண்பனை ஈனும் என்று திருஞானசம்பந்தர் பாட,அனைத்து ஆண் பனைகளும் நிறைந்த குலைகளை உடைய குரும்பை அரும்பும் பெண் பனைகளாக மாறிய அதிசயம் நிகழ்ந்தது. நடந்த அதிசயத்தை நேரில் கண்ட சமணர்கள் பலரும் சைவ மதத்தைத் தழுவ, எஞ்சியிருந்த சமணர்கள் அந்த தலத்தை விட்டுச் சென்றார்கள். மேலும் திருஞானசம்பந்தரின் பதிகத்தின் சிறப்பால், பெண் பனைகளாக மாறியவை, தங்களின் வாழ்நாள் முடிந்த பின்னர், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்திநிலை அடைந்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். தங்களது வினையின் காரணமாக, குலைகள் அளிக்காமல் இருந்த அந்த பெண் பனைகள்,தங்களது வினை, தேவாரப் பதிகத்தின் விளைவால், நீக்கப்பட்ட பின்னர், மலமற்ற தன்மையினால் முக்தி நிலை அடைந்தன என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இந்த தலத்து இறைவனை வழிபட்டால், மன நிம்மதி கிடைக்கும் என்றும் வேலை வாய்ப்பு, பணி உயர்வு ஆகியவை இறையருளால் கிட்டும் என்றும் நம்பப் படுகின்றது.

பாடல் 1

பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி

ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால்

ஓத்தூர் மேய ஒளிமழுவாள் அங்கைக்

கூத்தீரே உம்ம குணங்களே

விளக்கம்:

பெருமானை சிறந்த மலர்கள் கொண்டு வழிபடவேண்டும். அத்தகைய மலர்களை நாம் ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். எத்தகைய பூக்கள் கொண்டு இறைவனை வழிபடவேண்டும் என்று தேவார முதலிகள் உணர்த்தும் சில பாடல்களை நாம் இங்கே சிந்திப்போம். நீலகண்டத் திருப்பதிகத்தின் பாடலில் (1.117.6) பறித்த மலர்கொடு வந்துமை ஏத்துவோம் என்று திருஞானசம்பந்தர் கூறுவது சிந்திக்கத் தக்கது. தற்போது பணம் கொடுத்து மலர்களை வாங்கி இறைவனுக்கு அர்ச்சிப்பது என்பது பழக்கமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் ஒரு சில வீடுகளில், அவர்களது இல்லத்தில் வளரும் முல்லை, மல்லிகை, பாரிஜாதம், கருங்குவளை முதலிய மலர்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறு நாமே மலர்களை பறித்து இறைவனுக்கு சமர்ப்பிப்பதே சிறந்த வழிபடாக கருதப்படுகின்றது. இந்த செய்தியே இங்கே சொல்லப் படுகின்றது

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ் பிழையாத வண்ணம்

பறித்த மலர் கொடு வந்து உமை ஏத்தும் பணி அடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

மலர்களைப் பறித்து வழிபடுவதில், மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வியாக்ரபாதர். வண்டுகள் பூக்களில் உள்ள தேனைச் சுவைப்பதால்,மலர்களின் தூய்மை குறைகின்றது என்று எண்ணிய முனிவர் அத்தகைய பூக்கள் இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்தார்.அதனால் வண்டு சுவைக்கும் முன்னரே பூக்களைப் பறிக்க ஆசைப்பட்டார். அதற்கு வசதியாக விடியற்காலை இருட்டினில் தனக்கு கண்கள் நன்றாக தெரிய வேண்டும் என்றும், தான் மரத்தினில் ஏறும்போது பனியினால் நனைந்து இருக்கும் மரங்களின் தண்டுகளும் கிளைகளும், வழுக்காமல் இருக்க வேண்டும் என்றும் விரும்பிய முனிவர், இறைவனிடம் தனக்கு புலிக்கு உள்ளது போன்ற கண்களும் கால்களும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். இறைவன் அருளால் அவரது ஆசை நிறைவேறியது. அன்று முதல் முனிவர் வியாக்ரபாதர் என்றும் புலிக்கால்முனிவர் என்றும் அழைக்கப்பட்டார். வியாக்ரம் என்றால் வடமொழியில் புலி என்று பொருள். இறைவனை வழிபட உதவும் மலர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று கூறும் அப்பர் பிரானுக்கு, வியாக்ரபாதர் நினவு வந்தது இயற்கையே. தில்லைத் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றினில் (5.01.02) பெரும்பற்றப் புலியூர் என்று தில்லைச் சிதம்பரத்தை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் மற்ற பாடல்களில் தில்லை என்றும், அம்பலம் என்றும், தில்லைச் சிற்றம்பலம் என்றும் சிற்றம்பலம் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலில் மட்டும் வியாக்ரபாதர் செய்த வழிபாட்டினை நினைவூட்டும் வகையில் பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரினை பயன்படுத்துகின்றார். இறைவன் பால் வியாக்ரபாதர் பெரும் பற்று கொண்டிருந்தமை, சிறந்த பூக்களைப் பறித்து பெருமானுக்கு படைக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தமை, நமக்கு புரிகின்றது. மலர் கொண்டு தூவித் தொழுமினோ என்று அப்பர் பிரான் கூறுவதன் காரணம், அடுத்த அடியில் விளக்கப்பட்டுள்ளது. மன்மதனும் தனது கரும்பு வில்லில் மலர்களைப் பூட்டி, இறைவன் மேல் பொழிந்தான். ஆனால் அவனது செய்கையில் பக்தி இல்லை;இறைவனது தவத்தினைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இருந்தது. அதனால் தான் அவன் இறைவனால் எரிக்கப்பட்டான். மலர்கள் கிடைக்காத போது, பக்தியுடன் இலை கொண்டு வழிபடுவதையும் சிவபிரான் ஏற்றுகொள்கின்றார். ஏன், கல் எறிந்த சாக்கியருக்கும் அருள் செய்தவன் அல்லவா.சிவபெருமான். மறவாது கல் எறிந்த சாக்கியார் என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகின்றார். ஒருநாளும் மறவாது, தினமும் தான் உண்பதன் முன்னர், கல் கொண்டு இறைவனை வழிபட்டவர் சாக்கிய நாயனார். அவரது பக்தியின் காரணமாக, அவர் எறிந்த கல்லும், மலராக கருதப்பட்டு,இறைவன் அவருக்கு முக்தி அளித்த வரலாறு பெரிய புராணத்தில் காணப்படுகின்றது.

அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டு நீர்

சுரும்பு அற்றப்படத் தூவித் தொழுமினோ

கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்

பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளீய பதிகத்தின் (1.40) பாடல்களின் பெருமானின் திருமேனி மீது மலர்கள் தூவி வழிபடுவதன் சிறப்பு பத்து பாடல்களில் சொல்லப்படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில் கடிகமழ் மாமலரிட்டு கறைமிடற்றான் ஆகிய பெருமானது திருவடிகளைக் காண்போம் என்று நம்மை இந்த தலத்திற்கு கூட்டிச் செல்லும் சம்பந்தர், அவ்வாறு கண்டு களித்த திருவடிகளை விரைகமழ் மாமலர் தூவி இடைவிடாது தியானிப்போம் என்று இரண்டாவது பாடலிலும், அவனது திருவடி நிழலே நமக்கு சிறந்த பாதுகாப்பு என்பதை உணர்ந்து மாமலரிட்டு தலவன தாணிழல் பற்றுவோம் என்று மூன்றாவது பாடலிலும், அவனது திருவடிகளில் காரிடு மலர்கள் தூவி கண்குளிரக் காண்போம் என்று நான்காவது பாடலிலும், தரமான மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனைச் சார்ந்து இருப்போம் என்று ஐந்தாவது பாடலிலும், அன்றலர்ந்த தளையவிழ் மாமலர்களைக் கொண்டு அவனது திருவடிகளில் சமர்ப்பித்து அந்த திருவடிகளே சரணம் என்று சார்ந்து இருப்போம் என்று ஆறாவது பாடலிலும், சிறந்து அகன்று விரிந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனது திருவடி நிழலில் தங்கியிருப்போம் என்று ஏழாவது பாடலிலும், கொத்தாக விரிந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனது திருவடிகளைச் சார்ந்து இருப்போம் என்று எட்டாவது பாடலிலும், விரிந்து நன்கு மலர்ந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவி அவனது திருவடி நிழலில் சென்று தங்குவோம் என்று ஒன்பதாவது பாடலிலும் நம்மை வழிப்படுத்தும் சம்பந்தர், பதிகத்தின் பத்தாவது பாடலில் இவ்வாறு தொண்டர்கள் மலர் தூவி வணங்க வாழ்கொளிபுத்தூர் தலத்தில் வீற்றிருக்கும் நமது தலைவனின் திருவடி நிழலைச் சென்று அடைவோம் என்று கூறுகின்றார்.

திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருவிருக்குக்குறள் பதிகத்தின் (1.91) ஐந்து பாடல்களில் பெருமானை மலர்கள் தூவி தொழுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில், சித்தம் தெளிவடைய வேண்டும் என்று விரும்புவோர்,பெருமானை மலர் தூவி வழிபட்டால், தெளிந்த சித்தம் அடைவதுடன் முக்தி நிலையும் அடையலாம் என்று கூறுகின்றார். மூன்றாவது பாடலில், பொன் போன்று அழகுடன் பொலியும் மல்ர்களை தூவி இறைவனை வழிபட, இம்மை மற்றும் மறுமையில் இன்பம் அடையலாம் என்று கூறுகின்றார். ஐந்தாவது பாடலில், இறைவன் உறைகின்ற திருக்கோயில் சென்று அவனது திருப்பாதங்களில் மலர் தூவி வழிபட்டால், வினைகள் விண்டுபோக பிறவா நிலை எய்தலாம் என்று கூறுகின்றார். ஆறாவது பாடலில் நறுமணம் பொருந்திய மலர்கள் தூவி இறைவனை வழிபட, இறைவன் பால் நாம் வைத்துள்ள அன்பு மேன்மேலும் பெருகும் என்றும் ஏழாவது பாடலில் இறைவன் மீது செம்மையான மலர்கள் தூவி வழிபட, உலகினை ஆளும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகின்றார். காலை மாலை ஆகிய இரு பொழுதுகளிலும் இறைவனை மலர் தூவி வழிபட வேண்டும் என்று திருநீலகண்டப் பதிகத்தின் பாடலில் (1.116.2)திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானின் அடியவர்களாக இருக்கும் நாம், பெருமானின் திருவடிகளைப் போற்றுவோம் என்று பதிகத்தின் முதல் பாடலில் கூறிய ஞானசம்பந்தர், இந்த பாடலில் நாம் எவ்வாறு, நமது மனம் மொழி மெய்களால் இறைவனைப் போற்றுவது என்று சொல்கின்றார். மனதினால் பெருமான் திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்ததை நினைவு கூர்ந்து, கைகளால் பூக்களைக் கொய்தும் அவரது திருவடிகளின் புகழினை வாயால் உரைத்தும் பெருமான் வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் சொல்கின்றார். மேலும் மலர்ச் சோலைகளை வளர்த்தும் குளங்களை வெட்டியும் பெருமானுக்கு தொண்டுகள் செய்யவேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். ஏ=அம்பு; வினை=செய்கை; கனி மனம்=பெருமான் பால் அன்பு வைத்து கனிந்த மனம்; பெருமான் எரித்து அழித்த மூன்று கோட்டைகள், ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்கள் என்று திருமூலர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. மலங்களே முற்றிலும் அழிந்த பின்னர், மலத்தின் விளைவுகளுக்கும் நோய்களுக்கும் இடமேது. .

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்

தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

இவ்வாறு இறைவனை மலர் தூவித் தொழுவதால் நமக்கு கிடைக்கும் பயன் என்ன என்பதை அப்பர் பிரான் திருவையாற்றுப் பதிகத்தின் ஒரு பாடலில் கூறுகின்றார் (பதிக எண்: 4.80). சகம்=உலகம், இங்கே உலகத்தில் உள்ள உயிர்களைக் குறிக்கின்றது. துணை என்ற சொல் இணை என்ற பொருளில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபிரானுக்கு ஒப்பாக சொல்லக்கூடியவர் வேறு எவரும் இல்லை என்ற உண்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.நாண்மலர்=அன்று பூத்த மலர்கள்; தங்கள் நகங்கள் தேயும் அளவுக்கு மலர்களைப் பறித்து, பக்தியினால் கண்ணீர் சோர இறைவனை வணங்கும் அன்பர்களின் மனதினைக் கோயிலாகக் கொண்டு, அங்கே இறைவனை குடி கொள்வான் என்று நமக்கு கூறி, இறைவனை எவ்வாறு வணங்கவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் பாடல் இது.

சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை

நகம் எலாம் தேயக் கையால் நாண் மலர் தொழுது தூவி

முகம் எல்லாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்

அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

கடம்பூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.68.8) தேன் ஒழுகும் மலர்களை, தேன் சிந்தும் மலர்களை தூவி, இறைவன் இருக்கும் திசை நோக்கி தூவி, தொழவேண்டும் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். வண்டுகள் வந்து தேனை பருகுவதற்கு முன்னமே, பூக்களைப் பறிக்க வேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. படுகில்=நீர் நிலைகளில்; பூம்படுகு= அழகிய நீர்நிலை; புள்=பறவை; இரிய=பறந்தோட; காம்பு=மூங்கில்; அடுதல்=கொல்லுதல்,இங்கே வெற்றி கொள்ளல் என்ற பொருளில் வருகின்றது. காம்படு தோளியர்=அழகினில் மூங்கிலை வென்ற தோள்கள் உடைய பெண்கள்; மூங்கில் மகளிரின் தோள்களின் வனப்பிற்கு முன்னே தோல்வி அடைந்ததை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், கடம்பூர் மகளிரின் கண்கள் மீன்களை விடவும் அழகாக இருந்ததை உணர்ந்தார் போலும். அவர்களின் கண்களின் முன்னே போட்டியிட முடியாமல், மீன்கள் நீர்நிலைகளில் பாய்ந்து மறைந்தது என்று கூறுகின்றார்.தேம்படு=தேன் சொரிகின்ற;

பூம்படுகில் கயல் பாயப் புள் இரியப் புறங்காட்டில்

காம்படு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்

மேம்படு தேவியொர் பாகம் மேவி எம்மான் என வாழ்த்தித்

தேம்படு மாமலர் தூவித் திசை தொழத் தீய கெடுமே

திருவாடனை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.112.10) திருஞானசம்பந்தர், தூய்மையான மலர்களை, இறைவனின் திருப்பாதங்களில் தூவி,கைகளால் தொழுது வணங்க வேண்டும் என்று கூறுகின்றார். தூய்மையான மலர் என்றால் வண்டுகளின் எச்சில் படாத மலர் என்று பொருள் கொள்ளவேண்டும்.

மாயனும் மலரானும் கை தொழ

ஆய அந்தணன் ஆடானை

தூய மாமலர் தூவிக் கைதொழத்

தீய வல்வினை தீருமே

கருகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.46.4) மலர் கொய்து இறைவனை வழிபட வேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்தபாடலில் சிவனை வழிபடும் முறை சொல்லப்பட்டுள்ளது. மெய்யில் நீறு பூசி, மலர் கொணர்ந்து, மற்ற அடியார்களுடன் கூடி, மனதில் எந்த விதமான மாசு படிந்த எண்ணங்கள் இல்லாமல், எந்த வேண்டுதலும் கலந்த ஆசை இல்லாமல் பூஜை செய்ய வேண்டும் என்று இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. உடலில் பதினாறு இடங்களில் திருநீறு அணிய வேண்டும் என்பது முறை. இவ்வாறு பூஜை செய்பவரை செல்வந்தர் என்று சம்பந்தர் அழைக்கிறார். இந்த பதிகத்தின்இரண்டாவது பாடலில் பெருமானுக்கு திருப்பணி செய்ய எண்ணம் கொள்ளும் அடியார்கள் என்று பொதுவாக குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், மூன்றாவது பாடலில் இன்னிசைப் பாடல்கள் பாடும் அடியார்களை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் மலர்களை பறித்து வந்து பெருமானின் திருமேனி மீது தூவி மகிழும் அடியார்களை குறிப்பிடுகின்றார். மலர் கொய்து என்று குறிப்பிடுவதால், அப்போது தான் பறித்துக் கொண்டு வரப்பட்ட புதிய மலர்கள் என்பதை நாம் உணரலாம். கடி=நறுமணம்; புணர்ந்து= கூடியிருந்து;

பொடி மெய் பூசி மலர் கொய்து புணர்ந்துடன்

செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்

கடிகொள் முல்லை கமழும் கருகாவூர் எம்

அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே

பட்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.73.7) தேன் ஒழுகும் மலர்கள் கொண்டு இறைவனை வழிபடவேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உலகு=உலகத்தவர்; துறவி எனும் உள்ளம்=உலகப் பற்றைத் துறந்த உள்ளம் உடைய ஞானிகள்; கொடி வீதி=கொடிகள் அசையும் அழகான தெருக்கள்; தொகு=நிறையும், நிறைந்த; எழுதல்=துயில் எழுதல்; நறவ விரை=தேன் சிந்தும் நறுமணம் வீசும் மலர்கள்; தேன் சிந்தும் மலர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம், வண்டுகள் தேனைச் சுவைக்கும் முன்னரே பறிக்கப்பட்ட மலர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். அவர்=சிவபெருமான்;சிவபெருமானைப் போன்ற தோற்றத்தினை பெறுகின்ற அடியார்களின் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. இதனை சாரூப நிலை என்று கூறுவார்கள்.

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர் உலகு பேணல் உறுவார்

துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடிவீதி அழகாய தொகுசீர்

இறைவன் உறை பட்டிசரம் ஏத்தி எழுவார்கள் வினையேதும் இலவாய்

நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாதவ அவரே

அவளிவணல்லூர் தலத்து பதிகத்தின் முதல் பாடலில் (3.83.1) பொழுது புலர்வதன் முன்னர் பறித்த மலர்களை அடியார்கள் இறைவனுக்கு சூட்டி மகிழ்ந்தனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கொம்பு இரிய=கொம்புகள் தங்களது நிலையிலிருந்து விலகி நிற்க; கொன்றை மலர்கள் மாலைகளாக மாறி பெருமானின் மார்பினில் இருக்கும் நிலை மரங்களில் பூத்திருக்கும் இயல்பான நிலையிலிருந்து மாறி விலகி நிற்பதாக இங்கே குறிப்பிடப்படுகின்றது,பொதுவாக வண்டுகள் காலையில், தேனை பருகுவதற்காக காலையில் மலர்களை நாடி செல்வது வழக்கம். ஆனால் இந்த தலத்தில் உள்ள வண்டுகள் அவ்வாறு மலர்களை நாடி செல்வதில்லை என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அந்த வண்டுகள் மரத்தின் கொம்புகளில் உள்ள மலர்களை நாடிச் செல்லாமல், இறைவனின் திருமார்பினை நாடி, செல்வதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த நிலை எதனால் உண்டாகியது என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். இந்த தலத்தினில் உள்ள மக்கள், வண்டுகள் மலர்களில் உள்ள தேனைச் சுவைக்கும் முன்னரே, அந்த மலர்களை, இறைவனுக்கு அணிவதற்காக பறித்து விடுகின்றனர் என்பது தானே இந்த நிலைக்கு காரணம்.

கொம்பு இரிய வண்டுலவு கொன்றை புரிநூலொடு குலாவித்

தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து இடபம் ஏறிக்

கம் பரிய செம்பொன் நெடுமாட மதில் கல் வரை விலாக

அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.3.8) அப்பர் பிரான் பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன் என்று கூறுகின்றார். பொழுது விடிவதற்கு முன்னமே, வண்டுகள் தேனைப் பருகுவதற்கு முன்னமே, மலர்களைப் பறிக்கும் வழக்கம் கொண்டவராக அப்பர் பிரான் இருந்ததை நாம் இந்த பாடலிலிருந்து உணர்கின்றோம். பெரும்புலர்=வைகறை, இரவுப் பகுதியின் நான்காவது கூறு. பெறுமலர்=பேறுகளைப் பெற்றுத் தரும் மலர். இறைவனைத் தொழுதுத் துதிப்பதற்காக நாம் பயன்படுத்தும் மலர்கள், நமக்கு முக்திப் பேற்றினைப் பெற்றுத் தரும் என்பதால், பெறுமலர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கலை=ஆண் மான்.

விரும்பு மதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடிப்

பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்

அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயாறு அடைகின்ற போது

கருங்கலை பேடையொடாடிக் கலந்து வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.85.1) காலையில் எழுந்து தூய்மையான மலர்கள் கொண்டுவந்து இறைவனுக்கு சமர்பிக்க வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தூயன=முறைப்படி தூய்மையாக உள்ள மலர்கள். இந்த பாடலில் அப்பர் பிரான் மலர்களைத் தேர்ந்தெடுத்து இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறுகின்றார். அதிகாலையில் எழுந்தால் தானே, வண்டுகள் சுவைக்கும் முன்னர் நாம் மலர்களைப் பறிக்க முடியும். எனவே தான் காலை எழுந்து தூய்மையானதும் நறுமணங்கள் வீசுவதுமாகிய மலர்களை பறிக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

காலை எழுந்து கடிமலர் தூயன தாம் கொணர்ந்து

மேலை அமரர் விரும்பும் இடம் விரையால் மலிந்த

சோலை மணம் கமழும் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்

மாலை மதியம் அன்றோ எம் பிரானுக்கு அழகியதே.

கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (5.19.6) அப்பர் பிரான், சிறந்த மலர்கள் கொண்டு இறைவனை வழிபட வேண்டும் என்று கூறுகின்றார்.புழுக்கள் அரித்தவை, காய்ந்த மலர்கள், முற்றிலும் மலராதவை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று உணர்த்தப் படுகின்றது. தங்களது குணங்களை பெருமையாக பேசிக் கொண்டு, அடுத்தவரின் குற்றங்களை சுட்டிக் காட்டுவது இழிந்தோர்களின் செயல். ஆனால் பெருமானிடம் அன்புடைய அடியார்கள்,அடுத்தவர்களின் உயர்ந்த குணங்களைப் போற்றியும் தங்களது குறைகளை வெளிப்படுத்தியும் பேசி, பெருமானை வணங்குவார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வான்மலர்=சிறந்த மலர்கள்; குணங்கள் என்பதை இறைவனுடன் இணைத்து, இறைவனின் அருங்குணங்களைச் சொல்லியவாறு வழிபடும் அடியார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்

வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம்

வணங்கி வான்மலர் கொண்டு அடி வைகலும்

கணங்கள் போற்றி இசைக்கும் கரக் கோயிலே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.24.6) புதுமலர்கள் கொண்டு இறைவனை வழிபடவேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். போது=மொட்டு என்றும் பொழுது என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். தாழ்ந்து=நீக்கி என்றும் தலை சாய்த்து வணங்கி என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. எனவே மொட்டுகளை நீக்கி புது மலர்களை கொண்டு இறைவனை வணங்குதல், தமது தலையை சாய்த்து வணங்கி புது மலர்கள் கொண்டு வழிபடுதல் என்று இரண்டு விதமான வழிபாடுகள் பாடலின் முதல் அடியில் குறிப்பிடப் படுகின்றன. பறையும்=அழியும்; நீர்மாது=கங்கை நதி; மாது என்ற சொல்லினை நீர் என்ற சொல்லுடன் இணைத்து கங்கை நதி என்று பொருள் கொண்டு, மொட்டுகளை தவிர்த்து புது மலர்களைத் தனது சடையில் சூடிய பெருமான், கங்கை நதியினையும் சூடிக் கொண்டுள்ளார் என்று சிலர் பொருள் கூறுகின்றன

போது தாழ்ந்து புதுமலர் கொண்டு நீர்

மாது தாழ்சடை வைத்த மணாளனார்

ஓது வேதியனார் திருவொற்றியூர்

பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே

மலர்கள் கொண்டு வழிபடும்போதும் மனதில் வஞ்சனை ஏதும் இல்லாமல் வழிபட வேண்டும் என்று அப்பர் பிரான் மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.90.9) கூறுகின்றார். இதன் மூலம் கள்ளமற்ற மனதினை விடவும் சிறந்த மலர் ஏதுமில்லை என்பது புலனாகின்றது.பொக்கம்=பொய்ம்மை. தனது நடிப்பினால் ஒருவன் மனிதர்களை ஏமாற்றலாம். மனத்தளவில் இருக்கும் வஞ்சனையை மறைத்து, ஒருவரை மதிப்பது போலும் வணங்குவது போலும் நடித்து ஏமாற்றுவது எளிது. ஆனால் இறைவனை அவ்வாறு ஏமாற்ற முடியாது என்று அப்பர் பிரான் நமக்கு எச்சரிக்கை தருகின்றார். நெக்கு=உள்ளம் நெகிழ்ந்து

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு

நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே

மந்திரங்களாலும் தந்திரங்களாலும் தீர்க்க முடியாத சூலை நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையை தனது தமக்கையார் உணர்த்துவார் என்ற நம்பிக்கையில் திருவதிகை வந்தடைந்த அப்பர் பிரானை அடுத்த நாள், விடியற்காலையில் திலகவதியார் திருவதிகை வீரட்டானம் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றார். அப்போது திலகவதியார் செய்த திருத்தொண்டுகளை அப்பர் பிரான் நேரில் பார்த்திருக்க வேண்டும். பெருமானை எவ்வாறு வழிபடவேண்டும் என்று உணர்த்தும் திருவாரூர் பதிகத்தின் பாடல் (6.31.4) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில்புக்குப்

புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சய போற்றி போற்றி என்றும்

அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே

ஆராய்ந்து தேர்ந்தெடுத்த மலர்களை அடியார்கள் தூவி வழிபட அதனை ஏற்றுக்கொள்ளும் இறைவன் என்று திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஏய்ந்த=பொருந்திய; எவராலும் அளக்க முடியாத பெருமை உடையவர் என்று கூறுகின்றார்.

ஏய்ந்த உமை நங்கை பங்கர் தாமே ஏழூழிக்கு அப்புறமாய் நின்றார் தாமே

ஆய்ந்து மலர் தூவ நின்றார் தாமே அளவில் பெருமை உடையார் தாமே

தேய்ந்த பிறை சடைமேல் வைத்தார் தாமே தீவாய் அரவதனை ஆர்த்தார் தாமே

பாய்ந்த படர்கங்கை ஏற்றார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே

கன்றாப்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.61.1) முப்போதும் பூநீர் கொண்டு பெருமானைத் தொழவேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வாசனை என்ற சொல் எதுகை கருதி வாதனை என்று திரிந்தது; மனம் உருகி மனதினில் வஞ்சகம் ஏதுமின்றி, வாயினால் இறைவனது பெருமைகளை சொல்லி, கைகளால் பூவும் நீரும் கொணர்ந்து இறைவனை வழிபடவேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். நமது மனம், வாக்கு காயம் ஆகிய மூன்றும் இறைவனின் வழிபாட்டினில் ஈடுபடவேண்டும் என்பது அப்பர் பிரான் விருப்பம்.

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா மதிசூடி வானவர்கள் தங்கட்கு எல்லாம்

நாதனே என்று என்று பரவி நாளும் நைஞ்சு உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து

வாதனையால் முப்பொழுதும் பூ நீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்திக்

காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.83.8) அப்பர் பிரான், வண்டுகள் மொய்க்கும் தன்மை உடைய மலர்களை தூவி பெருமானை வழிபட வேண்டும் என்று சொல்கின்றார். தேனுடைய மலர்களாக இருந்தால் தானே, வண்டுகள் மொய்க்கும் தன்மை உடையதாக அந்த மலர்கள் இருக்கமுடியும்; எனவே வண்டுகள் சுவைப்பதற்கு முன்னரே நாம் இறைவனுக்கு அளிக்கவிருக்கும் மலர்களை பறிக்க வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இதே நிலை திருஞானசம்பந்தரால் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. அண்டம்=உலகம்; அண்டவர்=உலகத்தவர்கள், இங்கே மேல் உலகத்தில் வாழும் தேவர்களை குறிக்கின்றது; வேலை=கடல்; ஆறு=தன்மை; பண்டரங்க வேடன்=பண்டரங்கக் கூத்து ஆடியவன்; பெருமான் திரிபுரங்களை எரித்த பின்னர் ஆடிய கூத்து பண்டரங்கக் கூத்து., தானவர்கள்=அசுரர்கள்;

அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்த்து எழுந்த ஆலாலம் வேலைஞாலம்

எண்டிசையும் சுடுகின்ற ஆற்றைக் கண்டு இமைப்பளவில் உண்டுருண்ட கண்டர் தொண்டர்

வண்டுபடு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும்

பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

நெஞ்சில் பணிவு ஏதுமின்றி வழிபடுவோர் இடுகின்ற மலர்கள் எத்துணை உயர்ந்தவையாக இருப்பினும் அவற்றை பெருமான் ஏற்றுக்கொள்வதில்லை என்ற அப்பர் பெருமானின் வாய்மொழி (4.92.10) நமது நினைவுக்கு வருகின்றது. தேவர்கள் பெருமானது திருவடிகளில் மலர் தூவி வணங்கினாலும், அவர்களின் மனதினில் அடிப்படையாக தாங்களும் சிவபெருமானைப் போன்று தேவர்கள் என்ற எண்ணம் ஓங்கி இருப்பதாக உணர்த்தும் அப்பர் பிரான், பெருமான் அவர்கள் தூவி வழிபடும் மலர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் அவ்வாறு ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், அந்த மலர்கள் பெருமானின் திருவடிகளை மறைப்பதில்லை என்றும், பெருமானின் திருவடிகள் பவள நிறத்துடன் காணப்படுகின்றது என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். நின்போல் அமரர்கள்=உன்னைப் போலவே தாங்களும் தேவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் அமரர்கள் உழக்குதல்=அன்பின்மை கருதி ஏற்றுக்கொள்ளாது இருத்தல்: பைம்போது= கற்பகம், மந்தாரம் எனப்படும் தேவலோகத்தில் கிடைக்கும் மலர்கள்: நிமிர்த்து=மனதினில் பணிவு, அன்பு இல்லாத காரணத்தால் நிமிர்ந்த மனது: உகுத்தல்=சிந்துதல், தூவுதல்: ஐயாறனின் திருவடிகள், தன்னைப் போன்று சைவ சமய நியமங்கள் தெரியாது இறைவனை வழிபடும் அடியார்கள், அறியாமையால் இடும் இலைகளையும் மொக்குகளையும், தனக்கே உரிய பெருந் தன்மையுடன் அன்று மலர்ந்த புதிய பூக்களாக ஏற்றுக் கொண்டு அத்தகைய அடியார்களுக்கு நன்மை அளிப்பன: சிவபிரானைப் போன்று தாங்களும் தேவர்கள் என்ற எண்ணத்துடன், உடலளவில் தங்களது தலையினை சாய்த்து சிவபிரானை வணங்கினாலும், மனதினில் பணிவு, பக்தி ஏதும் இன்றி நிமிர்ந்த மனத்துடன் வணங்கும் தேவர்கள், உயர்ந்த மலர்களாகிய கற்பகம் மந்தாரம் கொண்டு, சிவபிரானின் திருப்பாதங்களில் தூவினாலும் அந்த மலர்களை பெருமான் ஏற்றுக் கொள்ளாது விலக்குவதால்,அத்தகைய மலர்களால் திருவடிகள் மறைக்கப்படாமல், பவள நிறத்துடன் பெருமானின் திருவடிகள் காணப்படும் என்று அப்பர் பிரான் கூறும் பாடல்.

நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்த்து உகுத்த

பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன பாங்கறியா

என் போலிகள் பறித்திட்ட இலையும் முகையும் எல்லாம்

அம்போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே

.ஆயன=முதலான; பூ முதலானவை என்று பொருள் கொள்ளவேண்டும், அபிடேகப் பொருட்கள், தூபம், தீபம் என்பன. பெருமானை ஏத்தாதார் இல்லை என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது. பாண்டிய நாட்டுத் தலயாத்திரைக்கு பின்னர் திருவோத்தூர் தலத்திற்கு திருஞானசம்பந்தர் வருகின்றார். மதுரையம்பதியில் அனல் வாதம் மற்றும் புனல் வாதம் ஆகிய இரண்டிலும் சமணர்களை வெற்றி கொண்டு, சமணர்களின் ஆதிக்கத்தை ஒழித்தும், பெரும்பாலான மக்களை சைவ மதத்திற்கு மாற்றியும் தனது அவதார நோக்கத்தை அவர் நிறைவேற்றியதை அறிவோம். இவ்வாறு தென் தமிழ் நாட்டில், சைவ சமயம் தழைத்தோங்க திருஞானசம்பந்தர் வழிவகுக்க, அதற்கு முன்னரே திருநாவுக்கரசர் சமணர்கள் செய்த பல சூழ்ச்சிகளிலிருந்து தப்பியது மற்றும் கொடிய சூலை நோயினை தீர்த்துக் கொண்டது ஆகிய அதிசயங்கள், தமிழ் நாட்டின் வடபகுதியில் மன்னன் மகேந்திரபல்லவன் உள்ளிட்டு பலரையும் சைவ சமயம் மேற்கொள்ள வைத்தது. சமணர்கள் பலர் சைவ சம்யம் சாரவும் சிலர் பல்லவ நாட்டினை விட்டு வெளியேயும் சென்றனர். இதனால் சமணப்பள்ளிகள் தங்குவார் எவருமின்றி வெற்றிடங்களாக திகழ்ந்தன. இதனால் தான், பல்லவ மன்னன் சமணப்பள்ளிகளை இடித்து அந்த கற்களைக் கொண்டு சிவாலயங்கள் எழுப்பினான் என்று சரித்திரம் உணர்த்துகின்றது. இவ்வாறு தமிழ் நாட்டின் இரு பகுதிகளிலும் சமணர் மற்றும் புத்தர்களின் செல்வாக்கு நலியவே, விரல் விட்டு எண்ணும் அளவுக்கு அவர்களின்ன் எண்ணிக்கை மாறியது போலும். அதனால் தான் பெருமானை ஏத்தாதார் இல்லை என்று இந்த பாடலில் குறிப்பிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகின்றாது.

பொழிப்புரை:

சேதமடைந்த மலர்களை தவிர்த்தும் புதியதாக மலர்ந்த மலர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டும், பெருமானின் வழிபாட்டினுக்கு தேவையான அபிடேகப் பொருட்கள், தூபம் தீபம் முதலானவை கொண்டு உமது பொன்னான திருவடிகளைப் புகழாதாவர்கள் எவருமில்லை என்பதை எண்ணுகையில் திருவோத்தூர் தலத்தினில் பொருந்தி உறைபவரும் ஒளிவீசும் ம்ழுவாட்படையை தனது அழகிய கையினில் ஏந்தியவரும், நடனமாடுபவரும் ஆகிய பெருமானே, உமது குணநலன்கள் தாம் என்னே என்று எம்மை வியக்க வைக்கின்றது.

பாடல் 2

இடையீர் போகா இளமுலையாளை ஓர்

புடையீரே புள்ளி மானுரி

உடையீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர்

சடையீரே உம தாளே

விளக்கம்:

ஈர்=ஈர்க்குச்சி; புடையீர்=அருகில் கொண்டுள்ளவர்; உரி=தோல்; ஏத்துதல்=புகழ்ந்து போற்றுதல்; தாள்=திருப்பாதங்கள்;

பொழிப்புரை:

ஈர்க்குச்சி இடையே போகாத வண்ணம், ஒன்றுக்கொன்று நெருங்கி பருத்து காணப்படுவதும் இளமை வாய்ந்ததும் ஆகிய மார்பகங்களை உடைய உமையன்னையை ஒரு பாகமாகத் தனது உடலில் கொண்ட பெருமானே, புள்ளி மானின் தோலை உடையாகக் கொண்டவரே, ஒப்பற்ற சடைமுடியை உடையவரே, ஓத்தூர் தலத்தினில் உறைகின்ற பெருமானே, உமது திருவடிகளை நாங்கள் புகழ்ந்து போற்றுகின்றோம்.

பாடல் 3

உள்வேர் போல நொடிமையினார் திறம்

கொள்வீர் அல்குலோர் கோவணம்

ஓள்வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்

கள்வீரே உம காதலே

விளக்கம்:

கொள்வீர் என்ற சொல்லினை நொடிமையினார் திறம் மற்றும் அல்குலோர் கோவணம் ஆகிய இரண்டுக்கும் பொதுவாக கருதி பொருள் கொள்ளவேண்டும்.நொடிமையினார்=பொய்யாக பேசுவோர்; பொய்யாக பேசுவோரின் தன்மையை புரிந்துகொண்டு அதனை வெளிக்காட்டாமல் பெருமான் இருக்கும் தன்மையை கள்வர் என்ற சொல் மூலம் குறிப்பிடுகின்றார். உயிர்கள் அனைத்தும் சென்ற பல பிறவிகளில் செய்த வினைகளுக்கு ஏற்ப, இந்த பிறவியில் இன்ப துன்பங்களை நுகர்ந்து அனுபவிக்கின்றன. அவ்வாறு தான் அனுபவிக்கும் இன்பங்கள், இந்த பிறவியில் தான் இறைவனை வழிபட்டதால் கிடைத்த பயன் என்று, பொய்யாக இறைவனை வழிபட்ட மனிதன் நினைத்துக்கொண்டு மகிழ்கின்றான். இந்த நினைப்பினை மாற்றுவதற்கு இறைவன் முயலுவதில்லை. இந்த தன்மை தான் இங்கே குறிப்பிடப் படுகின்றது. இதற்கு மாறாக உண்மையாக இறைவனை வழிபடும் அடியாரின் நிலையையும் நாம் சற்று சிந்திப்போம். இந்த மெய்யடியார்களின் சிந்தனை திருத்தப்படுவதால், அவர்கள் தாங்கள் எதிர்கொள்கின்ற இன்ப துன்பங்களை சரிசமமாக பாவித்து,எத்தகைய சலனமும் அடையாமல் வாழ்ந்து, மேன்மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுகின்றனர். இந்த பக்குவத்தை அடைந்த உயிர்கள், மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து எத்துணை இன்ப துன்பங்களை நுகர நேரிட்டாலும், அந்த உயிர்களின் மனம் சலனமடையாது என்பதை புரிந்து கொள்ளும் இறைவன் அந்த உயிர்களுக்காக இனியும் வரவிருக்கும் பிறவிகளுக்கு ஒதுக்கப்பட்ட வினைகளை முற்றிலும் கழித்து விடுகின்றான். இவ்வாறு மேலை வினைகள் கழிக்கப்பட்ட உயிர்கள், மலமற்ற உயிர்களாக மாறி முக்தி நிலை அடையும் தகுதி பெற்றுவிடுகின்றன.

வஞ்சனை உடைய மனத்துடன் தன்னைத் தொழும் அடியார்களை இனம் கண்டுகொண்டு நாணி நிற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் கூறுவதும் (5.90.9)நமது நினைவுக்கு வருகின்றது. பொக்கம்=பொய்ம்மை. தனது நடிப்பினால் ஒருவன் மனிதர்களை ஏமாற்றலாம். மனத்தளவில் இருக்கும் வஞ்சனையைமறைத்து, ஒருவரை மதிப்பது போலும் வணங்குவது போல் நடித்து ஏமாற்றுவது எளிது. ஆனால் இறைவனை அவ்வாறு ஏமாற்ற முடியாது என்று அப்பர்பிரான் நமக்கு எச்சரிக்கை தருகின்றார். நெக்கு=உள்ளம் நெகிழ்ந்து

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு

நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே

இதே கருத்து இன்னம்பர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் பாடலிலும் (5.21.8) உணர்த்தப்படுகின்றது. கீழ்க்கணக்கு=சிறு வரிகளால் எழுதப்படும் குறிப்பு. இன்னம்பர் தலத்தில் உறையும் இறைவனுக்கு கீழ்க்கணக்கர் என்பது ஒரு திருநாமம். இந்த தலத்து இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெயரும் உண்டு. அதனை உணர்த்தும் வகையில் எழுதும் கீழ்க்கணக்கு என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம். இந்த பாடலில் மனம், மொழி மற்றும் மெய்யினால் செய்யப்படும் வழிபாடு உணர்த்தப்படுகின்றது. மனத்தினால் இறைவன் பால் அன்பு கொண்டு, உடலால் தொழுதும் மலர்கள் தூவியும், வாயினால் அழுதும் அவனது திருநாமங்களை அரற்றியும் வழிபாடு செய்ய வேண்டும் என்று அப்பர் பெருமான் கூறுகின்றார்

தொழுது தூமலர் தூவித் துதித்தி நின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கும் இறைவன், தன்னை வழிபடும் அடியார்களின் வழிபாட்டு நிலையையும் அறிந்து குறித்துக் கொள்கின்றான் என்று மேற்கண்ட இன்னம்பர் பதிகத்து பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு உணர்த்துவதன் மூலம் வஞ்சனையான வழிபாட்டினை, தவிர்க்குமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். இதே கருத்தினை உள்ளடக்கிய திருமந்திரப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.கண்காணியாக உலகெங்கும் நிறைந்து நிற்கும் இறைவனின் தன்மையை உணர்ந்தவர்கள் தவறேதும் செய்ய மாட்டார்கள் என்று திருமூலர் இங்கே கூறுகின்றார்.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்

கண்காணி இல்லா இடம் இல்லை காணுங்கால்

கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.

வஞ்சனை நிறைந்த நெஞ்சர்க்கு இறைவன் அரியவன் என்று அப்பர் பிரான் கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.07.1)குறிப்பிடுகின்றார் கரவு=கள்ளம், வஞ்சனை. இறைவனுக்கு உரிய நமது மனம், மொழி மெய்களை வேறு பொருட்களுக்கு உரித்தாக்குதல் வஞ்சனையான செயலாக அப்பர் பெருமானால் கருதப் படுகின்றது. அவ்வாறு இருப்பவர்களின் நெஞ்சத்தை வலிமையான நெஞ்சம் (கல் நெஞ்சம்) என்று இங்கே அப்பர் பெருமான் சாடுகின்றார்..

கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானைக் கரவார் பால்

விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை

அரவாடச் சடை தாழ அங்கையினில் அனலேந்தி

இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

எனவே தான் வஞ்சனை அற்ற மனத்தவர்களாக, பொய்கள் கெட நின்று நாம் பெருமானை தொழவேண்டும் என்று முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.93.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஐயன்=தலைவன்; வையம்=உலகம்; பொய்கள்=வஞ்சனையான சிந்தனைகள்; இறைவனின் சன்னதி முன்னர் பொய்கள் கெட நின்று வழிபட வேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஐயன் முதுகுன்றைப்

பொய்கள் கெட நின்று

கைகள் கூப்புவீர்

வையம் உமதாமே

ஏன் அவ்வாறு பொய்கள் கெட நின்று வழிபடவேண்டும் என்பதற்கு அப்பர் பிரான் விடை அளிக்கும் பாடல் (6.56.5) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.வஞ்சனை எண்ணங்கள் உடைய நெஞ்சினில் புகுவதை இறைவன் தவிர்ப்பான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். எனவே இறைவன் நமது மனதினில் புகவேண்டும் என்று நாம் விரும்பினால் பொய்கள் கெட நாம் அவனை வழிபடவேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது

மை சேர்ந்த கண்ட மிடற்றாய் போற்றி மாலுக்கு ஓராழி ஈந்தாய் போற்றி

பொய்ச் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி

மெய் சாரப் பால் வெண்ணீறாடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி

கை சேர் அனல் ஏந்தியாடீ போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

இந்த பாடலில் கள்வர் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தோடுடைய செவியன் என்று தனது முதல் பதிகத்தைத் தொடங்கிய அவர்,அந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் தனது உள்ளங்கவர் கள்வன் என்று பெருமானை அழைத்து மகிழ்கின்றார். பெருமானை செல்லமாக, கள்வர் என்று குறிப்பிடும் தேவார ஆசிரியர்கள் அதற்கான காரணத்தையும் அந்தந்த பாடல்களில் குறிப்பிட்டு மகிழ்கின்றனர். பெருமானின் வெளித் தோற்றம் நமக்கு உணர்த்தாத செய்தியை குறிப்பிட்டு அந்த செய்கைகளின் பின்னணியை நமக்கு அறிவிக்கும் முகமாக கள்வன் என்று அழைக்கும் சில பாடல்களை நாம் இங்கே காண்போம்.

திருவலிதாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.3.2.) கள்வன் என்று திருஞான சம்பந்தர் பெருமானை அழைக்கின்றார். தனது திறமை,ஆற்றல் முதலியவற்றை மறைத்துக் கொண்டு பிச்சைப் பெருமானாக கோலம் கொண்டு உலகெங்கும் பலியேற்றுத் திரியும் பெருமானை கள்வன் என்று அழைப்பது பொருத்தம் தானே. இதே தன்மையை குறிப்பிட்டு படிறன் என்றும் பல தேவாரப் பாடல்கள் விளக்கம் அளிக்கின்றன.

படை இலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கல்னேந்திக்

கடை இலங்கு மனையில் பலி கொண்டுணும் கள்வன் உறை கோயில்

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலிதாயம்

அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர் தானே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.40.6) திருஞானசம்பந்தர் பெருமானை கள்வன் என்று அழைக்கின்றார். அளை=புற்று;களை தலை=களையப்பட்ட பிரமனின் தலை; அலர்=தாமரை மலர்; மிசை=இடம்; மலர் மிசை அந்தணன்=திருமாலின் கொப்பூழ்ப் பூவில் தோன்றிய பிரமன்.தளை=மொட்டு; தளையவிழ் மாமலர்=மொட்டாக இருந்து அப்போது விரிந்து மலர்ந்த மலர்கள்; மிகவும் உயர்ந்த பிரம கபாலத்தை, உண்கலனாக ஏற்றுக் கொண்டு திரியும் பரமனை, மண்டையோடு ஏற்றுத் திரிபவனாக நாம் கருதும் வண்ணம் அவன் காட்சி தருவது பெருமானின் கள்ளத்தினால் தானே. பெருமான் ஏந்தியிருக்கும் பிரமகபாலம், ஒரு காலத்தில் ஐந்து தலைகளை உடையவனாக இருந்த பிரமனின் அகந்தையை அழிக்கும் பொருட்டு, பிரமன் பொய் பேசியதற்கு தண்டனையாக, கிள்ளப் பட்ட தலையாகும். தனது தலை இவ்வாறு கிள்ளப்பட்ட பின்னர், அந்த தலையினை பெருமான் பலியேற்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரமனே வேண்டியதாக கந்த புராணம் உணர்த்துகின்றது. எனவே தான் பிரமனின் தலையினை, பரமன் பலியேற்பதற்காக எடுத்துச் செல்கின்றார். எனவே இந்த தலையினை, இறந்து பட்ட தலை என்று சொல்வது தவறு. ஒரு காலத்தில் பிரமனின் உடலில் பொருந்தியிருந்த தலை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். அன்றேல் கிள்ளப் பட்டதால் உயிரோட்டம் இழந்த தலை என்று வேண்டுமானால் கூறலாம்.

அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சிக்

களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா

வளை ஒலி முன் கை மடந்தையொர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்க்

தளை அவிழ் மாமலர் தூவித் தலைவன தாள் இணை சார்வோம்

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் கங்கையை வாழவைத்த கள்வன் என்று கூறுகின்றார். பெருமானின் செய்கை உண்மையில் கங்கையை மறைத்து வைத்தது போன்று தோன்றினாலும், கங்கை நதிக்கு உயர்வினை அளித்து வாழவைத்ததால், கங்கையை வாழ வைத்த கள்வன் என்று நயமாக கூறுகின்றார். இவ்வாறு பெருமான் கங்கை நதியைத் தாங்காது இருந்தால்,கங்கை நதி பூமியையும் புரட்டிக் கொண்டு பாதாளத்தில் சேர்த்து தானும் பாதாளத்தில் கலந்திருக்கும். மேலும் தன்னில் நீராடுவோரின் பாவங்களைக் களைந்து புண்ணிய நதி என்ற உயர்வினை பின்னாளில் தான் அடைந்ததையும் பெற்றிராது. இவ்வாறு இன்றும் பாய்ந்து கொண்டிருக்கும் நிலைக்கும், புண்ணிய நதி என்று பலராலும் போற்றப்படுவதற்கு காரணம், பண்டைய நாளில் பெருமான் தனது சடையினில் கங்கை நதியை ஏற்றுக்கொண்டது தானே.

மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவு வார் சடை மேல்

கங்கை அங்கே வாழ வைத்த கள்வன் இருந்த இடம்

பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்

பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே

திருக்கானுர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.73.6) திருஞானசம்பந்தர் பெருமானை கள்வன் என்று அழைக்கினறார். முளி=காய்ந்த;தேறல்=தேன்; எளி வந்தார்=இரக்கத்திற்கு உரியவர்; இந்த பாடலில் இறைவனை, சம்பந்த நாயகி கள்வர் என்று குறிப்பிட்டு, தான் அறியாமலே தனது கற்பினையும் நாணத்தையும் திருடிக் கொண்ட பெருமான் என்பதை உணர்த்துகின்றாள். தெளிவு=உள்ளத் தெளிவு; மிகவும் எளியவராக, இரக்கத்திற்கு உரியவராக, பிச்சை கேட்டு வந்தவர் என்பதால் தான், அவரை தனது இல்லத்தின் உள்ளே வருமாறு அழைத்ததாக கூறும் சம்பந்த நாயகி, உள்ளே வந்தவர்,தான் நினைத்ததற்கு மாறாக தனது உள்ளத்தில் கலக்கத்தை உண்டாக்கிய பெருமான், தனது கற்பினையும் நாணத்தையும் நாணும் குணத்தையும் கொள்ளை கொண்டதாக கூறுகின்றாள். பொதுவாக அயல் ஆண்களைக் கண்டால் நாணம் கொள்வது உயர்ந்த குணமுடைய பெண்களின் பண்பு. எனவே அயலவரைப் பார்ப்பதையும் அவர்களை இல்லத்திற்குள்ளே அனுமதிப்பதும் அத்தகைய பெண்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் பிச்சை எடுக்கும் நோக்கத்துடன் வந்த பெருமான் என்று கருதியதாலும், முப்புரி நூல் தரித்து திருநீறு உடலெங்கும் பூசி வந்தமையாலும், பலியேற்க வந்தவர் பால் இரக்கம் கொண்டு இல்லத்தின் உள்ளே வர அனுமதி தந்தாள் போலும். மேலும் எந்த விதமான அணிகலனும் இன்றி காய்ந்த எலும்புகள் மட்டுமே ஆபரணமாக கொண்டுள்ள இறைவனை எளிய கோலத்தவ்ர் என்று தானே எவருக்கும் நினைக்கத் தோன்றும். இறைவனை, சேடர் என்று குணசீலராக காட்சியளித்த பெருமான் என்று இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் குறிப்பிட்டதன் பின்னணியில், இல்லத்தின் உள்ளே வர சம்பந்த நாயகி அனுமதி அளித்தாள் என்று கருதுவதும் பொருத்தமே. இல்லத்தின் உள்ளே அவர் வரும் வரை சம்பந்த நாயகியின் மனதினில் தெளிவு இருந்தது. ஆனால் பெருமான் உள்ளே வந்த பின்னர், அவரது அழகினில் பண்புகளில் தனது மனதினை பறிகொடுத்த நாயகிக்கு உள்ளத்தில் கலக்கம் ஏற்ப்பட்டதை, இங்கே தெளிவும் கொண்ட கள்வர் என்று குறிப்பிடுகின்றாள். மேலும் அயலவரை நேரில் நிமிர்ந்து பார்ப்பதை தவிர்ப்பதை தனது வழக்கமாக கொண்டிருந்த அவள், தனது மன கலக்கத்தின் காரணமாக, வந்தவரை உற்று பார்த்ததை நாணும் கொண்ட கள்வர் என்ற தொடரால் குறிப்பிடுகின்றாள். பண்டைய நாளில் முன்பின் அறிமுகம் ஆகாத ஆடவரை நினைத்தாலே பெண்கள், தங்களது கற்பு பறிபோயிற்று என்ற எண்ணம் கொண்டிருந்தனர். வந்தவரின் அழகு தந்த மயக்கத்தில், அவரை உள்ளே வரவழைத்தன் பயனாக, தனது நாணம் தெளிவு, கற்பு ஆகிய பண்புகளை இழந்த தலைவி, தனது தன்மை மாறியதற்கு வந்தவர் தான் காரணம் முடிவு செய்து,தனது அரிய பண்புகளைக் கவர்ந்த அவரை கள்வர் என்று பழிக்கின்றாள். கண்டவுடன் தான் காதல் கொள்ளும் அளவுக்கு பெருமான் மிகுந்த அழகுடன் நல்ல பண்புகளுடன் திகழ்ந்தார் என்பதை தலைவி உணர்த்துவதாக உள்ள பாடல். இந்த பாடலிலும் சித்தாந்த கருத்து உணர்த்தப் படுவதை நாம் அறியலாம்.மனதினில் தெளிவுடன் இருந்த ஆன்மா, இறைவன் தனது உள்ளத்தினில் புகுந்த பின்னர் தனது நிலையில் மாற்றம் அடைகின்றது. அந்நாள் வரை உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டிருந்த ஆசை, பற்று, குறைந்து பாசத்திலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்கின்றது. இந்த நிலையே தெளிவு கொண்டார் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. நிலையற்ற உலகத்துப் பொருட்கள் மீது பாசம் வைத்து வாழ்வதே மனித உயிரின் பண்பு என்பதால், அந்த நிலையினை தெளிவு என்று கேலியாக குறிப்பிட்டார் போலும். உயிர் தனது உண்மையான விருப்பமான வீடுபேற்றினை அடைவதற்கு தகுதி பெறவேண்டும் என்றால், இந்த நிலையிலிருந்து மாற வேண்டும் என்பதால், இறைவனே ஆன்மாவின் உள்ளத்தில் புகுந்து, உலகப் பொருட்கள் மீது பாசம் வைத்துள்ள உயிரின் தெளிவான நிலையை மாற்றி, பாசமற்ற நிலையினை உருவாக்குவார் என்ற கருத்து இங்கே கூறப்படுகின்றது.

முளி வெள்ளெலும்பு நீறு நூலும் மூழ்கு மார்பராய்

எளி வந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ளத்

தெளிவு நாணும் கொண்ட கள்வர் தேறலார் பூவில்

களி வண்டு யாழ் செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே

இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும் (1.73.10) திருஞானசம்பந்தர் பெருமானை கள்வர் என்று குறிப்பிடுகின்றார். ஏனம்=பன்றி; அக்கு=எலும்பு;வெள்ளர்=வெள்ளை உள்ளம் கொண்டவர்; எளிய பொருட்களை, எவரும் பொதுவாக தவிர்க்கும் பொருட்களை, அணிந்து கொண்டு வெள்ளை உள்ளம் கொண்டவர் போல் காட்சி அளித்த பெருமான் தனது கோலத்திற்கு பொருந்தாத வண்ணம் கள்வராக செயல்பட்டு தனது உள்ளத்தை கொள்ளை கொண்டதாக சம்பந்த நாயகி இங்கே குற்றம் சாட்டுகின்றாள். சேமம்=பாதுகாப்பு; கோணாகம்=வளைந்த பாம்பு; இந்த பதிகத்தின் பாடல்கள் அகத்துறை வகையைச் சார்ந்தவை. வெள்ளை உள்ளம் கொண்டவராக காட்சி அளித்த பெருமான், உண்மையில் கள்வராகத் திகழ்ந்து தனது மனதினை கொள்ளை கொண்டதாக சம்பந்த நாயகி கூறுகின்றாள்.

ஆமை அரவோடு ஏன வெண் கொம்பு அக்கு மாலை பூண்டு

ஆமோர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்

ஓம வேத நான்முகனும் கோணாகணையானும்

சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே

திருமஙகலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.10.3) திருஞானசம்பந்தர், யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார் என்று குறிப்பிடுகின்றார். கருங்கை=கருமையான கை, துதிக்கை; கள்வனார் என்று பெருமான் தனது மனதினை கொள்ளை கொண்ட தன்மையை தான் முதன்முதலாக அருளிய தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிட்டு மகிழ்ந்த திருஞானசம்பந்தர், இந்த பாடலிலும் அதனை குறிப்பிடுகின்றார். மருங்கு= அருகில்; வீடும்=அழியும்; இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில், பெருமானின் திருவடிகளே நாம் சரணடையத் தகுந்த புகலிடம் என்று கூறிய திருஞானசம்பந்தர், அந்த திருவடிகளை அன்போடு வணங்கினால் நமது வினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கரிய யானையும், யானையின் தோலும் அஞ்ஞானத்தை குறிக்கும் சின்னங்களாக கருதப் படுகின்றன. சோதி வடிவமாக, ஞானத்தின் வடிவமாக காணப்படும் பெருமான், யானையின் தோலினைப் போர்த்துக்கொண்டு மறைந்திருக்கும் தன்மை கள்வனின் செயல் போல் காணப்படுவதால் கள்வர் என்று கூறினார் போலும். மேலும் ஆணவத்தால் மூடப்பட்டுள்ள உயிரின் உள்ளே ஒளியாக இறைவன் விளங்கும் தன்மையை, கரிய யானையின் தோலைப் போர்த்துள்ள இறைவனின் உருவத்தை குறிப்பிட்டு திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதும் நெறியினை இங்கே அன்பு நெறி என்று சுருக்கமாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். யானைத்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அன்னை பார்வதி தேவி அச்சமடைந்ததை கண்ணுற்ற பெருமான், பார்வதி தேவிக்காக தனது உடல் மீது போர்த்திருந்த யானைத்தோலை அகற்றி, தேவியைப் பார்த்து தனது பற்கள் அனைத்தும் தெரியும் வண்ணம் சிரித்தவாறே, தனக்கு யானையின் தோலைப் போர்த்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாதவர் போன்று, அந்த போர்வையை பெருமான் விளையாட்டாக நீக்கினார் என்று அப்பர் பிரான் பயற்றூர் தலத்து பதிகத்தின் முதல் பாடலில் (4.32.1) குறிப்பிடுகின்றார். இவ்வாறு தேவியை பரிகாசம் செய்து விளையாடியதை, கள்ளத்தனம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. உண்மையில் ஆலகால விடத்தின் தன்மையை, கொடிய பாம்பின் தன்மையை, வெறி பிடித்த மான் கன்றின் தன்மையை, மிகுந்த ஆவேசத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியின் தன்மையை மாற்றியது போன்று, யானைத் தோலின் கேடு விளைவிக்கும் தன்மையையும் பெருமான் மாற்றினார் என்றே கொள்ள வேண்டும்.

கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்

மருங்கெலாம் மணமார் பொழில் சூழ் மங்கலக்குடி

அரும்பு சேர் மலர்க் கொன்றையினான் அடி அன்பொடு

விரும்பி ஏத்த வல்லார் வினையாயின வீடுமே

திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.111.9) திருஞானசம்பந்தர் பெருமானை, கானமது இடமா உறைகின்ற கள்வர் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அகத்துறை வகையைச் சார்ந்தவை. தாருகவனத்து இல்லத்தரசியாக தன்னை உருவகித்துக் கொண்டு பாடிய பாடல்கள். சுடுகாட்டினில் உறைவது போன்று வேடமிடும் கள்வர் என்று இந்த பாடலில் சொல்லபப்டுகின்றது. உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கும் ஊழி முடிவினில், எஞ்சி இருக்கும் இறைவன் உறைவது சுடுகாடாகத் தானே இருக்கமுடியும். எப்போதும் பெருமானது நினைவாகவே இருந்த நாயகிக்கு, தான் எவ்வாறெல்லாம் பெருமானுடன் கூடி மகிழ்ந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த நாயகிக்கு, கனவிலும் பெருமான் தோன்றியதும் இயல்பே. நாள் முழுவதும் ஏங்கிக் கற்பனை செய்து கொண்டிருந்த காட்சிகள் நமது கனவில் வருவதை நாம் உணர்வது இன்றும் நடைபெறுகின்றது அல்லவா. கனவு கலைந்து விழித்தெழும் தலைவிக்கு, கனவு நனவாக மாறவில்லையே என்ற ஏக்கமும், துயரமும் தோன்றவே, தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெருமானை கள்வர் என்று அழைக்கின்றார். கனவில் தான் அனுபவித்த காட்சிகள் நனவில் தோன்றவில்லை என்பதால் அவளது ஏக்கம் அதிகரிக்க அவள் துயரம் கொள்கின்றாள் என்று திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

ஏன மருப்பினொடு எழிலாமை இசையப் பூண்டு ஓர் ஏறேறி

கானமது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து

தேன் உண மலர்கள் உந்தி விம்மித் திகழ் பொற்சடை மேல் திகழ்கின்ற

வான நன் மதியினொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

திருநணா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.72.9) திருஞானசம்பந்தர் பெருமானை பலியேற்ற கள்வன் என்று குறிப்பிடுகின்றார். பல பாடல்களில் நால்வர் பெருமானர்கள், பெருமான் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக தங்களை உருவகித்து, தங்களது மனதினைக் கொள்ளை கொண்ட கள்வன் என்று கூறுவதையும் நாம் உணர்கின்றோம். தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன் என்று தனது முதல் பதிகத்தை தொடங்கிய திருஞானசம்பந்தருக்கு பெருமானை கள்வன் என்று அழைப்பது மிகவும் விருப்பம் போலும். தாருகவனம் சென்ற பெருமான், ஆடியும் பாடியும் பிச்சை ஏற்பவர் போன்று சென்றாலும், அவரது நோக்கம் தாருக வனத்து முனிவர்களின் சிந்தனையை மாற்றுவதே ஆகும். இவ்வாறு தனது நோக்கத்தை மறைத்துக் கொண்டு செயல்பட்ட பெருமானை கள்வர் என்று அழைக்கின்றார் போலும். மேலும் எப்போதும் பலி ஏற்பதற்கு தனது உண்கலனை ஏந்திச் செல்லும் பெருமான், பிச்சை எடுப்பது போன்று தோன்றினாலும், உண்மையில் தனது உணவுத் தேவைக்கு பிச்சை எடுப்பதில்லை அல்லவா. எனவே இந்த செயல் புரியும் பெருமானை கள்வர் என்று அழைப்பது பொருத்தம் தானே. .

மையார் மணி மிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகள் தோறும்

கையார் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடிப்

பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னிச்

செய்யார் எரியா உருவம் உற வணங்கும் திருநணாவே

கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (3.38.11) திருஞான சம்பந்தர் பெருமானை வீரட்ட்த்துறை கள்வன் என்று குறிப்பிடுகின்றார். கருத்தன்=அடியார்களின் மனதில் உள்ள எண்ணங்களாக உள்ளவன்; கள்வன் என்று பெருமானை ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களுடன் இறைவன் கலந்திருந்தாலும் தன்னை நினைக்கும் அடியார்கள் உணரும் வண்ணம் செய்யும் பெருமான், தன்னை நினைக்காத அடியார்கள் உணராத வண்ணம் ஒளிந்து கொள்கின்றான். இந்த தன்மையை மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில், ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியான் என்று குறிப்பிடுகின்றார். (ஓர்தல்=உணர்ந்து ஆழ்ந்து பார்த்தல்) ஒளிந்து கொள்வது கள்வனின் இயல்பு என்பதால் பெருமானை கள்வனென்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அருத்தன்=சொற்களின் பொருளாக உள்ளவன்; சொற்கள் என்றால் பொதுவாக வேதத்தில் உள்ள புனிதமான சொற்கள் என்று குறிப்பிடுவது மரபு. சொற்றுணை வேதியன் என்று தானே, அப்பர் பிரானும் தனது நமச்சிவாயப் பதிகத்தினை தொடங்குகின்றார். வேதங்கள் உணத்தும் சொற்களின் பொருளாக இருப்பவர் சிவபெருமான் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் உயர்ந்தார்கள் என்று இறந்த காலத்தை ஞானசம்பந்தர் குறிப்பிடுவதிலிருந்து, எத்துணை விரைவாக, பதிகம் ஓதிய மாத்திரத்திலே அவர்களது தன்மை உயர்ந்து விடுகின்றது என்பதை உணர்த்துகின்றார். இந்த பாடலில் அடியார் பால் கேட்டுகந்த வினாவுரை என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவதிலிருந்து, தலத்து அடியார்கள் சம்பந்தர் கேட்ட கேள்விகளுக்கு உரிய விடையினை அளித்தார்கள் என்பதையும், அந்த விடைகளைக் கேட்ட திருஞானசம்பந்தர் பெரிதும் மகிழ்ந்தார் என்பதும் நமக்கு புலனாகின்றது. இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் பெருமானின் பல செயல்களை குறிப்பிட்டு, அந்த செயல்கள் புரிந்ததன் காரணம் யாதோ என்று அடியார்களை பார்த்து வினவுகின்றார். இந்த பதிகத்தில் குறிப்பிடப்படும் அனைத்துச் செயல்களின் பின்னணியையும் விளைவையும், நாம் தெளிவாக புரிந்து கொண்டால் தான் அவற்றின் தன்மையை நாம் சரியாக புரிந்து கொள்ள்முடியும் என்பதால், அந்த செயல்களை புரிந்த பெருமானை கண்டியூர் வீரட்டத்து உறை கள்வன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பலி ஏற்றதும் (முதல் பாடல்), சந்திரன் மற்றும் கங்கை நதியினைத் தனது சடையில் பெருமான் ஏற்றுக்கொண்டது (பாடல் 2), உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொள்ளுதல்(பாடல் 3), மதயானையின் தோலை போர்த்துக் கொண்டது (பாடல் 4), கடல் நஞ்சை உண்டது (பாடல் 5), பிரம கபாலத்தில் பிச்சை ஏற்பது (பாடல் 6)நால்வர்க்கு அறம் உரைத்தது மற்றும் திரிபுரங்களை எரித்தது (பாடல் 7), ஆனஞ்சு ஆடுதல் மற்றும் இராவணனை கயிலை மலையின் கீழே அடர்த்தது (பாடல் 8), திருமாலும் நான்முகனும் காணாத வகையில் நீண்டுயர்ந்த தீப்பிழம்பாக நின்றது (பாடல் 9), அந்தகனை சூலத்தில் ஏந்தியது (பாடல் 10)ஆகியவை இந்த பதிகத்தில் குறிப்பிடப்படும் செயல்கள்.

கருத்தனைப் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்துறைக் கள்வனை

அருத்தனைத் திறம் அடியர் பால் மிகக் கேட்டு உகந்த வினாவுரை

திருத்தமாம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்

ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரை செய்வார் உயர்ந்தார்களே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.44.6) வெண்டலையில் பலியேற்கும் கள்வன் என்ரு பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கொள்வனார் என்ற சொல்லினை பலி என்ற சொல்லுடன் இணைத்து பொருள் காண வேண்டும். உணவு உட்கொள்வதற்காக பிச்சை எடுப்பது போன்று பெருமான் ஊரூராக திரிந்தாலும், பெருமான் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை, தான் திரியும் நோக்கத்தை மறைத்துக் கொண்டு உணவுப்பிச்சை எடுப்பது போன்று தோற்றம் தரும் பெருமானை கள்வனார் என்று அழைக்கின்றார். அவரது நோக்கத்தின் உயர்ந்த தன்மை குறித்து அவருக்கு மதிப்பு கொடுத்து மரியாதையாக கள்வனார் என்று அழைப்பதையும் நாம் உணரலாம்.

துள்ளு மான்மறி அங்கையில் ஏந்தி ஊர்

கொள்வனார் இடு வெண் தலையில் பலி

கள்வனார் உறையும் கழிப்பாலையை

உள்ளுவார் வினை ஆயின ஓயுமே

பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.1) திருஞானசம்பந்தர் அழகினை கவர்ந்த கள்வர் என்று கூறுகின்றார்.விண்கொண்ட=ஆகாயத்தை இடமாகக்கொண்டு; தூமதி=களங்கம் உடையவனாக தக்கனின் சாபத்தைப் பெற்று அழியும் தருவாயில் இருந்த சந்திரன்,சாபம் தீர்க்கபெற்று தூய்மை உடையவனாக மாறிய தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது, பெருமானிடம் சரணம் அடைந்த சந்திரன் தனது களங்கம் நீக்கபெற்றது போன்று, இந்த தலத்தினில் செய்யப்படும் வழிபாட்டின் மூலம், உயிர்களும் தங்களது குற்றங்கள் களையப் பெற்று மாசற்று விளங்கும் என்பது குறிப்பால் உணர்த்தப் படுகின்றது. எனவே உயிர்கள் இறைவன் பால் அன்பு கொண்டு, அவனை அடைவதற்கு தங்களால் இயன்ற செயல்களை செய்யவேண்டும் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தி. பேணார்=பெருமையாக கருதாமல், இழிவாக கருதப்படும் செயல்; பிச்சை எடுப்பதை எவரும் பெருமையாக கருதுவதில்லை என்ற செய்தி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. சாயல்=தோற்றம்; கண் கொண்ட சாயல்=கண்ணைக் கவரும் அழகிய தோற்றம்;ஏர்=அழகு; பெருமான் தன்னுடைய அழகைக் கவர்ந்ததாக சம்பந்த நாயகி இந்த பாடலில் கூறுகின்றாள்; தனது தலைவனுடன் சேர முடியாத ஏக்கத்தினால் தலைவி, தனது உடல் மெலிந்து பொலிவிழந்து இருக்கும் நிலையை, தலைவியின் அழகை தலைவன் கவர்ந்ததாக சொல்வது இலக்கிய வழக்கு.தலைவனுடன் கூடி இருக்கும் தலைவியின் உடல் பொலிவடைந்து அழகுடன் மிளிரும் அல்லவா.

விண்கொண்ட தூமதி சூடி நீடு விரி புன்சடை தாழப்

பெண் கொண்ட மார்பில் வெண்ணீறு பூசிப் பேணார் பலி தேர்ந்து

கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கிடம் போலும்

பண் கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.108.6) திருஞானசம்பந்தர் பெருமானை கள்வர் என்று அழைக்கின்றார். வேட்டு=விரும்பி;அந்தணர்கள் வேள்விகளை விரும்பிச் செய்யும் தன்மை இங்கே சொல்லப் பட்டுள்ளது. விளி மூட்டு=இகழ்ச்சியாக பேசும், சிந்தை=மனம். முருடு=எளிதில் பிளக்க முடியாத கட்டை. இங்கே உடல் பருத்து காணப்படும் சமணரை குறிக்க பயன்படுத்தப் பட்டுள்ளது. முரட்டு சிந்தனைகளை உடைய சமணர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே; ஓட்டி=விரட்டி அடிக்க; காட்டில் வாழும் யானை எளிதில் அடக்க முடியாததாகவும் போர்க்குணம் மிகுதியாக உடைத்ததாகவும் காணப்படும். தாருகாவனத்து முனிவர்கள் சிவபிரான் மேல் ஏவிய யானை முரட்டு யானையாக இருந்த காரணத்தால், அந்த யானை காட்டு யானை என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. யானையின் தோலை உரித்த நிகழ்ச்சியில் மறைந்திருந்த கள்ளத்தனம் இந்த விளக்கத்தின் வேறோர் இடத்தில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை யுரித்தவெங் கள்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே

கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.20.9) அப்பர் பிரான் பெருமானை கள்வன் என்று அழைக்கின்றார். வெள்ளை நீர்=பால் போன்ற வெண்ணீறு; அடியவர்களின் உள்ளத்தில் பெருமான் நிறைந்து இருப்பதால், அவர்களின் உள்ளத்தில் தன்னைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இலாதவாறு செய்யும் பெருமானை அடியார்களின் உள்ளம் கவரும் கள்வன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு,திருஞானசம்பந்தர் அருளிய தோடுடைய என்று தொடங்கும் பதிகத்தை (1.1) நம்து நினைவுக்கு கொண்டுவருகின்றது. தோணிபுரத்து திருக்கோயில் சிகரத்தினை நோக்கி, அம்மையே அப்பா என்று அழுத தன்பால் கருணை கொண்டு, இடபத்தில் அம்மையுடன் எழுந்தருளி, தனக்கு ஞானப்பால் அளித்து அருட்செயலால் தனது உள்ளத்தைக் கவர்ந்த பெருமானை, என் உள்ளம் கவர் கள்வன் என்று பதிகத்தின் பத்து பாடல்களிலும் அழைத்து திருஞானசம்பந்தர் மகிழ்கின்றார்.

வெள்ளை நீறணி மேனியவர்க்கு எலாம்

உள்ளமாய பிரானார் உறைவிடம்

பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்

கள்வன் சேர் கடம்பூர்க் கரக்கோயிலே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.23.2) பெருமானை கள்வ்ர் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். இந்த பாடல் தாருகவனத்து மகளிர்களின் உள்ளங்களை, பிச்சைப் பெருமானாக சென்ற போது, பெருமான் கொள்ளை கொண்டதை குறிப்பிடும் பாடலாகும். பலி ஏற்கச் சென்ற பெருமான், பிச்சை இட வந்த மகளிரின் உள்ளத்தை கொள்ளை கொண்டதாகவும், பெருமானின் பேரில் தாங்கள் கொண்ட காதல் நிறைவேறாததால் ஏக்கம் அடைந்த பெண்கள் உடலிளைத்து வருந்தவே அவர்களது வளையல்கள் கழன்றன என்றும், அதனால் பெருமானை வளையல்கள் கவர்ந்த கள்வன் என்று அழைத்தும் மூவர் பெருமானர்கள் பாடிய பாடல்கள் பல உள்ளன. ஆன்மாவை பெண்ணாக உருவகித்து, பெருமான் பால் காதல் கொண்ட ஆன்மாவின் உள்ளத்தைத் திருடிய கள்வர் என்று விளக்குவதும் பொருத்தம். வெள்வளை=சங்கு வளை

வீதி வேல் நெடுங் கண்ணியர் வெள்வளை

நீதியே கொளற்பாலது நின்றியூர்

வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய்க்

காதில் வெண்குழை வைத்த எம் கள்வரே

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.17.4) கரியுரியர் வஞ்சக் கள்வர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.நிட்டுருவர்=கொடியவர்; தேசர்=ஒளியுடையவர்; திறம்=அருள் புரியும் தன்மை; எவருக்கும் எளிதில் அகப்படாமல் தன்னை மறைத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவர் என்பதால் பெருமானை வஞ்சக்கள்வர் என்று கூறுவதாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. நமக்கு ஒளிக்கும் சோரனைக் கண்டனம் என்று மணிவாசகர் திருவண்டப்பகுதி அகவலில் கூறுவதும் நினைவுக்கு வருகின்றது. யானையின் தோலை உரித்த செய்கையில் கள்ளத்தனம் இருக்கும் தன்மை இந்த பதிக விளக்கத்தில் வேறோர் பகுதியில் விவரமாக சொல்லப் பட்டுள்ளது.

தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திருவாரூர் என்றும் உள்ளார்

வாச மலரின் கண் மான்தோல் போர்ப்பர் மருவும் கரியுரியர் வஞ்சக் கள்வர்

நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுருவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும்

ஈசர் புனல் பொன்னித் தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம் கொண்டாரே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.62.4) அப்பர் பிரான், பெருமானை வஞ்சக் கள்வா என்று அழைக்கின்றார். தன்னை நினைப்பவர்களின் நெஞ்சினில் இறைவன் இருந்தாலும், அவன் இருப்பதை எவரும் உணரமுடியாத வண்ணம் மறைந்து இருப்பதால் அவனை வஞ்சக் கள்வன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். முனைந்தவர் என்ற சொல் எதுகை கருதி முனைத்தவர் என்று மாறியது. திரிபுரத்து அரக்கர்கள் இறைவனுடன் போர் செய்ய முனைந்ததை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கனைத்து வரும்=உரத்த குரலுடன் கனைக்கும்;

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்பால்

முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரியச் செற்றாய் முன் ஆனைத் தோல் போர்த்தமுதல்வா என்றும்

கனைத்து வரும் எருது ஏறும் காளகண்டா கயிலாய மலையா நின் கழலே சேர்ந்தேன்

அனைத்துலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.9) அப்பர் பிரான் பெருமானை கழற்போது தந்தளித்த கள்வர் என்று அழைக்கின்றார். எல்லா உயிர்களிலும் பெருமான் கலந்து உடன் இருந்தாலும், அவன் அவ்வாறு உடன் இருப்பதை நாம் உணராதவாறு மறைந்து நிற்கின்றான். எனவே தான் அவனை கள்வர் என்று அப்பர் பிரான கூறுகின்றார். மேலும் கருவுற்ற காலத்தே தன்னை இறைவன் ஆட்கொண்டதாக கூறும் அப்பர் பிரான், தன்னை சமண சமயம் செல்லாதவாறு இறைவன் தடுக்காமல் இருந்ததை, நினைத்து வருந்தி பெருமானை கள்வர் என்று கூறினார் போலும் என்றும் தோன்றுகின்றது.மைந்தர்=வலிமை உடையவர்; கூடிப் பிரியாத மைந்தர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இறைவன் தனது மெய்யடியார்களின் உள்ளத்தில் சேர்ந்து இருப்பது, அவர்கள் பக்குவம் அடைந்த பின்னர் என்பதால் அத்தகைய அடியார்களை விட்டு இறைவன் என்றும் பிரிவதில்லை. இந்த செய்தியே இந்த பாடலில் கூறப்படுகின்றது

கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர் போலும்

செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவராம் செல்வர் போலும்

மருவிப் பிரியாத மைந்தர் போலும் மலரடிகள் நாடி வணங்கலுற்ற

இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

திருவாசகம் திருச்சதகம் மெய்யுணர்தல் பதிகத்தின் ஐந்தாவது பாடலில், மணிவாசக அடிகளார் பெருமானை கள்வனே என்று அழைக்கின்றார்.ஆய்மலர்=ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்கள்; முட்டாது=தவறாமல்; வார் கழல்=நீண்ட திருப்பாதஙகள்; பரந்து=பல தலங்களும் சென்று; பெருமானை வழிபடுவோர் இரண்டு விதமாக இருப்பதை நாம் காண்கின்றோம். தாம் விரும்பியது கிடைக்க வெண்டும் என்ற நோக்கத்துடன், பலனை எதிர்பார்த்து வழிபடுவோர் ஒரு வகை. இத்தகைய பக்தி காமிய பக்தி என்று அழைக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பலனை எதிர்பாராமல், பெருமானை வழிபடுவோர் மற்றொரு வகை. இவரது பக்தி நிஷ்காமிய பக்தி என்று சொல்லப்படுகின்றது. பலன் எதிர்பார்த்து வழிபடுவோர், அந்த பலன் கிடைத்தவுடன், பெரும்பாலும் பெருமானை மறந்து விடுகின்றன்ர். பலன் கிடைக்கப்பெறாதார், பெருமானை வழிபட்டும் நமக்கு நாம் கோரிய பலன் கிடைக்கவில்லையே என்று சலிப்படைந்து, வழிபடுவதை நிறுத்தி விடுகின்றனர். வேண்டுகோள் பொதுவாக எவ்வாறு இருக்கின்றது என்பதை சற்று ஆராய்ந்தால், உலகியல் இன்பங்கள் கோரும் முகமாகவே பெரும்பாலோரின் வேண்டுகோள் இருக்கின்றது. அவ்வாறு வேண்டிப் பெறுகின்ற இன்பங்கள் நிலையற்றவை என்பதை நாம் அறிவோம். எனவே இந்த தன்மையிலிருந்து நாம் மாறவேண்டும். இதனை மிகவும் அழகாக அப்பர் பிரான், தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், அத்தகைய அடியார்களை கல்மனவீர் என்று அழைத்து, கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே என்று கேள்வி கேட்கின்றார்.அத்தகைய அடியார்களையே அன்பர் என்று இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அத்தகைய அடியார்களின் மனதினில் நில்லாமல் தன்னை இறைவன் மறைத்துக் கொள்கின்றான் என்று அடிகளார் கூறுவதாக, முனைவர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் திருவாசக சிந்தனைகள் என்ற் நூலில் குறிப்பிடுகின்றார். மிகவும் அருமையான விளக்கம். அத்தகைய அடியார்கள் போல் இல்லாமல், தான் நிரந்தரமாக இறைவனைப் புகழ்ந்து வழிபட வேண்டும் என்றும் அதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் இங்கே வேண்டுகின்றார். தன்னை மறைத்துக் கொள்ளும் செய்கை குறித்து, இறைவனை கள்வன் என்று அழைக்கின்றார்.

பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி

இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பருள்ளம்

கரந்து நில்லாக் கள்வனே நின்றன் வார்கழற்கு அன்பு எனக்கு

நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே

பொழிப்புரை:

மனதினில் உண்மையான அன்பின்றி உம்மை வழிபடுவதாக பொய்யாக நடிக்கும் மனிதர்களின் இயல்பை அறிந்து கொண்டாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களையும் மனதினில் நினைப்பவர் போன்று தோற்றம தரும் கள்வரே, தனது இடுப்பினில் கோவண ஆடை அணிந்து எளிமையாக காட்சி அளிப்பவரே, ஒளி வீசும் சிறந்த வாழைக்கனிகள் தேன் போன்று இனிக்கும் சாற்றினை சொரியும் திருவோத்தூர் தலத்தினை, பெருமானே, நீர் பெரிதும் விரும்புகின்றீர்,

பாடல் 4

தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை

ஆட்டீரே அடியார் வினை

ஓட்டீரே உமை ஏத்துதும் ஓத்தூர்

நாட்டீரே அருள் நல்குமே

விளக்கம்:

இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் சென்ற போது, ஆங்கிருந்த சமணர்கள் கொடிய பாம்பு ஒன்றினை அவர் மீது ஏவினார் என்றும் அப்போது ஒரு பாம்பாட்டி வடிவில் தோன்றிய பெருமான், அந்த பாம்பினை விரட்டி அடித்தார் என்றும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. பெரிய புராணத்தில் இந்த நிகழ்ச்சி குறிப்பிடப்படவில்லை. இதற்கான வேறு ஆதாரங்கள் ஏதும் எங்கும் கிடைக்கவில்லை. தோடு=செங்காந்தள் பூ; தோட்டீர்=செங்காந்தள் பூவினை அணிந்தவர்; ஐந்தலை நாகத்தை தனது இடுப்பினில் கட்டி விருப்பம் போன்று விளையாட்டாக அசைப்பது போன்று, அடியார்களின் வினைகளை மிகவும் எளிதாக விரட்டி ஓட்டுபவர் பெருமான் என்று கூறுகின்றார். துத்தி=புள்ளிகள்; தாருகவனத்து முனிவர்கள் அபிசார வேள்விகள் செய்து, பெருமான் மீது பல கொடிய பாம்புகளை ஏவி அவரை கொல்வதற்கு முயற்சி செய்தனர். பெருமான், அந்த பாம்புகளின் கொடிய தன்மையை மாற்றி, அந்த பாம்புகளை அணிகலன்களாக தனது உடலின் பல பாகங்களிலும் ஏற்றுக் கொள்கின்றார். இந்த நிகழ்ச்சியே இங்கே குறிப்பிடப் படுகின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. ஐந்தாவது பாடலில் காணப்படும் மழுவாட்படை பற்றிய குறிப்பு, ஆறாவது பாடலில் காணபப்டும் பிலியிட வந்த மகளிரின் தன்மை ஆகியவற்றின் பின்னணியில், இந்த பாடலும் தாருகவனத்து நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டது என்று கருதுவது மிகவும் பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை:

செங்காந்தள் பூவினை அணிந்து கொள்ளும் பெருமானே, புள்ளிகள் கொண்ட ஐந்து தலை நாகத்தை உமது விருப்பம் போன்று விளையாட்டாக அசைப்பது போல, மிகவும் எளிதாக அடியார்களின் வினைகளை துரத்தி அடிப்பவரே, திருவோத்தூர் நாட்டினில் எழுந்தருளியுள்ள பெருமானே, உம்மை நாங்கள் புகழ்ந்து போற்றுகின்றோம்; எமக்கு அருள் புரிவீராக.

பாடல் 5

குழையார் காதீர் கொடிமழு வாட்படை

உழையாள்வீர் திருவோத்தூர்

பிழையா வண்ணங்கள் பாடி நின்றாடுவார்

அழையாமே அருள் நல்குமே

விளக்கம்:

அடியார்களின் இடரைக் களைய வேண்டும் என்று பெருமானிடம் அடியார்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கும் திருஞானசம்பந்தர், பெருமான் அடியார்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடுகின்றார். அடியார்கள் அழைப்பதற்கு முன்னரே, பெருமான் அடியார்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று கோருகின்றார். எத்தகைய அடியார்களுக்கு பெருமான் அவ்விதமாக அருள் புரிய வேண்டும் என்பதையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.பாண்டவர்களுக்கு பல விதத்திலும் உதவி புரிந்தவனாக இருந்த கண்ணன் கூட, அத்தினாபுரத்து அவையில் திரௌபதியின் துகில் உரியப்பட்ட நேரத்தில்,திரௌபதி குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவனாக இருந்த தன்மையை நாம் அறிவோம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தனது நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருந்த பிரகலாதனின் உயிரை திருமால் காத்ததையும் நாம் அறிவோம். இறைவனின் திருநாமங்களை பக்தியுடன் உச்சரிப்பதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் இந்த நிகழ்ச்சிகள் மூலம் உணர்த்தப்படுகின்றன. கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தை பாடிய அப்பர் பிரான், அந்த பாடல் மூலம், தனது சூலை நோய் தீர்க்கப்படவேண்டும் என்று அந்த பதிகத்தின் வேண்டுகின்றார். அதன் பின்னர், சமணர்களின் சுழ்ச்சியால் பல விதமான கொடுமைகளுக்கு ஆளான போதிலும், அந்த தருணங்களில் அருளிய் பதிகங்களில், தன்னை காக்குமாறு இறைவனிடம் எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்பதை, அவர் அருளிய மாசில் வீணையும் (5.90), சுண்ணவெண் சந்தனச் சாந்தும் (4.2), சொற்றுணை வேதியன் (4.11)என்று தொடங்கும் பதிகங்களிலிருந்து நாம் உணரலாம். பிழையா வண்ணம் என்ற தொடருக்கு தவறாமல் என்று பொருள் கொண்டு, எத்தகைய துன்பத்தில் ஆழ்ந்திருந்தாலும், கவலை ஏதும் கொள்ளாமல், இறைவன் நமக்கு பக்க பலமாக இருக்கின்றார் என்ற உணர்வுடன், அவனது திருநாமங்களை உச்சரித்தவாறு நாம் இருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. பல்லவ மன்னன் விசாரணைக்கு அழைக்கின்றான் என்று அப்பர் பெருமானை, சேவகர்கள் அழைத்துச் சென்ற போதிலும், ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று அப்பர் பிரான் இசைந்து இருந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.நீற்றறையின் உள்ளே இருந்த போதும் ஈண்டு வரும் துயர் உளவோ ஈசனடியார்க்கு என்று மூண்ட மனம் நேர்நோக்கி முதல்வனையே அப்பர் பிரான் தொழுதிருந்தார் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். கல்லுடன் பிணைத்து கடலில் தூக்கி எறிவதற்காக அழைத்துச் சென்ற போதிலும், அப்பர் பிரான் மனம் கலங்காமல், எப்பரிசாயினுமாக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண்டமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்து துதிப்பாரர் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.

பெருமானின் புகழினை உணர்த்தும் நயமான பாடல்களை, பிழையேதும் இல்லாமல் பாடும் அடியார்களுக்கு இறைவன் அத்தகைய உதவி புரியவேண்டும் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த குறிப்பு மூலம், திருமுறைப் பாடல்களை பிழை ஏதும் இல்லாத வண்ணம், முறையான இசையுடன் பொருத்தி பாட வேண்டும் என்று கூறுகின்றார். பல பாடல்களில் தேவார பாடல்களை முறையாக பாடுவதால் நாம் அடையவிருக்கும் பலன்கள் குறிப்பிடப்படுகின்றன.உழை=பக்கம்; உழையாளுதல்=பக்கத்தில் வைத்திருத்தல்; மழுவாட் படையை ஏந்தி ஆள்பவர் என்று குறிப்பிடுகின்றார். மழுவாட்படை தாருகவனத்து முனிவர்களால், பெருமானை அழிக்கும் நோக்கத்துடன், பெருமான் மீது ஏவப்பட்டது. ஆனால் பெருமானோ, அந்த மழுவாட்படையை மிகவும் இலாவகமாக பிடித்து, செயலிழக்கச் செய்து, அதனை அடக்கி ஆட்கொண்டார். இந்த செயலை குறிப்பிடும் வண்ணம், மழுவாட்படை உழை ஆள்வீர் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

குழை அணிந்த காதினை உடைய பெருமானே, தாருகவனத்து முனிவர்களால் உம்மீது ஏவப்பட்ட கொடிய மழுவாட் படையை உமது கரத்தில் ஏந்தி, அதனை அடக்கி ஆண்டு செயலிழக்கச் செய்த பெருமானே, திருவோத்தூர் நகரினில் உறைபவரே, தவறாமல் எப்போதும் இடைவிடாது உமது புகழினை உணர்த்தும் பாடல்களை, பிழையேதுமின்றி பாடியும் ஆடியும் தொழும் அடியார்களுக்கு, அவர்கள் ஏதும் கோராமல் இருந்த போதிலும், அவர்களுக்கு அருள் புரிவீராக.

பாடல் 6

மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்

தக்கார் தம் மக்களீர் என்று

உட்காதார் உளரோ திருவோத்தூர்

நக்கீரே அருள் நல்குமே

விளக்கம்:

மிக்கார்=அன்பு மிக்கார்; நக்கீரே=மகிழ்ந்து இருப்பவர்; சிரிப்பினால் தமது மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் பெருமான். இந்த பாடல் தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு பலியேற்று பெருமான் சென்றபோது, அடுக்களையிலிருந்த மகளிர் தாங்கள் செய்து கொண்டிருந்த் வேலைகளை மறந்தவர்களாக, வெளியே வந்து பெருமானை பார்த்த பின்னர்,அவரது அழகினில் மயங்கி அவரைப் பின் தொடர்ந்தனர். தங்களது கூந்தல் அவிழ்ந்து புரள்வதையும் தங்களது உடை நழுவுவதையும் பொருட்படுத்தாதவர்களாக அவர்கள் பெருமானைப் பின்தொடர்ந்தனர் என்று கந்த புராணம் குறிப்பிடுகின்றது. தாங்கள் செய்வது இன்னதென்பதை புரிந்து கொள்ளவும் சக்தி அற்றவர்களாக அவர்கள் பண்டைய நாளில் பெருமானை பின்தொடர்ந்தது போன்று, பெருமான் பலியேற்க வந்தால், தங்களது இல்லத்து பெண்பிள்ளைகளும் மாறிவிடுவார்களொ என்று கவலை கொள்ளாதார் இருப்பரோ என்று பெருமானை பார்த்து கேள்வி கேட்பதாக அமைந்த பாடல். மக்கள் என்பது இங்கே பெண்மக்களை குறிக்கும். காண்போரின் மனதினைக் கவரும் அழகு படைத்தவர் பெருமான் என்பதை அனைவரும் உணர்கின்றனர் என்றும் அவ்வாறு உணர்ந்ததன் காரணமாகவே, அத்தகைய அழகினில் மயங்காத பெண்பிள்ளை எவரும் இருக்க முடியாது என்பதாக இந்த பாடல் உணர்த்துகின்றாது. தக்கார்=தகுந்தவர்; பெருமானின் அழகில் மயங்காமல், அவருக்கு பிச்சையிடுகின்ற ஆற்றல் படைத்தவர். உட்காதார்=எதுகை கருதி உள்காதார் என்பதன் திரிபு

பொழிப்புரை:

பெருமான் பால் வைத்துள்ள மிகுதியான அன்பின் காரணமாக, விருப்பத்துடன் அவருக்கு பிச்சை அளிக்கச் சென்ற பெண்பிள்ளைகளில், பெருமானின் அழகினில் மயங்கி தன்வசமிழந்து பெருமானைத் தொடர்ந்து செல்லாமல் இருக்கும் ஆற்றல் படைத்தவரும் உளரோ என்று கலக்கத்துடன் நினைத்து பார்க்காத தாய் தந்தையர் எவரேனும் உள்ளாரோ, திருவோத்தூர் தலத்தினில் உறைகின்ற பெருமானே, மயக்கும் சிரிப்புடன் விளங்கும் பெருமானே, எமக்கு அருள் புரிந்து சொல்வீராக.

பாடல் 7

தாதார் கொங்கை தயங்கு முடியுடை

நாதா என்று நலம் புகழ்ந்து

ஓதாதார் உளரோ திருவோத்தூர்

ஆதீரே அருள் நல்குமே

விளக்கம்:

தாது=மகரந்தப்பொடி; தயங்கு=பொருந்திய: ஆதீர்=முழுமுதற்பொருளாக உள்ளவர்; ஏத்தாதார் இல்லை என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட கருத்தே, இந்த பாடலிலும் பெருமானின் சிறப்பினை புகழாத மாந்தர்கள் இல்லை என்று சொல்லப் படுகின்றது.

பொழிப்புரை:

மகரந்த பொருந்திய கொன்றை மலர்கள் தங்கும் திருமுடியை உடைய தலைவரே என்று உமது பல விதமான சிறப்புகளை உணர்த்திப் புகழ்ந்து, பெருமானே உமது திருநாமங்களை ஓதாத மக்களும் உளரோ, எவரும் இல்லை. திருவோத்தூர் தலத்தினில் முழுமுதற் கடவுளாக பொருந்தி உறையும் பெருமானே,எமக்கு அருள் புரிவீராக.

பாடல் 8

என்றான் இம்மலை என்ற அரக்கனை

வென்றார் போலும் விரலினால்

ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்

என்றார் மேல்வினை ஏகுமே

விளக்கம்:

என்றான் இம்மலை என்று அரக்கன் இராவணன் ஆணவத்துடன் பேசிய சொற்களை, கயிலாய மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்னம் பேசிய சொற்களை, இந்த பாடலில் திருஞானசம்பந்தர் நினைவூட்டுகின்றார். தான் செல்லும் வழியில் குறுக்கே நின்ற கயிலாய மலை என்று அரக்கன் இராவணன் கருதிய போது, தேர்ப்பாகன் இந்த மலையின் புனிதத்தையும், மலையின் மீது சிவபெருமான் இருப்பதையும் கருத்தில் கொண்டு,வீரமொழிகள் ஏதும் பேசாமல் அகன்று செல்லுமாறு அறிவுரை கூறியபோது, அதனை ஏற்றுக்கொள்ளாமல், அரக்கன், மிகுந்த ஏளனத்துடன் சிவபெருமானும் உளரோ இந்த மலையின் மீது என்று பேசியதாக தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு இராவணன் பேசியதைத் தான், இந்த பாடலில் என்றான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒன்றார்=பகைவர்கள்; தங்களது அளவு கடந்த வலிமையின் காரணமாக தேவர்கள் மற்றும் மனிதர்களுடன் நட்பாக பழகி ஒன்றியிராமல், பகைவர்களாகத் திகழ்ந்த தன்மை உணர்த்தப்படுகின்றது. மேல்வினை=இனியும் எடுக்கவிருக்கும் பிறவிக்கு ஒதுக்கப்பட்ட வினைகள்; இந்த வினைகள் விலக்கப்படுவதால், அந்த உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடையும்.

பொழிப்புரை:

இந்த கயிலாய மலை அத்துணை புனிதமானதோ, இதன் மீது சிவபெருமானும் உறைகின்றாரோ என்று ஏளனமாக பேசி, தனது வழியில் குறுக்கிட்டது என்று தான் கருதிய கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைப்பதற்கு முயற்சி செய்த அரக்கன் இராவணனை, தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி, மலையின் கீழே அழுத்தி அவனது வலிமையை அடக்கி வென்றவர் சிவபெருமான். அனைவர்க்கும் பகைவர்களாக விளங்கி பலரையும் துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்த சிவபெருமான் உறைகின்ற தலம் திருவோத்தூர் என்று குறிப்பிட்டு வழிபடும் அடியார்களின் மேல்வினைகள் முற்றிலும் நீக்கப்பட்டு, அத்தகைய அடியார்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள்.

பாடல் 9

நன்றா நான்மறையானொடு மாலுமாய்ச்

சென்றார் போலும் திசையெலாம்

ஒன்றாய் ஒள்ளெரியாய் மிக ஓத்தூர்

நின்றீரே உமை நேடியே

விளக்கம்:

நேடுதல்=தேடுதல்; நன்றா நான்மறை=நன்மை பயக்கும் வேதங்கள்; நன்மை பயக்கும் வேதங்களை எப்போதும் ஓதுபவனாக இருந்தும், பெருமானை அணுகும் முறையினை தெரிந்து கொள்ளாமல் இருந்த பிரமன் என்று ஏளனமாக கூறுகின்றார். இறைவன் தங்களது மனதினில் இருப்பதை அறியாதவர்களாக பிரமனும் திருமாலும் பல இடங்களிலும் சென்று தேடினார்கள் என்பதை குறிப்பிட திசையெல்லாம் சென்றார் என்று கூறுகின்றார்.ஒள்ளெரி=ஒளி பொருந்திய நெருப்புத்தூண்; ஒன்றாய்=ஒப்பற்றதாய்;

பொழிப்புரை:

நன்மை பயக்கும் நான்மறைகளை எப்போதும் ஒதுபவனாக இருந்த போதிலும் நல்ல செயல்களை செய்யாமல் இருந்த பிரமனும், திருமாலும், தங்களது உள்ளத்தில் இறைவன் இருப்பதை உணர்ந்து அவனை நாடி அவனது திருவருள் துணையுடன், தங்களின் முன்னே எழுந்த ஒப்பற்றதும் மிகுந்த ஒளியுடன் திகழ்ந்ததும் ஆகிய தழற்தூணின் அடியையும் முடியையும் தேடாமல், பல இடங்களிலும் தேடி தங்களது முயற்சியில் தோல்வி அடைந்தனர். அவ்வாறு பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவராலும் தேடப்படும் நெடிய தழற்பிழம்பாக நின்ற நீர், திருவோத்தூர் தலத்தில் உறைகின்றீர்.

பாடல் 10

காரமண் கலிங்கத் துவராடையர்

தேரர் சொல்லவை தேறன்மின்

ஓரம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச்

சீரவன் கழல் சேர்மினே

விளக்கம்:

கார்=கரிய நிறம் உடைய; கலிங்க=கலிங்க நாட்டு; தேரர்=புத்தர்கள்; தேறன்மின்=நம்பாதீர்கள்; சீர்= சிறப்பு; கழல்=வீரக்கழல் அணிந்த திருப்பாதங்கள்;சமணர்கள் மற்றும் புத்தர்கள், அடியார்கள் சிவபெருமானை வணங்குவதை தவிர்க்கும் நோக்கத்துடன் செயல்படுவதால், அவர்களது உரைகளை புறக்கணிக்குமாறு ஆலோசனை சொல்லப் படுகின்றது. உலகத்தவர்களை பல விதமாகவும் வருத்திய திரிபுரத்து அரக்கர்களை அழித்து, உலகினுக்கு நலம் பயந்த செய்கை குறிப்பிடப்பட்டு, பெருமானை வழிபடுவதால் நாமும் நமது துயரங்களை நீக்கிக் கொள்ளலாம் என்ற உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

கரிய நிறம் உடைய சமணர்களும் துவர்ச்சாயம் ஏற்றப்ப்ட்ட கலிங்க நாட்டு ஆடைகளை அணியும் புத்தர்களும் கூறும் பொய்யான மொழிகளை பொருட்படுத்தாதீர். ஒரே அம்பினால் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்தவனும், சிறப்புகள் பல வாய்ந்தவனும்,திருவோத்தூர் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானின் வீரக்கழல் அணிந்த திருப்பாதங்களைச் சார்ந்து வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 11

குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்

அரும்பு கொன்றை அடிகளைப்

பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்

விரும்புவார் வினை வீடே

விளக்கம்:

குலை ஈனாமல் ஆண் பனைகளாக இருந்த ஆண் பனைகளின் வினைகள் தீர்க்கப்பட்டு, குலை ஈன்று நன்மை பயக்கும் பனைகளாக மாற்றிய பெருமான்,தேவாரப் பாடல்கள் பாடும் அடியர்களின் வினிகளும் பெருமானால் தீர்க்கப்படும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வீடே=முற்றிலும் அழிந்து நீங்குதல்;

பொழிப்புரை:

அந்நாள் வரையில் குலை ஈனாமல் ஆண்பனைகளாக இருந்துவந்த மரங்களை குலை ஈனும் பெண் பனைகளாக மாற்றிய திருவோத்தூர் தலத்து இறைவனை, புதியதாக மலர்ந்த கொன்றை மலர்களை சூட்டிக்கொள்ளும் தலைவனைப் புகழ்ந்து, பெருமை வாய்ந்ததும் புகலி என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி நகரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன் பாடிய சொல் மாலைகளை, மிகுந்த விருப்பத்துடன் முறையாக ஓதும் அடியார்களின் வினைகள் முற்றிலும் அழிந்து அந்த அடியார்களை விட்டு நீங்கிவிடும்.

பூத்தேர்ந்தாயன திருவோத்தூர் பழந்தக்கராகம் (PooTherndhayan Thiruvoththoor Pazhantakkaragam) is a phrase from Tamil literature or culture that seems to contain specific references. Let's break down each component to understand its meaning:

Breakdown of the Phrase:

பூத்தேர்ந்தாயன (PooTherndhayan): This could be translated as "one who is honored with flowers" or "one who is adorned with flowers." In Tamil, "பூ (Poo)" means "flower", and "தேர்ந்தாயன (Therndhayan)" means "one who has been honored" or "one who has been adorned."

திருவோத்தூர் (Thiruvoththoor): This refers to "Thiruvoththoor", which is a sacred place or temple town in Tamil Nadu. The prefix "திரு (Thiru)" denotes "sacred" or "holy."

பழந்தக்கரகம் (Pazhantakkaragam): This term seems to be specific to a location or a traditional reference. "பழந்தக்கரகம்" (Pazhantakkaragam) can be translated as "an ancient or revered place". It often denotes a place with historical or cultural significance.

Full Meaning:

"பூத்தேர்ந்தாயன திருவோத்தூர் பழந்தக்கரகம்" can be interpreted as "one who is honored with flowers at the ancient or revered Thiruvoththoor." This phrase seems to describe an individual or entity being venerated or celebrated in the sacred location of Thiruvoththoor, possibly highlighting their esteemed status or divine connection.

Context:

Religious and Cultural: In Tamil religious and cultural contexts, this phrase could be used to describe a figure, deity, or saint who is honored with flowers and revered at Thiruvoththoor. It reflects the significance of the location and the reverence afforded to the figure.

Literary Usage: In Tamil literature, particularly in devotional or historical works, this phrase might describe the veneration of a person or deity associated with a sacred place, emphasizing their esteemed status.

Historical Significance: Thiruvoththoor is known for its historical and cultural importance, and mentioning it in conjunction with "பூத்தேர்ந்தாயன" highlights the traditional respect and honor given to figures associated with this location.

Example in Context:

In a devotional hymn or historical text, "பூத்தேர்ந்தாயன திருவோத்தூர் பழந்தக்கரகம்" might be used to praise a deity or saint who is honored at the sacred site of Thiruvoththoor, emphasizing their divine status and the traditional reverence given to them.

Conclusion:

"பூத்தேர்ந்தாயன திருவோத்தூர் பழந்தக்கரகம்" describes a revered figure or deity honored with flowers at the ancient or sacred site of Thiruvoththoor. The phrase underscores the respect and veneration associated with this location and the figure, reflecting the cultural and religious significance of both.



Share



Was this helpful?