இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பூவார் மலர் கொண்டு

பூவார் மலர் கொண்டு

1.69 பூவார் மலர்கொண்டு திருவண்ணாமலை தக்கேசி

பின்னணி:

தனது ஆறாவது தல யாத்திரையில் தொண்டை நாடு மற்றும் நடுநாட்டில் உள்ள தலங்கள் சென்று பல பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர் அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அறையணிநல்லூர் தலம் வந்தடைந்தார். இந்த தலத்து இறைவனைப் பணிந்து பதிகம் பாடிய திருஞானசம்பந்தர்,திருக்கோயிலிலிருந்து வெளியே வந்த போது, ஆங்கிருந்த அன்பர்கள், அருகிலிருந்த திருவண்ணாமலையை சுட்டிக் காட்டினார்கள். அந்த மலையே பெருமானின் வடிவமாக தோன்றவும், மிகுந்த ஆர்வத்துடன் அந்த காட்சியை தனது கண்ணால் பருகுவார் போன்று, மலையை கைதொழுது உண்ணாமுலை உமையாளொடும் என்று தொடங்கும் பதிகம் பாடினார் என்று பெரிய புராணப் பாடல் எடுத்துரைக்கின்றது. பின்னர் திருவண்ணாமலை தலம் சென்றடைந்த திருஞானசம்பந்தர், ஆங்கே சில நாட்கள் தங்கியிருந்த போது, பூவார் மலர் கொண்டு என்று தொடங்கும் பதிகம் பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். நினைத்தாலே முக்தி தரும் தலமாக திருவண்ணாமலை கருதப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில், நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

பாடல் 1:

பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்

மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்

தூமாமழை நின்று அதிர வெருவித் தொறுவின் நிரையோடும்

ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

விளக்கம்:

இந்த பாடலில் மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்கள் மூவருக்கு பெருமான் அருள் செய்தமை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். சுதன்மன்,சுசீலன், சுபுத்தி என்ற மூன்று அரக்கர்கள் திரிபுரத்து நகரங்களில் வாழ்ந்து வந்தவர்கள். திருமாலும் நாரதரும் சேர்ந்து செய்து சூழ்ச்சியால். தங்களது மனம் பேதலித்து, திரிபுரத்து அரக்கர்கள் அனைவரும் வேத நெறியையும், சிவ நெறியையும் கைவிட்ட பின்னரும், சுதன்மன் முதலான மூவரும், சிவபிரானையே தொடந்து வழிபட்டு வந்தார்கள். அதனால் அவர்கள் மூவரின் மீது கருணை கொண்ட சிவபெருமான், மூன்று கோட்டைகள அழிந்த போதும் இவர்கள் மூவரும் அழியாமல் காப்பாற்றினார் என்று இலிங்க புராணம் குறிப்பிடுகின்றது. இவர்கள் மூவரையும் அழியாமல் காப்பாற்றிய கருணைச் செயல், மணிவாசகரின் திருவாசகம் திருவுந்தியார் பதிகத்திலும் குறிப்பிடப்படுகின்றது.

உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு

எய்ய வல்லானுக்கே உந்தீ பற

இளமுலை பங்கன் என்று உந்தீ பற

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடலிலும் (1.11.7) திருஞானசம்பந்தர், தன்னை வழிபட்ட திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் அழியாத வரங்கள் அளித்தான் என்று கூறுகின்றார். முதல் அடியில் உள்ள சொற்களை சிரத்தான் மலி கரத்தான் என்று மாற்றி பொருள் கொள்ளவேண்டும். பிரம கபாலம் பொருந்திய கரத்தினை உடையவன் என்று பொருள். படத்தான்=போர்வையாக போர்த்துக் கொண்டவன்; ஓவா=என்றும் அகலாமல் பெருமானுடன் இணைந்திருக்கும் தன்மை; தன்னடி பணி மூவர்கட்கு=தொடர்ந்து தன்னை வழிபட்டுக் கொண்டிருந்த மூன்று அரக்கர்கள்.

கரத்தான் மலி சிரத்தான் கரி உரித்தாயதொர் படத்தான்

புரத்தார் பொடிபடத் தன்னடி பணி மூவர்கட்கு ஓவா

வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி

விரைத் தாது பொன் மணி ஈன்று அணி வீழிம்மிழலையே

நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.84.3) திரிபுரத்தில் வாழ்ந்து வந்த தனது அடியார்களுக்கு சிவபெருமான் அருள் புரிந்தார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நாகைக் காரோணம் தலத்தில் ஆரவாரமாக தேர்த் திருவிழா நடைபெறுவதை குறிப்பிடும் திருஞானசம்பந்தர்,இவ்வாறு இடைவிடாது தொடர்ந்து நடத்தப்படும் அத்தகைய விழாக்களைத் தனது செல்வமாகக் கொண்டவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

பாரோர் தொழ விண்ணோர் பணியம் மதின்மூன்றும்

ஆரார் அழல் ஊட்டி அடியார்க்கு அருள் செய்தான்

தேரார் விழவு ஓவாச் செல்வன் திரை சூழ்ந்த

காரார் கடல் நாகைக் காரோணத்தானே

திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.09.03) திருஞானசம்பந்தர், திரிபுரத்து கோட்டைகள் மூன்றையும் எரிக்கும் முன்னரே, தனது அடியார்கள் மூவருக்கும் பெருமான் அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். உரம்=வலிமை; உம்பர்கள் என்ற சொல்லினை உரம் கெடுப்பவன் மற்றும் பரம் கெடுப்பவன் ஆகிய இரண்டு சொற்றொடர்களுக்கும் பொதுவாக கொள்ளவேண்டும். உம்பர்=தேவர்; பரம்=தெய்வத் தன்மை, மேலான தன்மை;பகலோன்=சூரியன்; தக்கன் செய்த வேள்வியில் பங்கேற்கச் சென்ற தேவர்கள், வேதநெறிக்கு மாறுபட்ட வேள்விக்கு துணையாக சென்றமையால், அவர்கள் தங்களது தெய்வத் தன்மையை இழந்தனர் என்று இங்கே சொல்லப் படுகின்றது. தக்கன் செய்த செயல் தவறு என்று தெரிந்த போதும், அவனிடம் இருந்த பயத்தினால் அவனைக் கண்டிக்க எவரும் தைரியம் இல்லாத நிலையில், சிவபெருமான், வேதநெறிக்கு மாறாக வேள்வி செய்து முடிக்க முயற்சி செய்த தக்கனையும், அந்த யாகத்தில் பங்கேற்ற தேவர்களையும் தண்டித்தார். தவறான காரியம் செய்து தண்டனை பெற்றதால், அந்நாள் வரை உயர்ந்தவர்களாக கருதப்பட்ட தேவர்கள், அந்த நிலையிலிருந்து, கீழே இறங்கியமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. முரண்=வேத நெறியிலிருந்து மாறுபட்ட நிலை.பெருமானுடன் பகைமை கொண்டு, அவனை இகழ்ச்சியாக பேசி, பெருமானை விலக்கிவைத்து வேள்வி செய்வதன் மூலம், பெருமானை அவமதிக்கத் திட்டம் தீட்டியவன் தக்கன். வேதநெறிக்கு மாறான இந்த செயலை செய்யவேண்டாம் என்று அத்ரி முதலான முனிவர்கள் சுட்டிக் கட்டியும் தனது திட்டத்தை கைவிடுவதற்கு தயாராக தக்கன் இல்லை. பெருமானிடம் பகைமை பாராட்டிய அவனுடன் நட்பு கொண்டு, அவனது யாகத்தில் பங்கேற்றதால் தேவர்கள் மீதும் பெருமான் கோபம் கொண்டார். தேவர்களாயினும், அவர்கள் பெருமானுடன் பகைமை கொண்டால், தண்டனை அடைவார்கள் என்பது இந்த நிகழ்ச்சி மூலம் உணர்த்தப் படுகின்றது. தக்கன் தனது மாமனாக, தனது மனைவியின் தந்தையாக இருந்த போதிலும், செய்த தவறுக்காக தக்கனும் தண்டனை பெறுகின்றான். இந்த குறிப்பு நமக்கு பழுவூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பாடல் (2.34.7) ஒன்றினை நினைவூட்டுகின்றது. தனது மாமனார் செய்த வேள்வியை அழித்தவன் பெருமான் என்று சம்பந்தர் கூறுகின்றார். மந்தணம்=இரகசியம்; சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமலும், தனது மகளாகிய தாட்சாயணிக்கும் தெரிவிக்காமல் நடத்த திட்டமிடப்பட்ட வேள்வி என்பதால் இரகசியமாக செய்யப்பட்ட வேள்வி என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தான் இருந்த இடத்திலே இருந்து கொண்டு அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த பெருமான், எங்கும் நடப்பதையும் நடக்கவிருப்பதையும் அறியும் ஆற்றல் படைத்த பெருமான், அறியாத இரகசியம் ஏதேனும் உண்டோ. அந்த வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றால், தனது மகள் என்றும் பாராமல், தக்கன் தாட்சாயணியை இழிவாக நடத்துவான் என்பதையும் முன்கூட்டியே அறிந்திருந்த காரணத்தால் அல்லவா, இறைவன் தனது மனைவி அங்கே செல்லவேண்டாம் என்று கூறுகின்றார். மாமடி=மாமனார், தக்கன்; சிந்த=அழியுமாறு; வேதநெறிகளுக்கு மாறாக செய்யும் வேள்வி இனிதாக முடிவடைந்தால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்ற காரணத்தினால் அந்த வேள்வி அழியும் வண்ணம் பெருமான் செயல்படுகின்றார்.சுவடு ஒற்று=அடையாளம் பட ஒற்றிக் கொள்ளுதல்;

உரம் கெடுப்பவன் உம்பர்கள் ஆயவர் தங்களைப்

பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன் தனை

முரண் கெடுப்பவன் முப்புரம் தீயெழச் செற்று முன்

வரம் கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே

நெல்லிக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.19.1) திருஞானசம்பந்தர், அறத்தால் உயிர் காவல் அமர்ந்தருளினார் என்று பெருமான்,திரிபுரத்து அரக்கர்கள் மூவரையும் காவல் செய்து மற்றவர் அனைவரும் எரிந்து அழியுமாறு பெருமான் செயல் புரிந்தார் என்று கூறுகின்றார். இந்த மூவரும் மூன்று வேறுவேறு கோட்டைகளில் வாழ்ந்து வந்தனர். ஒரு நகரத்தில் உள்ள அனைவரும் எரிந்து அழிந்த போதிலும், ஒருவரை மட்டும் அழியாமால் பெருமான் காத்தார் என்ற செய்தியிலிருந்து பெருமான், தனது அடியார்கள் பால் எத்துணை கருணை கொண்டவராக இருக்கின்றார் என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். அறத்தால்=தருமத்தை நிலை நாட்ட வேண்டி, தனது அடியார்களைக் காப்பது இறைவனின் கடமை என்ற அறம். உயிர்க்காவல்=உயிர்களை பாதுகாத்து, கோட்டை முற்றிலும் எரிந்து அழிந்த போதிலும் தனது அடியார்கள் மூவரும் எரியாமல் பாதுகாத்த திறமை; உயிர்க்காவல் என்ற தொடருக்கு பொதுவக உயிர்களை பாதுகாத்து காத்தல் தொழிலை புரியும் பெருமான் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். எனினும் திரிபுரத்து அரக்கர்களின் குறிப்பு பாடலின் அடுத்த அடியில் காணப்படுவதால், சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவரின் உயிரைக் காத்த மாண்பு உணர்த்தப்படுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. மாண்பு=பெருமை, எவராலும் அழிக்க முடியாத பெருமை; நிறத்தான் என்ற சொல்லினை தீ மற்றும் வெண்திங்கள் ஆகிய இரண்டு சொற்களுக்கும் பொதுவாக கருதி பொருள் கொள்ளவேண்டும். தீயின் நிறத்தன் மற்றும் வெண்திங்கள் நிறத்தான் என்று குறிப்பிட்டு, பொன் மலையில் வெள்ளிக் குன்றது போலிலங்கும் பெருமானின் தன்மை உணர்த்தப் படுகின்றாது.

அறத்தால் உயிர்க் காவல் அமர்ந்து அருளி

மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பழித்த

திறத்தால் தெரிவெய்திய தீ வெண் திங்கள்

நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

தனது சிரிப்பினால் மும்மதில்களும் வெந்து அழியுமாறு செய்த சிவபெருமான், தன்னை வணங்கிப் போற்றி வந்த திரிபுரத்தவர் மூவரும் மகிழுமாறு, அவர்கள் தன் பக்கத்தில் இருக்குமாறு அருள் செய்தான் என்ற தகவல் சம்பந்தர் அருளிய வேதிகுடி பதிகத்தின் (3.78) ஐந்தாவது பாடலில் காணப்படுகின்றது.உக்கு=பொடியாகி; அற=வீழ; கொக்கு பொழில்=மாமரச் சோலைகள்: வேதிகுடி தலத்தில் இருந்த மகளிர்களின் மேனி ஒளி, மாந்தளிர்களின் ஒளியினை விடவும் மிகுந்து இருந்ததாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழு மூவர் மகிழத்

தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார் இனிது தங்கு நகர் தான்

கொக்கரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலாம்

மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடம் போக நல்கு வேதிகுடியே

தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.81.6) திருஞானசம்பந்தர் மூவர்க்கு பெருமான் அருள் புரிந்த கருணைச் செய்கையை குறிப்பிடுகின்றார். பற்றலர்=வேத நெறியின் மீது சைவ நெறியின் மீது பற்று வைக்காத திரிபுரத்து அரக்கர்கள்;வெள்ளில்=பாடைகள்; இறந்தவர்களின் உடல் வைக்கப்படும் படுக்கை; முது கானம்=முதுகாடு, சுடுகாடு; பற்று=விருப்பம்; பாரிடம்=பூத கணங்கள்;துற்ற=நெருங்கி அடர்ந்த; கிளவி=வெளிப்படும் ஓசை; பூதங்கள் பாடும் பாடல், காதுக்கு இனிமையாக இருக்காது என்பதால் ஓசை என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தாயாக விளங்கும் பெருமான் என்று இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், தந்தையாகவும் பெருமான் அருள் புரிகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அன்பு காட்டி தனது மக்களை வளர்ப்பவள் தாய்; அறிவினை ஊட்டி தங்களது குழந்தைகளை உருவாக்குபவர் தந்தை; நம் பால் அன்பு வைத்து, நமது அறியாமையை நீக்கி ஞானம் உணர்த்துபவர் இறைவன் என்பதால், தாய் மற்றும் தந்தை ஆகிய இருவர் போலும் இறைவன் செயல்பட்டு உயிர்களுக்கு அருள் புரிவதை நாம் உணரலாம்.

பற்றலர் தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர் கண் மேலைக்

குற்றமது ஒழித்து அருளு கொள்கையினன் வெள்ளின் முது கானில்

பற்றவன் இசைக் கிளவி பாரிடமது ஏத்த நடமாடும்

துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரமாமே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.121.7) திருஞானசம்பந்தர் திரிபுரத்து அடியார்கள் மூவரையும் முற்றிய தவம் செய்தவர் என்று குறிப்பிடுகின்றார். எற்றுதல்= மோதுதல், எதிர்த்தல்; இடை கொள்வார்=துன்பம் செய்பவர் தேற்றினார்=அழித்தல் தொழிலைச் செய்யும் பகைவர்கள்;முற்றினார்=முற்றிய தவம் செய்தவர்கள்;

எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இருநிலம் வானுலகு எல்லை

தெற்றினார் தங்கள் காரணமாகச் செரு மலைந்து அடியிணை சேர்வான்

முற்றினார் வாழும் மும்மதில் வேவ மூவிலைச் சூலமும் மழுவும்

பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

முதலில் வேதநெறியை கடைப்பிடித்து திரிபுரத்து அரக்கர்கள் சிவபெருமானை தொழுது வாழ்ந்ததாகவும், அதனால் அவர்கள் தேவர்களுக்கு கொடுமை செய்தபோதிலும் அவர்களுடன் போர் செய்ய சிவபிரான் உடன்படாத நிலையும், திருமால் ஒரு வேதியர் உருவம் கொண்டு திரிபுரங்கள் சென்று அரக்கர்களின் மனதில் மயக்கத்தை தோற்றுவித்து அவர்களின் சிந்தனையைக் கெடுத்து அவர்களை வேதநெறியிலிருந்து வழுவி சிவ நிந்தனை செய்யும் அளவுக்கு அவர்களை கெடுத்ததுவும், பின்னர் சிவபிரான் அவர்களை அழித்த வரலாறும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்றில் உணர்த்தப்படும் திருமாலின் பங்கு, நம்மாழ்வாரால் திருவாய்மொழி பாசுரத்தில் (5.10.4) கூறப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில் சிவனும் திருமாலும் வேறு அல்லாமல் ஒன்றாக விளங்கினர் என்று நம்மாழ்வார் கூறுவதையும் காணலாம்.

கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்கவாறும் கலந்து அசுரரை

உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்

வெள்ள நீர்ச் சடையானும் நின்னுடை வேறு அலாமை விளங்க நின்றதும்

உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே

விடைவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பத்தாவது பாடலிலும் (3.126.10) இந்த செய்தி குறிப்பிடப் படுகின்றது. சிவநெறியை அடையாதார் புரங்கள் மூன்றும் வேவ மூவர்க்கு அருள் செய்த பெருமான் என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

உடை ஏதும் இலார் துவராடை உடுப்போர்

கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர்

அடையார் புரம் வேவ மூவர்க்கு அருள் செய்த

விடையார் கொடியான் அழகார் விடைவாயே

திருத்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.42.2) அப்பர் பிரான், திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் அருள் புரிந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். சவை=பயனற்றது, மனைவி, மக்கள் மற்றுள்ள உறவினர்கள் கூட்டம்; சலம்=சஞ்சலம், துன்பம்; ஐம்புலன்கள் தரும் சிற்றின்பத்தை பெரிதாக மதித்து வாழும் வாழ்க்கையினை முதல் பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் உடலின்பத்தை பெரிதாக கருதி குடும்பத்தை விரிவு படுத்திக் கொண்டு வாழும் வாழ்க்கையினை குறிப்பிடுகின்றார். அவைபுரம் என்ற சொல்லினை புரமவை என்று மாற்றி படிக்கவேண்டும். அருளிச் செய்த சுவை என்று குறிப்பிட்டு, திரிபுரத்து அடியார்கள் மூவரும் அடைந்த இன்பச்சுவையினை குறிப்பிடுகின்றார்.

சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற

இவை ஒரு பொருளுமல்ல இறைவனை ஏத்துமின்னோ

அவை புரம் மூன்றும் எய்து அடியவர்க்கு அருளிச் செய்த

சுவையினைத் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.58.3) அப்பர் பிரான், ம்ருவலார் புரங்கள் மூன்றையும் எரியில் மாட்டி அழித்த போதிலும், பெருமான் ஆங்கே வாழ்ந்து வந்த தனது அடியார்களுக்கு அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். கரவு=உள்ளதை மறைத்தல்; மருவலார்= பகைவர்; மாட்டிய=நெருப்பால் கொளுத்திய; பரவுதல்=வாழ்த்துதல்; அல்லும் பகலும் எப்போதும் நடனமாடியவராக இருப்பவர் சிவபெருமான். ஊழிக்காலத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருக்கும் நிலையிலும் விடாது பெருமான் நடனம் ஆடுவதை, நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அதே போன்று அப்பர் பிரானும் இந்த பாடலில் இரவு நின்று எரியதாடி என்று குறிப்பிடுகின்றார். கரவு=உள்ளதை மறைத்தல்;மருவலார்=பகைவர்; மாட்டிய=நெருப்பால் கொளுத்திய; பரவுதல்=வாழ்த்துதல்; அல்லும் பகலும் எப்போதும் நடனமாடியவராக இருப்பவர் சிவபெருமான்.ஊழிக்காலத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருக்கும் நிலையிலும் விடாது பெருமான் நடனம் ஆடுவதை, நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அதே போன்று அப்பர் பிரானும் இந்த பாடலில் இரவு நின்று எரியதாடி என்று குறிப்பிடுகின்றார்.பரவுவார்க்கு அருள் செய்தார் என்ற குறிப்பின் மூலம், தொடர்ந்து தன்னை தொழுது கொண்டிருந்த திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் பெருமான் அருள் புரிந்தார் என்று கூறுகின்றார்.

கரவிலா மனத்தராகிக் கைதொழுவார்கட்கு என்றும்

இரவு நின்று எரியதாடி இன்னருள் செய்யும் எந்தை

மருவலார் புரங்கள் மூன்று மாட்டிய வகையராகிப்

பரவுவார்க்கு அருள்கள் செய்து பருப்பதம் நோக்கினாரே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.9) திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த தலையான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.கோளரி=வெற்றி கொண்ட சிங்கம், நரசிங்கமாக திருமால் தோன்றியதை குறிப்பிடுகின்றார். நரசிம்மராக வந்த திருமால் என்று குறிப்பிட்டு அம்பின் வலிமையை அப்பர் பிரான் நயமாக உணர்த்துகின்றார். கலை=மான்; கொள்கையான்=செய்கையான், செயலைச் செய்தவன்; தத்துவம்=மேலான,உண்மையான பொருள்; திரிபுரத்து அசுரர்கள் புத்தனும் நாரதனும் கூறிய மயக்க மொழிகளால் கவரப்பட்டு வேத நெறியை கைவிட்டு, சிவ வழிபாட்டை நிறுத்தி, சிவ நிந்தனை செய்த போதிலும், அந்த நிலையிலும் மனம் மயங்காமல் சிவனை தொடர்ந்து ஆராதித்து வந்த மூவர்க்கு (சுதன்மன், சுசீலன்,சுநீதன்) அருள் புரிந்த தன்மை இந்த பாடலில் திரிபுரத்து ஓர் மூவர்க்கு செம்மை செய்த தலையான் என்று குறிக்கப்பட்டுள்ளது. திரிபுரத்தின் மேல் படையெடுத்து சென்ற போது, திருமால் அம்பின் கூறிய முனையாக நின்ற தன்மையும் இந்தப் பாடலில், கோளரியை கூர் அம்பா வரை மேல் கோத்த சிலையான் என்று கூறப் பட்டுள்ளது.

கொலை யானை உரி போர்த்த கொள்கையானைக் கோளரியைக் கூரம்பா வரை மேல் கோத்த

சிலையானைச் செம்மை தரு பொருளான் தன்னைத் திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த

தலையானைத் தத்துவங்கள் ஆனான் தன்னைத் தையலோர் பங்கினனை தன் கை ஏந்து

கலையானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

நாரையூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.74.8) திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அடியார்களுக்கு பெருமான் அருள் புரிந்ததை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இயமனுக்கு அந்தகன் என்ற பெயரும் உண்டு. தான் பறிக்கவேண்டிய உயிரின் தன்மையை, எந்த நிலையில் உள்ளார், எப்படிப்பட்டவர் என்பதை நோக்காமல், குருடனைப் போன்று உயிர் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் அந்தகன் என்று இயமன் அழைக்கப் படுகின்றான். அந்த இயமனுக்கும் இயமனாக செயல்பட்டு பெருமான் இயமனுக்கே முடிவைத் தேடித் தந்தமை, இங்கே அந்தகனுக்கு அந்தகன் என்ற தொடரால் குறிக்கப் படுகின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது

அரிபிரமர் தொழுது ஏதும் அத்தன் தன்னை அந்தகனுக்கு அந்தகனை அளக்கலாகா

எரிபுரியும் இலிங்க புராணத்துளானை எண்ணாகிப் பண்ணார் எழுத்துளானை

திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள் செய்தானைச் சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை

நரிவிரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.1) சுந்தரர், திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் பெருமான் அருள் புரிந்ததை குறிப்பிடுகின்றார். விடங்கர்=எவராலும் தோற்றுவிக்கப் படாமல் தானே தோன்றியவர்; அடங்கலார்=எவருக்கும் அடங்காது அனைவரையும் துன்புறுத்தி வந்த திரிபுரத்து அரக்கர்கள், பகைவர்கள்; திரிபுரத்து அரக்கர்கள் பால் கோபம் கொண்டு ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில் அவர்களது மூன்று கோட்டைகளையும் அழித்த போதிலும், பெருமான் தனது அடியார்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு செயலபட்ட விதம், தனது அடியார்கள் பால் அவர் கொண்டுள்ள அன்பின் தன்மையை நமக்கு உண்ர்த்துகின்றது. மடங்கலான்=ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களையும் தனது வயிற்றினில் அடக்கிக் கொள்ளும் பெருமான்; வேலை=கடலலைகள்

படங்கொள் நாகம் சென்னி சேர்த்திப் பாய்புலித் தோல் அரையில் வீக்கி

அடங்கலார் ஊர் எரியச் சீறி அன்று மூவர்க்கு அருள் புரிந்தீஎ

மடங்கலானைச் செற்று உகந்தீர் மனைகள் தோறும் தலை கையேந்தி

விடங்கராகித் திரிவதென்னே வேலை சூழ் வெண்காடனீரே

திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் அருள் புரிந்த செய்தி சுந்தரரின் திருப்புன்கூர் பதிகத்தின் ஒரு பாடலில் (7.55.8) சொல்லப்படுகின்றது. அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த நகரில், சுதன்மன், சுசீலன், சுபுத்தி எனப்படும் மூன்று அரக்கர்கள், தங்களது மன்னர்களாகிய வித்யுன்மாலி, தாருகாட்சன் மற்றும் கமலாட்சன் ஆகிய மூவர்களிடம் கொண்டிருந்த அச்சத்தால், அங்கே வாழ்ந்து வந்த ஏனையோர் சிவ வழிபாட்டினை நிறுத்தி விட்ட போதும், தொடர்ந்து சிவபிரானை வழிபாட்டு வந்தார்கள். இவர்கள் மூவரும் பெருமானிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக,திரிபுரங்கள் மூன்றும் அழிக்கப்பட்ட போதும், இவர்கள் மூவரும் இறவாது இருந்தார்கள். மேலும் சுதன்மன் சுசீலன் என்ற இருவரும் பெருமானின் வாயில் காப்பாளராகவும், சுபுத்தி பெருமானின் எதிரே மத்தளம் வாசிப்பராகவும் இருக்கும் தகுதியை அடைந்தார்கள். பெருமானிடம் அன்பு கொண்டு, அச்சம் நடுக்கம் ஏதுமின்றி, பெருமானை வழிபட்ட மூவர்கள் எய்திய பெருமை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இந்த மூன்று அடியார்களும் எப்போதும் பெருமானின் அருகில் இருக்கும் வாய்ப்பு பெற்றனர்.

மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயில் வாய்தல்

காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரி காடு அரங்காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ மணிமுழா முழக்க அருள் செய்த

தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.66.5) திரிபுரத்து அடியார்கள் மூவருக்கு அருள் செய்த தன்மையை சுந்தரர் குறிப்பிடுகின்றார். ஒக்க=ஒரு சேர; எப்போதும் வானில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் என்பதால், நொடிக்கும் குறைவான நேரமே இந்த கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டினில் இருக்கும்; அந்த சிறிய நேரத்தை பயன்படுத்தி, மூன்று கோட்டைகளையும் ஒரே சமயத்தில் பெருமான் எரித்த செயல்,ஒக்க என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. அம்பினை எய்தி தீ மூட்டிய செய்கை தூவ என்ற சொல் மூலம் சொல்லப் படுகின்றது. உன்னிய=தியானம் செய்த; பொன்னுலகு என்று திருக்கயிலாயத்தை குறிப்பிட்டு அவர்கள் மூவரும் உயர்ந்த கதியை அடைந்தமை சொல்லப்படுகின்றது. மற்ற கணங்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த பதவி பெற்றவர்களாக இருப்பதால், (வாயில் காப்பாளர் மற்றும் முழவு வாசிப்போர்) பொன்னுலகு ஆள என்று குறிப்பிட்டார் போலும்.அரை=இடுப்பு; அக்கு=எலும்பு மாலை;

ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம்

புக்கு மற்றவர் பொன்னுலகு ஆளப் புகழினால் அருள் ஏந்தமை அறிந்து

மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில்

அக்கணிந்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய மற்றொர் பதிகத்தின் பாடலில் (7.70.3) திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் செய்து அவர்களது உயிரை காத்த பெருமான் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், பெருமானே நீர் என்னை அஞ்சல் என்று சொல்லி அருள் புரியவேண்டும் என்றும் பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறெவரும் உறவு இல்லை என்றும் கூறுகின்றார். இந்த தலத்து அம்பிகையின் திருநாமாம் ஒப்பிலா முலையம்மை. அந்த திருநாமமே இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

ஒப்பிலா முலையாள் ஒரு பாகா உத்தமா மத்தமார்தரு சடையாய்

முப்புரஙகளை தீ வளைந்தாங்கே மூவருக்கு அருள் செய்ய வல்லானே

செப்ப ஆல் நிழல் கீழிருந்தருளும் செல்வனே திருவாவடுதுறையுள்

அப்பனே எனை அஞ்சல் என்றருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

தோணோக்கம் பதிகத்தில் மணிவாசகரும், திரிபுரத்தில் வாழ்ந்து வந்த அடியார்கள் மூவர் தீயினில் எரியாமல் பிழைத்து, பெருமானின் அருகே இருந்து பணிவிடை செய்யும் வாய்ப்பினை பெற்றார்கள் என்று கூறுகின்றார். இந்த நிகழ்ச்சி நடந்தது பண்டைய நாளில் என்பதை உணர்த்தும் பொருட்டு, இந்த நிகழ்ச்சி நடந்தேறிய பின்னர் எண்ணற்ற இந்திரர்களும் பிரமர்களும் திருமாலும் மாண்டனர் என்று கூறுகின்றார்

எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்துப்

கண்ணுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதற்பின்

எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்

மண்மிசை மால் பலர் மாண்டனர் காண் தோணோக்கம்

கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.13.7) கருவூர்த் தேவர், திரிபுரத்து அடியார்கள் மூவருக்கு பெருமான் அருளிய தன்மையை குறிப்பிடுகின்றார். நிசிசரர்=இரவில் நடமாடும் தன்மை உடைய இராக்கதர்கள், என்னை முன் ஈன்ற என்ற தொடர் மூலம் இறைவனே தனக்கு தாயும் தந்தையும் என்று கூறுகின்றார். மோதலைப்பட்ட=ஒன்றுடன் ஒன்று மோதும் தனமை உடைய கடலலைகள்; கடலில் தோன்றிய அமுதம், உருகி கடலுடன் ஒன்றாகி கலந்திருப்பது போன்று, இறைவன் தனக்கு காட்சி அளித்தால், தானும் இறைவனுடன் ஒன்றாகக் கலந்துவிடுவேன் என்று கருவூர்த்தேவர் கூறுகின்றார். திரிபுரத்து அடியார்கள் மூவரும் இறைவன் பால் வைத்த அன்பின் காரணமாக, அவர்களுக்கு கருணை புரிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

மோதலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழுமணித் திரள் அமுது ஆங்கே

தாய் தலைப்பட்டங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற

நீ தலைப்பட்டால் யானும் அவ்வவகையே நிசிசரர் இருவரோடு ஒருவர்

காதலிற் பட்ட கருணையாய் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே

பூவார் மலர்=அரும்புகளும் விரிந்து மலர்ந்த பூக்களும்; தூமாமழை=மழைத்துளிகளை தூவும் மேகங்கள்; அதிர=இடி முழக்கம் செய்ய; வெருவி=அச்சம் கொள்ளும்; தொறு=ஆடுகள்: நிரை= மந்தை; ஆமாம் பிணை=காட்டுப் பசுக்கள்; தன்னைத் தொழும் அடியார்களுக்கு அருள் புரியும் சிவபெருமானை,அவனது அடியார்கள் பூக்களைக் கொண்டு தொழுவதாகவும், தேவர்கள் அவனைப் புகழ்வதாகவும் இங்கே கூறுகின்றார். மழைக்கு, மலையின் அடிவாரத்தில் பதுங்கும் ஆட்டு மந்தைகள் மற்றும் பசுக்கூட்டங்கள் என்று அண்ணாமலையின் நீர்வளம், நிலவளம் இங்கே கூறப்படுகின்றது.

பொழிப்புரை:

அரும்புகளும் விரிந்து மலர்ந்த மலர்களும் கொண்டு நிலவுலகத்தில் உள்ள அடியார்கள் பெருமானைத் தொழுகின்றனர்; வானோர்கள் தோத்திரங்கள் சொல்லி இறைவனது புகழினை எடுத்துரைக்கின்றனர். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான், பண்டைய நாளில், திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்த போதிலும், அந்த கோட்டைகளில் வாழ்ந்து வந்த தனது அடியார்கள் மூவரும் அழியாமல் அவர்களை பாதுகாத்த பெருமான்,அண்ணாமலை தலத்தினில் உறைகின்றார். மழைத்துளிகள் பொழியும் மேகங்கள் ஒன்றோடொன்று மோதி செய்யும் இடிமுழக்கத்தின் ஓசை கேட்டு அச்சமடைந்த மந்தை ஆடுகளும் காட்டுப் பசுக்களின் கூட்டமும், ஒருங்கிணையும் அடிவாரத்தை உடையது திருவண்ணாமலை தலமாகும்..

பாடல் 2:

மஞ்ஞைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்

நஞ்சைக் கண்டத்து அடக்கும் அதுவும் நன்மைப் பொருள் போலும்

வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அதுவேறி

அஞ்சொற் கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே

விளக்கம்:

மஞ்சு=மேகம்; மஞ்சு என்ற சொல் எதுகை கருதி மஞ்ஞை என்று திரிந்தது. போழ்ந்த=கிழித்துக் கொண்டு ஊடே செல்லும் சந்திரன்: பெருமான்=பெருமகன் என்ற சொல்லின் திரிபு; பெருமைக்கு உரிய தலைமகன்; நஞ்சினை நன்மைப் பொருள் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் தனது கழுத்தினில் நஞ்சினை உட்கொண்டதால், ஆலகாலவிடம் தேவர்கள் உள்ளிட்டு அனைத்து உலகத்தவருக்கும் எந்த விதமான தீங்கினையும் இழைக்கவில்லை; வயிற்றின் உள்ளே செல்லாமல் பெருமானின் கழுத்தினில் தேங்கி இருந்தமையால், ஊழிக்காலத்தில் பெருமானின் வயிற்றில் ஒடுங்கும் உயிர்களுக்கும் எந்த கேட்டினையும் விளைவிக்கவில்லை. இவ்வாறு, பெருமானின் கழுத்தினில் அடக்கப்பட்ட ஆலகாலவிடம் எவருக்கும் எப்போதும் கேடு செய்யாமல் இருந்ததால், அது நன்மை பயக்கும் பொருளாக மாறியது என்று கூறுகின்றார். இதணம்=பரண்; மலைச் சாரலில் தினை பயிரிடுவது வழக்கம். அத்தகைய தினைப்புனங்களில் பரண் கட்டி அதனில் தங்கும் வேடுவப் பெண்கள், தினைக்கதிரை கொத்த வரும் கிளிகள் மற்ற பறவைகளை ஆயோ என்று குரல் கொடுத்து விரட்டும் வழக்கம் இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஆயோ= ஒலிக்குறிப்பு; வேடுவர்களின் தொழில் வேட்டையாடுவது தானே. அவர்கள் கூட்டமாக வேட்டையாடச் செல்கையில், தென்படும் விலங்குகளை பிடி, வெட்டு, கொல் என்று குரல் கொடுத்து ஊக்குவிப்பதை வெஞ்சொல் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

மேகத்தைக் கிழித்துக்கொண்டு வானில் உலவும் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், வானோர்களின் தலைவனாக விளங்குகின்றார். அவர் தனது கழுத்தினில் கொடிய ஆலகால விடத்தை தேக்கியதால், அந்த விடம் அனைவர்க்கும் கேடு எதனையும் விளைவிக்காமல் நன்மை பயக்கும் பொருளாக மாறிவிட்டது. இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான் அண்ணாமலையாராவார். வேட்டைத் தொழிலில் ஈடுபடுவதால் எப்போதும் கொடிய சொற்களைப் பேசும் வேடுவர்களின் இல்லத்து பெண்கள், தினைப்புனங்களின் பரண்களில் அமர்ந்த வண்ணம், அழகிய சொற்களைப் பேசும் கிளிகளை ஆயோ என்று குரல் கொடுத்து விரட்டும் காட்சிகள் நிறைந்த மலை அண்ணாமலையாகும்.

பாடல் 3:

ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல்

ஊனத் திரளை நீக்கும் அதுவும் உண்மைப் பொருள் போலும்

ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் அரவின் கண்

ஆனைத் திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

விளக்கம்:

திரள்=திரண்ட வடிவு, கூட்டம்; நல்ல அடியார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வஞ்சனை ஏதுமின்றி ஒன்றிய மனத்துடன் தொழும் அடியார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஊனம்= குற்றம்: ஊனத்திரள்=குற்றங்களின் குவியல். உயிர்களின் குற்றமாக கருதப்படுவது, உயிருடன் பிணைந்துள்ள மலங்களும் மலங்களின் சேர்க்கையால் எண்ணற்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளும் தாம். அந்த வினைகளை நுகர்ந்து கழிப்பதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து தகுந்த உடல்களுடன் இணைக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே உயிர்களின் ஊனம், பிறவிக்கடலில் உயிரினை ஆழ்த்துகின்றது. மெய்யடியார்கள், இறைவனின் அருளால் தற்போதம் அற்றவர்களாக பக்குவம் அடைந்தவர்களாக இருப்பதால், அவர்களின் வினைகள் இறைவனால் கழிக்கப்படுகின்றன. மேலும் அவர்கள் இறைவனின் உதவியுடன் மூல மலமாகிய ஆணவ மலத்தினை அடக்கி செயலறச் செய்யும் திறமை உடையவர்களாக மாறுகின்றனர். மலமற்ற தன்மையால் அவர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைகின்றனர். இந்த தன்மை இறைவனின் அருளால் நடைபெறுவதால், ஊனத்திரளை நீக்கும் என்று குறிப்பிடுகின்றார். இந்த செய்தியே வேதங்கள் ஆகமங்கள் புராணங்களின் மற்றும் அருளாளர்களின் கீதங்கள் உணர்த்தும் முடிவான பொருளாக இருக்கும் நிலை அதுவும் உண்மைப் பொருள் போலும் என்ற தொடர் குறிப்பிடுகின்றது.பெருமான் நீக்கும் என்று குறிப்பிடுவதை தொடர்ந்து அதுவும் உண்மைப் பொருள் போலும் என்று வருவதால், அது என்பது இறைவனை குறிப்பதாக பொருள் கொண்டு, பெருமான் ஒருவனே என்றும் நிலையாக இருக்கும் உண்மைப் பொருள் என்பதை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்று கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

ஞானத்தின் திரண்ட வடிவமாக இருக்கின்ற பெருமான், பக்குவப்பட்ட மெய்யடியார்களின் மேல் படர்ந்துள்ள ஊனத்தை நீக்கி அவர்களை பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுவிக்கின்றான். பெருமானின் இந்த கருணைச் செயலே உயிர்களுக்கு செய்யப்படும் உணமையான உதவி என்று வேதங்கள் புராணங்கள் உணர்த்துகின்றன. உண்மையான மெய்ப்பொருளாக இருக்கும் பெருமான் உறைவது அண்ணாமலையில். பன்றிக் கூட்டங்களோடு, மான் இனங்களும், கரடிகளும் கலந்து ஒருங்கே இறங்கிவரும் மலைசாரலில் யானைக் கூட்டமும் சேர்ந்து வரும் அண்ணாமலை அடிச் சாரலில் உறைபவர் அண்ணாமலையார் ஆவார்.

பாடல் 4:

இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்

தழைத்த சடையார் விடை ஒன்றேறித் தரியார் புரம் எய்தார்

பிழைத்த பிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்

அழைத்துத் திரிந்தங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே

விளக்கம்:

இழைத்த=நூலிழை போன்ற; தழைத்த=தாழ்ந்து தொங்கும்; தரியார்=பகைவர்; பிழைத்த=தவறிய; பிடி=பெண் யானை; விடை=திருமால் விடையாக மாறி தாங்கிய தன்மை குறிப்பிடப்படுகின்றது. திரிபுரத்தவர்களுடன் பெருமான் செய்த போர் இங்கே குறிப்பிடப்படுவதால், அந்த சமயத்தில், பெருமான் ஏறிச்ச்செல்ல இருந்த தேரின் தட்டு முறிந்ததால், திருமால் விடையாக மாறி பெருமானுக்கு வாகனமாக இருந்தார். தனது துணையைத் தேடி அலைந்து திரிந்த யானை, தளர்வடைந்தது என்ற குறிப்பின் மூலம் மலை பெரியது என்பதை உணர்த்துகின்றார். மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையின் நீளம் பதினான்கு கி.மீ. என்பதிலிருந்து நாம், மலையின் பரிமாணத்தை ஊகித்துக் கொள்ளலாம்.

பொழிப்புரை:

நூலிழை போன்று மெல்லிய இடையினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்ட பெருமான், வானவர்களின் தலைவராக விளங்குகின்றார். தாழ்ந்து தொங்கும் சடையினை உடைய அவர், இடபமாக மாறிய திருமாலைத் தனது வாகனமாகக் கொண்டவராக, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினை எய்து எரித்து அழித்தார். இத்தகைய பெருமை வாய்ந்த அண்ணாமலையாரின் இருப்பிடம், தன்னை விட்டுப் பிரிந்த பெண்யானையைத் தேடி பல இடங்களிலும் அலைந்து தேடிக் களைத்து அலுப்புடன் ஆண்யானை மலைசாரலில் படுத்து உறங்கும் வண்ணம், பெரிய மலையாகத் திகழும் அண்ணாமலையாகும்.

பாடல் 5:

உருவில் திகழும் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்

செருவில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார்

பருவில் குறவர் புனத்தில் குவித்த பருமா மணி முத்தம்

அருவித் திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே

விளக்கம்:

திரிபுரத்து அரக்கர்களுடன் நடந்த போரினில், பெருமான் நாணினை இழுத்து வில்லினை வளைத்து வில்லினில் தொடுக்கப்பட்டிருந்த அம்பினை எய்தி திரிபுரத்து மூன்று கோட்டைகளும் தீப்பற்றி எரியச் செய்த செயல் இங்கெ குறிப்பிடப்படுகின்றது. செரு=சண்டை; பரு வில்=பருத்த வில்லினை உடைய;மலைச் சாரலில் பல இடங்களிலும் சிறு சிறு அருவிகள் விழுவதை நாம் காணலாம். அத்தகைய அருவிகளின் கூட்டங்கள் என்பதை குறிப்பிட அருவித்திரள் என்று கூறுகின்றார். பெரிய வில்லினை ஏந்திய வேடர்களைக் கண்ட திருஞானசம்பந்தருக்கு பெருமான், வில்லேந்தி திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்ற காட்சி நினைவுக்கு வந்தது போலும். உலகினில் நடைபெறும் சாதாரண நிகழ்வுகளிலும் பெருமானைக் காண்பது, எங்கும் சிவத்தையும் எதையும் சிவமாகவும் காண்பது, அருளாளர்களுக்கே உரிய பண்பு. புனம்=விளை நிலங்கள்;

பொழிப்புரை:

தனது உடலின் ஒரு பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டவராகத் திகழும் பெருமான் தேவர்களுக்குத் தலைவராக விளங்குகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது, ஒரு காலால் வில்லின் ஒரு நுனியை ஊன்றிக்கொண்டு மற்றொரு காலை வளைத்து நாணினை இழுத்தும் அந்த வில்லினில் தொடுக்கப்பட்டிருந்த அம்பினை விடுவித்து மூன்று பறக்கும் கோட்டைகளும் பற்றி எரியும் வண்ணம் பெருமான் செந்தீ எழுவித்தார். பெரிய வில்லை ஏந்திய வேடர்கள் விளை நிலங்களில் குவித்து வைத்திருந்த பெரிய மணிகளையும் முத்துக்களையும் அடித்துக் கொண்டு வரும் அருவிக் கூட்டங்கள் வேகமாக கீழே இறங்கும் மலைச் சாரல்களை கொண்ட அண்ணாமலையில் பெருமான் உறைகின்றார்.

பாடல் 6:

எனைத்தோர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார்

நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில்

கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத

அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே

விளக்கம்:

எனைத்தோர் ஊழி=எந்த ஊழிக்காலத்திலும், எப்போதும் என்று பொருள் கொள்ளவேண்டும். மேதி= எருமை; நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் என்று தலத்தின் தன்மை குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

பண்டைய நாளிலிருந்து எந்த காலத்திலும் அடியார்களால் புகழ்ந்து போற்றப்படும் பெருமான் வானவர்களின் தலைவனாக விளங்குகின்றார்.இயற்கையாகவே பாசங்களிலிருந்து நீங்கிய அவர், தன்னை நினைத்துத் தொழுகின்ற அடியார்களின் பாவங்களைத் தீர்க்கின்றார். இத்தகைய பெருமான் உறைகின்ற இடமாவது, கனைத்து குரல் கொடுக்கும் எருமை மாடு இருக்கும் இடத்தினை அறிய முடியாமல் திகைக்கும் ஆயன், தனது கையிலிருக்கும் குழலை வாசிக்க, அந்த குழலின் ஓசையை அடையாளம் கண்டு கொள்ளும் எருமைகள் ஒன்றாக சூழ்ந்து சேரும் இடமாகிய அண்ணாமலையாகும்.

பாடல் 7:

வந்தித்து இருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு

பந்தித்து இருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்

முந்தி எழுந்த முழவின் ஓசை முதுகல் வரைகள் மேல்

அந்திப்பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

விளக்கம்:

வந்தித்து=வணங்கி நின்று; வருவினை=ஆகாமிய வினை; இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை நுகர்கையில் நமது மனதினில் ஏற்படும் சலனங்கள் காரணமாக நாம் சேர்த்துக் கொள்ளும் வினைகள்; நமக்கு விளையும் இன்பங்களுக்கு நமது ஆற்றல் தான் காரணம் என்று தவறாக நினைத்து கர்வம் கொண்டு அதன் காரணமாக நிலை பிறழ்ந்து செய்யும் தீய் செயல்கள் தீய வினைகளை நமக்கு சேர்க்கின்றன. நாம் துன்பம் அனுபவிக்கையில் அந்த துன்பங்களுக்கு காரணம் நமது பழைய தீவினைகள் என்பதை உணராமல், தீங்குவிளைவிப்பவர் மீதும் சில சமயங்களில் இறைவன் மீதும் கோபம் கொண்டு இகழ்வது, நமக்கு தீங்கு இழைத்தோர் பால் வெறுப்பினை வளர்த்துக்கொண்டு அவர்களை பழி தீர்க்க முயற்சி செய்வது ஆகிய செயல்களால் நாம் மேன்மேலும் வினைகளை சேர்த்துக் கொள்கின்றோம். இவ்வாறு ஆகாமிய வினைகளை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டுமானால், நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு நமது பழ வினைகளை காரணம் என்பதை உணர்ந்து, இன்ப துன்பங்களை ஒரு சேர பாவித்து மனதினில் சலனம் ஏதும் அடையாமல் எல்லாம் அவன் செயல் என்ற நினைப்புடன் இன்ப துன்பங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். மேல்வினை=சஞ்சித வினைகள்; நாம் இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்காக ஒதுக்கப்பட்ட வினைகள்; பொதுவாக இவற்றை நாம் மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து, அந்தந்த பிறவிகளில் விளையும் இன்ப துன்பங்களை நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் இன்ப துன்பங்களை ஒன்றாக பாவித்து, மனம் எந்த விதமான சலனமும் அடையாமல் அவற்றை எதிர்கொள்ளும் உயிர்களுக்கு, எத்துணை வினைகளைப் பிணித்தாலும், அவை அடைந்துள்ள பக்குவ நிலையில் மாற்றம் ஏதும் ஏற்படாது என்பதை அறிந்துகொள்ளும் இறைவன், அந்த உயிர்கள் பால் கருணை கொண்டு, அந்த உயிர்களின் சஞ்சித வினைகளை ஒருசேர ஒதுக்கித் தள்ளிவிடுகின்றான். பந்தித்த=அறியாமையில் கட்டுண்டு கிடக்கும்; முந்தி எழுந்த விழவின் ஓசை=திருவிழாக்கள் வருவதை அறிவிக்கும் முழவின் ஓசை;திருவிழாக்கள் மிகவும் அதிகமாக நடக்கும் தலம் என்பதால், இத்தகைய முழவின் ஓசைகள் இடையறாது கேட்கும் தலமாக அண்ணாமலை விளங்குகின்றது.பிரமனும் திருமாலும் காண முடியாத வண்ணம் நெடிதுயர்ந்த நெருப்புப் பிழம்பே மலையாக குளிர்ந்தது என்பதால், மலையே சிவலிங்கமாக கருதி வழிபடப் படுகின்றது. பெருமானின் சடையில் ஒற்றை பிறைச்ச் சந்திரன் இருப்பது போன்று, மலையின் சிகரங்களில் சந்திரன் இருப்பதாக கூறுகின்றார்.

பொழிப்புரை:

தன்னை வந்தனை செய்து பணிந்து வணங்கும் அடியார்களுடன் பிணைந்திருந்த ஆகாமிய வினைகள், சஞ்சித வினைகள் மற்றும் அந்த உயிர்களை அறியாமையில் ஆழ்த்தி கட்டியிருந்த பாவங்கள் அனைத்தையும் தீர்ப்பவனும் அனைத்து உயிர்களுக்கும் மேலானவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருக்கோயில் அண்ணாமலையாகும். திருவிழாக்கள் வருவதை முன்னமே உணர்த்தும் வகையில் ஒலிக்கும் முழவின் ஓசை எதிரொலிக்கும் பெரிய மலைப் பாறைகள் மேல், மாலை நேரத்து நிலவு வந்து தோய்கின்ற குன்றுகளை உடைய சாரல் கொண்டது அண்ணாமலையாகும்.

பாடல் 8:

மறம் தான் கருதி வலியை நினைந்து மாறா எடுத்தான் தோள்

நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார்

திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட

அறம் தான் காட்டி அருளிச் செய்தார் அண்ணாமலையாரே

விளக்கம்:

மறம்=உடல் வலிமை; மாறா=தனது எண்ணத்திற்கு மாறாக, தான் செல்லும் பாதையில் குறுக்கே நின்று தனது வழியினை மறித்தது என்று எண்ணி,திறன்=திறமை; திரிபுரத்து அரக்கர்களை அழித்தது தருமத்தின் செயலாக கருதப்படுகின்றது. பலருக்கும் தீங்கு இழைத்து வந்த திரிபுரத்து அரக்கர்களை தண்டிப்பது தருமத்தின் கடமை தானே.

பொழிப்புரை:

தனது உடல் வலிமையை மிகவும் பெரிதாக கருதி, தான் செல்லும் வழியில் குறுக்கே நின்று தனக்கு எதிராக செயல்பட்ட மலை கயிலாய மலை என்ற எண்ணத்துடன், அந்த மலையைப் பேர்த்து வேறொர் இடத்தில் தனது பயணத்தை தொடரலாம் என்று கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் அரக்கன் இராவணன் ஈடுபட்டான். அவனது செயல் தவறு என்பதை உணர்த்தும் பொருட்டு, தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றி, அந்த மலையின் கீழே அமுக்குண்டு உடலின் நிறம் மாறி அரக்கன் வருந்தும் வண்ணம், மலையை அழுத்தியவர் சிவபெருமான். பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் சாமகானம் பாடி இறைஞ்ச, தனது கால் பெருவிரல் அழுத்தத்தை திரும்ப வாங்கியும், அரக்கனுக்கு பெயர், எண்ணற்ற வாழ்நாள் மற்றும் சந்திரஹாசம் வாள் ஆகியவை கொடுத்து அருள் செய்தவர் சிவபெருமான். திரிபுரத்து அரக்கர்கள் இழைத்த துன்பங்களால் வருந்திய தேவர்கள், பெருமானே உமது திறமையை காட்டி, திரிபுரத்து அரக்கர்களின் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வேண்டிய போது, தவறிழைத்த திரிபுரத்து அரக்கர்களை தண்டித்து அறத்தை நிலைநாட்டி அருள் புரிந்த சிவபெருமான், அண்ணாமலையாராக காட்சி தருகின்றார்.

பாடல் 9:

தேடிக் காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை

மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம் பல கொண்டு

கூடிக் குறவர் மடவார் குவித்துக் கொள்ள வம்மின் என்று

ஆடிப்பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே

விளக்கம்:

உகுத்த=உதிர்த்த; வேய்=மூங்கில்; முதுவேய்=முதிர்ந்த மூங்கில்; வம்மின்=வருவீர்; ஓங்கி நின்ற மூங்கில் மரங்களைக் கண்ட திருஞானசம்பந்தருக்கு பெருமான் நெடிய தீப்பிழம்பாக ஓங்கி நின்றது நினைவுக்கு வந்தது போலும். மூடி=நிலப்பரப்பு தெரியாத வண்ணம் மூங்கில்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்த தன்மை;

பொழிப்புரை:

தங்கள் இருவரில் யார் பெரியவர் என்று தொடர்ந்து வாதம் செய்து கொண்டிருந்த திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும், தங்களின் முன்னே எழுந்த நெடிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பவரே தங்களில் உயர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்தவராக, தத்தம் முயற்சியில் ஈடுபாடபோது, தீப்பிழம்பின் அடியையும் முடியையும் அவர்கள் காண முடியாத வண்ணம் ஓங்கி நின்றவர் சிவபெருமான். மலையை மூடும் வண்ணம் அடர்த்து நெருங்கியும் பரந்தும் வளர்ந்திருந்த முற்றிய மூங்கில்கள் உதிர்த்த முத்துக்களை திரட்டிக் குவித்து கொண்டிருக்கும் குறவப்பெண்கள், பலரையும் முத்துக்கள் வாங்க வாருங்கள் என்று அழைத்து, ஆடியும் பாடியும் முத்துக்களை அளந்து விற்பனை செய்யும் நிறைந்த மலைச்சாரலாகிய அண்ணாமலையில் சிவபெருமான் உறைகின்றார்.

பாடல் 10:

தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்றுண்ணும்

பிட்டர் சொல்லுக் கொள்ளவேண்டா பேணித் தொழுமின்கள்

வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னியுறை கோயில்

அட்டமாளித் திரள் வந்தணையும் அண்ணாமலையாரே

விளக்கம்:

பிட்டர்=பிரட்டர்கள், உண்மையை பிரட்டி திரித்து கூறுவோர்; ஒரு இடத்தில் நிலையாக நில்லாமல் பல இடங்களிலும் திரிந்து கொண்டே இருப்பது அந்நாளைய சமணத் துறவிகளின் வழக்கமாக இருந்ததால், அவர்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தங்களது பாய், உண்கலன், குண்டிகை,மயிலிறகு ஆகியவற்றை எடுத்துச் செல்வது அவர்களின் பழக்கமாக இருந்து வந்தது.

பொழிப்புரை:

தமது உண்கலனைத் தங்களது அக்குளில் இடுக்கிக்கொண்டு தாம் செல்லுமிடமெங்கும் எடுத்துச் செல்வோரும், தங்களது தலைமயிரை முற்றிலும் பறித்துக் கொள்வோரும், நின்ற வண்ணம் உணவு உட்கொள்ளும் பழக்கம் உடையோரும் உண்மைக்கு மாறாக திரித்து பெருமானை பழித்துப் பேசுவோரும் ஆகிய சமணர்கள் சொல்லுகின்ற சொற்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிவபெருமானைப் பேணித் தொழுவீர்களாக. அழகாக வட்ட வடிவினில் அமைந்த மார்பகங்கள் கொண்ட உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்ட பெருமான், நிலையாக பொருந்தி உறைவது திருவண்ணாமலையாகும். இந்த மலைச் சாரலில் ஆண் சிங்கங்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.

பாடல் 11:

அல்லாடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை

நல்லார் பரவப் படுவான் காழி ஞானசம்பந்தன்

சொல்லால் மலிந்த பாடலான பத்தும் இவை கற்று

வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே

விளக்கம்:

அல்-இரவுப்பொழுது; பரவ=போற்றும் வண்ணம்; மன்னி=நிலைபெற்று; மன்னி வாழ்வார் என்பதற்கு நிலையான புகழுடன் வாழ்வார்கள் என்ற விளக்கம் கொடுக்கப்படுகின்றது. நிலவுலக வாழ்வு நிலையற்றது. புகழுடன் வாழ்ந்தவர்கள் மறைந்த சில நாட்கள் வரை அவர்களது புகழ் பேசப் பட்டாலும்,காலப்போக்கில் அவற்றை நாமும் மறந்து விடுகின்றோம். எனவே வானோர் வணங்க மன்னி வாழ்வார் என்ற தொடருக்கு, பெருமான் வாழும் முக்தி உலகம் சென்றடைந்து வானோர் உள்ளிட்டு அனைவராலும் வணங்கப்படுவார்கள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை:

இரவு வேளைகளில் படம் எடுத்தாடும் பாம்புகள் உலாவுகின்ற மலைச்சாரலை உடைய திருவண்ணாமலையில் உறைகின்ற பெருமானை, நல்லவர்களால் புகழ்ந்து போற்றி பேசப்படுவானும் சீர்காழி நகரைச் சார்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய அருஞ் சொற்கள் நிறைந்த பத்து பாடல்களையும் நன்றாக கற்று வல்லவராக விளங்கும் அடியார்கள், வானோர்களும் போற்றப்படும் வண்ணம், முக்தி உலகினில் நிலையாக வாழ்வார்கள்.



Share



Was this helpful?