Digital Library
Home Books
Porunar Atrupadai, also known as Porunaraṟṟuppaṭai, is a classical Tamil work that is part of the Pattuppāṭṭu (Ten Idylls) anthology, a key component of the Sangam literature. This collection is noted for its poetic excellence and its depiction of early Tamil society, culture, and values. "Atrupadai" in Tamil literature typically refers to a genre where the poet directs someone towards a patron or deity, praising their virtues and suggesting they seek their favor.
பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாலானது.
ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் வரலாறு
பத்துப்பாட்டினுள் இரண்டாம் பாட்டாகத் திகழும் இப் பொருநராற்றுப் படையை யாத்தவர் முடத்தாமக் கண்ணியார் என்னும் நல்லிசைப் புலவராவார். இவரைப் பெண்பாற் புலவர் என்று கூறுவாரும் உளர். தொல்காப்பிய உரையின்கண், (தொல்.சொல்.இடை. 22.சே.ந) ஆர்விகுதி பன்மையொடு முடிதற்கு முடத்தாமக் கண்ணியார் வந்தார் என்றெடுத்துக் காட்டப்பட்டிருத்தலால், இவர் பெயர் முடத்தாமக் கண்ணி என்பதாம் என்பர். இனி, கண்ணி என்பதனைத் தலையிற் சூடும் மாலையெனக் கொள்ளின், இப்பெயர் பெண்பாற் பெயர் என்று கூறுதற்கிடனில்லை. இப்பெயர் முன்னர் முடம் என்ற சொற்கிடத்தலால், இவர் உறுப்பு முடம்பட்டவர் என எண்ணற்கிடனுளது. இவர் இசைவல்லுநர் என்பதனை, இப்பாட்டின்கண் யாழ் முதலிய இசைக்கருவிகளைப் பற்றிக் கூறும் பகுதிகளால் உணரலாம். இசை, வன்கண்ணரையும் அருளுடை நெஞ்சினராக மாற்றியமைக்கும் பண்புடையதென இவர் கூறியுள்ளார். விறலியருடைய முடிமுதல் அடிகாறும் மிக அழகாகப் புனைந்து பாடியுள்ளார். உவமை எடுத்துக் கூறுவதில் இப்புலவர் பெரிதும் வல்லுநர். யாழினது உறுப்புக்களுக்கு இவர் கூறும் உவமைகள் மிகவும் இனிமை தருவன. அவற்றை,
குளப்பு வழியன்ன கவடுபடு பத்தல் என்றும், விளக்கழல் உருவின் விசியுறு போர்வை, என்றும் அலவன் கண்கண்டன்ன துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி என்றும், மாயோள் முன்கை யாய்தொடி கடுக்கும் கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின் என்றும் வரும் அடிகளிற் காண்க. இவர் கூறும் பிற வுவமைகளும் சிறப்புடையனவே. கரிகாலன், பொருநனை உடை உண்டி உறையுள் முதலியன அளித்துப் போற்றியவழி, ஞெரேலெனத் தன் வாழ்க்கையிலேற்பட்ட புதுமையால் மருண்டவனாய், இது நனவோ! கனவோ! என ஐயுறுதலும், இது நனவே! என, அவன் இளைஞர் ஏதுக்காட்டி விளக்குதலும், கரிகாலன் அளித்த உணவைத் தின்று தின்று எம் பற்கள் கொல்லையுழுத கொழுப்போன்று தேய்ந்தன என்பதும், கழுத்தளவாக வந்து நிறையும் படி உயிர்ப்பிடம் பெறாது உண்டேம் என்பதும், நகைச்சுவையுடையனவாக இப்புலவர் கூறுதல் இன்பந்தருகின்றன.
கரிகாலன் கொடைச்சிறப்பை இப்புலவர் மிகவும் நன்றாக விளக்கியுள்ளார். செய்யுள் இனிமையில், இப் பொருநராற்றுப் படை சாலச்சிறந்ததென்று அதனை ஓதுவோர் உணர்தல்கூடும். இதனை ஓதுவோர் உணர்வு சலியாமைப்பொருட்டு ஆசிரிய அடியாற் றொடங்கிப் பின்னர் வஞ்சியடியை விரவி இவர் இப்பாடலை யாத்துள்ளமை இவரது மனப்பண்புணர்ச்சியை நன்கு விளக்குகின்றது. இவரைப் பற்றிய வேறு வரலாறுகள் தெரிதற்குச் சான்றுகள் கிடைக்கவில்லை. இப் பொருநராற்றுப்படை ஒன்றே இவரது நல்லிசைப் புலமையை நன்கு காட்டப் போதியதாக அமைந்துள்ளது. கருங்குளவாதனார், வெண்ணிக்குயத்தியார், உருத்திரங் கண்ணனார் முதலியோர் முடத்தாமக் கண்ணியாரோடு ஒரு காலத்தே உயிர்வாழ்ந்திருந்த நல்லிசைப் புலவர்களாவார்.
பாட்டுடைத்தலைவன் வரலாறு
சோழன் கரிகாற்பெருவளத்தான்
ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற் றெரிந்து, சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டினுள், இவ்விரண்டாம் பாட்டிற்குத் தலைவனும் பேறுடையான், சோழன் கரிகாற் பெருவளத்தான் என்னும் காவலனாவான். இக் கரிகாற் பெருவளத்தானே, பத்துப்பாட்டினுள் ஒன்பதாம் பாட்டாகத் திகழும் பட்டினப்பாலைக்கும் தலைவனாவான். இம்மன்னர் பெருமான், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் அரசனுடைய மகன் என்ப. இதனை, உருவப் பஃறே ரிளையோன் சிறுவன், (130) என வரும் இப் பொருநராற்றுப்படை யடியான் அறியலாம். இவன் தன் தாய்வயிற்றிற் கருவா யிருக்கும்போதே இவன் தந்தை இறந்தான். ஆதலால், இவன் கருவிருக்குங்காலத்தே அரசுரிமை பெற்றுப் பின்னர்ப் பிறந்தான் என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது. இதனைத் தாய்வயிற் றிருந்து தாய மெய்தி (32) என்னு மடியினால் உணரலாம். தாய்வயிற்றிருந்து தாயமெய்தியதனால், இம் மன்னன் இளைஞனா யிருந்தபொழுதே, இவனுடைய அரசுரிமையைக் கைக்கொள்ளுதற்குத் தாயத்தாரும், பிறருமாகிய பல பகைவர்கள் துணிந்தனர். இளமையிலேயே கோமுடி கொண்டு நாட்டை நன்கு ஆட்சி செய்துவந்தான் இம் மன்னன் என்பதைப் பொருநராற்றுப்படையில்,
பவ்வ மீமிசை பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்த நன்
னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு
.......................................................
இருபெரு வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன் (135-148)
என்னும் பகுதியால் அறியலாம். இப்பகுதியில் கரிகாலன் மிக இளமையிலேயே மிகப்பெரும் பகைவருடன் போர் புரிந்து வெண்ணிக்களத்தே வென்றமையும் குறிக்கப்பட்டிருத்த லறிக. இனிச் சோழன் கரிகாற் பெருவளத்தானை இளம்பருவத்தே பகைவர் வஞ்சகமாகச் சிறையிட்டனர் என்று கூறுப. இதனை,
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
எனவரும் பட்டினப்பாலை அடிகளானும் உணரலாம். இச் சிறையிடத்தே, பகைவர் தீக்கொளுவினர் என்றும் அத் தீப்பற்றிய சிறையிடை நின்றும் கரிகாலன் தப்பி வெளியேறினன் என்றும், அம் முயற்சியிலே அவன் கால் தீயாற் கரிந்துபோயிற்றென்றும், அதன் பின்னரே கரிகாலன் என்று இம் மன்னன் வழங்கப்பட்டான் என்றும் கூறுவர். இப் பொருநராற் றிறுதியி லமைந்த,
முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
இச்சக் கரமே அளந்ததால் - செய்ச்செய்
அரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
கரிகாலன் கானெருப் புற்று
என்னும் வெண்பாவானும், பழமொழி முதலியவற்றானும் இந்நிகழ்ச்சி தெளியப்படும். இம் மன்னன் கருவூரிலிருக்கும்பொழுது, கையில் மாலை கொடுத்தனுப்பப்பட்ட கோக்களிறு, இவனுக்கு மாலைசூட்டித் தன் பிடரிலேற்றிக் கொணர்ந்ததென்றும், அதனால் இவனுக்கு அரசுரிமை வழங்கினர் என்றும் ஒரு வரலாறு கூறுகின்றது.
இம் மன்னன் வெண்ணிப் போரை,
நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே (புறம் - 66)
எனவரும் வெண்ணிக் குயத்தியார் பாட்டானும் உணரலாம்.
இம் மன்னனின் இயற்பெயர் திருமாவளவன் என்பதாம். அரிமா சுமந்த அமளிமே லானைத், திருமா வளவன் எனத் தேறேன் எனவரும் வெண்பாவான் இப் பெயருண்மை தெளியப்படும். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளார் இக் கரிகாலன் சிறப்புக்கள் பலவற்றைத் தம் பெருங்காவியத்தே கூறியுள்ளார். தமிழ் நாட்டெல்லையுள், தன்னோடு எதிர்த்துப் பொரும் அரசரை இரண்டு திசையினும் பெறாத கரிகாலன், போரிலே பேராசையுடையவனாதலின் வடதிசை பெருந்திசை யாதலிற் பகை பெறலாமெனக் கருதி, ஆண்டுச் சேறற்கு விரும்பி வாளும் குடையும் முரசும் நாளொடு பெயர்த்து, என் வலிகெழு தோள் இத்திசையிலானும் நண்ணாரைப் பெறுவதாக வேண்டுமென்று, தான் வழிபடு தெய்வத்தை மனத்தான் வணங்கி, அவ்வட திசையை நோக்கிய அந்நாளில், இமையவர் உறையும் இமயமலை பகையாகக் குறுக்கிட்டு விலக்கிற்றாகலின், மனஞ்சலித்து மீள்கின்றவன், மடிதலின்றி மேலும் செல்ல முயலும் என்னாசை பின்னிட்டொழிய இம்மலை எனக்குப் பகையாகக் குறுக்கிட்டு விலக்கிற்றென முனிந்து, அதன் பிடரிடத்தே தனது புலியைப் பொறித்துத் தான் வேட்டது பெறாத கோட்பாட்டால் மீள்கின்றவன், வச்சிரநாட்டுக் கோன் தான் இடக்கடவ முறைமையில் திறையாகவிட்ட அவனது முத்தின் பந்தரும், மகதவேந்தன் தந்த பட்டிமண்டபமும் அவந்திநாட்டு வேந்தன் தந்த வாயிற்றோரணமும் திறையாகப் பெற்றுவந்தான், எனச் சிலப்பதிகாரத்தே இவன் வெற்றி புகழப்பட்டுள்ளது.
செண்டு கொண்டுகரி காலனொரு காலினி மையச்
சிமைய மால்வரை திரித்தருளி மீளவதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிப்பொறி குறித்தது மறித்த பொழுதே (கலிங்கத்துப் - இராச.1)
எனவும்,
கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டங்காவன்
மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு (சிலப் 5: 95 - 8. உரைமேற். அடி)
எனவும்,
இலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்
வன்றிறற்புலி இமயமால் வரைமேல் வைக்கவேகுவோன் (பெரிய - திருக்குறிப்புத் : 85)
எனவும் பிற்றை நாட்புலவரும் இவன் வெற்றியைப் பாராட்டுதல் உணர்க. இனி, இம் மன்னர்பெருமான் புலவர் முதலிய கலைவாணர்க்கு மிகமிகப் பரிசில் வழங்கிப் போற்றும் இயல்பினன் என்பதனைப் பட்டினப்பாலை பாடிய நல்லிசைப் புலவர் உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கிப் போற்றினான் என்னும் செய்தியால் உணரலாம்.
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறு நூறா யிரம்பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்
என்பது கலிங்கத்துப்பரணி. கரிகாலன் முதன் முதலாகக் காவிரிக்கரை கண்டவன் என்பர். இம் மன்னன் உறையூரைப் பெரிதும் திருத்தினன் என்பதும், காடுகளை அழித்து நாடாக்கினன் என்பதும், நீர் நிலைகளை உண்டாக்கினன் என்பதும், குடிமக்களைப் பேணினன் என்பதும்,
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிக்
பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக்
கோயிலொடு குடி நிறீஇ
எனவரும் பட்டினப்பாலையான் உணரலாம். இங்ஙனம் நாட்டைப் பண்படுத்தினமையால் அந்நாட்டின் சிறப்பை அவன் சிறப்பாகக் கொண்டு,
ஏரியு மேற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு
எனச் சான்றோர் போற்றிப் புகழ்ந்தனர். இவ்வேந்தனுக்கு ஆதிமந்தி என்பாள் ஒரு நல்லிசைப் புலமையாட்டி மகளாக இருந்தனள் என்று சிலப்பதிகாரம் கூறும். இம் மன்னன் புகழ் விரிப்பினகலுமாகலின் இத்துணையே கூறி அமைகின்றாம்.
அறிமுகம்
செந்தமிழ் இலக்கியத்தின் சிமையமாகத் திகழும் பத்துப் பாட்டினுள் இஃதிரண்டாம் பாட்டாகத் திகழ்கின்றது. பத்துப்பாட்டிவை என்பதனை,
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
எனவரும் பழைய வெண்பாவாலறியலாம். பத்துப்பாட்டினுள், செம்பாதிப் பாட்டுக்கள், ஆற்றுப் படைப் பாட்டுகளாம். இதனால் பண்டைப் புலவர்கள் இத் துறையைப் பெரிதும் விரும்பிப் பாடினர் என்பது விளங்கும். ஆற்றுப்படை என்பது, புறத்திணைகளுட் பாடாண்டிணையின் உட்பகுதியாய் அமைந்ததொரு துறையாகும். தாவினல்லிசை என்று தொடங்கும் தொல்காப்பியப் புறத்திணை (36) நூற்பாவின்கண்,
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்
எனவரும் பகுதியே ஆற்றுப்படைக்கு இலக்கணமாம். ஆடன் மாந்தரும், பாடற்பாணரும், கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியு மென்னும், நாற்பாலாரும் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவை எல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும் என்பது இந்நூற்பாவின் பொருளாம். ஆற்றுப்படை என்னும் இத்துறை உலகில் அறப்பண்பு மிக்கு வறியார்க்குத் தம்பால் உள்ளன வெல்லாம் உவந்தீயும் வள்ளல்களைப் புகழ்ந்து பாடுதற்கென நல்லிசைப் புலவர்கள் வகுத்துக்கொண்டதொரு புலனெறி வழக்கமாகும். உயரிய மக்கட் பிறப்பெய்தியோர் அப்பிறப்பின் பெருமைக்கேற்ற செயலாக மேற்கொள்ளற் பாலவாகிய அறங்களில் ஈகை தலைசிறந்த தொன்றாம்.
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு
என்றற்றொடக்கத்துத் திருக்குறள்களான் இவ்வுண்மை தெளியப்படும். இத்தகைய சிறந்த நற்செயலைச் செய்தற்குரிய கொடைப்பண்பினைக் கருவிலேயே பெற்றுப் பிறப்போரே புரவலர் எனப்படுவார். இப் புரவலரைப் புகழ்வது நல்லிசைப் புலவர்க்கு நனியின்பம் நல்கும் செயலாகும். புரவலர்கள் உடை உண்டி உறையுள் முதலிய உயிர்வாழ்தற்குரிய பொருள்களைப் புலவர்கள் வேண்டி யாங்கு ஈந்து அவர்தம் இன்முகங்கண்டு மகிழ்வதில் பெரிதும் விருப்பமுடையர் ஆவர். புரவலரால், புலவர் உடம்பு வாழ்நாள் முடியுந்துணையும் இனிதே வளர்க்கப்படும். அச்செய்ந்நன்றி போற்றும் புலவர்களோ, தம் அழிவில்லா மெய்ப்பனுவலில் அவ்வள்ளலார் புகழுடலை மண்ணுலகம் உள்ள துணையும் மாயாதே நிலைத்து நிற்கச் செய்வர்.
கண்ணுக்கு ஒளியையும், செவிக்கு ஒலியையும், மூக்கிற்கு நாற்றத்தையும், வாய்க்குச் சுவையையும், உடலுக்கு ஊற்றினையும் ஒருங்கே படைத்தான் இறைவன். இவையிற்றில் ஒன்றைப் படைத்து ஒன்றைப் படையானாயின் இரண்டும் படைக்கப்படாத இல் பொருளாய் ஒழியும். கண்ணிருந்து ஒளியின்றேற் கண்ணாற் பயன் என்ன? அவ்வாறே மக்கட்கு மனனுணர்ச்சி என்னும் அகக் கருவியைப் படைத்த இறைவன், அதற்குப் புலனாக இவ்வருமைக் கலைகளையும் படைத்துவைத்தான். கண்ணில்லானுக்கு ஒளியால் உறுபயன் இல்லை. அங்ஙனமே மனனுணர்வுடையார்க்கன்றிக் கலைகள் அஃதில்லாத மாக்கட்கு இல்பொருளாகவே முடியும். எத்துணைச் சிறப்பாக மனனுணர்வு ஒருவர்க்கு முதிர்ந்துளதோ, அத்துணைச் சிறந்த இன்பத்தை அவர் கலைகளிடத்தே எய்த முடியும். மக்கள் மன உணர்ச்சியைப் பண்படுத்தி அதனை வளர்த்துத் தூய்தாக்கும் பண்புடையன கலைகள். இங்ஙனம் கலைகளாற் பண்பட்டுயர்ந்த மனவுணர்வே இறுதியில் கடவுளையும் தன்னுள்ளே காணும் பேறுடையதாகும். கலைகளின் முழுமையே கடவுள். கடவுளின்பத்தின் துளிகளே கலையில் யாம் நுகரும் பேரின்பம் இதனை,
குலவு மறையும் பலகலையும் கொளுத்து வதன்முன் கொண்டமைந்த
நிலவு முணர்வின் திறங்கண்டு நிறுவு மறையோ ரதிசயித்தார்
அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங்கழலே எனக்கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினிற் றெளிந்தார் சிறிய பெருந்தகையார் (பெரிய - சண்டே.15)
என வரும் சேக்கிழாரடிகள் மெய்ம்மொழியானும் தெளிக.
மக்கள் வாழ்க்கையின் பயனை முற்றுவித்தற்கு உறுதுணையாகிய கலைகளை உணர்வோரும் தாம் உணர்ந்தாங்கே பிறரை யுணர்த்தவல்லுநருமே கலைஞர் எனப்படுவார். இத்தகைய கலை யுணர்ச்சி முதிரப் பெற்றோர் கலைபேணுதல் ஒழிந்து இவ்வுலக வாழ்விற்கு இன்றியமையாத பொருள் ஈட்டுதலில் மனம்போக்கி உழல்வார் அல்லர். அதனால், பெரும்பாலும் கலைஞர் நல்கூர்ந்தாராதலும் இயல்பாயிற்று. இவ்விலம்படு புலவரைப் போற்றுதற்கெனவே இவ்வுலகில் புரவலரை இறைவன் படைக்கின்றான் போலும். அப் புரவலராலே புலமையாளர் உடலும், அவர் தம் கலைச் செல்வமும் செழிப்புடையனவாக வளர்க்கப்படுகின்றன; புலவர்களாலே புரவலன் புகழுடம்பு உலகுள்ள துணையும் நிலைப்பதாகின்றது.
இனி, கைவண்மையுடைய புரவலர்கள் கலைஞர்களே யன்றி யாரே யாயினும் தம்பால் வந்து இல்லையென்றிரப்போர்க்கு இல்லையென்று உரையாது வழங்குமியல்பினராயினும், கலைவாணரல்லால் ஏனையோர் வறுமையுற்ற விடத்தும் இரவாமை மேற்கொள்ளுதலின்றி இரத்தல் இகழ்ச்சியேயாகும் ஆகலானும், மற்றுக் கலைவாணர்க்கு இரந்துயிர் வாழ்தலும் சிறப்புடைய வாழ்வேயாகுமாதலானும், கலைவாணர் இரத்தற்குரியர் ஆதலன்றியும் கொடுத்தாரை வாழ்த்தவும், கொடாதாரைப் பழிக்கவும் உரிமை பெற்றுள்ளனர். ஆதலானும், இச் சிறப்புரிமையாலே ஆசிரியர் தொல்காப்பியனார், ஆற்றுப் படையில் உறுப்பினராகக் கலைவாணர்களை மட்டுமே கூறுவாராயினர்.
இனி, இப் பத்துப்பாட்டினுள், இறுதியினின்ற மலைபடுகடாம் கூத்தராற்றுப்படையாகும். பாணாற்றுப்படை இரண்டுள. இது பொருநரை ஆற்றுப்படுத்தமையாற் பொருநராற்றுப்படை என வழங்கப்பட்டது. பொருநராவார், ஏர்க்களம் பாடுநரும், போர்க்களம் பாடுநரும், பரணிபாடுநரும் எனப் பலவகைப்படுவர். அவருள், இவ்வாற்றுப்படையின்கட் கூறப்படுபவன் கரிகாற் பெருவளத்தானுடைய வெண்ணிப்பறந்தலை வென்றியை விதந்து பாடுதலாலே போர்க்களம் பாடும் பொருநன் ஆவான். பொருநன் வாயிலாகக் கரிகாற் பெருவளத்தான் புகழனைத்தும் இப்பாட்டின்கண் விரித்தோதப்படுகின்றன. இப்பாட்டு, இருநூற்று நாற்பத்தெட்டடிகளாலியன்றது. இதன்கண் ஆசிரியவடிகள் மிக்கும், இடையே வஞ்சியடிகள் விரவியும் உள்ளன. முழுதும் ஆசிரியவடிகளானே ஓதாமல் இடையிலே வஞ்சியடிகளை விரவியது இப்பாட்டின் இன்னோசையை மேலும் இன்பமுடைய தாக்குகின்றது.
இனி, இப் பொருநராற்றுப்படையின்கண் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீ இச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் என்ற தொல்காப்பிய விதிப்படியே, ஆற்றுப்படுத்துவோன் தான் கரிகாலனிடம் சென்று பெற்ற பெருவளனை நன்கு விரித்துக்கூறி, நீயும் சென்றுபயன் எதிர்வாயாக என ஆற்றுப்படுத்தலைக் காணலாம். சிறுபாணாற்றுப்படை முதலிய எஞ்சிய மூன்று ஆற்றுப்படைகளினும், ஆற்றுப்படுத்துவோன், ஆற்றுப்படுத்தப்படுவோனை, நீ இவ்வழியே சென்று இவ்விவ் விடங்களில் இன்னின்ன உண்டிகளைப் பெற்றுச் செல்க எனப் புதியனவும் சில புகுத்து ஓதப்படுதலை ஆராயுமிடத்து இவ்வாற்றுப்படையே காலத்தால் முந்தியதென்று கருதுதற்கு இடனுளது. இப்பொருநராற்றுப்படை ஏனைய ஆற்றுப்படைகட்கு முன்னர் வைக்கப்பட்டதற்கும் இதுவே காரணம்போலும். இப் பொருநராற்றுப்படையில், பொருநர்கள் ஊர்களில் நிகழும் விழாக்களிலே இசைப்புலமை காட்டுதலும், இவர்கள் ஊர் ஊராய்ச் சுற்றித் தங் கலையைப் பரப்பும் வழக்கமுடையராதலும், யாழின் இயல்பும், விறலியர் இயல்பும், கலைவாணரின் நல்கூர் நிலையும், கரிகாற் பெருவளத்தான் கலைவாணரைப் போற்றும் தன்மையும், கரிகாலனின் வென்றிச் சிறப்பும், திணை மயக்கமும், காவிரியாற்றின் பெருமையும், சோணாட்டு வளமும், பிறவும் அழகாக விரித்தோதப் படுகின்றன.
பொருநனை விளித்தல்
அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்,
சாறு கழி வழி நாள். சோறு நசை உறாது,
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!
பாலையாழின் அமைப்பு
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்;
விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை, 5
எய்யா இளஞ் சூல் செய்யோள் அவ் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல,
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை;
அளை வாழ் அலவன் கண் கண்டன்ன,
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி; 10
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி,
அண் நா இல்லா அமை வரு வறு வாய்;
பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்;
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்;
கண்கூடு இருக்கைத் திண் பிணித் திவவின்; 15
ஆய் தினையரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணியன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமை வரு, காட்சி; 20
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை
யாழை மீட்டிப் பாடுதல்
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்,
சீருடை நன் மொழி நீரொடு சிதறி
பாடினியின் கேசாதிபாத வருணனை
அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல், 25
கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண்,
இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்,
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்,
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
பூங் குழை ஊசற் பொறை சால் காதின், 30
நாண் அடச் சாய்ந்த நலம் கிளர் எருத்தின்,
ஆடு அமைப் பணைத் தோள், அரி மயிர் முன்கை,
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்,
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்,
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து, 35
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை,
நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்,
உண்டு என உணரா உயவும் நடுவின்,
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்,
இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின், 40
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்து நாய் நாவின், பெருந் தகு சீறடி,
அரக்கு உருக்கு அன்ன செந் நிலன் ஒதுங்கலின்,
பரல் பகை உழந்த நோயொடு சிவணி,
மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் 45
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின்,
பெடை மயில் உருவின், பெருந் தகு பாடினி
காடுறை தெய்வத்திற்குக் கடன் கழித்தல்
பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தொறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி,
இலை இல் மராஅத்த, எவ்வம் தாங்கி, 50
வலை வலந்தன்ன மென் நிழல் மருங்கில்,
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றைப்
பரிசு பெற்றோன் பெறாதொனை விளித்தல்
பீடு கெழு திருவின், பெரும் பெயர், நோன் தாள்,
முரசு முழுங்கு தானை, மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போலப் 55
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்
கோடியர் தலைவ! கொண்டது அறிந!
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது,
ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே;
பரிசு பெற்றோன் பாடின முறை
போற்றிக் கேண்மதி, புகழ் மேம்படுந! 60
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு
நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்று
எழுமதி; வாழி, ஏழின் கிழவ!
பழுமரம் உள்ளிய பறவையின், யானும், அவன்
இழுமென் சும்மை இடனுடை வரைப்பின், 65
நசையுநர்த் தடையா நன் பெரு வாயில்
இசையேன் புக்கு, என் இடும்பை தீர,
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி,
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப,
கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி 70
இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப, விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்,
ஒன்று யான் பெட்டா அளவையின்
அரசன் விருந்தோம்பலின் சிறப்பு
ஒன்றிய
கேளிர் போல, கேள் கொளல் வேண்டி,
வேளாண் வாயில் வேட்பக் கூறி, 75
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ,
பருகு அன்ன அருகா நோக்கமோடு,
உருகுபவை போல் என்பு, குளிர் கொளீஇ,
ஈரும் பேனும் இருந்து இறைகூடி,
வேரொடு நனைந்து, வேற்று இழை நுழைந்த 80
துன்னல் சிதாஅர் துவர நீக்கி,
நோக்கு நுழைகல்லா நுண்மைய, பூக் கனிந்து
அரவு உரி அன்ன, அறுவை நல்கி,
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து,
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர், 85
போக்கு இல் பொலங் கலம் நிறைய, பல் கால்,
வாக்குபு தரத்தர, வருத்தம் வீட,
ஆர உண்டு, பேர் அஞர் போக்கி,
செருக்கொடு நின்ற காலை,
இரவில் சுற்றத்துடன் கவலையின்றித் தூங்கி எழுதல்
மற்று அவன்
திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கி, 90
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயன் எய்திய அளவை மான,
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி,
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி, மாழாந்து எழுந்து, 95
காலையில் அரசவைக்குச் செல்லுதல்
மாலை அன்னது ஓர் புன்மையும், காலைக்
கண்டோ ர் மருளும் வண்டு சூழ் நிலையும்,
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப,
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப,
கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட, 100
அரசனை அணுகுதல்
கதுமெனக் கரைந்து, 'வம்' எனக் கூஉய்,
அதன் முறை கழிப்பிய பின்றை, பதன் அறிந்து,
உணவு கொடுத்து ஓம்பிய முறை
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி,
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங் குறை 105
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி,
அவைஅவை முனிகுவம் எனினே, சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ,
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க, 110
மகிழ்ப் பதம் பல் நாள் கழிப்பி, ஒரு நாள்,
'அவிழ்ப் பதம் கொள்க' என்று இரப்ப, முகிழ்த் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்,
பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப 115
அயின்ற காலை, பயின்று இனிது இருந்து,
கொல்லை உழு கொழு ஏய்ப்ப, பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி,
உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து,
ஊருக்குச் செல்லப் பரிசிலன் விரும்புதல்
ஒரு நாள்,
'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய 120
செல்வ! சேறும், எம் தொல் பதிப் பெயர்ந்து' என.
மெல்லெனக் கிளந்தனம் ஆக,
அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி அனுப்புதல்
'வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு?' என,
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு,
'துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு 125
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!' என,
தன் அறி அளவையின் தரத்தர, யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு,
இன்மை தீர வந்தனென்.
கரிகால் வளவனது சிறப்புக்கள்
வென் வேல்
உருவப் பல் தேர் இளையோன் சிறுவன், 130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, 135
வெவ் வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,
வெண்ணிப் போர் வெற்றி
ஆளி நல் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்,
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன்
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்
தொழுது முன் நிற்குவிர் ஆயின்,
கரிகாலனது கொடையின் சிறப்பு
பழுது இன்று, 150
ஈற்று ஆ விருப்பின, போற்றுபு நோக்கி, நும்
கையது கேளா அளவை, ஒய்யென,
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கி, தூய
கொட்டைக் கரைய பட்டு உடை நல்கி, 155
'பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க' என,
பூக் கமழ் தேறல் வாக்குபு தரத்தர,
வைகல் வைகல் கை கவி பருகி,
எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி, 160
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய,
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஊட்டு உளை துயல்வர, ஓரி நுடங்க,
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி, 165
காலின் ஏழ் அடிப் பின் சென்று, 'கேலின்
தாறு களைந்து, ஏறு' என்று ஏற்றி, வீறு பெறு
பேர் யாழ் முறையுளிக் கழிப்பி, நீர் வாய்த்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
நன் பல் ஊர நாட்டொடு, நன் பல், 170
வெரூஉப் பறை நுவலும், பரூஉப் பெருந் தடக் கை,
வெருவரு செலவின், வெகுளி வேழம்
தரவிடைத் தங்கல் ஓவிலனே: வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி, தெற்றென,
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின், பல புலந்து, 175
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
'செல்க' என விடுக்குவன் அல்லன்
சோழ நாட்டின் வளமும் வனப்பும்
ஒல்லெனத்
திரை பிறழிய இரும் பெளவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை,
மா மாவின் வயின் வயின் நெல், 180
தாழ் தாழைத் தண் தண்டலை,
கூடு கெழீஇய, குடிவயினான்,
செஞ் சோற்ற பலி மாந்திய
கருங் காக்கை கவவு முனையின்,
மனை நொச்சி நிழல் ஆங்கண், 185
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவம்;
இளையோர் வண்டல் அயரவும்; முதியோர்
அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்
முடக் காஞ்சிச் செம் மருதின்,
மடக் கண்ண மயில் ஆல, 190
பைம் பாகற் பழம், துணரிய
செஞ் சுளைய கனி, மாந்தி;
அறைக் கரும்பின் அரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக,
வறள் அடும்பின் இவர் பகன்றைத் 195
தளிர்ப் புன்கின் தாழ் காவின்
நனை ஞாழலொடு மரம் குழீஇய
அவண் முனையின், அகன்று மாறி,
அவிழ் தளவின் அகன் தோன்றி,
நகு முல்லை, உகு தேறு வீ, 200
பொன் கொன்றை, மணிக் காயா,
நல் புறவின் நடை முனையின்,
சுற வழங்கும் இரும் பெளவத்து
இறவு அருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின், 205
ஓங்கு திரை ஒலி வெரீஇ,
தீம் பெண்ணை மடல் சேப்பவும்;
கோள் தெங்கின், குலை வாழை,
கொழுங் காந்தள், மலர் நாகத்து,
துடிக் குடிஞை, குடிப் பாக்கத்து, 210
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப,
கலவம் விரித்த மட மஞ்ஞை
நிலவு எக்கர்ப் பல பெயர்;
நில மயக்கமும் நல் ஆட்சியும்
தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்; 215
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்;
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும் பூங் கண்ணி குறவர் சூட;
கானவர் மருதம் பாட, அகவர் 220
நீல் நிற முல்லைப் பல் திணை நுவல;
கானக் கோழி கதிர் குத்த,
மனைக் கோழி தினைக் கவர;
வரை மந்தி கழி மூழ்க,
கழி நாரை வரை இறுப்ப; 225
தண் வைப்பின் நால் நாடு குழீஇ,
மண் மருங்கினான் மறு இன்றி,
ஒரு குடையான் ஒன்று கூற,
பெரிது ஆண்ட பெருங் கேண்மை,
அறனொடு புணரந்த திறன் அறி செங்கோல், 230
அன்னோன் வாழி, வென் வேல் குருசில்!
காவிரியின் வெள்ளச் சிறப்பு
மன்னர் நடுங்கத் தோன்றி, பல் மாண்
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி,
குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும்,
அருவி மா மலை நிழத்தவும், மற்று அக் 235
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்,
துறைதுறைதோறும், பொறை உயர்த்து ஒழுகி,
காவிரி நாட்டு வயல் வளம்
நுரைத் தலைக்குரைப் புனல் வரைப்பு அகம் புகுதொறும், 240
புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி, குயத்தின் வாய் நெல் அரிந்து,
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்,
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும், 245
சாலி நெல்லின், சிறை கொள் வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆக,
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.
தனிப் பாடல்கள்
ஏரியும், ஏற்றத் தினானும், பிறர் நாட்டு
வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின்,
அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும்
கரிகாலன் காவிரி சூழ் நாடு. 1
அரிமா சுமந்த அமளி மேலானைத்
திருமாவளவன் எனத் தேறேன்; -திரு மார்பின்
மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப்
போனவா பெய்த வளை! 2
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச் சக்கரமே அளந்ததால்-செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று. 3
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |