இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


புடையினார் புள்ளி

புடையினார் புள்ளி

பதிக எண்: 2..26 - திருநெல்வாயில் - இந்தளம்

பின்னணி:

தனது நான்காவது தலயாத்திரையை தில்லை சிதம்பரத்தில் தொடங்கிய திருஞான சம்பந்தர், சிதம்பரம் தலத்தில் இறைவனின் திருக்கூத்தினைக் கண்டு களித்த பின்னர், அருகிலுள்ள வேட்களம், கழிப்பாலை, நெல்வாயில் ஆகிய தலங்களுக்கும் சென்று, ஆங்குள்ள இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடுகின்றார். நெல்வாயில் தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகம் நமக்கு கிடைத்துள்ளது. இந்த தலத்தின்

மீது அப்பர் பிரான் மற்றும் சுந்தரர் அருளிய பதிகங்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. தில்லைச் சிதம்பரம் சென்ற அப்பர் பிரான் கழிப்பாலை மற்றும் வேட்களம் தலங்களுக்கும் சென்று பதிகங்கள் அருளிய போதும், நெல்வாயில் தலம் சென்றதாக பெரியபுராண குறிப்பு ஏதும் இல்லை.

தற்போது சிவபுரி என்று அழைக்கப்படும் இந்த தலம், அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு அருகே உள்ளது. சிதம்பரத்திலிருந்து மூன்று கி,மீ, தூரத்தில்,கவரப்பட்டு செல்லும் வழியில் உள்ளது. திருவேட்களம் தலத்திலிருந்து ஒரு கி.மீ, தூரத்தில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.இறைவனின் திருநாமம் உச்சிநாதர். உச்சியார் என்று ஞானசம்பந்தர் தனது பாடல்களில் இறைவனை அழைக்கின்றார். தனது குடும்பத்தினருடன், தனது திருமணத்திற்காக ஆச்சாள்புரம் சென்று கொண்டிருந்த திருஞானசம்பந்தர் உச்சிப் பொழுதினில் இந்த தலம் வந்தைடைந்தார் என்றும், அப்போது கோயில் பணியாளர் வேடத்தில் வந்த இறைவன், ஞானசம்பந்தருக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் உணவு அளித்தார் என்றும் செவிவழிச் செய்திகள் உணர்த்துகின்றன. ஆனால் பெரிய புராணத்தில் இத்தகைய குறிப்பு ஏதும் காணப்படவில்லை. கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளுடன் கூடிய இராஜகோபுரம்.பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், பஞ்ச லிங்கங்கள், சனிபகவான், சந்திரன், நடராஜர், சன்னதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் நவகிராக் சன்னதியும் பள்ளியறையும் உள்ளன. இறைவன் சுயம்பு இலிங்கம். சதுர வடிவினில் ஆவுடையார் உள்ளது. நமக்கு வலது புறத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதி உள்ளது. இறைவியின் திருநாமம் கனகாம்பிகை. திருமால், பிரமன், சரஸ்வதி, அகத்தியர், கண்வ முனிவர் வழிபட்ட தலம். முன் மண்டபத்தில் உள்ள நந்திமண்டபத்தின் தூண்களில் நால்வர் சிற்பங்கள் உள்ளன. கருவறையின் சுவற்றினில் பெருமானின் திருமணக் கோலம் புடைச் சிற்பமாக உள்ளது.அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த தலமாக கருதப்படுகின்றது.

பாடல் 1:


புடையின் ஆர் புள்ளிக் கால் பொருந்திய

மடையினார் மணி நீர் நெல்வாயிலார்

நடையின் நால் விரல் கோவணம் நயந்து

உடையினார் எமது உச்சியாரே

விளக்கம்:

புடையின்=வயலின் பக்கத்தில்; ஆர்=பொருந்திய; நெல்வயல்கள் நிறைந்திருந்ததால் நெல்வாயில் என்ற பெயர் வந்தாதாக கூறுவார்கள்; திருஞானசம்பந்தர் காலத்திலும் நெல்வயல்கள் மிகவும் அதிகமாக காணப்பட்டன போலும். அதனால் தான் இந்த பதிகத்தினை வயல்களின் அருகே தோன்றும் காட்சியுடன் ஞானசம்பந்தர் தொடங்குகின்றார். புள்ளி=நண்டு; கால்= வாய்க்கால்; மணிநீர்=தெளிந்த நீர்; தலத்தின் நிலவளமும் நீர்வளமும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. நடை=ஒழுக்கம்; உச்சி நாதர் என்பது இந்த தலத்து இறைவனின் திருநாமம். இந்த திருநாமத்தை அறிந்தவுடன், ஞானசம்பந்தருக்கு, பெருமானை தான் தனது தலையின் மீது, உச்சி மீது வைத்து கொண்டாடுவது நினைவுக்கு வந்தது போலும். உச்சியார் என்று பெருமானை குறிப்பிடாமல், எமது உச்சியார் என்று பாடல்தோறும் அவர் குறிப்பிடுவதை நாம் உணரலாம்.

நால்விரல் கோவணம் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நமக்கு வேட்களம் தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பாடலை (1.39.2) நினைவூட்டுகின்றது..

சடைதனை தாழ்தலும் ஏற முடித்துச் சங்க வெண் தோடு சரிந்து இலங்கப்

புடை தனில் பாரிடம் சூழப் போதருமாறு இவர் போல்வார்

உடை தனில் நால் விரல் கோவண ஆடை உண்பது ஊரிடு பிச்சை வெள்ளை

விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னகராரே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பாடலில் (3.15.2) விரி கோவணத்தை ஆடையாக அணிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். விரி கோவணம்=நான்கு வேதங்களாக விரிந்த கோவணம்.. மிகுந்த விருப்பத்துடன் கோவண ஆடையினை பெருமான் அணிவதாக சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்

உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்

விடை உடை கொடியர் வெண்காடு மேவிய

சடையிடைப் புனல் வைத்த சதுரர் அல்லரே

இந்த பாடலில் விரி கோவணம் என்று பெருமான் அணிந்துள்ள கோவண ஆடையினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஏன் இவ்வாறு திருஞான சம்பந்தர் கூறுகின்றார் என்பதற்கு விடையினை, மணிவாசகர் திருவாசகம் திருச்சாழல் பதிகத்தில் தெளிவு படுத்துவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் மூலம் உணரலாம். பெருமான் ஏன் வெறும் கோவண ஆடையுடன் காணப்படுகின்றார் என்று ஒரு பெண் கேட்ட கேள்விக்கு அடுத்த பெண்மணி விடை அளிப்பதாக அமைந்த பாடல். துன்னம் பெய்=தைக்கப்பட்ட; துன்னு=நெருங்கிய; துன்னு பொருள்=பொருளுடன் தொடர்பு கொண்டுள்ள; மன்னு கலை=நிலை பெற்ற ஞானக் கலைகள்; வான்=நீண்ட; சில திருமுறைப் பாடல்கள் நால்விரல் கோவணம் என்றும் குறிப்பிடுகின்றன.

என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன்

துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும் அது என்னேடி

மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா

தன்னையே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ

எனது தலைவன் எனக்கு தந்தை போன்றவன் என்று எல்லா உயிர்களாலும் சிறப்பித்து அழைக்கப்படும் ஈசன், பெரிய துணியிலிருந்து கிழித்து தைக்கப்பட்ட கோவணத்தை அணிந்திருக்கும் நிலை இறைவனுக்கு பொருத்தமான செயலா என்று முதல் பெண்மணி கேள்வி கேட்கின்றாள். அதற்கு விடையாக அடுத்த பெண்மணி கூறுகின்றாள், பெருமான் அணிந்திருக்கும் கோவணத்தை நீ என்னவென்று கருதுகின்றாய். பெருமான் அணிந்திருப்பது பஞ்சு நூலால் செய்யப்பட்ட கோவணம் அல்ல; ஞான நூலாகிய நான்கு வேதங்களே இணைந்து கோவணமாக அமைந்துள்ளன என்று புரிந்து கொள்வாயாக என்று கூறுகின்றாள். மேலும் இந்த கோவணத்தை தாங்குகின்ற அரை ஞாண் கயிறாக, நிலையாக உள்ள ஞானக் கலைகள் இருக்கின்றன என்று கூறி பெருமான் அணிந்திருக்கும் கோவண ஆடையின் உயர்வு இங்கே விளக்கப் படுகின்றது. இந்த கருத்தினை உள்ளடக்கியே, வேதங்களாக விரியும் கோவணம் என்ற பொருள் பட, விரி கோவணம் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

பொழிப்புரை:

வயலின் வரப்புகளில் நண்டுகள் உடையதும், வாய்க்கால்களை அடுத்துள்ள மடைகளில் தெளிந்த நீரினை உடையதும் ஆகிய நெல்வாயில் தலத்தினில் வீற்றிருக்கும் இறைவனார், வாழ்க்கை ஒழுக்கத்தை எடுத்துரைக்கும் நான்கு வேதங்களை, மிகுந்த விருப்பத்துடன் தனது கோவண ஆடையாக அணிந்துள்ளார். அவரது பெருமை கருதி அவரை எனது தலை மேல் வைத்து நான் கொண்டாடுகின்றேன்.

பாடல் 2:

புடையினார் புள்ளிக்கால் (2.026) பாடல்கள் 1, 2, 3 (தித்திக்கும் தேவாரம் 0083)

வாங்கினார் மதில் மேல் கணை வெள்ளம்

தாங்கினார் தலையாய தன்மையர்

நீங்கு நீர நெல்வாயிலார் தொழ

ஓங்கினார் எமது உச்சியாரே

விளக்கம்:

தலையாய தன்மை=முதல்வராம் தன்மை; வாங்குதல்=வளைத்து அம்பினை எய்தல்; நீள்கு என்ற சொல்லின் மருவு. நீள்கு நீர=நீண்ட நீர்ப்பெருக்கு

பொழிப்புரை:

திரிபுரத்து அரக்கர்களுக்கு வலிமையான மதிலாகத் திகழ்ந்த மூன்று கோட்டைகளையும், தான் வைத்திருந்த வில்லினை வளைத்து அம்பினை எய்து அழித்த சிவபெருமான், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் தாங்கினார். பல அரிய குணங்களைக் கொண்டவராக, அனைவர்க்கும் தலைவராக திகழும் தன்மயை உடையவர். நீண்ட நீர்ப்பெருக்கினை உடைய நெல்வாயில் தலத்தில் வாழும் மாந்தர்கள் தொழ, புகழினில் மேலும் மேலும் ஓங்கும் தன்மையை உடைய பெருமானை, எனது தலை மேல் வைத்து நான் கொண்டாடுகின்றேன்.

பாடல் 3:


நிச்சல் ஏத்து நெல்வாயிலார் தொழ

இச்சையால் உறைவார் எம் ஈசனார்

கச்சை ஆவது ஓர் பாம்பின் ஆர் கவின்

இச்சையார் எமது உச்சியாரே

விளக்கம்:

நிச்சலும்=அனுதினமும், நாள்தோறும்; கச்சை=இடுப்பினில் கட்டும் கயிறு; கவின்=அழகு; இச்சையார்=இச்சா சக்தி; பெருமான் உயிர்கள் பலவிதமான செயல்களைச் செய்வதற்கு விருப்பம் ஏற்படும் வண்ணம் இச்சா சக்தியாக விளங்குகின்றார் என்று ஒரு விளக்கம் கூறப்படுகின்றது. பிரளயத்தின் போது தன்னுள் ஒடுங்கிய அனைத்து உயிர்களுக்கும், அவைகள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவ மலத்தினை அடக்கி முக்தி நிலை அடைவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்று பெருமான், எண்ணுகின்றார். இவ்வாறு உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையின் காரணமாக, உயிர்களை மீண்டும் தகுந்த உடலுடன் இணைக்கவும், உலகத்தினை மீண்டும் படைக்கவும் பெருமான் சித்தம் கொள்ளும் மாத்திரத்தில், அவரது கருணையாக விளங்கும் பிராட்டி கிரியா சக்தியாக செயல்பட்டு உலகத்தை படைக்கின்றார். இந்த தன்மையைத் தான், உலகினை மீண்டும் படைக்கவேண்டும் என்று விருப்பம் கொள்ளும் இச்சா சக்தியாக பெருமான் செயல்படுவதை இச்சையார் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்ற விளக்கமும் தரப்படுகின்றது. இச்சையார் என்பதன் மூலம், இச்சா சக்தி, ஞானசக்தி மற்றும் கிரியாசக்தியாக செயல்படுபவர் பெருமான் என்று கூறுவதும் பொருத்தமே.

உயிர்கள் தன்னை வந்தடைந்து தொழுது உய்வினை அடையவேண்டும் என்ற விருப்பம் கொண்டவராக பெருமான் இங்கே உறைகின்றார் என்று சம்பந்தர் கூறுகின்றார். இதே போன்று கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.105.5), பெருமான் நிலவுலகில் உறையும் தன்மையை, தேவர்களும் அடையாத பேற்றினை மண்ணுலுகத்தவர்கள் பெற்றுள்ளதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

வானிடை வாண்மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம்

கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்

ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த

நான் அடைவாம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனும் திருவாசகத் தொடர் கூறுவது போன்று, பெருமானை நாம் நினைத்து வணங்குவதற்கு அவனது அருளே காரணம். பெருமான் நம் மீது கருணை கொண்டுள்ள அன்பே, அத்தகைய அருளாக மிளிர்கின்றது. இந்த அருளால் நமக்கு விளைந்த நன்மையை, பெருமானை நினைக்கும் தன்மையை நாம் பெற்றிருப்பதை, நாம் நினைத்து போற்றுவோம் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். தேவர்கள் அடையாத நலனைத் தான் அடைந்ததாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார். தேவர்கள் போகம் தரும் உலகில் வாழ்பவர்கள். எனவே அவர்கள் அந்த உலகம் தரும் இன்பத்தில் ஆழ்ந்து இறைவனை மறந்து இருத்தல் இயற்கையே. ஆனால் தாங்கள் துன்பம் அடையும் தருணத்தில், தங்களது துன்பங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு பெருமானை நாடும் குணம் உடையவர்கள் அவர்கள். மூன்று வயது குழைந்தையாக இருந்த போது, இறைவனின் அருளால் ஞானப்பால் ஊட்டப்பெற்ற சம்பந்தரோ, அன்றிலிருந்து என்றும் இறைவனை மறவாது இருந்தைமையால், தேவர்களை விடவும் நலன் அடைந்தவனாகத் தன்னை கருதுகின்றார். கண்டல்=தாழை; வாண்மதி=ஒளிவீசும் சந்திரன்; அடைவாம்= அடையும் வண்ணம்; அடைவோம் என்று பன்மையில் கூறியுள்ளமையால் உலகத்தவர்கள் பெருமானின் அன்பு காரணமாக அடைந்துள்ள நன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாகும். நாம் என்ற சொல் நான் என்று எதுகை கருதி திரிந்தது என்றும் கொள்ளலாம். நான் அடைவாம் வண்ணம் அன்பு தந்த நலமே நினைவோமே, என்ற தொடருக்கு, தேவர்களும் அடைய முடியாத பேற்றினை நாம் அடையும் வண்ணம், பெருமான் அருள் புரியும் சிறப்பினை நினைந்து உருகுவோம் என்று சம்பந்தர் கூறுவதாகவும் விளக்கமும் அளிக்கப்படுகின்றது.

தேவர்கள் அடையாத நன்மையை உலகத்தவர் பெற்றுள்ளனர் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் கடைப் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. சிவபெருமானால் உய்யக் கொள்ளப்பட வேண்டுமானால், இந்த பூவுலகத்தில் போய் பிறப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே மண்ணுலகில் சென்று பிறக்காமல் இங்கே இருந்துகொண்டு தம் வாழ்நாளை வீணாக கழிக்கின்றோமே என்று திருமாலும் பிரமனும் கவலைப்படுவதாக மணிவாசகர் கூறும் பாடலை நாம் இங்கே காண்போம்; அவனை முந்திக் கொண்டு அவனது கருணையும் பூமியை வந்தடைகின்றது என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த நிலைக்கு காரணம் பூவுலகத்தில் இருப்போர்கள் செய்த தவம் தானே.

புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி

சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கித் திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்

அவன் விருப்பு எய்தவும் மலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்

அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

நாம் செய்த தவத்தினால் இந்த நிலவுலகில் பிறக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ள நாம், இந்த தவத்தின் முழுப் பயனை அடைய விரும்பினால் செய்ய வேண்டியது என்ன என்று அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடலையும் இங்கே காண்போம். இந்த பாடல் தில்லையின் மீது அருளப்பட்டுள்ள பதிகத்தின் பாடல் (4.81.5). எனவே நாம் பெற்றுள்ள மனிதப் பிறவியை இறைவன் நமக்கு அளித்த வரமாக கருதி, பெருமான் நிலவுலகில் பல தலங்களில் எழுந்தருளி அருள் புரியும் நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவனை வணங்கி வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தின் பாடல் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். கூழைமை=கடமை;

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்

பார்த்தற்கு பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீர்

கோத்தன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக்

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நந்தம் கூழைமையே

தில்லையில் நடமாடும் கூத்த பெருமானின் நடனக் காட்சியை மனிதர்கள் மட்டுமே கண்டு மகிழ்ச்சி அடையமுடியும் என்பதால், மனிதப் பிறவியைத் தான் வேண்டுவதாக அப்பர் பிரான் கூறும் பாடலை (4.81.4) நாம் இங்கே காண்போம். குனித்த=வளைந்த, பனித்த=ஈரமுள்ள, குமிண் சிரிப்பு=இதழ்கள் குவிந்து கூடிய புன்சிரிப்பு, மனித்தப் பிறவி= பெரியோர்களால் வேண்டப்படாத பிறவி

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

மேலே குறிப்பிட்ட பாடல்கள், இறைவன் நிலவுலகில் வந்து தங்கி அருள் புரிவதால், மிகவும் இழிந்ததாக கருதப்படும் மனிதப்பிறவி, எத்துணை உயர்ந்ததாக மாறிவிட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும் இந்த உயர்ந்த தகுதியினை, இறைவன் உறையும் திருக்கோயில்கள் சென்று இறைவனை வழிபடுவதன் மூலமே நாம் அடையமுடியும் என்பதையும் இந்த பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த கருத்தினை நமக்கு உணர்த்தும் பாடல் தான் வலஞ்சுழி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் (2.106) முதல் பாடல். வலஞ்சுழி வாணனை வாயார புகழ்ந்து மீண்டும் மீண்டும் பாடுவதற்கும், அவனை வணங்குவதற்கும் தனது நெஞ்சம் எத்தைகைய புண்ணியத்தை செய்துள்ளது என்று சம்பந்தர் வியக்கும் பாடல். தனது நெஞ்சத்தை அழைத்து சொல்லப் பட்டுள்ள பாடல் என்றாலும், நமக்கு கூறும் செய்தியாக தான் இந்த பாடலின் கருத்தினை நாம் கொள்ள வேண்டும்.

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து

முன்ன நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்

மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்

பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே

பொழிப்புரை:

நாம் அனைவரும் நாள்தோறும் தொழுது வாழ்வினில் உய்யும் பொருட்டு, நெல்வாயில் தலத்தினில் உறைபவர் எமது தலைவனாகிய சிவபெருமான். அவர் தனது இடுப்பினில் கச்சையாக அழகிய பாம்பினை அணிந்துள்ளார். பிரளயம் முடிந்து உலகும் உலகிலுள்ள அனைத்து பொருட்களும் அழிந்த பின்னரும் மீண்டும் உலகினை தோற்றுவித்து, உயிர்களுக்கு தங்களது வினைகளை கழித்துக் கொள்ள வாய்ப்பினை அளிக்க விரும்புவர் சிவபெருமான். இத்தகைய மாண்பினை உடைய பெருமானை எனது தலையின் மீது வைத்து நான் கொண்டாடுகின்றேன்.

பாடல் 4:


மறையினார் மழுவாளினார் மல்கு

பிறையினார் பிறையோடு இலங்கிய

நிறையினார் நெல்வாயிலார் தொழும்

இறைவனார் எமது உச்சியாரே

விளக்கம்:

மல்கு=பொருந்திய; நிறை=கற்பு‘; பெண்களுக்கு நிறைவான அணிகலனாக கற்பு விளங்குவதால், கற்பு நிறை என்று நயமாக அழைக்கப் படுகின்றது. நிறை என்ற சொல் இங்கே கங்கை நங்கையை குறிக்கின்றது.

பொழிப்புரை:

வேதங்களை உலகுக்கு அருளிய பெருமான், மழுவாட் படையினை உடையவர் ஆவார். அவரது சடையினில் பிறைச் சந்திரன் பொருந்தி விளங்குகின்றது. பிறைச் சந்திரனுடன் கற்புடைய கங்கை நங்கையையும் பெருமானே தனது சடையினில் ஏற்றுள்ளார். இத்தகைய தன்மையை உடைய இறைவனை, நெல்வாயில் தலத்தில் உள்ளோர் தொழுகின்றனர். இந்த பெருமானின் சிறப்புகள் கருதி, நாம் அவரை எனது தலையின் மீது வைத்து கொண்டாடுகின்றேன்.

பாடல் 5:


விருத்தனாகி வெண்ணீறு பூசிய

கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர்

நிருத்தன் ஆர நெல்வாயில் மேவிய

ஒருத்தனார் எமது உச்சியாரே

விளக்கம்:

விருத்தனர்=முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள்; நிருத்தம்=நடனம்; ஒருத்தனார்=ஒப்பற்ற தனித் தன்மை உடையவர்; தலைவன் என்ற பொருளை உணர்த்தும் கர்த்தா என்ற வடமொழிச் சொல் கருத்தன் என்று மிகவும் அழகாக தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. கருத்தன் என்பதற்கு கருத்து என்று பொருள் கொண்டு, அனைவராலும் மனதாரத் தொழப்படும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றிய ஆதியாக விளங்குபவர் சிவபெருமான்; தனது உடலெங்கும் திருநீறு பூசியவராக காட்சியளிக்கும் பெருமான் அனைவர்க்கும் தலைவனாக விளங்குகின்றார். கொழுந்து விட்டெரியும் தீயினில் நடனம் ஆடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர் சிவபெருமான். அவர் மிகுந்த விருப்பம் கொண்டவராக நெல்வாயில் தலத்தில் பொருந்தி விளங்குகின்றார். இத்தகைய மாண்பினை உடைய பெருமானை, நான் எனது தலை மீது வைத்து கொண்டாடுகின்றேன்.

பாடல் 6:


காரினார் கொன்றைக் கண்ணியார் மல்கு

பேரினார் பிறையோடு இலங்கிய

நீரினார நெல்வாயிலார் தொழும்

ஏரினார் எமது உச்சியாரே

விளக்கம்:

கார்=கார் காலம்; ஆர்=மிகவும் அதிகமாக தோன்றும்; காரார் கொன்றை=கார் காலத்தில் அதிகமாக மலரும் கொன்றை மலர்கள்; கண்ணி=தலைமாலை; ஏர்=அழகு; ஏரினார்=அழகர்; மல்கு=நிறைந்த; பேரினார்=பேரினை உடையவர், புகழினை உடையவர்;

பொழிப்புரை:

கார் காலத்தில் மிகவும் அதிகமாக பூக்கும் கொன்றை மலர் மாலையைத் தனது தலை மாலையாக அணிந்துள்ள பெருமான், நிறைந்த புகழினை உடையவர் ஆவார். பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், மிகுந்த நீர்ப் பெருக்கினை உடைய கங்கை நதியையும் சடையினில் அடக்கியுள்ளார். அழகராக விளங்கும் அவரை நெல்வாயில் தலத்தவர் தொழுகின்றனர். அவரது தன்மை கருதி, அவரை நான் எனது தலை மீது வைத்து போற்றுகின்றேன்.

பாடல் 7:


ஆதியார் அந்தம் ஆயினார் வினை

கோதியார் மதில் கூட்டழித்தவர்

நீதியார நெல்வாயிலார் மறை

ஓதியார் எமது உச்சியாரே

விளக்கம்:

கோது=குற்றம்; கோதியார்=தீய செயல்களை செய்வதால், தீய வினைகளை வளர்த்துக் கொண்டு குற்றம் உடையவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்கள்; மதில் கூட்டு என்று மூன்று மதில்களும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் தான் அந்த மதில்களை அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், மதில்கள் மூன்றும் ஒன்றாக இணையாது இருப்பதன் மூலம் ஒன்றுக்கொன்று துணையாக இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக விளங்கும் பெருமான், தன்னால் படைக்கப்பட உயிர்களுக்கு அந்தமாகவும் இருப்பவர் ஆவார். பல விதமான குற்றங்களை செய்ததால் தீய வினைகள் உடையவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின், கூட்டு அரணாகத் திகழ்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் வீழ்த்தி அழித்தவர் சிவபெருமான். தருமமே உருவாக உள்ளவரும் வேதங்களை ஓதுபவரும் ஆகிய பெருமான் நெல்வாயில் தலத்தினில் உறைகின்றார். அவரை நான் எனது தலை மீது வைத்துக் கொண்டு பெருமையாக கொண்டாடுகின்றேன்.

பாடல் 8:


பற்றினார் அரக்கன் கயிலையை

ஒற்றினார் ஒரு கால் விரல் உற

நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும்

பெற்றியார் எமது உச்சியாரே

விளக்கம்:

ஒற்றினார் என்ற சொல்லினை நெற்றி ஆர என்ற தொடருக்கு பின்னர் வைத்து பொருள் கொள்ளவேண்டும். பெற்றி=தன்மை;

பொழிப்புரை:

கயிலை மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு கயிலை மலையினை தனது கைகளால் பற்றிய அரக்கன் இராவணனின் நெற்றி மீது பொருந்தும் வண்ணம் கயிலை மலையினை தனது கால் விரல் ஒன்றினை ஊன்றி அழுத்தியவர் சிவபெருமான். அவர் நெல்வாயில் தலத்தினில் உறைகின்றார். உலகத்தவர்களால் தொழப்படும் தன்மை உடைய பெருமானை, நான் எனது தலையின் மீது வைத்துக் கொண்டாடுகின்றேன்.

பாடல் 9:


நாடினார் மணிவண்ணன் நான்முகன்

கூடினார் குறுகாத கொள்கையர்

நீடினார நெல்வாயிலார் தலை

ஓடினார் எமது உச்சியாரே

விளக்கம்:

நாடுதல்=தேடுதல்; கொள்கை=இயல்பு; பிரமனும் திருமாலும் காண்பரிய தன்மை உடைய பெருமான், எளியவராக பிச்சை ஏற்றுத் திரிபவராக உள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. ஓட்டினார் என்ற சொல் எதுகை கருதி ஓடினார் என்று மருவியுள்ளது.

பொழிப்புரை:

நீலமணி போன்ற நிறத்தினில் மேனியை உடைய திருமாலும் நான்முகனும், ஒன்று கூடி, பெருமானின் திருவடியையும் திருமுடியையும் தேடிக்கொண்டு சென்றபோதிலும், அவர்கள் இருவரும் சென்று அடையாத இயல்பினராக, சோதிப் பிழம்பாக நீண்டு நின்றவர் சிவபெருமான். அவர் பிரமனின் மண்டையோட்டினைத் தனது கையில் வைத்துக்கொண்டு பல இடங்களிலும் திரிபவராக உள்ளார். பிரமனும் திருமாலும் தேடிக் காண முடியாத அரியவராக இருப்பினும், உயிர்களின் நலன் கருதி உயிர்களின் மலங்களை தனது பிச்சைப் பாத்திரத்தில் வாங்கிக் கொள்ளும் நோக்கத்துடன் எளியவராக திரியும் பெருமானை, நான் எனது தலை மீது வைத்துக் கொண்டு போற்றுகின்றேன்.

பாடல் 10:


குண்டமண் துவர்க் கூறை மூடர் சொல்

பண்டமாக வையாத பண்பினர்

விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை

உண்ட கண்டர் எம் உச்சியாரே

விளக்கம்:

பண்டம்=பொருள், இங்கே தகுந்த பொருள் உடைய சொற்களாக என்று பொருள் கொள்ள வேண்டும்; விண் தயங்கு= விண்ணோர்கள் பணியும்;

பொழிப்புரை:

குண்டர்களாகிய சமணர்களும் துவர்ச் சாயம் ஏற்றப்பட்ட ஆடையினை அணிந்த மூடர்களாகிய புத்தர்களும் தாங்கள் கூறும் சொற்களை, பொருத்தமான பொருளுடைய சொற்களாக வைப்பது எவ்வாறு என்பதை அறியாதவர்களாக உள்ளனர். எனவே அவர்களது சொற்களை ஒரு பொருட்டாக கருத வேண்டா. நஞ்சினை உண்டு, அந்த நஞ்சினை தனது கழுத்தினில் தேக்கியதன் மூலம் பிரளய காலத்தில் தன்னுள் ஒடுங்கும் அனைத்து உயிர்களையும் காக்கும் பெருமான், வானளாவ நெற்கதிர்கள் வளரும் வயல்களை உடைய நெல்வாயில் தலத்தில் உறைகின்றார். அவரை நான் எனது தலை மீது வைத்துக் கொண்டாடுகின்றேன்.

பாடல் 11


நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச்

சண்பை ஞானசம்பந்தன் சொல்லிவை

பண் பயன் கொளப் பாட வல்லவர்

விண் பயன் கொளும் வேட்கையாளரே

விளக்கம்:

நெண்பு=நட்பு; நெண்பயங்கு=நீண்ட நட்பு; அயம் என்றால் குளம் என்று பொருள். குளம் போன்று ஆழமான நட்பு என்ற பொருள் பட நெண்பு அயங்கு என்ற தொடர் கையாளப் பட்டுள்ளது. நெல்வாயில் தலத்தில் உறையும் ஈசன், தன்னைக் காண்போர் மனதினில் ஆழ்ந்த இணக்கம் ஏற்படுத்தும் தன்மையனாக இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. பண் பயன் கொள்ளுதல்=பண் பாடலுடன் பொருந்த பாடுதல்; பெருமானை வழிபடும் அடியார்கள் வீடுபேற்றினை அடைவதில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அவர் அருளிய வீடலாலவாயிலாய் என்று தொடங்கும் பாடலை (3.52.1) நினைவூட்டுகின்றது. மதுரை ஆலவாய் தலத்தின் மீது அருளிய இந்த பாடலில் நான்கு அடிகளிலும் ஆலவாய் என்ற பெயர் வருமாறு உள்ள நிலை சிறப்புக்கு உரியது. இருந்தாலும் கடைசி அடியில் மட்டுமே ஆலவாய் என்ற பொருளில் வருகின்றது. மற்றைய அடிகளில், வீடு அலால் அவா இலாய், பாடு அலால் அவா இலாய், காடு அலால் அவா இலாய் என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும். வீடுபேற்றினை அடைவதைத் தவிர்த்து வேறு எந்த விருப்பமும் இல்லாத, மேன்மையான அடியார்கள் பாடும் பாடலைக் கேட்பதைத் தவிர்த்து வேறு எந்த ஆசையும் இல்லாதவன் இறைவன் என்று கூறும் சம்பந்தர், அத்தகைய அடியார்கள் தன்னைப் புகழ்ந்து பாடும் வண்ணம் ஆலவாய் தலத்தில் வீற்றிருக்கின்றார் என்று கூறுகின்றார். காட்டினில் உறைவதைத் தவிர்த்து வேறு எதனையும் தனது உறைவிடமாக ஏற்றுக் கொள்ளாத இறைவன், மண்டையோட்டினைத் தனது கையில் ஏந்திய இறைவன், நீண்ட மதில்களை உடைய ஆலவாய் தலத்தினை மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து உறைவதன் காரணம் யாதோ என்ற கேள்வி இங்கே கேட்கப்படுகின்றது.

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின் கழல்

பாடலால வாயிலாய் பரவ நின்ற பண்பனே

காடலால வாயிலாய கபாலி நீள் கடிம்மதில்

கூடலால வாயிலாய குலாயதென்ன கொள்கையே

பதிகத்தின் முதல் ஏழு பாடல்களில், பெருமானின் பல வித பண்புகளை குறிப்பிட்டு, தனது மனதினை கவர்ந்த பெருமான் என்பதால், அவரைத் தனது தலையின் மீது வைத்து கொண்டாடுவதாக குறிப்பிடும் ஞானசம்பந்தர், தன்னைப் போன்று பல அடியார்கள் நெல்வாயில் தலத்து இறைவன் பால் ஆழ்ந்த அன்பு கொண்டு விளங்கியதை கவனித்தார் போலும். அதனால் தான், அத்தகைய ஆழ்ந்த இணக்கத்தினை அடியார்கள் பால் ஏற்படுத்தும் தன்மையன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

தன்னைக் கண்டு வழிபடும் அடியார்களின் மனதினில், ஆழ்ந்த இணக்கம் ஏற்படும் வண்ணம் அவர்களது மனதினை கொள்ளை கொள்ளும் பண்புகள் உடைய தலைவனை, நெல்வாயில் என்ற தலத்தினில் உறையும் தலைவனை, சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழியைச் சார்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இந்த பாடல்களை, முறையாக பண்ணுடன் பொருந்தும் வண்ணம் பாடும் திறமை பெற்ற அடியார்கள், வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் வீடுபேறு அடைவதில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

முடிவுரை;

பெருமானை தனது உச்சியார் என்று மிகவும் பெருமையாக பாடல்தோறும் குறிப்பிடும் சம்பந்தர், அதற்கான காரணங்களையும் மிகவும் நயமாக எடுத்துக் கூறுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில் பெருமான் எளிய கோலத்தில் கோவண ஆடையுடன் இருப்பதை கூறும் சம்பந்தர் அந்த கோவண ஆடை எவ்வளவு உயர்ந்தது என்பதையும் குறிப்பிடுகின்றார். இரண்டாவது பாடலில் அனைவர்க்கும் தலையாய தன்மையராக இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது பாடலில் நினைத்த மாத்திரத்தில் உலகமும் உலகப் பொருட்களும் பிரளயத்திற்கு பின்னர், பெருமானால் படைக்கப் படுவதை குறிப்பிடுகின்றார். நான்காவது பாடல், உலக வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் வேதங்களை பெருமான் அருளிய தன்மை சொல்லப் பட்டுள்ளது. ஐந்தாவது பாடலில் ஊழி நெருப்பினில் நின்று நடமாடும் திறமை கூறப் படுகின்றது. மேற்கூறிய தன்மைகளால், நிறைந்த புகழுடையவராக பெருமான் திகழ்கின்றார் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். அனைவர்க்கும் ஆதியாகவும் அந்தமாகவும் உள்ள தன்மை ஏழாவது பாடலில் சொல்லப் பட்டுள்ளது. எட்டாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களில் இராவணன், பிரமன், திருமால் ஆகியோருக்கு அருளிய தன்மை கூறப் பட்டுள்ளது. பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும்

புத்தர்களின் சொற்களை ஒரு பொருட்டாக மதிக்கும் தகுதி படித்தவை அல்ல என்று உணர்த்தி நாமும் அவர்களது சொற்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவுரை கூறப் படுகின்றது. கடைப் பாடலில் பதிகத்தினை ஓதும் அடியார்கள், பக்குவம் அடைந்தவர்களாக வீடுபேற்றினைத் தவிர்த்து வேறு எதையும் விரும்பாதவர்களாக இருப்பார்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். பெருமானின் எண்ணற்ற பெருமையினை இந்த பதிகம் மூலம் உணர்ந்த நாமும், அவரது மாட்சிமை கருதி, சம்பந்தர் போன்று, நமது தலை மீது வைத்துக் கொண்டு போற்றி கொண்டாடுவோமாக.



Share



Was this helpful?